[] 1. Cover 2. Table of contents கச்சாமி   ஷோபாசக்தி   shobasakthi@hotmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/kachchami மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc கச்சாமி கண்டி நகரத்திலிருந்து வடமேற்காக நாற்பது கிலோ மீற்றர்கள் தொலைவிலிருந்த புராதன புத்த விகாரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நானும் கெய்லாவும் வெளியே வந்தபோது எங்களையே பார்த்துக்கொண்டு இரண்டு பொலிஸ்காரர்கள் வீதியில் நிற்பதைக் கண்டேன். நானும் கெய்லாவும் செருப்புகளை அணிந்துகொண்டு வீதிக்கு வந்தபோது, வீதியில் சனங்களும் கூடிநின்று எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவொரு மிகச் சிறிய நகரம். புத்த விகாரையைச் சுற்றியே அந்த நகரம் அமைந்திருந்தது. விகாரையின் முன்னால் ஏழெட்டுக் கடைகள் இருந்தன. அந்தப் பொலிஸ்காரர்கள் இருவரும் ஏதோ காரியமாகத்தான் எங்களையே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என எனது உள்ளுணர்வு சொல்லியது. வரப்போகும் பிரச்சினைகளை முன்கூட்டியே அனுமானிக்கும் எனது உணர்திறன் என்னை எப்போதும் கைவிட்டதில்லை. நான் கெய்லாவின் கையைப் பற்றிக்கொண்டேன். இரண்டு பொலிஸ்காரர்களும் வேகவேகமாக எங்களருகே வந்தனர். அவர்கள் இருவரும் மிக இளையவர்கள். அவர்களது மூஞ்சிகள் கடுகடுவென இருந்தன. முன்னால் வந்தவன் சிங்களத்தில் இரண்டு வார்த்தைகள் சொன்னான். எனக்குச் சிங்களமொழி நன்கு தெரியும். கெய்லா எனது முகத்தைப் பார்த்தாள். நான் சிங்களம் புரியாதவன் போல பாவனை செய்து, குரலைச் சற்று உயர்த்தி “உங்களுக்கு என்ன வேண்டும்?” என ஆங்கிலத்தில் பொலிஸ்காரர்களிடம் கேட்டேன். எனக்குப் பக்கத்தில் வெள்ளைக்காரப் பெண் இருப்பதும் எனது கேள்வியின் தொனியும் பொலிஸ்காரர்களைச் சற்று மிரட்சியுற வைக்கலாம் என எண்ணினேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பொலிஸ்காரர்களின் மூஞ்சிகளிலிருந்த கடுப்புத்தான் சற்று அதிகரித்தது. அவர்கள் என்னையும் கெய்லாவையும் வேற்றுக்கிரகவாசிகள் போல பார்த்தனர். அவர்களது கண்களிலே அருவருப்பு இருந்தது. ஒருவன் ஆங்கிலத்தில் “நீங்கள் இருவரும் எங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு வரவேண்டும்” என்றான். அப்போது வீதியில் நின்றிருந்த சில பெண்கள் கெய்லாவின் பின்புறம் போய் நின்றுகொண்டு தங்களுக்குள் இரகசியக் குரலில் ஏதோ பேசிக்கொண்டார்கள். இப்போது கெய்லா பேசினாள். “எதற்கு உங்களுடன் நாங்கள் வரவேண்டும்?” எனப் பொலிஸ்காரர்ளைப் பார்த்துக் கேட்டாள். பொலிஸ்காரர்கள் மறுபடியும் சிங்களம் பேசினார்கள். “நேரத்தை வீணடிக்க வேண்டாம், எங்களுடன் கிளம்புங்கள்!” என்றார்கள். நான் கெய்லாவிடம் " இங்கே பிரச்சினை வேண்டாம், வேடிக்கை பார்க்கக் கூட்டம் கூடிக்கொண்டேயிருக்கிறது. வா பொலிஸ் நிலையம் போய் என்ன எதுவென்று பேசிக்கொள்வோம்" எனப் பிரஞ்சு மொழியில் சொன்னேன். அவள் எனது முகத்தில் படிந்திருந்த கலவரத்தை வாசித்தாள். “போகலாம்” எனச் சொல்லிவிட்டுப் பெருமூச்சொன்றை வெளியிட்டாள். நாங்கள் வந்திருந்த வாடகைக்கார் வீதியோரத்தில் நின்றிருந்தது. முதியவரான சாரதி வண்டிக்கு வெளியே நின்றிருந்தார். அவர், தான் ஏதோ தேவையில்லாத பிரச்சினையில் சிக்கிக்கொண்டது போன்ற தோரணையில் நிலத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தார். நான் கைளைத் தட்டி அவரை அழைத்து வண்டியை எங்களுக்கு அருகே கொண்டுவருமாறு சைகை செய்தேன். வண்டி வந்ததும் பின்புற இருக்கையில் நானும் கெய்லாவும் அமர்ந்துகொண்டோம். ஒரு பொலிஸ்காரன் முன்புற இருக்கையில் அமர்ந்துகொண்டான். கார் புறப்பட்டுச் சென்றபோது நான் கண்ணாடி வழியே பின்னால் பார்த்தேன். சனங்கள் அங்கிருந்து கலைந்து கொண்டிருந்தார்கள். மற்றைய பொலிஸ்காரன் மோட்டார் சைக்கிளில் காரின் பின்னால் வந்துகொண்டிருந்தான். அவனது முகத்திலிருந்த கடுகடுப்பும் கண்களிலிருந்த அருவருப்பும் இவ்வளவு தூரத்திலும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. எனது நெஞ்சம் படிப்படியாக அச்சத்தில் மூழ்கிக்கொண்டிருந்தது. நான் இலங்கைக்கு வருவது குறித்துச் சிந்தித்தபோதெல்லாம் என்னுடைய பிரான்ஸ் நண்பர்களில் சிலர் ‘இப்போது நிலமை மோசமாகயிருக்கிறது, போகாதீர்கள்’ என்றார்கள். சில நண்பர்கள் ‘இப்போது பிரச்சினைகள் ஏதும் கிடையாது, தைரியமாகப் போங்கள்’ என்றார்கள். என்னால் ஒரு முடிவுக்கு வர முடியாமலிருந்தது. கடைசியில், நான் கெய்லாவுக்காக இருபத்தைந்து வருடங்கள் கழித்து இலங்கைக்கு வந்தேன். கெய்லாவுக்குச் சரியாக முப்பது வயது. எனக்கும் அவளுக்கும் இருபத்தியொரு வயதுகள் வித்தியாசமிருந்து. கெய்லாவுக்கு இருபத்தைந்து வயதாக இருந்தபோது அவள் என்னைக் காதலிப்பதாகச் சொன்னாள். பாரிஸின் ‘சென் மத்தான்’ நதியோரமிருக்கும் சிறிய அப்பார்ட்மென்டில் இருவரும் சேர்ந்து வாழ்கிறோம். காதல், படிப்பு, இசை, மது, சிறிது கஞ்சாப் புகை இவ்வளவாலும் எங்களது வசிப்பிடம் நிரம்பியிருக்கிறது. கெய்லா யூத இனப் பெண். அவளது பெயருக்கு ஹீப்ரு மொழியில் ‘அழகிய கிண்ணம்’ எனப் பொருள். எனது காதலால் மட்டுமல்லாமல் எனது துயரம், கழிவிரக்கம், கோபம், விரக்தி, இயலாமை என எல்லாவற்றாலும் அந்தக் கிண்ணம் நிரம்பியுள்ளது. கெய்லாவின் முன்னோர்கள் இரண்டாம் உலகப்போர் காலத்தில் போலந்திலிருந்து பிரான்ஸுக்கு ஓடிவந்தவர்கள். கெய்லாவின் தந்தையும் தாயும் ஜீன் போல் சார்த்தருக்கு நெருக்கமான மாணவர்களாக இருந்தவர்கள். பாரிஸ் மாணவர் புரட்சியில் முன்னணிப் பாத்திரங்களை வகித்தவர்கள். தந்தையார் பேராசிரியர், தாயார் சிற்பக் கலைஞர். இருவருமே இப்போது இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்துவிட்டார்கள். கெய்லா பாரிஸிலேயே தங்கிவிட்டாள். பாரிஸ் பல்கலைக் கழகங்களில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பட்டங்களைப் பெறுபவள் அவள். அவளது ஆய்வுகளின் முக்கிய பொருள் பவுத்தம். அவளது இந்த ஆய்வுப்பணிதான் என்னையும் அவளையும் சந்திக்க வைத்தது. ‘சேர்போன்’ பல்கலைக்கழகத்தில் நடந்த அம்பேத்கர் குறித்த கருத்தரங்கொன்றில் பார்வையாளர் பகுதியில் நாங்கள் இருவரும் அருகருகாக அமர்ந்திருந்தோம். நான் இலங்கையைச் சேர்ந்தவன் என அவள் தெரிந்துகொண்டதும் தேரவாத பவுத்தம் குறித்து என்னிடம் கண்களை விரித்து உரையாடத் தொடங்கிவிட்டாள். பிறகு தொடர்ச்சியான சந்திப்புகளைச் செய்தோம். ஒரு பின்மாலையில் அவளது அறையில் நான் அவளைச் சந்தித்தபோது நாங்கள் தம்மபதத்தை மீண்டும் வாசித்தோம். ‘நிழலின் தோற்றம் நீள்கதிர் ஒளியால், நிழலும் ஒளியும் நின்மன உருவாம்’ என்ற வரிகளை நான் வாசித்தபோது கெய்லா உணர்ச்சி மேலிட விம்மியவாறே என்னை அணைத்து முத்தமிட்டாள். தம்மபதத்தைச் சாட்சியாக வைத்து நாங்கள் ஒருவருள் ஒருவர் கலந்தவரானோம். கெய்லா கடந்த இரண்டு வருடங்களாக ‘ஹீனயானம்’ குறித்து ஆய்வுகளைச் செய்துகொண்டிருக்கிறாள். ஓர் அதிகாலையில் என்னை வருடியவாறே எனது காதுக்குள் “நான் தின் – தியான் புத்த மாடத்திற்குச் செல்ல வேண்டும், என்னை அழைத்துச் செல்வாயா ?” எனக் கேட்டாள். நான் கண்களைத் திறவாமலேயே " ம்" என முனகிக்கொண்டே புரண்டு அவளை அணைத்தேன். அவளது மார்பில் ஒரு தடித்த புத்தகம் விரித்து வைக்கப்பட்டிருப்பதை எனது கை உணர்ந்தது. வியட்நாமின் ஹோ லூ நகரத்தில் பிரமாண்டமான தின்– தியான் புத்த மாடம் இருந்தது. பத்தாம் நூற்றாண்டில் வியட்நாமின் தலைநகரமாக இந்த நகரமே இருந்தது. வியட்நாமின் முதலாவது பேரரசன் தின்– போ– லின் இந்தப் புத்த மாடத்தைக் கட்டியெழுப்பினான். இயற்கையின் வனப்புகள் அத்தனையும் ஊடும் பாவுமாக அந்த நிலப்பகுதியை நெய்திருந்தன. விரித்துக் கிடக்கும் வெள்ளிச் சரிகை இழைத்த பச்சைப் பட்டுத்துணியின் மத்தியில் கிடந்து ஒளிரும் செந்நிற இரத்தினக்கல் போல அந்தப் புத்த மாடமிருந்தது. கெய்லா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். புத்த மாடத்தை நுற்றுக்கணக்கான கோணங்களில் படம் எடுத்துக்கொண்டாள். அங்கே ஒரு நூலகமுமிருந்தது. பிரஞ்சு மொழியில் ஏராளமான பழைய நூல்களிருந்தன. காலையிலிருந்து மாலைவரை கெய்லா நூலகத்திலேயே இருந்தாள். எங்களது இரவுப் பொழுதுகள் வியட்நாமின் கிராமிய இசையாலும் மதுவாலும் மகிமைப்படுத்தப்பட்டன. நாங்கள் தங்கியிருந்த விடுதியின் வரவேற்பாளனிடம் கஞ்சா கிடைத்தது. வெள்ளையினப் பெண்ணோடு ஒரு கறுப்பன் இருப்பதைப் பார்த்தவுடனேயே, முதல் வேலையாக வியட்நாமில் கஞ்சாப் பொட்டலத்தைத் தூக்கிக் கொடுத்துவிடுகிறார்கள். கஞ்சாவைப் புகைத்துக்கொண்டிருந்த ஒரு தருணத்தில்தான் நாங்கள் அடுத்தபடியாக இலங்கைக்குச் செல்லலாம் என முடிவு செய்தோம். நான் கெய்லாவை முத்தமிட்டு “என்னை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்வாயா?” எனக் கேட்டேன். எனக்கு இலங்கையில் தங்கி நிற்பதற்கு ஒரு வீடில்லை. கிராமத்திலிருந்த வீடு குண்டுவீச்சால் தரைமட்டமாகிவிட்டது. சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் எல்லோருமே வெளிநாடுகளில்தான் இருக்கிறார்கள். விடுதியில் தங்குவதுதான் ஒரேவழி. அதைத்தான் கெய்லாவும் விரும்பினாள். இலங்கைக்கு வந்ததும் முதலில் கண்டிக்கு வந்தோம். அங்கிருந்து யாழ்ப்பாணம் போவதாகத் திட்டமிட்டிருந்தோம். வண்டி நின்றதும் நிற்காததுமாக முன் இருக்கையிலிருந்த பொலிஸ்காரன் கதவைத் திறந்து கீழே குதித்தான். அந்தப் பொலிஸ் நிலையம் மிகச் சிறியது. எங்களை ஒரு மேசையின் முன்னால் அமர வைத்து விட்டு எங்களை அழைத்துவந்த பொலிஸ்காரன் வெளியே போய்விட்டான். நிலையத்திற்குள் ஒரு ஓரமாக இரண்டு பொலிஸ்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நான் அவர்களிடம் “எப்போது அதிகாரி வருவார் ?” எனக் கேட்டேன். அவர்களில் நடுத்தர வயதாக இருந்தவன் ‘பொறுத்திரு!’ என்பது போல கையைத் தூக்கிச் சைகை செய்தான். கெய்லா ஒன்றின்பின் ஒன்றாகப் பெருமூச்சுகளை வெளியேற்றிவிட்டு, தனது கால்களைத் தூக்கி நாற்காலியில் வைத்துக்கொண்டாள். கால்களை அவள் அவ்வாறு வைத்திருப்பது இந்தச் சூழலுக்குப் பொருத்தமில்லாதது என நான் நினைத்தாலும் அதை அவளிடம் சொல்லவில்லை. கிட்டத்தட்ட ஒருமணிநேரமாக நாங்கள் காத்திருந்தோம். அங்கே கடுமையான நிசப்தமிருந்தது. கெய்லா அமர்ந்தபடியே கண்ணயர்ந்து விட்டாள். எங்களுக்குப் பின்னால் சப்பாத்துகள் ஒலி எழுப்பியபோது நான் திரும்பிப் பார்த்தேன். வேகமாக நடந்து வந்த அந்த மனிதன் காக்கி முழுக்காற்சட்டையும் வெள்ளை அரைக் கைச் சட்டையும் அணிந்திருந்தான். அவனது இடுப்பில் கட்டப்பட்டிருந்த கைத்துப்பாக்கி சட்டைக்குக் கீழே பாதி தெரிந்தது. அவனுக்கு முப்பது வயதுகள் இருக்கும். ஒல்லியாக, ஆனால் திடகாத்திரமான உடலுடனும் சிறிய கண்களுடனுமிருந்தான். பார்ப்பதற்குச் சாயலில் புரூஸ்லீயைப் போலிருந்தான். அவன் எங்களுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டு கெய்லா மீது ஒரு பார்வையை வீசிவிட்டு, மேசையைச் சுற்றிக்கொண்டு எங்கள் முன்னால் வந்து அமர்ந்தான். நான் கெய்லாவின் கைகளைப் பற்றினேன். கெய்லா விழித்துக்கொண்டு, கால்களை நாற்காலியிலிருந்து கீழே இறக்கினாள். எனக்குச் சற்று நிம்மதியாகயிருந்தது. அவன் தன்னை அந்தப் பொலிஸ் நிலையத்தின் அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டான். நான் பதிலுக்குப் புன்னகை செய்தேன். கெய்லா உணர்ச்சியற்ற முகத்துடன் அதிகாரியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதிகாரி தூய ஆங்கிலத்தில் தனது விசாரணையை ஆரம்பிக்கலானான். “எங்கிருந்து வருகிறீர்கள்?” “பிரான்ஸிலிருந்து..” அதிகாரி “உங்களது சொந்த இடம் எது?” என என்னிடம் கேட்டான். நான் எனது கிராமத்தின் பெயரைச் சொன்னேன். இப்போது அவன் கெய்லாவைப் பார்த்துக்கொண்டே " மேடம் உங்களை நான் கைது செய்ய வேண்டியிருக்கிறது" என்றான். அவ்வளவுதான். கெய்லா நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பிரஞ்சு மொழியில் சரமாரியாகக் கெட்ட வார்த்தைகளைக் கூவிக்கொண்டு எழுந்திருந்தாள். அதிகாரியை நோக்கிக் கையைக் காட்டி “அது உன்னால் முடியாது” என்று ஆங்கிலத்தில் சொன்னாள். அதிகாரி சில விநாடிகள் அமைதியாகயிருந்தான். பின்பு “அது முடியாவிட்டால் உங்களது முதுகுப் பகுதியையாவது நான் கைது செய்ய வேண்டியிருக்கும்” என்றான். கெய்லாவுக்கு செந்நிறச் சுருள்முடி. அவள் முடியை மிகக் கட்டையாக ஆண்கள் போல வெட்டியிருப்பாள். அவள் கையில்லாத நீலநிற பனியன் அணிந்திருந்தாள். அந்த பனியன் அவளது பாதி முதுகைத்தான் மறைத்திருந்தது. அவளது முதுகின் வலதுபுற மேற்பகுதியில் உள்ளங்கையளவில் புத்தரின் உருவம் வரையப்பட்டிருந்தது. புத்தர் தியானத்தில் அமர்ந்திருக்கும் சித்திரமது. வியட்நாமில் தின்– தியான் புத்த மாடத்திற்கு முன்பாக நடைபாதையிலிருந்த பெண்மணி ஒருவர் அய்ந்து டொலர்களிற்கு கெய்லாவின் முதுகில் அந்த அழகிய சித்திரத்தை நுணுக்கத்துடன் வரைந்திருந்தார். சிலவேளைகளில் அந்தப் புத்தர் கெய்லாவின் முதுகில் அங்குமிங்கும் அசைந்துகொண்டிருப்பதாக எனக்குத் தோன்றும். “புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்துவது தண்டனைக்குரிய குற்றம்” என அதிகாரி எங்களுக்குச் சொன்னான். கெய்லா அனிச்சையில் தனது கையால் வாயை மூடிக்கொண்டாள். அவளது கண்கள் விரிந்துபோயின. நான் கெய்லாவின் கையைப் பற்றி உட்கார வைத்தேன். பின்பு மெதுவாக “அது தண்டனைக்குரிய குற்றமென்று எங்களுக்குத் தெரியாது” என்றேன். அதிகாரி உதடுகளை இறுக மடித்தவாறே மேலும் கீழும் தலையாட்டினான். உங்களுக்குத் தெரியாததற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்பது போலிருந்தன அவனது அசைவுகள். நான் அதிகாரியிடம் “இந்தப் புத்தர் உருவம் முதுகில் பச்சை குத்தப்படவில்லை. இது ஒருவகையான இரசாயான வர்ணத்தால் வரையப்பட்டது. சிலமாதங்கள் வரைதான் இது உடலில்இருக்கும், பிறகு அதுவாகவே அழிந்துவிடும்” என்று உண்மையைச் சொன்னேன். “அதுவரை இந்தப் பெண் இலங்கையில் இருக்கமுடியாது, அப்படி இருப்பதானால் சிறையில்தான் இருக்க வேண்டும்” என்றான் அதிகாரி. அதிகாரி சொல்லி, சொன்ன வாயை மூட முன்பாகத் தனது கைப்பையைத் தூக்கி மேசையில் ஓங்கி அடித்துக்கொண்டு மறுபடியும் கெய்லா ஆவேசத்துடன் எழுந்தாள். " இல்லை…நாங்கள் இலங்கையில் இருக்க விரும்பவில்லை, நாங்கள் உடனேயே நாட்டைவிட்டு வெளியேறிவிடுகிறோம்" அதிகாரி கெய்லாவை முறைத்துப் பார்த்தான். கெய்லா விறுவிறுவென வெளியே நடந்தாள். அவளைத் தடுப்பதுபோல வாசலிலிருந்த பொலிஸ்காரன் அவள் எதிரே வேகமாக வந்தபோது தனது கையால் அவனது தோளைக் கெய்லா தட்டிவிட்டாள். பொலிஸ்காரன் அப்படியே சிலைபோல நின்று அதிகாரியைப் பார்த்தான். கெய்லாவுக்கு கோபம் வந்தால் அவளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. சினம் கொண்ட பெண்தெய்வம் போல நடந்துகொள்வாள். விளைவுகளைக் குறித்து அந்தத் தருணத்தில் கொஞ்சமும் கவலைப்படமாட்டாள். பின்னொரு பொழுதில் “நான் அப்போது ஏன் அவ்வாறு நடந்துகொண்டேன் என்பது உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை” என்பாள். கெய்லா பொலிஸ் நிலைய வாசலில் நின்றுகொண்டு என்னை நோக்கி ’“வா போய்விடுவோம், என்ன செய்துவிடுவார்கள் பார்த்துவிடலாம்” என்று பிரஞ்சு மொழியில் கத்தினாள். நான் “இதே வருகிறேன்” எனச் சொல்லிவிட்டு அதிகாரியைப் பார்த்தேன். அதிகாரி தலையைச் சாய்த்து என்னை உட்காரச் சொன்னான். எங்கள் இருவரது பெயர், பாஸ்போர்ட் விபரங்களையும் கண்டி நகரத்தில் நாங்கள் தங்கியிருந்த விடுதியின் முகவரியையும் தொலைபேசி இலக்கத்தையும் என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டான். உடனடியாகவே நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் கொடுத்திருந்த விபரங்களைச் சரிபார்த்தான். பின்பு “அந்தப் பெண் நாட்டிலிருந்து இன்னும் இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும். அல்லது இந்த நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தாலும் அவள் கைதுசெய்யப்படுவாள்” எனச் சொல்லிவிட்டு ‘நீ போகலாம்’ என்பதுபோல வாசலை நோக்கிக் கையைக் காட்டினான். நான் வாசலை நோக்கி நடந்தபோது அதிகாரி எனக்கு முன்பாகச் சென்றான். வாசலில் நின்ற பொலிஸ்காரனின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிய அதிகாரி " இந்த வெள்ளைச் சரக்கு லாபிள் பழம்போல இருக்கிறாள், அவளால் தொடப்பட்ட நீ அதிர்ஷ்டசாலி" என்று சொன்னது எனக்குக் கேட்டது. அந்தப் பொலிஸ்காரன் ‘க்ளுக்’ எனச் சிரித்தான். அதிகாரி வேகவேகமாக நடந்துபோய் ஜீப்பில் தொற்றிக்கொண்டான். நானும் கெய்லாவும் வண்டியில் கண்டிக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது செக்கலாகிவிட்டது. ஆபத்தான மலைவளைவுப் பாதையில் வண்டி மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. அதலபாதாளங்களில் விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னிக்கொண்டிருந்தன. கெய்லா எனது தோளில் சாய்ந்திருந்தாள். சில பெருமூச்சுகளை வெளியிட்டுவிட்டு “நான் பொலிஸ் நிலையத்தில் அப்படி நடந்துகொண்டிருக்கக் கூடாது, அதனால் உனக்கு ஏதும் கஷ்டம் ஏற்படலாம் என நான் சிந்திக்கவேயில்லை, நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் என எனக்கு உண்மையிலேயே புரியவில்லை” என்றாள். நான் சாரதி கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு ஓசையெழுப்பாமல் கெய்லாவை முத்தமிட்டேன். வழியில் ‘போகம்பர’சந்தியில் வண்டியை நிறுத்தி தேநீர் குடித்தோம். “நான் கீழே இறங்கவில்லை” எனச் சொல்லிவிட்டு வண்டிக்குள் அமர்ந்தவாறே கெய்லா தேநீர் அருந்தினாள். எங்களது வண்டிக்கு இடதுபுறத்தில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட ’சிறைக்குச் செல்லும் வழி’ யை அறிவிக்கும் பலகை இருந்தது. அந்தச் சந்தியிலிருந்து கிளைக்கும் பாதையொன்று இலங்கையின் மிகப் பெரியதும் பழமை வாய்ந்ததுமான சிறைச்சாலையை நோக்கிச் செல்கிறது. நான் கெய்லாவிடம் “இந்தச் சிறையில்தான் என் இளமைக்காலத்தின் ஆறுவருடங்களை நான் கழித்தேன்” என்றேன். நாங்கள் கண்டி நகரத்தை நெருங்கும்போது தலதா மாளிகையின் ‘பத்திரிப்புவ’ கோபுரம் முழுவதுமாக அலங்கார விளக்குகளால் இழைக்கப்பட்டு ஒளி பரப்புவதைக் கண்டோம். எங்களது விடுதிக்குள் நாங்கள் நுழைந்தபோது வரவேற்புப் பகுதியிலிருந்த பெண், இரண்டு பொலிஸ்காரர்கள் வந்து எங்களைக் குறித்து விசாரித்துவிட்டுப் போனதாகச் சொன்னாள். அதைக் கேட்டதும் தனது கால்களை அகல விரித்து நின்று இடுப்பில் தனது கைகளை ஊன்றியவாறு கெய்லா என்னைப் பார்த்தாள். பிறகு கைகளைத் தளர்த்திக்கொண்டு தலையைச் சடாரென மார்பை நோக்கிக் கவிழ்த்து பெருமூச்சு விட்டாள். அதிகாலையிலேயே நாங்கள் விடுதியைக் காலி செய்துகொண்டு கொழும்புக்குப் புறப்பட்டோம். கெய்லா தனது முதுகை முழுவதுமாக மறைக்கும்வகையில் சட்டையணிந்திருந்தாள். வியட்நாமில் வாங்கிய காவிநிறப் பட்டுச் சால்வையைக் கழுத்தில் சுற்றியிருந்தாள். எட்டுமணியளவில் கொழும்புக்கு வந்துவிட்டோம். கடற்கரையோரமாக இருந்த ஒரு விடுதியில் மதியம்வரை அடித்துப்போட்டது போல தூங்கினோம். தூக்கத்தால் எழுந்ததும் “கொஞ்சம் கஞ்சா வேண்டும்” எனக் கெய்லா கேட்டாள். அதை எங்கே வாங்குவது என எனக்குத் தெரியவில்லை. அவளது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. உச்சி வெயிலில் வெளியே கிளம்பினோம். அந்த வெப்பத்திலும் கெய்லா தனது தோள்களில் காவிநிறச் சால்வையை விரித்துப் போட்டிருந்தாள். அந்தச் சால்வை அவளது முதுகை முழுவதுமாக மறைத்து அவளது இடுப்புவரை தொங்கியது. “வெக்கையாக இருக்கிறது அதை எடுத்துவிடு” என்றேன். “இல்லை எனக்குச் சற்றுக் குளிராகயிருக்கிறது” என்றாள். விமானப் பயணச் சீட்டு அலுவலகத்துக்குச் சென்று “எங்களது பயணத் தேதியை மாற்றவேண்டும், நாளைக்கே நாங்கள் பிரான்ஸுக்கு அவசரமாகப் புறப்பட வேண்டும்” என்றோம். நல்வாய்ப்பாக, அடுத்தநாள் இரவு புறப்படும் விமானத்திலேயே எங்களுக்கு இடம் கிடைத்தது. மறுபடியும் விடுதி அறைக்கு வந்தோம். கெய்லா மிகவும் சோர்ந்து போயிருந்தாள். இருவரும் அருகருகாகக் கட்டிலில் கிடந்தோம். கெய்லாவின் கண்களில் நீர் வடிந்துகொண்டிருந்தது. நான் அவளது கண்களைத் துடைத்துவிட்டு அவளது பச்சைநிறக் கண்மணிகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது கெய்லா “நான் உன்னை உனது கிராமத்திற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறேன்” என்று எனது காதுக்குள் சொன்னாள். நான் எதுவும் பேசாமலிருந்தேன். கெய்லா கட்டிலிலிருந்து துள்ளி எழுந்து தரையில் நின்றாள். அவள் அணிந்திருந்த மேற்சட்டையைக் கழற்றித் தரையில் வீசியடித்தாள். பிய்த்து எறிவது போன்ற அவசரத்துடன் மார்புக் கச்சையையும் கழற்றித் தரையில் வீசினாள். பின்பு கட்டிலில் குப்புறப் படுத்துக்கொண்டாள். அவளது முதுகின் வலதுபுற மேற்பகுதியில் புத்தர் தியான நிலையிலிருந்தார். நான் கூர்ந்து கவனித்தபோது புத்தர் மேலும் கீழுமாகச் சற்று அசைந்தார். கெய்லாவிடம் அழகிய சிறிய ஒப்பனைப் பெட்டியொன்றிருந்தது. அந்தப் பெட்டியைத் திறந்து அதனுள்ளிருந்த ஒரு குறிப்பிட்ட குப்பியை எடுக்குமாறு கெய்லா என்னிடம் சொன்னாள். அந்தச் சிறிய குப்பியில் எரிசாராய வாசனையுடன் வெண்ணிறத் திரவமிருந்தது. அந்தத் திரவத்தைத் தனது முதுகில் ஊற்றி புத்தரின் உருவத்தை அழித்துவிடுமாறு கெய்லா சொன்னாள். “கெய்லா, நான் சொல்வதைக் கேள்! இது தேவையில்லை, நாங்கள் நாளையே இங்கிருந்து போய்விடப் போகிறோம்” என்றேன். கெய்லா தனது தலையைத் தூக்கி என்னைப் பார்த்து “இல்லை…நாங்கள் நாளைக்குப் போகவில்லை” என்றாள். மூன்றாவது நாள் அதிகாலையில் யாழ்ப்பாணத்தை நோக்கிப் புறப்பட்டோம். அந்தத் தனியார் சொகுசுப் பேருந்தில் நாங்கள் இரண்டு முன் இருக்கைகளைக் கோரிப் பெற்றிருந்தோம். அந்த இருக்கைகளிலிருந்து பேருந்தின் முன்கண்ணாடி வழியே நிலவியல் காட்சிகளையும் சிறு நகரங்களையும் கிராமங்களையும் பார்த்தவாறே பயணித்தோம். கெய்லா எனது தோளில் சாய்ந்திருந்தாள். அவள் கையில்லாத, பாதி முதுகு தெரியும் செம்மஞ்சள் நிற பனியன் அணிந்திருந்தாள். அவளது வலதுபுற முதுகின் மேற்பகுதியில் உள்ளங்கையளவான இடம் கடுமையாகச் சிவந்திருந்தது. சிவப்பின் ஓரங்களில் தோல் சற்றுத் தடித்துக் கறுத்திருந்தது. நான் அந்தக் கறுப்பையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். காடு என் ஞாபகத்தில் வந்தது. என்னுடைய பதினெட்டாவது வயதில் அந்தச் சம்பவம் நடந்தது. அந்தச் சம்பவத்தை இந்த உலகத்தில் நான்கு பேர்கள் மட்டுமே அறிந்திருந்தோம். இப்போது என்னைத் தவிர மற்றவர்கள் யாரும் உயிருடனில்லை. 1977ம் வருடம் நிகழ்ந்த இனக்கலவரம் மலையகத்தைக் கடுமையாகப் பாதித்திருந்தது. கூட்டம் கூட்டமாக மலையகத் தமிழர்கள் வடக்கை நோக்கி இடம்பெயரத் தொடங்கினார்கள். இந்த இடப்பெயர்வுக்கு அரசாங்கம் பலவழிகளிலும் முட்டுக்கட்டை போட்டதால் இடப் பெயர்வு மெதுவாகவே நடைபெற்றது. வருடம்தோறும் அகதிகள் வந்துகொண்டிருந்தார்கள். ‘காந்தீயம்’ அமைப்பின் தொண்டர்கள் வன்னிக் காடுகளை அழித்துப் புதிய குடியிருப்புகளை உண்டாக்கி, வந்துகொண்டிருந்த மலையகத் தமிழர்களைக் குடியமர்த்திக் கொண்டிருந்தார்கள். எனது கிராமத்திலிருந்து நானும் இன்னும் மூன்று இளைஞர்களும் புறப்பட்டு, வன்னிக்குச் சென்று காந்தீயம் அமைப்பில் தொண்டர்களாகப் பதிவு செய்துகொண்டோம்.  ‘செல்வா நகர்’ என்ற புதிய குடியிருப்புக்காகக் காடு வெட்டிக்கொண்டிருந்த தொண்டர் குழுவுடன் நாங்கள் சேர்ந்துகொண்டோம். வவுனியாவிலிருந்து வடக்குநோக்கிச் செல்லும் கண்டி வீதியின் இருபத்திநான்காவது கிலோமீற்றரில் புளியங்குளம் இருக்கிறது. புளியங்குளத்திலிருந்து இன்னும் சில கிலோமீற்றர்கள் தொலைவில் கண்டி வீதியையொட்டி ‘செல்வா நகர்’ உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அய்ம்பது குடும்பங்களை அங்கே குடியேற்றுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஒருநாள் மாலையில் வேலைகள் முடிந்த பின்பாகத் தொண்டர்கள் புளியங்குளத்திற்குத் திரும்பினார்கள். நானும் இன்னும் இரண்டு தோழர்களும் மட்டும் கண்டி வீதியிலிருந்து பத்து மீட்டர்கள் தூரம் விலகி ஒரு குழி தோண்டிக்கொண்டிருந்தோம். அந்தக் குடியேற்றத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் வரப்போவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது. எனவே விடிவதற்குள் அந்த இடத்தில் ‘செல்வா நகர்’ என்றெழுதப்பட்ட கல்லை நடுவதாகயிருந்தோம். மூன்று அடிகள் ஆழத்திற்குத் தோண்டியதன் பின்னாக மண்வெட்டி மீண்டும் மீண்டும் கல்லில் மோதியது. கைகளால் மணலை விலக்கிப் பார்த்தபோது உள்ளே ஒரு சிலையிருப்பதாகத் தெரிந்தது. நாங்கள் மூவரும் வேகமாக மணலை வாரிக்கொட்டியபோது ஆறு அடிகள் உயரமான சிலையொன்று குப்புறக் கிடப்பதைக் கண்டோம். மிகுந்த பிரயாசைப்பட்டு அந்தச் சிலையைப் புரட்டிப் போட்டபோது, புராதன புத்தர் சிலையொன்றை நாங்கள் கண்டோம். உடனேயே இலைதழைகளால் புத்தரை மூடி வைத்தோம். நான் வேக வேகமாகச் சைக்கிளை மிதித்துக்கொண்டு புளியங்குளத்தை நோக்கிச் சென்றேன். ‘செல்வா நகர்’ குடியேற்றத் திட்டத்துக்குப் பொறுப்பான அத்தனாஸ் பாதிரியார் அங்கேதானிருந்தார். அவரிடம் நான் புத்தர் சிலை குறித்த செய்தியைச் சொன்னதும் “ஆண்டவரே!” என வாய்விட்டுக் கூவிய பாதிரியார் மார்பில் சிலுவைக் குறியிட்டுக்கொண்டார். எனது சைக்கிளில் பாதிரியாரையும் ஏற்றிக்கொண்டு செல்வா நகருக்குத் திரும்ப வந்தேன். அத்தனாஸ் பாதிரியார் குழிக்குள் இறங்கி, புத்தர் சிலையைச் சோதித்தார். தனது சட்டைப் பையிலிருந்து சிறிய குறிப்புப் புத்தகத்தை எடுத்து அதில் கிறுக்கலான ஆங்கில எழுத்துகளில் கடகடவென எழுதினார். பின்னர் அவர் ஒரே தாவலில் குழியிலிருந்து மேலே வந்தார். எங்கள் மூவரையும் ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு “இந்தச் செய்தி வேறு யாருக்காவது தெரியுமா?” எனக் கேட்டார். இல்லையென்றோம். பாதிரியார், வெட்டப்பட்டு விழுந்து கிடந்த மரமொன்றின் மீது அமர்ந்துகொண்டு தனது காற்சட்டையில் ஒட்டிக்கிடந்த மணலைத் தட்டிவிட்டார். பின்பு தாழ்ந்த குரலில் எங்களிடம் இப்படிச் சொன்னார்:  “இங்கே புத்தர் சிலை கிடைத்த செய்தி அரசாங்கத்துக்குத் தெரியவந்தால் இந்த இடத்தில் முன்னொருகாலத்தில் சிங்களவர்கள் வாழ்ந்ததற்கான தடயம் இதுவென அவர்கள் சொல்வார்கள். புத்த பிக்குகள் வழிபாட்டிற்காக இங்கே வருவார்கள். சிங்களத் தொல்பொருள் ஆய்வாளர்கள் இங்கே படையெடுப்பார்கள். வன்னிமண் தமிழர்களது பாரம்பரிய நிலம் என்பதை அவர்கள் மறுப்பார்கள். அது நல்லதல்ல… ஆகவே இந்தச் சிலையைக் காதும் காதும் வைத்ததுபோல அழித்துவிடுங்கள்!” அன்று இரவு, நாங்கள் மூன்றுபேரும் கயிறுகளால் புத்தரைப் பிணைத்து நடுவே பலமான இரும்புக் கம்பிகளைச் செருகி, புத்தரை அடர்ந்த காட்டிற்குள் தூக்கிச் சென்றோம். புத்தரைக் கீழே போட்டுவிட்டு, நான் அலவாங்கால் முதல் அடியை புத்தரின் மார்பில் இறக்கினேன். சிலையிலிருந்து ‘கிலுங் கிலுங்’ எனச் சில்லறை நாணயங்கள் குலுங்குவது போல ஒலி எழுந்தது. அலவாங்கு என் கைகளிலிருந்து துள்ளப் பார்த்தது. ஏதோ நூதனமான கல்லில் சிலையை உருவாக்கியிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். மூன்றாவது அடியில் புத்தரின் மார்பு இரண்டாகப் பிளந்தது. நாங்கள் மூவரும் ஆள்மாறி ஆளாக அடித்து அந்தச் சிலையைத் தூள் தூளாக்கினோம். ஒவ்வொரு அடிக்கும் ‘கிலுங் கிலுங்’ என்ற ஒலி எழுந்துகொண்டேயிருந்தது. சிலையைச் சல்லிக் கற்களாகச் சிதைத்தோம். அந்தக் கற்களைகாட்டின் எல்லாத் திசைகளிலும் சில்லஞ் சில்லமாகக் குழிதோண்டிப் புதைத்தோம். அங்கேயொரு புத்தர் சிலையிருந்ததற்கான எந்தத் தடயத்தையும்விட்டுவைக்க நாங்கள் விரும்பவில்லை. இவ்வளவையும் செய்து முடிக்கும்போது பொழுது விடிந்துவிட்டது. தூங்கச் செல்லாமல் அப்படியே வந்து அந்த விடிகாலையில் ‘செல்வா நகர்’ என்ற பெயர்க் கல்லை நாங்கள் தோண்டிய குழியில் நாட்டினோம். கெய்லா ஆர்வத்துடன் நிலவியல் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பேருந்து கண்டிவீதியால் புளியங்குளத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. இந்த இருபத்தைந்து வருடங்களில் அந்தப் பகுதிகளில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. வீதியோரத்தில் சில வாகனங்கள் எரிந்து கிடந்தன. ஆள்நடமாட்டமே இருக்கவில்லை. நான் வீதியையே உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தேன். அந்த வீதியின் ஒவ்வொரு கல்லும் எனக்குப் பரிச்சயமானது. அந்த வீதியின் ஒவ்வொரு மேடுபள்ளத்திலும் எனது சைக்கிள் நூற்றுக்கணக்கான தடவைகள் பயணித்திருக்கிறது. வீதியோரத்தில் நின்றிருந்த மரங்கள் ஒவ்வொன்றையும் நான் அறிவேன். பேருந்து இன்னும் இரண்டு நிமிட நேரத்தில் ’செல்வா நகரை’க் கடக்கும் என நான் அனுமானித்தபோது எனது கண்களை இறுக மூடிக்கொண்டேன். தூங்குவதுபோல தலையை இருக்கையில் சாய்த்துக்கொண்டேன். சரியாக இரண்டு நிமிடங்களில் பேருந்து நிறுத்தப்பட்டது. நான் கண்களை மூடியவாறேயிருந்தேன். பேருந்துக்கு வெளியே ‘கிலுங் கிலுங்’ எனச் சத்தம் கேட்டது. “இந்த இடத்தில் ஒரு புத்தர் சிலை அமைக்கப்போகிறோம், அதற்குத் தர்மம் செய்யுங்கள்” என்ற குரல்கள் சிங்களத்தில் ஒலித்தன. நான் கண்களை இறுக மூடியவாறேயிருந்தேன். பேருந்து மறுபடியும் புறப்பட்டபோது கெய்லா எனது தோளில் சாய்ந்துகொண்டாள். நான் அவளது முதுகைத் தடவிக்கொடுத்தேன். அப்போது கெய்லாவின் வலதுபுறத் தோள் சடுதியில் உலுக்கிக்கொண்டதை எனது கை உணர்ந்தது. கெய்லாவிடமிருந்து ‘ஷ்..’ என மெல்லிய வேதனைக் குரல் எழுந்தது. அப்போது புத்தர் எனது உள்ளங்கைக்குள் இருந்தார். (குவர்னிகா – யாழ் இலக்கியச் சந்திப்பு மலரில் வெளியானது –ஜுலை, 2013) காணாமற்போனவர் எனக்கு எதிரே உட்கார்ந்திருந்த அந்த மனிதர், நான் தேடிக்கொண்டிருந்த பாவெல் தோழரைக் கொல்வதற்குத் தானே உத்தரவிட்டதாகச் சொல்லிவிட்டு ஒரு கோணல் சிரிப்புடன், பாதி நரைத்துப்போன அவரது மீசையில் படிந்திருந்த ‘பியர்’ நுரையை அழுத்தித் துடைத்துக்கொண்டார். நான் அவரையே வெறித்துப் பார்த்தவாறு இருந்தேன். இந்தக் கதை இன்னும் அய்ந்து நிமிடங்களில் முடியவிருக்கிறது. இந்தக் கதை இப்படித்தான் ஆரம்பித்தது. சென்ற கோடை காலத்தில் எனது அப்பா சென்னையில் இறந்துபோனார். அம்மா வேளாங்கண்ணி கோயிலுக்குப் போய்விட்டு மறுநாள் திரும்பி வந்தபோது, கதவு உட்புறமாகத் தாழிடப்பட்டிருந்த வீட்டுக்குள் அப்பா தரையில் விழுந்து இறந்து கிடந்தார். காவற்துறை வந்து பூட்டை உடைக்க வேண்டியிருந்தது. அம்மா தனித்துப் போனார். அய்ந்து பிள்ளைகளைப் பெற்றிருந்தும் அப்பாவை இடுகாட்டில் அடக்கம் செய்தபோது அம்மாவின் அருகில் நாங்கள் யாருமிருக்கவில்லை. அப்பாவின் அடக்கம் முடிந்த நான்காவது நாள் நான் பாரிஸிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டேன். அந்த அதிகாலை நேரத்திலும் என்னை வழியனுப்ப சுகன், தேவதாசன், அருந்ததி, சத்தியன் ஆகியோர் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது ஓட்டமும் நடையுமாகத் தோழர் சவரியான்  வந்து சேர்ந்தார். என்னைத் தழுவிய சவரியான் எனது கையை எடுத்துத் தனது மெலிந்த சிறிய கைகளில் பொத்திக்கொண்டார். செத்த வீட்டுக்குப் போவதற்கு விசா கொடுக்கக்கூட இந்தியத் தூதுவரகம் சுணக்கம் காட்டுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தோழர் சவரியான் என்னைச் சற்றுத் தனியாக வருமாறு அழைத்தார். நண்பர்களை விட்டுவிட்டு அவருடன் நான் தனியாகப் பேசப்போவது குறித்து நண்பர்கள் கோபப்படமாட்டார்கள். ஏனெனில் சவரியான் தேவைக்கு அதிகமாக இரகசியங்களைக் காப்பாற்றுபவர் என்பதையும் எப்போதும் தீவிரமான மனநிலையிலேயே இருப்பவர் என்பதையும் நண்பர்கள் அறிந்தேயிருந்தார்கள். நானும் சவரியானும் விமான நிலையக் கோப்பிக் கடையில் ஒதுங்கினோம். குரலைத் தாழ்த்தியபடியே  " உங்களுக்குச் செலவுக்குப் பணம் ஏதாவது தேவைப்படுகிறதா" எனச் சவரியான் கேட்டார். “இல்லைத் தோழர், எனது சகோதரர்கள் போதியளவு பணம் தந்திருக்கிறார்கள்” என்றேன். தலையை ஆட்டிக்கொண்ட சவரியான் குரலை மேலும் தாழ்த்திக்கொண்டு “நீங்கள் எனக்கொரு உதவி செய்ய வேண்டும்” என்றார். நான் நம்பிக்கை தொனிக்கத் தலையசைத்தேன். “நீங்கள் எப்போதாவது தோழர் பாவெல் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என என்னிடம் கேட்டார் சவரியான். “ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன். பாவெல் விலாசவ், ‘தாய்’ நாவலின் நாயகன் பாத்திரமது” என்றேன். சவரியான் மிகத் தீவிரமான பார்வையொன்றை எனது கண்களிற்குள் செலுத்திக்கொண்டே “தோழர் பாவெலின் மனைவியின் பெயர் பால்ராணி” என்றார். சென்னைக்கான விமானப் பறப்பு பதினொரு மணிநேரமாக இருந்தது. நான்  பால்ராணி  என்ற பெயரை மனதில் அழியாமல் திரும்பத் திரும்பப் பதிய வைத்துக்கொண்டேன். இனி எக்காலத்திலும் அந்தப் பெயர் எனது மனதிலிருந்து அகலாது. தோழர் சவரியான், பால்ராணி குறித்து ஒன்றிரண்டு குறிப்புகளைத்தான் சொல்லியிருந்தார். எனினும் அந்தக் குறிப்புகளை வைத்து பால்ராணி குறித்த சித்திரத்தை எனக்குள் நான் உருவாக்கிக்கொண்டேயிருந்தேன். இரக்கத்திற்குரிய அந்தப் பெண்ணைச் சந்திக்கும்போது நான் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென மனது ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தது. சவரியான் சரியாக முப்பத்தைந்து வருடங்களிற்கு முன்பு தனது இருபதாவது வயதில் பாவெலைச் சந்தித்திருக்கிறார். பாவெலுக்கு அப்போது இருபத்தைந்து வயதுகள் இருக்குமாம். பொலிஸாரால் தேடப்பட்டுக்கொண்டிருந்த சவரியான் வன்னிக் கிராமமொன்றில் தலைமறைவாக இருந்தபோது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பாவெலின் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. சவரியான் தமிழ் ஆயுத இயக்கமொன்றைச் சேர்ந்தவர். பாவெல் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்திருந்த மிகச் சிறிய ட்ரொட்ஸ்கிய கட்சியொன்றில் இயங்கிவந்தவர். சவரியானின் தலைமறைவுக் காலம் முழுவதும் பாவெல் சவுரியானுக்கு உதவி செய்துகொண்டிருந்திருக்கிறார். கடைசியில் சவுரியான் கைது செய்யப்பட்டபோது பொலிசாரின் சித்திரவதை பொறுக்க முடியாமல் தனக்கு உதவி செய்தவர் எனப் பாவெலைப் போலிஸாருக்கு சவரியான் காட்டிக்கொடுத்திருக்கிறார். பொலிஸார் பாவெலையும் கைது செய்தனர். பாவெல் ஒரு வருடம் சிறையிலிருந்திருக்கிறார். அய்ந்து வருடங்களிற்குப் பின்பு மட்டக்களப்புச் சிறையுடைப்பில் தப்பித்த சவரியான் இந்தியாவிற்குப் போய் அப்படியே பிரான்ஸ் வந்துவிட்டார். பாவெலைக் காட்டிக்கொடுத்த குற்றவுணர்வு சவிரியானிடம் இருந்து கொண்டேயிருக்கிறது. அவரது மரணம்வரை அந்தக் குற்றவுணர்வு அவரைத் தொடரும் என்றே நினைக்கிறேன். இந்தக் கதையை விமான நிலையத்தில் வைத்து சவரியான் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கையில் அவரது கண்களில் இகழ்ச்சி படர்ந்திருப்பதை நான் பார்த்தேன். அது சுய இகழ்ச்சி. சவரியான் பிரான்ஸ் வந்த பின்பும் பாவெலுடன் அவருக்குக் கடிதத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. ஒன்றிரண்டு முறைகள் சிறிது பணமும் அனுப்பி வைத்திருக்கிறார். பதிலுக்கு பாவெல் ‘பாட்டாளி குரல்’ பத்திரிகையை சவரியானுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்தப் பத்திரிகையின் பழைய பிரதிகள் சிலவற்றை அண்மையில் சவரியானின் வீட்டுப் புத்தக அலுமாரியில் நான் பார்த்திருக்கிறேன். படிக்கவே முடியாத ஒரு கொடுந்தமிழில் அப்பத்திரிகை மோசமான வடிவமைப்பில், மிக மோசமான தாளில் நான்கு பக்கங்களில் அச்சிடப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் பாவெலின் கதையை சவரியான் என்னிடம் சொன்னதில்லை. எண்பத்தாறு காலப்பகுதியில் பாவெலின் கட்சி தமிழ்ப் பகுதிகளில் தடை செய்யப்பட்டுவிட்டது. எண்பத்தெட்டில் சிங்களப் பகுதிகளிலும் அந்தக் கட்சி தடை செய்யப்பட அந்தக் கட்சி சிதைந்துபோனது. என்றாலும் கட்சியின் மிகச்சில உறுப்பினர்களுக்குள் தொடர்புகள் இருந்திருக்கின்றன. அவர்கள் சில இரகசியத் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டிருந்திருக்கிறார்கள். பிரான்ஸுக்கு வந்து இருபது வருடங்கள் கழித்து, 2004-ல் ஒரு மாதகால விடுமுறையில் சவரியான் இலங்கைக்குப் போனார். பாவெலைச் சந்திப்பது என்பது அவரது பயண நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக இருந்தது. அது சமாதான காலமாக இருந்ததால் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குச் செல்வதில் பெரிய பிரச்சினைகள் இருக்கவில்லை. சவரியான், பாவெலின் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது பொழுது பட்டுவிட்டது. பாவெலின் பழைய சிறிய வீடு வறுமையைப் போர்த்திருந்தது. பாவெலினதும் அவரது மனைவி பால்ராணியினதும் கண்களில் பஞ்சம் கவிந்திருந்தது. கையோடு எடுத்துச் சென்ற பொருட்களை பாவெல் முன் சவரியான் பரப்பி வைத்தபோது பாவெல் ஒவ்வொரு பொருளாக எடுத்து அது என்னவென்று கேட்டுக் கேட்டு எடுத்துப் பால்ராணியிடம் கொடுத்தார். அவர்களிற்குக் குழந்தைகள் இல்லை. அய்ம்பதாயிரம் ரூபாய் கட்டொன்றை எடுத்து பாவெலின் கைகளில் சவரியான் வைத்தார். பாவெலின் கைகளில் தயக்கத்தை உணர்ந்த சவரியான் பால்ராணியிடம் அந்தப் பணக்கட்டைக் கொடுத்தார். இரவு உணவிற்குப் பிறகு பாவெலிடம் பேசிக்கொண்டிருந்தபோது பாவெலுக்கு இன்னமும் அந்த இடதுசாரிக் குழுவுடன் தொடர்பிருக்கிறதா எனச் சவரியான் கேட்டார். பாவெல் ஒன்றும் பேசாமல் புன்னகைத்தார். பாவெல் தன்னிடம் மனம்விட்டுப் பேசத் தயங்குவது போல சவரியானுக்குத் தோன்றியது. இனம்புரியாத சோர்வுடன் சவரியான் நார்க் கட்டிலில் படுத்துக்கொண்டார். காலையில் முற்றத்திலிருந்த நார்க் கட்டிலில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். சில வார்த்தைகளை பாவெலிடம் சொல்ல வேண்டுமென சவரியான் நினைத்தார். பாவெல் புன்னகையுடன் சவரியான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். ‘இடதுசாரி அரசியல், வர்க்க அய்க்கியம் எல்லாம் இந்தக் காலத்திற்குச் சரிவராது’ என்று சவரியான் சொன்ன போது, பாவெல் வாயிலிருந்த புன்னகை மாறாமலேயே “பிரான்ஸில் முதலாளிகளிடம் வாங்கித் தின்ற உங்களது விசுவாசம் உங்களை இப்படிப் பேச வைக்கிறது” என்றார். சவரியான் திடுக்கிட்டுப் போனார். என்றாலும் சமாளித்துக்கொண்டு “இன்றைய முக்கிய பிரச்சினை இனப் பிரச்சினைதான்” என்றார். பாவெலின் வாயிலிருந்து ‘க்ளுக்’ என்ற சிரிப்புச் சத்தம் வந்தது. பிறகு சவரியானை ஓர் அற்ப பிராணிபோல பார்த்துவிட்டுச் சொன்னார்: “இருபத்தைந்து வருடங்களாக நீங்கள் மட்டுமல்ல, நானும் மாறவில்லை.” சவரியான் ஏனோ அப்போது அவமானமாக உணர்ந்தார். பாவெல் இருபத்தைந்து வருடங்களாக மாறாமலேயிருப்பது பாவெலின் அரசியல் முட்டாள்தனம் எனச் சவரியான் சொன்னார். பாவெல் வெறும் பாசாங்கு அரசியல் பேசிக்கொண்டிருப்பதாகவே அவருக்குத் தோன்றியது. சவரியான் இடைநிறுத்தாது கடகடவெனப் பேசிக்கொண்டேயிருந்தார். பேச்சின் போக்கில், புலிகளின் ‘நந்தவனம்’ அலுவலகத்துக்குச் சென்று தான் மனமுவந்து பெரும்தொகைப் பணத்தைக் கொடுத்ததைப் பற்றியும் சொன்னார். பாவெல் சடுதியில் எழுந்து நின்று “இதைச் சொல்லவா பிரான்ஸிலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள்?” எனக் கேட்டுவிட்டு விறுவிறுவென வீட்டுக்குள் போனார். அவர் திரும்பி வரும்போது அவரது கைகளில் சவரியான் கொடுத்த வெளிநாட்டுப் பொருட்களும் அந்தப் பணக்கட்டும் இருந்தன. அவற்றை அப்படியே சவரியான் அமர்ந்திருந்த நார்க் கட்டிலில் ’பொத்’தெனப் போட்டார். சவரியான் எழுந்து நின்றார். “தயவு செய்து இவற்றை எடுத்துக்கொண்டு போய்விடுங்கள்” பாவெல் நிலத்தைப் பார்த்துக்கொண்டு சொன்னார். சவரியான் தனது சிறிய பயணப் பையை எடுத்துக்கொண்டார். “காசை எடுங்கள்” என்று பாவெல் உறுமினார். சவரியான் திடீரென அச்சத்தை உணர்ந்தார். அது அச்சமல்ல, குற்றவுணர்வே என்று அடுத்த நிமிடமே சவரியான் நிதானித்துக்கொண்டார். மறுபேச்சில்லாமல் சவரியான் பணக்கட்டை எடுத்துக்கொண்டு படலையை நோக்கி நடந்தார். படலையைச் சாத்தும்போது வீட்டு வாசற்படியைப் பார்த்தார். அங்கே பாவெலைக் காணவில்லை. பால்ராணி நின்றிருந்தார். அந்தக் கிறவல் வீதியால் தலையைக் குனிந்தவாறே நடந்து பிரதான வீதிக்கு சவரியான் வந்தபோது அங்கே ஏற்கனவே பால்ராணி நின்றிருப்பதைக் கண்டார். அவர் ஏதோ குறுக்குப் பாதையால் அங்கே வந்திருக்க வேண்டும். இவரைக் கண்டதும் பால்ராணி அருகே வந்தார். இவர் ஒரு சொல்லும் பேசவில்லை. பையிலிருந்து பணக்கட்டை எடுத்துப் பால்ராணியிடம் கொடுத்தார். பால்ராணி அதை வாங்கிக் கொண்டு எதுவும் பேசாமல் வந்த வழியிலேயே திரும்பவும் சென்று மறைந்தார். சவரியான் பிரான்ஸ் திரும்பியதுமே ஒரு நீண்ட மன்னிப்புக் கடிதத்தை பாவெலுக்கு அனுப்பினார். ஒருமாதம் கழித்து வவுனியாவில் ‘போஸ்ட்’ செய்யப்பட்டிருந்த ஒரு தபால் சவரியானுக்கு வந்தது. அதற்குள் மட்டமான தாளில் அச்சிடப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரமிருந்தது. அந்தப் பிரசுரம் கொடுந்தமிழில் எழுதப்பட்டிருந்தது. இது நடந்து ஒரு வருடம் கழித்து தோழர் பாவெல் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டுக் காணாமற்போனார். பால்ராணியால் தனது கணவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. யுத்தம் மறுபடியும் உக்கிரமாகத் தொடங்கியபோது பால்ராணி இந்தியாவுக்கு அகதியாகச் சென்றார். அங்கிருந்து அவர் சவரியானுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் தோழர் பாவெல் காணாமற்போன செய்தியிருந்தது. அதன்பின்பு பால்ராணியிடமிருந்து கடிதம் எதுவும் சவரியானுக்கு வரவில்லை. பால்ராணி கும்மிடிப்பூண்டி அகதி முகாமிலே இருந்தார் என்ற செய்தி மட்டுமே சவரியானிடம் எஞ்சியிருந்தது. விமானத்திற்கு நேரமாகிக்கொண்டிருந்தது. கும்மிடிப்பூண்டி அகதி முகாமிற்குச் சென்று பால்ராணியைச் சந்தித்து, ‘தோழர் பாவெல் குறித்த செய்திகள் எதுவும் கிடைத்ததா’ என்று விசாரித்து வருமாறு சவரியான் என்னிடம் கேட்டுக்கொண்டார். ‘அந்தப் பெண் அங்கேதான் இன்னுமிருப்பார் என்பது சந்தேகமே’ என எனது வாய்வரை வந்த வார்த்தைகளை நான் சடுதியில் விழுங்கிக்கொண்டேன். “தோழர் பாவெல் இன்னும் உயிரோடுதான் இருப்பார் என்றே எனது மனம் சொல்கிறது, அவரை எதுவும் செய்திருக்கமாட்டார்கள்” என்று சவரியான் சொல்லும்போது அவருக்குக் கண்கள் சிவந்து நீர் கோர்த்திருந்தது. சென்னை விமான நிலையத்திற்கு அம்மா வந்திருந்தார். ஒரு பெரிய அழுகையுடன் அம்மா என்னை எதிர்கொள்வார் என நினைத்திருந்த எனக்கு அம்மாவின் அமைதியான புன்னகை நிம்மதியைக் கொடுத்தது. அப்பாவுக்கு முப்பத்தோராவது நாள் ‘திருப்பலி’ ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதிலிருந்து அம்மாவின் பேச்சு ஆரம்பித்தது. மற்றச் சகோதரர்கள் இந்தியா வர முடியாத நிலையை அம்மாவுக்குச் சொன்னேன். “ஒரு ஆள் வந்தால் போதும்தானே, எல்லோரும் வந்து எதற்கு வீண்செலவு” என்றார் அம்மா. “செத்தவன் குண்டி வடக்காலே போனாலென்ன தெற்காலே போனாலென்ன” என்று அப்பா அடிக்கடி சொல்வது ஞாபகத்திற்கு வந்தது. கார் அண்ணா நகர் வளைவுக்குள் நுழைந்தது. அந்த வளைவை அப்படியே நகர்த்தி வைக்க முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன எனச் சாரதி சொன்னார். அடுத்த நாளே ஒரு வாடகை வண்டியை அமர்த்திக்கொண்டு நான் கும்மிடிப்பூண்டிக்குப் போனேன். வெயில் பற்றி கும்மிடிப்பூண்டியின் நிலம் எரிந்துகொண்டிருந்தது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இலங்கை அகதிகள் முகாம் இருந்தது. முகாமிற்குள் நுழைவது சுலபமான வேலையாக இருக்கவில்லை. சொந்தக்காரர்களைத் தேடி பிரான்ஸிலிருந்து வந்திருக்கிறேன் எனப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சொன்னேன். பால்ராணி என்ற பெயரில் அங்கே யாருமே இல்லை என அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். முகாமிற்கு வெளியே ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்துகொண்டேன். அந்தப் பகுதி முழுவதும்அகதிகள் நிரம்பியிருந்தார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் அகதிக் குடும்பங்கள் அங்கிருந்தன. எதிர்ப்பட்டவர்களிடம் நான் பேச்சுக்கொடுத்தபோது முதலில் சற்றுத் தயங்கினாலும் பின்பு ஆர்வமாக என்னோடு  பேசினார்கள். சிலர் என்னை, அவுஸ்ரேலியாவிற்கு படகில் அனுப்பும் ஏஜென்ட் என்று நினைத்து அவர்களாகவே வலிய வந்து பேசினார்கள். அவுஸ்ரேலியாவிற்குப் படகில் போவது குறித்து அங்கே பேச்சு அலைந்துகொண்டிருந்தது. அவர்கள் ஒவ்வொருவரிடமும் பால்ராணி குறித்து நான் விசாரித்தேன். யாருக்குமே பால்ராணியைத் தெரிந்திருக்கவில்லை. கடைசியில் நாவாந்துறையைச் சேர்ந்த ஒரு பெண்மணியிடமிருந்து ஒரு தகவல் கிடைத்தது. சன்னமான குரலையுடையவரும் ஆனால் யாருடனும் அதிகம் பேசாதவரும் ஒல்லியானவருமான ஒரு பெண்மணி தனியாக இங்கே இருந்திருக்கிறார். இரண்டு வருடங்களிற்கு முன்பு அவர் காணாமற் போய்விட்டாராம். அவரது பெயர் பால்ராணி என்பதாகவே தனக்கு ஞாபகம் இருப்பதாக அந்தப் பெண்மணி என்னிடம் சொன்னார். காணமற்போன அகதி ஒருவரை எப்படித் தேடுவது? அவர் வெளிநாடு ஒன்றிற்குச் சென்றிருக்கலாம், இலங்கைக்குத் திருப்பிச் சென்றிருக்கலாம், பசுபிக் சமுத்திரத்திலே படகுடன் மூழ்கியிருக்கலாம், எங்கேயாவது பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து அடையாளமற்றவராகப் போயிருக்கலாம், ஏதாவது மனநோய் விடுதியில் பெயரற்றவராக இருக்கலாம், கொலை கூடச் செய்யப்பட்டிருக்கலாம். இவற்றில் எந்தச் செய்தியை நான் தோழர் சவரியானுக்கு எடுத்துச் செல்வது! இதற்கு அடுத்தநாள் காலையில் நான் அம்மாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது ‘அம்மா இனி என்ன செய்யப் போகிறார்’ எனக் கேட்டேன். அம்மாவும் அப்பாவும் பதினேழு வருடங்களிற்கு முன்பு அகதிகளாகப் படகில் வந்து இராமேஸ்வரத்தில் இறங்கியவர்கள். இலங்கைக்குத் திரும்பிச் செல்லப்போவதாக அம்மா சொன்னார். அந்தப் பதில் எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. ‘அங்கே காணி பூமி இருக்கிறதுதானே’ என நான் வாய்க்குள் முணுமுணுத்தேன். அம்மாவிற்கு வயது போனாலும் காது கூர்மையாகவே கேட்கிறது.  “என்னுடைய செத்த வீட்டுக்காவது நேரகாலத்தோடு யாராவது ஒரு ஆள் வந்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு அம்மா புன்னகைத்தார். எனக்கு நெஞ்சை அடைக்குமாற்போல இருந்தது. சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டேன். எதிரே அப்பாவின் படத்திற்கு முன்பு ஒரு வெள்ளிக் குவளையில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. அப்போது நெடிய உயரமும்,  சற்றுப் பருத்த உடலும் கொண்ட அந்த மனிதர் வீட்டு வாசற்படியில் நின்று செருப்புகளைக் கழற்றியவாறே என்னைப் பார்த்துச் சிரித்தார். பாதி நரைத்திருந்த , அடர்ந்த மீசைக்குக் கீழே அவரது பற்கள் நம்ப முடியாத வெண்மையில் பளீரிட்டன. தூய வெள்ளைச் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தார். கையில் ஒரு துணிப்பை வைத்திருந்தார். அவரைக் கண்டதும் அம்மா “வாங்க அம்மான்” என வரவேற்றார். ’“அம்மான் இவன்தான் என்னுடைய இரண்டாவது மகன், பிரான்ஸில் இருக்கிறவன்” ‘அம்மான்’ என அழைக்கப்பட்ட அந்த மனிதர்தான் அப்பா இறப்பதற்கு முன்பாக அப்பாவைக் கடைசியாகப் பார்த்த மனிதர். அப்பா இறந்த இரவு அந்த மனிதரும் அப்பாவும் வீட்டிலிருந்து மதுவருந்தியிருக்கிறார்கள். எட்டு மணியளவில் இந்த மனிதர் இங்கிருந்து சென்றிருக்கிறார். வெளியே நின்றுகொண்டு அப்பாவிடம் கதவை உட்புறமாகத் தாழிட்டுக்கொள்ளுமாறு இந்த மனிதர் சொல்லியிருக்கிறார். உள்ளே தாழிடும் சத்தத்தையும் கேட்டிருக்கிறார். இந்த மனிதர் வளசரவாக்கத்தில் இருப்பதாக அம்மா சொல்லியிருக்கிறார். வளசரவாக்கத்தில்  இலங்கைப் பலசரக்குக் கடை ஒன்றிருக்கிறது. அந்தக் கடைக்கு அப்பா அடிக்கடி போவதுண்டு. அந்தக் கடையின் உள்ளே இரகசியமாக இலங்கை ‘மெண்டிஸ்’ சாராயம் விற்பார்களாம். அங்கேதான் இந்த மனிதர் அப்பாவுக்கு நண்பராகியிருக்கிறார். வளசரவாக்கத்திலிருந்து இரண்டு நாட்களுக்கொரு முறை அப்பாவைப் பார்ப்பதற்காக இந்த மனிதர் ‘பஸ்’ பிடித்து அண்ணா நகருக்கு வருவராம். நான் எழுந்து நின்று அம்மான் என அழைக்கப்பட்ட அந்த மனிதருடன் கை குலுக்கிக்கொண்டேன். அம்மான் தனது இடது கையால் எனது தோளைத் தட்டிக்கொடுத்தார். அம்மான் ஒருகாலத்தில் பலசாலியாக இருந்திருக்க வேண்டும் என்பதை அந்தத் தொடுகை எனக்கு உணர்த்தியது. அம்மான் நாற்காலியில் அமர்ந்துகொண்டு எனது சுகபலன்களை விசாரித்தார். சென்னையில் ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் தன்னிடம் தயங்காது சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். இறந்துபோன அப்பாவைக் குறித்துப் பேசிக்கொண்டேயிருந்தார். இடையிடையே தனது கண்களைத் தடவிக்கொண்டார். அவர் பேசும்போது அவரது வாயிலிருந்து எச்சில் தெறித்தது. “தம்பி உங்களது அப்பா K-8 போல மன பலமுள்ளவர். அவரை மரணத்தால் நெருங்கியிருக்கவே முடியாது. அன்று இரவு ஒருவர் கூடயிருந்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும்” என்றார். அம்மா எழுந்து சமையலறைக்குள் போனார். “K-8 ?” என்று கேட்டுக்கொண்டே அம்மானைப் பார்த்தேன். அம்மான் புன்னகைத்துக்கொண்டே “அது உங்களிற்கு விளங்காது. அது இயக்கத்தில் முக்கியமான ஒரு தளபதியைக் குறிக்கும் சங்கேதச் சொல்” என்றார். நான் எழுந்து தண்ணீர் எடுப்பதற்காகச் சமையலறைக்குள் சென்ற போது அம்மா என்னைச் சைகையால் அருகே அழைத்து அம்மான் என்ற அந்த மனிதர் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் என்று என்னிடம் முணுமுணுப்பாகச் சொன்னார். சற்று யோசித்துவிட்டு “நானும் இயக்கத்தில் இருந்தது அவருக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். “இல்லை…நாங்கள் சொல்லவில்லை” என்றார் அம்மா. தண்ணீர் செம்பை எடுத்துச் சென்று அம்மான் முன்னே வைத்துவிட்டு உட்கார்ந்தேன். அம்மான் செம்பை எடுத்து  வாசற்படியை நோக்கித் தண்ணீரைச் சற்றுச் சிந்திவிட்டு செம்பைத் தூக்கி அண்ணாந்து ஒரே மூச்சில் தண்ணீரைக் குடித்து முடித்துவிட்டு வெறும் செம்பைக் கீழே வைத்தார். “அம்மான் நீங்கள் எந்தக் காலப் பகுதியில் இயக்கத்தில் இருந்தீர்கள்?” எனக் கேட்டேன். அம்மான் புன்னகையுடன் என்னைப் பார்த்தார். “அம்மா சொன்னார்” என்றேன். அம்மான் தலையை மேலும் கீழுமாக ஒருதடவை சுற்றிக்கொண்டார், சமையலறையைப் பார்த்து “அக்கா இன்னும் எத்தனை பேரிடம் இப்படிச் சொல்லியிருக்கிறீர்கள்” எனச் சத்தம் கொடுத்தார். அம்மாவிடமிருந்து பதிலில்லை. “கடைசி வரை, முள்ளிவாய்க்கால்வரை இயக்கத்தில் இருந்தேன்” என்றார் அம்மான். “எப்போது இயக்கத்துக்குப் போனீர்கள்?” அம்மான் உதட்டை மடித்துச் சிரித்தார். பின்பு “எண்பத்து மூன்றுக்கு முதலே இயக்கத்தில் சேர்ந்தவர்களைத்தானே ‘அம்மான்’ என்பார்கள்” என்றார். “நானும் எண்பத்து மூன்றிலிருந்து எண்பத்தாறுவரை புலிகள் இயக்கத்தில் இருந்திருக்கிறேன்” என்றேன். “தெரியும்” என்றார் அம்மான். “நான் உங்களைப் பார்த்ததில்லையே…எந்த ஏரியாவில் இருந்தீர்கள்?” அம்மான் மறுபடியும் புன்னகைத்தார். “உங்களை எனக்குத் தெரியும், ஆனால் உங்களுக்கு என்னைத் தெரியாது. நான் புலனாய்வுத்துறை. பொட்டரோடு நின்றேன். உங்களைக் குறித்து இயக்கத்திற்குள் ஒரு சந்தேகம் வந்தபோது உங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு என்னிடம்தான் இருந்தது” என்றார் அம்மான். பதினொரு மணிக்கே வெயில் உச்சிக்கு வந்துவிட்டது. “அம்மான் வாருங்கள் வெளியே போய் குளிர்ச்சியாக ஏதும் குடித்துவிட்டு வருவோம்” என்றேன். அம்மான் எழுந்திருந்தார். நாங்கள் வெளியே போகும் போது “சமையல் முடிகிறது, சாப்பிடுவதற்கு நேரத்திற்கு வாருங்கள்” என்றார் அம்மா. திரும்பவும் என்னை அருகே கூப்பிட்டு “அப்பாவும் குடியால்தான் செத்தவர், உனக்கும் அப்படியொரு நிலை வரக் கூடாது” என்றார். அந்த மதுபான விடுதி கொஞ்சம் ஆடம்பரமானது. அம்மான் கண்களை விரித்து அந்த விடுதியைச் சுற்றுமுற்றும் பார்த்தார். “இப்பிடியான ஒரு விடுதிக்கு வாழ்க்கையிலேயே இப்போதுதான் முதற்தடவையாக வருகிறேன்” என்றார். நான் மதுவை அவரது கோப்பைக்குள் ஊற்றிக்கொண்டே “இயக்கத்தில் குடிப்பதற்குத் தடை இருந்ததே” என்றேன். “M – 12க்கு இருந்ததா?” எனக் கேட்டார் அம்மான். “M- 12..?” என்று இழுத்தேன். ’“பாலா அண்ணையை அப்படித்தான் சொல்வோம்” என்றார் அம்மான். புலனாய்வுத்துறையில் வேலை செய்பவர்களிற்கு ஒற்றறியும்போது குடிக்க வேண்டிய கட்டாயம் எற்படுமென்றும் அப்படித்தான் அவர் குடிக்கப் பழகியதாகவும் அம்மான் சொன்னார். அம்மானின் குடி ‘சிலோன் குடி’. ஒரு பெரிய கோப்பை பியரை ஒரே மூச்சில் கண்களை மூடிக்கொண்டு உறிஞ்சிக் குடித்துவிட்டு ’டக்’கென ஓசையெழும்ப வெற்றுக் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, கைகள் நிறையச் சுண்டலை அள்ளி வாயில் போட்டு மென்றார். முதல் நாளிலேயே நானும் அம்மானும் மிகவும் நெருங்கிவிட்டோம். என்னுடைய பழைய இயக்க நண்பர்களில் அநேகமாக எல்லோரையுமே அம்மானுக்குத் தெரிந்திருந்தது. எனக்கு அம்மானோடு பேச நிறைய இயக்கக் கதைகள் இருந்தன. அவரும் களைப்புச் சளைப்புப் பார்க்காமல் பேசக் கூடியவராகயிருந்தார். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசும்போது அவர் மிகக் குறைவான சொற்களையே பயன்படுத்தினார். அடுத்து வந்த நாட்களில் ஒவ்வொரு நாளுமே என்னைத் தேடி எங்களது வீட்டுக்கு அம்மான் வந்துவிடுவார். சில நாட்களில் இரவு வரை எங்களது பேச்சு நீண்டது. அவரது மனைவியிடமிருந்து இரண்டு – மூன்று தடவைகள் தொலைபேசி அழைப்பு வந்ததற்குப் பிறகுதான் எங்களது வீட்டிலிருந்து கிளம்பிச் செல்வார். அம்மான், புலிகளின் தலைவரை ஒருமையில் அழைக்கக் கூடிய உரிமையைப் பெற்றிருந்தார் என்பதைக் கேட்டபோது நான் வாயைப் பிளந்தேன். அது எப்படி என்று நான் கேட்டபோது  “தலைவரின் மனைவி என்னை மாமாவென்றுதான் கூப்பிடுவார்” என்றார் அம்மான். இவர் அருமையாகப் பாடக் கூடியவர் என்பதால் இவர் பாடுவதைக் கேட்பதில் மதிவதனிக்கு அதிக விருப்பமாம். இவர் பாடும்போது பிரபாகரன் கண்களை மூடி ரசிப்பது மட்டுமல்லாமல் பாடலில் ஏதாவது தவறிருந்தால் அதையும் சுட்டிக்காட்டுவாராம். அம்மான் உண்மையிலேயே அருமையாகப் பாடக் கூடியவர். ஓரிரவில் அவர் காத்தவராயன் கூத்தைப் பாடியபோது கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அழுகை முட்டியது. அதிகமான போதையென்றால் நான் இலகுவில் மனம் நெகிழ்ந்து கண்ணீர்விடக் கூடியவன். அம்மானுக்கு ஒரு மகன் இருந்தான். அவனும் புலிகள் இயக்கத்தில் இருந்திருக்கிறான். ஆனந்தபுரச் சுற்றிவளைப்பை உடைத்துத் தலைவரை மீட்டுச் சென்ற பெரும் போரில் அவன் வீரச்சாவடைந்தான் என்றார் அம்மான். இதைச் சொல்லும் போது அவரது முகத்தில் கலக்கம் எதுவுமில்லை. மாறாக அவரது கண்கள் பெருமையில் மிதந்தன. “இறுதி யுத்தத்தின் போது அங்கே இந்திய இராணுவம் இருந்ததாகச் சொல்கிறார்களே” என்றேன். “ஆம் 3116 இந்திய இராணுவத்தினர் மே மாதம் 1ம் தேதி முல்லைத்தீவில் தரையிறங்கினார்கள். இலங்கை இராணுவத்தை அவர்களே வழி நடத்தினார்கள். முன்னேறிச் செல்லாத இராணுவத்தை இந்திய இராணுவம் பின்னாலிருந்து சுட்டது. முன்னேறியவர்களைப் புலிகள் சுட்டார்கள். அந்த மாதத்தில் மட்டும் 7285 இலங்கை இராணுவத்தினர்கள் கொல்லப்பட்டார்கள், அரசாங்கம் வேண்டுமென்றே கணக்கைக் குறைவாகச் சொன்னது. 534 இந்திய இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டார்கள்” என்றார் அம்மான். அவர் எதைச் சொன்னாலும் கணக்கை எண்கள் பிசகாமல் துல்லியமாகச் சொன்னார். ஒரு தடவை அம்மான், தலைவரைச் சந்திப்பதற்காக அவரது மறைவிடத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்த பாதுகாப்பு வீரன் அம்மானின் இயக்க அடையாள அட்டையைக் கேட்டிருக்கிறான்.  அன்று துரதிருஷ்டவசமாக அம்மான் தனது அடையாள அட்டையை மறந்துவிட்டுச் சென்றிருக்கிறார். எவ்வளவு சொல்லியும் அந்தப் பாதுகாப்பு வீரன் அம்மானை உள்ளேவிட மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்டான். அவ்வாறு அம்மானைத் திருப்பி அனுப்பிய பாதுகாப்பு வீரனின் பெயர் தமிழ்மன்னன். அவன் அம்மானின் ஒரே மகன். அவரது புலனாய்வுப் பணியில் ஒரேயொரு தடவை தவறு நிகழ்ந்ததாகவும் அந்தத் தவறு பெரிய தவறாகிப் போனதென்றும் அம்மான் சொன்னார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பரந்தன் வெற்றிலை வியாபாரி ஒருவனின் மனைவி நுழைந்திருக்கிறாள். அவள் அங்கே நகைகள் அடவு பிடிப்பதுபோலவும் வட்டிக்குப் பணம் கொடுப்பது போலவும் நடித்து மக்களுடன் கலந்து உறவாடி 2425 பொதுமக்களையும் 3 பெண் போராளிகளையும் அழைத்துக்கொண்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டாளாம். அன்றிலிருந்துதான் சனங்கள் பகுதி பகுதியாகப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்குள் தப்பிச் சென்றார்களாம். தன்னுடைய பிடியிலிருந்து தப்பிச் சென்ற ஒரேயொருத்தி பரந்தன் வெற்றிலை வியாபாரியின் மனைவியே என்ற அம்மான் பற்களைக் கடித்துக்கொண்டு விழிகளை மேலே செருகித் தலையை ஆட்டிக்கொண்டார். எல்லாப் புலிகளைப் போலவும் துரோகிகளைக் குறித்து அம்மானும் ஆவேசத்துடன்தான் பேசுவார். எங்களுடைய போராட்டத்தை அழித்தது துரோகிகள் தான் என்றார். களையெடுக்க எடுக்க எங்களது மண்ணில் துரோகிகள் புற்களைப் போல முளைத்துக்கொண்டேயிருந்தார்கள் என்றார். அம்மான் புலிகளின் துணுக்காய் சிறைச்சாலைக்குப் பொறுப்பாயிருந்தபோது ஒரு நாளைக்குக் குறைந்தது 43 கைதிகளை விசாரணை செய்வாராம். அவர்களை அடித்து அடித்துத் தனது கைகள் மரத்துப் போயிருந்தன என்று சொல்லிவிட்டு அம்மான் தனது கைகளை ஒன்றோடொன்று தேய்த்துக்கொண்டார். புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஈடுபட்டதாவும் சொல்கிறார்களே என நான் கேட்ட போது, “இரண்டொரு சம்பவங்கள் அப்படி நிகழ்ந்தனதான், ஆனால் விசாரணை இல்லாமலேயே அவர்களைக் கொல்லச் சொல்லி பொட்டம்மான் எங்களுக்கு அனுமதி கொடுத்திருந்தார். எனது கையாலேயே இரண்டு குற்றவாளிகளைத் துண்டு துண்டாக வெட்டிப் புதைத்திருக்கிறேன். நான் முதலில் அவர்களது ஆணுறுப்பைத்தான் வெட்டினேன்” என்றார் அம்மான். “யுத்தத்தின் கடைசி நாட்களில் நீங்கள் எங்கிருந்தீர்கள்?” எனக் கேட்டேன். “மே பதினைந்தாம் தேதியே இயக்கத்தைக் கலைக்கத் தலைமை உத்தரவிட்டது. இயக்கத்திடம் ரொக்கமாயிருந்த 169 கோடியே 8 இலட்சத்து 12 ஆயிரத்து 250 ரூபாய்கள் எரிக்கப்பட்டன. 613 கிலோ 540 கிராம் தங்கம் புதைக்கப்பட்டது. ஆயுதங்களையும் சயனைட் குப்பிகளையும் இலக்கத் தகடுகளையும் புதைத்துவிட்டு சரணடையுமாறோ, வாய்ப்பிருந்தால் தப்பிச் செல்லுமாறோ உத்தரவிடப்பட்டது. நான் சரணடையத் தயாரில்லை. தப்பிச் செல்லவும் வழியிருக்கவில்லை. எனது இரண்டு பிஸ்டல்களையும் குப்பியையும் மண்ணில் புதைத்து விட்டு இலக்கத் தகடைக் கடலுக்குள் வீசி எறிந்தேன். அலை திரும்பவும் அந்தத் தகடை எனது கால்களின் அருகே கொண்டு வந்தது. ஆத்திரத்துடன் அலையை நான் கால்களால் எற்றியபோது என்ன மாயமோ அலை அப்படியே உடைந்து போய் அடங்கிற்று. இலக்கத் தகடு மண்ணில் கிடந்தது. நான் அதை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றேன்.” “தலைவரும் சரணடைந்ததாகச் சொல்கிறார்களே” எனக் கேட்டேன். அம்மானின் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் அள்ளுகொள்ளையாக வெளிவந்தன. ‘அம்மா உள்ளே இருக்கிறார்’ எனச் சைகை காட்டினேன். அம்மான் உதடுகளை இறுக்கிக்கொண்டார். “தலைவரும் இன்னும் சில முக்கியமான ஆட்களும் ’ஒக்ஸிஜன் சிலிண்டர்’களுடன் நந்திக்கடலைக் கடக்க மறைவிடத்தில் இரவுக்காகக் காத்திருந்தார்கள். இரவுக்கு முன்னேயே இராணுவத்தினர் அவர்களைச் சுற்றிவளைத்துக்கொண்டனர். தலைவரின் கைத்துப்பாக்கி மிகச் சக்தி வாய்ந்தது. அவரது வாய்க்குள் பாய்ந்த குண்டு தலையால் வெளியேறிய இடம் கோடாரியால் பிளக்கப்பட்ட இடம்போல இருந்தது. அந்தக் காயத்தின் நீளம் 16 சென்ரி மீற்றர்கள். அன்று மட்டும் இரவு சற்று முன்னே வந்திருந்தால் சூரியன் கடலில் மறைந்திருக்கும்.”அம்மானின் கை விரல்கள் நடுங்குவதை நான் பார்த்தேன். எனக்கு அப்போது போதை சற்று ஏறியிருந்தது. “நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை” என்று கேட்டேன். அம்மான் வழமைபோலவே ஒரே மூச்சில் கோப்பையை உறிஞ்சிவிட்டு உதடுகளைச் சுழித்துக்கொண்டார். பிறகு “ஒரு இலட்சியத்திற்காகச் சாவது வேறு, அந்த இலட்சியமே செத்துவிட்டதற்குப் பிறகு நான் எதற்காக என்னை மாய்த்துக்கொள்ள வேண்டும்” என்றார். நான் அம்மானின் கையை ஆதுரத்துடன் பற்றிக்கொண்டேன். அம்மானும் அவரது மனைவியும் 18ம் தேதிவரை பதுங்கு குழிக்குள்ளேயே இருந்திருக்கிறார்கள். அவர்களைச் சூழவர நெருப்புப் பரவிக்கொண்டிருந்தது. முன்னேறி வந்த இராணுவத்தினர் கண்ணில் பட்டவற்றையெல்லாம் கொளுத்தியபடியே வந்திருக்கிறார்கள். கடைசியில், அம்மானும் மனைவியும் ஒளிந்திருந்த பதுங்குகுழியை இராணுவத்தினர் கண்டுபிடித்தார்கள். மக்களோடு மக்களாக அம்மானும் மனைவியும் இராணுவச் சோதனைச் சாவடியில் நின்றிருந்தபோது சுத்தத் தமிழில் அறிவிப்புக் கேட்டது. அம்மான் தலையை நிமிர்ந்து பார்த்தபோது தடிகளால் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கோபுரத்தில் அந்த ஒலிபெருக்கி கட்டப்பட்டிருந்தது.  அம்மானுக்கு நன்கு தெரிந்த போராளிகள் மூவர் அந்தக் கோபுரத்தில் நின்றிருந்தார்கள். இயக்கத்தில் இருந்தவர்களை வலதுபுறமாகவும் மற்றவர்களை இடதுபுறமாகவும் வரிசையில் நிற்குமாறு  ஒருவன் ஒலிபெருக்கியில் சொல்லிக்கொண்டிருந்தான். இடதுபுற வரிசையில் நின்றிருந்த அம்மான் வலதுபுற வரிசையைப் பார்த்தார். அங்கே பதினைந்து வயதுக்கும் குறைந்த மூன்று சிறுவர்களும் தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டிருந்த இரண்டு பெண்களும் மட்டுமே நின்றிருந்தார்கள். அம்மான் வலதுபுற வரிசைக்குச் செல்லக் காலெடுத்து வைக்கையில் அம்மானின் மனைவி இரகசியமாக அம்மானின் கையைப் பிடித்து நிறுத்தினார். அம்மான் இடதுபுற வரிசையிலேயே நின்றுகொண்டார். அந்த வரிசை நகரத் தொடங்கியபோது  பாதுகாப்புக் கோபுரத்தில்  நின்றவன் அம்மானைப் பார்த்துக் கையைக் காட்டினான். “அம்மான் நான் சொல்வது உங்களுக்கு விளங்கவில்லையா? வலதுபுற வரிசைக்குச் சென்று நில்லுங்கள்!” அம்மான் அதைக் கேட்காதது போல பாவனை செய்தார். இப்போது  அம்மானை வலதுபுற வரிசைக்குச் செல்லுமாறு ஒலிபெருக்கி அலறிற்று. அம்மான் வலதுபுற வரிசைக்கு நகர்ந்தார். ஒலிபெருக்கியில் அறிவுப்புச் செய்துகொண்டிருந்த போராளிகள் கருணாவின் ஆட்கள் என்று என்னிடம் அம்மான் சொன்னார். ஒரு பாடசாலைக் கட்டடத் தொகுதி தடுப்பு முகாம் ஆக்கப்பட்டிருந்தது. வதைகளும் ஓலங்களும் அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தன. அம்மானை யாரும் அதுவரை விசாரிக்கவில்லை. இரவானதும் பின்புறமாகக் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே அம்மான் உறங்கிப்போனார். நள்ளிரவில் அவர் தட்டி எழுப்பப்பட்டார். அவரது கையைக் கட்டியிருந்த கயிறு அவிழ்க்கப்பட்டது. அந்தக் கட்டடத் தொகுதிக்குப் பின்பக்கமிருந்த கிணற்றை நோக்கி அம்மான் அழைத்துச் செல்லப்பட்டார். அந்தக் கிணற்றில் தண்ணீர் அள்ளி முகத்தைக் கழுவிக்கொண்டிருந்த மனிதரைப் பார்த்ததும் அம்மான் அதிர்ந்து போய்விட்டார். அந்தச் சூழ்நிலையில், அந்த நேரத்தில் அங்கே கருணாவைத் தான் எதிர்பார்த்திருக்கவில்லை என்றார் அம்மான். கருணா நிதானமாக அம்மானைப் பார்த்து “அண்ணன் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? என்னுடன் நிற்கப் போகிறீர்களா அல்லது வேறெங்கேயும் போகப் போகிறீர்களா” என்று கேட்டிருக்கிறார். “இல்லை, இனி எனக்கு இந்த நாட்டில் இருக்க விருப்பமில்லை தம்பி” என்றிருக்கிறார் அம்மான். உடனடியாகவே கருணா தொலைபேசியில் பேசி அம்மானின் மனைவியிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்திருக்கிறார். அடுத்தநாள் இரவே அம்மானும் அவரது மனைவியும் கருணாவின் ஏற்பாட்டால் பத்திரமாக வவுனியாவைத் தாண்டிச் சென்றுவிட்டார்களாம். அன்று இரவு நான் பிரான்ஸ் திரும்பவிருந்தேன். காலையிலேயே அம்மான் வீட்டுக்கு வந்துவிட்டார்.  அவரது மனைவி எனக்குக் கொடுத்துவிட்டதாக ‘பருத்தித்துறை வடைகள்’ அடங்கிய ஒரு பொதியை என்னிடம் கொடுத்துவிட்டு ’“இது ஆறுமாதமானாலும் கெட்டுப் போகாது” என்றார். அன்றும் பதினொரு மணிக்கே வெயில் உச்சியில் நின்றது. மதுபான விடுதிக்குள் அமர்ந்திருக்கும்போது “இன்று அதிகம் குடிக்காதீர்கள் தம்பி, இரவு பயணமல்லவா” என்றார் அம்மான். எனினும் நாங்கள் அன்று எப்போதையும் விட அதிகமாகவே குடித்தோம். நான் ஒரு பணக்கட்டை எடுத்து அம்மானின் கையில் வைத்தேன். நான் எவ்வளவு கேட்டுக்கொண்டும் அந்தப் பணத்தை வாங்க அம்மான் மறுத்துவிட்டார். நான் திரும்பவும் பணக்கட்டை எனது காற்சட்டைப் பைக்குள் செருகும் போது எனது மூளையின் மடிப்பொன்று சடுதியில் விரிந்திருக்க வேண்டும். “அம்மான்! ஒரு விசயம் கேட்க வேண்டும்” என்றேன். அம்மான் அப்போது தனது கோப்பையை ஒரே மூச்சில் உறிஞ்சிக்கொண்டிருந்தார். வெற்றுக் கோப்பையை மேசையில் ’டக்’கென ஓசையெழ வைத்துவிட்டு என்னைப் பார்த்தார். “நீங்கள் எப்போதாவது தோழர் பாவெல் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” அம்மான் தனது கண்களை மூடிக்கொண்டார். அவரது உதடுகள் மடிந்து விரிந்தன. பின்பு கண்களை மெதுவாகத் திறந்தார். எனது முகத்தையே உற்று நோக்கினார். அவரது கண்மணிகள் குத்திட்டு நின்றன. “ஆம், பாவெல் விலாசவ்… அவனுக்குக் கடைசியில் தேசாந்திர சிட்சை கிடைத்தது”. நான் மெதுவாக “அந்தப் பெயரில் ஒருவர் 2005 – சமாதான காலத்தில் புலிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார்” என்றேன். அம்மான் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டார். கண்களைத் திறக்காமலேயே “ஒருவரல்ல, இருவர் கைது செய்யப்பட்டார்கள். ஒருவனது பெயர் பாவெல், அடுத்தவன் புஷ்பாகரன். அவர்களை நான்தான் கைது செய்தேன். அவர்களிடமிருந்து தமிழிலும் சிங்களத்திலும் அச்சிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்களைக் கைப்பற்றினோம். அந்தப் பிரசுரங்கள் சமாதானத்திற்கு எதிரானவையாகயிருந்தன.” எனக்கு உடனடியாகவே போதை தெளிந்துவிட்டது. “அவர்களை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். அம்மான் கண்களைத் திறந்தார். "இருவரையும் வட்டுவாகல் சிறைக்குக் கொண்டு சென்றோம். பாவெல் என்பவன் நெஞ்சழுத்தக்காரனாயும் திமிர் பிடித்தவனாயும் இருந்தான். அவன் பேசவே மறுத்தான்.