[] 1. Cover 2. Table of contents ௭ண்ணங்களின் சிதறல்கள் ௭ண்ணங்களின் சிதறல்கள்   சிவகுமாரி ஆவுடையப்பன்   sivakumsritsa@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/ennangalin_chitharalgal_part_2} மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம் : லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா - aishushanmugam09@gmail.com Ebook Publisher: http://freetamilebooks.com Cover Design : Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya - aishushanmugam09@gmail.com This Book was produced using LaTeX + Pandoc முன்னுரை அன்பானவர்களுக்கு வணக்கங்கள். " எண்ணங்களின் சிதறல்கள் " பாகம் 2ஐ ஓரு சிறுகதைத் தொகுப்பாகத் தங்களின் முன் சமர்ப்பிக்கிறேன். ஓசை என்ற தமிழ்ப்படத்தில் " ஒரு பாடல் நான் கேட்டேன்.." என்ற பாட்டில் வரும் வரிகள்… " வாழ்க்கை என்று எதுவும் இல்லை.. உந்தன் எந்தன் கதையாகும்.." நான் அதைச் சற்றே மாற்றிச் சொல்கிறேன். " கதைகள் என்று எதுவும் இல்லை.. உந்தன் எந்தன் வாழ்க்கை தானே ! " ஆம் ! அன்பு நண்பர்களே ! எனது இந்தத் தொகுப்பில் இருக்கும் கதை மாந்தர்கள் அனைவரும் உயிரோடு இருந்தவர்கள்… இருப்பவர்கள்.. இருக்கப் போகிறவர்கள். என்னுடைய கதைகளை 1970கள், 1980கள், 1990கள் கால கட்டத்தில், அதாவது 30..40 வருடங்களுக்கு முன் எழுதியுள்ளேன். ஆனாலும் அந்தந்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டு தான் இருக்கிறது..வேறு வேறு ஆட்கள் மூலம் என்பது போன்ற பிரமையை என்னால் தவிர்க்க இயலவில்லை. இதைத்தான் ‘சரித்திரம் திரும்பும்’ என்கின்றனரோ..? இவற்றில் “அவர்கள்..நல்லவர்கள்” மற்றும் “ஏத்தமரம்” - இவை இரண்டும் திருச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானவை. " அவர்கள்.. நல்லவர்கள் " கதை போதைப்பொருள் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்றும் அக்கொடிய பழக்கத்தால் சீரழிவோர் எத்தனை பேர்.. எண்ணிப் பாருங்கள் நண்பர்களே ! இதேபோல் தான் மற்ற கதைகளும். சமூகத்தின் எதிரொலிகள் ! என்னை மிகவும் பாதித்த மனிதர்கள்.. சம்பவங்கள்.. அவற்றால் எனக்கேற்பட்ட எண்ணங்களின் வலிகள் ! நான் எப்போதும் ஒரு விஷயம் எல்லோரிடமும் சொல்வது வழக்கம் : ’ உலகில் எங்கிருந்தாலும் மனிதர்களின் உணவு மாறலாம். உடை மாறலாம். சில பழக்க வழக்கங்கள் மாறலாம். ஆனால் மனிதர்களின் அடிப்படை உணர்வுகள் மாறுவதே இல்லை. இதுதான் என் கதைகளின் மையக் கரு. அனைவருக்கும் நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் ! அன்புடன், சிவகுமாரி ஆவுடையப்பன், திருச்சி. Email : sivakumsritsa@gmail.com பின் குறிப்பு : இக்கதைகளைப் படிப்பவர்கள் தங்களின் மேலான கருத்துக்களை.. விமர்சனங்களை எனது இமெயில் முகவரிக்கு அனுப்புமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றிகள். ஏத்தமரம் கண்ணாடியைப் பார்த்து நெற்றிப் பொட்டைச் சரி செய்து கொண்டாள் வேதா.அழகிய கண்கள்.. அளவான மூக்கு.. சிவந்த இதழ்கள். இப்படி ஒவ்வொன்றாய்ப் பார்த்துக் கொண்டே வந்தவள் தன் தோள்களைப் பார்த்தாள்.. ஒன்றுக்கொன்று சமமின்றி..ஏறத்தாழ.. ஏத்தமரம் போல.. ஊஹூம்.. ஏத்தங்கட்டைபோல… ஏத்தங்கட்டை என்றுதான் ராஜசேகர் சொல்வான். இன்று சொன்னது போல் அவள் காதில் ராஜாவின் குரல் கேட்கிறது. ஒரு வெள்ளிவிழாக் காலத்திற்கும் மேல் கழிந்து விட்டது. ஜன்னல் அருகே வந்து நின்று கொண்டு சற்றே தூரத்தில் தெரிந்த வயல் வெளியைப் பார்த்தாள். கட்டுக்கட்டாய்ப் பாத்திகள். இடையிடையே சாரை சாரையாக வரப்புகள். சலசலத்து ஓடும் நீர்க்கால்கள். வெள்ளைக்குச்சி வெள்ளைக்குச்சியாய் நாரைகள். உயரமான மெல்லிய கழுத்துடன் மீனுக்கும்.. புழுவுக்குமாகக் காத்திருக்கும் கொக்குகள்.. காலை வேளையில் மிகவும் அழகான காட்சி. கதிரவனும் இந்த அழகான காட்சிகளைப் பார்க்க சரசரவென மேலேறிக் கொண்டிருந்தான். அந்த வயலில் இரண்டு பேர் ஏத்தமரம் ஒன்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தனர். இன்னொருவன் வாய்க்காலில் இருந்து அந்தக் கனமான ரப்பர் பையில் நீரை முகர்ந்தான். மரத்தின் மீது ஏறியேறி மிதித்துக் கொண்டிருந்தவர்கள் தன்னை மறந்து.. லயித்துப் பாடிக் கொண்டிருந்தனர் இட்டுக்கட்டி. " ஏத்தமரம் கட்டி வச்சு ஏலேலோ.. ஏறியதில் கால் மிதிச்சு ஏலேலோ.. பாத்துப் பாத்து நீரிறச்சு ஏலேலோ.. பயிருபச்ச நாம் வளத்து ஏலேலோ.. படிச்சவர்க்கும் பாமரர்க்கும் ஏலேலோ.. பாங்கான உணவு தந்து ஏலேலோ.. ஏழைக்கும்.. கோடிக்கும் ஏலேலோ.. ஏத்த உணவை நாம் தந்து ஏலேலோ.. குழவிக்கும்.. கிழவிக்கும் ஏலேலோ.. குழைவான உணவூட்டி ஏலேலோ.. உழைப்பாளிக்கும்.. ஓய்ந்தோருக்கும் ஏலேலோ.. உவப்புடனே உணவு தந்து ஏலேலோ.." ஆனந்தமாகப் பாடிக் கொண்டே ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்த அந்தக் கள்ளமில்லா மனிதர்களைப் பார்த்து வியந்து போவாள் ஒவ்வொரு நாளும். கவலைகளை மறந்து பாடிக் கொண்டே வேலை செய்யும் அவர்களும், வேதாவும் அவள் அப்பாவும் இந்த வீட்டிற்கு வந்த சில காலத்திலிருந்து அவளுக்கு ஒரு உந்து சக்தி. திருச்சி நகரிலிருந்து வயலூர் செல்லும் வழியில் இருந்த அந்த இடத்தில் அங்கொன்றும்.. இங்கொன்றுமாக இப்போது தான் வீடுகள் வரத் துவங்கி இருக்கின்றன. அதனால் அமைதி மிகுந்த அந்த இடத்தில் அவர்களுடைய பாட்டுக்கள் அவளுக்குத் தெளிவாகக் கேட்கும். லயித்துப் போய் நின்று விடுவாள். வேதா எம். ஏ. எல்லோரையும் போலில்லை. அவள் ஒரு அசாதாரணப் பிறவி. உணர்ச்சிகள் அவளைப் பாதிக்க என்றுமே அவள் விட்டதில்லை. அது பழக்கப்படுத்தப்பட்டதன்று ; இயல்பாக அமைந்த ஒன்று. அறியாப் பருவத்திலிருந்து இன்று வரை…. வாயில் எச்சிலொழுக விரலைச் சூப்பியபடியே காவிரி ஆற்றுக்குச் செல்லும் அம்மாவின் முந்தானை நுனியைப் பிடித்துக்கொண்டு சென்ற காலத்திலும் சரி… தழையக் கட்டிய பாவாடை தடுக்கித்தடுக்கி விட அதை ஒரு கையால் பிடிக்க மாட்டாமல் பிடித்துக்கொண்டு.. கெந்திக்கெந்தி நடந்து.. அந்தக் கிராமத்திற்கு வருடத்தில் என்றோ சில நாட்கள் மட்டும் வரும் " பயாஸ்கோப் " பார்க்க நண்பர்களுடன் ஓடிய காலத்திலும் சரி.. மாலை வேளைகளில் அல்லது விடுமுறை நாட்களில் தன் வயதொத்தவர்களுடன் நொண்டி.. பல்லாங்குழி.. பச்சைக்குதிரை.. சில்லாக்கு.. என்று விளையாடிய காலங்களில், ராஜசேகர் " இந்த ஏத்தங்கட்டை என் கட்சிக்கு வேண்டாண்டா.." என்று முரட்டுத்தனமாகப் பிடித்துத் தள்ள, அவள் அலங்கோலமாக விழும் காட்சியைக் கண்டு மற்ற சிறுவர்கள் கேலியாகக் கைதட்டிச் சிரித்த காலத்திலும் சரி.. அவளுடைய அக்காவுக்கும், அண்ணனுக்கும் சீரான வாழ்க்கைப் பாதைகளை அமைத்துக் கொடுத்து விட்டு..இவளுக்கு என்ன வழி காட்டுவது என்ற ஏக்கத்திலேயே அவள் அம்மா மடிந்த அந்த நாளிலும் சரி.. இந்த வீட்டைக் கட்டி அவளுக்குத் தந்து விட்டு சிறிது காலம் அவளுடனேயே இருந்த அப்பா திடீரென்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்த கணத்திலேயே அவளிடமிருந்து நிரந்தரமாகப் பிரிந்த அந்தக் கணத்திலேயும் சரி.. வேதா ஒரே போல் தான் இருந்தாள். அது எப்படி சாத்தியம் என்றெல்லாம் அவள் சிந்தித்துப் பார்த்ததில்லை. வாழ்க்கைச் சாலையில் வருபவைகளை உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொள்ள வைக்கும் அச்சுபாவம் - அவளுக்கு ஆண்டவனின் அருட்பிரசாதம். அதனால்தானோ என்னவோ தனக்குச் சரியென்று பட்டதை அவள் சிறிதும் தயங்காமல் செய்து விடுவாள், அதற்கு எத்தனை எதிர்ப்பு இருந்தாலும் சரி. மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று அவள் தன் வாழ்க்கையில் எதையும் செய்ததில்லை. ஒரு விஷயம் மனதிற்குப் பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே அதிலிருந்து ஒதுங்கி விலகிவிடுவாள். அவள் மாநிலத்திலேயே முதலாவதாக எம். ஏ. தேறியவுடன் அவளுடைய பேராசிரியரும், கல்லூரி முதல்வரும் அவள் மேற்கொண்டு ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர ஏற்பாடுகள் செய்வதாகப் பெரிதும் கூறினர். ஆனால் வேதாவுக்கு எம். ஏ. படித்ததே போதுமென்று தோன்றியது. அதனால் அதை அவள் தீர்மானமாக மறுத்து விட்டாள் மிகவும் பணிவுடன். ஏனெனில் அவள் எதிர்காலத்தைப் பற்றிப் பெரிதாக எதையும் யோசித்ததில்லை எப்போதும். அவளிடம் ஐந்தாண்டு திட்டமோ அல்லது எதிர்காலத்தைப் பற்றிய குறிப்பிட்ட ஒரு திட்டமோ எதுவும் கிடையாது. " நாளை " என்றே அவள் என்றுமே நினைத்ததில்லை. காலையில் எழுந்து இறைவனை வணங்கும் போதே அன்று தான் செய்ய வேண்டிய செயல்களை அட்டவணைப்படுத்தி விடுவாள். அதன்படி செய்து முடித்துவிடுவாள் கூடுமானவரை. அதோடு சரி. அதனால் இந்த உலகப் பாதிப்புகள் எதுவும் அவளிடம் கிடையாது. ஆராய்ச்சிப் படிப்பு வேண்டாம் என்று சொன்னதும் அவள் பேராசிரியரே அவள் விருப்பப்படி ஒரு நல்ல நிறுவனத்தில் உயர் மூன்று இலக்க ஊதியத்துடன் வேலை வாங்கித் தந்தார். ஆயிற்று.. இதோ.. பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டன. நல்ல குணமும்.. அன்பு கலந்த மரியாதையும்.. யாருக்கும் உதவும் எண்ணமும்.. எல்லாவற்றிற்கும் மேலாக அளவில்லாத திறமையும் இருந்ததனால் படிப்படியாக முன்னேறி அங்கு ஒரு பிரிவிற்கு மேலாளராகவும் ஆகிவிட்டாள். " ஆன்ட்டி…" வேதா திரும்பிப் பார்த்தாள். " ஓ… நிரஞ்… வா..வா.." " ஆன்ட்டி.. நேத்து நீங்க சொல்லிக் கொடுத்த கணக்கெல்லாம் முடிச்சுட்டேன்… ரொம்பத் தேங்ஸ்.. ஆன்ட்டி… நாங்க ஸ்கூலுக்குக் கெளம்பியாச்சு.. போய்ட்டு வரேன் ஆன்ட்டி…" வேதா மணியைப் பார்த்தாள். எட்டரை. " எட்ர தானே ஆகுது…ஏம்மா அதுக்குள்ள…? " " வீட்டடியவிட வேம்படி மேல் ஆன்ட்டி…" தன்னை மீறிச் சொல்லி விட்டு சட்டென்று உதட்டைக் கடித்துக் கொண்டாள் நிரஞ்சனா. அவளை உற்றுப் பார்த்தாள் வேதா. பாளம் பாளமாய் கண்களில் கூடிய நீர் வெளிப் பாயாமல் அடக்கிக் கொள்ள முயன்றாள் அந்தச் சின்னப் பெண். சட்டென்று அவளை இழுத்து உட்கார வைத்துத் தானும் அவளருகில் மெதுவாக அமர்ந்தாள் வேதா. " ஏம்மா… நிரஞ்…என்னம்மா நடந்தது ? " பரிவான அந்தக் குரல் நிரஞ்சனாவைப் பொங்க வைத்துவிட்டது. கண்ணீரில் உடைந்து போனாள். சற்று நேர அழுகைக்குப் பின் அவளே பேசினாள். " ஆன்ட்.. டி…அப்பா இப்பல்லாம் முன்னாடி அம்மா இருந்தபோது இருந்தாப்ல இல்ல… எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறாரு.. அப்பாவோட கோபத்தையே பாக்காத எங்களால அதத் தாங்க முடியலே.. ஸ்ரவணும்.. குமாரும் இப்பல்லாம் அப்பான்னாலே நடுங்குறாங்க.. அதோட.. அதோட… அவரு.. அவரு..அப்பா… குடிச்சிட்டு வேற வராரு ஆன்ட்டி.. அப்பல்லாம் ரொம்ப அடிக்கிறாரு… நேத்து ராத்திரி கூட எங்க மூணு பேருக்கும் நல்ல அடி.." கண்களில் நீர் வழியக் குனிந்த தலை நிமிராமல் பேசினாள். வேதாவுக்குத் திக்கென்று இருந்தது. ’ குடி..யா.. ராஜாவா..? கடவுளே..’ வெளியே கார் ஹார்ன் கேட்டது. சட்டென்று எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு " நா வரேன் ஆன்ட்டி…" என்றவாறு வேகமாக வெளியேறினாள் நிரஞ்சனா. வேதா அப்படியே யோசனையில் ஆழ்ந்தாள். ’ இந்தச் சிறுமி மீது எத்தனை பெரிய பொறுப்பு ? டீனேஜின் முதல் படியில் கால் வைத்திருக்கும் இந்தச் சின்னஞ்சிறு குழந்தையால் தம்பிகளை கவனிக்க… குடிக்கும் அப்பாவைத் திருத்த முடியுமா ? பட்டாம்பூச்சியாய் பறக்க வேண்டிய வயதில்.. ஆண்டவா.. தன்னைப் பற்றியே முழுசா ஒண்ணும் தெரிஞ்சிருக்க முடியாத வயதில்.. தந்தையை…தம்பிகளை.. இந்தப் பொல்லாத.. அவலமான.. அசிங்கமான உலகத்தைப் புரிந்து கொண்டு ஈடு கொடுத்துச் செல்வது என்பது அவ்வளவு எளிதா ? ’ ஜன்னல் வழியே அடுத்த வீட்டைப் பார்த்தாள். குழந்தைகள் ஏறினதும் காரை இயக்க ஆரம்பித்த ராஜாவின் முகம் கோபமாக இருப்பதை உணர்ந்தாள் வேதா. ஆம்.. அதே ராஜசேகர் தான். கேலியாக, ஏளனமாக, ஏதோ ஒருவகையான இரக்கமாகப் பார்த்த இந்த உலகத்தைச் சலனமின்றி நோக்கி.. அனைத்து நிகழ்வுகளையும்.. கிண்டல் பேச்சுக்களையும் ஒரே மாதிரியாகப் பாவிக்கும் அவளுடைய இயல்புக்கு அவனும் ஒருவகையில் தூண்டுகோல்தான். ’ ஏத்தங்கட்டை..ஏத்தங்கட்டை’, என்று அவன் எப்போதும் கேலி செய்து வந்தாலும் அவள் ஒருபோதும் அவனை வெறுத்ததில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்.. ஒன்று சாந்திமதி. ராஜாவின் தங்கை. அவள் வேதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழி. மிகவும் அன்பாக இருப்பாள் வேதாவிடம். இன்னொன்று.. ராஜாவைவிடக் கொடூரமாக அவளைக் கேலி கிண்டல் செய்தவர்கள் ஏராளம். ஏனோ தெரியவில்லை.. அவனுக்காக அவள் எண்ணத்தில் அன்பு நிறைந்த ஓரிடம் உண்டு. C.A. முடித்துவிட்டு அவன் தனியாக அலுவலகம் ஆரம்பித்த போது அவளுடைய வாழ்த்துத் தந்திதான் முதலில் அவனுக்குக் கிடைத்தது. ஆனால் வேதாவை அவன் ஒருபோதும் லட்சியம் செய்ததில்லை. அதனால் தன் திருமண மடலைக் கூட அவளுக்கு அவன் அனுப்பவில்லை. ஆனால் அவனே எதிர்பாராதபடி அவள் வாழ்த்தே முதலில் அவனுக்குக் கிடைத்தது. அவன் அதையும் தூக்கி எறிந்து விட்டான் அலட்சியமாக. ஆனால் அவன் மனைவி இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு.. நோயைக் கண்டறிந்த ஆறேழு மாதங்களுக்குள்ளேயே சிகிச்சை பலனின்றி காலதேவன் மடியில் நிரந்தரமாகத் துயிலச் சென்று விட்டபோது.. ராஜா வேதாவைத்தான் சபித்தான் மனதுக்குள்.. ‘அந்த ஏத்தங்கட்டை வாழ்த்து தான் முதல்லே கெடச்சுது.. இன்னிக்கு என் வாழ்க்கையே கட்டயாப் போச்சு..’ ஆனால் அவன் வாங்கிய வீட்டுக்கு அடுத்த வீடே வேதாவோட வீடாக இருந்ததை அறிந்த போது.. என்ன செய்வதென்று தெரியாமல் ஆத்திரம் பீறிட்டது. வேதாவின் முகத்தில் விழிக்காமல் மிகவும் கவனமாக இருந்து கொண்டான். ஆனால் அவன் குழந்தைகள் மூவரும் அன்பு நிறைந்த வேதாவின் பேச்சிலும்..நடத்தையிலும் ஒரு இதமான உணர்வை உணர்ந்தனர்.. இயல்பாக அவளிடம் ஒட்டிக்கொண்டு விட்டனர். அவர்களுக்கு வேறு ஏதும் தெரியாது. ராஜாவால் அவர்கள் வேதாவுடன் பழகுவதைத் தடுக்க முடியவில்லை. ஆனால் வேதாவைப் பற்றி ஏதாவது குழந்தைகள் பேச ஆரம்பித்தால் உடனே எரிந்து விழுவான். அதனால் அவர்களும் நாட்போக்கில் அவளைப் பற்றி அவனிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டு விட்டனர். அதோடு ராஜாவுக்கு இன்னோரு நடைமுறைச் சிக்கலும் இருந்தது. அவன் அலுவலக வேலையாக மாதம் ஒரு முறையாவது வெளியூர் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். சமையல் மற்றும் மற்ற வேலைகளுக்கு ஆட்கள் இருந்தாலும் அந்த நாட்களில் வேதா அவர்களை நன்கு கவனித்துக் கொண்டாள். இரவில் சமையல் செய்யும் அம்மாவே துணைக்குப் படுத்துக் கொள்ளும். ஆனாலும் அவன் ஊரில் இல்லை என்று குழந்தைகள் உணராமல் வேதா பார்த்துக் கொண்டாள். அது அவனுக்கு அவனறியாமல் ஒரு தெம்பைக் கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வாரம் ஒரு நாள் போல ஓடிவிட்டது. ஒவ்வொரு நாளும் நிரஞ்சனாவும் அவள் தம்பிகளும் ராஜாவிடம் அடி, உதைபடுவது வேதாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது விமோசனம் தேட வேண்டும் என்று அவள் உள்மனம் கூறிக்கொண்டே இருந்தது. நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வரும் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களின் அத்தையும் தன் தோழியுமான சாந்திமதிக்குத் தெரியப்படுத்துவோமா என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த போதே இன்னும் ஒரு வாரம் பறந்து விட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை. ஓய்வு நாள். வேதா தன் வழக்கமான பொழுது போக்கான வயல் வெளியைப் பார்த்துக கொண்டு நின்றிருந்தாள். " வேதா.." குரல் கேட்டுத் திரும்பினாள். " அடடே.. சாந்திமதி.. வா..வா.. எப்ப வந்தே ஊர்லேர்ந்து..? நானே ஒனக்கு லெட்டர் போடணூன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன்.." மெதுவாக நடந்து வந்து தோழியின் கைகளைப் பற்றியபடி " உட்கார் சாந்தி.." என்று தானும் அவள் எதிரே அமர்ந்தாள் வேதா. இருவரும் பொதுவாக சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். ஃப்ளாஸ்க்கில் இருந்து காஃபியை ஊற்றிக் கொண்டு சாய்ந்து சாய்ந்து நடந்து வரும் வேதாவை உற்றுப் பார்த்தாள் சாந்திமதி. " என்ன சாந்தி.. அப்படிப் பாக்குறே..?" மெல்லிய சிரிப்புடன் கேட்டாள் வேதா. " நீ மாறவே இல்லே.. அப்படியே அழகா இருக்குறே.. வேதா..அது..அது..எப்படி..?" வேதா சட்டென்று சிரித்தாள். " சூழ்நிலையும்.. இந்த உலகமும் என்னை மாத்த.. நான் ஒருபோதும் அனுமதிக்கிறதில்லே.. கூடுமானவரை.. அப்படியே சில நேரங்களில் பாதிக்கப்பட்டாலும் திரும்ப எனது இயல்புக்கு சீக்கிரம் திரும்பிடுவேன்.. அதான் ரகசியம்.." கண்ணை லேசாகச் சிமிட்டியபடி சொன்னாள் வேதா. " ஊஹூம்.. அதில்லே.. நாஞ்சொல்லட்டுமா..? நீ…நீ… ஒண்டிக்கட்டையா…" சட்டென்று அவளை இடைமறித்தாள் வேதா. “ஒண்டிக்கட்டை இல்ல சாந்தி.. ஏத்தங்கட்டை…” சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தாள். சுருக்கென்றிருந்தது சாந்திமதிக்கு. " வேதா.. அதையெல்லாம் இன்னமுமா…" " மறக்கல சாந்தி.. அதமட்டும்.. மறக்கவேயில்ல… சாந்தி.. அதோ அந்த ஜன்னல் வழியாப் பாரு..அந்த ஏத்தமரம்.. அது தன்ன யாரு மிதிச்சாலும் ஒண்ணுஞ் சொல்லாது.. அதுக்கு வெயிலோ..மழையோ..காத்தோ பனியோ..குளிரோ கிடையாது. சுத்தி இருக்கறதல்லாம் பருவத்தால மாறுனாலும் அது மாறுறதில்லே.. வாய்க்காலிலிருந்து நீர் எறைக்க அது ஒதவுது.. வாய்க்காலே வத்துனாக்கூட அது கவலப்படுறதில்லே.. அதப்போலத்தான் நானும்.. எதப்பத்தியும் நெனக்கிறதுல்லே.. அதுனால கலங்கறதுமில்ல.. ஜஸ்ட் ஐ லிவ் ஃபார் டுடே.. ஐ நெவர் திங்க் ஆர் ப்ளான் அபவுட் த ஃப்யூச்சர்.. ஒங்கண்ணா எனக்குப் பொறுத்தமாத்தான் பேர் வச்சுருக்காரு.." ஏத்தங்கட்டை “ன்னு.. இல்ல சாந்தி ..?” சிரித்தபடி கேட்ட வேதாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை சாந்திமதிக்கு. வருத்தம் மிஞ்சும் முகத்துடன் வேதாவின் கை விரல்களைத் தன் கைவிரல்களுடன் கோர்த்துக் கொண்டாள். சற்று நேரம் கழித்து மெல்லப் பேசினாள். " நீ மாறவேயில்லே வேதா..ஆனா அண்ணா மாறிட்டான் ரொம்ப.. அதுவும் அண்ணி எறந்ததுக்கப்புறம்.. ரொம்பவே.. அவன நெனச்சாலே என்னவோ கலக்குது நெஞ்ச.. கொழந்தைகள நெனச்சா அதவிடப் பயம்ம்ம்மா இருக்கு.. இப்டிப் போச்சுன்னா அதுங்களோட எதிர்காலம் ?" அழுது விடுவாள் போலிருந்தது. " நாளைக்கு என்ன நடக்கும்னு ஒனக்கு இன்னிக்கே தெரியுமா..? ஏன் எதிர்காலத்த எண்ணி ஏங்குற ? " " ஒன்னோடப் பக்குவம் எனக்கு வரலேன்னு வச்சுக்கோயேன்.. அண்ணா இப்டியே நடந்துக்குட்டான்னா..? " " திரும்பவும் அதையே ஏன் சொல்ற? ஒங்கண்ணாவ இன்னோரு மேரேஜ் பண்ணிக்கச் சொல்லு.. எல்லாம் சரியாய்டும்.. நவ் ஹி நீட்ஸ் பேட்லி ய வொய்ஃப்.. தட்ஸால்..! " பொறிதட்டினாற்போல் நிமிர்ந்து உட்கார்ந்தாள் சாந்திமதி. " வே…தா..வேதா..நீ என்னா சொல்றே..? " " ஏன் சாந்தி.. ஒங்கண்ணாவின் நெலயச் சொன்னேன்.. சகஜமா ஒலகத்துல நடப்பது தானே..? " சாந்திமதி யோசனையாய்த் தலை குனிந்தாள். சற்றுப் பொறுத்துக் கலவரம் விரவிய குரலில் கேட்டாள். " வேதா..யோசிச்சுத்தான் சொல்றியா..? அப்படி மாற்றாந்தாய் வந்தா இந்தக் கொழந்தைகளோட கதி என்னாகும்..?" " என்னாகும்..? நெனக்கிறதெல்லாம் நடப்பாவதில்லே..வாழ்க்கைங்கறது பசுஞ்சோலையுமல்ல.. பாலைவனமுமில்ல..வெளிவேஷமே அதிகமா இருக்கும் இந்த ஓலகம் பாசத்தால் ஆனதல்ல.. பாறாங்கல்லால் ஆனது..நேசத்தால் நெறஞ்சதில்லே.. நெருஞ்சி முள்ளாலானதுன்னு அவுங்களுக்குக் கொஞ்ச நாள்ள புரிய ஆரம்பிக்கும்.. அவுங்க ஜாக்கிரதையா ஆய்டுவாங்க…" " வேதா..இது கொடுமை.." " நாம விரும்பினாலும் நம்மை விரும்பாத இந்த ஒலகம் 99 சதவீதம் கொடுமையானதுதான் சாந்தி..! " " அப்போ வேற வழியே இல்லையா..? " " இருக்கு.. ஆனா ஒங்கண்ணா நடக்கறத ஏத்துக்கணும்.. ஒங்கண்ணி போய்ட்டாங்க.. இனிமே கண்டிப்பா வரப்போறதில்லே.. கொழந்தைங்க சின்னதுங்க.. நாமதான் இனிமே அதுங்களுக்கு அப்பாவும் அம்மாவும்னு ஒங்கண்ணா யதார்த்தத்துக்கு வரணும்… நா பொதுவா நடப்பச் சொன்னேன்.. அவ்வளவுதான்.. இனிக்க இனிக்கக் கற்பனையிலேயே வாழ்ந்துட்டுப் பின்னர் இடிஇடியாய்ச் சுமைகளையும்.. கவலைகளையும் சொமக்கறதவிட மொதல்லியே கண்ணுக்கெதிர இருக்கறத.. நடக்கறத தைரியமா ஏத்துக்கறது நல்லதில்லையா..? " சாந்திமதி ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து விடை பெற்றாள். இரண்டு நாட்கள் உதித்து ஒடுங்கின. இரண்டு நாட்களாக நிரஞ்சனாவோ அவள் தம்பிகளோ வரவில்லை. அத்தை இருப்பதால் வரவில்லை போலும் என்று நினைத்துக் கொண்டாள் வேதா. மூன்றாம் நாள் மாலை தோட்டத்தில் அமர்ந்து செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தாள் வேதா. சாந்திமதி அவளைத் தேடி வந்தாள். " வா..வா..சாந்தி.. எங்க ஆளயே காணோம்…" " வேதா.. நான் ஒண்ணு கேக்கலாமா..? " " ஊம்…" " நீ ஏன் கல்யாணமே பண்ணிக்கலே…" வேதா பக்கென்று சிரித்துவிட்டாள். . " ஏன் வேதா சிரிக்கிற..? " " நீ கேட்டப்புறந்தான் அந்த வார்த்தையவே நெனச்சுப் பாக்குறன்.." " வேதா….? " " ஆமா சாந்தி.. நா அன்னிக்கு ஒங்கிட்ட சொல்லல.. ஐயாம் ஜஸ்ட் லிவ் ஃபார் த டேன்னு.." அவளை இடைமறித்தாள் சாந்திமதி. " இல்ல வேதா..நீ இப்டி வாழறதுக்குக் காரணம்.. யாரையோ நீ விரும்பி இருக்கே.. ஆனா அது நெறவேறல.. அதுனாலதான் இப்டீல்லாம் பேசிக்கிட்டு…" அவளை மேலே பேசவிடாமல் அடித்தது வேதாவின் பெரிய சிரிப்பொலி ! " வெரிகுட் ஸ்டோரி சாந்தி.. வெரி ஃபைன் இமாஜினேஷன்.." சாந்திமதி குழப்பமாக தோழியை நோக்கினாள். " நெஜம்ம்ம்மா சொல்லு.. நீ யாரையும் நேசிக்கலே.. நான் வெளிப்படையாவே கேக்குறேன்.. நீ ராஜா.. எங்கண்ணன விரும்பியதில்லே..? " வேதா சட்டென்று சிரிப்பை நிறுத்தினாள். " ஒண்ணு சொல்றேன் சாந்தி.. நா இந்த ஒலகத்த..பறவைகள.. விலங்குகள.. இயற்கைய நேசிக்கிறேன். நா ஒன்னயுந்தான் ரொம்ப விரும்புறேன்.. ஒன்னய மேரேஜ் பண்ணிக்க முடியுமா சாந்தி ? " " ச்சீ.. இதென்ன அபத்தம் வேதா ? " " அதேமாறித்தான் நீ சொன்னதும் அபத்தம். நான் ராஜாவை விரும்பியது அல்ல.. விரும்புவது உண்மை. அவர் வாழ்க்கை அமைதியாக, அழகாக அமைய வேண்டும் என்று என்றும் நான் பிரார்த்திப்பதும் நிஜம்.. அதேபோல் எத்தனையோ பேருக்காக நான் நிதமும் ஆண்டவனை வேண்டுவது உண்மை. ஆனால் அதையெல்லாம் வைத்துக்கொண்டு அவரை நான் மேரேஜ்… ச்சேச்சே.. நெனக்கவே நல்லால்லியே..! " " ஏன் வேதா..எங்கண்ணனுக்கு என்ன கொறை..அவனிடம் என்ன இல்லே..? " " எல்லாம் இருக்கு.. ! " " பின்னே அவன் ஒன்னப் பழித்ததற்குப் பழிவாங்கும் சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொள்கிறாயா ..? " " சாந்தி… பழிவாங்க நெனக்கிற நெஞ்சு பிரார்த்தனை செய்யாது.." சற்றே வேகமாகக் குரலை உயர்த்திச் சொன்னாள் வேதா. " பின் என்ன வேதா..? " " எதுவோ ஒன்று என்னத் தடுக்குது.. எனக்குச் சொல்லத் தெரியல்லே.. மேலும் ராஜாவை எந்தக்காலத்திலும் அப்படி ஒரு ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க என்னால் இயலாது… ச்சேச்சே.. நெனக்கவே கூசுதே…" உடலைச் சிலிர்த்துக் கொண்டவள்… “எல்லாத்துக்கும் மேல திருமணம் என்ற ஒன்றை என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியலே..” என்று முடித்தாள். வேதாவின் தீர்மானமான பேச்சு சாந்திக்கு வேதனை தந்தது. அவள் எத்தனை ஆவல் கலந்த மகிழ்ச்சியோடு வேதாவைத் தேடி வந்தாள் ? " இதுதான் உன் உறுதியான முடிவா வேதா..? " " மனசு உறுதிப்படுத்தாத ஒன்றை என் நாவு எப்போதும் பேசாது சாந்தி.. உன்னை எவ்வகையிலாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடு.. " மேற்கொண்டு சாந்தி ஏதும் பேசவில்லை. முந்தின நாள் மதியம் ராஜா தனியாக இருந்த ஒரு நேரத்தில் சாந்தி அவனிடம் பேச வந்தாள். அன்று நிரஞ்சனா பள்ளி செல்லவில்லை. தோட்டத்தில் எதையோ கொத்திவிட்டுக் கொண்டிருந்தவளையே ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜா. அவன் பார்வையின் போக்கைப் பார்த்த சாந்தி அதையே தான் பேச வந்த விஷயத்துக்கு அடிப்படையாக்கிக் கொண்டாள். " என்னண்ணா பாக்குறே.. நிரஞ்சனா எப்டிப் போய்ட்டா பாத்தியா ? தளதளன்னு வளர வேண்டிய செடி வாடலாமாண்ணா..? " தங்கையின் கேள்வி அவனைத் தலைகுனிய வைத்தது. அவனும் அதைத்தானே யோசித்துக் கொண்டிருக்கிறான். அவள் எதைக் குறிப்பிடுகிறாள் என்று அவனுக்குப் புரியாமலா இருக்கிறது ? " சாந்தி…! " ஆழ்ந்த பெருமூச்சொன்று அவனிடமிருந்து வெளிப்பட்டது. " அண்ணா..நான் ஒன்று சொல்லட்டுமா..? " " சொல்லும்மா…! " " நீ மறுபடி மேரேஜ் செய்துக்கோண்ணா.." “சாந்தி…!” பெரிதாகக் கத்தினான். பின் அப்படியே மௌனமாகிவிட்டான். சாந்தி அவன் மௌனத்தைக் கலைக்கவில்லை. இறுதியில் அவனே பேசினான். “சாந்தி…அப்புறம் கொழந்தைங்க..? வரும் பெண் அனுசரிப்பில்லாதவளாக இருந்தால்..? எத்தனை பாக்குறோம் நாட்டுல..?” " அனுசரிப்பு உள்ளவளா இருந்தா ? " " நீ என்னம்மா சொல்றே…நீ சொல்றதப் பாத்தா.." " ஆமாண்ணா..பொண்ணப் பாத்துட்டுத்தான் சொல்றேன்..பொண்ணு நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச பொண்ணுதான்.. தங்கமான பொண்ணு…" அவன் முகத்தையே கூர்ந்து நோக்கியவாறு சொன்னாள் சாந்தி. " சாந்தி…? " " ஆமாண்ணா நம்ம வேதாவத்தான் சொல்றேன்..! " " சாந்தி….? " கத்தியவாறு இருக்கையைவிட்டு எழுந்து விட்டான் ராஜா. சாந்தி அமைதியாக இருந்தாள். அவன் பதற்றம் அவள் எதிர்பார்த்தது தானே ? “சாந்திநீ என்ன சொல்றே..?ஒனக்குப்பைத்தியமா..?அந்த வேதாவையா.. அவளயா..என்னப்போயிக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றே..?” " எனக்கொண்ணும் பைத்தியமில்லண்ணா… இப்படியே இருந்தீன்னா ஒனக்குத்தான் பைத்தியம் பிடிச்சுடுமோன்னு எனக்குப் பயம்ம்ம்மா இருக்கு. ஏண்ணா.. வேதாவுக்கு என்ன கொறை.. அழகில்லையா.. இல்லே படிப்பு.. பணம்.. பதவிசு இல்லியா.. என்னண்ணா இல்லே அவகிட்ட..? " ஆத்திரம் தலைதூக்கும் குரலில் கேட்டாள் சாந்தி. ராஜா கொஞ்ச நேரம் ஏதும் பேசவில்லை. சற்றுப் பொறுத்து சாந்தியே தொடர்ந்தாள் " நீ ’ ஏத்தங்கட்டை.. ஏத்தங்கட்டை ’ என்று கேலி பண்ணுவியே.. அவளே ஏன் உன் வாழ்க்கையை ஏற்றமாக்குகிற ஏணியா இருக்கக்கூடாது ? அதோடு இது நீ மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லே.. நிரஞ்சனாவுக்குப் பதிமூணு தொடங்கிடுச்சு.. ஸ்ரவணுக்குப் பத்து.. ஆனா..குமார்..? அஞ்சு கூட ஆகலே.. அந்தப் பிஞ்சுகள நெனச்சுப் பாரண்ணா..! " " சாந்தி…" பெருமூச்சு விட்டவன் மறுபடியும் மௌனத்தில் ஆழ்ந்தான். இதுவரை நினைத்தே பார்க்காத ஒன்றைச் சிந்திக்க ஆரம்பித்தான். ’ ஆம்.. வேதாவுக்கென்ன.. நல்ல பெண்தான்.. ஆனா அவள நம்ம மனசு ஏத்துக்குமா..? காலப்போக்குல.. ஊம்.. ஆனா வேதான்னா…? கொழந்தைங்களுக்குக் கூடக் கவலயில்ல…அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆன்ட்டி..’ குழப்பம் நீங்கவில்லை. ஆனால் ஒரு தெம்பு கிடைத்தது போலிருந்தது அவனுக்கு. " ஐ வில் திங்க் அபௌட் இட் சாந்தி.." சாந்திக்கு இந்தப் பதில் வெகு நிம்மதியைத் தந்தது. ஆனால் அவர்கள் இருவரும் வேதா இதற்குச் சம்மதிப்பாளா என்று நினைத்துப் பார்க்க அறவே மறந்துவிட்டனர். இப்போது வேதாவின் பதிலைக் கேட்டபின்தான் தன் தவறு புரிந்தது சாந்திக்கு. ஊருக்குப் போய் கடிதம் எழுதுவதாக ராஜாவிடம் சொல்லிவிட்டு மறுநாளே பயணமானாள் சாந்தி. நான்கைந்து நாட்கள் சாரமற்று சென்றன. ராஜாவுக்குக் குழப்பம் நீங்கவில்லை. சாந்தியிடம் சொல்லிவிட்டானே தவிர வேதாவைத் தன் மனைவியாகக் கற்பனை செய்து பார்க்கக்கூட அவனால் இயலவில்லை. ஆயினும் வேதாவைக் குறித்து அதிகமாக , வழக்கமில்லா வழக்கமாகத் தன்னை அறியாமல் சிந்திப்பதையும் அவனால் மறுக்க முடியவில்லை. வேதாவையும் குழந்தைகளையும் இணைத்துப் பார்த்தால் மிகவும் தெளிவாகும் அவன் மனம், தன்னையும் வேதாவையும் இணைத்துப் பார்க்கையில் ஒருவிதமாகக் குழம்புவதையும் உணர்ந்து கொண்டான். ஆனால் எல்லாவற்றையும் மீறி ஏதோ ஒரு எதிர்பார்ப்பு அவனுள் வேகமாக வளர்ந்து வருவதையும் அவனால் தவிர்க்க இயலவில்லை. அன்று அவன் பெயருக்குப் பதிவுத்தபால் வந்தது. கையெழுத்திடும் போதே அது சாந்திமதியிடமிருந்து வந்துள்ளது என்று தெரிந்தது. அவசரமாகப் பிரித்துப் படித்தான். ஆத்திரமாக நின்றான். சாந்திமதி தனக்கும் வேதாவுக்கும் நடந்த உரையாடல்களை உள்ளது உள்ளபடி எழுதியிருந்தாள் வருத்தம் நிறைந்த தொனியில். தந்தையின் ஆத்திரம் பிள்ளைகளுக்குப் புரியவில்லை. பள்ளியில் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. நிரஞ்சனா மிக மெல்ல, " அப்பா..! ஸ்கூலுக்கு டைம் ஆச்சு.." என்றாள். எரிந்து விழுந்தான் ராஜா. அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. தம்பிகளுடன் சென்று விட்டாள் நிரஞ்சனா. ஏனென்று காரணம் சொல்லத் தெரியாமல் இடிந்து போய் அமர்ந்தான் ராஜா. ஆத்திரத்தின் அனல் அலையலையாய்த் தாக்கிற்று. அவனையும் அறியாமல் வேதாவுடன் தன் எண்ணத்தை இணைத்து விட்டிருக்கிறான். இப்போது அத்தொடருக்கு இணைப்பில்லை என்றதும் அவனுக்குத் தாங்க முடியவில்லை. தான் நினைப்பது, சொல்வது மட்டுமே சரி என்று பிடிவாதமாக எண்ணுகின்றவர்களுக்கு அடுத்தவர்களின் எதிர்ப்பு கோபத்தைத்தான் ஏற்படுத்தும். ஏனெனில் அவர்கள் அடுத்தவர்களுக்கு ஒரு எண்ணம் அல்லது கருத்து இருக்கும் என்று ஒருபோதும் நினைக்கவே மாட்டார்கள். ராஜாவும் அந்தத் திமிரான குணம் நிறைந்தவன் தான். ’ இல்லையில்லை.. அப்படியில்லை..’ இருப்புக் கொள்ளாமல் தலையை இப்படியும் அப்படியுமாய் ஆட்டினான். எழுந்து பீரோவைத் திறந்து வேண்டுமட்டும் குடித்தான். கண்கள் சிவக்க.. தொண்டை எரிய..குடல் உலர..தன் நிலை தவறுமளவுக்குக் குடித்தான். அவன் கையில் சாந்தியின் கடிதம் உருத் தெரியாமல் கசங்கிற்று. வெறி பிடித்துக் கத்தினான். " வ்..வே..தா..வே..தா..நீல்லாம் ஒரு பொண்ணா.. நா சொன்னது தான் சரி..நீ ஒரு ஏத்தங்கட்டை.. ஏத்தங்கட்டைதான்.. ஒன்னே..ஒன்னே.." வேதாவின் வீட்டை நோக்கி வெறியுடன் நடந்தான். தள்ளாட்டத்திலும் ஒரு வேகம் இருந்தது. வேதா அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். " வே…தா…. ஏய்.. ஏ ஏத்தங்கட்டை " திடீரென கேட்ட இந்தக் கர்ஜனைக் குரல் அவளைத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க வைத்தது. வாசல் நிலையை அடைத்துக் கொண்டு நின்ற ராஜாவின் கோலம் அவளைத் துணுக்குற வைத்தது. நல்ல போதையில் இருக்கிறான் என்று புரிந்து கொண்டாள். ’ ஒருவேளை.. வீடு தவறி நுழைந்து விட்டானோ.. ஆனால் வேதா என்று கூப்பிடறானே..’ அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் வெறியோடு அவளை நோக்கி வந்தான் உளறலான குரலில் கத்திக் கொண்டே. " ஏய்.. ஏ..ஏத்..தங்..கட்..ட என்..ன..யா..நீ..வேண்..டாங்..கு..ற..? எ..என்..ன.. வே..ண்..டா..ங்க..என்..னடீ.. த த தகு..தி..இருக்.. கு..ஒ..ஒனக்கு..?.. நா..நா..ன்.. ஒன்..ன..விட.. எல்..லாத்..து..லியும்… ஒ..ச..ந்த.. வன்..அண்டர்… ஸ்..டா..ண்ட்.. ? " வெறியும், ஏளனமுமாகப் கத்திக்கொண்டே வந்தவன் சட்டென்று அவள் கொஞ்சமும் எதிர்பாராமல் அவள் கையைப் பிடித்து இழுத்தான். அவள் இன்னதென்று ஊகிக்கும் முன்னே அவனுடைய முரட்டுத்தனம் அவளை முற்றுகையிட்டது. அந்த அதிர்ச்சியில் அவள் மயங்கி விழுந்து விட்டாள். சுயநினைவு வந்து அவள் கண்விழித்தபோது மணி ஒன்றரை. உடைகள் கலைந்து கிடந்தன. உடல் வலித்தது. நடந்தது ஒவ்வொன்றாக நீர்ப்படலமாகப் புரிய ஆரம்பித்தபோது வேதாவின் உடலும், உள்ளமும், எண்ணங்களும் நெருப்புக் கங்குகளாக தகித்தன. வாய்விட்டு அழக்கூட முடியாத ஒரு தவிப்பில் தத்தளித்தப் போனாள். வெகு நேரத்திற்குப்பின் ஒரு தீர்மானத்துடன் எழுந்தாள். ராஜாவுக்கு மதுவின் போதை தெளிந்த போது மனதின் வெறியும் தணியத் துவங்கியது. தான் நடந்து கொண்டவிதம் புரிய ஆரம்பித்ததும் அவன் உள்மனம் பூதாகரமாகச் சிரித்தது. அவன், அவனுக்கு முன்னாலேயே அவமானத்தால் தலைகுனிந்தான்.. கூனிக் குறுகிப் போனான். ’ ச்சே.. எவ்ளோ பெரிய கேவலமான காரியத்தச் செஞ்சுட்டேன்..? ச்சே.. நானா..நா..னா..இதச் செஞ்சேன்..? என் புத்தி எப்டி இவ்ளோக் கீழ்த்தரமாப் போச்சு..? ’ கண்களில் பட்ட மதுப்புட்டிகளைத் தூக்கி வீசி எறிந்தான். அவனால் அமைதி அடைய முடியவில்லை. அப்படியே சிறிது நேரம் கண்களை மூடிப் படுத்தான். இருப்புக் கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து ஒரு முடிவுடன் எழுந்து வீட்டைப் பூட்டி விட்டு காரைக் கிளப்பினான். பத்து நாட்கள் கழித்து அவன் வீட்டுக்குத் திரும்பும் போது பக்கத்து வீட்டைப் பார்த்தான். அது வெறிச்சோடி கிடப்பது போல் இருந்தது. நிதானமாக வீட்டுக்குள் நுழைந்தவனை நிரஞ்சனாவின் அழுகைக் குரல் எதிர்கொண்டது. " அ..ப்..பா…? " தவித்த குரலில் அழைத்தாள். தான் இவ்வளவு நாட்கள் வீட்டுக்கு வராததால் தான் அழுகிறாளோ என்று நினைத்தவன் என்றுமில்லாத பரிவுடன் அவளருகில் சென்று மெல்ல அன்பாகக் கூறினான். " ஒண்ணும் நடந்துடலே நிரஞ்.. அழாதேம்மா.. அப்பாதான்…" அவனை இடைமறித்தாள் நிரஞ்சனா. " எல்லாம் நடந்து முடிஞ்சுடுச்சுப்பா…" பொறுக்க மாட்டாமல் பெரிதாக அழத் தொடங்கினாள். பேச்சுக் குரலும்.. அழுகைச் சத்தமும் கேட்டு உள்ளிருந்து சாந்திமதி, ஸ்ரவண், குமார் வேகமாக வந்தனர். சாந்திமதியை அவன் எதிர்பார்க்கவில்லை. " சாந்தி… நீ எப்ப.." அவன் முடிக்கவில்லை. " அப்பா…ஆன்ட்டி.. ஆன்ட்டி.. செத்துப் போய்ட்டாங்கப்பா.." ஒரே குரலில் சொல்லிவிட்டு ஓவென்று அழத் தொடங்கினர் அந்தச் சின்னப் பிள்ளைகள். அவர்களோடு சேர்ந்து சாந்தியும் அழுதாள் குமுறிக்குமுறி. " எ..ன்..னா…? " பொளேர் என்று யாரோ அடித்தது போலிருந்தது அவனுக்கு. அவனால் ஜீரணிக்க முடியவில்லை அந்தச் செய்தியை. ஒரு இருட்டு மளமளவென்று அவனைச் சுற்றிப்படர்வது போல் உணர்ந்தான். அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து விட்டான். தனக்கு எந்த வகையிலும் தீங்கிழைக்காத ஒரு உயிரைக் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒடுக்கியாயிற்று. அவனால் தாங்க முடியவில்லை. சுற்றுப்புறம் அவனை விட்டு நழுவுவது போல் உணர்ந்தான். சற்றே பொறுத்து சாந்தி தான் மெல்லச் சொன்னாள். " ஒரு வாரத்துக்கு முன்னாடி சாய்ந்தரமா வேதா எனக்கு வழக்கமில்லா வழக்கமா ஃபோன் செஞ்சாண்ணா.. எங்க வீட்டுக்காரர் தான் எடுத்தாரு.. அவர்ட்ட என்னய அவசரமாவும் முக்கியமாவும் பாக்கணும்..கொஞ்சம் அனுப்ப முடியுமா ஒரே ஒரு நாள்னு கேட்ருக்கா.. அவரும் சரீன்னுட்டு..எங்கிட்டக் கொடுத்தாரு ஃபோன.. எங்கிட்டயும் அதையே சொன்னவ..ஒங்க மாமியார் மாமனார் கிட்டேயும் பர்மிஷன் வாங்கிட்டு ஒரே ஒரு நாள் வந்துட்டுப் போன்னா.. இப்பவே வரட்டுமான்னேன்.. அதெல்லாம் வேண்டாம்.. காலேல கெளம்பிக் கட்டாயம் வந்துடூன்னு ஃபோன வச்சுட்டா. எங்க வீட்ல எல்லாத்துக்குமே வேதாவ ரொம்பப் பிடிக்கும்… அதுனால அவுங்கல்லாமும் போய்ட்டு வந்துடூண்ட்டாங்க.. நானும் மறுநா காலேல பத்தர மணிக்கெல்லாம் இங்க வந்துட்டேன். அவளப் பாத்ததும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. எப்டி இருப்பா…அன்னிக்குப் பூத்த பூ மாதிரி ? ஆனா எப்டியோ இருந்தா.. மொகம் பேயறஞ்சமாறி இருந்துச்சு.. ஒடம்பும் அனலாக் கொதிச்சுது.. ’ சாந்தி.. எனக்கு என்னமோ பண்ணுது ரெண்டு நாளா..கொழந்தைங்கத் தனியா இருக்குதுங்க.. ஒங்கண்ணாவக் காணோம்.. எனக்கு ஒரு ஒதவி செய்றியா.. ஒங்கிட்ட சில விஷயங்கள் முக்கியமாப் பேசணும்.. போய்ட்டு வந்து சொல்றேன்.. மொதல்ல நான் ரிஜிஸ்டர் ஆஃபீஸ் வரைக்கும் போணும்.. என்னயக் கூட்டிட்டுப் போறயா’ன்னா.. போனோம்.. அவ கூட வேல பாக்குற காயத்ரீங்கறவங்களும் வந்திருந்தாங்க அவ ஒதவிக்கு.. அவுங்க ரெண்டு பேரும் ஏதோ வேலய.. முடிச்சாங்க… நா ரொம்பக் கேக்கல.. வெளியிலேயே நா இருந்துட்டேன்… பதினஞ்சு நிமிஷத்துக்குள்ளியே வேல முடிஞ்சு வந்துட்டாங்க.. காயத்ரி அப்டியே போய்ட்டாங்க… அவளால பேசவே முடியலே.. ரொம்ப சோ..ந்து போய்ருந்தா.. வீட்டுக்கு வந்தோம். தண்ணி கேட்டா.. அதுக்குள்ள கொழந்தைகளும் வந்துருச்சுங்க.. அதுங்களப் பாத்ததும் ஏனோ அழுதா..இதுங்களும் ’ ஏன் ஆன்ட்டி அழுறீங்க..?’ ன்னு கேட்டுக்கிட்டு இருக்கறப்பவே " சா..ந்..தீ.. ரொ..ம்..ப நெ..ஞ்..சு.." ன்னவ அப்படியே என் மடில சாஞ்சா.. ரெண்டு நிமிஷம் துடியாய்த் துடிச்சாண்ணா.. அப்படியே போய்ட்…டாண்ணா.." என்று அடக்க மாட்டாமல் கதறிவிட்டாள். சற்று நேரம் கழித்து மீண்டும் பேசினாள் சாந்தி. " அவளோட அண்ணா..அக்கால்லாம் எங்க இருக்காங்கன்னு எனக்கு ஒண்ணும் தெரியலே..அவளோட ஆஃபீஸ் நண்பர்களுக்கு மட்டும் அவளோட ஃபோன் டைரியப் பாத்துத் தகவல் சொன்னேன். ஒன்னோட மச்சினரையும் தந்தி குடுத்து வரவச்சேன்.. அவரும் உடனே வந்துட்டாரு.. அப்புறம் நடக்க வேண்டியத முடிச்சோம்…அண்ணா அவ எவ்ளோ ஆட்களச் சேத்து வச்சுருக்கா தெரியுமா… ஐயோ…விஷயம் தெரிஞ்சு வந்தா….ங்க…பாரு…ஆட்டோக்காரங்க..சைக்கிள் ரிக்ஷாக்காரங்க..பஸ் டிரைவர்ஸ்.. கண்டக்டர்ஸ்.. காய்கறி.. பழம்.. உப்பு விக்கிறவங்கள்ளேருந்து.. தள்ளுவண்டிக்காரங்கள்ளேருந்து.. எந்தெந்த ஆஃபீஸ்லேருந்தோ பெரிய பெரிய அதிகாரிகள்..சாதாரண ஸ்டாஃப்ஸ்… கவர்ன்மென்ட் அதிகாரிங்க..அங்க வேல பாக்குற ப்யூன்லேருந்து.. மற்ற அதிகாரிகள் வரை.. ஸ்கூல்.. காலேஜ் டீச்சர்ஸ்.. ப்ரின்ஸ்பல்ஸ்.. ஆஃபீஸ் ஸ்டாஃப்ஸ்..அப்பப்பா…ஆளு அமைதியா இருக்குறாப்புல இருந்துட்டு.. இவ்ளோ பேரா.. ஆங்.. இதச் சொல்ல மறந்துட்டனே.. எவ்ளோ பிள்ளங்களப் படிக்க வச்சுருக்கா.. வச்சுட்டிருக்கா.. வேல வாங்கிக் கொடுத்துருக்கா..? கல்யாணம் பண்ணி வச்சுருக்கா.. ? அம்மாடி…யோவ்..அந்தப் பிள்ளைங்க.. அவுங்களப் பெத்தவங்கன்னுக் கூட்டம் அலமோதிரிச்சு.. நா கொஞ்சம் கூட எதிர்பாக்கவேயில்ல..அவுங்கல்லாம் " ஐயோ.. நாங்க அனாதையாய்ட்டமேம்மா.. இப்புடி திடீர்ன்னு எங்கள விட்டுட்டுப் போய்ட்டியேம்மா…“ன்னு அழுதப்போ வயசு வித்யாசம்.. பதவி வித்யாசம் பாக்காம எல்லாருமே அடக்க முடியாம அழுதுட்டாங்கண்ணா..”வாழ்ந்தா இப்டியொரு வாழ்க்கைய வாழணூ“ன்னு ஒம் மச்சினன் அழுதுகிட்டே சொன்னப்ப நா”வே…தா..ன்னு" கதறிட்டேண்ணா..! " வெளியே துணிகளை அயர்ன் செய்து கொண்டு இருந்த மாணிக்கம் வண்டியிலிருந்த டிரான்ஸிஸ்டர்லேருந்து டி.எம். எஸ். குரல் விரக்தியுடன் பாடிக் கொண்டிருந்தது… " திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்..? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்… கண் போன போக்கிலே கால் போகலாமா..? கால் போன போக்கிலே மனம் போகலாமா..? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..?.." ராஜசேகர் கூனிக் குறுகிப் போனான். இரண்டு நாட்கள் இருந்து விட்டு சாந்தி கிளம்பி விட்டாள். ராஜா நிலைகுலைந்து போய் விட்டான். அலுவலகத்திற்கும் போகவில்லை. குழந்தைகள் இருண்டு போயிருந்தன.அவர்கள் பேசவேயில்லை. இந்த வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு வீடு பார்த்துப் போய்விட வேண்டும்.. குழந்தைகளை இனிமேல் கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். அழைப்பு மணியோசை கேட்டுக் கதவைத் திறந்தான். " ராஜசேகர்ங்கறது…" " நாந்தான்… நீங்க…? " " எம்பேரு சரவணன்.. வேதா ஸிஸ்டரோட வேல பாக்குறவன்.. அவுங்க இந்தக் கவர் ரெண்டையும் நேரடியா ஒங்ககிட்டக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்தாங்க..ஒரு வாரத்துக்கு முன்னே.. அவுங்க கடேசியா ஆஃபீஸ் வந்தப்ப.. ஆனா அன்னிக்கு மதியமே நா எங்கம்மாக்கு ரொம்ப முடியலேன்னு தந்தி வந்து ஊருக்குப் போய்ட்டேன்.. இந்தக் கவர் ரெண்டும் எம்பாக்கெட்லியே இருந்து போச்சு.. அங்க போனா எங்கம்மா மறாநாளே தவறிட்டாங்க.. காரியம் எல்லாம் முடிச்சிட்டு முந்தாநா ராத்திரிதான் வந்தேன்.. நேத்தும் நா ஆஃபீஸ் போல. இன்னிக்குப் போனா இடிமாதிரி ந்யூஸ் கெடச்சுது.. வேதாம்மா ஹார்ட் அட்டாக்ல போய்ட்…டாங்…" அடக்க முடியாமல் அழுதுவிட்டார் வந்தவர். ஒரு நிமிடம் திகைத்துப் போனவன் சுதாரித்து.." சார்.. உள்ள வாங்க.. ஒக்காருங்க…" என்று அவரை அழைத்து உட்கார வைத்தான். " எப்பேர்ப்பட்ட பொண்ணு தெரியுமா சார் அது…? எப்பவும் பிரியமாப் பேசும்.. ஒரு கஷ்டம்னா யாருக்குன்னாலும் ரெண்டாம் பேருக்குத் தெரியாம ஒதவும். வேலைல கில்லாடி சார்.. எத்தனப் பிள்ளைங்களப் படிக்க வச்சுக்கிட்டு இருக்கு… தெரியுமா சார்..? அதோட எத்தன ஏழப்பிள்ளைங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுருக்கு தெரியுமா சார்…? காயத்ரின்னு எங்க ஆஃபீஸ்ல ஒரு நல்ல அம்மா இருக்காங்க..அவுங்ககிட்டயே வீட்ட விக்கிறதுக்கும்… அந்தப் பணத்தையும்.. இன்னும் வேதாம்மாவோட சேமிப்பு எல்லாத்தையும் ராமகிருஷ்ண மடம்.. திருப்பராய்த்துறைய்ல இருக்குற குடில்.. இன்னும் அனாதக் கொழந்தைங்க படிக்கிறதுக்குன்னு.. இப்டி பிரிச்சுக் குடுக்கச் சொல்லி ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்.. அவுங்களுக்கு ஏதோ உள்ளாரத் தோணீருக்கு.. இல்ல சார்..? அதப் போயி ஆண்டவன் இப்டி படக்குன்னு கூட்டிட்டுப் போய்ட்டானே.. எங்க ஆஃபீஸ்ல யாருமே இன்னும் நார்மல்ஸிக்கு வரல சார்..! சரி சார்.. நா கெளம்புறேன்…ஒண்ணுமே ஓடல.." என்றவர் அவன் கையில் கவர்களைக் கொடுத்து விட்டு அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் விடுவிடென்று போய் விட்டார். திக்பிரமை பிடித்துப் போய் நின்றான் சற்று நேரம். பின் கவரைப் பிரித்தான். திகைத்துப் போனான். நிரஞ்சனா, ஸ்ரவண், குமார் மூன்று பேர் பேரிலேயும் நான்கு வருடங்களுக்கு முன்பே ஆளுக்கு ஐயாயிரம் நிரந்தர வைப்புத்தொகை போட்டதன் ரசீதுகள். எல்லாவற்றிலும் காயத்ரி என்ற பெயர் காப்பாளர் என்ற இடத்தில் இருந்தது. அப்போதுதான் வந்தவர் ‘காயத்ரி’ என்ற பெயரைக் குறிப்பிட்டது நினைவில் நிழலாடியது. அடுத்த கவரைப் பிரித்தான். ஒரு வெள்ளைத் தாளில் அழகான கையெழுத்தில் ஆங்கிலத்தில் இரண்டே இரண்டு வரிகள். " Silently i lived for you.. But Violently you killed me." Vedha. அவனுக்கு உயிரே போய்விட்டது போலிருந்தது. அவன் வாழ்நாளிலேயே முதன்முறையாக வாய்விட்டுக் கதறி அழுதான். மனைவி இறந்த போது கூட இவ்வளவு அழவில்லை. குற்றவுணர்வு கொன்றது. அவமானம் பாடாய்ப்படுத்தியது. தான் ஒரு புழுவை விடக் கீழாகப் போய்விட்டது போல் உணர்ந்தான். வேதா சாந்தியிடம் கூட நடந்த எதையும் சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டான் சாந்தி பேசிய விதத்திலிருந்து. ’ வீட்டுக்கு வந்து சொல்லணூண்ணு நெனச்சுருக்கா..ஆனா அதுக்குள்ள போய்ட்டா.. அவ நடந்தத சாந்திட்ட சொல்லி… சாந்தி நம்மள நாலு வார்த்த நறுக்குன்னு கேட்ருந்தாக் கூட ஆறீருக்குமோ..’ அவன் மனசாட்சி அவனைக் கொல்லத் துவங்கி விட்டது. இனி அவனுக்கு அதிலிருந்து மீட்சி இல்லை. ஏதோ நினைத்துக் கொண்டு பிள்ளைகளின் பீரோவைத் திறந்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பீரோ. மேலிரண்டு தட்டுகளில் உடைகளை அழகாக அடுக்கி வைத்திருந்தனர். கீழுள்ள தட்டுகளில் விளையாட்டுப் பொருட்கள் இருந்தன. ’ ஏ..அப்பா..இவ்வளவா..? ’ திகைத்துப் போனான். ’ நாம எப்ப இதெல்லாம்..’ நினைத்துக் கொண்டே ஒன்றை எடுத்தான். ஒரு பேப்பர் ஒட்டியிருந்தது. “ஆன்ட்டி-லண்டன்” . இன்னொன்றை எடுத்தான். "ஆன்ட்டி-பம்பாய்.. டெல்லி.. பூனா". இப்படி மூவரின் பீரோவிலும்.. வாயடைத்துப் போனான். ’ ஓ..வேதா அப்பப்ப ஊர்ல இல்லாததப் பாத்திருக்கோம்.. அவ படத்தோட தினசரி.. வார இதழ்கள்ள பேட்டி.. கட்டுரைகளப் பாத்துருக்கோம்.. ஆனா அலட்சியமா அவைகள ஒதுக்கிட்டுப் போயிருக்கோம் என்னன்னு கூடப் படிச்சுப் பாக்காம.. அவ என்ன வேல பாத்தான்னு கூட நமக்குத் தெரியல.. ஊம்…இனிமே தெரிஞ்சு என்ன பண்ணப் போறோம்.. வெளி நாடெல்லாங்கூடப் போயிருக்கா போல.. நாம அவளக் கொன்னுட்டமே..! ’ மனசாட்சி அணு அணுவாகக் கொன்று கொண்டு இருந்தது அவனை. இனிமையிலிருந்து துயரமோ அன்றி துயரிலிருந்து இனிமையோ.. அல்லது ஒருவரைப்பற்றி கொண்டுள்ள எண்ணத்தில் ஒரு மாற்றமோ - ஏற்படுவதற்கு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு நிகழ்வு அவ்வப்போது தேவைப்படுகிறது. அவன் வாழ்விலும் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்று முடிந்து விட்டது. அவனுள் ஒரு மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கனத்தை மனதுக்குள் அவனேதான் ஏற்றினான். இனி அவனால் அதை இறக்கி வைக்க முடியாது. நிமிடத்துக்கு நிமிடம் கனப்பட்டுக் கொண்டிருந்த மனதை அப்படியே வெளியே தள்ளி விடுவதைப் போல பெரிய பெருமூச்சு வெளியேறியது அவனிடமிருந்து. பார்வை தூரத்தில் ஏற்றம் இறைத்துக் கொண்டே வெள்ளந்தியாகப் பாடிக் கொண்டிருந்தவர்கள் மேல் பதிந்தது. " ஏத்தமரம் கட்டி வச்சு ஏலேலோ.. ஏறியதில் கால் மிதிச்சு ஏலேலோ.." குமுறிக்குமுறி அழுதான். காலத்துக்கும் அவன் அழுகை நிற்கப் போவதில்லை. ’ கண்போன போக்கிலே கால் போகலாமா…? கால் போன போக்கிலே மனம் போகலாமா…? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா…? ’ அவன் மனதில் இந்தப்பாடல் திரும்பத்திரும்ப ஒலித்தது. - 09-07-1973 To 11-07-1973 அவர்கள் நல்லவர்கள் ! " அவன் நல்லவனா இருக்கலாண்டீ…ஆனா அதுக்காக அவன் செய்றதெல்லாம் நல்லதா இருக்கூங்கறதில்லே.. ஒரு காசு சம்பாரிக்கத் துப்பில்லே… ஜாலி கேக்குதோ..ஜாலீ…? கெடக்குறாம்பாரு.. த்தூ.. எம் புள்ளயா இவேன்.. " ஆத்திரம் மீறி மீண்டும் கையிலிருந்த கட்டையால் அடிக்கிறார் விஸ்வம். " அய்..யோ… அம்..மா… அக்..கா. அக்கா.. " " அவனப் போட்டு அடிக்காதீங்களேன்.. விடுங்க.. போங்க உள்ள… நீங்க மட்டும் ரொம்ப யோக்யமாக்கும்… போங்களேன்…" " ஏய்.. என்னயவா எதுத்துப் பேசுறே.. என்ன செய்றம்பாரு…" விசாலத்தை நோக்கிக் கம்பைத் திருப்பியவரை " வேணாம் மாமா.. வேணாம்.." என்று ஓடி வந்து தடுத்தாள்அவரின் மூத்த மருமகள் ரேணுகா. " அக்..கா..அக்கா..வலிக்.. குதுக்கா.." வலியும் அழுகையுமாய் விம்மினான் கங்கா. " நல்லா வலிக்கட்டுண்டா… நீ செய்ற காரியத்துக்கு அடிக்காம.. கொஞ்சவாடா செய்வாங்க..? நீ கெட்ட கேட்டுக்குப் போத கேக்குதோ..? அத எடம் மாத்திக் குடுக்குற.. ஏதோ சம்பாதிச்சுக் கொண்டு வருவேன்னு பாத்தா… பாதிய நீ போத போடறதுலேயே செலவழிச்சர்ரே.. மீதியப்… பெரீ…சா.. தானம் குடுத்துட்டு வந்துடறாரு… பெரீ…ய்…யத் தருமதொர… என்று உறுமியவாறே வீட்டினுள் நுழைந்தார். விசாலமும், ரேணுவும் சேர்ந்து மெதுவாகக் கங்காவைத் தூக்கி உட்கார வைத்து, கொஞ்சம் தண்ணீர் குடிக்கக் கொடுத்துத் திண்ணையில் படுக்க வைத்தனர். " ரேணூ..நீ போய்ப் படும்மா.. ராஜு ஏதாவது திட்டப் போறான்.." " நீங்க அத்தே…? தூங்கப் போலியா…? " " எனக்குத் தூக்கம் போய்த்தான் மாமாங்கம் ஆச்சேம்மா.. இப்படியே நா இவன்கிட்டக்கப் படுத்துக்குறேன். ஒங்க மாமா கோவம் இன்னுந் தணியலியே.. திரும்பி அடிக்க வந்தாலும் வந்துருவாரு.. போம்மா நீ..போய்ப்படு.. கதவச் சாத்திக்க…" ரேணு உள்ளே போனாள். ஆனால் அவள் மனது கங்காவோடு வெளியிலேயே இருந்தது. ரேணு " மூத்த மருமகள் " என்ற பதிவுடன் அந்த வீட்டில் நுழைந்த போது கங்கா என்ற கங்காதரனுக்கு வயது எட்டு. எப்போதும் எதிலும் படாமல் ஒதுங்கும் சுபாவம். மிகவும் ஒல்லியாய் இருப்பான். சாப்பாடு வேணும் என்று கேட்கக் கூடப் பயப்படுவான். அம்மா பார்த்துப் போட்டால் தான் உண்டு. இந்த நிலையில் அன்பும்.. பாசமும்.. பரிவும், அதே நேரத்தில் கண்டிப்புக் காட்ட வேண்டிய கட்டத்தில் கண்டிப்பும் காட்டும் ரேணுவிடம் அவன் மனம் இயல்பாக இழுக்கப்பட்டது. அவளோடு மெல்ல மெல்ல ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தான். ’ அண்ணி ’ என்று கூட முறை வைத்துக் கூப்பிடத் தெரியாது. அக்கா என்று தான் கூப்பிடுவான். ரேணுவும் அவனிடம் அதிகம் அன்பு காட்டினாள். அவனைப் பள்ளிக்கூடம் அனுப்பத் தயார் செய்வாள். கதை ஏதாவது சொல்லிக்கொண்டே சாப்பிட வைப்பாள். பாடம் சொல்லித் தருவாள். அவன் தூங்கிய பின்தான் தான் தூங்கச் செல்வாள். இப்படியாக அவனைத் தன்னோடு ஒட்ட வைத்துக் கொண்ட ரேணுவுக்கு , அந்தச் சின்னஞ்சிறு உள்ளத்தில் ஆழப் பதிந்து போயிருந்தது.. அசாதாரணமான , அளவுக்கு மீறிய பய உணர்வு என்று புரிந்த போது அதிர்ந்து போனாள். ரேணுவும் வேலைக்குப் போகிறவள் தான். அவள் கணவன் ராஜு மூத்தவன். மைய அரசு ஊழியன். அடுத்தவன் அப்பாவைப் போல ரயில்வே ஊழியன். மூன்றாமவன் ரேடியோ..டிவி..மிக்ஸி.. ஃபேன்…கிரைண்டர்.. தண்ணீர் மோட்டார் என்று ஏதேதோ பழுது பார்ப்பான். சின்னதாகக் கடை ஒன்றையும் வைத்திருந்தான். இவர்கள் தவிர இரண்டு பெண்கள். அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. கங்காதான் கடைக்குட்டி. கடைசிப் பிள்ளை என்றால் எவ்வளவு செல்லம் இருக்க வேண்டும் ? ஆனால் அந்த வீட்டில் அதெல்லாம் கிடையாது. கங்கா பத்தாவது படித்து முடிக்கும் வரை ஒன்றும் பெரிதாக நடந்து விடவில்லை. அவன் கல்லூரிக்குப் போகிறேன் என்று சொன்ன போதுதான் பிரச்சனை ஆரம்பம் ஆயிற்று அவன் வாழ்வில். " காலேஜெல்லாம் வேண்டாம்.. ஒங்க அண்ணங்க அக்கால்லாம் எந்தக் காலேஜ் போனாங்க..? அவுங்கல்லாம் நல்லா சம்பாதிக்கலே..? நீயும் ஏதாவது வேலைக்குப் போற வழியப் பாரு.. போ..போ.. காலேஜ் போறானாம் கா..லே..ஜ்.. " " இல்..லப்..பா.. மார்க் நெறய இருக்கறதுனால சுலபமா எடம் கெடக்கிம்னாங்க.." " என்னது… நாம்பேசுறதுக்கு எதுத்தாப் பேசுற…? " இரண்டெட்டில் அவனை நெருங்கியவர் அவன் வச்சிருந்த மார்க் ஷீட்.. சர்டிஃபிகேட் எல்லாவற்றையும் பிடுங்கி அப்படியே கடாசினார். " ஐயோ.. அப்பா ", என்று அவன் அவற்றைக் குனிந்து எடுக்கப் போகுமுன் இடுப்பு பெல்ட்டை உருகி.. கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் மேனியை ரத்தக்களறி ஆக்கி அவனைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டு நகர்ந்தார். அப்போது கூட ‘அ…க்…கா…’ என்றுதான் வலி தாங்காமல் துடித்தான். ரேணு ஓடிவந்து அவனைத் தூக்கி.. மெதுவாகத் தன் அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்து வழக்கம் போல் வழியும் ரத்தத்தைத் துடைக்க ஆரம்பித்தாள். ராஜுவும் அவளுக்கு உதவினான் மன வேதனையை மறைத்துக் கொண்டு. " இவன் என்னங்க கேட்டான்..? மேல படிக்கிறேன்னுதானே கேட்டான்..? அதுல என்ன தப்பு.. ? அதுக்கு இப்டிப் போட்டு அடிக்கணுமா..? நல்லாப் படிக்க வைக்க வேண்டியது பெத்தவங்க கடம தானே ? அதுவும் நல்ல மார்க் வாங்கிருக்கிற பிள்ளய.. ? " " அப்பா சுபாவம் தான் ஒனக்குத் தெரியுமில்ல…? படிப்பெல்லாம் வீணுன்னு நெனக்கிறவரு.. அவர்ட்டப் போயி இவன் எதுக்கு…" " கேட்டா என்னங்க..? படிக்க ஆசையா இருக்கு.. கேட்ருக்கான்.. அப்பாட்டக் கேக்காம வேற யார்ட்டங்க கேப்பான்…? " " நீ சொல்றே.. எம். ஏ., எம். எஸ்ஸி.,பி.இ. , பி.டெக். ன்னு படிச்சிட்டு வேலயில்லாமத் திண்டாடுறவங்க வேல கேட்டு நம்ம கடைக்கு வர்ராங்க.. நம்ம கடை என்ன பெரிசா.. யோசிச்சுப் பாரு..பேப்பர எடுத்தா வேலயில்லாத் திண்டாட்டம்… எந்தப் பத்திரிக்கையப் பாத்தாலும் இதேதான்… இதெல்லாம் அவரு மனசுல படிப்பு பத்துன நல்ல எண்ணத்தக் கொடுக்கல… அதுக்கு நாம என்ன செய்ய முடியும்..? " " சரீ.. அத ஒரு இதமா.. இங்கிதமாச் சொல்லலாம்ல…? இப்டியா ரத்தம் வர்ர மாறி அடிக்கணும்…? " கங்காவைப் பார்க்கப்பார்க்க அந்தப் பெண்ணுள்ளம் தவித்தது. கங்கா மிகவும் நல்ல பையன். யாருக்கும் உதவும் குணமுடையவன். பசி என்று யார் கேட்டாலும் கையில் இருப்பதைக் கொடுத்து விடுவான். அதிரப் பேச மாட்டான். யாரும் சத்தமாகப் பேசினால் அந்த இடத்தில் நிற்கவே பயப்படுவான். இப்படிப்பட்டவனுக்கு வீடே முதல் சங்கடமாக இருந்தது. எதற்கெடுத்தாலும் காட்டுக்கத்தல் போட்டுத் தன் விருப்பப்படி தான் எல்லோரும் வீட்டில் நடக்க வேண்டும் என்று நினைக்கும் அப்பா. கட்டையோ அல்லது பெல்ட்டோ எது கிடைக்கிறதோ அதை வைத்து எதிராளியை அடிக்கும் அரக்க குணம் கொண்ட மனிதர். அவரின் கடுமைக்குப் பயந்து போவது போல் காட்டிக் கொண்டு, அவர் அந்தப்பக்கம் போனதும் இந்தப்பக்கம், அவர் எதைச் செய்யக்கூடாது என்று சொன்னாரோ அதையே பிள்ளைகளுக்காகச் செய்து விட்டு, பின்னர் அது அவருக்குத் தெரியவந்து அதற்காக அவரிடம் அடி வாங்கும் அம்மா ! பாவம் அவள்.. அவளால் வேறு எப்படி நடந்து கொள்ள முடியும்..? அவள் மனைவி மட்டுமில்லையே…தாயும் கூட அல்லவா ? மாதம் பிறந்ததும் அப்பாவிடம் ஒரு குறிப்பிட்டத் தொகையைக் கொடுத்து விட்டு அதன்பின் தனக்கு ஒரு பொறுப்பும் இல்லை என்று ஒதுங்கிவிடும் பெரிய அண்ணன். அதேபோல் தான் அடுத்த அண்ணணும்.. மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை அப்பாவிடம் கொடுத்து விடுவான். அவ்வளவுதான். அதன்பின் வேலை முடிந்ததும் தன் அறை.. அதை விட்டால் வேலை.. இல்லேன்னா நண்பர்களுடன் வெளியே சென்று குடி..சீட்டாட்டம். ஒருநாள் அவனுடைய நடத்தையைப் பற்றி அவர் தட்டிக்கேட்க முயல அவன் " நானு ஒங்ககிட்டத்தான் சம்பளம் வாங்குனதும் ஒரு தொகையத் தந்துடறன்ல.. அதோடு நிறுத்திக்குங்க.. நா என் இஷ்டம் போலத்தான் இருப்பேன்.. அதப்பத்தி அனாவசியமாப் பேசுனீங்கன்னா நா வீட்டுக்கு வர்ரதயே நிறுத்தீருவேன்.." சொல்லி விட்டு வெளியே போய் விட்டான். அதன் பிறகு அவர் அவனிடம் வாயே திறப்பதில்லை. காலையில் எட்டு மணிக்கு வீட்டை விட்டுப் போனால் கடை வேலை, வெளி வேலை என்று பார்த்து விட்டு இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வரும் எதிலும் அதிகம் பட்டுக் கொள்ளாத சுபாவம் கொண்ட கடைசி அண்ணன். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வந்து கிடைத்ததைப் போட்டி போட்டுக் கொண்டு சுருட்டிக் கொண்டு போகும் அக்காமார். இவர்கள் யாரிடமும் ஒரு உண்மையான அக்கறை கிடையாது. அவரவர் சுயநலம் அவரவர்க்கு. இத்தனை பேர் நடுவிலே யதார்த்தமான.. கனிவான, அதேசமயம் கண்டிப்பான.. சுயநலம் துளியும் இல்லாத ரேணுவிடம் அவன் ஒட்டிக்கொண்டதில் ஆச்சரியம் இல்லை. கங்காவின் பட்டைத் தீட்டப்படாதப் புத்திசாலிதனத்திற்குத் தன்னால் முடிந்த வரை ஒளியூட்டினாள் ரேணு. நல்ல புத்தகங்களை வாங்கிக் கொடுத்துப் படிக்க வைத்தாள். உலக நடப்புகளை அவனுடன் பேசி விளங்க வைப்பாள். சமுதாயம் எவ்வளவு முக்கியம் என்று அவனுக்குப் புரியும்படி கூறுவாள். உலகத்தின் பெரிய பெரிய தலைவர்களின் கதைகளைக் கூறுவாள். எல்லாவற்றிற்கும் மேல் பணமே முக்கியம் என்றும், போலியான வாழ்க்கையை நிஜம் என்று நம்பும் மனிதர்களின் மூடத்தனத்தை விளக்குவாள் அவனுக்குப் புரியும்படி. இதெல்லாம் ஒரு புறம் ஆறுதலாய் இருந்தாலும் அப்பாவின் கோபப் பிடியிலிருந்து அவனால் விடுபடவே முடியவில்லை. வேலை கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. வெறும் பள்ளிப் படிப்பு முடித்த நோஞ்சான் பயலுக்கு என்ன வேலை கிடைக்கும் ? ஒருநாள் டீக்கடை.. ஒருநாள் பெட்டிக்கடை.. என்று மாறி மாறிப் போனான். எதிலும் அவனால் கடைக்காரர்களின் திருப்திக்கு வேலை பார்க்க முடியவில்லை. அவன் அண்ணனின் கடையும் அவனுக்கு ஒத்து வரவில்லை. பழுது பார்ப்பதற்கென்று முழுப் பணத்தையும் முதலிலேயே வாங்கிக் கொண்டு.. பழைய சாமான்களையே போட்டு விட்டு புதிதுதான் போடப்பட்டுள்ளது என்று சொல்லும் பொய்யிலிருந்து… தெருவில் போவோர் வருவோரைத் தராதரமின்றிக் கிண்டல் செய்வது வரை அவனுக்குத் துளியும் பிடிக்கவில்லை. மேலும் அவன் எல்லாவற்றிலும் சிறுவனாகவே இருந்தான். உடல் வளர்ச்சி இருந்த அளவு மனதில் முதிர்ச்சி இன்னும் ஏற்படவில்லை. எதற்கெடுத்தாலும் கத்திரி போடும் அவன் வீட்டுச் சூழல் அவனை வளர விடவில்லை. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு பையன். அவர்கள் கடையும் ஒத்து வராமல்.. நிரந்தர வேலையும் கிடைக்காமல்.. தினந்தோறும் அப்பாவின் அடி..அம்மாவின் அழுகை.. ரேணு அக்காவின் கவலை தோய்ந்த முகம்.. மீண்டும்.. மீண்டும்.. மீண்டும்.. இதே ! கங்கா தவித்துப் போனான் வழிவகை தெரியாது. அப்போதுதான் ஐந்தாவது வரை அவனுடன் படித்துப் பின் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்ட காளியின் தொடர்பு கிடைத்தது. அவனுக்கு அப்பா கிடையாது. அம்மா வீடுகளில் வேலை செய்பவர். ஒரு அக்கா சிறிய அளவில் பூக்கட்டி விற்று அம்மாவுக்கு உதவியாக இருந்தாள். ஏழ்மையான குடும்பம் என்றாலும் அன்பு.. நேசம் இவைகளுக்குக் குறைவில்லாத ஒரு குடும்பம். காளியிடம் குமுறிக் கொட்டினான் கங்கா. காளியோ பெரிதாகச் சிரித்தான். " இதுக்காடா இவ்ளோ அலட்டிக்கிற…பெரீ..சா..? வா நா ஒனக்கு வேல வாங்கித் தரேன்…" சுலபமாகச் சொன்னவன் செய்தும் காட்டினான். கங்காவின் நல்ல குணத்தையே, காளி கங்காவுக்கு மூலதனமாக்கிக் கொடுத்தான். வேலை ஒன்றும் பெரிதில்லை. குறிப்பிட்ட ஒரு வீட்டில் போய் அந்த வீட்டுக்காரர் கொடுக்கும் பொட்டலங்களை, குப்பை பொறுக்கும் பையன் போல் அழுக்குச் சாக்கில் வைத்து , காளி அறிமுகப்படுத்தி வைத்த மூன்று நான்கு பெட்டிக் கடைகளில் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். நூறு ரூபாய் தருவோம் என்றார்கள்.. தந்தார்கள் ! கங்காவுக்கு நம்பவே முடியவில்லை. ’ நூறு ரூபாய்… நூ…று.. ரூவா… ஆனால் அது நிஜம்.. கொஞ்சம் பொட்டலங்களை ஒரு இடத்திலிருந்து மூன்று நான்கு கடைகளில் கொண்டு சேர்க்க… அதிலும் அந்தப பொட்டலங்கள் கனமாகக் கூட இல்லை. அதக் கொண்டு போக… நூ..று..ரூபாய்..’ ரேணுவிடம் ஓடினான்… சொன்னான் நடந்ததை.. அவள் சந்தோஷமாகத் தலையைக் கோதிவிட்டுப் பாராட்டுவாள் என்று நினைத்தவனுக்கு.. அவள் தலையில் கையை வைத்துக்கொண்டு திகைத்துப் போய் உட்கார்ந்து விட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. " அ..க்..கா.. அக்கா நா பொய் சொல்லலேக்கா.. காளி காமிச்ச வீட்டுக்காரர் கொடுத்த பொட்டலங்களை அவர் சொன்ன கடைங்கள்ளக் கொண்டு போய்க் கொடுத்த உடனே அந்தக் கடைக்காரங்க ஒத்தோருத்தரும் ஆளுக்கு நூறு.. நூறு ரூபாய் கொடுத்தட்டாங்கக்கா… இதோ முன்னூறு ரூபாய்… " சந்தோஷம் மிக அந்த அப்பாவிப் பையன் பணத்தைக் காண்பித்தபோது ரேணு செய்வதறியாது திகைத்தாள். " அய்..யோ.. கங்கா..! நா ஒனக்கு எத.. எப்படிப் புரிய வப்பேன்..? இந்த நூறு ரூபாயும் ஒனக்கு வேணாம்.. இந்த வேலயும் ஒனக்கு வேணாம்.." " அப்ப மறுபடி மறுபடி அந்த ஆள்ட்ட அடி ஒத வாங்கச் சொல்றியா…? " ரேணு அதிர்ந்து போய்க் கேட்டாள். " எந்த ஆள்ட்ட…? " " அதான்.. ஒம் மாமனார்ட்ட…" ரேணு சிறிதும் எதிர்பார்க்காத பேச்சு இது. அதிர்ச்சியாக இருந்தது அவளுக்கு. " கங்கா.. நீயா இப்டீல்லாம் பேசுற..? அவரு ஒம் அப்பாடா…! " " ஆ…மா… அப்…பா…! இதோ இந்தப் பணத்த அவர்ட்டக் கொண்டு போய்க் கொடுத்திருந்தா.. தூக்கிக் கொஞ்சாட்டாலும்.. தெனம் போலத் தூக்கிப்போட்டு மிதிக்காமலாவது இருந்திருப்பாரு…" " கங்கா..! நீ அவர்ட்ட அப்படி அடி வாங்கினாலும் பரவால்ல… இந்த வேல ஒனக்கு வேணவே வேணாம் ! நாஞ் சொல்றதத் தயவுசெஞ்சு கேளு…" " அய்…யோ.. அக்கா இது அப்டி என்னக்கா கெட்ட வேல…நீ பயப்படுறாப்புல…? சரீக்கா.. ஒனக்குப் புடிக்கலேன்னா செய்யல.. வேற நல்ல வேலக் கெடக்கிற வரைக்கும் இதச் செய்றேன்…சரியாக்கா…? " கையைப் பிடித்துக்கொண்டு கங்கா கெஞ்சிய போது ரேணுவால் அந்த விவரம் தெரியாத அப்பாவிப் பிள்ளைக்காய் அழத்தான் முடிந்தது உள்ளூற. ஆனால் அவள் முக்கால் வாசி எதிர்பார்த்தது போலவே விஸ்வம் இந்த வேலையை வேண்டாததாக நினைக்கவில்லை. " ஏண்டா… நாய் வித்த காசு கொலைக்குதா…? உப்பு வித்த காசு கரிக்குதா…? இந்தக் காலத்துல உத்து உத்துப் பாத்திட்டிருந்தா ஒண்ணும் நடக்காது.. முடியாதுடா… போ..போ..கெடக்கிற வேலயப் பாரு.. கெடக்கிற காச மரியாதயா எங்கிட்டக் கொண்டாந்து கொடுத்திடணும்.. புரியுதா.. டீ..அது..இதுக்குன்னு நாந்தர்ரேன் ஒனக்கு.. மண்டைல ஏறுச்சா..? " மிரட்டல் தொனியில் கூறி விட்டு நகர்ந்தார் அவன் கொடுத்த பணத்துடன். ’ ஒரு தகப்பன் இப்படியுமா இருக்க முடியும்…?’ ரேணுவால் நம்ப முடியவில்லை. அவள் எதை நினைத்துப் பயந்தாளோ அது மெது மெதுவே நடக்க ஆரம்பித்தது. வெறுமனே பொட்டலங்களைக் கொண்டு போய்க் கொடுத்துக் கொண்டிருந்த கங்கா ஒருநாள் காளியிடம் கேட்டான் அந்தப் பொட்டலங்களில் என்ன இருக்கிறது என்று. காளி பெரிதாகச் சிரித்து விட்டுச் சொன்னான். " அடப்பாவி.. அது என்னன்னே தெரியாதா…? அதாண்டா போத மருந்து..!" " அப்படீன்னா…?" " அட மண்டு… அப்படீன்னா.. இப்ப பீடி.. சிகரெட் குடிக்கிறாங்க.. தண்ணியடிக்கிறாங்க.. இல்ல ? அதப்போல இதுவும் ஒண்ணு.. இதுலியும் நெறய வகைவகையா இருக்கு… ஊசியாப் போட்டுக்கலாம்.. சிகரெட் போல ஊதவாம்.. சும்மா அப்டியே கைல தேச்சு மோந்து பாக்கலாம்.. அப்டி செஞ்சா அப்டியே மெதக்கறாப்ல இருக்கும்.. நம்மக் கவலயெல்லாம் பறந்து போய்டும்.. ஒடம்பு அப்டியே லேசா இருக்குறா மாறி இருக்கும்…வலிகிலி எதுவும் தெரியாது. மனசுக்கோ.. அப்டியே…" காளி சொல்லச் சொல்ல அந்தக் கள்ளமே அறியாத மனது வியப்பில் விரிந்தது. " அப்டீன்னா.. நாமல்லாம் கூட சாப்டலாமா.. ஊதலாமா…" ஆவலாய்க் கேட்டான் கங்கா. " சாப்டலாம்.. ஊதலாம்.. யாரு வேணா.. ஆனா நமக்கெல்லாம் காசு கட்டுப்படியாகாது. நமக்கெல்லாம் பீடி.. சிகரெட்.. சாராயந்தான்.." கங்கா சிறிது சிறிதாக மாறிப் போனான். காளி போல் ஆனான். ஆனால் காளி அவனை மாற்றவில்லை. இவன் கேட்ட சில சந்தேகங்களை அவன் தீர்த்து வைத்தான். அவ்வளவுதான். மாதத்தில் நான்கைந்து முறை இந்த வேலை. மற்ற நாட்களில் ஒன்றுமில்லை. இல்லையில்லை.. உண்டு.. அப்பாவிடம் அடி..உதை..! ஒருநாள் காளியிடம் அழுதேவிட்டான். காளி அவனைத் தேற்றிச் சினிமாவுக்கு அழைத்துப் போனான். போய்விட்டு வந்து அம்மா போட்ட சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவனுக்கு ஒரு பலமான உதை எதிர்பாராமல்…. அப்படியே நிலைகுலைந்து முன்னாலிருந்த குழம்பு.. ரசம்.. தயிரில் போய் விழுந்தான்.. சூடான சோறு வேறு.. முகமெல்லாம் எரிய ஆரம்பித்தது. அப்படியே கொத்தாய் அவனைத் தூக்கி வயிற்றில் தனது காலால் ஒரு எத்து எத்தினார் அவன் அப்பா. " ஏண்டா.. நாலு காசு நெலயாச் சம்பாதிக்கத் துப்பில்லே.. அதுக்குள்ள ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல ஒக்காந்து சினிமாக் கேக்குதோ ? " சொல்லிக்கொண்டே மறுபடியும் அடித்தார். " மாமா…" ஓடி வந்து தடுத்தாள் ரேணு. " இப்டியே நீங்க அடிச்சுச் சித்ரவதப் பண்ணிட்டிருந்தீங்கன்னா அவன் ஒரேடியாச் சீரழிஞ்சு போய்டுவான் ஒண்ணுத்துக்கும் ஆகாம.. அன்பாச் சொல்லாட்டியும் அடிக்காமலாவது சொல்லுங்களேன்.." " ஓஹோஹோஹோ… கொழுந்தனாருக்குப் பரிஞ்சுக்கிட்டு வந்தாகுதோ…?" அவருக்கு ரேணு பேரில் பல காலமாகவே கோபம். கங்காவிடம் அவள் பரிவுடன் இருப்பதும்.. கங்காவும் அவளிடம் ஒட்டிக்கொண்டதும்.. அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தனது அதிகாரத்தில் அது ஒரு குறுக்கீடு என்று மனதுக்குள் கொதித்துக் கொண்டு இருந்தார் அந்த அகங்காரம் பிடித்த மனிதர். அவளை அடிக்க முடியாதே ? " டேய் ராஜூ…ஒம் பொண்டாட்டிய அடக்கி வைடா.. இந்த வீட்ல என்னய எதுத்தா என்ன நடக்கும்னு தெரியுமில்ல..? " " ரேணூ..உள்ள போ.." ராஜு கத்துனதோட அவளைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு தங்கள் அறைக்குப் போய்க் கதவைச் சாத்திக் கொண்டான். கங்காவை இழுத்துப் போய், வெளியே தள்ளிக் கதவை மூடினார் விஸ்வம்" வேணாங்க.வேணாங்க" என்று விசாலம் கதறக்கதற. " அக்… கா…அக்…கா…அம்..மா..அக்கா…" கங்காவின் முனகல் வெகுநேரம் கேட்டது. காலையில் அவன் அங்கு இல்லை. அன்று போனவன் தான் ! பத்து நாளைக்கும் மேலாக வீட்டுப்பக்கம் அவன் வரவேயில்லை. ரேணு தவித்துப் போனாள். ஏற்கனவே களிமண்ணாய்க் குழைந்து.. நொந்து விட்ட மனது.அதை யார் யார் எந்த உருவத்தில் மாற்றித் தங்கள் தங்கள் வசதிக்குப் பயன்படுத்தப் போகிறார்களோ ? கங்கா சொன்னதெல்லாம் யோசித்தால் காளியும் ஓரளவு நல்ல பையனாகத் தான் தெரிகிறான். ஆனால் அவனுக்குத் தெரிந்த வழிகளெல்லாம் நல்லவையாகத் தெரியவில்லையே ? ரேணு பயந்தது நடந்து விட்டது. பத்து நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்த கங்கா, எதையுமே ரேணு அக்காவிடம் மறைத்தறியாத பிள்ளை… தன் உடல்.. உள்ளப் புண்களுக்கு மருந்து கண்டு பிடித்து விட்டதாக அவளிடம் கூறினான். ரேணு பதறிப் போனாள். அவன் பெரிதாகச் சிரித்தான். " உறவுமில்லை.. பகையுமில்லை.. ஒன்றுமேயில்லை.." உரக்கப் பாடினான். ஆம் ! அவனொரு வழியாகி விட்டான். தோன்றும் போது வீட்டுக்கு வருவான்.. அம்மா வற்புறுத்தலுக்காக ஏதாவது பேருக்குச் சாப்பிடுவான். வீட்டில் யாரோடும் பேசமாட்டான். ஏதேனும் கேட்டால் கூடப் பதில் சொல்ல மாட்டான் இடையில் அவனுடைய இரண்டாவது அண்ணனுக்குக் கல்யாணம் நடந்தது. வந்தான்.. ஏதோ செய்தான்.. போய்விட்டான். அவ்வளவுதான். அந்த அண்ணியோட முகம் கூட அவனுக்குச் சரியாகத் தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால் இத்தனைக்கும் நடுவில் ரேணுவை மட்டும் எப்படியும் பஸ் நிறுத்தத்திலோ.. அவளுடைய அலுவலகத்திலோ இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாகப் பார்த்து விடுவான். அவள் பிள்ளைகளுக்கு ஏதாவது தின்பண்டங்களையும் மறக்காமல் வாங்கி வந்து விடுவான். ரேணுவால் அவற்றை மறுக்க முடியவில்லை. ஏனெனில் அவனுடைய அன்பு.. நேசம் உண்மையானது. அவளுக்கு உள்ளூற அதில் ஒரு பெருமிதம் தான். அவளிடம் மட்டும் என்றில்லை. அவனிடம் உதவி கேட்டு வந்து விட்டால் யாரையுமே அவன் உதறி தள்ளிவிட்டுப் போவதில்லை. இப்போது அவன் கையிலும் எப்படியாவது பணமும் இருப்பதனால் அந்தத் தெருவிலுள்ளோர்.. அவர்கள் வீட்டில் குடியிருப்போர்.. வெகு குறிப்பாக வசதி இல்லாதவர்கள்.. குழந்தைக்கு உடம்பு முடியலியா.. டாக்டர்ட்டப் போகணுமா.. மருந்து வாங்கணுமா.. இந்தா.. பிடிங்க.. பள்ளிக்கு ஏதாவது பணம் கட்டணுமா.. சீருடை வாங்கணுமா..இந்தா.. பிடி காசு.. பிரசவச் செலவா…இந்தா.. வச்சுக்க.. இப்படி… ஆனால் அவனுக்கு இப்போது ஒன்று புரிந்தது. பணம்… காசு…பணம்.. காசு.. அது ஒன்றுதான் மனிதனுக்கு உணவையும் விட முக்கியமானது இந்த உலகத்தில் ! சும்மாவே அவனால் அவருக்கு ஒன்றும் உதவியில்லை என்று கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தவர் அவனுடைய செய்கைகள் அவ்வப்போது காதுக்கு வந்த போது கொதித்துப் போனார். ஏதோ எப்படியோ சம்பாதிக்கிறானாம்…அதையும் யார் யாருக்கோ வாரி இறைக்கிறானாம்… மிஞ்சியதைத் தன் போதைக்குப் பயன்படுத்திக் கொள்கிறானாம். பொங்கிப் பொங்கி வந்தது அந்த ஆளுக்கு. ஒருநாள் இரவு எட்டு மணி இருக்கும். எவ்வளவோ சொல்லியும் கேளாமல் அம்மா அழுகையும் கண்ணீருமாய் அவனை இழுத்துச் சாப்பாட்டுத் தட்டு முன் உட்கார வைத்த போது.. மறுக்க முடியாமல் இரண்டு வாய் அள்ளிப் போட்டான். விஸ்வம் வந்து விட்டார். " அடி…செருப்பால….இது எத்தன நாளா நடக்குது…எனக்குத் தெரியாம சாப்பாட்டு உபசாரமெல்லாம்…? எந்திரிடா நாயே…" இடக்கையால் கங்காவின் முடியைக் கொத்தாய்ப் பிடித்துத் தூக்கியவாறு அடிப்பதற்கு வலக் கையை ஓங்கியபோது ஒரு கரம் அதை வலுவாய்ப் பிடித்துத் தடுத்தது. திரும்பினார் ஆவேசமாக.. ரேணு ! " ரேணு.. விடு.." உறுமினார். " முடியாது.. இன்னிக்கு…இதுக்கு ரெண்டுல ஒரு முடிவு தெரிஞ்சாகணும். அவனப் போட்டு ஏன் இப்டிச் சித்ரவதப் பண்றீங்க.. அவன் உயிரோடு இருக்கறது ஒங்களுக்குப் புடிக்கலயா ?" “அவன் எம்மவன்.. அவன என்ன வேணா செய்ய எனக்கு உரிமையுண்டு.. நீ யாரு அதக் கேக்க…?” “நா அவன் அண்ணி…அண்ணீன்னு கூடக் கூப்பிடாம ’அக்கா…அக்கா’ன்னு பிரியத்தோடச் சுத்தி வர்ரவனுக்கு அன்பானவ..அவன் மேல உண்மையான அக்கறை உள்ளவ..அவனுக்காக அனுதாபப்படுறவ..அவன் நல்லா இருக்கணும்னு ஒவ்வொரு முயற்சியாப் பண்ணிட்டு இருக்கறவ..எல்லாத்துக்கும் மேல.. சின்னச்சின்னத் தப்புங்களுக்காகப் பெரிய பெரிய கொடுமைகளுக்கு மேல கொடுமைகள அனுபவிச்சு…அதுலேருந்து தப்பிக்க முடியாம..அத..மறக்க…மறைக்க..இன்னிக்குத் தப்பான வழியொன்றைத் தேர்ந்தெடுத்து அழிவோட ஆரம்பத்துல நிக்கிற இவனோட பரிதாபத்தச் சகிக்க முடியாத ஒரு மனுஷி…” தகித்தாள் ரேணு. " போதும்.. நிறுத்து…! என்னய எதுத்தீன்னா…? " “அடப்போங்கய்யா… சும்மா நிறுத்துங்க…ஒங்க மெரட்டலெல்லாம் இனிமேப்பட்டு இந்த ரேணுகிட்ட செல்லாது.. நா ஒரு முடிவோடதான் இருக்கேன்…” " ராஜு…ஒம் பொண்டாட்டிப் பேசறதப் பாத்தியாடா…? " “ரேணூ…உள்ள போ..” என்று கையைப் பிடித்தவனை உதறினாள் அவள். " நீங்க பேசாதீங்க.. எத்தன நாளைக்குத்தான் இப்டிக் கோழையாவே இருப்பீங்க…ஒங்களுக்கு மட்டுமில்ல..இந்த வீட்ல இனிமே இவனப் பத்திப் பேச யாருக்கும் உரிமை இல்லே..யோக்யதையுமில்லே.. ஒங்க கூடப் பொறந்த தம்பிதான அவன் ? என்னிக்காவது…கொஞ்சமாவது அவனப் பத்தி அக்கறப்பட்டிருக்கீங்களா..? ஆரம்பத்துல அவன் எப்டி இருந்தான்..? வெளி உலகமே தெரியாத அப்பாவியா…அதிரப் பேசுவானா யார்ட்டயும்..? ஆனா இன்னிக்கு…? அவன்ட்ட இல்லாத கெட்டப் பழக்கங்களே இல்லே…பொய் சொல்றான்… திருடுறான்.. அதுவும் சொந்த வீட்லியே…எந்தெந்தக் கெட்ட வழியிலேல்லாம் சம்பாதிக்க முடியுமோ அத்தனையிலும் சம்பாதிக்கிறான்.. எதுக்கு ? பாதி போத மருந்து வாங்க.. அவன் ஏன் இப்டியானான்… யாராச்சும் கொஞ்சமாவது யோசிச்சீங்களா..? நீங்க குடிக்கல? ஒங்கப்பா குடிக்கல ? வேற தப்பெல்லாம் பண்ணல..? ஒங்க தம்பி ஒருத்தர் சீட்டாடல..? ரேசுக்குப் போல..? இதெல்லாம் மட்டும் ரொம்ப நல்லப் பழக்கங்களோ ? ஒங்களேல்லாம் யார் கண்டிக்கிறது..? இல்லே அடிக்கிறது ? மீறி என்னிக்காவது கேட்டுட்டா எனக்கும்.. அத்தைக்கும் விழறது அடி ஒதைங்கதான்.. ஏன்னா.. நீங்கல்லாம் பெரீயவங்க… ரொம்பச் சம்பாதிக்கிறவங்க.. அவன் சின்னப் பையன்…வாயில்லாப் பூச்சி.. ஒங்கப்பாவோட ஜம்பம் ஒங்களோட இன்னோரு தம்பிக்கிட்ட செல்லுபடியாச்சா.. இல்லேல்ல…? ஏன்னா அவரு மாசம் பொறந்தாக் காசத் தூக்கி ஒங்கப்பாட்ட எறிஞ்சுடுறாரு.. நீங்கல்லாம் எப்டியோ போங்க.. ஏன்னா ஒங்களேல்லாம் யாராலியும் திருத்த முடியாது.. திருந்தவும் மாட்டீங்க.. நாங் கேட்டுக்கறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்.. கங்காகிட்ட நீங்கல்லாம்.. குறிப்பா மாமா.. கொஞ்சம் மனுஷத் தன்மையோட நடந்துக்குங்க..நீங்க அடுத்தவங்க கிட்ட எப்டியோ இருங்க.. ஒண்ணும் செய்ய வேணாம்.. ஆனா.. கங்கா..? ஒங்க தம்பிங்க..அவன்கிட்டக்க அனுசரணையா இருங்க.. ரெண்டு வருஷம் முன்னாடி வர.. அவன் ஸ்கூல்ல படிக்கிற வர அனாவசியமா ஏதாவது பேசிருப்பானா.. கேட்டிருப்பானா..? யோசிச்சுப் பாருங்க.. ஆனா இப்ப.. அவன் அம்மாட்ட.. ஒங்ககிட்ட.. அண்ணங்ககிட்ட..யாரப் பாத்தாலும் அவன் கேக்குறது..? பணம்.. காசு..தரலேன்னாக் கோபப்படுறான்.. திட்றான்..மீறுனா சொந்த வீட்லேருந்தே திருடீட்டுப் போய்டுறான்.. இயல்பா அவன் நல்லவங்க.! .ரொம்ப நல்ல பையன்.. அவன இப்படி ஆக்குனது யாரு..? ஆ..ஊ..னா ஒடனே கண்ணுமண்ணு தெரியாம அடிக்கிற ஒங்கப்பாவும்..எதையுமே கண்டுக்காத நீங்க எல்லாருந்தான்… கொளவி கொட்டிக் கொட்டி அதோட பிள்ளைங்களுக்கு வெஷத்த ஏத்துமாம்.. இங்கயும் அதான் நடந்துச்சு.. நடக்குது.. அவன் ஒண்ணும் தப்பு செய்யாதப்பவே அடி வாங்குனான்.. மேல படிக்கிறேன்னான்.. அடி..வேல கிடைக்கலே.. ஒத..வேல என்னா விக்கவா செய்யுது ? ஒடனே வாங்க ? கடேசில அப்டி.. இப்டி ஏதோ சம்பாதிச்சு அவனால முடிஞ்ச ஒதவியக் கஷ்டப்படுறவங்களுக்குச் செஞ்சா.. கொள்ளிக் கட்டைல சூடு.. என்னா துடிதுடிச்சிருப்பான்..? சரீ..பொழுது போக ஃபிரெண்டு கூட சினிமாக்குப் போனா..ஒத.. சினிமாபாக்குறது கூடத் தப்பா..? எத்தன நாளு ராத்திரி அவனச் சாப்பிடக்கூட விடாம அடிச்சிருப்பாரு..? எத்தன நாளு தூங்குறவன எழுப்பி அடிச்சு வெளிலே தள்ளிருப்பாரு..? அப்ப நீங்க யாராவது ஒத்தர்.. ஒத்தர்.. அம்மாவத் தவுத்து.. ஒரு தரமாச்சும் ‘ஏம்ப்பா இப்டி பண்றீங்க இந்தச் சின்னப் பையனப் போட்டு’ ன்னு கேட்டுருப்பீங்களா..? கேட்டதில்லே.. கேக்கமாட்டீங்க.. ஏன்னா ஒங்க சொகமான வாழ்க்கை போய்டும்.. ஏதாவது பேசுனா வீட்ட விட்டுத் தொரத்தீடுவாரு.. வெளீல போகப் பயம்.. வாடக குடுத்துக் குடியிருந்து.. வீட்டுச் செலவு பாத்து… பிள்ளைங்க படிப்பப் பாத்து.. நல்லது கெட்டதுக்கு ஈடு கொடுத்து.. முடியாது ஒங்களால.. முடியவே முடியாது.. இங்கேன்னா சம்பளம் வாங்குனதும் ஒரு தொகய வீசி எறிஞ்சிட்டு.. வேளா வேளைக்கு வக்கணயாத் தின்னுட்டுப் போய்டலாம்.. மத்த காச ஒங்க இஷ்டம் போல செலவு பண்ணலாம்.. இந்த வீட்டு ஆம்பிளங்களுக்கு அம்மா.. பொண்டாட்டி..பிள்ளங்க எல்லாமே ஒரு பேருக்குத்தான்.. அன்பா…நேசமா இருந்து குடும்பம் நடத்த இல்ல..ஒங்களுக்கு அம்மா வேணாம்.. பொண்டாட்டி வேணாம்.. பிள்ளைங்க வேணாம்.. அண்ணந்தம்பிங்க வேணாம்.. நீதி நேர்மை வேணாம்.. அக்கற.. பாசங்கறதெல்லாம் வேணவே வேணாம்.. த்தூ.. நீங்கல்லாம் ம..னு..ஷ..ங்..க..?" " நிறுத்து…என்னா நீ பாட்டுக்கு வசனம் பேசிட்டே போற வாய்க்கு வந்தபடி…இந்த வீட்ல என்னய எதுத்துக்கிட்டு ஒரு நிமிஷம் தங்க முடியாதுன்னு தெரியுமில்ல..? " " நானும் அந்த முடிவோட தான் இருக்கேன்.." " ரேணூ…என்ன சொல்ற நீ…..? வீட்டவிட்டுப் போறதா..? " பயமும், கோபமுமாகக் கேட்டான் ராஜு. " ஆமா..முடிஞ்சா நீங்களும் வாங்க.. இல்லேன்னா ஒங்கப்பாகிட்டியே ஒட்டிட்டு இருங்க.. எனக்கொண்ணுமில்லே. நா எம்பிள்ளைங்களையும், கங்காவையும் கூட்டிட்டுப் போய்த் தனியா இருக்கப் போறேன்…" தீர்மானமாகச் சொன்னாள் ரேணு. " ஓ…கொழுந்தனாரோடத் தனிக்குடுத்தனமோ…? நீ புருசன விட்டுட்டுக் கொழுந்தனக் கூட்டிட்டுப் போய்த் தனியாக இருந்தா எங்களுக்குத் தான் அவமானம்.." வக்ரமும், ஆங்காரமுமாக அசிங்கமான குரலில் கேட்டார் விஸ்வம். " ச்சீச்சி..அசிங்கமாப் பேசாதீங்க.. அண்ணீங்குறவ அம்மாக்கு அடுத்த ஸ்தானத்துல இருக்கறவ.. கூடப் பொறந்த அக்காவுக்குக் கூட அந்த எடம் கெடயாது.. அது அவ்ளவு புனிதமான எடம்.. அதனாலதான் ராமாயணத்துல சீதா எக்குத்தப்பா கேக்கக் கூடாத கேள்வியக் கேட்டப்ப துடிதுடித்துப் போனான் லஷ்மணன்.. அதோட என்னயப் பத்தித் தெரிஞ்சவங்களுக்கு என்னய நல்லாத் தெரியும்.. என்னயப் பத்தித் தெரியாதவங்ககிட்ட நா இப்டித்தான்னு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.." " கங்கா எம்புள்ள..நா இந்த வீட்டுக்கு மருமகளா வந்தப்ப அவன் எட்டுவயசுப் பாலகன்.. எல்லாத்துக்கும் மேல எங்கிட்ட எப்பவும் பிரியமா இருக்குறவன்..இது நா வரப் பாத்தேன்.. இனிமேலும் நீங்க அவனக் கொடுமப் படுத்தறதப் பாத்துட்டுச் சும்மா இருக்க முடியாது.. இனிமேயும் இப்டியே விட்டா அவன் சாவத்தான் பாக்க முடியும்.. அதுக்கு எனக்கு சக்தியில்லே.. அதுனால அவன எங்கூட வச்சிட்டு மெது…மெதுவா..கொஞ்சம் கொஞ்சமா பழய கங்காவா மாத்த என்னால முடியூங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு. எம் ஃபிரெண்டு ஒருத்தி இந்த மாதிரி போத மருந்துக்கு அடிமையானவங்களுக்கு ட்ரீட்மெண்ட் குடுத்துத் திருத்துற க்ளினிக் ஒன்னு வச்சுருக்கா.. அவட்ட இவனுக்கு ட்ரீட்மெண்ட்டுக்கு ஏற்பாடு பண்ணீருக்கேன்.. இவனுக்குத் தேவையானத நா செய்யப் போறேன்.. செய்வேன்.." " நீ கங்காவோடத் தனியாப் போனா எங்குடும்பக் கௌரவம் என்னாகுறது..?" " இப்ப மட்டும் அது எப்டி இருக்கூன்னு.. இன்னும் கண்ண மூடிட்டு ஒக்காந்திருக்காம..கொஞ்சம் எறங்கிவந்து.. அக்கம்பக்கத்துல மனசவிட்டுப் பேசிப் பாருங்க.. புரியும்.." " ட்டேய்..ராஜு.. என்னாப் பேச்சுப் பேசிட்டிருக்கா.. கேட்டுட்டுத் தடிமாடாட்டம் நிக்கிறியேடா..இழுத்துப் போட்டு மிதிக்காம…? "அவர் மகனிடம் பாய்ந்தார். " ரேணு சொல்றதுலயும் ஞாயம் இருக்குல்லப்பா.." முதன்முறையாக அப்பாவிடம் ஒரு கேள்வி கேட்டான் ராஜு. திகைத்துப் போனார் விஸ்வம். ரேணு வியந்து போனாள். அம்மா அதிர்ந்து போனாள். ஆனால் அம்மாவுக்கும், ரேணுவுக்கும் ஒரு மகிழ்ச்சி ஊற்றுக்கண் உள்ளூர வெடித்தது. " ட்டேய்…" விஸ்வம் கையை ஓங்கியவாறே ராஜுவை நோக்கி ஓரடி எடுத்து வைக்க ஒரு நொடியில் அவனைச் சற்றே பின்னுக்கு இழுத்து விட்டு ரேணு “ஊம்…” என்றவாறு அவர் முன் நின்றாள். ஒரு நொடி வெலவெலத்துப் போனார் அந்த அகங்காரம் நிறைந்த மனிதர். கீழே கிடந்து முனகிக் கொண்டிருந்த கங்காவுக்கு நடப்பது எதுவும் தெரியவில்லை. " இதப்பாரு..வீட்ட விட்டுப் போனா நகைநட்டெல்லாம்…" அப்போதும் அவர் நகையைப் பற்றித்தான் பேசுகிறார் என்று நொந்து போன அம்மா உள்ளே போனாள். ரேணு சிரித்தாள் வாய்விட்டு.. " ஒங்களப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும் மாமா.. இதோ.. நீங்க எனக்குப் பரிசம் போட்ட சங்கிலி.. நீங்க அதுக்கப்புறம் ஒரு குண்டுமணித் தங்கம் கூட எனக்கோ.. எம்பிள்ளைங்களுக்கோ.. இல்லே இவருக்கோ..செய்யலே.. எங்கப்பா செஞ்சு போட்டதத்தான் நா எடுத்துட்டுப் போறேன்.. நல்லாப் பாத்துக்குங்க.. இந்தப் பெட்டில இருக்கறது.. ஒங்ககிட்ட கொடுத்தது போக நா வச்சிருந்த பணத்துல அப்பப்போ நா வாங்குன பொடவைங்க.. பிள்ளைங்க துணிங்க.. இதுல எங்க அப்பாம்மா தீபாவளி.. பொங்கல்.. கார்த்திகை தீபம்.. பொறந்த நாள்.. கல்யாண நாள்னு எங்களுக்கு வாங்கித்தந்த துணிமணிங்கதான் இருக்கு.. நல்லாப் பாத்துக்குங்க.எனக்கு இப்டீல்லாம் வரும் சீக்கிரம்னு தெரியும்.. அதுனால நானும் ஒரு ப்ளான் பண்ணித்தான் வச்சிருந்தேன்.." " சம்பாதிக்கிறீல்ல.. அந்தத் திமிரு.. இதுவும் பேசுவ.. இன்னமும் பேசுவ.." " திமிரு இல்லீங்க..தன்னம்பிக்கை ! நானு என்னோட சுயநலத்துக்காக செய்யல.. ஒங்களோட பிள்ள கங்காவக் காப்பாத்தத்தான் செய்றேன் இதெல்லாம்.." “ஒம் வேலக்கும் ஒல வக்கிறம்பாரு…” " முடிஞ்சா செய்ங்க.. மிஸ்டர். விஸ்வம் ! விஸ்வம்னாலே ஒலகந்தான்.. ஆனா இனிமே இந்த விஸ்வத்தோட வீட்டுச் சுவருக்குள்ள இருக்குற இந்தச் சின்ன எடம் மட்டும் எங்களுக்கு ஒலகமில்ல..உண்மைல அது வெளில இருக்கு..ஆரோக்யமா இருக்கு.. செழிப்பா இருக்கு.. பரந்து விரிந்து “வா…வா..நா ஒனக்கு நல்ல வழி காட்டுறேங்குது” அது எங்களுக்குக் கண்டிப்பா நல்ல வழிகாட்டும்.. ஏன்னா நா இனிமே கங்காவ என்னோட பழைய பிள்ளையாப் பாக்குற வரைக்கும் நடத்தப் போறது வாழ்க்கையில்ல.. வேள்வி.." படபடவென்று கைதட்டல் சத்தம். திரும்பினாள் ரேணு… காளி ! " நல்லாச் சொன்னேக்கா.. வாக்கா தைரியமா.. நா இருக்குறேன்.. எங்கம்மா இருக்கு.. எங்க அக்கா இருக்குக்கா ஒனக்குத் தொணைக்கி… எல்லாத்துக்கும் மேல நெஞ்சு நெறய பாசமும் நேசமும் இருக்குக்கா.. ! அதுக்கும் மேல ஆண்டவன்னு ஒத்தன் இருக்கான்க்கா " காளியும், ரேணுவும் மயங்கிக் கிடந்த கங்காவை மெல்ல எழுப்பி உட்கார வைத்து… பின் தூக்கி நிறுத்த முயலும் போது ராஜுவும் சேர்ந்து கொண்டான் அவர்களுடன். ரேணு ஒன்றும் புரியாமல் கணவனைப் பார்த்தாள். அவன் மௌனமாக ஆனால் தீர்க்கமாக அவளைப் பார்த்தான். அந்தப் பார்வை பல்வேறு விஷயங்களை நொடியில் அவளுக்குப் புரிய வைத்தது. அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். குழந்தைகள் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் அவர்களோடு மெல்ல நடக்கத் தொடங்கினர். " கொஞ்சம் நில்லு ரேணு.. ! " குரல் கேட்டுத் திரும்பினர். அம்மா ! " இந்தாங்க..நானும் போறேன் அவுங்களோடு.. நாம பெத்தப் பிள்ளைக்காக ஊராவீட்டுப் பொண்ணு இவ்ளோ செய்றப்ப… நா எப்டி இங்க நிம்மதியா..மத்தப் பிள்ளைங்கல்லாம் பொழச்சுக்குவாங்க தானா..ஆனா இந்தப் பிள்ளதான் இப்ப அல்லாடுது நல்ல பிள்ளையா இருக்கறதால.. நா உடுத்தி இருக்குற பொடவயோடதான் போறேன்.. நகைல்லாம்.. தாலி உட்பட பீரோல வச்சுட்டேன்.. சாவி இதோ இருக்கு…ஒங்ககிட்ட பட்ட அடி..ஒதைல்லாம் போதும்.. எம்மருமக.. இல்லயில்ல நா வயித்துல சொமக்காத பொண்ணு ரேணு என்னய நல்லாப் பாத்துக்குவா… வா ரேணு.. போலாம்.." அவர்கள் அனைவரும் மன அளவில் இருட்டான அந்த வீட்டை விட்டு வெளிச்சத்தை நோக்கி நடக்கலானார்கள். விஸ்வம் அப்படியே விதிர்விதிர்த்துப் போய் நின்றார். ஓடுற வரைக்கும் தானே துரத்த முடியும்..? திரும்பி எதிர்த்து விட்டால்.. வெட்டி வீராப்புப் பேசுகிறவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. அதுதான் இப்போது அவரின் கண்முன்னே நடக்கும் நிஜம் ! பின் குறிப்பு : கங்காவைப் போல் பலப்பல இளைஞர்கள் - இளவயது ஆண்களும் , பெண்களும் - ஏன் சின்னஞ்சிறு சிறுவர்கள் கூடத் தெரிந்தோ.. தெரியாமலோ.. நண்பர்கள் சேர்க்கையால் போதை மருந்துப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதற்கு அன்பில்லா வீட்டுச் சூழல்.. பணமே முக்கியம் என்று நினைக்கும்… எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டு பிடித்துக் கடுமையாகத் தண்டிக்கும் பெற்றோர்.. சிறிய விஷயத்திற்கெல்லாம் கேலி கிண்டல் செய்யும் சுற்றத்தார்… இவர்களே முழுமுதற் காரணம் என்கின்றனர் மனவியலாளர்கள். " பழக்கம் என்பது பழகுவது அது விலக்கும் போதே விலகுவது.. பாசம்.. நேசம்.. காதல் தானே.. வாழ்வதற்கென்றே வளருவது.. நிழல் தொடருவது..