[] []      ஹெகல் துவங்கி… [] []   [] []                                                                                                                             -       ஹெகல் துவங்கி… ஆர்.பட்டாபிராமன்   மின்னூல் வெளியீடு : freetamilebooks.com உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மின்னூலாக்கம் & அட்டைப்படம் – த. சீனிவாசன் tshrinivasan@gmail.com   ஆசிரியர் : ஆர்.பட்டாபிராமன் http://www.pattabiwrites.in/  pattabieight@gmail.com  - ஹெகல் துவங்கி… (ஆறு கட்டுரைகள்)     பொருளடக்கம் முன்னுரை 5  ஹெகல் வாழ்வும் சிந்தனையும் 8   மார்க்சின் அரசியல் பரிணாமம் 34  லண்டனில் கார்ல் மார்க்ஸ் 56  பிரிட்டிஷ் சோசலிச சூழல் 56  மார்க்ஸ் மறைவின் போது…. 72   II மார்க்சின் இறுதி சடங்கு 77  III அமெரிக்காவில் மார்க்ஸ் மறைவு குறித்து 80  IV இங்கிலாந்தில் மார்க்ஸ் மறைவு குறித்து 84  எங்கெல்ஸ் சில குறிப்புகள் 89  பகுனின் போராட்ட வாழ்வும் அனார்க்கிச சிந்தனையும் 118  ஆசிரியரின் பிற நூல்கள் 150  முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று.  அவரின் வளர்ச்சி, மகிழ்ச்சி, துன்பம், போராட்டங்கள், குடும்பத்தார்கள்- உறவுகளை பேணுதல், அவரின் குணங்கள், பெருமை-குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் தங்கள் சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் பேசுகின்றன. மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு இம்மாதிரியான எழுத்துக்கள் சற்று வலியைத்தரும் அவ்வகை எழுத்தாளர்கள் குறித்து வசைப்பாடத் தோன்றும். நம்மைபோன்ற சக மனிதன் 200 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்து தனக்கு முந்திய காலத்தின் அறிவையெல்லாம் சேகரித்து ஜீரணித்த மனிதன், பிற்காலம் குறித்த கனவுகளை வசப்படுத்த தனக்கு சரி என உணர்ந்த வழியை அழுத்தமாக தெரிவித்த மனிதன்- கொண்டாடப்படவேண்டிய மனிதன் என்கிற நிதான பார்வை இருந்தால் இம்மாதிரி புத்தகங்கள் பயன்படுவதாக இருக்கும்.  மனித குல முயற்சியில் முற்றானது முடிந்து போனது என எதுவும் இல்லை. கடக்கவேண்டும்- ஒவ்வொன்றையும் கடந்தாக வேண்டும். மார்க்ஸ்க்கு அவருக்கு முந்தி இருந்த எவரும் முற்றானவராக தோன்றவில்லை. மார்க்சியத்தின்படி மார்க்ஸ் முற்றானவர் அல்ல. ஆனால் இதன் பொருள் எதிர்மறையான ஒன்றல்ல. மார்க்ஸ் தேவைப்படுகிறார் என்பதை குறைக்கும் அர்த்தத்தில் அல்ல. இந்தியாவில் மார்க்ஸ் உடன் பெரியார், அம்பேத்கார், காந்தி என சிந்தனை சேர்மான கலவை (- chemistry of ideas) நடந்து கொண்டுதான் இருக்கிறது. யார் விரும்பினாலும், விலகினாலும் இந்திய சமுகத்தின் எதார்த்தங்களில் மார்க்சியம் ஊடாடவேண்டியிருக்கிறது. சமுக மேம்பாடு குறித்த விழிப்புணர்வும் சுய சிந்தனையும் கொண்ட எவரும் மார்க்சியத்தை ஒதுக்கிவிடமுடியாது. ஆனால் வாழ்க்கையின் ஓட்டம் குறித்த ’கூகுள் மேப் ஆக’ மார்க்சியத்தை வறட்டுத்தனமாக பார்க்கவும் கூடாது.. செயலுக்கும், சிந்திக்கும் பாங்கிற்குமான பொதுவான வழிகாட்டல் என்பதில் கவனம் தேவைப்படுகிறது. அட்சரம் பிசகாமல் மேற்கோள்களை கொண்டு வாழ்க்கையை அளக்கவோ செப்பனிடவோ முடியாது என்கிற அனுபவத்தை புறக்கணிக்கமுடியாது. இந்திய சமுகத்தில் மக்களை ஒன்றுபடுத்த விழையும் பிற சிந்தனைகளை ரீ-ஆக்‌ஷனரி என்று முத்திரை குத்தி அப்புறப்படுத்துவதற்கு முன்னர் பலமுறை யோசிக்கவேண்டும். அச்சிந்தனைகள் தோழமை கொள்ளத்தக்கவையா- இல்லை எதிரி பக்கம் தள்ளப்படவேண்டியவையா என்று. தமிழ் வாசக பரப்பில் ஹெகல், பகுனின் குறித்த செய்திகள் மிகவும் குறைவுதான். மார்க்ஸ் பற்றி அறியும்போது ஹெகல் குறித்து சில வார்த்தைகள் சொல்லப்படும். அதுவும் ஹெகலை மார்க்ஸ் திருத்தி நேராக்கினார் என்கிற அளவில்தான் இருக்கும். ஹெகலிய மொழி கடினமானது. ஹெகல் குறித்த பல அறிஞர்களின் புத்தகங்களுக்குள் போவதும் எனக்கு கடினமாகவே இருக்கிறது. இங்கு அவர் குறித்த நீள் கட்டுரை ஒன்றும் தரப்படுகிறது. அவரது வாழ்க்கை குறித்த சித்திரம், சிந்தனைகள் பேசப்படுகிறது. கடினமான ஒன்றுதான் முயற்சி செய்யப்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். சுவாரசியமற்ற எழுத்துக்களில் உள் நின்று வாசிப்பது பொதுவாக கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அவசியம் புரிபடும்போது அவை தரும் பயனை அனுபவிக்க முடியும். தமிழில் நான் பார்த்திராத ஹெகல் குறித்த செய்திகள் சிலவற்றை தேடிப்பிடித்து இக்கட்டுரையில் சொல்ல முயற்சித்துள்ளேன். மார்க்சின் தளபதி என அழைக்கப்பட்ட தோழர் எங்கெல்ஸ் குறித்து நீள் கட்டுரை ஒன்றும் இங்கு  தரப்பட்டுள்ளது. தமிழ் வாசகர்களுக்கு பல செய்திகள் புதிதாக இருக்கும் என நம்புகிறேன். பல மணிநேர உழைப்பை இக்கட்டுரைகள் விழுங்கின. மார்க்ஸ்- எங்கெல்ஸ் பற்றி தொடர்ந்து தேடல் கொண்ட தோழர்களுக்கு தமிழில் இவற்றை கிடைக்க செய்துள்ளேன் என்கிற அளவில் சிறிய மகிழ்ச்சி. மார்க்ஸ் தனது motto ’Doubt Everything’ என்றார். எங்கெல்சோ Take it Easy’ என்றே சொன்னார். அப்படியே வாழ்ந்தார் என்பதை எங்கெல்ஸ் குறித்த கட்டுரையை படிக்கும் ஒருவரால் புரிந்து கொள்ளமுடியும். பகுனின் குறித்தும் தமிழில் போதுமான செய்திகள் இல்லை. மார்க்சை எதிர்த்தவர் என்ற எளிய புரிதல் மட்டுமே பொதுவாக நிலவுகிறது. பகுனின் அவர் அளவில் பெரும் துனபங்களை சித்திரவதைகளை அனுபவித்தவர். தான் உணர்ந்தவற்றை உரக்கப்பேசியவர். மார்க்ஸ் உடன் மரியாதை கலந்த எதிர்ப்பை தந்துகொண்டேயிருந்தவர். பகுனின் கட்டுரை அவரை சரியாக அறிமுகப்படுத்தும் என நம்புகிறேன். இவ்வாக்கத்தில் இடம் பெற்றுள்ள  6 கட்டுரைகளும் ஏதோ ஒருவகையில் மார்க்சை சுற்றியே பேசுவதை பார்க்கமுடியும். ஆனால் அவை மார்க்சை மட்டுமே பேசவில்லை என்பதையும் உணரமுடியும். ஆழமான விவாதங்களுக்கு தமிழ் உலகம் தன்னை பழக்கிக்கொள்ளவும், ஆராதனைகளுக்கு அப்பாற்பட்டு வளர்ச்சி நிலையில் கருத்துக்களை புரிந்துகொள்வதற்கும் இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பயன்படும் என நம்புகிறேன்.                                                ஆர்.பட்டாபிராமன்   ஹெகல் வாழ்வும் சிந்தனையும்                  ஹெகல் தெற்கு ஜெர்மனியில் உட்டன்பர்க் என்ற  பகுதியில் தோன்றி புகழ்பெற்று  இன்றளவும் மார்க்சியர் உலகிலும் தத்துவ உலகிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டவர். உர்ட்டெம்பர்க் இளவரசர் கார்ல் அயுகன்  அரசியல் அமைப்பு சட்டப்படி முடியாட்சி என்பதற்கு 1770ல் இணக்கம் தெரிவித்தார். அவரது அரசைவையில்தான் ஹெகலின் தந்தை  ஜார்ஜ் லுத்விக் ஹெகல் பணியாற்றினார் . ஹெகலின் தாயார் பெயர் மரியா மக்டலேனா லோசா ஹெகல். ஆகஸ்ட் 27, 1770 அன்று பிறந்த தங்கள் குழந்தைக்கு ஜார்ஜ் வில்ஹெல்ம் பிரடெரிக் ஹெகல் என  பெற்றோர் பெயரிட்டனர். செல்லமாக வில்ஹெல்ம் என ஹெகல் அழைக்கப்பட்டார். ரோம சாம்ராஜ்யம் என்றோ, ஜெர்மனி என்றோ உணரப்படமுடியாத பகுதியாக உர்டெம்பர்க் இருந்தது. தந்தை ஹெகல் துபிங்கன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.   அரசவையில் வருவாய்த்துறை அதிகாரி பொறுப்பில் இருந்தவர். அவரின் மூதாதையர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரியா பகுதியிலிருந்து உர்டெம்பர்க்குக்கு புலம்பெயர்ந்தவர்கள். முன்னோர்கள் பிராடெஸ்டெண்ட் ஆயர்களாக அப்பகுதியில் இருந்தனர். தாய் மரியாவின் தந்தை அங்கு உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். தாயார் வழி குடும்பத்தினர் நூறாண்டுகளாக  ஸ்டட்கர்ட் பகுதியில் வாழ்ந்து வந்தனர்.  உட்டென்பர்கில் சின்னம்மை தாக்குதலுக்கு அப்போது உள்ளானது. குழந்தைகள் பலர் இறந்தனர். ஹெகல் குடும்பத்திலும் இழப்பு ஏற்பட்டது. மூன்று குழந்தைகளே மிஞ்சின. தாயார் மரியா வயிற்றுப்போக்கு வாந்தி நோயால் 1781ல் இறந்தார். தாயின் மறைவிற்கு பின்னர் குடும்ப ஒட்டுதல் வில்ஹெல்ம் ஹெகலுக்கு குறைந்தது. சகோதரி கிறிஸ்டியானா தந்தையை பராமரிப்பதில் கவனமானார். சகோதரன் ஜார்ஜ் ராணுவசேவைக்கு நெப்போலியனின் கட்டுப்பாட்டிற்கு சென்றவர் என்னவானார் என தெரியாமல் போனது. வளர்ந்த ஹெகலுக்கு கல்லூரி காலத்தில் தந்தையுடன் பிணக்கு ஏற்பட்டது. பிரஞ்சு புரட்சி குறித்தும் அவர்கள் கருத்து மாறுபட்டனர். ஜெர்மன், லத்தீன் பள்ளிகளுக்கு ஹெகல் அனுப்பப்பட்டார். வீட்டில் தனியாக கணிதம் சொல்லித்தர ஆசிரியர் அமர்த்தப்பட்டார்.  ஹெகல் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்தினார். முதல் மாணவனாக இருந்தார். ஏராள புத்தகங்களை படித்து டைரி எழுத துவங்கினார். வீட்டிற்கு வந்த முற்போக்கு இதழ்கள் மூலம் காண்ட் குறித்து அறிந்தார். ஷேக்ஸ்பியரை கொடுத்து ’புரியாவிட்டாலும் படி-. பின்னர் தெரிந்துகொள்வாய்’ என பள்ளி ஆசிரியர் அவருக்கு இலக்கியம் அறிமுகப்படுத்தினார். துபிங்கென் பல்கலைகழகத்தில் புத்தகங்களுடனேயே ஹெகல் இருந்தததால் நண்பர்கள் ’கிழட்டுப்பயல்’ என கேலி செய்தனர். தன்னைப்பற்றி அதிகம் பேசாதவராக, குறிப்புகள் எழுதாதவராக அவர் இருந்தார்.  ஹெகல் வீட்டிற்கு மிக அருகாமையில் வசித்த ஜே ஜே மோசர் அப்போது அப்பகுதி ஹீரோ. அவரை ரசிப்பவராக ஹெகல் இருந்தார். மக்கள் உரிமைகள் குறித்து பேசக்கூடியவராக மோசர் இருந்தார். பல்கலையில் தத்துவபேராசிரியராக இருந்த வொன் அபெல் என்பார் ஹெகல்மீது தாக்கம் செலுத்தினார், காண்ட் குறித்த விவாதங்களில் அபெல் பங்கேற்றவர். லெஸ்ஸிங் (Lessing) எழுத்துக்கள் ஹெகலுக்கு அறிமுகமாயிற்று. அனைத்து மதங்களும் உள்ளார்ந்த நிலையில் ஒன்றே என லெஸ்ஸிங்கின் பாத்திரம் பேசியது. தனது கம்யூனிட்டியும் கலாச்சாரமும் எவ்வளவு பெருமிதமானதாக இருந்தாலும் பிறர் கலாச்சாரத்தை அங்கீகரிக்காமல் தள்ளி வெளியேற்ற வேண்டியதில்லை என்கிற கருத்து ஹெகலுக்கு புலப்பட்டது.   ஹெகலின் மாணவப்பருவ நாட்குறிப்புகள் - எழுதிப்பார்த்த கட்டுரைகள் அனைத்திலும் தேடல்கள் இருந்தன. அவர் முடிவான எதையும் அடைந்ததாக இல்லை. நடைமுறை அனுபவத்துடன் வாழ்க்கையை புரிந்துகொள்தல் என்பதும், ரூசோவின் தாக்கமும் அவற்றில் தெரிந்தன. மதம் குறித்து நேர்மறையான அணுகுமுறையை ஹெகல் கொண்டிருந்தார். பில்டங் (Bildung) என்பதற்கு ஜெர்மன் மொழியில் மக்களுக்கு கற்பிப்பவர் என்கிற பொருள்- தான் அவ்வாறு ஆகவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் படர்ந்தது. பட்டமளிப்புவிழாவில் உரை நிகழ்த்தும் மாணவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். The abortive state of Art and scholarship at Turkey" என்கிற ஆய்வுரையை அவர் நிகழ்த்தினார்.  ஜெர்மன் நாட்டில் கிடைத்த நல்ல கல்வி சூழலை துருக்கியின் மோசமான சூழலுடன் ஒப்பிடுவதாக அவர் உரை இருந்தது.  இறையியலில் புதிய அறிவொளியை தரவேண்டும் என இளம்வயது ஹெகல் விரும்பினார். துபிங்கன் பல்கலைக்கழகம்  1477ல் துவக்கப்பட்ட புகழ்வாய்ந்த கல்விக்கூடம். 300 ஆண்டுகள் பழமை என்பதாலேயே அதற்கான கேடுகளும், ஊழல்களும்  சேர்ந்தன. பேராசிரியர்களே சீர்திருத்தங்களை தடுப்பவர்களாகவும் இருந்தனர். கல்லூரிக்கு நுழைந்த ஹெகல் ஆரம்பத்தில் கர்வம் பிடித்தவர் என பெயர் வாங்கினார். தனது முதல் மாணவன் அந்தஸ்தை இழந்தார். பிரடெரிக் ஹோல்டெர்லின் (பிறகு பெரும் கவியானவர்), வில்ஹெல்ம் ஜோசப் ஷெல்லிங் போன்றவர்கள் ஹெகலுக்கு நண்பர்கள் ஆயினர்.  Pastors எனும் போதகர்  ஆவதில்லை என மூவரும் முடிவெடுத்தனர். ஹெகல் கவனம் தத்துவத்தின்பாற் திரும்பியது. 1789 பிரஞ்சு புரட்சி மூவரின் மீதும் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. ஜெர்மனி அப்படியொரு புரட்சியை காணவேண்டும் என அவர்கள் விரும்பினர். செல்வந்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனிவாத்தியார் வைத்து கற்பிக்கும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது. ஹெகல் அவ்வாறு கற்பிக்கும்  வேலையில் ஈடுபட்டார். ஷெல்லிங்கிற்கு இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளுக்கு  தான் கற்பிக்கும் குடும்பத்தார்களுடன்  சுற்றும் வேலை கிடைத்தது. ஜெர்மனியிலும் மோசமான பழக்கம் இருந்தது. ட்யூஷன் வாத்தியாரை குடும்பத்தாருடன் அமரவைத்து சாப்பிட செய்வதா அல்லது வேலைக்காரர்களுடன் அமர்த்துவதா என்கிற சமுக அந்தஸ்து பிரச்சனை இருந்தது. ஹெகல் மேம்பட்ட குடும்ப சூழலில் வந்தததால் தன்னை அவ்வீட்டார் நடத்தியவிதத்தில் அதிருப்தியுற்றார். அதேநேரத்தில் அவர்கள் வீட்டில் இருந்த ஏராள நூல்கள் நிறைந்த ’நூலகம்’ ஹெகலுக்கு பயன் தந்தது.   ஹெகலின் சோர்வை அறிந்து அவர் நண்பர் ஹோல்டெர்லின் பிராங்க்பர்ட்டில் ’ஒயின் பெருவணிகர்’ குடும்பத்தில் வாத்தியார் வேலைக்கு அழைத்தார். தரமான ரைன்லாந்த் ஒயின், பிரான்ஸ் ஒயின் எல்லாம் கிடைக்கும் என எழுதினார். ஹெகல் காண்ட்டின் தத்துவ கருத்துக்களை எளிமைப்படுத்தி  மக்களிடம் கொண்டு செல்வது குறித்து யோசிக்கலானார். யேசுவின் ஜீவிதம் என்கிற தனது இளமைக்கால கட்டுரையில் அவர் ஏசுவை காண்ட்டிய ஹீரோதான் என நிறுவ முயன்றார்.  1796 ல் பிராங்க்பர்ட் போவதற்கு முன்னர் ஹெகல் தன் சொந்த வீட்டிற்கு ஸ்டட்கர்ட் வந்தார். அங்கு அவரது சகோதரியின் தோழி நனேட்டே எண்டல் (Nanete Endel) என்பவருடன் சுற்றித் திரிந்தார். அவர்கள் கத்தோலிக்க- பிராடெஸ்டண்ட் குறித்த சச்சரவுகளில் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டனர். தந்தை ஜனவரி 15, 1799ல் மரணம் அடைந்தார் என்கிற செய்தியை ஹெகலுக்கு சகோதரி கிறிஸ்டியானா அனுப்பினார். பிராங்க்பர்ட்டிலிருந்து ஸ்டட்கர்ட் சென்று குடும்ப கடமைகளை ஹெகல் பார்க்க வேண்டியதானது. தந்தையின் சொத்துக்களை சகோதரர் இருவருக்கும் மட்டுமில்லாமல் சகோதரிக்கும் கூடுதலாக கிடைப்பதுபோல் பிரித்திட நடவடிக்கை எடுத்தார் ஹெகல். அன்றாட உறவிலும் உரையாடலிலும் நெருக்கமாக இருந்த தத்துவ நண்பர் ஹோல்டர்லின் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளானது. சிந்தனையின் சாலையில் இனி தனித்த பயணம் என்ற சூழல் ஹெகலுக்கு உதவியாகவே அமைந்தது. அவரின் பழைய நண்பர் ஷெல்லிங் மிக உயரத்திற்கு சென்றுவிட்டார். ஹெகல் 1801ல் ஜெனா வந்து சேர்ந்தார். தன்னால்  வெளித்தெரியும் எப்படைப்புகளையும் கொணரமுடியவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு இருந்தது. ஜெனாவில் முதலில் தனியார் ஆசிரியர் அந்தஸ்தில்தான் இருந்தார். தனித்திறன் பேராசிரியர் என்கிற கனவு ஆரம்ப ஆண்டுகளில்  அவருக்கு கைகூடவில்லை. 1817ல் அவரது 47ஆம் வயதில்தான் அவருக்கு முறையான பல்கலைக்கழக பேராசிரியர் பதவியே கிடைக்கிறது. பிஷ்டா(Fichte) செல்வாக்கு ஜெனாவில் இருந்தது.  The Difference between Fichte's and Schelling's systems of Philosophy என்கிற சிறு வெளியீட்டை 1801 இறுதியில் ஹெகல் கொணர்ந்தார். பின்னர் அப்போது புகழுடன் விளங்கத் துவங்கிய ஷெல்லிங்குடன் இணைந்து தத்துவ விமர்சன ஏடு ஒன்றை கொணர்ந்தார். ஷெல்லிங் மற்றும் அவரது துணைவியாருடன் ஹெகலுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. அவரவர் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் விமர்சனங்களை முன்வைக்கத்துவங்கினர்.  The Spirit of Christianity and its Fate என்கிற கட்டுரையை ஹெகல் எழுதினார். கிறிஸ்துவம் உண்மையில் நவீன மதம்தானா- மக்களின் மதமா என்கிற கேள்விகள் அவரை உறுத்திக்கொண்டிருந்தன. அன்பை அது போதிப்பதால் அதில் மேலாண்மை இருக்காது என்கிற கருத்திற்கு வந்தார். அன்பு ’பகைமைகளை’ எப்படி சரி செய்துகொள்கிறது என்கிற கேள்வியும் அவருக்கு எழுந்தது. நன்னெறிகளின் மதிப்பு  அன்பில்தான் இருக்கிறது. காண்ட்டின் சுய தன்னிலையில் இல்லை என்பதை ஹெகல் உணர்ந்தார். அன்பின்பாற்பட்ட மக்கள் கொண்ட தேசம் என்பதைவிட அழகான வேறு உயர் சிந்தனையில்லை என்கிற கனவையும் அவர் வெளிப்படுத்தினார். நவீன வாழ்வின் பல சிக்கலான பிரச்சனைகளுக்கு தன் கட்டுரை பதிலை தந்துவிட்டதாக அவரால் உணரமுடியவில்லை.  The German Contitution என்கிற கட்டுரை ஒன்றை அவர் அடுத்து எழுதினார். ஜெர்மன் ஓர் அரசாகவில்லை என்கிற விளக்கத்தை அதில் அவர் தந்தார். அரசு குறித்த கேள்விகளாகவும் அக்கட்டுரை இருந்தது. அரசுவாதம் என்கிற வகையில் அவர் எழுதவில்லை. குடிமக்களை பொது திட்டம் ஒன்றில் இணப்பதுதான் அரசு என்கிற பொருளில் ஹெகல் விளக்கினார்- பிரான்ஸ் தேசம் தனது மக்களை புரட்சி என்கிற செயல் நோக்கி ஒன்றிணைத்தது. அதாவது காரணகாரியத்துடன் அடையாளப்படுத்திக்கொள்தல் என்கிற அர்த்தத்தில் அவர் பேசினார். சட்டம் இயற்றுவதில் மக்கள் தங்கள் பங்கை உணரவேண்டும். அரசின் மிக முக்கிய பிரச்சினைகளில் நிர்வாக பங்கேற்பை உணரவேண்டும். அவ்வகையான பிரதிநிதித்துவ முறையை மக்கள் பெறவில்லையெனில் சுதந்திரம் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கில்லை. . இதை புரிந்து ஜெர்மானியர் தங்கள் அடையாளத்தை கண்டெடுத்து ஒன்றுபடவேண்டும் என்கிற விழைவை ஹெகல்  தெரிவித்தார். தங்களுக்குரிய பிரதிநிதித்துவ அமைப்பை கண்டடையாமல் சுதந்திரம் இல்லை என்றார். ஷெல்லிங் பிஷ்டே குறித்த சிறு ஆய்வில் முதல்நிலை கோட்பாட்டில் தன்னிலை, புறநிலைகள் முதன்மையாவது குறித்துள்ள வேறுபாட்டை அவர் ஆராய்கிறார். இலக்கு மற்றும் எதார்த்தம் என்பதின் வேறுபாடு உணர்வில் உள்ள ஒன்று என்றார் ஹெகல் . பகுத்தறிவு புரிதல்  என்பன குறித்து விவாதித்ததில் காரணகாரிய அறிவு என்பதை புரிந்துணர்தல் என்பதைக் கொண்டு ஹெகல் மாறுபட்டார். புரிதல் என்பது உலக நிலைமைகளிலிருந்து பெறப்படும் ஒன்று. ஆனால் பகுத்தறிவு பெறப்பட்ட புரிதலை உலகவெளிக்குள் கட்டுபாட்டு நிர்ணயத்திற்கு உள்ளாகதவற்றுடனும் இணைத்து பார்ப்பதாக இருக்கிறது என்றார் ஹெகல். 1803ல் ’System of Ethical Life’ நன்னெறி முறைமைகள் குறித்த சொற்பொழிவுகளை அவர் ஆற்றினார்.. உலக ஆன்மா என்பது அதன் எவ்வடிவத்திலும் தன்னை மகிழ்வுடன் கொண்டாடிக்கொள்ளும் ஆற்றல் கொண்டது. எந்த சட்டம், பழக்க வழக்கம் என்பதிலும், அதன் சொந்த சாரத்தை கொண்டாடிக்கொள்ளும் என எழுதினார். ஆன்மா என்பது அதன் சுய உள்ளொளிதான் என்றார். அதன் அளவில் அது முழுமையானது என்றார். 1804-5 களில் கதேவுடன் அவர் கடிதப்போக்குவரத்து வைத்திருந்தார். மேலும் Logic, Metaphysics, Philosophy of Nature என்பதை அவர் எழுதிக்கொண்டிருந்தார்.. தெய்வீக இயல்பு என்பது மனித இயல்புதான்- கடவுள் எனும் சுயம்  மனிதன்தான் என அவர்  வந்தடைந்தார். The phenomenology of Spiritல் ஹெகல் தனது குரலை காணத்துவங்கியதாக ஹெகல் குறித்து எழுதிய பிங்கார்ட் தெரிவிக்கிறார் கதேவின் உதவியுடன் 1806ல் ஹெகல் ஊதியம் 100 தாலர்களாக மாற்றப்பட்டது. ஆனால் மிக குறைந்த வசதிகளுடன் வாழக்கூட அப்போது 200 தாலர் தேவையாக இருந்தது. தனது நிதிநிலை கண்டு கடுமையான வருத்தத்தில் அவர் இருந்தார். அறிவியல் நாட்டம்  தன்னை இவ்வாறு துனபத்தில் வைத்துள்ளது- அதே அறிவியல் தன்னை  உயர்த்தும் எனவும் நம்பினார். 1806-07ல் பினோமனலாஜி புத்தகத்தை முடிக்க அவர் அரும்பாடுபட வேண்டியதாயிற்று. செலவிற்கு கூட பணமற்ற சூழல் நிலவியது. அவர் குடியிருந்த வீட்டுப்பெண்மணி  கிறிஸ்டியானா ஜோகனாவுடன் உறவு இருந்ததால் லுத்விக் என்கிற குழந்தைக்கு அவர் தந்தையானார்.   II ஜெனா பகுதி பிரஞ்சு நெப்போலியன் ஆக்ரமிப்பிற்கு உள்ளானது. கதேவின் எழுத்துக்களை பலமுறை வாசித்தவராக நெப்போலியன் இருந்தார். அவர்கள் மத்தியில் சந்திப்பு நிகழ்ந்ததை அறியமுடிகிறது. Botany- Philosophy இரண்டிற்குமான சொற்பொழிவு விரிவுரையாளர் பணியை தன்னால் செய்யமுடியும் என கதேவிற்கு ஹெகல் தெரிவித்தும் அவருக்கு அப்பணி கிடைக்கவில்லை .நண்பர் நியத்தம்மர்  என்பவர் உதவியுடன் ஹெகல் பாம்பெர்க்கில் பத்ரிக்கை பணியில் சேர்ந்தார். பாம்பெர்ஜெர் ஜெய்டுங் என்கிற பத்ரிக்கைக்கு ஹெகல் ஆசிரியராகிறார். பாம்பெர்க் பத்ரிக்கை நெப்போலியன் ஆதரவு குரலை வெளியிட்டு வந்தது. ரஷ்யாவை தாக்கி எழுதிவந்தது. ஹெகலிடம் சற்று பணப்புழக்கம் ஏற்பட்டது. தான் நிம்மதியாக சாப்பிடவும், குடிக்கவும் முடிந்தது என பதிவு செய்கிறார். அவருக்கு ரும்போர்ட் காபி மீது பெரும் விருப்பம் இருந்தது. தன் அறிவியல் பணிகளில் காபி பெரும் பங்காற்றியதாக அவர் குறிப்பிடுகிறார்.  ஷெல்லிங்குடன் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்ட பின்னரும் அவர்கள் சந்திப்புகள் இருந்தன. அவர்கள் தத்துவம் குறித்து பேசுவதை தவிர்த்துக்கொண்டனர். ஹெகலின் பினாமனலாஜி புத்தகம் ஆதரவையும் எதிர்ப்பு விமர்சனங்களையும் கண்டது. பாக்மன் என்பார் ஷெல்லிங் ’நவீன தத்துவத்தின் பிளாட்டோ’ எனில், ஹெகல் ’ஜெர்மன் அரிஸ்டாட்டில்’ என இருவரையும் ஒப்பிட்டு எழுதினார். நியத்தமர் தனது நண்பர் ஹெகலுக்கு உதவுகின்ற வகையில் பவேரியா பல்கலைகழகத்திற்கு தர்க்கவியல் குறித்த பாடபுத்தகம் ஒன்றை கொணரவேண்டினார். இந்தப்பணி பின்னர் தர்க்க அறிவியல் Science of Logic என வெளியானது ரெக்டார்ஷிப் என்கிற நுரெம்பர்க் பல்கலைகழக் பணிக்கு ஹெகல் அக்டோபர் 1808ல் சேர்ந்திட நியத்தமர் உதவுகிறார்.  நுரெம்பர்க்கில் கல்வி இலாகாவின் கமிஷனராக இருந்தவர் ஹெகல் நண்பரானார். அவர் செய்யவிரும்பும் சீர்திருத்தப்பணிகளுக்கு ஹெகல் ஒத்துழைக்கவேண்டும் என்கிற வேலையும் அவருக்கு கூடியது. ஜிம்னாசியம் என்கிற கல்விக்கூட தலைமை ஆசியராகவும் ஹெகல் ஆக்கப்பட்டார். 1810 இறுதியில் உயர்தட்டு நண்பர்கள் சந்திக்கும் கிளப் ஒன்றை நுரெம்பர்க்கில் உருவாக்கினர். ஹெகலுக்கு புதிய நண்பர்களின் பழக்கம் ஏற்பட்டது. ஹெகலின் முன்னாள் மாணவர்கள் சிலரும் இருந்தனர்.  மேரி ஹெலினா சூசன்னா (Marie Helena susanna Von Tucher) என்கிற ஹெகலைவிட 20 வயது குறைந்த பெண்மணியை அவர் 1811 செப்டம்பரில் மணப்பது என்று முடிவெடுத்தார். பெண்ணின் வான் டக்கர் குடும்பம் சம்மதம் தரவில்லை. 1810 ஏப்ரல் துவங்கி அவர் தனது காதலை வெளிப்படுத்தும் கவிதைகளை, கடிதங்களை மேரிக்கு அனுப்பிவந்தார். திருமணம், வாழ்க்கை குறித்து தனது எதிர்கால கணவன் கொடுத்துவந்த சொற்பொழிவுகள் மேரி வான் டக்கருக்கு உவப்பாக இல்லை. உயர்பிரபுத்துவ குடும்பத்துடன் காதல்வயப்பட்டுள்ள ஹெகல் நிலைகண்டு நியத்தமர் போன்ற நண்பர்கள் கவலை அடைந்தனர். ஏற்கனவே ஹெகலுக்கு லுத்விக் பிஷர் என்கிற மகன் இருக்கிறான் என்பது மேரி வான் டக்கருக்கு தெரியவந்தது. பணநெருக்கடி, மனநெருக்கடி என்கிற தடைகளை தாண்டி அவர்கள் திருமணம் 1811ல் நடந்தது. 1812ல் பெண்குழந்தை பிறந்து மறைந்தது குடும்பத்தில் துக்கத்தை ஏற்படுத்தியது. 1813ல் கார்ல் பிரடெரிக் வில்ஹெல்ம் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. 1814ல் தாமஸ் இம்மானுவேல் என்கிற அடுத்த குழந்தையும் பிறந்தது. 1816ல் ஹைடெல்பர்கில் ஹெகல் குடும்பம் இருந்தபோது தனது முதல் மகனான லுத்விக்கையும் குடும்பத்தில் அழைத்துக்கொள்வது என்கிற முடிவை ஹெகல் எடுத்தார்.  ஹைடெல்பர்க்கில் பேராசிரியர்களுடன் மட்டுமே தனது சமுக தொடர்புகளை ஹெகல் வைத்துக்கொண்டிருந்தார். இறையியல் ஆய்வாளர்கள், இசை கலைஞர்கள் சிலருடன் நட்பு பாராட்டினார். அரசியல் தத்துவம் குறித்த பொது சொற்பொழிவுகளை நடத்திவந்தார். அவர் பெர்லின் சென்ற பிறகு அவை சரிபார்க்கப்பட்டு 1820ல் உரிமையின் தத்துவம் என வெளியிடப்பட்டது. ஹெகல் அரசாங்க ஆதரவு அரசியல் கட்டுரைகள் அவரின் நெருங்கிய நண்பர்களுக்கு கசப்பை உருவாக்கியது. மக்களைப்பற்றியும், ஜனநாயகம் குறித்தும் கவலைப்படாமல் அரசர் பக்கம் நிற்பது சரியல்ல என அவர்கள் கருதினர். 1817 நவம்பரில்  கார்ல் சிக்மண்ட் அல்டென்ஸ்டைன் என்பவர் கலாச்சார அமைச்சர் பொறுப்பு ஏற்றார். அவர் ஹெகல் வயது ஒத்தவர். ஹெகல் பற்றி அறிந்த அவர் ஹெகல் பெர்லின் வருவது சரியானது மற்றும் தனக்கு துணையாக இருக்கும் என கருதினார். பெர்லின் ஹெகல் வந்து பணிபுரிந்தால் அவர் ஹைடல்பெர்க்கில் பெறுவதை போல் இருமடங்கு ஊதியம் கிடைக்கும் என்றார் அமைச்சர். ஆனால் பெருநகரம் என்பதால் அங்கு செலவும் கூடும் என்ற நிலை இருந்தது. அதற்கேற்ற ஈடு தேவை என ஹெகல் கருதினார். பிரஷ்யா அறிவியல் கழகத்தில் அவர் சேரவேண்டும். ஹெகல் துணைவியார் மேரிக்கு பெர்லின் இடம் பெயர தயக்கம் இருந்தது. மேரியின் தாய் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது என அறிவுரை சொல்லி ஏற்க செய்தார். ஹைடல்பெர்க்கிலிருந்து கிளம்பி பிராங்க்பர்ட், ஜெனா நண்பர்களிடம் தங்கி ஒருமாதம் பயண களைப்புடன் அக்டோபர் 1818ல் ஹெகல் குடும்பம் பெர்லின் சென்று சேர்ந்தது. நெப்போலியன் தாக்குதலாலும் சில பகுதிகளை பிரஞ்சு கைப்பற்றியிருந்ததாலும் பெர்லின் கடுமையான நெருக்கடியில் இருந்தது. குழந்தைகள் இறப்பு 70 சதமாக இருந்த காலமது. அரசாங்க கடன் 200 மில்லியன் தாலர்கள் என உயர்ந்தது. அரசர் பல ஆட்சியாளர்களை மாற்றி நிலைமைகள் மேம்பட நடவடிக்கைகள் எடுத்துவந்தார். பெர்லின் பல்கலைகழகத்தை அதன் புகழுக்கு மீட்பது பெரும் சவாலாக ஹெகலுக்கு அமைந்தது. அவர் தத்துவம் மற்றும் அரசியல் உரிமைகள் சார்ந்த பாடங்களை மாலைநேர வகுப்புக்களாக எடுக்க துவங்கினார். ஹெகல் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு வசதியும் கூடியது. தரமான ஒயின்கள் பாட்டில்களில் வருவதற்கு பதில் பாரல்களில் வரத்துவங்கியது என டெரி குறிப்பிடுகிறார். வாரந்தோறும் தியேட்டர், இசைநாடகங்களுக்கு ஹெகல் குடும்பத்தாருடன் சென்று வந்தார். குழந்தைகளுக்கு வீட்டில் இசைப்பயிற்சி கொடுத்தனர். காலை காபியுடன் தினசரிகளை படித்து தனது கமெண்ட்களை அவ்வப்போது தருபவராக இருந்தார் என அவரது மகன் அவரை நினைவுகூர்கிறார். Philosophy of Right என்ற ஆக்கத்திற்காக அவர் கடுமையாக உழைத்தார். 1829ல் அது வெளிவந்தது. அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் அவர் புகழ் கூடியது. எது விளைவுண்டாக்ககூடியதோ (efficacious) அது பகுத்தறிவுக்குரியது என்கிற கருத்து அவரிடம் இருந்தது.  அவரின் புகழ்வாய்ந்த எது பகுத்தறிவிற்குரியதோ அது உண்மையானது- எது உண்மையானதோ அது பகுத்தறிவிற்குரியது (what is rational is actual and what is actual is rational) என்பதை அவர் எழுதினார். இதை எது இருக்கிறதோ அது சரி என்றும், எது சரியோ அது இருக்கிறது என்றும் சிலர் நீட்டித்து பேசினர். அவர் ஆள்பவருடன் அணிசேர்ந்துவிட்டர் போன்ற விமர்சன குரல்களும் வராமல் இல்லை. பிரஷ்ய முழுமுதல்வாதத்திற்கான மன்னிப்பு என்கிற விமர்சனம் எழுந்தது. 1820-21 ஷால்ஸ் (Schulze) என்பவருடன் ஹெகல் நட்பு பூண்டார். கதேவுடன் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்திக்கொண்டார்.  ஷால்ஸ்தான் ஹெகல் மறைவிற்கு பின்னர் அவரது நூல்தொகைகளை எடிட் செய்பவராக இருந்தார். இளம் பேராசிரியராக வந்த ஆர்தர் ஷோபன்ஹார் தனது விரிவுரைக்கான நேரம் ஹெகலுக்குரிய அதே நேரமாக இருக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். கோரியநேரம் ஷோபன்ஹாருக்கு ஒதுக்கப்பட்டது. ஷோபன்ஹாரின் கர்வமான அணுகுமுறையால் அவரால் பெர்லினில் நீடிக்கமுடியவில்லை.  அவரின் பதவிஉயர்வு வாய்ப்புகளை ஹெகல் தடுத்தார் என்ற விமர்சனமும் ஹெகல் மீது இருந்தது.  பெண்களுக்கு குடும்பம்தான் பொறுப்பு மனைவி- அம்மா என்கிற பொறுப்பு என்பதை ஹெகல் ஆழமாக நம்பினார். சிவில் சமுக வளர்ச்சிக்கு சுதந்திர சந்தை என்பதும் அவரது கருத்தாக இருந்தது. அனைத்தும் சமுக பண்புகளை பெறுகின்றன. ஆடை, உணவு பழக்கம் என வழக்கங்கங்கள் நடைமுறைகள் உள்ளன. இதில் மற்றவர் நடந்துகொள்வது போலவே நடப்பது உசிதமானது என்றும் ஹெகல் கருதினார். புவிமாவட்ட அடிப்படையில் வாக்களிக்கும் ஜனநாயகம் என்பதை அவர் ஏற்கவில்லை. அரசியல் அமைப்பு சட்டப்படி முடியாட்சி என்பதை அவர் ஏற்றார்.  Philosophy of History என்பது அவரது நண்பர் எட்வர்ட் கான்ஸ் மற்றும் அவரது மகன் கார்ல் ஆகியவர்களால் கொணரப்பட்டது. உலக வரலாறு மானுடத்தின் வரலாறு- உலக ஆன்மாவின் வரலாறு என ஹெகல் கருதினார். அதேபோல் உலக வரலாறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பயணிக்கிறது. ஆசியா துவக்கம் எனில் அதன் முழுமுதல் முடிவாக அய்ரோப்பா இருக்கிறது என்றார். அவரிடம் அய்ரோப்பியமையவாதம் இருந்தது என்கிற விமர்சனம் எழுந்தது. மனிதகுலம் என்பதே பகுத்தறிவு வாய்ந்தது. அதில் சமத்துவ உரிமைகள் என்கிற வாய்ப்பு இருக்கிறது. இறுக்கமான உயர்ந்த தாழ்ந்த இனம் - உரிமை உள்ளவர், இல்லாதவர் என்பதெல்லாம் இல்லை என எழுதினார் ஹெகல். இன்றுள்ள காலத்தேவை மதத்திற்கும் பகுத்தறிவிற்கும் தேவைப்படும் இணக்கமே. அதை தத்துவம் மூலம் செய்யலாம் என நினைத்தார் ஹெகல். மதம் தனிமனிதன் கொள்ளும் உணர்ச்சி என்றால், நாய்க்குகூடத்தான் உணர்ச்சியும், திருப்தியும் இருக்கிறது. அதை சிறந்த கிறிஸ்துவராக ஏற்கலாமா எனக் கேள்வியும் எழுப்பியவர் ஹெகல். தனது உடல்நலம் 1822ல் பாதிக்கப்பட்டபோது அவர் குடும்ப உறுப்பினர்கள் குறித்து கவலையுற்றார். மனைவி மேரிக்கு மாதம் 300 தாலராவது பென்ஷன் நிதி ஒன்றிற்கு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். தனது அன்றாட வாழ்விலும் அறிவு வாழ்க்கையிலும் கதேவின் முக்கியத்துவம் குறித்து நன்றி பாராட்டி கதேவிற்கு கடிதம் எழுதினார் ஹெகல். பல நகர்களுக்கு சுற்றுப்பயணம் செய்வதில் ஆர்வம் காட்டினார். அங்கெல்லாம் தேவாலயங்களுக்கு சென்றார். ஹாலந்தில் தேவாலயங்களின் நேர்த்தியை வியந்தார். டச்சு காபி, யூதர்களின் சினாகாக் வழிபாட்டுக்கூடங்கள் பற்றி பெருமிதமாக பேசினார்.  III  ஆண்டுபுத்தகம் (Yearbook) என்கிற வகையில் ஆக்கங்களை கொணர்வதற்கு எட்வர்ட் கான்ஸ், ஹெகல் முயற்சித்தனர். ’Le Globe’ என்கிற பிரஞ்சு தாராளவாத பத்ரிக்கை பாணியில் கொணரவேண்டும் என்பதை கான்ஸ் வற்புறுத்தி வந்தார். இம்முயற்சியில் அவர்கள் போதுமான அளவு சந்தா சேராமையால் வெற்றி பெறமுடியவில்லை. 1827ல் ஹெகல் டாக்டர்களின் அறிவுரைப்படி ஆரோக்கியவாசஸ்தலம் செல்லவேண்டிவந்தது. பெர்லின் விட்டு வெளியேறிய சூழலில் பாரிஸ் வரலாமா என நண்பர்களுக்கு அவர் கடிதம் எழுதினார். மார்க்சின் ஊரான டிரியர் நகருக்கு அப்பகுதியில் புகழ்வாய்ந்த ஒயின் அருந்துவதற்காகவே ஹெகல் சென்றார். 