எனது பொடியன்கள் அடித்த அடியில் அவனது மண்டை பிளந்துவிட்டது. வேதனையில் துடித்துக்கொண்டிருந்தான். நான் அவனைச் சுட்டுவிடுமாறு பொடியன்களுக்கு உத்தரவிட்டேன். அவனைக் கைது செய்த அன்றே அவன் கொல்லப்பட்டான். அடுத்தவன், அவனின் பெயர் புஷ்பாகரன் என்று சொன்னேனே… பாவெலுக்கு விழுந்த அடியைப் பார்த்தவுடனேயே புஷ்பாகரன் எல்லா உண்மைகளையும் கக்கிவிட்டான். அவர்களுக்குச் சில சிங்கள ட்ரொட்ஸ்கியவாதிகளுடன் தொடர்பிருந்திருக்கிறது. புஷ்பாகரனை ‘பங்கருக்குள்’ போட்டுவிட்டோம். ஒரு ஆள் நிற்பதற்கு மட்டுமே தோதாக அந்தக் குழி வெட்டப்பட்டிருக்கும். அவனை விசாரணைக்காக வெளியே தூக்கி அடிக்கும்போது அவன் பெருங்குரலெடுத்து அலறுவான். அதற்காக நான் அவனுக்குப் புதியதொரு தண்டனையை வழங்கினேன். நாங்கள் அவனை அடிக்கும் போது அவன் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று மட்டுமே அலற வேண்டும். வேறு மாதிரியாக அலறினால் அவனின் முதுகில் நாங்கள் இரும்புக் கம்பியால் சூடு போடுவோம். எனவே அவன் அடி வாங்கும்போதெல்லாம் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என உரக்கக் கத்துவான். நீண்ட நாட்கள் அவன் அந்தக் குழிக்குள் நிர்வாணமாக நின்றான். எறும்புகளும் கறையான்களும் அவனில் புற்றெடுத்தன. அவனை வெளியே எடுத்தபோது அவன் அரைப் பைத்தியமாக இருந்தான். கடைசிவரை அவன் வட்டுவாகல் சிறையில்தானிருந்தான். கடைசிச் சண்டையின் போது மணலால் அரண்கள் அமைக்கும் வேலைக்குக் கைதிகளை அழைத்துப்போனோம். வேலை நடந்துகொண்டிருக்கும் போதே விமானக் குண்டுவீச்சு நிகழ்ந்து  16 போராளிகளும் 47 கைதிகளும் அங்கேயே இறந்து போனார்கள். அந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி இரண்டு சிங்களக் கைதிகளும் புஷ்பாகரனும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பியோடிவிட்டார்கள்". சொல்லி முடித்ததும் அம்மான் தனது வெறுமையான கோப்பையைக் காட்டி தனக்கு இன்னும் மது வேண்டுமென்று கேட்டார். நான் எதுவும் பேசாமல் அம்மானையே பார்த்துக்கொண்டிருந்தேன். எனது கைகள் பியர் போத்தலைப் பற்றியிருந்தன. அம்மானும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரது விழிகள் இப்போது கெஞ்சிக்கொண்டிருந்தன. அங்கே நிலவிய மவுனம் வழக்கத்திற்கு மாறானது, விநோதமானது, அடையாளம் தெரியாதது. நான் ஏதோவொரு வகையில் அந்த மவுனத்தை உடைத்தேன். “அம்மான் நீங்கள் உங்களது இயக்க வாழ்க்கை முழுவதும் தமிழர்களை மட்டுமே கொன்றிருக்கிறீர்கள்.” அம்மான் விசும்பும் சத்தம் கேட்டது. அவரது நாவு குழறியது. “1985ல்  அநுராதபுர நகரத்துக்குள் புகுந்து 138 சனங்களை நாங்கள் கொன்றோம். ஒரு நிறைமாதக் கர்ப்பிணியின் வயிற்றில் நான் நீண்ட வாளால் குத்தினேன். அதனால்தான் எனக்குப் பிள்ளையே பிறக்கவில்லை…”  அம்மான் எனது கைகளை இறுகப் பிடித்துக்கொண்டார். எனது கைகளில் சில கண்ணீர் சொட்டுகள் விழுந்தன. நான் அம்மானிடமிருந்து கைகளை விடுவித்துக்கொண்டு அவரை உற்றுப் பார்த்தேன். அவரது மகன் தமிழ்மன்னன் ஆனந்தபுரம் போரில் இறந்துவிட்டான் என்றவர், இப்போது தனக்குப் பிள்ளையே பிறக்கவில்லை எனக் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார். ஏனோ அப்போது எனக்கு அம்மானிடம் பேரச்சம் உண்டாகியது. அம்மான், ஏதோவொரு நாடகத்தில்  திட்டமிட்டு என்னைச் சிக்க வைத்துக்கொண்டிருக்கிறார் எனத் தோன்றியது. எனது அப்பாவின் சாவு கொலையாக இருக்கலாமோ என்றுகூடச் சந்தேகப்பட்டேன். நான் எதுவும் பேசாமல் எழுந்திருந்தேன். அம்மானும் தடுமாற்றத்துடன் எழுந்தார். அவரது கண்கள்  கெஞ்சிக்கொண்டேயிருந்தன. அப்போது அவரது கைபேசி ஒலித்தது. வலது கையால் எனது கையைப் பிடித்தபடியே இடது கையால் அவர்  கைபேசியை எடுத்தார்.  அவரது மனைவிதான்  அழைத்திருக்க வேண்டும். தொலைபேசிப் பேச்சின் இடையில் “தம்பி எனக்குப் பணம் கொடுத்தார், நான் வாங்கவில்லை” என்று அம்மான் சொன்னார். பணத்தை அவர் வாங்காததால் அவரது மனைவி கவலைப்படுகிறார் என்பது அம்மானின் பேச்சில் தெரிந்தது. “தம்பி, உங்களோடு என் மனைவி பேச வேண்டுமாம்” என்று சொல்லிவிட்டு, கைபேசியைத் தனது சட்டையில் அழுந்தத் துடைத்து என்னிடம் கொடுத்தார். என்ன பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை. தயக்கத்துடன் “வணக்கம் அக்கா” என்றேன். மறுமுனையில் ஒரு கணத் தயக்கத்திற்குப் பிறகு சன்னமான குரல் ஒலித்தது. அம்மானின் மனைவி என்னுடன் வெறும் ஆறு சொற்களை மட்டுமே பேசினார். திடீரென என்னுடைய உள்ளுணர்வு உந்தித்தள்ள “அக்காவுடைய பெயர் என்ன?”  என்று கேட்டேன். அவரிடமிருந்து ஏழாவது சொல்லாக அவரது ‘பெயர்’ எனக்குக் கிடைத்தது. அவர் தொடர்பைத் துண்டித்தார். அம்மானின் கையை இழுத்து மறுபடியும் உட்கார வைத்துவிட்டு, பரிசாரகனை அழைத்து மது கொண்டுவரச் சொன்னேன். அம்மானின் கைபேசியை அவருக்கும் எனக்கும் நடுவாக மேசையில் வைத்தேன். அம்மான் ஒரே மூச்சில் மதுவை உறிஞ்சிக்கொண்டிருக்கையில், எனது கைபேசியிலிருந்து தோழர் சவரியானுக்கு குறுஞ்செய்தி ஒன்றை நான் அனுப்பினேன்: <நான் காணமற்போனவருடன் மது அருந்திக்கொண்டிருக்கிறேன் > (ஜுலை -2013 ‘காலம்’ இதழில் வெளியான கதை) கப்டன் மனுவேல் பொன்ராசாசாவிற்கு ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூற்றோராம் வருடம் ஜனவரி மாதம் ‘கப்டன்’ பட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது. அந்தச் சம்பவம் பின்வருமாறு நிகழலாயிற்று: ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூறாம் வருடம் ஜுன் மாதம் யாழ்ப்பாணக் கோட்டை விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. கோட்டைக்குள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர்கள் சிக்கியிருந்தார்கள். கோட்டைக்கான அனைத்து வழங்கல்களும் புலிகளால் துண்டிக்கப்பட்டன. சிறியரகக் ’கிரேன்’களின் உதவியுடன் புலிகள் கோட்டை மதில்களில் ஏற முயன்றுகொண்டேயிருந்தார்கள். கடலிலிருந்து கோட்டைக்குள் படகில் செல்வதற்கான இரகசிய வழியொன்றுமிருந்தது. புலிகள் அந்த வழியால் சிறிய வள்ளங்களில் சென்று கோட்டைக்குள் புக முயன்றார்கள். புலிகளின் ஆட்லரிகள் கோட்டை மதில்களில் ஓட்டைகளைப் போட்டுக்கொண்டேயிருந்தன. இராணுவத்தினருக்கு அது சீவமரணப் போராட்டம். அவர்கள் கோட்டையைப் பாதுகாக்க இரவுபகலாகப் போராடிக்கொண்டிருந்தார்கள். ஜுலை மாதத்தில் கோட்டைக்குள் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும் வீச முயன்ற இராணுவ உலங்குவானூர்திகள் இரண்டு புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஓகஸ்ட் மாதத்தின்  நடுப்பகுதியில் வெடிபொருட்களும் உணவுப் பொருட்களும் முற்றாகத் தீர்ந்திருந்த நிலையில் இராணுத்தினர்  புலிகளிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாயிற்று. இராணுவத்தினர் சரணடைவதற்கான ஏற்பாடுகளைத் தாங்கள் முன்னின்று செய்வதாகச் செஞ்சிலுவைச் சங்கம் அரசுக்குத் தெரிவித்த மறுநாள் காலையில் யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து 14 கிலோமீற்றர்கள் தென்மேற்குத் திசையில் ஊறாத்துறையில் இராணுவத்தின் மீட்புப் படைகள் கடல்மார்க்கமாகவும் ஆகாயமார்க்கமாகவும் தரையிறக்கப்பட்டன. அந்த அணிகள் மெதுவாக யாழ்ப்பாணக் கோட்டையை நோக்கி நகரத் தொடங்கின. எறிகணைகளை வீசிக்கொண்டும் வானிலிருந்து குண்டுகளை வீசிக்கொண்டும் ஊறாத்துறையிலிருந்து இராணுவம் ஊர்ந்தவாறே முன்னேறியது. ஊறாத்துறையில் இராணுவத்தினர் தரையிறங்குவார்கள் என்பதைப் புலிகள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஊறாத்துறைக்கு யாழ்ப்பாணத்திலிருந்தோ வன்னியிலிருந்தோ தமது அணிகளை நகர்த்துதானால் கடல்மார்க்கத்தைத் தவிரப் புலிகளுக்கு வேறு வழியில்லை. கடற்பகுதி ஏற்கனவே இலங்கைக் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. கடலில் முழத்துக்கு முழம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. ஊறாத்துறையிலிருந்த சொற்ப புலிகள் “ஓடுங்கள்” என்று மக்களுக்கு அறிவுறுத்தியவாறே பின்வாங்கத் தொடங்கினார்கள். அன்றைய மதியப் பொழுதில் சுருவில் கிராமத்திற்குள் நுழைந்து “நாளைக் காலைக்குள் இராணுவம் இந்தக் கிராமத்திற்குள் நுழைந்துவிடும், ஓடுங்கள்” எனச் சொல்லியபடியே புலிகள் வாகனங்களில் விரைந்தார்கள். அந்த முனையில் இராணுவம், இந்த முனையில் கோட்டை, மற்றைய இரண்டு பக்கங்களும் கடல் என்றிருக்க அய்ந்தாவது திசையொன்றைத் தேடிச் சனங்கள் சிதறி ஓடலானார்கள். சுருவில் கிராமத்தின் இருபது மற்றும் பதினெட்டு வயதான இளைஞர்கள் கிறிஸ்டியும் பொஸ்கோவும் அவர்களது தகப்பனிடம் சென்று “ஐயா நாங்கள் இந்தியாவுக்குப் படகில் செல்லப்போகிறோம்” என்று சொன்னார்கள். அந்த இரண்டு இளைஞர்களது முகங்களிலும் உயிரச்சம் உறைந்திருந்தது. பொன்ராசா தனது வலது கையால் இடது கன்னத்தைத் தேய்த்தவாறே அச்சத்தில் உறைந்திருந்த தனது மகன்களையே சற்றுநேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு “வேண்டியதில்லை நீங்கள் இங்கேயே இருக்கலாம், இங்கே இராணுவத்தினர்கள் வரமாட்டார்கள்” என்றார். மகன்மாருக்கு ஏமாற்றமும் துயரமும் கலந்து பொங்கின. அவர்களுக்கும் இது சீவமரணப் போராட்டம். பொன்ராசாவோ வெகு அலட்சியமாகப் பேசிக்கொண்டிருப்பது அவர்களிற்கு எரிச்சலையும் ஊட்டலாயிற்று. இளையவன் பொஸ்கோ சற்றுத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு “இயக்கப் பொடியன்கள் எல்லோரையும் வெளியேறுமாறு சொல்லிக்கொண்டு போகிறார்கள், இராணுவத்தினர் எந்த நேரமும் இங்கே வந்துவிடலாம்” என்றான். குடிசையின் முற்றத்தில் நின்றிருந்த பொன்ராசா அப்படியே மணலில் குந்தினார். மகன்களையும் கீழே குந்தச் சொல்லிவிட்டு அவர் மணலை கைகளால் அளைந்து நிரல்படுத்திவிட்டு மணலில் கடகடவெனப் படம் வரையத் தொடங்கினார். அவரது தழும்பேறிய சுட்டுவிரல் மண்ணைக் கிழித்துக் கோடுகளை உருவாக்கின. “இது ஊறாத்துறை, இங்கேதான் இராணுவம் இப்போது இறங்கியிருக்கிறது”, அவரது விரல் வரைபடத்தின் கோடிக்குச் சர்ரென ஓடிற்று. “இது கோட்டை”, அவரது விரல் சடுதியில் மறுகோடிக்கு ஓடிற்று. “இராணுவம் இப்படியே வடக்கு வீதிவழியாக வடக்குக் கடற்கரையை ஒட்டி கரம்பன், நாரந்தனை, சரவணை, அராலிச் சந்தி, மண்கும்பான் அல்லைப்பிட்டி, மண்டைதீவுச்சந்தி வழியாகத்தான் கோட்டைக்குப் போவார்கள். அவர்களுடைய நோக்கம் கோட்டையைப் பிடிப்பதேயொழிய நோஞ்சான்களான உங்கள் இரண்டுபேரையும் பிடிப்பதல்ல. அவர்கள் தெற்கே திரும்பிச் சுருவிலுக்கு வர வாய்ப்பில்லை. அப்படியே அவர்கள் சுருவிலுக்குள் வந்தாலும் நான் உங்களைக் காப்பாற்றுவேன். எனக்குச் சிங்களம் தெரியும், நான் இராணுவத்துடன் பேசிக்கொள்கிறேன்” என்றார் பொன்ராசா. மூத்தவன் கிறிஸ்டி சற்றுக் குரலை உயர்த்தி " இராணுவத்தினர் கொலைவெறியில் வருவார்கள் அவர்கள் உங்களோடு பேசப்போவதில்லை, வயதான உங்களை ஒருவேளை அவர்கள் விட்டுவிடலாம் ஆனால் எங்களைக் கொல்வார்கள் " என்று சொல்லிவிட்டு குடிசையின் வாசலில் உட்கார்ந்திருந்த தாயாரைத் திரும்பிப் பார்த்தான். அவனது கண்கள் தாயாரைக் கெஞ்சின. நிலத்திலிருந்து தனது வலிய கால்களால் உந்தியெழுந்த பொன்ராசா ஒருமுறை நீளமாக ஓங்காளித்துக் காறித்துப்பினார். பின்பு,  “இந்தியாவுக்கு எப்படிப் போவீர்கள் கடலுக்குள்ளால் நீச்சலடித்தே போய்விடுவீர்களா?” என ஆங்காரமாகக் கேட்டார். மூத்தவன் தலையைக் குனிந்தவாறே “வேலணை முக்குவ துறையிலிருந்து படகுகள் இந்தியாவுக்குப் போகின்றன. ஒருவருக்கு மூவாயிரம் ரூபாய்கள் வாங்குகிறார்கள்” என்றான். இளையவன் “துறையில் இயக்கம் இந்தியாவுக்குச் செல்கிறவர்களிடம் தலைக்கு இரண்டாயிரம் ரூபாய்கள் வரி வசூலிக்கிறார்களாம், பத்தாயிரம் ரூபாய்கள் இருந்தால் நாங்களிருவரும் இந்தியாவுக்குப் போய்விடுவோம்” என்று அழுவாரைப் போல சொன்னான். “பத்தாயிரமோ! வைத்திருக்கிறீர்களா?” என அலட்சியமாகக் கேட்டார் பொன்ராசா. “அக்கா  காசு  அனுப்பவில்லையா” என்று முணுமுணுத்தான் மூத்தவன். “ஓ அப்படியா! அதை உங்களிடம் தந்துவிட்டு நானும் அம்மாவும் பட்டினியா கிடப்பது” எனக் கேட்டுவிட்டுக் கொடியில் கிடந்த சட்டையை உருவி எடுத்துத் தோளின்மீது போட்டு வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பொன்ராசா வெளியே கிளம்பினார். படலைக்குள் நின்று உரத்த குரலில் “டேய் கிறிஸ்டி, டேய் பொஸ்கோ நல்லாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.. இருபது வருடங்களாக உங்களைக் காப்பாற்றி வளர்த்த எனக்கு இனியும் உங்களை எப்படிக் காப்பாற்றுவது எனத் தெரியும்” என்று சொல்லிவிட்டு தெருவில் நின்று சட்டையை மாட்டிகொண்டார். சுருவில் தெருக்களில் மக்கள் பெட்டிகளும் சட்டிபானைகளுமாகக் கூட்டம் கூட்டமாக நின்றார்கள். எங்கே ஓடுவது என்பதுதான் அவர்களது கேள்வியாயிருந்தது. அய்ந்தாவது திசையொன்றை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லோருமாகக் கிழக்கு நோக்கி 4 கிலோமீற்றர்கள் நடந்துபோய் சாட்டி சிந்தாத்திரை மாதா கோவிலில் கூட்டமாகத் தங்கியிருப்பதே நல்லது என அவர்கள் பேசிக்கொண்டார்கள். பொன்ராசா “உயிருக்குப் பயந்த கோழைகள்” என அவர்களைத் திட்டினார். அந்தக் கிராமத்து மக்கள் பொதுவாகப் பொன்ராசாவுடன் பிரச்சினைக்குப் போக விரும்புவதில்லை. ஏதாவது ஒரு சிறிய வாக்குவாதமோ, உரசலோ ஏற்பட்டால்கூட பொன்ராசா தொடர்ந்து இரண்டு வருடங்களிற்கு ஒருநாள் விடாமல ஒவ்வொரு இரவும் எதிராளியின் வீட்டின் முன்நின்று கத்திக் கூச்சல் போடுவார். ஒரே நேரத்தில் இருவருடன் சண்டை என்றால் ஒருவர் வீட்டின்முன்பு காலைநேரக் கள்ளுக்குப் பின்னாகவும் மற்றைய எதிராளி வீட்டின்முன்பு மாலைநேரக் கள்ளுக்குப் பின்னாகவும் நேர அட்டவணை வகுத்துக்கொண்டு அதன் பிரகாரம் தவறாமல் சென்று சண்டையிடுபவர் பொன்ராசா. ஊருக்குள் அவரை ‘அலுப்பன்’ பொன்ராசா என்றும் சொல்வார்கள். இராணுவத்தினர் எதுவரை முன்னேறியிருக்கிறார்கள் எனப் பொன்ராசா கேட்டபோது அங்கிருந்த யாருக்கும் பதில் தெரியவில்லை. இராணுவம் எதுவரை முன்னேறியிருக்கிறது எனப் பார்த்துவருவதாக அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டுப் பொன்ராசா மேற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார். அவரின் தலை மறைந்ததும் அங்கிருந்தவர்கள் “சனங்கள் வீடுகளை விட்டு ஓடியிருக்கும் தருணம் பார்த்து ‘அலுப்பன்’ பொன்ராசா ஆளில்லாத வீடுகளில் கோழியோ தேங்காயோ திருடப் போகிறான்” எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். சரவணைக் கிராமத்துக்குள் நுழைந்து வடக்கு வீதியின் எட்டாம் கட்டைச் சந்தியில் பொன்ராசா மிதந்தார். சரவணை வரை சனங்களின் நடமாட்டமிருந்தது. எட்டாம் கட்டைச் சந்தியோ வெறிச்சோடிக் கிடந்தது. குறிப்பாக அந்தச் சந்தியிலிருந்த கள்ளுத் தவறணை மூடப்பட்டிருந்தது அவரை ஆத்திரமுட்டியது. தனது வலிய காலால் தவறணையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெற்றுப் பீப்பாவை எத்தினார். பீப்பா மூன்று கரணம் போட்டு நிலத்தில் வீழ்ந்தது. வடக்கு வீதியை ஒட்டியிருந்த வயல்வெளிகளுக்குள்ளால் கிழக்கு நோக்கி நடந்துகொண்டிருந்த பொன்ராசா செக்கல் பொழுதாகி நிலம் மறையத் தொடங்கியபோது  சடுதியில் வானத்தில் முளைத்த குண்டுவீச்சு விமானத்தைக் கண்டு அருகிலிருந்த ஒற்றைப் பனையொன்றின் பின்னால் மறைந்துகொண்டார். குண்டுவீச்சு விமானம் வட்டமடித்தபோது பனையைச் சுற்றிச்சுற்றி வந்தார். சுற்றிக்கொண்டிருந்த விமானம் திடீரெனக் காணமற்போனது. இப்போது வடக்குக் கடல் பக்கமாக குண்டுகள் வெடிக்கும் சத்தங்கள் கேட்டன. நாரந்தனைச் சந்திவரை பொன்ராசா வந்துவிட்டார். சனங்கள் ஏற்கனவே வீடுகளை விட்டு வெளியேறியிருந்தார்கள். தூரத்தே வெடிச்சத்தங்கள் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தாலும் இராணுவம் முன்னேறிவருவதற்கான எந்த அறிகுறியுமில்லை. “பயத்தில் மோட்டுச் சிங்களவன் பண்டார வெடி வைக்கிறான்” என்று பொன்ராசா உதடுகளுக்குள் முணுமுணுத்தார். இனி இரவில் இராணுவம் முன்னேறப் போவதுமில்லை, அதிகாலையில்தான் அவர்கள் திரும்பவும் முன்னேறத் தொடங்குவார்கள் என நினைத்துக்கொண்டே பொன்ராசா சுருவில் கிராமத்தை நோக்கி நடந்தார். இரவு அவரவர் வீடுகளில் தூங்கிவிட்டு காலையில் நிலமையைப் பார்த்து முடிவெடுக்கலாம் எனச் சனங்களுக்கச் சொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டே அவர் தனது நீண்ட கால்களை எட்டிப்போட்டு வேகமாக நடந்தார்;. இரவு எட்டுமணியளவில் அவர் சுருவில் கிராமத்திற்கு வந்தபோது கிராமம் இருளடைந்து கிடந்தது. வீதிகளில் ஒரு குஞ்சு குருமானும் இல்லை. ஒருமுறை காறித் துப்பிவிட்டுத் தனது குடிசையை நோக்கி நடந்தார். குடிசைக்குள் வெளிச்சத்தைக் காணாததால் வெளியே நின்று “ஞானம்மா.. ஞானம்மா” என்று மனைவியைக் கூப்பிட்டார். ஒரு பதிலுமில்லை. ஆத்திரத்துடன் குடிசைக்குள் நுழைந்து விளக்கைப் பற்றவைத்தார். குடிசை வெறுமையாக இருந்தது. பெட்டி படுக்கைள், சட்டி பானைகள் எல்லாம் எடுத்துச் செல்லப்பட்டிருப்பது தெரிந்தது. தாயும் பிள்ளைகள் இருவரும் சனங்களுடன் சேர்ந்து சாட்டி மாதா கோயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்று நினைத்தார். அவரின் சொல்லை மதியாமல் அவர்கள் புறப்பட்டுப்போனதை நினைக்கும்போது அவருக்கு அண்டபுண்டமெல்லாம் பற்றியெரிந்தது. குடிசையின் தெற்கு மூலையில் கைகளால் தரையைக் கிளறி அங்கே புதைத்து வைக்கப்பட்டிருந்த டப்பாவை எடுத்துத் திறந்து பார்த்தார். வைத்த காசு வைத்தபடியே இருந்தது. டப்பாவை மறுபடியும் இறுக மூடிப் புதைத்து வைத்தார். செத்தைக்குள் கைவைத்துச் சாராயப் போத்தலை எடுத்தார். அரைப் போத்தல் மிச்சமிருந்தது. அதில் பாதியை ஒரே மடக்கில் குடித்துவிட்டுக் குறைப் போத்தலைக் கடதாசியில் சுற்றிக் கைகளில் எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக மனைவியையும் பிள்ளைகளையும் தேடிக் கிழக்கு முன்னாகச் சென்றார். எப்படியும் வழியில் வைத்தே அவர்களைப் பிடித்து, பிடித்த கையோடு தாயையும் பிள்ளைகளையும் அடித்து நொருக்கிவிடுவதாகத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். வழி முழுவதும் வெறுமையாகயிருந்தது. அருகிலிருந்த வீடுகளிற்குள் நுழைந்து பார்த்தார். எவருமில்லை. அவர் சாட்டி மாதா கோயிலுக்கு வந்து சேர்ந்தபோது இரவு பதினொரு மணியாகியிருந்தது. மாதா கோயிலில் சூழவரவுள்ள ஏழெட்டுக் கிரமங்களின் மக்கள் நிறைந்திருந்தார்கள். கோயில் மண்டபத்திலும் கோயிலுக்கு வெளியே மணிலிலும் மக்கள் படுத்திருந்தார்கள். கோயிலுக்குப் பின்புறம் கிணற்றையொட்டி சமையல் வேலைகளும் நடந்துகொண்டிருந்தன. அந்தக் கூட்டத்திடையே தனது மனைவியையும் பிள்ளைகளையும் தேடி ஆத்திரத்துடன் வேகமாக நடந்தார் பொன்ராசா. “வீடு வாசலை விட்டுவிட்டு வேசைக் கூட்டம் எடுபட்டுத்திரிகிறது” என அடிக்கடி பற்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டார். கோயிலின் தூணோடு சாய்ந்திருந்த ஞானம்மாவைக் கண்டதும் ஞானம்மாவை நெருங்கிக் கையைப் பிடித்து வெளியே கொறகொறவென இழுத்து வந்தார். இருள்மறைவுக்கு வந்ததும் ஞானம்மாவின் கன்னத்தைப் பொத்தி ஓங்கி அறைந்தார். கிறிஸ்டியும், பொஸ்கோவும் எங்கே எனப் பொன்ராசா கேட்டபோது ஞானம்மா மவுனமாயிருந்தார். ஞானம்மாவின் கழுத்தை நெரிப்பதற்காகப் பொன்ராசா கையை வைத்தபோது ஞானம்மா வடித்திருந்த கண்ணீரால் கழுத்துப் பிசுபிசுத்தது.  கையை உதறிக்கொண்டே மறுபடியும் “கிறிஸ்டியும், பொஸ்கோவும் எங்கே” எனப் பொன்ராசா உறுமினார். ஞானம்மா மெதுவாக “அவர்கள் இந்தியாவுக்குப் போய்விட்டார்கள்” என்றார். பொன்ராசா அப்படியே மணலில் மெதுவாக உட்கார்ந்தார். கடதாசியைப் பிரித்துப் போத்தலை எடுத்து மிச்சமிருந்த சாராயத்தையும் குடித்தார். எழுந்து மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு விறுவிறுவெனக் கோயிலை நோக்கி நடந்தார். கட்டி எடுத்துவந்திருந்த சோறை, கோயில் மண்டபத்தில் வைத்து  ஞானம்மா கணவனுக்குக் கொடுத்தார். பொன்ராசா நெற்றியைச் சுருக்கி யோசித்தவாறே சோற்றை அளைந்துகொண்டிருந்தார். அவரது கண்கள் போதையாலும் ஆத்திரத்தாலும் சிவந்திருந்தன. “அவர்கள் போவதற்குக் காசு?” எனக் கேட்டார். “என்னுடைய நான்கு பவுண் சங்கிலியை அவர்களிடம் கொடுத்துவிட்டேன்” என்றார் ஞானம்மா. பொன்ராசாவின் வலிய கை ஞானம்மாவை அறைந்தபோது ஞானம்மாவின் முகம் முழுவதும் சோறும் குழம்புமானது. “காதுத் தோடுகளைக் கழற்றிக்கொடு” என்று பொன்ராசா கைகளை நீட்டினார். ஞானம்மா மறுபேச்சில்லாமல் நீலக் கற்கள் பதித்த அந்தத் தோடுகளைக் கழற்றிக்கொடுத்தார். அந்தத் தோடுகள் பொன்ராசா, ஞானம்மாவைக் கல்யாணம் செய்தபோது வரப்பிரகாசம் பாதிரியார் ஞானம்மாவுக்குப் பரிசளித்த தோடுகள். அவற்றை வாங்கி உள்ளங்கையில் வைத்துப் பரிசோதித்துவிட்டு அவற்றை மடியில் சொருகிக்கொண்டு பொன்ராசா எழுந்து வெளியே வந்து நின்றார். கால்கள் சற்றுத் தளும்புவதை உணர்ந்தார். தலையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டுத் தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார். பொன்ராசா வேலணை முக்குவதுறையை வந்தடைந்தபோது நேரம் அதிகாலை ஒன்றைத் தாண்டிவிட்டது. அங்கிருந்துதான் படகுகள் இந்தியாவிற்குக் கிளம்புவதாக மகன்மார்கள் சொல்லியிருந்தார்கள். பின்நிலவு வெளிச்சத்தில் கடற்கரை ஆளரவமற்றுக் கிடந்தது. ‘தாயோளிகள் போய்விட்டார்கள்’ என்று சொல்லியவாறே தனது வலதுகாலால் மணலில் சிலதடவைகள் ஓங்கிக் குத்தினார். பின்பு கடற்கரையில் இரண்டு தடவைகள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். கரையில் முழங்காலளவு தண்ணீரில் வரிசையாகப் படகுகள் கட்டப்பட்டிருந்தன. அந்தப் படகுகளுக்குள் யாருமிருக்கிறார்களா என நோட்டமிட்டார். ஒரு படகில் தாவி ஏறி அந்தப் படகைப் பரிசோதித்தார். அந்த நீல நிற பிளாஸ்டிக் படகில் வலைகளும் தாங்கு கம்புகளுமிருந்தன. மோட்டர் இணைக்கப்பட்டிருக்கும் பகுதி வெறுமையாயிருந்தது. படகுக்காரன் படகைக் கரையில் நங்கூரம் போட்டுவிட்டு மோட்டரைக் கையோடு எடுத்துச் சென்றிருக்கவேண்டும். படகில் நின்று வானத்தை உற்றுப் பார்த்தார். நட்சத்திரங்களை வைத்துத் திசையைக் கணக்கிட்டார். வடக்குத் திசையில் ஒன்றன்பின் ஒன்றாக நட்சத்திரங்கள் கோடிழுத்தது போல அணிவகுத்திருக்கக் கண்டார். இந்தியாவுக்குச் செல்வதற்கான திசைவழி அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. சட்டையைக் கழற்றிக் கையில் பிடித்து மேலே பறக்கவிட்டு காற்றின் திசையை மதிப்பிட்டார். சட்டை, வடக்கு நோக்கிப் படபடத்துப் பறந்தது. படகிலிருந்த வலைகளைத் தூக்கிக் கடலுக்குள் போட்டார். நங்கூரத்தை இழுத்துப் படகிற்குள் போட்டார். இந்தியாவை நோக்கி வடதிசையில் கம்பு ஊன்றி படகைச் செலுத்தத் தொடங்கினார். படகு நகர்வதுபோலத்தான் தெரிந்தது. சற்று நேரத்திலேயே பொன்ராசா களைத்தப்போனார். ‘தாயோளி எப்படித்தான் இந்தப் படகைச் செலுத்துகிறார்களோ தெரியவில்லையே’ என அலுத்தவாறு படகின் அணியத்தில் அமர்ந்தார். அவர் கம்பு ஊன்றாத போதும் படகு மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருப்பதை அவதானித்தார். எழுந்து இரண்டு தாங்கு கம்புகளை அணியத்தில் நிறுத்தி படகில் கிடந்த கயிற்றால் அவற்றைப் படாதபாடுபட்டுச் சமாந்தரமாகப் பிணைத்தார். தனது வேட்டியை உரிந்தெடுத்து அந்தக் கம்புகளின் நடுவில் பாயாகக் கட்டினார். இப்போது படகு காற்றின் திசையில் வேகமெடுத்துச் சென்றது. அணியத்தில் ஏறியிருந்து ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டே வடக்கு நோக்கி இருளில் பார்த்துக்கொண்டிருந்தார். தனது மகன்கள் கிறிஸ்டியையும், பொஸ்கோவையும் கண்டுபிடிக்காமல் இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்புவதில்லை எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். தண்ணீரத் தாகம் எடுத்தபோது தண்ணீர் எடுத்துவர மறந்துவிட்டோமே என்றெல்லாம் அவர் கலங்கினாரில்லை. அப்படியே கைகளால் கடல்நீரை வாரியெடுத்துக் கொப்பளித்து உமிழ்ந்தார். இந்தியாவில் தரையிறங்கியதும் யாராவது நீலக் கற்கள் பதித்த தோடுகளைப் பறித்துவிடக் கூடும் என நினைத்து எச்சரிக்கையாக அவற்றை எடுத்து உள்புறமாக ஜட்டிக்குள் வைத்துச் சிறிய முடிச்சிட்டார். கச்சதீவு தாண்டினால் இராமேஸ்வரம் கோயிலின் கோபுர வெளிச்சம் தெரியுமெனக் கேள்விப்பட்டிருந்ததால் அந்த வெளிச்சத்திற்காகக் காத்திருந்தார். குடித்த சாராயம் குமட்டிக்கொண்டு வந்தது. அவருக்கு இதுதான் முதலாவது தொலைதூரக் கடற்பயணம். முதற் கடற்பயணத்தின் போது குமட்டல் வரும் எனக் கேள்விப்பட்டிருந்ததால் அது குறித்து அவருக்குப் பெரிய கவலையில்லை. ஆனால் தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. வாயிலிருந்து புறப்பட்ட ஏப்பத்தில் சாரயம் மணத்தது. அப்படியே அணியத்தில் சரிந்தவர், தன்னையறியாது அயர்ந்து தூங்கிப்போனார். வெயில் சுள்ளிட்டபோது பொன்ராசா பதறிக்கொண்டி துள்ளி எழுந்தார். தூரத்தே கோயிற் கோபுரம் தெரிந்தது. தட்டத் தனியனாக வேட்டியைப் பாயாகக் கட்டியே இந்தியாவிற்கு வந்ததற்காகத் தன்னைத்தானே மெச்சிக்கொண்டார். இப்போது அவர் படகைக் கவனித்தபோது அது முன்னேயும் செல்லாமல் பின்னேயும் செல்லாமல் ஒரேயிடத்தில் சுற்றிக்கொண்டிருந்தது. கையை உயரே தூக்கிப் பார்த்தார். காற்று என்ற ஒன்றே கடலில் இல்லாமலிருந்தது. தாங்கு கம்பையெடுத்து அவர் ஊன்ற முயற்சித்தபோது கம்பு நிலத்தைத் தொட்டது அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. ஆனால் படகு அசைய மறுத்தது. ஆவது ஆகட்டும் எனப் படகை விட்டுக் குதித்து நீச்சலடித்தே கரைக்குச் சென்றுவிடலாம் என அவர் முடிவெடுத்தபோது, இரண்டு படகுகள் அதிவேகத்தில் அவரின் படகை நோக்கி வருவதைக் கண்டார். படகுகள் கிட்ட நெருங்கும் போதே; ‘இந்தியன் நேவி’ எனப் பொன்ராசா உற்சாகமாகச் சீட்டியடித்தார் கடற்படையினரே அழைத்துச் சென்று இராமேஸ்வரத்தில் இறக்கிவிடுவார்கள் என நிம்மதியடைந்தார். பொன்ராசாவின் படகைக் கடற்படையினரின் படகுகள் அணைத்தபோது பொன்ராசா வேட்டியை ஒழுங்காகக் கட்டி, சட்டையின் பொத்தான்களை எல்லாம் கழுத்துவரை போட்டு, சட்டையை முழுக்கையாக விட்டு ஒரு பண்பான கோலத்தில் அகதிக்குரிய முகபாவத்தை வரவழைத்துக்கொண்டு “வணக்கம் சேர்” எனக் கைகளைக் குவித்துத் தலைக்குமேல் உயர்த்தி ஒரு கும்பிடு போட்டார். பொன்ராசாவின் படகுக்குள் தாவியேறிய நான்கு படையினர் கேட்டுக் கேள்வியில்லாமல் பொன்ராசாவை அடித்துத் துவைத்தனர். “சேர் நான் தமிழன்” எனப் பொன்ராசா குழறினார். அடி நின்றபாடில்லை. உதடு வெடித்து வெள்ளைச் சட்டையில் இரத்தம் கோடாய் வழிந்தது. பொன்ராசவைத் தங்களது படகுக்குள் தூக்கிப்போட்டு பொன்ராசா வந்த படகைத் தங்களது படகில் கட்டியிழுத்துக்கொண்டு கரையை நோக்கிக் கடற்படையினரின் படகுகள் விரைந்தபோதுதான் தூரத்தே தெரிவது இராமேஸ்வரக் கோயில் கோபுரமல்ல, அது நயினாதீவு நாகபூசணியம்மன் கோயில் கோபுரமே என்பது பொன்ராசாவிற்குத் தெரிந்தது. வேலணையிலிருந்து புறப்பட்டு இரவிரவாகப் பயணம் செய்து வேலணைக்கு அடுத்த தீவான நயினாதீவிற்கே தான் வந்து சேர்ந்திருப்பதை நினைத்து அவருக்கு வெறுப்பாயிருந்தது. நயினாதீவு இலங்கைக் கடற்படையின் வலுவான தளம். அங்கிருந்து படகுகள் புறப்படுவதோ அங்கே படகுகள் வருவதோ கடற்படையினரின் அனுமதி பெற்றே நடக்கும் காரியம். அப்போது நாலாயிரத்துச் சொச்ச மக்கள் நயினாதீவில் வசித்தார்கள். கடற்படையினருக்குத் தெரியாமல் அந்தத் தீவில் ஒரு துரும்பும் அசையாது. அந்த இரும்புக் கோட்டையைத் தகரத்துக்கொண்டல்லவா பொன்ராசாவின் நீலப்படகு அங்கே அத்துமீறி நுழைந்திருக்கிறது. அங்கேயிருந்த உபதளபதி ஒருவனின் அலுவலகத்தின் முன்பிருந்த கொடிக்கம்பத்தில் பொன்ராசா முழு நிர்வாணமாகக் கட்டப்பட்டிருந்தார். கொடிமரத்தின் அரைவாசி உயரத்தில் பொன்ராசா இருந்தார். அவரது திரணை திரணையான கைகால்களையும் அகன்ற மார்பையும் உறுதியான தோள்களையும் பார்த்தபோது கடற்படையினர் நிச்சயம் பொறாமைப்பட்டிருப்பார்கள். அவரது கரிய உடலில் இரத்தத் துளிகள் இரத்தின ஆபரணங்களைப் போல பூத்துக்கொண்டேயிருந்தன. பொன்ராசாவின் ஜட்டிக்குள்ளிருந்த நீலக் கற்கள் பதித்த தோடுகள் இப்போது உபதளபதியின் மேசை இழுப்பறைக்குள்ளிருந்தன. அகப்பட்டிருப்பது என்ன வகையான புலி எனக் கடற்படையினர் துப்புத் துலக்குவதில் மும்மூரமாக ஈடுபட்டிருந்தார்கள். புலிக்கு அய்ம்பது வயதுக்கு மேலிருக்கும் என்பதுதான் அவர்களைக் கொஞ்சம் குழப்பத்தில் ஆழ்த்தியது. பிரபாகரனுக்கே அப்போது 36 வயதுதான். உச்சி வெயிலுக்குள் கட்டப்பட்டிருந்த பொன்ராசா வாய்விட்டுக் கதறிக்கொண்டிருந்தார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் இரந்து நின்றார். ‘எப்படியும் இந்தக் கண்டத்திலிருந்து நான் தப்பித்துவிடுவேன்’ என அவரது மனது சொல்லிக்கொண்டது.  ஆனால் விறைப்பாயிருந்தால் நேவிக்காரன் சுட்டுக் கடலில் போட்டாலும் போட்டுவிடுவான். அதனால் அவர் இடைவிடாமல் கதறிக் கண்ணீர் விட்டு மாய்மாலம் போட்டவாறேயிருந்தார். தண்ணீர் கேட்டு அவர் துடித்தபோது கடலின் உப்புநீர் அவருக்குப் புகட்டப்பட்டது. பொன்ராசாவும் ஒரு பிழையைச் செய்துவிட்டார். பிடிபட்டவுடனேயே, இந்தியாவிற்குப் போன பிள்ளைகளைத் தேடிக் குடிபோதையில் படகொன்றைத் திருடிக்கொண்டு தெரியாத்தனமாகப் புறப்பட்டதை அவர் ஒத்துக்கொண்டிருக்கலாம். இந்தியாவுக்குக் கிளம்பியதைச் சொன்னால் பெரிய பிரச்சினையாகலாம் என நினைத்து மீன்பிடிக்கக் கிளம்பித் திசைமாறி வந்துவிட்டதாக உளறிவிட்டார். கடற்படையினர் இரண்டு கேள்விகளிலேயே இவருக்குக் கடல் குறித்து எதுவும் தெரியாது என்பதையும் அது திருடப்பட்ட படகென்பதையும் கண்டுபிடித்துவிட்டனர். இரண்டு நாட்களாக அன்னம் தண்ணியில்லாமல் பொன்ராசா கொடிமரத்திலேயே கட்டப்பட்டு வாடிப்போய்க் கிடந்தார். மூன்றாவது நாள் அவர் ஓர் அறைக்குள் அடைக்கப்பட்டார். அந்த அறைக்குள் பாம்பு, பல்லி, பூரான் எல்லாம் தாராளமாக வந்து சென்றன. மாலை நேரமானால் பொன்ராசாவை நரகம் சூழ்ந்தது. நல்ல போதையில் வரும் கடற்படையினர் பொன்ராசாவை அறையிலிருந்து வெளியே இழுத்துவருவார்கள். விசாரணை என்ற பெயரில் அலட்டலான கேள்விகளைக் கேட்பார்கள். பொன்ராசா அதைவிட அலட்டலாகப் பதில் சொல்வார். மண்ணில் படம் வரைந்து யாழ்ப்பாணத்தில் எந்த எந்த இடத்தில் புலிகளின் முகாம் இருக்கிறது, எங்கே புலிகளின் தலைவர் இருக்கக் கூடும், குறிப்பாகக் கடற்புலித் தளபதி சூசை இப்போது எங்கேயிருக்கக் கூடும் என்று கடற்படையினருக்குப் பொன்ராசா விளக்கினார். அடுத்தநாள் அதே வரைபடத்தை வரைந்துகாட்டச் சொல்லிக் கடற்படையினர் கேட்பார்கள். முதல்நாள் வரைந்த படத்திற்கு எதிர்மாறாக வேறொன்றைப் பொன்ராசா வரைவார். முதல்நாள் பருத்தித்துறையிலிருந்த பிரபாகரனின் முகாம் இப்போது சாவகச்சேரியிலிருக்கும். தென்னைமட்டைகள், கயிறு, மொத்தமான தடிகள் எல்லாவற்றாலும் பொன்ராசவைக் கடற்படையினர் அடித்தார்கள். ஒருவாரத்திற்குள் பொன்ராசாவின் உடலின் பாதியிடத்தில் தோல் உரிந்துவிட்டது. ஒருவாரத்திற்குப் பின்பு அடி ஆய்க்கினைகள் குறைந்தன. தாங்கள் பிடித்துவைத்திருப்பது ஒரு திருடனையே தவிர, புலியை அல்ல என்பது கடற்படையினருக்குத் தெளிவாக விளங்கியது. பொன்ராசா கடற்படையினருக்கு ஏற்றவாறு தாளம் போடுவதிலும் இப்போது தேர்ச்சி பெற்றிருந்தார். பொன்ராசா ஒரு சமையல் மன்னனாயிருந்தார். அவர் தளபதிகளுக்குச் சுவையாகச் சமைத்துப்போட்டு தளபதிகளின் இரக்கத்தைக் பெற்றார். கடற்படையினருக்கு ஒரு செல்லப்பிராணிபோல பொன்ராசா ஆகிவிட்டார். இப்போது கடற்படையினர் பொன்ராசாவை ஊருக்கள் சென்றுவரவும் அனுமதித்தார்கள். பகல் முழுவதும் ஊருக்குள் சுற்றித்திரியும் பொன்ராசா இரவில் முகாமுக்குத் திரும்பித் தனது அறையில் படுத்துக்கொள்வார். அவர் தனது அறையை சுத்தப்படுத்தி அதற்குள் மரப்பலகைகளால் ஒரு படுக்கையும் இணக்கிப் போட்டுக்கொண்டார். ஊருக்குள் சனங்கள் பொன்ராசாவை ’ நேவி ஐயா’ என அழைத்தார்கள். பொன்ராசா நேவியின் ஆள் என்ற அச்சம் சனங்களுக்கிருந்தது. நயினாதீவில் கள்ளும் மீனும் தாராளமாக் கிடைத்தன. அங்கிருந்து கடற்படையினருக்குத் தெரியாமல் தப்பித்துச் செல்வதும் நடவாத ஒன்று என்பதற்கப்பால் அங்கிருந்து தப்பிச் செல்வது குறித்துப் பொன்ராசா யோசிக்கவேயில்லை. இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற மகன்மாரைக் குறித்தும் இப்போது அவர் குறைபட்டுக்கொள்வதில்லை. இந்தக் கிழவனையே ஆடாகக் கட்டித் தோலாக உரித்தெடுத்வர்களிடம் அந்த இளைஞர்கள் சிக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை இப்போது அவர் அறிந்திருக்கக்கூடும். அவ்வப்போதுதான் பொன்ராசா கடற்படை முகாமுக்குச் சென்று வந்தார். மற்றப்படிக்கு அவர் கோயில் மண்டபத்திலேயே தங்கிக்கொண்டார். அந்தத் தீவு மணிமேகலைக்கு அமுதசுரபியை வழங்கிய தீவல்லவா. பொன்ராசாவுக்கு மட்டும் சோற்றுக்குப் பஞ்சம் வந்துவிடுமா என்ன! கோயில் சோறும், அன்னதான மடமும், கடற்படை முகாமின் பட்டரும் ஜாமுமாக அவர் கொழுத்துத் திரித்தார். நயினாதீவிலிருந்து கடற்படையினரின் கடுமையான சோதனைக்குப் பிறகு காலையில் ஒரு பயணிகள் இயந்திரப் படகு புங்குடுதீவின் குறிகட்டுவான் துறைக்குச் செல்லும். மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே அந்தத் தீவிலிருந்து மக்களை வெளியேறக் கடற்படையினர் அனுமதித்தார்கள். அவ்வாறு சென்ற ஒரு பயணியிடம் தனது மனைவியிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கடிதத்தைப் பொன்ராசா கொடுத்தனுப்பினார். மூன்று மாதங்களாகக் கணவன் இருக்குமிடம் தெரியாமல் செத்தவீடு கொண்டாடிக்கொண்டிருந்த ஞானம்மாவின் கையில் அந்தக் கடிதம் கிடைத்தபோது அவர் செய்வதறியாது விழித்தார். அந்தக் கடிதத்தில் ’ நயினாதீவில் சிவில் நிர்வாகம் நன்றாகயிருக்கிறது, இக்கடிதம் கண்டதும் புறப்பட்டு நயினாதீவுக்கு வரவும், இங்கே நேவிக்காரர்கள் எனக்கு மிகவும் ஆதரவாகயிருக்கிறார்கள்’ என எழுதப்பட்டிருந்தது. ஞானம்மா பக்கத்து வீட்டுப் பொடியனிடம் கடிதத்தைக் காட்டியபோது அவன் அந்தக் கடிதத்தை இயக்கத்திடம் கொண்டுபோய்க் கொடுப்பதே சரியாயிருக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் ஏதோ சதி ஒளிந்திருக்கிறது என்றும் சொன்னான். இவ்வாறாக அந்தக் கடிதம் புலிகளின் அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்தது. புத்தாண்டுக் கொண்டாட்டம் கடற்படை முகாமில் அட்டகாசமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. அன்று பொன்ராசா விசேடமாகக் கணவாய், இறால், நண்டு என பொரித்துக் கரித்துச் சமைத்துத் தளபதிகளை மகிழ்ச்சிப்படுத்தினார். தளபதியிடமிருந்து ஒரு முழு ‘மெண்டிஸ்’ சாராயப் போத்தல் அவருக்கு அன்பளிப்பாகக் கிடைத்தது. கடற்கரையில் உட்கார்ந்திருந்து அதை இரசித்து இரசித்துக் குடித்துக்கொண்டிருந்தார். மார்கழியின் குளிர்காற்று வீசிக்கொண்டிருக்க உடல் சில்லிட்டது. தெற்கே புங்குடுதீவிலிருந்து ஓர் ஆகாயவாணம் மேலே கிளம்பி ஆகாயத்தில் வண்ணமயமாகப் பூத்ததைக் கவனித்தார். அரைப் போத்தல் சாராயம் முடிந்தபோது உடல் முறுக்கேறி நின்றது. போத்தலை கையிலெடுத்தவாறு முகாமை நோக்கி நடந்தார். முகாமில் சிங்கள பைலாப் பாடல்கள் முழங்கிக்கொண்டிருந்தன. இந்த நேரத்தில் புலிகள் தாக்கினால் வலுசுலபமாக இந்த முகாமை வீழ்த்திவிடலாம் என்று நினைத்துக்கொண்டார். அவரது கால்கள் அவரை ஊர்மனைக்குள் இழுத்துச் சென்றன. எல்லா வீடுகளும் இருளில் மூழ்க்கிக் கிடந்தன. இவ்வாறான கொண்டாட்ட நாட்களில் மதுபோதையுடன் கடற்படையினர் வீடுகளுக்குள் நுழைவது, பெண்களோடு சேட்டை செய்வது சர்வ சாதாரணமாக நிகழுமென்பதால் இத்தகைய    நாட்களில் மக்கள் இன்னும் எச்சரிக்கையாக இருப்பதுண்டு என அவர் அறிந்திருந்தார். மனம் காமம் குறித்த நினைவுகளால் அலைக்கப்படலாயிற்று. கையிலிருந்து போத்தலைக் கடகடவென வாய்க்குள் சரித்தார். போத்தலில் இன்னும் கால்பகுதி மீந்திருந்தது. கடற்கரைக்குத் திரும்பியவர் போத்தலைக் கடற்கரையில் வைத்துவிட்டு உடைகளையும் களைந்துவிட்டு நிர்வாணமாகக் கடலுக்குள் இறங்கி இடுப்புவரையான நீருக்குள் நடந்து சென்றார். கண்களை மூடியவாறு  நீருக்குள் கரமைதுனம் செய்யத் தொடங்கினார். சில நிமிடங்களில் சலிப்புடனும் வெறுப்புடனும் கரையை நோக்கி நடந்துவந்து உடைகளை அணிந்துகொண்டார். சாராயப் போத்தலை எடுத்து அதைத் திறந்தபோது அவரது கழுத்தில் அந்த வலுவான அடி விழுந்தது. தாக்கப்பட்ட ஒரு வலிய மிருகம் போல சுழன்று திரும்பினார். அவரது மூளை நிதானிப்பதற்குள்ளாகவே அவரது கையிலிருந்த போத்தல் எதிராளியின் தலையில் மோதிச் சிதறிய ஓசையைக் கேட்டார். அடுத்தநாள் காலையில் அவரது கழுத்தில் கல்லைக் கட்டிப் படகில் ஏற்றிக் கடற்படையினர் கடலுக்குள் அழைத்துச் சென்றனர். இவரால் இரவு தாக்கப்பட்ட கடற்படை வீரன் தலையில் காயத்திற்குப் போடப்பட்ட துணிக்கட்டோடு இவரையே உற்றுப் பார்த்தவாறிருந்தான். பொன்ராசா மவுனமாயிருந்தார். அவரைக் கல்லோடு அவர்கள் கடலுக்குள் ஒரு நீள் கயிற்றில் இறக்கினார்கள். கடலம்மாவின் கருவறையில் பொன்ராசா போய் விழுந்தார். கைகளையும கால்களையும் ஒரு குழந்தைபோல அவர் அடித்தார். அவரது அடிவயிற்றில் சரளைக் கற்கள் குத்துவதை உணர்ந்தார், தனது தலை வெடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். மூளைக்குள் கருமை மட்டுமே படரத் தொடங்கியது. அப்போது  மறுபடியும் கயிற்றினால் மேலே இழுக்கப்பட்டார். முக்கால் பிணமாகப் பொன்ராசா மேலே வந்தார். சில தடவைகள் இந்த விளையாட்டு நடந்ததன் பின்பாக அவரை மறுபடியும் படகில் ஏற்றினார்கள். நயினாதீவுத் துறையிலிருந்து குறிகட்டுவானுக்குப் புறப்பட்ட பயணிகள் படகு தூரத்தே வந்துகொண்டிருந்தது. அந்தப் படகைக் கடற்படையின் படகு நெருங்கி அணைத்தது. பொன்ராசா அந்தப் பயணிகள் படகில் ஏற்றப்பட்டார். அவரது கையில் உபதளபதியால் ஒரு சிறிய பொட்டலம் கொடுக்கப்பட்டது. அந்தப் பொட்டலத்தில் நீலக் கற்கள் பதித்த இரண்டு தோடுகளிருந்தன. தளபதி சிங்களத்தில் பொன்ராசாவிடம் சொன்னான்:“மரணம் என்றால் என்னவென்று இப்போது பொன்ராசாவுக்குத் தெரியும்”. பொன்ராசா நீலக் கற்கள் பதித்த தோடுகளைச் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டார். குறிகட்டுவான் துறையில் இறங்கியதும் விறுவிறுவென நடந்துபோய் அங்கு நின்றிருந்த மினிபஸ்ஸில் ஏறி உட்கார்ந்தார். இரண்டு நிமிடங்கள் ஆகியிருக்காது " ஐயா கொஞ்சம் வெளியே இறங்கி வாங்க" என்ற குரல் கேட்டது. அங்கே விடுதலைப் புலிகள் நின்றிருந்தார்கள். பொன்ராசா இறங்கி வெளியே வந்ததும் அவரது கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டன. புலிகளின் சிறைச்சாலையில் இருநூறுவரையான கைதிகள் அடைபட்டிருந்தார்கள். அந்தச் சிறைச்சாலை எங்கேயிருக்கிறது என்பது அங்கிருந்த யாருக்குமே தெரியவில்லை. பொன்ராசாவிடம் குறுக்கு விசாரணைகள் ஏதும் நடத்தப்படவில்லை. அவரிடமிருந்த நீலக் கற்கள் பதித்த தோடுகளைக் கைது செய்தவுடனேயே புலிகள் எடுத்துக்கொண்டார்கள். அவருக்குச் சிறைச் சீருடை வழங்கப்பட்டது. ஒரு சாரத்தைப் பாதியாக்கிய பாதித்துண்டு மட்டுமே சிறைச் சீருடை. வேறெந்த உடைகளும் கிடையாது. உள்ளாடை அணியவும் தடையிருந்தது. அவரது கால்கள் மூன்று குண்டுகள் வைத்த சங்கிலியால் பிணைக்கப்பட்டன. பொன்ராசா குறித்த விபரங்கள் எல்லாமே புலிகளிடமிருந்தன. அவர் திருடிச் சென்ற படகின் உரிமையாளரும் புலிகளிடம் முறையீடு செய்திருந்தார். பொன்ராசா நயினாதீவிலிருந்து தனது மனைவிக்கு அனுப்பிய கடிதமும் அவர்களிடமிருந்தது. அவர் தனியனாகப் படகில் சென்றதால் அவர் ‘கப்டன்’ என்றே  அங்கிருந்த புலிகளால் அழைக்கப்பட்டார். அவர்கள் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்: “கப்டன் உள்ளதைச் சொல்லிப்போடுங்க!” பொன்ராசா உள்ளது, இல்லாதது, பொல்லாதது எல்லாவற்றையும் சொன்னார். அதைப் பொறுமையாகக் கேட்டு ஒரு பேரேட்டில் பதிவுசெய்துவிட்டு அவர்கள் மறுபடியும் கேட்டார்கள்: “கப்டன் உள்ளதைச் சொல்லிப்போடுங்க”. கடற்படையினர் அடிக்கும்போது பொன்ராசாவிற்கு கோபம் வரவில்லை. ஆனால் புலிகள் அடித்தபோது அவருக்கு அளவிட முடியாத கோபம் வந்தது. அவர்கள் அடிக்கும் போது அவர் கண்களை இறுக மூடிக்கொள்வார். ‘ஆள்களைப் பார்..மூன்றாம் நம்பர் ரீல்கட்டைகள் மாதிரி இருந்துகொண்டு மல்லா மலையான என்னில் கைவைக்கிறார்களே’ என அவரது மனம் அடங்காத ஆத்திரத்துடன் கொந்தளிக்கும். நயினாதீவு கடற்படைத் தளத்தின் அமைப்பைப் பொன்ராசா படம் வரைந்துகாட்டியபோது உண்மையிலேயே புலிகள் ஆச்சரியப்பட்டுத்தான் போனார்கள். பொன்ராசா வரைந்துகொடுத்த படத்தையே பார்த்துக்கொண்டிருந்த பொறுப்பாளன் “அந்த சிவில் என்ஜினியரைக் கூட்டிக்கொண்டு வா” என அருகில் நின்ற ஒருவனுக்கு உத்திரவிட்டான். சற்று நேரத்தில் கைகளும் கால்களும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவன் முழந்தாள்களில் நடக்க வைக்கப்பட்டு நாய்போலே அங்கே இழுத்துவரப்பட்டான். அந்த இளைஞனின் முன்பு பொன்ராசா வரைந்த படத்தைக் காட்டிய பொறுப்பாளன் “நீ என்னடா சிவில் என்ஜினியர், இங்கே கப்டன் வரைந்திருக்கும் படத்தைப் பார்த்தாயா! உன்னால் ஆறுமாதமாகக் கேவலம் பூந்தோட்ட முகாமின் படத்தைச் சரியாக வரைந்துகாட்ட முடியவில்லையே” என்று சொல்லிவிட்டுப்  பொன்ராசாவைத் திரும்பிப் பார்த்தவாறே ஒரு மண்வெட்டிப் பிடியை எடுத்து அதை அவரிடம் கொடுத்து  “கப்டன் அடியுங்கள் இவனை, அப்படியாவது இவனுக்குப் படித்ததெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறதா பார்க்கலாம்” என்றான். பொன்ராசா கொஞ்சமும் தயங்காமால் கையை நீட்டி அந்த மண்வெட்டிப் பிடியை வாங்கி இரண்டு கைகளாலும் இறுகப் பிடித்துக்கொண்டார். முதலாவது அடி அந்த இளைஞனின் முதுகில் விழுந்தது. பொன்ராசா உரத்த குரலில் “டேய் துரோகி உன்னைப் போன்றவர்களால்தான் எங்களுக்குத் தமிழீழம் கிடைக்காமலிருக்கிறது…இந்தப் பிள்ளைகள் உயிரைக் கொடுத்துப் போராடிக்கொண்டிருக்க நீங்கள் துரோகமா செய்கிறீர்கள், தமிழர்கள் படும் கஸ்டத்தைக் கொஞ்சமாவது  நினைத்துப் பார்த்தாயா?” என உறுமியவாறே அந்த இளைஞனை அடித்தார். இளைஞனின் உடல் துடித்ததே தவிர அவனிடமிருந்து ஒரு முனகல் கூட வரவில்லை. பொன்ராசா பாய்ந்து அடிக்க முயற்சித்தபோது அவரது கால்களில் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலி தடக்கி அவர் அந்த இளைஞன் மேலேயே குப்புற விழுந்து போனார். அந்த இளைஞன் யார் எவர் என்பதெல்லாம் பொன்ராசாவுக்குத் தெரியாது. புலிகளின் சிறையில் இரண்டு வேளைகள் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. வெள்ளையரிசிக் கஞ்சிக்குள் சீனி போட்டுக் கொடுப்பார்கள். அது கால்வயிற்றுக்குக் கூடப் போதாது. ஏதோ கண்களைக் கட்டினார்கள், கூட்டி வந்தார்கள், இரண்டு அடியைப் போட்டு விசாரித்துவிட்டுப் பின்பு துரத்திவிடுவார்கள் என்றுதான் இங்கே வரும்போது பொன்ராசா நினைத்திருந்தார். ஆனால் மாதக்கணக்கில் பட்டினியும் சிறையும் சித்திரவதையும் கிடைக்கும் என அவர் நினைத்திருக்கவேயில்லை. ஒருநாள் விசாரணையின் போது அவர்கள் “கப்டன் உள்ளதைச் சொல்லிப்போடுங்க”  என்றபோது பொன்ராசா பொறுக்கமுடியாமல்  உள்ளதைச் சொல்லியும் விட்டார்: “தம்பிமார் நான் உங்களுடைய தகப்பனுக்குச் சமம், ஒரு  மிருகத்தைப் போல என்னைச் சங்கிலியால் கட்டி அரை நிர்வாணமாக நீங்கள் வைத்திருப்பதெல்லாம் சரியான தவறு. நான் உங்களுக்கு நயினாதீவு முகாமின் வரைபடத்தைக் கொடுத்திருக்கிறேன். அந்த முகாமைத் தாக்கும் வேலையை விட்டுவிட்டு நீங்கள் இந்தக் கிழவனைப் போட்டுச் சிறுகச் சிறுக வதைப்பது நியாயமற்றது. நான் ஏற்கனவே நேவியிடம் போதுமான அடி வாங்கியிருக்கிறேன். தமிழனுக்குத் தமிழனே இப்படிச் செய்யக்கூடாது” என்று கொஞ்சம் கடுப்பாகத்தான் பொன்ராசா பேசிவிட்டார். அவர் பேசியதைப் பொறுப்பாளன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு அவரை அவன் ’கரப்பு’க்கு அனுப்பிவைத்தான். கோழிகளை அடைத்து வைக்கும் பிரம்புகளால் இழைக்கப்பட்டிருக்கும் கரப்புவைப் பாரத்திருப்பீர்கள்தானே. இது முட்கம்பிகளால் இழைக்கப்பட்ட கரப்பு. முக்கோண வடிவில் ஒரு ஆள் உட்கார்ந்திருக்கும் உயரத்திற்கு முட்கம்பிகளால் அந்தக் கூண்டு பின்னப்பட்டிருக்கும். அதற்குள் மூன்று நாட்களுக்குப் பொன்ராசாவைப் போட்டுவிட்டார்கள். “கப்டன் அரசியல் பேசுகிறார்” என்று பொறுப்பாளன் குறைபட்டுக்கொண்டானாம். அந்தக் கூண்டுக்குள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்ப முடியாது. அசைந்தால் முட்கம்பி உடலைக் கிழித்துவிடும். உணவோ தூக்கமோ இல்லாமல் மூன்று நாட்கள் அந்தக் கூண்டுக்குள் பைத்தியம் பிடித்ததுபோல பொன்ராசா உட்கார்ந்திருந்தார். தூங்கி விழுந்தபோது முட்கம்பிகள் அவரை இரத்தம் வரக் குத்தி எழுப்பிவிட்டன. முள்ளுச் சட்டையை அணிந்திருந்தது போல அவர் அவதிப்பட்டார். மூன்று நாட்களில் அவரது உடல் முழுவதும் தோலும் தசையுமாகக் கிழிந்திருந்தன. தலையில் மட்டும்தான் காயம் ஏதுமில்லை. தலையில் ஒரு முட்கிரீடமும் வைத்திருந்தால் அந்தக் குறையும் தீர்ந்திருக்கும் என்று அந்த நரகவேதனையிலும் பொன்ராசா நினைத்துக்கொண்டார். 1958ம் ஆண்டு இன வன்முறை நடக்கும்போது பொன்ராசாவுக்குச் சரியாக இருபது வயது. அப்போது அவர் சிங்கள நாட்டுப்பக்கத்திலுள்ள ‘நிற்றம்புவ’ என்ற சிறுநகரத்தில் ‘மரியாம்பிள்ளை அன்ட் சன்ஸ்’ துணிக்கடையில் சமையற்காரனாயிருந்தார். தனது பதின்முன்று வயதில் சமையல் எடுபிடியாக இங்கே வேலைக்குச் சேர்ந்தவர் இப்போது சமையற்காரனாகிவிட்டார். முதலாளி கரம்பனைச் சேர்ந்தவர். அவருக்குப் பொன்ராசாவின் சமையல் வெகுவாகப் பிடித்துக்கொண்டது. பொன்ராசா கொஞ்சம் குழப்படிகாரர் என்பதனால் அவரது கையில் சம்பளம் எதுவும் முதலாளி கொடுப்பதில்லை. முதலாளி ஊருக்குப் போகும்போது பொன்ராசாவின் அப்புவை வீட்டுக்குக் கூப்பிட்டு மொத்தமாகச் சம்பளப் பணத்தைக் கொடுத்துவிடுவார். அந்த வன்முறையின்போது ‘மரியாம்பிள்ளை அன்ட் சன்ஸ்’ கொள்ளையிடப்பட்டு எரிக்கப்பட்டது. முதலாளி மரியாம்பிள்ளை உயிருடன் எரியும் நெருப்பில் தூக்கிப் போடப்பட்டார். பொன்ராசாவைப் பிடிக்கவந்த காடையர்கள் இருவரை நின்ற நிலையில் பொம்மைகள் போலத் தூக்கி எறிந்துவிட்டுப் பொன்ராசா ரம்புட்டான் தோட்டங்களிற்குள் ஓடி ஒளிந்துகொண்டார். அடுத்தநாள் காலையில் வீதியால் இராணுவ வாகனங்கள் போவதைக் கவனித்துவிட்டு அவற்றை நோக்கி ஓடிப்போனார். இராணுவத்தினர் அவரை அகதிமுகாமில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். வன்செயல்கள் தணிந்தவுடன் உடுத்த உடுப்புடனும் அகதிமுகாமில் கொடுக்கப்பட்ட துவாயுடனும் பொன்ராசா ஊருக்கு வந்தார். அவரது ஊரிலிருந்து இன்னொரு இளைஞர்கள் கூட்டம் அப்போது சிங்கள நாட்டுப்பக்கக் கடைகளில் வேலைக்காகப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. பொன்ராசாவும் திரும்பவும் கொழும்புக்குப் போய் வேலை தேடலாம் எனப் புறப்படத் தயாரானபோதுதான் அவருக்கு அவரது ஊர்ப் பாதிரியார் மூலம் பெரிய கோயில் பாதிரியார் வரப்பிரகாசத்திடம் ’ கோக்கி’ வேலை கிடைத்தது. யாழ்ப்பாணப் பெரிய கோயிலை ஆசனக்கோயில் என்றும் சொல்வார்கள். அப்போது அந்தக் கோயிலில் மட்டும்தான் வழிபடுபவர்கள் உட்காருவதற்கான இருக்கைகள் போடப்பட்டிருந்ததால் அந்தப் பெயர். வரப்பிரகாசம் பாதிரியாருக்கும் பொன்ராசாவின் சமையல் பிடித்துக்கொண்டது. பாதிரியாரின் அறைவீட்டிலேயே தங்கிக்கொள்வதற்குப் பொன்ராசாவுக்கு இடம் கிடைத்தது. பாதிரியார் மலேசியாவில் பிறந்து இத்தாலியில் படித்தவர். அவருக்குத் தமிழ் பேசுவதற்கு அவ்வளவாக வராது. அவர் பெரிய கோயிலில் லத்தீன் மொழிப் பூசைக்குப் பொறுப்பாயிருந்தார். அவர் பொன்ராசாவிடம் ஆங்கிலத்திலேயே பேசுவார். பொன்ராசா தனது சமையல் திறமையால் பாதிரியாருக்குப் பதில் சொன்னார். அங்கே வேலைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆனபோது பெரிய கோயில் மரியாயின் சேனையின் பாடகிகள் குழுவிலிருந்த ஞானம்மாவுக்கும் பொன்ராசாவுக்கும் காதல் உருவானது. ஞானம்மாவின் வீட்டில் பெரிய எதிர்ப்புக் கிளம்பியபோது பொன்ராசா இரவோடு இரவாக ஞானம்மாவை அழைத்துக்கொண்டு படகேறிச் சுருவிலுக்கு வந்துவிட்டார். பொன்ராசா ஞானம்மாவுடன் ஓடிவந்த மூன்றாவது நாளில் வரப்பிரகாசம் பாதிரியாரும் ஞானம்மாவின் தகப்பனும் சுருவிலுக்குத் தேடிவந்தார்கள். பொன்ராசாவின் வீட்டின் முன்னால் நின்று உரத்த குரலில் பாதிரியார் " கோக்கி…கோக்கி" எனக் கூப்பிட்டார். யாழ்ப்பாணம் பெரிய கோயிலில் வைத்துக் காலைப் பூசையில் பொன்ராசாவுக்கும் ஞானம்மாவுக்கும் தலையில் முட்கிரீடங்கள் வைக்கப்பட்டன. அந்தத் தண்டனைக்குப் பிறகு வரப்பிரகாசம் பாதிரியாரே இருவருக்கும் கைபிடித்து வைத்தார். திருமணப் பரிசாக ஞானம்மாவுக்கு நீலக் கற்கள் பதித்த தோடுகளைப் பாதிரியார் வழங்கினார். புலிப்படையின் மூன்றுநாட்கள் முட்கம்பிக் கூண்டுத் தண்டனையுடன் பொன்ராசா ஒடுங்கிப்போனார். அவரது உடல் எப்போதும் நடுங்கியவாறேயிருந்தது. அவரது உடல் வேகமாக உருக்குலையலாயிற்று. ஒரு பட்டுப்போன பனைமரம்போல உள்ளுக்குள்ளால் அவர் உளுத்துப்போனார். எப்போதும் அவர் படுத்தே கிடந்தார். விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் கால்கள் பின்னச் சங்கிலியை இழுத்து இழுத்துத் தள்ளாடி நடந்துசென்றார். இப்போதெல்லாம் அடிவிழும்போது அவர் ஓலமிட்டு அழத்தொடங்கினார். தனது மனைவியை ஒருதடவையாவது பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது. ஆனால் அதை அவர் புலிகளிடம் சொல்லவில்லை. முட்கம்பிக் கூண்டுத் தண்டனையாவது பரவாயில்லை. பங்கர் சிறைக்குள் போட்டார்கள் என்றால் இருபத்திநான்கு மணித்தியாலங்களில் தனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என அவர் நினைத்துக்கொண்டார். ஒருநாள் மாலையில் பொன்ராசாவினதும் இன்னும் ஆறு கைதிகளினதும் கால் விலங்குகள் நீக்கப்பட்டன. அவர்கள் எல்லோரும் ஐம்பது வயதைக் கடந்த கைதிகளாகவேயிருந்தார்கள். எல்லோருக்கும் புதிய சாரமும் சட்டையும் வழங்கப்பட்டது. விடுதலை செய்யப் போகிறார்கள் என்றுதான் பொன்ராசா நினைத்தார். அவர்களது கண்கள் கறுப்புத்துணிகளால் கட்டப்பட்டன. இரவோடு இரவாக அந்த ஏழு கைதிகளும் யாழ்ப்பாண நகரத்து முகாமொன்றுக்கு மாற்றப்பட்டார்கள். யாழ்ப்பாணக் கோட்டைக்குள் முற்றுகைக்குள் சிக்கியிருந்த இராணுவத்தினரை மீட்புப் படைகள் மீட்டுச் சென்றதன் பின்னாக அந்தக் கோட்டை புலிகளின் கைகளில் வீழ்ந்தது. நானூறு வருடங்கள் பழமைவாய்ந்த அந்த வலிய கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கப் புலிகள் முடிவெடுத்தார்கள். அதிகாலை ஆறுமணிக்கே பொன்ராசா வைக்கப்பட்டிருந்த முகாமிலிருந்து ஒரு கைதிகள் அணி வேலைக்காகக் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. மாலை ஆறுமணிவரை அங்கே ஓயாத வேலைகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. இவர்கள் வேலை செய்தபோது பத்தடி தூரத்திற்கு ஒரு புலி கையில் கொட்டானோடு நின்று இவர்களைக் கண்காணித்தது. கைதிகள் ஒருவரோடு ஒருவர் பேசக் கூடாது எனக் கண்டிப்பான உத்தரவிருந்தது. வேலையில் சுணங்கினாலோ சற்றே  தடுமாறினாலோ கொட்டானால் முதுகுத்தோல் பிய்ய அடி விழுந்தது. மூன்று மாதங்கள் ஒரு ஊமைபோல பொன்ராசா அங்கே மதிற் கற்களை உடைந்தும் மண் அள்ளிக் கொட்டியும் கடூழியம் செய்தார். கோட்டையை உடைக்கும் வேலைகள் அனைத்தும் முடிந்த மாலைப்பொழுதில் பொன்ராசா புலிகளால் விடுவிக்கப்பட்டார். “கப்டன் இனியாவது தமிழீழத்துக்கு விசுவாசமாகயிருங்கள்” என்றொரு அறிவுரையும் அவருக்கு வழங்கப்பட்டது. தன்னுடைய நீலக் கற்கள் பதித்த தோடுகளை அவர்கள் திருப்பித் தருவார்கள் எனப் பொன்ராசா எதிர்பார்த்தார். அது திரும்பி வருவதாகத் தெரியவில்லை. விடுதலை என்ற செய்தியைக் கேட்டவுடனேயே பொன்ராசா பழைய பொன்ராசாவாகியிருந்தார். அவர் தனக்கு அறிவுரை சொன்னவனிடம் போய் மிதப்பான குரலில் “என்னுடைய நீலக் கற்கள் பதித்த தோடுகள் இரண்டு உங்களிடமுள்ளன, அவற்றைப் போராட்டத்திற்கான எனது பங்களிப்பாக வைத்துக்கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அந்த இரவு நேரத்தில் திடுக்கடிமடக்காக பொன்ராசாவைக் கண்ட ஞானம்மா திகைத்துப்போனார். பொன்ராசா, ஞானம்மாவைக் கேட்ட முதலாவது கேள்வி “கோட்டையைப் பிடிக்கப் போன இராணுவம் சுருவில் கிராமத்திற்குள் வந்ததா?” என்பதாயிருந்தது. ‘இல்லை’ என்று ஞானம்மா தலையசைக்கவும் பொன்ராசா “அதைத்தானேயடி வேசை நானும் சொனன்னேன். அதைக் கேட்காமல்தானே உனது பிள்ளைகள் இந்தியாவுக்கு ஓடினார்கள்” எனச் சொன்னபடியே ஞானம்மாவின் காதைப் பொத்தி ஓங்கி அறைந்தார். அந்த அடியில் ஞானம்மாவின் காதிலிருந்த நீலக் கற்கள் பதித்த தோடு பறந்துபோய் தரையில் விழுந்து விளக்கொளியில் மினுங்கிக்கொண்டிருந்தது. அதைக் குனிந்து எடுத்த பொன்ராசா “இது இங்கே எப்படி வந்தது?” எனக் கேட்டார். “நான்கு மாதங்களிற்கு முன்பு இயக்கப் பொடியன்கள் கொண்டுவந்து தந்தார்கள்” என்றார் ஞானம்மா. பொன்ராசா படுத்திருந்தபோது அவரருகில் வந்த ஞானம்மா அவரது மார்பை வருடிக்கொடுத்துவிட்டு அவரது மார்பில் தலைவைத்துப் படுத்துக்கொண்டே “கிறிஸ்டியும், பொஸ்கோவும் இந்தியாவிலிருந்து பிரான்ஸுக்குப் போய்விட்டார்கள், தம்பிமார் இந்தியாவில் கஸ்டப்படக்கூடாதென்று கில்டா புருசனிடம் சொல்லி ஒரே மாதத்தில் இருவரையும் பிரான்ஸுக்கு கூப்பிட்டுவிட்டாள்” என்றார். 2 மே மாதம், எட்டாம் தேதி கரையாம் முள்ளிவாய்க்காலில் வைத்துப் பொன்ராசா “இனியும் இங்கே இருக்க முடியாது, எந்த நேரமும் இங்கே இராணுவம் வந்துவிடும் நாங்கள் கடலுக்குள் இறங்கி அடுத்த பக்கம் போய்விடலாம்” என்று ஞானம்மாவிடம் நச்சரித்துக்கொண்டேயிருந்தார். “இல்லை இங்கே இராணுவம் வரப் பொடியன்கள் விடமாட்டார்கள், நாங்கள் இங்கேயே இருப்பதுதான் புத்தியான காரியம்” என்றார் ஞானம்மா. “இராணுவம் வந்தால் நீ பெண்ணென்று உன்னை ஒன்றும் செய்யமாட்டார்கள், என்னைத்தான் கொல்வார்கள்” என்று  வெறுப்பான குரலில் சொன்னார் பொன்ராசா. அவர் அப்படியே கடற்கரை மணிலில் குந்தியிருந்து ஞானம்மாவின் கையைப் பிடித்துத் தன்னருகே உட்காரவைத்து நடுங்கும் விரலால் மணலில் வரைபடமொன்றை உருவாக்கினார். “இங்கே மண் அணைகள் உள்ளன, இங்கே கண்ணிவெடிகள் இருக்கின்றன, இங்கே புலிகள் நிற்கிறார்கள், இந்த வழியால் உடைத்துக்கொண்டு இராணுவம் உள்ளே வரும்” என அவர் ஞானம்மாவுக்கு விளக்கினார். அன்று நடுநிசியில் குண்டுச் சத்தம் கேட்டு ஞானம்மா திடுக்குற்று விழித்தபோது அருகில் படுத்திருந்த பொன்ராசா காணாமற் போயிருந்தார். தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. ஞானம்மா கலங்கிப்போய் உட்கார்ந்திருந்தார். அதிகாலை மூன்று மணியளவில் பொன்ராசா பூனைபோல வந்து  ஞானம்மாவுக்கு அருகே அமர்ந்துகொண்டார். இரகசியக் குரலில் “கடற்கரையில் வள்ளங்கள் நிற்கின்றன, ஒன்றை அவிழ்த்துக்கொண்டு அந்தப் பக்கம் போய்விடலாம் வருகிறாயா” எனக் கெஞ்சினார். “சும்மாயிருந்தால் ஒரு பக்கத்தால்தான் வெடி வாங்க வேண்டிவரும், ஏதாவது குழப்படி செய்தீர்களென்றால் இரண்டு பக்கத்தாலும் வெடி வாங்கவேண்டியிருக்கும்” என்றார் ஞானம்மா. “நான் செத்துப்போனால் நீதானடி பொறுப்பு தாசி அபராஞ்சி!” எனச் சொல்லிப் பொன்ராசா பற்களைக் கடித்தார். தாயையும் தகப்பனையும் குறித்துச் செய்திகள் ஏதும் கிடைக்காமல் கில்டாவும், கிறிஸ்டியும், பொஸ்கோவும் தவித்துக்கொண்டிருந்தார்கள். ஒருநாள் வவுனியாவிலிருந்து தொலைபேசிச் செய்தி வந்தது. பொன்ராசாவும் ஞானம்மாவும் வவுனியா தடுப்பு முகாமொன்றில் இருப்பதாக அந்தச் செய்தி அறிவித்தது. அடுத்த வாரமே கில்டா பாரிஸிலிருந்து புறப்பட்டு வவுனியா வந்துவிட்டாள். காசை வவுனியா முழுவதும் விசிறியடித்தாள். தகப்பனையும் தாயையும் அழைத்துக்கொண்டு கொழும்புக்கு வந்தாள். அடுத்த ஒருமாதத்திற்குள் ‘ஸ்பொன்ஸர்’ அலுவல் சரிவந்தது. இருவரையும் அழைத்துக்கொண்டு கில்டா  பிரான்ஸுக்கு விமானம் ஏறினாள். கில்டாவின் குடும்பம் பாரிஸில் இருந்தது. கிறிஸ்டியும், பொஸ்கோவும் தெற்குப் பிரான்ஸில் சென்திபோ என்ற ஊரில் ஆளுக்கொரு சிறிய கடை வைத்திருந்தார்கள். கிறிஸ்டி பாரிஸ் வந்து பொன்ராசாவையும் ஞானம்மாவையும் சென்திபோவுக்கு அழைத்துப்போனான். சென்திபோ ஆறுகளின் ஊர். திபோ ஆற்றங்கரையோரம் அமைதியான சூழலில் சிறுகாடுகளுக்கு நடுவில் கிறிஸ்டியின் வீடு இருந்தது. அங்கிருந்து அய்ந்து நிமிட நடை தூரத்தில் இளையவன் பொஸ்கோவின் அழகிய வீடிருந்தது. அவர்களது கடைகள் நெடுஞ்சாலையை ஒட்டி அருகருகாக இருந்தன. அந்தச் சூழல் பொன்ராசாவுக்கு மிகவும் பிடித்துப்போனது. அடுத்த கோடை காலத்திற்குள் பொன்ராசா முழுவதுமாக மாறிவிட்டார். சிங்கள நாட்டில் இரண்டு காடையர்களைப் பொம்மைகள் போல தூக்கியெறிந்த பொன்ராசாவாக அவர் இருந்தார். காலையில் பத்துமணிக்கு ஒரு பெக் விஸ்கி அருந்திவிட்டு கிறிஸ்டியின் வீட்டிலிருந்து பொஸ்கோ வீட்டிற்கு நடந்துபோய் அங்கே மருமகளை நாட்டாமை செய்வார். அங்கே இன்னொரு பெக் அருந்திவிட்டு மதியச் சாப்பாட்டிற்கு கிறிஸ்டியின் விட்டுக்கு வந்து இந்த மருமகளை நாட்டைமை செய்வார். தாத்தாவின் சிவந்த கண்களைக் கண்டதுமே பேரப்பிள்ளைகள் கப் சிப்பாக இருந்து விடுவார்கள். கிறிஸ்டிக்கும் பொஸ்கோவுக்கும் தகப்பனிடம் இன்னும் பயமிருக்கவே செய்தது. ‘அய்யா எவ்வளவு வேண்டுமென்றாலும் குடியுங்கள், ஆனால் சத்தம் மட்டும் போடாதீர்கள்’ என அவர்கள் அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். ஞானம்மாவுக்கு பேரக் குழந்தைகளுடன் பொழுது கழிந்தது. பிள்ளைகள் போட்டி போட்டுக்கொண்டு அம்மாவுக்கு நகைகளும் உடைகளும் வாங்கிப் பூட்டி அழகு பார்த்தார்கள். வரப்பிரகாசம் பாதிரியார் பரிசளித்த நீலக் கற்கள் பதித்த அந்தத் தோடுகள் இப்போது தேடுவரற்று ஞானம்மாவின் பெட்டிக்குள் கிடந்தன. ஒரு மதியநேரம் திபோ ஆற்றங்கரையில் பொன்ராசா தனித்திருந்தபோது அந்த வெண்ணிறப் படகைப் பார்த்தார். துடுப்புகளை வலித்தவாறே ஐம்பது வயதுகள் மதிக்கத்தக்க ஒரு பிரஞ்சுப் பெண்மணி கரையை ஒட்டியே அந்தச் சிறிய படகில் வந்துகொண்டிருந்தார். பொன்ராசா கைளை உயர்த்திக்காட்டினார். அந்தப் பெண்மணியும் கைகளை உயர்த்தி வணக்கம் தெரிவித்துப் புன்னகைத்தார். மறுநாளும் அதேநேரத்திற்கு அந்தப் பெண்மணி படகில் கரையோரமாகவே வந்தபோது பொன்ராசா எழுந்து நடந்து சென்று படகை நிறுத்துமாறு சைகை செய்தார். அந்தப் பெண்மணி படகை நிறுத்தியதும் பொன்ராசா குதித்து ஆற்றுக்குள் இறங்கினார். அந்தப் பெண்மணி பதற்றத்துடன் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் எனச் சைகை செய்தார். பொன்ராசா ஒரு புன்னகையுடன் நடந்துபோய் அந்தப் படகைப் பிடித்துக்கொண்டார். அவர் படகுள்ளே ஏறுவதற்கு அந்தப் பெண்மணி கைகொடுத்தபோது பொன்ராசா சர்வ அலட்சியமாகப் பெண்மணியின் கையை விலக்கிவிட்டு தனது  நீண்ட கால்களைத் தூக்கிப் போட்டுப் படகில் தொற்றி உள்ளே விழுந்தார். படகு ஓர் உலாஞ்சு உலாஞ்சிய போது அந்தப் பெண்மணி  மார்பில் சிலுவைக் குறியிட்டுக் கூக்குரலிட்டாள். பொன்ராசா அவளை அமைதியாக இருக்குமாறு சைகை செய்துவிட்டு, சுட்டுவிரலால் தனது மார்பை இரண்டுதரம் தொட்டுக்காட்டி “கப்டன்” என்றார். அந்தப் பெண்மணி கண்கள் விரியப் புன்னகைத்தார். அந்தப் பெண்மணியின் பெயர் அன்னியஸ். அன்னியஸுக்கு நூறு ஆங்கிலச் சொற்களும் பொன்ராசாவுக்கு ஐம்பது ஆங்கிலச் சொற்களும் தெரிந்திருந்தன. அவர்கள் அந்தக் கோடை காலம் முழுவதும் அந்தச் சிறிய படகிலே திபோ ஆற்றிலே சுற்றித்திரிந்தார்கள். சிறுகாட்டுக்குள் நுழைந்து புற்தரையில் அருகருகே படுத்திருந்து வெயில் காய்ந்தார்கள். பொன்ராசா அன்னியஸை ’ லேடி’ என்றும் அன்னியஸ் பொன்ராசாவை ’ கப்டன்’ என்றும் அழைத்துக்கொண்டார்கள். ஒருநாள் அன்னியஸின் காரிலே அவர்கள் இருவரும் கிறிஸ்டியினதும் பொஸ்கோவினதும் கடைகளுக்குச் சென்றார்கள். அன்னியஸைத் தனது சிநேகிதியென மகன்களுக்குப் பொன்ராசா அறிமுகப்படுத்தி வைத்தார். அடுத்த குளிர்காலத்தின் ஒரு மாலைநேரத்தில் அன்னியஸின் வீட்டுப் படுக்கையறையிலிருந்த பதினைந்தாம் லூயி காலத்தைச் சேர்ந்த அழகிய விசாலமான கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த வெண்மையான படுக்கை விரிப்பில் தனது நீண்ட இடதுகையால் அன்னியர்ஸை அணைத்தவாறே தூங்கிக்கொண்டிருந்த பொன்ராசாவின் கை தளர்ந்துபோனபோது பொன்ராசா இறந்துபோயிருந்தார். கிறிஸ்டியும் பொஸ்கோவும் அங்கே வந்து சேர்ந்தபோது கட்டிலின் அருகே நின்றிருந்த அன்னியஸ் கண்ணீர் வடித்தவாறிருந்தார். அம்புலன்ஸில் பொன்ராசாவின் உடல் ஏற்றப்பட்டபோது அன்னியஸ்  ஓடிவந்து பொஸ்கோவைத் தழுவிக்கொண்டு கண்ணீர் உகுத்தார். பொஸ்கோ அவரது முதுகைத் தட்டிக்கொடுத்தபோது கிறிஸ்டி கண்கள் சிவக்கக் கண்களால் சைகை செய்தான். அந்தச் சைகை பொஸ்கோவுக்குப் புரியவில்லை. ஆஸ்பத்திரியில் பொன்ராசாவின் உடல் வைக்கப்பட்டிருந்த அறை ஒவ்வொரு நாளும் காலையில் ஒன்பது மணிக்குத் திறக்கப்பட்டு பதினொரு மணிக்கு மூடப்பட்டது. ஒவ்வொருநாளும் அங்கே ஞானம்மாவும் பிள்ளைகளும் போய் உட்கார்ந்திருந்தார்கள். கில்டா  அடிக்கடி மயங்கி விழுந்தாள். பொன்ராசா எங்கே இறந்தார் என்பதை மட்டும் கிறிஸ்டியும் பொஸ்கோவும் தாயிடமும் தமக்கையிடமும் சொல்லவில்லை. ஆற்றங்கரையில் படுத்திருந்தபோது அவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறது என்று சொல்லிவைத்தார்கள். அன்னியஸ் அந்தப் பக்கமே வராமலிருந்தது அண்ணனுக்கும் தம்பிக்கும் கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. சவ அடக்கத்திற்கு முந்தையநாள் மதியம் கிறிஸ்டியின் வீட்டில் அவர்கள் கூடியிருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அன்றிரவும் அடுத்தநாள் காலையிலும் பாரிஸிலிருந்து உறவுக்காரர்களும் நண்பர்களும் சவ அடக்கத்துக்காக வந்துவிடுவார்கள். அவர்களைத் தங்கவைப்பது, சாப்பாடுக்கு ஏற்பாடு செய்வது போன்ற விசயங்களை அவர்கள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். எப்படியும் நூறு பேர்களிற்குக் குறையாமல் சவ அடக்கத்திற்கு வரக்கூடும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். அப்போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தபோது அங்கே அன்னியஸ் கையில் ஒரு பொதியுடன் நின்றிருந்தார். அவர் தலையை ஒரு துணியால் முக்காடிட்டுக் குளிரில் நடுங்கியவாறே நின்றிருந்தார். பொஸ்கோ அவரை உள்ளே வருமாறு அழைத்தான். அன்னியர்ஸ் அதிகம் பேசவில்லை. அந்தப் பொதியைப் பொஸ்கோவிடம் கொடுத்துவிட்டு “இதைத் திரு. பொன்ராசா அவர்களின் கல்லறையில் நீங்கள் பதித்துவைத்தால் நான் அதிர்ஷ்டம் செய்தவளாவேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். பொஸ்கோ ஜன்னலால் பார்த்தபோது அன்னியஸ் உறைந்திருந்த பனிக்குள்ளால் திபோ ஆற்றங்கரையை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தார். அன்னியஸ் கொடுத்த அந்தப் பொதியை பொஸ்கோ அவதானமாகப் பிரித்தான். அது கல்லறையின் முகப்பில் பதிக்கும் சதுரவடிவிலான கறுப்பு நிறச் சலவைக் கல். அந்தக் கறுப்புக் கல்லில் கப்பலின் சுக்கானை இயக்கப் பயன்படும் சக்கரம் பொன்னிறத்தில் பொறிக்கப்பட்டு அதன் நடுவில் நங்கூரம் பொறிக்கப்பட்டிருந்தது. கப்பல் தலைவர்களது கல்லறைகளில் இந்தச் சின்னமிட்ட சலவைக்கல்லைப் பதித்து வைப்பது பிரஞ்சுக்காரர்களின் மரபு . கிறிஸ்டி மெதுவாக எழுந்து வந்து பொஸ்கோவின் கையிலிருந்த அந்தச் சலவைக்கல்லை வாங்கித் தரையில் வீசியடித்தான். " இதைக் கல்லறையில் பதித்தால் பார்க்கும் சனங்கள் எங்களைக் கரையார் என்றவல்லா நினைப்பார்கள்" என்று அவன் கத்தினான். இரண்டு துண்டாக உடைந்துகிடந்த அந்தச் சலவைக்கல்லை கால்களால் எத்திவிட்டான். கில்டா பதறிப்போய் ஓடிவந்து தம்பியாரின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். “வேண்டாமென்றால் விட்டுவிடு அதற்கு ஏன் இப்படிக் கோபப்படுகிறாய்” என்று அவள் பதற்றத்தடன் கேட்டாள். கில்டாவை உதறித்தள்ளிய கிறிஸ்டி ஒரே பாய்ச்சலில் அங்கிருந்து வெளியேறினான். அவன் கதவை அறைந்து மூடிய வேகத்தில் சன்னல்கள் சடசடத்தன. ஒரு தீயணைப்புப் படைவீரனின் கல்லறைக்கும் ஒரு சீன வியாபாரியின் கல்லறைக்கும் நடுவாகச் சிறுசெடிகளும் புற்களும் முளைவிட்ட அந்தக் கல்லறை இருக்கிறது. அது யாருடைய கல்லறை என்பதற்கான தடயங்கள் ஏதுமில்லை. அடுத்த வேனிற்காலத்தில் திபோ ஆற்றில் வெண்ணிறமான சிறிய படகில் தனியாகத் துடுப்பு வலித்துச் சென்றுகொண்டிருந்த அந்தப் பெண்மணியின் முகத்தில் வெயில் பட்டபோது அவளது காதுகளிலிருந்த நீலக் கற்கள் பதித்த தோடுகள் பளீரென மின்னின. காலம். –  நவம்பர் ரூபம் இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன்” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்சவின் முகம் நிறைத்திருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும் நவீனமாகவும் துல்லியமான ஒலியமைப்புடனும் அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சவூதியிலிருந்து அனுப்பி வைத்திருக்கலாம். இவன் முகத்தைத் திருப்பி வீதியைப் பார்த்தான். வீதியில் இருள் மண்டியிருந்தது. இவன் சிறுவனாய் இருந்தபோது அம்மாவிடம் தொலைக்காட்சியொன்று வாங்கும்படி இடைவிடாமல் நச்சரித்திருக்கிறான். இறந்து போன அப்பாவின் சொற்ப பென்ஷன் பணம் மட்டுமே இவர்களிற்கு