மதி மயங்குவது வழி நேற்றும் இன்றும் மாறுவது.." இது ஒரு பழைய தமிழ்த் திரைப்படப்பாடல். எவ்வளவு உண்மையான வரிகள் பாருங்கள். இந்தக் கதையின் நாயகன் கங்கா நல்லவன். ஆனால் தகப்பனின் தேவையில்லாத சின்னச்சின்ன விஷயங்களில் அளவுக்கு மீறிய கண்டிப்பே அவனைச் சீரழித்துவிட்டது.. அவன் என்றைக்கு நல்வாழ்வுக்குத் திரும்புவானோ ? ஆனால் கட்டாயம் ஒரு நாள் திருந்துவான். அது நிச்சயம் ! ஏனென்றால் அவன் மட்டுமல்ல.. இப்பயங்கரப் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கும் பல இளைஞர்கள் அடிப்படையில் நல்லவர்கள்…ஆமாம்…! அவர்கள் நல்லவர்கள் ! 14-10-1984 ------------------------------------------------------------------------ உணர்வுகள்…! உணர்ச்சிகள்…! " எல்லாம் நீ குடுத்த எடம்… கேக்கறதக் கேட்டுக் கண்டிக்கறதக் கண்டிச்சிருந்தா..?" முரளி கத்திக்கொண்டிருந்தான். சதாசிவம் ஒன்றும் பேசவில்லை… மெதுவாக வெற்றிலையை நீவி சுண்ணாம்பு தடவிக் கொண்டிருந்தார்.அவருக்குத் தெரியும் இது அவரும் அவனும் பேசித் தீர்க்கக்கூடிய பிரச்சனை அல்ல. அதுவும் அல்லாமல் எல்லாம் நடந்து முடிந்து பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு மேல் பறந்தோடிவிட்டது. " ச்சே…ஒரே அவமானமா இருக்கு என்னா கேள்வி கேட்டுட்டாரு அந்த ஆளு …? " மறுபடியும் குமுறினான். “முரளீ… முரளீ…” வெளியிலிருந்து ஒரு குரல். வந்தவனைக் கண்டதும் கோப வெறியில் ஓடிச் சென்று வந்தவனின் சட்டையைக் கோர்த்துப் பிடித்தான் முரளி. " ட்டேய்….ட்டேய்… எப்படிப் பேசிட்டாரு… பாத்தியாடா… உங்க மாமா எங்க குடும்பத்தைப் பத்திப் பேச அவரு யாருடா… யாரோ செஞ்சதுக்கு நான் என்னடா செய்வேன்…???? " வெறியில் கையோங்கியவனை வேகமாக ஓடி வந்து தடுத்துப் பிடித்தார் சதாசிவம். " முரளீ…என்ன இது…யாரோ பண்ணினதுக்கு.. ஷமீர் என்னடா செய்வான்.. அவனப் போயி அடிக்கப் போற…? மொதல்ல உள்ள போ..தெருவுல நின்னுட்டு…" " யாரோ இல்ல…இவனோட மாமா.." " அதே போல தப்பு செஞ்சது யாரோ இல்ல…ஒன்னோட அம்மா..!" " த்தூ…இன்னோருவாட்டி அந்தப் பழிகாரிய என் அம்மான்னு சொல்லாத…" ஷமீர் சம்பவத்தின் வேகத்தில் திகைத்துப் போய் நின்றிருந்தான். " ஷமீர்.. நீ ஒக்காருப்பா.." ஷமீர் உட்கார்ந்தான். முரளியின் வேகம் தணியவில்லை.. அப்படியும்.. இப்படியுமாக ஏதோ முணுமுணுத்துக் கொண்டே நடந்து கொண்டு இருந்தான். சிறிது நேரம் கனமான மௌனம். ஷமீர் மிக மெதுவாகப் பேசினான். " முரளீ.. எங்க மாமா பேசுனதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்.. அங்கியே ஒம் மொகம் மாறுனதக் கவனுச்சேன்.. நீ வேகமும்.. வேதனையுமா வர்ரதப் பாத்துட்டுத்தான் நானும் ஒம் பின்னாடியே வந்தேன்…" " ஷமீர்…! " குமுறினான் முரளி. கண்கள் முட்டக் கண்ணீர். " ரிலாக்ஸ்.. முரளீ… நீ என்னச் சின்னக் கொழந்தையா…?வர்றது எதுவானாலும் வாழ்க்கைல ஏத்துக்கத்தான் வேண்டியிருக்கு…" " யாரோ… ஏதோ செஞ்சிட்டு.. அதனோட அவமானமும்.. அழுக்கும் நம்ம மேல விழுந்தா…?" " அதான் வாழ்க்கை…சரிசரி.. வா..நாம கொஞ்ச நேரம் வெளியில போய்ட்டு வரலாம்… வா..வா..டா.." வலுக்கட்டாயமாக முரளியை இழுத்துக்கொண்டு போனான் ஷமீர். சதாசிவம் பெருமூச்செறிந்தார். முரளி சொன்னது போல் சேற்றை மிதித்தது அவர் மனைவி ரங்கா…ஆனால் சகதி தெறித்துக் கொண்டிருப்பதோ…அவர் மேலும்.. அவர் பிள்ளைகள் மேலும். ’ முரளி கேட்டாப்புல அவளக் கண்டிக்க விட்டுட்டமோ.. சகதர்மிணீன்னு சகல சுதந்திரத்தோட வச்சுருந்தது தப்போ.. அதோட விளைவுதான் இதெல்லாமோ… தெரியல்லே…’ தவித்தது அந்த நல்ல உள்ளம். அவளும் வேலைக்குப் போனாள். அவரோட சமையல் வேலையை விட்டுவிடச் சொன்னாள். மௌனமாக மறுத்து விட்டார் அவர். எத்தனையோ நாட்கள்… நெருப்பில் பல மணி நேரம் வேலை செய்து விட்டு வந்து.. வெறும் ரசம் சாதத்தைக் கரைத்துக் குடித்து விட்டு அசதியாக வருகிறவரை விடமாட்டாள் ரங்கா. ’ பொம்மனாட்டிக்கு இத்தன வேகமா..’ மனதுக்குள் திகைத்துப் போவார் அவர். கணவன்-மனைவி அந்தரங்கம் என்பது மிகவும் புனிதமானது என்று நினைப்பவர் அவர். அதைப்பற்றிக் கூடக் கொஞ்ச நேரம் நினைத்தால் கூட அதன் புனிதம் பழுது பட்டுவிடும் என்று எண்ணுபவர். முதலில் முரளி.. பின் இரண்டு வருடத்திற்குப் பின் கார்த்திகேயன். அதன்பின்தான் விரிசல் பெரிதாய் வெளியே தெரிந்தது. அவள் முன்னைப் போலில்லை. அலுவலகத்தில் இருந்து தினமும் இரவு 9 - 10 மணி என்று திரும்ப ஆரம்பித்தாள். முதலில் வேலை அதிகம் என்று நினைத்தார். விஷயம் வேறு என்று வேம்பு… கூட வேலை செய்பவன் சொன்னான். ஊர் வம்புதான் அவனுக்குச் சாப்பாடு. அது அவனுக்கு இப்போது அடிமடியிலேயே கிடைத்தது. முதலில் நம்ப மறுத்த மனம்.. யோசிக்க.. யோசிக்க.. ’ அவளுடைய சமீபத்திய நடவடிக்கைகளை ஒண்ணாச் சேத்துப் பாக்கும்போது…ரொம்ப நேரம் கழிச்சு வரா…ஆத்துல அவ்வளவா சாப்பிடறதில்லே…ஆத்துக் காரியங்களையும் அவ்ளவாக் கவனிக்கறதில்லே… முரளி.. கார்த்தியக் கூடச் சரியாப் பாக்கறதில்லே…அதுங்கள ஸ்கூலுக்குக் கெளப்பறது கூட நாமதான் செய்றோம்… செகண்ட் சாட்டர்டேல கூட வெளியில போயிடறா.. ஞாயித்துக் கெளமைகள்ளயும் ஆத்துல தங்கறதில்லே…கேட்டா சரியாப் பதிலும் சொல்றதில்லே…பண்டிகைன்னு பொடவ வாங்குறவ…இப்போ வாராவாரம் புதுசு கட்டிண்டு போறா…’ மனது சாத்தானாயிற்றே ! அதற்கு அவல் படிபடியாகக் கிடைத்தால் விடுமா? அவரை வாட்டி எடுத்தது. இடையில் சித்ரா பிறந்தாள். ஒருநாள். ஒரு நிச்சயதார்த்த வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தபோது..ஜங்ஷன் ரவுண்ட்டானாக்கிட்ட கலையரங்கம் சினிமாவிட்டு வந்து கொண்டிருந்த கூட்டத்திற்கு நடுவே…ரங்கா ஒரு மனிதரோடு அட்டகாசமாகச் சிரித்தபடி.. குழைந்து குழைந்து இடித்துக் கொண்டு வருவதைக் கண்ணால் பார்த்த போது தான்….வெள்ளம் அணை மீறிவிட்டதை உணர்ந்தார்… துவண்டு போனார். இத்தன நாளும் அவன் சொன்னான்.. இவன் பார்த்தான் என்றெல்லாம் விஷயம் காதுக்கு வந்த போது கூட இல்லாத ஒரு ஆழ்வேதனை அவர் மனதில் சுருக்கிட்டது.’ இப்போ நம்ம கண்ணுக்கே ஆண்டவன் காட்டிட்டானே..பகவானே நான் செஞ்ச பாவமா இது..?’ உள்ளுக்குள் நொறுங்கிப் போனாலும் அவராக அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அவளோடு சாதாரணமாகவே பழகினார். எதையும் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. அவருக்குத் தெரியும்.. வேகமாக ஓடும் மாட்டை இழுத்துப் பிடித்தால் அது அதிகமாகத் திமிறுமென்று. சரி ஏதோ ஒரு ஆசை.. ஒரு வெறி.. வேகம்.. அவளாகச் சரியாகிவிடுவாள் என்று நினைத்தார். இல்லை..சரியாகவில்லை ஓடிய வேகத்தில் திசை மாறிப் போய்விட்டது என்று விரைவில் ஒருநாள் தெரிந்து போயிற்று. வளமைபோல் ஒரு திருமண வேலை. பெரிய இடத்துக் கல்யாணம்..அதுவும் வெளியூரில். ஐந்து நாட்களுக்கு ஒத்துக்கொண்டு இருந்தார். அதை முடித்துவிட்டு ஆய்ந்து ஓய்ந்து வீடு திரும்பிய போது வீடு வீடாக இல்லை. அலுவலகம் சென்றவள் மூன்று நாட்களாக வரவில்லையாம்.சின்னவள் சித்ராவையும் தன்னுடன் கூட்டிப் போய் விட்டாளாம். கார்த்தி அழுது கொண்டே சொன்னபோது விக்கித்துப் போய்விட்டார். பதினோரு வயது முரளி.. இரண்டு மூன்று நாட்களாகச் சரியாகச் சாப்பிடக் கூட இல்லாமல்… கார்த்திக்குக் காய்ச்சல் வந்து…பக்கத்து வீட்டு மாமி ஏதோ ஆகாரம் கொடுத்து… முதன்முதலாக அவருக்கு அடக்க முடியாமல் கோபம் வந்தது. ஆனால் யாரிடம் காட்டுவது..? அழுது கொண்டிருந்த பிள்ளைகளை இழுத்து மடியில் போட்டுக் கொண்டார். மிகவும் முயற்சித்துத் தன் அழுகையை அடக்கிக் கொண்டார். ரொம்பவும் கஷ்டப்பட்டுத் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டார். ’ சித்ராவ மட்டும் ஏன் கூட்டிட்டுப் போயிருக்கா… சின்னப் புள்ளேன்னா…இல்லே.. பொம்பளப் புள்ளேன்னா…’ மனதில் ஆயிரம் கேள்விகள். கார்த்திக்கு ஒன்றும் புரியவில்லை.. அம்மா இங்கே இல்லை என்பதைத் தவிர்த்து… முரளிக்குச் சிலது புரிந்தது…ஆனால் அப்பாவின் முகம்….அவனை வாயைத் திறக்க விடவில்லை. சதாசிவம் ஏற்கனவே பக்குவமானவர்… மேலும் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டார். அம்மா இல்லாத குறை கூடுமானவரை தெரியாமல் பிள்ளைகளை வளர்த்தார். அவரே சமைத்து விடுவார். அவர் வேலையாய்ப் போய்விட்டால் முரளி பொறுப்பாகப் பார்த்துக் கொண்டான்.. தன்னையும்.. தன் தம்பியையும். காலம் யாருக்காகக் காத்திருக்கிறது ? வருடங்கள் உருண்டன. கார்த்தி வேதம் படிக்கப் போய்விட்டான். முரளி நன்றாகப் படித்தான்… மின்னணு டிப்ளமோ முடித்தான்… வேலையிலும் சேர்ந்து விட்டான். சரி… வாழ்க்கை ஒரு வழியாக அமைதியாகப் போய்க்கொண்டு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது..இப்போது எரிமலைக் குமுறலாக மீண்டும் நிகழ்வுகள். ராத்திரி பதினோரு மணிக்கு மேல் தான் முரளியைக் கொண்டு விட்டுவிட்டுப் போனான் ஷமீர். சாப்பிட்டானா என்று கூடக் கேட்கத் தோன்றவில்லை சதாசிவத்திற்கு. முரளி புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு இருந்தான். அவருக்கும் தூக்கமே வரவில்லை. மணியைப் பார்த்தார்…இரண்டு.. டேப்பை எடுத்து ஏதோ ஒரு கேசட்டைப் போட்டார். சுசீலாவின் சோகம் நிறைந்த ஆறுதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது. " ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ… எதிர்கால வாழ்வில் கவனம் கொண்டாயோ… நாளை உலகம் நல்லோரின் கையில்.. நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்… மாடி மனை வேண்டாம்… கோடிச் செல்வம் வேண்டாம்.. வளரும் பிறையே நீ போதும்…" அவருக்குக் கண்கள் கலங்கின. கொஞ்சம் டேப்பை ஓடவிட்டுப் பாடவிட்டார்… " இருளினிலும் ஒளி தெரியும்.. ஏக்கம் ஏனடா…தம்பி… தூக்கம் கொள்ளடா…" பெருமூச்சு ஒன்றை உதிர்த்தவர் டேப்பை அணைத்து விட்டு முரளி அருகில் உட்கார்ந்து அவன் தலைமுடியைக் கோதிவிட்டார். இதற்காகவே காத்திருந்தது போல் " அ..ப்…பா…" என்று அழுகையின் வெடிப்புடன் அவர் மடியில் முகம் புதைத்து அழுதான் முரளி. எதற்கும் கலங்காத அவர் மனமும் அந்த இருபத்து நாலு வயதுப் பிள்ளையின் தவிப்பில் கலங்க…கண்ணின் துளிகள் அவன் மேல் சரஞ்சரமாய் விழுந்தன. திடுக்கிட்டான் முரளி. தனக்கும், தன் தம்பிக்கும் " தாயும் " ஆன அவர் அழுவதா..? அழுகை மனதைச் சற்றே இலகுவாக்கிவிட எழுந்து உட்கார்ந்தான். " அப்பா…நோக்குத் தெரியாது..ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே கார்த்தி வந்தப்ப கேட்டான்.. " ஏண்ணா…நம்மாத்துல மட்டும் அம்மா இல்லே.. செத்துப் போய்ட்டாளான்னு ? " " முரளீ…" " இப்படித்தாம்ப்பா நானும் பதறி அவன் வாயை மூடினேன்.. ஆனா அவ செத்திருந்தாக்கூட…வருஷா வருஷம் தெவசம் கொடுத்து… ரெண்டு சொட்டுக் கண்ணீர் விட்டு…" " முரளீ… " " ஏம்ப்பா…நாஞ் சொல்றதுல என்ன தப்பு…? இத்தன வேதனையும்.. அவமானமும் இல்ல பாரு.. ? அதோட ’அன்னிக்கோரு நாளு அத்தை வந்தப்ப அம்மாவப்பத்தி ஏதோ தப்பு தப்பா சொன்னாளேன்னா..அதெல்லாம் நெஜமா… அப்பாட்டக் கேக்க என்னமோ மாறி இருக்குண்ணா.. அதான் ஒங்ககிட்டக்கக் கேக்குறேன்’ன்னான்.. என்னவோ சொல்லி சமாளிச்சேம்ப்பா அவன… அவனுக்காத் தெரியறப்பத் தெரியட்டும்னு … ச்சே.. எவ்ளோ கேவலமா இருக்குப்பா… அப்பா நா இப்போ ஒங்கிட்ட ஒண்ணு கேக்கப் போறேன்… எனக்கும் இருபத்துநாலு வயசாச்சு… தோளுக்கு மிஞ்சினாத் தோழம்பா…அப்படி நெனச்சுக்கோ.. எங்கிட்ட சொல்லுப்பா…ஒங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல ஒறவில்லையா…? " சதாசிவம் கூசிப் போனார். ’ இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எதுவுமே ஃப்ரீ தான். தோப்பானரண்டக் கேக்கறமே இதெல்லாம்னு யோசிக்கிறானா…அவந்தான் தோழனாய்ட்டானே..’ "ஏம்ப்பாப் பேசமாட்டேங்குற…? சித்ராவக் கூட்டிட்டுப் போனா… கொஞ்ச நாள்ள ஒங்கிட்டக்கவே திருப்பி அனுப்பிட்டா…தான் கொண்டு வந்து கூட விடல…நீயும் வழக்கம்போல அம்மாஞ்சியா சரீன்னு இருந்துட்ட… பொம்மனாட்டிக் கொழந்நயத் தனியா விட்டுட்டுப் போக முடியல்ல… ஒம்பொழப்புக்கு… கொண்டு போய் தாத்தா பாட்டியாண்ட விட்ட…" " ஊம்… முரளீ… சித்ரான்னதும் ஞாபகம் வருது… அவ..அவ… தெரண்டிருக்காளாண்டா… தாத்தா லெட்டர்போட்ருக்கார்டா.. இன்னிக்கு நீ பண்ண கூத்துல மறந்துருச்சுடா.." " போச்சுடா…இது வேறயா…? அப்பா…இனிமேதான் பூகம்பமே இருக்கு…பசங்களான எங்களாலயே யாரும்…ஏதும் சொன்னாத் தாங்க முடியலே..சித்ரா பொம்பளப்புள்ள.. நாளைக்குக் அவளுக்குக் கல்யாணம் காத்தின்னு வரும்போது அவ எத்தன ஏச்சு…பேச்சுகளுக்கு ஆளாகணுமோ… ச்சே…ஒத்தியோட சொகத்துக்கு நம்ம நாலு பேரோட லைஃபையும் பலி கொடுத்துட்டாளே கிராதகி.. இவல்லாம் பொம்மனாட்டியா….?" சாதாரணமாக ஆரம்பித்து மீண்டும் வெறியாகக் கத்தினான். " கத்தாதப்பா… ராப்போது.. என்ன செய்றது….எல்லாம் நம்ம தலையெழுத்து.. வாங்கி வந்த வரம்…முரளீ… கோவம்.. பாவம்.. சண்டாளம்ப்பா… மொதல்லக் கோவத்தக் கொறைக்கப் பாரு…சரி.. சரி அத்த விடு… நாளைக்கு சித்ராவப் பாக்கப் போலாம்னு நெனக்கிறேன்… நீ வர்ரியாப்பா…? " " நா வல்லப்பா…" " ஏம்ப்பா…? " ஆதங்கமாய்க் கேட்டார் சதாசிவம். " நேக்கு மனசே நல்லால்லப்பா.. அங்க வந்து நாபாட்டுக்கு ஏதாவது ஏடாகூடமாப் பேசிட்டா…! பாவம்ப்பா.. தாத்தா.. பாட்டி… நீ போய்ட்டு வாப்பா.. போறச்சே பூ..பழம்.. ஸ்வீட்.. எல்லாம் வாங்கிட்டுப் போப்பா… நோக்குத் தெரியாததில்லே…வழக்கம் போல மாடத்துல…கவர்ல பணம் வச்சிருக்கம்ப்பா… வேணுங்கறத எடுத்துக்கோ… நா நாலஞ்சு நாக் கழிச்சுப் போய்ப் பாத்துட்டு வர்ரேன்.." அந்தப் பிள்ளையின் சகோதர வாஞ்சையும்…தகப்பனுக்குத் தோள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் அத்தனை துயரத்திற்கு நடுவிலும் அந்தத் தகப்பனைப் பெருமை கொள்ள வைத்தது. " சரி.. நீ படுப்பா… நானும் கொஞ்ச நாழி தலயச் சாய்க்கிறேன்.." அவனருகிலேயே தானும் படுத்தார். ஏதோ சத்தமான குரல் கேட்டு முழித்தான் முரளி. " நோக்கு ஏண்டா இந்தத் தலையெழுத்து.. இப்டி அல்லாடிண்டு கெடக்குற ? அந்த ஓடுகாலிதான்.. தான் இஷ்டப்படி எவனோடயோ போய்த் தொலஞ்சிட்டா… நீ பேசாத இன்னோருத்தி எவளயாவது கட்டிண்டு இருக்கலாமோல்லியோ…" சதாசிவம் காதுகளைப் பொத்திக்கொண்டு " அக்கா " என்று சற்றே உரத்த குரலில் பேச முயன்றார். அவரைப் பேச விடவில்லை அவருடைய அக்கா. " ஏண்டா அதட்டறே…பூனக் கண்ண மூடிண்டுட்டாப் பூலோகம் இருண்டுருமாடா…? நீ வேணாப் பேசாதிருக்கலாம்…ஆனா ஊருலகம் ஒன்னப்பத்தி என்ன பேசறது தெரியுமோன்னோ… கையாலாகாதவன்னு… நேக்கு சகிக்கலடா…" " யாரு வேணா…என்ன வேணாப் பேசிண்டு போட்டுமே… நேக்கென்ன..? " " நோக்கொண்ணும் இல்லேடா.. நீதான் பரப்ரம்மமாயிட்டியே… நாளக்கிப் பசங்களோட வாழ்க்கையப் பாக்க வேணாமாடா… பொம்மனாட்டிக் கொழந்த வேற ஒண்ணுருக்கே…?" என்றவள் குரலைத் தாழ்த்தி, " ஏண்டா.. அவ இன்னும் அந்தத் துலுக்கனோடதான் இருக்காளா.. இல்ல.. வேற யாரோடியானும் போய்ட்டாளா…?" குரலில் தான் எத்தனை நக்கல்.. கேலி.. கிண்டல்.. வம்பறியத் துடிக்கும் வேகம்…? கேட்டுக் கொண்டு நின்ற முரளிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. " அத்தே… காலங்காத்தல.. வேற எதானும் பேசறதுன்னா இருங்கோ…இல்லே…இப்பவே போய்டுங்கோ தயவுசெஞ்சு…" காட்டமாகக் கத்தினான். " வாடாப்பா… வா..வேற எத வச்சுட்டுப் போனாளோ இல்லியோ.. இந்தக் கோவத்த மட்டும் வச்சுட்டுப் போய்ருக்கா… நேக்கென்னப்பா.. எல்லாம் நல்லா இருந்தா எங்க வனஜாவ நோக்குக் கட்டி வைக்கலாம்னு ஒரு நெனப்பு நேக்கிருந்துது… ஹூம்.. இப்ப என்னால வாயத் தொறக்கக் கூட முடியாது…" முரளிக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. " அத்தே.. நீங்க இப்பப் போறீங்களா.. இல்லியா.. காலங்காத்தல…ஒங்கள யாரு இங்க வரச் சொன்னா…?" என்றவன் அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் வெளியே விட்டுக் கதவைப் படாரென்று சாத்தினான். " முரளீ…என்ன இது… பெரியவங்கக்கிட்ட நடந்துக்குற மொறயாயிது…? இதயா நா நோக்குச் சொல்லித் தந்துருக்கேன்…? " வேதனையோடு பேசினார் சதாசிவம். " அப்பா…இவுங்களேல்லாம் ஏம்ப்பா உள்ள விடுற…? நம்மளக் கொதற்றதுக்குன்னே வரவாப்பா இவாள்ளாம்…அன்னிக்கி கார்த்தி ஜொரத்தோடப் படுத்துறந்தப்ப நா போயி கொஞ்சம் கஞ்சி வச்சுத் தாங்கோன்னு கேட்டப்ப " நோக்குக் கொடுத்தா எங்க மாமியார் கோச்சுப்பா“ன்னுக் கதவச் சாத்திண்டு போய்ட்டாப்பா இவ..ஒரு ஒதவி செய்ய மாட்டா ஆபத்து சமயத்துக்கு…வம்பு பேச மட்டும் காலம்பறயே வந்துருவா..” முரளிக்குத் தாளவில்லை. " முரளீ…மறுபடியும் மறுபடியும் சொல்றேன்… கோவத்தக் கொறைக்க முயற்சி பண்ணு… கோபம்.. பாவம்.. சண்டாளம்ப்பா…" ஆதரவாக அவன் முதுகில் தட்டிக் கொடுத்தவர், "போப்பா.. போய்.. பல்லத் தேச்சுட்டுக் குளிச்சிட்டு வா..டிஃபன் ரெடி பண்றேன்.. நீ ஆஃபீஸ் போய்ட்டு வா…நா சித்ராவ ஒரெட்டுப் பாத்துட்டு வந்துடறேன்.." " ஷமீர்…என்னடா சொல்றே…?" " ஆமாம்.. முரளி…ஏண்டா ஊருக்குப் போனோம்னு ஆயிடுச்சுடா.. வீட்ல ஒரே ரகள…எந்தங்கச்சியப் பொண்ணு பாக்க வந்தவங்க ஏதோ பெருந்தன்மையாப் பேசறதா நெனச்சு எங்கப்பாக்கு வேற ஒரு சின்னவீடு இருந்தாலும் பரவால்ல…பவுனும்.. ரொக்கமும் மட்டும் கூட வேணூன்னு கேட்டுட்டுப் போக…அம்மா அழுது ஆர்ப்பாட்டம் பண்ண…தங்கச்சி அழுதுட்டே தூக்குப் போட்டுக்கப் போக.. அப்பப்பா… முரளீ…ஒம்மனசு ஒங்கம்மா மேட்டர்ல என்னா பாடு பட்ருக்கும்னு இப்பதாண்டா புரியுது… ’ வாழ்க்கை இப்படித்தாண்டான்னு ’ அன்னிக்கி ஒங்கிட்ட தத்துவம் பேசினண்டா…மன்னிச்சுக்கோடா.. மாதா..பிதா செய்றது மக்கள் தலையிலேன்னு சொல்றாங்களே.. அதோட முழு அர்த்தம் இப்பதாண்டாப் புரியுது…மனசு அல்லாடுதுடா… எப்படியோ இருக்கு முரளீ…" கண்ணீர் மல்க நிறுத்தினான் ஷமீர். " ஷமீர்…ஒரு குருடனுக்கு இன்னோரு குருடந்தாண்டா தொணை.. ஆறுதல்.. எல்லாம்.." முரளி ஷமீரின் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான். உள்ளே படுத்தபடியே இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சதாசிவம் பலத்த யோசனையில் ஆழ்ந்தார். அதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு ஷமீரின் தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணம் முடிந்தது. அதற்குப் பின் இருந்தவர் சதாசிவம் என்பது யாருக்கும் தெரியாது ஷமீரைத் தவிர. சதாசிவம் பேச்சிழந்து உட்கார்ந்து இருந்தார். அவர் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எதிரில் ஷமீர் பரபரப்பாக…ஒரு எதிர்பார்ப்புடன் அவரையும்.. முரளியையும் மாறி மாறிப் பார்த்தபடி அமர்ந்து இருந்தான். " என்னப்பா… பேசாதிருக்கே.. ஷமீருக்கு என்ன பதில் சொல்லப் போற.." முரளியின் குரலில் ஒரு சந்தோஷம் எட்டிப் பார்த்தது. " ஷமீர்… முரளீ.. இதெல்லாம் என்ன ?" " என்ன மாமா…என்னண்ணு கேக்குறீங்க… நாதான் மொதல்லியே சொல்லிட்டனே… சித்ரா… சித்ராவ.. நா கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படுறேன்னு…" " ஷமீர்…ஒங்க அம்மாப்பா…" அவரை இடை மறித்தான் ஷமீர். “அவுங்க சம்மதம்…ஒங்க ஆசீர்வாதம்… முரளி சம்மதம்.. எல்லாத்தியோடியுந்தான்…”. உற்சாகமாகப் பேசினான் ஷமீர். " அது கெடைக்கலேன்னா…" " கெடக்கிறவரப் பொறுமையாப் போராடுவேன்… காத்திருப்பேன்…" நயந்து கூறினான் ஷமீர். " அதுக்கென்ன அவசியம்…? ஒனக்குத்தான் ஒங்க வகையிலேயே நல்ல நல்ல பொண்ணுங்கள்ளாம் கெடப்பாங்களேப்பா…ஏன்.. நீ வீணா கண்ட கண்ட கஷ்டத்தேல்லாம் இழுத்துக்கப் பாக்குற…? " " அ…அ…அது வந்து.. அது வந்து.." " நேக்குச் செய்யுறப் பிரதி உபகாரமா நெனக்கிறியா…? " " மாமா…? " முரளிக்கு ஒன்றும் புரியவில்லை. " அப்பா… நீ என்ன சொல்ற…? " " ஆமாண்டா.. முரளி…இவன் தங்கை ஷகீலா கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும்… மாப்ள பாத்துக் குடுத்ததுலேருந்து…நாந்தான் பண்ணுனேன்…நடக்கவே நடக்காதூன்னு இவன் நெனச்சது நடந்துடுச்சுன்னதும்…இவன் பதிலுக்கு நம்ம சித்ராவ…" சட்டென்று இடை மறித்தான் ஷமீர். " மாமா… மாமா.. அப்டீல்லாம் இல்ல மாமா…ஒரு…ஒரு நல்ல எண்ணத்தோடதான்… விருப்பத்தோடதான்…" " நல்ல எண்ணம்னா..? ஒங்கப்பா விவகாரத்துல மனசொடிஞ்சு போன ஒங்கம்மா.. இப்பதான் கொஞ்சம் தேறி வராங்க…இந்த நேரத்துல ஒம்பங்குக்கு நீ வேற அவுங்கள வேதனப்படுத்த ஆரம்பிக்காத…" " மாமா…அப்படீல்லாம் நிச்சயம் இல்ல மாமா…அம்மாட்ட நான் மெதுவா இதப் பத்தி ஏற்கனவே சொல்லீருக்கேன் யோசிக்கச் சொல்லி…அப்பாதான் சம்மதிக்கணும்…அப்புறம் முக்கியமா நீங்க…" " அவர் சம்மதிக்க மாட்டார் நிச்சயமா…" தீர்மானமாகச் சொன்னார் சதாசிவம். " ஏன்…? " ஷமீரும் முரளியும் ஏக காலத்தில் கேட்டனர். " ஏன்…ஏன்…னா… சித்ரா அவர் மக…அவரோட ரத்தம்…" மெல்ல.. மெல்ல… மிக மிக மெதுவாகச் சொன்னார் சதாசிவம். " மாமா…." " அப்பா…" அதிர்ந்து போயினர் இருவரும். " நீ என்னப்பா சொல்ற …? " " இத்தன நாளா மறச்ச உண்மையச் சொல்றேன்…" " அப்பா….அப்…பா…நேக்கு என்னமோ பண்றது…" " அன்னிக்கி ஷமீர் சொன்னாப்படி வாழ்க்கைய எதிர் கொள்ளக் கத்துக்கோ… நாம விரும்புறமோ ..இல்லியோ…நடக்கறது பகவான் சித்தப்படி நடந்துண்டேதான் போகும்.. சித்ராவத் திருப்பிக் கொண்டு இங்க விட்டப்ப நீ அம்மாஞ்சியா சரீன்னுட்டேன்னு அன்னிக்கோரு நா நீ என்னண்டக் கோச்சுண்டே…நா அம்மாஞ்சியா அவள ஏத்துக்கலே… அந்த அப்பாவிக் கொழந்தையோட லைஃபுப் பாழாயிரக் கூடாதேங்குறதுனால தான் ஏத்துண்டேன்… தாத்தா பாட்டியண்டையும் உள்ளத உள்ளபடிச் சொல்லித்தான் பொறுப்ப அவாண்ட ஒப்படச்சேன்…அந்த நல்ல மனுஷா இன்னிவர கண்ணுக்குக் கண்ணா அந்தக் கொழந்தய வளத்துண்டு வரா.. அவாளுக்குக் கோடானு கோடி நன்றிகள்.." கண்களில் கண்ணீர் மல்கக் கையெடுத்துக் கும்பிட்டார் அந்த நல்ல மனிதர். " ஷமீரோட அப்பா சஹாப்தீன் ஒரு நா என்னண்ட வந்து ரொம்ப வேதனப்பட்டார்.. அவரால ரங்காவக் கட்டுப்படுத்த முடியலேன்னு.. ஒரு வேகத்துல செஞ்சிட்டேன்.. ஆனா அவ போக்கே சரியில்லேன்னார்… சித்ரா தன்னோட பொண்ணுதான்னு ஒத்துண்டார்…ஆனா அது வெளிப்படையாச்சுன்னா ரெண்டு பேருக்குமே.. தனக்கும்.. சித்ராவுக்கும்…நல்லதில்லேன்னார்.. அவள வளக்குற பொறுப்ப தயவுசெஞ்சு நீங்க ஏத்துக்கோங்கன்னு அழுதார்.. மனசு கேக்கல.. ஏத்துண்டன்.. பாட்டியாத்துல விட்டேன்.. மாசாமாசம் பணம் அனுப்ச்சேன்… ஹூம்.. எல்லாம் நடந்து முடிந்த கத… " சற்று நிறுத்தியவர் " ஷமீர்…இப்ப ஒம்முடிவச் சொல்லுப்பா.." " மாமா…" அவன் குரல் செத்திருந்தது. " ஷமீர்…ஒன்னோட ஃபிரெண்டு முன்ன ஒரு நா என்னண்ட கேட்டான்..’ ஏம்ப்பா…ஒங்களுக்குள்ள ஒறவு சரியில்லையா’ ன்னு.. ஒத்தறோட ஒத்தர் ஒறவு எப்பவுமே சந்தோஷமா இருக்கணூம்னு நெனக்கிறவன்… நானு.. அதுனால தான் நா இன்னிக்கு எல்லாருக்கும் ஒரு காட்சிப் பொருளா இருக்கேன்…பரவால்ல.. பகவான் துணை எப்பவும் நேக்கிருந்தாச் சரி..மனுஷங்களோட மன உணர்வுகள் மதத்துக்கெல்லாம் அப்பாற்பட்டது… " கடமயச்செய்…பலன எதிர்பாராதேன்னான் கண்ணன்…" செஞ்சேன்… செய்றேன்… செய்வேன்.. " அடுத்தவங்க கிட்ட அன்பா இருக்கறவந்தான் நெஜமான முஸ்லிம்.. சொல்லாலியும்.. செயலாலியும் மத்தவங்கள இம்சிக்காதவந்தான் உண்மையான இஸ்லாமியன்னார்.." நபிகள் நாயகம்… முடிஞ்ச வர இருக்கேன்… " ஒனக்கு செஞ்சப் பாவத்த மன்னிச்சுருன்னாரு.." ஏசுபிரான்.. எப்பவுமே மன்னிச்சுட்டே இருக்கேன்… ஏன்னா.. என்னயப் பொறுத்தவரை மனசு தான் நெஜமான மதம்… ஒத்தொருக்கொத்தர் காமிக்கிற அன்பு தான்… நெஜமான நேசந்தான் லோகத்துல எல்லாத்துக்கும் அடிப்படை.. முடியற வர அப்படியே நடக்கப் பாருங்கோ…என் உணர்வுகள் புரியும்… கொழந்தேளா…உணர்ச்சி வேற.. உணர்வு வேற…உணர்ச்சி ஒடம்பு சார்ந்தது… உணர்வு மனசு சார்ந்தது.." சொல்லிக்கொண்டே துண்டை உதறித் தோளில் போட்டபடி நகர்ந்த அந்தக் கர்ம யோகியைப் பார்த்தபடி பேச்செழாமல்.. பிரமித்தபடி நின்றனர் ஷமீரும்.. முரளியும். - 18 - 08 - 2005 ------------------------------------------------------------------------ ௨ள்ளத்தில் ஒரு ஊனம் ’ நேரமாச்சு…கெளம்பணும்… இன்னும் பூ வச்சுக்கணும்…’ " ஆயா…" கத்துகிறேன். சமையல்கட்டிலிருந்து நெய் வாசம் காற்றில் மிதந்து வருகிறது. ஆயா அங்குதான் இருப்பாள். கையைத் துடைத்துக் கொண்டே ஓடி வருகிறாள். அவள் மிகவும் பொறுமைசாலி. என் ஆத்திரம்.. அவசரம் அனைத்துக்கும் ஈடு கொடுப்பாள். பூவை என் தலையில் வைக்கிறாள். கண்ணாடி பிரதிபலிக்கிறது. " இன்னிக்கு என்ன டிஃபன் ஆயா..? " " சப்பாத்தி கண்ணு…" அவளுக்கு அவசரம். நான் கலைத்துப் போட்டிருந்த துணிகளை மடிக்கத் தொடங்குகிறாள். " இதுக்கு என்ன அவசரம்.?டிஃபன எடுத்து வை…நேரமாகுதுல்லே..? " காரணம் இல்லாமல் கத்துகிறேன். ஆயா சப்பாத்தியையும் குருமாவையும் எடுத்து வருகிறாள். நான் ரசித்துச் சாப்பிடுவதை ஒரு தாய் போல் பரிவுடன் கவனிக்கிறாள். எனக்குள் எங்கோ நெகிழ்ச்சி.. மனக்கண் நீரில் நனைகிறது. எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவள் இந்த ஆயா. என்னைச் சிறு வயதிலிருந்தே வளர்த்தவள். என் அம்மா..அப்பா போனபின் என்னோடேயே இருப்பேன் என்று இருந்து விட்டாள். கல்யாணம் கூடச் செய்து கொள்ளவில்லை அவள். அவளுக்கு நான்.. எனக்கு அவள். " ஆயா…போய்ட்டு வரேன்…" மெல்ல நடக்கிறேன். படிகளில் ஒவ்வொரு படியிலும் இரண்டு கால்களையும் வைத்து நிதானமாக இறங்குகிறேன். ஒவ்வொன்றாய்க் குறைகிறது படிகள். " குட்மார்னிங் மிஸ்.." கீழ் வீட்டு வாண்டு. ரொம்பத் துறுதுறுப்பு. காலில் சக்கரம் கட்டினாற் போல் எப்போதும் ஓட்டம் தான். ’ ஆங்…ஆமாம்.. காலில் சக்கரம்..ஆமாம்..’ " குட்மார்னிங் டார்லிங்…" ! " ம்…ம்ம்.. மிஸ்… சாயந்தரம் வரும்போது எனக்கு அனிமல்ஸ் போட்ட ஏபிஸிடி புக் வாங்கிட்டு வரியா.." " ஓ…ஷ்யூர்…" என் கண்கள் அவன் காலைவிட்டு அகலவில்லை. சுதாரித்துக் கொண்டு மெல்ல நடக்கத் தொடங்குகிறேன். ஆமாம்.. என்ன அவசரம்..? லைப்ரரிக்கு பத்தரை மணிக்குப் போனால் போதும்.. இங்கிருந்து நடந்து போய் சாலை ரோடு ஸ்டாப்பில் ஏறி..தெப்பக்குளம் ஸ்டாப்பில் இறங்கி.. அங்கிருந்து நடந்து கோட்டை வளைவைக் கடந்து…ஊஹூம்…நடந்தே போனாலும் சரி…இந்த நேரத்துல பஸ்ஸில் என்னால் ஏறக்கூட முடியாது. இடது கையில் இருந்த கைப்பை கனக்கிறது வழக்கம் போல்.. கை வலிக்கிறது.. ஆனால் அதை மாற்றிக்கொள்ள முடியாது. திடீரென்று கூட்டாகப் பாடும் குரல்கள். ஓ…நர்ஸரி ஸ்கூல் வந்துருச்சா…? " ஓடி விளையாடு பாப்பா… நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா.. ஆ..ஆ..ஆ.." பிஞ்சுக் குரல்கள் கோரஸாகப் பாடும் சத்தம்… ஒன்றுக்கொன்று சேரவில்லை.. ஆனாலும் அதில் ஒரு இனிமையான ரிதம் இருக்கிறது…ஒரு உற்சாகம் இருக்கிறது…இப்பவே ஓடி ஓடி அவை விளையாடும்… ஓ…அவை ஓடி ஓடி விளையாடும்…என்னையும் அறியாமல் அங்கே சில நிமிடங்கள் நின்று விட்டு மெல்ல நடக்கிறேன். வலது கையில் மணி 9.50 காட்டுகிறது. அட…மணி கூட ஓடுகிறது. நான் வேகமாக நடக்க முயற்சிக்கிறேன். கலகலவென்று சிரிப்பொலி. திரும்புகிறேன். குழந்தைகள் தான் சிரிக்கின்றன. என்னைப் பார்த்தா..?..