1827 செப்டம்பரில் அவர் பாரிஸ் செல்கிறார். பெர்லினைவிட பாரிஸ்  அருமையாக இருக்கிறது என அவர் வியந்தார். அங்கு தலைசிறந்த ஷேக்ஸ்பியர் நாடக குழுவினரை சந்தித்தார். புரட்சியின் முழு ஒழுங்கீனத்தையும் தன்னால் காணமுடிகிறது என மேரிக்கு எழுதினார். பிரஞ்சு அறிவியல் கழகம் அவரை வரவேற்று உபசரித்தது. அங்கு நிரம்பியிருந்த அறிவுஜீவிகளுடன் உரையாடினார் ஹெகல். பாரிசிலிருந்து திரும்புகையில் கதேவை சந்தித்து உரையாடிவிட்டு வருகிறார். ஹெகல் மீது கதேவிற்கு மாரியாதை கூடியிருந்ததாக டெர்ரி பதிவு சொல்கிறது.   இயற்கையின் தத்துவம் குறித்து பல சொற்பொழிவுகளை பெர்லினில் ஹெகல் செய்துவந்தார். நியுட்டன், கெப்ளர் என எந்திரவியல் குறித்து உரையாடியிருந்தாலும் ஆர்கனிசம் என்பதில் அவர் அழுந்த நின்றார். பொருள் என்பது காலவெளிசார்பில் நமது கருத்துருவாக்கம். இயற்கை குறித்த பகுத்தறிவு விளக்கம் என்றார்.  ஒளி - இயற்பியல் பற்றியும் அவர் விளக்கம் அளிக்கிறார். வானியல் நிகழ்வில் உயிர் உருவாகும் வாய்ப்புகளை பெற்று தன்னளவில் அடங்கிக்கொள்ளும்  ஒன்றாக பூமி குறித்து அவர் இயற்கையின் தத்துவத்தில் சொல்கிறார். உயிரினங்கள் தங்களுக்கு பொருட்கள்/ விஷயங்கள் வேண்டும் என்பதை உணர்கின்றன. தூண்டலுக்கு துலங்கல் என்பதுடன் சூழலுக்கு உரிய எதிர்வினையாகவும் இதை உணர்கின்றன. என விளக்குகிறார்.  Philosophy of Religion குறித்து அவர் பேசினார். அன்றாட வழிபாட்டுமுறைகளை கைகொண்டவர் அல்லர் ஹெகல். அவரது துணவியார் அதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஹெகல் மறைவிற்கு பின்னர் மத நம்பிக்கை மேரிக்கு  கூடுதலாயிற்று.. கடவுள் உலகை படைத்தார்- அனைத்தையும் வழிநடத்துகிறார் என்பது போல் அல்லாமல் உலக இருப்பில் கடவுள் இருக்கிறார், அதன் உள்ளார்ந்த விளவுகளால் வடிவங்களாக உலகம் என்கிற வகையில் என அந்த கருத்தாக்கத்தை ஹெகல் விளக்கினார்.  தூய இதயம் படைத்தவர் ஆசிர்வதிக்கப்பட்டவர்,  அவர்கள் கடவுளை காண்பர் என்கிற மாத்யூ வசனம் (Blessed are the pure in heart, for they shall see God- Mattthew 5:8) ஹெகலுக்கு பிடித்த பைபிள் வாசகம் என மேரி சொல்கிறார். மதம் ஒவ்வொருவருக்கும் உரியது. தத்துவம் அப்படியானதல்ல. மனிதர்கள் அனைவரும் தங்களுக்கன உண்மைகளை கண்டறிய உதவும் வழி மதமாகும் என பேசிவந்தார் ஹெகல். கடவுளை உலக கொள்கையிலிருந்துதான் காணமுடியும் என்பதை அவர் கருத்தாக நாம் கொள்ளலாம். கடவுளை உலக நடப்புகளில்தான் கண்டெடுக்கவேண்டும் என்பதே ஹெகல் தரும் அழுத்தம்.  1827ல் கீழைத்தேய மதங்கள் குறித்தும் ஹெகல் சொற்பொழிவுகள் தந்தார். தலாய்லாமா பற்றிக்கூட பேசுகிறார். ஒன்று தான் எல்லாம் ( 'one' that is 'all') என்பதை அவை வெளிக்காட்டுவதாக ஹெகல் கூறினார். அவை அமைதி, பணிவு, நிதானம் போதிக்கின்றன என்றார்.  ’இறவாமை’ என்பதை அவர் ஏற்கவில்லை. மனிதகுலம் இறவாமல் நீடிக்கிறது என்ற ஒன்றே  நாம் நமது அறிவாற்றல் துணையுடன் சொல்வதுதான் என எழுதினார். யேசுவின் மரணம் என்பதில் கடவுள் மரணம் என்கிற பெரும் பிரச்சனையை நாம் எதிர்கொண்டோம். ஆனால் புத்துயிர்ப்பு (Resurrection ) என்பதன் மூலம் மீள்கிறோம் என்றார்.   கலை, நவீன கலை குறித்தும் அவர் பேசினார். முன்பிருந்தமைக்கும் நவீன உலகத்திற்குமான முறிவின் வெளிப்பாடு கலை என்றார். வில்ஹெல்ம் ஹம்போல்ட்   (Wilhelm Von Humbolt)  என்கிற புகழ்வாய்ந்த சிந்தனையாளர் இந்திய பகவத்கீதையை பற்றி எழுதினார். இதற்கு 1827ல் ஹெகல் தனது விமர்சன ஆய்வை எழுதியதாக பிங்கார்ட் குறிப்பிடுகிறார். ஷெல்லிங், அலெக்சாண்டர் ஹம்போல்ட் போன்றவர்கள் ஹெகலை கடுமையாக தாக்கி சொற்பொழிவாற்றினர். பேராசிரியர் கிரக் என்பார் சிந்தனைகளின் விளயாட்டு என ஹெகல் சிந்தனைகள்மீது தாக்குதல் தொடுத்தார். பல பக்கங்கள் காலி பக்கங்களே என்பது போன்ற தாக்குதல்கூட அவர்மீது எழுந்தது.  ஹெகல் 1829ல் நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். முகம் வெளுத்து இரத்தசோகை ஏற்பட்டது. 1830ல் பெர்லின் பல்கலைகழகத்தின் முழு தலைமை பொறுப்பும் ஹெகலிடம் வந்தது. ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டிருந்த ஷெல்லிங்குடன் 1830களில் மீண்டும் அவரால் நட்பு பாராட்ட முடிந்தது. இருவரும் கருத்துவேறுபாடு உருவாக்கும் ’தத்துவம்’ குறித்து பேசுவதை தவிர்த்தனர். ஹெகல் மறைவிற்கு பின்னர் ஷெல்லிங்கும் ஹெகல் மகனுடன் நன்றாக பழகினார். ஹெகல் மகனான இம்மானுவேல் ஷெல்லிங்கின் விரிவுரைகளுக்கு செல்லத்துவங்கினார். ஹெகல் மகன் மூலம் பழைய ஹெகல் உறவுகளை தான் காணுவதாக ஷெல்லிங் குறிப்பிடலானர். 1830ல் அரசவைக்கு ஹெகல் அழைக்கப்பட்டு கெளரவம் செய்யப்பட்டார். இளவரசர், இளவரசியுடன் பேராசிரியருக்கு விருந்து என்பது நடைபெற்றது. 1830 அவர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில் அவர் தனது பெர்லின் பல்கலை பொறுப்பை அடுத்தவருக்கு மாற்றிக் கொடுத்தார்.  ஜெர்மனியில் வேறு எங்குமில்லாத அளவு மாணவர்கள் 1909பேர் அங்கு படித்ததை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். பேராசிரியர் சொற்பொழிவுகளை கேட்போர் சேர்த்தால் எண்ணிக்கை 2200யை தாண்டியது . ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை தரமுடியும் என்றால் நாம் மேலும் உயர்வோம் என அவர் தனது விடைபெறும் சொற்பொழிவில் குறிப்பிட்டார்.. On the English Reform Bill என்பதன் மீதான  விமர்சன கட்டுரையை அவர் ஏப்ரல் 1831ல் எழுதினார். வரிக்கொடுமை, ஊழல்கள், விவசாயம் பாதிப்பு போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டினார். பல தேவாலயங்களில் சேர்ந்த  தனியார் சொத்து மதவிவகாரங்களில் ஊழல் மலிய காரணமாயிற்று. தனியார் சொத்துரிமையை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் சக்திமிக்க வர்க்கம் செயல்படுகிறது என்றார் ஹெகல். அரசியலை பெரும் வியாபாரமாக அவர்கள் ஆக்கிவிட்டனர் என்றும் எழுதினார்.. கட்டளையிடுவது எனும் உரிமை சிலர் பெறுவதன் மூலம் மனித சமத்துவம் நிலைகுலைக்கப்படுகிறது என்றார்.  1830ல் ரஷ்யாவில் துவங்கிய காலரா நோய் அய்ரோப்பா முழுமையும் தாக்கத்துவங்கியது. 1831ல் பிரஷ்யா அரசு முன் எச்சரிக்கையாக பள்ளிகள், இறைச்சி கூடங்களை மூடியது. வீடுகளுக்கு வருவோர் கட்டுப்படுத்தப்பட்டனர். இறந்தவர்களை கால்சியம் குளோரைடில் அமிழ்த்தித்தான் எடுத்து செல்லவேண்டும் என்கிற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 1831ஆகஸ்டில் காலரா பெர்லினுக்கு பரவியது. அங்கு சாக்கடை கழிவுநீர் வசதிகள் மேம்படாமல் தெருவில் ஓடும் நிலைதான் இருந்தது. இதனால் தொற்றுக்கிருமிகள் வேகமாக பரவியது. ஹெகல் 1831ல் வயிற்று வலியால் அவதிப்பட்டார்.  வாந்தி தொல்லையும் கூடியது. தியேட்டர் பொழுதுபோக்குகள் என எதிலும் அவரால் ஈடுபட முடியவில்லை. பெரும்பாலும் தோட்டத்திலேயே இருந்தார். சில நேரம் தங்கள் குடும்பத்தாருடன் செஸ் விளையாடினார். சில மாணவர்கள் மட்டும் அவரை பார்த்து சென்றனர். அருகாமையில் குடியிருந்தோர் பலர் காலராவிற்கு பயந்து வெளியேறினர். 1831 நவம்பர் ஆரம்பத்தில் அவர் சொற்பொழிவுகள் தந்தார். அவரின் உடல் பலவீனம் உணரப்பட்டது.  நவம்பர் 13 அன்று அவருக்கு டாக்டர் சிகிட்சை அளித்தனர். அவர் இரத்த வாந்தி எடுத்தார். நவம்பர் 14 அன்று மதியம் அவரால் மூச்சுவிட முடியவில்லை. அன்று மாலை டாக்டர்கள் வந்து அவர் காலரா தாக்கி மறைந்துவிட்டார் என உறுதிப்படுத்தினர். எட்வர்ட் கான்ஸ் ஹெகல் மறைவை நண்பர்களுக்கு அறிவித்தார். காலரா என தவறாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர் என்பதையும் டெர்ரி பதிவு செய்கிறார். நவம்பர் 16 1831 அன்று மாபெரும் ஊர்வலமாக அவரது உடல் பிஷ்டே போன்றவர்கள் வைக்கப்பட்ட  இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. மாணவர்கள் திரளாக வந்திருந்தனர்.. ஹெகல் மறைவிற்கு பின்னர் ஒரே மாதத்தில் அவரது சகோதரி கிறிஸ்டியான நதியில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டார். ஹெகல் நண்பர்கள் அவரது ஆக்கங்களை கொணர்வது என முடிவெடுத்தனர்.  ஹெகல் மறைந்த பத்தாம் ஆண்டில் 1841 நவம்பர் 15ல் ஷெல்லிங் உரை கேட்க பகுனின், எங்கெல்ஸ், சோரன் கீர்க்கேகார்ட் அமர்ந்திருந்தனர். இவர்கள் பின்னாட்களில் அனார்க்கிசம், மார்க்சியம், எக்சிஸ்டென்சியலிசத்தின் அடையாளமாகி போனார்கள்.     IV எதார்த்தமானது அனைத்தும் பகுத்தறிவிற்கு உகந்தது. பகுத்தறிவிற்கு உகந்தது எதார்த்தமானது - தனது வளர்ச்சி போக்கில் யதார்த்தமானது அவசியமானதென்று நிரூபித்துக்கொள்கிறது. என்கிற புகழ்வாய்ந்த கருத்தை முன்வைத்தார் ஹெகல். ஹெகல் படைப்பாற்றல்மிக்க மேதை மட்டுமல்ல, பல்துறைகளின் அறிவுகளஞ்சியம் அவர் என எங்கெல்ஸ் அவரை புகழ்ந்து எழுதினார். ஒவ்வொரு துறையிலும் புதிய சகாப்தத்தை திறந்துவிடும் பாத்திரம் வகித்தவர் அவர். தர்க்கவியல், இயற்கை, மனம், வரலாறு, உரிமை, சமயம் பற்றிய தத்துவஞானங்களை அவர் தந்தவர். வெவ்வேறு துறைகளின் வளர்ச்சிக்குரிய வழிகளை கண்டுபிடித்து நிரூபிக்க பாடுபட்டவர் ஹெகல். ஹெகல் அமைப்புமுறை ஒன்றை உருவாக்கும் கட்டாயத்தில் இருந்தார். அதை ஏதோவொரு முனைக்கு கொண்டுவந்து முடிக்க வேண்டியதாயிற்று. அவரின் அந்த முழுமுதல் கருத்தானது (absolute Idea)- எந்த அளவிற்கு அதைப்பற்றி அவரால் ஒன்றும் சொல்வதற்கு இல்லையோ அந்த அளவிற்குத்தான் பரமநிலையில் இருந்தது என எங்கெல்ஸ் கூறினார். தத்துவஞானத்திற்கு வகுத்தளிக்கப்படும் பணிக்கு அர்த்தம், மனிதகுலம் முழுவதும் தனது முற்போக்கு வளர்ச்சியில் சாதிக்க முடிவதை ஒரு தனி தத்துவ ஞானி சாதித்து தீரவேண்டும் என்பதுதான் என்றால் இதற்காக நாம் ஹெகலுக்குதான் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.  அறியாமலேயே ஹெகல் அமைப்புமுறைகளின் குகைப்பாதைகளிலிருந்து வெளிவந்து உலகத்தைப்பற்றிய உண்மையான நேர் உறுதியான அறிவுகாணும் பாதையை நமக்கு காட்டினார் என்றார் எங்கெல்ஸ். ஹெகலுக்கு வளர்ச்சியின் போக்கில் முன்பு எதார்த்தமாக இருந்தது அனைத்தும் எதார்த்தமற்றதாகிவிடுகிறது. எதார்த்தமானது அனைத்தும் பகுத்தறிவிற்குரியது எனும் கூற்று நடப்பில் இருந்து வருவதனைத்தும் சாகத்தக்கதே என்கிற கூற்றாக மாறிவிடுகிறது என்றார் எங்கெல்ஸ். எந்த தத்துவ ஞானத்தையும் பொய் என அடித்து பேசுவதால் மட்டுமே அதை ஒழித்துவிடமுடியாது, ஹெகலின் வலுமிக்க, அறிவுவளர்ச்சியின்மீது செல்வாக்கு செலுத்திய நூல்களை புறக்கணிப்பதன்மூலம் அவரை ஒதுக்கிவிடமுடியாது. அதன் சொந்த அர்த்தத்தில் தான் அவற்றை அகற்ற வேண்டியிருந்தது என்பார் எங்கெல்ஸ். ஹெகல் கருத்துப்படி தீமை என்பது வரலாற்று வளர்ச்சியின் உந்துசக்தி- தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வடிவம். மனிதன் இயற்கையாக நல்லவன் என்பதைவிட மனிதன் இயற்கையாக கெட்டவன் என்பதுதான் ஆழமானதாக இருக்கிறது என்றவர் ஹெகல். பேராசை, அதிகார வேட்டை வர்க்கப் பகைமைகள் தோன்றிய காலத்திலிருந்து, வரலாற்று வளர்ச்சிக்கு நெம்புகோல்களாக பயன்பட்டுவருகின்றன என எங்கெல்ஸ் இதை விளக்கி சொல்கிறார். சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு பேராசிரியர்கள் இணைந்து மேற்கு- கீழை தத்துவங்கள் குறித்த வரலாற்று நூல் ஒன்றை கொணர்ந்தனர்.. அபுல்கலாம் ஆசாத் எடுத்த முயற்சியால் இந்திய வாசகர்களுக்கு புரியவைக்கவேண்டும் என்கிற பொறுப்பில் பல்வேறு மாநில மொழிகளிலும் இப்பெரும் நூல் மொழிபெயர்க்கப்பட்டு தத்துவத்துறைக்கு மகத்தான பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரடெரிக் ஹெகல் குறித்த பகுதியை பேராசிரியர் ராஷ்பிகாரிதாஸ் என்பார் எழுதியிருக்கிறார். பேராசிரியர் ராஷ்பிகாரி தரும் ஹெகல் குறித்த விளக்கத்தை சுருக்கமாக பார்க்கலாம். ஹெகலைப் பொறுத்தவரை தத்துவம் விஞ்ஞானமே. டயலக்டிக்ஸ் என்கிற முரண்தர்க்கமுறையான ’இயக்கவியல்தான்’ ஆய்வுமுறையாகும். உடன்பாடான ஒன்று மறுப்பினை காணும்போது முரண்நிலை தோன்றும். மறுப்பை மறுத்தல் நடக்கும். இதனால் முதலில் இருந்த நிலை வருவதில்லை. மூன்றாவது நிலை உருவாகலாம். தனித்த நிலையில் புலப்படும் ஒன்று உள்ளார்ந்த நிலையில் முரண்பாடுகளை புலப்படுத்துகிறது. இங்கு நாம்பேசும் தொகுத்துக்காண்பது என்பது வேறுபடும் நிலையை காணாதது அன்று. ஹெகல்  Science of Logic, Philosophy of Nature, Philosophy of Spirit என தர்க்கவியல், இயற்கையின் மெய்ப்பொருளியல்,ஆன்மாவின் மெய்ப்பொருளியல் என பல நூட்கள் வழியாக பேசுகிறார். முதலில் உள்ளது என்கிற உடன்பாட்டு நிலையிலும், வரையறை பண்பிலாததால் இன்மையாகவும் Being- nothing என்கிற ’உளது—இன்மை’ என எதிர்மறை இணைவுகளில் ஹெகலின் அளவையியல் செல்கிறது. ஆகும்போது உள்ளநிலையிலிருந்து இன்மை நிலைக்கு செல்கிறது. Becoming என்கிற ஆகுதல் இடையறாது தோன்றும் மாறுதல் ஆகும். உளவாவது ஆகுதல், இல்லாது நீங்குதல் ஆகிய நிலைகளை இடையறாது கொள்வதே ஆதல் என்கிற விளக்கம் ஹெகலிடம் கிடைக்கிறது. உள்ளது என்கிற நிலையை அறிகிறோம். மற்றவற்றிலிருந்து ’அது’ வேறுபடுகிறது. இக்குணம் பொருளை எல்லைகுட்படுத்துகிறது. எல்லைக்கு உட்பட்ட ஒன்று மற்ற ஒன்றால் வரையறைக்கு உட்படுகிறது. இது முடிவின்றி தொடர்ந்து நடைபெறுகிறது. ஹெகல் theory of being, theory of essence, theory of concept என்கிற இருப்பு , சாரம், கருத்தாக்க கொள்கைப்பற்றி  விளக்குகிறார். கருத்தமைவு எனும் பொதுமைக்கு ’மாறு’ தனிநிலை. பொதுப்பண்பு தனிநிலையில் விளங்குபவனற்றால் உணர்த்தல் பெறுகிறது. அறிவானும் அறிபொருளும் ஒன்றை ஒன்று எதிர்த்து என்பதுடன் இயைந்து ஒருமைப்பட்டும் விளங்குகின்றன. ஹெகல் கருத்தில் எண்ணமானது முற்றிலும் உண்மையுடையதே. முழுமையான எண்ணம் வரம்பிலாதது. முற்றிலும் தன்னையே தான் வரையறை செய்து கொள்வது. எண்ணமானது செயலுரிமை பெறுகிறபோது தன்னைத்தானே பகைத்துக்கொள்கிறது. அயலானதாக ஆகிறது. இயற்கையானது இயற்கையல்லாத ஆன்ம வடிவத்தில் மீள்கிறது என ஹெகல் விளக்கி செல்கிறார். ஹெகல் தூய அறிவிற்கு இயற்கையை எதிர்நிலையாக கொள்கிறார். எண்ணமானது எதிர்நிலையில் விளங்குகிறபோது இயற்கையாகும். பண்புகளும் எதிர்மறை நிலையிலேயே விளங்குகின்றன. அறிவுலகில் தூயப் பொதுப்பண்புகள் இயற்கையில் தனிநிலைப்பண்புகளாக விளங்குகின்றன. எண்ணம் புறவடிவத்தை ஏற்கிறபோது தன் இயல்போடு முரணுறுகிறது. இயற்கையில் அறிவானது உறங்கிக்கிடக்கிறது என்கிறார் ஹெகல். அறிவாற்றல், இயற்கையினுள் செயலற்று விளங்கி, பின்னர் உயிராக அல்லது ஆன்மாவாக விழித்தெழுகின்றது. இயற்கை அவருக்கு அறிவு பிறழ்ந்தநிலை போன்றது. அறிவுநிலை பிறழ்ந்து விளங்கினும் அல்லது உறங்கினும் இயற்கையினுள் அறிவாற்றல் விளங்காமல் இல்லை எனவும் அவர் விளக்குகிறார். இயற்கையானது எவ்வாறு பல்வகை நிலைகளைக்கடந்து தன்னிலை உணர்வை ஆன்மீகத்தன்மையை அடைகிறது என்பதையும் அவர் பேசுகிறார். ஹெகலின் கருத்துமுறைக்கு அளவையியல் அடித்தளம் எனில் அவரது ஆன்மாவின் மெய்ப்பொருளியில் philosophy of spirit முடிநிலை என்கிறார் ராஷ்பிகாரி. ஆன்மாவின் வாழ்விலே கருத்தானது நிறைவுறுவதுடன் இயற்கையும் தன் உண்மையைக் காண்கிறது. அவர் அகநிலை ஆன்மா என்பதை மானிடவியல், உளவியலில் விளக்குகிறார். ஆன்மா உணர்வு பெறுவதை phenomenology தோற்றநிகழ்வுகொள்கைத்துறை என்கிறார். செயலுரிமை அல்லது கட்டற்ற நிலையை உணர்வது என்பது செயலுரிமையை புறநிலையில் உள்ளதாக அமைத்து அறிதலேயாகும். உலகாக ஆன்மா தன்னையே அமைத்துக் கொள்கிறது. செயலுரிமை அல்லது கட்டற்றநிலை எண்ணமே இவ்வுலகாகும். இதுதான் புறநிலை ஆன்மா என்கிற விளக்கம் நமக்கு கிடைக்கிறது. இதில் உரிமை மெய்யியல், அரசியல் தத்துவம், வரலாறு மெய்ப்பொருளியல் வருவதாக ராஷ்பிகாரி சொல்கிறார். கடவுள் மனம் என்பது படைப்பு மனங்களில்தான் உண்மையாகிறது என எழுதினார் ஹெகல்.. வரலாறு பற்றிய ஒருமைவாதத்தின் வளர்ச்சி என்கிற நூலை தோழர் பிளக்கானோவ் எழுதினார். அதில் ஜெர்மன் தத்துவம் குறித்து விவாதிக்கிறார். முரண்தர்க்கமே வாழ்க்கை அனைத்தின் தத்துவமாக இருக்கிறது. வாழ்வு மரணத்தின் விதைகளையும் தன்னுள் கொண்டிருக்கிறது. எந்த ஒரு நிகழ்வும் அண்மையிலோ சேய்மையிலோ தனது இருப்பிற்கு முடிவு கண்டு அதன் எதிராகவே அதை மாற்றும் அம்சங்களை தன்னிடமிருந்தே உருவாக்கிக்கொள்கிறது என ஹெகல் விளக்கியதாக தெரிவிக்கிறார். இதை மேலும் விரிவாக்கி பிளக்கானோவ் எழுதுகிறார். ஒவ்வொருநிகழ்வும் அதன் இருப்பை நிர்ணயிக்கும் அதே சக்திகளின் செயலினால் தவிர்க்கமுடியாதபடி அதன் சொந்த எதிர்மறையாக மாற்றப்படுகிறது. இருப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஓர் அளவை மற்றொரு அளவாக மாற்றுகிறது. அதுமட்டுமில்லாமல் பண்பு அளவாகவும், அளவு பண்பாகவும் மாறுவதையும் அது உள்ளடக்கியது- சாத்தியமான எதிர்மறை கருத்துக்கள் அனைத்தின் போராட்டத்தின் விளைவாகவே உண்மை தோன்றவும் செய்கிறது  என ஹெகலின் தர்க்கவியலை பிளக்கானோவ் எடுத்துரைக்கிறார். எதுவும் உலகில் நிரந்தரமாக இருப்பதில்லை. அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவை. உலகம் முழுமையான ஒன்று. ஒவ்வொரு துகளும் முடிவில்லாத எண்ணற்ற தொடர்புகள் உடையது- அனைத்து இயக்கங்களும், ஒவ்வொன்றும் தமக்குள்ளே முரண்பாடுகளைக் கொண்டுள்ளன  என்பதை ஹெகலிடம் மார்க்ஸ்- எங்கெல்ஸ் கண்டனர். ஆனால் ஹெகலின் இயக்கவியல் உணர்வில் துவங்குகிறது. நடப்பவை சிந்தனையின் முழுமுதல் கருத்தின் பிரதிபலிப்பு எனக் கருதினார் ஹெகல். இயற்கை, மனிதவரலாற்றை அதற்கு உட்படுத்தினார். இப்போதுள்ள அறிவு, போதனை அச்சமூகத்தின் உச்சகட்டம் என்றார். பரம்பொருள் என சொல்லி கருத்துமுதல்வாதமாக சுருங்கிவிட்டார் ஹெகல் என மார்க்ஸ் அவரை விமர்சித்தார். ஹெகலின் இயக்கவியலை தலைமேல் எழும்படி கால்களில் நிறுத்தவேண்டியுள்ளது என்றார் மார்க்ஸ். மார்க்ஸ் ஹெகலை கருத்தூன்றி கற்றார். ஆனால் அவரை தெய்வமாக்கவில்லை என ஹென்றி வோல்காவ் குறிப்பிட்டார். தத்துவ ஞானம் தனது பொருளாயத ஆயுதங்களை பாட்டாளி வர்க்கத்தில் காண்பதுபோல், பாட்டாளிவர்க்கம் தனது ஆன்மீக ஆயுதங்களை தத்துவ ஞானத்தில் காண்கிறது என்றார் மார்க்ஸ். மார்க்ஸ் எழுதிய ஹெகல் விமர்சன நூல் சற்று கடினமானது. அதற்கு ஹெகலிய மொழி தெரிந்திருக்கவேண்டும் என்றார் வோல்காவ்.  மார்க்சின் காபிடலை ஹெகலை விளங்கிக் கொள்ளாமல் சரியாக புரிந்துகொள்ளமுடியாது என்றார் லெனின்.. அரசர் சர்வவல்லமை படைத்தவரா- மக்களா என்கிற கேள்வியை ஹெகல் குறித்த விமர்சனத்தில் மார்க்ஸ் எழுப்பினார். பொதுநன்மை என்பதன் பின்னால் தனிகோஷ்டியின் நலன் இருக்கிறது- அது கார்ப்பரேஷன் உணர்ச்சி என்றார். இரகசிய அர்த்தம் அங்கு மறைத்துவைக்கப்படுவதாக மார்க்ஸ் விளக்கினார். பாயர்பாக் செல்வாக்கு மார்க்சிடம் ஏற்பட்டாலும் ஹெகலைவிட பாயர்பாக் தாழ்ந்தே இருக்கிறார் என்றார்.. ஹெகலிடம் எல்லா அந்நியமாதலும் கருத்தின் அந்நியமாதலாக இருந்தது. அந்நியமாதலை ஒழிப்பது, தனிசொத்துடைமையை ஒழிப்பதை பொறுத்தது என மார்க்ஸ் முன்னேறவேண்டியிருந்தது என்று சொல்கிறார் வோல்காவ். பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் தனது மனித சமுக சாரம் எனும் புத்தகத்தில் ஹெகல்- மார்க்ஸ் பற்றி விளக்குகிறார். மூலதனத்தில் தனது இயக்கவியல் ஹெகலிடமிருந்து எப்படி மாறுபடுகிறது என்பதை மார்க்ஸ் சொல்கிறார். ஹெகல் சிந்தனையின் இயக்கப்போக்கை கருத்து என்ற பெயரில் தனியான பிரிவாக மாற்றிவிடுகிறார். எதார்த்த உலகை கருத்திலிருந்து தோன்றும் வெளிப்புற நிகழ்வுபோக்கின் வடிவமாக காண்கிறார். மாறாக பொருளியல் உலகின் நிகழ்ச்சி போக்குகளை  மனிதமூளை பிரதிபலிப்பதே கருத்தியல் என்பதாகும். இதுதான் தனது இயக்கவியல் என மார்க்ஸ் குறிப்பிடுவதாக தாம்சன் எழுதுகிறார்.   V இஸ்தவான் மெஸ்சாரஸ் (Istavan Meszaros) ஹெகலிடம் மார்க்சின் உறவு எனும் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் லெனின் குறிப்பிட்டு சொல்வதை நினைவுபடுத்துகிறார்.  காபிடல் புரிய ஹெகல் அவசியம். ஹெகலை புரிந்துகொள்ளாததால்தான் பலர் மார்க்சை தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என்றார் லெனின். மார்க்ஸ்  தனது கிரான்ரிஸ்ஸே, காபிடலில் ஹெகல் குறித்து பேசுகிறர். ஹெகல் மார்க்ஸ் உறவை தத்துவ உறவாக இயக்கவியல் உறவாக புரிந்துகொள்ளவேண்டும் என்பார் இஸ்தவான். ஹெகலது டயலக்டிக்ஸ் அடிப்படையானது என்பார் மார்க்ஸ். ஹெகலின் சாரத்தில்  துவக்கம் mystical result என்கிற புதிர்நிலை ஆக்கப்பட்டது என்றார் மார்க்ஸ். மார்க்சின் இயக்கவியல் ஹெகலை தாண்டி சென்றது என்பதை ஏற்கும் மெஸ்சாரஸ் இருவரையும் எதிர் எதிர் நிறுத்துவது இருவரின் முக்கியத்துவத்தையும் குறைத்துவிடும் என்றார். ஹெகலை மார்க்சின் பெயரால் தாக்குவது மார்க்சை குறைத்துவிடும் என எச்சரித்தார். காண்ட்டின் மீதான விமர்சனம் என்கிற வகையில் ஹெகல் சிந்தனைகள் மார்க்சிற்கு முக்கியமாயின. ஹெகலின் இயக்கவியல் முரண்தர்க்கமுறை மார்க்ஸிற்கு உதவியது. அவர் முதலாளித்துவ வளர்ச்சி அதன் உற்பத்திமுறை ஆய்விற்கு அதனை பயன்படுத்திக் கொண்டார். ஹெகல் வரலாறு என்பதை செயலுரிமை அல்லது சுதந்திரம் குறித்த விழிப்பின் வளர்ச்சி என்றார். சமுக நிறுவனங்கள் அதைப்பொறுத்தே அமைவதாகவும் தெரிவித்தார். உணர்வு இருப்பை தீர்மானிப்பதாக அவர் வந்து சேர்ந்தார். கிறிஸ்துவம், பிரஞ்சுபுரட்சி, அரசியல் அமைப்பு சட்டப்படியான முடியாட்சி என மனித வரலாறு வளர்கிறது. மதத்தில் ஏற்படும் வளர்ச்சி, தத்துவ கருத்துக்களுக்கு ஏற்ப சமுக நிறுவனங்கள், அரசியல் வளர்ச்சி என அவர் நிறுவிட முயற்சித்தார்.  ஹெகல் மார்க்ஸ் என்கிற இருபெயர்கள் ஏற்பு மறுப்பு என்கிற இரண்டுமான பெயர்கள் என்றார் சிட்னி ஹூக். ஹெகலிய கூறுகள் மார்க்சின் சிஸ்டத்தில் ஒருங்கிணந்தவையே என்றார் ஹூக். ஹெகலின் முறையியல் மற்றும் கோட்பாட்டியல் தாக்கம் மார்க்சிடம் செல்வாக்கு செலுத்தியது. காரணகாரிய இறையியலாக(Rational Theology) நாம் ஹெகலை எடுத்துக்கொள்ளலாம். உருவம்- உள்ளடக்கம், ஆன்மா-பொருள், தனி- சமூகம், மனசாட்சி- சட்டம் என்பன போன்ற இருமைகளை கடக்க விரும்பினார் ஹெகல். அவையெல்லாம் நிகழ்தலின் தொடரிகள் என்றார்.  உலகு இல்லையெனில் கடவுள் இல்லை (Without the world, God is not God)  என ஹெகல் விளக்கினார். கடவுள் தன்னை உலகு வழியாக விவரித்துக்கொள்கிறார் என அவர் பேசியதை நம் வசதிக்காக புரிந்துகொள்ளலாம்.  மனிதர்களின் மெய்யான இருத்தல் என்பது அவர்களது மெய்யான வாழ்க்கை நிகழ்ச்சிபோக்காகும் என மார்க்ஸ் ஜெர்மன் சித்தாந்தத்தில் குறிப்பிட்டார். விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கும் ஜெர்மன் தத்துவஞானத்திற்கு பதிலாக நாம் மண்ணிலிருந்து விண்ணுக்கு ஏறுகிறோம். அதாவது உடலுருவில் விளங்கும் மனிதர்களை வந்தடைவதற்காக என்றார்.     ஹெகலின் ’ஆன்மா கருத்தியல்வாதம்’ என்கிற இலக்கை மார்க்ஸ் ஏற்கவில்லை. Whatever is real is reasonable, and whatever is reasonable is real  என்பது ஹெகலின் புகழ்வாய்ந்த மேற்கோள்களில் ஒன்று. அவரது முறைமையில் காரணம் யதார்த்தத்துடன் அடையாளமாகிறது. ஹெகல்  ‘உள்ளதன்கண் அமைதி’ என்பதை அரசியலில் தான் உணர்த்தவில்லை என பிற்காலத்தில் கேள்வி ஒன்றிற்கு விளக்கமாக தந்தார். இருக்கின்ற பிரஷ்யா அரசு பிரெடரிக் வில்லியம் III அவர்களின் ஆட்சி எந்த அளவு நேரிய நியாயம் கொண்டது என்கிற கேள்வி ஹெகலைப் பார்த்து எழுந்தது.  தர்க்கப்படி சமுகத்திற்கு அரசு முதலானது என்றும் நன்னெறிகள் மற்றும் தூலமான விடுதலையின் வெளிப்பாடாக அரசு  என ஹெகலுக்கு தோன்றியது. அரசு என்பதே இல்லாமல் சமுகங்கள் இருந்துள்ளன.  எனவே தர்க்கப்படி பார்த்தால் சமுகம்தான் முதல்.  அதில் முக்கிய அமைப்பாக அரசு என்பது செயல்படுகிறது என மார்க்ஸ் விளக்கம் அமையும். -பொருளாதார வகைப்பட்டு வர்க்கங்கள் உள்ளவரை அரசு இருக்கும் என்பது சிட்னிஹூக் தரும் மார்க்சிய விளக்கம். ஹெகலின் அரசியல் தத்துவம் அவரின் மதமெய்ப்பொருளியலின் கூறாக உள்ளது என்கிறார் ஹூக். ஹெகலைப் பொறுத்தவரை தத்துவம் the thinking view of things-  சிந்தனயின் செயல்பாடு. அனைத்து பொருட்களுக்கும் தனித்தனியாகவும் அதன் குழுவாகவும் அர்த்தம் இருக்கிறது. தத்துவவாதி அதனை கண்டுணரவேண்டும். ஹெகலிடம் உலகை எவ்வாறு மாற்றிடவேண்டும் என்பதை நாம் தேடமுடியாது என்கிறார் ஹூக்..  அனைத்து உண்மைகளும் தூலமானவை (All Truth is concrete) என்றார் ஹெகல்.. அவை கருத்து தர்க்கவியல்பட்டவை என்றார். சிந்தனை சிந்திப்பதால் உண்மையை அந்த சிஸ்டத்தில் கண்டுணர்கிறது என்றார். மார்க்சிற்கு தூலமானவை ’இருப்பவை’ சிந்தனைக்குரியவகையில் உள்ளவை என்றாகிறது.. செயல் மற்றும் சிந்தனையின் ஒற்றுமையை அதிகமாக வலியுறுத்தினார் மார்க்ஸ். சமுக கோட்பாடுகள் எதை உருவாக்குகின்றன என்பதால் தீர்ப்பிடப்படுகின்றன. உன்னதமான சமூகம் ஒன்றைப் பற்றி கோட்பாட்டாக்கம் செய்யும்போது இன்றுள்ள சமுகத்தை உன்னதமாக மாற்றிட முயற்சி எடுக்காமல் இருப்பது என்பது இன்றுள்ளதை ஏற்பதாகவே ஆகும் என்கிற மார்க்ஸ் பார்வையை சிட்னி விவரிக்கிறார். மார்க்சின் தத்துவ முறையியல் விமர்சனாபூர்வமானது. சமுகவியல் விசாரிப்புகள் கொண்டது- Sociaology not axiology சமுகவியல் விழுமவியல் அல்ல என்பார் சிட்னி. பாட்டாளிவர்க்கம் தத்துவத்தில் அறிவார்ந்த ஆயுதங்களையும், தத்துவம் பாட்டாளிவர்க்கத்திடம் தனது பொருண்மை கருவிகளையும் கண்டாகவேண்டும் என்றார் மார்க்ஸ்.  உலகம் மனித படைப்பிற்கு முன்னரான கடவுளை அவரது என்றைக்குமான நிரந்தர சாரத்தில் வெளிப்படுத்துவது தனது தத்துவம் என்கிற உரிமைகோரல் ஹெகலிடம் இருந்தது. உண்மையான எண்ணம் என்பது அனைத்து அருவ அம்சங்களையும் சீராக ஒன்றாக்கி அதை தூலமாக்கும். அந்த ஒன்றுபட்டதை தாண்டி தெளிவானது ஏதுமில்லை என்பது ஹெகலின் குரல் . இருக்கும் ஒன்று அதை கண்டறியும்போதுதான் தெளிவாகிறது. இருப்பது நாம் எப்படி அறிந்துகொள்கிறோம் என்பதை பொறுத்து இருப்பதில்லை என்பது மார்க்சின் குரல்.   வரலாறு என்பது கடவுளின் சரிதையா-இல்லையேல் மனித முயற்சிகளுக்கான முடிவுகளா என்கிற கேள்வி ஹெகலிடமிருந்து மார்க்சை பிரிக்கிறது என வரையறுக்கிறார் சிட்னி. வரலாற்றை முறைமைப்படுத்துவது என்பதையோ, தீர்மானகரம் என்பதையோ மார்க்ஸ் மறுக்கவில்லை. ’விதிவாதம்’ என்பதை அவர் ஏற்கவில்லை. மானுடமில்லாத சக்திகளால் வரலாறு உருவாக்கப்படுவதில்லை. மனிதர்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்றார் மார்க்ஸ். மார்க்ஸ் மனித வரலாற்றை சமுக வரலாறாக பார்க்கிறார். தனிமனிதர் என்ன செய்கிறார் என்பதைவிட வர்க்கம் அதில் உறுப்பினர் என்கிறவர் என்ன செய்கிறார் என்பதை அவர் விவாதிக்கிறார். எனவேதான் வரலாறு என்பது வர்க்க எழுச்சி , வீழ்ச்சி, முயற்சிகளாக அவரின் எழுத்துக்களில் வெளிப்படுகிறது என நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.  ஹெல்கலுக்கு வரலாறு  முன்னேற்ற முறையில் சுதந்திரத்தை அடைவதாகும். மார்க்சிற்கு வாழ்வின் சாதனங்கள் எந்த அளவு சமுகமயபடுத்தப்படுகிறது- அப்படியில்லாத நிலையில் சுதந்திரம்  ஏது என்ற புரிதல் இருந்தது என சிட்னி மேலும் தெளிவாக்குகிறார். யதார்த்தம் என்பது ஆன்மீகமானது-முறையியலானது- பகுத்தறியக்கூடியது என்பது ஹெகலிய முன்வைப்புகள். சமுகம் மனித மந்தை (Society as a human herd ) என்பார் ஹெகல். முழுமையை உணரும் தனித்துவம் அவருக்கு தேவைப்படுகிறது. சிஸ்டம் உய்ர்ந்து செல்ல செல்ல ’உண்மை தனிநபர்’  வெளிப்படுவார் என்பது அவர் பார்வை. தனிநபர்கள் பேசிக்கொள்வதற்கும் விவாதிப்பதற்கும் முன்னர் மனிதர்கள் இருந்து ஒருவருக்கொருவர் தேவைப்படுகின்றனர். எனவே உணர்வு என்பது சமுகவயப்பட்டது என்பது மார்க்ஸ் பார்வை.  எது நடந்ததோ அதை நடக்கவேண்டியபடித்தான் நடந்தது என்பார் ஹெகல். (possibilities must be grounded in the nature of actual). மார்க்ஸ் பொறுத்தவரை நெறிமுறைகள் (Ethics) என்பது வர்க்கம் சார்ந்ததுதான். வர்க்கம் தனது தேவைகளையே உரிமைகளாக பிரகடனப்படுத்தவேண்டியுள்ளது. நாங்கள் உலக கோட்பாடுகளுக்கு எதிராக எங்களை நிறுத்திக்கொண்டு, நாங்கள் சொல்வதுதான் உண்மை, மண்டியிடுங்கள் எனக் கோரவில்லை. இருக்கின்ற கோட்பாடுகளிலிருந்துதான் எங்களது புதிய கோட்பாடுகள் பெறப்பட்டு முன்வைக்கப்படுகின்றன. உலகம் தன் விருப்பத்திற்கு மாறாக என்ன இருக்கிறதோ அதை பெறவேண்டிய அவசியத்தை நாங்கள் எடுத்துக்காட்டியுள்ளோம் என மிக அடக்கமாக ஆனால் உறுதியாக தங்கள் சிந்தனைக்குரிய இடத்தை மார்க்ஸ் ரூகேவிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் தெளிவுபடுத்துகிறார். வழிமுறை என்பதன் வாழ்வு நடைமுறைக்குள்ளாதல் என்பதில்தான் இருக்கிறது.     VI The Cambridge Companion to Hegel and Nineteenth-Century Philosophy என்ற புத்தகத்திற்கு ஒரு விமர்சனம் என்பதை அலெக்சாந்தர் பாங்க்மேன் (Alexander Fangmann)  எழுதினார். அதில் அவர் ஹெகல் சிந்தனையின் சாரமாக சிலவற்றை குறிப்பிடுகிறார். ஹெகலிய கருத்துக்களை ஏனைய சிந்தனையாளர்கள் (குறிப்பாக மார்க்ஸ்) உள்வாங்கியதை ஆராயாமல் ஹெகலை ஒருவர் புரிந்து கொள்வதென்பது அர்த்தமற்றதும், பின்னோக்கிய வீழ்ச்சியுமே ஆகும். ஹெகலுடைய கருத்துக்கள் வெறுமனே ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மேதையின் கைவண்ணத்தில் வந்தவை அல்ல; அவை உள்வாங்கப்பட்டவிதம் மற்றும் அவற்றின் அபிவிருத்தி ஆகியவற்றால் மட்டும் தான் அவற்றின் உண்மையான முக்கியத்துவத்தையும், அர்த்தத்தையும் அளவிட முடியும். மார்க்ஸூம், ஏங்கல்ஸூம் ஹெகலிய முறையைக் குறித்து மிக பிரகாசமான விமர்சனங்களை மட்டும் அளிக்கவில்லை. ஹெகலால் செய்யப்பட்ட தத்துவார்த்த அபிவிருத்திகளைப் பாராட்டிய மற்றும் அவற்றை ஒரு விஞ்ஞான சடவாத அடித்தளத்தில் கொண்டு போய் நிறுத்திய முதல் சிந்தனையாளர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். உண்மையில் சிந்திப்பதற்கு ஏதோவொன்று இருந்து கொண்டே இருக்கிறது என்று சிந்தனை எடுத்துக் கொள்கிறது. ஆனால் தர்க்கம் முழு ஆழமுடையதாக இருப்பதற்காக, அதை ஆராய்வதற்காக, இந்த ஏதோவொன்று என்பது எந்தவிதமான பண்புநலனிலும் இருக்கலாம் என்பதை ஏற்க முடியாது. இதுவரையில் அது இருக்கும் தன்மையிலிருந்து தான் அதை எடுத்தாள முடியும்..  