வருமானம். அந்தப் பணத்தில் தான் அம்மா இவனையும் இவனது அக்காவையும் பட்டினியில்லாமல் பள்ளிக்கூடம் அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது இந்த வீட்டில் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியிருந்தது. இவனும் அக்காவும் இரவு நேரத்தில் இங்கே தொலைக்காட்சி பார்க்க வருவார்கள். அக்காவிற்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏனோ ஆர்வமில்லை. ஆனால் இருளில் தனியாக வருவதற்கு இவன் பயப்படுவான். அதனால் அக்காவைத் துணைக்கு அழைத்து வருவான். தரையில் அமர்ந்து இவன் கண்கொட்டாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பான். சிறிது நேரமானதுமே அக்கா “வீட்ட போகலாமா” என முணுமுணுப்பாள். அது இவனது காதில் விழாது. அக்கா பொறுக்க முடியாமல் இரகசியமாக இவனது தொடையைக் கிள்ளும்போது, இன்னும் கொஞ்ச நேரம் என இவன் அக்காவிடம் மன்றாடுவான். வீட்டுக்காரர்கள் தேனீரும் அவித்த பனங்கிழங்கும் தருவார்கள். அக்கா வெட்கப்படுவாள். அவற்றை வாங்காவிட்டால் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்க மாட்டார்களோ என்ற பதற்றத்திலேயே இவன் அவற்றை வாங்கிக்கொள்வான். இவன் வீட்டில் வெறும் தீப்பெட்டியின் மீது வெள்ளைத்தாளை ஒட்டி நடுவே கத்தரித்து பக்கவாட்டில் வர்ணம் தீட்டித் தொலைக்காட்சிப் பெட்டி செய்து விளையாடிக் கொண்டிருப்பான். பள்ளிக்கூடம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் சில தீப்பெட்டித் தொலைக்காட்சிகள் இருக்கும். கொஞ்சம் வளர்ந்ததும் தொலைக்காட்சி பார்ப்பதற்காக இவன் கிராமத்துக் கடைத் தெருவுக்குப் போகத் தொடங்கினான். அங்கேயிருந்த ’மீனா கபே’யில் எப்போதும் வண்ணத் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது இவன் வசியத்தில் விழுந்தவன் போலிருப்பான். அந்த நேரங்களில் இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும். எந்த நிகழ்ச்சியும் அவனுக்கு அலுப்பூட்டியதேயில்லை. அலைவரிசைக் குழப்பத்தால் அடிக்கடி தொலைக்காட்சியில் வெறும் புள்ளிகள் மட்டுமே தோன்றும். அந்தப் புள்ளிகளை ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஓடி வந்துகொண்டிருப்பது போல கற்பனை செய்துகொள்வான். தொலைக்காட்சியில் சிலசமயங்களில் படம் மட்டும் வரும், ஒலி வராது. படத்துக்கு ஏற்ற ஒலிகளை இவனாகவே கற்பனை செய்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருப்பான். ஒலி மட்டும் வந்தாலும் படக்காட்சிகளை இவனால் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள முடியும். மின்சாரம் துண்டிக்கப்படும் போது வெறுமனே இவனால் தொலைக்காட்சியைக் கண்ணிமைக்கால் பல நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியும். தொலைக்காட்சிப் பெட்டியொன்று தான் இவனுக்குத் தேவையானது. அதிலிருந்து படங்களையும் ஒலிகளையும் இவனால் உருவாக்கிக்கொள்ள முடியும். கடை மூடப்படும் போதுதான் இவன் வீட்டுக்குத் திரும்பி வருவான். பக்கத்து வீட்டிற்கு இவன் தொலைக்காட்சி பார்க்கப் போவது குறைந்திருந்தது. இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இவனின் கிராமம் அமைந்திருந்தது. அந்த நெடுஞ்சாலையை ஒட்டித்தான் கடைத்தெரு இருந்தது. அந்த நெடுங்சாலையால் இராணுவம் ரோந்து செல்லும் நாட்களில் கடைத் தெரு வெறிச்சோடிவிடும். இராணுவ வாகனங்கள் துரத்தில் வரும் ஒலி கேட்டவுடனேயே கடைகள் சடுதியில் மூடப்படும். கடைத் தெரு மனிதர்கள் நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஓடிவிடுவார்கள். இராணுவம் கடை வீதியைக் கடந்து செல்லும் போது சில வேட்டுக்களைத் தீர்க்காமல் செல்வதில்லை. அது வெறுமனே எச்சரிக்கை வெடியாகத்தானிருக்கும். இராணும் ஒருபோதும் நெடுஞ்சாலையிலிருந்து விலகிக் கிராமத்திற்குள் நுழைந்ததில்லை. கடைத்தெரு மூடிக் கிடக்கும் நாட்களில் இவன் பக்கத்து வீட்டிற்குத்தான் தொலைக்காட்சி பார்க்கப் போவான். அவர்கள் இப்போது ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சியை வாங்கியிருந்தார்கள். இவன் ஆள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் இப்போது இவனை நாற்காலியில் உட்காருமாறு அவர்கள் வற்புறுத்துவார்கள். நொறுக்குத் தீனிகளும் தேனீரும் கொடுப்பார்கள். அவற்றை வாங்கத்தான் இவன் கொஞ்சம் வெட்கப்படுவான். இவ்வளவுக்கும் இவனது தாயாரும் இந்த வீட்டுக்காரியும் நெருங்கிய சிநேகிதிகள் தான். அவசரத்துக்குச் சீனி, தேயிலை என இருபக்கமும் கைமாற்றும் நடப்பதுண்டு. ஆனால், இவனுக்குத்தான் யாரிடமும் எதுவும் வாங்கிக் கொள்ளவதென்றால் கூச்சமாயிருக்கும். தொலைக்காட்சி விசயத்தில் மட்டும் தான் இவன் கூச்சத்தையும் மீறி நடந்துகொண்டான். தீப்பெட்டித் தொலைக்காட்சி வைத்து விளையாடும் வயது கடந்து போன போது உண்மையாகவே இவனது வீட்டுக்கு ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அக்கா ஆசிரியப் பணியில் சேர்ந்து பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன் கையிலிருந்த சேமிப்புப் பணத்தையும் போட்டு அம்மா இவனுக்கு அதை வாங்கிக் கொடுத்தார். இவன் அக்காவிடம் கேட்டு ஓர் அழகிய துணியுறையைத் தைக்கச் செய்து அதனால் தொலைக்காட்சியைப் பத்திரம் செய்தான். பள்ளிக்கூடத்துப் பைக்குள் இப்போது தீப்பெட்டிகள் இல்லை. அதற்குப் பதிலாகத் தொலைக்காட்சியை இயக்க வழிகாட்டும் விபரக்கொத்தை இவன் பைக்குள் எப்போதும் வைத்திருந்தான். பள்ளிக்கூடத்தால் வந்ததும் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்துவிடுவான். ஆட அசைய மாட்டான். சிலைபோல தொலைக்காட்சியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். சாப்பிடுவதற்கு அம்மா பத்துத் தடவைகள் கூப்பிட்ட பின்பே குசினிக்குள் ஓடிச் சென்று தட்டை எடுத்துக்கொண்டு ஓடிவந்து தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து விடுவான். இதனால் ஒன்றும் அவனது படிப்புப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வகுப்பில் எப்போதும் அவன் முன்னணி மாணவனாகவேயிருந்தான். அக்காவிடம் ஒரு நாள்   தொலைக்காட்சியைச் சுட்டிக்காட்டி ‘எங்கிட வாத்திமார விட இது பிரயோசனமானது’ என்றான். பல்கலைக்கழக அனுமதி சொற்ப மதிப்பெண்களால் தவறிப் போனது. கொஞ்சம் மனம் சோர்ந்து போனான். பகல் முழுவதும் தீவிரமாகப் படித்தான். இரவானதும் அறையிலிருந்த விளக்கை அணைத்துவிட்டு இருளில் நடுநிசி வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பான். அம்மா அவ்வப்போது வந்து ‘இருட்டுக்குள்ளயிருந்து பார்க்காத தம்பி, கண் பழுதாப் போகும்’ என்பார். அது இவனின் காதில் ஏறாது. இவனுக்கு இருபது வயதானபோது அந்தக் கிராமத்திற்குள் இராணுவம் முதற்தடவையாக நுழைந்தது. இராணுவம் வரும் செய்தி கேட்டுச்  சனங்கள் வீடுகளிலிருந்து கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு உயிர் தப்பச் சிதறியோடினார்கள். அக்கா அப்போது நகரத்தில் அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்து நகரத்துப் பாடசாலையில் வேலை செய்ததால் இவனும் அம்மாவும் நகரத்திற்குப் போவதென்று முடிவெடுத்தார்கள். இவர்களது உடமைகள் இரு பெட்டிகளிற்குள் அடங்கிவிட்டன. சைக்கிளின் பின்னால் தொலைக்காட்சியை வைத்துக் கட்டிக் கொண்டான். நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று நகரத்திற்குச் செல்லும் வாகனமொன்றில் அம்மாவையும் பெட்டிகளையும் ஏற்றி விட்டு இவன் வாகனத்தைச் சைக்கிளில் பின் தொடர்ந்தான். நகரத்திற்கு வந்ததும் கிடைத்த விலைக்கு தொலைக்காட்சியை விற்றான். மிகச் சொற்பமான பணமே கிடைத்தது. நகரத்திலிருந்த உறவினரின் கடையொன்றிற்குச் சென்று அங்கே சைக்கிளை நிறுத்திவிட்டு, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு நடந்து பஸ் நிலையம் வந்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். நான்கு மணிநேரப் பயணத்தில் இருபது சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறங்கியவன் அங்கிருந்து வயல்வெளிகளுக்குள்ளால் காட்டை நோக்கி நடந்தான். இடையிடையே எதிர்ப்பட்டவர்களிடம் வழியை விசாரித்துக்கொண்டான். இரவாகிக்கொண்டிருந்தாலும் காட்டின்மீது நிலவு வெளிச்சம் போட்டது. இரவு முழுவதும் காட்டுப் பாதையால் நடந்து ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கே விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது. இவன் காட்டிற்குள்ளால் நடந்துவந்து இயக்கத்தில் சேர்ந்ததாலோ என்னவோ இவனுக்குக் கானகன் என்று இயக்கத்தில் பெயர் வைத்தார்கள். ஆனால், தோழர்கள் இவனை ‘யங்கிள்’ என்றே அழைத்தார்கள். தாக்குதலின் முன்னணி அணியில் யங்கிள் நின்றால் அந்தத் தாக்குதல் வெற்றிதான் என்று இயக்கத்திற்குள் கதை இருந்தது. போரிடவே பிறந்தவன் போல அவன் இருந்தான். அவனது இடது கண்ணிற்கு திட்டமிடல் என்றும் வலது கண்ணிற்கு துணிச்சலென்றும் பெயர். அவனது இடது காலிற்கு நிதானம் என்றும் வலது காலிற்கு வேகமென்றும் பெயர். எத்தனையோ முற்றுகைகளை முன்னணியில் நின்று முறியடித்திருக்கிறான். அவனது அணி முழுவதுமாகச் சிதைக்கப்பட்ட நிலையிலும் தனியாளாகப் போராடித் தளம் திரும்பியிருக்கிறான். கடைசியில் விமானக் குண்டு வீச்சொன்றில் வேகமெனப் பெயரிடப்பட்ட கால் துண்டிக்கப்பட்டது. நிதானம் எனப் பெயரிடப்பட்ட கால் எஞ்சியிருந்தது. ஊன்றுகோலின் உதவியுடன் அவன் முகாமில் நிதானமாக நடந்து திரிந்தான். அம்மாவிற்கோ அக்காவிற்கோ தான் காலிழந்த செய்தி தெரியாமல் பார்த்துக் கொண்டான். யுத்த நிறுத்தம் வந்தபோது கூட இவன் அம்மாவைப் பார்க்கப் போகவில்லை. இவன் இருக்குமிடமும் அம்மாவிற்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான். ஒரு வருடத்திற்குப் பின்பு புலிகளின் தொலைக்காட்சியில் தான் அம்மா இவனைப் பார்த்தார். அடுத்த வாரமே அம்மாவும் அக்காவும் இவனைத் தேடி வந்தார்கள். இவன் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. அம்மா இவனது கால் துண்டிக்கப்பட்ட பகுதியை மட்டும் தடவிக்கொடுத்தார். உற்சாகமாகப் பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். புலிகளின் தொலைக்காட்சியில் இவன் மூன்று நிகழ்ச்சிகளிற்குத் தொகுப்பாளராயிருந்தான். அவற்றில் ‘விடுதலை கீதங்கள்’ என்ற அரை மணிநேர நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சாந்தன், தேனிசை செல்லப்பா, சுகுமார், சிட்டு போன்றோரின் புகழ்பெற்ற பாடல்களை இவன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்குவான். பாடல்களிற்கு முன்பு இவன் சொல்லும் கவிதை வரிகளும் இவனது உணர்ச்சி துள்ளும் ஏற்ற இறக்கமான கம்பீரமான குரலும் மக்களைச் சொக்கச் செய்தன. சாந்தன் ஒருமுறை இவனிடம் ‘என்னைவிட உங்களுக்குத்தான் கனக்க ரசிகர்கள்’ எனச் சொல்லிச் சிரித்தார். வழிதெருவில் இவனை மக்கள் காணும் போது இவனைச் சூழ்ந்து கொண்டார்கள். இவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றும் போது உட்கார்ந்துகொண்டிருப்பதால் இவனிற்கு ஒரு கால் இல்லை என்பது பலருக்குத் தெரியாது. அந்தக் கம்பீரக் குரல் ஊன்றுகோலோடு தடுமாறி நடந்து வருவதை அவர்கள் நேரில் பார்த்தபோது அவர்களது கண்கள் இருண்டு போயின. சில தாய்மார்கள் இவனை அணைத்து உச்சி மோர்ந்தார்கள். இழந்து போன குழந்தைகள் அவர்களிற்கு ஞாபகம் வந்திருக்கலாம். இவனுக்கு ஏராளமான நேயர் கடிதங்கள் வந்தன. அவற்றில் காதல் கடிதங்களும் இருந்தன. அந்தக் கடிதங்களை இவன் தனிமையில் புன்னகையோடு படித்துவிட்டுக் கிழித்துப் போடுவான். ’ இயக்கத்துக்கே காதல் கடிதம் எழுத எங்கிட பெட்டையள் துணிஞ்சிற்றாளவ’ என அவனது உதடுகள் முணுமுணுக்கும். சமாதான காலத்தில் வன்னியிலிருந்து இசைக்குழுவொன்று அய்ரோப்பாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இசை நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றபோது நிகழ்ச்சித் தொகுப்பாளராக இவனும் அவர்களுடன் சென்றான். இவன் தான் அவசியம் வர வேண்டுமென நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டிருந்தனர். விமானத்தில் மது வழங்கப்பட்ட போது இவனுக்கு அருகிலிருந்த பாடகன் ’ கன நாளாப் போச்சுது, ஒண்டு எடுக்கவா" என இவனிடம் பகடி மாதிரிக் கேட்டான். இவன் முறைத்த முறைப்பில் பாடகன் “குடிக்கிறதில ஒண்டுமில்ல ஆனால் குரலுக்குக் கூடாதெல்லா” என முனகிவிட்டு இருக்கையில் சாய்ந்துகொண்டான். அய்ரோப்பிய நகரங்களில் பெருந்தீனியால் இவனுக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. தங்களது வீட்டிற்குச் சாப்பிட வரவேண்டும் என மக்கள் அடிக்காத குறையாக இவனைத் தங்களது வீட்டிற்கு முறை வைத்துக் கடத்திச் சென்றார்கள். நிகழ்ச்சிகளின் போது இவன் மேடைகளில் தோன்றும் போதெல்லாம் இளைஞர்கள் ஆரவாரித்துக் கூக்குரலிட்டார்கள். அங்கிருந்து திரும்பும் போது விலையுயர்ந்த பரிசுப் பொருட்களால் இவனது பெட்டி நிரம்பி வழிந்தது. கொழும்பு விமான நிலையத்தில் சோதனையின் போது பரிசுப் பொருட்களில் ஒன்றைக் கையிலெடுத்து “இதை எனக்குத் தருவாயா” என அதிகாரி கேட்ட போது, அதை அதிகாரியே எடுத்துக் கொள்ளுமாறு புன்னகையுடன் கைகாட்டினான். முகாமுக்குத் திரும்பியவுடனேயே எல்லாப் பரிசுப் பொருட்களையும் தோழர்களிற்குப் பகிர்ந்து கொடுத்தான். அவனுக்கென்று எஞ்சியவை காதலைத் தெரிவிக்கும் மூன்று வாழ்த்து அட்டைகள் மட்டுமே. பாரிஸ் நகரத்தில் இரண்டு அட்டைகளும் சுவிஸில் ஓர் அட்டையும் கிடைத்திருந்தன. பாரிஸ் அட்டைகள் இரண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. சுவிஸ் அட்டையில் மழலைத் தமிழில் ஒரு மட்டமான காதல் கவிதை எழுதப்பட்டிருந்தது. அவற்றில் எழுதப்பட்டிருந்தவற்றுக்காக அல்லாமல் அந்த அட்டைகளின் அழகிற்காக அவற்றைக் கிழித்துப் போட மனமற்றவனாய் எடுத்து வந்திருந்தான். முகாமில் வைத்து அவற்றையும் கிழித்துப் போட்டான். முகாமிலிருந்த தோழர்களிற்கு விடிய விடிய அய்ரோப்பியப் பயணக் கதைகளைச் சொன்னான். புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் வரை போராட்டத்தை எவராலும் அழித்துவிட முடியாது என நம்பினான். நந்திக் கடலின் ஓரத்தில் இவனது அணி சரணடையும் முடிவை எடுத்த போது இவன் அந்த இடத்திலேயே சயனைட் குடித்துவிடலாம் என்றான். சாவதால் ஆகப்போவது எதுவுமில்லை எனப் பொறுப்பாளர் சொன்னார். துப்பாக்கிகள், சீருடைகள், இலக்கத் தகடுகள், சயனைட் குப்பிகள் எல்லாம் மணலில் புதைக்கப்பட்டதும் அணி சிதறி மக்களுக்குள் கரைந்து போனது. இவனுக்கு சயனைட் குப்பியைப் புதைக்க விருப்பமில்லை. அதை மடியில் செருகிக் கொண்டு நந்திக் கடலோரமாக நடந்து வந்தான். கடல் நீரேரியைக் கடந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் செல்ல ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக ஒரு படகில் இருபது பேர் வரை தயாராக இருந்தார்கள். இராணுவத்திடமிருந்து வரும் ஷெல் வீச்சுகள் குறையும் போது படகு புறப்படுவதாகத் திட்டம். இவன் செயற்கைக் காலைக் கழற்றிக் கரையிலேயே வைத்து விட்டு ஊன்றுகோலுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டான். ஷெல் வீச்சு நின்றிருந்த ஒரு தருணத்தில் படகு புறப்பட்டது. இவன் சயனைட் குப்பியைக் கடல் நீரில் எறிந்தான். படகு கரையை அடையும் போதுதான் கரையிலேயே வரிசையாக இராணுவீரர்கள் படகை எதிர் நோக்கித் துப்பாக்கிகளைக் குறிவைத்துக் கரையோடு கரையாகப் படுத்துக் கிடந்தது தெரிந்தது. இவர்கள் படகை விட்டு இறங்கியதும் “ஆடைகளைக் களைந்து விட்டு வாருங்கள்!” என்ற உத்தரவு வந்தது. இவர்கள் " அய்யா நாங்கள் பொது மக்கள்" எனக் கூக்குரலிட்டார்கள். ஆடைகளைக் களையுமாறு மறுபடியும் உத்தரவு வந்தது. இவர்கள் தயங்கி நின்றபோது கரையிலிருந்து சரமாரியாக வெடிகள் கிளம்பின. கடல்நீர் துடித்துச் சிதறியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே ஆடைகள் முற்றாகக் களையப்பட்டு அவர்களது உடல்களிலே வெடிப்பொருட்கள் கட்டப்பட்டிருக்கின்றனவா எனப் பரிசோதிக்கப்பட்டனர். அந்த மனிதர்களை முழு நிர்வாணமாகவே ஒரு கிலோமீற்றர் நடத்திச் சென்ற இராணுவம் அங்கிருந்த பஸ்ஸில் ஏற்றியதன் பின்பாகத்தான் அவர்களை ஆடைகள் அணிந்துகொள்ள அனுமதித்தது. இவன் தலையைக் குனிந்தவாறேயிருந்தான். எவரையும் ஏறிட்டுப் பார்க்க இவன் விரும்பவில்லை. மணிக்கணக்காக பஸ் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகள் தாகத்தாலும் பசியாலும் வெப்பத்தாலும் அழுதபோது அவர்களது தாய்மார்களால் ‘பளாரென’ அறையப்பட்டு அடக்கப்பட்டன. வவுனியா தடுப்பு முகாமில் பஸ் நின்றபோது இவன் தலையைக் கவிழ்ந்தவாறே இறங்கினான். பூமியைத் தவிர இவனது கண்கள் எதையும் பார்க்கவில்லை. வரிசையில் உட்கார்ந்திருந்தபோது இவனது தோளைத் தொட்டு ஒரு இரகசியக் குரல் ‘கானகன்’ என அழைத்தது. சடுதியில் இவன் தலை நிமிர்த்திப் பார்த்தபோது ஓர் இராணுவ அதிகாரி இவனைப் பார்த்து இளித்துக் கொண்டு நின்றான். தரையில் கிடந்த ஊன்றுகோலைக் கையில் எடுத்தவாறே மறுகையால் இவன் எழுந்திருக்க அதிகாரி உதவினான். இவன் எழுந்ததும் ஊன்றுகோலைக் கொடுத்து விட்டு இவனது தோள் பற்றி அதிகாரி அழைத்துச் சென்றான். தகரங்களால் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய அறைக்குள் தான் விசாரணை தொடங்கியது. இவனது உண்மையான பெயரைக் கேட்ட போது ரவிக்குமார் என்றான். இயக்கப் பெயர் கானகன் என்றான். “உனக்கு யங்கிள் என்று இன்னொரு பெயரும் இருக்கிறதே’ எனச் சொல்லி அதிகாரி சிரித்தான். எந்த உண்மையை மறைத்தும் பலனில்லை என்பது இவனுக்குத் தெரிந்தது. ஆனால், முடிந்தவரை உண்மைகளைப் பேசிவிடாமலிருப்பது தனது கடமை என்று இவன் நினைத்தான். ஆனால், விசாரணையின் போக்கில் மறைப்பதற்கு எந்தத் தகவல்களும் இவனிடம் இல்லாமற் போயின. விசாரணை ஒரு பேரேட்டில் பதிவாகிக்கொண்டிருந்தது. சுற்றி நின்ற இராணுவத்தினரில் சிலர் இவனை செல்போன் வீடியோவில் பதிவு செய்தவாறிருந்தார்கள். இவன் தலையைக் குனிந்தபோதெல்லாம் ஒரு சிங்கள வசைச் சொல்லுடன் இவனது தலை அவர்களால் தூக்கி நிறுத்தப்பட்டது.”கானகன் தான் சங்கடப்படுகிறாரே, படம் பிடிப்பதை நிறுத்துங்கள்" என அதிகாரி புன்னகையுடன் உத்தரவிட்டதும் படம் பிடிப்பது நிறுத்தப்பட்டது. இவன் எதிர்பார்த்த மாதிரியே பிறகு சம்பவங்கள் நிகழ்ந்தன. தரையோடு தரையாக நகர முடியாது கிடக்கும் ஒரு முயலை அடிப்பதுபோல சுற்றிநின்று தடிகளாலும் துப்பாக்கியின் பின்புறங்களாலும் இவனை அடித்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களது கேள்விகளிற்கு இவனுக்கு உண்மையிலேயே பதில் தெரியாது. இவனை உட்கார வைத்து விட்டு அசையவிடாமல் பிடித்துக்கொண்டே இவனது துண்டிக்கப்பட்ட காலின் தொடைப் பகுதியிலிருந்து மிக நிதானமாகவும் திருத்தமாகவும் ஒரு துண்டுத் தசையைக் ‘கேக்’ போல கத்தியால் வெட்டி எடுத்து இவனது கையில் கொடுத்து அதைச் சாப்பிடச் சொன்னார்கள். இவன் மயங்குவது போல பாவனை செய்து கண்களைச் சுழற்றிக் கீழே சரிந்தான். இவனின் வாய்க்குள் அந்தச் சதைத்துண்டு இரத்தம் வடிய அப்படியே திணிக்கப்பட்டது. அது தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு போனது. அடுத்த மூன்று நாட்களும் இவன் வாந்தி எடுத்தபடியே இருந்தான். உடலிலிருந்த இரத்தம் வாந்தியாக வெளியேறிக் கொண்டிருந்தது. இவன் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்ட பின்பும் அடிக்கடி வாந்தி எடுத்தவாறேயிருந்தான். சாப்பிடும் போது இறைச்சியையோ மீனையோ பார்த்தால் ஓங்காளித்து வாந்தி எடுப்பான். மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டான். இந்தப் புனர்வாழ்வு முகாமில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இருநூறு சரணடைந்த போராளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நோயால் இறந்த ஆறுபேருக்கும், தற்கொலை செய்துகொண்ட இருவருக்கும் பதிலாக புதியவர்கள் முகாமில் சேர்க்கப்பட்டார்கள். இருநூறு என்ற எண்ணிக்கை குறையாமல் இராணுவத்தினர் பார்த்துக்கொண்டார்கள். இவன் எப்போதும் மனச் சோர்வுடனேயே காணப்பட்டான். முகாமில் இருவருக்கு மனநிலை முற்றாகச் சரிந்திருந்தது. அவர்களில் ஒருவன் தனது ஆடைகளைக் கழற்றி வீசுவதிலேயே குறியாயிருந்தான். அதற்காக இராணுவத்தினரிடம் ஒவ்வொரு நாளும் உதைபட்டான். அவன் அங்கிருந்து விடுதலையாவதற்காக நாடகம் போடுகிறான் என இராணுவ அதிகாரி சொன்னான். இவர்களில் தெரிவு செய்யப்பட்ட அய்ம்பது பேர்களிற்கு பயிற்சியளிக்க ஒரு மனநல மருத்துவர் வந்தார். அவர் மனச் சோர்விலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு என உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே இவன் குறுக்கிட்டு “இங்கிருந்து விடுதலையாகி வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சியாயிருப்போம் என நினைக்கிறேன்’” என்றான். மருத்துவர் எது சொன்னாலும் இவன் விட்டேற்றியாக அவரைத் தட்டிக்கழித்தான். கடைசியில் மருத்துவர் மனச் சோர்வுக்கு ஆளாகிவிட்டார் போலிருந்தது. அடுத்த பயிற்சி வகுப்பை இராணுவத்தினருக்கு எடுக்கவிருப்பதால் முன்னாள் போராளிகளிற்கான முதல்நாள் பயிற்சி வகுப்பை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் சொன்னார். சரியாக ஒன்றரை வருடங்கள் கழித்து அங்கிருந்து விடுதலையான முதலாவது அணியில் இவனுமிருந்தான். அந்த அணியில் அவயங்களை இழந்திருந்தவர்கள் மட்டுமேயிருந்தனர். புதிய வேட்டியும் சட்டையும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன. முகாமில் விழா நடத்திப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முன்னாள் போராளிகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவனை அழைத்துச் செல்ல அம்மா வந்திருந்தார். அம்மாவின் முகம் முழுவதும் சிரிப்புத் தொற்றியிருந்தது. அக்காவுக்கு கல்யாணமாகி அவள் நகரத்தில் குடியிருந்தாள். இவ்வளவு நாட்களும் அம்மா அக்காவுடனேயே தங்கியிருந்தார். அம்மா தன்னை அக்காவின் வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்வதாக இவன் எண்ணினான். ஆனால் அம்மா இவனைக் கிராமத்து வீட்டிற்கு அழைத்து வந்தார். வீடு உருக்குலைந்திருந்தது. கதவுகளையும் நிலைகளையும் கூடத் திருடிச் சென்றிருந்தார்கள். வாசலுக்கும் ஜன்னல்களிற்கும் அம்மா துணியால் திரை செய்து போட்டார். இவனது அறைக்குள் ஒரு மேசையும் நாற்காலியும் படுக்கையும் வாங்கிப் போட்டார். இவன் அந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சி உருவாகும் என மனநல மருத்துவரிடம் சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்த்தான். கடைத் தெருவே மாறியிருந்தது. முன்பு இவன் தொலைக்காட்சி பார்க்கச் செல்லும் ‘மீனா கபே’ இப்போது ‘லங்கா கபே’ ஆகியிருந்தது. அதை இராணுவத்தினர் நடத்திக்கொண்டிருந்தனர். இப்போதும் அங்கே இடையறாது தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. இவன் தலையைக் கவிழ்ந்தவாறே அதைக் கடந்து சென்றான். கடைத் தெருவில் எல்லோருமே தன்னைப் போலவே தலையைக் குனிந்தவாறே நடந்துகொண்டிருப்பதாக இவனுக்குத் தோன்றியது. தற்செயலாகச் சந்தித்த கண்களில் அச்சத்தை மட்டுமே இவன் பார்த்தான். அம்மா இவனுக்குச் செயற்கைக் கால் பொருத்துவதற்காகப் பணம் திரட்டிக் கொண்டிருந்தார். காலைப் பொருத்தி நான் எங்கே போகப் போகிறேன், அந்தப் பணத்தில் ஒரு தொலைக்காட்சி வாங்கினாலாவது அறைக்குள்ளிருந்து பார்த்துக்கொண்டிருக்கலாமென நினைத்தான். ஆனால், அவ்வாறு கேட்பது அம்மாவைப் புண்படுத்தக் கூடுமென்பதால் இவன் வெறுமனே அறைக்குள் அடைந்து கிடந்தான். வாரம் ஒருமுறை இராணுவச் சாவடிக்குச் சென்று கையெழுத்திட வேண்டியிருந்தது. அந்த நாட்களில் மட்டுமே வெளியே போனான். அன்று மாலையில் பக்கத்து வீட்டிலிருந்து பாட்டுச் சத்தம் வந்து கொண்டிருந்தது. மகிழ்ச்சி என்பது நாம் உருவாக்கிக் கொள்வதே என மனநல மருத்துவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். பொழுது பட்டதும் ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான். அவன் பக்கத்து வீட்டு வாசற்படியில் தட்டுத் தடுமாறி ஏறிய போது உள்ளேயிருந்த தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் தொலைக்காட்சி திடீரென நிறுத்தப்பட்டது. வீட்டுக்காரர் வாசலுக்கு வந்து இவனைப் பார்த்தார். இவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக வந்ததாகச் சொன்னான். வீட்டுக்காரர் தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்தவறே அவர்கள் சாப்பிடப் போவதாகச் சொல்லிவிட்டு வாசலிலேயே நின்றார். இவன் கையை வாசற்படியில் ஊன்றித் தட்டுத் தடுமாறி எழுந்து சுவரில் சாய்த்து வைத்திருந்த ஊன்றுகோலையும் எடுத்துக்கொண்டு படியிறங்கும் போது வீட்டுக்காரர் ‘கானகன் நீ இஞ்ச வந்து போனால் ஆமியால எங்களுக்கும் பிரச்சினை வரும்’ என்று முணுமுணுத்தது இவனுக்குத் தெளிவாகக் கேட்டது. வீதியில் நின்று சட்டைப் பையிலிருந்து பீடியை எடுத்துப் பற்றவைக்க முயன்றான். கை நடுங்கிக் கொண்டிருந்தது. நான்காவது தீக்குச்சியிலேயே பற்ற வைக்க முடிந்தது. இந்தப் பழக்கம் தடுப்பு முகாமிலிருந்தபோது வந்திருந்தது. அம்மா காலையில் ஒரு கட்டு பீடி வாங்கிக் கொடுப்பார். வாயில் பீடியை வைத்தவாறே நடந்தான். இவனது ரவி என்ற பெயரை வீட்டுக்காரர் மறந்து இவனைக் கானகன் என அவர் அழைத்தது இவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. பீடியை இழுத்துக் கொண்டே நடந்தான். விடுதலையாகி வந்து இவ்வளவு நாளாகியும் அக்காவோ அத்தானோ தன்னை இதுவரை வந்து பார்க்காதது திடீரென இவனுக்கு உறைத்தது. நடுநிசியில் அம்மா எழுந்து கை விளக்கையும் எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து இவனது அறையை நோக்கிப் போனார். ஒவ்வொரு நாளும் அம்மா இவ்வாறு சென்று பார்ப்பார். இவன் தூங்கிக்கொண்டிருப்பது அவருக்கு நிம்மதியாகயிருக்கும். அம்மா இவனது அறையின் வாசலில் நின்று இவனது படுக்கையிருந்த திசையில் விளக்கைப் பிடித்தபோது படுக்கை காலியாயிருந்தது. அம்மா பதற்றத்துடன் அறையின் மூலையொன்றிற்கு வெளிச்சத்தைத் திருப்பினார். அங்கே அவன் சுவரோடு சாய்ந்து தரையில் ஆடாமல் அசையாமல் சிலைபோல உட்கார்ந்திருந்தான். அம்மா அவனது முகத்திற்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது அவனது கண்கள் மேசையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அம்மா மேசைக்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது மேசையில் ஒரு தீப்பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அம்மா திடீரென வெடித்துப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார். இவன் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தான். இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. ( இவ்வார ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளியானது ) லைலா இந்தக் கதையை படித்துக்கொண்டிருக்கும் போது எந்த இடத்திலாவது நீங்கள் ஒரு புன்னகையைச் செய்தால் இந்தக் கதைசொல்லியின் ஆன்மா வக்கிரத்தால் நிறைந்துள்ளதாக அர்த்தம். அல்லது புன்னகை செய்த உங்களது ஆன்மா அவ்வாறு சிதைந்து போயிருக்கலாம். ஒருவேளை நம்மிருவரது ஆன்மாக்களுமே வக்கரித்துப் போயிருக்கவும் கூடும். பிரான்ஸின் தற்போதைய அதிபர்   நிக்கோலா சார்க்கோஸி நான்கு வருடங்களிற்கு முன்பு தனது தேர்தல் பிரச்சார உரையின்போது பாரிஸின் புறநகர்ப் பகுதியான ’ஸெயின் துறுவா மூலி’ன்  பெயரைக் குறிப்பிட்டு, தான் பதவிக்கு வந்தால் அந்தப் பகுதியைச் சுத்திகரிக்கப் போவதாகச் சொன்னார். அந்தப் பகுதியில்தான் நான் கடந்த பத்து வருடங்களாக இருக்கிறேன். உண்மையிலேயே இந்தப் புறநகர்ப் பகுதி ஓங்கிய சிறு மரக்காடுகளையும் பரந்த புல்வெளிகளையும் குறுக்கறுத்து ஓடும் ஸெயின் நதியையும் கொண்ட அழகிய நிலப்பகுதி. பிரான்ஸில் ஆபிரிக்கர்களும் அரபுக்களும் சிந்தி ரோமா நாடோடிகளும் ஆசிய நாட்டவர்களும் செறிந்து வாழும் பகுதியும் இதுதான். ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோஸி சூழலியலில் பெரும் அக்கறைகொண்டவர் எனப் பத்திரிகைகள் எழுதியுமுள்ளன. அவர் அந்த மரக் காடுகளையும் புல்வெளிகளையும் ஸெயின் நதியையும் எங்களிடமிருந்து காப்பாற்ற நினைத்திருக்க வேண்டும். எதிர்பார்த்தது போலவே அந்தத் தேர்தலில் நிக்கோலா சார்க்கோஸி  வெற்றியும் பெற்றார். ஆனால் அவர் நினைத்திருந்ததுபோல எல்லாம் சுத்திகரிப்பை எங்கள் பகுதியில் நடத்திவிட முடியாது. நிக்கோலா சார்க்கோஸி என்ன, அந்த மாவீரன் நெப்போலியனே மறுபடியும் உயிர்பெற்று வந்தால் கூட எங்களது பகுதியில் மயிரைப் பிடுங்க முடியாது. இந்தப் பகுதியில் எவரும் பிரஞ்சு அரசாங்கத்தின் சட்டங்களை ஏற்றுக்கொள்வதில்லை. இங்கே எங்களுக்கான அறங்களையும் சட்டங்களையும் விதிகளையும் தண்டனைகளையும் நாங்களே எங்களுக்காக விதித்து வைத்துள்ளோம். பாரிஸ் நகரத்தில் வாழும் எனது நண்பர்கள் “நீ எப்பிடி அந்த ஏரியாவில சகிச்சுக்கொண்டு இருக்கிறாய்” என என்னைக் கேட்கும்போது நான் அவர்களிடம் திருப்பி “நீங்கள் எப்பிடித்தான் பரிஸில சகிச்சுக்கொண்டு இருக்கிறீங்களோ” எனக் கேட்பேன். எனது பகுதியில் வாழ்ந்தவர்களால் ஒருநாள் கூட பிரான்ஸின் வேறு பகுதிகளில் வாழ முடியாது. எங்களது பகுதியில் வந்து குடியேறியவர்கள் இறந்தால் அல்லது பொலிஸாரால் நாடு கடத்தப்பட்டால் தவிர இந்தப் பகுதியிலிருந்து வேறு இடங்களுக்குச் செல்வதில்லை. பதின்மூன்று மாடிகளைக் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றின் பத்தாவது தளத்தில் எனது வீடு இருந்தது. ஒரு மிகச் சிறிய வரவேற்பறையையும் ஒரு சிறிய படுக்கை அறையையும் கொண்டது எனது வீடு. அந்த தொடர்மாடிக் குடியிருப்பில் இருந்த எல்லா வீடுகளுமே அவ்வகையானவைதான். எனது மாதச் சம்பளத்தில் சரிபாதி வாடகைக்குப் போயிற்று. பாரிஸ் நகரத்தில் இதேபோன்ற ஒரு வீட்டில் வாடகைக்கு இருப்பதென்றால் முழுச் சம்பளத்தையுமே வாடகைக்காகத் தாரைவார்க்க வேண்டியிருக்கும். வேலைக்குச் செல்லாத நாட்களிலும் மாலை நேரங்களிலும் அநேகமாக நான் எங்களது தொடர்மாடிக் குடியிருப்பின் கீழ்த் தளத்திலிருக்கும் வாசற்படிக்கட்டில் குந்தியிருப்பேன். என்னோடு அந்தக் குடியிருப்பில் இருக்கும் இளைஞர்களும் குந்தியிருப்பார்கள். பலதும் பத்தும் பேசுவோம். எங்களிடையே அடிக்கடி கைகலப்பும் வரும். எல்லாமே ஒருநாள் கோபம்தான். அடுத்தநாள் கைகொடுத்துச் சமாதானமாகிவிடுவோம். இரவு நேரங்களில் அந்தப் படிகளில் உட்கார்ந்திருந்து பேசியவாறே குடிப்போம். எங்கள் குடியிருப்புக்குத் தனியாகக் காவலாளி தேவையில்லை. எந்த நேராமானாலும் யாராவது சிலர் வாசற்படிகளில் உட்கார்ந்திருப்போம். சிலர் அங்கேயே உட்கார்ந்தவாறே தூங்கிவிடுவார்கள். எங்களை மிகவும் இடைஞ்சல் செய்வது பொலிஸ்காரர்கள்தான். திடீரெனச் சுற்றிவளைத்துக் கைகளை உயர்த்துமாறு கட்டளையிட்டு எங்களைச் சுவரோடு நிறுத்தி வைத்துச் சோதனையிடுவார்கள். கத்தி, கஞ்சா, போலி விசா, திருட்டு செல்போன் என ஏதாவது அவர்களுக்குச் சிக்கும். எங்கள் குடியிருப்பே திரண்டு நின்று பொலிஸ்காரர்களைத் திட்டும். ஒருமுறை பொலிஸ் வாகனத்துக்குத் தீ வைத்த கதையும் இங்கே நடந்தது. பிரான்ஸில் போலிஸ்காரர்களுக்குக் காதலிகள் கிடைப்பதில்லை எனச் சொல்வார்கள். அத்தகைய ஒரு வெறுப்பு இங்கே பொலிஸ்காரர்கள்மீது மக்களுக்கு உண்டு. எங்கள் பகுதியில் பொலிசாருக்குக் காதலி அல்ல, தவித்த வாய்க்குக் குடிக்க ஒரு மிடறு தண்ணீர் கூட யாரும் கொடுக்கமாட்டோம். ஜனாதிபதி நிக்கோலா சாக்கோஸி எங்களது குடியிருப்புப் பகுதியைச் சுத்திகரிக்கப் போவதாகச் சொன்ன சில நாட்களில் எங்களது தொடர்மாடிக் கட்டடத்திற்கு அய்ம்பது வயதுகள் மதிக்கத்தக்க ஒரு தமிழ்ப் பெண்மணி வந்து சேர்ந்தார். முன்பு எங்களது தொடர்மாடிக் கட்டடத்தில் சில தமிழ்க் குடும்பங்கள் இருந்தன. பிள்ளைகள், குட்டிகள் பெருக அவர்கள் இங்கேயே அயலில் வேறு வீடுகளுக்குப் போய்விட்டார்கள். அதன் பின்பு இந்தப் பெண்மணி அங்கே வரும்வரை நான் ஒரேயொரு தமிழன்தான் அங்கிருந்தேன். அந்தப் பெண்மணி நானிருந்த பத்தாவது தளத்திலேயே ஏழாம் இலக்கத்தில் குடியேறினார். எனது கதவு இலக்கம் அய்ந்து. அந்தப் பெண்மணியைப் பார்த்தவுடனேயே அவர் பாண்டிச்சேரித் தமிழா, அல்லது சிங்களப் பெண்மணியா என்ற சந்தேகங்கள் ஏதும் எனக்கு வரவில்லை. பொதுவாக அய்ரோப்பாவில் வாழும் அய்ம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஈழப் பெண்மணி எப்படியிருப்பாரோ, எவ்வாறு ஆடையணிவாரோ, எப்படித் தலை முடியையைப் பின்னால் கூட்டிக் கட்டியிருப்பாரோ அப்படியே அவர் இருந்தார். ஆனால் அவர் தனியாக அங்கே குடிவந்ததும், கையில் ஒரு நாயைப் பிடித்தபடி வெள்ளைக்காரி மாதிரி வெளியே உலாவச் செல்வதும்தான் என்னைக் கொஞ்சம் குழப்பியது. அந்த அழகிய நாய் இரண்டு உள்ளங்கைகளுக்குள்ளும் அடங்கி விடுமளவிற்கு மிகச் சிறியதான ஓர் இனத்தைச் சேர்ந்தது. அந்த வெண்ணிற நாயின் உடல் சடைத்த முடிகளால் மூடப்பட்டிருந்தது. நாயின் காலெங்கே, வாலெங்கே எனக் கண்டுபிடிப்பதே சிரமம். நாயின் கண்கள் மட்டும்தான் வெளியே தெரிந்தன. அந்தக் கண்கள் எப்போதும் ஒளிர்ந்தவாறேயிருந்தன. மூக்குக் கண்ணாடியில் வரைந்து ஒட்டப்பட்ட கண்களைப்போல அந்தப் பெண்மணியின் கண்கள் மரத்திருந்தன. அந்தப் பெண்மணியின் கண்களில் ஒருபோதும் உணர்சிகளை நான் பார்த்ததே கிடையாது. நாங்கள் கட்டடத்தின் வாசற்படியில் உட்கார்ந்திருக்கும்போது அந்தப் பெண்மணியை எதிர்கொள்வதுண்டு. அவர் நாயுடன் எங்களைத் தாண்டிச் செல்லும் போது நாங்கள் “Bonjour Madame” என வணக்கம் தெரிவிப்போம். அவரும் பதில் வணக்கம் சொல்லிவிட்டுப் போவார். சில தடவைகள் “எப்படி நலமாயிருக்கிறீர்களா” என ஒன்றிரண்டு வார்த்தைகள் எங்களிடம் பேசுவார். அந்த ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே அவர் பிரஞ்சு மொழியைப் பிரஞ்சுக்காரர்கள் மாதிரியே உச்சரித்துப் பேசக் கூடியவர் எனத் தெரிந்தது. கீழ்த்தளத்தில் நாங்கள் அமர்ந்திருக்கும் படிகளின் அருகிலேயே தபாற் பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தன. ஒருநாள் அந்தப் பெண்மணி தனது தபாற் பெட்டியைத் திறந்து கடிதங்களை எடுப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த நான் அவர் சென்றதும் அந்தப் பெட்டியருகே சென்று அதில் எழுதப்பட்டிருந்த பெயரைப் படித்துப் பார்த்தேன். அதில் – ராஜரத்தினம் இலங்கை நாயகி – எனப் பெயர் எழுதப்பட்டிருந்தது. இலங்கை நாயகி அங்கு வந்து ஒருமாதம் கழிந்ததன் பின்னாகத்தான் எனக்கு அவரோடு பேச வாய்ப்புக் கிடைத்தது. நாங்கள் இருவரும் கீழ்த்தளத்தில் லிப்டுக்காகக் காத்திருந்தபோது நான் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவர் என்னைப் பார்த்து மெதுவாகத் தலையசைத்தார். லிப்டுக்குள் ஏறியதும் நான் அவரின் கையிலிருந்த அந்த நாயைக் காட்டி “நல்ல வடிவான நாய்…என்ன பேர்?” என்று கேட்டேன். இலங்கை நாயகி ஒரு புன்னகையுடன் “லைலா” எனச் சொல்லிவிட்டுத் தனது கையிலிருந்த அந்த நாயைத் தடவிக் கொடுத்தார். நாய்க்கு யாராவது லைலா எனப் பெயர் வைப்பார்களா? எனக்குத்தான் அவர் சொன்னது சரியாகக் காதில் கேட்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன். நாய்க்கு லைக்கா எனப் பெயர் வைப்பவர்களுண்டு. முதன் முதலில் ரஷ்ய விஞ்ஞானிகள் விண்வெளிக்கு அனுப்பிய நாய்க்கு லைக்கா என்று பெயர். எனவே நான் இலங்கை நாயகியிடம் மறுபடியும் “லைக்காவா” என்று கேட்டேன். அவர் வாயை அகலத்திறந்து “லைலா” என அழுத்தமாக உச்சரித்துவிட்டு நாயை எனக்கு முன்னே ஒரு குழந்தையைத் தருவதுபோல நீட்டினார். நான் நாயைத் தடவிக்கொடுத்தேன். இருவரும் பத்தாவது தளத்தில் இறங்கினோம். நான் இலங்கை நாயகியிடம் “அக்கா, நாட்டிலயிருந்து வெளிக்கிட்டு கனகாலமோ” என்று கேட்டேன். இலங்கை நாயகி என் முகத்தைப் பார்த்தவாறே “ஓம் தம்பி, எண்பதாம் ஆண்டு லண்டனுக்கு படிக்கவெண்டு போனது, எண்பத்தி மூண்டில அங்கயிருந்து திரும்பி இந்தியாவுக்கு போயிற்றன். பிறகு திரும்பியும் எண்பத்தாறில இஞ்ச வந்தனான்” என்றார். “லண்டனிலயிருந்து ஏன் திரும்பிப் போனீங்கள், படிப்பு முடிஞ்சுதா இல்லாட்டி லண்டன் பிடிக்கயில்லையோ?” இலங்கை நாயகி நாயை இறக்கித் தரையில் விட்டுக்கொண்டே “நான் லண்டனிலயிருந்து இயக்கத்துக்குப் போனனான் தம்பி” என்று சொல்லிவிட்டுத் தனது கதவை நோக்கி நடக்கத் தொடங்கினார். நான் இவ்வாறான ஒரு பதிலை ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. மெதுவாக நடந்து கதவைத் திறந்து எனது வீட்டுக்குள் நுழைந்தேன். என்ன இந்த மனுசி ஒரு ரைப்பாக் கதைக்கிறதே என்று யோசித்தேன். முன்பின் தெரியாத ஆளிடம் தான் இயக்கம் என்று சொல்வதென்றால் இலங்கை நாயகியின் பேச்சில் ஏதோ உள்நோக்கம் இருக்கக் கூடும் என நான் எச்சரிக்கையானேன். என்னை அவர் உளவு பார்க்கிறாரா? இன்னொரு புறத்திலே ‘அந்த மனுசி இயல்பாகச் சொல்லியிருக்கவும் கூடும், அது உண்மையாகவுமிருக்கலாம், எதைப் பார்த்தாலும் தவறாகவே நோக்கிச் சந்தேகமும் அச்சமும் கொள்ளுமளவிற்கு உனக்குத்தான் மூளை வக்கிரமடைந்துவிட்டது’ என்று என் மனம் குறுக்காலே சொல்லிற்று. அடுத்தநாள் நான் வாசற்படியில் உட்கார்ந்திருந்தபோது தூரத்தே நாயுடன் இலங்கை நாயகி நடந்து வருவதைக் கண்டதும் நான் எழுந்து லிப்டுக்கு அருகாக வந்து நின்றுகொண்டேன். அவர் லிப்டின் அருகே வந்ததும் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவர் மெதுவாகத் தலையசைத்தார். லிப்டுக்குள் சென்று லிப்டின் கதவுகள் மூடிக்கொண்டதும் நான் இலங்கை நாயகியிடம் “அக்கா, நீங்கள் இயக்கத்துக்குப் போனதாச் சொன்னீங்கள்..எந்த இயக்கத்துக்குப் போனீங்கள்?” என்று கேட்டேன். அதைக் கேட்காவிட்டால் எனக்குத் தலை வெடித்திருக்கும். அவர் பதில் சொல்வதானால் சொல்லட்டும். இலங்கை நாயகி நெற்றியைச் சுருக்கி உதடுகளைக் கடித்து மேலே பார்த்தார். பின்பு “அது.. புளொட்டோ என்னவோ ஒரு பேர் சொன்னாங்கள், நான் அங்க சமையலுக்கு நிண்டனான்” என்றார். லிப்டின் கதவுகள் திறந்ததும் அவர் என்னைத் திரும்பியும் பாராமல் தனது கதவை நோக்கிக் கால்களை அகல வைத்து விறுவிறுவென நடந்தார். எனக்கு மறுபேச்சு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. ஏதாவது திருப்பிப் பேசக் கூடிய மாதிரியா இலங்கை நாயகி பேசுகிறார். அவர் வாயைத் திறந்தாலே அவரின் வாயிலிருந்து முளைத்து ஒரு பாம்பல்லவா என்னைத் தீண்டுகிறது. எனக்குக் கடி விஷம் ஏறிப் போய்விட்டது. இலங்கை நாயகிக்கு கொஞ்சம் மூளைப் பிசகு என்பதைத் தவிர வேறெதுவும் எனக்குத் தோன்றவில்லை. ஒரு எதிர்பாராத நேரத்தில் லிப்டுக்குள் வைத்து இலங்கை நாயகி என்னைத் துப்பாக்கியால் சுட முயற்சிப்பது போல எனக்கு எண்ணங்கள் வர ஆரம்பித்தன. அவர் துப்பாக்கியை எங்கிருந்து உருவுவார், அப்போது லிப்டுக்குள் எனக்கும் அவருக்கும் எவ்வளவு இடைவெளியிருக்கும், நான் எப்படி அவரிடமிருந்து துப்பாக்கியைத் தட்டிப் பறிப்பது, பறித்தவுடன் அவரை நான் சுட வேண்டுமா, அவரைச் சுட்டால் மட்டும் போதுமா அல்லது அவரது நாயையும் சுட வேண்டுமா என்று என் மனதிற்குள் கேள்விகள் ஒன்றின் பின் ஒன்றாகாத் தோன்றி என்னை அலைக்கழித்தன. ‘உனக்கென்ன மனம் வக்கரித்துவிட்டதா, எதற்காக அந்த அழகிய நாய் லைலாவை நீ சுட வேண்டும்?’ என என்னையே நான் கேட்டுக்கொண்டேன். ஜார் மன்னனை ட்ரொட்ஸ்கி சுடும்போது ஜாரின் நாயையும் சுட்டுக் கொன்றார் என்ற விஷயம் அந்த நேரத்தில் என் ஞாபகத்திற்கு வந்தது. அடுத்து வந்த நாட்களில் நான் இலங்கை நாயகியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தேன். அதுவென்றும் இலேசான காரியமாக இருக்கவில்லை. அவர் திடீரெனத் தனது வீட்டிலிருந்து நாயோடு வெளியே வருவார். எங்களது குடியிருப்பின் அயலில் நாயோடு உலாவுவார். கொஞ்ச நேரம் நாயோடு புல்வெளியின் ஓரத்தில் போடப்பட்டிருக்கும் வாங்கில் உட்கார்ந்திருப்பார். வேறங்கும் அவர் போய் வருவதாகத் தெரியவில்லை. அருகிலுள்ள சீனாக்காரனின் மலிவு சுப்பர் மார்க்கெட்டுக்குள் அவர் நுழைந்து வெளியே வரும்போது கையில் நாய்க்கான உணவு அடைக்கப்பட்டிருக்கும் பேணிகளுடன் வருவார். இலங்கை நாயகி எங்கே வேலை செய்கிறார், என்ன சாப்பிடுகிறார், சமைப்பதற்குப் பொருட்களை எங்கு வாங்குகிறார்? என்பது ஒன்றுமாக விளங்கவில்லை. என்னுடைய கண்காணிப்பிலும் குறைபாடுகள் இல்லாமலில்லை. வேலைக்குச் செல்லும் நாட்களில் அதிகாலையில் புறப்பட்டுச் சென்று மாலையில்தான் திரும்பி வருவேன். இரவு எட்டு மணிக்குப் பிறகு என் தலையில் இடியே விழுந்தாலும் உணராத அளவுக்குப் போதையிலிருப்பேன். வேலையில்லாத நாட்களில் நான் தூக்கத்தால் எழுவதே மதியம் கழிந்த பிறகுதான். ஆனால் இப்போது நான் இலங்கை நாயகியுடன் லிப்டில் தனியாகச் செல்லும் தருணங்களைக் கவனமாகத் தவிர்த்துக்கொண்டேன். விரைவிலேயே எனக்கு ஒரு வழி கிடைத்தது. உண்மையில் இலங்கை நாயகி ‘புளொட்’ இயக்கமா, இல்லை மனுசி புத்தி பேதலித்துப் பிதற்றுகிறதா, இல்லை மனுசி கள்ள மனதோடு என்னுடன் பேசுகிறதா என அறிய ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நான் செல்லத்துரையைப் போய்ச் சந்தித்தேன். செல்லத்துரை புளொட் இயக்கத்தில் முக்கியமானவராக இருந்தவர். மத்திய குழுவில் கூட இருந்தவர் என்று யாரோ சொன்னதாக ஞாபகம். எண்பத்தாறிலோ எண்பத்தேழிலோ புளொட்டின் தள மாநாடு நடக்கும்வரை இயக்கத்திலிருந்து மாநாட்டோடு இயக்கத்திலிருந்து வெளியேறியவர். இப்போது அவருக்கு அரசியல் ஈடுபாடெல்லாம் கிடையாது. இடைக்கிடையே இலக்கியக் கூட்டங்களிற்கு செல்லத்துரை வருவார். அப்படி எனக்கு அவர் பழக்கம். பாரிஸ் நகரத்தின் ஒரு கபேயில் நான் செல்லத்துரையைச் சந்தித்தேன். நான் அவரிடம் “அண்ணே, ராஜரத்தினம் இலங்கை நாயகி எண்டு பெயர்.. அம்பது வயசிருக்கும், லண்டனிலயிருந்து எண்பத்தி மூண்டில புளொட்டுக்கு வந்தவவாம். இப்ப பிரான்ஸில் இருக்கிறா. ஆளை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். செல்லத்துரை கொஞ்சமும் யோசிக்காமல் “ஓ நீங்கள் லைலா தோழரைச் சொல்லுறீங்கள்” என்றார். “அண்ணே, லைலாத் தோழரா, இல்லை லைலாவின்ர தோழரா? தெளிவாச் சொல்லுங்கோ, நான் ஏற்கனவே போதுமான அளவுக்குக் குழம்பியிருக்கிறன்” “அவவுக்கு லைலா எண்டுதான் இயக்கத்தில பேர்” “லைலா, மஜ்னு எண்டெலாம் ரொமான்டிக்கா உங்கிட இயக்கத்தில பேர் வைக்க மாட்டீங்களே! மெண்டிஸ், சங்கிலி, மொக்கு மூர்த்தி எண்டு திகிலாத்தானே நீங்கள் பேர் வைப்பீங்கள்.” “உமக்கு லைலாவெண்டா ஆரெண்டு விளங்கயில்ல. பாலஸ்தீன விடுதலை இயக்கம் முதல்முதலாய் ப்ளேன் கடத்தயிக்க அந்த ஒப்பிரேஷனைச் செய்த ஒரு பெண் போராளிக்கு லைலா எண்டு பெயர்” “அண்ணே ஒரு பியர் குடிப்பமா, தலையிடிக்குது” என்று செல்லத்துரையிடம் கேட்டேன். அவருக்கு சீனி வருத்தமென்று சொல்லி பியர் வேண்டாம் என்றார். அவருக்கு ஒரு கறுப்புக் கோப்பியும் எனக்கு ஒரு பியரும் ஓடர் செய்தேன். “அண்ணே அவ லண்டனிலயிருந்தா இயக்கத்துக்கு வந்தவ?” “ஓமோம்..அதென்னண்டா இவ லண்டனுக்கு படிக்கத்தான் போனது. அங்கதான் கீர்த்தி மாஸ்டரோட லவ்வானது. கீர்த்தி மாஸ்டர் அப்ப லண்டனில புளொட்டுக்கு வேலை செய்தவர். நல்ல அரசியல் தெளிவுள்ள ஆள். ரெண்டு பேரும் லண்டனிலயிருந்து ஒண்டாத்தான் வெளிக்கிட்டவை. கீர்த்தி மாஸ்டர் நேர பி. எல் ஓ. ட்ரெயினிங்குக்காக லெபனானுக்குப் போயிட்டார். லைலா இந்தியாவுக்கு வந்திற்றா. இந்தியாவில கே. கே. நகர் புளொட் ஒப்பிஸிலதான் இரண்டு வருசமா இருந்தவ.” “அப்ப இவ லைலா இயக்கத்தில் பெரிய பொறுப்பில இருந்தவவா?” “ஒப்பிஸில வேலை செய்தவ. கிட்டத்தட்ட உமாமகேஸ்வரனுக்கு செகரட்ரி மாதிரித்தான். இங்கிலீஸ் நல்லாத் தெரியும். அதால வெளிநாட்டுத் தொடர்புகள், மொழிபெயர்ப்புகள் எண்டு கன வேலை செய்தவ. இவவுக்கு அங்க மஞ்சள் குருவியெண்டு பட்டம்.” “அதென்ன மஞ்சள் குருவி?” “ஆம்பிள பொம்பிளை எண்டு வித்தியாசம் பாராம எல்லாரோடயும் நல்லாச் சிரிச்சுப் பழகுவா. உடுப்புகளும் அப்பிடி, இப்பிடி லண்டன் ஸ்டைலிலதான் போடுவா. ஒருக்கா உமாமகேஸ்வரன் கூட ‘உங்கிட லண்டன் பழக்கத்தை இஞ்ச காட்டாதீங்கோ, கட்டுப்பாடு தேவையெண்டு’ இவவ ஏசினது. ஆரைப் பார்த்தாலும் வழியிற கேஸ் எண்டு அவவுக்கு ஒரு பேரிருந்தது. லைலாத் தோழர் எங்களுக்கு முதலே இயக்கத்திலயிருந்து விலத்திற்றா.” “ஏன் இயக்கத்திலயிருந்து வெளியில வந்தவ?” “அது எனக்குச் சரிவரத் தெரியேல்ல, ஆனால் இயக்கம் உடையத் தொடங்கின உடனேயே கெட்டிக்காரங்கள் ஓடித் தப்பிற்றாங்கள். லைலா லண்டன் படிப்பெல்லா.. நாங்கள் அரைகுறையள் நிண்டு இழுவுண்டு வந்தது. மொக்குகள் எல்லாம் அங்கயிருந்து செத்துப்போனாங்கள். புலி போட்டது அரைவாசி…எங்கிட ஆக்களே போட்டது அரைவாசி.” “அந்தக் கீர்த்தி மாஸ்டர் இப்ப எங்க?” “ஆருக்குத் தெரியும்! பி.எல்.ஓவுக்குப் போன ஆளை பிறகு ஒருதரும் கண்டதாத் தெரியேல்ல. அவர் லெபனானிலேயே அடிபாட்டில செத்துப்போனார் எண்டு ஒரு கதையிருக்கு. அப்பிடியில்ல லெபனானில மாணிக்கத்தோட பிரச்சினைப்பட்டுத் திருப்பி இந்தியாவுக்கு வந்துதான் காணாமல் போனவர் எண்டும் ஒரு கதையிருக்கு” செல்லத்துரையிடம் பேசிவிட்டுத் திரும்பி வரும் வழியெல்லாம் எனக்கு இலங்கை நாயகி குறித்த சித்திரங்களே மனதிற்குள் வந்து போயின. ஆனால் இப்போது மனது கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. அடுத்தநாள் கீழ்த்தளத்தில் லிப்டின் அருகே காத்திருந்து இலங்கை நாயகியுடன் லிப்டில் ஏறி அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவர் வழமைபோலவே தலையைச் சிறிது அசைத்து வைத்தார். நான் புதிதாகப் பார்ப்பதுபோல ஓரக் கண்ணால் இலங்கை நாயகியைக் கவனித்தேன். அவர் தலை குனிந்து கையிலிருந்த நாயைத் தடவிக்கொண்டிருந்தார். இலங்கை நாயகி எலுமிச்சம் பழ நிறம். அதனால் கூட அவருக்கு மஞ்சள் குருவியென்று பெயர் வந்திருக்கலாம் என நினைத்துக்கொண்டேன். சற்றுப் பருமனான உடல்வாகு, அல்லது அவரது குள்ளமான தோற்றம் அவரைப் பருமனாகக் காட்டுகிறது. தலையில் ஒரு நரை முடி கூடக் கிடையாது. லிப்ட் கதவுகள் திறந்ததும் விறுவிறுவென அவர் கால்களை அகற்றி வைத்து வேகமாக நடந்து போனார். இப்படிக் கால்களை எறிந்து விறுக்காக நடந்துபோகும் பெண்களை ஊரில் ஆண்மூச்சுக்காரி என்பார்கள். ஒருநாள் காலையில் நான் கீழ்த்தளத்து வாசற்படியில் உட்கார்ந்திருந்தபோது தபாற்காரி வந்து தபாற் பெட்டிகளிற்குள் கடிதங்களைப் போட்டுக்கொண்டிருந்தாள். திடீரென ஒரு யோசனை உதிக்க நான் போய் தபாற்காரியின் அருகில் நின்று இலங்கை நாயகிக்கு ஏதாவது கடிதம் வந்திருக்கிறதா எனக் கவனித்தேன். அன்று இலங்கை நாயகிக்குக் கடிதம் வந்திருந்தது. அதைத் தபாற்காரி இலங்கை நாயகி என்று எழுதப்பட்டிருந்த பெட்டிக்குள் போட்டுவிட்டுச் சென்றதும் நான் கீழே கிடந்த ஒரு நீளமான மெல்லிய குச்சியை எடுத்து அந்தக் குச்சியைப் பெட்டிக்குள் விட்டு லாவகமாகக் கடிதத்தை வெளியே எடுத்தேன். எங்கள் தொடர்மாடிக் குடியிருப்பில் இவ்வாறு குச்சிவிட்டு ஆட்டும் வேலையை ஒளிவு மறைவாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை. பொதுவாகவே தபால் பெட்டிக்குச் சாவியிருக்கிறதோ இல்லையே அநேகமானோர் இவ்வாறு குச்சி விட்டுத்தான் கடிதங்களை எடுத்தார்கள். தபால் பெட்டிகளுக்குக் கீழே நீளமான குச்சிகள் எப்போதும் கிடக்கும். நான் அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு பத்தாவது தளத்திற்கு வந்தேன். எங்கே வேலை செய்கிறார், என்ன வருமானம், அவரின் தொடர்புகள் எத்தகையவை என எந்தவொரு தடயத்தையும் எனக்குத் தராமல் புகையால் வரைந்த ஒரு சித்திரம் போல இலங்கை நாயகி எங்களது குடியிருப்பில் இருந்தார். இந்தக் கடிதத்தைக் கொடுக்கும் சாட்டில் இலங்கை நாயகியின் வீட்டிற்குள் நுழைவது, குறைந்த பட்சம் அவர் கதவைத் திறந்து கடிதத்தை வாங்கும்போது கதவு இடைவெளிக்குள்ளால் அவரது வீட்டின் உள்ளே எட்டியாவது பார்த்துவிடுவது என்பதுதான் எனது திட்டம். உண்மையில் எனக்கு இதுவொரு தேவையில்லாத வேலைதான். ஆனால் யாரைப் பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் சந்தேகத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு எனது மனம் என்னை வழிநடத்திற்று. நான் ஏழாம் இலக்கக் கதவின் முன்னே நின்று அழைப்பு மணியை அழுத்திக் கையை மணியிலிருந்து எடுக்கவில்லை, சடாரெனக் கதவு திறந்தது. இலங்கை நாயகி கதவுக்குப் பக்கத்திலேயே நின்றிருக்க வேண்டும். அல்லது இவ்வளவு சடுதியில் கதவு திறபட வாய்ப்பேயில்லை. திறந்த கதவு நான்கு அங்குலங்கள் மட்டுமே திறந்தது. கதவுக்கும் நிலைக்கும் இடையே உட்புறமாக ஒன்றுக்கு இரண்டாக இரண்டு சங்கிலிகள் இணைக்கப்பட்டிருந்தன. அந்த நாய் கீச்சிடும் சத்தம் கேட்டது. திறந்த கதவு இடைவெளிக்குள்ளால் மூக்குக் கண்ணாடியணிந்த இலங்கை நாயகியின் கண்கள் என்னைப் பார்த்தன. “எக்ஸ்கியூஸே முவா மேடம், உங்கிட பெயர் ராஜரத்தினம் இலங்கை நாயகியா?” கதவின் இடுக்கு வழியே பதில் ஏதும் வரவில்லை. “இலங்கை நாயகி எண்ட பேருக்கு வந்த கடிதம் ஒண்டு என்ர பெட்டிக்க கிடந்தது, தபால்காரி மாறிப் போட்டுட்டாள் போல” என்று கடிதத்தைக் கதவு இடுக்கை நோக்கி நீட்டினேன். “கடிதத்தைக் கொண்டுபோய் என்ர தபால் பெட்டிக்குள்ள போடுங்கோ” என்று இலங்கை நாயகி சொன்னதும் கதவு சாத்தப்பட்டதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன. ஒரு ஞாயிற்றுக்கிழமை நான் பகல் தூக்கத்திலிருந்தபோது அழைப்பு மணி ஒலித்தது. மாதத்தின் முதல் ஞாயிறு. எங்களது குடியிருப்புப் பகுதிக்கு இயக்கப் பொடியன்கள் பத்திரிகைகள் விற்கவும் பணம் சேர்க்கவும் வரும் நாள். நான் எழுந்து சென்று கதவைத் திறந்ததும் எனது கையைப் பற்றிக் குலுக்கியவாறே இரண்டு பொடியன்களும் உள்ளே வந்து அமர்ந்தார்கள். “சொல்லுங்க தம்பியவ, நாட்டில என்ன புதினம்?” என்று நான் அவர்கள் எதிரே அமர்ந்தவாறே கேட்டேன். “சொன்னா நீங்கள் என்ன உதவியா செய்யப் போறீங்கள்” என்று அவர்களில் ஒருவன் கசப்புடன் சொல்ல, மற்றவன் என்னை வலு தீவிரமாகப் பார்த்துக்கொண்டே ’அண்ணன், இப்ப உலக நாடுகள் எல்லாம் எங்கிட போராட்டத்தக் கவனிக்குது. தமிழீழ அரசு அமைஞ்சிற்றுது. எங்களட்ட முப்படையுமிருக்கு, ஒரு நீதி நிர்வாகம் இருக்கு, காவல்துறை இருக்கு, வங்கி இருக்கு. எங்கிட அரசை உலகம் அங்கீகரிக்கிறதுதான் மிச்சம். உங்களப் போல ஆக்கள எல்லாம் இந்த நேரத்தில எங்களுக்கு உதவி செய்ய வேணும்" என்றான் நான் அவர்களைப் பார்த்து எனது முகத்தைப் பாவமாக வைத்தவாறே “தம்பி நீங்கள் என்ன சொன்னாலும் தாறதுக்கு என்னட்டக் காசில்ல, இந்தப் புத்தகம் பேப்பருகளைத் தாங்கோ அதுக்கு மட்டும் காசுதாறன்” என்றேன். அவர்கள் என்னிடம் ஒரு சஞ்சிகையையும் பத்திரிகை ஒன்றையும் தர நான் எண்ணிச் சில்லறைகள் கொடுத்தேன். சில்லறைகளை வாங்கிக்கொண்டு பொடியன்கள் புறப்படும்போது எனக்கு அந்த எண்ணம் திடீரெனத் தோன்றியது. நான் அந்தப் பொடியன்களைப் பார்த்து “தம்பி இஞ்ச ஏழாம் நம்பரில புதுசா ஆக்கள் வந்திருக்கினம், அங்க போனீங்களா?” என்று கேட்டேன். பொடியன்கள் ‘பிரேக்’ அடித்து நின்றார்கள். “என்ன பேர்?” “இலங்கை நாயகி” “சிங்களப் பேர் மாதிரியெல்லோ கிடக்கு” “இல்லைத் தம்பி தமிழ்தான், இலங்கை நாயகி எண்டது தமிழ்ப் பேர்தான், சிங்களமெண்டா லங்காராணியெண்டல்லோ பேர் இருக்கும்” பொடியன்கள் வெளியே போனதும் நான் கதவைச் சாத்திவிட்டு உள்ளே நின்று கதவில் இருக்கும் வெளியே பார்க்கும் துவாரம் வழியாக வெளியே நடப்பதை அவதானித்தேன். அந்தப் பொடியன்கள் ஏழாம் இலக்கக் கதவருவே போய் நின்று அழைப்பு மணியில் கை வைக்கவும் கதவு சடாரெனத் திறந்தது. பொடியன்கள் உள்ளே பார்த்துப் பேசுவது தெரிந்தது. ஆனால் அவர்கள் பேசுவது இங்கே எனக்குக் கேட்காது. திறந்த வேகத்திலேயே இலங்கை நாயகியின் கதவு மூடப்பட்டது. நான் மெல்ல எனது கதவைத் திறந்து வெளியே வந்து இயக்கப் பொடியன்களிடம் “தம்பி மனுசி என்ன சொன்னது?” எனக் கேட்டேன். ஒரு பொடியன் சலித்துக்கொண்டே “மனுசி கதவே திறக்கமாட்டன் எண்டு சொல்லிப் போட்டுது, இயக்கப் பத்திரிகை வாங்குங்கோ எண்டு கேட்டதுக்கு பேப்பரைக் கொண்டு போய்க் கடையில போடுங்கோ வாங்குறன், வீட்டை வரக் கூடாது எண்டு சொல்லிப்போட்டுது” என்று சொல்ல, அடுத்தவன் “இலங்கை நாயகி எண்டது மனுசிக்குப் பொருத்தமான பேராத்தான் கிடக்குது” என்றான். எனக்கு இலங்கை நாயகி மேல் மெது மெதுவாக ஆர்வம் குறையலாயிற்று. ஏனெனில் அதுக்கு மேலே தலைபோகிற பிரச்சினைகளெல்லாம் என்னைச் சூழ நடந்துகொண்டிருந்தன. பிரான்ஸில் வாழும் ஒரு இலட்சம் தமிழர்களில் எனக்கு இலங்கை நாயகியும் ஒருவரானார். எப்போதாவது அவர் எதிர்ப்பட நேரிடுகையில் நான் வணக்கம் சொல்வதும் அவர் தலையசைப்பதும் தொடர்ந்தது. நான் புன்னகைக்கும்போது அவர் எனக்குத்தான் தலையசைக்கிறாரா அல்லது எப்போதுமே கையிலிருக்கும் தனது நாயோடு தலையசைத்து அவர் செல்லம் கொஞ்சுகிறாரா என்று எனக்கு வரவரச் சந்தேகமாயிருந்தது. ஒருநாள் எனது அழைப்பு மணி ஒலிக்கக் கேட்டு நான் கதவைத் திறந்தபோது அங்கே இலங்கை நாயகி நின்றிருந்தார். நான் “உள்ளுக்க வாங்க அக்கா” என்று கூப்பிட்டுவிட்டு அறைக்குள் வந்து நின்றேன். அவர் ஓரடி முன்னால் வந்து திறந்திருந்த கதவைப் பிடித்தவாறே நின்றார். எனக்கும் அவருக்கும் இடையே இருந்த மேசையில் எனது சிகரெட் பெட்டி கிடந்தது. எதற்கு இவர் என்னிடம் வந்திருக்கிறார் என்று நான் மண்டையைக் கசக்கியவாறே சிகரெட் பெட்டியை எடுக்க ஓரடி முன்னால் சென்றபோது இலங்கை நாயகி பதறிப்போய் பின்னால் நகர்ந்து வெளியே சென்றார். ‘நான் மஞ்சள் குருவிய ரேப் செய்யப்போறனாக்கும், அதுதான் பயப்பிடுறா’ என்று ஆத்திரத்துடன் நான் மனதிற்குள் சொல்லிக்கொண்டே ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தேன். அவர் என்னைப் பார்த்து அவ்வாறு பதறியடித்தது எனக்குக் கொஞ்சம் அவமானமாயுமிருந்தது. இலங்கை நாயகி மறுபடியும் முன்னால் வந்து கதவைப் பிடித்துக்கொண்டு நின்றார். “அன்ரனிதாசன் நீங்கள் எனக்கொரு உதவி செய்வீங்களா?” என்னுடைய பெயர் எப்படி இவருக்குத் தெரியும்..? சரி அவரும் தபாற் பெட்டியில் பார்த்திருப்பார் போல என்று நினைத்துக்கொண்டே “சொல்லுங்கோ அக்கா என்ன செய்ய வேணும்” என்று கேட்டேன். “எனக்குச் சரியான சுகமில்லாமல் கிடக்குது, வெளிய போக ஏலாமக் கிடக்கு. லைலாவுக்கு சாப்பாடு வாங்கவேணும் வாங்கிக்கொண்டுவந்து தருவீங்களா” என்று கேட்டார். நான் தலையாட்டியதும் அவர் மெதுவாக நடந்து வந்து கையில் வைத்திருந்த பணத்தையும் உணவுப் பொருட்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்த தாளையும் மேசையின் விளிம்பில் வைத்துவிட்டுச் சென்றார். நான் நாய்க்கான உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு வரும்போது இலங்கை நாயகி என்ன சாப்பிடுவார், அவருக்கு ஏதும் தேவையில்லையா? என யோசித்துக்கொண்டே வந்தேன். இலங்கை நாயகியின் கதவின் முன்னால் நின்று நான் அழைப்பு மணியில் கை வைத்ததும் நான் எதிர்பார்த்தது போலவே கதவு உடனே திறக்கப்பட்டது. அந்த நான்கு அங்குல இடைவெளிக்குள்ளால் நான் பொருட்களை ஒவ்வென்றாக எடுத்துக் கொடுக்க இலங்கை நாயகி ஒவ்வொன்றாக வாங்கி வைத்துக்கொண்டார். நான் அத்தோடு வந்திருந்தால் மரியாதை. நான் பேச்சை வளர்க்கும் ஆர்வத்தில் “நாட்டில் என்ன செய்தியெண்டு ஏதாவது அறிஞ்சியளோ” எனக் கேட்டேன். “எனக்கு ஒண்டும் தெரியாது” என்ற பதில் வந்ததும் கதவு மூடப்பட்டதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன. அது ஸ்ரீலங்காவில் யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த நேரம். புலிகளின் விமானங்கள் கொழும்பில் குண்டு வீசியதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்த நேரமது. நான் இலங்கை நாயகியின் உடல்நிலை குறித்து ஏதாவது கேட்டிருந்தால் அவர் பதில் சொல்லியிருக்கலாம் என நினைத்துக்கொண்டேன். கொடும்பனி கொட்டிக்கொண்டிருந்த காலமது. புல்வெளிகள் எல்லாம் பனிப் பாலைகளாக மாறியிருந்தன. ஜனவரி மாதத்தில் கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிவிட்டதாகச் செய்திகள் வந்தன. பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் என எல்லா மாதங்களுமே அவலச் செய்திகளுடன் பிறந்து மடிந்துபோயின. மே மாதத் தொடக்கத்தில் குளிர் மடியத் தொடங்கிற்று. நான் கீழ்த்தளத்து வாசற்படியில் குந்தியிருந்தபோது இலங்கை நாயகி சுமக்க முடியாத சுமையுடன தூரத்தே நடந்து வருவது தெரிந்தது. நான் எழுந்து அவரை நோக்கி நடந்தேன். அவரின் கைளில் இருந்த இரண்டு பைகள் நிறையப் பாண் துண்டங்கள் இருந்தன. அவரின் பின்னே லைலா மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தது. நான் அவரின் கைகளிலிருந்த பைகளை வாங்கிக்கொண்டேன். லிப்டில் போகும்போது நான் இலங்கை நாயகியிடம் “எதுக்கு இவ்வளவு பாண்?” என்று கேட்டுச் சிரித்தேன். இலங்கை நாயகி தனது நாவால் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு “குளிருக்க நிண்டு எங்கிட பிள்ளையள் போராடிக்கொண்டிருக்குதுகள், அதுகளுக்கு சாண்ட்விச் செய்துகொண்டுபோய்க் குடுக்கப் போறன்” என்றார். நான் இலங்கை நாயகியின் கதவுவரை சென்று பாண் துண்டங்கள் நிறைந்த பைகளைக் கீழே தரையில் சுவரோடு சாய்த்து வைத்தேன். இலங்கை நாயகி நான் அங்கிருந்து நகரும்வரை காத்திருந்துவிட்டு, தனது கதவைத் திறந்து பைகளை இழுத்துக்கொண்டு உள்ளே போனார். லைலா உள்ளே நுழைந்ததும் கதவு மூடப்பட்டது. நான் இரவு தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஈழத் தமிழர்கள் பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரத்தின் கீழே நாற்பது நாட்களாகத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் போராட்டத்தைக் காண்பித்தார்கள். மேலேயிருந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். எப்படியும் முப்பதாயிரம் சனத்துக்குக் குறையாது என நினைக்கிறேன். இப்போது தொலைக்காட்சியில் இலங்கை நாயகி தோன்றினார். அவரின் கையில் பிரபாகரனின் படம் இருந்தது. செய்தியாளரிடம் அவர் பிரஞ்சு மொழியில் துல்லியமாகப் பேசினார். “இலங்கையில் போரைத் தடுத்து நிறுத்தி அங்கே விமானத் தாக்குதல்களாலும் கொத்துக் குண்டுகளாலும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களைக் காப்பாற்றுங்கள், ஒரு தாயாகக் கேட்கிறேன்..சர்வதேசமே எனது பிள்ளைகளைக் காப்பாற்று”  என்று விம்மிய குரலில் பேசினார் இலங்கை நாயகி. பேசும்போது அவரின் உடல் பதறிக்கொண்டிருந்தது. அவரின் கைகள் தொலைக்காட்சிச் செய்தியாளரை அடிப்பதுபோல முன்னும் பின்னும் போய்வந்தன. அவர் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகத்தான் பேசியிருப்பார். ஆனால் அவரின் குரலும் ஓலமும் கேட்பவர்களின் ஆன்மாவை உலுக்கக் கூடியவை. இலங்கை நாயகி தனது பேச்சை முடிக்கும்போது தனது கையிலிருந்த படத்தை உயரே தூக்கிக்காட்டி “எங்கள் தலைவர் பிரபாகரன்”  என்றார். அப்போது அவரது குரல் கணீரென ஒலித்தது. அன்று மே எட்டாம் தேதி. அதற்குப் பின்பு ஒரு மாதம் கழிந்திருக்கும், நான் எனது கதவைத் திறந்து லிப்டை நோக்கிச் சென்றபோது அங்கே நாயுடன் லிப்டுக்காகக் காத்திருந்தார் இலங்கை நாயகி. லிப்ட் கதவுகள் முடிக்கொண்டன. இருவரும் ஒரேதளத்தில் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் இருக்கிறோம்,  ஆனால் நம்முடைய பேச்சுவார்த்தைகள் என்னவோ லிப்டில்தான் நடக்கின்றன. இயக்கமும் அரசாங்கமும் சொந்த நாட்டில் பேசாமல்  மூன்றாவது நாடொன்றில் பேசிக்கொள்வதுபோல நமக்கு லிப்ட் முன்றாவது தளம். “அக்காவ கொஞ்ச நாளைக்கு முன்னம் நான் பிரஞ்சுச் செய்தியில் பார்த்தனான்” இலங்கை நாயகி மெதுவாகத் தலையசைத்தார். அது நாய்க்கா அல்லது எனக்கா என்பது தெரியவில்லை. நான் அவரின் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே " கையிலயிருந்த படத்தையெல்லாம் தூக்கிக்காட்டி அடிக்குமாப்போல பேசினீங்கள்" என்றேன். இலங்கை நாயகி உதட்டைச் சுழித்து மேலே பார்த்துக்கொண்டே “அந்தப் படமோ, அது பிரபாகரனோ என்னவோ எண்டு சொன்னாங்கள்” என்றார். லிப்ட் கதவு திறந்ததும் இலங்கை நாயகி கால்களை அகல வைத்து நடந்து வெளியே போனார். நாய் அவரின் பின்னாலே ஓடிற்று. நான் லிப்டிற்குள் அப்படியே நின்றிருந்தேன். லிப்ட் மூடிக்கொண்டது. நேற்று நான் வெளியே பெரும் சத்தங்களைக் கேட்டு ‘லீவு நாளில கூடப் படுக்க விடுறாங்களில்லை’ எனத் திட்டிக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்தேன். நேரம் காலை பத்துமணியாகியிருந்தது. கதவைத் திறந்து வெளியே என்ன சத்தம் எனப் பார்த்தேன். இலங்கை நாயகியின் கதவு முன்னே கூட்டமாயிருந்தது. பொலிஸார் வந்து கதவை உடைத்துக்கொண்டிருந்தார்கள். அங்கே நின்றிருந்த ஆறாம் இலக்கத்தில் குடியிருக்கும் அந்த ஆபிரிக்கப் பெண்மணியிடம் “என்ன விசயம்?” என்று கேட்டேன். தான் இரண்டு மூன்று நாட்களாகவே ஏழாம் இலக்க வீட்டின் உள்ளேயிருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்ததாகவும் இன்று துர்நாற்றம் அளவுக்கு மீறிப்போகவே தான் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் அவர் சொன்னார். நான் என் நாசியை விரித்து ஆழமாக மூச்சை இழுத்து விட்டேன். அப்படி ஒரு துர்நாற்றத்தையும் நான் உணரவில்லை. நான் எப்போது கடைசியாக இலங்கை நாயகியைக் கண்டேன் என்பது எனக்குச் சரியாக ஞாபகத்தில் வர மறுத்தது. ஆனாலும் கடந்த பத்துப் பதினைந்து நாட்களாகவே நான் அவரைக் காணவில்லை என்பது எனக்கு உறைத்ததும் எனக்கு நெஞ்சுக்குள் தண்ணீர் வற்றிப்போயிற்று. கதவு உடைக்கப்பட்டதும் பொலிசார் அந்தப் பகுதியை யாரும் நெருங்காதவாறு சிவப்புப் பிளாஸ்டிக் நாடாக்களைக் குறுக்கே கட்டினார்கள். உள்ளே இலங்கை நாயகியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இறந்து பத்து நாட்களாகியிருக்கலாம் எனச் சொன்னார்கள். நான் ஒரு பொலிஸ்காரனைக் கூப்பிட்டு அவனிடம் மெல்லிய குரலில் “உள்ளே ஒரு நாயும் இருந்தது, அது உயிரோடு இருக்கிறதா எனப் பாருங்கள்” என்றேன். உள்ளே போன பொலிஸ்காரன் திரும்பிவந்து என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “உள்ளே நாய் எதுவும் இல்லை” என்றான். “அதுவும் செத்திருக்கலாம்” என்றேன். “எல்லாம் தேடிப் பார்த்தாயிற்று அப்படியெல்லாம் எதுவுமில்லை” என்றான் பொலிஸ்காரன். இலங்கை நாயகியின் உடல் பிளாஸ்டிக் பையில் பொதியப்பட்டு வெளியே எடுத்துவரப்பட்டது. நான் கண்களை இறுக முடிக்கொண்டேன். லிப்டுக்குள் அவர்கள் இலங்கை நாயகியின் உடலை வைக்கும் சத்தம் கேட்டது. நான் கண்களைத் திறந்தபோது லிப்ட் போய்விட்டிருந்தது. நான் மெல்ல நடந்து எனது கதவைத் திறந்து உள்ளே வந்து படுக்கையில் விழுந்தேன். படுக்கையில் அப்படியே கண்களை மூடியவாறே கிடந்தேன். இரவு ஏழு மணியளவில் மறுபடியும் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தேன். இப்போது இலங்கை நாயகியின் வாசலின் முன்னே யாருமில்லை. நான் மெல்ல நடந்துபோய்ப் பார்த்தபோது உடைக்கப்பட்ட கதவு அடைக்கப்பட்டு பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டிருந்தது. இப்போது நான் துர்நாற்றத்தை அங்கே உணர்ந்தேன். உடனே ஆறாம் இலக்கக் கதவைப் போய்த் தட்டினேன். அந்த ஆபிரிக்கப் பெண் கதவைத் திறந்து வெளியே வந்தார். நான் பதற்றத்துடன் அவரிடம் “நீங்கள் துர்நாற்றத்தை உணர்கிறீர்களா?” எனக் கேட்டேன். அந்தப் பெண் என்னைக் கவலையோடு பார்த்து “காலையிலேயே சடலத்தைக் கொண்டுபோய் விட்டார்களே…இப்போது துர்நாற்றம் எதுவுமேயில்லையே” என்றார். “அவர்கள் ஒரு சடலத்தை மட்டும்தான் கொண்டு சென்றார்கள்” என்று நான் முணுமுணுத்தேன். அந்த ஆபிரிக்கப் பெண் என்னை இரக்கத்தோடு பார்த்து “இறந்துபோன அந்தப் பெண்மணி உன்னுடைய நாட்டைச் சேர்ந்தவரா?” எனக் கேட்டார். நான் ஆம் என்று தலையாட்டினேன். “நீங்கள் எந்த நாட்டவர்கள்?” என அந்தப் பெண் கேட்கவும் “ஸ்ரீலங்காவோ என்னவோ ஒரு பேர்” என்று சொன்னேன். எனது மூளை முழுவதும் லைலாவுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியே நிரம்பியிருந்தது. அந்த நாயை இலங்கை நாயகியைத் தவிர வேறு யாரும் கொன்றிருக்கவோ அழித்திருக்கவோ வாய்ப்பில்லை என்று திடீரென என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அதை நான் நம்பவும் ஆரம்பித்தேன். ஆரம்பம் முதலே இலங்கை நாயகி மீது எனது அடி மனதிலே மண்டிக் கிடந்த சந்தேகமும் வெறுப்பும் இப்போது முழுவதுமாகத் திரண்டு மேலே வரலாயிற்று. மஞ்சள் குருவி ஒரு வெண்ணிற நாயைக் கொன்றது. அதுதான் இந்தக் கதையின் ஆரம்பித்திலேயே நான் சொன்னேனே, இந்தக் கதைசொல்லியின் மனது வக்கிரத்தால் நிரம்பியிக்கிறது! (‘காலம்’ ஜனவரி 2011 இதழில் வெளியாகிய கதை) F இயக்கம் நான் இந்தக் கதைக்கு முதலில் ‘X இயக்கம்’ என்றுதான் பெயரிட்டிருந்தேன். இந்தக் கதை இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் போராளிகளைப் பற்றியது. இவர்கள் இருவருமே பல வருடங்களிற்கு முன்பே அரசியல் அகதிகளாக அய்ரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இருவரும் ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களா போன்ற எந்த விபரமும் எனக்குத் தெரியாது. கதையின் எந்த இடத்திலும் இவர்கள் எந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என வாசகர்கள் ஊகம் செய்யப் பிடிகொடுக்காதவாறு கதையை நகர்த்திச் செல்வதும் அதைக் கதை முடிந்த பின்பும் காப்பாற்றுவதும் இந்தக் கதையைப் பொறுத்தவரையில் முக்கியமான உத்திகள். எனவே அறியப்படாத ஒன்றை குறிப்பதற்கு X என்ற குறியீட்டை உபயோகிக்கும் மரபையொட்டிக் கதைக்கு ‘X இயக்கம்’ எனப் பெயரிட்டிருந்தேன். கதையின் தலைப்பைக் கேட்ட மாத்திரத்திலேயே “இந்தக் கதை ‘செம்படை’ இயக்கம் குறித்த கதையா?” என நண்பரொருவர் கேட்கவும் நான் ஏங்கிப் போனேன். 