ஓ..இல்லையில்லை.. ஆமா..ஆமாம்.. ஊஹூம்.. இல்லே.. உள்மனம் உறுத்துகிறது. உதட்டைக் கடித்து சமனமாகிறேன். இன்னும் மெயின் ரோடே வரவில்லை. ஓ..எவ்வளவு தூரம்..? சே..ஆங்.. உனக்காக ரோடு ஒங்கிட்ட வரும்..? மெல்ல மெல்ல நகர்கிறது ஒவ்வோர் இடமும். ஸ்கூல், காலேஜ் பசங்க… ஆஃபீஸ் போறவங்க…எல்லோரும் வேக வேகமாய்ப் போகிறார்கள். நடந்து.. லேம்ப்ரட்டா.. வெஸ்பா.. ராஜ்தூத்.. ராயல் என்ஃபீல்ட்.. ஆட்டோ.. அம்பாஸடர்.. ப்ளிமவுத்.. ஹெரால்ட்.. ஸ்டாண்டர்ட்..இப்படி நான் ஒவ்வொன்றாய் வேடிக்கை பார்த்துக் கொண்டே மெல்ல மெல்ல நடக்கிறேன்.. அப்பப்பா.. எல்லாவற்றிற்கும் என்ன ஒரு வேகம்..? என்னைக் கடந்து போவோர் ஒவ்வொருவரும் என்னைத் திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே போகிறார்கள். அநேகமாக எல்லாமே தெரிந்த முகம்.. ஆமாம்.. நானுந்தான் நாலஞ்சு வருஷமா இப்படியே போறேனே ! சிலர் கண்களில் ஏளனம்.. சிலவற்றில் இரக்கம்.. சில கருணை.. பரிதாபம்… ச்சே.. இதுதான் எனக்குப் பிடிப்பதில்லை.. அவுங்க அவுங்க பாட்டுக்குப் போறது.. என்னை ஏன் அப்படிப பாக்கணும்.. யாருக்கு வேணும் இதெல்லாம்…எல்லாம் நாடகம்.. ஏதாவது ஆபத்துன்னா ஒத்தராவது ஹெல்ப்புக்கு வருவாங்களா..? ஒத்தொருத்தர் கண்ணயும் பாரு.. என்னவோ தாங்க தான் ஹெவன்லி க்ரியேஷன்ஸ் ங்குற மாதிரி… " பாம்பாம்.. " சட்டென்று நின்றேன்.. " ஏம்மா.. நீங்க ஓரமா வந்தா என்ன..? " சடன் ப்ரேக் போட்ட ஆட்டோ டிரைவர் கோபமாகக் கேட்கிறான்.. அறையலாம் போல வருது எனக்கு.. இவன் யாரு என்னக் கேக்க.. நா ஓரமாப் போவேன்.. இல்ல..நடுரோட்ல போவேன்.. பதில் சொல்லாமல் முறைத்தேன் அவனை.. அதேநேரம் ’ ஓ..இந்த ஆட்டோல ஏறிப் போய்ட்டா என்ன.. வலிக்குதே.. ’ ஆத்திரம் சற்றே தணிய அந்த டிரைவரைப் பார்க்கிறேன். அவன் பரிதாப உணர்வோடு என்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் என் உணர்ச்சி மீண்டும் சூடாகிறது. எரித்து விடுவதைப் போல் அவனைப் பார்த்து விட்டு மெல்ல நடக்கிறேன். பஸ் ஸ்டாப் வந்து விட்டது. ஒரு 9 வருகிறது. ஆனால் அதில் 90 பேர் இருக்கிறார்கள். படிக்கட்டில் கூட ஆட்கள்.. அப்படியும் பலர் பஸ்ஸில் ஏற ஓடுகிறார்கள்.. ஓ..இது நம்மால் ஆகாது… ஸ்டாப்பை விட்டு மெல்ல நகர்கிறேன். " ஐயோ பாவம் " யாரோ சொல்கிறார்கள் என்னைப் பார்த்து.. நெஞ்சும்.. நினைப்பும் பெட்ரோல்.. ஃபயருக்கு விருந்தாகிறது. கண்களில் அந்த ஜ்வாலை வீச நடக்கிறேன். வெயில் அதிகமாகிறது. கருப்புக் கண்ணாடி கண்களுக்கு மாறுகிறது ஹேண்ட் பேக்கிலிருந்து. குடையையும் பிரித்துப் பிடித்துக்கொண்டு மேலும் மெல்ல நடக்கிறேன். சற்றே தூரத்தில் மேம்பாலம் தெரிகிறது. அதன் மேல் எத்தனையோ வாகனங்கள்.. " டிர்ர்ர்ரிங்.. டிர்ர்ர்ரிங்.." சற்றே ஒதுங்குகிறேன். " ஏண்டா சுரேஷ்.. இத்தன ஸ்லோ…வேகமா ஒரு அழுத்து அழுத்துனா காலேஜ் வாசல்..? " ரெண்டு காலேஜ் பசங்க.. அவர்கள் சைக்கிளை வேகமாக மிதிக்க.. ஓ..எத்தனை வேகம்..? நான் மெல்ல மெல்ல நடக்கிறேன். ஒரு ஆட்டோ என்னருகில் மெதுவாக வருகிறது. அதை அலட்சியமாகப் பார்த்து விட்டு என் போக்கில் நடக்கிறேன். அதோ.. அதோ மேம்பாலம்.. இப்ப அது புதுசா மாறி இருக்கு. கிடீஸ் கார்மென்ட்ஸ்.. கிடீஸ் கார்னர்.. வோர்ல்ட் ஆஃப் சில்ட்ரன்ஸ் ட்ரஸ்ஸஸ்.. படித்துக்கொண்டே நடக்கிறேன். ஒரு கருப்பு அம்பாஸடர்.. என்னருகில் மெல்ல நிற்கிறது. " ஓ.. நீங்களா மிஸ்..? குட்மார்னிங் மிஸ்.. மே ஐ ஆஃபர் யூ ய லிஃப்ட்.. மிஸ்..?" எங்கள் காலேஜ் ஸ்டூடண்ட் ஒருவன்.. வார்த்தைகளில் என்ன இரக்கம் வேண்டிக் கிடக்கிறது ? என் கோபத்தை சன் கிளாஸ் மறைக்கிறது. தலையை வேண்டாம் என்பது போல ஆட்டி விட்டு நடையை அலட்சியமாகத் தொடர்கிறேன். அந்தக் கார் உறுமலுடன் வழுக்கிக்கொண்டு செல்கிறது. காற்று பலமாக வீசுகிறது. புடவை பறக்கிறது. குடையை மடக்கியபடி சிரமத்துடன் நடக்கிறேன். என் சிரமத்தை யாரும் அறிந்து கொள்ளக் கூடாது என்று வீம்பு வேறு… " ஒய்யாரக் கொண்டையாம்.. தாளம்பூவாம்.. உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.. அந்த மாதிரி.. பொடவ இன்னா.. கருப்புக் கண்ணாடி இன்னா..கொட இன்னா.. பேக்கு இன்னா..ஆ…னா…" தலையில் பெரிய கூடை நிறைய மாம்பழம்.. வாழைப்பழத்தோட.. “சிலுங்சிலுங்”குன்னு ஜதி தவறாம வேகமாய்ப் போற ரெண்டு பொம்பளங்க என்னைத் திரும்பித்திரும்பிப் பார்த்துப் பேசிக்கிட்டே நடக்கறதப் பாத்து நான் கொதியாய்க் கொதிக்கிறேன். கருப்புக் கண்ணாடி என் கண்ணீரை மறைத்துக் கொள்கிறது. நான் மெல்ல நடக்கிறேன். என்னைக் கடந்து என்னென்னவோ வண்டிகள் வேக வேகமாகப் போகின்றன. நான் மெது மெதுவாக.. இதோ கூட்டுறவு வங்கி. அங்கே பஸ்ஸுக்காக நிற்பவர்கள்.. பஸ்ஸிலிருந்து இறங்குபவர்கள்..இப்படி எல்லோரும் என்னை மட்டும் உற்று உற்றுப் பார்க்கிறார்கள்.. வேதனையாக இருக்கிறது. ஆத்திரம் உச்சத்திற்கு எகிறுகிறது. ஆனால் யாரிடம் காட்ட முடியும் ? தினமும் இதேதான்.. இப்படித்தான்.. ஆயா கூட ஒருநாள் சொன்னாள்.. " பேசாம ஒரு ஆட்டோ மாசத்துக்குன்னு பேசி போய்ட்டு வாயேன் கண்ணு.. ஏன் இப்படி அல்லாடுற..?" ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஏனென்றால் அப்புறம் நடப்பதே மறந்துடாதா ? இதோ எங்கள் கல்லூரி வந்து விட்டது. கல்லூரி வாசலில் ஒரு வெஸ்பா ஸ்கூட்டர் என் மேல் மோதுவது போல வந்து நின்றது. கோபமாகப் பார்த்தவன் என்னை நன்றாகப் பார்த்ததும் " ஓ..ஐம் ஸாரி.." என்று சொல்லி விட்டுத் திரும்பித்திரும்பி என்னைப் பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டு போனான். பற்றிக் கொண்டு வருகிறது எனக்கு.. ‘ஸாரியாம் ஸாரி.. யாருக்கு வேணும் இதெல்லாம்.. அதோ போகுது பாரு..TMC குப்பை லாரி.. அதுல கொண்டு போய்க்கொட்டு உன் ஸாரிய.’ கோபத்தில் உதடு கடிபட்டு உப்புக் கரிக்கிறது. ஆஃபீஸ் ரூம் போய் கையெழுத்துப் போட்டுவிட்டு நூலக அறையில் என் நாற்காலியில் வந்து அமரும் போது மணி 10.35. ’ அப்பாடா.. என் மனதைப் பற்றிக் கவலைப்படாமல் என் உடம்பு அந்த வசதியான நாற்காலியில் சொகுசாகச் சாய்ந்து கொள்கிறது. இனி மதியம் இரண்டு அல்லது இரண்டரை வரை சீட்டை விட்டு எழுந்திருக்க வேண்டாம். ’ அப்பா..’ ஒரு திருப்தி.. ! எழுந்து நின்றால் தானே எல்லோரும் என்னை பரிதாபமாகப் பார்க்க….கமெண்ட் அடிக்க ? யாரோ என்னைக் கூப்பிட்டா மாதிரி இருந்தது. " குட்மார்னிங் மேடம்..! " சட்டென நிமிர்ந்து பார்த்தேன். நிற்க முயற்சித்தேன். " ஊஹூம்.. வேணாம்..வேணாம்…..! அதே இரக்கம் நிறைந்த பார்வை.. ஆதரவான கனிவூட்டும் குரல்.. ஆனால் இவரிடம் மட்டும் என்னால் கோபிக்கவே முடியாது. மாறாக மரியாதை தான் புன்னகையாகும். ’ஓ..இவர ஒங்களுக்கு அறிமுகப்படுத்தலேல்ல.. இருங்க சொல்றேன். இவர்தான் செல்வி. சாருமதி. எங்கள் கல்லூரி முதல்வர். மிகவும் கனிவான அதேசமயம் கண்டிப்பான.. நல்ல மனங்கொண்ட.. தேர்ந்த அறிவாளி. தமிழகக் கல்லூரிகள் வட்டாரத்தில் இவர் பெயர் மிகவும் பெருமையுடன்..அதேசமயம் கண்ணியத்துடன் உச்சரிக்கப்படும். தன் சொந்த செலவில் நிறைய ஏழைப் பிள்ளைகளைப் படிக்க வைத்தவர்.. வைத்துக்கொண்டு இருப்பவர். அவரால் முன்னுக்கு வந்தவர்களில் நானும் ஒருத்தி. என்னால் எதுவுமே முடியாது என்று நான் சோர்ந்து போகும் போதெல்லாம் என்னைத் தேற்றி முட்டுக் கொடுத்தவர். இன்னிக்கு நான் M.Sc Lib.Sc . என்று பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளக் காரணமானவர்.’ " ஏம்மா.. நேத்து நானு ஒங்கிட்ட எடுத்து வைக்கச் சொன்ன சங்க இலக்கியம் பற்றிய நூல்கள்…" அவர் முடிக்கும் முன் " குட்மார்னிங் அம்மா.. இதோ நீங்க கேட்ட எல்லாப் புத்தகங்களும்… நேத்தே எடுத்து வச்சுட்டுத் தான் வீட்டுக்குப் போனேன். ஒங்க ரூமுக்குக் கொடுத்து விட்றால்லான்னு நெனச்சிட்ருந்தேன்.. நீங்களே வந்துட்டீங்க…" புத்தகங்களை அவர் பக்கம் நகர்த்திக் கொண்டே கூறினேன். " ஓ…வெரிகுட்.. வெரிகுட்.. ரூமுக்கே அனுப்ச்சுரும்மா.. ரவுண்ட்ஸ் வந்தேன்.. ஒன்னயப் பாத்ததும்.. ஒன்னையுப் பாத்து ரெண்டு.. மூணு நாளாச்சா.. அப்டியே ஒரு ஹலோ சொல்லீட்டுப் போலாமேன்னு லைப்ரரிக்குள்ள நொழஞ்சேன்… ஒடம்பெல்லாம் நல்லா இருக்குல்ல…? " கனிவோடு அவர் கேட்டபோது என் கண்களில் மளுக்கென்று கண்ணீர். அவர் அறியாதவாறு மறைத்துக் கொண்டு, " நல்லா இருக்கேம்மா.." என்று கை கூப்பினேன். " ஏய்.. என்ன இது..? " என்றவாறு என் கைகளைப் பிடித்துக் கொண்டவர், " எப்பவும் போல…எது வேணாலும் எங்கிட்டச் சொல்லு…என்ன..? " என்றவர், " அப்ப நா கெளம்பட்டா..ஆல் தி பெஸ்ட் " , என்றவர் " கட்டட வேல நடந்துட்டிருக்குல்ல…அதப் பாத்துட்டு அப்டியே போறேன்.. நீ என் ரூமுக்கு இதெல்லாத்தையும் கொடுத்து விட்று கமலாட்ட.." என்று என் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தார். இவர் மட்டும் நான் ஏதாவது கொஞ்சம் செஞ்சாலும் அதிகமாகப் பாராட்டுவார்… செய்யாட்டாக் கூடப் பாராட்டுவார். அதுதான்.. அந்தப் பாராட்டுக்கள் தான் என்னையும் இன்று வாழ்வில் உயர வைத்திருக்கிறது ஒரு தன்னம்பிக்கையுடன். ஆனா… ஆனா…மத்தவங்களுக்கு மட்டும் ஏன் இது தெரியமாட்டேங்குது.. நானும் எல்லோரையும் போலத்தான்.. ஒரு சாதாரண மனுஷீன்னு.. மனசு மறுபடியும் கொதிக்க ஆரம்பிக்கிறது. " ப்ளீஸ்.. எக்ஸ்க்யூஸ் மி மேடம்.." அந்தக் கருப்பு அம்பாஸடர் பையன். புத்தகங்களைச் சரி பார்த்து வாங்குகிறேன். சில நிமிடங்கள் கழித்து பக்கத்தில் இருக்கும் புத்தக அலமாரி ஒன்றின் பக்கம் பேச்சுக் குரல் கேட்கிறது. " டிஸேபிள்டா இருந்தாக் கூட ஸெலஃப் கான்ஃபிடன்ஸ் ரொம்ப ஜாஸ்தி இல்லே..? " " ஆமாம்…ஆமாம்…எனக்கு அவுங்களப் பாக்கும் போதெல்லாம் கஷ்டமா இருக்கும்.. ஏதாவது ஒதவி பண்ணாலான்னு போனா அவுங்க கோபமாய்டறாங்ங… திட்டுனாலும் பரவால்லேன்னு அவுங்க கஷ்டப்பட்டு நடந்து வர்ரதப் பாத்தேன்னா காரை அவுங்க பக்கத்துல கொண்டு நிறுத்துவேன்.. ஒரு மொற மொறச்சிட்டுப் போய்ருவாங்க.." எனக்குள் என்னென்ன உணர்ச்சிகளோ புரள்கின்றன. ’ டிஸேபிள்டாம்… ஸெலஃப் கான்ஃபிடன்ஸாம்.. ’ கஷ்டப்பட்டு எரிச்சலை அடக்கிக் கொள்கிறேன். மனம் பொங்கிப் பொங்கித் தணிகிறது. எல்லோரும்…எல்லோரும் ஒரே மாதிரி.. ’ ஒன்னப் பாத்தால் எல்லாத்துக்கும் ஒரே உணர்ச்சிதான்…’ என்னுள் எதுவோ ஒன்று கூச்சலிடத் தொடங்குகிறது. அது கேட்காதவண்ணம் காதுகளைப் பொத்திக்கொண்டு இப்படியும்.. அப்படியுமாய் அசைகிறேன். ’ பாவம் நீ…’ தூக்கிவாரிப் போட ஒரு உந்துதலுடன் இங்கும் அங்கும்.. சுற்றுமுற்றும் சிரமப்பட்டுப் பார்க்கிறேன். யாருமே இல்லை. வரிசை வரிசையாகப் புத்தக அலமாரிகள்தான்.. சாய்ந்தரம் என்றாலாவது நிறையப் பேர் வருவாங்க. மேலே ஓடும் மின்விசிறியின் சத்தம் கூடத் தெளிவாகக் கேட்கிறதே ! மற்றபடி வேற சத்தம் கூட இல்லே. பின் அந்தக் குரல் எங்கிருந்து வந்தது ? ’ என்ன யோசன.. நாந்தான் ஒனக்குள்ளேருந்து ஒன்னோட மனசுதான்.. பேசறேன்.. என்னயத் தெரியலே..? நீதான் எப்பப் பாத்தாலும் கோவத்தலயும்.. எரிச்சல்லயுமே இருக்கியே.. என்னய எங்க கவனிக்கிறே..? வெளில மட்டூம்ல..ஒனக்கு உள்ள இருக்குற எனக்குமே ஒம்மேல பரிதாபந்தான்.. எரக்கந்தான்.. ஒன்ன நெனச்சு நானும் ஒவ்வொரு நொடியும் அழுதுக்கிட்டுத்தான் இருக்கேன்.. இத இத்தன நாளா நீ புரிஞ்சுக்கலே.. ஏந்தெரியுமா ? மத்தவங்க ஒன்ன ‘ஐயோ பாவம்’னு பாக்கறது.. எரக்கப்படுறது ஒனக்குப் புடிக்கலே.. அதனால ஆத்திரமும்.. ஆங்காரமும் ஒன்னோட அறிவ மறைக்குது.. அதனால எல்லாத்தையும் வெறுக்கறே.. நீ ஏன் அப்டி நெனக்கணும்… கொஞ்சம் மாத்தி யோசிச்சுப்பாரேன்.. அவுங்களோட கழிவிரக்கங்களையே ஒனக்குப் படிக்கட்டுக்களா ஆக்கிக்கிட்டு.. அவுங்களவிட ஒசந்த எடத்துக்குப் போக நீயேன் முயற்சிக்கக் கூடாது ? அத விட்டுட்டு எல்லார்கிட்டேருந்தும் நீ ஏன் ஒதுங்கி.. ஒதுங்கிப் போறே..? ஒனக்குள்ள இருக்குற நானே ஒனக்காகப் பரிதாபப்பட்டுக்கிட்டு இருக்கறப்ப…மத்தவங்கள ஏன் குத்தமா நெனக்கிறே..? சகஜமாத்தான் இருந்து பாரேன்…எப்படி ஒன்னய எல்லாரும் நெனக்கிறாங்க… பாராட்டுறாங்கன்னு பாரேன்… நான் சொன்னதக் கொஞ்சம் யோசி…ஊனமா இருக்கறது ஒன்னோட மனசு.. எண்ணங்கள் தான்… ஒடம்பு இல்ல..’ நான் சட்டென்று நிமிர்ந்து உட்கார்கிறேன். என் உள்ளத்தின் ஒரு பகுதியே இப்படி நெனக்கும் போது.. நான்.. மத்தவங்கள… எனக்குள் ஏதோ ஒன்று பலமாகப் புரண்டு கொடுக்கிறது. காலங்காலமாக இருண்டு கிடந்த அறையில் யாரோ திடீரென ஆயிரம் வாட்ஸ் பல்பு ஒன்றை எரியவிட்டது போல.. எனக்குள் புன்னகைப் பூவொன்று பூக்கிறது.. மெதுவாக.. இத்தன காலம் இல்லாத ஒரு உணர்வு.. தன்னிரக்கம்..வீணான கற்பனை.. பிறத்தியாரை ஒரு சந்தேகத்தோடேயே பார்க்கும் பார்வை.. ஒரு வகையான அலட்சியம்… இவைகளிலிருந்து மாறுபட்டுக் காணும் ஒரு எண்ணப்படலம்…இத்தன நாளா நான் ஏன் இப்படி சிந்திக்காம இருந்தேன்..? ஓ..நானேதான் ஏதேதோ நெனச்சு… வாழ்க்கைய இது நாள் வர வீணாக்கியிருக்கேன்.. மத்தவங்க யாருமில்லே… அம்மாவுக்கு எப்போதும் வரும் இசிவு நோய் நான் பிறக்கும் நேரத்திலேயும் வந்துவிட்டதால்..பிரசவம் சிக்கலாகி.. என் கால்கள் முதலில் வெளியே வர.. நான் உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாம்.. அதன்பின் தான் எல்லோரைப் போல எனக்கு தோள்கள்.. வாய்.. தலை.. எல்லாம் இல்லை என்று தெரிந்திருக்கிறது. மருத்துவம் என்னிடம் தோற்றுப் போனது. பிறகு கொஞ்ச நாட்களில் ஒருவர் பின் ஒருவராக என் கவலையிலேயே அப்பாவும்.. அம்மாவும் ஆண்டவன்கிட்ட போய்விட…உறவினர்கள் கைவிட.. நான் பிறக்கும் முன்னேயே அம்மாவுக்கு உதவிக்காக வந்த ஆயாவே என்னைத் தன் சொந்தப் பிள்ளையாக நினைத்து வளர்க்க…ஊம்.. நல்லவேளை..அப்பா என் பெயருக்கு எழுதி வைத்திருந்த நிலமும்.. பணமும் ஆயாவைப் பொருளாதார ரீதியாகச் சிரமப்பட வைக்கவில்லை. மனசுக்குத்தான் எவ்வளவு வேகம் ? கண நேரத்தில் மனதில் எவ்வளவு ஓட்டம்.. பாவம்.. ஆயாவையும் இனிமே நல்லா.. அன்பா வச்சுக்கணும்.. ஆயாட்ட மட்டும்ல.. எல்லாத்துக்கிட்டேயுமே நல்லா நடந்துக்கணும்.. என் சிந்தனை ஓட்டத்தில் மாறுதல் தெரிகிறதா உங்களுக்கு ? மற்றவர்கள் சாதாரண மனிதாபமானத்தோட நினைக்கிறத… பாக்குறத…அப்படி அப்படியே எடுத்துக்கணும்.. அத வீணா மைக்ரோஸ்கோப் கண்களால ஆராயக் கூடாது. அதுனால நமக்கு வெறும் கோபந்தான் மிஞ்சுது. மத்தவங்களோ நம்மள கர்வின்னு நெனக்கிறாங்க.. அதுனால மேலும் நம்மளக் கிண்டல் பண்றாங்க.. இந்த மாதிரி நாம் மாறிட்டா நல்ல நட்புக் கூடக் கிடைக்கலாம். என் மனசுக்குள்ளே ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றிக் கொண்டு..வலக்கை வாட்ச்சில் பார்த்த போது மணி 11.45. புதுத் தெம்புடன் நிமிர்ந்து அமர்கிறேன். வராண்டாவில் ஏதோ சில காலடிகள் சப்திக்கின்றன. சாருமதி அம்மா யார்கிட்டேயோ ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு வருவது கேட்கிறது. " இந்தப் பெண் நல்ல திறமைசாலி. ஆனால் பிறக்கும் போதே ஏற்பட்ட சில சிக்கல்களினால் வலது பக்கத்தில் பெரிய பிரச்சினை..கால்களில் வலு ரொம்பக் கம்மி.. அதனால் இழுத்து இழுத்து மிகவும் மெல்லத்தான் நடக்க முடியும்.. அதோடு தோள்பட்டை எலும்பு.. வாய்.. இங்கெல்லாமும் நரம்புப் பிரச்னைகள். அதனால் பேச்சும் திக்கிதிக்கித்தான் வரும்… ஆனால் தைரியமான பெண்..நல்லா புத்திசாலி.." சாருமதி அம்மாவுடன் மூன்று வெளிநாட்டு மனிதர்கள். நான் சட்டென்று எழுந்து வணக்கம் சொன்னதும் அம்மா ஒரு கணம் திகைத்துப் போனார்கள். சில நொடிகள் என்னை உற்றுப் பார்த்தார்கள். உடனே இயல்பு நிலைக்கு வந்தும் விட்டார்கள். என் நல்ல மாற்றத்தை உணர்ந்து கொண்டு இருப்பார்களோ… நிச்சயம் ! என் அன்பு அம்மாவாயிற்றே! மணி இரண்டரை. எனக்கு வழக்கமான மதிய உணவு இடைவேளை. வழக்கம் போல் என் உணவு மேசையில் அட்டெண்டர் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போன தண்ணீர் கூஜாவை அலட்சியமாகப் பார்த்துவிட்டு ஸ்டாஃப் ரூமை நோக்கி மெல்ல நடக்கிறேன் எனது மாற்றத்தை மற்றவர்களுக்கும் உணர்த்த. ஆம் ! மெல்ல மெல்ல நடந்து.. மெல்ல மெல்லத் தொடர்ந்து என்னை எல்லோருக்கும் புரிய வைத்துவிடுவேன் சீக்கிரம். சாயங்காலம் அன்று திரும்பி வந்திருந்த புத்தகங்களை எல்லாம் சரி பார்த்துவிட்டு, மறுநாள் கொடுக்க வேண்டிய புத்தகங்களில் வைக்கப்பட்டிருந்த நூலக சீட்டுகளில் உதவியாளர் போட்டு வைத்திருந்த முத்திரையின் மேல் கையெழுத்தும் போட்டுவிட்டு எழுந்தேன். நூலகத்தைப் பூட்டிச் சாவியை என்னிடம் ஒப்படைத்த உதவியாளருக்குக் கை குலுக்கி நான் நன்றி சொன்ன போது அந்தப்பெண் திகைத்துப் போய்விட்டாள். மணி ஆறரை ஆகப் போகிறது. நான் சிரித்துக்கொண்டே மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். ஆனால் எனக்குள் எந்த சோர்வும் இல்லை. மாறாக ஒரு உற்சாகம்..! மெல்ல மெல்ல நடந்து கல்லூரி வாசல் நோக்கி நடக்கிறேன். “பாம்..பாம்..” கீங்.. கீங்.." டிர்ர்ர்ரிங்.. டிர்ர்ர்ரிங்…பலவிதமான வண்டிகளின் பலவிதமான ஒலி எழுப்பும் கருவிகள். எப்போதும் எரிச்சல் அடையும் நான் இன்று ரசிக்கிறேன். கல்லூரி வாசல் அருகே வந்தபோது அதே கறுப்பு அம்பாஸடர் என்னருகில் தயங்கித்தயங்கி நிற்கிறது. " மேடம்.. இஃப் யூ டோண்ட் மைண்ட்.. கார்ல ஏறுங்க.. ஒங்கள நான் கொண்டு வீட்ல விடுறேன்.." அதே பையன்.. அதே இரக்கமான பார்வை…பதவிசான குரல்.. நான் ஆத்திரப்படவில்லை. மாறாக " ஓ…ஷ்யூர்.. தேங்க்யூ.." என்று வாய் கோண நான் சொன்னதும்.. அந்தப் பையன் ஒரு நொடி திகைத்து…சட்டென்று கீழிறங்கி காரின் பின் கதவைத் திறந்து..என் கைப்பையைத் தான் வாங்கிக்கொண்டு.. நான் காரில் மெதுவாக ஏற உதவி செய்து… நான் திகைத்துப் போகிறேன் என்னுள்…’ ஓ…மனிதர்கள் அன்பானவர்கள்..’ காரில் ஏற்கனவே இருந்த அவனின் நண்பர்கள் என்னை நம்ப முடியாமல் பார்க்க.. அவர்களுக்கு நான் குடீவினிங் சொன்ன போது அவர்கள் வாயடைத்து உட்கார்ந்து இருந்தார்கள். எனக்குள் சிரித்துக் கொள்கிறேன். கார் ஜெயந்தி ஸ்டாப் தாண்டியதும் உள்ளே திரும்ப முயற்சித்த போது " ஓ..தேங்க்யூ வெரி வெரி மச்…காரை நிறுத்துப்பா.. நான் இங்கியே எறங்கிக்கிறேன்… ரொம்ப நன்றிப்பா.. பை பை பிள்ளைகளா.." என்று நான் திக்கித்திணறி பேசி முடித்த போது அனைவரும் வாயடைத்துப் போயிருந்தனர். காரில் ஏற உதவி செய்தது போலவே அந்தப்பையன் இறங்கவும் உதவினான். " ஸோ மெனி தேங்ஸ்…" என் வலது கையைக் கொஞ்சம் தூக்கி ஆட்டி என் மகிழ்ச்சியை வெளிக்காட்டி நான் விடை பெற்ற போது காரில் இருந்தவர்கள் சிலைகளாய் இருந்தனர். நான் சந்தோஷம் பொங்கச் சிரித்தபடி மெல்ல மெல்ல நடக்கிறேன். வலக்கை சற்றே வலிக்கிறது. வலக்கையைச் சிரமப்பட்டுத் தூக்கி அந்தக் கையில் பிடித்துக் கொள்கிறேன் கைப்பையை. ஆனால் அந்தக் கை ஒத்துழைக்க மறுக்கிறது. ஆனால் மனம் மலர்கிறது புதுத் தெளிவில். அதோ பால்கனியில் ஆயா நிற்கிறாள். என்னைப் பார்த்ததும் அவசர அவசரமாக இறங்கி ஒடி வருகிறாள் என் பெரிய கைப்பையை வாங்க. ஆனால் இன்று நான் எரிந்து விழுந்து கொண்டே அதை அவளிடம் கொடுக்க மாட்டேன் என்று அவளுக்குத் தெரியாது. முகமலர்ச்சியுடன் வலக்கையில் கைப்பையை நான் பிடித்துக் கொண்டு வருவதை வியந்து போய்ப் பார்த்தபடி திகைத்து நிற்கிறாள். இவர்களுடைய திகைப்பு… வியப்பு எல்லாத்தையும் பார்க்கும் போது எனக்கு ஒன்று நன்றாகப் புரிகிறது. ‘இத்தனை நாட்களாக நான் கடுகடுவென்று இருந்திருக்கிறேன்.’ ஆனால் இவர்களுக்கெல்லாம் இப்போது புரியாது.. அந்தப் பழைய " நான் " இன்று காலை 11.45க்கு இறந்து போய்விட்டாள்…இப்போது இருப்பது புதிய " நான் " என்று ! 20-03-1972 To 21-03-1972 ------------------------------------------------------------------------ காதல் என்னும் கானல் நீர் " ஓ..நீங்களா..? ஹலோ.. சுகமா இருக்கீங்களா..? " குரலின் தொனியிலேயே தெற்கு தமிழின் மணம் வீசியது. வாங்கிய பழங்களைக் கூடையில் கவனமாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தவள் சட்டென்று நிமிர்ந்து நோக்கினேன். ‘இவனா…?’ " ஓ..ஹலோ..நல்லாருக்கீங்களா..? " சும்மா வாய் வார்த்தைக்காகக் கேட்டேன். என் மனதில் என்னென்னவோ கேள்விகள். " சும்மாதான் இருக்கீங்களா….? ஜாபுக்கு ஏதும் ட்ரைப் பண்ணலியா..? " " நோ நெஸஸிட்டி… அக்கால்லாம் நல்லா இருக்காங்களா….? கேட்டதாச் சொல்லுங்க… அப்ப நான் வரட்டுமா…?" அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு கிளம்பினேன். அந்த NSB சாலை வெள்ளிக்கிழமைக் கூட்டத்தில் பிதுங்கிக் கொண்டிருந்தது. சிரமத்துடன் நடந்து கொண்டிருந்த எனக்குக் கல்லூரி நாட்கள் நினைவில் அலைமோதத் தொடங்கின. என் தோழி சங்கரியின் நீர் நிறைந்த கண்களும் மனத்திரையில் தோன்றின. ’ பாவம்.. எப்படி இருக்காளோ..? அவள்ட்டேருந்து லெட்டர் வந்தே மூணு.. நாலு மாசமிருக்குமே…’ உறையூர் பஸ் ஸ்டாப்பில் எக்கச்சக்கமான கூட்டம். இந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் என் நினைவு மறுபடியும் பின்னோக்கி ஓடியது. இதேபோல் தான் தினமும் மாலை ஐந்தரை மணி புகை வண்டிக்கும் திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் கூட்டம் நெறிபுறியாய் இருக்கும். ஈரோடு வரை செல்லும் அந்த ரயிலில் பயணிப்போரில் 70 சதம் மாணவ மாணவியர் தான். தினமும் ஒரேபோல் கூட்டத்தில் பிரயாணப்பட்டுப் பழகி விட்ட அவர்களுக்குக் கூட்டம் இல்லாமல் இருந்தால் தான் என்னவோபோல் இருக்கும். நானும் என் கல்லூரிப் படிப்பை அந்த ரயில் வாழ்க்கையில் தான் முடித்தேன். அந்த ரயில் வாழ்க்கையில் அறிமுகம் ஆனவள் தான் சங்கரி. குளித்தலையை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் ஒரு செல்வாக்கான மிராஸ்தாரின் நாலு செல்வங்களில் மூத்தவள். ஒல்லியான உடல் வாகு. சதா குறும்பு நடனமாடும் பெரிய கண்கள். ஒரு மாதிரியாக வளைந்த மூக்கு. சற்றே வெளித் தெரியும் பற்கள். அமைதியான குணம். இவற்றின் வார்ப்புத்தான் சங்கரி. பழகப்பழக என்னிடம் அதிகமாக ஒட்டிக் கொண்டாள். இனிமையாக மகிழ்ச்சி.. கேலி.. கிண்டல் என்று கலகலப்பாக ஓட்டிய நாட்கள் வெகுவிரைவில் மயான அமைதியை அடைந்துவிடும் என்று நாங்கள் ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. சீறிக்கொண்டு வந்த பஸ்ஸில் நானும் எப்படியோ ஏறிவிட்டேன். கூட்டத்தில் யாரோ என் கையை அழுத்திப் பிடிப்பதை உணர்ந்து திரும்பினேன். ராதை… சங்கரியின் தங்கை.அவளை இங்கு எதிர்பார்க்காத நான் வியப்பில் விரிந்தேன். " ராதை…" அத்தனை கூட்டத்திலும் திரும்பி அவள் கையைப் பிடித்துக் கொண்டேன். அவள் முகம் எதற்கோ தயங்குவது தெரிந்தது. வற்புறுத்தி எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தேன். எங்கள் வீட்டில் அப்போது யாருமில்லை. ஒரு விசேஷத்திற்காக வெளியூர் போயிருந்தனர். அந்தத் தனிமை ராதைக்கு வேண்டியிருந்ததை நான் உணர்ந்து கொண்டேன். உள்ளே நுழைந்ததுமே இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்ததைக் கொட்டினாற்போல அவள் என்னைப் பிடித்துக்கொண்டு ஓவென அழ ஆரம்பித்து விட்டாள். எனக்குத் " திக்" கென்றிருந்தது. " என்னம்மா… ராதை…என்ன நடந்தது…? " பதறினேன். " அக்கா… அக்…கா…சங்கரியும்.. சாமுவேலும்… மறுபடியும்.. பழையபடி…" மீண்டும் அழ ஆரம்பித்தாள். எனக்குப் புரிந்தது. " ராதை..நான் இப்ப… சாயங்காலம் சாமுவேலத் தற்செயலாப் பாத்தேன்.." " ஆமாக்கா… நானுந்தான் பாக்குறேனே…ஆனா அக்கா…எனக்கு என்னவோ… ரொம்பப் பயம்ம்மா இருக்குக்கா.." எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை… புரியவுமில்லை. அவள் நிலைமை பரிதாபமானது. தமைக்காகப் பலமுனைத் தாக்குதலுக்கு ஆளானவள் அவள். தெரிந்த கல்லூரித் தோழிகளிடம் வசவு.. வீட்டிலோ தினந்தோறும் ஒரு நாடகம். வெளியிலும் , ரயிலில் வரும்போதும் சங்கரிக்காக பலப்பல வேடங்கள். இப்படிப்பட்ட சூழலில் அவள் தன் மனக்கவலையை வெளிக்காட்டிக் குமுற என்னை மட்டும் தேர்ந்தெடுத்தது எனக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில் எனக்கும் அவளுக்கும் பல விஷயங்களில் கருத்தொற்றுமை இருந்தாலும், ஜாதி.. மதம் போன்றவற்றில் கடுமையான வேறுபாடுகள் இருந்தன. தான் சார்ந்துள்ள ஜாதி ஆட்களைத் தவிர வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களிடமிருந்து ஒரு வாய்த் தண்ணீர் கூட வாங்கிக் குடிக்க மாட்டாள் அவள். அப்படி இருந்தும் அவள் ஜாதி அல்லாத என்னிடம் மட்டும் அவள் இயல்பாக நெருங்கி உறவாடியது எனக்கு வியப்பாகவே இருந்து வந்தது. மேலும் அவளுக்கும், சங்கரிக்கும் எந்த விஷயத்திலும் சிறிதும் ஒத்து வராது. இருவரும் எப்படி ஒரே வீட்டில் இருந்து வருகிறார்கள் என்று எண்ணும் அளவுக்கு அவர்களின் " பிடிப்பு " இருக்கும். அதேபோல் சங்கரியும் என்னை ஏதோ பெரிய இவள் என்று நினைத்துக் கொண்டு என்னிடம் வெகு பிரியமாய் இருப்பாள். அவள் சந்திக்கும் பல பிரச்னைகளுக்குத் தீர்வுகளை என்னிடம் பேசியதன் மூலம் கண்டிருப்பதாக அவள் கூறி இருக்கிறாள். சுவாரஸ்யமான, தன்னிச்சையான, கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரம் நிறைந்த அந்த நாட்களில் ஒருநாள்… ஏதோ என்ஜினில் கோளாறு காரணமாகப் பாதையை மறித்துக் கொண்டு விட்ட எதிர் திசையில் வந்த ஒரு ரயில்… அன்று கட்டாயமாகக் கல்லூரிக்குப் போக வேண்டிய நாங்கள் ஒரு பத்து பேர் தவித்த தவிப்பு… முன்பின் அறிமுகம் இல்லாத அந்த ஊரில் அதே ரயிலில் தினமும் வரும் சாமுவேல் உதவி செய்ய முன் வந்து பஸ்ஸில் எங்களை ஏற்றி விட்டது… அதன்பின் அந்த அறிமுகத்தை வைத்துக்கொண்டு பலமுறை எங்களுடன் பேச முற்பட்டது எல்லாம் நெஞ்சில் நிழலாடியது. இறுதியில் ஒருநாள், சங்கரி தயங்கித்தயங்கி என்னிடம் கூறினாள். " சாமுவேலும்… நானும்… ஒருவரை ஒருவர்…." எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நான் இதைத் துளியும் எதிர்பார்க்கவில்லை. ஏதோ எல்லாம் சாதரணமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று நான் நினைத்தது எவ்வளவு பெரிய தப்பு ? அந்தக்கணத்தில் எனக்கு விளங்கியது, ராதை ஏன் இப்போதெல்லாம் திடீர் திடீரெனத் தத்துவம் பேச ஆரம்பித்து விடுகிறாள் என்று… சங்கரி ஏன் அவ்வப்போது தனக்குள்ளேயே ஒரு மௌனத்தில் ஆழ்ந்து விடுகிறாள் என்று… அவள் கலகலப்பெல்லாம் எங்கே போயிற்று ? நான் விழித்துக் கொண்டேன்.. ஆனால் அதற்குள் விஷயம் வலுப்பட்டுப் போயிருந்தது. நான் என்ன செய்ய முடியும் ? சாமுவேலைப் பற்றி எனக்கு ஓரளவு தெரிந்திருந்தது. அவன் ஒரு கல்லூரியில் ப்யூனாக வேலை பார்க்கிறான். மாத வரும்படி அவன் ரயில் பாஸுக்கே பாதி போய்விடுமே ! இதைவிட அவன் ஒரு கிறித்துவன். ஆனால் சங்கரி ? பரம்பரை பரம்பரையாக வேதங்கள்.. உபநிடதங்கள்.. இவற்றை அப்பியாசிக்கும் குடும்பத்தில் பிறந்தவள். ஏதேனும் கல்யாணம் அவர்கள் வீட்டில் என்றால் முகூர்த்த நாள் தவிர நாலைந்து நாட்களுக்கு வேத பாராயணம் நடக்கும் அந்த வீட்டுப் பெண்ணை…ஒரு ஆங்கில, ஹிந்தி சினிமா விடாமல் பார்க்கும் இந்த சாமுவேல் மணக்க முடியுமா ? மேலும் சங்கரி வீட்டின் தோப்பும் துரவும்… மாடும் கன்றும்…பணமும் நகையும்…ஒவ்வொரு பைசாவுக்கும் கூட்டல் கழித்தல் போட வேண்டியிருக்கும் இவனின் பொருளாதார நிலைக்கு ஒத்து வருமா ? காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள்.. ஆனால் இடம், பொருள், ஏவல் எதுவுமே கிடையாது என்பதை அன்று நான் முதன்முதலாகப் பிரத்தியட்சமாகக் கண்டு கொண்டேன். " நீ என்ன சொல்றே…" என்னைக் கேட்கிறாள். எனக்குத் தர்மசங்கடமாக இருந்தது. சற்று நேரம் வெறித்துப் போயிருந்தேன். " நா…நான்…நான் என்ன சொல்லப்போறேன்..