இவ்வித ஆராய்ச்சியில் ’இருப்பின்’ இந்த தொடக்க வகைப்பாடு, அதன் மிகவும் மறைபொருளாக உள்ள தன்மையிலும் மற்றும் வரையறுக்க முடியாததன்மையிலும், “அது நம் கண் முன்னாலேயே ஒன்றுமில்லாததற்குள் (nothing) மறைந்துவிடுகிறது.”  எந்தவித வேறுபட்ட பண்புநலனையும் கொண்டிருக்காமல், சுத்தமான இருப்பின் சிந்தனை முற்றிலும் வெறுமையாக இருக்கிறது என்பதுடன், அது நடைமுறையில் ஒன்றுமில்லாத சிந்தனைக்குச் சமமாக இருக்கிறது. ஆனால் இந்த ஒன்றுமில்லாத தன்மையையும் ஓரளவிற்கு உள்ளவாறே ஏதோவொன்றாக மட்டுமே இருக்க முடியும். ஆகவே ஒன்றுமில்லாத தன்மை இருப்பிற்குள் தான் மீண்டும் வந்து விழுகிறது. ஓர் ஒன்றுமில்லாத தன்மையே சிந்தனையாக இருக்க முடியும் என்பதால், அது ஒன்றுமில்லாத தன்மையாக இருக்க முடியாது, மாறாக அது இருப்பாக இருக்கிறது. இத்தகைய தூய்மையின் வகைப்பாடுகள் ஒவ்வொன்றும் "தர்க்கரீதியாக ஸ்திரமின்மைக்குத் திரும்புகின்றன என்பதுடன் அதன் எதிர்தரப்பிற்குள் சென்று அதுவே காணாமல் போகின்றன... ஒவ்வொன்றும் ஒன்றுமில்லாததாக இருப்பதையும், ஆனால் அதன் சொந்த காணாமல் போகும் தன்மையின் நிகழ்முறையையும் எடுத்துக்காட்டுகின்றன.” உண்மையில், அவையெல்லாம் என்னவாக இருக்கின்றன என்றால் "மாறிக்கொண்டே இருப்பதாக" இருக்கின்றன என ஹெகலிய சிந்தனை பயணிக்கிறது. “இயங்கியல் என்பது இவ்வாறு ஹெகலினால் உருவாக்கப்பட்ட ஒரு முறையோ அல்லது அது வகைப்பாடுகளின்மீது வெளியிருந்து பெறப்பட்டதோ அல்ல, மாறாக அது இந்த வகைப்பாடுகளுக்கே சொந்தமானதாகும் (மேலும் அது இருப்பின் விஷயங்களைப் தொடர்புபடுத்திக்கொள்கிறது). "அதனை அதற்குள்ளேயே கொண்டிருக்கும் இயங்கியல் உள்ளடக்கத்தின் உட்தன்மையாக இருக்கிறது." ஆண்டி பிளண்டன் (Andy Blunden) ஹெகல் குறித்து மெல்போர்ன் சொற்பொழிவுகள் ஆற்றினார். நெப்போலியன் போனபார்ட் ஹெகல் பிறந்த ஆண்டில்தான் பிறந்தார்.  1821ல் மறைந்தார். அவரை குதிரையின் மீது அமர்ந்திருக்கும் உலக ஆன்மா என்பார் ஹெகல். பிரிட்டிஷ் சார்ட்டிஸ்ட் இயக்கம் ஹெகலின் மறைவிற்கு (1830க்கு) பின்னர்தான் வலுப்பெற்றது. ஹெகலுக்கு பூர்ஷ்வா முதலாளித்துவமுறை கொணர்ந்த துயரங்கள் தெரிந்தது. ஆனால் அதை எதிர்த்த ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக சோசலிசம் என பேசப்பட்டதை அவர் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. ஜெர்மனியில் மாற்றம் - எழுச்சி என்றால் அது துப்பாக்கியிலிருந்து என்பதைவிட தத்துவபுரட்சி மூலம் என ஹெகல் கருதினார் என்கிறார் ஆண்டிபிளண்டன். 300க்கும் மேற்பட்ட சிறுதுண்டுகளாக பல்வேறு ஆட்சியாளர்களின் பிடியில் இருந்த ஜெர்மனியின் பகுதிகள் 1815ல் ரோமன் சாம்ராஜ்ய முடிவில் 38 பகுதிகளாக ஜெர்மன் பெடரேஷன் ஆனது. இது ஹெகலுக்கு வசதியாகவும் ஆனது. அவருக்கு டார்வினை தெரிந்திருக்க முடியாது. ஹெகல் மறைவின்போது டார்வின் 20வயது இளைஞர். மனிதன் மிருகங்களிலிருந்து மனிதன் வளரவில்லை. தாவரங்களிலிருந்து மிருகம் வளரவில்லை. அவை எப்படியானவையோ அப்படியே ஒரே நிகழ்வில் வந்திருக்கலாம்  என எழுதினார் ஹெகல்.  தனிநபர் சுதந்திரம், தாராளவாத சிந்தனைகளுடன் அவர் நிற்கவில்லை. கம்யூனிட்டி வலிமை என பேசியவர். அவருக்கு அரசு என்பது வர்க்க ஆட்சி என்கிற கருத்து இல்லை. மாற்றம் ஏற்படுத்துவதில் தனிநபருக்கு பங்கு இருப்பதை அவர் ஏற்றிருந்தர். System of Ethical Life என்கிற அவரின் துவக்க 1802-3 எழுத்துக்களில் சாதாரண மக்கள்தான் தங்களை தாங்களே உருவாக்கிக்கொள்கிறார்கள் - சமுகத்தை கட்டமைக்கிறார்கள் என்கிற கருத்துக்கள் காணப்பட்டது - பிற்காலங்களில் இல்லை எனவும் ஆண்டி தெரிவிக்கிறார். 1805-06 Philosophy of spirit ஆன்மா குறித்து பேசத்துவங்கிவிட்டார். மனிதர்களின் நடவடிக்கைகளில் ஆன்மா தொழிற்பட்டு விதிமுடித்து அடுத்தவர்களிடம் நகர்ந்து  என பேசினார். ஒட்டுமொத்த மனிதஜீவிகளின் இயல்பு ஆன்மா என்றார் ஹெகல்.  அனைத்துபுறநிலை அம்சங்களும் , பொருள்வகைப்பட்ட கலாச்சாரம், மொழி, விவசாயம் எல்லாமே ஹெகலுக்கு சிந்தனை பொருட்கள். எனவேதான் அவர் புறநிலை கருத்துமுதல்வாதி என பார்க்கப்படுகிறார்.. நாம் பொருள்வகைப்பட்ட உலகில் அல்ல, சிந்தனை பொருளில் சாவி ‘சாவி என அறியப்படுவது‘ அதற்கு பூட்டு இருப்பதால் என்கிற வகையில் வாழ்கிறோம் என்கிற கருத்தில் அவர் இருந்தார். காண்ட் 1724ல் பிறந்தவர். அவர் மறையும்போது நல்ல செல்வாக்கில் இருந்தவர். ஹெகல் காண்டியனாகத்தான் இளம் வயதில் இருந்தார். காண்ட் இளைஞராக இருந்தபோது டேவிட் ஹ்யூம் செல்வாக்கும் பெருமளவு இருந்தது . காண்ட் மாறா தன்னிலை ஒன்றை உருவாக்கினார். ஹெகல் இந்த தன்னிலையை கலாச்சாரம், வரலாற்றின் பகுதியாக விளைபொருளாக, அதற்கு வெளியே நிறுத்தாமல் கொணர்ந்தார் (Hegel replaced Kant's transcendental individual subject with cultural- historical subject) என விளக்குகிறார் ஆண்டி. மக்கள் தாவரங்களுடனும், மிருகங்களுடனும், எந்திரங்களுடனும் தனது பணியை எதிர்கொள்கிறான். வார்த்தைகளையும், மொழியையும் கட்டமைக்கிறான். இவை சர்வாம்சமானவையாக இரண்டாவது இயற்கையாகிறது என உழைப்பை  சர்வாம்சதன்மை கொண்டு கலாச்சார கட்டுமானமாக ஹெகல் விளக்குகிறார். நெறி வாழ்வின் முறையியலில் அவர் கருதுகோள் மற்றும் உள்ளுணர்வு  குறித்து பேசுகிறார். அவை ஒன்றுக்குள் ஒன்று உள்வாங்கிக்கொள்தலை சொல்கிறார்.. தனிநபரின் வளர்ச்சி சமுகத்தின் கலாச்சாரத்தின் வளர்ச்சியுடன் பின்னப்பட்டிருக்கிறது. அது இல்லாமல் தனிநபர் வளர்ச்சியில்லை என்கிறார் ஹெகல்.  காண்ட்டைவிட கதே இளையவர் என்றாலும் கதேவிடம்தான் ஹெகலுக்கு அதிக ஈர்ப்பு இருந்தது. ஆனால் கதேவிற்கு ஹெகல் என்ன பேசுகிறார் என புரியவில்லை என்கிற கருத்து இருந்தது. ஹெகலுக்கு எடுத்து விளக்குவதில் உள்ள சிக்கல் என கதே கருதினார் என்பதை ஆண்டி தன் சொற்பொழிவில் கொணர்கிறார். ஹெகலுக்கு அறிவியலின் நோக்கம் அதன் ஆய்வு இலக்கிற்குரிய பொருளின் சட்டபூர்வமானதையும் தெளிவையும்  கண்டறிவதே ஆகும். இலக்கு புறநிலை அவ்வப்போது மாறும். அது தன்னிலையால் கட்டப்படுகிறது. கூடவே தன்னிலையும் புறநிலையால் கட்டப்படுகிறது என்பது அவரது விளக்கம். ஆரம்ப ஆண்டுகளில் தன் திறமை ஏற்கப்படாமல்  இருந்ததற்கு வருந்திய ஹெகல், தனது  வாழ்நாளிலேயே கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் குறித்து பெருமிதம் உடையவராக இருந்தார். ஓவியர்கள் வரையக்கூடியவர்களாகவும், சிற்பிகள் வடிக்கக்கூடியவனாகவும் நான் இருக்கிறேன் என பெருமிதம் பொங்கிட ஹெகல் தனது சகோதரிக்கு 1831ல் எழுதினார். நவீனத்துவத்தை ஆய்படுபொருளாக்கிய முதல் தத்துவ அறிஞர் ஹெகல். நவீன தத்துவ ஆய்வாளர்கள் எந்த எந்த வழிகளை கண்டு நுழைய முயன்றாலும் அவை முடிந்த சாலைகளாக அதே நேரத்தில் ஹெகல் அங்கு சிரித்துக்கொண்டு அமர்ந்திருப்பதை காண்பர் என்பது ஏற்கப்பட்ட கூற்றானது. ஹெகல் மறக்கப்பட்டாலும் மார்க்சியத்திற்குள் வெளிச்சமாக இருக்கிறார். Ref: 1. Hegel A biograophy  Terry Pinkard 2. History of Philosophy: Eastern and Western-Edited by sarvepalli RadhaKrishnan 3. From Hegel to Marx- Sydney Hook 4. Hegel Lectures   Andy   Blunden 5. Alexander Fangmann ‘s   Essay 6.  Marx’s Relation to Hegel   Istavan Meszaros    7. மனித சமுக சாரம்   ஜார்ஜ் தாம்சன் 8. வரலாறுபற்றிய ஒருமைவாதம்- பிளக்கானாவ் 9. லுத்விக் பாயர்பாக்- ஜெர்மன் தத்துவ ஞான முடிவு  எங்கெல்ஸ் 10. மார்க்ஸ் பிறந்தார்   ஹென்றி வோல்காவ்                    மார்க்சின் அரசியல் பரிணாமம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சில தீர்க்கதரிசிகள் பெயரும் , அவர்களின் பெயரால் சொல்லப்படும் விஷயங்களும் போய் சேர்ந்துள்ளன. புத்தர், ஏசுபிரான், நபிகள் என மதம் சார்ந்த அடையாளங்களுடன் இவர்கள் அனைத்து நாடுகளிலும் உணரப்படுகிறார்கள். அவர்களின் பெயரால் வழிபாட்டுக்கூடங்களுக்கு மக்கள் ஏராள  பொருளை நேரத்தை உயிர் தியாகத்தை செய்துள்ளனர். அதேபோல் சில இலக்கிய மேதைமைகள் குறித்த சொல்லாடல்கள், அவர்களின் பெயரால் இலக்கிய அமைப்புகள் என்று அவை உலக அளவிற்கு சென்றுள்ளன. பிரஞ்சு புரட்சியின் மகத்தான முழக்கம் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவமும் பல நாடுகளின் இயக்கங்களை கவ்வி பிடித்தது. ஆனால் அரசியல் ஆளுமை என்கிற வகையில்  வேறு எவருக்கும் கிடைக்காத இடம் மார்க்ஸிற்கு உலகம் முழுவதும் கிடைத்துள்ளது. அவரின் பெயரால்- சிந்தனையால்- வழிகாட்டல் என்கிற முறையில் மார்க்ஸ் செல்லாத நாடு இல்லை எனலாம். மார்க்ஸ் எனும் தனிநபர் தனது படைப்புக்கள் மூலம் இசமாகி தொழிலாளர் இயக்கங்களில் ஏற்கப்பட்டு  கம்யூனிஸ்ட் இயக்கங்களாக பெருகி, சோவியத்- சீனா போன்ற நாடுகளின் புரட்சிகர அரசசுகளாக உருவெடுத்து கடந்த 100 ஆண்டுகளாக  உலகின் பெரும் பொருளாயத சக்தியாகியுள்ளார். உலகம், முதலாளித்துவம் நெருக்கடிகளில் சிக்கும்போதெல்லாம் அவர் பேசப்படுகிறார். மேல் அதிகமாக உணரப்படுகிறார். அந்த மகத்தான ஆளுமையின் பரிணாமம் குறித்து  அறிமுக சுருக்கம் தரப்பட்டுள்ளது.  . மார்க்ஸ் தன் இளமைக்காலம் துவங்கி தனிப்பட்ட மனித உறவுகளிலே அன்புடன் இருந்தவர். அதேநேரத்தில் பிரச்சனைகளில் கறாராக, உறவு முறிந்தாலும் அதை பொருட்படுத்தாதவராக  இருந்தவர். தந்தையுடன் விவாதிக்கும் தருணமாக இருந்தாலும், இறுதிவரை தந்தையின் போட்டோ ஒன்றை தன்னுடன் வைத்துக்கொண்டிருந்ததாக இருந்தாலும், தாயுடன் கசப்புகளை சந்தித்தபோதும் அவர் இவ்விதம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.  சகோதரிகளுடன்  ஆனாலும். பள்ளிகளில் சகமானவர்களுடனும் குறும்பும் கேலியும் கொண்ட சீண்டும் சிறுவனாக  மார்க்ஸ் இருந்தார். எந்த வேலைக்கு எதிர்காலத்தில் செல்லவேண்டும் என்கிற கனவு குறித்த  ஜெர்மன் கட்டுரை எழுதியபோது அவருக்கு வயது 17.  பொதுநலனுக்கும் அதில் நாம் பெறும் முழுமைக்கும் எச்சிந்தனை நம்மால் நம்பிக்கையுடன் ஏற்கப்படுகிறதோ - எப்பணி அழைத்து செல்கிறதோ அப்பணிக்கு அர்ப்பணித்துக்கொள்வது என மார்க்ஸ் அதில் குறிப்பிட்டிருந்தார். தனது பட்டப்படிப்பில் 32 மாணவர்களில் அவர் 8வது ரேங்கில் வந்தார்.  அவருக்கு ‘Excellent promise’ என்பது கொடுக்கப்பட்டிருந்தது. பான் பல்கலை காலத்தில் இளைஞர்களுக்கே உரிய குணத்துடன்  பணச்செலவு செய்பவராக கடன்பட்டவராக இருந்தார். தந்தையும், சகோதரியும் கவலை தெரிவிக்கும் கடிதங்களை அவருக்கு அனுப்பினர். ’காரலின்’ பாராமுகம் குடும்பத்தில் வருத்தத்தை ஏற்படுத்தியது. பக்கத்து வீட்டு அழகிய பெண் ஜென்னியுடன் மார்க்சிற்கு 18 வயதிலேயே காதல் ஏற்பட்டது. மணமுடிக்கலாம்  என ரகசிய  உடன்பாடும் ஏற்பட்டது. இளம் கார்ல் பெர்லினில்   நோய்வாய்ப்பட்டு இருந்தபோது அவர் தந்தை மே 10 1838ல் மறைகிறார். இருக்கிற தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் தந்தையின் இறுதி சடங்கிற்கு அவர் வந்ததாக தெரியவில்லை . 1839ல் அவர் டிரியர் வருகிறார்.  1842ல் திரும்ப ஊர்வந்த மார்க்ஸ் ஜென்னி குடும்பத்தாருடந்தான் தங்குகிறார்.   1842 ஜூலையில்  தாயாருடன் தந்தையின் எஸ்டேட் பணம் கேட்டதில் பிரச்சனை வருகிறது. குடும்பத்தார் அவருக்கு பணம்தர மறுத்தனர். பெர்லின் கல்வி சூழல் சட்டம், தத்துவம், வரலாறு, மொழியியல் கற்க தூண்டியது. ஹெகலிய தாக்கம் ஏற்பட்டது. ஆறுமாதம் நோய்வாய்பட்டிருந்த அக்காலத்தை மார்க்ஸ் முழுமையாக ஹெகலை படிக்க பயன்படுத்திக்கொண்டார். டிரியர் நகரத்து கருப்பாண்டி (Dark fellow from Trier) என கல்லூரி வளாகத்தில் சக மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் அவர் அறியப்படலானார். அவர் ஏராள கவிதைகள்  எழுதிய காலமது.  ’ஃபாக்டரி ஆஃப் ஐடியாஸ்’ என நண்பர்கள் அவரை குறிப்பிட துவங்கினர். – வால்டர் ,ஹெகல், லெஸ்ஸிங், ஹைன் போன்ற பிரம்மாண்டங்களின் கலவை மார்க்ஸ் என்றார் மோசஸ் ஹெஸ்.  நேர்மையாக ஒருவரை தத்துவவாதி என அழைக்கவேண்டுமெனில் அது மார்க்ஸ்தான் என்றார் ஹெஸ். ஹெஸ் பின்னாட்களில் மார்க்ஸ் எங்கெல்ஸ் உடன் நட்புடனும், முரண்பட்டும் இருந்தவர்.  பெர்லின் டாக்டர் கிளப்பில் இளம் இடது ஹெகலியர்களுடன் மார்க்ஸ் சேர்கிறார். A comparision of Natural Philosophy of Democcritus and Epicurus என்பதை ஆய்விற்கு எடுத்து 40 பக்க கட்டுரை- 6 பக்க சுருக்கம் ஒன்றை அவர் தந்தார். தீர்மானகரம்- விருப்புறுதி (Determinism and free will) என்கிற இருமை நிலைகள்  எபிகுரஸ் ஆய்விலேயே மார்க்ஸிற்கு துவங்கிவிட்டதாக  பெலிக்ஸ் குறிப்பிடுகிறார்.  பத்திரிகை ஆசிரியர் பொறுப்பை 24 வயதிலேயே மார்க்சால் எடுக்க முடிந்தது. ’டாக்டர்கிளப்’ என்கிற சுதந்திர மனிதர் குழாமில் அனார்க்கிசம், நிகிலிசம், கம்யூனிசம் என்கிற பல கதம்ப வாதங்கள் இருந்தன. மார்க்ஸ் தனது எடிட்டோரியல் கொள்கையை இவர்களிடமிருந்து சற்று விலக்கி வைத்துக்கொண்டார். அன்றுள்ள பத்திரிக்கை சட்ட சூழலில் அவர்களின் கருத்துக்கள் பொருத்தமில்லாதவை என இளம் மார்க்ஸ் கருதினார். ரெயினிஸ் ஜெய்டுங் (RZ) பாரிஸ் நிருபராக மோசஸ் ஹெஸ்  கம்யூனிச சிந்தனைகளை அனுப்பிக்கொண்டிருந்தார். வேறு பத்திரிக்கைகள் அவற்றை விமர்சித்தபோது மிக கவனமாக மார்க்ஸ் ’அதன் கொள்கைகள் இன்று சொல்லப்படும் வடிவத்தில் இன்னும் சோதிக்கப்படாதவைகளாகவே இருக்கின்றன, எனவே நடைமுறையில் ’தேவை குறைவான’ ஒன்றாகவே படுவதாக எடிட்டர் என்ற முறையில்  மார்க்ஸ் அன்று கருதினார்.   ஜெய்டுங் பத்ரிக்கை ஆரம்பத்தில் அதன் தாராளவாத சிந்தனைகளால் பொறுத்துக்கொள்ளப்பட்டாலும் சென்சார் தொல்லைகளுக்கு உள்ளானது. ’தனியார் சொத்துரிமை நியாயமற்றது’ என மிக சாதரணமாக இன்று நாம் கருதமுடிந்த ஒன்றை அன்று பிசினஸ் வட்டாரங்கள் ஏற்காமல் கோபமடைந்தன. மோசேல் திராட்சை தோட்ட உரிமையாளர்கள் குறித்து மார்க்ஸ் எழுதிய 4 பகுதி கட்டுரை அரசாங்கத்தையும் குற்றத்திற்கு உள்ளாக்கியது. மார்க்ஸ் பொறுப்பேற்றபின் ரெயினிஸ் ஜெய்டுங் பிரதிகள் 1000லிருந்து 3300 ஆக விற்பனையில் உயர்ந்தது. மிக முக்கிய பத்ரிக்கையாக கருதப்படலானது.  ஜார் பற்றி எழுதிய கட்டுரையால் ருஷ்யாவின் பேரரசர் நிகோலஸ்1 கோபமடைந்தார். பின்னர் பிரஷ்யாவின் அமைச்சரவை கூடி பத்திரிக்கை தடையை தெரிவித்தது. மார்க்சின் பதில்களால் அரசாங்கம் திருப்தியடையவில்லை. அவர் தனது எடிட்டர் பொறுப்பை மார்ச் 17 1843ல் ராஜினாமா செய்தார். மார்க்ஸ் ஆறுமாத அளவு எடிட்டர் பொறுப்பில் இருந்திருப்பார். பத்ரிக்கை துறையின் மோசமான, சுதந்ததிரத்தை பாதிக்கும் சூழலை அவர் உணர்கிறார். கபடங்களால் தான் சோர்ந்துவிட்டதாக தெரிவிக்கிறார். பிரஞ்சு புரட்சியின் அரசியல், இங்கிலாந்தின் தொழிற்புரட்சியின் தாக்கங்கள், ஜெர்மன் சித்தாந்தங்களின் முன்னேற்றம் ஆகியவை மார்க்சை புரட்சிகர சிந்தனைகள் நோக்கி அதன் புதிய உருவாக்கங்களை நோக்கி அழைத்து சென்றன. முப்பது மில்லியன் மக்கள் வாழ்ந்த பிரான்சில் லூயி பிலிப் அரசர் வாக்குரிமையை சற்று விரிவுபடுத்தினர். லூயி பிளாங் சோசலிஸ்ட் கருத்துக்களை வரலாற்றுணர்வுடன் பேசியும் எழுதியும் வந்தார். மக்கள் நண்பர்கள் சமூக அமைப்பு  1830 செப்டம்பரில் பெரும் பொதுக்கூட்ட அழைப்பை விடுத்தது. இதன் காரணமாக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிலர் தலைமறைவாகினர். பின்னர் மனித உரிமை சொசைட்டி அழைப்பில் 1834களில் போராட்டங்கள் நடந்தன. Society of families, Society of seasons என இயக்கங்கள் நடந்தன. 1839ல் palace of Justice யை போராளிகள் 300 பேர் சூழ்ந்து பிடித்தனர். ஆனால் அக்கலகம் நீடித்து நிற்கவில்லை. தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தோல்வியை தழுவிய கலகங்களால் ஆகஸ்ட் பிளாங்கி  33 ஆண்டுகள் சிறைத்தள்ளப்பட்டார். 1789 பிரஞ்சு புரட்சி காலத்தில்  பாபெஃப் (Babeuf ) சோசலிச சிந்தனைகள் மூலம் ‘நிலம்  சமுக உடைமை, உணவு’ பிரச்சாரங்களை மேற்கொண்டார். அவரின் கலகம் காரணமாக கில்லட்டின் முறையில் அவர் கொல்லப்பட்டார். செயிண்ட் சைமன்   பொருளாதார நாடாளுமன்றம்(’Economic parliament’) என்கிற கருத்தை தீர்வாக முன்வைத்தார். முதலாளிகள் தலைமையில்- விஞ்ஞானிகள், இலக்கியவாதிகள் அறிவுரையில் நாடாளுமன்றம் என்றார். சார்லஸ் ஃபூரியர் கம்யூன்கள் வாழ்க்கை என்றார். ராபர்ட் ஓவன் ’மாதிரி சமூகம் ஒன்றை’ நிறுவி சோதித்தார். காபே (Cabet) புத்தகம் 1839ல் வெளியாகி செல்வாக்கு பெற்றது. வறுமைக்கு எதிராக என அவர் குரல் ஒலித்தாலும் வன்முறையற்று என பேசினார். லூயி பிளாங்க் (Louis Blanc) பிரஞ்சு புரட்சியை உயர்த்திப் பிடித்து அதன் வரலாற்றையும், அதேபோல் அரசாங்க கடன் உதவிகளின் மூலம் தொழிலாளர்களின் ஒர்க்‌ஷாப் கோரிக்கையும் வைத்தார். புருதான் (Proudhan) சொத்து என்பது திருட்டு என்றார். அனார்க்கிச சோசலிசம் என்கிற கலவையை அவர் பேசினார். இவை அனைத்தையும் மார்க்ஸ் கற்று விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளவேண்டியிருந்தது. 1760-1840 பிரிட்டனின் தொழில்வளர்ச்சி அபாரமாக 20 மடங்கு வளர்ந்து உயர்ந்தது. அடுத்த 20 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்தது. ஜெர்மன் தத்துவ சிந்தனையை அடுத்த உயரத்திற்கு எடுத்து சென்றிருந்தார் ஹெகல். அவரின் பினோமனலாஜி ஆஃப் மைண்ட் வெளியானது. அவர் World Spirit  என்கிற உலக ஆன்மா  சிந்தனையிலிருந்து தனது இயக்கவியல் கருத்துக்களை பின்னினார்.  அவரது தத்துவம் ’இருக்கின்ற சமுகத்தின் செறிவு (solidity of established society’) என்பதாக அமைந்தது. புருனோ பாயர் கிறித்துவம் குறித்த கேள்விகளை எழுப்பினார். ஃபாயர்பாக் உலக ஆன்மா என்பதெல்லாம் இல்லை என்றார். இளம் ஹெகலியர்களில் சிலர் நேரடி அரசியல் நடவடிக்கை என்றனர். கடுமையான வதையில் ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்து வெளிவந்த ஆர்னால்ட் ரூகா பத்ரிக்கை ஒன்றை துவங்கினார். இது அரசியல் காலம் (The age has become political) என ஆர்னால்ட் ரூகா பேசிவந்தார். 1843ன் துவக்கத்தில் ரூகா தன்னுடன் இணை ஆசிரியராக பத்ரிக்கையில் பணிபுரிய  மார்க்சை அழைத்தார்.  மார்க்சின் மீதும் அவரின் ஆற்றலிலும் மிகுந்த நம்பிக்கைவைத்து ஜென்னி 7 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தார். இந்த பொறுமை வியக்கத்தக்கது என்றாலும் சில நேரம் மனத்தொய்வுகளை காட்டுவதாகவும் இருந்தது. அமைதியாகிவிடுவது, குறைகளை எழுதுவது, தற்கொலை மனோபாவத்தை வெளியிடுவது போன்ற அழுத்தங்களையும் மார்க்சிற்கு அவர் தந்ததாக டேவிட் பெலிக்ஸ் ( பக் 26  marx as politician david felix) குறிப்பிடுகிறார். திருமணத்திற்கு பின்னர் மார்க்ஸ் ஜென்னியுடன் அவரது தாயார் வீட்டில் ட்ரியருக்கு அருகில் குரோயின்ஷா (Kreuznach) எனும் ஊரில்  தங்குகிறார்..  Philosophy of Rights என்கிற அரசியல் சமுக பிரச்சனைகளை விவாதிக்கின்ற ஹெகல் ஆக்கத்தை மார்க்ஸ் கற்கிறார். அது குறித்து கட்டுரை ஒன்றை எழுதுகிறார்.. பாரிஸ் என்றால் புரட்சி என்கிற ஈர்ப்பு மட்டுமே அவருக்கு தெரிகிறது. அதன் கலாச்சார மேன்மை அழகு என்பதெல்லாம் அவரை பாதிக்கவில்லை. புரட்சிகர கருத்துக்களை தேடி குவித்துக்கொண்டிருந்தார். 1843-45ல் பாரிசில் இருந்தார். Deutsch Jahrbucher பத்ரிக்கையில் ரூகா உடன் இரு கட்டுரைகள் மார்க்ஸ் எழுதினார். பின்னர் வரவிருந்த அவரின் ’புனித குடும்பம், பொருளாதார தத்துவ கையேடுகள்’  ஆகியவற்றிற்கான வெளிப்பாடுகளை இக்கட்டுரைகள் கொண்டிருந்தன. 1840களில் அரசியல் அகதிகளின் பெரும் புகலிடமாக பிரான்ஸ் இருந்தது. 20000 என்ணிக்கையில் அவர்கள் இருந்ததாகவும் அதில் பாரிசில் மட்டும் 12000பேர் இருந்ததாகவும் பெலிக்ஸ் சொல்கிறார். புரட்சிகரவாதிகளைத்தவிர ஜெர்மானியர்கள் 15000பேர் அங்கு வாழ்ந்து வந்தனர். ஜெர்மன் மக்கள் மன்றம், சமூக ஒதுக்கலுக்கு உள்ளானவர்களின் அமைப்பு போன்றவற்றில் ஜெர்மன் கைவினைஞர்கள் இருந்தனர். இக்காலத்தில் ஜெர்மன் தொழிலாளர் தலைவர் கார்ல் ஷாப்பர் (karl Schapper) தீவிரமாக செயல்பட்டுவந்தார். 1837ல் சில தொழிலாளர்களை திரட்டி’ லீக் ஆப் ஜஸ்ட் ’ உருவாக்கினார். அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் லண்டன் சென்று 1840ல் ஜெர்மன் தொழிலாளர் கல்வி என்பதற்கான சொசைட்டியை துவக்கினார்.  பாரிஸ் வந்த மார்க்ஸ்க்கும் ஜென்னிக்கும் பொது சமையல் அறை கொண்ட-  நான்கு குடும்பங்கள் சேர்ந்து ஒன்றாக வசிக்கும்படியான கம்யூனில் தங்க இடம் கொடுக்கப்பட்டது. சிலவாரங்களில் இளம் ஜெர்மான்ய இயக்க புரட்சிகர கவிஞர் ஜார்ஜ் ஹெர்வேவின் துணைவியார் தனி இடம் என சொல்லி வெளியேறினார். ரூகா துணைவியாரின் தொல்லை ஜென்னிக்கு ஏற்பட்டது. அதே பகுதியில் வேறு இடத்திற்கு ஜென்னியுடன் மார்க்ஸ் குடியேறினார். பிரஞ்சு புரட்சிகர தலைவர்களிடமிருந்து கட்டுரைகள் ரூகாவிற்கு வரவில்லை. வந்த சில கட்டுரைகளும் மிகுந்த நாத்திக  நெடி கொண்டிருந்தன .பாரிசில் லூயி பிளாங், பியரி லெராக்ஸ், புருதான் போன்றவர்களை சந்திக்க  மார்க்சிற்கு வாய்ப்பு கிடைத்தது. ரூகாவிற்கு பிரான்ஸ் புரட்சிகர சக்திகள் அங்கீகாரம் தங்களுக்கு கிடைப்பதில்லை, வெளிநாட்டிலிருந்து வருவோர் தனித்துவிடப்படுகின்றனர் என்கிற என்ணம் உருவானது. புருதான் மறைந்தபோது ஒருவரை ஒருவர் காயப்படுத்திகொண்ட விவாத இரவுகளை ரூகே குறிப்பிடுகிறார். புருதான் டைரிகளில் மார்க்ஸ் பற்றிய குறிப்பு இல்லை என பெலிக்ஸ் சொல்கிறார்.  ரூகா 1844 பிப்ரவரியில் நோய்வாய்பட்டதால் மார்க்ஸ் பத்ரிக்கையை எடிட் செய்து கொணர்ந்தார். மார்க்ஸ், எங்கெல்ஸ், ஹெயின்ரிச் ஹெயின் போன்றவர்களின் ஆக்கங்கங்கள் இடம்பெற்றன. சர்க்குலேஷன் மிக குறைவாக இருந்தது. கப்பல் வழியாக ரைன்லாந்த் பகுதிக்கு அனுப்பப்பட்ட 100 பிரதிகளும் கைப்பற்றப்பட்டன. ஆண்டுக்கு 550 பிரஷ்யன் தாலர் என்கிற ஊதியம் மார்க்சிற்கு தருவதாக சொல்லித்தான் ரூகா (Arnold Ruge) அழைத்திருந்தார். அன்றுள்ள நிலையில் மத்தியதர வாழ்க்கைக்குரிய ஊதியமது. ஆனால் பத்ரிக்கை போகாததால் மார்க்சிற்கு ஊதியம் தரப்படவில்லை. தனது  கலோன் பணக்கார நண்பர்கள் மூலம் 1000 தாலர்கள் பெற்றுத்தான் மார்க்ஸ் குடும்பத்தை நடத்த வேண்டியிருந்தது.  புத்தகம் ஒன்றை எழுதுவதற்காக முன்பணம் 1500 பிராங்க்ஸ் பெற்று கஷ்டத்தை மார்க்ஸ் தணித்துக் கொண்டதாக அறிய முடிகிறது.  Vorwarts பத்ரிக்கை குழு ஒன்று வளர்ந்தது. மார்க்ஸ், பகுனின், ஹெயின், ஹெர்வே என எழுதுபவர்கள் சேர்ந்தனர். பகுனின் தங்கியிருந்த சிறு அறையில் 14 பேர் அளவில் கூடுவதும் விவாதிப்பதும் நடந்தது. முகம் தெரியாத அளவு  புகை மண்டலம் சூழ  அவர்கள் விவாதித்தாக   பெலிக்ஸ் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார். நண்பர்கள் குழு விவாதத்தில் ரூகா அந்நியப்பட்டுப்போக மார்க்ஸ் அக்குழுவிற்கு ஏற்புக்குரியவரானார். ரூகா தொழிலாளர் பிரச்சனை குறித்து எழுதிய கட்டுரைக்கு அவரின் முதலாளித்துவ சிந்தனையை தாக்கி மார்க்ஸ் விமர்சனம் எழுதினார். எதிர்படுபவர்களையெல்லாம் மார்க்ஸ் கொன்றுவிடுவார் என ரூகே பதில் விமர்சனம் தந்தார்.    II 1842களில் மார்க்ஸ் இருந்த பத்ரிக்கை அலுவலகத்திற்கு எங்கெல்ஸ் வந்து செல்பவராக இருந்தார். 1844களில் அவர் சோசலிச சிந்தனைகளில் உறுதி கொண்டவராக மாறியிருந்தார். பிரிட்டிஷ் தொழில்கள் குறித்து கட்டுரைகள் எழுதினார். பாரிசில் அவர்கள் காபி டேபிள்களில் சந்திப்பதும் நடக்க துவங்கியது. ஜென்னி பிள்ளைப்பேறுக்காக ரைன்லாந்த் சென்ற அக்காலத்தில் எங்கெல்ஸ்  தனது சந்திப்பை மார்க்ஸ் வீட்டில் மேற்கொள்ளத் துவங்கினார்.  தொடர்ந்த 10 நாட்கள் விவாதங்கள் அவர்களது தோழமையை உறுதிப்படுத்தியது. வாழ்நாள் நட்பாக அவர்கள் தோழமை உச்சம் சென்றது. எதிர்படும் அனைத்து குறித்தும் தயவுதாட்சண்யமற்ற விமர்சனம் (‘Ruthless criticism of everything existing, less be afraid of struggle with the powers that be’) என்கிற சிந்தனைக்கு மார்க்ஸ் வந்து சேர்கிறார். மூர்க்கத்துடன் கூடிய மேதமையை அவர் இக்காலத்தில் வெளிப்படுத்தி வந்தார் மார்க்ஸ் என பெலிக்ஸ் கூறுகிறார்.  Jewish question, The philosophy of Right விமர்சன கட்டுரைகளை மார்க்ஸ் எழுதுகிறார்.. முந்திய புரட்சிகள் நடைமுறைப்படுத்த தவறிய   மத அழித்தொழிப்பு, சொத்து பறிமுதல் பற்றி மார்க்ஸ் பேசுகிறார். நிரந்தர புரட்சி (Permanent Revoultion) என்கிற கருத்திற்கும் அவர் வருகிறார் . பின்னாட்களில் டிராட்ஸ்கி இதை பயன்படுத்தி பேசத்துவங்கினார். பாட்டாளி வர்க்கத்தை யுனிவர்சல் கிளாஸ் என்றார் மார்க்ஸ்- the class that would mean the end of all classes அனைத்து வர்க்கங்களையும் முடிவிற்கு கொணரும் வர்க்கம் எனவும் குறிப்பிட்டார்.  1844 மே மதத்தில் ஆர்னால்ட் ரூகா பாயர்பாக்கிற்கு எழுதிய கடிதம் ஒன்றில்  மார்க்சின் மேதாவிலாசம் புத்திகூர்மையை குறிப்பிட்டு விமர்சிக்கிறார் மார்க்ஸ் அசாதரண தீவிரத்துடன் செயல்படுகிறார். புத்தம் புது அறிவுத்திறனது. அதனால் கர்வத்துடனான பெரும் விளக்கமாக போகிறது. கரை தென்படாத கடல் மாதிரியான புத்தகங்களில் அவர் ஆழ்ந்து விடுகிறார். எதையும் முடிக்காமல் அப்படியே விட்டுவிடுகிறார் என்கிற மார்க்ஸ் பற்றிய தனது அபிப்ராயத்தை ரூகா வெளிப்படுத்தினார். பாரிஸ் மானுஸ்கிரிப்ட்ஸ் என்கிற பொருளாதார தத்துவ கையேடுகள் என்பதில் மார்க்ஸ் ஈடுபட்டிருந்தார். ஆடம்ஸ்மித், ரிக்கார்டோ ஆகிய பொருளாதார வல்லுனர்கள் மீது மரியாதை கொண்டிருந்தாலும் மார்க்ஸ் அவர்களது கருத்துக்களை விமர்சித்துவந்தார். தேசங்கள் ஒர்க்‌ஷாப் ஆகிவிட்டன. மனிதர்கள் உற்பத்தியும் நுகர்வும் கொண்ட மெஷின்கள் ஆக்கப்பட்டுவிட்டனர். மனித வாழ்க்கை மூலதனமாகிவிட்டது. கண்மூடித்தனமாக பொருளாதார விதிகள் உலகை ஆள்கின்றன என்கிற ரிக்கார்டோ எழுதியதை சுட்டிக்காட்டி மார்க்ஸ் விவாதிக்கிறார். மார்க்சை பொருளாதாரவாதி என சொல்வதைவிட அவரை பொருளாதார விமர்சகர் என பார்ப்பதே சரியாக இருக்கும் என்கிற கருத்தை ராபர்ட் டக்கர் கொண்டிருக்கிறார். மனிதனின் அறிவார்ந்த குழப்பத்தின் விளைவாக கடவுளே தவிர , கடவுள் மனித படைப்பிற்கு  காரணகர்த்தா அல்ல என்றார் மார்க்ஸ். மனிதனை அந்நியமாக்கும் தனிசொத்துரிமையை கடப்பது கம்யூனிசம். மனித சாரத்தை மீட்டுத் தருவது- மனிதனை மனிதனாக்குவது, மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் மனிதனுக்குமான முரண்களை மிக நேர்மையான வகையில் தீர்ப்பது என்றார். வரலாற்றின் புதிரை கம்யூனிசம் விடுவிக்கிறது என்கிற அற்புத விளக்கத்தை மார்க்ஸ் நல்கினார். இந்த ஸ்டேட்மெண்ட்டில் செயல்வகைப்பட்ட விளக்கம் ஏதும் அவர் தரவில்லை. பொருள்தான் முதலானது (The world's materialist character was its First cause ) என்கிற ஆழமான நம்பிக்கையை அவர் வந்தடைந்தார். ப்ருனோ பாயரை விமர்சித்து அவரது முதல் புத்தகமாக புனித குடும்பம் வந்தது.. டேவிட் பெலிக்ஸ் ’புனித குடும்பம்’ புத்தகம் என்கிற வகையில் தோல்விதான் என்கிற கருத்தை கூறுகிறார். 1845 பிப்ரவரியில் வெளியான இப்புத்தகம் புருனோ பாயரின் செல்வாக்கை சற்று குறைத்தது எனலாம். பாரிசில் நீடித்து இருக்கமுடியாத சூழலில் மார்க்ஸ், பகுனின், ரூகா , ஹைன் வெளியேற்றப்பட்டனர். 1846 பிப்ரவரியில் மார்க்ஸ் பிரஸ்ஸல்ஸ் சென்றார். இருக்கிற வீட்டு சாமான்களை விற்றுவிட்டு பின்னர் ஜென்னி போய் மார்க்சுடன் சேர்ந்துகொண்டார்.   பாயர்பாக் ஆய்வுகள் தீசஸ் 11ல் (Theses on Feuerbach)  புகழ்வாய்ந்த திரும்ப திரும்ப சொல்லப்படும் அவரது மேற்கோளான– உலகை வியாக்கியானப்படுத்தி கொண்டிருப்பதல்ல, மாற்றுவது என்பதுதான் முக்கியமானது(’ The philosophers have only interpreted the world in various ways, the point is to change it’) என்பதை சொல்கிறார். இந்த நிலையில் அதீதமாக  மார்க்ஸ் தன்னை மாறும் உலக நடவடிக்கைகளுக்கான தலைமையாக (’to be chief of operations in changing world’) என கருதிக்கொண்டு விட்டதாக பெலிக்ஸ் விமர்சனம் செய்கிறார். 1845 செப்டம்பர் முதல் 1846 ஆகஸ்ட் வரையில் எங்கெல்ஸ் உடன் அவர் ஜெர்மன் தத்துவம் எழுதுவதில் கவனம் குவிக்கிறார். தத்துவத்தின் வறுமை ஏப்ரல் 1847லும், கம்யூனிஸ்ட் அறிக்கை ஜனவரி 1848லும் எழுதப்படுகிறது. 1850களின் இறுதியில்தான் அவர் தன்னை முழுமையாக நிலைநிறுத்திக் கொள்ளமுடிந்தது. வாழ்நிலைதான் உணர்வை தீர்மானிக்கிறது (It is not consciousness that determines life, but life that determines consciousness) என்பதை உறுதிபட  மார்க்ஸ் நிறுவுகிறார். தனது பொருளாதார ஆய்வுகளின் மூலம் மார்க்ஸ் புரட்சியை பாட்டாளிமயப்படுத்தலிலும் சர்வதேசமயப்படுத்தலிலும் நகர்த்திவிட்டார் . 1846  System of Economic contradictions or The philosophy of Misery  என்பதை புருதான் இரண்டு வால்யூம்களில் கொணர்ந்தார். இதனை விமர்சித்துதான் மார்க்ஸ் தத்துவத்தின் வறுமை என மேற்சொன்ன புத்தகத்தை 1847ல் கொணர்கிறார். புருதானின் அனார்க்கிச சோசலிச பொருளாதாரம் இதில் விமர்சனத்திற்கு உள்ளானதாக பெலிக்ஸ் சொல்கிறார். பொருளாதாரத்தின் சாரம் அரசியல்தான், உண்மையான அரசியல் புரட்சிதான் என்பது எதிரொலிக்கப்படுகிறது.  ஏறத்தாழ அவர் கம்யூனிஸ்ட் அறிக்கையை இறுதி செய்திட்ட காலத்துடன் பிரஸ்ஸல்ஸ் வாழ்க்கை முடிவிற்கு வருகிறது. அகாடமிக் வட்டாரங்களுக்கு பெரும் புத்தகங்களை  எழுதி தருவதல்ல, புரட்சிகர இயக்கங்களை உந்தி எழுப்புவது, அவர்களிடத்தில் கருத்துக்களை எடுத்து செல்வது எங்களின் நோக்கமாக இருந்தது என எங்கெல்ஸ் இக்காலத்தில் தங்கள் சிந்தனையில் ஏற்பட்ட முக்கிய மாற்றத்தை வெளிப்படுத்துகிறார். 1844-45களில் எங்கெல்ஸ் அவரது  ரைன்லாந்து பெர்மன்  மற்றும் எல்பெர்ஃபெல்ட் பகுதிகளில் 200 பேர்கள் பங்கேற்ற கம்யூனிஸ்ட் குழு கூட்டங்கள் மூன்றை நடத்திவிட்டதாக தெரிவிக்கிறார். வேடிக்கையாக ஒருமுறை அவர் அங்கு தொழிலாளிதான் இல்லை (’only the proletariat was missing’) என குறிப்பிடுகிறார். நெருக்கடிகள் ஏற்பட்டதால் அதற்குமேல் கூட்டங்கள் நடத்தமுடியாமல் போனது.  எங்கெல்ஸ் இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை (The condition of working class in England) எழுதி   மார்க்சிடம் தெரிவித்திருந்தார். 1845ல் லீப்சிக்கில் வெளியான அப்புத்தகம் மார்க்சின் புத்தகங்களைவிட அந்நேரத்தில் அதிகம் விற்றதாக பெலிக்ஸ் சொல்கிறார். 