1985 வரை ‘செம்படை’ என்றொரு தமிழீழப் போராட்ட இயக்கமும் இயங்கி வந்தது நீண்ட வருடங்களிற்குப் பிறகு எனக்கு அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. நண்பர் ஈழப் போராட்ட வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர். தவிரவும் ஒன்றிரண்டு போரியல் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியவர். நான் குழப்பத்துடன் “கதையைக் கூடப் படிக்காமல் செம்படை இயக்கம் குறித்த கதையென எப்படிச் சொல்கிறீர்கள்?” என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் “அந்த இயக்கத்தின் தலைவரின் பெயர் சேவியர், எனவே X என்பது ஆங்கிலத்தில் அவரின் பெயரின் முதலெழுத்தைக் குறிப்பிடுகிறது” என்றார். இப்படிக் கூட ஊகிக்க முடியுமா என எனக்கு வியப்பாயிருந்தது. X என்பது கணிதம் முதற்கொண்டு போர்னோப் படங்கள்வரை நாம் சர்வ சாதரணமாக உயயோகித்து வந்த ஒரு குறியீடு என்பதையும் முந்திக்கொண்டு X என்பது ஒரு இயக்கத் தலைவரின் முதலெழுத்தாக விளங்கிக்கொள்ளப்பட்டதை என்னால் உடனே விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. நிதானமாக யோசித்துப் பார்த்ததில் கடந்த இருபத்தைந்து வருடங்களில் இப்படியான இசகுபிசகுகள் ஏராளமாக நிகழ்ந்திருக்கின்றன என்பது பிடிபட்டது. முன்பெல்லாம் சக்கையென்றால் மிச்சம் அல்லது திறமையற்றது எனப் பொருள். இப்போது சக்கையென்றால் மிச்சம் மீதி வைக்காமல் அழிக்கக் கூடிய வீரியமான வெடிமருந்து எனப் பொருள். முன்பெல்லாம் பொட்டு வைப்பதென்றால் மங்கலம் என்று பொருள். இப்போது பொட்டு வைப்பதென்றால் தாலியறுப்பது என்று பொருள். ‘கொல்வது’ என்ற வினைச்சொல்லுக்கு மட்டுமே ‘டம் பண்ணுதல்’, ‘மண்டையில் போடுதல்’, ‘தட்டுதல்’, ‘மட்டை’ என்று பல்வேறு இயக்க வழக்குகள் புழக்கத்திலிருக்கின்றன எந்த வகையிலும் கதையில் குறிப்பிடப்படும் இருவரும் எந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என வாசகர்கள் ஊகிக்க இடம் கொடுக்கக் கூடாது என்பதில் நான் கவனமாயிருந்ததால் X என்ற எழுத்துக்குப் பதிலாக வேறெந்த எழுத்தைக் கதையின் தலைப்புக்குத் தெரிவு செய்யலாம் என நான் யோசித்தபோதுதான் அப்படியொரு எழுத்தைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பது எனக்கு உறைத்தது. ஏனெனில் ஆங்கிலத்தில் இருபத்தாறு எழுத்துகள் மாத்திரமே உள்ளன. ஆனால் நம்மிடையே முப்பத்தேழு இயக்கங்களும் எண்ணற்ற தலைவர்களுமிருந்தார்கள். நான் A என்ற எழுத்திலிருந்து ஆரம்பித்தேன்: A -அருளர் B -பாலகுமார் C -சந்திரஹாஸன் D -டக்ளஸ் தேவானந்தா E – ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஈ.என்.டி.எல். எவ் மற்றும் பல F- …. G -ஞானசேகரன் என்ற பரந்தன் ராஜன் H – ஹென்ஸி மோகன் I – இன்பம் J -ஜெகன் K – கருணா L – எல்.ரி.ரி.ஈ. M -முகுந்தன் N – என். எல். எவ். ரி O – ஒபராய் தேவன்… என்று தொடர்ந்த பட்டியலில் F என்ற எழுத்து மட்டுமே கேட்பாரற்றுக் கிடந்தது. எனவே நான் அந்த எழுத்தைக் கைப்பற்றிக்கொண்டேன். எங்கே இனி முடிந்தால் ஊகித்துப் பாருங்கள் பார்ப்போம். பாரிஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ‘லுப்தான்ஸா’ விமானத்தில் இவன் பயணம் போனான். பிராங்போர்ட் விமான நிலையத்தில் மறு விமானம் பிடித்து இவன் கொழும்புக்குப் போவான். பிராங்போர்ட் விமான நியைத்தில் சோதனைகளை முடித்துக் கொழும்பு செல்லவிருக்கும் விமானத்தில் ஏறி உட்கார்ந்தான். இவனது அருகாமை இருக்கை வெறுமையாயிருந்தது. அந்த இருக்கையில் ஒரு அழகிய ஜெர்மானியப் பெண் வந்து உட்காரக் கூடுமென இவனது உள்ளுணர்வு சொல்லிற்று. ஆனால் இவனது உள்ளுணர்வு ஒருபோதுமே பலித்ததில்லை என்பதே வரலாறு. மாதத்திற்கு ஒரு தடவையாவது இவனது உள்ளுணர்வு அப்பா இன்றோ நாளையோ இறந்துவிடுவார் என்றே இவனுக்குச் சொல்லி வந்தது. ஆனால் அப்பா இன்னமும் உயிரோடு நோயும் பாயுமாகத்தான் இருக்கிறார். அதிகாலையில் தொலைபேசி அழைக்கும்போதெல்லாம் இவன் அப்பாவின் சாவுச் செய்தியை எதிர்பார்த்தே தொலைபேசியை எடுப்பான். யாழ்ப்பாணத்துக்குப் போய் அப்பாவைப் பார்த்துவிட்டு வரலாமா என்று பல காலமாகவே மண்டையைப் போட்டுக் குழப்பியவன் இவன். அப்பாவின் மரணச் செய்தி வந்தால் இந்தத் தொடர் துயரிலிருந்து விடுபடலாமே என்று கூட இவன் நினைத்ததுண்டு. அப்படி நினைத்தற்காக ஒருமுறை இரவில் தண்ணியைப் போட்டுவிட்டு இவன் தன் முகத்தில் தானே ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான். இவனோடு வேலை செய்யும் நண்பர்களின் உறவினர்கள் கொழும்பிலோ வவுனியாவிலோ இருந்து தீபாவளி, வருடப் பிறப்பு என்றும் கலியாணம், படிப்பு என்றும் காசு கேட்பதும் நண்பர்கள் அனுப்புவதும் வழமை. ஆனால் இவனின் சின்னக்காவும் பெரியக்காவும் அத்தான்மாரும் அப்படி இவனிடம் காசு கேட்பதில்லை. அவர்கள் எப்போதுமே அப்பாவுக்கு நோய் கடுமையாயிருக்கிறது, சிகிச்சைக்காகக் கொழும்புக்கு அழைத்துப் போகப் போகிறோம், இந்தியாவுக்குக் கூட்டிப் போகப் போகிறோம் என்று சொல்லியே காசு கேட்பார்கள். ஆனால் அவர்கள் அப்பாவைப் பாயிலிருந்து எங்குமே நகர்த்தியதாகத் தெரியவில்லை. சின்னக்காவும் பெரியக்காவும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் காசு கேட்டார்கள். ஒருவரையொருவர் குற்றம் சொன்னார்கள். சிகிச்சைக்காக அப்பாவைக் கொழும்புக்கு அழைத்துச் செல்லாததற்காகப் புதுப் புது சாட்டுக்களைச் சொன்னார்கள். குறிப்பாக இவன் இதைப் பற்றிப் பெரியத்தானிடம் கேட்டபோதெல்லாம் கொழும்புக்கு அழைத்துப் போக முடியாததற்கான காரணங்களை அத்தான் அரசியல் ரீதியாகத்தான் விளக்கினார். அவர் சந்திரிகா பண்டாரநாயக்காவின் செத்துப்போன புருசனையும் ரணில் விக்கரமசிங்காவின் தாயையும் மகிந்த ராஜபக்சவின் பெண்சாதியையும் தூசணத்தால் ஏசினார். உங்கள் அப்பா எப்போதிருந்து நோய்ப் படுக்கையிலிருக்கிறார் என யாராவது கேட்கும்போதெல்லாம் ‘சந்திரிகாவின் காலத்திலிருந்தே படுக்கையிலிருக்கிறார்’ என்று சொல்லலாமா என்று கூட இவன் யோசிப்பான். சோமாலியாக் கடற்கொள்ளைக்காரர்களிடம் சிக்கிய கப்பல் போல அப்பா அக்காமாரிடம் பணயமாக இருப்பது போலத்தான் இவனுக்குப் பட்டது. அப்பாவிற்குச் சாகிற வயதுதான். ஆனால் இவர்கள் அப்பாவைச் சாக விமாட்டார்கள். பணயப் பொருளைத் தொலைப்பதற்குக் கடத்தல்காரர்கள் விரும்புவதில்லை. தான் இப்படியெல்லாம் யோசிப்பதற்குத் தன்னிடம் சகோதர பாசம், தந்தைப் பாசம் எல்லாமே அற்றுப் போய்விட்டதுதான் காரணமோ என இவன் யோசித்தான். தீர யோசித்துப் பார்த்தத்தில் அப்பாவின் மீதல்ல, எவர்மீதும் தனக்கு உண்மையான அன்பு கிடையாதென்றும் தன்மேலும் எவருக்கும் அன்பு கிடையாதென்றும் நிர்ப்பந்தங்களால் மட்டுமே அன்பு செலுத்துவதாக நடிக்க வேண்யிருப்பதாகவும் இவன் நினைத்தான். ‘உறவுகள் எல்லாமே காசுக்காக’ என்ற பிரபலமான புலம் பெயர் பழமொழியை எல்லோரைப் போலவே இவனும் அடிக்கடி முணுமுணுத்தான். ‘வணக்கம்’ என்ற வார்த்தையைப் போலவே ‘விசா’ என்ற வார்த்தையைப் போலவே இந்தப் பழமொழியும் புகலிடத்தில் சர்வசாதாரணமாகப் புழக்கத்திலிருந்தது. ஆனால் சென்ற கிழமை அக்கா தொலைபேசியில் ‘அப்பா இந்தமுறை தப்பமாட்டார்’ என்றும் அப்பா திடீர் திடீரெனக் கண் விழித்து இவன் வந்துவிட்டானா என்று கேட்டுக்கொண்டிருப்பதாகவும் சொன்னபோது அப்பாவைப் போய்க் கடைசியாக ஒருதடவை பார்க்க வேண்டுமென இவன் முடிவெடுத்தான். அம்மா இறந்தபோது இவன் பிரான்ஸுக்கு வந்து மூன்று வருடங்களே ஆகியிருந்தன. அம்மாவின் பிரேதம் கொள்ளி போடப் பிள்ளையில்லாமலேயே எரிந்தது. தனக்கும் அப்படியொரு நிலை ஏற்படக் கூடாது என அப்பா அழுதாராம். யாழ்ப்பாணம் போக முடிவெடுத்த கணத்திலேயே இவன் மனம் கிளர்ச்சியடையத் தொடங்கியது. இவனின் கிராமமும் உறவுகளும் நட்புகளும் வரிசையாக மூளைக்குள் படமாய் ஆடின. அப்பாவின் இறுதிச் சடங்கில் தான் வேட்டி உடுத்துக்கொண்டு கொள்ளியிடும் சித்திரம் இவனின் மனதில் தோன்றியபோது இவனுக்குக் குறுகுறுப்பாயிருந்தது. விமானத்தின் இருக்கைப் பட்டியை அணிந்து கொள்ளும்போது இவன் கொழும்பில் இறங்கும்போது அப்பாவின் மரணச் செய்தி இவனுக்காகக் காத்திருக்கும் என இவனது உள்ளுணர்வு சொல்லிற்று. விமானம் புறப்படவிருக்கும் தருணத்தில் இவன் வயதேயுள்ள கரிய, தடித்த உருவமுடைய ஒரு மனிதன் இவனின் அருகாமை இருக்கையை நோக்கிப் பதற்றத்துடன் வந்தான். வந்தவன் இவனைப் பார்த்து ஒரு புன்னகை கூடச் செய்யாமல் இவனையும் இருக்கையையும் மாறி மாறிப் பார்த்தான். வேறு வழி இல்லாதவன்போல முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு இருக்கையில் தன் பருத்த உடலைச் சாய்த்தான். தனது கால்களிற்கு இடையே தனது கையிலிருந்த தோற்பையை வைத்துக்கொண்டான். இருக்கைப்பட்டியைச் சிரமப்பட்டுப் போட்டுக்கொண்டு கையிலிருந்த ஜெர்மனிய மொழிப் பத்திரிகையொன்றை அந்த மனிதன் வாசிக்கத் தொடங்கினான். இவன் கடைக் கண்ணால் அந்த மனிதனினின் கால்களுக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த கைப்பையில் தொங்கவிடப்பட்டிருந்த முகவரிச் சீட்டைச் சிரமப்பட்டுப் படித்தான். அதில் ‘அருமைநாயகம் தெய்வேந்திரன், டோர்ட்முண்ட், ஜெர்மனி’ என எழுதப்பட்டிருந்தது. விமானம் புறப்பட்ட அடுத்த அரைமணி நேரத்திற்கு இவன் ஜன்னலால் வெளியே பார்த்தும் கைகளைக் கோர்த்தும் பிரித்தும் கால்களை ஆட்டியும் சேட்டைகள் செய்துகொண்டிருந்தான். அருகிலிருந்தவனுடன் இனியும் பேசாமல் இருக்க முடியாது எனத் தோன்றியது. கடைக்கண்ணால் அருகிலிருந்தவனைக் கவனித்தான். அவனும் முகத்தைத் திருப்பாமலேயே தன்னைக் கவனித்துக்கொண்டிருப்பது போல இவனுக்குப் பட்டது. அருகிலிருந்தவனுடன் பேசுவதற்கான வார்த்தைகள் இவனின் வாய்க்குள் முட்டிப் போயிருந்தன. பேச்சை எப்படி ஆரம்பிப்பது என இவன் மனதிற்குள் ஒரு சிறிய ஒத்திகை பார்த்துக்கொண்டு முகத்தைத் திருப்பியபோது அருகிலிருந்தவன் இவனிடம் பேசத் தொடங்கினான். ஒரு முட்டாள்தனமான கேள்வியுடன் அந்த உரையாடல் ஆரம்பிக்கலாயிற்று. “நீங்கள் தமிழா?” இவன் கொழும்புக்குப் போய், அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு போகப் போவதாகவும் தனது தகப்பனார் மரணப் படுக்கையில் கிடக்கிறார் எனவும் சொன்னான். அதைத்தான் மற்றவனும் சொன்னான். அவனின் தாயார் வாய்ப் புற்றுநோயால் யாழ்ப்பாணக் கிராமமொன்றில் மரணப் படுக்கையில் கிடக்கிறாராம். அவன் இவனிடம் கல்யாணம் செய்துவிட்டீர்களா எனக் கேட்டபோது ‘ஓம்’ என்று இவன் பொய் சொன்னான். அவன் ஜெர்மனியில் ஒரு அச்சகசாலையில் வேலை செய்வதாகவும் தனக்கு மூன்று குழந்தைகள் என்றும் சொன்னான். இவன் தான் பாரிஸில் ஒரு சுப்பர் மார்க்கட்டில் வேலைசெய்வதாகவும் தான் பிரான்ஸுக்குப் போய் இருபது வருடங்கள் ஆகின்றன எனவும் சொன்னான். அவன் தானும் ஜெர்மனிக்கு வந்து இருபது வருடங்கள் ஆகின்றன என்றான். இருவருமே வந்ததற்கு முதல் முறையாக இப்போதுதான் இலங்கைக்குப் போகிறார்களாம். இவன் தனது பெயர் சந்திரன் என்று சொன்னான். அவன் தன்னுடைய பெயர் மாறன் என்றான். அவனுடைய பெயரை அருமைநாயகம் தெய்வேந்திரன் என்று இவன் ஏற்கனவே அவனுடைய கைப்பையிலுள்ள முகவரிச் சீட்டிலிருந்து தெரிந்து வைத்திருந்தான். மாறன் என்பது அவனின் வீட்டுப் பெயராக இருக்கலாம் என இவன் நினைத்துக்கொண்டான். பேசிக்கொண்டிருந்தபோது தான் அவனை ஏற்கனவே எங்கேயோ பார்த்திருப்பதாக இவனுக்குத் தோன்றியது. இவனின் வாய் பேசிக்கொண்டிருந்தாலும் இவனது கண்கள் மாறனின் கண்களையே ஊடுருவிக்கொண்டிருந்தன. திடீரென இவனது தேகம் குளிர்ந்து போயிற்று. தன்னோடு இப்போது பேசிக்கொண்டிருக்கும் மாறனைத் தான் எங்கேயோ பார்த்திருப்பதாகவும் அப்போது மாறனின் கையில் துப்பாக்கியிருந்ததாகவும் இவனுக்குள் ஒரு சித்திரம் உருவாகியது. அந்தச் சித்திரம் புகையால் தீட்டப்பட்டிருந்தது. அருகிலிருப்பவன் இயக்கக்காரன் என இவனது உள்ளுணர்வு எச்சரித்தது. பேச்சை நிறுத்திவிட்டு இவன் ஜன்னல் பக்கம் திரும்பியதும், அருகிலிருந்தவன் அதற்காகவே காத்திருந்தவன் போலக் கண்களை மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்ததும் ஒரே கணத்தில் நிகழ்ந்தன. மாறனை எங்கே பார்திருக்கிறேன் என்று மண்டையைப் போட்டு இவன் உடைத்துக்கொண்டான். 1984 மார்ச் யாழ்ப்பாணம் புத்தவிகாரைக்குப் பக்கத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலுக்குப் பின்னாகக் கோட்டையிலிருந்து நகரத்துக்குள் நுழைந்த இராணுவத்தினர் பெரியகடைப் பகுதியைக் கொழுத்தினர். அவர்களின் கைகளிலிருந்த துப்பாக்கிகள் இலக்குகள் இல்லாமல் சுட்டுத் தள்ளின. ஒருமணிநேர வெறியாட்டத்திற்குப் பின்பு இராணுவத்தினர் நகரத்தை விட்டு வெளியேறியதும் இயக்கங்கள் நகருக்குள் நுழைந்தன. தெருவில் காயப்பட்டுக் கிடந்தவர்களையும் தெருவிலும் கடைகளுக்குள்ளும் பிணங்களாகக் கிடந்தவர்களையும் இயக்கப் பொடியன்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள். காயப்பட்டவர்களை எடுத்துச் செல்வதற்காக வீதியில் நின்ற வாகனங்கள் இயக்கங்களால் எடுத்துக்கொள்ளப்பட்டன அல்லது கடத்தப்பட்டன. நாவற்குழி இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் நடைபவனியாக புறப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி கிடைத்தபோது கொஞ்ச இயக்கப் பொடியள் துவக்குகளோடு சைக்கிள்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் நாவற்குழியை நோக்கிப் பறந்தார்கள். பெரியாஸ்பத்திரியில் காயப்பட்டவர்களைச் சேர்த்துவிட்டு இரத்தம் வழங்கவதற்காகக் கொஞ்சம் இயக்கப் பொடியள் காத்திருந்தார்கள். அவர்களுக்கு அவசரம். இரத்தம் கொடுத்துவிட்டு நாவற்குழிக்குப் போக அவர்கள் துடித்துக்கொண்டிருந்தார்கள். வெளியே வந்த பெரிய டொக்டர் அவர்களைத் துவக்குகளை வெளியே வைத்துவிட்டு இரத்தம் வழங்க உள்ளே வருமாறு கூப்பிட்டார். அவிழ்த்து வைத்த இருக்கைப் பட்டிகளை மறுபடியும் அணியுமாறு விமானத்தில் சொன்னார்கள். விமானம் மேலேயும் கீழேயும் உலாஞ்சியது. இவன் முன்னாலிருந்த திரையில் பார்த்தபோது விமானம் பல்கேரியாவுக்கு மேலாகப் பறந்துகொண்டிருந்தது. இவன் தலையை மெதுவாகத் திருப்பிப் பக்கத்திலிருந்தவனைக் கவனித்தான். அவன் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தான். அந்தக் கண்களும் மூக்கும் தடித்த உதடுகளும் மறக்க முடியாதவை. ஆனால் அவற்றை எங்கே பார்த்தான் என்பதுதான் இவனின் ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் துப்பாக்கியுடன்தான் பார்த்திருக்கிறான். 1985 ஜுலை பூட்டானில் நடந்துகொண்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஈழத் தமிழர்களுக்கான தீர்வில்லை எனக் கண்டித்து எல்லா இயக்கங்களுமாகச் சேர்ந்து ஒரு மாபெரும் பேரணியை மருதனாமடத்திலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தை நோக்கி நடத்தினார்கள். பாடசாலை மாணவர்கள் முதலிலும் பொதுமக்கள் அடுத்ததாகவும் வாகனங்கள் கடைசியாகவும் சென்ற அந்தப் பேரணியின் இரு புறங்களிலும் இயக்கப் பொடியன்கள் பேரணியை கட்டுப்பாடாக நடத்திச் சென்றுகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு இயக்கமும் பேரணி வேலைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டிருந்தன. பேரணியினரின் முழக்கங்கள் ஒரே குரலில் ஒலித்தன “பூட்டான் என்ன, பாட்டன் வீடா!” “வேண்டாம் வேண்டாம் பேச்சு, தமிழீழமே இறுதி மூச்சு!” “திம்பு நாடகத்தை, நம்பவே மாட்டோம்” “கொள்கைகளை விற்றிட மாட்டோம், தோழர்களின் கல்லறைகளை ஏமாற்ற மாட்டோம்!” பேரணி பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து அமர்ந்ததும் முதலில் அங்கே ‘மண்சுமந்த மேனியர்’ நாடகம் நடத்திக் காட்டப்பட்டது. இறுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எல்லா இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் பேசினார்கள். இயக்கங்களின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அங்கே பேசியதால் மேடையைச் சுற்றி அவர்களின் மெய்ப்பாதுகாவலர்கள் துப்பாக்கிகளுடன் நின்றிருந்தார்கள். விமானப் பணிப்பெண் தேனீருடன் வந்தபோது பக்கத்திலிருந்தவன் அவளிடம் தேனீர் கோப்பையை வாங்கி இவனிடம் கொடுத்தான். இவன் அவனைப் பார்த்து நன்றியுடன் புன்னகைத்தான். அவனும் பதிலுக்குப் பற்கள் தெரிய புன்னகைத்தான். நிச்சயமாக இந்தச் சிரிப்பை இவன் முன்பே எங்கோ பார்திருக்கிறான். அதுவும் துப்பாக்கியும் சிரிப்புமாகப் பார்த்திருக்கிறான். 1986 ஏப்ரல் காரைநகர் கடற்படைத் தளத்திலிருந்து இரவோடு இரவாக முன்னேறிய கடற்படையினர் ஊறாத்துறை அந்தோனியார் கல்லூரியில் முகாமிட்டனர். விடிந்ததும் விடியாததுமாக இயக்கம் அந்தோனியார் கல்லூரியைச் சுற்றி வளைத்தது. உள்ளே இருநூறு படையினரளவில் இருந்தனர். வெளியே வெறும் இருபது பொடியள் வளைத்து நின்றனர். அப்போது பொடியளிடம் பெரிதாக ஆயுதங்களும் கிடையாது. ஒரு M16, இரண்டு G3, ஆறு AK 47, நான்கு SMG துப்பாக்கிகள், ஒரு ரிப்பீட்டர், கொஞ்சம் கைக்குண்டுகள் மட்டுமே வளைத்து நின்ற பொடியளிடமிருந்தன. கடற்படையோ ஆட்டிலரி, ஆர்.பி.ஜி. லெவலில் இருந்தது. கல்லூரியைச் சுற்றி ஒரு ஹெலிகொப்டர் பறந்துகொண்டேயிருந்தது. ஏழு மணியளவில் பொடியள் தாக்குதலைத் தொடக்கினார்கள். அவர்கள் இருபது பேரும் பாடசாலையின் மதில்களுக்குப் பின்னாகவும் சடைத்திருந்த மரங்களின் மீதும் பதுங்கியிருந்தார்கள். முகாமிலிருந்தவர்களை அச்சுறுத்திப் பின்வாங்க வைப்பதே அவர்களின் நோக்கமாயிருந்தது. மரங்களிலிருந்தவர்கள் உள்ளே குறிபார்த்துச் சுட்டுக்கொண்டிருந்தார்கள். மதிலுக்குப் பின்னால் பதுங்கியிருந்த பொடியள் திடீர் திடீரென வெவ்வேறு இடங்களிலிருந்து எழுந்து நின்று சுட்டார்கள். கைக்குண்டுகளை வீசினார்கள். ஹெலிகொப்டர் வாணவேடிக்கையைத் தொடங்கியது. ஹெலிகொப்டரை நோக்கியும் சூடுகள் பறந்தன. உள்ளேயிருந்த கடற்படையினர் இடையறாமல் எல்லாப் பக்கமும் சுட்டுக்கொண்டிருந்தார்கள். ஒருமுறை ஒரு பொடியன் – அவனுக்குப் பதினேழு வயதிருக்கும் – மதிலுக்கு மேலாக எஸ்.எம்.ஜியுடன் எழுந்தபோது கடற்படையிடமிருந்து வந்த ‘லோ’ தாக்குதலால் அவனின் தலை சிதறியது. எட்டு மணியளவில் இரண்டு ஹெலிகொப்டர்கள் அந்தோனியார் கல்லூரிக்குச் சற்றுத் தூரத்தில் தரவைக்குள் சிறப்புக் கொமாண்டோ படையினரை இறக்கிவிட்டன. கொமாண்டோ அணியினர் அசுர வேகத்தில் அந்தோனியார் கல்லூரியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள். அது பொடியளுக்குச் சிக்கலாகிவிட்டது. அவர்களுக்கு முன்னே கடற்படையினர். பின்னே கொமாண்டோப் படையினர். இப்பொது பொடியள் முற்றுகைக்குள் சிக்கிவிட்டார்கள். பொடியளுக்குப் பின்வாங்கிச் செல்வதற்கு இப்போதும் வாய்ப்புகள் இருப்பினும் அவர்கள் அதை விரும்பியதாகத் தெரியவில்லை. அடிபட்டுச் சாவதென்று முடிவெடுத்ததுபோல அவர்கள் இரு அணியாகப் பிரிந்து இரண்டு பக்கமும் சுட்டுக்கொண்டிருந்தார்கள். முற்றுகை வளையம் இறுகிப் பொடியளால் இனித் தப்ப முடியாது என்ற நிலை வந்தபோது மெலிஞ்சிமுனைக்குள்ளால் வந்த இன்னொரு இயக்கம் கொமாண்டோப் படையினரைப் பின்னாலிருந்து தாங்கியது. அந்த இயக்கத்திடம் சொந்தத் தயாரிப்பான ‘2 இஞ்’ மோட்டர்கள் இருந்தன. மோட்டர் தாக்குதலில் கொமாண்டோப் படை கதிகலங்கிவிட்டது. கொமாண்டோப் படையினர் திசைமாறித் தம்பாட்டிக் கடற்கரைப் பக்கமாகப் பின்வாங்கத் தொடங்கினார்கள். இப்போது மற்ற இயக்கம் மோட்டர்களுடன் கடற்படையினர் முகாமிட்டிந்த கல்லூரியை நெருங்கியது. அந்த இயக்கம் வந்தாலே குறைந்தது அய்ம்பது பேருடன்தான் தாக்குதலுக்கு வருவார்கள். பயிற்சிபெற்ற போராளிகள் தான் தாக்குதலுக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் ஊர்ச் சனங்களையும் திரட்டிக்கொண்டு துப்பாக்கிகள் போதாவிட்டாலும் கத்திகள் பொல்லுகளோடு களத்துக்கு வருவார்கள். கிழக்குப் பக்கத்தை மட்டும் படையினர் பின்வாங்கிச் செல்வதற்காகத் திறந்துவிட்டு மற்றைய மூன்று பக்கங்களிலும் இரண்டு இயக்கங்களும் வளைத்து நின்றன. பத்து மணியளவில் மற்றைய இயக்கங்களும் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் களத்துக்கு வந்துவிட்டார்கள். ஒரு இயக்கத்திடம் ரவைகள் தீர்ந்துவிட்டால் மற்றைய இயக்கம் தன்னிடமுள்ள ரவைகளைக் கொடுத்தது. காயப்பட்ட பொடியளை ஒரே வாகனத்தில் எடுத்துச் சென்றார்கள். மாலை அய்ந்து மணியளவில் கடற்படையினர் பின்வாங்கத் தொடங்கினார்கள். இயக்கங்கள் படையினரை கடற்கரைவரை துரத்திச் சென்றன. அடுத்தநாள் ஒரு இயக்கம் " தோளோடு தோள்நின்ற சக தோழர்களுக்கு நன்றி" எனத் துண்டுப்பிரசுரம் கூட வெளியிட்டது. விமானம் தரையிறங்குவதற்குத் தயாராவதாக அறிவிக்கப்பட்டது. இவன் தனது மூளையின் எல்லாச் செல்களையும் வதைத்துப் பார்த்துவிட்டான். அருகிலிருப்பவனை எங்கே பார்த்தோம் என்பது இவனுக்குப் பிடிபடமாட்டேன் என்கிறது. கண்களை உருட்டி உதடுகளைத் திரும்பத் திரும்பப் பற்களால் கடித்துக்கொண்டிருந்தான். விமானத்தை விட்டு இறங்கியதுமே அவனின் கண்ணில் படாமல் தன்வழியே சென்றுவிட வேண்டும் என முடிவு செய்தான். அப்போது அருகிலிருந்தவன் இவனிடம் “கொழும்பில் எங்கே தங்கப் போகிறீர்கள்?” எனக் கேட்டான். திடுக்கிட்டுப்போன இவன் கொஞ்சம் யோசித்துவிட்டுக் கொழும்பில் தங்கப் போவதில்லை என்றும் காலையிலேயே யாழ்ப்பாணம் செல்வதற்கு விமானச் சீட்டு வாங்கியிருக்கிறேன் என்றும் பதில் சொன்னான். அவ்வளவும் பொய். இவன் கொழும்பில் இறங்கும்போது அக்கா விமான நிலையத்தில் காத்திருப்பார். எப்போது யாழ்ப்பாணம் போவது, எப்படிப் போவது என்பதை எல்லாம் அக்காவிடம் கலந்துபேசித்தான் முடிவு செய்ய வேண்டும். பக்கத்திலிருப்பவன் ஆச்சரியப்படுப்போவது போலக் கண்களை மலர்த்தி “நானும் காலை விமானத்தில்தான் யாழ்ப்பாணம் போகிறேன். நாங்கள் அநேகமாக நாளைக்கும் விமானத்தில் சந்திப்போம் என்று நினைக்கிறேன்” என்றான். அதைக் கேட்டதும் இவனும் ஆச்சரியப்படுவது போலவும் மகிழ்ச்சியடைவது போலவும் கண்களை மலர்த்தினான். ஆனால் இவனுக்கு உள்ளுக்கு எரிந்துகொண்டிருந்தது. அருகிலிருக்கும் தடியனின் கையில் மட்டும் இப்போது ஒரு துப்பாக்கி இருந்தால் அவனைத் தன்னால் உடனேயே அடையாளம் கண்டுபிடிக்க முடியும் என்று இவன் நினைத்துக்கொண்டான். அவனை எங்கே பார்த்தோமென இனியும் மண்டையைப் போட்டுடைப்பது வீண்வேலை, மறுபடியும் அவனின் கண்ணில்படாமல் இருப்பதே புத்தியான வேலை என இவன் முடிவெடுத்தான். விமானநிலையத்தில் இறங்கிச் செல்லும்போது ‘இமிக்கிரேசன் கௌண்டர்’ வரை அவனும் பின்னால் கூடவே வந்தான். இவன் புத்தியாக வரிசையில் அவனே முன்னால்விட்டுப் பின்னால் நின்றுகொண்டான். அவன் இமிக்கிரேசனில் சரளமாகச் சிங்களம் கதைப்பது இவனுக்குக் கேட்டது. இவனுக்குச் சிங்களத்தில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. அவன் சிங்களம் கதைப்பது இவனுக்கு ஏனோ கவலையைக் கொடுத்தது. இவன் ‘இமிக்கிரேசன்’ தாண்டியதும் சுற்றுமுற்றும் பார்த்தான். பிராங்போர்ட்டிலிருந்து கூடவே வந்த தடியனைக் காணவில்லை. இவன் வேகமாக நடந்து சென்று கழிப்பறைக்குள் புகுந்துகொண்டான். கழிப்பறையின் கதவை முடிக்கொண்டு சும்மாதான் உள்ளே நின்றிருந்தான். ‘எனக்கு மூளை மரத்துப்போய் ஞாபகம் மங்கியிருக்கலாம். ஆனால் கூட வந்த தடியனுக்கும் அப்படியிருக்க வாய்ப்பில்லை. என்னை அவன் அடையாளம் கண்டிருக்கலாம். என்னை அவன் முதற் பார்வையிலேயே அடையாளம் கண்டிருக்கக் கூடும். பேச்சின்போதுகூட அநேகமாக நான் சொல்லுபவற்றையே திருப்பிச் சொல்லும் டெக்னிக்கைத்தான் அவன் பாவித்தான். அவனின் மாறன் என்ற பெயர்கூடச் சாதாரணமான யாழ்ப்பாணப் பெயரில்லை. இந்த மாறன், பரிதி, சங்கிலி போன்ற பெயர்களை இயக்கப் பொடியள்தான் வைத்துக்கொள்வார்கள்’ என்று யோசித்துக்கொண்டிருந்தவனுக்குத் தன்னுடைய இயக்கப் பெயர் பீற்றர் என்பது ஞாபகத்திற்கு வந்தது. அதைத் தொட்டு ‘வாளெடுத்தவனுக்கு வாளாலேதான் சாவு’ என்ற பைபிள் வாசகமும் ஞாபகத்திற்கு வந்தது. ‘இருபது வருசமாகப் பாரிஸில் மூடிக்கொண்டிருந்ததுபோல அங்கேயே இருந்திருக்கலாம், அப்பா பாசத்தில் நாட்டுக்கு வந்து நாட்டில் கால் வைக்கும்போதே நிம்மதியின்மையோடும் பயத்தோடும் தவிக்க வேண்டியிருக்கிறதே’ என்று இவன் கக்கூசுக்குள் நின்று கலங்கிக்கொண்டிருந்தான். இவன் வாயில் அப்பாவைப் பற்றி ஒரு வசவு வார்த்தையும் வந்து போயிற்று. அதிக நேரம் கழிப்பறைக்குள் நின்றால் அது வேறு பிரச்சினையைக் கொண்டுவரலாம் என யோசித்துவிட்டுக் கதவைத் திறந்து தயக்கத்தோடு வெளியே வந்தான். கழிப்பறைக்கு வெளியே அந்தத் தடியன் மாறன் நின்றுகொண்டிருந்தான். ஒருவரையொருவர் கண்டுகொண்டதாகவே இருவரும் காட்டிக்கொள்ளவில்லை. இவன் நிதானமான ஒரு நடையைப் போட்டு பெட்டிகள் எடுக்கும் பகுதிக்குப் போனான். அந்தப் பகுதியில் இவனின் பெட்டி மட்டும் அநாதரவாகப் பெல்டில் சுற்றிக்கொண்டிருந்தது. இவன் பெட்டியை இழுத்துக்கொண்டு விறுவிறென வெளியே நடந்தான். வெளியே பார்வையாளர்களைச் சந்திக்கும் பகுதியில் ஒரே கூட்டமாயிருந்தது. சிங்களத்திலும் தமிழிலும் பேரிரைச்சலாயிருந்தது. அங்கே அக்காவைக் காணாமல் இவன் பதறிப்போனான். தனியாக நின்றவனைச் சிலர் அணுகி சிங்களத்தில் ஏதோ கேட்டனர். இவன் ஒரு வலிந்த புன்னகையுடன் அவர்களைக் கடந்து சென்றான். அங்கே அந்தத் தடியன் மாறன் இருக்கிறானா என இவனின் கண்கள் தேடிக்கொண்டிருந்தன. காவலுக்குத் துப்பாக்கியும் கையுமாக நின்றிருந்த ஒரு பொலிஸ்காரனின் அருகில் போய் இவன் நின்றுகொண்டான். அது இவனுக்கு ஏனோ சற்று அமைதியையும் பாதுகாப்பு உணர்வையும் கொடுத்தது. அக்காவும் அத்தானும் ஒருவாறு இவனைக் கண்டுபிடித்தபோது இவன் அவர்களில் எரிந்து விழுந்தான். அத்தான் வாகனம் தயாராக இருக்கிறது என்று சொன்னார். இவன் உற்சாகமில்லாமல் வாகனத்தை நோக்கி நடந்தான். அந்தப் பொலிஸ்காரனை விட்டுப்போவது இவனுக்குக் கவலையைக் கொடுத்தது. இவனை வைத்துக் கதை எழுதுவது ஆய்க்கினை பிடித்த வேலை. இவன் எப்போது என்ன நினைப்பான், எதற்குக் கவலைப்படுவான், எதற்கு மகிழ்ச்சியடைவான், எதற்குப் பதற்றமடைவான் என்று ஒரு இழவும் விளங்கவில்லை. இது போதாதென்று இவனது உள்ளுணர்வு வேறு கதையை ஒரு பக்கமாக இழுக்கிறது. இவனும் அக்காவும் அத்தானும் கொள்ளுப்பிட்டியிலுள்ள ஒரு விடுதியில் தங்கினார்கள். அத்தான் “யாழ்ப்பாணம் போவதற்கு எந்தத் தேதியில் விமானச்சீட்டுப் பதிவு செய்ய வேண்டும்?” என இவனிடம் கேட்டார். அதற்கு இவன் “கொஞ்ச நாட்கள் கொழும்பிலிருந்து கொழும்பைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் பின்பு யாழ்ப்பாணம் போகலாம்” என்றான். அதைக் கேட்டதும் அக்காவுக்கும் அத்தானுக்கும் மகிழ்ச்சியால் முகம் விரிந்துபோனது. அக்கா “கொழும்பில் பார்ப்பதற்கு நிறைய இடங்களிருக்கின்றன” என்றார். அந்தக் கிழவன் அங்கே சாகக் கிடக்கிறான், இவர்கள் கொழும்பு பார்க்க நிற்கிறார்கள் என இவன் மனதிற்குள் முறுகிக்கொண்டான். இப்போது யாழ்ப்பாணம் போவது புத்திசாலித்தனமான செயல் அல்ல என்று இவனது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டேயிருந்தது. கண்ணை மூடிக் கண்ணைத் திறந்தால் அந்தத் தடியன் மாறனின் கறுத்த முகமே முன்னால் வந்து இவனை அலைக்கழித்தது. அக்காவும் அத்தானும் கொழும்பு பார்க்கப் போக, தனக்கு உடம்பு சுகமில்லை என்று சொல்லவிட்டு இவன் இரண்டு நாட்களாக விடுதிக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். கொழும்பில் நடமாடக் கூட இவன் விரும்பவில்லை. கட்டிலில் குறுகிப் படுத்துக்கொண்டான். வடக்கிலும் இயக்கங்கள், தெற்கிலும் இயக்கங்கள் எந்தப் பக்கம் கால் நீட்டிப் படுப்பதென்றே இவனுக்குத் தெரியவில்லை. திரும்பிப் பிரான்ஸுக்கே போய்விடலாமா என்றுகூட யோசித்துப் பார்த்தான். எந்த நேரத்திலும் அப்பாவின் மரணச் செய்தி வரவிருக்கும் நிலையில் தான் திரும்பிப்போக நினைப்பது சரியான வேலையில்லை எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். அப்பா சாவதற்கு முன்பு அவரின் முகத்தை ஒருமுறை பார்த்துவிடுவது அவசியம் என்று இவனுக்கு மறுபடியும் தோன்றியது. முன்னொரு முறை பாரிஸில் வந்த அந்த உணர்வுதான் இவனை இந்த இடம் வரைக்கும் இழுத்து வந்திருக்கிறது. அந்த எண்ணம் நெஞ்சில் வந்ததும் தான் மாறனை விமானத்தில் சந்தித்தது வெகு சாதாரண நிகழ்வென்றும் அவனைத் தான் எங்கேயோ துப்பாக்கியும் கையுமாகப் பார்த்த நினைவு வெறும் பிரமையாகக் கூட இருக்குமென்றும் இவனுக்குப்பட்டது. இவன் பாரிஸிலிருந்து கிளம்பிய விமானத்தில் கொடுக்கப்பட்ட அரைப் போத்தல் வெள்ளை வைனையும் பிராங்போர்ட் விமான நியைத்தில் மூன்று கோப்பைகள் சிவப்பு வைனையும் கலந்து குடித்துவிட்டுத்தான் பயணம் செய்திருந்தான். வைன் இப்படியான அதீத கற்பனைகளைத் தூண்டிவிடக் கூடியது என்பது இவனுக்குத் தெரியும். பாரிஸில் ஒருமுறை இவன் வைனை முட்டக் குடித்துவிட்டுச் சுப்பர் மார்க்கட்டுக்கு வேலைக்குப் போய்க் குழந்தைகளுக்கான உணவு டப்பாக்கள் இருக்கும் பகுதியில் பூனைகளுக்கான உணவு டப்பாக்களை அடுக்கி வைத்துவிட்டான். இவ்வளவுக்கும் குழந்தைகளின் உணவு டப்பாக்களில் குழந்தைகளின் முகமும் பூனைகளுக்கான உணவு டப்பாவில் பூனைகளின் முகமும் அச்சிடப்பட்டிருக்கும். இவனுக்கு அன்று பூனைகள் குழந்தைகளைப் போலத் தோன்றின. அப்பாவைப் பார்க்கப் போவது உறுதியானவுடன் யாழ்ப்பாணம் செல்வதற்கு விமானப் பயணச் சீட்டுப் பதிவு செய்வதற்காக வெளியே புறப்பட்டான். தங்கும் விடுதிக்கு எதிரேதான் பயணச்சீட்டுப் பதிவு செய்யும் அலுவலகம் இருந்தது. இவன் விடுதியிலிருந்து வெளியே வந்து தெருவைக் கடந்து அந்தப் பக்கம் சென்றபோது அங்கே ஒரு தேனீர்க் கடையின் ஓரமாக அந்தத் தடியன் மாறன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். இவனின் கால்கள் அப்படியே நகராமல் நின்றன. ஒரு செக்கனில் சமாளித்துக்கொண்டு இவன் மாறன் நின்றிருந்த திசைக்கு எதிர்த் திசையால் மெதுவாக நடந்தான். தன்னை அவனும் கண்டுவிட்டான் என்பது இவனுக்குத் தெரியும். அடுத்தநாளே யாழ்ப்பாணம் போவதாகச் சொன்ன தடியன் இங்கே நின்று என்ன செய்கிறான்? இவன் பதற்றத்தோடு கடற்கரையை நோக்கி நடக்கத் தொடக்கியவன் திடீரெனத் திசையை மாற்றி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினான். இடையிடையே சப்பாத்தைச் சரிசெய்வது போல நின்று பின்னாலே பார்வையை எறிந்தான். அன்றிரவே அந்தத் தங்கும் விடுதியை விட்டு வேறு இடத்துக்கு மாறவேண்டும் என இவன் அத்தானிடம் சொன்னான். அத்தானுக்கு இவனின் போக்குப் பிடிபடுவதாயில்லை. அந்த விடுதியிலிருந்து மாறி கொட்டஞ்சேனையிலிருந்த ஒரு விடுதிக்கு வந்து தங்கினார்கள். அப்பாவின் இறுதிச் சடங்குகளுக்கு வேண்டிய துணிமணிகளை வாங்குவதில் அக்கா அக்கறைகாட்டினார். யாழ்ப்பாணத்தில் நல்ல துணிகள் கிடைக்காதாம். கிடைத்தாலும் அறாவிலையாம். கொள்ளி வைக்கும் போது கட்டுவதற்காக இவனுக்கு ஒரு வேட்டியும் பந்தம் பிடிக்கும் பேரக் குழந்தைகளுக்காகத் துண்டுகளும் வாங்கப்பட்டன. இவன் அறையைவிட்டு சாப்பிடுவதற்கு மட்டுமே வெளியே போனான். வெயில் உடம்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று அக்காவிடம் சொன்னான். புதிய விடுதிக்கு வந்த நான்காவது நாள் காலையில் சாப்பிடச் சென்றவன் நிம்மதியால் கழுவப்பட்ட முகத்துடன் உற்சாகமாகத் தங்கும் விடுதிக்குத் திரும்பி வந்தான். அத்தானிடம் யாழ்ப்பாணம் புறப்படுவதற்கு உடனே பயணச் சீட்டுகள் வாங்குமாறு சொன்னான். இவனது கிராமமும் உறவுகளும் பழைய நட்புகளும் இவனுக்குள் உயிர்த்தெழுந்தன. அப்பாவின் இறுதிச் சடங்கையும் அங்கே உடுத்த வேட்டியுடன் தான் சிதைக்குத் தீ மூட்டுவதையும் நினைத்தபோது இவனுக்குப் புல்லரித்தது. அந்த மரணச் செய்தி இன்று காலையில் இவனுக்குக் கிடைத்தது. அந்தச் செய்தி இவன் கையில் சுருட்டி வைத்திருந்த பத்திரிகையில் அந்தத் தடித்த, கறுத்த மனிதனின் புகைப்படத்துடன் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஜெர்மனியை வசிப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும் கொண்ட அந்த மனிதன் நேற்றுக் காலையில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் வைத்து மோட்டர் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டானாம். ஏனோ தெரியவில்லை இவன் மிகச் சிரத்தையுடன் அந்தப் பத்திரிகையைத் தனது பெட்டிக்குள் வைத்து மூடினான். இப்படியாக இந்தக் கதை சப்பென்று முடிந்தது. எம்.ஜி.ஆர். கொலைவழக்கு கேளுங்கள் பௌசர்! இதுதான் கதை. இந்தக் கதையை நீங்கள் நம்பலாம் அல்லது நம்பாதிருக்கலாம். இந்தக் கதையை நீங்கள் உங்கள் பத்திரிகையில் பிரசுரிப்பதும் பிரசுரிக்காமல் விடுவதும் உங்கள் பிரச்சினை. இந்தக் கதை நடந்து அதிக நாட்களாகவில்லை. நீங்கள் பெரியார் நினைவு விழாவுக்குப் பாரிஸுக்கு வந்துவிட்டுப் போனீர்களே, அதற்கு இரண்டு நாட்கள் கழித்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. அன்று கடும் குளிர்நாள். மைனஸ் ஏழு என்றளவில் குளிர் வதைத்தது. நான் வெளியே எங்கேயும் போவதில்லை என்ற முடிவுடன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மஹ்முட் தர்வீஷ் பற்றிய விவரணப் படம் ஒன்றை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது எனது சொந்தக்காரப் பொடியன் நியூட்டன் என்னைத் தொலைபேசியில் அழைத்து “மாமா நாங்கள் டொனாஸைப் பிடிச்சு வைச்சிருக்கிறம். நீங்கள் ஒருக்கா என்ர வீட்ட வரவேணும்” என்றான். எனக்கு டொனாஸ் என்றால் யாரென்று தெரியவில்லை. நான் “அது ஆர் டொனாஸ்?” என்று கேட்டேன். “அது மதிலேனம் அன்ரியின்ர கடைசி மகன் மாமா, அவன் ஊரில இயக்கத்திலயிருந்து கன சனத்தைக் கொலை செய்திருக்கிறான்” என்றான் நியூட்டன். எனக்கு இப்போது ஞாபகம் வந்தது. நான் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு உடைகளை அணிந்துகொண்டு வெளியே கிளம்பினேன். நியூட்டனின் வீடு பாரிஸின் புறநகரான மூலோனில் இருந்தது. அந்த வீட்டில் எங்கள் ஊர்ப் பொடியன்கள் ஆறுபேர் சேர்ந்திருக்கிறார்கள். எல்லோருக்குமே இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள்தானிருக்கும். நான் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றபோது நேரம் இரவு ஏழாகியிருந்தது. அங்கிருந்த பொடியன்கள் ஒரு விறுவிறுப்புடன் என்னை வரவேற்றார்கள். அந்த வீட்டின் ஹோலில் நடுவாகயிருந்த ஒரு நாற்காலியில் டொனாஸ் என்ற அந்த அழகிய இளைஞன் கண்களில் மிரட்சியுடன் உட்கார்ந்திருந்தான். அவன் அசாதாரணமான அழகன். நெற்றியிலும் பிடரியிலும் புரளும் அடர்த்தியான தலைமுடியும் உருளைக் கண்களும் ஓங்குதாங்கான உடலும் பவுண் நிறமுமாக அடிவாங்கிய ஒரு பந்தயக் குதிரைபோல அவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனின் உதடுகள் வீங்கிக் கிடந்தன. இடப்புறக் கண் அடியால் சிவந்திருந்தது. அவன் என்னைப் பாரத்ததும் எழுந்திருக்க முயன்றான். அவனின் வாயில் ஒரு பரிதாமான இளிப்பு வந்து போயிற்று. அவன் என்னிடம் “மாமா என்னைத் தெரியுதா?” என்று கேட்டுக் கேட்ட வாயை மூட முன்பே நியூட்டன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். டொனாஸ் என்னைப் பார்த்ததும் நான் தன்னைக் காப்பாற்றக்கூடும் என்று நம்பியிருக்கலாம். நியூட்டனின் அந்த அடியுடன் அவனின் நம்பிக்கை சிதறிப்போயிருக்கும். பதினைந்து வருடங்களிற்கு முன்பு நான் வெளிநாட்டுக்கு வரும்போது டொனாஸுக்கு அய்ந்து அல்லது ஆறு வயதிருக்கும். வறுமையாலும் வெயிலாலும் வாடி வதங்கிக் கருவாடாயிருந்த எங்கள் ஊர்ச் சிறுவர்களிடையே இவன் ஒரு தேவதையைப் போல திரிந்துகொண்டிருந்தான். எல்லோருக்கும் அடித்த வெயில்தான் இவனுக்கும் அடித்தது. எல்லோர் வீட்டுக் குழந்தைகளைப் போலவே இவனும் வீசிக் கந்தோரில் கொடுக்கப்படும் திறிபோசா மாவைச் சாப்பிட்டுத்தான் வளர்ந்தான். ஆனாலும் இவன் பனங்குருத்துப் போல இருப்பான். மதிலேனம் மாமி நல்ல அழகி. அவரிலிருந்து அந்தச் சிவப்பும் பொலிவும் இவனுக்கும் கிடைத்திருந்தது. நான் அவனைப் பார்க்கும்போதெல்லாம் அவனைக் கைகளில் தூக்கி முத்தமிடுவேன். நான் டொனாஸையே பார்த்துக்கொண்டிருந்தேன். மற்றைய பொடியள் மௌனமாக டொனாஸைச் சுற்றி நின்றிருந்தார்கள். திரைப்படங்களில் குற்றவாளியைப் பெரிய பொலிஸ் விசாரணை செய்யும்போது சின்னப் பொலிசுகள் கைதியைச் சூழ அடிப்பதற்குத் தயாராக நிற்பார்களே அப்படியிருந்தது அந்தக் காட்சி. நான் எழுந்து போய் டொனாஸின் முன்னால் நின்றேன். நானும் அவனுக்கு அடிக்கப் போவதாக அவன் நினைத்திருக்கலாம். அவனின் இமைகள் வெட்டித் தெறிக்க அவனது தேகம் ஒருமுறை நடுங்கி நின்றதை நான் பார்த்தேன். அவன் மெதுவாக “மாமா நான் விரும்பி இயக்கத்துக்குப் போகயில்ல, என்னை வைபோசாய்தான் பிடிச்சு வைச்சிருந்தவங்கள்” என்றான். அவன் அடுத்த வார்த்தை பேசினால் அது அழுகையாகத்தான் இருக்கும் போலயிருந்தது. அவனுக்குப் பின்னால் நின்றிருந்த பொடியன் ஓங்கி அவனின் பிடரியில் குத்தினான். சாதாரணமாக அந்த அடிக்குப் பொறி கலங்கி டொனாஸ் முகங்குப்புற விழுந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சிறிய அசைவுடன் டொனாஸ் அடித்தவனைத் திரும்பிப் பார்த்தான். அடித்தவனுக்கு அவமானமாயிருந்திருக்கும். அடித்தவனிடம் டொனாஸ் “மச்சான் உங்கள் எல்லாரையும் நம்பித்தானே நான் பிராஞ்சுக்கு வந்தனான்” என்றான். அல்லைப்பிட்டியிலோ மண்கும்பானிலோ ஒவ்வொரு அனர்த்தமும் கொலையும் கைதும் நடக்கும்போது இயக்கத்தின் பெயர் செய்திகளில் அடிபடும். இயக்கத்திலிருந்த டொனாஸின் பெயரையும் இணைத்தே எங்கள் ஊர்ச் சனங்களிடமிருந்து எங்களுக்குச் செய்திகள் வரும். டொனாஸ் இலங்கையிலிருந்து சென்ற கிழமைதான் பிரான்ஸுக்கு வந்திருக்கிறான். இன்று காலையில் ‘லாச்சப்பல்’ கடைத்தெருவில் நியூட்டன் இவனைக் கண்டிருக்கிறான். பார்த்தவுடனேயே “என்ன மச்சான்? எப்ப வந்தனி?” என்று பாசத்தைக் பொழிந்து தனது வீட்டுக்கு வருமாறு நியூட்டன் கேட்டிருக்கிறான். முதலில் டொனாஸ் நியூட்டனுடன் வர மறுத்திருக்கிறான். நியூட்டன் கொஞ்சம் தந்திரமாக அவனுக்குத் தங்குவதற்கு நல்ல இடமும் நல்ல வேலையும் ஒழுங்குசெய்து தருவதாக நாடகமாடியிருக்கிறான். அதை நம்பி டொனாஸ் நியூட்டனோடு கிளம்பி வந்திருக்கிறான். வரும் வழியிலேயே நியூட்டன் தொலைபேசியில் தன்னுடைய நண்பர்களுக்குத் தான் டொனாஸை அழைத்துவரும் செய்தியைச் சொல்லியிருக்கிறான். டொனாஸ் நியூட்டனின் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததுமே எல்லாப் பொடியன்களுமாகச் சேர்ந்து டொனாஸை அடித்திருக்கிறார்கள். அதற்குப் பின்பு அவனை என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியாததால் எனக்குப் போன் செய்திருக்கிறார்கள். நான் டொனாஸிடம் “ரத்தினத்தின்ர கடைக்குள்ள எட்டுப்பேரை நீதான் சுட்டனியாம்?” என்று கேட்டேன். “இல்லை மாமா, அது என்ன நடந்ததெண்டால் வேவியற்ற மகள் ஒரு நேவிக்காரனைக் கலியாணம் கட்டியிருக்கிறாள். அதுக்குப் பிறகு அல்லப்பிட்டியில வேவியும் அவற்ற மகளும் வச்சதுதான் சட்டம். அவையளும் ஒரு கடை வைச்சிருந்தவை. பிஸினஸ் பிரச்சினையிலதான் வேவியற்ற மகள் நேவிக்காரன்கள வைச்சு ரத்தினத்தின்ர கடைக்குள்ள சுடப் பண்ணினவள்” என்றான். “நேவியோட நீங்களும் போனது எண்டுதானே சொல்லுறாங்கள்?” “அது எனக்குத் தெரியாது மாமா, நான் அது நடக்கயிக்க நெடுந்தீவில இருந்தனான்.” “சில்வஸ்டர நீதானே சுட்டனி?” “இல்லை மாமா அவர் என்ர தொட்டையா. எனக்கு அவர்தான் தலை தொட்டவர். அவர நான் சுடுவனா? அவரைக் கொட்டிதான் சுட்டது” பொடியன் புலிக்குக் ’கொட்டி’யென்று சொல்கிறான். எல்லாக் கேள்விக்கும் டொனாஸ் இல்லை என்ற வார்த்தையுடனேயே பதிலைத் தொடங்கினான் பதிலை முடிக்கும்போது மாமன், மச்சான், சித்தப்பா என்று பதிலை முடித்தான். எங்கள் விசாரணைக்குழு சோர்ந்துவிட்டது. அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. நியூட்டன் போய்க் கதவைத் திறந்ததும் திறக்காததுமாகக் கதவைத் தள்ளிக்கொண்டு “எங்க அவன், எங்க அவன்” என்று கேட்டுக்கொண்டே திரவியம் உள்ளே ஓடிவந்தார். திரவியத்திற்கு அய்ம்பது வயதுக்கு மேலேயிருக்கும். உயர்ந்த ஒல்லியான பலவீனமான மனிதர். இரண்டு வருடங்களிற்கு முன்பு அவரின் பதினைந்து வயதான மகனைக் கடத்தி வைத்துக்கொண்டு அய்ந்து இலட்சம் ரூபாய்கள் பணயத் தொகையாகக் கேட்டிருக்கிறார்கள். அந்தத் தொகையைத் திரட்டுவதற்காக அந்த மனிதர் பாரிஸ் முழுவதும் ஓடித்திரிந்தார். நான்கூட ஆயிரம் ஈரோக்கள் கடனாகக் கொடுத்திருந்தேன். அவர் பணயத்தொகையை அனுப்ப முன்னமே அவரின் மகன் சடலமாக வேலணைக் கடற்கரையில் கிடந்தான். அந்த ஆயிரம் ஈரோக்களை என்னிடம் திருப்பித் தந்த நாளில் திரவியத்தின் முகத்தில் ஒட்டிக்கிடந்த துயரப் புன்னகை என்னைத் தலைகுனிய வைத்தது. திரவியத்தின் மகனைக் கடத்துவதற்கும் கடத்தினால் வெளிநாட்டிலிருந்து காசு வருமென்றும் டொனாஸ்தான் துப்புகள் கொடுத்ததாக அப்போதே திரவியம் என்னிடம் சொல்லியிருந்தார். ஓடிவந்த திரவியம் முதலில் டொனாஸின் முகத்தில் காறி உமிழ்ந்தார். பின்பு அவனின் தலைமுடியை பற்றிப்பிடித்து அவனின் முகத்தில் கைகளால் அறைந்தார். திரவியம் அவனின் சட்டையைப் பற்றி இழுத்தபோது அவன் நாற்காலியிலிருந்து முன்னே விழுந்தான். அவனை இழுத்து விழுத்துமளவிற்குத் திரவியம் பலசாலியல்ல. அவர் அடிப்பதற்கும் உதைப்பதற்கும் விழுத்துவதற்கும் தோதாகத் தன்னுடைய தேகத்தை டெனாஸ் அப்போது வளைத்துக் கொடுத்துக்கொண்டிருப்பதாகவே எனக்குப்பட்டது. நான் திரவியத்தைத் தடுக்க முயற்சித்தபோது திரவியம் அழத் தொடங்கினார். பின்பு தளர்நடையுடன் போய்க் கைகளைக் கழுவிவிட்டு வந்தார். பின் அமைதியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார். அதற்குப் பின்பு அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. அவர் அங்கே வரும்போதே என்ன செய்ய வேண்டும் என ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துக்கொண்டுவந்து அதன்படி நிகழ்ச்சிகளை நடத்தி முடித்ததும் திருப்பதியாக அமர்ந்திருப்பது போலத் தோன்றியது. டொனாஸ் தரையில் மல்லாக்கக் கிடந்தான். அவனது ஆடைகள் தும்பு தும்பாகக் கிழிந்திருந்தன. உண்மையில் அவனை அடிக்கிறேன் என்ற பெயரில் திரவியம் அவனது ஆடைகளைத்தான் கிழித்திருந்தார். டொனாஸ் மெதுவாக எழுந்து தலையைக் குனிந்தவாறே தரையில் சப்பணம் கட்டி அமர்ந்தான். நான் அவனிடம் “இப்ப நீ என்ன சொல்றாய்? உன்ர முகத்தைப் பார்த்தாலே ஆயிரம்பேரைக் கொலை செய்தவன்ர முகம் மாதிரி இருக்கு, நீ ஒருத்தரையும் கொலை செய்ய இல்லையோ?” என்று கேட்டேன். டொனாஸ் நிமிர்ந்து என்னைப் பார்த்தான். பின்பு கண்களைத் தாழ்த்திக்கொண்டு “மாமா நான் உண்மையச் சொல்லுறன், அந்தோனியார் சத்தியமா நான் எம்.ஜி.ஆரை மட்டும்தான் கொலை செய்தனான், வேற எதிலும் எனக்குச் சம்மந்தமில்லை” என்றான். அங்கிருந்த நாங்கள் எல்லோருமே அப்போது திடுக்கிட்டோம். ஏனென்றால் எம்.ஜி.ஆர் தற்கொலை செய்ததாகத்தான் எங்களுக்குச் செய்தி வந்திருந்தது. அவர் தலையில் தொப்பியுடனும் கண்களில் கறுப்புக் கண்ணாடியுடனும்தான் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாராம். 2 பழைய கதை சொல்கிறேன் கேளுங்கள் பௌசர்! எங்கள் ஊருக்கு அல்லைப்பிட்டி என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக எம்.ஜி.ஆர்.பட்டி என்று பெயர் வைத்திருக்கலாம். அப்போது எங்கள் கிராமம் எம்.ஜி.ஆர். ரசிகர்களாலும் பக்தர்களாலும் நிரம்பியிருந்தது. ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்: எனது அண்ணனுக்குப் பதினைந்து வயதிருக்கும்போது வீட்டை விட்டு ஓடிப்போனான். அப்போது எங்கள் கிராமத்துச் சிறுவர்களுக்கு இரண்டு பொழுதுபோக்குகள்தான் வழமையாயிருந்தன. ஒன்று, சூள் கொளுத்தி நண்டு பிடிக்கப்போவது. இரண்டாவது, வீட்டை விட்டு ஓடிப்போவது. சினிமா பார்ப்பது என்பது எங்களைப் பொறுத்தவரை பொழுதுபோக்கு என்ற வகைக்குள் அடங்காது. அது வாழ்க்கை முறைமை, கடமை, இலட்சியம். வீட்டை விட்டு ஓடிப்போவதில் மூன்று முக்கியமான படிகள் இருந்தன. முதலாவதாக வீட்டிலிருந்து கொஞ்சம் பணம் திருடவேண்டும். வீட்டில் எப்போது பணம் திருட வாய்ப்பிருக்கிறதோ அதுவே ஓடிப்போவதற்கான நாளாக அமையும். இரண்டாவது படியாக யாழப்பாணம் போய் இரவுவரைக்கும் தொடர்ச்சியாகப் படம் பார்க்க வேண்டும். மூன்றாவது படியாக இரவு ரயிலைப் பிடித்துக் கொழும்புக்குப் போக வேண்டும். கொழும்பில் நான்காம் குறுக்குத் தெருவிலோ, அய்ந்தாம் குறுக்குத் தெருவிலோ அரிசிக் கடைகளில் வேலை கிடைக்கும். வீட்டை விட்டு ஓடிப்போன எனது அண்ணன் இரண்டாவது படியை நிறைவேற்றுவதற்காகப் படம் பார்க்கப் போயிருக்கிறான். அன்று அவன் எம்.ஜி.ஆரின் ‘அன்னமிட்ட கை’ படம் பார்த்திருக்கிறான். படத்தைப் பாரத்ததும் அண்ணனுக்குள் தாய்ப்பாசம் பொங்கிவிட்டது. அவன் கொழும்புக்குப் போகாமல் அம்மாவைத் தேடித் திரும்பவும் வீட்டுக்கே வந்துவிட்டான். ஒரு ஊரென்றால் அங்கே எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி கணேசன் ரசிகர்களும் ஜெய்சங்கர் ரசிகர்களும் கலந்திருப்பதுதானே வழமை. ஆனால் அந்த வழக்கமெல்லாம் எங்கள் கிராமத்தில் கிடையாது. சிவாஜி கிவாஜி என்று யாராவது முணுமுணுத்தால் நாங்கள் முளையிலேயே அந்தக் குரலைக் கிள்ளியெறிவதுதான் வழக்கம். எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எவருக்கும் எங்கள் ஊரில் ரசிகர்கள் இருக்கக் கூடாது என்பது எங்கள் கொள்கை. ஏக பிரநிதித்துவக் கொள்கை. 1979ல் யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சியும் டெக்கும் அறிமுகமாகி கிராமங்கள் தோறும் திருவிழாவாக அது கொண்டாடப்பட்டபோது ‘அண்ணன் ஒரு கோயில்’ என்ற சிவாஜியின் படமே முதன் முதலாக எல்லா இடங்களிலும் காண்பிக்கப்பட்டது. அப்போது வேறு படப் பிரதிகள் புழக்கத்திலில்லை. நாங்கள் காத்திருந்து ‘மீனவ நண்பன்’ என்ற எம்.ஜி.ஆரின் படத்துடன்தான் மாதா கோயில் பெருநாளில் எங்கள் ஊரில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தினோம். அப்போது காலையில் எழுந்ததும் உத்தரியமாதா, அந்தோனியார் இவர்களுடன் சேர்த்து எம்.ஜி.ஆரையும் வணங்கும் பழக்கம் எனக்கிருந்தது. அப்போதெல்லாம் இந்தியாவில் படம் வெளியாகி நான்கு, அய்ந்து வருடங்களுக்குப் பிறகுதான் இலங்கையில் படம் வெளியாகும். அப்படியும் எம். ஜி. ஆரின் ‘சங்கே முழங்கு’, ‘பட்டிக்காட்டு பொன்னையா’ என்ற இருபடங்களும் கடைசிவரை இலங்கையில் வெளியாகவேயில்லை. படம் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன்னமே தியேட்டரில் படத்தின் சுவரொட்டியும் படத்தின் நான்கைந்து ஸ்டில்களும் ஒட்டப்படடிருக்கும்; அந்த ஸ்டில்களையும் சுவரொட்டியையும் வைத்தே நான் எனக்குள் அந்தப் படத்தைக் கற்பனை செய்துகொள்வேன். அப்போது படக்கதை சொல்வது என்றொரு அருமையான பழக்கமிருந்தது. வெறும் நான்கு ஸ்டில்களைப் பார்த்ததை வைத்துக்கொண்டே நான் என் பள்ளிக்கூடச் சிநேகிதர்களுக்கு முழுநீளப் படக்கதையும் சொல்வேன். படம் வெளியாகும்போது பார்த்தால் நான் சொன்ன கதை கிடடத்தட்டச் சரியாகவேயிருக்கும். ‘ராமன் தேடிய சீதை’ மட்டும்தான் கொஞ்சம் மிஸ்ஸாகி விட்டது. சுவரொட்டியிலும் ஸ்டில்களிலும் எஸ்.ஏ.அசோகன் சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருந்ததால் அசோகனுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும்போது எம்.ஜி.ஆரும் சக்கரநாற்காலியில் அமர்ந்துதான் சண்டையிடுவார் என நான் நினைத்திருந்தேன். இதற்கு ஒரு முன்னுதாரணமும் இருந்தது. ‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு காலில்லாத அசோகனுடன் எம்.ஜி.ஆரும் ஒருகாலைக் கட்டிக்கொண்டுதான் சண்டையிடுவார். ஆனால் இந்தப்படத்தில் சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருந்த அசோகன் கடைசிக் கட்டத்தில் சக்கர நாற்காலியிலிருந்து துள்ளியெழுந்து இருகால்களையும் ஊன்றி நின்று சண்டை போடுவார் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘ஒளிவிளக்கு’ இரண்டாவது தடவையாக ராஜா தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைக் கடந்தபோது நாங்கள் எங்களது கிராமத்தின் சார்பில் தியேட்டருக்கு முன்பு கஞ்சி காய்ச்சி ரசிகர்களுக்கு வழங்கினோம். ‘நாளைநமதே’ ராணி தியேட்டரில் தொடர்ந்து 140 காட்சிகள் ஹவுஸ்புல்லாகக் காண்பிக்கப்பட்டது. இது அகில இலங்கை வசூல் சாதனை. அப்போது எம்.ஜி.ஆரின் படங்களுக்குக் காட்சி நேரம் நிர்ணயிக்கப்படுவதில்லை. கொழும்பிலிருந்து ரயிலில் படப் பெட்டி வந்தவுடனேயே அதிகாலையிலேயே காட்சி தொடங்கிவிடும். இரவு முழுவதும் நாங்கள் தியேட்டருக்கு முன்புதான் படுத்துக்கிடப்போம். எம்.ஜி.ஆரின் புதிய பட விளம்பரங்களுக்குக் கீழே ‘கொட்டகை நிறைந்ததும் காட்சிகள் ஆரம்பமாகும், பாஸ்கள் சலுகைகள் ரத்து’ என்ற வரிகள் தவறாமல் இடம்பெறும். எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குப் புகழ்பெற்றிருந்த குருநகரில் கூட வாசகசாலைக்கு ‘அண்ணா சனசமூக நியைம் ’என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் எங்கள் ஊர் வாசகசாலைக்கு நாங்கள் ’மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ என்று கட்டன் ரைட்டாக பெயர் வைத்திருந்தோம். மட்டக்களப்பில் புயலால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணமாக அப்போது எம்.ஜி.ஆர் பத்து இலட்சம் ரூபாய்கள் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக மனோகரா தியேட்டரில் பத்து நாட்களுக்கு எம்.ஜி.ஆரின் பத்துப் படங்களை அரை ரிக்கட்டுக்குக் காண்பித்தார்கள். எம்.ஜி.ஆர். மட்டக்களப்புக்கு நிதி வழங்கியதையொட்டி நாங்களும் எங்கள் வாசகசாலையின் பெயரிலிருந்த ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை நீக்கிவிட்டு ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ எனப் புதிதாகப் பெயரிட்டோம். அந்த வாசகசாலைக்கும் நாங்கள் நடத்திவந்த எம்.ஜி.ஆர் கலாமன்றத்துக்கும் பரிமளகாந்தன் தான் தலைவர். எம்.ஜி.ஆர் கலாமன்றத்திலிருந்த நாங்கள் எல்லோரும் விடலைகளாகவேயிருந்தோம். பரிமளகாந்தன் மட்டுமே எங்களில் வயதில் மூத்தவர். பரிமளகாந்தனுக்கு அப்போதே முப்பது வயதுக்கு மேலிருக்கும். எங்கள் ஊர் கிராமசபைக் கட்டடத்தில் அவர் இரவு நேரக் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். எம்.ஜி.ஆர் போலவே பரிமளகாந்தனுக்கும் குழந்தைகள் கிடையாது. பரிமளகாந்தன் எம்.ஜி. ஆருக்கு ரசிகர் என்றால் பரிமளகாந்தனின் மனைவி பரிமளகாந்தனுக்கு ரசிகை. மாலைநேரங்களில் இரண்டுபேருமாகச் சோடிபோட்டுக்கொண்டு கையில் தேநீர் குடுவையுடன் கடற்கரைக்குப் போய் மணலில் உட்கார்ந்திருப்பார்கள். கடற்கரைக்குப் போய்க் காற்று வாங்கும் பழக்கமெல்லாம் எங்கள் ஊரில் அப்போதும் கிடையாது, இப்போதும் கிடையாது. இவர்கள் ஏன் கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று எங்கள் ஊர்ச் சனங்களுக்குக் கடைசிவரை விளங்கவேயில்லை. பரிமளகாந்தனின் வீட்டில் பக்கத்துக்குப் பக்கம் எம்.ஜி.ஆரின் படங்கள் மாட்டப்பட்டிருக்கும். எல்லாப் படங்களுக்கும் நடுவாக அறிஞர் அண்ணாவின் படமும் மாட்டப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர் படங்களின் பாடல் புத்தகங்கள் அழகாக பைன்ட் செய்யப்பட்டு அவரிடமிருந்தன. எங்கள் எம்.ஜி.ஆர். கலாமன்றத்தால் ‘காதலா கடமையா’, ‘விமலாவின் வாழ்வு’, ‘பெண்ணின் பெருமை’, ‘இரு துருவங்கள் இணைந்தபோது’ போன்ற நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. எல்லா நாடகங்களிற்கும் பரிமளகாந்தன்தான் கதை, வசனம், டைரக்சன். ‘பெண்ணின் பெருமை’ நாடகத்தில் நீதிதேவதை பாத்திரத்தில் பரிமளகாந்தன் தன் மனைவியை நடிக்க வைத்தார். எங்கள் கிராமத்திலெல்லாம் கல்யாணமான ஒரு பெண் மேடையில் ஏறி நடிப்பதைக் கற்பனை செய்யவே முடியாது. ஆனால் பரிமளகாந்தனின் மனைவி நடித்தார். நாடக விழா கேள்விப்பட்டிருப்பீர்கள். நாடகம் போடுவதையே விழாவாகக் கொண்டாடுவதை நீங்கள் எங்கள் ஊரில்தான் பார்க்க முடியும். பரிமளகாந்தன் நாடகம் எழுதும்போதே எங்கள் மன்றத்திலுள்ள எல்லோருக்கும் பாத்திரங்களை உருவாக்கித்தான் எழுதுவார். ஒத்திகை அவர் வீட்டில்தான் நடக்கும். அவரின் மனைவி கணவரின் முகத்தையே பூரிப்போடு பார்த்தவாறிருப்பார். அநேகமாக மாதா கோயில் பெருநாள் அல்லது அம்மன் கோயில் திருவிழா இரவில் நாடகம் மேடையேறும். நாடகத்தில் நடிப்பவர்களின் வீட்டில் அன்று பெருவிழாவே நடக்கும். “எங்கிட மகன் நாடகம் நடிக்கிறான், நீங்கள் கட்டாயம் வரவேணும்” என்று அயலூர்களிலுள்ள உறவினர்களுக்கெல்லாம் அழைப்புப் போகும். நாடகத்தின் ஒரு பாத்திரம் மேடையில் தோன்றும்போது அந்த நடிகனின் உறவினர்கள் பட்டாசு வெடிப்பார்கள். சரவெடி தூள் பறக்கும். மேடையில் மன்னாதி மன்னன் தோன்றும்போதும் வெடிதான், வில்லன் தோன்றும்போதும் வெடிதான், துறவி தோன்றும்போதும் வெடிதான். அநேகமாக நாடகத்தின் கடைசிக் காட்சியில் பொலிஸாக நடிக்கத்தான் எங்கள் பொடியன்கள் விருப்பப்படுவார்கள். பொலிஸ் யூனிபோர்மும் சப்பாத்துகளும் அணிந்து மிடுக்காக நடிப்பதில் அவர்களுக்கு ஒரு விருப்பம். ஒத்திகை தொடங்குவதற்கு முன்பே அவர்கள் சீருடைகளைத் தயார் செய்து விடுவார்கள். அநேகமாக எங்கள் ஊர் தபால்காரரின் மற்றும் நுளம்புக்கு மருந்தடிப்பவரின் காக்கிக் காற்சட்டைகளையும் மேற்சட்டைகளையுமே அவர்கள் இரவல் வாங்குவார்கள். ஒத்திகைக்கு வரும்போதே காக்கிச் சீருடை தரித்துக் கையில் பெற்றன் பொல்லுகளுடன் மிடுக்காக வருவார்கள். நாடகம் நடத்தும் நாள்வரை அவர்கள் அந்த உடைகளுடனேயே ஊருக்குள் சுற்றிக்கொண்டிருப்பார்கள். ஒருமுறை எனக்கு நீதிக்காகப் போராடி பொலிஸாரிடம் அடிவாங்கும் தியாகி பாத்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் அந்தப் பாத்திரத்தில் நடித்தது பிடிக்கவில்லை. என்னை அடிக்கும் பொலிஸ் பாத்திரத்தில் நடித்தவன் அய்ந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியிருந்தான். நான் அப்போது ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். என் அப்பா “அவன் அஞ்சாம் வகுப்புப் படிச்சவன் அடிக்கிறான், நீ படிச்ச முட்டாள் அடிவாங்கிறாய், நீயெல்லோ பொலிசுக்கு நடிச்சிருக்க வேணும், வேலணை சென்றல் ஸ்கூலில என்னதான் படிக்கிறியோ” என்று சலித்துக்கொண்டார். நாடகம் நடக்கும் நாளன்று அங்கே இணக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மேடையாலும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் திரைச்சீலைகளாலும் இறுதி நேரத்தில் கவரப்படும் மன்றத்தில் இல்லாத பொடியன்கள் தங்களுக்கும் அன்றிரவு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமெனப் பரிமளகாந்தனிடம் கேட்பதுண்டு. உடனேயே பரிமளகாந்தன் நாடகத்தில் அவர்களுக்கு ஒரு சிறிய பாத்திரமும் ஒன்றிரண்டு வசனங்களும் கொடுத்துக் கெட்டிக்காரத்தனமாக அவர்களையும் நாடகத்தில் நுழைத்துவிடுவார். அது அநேகமாக மேடையில் சிக்கலில்தான் முடியும். நாடகம் குழம்புகிறதே என நாங்கள் துடிப்போம். ஆனால் பரிமளகாந்தனுக்கு நாடகம் முக்கியமில்லை. அதில் நடிப்பவர்களின் மகிழ்ச்சியே அவருக்கு முக்கியம். அவருக்குக் கோபமே வராது. பரிமளகாந்தனுக்கு ஒருமுறை கோபம் வந்தபோது அது அடிதடியில்தான் முடிந்தது. அந்தச் சண்டை வாசகசாலையில்தான் நடந்தது. வாசகசாலைக்கு முன்னால் பரிமளகாந்தனுடன் நாங்கள் நின்றிருந்தபோது மத்தியாஸ் கொஞ்சம் வெறியில் அந்தப்பக்கம் வந்தான். மத்தியாஸ் கொஞ்சம் சண்டியன். அவனுக்கு என்ன கோபமோ எங்களைப் பார்த்துக் காறித் துப்பிவிட்டு வாசகசாலைக்குள் போனவன் அங்கேயிருந்த வாங்கில் நீட்டி நிமிர்ந்து படுத்தவிட்டான். பரிமளகாந்தன் உள்ளே போய் அவனின் தோளில் தட்டி “இஞ்ச படுக்கக் கூடாது, வெளிய போ!” என்றார். மத்தியாஸ் “ஏன் படுக்கக் கூடாது” என்றான். அவனின் கேள்வி நியாயமான கேள்விதான். எங்கள் வாசகசாலையில் ஒரு எம்.ஜி.ஆர். படத்தையும் ஒரு மேசையையும் இரண்டு வாங்குகளையும் தவிர வேறெதுவுமில்லை. முன்னொரு காலத்தில் ‘ஈழநாடு’ பத்திரிகை மட்டும் வாசகசாலையில் போடப்பட்டது. பின்பு பணமில்லாததால் அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. நாங்கள் எங்கள் கலாமன்றக் கூட்டங்களை நடத்தவும் ஒரு கௌரவத்திற்காகவும்தான் அந்த வாசகசாலையை நடத்திவந்தோம். வாசகசாலையின் கௌரவத்தை மிகக் கண்டிப்புடன் பரிமளகாந்தன் காப்பாற்றி வந்தார். எங்களைக் அங்கே கடதாசி விளையாடக்கூட அவர் அனுமதிப்பதில்லை. வாசகசாலையிலிருந்து வெளியே வந்து மத்தியாஸ் காலைத் தூக்கி வாசகசாலை வேலியை உதைத்தான். ஒரு உதையில் வேலி பாட்டில் பாறி விழுந்தது. பரிமளகாந்தன் அமைதியாகக் கைகளைக் கட்டியவாறே மத்தியாஸைப் பார்த்து அங்கிருந்து போய்விடும்படி சொன்னார். மத்தியாஸ் அங்கிருந்து போவதாயில்லை. அவன் பரிமளகாந்தனை ‘மலடன்’ என்று ஏசினான். பரிமளகாந்தன் அமைதியாகக் கையைக் கட்டிக்கொண்டு நிதானமாக மத்தியாசுக்கு அருகில் வந்து அவனுக்குப் புத்திமதி சொன்னார். “நீதிக்கு முன்பு அநீதி ஜெயிக்காது,”அநீதிக்கு முன்பு நீதி தோற்காது“,”என் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு" என்று அவர் சொன்னதெல்லாம் எம்.ஜி.ஆர். பட வசனங்களாகவேயிருந்தன. மத்தியாஸ் திடீரெனப் பரிமளகாந்தனின் கன்னத்தில் ஒரு அறைவிட்டான். நாங்கள் பொடியன்கள் கொதித்துப்போய் மத்தியாஸை நோக்கிப் பாய்ந்தோம். பரிமளகாந்தன் தனது வலது கையால் அடிபட்ட கன்னத்தைத் தடவிக் கொடுத்தவாறே இடது கையால் எங்களைத் தடுத்து நிறுத்திவிட்டு “இது எனக்கும் மத்தியாசுக்குமான பிரச்சினை நீங்கள் தலையிட வேண்டாம்” என்றார். இதுவும் எம்.ஜி.ஆர். பாணிதான். இதைக் கேட்டவுடன் மத்தியாஸ் துள்ளி இன்னொரு அறைவிட்டான். பரிமளகாந்தன் அடுத்த கன்னத்தைத் தடவிக் கொடுத்தார். அவரின் கண்களில் கோபம் கொப்பளித்தது. மூன்றாவது அடியையும் மத்தியாஸ் அடித்தபோது பரிமளகாந்தன் பொறிகலங்கி மல்லாக்க நிலத்தில் விழுந்தார். அதற்குமேல் எங்களால் பொறுக்க முடியவில்லை. எல்லாப் பொடியன்களும் ஒருசேரப் பாய்ந்து மத்தியாஸைக் கும்மிவிட்டோம். அடிப்பதை நாங்கள் நிறுத்தினால் மத்தியாஸ் எங்களைத் திரும்ப அடிப்பான் என்ற பயத்திலேயே நாங்கள் நிறுத்தாமல் அடித்தோம். கடைசியில் தன்னை விட்டுவிடுமாறு மத்தியாஸ் கெஞ்சியபோதுதான் நாங்கள் அடிப்பதை நிறுத்தினோம். எங்கள் அடியின் வேகத்தில் மத்தியாஸ் ஒட்டகப்புலத்தாரிடம் போய் புக்கை கட்டினான் என்று கேள்விப்படடோம். அவனின் மனைவி எங்கள் வாசிகசாலைக்கு வந்து நாங்களும் எங்கள் மன்றமும் தொலைய வேண்டுமென மண்ணள்ளி எறிந்து சாபமிட்டாள். அவளின் சாபம் பலிக்கத் தொடங்கியது. அப்போது யாழ்ப்பாணத்தில் ‘கிழக்கே போகும் ரயில்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் ஊர் குமர்ப்பெண் ஒருத்தி தனது சிநேகிதிகளுடன் சேர்ந்து அந்தப் படத்திற்குப் போவதற்கு அனுமதி கேட்டபோது அவளின் தாயார் அனுமதி மறுத்துவிட்டார். அந்தப் பெண் உடனே பொலிடோல் குடித்துச் செத்தப்போனாள். அந்தப் படம் ஓடிய தியேட்டரில் ‘இந்தப் படத்தைக் காண முடியாததால் நஞ்சு குடித்துக் காலமான அல்லைப்பிட்டி சூரியகலாவுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்’ என்று ஸ்லைட் போட்டுவிட்டே காட்சியைத் தொடங்கினார்கள். மித்திரன் பேப்பரில் தலைப்புச் செய்தியாக அவளின் சாவு எழுதப்பட்டது. இதற்குப் பிறகு ஊருக்குள் தொலைக்காட்சியில் படம் ஓடுவதையோ நாங்கள் கலாமன்றம் நடத்துவதையோ சனங்கள் கொஞ்சம் கடுப்புடன்தான் பாரத்தார்கள். அடிமேல் விழுந்த அடியாகப் பரிமளகாந்தனின் மனைவியும் திடீரென இறந்து போனார்.அம்மாள் வருத்தம் என்று படுத்தவர் செங்கமாரி மங்காமாரியாக்கி இறந்துபோனார். பரிமளகாந்தன் தனித்துப் போனார். அவர் தனியாக வீட்டிலிருந்து எம்.ஜி.ஆரின் போட்டோவோடு பேசிக்கொண்டிருப்பதைப் பொடியன்கள் பார்த்திருக்கிறார்கள். எங்கள் ஊரில் நடந்த முதலாவது இயக்கக் கூட்டம் எங்கள் வாசகசாலைக்குள்தான் நடந்தது. அப்போதெல்லாம் இயக்கக் கூட்டங்கள் திடீரெனத்தான் ஏற்பாடு செய்யப்படும். கூட்டத்துக்குப் பதினைந்து இருபதுபேர்கள்தான் வருவார்கள். அவ்வளவுபேரும் இளந் தரவளிகளாக இருப்பார்கள். அன்றைய கூட்டத்திற்கு இரண்டு இயக்க இளைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவரின் கையில் ஒரு பையிருந்தது. அந்தப் பைக்குள்தான் துவக்கு இருக்கும் என நாங்கள் இரகசியமாகப் பேசிக்கொண்டோம். ஆனால் அந்தப் பையை அவர் திறந்தபோது அதற்குள் பத்திரிகைகளும் தமிழீழப் படம் அச்சடிக்கப்பட்ட 1984ம் ஆண்டுக்கான கலண்டர்களுமேயிருந்தன. அன்று கூட்டத்தில் அந்த இளைஞர்கள் பேசியதில் முக்கால்வாசி எங்களுக்கு விளங்கவில்லை. ஆனால் அவர்கள் பேசி முடித்தபின்பு அவர்களில் எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை வந்தது. கூட்டத்திற்கு பரிமளகாந்தன் வரவில்லை. கூட்டம் முடிந்ததும் வந்திருந்த இரண்டு இயக்கப் பொடியன்களும் ‘பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். சனசமூக நிலையம்’ என்றிருக்கும் வாசகசாலையின் பெயரை மாற்றியமைப்பது நல்லது என்றார்கள். எங்களின் மதிப்புக்குரிய அந்த இளைஞர்களுக்கு என்ன பதிலைச் சொல்வது எனத் தெரியாமல் நாங்கள் தடுமாறினோம். நாங்கள் அவர்களைச் சற்றுக் காத்திருக்குமாறு கூறிவிட்டு பரிமளகாந்தனை அழைத்துவர ஆள் அனுப்பினோம். பரிமளகாந்தன் தூய வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் தோளில் சால்வையும் அணிந்து வரும்போதே அந்த இளைஞர்களை நோக்கிக் கைகளைத் தனது முகத்துக்கு நேராகக் கூப்பிக் கும்பிட்டவாறே வந்தார். அந்த இளைஞர்கள் தமிழ்ப்பற்று, விடுதலை, புரட்சி இவைகளைக் குறிக்கும் வகையில் வாசகசாலையின் பெயரை மாற்றலாம் என்றார்கள். அந்தப் பண்புகள் ஒன்றாகக் குவிந்திருக்கும் முன்றெழுத்து மந்திரம்தான் எம்.ஜி. ஆர். என்றார் பரிமளகாந்தன். அந்த இளைஞர்கள் கொஞ்சம் யோசித்துவிட்டு வாசகசாலையின் பெயரை ‘புதியபூமி சனசமூக நிலையம்’ என மாற்றலாம் என்றார்கள். அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம்தான் என்றார் பரிமளகாந்தன். கடைசிவரை வாசகசாலையின் பெயரை மாற்றப் பரிமளகாந்தன் மறுத்துவிட்டார். எங்களாலும் இயக்க இளைஞர்கள் தங்களது உடல்களில் எங்கே துப்பாக்கிகளை ஒளித்து வைத்திருந்தார்கள் என்பதைக் கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்தடுத்த வருடங்களில் எம்.ஜி.ஆர் கலாமன்றத்தின் பாதிப்பொடியன்கள் இயக்கத்துக்கென்றும் பாதிப்பொடியன்கள் வெளிநாடுகளுக்கென்றும் தெறிக்கத் தொடங்கினார்கள். வெளிநாடுகளுக்குப் போனவர்கள் சவூதி அரேபியா, அய்ரோப்பா, கனடா என்று பல நாடுகளுக்கும் போனார்கள். ஆனால் இயக்கத்துக்குப் போன நாங்கள் அப்படியே ‘செட்’டாக ஒரு இயக்கத்துக்குத்தான் போனோம். எங்கள் ஊரில் நாங்கள்தான் கடைசி எம்.ஜி.ஆர். ரசிகர்களாக இருந்தோம். இரண்டு வருடங்கள் கழித்து நான் ஊருக்குத் திரும்பிவந்தபோது எங்கள் ஊரில் டி.ராஜேந்தருக்கும் கராட்டி மணிக்கும்தான் அதிகமான ரசிகர்கள் இருந்தார்கள். அப்போது ’தங்கக் கோப்பை’, ‘அதிசயப் பிறவிகள்’ போன்ற படங்களில் நடித்துக் கராட்டி மணி பிரபலமாயிருந்தார். ஊருக்குள் தொலைக்காட்சியில் படம் போட்டு இந்த ரசிகர்கள் கூடியிருந்து பார்க்கும்போது நாங்கள் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து அவர்களைப் பிடித்துச் சென்றி பார்க்கக் கூட்டிச் சென்றோம். எங்களுக்கு ஒரு காரியமாகத் தீவுப்பகுதியின் நிலவியல் வரைபடம் தேவைப்பட்டது. அதை எங்கே எடுக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு பொடியன் அது கிராமசபை அலுவலகத்தில் இருக்கலாம் என்றான். கிராமசபைக்குப் புதிய ஓவிசியர் வந்திருந்தார். அவர் வெளியூரிலிருந்து எங்கள் ஊருக்கு வேலைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார். நான் கிராமசபை அலுவலக்திற்குப் போய் இன்ன இன்ன மாதிரி நான் இன்ன இயக்கம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு எங்களுக்கு அவசரமாகத் தீவுப்பகுதியின் நிலவியல் வரைபடம் தேவையாயிருக்கிறது என்றேன். ஓவிசியர் முதலில் முழித்தார். பின்பு மென்று விழுங்கி அது தன்னிடமில்லை என்றார். அவரின் முகத்திலிருந்தே அங்கே நிலவியல் படம் இருக்கிறது என்று நான் விளங்கிக்கொண்டேன். இரவு, நாங்கள் கிராமசபைக் கட்டடத்துக்குச் சென்றோம். கட்டடத்தின் வாசலில் இரவுக் காவலாளி பரிமளகாந்தன் தூங்கிக்கொண்டிருந்தார். அவரைத் தட்டியெழுப்பி ஒரு பொடியன் கட்டத்தின் சாவியைக் கேட்டான். பரிமளகாந்தன் கையைக் கட்டிக்கொண்டு உதட்டைக் கடித்துக்கொண்டு தலையைச் சாய்த்துப் பார்த்தார். அது அச்சொட்டான எம்.ஜி.ஆர். பார்வை. நான் சிரித்தக்கொண்டே கையை நீட்டினேன். பரிமளகாந்தன் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு “நீ கொள்ளையடிக்கவும் தொடங்கிற்றியா?” எனக் கேட்டார். நான் “அண்ணே இது மலைக்கள்ளன் படம்மாதிரி” என்றேன். அரைமணிநேரம் பேசிய பின்பு அவர் சாவியைத் தந்தார். நான் கதவைத் திறந்து உள்ளே போனேன். உள்ளே அலுமாரி பூட்டப்பட்டிருந்தது. அலுமாரியை உடைக்க வேண்டியதாயிருந்தது. அங்கே நிலவியல் வரைபடம் இருந்தது. 1987 நத்தாருக்கு முதல்நாள் எம்.ஜி.ஆர் இறந்துபோனார். எம்.ஜி.ஆர் இறந்த செய்தி வந்ததுமே பரிமளகாந்தன் மொட்டையடித்துக்கொண்டார். என்னைத் தெருவில் கண்டபோது என்னிடம் “அவர் இப்படித் திடீரெண்டு போவார் எண்டு நான் எதிர்பார்க்கயில்ல” என்றார். மொட்டைத் தலையை மறைப்பதற்காக பரிமளகாந்தன் தொப்பியணியத் தொடங்கினார். அது எம்.ஜி.ஆர் அணியும் அதேபாணியிலான வெள்ளைத் தொப்பி. சில நாட்கள் கழித்து அவர் கறுப்புக் கண்ணாடியும் அணியத் தொடங்கினார். இப்படித்தான் அவரை ஊருக்குள் பொடியன்கள் எம்.ஜி.ஆர் என்று அழைக்கத் தொடங்கினார்கள். எங்கள் ஊரில் மலேரியாக் காய்ச்சலும் பட்டப் பெயரும் டக்கெனப் பரவும். நான் பிரான்சுக்கு வந்ததற்குப் பிறகும் பரிமளகாந்தனைப் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டுக்கொண்டிருந்தேன். அவர் பென்ஷன் வாங்கி விட்டார் என்றும் இப்போதும் அதே அழுக்குத் தொப்பியுடனும் கறுப்புக் கண்ணாடியுடனும்தான் திரிகிறார் என்றும் கேள்விப்பட்டேன். ஒரு வருடத்திற்கு முன்பு பரிமளகாந்தன் தனது வீட்டில் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வந்தது. அந்தச் செய்தியைக் கதையோடு கதையாக எனக்குத் தொலைபேசியில் சொன்ன எனது அம்மா “எம்.ஜி.ஆர். தூக்குப் போட்டுச் செத்துப்போனான்” என்றுதான் சொன்னார். அவர் சாகும்போதும் தொப்பியும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருந்தாராம். 3 டொனாஸ் தலையைக் கவிழ்ந்தவாறே தரையில் அமர்ந்திருந்தான். நியூட்டன் ‘அடிக்கவோ’ என்று என்னிடம் சைகையால் கேட்டான். நான் அவனைப் பொறுத்திருக்குமாறு சொல்லிவிட்டு டொனாஸின் அருகில் சென்று அவனுக்குப் பக்கத்தில் தரையில் உட்கார்ந்துகொண்டேன். பின்பு அவனிடம் “அது தற்கொலையில்லையா?” என்று கேட்டேன். டொனாஸ் தலையை நிமிர்த்தாமலேயே “இல்லை. நான்தான் கழுத்தை நெரிச்சுக் கொலை செய்துபோட்டு எம்.