ஒனக்குத் தெரியாததையா சொல்லப்போறேன் ? நீ ஒண்ணும் விவரம் தெரியாத சின்னக் குழந்தை இல்லையே..நல்லா யோசிச்சியா… இது ஒன்னோட முடிஞ்சு போற விஷயம் இல்லியே…ஒங்க குடும்பத்தோட… குறிப்பா… ஒனக்குப் பின்னால நிக்கிற தங்கைகளோட வாழ்க்கையையும் கூடப் பாதிக்கிற விஷயம் இல்லியா..? சங்கரி… ஒங்க குடும்பக் கௌரவத்தக் காக்குற பொறுப்பு மூத்த பெண்ணான ஒனக்கு ஜாஸ்தி.. இது ஒனக்கு ஒண்ணும் தெரியாததில்லியே ? ஒன்ன விடவா எனக்கு அதில் அக்கறை அதிகம் ? " தைரியத்துடன் சொல்லி விட்டேன். சங்கரியின் கண்களில் கோபமும், ஆத்திரமும் கனிந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் நான் சங்கடத்துடன் தலையைக் குனிந்து கொண்டு விட்டேன். தன் கையை என் கையிலிருந்து பிரித்துக் கொண்டு விட்டாள். அந்தப் பெட்டியில் இருந்த பிறர் காதுகளில் கேட்கா வண்ணம் மெல்லிய.. ஆனால் அழுத்தமான குரலில் சொன்னாள். " நீயும் மத்தவங்க மாறித்தான் இருக்கே…குலம்.. கோத்திரம்னுட்டு ..எங்க வீட்லேயே இருக்கே ஒரு சைத்தான்… அது மாதிரி..அப்டீன்னா நீ பேசுற ஒன்றே குலத்துக்கும்.. ஒருவனே தேவனுக்கும் என்ன அர்த்தம்…? நீயாவது எங்களோட உண்மையான அன்பைப் புரிஞ்சுக்குவேன்னு நெனச்சேன்…இப்பதான் தெரியுது நீயும் ஒரு வேஷதாரின்னு…" சட்டென்று தலையசைத்தேன். " இல்லே சங்கரி… நீ சொல்றது தப்பு…ஒங்க அன்பு உண்மையானதுன்னா ஆண்டவன் துணை இருப்பான். ஆனா சங்கரி.. அது வெறும் இள வயதுக்கே உரிய இனக்கவர்ச்சிய அடிப்படையாக் கொண்டதூன்னா… யோசி… அதோட சங்கரி.. சாமுவேல் நல்ல குட்புக்ஸ்ல இருக்குற ஆள் மாதிரிப் படலியே.. மேலும் இது ஒன்னோடப் பர்சனல் மேட்டர்… நா.. அதுல…" சட்டென்று இடைமறித்தாள். " ஒனக்குத் தெரியாத “பர்ஸனல்” எதுவும் எங்கிட்ட இல்லே…" அந்தக் குரலில் ஒலித்த உறவும், உறுதியும் என்னை அவளைக் கூர்ந்து பார்க்கச் செய்தன. கலங்கிய கண்களுடன் ஏதோ ஒரு ஆதரவைத் தேடுவதைப் போல என் தோளில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள். நான் வேதனையும்… சிந்தனையுமாய் உட்கார்ந்திருந்தேன். சங்கரியின் இந்த விஷயம் எங்கள் தோழிகள் ஒவ்வொருவருக்கும் மெல்ல மெல்லத் தெரிய ஆரம்பித்தது. அதன்பின் ஏதோ ஒரு நெருடல் ஒவ்வொருத்தருள்ளும் இருப்பதை எல்லோருமே உணர்ந்தோம். மிக மிக ஜாக்கிரதையாகவே எல்லோரும் பேசிக் கொண்டோம். எங்கே சற்றுப் பலமாகக் காற்றடித்தால் மேலுள்ள சாம்பல் பறந்து அடியிலுள்ள நெருப்புக் கங்குகள் கண்ணில் பட்டு விடுமோ என்று பயப்படுவது போலேயே எல்லோரும் பழகிக் கொண்டிருந்தோம். ஒருநாள் மாலை. தெரிய வேண்டாதவர்களுக்கும்… கூடாதவர்களுக்கும் கூட அந்த விஷயம் எட்டிவிட…அவர்களெல்லாம் ஏதோ கொள்ளைக் கூட்டத்தைப் பார்ப்பது போல பார்த்தார்கள். வீட்டுக்குப் போகத் தயாராக இருந்த ஒருவர் முகத்திலும் நிம்மதி இல்லை. சற்றே எட்டி நின்றிருந்த என்னிடம் ஒருத்தி கேட்டாள். “ஏண்டி… நீயாவது இத வளரவிடாமத் தடுத்துருக்கக் கூடாதா..” இவள் ஏதோ நளாயினி.. அனுசூயா போலக் கேட்கிறாள். நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். பிறகு பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காகச் சொன்னேன். " அதெப்படி நீ என்னக் கேக்குற.. எனக்கே இப்பக் கொஞ்ச நாள் முந்திதான் தெரியும்…அதுக்குள்ள அவுங்க ஒரு முடிவுக்கே வந்தா மாதிரித் தெரியுது… அதோட இது அவளோடத் தனிப்பட்ட விஷயம்.. நானெப்படித் தலையிட முடியும்…?" சற்றே தள்ளி தலைகுனிந்து யோசனையில் ஆழ்ந்திருந்த சங்கரியைப் பார்த்துக் கொண்டே கேட்டேன். " இருந்தாலும் நீ சொன்னா அவ கேப்பாளே…ஒங்கிட்ட அவளுக்கு அவ்ளோ பிடிப்பாச்சே…" மேலே அவளைப் பேசவிடாமல் நான் ஆத்திரத்துடன் குறுக்கிட்டேன். " ஏன் எல்லோரும் அவ என்னமோ செய்யக்கூடாதத செஞ்சுட்ட மாறியும்… நாமெல்லாம் என்னமோ தூய்மையா இருக்குறாப்புலயும் நெனச்சுக்கிட்டே போறீங்க…ஒங்க நெஞ்சுல கைய வச்சு சொல்லுங்க…ஒரு கணம் கூட நீங்க யாரையும் நெனச்சது கெடயாதா…சங்கரி அதுல ஒரு முடிவோட இருக்கா…அவ்ளோதானே…" " ஆனாக்கூட இதெல்லாம் நாம டிஸைட் பண்ற மேட்டரா..? பெரியவங்களாப் பாத்து செய்ய வேண்டிய விஷயம் இல்லே…" " இங்க தான் நாம மாறுபடறோம் அவட்டேருந்து… நீ சொல்றாப்புல பெரியவங்களாப் பாத்து செய்றது நல்லது தான்… இன்னும் சொல்லப் போனா அது நமக்கு ஸேஃப்டியுங்கூட… ஏன்னா நாளக்கி நல்லதப்போல ஒரு பொல்லாததுன்னா பழிய அவுங்க மேல ஈசியாத் தூக்கிப் போட்றலாம்… நீங்க தானே பாத்துப்பாத்து செஞ்சீங்கன்னு.. ஆனா சங்கரி மாதிரி நடக்குறவங்க இந்த விஷயத்துல அநேகமா அவுங்களே அதுக்குங்கூடத் தயாராத்தான் இருப்பாங்கன்னு நான் நெனக்கிறேன்….அதோட அவ ஒண்ணும் தப்பா நடந்துக்கிடலயே.. மனசார தனக்கு ஒரு துணைவனத் தேர்ந்தெடுத்திட்டிருக்கா… கொஞ்சம் கொஞ்சமா அவனப் பத்தியும் தெரிஞ்சிட்டிருக்கா…அவளுக்கு அது ஒத்து வர்ரதுனாலதான இத்தனை எதிர்ப்பையும்…வசவையும் வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கா…மேலும் இந்தக் காதல் ஒண்ணும் புது விஷயமில்லியே.நாம படிச்ச…படிக்கிற.. அகநானூறு… புறநானூறு.. ஏன்.. அதுக்கும் முந்தின புராண காலத்துலேந்து நடந்து வர்ற சங்கதிதானே…" என் ஆவேசம் எனக்கே புதிராயிருந்தது. எல்லோரும் அப்படி அப்படியே நிற்கிறார்கள். கண்ணீர் வழியும் முகத்தோடு நன்றி கூறுவது போல் சங்கரி என்னை நிமிர்ந்து பார்க்கிறாள். தணல் மேல் நடப்பது போல் நான் மெதுவாக நடக்க ஆரம்பிக்க, என் தோழிகள் மெல்ல மெல்ல என்னைத் தொடர்ந்தனர். ஏதோ மௌனமாக துக்க ஊர்வலம் போவது போல அனைவரும் நடந்தோம். வாணப்பட்டறை அம்மன் கோயில் தெருவில் இருந்த இரண்டு தோழிகள் தலையை மட்டும் அசைத்து விடை பெற்றனர். வாயைத் திறக்க அத்தனை அச்சம். எங்கள் கலகலப்புக்கு இது முற்றிலும் விரோதம். இதற்கெல்லாம் மூல காரணமான சங்கரியைப் பார்த்தேன். பாதங்களை மட்டுமே பார்த்த வண்ணம் எங்களைவிட்டு சற்று தள்ளியே நடந்து கொண்டிருந்தாள். நான் அவளருகில் சென்று “சங்கரி..”என்று மெல்ல அவள் தோளைத் தொட்டேன். சட்டென்று என்னை நிமிர்ந்து பார்த்தவள் அழுகையை அடக்க வெகு பாடுபட்டாள். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. சிறிது தூரம் மௌனமாகவே நடந்தேன். பின் மெல்லப் பேசினேன். " நான் என்னவோ அவ்ளோ வேகமாப் பேசிட்டனே தவிர என் நிலை எனக்கே புரியலே…ஏன்னா நாம எல்லாருமே அவுங்கள மாதிரி குடும்பத்துல… சூழ்நிலைல வளக்கப்பட்டவங்க தான்… சாதரணமா ஒனக்கு இருக்குற சுதந்திரம் கூட எனக்கெல்லாம் கெடயாது…ஒரு ஃபிரண்டு வீட்டுக்குப் போணும்னாக் கூட ஆயிரம் தயக்கத்துக்கப்புறந்தான் கேக்க முடியும்…அதுக்கும் முக்காவாசி பர்மிஷன் கெடைக்காது…தங்களோட வளர்ப்பு மேல அவுங்களுக்கு அவ்ளோ “நம்பிக்கை” ..அவுங்கல்லாம் கதை..சினிமால வர்ர காதலர்களைப் பாராட்டுவாங்க… வாழ்த்துவாங்க.. அந்தக் கதாபாத்திரங்களுக்கு ஏதாவது தடங்கல் ஏற்பட்டுதுன்னா மனம் உருகிப் போவாங்க…அந்தத் தடைக்குக் காரணமானவங்களத் திட்டக் கூட செய்வாங்க…ஆனாப் பிராக்டிக்கலாப் பாரு… நாம சாதாரணமாக் கொஞ்சம் வேடிக்கை பாக்கலாமேன்னு வாசலுக்கு வந்தாக் கூட ஆயிரம் சந்தேகத்தோட நம்மப் பாப்பாங்க.. பொதுவா எல்லார் வீட்லயும் நடக்கறதத்தான் சொல்றேன். கற்பனைய ஏத்துக்க முடியற அவுங்களால..நெஜத்த ஏத்துக்க முடியறதுல்ல..ப்ளண்ட்டா (blunta) மறுக்குறாங்க… ஏசுறாங்க..ஆனா இந்த மாறில்லாம் கட்டுப்படுத்துனா எங்க போயி நிக்கும்னு அவுங்க கற்பனை பண்ண முடியாத அளவுக்கு அங்கங்கே நிகழ்ச்சிகள் நடந்துட்டிருக்கு… நாமதான் பேப்பர்ல தெனம் பாக்குறமே..அளவுக்கு மீறிக் கண்டிஷன் போட்டா எங்கியாவது ஒரு சின்ன லூப்ஹோல் கெடச்சாக் கூட மனசு அது வழியா நழுவிடுது. ஆனா சங்கரி அவுங்களக் கம்ப்ளீட்டா எதுக்கறதுக்கும் தைரியம் போதல்லே…ஒரு சட்டத்துணி எடுக்கணூம்னாக்கூட அவுங்க சொல்படி தான் கலரக் கூட சூஸ் பண்ணணூன்னு வீட்டுப் பெரியவங்க நெனக்கிறாங்க.. அதுனால தான் ராஜி.. கலால்லாம் ஒன்னோட விஷயத்துல அவ்ளோ பயப்படுறாங்க…இதெல்லாம் ஒனக்குத் தெரியாததா என்ன..? அதுனால யாரயும் தயவுசெஞ்சு தப்பாப் புரிஞ்சுக்காத…இத்தனைக்கும் மேல நான் ஒண்ணு சொல்றேன்… போற போக்கப்பாத்தா நாங்கூட ஒனக்கு எந்த அளவுக்கு ஒதவ முடியும்னு சொல்ல முடியல…பட் ஒண்ணு மட்டும் நெனப்பு வச்சுக்கோ…ஒன்னோட விருப்பம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உங்க குடும்ப கௌரவம்.. ஒங்க அன்பு உண்மையானதுன்னா அந்த ஆண்டவன் ஒங்களுக்கு ஒதவுவான்…என்னோட ப்ரேயர்ஸ் எப்பவும் ஒங்கூட இருக்கும்…" இதுக்கும் மேலே என்ன பேசுவது என்று புரியவில்லை. என் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சங்கரி மௌனமாகவே நடந்து வந்தாள். அதன்பின் எத்தனையோ மாற்றங்கள் நடந்து விட்டன என் வாழ்வில். மூன்று வருட கால ஓட்டத்தில் என் வாழ்க்கை முறை மாறி விட்டது. என்னைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்கது என்று ஏதுமில்லை. ஏனெனில் சேணம் பூட்டிய குதிரையாய்க், காட்டப்பட்ட ஒரே பாதையில் மௌனமாகச் செல்லப் பழக்கப்படுத்தப்பட்டு விட்டவள் நான். ஆனால் எனக்கும் மீறிய சில ஆத்திரங்கள் அவ்வப்போது வெளிப்படுவது உண்டு. அநேகமாக சங்கரியிடமிருந்து கடிதம் வரும் போதெல்லாம்.. என்னை மறந்து சொல்லத் தெரியாத உணர்ச்சியில் நான் தவிப்பதுண்டு. ஆனால் என்னால் என்ன செய்து விட முடியும்.. அவளுக்காக ஆண்டவனை வேண்டுவதைத் தவிர…? ராதையின் விசும்பல் அடங்க வெகு நேரமாயிற்று. நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். " அக்கா…சங்கரி மாறவே இல்லக்கா…வர்ர வரனெல்லாம் கூட ஏதேதோ காரணத்துனாலத் தட்டித்தட்டிப் போய்டுது…இந்த லட்சணத்துல அவ என்னடான்னா…எனக்குக் கல்யாணமே வேண்டாம்… ராதைக்கு முடிங்கங்குறா.. ஆனா நாளாக நாளாக அவ விஷயம் ஒத்தொத்தொருக்கா தெரியத்தெரிய ஊர்ல இருக்கறவங்க என்னையும் ஒரு மாறியாப் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க… ஏன்க்கா.. நீங்களே சொல்லுங்க… செய்யாத குத்தத்துக்காக நான் ஏன்க்கா தண்டனை அனுபவிக்கணும் சொல்லுங்க..? எல்லாம் யாரால…அந்த சங்கரியாலதான…? அவ என்னடான்னா அவ கஷ்டத்துக்கெல்லாம் நாந்தான் காரணம்னு என்ன வெஷமா வெறுக்குறா…வீட்ல…ஊர்ல இருக்குறவங்க என்னடான்னா அவ போக்குக்கு நானும் ஒடந்தைன்னு நெனச்சு என்னையும் ஒரு மாறிப் பாக்குறாங்க…இத்தனைக்கும் நடுவுல எனக்கும் ஒரு மனசு இருக்கும்னு யாருமே நெனக்கவே மாட்டேங்குறாங்க.. சொல்லுங்கக்கா.. நான் ஏன் உயிரோட இருக்கணும்…?" பதறிப்போய் அவள் வாயை மூடினேன். கதறிய அந்தச் சின்னப் பெண்ணை என்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன். " ராதை.. இது என்னம்மா பேச்சு..?" " அ…க்…கா " மீண்டும் அழ ஆரம்பித்து விட்டாள். " சின்னவ உஷா கூட இப்பல்லாம் என் மேல சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டாக்கா… ஹும்ம்ம்.. அவ கவல…அவளுக்கு…" " அது சரி.. இப்ப.. இங்க எங்க வந்தே…" " அந்தப் பாழாப்போன ஊரவிட்டுக் கொஞ்ச நாள் இருக்கலாமேன்னு…இங்க.. எங்க பெரியம்மா வீட்டுக்குப் போலாமேன்னு இன்னிக்குத்தான் கெளம்பி வந்தேன்க்கா…" எனக்கு அவளை எப்படித் தேற்றுவது என்று தெரியவில்லை. அவள் சொல்வதும் ஞாயந்தானே ? அதே நேரத்தில் சங்கரி மேலே எனக்கு ஆத்திரம் ஆடி வெள்ளமாக..நொப்பும் நுரையுமாகப் பொங்கி வந்தது. சங்கரி அவளுக்கு மட்டும் சங்கடத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லையே.. அவள் காலைச் சுற்றிக்கொண்டு இருக்கிற அவப்பெயர் என்னும் பாம்பு.. தன் வாய் வழியே நச்சுக்காற்றை ராதை மேலும், தன் கூரிய வாலின் தாக்குதலை அந்தக் குடும்பத்தின் ஒவ்வொருத்தர் மேலும் அல்லவா சுழற்றிக் கொண்டு இருக்கிறது ? ஆனால் அதே சமயத்தில் சங்கரியின் நிலைமை ? இதனால் எல்லாம் அவளுடைய மெய்யான காதல் இல்லேன்னு ஆகிவிடுமா ? அப்படி அது வயதினால் வரும் வெறும் உணர்ச்சிகளின் ஆர்ப்பாட்டம் என்றால் இத்தனை கடுமையான புயல்களுக்கு ஈடுகொடுத்து நின்று கொண்டு இருக்குமா ? ராதையின் பேச்சிலிருந்து சங்கரியும் , சாமுவேலும் தங்கள் நிலையில் இருந்து ஒரு சிறிதும் வேறுபடவேயில்லை என்று தெரிகிறதே ? அப்படியானால்.. பாவம் சங்கரி.. வீட்டின் உள்ளும் புறமும்அவளை..அவள் மனதை..எண்ணங்களை..அவற்றின் உயிரோட்டத்தை எத்தனை விஷக் கொடுக்குகள் கொட்டிக் கொண்டு இருக்கின்றனவோ ? நான் வெகுவாகக் குழம்பிப் போனேன். நான் யாருக்காகப் பரிந்து பேச முடியும் ? கடைசியாக விடை பெறும் போது ராதை சொன்னாள். “அக்கா..நான் ஒங்கள இங்க..இப்பப் பாப்போம்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல.. ஆனாக்கூட ஒங்களப் பாத்து.. என் உணர்ச்சிகளக் கொட்ற ஒரே இடமான ஒங்க மொகத்துக்கு நேர ஒரே ஒரு தடவ ’ஓ’ன்னு அழுதுட்டாத் தேவலேன்னு நெனச்சுக்கிட்டே தான் இருந்தேன்.. அந்த ஒண்ணாவது நான் நெனச்சபடி நடந்துதேன்னு நான் ரொம்ப நன்றி சொல்றேன் ஆண்டவனுக்கு… இனிமே நடக்கறது நடந்துட்டுப் போட்டும்…நான் இதுக்கெல்லாம் ஒரு முழுக்குப் போட்டுடப் போறேன் இனிமேலே…” பாதி அழுகையும்.. பாதிப் பேச்சுமாய் அவள் நிறுத்தியபோது நான் அழவும் முடியாத ஒரு தவிப்பில் மனம் கனத்து நின்றிருந்தேன். நான் வந்திருப்பது தெரிந்து சங்கரி ஒருநாள் வந்தாள். அவள் மனக்குழப்பம் உடலை வெகுவாகப் பாதித்திருந்தது. சற்று நேரம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இறுதியில் கேட்டேன். " இன்னும்…? " " இன்னும்…! " நான் கேள்வியாய்க் கேட்டதைப் பதிலாய்த் தந்தாள் அவள். " நா…நான்… ராதையைப் பார்த்தேன் நாலைந்து நாளுக்கு முன்னால..அவ சொன்னா… அவ…அவ பாவம்.. சங்கரி…" தயங்கித்தயங்கி கூறினேன் வேதனை நிறைந்த அவள் விழிகளைப் பார்த்தவாறே ! " நா மட்டும்…? உனக்குக் கூடவா ஏந்தவிப்புப் புரியலே…நா எத்தனை பேருக்குப் பிரச்சனையா… வேதனையா… தலவலியா இருக்கேன் தெரியுமா ? " நான் ஏதும் பேசவில்லை. அவளே தொடர்ந்தாள். " அவர்…அவர்… முன்ன மாதிரி இல்லே இப்பல்லாம்… நீ சொன்னதெல்லாம் கூட அவர்ட்ட சொன்னேன்… அவர் அதுக்கு என்ன சொன்னார் தெரியுமா..? ’அந்த சிஸ்டர் கூடவா என்னெ அப்படி நெனக்கிறாங்க ’ன்னு ரொம்ப வேதனப்பட்டார்.. சினிமாப் பாக்குறதக்கூட ரொம்பக் கொறச்சுட்டார்.. மாறா ஓரளவாவது தானும் எகனாமிக் ஸ்டேடஸ்ல ஒசரணூண்ணு ராவாப்பகலாப் படிச்சுப் பட்டம் வாங்கி.. நல்ல வேலைக்குப் போக முயற்சி எடுத்துட்டிருக்காரு.. எனக்காக இத்தனக் கஷ்டப்படுறவர என்னால மறக்க முடியுமா… நீயே சொல்லேன்…." என்ன பதில் சொல்வது.. சற்று நேரம் கழித்துப் பேசினேன். " சங்கரி… திரும்பவும் நா அதையேதாம்மா சொல்றேன்… வாழ்க்கைல நடக்கறதுதான் சினிமால வருது…ஆனா சினிமால நடக்கறது வாழ்க்கையாக முடியாது…அப்படி ஆச்சுன்னா பலரோட ஏளனச் சிரிப்பும்.. கடுஞ் சொற்களுந்தாம்மா விமர்சனமா வரும்…இதப் புரிஞ்சுக்காம…" சங்கரி என்னை இடைமறித்தாள். " அப்படீன்னா காதலிக்கிறது தப்பூங்குறியா..? " " நோ..சங்கரி.. யு ஆர் ராங்… நா அப்படிச் சொல்லல…ஒனக்கு நா எத..எப்படிச் சொல்லி வெளங்க வக்கிறது..? ஆனா சங்கரி…இத்தனக் கஷ்டநஷ்டத்துக்கும்…சோதனைக்கும் உட்பட்டும்… ஒங்காதல் வளந்துக்கிட்டுப் போகுதே தவிர….கொறயல…அதனால ரியலி இட்ஸ் க்ரேட்…ஸோ யு வில் ரீச் தி சக்ஸஸ் ஷ்யூர்லி…" சங்கரி பெரிதாகச் சிரித்தாள். திடுக்கிட்டு நிமிர்ந்தேன் நான். " இப்ப சொன்ன பாரு…க்ரேட் லவ்வுன்னு…எங்களோடது உண்மையான காதல்னா அதுக்கு வெற்றி கிடைக்காதும்மா…அழிவுதான் கெடைக்கும்… யெஸ்…ஃபெய்லியர் இஸ் த அல்டிமேட் ரிசல்ட் ஆஃப் இட்…பரிசுத்தமான அன்பு ஜெயித்ததா ஜாதகமே கெடயாது…ரோமியோ ஜூலியட்டப் பாரு… ஆன்ட்டனி..க்ளியோபாட்ராவ எடுத்துக்க…லைலா.. மஜ்னு கதையக் கேளு.. ஏன்.. பார்வதி.. தேவதாஸ் ஸ்டோரியப் பாரு…இவ்ளோ ஏன்..? நமக்கு ரொம்பப் புடிச்ச நா.பா.வின் பொன்விலங்கு நாவல எடுத்துக்கோ.. அதுல பாரதியின் காதல் நெறவேறுச்சா.. இல்லே…அவளப் புறக்கணிச்சுட்டு மோகினிய விரும்புனானே சத்தியமூர்த்தி..? அவுங்களாவது வாழ்க்கைல இணஞ்சாங்களா…நமக்கு ரொம்பப் புடிச்ச கல்கியோட சிவகாமியின் சபதம் கதைல நரசிம்ம பல்லவனும்.. சிவகாமியும்…எவ்வளவு நேசிச்சாங்க ? வாழ்க்கைல இணைஞ்சாங்களா என்ன ?… இத்தன ஏன்.. ஆதாம் ஏவாள எடுத்துக்கிட்டாக்கூட அவுங்க அழிவுக்கும் அவுங்க ஒத்தர் மேல ஒத்தர் வச்சிருந்த அன்புதான் காரணம்னு ஆர்க்யூ பண்ண முடியுமே.. இப்படீல்லாம் சரித்திரம் இருக்கும் போது என்னால மட்டும் ஹிஸ்டரிய ப்ரேக் பண்ணவா முடியும் ? என்னோடதும் அழியத்தான் போகுது.." " சங்கரீ…இது என்ன அபசகுனமான பேச்சு…? " நான் என்னை மீறிக் கத்தினேன் கோபத்துடன். அவள் மீண்டும் பெரிதாக ச் சிரித்தாள். " அடீ…நானே அபசகுனத்தின் மொத்த உருவந்தான்.. என் வாழ்க்கையே அபசகுனந்தான்.. இதுல போயி…" அவளை உற்று நோக்கினேன். அவள் பெருமூச்சு விட்டாள். கோபம்.. அழுகை.. ஆத்திரம் இத்தனையையும் தாண்டிய ஒரு நிலையில் இருந்தாள். விரக்திதான் சிறிது தொனித்தது அவள் குரலில். " இன்னோண்ணு தெரியுமா ஒனக்கு…? கன்டினுவஸ்ஸா… விடா….ம எனக்கு வரன் பாத்துட்டே இருக்காங்க… வீட்ல… ஹூம்… பாவம் அவுங்க…" பேச்சில் பசையே இல்லை. எதற்கும் துணிந்து விட்டாளா இவள் ? " ஒண்ணு மட்டும் உறுதி…எனக்கு மேரேஜுன்னாக் கண்டிப்பா… சாமுவேல் தான் ப்ரைட்க்ரூம்…" நான் வாயே திறக்கவில்லை. ’ ஆண்டவா…இவளுக்கு ஒரு நல்ல வழியக்காட்டு ’ மனம் மட்டும் பிரார்த்தித்தது. இரண்டு வாரம் சென்றது. அன்று தபாலில் வந்த ஒரு திருமணப் பத்திரிகை என்னைத் திடுக்கிட வைத்தது. சங்கரிக்குத்தான் திருமணம். ஆனால் சாமுவேல் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் வேறு ஒரு பெயர் போடப்பட்டிருந்தது. பம்பாயில் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை… நல்ல படிப்பு… நான் நம்பவே முடியாமல் திரும்பத்திரும்ப அந்த அழைப்பிதழைப் பார்த்தேன். சந்தேகமேயில்லை. என் தோழி அந்த சங்கரிக்குத்தான் திருமணம். மனம் பதைத்தது. சங்கரீ…அவள் எப்படி இதற்கு உடன்பட்டிருப்பாள்..? கடைசியாக என்னை அவள் பார்த்த போது அவள் பேசிய பேச்சு..? ஐயோ..எந்தச் சூழலில்.. எத்தகைய வற்புறுத்தலின் பேரில்.. எந்தக் கொடுமைக்குப் பயந்து அவள் இதற்குச் சம்மதித்தாளோ..? ஓ..எவ்வளவு கொடூரம்..! என்னால் ஒரு நிலைக்கு வரமுடியவில்லை. கையில் இருந்த அந்த அழைப்பிதழை மேசையின் ஒரு மூலையில் போட்டேன். மிகச்சிறிய மகிழ்ச்சியைக் கூட அந்தக் கல்யாணப் பத்திரிகை என்னுள் ஏற்படுத்தவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் அமர்ந்துவிட்டேன். அன்று மாலை மன அமைதி வேண்டி மலைக்கோட்டை மாணிக்க விநாயகரைப் பார்க்கப் போனேன். அங்கு சென்றும் அமைதி கிட்டவில்லை. மனக்குரல் அழுது கொண்டே இருந்தது. தரிசனம் என்ற பெயரில் ஒரு கும்பிடு போட்டு விட்டுத் திரும்பியவளை ராதையின் குரல் நிறுத்தியது. " அக்கா…" ! ஒரேசொல்…ஆனால் பல கோடி விஷயங்கள்…! " ராதே…" நடுங்கும் குரல் என்னைக் காட்டிக் கொடுத்தது. அவள் கையைப் பிடித்துக் கொண்டவள் அழுகையை அடக்க முயற்சித்தேன். " ரா…ரா…ராதே…நீ எங்கே.." " இங்கதான்க்கா…கல்யாணம்.. இன்னும் அஞ்சாறு நாள் தானே இருக்கு.. எல்லாம் அவசரம்… அக்… அக்கா… ஆனா எனக்கு என்னமோ பயம்ம்ம்மா இருக்குக்கா.." நான் நிமிர்ந்து அவளை ஊடுருவினேன்…என் மனம் அவள் கண்களிலிருந்து எதையோ உணர்ந்து கொள்ள முயற்சித்தது. அதற்குள் அவளுடன் வந்திருந்த உறவினர்கள் வரவே நான் சட்டென்று அவளை விட்டுநடந்தேன். மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது பௌர்ணமிக் கடலாய்… பார்வை மட்டும் வழியைப் பாரத்துக் கொண்டிருந்தது. எண்ணங்கள் சங்கரியிடம் சென்று விட்டன. " டிர்ர்ர்ரிங்…" சைக்கிள் மணி ஓசை என்னை நடைமுறைக்கு இழுத்து வந்தது. சட்டென்று விலகி நின்றேன். “ஸிஸ்டர்…நீங்களா…ஸிஸ்டர்..?” அந்தக் குரல்…! விளிம்பு கட்டியிருந்த நீரைத் துடைத்துக்கொண்டே நிமிர்ந்தேன். ’ சாமுவேல்..! ’ நான் எதிர்பார்க்கவில்லை கொஞ்சமும். " இதப்பாத்தீங்களா..ஸிஸ்டர் ?" என்னிடம் எதையோ நீட்டினான். கையில் வாங்கினேன். சங்கரியின் கல்யாணப் பத்திரிகை ! ’ இவனுக்கு எப்படி.. இது..? ’ நான் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தேன். " பாத்தீங்களா ஸிஸ்டர்.. ஒங்க ஃப்ரெண்டு செஞ்சுருக்குற காரியத்தப் பாத்தீங்களா ஸிஸ்டர்..? அத்தன வீராப்பாப் பேசிட்டு.. இப்ப…கடேசில.. தன்னோட பெண் புத்திய…பணக்காரப் புத்தியக் காமிச்சுட்டா.. பாத்தீங்களா..? " மிஸ்டர் சாமுவேல்…தயவுசெஞ்சு.." " ஸிஸ்டர்… ஸிஸ்டர்…அவளுக்காக நான் எத்தனக் கஷ்டப்பட்டிருப்பேன் தெரியுங்களா…எத்தனையெத்தனை வசவு…எவ்வளவு செலவழிச்சு என் சக்திக்கும் மீறிப் படிச்சிட்ருக்கேன்.. இத்தனையும் அவளுக்காக நான் ஒரு நல்ல வேலயத் தேடிக்கத்தானே.. ஸிஸ்டர் ? அவ இதெல்லாம் நெனச்சுப் பாத்திருந்தா இதுக்குச் சம்மதிச்சிருப்பாளா ஸிஸ்டர்.. சொல்லுங்க…இந்தப் பொண்ணுங்கள நம்புனாலே இப்படித்தான்…" பொரிந்து தள்ளிவிட்டான் தெருவென்றும் பாராமல். " நோ…நோ..ப்ரதர்… நீங்க நெனக்கிறா மாதிரி இல்லே…நாங்க பெண்கள்…எங்களுக்கூன்னு எத்தனையோ ஆப்ளிகேஷன்ஸ் இருக்கு…எங்களோட சொந்த விருப்பு.. வெறுப்பையும் மீறி.. வி..வி..ஜஸ்ட் பிகாஸ் வி ஹேவ் பார்ன் ஆஸ் லேடீஸ்.. வி ஹேவ் தௌஸண்ட்ஸ் அண்ட் தௌஸண்ட்ஸ் ஆஃப் இம்பெடிமெண்ட்ஸ் ஆன் அவர் எவ்ரி வே…ப்ளீஸ் ஹேவ் திஸ் இன் யுவர் மைண்ட்.. தயவுசெஞ்சு சங்கரியப்பத்தி எந்தத் தவறான முடிவுக்கும் வந்துறாதீங்கண்ணா… அவ எந்த மாதிரி சூழ்நிலைல அகப்பட்டுக்கிட்டுத் தவிச்சுக்கிட்டு இருக்காளோ…?" " ஹூம்… பெரிய சூழ்நிலை…" உறுமினான் சாமுவேல். " ஸிஸ்டர் இவளுக்கு மட்டுந்தான் இப்படி நடந்துக்கத் தெரியும்னு நெனச்சுக்கிட்டாப் போல…எனக்கும் அதுக்கும் மேலப் போகத் தெரியும்.. ஸிஸ்டர் எனக்கும் சொந்தத்துலியே ஒரு பொண்ணு தயாராயிருக்கு.. நான் அதக்கட்டிக்கிட்டு இவளப் பழிவாங்க.." ஆத்திரத்துடன் இடைமறித்தேன். " மிஸ்டர் சாமுவேல்…ஒங்களுக்கு அது ஈஸி…தயவுசெஞ்சு கொஞ்சம் பொறுங்க…சங்கரியத் தப்பா முடிவு கட்டிடாதீங்க…எதுக்கும் விசாரிச்சு.." " ஓஹோஹோஹோ…" கோபமாய்க் கத்தினான் தெருவென்றும் பாராமல். " நீங்களும் அவளோட ஃபரெண்டு தானே.. பின்னே எப்படிப் பேசுவீங்க…" என்றவன் சைக்கிளில் ஏறி அமர்ந்தான். " வாழ்ந்தா ஒங்களோடதான் வாழ்வேன்… இல்லே..ரெண்டு பேரும் சேர்ந்து சாவோம்னு அன்னிக்கி என்னவோ அப்படிப் ப்ராமிஸ் பண்ணவ…டயலாக் எல்லாம் விட்டவ..இன்னிக்கு எவனோ ஒரு பணக்காரனுக்குத் தலய நீட்ட சம்மதிச்சிருக்கான்னா….அதுக்கு என்ன அர்த்தம்…? ஆ..ங்…நா என்னா ஒரு அன்னாடங்காய்ச்சி தான…குபேரனா..?" ஆரம்பத்தில் குழப்பமும்.. வேதனையும்.. விவரிக்க இயலாத சோகப் பார்வையுமாய் என் முன் நின்றவன்.. அளவுக்கு மீறிய கோபமும்.. ஆத்திரமுமாய் என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் கூட சைக்கிளை மிதித்தான். ’ ஆண்டவா…ஹி இஸ் மச் ஃப்ரஸ்ட்ரேட்டட்…’ நான் செயலற்று நின்றுவிட்டேன். சங்கரியின் திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் இருந்தன. எனக்கு அதற்குப் போக வேண்டும் என்று தோன்றவேயில்லை. மாறாக மனம் சொல்லவொண்ணா சங்கடத்தில் உழன்று கொண்டிருந்தது. யந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தேன். 11 மணி இருக்கும். என் பெயருக்கு தந்தி ஒன்று வந்தது. " சங்கரி எக்ஸ்பையர்டு… ஸ்டார்ட் இம்மீடியட்லி -ராதை ". எண்ணத்தின் அசைவுகளும்..இதயத்துடிப்பின் அதிர்வுகளும் அப்படி..அப்படியே நின்று விட்டன. பனிக்குவியலில் என்னை அமிழ்த்தினாற்போல் நான் உறைந்து போய்விட்டேன். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு என்னைத் திரட்டிக் கொண்டு கிளம்பினேன். ராதை என்னைக் கட்டிக்கொண்டு “ஓ”வென்று அழுதாள். “அக்…அக்கா.. சங்கரி இப்படிப் பண்ணிட்டாளேக்கா …நான் பயந்தது நடந்துருச்சேக்கா…அக்கா …ஐயோ.. சங்கரி…இப்படிக் கதறவிட்டுட்டுப் போயிட்டியேடி…?” அத்தனை துக்கத்திலும் எனக்கு வியப்பாக இருந்தது. ’ ராதையா இது..? அவளா இப்படி அழுது அரற்றுகிறாள் ? வாழும் போதெல்லாம் சங்கரியைப் பரம வைரியாக நினைத்த ராதையா இப்படித் துக்கத்தைக் கொட்டுகிறாள் ? ’ “விக்கித்து நிற்பது” என்பதன் முழுப்பொருளை அப்போது உணர்ந்தேன். “அக்கா அவ வைரத்தைப் பொடிச்சு விழுங்கிட்டு…ஐயோ.. சங்கரி..” அவள் அம்மா மௌனமாக அழுது கொண்டிருந்தார். அப்பாவோ இப்படி ஒரு முடிவை அவள் எடுப்பாள் என்று நினைக்கவில்லை போலும்..அதை அவர் முகமே காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது. மனதில் என்னென்னவோ கேள்விகள். சத்தமாகக் கேட்டுவிட வேண்டும் என்று வேகம். அவள் அப்பா அருகில் சென்றேன்.. தூரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்த ஒரு இளம் தம்பதியை நோக்கி அவருக்கு மட்டும் புரியும் வகையில் கை காட்டினேன். அந்த ஜோடி இவரால் திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் ஜாதி விட்டு ஜாதி. அவர் முகம் மாறிவிட்டது சட்டென்று. அவரைவிட்டு நகர்ந்து அவருடைய தங்கை.. சங்கரியின் அத்தை - அவரை நெருங்கினேன். மிகவும் மெதுவாகக் கேட்டேன்.." களவு மணம்.. காதல் மணம்.. காந்தர்வ மணம்.. எல்லாம் மேடைப் பேச்சுக்கு மட்டுந்தான்.. இல்லே மேடம்..? " அவர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியை… மேடைப் பேச்சாளர். " நீங்க கூட ஒங்க அண்ணாட்ட எடுத்துச் சொல்லலியே மேடம்…?" கேட்டு விட்டு நகர்ந்து விட்டேன். அருகில் சங்கரியின் மாமா. பெரிய வழக்கறிஞர். துணிந்து அவரையும் ஒரு கேள்வி கேட்டேன். " கொல செஞ்சவங்களவிடக் கொல செய்யத் தூண்டியவங்களுக்கு ஒங்க இபிகோல தண்டனை ஜாஸ்தி.. இல்லியா சார்…சங்கரி சாவும் ஒரு விதத்தில் தூண்டப்பட்டது தானே சார்…? " கோபத்தை அடக்கிக்கொண்டு நான் கேட்ட கேள்வியில் அவருக்கு சுர்ரென்று கோபம் வந்தது. கடைசியாக சங்கரியின் அம்மாவிடம் வந்தேன். என்னைக் கட்டிக்கொண்டு ஓவென்று அழுதார். சிறிது பொறுத்து அவரையும் கேட்டேன்.. " ஒங்க மகளோட சந்தோஷத்த விட…ஒங்க ஜாதி பெரிசு…! முக்கியம்…இல்லம்மா….?" அடக்க முடியாமல் அழுதுவிட்டேன். படுக்க வைக்கப்பட்டிருந்த சங்கரியின் முகத்தை உற்று நோக்கினேன். எனக்குள் எங்கோ ஒரு நிம்மதி மகிழ்ச்சியாகப் பெருமூச்சு விடுவதை என்னால் கேட்க முடிந்தது. அந்த எண்ணத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை. அவள் முகத்தில் பிரேத களை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தன்னுடைய ஒரு லட்சியத்திற்காகத் , தான் நினைத்தவொன்றை முடித்துவிட்டதால் ஏற்பட்ட ஒரு பெருமிதம் மலர்ந்து இருப்பது போலத்தான் எனக்குத் தோன்றியது. இறுதியாக அவள் என்னிடம் பேசிய சொற்கள் என் நினைவில் மிதந்தது. " நான் அழியத்தான் போறேன்.." ‘சங்கரீ.. என் செல்லமே..’ நான் என்னுள் உடைந்து போனேன். அந்த வீட்டில் நிற்க மனமில்லை. தெருவுக்கு வந்து நின்று கொண்டேன். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாகப் பேசுவதை சகிக்க முடியவில்லை. பலவித கோணங்களில், பலவித அலங்காரங்களில் சங்கரியைப் பார்த்திருந்தவள்… நெருப்பில் எரிந்து.. காற்றில் கலந்து.. சாம்பலாய் மாறி நீரில் கரைய அவள் புறப்பட்டுச் செல்லும் அந்தக் கடைசி நேர ஜோடனையையும் பார்த்துவிட்டுத் திரும்பினேன். அன்றுதான் சங்கரிக்குக் கல்யாணம் நடைபெற வேண்டிய நாள். ஆனால் அவர்கள் வீடு எப்படி இருக்கும்? நான் நிம்மதியற்ற மன நிலையுடன் என் பொருட்களை எடுத்து வைக்கத் துவங்கினேன். ஆம் ! நானும் நாளைக் காலை திருச்சியைவிட்டுப் பயணப்பட வேண்டும். அன்று மாலை நிம்மதி வேண்டி வாணப்பட்டறை அம்மன் கோவிலுக்குக் கிளம்பினேன்.நம்முடைய நன்மைக்கும் தீமைக்கும் ஆதிகாரணமாய்.. ஸர்வ ஸாக்ஷியாய் இருக்கும் அந்த அன்னையைத் தவிர நமக்கு வேறு ஏது புகலிடம் ? நினைவுகள் வெகுவாய்த் தவித்துக் கொண்டிருந்தன. அதனால் இயல்பான நடையே பின்னிப்பின்னித்தான் வந்தது. செயின்ட் ஜோசஃப் சர்ச்சைப் பார்த்துச் சிலுவைக்குறியைப் போட்டுக் கொண்டே சாலையைக் கடந்தேன். தெப்பக்குளத்தை ஒட்டி நடக்கும் போது மனம் திரும்பவும் கல்லூரி நாட்களுக்கு.. அதிலும் குறிப்பாக…சங்கரியின் பிரச்சினை வெளியே தெரிந்த நாட்கள் சிறகடித்தன. இன்னும் இருட்டுக் கவியவில்லை. பர்மா பஸார் கடைகளில் கூட இன்னும் பலவற்றில் விளக்குப் போடவில்லை. எல்லா இடங்களிலும் ஏதோ துக்கம் விரவியிருந்ததைப் போல எனக்கு ஒரு நினைப்பு. சற்று தூரத்தில் ஏதோ சலசலப்பு. அங்கிருந்தும், இங்கிருந்துமாய்ப் பலர் ஓட்டமும்.. நடையுமாக அந்த இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். அந்த இடம்… ஓ…கிழக்கு முகமாயிருக்கும் தெப்பக்குளத்தின் படிக்கட்டுகள் இருக்கும் இடம். நானும் ஒரு பதட்டம் பற்றிக் கொள்ள சற்றே விரைந்து அந்த இடத்தை அணுகினேன். அதற்குள் அங்கு கூட்டம் கணிசமாகிவிட்டது. ஏதேதோ கசமுசவென்று பேச்சுக்கள். " யாரோ ஒரு 20..25 வயதுப் பையன்… மூழ்கிச் செத்துட்டான்.." கூட்டத்தில் யாரோ ஒருவர் சொன்னது காதில் விழுந்தது. நானும் ஏனோ பரபரப்படைந்தேன். பல்வேறு காலிடுக்குகளின் வழியே ஊடுருவி நோக்கினேன். அந்த முகத்தைப் பார்த்தவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு அருகில் சென்று நன்றாகப் பார்த்த போது ’ சாமுவேல் ’ என என் மனம் பெரிதாக அலறியது. இவனுக்கு எப்படிச் செய்தி எட்டியது ? சட்டென்று ஒன்று நினைவுக்கு வந்தது. ‘ஓ..இன்று காலை சங்கரியின் சாவைப்பற்றி நாளிதழில் வந்ததைப் படித்திருப்பானோ ? ஊம்…இவன் அன்று சொன்னது போல நடக்கவில்லை…. சங்கரி “போய்விட்டாள்” என்றதும் இவனும் இந்த முடிவுக்கு வந்து விட்டிருக்கிறான்..சாமுவேலை அடைய முடியாது இப்பிறவியில் என்று முடிவுக்கு வந்த சங்கரி தன் சீதனத்தாலேயே தன்னை மாய்த்துக் கொண்டாள்…சங்கரி என்ற அந்த சீதனம் தனக்காக உயிரை விட்டிருக்கிறாள் என்று தெரிந்ததும் இவனும் தன்னை முடித்துக்கொண்டு விட்டான்… ஓ..சங்கரி.. நீ சொன்னது போலவே உங்கள் காதலும் காவியமாக்கிவிட்டதடி.. வாழ்வில் இணைய முடியாத உங்களை ஆண்டவன் சாவில் பிணைத்து விட்டானடி…உண்மை அன்பை மதிக்காத…வரவேற்காத இந்தப் பாழும் உலகில் நீங்கள் மீண்டும் பிறக்கவே வேண்டாமடி…அமர காதலர்களாக அந்த உலகத்திலேயே இருந்து விடுங்கள்..நீ இறந்த பின் தான் சாமுவேலே உன்னை..உன் காதலைப்..பூரணமாகப் புரிந்து கொண்டு இருக்கிறான்..அவனே அப்படியென்றால் மற்றவர்கள் எங்கே உன்னை உணர்ந்து கொண்டிருப்பார்கள்? சங்கரி.. சாமுவேல்.. ஓ..போத் ஆஃப் யுவர் ஸோல்ஸ் மே ரெஸ்ட் இன் பீஸ் அட் தி லோட்டஸ் ஃபீட் ஆஃப் காட்’. கோவிலுக்குப் போக வேண்டியதையும் மறந்து அங்கேயே நின்று கொண்டு இருந்தேன் வெகுநேரம். யாரோ அவசரம் அவசரமாகக் கொட்டியதைப் போலப் பரவிக் கொண்டிருந்த அந்தத் துயரமான அந்திப் பொழுதின் மையிருட்டு என்னுள்ளும் புகுந்து கட்டுப்பட்டுக் கனத்து நின்றது. 05-08-1972 to 07-08-1972 ------------------------------------------------------------------------ மனநதிப் போக்கினிலே காலை ஏழு மணிக்கெல்லாம் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் முன் என் தோழி சுகன்யா வந்து சொன்னாள், " தீபா.. நம்ம பிரேமிய எங்க நர்ஸிங்ஹோம்ல கொண்டு வந்து சேத்துருக்காங்க நேத்து ராத்திரி.." நான் அதிர்ந்து போனேன். " என்ன சொல்றே சுகன்யா.. நேத்துக்கூட அவளப் பாத்துட்டு வந்தேனே.. கொஞ்சம் டயர்டா இருந்தா.. மத்தபடி நல்லாத் தானேப் பேசிட்டிருந்தா.. அதற்குள் என்ன..? " இரவு வேலை முடிந்து களைப்புடன் வந்தவளிடம் சூடாகக் காஃபியையும் ரஸ்க்கையும் கொடுத்தபடியே கேட்டேன். " மறுபடியும் அந்த அட்டாக் தான் தீபா.. நேத்து ராத்திரி பன்னண்டரை மணி இருக்கும்… சேகர் அண்ணனும் செல்வி மதினியும் கொண்டு வந்து சேத்தாங்க… ரொம்ப அக்ரஸ்ஸிவா இருந்தா பிரேமி… அந்த வார்டுலதான் எனக்கு டூட்டி.. ராத்திரி பூரா ஒரே ரகளை.. ’ என்ன விட்ருங்கங்குறா.. கொல்லப் பாக்குறீங்கங்குறா ’ அண்ணனப் பாத்து. அம்மாவக் கண்டபடி திட்றா.. மதினியப் பாத்து ’ ஏன் இப்டி என்னயச் சித்ரவதப் பண்றீங்க’ங்குறா.. ஒரே கத்தல்.. ஆர்ப்பாட்டம். ஊசி போடறதுக்குள்ள நாங்க பட்டபாடு…? தீபா.. எனக்கு மனசே சரியில்லடி.. நம்ம பிரேமிக்கி ஏன் இவ்ளோ சோதனைகளக் கொடுக்குறான் ஆண்டவன்.. அதிர்ந்து கூடப் பேசத் தெரியாதவள அலற அலற வைக்கிறானே.. அது ஏன் தீபா ? " வைத்த காஃபியையும், ரஸ்க்கையும் பார்த்த படியே.. அவற்றைச் சாப்பிடக் கூடத் தோன்றாமல் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தவளைப் பார்க்க எனக்கும் மிகவும் கஷ்டமாக இருந்தது. " சுகன்யா.. காஃபியக் குடி..ஆறுது பாரு.. நான் வேலயச் சீக்கிரமா முடிச்சுட்டுப் போறேன்…" பெருமூச்சு விட்டபடி காஃபியை மட்டும் குடித்து விட்டு அவள் கிளம்பினாள். எனக்கும் வேலையே புரியவில்லை. மனது மரத்துவிட்டாற் போலிருந்தது. அன்றாட வேலைகள் கூட நினைவுக்கு வர மறுத்தன. புளிக்குப் பதில் உப்பைக் கரைத்தேன். சோற்றுக்கு அரிசிக்குப் பதில் பருப்பை ஊற வைத்தேன். அந்த அளவுக்கு மனதில் குழப்பம்.. வேதனை. எப்படியோ ஒருவழியாகச் சமையல் வேலைகளை முடித்து, கணவர், குழந்தைகளை அனுப்பி விட்டுச் சாப்பிடக்கூடத் தோன்றாமல் பிரேமியைப் பார்க்கக் கிளம்பினேன். சுகன்யா விவரம் எல்லாம் சொல்லி ஒரு அனுமதிச் சீட்டும் கொடுத்து இருந்ததால் விசாரிக்கக் கூடத் தேவையின்றி பிரேமி இருந்த அறைக்கு எளிதில் போய் விட்டேன். பறித்து வீசப்பட்டக் கொடியாகப் பிரேமி துவண்டு படுத்திருந்த கோலம் வயிற்றைப் பிசைந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். தூக்க மருந்துகளின் வேலை. அவள் கட்டிலின் அருகில் ஈஸிச்சேரில் சாய்ந்து படுத்திருந்தார்கள் செல்வி மதினி. யோசனையும் வேதனையுமாய் முகம் சோர்ந்து போய் இருந்தது. " மதினி… " மிக மெல்லக் கூப்பிட்டேன். என் குரல் கேட்டுக் கண் திறந்தவர்கள் " தீபா…" என்றபடியே சட்டென்று எழுந்து என் கைகளைப் பிடித்தவரின் கண்களில் கண்ணீர் முட்டியது. நட்பின் நெருக்கம் தந்திருந்த உரிமை கைகளின் இறுக்கத்தில் தெரிந்தது. இருவருக்குமே பேசத் தோன்றவில்லை சிறிது நேரம். " நேத்து நா வந்தப்ப நல்லாத்தானே இருந்தா மதினி.. அதுக்குள்ள என்னாச்சு..? சுகன்யா வந்து சொன்னப்ப எனக்குத் தூக்கிவாரிப் போட்ருச்சு…" “இல்ல தீபா.. அவ ஒரு வாரமாவே சரியால்ல…சரியாச் சாப்பிடல… தூங்கல.. ஒங்கண்ணங்கிட்டக் கூட சொன்னேன்… ’ அதெல்லாம் ஒண்ணுமில்லே.. நல்லாத்தான் இருக்கா.. நீயா ஏதாவது கற்பனை பண்ணாதே’ன்னுட்டாங்க. ஆனா நா நெனச்சது சரியாப் போச்சு.. நேத்து ராத்திரி எல்லாரும் உக்காந்து சாப்டுக்கிட்டு இருந்தோம். தட்டிலிருந்த தோசையைப் பிச்சுப்பிச்சுப் போட்டுட்டு இருந்தா.. திடீர்னு” நா எல்லாத்துக்கும் பாரமா இருக்கேன் " அப்படீன்னா. அண்ணன் " என்னம்மா பிரேமி ? " ன்னாங்க. அவ்வளவுதான்.. சாப்பாட்டுத் தட்டத் தூக்கி அத்தை மேல வீசுனா வெறி பிடிச்சவளாட்டம். ’ நீதான் எனக்கு எனிமி.. நீதான் எல்லாத்துக்கும் காரணம்.. நீதான் என் வாழ்க்கைய அழிச்சிட்டே..’ அப்படீன்னு “ஓ”ன்னு கத்துனா.. அண்ணன் " பிரேமி.. என்ன இதெல்லாம்“னு கொஞ்சம் சத்தமா அதட்டுனாங்க.. எந்திருச்சு அவகிட்ட வந்தாங்க. அவ்ளோதான்..” என்னய விடுங்க… என்னய விட்றுங்க.. நா ஒழிஞ்சு போறேன்.. நா செத்துப் போறேன்.. நா தொலஞ்சு போறேன்.." அதுயிதுன்னுக் கத்திக்கிட்டே வீட்ட விட்டு வெளியே ஓடி வந்துட்டா.. அண்ணன் வேகமாப் போயி அவக் கையப் புடிச்சு தரதரன்னு இழுத்துட்டு வந்தாங்க.. நானும் ஓடிப்போய் இன்னொரு பக்கம் அவளப் புடிச்சுக் கூட்டிட்டு வந்தேன். ’ நா வரல.. நா வரமாட்டேன்.. என்னய விடு.. விடு’ன்னு அலறிக்கிட்டே இருந்தா. அப்புறந்தான் அண்ணன் நெலமயப் புரிஞ்சுக்கிட்டாங்க. . டாக்டருக்கு ஃபோன் பண்ணிட்டு இங்க கொண்டு வந்து சேத்தோம். தீபா பிரேமிக்கு முன்னால எத்தனை தரவ இந்த அட்டாக் வந்துருக்கு.. ஒனக்கும் தெரியுமில்ல.. ஆனாலும் இந்த மாதிரி வந்ததேயில்ல.. அப்பப்பா.. என்னா வரத்து வந்துட்டா.. ? வீட்லேருந்தும் அவ்ளோ சீக்கிரம் அவளக் கூட்டிட்டு வர முடியல தீபா.. நா வரமாட்டேன்னு ஒரே ரகள.. அந்தா.. இந்தான்னு நடுராத்திரி ஆய்டுச்சு அவள இங்க கொண்டு வந்து சேக்கும்போது. டாக்டர் இவுங்க நண்பர்தானே.. அதுனால ரெண்டு ஒதவியாளரோட ஆம்புலன்ஸையும் அனுப்பி வச்சுட்டாரு. அப்படியும் ஒரே கத்தல்.. அழுகை.. ஸெடேடிவ் குடுத்து அவளத் தூங்க வக்கிரதுக்குள்ள டாக்டர்ஸும்.. நர்ஸுகளும் பட்டபாடு..? நா நேத்து ராத்திரி வந்தவ.. அண்ணன் மட்டும் காலேல வீட்டுக்குப் போயிருக்காங்க.. அங்க பிள்ளைங்க என்ன பண்ணுச்சுங்களோ.. ? அத்தையும் பாவம்.. ரொம்ப நொந்து போய்ட்டாங்க.. அவுங்க என்ன செஞ்சாங்களோ…? " செல்வி மதினி ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்கள். பிரேமி, எனக்கும், சுகன்யாவுக்கும் நாலைந்து வயது மூத்தவள். பள்ளியில் ஆறாவது வகுப்பிலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள் நானும் சுகன்யாவும். நாங்கள் ஆறாவது படிக்கும் போது பிரேமி ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒரே பள்ளிக்கூடம். பள்ளியில் எந்த விழாவானாலும் ஒன்றாக வேலை செய்வோம் மூவரும். அதனால் எங்களுக்குள் ஒரு அன்யோன்யமான நெருக்கம் நிறைந்த ஆழ்ந்த நட்பு வேர் விட்டிருந்தது. ஆனால் செல்வி மதினியுடன் கடந்த இரண்டு வருடங்களாகத்தான், சேகர் அண்ணன் இங்கு மாற்றலாகி வந்த பின் தான் பழக்கம். ஆயினும் மதினியின் நல்ல குணமும், பரிவுடன் அவர்கள் பழகும் விதமும் என்னையும், சுகன்யாவையும் அவர்களுடன் நெருக்கமாக ஒட்ட வைத்து விட்டது. தெளிந்த, ஆழ்ந்த அவர்களின் நட்பு ஒரு தனிப் பிரியத்தையும், உரிமையையும் தந்திருந்தது. எங்களிடையே எதிலும் ஒளிவு மறைவு இல்லை. " ஏன் மதினி..? எனக்கு ஒரு ஃபோன் பண்ணீருக்கலாம்ல.. நா வந்திருப்பேனே ஒதவிக்கு…? " " எங்களுக்கே ஒண்ணும் புரியல தீபா.. எப்படி இங்கக் கூட்டிட்டு வரப்போறோம்னு பயந்தே போய்ட்டோம்.. நல்லவேளை.. இவுங்க டாக்டர் ஃபிரெண்டு நா ஆம்புலன்ஸ ஆளோட அனுப்புறேன்னுட்டாரு.. அப்படியும் அவ வந்த வரத்து.. கடவுளே.. அதோட அவயிருந்த நெலம ரொம்பப் பயம்ம்ம்மா இருந்துச்சு தீபா.. காலேல அண்ணனுமே எட்டு மணிக்கப்புறம் டாக்டர் வந்துட்டுப் போனப்புறந்தான் வீட்டுக்குப் போனாங்க. ஒங்கிட்டத் தகவல் சொல்லச் சொன்னேன் சுகன்யாவிடம். எப்படியும் விஷயம் தெரிஞ்சா நீ கட்டாயம் வந்துருவேன்னு தெரியும்." " சரி மதினி… நீங்க வீட்டுக்குப் போய்ட்டு வாங்க.. சாய்ங்காலம் வரைக்கும் நா இருக்கேன். " அரைகுறை மனதுடன் அவர்கள் கிளம்பிப் போனார்கள். சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு நாற்காலியை இழுத்துப் பிரேமி படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் போட்டு அமர்ந்தவளுக்கு சிந்தனை பிரேமியை நோக்கிச் சென்றது. நான்கு அண்ணன்களுக்கு ஒரே அன்புத்தங்கை. ஐந்தாவது பெண் அரசாளுவளாம். அல்லாடிக் கொண்டு இருக்கிறாள் இவள். அதிர்ந்து பேசாத மென்மை ; மோனோலிஸா போல் முகத்தில் மாறாத புன்னகை ; படிப்பில் கெட்டி ; எத்தனையோ போட்டிகளில் எத்தனையெத்தனையோ பரிசுகள் அவளுக்கு. எங்களுக்கு மூத்தவள் என்றாலும் பள்ளி விழாக்களில் சேர்ந்து வேலைகளைப் பகிர்ந்து செய்த போது முகிழ்த்த நட்பு மலர் எங்கள் மூவரையும் அன்புக் கயிற்றில் நிரந்தரமாகக் கட்டிப்போட்டு விட்டது. புகுமுக வகுப்பிற்குப் பின் சுகன்யா நர்ஸிங் கோர்ஸைத் தேர்ந்தெடுக்க, நான் ஆங்கில இலக்கியம் படிக்க விருப்பப்பட, ஒரே பாடம், ஒரே கல்லூரி என்ற வகையில் நானும் பிரேமியும் மிகவும் நெருங்கிவிட்டோம். அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்தது. பிரேமி M.A. இரண்டாமாண்டில் இருந்தாள். திடீரென்று ஒருநாள் பிரேமியின் அப்பாவுக்கு இதயவலி மிகக் கடுமையாக ஏற்பட்டுப் படுத்த படுக்கையாகி விட்டார். பிரேமி துடிதுடித்துப் போய் விட்டாள். அவளுக்கு எல்லாமே அப்பாதான். பூவிலிருந்து புடவை வரை எதுவானாலும் அவரிடம் தான் கேட்பாள். ஒரு மாதத்திற்குக் கல்லூரிக்கு விடுமுறை எழுதிக் கொடுத்து விட்டு அப்பாவின் அனைத்துத் தேவைகளையும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். அவரைவிட அவள் தான் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டாள். ஒருவாறு அவர் தேறிவந்து கொண்டிருந்த போது தான் ஒரு மாப்பிள்ளை வீட்டார் அவளைப் பெண் கேட்டு வந்தனர். மாப்பிள்ளை ஆர்க்கிடெக்டாம். மேல் படிப்புக்கு அமெரிக்கா செல்கிறாராம். இன்னும் மூன்று நான்கு மாதங்களில். அதற்குள் திருமணத்தை முடித்துவிட வேண்டுமாம். சர்ச்சில் பிரேமியைப் பார்த்த பையனுக்குப் பிடித்துவிடவே பெண் கேட்டு வந்துள்ளனர். இத்தனையும் சொன்னவள் " நான் மாட்டேனுட்டேன்…" என்றாள் என்னிடம். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. " ஏன் பிரேமி.. நல்ல இடமா வரபோது சரீங்க வேண்டியது தானே.. வாழ்க்கைல நல்ல சந்தர்ப்பம் எப்பவாது தான் வரும்.. எப்பவும் வராது.." என்றேன். " போடீ.. எல்லாரும் மாறியே நீயும் பேசுறே.. அம்மா.. அண்ணங்க.. மதினிங்க எல்லாம் அப்படித்தான் சொன்னாங்க.. திட்டக்கூட செஞ்சாங்க. அதுக்காக ? என்னால அப்பாவப் பிரிஞ்சு இருக்க முடியுமா ? கல்யாணம் ஆனவுடனே அமெரிக்காப் போகணுமாமில்ல..அமெரிக்கா.. போடி..என்னால எங்கப்பாவ விட்டுட்டெல்லாம் இருக்க முடியாது " சிறு பிள்ளை போல் பேசினாள். " பிரேமி ! என்ன பேசுறே.. பெண்ணா எப்பப் பொறந்துட்டமோ, அப்பவே நாம பெத்தவங்கள விட்டுப் பிரிஞ்சு இன்னோரு வீட்டுக்குப் போய்த்தானே ஆகணும் ? கிராமத்துப் பக்கங்கள்ள பிள்ளை பொறந்ததுமே " ஊட்டுக்கா.. ஊருக்கா“ன்னுக் கேப்பாங்களாம். ஊட்டுக்குன்னா ஆம்பிளப்பிள்ளை.. ஊருக்குன்னாப் பொம்பளப் பிள்ளை. அப்பவே அறையிலேயே தீர்மானம் ஆயிடுதே அது..!” " ஆமாம்.. பெருசா நூத்துக் கெழவியாட்டம் பேசாதே தீபா.. எனக்கு இப்ப அப்பா இருக்குற நெலமேலக் கல்யாணம் வேண்டாம். அப்பாவ விட்டுட்டுப் போறதுன்னா எப்பவுமே எனக்குக் கல்யாணம் வேண்டாம் போ.. நான் எப்பவும் எங்கப்பா கூடத்தான் இருப்பேன்…" இப்படித் தீர்மானமாகப் பேசியவளைக் கதறக்கதற அடித்துவிட்டுச் சில நாட்களிலேயே மீண்டும் வந்த நெஞ்சுவலி அவரை அழைத்துக்கொண்டு போய் விட்டது கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில். பிரேமி அலறித் துடித்து விட்டாள். யார் சொல்லியும் கேட்காமல், ஒருவிதப் பிடிவாதத்தோடு சாப்பிடாமல்.. தூங்காமல் அழுது கொண்டே இருந்தவளுக்கு, முதன்முறையாக இந்த அட்டாக் வந்தது. வெறி பிடித்த பார்வை; எப்போதும் ஒருவிதமான பிரமை; யாருடனும் பேசமாட்டாள். அவளுடைய அம்மாவைப் பார்த்தாலே “ஓ”வென அலறுவாள்.. கைக்குக் கிடைத்ததைத் தூக்கி அவர்கள் மேல் வீசுவாள். பத்து இருபது நாட்கள் மருத்துவமனையில் சேர்த்துப் பார்த்தோம். தேறினாள். ஆனாலும் அவளிடம் முன்பிருந்த மான் குட்டி போன்ற துள்ளலுடன் கூடிய மலர்ச்சி எங்கோ மறைந்து விட்டது. அவளுடைய குடும்ப நண்பர் ஒருவர் மூலம் ஒரு வேலையைத் தேடிக் கொண்டாள். M.A. படிப்பை முடிக்கவேயில்லை. காலமும்.. கடலலையும் யாருக்காகவும் காத்து நிற்பதில்லையே ! நானும், சுகன்யாவும் குடும்பத் தலைவிகளானோம். சுகன்யாவுக்கும் இங்கேயே வேலையும் கிடைத்து விட்டதால் எங்கள் நட்பில் தொய்வில்லை. ஆனாலும் முந்நாளில் இருந்த குதூகலம் திரும்பி விடாமல் பிரேமியின் நிலை தடுத்தது. எந்த அண்ணனுடனும் இருக்க அவள் பிடிவாதமாக மறுத்து விட்டதால் அவளுக்குத் துணையாக அவள் அம்மாவும் அவளுடனேயே இருக்க நேர்ந்தது. அவர்களிடமும் அவள் சுமுகமாக நடந்து கொள்ளவில்லை. வயதான காலத்தில் அந்த அம்மா இவளால் அடைந்த துயரங்கள் ஏராளம். சில நேரங்களில் சில மனிதர்கள் கங்காவைப் போல் அம்மாவிடம் ஒட்டுதல் இல்லாமலேயே இருந்து வந்தது எங்களுக்கெல்லாம் மிகவும் வருத்தம். ஆனால் இந்த விஷயத்தில் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை அம்மாவிடம் கொடுத்து விட்டு மீதியை யாராவது ஏழைப் பிள்ளைகளுக்குத் துணி.. அது இது என்றும், கோயில் ஊழியத்துக்கு என்றும் கொடுத்து விடுவதாக அம்மா புலம்புவார்கள். மீறிக் கேட்டால் ஒரு முறை முறைத்து விட்டுச் சென்று விடுவாளாம். அவளுக்கு அந்த மனநிலை பாதிப்பு அடிக்கடி வந்து கொண்டு இருந்ததால் அவளைத் தட்டிக் கேட்கவும் யாருக்கும் துணிவில்லை. அதற்கு மருத்துவம்.. மருந்து என்று நூற்றுக் கணக்கில் செலவு. இவள் நிலை வயதான அந்த அன்னையையும் அடிக்கடி படுக்க வைத்தது. இப்படி அடிக்கடி இவளால் சோதனைக்குள்ளாக்கப் பட்டவர் இவளிடம் அதிகம் பிரியம் வைத்திருந்த மூத்த அண்ணன் சேகர் மட்டும் தான். அவர் மனைவி செல்வியும் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணானதால் பிரேமியை முழுமனதுடன் பார்க்க முடிந்தது. இருப்பினும், தனக்கென்று ஒரு குடும்பம்.. குழந்தைகள்.. அவற்றின் படிப்பு என்று ஏற்பட்ட பின் அவரும் திணறித்தான் போனார். " யாரு… தீபாவா…? " பிரேமியின் மிக மெல்லிய குரல் கேட்டுச் சிந்தனை கலைந்தேன். " நான் தான் பிரேமி… ஏதாவது வேணுமா சாப்பிட… குடிக்க…? " என் யோசனைகள் ஏதும் அவளுக்குத் தெரிந்து விடக்கூடாது என்ற பரபரப்பில் பேசியபடி அவளுக்கு மிகவும் பிடித்த ரஸ்தாளிப் பழங்களை எடுத்துக் கொடுத்தேன். மெதுவாக எழுந்தாள். தலையணை ஒன்றை அவள் முதுகுக்கு முட்டுக் கொடுத்து அவள் வசதியாக அமர உதவினேன். பார்வை வெறிச்சோடிக்கிடந்தது. ஒன்றும் பேசாமல் மடமடவென்று அந்தப் பழங்களைச் சாப்பிட்டுச் சிறிது தண்ணீர் குடித்தாள். இன்னொரு பழத்தை உரித்துக் கையில் வைத்துக்கொண்டு என்னைப் பார்க்காமல் பழத்தையே பார்த்துக் கொண்டு பேசினாள். " நா எல்லாத்துக்கும் பாரமா இருக்கேன்…." " நீ யாருக்கும் பாரமெல்லாம் ஒன்றுமில்லே… சும்மா நீயா எதையாவது கற்பனை பண்ணிட்டுருக்கே… அண்ணன் மதினீல்லாம் எவ்வளவு வருத்தப்படறாங்க தெரியுமா..? ,அவுங்க ஒனக்கு என்ன கொறை வச்சாங்க..? " சற்றே காட்டமாகக் கேட்டேன். " அவுங்க ஒண்ணும் கொற வைக்கல தீபா…நாந்தான் தீராத கொறயாயிட்டனே…இப்படி அடிக்கடி மனசு எங்கியாவது போயிடுது .. ஒலகத்துல யாருமே இல்லாம நா மட்டும் தனியா..ஒரே இருட்டுல இருக்குறாப்புல ஒரே பயம்ம்ம்மா இருக்கு தீபா ! அண்ணங்களுக்கெல்லாம் குடும்பம் இருக்கு.. அம்மாக்கு அண்ணங்க இருக்காங்க.. எனக்கூன்னு யாரு இருக்கா.. இல்லே என்ன இருக்கு..? நாமட்டும் தனீ…யா..இருக்கேன். அப்பா போனப்புறமே இப்டி ஆய்ட்டேனே நானு..ஆனா ஒன்னயப் பாக்குறப்ப மட்டும் ஏதோ கொஞ்சம் தெம்பா இருக்கு. தீபா..! நீதான் எனக்கு ஒதவுவேன்னு ஒரு நெனப்பு.. எனக்குப் புடிச்சப் பழங்களக் குடுத்தியே அது மாதிரி..". இவ்வளவு தெளிவாகப் பேசுகிறாளே? இந்தச் சமயத்தில் இவளிடம் கொஞ்சம் விரிவாகப் பேசிப் பார்த்தால் என்ன ? " பிரேமி.. தப்பா எடுத்துக்காதே.. உன் மனசுல என்னம்மா குழப்பம்..? எதுனால நேத்து அப்படீல்லாம் நடந்துக்கிட்டே.." மிக மிக மெல்லக் கேட்டேன். " என்ன கேக்குற தீபா..எப்படி நடந்துக்கிட்டேன்..? " எதைச் சொல்வது? பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். " மனசுல என்ன இருக்கூன்னு கேக்குற.. அதானே..? ஒரு சமயம் வெட்ட வெளிப் பொட்டலா இருக்கு. ஒரு சமயம் வெள்ளமும் புயலுமாப் பிரளயமா இருக்கு.. ஒரு சமயம் எரிமலையாத் தகிக்குது.. ஒரு சமயம் பனிமலையாக் குளிருது தாங்க முடியாம… பாலைவனத்துல கூட ஒயாஸிஸ் அதான் சோலைவனம் இருக்குமாம். ஆனா எம்மனசுல சந்தோஷத்துக்கே எடமில்லாமப் பண்ணிட்டாரே கர்த்தர் ? நா அப்டி என்னதான் பாவம் பண்ணிருக்கனோ.. இப்படித் துக்கத்தோட சுமைதாங்கியா இருக்கறத விடத் தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுது தீபா சில நேரங்கள்ள.. நானிருந்து யாருக்கென்ன பயன் ? மாறா அண்ணன் அண்ணிக்கெல்லாம் தொந்தரவு தான் குடுத்திட்டு இருக்கேன். இப்படி அடிக்கடி அட்டாக் வரும் போது உடலோடு உள்ளமும் மரத்துப் போகுது தீபா ! நோயாளிப் பெண்ணை வேலைக்கு வச்சுக்கவும் தயங்குறாங்க.. இதோட அஞ்சு எடம் மாறியாச்சு…" பெருமூச்சு விட்டாள். மடைதிறந்த வெள்ளமாய்ப் பேசினாள் பிரேமி. சிக்கல் தெரிந்தாலும் அதன் அடிப்படைக் காரணம் தெரியவில்லையே. அதற்குள் டூட்டி நர்ஸ் வந்து சில கடமைகளை முடித்துவிட்டுச் சென்றார். பிரேமி மறுபடியும் தூங்கிவிட்டாள். மாலை நான்கு மணி போல மதினியும் பிரேமியுடன் வேலை செய்யும் இருவரும் வந்தனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் போய் விட்டனர். மதினியிடம் அவள் பேசியதைச் சொன்ன போது , “அவளுக்கு என்ன தீபா கொறை வைக்கிறோம்.. ஏன் இப்டீல்லாம் நடக்குது.. அண்ணன் ரொம்ப வருத்தத்துல இருக்காங்க தீபா..!” மேற்கொண்டு அவர்கள் பேசும் முன் என் கணவரும் பிள்ளைகளும் வந்து விட்டனர். பிரேமியிடம் பிரியமிக்க ஒட்டுதல் கொண்ட என் பிள்ளைகள் அவள் கட்டிலருகில் வேகமாகச் சென்றனர். சத்தம் கேட்டு விழித்த பிரேமி குழந்தைகளைப் பார்த்ததும் சற்று சந்தோஷத்துடன் எழுந்து அமர்ந்து கொண்டாள். நாங்கள் மூவரும் அறையைவிட்டு வெளியே வந்தோம். " இப்ப எப்படி இருக்காங்க பிரேமி..?" என்னவர் கேட்டார். " அதாங்க மதினீட்ட சொல்லிட்டிருந்தேன்…எவ்ளோ தெளிவாப் பேசுறா…? ஆனா நா பாரமா இருக்கேங்குற ஒரே பல்லவிதான்.. நானும் விடலே.. ஒனக்கு யாரு என்ன கொற வச்சாங்கன்னேன்…அதுக்கு நேரடியாப் பதில் சொல்ல மாட்டேங்குறா.." " நா ஒண்ணு கேக்குறேன் அக்கா… ப்ளீஸ் டோண்ட் மிஸ்டேக் மி.. ஒய் டோண்ட் யூ செட்டில் ஹர் இன் மேரேஜ் லைஃப்.. என் கணவர் கேட்டார். “எனக்கென்னவோ கல்யாணம் ஆய்டுச்சுன்னா அவுங்களுக்குச் சீக்கிரம் குணமாயிடும்னு தோணுது…” " நீங்க சொல்றது சரிதான் தம்பி.. நிறையப்பேர் அத எங்ககிட்ட சொல்லிட்டேதான் இருக்காங்க. ஆனா என் வீட்டுக்காரர்… ஹும்ம்.. ஹி ஈஸ் நாட் ஃபார் இட்.. கல்யாணம் ஆயிருச்சுன்னாலும் இது தொடராதூன்னு என்ன நிச்சயங்குறாங்க..? " " நாமா ஏன் அப்படி ஒரு ஊகத்த வச்சுக்கணும்…? " " அப்படி இல்லே.. நாம இவளக் கட்டிக் கொடுத்தா எல்லா விஷயத்தையும் ஓப்பனாச் சொல்லித்தான் ஆகணும். மறைக்க முடியாது. ஏன்னா இவளப் பத்தின இந்த விஷயம் ஊரறிஞ்ச ரகசியம். அப்படி இருக்கும் போது மனசோடக் கட்டிக்க யாராவது வந்தாலும் இவளக் கனிவா வச்சு நடத்தணும். இருந்தாலும் நா ஓப்பனாவே ஒங்ககிட்டச் சொல்றேன்.. இவ பொதுவா ரொம்பப் பிடிவாதம் பிடிக்கிறவ.. இவளுக்கெல்லாம் வாழ்க்கைல ஒரு பிரச்னையும் இருக்கக்கூடாது. பணப் பிரச்சினை கூட இருக்கக்கூடாது. ரெண்டாவது பூப்போல வச்சுக் குடும்பம் நடத்துறவனா, அதட்டிக் கூடப் பேசாதவனா கெடைக்கணும். இப்படிப் பணம்.. குணம் எல்லாம் இருக்கறவனாக் கெடச்சாலும் இவ ஒத்துப் போகணும். இவ இப்ப மாறியே எடுத்ததுக்கெல்லாம் முரண்டு பண்ணிட்டு வந்துட்டான்னா.. ஸப்போஸ் ஒண்ணுரெண்டு கொழந்தைங்க வேறு ஆயிடுச்சுன்னு வைங்க… காலம் பூரா வச்சுக் காப்பாத்த வேணாமா..? இப்படி எத்தனை எத்தனை ப்ராப்ளம்ஸ்..? அப்புறம் கல்யாணம்னா… கைல பைசா கெடயாது.. எல்லாம் புரட்டித்தான் ஆகணும்…ஒங்களுக்கு நல்லாத் தெரியும்… அவ சம்பளத்த என்ன செய்றான்னே யாருக்கும் தெரியாது. மத்த ப்ரதர்ஸ்ட்ட கேக்கல்லாம் அண்ணனுக்கு இஷ்டம் இருக்காது.. எனக்கு நல்லாத் தெரியும் அது. எல்லாத்துக்கும் மேல இவ வயசென்ன.. அதுக்கு ஏற்றபடிப் பார்த்தா….? " " நீங்க சொல்றதெல்லாம் சரிதான்க்கா.. ஆனாலும் முயற்சி பண்ணாம முடிவு கெடைக்குமா..? நாம நெனக்கிறாப்புல இல்லாம பாஸிட்டிவா ரிசல்ட் இருந்துச்சுன்னா…? " என் கணவர் விடாது பேசினார். அதற்குள் சேகர் அண்ணன் வந்து விட்டார்கள். துணிவும், கனிவும் நிறைந்த அந்த நெடிய உருவத்தின் கண்களை மேகம் மூடிய நிலவாய் ஒரு சோகம் மூடி இருந்தது. துக்கத்தையும் மீறிய விரக்தி முகத்தில். என்னதான் இருந்தாலும் தங்கையல்லவா ? எதிர்பார்த்திருந்தால் யானையின் தாக்குதலைக் கூடச் சமாளித்துவிட முடியும். ஆனால் எதிர்பாராமல் எறும்பு கடித்தால் கூடச் சுருக்கென்று வலிக்கத்தானே செய்யும் ? சிறிது நேரம் பேசி விட்டு நாங்கள் கிளம்பினோம். " பிரேமி ஆன்ட்டிக்குத்தான் காச்சலே இல்லியேம்மா.. நானு தொட்டுப் பாத்தனேம்மா.. அப்புறம் ஏம்மா ஹாஸ்பிடல்ல வச்சுருக்காங்க.. ? " தொணதொணத்தான் கார்த்தி. அவனை ஒரு முறை டைஃபாய்டு காய்ச்சல் வந்து மருத்துவ மனையில் சேர்த்திருந்தோம். அதிலிருந்து மருத்துவ மனையில் இருந்தால் அவர்களுக்குக் காய்ச்சல் என்பது அவன் தீர்மானம். அது குழந்தை மனது. உடல் வளர்ந்து விட்டாலும் மனது குழந்தையாகவே இருந்துவிட்டால் துயரேதுமில்லை. உடல் வளர்ச்சிக்கு ஏற்ப மனதும் பக்குவப்பட்டு விட்டாலும் கவலையில்லை. ஆனால் மனதின் வளர்ச்சி இடையிலேயே நின்று விடும் போது அல்லது ஏதோ சில காரணங்களால் நிறுத்தப்படும் போது அமைதி அவலமாகி விடுகிறது. சிந்தனைகளின் சிதிலங்களை ஒன்று சேர்த்து உருவம் கொடுக்கும் முன் சிலர் வாழ்வே கூட முடிந்து விடுகிறது. உண்டபின் உறங்கி விட்டனர் குழந்தைகள். காலையிலிருந்து வெறும் வயிறாக இருந்ததால் சாப்பிட முடியவில்லை. இரண்டு பழங்களையும், பாலையும் எடுத்துக்கொண்டு ஏதோ படித்துக் கொண்டிருந்த இவர் அருகில் உட்கார்ந்தேன். " ஏம்மா.. சாப்பிடலியா…? " " இல்லீங்க…ஒண்ணும் வேணும் போல இல்லே… மனசு அலையா அலையுது…" “தீபா…நா சொல்றேன் கேளு…ஒன்னோட ஃப்ரண்டுக்கு வேண்டியது ஃப்ரீ செக்ஸ்..