1845ல் மார்க்சை லண்டன் அழைத்து சென்று ஆறுவாரம் மான்செஸ்டரில் தங்கவைத்து கார்ல் ஷாப்பர் போன்றவர்களை எங்கெல்ஸ்தான் அறிமுகம் செய்து வைக்கிறார். நார்த்தெர்ன் ஸ்டார் என்பது சார்ட்டிஸ்ட்களின் பத்ரிக்கை. அதன் எடிட்டராக இருந்த ஜூலியன் ஹார்னே அறிமுகம் மார்க்சிற்கு கிடைக்கிறது. 1846 ல் அமைப்பு  வடிவத்தில்  கம்யூனிஸ்ட் கரஸ்பாண்டன்ஸ் கமிட்டி ஒன்றை மார்க்ஸ் ஏற்படுத்துகிறார்.   மார்ச் 30 1846ல்  மார்க்ஸ், எங்கெல்ஸ், ருஷ்யத்தோழர் பாவல் அன்னென்காவ் , தையற்கலைஞராக இருந்து ஜெர்மன் தொழிலாளர்களிடம் வேலை செய்த வைட்லிங்  உள்ளிட்டவர்கள் கூட்டம் ஒன்று நடந்தது. தொழிலாளர் இயக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக அவர்கள் கூடினார்கள். எங்கெல்ஸ் தலைமையுரையில் பல தோழர்கள் பல்வேறு வகைகளில் தொழிலாளர்களிடம் வேலைசெய்து வருகிறார்கள். அவர்களுக்கு கொள்கைகளை உருவாக்க நேரமில்லாமல் இருக்கலாம். பொதுவான கோட்பாடு (doctrine) ஒன்றை ஏற்று செயல்படுத்துவதற்காக நாம் கூடியிருக்கிறோம் என அறிமுகம் செய்தார்.  ஏராள தோழர்களிடம் கம்யூனிசம் என பேசி வேலை செய்யும் வைட்லிங் சொல்லட்டும் எத்தனைபேருக்கு அவர்களால் ’வேலை’ போயிருக்கும் என்பதை மார்க்ஸ் கேலியாக சொல்லிட வைட்லிங் கடுமையான பதிலை தந்தார். மார்க்ஸ் தனது படிப்பறிவை (bookish theory) உண்மையான தொழிலாளர்களிடம் திணிக்க பார்க்கிறார் என்றார் வைட்லிங் . அறியாமையால் எவருக்கும் பலனிருக்கபோவதில்லை என மார்க்ஸ் தனது கோபத்தை வெளிப்படுத்த வேண்டியதானது. 1846 CCC என்கிற கம்யூனிஸ்ட் கரஸ்பாண்டண்ட் குழுவிற்கு பாரிஸ் நிருபராக இருக்க வேண்டி புருதானுக்கு மார்க்ஸ் எழுதினார். அதில் புருதான் புத்தக ஜெர்மன் மொழிபெயர்ப்பாளர்  ஹெர் க்ருண் பற்றி மார்க்ஸ் விமர்சித்திருந்தார். புருதோனிடமிருந்து மார்க்ஸ் பதிலை பெற்றாலும் பாரிஸ் நிருபர் என்பதற்கான இசைவை பெறவில்லை. கம்யூனிச கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விவாதிக்க பரந்த பல நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய சர்வதேச அமைப்பு ஒன்றின் தேவை குறித்து ஷாப்பர் - மார்க்ஸ் கடிதங்கள் எழுதிகொண்டனர். ஷாப்பர் அதை அமுல்படுத்தும்வகையில் உரிய திட்டமென்ன என மார்க்சை கேட்டிருந்தார்.  மார்க்சின் ஆலோசனையான ’கம்யூனிஸ்ட் காங்கிரஸ்’ என்பதை ஷாப்பர் ஏற்றார். அதே நேரத்தில் பிரஸ்ஸல்ஸிலிருந்து செயல்படும் மார்க்ஸ் குழுவை பற்றி பேராசிரியத்தனமான கர்வம் என்று விமர்சித்து ( " you proletarians of Brussels still have the professor's arrogance in a high degree" ) ஷாப்பர் எழுதினார். பதில் தரும் வகையில் பாரிசிலிருந்து எங்கெல்ஸ் ’லண்டன் ஷாப்பர் குழுவினரை’ விமர்சித்து கடிதம் எழுதினார். இவர்களுடன் வேலை செய்வது கடினம்தான், பொறாமையுடன் பேராசிரியர் என குற்றம் சொல்வது நம்மை ஆர்வமிழக்க செய்கிறது என்றார் எங்கெல்ஸ்.   ஜனவரி 20 1847ல் ’லீக் ஆப் ஜஸ்டிஸ்’  ஜோசப் மோல் என்பவரை பிரஸ்ஸல்ஸ் அனுப்புகிறது. சி சி சி யை தங்களுடன் வந்து இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறார் மோல். மார்க்ஸ் அக்குழுவினரின் கற்பனாவாத சிந்தனைகள் குறித்து கேள்வி எழுப்புகிறார். மார்க்ஸ் தனது சிந்தனைகளால் லீக் உறுப்பினர்களை சரி செய்து ஏற்கவைக்க முடியும் என மோல் தெரிவிக்க லீக் ஆப் ஜஸ்டிஸ் உடன் செல்வது என மார்க்ஸ் தோழர்கள் முடிவெடுக்கின்றனர்.  ’லீக் ஆப் ஜஸ்டிஸ்’  ஜூன் 2 - 9 1847ல் கூடுகிறது. மார்க்ஸ் வரவில்லை. எங்கெல்ஸ் பாரிஸ் பிரதிநிதியாக பங்கேற்றார். கம்யூனிஸ்ட் லீக் என பெயரை மாற்ற முடிவெடுக்கின்றனர். அனைவரும் சகோதரர்கள்(All men are Brothers) என்பதற்கு பதிலாக அனைத்துப்பகுதி பாட்டாளிகளே ஒன்றுசேருங்கள்(Proletarians of all lands, Unite) என்பதும் ஏற்கப்படுகிறது. பிரஸ்ஸல்ஸ் சி சி சி கம்யூனிஸ்ட் லீகின் கிளையாக ஆகஸ்ட் 5 1847ல் மாற்றப்பட்டு தலைவர் மார்க்ஸ் என அறிவிக்கின்றனர். கம்யூனிஸ்ட் லீக் உறுப்பினர்கள் வேறு எந்த அரசியல் அமைப்புடனும் தொடர்பு கொள்ளக்கூடாது என்கிற லண்டன் செண்ட்ரல் கமிட்டியின்  வழிகாட்டலை பிரஸ்ஸல்ஸ் கமிட்டியால் ஏற்கமுடியாது என்கிறார் மார்க்ஸ். அவர்களின் அரசியலற்ற பார்வையையும் மற்ற குழுக்களுடன் தொடர்புகொண்டு விவாதம் மூலம் தங்கள் கருத்துக்களை ஏற்க செய்திடும் முயற்சியை கட்டுப்படுத்துவதாகவும் மார்க்ஸ் கூறினார்.  கம்யூனிஸ்ட் லீகின் இரண்டாவது காங்கிரஸ் அவசியம் என மார்க்ஸ் கருதினார். லண்டனில் நவ 30 - டிசம்பர் 8 1947வரை அக்கூட்டம் நடந்தது. மார்க்ஸ் பங்கேற்றார். முதலாளித்துவ முறையிலான ஆட்சியை தூக்கி எறிவது, தனியார் சொத்துரிமையற்ற, வர்க்கபேதமற்ற சமுதாயம் அமைப்பது, பாட்டாளிகளின் ஆட்சி என்பதை லீக் ஏற்றது. கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதும் பொறுப்பு மார்க்ஸ் எங்கெல்ஸ்க்கு தரப்படுகிறது.     III பிரஸ்ஸல்ஸில் ஜெர்மன் தொழிலாளர் கல்விமையம் ஒன்றை மார்க்ஸ் நண்பர்களுடன் அமைக்கிறார். அங்கு வில்ஹெல்ம் உல்ஃப், மோசஸ் ஹெஸ் வகுப்புகள் எடுக்கின்றனர். மார்க்ஸ் பொருளாதார குறிப்புகள் பற்றி வகுப்புகள்  எடுத்து வந்தார். லண்டன் கமிட்டி உடனடியாக கம்யூனிஸ்ட் அறிக்கையை அனுப்பிடவேண்டும் என்ற தாக்கீதை மார்க்ஸிற்கு அனுப்பியது. 1848 பிப்ரவரியில் வெளியிட ஏதுவாக மார்க்ஸ் அறிக்கையை அனுப்பினார். இவ்வறிக்கை எழுதியதன்மூலம் ’காலங்களை கடந்த புரட்சிகர சக்திகளின் மாஸ்டர் ஆனார் மார்க்ஸ்’ என டேவிட் பெலிக்ஸ் பாராட்டுடன் குறிப்பிடுகிறார். அதேநேரத்தில் "A spectre is haunting Europe- the spectre of communism " அய்ரோப்பாவை கம்யூனிசம் எனும் பெரும்பூதம் ஆட்டிப்படைக்கிறது என்று அவர் எழுதியதை ’boastful lie’ வெற்றுப்பெருமை என பெலிக்ஸ் விமர்சிக்கிறார். அனைத்துவகைப்பட்ட சோசலிச சிந்தனைகளையும் கடுமையாக விமர்சித்து மார்க்ஸ் தொழிலாளி வர்க்க கம்யூனிஸ்ட் கட்சி என்பதை உயர்த்தி பிடித்தார். அதன் தீர்மானகரமான புரட்சிகரமான பாத்திரத்தை அழுத்தமாக வெளிப்படுத்தினார்.  பெல்ஜியத்தில் தாயிடமிருந்து பெற்ற 6000 பிராங்க்ஸ் பணத்தில் 2100 எடுத்து பெல்ஜியம் குழு ஒன்று ஆயுதம் வாங்கிட மார்க்ஸ் உதவினார் என்கிற போலீஸ் தகவல் சென்றது. பெல்ஜியம் டெமாக்ரடிக் அசோசியேஷன் என்பதற்கு மார்க்ஸ் துணைத்தலைவராக இருந்தார். பிப்ரவரி 27 அன்று ஆர்ப்பாட்ட அறைகூவல் விடப்பட்டது. 1848 மார்ச் 3 அன்று மாலை 24 மணிநேரத்திற்குள் மார்க்ஸ் பெல்ஜியம்விட்டு வெளியேறவேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 4 காலையில் அவர் கைது செய்யப்படுகிறார். மார்க்சும் சில வெளிநாட்டினர்களும் கூச்சலுடன் பிரஞ்சு புரட்சியை காபி கிளைப்பில் கொண்டாடிகொண்டிருந்தார்கள், அங்கு  போலிசாருடன் நடந்த வாக்குவாதத்தில் மார்க்ஸ் கைது செய்யப்பட்டார் என போலிஸ் தரப்பு கூறியது. மார்க்ஸ் வீடு புகுந்து அவர்களிடம் போலிசார் மோசமாக நடந்துகொண்டனர்  என்கிற பொதுவான பதிவை பலர் தந்துள்ளனர்.   நிதிதிரட்டி புதிய ரெயினிஷ் ஜெய்டுங் பத்ரிக்கையை மார்க்ஸ் மற்றும் தோழர்கள் கொணர்ந்தனர். மிக கவனமாக கம்யூனிஸ்ட் பத்ரிக்கை  என அறிவிக்காமல் ஜனநாயக இதழ் என அறிவித்தனர். பிரியமுடியாத ஒன்றுபட்ட ஜெர்மனிக்காக என்ற முழக்கம் தந்தனர். இன்றுள்ள நிலைபோல்தான் அன்றும்.. பல தொழிலாளர்கள் வேறு பத்ரிக்கைகளையே அதிகம் படித்து வந்தனர். ஆனாலும் மார்க்ஸ் உழைப்பால் 6000 எண்ணிக்கையில் வெளியாகி அப்பத்ரிக்கை கவனத்தை ஈர்ததது. 1848 ஏப்ரலில் கலோன் வந்தார் மார்க்ஸ். கலோனில்  அந்நேரத்தில் லீகை துவங்கி நடத்தியவர் டாக்டர் காட்சால்க். 1848 மார்ச்சில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். காட்சால்க் தொழிலாளர் அமைப்பில் 5000 உறுப்பினர்களை வைத்திருந்தார்,  மத்தியதர வர்க்கத்திலிருந்து தீவிரமாக இயங்கிவந்த சிலருடன் ’நகர ஜனநாயக கழகம்’ ஒன்றை மார்க்ஸ் துவங்கினார். சிறு வர்த்தகர் சிலரும் அதில் இணைந்தனர். அரசியல் நிகழ்வாக ஜெர்மன் 38 சிறுபகுதிகளிலும், பிரஷ்யாவும் சேர்ந்து பிராங்கபர்ட் நாடாளுமன்றம் அமைந்தது. அதற்கு மார்க்சின் சில நண்பர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.ஆர்னால்ட் ரூகாவும் உறுப்பினர். 1848 ஜூலையில் மார்க்சின் ஆலோசனைப்படி மூன்று முக்கிய ஜனநாயக அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு, அதை இயக்கிட ஆறுபேர் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் போலிசார் காட்சால்க்கை கைது செய்தனர். வன்முறை மூலம் குடியரசு நிறுவ முயற்சி என்கிற வழக்கு அவர்மீது போடப்பட்டது. இச்சூழலில் மார்க்ஸ் தலைமை பாத்திரம் எடுத்து  ஜனநாயகவாதிகளின் கலோன் காங்கிரஸ் என்பதை ஆகஸ்டில் அமைத்தார். செப்டம்பரில் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டி என ஒன்றை எங்கெல்ஸ், உல்ஃப் போன்றவர் அமைத்தனர். இக்கமிட்டி கலோனுக்கு 10 கிமீ தூரத்தில் உரிங்கன் எனுமிடத்தில்  10000 மக்களை திரட்டி பொதுக்கூட்டம் நடத்தி பிராங்கபர்ட் நாடாளுமன்ற நடவடிக்கைகளை  தாக்கியது. ஷாப்பர் தலைமையில் எங்கெல்ஸ் உட்பட உரையாற்றினர். மார்க்ஸ் பங்கேற்கவில்லை.  செப்டம்பர் 25 அன்று எங்கெல்ஸ், உல்ஃப் உள்ளிட்டவர்களை கைது செய்ய அரசாங்கம் உத்தரவிட்டது. ஷாப்பர் சிறையிலடைக்கப்பட்டார். எங்கெல்ஸ் தப்பி பெல்ஜியம் சென்றுவிட்டார். மார்க்ஸ் பத்ரிக்கையில் தொடர்ந்து அரசாங்கத்தை தாக்கி மக்கள் ஆயுதகுழுக்களை அமையுங்கள் என எழுதிவந்தார். வரிகொடா இயக்கம் மேற்கொள்வீர் என்றார். 1849 பிப்ரவரி வழக்கில் தன்னை தற்காத்துக்கொள்ளும் வகையில் கருத்துக்களை அவர் முன்வைத்தார்- ”கனவான்களே! உலகின் பெரும் பிரச்சனைகள் குறித்த ஆய்விற்கே நான் முன்னுரிமை தருபவன். மாநிலங்களில் யார் என்ன என்பதைவிட, வரலாற்று இயக்கம் குறித்தே ஆய்வு செய்கிறேன். எனவே வாழ் இடத்தில் உள்ள போலீஸ், நீதிமன்றம் என்பதுடனான மோதலை விட என் ஆய்வுப்பணிக்கே அதிக முன்னுரிமை  என உறுதி தருகிறேன்" என தனது தற்காப்பு வாதங்களை வைத்தார். அதே நேரத்தில் ஆளுபவர்கள் எதிர்புரட்சியை கைகொள்ளும்போது மக்கள் புரட்சி எனும் தங்கள் உரிமை மூலம் பதிலை தராமல் இருக்கமுடியாது என்பதையும் தன் வாதமாக முன்வைத்தார்   நியுரெயினிஷ் ஜெய்டுங் (NRZ) பத்திரிக்கையில்தான் மார்க்ஸ்   கூலி-உழைப்பு- மூலதனம் பற்றி தொடர் எழுதிவந்தார். மே18ல் அதன் கடைசி இதழ் சிவப்பு மையிட்டு வந்தது. 20000 காப்பி சென்றது. உங்களது ஆயுதத்திற்கு விடைகொடுங்கள் என அவர் உருக்கமாக எழுதியிருந்தார் . புதிய வலுவான ஆயுதங்கள் தரித்து மீண்டும் எழுவோம் என்கிற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தார். பெல்ஜியத்திலிருந்து பாரிஸ் சென்று அங்கிருந்து ஆகஸ்ட் 23 1849ல் அவர் லண்டன் செல்கிறார். எங்கெல்சையும் அங்கு அழைக்கிறார். 1850 மார்ச்சில் அரசாங்கத்திற்கு இணையாக தொழிலாளர் தங்களது புரட்சிகர அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளவேண்டும் என்றார் மார்க்ஸ்.  நிரந்தர புரட்சி உங்கள் யுத்த முழக்கமாகட்டும் என்று பேசினார்.   புரட்சிகர கம்யூனிச உலக சொசைட்டி (World Society of Revoultionary Communism) என்பதை மார்க்ஸ், எங்கெல்ஸ், வில்லிக், பிளாங்கியின் சீடர்கள், சார்ட்டிஸ்ட் இயக்கத்தினர் லண்டனில் நிறுவினர். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், நிரந்தர புரட்சி என்கிற கருத்தாங்கங்களை அக்குழு பேசியது. வில்லிக் , ஷாப்பர் ஆகியவர்களுடன் மார்க்சிற்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. லண்டனில் அரசியல் பொருளாதார ரிவ்யூ பத்ரிக்கை மூலம் 1850 மார்ச்- மே காலத்தில் பிரான்சில் வர்க்க போராட்டங்கள் குறித்து மார்க்ஸ் எழுதினார்.  சில மாதங்களுக்கு பின்னர் 1852ல் 18வது புருமர் லூயிநெப்போலியன் வெளியானது. மிக குறைவான தோழர்களுடன் இருப்பதே நல்லது என மார்க்ஸ் இக்காலத்தில் கருதினார். பிப்ரவரி 11, 1851ல் அவர் எங்கெல்ஸ்க்கு ’மிகப் பிரபலமான நேர்மையான நமது தனிமையில் நீங்களும் நானும் நம்மை கண்டறிகிறோம். நமது கொள்கைக்குகு மிக உகந்ததுதான் இத்தனிமை’ என எழுதினார். குடிபெயர்ந்தோர் சார்பில் கூட்டம் ஒன்று 1848ன் பிரஞ்சுபுரட்சி குறித்து பேசிட கூடியபோது மார்க்சின் சார்பில் சென்றோரை அக்கூட்டத்தினர் ஏற்காமல் ஒற்றர்கள் என விமர்சித்து தொந்திரவு செய்து அனுப்பிவிட்டனர். 1850 நவம்பரில் எங்கெல்ஸ் தந்தையின் தொழிலை கவனிக்க மான்செஸ்டர் சென்றார். 1851ல் நியுயார்க் டிரிப்யூன் எடிட்டரும், ஃபூரியரிஸ்ட் என அறியப்பட்ட சார்லஸ்  ஜெர்மன் நிகழ்வுகள் குறித்து மார்க்சை எழுத சொன்னார். எங்கெல்ஸ் உதவியுடன் கட்டுரைகளை மார்க்ஸ் எழுதினார். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மார்க்சின் ஜெர்மன் கட்டுரைகள் எங்கெல்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சென்றாலும், 1853 முதல் மார்க்சே ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். மார்க்ஸ் லண்டன் வந்தபோது அவருக்கு வயது 31. பிரஷ்யா போலீஸ் உளவாளி ஒருவர் மார்க்ஸ் மிக மோசமான மலிவான வாடகைப்பகுதியில் தங்கியிருந்ததையும், வீட்டு தளவாட சாமன்கள் பழையனவாக அழுக்காக இருந்ததையும், யார் வ்ந்தாலும் ஜென்னி உபசரித்து வருவதைப்பற்றியும் செய்தி அனுப்பியிருந்தார்.  முதலில் செல்ஷ்ஸி என்கிற சற்று மேம்பட்ட பகுதியில் மார்க்ஸ் தங்கினார். வாடகை கொடுக்கமுடியவில்லை. அதன்பின்னர் டீன் தெரு  என்பதில் 6 ஆண்டுகள் இருந்தார். முதல் பெண் ஜென்னி பாரிசில் பிறந்தார். லாராவும், எட்கரும் பிரஸ்ஸல்ஸில் பிறந்தனர். லண்டன் வந்தவுடன் எட்மெண்ட் , பின்னர் கைடோ என்கிற குழந்தைகள் பிறக்கின்றன. 1851 மார்ச்சில் பிரான்சிஸ்கா என்ற பெண் குழந்தை பிறக்கிறது. கைடோ, பிரான்சிஸ்கோ குழந்தைகள் இறக்கின்றனர்.  பிரான்சிஸ்கோவை புதைக்கத்தான் பணமில்லாமல் போய் பிரான்சிலிருந்து குடியேறிய ஒருவரிடம் கடன்பெற்று இறுதி சடங்கு முடிகிறது. 1855 ஏப்ரலில் 7 வயதில் எட்கர் மரணிக்கிறான். 1855 ஜனவரியில் எலியனார் பெண் பிறக்கிறாள். 1857 ஜூலையில் மற்றொரு பெண் குழந்தை மரித்தே பிறந்தது.   மார்க்ஸ் குடும்பத்தில் ஹோமர், சோபாக்கிள்ஸ், தாந்தே, சேக்ஸ்பியர், கதே, பால்சாக் சார்ந்த இலக்கிய பேச்சுக்கள் மிக சாதரண உரையாடல்களில் கூட மிளிரும் என்பதை நாம் அறியமுடிகிறது. மார்க்ஸ் பெரும் நகைசுவையாளரும் கூட. கேலிபேச்சும் கிண்டலும் பெயர்வைத்து கலாய்ப்பதும் நடக்கும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் குழந்தையைபோல் அடம் பிடிப்பவராக மார்க்ஸ் இருந்தார் . மோசமான கும்பல்(Vulgar Mob) என்றால் அவர்களின் அறியாமை கண்டு அவர் கோபம் கொள்பவராகவும் இருந்தார். வறுமையை, குடும்ப சுமையை எதிர்கொண்டு சமாளிப்பவராக ஜென்னி வாழ்ந்து மறைந்தார். ஆனால் அவர்களின் இருமகள்கள் தற்கொலை செய்துகொண்டு தங்கள் வாழ்க்கையை துறந்தனர். மூத்த மகள் ஜென்னிலாங்கேகூட 39 வயதில் உடல் சுகவீனமற்றவராகவே மறைந்தார். எங்கெல்ஸ் மான்செஸ்டரில் தொழிலாளர் பெண்மணி மேரிபர்ன்ஸ் உடன் மணவாழ்க்கையில் இருந்தார். அவர் மறைவிற்கு பின்னர் அவரது தங்கை லிஸ்ஸி உடன் வாழ்ந்தார். ஜென்னி மார்க்ஸ் மேரிபர்னசை வரவேற்பவராக இல்லை என்கிற பதிவை பெலிக்ஸ் தருகிறார். மேரி இறந்தபோது மார்க்ஸ் எழுதிய கடிதம் கூட எங்கெல்ஸ்க்கு வருத்தமளித்தது. அக்கடிதத்தில் மார்க்ஸ் கேட்ட பண உதவியை எங்கெல்ஸ் தரவில்லை. உடனடியாக செய்ய இயலாது என எங்கெல்ஸ் பதில் எழுதினார்.. பணம் கேட்க அது சரியான நேரமா என்ற கேள்வி எங்கெல்ஸ் இடம் இருந்தது. இதையறிந்த மார்க்ஸ் தனது வருத்தத்தை உடன் தெரிவிக்கிறார். எங்கெல்ஸ் அனைத்தையும் மறந்து கம்பெனி பணத்திலிருந்து 100 பவுண்ட் அனுப்பினார். எங்கெல்ஸ் 1851முதல் மார்க்ஸ் குடும்பத்திற்கு நிதி உதவி செய்பவராக இருந்தார். மார்க்ஸ்-எங்கெல்ஸ் மாஸ்கோ ஆய்வு நிறுவனப்படி ஏறத்தாழ மார்க்ஸிற்கு எங்கெல்ஸ் செய்த உதவி 7500 பவுண்ட் ஆகும். அன்றைய காலத்தில் பெரிய தொகையாகவே அதை கருதமுடியும்.  லண்டன் வந்த ஆரம்ப ஆண்டுகளில் மார்க்ஸ் குடும்பம் மிக வறுமையில் இருந்தது. மூன்று- நான்கு ஆண்டுகளில் மாத வருவாய் 150 பவுண்ட் என்ற நிலை ஏற்பட்டது.. அடித்தட்டு மத்தியதர வாழ்க்கை வாழக்கூடிய அளவு இருந்தது. 1869ல் மார்க்ஸ்  கடன்களை பெரும்பாலும் அடைத்தார். எங்கெல்ஸ் மார்க்சிற்கு ஆண்டிற்கு 350 பவுண்ட் வருவாய் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்தார். தாயார் இறப்பிற்கு பின்னர் 700 பவுண்ட், வில்லியம் உல்ஃப் உயில் மூலம் 824 பவுண்ட் என பெற்றதால் குடும்பத்தை வறுமையிலிருந்து சிறிது சிறிதாக மீட்க முடிந்தது. மார்க்ஸ் குடும்பம் ஹாம்ப்ஸ்டெட் பகுதிக்கு சற்று விசாலமான 7 அறைகள் கொண்ட வீட்டிற்கு செல்கிறது. 1867ல் காபிடல் முடியும் தருவாயில் அவருக்கு கொப்புளங்கள் வரத்துவங்கின. கண்பார்வை பாதிப்பு, பசியின்மை, வயிற்று உபாதைகள்,  லிவர் பாதிப்பு தலைவலி, மூட்டுவலிகளால் அவதிப்பட்டார். பத்ரிக்கை விமர்சனம் என்பதை தாண்டி கனமான புத்தகங்களை மார்க்ஸ் எழுதவேண்டும் என்கிற விழைவை எங்கெல்ஸ் 1850களிலேயே சொல்லி வந்தார். காபிடல் முதல்பாகம் வெளியிடுவதற்கு 16 ஆண்டுகள் மார்க்ஸ் கடுமையாக உழைத்திருந்தார்.  இளமையிலிருந்து முதுமைவரை (Adolesecence- Senescence)   மார்க்சிடம் காபிடலுக்கு ஆன கூறுகள் வளர்ந்து கொண்டேயிருந்தது என பெலிக்ஸ் மதிப்பிடுகிறார். மார்க்ஸ் மறைந்த பின்னர் 1885, 1894ல் அடுத்த பாகங்கள் வந்தன. மார்க்ஸின் குறிப்புகளை வைத்துக்கொண்டு அவற்றை சரிசெய்து வெளியிட்டதாக எங்கெல்ஸ் தெரிவிக்கிறார். முதல்பாகம் மார்க்சின் தலைசிறந்த படைப்பாக அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது.          IV The production process of capital, The Process of Circulation of Capital, The process of Capitalistic production என காபிடலின் மூன்று பாகங்களுக்கும் பெயரிடப்பட்டது. இதற்கு முன்னர் 1857-58ல் மார்க்ஸ் எழுதிய அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு அடிப்படைகள் என்பதை சோவியத் எடிட்டர்கள் 1939-41ல் வெளியிட்டனர். கிராண்ரிஸ்சே (Grundrisse) என்கிற ஜெர்மன் டைட்டிலில் அது அறியப்படுகிறது. மார்க்ஸ் 1859ல் அரசியல் பொருளாதார விமர்சனங்கள் வெளியிட்டார். கார்ல் காட்ஸ்கி தேடிப்பிடித்து உபரிமதிப்பு கோட்பாடுகள் என்பதை 1905-10 காலத்தில் வெளிக்கொணர்கிறர். டேவிட் மக்லெல்லன் கிராண்ரிஸ்ஸே குறித்த ஆய்வுகளை செய்துள்ளார்.   காபிடலில் லேபர் என்பது லேபர், லேபர் பவர் என விளக்கப்படும். தனியார் சொத்துரிமை என்பது உற்பத்தி- மறு உற்பத்தி எனவும், மதிப்பு என்பது உபரிமதிப்புவரை விளக்கப்படும். Relative Surplus value, Absoulte surplus எனவும் மார்க்ஸ் பேசுகிறார். அவர் ஆய்வுகள் விரிவடைய அவரது எழுத்தும் விரிந்து செல்லவேண்டியதானது. அரிஸ்டாட்டில் முதல் ரிகார்டோவரை கற்பது என்பது எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் அவர் விரிவாக கற்க தவறவில்லை. உழைப்புமதிப்பு கோட்பாடு மார்க்சின் மையமான கோட்பாடானது. ஆடம்ஸ்மித் எடுத்துரைத்த மதிப்பு கோட்பாட்டை தேவை- வழங்கல்  என்பதில் பார்க்கவேண்டியிருந்தது. மார்க்சின் மதிப்பு கோட்பாட்டை புரட்சிகர குறுக்கல்வாதம் என விமர்சிப்போரும் உண்டு. வேலைநாள் என்பது பற்றிய விளக்கமே காபிடலில் 75 பக்கங்கள் வருவதாக பெலிக்ஸ் குறிப்பிடுகிறார். ஆலை மெஷினரி என்பது 140 பக்கங்களில் பேசப்படுகிறது. It is a cold work என பெலிக்ஸ் விமர்சித்தாலும் மனிதகுலத்தின் மீதான மகத்தான பிடிப்பில்லாமல் இவ்வேலை சாத்தியமில்லை எனவும் பெலிக்ஸ் மதிப்பிடாமல் இல்லை. காபிடலின் மையமே அதிகாரம் பற்றியதுதான். பாட்டாளிவர்க்கம் என்கிற புதிய வகைப்பட்ட வர்க்கத்தின் அதிகாரம் நோக்கி மார்க்ஸ் மனிதகுலத்தை நகர்த்த விரும்பினார். மார்க்சியர்களால், கம்யூனிஸ்ட் கட்சியால் தொழிலாளிவர்க்கத்தால் இது சாத்தியம்தான் என்பதும் நம்பப்படுகிறது. காபிடல் உலகின் பொருளாதார விளக்கத்திற்காக வரவில்லை- புரட்சிகர ஆட்சி அதிகார மாற்றம் என்பதற்கான விளக்கம் – அரசியல் என அதை விமர்சிப்போர் உண்டு.   1868ல் பிரஸ்ஸல்ஸ் நடந்த அகிலத்தின் கூட்டத்தில் காபிடல் எனும் மூலதனம் குறித்த முதல் அறிவியல் ஆய்வை உலகிற்கு தந்த பொருளாதார அறிஞர் கார்ல் மார்க்ஸ் என்கிற தீர்மானத்தை மார்க்ஸ் ஆதரவாளர்கள் கொணர்ந்தனர். மூலதன புத்தகம் அதிகாரத்திற்கான கருவி- ஆக உயர் புரட்சிகர அரசியலை அது படைக்கிறது என தனது ஆய்வின் முடிவாக பெலிக்ஸ் குறிப்பிடுகிறார்.  பாட்டாளிகளின் தேசியம் (Proletarian Nationalism) என்பது அனைத்துவகை தேசிய பகைமைகளையும் முடிவிற்கு கொணரும் (end of all national hostilities) என்கிற கருத்திற்கும் மார்க்ஸ் வந்தார். பாட்டாளிகள் தங்கள் அரசியல் உயர் அதிகாரம் பெற தேசிய வர்க்கமாக தன்னை அமைத்துக்கொள்ள வேண்டும். இதை.பூர்ஷ்வாக்கள் பொருளில் தாங்கள் பேசவில்லை  என்றார் மார்க்ஸ். இந்துஸ்தான் அதுவரைபட்ட துன்பங்களையெல்லாம் விஞ்சக்கூடிய துயர்களை பிரிட்டன் அதன் மீது சுமத்தியுள்ளது என மார்க்ஸ் எழுதினார். அதேநேரத்தில் ஆசிய சமுகம் தனது விதியை மாற்றிக்கொள்ள இங்கிலாந்து நினைவற்ற வகையில் வரலாற்றின் கருவி (unconscious tool of history) எனவும் மார்க்ஸ் குறிப்பிட்டார்.   பிரான்சில் லூயி நெப்போலியன் உறவினர் விக்டர் நெப்போலியன் தொழிற்சங்க இயக்கத்திற்கு சற்று உதவிகரமாக இருந்தார். அரசிற்கு எதிரான தொழிற்தகராறுகளை மட்டுப்படுத்த விழைந்தார். 1862ல் அவர் 750 பிரான்ஸ் தொழிலாளர் லண்டன் சென்று தொழில் கண்காட்சி காண ஏற்பாட்டையும் நிதி உதவியையும் செய்தார். லண்டன் ட்ரேட்ஸ் கவுன்சில் தோழர்களுடன் பிரான்ஸ் தோழர்கள் கலந்துபேசி நிரந்தர அமைப்பு ஒன்றை செப் 28 1864ல் துவங்கினர். இது முதல் அகிலம் என வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இக்கூட்டத்திற்கு மார்க்ஸ் அழைக்கப்பட்டு அவர் உட்பட 34 உறுப்பினர் பன்னாட்டு பிரதிநிதிகள் கமிட்டி ஒன்றை அமைக்கின்றனர். அதில் 9 பேர் கொண்ட துணைக்கமிட்டியில் மார்க்ஸ் இடம்பெற்றார். மார்க்சின் ஆளுமையாலும் அறிவாற்றலாலும் விரைவில் அதன் தலைமை பாத்திரத்தை  அவரால் எடுக்க முடிந்தது. ஜெர்மன் தொழிலாளர் கல்வி சொசைட்டியின் (German workers Educational Society) கரஸ்பாண்டெண்ட் செக்ரட்டரி ஆக மார்க்ஸ் இருந்தார். 1864ல் ஜார்ஜ் ஓட்ஜர் என்பார் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1866ல் மார்க்ஸ் பெயர் வந்தபோது அவர் மறுத்து ஓட்ஜெரையே தலைவராக இருக்க சொன்னார். கூட்டாக விவாதித்து முடிவு (Collective Decision) என்பதை மார்க்ஸ் வற்புறுத்தி வந்தார். விவாதங்களுக்கு பின்னர் மார்க்சின் கருத்துக்களே முடிவாக வரத்துவங்கின. அகிலம் துவங்கிய இரண்டே ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள், சொசைட்டிகள், கில்ட்கள், இலக்கிய கழகங்கள், மொழிப்போராளிகள் என அவ்வமைப்பு விரிவடைந்தது. அதனால் பல்வேறு புதிய பிரச்சனைகளும் வரத்துவங்கின. வேலைநிறுத்த காலங்களில் அகிலம் போராளிகளுடன் நின்று உதவியது. எட்டுமணிநேர வேலை என்பதை தீர்மானமாக்கியது. அகிலம் வழியாக சிந்தனையையும் அமைப்பின் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்க மார்க்ஸ் முயன்றார்.  குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு என்கிற முழக்கம் எடுபடவில்லையெனினும் அதற்கு சட்ட முறைகள் அவசியம் என அகிலம் சார்ந்தவர் கோரினர். லசேன் 1867, பிரஸ்ஸல்ஸ் 1868, பாசல் 1869 மாநாடுகளில் மார்க்சின் செல்வாக்கு கூடியது. கம்யூன் என்பது பாரிசில் முனிசிபல் நிர்வாகத்தை குறித்தது. 1870 செப்டம்பரில் லூயி நெப்போலியன் சரணடைந்தார். பூர்ஷ்வாக்களின் அரசியல்வாதிகள் தற்காலிக அரசாங்கம் அமைத்தனர். பாரிசில் புரட்சியாளர்கள் அவசரப்பட்டு இந்த அரசாங்கத்திற்கு எதிராக போய்விடவேண்டாம் என மார்க்ஸ் உட்பட அகிலத்தினர் கருதினர்.  கம்யூன் எழுச்சி 72 நாட்கள் நீடித்தது. இருந்த நாட்களில் முற்போக்கான நடவடிக்கைகளை,  பொருளாதார நடவடிக்கைகளை புரட்சியாளர்கள் எடுத்தனர். ஆறுமாத நிலவாடகை தள்ளுபடி, வங்கிகடன் தவணைகள் அதிகரிப்பு, கத்தோலிக்க மதப்பிடியிலிருந்து கல்விமுறையினை விடுவிக்க முயற்சி போன்றவைகளை அறிவித்தனர்.  கத்தோலிக்க பெற்றோர் சிலர் பள்ளி புகுந்து புதிய முறைகளை முறியடிக்க முயன்றதும் நடந்தது. வீட்டு சாமான்கள் விலை குறைப்பு, அதிகாரிகள் அலுவலர் சமபளத்தை கட்டுக்குள் கொணர்தல், தொழிலாளர்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள், 34 புதிய தொழிற்சங்கங்களை அமைத்துக் கொடுத்தல்,  ரொட்டி தொழிலாளர் இரவுப்பணிக்கு தடை, புரட்சிகர நீதிமன்றம் நிறுவுதல் போன்றவையும் அமுலுக்கு வந்தன. 1871 மே 21- 28 ஆகிய இரு  ஞாயிறுக்குள் பாரிஸ் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. 20000 கம்யூனார்ட்ஸ் உயிர் பறிபோனது. முப்பதாயிரத்திற்கும் மேலானவர் சிறைபிடிக்கப்பட்டனர்.  ஆயிரக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டனர். பலர் சித்திரவதை கூடத்திற்கு அனுப்பபட்டனர். மார்க்ஸிற்கு பாரிஸ் கம்யூன் வெற்றி குறித்து சந்தேகங்கள் இருப்பினும் அதனை அற்புத வரலாற்று முன்முயற்சி, மாபெரும் தியாகம் என வர்ணித்திருந்தார். கம்யூன் வீழ்ச்சியை அடுத்து மார்க்ஸ் The Civil war in France  எழுதினார். செப்டம்பர் 4 1870 எழுச்சியை தொழிலாளர்கள், அவர்களின் பிரதிநிதிகளின்  அரசாங்கம் என்றே மார்க்ஸ் அங்கீகரித்தார். கம்யூன் நாடாளுமன்றம் மட்டுமல்லாமல், எக்ஸிகுயுட்டிவ் லெஜிஸ்லேட்டிவ் அமைப்பாகவும் உருவானது என்றார். கம்யூனில் பெரும்பான்மை சோசலிஸ்ட்கள் இல்லை என்பதையும் மார்க்ஸ் குறிப்பிடாமல் இல்லை. பாரிஸ் எழுச்சி புதிய சமூகத்தின் கட்டியங்காரன் என்று கொண்டாடப்படும் (working men's paris, with its commune, will be forever celebrated as the glorious harbinger of a new society)  என்கிற அங்கீகாரத்தை மார்க்ஸ் அதற்கு வழங்கினார். மார்க்ஸ் பாரிஸ் கம்யூனை உற்சாகப்படுத்தி எழுதியதை இசையா பெர்லின்  என்ற சிந்தனையாளர் revoultionary hagiography புரட்சியாளர்களின் திருத்தொண்டு வரலாறு என குறிப்பிட்டார்.  நியுயார்க் வேர்ல்ட் பத்ரிக்கைக்கு மார்க்ஸ் கொடுத்த பேட்டி ஜூல 18 1871ல் வெளியானது. அதில் அவர் அகிலம் என்பது தொழிலாளர்கள் இணைந்து உருவாக்கிக்கொண்ட ஒன்று. அதன் நோக்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி தொழிலாளர்க்கு பொருளாதார விடுதலையை பெற்றுத்தருவது என விளக்குகிறார். 1871 ஜூனில் பிரஞ்சு அரசாங்கம் சார்பில் அகிலத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டது. நாத்திக, கம்யூனிச சொசைட்டி , வெகுஜனங்களின் மிருகத்தனமான சக்தியது என்றது அவ்வறிக்கை. அகிலத்தின் லண்டன் காங்கிரஸ் செப்டம்பர் 17-23 1871ல் நடந்தது. பகுனினுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரித்திருந்தது. 1872 செப்டம்பரில் அடுத்த காங்கிரஸ் ஹேகில் நடந்தது. மார்க்ஸ் பங்கேற்றார். சார்பாளர் அனுமதி முற்றிலுமாக மார்க்ஸ்- எங்கெல்ஸ் வசம் இருந்தது. அனுமதிக்கப்பட்ட 61 சார்பாளர்களில் பெரும்பான்மை மார்க்சை ஏற்பவர்கள்.. உடல்நிலை பாதிக்கப்பட்ட பகுனின் காங்கிரஸிற்கு வரவில்லை. சிலர் கயில் அதிகாரமா- சுதந்திர பெடெரேஷனா (Centralisation of power in the hands of few  or free federation) என்கிற இரு சிந்தனைகளின் மோதல் களமாக அகிலத்தின் காங்கிரஸ் இருந்தது என பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டார். மார்க்ஸ் எதிர்ப்பாளர்கள் சிலர் இயக்கம் ஒரே ஒரு மூளையின் பிரதிநிதியாகக்கூடாது( The movement cannot represent the conception of a single brain ) என  விமர்சித்தனர். அகிலத்திற்கு விரோதமாக நடப்பவர்களை நீக்கலாம் என்கிற தீர்மானத்தில் மார்க்சால்  பெரும்பான்மை பெற முடிந்தது. அதேநேரத்தில் எங்கெல்ஸால் முன்மொழியப்பட்ட தீர்மானமான அகிலத்தை நியுயார்க்கிற்கு மாற்றுவது என்பதற்கு கூடுதல் எதிர்ப்பு வந்தது. இறுதியில் அத்தீர்மானமும் முடிவானது. பகுனின் மீதான விசாரணைக்குழு முடிவுகள் நிருபணமானது என அகிலம் அவரை வெளியேற்றியது.  தொழிலாளர் தலைவர் ஃபெர்டினாண்ட் லசேல் மார்க்சின் கருத்துக்களை எடுத்து செல்பவராக இருந்தார். அரசியல் பொருளாதார விமர்சனங்கள் 1859ல் வெளிவர உதவினார். 1860களின் துவக்க ஆண்டுகளில் இருவருக்கும் இடையே  அடிக்கடி கடித பரிமாற்றங்கள் , சந்திப்புகள் நடந்தன. AGWA என்கிற அனைத்து ஜெர்மன் தொழிலாளர் சங்கத்தை லசேல் 1863 மே மாதம் உருவாக்கினார். அதை சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி போன்றது என்றார். AGWAமுதல் ஆண்டிலேயே 5000 உறுப்பினர்களை பெற்றது. அரசின் உதவியுடனான தொழிலாளர் கூட்டுறவுகள் என்பதை லசேல் பேசினார். முதலாளித்துவத்திற்குள் சில நலன்கள் என்கிற அவரது நடவடிக்கை மார்க்சின் புரட்சிமூலம் முதலாளித்துவத்தை தூக்கி எறிதல் என்பதுடன் மாறுபட்டது.  GWA என்கிற ஜெர்மன் தொழிலாளர் அமைப்பினை லசேலுக்கு எதிரானவர்கள் பிராங்கபர்ட்டில் துவங்கினர். ஆகஸ்ட் பெபல் லீப்சிக்கில் லசேலுடன் சேராமல் இருந்தார். லீப்னெக்ட் பெபலுடன் இணைந்தார். லாசேல் மறைந்தபின், ஸ்விட்சர் தலைமை விலகலுக்கு பின்னர் 1875ல் இரு அமைப்புகளும் இணைந்து சோசியல் ஜனநாயக தொழிலாளர் கட்சியை 1875ல் உருவாக்கினர். இணைப்பு குறித்து லீப்னெக்ட் முன்கூட்டியே மார்க்சுடன் விவாதிக்கவில்லை என்றும், பத்ரிக்கை செய்தி மூலமே மார்க்ஸ் இதை அறிந்தார் எனவும் பெலிக்ஸ் கூறுகிறார். கோதா திட்டம் குறித்த மார்க்சின் விமர்சனங்களையும் லீப்னெக்ட் வெளியே தெரிவிக்காமல் பின்னர் 1891ல்தான் வெளியானது எனவும் பெலிக்ஸ் கூறுகிறார்.  ருஷ்யா செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் ஏப்ரல் 1872ல் மூலதனம் முதல் வால்யூம் 900 காப்பிகள் விற்றன. 1870 ல் பகுனினுடன் தொடர்பு இல்லை என தெரிவித்து நிகொலாய் உதின் மார்க்சுடன் தொடர்புகளை மேற்கொண்டார். பகுனினை எதிர்த்து மார்க்சுடன் நிகோலாய் நின்றார். பன்முக சோசலிசம் (Eclectic Socialism) என்கிற கருத்துக்களுடன் பார்வையில்லாத நிலையிலும் டூரிங் சுற்றிவந்தார். அவரை பாராட்டி கட்டுரைகளை பெபல் பத்ரிக்கையில் எழுதினார்.  