ஜி. ஆரின்ர கழுத்தில கயிறுபோட்டு முகட்டில கட்டித் தூக்கினான்” என்றான். “ஏன் அப்பிடிச் செய்தனி?” என்று கேட்டேன். டொனாஸ் முகத்தை நிமிர்த்தாமலேயே “எம்.ஜி.ஆர். கொட்டிக்கு ஆதரவு” என்றான் “என்ன கதை சொல்லுறாய், தீவுப் பகுதி முழுக்க உங்கிட கட்டுப்பாடு அங்க எங்க புலி வந்தது?” என்று நான் கேட்டேன். டொனாஸ் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தான். அவனின் உருண்டைக் கண்கள் விரிந்திருந்தன. அவன் ஒரு இரகசியத்தை வெளியிடும் தோரணையில் குரலைத் தாழ்த்தி “உங்களுக்குத் தெரியாது மாமா, எம்.ஜி.ஆர். கோடி கோடியாய் கொட்டிக்குக் காசு குடுத்தவர்” என்றான். நம்ப முடிகிறதா பௌஸர்? அந்தக் கொலைக்கு அவன் சொல்லும் காரணத்தை உங்களால் நம்ப முடிகிறதா? டொனாஸை நியூட்டனின் பொறுப்பிலேயே விட்டுவிட்டு நானும் திரவியமும் அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் வெளியே வந்தபோது என் பின்னாலேயே வந்த நியூட்டன் “மாமா அவனை என்ன செய்யிறது” என்று கேட்டான். “அவன் இரவுக்கு இஞ்சயே இருக்கட்டும் நான் விடியப் போன் செய்யிறன்” என்று சொல்லிவிட்டு வந்தேன். நான் காலையில் ஒன்பது மணிக்குப் போன் செய்தபோது நியூட்டனின் வீட்டில் யூட்டைத் தவிர மற்ற எல்லோரும் வேலைக்குப் போயிருந்தார்கள். யூட்டும் வேலைக்குப் போகும் அவசரத்திலிருந்தான். “டொனாஸ் எங்கே?” என்று கேட்டேன். “அவனைப் பார்க்கப் பாவமாயிருந்தது, அவனை விடியப்புறமே விட்டுட்டம்” என்றான் யூட். இது நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு நான் டொனாஸை லாச்சப்பல் தெருவில் கண்டேன். என்னைக் கண்டதும் டொனாஸ் ஓடிவந்து என் பக்கத்தில் நின்றான். “எப்படியிருக்கிறாய்?” என்று கேட்டேன் “நல்ல சுகம் மாமா” என்றவன் கொஞ்சம் நிறுத்தி, “அண்டைக்கு நீங்கள் போன பிறகும் யூட் மச்சான் எனக்கு அடிச்சவர்” என்றான். தலையசைத்து விட்டு நான் அங்கிருந்து நடக்க முயன்றபோது டொனாஸ் என்னை ‘மாமா’ என்று மெதுவாகக் கூப்பிட்டான். நான் நின்றேன். டொனாஸ் என் கண்களைப் பார்த்தவாறே “மாமா நான் இப்ப ரெண்டு மூண்டு எம்.ஜி.ஆரின்ர படம் பார்த்தனான். எம்.ஜி.ஆர். உண்மையிலேயே நல்ல ஆள்” என்றான். எனக்கு அப்போது ஏற்பட்ட உணர்வுக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. அந்தரம் என்பதுகூட எனது உணர்வை விளக்கப் போதுமான சொல்லல்ல. நான் “எம்.ஜி.ஆரும் புண்டையும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்தேன். ‘எதுவரை’ (ஏப்ரல்- மே) இதழில் வெளியான சிறுகதை குண்டு டயானா “இறந்துபோன குழந்தையை அந்தப் பாலைமரத்தடியில் விதைத்து வந்தேன் இரவெல்லாம் பாலைமரம் தீனமாய் அழுகிறது.” -தமிழ்நதி ஈவ் தானியல் என்ற அந்தப் பிரஞ்சு நீதிபதி செல்வி. டயானாவின் மரணச் சான்றிதழை வரிவரியாகப் படித்து முடித்துவிட்டுச் சான்றிதழின் தலையில் பொறித்திருந்த சிங்க இலச்சினையை விரல்களால் வருடிப் பார்த்தான். பின்பு அந்த மரணச் சான்றிதழைத் தூக்கிப் பிடித்து ஒரு ‘லேசர்’ பார்வை பார்த்தான். சான்றிதழோடு விளையாடிக்கொண்டிருக்கும் நீதிபதியின் முகத்தைச் சலனமேயில்லாமல் அகதி வழக்காளி தே. பிரதீபன் பார்த்துக்கொண்டிருந்தான். மரணச் சான்றிதழை ஓரமாக வைத்த நீதிபதி தனது கொழுத்த முஞ்சியை விரல்களால் தேய்த்துவிட்டவாறே தே. பிரதீபனிடம் கீழ்வரும் கேள்விகளைக் கேட்கலானான் : “டயானா மகேந்திரராஜாவிற்கு குண்டு விழுந்தபோது நீர் எங்கிருந்தீர்?” “குண்டு வீச்சு விமானங்களின் சத்தத்தைக் கேட்டதுமே தூக்கத்திலிருந்து நாங்கள் விழித்துக்கொண்டோம். பள்ளிக்கூடத்தின் மேலே குண்டுகள் விழுந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. வெடிச்சத்தம் கேட்டதும் முற்றத்தில் படுத்திருந்த நான் ஓடிப்போய் குடிசைக்குப் பின்னால் ஒரு பாலைமரத்தின் கீழே வெட்டப்பட்டிருந்த பதுங்கு குழிக்குள் இறங்கிவிட்டேன். குடிசைக்குள் தூங்கிக்கொண்டிருந்தவர்களும் ஒருவர் பின் ஒருவராகப் பதுங்கு குழிக்கு ஓடிவந்தார்கள். டயானா பதுங்கு குழிக்கு ஓடிவரும் வழியிலேயே அவள் மீது குண்டு விழுந்தது. அவளின் பிரேதம் கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. பதுங்கு குழிக்கும் குடிசைக்கும் நடுவில் குண்டு விழுந்த இடத்தில் ஏற்பட்ட அரைக்கிணறு ஆழமுள்ள குழிக்குள் டயானா உடுத்திருந்த உடைகள் தூசி போலச் சிதறிக் கிடந்தன.” இப்போது நீதிபதியின் கண்கள் சலனமேயில்லாமல் பிரதீபனைப் பார்த்தன. பின்பு நீதிபதியின் சன்னமான குரல் ஒளியைப் போல அந்த இடத்தில் பரவிற்று. “குண்டு வீச்சில் இறந்துபோன டயனா உமக்கு என்ன உறவு?” பிரதீபன் மொழிபெயர்ப்பாளரின் முகத்தைப் பார்த்தான். மொழிபெயர்ப்பாளர் கேள்வியைத் தமிழில் சொல்லத் தொடங்கும்போதே பிரதீபனின் முகம் கறுக்கத் தொடங்கியது. அவனின் பார்வை இருளைப் போல அந்த அந்த இடத்தை நிரப்பிற்று. அவனின் மார்பு ஏறி இறங்கி அவனிலிருந்து பிரிந்த பெருமூச்சு அந்த விசாரணை மன்றத்தில் அமர்ந்திருந்த ஒவ்வொருவருக்கும் கேட்டிருக்கக்கூடும். குரல் நடுங்கிக் கிடக்க பிரதீபன் நீதிபதிக்குப் பதில் சொன்னான்: “டயானா என்னுடைய மச்சாள், அல்லைப்பிட்டிப் படுகொலைகளுக்குப் பிறகு தீவிலிருந்து இடம்பெயர்ந்து வன்னிக்குப் போன நாங்கள் நல்லான்குளத்தில் அவளின் குடும்பத்துடனேயே தங்கியிருந்தோம்.” “அன்று எத்தனை குண்டுகள் வீசப்பட்டன?” "மூன்று குண்டுகள் வீசப்பட்டன. முதலாவது குண்டு கிராமத்தின் பாடசாலை மீதும் இரண்டாவது குண்டு அங்கிருந்து அரைக் கிலோமீற்றர் தூரத்திலிருந்த ஒரு குடியிருப்புப் பகுதியிலும் முன்றாவது குண்டு டயானா வீட்டின் மீதும் போடப்பட்டன. “நல்லான் குளம் என்று இங்கே குறிப்பிடப்படும் கிராமத்துக்கும் கிளிநொச்சி நகரத்துக்கும் இடையே எவ்வளவு தூரமிருக்கும்?” “அய்ந்து கிலோமீற்றர்கள் தூரமிருக்கும்.” நீதிபதி கேள்விகள் கேட்பதை நிறுத்தி, குனிந்து எழுதிவிட்டு நிமிர்ந்தபோது அகதி வழக்காளி தே. பிரதீபனின் வழக்கறிஞர் “பிரபு! 21. 05. 2007 அன்று அந்தக் கிராமத்தில் இலங்கை வான்படையினரால் குண்டுகள் வீசப்பட்ட தமிழ்ச் செய்திப் பத்திரிகைக் குறிப்பும் அதன் பிரஞ்சு மொழிபெயர்ப்பும் தங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன” என்றார். நீதிபதி தலையை அசைத்தவாறே அந்தப் பத்திரிகைக் குறிப்பையும் டயானாவின் மரணச் சான்றிதழையும் அருகருகே வைத்துப் பார்த்தான். மரணச் சான்றிதழின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த சிங்க இலச்சினையை அவனின் விரல்கள் வருடியவாறேயிருந்தன. முரட்டுக் காகிதத்தில் ஒரு ரூபா நாணயமளவுக்கு பொறிக்கப்பட்டிருந்த அந்த சிங்க இலச்சினையை விரல்களால் தடவிப் பார்க்கும்போது நீதிபதியின் விரல்கள் இலச்சினையில் உராய்வை அறியாமல் வழுக்கிப் போயின. போலிச் சான்றிதழ்களுக்கும் அசல் சான்றிதழ்களுக்குமுள்ள வேறுபாட்டை இலச்சினையை விரல்களால் வருடிப் பார்த்தே கண்டறியக்கூடிய அனுபவசாலியான நீதிபதி ஈவ் தானியல் அதுவொரு உண்மையான மரணச் சான்றிதழ் என்பதைக் கண்டுகொண்டான். தூரத்தில் அந்த ரீங்காரத்தைக் கேட்டதும் பிரசவ விடுதியின் கட்டில்களில் படுத்துக் கிடந்த பெண்கள் அனிச்சையில் புரண்டு விழுந்து கட்டில்களின் கீழே பதுங்கிக்கொண்டார்கள். அந்த ரீங்காரம் இரைச்சலாய் அவர்கள்மீது கவிந்தபோது அவர்கள் ஓலங்களை எழுப்பினார்கள். பிரசவ வலி பொறுக்காமல் அங்குமிங்கும் நடந்து திரிந்துகொண்டிருந்த இளம் பெண்ணொருத்தி அடி வயிற்றைக் கைகளால் ஏந்திப் பிடித்தவாறே ஓடிச்சென்று கழிப்பறைக்குள் ஒளிந்துகொண்டாள். தாயின் படுக்கையினருகே நின்றிருந்து சிறுமி துஷ்யந்தி துள்ளிப் பாய்ந்து கட்டிலில் ஏறித் தாயாரை மூடியிருந்த கொசுவலைக்குள் தானும் நுழைந்து தன் கண்களை மூடிக்கொண்டாள். 150 கிலோ எடையுள்ள குண்டுகளிலிருந்து அந்தக் கொசுவலை தன்னைக் காப்பாற்றும் என துஷ்யந்தி நம்பியிருக்க வேண்டும். தென்திசை முகில்களுக்குள் மறைந்து வந்த விமானங்களிரண்டும் ஒரு கணத்தில் முகில்களில் சறுக்கிக் குத்திட்டு இறங்கி அதே கணத்தில் கூவிக்கொண்டே மூளாய் பிரசவ ஆஸ்பத்திரியின் மீது நெருப்புக் குண்டுகளை வீசியபோது பேரோசையுடன் ஆஸ்பத்திரியின் அலுவலக அறையும் சமையற்கூடமும் சிதறிப்போயின. வெடியின் அதிர்வில் பிரசவ வார்ட்டின் ஓடுகள் காகிதங்களாய் பறக்க பிரசவ வார்ட் கந்தகப் புகையால் நிரம்பிற்று. அப்போது டயானா பிறந்து தொண்ணூறு நிமிடங்கள் மட்டுமே ஆகியிருந்தன. அம்மா இன்னும் பிரசவ மயக்கம் தெளியாமல் வெள்ளத்தில் கரைந்த மண் சிலையாகப் படுக்கையிலேயே கிடந்தார். தாதியொருத்தி தள்ளிச் செல்லக்கூடிய ஒரு தொட்டிலுக்குள் டயானாவையும் இன்னும் மூன்று சிசுக்களையும் தூக்கிக் கிடத்தித் தொட்டிலை இழுத்துக்கொண்டு ஆஸ்பத்திரியின் பின் ஒழுங்கைக்குச் சென்று மொட்டையாயிருந்த பூவரசம் மரத்தின் கீழே தொட்டிலை நிறுத்திவிட்டு ஆகாயத்தைப் பார்த்தபோது ரீங்காரத்துடன் சுற்றிக்கொண்டிருந்த விமானங்கள் இரண்டும் முகில்களில் ஏறிப்போயின. தாதியின் முகத்தில் ஒரு மாசில்லாச் சிரிப்புத் தொற்றியது. டயானாவும் தன்னாரவாரம் சிரித்தது. டயானாவுக்கு மூன்று வயதானபோது மழைக்கால இரவொன்றில் அவர்கள் ஊரிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. முழு யாழ்ப்பாணமும் கைதடிப் பாலத்தால் நடந்துகொண்டிருந்தது. டயானா சாக்குப் பை ஒன்றினால் முக்காடிடப்பட்டு அப்பாவின் தோளில் உட்கார்ந்திருந்தாள். அப்பாவுக்கு மகேந்திரராஜா என்று பெயர். அப்பாவை ‘மென்டல்’ மகேந்திரம் என்றுதான் ஊரில் கூப்பிட்டார்கள். அப்பா தனது குச்சிக் கால்களால் அடிமேல் அடிவைத்து நடந்துகொண்டிருந்தார். அம்மா தலையில் ஒரு மூட்டையும் கையிலொரு பையுமாக முன்னே நடந்தார். இருளைக் கிழித்துக்கொண்டு வானத்திலிருந்து வெளிச்சப் புள்ளிகள் விழலாயின. விமானத்திலிருந்து தேடுதல் விளக்குகள் சனங்களின் மீது போடப்பட்டன. சனங்கள் அந்த வெளிச்சத்தில் வன்னியை நோக்கி அங்குலம் அங்குலமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள். பாலத்தில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் நடந்தபோதோ, ஒரு முதியவரோ ஒரு கைக்குழந்தையோ இறந்தபோதோ அந்த அகதிகளின் வரிசை பாலத்தில் அசையாமல் நின்றது. முன்னாலிருந்தவர்களால் நகர முடியவில்லை. அப்பாவுக்குத் தனது ஒருகாலின் மீது மற்றைய காலை ஊன்றி நிற்கவேண்டியிருந்தது. அம்மா பார்த்தபோது அப்பாவின் தோளில் டயானா சிலையாக விறைத்துப்போயிருந்தாள். அப்பாவின் தலைமுடிகளைப் பற்றியிருந்த அவளின் கைகளிலிருந்து அப்பாவின் முடிகளை விடுவிக்க முடியவில்லை. குழந்தையைத் தோளிலிருந்து இறக்கவும் முடியவில்லை. டயானாவின் கண்கள் சொருகியிருந்தன. டயானாவோடு கீழே அப்பா உட்கார முயற்சித்தபோது பின்னாலே வந்த சனத்திரள் அப்பாவை எற்றி முன்னாலே தள்ளியது. அந்தப் பெருமழையின் துளியால் கூடப் பாலம் நனைவதாயில்லை. அப்பாவின் கண்ணீரை மழைதான் கழுவிவிட்டது. அந்த நிலைக்கு என்ன பெயர் என்று எவருக்கும் தெரியவில்லை. டயானா துறுதுறுவென ஓடிக்கொண்டிருப்பாள். ஒரு உரத்த சத்தத்தைக் கேட்கும்போதோ அல்லது அவளை யாராவது மிரட்டும்போதோ அவளுக்கு முதலில் காதுகள் அடைத்துக்கொள்ளும். பின்பு வாயைக் கிழித்து இரண்டு மூன்று கொட்டாவிகள் விடுவாள். அப்படியே உடல் மரத்துப்போய் சிலையாய் நின்றுவிடுவாள். உட்கார்ந்திருந்தால் உட்கார்ந்தபடியே சிலையாகிவிடுவாள். சாப்பிட்டுக்கொண்டிருந்தால் சோற்றுக் கோப்பைக்குள் கையை வைத்தவாறே அப்படியே மரத்திருப்பாள். அவளின் கண்கள் பாதி திறந்திருக்க கருமணிகள் மேலே சொருகியிருக்கும். சிலவேளைகளில் நின்றவாக்கிலேயே உடல் மடங்காமல் சரிந்து அவள் நிலத்தில் விழுவதுண்டு. மூன்று நிமிடங்களிலோ நான்கு நிமிடங்களிலோ அவள் கண்களை மலங்க மலங்கப் புரட்டிக்கொண்டே மறுபடியும் தன்னுணர்வுக்கு வருவாள். கழிந்த அந்த நிமிடங்களில் நடந்தது எதுவும் அவளுக்குத் தெரியாதிருக்கும். வற்றாப்பளை அம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்றிருந்த சனங்கள் மீது போர் விமானங்கள் சுற்றிச் சுற்றி வந்தபோது சனங்கள் கலைந்து ஓடினார்கள். அப்பா டயானாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஓட முயன்றபோது டயானா வாய் கிழிந்து கொட்டாவி விட்டாள். அப்பா அவளைத் தூக்கிக்கொண்டு கோயிலுக்குள் ஓடினார். குண்டுவீச்சு விமானம் கீழே பதிந்தபோது டயானா கண்கள் சொருகப் பொத்தென கோயிலுக்குள் விழுந்தாள். பின்பு சனங்கள் ஓடிவந்து பார்த்தபோது இடிபாடுகளுக்கிடையே கண்டெடுக்கப்பட்ட ஒரு வெள்ளிச் சிலையாக டயானா அசையாமல் கிடந்தாள். அவள் கண் திறந்ததும் கண்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு முதலில் வெட்கத்துடன்தான் சிரித்தாள். வெட்கத்துக்கும் அச்சத்துக்கும் இடையே கோடுகள் ஏதுமில்லை. அச்சம் வெட்கமாயும் வெட்கம் அச்சமாயும் கணத்திலேயே மாறுகின்றன. இப்போது டயானா அச்சப்படலானாள். அச்சம் அவளைத் தொடர்ந்துகொண்டிருந்தபோது அவளால் வெட்கத்தை உணர முடியாமற் போயிற்று. அச்சத்தால் நிரப்பப்பட்ட டயானாவின் உடல் ஊதிக்கொண்டே போயிற்று. பத்து வயதிலேயே அவள் பருவத்துக்கு வந்தாள். அவளது வெள்ளை வெளேரென்ற உடலில் கைகளும் தொடைகளும் கரணை கரணையாகப் பழுத்திருந்தன. கன்னக் கதுப்புகளும் தாடையும் வீங்கிக் கிடந்தன. இப்படித்தான் அவளுக்கு ‘குண்டச்சி’ என்ற பெயர் கிராமத்திலும் ‘குண்டு’ டயானா என்ற பெயர் பள்ளிக்கூடத்திலும் வாய்த்தது. கிளிநொச்சி நகரத்திலிருந்த பிரஞ்சுத் தொண்டு நிறுவன மருத்துவர் டயானாவைப் பரிசோதித்துவிட்டு அவளின் விறைத்துப் போகும் நோயே அவளின் உடல் வீக்கத்துக்குக் காரணமென்றார். இப்போது வன்னியில் மட்டும் இருபது குழந்தைகளுக்கு இந்த விறைத்துப்போகும் நோயிருப்பதாக மருத்துவர் அம்மாவிடம் சொன்னார். அப்பாவிடம் மாத்திரைகளைக் காட்டியவாறே அம்மா இந்தச் செய்தியைச் சொன்னபோது அப்பா படாரென்று “வன்னியில் இருபது குண்டன்களும் குண்டச்சிகளும் இருக்கிறார்கள்” என்றார். அம்மா பாவமாய்ச் சிரித்தார். டயானா பாடசாலையிலிருந்து திரும்பி வரும்போது மெயின் ரோட்டின் ஓரமாய் நின்றிருந்த பாலைமரத்தில் ஒரு மனிதனைக் கைகால்களைப் பிணைத்து இயக்கம் கட்டி வைத்திருந்தது. அந்த மனிதன் இராணுவத்தின் உளவாளியாம். அவனுக்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட குண்டொன்றை இயக்கம் அவனிடம் கண்டுபிடித்தாம். அந்தக் குண்டு அந்த மனிதனின் மார்பில் கட்டப்பட்டிருந்தது. டயானா கூட்டத்திலிருந்து விலகி வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினாள். பருத்த உடலைத் தூக்கிக்கொண்டு முச்சிரைக்க அவள் ஓடிக்கொண்டிருந்தபோது அந்த மனிதனின் மார்பில் கட்டப்பட்டிருந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. அந்த வெடிச் சத்தம் டயானாவில் மோதியபோது டயானா வீதியில் நின்றவாறே கொட்டாவிகளை விட்டாள். அவள் வாயிலிருந்து காற்றுப் பிரிந்தது. அந்தத் தெருவில் ஒரு கால் முன்னேயும் மறுகால் பின்னேயுமாகக் கையில் இறுகப் பிடித்த புத்தகப் பையுடன் வெண்ணிறச் சீருடையில் டயானா சிலையாக நிற்கத் துவங்கினாள். டயானா எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும்போது ஒருகாலையில் இயக்கம் டயானாவின் பள்ளிக்கூடத்துக்கு வந்தது. மாணவிகளை முற்றத்தில் நிறுத்திவைத்து இயக்கம் போராட்டத்தின் அவசியம் குறித்துப் பேசலாயிற்று. பத்தாவது வகுப்புக்கு மேலே படிக்கும் மாணவிகள் அடுத்தடுத்த வாரவிடுமுறை தினங்களில் இயக்கத்தால் நடத்தப்படவிருக்கும் முதலுதவிப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள வேண்டுமென்று இயக்கம் கண்டிப்புடன் சொன்னது. பயிற்சி முகாமுக்கு வராதவர்களை இறுதிப் பரீட்சைகளை எழுதத் தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்றும் இயக்கம் சொல்லியது. மாணவிகள் பயிற்சிக்காக இயக்கத்திடம் தங்கள் பெயர்களைக் கொடுத்துக்கொண்டிருந்தபோது எட்டாம் வகுப்பு வரிசையில் நின்றிருந்த டயானாவின் மீது ஒரு இயக்கப் பொடியனின் பார்வை விழலாயிற்று. அவன் துப்பறியும் புலியாய் இருக்கக்கூடும். டயானாவின் குண்டுத் தோற்றம் அவளை வயதுக்கு மீறியவளாகத்தான் காட்டியது. அவள் பயிற்சிக்கு வருவதைத் தவிர்ப்பதற்காக எட்டாம் வகுப்பு வரிசைக்குள் மறைந்து நிற்கிறாள் என அந்தப் பொடியன் சந்தேகப்பட்டிருக்கலாம். அவன் தனது விரலை மடக்கி டயனாவைப் பார்த்து அவளை முன்னே வரும்படி அழைத்தபோது டயானா வரிசையிலிருந்து அசையவில்லை. அந்த இயக்கப் பொடியன் கண்களைச் சுருக்கி ஒரு புலனாய்வுப் பார்வையுடன் டயானாவை நெருங்கியபோது அவள் வரிசையிலேயே விறைத்திருந்தாள். அவன் மவுனமாகத் திரும்பியபோது டயானா பிடரி அடிபட மல்லாக்கப் பறிய நிலத்திலே விழுந்தாள். அடுத்த வாரவிடுமுறையில் இயக்கத்தால் பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள் பயிற்சி மைதானத்தில் காலையில் குழுமி நின்றபோது அந்த மாணவிகள் மீது விமானங்கள் துல்லியமாகக் குண்டுகளை வீசின. அறுபத்துநான்கு மாணவிகள் அந்த மைதானத்திலே அன்று தசையும் நிணமுமாகச் சிதறிக்கிடந்தார்கள். சகமாணவிகளின் கூட்டு ஓலம் ஆகாயத்தை நோக்கிக் கிளம்பிற்று. அறுபத்துநான்கு உடல்களும் ஒரே வரிசையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது அஞ்சலி செலுத்த டயானாவும் தன் பள்ளி மாணவிகளுடன் போயிருந்தாள். அன்று முழுவதும் அவள் அழுதுகொண்டேயிருந்தாள். துக்கமும் அச்சமும் தாள முடியாத எல்லையை மீறியபோது அவள் விறைத்துப்போக விருப்பப்பட்டாள். அஞ்சலி மண்டபத்தின் ஒரு மூலையில் குந்தியிருந்து கைகளை இறுகப் பொத்தியபடிக்கும் கண்களை மூடிக்கொண்டும் ஒரு மீன்போல வாயைத் திறந்து வாயினால் காற்றை வெளியேற்றியும் அவள் விறைத்துப்போக முயன்றாள். சற்று நாட்களில் இயக்கம் வீட்டுக்கொருவர், அது ஆணோ பெண்ணோ இயக்கத்தில் சேரவேண்டும் என்றது. அதிகாலை வேளையில் படுக்கைகளில் கிடந்த சிறுவர்களையும் சிறுமிகளையும் இயக்கக்காரர்கள் தட்டியெழுப்பித் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள். பள்ளிக்கூடங்களிலும் வீதிகளிலும் சிறுவர்கள் இயக்கத்தால் பிடித்துச் செல்லப்பட்டார்கள். பிள்ளைகளைப் பெற்றவர்கள் இயக்க அலுவலகங்களின் வாசல்களிலே தங்கள் பிள்ளைகளைத் தேடி அன்னந் தண்ணியில்லாமல் பழியாய்க் கிடக்கலானார்கள் எந்த நேரமும் அவர்கள் தன்னையும் பிடித்தச் செல்லக்கூடுமென அஞ்சி அஞ்சி டயானா செத்துக்கொண்டிருந்தாள். தனக்கு ஒரு தம்பியோ அண்ணனோயிருந்தால் இயக்கம் அவர்களைப் பிடித்துச் செல்லத் தான் தப்பித்துக்கொள்ளலாம் என்றுகூட அவள் நினைத்துக்கொண்டாள். இப்போது டயானாவுக்கு எவரைப் பற்றியும் அக்கறை கிடையாது. ஒரு விமானக் குண்டு வீச்சு நிகழும்போதோ, ஒரு ‘ஷெல்’ வீசப்படும்போதோ, இயக்கம் பிடிக்க வரும்போதோ எப்படித் தப்பித்துக்கொள்வது, முக்கியமாக அந்தத் தருணத்தில் எப்படி விறைத்து விழாமலிருந்து தப்பிப்பது என்று மட்டுமே அவள் சிந்தித்தாள். அவள் அம்மாவிடம் “என்னை அவர்கள் பிடித்துப் போவதால் அவர்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை, நான் விறைத்து விறைத்துத்தான் விழுவேன்” என்றாள். தாள்வாரத்திலிருந்து கம்பு சீவிக்கொண்டிருந்த அப்பா “வீட்டுக்கு ஒருவரைத்தானே கேட்கிறார்கள், அவர்கள் இங்கே வந்தால் அவர்களுடன் நான் போகிறேன்” என்றார். டயானாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது. அவர்களின் குடிசைக்குப் பக்கத்துக் குடிசையிலிருந்த பழனியின் மகனைப் பிடிப்பதற்காக இயக்கம் பழனியின் குடிசையை ஒரு காலையில் சுற்றிவளைத்தபோது பழனியின் மகன் ஓடிப்போய்க் குடிசையின் பின்னால் ஓங்கி வளர்ந்திருந்த பாலைமரத்தின் மீது ஒரு குரங்குபோல தொற்றியேறி உச்சிக்குப்போய் பதுங்கிக்கொண்டான். இயக்கம் மரத்தைச் சுற்றி நின்று அந்தச் சிறுவனைக் கீழே இறங்குமாறு மிரட்டிக்கொண்டிருந்தது. பழனி தோட்டக்காட்டிலிருந்து வந்து வன்னியில் குடியேறிய மனிதர். இப்போதும் அவரின் பேச்சு கலப்பில்லாத தோட்டக்காட்டுத் தமிழாகவேயிருந்தது. அவர் காசுக்குச் சல்லியென்றும் கடவுளுக்குப் பெருமாளென்றும் சொல்வதைக் கேட்டு டயானா விழுந்து விழுந்து சிரிப்பாள். டயானாவைக் ‘குண்டுப் பாப்பா’ என்றுதான் அவர் கூப்பிடுவார். ‘மென்டல்’ மகேந்திரத்தை ‘அண்ணாச்சி’ என்பார். அன்று பழனி இயக்கப் பொடியன்களிடம் சாமி சாமியென்று கெஞ்சிக் கூத்தாடினார். “நாங்கள் ஏழைப்பட்டவர்கள், சாமி என் மகனை விட்டுவிடுங்கள்” என்று பழனி இயக்கப் பொடியளிடம் மன்றாடியபோது ஒரு இயக்கப் பொடியன் “நாங்கள் ஏழைகளுக்கும் சேர்த்துத்தான் தமிழீழம் கேட்டுப் போராடுகிறோம்” என்று சொல்லிவிட்டு ஒரு கல்லையெடுத்து பாலைமரத்தில் தொற்றியிருந்த சிறுவனை நோக்கி வீசினான். மரத்தில் தொற்றியிருந்த சிறுவன் இன்னொரு பாய்ச்சலில் மரத்தின் இன்னொரு கிளைக்குத் தாவினான். பாலைமரத்தின் கிளைகளைக் காட்டிலும் மரத்தின் கீழே கிடந்த கற்கள் அதிகமாயிருந்தன. ஒரு கல் சிறுவனைத் தாக்கியபோது சிறுவன் “அய்யா” என்று கத்தினான். அந்த அலறலைக் கேட்ட பழனியின் கால்கள் குடிசைக்குள் பாய்ந்து திரும்பிய வேகத்தில் அவரின் கையிலே ஒரு கோடரியிருந்தது. இயக்கப் பொடியள் நிதானிப்பதற்கு முதலே ஒரு இயக்கப் பொடியனின் தோளிலே கோடரி வெட்டு விழுந்தது. உடனடியாகவே இயக்க வாகனத்தில் காயப்பட்டவன் எடுத்துச் செல்லப்பட்டான். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பழனியும் அவரின் மகனும் ஒருவரின் கையோடு மற்றவரின் கை கயிற்றால் பிணைக்கப்பட்டு, இயக்கத்தால் தெருவில் இழுத்துச் செல்லப்பட்டார்கள். பழனியின் குடிசைக்கு இயக்கம் வந்ததைதைக் கண்டவுடனேயே டயானா ஓடிப்போய் குசினிக்குள் இருந்த ‘பக்கீஸ்’ பெட்டிக்குள் ஒளிந்து கொண்டாள். சட்டி பானைகளும் அரிசி சாமான்களும் வைக்கப் பயன்படுத்தப்பட்ட அந்தப் பெட்டிக்குள் தனது பருத்த தேகத்துடன் அவள் கடும் சிரமப்பட்டுத்தான் புகுந்துகொண்டாள். இயக்கம் அங்கிருந்து போனதன் பின்பு அப்பா ஓடிவந்து ‘பக்கீஸ்’ பெட்டியைத் திறந்து பார்த்தார். முழங்கைகளையும் முழங்கால்களையும் கீழே ஊன்றி ஒரு மாடுபோல மண்டியிட்டு டயானா அந்தப் பெட்டிக்குள் சிலையாக விறைத்திருந்தாள். ஆண்டுத் தொடக்கத்தில் டயானா ஒன்பதாம் வகுப்புக்குச் செல்வதற்கு முன்பாக உள்ளாடைகள், செருப்பு, சோப்பு, சீப்பென்று சில பொருட்கள் அவளுக்குத் தேவைப்பட்டன. டயானாவின் உடல் வீங்கிக்கொண்டேயிருந்ததால் அந்தப் பஞ்சத்திலும் டயானாவுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு தடவை புதிய உடுப்புகள் தேவைப்பட்டன. டயானாவும் அம்மாவும் அவற்றை வாங்குவதற்காக கிளிநொச்சி நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். நல்லான்குளத்திலிருந்து நகரத்திற்கு வந்த ட்ரக்டரில் ஏறிவந்த அவர்கள் பாதிவழியில் இருக்கும்போதே குண்டுகள் வெடிக்கும் சத்தங்களைக் கேட்டார்கள். நகரத்தை நெருங்கும்போது நகரத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தவர்கள் நகரத்துக்குள் ‘கிபீர்’ விமானங்கள் குண்டு வீசியதால் சனங்கள் செத்துப் போய்விட்டதாகச் சொன்னார்கள். டயானா பதற்றத்தடன் அம்மாவிடம் “நாங்கள் திரும்பிப் போய்விடுவோம்” என்றாள். அம்மா வாகனச்சாரதியிடம் கேட்டபோது அவன் ஓங்காளித்துக் காறித் துப்பிவிட்டு “நாளைக்கும் குண்டு போடுவார்கள்” என்று சொல்லிவிட்டு வாகனத்தை நகரத்தின் மையப்பகுதியை நோக்கிச் செலுத்தினான். கடைவீதியில் கடைகள் திறந்துதானிருந்தன. வியாபாரமும் ஒன்றுபாதி நடந்துகொண்டுதானிருந்தது. கடைவீதியின் ஓரத்தில் இரத்தமும் சதையுமாக கிடந்த உடல்களைத் தூக்கி வாகனம் ஒன்றிற்குள் சனங்கள் அடுக்கிக்கொண்டிருப்பதை டயானா பார்த்தாள். அவள் ட்ரக்டருக்குள் இருந்து வாயைக் கிழித்துக் கொட்டவிகள் விட்டாள். அவள் காதுகள் அடைத்துக்கொண்டன. கைகள் இரண்டையும் மார்புக்குக் குறுக்கே இறுகக் கட்டியவாறே கால்கள் சப்பணமிட்டிருக்க டயானா ட்ரக்டருக்குள் விறைத்துப்போயிருந்தாள். டயானா அப்பாவிடம் விமானக் குண்டுவீச்சிலிருந்து தப்பிப்பதற்காக குடிசைக்குப் பின்னே ஒரு பதுங்கு குழி வெட்ட வேண்டுமென்று சொன்னாள். அப்பா சிரித்துக்கொண்டே “இந்தக் காட்டுக்குள் வந்தெல்லாம் குண்டு போடமாட்டார்கள்” என்றார். அப்பா சொல்வது போல நல்லான்குளத்தைக் கிராமம் என்று சொல்வதைவிடக் காடு என்று சொல்வதுதான் சரியாயிருக்கும். அந்தச் சிறுகுளத்தைச் சுற்றி எட்ட எட்டக் குடிசைகளிருந்தன. நல்லான்குளத்தில் எண்ணி மூன்று கல்வீடுகளேயிருந்தன. ஒரு கிராமத்திற்குரிய எந்தக் கட்டமைப்பும் அங்கே கிடையாது. பாடசாலைக்குப் போவதற்குக் கூட டயானா மூன்று கிலோமீற்றர்கள் நடந்துபோக வேண்டியிருந்தது. டயானா அம்மாவிடம் பதுங்கு குழி வெட்ட வேண்டும் என்று சொன்னபோது அம்மா “இதென்ன வெட்கக்கேடு” என்றார். நல்லான்குளத்தில் யாரும் அதுவரை பதுங்கு குழிகள் அமைத்துக்கொண்டதே கிடையாது. டயானாவோ கோரிக்கையைக் கைவிடுவதாகயில்லை. அவள் இருபத்து நான்கு மணிநேரமும் குண்டுகளை நினைத்து அச்சப்பட்டுக்கொண்டேயிருந்தாள். வள்ளிபுனத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்படடிந்த மாணவிகளின் உடலங்கள் அவள் கண்களுக்குள் உருண்டுகொண்டேயிருந்தன. அறுபத்துநான்கு டயானாக்கள் வரிசையாக நிலத்தில் பிணங்களாக நீட்டுக்கு அடுக்கிவைக்கப்பட்டிருப்பதை அவள் பார்த்தாள். கிளிநொச்சி கடைத்தெருவில் டயானா வயிறு வெடித்துக் குடல் சரியப் பிணமாய்க் கிடந்தாள். அவள் ஒரு இரவில் அப்பாவிடம் “விமானங்கள் குண்டுபோட வரும்போது நீங்களும் அம்மாவும் ஓடிவிடுவீர்கள், நான் விறைத்துப் போய் விழுந்துவிடுவேன்” என்றாள். அப்பா தலையை மேலும் கீழுமாக அசைத்துக்கொண்டே “நீ குண்டச்சி உன்னைத் தூக்கிக்கொண்டு ஓடவும் முடியாது” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். அவரின் சிரிப்பு விக்கல் மாதிரியிருந்தது. மறுநாள் காலையில் அப்பா ‘முழியன்’ செல்வத்தைக் கூட்டி வந்தார். செல்வத்தின் ஒருதோளில் மண்வெட்டியும் மறுதோளில் நீண்ட அலவாங்குமிருந்தன. அப்பா தனது தலையில் ஒரு கடகத்தைக் கவிழ்த்தபடி வந்தார். குடிசையின் பின்னால் ஓங்கி வளர்ந்திருந்த பாலைமரத்தின் கீழே அப்பாவும் செல்வமும் பதுஙகு குழி தோண்டத் தொடங்கினார்கள். டயானா அன்று பாடசாலைக்குப் போகவில்லை. அவள் உற்சாகமாகப் பதுங்கு குழி தோண்டுபவர்களுக்கு உதவிகள் செய்தாள். அப்பா தொடர்ச்சியாக வேலை செய்யுமளவிற்கு தேக ஆரோக்கியம் உள்ளவரல்ல. அவர் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு “இங்கே வந்து யார் குண்டு போடப் போகிறார்கள்” என்று சொல்வார். ஒருமுறை செல்வம் அப்பாவின் சலிப்புக்குப் பதிலாகத் தனது முழிக் கண்களால் சிரித்தக்கொண்டே “அண்ணே பிள்ள ஆசைப்படுகிறதல்லவா” என்று சொல்லிவிட்டு ஒரு இயந்திரம் போல வேலை செய்தான். அம்மா வந்து வாயில் கைவைத்துக்கொண்டே “இந்தக் கூத்தைப் பார்த்தால் அயலட்டம் சிரிக்கவல்லவா போகிறது” என்றார். முழியன் என்ற செல்வத்துக்கு இருபத்தைந்து அல்லது இருபத்தாறு வயதிருக்கும். மெலிந்த ஆனால் உரமான கறுவல். பஞ்சத்தில் அடிபட்ட அவனது முகத்தில் இரண்டு கண்களும் எந்த நேரத்திலும் கீழே தெறித்து விழப்போவதுபோல துருத்திக்கொண்டிருக்கும். வெற்றிலைக் காவியேறிய பெரிய பற்கள் உதடுகளுக்கு மேலாக நீண்டிருக்கும். அந்த உதடுகளில் இரத்தம் துளியாய்க் காய்ந்திருக்கும். பேசும் போது எப்போதும் தலையைச் சத்தாராகச் சாய்த்து வைத்திருப்பான். அவன் பேசும்போது அவனது வலதுகை விரல்கள் வெற்றிலைக்குச் சுண்ணாம்பு கிள்ளுவது போலக் குவிந்திருக்கும். அன்றிரவு வேலை முடிந்ததும் அப்பா போய் கள் வாங்கிவந்தார். குடிசையின் முற்றத்திலிருந்து அப்பாவும் செல்வமும் கள்ளுக் குடித்தார்கள். அப்பா எப்போதும் குடிப்பவரல்ல. எப்போதாவது குடிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் ஒரு இராணுவ முகாமைத் தாக்குவதற்குத் தயாரானவர் போல ஒரு சாகச மனோநிலையில் மிதப்பார். ஆனால் ஒரு சிரட்டை கள் குடித்ததுமே நிலத்தில் சுருண்டு விடுவார். அப்பா சுருண்டு விழச் செல்வம் அப்பாவைக் கைகளில் தூக்கிக் குடிசைக்குள் எடுத்துச்சென்று பாயில் கிடத்தினான். பின்பு அவன் தனியாக முற்றத்திலிருந்து கள் குடித்தான். அம்மா செல்வத்தோடு பேசிக்கொண்டிருந்தார். செல்வம் மிக நிதானமாகப் பேசினான். பழமொழிகளும் விடுகதைகளும் காத்தவராயன் கூத்துப் பாடல்களின் வரிகளும் நொடிக்கொரு தரம் அவன் நாவிலிருந்து வழுக்கிக்கொண்டிருந்தன. பேசும் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் செல்வம் ‘சரியோ’, ‘சரியோ’ என ராகத்துடன் இழுப்பதில் ஒரு கவர்ச்சியிருந்தது. பதுங்கு குழி வெட்டும் வேலைகள் மூன்று நாட்களாக நடந்தன. பாடசாலையில் இருக்கும் போதெல்லாம் டயானா பதுங்கு குழி பற்றியே யோசித்துக்கொண்டிருப்பாள். பாடசாலை விட்டதும் உருவாகிக் கொண்டிருக்கும் பதுங்கு குழியைப் பார்ப்பதற்காக அவள் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குப் போனாள். வழி தெருவெல்லாம் அவளுக்கு பதுங்கு குழி குறித்த சிந்தனையாகவேயிருக்கும். வீட்டுக்கு வந்ததும் உடை கூட மாற்றாமல் பதுங்கு குழியருகே போய் நின்றுகொள்வாள். செல்வம் வேலைகாரன். ’டானா’ப் பட ஆறடி ஆழத்துக்கு வெட்டிய குழிக்குள் இறங்குவதற்குத் திருத்தமான படிக்கட்டுகளை மரத் துண்டங்களைக்கொண்டு அமைத்திருந்தான். பதுங்கு குழியின் மேலாக மரக்குற்றிகளைக் காற்றுப் போகவும் இடுக்கின்றி நெருக்கமாக அடுக்கி அவற்றின் மேல் கற்களை அடுக்கிக் கற்களின் மேலாக மண்ணால் நிரவியிருந்தான். செல்வம் ஒரு கலைநயத்தோடு அந்தப் பதுங்கு குழியை வடிவமைத்திருந்தான். அந்தப் பதுங்கு குழி அவன் டயானாவுக்காகக் கட்டிய தாஜ்மஹால். செல்வத்திற்கு ஏற்கனவே கல்யாணமாகியிருந்தது. அவனின் மச்சாள் மீராவைத்தான் செல்வம் கட்டியிருந்தான். முன்று வயத்தில் ஒரு பெண் குழந்தையும் அவர்களுக்கிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு தீபாவளி நாளில் செல்வம் மீராவை அடித்து அவளின் தாய் வீட்டுக்குக் குழந்தையுடன் துரத்திவிட்டான். இந்த இரண்டு வருடங்களாகவே மீராவின் குடும்பத்திற்கும் செல்வத்திற்கும் தீராத பகையாயிருக்கிறது. சென்ற வருடம் செல்வத்தின் தாயார் இறந்தபோது இழவு வீட்டிற்கு வந்த மீராவைச் செல்வம் சனங்களுக்கு முன்னால் வைத்தே அறைந்தான். “குடும்பத்திற்கு ஒத்துவராத பெண்ணை வீட்டுக்கு மருமகளாய் கொண்டுவந்ததை நினைத்துப் பொருமி பொருமித்தான் கிழவி செத்தாள்” எனச் சொல்லிச் சொல்லி செல்வம் மீராவை உதைத்தான். மீராவோ அவ்வளவு அடிகளையும் தாங்கியவாறு பிரேதத்தின் கால்களில் முகத்தைப் புதைத்தவாறு “மாமி, மாமி” என்று அரற்றிக்கொண்டிருந்தாள். கடைசியில் செல்வம் கையில் உலக்கையைத் தூக்கவும் சனங்கள் மீராவை அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள். மீரா போகும்போது ஒரு கையில் குழந்தையைத் தூக்கிக்கொண்டும் மறுகையால் தனது வயிற்றில் அறைந்தவாறும் ஓலமிட்டுக்கொண்டே போனாள். அப்போது கூட அவள் வாயிலிருந்து ஒரு சாபம் வந்ததில்லை. அதற்குப் பின்பு அவள் செல்வத்தின் முற்றத்தை மிதிக்கவேயில்லை. இதற்குச் சிலநாட்கள் கழித்து மீராவின் தம்பிமார்கள் இருவரும் ஒரு இரவில் கணபதியரின் தோட்டத்தில் கிணறு வெட்டிவிட்டு வந்த செல்வத்தை வழியில் மடக்கி அடித்து நொருக்கிவிட்டார்கள். இரும்புக் கம்பியினாலும் சைக்கிள் செயினாலும் அடிகள் விழுந்தன. வயிற்றிலும் மார்பிலும் மூன்று குத்தூசிக் குத்துகளும் விழுந்தன. பதுங்கு குழி வெட்டும் வேலைகள் முடிந்த பின்பும் இப்போது செல்வம் டயானாவின் வீட்டுக்கு வந்து போகத் தொடங்கினான். வரும்போது கையில் மான் இறைச்சி, மர வற்றல் என்றொரு காரணத்துடன்தான் வருவான். அவன் வரும் மாலைநேரங்களில் டயானா பதுங்கு குழியின் மேலே அமர்ந்திருந்து படித்துக்கொண்டிருப்பாள் அல்லது மேலே சடைத்திருக்கும் பாலைமரத்தை மணிக்கணக்காக வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பாள். மானோ மரையோ கறியாகி, செல்வம் சாப்பிட்ட பின்பே அங்கிருந்து போவான். “அவன் பாவம் தனியாகச் சீவிக்கிறான், அவனுக்குச் சமைத்துப் போட யாருமில்லை” என்று அம்மாவுக்குப் பரிதாபம். இப்போது டயானா பாடசாலைக்குப் போகவும் வரவும் செல்வம் அவளுக்குப் பின்னாலேயே சைக்கிளை உருட்டிக்கொண்டு நடக்கத் தொடங்கினான். செல்வம் சிரித்துக்கொண்டு கதை சொன்னால் கேட்பவர்களுக்கும் கண்டிப்பாகச் சிரிப்பு வரும். செல்வம் அழுதுகொண்டு கதை சொன்னால் கேட்பவர்களுக்கும் கண்ணீர் வரும். அப்படியொரு வாலாயம் அவனுக்கு. தனது மனைவி மீராவைப் பற்றிச் செல்வம் அழுதழுது டயானாவுக்குக் கதை சொன்னான். தனது குழந்தையை அவள் தன்னிடமிருந்து பிரித்துக்கொண்டு போய்விட்டாள் என்றும் இயக்கத்திடம் புகார் சொல்லி இயக்கத்தைக் கொண்டு தன்னை அடித்துவிட்டாள் என்றும் அவன் கண்கலங்கப் பேசினான். மே மாதம் இருபதாம் தேதி இருள் பிரியாத அதிகாலையில் டயானா செல்வத்துடன் ஓடிப்போனாள். செல்வம் டயானாவின் வீட்டுக்குப் பின்னாலிருந்த பாலைமரத்தின் கீழ் கையில் புது கவுன் ஒன்றுடன் நின்றிருந்தான். அவன் அதை டயானாவிடம் கொடுத்து அவள் உடுத்திருந்த சட்டையைக் கழற்றி அங்கேயே வைத்தவிட்டுப் புதுக் கவுனை அணிந்துகொண்டு தன்னோடு வருமாறு சொன்னான். டயானாவின் வீட்டிலிருந்து ஒரு சட்டையைக் கூட டயானா தன்னோடு எடுத்து வரக்கூடாது என்பது செல்வத்தின் நிலைப்பாடு. டயானாவின் வீட்டிலும் எடுத்து வருவதற்கும் எதுவுமில்லை. அவர்கள் இருவரும் ஒருவரின் கையை ஒருவர் பற்றிக்கொண்டு செல்வத்தின் குடிசையை நோக்கி நடந்தார்கள். நடந்துகொண்டிருந்த டயானா திடீரென்று செவியைச் சாய்த்துக்கொண்டு வழியில் அப்படியே நின்றாள். அவளின் கால்கள் பதறத் தொடங்கின. தூரத்தில் விமானம் ஒன்றின் மெல்லிய இரைச்சலை அவள் கேட்டாள். அவள் செல்வத்தின் கையை உதறியவாறே “குண்டு போட வருகிறார்கள்” என்று மெதுவாகச் சொன்னாள். செல்வம் அவளின் கையை மறுபடியும் பிடித்தவாறே “இது இயக்கத்தின் விமானம், இரணைமடுவுக்குப் போகிறது” என்றான். டயானா செல்வத்தின் குடிசைக்கு வந்து சேர்ந்தபோது நிலம் வெளிக்கத் தொடங்கியது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் டயானாவைக் காணவில்லை என்று தேடும் சிரமங்கள் எதையும் செல்வத்தின் மனைவி மீரா விட்டு வைக்கவில்லை. நித்திரைப் பாயிலிருந்து அம்மாவையும் அப்பாவையும் மீராவின் குரல்தான் உலுக்கி எழுப்பிற்று. டயானா செல்வத்தின் வீட்டிலிருப்பதை அவள் அவர்களுக்கு வசைகளால் அறிவித்தாள். “என் புருசனை என்னிடமிருந்து பிரிக்கவா நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்தீர்கள்” என்று அவள் கண்களில் நீரும் ஆத்திரமும் கொப்பளிக்கக் கூச்சலிட்டாள். அம்மா இடிந்துபோய் அப்படியே நிலத்தில் உட்கார்ந்துவிட்டார். முற்றத்தில் நின்று ஏசிக்கொண்டிருந்த மீராவை அப்பா வாயைத் திறந்து பார்த்தவாறே சுற்றிச் சுற்றி வந்தார். மீரா “நீ பைத்தியத்துக்கு நடிக்காதே” என்று அப்பாவை பார்த்து நிலத்தில் காறியுமிழ்ந்தாள். மீரா அங்கிருந்து போன பின்பும் அப்பா முற்றத்திலேயே கால்களைத் தேய்த்துக்கொண்டு அமைதியாக நடந்துகொண்டிருந்தார். அம்மா எழுந்து அப்பாவுக்குப் பக்கத்தில் வந்து அவரின் முகத்தைப் பார்த்தவாறே “குண்டச்சி அந்த முழியனோடு ஓடிவிட்டாள்” என்றார். அப்பா கண்கள் ஒளிர அம்மாவைப் பார்த்து அமைதியாக “இனி இயக்கம் அவளைப் பிடித்துக்கொண்டு போகாது” என்றார். அம்மா பற்களை இறுகக் கடித்தார். மூடிய அவரின் வாய்க்குள் ‘பைத்தியகாரன்’ என அவரின் நாவு துடித்தது. டயானா செல்வத்தின் குடிசைக்குள் குந்தியிருந்து வரிச்சு மட்டைகளுக்கு இடையால் பார்த்தபோது அந்த மத்தியான வெயிலில் மீரா வெறுங் கால்களுடன் கையில் குழந்தையையும் தூக்கிக்கொண்டு குடிசையை நோக்கி நடந்து வருவதைப் பார்த்தாள். குடிசையின் வாசலில் குந்திக்கொண்டிருந்த செல்வமும் வரும் மீராவைக் கண்களை உருட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் கிட்டே வந்ததும் ஒரு மாடு மாதிரிப் பாய்ந்து செல்வம் மீராவை முட்டித் தள்ளினான். சுடுமணலில் தடுமாறி விழுந்த மீராவிடமிருந்து செல்வம் குழந்தையைப் பறித்தெடுத்துத் தன் கைகளில் வைத்துக்கொண்டான். குழந்தையை அவன் பறிப்பான் என்று மீரா எதிர்பார்த்திருக்க மாட்டாள். எனவே அவளுக்கு இப்போது புருசனை மீட்பதை விடக் குழந்தையை மீட்பதே முக்கியமாயிருந்தது. அவள் தவழ்ந்து வந்து செல்வத்தின் கால்களைப் பிடித்துக்கொண்டாள். அவள் குழந்தையைத் தருமாறு செல்வத்திடம் கெஞ்சியழுதாள். செல்வம் குழந்தையுடன் குடிசைக்குள் செல்ல முயற்சித்தான். மீராவோ அவனின் கால்களை விடுவதாயில்லை. செல்வம் குழந்தையை உயரே தூக்கிப் பிடித்தவாறே “டயானா, டயானா” என்று உரத்துக் கூப்பிட்டான். அப்போது டயானாவின் வாய் பிளந்து காற்று வெளியேறியது. அவளின் காதுகள் அடைத்துக்கொண்டன. செல்வம் என்ன நினைத்தனோ மீராவை எற்றித் தள்ளிவிட்டு அவன் குழந்தையுடன் நடந்து தெருவுக்கு வந்தான். மீரா அவனுக்குப் பின்னால் குழறியவாறே வந்தாள். தெருவில் நின்றிருந்த கொஞ்சப் பேர்கள் செல்வத்தைச் சமாதானப்படுத்தப் பார்த்தார்ர்கள். சனங்களைக் கண்டதும் மீராவுக்குக் கொஞ்சம் தைரியம் வந்திருக்க வேண்டும். அவள் அந்தச் சனங்களிடம் “அந்தக் குண்டச்சியைக் கொண்டுவந்து வீட்டிற்குள் வைத்துக்கொண்டு என்னை அடித்து விரட்டுகிறானே” என்று ஓலமிட்டாள். இதைக் கேட்டதும் செல்வம் தெருவில் கிடந்த ஒரு பெரிய தடியைத் தூக்கி மீராவின் தலையில் அடித்தான். எவ்வளவு அடி வாங்கியும் மீரா அங்கிருந்து போவதாயில்லை. கடைசியில் செல்வம் குழந்தையைக் கீழே இறக்கிவிட்ட பின்புதான் அவள் ஓய்ந்தாள். அவள் குழந்தையைக் கைகளில் வாரியெடுத்தக்கொண்டே தனது தாய் வீட்டைப் பார்த்து நடந்தாள். அப்போது கூட அவள் வாயிலிருந்து புலம்பலும் ஓலமும் வெளிப்பட்டனவே தவிர ஒரு சாபம் விழவில்லை. செல்வம் குடிசைக்குத் திரும்பி வந்தபோது குடிசைக்குள் டயானா வரிச்சு மட்டைகளைப் பற்றிப்பிடித்தவாறே குந்தியிருந்த நிலையிலேயே விறைத்திருந்தாள். அவள் விழித்ததும் செல்வம் அவளைப் பாயில் படுக்க வைத்துவிட்டு வெளியே போனான். திரும்பிவரும்போது அவனது கையில் ஒரு சாரயப் போத்தலும் ரொட்டியும் மாட்டுக்கறியும் இருந்தன. டயானாவைச் சாப்பிடச் சொல்லிவிட்டு செல்வம் முற்றத்தில் அமர்ந்து சாராயம் குடிக்கத் தொடங்கினான். டயானாவின் பெற்றோர்கள் டயானாவை மீட்பதற்கோ மீராவின் சகோதரர்கள் தன்னைத் தாக்குவதற்கோ வரக் கூடுமென அவன் எதிர்பார்த்திருக்கலாம். அவனின் கைகளின் அருகே நிலத்தில் ஓர் நீண்ட வாள் இருந்தது. லொறி வில்லுத் தகடு கொடுத்து அய்யம்பிள்ளை ஆசாரியிடம் செய்வித்த வாள் அது. போதை ஏற ஏற அவன் காறிக் காறித் துப்பிக்கொண்டான். நேரம் நள்ளிரவுக்கு மேலாகியும் அவன் கையில் வாளுடன் அய்யனார் சிலைபோல முற்றத்தில் ஆடாமல் அசையாமல் தன் எதிரிகளுக்காகக் காத்திருந்தான், அல்லது டயானாவுக்குக் காவலிருந்தான். ஆழ்ந்த தூக்கத்திலிருந்த டயானா அவளது கால்கள் முரட்டுத்தனமாக அழுத்தப்படுவதை உணர்ந்து திடுக்குற்றுக் கண்விழித்தபோது அவளை இருள் சூழ்ந்திருந்தது. அங்கே அழுகிய பழவாசனை வீசிற்று. அவள் எழுந்து தலைமாட்டிலிருந்த விளக்கைப் பற்ற வைத்தாள். அவள் படுத்திருந்த பாயின் தலைமாட்டில் ஒரு நீண்ட வாள் தரையில் குத்தென நிறுத்திவைக்கப்பட்டிந்தது. கால்மாட்டில் முழிக் கண்கள் இரத்தமாய்ச் சிவந்திருக்கச் செல்வம் நிர்வாணமாகக் குந்திக்கொண்டிருந்தான். டயானா படாரென விளக்கை ஊதி அணைத்துவிட்டுப் பாயில் குப்புறப் படுத்துக்கொண்டாள். டயானாவைச் செல்வத்தின் வலிய கைகள் புரட்டிப்போட்டன. அவள் மார்பில் அவனின் கை பதிந்தபோது டயானா திகிலுடன் அவனது கையை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அந்த அழுகிய பழவாசனை அவளது உடல் முழுவதும் பரவிற்று. டயானாவிற்கு வாயில் எச்சில் சுரந்தது. டயானாவின் இடுப்புத் தானாகவே மேலே உன்னிற்று. அவளின் உடற்பாரம் முழுதும் அவளின் கெண்டைக் கால்களில் தங்கிற்று. டயானாவின் கொழுத்த காலொன்றைத் தூக்கிச் செல்வம் தன் முதுகில் போட்டபோது டயானாவின் விழிகள் செருகின. அவள் பதற்றத்துடன் “நான் விறைத்துப் போகப் போகிறேன்” என்று முணுமுணுத்தாள். அவளின் வாயில் செல்வத்தின் வியர்வைத் துளிகள் தெறித்தன. அவள் வாயை அகலப் பிளந்துகொண்டே “கொட்டாவி வருகிறது நான் விறைக்கப் போகிறேன்” என்றாள். செல்வத்தின் வலிய கை அவளின் வாயை இறுக மூடிக் கொட்டாவியை அடக்கியது. அவனின் அடுத்த கை டயானாவின் முதுகுக்குக் கீழாக நீண்டு அவளின் ஆசனவாயை மூடியது. அவளின் மனது நிர்மலமாய்க் கிடந்து. அவளின் தலைமாட்டிலிருந்து செல்வம் வாளை உருவி எடுக்கும் ஓசை கேட்டது. அவன் டயானாவை ஒரு கையால் அணைத்தவாறே மறுகையில் வாளைப் பற்றிப் பாயில் கிடந்தான். டயானாவின் அடிவயிற்றில் சுருக்கென ஒரு வலி கிளம்பியது. டயானா கைகளால் தனது நிர்வாண வயிற்றைப் பொத்தியவாறு தனக்குள் ஒரு குழந்தை சனிப்பதாக நினைத்துக்கொண்டாள். அப்போது விமானங்களின் இரைச்சல் அந்த நல்லான்குளத்துக்குள் தாழக் கேட்டது. டயானா பாயிலிருந்து துள்ளி எழுந்திருந்து காதுகளைக் குவித்துக் கேட்டாள். இப்போது விமானங்கள் குடிசையின் கூரையைத் தட்டிச் செல்வதுபோல பேரிரைச்சல் எழுந்தது. டயானா எழுந்து நின்று கவுனை அணிந்துகொண்டு குடிசைக்கு வெளியே ஓடிவந்து பார்த்தாள். அவள் பிடரிக்குப் பின்னாலிருந்து கிளம்பிய பேரிரைச்சல் வடக்கு நோக்கிப் போய் மறுபடியும் திரும்பி நல்லான்குளத்திற்குள் பதிந்து வந்தது. டயானா பார்த்துக்கொண்டிருக்க அவள் கண் முன்னமே ஒரு விமானம் சிவப்பு விளக்கு முணுக் முணுக்கென எரிய பூமிக்குப் பாய்ந்து குத்திய வேகத்தில் மேலெழுந்தது. பெருத்த வெடியோசை அந்தக் கிராமத்தில் எழுந்தது. டயானா ஒரு செக்கன் கூட யோசிக்கவில்லை. அவள் அந்தக் கச இருட்டில் செல்வத்தின் குடிசை முற்றத்திலிருந்து ஓடத் தொடங்கினாள். காட்டுக்குள் புகுந்து தனது வீட்டின் பின்புறம் பாலைமரத்தின் கீழே அமைந்திருக்கும் பதுங்கு குழியை நோக்கி அவள் ஓடினாள். இப்போது நல்லான்குளத்தின் தெற்குப் பக்கத்தில் வெடியோசையும் புகையும் எழுந்தன. ஓடிக்கொண்டிருந்த டயானாவுக்குக் காது அடைக்கத் தொடங்கிற்று. அவள் விறைத்து விழப்போகிறாள் என்பது அவளுக்குத் தெரிந்தது. டயானாவால் கால்களை அசைக்க முடியவில்லை. கண்கள் செருகத் தொடங்கின. டயானா வழியிலிருந்த பாலைமரம் ஒன்றின் கீழே முழங்கால்களை மடக்கிக் குந்திக்கொண்டாள். விமானங்களின் இரைச்சல் வரவரப் பெரிதாகிக்கொண்டேயிருந்தது. பாலைமரத்தின் கீழே குந்தியிருந்த டயானா தான் விறைத்து விழக் கூடாது என்று நினைத்துக்கொண்டாள். எப்படியாவது சமாளித்துக்கொண்டு எழுந்து பதுங்கு குழிக்கு ஓடிவிட வேண்டும் என அவள் நினைத்தாள். அவளது வாய் கிழிந்து கொட்டாவி எழ டயானா சட்டென்று தனது இரு கைகளாலும் வாயை இறுக மூடிக் கொட்டாவியை அடக்கப் பார்த்தாள். பின்பு ஒரு கை வாயிலிருக்க அடுத்த கையை எடுத்து அந்த வெட்கம் கெட்ட டயானா அந்தக் கையால் தனது ஆசனவாயை மூடிக்கொண்டாள். அகதி வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த அகதி வழக்காளி தே. பிரதீபன் அவசரமாக ஒரு நண்பனைத் தொலைபேசியில் அழைத்தான். அந்த நண்பனிடம் விசாரணை பிரச்சினைகளின்றி முடிந்தது என்றும் கேட்ட கேள்விகளுக்குத் தான் சரியாகவும் தெளிவாகவும் பதிலளித்திருப்பதாகவும் சொன்ன பிரதீபன் ஒரு சிறிய விசயம்தான் நெருடலாக இருக்கிறது என்று நிறுத்தி, அந்த நண்பனிடம் “நல்லான்குளத்திற்கும் கிளிநொச்சி நகரத்திற்கும் எவ்வளவு தூரமிருக்கும்” என்று கேட்டான். அந்த நண்பன் வன்னியிலிருந்து வந்தவன். அவன் தெளிவாகக் கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டு “பதினைந்து கிலோ மீற்றர்களுக்குக் குறையாது” என்றான். பிரதீபனுக்கு நெஞ்சு கமாரிட்டது. அவன் விசாரணையில் நல்லான்குளத்திற்கும் கிளிநொச்சி நகரத்திற்கும் இடையேயான தூரம் அய்ந்து கிலோ மீற்றர்கள் என்றே சொல்லியிருந்தான். அவன் ஒரு கையால் தொலைபேசியைப் பிடித்தவாறே மறுகையால் தனது நெற்றியில் ஓங்கி அறைந்து “கெடுத்தாளே பாவி” என்று முணுமுணுத்தான். அவன் டயானாவின் மரணச் சான்றிதழை மரண சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் விற்பவர் ஒருவரிடமிருந்து முப்பது ஈரோக்களுக்கு வாங்கியிருந்தான். (’தீராநதி’யில் -ஜனவரி 2009 – வெளியாகியது) CROSS FIRE *01.01.2008ல் பிராங்போர்ட் நகரில் ‘இனங்களின் அய்க்கியத்திற்கான இலங்கையர் ஒன்றியம்’ நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு ‘இலங்கையில் மனித உரிமை மீறல்களும் அதன் பரிமாணங்களும்’ என்ற தலைப்பில் இலங்கை ஊடகச் சுதந்திரப் பாதுகாப்பு அமைப்பின் செயலாளரும் பத்திரிகையாளருமான உபுல் கீர்த்தி (39) ஆற்றிய உரை: தோழர்களே! இன்றைக்கு ஒரு கொலையோடு புத்தாண்டு நமக்கு விடிந்திருக்கிறது. முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரும் தற்போதைய கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினருமான தியாகராசா மகேஸ்வரன் இன்று காலையில் கொல்லப்பட்டுள்ளார். அமரர் மகேஸ்வரனை ஊடகவியலாளன் என்ற முறையில் நான் இருதடவைகள் சந்தித்திருக்கிறேன். அந்தச் சந்திப்புகளின் ஞாபகங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள என்னை அனுமதியுங்கள். நானொரு இடதுசாரிப் பத்திரிகையாளன் என்ற முறையில் எனக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றன. அந்தத் தளத்திலிருந்தே சில விடயங்களை நான் பேச விழைகிறேன். எனினும் தமிழ்ச் சகோதரர்களே நிறைந்திருக்கும் இந்த மண்டபத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த எனது உரையை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்வீர்களோ என்ற நியாயமான அச்சமும் என்னுள் தோன்றுவதை நான் உங்களிடம் மறைக்க விரும்பவில்லை. இங்கே பேசிய தோழர் ரகுநாதன் முஸ்லீம் மக்களை ஒடுக்கிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய இனத்தில் பிறந்ததற்குத் தான் வெட்கப்படுவதாகச் சொன்னார். அவரை அடியொற்றிச் சொன்னால் பெரும்பான்மைச் சிங்கள இனத்தில் பிறந்ததற்காக நான் குற்றவுணர்வு கொள்கிறேன். தியாகராசா மகேஸ்வரன் இந்து கலாச்சார அமைச்சராகயிருந்தபோது ஒரு பத்திரிகை நேர்காணலுக்காக முதற் தடவையாக நான் அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். மகேஸ்வரனுடைய அரசியலில் எனக்கு எப்போதும் கடும் விமர்சனங்கள் இருந்திருக்கின்றன. குறிப்பாக அவர் சார்ந்திருந்த அய்க்கிய தேசியக் கட்சியை நான் எப்போதும் கடுமையாக விமர்சித்தே வந்திருக்கிறேன். ஆனால் அந்த இனவாதக் கட்சிக்குள் ஒரு யாழ்ப்பாணத் தமிழரான மகேஸ்வரனால் எப்படி ஒத்தோட முடிகிறது என்ற கேள்வி என்னிடமிருந்ததில்லை. ஏனெனில் இலங்கையின் முன்னணி வர்த்தகரும் சொந்தமாகக் கப்பல்களை வைத்திருந்து யாழ்ப்பாணத்து மக்களுக்கு மண்ணெண்ணை விற்றே மில்லியனரானவருமான மகேஸ்வரனின் வியாபார நலன்களிற்கும் அவரின் அரசியலுக்குமான தொடர்புகளை எல்லோரைப் போலவே நானும் அறிவேன். ஆனால் என்னிடம் வேறொரு கேள்வியிருந்தது. இந்த வியாபார நலன்களைத் தாண்டியும் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்தவர், ஒரு தமிழர் என்ற முறையில் மகேஸ்வரனின் அரசியலுக்கு ஏன் இன்னொரு பக்கம் இருக்கக் கூடாது என்று நான் யோசித்தேன். அந்த நேர்காணல் முழுவதும் அவரின் மறுபக்கத்தை –அப்படியொன்றிருந்தால் – வெளிக்கொணரவே நான் முயற்சித்தேன். ஆனால் அமைச்சர் மகேஸ்வரனிடம் மூன்றாவது பக்கமொன்றிருந்தது. இலங்கையில் ‘முதலீட்டுத்துறை அமைச்சர்’ என்றொரு பதவியிருப்பதுபோல ‘முறையீட்டுத்துறை அமைச்சர்’ என்றொரு பதவி உருவாக்கப்பட்டால் அதற்கு மகேஸ்வரனை விடச் சிறப்பானவராக ஒருவரைத் தேடியும் கண்டுபிடிக்க முடியாது. முழு நேர்காணலிலும் அமைச்சர் என்னிடம் முறையிட்டுக் கொண்டேயிருந்தார். ஜனாதிபதி, அரசாங்கம், புலிகள், இந்தியா, ஈபிடிபி, மனோ கணேசன், யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழு எனச் சகலரைக் குறித்தும் அவர் அந்த நேர்காணலில் முறையிட்டார். எதிர்ப்புக் குரலுக்கும் முறையீட்டுக் குரலுக்குமுள்ள வித்தியாசத்தை நீங்கள் விளங்கிக்கொள்வீரகள் என்று நம்புகிறேன். அவருடைய குரல் உரிமை கோரிய குரலாயில்லாமல் கருணை கோரிய குரலாயிருந்தது. நேர்காணலில், அவரின் வியாபாரத்தின் திடீர் வளர்ச்சி குறித்து நான் கேட்டபோது அமைச்சர் ‘ஹித்த ஹொந்த அம்மாட்ட ஹம தாம படே’ என்றார். இந்தப் பிரபலமான சிங்களப் பழமொழிக்கு ‘நல்ல மனதுள்ள அம்மாவுக்கு வயிற்றில் எப்போதும் பிள்ளையிருக்கும்’ என்று பொருள். மிகச் சிக்கலான கேள்விகளை என்னிடமிருந்து மகேஸ்வரன் எதிர்கொண்டபோது – குறிப்பாக அவரின் வியாபாரத்திற்கும் அவரின் அமைச்சர் பதவிக்குமான தொடர்புகளைக் குறித்து நான் கேட்டபோது – அவர் உரத்த குரலில் என்னைக் குறித்துக் கடவுளிடம் முறையிட்டார். மகேஸ்வரன் என்னோடு என்ன குரலிலும் தொனியிலும் பேசினாரோ அதைப் போலவே கடவுளிடம் முறையிடும் போதும் மேலே பார்த்துக் கைகளை விரித்துக் கடவுளிடம் விலாவாரியாகப் பேசினார். அவரின் சொந்த ஊரான காரைநகர் சைவசமய மயப்படுத்தப்பட்ட ஊர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த ஊரை ‘ஈழத்துச் சிதம்பரம்’ என்றும் சொல்வார்கள். அந்தப் பின்னணியிலிருந்து வந்த அமைச்சரின் இறை நம்பிக்கையில் எனக்குச் சந்தேகங்கள் எதுவுமில்லை. நெற்றியில் விபூதியும் காதில் பூங்கொத்துமாகத்தான் அமைச்சர் நாடாளுமன்றத்திற்குப் போவார். இரண்டாவது தடவையாகவும் இறுதியாகவும் கடந்த நவம்பர் மாதம் இருபத்தைந்தாம் தேதி நான் மகேஸ்வரனைச் சந்தித்தேன். அப்போது அவர் அமைச்சரல்ல. பூஸா தடுப்பு முகாமிலும் களுத்துறைச் சிறையிலும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகளைப் பார்வையிடுவதற்காக அன்று காலையில் கொழும்பிலிருந்து ஒரு குழு புறப்பட்டது. நீதியமைச்சர் அமரசிறி தொடங்கொட, பிரதி அமைச்சர்கள் பி. இராதாகிருஷ்ணன், கே.ஏ. பாயிஸ், தி. மகேஸ்வரன் எம். பி, அய்கிய நாடுகள் அவையின் சமூகப் பொருளாதாரக் கவுன்ஸில் உறுப்பினர் நிக்பீம்ஸ் , செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி சாலா வேர்னர், ஒரு மொழிபெயர்ப்பாளர் இவர்களோடு பத்திரிகையாளர்களும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தோம். நிக்பீம்ஸ் கனடா நாட்டவர். சாலா வேர்னர் ஒஸ்ரியா நாட்டவர். கனடாவிற்கும் ஒஸ்ரியாவிற்கும் நிச்சயமாக எதாவது வரலாற்றுப் பகையிருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் சாலா வேர்னரால் ஒரு வார்த்தையைக் கூட நிக்பீம்சுடன் அமைதியாகப் பேச முடியவில்லை. நிக்பீம்ஸ் ஒரு கதைக்குக் காலையிலேயே வெப்பம் அதிகமாயிருக்கிறது என்றால் சாலா வேர்னர் மனித உரிமைப் பணிகளில் ஈடுபடுவர்கள் வானிலை அறிவிப்பாளர்களைப் போலப் பேசுவது விரும்பத்தக்கதல்ல என்றார். நிக்பீம்ஸ் தனது கழுத்துப்பட்டியைத் தளர்த்தி இப்போது காற்று நன்றாக வீசுகிறது என்றால் உங்களது பேச்சு ஒரு உல்லாசப் பயணியின் பேச்சுப் போலவேயிருக்கிறது என்றார் சாலா. சாலாவின் சீண்டல் பேச்சுகள் நிக்பீம்ஸை எந்த வகையிலும் சலனப்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. நிக் பீம்ஸ் அழுகிறாரா சிரிக்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாதளவிற்கு உணர்ச்சி ரேகைகளேயற்ற ஒரு சிறப்பான முகவாகு அவருக்கு அமைந்திருந்தது. நிக்பீம்ஸ் அன்று காலை முழுவதும் தனது ஜோக்குகளால் சாலா வேர்னரைக் கவரவே முயற்சி செய்தார். அவரது ஜோக்குகளும் ஒன்றும் மோசமல்ல. ஆனாலும் சாலா வேர்னருக்கு இந்தப் பகடிப் பேச்சுகளில் சிரத்தையிருக்கவில்லை. அவர் இலங்கைப் பிரச்சினைகளைக் குறித்துப் பத்திரிகையாளர்களான எங்களின் கருத்துகளை அறிவதிலேயே படு தீவிரமாயிருந்தார். சாலா வேர்னர் யாழ்ப்பாணத்து நிலைமைகள் குறித்து என் கருத்தைக் கேட்டபோது அது குறித்து இங்கிருக்கும் எவரைவிடவும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் எம்.பிக்கு அதிகமாகத் தெரிந்திருக்கும். நீங்கள் அவரிடம் கேளுங்களேன் என்றேன். சாலா வேர்னர் தனது கண்களை விரித்து ‘மிஸ்டர் மகேஸ்வரன் ஒரு தமிழரா?’ என்று ஆச்சரியப்பட்டார். அன்றைக்கென்று பார்த்து எம்.பி. நெற்றியில் விபூதியும் காதில் பூவுமில்லாமல் வந்திருந்தார். பூஸா இராணுவ முகாமுக்குச் சற்றுத் தூரத்தில் தடுப்பு முகாம் அமைந்திருக்கிறது. மதியத்திற்குச் சற்று முன்பாக எங்களது குழு பூஸா தடுப்பு முகாமைச் சென்றடைந்தது. நாங்கள் சென்றிருந்தபோது அங்கே 138 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். முன்னாள் விமானப்படை அதிகாரி கஜநாயக்கவுடன் சேர்ந்து கடத்தல், கப்பம் என்று குற்றச் செயல்கள் புரிந்ததாக நான்கு சிங்களவர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் திருகோணமலை, பொலனறுவ மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்பது முஸ்லீம்களும் மற்றும் 125 தமிழர்களும் அங்கே தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். தமிழர்களில் ஏழுபேர்கள் பெண்கள். பருத்தித்துறையைச் சேர்ந்த தமயத்தி என்ற இளம்பெண் தனது ஆறுவயதுப் பெண்குழந்தையுடன் அங்கே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். எந்தவித அடிப்படை வசதிகளுமில்லால் பூஸா முகாம் சீரழிந்து கிடக்கிறது. அங்கு கைதிகளின் எந்த உரிமைகளும் மதிக்கப்படுவதில்லை. விசாரணை என்ற பெயரில் கைதிகள் மிருகத்தனமாகச் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். பெண்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் அதிகாரிகளால் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அங்கே மாதக் கணக்காக அடைக்கப்பட்டிருப்பவர்களில் நூற்றுக்கு மேலானவர்கள் ஒருதடவை கூட நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதில்லை. நான் அடுத்தநாள் பத்திரிகையில் பூஸா முகாமைக் குறித்து எழுதிய கட்டுரைக்கு விவிலிய வார்த்தையான ‘உத்தரிப்பு ஸ்தலம்’ என்ற வார்த்தையையே தலைப்பாயிட்டேன். அரசாங்கத்தின் அனைத்து மனிதவுரிமை மீறல்களும் அவசரகாலச் சட்டம் என்ற நிழலிலேயே இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நியாயப்படுத்தப்படுகின்றன. நான் மகேஸ்வரன் எம்.பியிடம் பணிவாக ‘சேர் பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாகக் கையைத் தூக்கும் உறுப்பினர்கள்தான் நாட்டின் முதலாவது பயங்கரவாதிகள்’ என்றேன். மகேஸ்வரன் மெல்லிய குரலில் என்னிடம் ‘நான் இப்போது கையைத் தூக்குவதில்லை என்பது உங்களுக்கும் தெரியும் கடவுளுக்கும் தெரியும்’ என்றார். நீதியமைச்சர் தலைமையிலான குழு கைதிகளிடம் அவர்களது குறைகளைக் கேட்டறியத் தொடங்கியது. சாலா வேர்னர் பூஸா கிடந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போயிருந்தது அவரின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அவர் தனது கழுத்தில் தாறுமாறாகச் சுற்றிக்கிடந்த பாசிமணிமாலைகளை கையில் எடுத்துப் பற்களிடையே நன்னியவாறே அமர்ந்திருந்தார். நிக்பீம்சிடம் பதற்றம் எதுவுமில்லை. அவர் இதைப்போல எத்தனை முகாம்களை எத்தனை நாடுகளில் கண்டிருப்பார்! மகேஸ்வரன் எம்.பி. வழமைபோலவே முகட்டைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தார். கைதிகள் ஒரே குரலில் விசாரணையென்ற பெயரில் அதிகாரிகள் தங்களை அடித்துத் துவைப்பதாக முறையிட்டார்கள். நீதியமைச்சர் அமரசிறி தொடங்கட ‘கைதிகள் சொல்வது உண்மையா?’ எனப் பூஸா தடுப்பு முகாமின் பொறுப்பதிகாரி ஜனக சந்திரஜித்திடம் கேட்டார். ‘விசாரணையின் போது முரணான பதில்களைச் சொல்லும்போது சில தருணங்களில் லேசாக அடிக்க வேண்டியிருக்கிறது’ என்றார் பொறுப்பதிகாரி. பருத்தித்துறை விதவையான தமயந்தி ஆறு மாதங்களுக்கு முன்பு அவரின் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகவும் அவரின் வீட்டிலிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றியதாகவும் அரசாங்கம் சொல்கிறது. ஆனால் தமயந்தியோ தனக்கு வீடேயில்லை என்றும் தன்னை அகதிகள் முகாமில் வைத்தே படையினர் கைதுசெய்தார்கள் என்றும் சொல்லியழுதார். கோப்பாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புலிகளின் பிரச்சாரப் பாடல்களடங்கிய ஒலிநாடாவுடன் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்த ஒலிநாடாவைத் தனது அறையில் வைத்திருந்ததுதான் அந்த இளைஞர் செய்த குற்றம். இந்தக் குற்றத்திற்காக ஒன்றரை வருடங்களாக நீதி விசாரணைகளின்றி அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். அந்த இளைஞரைக் கேட்டால் ’சமாதான காலத்தில் ஏ-9 பாதையால் பயணித்த எல்லோருக்குமே அந்த ஒலிநாடவைப் புலிகள் விற்றார்கள் என்கிறார். சிங்களவர்களுக்குக் கூட அந்த ஒலிநாடாவைப் புலிகள் விற்றார்களாம். நெடுந்தீவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரும் பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். நீரிழிவு நோயாளியான அவருக்கு சிறையில் சரியான சிகிச்சையளிக்கப்படததால் அவர் முற்றாகப் பார்வையிழந்துவிட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை அந்த முதியவர் எங்களிடம் இப்படிச் சொன்னார்: ’என்னிடம் ஒரு ஸ்கூட்டர் இருந்தது. பொதுப் போக்குவரத்து வசதிகளில்லாத நெடுந்தீவில் நான் எனது ஸ்கூட்டரையே எனது போக்குவரத்திற்கு நம்பியிருந்தேன். ஒரு ஈபிடிபி உறுப்பினர் என்னிடம் வந்து தங்களது பொறுப்பாளர் எனது ஸ்கூட்டரை வாங்கிவரச் சொன்னதாகச் சொன்னார். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். அந்தப் பொடியனோ அது தனது பொறுப்பாளரின் உத்தரவு என்றான். நான், “தம்பி உமது பொறுப்பாளரை எனக்குத் தெரியாது. ஆனால் ஸ்கூட்டருக்கு நான்தான் பொறுப்பாளர் ஸ்கூட்டரைத் தர முடியாது என்று சொல்லிவிட்டேன். அன்றிரவே புலிகளின் உளவாளி என்று நான் படையினரால் கைதுசெய்யப்பட்டேன். படையினரோடு அந்த ஈபிடிபி பொடியனும் என்னை அடையாளம் காட்ட வந்திருந்தான்”. குருநகரைச் சேர்ந்த டெய்ஸியம்மா என்ற பெண் கைதியின் கதை கொடுமையானது. புலிகள் இயக்கத்திலிருந்த அவரது தங்கையின் மகள் சமாதான காலத்தில் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இயக்க வேலையாக வந்திருந்தபோது வழியில் இரகசியமாக டெய்ஸியம்மா வீட்டிற்கு வந்திருக்கிறாள். தனது கையால் ஒரு பிடி சோறுகூடச் சாப்பிட நேரமில்லாமல் அந்தப் பிள்ளை உடனேயே திரும்பிவிட்டதாக டெய்ஸியம்மா சொன்னார். ஆனால் இரகசியம் எப்படியோ வெளியே கசிந்திருக்கிறது. இது நடந்து ஆறுமாதத்திற்குப் பின்பு புலிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டில் டெய்ஸியம்மாவும் அவரது மூத்த மகளும் கைதுசெய்யப்பட்டார்கள். டெய்ஸியம்மாவோடு கைது செய்யப்பட்ட அவரது மூத்தமகள் இமெல்டா படையினரால் எங்கே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பது டெய்ஸியம்மாவிற்குத் தெரியாது. டெய்ஸியம்மா நீண்டகாலமாகப் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். எட்டு மாதங்களுக்கு முன்பு முகமாலையில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் இராணுவத்தினரால் டெய்ஸியம்மாவின் தங்கையின் மகள் கொல்லப்பட்டுவிட்டாள். இதைச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே டெய்ஸியம்மா முழந்தாளிலிருந்து அப்படியே மடிந்து சாலா வேர்னரதும் நிக்பீம்சினதும் கால்களில் விழுந்து கதறியழத் தொடங்கினார். தோழர்களே! அண்மையில் தினக்குரல் பத்திரிகையில் கோகர்ணன் குறிப்பிட்ட ஒரு விடயத்தை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 1980களில் காணாமற்போன தங்களது பிள்ளைகளைத் தேடித் தமிழ்த் தாய்மார்கள் போராட்ட முன்னணி அமைத்து வீதியில் இறங்கிப் போராடி அரசாங்கத்திடம் நீதி கேட்டார்கள். அதே தாய்மார்கள் இப்போது கண்ணில் படும் வெள்ளையர்களின் காலிலெல்லாம் விழுந்து தங்கள் குழந்தைகளுக்காக இறஞ்சுகிறார்கள். பூஸாவில் தடுத்த வைக்கப்பட்டிருக்கும் விவேகானந்தனின் வலது கை முழங்கைக்குக் கீழே முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது. 1989ல் இந்திய அமைதிப் படையினரின் ஷெல் விழுந்தே தனது கை துண்டிக்கப்பட்டதாக விவேகானந்தன் சொல்கிறார். அவரின் உடலின் வேறுபாகங்களிலும் இருக்கும் தழும்புகளையும் வைத்துப் பார்க்கும்போது அவர் சொல்வது உண்மையென்றே எனக்குப்படுகிறது. ஆனால் அரசாங்கமோ விவேகானந்தன் புலிகள் இயக்கத்திலிருந்து போரிட்டபோதே அவரின் கை துண்டிக்கப்பட்டிருக்கிறது என அழி வழக்காடுகின்றது. விவேகானந்தன் சரளமாகச் சிங்களம் பேசக் கூடியவர். அன்று அவர் நீதியமைச்சரிடம் மிகவும் துணிச்சலாகப் பேசினார்: ‘அய்யா இங்கே மாட்டை அடிப்பதுபோல எங்களைப் போட்டு உரிக்கிறார்கள். எந்த இரவு இவர்கள் எங்களைச் சாறு பிழிய அடித்து நொருக்குகிறார்களோ அன்று பகலில் புலிகள் ஏதாவது ஒரு தாக்குதலை எங்கோ வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்வோம்; உண்மையில் இங்கேயிருக்கும் கைதிகளது இப்போதைய முழுநேரப் பிரார்த்தனை கடவுளே! புலிகள் தோற்கவேண்டும்! என்பதாகவேயிருக்கிறது’ சற்று நிறுத்திய விவேகானந்தன் தனது வலது முழங்கையில் இடதுகையைச் சேர்த்து கும்பிடுவதுபோல பாவனை செய்து ‘புலிகள் தோற்கட்டும்’ என்றார். பூஸா முகாமில் இருவர் இருவராக நாற்பது கைதிகள் இருபது அறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். எஞ்சியவர்கள் குறுகிய மண்டபமொன்றில் மிருகங்களைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆறுவயதில் சிறையிருக்கும் பருத்தித்துறை தமயந்தியின் மகளை ஏழு வயதில் வெளியே விட்டால் அவள் எட்டுவயதில் புலிப்படையில் சேருவாளா இல்லையா என்பதை நீங்கள் உங்கள் நெஞ்சுகளில் கையை வைத்துச் சொல்ல வேண்டும். அப்போது நாங்கள் ‘குழந்தைப் போரளிகள்’ என்று இன்னொரு கருத்தரங்கை பெர்லினிலோ லண்டனிலோ நடத்தி அந்தக் குழந்தையைப் புலிகளிடமிருந்து மீட்பது குறித்துக் கலந்துரையாட வேண்டியிருக்கும். இதற்கு யார் பொறுப்பு? ஆறு வயதுக் குழந்தையை வேலைக்கே வைத்திருக்கக் கூடாது என்று சட்டமுள்ள நாட்டில் எந்தச் சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சிறையில் வைத்திருக்கிறார்கள்? The law maker should not be a law breaker கிரிதரன் – சசிதரன் என்ற இரு சகோதரர்கள் தடுப்பு முகாமின் ஓர் அறையில் கடந்த ஏழு மாதங்களாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இருவருக்குமே இருபது வயதிற்குள் தானிருக்கும். அவர்களைச் சிறுவர்கள் என்று கூடச் சொல்லலாம். சகோதரர்கள் மட்டக்களப்புக் கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர்கள். அந்தக் கிராமம் படுவான்கரையைச் சேர்ந்தது. அந்தப் பகுதி முழுவதும் புலிகளும் கருணா குழுவினரும் மாறிமாறிப் படுகொலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். விரும்பினால் கருணா குழுவென்ற சொல்லுக்குப் பதிலாக இப்போது பிள்ளையான் குழுவென்று சொல்லிக்கொள்ளுங்கள். இளைஞர்களை வலுகட்டாயமாத் தங்கள் அமைப்புகளிலும் சேர்த்துக்கொள்கிறார்கள். இந்தச் கொலைச் சூழலிலிருந்து தப்பிச் சிங்களப் பிரதேசமான மொனராகலக்கு இரு சகோதரர்களும் வந்து அங்கே தங்கியிருந்து தச்சுத் தொழில் செய்தார்கள். இவர்களிடம் முறையான ஆவணங்களும் மொனராகல பொலிஸ் நிலையப் பதிவும் இருந்தும் ஒருநாள் இவர்கள் காரணமேயில்லாமல் கைதுசெய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள். அரசாங்கம் இவர்கள் சந்தேகத்துக்குரிய நபர்கள் என்கிறது. இலங்கையில் யார் மீதுதான் யாருக்குச் சந்தேகமில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கோடிகோடியாகப் புலிகளுக்கு பணம் கொடுத்தார் என்று மஹிந்த ராஜபக்ஷ மீது சந்தேகமிருக்கிறது. அந்தப் பணத்தை வாங்கினார் என்று பிரபாகரன் மீதும் சந்தேகமிருக்கிறது. இதற்குத் தரகுவேலை பார்த்தார் என்று மகேஸ்வரன் எம்.பி.மேல் கூடச் சிலர் சந்தேகப்படுகிறார்கள். அந்த இரு சகோதரர்களும் சிறையில் எவருடனும் பேசுவதில்லையாம். இருவரும் நாள் முழுவதும் ஒன்றாக அறைக்குள் முடங்கிக் கிடப்பார்களாம். அவர்களுக்கு அங்கு நடக்கும் எதைப்பற்றியும் அக்கறை கிடையாதாம். அவர்கள் விசாரணையின் போது வாயைத் திறப்பதில்லை என்றும் அவர்கள் சரியாக ஒத்துழைக்காததால்தான் அவர்கள் மீது எந்த முடிவும் எடுக்க முடியாதிருக்கிறது என்றும் முகாம் பொறுப்பதிகாரி ஜனக சந்திரஜித் சொன்னார். அந்த இரு சகோதரர்களது தேகங்களைப் பார்த்தால் அவர்கள் ஆறுமாதங்களாகச் சிறையிலிருப்பவர்கள் போலத் தெரியவில்லை. இருவரும் மல்யுத்த வீரர்களைப்போல ஓங்குதாங்காகன கட்டுடல்கள் வாய்க்கப் பெற்றிருந்தார்கள். அன்று அவர்கள் எங்களிடமும் பேச மறுத்தார்கள். அவர்களின் கண்களில் துக்கத்தையோ பரிதாபத்தையோ என்னால் பார்க்க முடியவில்லை. அவர்களின் கண்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. சகோதரர்கள் இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் விடாது பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார்கள். அந்த இளைஞர்கள் மனநிலை சரிந்திருக்கிறார்களோ என்று நான் சந்தேகப்பட்டேன். அப்போது நீதியமைச்சர் அந்தச் சகோதரர்களைப் பார்த்து ‘நீங்கள் உண்மையைச் சொன்னால் மட்டுமே இங்கிருந்து விடுதலையாக முடியும். பைத்தியங்களாக நடிப்பதால் உங்களுக்கு எந்த நன்மையும் கிட்டப்போவதில்லை’ என்றார். சகோதரர்கள் அவர்களது அறைக்குத் திருப்பியனுப்பப்பட்டனர். சற்று நேரத்தில் சாலா வேர்னர் அந்தச் சகோதரர்களின் அறையைப் பார்வையிடப் போனார். முகாம் பொறுப்பதிகாரியும் மொழிபெயர்ப்பாளரும் பத்திரிகையாளர்கள் இருவரும் அவருக்குப் பின்னால் போனோம். அந்தச் சகோதரர்களிடம் சாலா வேர்னர் ‘உங்களை இங்கே யாராவது அடிக்கிறார்களா’? என்று கேட்டார். சகோதரர்கள் அப்போது தங்கள் கண்களைப் பூமிக்குத் தாழ்த்தினார்கள். ‘நீங்கள் இங்கே எவருக்கும் பயப்பட வேண்டாம். நான் செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து வந்திருக்கிறேன். நீங்கள் என்னுடன் ஒத்துழைத்தால் என்னால் உங்களுக்கு உதவ முடியும்.’ என்று சாலா வேர்னர் சொன்னபோது கூட அந்தச் சகோதரர்கள் மவுனமாகவே நின்றிருந்தார்கள். சாலா வேர்னர் முகாம் பொறுப்பதிகாரியைத் திரும்பிப் பார்த்தபோது அவர் வேறு ஏதோ வேலையிருப்பது போல பாவனை செய்தவாறே அங்கிருந்து மெல்ல நழுவினார். சாலா வேர்னர் அந்த இளைஞர்களைச் சட்டையைக் கழற்றிக் காட்டுமாறு கேட்டார். சகோதரர்களின் முகத்தில் சட்டென ஒரு மகிழ்வு தொற்றி ஓடியதை நான் கவனித்தேன். அவர்கள் சட்டையைக் கழற்றியபோது சகோதரர்களின் சிவந்த உடல்களில் வரிவரியாக அடிவாங்கிய கோடுகளும் சிராய்ப்புகளும் இருப்பதை நாங்கள் கண்டோம். அந்தச் சகோதரர்களை அன்று காலையிற் கூட யாரோ அடித்திருக்க வேண்டும். அப்போது சாலா வேர்னரின் கண்கள் ஆத்திரத்தில் துடித்தன. ‘யார் உங்களை அடித்தார்கள்’? என்று சாலா வேர்னர் கேட்டபோது அவர்கள் சட்டைகளை மறுபடியும் அணிந்துகொண்டு ஒரு அறையின் மூலையில் உட்கார்ந்துகொண்டார்கள். சாலா வேர்னர் மறுபடியும் அந்தக் கேள்வியைக் கேட்டபோது சகோதரர்களில் ஒருவன் படரரென மற்றவனின் கன்னத்தில் அறைந்தான். சாலா வேர்னர் ‘ஓ கடவுளே’ என முணுமுணுத்துவிட்டு வேகமாக அங்கிருந்து நடக்கத் தொடங்கினார். சாலா வேர்னரின் பின்னாலேயே வந்த மொழிபெயர்ப்பாளர் ‘மேடம் அவர்கள் இருவருமே முறைவைத்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள் எனப் பக்கத்து அறைகளில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்’ என்றார். அப்போது எதிரே வந்த நிக்பீம்சிடம் சாலா வேர்னர் ‘இது காட்டுமிராண்டி அராங்கம் இந்த நாட்டில் எந்த நெறிகளும் கிடையாது இந்த நாட்டின் அதிபரை யுத்தக் குற்றவாளி என்று சொல்லக்கூட நான் தயங்கப்போவதில்லை. இங்கேயிருக்கும் கைதிகளை இந்த அரசாங்கம் கொன்றுகொண்டிருக்கிறது’ என்று வெடித்தார். நிக்பீம்ஸ் அமைதியாக ‘ஆனால் கைதிகளது பிரார்த்தனை புலிகள் தோற்க வேண்டும் என்பதாகத்தானேயிருக்கிறது’ என்றார் நான் மெதுவாக நடந்து மகேஸ்வரன் எம்.பிக்கு அருகே சென்றேன். ‘என்ன உபுல் கீர்த்தி, வெள்ளைக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?’ என்று மகேஸ்வரன் எம்.பி. கேட்டார். சாலா வேர்னரும் நிக்பீம்சும் பேசியதைச் நான் அவருக்குச் சொன்னேன். மகேஸ்வரன் நீதியமைச்சரிடம் சென்று ‘நாங்கள் இப்போது புறப்பட்டால்தான் களுத்துறைச் சிறையைப் பார்வையிட நேரம் சரியாயிருக்கும்’ என்றார். நான் நேற்றிரவு நண்பர் சிவபாலன் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தேன். இரவு நீண்டநேரம் விழித்திருந்து இன்று இந்தக் கருத்தரங்கில் உரையாற்றுவதற்காகக் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். விடியற் காலையில் கொழும்பிலுள்ள எனது பத்திரிகை அலுவலகத்திலிருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்து மகேஸ்வரன் எம்.பி. கொல்லப்பட்ட செய்தியைச் சொன்னார்கள். நான் நண்பர் சிவபாலனிடம் மகேஸ்வரன் கொல்லப்பட்ட செய்தியைச் சொன்னேன். அப்போது சிவபாலன் ‘மகேஸ்வரன் எங்கே வைத்துக் கொல்லப்பட்டார்?’ எனக் கேட்டார். கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு வழிபாட்டிற்காகச் சென்றிருந்தபோது எம். பி. சுடப்பட்டார் என்றேன். உடனே சிவபாலன் ‘அது மகேஸ்வரனுக்கு வைக்கப்பட்ட இலக்குத்தானா அல்லது வேறு யாருக்காவது வைக்கப்பட்ட இலக்கில் மகேஸ்வரன் தவறுதலாகச் சிக்கினரா?’ எனக் கேட்டார். என்னிடம் இந்தக் கேள்விக்கு என்ன பதிலிருக்க முடியும்? நான் பத்திரிகையாளன் என்பதால் எனக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்று சிவபாலன் நம்பியிருக்க வேண்டும். அவர் மீண்டும் என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். நானே சற்றும் எதிர்பாராத வகையில் அந்தக் கேள்விக்கான பதில் என் உள்ளத்தில் அப்போது தோன்றியது. நான் சிவபாலனிடம் ‘அது கடவுளுக்கு வைக்கப்பட்ட இலக்கு கும்பிடப்போன மகேஸ்வரன் குறுக்கே மாட்டிக்கொண்டார்’ என்றேன். சிவபாலன் புன்னகைத்தார். உபுல் கீர்த்தி பைத்தியத்துக்கு நடிக்கிறானென்று அவர் நினைத்திருக்கக்கூடும். இப்போது பூஸா முகாமில் எண்ணூறு பேர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். (* ‘காலம்’ மே 2008 இதழில் வெளியாகிய ஷோபாசக்தியின் சிறுகதை) ரம்ழான் “பிரான்ஸ் தன்னிடமிருக்கும் கடைசி நாணயத்தையும் தான் கொலனிகளாக வைத்திருந்த நாடுகளுக்கு நட்டஈடாகச் செலுத்த வேண்டியிருக்கிறது, ஒட்டு மொத்தப் பிரஞ்சு தேசமும் அல்ஜீரியாவின் ஏதோவொரு கடற்கரையில் புதைக்கப்பட்டிருக்கும் எனது மரியத்தின் புதைகுழிக்கு முன்னே மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கவேண்டும்! ஜெனரல் சார்ள் து கோல் மன்னிப்புக் கேட்ட வேண்டும்! பாதிரி லூயி டொனார்த் மன்னிப்புக் கேட்க வேண்டும்! சார்த்தருக்கும் விலக்குக் கிடையாது, அவரும் மரியத்திடம் மன்னிப்புக் கேட்கட்டும்! ஒரு பிராயச்சித்தம் நூறு சரிகளுக்குச் சமம்”என்ற திரை எழுத்துகளுடன் முடிவுறும் பிரஞ்சு இயக்குனர் எரிக் ஜக்மெனின் ரம்ழான் திரைப்படம் ஜோன் போல் சார்த்தரின் வீட்டில் ஆரம்பிக்கிறது. சார்த்தர் தனது பாரிஸ் வீட்டில் தடித்த புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கும் கண்ணாடி அலுமாரிகளுக்கு நடுவேயிருந்து ஒரு பத்திரிகையாளருக்கு நேர்காணலை வழங்கிக்கொண்டிருக்கிறார். இப்பொழுது கமரா புத்தக அலுமாரியொன்றிற்கு மேலே தொங்கும் ஒரு பெரிய சுவர்க் கடிகாரத்தை நோக்கித் திரும்புகிறது. அடுத்த அய்ந்து நிமிடங்களுக்கு நிதானமாக அந்தச் சுவர்க் கடிகாரமும் அது எழுப்பும் துல்லியமான டிக் டிக் ஒலியும் மட்டுமே திரையில் வருகின்றன. திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு சலிப்புத் தட்டத் தொடங்குகிறது. ஆறாவது நிமிடம் மீண்டும் கமரா பத்திரிகையாளரிடம் திரும்புகிறது. நம்மிடமிருந்த அதே சலிப்பு பத்திரிகையாளரின் முகத்திலும் தெரிகிறது. சார்த்தரோ ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கிறார். நடுவே ஒருமுறை முதிய வேலைக்காரி ஒருவர் சர்த்தாருக்கு முன்னே தேனீரையும் புகையிலைப் பொட்டலத்தையும் வைத்துவிட்டுப் போகிறார். சார்த்தர் அந்தப் பெண்ணிடம் “நன்றி அமதுல்லா” என்கிறார். அமதுல்லா என்ற பெயருக்கு ‘அல்லாஹ்வின் வேலைக்காரி’ என்று பொருள். பத்திரிகையாளர் நடந்துகொண்டிருக்கும் அல்ஜீரிய விடுதலைப் போர் குறித்துக் கேட்ட கேள்விக்கு பதிலளித்துக்கொண்டிருந்த சார்த்தர் மறுபடியும் விட்ட இடத்திலிருந்து பதிலைத் தொடருகிறார். “அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பிரஞ்சு இராணுவத்தில் சேருமாறு அரசு இளைஞர்களுக்கு அழைப்பு விட்டிருந்தபோதிலும் அந்த அழைப்பைப் புறக்கணித்து அல்ஜீரிய மக்களுக்கு எதிராக நாங்கள் ஆயுதம் ஏந்த மாட்டோம் என பிரஞ்சு இளைஞர்கள் மறுப்பதை நான் நியாயமானதெனக் கருதுகிறேன், பிரஞ்சு மக்களின் பெயரால் பிரஞ்சு அரசு இயந்திரத்தாலும் படையினராலும் ஒடுக்கப்பட்டுவரும் அல்ஜீரிய மக்களுக்கு உதவுவதும் பாதுகாப்பளிப்பதும் பிரஞ்சு மக்களின் கடமையென வலியுறுத்துகிறேன், கொலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறப் போராடிவரும் அல்ஜீரிய மக்களுக்கு எனது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவிக்கிறேன்” என்கிறார் சார்த்தர். ஒலிப்பதிவுக் கருவியைச் சலிப்புடன் நிறுத்தும் பத்திரிகையாளர் “அய்யா 121 பேர்கள் கூட்டாகச் சென்ற மாதம் வெளியிட்ட அறிக்கையை நீங்கள் மறுபடியும் என்னிடம் படித்துக் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்” என்கிறார். தனது இருக்கையிலிருந்து எழுந்து நிற்கும் சார்த்தர் தலையை உலுக்கியவாறே “பிரஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணிக்கு ஆதரவளிக்க வேண்டும், எனது இந்த நிலைப்பாட்டுக்காக அரசாங்கம் என்னைக் கைது செய்வதானாலும் செய்யட்டும்” என்னும் போது பத்திரிகையாளர் புன்னகையுடன் “சார்த்தர் ஒருபோதும் அரசாங்கத்தால் கைது செய்யப்படமாட்டார் என ஏற்கனவே ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்” என்கிறார். திரைப்படத்தின் அடுத்த காட்சி பாரிஸின் புறநகரம் ஒன்றிலிருக்கும் ஒரு அரபுச் சேரியில் ஆரம்பிக்கிறது. தனது கந்தல் படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்கும் மரியம் அதிகாலையில் ஒரு கனவு கண்டு விழித்துக்கொள்கிறாள். எதிர்வரும் ரம்ழான் பெருநாளை அவள் தனது தாயகமான அல்ஜீரியக் கிராமத்தில் கொண்டாடிக்கொண்டிருப்பதாக அவள் கனவு கண்டாள். அவளருகில் உறங்கிக்கொண்டிருந்த அவளது தாயாரை எழுப்பி “நோன்பு நேற்றுத்தான் ஆரம்பித்திருக்கிறது. ரம்ழான் பெருநாளுக்கு நான் எப்படி அல்ஜீரியாவில் இருக்க முடியும்?” என மரியம் கேட்கிறாள். தாயார் மரியத்திடம் “இறைவன் விருப்பம் அதுவானால் அது நிறைவேறும்” என்கிறார். அதிகாலையிலேயே மரியம் வேலைக்குப் புறப்படுகிறாள். அவள் இரண்டு நாட்களுக்கு முன்புதான் புதியதொரு வேலையில் சேர்ந்திருக்கிறாள். ஒரு பிரஞ்சுக் கப்பற்படை அதிகாரியின் வீட்டில் பணிப்பெண்ணாக அவள் வேலை செய்கிறாள். அவள் வேலைக்குப் புறப்பட்டுச் சென்றதும் தாயார் மரியத்தின் தந்தையிடம் “மரியத்துக்கு வயதாகிக்கொண்டே போகிறது. நாங்கள் சீக்கிரமே அல்ஜீரியாவுக்கு திரும்பிபோய் அவளுக்கு நிக்காஹ் செய்து வைக்க வேண்டும்” என்கிறார். மரியத்தின் தகப்பன் “யுத்தம் சீக்கிரமே முடிந்து அல்ஜீரியா விடுவிக்கப்படும் என்று அஹமத் பென் பெல்லா சொல்லியிருக்கிறார், அடுத்த வருடம் ரம்ழானை நாங்கள் அல்ஜீரியாவிலே கொண்டாட முடியும்” என்று தனக்குள் முணுமுணுக்கிறார். மரியம் வெகுளிப் பெண்ணாயிருக்கிறாள், அவள் உடல் வருத்தம் பாராமல் கடுமையாக உழைக்கக் கூடியவள், அவளுக்கு எழுத வாசிக்கத் தெரியாது. இந்தச் செய்திகளையெல்லாம் மரியமும் அவளது தோழிகளும் அதிகாலையில் வேலைக்காக அதிகாரிகளின் வில்லாக்களிருக்கும் பகுதிக்கு நடந்து போய்க்கொண்டிருக்கும் காட்சியிலேயே இயக்குனர் எரிக் ஜக்மென் குறிப்புகளால் சொல்லி விடுகிறார். மரியத்தின் மூன்றாவது வேலைநாள் அந்தக் கப்பற்படை அதிகாரி நிக்கொலாவின் வீட்டில் ஆரம்பிக்கிறது. முழுமையான கப்பற்படைச் சீருடையில் அதிகாரி நிக்கொலா பியானோ இசைத்துக்கொண்டிருக்கிறான். அவனின் முன்னே தேநீர் குவளை மற்றும் கோப்பைகள் இருக்கும் தட்டுடன் மரியம் நின்றுகொண்டிருக்கிறாள். ‘அதை அங்கே வைத்துவிட்டுப் போ’ என்ற கட்டளையை எதிர்பார்த்து மரியம் அங்கே நின்றுகொண்டிருக்கலாம். நிக்கொலா எதுவும் சொல்லாமலேயே மரியத்தைப் பார்த்தவாறு அருமையான இசையை இசைத்துக்கொண்டிருக்கிறான். மரியம் தலையைத் தாழ்த்தியவாறு நின்றிருக்கிறாள். பியானோவிலிருந்து எழுந்துவரும் நிக்கோலா தேனீர் கோப்பையை வாங்காமல் மரியத்திடம் ’ மரியம் உனது முலைகள் அழகானவை’ என்கிறான். இப்போது மரியத்தின் முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை. அவளின் முகம் ஒரு புராதனக் கற்சிலையின் முகத்தைப் போலிருக்கிறது. அவளின் கண்கள் ஆட அசையவில்லை. அதிகாரி மிக இயல்பாயும் உரிமையுடனும் மரியத்தின் முலைகளில் கை வைக்கிறான். நாங்கள் மரியம் தேநீர்த் தட்டைக் கீழே போட்டுவிடுவாள் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் மரியத்தின் கைகைள் தேனீர்த் தட்டை இறுக்கமாகப் பிடிப்பது அண்மைக் காட்சியில் காட்டப்படுகிறது. அவள் சற்றுப் பின்நகர்ந்து சமையலறைக்குத் திரும்புகிறாள். நிக்கொலா, மரியம் போவதையே பார்த்துக்கொண்டிருந்து விட்டு மீண்டும் பியானோவின் முன்னால் உட்கார்ந்திருந்து பியானோவை இசைக்கத் தொடங்குகிறான். அவன் கால்களால் தாளமிட்டவாறே “புது மாடு உழவு பழக மிரளுவது உழவனுக்கும் புதிதல்ல, வயலுக்கும் புதிதல்லவே” என்று பாடுகிறான். சமையலறைக்குச் சென்ற மரியம் தேனீர்த் தட்டை ஒழுங்காக அதனுடைய இடத்தில் வைக்கிறாள். தனது கண்களைத் தாழ்த்தி வெண்ணிற அங்கியால் போர்த்தப்பட்டிருக்கும் தனது மார்பகங்களைப் பார்க்கிறாள். இந்த ‘ஷொட்’டில் மார்பகங்களை மிக அண்மைக் காட்சியில் காட்டுவதுதான் பிரஞ்சு சினிமாவின் மரபு. ஆனால் எரிக் ஜக்மென் மரியத்தின் கவிழ்ந்த கண்களைத் திரை முழுவதும் காண்பிக்கிறார். கவிழ்ந்த கண்கள் மிக அண்மைக் காட்சியில் காட்டப்படுவதைக் ’குளேசப் ஷொட்’ மன்னன் அகிரா குரோசவாவின் திரைப்படங்களில் கூட நான் பார்த்ததில்லை. இப்போது மரியம் சமையலறையிலிருக்கும் இறைச்சி வெட்டும் கூரிய கத்தியை எடுத்துக்கொண்டு பியானோ வாசித்துக்கொண்டிக்கும் நிக்கொலாவின் முதுகுப்புறத்தால் நிக்கொலாவை நெருங்குகிறாள். பியானோ இசை நெருங்கிச் செல்லும் காலடிச் சத்தங்களை அமுக்கிவிடும் என்று மரியம் நினைத்திருப்பாள். மரியம் கத்தியை வீசும்போது பியானோவின் இசை அறுகிறது. நிக்கோலா சுழன்று திரும்புகிறான். மரியம் வீசிய கத்தி நிக்கொலாவின் முதுகில் பட்டும் படாமலும் சறுக்குகிறது. நிக்கொலாவிற்கு மரியத்தின் கையிலிருக்கும் கத்தியைப் பிடுங்குவதற்கு ஒரு விநாடியே போதுமாயிருந்தது. அவன் தனது முழு இராணுவப் பயிற்சியையும் மரியத்திடம் பிரயோகித்தான். தனது வலிய கரங்களால் மரியத்தின் தலைமுடியைப் பற்றிப் பிடித்து அவளின் முகத்தைப் பியானோவில் நிக்கொலா அறைந்தபோது பியானோ வீறிட்டது. “அரபுப் பெட்டை நாயே” என்று சொல்லிச் சொல்லி மரியம் மயங்கும்வரை நிக்கொலா அவளின் தலையைப் பியானோவில் மோதினான். பியானோவின் சுரக் கட்டைகள் மீது மரியத்தின் இரத்தம் படர்கிறது. அவள் மயங்கித் தரையில் விழுந்ததும் நிக்கொலா தொலைபேசியில் பொலிஸாரை அழைத்தான். கப்பற்படை அதிகாரி நிக்கொலாவைக் கொல்வதற்காக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணியால் அனுப்பப்பட்ட உளவாளி என்று மரியத்தின் மீது பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டது. ’சாம்ஸ் எலிஸே’யில் இருந்த உளவுத்துறைப் பொலிஸ் தலைமையத்தில் மரியம் விசாரணைக்கெனத் தடுத்து வைக்கப்படுகிறாள். அக்காலத்தில் குறிப்பாக 1958 காலப்பகுதியில் அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி பிரான்சுக்குள் ஊடுருவி பிரான்ஸ் முழுவதும் பரவலாகத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தது. ஏராளமான இராணுவத் தளபதிகளும் பொலிஸ் அதிகாரிகளும் குறிவைத்துக் கொல்லப்பட்டார்கள். அல்ஜீரிய விடுதலைப் போராளிகள் பாரிஸிலிருந்த காவல் நிலையங்கள் மீதும் படையினரின் ரோந்து வாகனங்கள் மீதும் துப்பாக்கிச் சூடுகளை நடத்தினார்கள். பல வெடிமருந்துக் கிடங்குகளும் எண்ணைக் குதங்களும் போராளிகளால் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டன. ஒருநாளைக்கு ஆகக் குறைந்தது இரண்டு சம்பவங்களாவது இவ்வாறு நிகழ்ந்தன. உளவுப் பொலிஸாரின் விசாரணைக்கூடத்தில் நடக்கும் கொடுமைகள் அடுத்தடுத்த காட்சிகளில் துயரமாகச் சித்திரிக்கப்படுகின்றன. மரியத்திற்கு ஒரு நீண்ட சாம்பல்நிற அங்கி மட்டுமே அணிந்துகொள்ளக் கொடுக்கப்படுகிறது. மரியத்தின் உள்ளாடைகளை அவர்கள் பறித்து வீசிவீடுகிறார்கள். உள்ளாடைகள் அணிவதற்கு விசாரணைக் கைதிகள் அனுமதிக்கப்படுவதில்லை. உள்ளாடைகளால் கைதிகள் கழுத்தை இறுக்கித் தற்கொலை செய்துகொள்கிறார்களாம். உளவுத்துறைப் பொலிஸார் மரியத்தை அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணியின் உளவாளி என்று ஒத்துக்கொள்ள வைப்பதற்குப் பெரும் பிரயத்தனங்களைச் செய்தார்கள். பன்னிரெண்டு மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டடத்தின் ஒவ்வாரு தளத்தின் மாடிப்படிகளின் அருகிலும் ஒரு பொலிஸ்காரன் நாற்காலியில் துப்பாக்கியோடு காவலிருப்பான். ஒருநாள் விசாரணை அதிகாரியொருவன் மரியத்திடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக ஒரு நூதனமான வழியைக் கையாண்டான். மரியம் கீழ்த் தளத்தலிருந்து பன்னிரெண்டாம் மாடிவரை நிற்காமல் படிகளில் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். மறுபடியும் மேலிருந்து கீழ்த்தளம் வரைக்கும் படிகளில் இறங்கி ஓடிவர வேண்டும். அப்படி ஓடும்போது ஒவ்வொரு தளத்திலும் காவலுக்கு அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பொலிஸ்காரனின் கைகளையும் அவள் தனது கையால் தொட்டுவிட்டுத் தொடர்ந்து ஓட வேண்டும். மரியம் நான்கு தடவைகள் ஏறி இறங்குவதற்குள்ளேயே முற்றாகத் தளர்ந்து விட்டாள். அவள் தளர்ந்து வேகத்தைக் குறைத்த போதெல்லாம் அவளின் பிடரியில் அறைகள் விழுந்தன. அவள் தனது வெற்றுக்காலைப் படியொன்றில் மோதி தனது விரலொன்றில் காயப்பட்டாள். அந்த இரத்தக் காயத்துக்குப் பிறகும் கூட ஓடிக்கொண்டேயிருக்குமாறு அவள் கட்டாயப்படுத்தப்பட்டாள். மரியம் தனது காலை நொண்டி நொண்டி ஓடிக்கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் அச்சமுமும் பதற்றமும் வலியும் தொற்றிக் கிடந்தன. பன்னிரெண்டாம் மடியிலிருந்த பொலிஸ்காரனை மரியம் இருபத்தோராவது தடவையாகத் தொடச் சென்ற போது இடுங்கிய கண்களைக்கொண்ட அந்த பொலிஸ்காரன் “நீ ஒடிவரும் போது உனது முலைகள் வசீகரமாகக் குலுங்குகின்றன” எனச் சொல்லிவிட்டு மரியம் தொடுவதற்காகத் தனது கையை நீட்டினான். மரியம் சிறையிலும் நோன்பைக் கடைப்பிடிக்கிறாள். சிறையில் வழங்கப்படும் உணவை வேண்டாம் என்று கைதிகளால் மறுக்கமுடியாது. அதுவும் சட்ட விரோதமாம். மரியம் காலையிலும் மதியத்திலும் வழங்கப்படும் சிறையுணவை கக்கூஸ் குழியில் கொட்டி விடுவாள். இரவுணவை மட்டுமே அவள் சாப்பிட்டாள். பெற்றோர்களையும் தனது சிறிய தங்கைகளையும் நினைத்து அவள் இரவு முழுவதும் அழுதுகொண்டிருந்தாலும் இன்னும் சில நாட்களில் ரம்ழான் பெருநாளைத் தான் அல்ஜீரியாவில் கொண்டாடப் போவதாக அவள் மனப்பூர்வமாக நம்பினாள். தனது நம்பிக்கையை சக கைதிகளிடம் அவள் பகிர்ந்துகொண்டபோது அவர்கள் மரியத்தை “பைத்தியக்காரி” எனத் திட்டினார்கள். பாரிஸில் பிரஞ்சு ஆட்சியாளர்களுக்கு எதிரான அல்ஜீரியர்களின் தாக்குதல்களும் ஆர்ப்பாட்டங்களும் கட்டுக்கடங்காமல் பெருகிப் போகவே பிரஞ்சு அரசாங்கம் பிரான்சுக்கு வேண்டப்படாத அல்ஜீரியர்களை அல்ஜீரியாவுக்குக் கட்டாயமாகத் திருப்பி அனுப்பிவைக்க முடிவெடுக்கிறது. பாரிஸ் நகரத்தில் உளவுத் துறையினரின் சந்தேகத்துக்குரிய அல்ஜீரியர்கள் குடும்பம் குடும்பமாகக் காவற்துறையினரால் பிடிக்கப்பட்டு ‘வெலோத்ராம் து ஹிவர்’ என்ற மிகப் பெரிய விளையாட்டு அரங்கத்தில் அடைக்கப்படுகிறார்கள். இந்த அரங்கு செயின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது. 1942ல் இந்த அரங்கத்தில்தான் நாஸிப் படையினரால் பன்னிரெண்டாயிரம் யூதர்கள் அடைக்கபட்டிருந்து, பின்பு சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். பதினாறு வருடங்களுக்கு முன்பு யூதர்களின் கண்ணீரால் கழுவப்பட்ட அந்த அரங்கு இப்போது அரபுப் பெண்களின் கண்ணீராலும் குழந்தைகளின் கண்ணீராலும் கழுவப்பட்டது. அந்தத் தடுப்பு முகாமுக்கு மரியமும் உளவுத்துறைப் பொலிஸாரால் அனுப்பப்படுகிறாள். மரியத்தின் கனவு நனவாக இன்னும் ஒருவாரம் மட்டுமேயிருக்கிறது. அடுத்த வாரம் ரம்ழான் பெருநாள். அந்த அரங்கத்தில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் ரம்ழான் பெருநாளுக்கு அய்ந்து நாட்களுக்கு முன்னதாகச் சிறப்பு ரயில் ஒன்றில் துறைமுக நகரமான மார்ஸெயிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அன்றைய தினம் பிரஞ்சுத் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்த பிரஞ்சு அதிபர் ஜெனரல் சார்ள் து கோல் “அல்ஜீரியக் கிளர்ச்சிக்காரர்கள் விரைவில் பிரஞ்சு பராசூட் சிறப்புப் படையினரால் அழிக்கப்படுவார்கள், அல்ஜீரியா பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதி, அல்ஜீரியாவிலிருந்து பிரஞ்சுப் படைகள் வெளியேறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனது அரசாங்கம் அல்ஜீரியர்களைப் பிரஞ்சுக் குடியரசின் பிரஜைகளாகக் கௌரவமாகவே நடத்திவருகிறது. அல்ஜீரியாவிற்குத் தமது சுயவிருப்பத்தின் பேரில் திரும்ப விரும்பிய அல்ஜீரியர்கள் இன்று கூட மார்ஸெயிலிலிருந்து புறப்படும் கப்பலில் தங்களது சொந்தக் கிராமங்களுக்கு அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அவர்கள் ரம்மான் பெருநாளை அமைதியாகத் தங்களது கிராமங்களில் கொண்டாடுவார்கள். அவர்களுக்கு எனது ரம்ழான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். அந்தக் கப்பலில் சிறப்பு ரயிலில் அழைத்து வரப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் புறநகரங்களில் கைது செய்யப்பட்டு இராணுவ வாகனங்களில் அடைக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட அல்ஜீரியர்களும் ஏற்றப்படுகிறார்கள். மரியம் கப்பலில் ஏறியதும் கப்பலில் தனது பெற்றோர்களும் தங்கைகளுமிருக்கலாம் என்று அவர்களைத் தேடுகிறாள். ஆனால் அவர்கள் கப்பலில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தக் கப்பலில் அவள் தனக்கு முன்னமே தெரிந்த ஒருவனைச் சந்திக்கிறாள். அவன் கப்பற்படை அதிகாரி நிக்கொலா. அவன்தான் அந்தக் கப்பலின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி. அவன் மரியத்தை நெருங்கி வந்து அவளது மார்பகங்களைக் கண்களால் சுட்டிக்காட்டி “நீ சிறையில் இருந்தபோதும் கூட உனது கொழுத்த முயல் குட்டிகள் இளைத்துவிடவில்லை” என்று சொல்லிவிட்டு இளித்தான். மரியம் வேகமாக அந்த இடத்திலிருந்து நடந்து செல்கிறாள். அவள் பின்பு கப்பலுக்குள் அமதுல்லாவைச் காண்கிறாள். இந்த அமதுல்லாதான் திரைப்படத்தின் முதற் காட்சியில் சார்த்தருக்குத் தேனீர் பரிமாறிய முதிய வேலைக்காரி. அமதுல்லா தனது தலையில் ஒரு துணிமூட்டையை வைத்திருக்கிறார். அவர் அந்தத் துணிமூட்டையை யாராவது திருடிவிடக் கூடும் என்ற பதற்றத்திலிருக்கிறார். அவர் “நீ எனது துணிமூட்டையைத் திருட நினைக்காதே” என்று மரியத்தைத் திட்டுகிறார். ஓரிடத்தில் அமர்ந்தாலோ நின்றாலா தனது துணிமூட்டையை யாராவது திருடிவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவர் ஓடும் கப்பலுக்குள் ஓயாமல் நடந்துகொண்டேயிருக்கிறார். கப்பல் இரவு நேரம் நடுச் சமுத்திரத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆண்கள் கப்பலின் கீழ்த்தளங்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கப்பலின் மேற்தளத்தில் பெண்களும் குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். காவற் கடமையிலிருக்கும் படைவீரர்கள் எல்லோருமே கப்பலின் உணவுச்சாலையில் குடித்துக்கொண்டும் புகைத்துக்கொண்டுமிருக்கிறார்கள். கப்பலின் மேற்தளத்தில் விளக்குகள் ஏதுமில்லை. நட்சத்திரங்களின் கீழே தூங்கிக்கொண்டிருந்தபோது மரியம் ஒரு கனவு கண்டாள். கருமையிலிருந்து ஒளி தோன்றுகிறது. அந்த ஒளி மரியத்திடம் “அருள் நிறைந்த மரியமே வாழ்க! பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீயே! உன் திருவயிற்றின் கனியும் ஆசிர்வதிக்கப்பட்டதே! இந்த இரவில் நீ கர்ப்பம் தரிப்பாய், உன் உதிரத்தில் சுமந்து நீ கடவுளின் குமாரனை பெற்றெடுப்பாய்!” என்றது. பின்பு ஒளி தணிந்துவிடுகிறது. மரியம் வியர்த்துப் போய்த் திடுக்குற்று விழிக்கிறாள். அவள் குந்தியிருந்து ஒரு நிமிடம் மட்டுமே தனது முழங்கால்களில் தனது தலையைக் கவிழ்த்து வைத்துக்கொண்டு யோசனை செய்தாள். அடுத்த நிமிடம் அவள் கப்பலிலிருந்து சமுத்திரத்திற்குள் குதித்தாள். அந்த வினாடியில் கப்பலின் மேற்தளத்துக்கு ஒரு வெளிச்சப் புள்ளி ஏறி வருகிறது. போதையில் தள்ளாடியபடியே படிகளில் ஏறிவரும் கப்பற்படை அதிகாரி நிக்கொலாவின் கையிலிருக்கும் விளக்கிலிருந்து ஒளி கசிகிறது. அவன் அந்த விளக்கின் வெளிச்சத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களிடையே பெருத்த முலைகளைக் கொண்ட பெண்ணான மரியத்தைத் தேடிக்கொண்டிருக்கிறான். தொலைக்காட்சி நேர்காணலில் ஜனாதிபதி ஜெனரல் சார்ள்து கோல் சொன்னது அப்பட்டமான பொய். மார்ஸெய்ல் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் அல்ஜீரியாவின் கிராமங்களை நோக்கிப் போகவில்லை. கப்பல் அல்ஜீரியாவின் பாலைவனத்தின் தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சிறைமுகாம்களை நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது. ரம்ழான் பெருநாளுக்கு முந்தியநாள் மாலையில் அல்ஜீரியக் கடற்கரையொன்றில் கிராமவாசிகள் பிறையைக் காண்பதற்காகக் கூடி நின்றபோது கடலில் மிதந்துவந்த ஒரு உடலை அவர்கள் கண்டெடுத்தார்கள். அந்த நிர்வாண உடலை சுறாக்கள் குதறியிருந்தன. அந்த உடலில் முலைகள் இருந்ததற்கான தடயத்தைக் கூட மீன்கள் விட்டுவைத்திருக்கவில்லை. “தேசத்துரோகி சார்த்தரைக் கைது செய்ய வேண்டும்” என்ற கூச்சலோடு பிரஞ்சுக் கொடிகளை உயர்த்திப் பிடித்தபடி பாரிஸ் நகரத்தின் தெருக்களில் ஊர்வலமாக ஒரு கூட்டம் போய்க்கொண்டிருக்க, அல்ஜீரியக் கடற்கரைக் கிராமமொன்றில் கிராமவாசிகள் மரியத்தின் வெள்ளைத்துணி போர்த்திய உடலை ஊர்வலமாகப் புதைகுழிக்கு எடுத்துப் போவதுடன் திரையில் எழுத்துகள் மின்ன ரம்ழான் திரைப்படம் முடிகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களின் முலைக்கும் வரி விதிக்கப்பட்டிருந்தபோது வரியைக் கட்ட மறுத்த பெண் ஒருத்தி தனது முலைகளை அறுத்து வாழையிலையில் பொதிந்து வரி வசூலிக்க வந்த அதிகாரிகளின் கையில் கொடுத்தாளாம். திரைப்பட அரங்கிலிருந்து வெளியே வரும்போது நான் எனது அந்த மூதாதையை நினைத்துக்கொண்டேன். திரைப்பட அரங்கிலிருந்து வெளியே வந்த இன்னொருவர் ‘சார்த்தர் அலுப்பூட்டக் கூடிய விதத்தில் பேசக் கூடியவரா?’ என்று கூட யோசித்திருக்கலாம். மரியமாகப் பாத்திரமேற்று நடித்திருந்த ஜஸ்மின் சிறந்த நடிகைக்கான விருதை வெனிஸ் திரைப்பட விழாவில் மயிரிழையில் இழந்தார். சிறந்த நடிகைக்கான விருதை ‘1970 மூனிச்’ திரைப்படத்துக்காக வனஸா ரெட்போர்ட் பெற்றுக்கொண்டார். ரம்ழான் திரைப்படத்தில் மரியமாக நடித்திருந்த ஜஸ்மினுக்கு அந்தப் படம்தான் முதலாவது கதைப் படம். ஜஸ்மின் நீலப் படங்கள் என்று சொல்லப்படும் போர்னோ படங்களில் நடிப்பவர். அவர் ரம்ழான் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது பிரான்ஸின் பிரபல நாளிதளான ‘20 மினுற்’ பத்திரிகை “ஒரு நீலப்பட நடிகையின் வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கு நீங்கள் நிச்சயமாக விரும்புவீர்கள்!” என்ற அறிவிப்போடு நடிகை ஜஸ்மினுக்கும் தனது வாசகர்களுக்குமான ஒரு இணைய உரையாடலைத் தனது இணையத்தளத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இனிவருவது அந்த உரையாடல்: Anelka: : ஜஸ்மின் நீங்கள் நீலப் படங்களில் நடிப்பதற்காக உங்கள் உறுப்புகளில் எதையாவது திருத்தி அமைத்துக்கொண்டீர்களா? ஆம்; எனது மார்பகங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் திருத்திக்கொண்டேன். Noway: உங்களுக்குக் கணவரோ அல்லது காதலரோ இருக்கிறாரா? இருந்தால் நீங்கள் அவருடன் கழிக்கும் பொழுதுகளில் நீலப் படங்களில் நடிப்பதனால் உங்களுக்கு ஏதாவது மன உளைச்சல்கள், தடுமாற்றங்கள் ஏற்படுவதுண்டா? இல்லை, இத்தகைய உளைச்சல்களோ குழப்பங்களோ எனக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. நான் எனது காதலனுடன் சேர்ந்து வாழ்கிறேன். நாங்கள் வாழ்க்கைத் துணைவர்கள்தான் ஆனாலும் நாங்கள் இருவருமே அவரவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் கருத்தானவர்கள். நாங்கள் இருவருமே பாலுறவுக் கட்டுப்பாடுகளிலிருந்து எங்களை விடுவித்துக்கொண்டவர்கள். இருவருமே சுயமான பாலியல் தேர்வுகளைக் கொண்டவர்கள். வாழ்க்கை ஒரு படப்பிடிப்பு போன்றதல்ல. அங்கே நடித்தால் நாம் நம்மையே ஏமாற்றுபவர்களாவோம். Reivax: இந்த ஆணாதிக்க சமூகத்தில் அரசியல், வேலை, கலை போன்ற பல துறைகளில் பெண்களுக்கான சம வாய்ப்புகளும் உரிமைகளும் ஆண்களால் மறுக்கப்படுகின்றன. பெண்களுக்கான சமூக அங்கீகாரம் மீண்டும் மீண்டும் மறுக்கப்படுகிறது. இந்த நிலையில் நீங்கள் வெறும் பாலியல் பண்டமாக மட்டுமே கவனப்படுத்தப்படுவது உங்களை எவ்வளவு பாதிக்கிறது? நீங்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதாக நினைக்கிறீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை. நான் ஒரு தொழிலைச் செய்கிறேன். அதுவும் எனக்குப் பிடித்தமான நடிப்புத் தொழிலைச் செய்கிறேன். உடல்களின் மேன்மையையும் காமத்தையும் அழகியலாக்கப் போராடும் எனது இயக்குனர்களை நான் பிரதிபலிக்கிறேன் என்று நினைக்கும்போது நான் கர்வமுறுகிறேன். Pierre: உங்களுடனான இந்த உரையாடலை ‘20Minutes’ பத்திரிகை ஏற்பாடு செய்ததன் நோக்கம் என்னவென்று நினைக்கிறீர்கள்? உங்கள் அந்தரங்க வாழ்வை அவர்கள் அரட்டைப் பொருளாக்குகிறார்களா? அல்லது உங்கள்மீது கொண்ட கரிசனத்தால் இந்த உரையாடலை ஏற்பாடு செய்தார்களா? இந்தக் கேள்வியை நான் அவர்களிடமே விட்டுவிடுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் நான் வாசகர்களுடனும் எனது ரசிகர்களுடனும் உரையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். Luimeme: நீலப்படங்களில் நடிப்பதற்கு உடல்ரீதியாகக் கடினமான உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கும். பல மணிநேரங்களாக, நாட்கணக்கில் நீடிக்கும் படப் பிடிப்புகளால் ஒரு பெண்ணென்ற முறையில் என்னவிதமான சிரமங்களை எதிர்கொள்கிறீர்கள்? அனைத்தும் ஒரு நாளைக்கு எத்தனை காட்சிகளில் நடிக்கிறேன் என்பதைப் பொறுத்தே உள்ளது. படிப்பிடிப்பு முடிந்ததும் எரிவு பொதுவாகவே இருக்கும். சில வேளைகளில் இலேசான வலியும் ஏற்படுவதுண்டு. ஆனால் இப்போது இவற்றுக்கென பிரத்தியேகமான ’ஜெல்’களும் ’க்ரீம்’களும் கிடைக்கின்றன என்பது நிம்மதியான விஷயம். Anto: 2007 கான்ஸ் திரைப்பட விழாவில் நீங்கள் நடித்த ‘SEXTANT 2’ படத்தைப் பார்த்தேன். வாழ்த்துகள். ஜஸ்மின் நீங்கள் நீலப்படத்தில் அல்லாமல் மரபான கதைப் படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் உள்ளன. அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா? உங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி. உண்மைதான் நான் எரிக் ஜக்மெனின் ‘ரம்ழான்’ என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 2008ல் வெளியாகும். இந்தப் படத்தில் டானியல் ஒற்றேயும் நடிக்கிறார். Liouba: இரவு பகலாகத் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கும்போதோ, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் புணருவதாகக் காட்சிகள் அமைக்கப்படும் சந்தர்ப்பங்களிலோ நீங்கள் எப்போதாவது நடிக்க இயலாது என்று மறுத்ததுண்டா? பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு காட்சியில் மட்டுமே நடிக்கிறேன். ஒன்று அல்லது இரண்டு ஆண்களுடன் அல்லது பெண்களுடன் இணைந்து நடிக்கிறேன். எனது தயாரிப்பு நிறுவனமான ‘மார்க் டோர்ஸெ’ நிறுவனத்தில் நான் இதுவரை எதற்கும் மறுப்புச் சொன்னதில்லை. ஏனெனில் அவர்கள் தயாரிக்கும் படங்கள் செக்ஸியையும் கிளாமரையும் பிரதிபலிக்கும் படங்கள். வக்கிரமான படங்களை அவர்கள் தயாரிப்பதில்லை. Julien: ஆண்களின் கண்களுக்கு நீங்கள் இத்தனை கவர்ச்சியாயிருப்பதின் இரகசியம் என்ன? நான் எனது உடற் பராமரிப்பில் மிகவும் கவனம் எடுத்துக்கொள்கிறேன். எனது பதின்ம வயதுகளிலிருந்து எனது அதிகமான நேரங்களை அழகு நிலையங்களிலும் உடற்பயிற்சி மையங்களிலுமே செலவிடுகிறேன். Gillou: விரைவில் உங்களின் இருபத்தொன்பதாவது பிறந்த தினம் வரவிருக்கிறது என அறிந்தேன் உண்மைதானா? ஆம், உண்மைதான். ஜனவரி 18ம் தேதி என்னுடைய பிறந்தநாள் வருகிறது. எனக்குப் பிறந்தநாள் பரிசு அனுப்பி வையுங்கள். Noway: இந்த வாழ்க்கை எப்படியிருக்கிறது? நிம்மதியாக உணருகிறீர்களா? உங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் உங்களுடைய இந்தத் தொழிலை எந்தளவுக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்? படப் பிடிப்புகள், நடன விடுதிகளில் காட்சிகள் நிகழ்த்துவது, எனது காதலனுடன் வீட்டில் இருப்பதற்கான நேரத்தை ஒதுக்குவது என எப்போதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தாலும் நான் வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ்வதால் எனது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் சீராகவும் போய்க்கொண்டிருக்கிறது. எனது குடும்பத்தினருடனோ உறவினர்களுடனோ எனக்கு இப்போது எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்களால் எனது இந்தத் தொழிலை ஏற்றுக்கொள்ள முடியாது. Emre: நான் லியோன் நகரத்தில் வசிக்கும் இளைஞன். நீங்கள் நடித்த படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பேன். நீலப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை எப்படிப் பெறலாம் எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அது குறித்து எனக்குச் சில வழிகாட்டல்களைத் தருவீர்களா? நீலப் படங்களில் நடிக்க வாய்ப்புப் பெறுவதற்கு உங்களுடைய தளராத முயற்சியும் பயிற்சியும் முக்கியமானவை. உண்மையில் நீலப் படங்களில் நடிப்பதற்கு தேர்வாவதும் நடிப்பதும் மிகவும் கடினமானவை. கமராவின் முன்னாலும் படப்பிடிப்புக் குழுவினரின் முன்னாலும் நீங்கள் நிற்கும் போது உங்களது ஆணுறுப்பு விறைப்பை இழந்துவிடக் கூடாது. இது பயிற்சியினாலும் மனதை ஒருநிலைப் படுத்துவதாலுமே சாத்தியமாகும். நீங்கள் முதலில் சிறிய ‘அமெச்சூர்’ குழுக்கள் தயாரிக்கும் படங்களில் நடித்து அனுபவத்தையும் பெயரையும் பெற முயற்சிப்பதே சிறந்தது என்பது எனது ஆலோசனை. இணையத் தளங்களிலும் போர்னோ பத்திரிகைகளிலும் நடிகர்கள் தேவை என்று விளம்பரங்கள் அவ்வப்போது வெளியாவதுண்டு. அவர்களை அணுகிப் பாருங்கள். Ham: கமராவுக்கு வெளியே ஒரு நீலப்பட நடிகையின் வாழ்வு எப்படியிருக்கிறது? நீங்கள் நீலப்பட நடிகையென்று அறியவரும் போது உங்களை இழிவு செய்கிறார்களா? கமராவுக்கு வெளியே நான் அமைதியான ஒரு மனுஷி. நான் நீலப்பட நடிகையென்று தெரியவரும்போது எதிரிலிருப்பவர்கள் ஆச்சரியமடைகிறார்களே தவிர என்னை அவர்கள் இழிவு செய்வதில்லை என்றே நினைக்கிறேன். Dimal: நீங்கள் அல்ஜீரியாவில் பிறந்தவர். அப்படியான இறுக்கமான கலாச்சாரப் பின்னணியில் வந்த நீங்கள் ஒரு நீலப்பட நடிகையாக இருப்பதை உங்கள் பெற்றோர்கள் எப்படி உணருகிறார்கள்? நான் அல்ஜீரியாவில் பிறந்திருந்தாலும் எனது ஒன்பதாவது வயதிலேயே நாங்கள் குடும்பத்தோடு பிரான்சுக்குப் புலம் பெயர்ந்துவிட்டோம். நான் ஏற்கனவே சொல்லியது போல எனது பெற்றோர்களுடன் எனக்கு இப்போது எந்தத் தொடர்பும் கிடையாது. Thomas: பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிடுமா? பணத்திற்காக ஒரு பெண் தனது கவுரவத்தை விட்டுக்கொடுப்பதை எப்படிப் புரிந்து கொள்வது. காசு கொடுத்தால் நீங்கள் விலங்குகளைப் புணரும் காட்சிகளிலும் நடிப்பீர்களா? அல்லது மிக வறிய நிலையிலிருக்கும் பெண்கள்தான் அப்படியான காட்சிகளில் மிருகங்களுடன் நடிக்கிறார்களா? நிர்வாணத்திலும் அவமானத்திலும் கூட ஏழைகள் பணக்காரர்கள்; போன்ற வித்தியாசங்களுண்டா? சத்தியமாக நான் பணத்திற்காக நீலப்படங்களில் நடிக்கத் தொடங்கவில்லை. நான் என்னுடைய மகிழ்ச்சிக்காகவும் கொண்டாட்டத்துக்காகவும் மட்டுமே நீலப்படங்களில் நடிக்க வந்தேன். என்னுடைய விருப்பங்கள் எனக்கு முக்கியமானவை. அவற்றை வெறும் ஆழ்மன விருப்புகளாக மட்டுமே குறுக்கிக்கொண்டு என் உணர்வுகளுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. மிருகங்களுடன் நடிப்பது என் தொழில் இல்லை. தோமஸ்!அந்தக் கேள்வி எனக்கானது அல்ல. நானும் உங்களைப் போன்ற ஒரு சாதரண மானிடப் பிறவிதான். Jules: நீங்கள் உண்மையாகவே இந்தத் தொழிலை விரும்புகிறீர்களா? ஆம், மனப்பூர்வமாக விரும்புகிறேன். Mr K: ஜஸ்மின் உங்கள் வீட்டிலோ அல்லது நண்பர்கள் வீட்டிலோ இரவு விருந்துகள் நடைபெறும் போது உங்கள் படங்களில் காண்பிக்கப்படுவதைப் போல நீங்கள் நடந்துகொள்வதுண்டா? இல்லை, இந்த விருந்துகள் காதலாலும் நட்புகளாலும் மகிமைப்படுத்தப்படுபவை. Reds: நீலப்படங்களில் நடிகர்கள் எப்படி நீண்ட நேரமாக விந்து வெளியேறாமல் உடலுறவை நீட்டிக்கிறார்கள். இது எடிட்டிங் வித்தை என்றுதான் நான் நினைக்கிறேன். நடிகர்கள் படப்பிடிப்பின் போது ஊக்க மருந்துகளை உட்கொள்கிறார்களா? இதனால்தான் நீலப்பட நடிகர்களாக இருப்பது மிகவும் கடினமானது என்று சொன்னேன். அவர்கள் தங்களது ஆணுறுப்புகளை விறைப்பாகவே வைத்திருக்கும் அதே நேரத்தில் இயக்குனர் சொல்லும்வரைக்கும் விந்தையும் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஊக்க மருந்துகளையோ அல்லது நீண்ட நேரப் புணர்ச்சிக்கான சிறப்பு மருந்துகளையோ உபயோகிக்கும் நடிகர்களை நான் பார்த்ததில்லை. அவர்கள் விறைப்பை இழந்துவிட்டால் மனதை ஒருநிலைப் படுத்துவதன் மூலமே மீண்டும் குறி எழுச்சியைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால்தான் சில வேளைகளில் படிப்பிடிப்பு நீண்டு போகிறது. ஆனால் பொதுவாகத் தொழில்முறை நடிகர்களுக்கு இந்தச் சிக்கல்கள் ஏற்படுவதில்லை. Spamyo: நீங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் நீங்கள் படங்களில் நடிப்பது போல பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறீர்களா? எனக்கு உயிருக்குயிரான சில தோழிகள் இருக்கிறார்கள். ஆனால் நான் லெஸ்பியன் கிடையாது. என்னால் ஒரு பெண்ணைக் காதலிக்க முடியாது. நான் ஆண்களையே காதலிக்க விரும்புகிறேன். Kery- Dina : ஜஸ்மின் நாங்கள் உங்களது தொழிலை மிகவும் விரும்புகிறோம், மதிக்கிறோம். அத்துடன் சில விசயங்களைத் தெரிந்துகொள்ளவும் விரும்புகிறோம். இந்தத் தொழிலில் குறிப்பாக என்னென்ன சிரமங்களும் வலிகளும் உள்ளன என்று சொல்வீர்களா? நிச்சயமாக, படப்பிடிப்பின் போது நீண்ட பொறுமையையும் சகிப்பையும் காட்ட வேண்டியிருக்கிறது. இந்தத் தொழிலுக்கு நேரகாலம் கிடையாது. பொதுவாகவே அதிகாலையிலேயே எழுந்து இரவில் மிகத் தாமதமாகத் தூங்க வேண்டியிருக்கிறது. நீண்ட தூரங்கள் பயணங்கள் செய்து வசதி குறைவான விடுதிகளில் தங்கி நடிக்க வேண்டியிக்கிறது. முக்கியமாக நடிகைகளுக்குள்ளே போட்டியும் பொறாமையும் நிலவுவதையும் சொல்ல வேண்டும். படிப்பிடிப்பின் போது சக்தி வாய்ந்த விளக்குகளின் வெப்பத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். வெளிப்புறப் படப்பிடிப்புகளின் போது கடுங் குளிரிலோ அல்லது கடும் வெயிலிலோ ஆடைகளில்லாமல் நடிக்க வேண்டியிருக்கிறது. நீலப்படத் துறை மரபான சினிமாத்துறை போன்றதல்ல. இங்கே தொட்டதற்கெல்லாம் உதவியாளர்களும் பணியாளர்களும் இருக்கமாட்டார்கள். மரபான சினிமாத் துறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாதளவிற்கு மிகக் குறைவான சம்பளமே எங்களுக்கு வழங்கப்டுகிறது. Silvy: ஜஸ்மின் எந்த நடிகையை நீலப்படத் துறையில் உங்கள் முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறீர்கள்? உண்மையிலேயே நான் யாரையுமே முன்மாதிரியாகக் கொள்ளவில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். T Man: நீங்கள் ரம்ழான் நோன்பிருக்கிறீர்களா? நோன்பு காலப் பகுதியல் படப்பிடிப்புக்குப் போவீர்களா? போவீர்களானால் எந்த நேரத்தில் நடிக்கிறீர்கள்? இல்லை, நான் நோன்பிருப்பதுமில்லை, பெருநாளைக் கொண்டாடுவதுமில்லை. நான் ஒரு முஸ்லிமாகப் பிறந்திருந்தாலும் இப்போது நான் மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனாலும் நான் இப்போதும் இறை நம்பிக்கையுடையவள்தான். நான் விரும்புவதை நான் செய்கிறேன். நான் விரும்பியவாறு நான் வாழ்கிறேன். நான் என்னையும் பிறரையும் எப்போதுமே மரியாதை செய்கின்றேன். நான் வித்தியாசமான ஒரு தொழிலைச் செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் அந்தத் தொழிலைச் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் தைரியமாக, வெளிப்படையாக இருக்கும் அதே தருணத்தில் அதன் விளைவுகளையும் நானறிவேன். என்னால் போலித்தனமாக இருக்க முடியாது. நான் எனது கன்னிமையை எனது இருபதாவது வயதில்தான் என் காதலனிடம் கொடுத்தேன். நான் அந்தக் காதலனுடன்தான் இப்போதும் சேர்ந்து வாழ்கிறேன். என்னிடம் நீதி விசாரணை நடத்தவும் எனக்குத் தீர்ப்பளிக்கவும் இறைவன் ஒருவனைத் தவிர வேறெவருக்கும் உரிமையில்லை. நீங்கள் நோன்பிருக்கிறீர்களா? இருந்தால் உங்களுக்கு எனது ரம்ழான் வாழ்த்துகள். ‘புதுவிசை’ (ஏப்ரல்- யூன்) இதழில் வெளியாகியது வெள்ளிக்கிழமை ‘லுரெஸ்ரா’ தியேட்டரில் நடக்கவிருக்கும் ‘அன்னா கரீனினா’ நாடகத்துக்குத் தோழர். சாம்ஸனுடன் சேர்ந்து போவதற்காக நான் ‘லா சப்பல்’ மெத்ரோ நிலையத்துக்குள் தோழர். சாம்ஸனுக்காக நீண்ட நேரமாகக் காத்திருந்தேன். இப்பொழுது நேரம் மாலை 4. 40. இன்னும் இருபது நிமிடங்களில் நாடகம் தொடங்கிவிடும். இனி சாம்ஸன் வந்தாலும் இங்கிருந்து அடுத்த மெத்ரோ பிடித்து நாடக அரங்கிற்குப் போவதற்கிடையில் நாடகம் தொடங்கிவிடும். நாடகம் தொடங்கியதற்குப் பின்பு உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். இந்த வெள்ளிக்கிழமை விட்டால் இனி அடுத்த வெள்ளிக் கிழமை தான் மறுபடியும் ‘அன்னா கரீனினா’ நாடகம் நடக்கும். எனக்கு எரிச்சலாய்க் கிடந்தது. தாமதமாய் வந்தததற்காக நிச்சயமாக சாம்ஸன் அய்ந்து சதத்திற்குப் பெறுமதியில்லாத ஒரு காரணம் வைத்திருப்பார். ‘அன்னா கரீனினா’ நாடகத்தைத் தவறவிட்டாலும் வரத் தாமதித்திற்கான காரணத்தைச் சொல்லி சாம்ஸன் போடும் நாடகத்தை இன்று நான் பார்க்கலாம். “அவர் ஒரு பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும். சஞ்சல புத்தி உள்ளவர். கடவுள் நம்பிக்கையற்றவர். ஆரம்பத்தலிருந்தே மத மறுப்பு மற்றும் அவநம்பிக்கையால் பீடிக்கப்பட்டவர். முன்னொரு காலத்தில் மதம், சட்டம், அறநெறி ஆகியவற்றில் தோய்ந்து போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அதற்காக அடி வாங்கினார்கள். வேதனைகளை அனுபவித்தார்கள். இதன் மூலம் சிந்திப்பதற்கான சுதந்திரத்தைப் பெற்றார்கள். சுதந்திரச் சிந்தனையாளர்களாக வளர்ந்தார்கள். ஆனால் இப்பொழுது சுதந்திரச் சிந்தனையாளர்களில் புதிய ரகம் ஒன்று உருவாகியிருக்கிறது. அவர்களுக்கு மறுப்பு ஒன்றுதான் தெரியும். அவருக்கு செவ்வியல், இலக்கியம், தத்துவம் ஆகியவற்றைப் பற்றி எதுவும் தெரியாது. அவர் வெறுமனே மறுப்பு இலக்கியங்களை மட்டுமே படித்திருக்கிறார்” என்று ‘அன்னா கரினீனா’ நாவலில் கொலெனிஸஷே, ஓவியர் மிஹாய்லோவைப் பற்றிச் சொல்வார். இவ்வளவும் அப்படியே சாம்ஸனுக்கும் பொருந்தும். ஓவியர் மிஹாய்லோ என்பதற்குப் பதிலாக ‘TELO’ சாம்ஸன் என்று போட்டு எழுத வேண்டும். நேரம் அய்ந்தேகால் ஆகிவிட்டது. இந்த நேரம் நாடகத்தில் ஆப்லான்ஸ்கிக்கும் அவனது மனைவி தார்யா அலக்ஸாண்டரோவ்னாவிற்கும் சண்டை நடந்து கொண்டிருக்கும். சாம்ஸன் இன்னமும் வந்தபாடில்லை. கைத்தொலைபேசி வைத்திருக்கும் பழக்கமும் சாம்ஸனிடம் கிடையாது. அடுத்து வரும் மெத்ரோவைப் பார்த்துவிட்டு அதிலும் சாம்ஸன் வராவிட்டால் அறைக்குத் திரும்பிப் போக வேண்டியதுதான். அடுத்த வெள்ளிக்கிழமை தனியாக நாடகத்திற்குப் போய்விட வேண்டியதுதான். மெத்ரோ நிலையத்திற்குள் ஒரு இளம்பெண் வயலின் இசைத்துக் கொண்டிருந்தாள். அவள் ருமேனியா அல்லது ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவளாயிருக்கலாம். அவளின் முன்னால் தரையில் விரித்திருந்த துணியில் கணிசமான ஈரோ நாணயங்கள் கிடந்தன. அவளைக் கடந்து சென்ற பயணிகளில் சிலர் ஓரிரு நிமிடங்கள் நின்று அவளின் இசையைக் கவனித்துவிட்டு அவளின் முன்னால் நாணயங்களை வீசிவிட்டுப் போனார்கள். அவளின் வயலின் வாசிப்பு ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாயில்லை. அவள் நாணயங்களை வீசுபவர்களுக்கு நன்றி சொல்லத் தனது உடலை முன்னால் வளைத்த ஒவ்வொரு தருணங்களிலும் வயலின் இசை அறுந்துகொண்டிருந்தது. ‘லா சப்பலு’க்கு மேலாகச் செல்லும் பாலத்தில் மெத்ரோ நிலையம் அமைந்திருந்தது. நான் சலிப்புடன் கண்களை வெளியே எறிந்தபோது கீழே நல்லூர் திருவிழாக் கூட்டமாய்த் தமிழர்களின் தலைகள் அலைந்துகொண்டிருப்பது தெரிந்தது. ’லா சப்பல்’ மெத்ரோ நிலையத்தை ஒட்டி இரண்டு கிலோமீற்றர்கள் சுற்றளவில் தமிழர்களின் கடைத்தெரு விரிந்து கிடக்கிறது. மங்கை மளிகை, சரவணபவன் உணவகம், மாமா மீன்கடை, படையப்பா சலூன், மோகன் நகைமாடம், பராசக்தி சினிமா, செம்பருத்தி பூக்கடை, விஜய் கூல்பார், வேலும் மயிலும் ஸ்டோர், அறிவாலயம் புத்தகசாலை, அசின் அழகு நிலையம், குருஜி சோதிட மையம், தமிழருவி, சுவையருவி எனக் கடைத்தெரு களைகட்டிக் கிடந்தது. ஒரு வீடியோக் கடையின் முன்புறத்தில் கார்த்திகைப் பூவும் கையுமாக பிரபாகரன் நின்றிருக்கும் ‘போஸ்டர்’ ஒட்டப்பட்டிருந்தது. சாலையோரத் தடுப்புகளில் இளைஞர்கள் ஏறிக் குந்தியிருந்தார்கள். “முதன் முதலாகப் பாரிஸுக்கு வரும் ஒருவனை நேரே கொண்டுவந்து லா சப்பலில் இறக்கினால் அவன் ஏஜென்ஸிக்காரன் தன்னை ஏமாற்றி மறுபடியும் வன்னியிலோ மன்னாரிலோ கொண்டுவந்து கைவிட்டிருப்பதாகத்தான் நினைப்பான்” என்று முன்பொரு சிறுகதையில் ’லா சப்பலை’க் குறித்து நான் எழுதியிருப்பேன். இந்த மெத்ரோவிலும் தோழர் சாம்ஸன் வரவில்லை. நான் சோர்வோடு எழுந்திருந்தபோது வந்து நின்றிருந்த மெத்ரோவுக்குள்ளிருந்து ஒரு அழுக்கு மனிதர் மெல்ல இறங்கினார். அவரின் கறுத்த நெற்றியில் பட்டையாகப் பூசப்பட்டிருந்த விபூதியும் குங்குமமும் அவரின் இரு கைகளிலுமிருந்த இரண்டு பெரிய அழுக்குப் பயணப் பைகளும் அவரிடம் என் கவனத்தைக் குவித்தன. அவருக்கு நாற்பத்தைந்து அல்லது அய்ம்பது வயதிருக்கலாம். அந்த மனிதர் நாலரை அடி உயரம்தானிருப்பார். பஞ்சத்தில் அடிபட்டவரைப்போல அவரின் உடல் நைந்திருந்தது. இந்தக் கோடைகாலத்திலும் முழங்கால்களைத் தொடும் ஓர் அழுக்குக் குளிரங்கியை அவர் அணிந்திருந்தார். அவர் நடைபழகும் ஒரு குழந்தையைப் போலத் தட்டுத் தடுமாறிக் காலடிகளை வைத்து நடந்துகொண்டிருந்தார். அவரின் கைகளிலிருந்த பைகளை மிகுந்த சிரமத்துடன் அவர் இழுத்துப் பறித்துத் தன்னோடு எடுத்துச் சென்றார். நான் எதற்கென்று தெரியாமலேயே அந்த மனிதரைப் பின்தொடரலானேன். அந்த மனிதர் வயலின் வாசிக்கும் பெண்ணைக் கடந்தபோது அந்தப் பெண் அந்த மனிதரைப் பார்த்துப் புன்னகைத்தாள். நான் அந்தப் பெண்ணிற்கு ‘அன்னா’ என்று பெயரிட்டேன். அந்த மனிதர் மெத்ரோ நிலையத்தின் படிகளில் அடிமேல் அடிவைத்து இறங்கி ‘லா சப்பல்’ கடைத் தெருவிற்குள் நுழைந்தார். அவரின் பின்னாலேயே போய்க்கொண்டிருந்த நான் அந்த மனிதருக்கு ‘வெள்ளிக்கிழமை’ என்று பெயரிட்டேன். 2 மெத்ரோவிலிருந்து இறங்கிக் கடைத்தெருவிற்குள் நுழையும் எவரும் ஷாலினி அங்காடியைக் கடந்துதான் போகவேண்டும். அந்தக் கடையின் முன்னால் வெள்ளிக்கிழமை போய் நின்றார். தனது கையிலிருந்த பைகளை ஓரமாக வைத்துவிட்டு வெள்ளிக்கிழமை தெருவில் நின்று போவோர் வருவோரைக் கவனிக்கத் தொடங்கினார். முதலில் முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனைத் தேர்வு செய்து வெள்ளிக்கிழமை அவனைக் கூப்பிட்டு வணக்கம் சொன்னார். அந்த இளைஞன் நின்றபோது வெள்ளிக்கிழமை அவனிடம் மெல்லிய குரலில் ‘தம்பி சாப்பிடக் காசு ஏதாவது தருவீங்களோ, ரெண்டு நாளாய் சாப்பிடயில்லை’ என்று தன் வழுக்கைத் தலையைத் தடவினார். அந்த இளைஞன் வெள்ளிக்கிழமையை உற்றுப் பார்த்தான். வெள்ளிக்கிழமையிலிருந்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமைக்கு வாயில் ஒன்றிரண்டு பற்கள்தான் எஞ்சியிருந்தன. அவரின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. கண்கள் அரை மயக்கத்தில் கிடந்தன. அந்த இளைஞன் புன்னகைத்துக்கொண்டே ‘எதுக்குத் தண்ணியடிக்கவா காசு?’ என்று கேட்டான்;. ‘இல்ல…நான் குடிக்கிறதில்ல, பசிக்குது ஒரு ரெண்டு ஈரோ தாருங்கோ இடியப்பம் சாப்பிடலாம்’ ‘சரி என்னோட வாங்க சாப்பாடு வாங்கித்தாறன்’ ‘இல்ல நீங்க காசு தாங்கோ… நான் பிறகு சாப்பிடுவன்’ என்று தலையைக் குனிந்தவாறே வெள்ளிக்கிழமை முணுமுணுத்தார். அந்த இளைஞன் புன்னகைத்தவாறே ‘நீங்கள் குடிக்கத்தான் காசு கேக்கிறியள்’ என்று சொல்லிக்கொண்டே தனது காற்சட்டைப்பையைத் துளாவிச் சில சில்லறை நாணயங்களை எடுத்து வெள்ளிக்கிழமையிடம் கொடுத்துவிட்டுப் போனான். இப்போது வெள்ளிக்கிழமையின் முகம் ஒளிர்ந்தது. அவர் அந்தச் சில்லறை நாணயங்களை எண்ணியபோது மூன்று ஈரோக்களும் முப்பது சென்ரிமுகளும் தேறின. வெள்ளிக்கிழமை அந்த நாணயங்களைக் கைகளிற்குள் போட்டுக் குலுக்கியவாறே ஷாலினி கடைக்குள் நுழைந்தார். வெள்ளிக்கிழமையை உற்றுப்பார்த்த கடைக்காரர் ‘வைன் போத்தல் அங்கேயிருக்கு’ என்று ஒரு மூலையை நோக்கிக் கையைக் காட்டினார். கடைக்காரரின் குரலைக்கேட்டுச் சடாரெனத் திரும்பிய வெள்ளிக்கிழமை ஆங்காரத்துடன் தனது இடுப்பில் கைகைளை வைத்துக்கொண்டு ‘உம்மிட்ட குத்துவிளக்கு இருக்கோ’ என்று கேட்டார். கடைக்காரர் வெள்ளிக்கிழமையை மேலும் கீழுமாகப் பார்த்துக்கொண்டே எழுந்து வந்து ஒரு சிறிய குத்துவிளக்கை கைகளில் எடுத்துக் காட்டினார். ‘சே கொம்மியான்?’ என்று வெள்ளிக்கிழமை கேட்டார். கடைக்காரர் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே ‘பத்து ஈரோ’ என்றார். ‘குறைக்கமாட்டியளோ?’ ‘இஞ்ச ஒரே விலைதான்’ ‘இந்தக் குத்துவிளக்கை மார்கடேயில நாலு ஈரோவுக்கு விக்கினம்’ ‘உம்மட்ட அய்ஞ்சு ஈரோப்படி வேண்டுறன் ஒரு நூறு குத்துவிளக்குக் கொண்டுவாரும்’ என்று சொல்லிக்கொண்டே கடைக்காரர் குத்துவிளக்கை எடுத்த இடத்தில் வைத்தார். வெள்ளிக்கிழமை அந்தக் கடையில் ஒரு கற்பூரமும் ஒரு பெட்டி ஊதுபத்தியும் ஒரு எண்ணைப் போத்தலும் வாங்கிக்கொண்டு எண்ணி மூன்று ஈரோக்கள் இருபது சென்ரிம்களைக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு ‘குத்துவிளக்கை வைச்சிருங்கோ கொஞ்சம் செல்ல வாறன்’ என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தவர் திரும்பவும் உள்ளே ஓடிப்போய் ‘எத்தினை மணிக்கு கடையைப் பூட்டுவிங்க?’ என்று கடைக்காரரிடம் கேட்டார். கடைக்காரர் புன்னகைத்துக்கொண்டே ’பத்து மணிக்குத்தான் பூட்டுவன் நீர் ஆறுதலாய் வாரும்’என்றார். வாங்கி வந்த பொருட்களைத் தெருவேராமாயிருந்த தனது பைக்குள் பத்திரமாக வைத்துவிட்டு வெள்ளிக்கிழமை ஷாலினி கடையின் முன்னால் நின்று மீண்டும் தெருவில் போவோர் வருவோரைக் கவனிக்கத் தொடங்கினார். இப்போது குத்துவிளக்கு வாங்குவதற்கு வெள்ளிக்கிழமைக்கு பத்து ஈரோக்கள் தேவை. கையில் முருங்கைக்காயும் பையுமாக வந்த பச்சை சேர்ட் அணிந்திருந்த ஒரு நடுத்தர வயதானவரை நெருங்கிய வெள்ளிக்கிழமை ‘வணக்கம்’ என்றார். திடுக்குற்றுப்போன பச்சைச் சேர்ட் ஓரடி துள்ளிப் பாய்ந்து வெள்ளிக்கிழமையை விலக்கிப்போக அவர் பின்னாலேயே போன வெள்ளிக்கிழமை ‘வணக்கம் பாருங்கோ’ என்றார். பச்சைச் சேர்ட் நடையை வேகமாய் போடப் பின்னாலேயே துரத்திக்கொண்டுபோன வெள்ளிக்கிழமை ‘கூப்பிடறது கேக்கலையே’ என்று குரலை உயர்த்தவும் பச்சைச் சேர்ட் கொஞ்சம் நடையின் வேகத்தைக் குறைத்தார். அவரை நெருங்கிய வெள்ளிக்கிழமை ‘உடுப்புத் தோய்க்கக் காசில்லை ஒரு அய்ஞ்சு ஈரோ வேணும்’ என்றார். பச்சைச் சேர்ட் உணர்ச்சியே இல்லாத கண்களால் வெள்ளிக்கிழமையைப் பார்த்துவிட்டு மறுபடியும் வேகமாக நடக்கத் தொடங்கினார். இப்போது வெள்ளிக்கிழமை தனக்குத்தானே பேசிக்கொண்டு வீதியில் நின்றார். ஒரு முதியவரிடமிருந்து ஒரு ஈரோவும், ஒரு கோட்சூட் மனிதரிடமிருந்து அய்ம்பது சென்ரிமும் வெள்ளிக்கிழமைக்குக் கிடைத்தன. இருபது வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞனைக் கண்டபோது வெள்ளிக்கிழமை அவனிடம் ‘தம்பி நான் சார்சலில இருக்கிறானான். போறதுக்கு ரெயின் ரிக்கட் எடுக்கக் காசில்லை நாலு ஈரோ உங்களிட்ட இருக்குமா?’ என்று கேட்டார். அந்த இளைஞன் எடுத்த எடுப்பிலேயே ‘இந்தா! உங்களை மாதிரி ஆக்களாலதான் தமிழன்ர மரியாதை போகுது’ என்று சொல்லிவிட்டு வெள்ளிக்கிழமையை முறைத்தான். அதைக் கேட்டதும் வெள்ளிக்கிழமைக்குக் கோபம் உச்சியிலடித்தது. வெள்ளிக்கிழமை கண்களைத் தாழத்தியவாறே ‘காசு தர விருப்பமில்லாட்டி வாயைப் பொத்திக்கொண்டு போ! தேவையில்லாக் கதை வேண்டாம்’ என்றார். இளைஞன் உதட்டைக் கடித்துக் கைகயைத் தூக்கிக்கொண்டு வெள்ளிக்கிழமைக்கு அடிக்க வந்தபோது வெள்ளிக்கிழமை இரண்டடி பின்வாங்கி த்தூ… த்தூவென்று அந்த இளைஞனை நோக்கி எச்சில் துப்பினார். அந்த எச்சில் துளிகள் அந்த இளைஞனின் சட்டையில் பட்டதும் அவன் ஆடாமல் அசையாமல் ஒரு நிமிடம் அப்படியே நின்று குனிந்து தனது சட்டையில் தெறித்திருந்த எச்சிற் துளிகளைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பேசாமல் தன் வழியில் போனான். இதற்குப் பின்பு பொடியளிடம் காசு கேட்பதை வெள்ளிக்கிழமை தவிர்த்துக்கொண்டார். கைவண்டியில் குழந்தையை வைத்துத் தள்ளிக் கொண்டுவந்த மனிதனைக் கண்ட வெள்ளிக்கிழமை அந்த மனிதனிடம் ‘மருந்து வாங்க வேண்டும்’ என்று பணம் கேட்டார். அந்த மனிதன் கொஞ்ச நேரம் நின்று வெள்ளிக்கிழமையை மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘நீர் சிலோனில எவ்விடம்’ என்று கேட்டான். ‘யாழ்ப்பாணம்’ ‘யாழ்ப்பாணமெண்டால்?’ ‘யாழ்ப்பாணம்தான்’ அந்த மனிதன் புன்னகைத்தவாறே இரண்டு ஈரோ நாணயத்தைத் தனது குழந்தையிடம் கொடுத்து அதை வெள்ளிக்கிழமையிடம் கொடுக்கச் சொன்னான். குழந்தையிடமிருந்து நாணயத்தை வாங்கிய வெள்ளிக்கிழமை ‘அண்ணே எங்கயாவது வேலை வந்தாச் சொல்லுங்கோ’ என்று கைகளைப் பிசைந்தவாறே அந்த மனிதனிடம் சொன்னார். வெள்ளிக்கிழமை அய்ந்து பேரிடம் காசு கேட்டால் அவர்களில் ஒருவராவது காசு கொடுத்தார். மாலை ஏழுமணியளவில் வெள்ளிக்கிழமையின் கைகளில் பத்து ஈரோக்கள் சேர்ந்துவிட்டன. வெள்ளிக்கிழமை ஷாலினி கடையினுள் நுழைந்து கடைக்காரரின் மேசையில் சில்லறைகளைப் பரப்பிவிட்டு கடைக்காரரை மிதப்பாகப் பார்த்து ‘பொருளை எடுங்கோ’ என்றார். கடைக்காரர் மிக நிதானமாக வெள்ளிக்கிழமையின் சில்லறைகளை எண்ணிப் பார்த்துவிட்டுக் குத்துவிளக்கை ஒரு பையில் போட்டு வெள்ளிக்கிழமையிடம் கொடுத்தார். வெளியே வந்த வெள்ளிக்கிழமை குத்துவிளக்கை எடுத்து உருட்டி உருட்டிச் சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு அதைத் தனது பைக்குள் வைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினார். இப்போது, வெள்ளிக்கிழமை ‘லா சப்பல்’ மெத்ரொ நிலையத்திற்குக் கீழேயுள்ள சிறிய பூங்காவிற்குள் நுழைந்தார். அந்த மாலை நேரத்தில் ஒரு புறமாகச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க மறுபுறத்தில் சில தமிழர்கள் நடுவில் விஸ்கிப் போத்தலை வைத்துவிட்டுச் சுற்றிவரயிருந்து குடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சிலாபத்துறையைச் ஸ்ரீலங்கா இராணுவம் கைப்பற்றிய செய்தியில் உண்மையிருக்கிறதா இல்லையா என்று சத்தம்போட்டு விவாதித்துக்கொண்டிருந்தார்கள். வெள்ளிக்கிழமை நேராக அங்கிருந்த பூச்செடிகளிடம் போய் பூக்களைக் கொய்து தனது குளிரங்கியின் பைகளுக்குள் திணிக்கத் தொடங்கினார். விளையாடிக்கொண்டிருந்த ஒரு ஆபிரிக்கச் சிறுவன் பந்தை உதைத்தபடியே வெள்ளிக்கிழமையிடம் ஓடிவந்து ‘பூக்களைப் பறிக்கவேண்டாம்’ எனச் சொன்னான். அவன் சொன்னது வெள்ளிக்கிழமைக்குப் புரியவில்லை. அவர் கீழே கிடந்த ஒரு சுள்ளியை எடுத்து ‘அலே’ என்று உறுக்கி அந்தச் சிறுவனை விரட்டினார். சிறுவன் கண்களில் வியப்பும் அச்சமும் மேலெழப் பந்தை உருட்டிக்கொண்டு திரும்பி ஓடிப்போனான். தனது குளிரங்கியின் பைகளை மலர்களால் நிரப்பியதும் வெள்ளிக்கிழமை தனது பயணப் பைகளைச் சுமக்க முடியாமல் சுமந்தபடியே மறுபடியும் மெத்ரோ நிலையத்திற்குள் நுழைந்தார். மெத்ரோ வரும் மேடைக்குப் போவதற்கு ரிக்கட் தேவைப்படும். அந்த ரிக்கட்டைக் கதவில் செருகினால்தான் கதவு திறந்து உள்ளே செல்ல வழிவிடும். வெள்ளிக்கிழமை அந்தக் கதவின் முன்னால் நோட்டம் பார்த்துக்கொண்டு நின்றார். ஒரு பெண்மணி கதவில் ரிக்கட்டைச் செருகிக் கதவைத் திறக்கும்போது அவளை உரசிக்கொண்டே வெள்ளிக்கிழமையும் கதவிற்குள் நுழைந்து கதவு மறுபடியும் மூடாதவாறு கதவிற்குக் காலால் முட்டுக்கொடுத்தபடியே தனது பயணப் பைகளை லாவகமாக உள்ளிளிழுத்துக்கொண்டு ஒவ்வொரு படியாக நின்று நிதானித்து ஏறி மெத்ரோ மேடைக்கு வந்தார். அன்னா வயலினில் ‘யெய் சரா, சரா’ வாசித்துக்கொண்டிருந்தாள். அந்த மெத்ரோ மேடை நூறு மீற்றர்கள் நீளமும் நான்கு மீற்றர்கள் அகலமும் கொண்டது. இப்போது மேடையில் கூட்டமில்லை. மேடையில் நின்றுகொண்டிருந்த ஏழெட்டுப் பேர்களையும் இரண்டு நிமிடங்களிற்கு ஒருமுறை வந்த மெத்ரோ அள்ளிப் போனது. வெள்ளிக்கிழமை மெத்ரோ மேடையின் ஒரு மூலையில் போய் நின்றார். அங்கே அவரைத் தவிர யாருமில்லை. மேடையின் நடுவில் அன்னா வயலின் இசைத்துக்கொண்டிருந்தாள். வெள்ளிக்கிழமை அந்த மூலையில் தனது பயணப் பைகளை வைத்துத் திறந்தார். உள்ளிருந்து ஒரு சட்டமிடப்பட்ட படத்தை எடுத்து அந்த மூலையில் தரையில் நிறுத்திச் சுவரோடு சாய்த்துவைத்தார். தனது குளிரங்கியின் பைகளுக்குள் கைகளை நுழைத்து மலர்களை எடுத்து அந்தப் படங்களிற்கு முன்னால் வைத்தார். பயணப் பையிலிருந்து தேங்காயை எடுத்து மெத்ரோ மேடையின் ஓரத்துக்குச் சென்று மேடையின் விளம்பில் தேங்காயை மோதி ஒரே அடியில் சரிபாதியாக உடைத்தார். உடைத்த தேங்காய்ப் பாதிகளை மூக்கினருகே வைத்து முகர்ந்து பார்த்துவிட்டுத் தலையை ஆட்டியவாறே அவற்றை அந்தப் படத்தின் முன்னால் வைத்தார். பின்பு அங்கிருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்தவாறே ஒரு அழுக்குத் துணியை எடுத்துக் கீலமாகக் கிழித்துத் தனது தொடையில் வைத்து உருட்டிக் குத்துவிளக்கிற்குத் திரி தயாரித்தார். திரி தயாரானதும் குத்துவிளக்கை வெளியில் எடுத்து அந்தப் படத்திற்கு முன்பாக நிறுத்தி எண்ணையூற்றி எண்ணையில் திரியை வைத்தார். குத்துவிளக்கைப் படத்திற்கு வலது புறத்தில் நகர்த்தி வைத்தவர் படத்திற்கு இடதுபுறத்தில் கற்பூரத்தை வைத்தார். தனது காற்சட்டைப் பையிலிருந்து ஒரு வாழைப்பழத்தை எடுத்தவர் பாதிப் பழத்தைத் தின்றுவிட்டு மற்றப் பாதியை படத்திற்கு முன்னால் வைத்து அதன்மேல் ஊதுபத்திகளைச் செருகி வைத்தார். சட்டைப் பையிலிருந்து ஒரு சரையை எடுத்துப் பிரித்து அந்தப் படத்திற்குச் சந்தனத்தாலும் குங்குமத்தாலும் அலங்காரம் செய்தார். அந்த வேலைகள் முடிந்ததும் தனது மற்றப் பயணப்பையைத் திறந்த வெள்ளிக்கிழமை அதனுள்ளிருந்து ஒரு பெரிய ரேப்ரெக்கோடரை எடுத்து அதில் எச்சில் உமிழ்ந்து தனது அழுக்குக் குளிரங்கியின் ஓரத்தால் அதனைச் சரசரவென ஓசையெழத் துடைத்து படத்திற்கு முன்னால் வைத்தார். இப்போது அவர் ரேப்ரெக்கோடரைத் தட்டிவிடச் சீர்காழி கோவிந்தாஜனின் குரலில் தேவாரப் பாடலொன்று அந்த மெத்ரோ மேடையில் ஒலிக்கலாயிற்று. மேடையின் நடுவே நின்றிருந்த அன்னாவிற்குத் தேவாரம் கேட்டிருக்க வேண்டும். அவள் வெள்ளிக்கிழமையைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள். வெள்ளிக்கிழமை மெத்ரொ மேடையின் விளிம்பிற்குச் சென்று நின்று இடுப்பில் கைகளை ஊன்றியவாறே தலையைச் சாய்த்து தனது ஏற்பாடுகளை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டார். திருப்தியுடன் தலையை அசைத்துக்கொண்டே சட்டைப் பையிலிருந்து லைட்டரை எடுத்துக் குத்துவிளக்கை ஏற்றினார். ஊதுபத்தியையும் பின்பு கற்பூரத்தையும் கொழுத்திவிட்டுக் கைகளைத் தலையில் குவித்து அந்தப் படத்தைப் பார்த்துக் கும்பிட்டார். பின்பு அப்போது நிலையத்திற்குள் நுழைந்துகொண்டிருந்த மெத்ரோவின் முன்னால் மேடையிலிருந்து குதித்தார். ‘சக்’ என்று வெள்ளிக்கிழமையில் மெத்ரோ மோதிய சத்தம் அன்னாவிற்குக் கேட்டது. அடுத்த இரண்டு நிமிடங்களில் பொலிஸார் வந்து அன்னாவை விசாரித்தபோது மெத்ரோ மேடையில் குத்துவிளக்கு, தேங்காய், ஊதுபத்திகளிற்குப் பின்னாலிருந்த புகைப்படத்தில் காணப்படும் மனிதர்தான் மெத்ரோவின் முன்னால் குதித்தவர் என்று அன்னா சாட்சியம் சொன்னாள். சொல்லிவிட்டுத் தனது வாயை இருகைகளாலும் மூடிக்கொண்டிருந்தவள்; கைகளை விலக்கி அந்தப் புகைப்படத்தைக் காட்டி ‘இது பத்து அல்லது பதினைந்து வருடங்களிற்கு முன்பு எடுக்கப்பட்ட படமாயிருக்கலாம்’ என்றாள். 3 அந்த இரக்கத்துக்குரிய மனிதர் மெத்ரோவின் முன்னால் விழுந்து தற்கொலை செய்ததற்கு அடுத்த வெள்ளிக்கிழமை ‘லா சப்பல்’ மெத்ரோவில் நான் தோழர் சாம்ஸனைச் சந்தித்தேன். இன்று சாம்ஸன் நான்கு மணிக்கே வந்து மெத்ரோவில் உட்கார்ந்திருந்தார். ‘அன்னா கரீனினா’ நாடகம் தொடங்குவதற்கு இன்னும் நிறைய நேரமிருந்தது. நானும் சாம்ஸனும் மெத்ரோ நிலையத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தபோது நான் எனது கையில் வைத்திருந்த தாள்களைச் சாம்ஸனிடம் கொடுத்து ‘வாசிச்சுப் பாருங்கோ’ என்றேன். ஆர்வத்துடன் தாள்களை வாங்கிய சாம்ஸனிடம் ‘அந்த மனுசன் மெத்ரோவுக்கு முன்னால குதிச்ச இரவு முழுக்க எனக்குத் துண்டற நித்திரையில்லை. இரவிரவா முழிச்சிருந்து இந்தக் கதையை எழுதினான்’ என்றேன். அந்தக் கதையின் தலைப்பு ‘வெள்ளிக்கிழமை’. சாம்ஸன் கதையைப் படிக்கப் படிக்க நான் அவரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். சாம்ஸனின் உதடுகளில் புன்னகை கீற அவர் வேகமாகப் படித்துக்கொண்டிருந்தார். படித்து முடித்தபோது அவரின் உதட்டிலிருந்த புன்னகை ஒரு எள்ளல் சிரிப்பாக மாறி என்னை வதைக்கத் தொடங்கியது. சாம்ஸன் கையிலிருந்த தாள்களை என்னிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. அவற்றைச் சுருட்டித் தனது இடது கையில் பிடித்துத் தனது தலைக்கு மேலே உயர்த்தியவாறே எழுந்திருந்தார். நானும் அவருடன் கூட எழுந்து நின்றேன். சாம்ஸன் திடீரெனக் குரோதத்துடன் என்னைப் பார்த்தார். பின்பு ‘நீங்கள் எப்பிடி அந்த மனுசனைக் கொலை செய்ய ஏலும்’ என்று கேட்டார். சாம்ஸன் பேசுவது கணிதச் சூத்திரம் மாதிரியிருக்கும். ஒற்றை வார்த்தைதான் பேசுவார். அதைப் பேசிவிட்டு அவரின் மனதில் இருப்பவற்றையெல்லாம் அந்த ஒற்றை வார்த்தையூடாக நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் எதிர்பார்ப்பார். அவர் நினைத்ததை நாம் புரிந்துகொள்ளாவிட்டால் எம்மைக் கொலைக் குற்றவாளிகளைப் போலப் பார்ப்பார். நான் மௌனமாக நின்று அந்த மனிதர் தண்டவாளத்தில் விழுந்து இறந்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். சாம்ஸன் என் முகத்தைப் பார்த்து ‘வழியில்லாதவன், பிச்சை எடுக்கிறவன் குடிகாரன் சாகத்தான் வேணுமா?’ என்று கேட்டார். நான் மெதுவாக ‘செத்துத்தானே போனான், அதுவும் என்ர கண்ணுக்கு முன்னால’ என்று சொல்லிவிட்டு என் உள்ளங்கையால் என் நெற்றியில் படாரென அடித்தேன். நான் அந்த மனிதனுக்காக மிகவும் வருந்துகிறேன் என்பதைச் சாம்ஸனுக்கு உணர்த்தத்தான் நான் எனது நெற்றியில் ஓங்கி அடித்திருக்க வேண்டும். சாம்ஸன் இப்போது வாய்விட்டுச் சிரித்தார். சிரித்து ஓய்ந்ததும் மறுபடியும் ‘அந்த மனுசனை மெத்ரோவுக்கு முன்னால நீங்கள் எப்படித் தள்ளலாம்?’ என்று கேட்டார். அவரின் உயர்ந்திருந்த இடது கையில் நான் எழுதிய தாள்களிருந்தன. இன்று முழுவதும் பேசினாலும் இந்த முட்டாள் சாம்ஸன் இதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருப்பார் என்பது தெரிந்தது. நான் மெதுவாக ‘நாடகத்துக்கு நேரமாயிற்றுது போகலாம்’ என்றேன். போகலாம் என்பது மாதிரித் தலையசைத்த சாம்ஸன் உயர்த்திப்பிடித்த கையுடனேயே நடக்கத் தொடங்கினார். நான் அவரிடமிருந்து தாள்களை வாங்குவதற்காகக் கைகளை நீட்டியபோது சாம்சன் என்னிடமிருந்து சற்று விலகி எனது கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டே ‘அந்த மனுசனைக் கொலை செய்ய உங்களுக்கு எப்பிடி மனம் வந்துது?’ என்று கேட்டுவிட்டுத் தனது கையிலிருந்த தாள்களை மெத்ரோ நிலையத்திற்குள் விசிறியடித்தார். அப்போது மெத்ரோ நிலையத்தினுள் சனக் கூட்டமாயிருந்தது. சனங்கள் எனது கதைத் தாள்களை மிதித்துக்கொண்டு நடக்கலானார்கள். நான் சனங்களிடையே புகுந்து எனது கதைத் தாள்களை பொறுக்கத் தொடங்கினேன். பொறுக்கிக்கொண்டிருந்த போது ஒரு மனிதரில் ‘மடாரெ’ன மோதி நான் நிமிர்ந்தபோது அங்கே வெள்ளிக்கிழமை அதே அழுக்குக் குளிரங்கியுடன் என் முன்னே நின்றிருந்தார். நான் அவரில் பலமாக மோதியிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தனது மார்பைப் பொத்திப் பிடித்திருந்தார். அவரின் முகத்தில் வலி தெரிந்தது. அவர் முகத்தைச் சுழித்துக்கொண்டே ’மனுசரில இடிபடாம பார்த்துப் போகவேணும்’ என்று சொல்லிவிட்டுத் தனது பயணப் பைகளை இழுத்துக்கொண்டு நடந்தார். நான் தாள்களைப் பொறுக்குவதைக் கைவிட்டு அதிர்ந்துபோய், நடந்துபோகும் வெள்ளிக்கிழமையையே பார்த்துக்கொண்டிருந்தேன். வெள்ளிக்கிழமை அன்னாவைக் கடந்தபோது வயலினை உறைக்குள் வைத்துக்கொண்டிருந்த அன்னா வெள்ளிக்கிழமையைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுத் தன் முன்னே தரையில் விரித்திருந்த துணியில் கிடந்த சில்லறை நாணயங்களைப் பொறுக்கத் தொடங்கினாள். பரபாஸ் “பொந்தியோ பிலாத்து அவர்களை நோக்கி; எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாஸையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ என்று கேட்டான்” (மத்தேயு 27:18)  நீங்கள் சந்தியாப்புலத்திற்குப் போயிருக்கமாட்டீர்கள்! இப்போது சந்தியாப்புலத்தில் கடற்படையினர் மட்டுமேயிருக்கிறார்கள். உருக்கெட்டுக் கிடக்கும் சந்தியோகுமையர் தேவாலய மண்டபத்தில்தான் படையினரின் தலைமையகம் இயங்குகின்றது. சந்தியாப்புலத்தின் மணலில் மனிதர்களின் வெற்றுப் பாதங்கள் பதிந்து இருபத்தொரு வருடங்களாகின்றன. படையினரின் பூட்ஸ் தடயங்கள் மட்டுமே இப்போது அந்தக் கிராமத்தில் பதிந்திருக்கின்றன. கால்களால் நடந்து செல்லும் மிருகங்கள்கூட சந்தியாப்புலத்தில் கிடையாது. வயிற்றினால் ஊர்ந்து போகும் பாம்புகள் புழுக்களின் தடங்களே சந்தியாப்புலத்தின் மணலில் பதிந்து கிடக்கின்றன. படையினர் சந்தியாப்புலத்தில் எந்தச் சண்டையையும் எதிர்கொண்டதில்லை. அவர்களுக்கே தாரைவார்த்துக் கொடுத்ததுபோல சந்தியாப்புலம் அவர்களிடம் அடங்கியே கிடக்கின்றது. இங்கிருக்கும் சிப்பாய்கள் அந்நிய மனிதர்களைப் பார்த்தே வெகுநாட்களாகின்றன. அவர்கள் போர் செய்வதையே கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள். அவ்வப்போது மனநிலை பிறழும் ஒரு வீரன் தனது மேலதிகாரியையோ சகவீரனையோ போட்டுத் தள்ளுவதைத் தவிர வேறெந்த வெடிச் சத்தங்களும் சந்தியாப்புலத்தில் கேட்டதில்லை. இங்கே தற்கொலை செய்துகொள்ளும் எல்லா வீரர்களுமே ஒன்றில் பண்டிகை நாட்களுக்கு முதல்நாளில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அல்லது பண்டிகைக்கு அடுத்த நாளில் தற்கொலை செய்கிறார்கள். இங்கே படையினரின் அன்றாட நடைமுறைகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. அவர்கள் காலையிலோ மாலையிலோ அணிவகுத்து நடப்பதில்லை. அவர்களின் தலைமுடிகள் கடல்நீரில் தொடர்ந்து குளித்ததால் நீளமாகச் செம்பட்டை பற்றிக் கிடந்தன. அவர்கள் சவரம் செய்து கொள்வதும் கிடையாது. அவர்கள் சீருடைகள் அணிவதும் கிடையாது. அவர்கள் வெறும் அரைக் கச்சைகளுடன் சந்தியாப்புலத்தில் சோர்வுடன் அலைந்துகொண்டிருந்தார்கள். ஆனால் முழங்கால்கள்வரை வரும் கனமான கறுப்பு இராணுவக் காலணிகளை மட்டும் அவர்கள் அணியத் தவறுவதேயில்லை. அவர்கள் தூங்கும்போதுகூடக் கால்களிலிருந்து காலணிகளை அகற்றினார்களில்லை. மாதத்திற்கு ஒருதடவை காரைநகர் கடற்படை முகாமிலிருந்து சந்தியாப்புலம் கரைக்கு வரும் விசைப்படகு விஜிதாவை சந்தியாப்புலத்தில் இறக்கிவிட்டுப் போகும். விஜிதா கணுக்கால் தண்ணீரில் நடந்து கரைக்கு வரும்போது சிப்பாய்கள் அவள் அணிவதற்காக ஒருசோடி இராணுவக் காலணிகளைக் கரையில் தயாராக வைத்திருப்பார்கள். அந்தக் காலணிகளை அணிந்து அவளால் சரிவர நடக்க முடியாது. அவள் காலணிகளுக்குள் தன் பருத்த கால்களை நுழைத்துக்கொண்டு சேலையைத் தொடைகள்வரை தூக்கிப் பிடித்துக்கொண்டு கால்களை அகட்டி அகட்டி நடப்பாள். அவள் சிப்பாய்களுடன் முயங்கும்போது நாட்கணக்கில் சந்தியாப்புலத்தின் சுடுநிலத்தில் முதுகு கருக நிர்வாணியாய்க் கிடப்பாள். ஆனால் அப்போதும் அவளின் கால்களில் பூட்ஸுகள் கிடக்கும் உங்களுக்குக் ‘காந்தியம்’ டேவிட் அய்யாவையோ அல்லது தனிநாயகம் அடிகளையாரோ தெரிந்திருக்கும். இல்லாவிட்டால்தான் என்ன உங்களுக்குக் கண்டிப்பாக ஏ.