அது ஒண்ணுல தான் அவுங்க குணமாக முடியும். இஷ்டத்துக்குக் கொஞ்ச நாள் அந்த ஃபிஸிகல் ப்ளஷரை அனுபவிச்சா அவுங்களுக்கு ஒரு தெளிவு ஏற்படும்னு நா நெனக்கிறேன்…” " நீங்க என்ன சொல்றீங்க…? " எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. " ஆமா தீபா ! அவுங்க தான் அவுங்க மதத்தோட கூட்டம்.. அது.. இதுன்னு போறாங்களே.. அப்படியே யாராவது மனசுக்குப் பிடிச்சவங்களாப் பாத்துத் தேர்ந்தெடுத்துக் கல்யாணம் பண்ணிக்கலாமில்ல…? செல்வி அக்கா நெனக்கிறாப்புல வயசு ஒண்ணும் பெரிய பிரச்சனையா இருக்காது என்பது என் எண்ணம். எத்தனையோ பேர் நாப்பது வயசுக்கு மேலக் கூடக் கல்யாணம் பண்ணிக்கிறாங்களே.." இவர் சொல்வதும் சரிதானோ ? ஒருவேளை இயற்கையின் ’ அந்த ’ நியதிக்கு உட்பட்டு ’ சாந்தி ’ அடையாமல் தான் அவள் உடலணுக்கள் அவள் ‘சாந்தியைக்’ குலைத்துக் கொண்டு இருக்கின்றனவோ ? " என்னங்க சொல்றீங்க ? அவளுக்கு இப்ப வயசு நாப்பத நெருங்குது.. இனிமே அவ லவ் பண்றதா..? அப்படியே பண்ணினாலும் அதுக்கு எதிரொலி குடுக்க ஆள் வேண்டாமா..? " " வயசு.. அது..இதுங்கறதெல்லாம் ஒரு சாக்கு.. அவ்ளோதான்.. தேடுனா அவுங்க விருப்பப்படி ஆள் கிடைக்கும். இன்னோண்ணு தெரிஞ்சுக்கோ தீபா..ஒவ்வொருத்தரோட உடல் வாகு ஒவ்வொரு மாதிரி.. ஏன் சில பேருக்கு அறுபதாம் கல்யாணம் முடிஞ்ச பிறகு கூட பிள்ளை பிறக்குது.. அங்கங்கே பாக்குறோம்.. கேள்விப்படறோம்ல..? சில பேருக்குப் பதினாலு வயசுல தோணுற.. தூண்டப்படுற உணர்ச்சிகள் சில பேருக்கு நாப்பது.. சில பேருக்கு அறுபதத் தாண்டியும்…இதெல்லாம் இயற்கை தீபா.. it’s purely an urge of nature ma…" சற்று நேரத்தில் அவரும் உறங்கி விட்டார். நான்தான் மணித்துளிகளை மனக் கணக்கில் செலவிட்டுக் கொண்டு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். திடீரென்று வாசலில் கார் வந்து நிற்கும் ஒலி கேட்டது. தொடர்ந்து அழைப்பு மணியின் ஒலி. இவரையும் எழுப்பி விட்டுக் கதவைத் திறந்தேன். தூக்கிவாரிப் போட்டது. சேகர் அண்ணனும்.. செல்வி மதினியும் ! " பயப்படாதே தீபா.. திரும்பப் பிரேமியோட ரகள அதிகமாய்டுச்சு.. டாக்டர் திலீபன் மதுரைல இருக்கிற அவரோட டாக்டர் நண்பர்.. அவர் ஒரு மனநல மருத்துவராம்… அவர்ட்ட உடனே கூட்டிட்டுப் போகச் சொல்லி லெட்டர் குடுத்துருக்காரு. இங்க அவளுக்கு ட்ரீட்மெண்ட் சரியாக் குடுக்க ஆள் இல்லே..இவ ரகள ஆஸ்பத்திரில எல்லாருக்கும் தொந்தரவா வேற இருக்கு…" வேதனை தெறிக்கப் பேசினார் அண்ணன். " தீபா.. உன் வீட்டுக்காரர் சொன்னதையும் டாக்டர்ட்டக் கேக்கலாம்னு இருக்கேன். அண்ணன் எப்படியும் ஒருநாள் இல்லே ரெண்டு நாள்ள வந்துடுவாங்க… நா வர நாளாகலாம்.. அதுவரைக்கும் அத்தை.. பிள்ளைங்களக் கொஞ்சம் தெனம் போய் பாத்துக்குவியாம்மா..அத்தையும் ரொம்ப அலமந்து போய் இருக்குறாங்க தீபா… " குரல் உடைய மதினி சொன்ன போது மளுக்கென்று கண்ணீர் வந்து விட்டது. அடக்கிக் கொண்டேன். " நாங்க பாத்துக்குறோம் மதினி.. நீங்க தைரியமாப் போய்ட்டு வாங்க.." " நாங்க பாத்துக்குறோம் நீங்க கவலப்படாமப் போய்ட்டு வாங்க அக்கா.. அண்ணா நீங்களும் தைரியமா இருங்க. ஒங்களுக்கு நா சொல்லி எதுவும் தெரியணூங்கறது இல்லே..ஆண்டவன் ஒரு நல்ல வழியச் சீக்கிரம் காட்டுவான் அண்ணா.. ", சேகர் அண்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டு இவர் சொன்ன போது கலங்காத அந்தக் கண்களும் கலங்கி விட்டன. மறுநாள் நான் போனபோது பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று விட்டனர். அம்மா என்னைப் பார்த்ததும் “தீபா” என்று கையைப் பிடித்துக் கொண்டு அழுதுவிட்டார்கள். சிறிது நேரம் அவர்கள் அருகில் அமர்ந்து இருந்தேன். " சரீம்மா.. நீ பாரு.. அவுங்க கிட்டேருந்து ஃபோன் ஏதும் இன்னும் வரல.. நா கொஞ்ச நேரம் படுக்குறம்மா" அவர்களை எப்படித் தேற்றுவது ? நான் கொண்டு வந்திருந்த இட்லி மாவை ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு வீட்டை ஒதுங்க வைக்க ஆரம்பித்தேன். அப்போது தான் பிரேமி பெயருக்கு வந்த அந்தக் கடிதமும், பிரேமியின் டைரி ஒன்றும் கண்ணில் பட்டன. ஒரு நிமிடம் யோசித்தவள் அவற்றை என் கைப் பையில் வைத்துவிட்டு மேற்கொண்டு வேலைகளைப் பார்த்தேன். அதற்குள் காய்கறி வாங்கப்போன சமையல் செய்கிற அம்மாவும் வந்து விட்டார்கள். அவர்களை அண்ணன் வரும் வரை வீட்டோடேயே இருக்கச் சொல்லி இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். ஏதும் வேண்டும் என்றால் எனக்கு ஃபோன் செய்யச் சொல்லி விட்டு நான் கிளம்பினேன். தூங்கிக்கொண்டு இருந்த அம்மாவை எழுப்ப மனமில்லை. மனம் முழுக்க அந்தக் கடிதமும்.. டைரியுமே நிறைந்து இருந்தன. வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக அவற்றைப் படிக்க ஆரம்பித்தேன். " நாம் பழகியதெல்லாம் உனக்கு அப்படி ஒரு எண்ணத்தை வளர்த்து விட்டிருக்கும் என நான் சிறிதும் எண்ணவுமில்லை.. எதிர்பார்க்கவுமில்லை. உன் அமைதியான குணமும், எப்போதும் தவழும் புன்னகையும் உன்னிடம் என்னை ஈர்த்தது உண்மை பிரேமி ! ஆனால் எந்த ஒரு கணத்திலும் நான் உன்னை ஒரு அன்புச் சகோதரியாகத்தான் எண்ணிப் பழகி வந்திருக்கிறேன். நீ மயங்கி விழுந்த போது பிடித்ததும் அதன்பின் உன் சுகவீனம் நீங்கும் வரை உனக்கு உதவியதும் அத்தகைய ஒரு பாசத்தினால் தான். என் நடத்தை நான் உன்னிடம் காதல் கொண்டிருக்கிறேன் என்ற ஒரு நினைப்பை உன் மனதில் ஏற்படுத்தி இருக்குமாயின், அதற்குக் காரணமான என்னை மன்னித்து விடு தயவுசெய்து. உன்னால் என்னிடம் அறிமுகப்படுத்தப்பட்ட கலாவுக்கும் எனக்கும் கர்த்தர் அருளால் வரும் ஜுனில் கோவையில் திருமணம் நடக்கப் போகிறது. உன் அன்பும்.. நட்பும் எப்பவும் எதிர்பார்க்கும், அன்புச் சகோதரன், குணசீலன். நான் எடுத்து வந்த கடிதத்தின் முக்கியமான பின் பகுதி இது. தேதி, கடைசியாகப் பிரேமிக்கு’ அட்டாக்’ வந்ததற்குச் சரியாக ஒருவாரம் முன். ’ அப்ப மதினி சொன்னது சரிதான். ஒரு வாரமாகவே அவ நல்லா இல்லேன்னாங்களே ! அப்ப இந்தக் கடிதம் பற்றி யாருக்கும் தெரியலே.. அவ இதப்பத்தி யார்ட்டயும் சொல்லல..! ’ “கடவுளே…!” யோசித்தபடியே டைரியைப் பிரித்தேன். முத்துமுத்தான பிரேமியின் கையெழுத்து. சில இடங்களில் சிவப்பு மையில் எழுதி இருந்தாள். சிவப்பு மையில் எழுதி இருந்தவற்றை முதலில் படித்தேன். " இந்தக் குமாரைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் ஏதோவொரு இனம் புரியாத உணர்வு மனதை வாட்டுகிறது. அவனுடனேயே இருக்க வேண்டும்.. பழக வேண்டும் என்று. அவன் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அப்படியே சிலிர்த்துப் போகிறேன். உடல்.. மனசு எல்லாம் ஒரு கொதிப்பில் தவிக்கிறது. இதெல்லாம் ஏன் ? இதை யாரிடம் கேட்பது…யாரிடம் சொல்வது…எனக்கென்று யார் இருக்கிறார்கள் ? " குமார் இவளுடைய அத்தை மகன்தான். ஆனால் திருமணம் ஆனவன். அவனைப் பற்றியா இப்படி நினைக்கிறாள் ? புரியாதது புரியத் தொடங்குவது போல் இருந்தது. பக்கங்களைப் புரட்டினேன். " இன்று மோகன் வந்திருந்தான். குலு ஆப்பிள் மாதிரி எப்படி இருக்கிறான்.. தளதளன்னு ? அவனோடு ஷாப்பிங் போனேன். நேரம் போனதே தெரியவில்லை. சிரிக்கச்சிரிக்கப் பேசிக்கொண்டே வந்தான். என்னவெல்லாமோ வாங்கிக் கொடுத்தான் சாப்பிட.. குடிக்க.. வாய்க்கு வாய் டியர் போட்டான்…டார்லிங் என்றான். அப்போதெல்லாம் ஒரு மின் அலை என்னுள் வேகமாகப் பரவுவதைப் போல் உணர்ந்தேன். ஒருமுறை அந்த வேகத்தில் அவன் கையை அழுத்திப் பிடித்தேன். அப்போது என்னைப் பார்த்து அழகாகச் சிரித்தானே.. அந்தச் சிரிப்பிற்கு என்ன பொருள் ? " மோகனும் இவளுக்கு உறவுதான். ஆனால் வயதில் இவளைவிட மிகவும் சிறியவன். வேகமாக.. உள்ளம் படபடக்கப் பக்கங்களைப் புரட்டினேன். என் பெயர் கண்ணில் பட்டதும் அவசரமாகப் படிக்க ஆரம்பித்தேன். " இன்று தீபாவும் அவள் கணவர் தினகரனும் குழந்தைகளோடு வந்திருந்தனர். தீபா அதிர்ஷ்டசாலி. தினகரன் நன்கு பழகுகிறார். பர்ஸனாலிட்டியும் படு ஜோர். பேசும் போதும் சிரிக்கும் போதும் அந்தக் கண்களும் உதடுகளும் எவ்வளவு கவர்ச்சியாக உள்ளன ? தீபா நிஜம்ம்மா நீ அதிர்ஷ்டக்காரிதாண்டி…! " நான் சற்றும் எதிர்பாராத பிரேமியின் ஒரு கோணம் இது. திகைப்பாக இருந்தது. ஆனால் அதே சமயம் என் கணவரின் கணிப்பு எவ்வளவு துல்லியமானது என்பதையும் உணர்ந்தேன். எனக்குப் புதிர் விடுபட்டாற் போலிருந்தது. ’ அவுங்களுக்குத் தேவை ஒரு ஃப்ரீ செக்ஸ்..’ நேற்று அவர் கூறிய வார்த்தைகள் காதில் ஒலித்தன. ’ அந்த’ ஏக்கந்தான் அவளுள் ஏரியாய் விரிந்திருக்கிறது. அதன் அலை வீச்சுக்களைச் சமாளிக்கவோ.. அன்றி எதிர்த்துப் போராடவோ..அந்த எண்ணங்களை அழிக்கவோ அவளால் முடியவில்லை.. அதற்கு உண்டான மன வலிமையும் அவளுக்கில்லை. ’ அப்பாவுக்குப் பின் எனக்கு யார்’ என்று அவள் பேசுவதெல்லாம் , ‘அப்பா இருக்கும் போது கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டோமே’ என்று உள்ளூற அவள் உருகுவதன் எதிரொலிதான். அப்படியானால் ’ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ’ என்று ஒரு கோடி காட்டி இருக்கலாமே சேகர் அண்ணனிடம். சந்தோஷமாகச் செய்து வைத்திருப்பார்களே எப்போதோ ? எல்லாவற்றையும் என்னிடம் ஒளிவு மறைவில்லாமல் பேசுகிறாள்.. நடந்து கொள்கிறாள் என்றல்லவா நினைத்து நாமும் ஏமாந்து போயிருக்கிறோம்.. நம்மிடமும் இதை மறைத்து விட்டாளே! இப்போதாவது இது தெரிய வந்ததே.. இதை இப்போது யாரிடம் பேசி ஒரு முடிவுக்கு வருவது..? ’ அடுத்த அடி என்ன வைப்பது.. எப்படி வைப்பது..? புரியாமல் தவித்தேன். ஆனாலும் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டேன். எதற்கும் அவள் வந்து விடட்டும் மருத்துவ மனையிலிருந்து என்று முடிவு செய்து கொண்டேன். இரண்டு நாட்களில் வருவதாக இருந்த சேகர் அண்ணன் வரவில்லை. ட்ரீட்மெண்ட் கொடுத்துக் கொண்டு இருப்பதாகவும்.. அவள் நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை என்றும் ஓரிரு நாட்கள் பார்த்து விட்டு வருவதாகவும் ஃபோன் செய்தார்கள். வந்து விடட்டும்.. அவளையும் வைத்துக்கொண்டே பேசுவோம் என்று என் கணவரிடம் கூட எதுவும் இதைப்பற்றி பேசாமல் இருந்து விட்டேன். அடுத்த இரண்டாம் நாள் அவளை அழைத்துக்கொண்டு வந்து விட்டனர். சிகிச்சை பலனளிக்க முடியாத அளவுக்கு நிலைமை முற்றி விட்டதாகத் தெரிவித்தனராம். மேலும் பிரேமி ஒத்துழைக்க மறுப்பதால் தங்களால் சிகிச்சை அளிக்க இயலாது என்றும் மருத்துவர்கள் கூறி விட்டனராம். மருந்துகள் தோன்றத் தோன்ற நோய்களும் புதிது புதிதாகத் தோன்றுகின்றன. மனநோய் மருத்துவம் பிரபலம் அடைய அடைய மனிதர்களின் மனங்களின் சிக்கல்களும் மலிந்து விட்டன. அவ்வளவு பெரிய நிபுணரால் இவள் நோயின் தீவிரத்தை ஊகிக்க முடியவில்லையா…இல்லை.. இவள் மனப் பெட்டகத்தைத் திறக்க மறுக்கிறாளா ? இறுதியாக அந்த மருத்துவர் கூறினாராம் - ’ அவளுக்கு ஒரு சுதந்திரமான.. இயல்பான திருமண உறவும்.. அழுத்தமான, ஆதரவான ஒரு நிலைத்த பிடிப்பும் ஏற்பட்டால்.. ஒருவேளை குணம் அடையலாமென்று ‘.’ அது எப்படி இனியும் சாத்தியம் ? ’ என்று செல்வி மதினி கேட்கிறார்கள். அது சாத்தியம் தான் என்று அவளுடைய டைரி மற்றும் அவளுக்கு வந்த குணசீலனின் கடிதத்தைப் படித்த என் உள் மனது சொல்லிற்று. பிரேமியைச் சங்கிலி போட்டுக் கட்டாத குறைதான். அவள் அழுகையும்.. வெறி பிடித்த கத்தலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. என்னையும், மதினியையும் தவிர வேறு யாரையும் அருகில் வரக்கூட அவள் விடவில்லை. அவள் இருந்த நிலையில் அந்தக் கடிதம்.. டைரியில் அவள் எழுதியிருந்தது பற்றிப் பேசும் எண்ணமே எழவில்லை. குடும்பமே குழப்பத்தில் இருந்தது. அன்று நான் அவளைப் பார்க்கப் போனேன். கிளம்பும் போது என்னுடன் எங்கள் வீட்டுக்கு வருவேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள். யார் என்ன சொல்லியும் கேட்கவில்லை. இறுதியில் உள்ளூற ஒரு பயத்தோடு அழைத்து வந்தேன். எங்கள் வீட்டில் அவள் ஏதும் கத்தவில்லை; ஆர்ப்பாட்டம் பண்ணவில்லை. சாதுவாக இருந்தாள். கொடுத்ததைச் சாப்பிட்டாள். குழந்தைகளோடு இயல்பாக விளையாடினாள். ஆனாலும் விழிகளில் ஒருவித அமைதியின்மை தெரிந்து கொண்டு தான் இருந்தது. சில சமயங்களில் அதுவும் இரவு வேளைகளில் மட்டும் ஒரு மாதிரி நடந்து கொண்டாள். " என்ன தீபா..! உனக்குப் பைத்தியம்.. கிய்த்தியம் புடிச்சு இருக்கா.. என்ன ஒளர்றே ? " திருமணமாகி இந்த ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக என்மேல் கோபம் கொண்டது போல ஓங்கி ஒலித்தது அவர் குரல். " எனக்குப் பைத்தியம் இல்லீங்க.. பைத்தியம் போல் ஆகிவிட்ட என் தோழியத் தெளிய வைக்கலாமான்னு பாக்குறேன்…" “அதுக்கு நாந்தான் கெடச்சனா..?” " கோபப்படாதீங்க ப்ளீஸ்.. இது எவ்வளவு டெலிகேட் மேட்டர்..? நா ஒங்ககிட்டக் கேக்குற மாறி வேற யார்ட்டங்க கேக்க முடியும்..? யோசிச்சுப் பாருங்க.. அவளப் பூவா நெனச்சு.." என்னை இடைமறித்தார். " அதுக்காக தீபா..ஒன்னயத் தொட்ட இந்தக் கைகள் வேறொரு பொண்ணத் தொடாது…" " ஒங்கள நா நிரந்தரமா இதுல ஈடுபடச் சொல்லலியே…ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் தானே ! அதக் குடுக்கறவங்க அவள ஓரளவாவது புரிஞ்சுக்கிட்டவங்களா இருக்கணும்; அவளுக்குப் புடிச்சவங்களாவும் இருக்கணும்…! " " ஆ…மா…அவளுக்கு என்னயப் புடிச்சிருக்கு…! " சற்றே கேலி கலந்த குரலில் கோபத்தையும் சேர்த்துச் சீறும் குரலில் பேசினார். " டைரில எழுதியிருக்காளே ஒங்கள வர்ணிச்சு…" " அதுல குமாரப் பத்தியும்.. மோகனப் பத்தியுங் கூடத்தான் எழுதிருக்கா.." “அதுக்காக அவுங்ககிட்டப் போயி ஒங்ககிட்ட கேட்டா மாதிரி கேக்க முடியுமா என்னால…?” " தீபா…! இப்ப என்னதான் பண்ணச் சொல்றே என்னய…? " அவர் பொறுமை இழந்து வருவது போலவும் இருந்தது.. இறங்கி வருவது போலவும் இருந்தது எனக்கு. " என்ன செய்யணும்னு நான் சொல்றேன்னு ஒங்களுக்குப் புரியுதே.. இங்க வந்தப்புறம் முதல் ரெண்டு நாள் ஏதோ சாதுவா இருந்தா..! ஆனா கடந்த மூணு நாளாக் கத்தலும் கோபமும் அதிகமாக இருக்கு . அடிக்கடி மயக்கமாய்டறா.. ஏதேதோ பெனாத்துறா.. இங்கேருந்து போகவும் மாட்டேங்குறா.. இன்னிக்கு மதியம் வந்திருந்த செல்வி மதினி, கட்டாயம் இன்னிக்கு அவள அவுங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடணும்ங்குற எண்ணத்தோடதான் வந்திருந்தாங்க..கெளம்புறப்ப அவளையும் அவுங்க வீட்டுக்குக் கூப்டாங்க.. கையப் புடிச்சு இழுத்துக்கூடப் பாத்தாங்க.. ஆனா இவ அவுங்க கைய வேகமா ஒதறீட்டு ரூம்க்குள்ள போய் கதவத் தாள் போட்டுக்கிட்டா.. மதினி " இவ அடத்தப் பாத்து இங்க அனுப்பனது தப்பு தீபா.. ஒங்களுக்கும் இவ ரொம்பத் தொந்தரவு குடுக்குறா " ன்னு வருத்தமாச் சொல்லிட்டுப் போக மனசே இல்லாமப் போனாங்க…" " அந்த நல்ல உள்ளம் நலிஞ்சு போய்க் கெடக்குதுங்க…நம்மால ஒரு உயிரை உண்டாக்க முடியாது. ஆனா கண் முன்னால ஒரு ஜீவன் தவிச்சுக்கிட்டு இருக்கு.. அதுக்கு தீர்வு ஒண்ணு நம்ம அறிவுக்கு எட்டியிருக்கு.. ஒரு முயற்சி செய்து பாக்கலாமில்லியா? அதுவும் நம்மால முடியும்ங்குற பட்சத்துல…." " மதினி போனப்புறம் மெதுவா நா கதவத் தட்டியதும் திறந்தவள் ’ தீபா நா இங்க கொஞ்ச நாளு இருக்குறன்.. அப்புறமா போயிடறை’ன்னு கெஞ்சுனப்போ எனக்கு அழுகையே வந்துட்டுதுங்க. அடக்கிக்கிட்டு ’ நீ இங்கியே இரு..ஒண்ணும் பிரச்சினை இல்லேன்னு ’ சொன்னப்புறம் கொஞ்ச நேரத்துல தூங்கிட்டா.. அவ கட்டில் கிட்டயே உக்காந்து ஏதாவது படிக்கலாம்னு புக் ஷெல்ஃப்ல பாத்தப்போ சாண்டில்யனோட " ராஜ முத்திரை " கதை கைல கெடச்சுது. அந்தக் கதையில கடசீல அந்தக் கதாநாயகனும் இப்படித்தான் ‘ஆச்சு போச்சுன்னு’ இழுத்துக்கிட்டு கெடக்குறான். உளவியல்.. உடலியல் ரெண்டிலியும் தெறமை மிகுந்த அவுங்க ராஜ வைத்தியரையே தெணறத்தெணற அடித்து அவரும் கைவிடும் அளவுக்கு வைத்துவிடுகிறது அவனோட ஒடம்பும்.. மனசும்..! அந்த இக்கட்டான சூழ்நிலையில் கதாநாயகியைக் கூப்பிட்டு இதைத்தான் சொல்கிறார். ‘இது ஒரு கடைசீ முயற்சி தாயே.. உனது தொடுதல் இன்பம் அவரை உசுப்பி பிழைக்க வழி செய்யலாம் அம்மா..’ என்கிறார் அந்த வயதான வைத்தியர். அந்தக் கூடலின்பம் அந்தக் கோமகனை மீண்டும் குடிமக்களுக்கு அரசனாக்கிக் கொடுத்து விடுகிறது. இதைப் படித்த பின்பு தான் எனக்கும் இந்த யோசனை வந்தது…." " அதெல்லாம் சரிதான்.. என் தீபா இருந்த இடத்தில் இன்னொரு பெண்ணா..? என் தீபாவோடு சேர்ந்து அனுபவித்த இனிமையை எப்படீம்மா இன்னோரு…." இடைமறித்தேன் நான். " இதோ பாருங்க.. ஒங்களப் பத்தி எனக்குத் தெரியும்.. என்னய ஒங்களுக்குப் புரியும்.. you are going to give a treatment.. That’s all.. " என்னைப் போல வாழ்ந்தவர்கள் குறைவு… என் தேவன் தந்ததிந்த நிறைவு “ன்னு நா எப்பவும் ஒரு பாட்டச் சொல்லுவேன்லங்க… ஒரு நிறைவான வாழ்க்கைய ஆண்டவன் அருளால் வாழ்ந்துட்டு இருக்குறவ நானு… வாழ்வின் குறைவில்லா நிறைவு எனக்குத் தெரியும்…ஆனா ஒரே ஒரு குறையினால நிறைவுங்கறதே என்னான்னு தெரியாம வாழ்க்கையின் வசந்த காலத்தின் முக்கால் வாசி கழிச்சிட்ட பிரேமிக்கு.. அந்தக் கள்ளமறியா உள்ளத்துக்கு என்னால ஏதாவது செய்ய முடியாதான்னு தவிக்கிறேன்.. இத்தன நுணுக்கமான.. மிகவும் தனிப்பட்ட விஷயத்துக்கு ஒங்ககிட்ட அல்லாம வேற யார்ட்டங்க போயி நா துணிஞ்சு ஒதவி கேக்க முடியும் ? என்னால.. ஐ மீன்.. என் உடலால அவளுக்கு இந்த விஷயத்தில் ஒதவ முடியுமா ?” உணர்ச்சிகளின் கலவை உச்சத்தில் குரலை அடைத்தது. " தீபா…." என்று இவர் என்னை இழுத்து அணைத்துக் கொண்ட போது என் வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொண்டது புரிந்தது எனக்கு. நான் நினைத்ததும்..அவரின் ஊகமும் மிகவும் சரி என்று நிரூபணமானது. இரண்டு மூன்று நாட்களில் அவள் நிலையில் நல்ல மாற்றம்; முன்னேற்றம்! என் கணவர் சில விஷயங்களை என்னுடன் பகிர்ந்தார். அதாவது ’ அவளுக்கு ஒரு ஆண் மகனின் தொடுதல்.. வெறும் அணைப்பு மட்டுமே போதுமானதாக இருந்தது… வேறு உடல் உறவு ஏதும் தேவைப்பட்ட மாதிரி தெரியவில்லை. அந்த வகையில் நான் தப்பித்தேன்.. உனக்காக ஒத்துக் கொண்டாலும் என் மனசாட்சி ஒத்துக்கவே இல்லை.. ஆனால் ஆண்டவன் என் பக்கம் இருந்து என்னையும் காப்பாற்றி.. உன் தோழியையும் தெளிய வைத்து விட்டான்’ என்று இவர் சொன்ன போது ஒரு வகையில் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது இவரை எண்ணி. அன்று இவரும் குழந்தைகளும் போய் வெகு நேரம் ஆகியும் பிரேமி அறையைவிட்டு வெளியே வரவில்லை. என்னவென்று பார்க்க நான் உள்ளே போனேன். அவள் குப்புறப்படுத்து அழுது கொண்டு இருந்தாள். " பிரேமி.. என்னம்மா…என்ன நடந்துச்சு…ஏம்மா அழுறே…? " ஒன்றும் தெரியாதவள் போல் கேட்டேன். என் குரல் கேட்டு எழுந்தவள் அப்படியே என்னை இழுத்து உட்கார வைத்து என் மடியில் படுத்துக் கதறிவிட்டாள். இப்படி அவள் அழுதது அவள் அப்பா இறந்த அன்றுதான். இந்த அட்டாக் வர ஆரம்பித்த பிறகு அவளிடம் நான் பார்த்ததெல்லாம் வெறுப்பு.. கோபம்.. ஆங்காரம்.. ஒரு வகையான வெறி - இவற்றுடன் கூடிய ஒரு அழுகையைத்தான். இப்படி மனம் விட்டு அழுததே கிடையாது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அழுக்குகளைப் போல, அவள் உள்ளத்தில் ஒளிந்திருந்து அவளைக் கலவரப்படுத்திக் கொண்டிருந்த தேவையற்ற எண்ணங்களும் இந்த அழுகையால் அடித்துக்கொண்டு செல்லப்படுகின்றனவோ…? கால் மணி நேரத்திற்கு மேல் அழுது தீர்த்தவள் ஒரு வழியாக ஓய்ந்தாள். " தீபா…ஒம் மொகத்துல முழிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு…ஒனக்கு நான் துரோகம் செஞ்சுட்டேன்.." மீண்டும் அழுதாள். " அப்படீல்லாம் ஒண்ணும் இல்லே பிரேமி… நீ மொதல்ல எந்திருச்சு வந்து கொஞ்சம் ஏதாவது சாப்பிடு.. நா ஒங்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்ன நினைத்தாளோ.. எழுந்து போய் குளித்து விட்டு வந்தாள். அவளுடன் சேர்ந்து நானும் சாப்பிட்டேன். அவளும் எதுவும் பேசவில்லை..நானும் பேசவில்லை. கை கழுவிவிட்டு வந்தவளிடம் காஃபி டம்ளரை நீட்டியவள் அவள் அருகில் அமர்ந்தேன். குடித்து முடித்ததும் அவளிடம் நான் அவள் மதுரைக்குப் போனபின் அவர்கள் வீட்டுக்குப் போனபோது எனக்குக் கிடைத்த அவளின் டைரி மற்றும் குணசீலனின் கடிதம் பற்றியும்.. அதைப் படித்த பின்புதான் அவளுடைய மன நிலையை ஓரளவு என்னால் ஊகிக்க முடிந்தது என்பதையும், மதுரை மருத்துவர் இறுதியாகக் கூறியதும், அதற்கு முன்பே என் கணவர் அதை ஊகித்ததையும் விரிவாகக் கூறினேன். " இதுக்கு நீ என்னை மன்னிச்சிடு.. உன் அனுமதியில்லாம ஒனக்கு வந்த Mr.குணசீலன் லெட்டர தற்செயலா நான் படிக்க நேர்ந்துச்சு. அதோட ஒன்னோட பர்ஸனல் டைரியையும் படிச்சேன். அதுலேருந்து தான் ஒன்னோட மனப்போக்கை ஓரளவு நான் தெரிஞ்சுக்கிட்டேன். அண்ணங்கிட்ட சொல்லி ஒரு ஏற்பாடு பண்ணலாம்னா.. ஒன் நெலம ரொம்ப மோசமாயிடுச்சு. மதுரையில் இருந்து ஒன்ன இங்கக் கூட்டிட்டு வந்தப்ப ஒன் நெலம ஊசலாட்டமா இருந்துச்சு ரொம்ப. ஆனா ஆண்டவனோட சித்தம் சில நாள்ளயே நீ எங்க வீட்லதான் இருப்பேன்னு அடம் புடிச்சே.. வேற வழியில்லாம அண்ணனும் மதினியும் இங்க அனுப்பி வச்சாங்க.. குழம்பிப் போயிருந்த எனக்கும் ஒரு தெளிவு கெடச்சுது. உன்னையும் தெளிய வைக்க ஆண்டவன் ஒரு வழி காட்டினான். எல்லாம் இறைவன் செயல் பிரேமி.." அவளால் சிறிது நேரம் ஒன்றுமே பேச முடியவில்லை. கண்களில் கண்ணீர் பெருக அமர்ந்திருந்தாள். சற்று நேரம் கழித்துப் பேசினாள் மிகவும் மெல்லிய குரலில். " தீபா.. இப்படிக் கேவலமாவா நான் போய்ட்டேன்.. எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு… அவமானமா இருக்கு ! கேவலம்.. உடலின்பத்துக்கா நான் ஏங்கிக்கிட்டு இருந்திருக்கேன்..? அந்த எண்ணமா என்னய இப்படி ஆட்டிவச்சுருக்கு..? ",குமுறினாள் பிரேமி. " பிரேமி.. தப்பு.. நீ நெனக்கிறது ரொம்பத் தப்பு. உடலின்பம் நீ மட்டுமல்ல ஒலகத்துல நெறயப் பேர் நெனக்கிறாப்புல…கேவலமானதுமல்ல.. அருவெறுக்கத் தக்கதுமல்ல. அது வேண்டாத விஷயமுமல்ல. ஒலகத்தோட ஒவ்வொரு உயிர்களின் தொடர்ச்சிகளையும் ஆண்டவன் அதில் தான் வைத்துள்ளான். முறையா இருக்குற வரைக்கும் அது மனிதனுக்கு ஒரு மன அமைதியை மட்டுமல்ல பிரேமி, மத்த விஷயங்கள்ள தெளிவாச் செய்றதுக்கும், எந்த விஷயத்திலும் ஒரு முடிவு எடுக்கறதுக்கும்கூட உற்சாகத்தத் தருது.. தப்பா நெனச்சுக்காத.. ஒன்ன அறியாமலே அதப்பத்தி உள்ளுக்குள்ள நெனச்சுக்கிட்டு இருந்துருக்கே ! ஆனா வெளிலே அதப்பத்தி நெனப்பே இல்லாதவ போல ஒரு போர்வயப் போட்டுட்டு இருந்திருக்கே ! கல்யாணங்கறது மொதல்ல ஒன்னய விட்டு வெலகுனப்ப உம்மனசுல ஒரு ஆவலையும் ஏற்படுத்தி விட்டுடுச்சு. அத நீ உணர்ந்தப்போ காலங் கடந்துடுச்சுன்னு நீயா நெனச்சுக்கிட்டு.. யார்ட்டயும் சொல்லாம ஒனக்குள்ளயே ஒரு ஒலகத்த உண்டாக்கிக்கிட்டே.. யார்ட்டயும் சரியாப் பேசாம..சரியாச் சாப்பிடாம.. தூங்காம இப்படி நீயே ஒன்னய வருத்திக்கிட்டே ! ஆனா மத்தவங்கல்லாம் ஒன்னைய வெறுக்குறாங்கன்னு நீயே கற்பனை பண்ணிக்கிட்டு மத்தவங்கள வெறுக்க ஆரம்பிச்சே.. குறிப்பா அம்மாவ.. உண்மையில ஒன்னச்சுத்தி ஒரு வேலி போட்டுக்கிட்டது நீதான் பிரேமி.. இப்ப ஒனக்குப் புரியுதா ! " நான் கூறியவற்றை ஒத்துக் கொள்வது போல் சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை அவள். " தீபா.. நீ எப்பேர்ப்பட்ட தியாகத்தச் செஞ்சிருக்கே ! " " இல்ல பிரேமி.. நா செஞ்சது ஒரு ட்ரீட்மெண்ட்.. ஒரு உதவி என் நல்ல தோழியை அழிவிலிருந்து காக்க..! பயந்து கொண்டேதான் செஞ்சேன். ஆண்டவன் அருள் ! நல்லபடியா எல்லாம் முடிஞ்சுது. இதுல என் கணவருக்குத்தான் நாம நன்றி சொல்லணும். உண்மையில் உன்னை மீட்டது அவரின் மிகப்பெரிய ஒத்துழைப்புத்தான் ! அவர் மட்டும் பிடிவாதமா மறுத்திருந்தார்னா.. அப்பப்பா.. நெனச்சுப் பாக்கவே முடியலே.." " தீபா.. நீ சொல்லிட்டே ஈஸியா.. நா எப்படி அவர் மொகத்துல முழிப்பேன்..?" “அப்படீல்லாம் நெனக்காத பிரேமி..! அவருக்கும் நீ ஒரு நல்ல தோழிதான்..” " தீபா.. ’உயிர் காப்பான் தோழன்’ங்குற வார்த்தைகளை உன் உயிருக்கு உயிரானவர் மூலம் நீ நிரூபிச்சிட்டே.. ஒங்க முன்னாடி நாந்தான் சிறுத்துப் போய்ட்டேன்.." வருத்தம் நிறைந்த குரலில் சொன்னாள். " அப்படீல்லாம் பேசாதே பிரேமி ! இனிமே நீ எந்தத் தாழ்வு மனப்பான்மை க்கும் ஒம்மனசுல எடங் கொடுக்கக் கூடாது. Be Frank and Feel Free " மன நிறைவோடும், மகிழ்ச்சியோடும் சொன்ன என் கைகளை எடுத்துத் தன் முகத்தை அவற்றில் புதைத்துக் கொண்டாள். அவள் தெளிவு அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆனால் நடந்தது எதுவும் வெளியே தெரியவே கூடாது என்று நாங்கள் மூவரும் முடிவு செய்து இருந்ததால் மதினியிடம் கூட எதையும் தெரிவிக்கவில்லை. பிரேமியிடம் நல்ல முன்னேற்றம். தந்தையை இழக்கும் முன் இருந்தவள் போல் விரைவில் மாறினாள். வீட்டில் எல்லோரிடமும், குறிப்பாக அம்மாவிடம், நல்லபடியாக நடந்து கொண்டாள். பழைய புன்னகை தெளிந்த முகத்திற்கு மெருகூட்டியது. நல்லதொரு வேலையையும் அவளே தேடிக் கொண்டாள். முதல் மாத சம்பளத்தில் என்னென்னமோ வாங்கிக்கொண்டு வந்து குவித்து விட்டாள். மறுக்க முடியவில்லை. மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டேன். " எப்படீ..கொயட் ஓகேயா தீபா ? என் மனக் குழப்பங்கள் எல்லாம் அடியோடு போய்டுச்சு தீபா. வசந்த காலச் சோலையா ஒரே சந்தோஷமா இருக்கு.. தெம்பா இருக்கு. குமுறித் தீர்த்துவிட்டு அடங்கிப் போய்விட்ட எரிமலையா நிம்மதியா இருக்கு.. புயலுக்குப் பின் அமைதியா.. வெள்ளம் வடிஞ்ச ஆறு போல ஒரு நிம்மதிய உணர்ரேன் தீபா ! எல்லாத்துக்கும் காரணம் நீதான்.." அவள் பேசப்பேச எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இறைவனுக்கு உள்ளூற நன்றி தெரிவித்துக் கொண்டே " நீ நிம்மதியா இருக்கேன்னு கேக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரேமி !.."என்று நிறைவோடு சொன்னேன். சேகர் அண்ணன், மதினி, சுகன்யா, பிரேமியின் அம்மா - இப்படி யார் கேட்டாலும் ’ அவளிடம் மாறி மாறி, நிறைய முறை பேசிப் பேசி அவளை மனம் விட்டு பேச வைத்து.. அழவும் வைத்தேன். அதில் மனப்பாரம் குறையக் குறைய அவள் எதார்த்த நிலைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பினாள் ’ என்று மட்டும் அவர்கள் நம்பும்படிப் பேசினேன். அடுத்த இரண்டாவது மாதம் வீட்டில் தேர்ந்தெடுத்த, நாற்பது வயது தாண்டிய, மனைவியை இழந்த, இரண்டு குழந்தைகள் இருக்கும் ஒரு நல்ல மனிதரை அவள் மணக்க மனமுவந்து முன் வந்த போது எல்லோருக்கும் ஆச்சரியமும், மகிழ்ச்சியுமாய் இருந்தது. இதோ என் கையில் அவள் கல்யாணப் பத்திரிகை. அதை என் கணவரிடம் காட்டிய போது என் முகத்தையே உற்றுப் பார்த்தார். " என்னங்க…" என்றவளைத் “தீபா” என்று என்னைத் தன் நெஞ்சோடு அவர் அணைத்துக் கொண்ட போது… அவர் சொல்லாத எத்தனை எத்தனையோ வார்த்தைகள் என் மனச் செவிகளில் ஒலிக்க ஆரம்பித்தன. 18 - 11 - 1974 to 20 - 11 - 1974 ------------------------------------------------------------------------ FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.