மார்க்ஸ் அரைகுறை விஞ்ஞானத்தையும் குறையுள்ள தத்துவத்தையும் பயன்படுத்துகிறார் என்கிற கருத்தை டூரிங் சொல்லிவந்தார். 1877-78 ல் டூரிங்கிற்கு பதிலை எங்கெல்ஸ் எழுதி டூரிங்கிற்கு மறுப்பு புத்தகமாக வந்தது. 1880ல் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பத்ரிக்கை பொறுப்பை கார்ல் ஹிர்ச் என்பவருக்கு தரவேண்டும் என மார்க்ஸ் நினைத்தார். பெபலும் லீப்னெக்ட்டும் பெர்ன்ஸ்டைனுக்கு கொடுக்க விரும்பினர்.  சோசலிச ஜனநாயக கட்சி (SDP) 1880களில் பெரிதாக வளர்ந்தது. அதிக வாக்குகளையும் பெறத்துவங்கியது. மார்க்ஸ் மறைந்தாலும் எங்கெல்ஸ் இதை கண்ணுற்றார். 1878ல் அக்கட்சியின் பெயரால் 75 பத்ரிக்கைகள் வந்தன. 1896ல் பெர்ன்ஸ்டைன் Evoultionary Socialism என்பதை எழுத துவங்கினார். பெபல் இதை விமர்சித்தார். புரட்சி என்பது நோக்கம் என்பதிலிருந்து பக்தி (as object to piety) என போய்விட்டதாக பெலிக்ஸ் குறிப்பிடுகிறார்.   1860ல் ஜென்னிமார்க்ஸ் தனது 46ஆம் வயதில் சின்னம்மை நோயால் தாக்கப்பட்டார். மார்க்சிற்கு நகல் எழுதி தருவதில் துணையாக இருந்தாலும் சில காலம் ஓய்விற்காக தனியே சென்றார். இக்காலங்களில் மகள் உதவியாக மார்க்சிற்கு இருந்தார். மகள் ஜென்னிலாங்கேவிற்கு ஆஸ்த்மா தொந்திரவு மட்டுமல்லாமல், சில நேரங்களில் மாமியார் தொந்திரவுகளும் இருந்தது. மகள் லாராவிற்கு மூன்று குழந்தைகள் இறந்த துக்கம் இருந்தது. 1911ல் அவர் தனது கணவருடன் தற்கொலை செய்துகொண்டார். இறுதி சடங்கில் லெனின் பங்கேற்ற செய்தியை பார்க்கமுடிகிறது. அடுத்த மகள் எலியனார் தனது 43ஆம் வயதில் 1898ல் விஷம் அருந்தி மறைந்தார். 1881 டிசம்பர் 2 அன்று லிவர் கான்சரால் பாதிக்கப்பட்டு ஜென்னி மார்க்ஸ் இறந்தார். ஜென்னியின் இழப்பு மார்க்சின் உடலை மேலும் பலவீனப்படுத்தியது. 1883ஜனவரி 10 அன்று  5 குழந்தைகளின் தாயான  மார்க்சின் மகள் ஜென்னிலாங்கெ  புற்றுநோய் தாக்கி மரணம் அடைந்தார். மார்க்ஸ் தனது இருக்கையில் அமர்ந்தபடியே மார்ச் 14 1883ல் மறைந்தார்.  மார்க்ஸ் காலத்தில் புகழ்வாய்ந்த ஆட்சியாளர்களாக  பிஸ்மார்க், கிளாட்ஸ்டோன், டிஸ்ரேலி இருந்தனர். ஆனால் எதிர்காலத்திற்கான மகத்தான திட்டமிடலில் மார்க்ஸ் இருந்தார். அவர் பேசிய சர்வதேசியம், பாட்டாளிவர்க்கம்  அவரை உலகத் தலைவராக மாற்றின. அவரின் பெயரால் எழாத இயக்கமென உலகில் எங்கும் இல்லை என்ற நிலை அவரின்  பிறந்த 125 ஆண்டுகளிலேயே  ஏற்பட்டுவிட்டது. அவர் உலகின் சர்வ இடங்களையும் சென்றடைந்தார். மார்க்ஸ் புரட்சிகர இயக்கங்களின் உந்துவிசையாக தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  இன்றும் உலகின் மையமான விவாதம் அவரை சுற்றியே நடந்து வருகிறது. Ref: Marx as Politician- Prof David Felix, Newyork Marx- Engels An introduction to their Lives and work- David Riazanov லண்டனில் கார்ல் மார்க்ஸ் பிரிட்டிஷ் சோசலிச சூழல்                                               மார்க்சின் லண்டன் தொடர்பும் அவர் அங்கு வாழ்ந்த காலத்திலும் மறைந்த சில ஆண்டுகளிலும்  நிலவிவந்த சோசலிச கருத்துக்கள் மற்றும் சூழல் பற்றிய சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. 1847 ஜூலை- ஆகஸ்டில் பிரிட்டனில் நாடளுமன்ற தேர்தல் நடந்தது. சார்ட்டிஸ்ட் இயக்கம் வேட்பாளர்களை நிறுத்துகிறது. ராபர்ட் ஓவன் மரில்போன் என்கிற இடத்தில் அரசியல் சீர்திருத்தம் என்கிற முழக்கத்துடன் வேட்பாளராக நின்றார். வெற்றிபெறமுடியவில்லை. 1844 செப்டம்பரில் ஜெர்மன், போலந்து, இத்தாலியிலிருந்து குடியேறிய அகதிகள் தங்களை  இங்கிலாந்து சமுகத்தினருடன் இணைத்துக்கொண்டு இருக்கத்தக்க வகையில் லண்டனில் சகோதரத்துவ ஜனநாயக சமூகம் என்பதைத் துவங்கினர். தங்கள் கூட்டங்களை ஜெர்மன் கம்யூனிஸ்ட் தொழிலாளர் கிளப்பில் (கட்சிகளுக்கு அப்போது கிளப் என பெயரிட்டனர்) நடத்தி வந்தனர். அவர்கள் சார்ட்டிஸ்ட் இயக்கத்தார்களையும் இக்கூட்டங்களுக்கு வருமாறு அழைத்தனர். மாஜினிக்கு நேரடியாக சார்ட்டிஸ்ட்களுடன் தொடர்பில்லை என்றாலும் தீவிரமாக இயங்கிவந்தார்.. கார்ல் ஷாப்பர் (Karl Schapper) என்கிற ஜெர்மன் புரட்சியாளருக்கு சார்ட்டிஸ்ட்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. பிரடெரிக் எங்கெல்ஸ்க்கு சார்ட்டிஸ்ட் அறிவுவட்டத் தொடர்பும் , நார்த்தென் ஸ்டார் எடிட்டர்களுடன் தொடர்பும் இருந்தது. 1845ல் ஜெர்மன் விஷயங்கள் குறித்து அவர் எழுதவும் செய்தார். 1846ல் மார்க்ஸ்க்கு சார்ட்டிஸ்ட்கள் தொடர்பு இருந்ததை பார்க்கிறோம். பெல்ஜியத்தில் இருந்த ஜெர்மானிய கம்யூனிஸ்ட்கள் சார்ட்டிஸ்ட் தலைவர்களை பாராட்டி மார்க்ஸ் எங்கெல்ஸை எழுத சொல்கின்றனர். அவர்களது பாராட்டு செய்தி நார்த்தெர்ன் ஸ்டார் ஜூலை 25 1846ல் வெளியாகிறது.   1847ல் கம்யூனிஸ்ட் அறிக்கை தொடர்பான  கூட்டத்திற்கு லண்டன் வந்த மார்க்ஸ், எங்கெல்ஸ் உள்ளிட்டவர்கள் சார்ட்டிஸ்ட் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேச வைக்கப்படுகின்றனர். பிரஸ்ஸல்ஸ் டெமாக்ரட்ஸ் இயக்கம் தன்னை அனுப்பியதாகவும் அவர்கள் சார்பில் தான் பேசுவதாகவும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். லண்டன் சார்ட்டிஸ்ட்களும் தாங்களும்தான் உண்மையான ஜனநாயகவாதிகள் என மார்க்ஸ் அக்கூட்டத்தில் பேசினார். இங்கிலாந்தின் உழைக்கும் மக்களே என விளித்து நீங்கள் உலக ரட்சகர்கள் என புகழ்பெறுவீர்கள் என்றார். அவரது உரை ஜெர்மன் மொழியில் நிகழ்த்தப்பட்டிருந்தது   லீக் ஆப் ஜஸ்ட் குறித்து சில மாறுபட்ட செய்திகளை வெவ்வெறு ஆய்வாளர்கள் தருகின்றனர். டேவிட் ரியாஸ்னாவ் அவ்வமைப்பு பாரிசில் துவங்கப்பட்டு 1839ல் பிளாங்கிஸ்ட்கள் எழுச்சி தோல்வியுடன் பலவீனமடைந்தது என்றும் அதில் பணியாற்றிய  ஷாப்பர், வைட்லிங் போன்றவர்கள் பின்னாட்களில் லண்டனில் புதுப்பிக்க முயற்சித்ததாகவும் குறிப்பிடுகிறார். ஷாப்பர் 1840ல் லண்டன் வந்து தொழிலாளர் கல்விக்கான சொசைட்டி ஒன்றை நிறுவுகிறார். மற்றவரான வில்லியம் வைட்லிங் தையற்கலைஞர். அவர் ஸ்விட்சர்லாந்த் சென்றார். பல்வேறு பிரசுரங்கங்களை வெளியிட்டார். பாட்டாளிவர்க்கம் என தனித்த வர்க்கப்பார்வை சரியல்ல என்றார். உதிரிபாட்டாளிகள், திருடர்கள், பிச்சைக்காரர்கள்தான்  புரட்சியாளர்கள் என்றார் வைட்லிங். ஆரம்பத்தில் மார்க்ஸ் வைட்லிங்கை பாராட்டி பேசியிருந்தாலும் அவரின் அறியாமையை கண்டு வெகுள்கிறார். பிரஸ்ஸல்ஸில் தங்கியிருந்த மார்க்ஸ் 1846 இறுதியில் கம்யூனிஸ்ட் கரஸ்பாண்டன்ஸ் கமிட்டி ஒன்றை அமைக்கிறார். பல நாடுகளின் புரட்சியாளர்களுடன் தொடர்புக்கான கமிட்டியாக அது செயல்பட்டது. பாரிசில் எங்கெல்ஸ், பிரஸ்ஸல்ஸிலிருந்து வில்லியம் உல்ஃப், லண்டனில் ஷாப்பர் என தொடர்பு ஏற்பட்டு  பிரதிநிதிகள் சந்திப்பு கூட்டம் லீக் சார்பில் லண்டனில் ஏற்பாடு செய்யப்படுகிறது. முதல் அமர்விற்கு மார்க்ஸ் வரவில்லை.  கூட்டத்தில் முதலாளித்துவத்தை தூக்கி எறிதல், சுரண்டலற்ற தனியார் சொத்துரிமையற்ற பாட்டாளிவர்க்கத்தின் ஆட்சிமுறை என லீகில் பிரகடனப்படுத்துகின்றனர். அமைப்பு ”டிஸ்டிரிக் பாடி” என்கிற வகையில் ஏற்கப்பட்டு மையம் லண்டன் கமிட்டியிடம் கொடுக்கப்பட்டிருந்தது. மையக்குழுவை கம்யூன் என்றனர். இக்கூட்டத்தில் அமைப்புவிதியாக டெமாக்ரடிக் சென்ட்ரலிசம் சொல்லப்பட்டது. இம்முறைதான் பின்னர் வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் அமைப்பு முறையாக கைக்கொள்ளப்பட்டது. இரண்டாவது கூட்டம் 1847ன் இறுதியில் லண்டனில் நடந்தது. லண்டனில் இருந்து மோல் என்பவர் பிரஸ்ஸல்ஸ் வந்து லீக் கூட்டத்திற்கு மார்க்சை அழைத்தார். அதில் மார்க்ஸ் பங்கேற்றார். முன்னதாக எங்கெல்ஸ் பாரிசிலிருந்து communist catechism என்கிற கேள்வி-பதில் குறிப்புகளை அனுப்பியிருந்தார். மார்க்ஸ் மாநாட்டிற்கு வரும்போது முழுமையான தயாரிப்புகளுடன் வந்தார். விவாதங்களில் பலவற்றை தெளிவுபடுத்தினார். இக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் அறிக்கைப் பணி மார்க்சிடம் தரப்பட்டதாக டேவிட் ரியாஸ்னாவ் சொல்கிறார். மார்க்ஸ்- எங்கெல்ஸ் இருவரிடமும் கூட்டாக என சில ஆய்வாளர்கள் எழுதுகின்றனர். ஆனால் பிரஸ்ஸல்ஸ் கமிட்டியிடம் என்பதால் மார்க்சிடம் என்கிறார் ரியாஸ்னாவ். 1847 டிசம்பரில் கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதுவதற்கு இசைவு தெரிவித்த மார்க்சிடமிருந்து அவ்வறிக்கை வராததால் லண்டன் கமிட்டி ஜனவரியில் கூடி கெடு குறித்து தீர்மானம் இயற்றி கடிதமும் எழுதியது.. இக்கடிதம் ஷாப்பர், மோல் போன்றவர்களால் கையெழுத்து இடப்பட்டு ஜனவரி 26 1848ல் அனுப்பப்பட்டது. ஏற்றுக்கொண்டபடி சிட்டிசன் மார்க்சால் பிப்1, 1848க்குள் கம்யூனிஸ்ட் அறிக்கை அனுப்பப்படாவிட்டால் மேல்நடவடிக்கை என மத்திய கமிட்டி பிரஸ்ஸல்ஸ் மாவட்ட கமிட்டி மூலம் எச்சரிக்கை விடுக்கிறது. மார்க்ஸ் எழுதவில்லையெனில் எங்களிடம் காங்கிரசின்போது எடுத்து சென்ற ஆவணங்களை உடனடியாக அனுப்பி வைக்கவேண்டும் என்றனர். மார்க்ஸ் நிதானமாக ஆழ ஆய்ந்து தேர்ந்த வகையில் கருத்துக்களை முன்வைக்கும் பழக்கம் கொண்டவர். ஆனாலும் கடிதம் அறிந்தவுடன் பாரிஸ் புரட்சிக்கு முன்னதாகவே தனது புகழ் வாய்ந்த கம்யூனிஸ்ட் அறிக்கை என்கிற கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோவை கொடுக்கிறார். இன்று உலகில் மிக அதிகமான மொழிகளில் பேசப்படும்  ஆயிரக்கணக்கான அமைப்புகளுக்கு வழிகாட்டும் அறிக்கையாக இன்றும் அங்கீகாரத்துடன் அவ்வறிக்கை திகழ்கிறது.  பிப்ரவரி 1848ல் பிரஞ்சு புரட்சி எழுந்தது. லண்டனிலும், மான்செஸ்டரிலும் பல இடங்களிலும் ஏராள கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எழுந்தன. வேலையில்லா இளைஞர்கள் ரொட்டி அல்லது புரட்சி என ஊர்வலம் சென்றனர். பிரிட்ஜ்டனில் துப்பாக்கி சூடு நடந்து ஏராள உயிர்ப்பலிகள் ஆகின.  ஓ கானர் (o' Connor) சார்ட்டிஸ்ட் தலைவர்  கோரிக்கைகளில் ஒன்றைக்கூட விட இயலாது சாகவும் தயார் என கூட்டங்களில் பேசினார். பிரான்சையும் பிரஸ்யாவையும் பாருங்கள். அங்குள்ள எழுச்சியை காணுங்கள் என அவர் தட்டி எழுப்பினார். நில சீர்திருத்தம் கோரினார். இங்கிலாந்து மக்களே  வேலை மற்றும் நிலம் முழக்கத்துடன் அதற்கான பெட்டிஷன் இயக்கத்தில் சேருங்கள் என்றது அவ்வியக்கம்.  விவசாய மற்றும் ஜனநாயக குடியரசு என்பதற்கான அரசியல் அமைப்பு சட்டத்தையும் அவர்கள் தயாரித்தனர். ஏப்ரல் 10, 1848ல் பெரும் ஊர்வலம் நடத்தி கோரிக்கை சாசனத்தை நாடாளுமன்றத்தில் வழங்குவது என்பது முடிவானது. அனைத்து செல்வங்களுக்கும் உழைப்பே ஆதாரம். ”அமைதியான வழியில் வாய்ப்பிருந்தால்- இல்லையேல் ஆயுதம் தாங்கி கட்டாயமாக” போன்றவை முழக்கமாக இருந்தன. ஆயுதங்களும் இரகசியமாக சேகரிக்கப்பட்டன. போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டனர். இங்கிலாந்து வங்கிக்கு சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. மூலைக்கு மூலை போலிசார் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. என் சி ஏ (National Charter Association) தலைவர்கள் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் தலைமைதாங்கி வந்தனர்.  கானர், மக்கிராத் போன்ற தலைவர்களிடம்ம் போலீஸ் கமிஷனர்  அமைதியாக கூட்டம் நடத்துங்கள் - நாடாளுமன்றத்திற்குள் ஊர்வலம் செல்ல அனுமதியில்லை என்றார்.  நாடாளுமன்ற வாயிலை தாண்டி உள்ளே உடைத்துக்கொண்டு போவோம் என்கிற உணர்ச்சி பேச்சுக்கள் எல்லாம் நிற்க வேண்டியிருந்தது. தாங்கள் 57 லட்சம் மக்களின் கையெழுத்தை ஒப்படைப்பக்க போகிறோம் என்றனர் தலைவர்கள். ஆனால் 20 லட்சம் கூட இல்லை. திரும்ப திரும்ப பெயர்கள் வந்துள்ளதென அவர்கள் கேலி பேசப்பட்டனர். கானர் தலைமையின் பலவீனம் உணரப்பட்டது. நாடாளுமன்றம் 15 மாதங்களுக்கு சார்ட்டரை எடுத்துக்கொள்ளவில்லை. ஜூலை 3, 1849ல் அதற்கு ஆதரவாக 17 பேரும் எதிர்த்து 222 உறுப்பினர்களும் வாக்களித்து பெட்டிஷன் குப்பைக்கு போனது. 1848 மே முதல் அக்டோபர்வரை  சார்ட்டிஸ்ட் தலைவர்கள் பலர் இரண்டு ஆண்டுகளுக்குமேல் சிறைத்தள்ளப்பட்டனர். எர்னெஸ்ட் ஜோன்ஸ் என்ற முக்கிய தலைவர் கிரிமினல் போல் நடத்தப்பட்டார். ஹார்னே போன்ற தலைவர்கள்  தனியாக ரெட் ரிபப்ளிக்கன், டெமாக்ரடிக் ரிவ்யூ போன்ற  பத்ரிக்கைகளை துவக்கினர். நார்த்தெர்ன் ஸ்டார் செல்வாக்குடன் 15 ஆண்டுகள்  இருந்துவிட்டு நின்றுபோனது. 1848-50 களில் இங்கிலாந்து தொழிலாளிக்கு பிற நாடுகளான பிரஞ்சு, பிரஷ்யா, ஆஸ்திரியா, ஹங்கேரி என  அந்நாட்டு புரட்சியாளர்கள் பெயர்கள் தெரியத்துவங்கியது. 1855  ஓ கானர்  இரண்டு ஆண்டுகள் மனநல காப்பகம்  ஒன்றில் இருந்து இறந்து போனார். அவரின் செல்வாக்கு காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் 50000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். மார்க்சின் இறுதி சடங்குடன் ஒப்பிட்டால் மார்க்ஸ் அவர் வாழ்ந்த காலத்தில் எவ்வளவு புறக்கணிக்கப்பட்டுள்ளார் அல்லது ஒதுங்கியிருந்துள்ளார் என்பது புலனாகும். ஆனால் இன்று பெர்குஸ் கானர் என்ற அத்தலைவரை லண்டன்கூட நினைத்திருக்குமா எனத் தெரியவில்லை. உலகம் முழுதும் மார்க்ஸை நினைக்கிறது, ஆராய்கிறது.  சிந்திக்கின்ற போராடுகின்ற யாராலும் மார்க்சை விடமுடியவில்லை. ராபர்ட் ஓவனும் அடுத்த 3 ஆண்டுகளில் மறைகிறார். மதகுருமார் அவர் சாகும் தருவாயில் மத ஆறுதல் நிகழ்விற்கு அருகே வந்தபோது ஓவன் அதை மறுத்துவிடுகிறார். நான் பயனற்ற வாழ்க்கை வாழவில்லை. பல உண்மைகளை உலகிற்கு சொல்லியவன். புரிதல் இல்லாததால் அவை ஏற்கப்படாமல் போயிருக்கலாம். நான் காலத்திற்கு முந்தியவனாகத்தான் இருந்துள்ளேன் என்றார் ஓவன். அன்றிருந்த இங்கிலாந்தின் தொழிலாளர் நிலைப்பற்றி எங்கெல்ஸ் எழுதியிருந்தார்.  பல புகழ்வாய்ந்தவர்கள், நாவலாசிரியர்கள் கூட எழுதினர். பலருக்கு  கோல்ரிட்ஜ் தாக்கம் இருந்ததாக அறிஞர் மில் குறிப்பிடுகிறார். பென்தாம் மற்றும் கோல்ரிட்ஜ் ஆகியவர்களை சுற்றியே மனிதாபிமான சிந்தனைகள் பேசப்பட்டன. தேவாலயம் மற்றும் பழமைவாதம் பேசும் உக்கிர கவிதைகளும், லிபரல் முதலாளித்து ஆதரவு குரல்களும் ஒருசேர இருந்தன. பிரடெரிக் டெனிசன் மெளரிஸ் போன்றவர்கள் கிறிஸ்துவ சோசலிசம் என பேசத்துவங்கினர். இந்தியாவில் பின்னாட்களில் நாம் கேட்க இருந்த ராம ராஜ்யம் என்பதை போன்ற முழக்கத்தை முன்பே அங்கு அவர் ஏசுவின் ராஜ்யம்(Kingdom of Christ) என பேசினர். ராஜ்யவாதிகளுக்கு பைபிள்தான் மானுவல் என்றனர். கிறிஸ்துவ சோசலிசம் கடவுளின் ஆணையாகும். அங்கு நீதி என்பது முதல் கொள்கையாகும். அங்கு மனித பகைமை இராது என்றனர். மெளரிஸ் கிறிஸ்துவர்களை சோசலிசமயமாக்கு- சோசலிஸ்ட்களை கிறிஸ்துமயமாக்கு என்ற முழக்கத்தை வைத்தார். அவர்கள் சார்ட்டிஸ்ட்களை எதிர்த்தனர். ஓவன்வாதிகளுடன் கூட உடன்படமுடியும் என்றனர். மக்களுக்காக அரசியல் எனும் வாரப்பத்ரிக்கையை அவர்கள் கொணர்ந்தனர்.  கிறிஸ்டியன் சோசலிஸ்ட் என்கிற வார இதழை  1850 நவம்பரில் துவக்கினர் . சோசலிசம் இல்லாத கிறிஸ்துவமும், கிறிஸ்துவாக இல்லாத சோசலிஸ்ட்டும் பாழ் என எழுதினர். ஆனால் 5 ஆண்டுகளுக்குள் அதன் செல்வாக்கு சரிந்தது. அவர்கள் லண்டன் தொழிலாளர் கல்லூரி போன்ற சில நல்ல செயல்களையும் செய்தனர்.   பொருளாதார அறிஞர் மில் போன்றவர்கள் முதலாளி- தொழிலாளி நிரந்தர போராட்டம் கண்டு கவலையை தெரிவிக்க துவங்கினர். மில் தடுமாறியதாக சோசலிஸ்ட்கள் விமர்சனம் வைத்தனர். ஹைலேபரியில் அரசியல் பொருளாதாரத்துறைக்கு மால்தூஸ்க்கு பின்னர் ரிச்சர்ட் ஜோன்ஸ் பொறுப்பேற்றார். மில் போல அவர் அதிகம் எழுதாவிட்டாலும் முதலாளி, தொழிலாளி உறவுகள், அரசியல் பொருளாதாரத்தில் சமுக உறவுகளையும் காணவேண்டும் என்கிற கருத்தை எழுதினார்.  கம்யூனிஸ்ட் லீகில் கருத்து வேறுபாடுகள் வந்தன. சாகசமிக்க சிலரும் பணமும் இருந்தால் புரட்சி- அதற்காக அமெரிக்காவில் கடன் பெறலாம் என ஷாப்பர் குழுவினர் பேசினர். மார்க்ஸ் இதை ஏற்கவில்லை. 1852ல் கம்யூனிஸ்ட்லீக் கலைந்தது. ஆனால் அதன் சார்பில் மார்க்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை இன்றும் விவாதிக்கப்படும் வழிகாட்டிடும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. சார்ட்டிஸ்ட் இயக்கம் பாக்டரி சட்டம், சுரங்க சட்டம், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு சட்டம், 1847ல் 10 மணி வேலை சட்டம், கோதுமை இறக்குமதி பிரச்சனை (Anti Corn Laws)  ஆகியவற்றிற்கான தீவிரத்தை காட்டியது. உழைப்பாளர் பிரச்சனையை இனி சமுகம் ஒதுக்கமுடியாது என்கிற கட்டத்திற்கு அது நகர்த்தியது எனலாம்.     II பிரிட்டன் தொழில்களின் உலகப் பட்டறையாக இருந்தது.  சுதந்திர வர்த்தகம் பேச்சானது. போட்டி மூலம் வளர்ச்சி என்றனர். தனிநபர் லிபர்ட்டி என்கிற பேச்சு பெருகியது. பிரிட்டனின் தாராளவாதம் உலகை கவ்விப்பிடித்தது. தொழிற்சங்கவாதம், லிபரல் கட்சியின் ஜூனியராக தொழிற்சங்கங்கள் செயல்படுவது என்பன நடந்தேறின. அதேனேரத்தில் இப்போக்குகளால் வேலை நிறுத்தங்கள் நடைபெறாமல் தடுக்க முடியவில்லை . சுதந்திர  வர்த்தகம் , போட்டி சூழல் என்பது வெளிரத் துவங்கியது, மீண்டும் நிலசீர்திருத்தம், சோசலிசம் என்கிற முழக்கங்கள் பெருகலாயின. சோசியல் டெமாக்ரடி ஃபெடெரேஷன் உருவானது. உருவாக்கிய ஹைண்ட்மேன்(H M Hyndman) மார்க்சிய கொள்கைகளை , வர்க்கப்போராட்டத்தை பேசினார். சிட்னிவெப் போன்றோர் முன்நின்று பாபியன் சோசலிஸம் உருவாக்கினர் லிபரல் லேபரிசம் என்பதை  வலியுறுத்தி கிளாட்ஸ்டோன்(Gladstone) போன்றவர்கள் அமைச்சரவை நோக்கி உழைப்பாளர் (Labour to Cabinet) முழக்கம் வைத்தனர். தொழிலாளர் தலைவர்கள், சோசலிஸ்ட்கள் அமைச்சர்களாகட்டும் என்றனர். 1886  ஹென்றி பிராட்ஹர்ஸ்ட்(Henry Broadhurst) என்பவர் கிளாட்ஸ்டோனின் வலக்கரம் என அறியப்பட்டவர் அரசாங்கத்தின் உதவி செயலர்(Under Secretary) , 1892ல் தாம்ஸ் பர்ட் நாடாளுமன்ற செயலர், 1906ல் ஜான் பர்ன்ஸ் அமைச்சரவைக்குள்ளும்  முன்னேறி சென்றனர்.   மார்க்ஸ் லண்டன் வந்தவுடனேயே அவர் குடும்பம் துயர்களை அனுபவித்தது. குழந்தைகள் மாண்டனர். வறுமை வாட்டியது. எங்கெல்ஸ் தந்தையுடன் கொண்ட கருத்து வேறுபாட்டில் தொழிலை நாய் வேலை என விமர்சித்து வெறுப்புடன் பேசி வந்தார். ஆனால் சூழல் அவரை மான்செஸ்டர் வேலைக்கு அனுப்பியது. மார்க்ஸை அறிந்திருந்த நியுயார்க் டிரிப்யூன் ஆசிரியர் அவரை தொடர்ந்து எழுதுமாறு பணித்தார், ஆரம்பத்தில் எங்கெல்ஸ் உதவியுடன் ஆங்கில போதாமை உணர்ந்து கட்டுரைகள் அனுப்பிய மார்க்ஸ் ஓராண்டிலேயே தானே எழுதி அனுப்பலானார். கட்டுரை ஒன்றிற்கு 10 டாலர் பெற முடிந்து குடும்பத்தை ஒட்ட வேண்டியிருந்தது. ஆனால் 1857 நெருக்கடியால் பாதிக்கப்பட்ட டிரிப்யூன் வெளிநாட்டு நிருபர்களை எழுத்தாளர்களை நிறுத்தியது. பிற நாட்டு எழுச்சிகளுக்கு தங்கள் பரிவும் ஆதரவும் உண்டு என்ற அளவில் லண்டன் தொழிலாளர்கள் நின்றனர். இத்தாலியின் கரிபால்டி லண்டன் வந்தபோது அவர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர்.. பிரஞ்சு தொழிலாளர் இயக்கம் தனது சர்வதேசத்தன்மையில் சற்று தீவிரமாக இருந்தது.  ஆஸ்திரியாவிலிருந்து இத்தாலியை விடுவிக்கும் பிரச்சனையில், ஆரம்பத்தில் மார்க்சின் சீடராக இருந்த  லஸ்ஸேல் மார்க்ஸ்- எங்கெல்ஸ் உடன் 1859ல் முரண்பட்டார். லஸ்ஸேல் பிரஷ்யாவிலிருந்து இயங்கி வந்தார், ஜெர்மன் தொழிலாளி வர்க்கத்தை கட்டிய பெருமித உணர்வுபட்டவராக அவர் இருந்தார். தான் நடைமுறை அரசியல்வாதி என்றும் மார்க்ஸ்போல் கோட்பாட்டாளன் (doctrinaire) இல்லை எனவும் பேசினார். மார்க்சின் பல்வேறு கருத்துக்களை அவர் தொழிலாளர் கூட்டங்களில் அறிமுகப்படுத்தும்போது பொருளாதார அறிஞர் என மார்க்சை குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டார். புரட்சிகரவாதி, கம்யூனிஸ்ட் என்றெல்லாம் சொல்லி தொழிலாளர்களை பயமுறுத்த முடியாது என்றார் லஸ்ஸேல். உற்பத்தியாளர் கூட்டுறவுமுறை என்பதற்கு லஸ்ஸேல் அழுத்தம் கொடுத்தார். அனைவருக்கும் வாக்குரிமை என பெற்றுவிட்டால் 90 சத நாடாளுமன்ற இடங்களுக்கு தொழிலாளர் பிரதிநிதிகள் போகமுடியும் என்கிற பிரமையை பரப்பினார். இக்கருத்துக்களில் கண்டிப்பாக மார்க்சிற்கு வேறுபாடுகள் வராமல் இருக்க முடியாது. லஸ்ஸேலை ஏமாற்று என மார்க்ஸ் விமர்சித்தார். லஸ்ஸேல் பிஸ்மார்க்குடன் உறவு கொண்டுள்ளார் என்கிற செய்தி பரவி அவரின் செல்வாக்கு வீழத்துவங்கியது. 1860களில் லண்டன் டிரேட்ஸ் கவுன்சில் தொழிலாளர்களின் செல்வாக்கை பெற்ற அமைப்பாக இருந்தது. ஓட்ஜர், கீரீமர், ஹோவெல் (Odger, Creamer, Howel)l போன்றவர்கள் முக்கியமானவர்களாக செயல்பட்டனர். சர்வதேச உறவுகளை வளர்த்துக்கொள்தல் என்பதை லண்டன் பிரஞ்சு தொழிலாளர் உணர்ந்தனர். போலந்தின் விடுதலை என்கிற பிரச்சனை தோற்றுப்போனாலும் அதற்கான இயக்கங்களை இத்தலைவர்கள் பேராசிரியர் பீஸ்லியுடன் எடுத்தனர். பாரிசில் புருதான் செல்வாக்கில் தொழிலாளர் இயக்கங்கள் இருந்தன. அவர் தொழிலாளிவர்க்கத்தின் அரசியல் திறன் (political capacity of working class)  என்ற நூலை எழுதியதாகவும் ஆனால் அது வெளியாவதற்கு முன்னர் புருதான் மறைந்துவிட்டார் என்கிற செய்தியை டேவிட் ரியாஸ்னாவ் தருகிறார். 1861 செப்டம்பரில் இருநாட்டு தொழிலாளர் பிரதிநிதிகள் சந்திப்பும் அதில் மூலதன சுரண்டல் பிரச்சனை, உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்  முழக்கமும் எதொரொலித்ததாக டேவிட் பதிவு செய்கிறார். 1862ல் பாரிஸ் தொழிலாளர்கள் சர்வதேச கண்காட்சி ஒன்றிற்கு வரும்போது இங்கிலாந்தில் தொழிலாளர் இயக்கம் பற்றி நேரடி அனுபவங்களை  பெற விரும்பினர்.. மாநாடு ஒன்றின்மூலம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒன்றை நிறுவுகின்ற முடிவும் வந்தது.  இதற்கான மாநாடு 1864 செப்டம்பர் 28ல் நடந்தது. ஜார்ஜ் ஓட்ஜர் செப்28 1864 கூட்டத்தை கூட்டியிருந்தார். பொதுக்கூட்டம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு லண்டன்வாழ்  தலைவர்கள் பேசவும் அழைக்கப்பட்டனர்.  இதற்கான அழைப்பை கிரீமர் என்பார் கார்ல் மார்க்ஸ்க்கு அனுப்புகிறார். மார்க்ஸ் அவர்களும் அழைப்பை ஏற்று வருகிறார்..  பேராசிரியர் எட்வர்ட் ஸ்பென்சர் பீஸ்லி தலைமை ஏற்றார். அமைப்பிற்கு ஓட்ஜெர் தலைவர், கிரீமர் பொது செயலர் என தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதலில் மாஜினி ஆதரவாளர்களாலும், ஓவனின் ஆதரவாளர்களும் எழுதப்பட்ட அறிக்கைகள் ஏற்கப்படவில்லை.  மார்க்ஸ் எழுதிய தொழிலாளிவர்க்கத்திற்கு என்கிற அறிக்கை (Address to the working classes) ஒருமனதாக ஏற்கப்பட்டது. ஏறத்தாழ சர்வதேச தொழிலாளர் அமைப்பிற்கு அவ்வறிக்கையை (IWMA) சார்டிஸ்ட்கள் பாணியில்தான் மார்க்ஸ் எழுதியிருந்ததாக பீர் குறிப்பிடுகிறார். அவரின் தீர்க்கமான தொழிலாளர் வர்க்க பொருளாதார அறிவின் மூலம் தலைமை பாத்திரம் எடுக்க அவரால் முடிந்தது. நவம்பர் 1, 1864ல் மார்க்ஸ் எழுதிய அறிக்கை சில திருத்தங்களுடன் இவ்வமைப்பினரால் ஏற்கப்பட்டது. முதலில் பெயர் கூட இல்லாமலிருந்த அமைப்பிற்கு  தொழிலாளர்கள் எக்காரியஸ், விட்லாக் (Eccarius, Whitlock) வற்புறுத்தலால்  அய் டபிள்யூ எம் ஏ (International working Men Association) என்கிற சர்வதேசதொழிலாளர் சங்கம், அகிலம் என்கிற பெயரிடப்பட்டதாக அதன் மினிட்ஸ்களை ஆய்ந்த டேவிட் ரியாஸ்னாவ் குறிப்பிடுகிறார். பிரிட்டிஷ் மக்கள்பாற் உள்ள வறுமை, அதை ஒழிப்பதாக பேசிய நாடாளுமன்ற பேச்சுகள், பெருகிய அரசு கஜானா, அதிகரித்துவரும் சுரண்டல், நிலமும் மூலதனமும் சிலர் கையில் எப்படி குவிந்து வருகிறது போன்ற பல அம்சங்களை மார்க்ஸ் தன் உரையில் கொண்டுவருகிறார். பட்டினி சாவு நேர்ந்ததை குறிப்பிடுகிறார். சார்ட்டிஸ்ட்கள் இயக்கம் பெற்ற வெற்றிகளையும் தாண்டி முன்னேறவேண்டும் என்கிற அறைகூவலைக் கொடுக்கிறார். 10 மணிவேலை சட்டம் கைகூடியதை வரவேற்றார். அனைத்தையும் விஞ்சி தொழிலாளர் வர்க்கம் தனக்கான அரசியல் அதிகாரத்தை பெற்றாக வேண்டும் . அரசு எந்திரத்தை தங்கள் நலனுக்கான கருவியாக்கிடவேண்டும் என்ற இலக்கை முன்வைத்தார். உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என முழங்கினார் மார்க்ஸ். வர்க்க ஆட்சிமுறையை ஒழித்துக்கட்டுவதன் மூலம் தங்களது விடுதலையை தாங்களே பெற வேண்டும்(The Emancipation of the working class must be achieved by the working class themselves.. for the abolition of class rule) என்று மார்க்ஸ் அவ்வுரையில் எழுதியிருந்தார்.  மார்க்ஸ் லண்டனில் வாழ்ந்த கடைசி 15 ஆண்டுகளில் அவரது ஆங்கிலம் அற்புதமாக மாறியது என்கிறார் ஆய்வாளர் பீர். சில நேரங்களில் தாய்மொழி ஜெர்மனைவிட அவரது ஆங்கிலம் மேம்பட்டு இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். தொழிலாளர் ஏதும்  செய்ய இயலாத வகையற்ற வெறும் கூட்டமல்ல. அவர்கள் வருங்கால சுரண்டலற்ற சமுகத்தின் கட்டுமான மாஸ்டர்கள் என மார்க்ஸ் எழுதிவந்ததை பீர் குறிப்பிடுகிறார்.    மூலதனம் என்பது சமுக சக்திகளின் சேகரம்  திரட்சி கொண்ட சக்தியுடையது. ஆனால் தொழிலாளர் தங்களின் தனிமனித சக்தியை மட்டுமே கொண்டுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை மட்டுமே அவர்களின் சமூக சக்தி. வேற்றுமைகளால் அதையும் அவர்கள் பலவீனமாக வைத்துக்கொண்டுள்ளனர் என்றார் மார்க்ஸ். உடனடி பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் அவர்கள் அடிப்படையான உற்பத்திமுறை குறித்த கவனம் செலுத்தவில்லை. இதனால் பொதுவான சமூக அரசியல் போராட்டங்களிலிருந்து அவர்கள் விலகி நிற்கிறார்கள் என பிரிட்டிஷ் தொழிற்சங்கங்களின் செயல்பாட்டை கண்ணுற்ற அனுபவத்திலிருந்து பொதுமைப்படுத்தி விளக்கினார்.தொழிற்சங்கங்கள் தொழிலாளிவர்க்கத்தின் குவிமையமாக செயல்பட கற்கவேண்டும்  என்றார் மார்க்ஸ்.  தொழிலாளர் வர்க்கம் தங்களுக்கு என தனித்த கட்சியை துவக்குவதும் உற்பத்தியை தேசிமயமாக்குவதும் அரசியல் அதிகாரம் பெறும்வரை வர்க்கப்போரை நீடித்து நடத்துவதும் அவசியம் என்கிற அறிவுரையை சர்வதேச தொழிலாளர் சங்கத்திற்கு மார்க்ஸ் தந்தார்.  அகிலம் எனப்படும் சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் மாநாடுகள் 1865 லண்டன், 1866 ஜெனிவா, 1867 லசான்னே, 1868 பிரஸ்ஸல்ஸ், 1869 பாஸல், 1872 ஹேக் பகுதிகளில் நடந்தது. ஆரம்பத்தில் பிரிட்டிஷ் தொழிற்சங்கத்தலைவர்கள் பலர் பங்கேற்றாலும் பின்னர் அவர்கள் விலகிக்கொள்ளத் துவங்கினர். பொதுக்குழு உறுப்பினர்களாக பிரிட்டிஷ் தோழர்கள் பலர் இருந்தனர். அங்கு பிரஞ்சு, ஸ்விஸ், ஜெர்மன், பெல்ஜியம், ருஷ்யா என பல நாட்டுப் பிரதிநிதிகள் விவாதம் கருத்து மோதல்கள் அதிகமாயின. மூலதனம் புத்தகத்தை முடிக்கும் வேலையில் தீவிரமாக இருந்ததால் மார்க்ஸ் 1866ல் ஜெனிவாவிற்கு போகவில்லை என ரியாஸ்னாவ் தெரிவிக்கிறார். இங்கிலீஷ் பிரதிநிதிகள் மார்க்சின் நிலைப்பாட்டை உயர்த்திப் பிடித்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். 1868 பிரஸ்சல்ஸ் அமர்வில் மூலதனம் நூல் மிகுந்த பாராட்டை பெற்றது . அனைத்து நாட்டு தொழிலாளி வர்க்கமும் அதை படித்து அறியவேண்டும் என தீர்மானமும் நிறைவேறியது. 1869 பாசில்(Basle) காங்கிரசில் பகுனின் பங்கேற்றார். தொழிலாளி வர்க்கம் என்பதற்கு அதீத முக்கியத்துவம் மார்க்ஸ் தருகிறார். மாணவர், அறிவுஜீவிகள், மத்தியதர வர்க்க ஜனநாயகவாதிகள் புரட்சிகர சக்திகள் என்றார் பகுனின்.  சமூக கூட்டிணைவு (Social alliance) என்கிற தங்களின் தனி சர்வதேச அமைப்பையும் கடவுள் மற்றும் அரசுக்கு எதிராக யுத்தம்(War against God and State) முழக்கத்தையும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர். பகுனின் மார்க்ஸிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் தான் அவரின் சீடன் என்பதில் பெருமை கொள்வதாக எழுதினாலும் அவர் குறித்த விமர்சனங்களை சுற்றறிக்கையாக விநியோகித்தார்.  பாரிஸ் கம்யூனின் மார்ச் 18-மே 29, 1871 எழுச்சியின் தோல்வி அனுபங்களை பெற உதவியது . பகுனின் கம்யூன்களை உருவாக்குவோம் என முழங்கினார். பாசில் காங்கிரஸ்  கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து லண்டனில் 1871ல் அகிலம் கூடியது. பகுனிஸ்ட்கள் முறியடிக்கப்பட்டனர். 1872 ஹேக் மாநாட்டில் மார்க்ஸ் பங்கேற்றார். பகுனின் வரவில்லை. அவரை வெளியேற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எங்கெல்ஸ் அகிலத்தின் ஜெனரல் கவுன்சில் நியூயார்க்கிலிருந்து செயல்படும் என்கிற தீர்மானத்தை முன்மொழிந்தார். 1876ல் நியூயார்க்கில் அகிலம் கலைக்கப்பட்ட அறிவிப்பு வெளியானது. அகிலத்தில் 300 உறுப்பினர்கள் இருந்தனர். ஓவன் ஆதரவாளர்கள், புருதான் ஆதரவாளர்கள் மற்றும் சில அனார்க்கிஸ்ட்கள் ஆகியவர்களுடன் மார்க்ஸ்க்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சர்வதேச அமைப்பு பலவீனமாக துவங்கியது. 1872ல் பிரிட்டிஷ் தொழிற்சங்க தலைவர்கள் 1864 மார்க்ஸ் உரையுடன் சில கருத்துக்களையும் இணைத்தனர். வயது வந்தோர் வாக்குரிமை, விகிதாச்சார பிரதிநிதித்துவம், மதசார்பற்ற இலவச கல்வி, அரசாங்க சர்ச்சுகள் என்கிற முறை கூடாது. பட்டங்களும் சலுகைகளும் உள்ள முறை ஒழிப்பு, அயர்லாந்த்தில் சுய ஆட்சி, நிலம், சுரங்கம் மர்றும் உற்பத்திமுறைகளை தேசஉடைமை ஆக்குதல், நாணய பரிவர்த்தனைக்கு ஸ்டேட்பாங்க் முறை என பல்வேறு கோரிக்கைகளை பிரிட்டிஷ் அமைப்புகள் வைத்தன. அனுபவங்கள் தலைவர்களுக்கு சோர்வை தந்தன. தொழிலாளர்கள் சிந்திக்க மறுக்கின்றனர்  என 1850களில் அவர்கள் முன்னேற்றத்திற்காக போராடிய மூத்த தலைவர்கள் 1860 இறுதிகளில் வருத்தமுற துவங்கினர். தொழிலாளர்களின் பொருளாதார வாழ்க்கை சற்று மேம்பட்டுள்ளதாக தலைவர்கள் கருத்து தெரிவிக்க துவங்கினர்.  