ஜே.கனரட்ணாவையோ யையோ தெரிந்துதானிருக்கும். இவர்கள் பிறந்த கரம்பொன் கிராமத்திலிருந்து வடக்கு நோக்கி நீங்கள் பற்றை வெளியூடாக நடந்து சென்றால் பதினைந்து நிமிட நடைதூரத்தில் பூமி கரையத் தொடங்குவதைக் காண்பீர்கள். கற்பூமி களிமண்ணாகித் தரவையாகிக் குறுமணலாகிச் சொரிமணலாய்க் கிடக்கும் சிறிய நிலப்பரப்பை இப்போது நீங்கள் வந்தடைந்திருப்பீர்கள். தம்பாட்டிக் கடலோரத்தில் கிடக்கும் அந்தக் குறிச்சிக்குத்தான் சந்தியாப்புலம் என்று பெயர். முன்பு குறிச்சியின் நடுவே சந்தியோகுமையர் தேவாலயமிருந்தது. முன்பு குறிச்சியின் கிழக்குத் தெருவில் கூட்டுறவுச் சங்கத்தின் கடையிருந்தது. முன்பு தேவாலயத்தை ஒட்டி ரோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையிருந்தது. முன்பு குறிச்சியின் கடலோரமாகக் கள்ளுத் தவறணையிருந்தது. முன்பு சந்தியாப்புலத்தின் மக்கள் கடும் இறைவிசுவாசிகளாயும் சோம்பேறிகளுமாயிருந்தனர். இந்தக் கிராமத்தில்தான் இருபத்தொரு வருடங்களிற்கு முன்பு வில்லியம் என்ற திருடன் இருந்தான். 2 கள்ளக் கபிரியல் சாகும்போது அநாதையாகத்தான் இறந்தார். அப்போது சந்தியாப்புலமே ஆறாத சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. கிராம மக்கள் மிகுந்த அக்கறையுடன் கள்ளக் கபிரியேலின் இறுதிச் சடங்குகளைச் செய்தார்கள். சின்னமடுவிலிருந்து இரண்டு கூட்டம் பறைமேளங்கள் வரவழைக்கப்பட்டன. பாடல்களைப் பாடுவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து சுதிமரியான் கொண்டுவரப்பட்டார். சுதிமரியான் தனது எக்கோர்டியனை இசைத்தவாறே “கெட்டுப் போனோம் பாவியானோம் சிலுவைசெய் நாதனே” என்று கட்டைக் குரலெடுத்துப் பாடிக்கொண்டிருக்கக் கோடித் துணியுடுத்து அலங்கரிக்கப்பட்ட தோம்புவில் ஏற்றி ஒரு கடவுளைப்போல கிராமத்து மக்கள் கபிரியலை ஊர்வலமாகச் சவக்காலைக்கு எடுத்துச் சென்றனர். சந்தியாப்புலம் இரவு எட்டு மணிக்கெல்லாம் அடங்கிவிடும். வருடம் முழுவதுமே இரவு பகலாகத் தகிக்கும் வெம்மையால் ஆண்கள் வீட்டின் முற்றங்களில்தான் படுத்துக் கிடப்பார்கள். அமாவாசையை ஒட்டிய நாட்களில் ஒருநாள் சந்தியாப்புலத்தின் தெருக்களில் திடீர் திடீரெனக் குதிரைக் குளம்பொலிகளின் சத்தம் கேட்கும். அந்தத் தருணங்களில் மட்டும் முற்றங்களில் படுத்திருப்பவர்கள் அமைதியாக எழுந்து சென்று வீடுகளுக்குள் முடங்கிவிடுவார்கள். அவர்களுக்குத் தெரியும், சந்தியோகுமையர் புரவியில் ஆரோகணித்துச் சந்தியாப்புலம் வீதிகளில் ரோந்து செல்கிறார். அறுபது வருடங்களிற்கு முன்பு பிரப்பம்தாழ்வு என்றழைக்கப்பட்ட இந்தக் கிராமத்தில் பெத்லேம் இஸ்ரேல் பாதிரியால் சந்தியோகுமையர் தேவாலயம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து மாதத்திற்கு ஓரிரு தடவைகள் சந்தியோகுமையர் இவ்வாறாக நடுநிசியில் வீதிவலம் போய்க்கொண்டுதானிருக்கிறார். சந்தியோகுமையர் வீதிவலம் வந்தவொரு இரவில் விதானையின் தோட்டத்தில் பழுத்துக் கிடந்த மிளகாய்கள் களவாடப்பட்டிருந்தன. யார் திருடியிருப்பார்கள் என்பது விதானைக்கும் ஊர்ச் சனங்களுக்கும் நிரூபணமாகத் தெரியும். ஆனாலும் அவர்கள் வழமைபோலவே காலடி பார்க்கும் எப்பாஸ்தம்பிக்கு அதிகாலையிலேயே தகவல் அனுப்பினார்கள். கிராம மக்கள் விதானையின் தோட்டத்தில் எப்பாஸ்தம்பியை எதிர்பார்த்து அமைதியாகக் காத்திருந்தார்கள். அவர்கள் தோட்டத்து மணலில் பதிந்திருந்த திருடனின் காலடித் தடங்களைச் சுற்றி மணலில் விரல்களால் வட்டங்களை வரைந்துவிட்டு எப்பாஸ்தம்பி வரும்வரைக்கும் அந்தக் காலடித் தடங்கள் கலைந்தவிடாதவாறு கண்ணும் கருத்துமாய் பாதுகாத்ததார்கள். எட்டு மணியளவில் எப்பாஸ்தம்பி தோட்டத்திற்கு வந்தார். எப்பாஸ்தம்பி காலடித் தடங்களைப் பரிசோதித்துவிட்டு என்ன சொல்லப் போகிறார் என்பதைச் சனங்கள் அறிந்தேயிருந்தார்கள். எனினும் அவர்கள் எப்பாஸ்தம்பியின் சொல்லுக்காக அமைதியாகக் காத்திருந்தார்கள். அவர்களில் பலரும் எப்பாஸ்தம்பி சொல்லப்போவது குறித்துத் தமக்கு எவ்வித முன்முடிவுகளுமில்லை என்ற தோரணையைத் தங்களது முகங்களில் கொண்டுவருவதற்காகப் பெரும் பிரயத்தனங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். திருடன் யாராயிருப்பான் என அவர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருந்தபோதிலும் அவர்களில் எவராவது ஒரு ஊகமாகவாவது தாங்கள் அறிந்திருந்த திருடனின் பெயரை உச்சரித்தார்களில்லை. எப்பாஸ்தம்பி நிலத்தில் குந்தியிருந்து திருடனின் முதலாவது காலடித் தடத்தை உற்றுப் பார்த்தவாறேயிருந்தார். முதலாவது காலடித் தடத்தை ஆராய மட்டும் அவர் பத்து நிமிடங்களைச் செலவிட்டார். பின் மெதுவாக எழுந்து திருடனின் தடத்தை அவர் பின்தொடர்ந்தார். சனங்கள் அவரின் பின்னாலேயே தொடர்ந்து வந்தார்கள். தோட்டத்தின் எல்லைக்கு வந்ததும் எப்பாஸ்தம்பி அமைதியாக மடியிலிருந்த புகையிலையை எடுத்து நுணுக்கமாகக் கிழித்துச் சுற்றிக்கொண்டே விதானையிடம் “எனக்கு ஆர் ஆளெண்டு விளங்குது” என்று சொல்லிவிட்டு சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டு வடக்கு முன்னாக தனது வளைந்துபோன காலை இழுத்து இழுத்து நடக்க ஆரம்பித்தார். வழமைபோலவே இம்முறையும் சனங்கள் தோட்டத்துடனேயே நின்றுவிட களவு கொடுத்தவன் மட்டும் எப்பாஸ்தம்பியைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தான். எப்பாஸ்தம்பி இழுத்து இழுத்துக் கள்ளுத் தவறணைக்கு வந்தபோது தவறணையைத் திறந்துகொண்டிருந்தார்கள். சீவல் தொழிலாளிகள் முட்டிகளில் பொங்கிக்கிடந்த கள்ளை அளந்து அளந்து தவறணையின் பீப்பாவில் நிரப்பிக்கொண்டிருந்தார்கள். தவறணையின் முன்னிருந்த கொட்டிலில் மணலைக் குவித்து எப்பாஸ்தம்பி உட்கார்ந்துகொண்டார். விதானை ஒரு புளாவில் பவுத்திரமாக கள்ளை ஏந்திவந்து எப்பாஸ்தம்பியிடம் கொடுத்தான். புளாவில் வாயை வைத்து ஒரு இழுவை இழுத்த எப்பாஸ்தம்பி விதானையிடம் “உவன் கள்ளக் கபிரியேல் தான் செய்திருக்கிறான்” என்றார். இந்தத் துப்பை எதிர்பார்த்தேயிருக்காதவன் போல விதானை மூஞ்சியை விரித்தவாறே “இதென்ன சந்தியோம்மையாரே உந்த அமாவாசை இருட்டுக்க என்னெண்டு அந்தக் கிழவன் ஒரு காய் விடாம ஆய்ஞ்சுகொண்டு போனவன்!” என்று தன் வாயைக் கைகளால் பொத்திக்கொண்டான். கபிரியலுக்கு எழுபது வயதிருக்கும். நல்ல வாட்டசாட்டமான உடலும் தீர்க்கமான கண்களும் கம்பீரமான நடையும் வெண்ணிறத் தாடியுமாக ஆள் பார்ப்பதற்கு சுந்தர ராமசாமி போலவேயிருப்பார். ஆனால் கபிரியல் கிழவர் நிறம் குறைவு. கபிரியலுக்குப் பெண்சாதி பிள்ளைகள் கிடையாது. அவர் தொடர்ந்து அறுபது வருடங்களாகச் சந்தியாப்புலத்தில் திருடி வருகிறார். பழைய துணிகள், சட்டிபானைகள், கோழிகள், ஆடுகள், சைக்கிள்கள், தோட்டங்களில் மிளகாய்கள், தக்காளிகள் என மதிப்புள்ளவை மதிப்பற்றவை என்ற பேதங்களில்லாது அவர் எல்லாவற்றிலும் கைவைப்பார். அவர் இதுவரை திருடியவற்றில் உச்ச மதிப்புள்ள பொருள் ஒரு நீர் இறைக்கும் இயந்திரம்தான். கபிரியல் அதைப் பத்து வருடங்களிற்கு முன்பு திருச்செல்வத்தின் வீட்டிலிருந்து திருடிச் சென்றார். அப்போதும் எப்பாஸ்தம்பி திருச்செல்வத்தின் வளவில் பதிந்திருந்த காலடிகளைப் பார்த்து அத்தடங்கள் கபிரியலுடையவையே எனக் கண்டுபிடித்தார். சபினாரின் மகன் திருச்செல்வம் ஊரறிந்த முரடன். நான்கு நாட்கள் கழித்து திருச்செல்வம் பனை தறித்துவிட்டுத் தோளில் கோடரியுடன் வரும் போது கபிரியேல் தெருவில் அவனுக்கு எதிர்ப்பட்டபோது திருச்செல்வம் கையில் கோடரியுடன் கபிரியலைத் துரத்த ஆரம்பித்துவிட்டான். தெருவில் கபிரியலும் திருச்செல்வமும்ம் ‘ரேஸ்’ ஒடினார்கள். வாசிகசாலை முன்றலில் வைத்துத் திருச்செல்வம் கிழவரை நெருங்கிவிட்டான். முன்றலில் கூடிநின்ற சனங்களின் மத்தியில் இருவரும் சண்டைக் கோழிகள் மாதிரி ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்தவாறே நின்றனர். இப்போது கபிரியலின் மடியிலிருந்த சிறிய கிறிஸ் கத்தி அவரின் கையிலிருந்தது. திருச்செல்வம் கிழவரின் கையிலிருந்த கத்தியையே முறைத்துப் பார்த்தவாறு நின்றிருந்தான். மோதலுக்குக் கிழவர்தான் முன்கையெடுத்தார். கிழவர் தனது கையிலிருந்த கத்தியைத் திருச்செல்வத்தின் காலடியில் மணலில் வீசியெறிந்துவிட்டு “செல்வம் நான் கிறிஸைப் போட்டுட்டன், நீயும் கோடலியக் கீழ போட்டுட்டு என்னோட கையால அடிபட வாவன்” என்று கிழவர் சவால் விட்டார். அந்தக் கணமே திருச்செல்வம் தன்னுடைய கோடரியைத் தூக்கிக் கபிரியலுக்கு முன்னால் வீசியெறிந்தான். அவ்வளவுதான், ஒரு பாய்ச்சலில் குனிந்து திருச்செல்வம் வீசியெறிந்த கோடரியைக் கையில் எடுத்த கிழவர் மறுபாய்ச்சலில் கோடரியால் திருச்செல்வத்தின் கால்களில் வெட்டினார். அன்று திருச்செல்வம் கால்களில் இரத்தம் ஒழுக ஒழுக ஓடித் தப்பினான். விதானையின் தோட்டத்தில் திருடியது கபிரியல் கிழவர்தான் என்று எப்பாஸ்தம்பி உறுதிசெய்த அரைமணி நேரத்தில் கிராமத்தினர் கிழவரின் குடிசையைச் சுற்றி வளைத்தனர். கிழவர் கடும் போதையிலிருந்தார். அவரால் நடக்கவே முடியவில்லை. கிராமத்தினர் கிழவரின் கைகளைப் பற்றிச் சுடுமணலுக்குள்ளால் விதானையின் வீடுவரை கொற இழுவையில் கிழவரைக் கொண்டுவந்தனர். விதானை தனது விசாரணையைத் தொடங்கினான். “அப்பு எனக்கு உண்மையைச் சொல்லிப்போட வேணும்! எங்க மிளகாய்ச் சாக்கை ஒளிச்சு வைச்சிருக்கிறியிள்?” அரை மயக்கத்தில் கிடந்த கிழவர் தனது இடக்கையைத் தூக்கி விரல்களை விரித்துத் தனது வலக்கையால் இடது உள்ளங்கையில் ஒரு குத்துவிட்டு “எனக்கு வழியில்லாமலோ தூமைச்சீலை உன்னட்ட களவெடுக்க வந்தனான்” என்று உறுமினார். இளைஞர்கள் மறுபடியும் சென்று தேடியதில் கிழவரின் குடிசையைச் சூழவரவிருந்த நொச்சிப் புதர்களிடையே மிளகாய்ச் சாக்கு கண்டுபிடிக்கப்பட்டது. விதானை ஆங்காரத்துடன் மிளகாய்ச் சாக்கைத் தூக்கி கிழவருக்கு முன்னால் வைத்துவிட்டு “எண அப்பு இது என்ன?” என்று கேட்டான். கிழவர் கண்களை மூடியவாறே “இது நான் விசுவமடுவிலயிருந்து கொண்டுவந்தது” என்றார். கிழவரைச் சுற்றி நின்றவர்கள் ஆளைஆள் பார்த்து இளித்துக்கொண்டனர். கிழவர் மெல்ல எழுந்து நின்றார். அவரின் முகத்தில் சினம் பற்றியிருந்தது. அவர் சுற்றும் முற்றும் பார்த்துத் தலையை ஆட்டியவாறே சாரத்தைத் தூக்கிச் சண்டிக்கட்டாகக் கட்டிக்கொண்டு வெளியே நடக்கத் தொடங்கினார். அப்போது விதானையின் பெண்சாதி கிழவரைத் துரத்திக்கொண்டே ஓடிவந்து ஒரு ஓலைப்பெட்டியைக் கிழவருக்கு முன் நீட்டினாள். அந்தப் பெட்டி நிறையப் பழுத்த மிளகாய்கள் கிடந்தன. ஏதோ காணிக்கை கொடுப்பதைப்போல அவள் கிழவரின் முன்னால் மிளகாய்களை ஏந்தியவாறே நின்றிருந்தாள். கிழவர் தனது நீண்ட கையை விசிறி அந்தப் பெட்டியைத் தட்டிவிட்டுத் தன்னாராவாரம் நடந்துபோனார். கிழவர் இறந்தபோது இனிக் கிராமத்தில் திருட்டே நடக்காது என மக்கள் நினைத்துக்கொண்டனர். கிழவர் இறந்த நாளிலிருந்தே சந்தியோகுமையர் குதிரையில் வீதிவலம் வருவதும் நின்று போயிருந்தது. கிழவர் இறந்துபோன மூன்றாவது அமாவாசையில் ரீத்தம்மாக் கிழவியின் வீட்டில் உடுபுடவைகள் களவு போயின. அன்று அதிகாலையில் சந்தியாப்புலத்தின் தெருக்களில் குதிரையின் குளம்பொலிகளை மக்கள் மறுபடியும் கேட்கலாயினர். ரீத்தம்மாவின் வளவில் பதிந்திருந்த திருடனின் காலடிகளை எப்பாஸ்தம்பி நுணுக்கமாக ஆராய்ந்துகொண்டிருந்தார். மணலில் ஒரு பந்து துள்ளிச் சென்றதைப்போல அந்தக்காலடிகள் மங்கலாயும் திருத்தமில்லாமலும் கிடந்தன. திருடனின் காலடிகளைச் சுற்றி நின்ற மக்கள் திருடன் செருப்புகளை அணிந்துகொண்டு வந்திருப்பானோ என்று சந்தேகப்பட்டனர். ரீத்தம்மாவின் மகன் தயங்கித் தயங்கி அதை எப்பாஸ்தம்பியிடம் கேட்டே விட்டான். அப்போது எப்பாஸ்தம்பி குந்தியிருந்து மணலைத் தனது கைகளில் அள்ளிக் கீழே துளித் துளியாய் உதிர்த்துக்கொண்டேயிருந்தார். பின் அவர் எழுந்துநின்று ரீத்தம்மாவின் மகனிடம் “எனக்கு ஆளை விளங்குது” என்று சொல்லிவிட்டு தனது வளைந்த கால்களை இழுத்தக்கொண்டே நடக்கத் தொடங்கினார். அவர் கள்ளுத் தவறணையில் வைத்து ரீத்தம்மாவின் மகனிடம் திருடனின் பெயரை வெளியிட்டார். சபினாரின் மகன் வில்லியம் திருடனாயிருந்தான். இதை அறிந்ததும் கிராமத்து மக்கள் தங்களின் மார்புகளில் கைகளால் சிலுவைக் குறிகளைப் போட்டுக்கொண்டனர். அவர்களின் முகங்களில் அடையாளமில்லாத ஒளி தொற்றிற்று. கடந்த மூன்று மாதங்களில் அவர்கள் எல்லோருமே தங்களின் வீடுகளுக்குள்ளும் தோட்டங்களிலும் ஆலயத்திலும் முடங்கிக் கிடந்திருந்தார்கள். இன்று ஒரு திருடனின் பொருட்டு அவர்கள் ஒன்றாகக் கூடியிருக்கிறார்கள். கிராம மக்களிடம் சந்தியோகுமையர் ஆலய கொடியேற்ற காலங்களில் மட்டுமே இன்றுள்ளது போன்ற உற்சாகமும் சகோதரத்துவமும் காணக்கிடைக்கும். அந்தக் கிராமத்திலேயே ‘சென்ற் பற்றிக்ஸ்’ பாடசாலையில் படித்தவன் வில்லியம் மட்டுமே. அந்தக் காலத்திலேயே ஒரு மாணவனுக்கு இடம் கொடுப்பதற்கு பற்றிக்ஸில் அய்நூறு ரூபாய்கள் அறவிட்டார்கள். காலையிலும் மாலையிலும் இரண்டு மணிநேரங்கள் பயணம் செய்து வில்லியம் நகரத்திற்குச் சென்று படித்து வந்தான். பத்தாவதோடு அவன் படிப்பு நின்றுவிட்டது. ஆலயப் பலிப் பூசையின்போது சன்னமான குரலில் ஏற்ற இறக்கங்களுடன் ஒன்றிப்போய் விவிலியப் புத்தகத்தை வில்லியம் வாசிக்கும்போது பெண்கள் கண்ணீர் விடுவார்கள். வில்லியம் தனது பத்தொன்பதாவது வயதில் எங்கிருந்தோ கறுப்பியைச் அழைத்துவந்தான். கறுப்பி பூநகரியாள் என்றும் நெடுந்தீவாள் என்றும் வெவ்வேறு தகவல்கள் உள்ளன. கறுப்பிக்கு அப்போது பதினேழு வயதிருக்கும். கடற்கரையில் ஈச்சம் பற்றைகளை வெட்டி அகற்றி அங்கே ஒரு கொட்டிலை இணக்கிக்கொண்டு வில்லியமும் கறுப்பியும் சீவித்தார்கள். பின்னிரவுகளில் கடற்கரையை ஒட்டிய ஈச்சம் செடிகளில் கறுப்பி பழங்கள் சேகரிப்பதைச் சிலர் கண்டிருக்கிறார்கள். அதைத் தவிர்த்துக் கறுப்பி பகலில் அந்தக் கொட்டிலை விட்டு வெளியே வந்ததேயில்லை. வில்லியமும் காலையிலேயே நகரத்திற்குப் போய்விடுவான். அவன் எப்போதும் தூய்மையான வெள்ளைச் சாரமும் வெள்ளை முழுக்கைச் சட்டையும் அணிந்திருப்பான். அந்தக் கிராமத்தில் பெரும்பாலானோர்க்கு செருப்புகள் அணியும் பழக்கம் கிடையாது. அந்த மணற்பூமியில் செருப்புடன் நடப்பது நீரின் மேல் நடப்பதைப் போலச் சிரமமானது. வில்லியம் தன் கைகளில் வெண்ணிறச் செருப்புக்களைத் தூக்கிப்பிடித்தவாறே மணலில் நடந்து வருவான். சிவந்த மெல்லிய உடலுடன் கன்னங்களில் புரளும் சுருட்டை முடியுடனும் முட்டைக் கண்களுடனும் சிவந்த உதடுகளுடனும் வில்லியம் அந்த வெள்ளுடையில் ஒரு சம்மனசைப் போலயிருப்பான். அவன் நகரத்தில் என்ன செய்கிறான் என யாருக்கும் தெரியாது. அவன் காலையிலிருந்து மாலைவரை நகரத்து பஸ் நிலையத்திலேயே நின்றிருப்பதை அவதானித்திருப்பதாகச் சிலர் பேசிக்கொண்டார்கள். சபினாருக்கு இப்படியாரு பிள்ளையா வாய்த்திருக்க வேண்டுமென்று அவர்கள் சலித்துக்கொண்டார்கள். கிராம மக்கள் முதலில் சபினாரிடம்தான் போனார்கள். “அவன் கள்ளனெண்டா அவனை நீங்கள் அடிச்சுக் கொல்லுங்கோ, எனக்கும் அவனுக்கும் தேப்பன் பிள்ளை உறவு முடிஞ்சு வரியம் ஒண்டாச்சு” என்று சபினார் படலையயை அடித்துச் சாத்திவிட்டார். கிராமத்து இளைஞர்கள் வில்லியத்தைத் தேடி அவனின் கொட்டிலுக்குப் போனபோது அங்கே கறுப்பி தனது கைக்குழந்தையுடன் குடிசை முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளிடம் இளைஞர்கள் வில்லியம் எங்கேயென்று கேட்டார்கள். அவள் ஒன்றும் பறையாமல் விறுக்கென கொட்டிலுக்குள் போய்விட்டாள். செக்கலில் வில்லியம் சந்தியாப்புலம் எல்லையில் தட்டி வானில் வந்து இறங்கியபோது இளைஞர்கள் அவனைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவனின் கைகளைக் கயிற்றால் பிணைத்து அவனை ரீத்தம்மாவின் வீட்டுக்கு இழுத்துச் சென்றார்கள். ரீத்தம்மாவின் வீட்டின் முன்னால் நின்ற ஒல்லி வேம்புடன் அவன் இறுகக் கட்டப்பட்டான். ரீத்தம்மாவின் மகன் வில்லியத்தின் நீளமான சுருள் முடிகளைப் பற்றி விட்ட முதல் அறையிலேயே வில்லியத்தின் உதடுகள் வெடித்தன. வில்லியம் ஒரு கண்ணாடிச்சிலை போலயிருந்தான். எந்த இடத்தில் தட்டினாலும் அவனின் உடல் வெடித்து இரத்தம் கசியலாயிற்று. வில்லியத்தின் வெண்ணிற உடையில் இரத்தப் பொட்டுகள் தெறித்தன. வில்லயம் முதல் அடியிலேயே திருடன் அவன்தான் என்பதை ஒத்துக்கொண்டான். திருடிய துணிகளை அவன் யாழ்ப்பாணத்தில் விற்றுவிட்டானாம். வில்லியம் தனது சட்டைப்பையில் எழுபது ரூபாய்கள் இருப்பதாகவும் அவற்றை எடுத்துக்கொண்டு தன்னை விட்டுவிடுமாறும் அவர்களிடம் மன்றாடினான். கிராமத்தினர் வில்லியத்தைச் சுற்றி முகங்களில் குழப்ப ரேகைகளுடன் நின்றிருந்தனர். அவர்களிடையே வில்லியத்தின் அண்ணன் திருச்செல்வமும் நின்றிருந்தான். அவனின் வெற்றுத் தோளில் அப்போதும் அவனது கோடரி தொங்கிக் கிடந்தது. விதானை இரண்டு இளைஞர்களைத் தனியாகக் கூப்பிட்டு திருச்செல்வம் கோடரியால் வில்லியத்தைக் கொத்தக்கூடும் என்றும், எதற்கும் திருச்செல்வத்தின் அருகிலேயே இளைஞர்களை அவதானமாக நிற்கவும் சொன்னான். அன்று இரவு முழுவதும் ரீத்தம்மா வீட்டு வேப்பமரத்தில் வில்லியம் கட்டப்பட்டிருந்தான். அதிகாலையிலே சந்தியோகுமையர் குதிரையில் வீதிவலம் வரும் சத்தத்தை வில்லியம் கேட்டான். கூட்டுறவுச் சங்கக்கடையின் ஓடுகள் பிரிக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டிருந்தன. எப்பாஸ்தம்பி அடி பார்த்துத் தடங்கள் வில்லியத்தினுடையவை என்று சொல்லவிட்டார். சங்கக்கடை மனேச்சருக்கு வேறு வழியில்லை. அவன் களவுபோனதை ஊறாத்துறை தலைமைச் சங்கத்திற்கு அறிவித்துவிட்டான். மதியத்தில் சந்தியாப்புலத்திற்குள் பொலிஸ்ஜீப் வந்தது. ஜீப்பைக் கண்டதும் கிராமத்தினர் செத்த நாயிலிருந்து உண்ணி கழன்றதுபோல மெதுவாகச் சங்கக்கடையிலிருந்து நழுவலாயினர். மெதுமெதுவாய் நடந்து சென்ற இளைஞர்கள் வீதியிலிருந்து இறங்கியதும் வேலிகளைப் பாய்ந்து தலைதெறிக்க ஓடலானார்கள். இந்தச் சந்தியாப்புலத்து மணலில் கபிரியல் கிழவரோ அலலது வில்லியமோ கூட இந்த அச்சத்துடனும் வேகத்துடனும் இதுவரை ஓடியதில்லை. சங்கக் கடையின் முன்னால் வந்துநின்ற ஜீப்பிலிருந்து சார்ஜன் அரியநாயகமும் இன்னும் இரண்டு பொலிஸ்காரர்களும் இறங்கினார்கள். அரியநாயகம் இறங்கியபோது அவனிற்கு முன்னால் சிறுவன் அன்ரனி நின்றிருந்தான். அன்ரனி அந்தப் பச்சைநிற ஜீப்பையே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு நின்றான். அரியநாயகத்தின் மிடுக்கையும் அவனின் சீருடைகளையும் தொப்பியையும் அந்தச் சிறுவன் அச்சத்துடன் ஓரக்கண்ணால் கவனித்தான். அன்ரனியை எட்டிப்பிடித்த சார்ஜன் அரியநாயகம் “என்ன புண்டையா பாக்கிறாய்?” என்றவாறே அன்ரனியின் தலையில் ஓங்கிக் கொட்டிவிட்டுச் சங்கக்கடைக் கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளிவந்து ஜீப்பைக் கழுவுமாறு அன்ரனிக்குக் கட்டளையிட்டான். சிறுவன் தூக்க முடியாமல் தண்ணிர் வாளியைத் தூக்கிவந்து வாயைமூடி விம்மியவாறே ஜீப்பைக் கழுவத் தொடங்கினான். சார்ஜன் விசாரணையைத் தொடங்கலானான். அவன் சந்தியாப்புலத்திலிருந்த ஒவ்வொருவரையும் திருடன் என்ற கோணத்திலேயே விசாரித்தான். இதற்குள் ஊருக்குள் சென்ற பொலிஸ்காரர்கள் இருவரும் ஊரிலிருந்த ஆண்கள் எல்லோரையும் சங்கக்கடைக்குச் சாய்த்துக்கொண்டு வந்தார்கள். கிராமத்தினர் சார்ஜனின் முன்பு தலைகுனிந்து நின்றிருந்தார்கள். அன்றைய விசாரணையில் எப்பாஸ்தம்பி உட்பட நான்குபேர் சார்ஜனின் பூட்ஸ் கால்களால் உதைபட்டார்கள். மதியச் சாப்பாடும் சாராயமும் பொலிஸாருக்கு விதானையின் வீட்டில் ஏற்பாடாகியிருந்தது. சாப்பிட்டுவிட்டு விதானையின் முற்றத்து மரநிழலில் சாய்வுநாற்காலியில் சட்டையைக் கழற்றிவிட்டு சார்ஜன் தூங்கிக்கொண்டிருக்க அந்த இடைவெளியில் இரண்டு பொலிஸ்காரர்களும் குடிமனைகளுக்குள் புகுந்து மாம்பழங்கள், மிளகாய்கள், பனங்கிழங்குகள் ஆகியவற்றைச் சேகரித்து ஜீப்பில் ஏற்றினார்கள். மாலையில் விதானை, சார்ஜனிடம் பக்குவமாக “ஐயா களவெடுத்தவன் வில்லியம்தான், அவனைத் தேடிப் பார்த்தாச்சு, ஆள் ஊரில இல்லை” என்று சொன்னான். மாலையில் வில்லியத்தின் தகப்பன் சபினாரையும் சகோதரன் திருச்செல்வத்தையும் ஏற்றிக்கொண்டு பொலிஸ்ஜீப் சந்தியாப்புலத்திருந்து புறப்படலாயிற்று. சார்ஜனின் கைகளுக்குள் சங்கக்கடை மனேச்சர் நூறு ரூபாயை வைத்தான். அப்போது சிறுவன் அன்ரனி ஜீப்பை பாதிதான் கழுவி முடித்திருந்தான். நீக்கிலாப்பிள்ளையின் பட்டியில் வெள்ளாடு களவுபோனபோது ஊறாத்துறைப் படகுத்துறையில் வில்லியம் ஆட்டுடன் பொலிஸாரிடம் அகப்பட்டான். இரண்டு பொலிஸகாரர்கள் அவனையும் ஆட்டையும் லைன்வானில் ஏற்றிச் சந்தியாப்புலத்திற்குக் கொண்டுவந்தார்கள். நீக்கிலாப்பிள்ளையின் ஆட்டுப்பட்டியில் கட்டிவைத்துப் பொலிசுக்காரர்கள் வில்லியத்தின் தோலையுரித்தார்கள். அவன் “சேர் ப்ளிஸ் அடிக்கதையுங்கோ, சேர் ப்ளிஸ் அடிக்காதையங்கோ” என்று கையைடுத்துக் கும்பிட்டு அலறிக்கொண்டிருந்தான். கிராமத்தினர் துயரத்துடன் வில்லியத்தின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இடையே ஒரு தடவை வில்லியம் “ஐயோ நான் சென் பற்றிக்ஸில படிச்சனான்” எனக் கூவியழுதான். பின் நீக்கிலாப்பிள்ளையைப் பார்த்து “மாமா நான் செய்தது பிழைதான் என்ன மன்னிச்சுக்கொள்ளுங்க” என்று கேவினான். இந்தப் பத்து வருடத்தில் சந்தியாப்புலத்தில் வில்லியம் கைவைக்காத வீடுகளேயில்லை. மூன்று மூன்று மாதங்களாக இரண்டு தடவைகள் மறியலுக்கும் போய் வந்து விட்டான். அந்தக் கிராமத்திலிருந்து முதன்முதலில் மறியலுக்குப் போனவனும் வில்லியம்தான். வில்லியம் முதல் முறையாகச் சிறையிலிருந்து விடுதலையாகி வரும்போது அவனின் கையிலிருந்த பையில் அன்று காலை சிறையில் கொடுத்த அச்சுப்பாணும் சம்பலுமிருந்தன. அவன் அந்தப் பாணைப் பிய்த்துத் துண்டுகளை கறுப்பிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்தான். அப்போது வயிற்றில் கறுப்பிக்கு மூன்றாவது குழந்தையிருந்தது. இப்போதெல்லாம் வில்லியம் சந்தியாப்புலத்திற்குள் பகலில் வருவதேயில்லை. பத்துத் தடவைகள் திருடினால் அவன் பதினொரு தடவைகள் பிடிபட்டான். அடிவாங்கி அடிவாங்கி அவனின் தேகம் மரத்துப் போய்விட்டது. முப்பது வயதிலேயே அவனுக்குத் தலைமுடி முற்றாக நரைத்துவிட்டது. முன்வாய்ப் பற்களில் மூன்றைப் பொலிஸ்காரர்கள் உடைத்துவிட்டார்கள். அவனின் தேகத்தில் அடிவிழும் முன்பே அவனின் கண்களில் கண்ணீரும் வாயில் எச்சிலும் சுரக்கத் தொடங்கிவிடும். சந்தியாப்புலத்தின் ரோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையின் அலுவலக அறை ஒரு இரவில் உடைக்கப்பட்டபோது எப்பாஸ்தம்பி காலடித் தடம் பார்த்து அந்தத் தடங்கள் வில்லியத்தினுடையவை என்றார். சந்தியாப்புலம் ஐக்கிய வாலிபர் சங்கத்தினர் இதைக்கேட்டுத் தலையைப் பிய்த்துக்கொண்டனர். பாடசாலை அலுவலகத்தில் என்னயிருக்கிறது என்று வில்லியம் திருடப் போனான்? ஐக்கிய வாலிபர் சங்க இளைஞர்கள் நான்கு நாட்கள் கழித்து யாழ்ப்பாண பஸ்நிலையத்தில் வில்லியத்தை தற்செயலாகக் கண்டபோது அவர்கள் ஒரு வாடகைக் காரைப் பிடித்து அதில் வில்லியத்தை ஏற்றிச் சந்தியாப்புலத்திற்குக் கொண்டுவந்தனர். வண்டி ஒடும்போதே வண்டிக்குள் வைத்து வில்லியத்தைத் துவைத்தெடுத்தனர். ஐக்கிய வாலிபர் சங்கக் கட்டடத்துக்குள் இரவு முழுவதும் வில்லியத்தை முழந்தாளில் நிறுத்தி வைத்தார்கள். காலையில் இளைஞர்கள் வில்லியத்தை உட்காரவைத்து நீண்ட அறிவுரைகளை வழங்கினார்கள். அவனின் குழந்தைகள் வளர்ந்து வருவதாகவும் திருடர்களின் குழந்தைகள் என்ற அவப்பெயருடன் அவர்கள் வளரக்கூடாது என்றும் வில்லியத்திற்குப் புத்திமதிகள் சொன்னார்கள். வில்லியம் சிந்தனை தோய்ந்த முகத்துடன் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தான். இடையிடையே “ஓ யேஸ், ஓ யேஸ்” என்று தலையாட்டினான். அவனை வீட்டிற்கு அனுப்பும்போது இளைஞர்கள் அவனுக்கு ஐம்பது ரூபாயைக் கொடுத்து அனுப்பினார்கள். அடுத்தநாள் காலையில் சந்தியாப்புலத்தின் வீதிகளில் கறுப்பி கைக்குழந்தையை இடுப்பில் வைத்தவாறு நடந்து வருவதைக் கிராமத்தினர் கண்டனர். அவள் நேராக ஐக்கிய வாலிபர் சங்கக் கட்டடத்திற்குப் போய் அங்கிருந்த இளைஞர்களிடம் “அவர் உங்களிட்ட காசு வாங்கிக்கொண்டுவரச் சொன்னவர்” என்றாள். 3 சந்தியாப்புலத்தையும் கரம்பொன் கிராமத்தையும் பிரித்து வைத்திருக்கும் பிரதான வீதியில் பஸ்ஸிற்காகக் காத்திருந்த கரம்பொன் பெண்ணொருத்தியின் கழுத்தில் கிடந்த சங்கிலியை வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்த ஒரு திருடன் அறுத்துக்கொண்டு சந்தியாப்புலத்திற்குள் ஓடிவிட்டானாம். அவன் ஓடும்போது அவனது செருப்புக்களைக் கையில் எடுத்துக்கொண்டு ஓடினானாம் என்ற வழக்கு இயக்கத்திடம் வந்தபோது இயக்கம் வெள்ளைவானில் சந்தியாப்புலத்திற்கு வந்தது. கிராம மக்கள் முதலில் திருடனின் காலடித் தடங்களை அடையாளம் காணவேண்டும் என இயக்கப் பொடியளிடம் வாதிட்டார்கள். இயக்கப் பொடியள் அதைக்கேட்டுச் சிரித்தார்கள். இயக்கப் பொடியளிடம் எல்லாத் தகவல்களும் இருந்தன. அவர்கள் வாகனத்தை வில்லியத்தின் வீட்டுக்குச் செலுத்தினார்கள். அவர்கள் கறுப்பியையும் நான்கு குழந்தைகளையும் வெளியே வரச் சொல்லிவிட்டுக் குடிசைக்குள் புகுந்து தேடினார்கள். குடிசையிலிருந்த சட்டி பானைகளிலிருந்து பவுடர் பேணிவரை அவர்கள் தட்டிக்கொட்டிச் சங்கிலியைத் தேடினார்கள். அன்று முழுவதும் தேடியும் இயக்கத்திடம் சங்கிலியும் அகப்படவில்லை, வில்லியமும் அகப்படவில்லை. இரவு சந்தியோகுமையர் குதிரையில் வீதிவலம் போனார். அடுத்தநாள் விடிந்தபோது மறுபடியும் வில்லியத்தின் குடிசைக்கு இயக்கப் பொடியள் வந்தார்கள். குடிசைக்குள் அரவம் ஏதுமில்லாததால் ஒரு பொடியன் குடிசைக்குள் நுழைந்து பார்த்தான். குடிசைக்குள் வில்லியமும் கறுப்பியும் நான்கு குழந்தைகளும் விரித்த பாய்களில் பேச்சுமூச்சில்லாமல் விறைத்துக் கிடந்தார்கள். அவர்களின் வாய்களில் வாந்தியும் இரத்தமும் உறைந்து கிடந்தன. “அய்யோ என்ர அம்மா” எனக் கூச்சலிட்டுக்கொண்டே இயக்கப்பொடியன் வெளியே ஓடிவந்தான். இயக்கப் பொடியள் ஆறு உடல்களையும் தூக்கிக்கொண்டுபோய் வாகனத்தில் ஏற்றினார்கள். அந்த இயக்கப் பொடியன் இப்போது கண்கள் சிவக்க உதடுகளை இறுக மடித்து வாகனத்தில் சாய்ந்து நின்றான். அவனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. மதியம் ஊறாத்துறை ஆஸ்பத்திரியிலிருந்து கறுப்பியினதும் குழந்தைகளினதும் உடல்களை இயக்கம் திரும்பவும் சந்தியாப்புலத்திற்கு கொண்டுவந்து சேர்த்தது. அவர்கள் அரளி விதைகளைத் தின்று செத்திருக்கிறார்கள். வில்லியத்தின் உடலில் உயிர் ஒட்டிக்கிடந்தது. வில்லியம் மயங்கிய நிலையிலேயே யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரிக்கு இயக்கத்தால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தான். வில்லியத்தின் குடிசையின் முன்பு கிராம மக்கள் அமைத்திருந்த தறப்பாள் பந்தலுக்குள் சடலங்கள் அடுக்கப்பட்டன. சவப்பெட்டிகளை வாங்குவதற்கு சபினார் பணம் கொடுத்தார். மற்றைய செலவுகளிற்காக இயக்கமும் ஆயிரம்ரூபா கொடுத்தது. செக்கலில் கறுப்பியினதும் குழந்தைகளினதும் உடல்கள் புதைக்கப்பட்டன. மூன்று நாட்கள் கழித்துக் கடற்கரையோரமாக நடந்து வில்லியம் சந்தியாப்புலத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் அப்போதும் தூய்மையான ஆடைகளைத்தான் அணிந்திருந்தான். அவனின் கையில் செருப்புகளிருந்தன. சபினார் தனது மகனைக் கட்டிப்படித்து அழுதபோது வில்லியம் நிலத்தைப் பார்த்தவாறே நின்றிருந்தான். கிராமத்தினர் அவனுக்கு ஆறுதல் சொன்னபோது அவன் அவர்களைப் பார்த்து இதழ் பிரியப் புன்னகைத்தான். கிராமத்தினர் அங்கேயிருக்கும்போதே வில்லியம் தனது குடிசையைப் பிரித்து அடுக்க ஆரம்பித்தான். அந்தக் குடிசையிலிருந்த தட்டுமுட்டுச் சாமான்களை ஓரிடத்தில் குவித்தான். குடிசைத் தடிகளையும் மரங்களையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் யாராவது விலைக்கு வாங்கிக்கொள்கிறீர்களா என வில்லியம் தணிந்த குரலில் கிராமத்தினரிடம் கேட்டான். இவற்றை விற்றுவிட்டு நீ எங்கே போகப்போகிறாய்? எனக் கிராமத்தினர் கேட்டபோது அவன் மவுனமாயிருந்தான். கடைசியில் அய்நூறுரூபா கூடப் பெறாத அந்தப் பொருட்களை விதானை பாவப்பட்டு எழுநூறுரூபா கொடுத்து வாங்கினான். அன்று மாலையே கடற்கரையோரமாக நடந்து வில்லியம் என்ற அந்தத் திருடன் சந்தியாப்புலத்திலிருந்து வெளியேறினான். சந்தியாப்புலத்தில் இனி திருட்டே நடக்காது எனக் கிராமத்தினர்கள் நம்பினார்கள். ஆனால் மறுநாள் காலை விடிந்தபோது சந்தியோகுமையர் ஆலயத்தின் பிரமாண்டமான வாயில் கதவு இரண்டாகப் பிளந்து கிடந்தது. ஆலயத்திலிருந்த வெள்ளியாலான திருவிருந்துப் பேழையும் காணாமல் போயிருந்தது. கிராமத்தினர் திகைத்துப்போய் நின்றிருந்தனர். கோயிலிலிருந்து திருடனின் தடங்கள் கடற்கரையை நோக்கிச் சென்றன. கிராமத்தினர் அந்தத் தடங்களைச் சுற்றி மணலில் வட்டங்களை வரைந்துவிட்டு எப்பாஸ்தம்பியை அழைத்துவர ஆள் அனுப்பனார்கள். ஆனால் எப்பாஸ்தம்பி சினத்துடன் ‘நீங்கள் இயக்கத்திடமே போங்கள் அவர்கள் வந்து கண்டுபிடிப்பார்கள்’ என்று வந்த ஆளை விரட்டிவிட்டார். இப்போது விதானை முதற்கொண்டு எல்லோரும் வந்து கெஞ்சியும் எப்பாஸ்தம்பி அவர்களுடன் போக மறுத்துவிட்டார். உச்சி வேளையில் எப்பாஸ்தம்பி தனது வளைந்த கால்களை வேகமாக இழுத்து வைத்தவாறே சந்தியோகுமையர் ஆலயத்திற்குற்கு வந்தார். ஆலயத்தின் முன்றலில் வெள்ளைவானிற்குள் இயக்கத்துப் பொடியளுடன் விதானை பேசிக்கொண்டிருந்தான். கிராமத்தினர் இயக்கத்தினரின் வாகனத்தைச் சூழவர நின்றிருந்தனர். எப்பாஸ்தம்பி தனியாக ஆலயத்திலிருந்து கடற்கரைவரை நீண்டிருந்த திருடனின் தடங்களைத் தொடர்ந்தார். பூமியை உற்றுப்பார்த்தவாறே நடந்தவரின் கால்கள் பின்னத் தொடங்கின. கடற்கரைக்கு வந்தவர் கீழே குந்தியிருந்து அந்தத் தடத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அந்தத் தடங்கள் கடலுக்குள் சென்று மறையும் இடம்வரை அவர் நடந்து சென்று கடலைப் பார்த்தவாறு வெகுநேரமாக நின்றிருந்தார். பின்பு மார்பில் சிலுவைக்குறி போட்டவாறே வேதனையுடன் முகத்தைச் சுழித்தார். அந்தத் தடங்கள் ஒரு குதிரையின் குளம்படிகள் என்பதை எப்பாஸ்தம்பி கண்டுபிடித்திருந்தார். (நன்றி: ‘காலம்’ ஜுன் 2007) திரு. முடுலிங்க சென்ற புதன் கிழமை Le Monde பத்திரிகை இணைப்பாக ஆப்பிரிக்க இலக்கியச்சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த இலக்கியச்சிறப்பிதழின் நடுப்பக்கத்தில் வெளியாகியிருந்த ‘Monsier Mudulinka’ என்ற சிறுகதையை நைஜீரிய எழுத்தாளர் மம்முடு ஸாதி எழுதியிருந்தார் ஹெளஸ மொழியில் எழுதப்பட்ட இந்தக் கதையை ஹீரன் வில்பன் பிரஞ்சில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்தக் கதையின் தலைப்புப்பாத்திரமாக வருபவர் ஒரு இலங்கையர் என்பதைக் கதையின் போக்கில் நான் அறிந்து கொண்டதும் மிதமிஞ்சிய ஆர்வத்துடன் கதை யைப் படித்து முடித்தேன். படித்து முடித்தவுடனேயே அந்தக் கதையைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். கதை எளிய பிரஞ்சு மொழியில் இருந்ததால் தமிழில் மொழிபெயர்ப்பதில் பெரிய சிக்கல்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஒரேயரு பிரச்சனை இருக்கிறது. கதையின் ஒரு இடத்தில் Cocoville என்றொரு ஊர் குறிப்பிடப்படுகிறது. (கொக்கோ வில்லி என்று வாசிக்கக் கூடாது. பிரஞ்சு மொழி இலக்கணப்படி இதைக் கொக்கோ வில் என்றுதான் படிக்க வேண்டும்.) கதையின் போக்கில் அந்தஊர் இலங்கையில் உள்ளதாக ஊகிக்க முடிகிறது. ஆனால் நான் ஒருநாள் முழுவதும் இலங்கை வரை படத்தை விரித்து வைத்துத் தேடிப் பார்த்தும் கொக்கோ வில் என்ற ஊரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே தமிழ் மொழிபெயர்ப்பிலும் அந்த ஊரை நான் கொக்கோ வில் என்றே எழுத வேண்டியதாகிவிட்டது. எனினும் இந்தச் சிக்கல் கதையின் மொழிபெயர்ப்பை எதுவிதத்திலும் பாதிக்கப் போவதில்லை. நாற்பத்தொரு வயதாகும் மம்முடு ஸாதி இது வரை மூன்று சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். மம்முடு ஸாதி லாகோஸில் உள்ள அய்க்கிய நாடுகள் சபையின் கிராமப்புற வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் ஒரு சிற்றூழி யராகப் பணி செய்து வருகிறார். இனி மம்முடு ஸாதியின் கதை: கொடிக் கம்பம் என் நெற்றியின் முன்னாக நிற்க லாகோஸின் அனல் காற்றில் யு.என். ஓவின் கொடி என் தலை மீது சரிந்தாடியது. இந்தக்காலை நேரத்திலேயே மனுக்களுடனும் கோரிக்கைகளுடனும் நிறைய மக்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அங்கே வந்திருந்தார்கள். தொலைதூர வட மாவட்டமான சொக்கட்டோவில் இருந்து ஒரு விவசாயிகள் குழு வந்திருந்தது. அவர்கள் மதிற்சுவரின் ஓரத்திலே களைப்புடன் குந்தியிருந்தார்கள். நான் அவர்களிடம் சென்று அவர்கள் கொண்டு வந்த மனுக்களைச் சேகரித்துக் கொண்டிருந்தேன். அப்போது பிரதான வாசலால் கறுப்பு நிற மெர்ஸிடஸ் பென்ஸ் கார் உள்ளே நுழைந்தது. ஊருக்குள் பிரஸிடண்ட் அன்ஸாரி பின் இருக்கையில் அமர்ந்திருந்து என்னைப் பார்த்துத் தலையசைத்தார். நான் எனது வலது கையைத்தூக்கி பிரஸிடண்டுக்கு ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சலாம் செய்தேன். கடவுளுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சாத்தானுக்கு இரண்டு விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும் என்பார்கள். நான் இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து மூன்று வருடங்கள் முடியப்போகின்றன. இந்த மூன்று வருடங்களில் ஒரு நாளாவது பிரஸிடண்ட் அன்ஸாரி என்னை மம்முடு என்று பெயர் சொல்லி அழைத்தது கிடையாது. அறிவிலி, கழுதை, முட்டாள் என்ற பெயர்களில் தான் என்னை அவர் கூப்பிடுவார். அதியசமாக அவர் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் ‘ஏய் சின்னவனே’ என்று அவர் என்னைக் கூப்பிடுவார். என் வேலைக்கு ‘அலுவலக உதவியாளன்’ என்று தான் பெயர். ஆனால் பரிசாரகன், தேனீர் தயாரிப்பவன், வாகனச்சாரதி என்று எல்லாவித வேலைகளையும் நான் செய்ய வேண்டியிருந்தது. இந்த அலுவலகத்தில் திட்டமிடல் அதிகாரிகளாக இருக்கும் இரண்டு வெள்ளையர்கள் மட்டும் தான் தங்கள் தனிப்பட்ட வேலைகளை என் தலையில் சுமத்துவது கிடையாது. இதன் மறுபுறத்தில் ஒரு நன்மையும் இருந்தது. அந்த இரண்டு வெள்ளையர்களின் அறையைத்தவிர அலுவலகத்தின் மற்றைய அலுவலர்களுடன் எனக்கு விரைவிலேயே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த அலுவலகத்து மேசைகளின் ஒவ்வொரு இழுப்பறைகளும் லஞ்சப் பணத்தால் நிரம்பிக் கிடந்தன விரைவிலேயே என சட்டைப்பையிலும் அய்ம்பது, நூறு நைறாக்கள் சாதாரணமாகப் புழங்கத் தொடங்கின. ஆகாயத்திலிருந்து ஈச்சம்பழம் விழுந்தால் நீயும் வாயைத் திற என்பது எங்கள் பக்கத்துப்பழமொழி. இந்த அலுவலகத்தின் தலைமை அலுவலகம் தலை நகர் அபுஜாவில் இருக்கிறது. எனக்கு உத்தியோக உயர்வு தந்து என்னை அங்கு அனுப்பி வைப்பதாகப் பிரஸிடண்ட் அன்ஸாரி எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றுவதில் என் தரப்பிலிருந்து ஒரு சிக்கல் இருந்தது. அபுஜா தலைமை அலுவலகத்தில் பணிபுரிபவர்களில் முக்கால்வாசிப் பேர் வெள்ளையர்கள் தான். அங்கே நான் வேலை செய்வதற்கு எனது ஆங்கில அறிவு போதாமல் இருக்கிறது. என்று பிரஸிடண்ட் அன்ஸாரி அபிப்பிராயப்பட்டார். இவ்வளவுக்கும் எனது கிராமத்திலேயே அதிக ஆங்கில அறிவு உடையவன் நான் தான். அங்கே எனக்கு ‘இங்கிலிஷ் மம்முடு’ என்று ஒரு பட்டப்பெயரே வழக்கிலிருக்கிறது. ஆனால் இந்த அலுவலகத்திலிருக்கும் வெள்ளையர்கள் இருவரும் பேசும் ஆங்கிலம் தான் எனக்குப் பிடிபடாமலேயே இருக்கிறது. அவர்களில் ஒருவர் ஐரிஸ்காரர், மற்றவர் அவுஸ் ரேலியர். அவர்கள் இருவரும் பேசும் ஆங்கிலம் அவர்கள் நாவிலிருந்து புறப்படும் அதே வினாடியிலேயே மறுபடியும் ஓக்ரா குழம்பில் நனைத்து எடுத்த வ்வூவ்வூ களி மாதி அவர்களின் தொண்டைக்குள் வந்த வேகத்திலேயே வழுக்கிப் போனது. நான் பேசும் ஆங்கிலத்தை புரிந்து கொள்ளாதது போல அந்த வெள்ளையர்கள் இருவரும் எப்போதும் தமது உதடுகளை மடித்துத்தோள்களைக் குலுக்கினர்கள். நான் ஒரு வெறியோடு ஆங்கிலத்தைப் படிக்கத்தொடங்கினேன். காலை வேளைகளில் ஆங்கிலச் செய்தித் தாள்களை ஆர்வத்தோடு படித்தேன். மாலை வேலைகளில் என் பூட்டிய அறைக்குள் உள்ளிருந்து விடாமல் ஆங்கில இலக்கணப் பயிற்சி நூல்களைக் கற்று வரலானேன். சோம்பலால் வளர்வது பேனும் நகமும் தவிர வேறில்லை. மதிலோரத்தில் குந்தியிருந்த சொக்கட்டோ விவசாயிகள் குழு என்னிடம் தங்களது மனுவைத் தருவதற்கு முதலில் மறுத்தார்கள். அவர்கள் அந்த மனுவை உள்ளேயிருக்கும் வெள்ளையர்களிடம் தான் கொடுப்பார்களாம். ‘அந்த வெள்ளையர்கள் வெளியே வரவும் மாட்டார்கள். முன் அனுமதி பெற்றிராமல் நீங்கள் அலுவலகத்துக்கு உள்ளே போகவும் முடியாது’ என்று நான் விவசாயிகளுக்கு விளக்கமாகச் சொன்னேன். அவர்கள் என்னை நம்ப மறுத்தார்கள். அந்த விவசாயிகள் அலுவலகத்தின் முன்னே தொடங்கிக் கிடக்கும் யு.என்.ஓ. கொடியைக் கூட இன்னமும் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் கொடியென்றே நம்பிக் கொண்டிருப்பவர்கள் ‘அந்த வெள்ளையர்களை விட உங்கள் மனு மீது முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர் பிரஸிடண்ட் அன்ஸாரி, நீங்கள் என்னிடம் மனுவைக் கொடுத்தால் அதை நான் அவரின் பார்வைக்கு எடுத்துச் செல்வேன்’ என்று நான் விவசாயிகளிடம் சொன்னேன். நானும் அவர்களைப்போல (f)புலானி இனக் குழுவைச் சேர்ந்தவன் என்று அறிந்த பின்பு தான் அந்த விவசாயிகள் என்னை நம்பினார்கள். அவர்களின் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கோரி அவர்கள் அந்த மனுவைத் தயாரித்திருக்கிறார்களாம். அந்த விவசாயிகள் குழுவின் தலைவர் என் கையில் மனுவைக் கொடுத்து விட்டு என் சட்டைப்பைக்குள் நூறு நைறா தாளன்றைத் திணித்து விட்டார். சென்ற மாதம் வரை எவரும் அலுவலகத்துள் வரலாம் போகலாம் என்று விதிகள் இருந்தன. ஆனால் இப்போது ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் அலுவலகக் கட்டடத்தின் உள்ளே நுழைய அனுமதி கிடையாது. மனு கோரிக்கை எதுவானாலும் முற்றத்தில் வைத்தே முடித்து அனுப்பிவிடச் சொல்லி பிரஸிடண்ட் அன்ஸாரிக்கு காவல் துறை ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். சென்ற மாதம் இந்த முற்றத்தில் இதே கொடிமரத்தின் கீழே இரண்டு இளைஞர்களைப் பொலிஸார் சுட்டு வீழ்த்தியிருந்தனர். சென்ற மாதத்தின் கடைசி நாளில் இளைஞர்களும் பெண்களுமாய் ஒரு கூட்டம் அதிரடியாய் எங்கள் அலுவலகத்தின் முற்றத்தில் நுழைந்தது. அவர்கள் கைகளில் கொடிகளும் அட்டைகளும் வைத்திருந்தார்கள் அவர்கள் உரத்த குரலில் கோஷங்களை எழுப்பினார்கள். அதற்கு முன் தினம் தான் ஒல்லாந்து, பிரஞ்சு எண்ணை நிறுவனங்களுக்கு எதிராகப் போராடிய ஒன்பது நைஜீரியர்களுக்கு நைஜீரிய அரசு தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிக்கம் பத்தில் ஏறி யு.என்.ஓ. கொடியை அறுத்து தீ வைத்துக்கொளுத்தினார்கள். அவர்கள் கற்களால் அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்களைச் சிதறடித்தார்கள். நாங்கள் அலுவலகத் தின் கதவுகளை மூடிவிட்டு உள்ளேயே இருந் தோம். பிரஸிடன்ட் அன்ஸாரி தன் கொழுத்த உடம்பைத் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் பதற்றத்தோடு ஓடித்திரிந்தார். உதவித்தலைவர் வில்லியம்பிரான்ஸிஸ் இபோ இனக்குழுவைச் சேர்ந்தவர். அவர் இபோ வழக்கப்படி எந்த விசயத்தைப் பேசினாலும் இழுத்து இழுத்து ரப்பராய் விரித்து உவமான உவமேயங்கள் முது மொழிகள் பொன்மொழிகள் எல்லாம் பொதித்துத்தான் எந்தவொரு வாக்கியத்தையும் முடிப்பார். இப்போது அவர் அலுவலக ஊழியர்களிடம் ‘பொலிஸார் வந்து ஆர்ப்பாட்டக் காரர்களைச்சுடப் போகிறார்கள்’ என்பதை வளைத்து வளைத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போது வெளியே துப்பாக்கிகள் வெடிக்கும்சத்தங்கள் கேட்டன. வில்லியம் பிரான்ஸிஸ் ‘புதிதாய்ப்பிறந்த கன்றுகள் புலிகளுக்கு அஞ்ச மாட்டா’ என்று கூறிக் கண்களை மூடிக் கொண்டார். எங்கள் அலுவலகத்துக்குப் புதிய திட்டமிடல் அதிகாரி ஒருவர் வெளிநாட்டில் இருந்து வரப்போவதாகச் செய்திகள் அடிப்பட்டன. ஏற்கனவே அலுவலகத்தில் இருக்கும் இரண்டு வெள்ளையர்களும் அவர்களது மாயஜால ஆங்கிலத்தால் என்னைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வரப் போகும் புதிய திட்டமிடல் அதிகாரி பேசப் போகும் ஆங்கிலமாவது எனக்குப்புரிய வேண்டும் என்று நான் இறைவனை இடைவிடாமல் தொழுதேன். இறைவன் ஒவ்வொரு நோய்க்கும் ஒரு பச்சிலையை அளித்திருக்கிறான். புதிதாக வந்திருந்த திட்டமிடல் அதிகாரி ஆங்கிலத்தைப் பத்து விதமாகப் பேசினார். அவர் பிரஸிடண்ட் அன்ஸாரியோடு ஒருவித ஆங்கிலம் பேசினார். ஐரிஸ்காரரோடு இன்னொரு விதமான ஆங்கிலத்தில் பேசினார். அவுஸ்ரேலியாக்காரரோடு மற்றொரு விதமான ஆங்கிலம் பேசினார். எங்கள் அலுவலகத்தில் தோடம்பழங்கள் விற்க வரும் கூடைக்காரி மைமூனுடன் வினைச் சொற்களே இல்லாமல் வெறும் பெயர்ச் சொற்களை உபயோகித்தே நூதனமான ஒரு ஆங்கிலத்தில் உரையாடினார். என்னோடு பேசுவதற்கு அவர் விசேடமான ஒரு ஆங்கிலத்தை வைத்திருந்தார். தனது வாயை அகலத்திறந்து சுட்ட சூயா இறைச்சித் துண்டங்களை கடித்துத் தின்பது போல அவர் தன் பற்களுக்கிடையே ஆங்கிலத்தைக் கடித்துச் சிறு சிறு துண்டுகளாக என்னிடம் அனுப்பினர். என் வாழ்க்கையில் முதற் தடவையாக நான் நைஜீரியர் அல்லாத ஒருவர் பேசும் ஆங்கிலத்தை முழுவதுமாக விளங்கிக்கொண்டேன். அல்லா கொடுக்கும் போது நீ யார் பிள்ளையென்று கேட்பதில்லை. ’ஒரு தங்கத் திறவுகோல் எல்லாப்பூட்டுகளையும் திறக்கும் என்பார்கள். புதிய திட்டமிடல் அதிகாரி சொக்கத்தங்கமாய் இருந்தார் அவரின் பெயர் திரு. முடுலிங்க. அவரை நான் முதலில் ஒரு படேல் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் திரு. முடுலிங்க சிலோன் நாட்டுக்காரர். திரு. முடுலிங்க எல்லாவற்றிலும் மிகத் துல்லியமாக இருந்தார். குறித்த நேரத்துக்கு அலுவலகத்துக்கு வந்து குறித்த நேரத்தில் அலுவலகத்தை விட்டுப்புறப்படுவார். அவர் எப்போதும் மிகத்தூய்மையான அழகிய உடைகளையே அணிவார். அவரின் சுத்தமாகச் சவரம் செய்யப்பட்ட முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை தொற்றியிருக்கும் அவருக்கு அறுபது வயது இருக்கலாம். ஆண்டுகள் அழகுக்கு மரியாதை செலுத்துவதில்லை என்ற (f)புலானிப் பழமொழி திரு. முடுலிங்கவை பொறுத்தவரையில் செல்லுபடியாகாது. அவர் எப்போதுமே தன் கையோடு எடுத்து வரும் சிறிய கணிப்பொறியைப் போல தனது தலையுள் ஆயிரம் கணிப்பொறிகளை வைத்திருந்தார். பிரஸிடண்ட் அன்ஸாரிக்கு கொடுக்கும் அதேயளவு மரியாதையைத் தான் திரு. முடுலிங்க எனக்கும் கொடுத்தார். அதேயளவு மரியாதையைத்தான் அவர் தோடம்பழக் கூடைக்காரி மைமூனிடமும் காட்டினார். அவரின் கண்களில் அறிவும் கனிவும் சுடராய் எழுந்தன. நான் அவரின் அதீத கவனத்தைப் பெறுவதற்கு பெரு முயற்சிகள் எதுவும் செய்யவேண்டியிருக்கவில்லை. நைஜீரிய நாட்டு அரசியல் நிலைமைகள் விரைவிலேயே என்னை திரு. முடுலிங்கவின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய ஊழியக்காரனாக மாற்றி விட்டிருந்தன. அந்த ஒன்பது தூக்குத்தண்டனைகளுக்கும் எதிராக நைஜீரியா முழுவதும் கலவரங்கள் நடைபெற்றன. பயாஃப்ரா பிரிவினைப் போராட்டத்தக்குப் பிறகு நைஜீரியா கண்டிருக்கும் மிகப் பெரிய கலவரம் இதுதான் என்று ‘Nigeria Times’ எழுதியது. நைஜீரியாவின் தெற்குப்பகுதிகளில் எண்ணை வயல்களை அண்டிய பிரதேசங்களில் தொடங்கிய இந்தக் கலவரம் பின் நகரங்களுக்குப் பரவி இப்போது நைஜீரியாவின் கிராமங்களுக்கும் பரவத்தொடங்கியது. ‘எட்டு மனிதர்கள் உள்ள கிராமத்திலும் ஒரு தேசபக்தன் இருப்பான்’ என்பதே கலவரக் காரர்களின் பிரதான கோஷமாக இருந்தது. கலவரக்காரர்கள் வெளிநாட்டு நிறுவனங்களையும் அலுவலகங்களையும் குறிவைத்துத்தாக்கினார்கள். எங்கள் அலுவலகத்தில் இருக்கும் வெளிநாட்டவர்களையும் கலவரக்காரர்கள் தாக்கக்கூடும் எனப் பிரஸிடண்ட் அன்ஸாரி அபிப்பிராயப்பட்டார். இரண்டு வெள்ளையர்களின் வீடுகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. திரு. முடுலிங்க தங்கியிருந்த வீடு எங்கள் அலுவலகத்திலிருந்து பத்துக் கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்தது. லாகோஸின் புறநகர்ப் பகுதியில் ஓபஸான்ஸோ வீதியில் அவரின் வீடு இருந்தது. அந்த வீதியில் இருந்த பதினோராவது குறுக்குத் தெருவில் தான் நான் தங்கியிருந்த அறையும் இருந்தது. திரு. முடுலிங்க அலுவலகத்துக்கு வரும் போதும் போகும் போதும் அவருக்குத் துணையாக அவரோடு வந்து போகுமாறு பிரஸிடண்ட் அன்ஸாரி எனக்குக் கட்டளையிட்டார். என் பணி வரலாற்றிலேயே பிரஸிடண்ட் அன்ஸாரி போட்ட ஒரு உத்தரவை முதற்தடவையாக நான் முழு மகிழ்ச்சி யோடு ஏற்றுக் கொண்டேன். இந்தப்புதிய ஏற்பாட்டால் எனக்கு உடனடியாக இரண்டு நன்மைகள் கிட்டின. முதலாவதாக நான் திரு. முடுலிங்கவின் பரிவை விரைவிலேயே பெற்றுக் கொண்டேன். இரண்டாவதாக நான் அலுவலக நேரம் முடிந்த பின்பும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை. சரியாக மணி அய்ந்தானதும் திரு முடுலிங்க அலுவலகத் திலிருந்து புறப்படுவார். நானும் அவருடனேயே புறப்பட்டு விடுவேன். திரு. முடுலிங்க தனது ஜீப் வண்டியைத் தானே ஓட்டினார். நைஜீரியச் சாரதிகளின் மிதமிஞ்சிய வேகமும் அவர்களது வீதிச் சாகஸங்களும் தனக்கு ஒத்துவரவில்லை என்று அவர் சொல்லுவார். ஜீப் ஓடத் தொடங்கியதும் திரு. முடுலிங்க ஜீப்பினுள் ஒரு சோம்பலான சங்கீதத்தை ஒலிக்க விடுவார். அந்தச்சங்கீதம் இந்திய இசை வகையைச் சேர்ந்ததாம். அந்தச் சங்கீதம் ‘நன்நன்நன்நா’ என்று மிக மெதுவாகவே செல்லும். திரு. முடுலிங்க ஸ்ரேறிங்கில் தாளம் போட்டவாறு அந்தச் சங்கீதத்தைக் காட்டிலும் மெதுவாகவே ஜீப் வண்டியைச் செலுத்துவார். திரு. முடுலிங்கவின் வீட்டில் சமையல்காரனாக தோட்டக்காரனாக காவலாளியாக மூன்று நைஜீரியர்கள் வேலை செய்து வந்தார்கள். அந்த மாளிகை போன்ற வீட்டிலே திரு. முடுலிங்க தனியாகவே தங்கியிருந்தார். திரு. முடுலிங்கவின் வீட்டுக்குப் போனால் அங்கிருந்து நான் உடனே கிளம்பிவிடுவதில்லை எவ்வளவு நேரத்தை அங்கு கழிக்கலாமோ அவ்வளவு நேரத்தை நான் அங்கு கழித்தேன். திரு. முடுலிங்கவோடு பேசக்கிடைக்கும் சின்னதொரு தருணத்தைக் கூட நான் நழுவ விட்டேனில்லை. அவருடன் பேசிப்பேசியே என் ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்த்துவிடுவது என்ற முடிவோடு நான் செயற்பட்டேன். திரு. முடுலிங்க எனது ஆங்கில உச்சரிப்பில் சலிக்காமல் புன்னகையோடும் அக்கறையோடும் திருத்தங்களைச் சொல்வார். எனக்கு ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதில் இருந்த வெறியையும் வேகத்தையும் பார்த்து உண்மையிலேயே திரு. முடுலிங்க மிரண்டு போனார். அவர் புன்னகையுடன் ‘அதிக அவசரம் கிழங்குக்குக் கேடு’ என்றார். இந்தக்கிழங்குப் பழமொழி கென்யா நாட்டில் மிகப்பிரபலமான பழமொழி. திரு. முடுலிங்க கென்யா, சூடான், ஸியாரோலியோன், சோமாலியா, எத்தியோப்பியா, தான்சானியா, ஸாயிர் என்று ஆபிரிக்காவை ஒரு சுற்றுச் சுற்றி விட்டுத்தான் நைஜீரியாவுக்கு வந்திருந்தார். அவருக்கு ஆபிரிக்காவின் ஒவ்வொரு கலாசாரத்தைப் பற்றியும் தெரிந்திருந்தது. அவருக்கு ஆபிரிக்காவின் ஒவ்வொரு குடிவகை, உணவு வகை பற்றியும் தெரிந்திருந்தது. அவருக்கு ஆபிரிக்காவின் ஒவ்வொரு இனக்குழுவைப் பற்றியும் தெரிந்திருந்தது. அவருக்கு ஒவ்வொரு ஆபிரிக்க பழங்குடிகளினதும் பாடல்களைப் பற்றித் தெரிந்தது. முக்கியமாக அவருக்கு ஒவ்வொரு ஆபிரிக்கர்களுடனும் விதம்விதமாகமான உச்சரிப்புக்களில் எப்படி ஆங்கிலம் பேசுவது என்பதைப் பற்றித் தெரிந்திருந்தது. எந்த ஊசியும் இருபுறமும் கூராயிராது என்பார்கள். ஆனால் திரு. முடுலிங்க எட்டுப் பக்கமும் கூர்மையாய் இருந்தார். அவர் நைஜீரியாவுக்கு வந்த சில நாட்களிலேயே நைஜீரியாவின் பல பழக்க வழக்கங்களைத்தெரிந்து கொண்டிருக்கிறார். ஒருநாள் அவர் தன் கையாலேயே நைஜீரியர்களின் சிற்றுண்டி வகையான ஹோஸையைத் தயாரித்தார். நான் என் பாட்டியின் கைகளில் கூட அவ்வளவு சுவையான ஒரு ஹோஸையைச் சாப்பிட்டிருக்கவில்லை. அவர் எங்கேயும் எப்போதும் தன் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தார். திரு. முடுலிங்கவுடனான எனது தீவிரவாத ஆங்கிலப்பயிற்சியில் ஒரு இடைவெளி விழுந்தது. நான் எனது நிக்ஹாஹ்வுக்காக நைஜீரியாவின் வடக்கு எல்லையில் இருக்கும் எனது ஊருக்கு ஒரு மாத விடுமுறையில் சென்றேன். பெண் எடுத்தல் பக்கத்திலும் களவாடுதல் தூரத்திலும் இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் என் தாயர் என் மனைவி ஆமினாவை தூரத்தில் இருந்துதான் தேர்ந்தெடுத்தார். ஆமீனா கடுனா மாவட்டத்தைச் சேர்ந்தவள். அந்தப் பகுதியில் மந்தை வளர்ப்புத்தான் பிரதான தொழில் ஆனாலும் ஆமினா எழுத வாசிக்கக்கற்றிருந்தாள். ஆமினாவுக்கு பதினேழு வயது. அவள் உயரமாக ஆனால் மிகவும் மெலிந்து நோஞ்சானாக இருந்தாள். அவள் எவ்வளவு தான் ஓடி ஓடி வீட்டு வேலைகளைச் செய்தாலும் எனது பாட்டி ஆமினாவைக் குற்றம் சொல்லிக்கொண்டேயிருந்தார். நான் பாட்டியை திட்டி அடக்க முயன்ற போதெல்லாம் அவர் ‘குருட்டுப்பூனை செத்த எலியைத் தான் பிடிக்கும்’ என்று என்னைக் கிண்டல் செய்தார். ஆமினாவிடம் ஒரு விரும்பத்தகாத பழக்கமும் இருந்தது. அவள் எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக வெட்கப்பட்டாள். சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் ஆமினா பயந்தாள். நான் அவளைத்தொடும் போது கூட அவளின் கண்கள் வெளிறிப்போய்க் கெஞ்சின. நான் அவளை அணைத்த போதெல்லாம் அவளின் தேகம் அச்சத்தால் நடுங்கியது. நான் அவளைப் பார்க்கும்போதெல்லாம் ஆமினா தன் முக் காட்டை நூறு தடவைகள் சரி செய்தாள். என்னோடு பேசக்கூட அவள் தயங்கினாள். அவளின் நாவு வார்த்தைகளைக் குழறியது. ஆனால் எனக்கு நம்பிக்கையிருந்தது. நான் ஆமினாவை லாகோஸீக்கு அழைத்துச் சென்றவுடனேயே அவளை நான் மெல்ல மெல்ல மாற்றுவேன். இந்தச் சின்ன மலைப் பூவின் இதழ்கள் காயப்படாமலேயே நான் அதை மலரவைப்பேன். [] நான் ஆமினாவுடன் லாகோஸீக்குத் திரும்பி வந்தபோது நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. கலவரக்காரர்களைப் பொலிஸாரும் இராணுவத்தினருமாக அடக்கியிருந்தனர். நான் லாகோஸீக்கு வந்து சேர்ந்த அடுத்த சனிக்கிழமையே திரு முடுலிங்க புதுமணத் தம்பதிகளான எங்களுக்குத் தன்வீட்டில் இரவு விருந்தொன்றை ஏற்பாடு செய்தார். அந்த விருந்துக்கு எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த அந்த இரண்டு வெள்ளையர்களும் கூட அழைக்கப்பட்டிருந்தனர். மூன்று வெளிநாட்டவர்களைக் கண்டது தான் தாமதம் ஆமினாவின் உடல் வெட வெடவென நடுங்கத் தொடங்கி விட்டது. எங்கள் எல்லோருடனும் மேசையில் அமர்ந்து உணவருந்தும் போது அவள் அளவுக்கு அதிகமான வெட்கத்தால் அலைக்கழிக்கப் படுவதை நான் கவனித்தேன். திரு. முடுலிங்க மிகுந்த கனிவோடு ஆமினாவை உபசரித்தார். அவர் ஆமினாவை இயல்பாக இருக்கச் செய்வதற்கு தனக்குத் தெரிந்த வித்தைகள் அனைத்தையும் கையாண்டு பார்த்தார். ஆமினாவின் இயல்பே வெட்கப்படுவதும் பயப்படுவதும் தான் என்பதை திரு. முடுலிங்க அறிய மாட்டார். (f)புலானி இனப்பெண்கள் மற்றைய நைஜீரியப் பெண்களைப் போல கறுப்பிகள் இல்லை. ஆமீனா ஓரளவு நிறமானவள். உரித்த யாம் கிழங்கு போல இருப்பாள். அவள் அணிந்திருந்த விருந்துக்கான ஆடையும் (f)புலானி இனப்பெண்களுக்கே உரித்தானவை. அவளின் இரு கன்னங்களிலும் இனக்குழு அடையாளங்கள் கீறப்பட்டிருந்தன. இவை குறித்தெல்லாம் திரு. முடுலிங்கவுக்கு ஆயிரம் கேள்விகளும் விசாரணைகளும் இருந்தன. அவர் இவை குறித்து ஆமினாவிடம் கேட்ட கேள்விகளை ஆமினா மிகுந்த அச்சத்துடன் எதிர்கொண்டாள். அவள் ஒரு கடுமையான பள்ளி ஆசிரியருக்கு முன் நிற்கும் படுமொக்கான பள்ளிச் சிறுமி போல திணறித் திணறி திரு. முடுலிங்கவுக்கு பதில் சொன்னாள். ஆமினா சொன்ன எல்லாப் பதில்களுமே திரு. முடுலிங்கவுக்குப் பெருத்த ஆச்சரியங்களை ஏற்படுத்தின. மலையடிவாரத்தில் சிறு வயதில் தான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட சம்பவங்களை ஆமினா சொன்ன போது திரு. முடுலிங்க பரவச நிலையின் உச்சியில் இருந்தார். சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் பயப்படுவது ஆமினாவின் சிறப்பென்றால் சின்னச் சின்ன விசயங்களுக் கெல்லாம் பரவசப்படுவது திரு. முடுலிங்கவின் சிறப்பாய் இருந்தது. ஆமினா ஹெளஸ மொழியில் பேசியதை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து திரு. முடுலிங்கவுக்கும் அந்த வெள்ளையர்க்கும் கூறினேன். இப்போது கூட இந்த வெள்ளையர்களுக்கு என் ஆங்கிலம் புரியவில்லை. எனவே நான் ஆங்கிலத்தில் திரு. முடுலிங்கவுக்கு கூறியதை அவர் மறுபடியும் இன்னொரு ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து அந்த வெள்ளையர்களுக்குக் கூறினார். விருந்து முடிந்து புறப்படும்போது ஆமினா மட்டுமல்லாமல் நானும் ‘திடுக்கிடும்’ படியான காரியம் ஒன்றை அந்த ஐரிஸ் வெள்ளைக்காரர் செய்ய முனைந்தார். விடைபெறும் போது கை குலுக்குவதற்காக அந்த வெள்ளைக்காரர் ஆமினாவை நோக்கித் தனது கையை நீட்டினார். அப்போது ஆமினா ஒரு மான் போல இரண்டடிகள் பின்னே துள்ளிப் பாய்ந்தாள். நத்தை தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல அவள் தனது தலை, கைகள், கால்கள் முதலிய உறுப்புக்களை தன் உடலுக்குள் அனிச்சையாக இழுத்துக் கொண்டாள். ஐரிஸ்காரரும் உடனடியாகவே சமாளித்துக் கொண்டு ஒரு தந்திரம் செய்தார். தன் நீட்டிய கையின் விரல்களை படபட வென அடித்து விடைபெறுவது போல சைகை செய்தார். அவர் தனது கையை நீட்டிய போது தான் ஓரிரு துளி சிறுநீரை ஆடையிலேயே கழித்து விட்டதாக ஆமினா பின்பு என்னிடம் தயங்கித் தயங்கிச்சொன்னாள். திரு. முடுலிங்க எங்களை தனது ஜீப் வண்டியிலேயே எங்களது வீட்டு வாசல் வரை கொண்டு வந்து விட்டார். அவருக்கு நானும் ஆமினாவும் பல தடவைகள் நன்றி தெரிவித்தோம். அப்போது திரு. முடுலிங்க எங்களுக்கு திருமணப் பரிசொன்றை அளித்தார். அந்தப் பரிசு அடுத்த நாள் மாலை நேரக் காட்சிக்கான இரண்டு பல்கனி நுழைவுச் சீட்டுக்களாக இருந்தது. பின்பு திரு. முடுலிங்க அந்த நுழைவுச் சீட்டுக்களைக் குறித்து எனக்கு ஒரு சிறியதொரு விளக்கம் அளித்தார். அப்போது லாகோஸில் ஓடிக்கொண்டிருந்த ஒரு அமெரிக்கத் திரைப்படத்துக்கான நுழைவுச் சீட்டுக்கள் அவை. அந்தத்திரைப்படத்தின் கதை போத்துக்கேயர்கள் ஆபிரிக்காவுக்குள் நுழைந்து ஆபிரிக்கர்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றதைக் குறித்துப் பேசுகிறதாம். எனக்குத் திரைப்படம் பார்ப்பதில் எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை. மாணவனாய் இருந்த காலத்தில் ஒன்றிரண்டு ஹிந்தி சினிமாக்கள் பார்த்ததோடு சரி. அதன் பின்பு நான் சினிமாவே பார்த்ததில்லை. திரு. முடுலிங்கவின் கூர்மையான கண்கள் என் முகத்தின் உற்சாகமற்ற தன்மையை உடனடியாகவே கண்டுபிடித்து விட்டன. திரு. முடுலிங்க புன்னகையுடன் இப்படிச் சொன்னார். “மம்முடு நீ அடிக்கடி ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது உன் ஆங்கில உச்சரிப்பை நேர் செய்து கொள்ள உதவும்.” அப்போது என் மூளைக்குள் பளீரென்று ஒரு வெளிச்சம் அடித்தது. திரு. முடுலிங்க சொல்வது முற்றிலும் உண்மை. ஹிந்திப்படம் பார்த்துப் பார்த்தே ஹிந்தி மொழியைச் சரளமாகப் பேசும் பல நைஜீரியர்களை நானறிவேன். அவர்கள் படேல்களின் கடைகளில் ஹிந்தியிலேயே பேரம் பேசிப்பொருட்களை வாங்குவதையும் நான் கண்டிருக்கிறேன். நான் ஊருக்குப் போய் வந்த இந்த ஒரு மாத காலத்துள் நானே எனது ஆங்கில மொழி விருத்தியைப்பற்றிக் கொஞ்சம் அசட்டையாக இருந்த போதும் திரு. முடுலிங்க அதை ஒருபோதும் மறந்தாரில்லை. திரு. முடுலிங்க புறப்படும் போது என்னைப் பார்த்துக் கண் சிமிட்டி “மம்முடு திருமணமான புதுச் சோடிகள் படம் பார்க்கப் போவது சிலோன் நாட்டுச் சம்பிரதாயம் என்று உன் மனைவியிடம் கூறு” என்றார். ஞாயிற்றுக்கிழமை மாலையில் நானும் ஆமினாவும் திரைப்படத்துக்குக் கிளம்பினோம். நாங்கள் திரைப்படத்துக்கு போகப்போகிறோம் என்ற செய்தியை அறிந்தவுடன் ஆமினா அதற்கும் பயப்பட்டாள். அவள் இதுவரை திரையரங்கில் படம் பார்த்ததே இல்லையாம். அவள் லாகோஸின் பெரும் சன நெருக்கடி மிகுந்த வீதிகளை ஓரக் கண்களால் மிரளமிரளப் பார்த்தவாறு குனிந்த தலை நிமிராமல் என் பின்னே நடந்து வந்தாள். அய்ந்து நிமிடங்கள் நடப்பதற்கு இடையில் அவள் அய்ம்பது தடவைகள் தன் முக்காட்டைச் சரி செய்தாள். ‘ரெக்ஸ்’ திரையரங்கம் நகரத்தின் மிக முக்கிய பகுதியான விக்ரோறியாச் சதுக்கத்தில் இருந்தது. இந்தப் பகுதியை ‘வைற் லாகோஸ்’ என்று சொல்வார்கள். வெள்ளையர்களின் குடியிருப் புப்பகுதிகள் இங்கேயே அமைந்திருந்தன. அங்கிருந்த சிறப்பு அங்காடிகளும் கடைகளும் வெள்ளையர்களுக்கு என்றே சிறப்பாக அமைக்கப்பட்டவை. நைஜீரியா சுதந்திரமடைந்த பின்பு இங்கிலாந்துக்குப் போகாமல் இங்கேயே தங்கிவிட்ட வெள்ளையர்களின் மையமாக விக்ரோறியாச் சதுக்கம் இருந்தது. நான் ஆமினாவிடம் ‘லண்டன் மாநகரம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும்’ என்றேன். ஆமினா குனிந்த தலையை நிமிர்ந்தாமலேயே ‘ம்’ கொட்டினாள். திரையரங்கம் முற்று முழுதாக ஆங்கிலேயேப் பாணியிலேயே அமைந்திருந்தது. திரையரங்கத்தில் அனைத்து அறிவித்தல்களும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டிருந்தன. காட்சி அரங்கத்துக்குள் நுழையும் கதவுக்கு அருகாக சுத்தமான வெள்ளை ஆடையும் தலையில் வெள்ளைத்தொப்பியும் அணிந்திருந்த ஒரு இளம் சீனாக்காரி ஒரு பெரிய இயந்திரத்தில் சோள மணிகளைப் பொரித்துக் கொண்டிருந்தாள். நாங்கள் கிராமங்களில் சோளப்பொத்தியை நெருப்பில் சுட்டுத் தான் சாப்பிடுவோம். சைனாக்காரியின் பொரிக்கும் இயந்திரத்தின் அடிப்பகுதியில் வெள்ளை முத்துக்கள் போல சோளப் பொரிகள் சொரிந்து கொண்டிருந்ததை ஆமினா ஆர்வத்தோடு பார்த்தாள். நான் சைனாக்காரியிடம் ஒரு சரை சோளப்பொரியும் ஒரு கொக்கோ கோலா போத்தலும் தருமாறு ஆங்கிலத்தில் கேட்டு பத்து நைறா தாளென்றை நீட்டினேன். நான் பேசிய அந்த ஒற்றை வரி ஆங்கிலத்தைக்கூட அந்தச் சீனாக்காரி சிரமப்பட்டே புரிந்து கொண்டாள். அவள் பதிலுக்குப் பேசிய ஆங்கிலம் எனக்கு சரிவரப்புரியவில்லை. சீனாக்காரி சிரித்த படியே என்னிடம் ‘நீ என்ன மொழி பேசுவாய் ஹெளஸவா? இபோவா? யரூபாவா?’ என்று கேட்டாள். அந்தச்சிறிய சீனப் பெண் நான்கைந்து மொழிகள் பேசக் கூடியவளாய் இருப்பாளாக்கும். முதல் பட்டத்திற்கு படிப்பது தான் கடினம் அடுத்த பட்டம் தானாகவே வரும் என்பார்கள். சோளப்பொரியையும் கொக்கோ கோலாப்போத்தலையும் சீனாக்காரியிடம்’ இருந்து வாங்கி நான் ஆமினாவிடம் கொடுக்கும் போது காட்சி அரங்கினுள்ளேயிருந்து சத்தம் வருவதைக் கேட்டு பதற்ற முற்றேன். எனது பதற்றத்தைக் கவனித்த சீனாக்காரி உள்ளே விளம்பரப்படங்கள் தான் காண்பிக்கப்படுகின்றன என்றும் பிரதான படம் தொடங்க இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கின்றன என்றும் ஹெளஸ மொழியில் சொன்னாள். நானும் ஆமினாவும் காட்சியரங்கினுள் நுழைந்த போது உள்ளே விளக்குகள் முற்றாக அணைக்கப்படிருக்கவில்லை. அரங்கு அரையிருளில் இருந்தது. நானும் ஆமினாவும் பல்கனி வகுப்பில் நடுக்கொள்ள அமர்ந்தோம். திரையில் விளம்பரப் படங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் அவற்றை யாரும் கவனிப் பதாய்த் தெரியவில்லை. அது ஒரு மிகச்சிறிய அரங்கு. அரங்கின் பல்கனியில் ஏற்கனவே முப்பது பேர்கள் வரை ஆண்களும் பெண்களுமாகப் பார்வையாளர்கள் இருந்தார்கள். பார்வையாளர்களில் பாதிப்பேர்கள் வெள்ளைக்காரர்கள். அவர்கள் சோடி சோடியாக அமர்ந்திருந்தார்கள். நான்கைந்து இந்தியர்கள், மிகுதி பேர் கறுப்பர்கள் அந்தக் கறுப்பர்களின் உடையலங்காரங்களே அவர்களை மேசைக்கார கறுப்பர்கள் என்று காட்டின. சிலர் தங்களுக்குள் கிசு கிசுப்பான குரல்களில் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் அந்த அரை வெளிச்சத்தில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்கள். நான் விளம்பரப் படங்களைக் கவனிக்கலானேன் எல்லா விளம்பரங்களும் ஆங்கில மொழியிலேயே தயாரிக்கப்பட்டிருந்தன. ஒன்று: திரையில் ஒரு வெள்ளைக்காரி நிர்வாணமாக அருவியில் குளிக்கிறாள். அப்போது ஒருவன் அங்கே வருகிறான். இருவரும் முத்தமிடுகிறார்கள். நான் இது சவர்க்காரத்துக்கான விளம்பரம் என்றுதான் நினைத்திருந்தேன். அவர்கள் இருவரும் ஒரு காரில் ஏறிப் போகும் போது தான் அது ’ரெனோல்ட்’காருக்கான விளம்பரம் என்று தெரிந்து கொண்டேன். நான் ஆமினாவை ஓரக்கண்ணால் கவனித்தேன். சோளப் பொரியும் கொக்கோகோலப் போத்தலும் அவள் மடியில் கிடந்தன. அவள் மார்புக்கு குறுக்காகத் தனது கைகளைக் கட்டியவாறே குறுகிப்போய் உட்கார்ந்திருந்தாள். இரண்டு: திரையில் இப்போது ஒரு கறுப்பு இளம்பெண் நிர்வாணமாக கண்களை மூடிக் கிடக்கிறாள். ஒரு வெள்ளையன் அவளின் கரிய தேகத்தில் கால்களில் இருந்து முத்தமிட ஆரம்பிக்கிறான். அவன் படிப்படியா அவளின் முகம் வரை முத்தமிட்டுக்கொண்டே முன்னேறுவதை அங்கங்கே வெட்டி வெட்டிக் காட்டினார்கள். நான் இது நிச்சயமாகவே வாசச் சவர்க்காரத்துக் கான விளம்பரமாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். விளம்பரத்தின் முடிவில்தான் அது கறுப்புக் கோப்பிக்கான விளம்பரம் என்று எழுத்துக்கள் மூலம் தெரியவந்தது. இவ்வளவுக்கும் விளம்பரத்தில் ஒரு துளி கோப்பித்தூளைக்கூடக் கண்ணிற் காட்டினார்களில்லை. மூன்று: இப்போது திரையில் நீண்ட தலைமுடி வைத்திருந்த ஒரு வெள்ளைக்காரன் குதிரையில் வந்து குதித்தான். வழியால் வந்த ஒரு இளம்பெண் ஓடிப்போய் அவனின் மார்பிலும் கழுத்திலும் முத்தமிட்டாள். பின் அவனின் கன்னத்தில் முத்தமிடும் போது அங்கே ஒரு சிறுவன் வருகிறான். உடனே இளம்பெண் ஓடிப்போய் அந்தச் சிறுவனை முத்தமிடுகிறாள். குதிரையில் வந்தவன் குதிரையின் அடிவயிற்றைத் தடவடிக் கொண்டே அந்தச்சிறுவனை முறைக்கிறான். நான் இது குதிரைக் கான விளம்பரமா? அல்லது அந்தச் சிறுவனுக்கான விளம்பரமா? என்று என் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்த போது “தவறாமல் எப்போதும் கிலெட்டின் பிளேடுகளையே உபயோகியுங்கள்” என்று திரையில் எழுத்துக்கள் மின்னின. எழுத்துக்களின் பின்னணியில் அந்தப் பெண்ணின் இராட்சத உதடுகள் அசைந்தன. அப்போது திரையில் ‘முத்தங்களை இழந்து விடாதீர்கள்’ என்று எழுத்துக்கள் வந்தன. நான்கு: திரையில் கடும் மழையின் நடுவே ஒருவன் சட்டையில்லாமல் வெற்றுடம்புடன் நிற்கிறான். அவன் உடல் குளிரில் வெடவெடக்கிறது. ஒரு இளம் பெண் அவனை நெருங்கி முத்தமிடத் தொடங்குகிறாள். அவள் முத்தமிட முத்தமிட அவன் மெல்ல மெல்ல ஒரு நெருப்புச்சிலையாக மாறிக்கொண்டிருக்கிறான். அவள் விடாமல் நெருப்புச் சொரூபத்தையும் முத்தமிட நெருப்புச்சொரூபம் கடும் மழையோடு கலந்து உருகித் தீக்குழம்பாய் ஓட ஆரம்பிக்கிறது. அது ‘ஜக் டானியல்’ விஸ்க்கிக்கான விளம்பரம். நான் ஆமினாவைக் கவனித்தேன். அவள் தலையைக் குனிந்து கொண்டிருந்தாள். நான் அவளின் விரல்களைப் பற்றினேன். அவளின் விரல்கள் தீக்கங்குகளாய் சுட்டுக் கொண்டிருந்தன. அய்ந்து: ஒருத்தி தன் உதடுகளின் கீழே கையை விரித்து ஊதிப் பறக்கும் முத்தம் கொடுக்க அவளின் உதடுகள் அவளின் முகத்திலிருந்து கழன்று தோடம்பழச் சுளைகளாக மாறிக் காற்றில் பறந்து நைஜீரியாவில் இருந்து கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து இரட்டைக் கோபுரங்களின் அருகே இறங்கி அங்கே கோட் சூட் போட்டு அலுவலகத்தில் இருக்கும் ஒரு ஆடவனின் உதடுகளில் போய் ஒட்டிக்கொள்கின்றன. உடனே அவனது உதடுகள் இரத்தச் சிவப்பு நிறமாகின்றன. நான் அது லிப்ஸ்டிக்குக்கான விளம்பரம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது நோக்கியா கைத் தொலைபேசிக்கான விளம்பரம். விளம்பரம் முடியும் போது அந்த ஆடவன் செல்லமாகத் தன் நாவால் திரை முழுவதையும் வருடினான். நான் அப்போது ஆமினாவை முத்தமிடத்தொடங்கினேன். ஆமீனா பதறிப்போனாள். நான் விடாமல் ஆமினாவின் முகத்தைக்கைகளால் ஆடாமல் அசையாமல் பிடித்து வைத்து அவளது கண்கள் மூக்கு நெற்றி கன்னங்கள் உதடுகள் என்று என் உதடுகளால் உறிஞ்சினேன். திரையங்குக்குள் இருந்தவர்கள் ஒருவர் இருவராகச் சாடை மாடையாக ஓரக்கண்களால் எங்களை கவனிக்கத் தொடங்கினார்கள். நான் நிறுத்தாமல் ஆவேசத்தோடு ஆமினாவைப் பெரும் சத்தத்துடன் முத்தமிட்டேன். என் ஒவ்வொரு முத்தமும் ஒரு ஊசிப்பட்டாசு போல பெரும் சத்தத்துடன் வெடித்தது. இப்போது பல்கனி வகுப்பில் இருந்த எல்லோருமே எங்களைக் கவனிக்கத் தொடங்கினார்கள். நான் உன்மத்தம் தலைக்கேறியவன் போல ஆமினாவை முத்தமிட்டுக்கொண்டேயிருந்தேன். ஆமினா சேவலிடம் அகப்பட்ட பெட்டைக்கோழி மாதிரித்தனது கைகளைப்படபடவென அடித்துக் கொண்டாள். நான் ஆமினாவை விடாமல் முத்தமிட்டுக் கொண்டே திரையரங்கைக் கவனித்தேன். அங்கிருந்த முப்பது சோடிக்கண்களும் அரையிருட்டில் எங்களையே கவனித்துக் கொண்டிருந்தன. அப்போது எனது இடதுகையால் ஆமினாவை அணைத்து முத்தமிட்டவாறே வலது கையால் ஆமினாவின் மடியிலிருந்த கொக்கோ கோலாப் போத்தலை எடுத்து எனதும் ஆமினாவினதும் தலைகளுக்கு மேலாக கொக்கோ கோலாவை உயர்த்திப் பிடித்தவாறே நான் அடித்தொண்டையால் “Enjoy Coca Cola” என்று கூவினேன். மறுநாள் காலையில் அலுவலகத்தில் என்னைப் பார்த்தபோது திரு. முடுலிங்க முதற்கேள்வியாக ‘நேற்று மாலை திரைப்படம் எப்படியிருந்தது?’ என்று கேட்டார் நான் திரைப்படத்தைப் பற்றிப் பேசாமல் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முதல் நடந்த விளம்பரக்கூத்துக்களைப் பற்றியும் நான் ஆமினாவை முத்தமிட்டதையும் கொக்கோ கோலாப் போத்தலைத் தூக்கிக்காட்டியதையும் ஒன்று விடாமல் திரு. முடுலிங்கவுக்குச் சொன்னேன். அந்தக் கதையைக் கேட்டதும் திரு. முடுங்லிங்க விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டார். விடாமல் வெடித்துச் சிரித்ததில் அவர் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. பிற்பகல் இரண்டு மணியளவில் திரு. முடுலிங்க என்னைத் தனது அறைக்கு அழைத்தார். என்னை நாற்காலியில் உட்காரச் சொன்னார். பின் திரு. முடுலிங்க நானும் ஆமினாவும் திரைப்படம் பார்க்கப் போனதைப் பற்றித் தான் ஒரு சிறுகதை எழுதியிருப்பதாக என்னிடம் சொன்னார். நான் மிகுந்த ஆச்சரியத்துடன் ‘மாஸ்ர நீங்கள் கதைகளும் எழுதுவீர்களா?’ என்று திரு. முடுலிங்கவிடம் கேட்டேன். அவர் தனது கணிப்பொறியில் தாளம் போட்டவாறே புன்னகைத்தார். அவர் இதுவரை அறுபத்தொரு சிறுகதைகளை எழுதியிருக்கிறாராம். பிரஸிடண்ட் அன்ஸாரியைப் பற்றி அவர் கதை எழுதியிருக்கிறாராம். அந்த ஐரிஸ் வெள்ளையரைப் பற்றியும் ஒரு கதை எழுதியிருக்கிறாராம். அவர் வீட்டுத் தோட்டக்காரன் கமறா குறித்து ஒரு கதை எழுதியிருக்கிறாராம். எங்கள் அலுவலகத்துக்கு அவ்வப்போது தோடம் பழம் விற்க வந்து போகும் கூடைக்காரி மைமூன் பற்றிக் கூட திரு. முடுலிங்க ஒரு கதை எழுதியிருக்கிறாராம். இப்போது என்னைப் பற்றியும் அவர் ஒரு கதை எழுதியிருக்கிறார். அவர் அந்தக் கதையை சிலோன் மொழியில் எழுதியிருந்தார். என்னை அவர் தன் எதிரே உட்கார வைத்து என்னைப் பற்றி எழுதிய கதையை எனக்கு வரிக்கு வரி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லி முடித்தார். நானும் ஆமினாவும் அவர் வீட்டுக்கு விருந்துக்குப் போனது, அவர் எங்களுக்கு சினிமா நுழைவுச் சீட்டுக்களைப் பரிசளித்தது, ஆமினா லாகோஸ் வீதிகளில் மிரண்டது, சோளப்பொரி விற்ற சீனாக்காரியின் ஆங்கிலம் புரியாமல் நான் முழித்தது, திரையில் காண்பிக்கப்பட்ட விளம்பரப் படங்கள், ரெனோல்ட் கார், கறுப்புக் கோப்பித் தூள், கிலெட்டின் ப்ளேட், ஜக் டானியல் விஸ்கி, நோக்கியா கைத் தொலைபேசி என நான் சொன்னதைச் சொன்னபடியே எழுதியிருந்த திரு. முடுலிங்க கதையின் முடிவில் மாத்திரம்ஒரு நுட்பமான மாற்றத்தைச் செய்திருந்தார். திரு. முடுலிங்கவின் கதைப்படி நான் ஆமினாவை முத்தமிடவில்லை. ஆனால் திரு. முடுலிங்க கதைக்கு ‘முத்தம்’ என்று தலைப்பிட்டிருந்தார். அங்கேதான் அவரின் படைப்புச் சூட்சுமம் ஒளிந்திருக்கிறது. திரு. முடுலிங்க என்னையும் ஆமினாவையும் குறித்து எழுதிய கதையின் முடிவு பின்வருமாறு: "மம்முடு திரையில் ஓடும் விளம்பரங்களையே பார்த்தவாறு இருந்தான். அந்த விளம்பரப் படங்களில் வசனங்களே இல்லாமல் இருந்தது அவனுக்குச் சற்று ஏமாற்றமாய் இருந்தது. அவன் சற்று சலிப்போடு ஆமினாவைப் பார்த்த போது அவளின் கண்கள் திரையைப் பார்ப்பதும் தரையைப் பார்ப்பதுமாய் சாகசங்கள் செய்தன. மம்முடு ஆமினாவின் கையைத் தொட்டபோது அவளின் கை விரல்கள் தீக் கங்குகளாய்த் தகித்தன. விளம்பரப் படங்கள் முடிந்த போது அரங்கு முழுவதும் இருளானது. அந்த இருளுக்குள் ஆமினா ஒரு காரியம் செய்தாள். அவளது சவூதிப் பூசணிக்காய் போன்ற பிருஷ்டங்களைச் சற்றேஅசைத்து வைத்துத் தலையை சரியாகத் தொண்ணூறு பாகையில் சடாரென வெட்டித் திருப்பி கனிந்த நாகதாளிப் பழங்களைச் சரிபாதியாகப் பிளந்து வைத்திருந்தது போல இருந்த தனது அதரங்களால் காய்ந்த கடலட்டை போலக் கிடந்த மம்முடுவின் தடித்த கீழ் உதட்டை மெதுவாகக் கௌவினாள். அந்த முத்தம் கல்யாணம் ஆன இந்த ஒரு மாதமாய் மம்முடு ஏங்கிக் கிடந்த முத்தம். அவளாக வலிய வந்து கொடுக்கும் முதல் முத்தம். ஆனால் மம்முடு இப்போது அவளோடு சரசமாடும் நிலையில் இல்லை. அவன் திரையில் ஓடத் தொடங்கியிருந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் காதுகள் வேட்டை நாயின் காதுகளைப் போல கவனமாக விறைத்து நின்றன. திரையில் வெள்ளையர்களின் கப்பல் ஆபிரிக்க கரையை நோக்கி வருகிறது. வெள்ளையர்கள் தங்களுக்குள் உரையாடுகிறார்கள். அவர்களின் உரையாடலில் ஒரு சொல் கூட மம்முடுவுக்குப் புரியவில்லை. இப்போது ஆமினா தனது ஈரமான உதடுகளால் மம்முடுவின் கன்னத்தை வருடிக் கொண்டிருந்தாள். மம்முடுவோ திரையில் பேசப்படும் வசனங்களையே உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தான். மார்க்கோனி முதன் முதலாகக் கண்டுபிடித்த வானொலி போல மம்முடுவால் ஒரு நேரத்தில் ஒரு அலைவரிசையில் மட்டும் தான் இயக்க முடியும். இப்போது ஆமினா மம்முடுவின் கை விரல்களை நோகாமல் முத்தமிட்டிக்கொண்டிருந்தாள். படம் தொடங்கி அப்போது நான்கு நிமிடங்கள் ஆகிவிட்டன. ஆகக் குறைந்தது நூறு சொற்களாவது திரையில் பேசப்பட்டிருக்கும். மம்முடுவால் ஒரு சொல்லையாவது புரிந்துகொள்ள முடியவில்லை. மம்முடு சோர்வடைந்து விட்டான். தன்னைப் போன்று ஆப்பிரிக்க கிராமப்புறத்திலிருந்து வந்தவனுக்கு வெள்ளையர்கள் பேசும் ஆங்கிலம் ஒரு போதும் விளங்கப் போவதில்லை என்று அவன் தன்னைத் தானே சபித்துக்கொண்டான். பின் மெதுவாக ’ஆதாமின் காலத்திலிருந்தே கழுதை சாம்பல் நிறமாய்த் தான் இருக்கிறது. எனத் தன் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான். சரியாகப் படம் தொடங்கிய அய்ந்தாவது நிமிடத்தில் மம்முடு தன் இருக்கையில் இருந்து எழுந்து திரையரங்கை விட்டு வெளியே வந்தான். அந்த நிமிடத்தில் தான் மம்முடு ஒரு மகா தவறைச் செய்தான். அந்த அமெரிக்கத் திரைப்படத்தில் முதல் அய்ந்து நிமிடங்கள் வரை கதாபாத்திரங்கள் போர்த்துகேயே மொழியில் மட்டும் தான் உரையாடுவார்கள். “என் கதைக்கு திரு. முடுலிங்க எழுதிய முடிவுதான் சரியாக இருக்கும் என்று எனக்குப்பட்டது. ஏனெனில் திரு. முடுலிங்க எனது கதையை இப்படி ஆரம்பித்திருந்தார்.”மம்முடு பேசும் ஆங்கிலம் கொக்கோ வில் கல்லொழுங்கையால் மாட்டுவண்டி ஓடுவது போலிருக்கும்." நன்றி அநிச்ச விலங்குப் பண்ணை ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்திரெண்டாம் ஆண்டு நான் ஏழாவது வகுப்பில் பாஸாகி எட்டாம் வகுப்புக்குச் சென்றேன். சென்ற ஆண்டு இறுதிப் பரீட்சையில் சித்தியடையாத பழைய எட்டாவது வகுப்பு மாணவன் ஒருவன் இப்பொழுது எங்களுடன் மறுபடியும் எட்டாம் வகுப்பில் படிக்கத் தொடங்கினான். எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் அதிக தலைமுடியுடன் காணப்பட்டோம். இருவரும் சீத்தைத் துணியில் தைக்கப்பட்ட பூப்போட்ட சட்டைகளும் ப்ளுரில் துணியில் காற்சட்டைகளும் அணிந்திருந்தோம். இருவருமே வேதக்காரர்கள். அதாவது A B C D எனப் பிரிக்கப்படடிருந்த எட்டாவது வகுப்பில் நான்கு பரிவுகளிலும் நாங்கள் இருவர் மட்டுமே வேதக்காரர்கள். எல்லாவற்றையும்விட எங்கள் இருவரது பெயர்களும் ஒன்றாகவிருந்தன. நான் ஜெ.அன்ரனி, அவன் ம.அன்ரனி. ம.அன்ரனியை நான் முன்பே பாடசாலை வளவுக்குள்ளும் தெருவிலும் சந்தித்திருந்த போதிலும் அவனுடன் பேசியதில்லை. அவன் ஒரு நெடு நெடுவென வளர்ந்தவன். ஆனால் மிகவும் ஒல்லியானவன். எப்போதுமே நோயாளி போலவே காணப்படுவான். அவன் இப்போது வகுப்பறையின் கடைசி வாங்கினை என்னுடன் பகிர்ந்து கொண்டான். நான் படிப்பிலே மத்திமமான மாணவன் என்ற போதிலும் உயரம் அதிகமாகையால் கடைசி வாங்கிலே தான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். வகுப்புகள் தொடங்கிய அன்று முதலாவது பாடம் சமயம். இந்து சமய ஆசிரியர் ஜெகசோதி வகுப்புக்குள் வந்துவிட்டார். வந்தவரத்தில் பாடத்தையும் ஆரம்பித்துவிட்டார். எங்கள் வகுப்பில் மிக அழகாகப் பாடக்கூடிய பெண்ணொருத்தியிருந்தாள். அவளுக்கு நாங்கள் கே.பி.சுந்தராம்பாள் என்று பட்டம் கூட வைத்திருந்தோம். அவளை அழைத்து வாத்தியார் ஒரு தேவாரம் பாடச் சொன்னவுடன் அவள் பாட ஆரம்பித்தாள். ம.அன்ரனியின் பெயரில் இருந்து அவனும் கிறிஸ்தவன்தான் என்பது எனக்குத் தெரியும். அவனைப் பார்த்தேன். அவன் கண்களை மூடிக்கொண்டிருந்தான். முன்னைய வருடங்களின் அனுபவங்களின் போது முதல்நாள் சமய வகுப்பில் இந்து சமய வாத்தியார் “வகுப்பில் யாராவது வேதக்காரர்கள் இருக்கிறார்களா?” எனக் கேட்பார். நான் எழுந்து நிற்பேன். “போய் அசெம்பளி ஹோலில் இரு கிறிஸ்தவ சமயத்தைக் கற்பிக்க ஆசிரியர் வருவார்” என்பார். நானும் மூன்று வருடங்களாக தட்டத் தனிய அசெம்பிளி ஹோலில் காத்திருக்கிறேன். வேதக்கார வாத்தியார் வந்தபாடில்லை. இவ்வளவுக்கும் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த ஒரு வாத்தியார் எங்கள் பாடசாலையில் இருந்தார். அவர் சமூகக் கல்வியும் ஆங்கிலமும் கற்றுக் கொடுத்துவந்தார். மற்றைய நேரங்களில் புகைப்படம் பிடிப்பது தபால் தலைகள் விற்பது போன்ற உபதொழில்களையும் மேற்கொண்டு வந்தார். நான் எழுந்து ஜெகசோதி வாத்தியாரிடம் “சேர் நான் கிறிஸ்தவ சமயம்” என்று அறிவித்தேன். “வேறு யாராவது கிறிஸ்தவர்கள் வகுப்பில் இருக்கிறார்களா?” என வாத்தியார் கேட்டார். ம.அன்ரனியும் எழுந்து நின்றான். வாத்தியார் எங்கள் இருவரையும் அசெம்பிளி ஹோலுக்கு அனுப்பினார். நாங்கள் இருவரும் அசெம்பிளி ஹோலில் போய் ஒரு மூலையில் இருந்தோம். சற்று நேரத்தில் அவ்வழியால் சென்ற அதிபர் ’ஏன் இங்கு இருக்கிறீர்கள்?" எனக் கேட்டார். “கிறிஸ்தவ சமயப் பாடம்” என்றேன். “இருங்கள் மாஸ்டர் வருவார்” என்று கூறிவிட்டுச் சென்றார். நான் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்து விலகும் வரை கிறிஸ்தவ சமய ஆசிரியர் வரவேயில்லை. ம.அன்ரனியிடம் நான் பேசிய முதல் வார்த்தை “என்ன உடம்பு சுகமில்லையா?” என்பதாய் இருந்தது. அவன் எனக்கு கூறிய முதல் மறுமொழி “பசிக்குது” என்பதாய் இருந்தது. அதிர்ந்து போய்விட்டேன். பசியைப் பார்த்து நான் அதிர்ந்து போகவில்லை. எனக்குப் பசி நினைவு தெரிந்த நாளில் இருந்தே மிகவும் பழக்கமானது. அது என் வயிற்றிலேயே குடியிருக்கும் மிருகம். அந்தக் கொடிய மிருகம் என் வயிற்றை எப்போதும் விறாண்டிக்கொண்டேயிருந்தது. பசி எனது கற்பனையில் தேவாங்குக்கும் நரிக்கும் நடுவிலான உடலெல்லாம் புசுபுசுவென ரோமங்கள் கொண்ட ஓர் வெண்ணிற மிருகமாய் இருந்தது. ஆனால் பசிக்கிறது என்பதை வீட்டை விட்டு வெளியே வந்தால் மற்றவர்களிடம் சொல்ல முடியுமா?. ம.அந்தோனி என்னிடம் சொல்கிறான்.! அதுதான் என் அதிர்வுக்கு காரணம். முதலாம் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது புவனம் ரீச்சர் மாணவர்களிடம் “இன்று என்ன சாப்பிட்டீர்கள்?” என வகுப்பில் கேட்பார். அப்போதெல்லாம் இந்தக் கேள்வியளவுக்கு இன்னொரு கேள்வி என்னைப் பயமுறுத்தியதில்லை. அநேகமாகக் காலையில் வீட்டில் சாப்பாடு இருக்காது. சில நாட்களில் கிடைக்கும். அது திறிபோசா மாவுருண்டையாக இருக்கும். எனினும் நான் “இன்று இடியப்பமும் சம்பலும், மீனும் சாப்பிட்டேன்.” என்று வகுப்பில் பொய் சொல்வேன். அநேகமாக இந்தச் சமூகத்தில் நான் சொன்ன முதல் பொய் அதுவாகத்தான் இருக்கக்கூடும். இப்பொழுது எனது மூத்த சகோதரன் ஊரில் ஒரு தேநீர்க் கடையில் வேலை செய்ததால் காலையில் ஒரு றாத்தல் பாண் பெறக் கூடியதாக இருந்தது. நாங்கள் நான்கு பிள்ளைகளும் பகிர்ந்து சாப்பிடுவோம். கடைசித் தம்பிக்கும் தங்கச்சிக்கும் அச்சுப்பாணில் இருக்கும் கருகிய ஓரப்பகுதி பிடிக்காது. அதை அம்மாவுக்குக் கொடுப்பார்கள். ஆனால் எனக்கு பண்டிகை நாட்களின் மறுநாட்களைத் தவிர அல்லது பப்பா கொழும்பில் இருந்து வந்து ஊரில் நிற்கும் ஆரம்ப நாட்களைத் தவிர மற்றைய நாட்களில் பாடசாலைக்கு கட்டிக்கொண்ட போகச் சாப்பாடு கிடைக்காது. சில நேரங்களில் எப்படியாவது ஒரு இருபத்தைந்து சதம் கிடைத்துவிடும். அதற்கு கார்த்திகேசு கடையில் ஒரு ஐஸ்பழம் வாங்கிச் சூப்பலாம். பசி அடங்கிய மாதிரித் தோன்றும். பகல் ஒருமணிக்கு மீண்டும் வகுப்புகள் தொடங்கும்போது காத்திருந்த மிருகம் வயிற்றுக்குள் கடித்துக் குதறத் தொடங்கும். எனினும் நான் எப்போதும் என் பசியை வீட்டுக்கு வெளியே யாரிடமும் சொன்னதில்லை. எனது வகுப்புத் தோழர்களுக்கு எனது கொட்டில் வீட்டை கல் வீடு எனவும், எங்களிடம் வரதலிங்கம் மாஸ்டரிடம் உள்ளதை விடத் திறமான வி.எஸ்.ஏ மோட்டார் சைக்கிள் இருக்கிறது எனவும், கொழும்பில் யாழ்தேவி புகையிரதத்தில் லேஞ்சி போட்டு சீட் பிடித்து அதை ஒரு ரூபாவுக்கும் இரண்டு ரூபாவுக்கும் விற்கும் என் பப்பாவை அரசாங்க அதிகாரி என்றும் புளுகி வந்தேன். இதில் பப்பாவின் உத்தியோகத்தை அடிக்கடி மாற்றிக் கூறிவந்ததற்கு எனது மறதி ஒரு காரணம். என் பப்பா கஸ்டம்ஸ், பொலிஸ், மாஸ்டர் என்று பல்வேறு பதவிகளை என் புண்ணியத்தில் வகித்து வந்தார். முக்கியமாக நான் மதிய இடைவேளையில் பட்டினியாய் இருப்பதை யாருக்கும் காட்டிக்கொள்வதில்லை. மதிய உணவு மணி அடித்ததும் வகுப்பறையில் இருந்து வெளியே வந்து மைதானத்திலோ வீதியிலோ சுற்றுவேன். என்னைத் தவிர என் வகுப்பில் இருந்த மற்றவர்கள் எல்லோரும் மதியச் சாப்பாடு கட்டிக்கொண்டு வருபவர்களே. அதிலும் சிலருக்கு பத்து மணிக்கு விடும் “சோர்ட் இன்ரெவலில்” கூட கன்ரினில் வடையும் வாய்ப்பனும் சாப்பிடும் அளவுக்கு வசதி இருந்தது. வகுப்பில் பாடங்களைக் கவனிப்பதைவிட என் வயிற்றில் வாழும் விலங்கை அடக்குவதிலும் எனது “பவரை”க் காட்டுவதற்கு என்னென்ன பொய் சொல்லலாம் என்று சிந்திப்பதிலுமே எனது பள்ளிக் காலம் கழிந்தது. ம.அன்ரனியிடம் இந்தப் பேச்சுக்கே இடமில்லை. அவன் பசியைக் கண்டு ஒழியவில்லை. அதை நேருக்கு நேரே சந்தித்தான். தன் வறுமையைக் கண்டு அவன் வெட்கப்படவில்லை. அதை எனக்குத் தெட்டத் தெளிவாய் அறிவித்தான்.இப்பொழுதெல்லாம் மதிய உணவு மணி அடித்ததும் நானும் ம.அன்ரனியும் தெருவுக்கு வருவோம். அவன் பசியை தணிப்பதற்கு சில உத்திகள் வைத்திருந்தான். பாடசாலையிலிருந்து வங்களாவடிக்கு போகும் வீதியின் இருமருங்கிலும் கிளுவை மரங்கள் நிறைந்திருக்கும். நாங்கள் கிளுவங்காய்களைப் பறித்துத் தின்போம். மயிலப்புலம், சோளாவத்தைப் பகுதிகளில் புல்லாந்திச் செடிகள் காணக்கிடைக்கும். அவற்றின் சின்னஞ் சிறிய பழங்களைப் பிடுங்கித் தின்போம். நாகதாளிப் செடிகளில் பழங்கள் பிடுங்கி நட்சத்திர முள்ளைக் கவனமாக அகற்றி ம.அன்ரனி எனக்குச் சாப்பிடத் தருவான். புல்லாந்திப் பழத்தையும் கிளுவம் பழத்தையும் சாப்பிட்டுவிட்டு என்னத்தைப் படிப்பது? மனம் முழுவதும் சுவையான உணவுகளைப் பற்றிய கற்பனையிலேயே மிதந்து கொண்டிருக்கும். ஐந்தாம் வகுப்பு படிக்கும்வரை பாடசாலையில் பிஸ்கட் தருவார்கள், இப்போது இந்தப் பெரிய பாடசாலைக்கு வந்த பின்பு அதுவுமில்லை. யோசித்து பார்க்கும்போது பெயில் விட்டு பெயில் விட்டு ஐந்தாம் வகுப்பிலேயே இருந்திருக்கலாம் என்றிருக்கும். எங்களுக்கு கணிதம் படிப்பித்த வாத்தியாருக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். அவருக்கு பொடியள் எட்டுஸ்ரீ என்று பட்டம் வைத்திருந்தார்கள். அதாவது எங்கள் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருக்கு எட்டாயிரம் ரூபாய்கள் லஞ்சம் கொடுத்து அவர் இந்த வாத்தியார் வேலையைப் பெற்றுக்கொண்டாராம். எங்கள் பாடசாலையில் மூன்று ஸ்ரீயிலிருந்து இருபது ஸ்ரீ வரை பல ஆசிரியர்கள் இருந்தார்கள். எட்டு ஸ்ரீக்கு கணித மாஸ்டர் வேலையைவிட கராட்டி மாஸ்டர் வேலைதான் மிகப் பொருத்தமாய் இருந்திருக்கும். ஆள் நுள்ளான். ஆனால் எங்களுக்கு அடிக்கும்போது எதிரிக்கு அடிப்பதுபோல்தான் அடிப்பார். ஆனால் அவர் எங்கள் வகுப்பிலேயே மிகவும் அமைதியாகவும் சிவப்பு நிறமாயும் காணப்படும் மணிமேகலைக்கு என்றுமே அடித்ததில்லை. பின்பு பத்தாவது படிக்கும்போது எட்டுஸ்ரீ மணிமேகலையைக் கூட்டிக்கொண்டு ஒடிவிட்டார். பொலிசுக்காரர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்து போனார்கள். ஒருமுறை பசி மயக்கத்தில் இருந்த ம.அன்ரனியை எட்டு ஸ்ரீ அடித்த அடியில் ம.அன்ரனி மயங்கி விழுந்துவிட்டான். இன்னொரு தடவை விஞ்ஞான டீச்சர் மிஸிஸ் இராசையா பிடித்து அவனை உலுக்கி “ஏனடா நித்திரை கொள்ளவா இங்கே வருகிறாய்?” என்று கேட்டபோது ம.அன்ரனி மரமாய் நின்றிருந்தான். “போய் உங்கள் சாதித்தொழிலைப் பார், உனக்கு எதற்கு சயன்ஸ்?” என்று மிஸிஸ் கந்தையா கேட்டார். வகுப்பில் இருந்த எல்லோருடைய சாதி விபரங்களையும் மிஸிஸ் கந்தையா விரல் நுனியில் வைத்திருந்தார். எப்படி இந்த சாதி விபரங்களை திரட்டினார் என்பது தெரியவில்லை. விஞ்ஞான டீச்சர்! அவருக்க தெரியாத விதிகளா? பரிசோதனை முறைகளா? ஏதாவது ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருப்பார். கொடுமை, கொடுமையென்று கோயிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமை அவிழ்த்துப் போட்டு ஆடிய கதையாய் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் “வைட் அண்ட் வைட்” போட்டுக்கொண்டு வரவேண்டும் என்றொரு அவசர சட்டம் பாடசாலையில் கொண்டுவரப்பட்டது. என்னுடைய முதற் சற்பிரசாதத்துக்காகத் தைக்கப்பட்ட எனது வெள்ளைச் சட்டை எனக்கு இப்போது அளவாக இராது. அதை என் தம்பி போட்டிருக்கிறான். அவனிடம் கெஞ்சி மன்றாடி வெள்ளிக்கிழமைகளில் அச்சட்டையைப் போட்டுக்கொண்டேன். அந்த வெள்ளைச் சட்டை தொப்புள் வரைதான் வரும். அடிக்கடி கீழே இழுத்துவிட்டு சமாளிக்க வேண்டியிருந்தது. வெள்ளைக் காற்சட்டை கிடைக்கவில்லை. அதற்குப் பப்பா கொழும்பிலிருந்து வரும் வரை பொறுத்திருக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை காலைகளில் ஒரு வெறிநாயின் மூர்க்கத்துடன் அதிபர் பாடசாலையின் முன்வாசலில் நின்றிருப்பார். “வைட் அண்ட் வைட்” போட்டு வராத மாணவர்களின் குண்டிகள் அவரின் பிரம்பால் பழுத்தன. நான் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு மட்டம் போடத் தொடங்கினேன். என் வீட்டு நிலைமை தெரியாத மாணவர்கள் திங்கட்கிழமை காலையில் “பள்ளிக்குக் கள்ளம் பழஞ்சோத்துக்குக் காவல்” என்று பொருத்தமில்லாமல் என்னைப் பழிக்கத் தொடங்கினர். ஆனால் ம.அன்ரனி வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலைக்கு போனான். அவனிடமும் “வைட் அண்ட் வைட்” கிடையாது. ஆனால் அவன் அதிபரின் அடியை ஏற்றுக்கொண்டான். அவனுக்கு எதையும் நேருக்கு நேர் சந்தித்துத்தான் பழக்கம். இப்படியான சில விறுமத்தடியன்களை அடித்தும் உதைத்தும் பார்த்துத் தோல்வி கண்ட அதிபர் இறுதியில் அவர்களை “வைட் அண்ட் வைட்” போடும்வரை வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு வரக்கூடாது எனத் தீர்ப்பிட்டார். ஒருமுறை பெரிய வியாழன் அன்று நானும் ம.அன்ரனியும் சின்னமடு தேவாலயத்திற்கு ஒரு திட்டத்துடன் சென்றிருந்தோம். அவன் சின்னமடு ஆலயப்பங்கைச் சேர்ந்தவன். இயேசுக்கிறிஸ்து சீடர்களுடன் அருந்திய கடைசி இராப்போசன விருந்தைப் பெரிய வியாழன் அன்று கொண்டாடுவார்கள். அன்று பன்னிரண்டு சீடர்களின் கால்களையும் வாசனைத் திரவியங்களாலும் பன்னீராலும் இயேசு கழுவி அவர்களுக்கு விருந்தளித்தாராம். அதை நினைவு கூரும் முகமாக பாதிரி பன்னிரெண்டு சிறுவர்களது கால்களைப் பச்சைத் தண்ணீரால் கழுவிவிட்டு ஆளுக்கு ஒரு றாத்தல் பாண் கொடுப்பான். நாங்கள் இருவரும் சின்னமடு மாதாவுக்கு வைத்த நேர்த்தி வீண்போகவில்லை. அன்றிரவு என் வயிற்றினுள் கிடந்த மிருகம் உறங்கிற்று. சுகாதாரப் பாடத்தில் உணவு – சமிபாடு – பெருங்குடல் – சிறுகுடல் – குதம் என்று ஆசிரியர் படம் போட்டுக் காட்டி விளக்குகையில் நான் அந்தப் படத்தில் பசியைத் தேடிக்கொண்டிருந்தேன். நமது தொண்டையில் இருந்து குதம் வரையான ஒரு பௌதிகச் செயற்பாடு எப்படி மண்டை, காது, உள்ளங்கால்கள், விதைகள், ஆணுறுப்பு, பற்கள் என எல்லாவற்றிலும் சுண்டி இழுத்து வதைக்கின்றது என்பது எனக்குப் புரியவே இல்லை. நான் ம.அன்ரனி எல்லோருமே எங்கள் ஆண்டிறுதிப் பரீட்சையில் வெற்றி பெற்றோம் என அறிவிக்கப்பட்டது. நாங்கள் ஒன்பதாம் வகுப்புக்குச் சென்றோம். ஆனால் ம.அன்ரனி ஒன்பதாம் வகுப்புக்கு வரவில்லை. அவன் பாடசாலைக்கு வராமல் நின்று கொண்டான்; நான் சின்னமடுவுக்குச் சென்று தேடினேன். யாழ்ப்பாணத்தில் வேலை செய்யப் போய்விட்டான் என்ற தகவல் கிடைத்தது. சில மாதங்களுக்குப் பின் நான் பனங்கிழங்கை விற்பதற்காக யாழ் நகரச் சந்தைக்குச் சென்றிருந்தேன். அம்மா நூறு பனங்கிழங்குகளை ஒரு உரப்பையில் போட்டுக் கட்டித் தந்திருந்தார். அப்போது நுறு பனங்கிழங்குகள் ஐந்து ரூபாய். எனக்கு அம்மாவிடமிருந்து ஐம்பது சதம் கொமிசன் போடப்பட்டிருந்தது. மணல் ஏற்றிப் போகும் ட்ரக்டரில் கிழங்குகளோடு ஏறிப் போய்விட்டேன். வழியெல்லாம் என் கொமிசன் ஐம்பது சதத்தை எப்படியெல்லாம் செலவழிப்பது என்று திட்டம் போட்டுக்கொண்டே சென்றேன். கடைசியில் கொஞ்சம் திராட்சைப் பழங்கள் வாங்கி சாப்பிடலாமென முடிவு செய்தேன்.யாழ் பஸ் நிலையத்தின் முன்பாக வரிசையாகத் தேநீர்க் கடைகள் இருந்தன. அவற்றில் குலைகுலையாக திராட்சைப் பழங்கள் தொங்கின. ஐம்பது சதத்திற்கு தருவார்களா என்பது தெரியவில்லை. கேட்கவும் பயமாக இருந்தது. கடைகளைப் பார்த்துக் கொண்டே தயங்கித் தயங்கி நடக்கும் போதுதான் ம.அன்ரனியைக் கண்டேன். ம.அன்ரனி “ரஜினி கூல் பாரில்” மேசை துடைக்கும் வேலையில் இருந்தான். அழுக்கான சறமும், பனியனும் அணிந்திருந்தான். அவன் இப்போது கொஞ்சம் உடம்பு தெளிந்திருந்தான். அப்போது எனக்கு ஒரு ஆசை எழுந்தது. நானும் அவனுடன் வேலையில் சேர்ந்துவிடுவதென முடிவெடுத்தேன். “எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்?” என ம.அன்ரனியிடம் கேட்டேன். சாப்பாடு மட்டும்தானாம். தீபாவளிக்கு ஒருசோடி உடுப்பு கொடுத்தார்களாம். மற்றப்படி சம்பளம் ஏதும் இல்லையாம். அங்கு வேலை செய்தால் வடை வாய்ப்பன் என்று விதவிதமாக சாப்பிடலாம் என்று தோன்றியது. முதலாளாளியோடு எனது வேலை விசயமாகப் பேசுவதாகவும் அடுத்த கிழமை வந்து தன்னைச் சந்திக்குமாறும் ம.அன்ரனி சொன்னான். அடுத்த கிழமை நான் போனபோது அந்தக் கடை எரிந்து கிடந்தது.அந்தக் கடைத் தொடரையே இராணுவம் எரித்து நாசப்படுத்தியிருந்தது. ஆயிரத்துதொளாயிரத்து எண்பத்து அய்ந்தாம் ஆண்டின் கடைசிப்பகுதி என நினைக்கிறேன். கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில் இருந்து பழவந்தாங்கல் இரயில் நிலையத்திற்குச் சென்றேன். நிலையத்தில் இறங்கி நண்பன் ஒருவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். அந்த இடத்தில் நான் ம.அன்ரனியை எதிர்பார்க்கவில்லை. என்னைக் கண்டவுடன் ம.அன்ரனி என் கைகளைப் பிடித்துக் கொண்டான் “எப்படி இருக்கிறீர்கள் தோழர்?” என்று சுகம் கேட்டான். அவன் நின்றிருந்த பழவந்தாங்கல் ஏரியா, அவனின் இளந்தாடி, அவன் என்னைத் தோழர் என்று சிநேகிதமாய் அழைத்த முறை இவற்றை வைத்து அவன் என்ன இயக்கத்திற்கு வேலை செய்கிறான் என்று கணக்குப் போட்டேன். கணக்குத் தப்பவில்லை. அவன் கள்ளங் கபடம் இல்லாமல் தன்னுடைய இயக்கம் பற்றிக் கூறினான். என்னைப் பற்றிக் கேட்டான். “வெளிநாடு செல்வதற்காக வந்துள்ளேன்” என்று பச்சைப் பொய் சொன்னேன். அவன் என்னை ஆச்சரியத்தோடு கண்கள் சுருங்கப் பார்த்தான். அவன் கண்களில் இருந்தது ஏளனமா, இல்லை ஏக்கமா என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை. பணம் ஏதும் இருந்தால் கொடுக்கும்படியும் தானும் சில தோழர்களும் இரண்டு நாட்களாய் பட்டினியாய் கிடப்பதாயும் ம.அன்ரனி சொன்னான். நான் அவனுடன் அதிகம் பேச விரும்பவில்லை. பணமும் கொடுக்கவில்லை. ஆயிரத்துதொளாயிரத்து எண்பத்தொன்பதாம் ஆண்டு நான் கொழும்பில் தங்குமிடமோ, சாப்பாடோ இல்லாமல் அலைந்து கொண்டிருந்தேன். என் வயிற்றுக்குள் இருக்கும் அக் கொடிய மிருகமும் என்னைப் போலவே வளர்ந்திருந்தது. அந்த விலங்கு என்னைத் தின்று கொண்டிருந்த அந்தக் கணத்தில் நான் ம.அன்ரனி பற்றிய ஒரு செய்தியை அவனின் படத்துடன் பத்திரிகையில் படித்தேன்.வவுனியா காவலரணில் இருந்த ம.அன்ரனி மறைந்திருந்த சுடப்பட்ட “சினைப்பர்” தாக்குதலில் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்டபோது அவன் திறந்த ஜீப்பினுள் அமர்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறான். அவனது இரத்தமயமான உடல் சோற்றுப் பருக்கைகளுக்கு நடுவே கிடந்ததாம். மறுபடியும் மறுபடியும் பத்தரிகைச் செய்தியைத் திருப்பித் திருப்பிப் படித்துப் பார்த்தேன். அவனில் வயிற்றில் குண்டு பாய்ந்திருப்பதாகவும் அவனுக்கு வயது இருபத்திரெண்டு எனவும் சூடுபட்ட உடனேயே அவனது உயிர் பிரிந்து விட்டது எனவும் எல்லாவற்றையும் விளக்கமாகப் பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். ஆனால் அவனின் வயிற்றினுள் இருந்த அந்த தேவாங்குக்கும் நரிக்கும் இடையேயான புசுபுசுவென்ற வெண் மயிர்கள் கொண்ட மிருகத்தைப் பற்றிய செய்திகள், குறிப்புகள் எதுவும் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ் நவம்பர் 2005 வேசியின் விரிந்த கூந்தல் அவளின் முதுகின் கீழாகப் பரவிப் போய் அவளின் குண்டியைத் தொட்டது. வேசி அந்தக் கரிய கூந்தல் விரிப்பில் கால்களை விரித்து மல்லாந்து கிடந்தாள். அவளின் கண்கள் புருவங்களுக்குள் சொருகிக் கிடந்தன. அவள் நெற்றியில் இலந்தைப் பழங்களை ஒட்டி வைத்தது போல இடப்புறத்தில் ஒன்றுமாக வலப்புறத்தில் ஒன்றுமாக இரண்டு துளைகள் இருந்தன.பின்னிரவில் பெய்த மழையில் அந்தச் சவம் செம்மையாய் நனைந்திருந்தது. சவத்தின் அசாதாரணமான நீண்ட கைகளையும் வயிற்றையும் பாதங்களையும் மழை தீரக் குளிப்பாட்டியிருந்தது. சடலம் உடுத்திருந்த சேலையின் ஓரத்தைக் கிழித்துத் தான் சடலத்தின் வாயைக் கட்டியிருக்கிறார்கள். சடலத்தின் மூஞ்சியைச் சுற்றி ஈக்கள் பறக்க ஈக்களைச் சுற்றி பற்களை விளக்கிக் கொண்டே கிராம மக்கள் நின்றிருந்தனர். சவம் கிராமத்தின் சந்தைக் கட்டடத்தின் முன்பாகக் கிடந்தது. கிராம மக்கள் சடலத்தையே சுற்றிச் சுற்றி வந்தனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு பிணத்தை தம் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. அவர்கள் பெருத்த ஆச்சரியத்துடனும் இரக்கத்துடனும் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். சவத்தின் மார்பில் ஒரு பெரிய வெள்ளை அட்டை கட்டப்பட்டிருந்தது. அந்த அட்டை மழையில் ஊறிப் பொருமி அட்டையின் ஓரங்கள் சுருண்டு கிடந்தன. அட்டையில் சிவப்பு நிறப் பெயின்ட் ஊறிக் கிடந்தது. மழை அழித்து விட்ட அட்டையிலிருந்த எழுத்துக்களை கிராம மக்கள் படிக்க முயன்றனர். அவர்களில் எவராலும் அதை வாசிக்க முடியவில்லை. மழை அழித்திருந்த அந்த எழுத்துக்களை நிச்சயமாக என்னால் வாசிக்க முடியும். சமூக விரோதிகளுக்கு எச்சரிக்கை! பெயர் : இந்துமதி விபச்சாரத்துக்காக மரண தண்டனை. நேற்றைய முன்னிரவில் – கடும் மழை பெய்வதற்கு முன்பாக – இந்தக் கடதாசி அட்டையில் சிவப்பு வண்ணத்தினால் நான் தான் இந்த எழுத்துக்களை எழுதியிருந்தேன். முன்னிரவில் அவர்கள் மூன்று பேர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அப்போது ஐயா நிறைய வெறியில் தாழ்வாரத்தில் குப்புறக் கிடந்தார். எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள ஏழெட்டுக் கிராமங்களுக்கும் என் ஐயா தான் ‘ஆர்ட்டிஸ்ட் மணியம்’. ஐயா கடைகளுக்கு பெயர்ப் பலகை எழுதுவார், கோயில்களுக்கு தீந்தை பூசுவார். சைக்கிள்களுக்கு பெயின்ட் அடிப்பார். வந்தவர்கள் தங்களுக்கு கொஞ்சம் பெயின்ட் வேண்டுமென்று கேட்டனர். அவர்களிடம் அப்போது துப்பாக்கிகளை நான் காணவில்லை. இடுப்புக்குள் ஒளித்து வைத்திருப்பார்கள். நான் ஐயாவை ஆன மட்டும் உலுக்கி, எழுப்பி விட முயற்சித்தேன். நான் எழுப்பி விட எழுப்பி விட ஐயா வட்டமடித்து வட்டமடித்து முற்றத்து மணலில் சுருண்டு விழுந்தார். அது சுவரொட்டிகள் காலம். யாழ்ப்பாண நகரம் முழுவதும் சென்ற கிழமை ஒரே மாதிரியான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தச் சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்கள் ஐயாவை மாதிரி ஒரு தொழில் முறை ஓவியனால் அல்லது குறைந்த பட்சம் ஐயாவோடு சில வேளைகளில் உதவிக்குப் போய் வரும் என் போன்ற ஒருவனால் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். எழுத்துக்கள் வட்டுறுப்பாய் ஒன்றின் மீது ஒன்றாக நகரத்தையே கவர்ந்திழுத்தன. ‘ஆற்றல் மிகு கரங்களில் ஆயுதம் ஏந்துவோம் மாற்றுவழி நாமறியோம்’ என்று எழுதப்பட்டிருந்த அந்தச் சுலோகம் எனக்கு மனப்பாடம். ‘கசிப்பு வடிக்க வேண்டாம்’ என்று சுவரொட்டி, ‘கருத்தடை செய்ய வேண்டாம்’ என்று சுவரொட்டி ‘ஹர்த்தால், கடையடைப்பு’ என்று சுவரொட்டியாக நாங்கள் சுவரொட்டிகளுக்கு கீழே வாழ்ந்து வந்தோம். ஐயா எழுந்திருப்பதாக இல்லை. இயக்கக் காரர்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பை தவறவிட நான் தயாராகவில்லை. ஒரு நாளும் இல்லாத புதுமையாக பெயின்டையும் பிரஷையும் தொடும் போதே என் உள்ளம் கிளர்ந்தெழுந்தது. இந்த வண்ணத்தால் எழுதப்படவிருக்கும் சுலோகம் எதுவாய் இருக்குமெனக் கேட்டு மனம் அடித்துக் கொண்டது. நேற்றுக் காலையில் எங்கள் பாடசாலையின் மதிற் சுவர்களில் – அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் – புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தச் சுவரொட்டிகளில் ‘ஈரானில் மாணவர்கள் புரட்சி – இங்குஏன் தோழா இன்னும் புத்தகப் பூச்சி’ என்ற சுலோகம் எழுதப்பட்டிருந்தது. நாள் முழுவதும் அந்தச் சுலோகத்தைப் பற்றியே பாடசாலை முழுவதும் பேசிக் கொண்டிருந்தது.நான் சிவப்பு பெயின்டை அவர்களிடம் கொடுத்துவிட்டு “இது போதுமா அண்ணே ?” என்று கேட்டேன். “போதும் ஒரு போர்ட் தான் எழுத வேணும்” அவர்கள் திரும்ப முயற்சிக்கும் போது அவர்கள் முதுகுக்குப் பின்னால் நான் தயங்கித் தயங்கிக் கேட்டேன் “என்னவும் எழுத வேணுமெண்டால் நான் எழுதித் தாறன்…….” அவர்கள் நின்றார்கள். அவர்கள் இருளுக்குள் தலைகளை ஆடாமல் அசையாமல் வைத்திருந்தார்கள்.கடைசியில் தலைவாசலுக்குள் மெழுகு திரியை கொழுத்தி வைத்துக் கொண்டு அவர்கள் சொல்லும் சுலோகத்தை எழுதத்தயாரானேன். ஈரானில் புரட்சி இங்கு புத்தகப்பூச்சி போல இன்னொரு சுலோகம் சொல் வார்கள் என்று தான் நினைத் திருந்தேன். ஆனால் சொன்ன சுலோகம் நான் அதுவரை கேட்டிராத ஒன்றாகவிருந்தது. சமூகவிரோதி – இந்துமதி – மரணதண்டனை என்று ஒரு எழுவாய் பயனிலை இல்லாமல் சுலோகத்தை துண்டு துண்டாகச் சொன்னர்கள். நான் அட்டையில் அழகழகாக எழுத்துக்களைச் சாய்த்துநிறுத்தினேன். நான் எழுதிக் கொண்டிருந்த போது என் அம்மா அவர்கள் மூவருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார். நான் எழுதி முடித்து விட்டு சற்று தூரத்தே நின்று எழுத்துக்களை மெழுகுதிரி வெளிச்சத்தில் பார்த்தேன். திருப்தியாய் இருந்தது. நான் அவர்களிடம் “அண்ணே கறுப்புப் பெயின்டில் எழுத்துக்களை சுத்தி போடர் கட்டவா ?” என்று கேட்டு விட்டு “அது ஒளிப்பாய் இருக்கும்” என்றேன். இது நடந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் இருக்கலாம். காலையில் நான் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தேன். பாடசாலை நகரத்தின் தெற்குப் பகுதியில் இருந்தது. நகரத்தின் தெருக்களால் சனங்கள் ஒரு நாற்சந்தியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள். என்ன ஏதென்று விசாரித்த போது நாற்சந்தியில் ஒரு வேசி வேப்ப மரத்தில் கட்டப் பட்டிருக்கிறாள் என்றும் அவள் கழுத்தில் ஒரு அட்டை எழுதி தொங்கவிடப் பட்டிருக்கிறது என்றும் அறிந்தேன். என் சைக்கிள் நாற் சந்தியைப் பார்த்துத் திரும்பியது. வேசியின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் எழுத்துக்களைப் படித்துவிடுவதற்கான ஆர்வம் என் கால்களை இயக்கியது. அது நகரத்தில் ஆமிக்காரர்கள் திரிந்த காலம். அவர்கள் எந்தத் தருணத்திலும் நாற்சந்திக்கு வரலாம். கழுத்தில் கட்டப்பட்டிருக் கும் எழுத்துக்களைப் படித்து விட்டு உடனே ஓடிப்போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த விபச்சாரி சவமாய் இல்லை. அவள் உயிருடன் வேப்ப மரத்தோடு கட்டப்பட்டிருந்தாள். சனங்கள் வேப்ப மரத்தை சுற்றிச் சுற்றி வந்தார்கள். விபச்சாரியின் கைகள் அவளின் தலைக்கு மேலே உயர்த்தப்பட்டு ஒரு புள்ளடி போல வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அவளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் பதினேழு அல்லது பதினெட்டு வயது தான் இருக்கும். அவள் மெலிந்த உடலும் சிவந்த நிறமுமாய் நின்றாள். இடையில் ஒரு சாரமும் மேலுக்கு ஆண்களின் சட்டையும் உடுத்திருந்தாள். அவளின் தலைமுடி அலங்கோலமாகக் கத்தரிக்கப்பட்டிருந்தது. அவளின் கழுத்தில் தொங்கிய எழுத்துக்கள் ஊதா நிறத்தில் ஆடின. அந்தத் தமிழ் எழுத்துக்கள் பாய்கள் இழைக்கப் பயன்படுத்தும் ஓலைச் சாயத்தால் கோணல் மாணலாக எழுதப்பட்டிருந்தன. விபச்சாரம் செய்ததற்காக 12 மணித்தியாலத் தண்டனை வழங்கப் பட்டுள்ளது.அந்த இளம் விபச்சாரியின் கால்களுக்குக் கீழே ஒரு அழுக்கு மூட்டை போல ஒரு வாடலான கிழவி குந்தியிருந்து சனங்களை கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். விபச்சாரி கால் மாற்றிக் கால் மாற்றி ஒற்றைக் காலிலேயே நின்றாள். அவள் இடையிடையே கிழவியைப் பார்த்து “எண கால் உளையுதண, கால் உளையுதண” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதெல்லாம் அந்தக் கிழவி விபச்சாரியின் மூஞ்சியை நிமிர்ந்து பார்த்து “மூளி அலங்காரி… மூளி அலங்காரி” என்று சொன்னாள் பின் திரும்பவும் சனங்களை கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் வகுப்பில் இருந்த போது புங்குடுதீவுக் கடற்கரையில் ஒரு தாய் வேசியையும் மூன்று மகள் வேசிகளையும் இயக்கம் சுட்டுச் சவங்களை வரிசையாகக் கடற்கரையில் வளர்த்தி வைத்திருக்கிறது என்ற செய்தியை கேள்விப்பட்டேன். செய்தியைக் கொண்டு வந்தவன் இறைமொழி என்ற புங்குடுதீவுப் பொடியன். இறைமொழி அதிகாலையிலேயே அந்த நான்கு பிரேதங்களையும் பார்த்து விட்டுத்தான் பஸ் பிடித்து பாடசாலைக்கு வந்திருந் தான். நான் இறைமொழியிடம் “அந்தச் சவங்களின் கழுத்துக்களில் என்ன எழுத்துக்கள் கட்டப்பட்டிருக்கின்றன?” என்று கேட்டேன். “இல்லை பிரேதங்களின் கழுத்தில போர்ட் ஒண்டும் கட்டியிருக்கேல்ல” என்று இறைமொழி சொன்னான். என்னால் அதை நம்ப முடியவில்லை. குழப்பமாய் இருந்தது. ‘போர்ட்’ இல்லாமல் எழுத்துக்கள் இல்லாமல் சுட்டிருக்கிறார்கள் என்றால் அந்த நான்கு பெண்களையும் இராணுவம்தான் சுட்டிருக்க வேண்டும் என்று நான் சந்தேகப்படலானேன்.இடைவேளையின் போது இறைமொழி என்னை இரகசியமாக மலசல கூடத்துக்குள் அழைத்துச் சென்றான். தன் காற்சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டுப் பிரசுரத்தை எடுத்து “வாசிச்சுப் போட்டு திரும்பத் தரவேணும், கல்வி மேல சத்தியம்” என்று சொல்லிக் கொண்டே என்னிடம் துண்டுப் பிரசுரத்தை நீட்டினான். அழகான கையெழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அந்தத் துண்டுப் பிரசுரம் ரோனியோ இயந்திரத்தில் பிரதி எடுக்கப்பட்டிருந்தது. சவங்களைச் சுற்றி துண்டு பிரசுரங்கள் கிடந்தனவாம். தாயின் பெயர்: கிருஷ்ணாம்பாள். மகள்களின் பெயர்கள்: சுபத்திரா தேவி, ஜெயதேவி, ஜெபதேவி.தாயும் பிள்ளைகளும் நயினாதீவு கடற் படையினருடன் விபச்சாரம் செய்து வந்ததால் மரணதண்டனை! கொழும்பில் தங்கியிருந்த போது தான் நான் முதன் முதலாக ஒரு வேசியிடம் போனேன். அப்போது எனக்கு பத்தொன்பது வயது. எங்களை ஏஜென்சி கொழும்பின் புறநகர் ஒன்றில் தங்க வைத்திருந்தான். அந்த விடுதி காலி வீதியில் இருந்தது. அந்த விடுதி முழுவதும் வெளிநாட்டுக்குப் போகக் காத்துக் கொண்டிருக்கும் தமிழர்களாலும் ஏஜெண்டுகள், சப் – ஏஜெண்டுகளாலும் நிரம்பி வழிந்தது. கொழும்பு பஸ் வண்டிகளிலும் வீதி களிலும் கடைகளிலும் சிங்களப் பொட்டைகள் என்னை நெருக்கித் தள்ளினார்கள். அவர்களின் பொட்டிடாத மூஞ்சியும் சாயம் பூசிய வாய்களும் என்னைக் கிளர்த்தின. சிங்கள மொழியின் தொனியில் ஒரு இறுக்கம் தெரியவில்லை. மொழி உருகி ஓடுவதாக தோன்றியது. விடுதியிலிருந்து காலி விதியைக் குறுக்காகக் கடந்தால் அந்தப் பக்கத்தில் சில கட்டடங்கள். அவற்றின் ஊடே நடந்தால் ரயில் தண்டவாளம் கடற்கரையை ஒட்டிச் செல்வதைப் பார்க்கலாம். ரயில் தண்டவாளம் செல்லும் பகுதியிலோ கடற்கரையிலோ மதிய வேளைகளில் ஆள் நடமாட்டமே இருக்காது. ஆனால் ஒவ்வொரு நாளும் மதிய நேரம் ஒரு பெண்ணும் ஒரு மனிதனும் எங்கிருந்தோ தண்டவாளத்தில் நடந்து அந்தபகுதிக்கு வருகிறார்கள். அந்தப்பெண் தண்டவாளத்தில் நின்றிருப்பாள். அந்த மனிதன் சற்றுத் தள்ளிப் போய் கடற்கரையில் கடலைப் பார்த்தவாறு குந்திக்கொண்டிருப்பான். தொடர்ச்சியாக மூன்று நாட்களின் மதியப் பொழுதில் நான் அவர்களை அங்கே பார்த்தேன். அந்தப் பெண் தலையைத் திருப்பி என்னைப் பார்க்கும் போது நான் திரும்பவும் காலி வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்து விடுவேன். மூன்றாவது நாளில் அந்தப் பெண் என்னை நோக்கி இரண்டொரு அடிகள் எடுத்து வைத்ததாகத் தோன்றியது. நான் திரும்பியும் பாராமல் வீதியை நோக்கி வேகமாக நடந்து வந்து விட்டேன். நான் மிகவும் கவனமாக திட்டமிடலானேன். நாளை மதியம் நான் தண்டவாளத்தால் நேராக நடந்து செல்ல வேண்டும். எனக்குச் சரிவர சிங்களம் பேசத்தெரியாது என்பதை முடிந்தவரை காண்பித்துக்கொள்ளக்கூடாது. எனக்குத் தெரிந்த சில சிங்களச் சொற்களை வைத்து மனதுக்குள் ஒரு ஒத்திகை பார்த்துக்கொண்டேன். முப்பது ரூபாய்கள் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். அதுவும் மூன்று பத்து ரூபாய் தாள்களாக இருக்க வேண்டும். முதலில் அவளிடம் இரண்டு பத்து ரூபாய் தாள்களைக் காட்ட வேண்டும். அதற்கு அவள் சம்மதிக்கா விட்டால் அடுத்த பத்து ரூபாயையும் நீட்ட வேண்டும். முப்பது ரூபாய்க்குள் அவள் சம்மதிக்காவிட்டால் திரும்பி வந்து விட வேண்டும்.அடுத்த நாள் மதியம் நான் மிகக்கவனமாகத் தங்கும் விடுதியிலிருக்கும் எவரும் அறியாதவாறு விடுதியை விட்டு வெளியே வந்தேன். காலி வீதியில் ஏறியதும் ஒரு தேநீர்க் கடையில் இரண்டு சிகரெட்டுகள் வாங்கி ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டே விடுதியிலிருந்து எவரும் என்னைக் கவனிக்கிறார்களா என்ற பார்த்தேன். சிகரட் புகைத்து முடியும் வரை அங்கேயே நின்றேன். யாரும் என்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு வீதியை ஓடிக்கடந்து கடற்கரையை நோக்கி நடந்தேன்.அவள் தண்டவாளத்தில் நின்றிருந்தாள். அவள் சிவப்பு நிறத்தில் கவுன் போட்டிருந்தாள். நான் தண்டவாளத்தில் ஏறி அவளை நோக்கி நடந்தேன். நடக்கும் போது என் சட்டையின் கைப்பகுதியை நன்றாக மேலே சுருட்டி விட்டேன். அடுத்த சிகரட்டை எடுத்துப் புகைத்துக் கொண்டே தண்டவாளத்தில் நடந்தேன். நடக்கும் போது முகத்தில் கடுகடுவென்ற ஒரு பாவத்தை வர வழைத்துக்கொண்டேன். கால்களில் ஒரு சண்டித்தன நடையைக் கொண்டு வந்தேன். அவள் என்னை நோக்கி கைகளை அசைத்த மாதிரி தெரிந்தது.ஒரு கருவாட்டுக்கு கவுனும் பவுடரும் போட்டு விட்டால் எப்படியிருக்குமோ அந்த விபச்சாரி அப்படியிருந்தாள். அவள் தன் கண்களை விரித்து என்னை உற்றுப்பார்த்தாள். அவள் கண்கள் வெளிறிக்கிடந்தன. அவள் தனது தலையை இடதுபுறம் சரித்து இடது கண்ணைச் சுருக்கி சிங்களத்தில் ஏதோ சொன்னாள். அவளின் வாயும் பற்களும் கறுப்பாய் இருந்தன. அவளிலிருந்து ஏதோ ஒரு நாற்றம் கசிந்தது. அது புகையிலையின் நாற்றமாய் இருக்கலாம். அவள் தலையால் சைகை செய்து விட்டு என் முன்னே தண்டவாளத்தில் நடக்கத் தொடங்கினாள். நான் அவளோடு வந்த மனிதனைத் திரும்பிப்பார்த்தேன். அவன் தூரத்தில் கடற்கரையில் குந்தியிருந்து மணலில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். நான் விபச்சாரியின் பின்னால் நடக்கலானேன்.விபச்சாரி இப்போது தண்டவாளத்திலிருந்து சரிவில் பள்ளத்தை நோக்கி இறங்கினாள். தண்டவாளத்தின் கீழே நான்கு அடிகள் விட்டமுள்ள ஒரு சீமெந்துக் குழாய் தெரிந்தது. அந்தக் குழாய் மழை நீர் பள்ளத்திலிருந்து தண்டவாளத்தின் கீழாகக் கடலுக்குள் கடத்தப்படுவதற்காக அங்கே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த விபச்சாரி குழாயின் முகத்துக்குள் போய் குனிந்து நின்று என்னையும் குழாயினுள் வருமாறு கூப்பிட்டாள். குழாய் ஒரு பொந்து மாதிரி ஒரு வகையான பாசி படந்து கிடந்தது. என் கணுக்கால்கள் வரை அழுக்கு நீர் தேங்கி நின்றது. விபச்சாரி தன் உடலை குழாயோடு குழாயாக வளைத்து ஒரு குழாய் போல சுருண்டு நின்றாள்.மீண்டும் நான் தண்டவாளத்தில் ஏறிய போது என் எதிரே விபச்சாரியோடு வரும் அந்த மனிதன் நிற்பதைப் பார்த்தேன். அவன் தண்டவாளத்தின் சிலிப்பர் கட்டையை தன் காலால் தேய்த்துக் கொண்டிருந்தான். நான் உடனே மீண்டும் சரிவில் இறங்கி பள்ளத்தினூடாக காலி வீதியை நோக்கி நடந்தேன். நான் திரும்பி வந்த போது விடுதி அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. என் ஏஜென்ஸி ஒரு பெருத்த தடியன். அவன் விடுதியின் அலுவலக அறைக்குள் போட்டு ஒரு பொடியனை அடித்து நொருக்கிக் கொண்டிருந்தான். அந்தப் பொடியனுக்கு இருபது வயது இருக்கும். அவன் கனடாவுக்குப் போவதற்காக ஏஜென்சியிடம் நிற்கிறான். அவன் அந்த விடுதியில் லண்டனுக்குப் போவதற்காகக் காத்துக்கொண்டிருந்த அருள்மொழி என்ற பெண்ணுக்கு காதல் கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறான். பிரச்சனை இப்போது ஏஜென்ஸியிடம் விசாரணைக்கு வந்திருக்கிறது.நான் ஜன்னலில் கை ஊன்றி அலுவலக அறையினுள் பார்த்தேன். ஏஜென்ஸியின் கை பொடியனின் தலைமுடியைப் பற்றியிருந்தது. “எளிய வடுவா! தாய் தேப்பன் காணிய பூமிய வித்து உங்களை வெளிநாட்டுக்கு அனுப்புவமெண்டால் உங்களுக்கு வேற எண்ணங்கள், முதலில் போய் உழைச்சு குடும்பத்தைக் முன்னேற் றுங்கோ! பிறகு உதுகளைப் பாக்கலாம். வெளி நாட்டில பொட்டையளுக்கு குறைவில்லை”. ஏஜென்ஸி இப்படி அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு முறை ஏஜென்ஸியின் கைகளுக்குள்ளால் புகுந்து போய் அந்தப் பொடியனின் முகத்தில் அருள் மொழி காறித் துப்பினாள்.ஏஜென்ஸி அறிவுரை சொல்லும் வேகத்தில் பொடியனுக்கு அடிக்க மறந்த போதெல்லாம் அலுவலக அறையில் கண்ணீர் சிலும்ப நின்றிருந்த அருள்மொழி துள்ளிக் குதித்தாள். அவள் ஏஜென்ஸியைப் பார்த்து “ஐயோ அண்ணா, அடியுங்கோண்ணா இந்த நாயை, கொல்லுங்கோ இவனை,என்னை இவ்வளவு ஆக்களுக்கு முன்னுக்கு மானங்கெடுத்திப் போட்டான்” என்று அலறினாள். நான் விடுதிக்குப் பின் புறம் போய் குளிக்கத் தொடங்கினேன். அது வரை எனது மூளையின் ஏதோ ஒரு மடிப்பில் சின்னதாய் இருந்த ஒரு புள்ளி இப்போது என் மூளைக்குள் அலை அலையாய்ப் பரவத் தொடங்கியது. எனக்கு அந்த சிங்கள விபச்சாரி நோய் ஏதாவது கொடுத்திருப்பாளா? கையிலிருந்த வாளியைத் தூக்கி நெற்றியில் அடித்துக் கொண்டேன். நான் லாவோஸ் நாட்டுக்குச் சென்றிருந்த போது எனக்குப் பால் வினை நோய் வந்தது. லாவோஸின் தலைநகரம் நொங்காய் ஆற்றின் மடியில் கிடக்கிறது. தலைநகரத்துக்கு வியன்டைன் என்று பெயர். அது கிளி நொச்சியைவிடச் சிறிய நகரம். நகரம் காடு பற்றிப் போயிருந்தது. நகரத்தில் சதுரப்பட ஒரேயரு வீதியுண்டு. அந்த வீதியில் சிறுவர்கள் பிச்சை யெடுத்துக்கொண்டு திரிந்தார்கள். நகரத்தின் சதுக்கத்தில் பியர்ச் சாலைகள் உண்டு.பியர்ச் சாலையில் லிட்டர் கணக்கில் பெரிய பெரிய பாத்திரங்களில் பியர் தருகிறார்கள். ஒரு பியர்ச் சாலையின் பின்புறத்தில் தான் அந்த வேசியைச் சந்தித்தேன். அவள் இலக்கணச் சுத்தமாக ஆங்கிலம் பேசி னாள். வியண்டைன் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறாளாம். சிறிய விழிகளுடனும், மின்னும் கன்னங்களுடனும் சாரம் மாதிரியான செயற்கைப் பட்டு உடையுடன் அவள் ஒரு பொம்மை மாதிரி இருந்தாள். வெறும் பத்து டொலர்களுக்கும் ஒரு குவளை பியருக்கும் அவள் ஒரு இரவு முழுவதும் என்னுடன் தங்கச் சம்மதித்தாள். மறுநாள் காலையில் என் மேலுதட்டில் ஒரு கொப்புளம் காணப் பட்டது. மதியம் என் ஆண்குறியின் தலைப்பில் சில கொப்புளங்கள் தோன்றின. மாலையில் ஆண்குறியின் துவாரத்திலிருந்து நூல் போல சீழ் கொட்டத் தொடங்கியது. என் பிடரியிலும் முகத்திலும் மார்பிலும் வயிற்றிலும் பாதங்களிலும் தொடைகளிலும் ஊசி வலி கிளம்பி அலைந்து அது என் ஆண் குறியில் திரண்டது. நான் ஆண்குறியின் துவாரத்தை விரலால் அமுக்கிய போதெல்லாம் செம்மஞ்சள் நிறத்தில் சீழ் குமிழியிட்டு வந்தது. என் இருதயத்திலிருந்து அந்த வேசியின் மீது கொலை வெறி கிளம்பிற்று. நான் அன்றிரவே பாங்கொக் திரும்பினேன். நொங்காய் ஆற்றைக் கடந்தால் ஓரிரவுப் பயணத் தொலைவில் பாங்கொக் நகரம் இருந்தது. பாங்கொக் நகரின் மிகப்பெரிய வீதியான சீலோம் வீதியின் ஒரு முனையில் மாரியம்மன் கோயில் இருக்கிறது. மறு முனையில் லும்பினிப் பூங்கா விரிந்து கிடக்கிறது. இவை இரண்டுக்கும் நடுவாக வேசிகளின் பள்ளத்தாக்கு பற்பொங் இருக்கிறது.பற்பொங் நிர்வாண நடன விடுதிகளாலும் விபச்சார விடுதிகளாலும் கட்டப்பட்டிருந்தது. நடன விடுதிகளில் ‘கோ – கோ’ என்ற ஒரு வகையான நிர்வாண நாட்டியங்கள் நடந்து கொண்டிருக்கும். ஒரே மேடையில் முப்பது நாற்பது நிர்வாணிகள் நடனமாடுவது ஒரு நிர்வாண ஒப்பேரா போலிருக்கும். விபச்சார விடுதிகளில் இருக்கும் வேசிகள் நிதானம் தவறாதவர்களாய் இருந்தார்கள். ஒரு கோப்பை பியரை மணிக்கணக்காக வைத்து வைத்து குடித்தார்கள். அவர்களின் மூஞ்சிகள் ரப்பரால் செய்யப்பட்டவை போல எல்லாப் பக்ககங்களும் வளைந்தன. பூச்சுக்களாலும் சாயங்களாலும் மையாலும் அவர்களின் இருதயங்கள் செய்யப்பட்டிருந்தன. நாங்கள் விபச்சாரம் செய்கிறோம் என்று அவர்கள் சொல்வதில்லை. “நாங்கள் வேலை செய்கிறோம்” என்றே அந்த வேசிகள் சொல்லிக்கொண்டார்கள். சூது பற்பொங்கின் தர்மம். சூதும் வேசமும் காமமும் அந்த வேசிகளை வனைந்திருந்தன. தாய்லாந்தின் குருவிகள் மலைகளில் உள்ளன. பாங்கொக்கில் இருந்து இருநூற்றுச் சொச்சக் கிலோமீற்றர்கள் தொலைவில் நன்தாபுரி மலைத் தொடர் ஆரம்பிக்கிறது. மலை முழுவதையுமே உல்லாசப் பிராயணிகள் மொய்த்துக் கிடந்தனர். அந்த மலைக் கிராமங்களில் குடும்பம் குடும்பமாய் விபச்சாரம் செய்து வந்தார்கள். நான் சாம்ப்போய்ன் குடும்பத்தின் கடைசிப் பெண்ணைத் தேர்ந்தெடுத்தேன்.அந்த விபச்சாரி நான்கடி உயரம் தான் இருந்தாள். கொழுத்த உடல்வாகு. வட்டமான மூஞ்சியும் புருவங்களில்லாத கண்களும் ஒளிரும் கூந்தலும் மாசு மருவற்ற மஞ்சள் தோலுமாய் பளபளவென்று ஒரு மாம்பழம் போலிருந்தாள். நான் சாம்போய்ன் குடும்பத்தில் பத்து நாட்கள் தங்கியிருந்தேன். மாம்பழம் ஒரு நிமிடம் கூட என்னை விட்டு அகன்றாள் இல்லை. என் நீண்ட தலை முடியை வாரி விடுவதிலும் என் காலணிகளின் நூலை முடிச்சுப் போடுவதிலும் அவளுக்குத் தீராத ஆனந்தம். நன்தாபுரி மலைத்தொடரின் ஒவ்வொரு இரகசிய மடிப்புகளுள்ளும் மாம்பழம் என்னை அழைத்துச் சென்றாள். நானும் மாம்பழமும் பகல் முழுவதும் ஆட்களில்லாத மலைச் சரிவுகளில் கிடந்தோம். மாம்பழம் ஒரு குரங்கு மாதிரி மரங்களில் தாவித் தாவி ஏறிச் செல்வாள். தன்னுடைய இடுப்பு முழுவதும் பழங்களால் நிறைத்துக் கொண்டு இறங்குவாள். மாம்பழம் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து தடவைகள் குளித்தாள். அவள் பகலிலோ இரவிலோ தூங்கி நான் பார்த்ததில்லை. இரவில் நானும் மாம்பழத்தின் தகப்பனும் முற்றத்திலிருந்து ‘பறவை’ மது அருந்துவோம். அந்தக் கிழவன் துளசி இலைகளை மென்றபடியே மதுவைக் குடித்துக் கொண்டிருப்பான். ஒரு நாள் விடிகாலையில் நான் வயிற்று வலியால் துடித்தபடி படுக்கையில் கிடந்தபோது சாம்ப்போய்ன் குடும்பமே என்னைச் சுற்றிக் கவலையுடன் நின்றிருந்தது. மாம்பழத்தின் தாய் மலையிலிருந்து விதம் விதமான இலைகளை எடுத்து வந்து விழுதாய் அரைத்து என் அடி வயிற்றில் பூசினாள். மாம்பழம் கண்ணீர் விட்டு அழுதாள். அவளின் கண்ணீர் பொட்டுக்கள் என் நெற்றியில் சிந்தி உடைந்தன. எனக்குத் தாய்லாந்து மொழியில் இருபது சொற்கள் தெரியும். மாம்பழத்துக்கு பத்து ஆங்கிலச் சொற்கள் தெரியும். இந்த முப்பது சொற்களால் நாள் முழுவதும் நானும் அவளும் பேசிக் கொண்டிருப்போம். இன்னொரு அதிகாலையில் என்னைத்தான் காதலிப்பதாக மாம்பழம் சொன்னாள்.மாம்பழத்துக்கு சிறிலங்கா எங்கே இருக்கிறது, சுவிஸ் எங்கே இருக்கிறது, அமெரிக்கா எங்கே இருக்கிறது என்று ஒரு மண்ணும் விளங்கியதாகத் தெரிய வில்லை. தன்னை என்னோடு சிறிலங்காவுக்கு கூட்டிப் போகச்சொன்னாள். சென்ற வருடம் அவளின் சிநேகிதி ஒருத்தியை ஒரு சுவிஸ்காரன் சுவிற்சலாந்துக்குக் கூட்டிப் போனானாம். ஐயாயிரம் பாத் ‘ரேட்’ பேசி பத்து நாட்கள் தங்க வந்ததை ஒரு கலியாணத்தில் கொண்டு வந்து முடிக்க மாம்பழம் திட்ட மிடுகிறாள். “இதோ பாங்கொக்குக்கு போய்விட்டு இரண்டே நாளில் திரும்பி வருகிறேன்” என்று மாம்பழத்திடமும் சாம்ப்போய்ன் குடும்பத்திடமும் கூறி விட்டு நொன்தாபுரி மலையிலிருந்து கிளம்பிய நான் அங்கிருந்து சிங்கப்பூருக்கு வந்தேன். சிங்கப்பூரில் சிரங்கூன் பள்ளிவாசலுக்கு முன்னாக வலது புறத்தில் கிளைக்கும் ஒரு குறுக்குப் பாதை டஸ்கா ரோட்டில் சென்று முடிகிறது. அந்த குறுக்குப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் சின்னஞ் சிறிய வீடுகள். அந்த வீடுகளின் முன் வாசற்கதவுகள் அகலத் திறந்து கிடந்தன. வீடுகளின் உள்ளே வீட்டுக்கு நான்கு பேர் ஐந்து பேரென விபச்சாரிகள். நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்று புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்கள் அல்லது வர்ண நூற்க்கண்டுகளை மடியில் வைத்து பின்னல் வேலை செய்து கொண்டிருந்தார்கள். திறந்த கதவுகளின் முன்னே மக்கள் கூடி மணிக்கணக்காக அந்த வேசிகளைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்கள். அங்கே நான் அந்த மலேசிய விபச்சாரியைச் சந்தித்தேன். அவள் ஓங்கு தாங்கான உடலமைப்புக் கொண்டவள். அவளின் குரலில் ஆண்மை பிசிறியது. அவளின் கரிய சருமத்திலிருந்து நான் மதுவின் வாசனையை முகர்ந்தேன். அவளின் உடலின் மொழி கண்டிப்பாக ஒரு விபச்சாரிக்கு உரியதல்ல. அவள் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை மாதிரி அசைந்தாள். மயில் கழுத்து நிறத்தில் சேலை உடுத்திருந்தாள். தன்னுடைய பெயர் கவிதா என்றவள் என்னுடைய பெயரையும் நாட்டையும் விசாரித்தாள். “பெயர்: ஜே.ஆர்.ஜெயவர்தனா. சிறிலங்காச் சிங்களவன்” என்று கூறிவிட்டு வாயை மூடிக்கொண்டேன். பின்மெதுவாக “உனக்கு இருபது வெள்ளிகள் மிகவும் அதிகமானது” என்று சொன்னேன். அந்த வேசி என்னைப் பார்த்து புண்ணான தனது உதடுகளை சுழித்துக் கொண்டே “ஐந்து வெள்ளிக்கும் பத்து வெள்ளிக்கும் தேக்கா மார்க் கெட்டில் உன் சிங்களத்திகள் நிற்பார்கள் அவர்களிடம் போய்க் கொள்” என்றாள். நான் தேக்கா மார்க்கெட் என்ற பெயரை மனதுக்குள் குறித்துக் கொண்டேன். மாலை நேரத்தில் தேக்கா மார்க்கெட் பெண்களால் நிறைந்திருந்தது. நான் மார்க்கெட்டுக்குள் நுழைம் போதே அந்த விபச்சாரியை கண்டுபிடித்து விட்டேன். அவள் மார்க்கெட்டின் பிரதான நுழைவாயிலின் அருகே நின்றிருந்தாள். கறுப்பென்றும் சொல்ல முடியாத சிவப்பென்றும் சொல்ல முடியாத ஒரு சிங்களக் கலர். சுருள் சுருளான முடியைத் தூக்கிக் கட்டி யிருந்தாள். வயது இருபத்தைந்துக்குள் இருக்கலாம். குதியுயர்ந்த செருப்புக் களும் ஜீன்ஸம் டீ – சேர்ட்டும் அணிந்திருந்தாள் அவளின் மார்பில் இப்படி எழுதியிருந்தது. ‘I LOVE SINGAPORE’ வேசி பொட்டு வைத்திராத தன் நெற்றியை நெரித்து என்னைப் பார்த்து இளித்தாள். நான் கொழும்பில் இருந்த காலத்தில் ஓரளவு சிங்களம் பேசப் பழகியிருந்தேன். அவளை நெருங்கி “லங்காத?” என்று கேட்டுக் கதையை ஆரம்பித்தேன். அவள் பத்து வெள்ளி கேட்டாள். அவள் பணிப் பெண்ணாய் வேலை செய்யும் வீட்டுக்கு ஏழு மணிக்கு முன்பாக போய்விட வேண்டும் என்பதால் தூர இடத்துக்கு வரமுடியாது என்றாள். விபச்சாரி கடகடவென வேகமாய் பேசிக்கொண்டேயிருந்தாள். அவள் பேசியதில் அரைவாசிச் சிங்களம் எனக்கு விளங்கவில்லை. நான் தங்கியிருக்கும் அறை மிகவும் அருகில் இருப்பதாகச் சொன்னேன். “நீ நன்றாக நடந்து கொண்டாயானால் பேசியதற்கு மேலே ஐந்து வெள்ளி தருவேன்” என்றேன். நான் ஆரம்பத்தில் இருந்து கவனித்துக்கொன்டேயிருக்கிறேன். அந்த வேசியின் கண்கள் முழுவதும் சந்தேகம் பிடித்திருந்தது. நான் அறைக்கதவை மூடியவுடன் அவள் வெள்ளியைக் கேட்டு கையை நீட்டினாள். நான் பத்து வெள்ளித் தாளன்றை அவளிடம் கொடுத்தேன். “ஐந்து வெள்ளி கூடத் தருவதாக சொன்னீர்கள்” என்று தன் நாவை வெளியே நீட்டி மாய்மாலச் சிரிப்பு சிரித்தாள். “நீ போகும்போது அதைத் தருவேன்” என்று கூறிவிட்டு என் சப்பாத்துக்களை கழற்றிக்கொண்டே “உம்ப கம கோயித?” என்று கேட்டேன். அந்தச் சிங்கள வார்த்தைகளுக்கு “உன் ஊர் எது?” என்று கேட்பதாக அர்த்தம். வேசி வாயை ஒரு மீன் மாதிரித் திறந்ததை நான் நிச்சயம் கண்டேன். அவளின் நுனி நாக்கு அவளின் மேலண்ணத்தைத் தொட்டதைக் கண்டேன். அவளின் உதடுகள் மீண்டும் முட்டிக்கொண்டதையும் கண்டேன். தொடர்ந்து வேசியின் தொண்டையிலிருந்து ஒலியெழுந்ததையும் நான் கேட்டேன். எனினும் அந்த ஒலிச் சமிக்ஞைகளை என் செவிகளால் உணர முடியவில்லை. சில சுவைகளை நாவு நிராகரிப்பது போலவே சில ஒலிகளை காதும் நிராகரிக்கும். மறுபடியும் “உம்ப கம கோயித?” என்று கேட்டேன். அவள் மறுபடியும் வாயை மீன் போலத் திறந்து நுனி நாக்கால் மேலண்ணத்தை வருடி “யாப்பணய” என்றாள். யாப்பணய என்ற சிங்களச் சொல்லுக்குத் தமிழில் யாழ்ப்பாணம் என்று அர்த்தம். நான் விடுத்து விடுத்து சிங்களத்தில் கதைகளைக் கேட்டேன். அவள் தன்னுடைய பெயர் நயீமா என்று சொன்னாள். தன்னுடைய சிறிய வயதில் அவள் யாப்பணயில் இருந்தாளாம். பின் நீர் கொழும்புக்கு அவள் குடும்பம் போய் விட்டதாம். அவள் என்னுடன் சிங்களத்தில் தான் பேசிக் கொண்டிருந்தாள். தான் சிங்கப்பூருக்கு பணிப் பெண்ணாக வந்து ஆறு மாதங்களாகின்றன என்றாள். பின் அந்த ஐந்து வெள்ளியை மறுபடியும் எனக்குஞாபக மூட்டினாள். யாப்பணயவில் தான் படித்த முஸ்லீம் பெண்கள் பாடசாலையும் பொம்மை வெளியும் அங்கிருக்கும் சிறிய வீடுகளும் தன் கண்களுக்குள் நிற்பதாகச் சொன்னாள். பின் மறுபடியும் அந்த ஐந்து வெள்ளியை ஞாபகப்படுத்தினாள்.நான் அவளிடம் ’எப்போது யாப்பணயவிலிருந்து நீர்கொழும்புக்குப் போனாய்? என்று கேட்டேன். அவள் சடாரென என்ன தெரியாதது மாதிரிக் கேட்கிறீர்கள்? என்றாள்.அவளின் கண்கள் ஆடாமல் அசையாமல் நின்றன. அம்ஸ்ரர்டாமில் என் கால்களுக்குக் கீழே ஆறுகள் பின்னிச் சென்றன. அங்கே தான் ஐரோப்பா வின் மிகப்பெரும் வேசிகளின் பூமி இருக்கிறது. அம்ஸ்ரர்டாம் பிரதான ரயில் நிலையத்திலிருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஆறுகளின் நடுவே அந்தப் பிரதேசம் இருந்தது. தெருவின் ஒரங்களில் கண்ணாடிக் கூடுகளுக்குள் அரை நிர்வாணமாக விபச்சாரிகள் நின்றிருந்தார்கள். தெருக்களில் மக்கள் பியர் அருந்தியவாறே அந்த விபச்சாரிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் ஒடிப்போய் கண்ணாடி கூண்டில் முத்தமிட்டார்கள். கண்ணாடிக் கூண்டுகளை வரிசையாகப் பார்த்தவாறே நான் நடக்கலானேன். வரிசையின் இறுதிக் கண்ணாடிக் கூண்டுக்குள் ஒரு இளம் பெண் ஏறக்குறைய முழு நிர்வாணமாய் உட்கார்ந்திருந்தாள். நான் கண்ணாடியுடன் போய் ஒட்டி நின்றேன். அந்தப் பெண்ணுடன் இருந்த மற்றைய இரு விபச்சாரிகளும் என்னை உள்ளே அழைத்தனர். நான் உள்ளே போனவுடன் கண்ணாடியின் மீது திரை போடப்பட்டது. ஒரு விபச் சாரி உட்கார்ந்திருந்த அந்தப் பெண்ணைச் சுட்டிக் காட்டி “அவளா வேண்டும்?” என்று கேட்டாள். நான் யோசித்துக் கொண்டு நிற்பதைத் பார்த்த மற்ற விபச்சாரி “அவள் அருமையான பெண், நேரத்தை வீணாக்காதே, ஒரு முறை இவளிடம் வருபவர்கள் மறுபடியும் இவள் தான் வேண்டுமென விரும்புகிறார்கள். இவளால் எங்கள் இருவரின் தொழிலும் கெட்டுப்போய்க் கிடக்கிறது” என்று சொல்லிவிட்டு பெருங்குரலெடுத்துச் சிரித்தாள். அந்த இளம் பெண் எழுந்து சுவரைக் தடவிக் கெண்டே என்னை நோக்கி வந்தாள். அவருக்குப் பார்வை கிடையாது. அந்தக் குருட்டு விபச்சாரி கிழக்கு ஐரோப்பாவில் இருந்து அம்ஸ்ரர்டாமுக்கு வந்திருக்கிறாள்.ஒரு உக்ரேனிய வேசியை நான் போர்த்துக்கல்லில் சந்தித்தேன். அவளின் பெயர் வால்யா. கீவ் நகரத் திலிருந்து வந்தவள். பழைய லிஸ்பொனின் பக்ஷியா சதுக்கத்தில் அவள் நின்றிருந்தாள். அந்த வசந்த காலத்திலும் குளிரங்கியும் தொப்பியும் கையுறைகளும் பனிக் காலணிகளும் அணிந்திருந்தாள். அவள் எப்போதும் பதற்றத்துடனேயே பேசினாள். எனது அறையில் கூட விபச்சாரி குளிர் அங்கியையும் கையுறைகளையும் கழற்றவில்லை. இரவு முழுவதும் நாங்கள் போர்டோ மது அருந்தினோம். போதை ஏற ஏற அவளில் பதற்றம் அதிகரித்துக்கொண்டே போனது. குளிர் அங்கிக்கு மேலாக போர்வையைப் போர்த்துக் கொண்டாள். அவளுக்கு உக்ரேய்னில் ஒரு சிறிய வீடு கட்ட நான்காயிரம் ஈரோக்கள் தேவையாம். அதைச் சம்பாதித்தவுடன் உக்ரேய்னுக்கு திரும்பி போய் விடுவாளம். உக்ரேய்னில் அவளுக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறதாம். அவளது குடும்பத்தினருக்கு போர்த்துக்கல்லில் உணவு விடுதி ஒன்றில் தான் வேலை செய்வதாக சொல்லி வைத்திருக்கிறாளாம். எனக்கு அவளின் இடை விடாத பேச்சில் சலிப்பு ஏற்பட்டது. “போதும் நிறுத்து” என்றேன். “நீ என் பேச்சைக் கேட்கக் தயார் இல்லை யென்றால் வெளியே போய் விடு” என்று கதவைத் திறந்து விட்டு கைகளைப் பொத்திக் கதவில் குத்தினாள். நான் அசையாமல் நின்றிருந்தேன். அவள் என் சட்டையைப் பிடித்திழுத்து என்னை வெளியே தள்ளினாள். அவளின் வெறிக்கூச்சல் அதிகாலையைக் கிழித்துப் பறந்தது. நான் அவளை வெளியே தள்ள முயன்றேன். அவள் என் கன்னத்கில் ஒங்கி அறைந்தாள். நான் அவள் மூஞ்சியில் காறி உமிழ்ந்தேன். பொலிஸ்காரர்கள் வந்து அவளைச் சோதனையிட்ட போது அவளிடம் போர்த்துக்கல்லில் தங்குவதற்கான அனுமதி பத்திரம் இல்லாதது தெரியவந்தது. அவளின் கைப்பையை பொலிசார் சோதனையிட்ட போது உள்ளே ஆணுறைகளும், மாத்திரைகளும் சிகரெட்டுக்களும் இருந்தன. கைப்பையின் இன்னொரு அறையில் ஒரு கூரிய கத்தியும். மின் அதிர்வை உற்பத்தி செய்யும் கருவியும் ஒரு கத்திரிக்கோலும் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கையில் சவுக்கும் மறு கையில் கைவிலங்கும் வைத்திரும் ஒரு கிழட்டு விபச்சாரி ஸ்ரார்ஸ்பேர்க் சென்டெனி வீதியில் நின்றிருப்பாள் அந்த வீதி விபச்சாரம் செய்வதற்கு பிரஞ்சு அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள வீதி. அந்த வீதியில் நிற்பவர்களில் அநேகமானோர் வெள்ளை வேசிகள், அறுபது எழுபது ஈரோவென அறாவிலை சொல்லுவார்கள். என் தரவளியை எல்லாம் அவர்கள் ஒரு நாய் மாதிரித் தான் பார்ப்பார்கள். ஊண் வழியும் வெள்ளைத் தோல்களைப் போர்த்திய அந்த வேசிகள் விபச்சாரம் செய்வதற்கு லைசன்ஸ் வைத்திருந்தார்கள்.லைசன்ஸ் இல்லாத விபச்சாரிகள் ரீபப்ளிக் சதுக்கத்தில் நிற்பார்கள். நான் அங்கே பால்க்கோப்பி நிறத்தில் ஒரு ஆபிரிக்க வேசியைச் சந்திதேன். அவள் டோகோ நாட்டைச் சேர்ந்தவள். ஏமா என்று பெயர் சொன்னதாக ஞாபகம். அவள் முப்பது ஈரோக்கள் கேட்டாள். அவளின் அறை மிகச் சுத்தமாக இருந்தது. கட்டிலில் சுத்தமான துணிகள் விரிக்கப்பட்டிருந்தன. என்னைப் பார்த்து “ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்” என்ற வேசி தரையில் மண்டியிட்டாள். அவளின் கைகளில் ஒரு சிறிய மண்பாத்திரத்தில் நீர் இருந்தது. அவள் தனது இரு கைகளாலும் அந்த நீர் நிறைந்த மண்பாத்திரத்தைத் தனது பெண்குறியின் கீழ் வைத்துக்கொண்டே கண்களை மூடி அடித் தொண்டையிலிருந்து மந்திரம் ஓதும் தொனியில் முணுமுணுத்தாள், அதன் பின் அவள் அந்த நீரை தன் பெண்குறியின் மீது தெளித்து விட்டாள். “அது எதற்கு?” என்று கேட்டேன். வேசி தன் மூதாதையர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாளாம். " தயவு செய்து நீயும் மண்டி போட்டு உட்கார்ந்து கொள்" என்று சொன்னாள். பின்பு மண் பாத்திரத்திலிருந்த மிகுதி நீரை என் ஆண்குறி மீது தெளித்துக்கொண்டே அடித்தொண்டைக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தாள். அப்போது அவளின் கண்கள் ஒரு துர்தேவதையின் கண்களைப் போல மேலும் கீழும் உருளலாயின.அந்த வேசி எந்த நேரத்தில் எனக்கு மந்திரம் போட்டாளோ தெரியவில்லை. விபச்சாரிகளின் நாற்றம் துரத்திக் கொண்டேயிருக்கிறது. ஆயிரம் பெண்கள் கூடி நிற்கும் போது அவர்களிடைய ஒரேயரு வேசி இருந்தால் கூட நான் அவளைக் கண்டு பிடித்து விடுகிறேன். என் வாழ்நாளில் நான் சந்தித்த ஒவ்வொரு வேசியின் மூஞ்சியும் என் இருதயத்தில் அழியாமல் இருக்கிறது. அவர்களை மறுபடியும் மறுபடியும் ஞாபகப் படுத்திக்கொண்டே சீவிக்கிறேன். வேசிகளைக் குறித்த ஒவ்வொரு தனித்தனிப் படிமங்களையும் சிதறாமல் என் ஞாபகத்தில் சேமித்து வைத்திருக்க என்னால் முடிகிறது. வேசிகளின் ஆன்மா, உடல், வார்த்தை, தந்திரம், உறுதி, பயம், இரத்தம், அழுக்கு, கண்ணீர் என எல்லாமே என்னில் காமத்தைக் கிளர்த்துகின்றன. எனக்குத் தெரியும், என் காமம் என் பாதங்களில் தான் முகிழ்க்கிறது. நான் இறுதியாச் சந்தித்த வேசி கானா நாட்டுக்காரி நான் அவளைப் பரிஸ் மெத்ரோ நிலையம் ஒன்றில் சந்தித்தேன். அவளுக்கு நாற்பது வயதிருக்கலாம். ஆறடிக்கு மேலே உயர்ந்த கறுப்பி. அவளின் தடித்த உடுதடுகளில் எச்சில் வடித்து கொண்டேயிருந்தது. அவள் பேசிய போதெல்லாம் எச்சில் துமித்தது. அவளுக்கு பிரஞ்சுமொழி பேசத் தெரிந்திருக்கவில்லை. கொச்சையாக ஆங்கிலம் பேசினாள். என்னைச் “சகோதரனே” என்று தான் அழைத்தாள். முழு இரவுக்கு தனக்கு நூற்றியிருபது ஈரோக்களும் தான் தங்கியிருக்கும் ஹொட்டாலுக்கு முப்பது ஈரோவும் கொடுத்துவிட வேண்டும் என்றாள். அவள் தங்கியிருக்கும் ஹொட்டல் ஐந்து நிமிட நடை தூரத்தில் இருக்கிறது என்றாள். நானும் அந்த வேசியும் மெத்ரோ நிலையத்திலிருந்து வெளியே வந்து வீதியில் நடக்கலானோம்.அந்தப் பகுதி வெளிநாட்டவர்கள் வாழும் பகுதி. கறுப்பர்களும் அராபியர்களும் ஈழத் தமிழர்களும் அந்தப் பகுதியில் அதிகம். நான் வேசியை முன்னே நடக்கச் சொல்லிவிட்டு சற்று இடைவெளி விட்டு அவளைப் பின்தொடர்ந்தேன். அந்த நள்ளிரவிலும் ஈழத்தமிழர்களின் கடைகளும் உணவு விடுதிகளும் திறந்திருந்தன். கடைத்தெருவில் எனக்குத் தெரிந்த இரண்டு தமிழர்களை கண்டேன். “என்ன இந்த நேரத்தில் இந்தப் பக்கம்?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்கள். " ‘ஹஸீஸ்’ வாங்க வந்தேன்" என்றேன். இந்தப் பதில் அவர்களை மிரள வைக்கும் என்று எனக்குத் தெரியும். அந்தப் பகுதியின் இருண்ட மூலைகளில் கஞ்சா, ஹஸீஸ் வியாபாரமும் நடக்கும்.அந்த ஹொட்டல் வேசிகளுக்காகவே கட்டப்பட்டிருந்தது. ஹொட்டலின் மாடிப்படிகளில் கறுப்பு வேசிகள் உட்கார்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வேசியின் அறையில் மூச்சு விட இடமில்லை. அறை முழுவதும் சட்டி பானை பெட்டிகளளென்று குவித்து கிடந்தது. மாட்டுத் தொழுவத்தில் வீசும் நாற்றம் அறையின் சுவர்களில் இருந்தது. பாதி சாப்பிட்ட உணவும் பாத்திரங்கள் தரையில் கிடந்தன. கட்டிலின் விரிப்பில் இரத்தக் கறை படித்திருந்தது.நான் அதிகாலையிலேயே விழித்து விட்டேன் வேசி வாயில் எச்சில் ஒழுகத் தூங்கி கொண்டிருந் தாள் நான் கட்டிலில் இருந்து இறங்கி என் ஆடைகளை அணிந்து கொண்டேன். தரையில் கிடந்த உணவுப் பாத்திரங் களுக்குள்ளால் தட்டுத் தடுமாறி கண்களைத் தேய்த்துக் கொண்டே நடந்து குளியலறைக்குள் போனேன். குழாயைத் திறந்து விட்டு பச்சைத் தண்ணீரை என் முகத்தில் அடித்துக் கொண்டேன். கண்கள் சிவந்து போயிருப்பது குளியலறைக் கண்ணாடியில் தெரிந்தது. என் கண்களையே கண்ணாடியில் பார்த்துக் கொண்டு நின்றேன். அப்போது என் தலையின் பின்புறத்தில் சில எழுத்துக்கள் நெளிவதைக் கண்டேன். திரும்பிப் பார்த்த போது குளியலறையின் சுவரில் ஒரு வாக்கியம் பிரஞ்சு மொழியில் தப்பும் தவறுமாக எழுதி ஒட்டப்பட்டிருந்தது. NE JETEZ PAD MANIX DA LA COMADE நான் அந்த வாக்கியத்தைப் படித்து விட்டுத் திரும்பும் போது குளியலறைக் கதவின் உட்புறத்தில் அதே வாக்கியம் தவறே இல்லாத வாக்கிய அமைப்பில் தமிழ் எழுத்துக்களால் எழுதப்பட்டு அங்கே ஒட்டப்பட்டிருந்த தைக் கண்டேன். தயவு செய்து ஆணுறைகளை மலக்குழியினுள் எறிய வேண்டாம். நான் அந்த எழுத்துக்களையே பார்த்தவாறு நின்றிருந்தேன். அந்தக் கணத்தில் நான் அடைந்த பெரும் அச்சத்தைப் போலவே இன்னொரு அச்சத்தை என் வாழ்க்கையில் நான் முன்பும் அடைந்ததில்லை. பின்பும் அடைந்ததில்லை. அந்தத் தமிழ் எழுத்துக்கள் முத்து முத்தாக மையால் வெள்ளைத் தாளில் எழுதப்பட்டிருந்தன. எழுதிய கை மிக நேரான கோடுகளைக் கீறிப் பழகிய கையாக இருக்க வேண்டும். என் ஐயாவைப் போன்ற ஒரு தொழில் முறை ஒவியனால் அந்த எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். பெரும் சோர்வுடன் நான் நின்றிருந்த போது குளியலறையின் மாடத்தில் வேசியின் சிவப்பு உதட்டுச்சாயம் கிடப்பதைக் கண்டேன். நான் பதற்றத்துடன் வேசியின் சிவப்பு உதட்டுச் சாயத்தால் அந்தத் தமிழ் எழுத்துக்களை அழிக்கத் தொடங்கினேன். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.