தொழிலாளர் கூட்டு அமைப்புகள் சில(London working Men Union ,  Labour Electoral Association, Labour Representation League) செல்வாக்கு நிறைந்த அமைப்புகளாக மாறின. நாடாளுமன்றத்தில் தொழிலாளர் பிரச்சனைகளை கொண்டுபோய் தீர்க்க முடியும் என அவ்வமைப்புகள் சொல்லத்துவங்கின. எல் ஆர் எல் என்கிர லீக் அகிலத்தை (IWMA)  ஏற்காமல் விமர்சித்தது. அதற்கு புகழ்வாய்ந்த ஜே எஸ் மில் போன்றவர்களின் ஆதரவும் கிட்டியது. மார்க்ஸ் நோய்வாய்ப்பட்டு வெளிஉலக நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத 1882-83 களில்  சோசியல் டெமாக்ரடிக் ஃபெடெரேஷன், பாபியன்கள், சோசலிஸ்ட் லீக் போன்றவர்கள் இணைந்து சோசலிச கொள்கைகள் என போராடிவந்தனர். எங்கெல்ஸ் தனது பாக்டரி தொடர்புகளை விடுவித்துக்கொண்டு 1870 செப்டம்பரில் லண்டன் வந்து சேருகிறார். அமைப்பு வேலைகளில் மார்க்சின் பளுவை குறைக்கிறார். அப்போது ஜெர்மனியில் பேராசிரியர் டூரிங் சிந்தனைகள் செல்வாக்கு பெற்று வந்தன. கண்பார்வை இல்லாததையும் கடந்து பல ஊர்களில் அரசியல் பொருளாதாரம், தத்துவம் குறித்து அவர் உரை நிகழ்த்தினார். அவருக்கு மறுப்பு எழுதவேண்டிய கடமை எங்கெல்ஸ்க்கு வந்தது. எங்கெல்ஸ் ஆரம்பத்தில் தயங்கினாலும் மார்க்சின் துணையுடன் வோர்வார்ட்ஸ் ஜெர்மன் பத்ரிக்கையில் 1877ல்  தொடர்களாக எழுதி பின்னர் 1878ல் டூரிங்குக்கு மறுப்பு வெளியானது.   பெர்ன்ஸ்டைன் உள்ளிட்டவர் எங்கெல்ஸை விமர்சித்தனர் . மார்க்சியத்திற்கும் கேபிடலுக்கும் மிக சிறந்த அறிமுகம் அப்புத்தகம் என ரியாஸ்னாவ் குறிப்பிடுகிறார்.   III சமுக தத்துவ ஆய்வுகளிலிருந்து மார்க்ஸ் பொருளாதார ஆய்வுகள் நோக்கி தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். கடுமையாக 15 ஆண்டுகள் சொல்லணாத் துயர் சூழ 1867ல் காபிடல் முதல் வால்யூம் வெளியிடப்பட்டது. மற்ற இரு வால்யூம்களும் சரிபார்க்கப்பட்டு நேர் செய்யப்பட்டால் வெளியிட முடியும் என்ற நிலை இருந்தது. அவர் மறைவிற்கு பின்னர் எங்கெல்ஸ் அப்பணியை செய்கிறார்.  முதலாளித்துவத்திலிருந்து சோசலிசம் நோக்கி மாறும் கட்டத்திற்கு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எனும் அரசியல் கருவியின் அவசியம்  குறித்து மார்க்ஸ் பரிந்துரைத்தார். அன்று நிலவிய முக்கிய குறை மார்க்சின் எழுத்துக்களை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் ஆங்கிலேயர்களுக்கு ஜெர்மன் பிரஞ்சு தெரிய வேண்டியிருந்தது. அவ்வாறு அறிந்தவர்கள் மிக குறைவாக இருந்தனர். பெல்போர்ட் பாக்ஸ், ஹைண்ட்மேன் (Belfort Bax, Hyndman )போன்ற சிலர்தான் மார்க்ஸ் இருக்கும்போதே ஆங்கில இதழ்களில் அவரது கருத்துப்பற்றி கட்டுரைகள் எழுதினர்.  நவீன சிந்தனையின் தலைவர்கள் என்ற ஆக்கத்தில் பெல்பார்ட் பாக்ஸ் டிசம்பர் 1881 கார்ல் மார்க்ஸ் குறித்தும் அவரது காபிடலை அறிமுகப்படுத்தியும் எழுதினார். இந்த நூற்றாண்டின் மிக முக்கிய படைப்பு மூலதன புத்தகம். இங்கிலாந்தின் தொழிலகம் அதன் விவரங்களைப் பேசும் அப்புத்தகம் ஆங்கிலத்தில் இதுவரை இல்லாதது ஆச்சர்யத்தை எனக்குத் தருகிறது. மார்க்சின் நடையை ஒரே ஒருவருடன் தான் ஒப்பிடமுடியும். ஷோபன்ஹாருடந்தான் ஒப்பிடமுடியும். ஆங்கிலேயருக்கு பிரஞ்சு ஜெர்மன் தெரியாததால் இப்புத்தகம் அப்படியே கிடக்கிறது. மிகமிக சிக்கலான அரூப பிரச்ச்னைகளை மிகுந்த நகைச்சுவை ததும்ப மார்க்ஸ் வெளிக்கொணர்துள்ளார் இப்படிப்பட்ட அருமையான மிக முக்கிய புத்தகம் இங்கிலாந்தின் தொழிலை பேசக்கூடிய புத்தகம் ஆங்கிலத்தில் வராமல் இருக்கிறதே என்கிற கவலையை அவர் தெரிவித்திருந்தார். பின்னால் ’காபிடல்’ ஆங்கிலத்தில் வந்துவிட்டது. ஹைண்ட்மேனுக்கு கன்சர்வேடிவ் கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம்தான் மார்க்ஸ் குறித்த  அறிமுகம் கிடைத்தது. அவர் மார்க்சை சந்தித்து உரையாடி வந்தார். அவரின் மேதாவிலாசத்தால் கவரப்பட்டார். பீஸ்லி (IWMA அமர்விற்கு தலைமையேற்றவர்) மார்க்ஸ் குறித்து பெருமிதம் கொண்டவராக இருந்தார். மார்க்சை நடமாடும் என்சைக்ளோபீடியா- அரசியல், தத்துவம் வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் நிகரவற்ற அறிவுக்கூர்மை பெற்றவர்  என பேராசிரியர் எட்வர்ட் பீஸ்லி மார்க்சைப்பற்றி  மதிப்பிடு செய்தார்.  சாகச வாழ்வின் பதிவுகள் (Record of an Adventurous Life) என்பதில்  ஹைண்ட்மேன் மார்க்ச்- எங்கெல்ஸ் நட்பு, வேறுபாடுகள் குறித்து எழுதியுள்ளார். மார்க்ஸ்- எங்கெல்ஸ் இருவரும் 1881களில் அவரை நம்ப மறுக்கும் சூழல் ஏற்பட்டது. தன்னிடம் வந்து செய்தி வாங்கிக்கொண்டு அதை தவறாக பயன்படுத்திக்கொள்ளும் மனிதன் என்கிற கருத்து உருவானது. The Historical Basis of Socialism என்கிற புத்தகத்தை மார்க்ஸ் மறைந்த ஆண்டான 1883ல் ஹைண்ட்மேன் எழுதினார். இங்கிலாந்த் ஃபார் ஆல் என்பது முன்னர் எழுதப்பட்டு அது மார்க்சுடன் கருத்து வேறுபாட்டிற்கு காரணாமாயிற்று.  மார்க்சின் மூன்றாவது மகள் எலியனார் சில ஆண்டுகள் ஹைண்ட்மேன் கட்சியில் இணைந்து பணியாற்றினார். எங்கெல்ஸ்க்கு எப்போதும் ஹைண்ட்மேன் குறித்து நல்ல அபிப்ராயம் இல்லாமல் இருந்தது. சார்டிஸ்ட் வகைப்பட்ட இயக்கத்தை புதுப்பித்து டெமாக்ரடிக் ஃபெடெரேஷன் என ஹையிண்ட்மேன் துவக்கினார். மார்க்சிடம் இது குறித்து அவர் விவாதித்ததாகவும் அதன் வெற்றி சந்தேகமே என மார்க்ஸ் கருதியதாகவும் பீர் தெரிவிக்கிறார்.   பொருளாதார அறிஞர் மில் ஆங்கிலேயர்களுக்கு காம்டேவை அறிமுகப்படுத்தினார். மார்க்ஸ் மறைந்த 6 ஆண்டுகளில்  சிட்னிவெப் எழுதிய இங்கிலாந்தில் சோசலிசம் வெளியாகிறது. அரசியல் பொருளாதார வகைப்பட்டு சோசலிச சிந்தனைகள் எவ்வாறு வளர்ந்தன என்பது குறித்து அவர் அதில் எழுதுகிறார். மில்லின் 1848 அரசியல் பொருளாதாரம் பற்றி வெப் குறிப்பிடுகிறார். இங்கிலாந்தின் சோசலிஸ்ட்கள்  பொருளாதார வரலாற்றில் மார்க்சின் முக்கிய பங்களிப்பை பாராட்டினாலும் கண்மூடித்தனமாக மார்க்சிடம் போகவில்லை என்கிற பதிவை வெப் தருகிறார். மார்க்சின் மூலதன ஆங்கில பதிப்பு வெளிவந்தவுடன் விற்று தீர்ந்தது . மார்க்ஸ் மறைந்த சில மாதங்களில் ஜனவரி 1884ல் பாபியன் சொசைட்டி நிறுவப்படுகிறது. பாபியஸ் என்கிற ரோமன் ஜெனரலின் புகழ்வாய்ந்த அறிவுரையில் வசப்பட்டு   (For the Right Moment you must wait ) பாபியன் என்கிற பெயரை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். பெர்னார்ட் ஷா, சிட்னி வெப், அன்னிபெசண்ட் போன்றவர் இதில் பணியாற்றினர். சோசலிசம் ஜனநாயகத்தை தழுவவேண்டும் (Socialism had to be adapted to democracy) என்பது மார்க்சியத்திலிருந்து பாபியனிச மாற்றம் என்றனர்.   Socialism Critical and Constructive  என்கிற புத்தகம்   ராம்சேமாக்டானல்ட்(Ramsay Macdonald ) எழுதி 1921ல் வெளியானது.  சமூகத்தில் எந்த பிரிவும் வேலியிட்டுக்கொண்டு நிற்கமுடியாது என்பதையே ஓவன் அனுபவங்கள் நம்க்கு உணர்த்துகின்றன. மார்க்ஸ்தான் கம்யுனிஸ்ட் அறிக்கை மூலம், காபிடல் மூலம் தனது பிர எழுத்துக்கள் மூலம் சோசலிசத்திற்கு  கோட்பாட்டு வடிவம் தந்தார். அதற்காக தன் வாழ்நாளை செலவு செய்தார்- அவை போராட்டங்களாகவும் முரண்பாடுகளையும் சேர்த்தன என மார்க்ஸ் குறித்து மாக்டானல்ட் எழுதினார். மார்க்ஸ் இன்று கிறிஸ்து முகமது மாதிரி ஆக்கப்பட்டுள்ளார். அவரது பொருளாதார கொள்கைகள் குறித்த சந்தேகங்கள் இருக்கின்றன. அவரது வரலாற்று தத்துவமும் அப்படித்தான். ஆனால் அவர் இன்று  மத தலைவர்கள் போல் வந்தடைந்துள்ள நிலைக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை என்றார் ராம்சே.  இக்கொள்கைகளை பின்பற்றினால் தொழிலாளிவர்க்கம் அரசியல் அதிகாரம் பெறமுடியும் என்கிற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்தியவர் மார்க்ஸ்தான். வர்க்கஎதிரிகள்  என சரியாக தொழிலாளர் மனதில் படியவைத்து ஆளும்வர்க்கம் எதிர்த்த உறுதியான போராட்டம் என்பதில் மனம் ஒன்ற செய்தவர் மார்க்ஸ் என அற்புத சித்திரம் ஒன்றை ராம்சே மாக்டானல்ட் வழங்கியிருந்தார் மார்க்சின் உபரிமதிப்பு கோட்பாட்டை சந்தேகத்திற்குரிய பொருளாதார பார்முலா என்றார் ராம்சே. பொருளாதார விமர்சன பிரதிகள் என்பதை போராடும் வாழும் இயக்கமாக மாற்றினார் மார்க்ஸ். தொழிலாளிவர்க்கத்தினருக்கான முழு உருவம் மார்க்ஸ்- சோசலிசத்திற்கான உறுதியான போராளி என ராம்சே மார்க்ஸ்க்கான மரியாதையும் தந்தார். மார்க்சிசம் வாழ்கிறதா எனக்கேட்டால் மார்க்சிசத்தைவிட மார்க்சே வாழ்கிறார் என்கிற நூதனமான  கருத்தை ராம்சே மக்டானல்ட் 95 ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்ஸ் மறைந்து 28 ஆண்டுகளில், சோவியத் புரட்சியின் 5 ஆண்டுகளில் வெளிப்படுத்தினார். ராம்சே மக்டானல்ட் பிரிட்டிஷ் லேபர் கட்சியின் முதல் பிரதமராக 1924ல் வந்தவர்.  லேபர் கட்சியின் முக்கிய கொள்கையாளராக இருந்தவர்.  சோவியத் புரட்சி நடந்த காலத்தில் கில்ட் சோசலிசம் என்பது இங்கிலாந்தில் வளரத்துவங்கியது, அதன் கொள்கைகள் குறித்து ஜி டி எச் கோல் எழுதிய சுய அரசாங்கமும் தொழிலகமும் (self Govt and Industry )என்பதில் நாம் அறியமுடியும்.  ஆளும் வர்க்கத்தின் செயற்குழு அரசு (State as the Executive of Ruling class )மார்க்சிய பார்வையிலிருந்து மாறுபட்டு  குடிமக்கள் மற்றும் நுகர்வோரின் அரசியல் அரசாங்க நிறுவனம் அரசு (State as the political and governmental institution of citizens and consumers) என  கில்ட் சோசலிஸ்ட்கள் பேசி வந்தனர். 1880 துவங்கி 30 ஆண்டுகள் பல்வேறு பெயர்களில் சோசலிசம் பேசினாலும் பிரிட்டிஷ் சோசலிஸ்ட்கள் நிலங்களை தேசியமயாமாக்கல் என்பதை வலியுறுத்தினர்.  பேராசியர் ரிசர்ட் ஏலி (prof Richard T Ely)  1883ல்நவீன காலத்தில் பிரஞ்சு ஜெர்மன் சோசலிசம் ( French and German socialism in Modern Times) எழுதினார். இப்படைப்பு நியூயார்க்கில் வெளியானது. மார்க்ஸ் இறந்த ஆண்டில் வந்த புத்தகம்.. மார்க்ஸ் எழுதிய காபிடல் சோசியல் டெமாக்ரட்களுக்கு பைபிள் போல ஆகியுள்ளது என்கிறார் ரிச்சர்ட். அப்படி சொல்வதற்கு அது பொருத்தமான ஒன்றும்கூட என்றார். ரிகார்டோவிற்கு இணையான படைப்பது. அதன் ஆழம் காரணாமாக  படிப்பதற்கு சற்று கடுமையாக இருக்கிறது என்றார் சாதாரண மக்களையும் அறிஞர்களையும் ஒருசேர கவ்விப்பிடித்து ஈர்த்த அரசியல் பொருளாதார புத்தகம் காபிடல் போல் வேறு ஏதுமில்லை என்று அவர் தனது புத்தகத்தில்  135 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டுள்ளார். மார்க்ஸ் மறைந்தபோது அமெரிக்காவில் நடந்த இரங்கல் கூட்டங்களை குறிப்பாக கூப்பர் சார்பில் நடத்தப்பட்ட பெரும் நினைவாஞ்சலியை அவர் குறிப்பிடுகிறார். மார்க்சின் செல்வாக்கில் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பு முடிந்துவிட்டதாக நினைக்க முடியாது என்றும் அய்ரோப்பா அரசாங்கங்களில் அவ்வமைப்பு செலுத்திய செல்வாக்கை குறைத்து மதிப்பிட முடியாது என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.  மார்க்சின் துணவியார் ஜென்னி மறைவு, அடுத்து மகள் மறைவு அவரை உலுக்கின. அவர் உடல்நலம் குன்றிப்போனார். எதையும் ஆழ்ந்து செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. மார்ச் 14 1883 மதியத்தில் தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியே மார்க்ஸ் மரணித்த செய்தியை எங்கெல்ஸ் அறிவித்தார். சோசலிச சிந்தனைகள் குறித்து பலர் பேசியிருந்தாலும் அதை புரட்சியின் மூலம் நடைமுறைப்படுத்துவதில் தொழிலாளி வர்க்கத்தின் பிரதான பாத்திரத்தை முதலில் அழுத்தமாக வெளிப்படுத்தியவர் மார்க்ஸ் என்ற புகழ் அவருக்கு கிட்டியது. ராம்சே மக்டானல்ட் சொல்வது போல் உலகம் மார்க்சியத்தை புரிந்து கொண்டதோ இல்லையோ மார்க்சை கொண்டாடுவதை அவரது 200வது பிறந்த நாளில் காணமுடிகிறது. காந்தியை கொண்டாடிவிட்டு காந்திய சாரங்களை கைவிட்டதுபோல் மார்க்சியம் ஆகிவிடக்கூடாது என்கிற கவலையை பலரும் வெளிப்படுத்தாமல் இல்லை. 2017ஆம் ஆண்டு சோவியத் போல்ஷ்விக் அனுபவத்தின் நூற்றாண்டு மட்டுமல்ல, காபிடல் வெளிவந்த 150 ஆண்டுகளும் ஆகும்.  அரசியல் பொருளாதாரம் குறித்த விரிவான கற்கைகளின் ஆண்டாகவும் இது அமைந்தால் அனுபவங்களும் அறிவும் செழுமையடையும். Ref: 1.  History of British Socialism- BEER 2. Life of Marx, Engels- David Riaznov 3. British Trade Unionism- Works of Sidney,  G D H Cole 4. Hyndman - Record of an Adventurous Life 5. Socialism Critical and Constructive- Ramsay Mcdonald 6. French and German socialism in Modern Times- prof Richard T Ely   மார்க்ஸ் மறைவின் போது…. (At The Time of Death of Karl Marx) மார்க்ஸ் - மார்க்சியம் குறித்து ஏராள புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் வந்து கொண்டேயிருக்கின்றன, மார்க்ஸ் என்ன சொன்னார் என்பதை குறித்தே ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்துவிட்டன. மார்க்சின் 200 ஆண்டுகள் என்பதால் மேலும் புதியவைகள் ஏராளம் வரலாம். மார்க்ஸ் மறைந்த மார்ச் 14 1883 நேரத்தில் அடுத்த சில நாட்களில்- மாதங்களில் நடந்தவை, வெளிவந்த பத்ரிக்கை செய்திகள், புறக்கணிப்புகள் பற்றியும் நிறைய தகவல்கள் கிடைக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். மார்க்சின் கடைசி 10 ஆண்டுகள், கடைசி ஆண்டு என்பதை பற்றி கட்டுரைகள், நூல் அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன.  அச்சூழலை தொகுத்து புத்தகங்கள் வந்துள்ளன. அவர் மறைந்த சூழல்- வெளிவந்த செய்திகள் இங்கு தரப்பட்டுள்ளன. மார்க்ஸ் மறைந்த இருவாரத்தில் தடையில் இருந்த ஜெர்மன் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் சோசியல் டெமாக்ரட் பத்ரிக்கை அவருக்கு செலுத்தப்பட்ட பல்வேறு இயக்கங்களின் நினைவு இரங்கல் செய்திகளை தொகுத்து சிறப்பு இதழ் ஒன்றை வெளியிடும் என்றது.  ஆனால் அப்படி ஏதும்  வரவில்லை. முதலாண்டு  நினைவான மார்ச் 14 1884ல் கூட எங்கெல்ஸ் நிகழ்த்திய உரையை மட்டும் சிலர் வெளியிட்டனர். 1933ல்  மார்க்சின் 50வது நினைவாண்டில் சோவியத்யூனியனின் மார்க்ஸ்- எங்கெல்ஸ்- லெனின் இன்ஸ்டிட்யூட் பல்வேறு மொழிகளில் எங்கெல்ஸ் நிகழ்த்திய மார்க்ஸ் நினைவாஞ்சலி உரையை சிறு பிரசுரமாக வெளியிட்டது.1968 ஜி டி ஆர் எனப்பட்ட ஜெர்மன் ஜனநாயக குடியரசில் சில இரங்கல் செய்திகள், பத்ரிக்கைகள் எழுதிய அஞ்சலி மற்றும் தலையங்கங்கள் வெளியிடப்பட்டன. மாஸ்கோ பதிப்பகம் மார்க்ஸ்- எங்கெல்ஸ்க்கு   நினைவு குறிப்பு புத்தகம் ஒன்றை தமிழ் உட்பட பலமொழிகளில் வெளியிட்டது. தற்போது மார்க்ஸ் பிறப்பின் 200 ஆண்டுகள் என்பதை கொண்டாடாத நாடுகளே இல்லை - அவரைப்பற்றி பாராட்டியோ தூற்றியோ பேசாத நாடுகளே இல்லை என சொல்லமுடியும். ஆனால் அவர் இறந்த மார்ச்14 1883 -அதை ஒட்டிய மாதங்களில் அவரது மறைவை பல்வேறு அமெரிக்க, அய்ரோப்பிய முக்கிய பத்ரிக்கைகள் செய்தியாகக்கூட தரவில்லை. தொடர்ந்து சோசலிசம் குறித்து கட்டுரைகளை வெளியிட்ட அட்லாண்டிக் மன்த்லி, நார்த் அமெரிக்கன் ரிவ்யூ, லண்டன் காண்டம்பரரி ரிவ்யூ  போன்றவை அக்க்கட்டுரைகளின் ஊடாக கூட மார்க்ஸ் மறைவை சொல்லவில்லை. லத்தீன் அமெரிக்காவில் புகழ்வாய்ந்த தாராளவாத சிந்தனை பத்ரிகைகளிலும் தொடர்ந்த நாட்களில் செய்தி இல்லை. புகழ்வாய்ந்த ஜோஸ் மார்ட்டியின் அனுதாப செய்தி அமெரிக்க கூப்பர் சங்க நினைவு கூட்டம் ஒன்றில் சொல்லப்பட்டது. வெளிவந்த சில செய்திகளிலும் வாழ்க்கை குறிப்புகள் தவறாக இருந்துள்ளன. பல செய்திகள் கார்ல்மார்க்ஸ் மறைவு என்கிற தலைப்பிலேயே இருந்தன. பல்வேறு இடங்களுக்கும் சென்று கிடைத்த அனைத்தயும் தொகுத்து தரக்கூடிய கடினமான வேலையை பேராசிரியர் பிலிப் ஃபோனர்  Philip S Foner செய்தார். அந்த தொகுப்பு மார்க்சின் 90ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் 1973ல் வந்தது. 1983ல் மார்க்சின் மறைவு நூற்றாண்டில் இந்தியாவில் இத்தொகுப்பு கல்கத்தாவில் வெளியிடப்பட்டது.  ஆக்ஸ்போர்டு வரலாற்றாசிரியர் அசா பிரிக்ஸ் அவர்களின் முயற்சியால் பி பி சி 1981ல் கார்ல் மார்க்ஸ் தொடர் ஒன்றை ஒளி பரப்பியது. அசா பிரிக்ஸ் புத்தகம் ’லண்டனில் கார்ல்மார்க்ஸ்’  என வெளிவந்தது. பிலிப் ஃபோனர் பென்சில்வேனியா லிங்கன் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியராக இருந்தவர். மார்க்ஸ் மறைந்த நேரத்தின் சில நிமிடங்களில் எங்கெல்ஸ் துரிதமாக செயல்பட்டார். கேபிள் மூலம் மார்ச் 14 1883ல்  ப்ரடெரிக் அடால்ப் சோர்கே அவர்களுக்கு, நியுஜெர்சிக்கு செய்தியை எங்கெல்ஸ் அனுப்புகிறார். அதில் மார்க்ஸ் இன்று மறைந்தார் என்பது  தந்தி  வாசகம். லீப்னெக்ட்டுக்கு(Liebknecht) அன்றே எங்கெல்ஸ் கடிதம் எழுதுகிறார். என்னிடம் இருந்த ஒரே முகவரிக்கு அனுப்பிய டெலிகிராம் மூலம் மார்க்ஸ் மறைவை அறிந்திருப்பீர்கள். மார்க்ஸ் உணவு எடுத்துக்கொண்டால் தேறி வந்துவிடலாம் என கடந்த வாரம் லண்டனில் உள்ள புகழ் வாய்ந்த டாக்டர் தெரிவித்திருந்தார். பசித்து சாப்பிட துவங்கியிருந்தார் மார்க்ஸ். ஆனால் இன்று மதியம் வீடு கண்ணீரால் சூழ்ந்தது. அவர் பலவீனமாக இருக்கிறார் என சொல்லி மாடிக்கு அழைத்தனர். டெமூத் இரு நிமிடம் மட்டுமே அங்கு இல்லை. மார்க்ஸ் அரைதூக்கத்தில் இருப்பது போல இருந்தது. மாடிக்கு சென்று பார்த்தேன். அது நிரந்தர உறக்கம் என தெரிந்தது. நமது நூற்றாண்டின் பிற்பகுதிக்குரிய பெரும் மூளை சிந்திப்பதை நிறுத்திக் கொண்டுள்ளது (The greatest mind of the second half of our century had ceased to think). மருத்துவர்கள் கருத்தைப் பெறாமல் ஏன் இப்படி திடிரென முடிவுவந்தது என்பதை சொல்லமுடியாது. கடந்த 6 வாரத்தில் நான் போதுமான அளவு பார்த்துவிட்டேன். ஜென்னியின் இறப்பு இறுதி நெருக்கடிக்கு காரணமாகாமல் இல்லை. பாட்டாளிகளின் இன்றுள்ள இயக்கத்திற்கு அவர் மூலகர்த்தா. நாம் அவருக்கு கடன்பட்டுள்ளோம் என்ற வகையில் அக்கடிதம் சென்றது.  எட்வர்ட் பெர்ன்ஸ்டினுக்கும் எங்கெல்ஸ் கடிதம் அதே நாளில் எழுதுகிறார். எனது தந்தி கிடைத்திருக்கும்.  திடிரென கொடுமையாக அது நடந்துவிட்டது. அவர் இரண்டு நிமிடங்களில் சிந்திப்பதை நிறுத்திவிட்டார். அவர் தேறிவருவார் என டாக்டர்கள் தெரிவித்தனர். கொள்கை, நடைமுறைகளில் எவ்வளவு மதிப்புமிக்க மனிதர் அவர். அவருடன் நீண்டகாலம் உடன் இருந்தவர்களால்தான் இதை உணரமுடியும். அவர் பலவீனமாகி இன்று காலை இறந்துவிட்டார் ( இக்கடிதத்தில் மார்னிங் என எங்கெல்ஸ் மணி குறிப்பிடாமல் எழுதுகிறார்)  அவரின் பலமான பார்வை தீர்க்கம் வருகிற ஆண்டுகளுக்காக அவருடன் சேர்ந்தே புதைக்கப்படும். நாம் யாரும் அந்த அளவு திறமையானவர்கள் அல்லர். இயக்கம் இருக்கும். ஆனால் அந்த மேம்பட்ட மூளையின் வழிகாட்டுதல் இல்லாமல் இருக்கும். அவர் பல தவறுகளிலிருந்து அவ்வப்போது கொள்கையை  விடுவித்தவராக காப்பாற்றியவராக இருந்தார். இப்போது மணி நள்ளிரவை நெருங்கப்போகிறது. மதியமும் மாலையிலும் தேவையானதை செய்துவிட்டு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன் என அதில் எங்கெல்ஸ் குறிப்பிட்டிருந்தார்.  பிலிப் பெக்கருக்கு (Johann Philip Becker) மார்ச் 15 1883ல் எங்கெல்ஸ் கடிதம் எழுதினார். கடந்த இலையுதிர்காலத்தில் மார்க்சை பார்த்து சென்றதற்கு நன்றி. நேற்று மதியம் 2.45க்கு அவரைவிட்டு இரண்டு நிமிடம் மட்டுமே இல்லாதிருந்தோம். அவர் தனது சாய்வு நாற்காலியில் ஆழத்துயில் கொண்டார். நமது கட்சியின் மிகச்சிறந்த மூளை சிந்திப்பதை நிறுத்திக்கொண்டது. வலிமையான இதயம் துடிப்பதை நிறுத்திக்கொண்டது. Internal Hemorrahage எனும் இரத்தக்கசிவாக  இருக்கலாம். நீங்களும் நானும்தான் 1848ன் பழைய சகாக்கள். புல்லட்ட்டுகள் சப்தமிடுகின்றன. நம்மில் ஒருவரையும் தாக்கலாம். ஆனால் அது நம்மை வெகுநாள் வலியில் கிடத்தாமல் வரட்டும் என்பன அதில் இடம்பெற்ற வாசகங்கள்.  அடால்ப் சோர்கேக்கு (Frideric Adolp Sorge) மார்ச் 15 அன்று கடிதம் எழுதினார் எங்கெல்ஸ். தங்கள் தந்தி இன்று மாலை கிடைத்தது. மார்க்ஸ் உடல்நிலைப்பற்றி தொடர்ந்து தங்களுக்கு தெரிவிக்கமுடியவில்லை. அது மாறிக்கொண்டேயிருந்தது. அவரது துணைவியார் மரணத்திற்கு முன்னர் அக்டோபர் 1881ல் மார்க்ஸ் புளுரசியால் தாக்கப்பட்டார். 1882 பிப்ரவரியில் அவர் அல்ஜியர்ஸ் அனுப்பப்பட்டார். ஆனால் பயணத்தில் கடும் குளிரால் மறுபடியும் அவருக்கு நோய் ஏற்பட்டது. பின்னர் கோடை வெப்பத்திலிருந்து அவரை காத்திட அவர் மாண்டேகர்லோ மனோகோ அனுப்பப்பட்டார். பிறகு பாரிஸ் அருகில் அர்ஜெண்டில் பகுதியில் அவர் மகள் மேடம் லாங்கே (Longuet)வீட்டிற்கு சென்றார். பிராங்காடிஸ் (Bronchitis) தொல்லைகளிலிருந்து குணப்படுத்த முயன்றனர். குணம் அடைந்து வந்தார். ஆறுவாரங்கள் வெவே பகுதியில் இருந்துவிட்டு குணமாகி செப்டம்பர் 1882ல் திரும்பினார். இங்கிலாந்தின் தென் கடற்கரைப்பகுதியில் அவர் குளிர்காலத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டார். பனிக்காலம் வந்தவுடன்  வைட் தீவு பகுதியில் இருந்தார். ஆனால் அங்கு மழையின் காரணமாக அவர் பாதிக்கப்பட்டார். ஜென்னியின் மரணத்தை அடுத்து  பிராங்காட்டிஸ் தொல்லைகள் தொடர்ந்தது. நுரையீரல் நோய் (Lung Abscess) காரணமாக உடல் பலவீனமாகியது.  லண்டனில் தலைசிறந்த மருத்துவர் அவரை ரே லங்கெஸ்டர் அழைத்து செல்ல பரிந்துரைத்தார். தற்போது ஆறுவாரமாக கொடுமையான பய உணர்வுகள். அவரை பார்க்க உகந்தநேரமான மதியம் 2.30க்கு வந்தேன். வீடு கண்ணீரில் இருந்தது.  இரத்தக்கசிவால் பலவீனமாக இருந்தார் என்றனர். அவரை தாயினும் மேலாக பார்த்து வந்த ஹெலன் டெமூத் அரைத்துக்கத்தில் இருக்கிறார் என தெரிவித்தார். நாங்கள் அறைக்குள் நுழைந்தோம்.. அவர் மீண்டு எழாத தூக்கத்தில் இருந்தார். அந்த இரண்டு நிமிடத்தில் அவர் அமைதியாக வலியேதுமின்றி போய்விட்டார். அவர் நாடித்துடிப்பும் மூச்சும் நின்றிருந்தது. எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும் சுய தேற்றல் இயற்கையானது. முற்றுப்பெறாத வேலைகளை முடிக்கவேண்டும் என்கிற தவிப்புடன் இருந்து ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையானது ஜெண்டிலான இறப்பை விட ஆயிரம் மடங்கு கசப்பானது.  Death is not a misfortune for him who dies but for him who survives என்றார் எபிகுரஸ். அற்பவாதிகளை நிர்மூலமாக்கிய அவர் இரண்டு நாட்களில் அவரது மனைவியின் கல்லறைக்கு அருகில் அமைதியாக அடக்கமாவார்.  மானுடத்திற்கு தலை ஒன்று குறைந்துவிட்டது, நமது காலத்தின் பெரும் தலையது. பாட்டாளிகளின் இயக்கத்தில் பிரஞ்சுகாரர்கள், ருஷ்யர்கள், அமெரிக்கர், ஜெர்மானியர் என அனைவரும் அத்தனை நெருக்கடியிலும் அவரிடம் வழிகாட்டலைப் பெற்றனர். ஆனால் என்ன இனி, தலமட்ட ஒளிவட்டங்கள், சிறு மூளைகள் எல்லாம்  சுதந்திரமாக இருக்கும். நாம் எதற்கு இருக்கிறோம். தைரியத்தை இழக்காமல் இருப்போம் பிரடெரிக் லெஸ்ஸனருக்கு (Friedrich Lessener) எங்கெல்ஸ் மார்க்ஸ் இறப்பு குறித்து கடிதம் எழுதினார். அக்கடிதமும் மார்ச் 15, 1883ல் எழுதப்பட்டது. நமது பழைய நண்பர் நேற்று  மூன்று மணிக்கு மென்மையாக அமைதியாக நிரந்தர தூக்கத்தில் ஆழ்ந்தார். உடனடி காரணம் உள் இரத்தக்கசிவாக  இருக்கலாம். இறுதி சடங்கு சனிக்கிழமை மணி 12க்கு நடைபெறும். Tussy (மார்க்சின் மகள் எலியனார்) உங்களை வரச் சொல்கிறார். அவசரத்தில் இக்கடிதம் எழுதப்படுகிறது. டெர் சோசியல்டெமாக்ரட் (Der Sozialdemokrat, Zurich) பத்ரிக்கைக்கு மே 3 1883ல் மார்க்ஸ் இறப்பு குறித்து தெளிவுபடுத்தி எங்கெல்ஸ் எழுதினார். நமது மாபெரும் கோட்பாடுகளின் ஆசான் பற்றி தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. சில விவரங்களை தெளிவுபடுத்தவேண்டியுள்ளது. மார்க்ஸ் லிவர் தொல்லைக்கு மருத்துவம் தரப்பட்டது. அவருக்கு வயிற்றுவலி, தலைவலி, இன்சோம்னியா அவதி இருந்தது. தொடர்ந்த இருமல் காரணமாக தொண்டை வலியாலும் தூக்கமில்லாமல் அவதிப்பட்டார்.  பிராங்காட்டிஸ் தாக்கத்தை அவர் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. இவை அவரது மரணத்திற்கு காரணமாயின. ஜென்னியின் மரணத்திற்கு 4 அல்லது 5 வாரங்களுக்கு முன்பாக ப்ளுரசி தொல்லை. ஆரம்ப நிமோனியா அறிகுறிகள் இருந்தன. அவர்  வைட் தீவு, அல்ஜீரியா பகுதிகளுக்கு குணமடைய சென்றார். ஆனால் தொடர் குளிர் மழையால் குணமடைய முடியாமல் நிலைமை மோசமானது. மாண்டே கார்லோ சென்று பிறகு மகள் லாங்கெ வீட்டில் அர்ஜெண்டில் பாரிஸ் பகுதியில் கோடையை கழித்தார்.  கடுமையான பிராங்காடிஸ் நோயிலிருந்து  குணமாகி வருகிறார் என டாக்டர்கள் கருதினர்.  பிறகு வெவே என்கிற ஜெனிவா ஏரிப்பகுதிக்கும் அதன் பின்னர் (லண்டனில் வேண்டாம் என்று) தென் கடலோரப்பகுதியிலும் அவர் இருந்தார். செப் 1882ல் குணமாகி லண்டன் திரும்பினார். 300 அடி உயர  ஹாம்ஸ்டெட் குன்றைக் கூட என்னுடன் சிரமம் இல்லாமல் ஏறினார். நவம்பர் பனிமூட்ட பயத்தால் அவர் வைட் தீவு அனுப்பப்பட்டார். அங்கும் குளிர் , இருமல் அவதியால் பலவீனமானார். படுக்கையில் ஓய்வு எடுக்கும் நிலை ஏற்பட்டது. மார்க்சின் மகள் திருமதி லாங்கே மறைந்த செய்தியால் மறுநாள் ஜனவரி 12,(1883) அன்று மார்க்ஸ் லண்டன் வந்தார். ஆகாரம் எடுக்கமுடியவில்லை. பால் தான் குடிக்க முடிந்தது. Lungs Tumorபிப்ரவரியில் ஏற்பட்டது. கடந்த 15 மாதங்களாக மருந்துகள் கூட பலனளிக்கவில்லை. பிராங்கடிஸ் தொலையிலிருந்து விடுவிக்க டாக்டர்கள் முயற்சி பலனளித்தது. ஆகாரம் விழுங்கக்கூடிய முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அன்று 2 மணிக்கு வீடு கண்ணீரால் சூழ்ந்தது.  மார்ச் 14 1883 அன்று காலை அவர் பால், சூப் சிறிது ஒயின் எடுத்துக்கொள்ள முடிந்தது. அவரின் விசுவாச  டெமுத், மார்க்சின் அனைத்து குழந்தைகளையும் 40 ஆண்டுகளாக உடன் தங்கி வளர்த்தவர், அவர் அரைதூக்கத்தில் இருக்கிறார், வாருங்கள் பார்ப்போம் என அழைக்கிறார். நாங்கள் உள்ளே சென்று அவர் நிரந்தர துயில் கொண்டதை பார்த்தோம். இதைவிட அமைதியான சாய்வுநாற்காலியில் அமர்ந்தபடியான மென்மையான சாவு வராது. காபிடல் இரண்டாம் வால்யூம் 1000 ஃபோலியோ பக்கங்கள் முடியும் நிலையில் உள்ளது .. மார்க்ஸ்  என்னையும் மகள் எலியனாரையும் அவரது நிர்வாகிகள் (literary Executors) என சொல்லி இருக்கிறார். (மேற்கண்ட விளக்கம் ஏப்ரல் 28, 1883 ல் லண்டனில் எங்கெல்ஸ் எழுதி மே 3ல் பிரசுரிக்கப்படுகிறது.)        II மார்க்சின் இறுதி சடங்கு மார்க்ச் ஹைகேட் இடுகாட்டில் மார்ச் 17 1883 அன்று புதைக்கப்படுகிறார்.  ஜார்ஜ் எலியட் போன்றவர் கல்லறைகள்  ஹைகேட்டில் இருந்தன. ஹெர்பர்ட் ஸ்பென்சர் நினைவகம் அங்குதான். மார்க்ஸ், ஜென்னி, மார்க்சின் பேரன், டெமுத் ஆகியவ்ர்களும் அங்குதான் புதைக்கப்பட்டனர். 4வயது பேரன் மார்க்ஸ் இறந்து 6 நாளில் இறக்கிறான். டெமுத் 1890 நவம்பர் 4ல் தனது 67ஆவது வயதில் இறக்கிறார். . ஆகஸ்ட் பெபல் மார்க்ஸிற்கு நினைவு சின்னம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றார். குடும்பத்தார்களுக்கு விருப்பமில்லை என எங்கெல்ஸ் தெரிவித்தார். மில்லியன் கணக்கான தொழிலாளர் இதயத்தில் மூளையில்  உயிர்ப்புடன் வாழ்பவர் மார்க்ஸ் - நினைவு சின்னத்தை மார்க்சே விரும்பியதில்லை என்றார் லீப்னெக்ட். 1956ல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்ஸ் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இடம் பெற்று 10 அடி உயரத்தில் கிரானைட்டில் அனைத்துபகுதி தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என பொறிக்கப்பட்டு மார்க்சின் மார்பளவு சிலை வைக்கப்பட்டது.  மார்க்ஸ் புதைக்கப்படுவதற்கு முன்னதாக இறுதியாக அவரை பார்க்க கூடியிருந்தவர்கள் பார்த்திட அனுமதிக்கப்படுகிறார்கள். எங்கெல்ஸ், எலியனார் மார்க்ஸ், சார்லஸ் லாங்கே, பால் லபார்க், வில்லியம் லீப்னெக்ட், பிரடெரிக் லெஸ்ஸனர், கார்ல் ஸ்காரலெம்மர்,எட்வின் ரே லாங்ஸ்டர் வந்தனர். இடுகாட்டில் சோசியல் டெமாக்ரட் பத்த்ரிக்கை சார்பில் சிவப்பு ரிப்பன் கட்டிய இரு மலர் வளையங்களை லெம்கே வைத்தார். லெஸ்ஸனர் கலோன் கம்யூனிஸ்ட் வழக்கில் 1852ல்  5 ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்டவர்.  ரே லாங்க்ஸ்டர் விலங்கியல் பேராசிரியர். ஸ்கார்லெம்மெர் வேதியல் பேராசிரியர். இருவரும் லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினர்கள்.  பலமுறை பிரசுரமாகியுள்ள எங்கெல்சின் புகழ்வாய்ந்த உரை அங்கு  நிகழ்த்தப்பட்டது. டார்வினுடன் ஒப்பீடு, புரட்சிகர இயக்கங்களுக்கு அளவிடமுடியாத நட்டம், உபரி மதிப்பு குறித்த அவரது கண்டுபிடிப்பு , அவரின் அறிவியல் பார்வை, புரட்சிகர குணம், முதலாளித்துவ முறையை தூக்கி எறிந்து பாட்டாளிகளின் விடுதலைக்கான பாதை.,தொடர்ந்த பத்ரிக்கை பணிகள் குறித்து எங்கெல்ஸ் எடுத்துரைத்தார். நாடுகள் அவரை துரத்தின, கடுமையாக வெறுக்கப்பட்ட மனிதராக அதிகம் பேசப்பட்ட மனிதராகவும் அவர் இருந்தார். அவருக்கு பல எதிராளிகள் இருந்திருக்கலாம் தனிப்பட்ட பகைவன் யாரும் இல்லை என்றார் எங்கெல்ஸ். ருஷ்ய சோசலிஸ்ட்களின் இரங்கல் செய்தியை மார்க்சின் மருமகன் லாங்கே பிரஞ்சில் வாசிக்கிறார். மூலதனத்தின் ருஷ்ய மொழிபெயர்ப்ப்பு முடிந்துவிட்டது. ருஷ்ய பல்கலைக்கழக மாணவர்கள் மார்க்சின் மகத்தான கொள்கையை அறியும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் செய்தியாக அங்கு படிக்கப்பட்டது. பிரஞ்சு தொழிலாளர் கட்சி, ஸ்பானிஷ் தொழிலாளர் கட்சி தந்தி வாசிக்கப்படுகிறது.   ஜெர்மன் மொழியில் லீப்னெக்ட் உரையாற்றினார். மார்க்சின் நீண்டகால சகா எங்கெல்ஸ் ’மார்க்ஸ் பலரால் வெறுக்கப்பட்டவர்’ என்பதை குறிப்பிட்டார். ஆமாம் அதேபோல் பலரின் அன்புக்குரியவராகவும் அவர் இருந்தார். சுரண்டப்பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் அவரை நேசித்தனர். அவர் மகத்தான இதயமும் மூளையும் கொண்டவராக இருந்தார். அவரை அறிந்தவர்கள் இதை உணர முடியும். அவரின் மாணவராக, நண்பராக மட்டுமில்லாமல் ஜெர்மன் சோசியல் டெமாக்ரடிக் கட்சி சார்பிலும் தான் பேசுவதாக லீப்னெக்ட் குறிப்பிட்டார். விஞ்ஞானம் ஜெர்மனிக்கு மட்டும் சொந்தமானதல்ல. அதற்கு தேசியம் என்கிற வரையறை இல்லை. அதேபோல்தான் காபிடல் சர்வதேச தொழிலாளர்க்குரியது. மார்க்ஸ் சோசியல் டெமாக்ரசி என்பதை செக்ட் என்பதிலிருந்து கட்சியாக்கி தந்துள்ளார். அது தோற்காமல் போராடும். இது ஜெர்மனிக்கு மட்டுமானதல்ல. மார்க்ஸ் பாட்டாளிகள் முழுமைக்குமானவராகியுள்ளார். அவரது நினவுகள் மறையாது. அவரது பாடங்கள் பல வட்டங்களை பாதிக்கும் என்றார் லீப்னெக்ட்.  ருஷ்ய பெண் மாணவர்கள் மற்றும் பீட்டர்ஸ்பர்க் மாணவர்கள் சார்பில் மலர் வளையம் வைத்திட பணவிடை (எம் ஓ) அனுப்பியிருந்தனர். அருகாமை பகுதிகளிலிருந்து மலர் வளையங்கள் வந்து கொண்டிருந்த செய்தியை எங்கெல்ஸ் தருகிறார். மார்க்ஸ் இறந்தவுடன் இரு முக்கிய வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஒன்று எலியனார் அவரது மகள் எழுதியது. மற்றது ப்ரடெரிக் ஏ சோர்ஜ். எலியனார் தன் கணவர் எட்வர்ட் ஏவ்லிங்கின்  ப்ராக்ரஸ் பத்ரிக்கையில் மே, ஜூன் 1883ல் எழுதினார். முதல் இரண்டு சகோதரிகள் (மார்க்சின் பெண்கள்) பிரஞ்சு சோசலிஸ்ட்களான லபார்க், லாங்கேவை மணமுடித்திருந்தனர். மூன்று பெண்களுமே மார்க்சுடன் படிப்பது, செய்தித்தாள் படித்துக்காட்டுவது உள்ளிட்ட உதவிகளை செய்துவந்தனர்..  ப்ரொக்ரஸ் இதழ்களில் தனது தந்தையின் மகத்தான படைப்பான காபிடல் குறித்து எழுத அவரின் உத்தேசம் பற்றி எலியனார் தெரிவித்தார். மார்க்சின் பிறப்பு, பள்ளிக்காலம், ஜென்னி காதல், பத்ரிக்கை பணிகள்- அதன் கசப்பான அனுபவங்கள், ஹெகல் குறித்த ஆய்வுகள், சோசலிச எழுத்துக்கள், எங்கெல்ஸ் உடன் புனித குடும்பம் எழுதியது, புருதான் உடன் தத்துவத்தின் வறுமை விவாதம், கம்யூனிஸ்ட் லீக் அமைத்தது.- அதன் மூலம் முதன்முதலாக சர்வதேச சோசலிச இயக்கம் உருவாக்கப்பட்டது, 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கை பின்னர் பல அய்ரோப்பிய மொழிகளில் மொழிமாற்றம் பெறுவது போன்ற பல்வேறு மார்க்சின் பணிகளை எலியனார் தொகுத்து சொல்கிறார். சென்று தங்கிய நாடுகள், அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்படுவது பற்றியும் சொல்கிறார்.  1853 கலோன் வழக்கிற்கு பின்னர் தீவிர அரசியல் நடவடிக்கையிலிருந்து மாறி பொருளாதார ஆய்வுகளை மார்க்ஸ் மேற்கொண்டார் என்கிறார் எலியனார். 1859ல் மதிப்பு கொள்கை பற்றி 1859க்கு வந்தடைகிறார். 1867ல் ஹாம்பர்கில் தனது தலையான படைப்பான காபிடல் வெளியிடுகிறார். முன்னதாக 1864 செப்டம்பரில் சர்வதேச தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டு மார்க்ஸ் துவக்கவுரை ஆற்றுகிறார். 1873ல் ஜெனரல் கவுன்சில் லண்டனிலிருந்து நியுயார்க்கிற்கு அவரது ஆலோசனைப்படி மாற்றப்படுகிறது. அவர் உடல்நிலை பாதிப்பால் தொடர் வேலைகள் நின்று போயின. அவரது இரண்டாவது வால்யூம் அவரின் உண்மையான, பழைய நண்பர் எங்கெல்ஸால் கொணரப்பட இருக்கிறது. அடுத்த வால்யூம்கள் உள்ளன. அவரின் ஆளுமை, மகத்தான அறிவு, நகைச்சுவை உணர்வு, அன்பு, பரிவு அனைத்தும் கலந்த மனிதன் இதோ என இயற்கை எழுந்து நின்று சொல்லும் என எலியனார் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.    III  அமெரிக்காவில் மார்க்ஸ் மறைவு குறித்து அமெரிக்க நியுயார்க டிரிப்யூன் வாசகர்களுக்கு மார்க்ஸ் தெரியதவர் அல்லர். 1851-62 களில் அதில் எழுதிவந்தார். அப்பத்ரிக்கை அவரது மறைவை மார்ச் 17 1883 சனி அன்று செய்தியாக வெளியிட்டது. அவரது பத்ரிக்கை தொடர்பு குறித்தோ அவரது பங்களிப்பு குறித்தோ ஏதும் சொல்லவில்லை. அவரது கட்டுரைகள் அப்பத்ரிக்கை விற்பனையான 2 லட்சம் வாசகர்களிடம் சென்றடைந்த காலமது. மார்க்சின் காபிடல் ஆங்கில பதிப்பு  1887ல் தான் வந்தது. லேபர் ஸ்டாண்டர்ட் பத்ரிக்கை 1876-78ல் சில குறிப்புகளை வெளியிட்டது. அட்டோ வெய்டெமேயர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மகத்தான பங்களிப்பை செய்தார். பாரிஸ் கம்யூன் 1871ல்  காலத்தில் மார்க்ஸ் பெயர் அமெரிக்காவில் நன்றாகவே பரவியது. மார்க்சின் கருத்துக்களை தவறாக திரித்து வெளியிட்ட நியுயார்க் ஹெரால்ட் மார்க்சின் பதிலாக எழுதிய  விளக்கத்தை போட மறுத்தது. அதே நேரத்தில் நியுயார்க் வேர்ல்ட் எனும் பத்ரிக்கை பாரிஸ் கம்யூன் பற்றிய மார்க்ஸ் பேட்டியை ஜூலை 18 1871ல் வெளியிட்டது. ஜனவரி 5 1879 சிகாகோ டிரிப்யூன் மார்க்சின் பேட்டியை வெளியிட்டது. 1880 ல் நியுயார்க் சன் பத்ரிக்கை நிருபர் அவரின் ஆளுமையை வியந்து பேசினார். அமெரிக்காவின் சிறந்த சோசலிச தலைவர்கள் ஜோசப் வெய்டெய்மர், பிரடெரிக் சோர்ஜ் ஆகியவர்களுடன் மார்க்ஸ் எங்கெல்ஸ் தொடர்பு இருந்தது. லாசேல் செல்வாக்கு தொழிற்சங்கங்களில் பெருமளவு இருந்தது. மார்க்சின் கருத்துக்களை கொண்டு செல்வதில் சோசலிஸ்ட் தலைவர்கள் முன்நின்றனர். சர்வதேச சிகரட் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சாமுவேல் கோம்ஸ் போன்றவர் ஏ எஃப் எல் என்கிற சங்கத்தை துவங்கியிருந்தனர். அதே போல் சி எல் யு என்பதும் மார்க்ஸ் மறைந்த காலத்தில் செல்வாக்குடன் நியுயார்க்கில் இருந்தது. இதில் சோசலிஸ்ட்கள் செல்வாக்குடன் இருந்தனர். வர்க்கப் போராட்டத்திற்கு தொழிற்சங்கம் மற்றும் அரசியல் அமைப்புகளும்  அவசியம் என்பதையும் மார்க்சின் சிந்தனைகளையும் இவர்கள் கொண்டு சென்றனர். மேதின தியாகிகள் விஷயத்தில் அவர்களது வாழ்க்கை குறிப்புகளை வெளிக்கொணர்ந்த Knights of Labour பத்ரிக்கை குழுவினர் மார்க்ஸ் மறைந்தபோது அவர் குறித்து தலையங்கம் வராமல் பார்த்துக்கொண்ட செய்தியை நாம் காணமுடிகிறது.  நியுயார்க் சன்  பத்ரிக்கை A vigorous and Fruitful Thinker என்கிற கட்டுரையை மார்ச் 16 1883ல் வெளியிட்டது. பகுனின், லாசேல் என்பவர்களையெல்லாம்விட நம்பற்குரிய தொழிலாளிவர்க்கத்திற்கு வழிகாட்டி என மார்க்ஸ் பற்றி அது பேசியது. மார்க்சின் மகத்தான காபிடல் படைப்பை பற்றி மிக உயர்வான மதிப்பீடுகளை முன்வைத்தது. New Yorker Volkszeitung மார்ச் 15 1883ல் மார்க்ஸ் மறைவு குறித்து எழுதியது. மானுடர்களின் துயரத்திற்கான் சிகிட்சையை கண்டுபிடித்தவர் மார்க்ஸ் என்றது. முழுமையாக காபிடலை முடிப்பதற்கு முன் அவர் கை அசைவற்று நின்றது. ஈடுசெய்யமுடியா பேரிழப்பு. அவர் சிந்தனையாளர் மட்டுமல்ல. போராடுபவர்.  சர்வதேச தொழிலாளர் அமைப்பு என்கிற  நடைமுறையை அவர் துவங்கிவைத்தவர் என்று புகழாரம் சூட்டியது. நவீன சோசலிசத்தின் உருவம் அவர் என புகழ் அஞ்சலி செய்தது.  நியுயார்க்கின் Freiheit பத்ரிக்கை  மார்ச் 24 மற்றும் ஏப் 14 1883. தனது நூற்றாண்டின் மகத்தான சிந்தனையாளர் என எழுதியது. நவீன சோசலிசத்தின் தந்தை என புகழாரம் சூட்டியது. உலக பாட்டாளிகளே ஒன்றுசேருங்கள் என்பது வலிமையாக பரவி மந்திர சொல்லாகியுள்ளது. அய்ரிஷ் தொழிலாளர் பத்ரிக்கை, கார்பெண்டர் அவரது மறைவு செய்தியை தந்து அவருக்கு புகழ் அஞ்சலி செய்தன. Progress பத்த்ரிக்கை அவர் தனது நாட்டிற்காக மட்டுமோ, அதன் புகழுக்காக மட்டுமோ மார்க்ஸ் நிற்கவில்லை. தாய்மண் அவரை விரட்டியது.  உலகம் அவரது நாடாயிற்று. அவர் எந்த பதவிக்காகவும் ஏங்கவில்லை. அப்பாவி உழைக்கும் ஏழைகளின் விடியலுக்காக நின்றார். இன்று பத்ரிக்கைகள் அவரை கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஆரம்பித்துள்ள இயக்கத்தின் அடிகள் ஒவ்வொரு பகுதியிலும் புரட்சியின் புயலை ஆரம்பிக்கும். கரை நோக்கி தங்கள் கப்பலை ஆள்பவர்கள் திருப்ப வேண்டியிருக்கும் என்று எழுதியது. நியுயார்க் Voice of the people  மார்ச் 18 1883ல்  மாபெரும் மார்க்ஸ் மறைந்தார் செய்தியை வெளியிட்டது. கலிலியோ, நியூட்டன், வால்டேர் வரிசையில் மார்க்ஸ் புகழ் எனும் கோயிலில் நிரந்தரமாக இனி இருப்பார் என்றது. Springfield massachusetts Republican மார்ச் 17 1883ல் கற்றல் செயல்பாடுகள் நிறைந்த மனிதர் என மார்க்ஸை சித்தரித்தது. சின்சினாட்டி அமெரிக்கன் இஸ்ரேலியட் பத்ரிக்கை சோசலிஸ்ட்கள் தங்கள் மனிதரை இழந்துவிட்டனர் என்று எழுதியது. Chicago Tribune  பேரறிஞர் பெரும் சிந்தனையாளர்  மறைவு என்று மார்ச் 17 1883ல்   செய்தி தந்தது.  Chicago Arbeiterzeitung மார்க்ஸ் எனும் சிந்தனையாளர் போராளி என எழுதியது. இக்காலத்தில் அகஸ்டஸ் ஸ்பீஸ் மேதின தியாகிகளுள் ஒருவர் இப்பத்ரிக்கையுடன் தொடர்புள்ளவராக செயல்பட்டுக் கொண்டிருந்தார். தன் காலத்தின் மிகப்பெரிய வரலாற்று ஆசான் மார்க்ஸ். கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ, அகிலம் மூலம் பாட்டாளிகளின் விடுதலைக்கு வழிகாட்டியவர். முதலாளித்துவம் வீழ்த்தப்படக்கூடியதே என்ற உறுதியை தந்தவர். உலகத்தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள் என்கிற சாவியையும் அவர் தந்துள்ளார் என்றது அப்பத்ரிக்கை. Daily Alta California இதழ் His Life was not Success என்கிற தலைப்பிட்டு மார்ச்18 1883ல் எழுதியது. வாழ்நாள் முழுக்க நாடு பெயர்ந்து கொண்டிருந்ததை அது குறிப்பிட்டது. தனது கடுமையான பணிகள் தன் காலத்தில் வெற்றி பெறாததை அவர் கண்ணுற்றார் என்றது. அகிலத்தில் தலைமை பாத்திரம்  அவரிடத்து வந்தது குறித்த பெருமிதத்தை அது பகிர்ந்துகொண்டது.  மார்ச் 20 1883 கூப்பர் தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்த மாபெரும் சர்வதேச அஞ்சலி கூட்டம் பற்றிய செய்தியை நியுயார்க் சன் ரிபோர்ட் செய்தது. அமெரிக்கர், ஜெர்மானியர், ருஷ்யர், பிரஞ்சுகாரர், பொகிமியர் என கூட்டம் வழிந்தது. ஏராள பெண்கள் வந்தனர். கூட்டம் மார்ச் 19 1883ல் நடந்தது. அனார்க்கிஸ்ட், சோசலிஸ்ட், அமெரிக்கன் பெடெரேஷன் என அனைவரையும் அக்கூட்டம் ஒருங்கிணைத்தது. கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோவை ஆங்கிலத்தில் கொணர்ந்து அதை தொழிலாளர் மத்தியில் கொண்டு செல்வது என கூப்பர் சங்கம் முடிவெடுத்தது. மொழிபெயர்ப்பு அவ்வளவு சரியாக இல்லை என எங்கெல்ஸ் தெரிவித்ததாக செய்தியும் உள்ளது. முதல்நாள் புருக்ளின் தொழிலாளர் கொடி இறக்கி அஞ்சலி கூட்டம் நடத்தியிருந்தனர். பாரிஸ் கம்யூன் பங்கேற்ற தோழர்கள் கிளிவ்லாந்து பகுதியில் மார்ச் 18 அன்று இரங்கல் கூட்டம் நடத்தினர்.  Paul Grottakau பாரிஸ் கம்யூன் வீரர் சோசலிஸ்ட் தலைவர் மார்க்சை கெப்ளர், டார்வின் ஆகியோருடன்  ஒப்பிட்டு பேசினார்.   ஜோகன் மோஸ்ட் (Johann Most) தீவிர அனாக்க்சிசவாதி..  மார்க்ஸ் இரங்கல் கூட்டத்தில் தனக்கு மார்க்ஸை லண்டனில் சந்தித்து  ஆசி பெற வாய்ப்பு கிடைத்ததாகவும் அவரது காபிடலை ஜெர்மன் முழுக்க கொண்டு சென்றதாகவும் பேசியது சர்ச்சையானது. அவ்வுரை குறித்து அமெரிக்க சோசலிஸ்ட்கள் எங்கெல்ஸ்க்கு கடிதம் எழுதினர். மார்க்ஸ் அனார்க்கிசத்திற்கு ஆதரவாக இருந்தாரா என்பதை தெளிவுபடுத்தக் கோரினர். Van Patten என்பார் அதை எழுதியிருந்தார். கடிதத்திற்கு எங்கெல்ஸ் ஏப்ரல் 18 1883ல் பதில் எழுதினார். அனார்க்கிசத்திற்கும் மார்க்சியத்திற்கும் பொதுவானவை ஏதுமில்லை என்றார் எங்கெல்ஸ். அரசு என்கிற அரசியல் வடிவத்தை ஒழித்துவிட்டுத்தான் பாட்டாளி புரட்சி என்கிற அனார்க்கிசத்தை பகுனின் எழுப்பியபோதே மார்க்ஸ் எதிர்த்து நிராகரித்தார். 1872 செப்டம்பரில் அனார்க்கிஸ்ட்கள் அகிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.  அனார்க்கிஸ்ட் என சொல்லிக்கொண்டு மார்க்சிடமிருந்து உதவியை மோஸ்ட் பெற்றிருக்கமுடியாது அவ்வாறு சொல்வது ஏமாற்று. மோஸ்ட் காபிடலின் சில பகுதிகளை பாப்புலர் சம்மரி என மொழிபெயர்ப்பு செய்தபோது அதை சரி செய்ய மார்க்ஸ் ஒப்புக்கொண்டதே தன் பெயரை மோஸ்ட் எங்கும் பயன்படுத்தகூடாது என்கிற நிபந்தனையில்தான் என எங்கெல்ஸ்  குறிப்பிட்டார். இந்த மோஸ்ட் என்பார் அமெரிக்க அனார்க்கிஸ்ட்கள் தங்களுக்கான சர்வதேச அமைப்பை நடத்தியவர்களில் ஒருவர்.. சிகாகோ மே தின தியாகிகள் கூட இவரின் அதிதீவிரத்தை ஏற்காமல் இருந்தனர்.  CLU மத்திய அமைப்பு நியுயார்க்கில் மார்ச் 25 1883ல் கூட்டம் நடத்தி மார்க்ஸிற்கு புகழ் அஞ்சலி செய்தது.  பல்வேறு அமைப்புகளின் பல்வேறு தேசிய இனம் சார்ந்த தலைவர்கள் அழைக்கப்பட்டு உரையாற்றினர். ஜான் ஸ்விண்டன் என்பார் மார்க்சை இங்கிலாந்து சென்றபோது சந்தித்த அனுபவத்தை விவரித்தார். அங்கு இரு தலைமுறைகளுடன் மகிழ்வாக சிந்தை பொங்கிட மார்க்ஸ் வாழ்ந்ததை பற்றி அவர் குறிப்பிட்டார். அவருடன் உரையாடியபோது அவர் சாக்ரடிஸ் போல பேசுவதாக தான் உணர்ந்ததாக ஜான் தெரிவித்தார். பகுனின், லாசேல் பற்றியும் கூட அவருடன் உரையாட முடிந்தது. கடற்கரையில் உலாவியபோது அங்கு வந்த குழந்தைகளுடன் அவர் குதுகுலமாக பேசினார். குழந்தைகளை  பிடிக்கும்  நேசிக்கிறேன் என்றார் மார்க்ஸ். அமெரிக்க நண்பனாகிய என்னை ரயில்வே நிலையம் வந்து கொண்டுவிட்டு அரைமணிநேரம் காத்திருந்து நகைச்சுவை பொங்கிட உரையாடியதையும் ஜான் நினைவு கூர்ந்தார்.  மாஜினி ஒன்றுபட்ட இத்தாலி கனவை 40 ஆண்டுகள் வைத்திருந்து போராடி வெற்றி கண்டார். வெண்டல் பிலிப்ஸ் நீக்ரோக்கள் விடுதலைக்காக 40 ஆண்டுகள் உழைத்து அதை காணமுடிந்தது. விக்டர் ஹ்யுகோ 400 அண்டுகள் பிரஞ்சு குடியரசு கனவை கண்டார். பார்க்கமுடிந்தது. கார்ல் மார்க்ஸ் தேச விடுதலையை தாண்டி சிந்தித்தார். அவர் மாபெரும் மனிதகுல விடுதலைக்காக போராடி வாழ்ந்தார். தனது சொந்த வாழ்க்கையை எதுவும்  எதிர்பார்க்காமல் தொலைத்துக்கொண்டார். அவர் மறைந்திருக்கலாம் மனிதகுலத்தின் மனதில் வாழ்ந்துகொண்டேயிருப்பார் என ஜான் உரை அமைந்தது.  புகழ்வாய்ந்த ஸ்பானிய கவிஞரும் கியுபாவின் அபோஸ்தலர் என சொல்லப்பட்டவருமான ஜோஸ்மார்ர்ட்டி தனது உரையை தந்தார். உழைப்பு அழகூட்டக்கூடியது. அயர்திருப்ப்வர்களை உசுப்பி விழிப்புநிலகூ உயர்ந்த்தியவர் மார்க்ஸ். அவர்களின் போராட்டகுணத்தை கண்டெடுத்தவர் அவர் என மார்ட்டி உரையாற்றினார். IV இங்கிலாந்தில் மார்க்ஸ் மறைவு குறித்து 1849முதல் அவர் மறைவுக்காலம்வரை மார்க்ஸ் இங்கிலாந்துவாசியாகவே இருந்தார். 1849-56 களில் அவர் குடியிருந்த டீன் தெருவிலிருந்து 10 நிமிட நடையில் பிரிட்டிஷ் ம்யூசியம் இருந்தது. . லண்டன் பத்ரிக்கைகளும் பெருமளவு செய்தி வெளியிடவில்லை. லண்டன் Annual Register ஆண்டு இதழ் மார்க்ஸ் சோசலிச தலைவர்களுள் முதன்மையானவர், காபிடல் சோசலிசத்தின் பாடப்புத்தகம் என தெரிவித்தது. Guardian, Jewish Chronicle போன்றவை எச்செய்தியும் மார்க்ஸ் மறைவு குறித்து போடவில்லை. Illustrated London News Obituary பகுதியில் மார்க்ஸ் மறைவு இடம் பெறவில்லை. லண்டனுக்கு வெளியே மான்செஸ்டர் கார்டியனில் செய்தி கட்டுரை இடம் பெற்றது. லண்டன் டெய்லி நியுஸ் வெளியிட்ட தவறான தகவலை குறித்து மார்க்சின் புதல்வி எலியனார் ஆசிரியர்க்கு கடிதம் மார்ச் 19, 1883ல் எழுதினார். லண்டனில் வெளியான டைம்ஸ் மார்ச் 17 1883ல் அதன் பாரிஸ் நிருபர் மூலம் வந்த  மார்க்ஸ் மறைவு செய்தியை வெளியிட்டது. முதலாளித்துவம் மீது தாக்குதல் தரும் மிக முக்கிய காபிடலை அவர் எழுதினார். சிலகாலமாக அவர் நோய்வாய்பட்டு பலவீனமாக இருந்தார் என்கிற செய்தியை தந்தது டைம்ஸ். மேற்குறித்த பத்ரிக்கைகளில் அவர் காபிடல் எழுதியது சோசலிச இயக்கத்திற்கு கலங்கரை விளக்ககமாக இருந்தது, புருதானுடன் வாதிட்டது போன்றவை தெரிவிக்கப்பட்டு இருந்தன.  ஜெர்மனியில் கார்ல்காட்ஸ்கி நடத்திய நியு ஜெயிட் மற்றும் இரு பத்ரிக்கைகள் செய்தி வெளியிட்டன. புடாபெஸ்ட்டில் அர்பெய்ட்ட்ர் வோஷென் கிரானிக்கிளில் பாரிஸ் கம்யூன் தலைவர்களுள் ஒருவரான லியோ ஃப்ராங்கல் மார்க்ஸ் குறித்து அஞ்சலி கட்டுரை எழுதியிருந்தார். பிரஞ்சு பத்ரிக்கைகள் சில தலையங்கம் எழுதியிருந்தன. மார்க்சின் மருமகன் சார்லஸ் லோங்கே  தொடர்புடைய பத்ரிக்கை லா ஜஸ்டிஸ் எழுதியது. சில அனார்க்கிஸ்ட்கள் சோசலிஸ்ட்களை எரிச்சல் படுத்திய இரங்கல் செய்திகளை தந்ததாக அறிய முடிகிறது. Vossische Zeitung பெர்லின் பத்ரிக்கை சோசலிஸ்ட்கள் தங்கள் தந்தையை இழந்துவிட்டனர் என அஞ்சலி செய்தது. கார்ல்மார்க்ஸ் எனும் பெரும் சுரங்கத்திலிருந்து நாணயங்களை உருவாக்க வேண்டிய கடமை பெபல், லீப்னெக்ட் போன்றவர்க்கு இருப்பதாக அப்பத்ரிக்கை சுட்டிக்காட்டியது. Scholarly heaven star என அழைத்த புடாபெஸ்ட் பத்ரிக்கை அவர் பூமியில் நடந்த சிறந்த மனிதர் என்றது. தொழிலாளர் விடுதலை எனும் லட்சியம் சார்ந்து தன் வாழ்க்கையை அற்புதமாக்கி கொண்டவர் அவர் என்றது. அவர் தன் படைப்பின் உச்சங்களை தொட்டுக்கொண்டிருக்கும்போதே  மரணமடைந்துவிட்டார். La proletaire மார்ச் 24 1883ல் மார்க்ஸ் இணையற்ற விமர்சனாவாதி, சிந்தனையாளர் என்றது. அவர் கடவுள் இல்லை . ஆனால் ஓவன், செயிண்ட் சைமன், பூரியர் , புருதான் போல் விஞ்சி நிற்கிறார் என்று எழுதியது. மார்க்சின் உற்றார் வருத்தப்படும் அளவிற்கு கருத்துதனை தற்போது சொல்ல விரும்பவில்லை எனவும் எழுதியது. அந்நேரத்தில் இத்தாலியில் மார்க்சின் செல்வாக்கைவிட பகுனின் செல்வாக்குதான் கூடுதலாக இருந்ததாக எங்கெல்ஸ் தெரிவித்தார். மிலான் ரோமில் இருந்து வந்த ஜனநாயக சோசலிச பத்ரிக்கைகள் செய்திகளை வெளியிட்டு இருந்தன. சில முக்கிய பகுனிஸ்ட்கள் பின்னர் மார்க்சியர்களாகவும் மாறினர். டுரின் பகுதி பேராசிரியர் லோரியா மார்க்சுடன் உரையாடல் நடத்தியிருந்தார். ஜாரின் ருஷ்யாவில் மார்க்ஸ் மறைவு செய்தி பெருமளவு வெளியிடப்பட்டிருந்தது. மாஸ்கோ நியூஸ், வார்சா டைரி, வோல்கா மானேஜர் , வீக் போன்ற பலவகைப்பட்ட அரசியல் சிந்தனைகள் உள்ள பத்ரிக்கைகள் காபிடலின் ஆசிரியர், சிறந்த சோசலிஸ்ட் என புகழாரம் சூட்டின. மாஸ்கோ லா சொசைட்டி சார்பில் மார்ச் 28 அன்று நினைவாஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. மாஸ்கோ பல்கலைகழக பொருளாதார பேராசிரியர் சுப்ரோவ் அதில் உரையாற்றினார். பீட்டர்ஸ்பர்க் செண்ட்ரல் பல்கலைகழக மாணவர் வட்டம் முன்பே கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டு இருந்தனர். மறைவை அறிந்த அவர்கள் மார்க்ஸிற்கு மலர்வளையம் என்கிற கட்டுரையை  வெளியிட்டிருந்தனர். ருஷ்ய சோசலிஸ்ட்களான பிளக்கானோவ், அக்சல்ராடு , வெரா சசூலிச்  ஜூரிச் சோசியல் டெமாக்ரட் பத்ரிக்கையில் கூட்டாக இரங்கல் செய்தி தந்திருந்தனர். நிதி திரட்டி அவரது ஆக்கங்கங்களை மக்கள்முன் கொண்டுசெல்வோம் என்றனர். மாஸ்கோ பத்ரிக்கைகள் மார்க்சை அற்புதமான நவீன பொருளாதார அறிஞர் மற்றும் பிரதிநிதி என அழைத்திருந்தன.  கொள்ளையில் வருவதே மூலதனம் என்கிற கிண்டல் தொனியில் பீட்ட்டர்ஸ்பர்க் பத்ரிக்கை சிட்டிசன் செய்தி போட்டிருந்தது.இந்த புத்திசாலி கல்விமான் புதிரான, விளங்கிக்கொள்ளமுடியாத, பிளவுபட்ட பொருளாதார எதிர்காலத்தை எந்த வண்ணமயமானதில்லாமலும் வைக்கிறார் என்கிற விமர்சன பார்வையுடன் மார்க்ஸ் மறைவை வெளியிட்டது. சுவிட்ஜர்லாந்த் பத்ரிக்கை சோசியல்டெமாக்ரட் மார்க்ஸ் சோசலிசத்திற்கு விஞ்ஞான அடிப்படைகளை உருவாக்கியவர் என்றது. அவரின் அறிவுப்புதையலும் விமர்சனகூர்மையும் நிகரற்றவை என்றது. தனது மகத்தான படைப்புகள்மூலம் அவர் அவருக்குரிய நினைவு சின்னத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டார் என்றது. மார்க்ஸ் குறித்து இத்தாலியில் லோரியா எழுதியிருந்தவற்றைப்பற்றி பின்னர் கிராம்சி போன்றவர்கள் விமர்சித்தனர். லோரியா  historical Economism என்று பேசியதை கொச்சை மார்க்சியம் என கிராம்சி விமர்சித்தார். ஆனால் மார்க்ஸ் குறித்து லோரியா இத்தாலியில் செல்வாக்கு பெற்ற நுவா அண்டொலொஜி பத்ரிக்கையில் எழுதியதை பேராசிரியர் பிலிப் போனர் பாராட்டி சொல்கிறார். NewYorker Volkszeitung பத்ரிக்கையில் மார்ச் 18 1883ல் மார்க்சும் ருஷ்ய சோசலிஸ்ட்களும் என்கிற கட்டுரையை செர்ஜியஸ் என்பார் எழுதினார். N G Chernishevsky என்கிற மூத்த ருஷ்ய சோசலிச சிந்தனையாளர்தான் மார்க்சின் எழுத்துக்களுடன் 1850களில் தொடர்பு வைத்திருந்தார். 1860களில் ருஷ்ய பத்ரிக்கை சுதந்திரம் சற்று தளர்த்தப்பட்டபோது காபிடலை மொழிமாற்றி கொணரவேண்டும் என ருஷ்ய சோசலிஸ்ட்கள் முயற்சி எடுத்தனர். ருஷ்ய புரட்சிகரவாதிகளிடமும் மார்க்சிஸ்ட்கள், பகுனிஸ்ட்கள் என்கிற உடைவு ஏற்பட்டது. ஆனால் ருஷ்யாவிற்கு மார்க்ஸ் அந்நியர் அல்லர், நம்மவர் என்கிற அளவு செல்வாக்கு பெருகியது என அப்பத்ரிக்கை எழுதியது. பிளக்கானாவ் போன்ற மூத்தவர்கள் கூட பகுனின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு மார்க்சியம் நோக்கி வந்தவர்கள்தான். ஆம்ஸ்டர்டாமில் வந்த டான் பத்ரிக்கை கட்டுரையில் சமுகத்தின் நலன்களை ஒன்றிணக்கும் மகத்தான மனிதர்கள் வரிசையில் மார்க்ஸ் இணைந்துவிட்டதாக எழுதியது. நம்முடைய காலத்தின் ஈடு இணையற்ற பொருளாதார மேதை என்றது.பொருட்படுத்தவேண்டிய  மிக முக்கிய மனிதர் என்பதை எழுதிய   Kerdijk என்பார் கம்யூனிஸ்ட் அறிக்கையை விமர்சித்து தனது மார்க்ஸ் குறித்த செய்தியை தந்த்திருந்தார். அவரது விமர்சனம் கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ மனசாட்சியற்ற வார்த்தை ஜாலம் (Communist Manifesto the language of demagogue without conscience) என்பதாக இருந்தது. Achille Loria  எழுதியதில்  கார்ல் மார்க்ஸ் வேறுநாடுகளுக்கு குடியேறியது அவரின் சிந்தனையை போர்க்குணத்தை  ஆற்றலை மேம்படுத்திவிட்டது. சோசலிசத்தின் தாந்தே மார்க்ஸ் என்றார் லோரியா. லாசேலும் மார்க்சும் ஹெகலிடமிருந்து எடுத்துக்கொண்ட வித்தியாசப்பட்ட அம்சங்களை அக்கட்டுரையில் லோரியா விளக்குகிறார். பொருளாதார காரணிகளுக்கு அழுத்தத்தை மீட்ட புலமைவாய்ந்த சோசலிசம், அழுதுதூங்கிவழிந்த அரசியலை காபிடல் மூலம் உசுப்பி எழுப்பியவர் மார்க்ஸ் என லோரியா  எழுதினார். மார்க்சின் Theory of Value அறிமுகப்படுத்தி அவரது மகள் எலியனார் மார்ச்- ஜூன் 1883ல் ப்ராக்ரஸ் இதழில் எழுதினார். Chicago Tribune ஜனவரி 5 1879ல் மார்க்ஸ் கொடுத்த பேட்டியில் கட்சி அல்ல, தேசம்தான் புரட்சி செய்யவேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார். அதேபோல் காபிடலை ஆங்கிலத்தில் ஜெர்மன் மூலத்திலிருந்து கொண்டுவருவது கடினம் என்றும் பிரஞ்சு மொழியில் வந்துள்ள மொழிபெயர்ப்பிலிருந்து கொண்டுவரலாம் எனவும் மார்க்சிடம் (1880) கருத்து இருந்தது.  மார்க்சின் மகள் லாரா லபார்க் எங்கெல்ஸ்க்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸ், எலியனார் இருவரும் literary Executors என சொன்னதை கேள்விக்கு உட்படுத்தியதாகவும் அறியமுடிகிறது. எங்கெல்ஸ் அது தனது சொற்றொடர்தான் என அவருக்கு பதில் எழுதியதாகவும் தெரிகிறது.   Ref 1. Karl Marx Remembered Comments at the time of his  death: Philip  Foner 2.மார்க்ஸ்- எங்கெல்ஸ் நினைவு குறிப்புகள் எங்கெல்ஸ் சில குறிப்புகள்          ஜெர்மனியின் ரைன்லாந்த் தாதுப்பொருட்கள் நிறைந்த பூமி. ரைன்லாந்த் 1795.ல் பிரஞ்சு ஆதிக்கப்பகுதியாக மாற்றப்பட்டது. விவசாயத்தை காவுகொடுத்து முதலாளித்துவம் வளர்வதற்கான முயற்சிகள் அங்கு நடக்கத் துவங்கின. உப்பர்டால் எனும் பகுதி ஜெர்மனியின் மான்செஸ்டர் என கருதப்பட்டது. எங்கெல்ஸ் குடும்பம் பர்மெனில் வாழ்ந்து வந்தது. தந்தை பஞ்சாலை தொழிலில் ஈடுபட்டிருந்தவர். எங்கெல்ஸ் 1820 நவம்பர் 28 ஆம் நாள் செவ்வாய் இரவு 9 மணிக்கு பிறந்தார். அவரின் தந்தை ப்ரெடெரிக் எங்கெல்ஸ். தாய் எலிசி. எங்கெல்ஸ் உடன் பிறந்தவர்கள் 4 சகோதரர்கள், 4 சகோதரிகள். அக்குடும்பம் பர்மன், ரைன்லாந்து பகுதியில் இரண்டு தலைமுறையாக வர்த்தக குடும்பமாக செழித்து வந்தது . கொள்ளுதாத்தா ஜோகன் காஸ்பர் (1717-87) விவசாயத்திலிருந்து சாயத்தொழிலுக்கு மாறினார்.  தாத்தா காஸ்பர் 1808ல் அப்பகுதியில் முனிசிபல் கவுன்சிலராக இருந்தார். அங்கு பிராடெஸ்டண்ட் சர்ச் வருவதற்கு காரணமாகவும் இருந்தார். தந்தை எங்கெல்ஸ் தனது உறவுக்காரர் எர்மனுடன் சேர்ந்து டெக்ஸ்டைல் வர்த்தகத்தை உள்ளூரிலும் மான்செஸ்டரிலும் செய்துவந்தார். 1810ல் 16000 மக்கள் தொகையுடன் இருந்த பர்மன் 30 ஆண்டுகளில் பெரிய நகரமாக 40ஆயிரம் மக்கள் வாழும் பகுதியாக விரிந்தது.. தந்தை கண்டிப்பானவர் என்பதால் பொதுவாக அனைவரும் பணிந்து செல்லும் பழக்கம் இருந்தது. வீட்டிற்கு வந்துகொண்டிருந்த ஆங்கிலம், டச்சு, பிரஞ்சு மொழிகளில் பத்ரிக்கைகளை எங்கெல்ஸ் படிக்க துவங்கினார் . படிக்கும் காலத்தில் வரலாறு, மொழி ஆய்வுகள், இலக்கியம், இசை குறித்த நாட்டம் அவரிடத்தில் வளர்ந்தது. தனது நண்பர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் தன்னால் லத்தீன், கிரேக்கம், இத்தாலி, ஸ்பானிஷ், போர்த்துகீசியம் போன்ற மொழிகளிலும் படிக்க முடிவதாக தெரிவித்தார். தடை செய்யப்பட்ட பல புத்தகங்களை தேடி அவற்றை படிக்கலானார். வர்த்தக நாட்டத்தைவிட படிப்பதில், மொழிகளை அறிவதில் விருப்பம் அதிகம் இருப்பதாகவும் தான் ஏறக்குறைய 25 மொழிகளை கற்றிருப்பதாகவும் தனது சகோதரிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தெரிவித்தார் எங்கெல்ஸ். நண்பர்களுக்கு பல மொழிகளில் கடிதம் எழுதலானார். தியேட்டர்களுக்கு செல்வது, இசை நிகழ்வுகளுக்கு செல்வது என்பதில் ஆர்வம் காட்டினார். தந்தையோ வர்த்தகத்தில் மகன் கவனம் செலுத்தி வளரவேண்டும் என விரும்பினார். அம்மாவழி முன்னவர்கள் வர்த்தகம் என்பதைவிட இலக்கியத்தில் ஆர்வமாக இருந்தனர். தாத்தா மாணவன் எங்கெல்ஸ்க்கு கதேயை படி என அறிமுகப்படுத்தினார். கிரேக்க தொன்மக்கதைகளை அறிமுகப்படுத்தினார். சாகச கதைகளை சொல்லித்தந்தார். தந்தையோ கதே கடவுள் மறுப்பாளன், எனவே வீட்டிற்குள் நுழையக்கூடாது என்பதை வலியுறுத்தினார். படிப்பில் கவனம் செலுத்தி மகன் தன்னைப்போல் பெரிய முதலாளியாக வரவேண்டும் என்பதில் கறாராக இருந்தார். 1837ல் அவரின் 17 ஆம் வயதில் அவர் கல்விக்கூடத்திலிருந்து நிறுத்தப்பட்டு டெக்ஸ்டைல்ஸ் வர்த்தக வெளிக்கு அனுப்பப்படுகிறார். தந்தையுடன் 1838ல் மான்செஸ்டர் செல்கிறார்.. சில மாதங்கள் ஊர் அருகில் தொழில் கல்விக்கு அப்பரண்டிஸ் ஆக அனுப்பப்படுகிறார். 1800களின் துவக்கத்தில் ஷெல்லிங், பிச்டே தாக்கத்தில் இல்லாத மாணவர்கள் பிரஷ்யாவில்- பெர்லினில் இல்லையென்ற நிலை இருந்தது. நெப்போலியன் தோல்விக்கு பின்னர் ஜெனாவில் ’அரசியல் அமைப்பு சட்டப்படி ஆட்சி’ முழக்கம் மாணவர்களால் முன் எடுக்கப்பட்டது.  பிரெமனில் இருந்த காலத்தில் நாட்டிய பள்ளியில் சேர்தல், பீர் குடிப்பது, புத்தக கடைகளை மேய்வது- வாங்குவது, படிப்பது என நேரம் செல்வதாக தன் சகோதரிக்கு எங்கெல்ஸ் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். எங்கெல்ஸ் பி பி ஷெல்லி, பைரன், கோல்ரிட்ஜ் ஆகியவர்களின் கவிதையை விரும்பி படித்தார். ஷெல்லியின் கலகக்குரல் அவரை வசிகரித்தது. ராணி மாப் போன்ற ’குடியரசை, மதத்தன்மையற்ற, லிபரல் சமுகத்தை’ கட்டியமைக்கும் குரலில் ஈர்ப்பு ஏற்பட்டது. ஷெல்லியின் விடுதலை பாடல் போன்று எழுதிப்பார்த்தார். விடுதலை குறித்த குரல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது- என்னால் தூங்க முடியவில்லை என்று சகோதரிக்கு எழுதினார் எங்கெல்ஸ். அந்நிய கலாச்சார ஊடுருவலால் தடுமாறிப்போன பெடோயின் மக்கள் பற்றிய கவிதை தொகுப்பை  முதலில் வெளியிட்டார். இதிகாச வகைப்பட்ட நாடகம் ஒன்றை ஜெர்மனியின் பழமையான நாட்டுப்புற கதாநாயகனை வைத்து எழுத முயற்சித்து பாதியிலேயே கைவிட்டார்.   ஹெகலின் டயலக்டிக்ஸ் எங்கெல்சிடம் வேர்பிடிக்க துவங்கியது. நிரந்தரமான நீடித்த காலாகாலத்திற்குமான உண்மை- புனிதம் என்பதெல்லாம் இல்லை. அனைத்தும் மாறக்கூடிய கட்டங்களைக்கொண்டுதான் இருக்கின்றன என்பது அவரது உள்ளத்தில் ஆழப்பதிந்தது. கிறிஸ்துவம் அல்லது மதம் என்பது இனி காரணகாரிய விமர்சனத்திற்கு அப்பால் வைக்கப்படமுடியாதது என்கிற கருத்தும் அவரை கவ்விப்பிடித்தது. பெர்லினில் நேரடி மாணவனாக இல்லாதபோதும் கல்லூரி வளாகத்தில், படிப்புக்கூடங்களில் கிளப்களில் நடக்கும் அறிவு விவாதங்களில் எங்கெல்ஸ் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.   1840ல் ஜெர்மன் கம்யூனிஸ்ட் பிரடெரிக் லெஸ்ஸனர் எங்கெல்சை பற்றி ஆறு அடி உயரம். ஒல்லியான திரேகம். உடனடியாக எதையும் செய்யும் ஆற்றல், சுருக்கமாக அழுத்தமாக பேசும் பாணி, நிமிர்ந்து நின்று பார்த்து பேசும் பழக்கம் கொண்டவர் என வர்ணிக்கிறார். ‘பீர் இலக்கியக்குழு’ என்கிற பெயரில் புருனோ பாயர், மாக்ஸ் ஸ்டிர்னர், புத்த அறிஞர் கார்ல்கோப்பன், கார்ல் நெளரிக், எட்வெர்ட் மேயன் என்கிற குழாமுடன் எங்கெல்ஸ் இணைந்தார், செக்ஸ், ஒழுக்கம் என்பது குறித்தெல்லாம் இளைஞன் எங்கெல்சிடம் தாராளவாத சிந்தனைகள் இருந்தன. 1842 நவம்பரில் அவர் ரெயினிஷ் ஜெய்டுங் பத்ரிக்கை அலுவலகத்தில்  முதன்முதலில் மார்க்சை சந்திக்கிறார். மார்க்ஸ் பாயர் சகோதரர்களுக்கு எதிரான நிலை எடுத்த நேரமது. பாயர்களுடன் தொடர்பில் இருந்த எங்கெல்ஸ்க்கு மார்க்ஸ் குறித்த சந்தேகங்களை அவர்கள் ஏற்படுத்தி இருந்ததாக அப்போதைய சூழலில் எங்கெல்ஸ் தெரிவித்திருந்தார். ஆனால் அச்சந்திப்பும், தொடர் உரையாடல்களும் இருவருக்கும் வாழ்நாள் தோழமை எனும் பந்தத்தை உருவாக்கின. இங்கிலாந்தில் வளர்ந்துவரும் முதலாளித்துவம் தொழிலாளர்களை வஞ்சிக்கிறது என்கிற உணர்வில் சார்ட்டிஸ்ட் இயக்கம் உருவாகி வளரத்துவங்கியது. 1835-45 ஆண்டுகளில் பெரும் எதிர்ப்பு இயக்கங்கள் கட்டப்பட்டன. ஹெகலிய இடதுசாரிகள் தத்துவ உலகில் முன்னிலையில் இருந்தனர். அனைத்தும் மாறக்கூடியவை என்பது போராடுபவர்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. இருக்கிற அரசாங்கம் இலட்சிய அரசாங்கம் என்கிற ஹெகலின் குரலை ஏற்க முடியாவிட்டாலும் அவரின் இயக்கவியல் ஈர்ப்பை ஏற்படுத்தியது. 1840 களின் துவக்கத்தில் தான் தினம் மாலை ஹெகல் புத்தகங்களுடனேயே இருந்ததாக எங்கெல்ஸ் கூறினார். ஹெகல் சாலையில் நான் பயணித்துவருகிறேன் என தன் நண்பர்களுக்கு எழுதினார். கிறிஸ்துவ மதம் குறித்து விமர்சனபூர்வமாக வெளிவந்த எழுத்துக்கள் அவர்மீது தாக்கத்தை ஏற்படுத்தின. பைபிள் முரண்பாடுகளின் தொகுப்பு என்று நண்பர்களிடம் பேசலானார். தந்தைக்கு கவலை அதிகரித்தது. ஹம்பர்க் டெலிகிராப் என்கிற முற்போக்கு இலக்கிய பத்ரிக்கை ஒன்றில் எங்கெல்ஸ் எழுத துவங்குகிறார்.. சில ஜெர்மானிய கவிஞர்களை அவர் விமர்சித்து எழுதினார். ’இரவின் கொடுமை எவ்வளவு நாட்களுக்கு’, ’குருட்டு மனிதர்களாக இருட்டில் உழல்கிறோம்’ போன்ற கவிதை வரிகளையும் அவர் தந்தார். தனக்கு கவித்துவ நடை வாய்க்கவில்லை என்பதை அவர் உணராமல் இல்லை. உப்பர்டால் கடிதங்கள் என்கிற பதிவை அவர் புனைபெயரில் எழுதினார். பிரடெரிக் ஆஸ்பால்ட் என்கிற பெயரிலும் சில எழுதியதாக அறியமுடிகிறது. பிரஷ்யா அரசர் குறித்து கடும் விமர்சன பார்வை அவரிடம் வரத்துவங்கியது இளவரசர் என சொல்லிவரும் எவனுக்கும் மரணதண்டனை தரவேண்டும் என்கிற கோபமான கருத்தை அவர் வெளிப்படையாக அவர் கொண்டிருந்தார்.   II 1841ல்  எங்கெல்ஸ் ராணுவசேவைக்கு சென்றார்.  இராணுவகலை குறித்து அறியலானார். பெர்லினில் அவர் பல்கலைக்கழக வெளி மாணவர் என்கிற வகையில் நட்புவட்டம் கிடைத்தது. 1842களில் எட்கர் பாயருடன் இணைந்து நையாண்டிகவிதைகள் எழுதிவந்தார்.. அதே ஆண்டில் மார்க்ஸ் பொறுப்பில் வந்த ரெய்னிஷ் ஜெய்டுங்கில் எங்கெல்ஸ் கட்டுரை எழுதினார். ஷெல்லிங்- ஹெகல் ஒப்பீடு ஒன்றை செய்தார். ஹெகலின் முற்போக்கான அம்சங்களை அவர் உயர்த்திப்பிடித்தார். ஹெகலியர்களில் நாத்தீகம் என்பதை முதலில் பேசியவராக எங்கெல்சை குறிப்பிட்டு சொல்லமுடியும் என்கிறார் ஆய்வாளர் ஸ்டெப்பனோவா. ஷெல்லிங் குறித்து எங்கெல்ஸ் எழுதியதை ஆர்னால்ட் ரூகே பாராட்டினார். டாக்டர் பட்டம் பெற்ற ஒருவரால்தான் இவ்வளவு சிறப்பாக எழுதமுடியும் என எங்கெல்ஸ் பற்றி அறியாமலேயே உயர்வாக ரூகே எழுதினார் . எங்கெல்ஸ் நேர்மையாக நான் டாக்டர் பட்டம் பெற்றவனல்ல- ஆகவும் முடியாது என்று பதில் எழுதினார். தான்  வணிகன் என்கிற உண்மையை  தெரிவித்தார். தத்துவத்தை சுயமாக கற்று வருபவன்- அதன் ட்ராவல் ஏஜெண்ட் என்றும் சோதனை ஓட்டமாக எழுதிவருவதாகவும் நகைச்சுவயுடன் பதில் தந்தார். எங்கெல்ஸின் ராணுவபணிக்காலம் முடிந்து ஊர் வந்தவுடன் தந்தை மான்செஸ்டர் செல்ல பணித்தார். தந்தையார் பார்ட்னராக இருந்த டெக்ஸ்டைல்ஸ் பர்ம் வேலைக்கு அவர் செல்வதற்காக 1842 நவம்பரில் லண்டன் வந்தார். இங்கிலாந்து பிரஷ்யாவைவிட பலவிதத்தில் மாறுபட்டு இருப்பதை எங்கெல்ஸ் உணர்ந்தார். பாட்டாளிகள் தங்கி இருக்கும் பகுதிகளுக்கு செல்லத்துவங்கினார். அங்கு அவர்களின் மோசமான வாழ்க்கை குறித்து தீவிரமாக கற்றார். இங்கிலாந்தில் தொழிலாளிவர்க்க நிலை என்பதை அவர் எழுதினார். இவ்வாக்கத்தில் மனம் லயித்ததால் மத்தியதர வர்க்கத்தின் ஆசைகள் கேளிக்கைகளில் ஈடுபடவில்லை என எழுதுகிறார் எங்கெல்ஸ். இச்சூழலில்தான் மேரிபர்ன்ஸ் என்கிற அய்ரிஷ் பெண் தொழிலாளருடன் அவர் காதல் வயப்பட்டு வாழத்துவங்கினார். முற்போக்கு இலக்கிய கவிஞர்களின் நட்பு மான்செஸ்டரில் கிடைத்தது. சார்ட்டிஸ்ட் இயக்கத்தாருடன் நட்பு கொண்டு அவர்களது பத்ரிக்கைகளில் எழுத துவங்கினார். 1844ல்  நெசவாளர் போராட்டம் பற்றி எங்கெல்ஸ் எழுதினார். ராபர்ட் ஓவன் ஆதரவாளர்களுடன் தொடர்புகளை வளர்த்துக்கொண்டார். அவர்களின் பத்ரிக்கையான நியு மாரல் வேர்ல்ட் என்பதிலும் எழுதினார்.. ஜெர்மன் தத்துவஞானிகள் எனப்பட்ட காண்ட், பிச்டே, ஷெல்லிங், ஹெகல் குறித்த அறிமுகங்கங்களை அவர் தரலானார். பிரஞ்சு தத்துவம் குறித்தும் எழுதினார். பிப்ரவரி 1844ல் மார்க்ஸ்- ரூகே கொணர்ந்த பத்ரிக்கையிலும் எங்கெல்ஸ் எழுதினார். அவுட்லைன்ஸ் ஆப் பொலிட்டிகல் எகானமி அதில் வந்தது.  எங்கெல்ஸ் நன்கு பழக்கமாவதற்கு முன்பே மார்க்ஸ் இந்த கட்டுரையை பாராட்டி ’பிரில்லியண்ட் எஸ்ஸே’ என்றார். சமுக விஞ்ஞானம் என்கிற துறைக்கு எங்கெல்ஸ் இவ்வாறு நுழைந்தார் எனலாம். மார்க்ஸ்- எங்கெல்ஸ்க்கு முன்பாகவே ஜெர்மனியில் தீவிர சோசலிச, கம்யூனிச  கருத்துக்களை வில்ஹெல்ம் வைட்லிங், மோசஸ் ஹெஸ் பேசிவந்தனர். வர்த்தகம் முதலாளித்துவமயமாகி வருவதின் சமுக கேடுகள் பற்றியும் ஹெஸ் எழுதி வந்தார். லங்காஷ்யரில் ஊதிய வெட்டு எதிர்ப்பு இயக்கங்கள் நடந்தன. மான்செஸ்டர் மில்களிலும் தொழிலாளர் பிரச்சனைகள் பரவலாக எழுந்தன. பத்தாயிரம் தொழிலாளர்கள் மில்களை சூழ்ந்துகொண்டு தாக்கத்துவங்கினர். மார்க்சியத்தின் துவக்கப்புள்ளிகளை எங்கெல்ஸ் 1840களின் மத்தியில் வந்தடைகிறார். 1845ல் இங்கிலாந்தில் தொழிலாளிவர்க்கத்தின் நிலை என்கிற ஆக்கத்தை எழுதினார்.  ராபர்ட் ஓவன் தனது ஸ்காட்லாந்த் நியு லனார்க் பஞ்சாலையை தொழில் உறவின் மாதிரியாக மாற்றிட முயற்சித்து வந்தார். கூட்டுறவு கடைகளை அவர் நிறுவினார். சோசலிச அசோசியேஷன்களை நடத்தினார். அதில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்தனர். 1830களில் ஒவன் ஆதரவாளர்கள் செல்வாக்கு குறைந்து சார்ட்டிஸ்ட்கள் தொழிலாளர் மத்தியில் செல்வாக்குடன் இருந்தனர். அவர்களது ஆறு அம்ச கோரிக்கைகள் அனைவருக்கும் வாக்குரிமை, இரகசிய வாக்கெடுப்பு, ஆண்டு தேர்தல், சம எண்ணிக்கை வாக்குதொகுதிகள், சம்பளபட்டுவாடா முறைப்படுத்தல், சொத்து இருந்தால் மட்டுமே தேர்தலில் என்கிற நிபந்தனை நீக்கம் தொழிலாளர்களிடம் பரவியது. எங்கெல்ஸ் சார்ட்டிஸ்ட்கள் இயக்கத்தை ’வர்க்க இயக்கம்’, ’கூட்டு வர்க்க உணர்விற்கு’ துணையாகிறது என கருதினார்.. கார்லைல் தாக்கமும் அவரிடம் ஏற்பட்டது. மான்செஸ்டர் நகரம் குறித்து அவர் நண்பர்கள் எரிச்சல் அடைந்து பேசுவர். லண்டன் போல் அங்கு சமுக வாழ்க்கை, கேளிக்கை வசதிகள் இல்லை. ஊர் முழுதும் பஞ்சாலைத்தொழிலாளர், ஊரே அழுக்கு என  தெரிவிப்பர். எங்கெல்சின் முதல் காதல் அய்ரிஷ் பெண்மணி மேரிபர்ன்ஸ் வசம் ஏற்பட்டது. பஞ்சாலைத் தொழிலாளர் குடும்பம். முறையான கல்வி கிடையாது. எழுதவும் படிக்கவும் கொஞ்சம் மட்டுமே தெரிந்த நல்ல பெண்மணி என்கிற பதிவு நமக்கு கிடைக்கிறது. எங்கெல்ஸ் தந்தையின் பாக்டரியில் அப்பெண்மணி வேலை பார்த்தார்  என்கிற தகவலும்,  அவர் ஆரஞ்சு விற்றவர் என்று சிலரும் வேறுபட்ட தகவல்களை தருகின்றனர்.. அவர்கள் சேர்ந்து வாழத்துவங்கினர். . 1843-44 களில் இருவரும் சேர்ந்து சென்று பல தொழிலாளர் குடியிருப்புகளை பார்த்தனர். 1845 இங்கிலாந்தில் தொழிலாளர் நிலை புத்தகம் வருவதற்கு மேரி பர்ன்ஸ் பங்களிப்பை ஊகித்து உணரமுடியும். புருதான் புத்தகம் பற்றி ஓவன் பத்ரிக்கையான நியு மாரல் வேர்ல்டில் எங்கெல்ஸ் எழுதினார். தனியார் சொத்துரிமை குறித்த  விமர்சன பார்வை அவரிடம் மேம்படத்துவங்கியது. தொழிலாளர் பகுதிகளுக்கு கையில் நோட்டுபுத்தகத்துடன் சென்று மோசமான நிலைமைகளை குறிப்பெடுத்துக்கொண்டு வரும் பழக்கம் வைத்திருந்தார் எங்கெல்ஸ். அவுட்லைன்ஸ் ஆப் கிரிட்டிக் ஆப் பொலிடிகல் எகானமியில் எங்கெல்ஸ் அந்நியமாதல் கருத்தாக்கத்தை வெளிப்படுத்தினார். நடைமுறை செயல்தான் தேவைப்படுகிறது. சார்ட்டிசமும் சோசலிசமும் இணைந்து கம்யூனிசம் நோக்கிய பயணம் வரலாற்றில் தேவைப்படுகிறது. அமைதியான தீர்வு எனப் பேசுவதில் காலம் கடந்துவிட்டது. புரட்சி எழவேண்டும்  என எங்கெல்ஸ் எழுதினார். இளைஞனாக இருந்தபோதே மிக முக்கிய அம்சமான வன்முறை குறித்து அவர் தெளிவாக பேசியிருந்தார். எவ்வளவு அதிக தொழிலாளர்கள் கம்யூனிசத்தை கொள்கை என புரிந்து வளர்கிறார்களோ அந்த அளவு வன்முறை இரத்த களறி குறைவாகவே இருக்கும் என குறிப்பிட்டார் எங்கெல்ஸ். கம்யூனிச புரிதல் நோக்கி திரள் வெகுஜன இயக்கம் வளர்த்தெடுக்கப்படவேண்டும் என இதை நாம் எடுத்துக்கொள்ளலாம். கம்யூனிசம் என்பது மானுடத்திற்கான கேள்வியாகும். அது தொழிலாளர்களுக்கு மட்டுமான ஒன்றல்ல என எங்கெல்ஸ் விரிந்த பொருள் தந்து எழுதினார். எங்கெல்ஸ் தன்னை ஹெகல்நீக்கம் செய்துகொண்டுவிட்டார் என த்ரிஸ்ட்ராம் குறிப்பிடுகிறார். அவரின் இங்கிலாந்தில் தொழிலாளர் நிலையும், அவுட்லைன் ஆக்கமும் கம்யூனிச கொள்கைக்கு மிக முக்கிய பங்களிப்பை தந்துள்ளதாகவும் த்ரிஸ்ட்ராம் ஹண்ட் தெரிவிக்கிறார்.   ’கபே டெ லா ரெஜென்ஸ்’ ஒருகாலத்தில் வால்டேர், நெப்போலியன், பெஞ்சமின் பிராங்க்லின் போன்றோர் வந்து போன பார்கிளப். அங்குதான் எங்கெல்ஸ் மார்க்ஸ், மற்ற ஹெகலியர்கள் பாரிசில் சந்திப்புகளை வைத்திருந்தனர். ஜென்னியுடன் மார்க்ஸ் 1843ல் பாரிஸ் வந்தார்.. இருவரும் இணைந்து பாயரை விமர்சித்து புனித குடும்பம் எழுதினர். பின்னர் ஊர் திரும்பி அங்கு கம்யூனிச விளக்க கூட்டங்களை எங்கெல்ஸ் நடத்திக்கொண்டிருந்தார். உளவுத்துறை அறிக்கை சென்றது. எல்பெர்ஃபெல்ட்- பர்மன் பக்கத்தில் கம்யூனிஸ்ட் கூட்டங்களுக்கு தடை வந்தது. எங்கெல்சின் தந்தைக்கு கடுமையான வருத்தம் ஏற்பட்டது. மார்க்ஸ் பெல்ஜியத்தில் இருப்பதை அறிந்து எங்கெல்ஸ் அங்கு சென்றார். இருவரும் சேர்ந்து மான்செஸ்டர் சென்றனர். அங்கு நூலகத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்டனர்.  பூர்ஷ்வா உற்பத்திமுறை, பொருளாதார ஏற்பாடுகள் குறித்த விமர்சனங்கள் எங்கெல்ஸ் எழுத்தில் காணப்பட்டன. மால்த்யூஸ், கார்லைல் ஆகியவர்கள் குறித்தும் அவர் விமர்சன் பார்வை கொள்ளத்துவங்கினார். பொருள்முதல்வாதம் நோக்கி நகர்ந்து தனது கம்யூனிச பார்வையை பலப்படுத்திக் கொண்டிருந்தார் எங்கெல்ஸ். இங்கிலாந்தின் தொழிலாளர் போராட்டங்களின் வர்க்கத்தன்மைகளை பேச ஆரம்பித்தார். டோரி கட்சியினரை பிரபுத்துவாதிகள், சீர்குலைவாளர்கள் போன்ற விமர்சனங்களால் தாக்கினார். லிபரல் கட்சியை வியாபாரி என்றார். தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லாததை கண்டித்தார். இங்கிலாந்தை சொத்துதான் ஆள்கிறது என்றார். மார்க்சுடன் உரையாடிய பின்னர்தான் தனது இங்கிலாந்தில் தொழிலாளர் நிலை புத்தகத்தை லீப்சிக்கில் வெளியிட்டார் எங்கெல்ஸ். முதலாளித்துவத்தை வீழ்த்த பாட்டாளிகளின் அமைப்புரீதியான திரட்சி அவசியம் என்பதை எங்கெல்ஸ் வலியுறுத்தினார். அப்போது அவருக்கு சார்ட்டிஸ்ட் இயக்கத்தார் மீது நம்பிக்கை அதிகம் இருந்தது. சோசலிசம்- சார்ட்டிசம் இணைப்போம் என பேசிவந்தார். III 1844ல் பாரிசில் மார்க்சை சந்தித்து உரையாடினார் எங்கெல்ஸ். கொள்கைபூர்வமாக இருவருக்கும் ஒத்தநிலைப்படுகள் இருப்பதை உணர்ந்தனர். தங்கள் வேலைகளை அதற்கேற்ப இசைவுடன் உருவாக்கிக்கொண்டனர். மார்க்ஸ் எங்கெல்ஸ்  இணைந்து புருனோ பாயரை விமர்சித்து தங்களது புனிதகுடும்பம் என்கிற புகழ்வாய்ந்த படைப்பை எழுதினர். வெகுமக்கள்தான் வரலாற்றை உருவாக்குபவர்கள் என இருவரும் உரக்க அறிவித்தனர். பாயர்பாக்கின் தாக்கம் அவர்களுக்கு இருந்தது. பாட்டாளிகளின் விடுதலை இலக்கு குறித்து பேசினர். தனது கம்யூனிச கருத்துக்களால் தந்தையிடமிருந்து தான் தொல்லைக்கு ஆளாவதாக எங்கெல்ஸ் மார்க்ஸிற்கு 1845 மார்ச்சில் கடிதம் எழுதுகிறார். வீட்டிலும் வெளியிலும் ஏதும் செய்யமுடியவில்லை என்கிற தனது சோர்வை வெளிப்படுத்தினார். பின்னர் இருவரும் பிரஸ்ஸல்சில் சந்திக்கின்றனர். பாயர்பாக் தீசிஸ் என்கிற ஆழமான சிறிய படைப்பை மார்க்ஸ் எழுதிக்கொண்டிருந்தார். உலகை விளக்குவதல்ல, மாற்றுவதே வேலை என்கிற புகழ் வாய்ந்த மார்க்சின் வாசகம் அதில்தான் எழுதப்பட்டது. இருவரும் சேர்ந்து பிரிட்டன் சென்றனர், மான்செஸ்டரில் தங்கினர். கார்ல் ஷாப்பர், பாயர், ஜோசப் மோல் ஆகியவர்களுடன் உரையாடினர். ஜனநாயகவாதிகளின் சர்வதேச அமைப்பு ஒன்று தேவை என்கிற முடிவிற்கு வந்தனர். பாட்டாளிவர்க்க சர்வதேசியம் எனப் பொருள்தரக்கூடிய கட்டுரை ஒன்றை பெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ் என்பதில் எங்கெல்ஸ் எழுதினார். அனைத்து நாடுகளின் பாட்டாளிகளுக்கும்  இலக்கு ஒன்றே, ஒரே எதிரி, ஒரே போராட்டம் என்றார் எங்கெல்ஸ். உழைப்பவர்களுக்கு குறுகிய தேசிய வெறி இல்லை. பல நாடுகளின் சகோதரத்துவத்தை அவர்களால் உணரமுடியும் என்றார். மார்க்ஸ் எங்கெல்ஸ் இணைந்து ஜெர்மன் தத்துவம் எழுதினர். ஆனால் பிரசுரிக்கவில்லை. 1932ல்தான் அது வாசகர்களுக்கு கிடைத்தது. அவர்கள் வர்க்க போரட்டம் என்பதை அதில் வலியுறுத்தியிருந்தனர். புரட்சியின் அவசியத்தை பேசியிருந்தனர். தங்களது பார்வையை விசாலப்படுத்திக்கொள்ளவே நாங்கள் ஜெர்மன் தத்துவம் எழுதிப்பார்த்துக்கொண்டோம். சமுக பொருளாதார மாற்றங்கள், வர்க்கப்போராட்டம் வரலாற்றின் உந்துசக்தி, கம்யூனிச சமுகம் என்பதை பற்றிய தங்கள் பார்வையை மார்க்ஸ் - எங்கெல்ஸ் அவ்வாக்கம் மூலம் மேம்படுத்திக்கொண்டனர். எங்களுக்கு புரிதல் கிடைத்துள்ளது, அந்த ஜெர்மன் தத்துவ ஏடுகளை எலிகள் சாப்பிடட்டும் என்றனர் நண்பர்கள். 1845 கோடையில் அவர்கள் பிரஸ்ஸல்ஸ் திரும்பினர். அருகாமை வீடுகளில் தங்கினர். மாலை நேரம் முழுதும் பீர் கிளப்களில் மோசஸ் ஹெஸ், ஜார்ஜ் வீர்த், பெரெயில்கிராத், பகுனின், எங்கெல்ஸ், மார்க்ஸ் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். மேரிபர்ன்ஸ் உடன் திருமணம் இல்லாமல் எங்கெல்ஸ் வாழ்வது  சில சோசலிஸ்ட்களுக்கு பிடிக்காமல் இருந்தது. ஆனால் விமர்சனங்களுக்கு அஞ்சாமல் அவர்கள் வட்டத்திற்கு எங்கெல்ஸ் மேரியை அழைத்து வந்துள்ளார். ஜெர்மன் தொழிலாளர் கல்வி மையம் நிறுவிய ஷாப்பர், மோல், ஹெயின்ரிச் பாயர் ஆகியோருடன் எங்கெல்ஸ் நட்பு ஏற்படுத்திக்கொண்டார். அவர்களுக்கு பிளாங்கியிஸ்ட்கள் தொடர்பு இருந்தது. 1843வரை எங்கெல்ஸ் லீகில் சேரவில்லை. அவர்களுடன் 1845ல் மார்க்ஸ் விவாதித்துக் கொண்டிருந்தார். பிரஸ்ஸல்ஸில் கம்யூனிஸ்ட் கரஸ்பாண்டன்ஸ் கமிட்டி ஒன்றை மார்க்ஸ் ஏற்படுத்தியிருந்தார். 1845-48 ஆண்டுகளில் மார்க்ஸ்  எங்கெல்ஸ் இருவரும் பூர்ஷ்வா அரசாங்கத்தை உருவாக்குவது, தாராள ஜனநாயகத்தை ஏற்படுத்துவது, அவசியம் எனில் புரட்சி வன்முறை மூலம் கூட இதை சாதிக்கலாம் என்கிற கருத்தில் உறுதியாக இருந்ததாக ஹண்ட் தெரிவிக்கிறார்.   மார்க்ஸ் பிரஸ்ஸல்ஸ் மையம் அமைத்து செயல்பட்டுக்கொண்டிருந்தார். அங்கு வில்லியம் உல்ப், ஜென்னியின் சகோதரர் எட்கர் ஆகியோர் உடன் இருந்தனர். ஜனவரி 1846ல் கம்யூனிஸ்ட் கரெஸ்பண்டான்ஸ் கமிட்டி மூலம் பல நாடுகளின் சோசலிச புரட்சியாளர்களின் தொடர்புகளை மார்க்ஸ் உருவாக்கினார். லண்டனில் லீக், சார்ட்டிஸ்ட்கள் தொடர்பும் இருந்தது. சிதறிகிடக்கும் ஜெர்மன் சோசலிஸ்ட்களை திரட்டுவது, லண்டன், பிரஞ்சு குழுக்களுடன் உறவுகள் என முடிவெடுத்தனர். பிரான்சில் ஆகஸ்ட் பிளாங்கியின் இயக்கம் தோற்றது. 1839ல் பலர் கைதாகினர். 1840ல் லண்டன் தொழிலாளர் சங்கம் என்பதை பிரான்சிலிருந்து சென்ற நண்பர்கள் துவங்கினர். வில்ஹெல் வைட்லிங் தையற்கலைஞர். கம்யூனிச கருத்துக்களுடன் ஆயுதம் தாங்கிய புரட்சி என பேசிவந்தவர். வைட்லிங்  தண்டனை பெற்ற 40 ஆயிரம் பேர்களை கொண்டு கம்யூனிச புரட்சி என வலியுறுத்தி வந்ததை எங்கெல்ஸ் கடுமையாக கிண்டலடித்து விமர்சித்தார். வைட்லிங் பாக்கெட்டில் தயாராக சோசலிசம் உட்கார்ந்துள்ளது . அதை நாம் யாரோ திருடிக்கொண்டு போய்விடப்போகிறோம் என அம்மனிதர் அஞ்சுவது வேடிக்கை என எங்கெல்ஸ் விமர்சித்தார். கம்யூனிசம் என்பது இனி கட்டுக்கதையாக இருக்கமுடியாது. இலட்சிய சமூகம் என்கிற கற்பனையாக இருக்கமுடியாது. தொழிலாளர் போராட்டத்தின் நிலை சூழல் குறித்த ஒன்றாகும் என எங்கெல்ஸ் பதில் உரைத்தார்.. புருதானின் வறுமையின் தத்துவத்தை விமர்சித்து மார்க்ஸ் தத்துவத்தின் வறுமை என்பதை கொணர்ந்தார். எங்கெல்ஸ் பல குழுக்களை சந்தித்து தனியார் சொத்துரிமை ஒழித்தல், பாட்டாளி வர்க்கநலன், புரட்சி போன்ற பொது கருத்தாங்களை ஏற்க வைத்துக்கொண்டிருந்தார். 1847ல் லீகில் சேரவேண்டி ஜோசப் மால் மார்க்சுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். லீக் காங்கிரஸ் 1847 ஜூனில் நடந்தது. மார்க்ஸ் பங்கேற்க இயலவில்லை. எங்கெல்ஸ் பாரிஸ் பிரதிநிதியாக பங்கேற்றார். எங்கெல்ஸ் கேள்வி- பதில் முறையில் ஆவணம் ஒன்றை தயாரித்து எடுத்து வந்திருந்தார். லீகை கம்யூனிஸ்ட் லீக் என பெயரிட்டு அழைப்பது என்பதும், அனைத்து நாடுகளின் பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள் என்கிற முழக்கமும் ஏற்கப்பட்டன. பிரஸ்ஸல்சில் மார்க்ஸ் தலைமையில் கம்யூனிஸ்ட் லீக் மாவட்டம் ஒன்று செயல்பட துவங்கியது. அடுத்த காங்கிரஸிற்கு முன்னர் சந்தித்து பேசவேண்டும் என்கிற கடிதம் ஒன்றை எங்கெல்ஸ் மார்க்சிற்கு நவம்பர் 23, 1847ல் எழுதுகிறார். முழுமையாக நமது கருத்துப்படி மாநாடு அமையவேண்டும் என்கிற விருப்பம் அதில் தெரிவிக்கப்பட்டது. நமது ஆவணத்தை கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ என அழைக்கலாம் என்றார் எங்கெல்ஸ். என்னிடம் உள்ளவற்றை எடுத்துவருகிறேன் சரிபார்த்துக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். எங்கெல்சின் நகல் கம்யூனிசத்தின் அடிப்படை கொள்கைகள் (principles of communism) என்றிருந்தது. அதில் அவர் மிக முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அமைதியான வழிகளில் தனியார் சொத்துரிமையை அழிக்கமுடியுமா? வாய்ப்பிருக்கலாம் அது நம் விருப்பம் கூட என்கிற பதிலும் அதில் இருந்தது. ஆனால் பாட்டாளிகள் ஒடுக்கப்படுவதுதான் அனுபவமாக இருக்கிறது. புரட்சியை காப்பாற்றவேண்டாமா என்கிற பதில் கேள்வியையும் அவர் எழுப்பினார். அதே போல் ஒரு நாட்டில் சோசலிசம் வெல்லுமா என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார். இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனியில் ஒரே நேரத்தில் புரட்சி  எழலாம் என்கிற பதிலை வைத்திருந்தார். இந்த கேள்விகள் அவர்கள் பின்னர் எழுதப்போகும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் இடம் பெறவில்லை.   கம்யூனிஸ்ட்லீகின் இரண்டாவது காங்கிரஸ் நவம்பர் 9- டிசம்பர் 8 வரை 1847ல் லண்டனில் நடந்தது. பிரஸ்ஸல்ஸ் சார்பில் மார்க்ஸ், பாரிஸ் சார்பில் எங்கெல்ஸ் பங்கேற்றனர். பூர்ஷ்வா ஆட்சியை தூக்கி எறிந்து பாட்டாளிகளின் ஆட்சி   என்பது  மார்க்ஸ் கூறியபடி ஏற்கப்படுகிறது. வெளிப்படையான போராட்டம்- புரட்சி என்பதுதான் அவசியம், சதி கவிழ்ப்பல்ல என்ற நிலையை மார்க்ஸ்- எங்கெல்ஸ் எடுத்தனர். 1848ல் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியின்படி பிப்ரவரியில் கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதப்பட்டு வெளியானது. 1848 மார்ச் 3ல் மார்க்ஸ் பிரஸ்ஸல்சிலிருந்து 24 மணிநேரத்தில் வெளியேற  அரசாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜெர்மனிக்கு வலுவான பேரரசு முறையா, ஒன்றுபட்ட ஜனநாயக குடியரசா எது தேவை என்கிற விவாதம் பெருகியது. மார்க்ஸ்- எங்கெல்ஸ் பாட்டாளிவர்க்க எழுச்சி மூலம் ஜனநாயக ஜெர்மனி என்பதை  பேசிவந்தனர்.  அவர்கள் ஜெர்மன் கம்யூனிஸ்ட்களுக்கு கோரிக்கைகள் என்கிற நகலையும் தயாரித்தனர். பிரிக்கமுடியாத ஒற்றை ஜெர்மானிய குடியரசு என முழங்கினர். 21 வயது நிறைந்த அனைவருக்கும் வாக்குரிமை, நில உடைமை ஒழிப்பு, விவசாயிகளை சுமைகளிலிருந்து விடுவித்தல், அரச குடும்ப சொத்துக்கள் பறிமுதல், தனியார் வங்கிகளை ஒழித்து அரசு வங்கிகள், தாது சுரங்கம்- குவாரிகள் அரசு உடைமை, தகவல் போக்குவரத்து அரசுடைமை, அனைவருக்கும் கல்வி போன்றவை கோரிக்கைகள். பாட்டளிவர்க்க புரட்சிக்கு இவை முகவுரை என்றனர். கலோனை மையமாக வைத்து அவர்கள் செயல்பட்டனர். அங்கு ஜனநாயக சொசைட்டியினருடன் சேர்ந்து மார்க்ஸ் பணியாற்றிவந்தார். புதிய ரெயினிஷ் ஜெய்டுங்கை 1848ல் கடும் போராட்டங்களுக்கு பின்னர் அவர்கள் கொணர்ந்தனர். எங்கெல்ஸ் நடமாடும் என்சைக்ளோபீடியா என அழைக்கப்பட்டார். பத்ரிக்கைக்காக பெரும் நேரம் ஒதுக்கி செயல்பட்டார். கொள்கை பிரச்சனையெனில் இறுதியில் மார்க்சின் சர்வாதிகாரமே வெல்லும் என எங்கெல்ஸ் ஆசிரியர் குழு விவாத பதிவுதனை செய்கிறார். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் எழுச்சி குறித்து எங்கெல்ஸ் எழுதினார். அப்பகுதியில் காட்சால்க் எனும் தலைவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. 1848ல் பிரான்ஸ் புரட்சியாளர்களின் தோல்வி புரட்சிகர இயக்கங்களுக்கு பல பகுதிகளிலும் பின்னடைவை தந்தது. பாரிஸ் கிளர்ச்சி குறித்து எங்கெல்ஸ் எழுதினார். உரிங்டன் எனும் இடத்தில் ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி பொதுக்கூட்டம் ஒன்றிற்கு செப்டம்பர் 17, 1848ல் ஏற்படு செய்யப்பட்டது. மார்க்ஸ் பங்கேற்கவில்லை. எங்கெல்ஸ் ஜனநாயக சோசலிச செங்குடியரசு என உரையாற்றினார். இக்கூட்டத்தில் பங்கேற்று பிரஷ்ய அரசிற்கு எதிராக பேசிய ஷாப்பர் போன்றவர்கள் கைதாகினர். எங்கெல்ஸ் தப்பி சென்றார். பாரிஸ் வழியே 15 நாட்கள் நடந்தே ஜெனிவா சென்றார். அப்போது அவருக்கு வயது 28. IV ரெயினிஷ் பத்ரிக்கையில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் தனது இராணுவ அறிவு குறித்த அம்சங்களை எங்கெல்ஸ் பரிமாறிக்கொண்டார். ஆயுதப்போராட்டம் குறித்து எழுதிய கட்டுரைகளால் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டனர். பிராங்பர்ட்டை கைப்பற்ற ராணுவத்திட்டம் என எங்கெல்ஸ் எழுதியவையும் பிரச்சனைக்குரியதானது. ரைன் பிரதேச எழுச்சியில் 500க்கும் மேற்பட்டவர்க்கு ஆயுத பயிற்சி முகாமும் எங்கெல்ஸ் உதவியுடன் நடந்ததாக அறியமுடிகிறது. கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆட்படாமல் தன்னை சோசலிஸ்ட் தொழிலாளர்கள்தான்  காத்தனர் என எங்கெல்ஸ் பதிவு செய்துள்ளார். பத்ரிக்கையின் எடிட்டோரியல் அலுவலகத்தில் அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்த செய்தியும் வெளியானது. நிலைமைகள் மோசமாகி மே 19, 1849 உடன் பத்ரிக்கை நிறுத்தப்பட்டது. மார்க்ஸ் பாரிஸ் செல்ல நேர்ந்தது பிரஷ்யாவில் முடியாட்சி பலவீனப்பட்ட நிலை உருவானது. மார்க்ஸ் எங்கெல்ஸ் நிலைமைகள் முற்றட்டும் என கருதினர். கோட்ஸால்க் எழுச்சி ஒடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 1848 தேர்தலில் சோசலிஸ்ட்கள் 876க்கு 100 தொகுதிகளைத்தான் கைப்பற்றமுடிந்தது. கன்சர்வேடிவ்களின் பிடி மீண்டும் ஓங்கியது. 1849 மே மாதம் எல்பெர்பீல்ட்டில் ஆயுத எழுச்சி ஏற்பட்டு மேயர் ஓடவேண்டிவந்தது. எங்கெல்ஸ் தலைமை என்றனர்.  ரெட் ரிபப்ளிக் என்றனர் . ஹாஸ்பீலர் பாலத்தில் ஆயுதங்தாங்கிய குழுவுடன் மகன் நிற்கிறான் என்கிற செய்தி எங்கெல்ஸ் தந்தையை எட்டியது. குழுவில் சிலர் எங்கெல்ஸ் கனவு அதிகமாக காண்கிறார் என விமர்சித்தனர். செங்கொடி ஏற்றியிருக்கக்கூடாது என்ற விமர்சனம் எழுந்தது. நிலைமை விவரீதமாகியதால், கமிட்டி கூடி எங்கெல்ஸ் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றாலும் அவரது தொடர் இருப்பு இயக்கத்திற்கு நல்லதல்ல என சொல்லி அவர் வெளியேற வேண்டுகோள் விடப்பட்டது. சில தொழிலாளர்கள் எங்கள் உயிரைவிட்டு எங்கெல்சை காப்போம் என முன்நிற்காமல் இல்லை. சுவிட்ஜர்லாந்த் சென்றார் எங்கெல்ஸ். அங்கு மார்க்சின் அறிவுரைப்படி  ஜெர்மன் இம்பீரியல் அரசியல் அமைப்பு சட்டம் பரப்புரை என்பதன் அனுபவத்தை எழுதினார்.. பாரிசிலிருந்து மார்க்ஸ் வெளியேற்றப்பட்டதால் ஆகஸ்ட் 1849ல் லண்டன் செல்வதாக எங்கெல்ஸ்க்கு அவர் செய்தி அனுப்பினார். எங்கெல்ஸையும் லண்டன் வர வேண்டுகோள் விடுத்தார். எங்கெல்ஸ் சுவிட்ஜர்லாந்திலிருந்து இத்தாலி வழியாக இங்கிலாந்து வந்து சேர்ந்தார். 1849 நவம்பரில் எங்கெல்ஸ் வந்தவுடன் லண்டன் கம்யூனிஸ்ட் லீகை சீரமைத்தனர். பல புரட்சிகர குழுக்களுடன் தொடர்புகளை வலுப்படுத்திக்கொண்டார் எங்கெல்ஸ். 1850ல் ஷாப்பருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இக்காலத்தில் பிரான்சில் வர்க்கப்போராட்டங்கள், 18வது புருமர் போன்றவற்றை மார்க்ஸ் எழுதினார். எங்கெல்ஸ் ஜெர்மன் இம்பீரியல் சட்டம், விவசாய போர்கள், புரட்சி- எதிர்புரட்சி குறித்து எழுதினார். இக்காலத்தில்தான் அவர்களிடம் மார்க்சியம் என சொல்லத்தகுந்த ஒருங்கிணைந்த கோட்பாட்டாக்கங்கள் உருவானதாக ஸ்டெப்பானோவா தெரிவிக்கிறார். 1848ல் பாரிசில் 3.5 லட்சம் தொழிலாளர் இருந்தனர்.  இதில் 20 சதம் ஜெர்மானியர்கள். அவர்கள் தங்கிய   இடங்களில் ஒரு பிரஞ்சு வார்த்தைக் கூட பேசவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஜெர்மானியர்கள் மட்டும் என்கிற அளவில் சேர்ந்து தங்கியிருந்தனர். வந்தேறி ஜெர்மானியர்கள் குறித்து பிரஷ்யா உளவு பார்த்துக்கொண்டேயிருந்தது. மார்க்ஸ் பாரிசிலிருந்து பிரான்ஸ் அரசால் வெளியேற்றப்பட பிரஷ்ய அரசின் நெருக்குதல் காரணமாக இருந்தது. பாரிசில் சோசலிஸ்ட்கள், புரட்சிகரவாதிகளுடன் எங்கெல்ஸ் விவாதிப்பது, கிளப்களுக்கு செல்வது, பல பெண்களுடன் செக்ஸ் உறவுகொள்வது என்பதை  வழக்கமாக வைத்திருந்தார் என ஹண்ட் தனது புத்தகத்தில் பதிவிடுகிறார். எங்கெல்ஸை பாரிஸ் போலீஸ் கண்காணித்து வந்ததையும் குறிப்பிடுகிறார். செக்ஸ்க்கு செலவிடுவது குறித்து அவர் குற்றவுணர்வற்றவராக இருந்தார் என்கிற செய்தியும் நமக்கு தரப்படுகிறது. எனக்கு 5000 பிராங்க் வருவாய் வந்தால் நான் எந்த வேலையும் செய்யவேண்டியதில்லை. பெண்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை இற்றுவீழும்வரை கழிக்கமுடியும். பிரஞ்சு பெண்கள் இல்லாத வாழ்வு என்ன வாழ்வு. பிரஞ்சு உழைக்கும் பெண்கள் இருக்கும்வரை நல்லதுதான் என்கிற தனது மனநிலையை என்று அவர் மார்க்சிற்கு எழுதினார்.  மார்க்ஸ் எங்கெல்ஸ் தோழராக இருந்த மோசஸ் ஹெஸ் என்பவரின் துணைவிக்கும் எங்கெல்ஸ்க்கும் உறவு என்கிற சர்ச்சையும் ஏற்பட்டு அவர்கள் நட்பு முறிந்ததாகவும் செய்தி தரப்படுகிறது. எங்கெல்ஸ்க்கு ஒருதாரமணம், பூர்ஷ்வா மணவாழ்க்கை நெறிகள் மீது நம்பிக்கையில்லாமல் இருந்தது.  லீகில் எங்கெல்ஸ்க்கு மாற்றாக மோசஸ்ஹெஸ் குறிப்பும் வந்தது, மார்க்ஸ் உடன் எங்கெல்ஸ் கலந்து பேசினார். அக்டோபர் 1847ல் ’பிரின்ஸ்பில்ஸ் ஆப் கம்யூனிசம்’ என்கிற நகலை எழுதினார் எங்கெல்ஸ். கம்யூனிசம் தனி சொத்துரிமையை ஒழிக்கிறது. சமூகரீதியாக குழந்தைகள் கற்பிக்கப்படுவர். திருமணம் என இதுவரை கருதப்படும் முறையை ஒழிக்கிறது. சொத்துரிமை மூலம் கணவரை நம்பி வாழவேண்டிய மனைவி, பெற்றோர்களை நம்பிய குழந்தைகள் என்பதை ஒழிக்கிறது என அதில் எங்கெல்ஸ் குறிப்பிட்டிருந்தார், 1914வரை ’பிரின்ஸ்பில்ஸ் ஆப் கம்யூனிசம்’ வெளியாகவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸின் வரலாற்று சிறப்புமிக்க கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு அது அடிப்படையாக இருந்தது எனலாம். 1850ல் ரெட் ரிபப்ளிகனில் கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பு வந்ததை சில நூறு உறுப்பினர்கள் படித்திருக்கலாம். ஆனால் அப்பிரசுரம் அன்றைய சூழலில் பெரிய அளவில் விற்பனையாகவில்லை. இங்கிலாந்து தொழிலாளர்களிடம்  செல்வாக்கும் பெறவில்லை. பிரான்சில் முடியாட்சி தகர்ந்தது குடியரசு நீடுழி வாழட்டும் (viva la republique)  என எங்கெல்ஸ் 1848 மார்ச்சில் மகிழ்ச்சியுடன் எழுதினார். பிரஞ்சு எழுச்சி அய்ரோப்பாவை பற்றும் என அவர் கருதினார்.  பிரான்ஸ் அரசர் லூயி தப்பி ஓடவேண்டியதானது. பிரஸ்ஸல்சில் பிரான்ஸ் எழுச்சி பரவாமல் தடுக்க அந்நாட்டு அரசர் நடவடிக்கை எடுத்தார்.            V லண்டனில் குடியேறிய மார்க்ஸ் அங்கிருந்து தனது பணிகளை தொடர்ந்தார். எங்கெல்ஸ் தந்தையின் ஆலைப்பணிக்காக மான்செஸ்டர் சென்றார். தாங்கள் வெளியேறி பருத்தி பிரபுவாக ஆவீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி   என ஜென்னி மார்க்ஸ் எங்கெல்ஸ்க்கு எழுதினார். 1850-70ல் மார்க்ஸ் குடும்பத்தை காத்திட நிதி உதவி செய்வதற்கு மான்செஸ்டர் காலம் அவருக்கு அமைந்தது.  மார்க்சின் ’செகண்ட் பிடில் நிலையை’ அவர் மனம் உவந்து ஏற்றார். புரட்சிகர குழுக்களின் அனுபவங்கள் பற்றி எங்கெல்ஸ் வருத்தமான பதிவை தந்தார். பல வண்ண கருத்துக்களில் அமைப்புகள் உருவாவதும் அவை மண்மூடிப்போவதும் பற்றி பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. குற்றசாட்டுகள் குவிந்து போய் பெரும் சச்சரவுகளில் முடிவதும் ஏமாற்றம் அளிக்கிறது என்கிற வகையில் அப்பதிவு இருந்தது. கம்யூனிஸ்ட் லீகில் கருத்து வேறுபாடுகள்  ஏற்பட்டது. ஷாப்பர் முதலானவர்களின் அவசரத்தை tin pot terrorism and a premature threat tothe communist cause  என மார்க்ஸ் எங்கெல்ஸ் கருதினர். அரசியல் தனிமைவாசம் என்பது எங்கெல்சை உறுத்தியது. எங்களுக்கு எக்கட்சியின் ஆதரவோ விளம்பரமோ தேவையில்லை என அவர் கோபப்பட்டார். கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மீதான கலோன் வழக்கு ஒன்று 1850 அக்டோபர்- நவம்பரில் நடந்தது. நவம்பர் 17, 1850ல் கம்யூனிஸ்ட் லீக் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் முடிவிற்கு வந்தன. 1850-70 ஆகிய 20 ஆண்டுகள் எங்கெல்ஸ் மான்செஸ்டரில், மார்க்ஸ் லண்டனில் இருந்தாலும் அவர்கள் நெருங்கிய தொடர்புகளை, விவாதங்களை வைத்திருந்தனர். 1851ல் மார்க்ஸ் நியுயார்க் ட்ரிப்யூனுக்கு ஆரம்பத்தில் எழுதிய பல கட்டுரைகளை எங்கெல்ஸ்தான் மொழியாக்கம் செய்து அனுப்பிவந்தார். பின்னர் மார்க்ஸ் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று தானே எழுத துவங்கினார். மார்க்சின் கட்டுரைகளில் மூன்றில் ஒருபகுதி எங்கெல்ஸால் முயற்சிக்கப்பட்டவை. எங்கெல்ஸ் இராணுவம், போர்க்கலை குறித்து ஏராளம் எழுதிவந்தார். இதனால் மார்க்ஸ் குடும்பத்தில் அவரது பெண்கள் அவரை ’ஜெனரல்’ என அழைத்தனர். இந்தியா குறித்தும், சீனா குறித்தும் கூட எங்கெல்ஸ் எழுதியுள்ளார். 1860களின் துவக்கத்தில் இராணுவ இதழுக்கு எழுதக்கூடிய அளவு போர்முறைகள் பற்றி அவர் கற்றிருந்தார். புரட்சிகரவாதிகளின் முதல் இராணுவ கொள்கையாளர் என அவர் கருதப்பட்டார். எங்கெல்ஸால் 12 மொழிகளில் எழுதமுடிந்தது. தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கூட ஒரே கடிதத்தில் பல மொழிகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கும் வகையில் எழுதினார். அவரால் 20 மொழிகளில் படிக்க முடிந்தது. இந்த மொழிப்பயிற்சி பல நாடுகளின் புரட்சியாளர்களை ஒருங்கிணைக்க உதவியாக இருந்தது. அதே நேரத்தில் புரட்சியாளர்கள் இயக்கத்தில் ஏற்படும் கருத்துவேறுபாடுகளை திறம்பட கையாளவும் அவரால் முடிந்தது. லாசேல் போன்றவர்கள் பிஸ்மார்க்குடன் நெருங்கியதை மார்க்ஸ்- எங்கெல்ஸ் கண்டனர். வாக்குரிமை என்பதுடன் அவர் நிறுத்திக்கொள்கிறார்- சமரசம் ஆகிறார் என்கிற கருத்து இருவருக்கும் ஏற்பட்டது. 1864ல் லாசேல் மறைந்தாலும் அவரது தொண்டர்கள் மத்தியில் தொடர்ந்த செல்வாக்கு எதிர்த்து போராட வேண்டியிருந்தது. முதலாவது அகிலம் 1864ல் லண்டனில் அமைக்கப்பட்டது. அதன் துவக்க நிகழ்வு செப் 28 அன்று நடந்தது. மார்க்ஸ் அழைக்கப்பட்டிருந்தார். லஸ்ஸேல் எதிர்த்த போராட்டத்தில் நின்ற லீப்னெக்ட், ஆகஸ்ட் பெபல் இருவரும் ஜெர்மன் நாடாளுமன்றம் சென்றனர். ஜெர்மன் தொழிலாளி வர்க்கத்தின் மூலவர் மார்க்சா- லஸ்ஸேலா என்கிற விவாதத்தில் மார்க்சின் மகத்தான பங்களிப்பை எங்கெல்ஸ் எடுத்துக்காட்டி நிறுவினார். 1867ல் கடுமையான 20 ஆண்டுகளின் உழைப்பிற்கு பின்னர் மார்க்சின் மகத்தான படைப்பான மூலதனம் வெளிவந்தது. அகிலம் இப்படைப்பை பாராட்டி தீர்மானம் போட்டது. எங்கெல்சின் தியாகம் இல்லையெனில் மூலதனம் இல்லை என் மார்க்ஸ் வெளிப்படையாக எங்கெல்ஸ் குறித்த பெருமிதத்தை பதிவு செய்தார். முதலாளித்துவ தீங்குகள், உற்பத்தி அராஜகம், பொருளாதார நெருக்கடிகள், விவசாயம் அழிவு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மார்க்ஸ் விரிவாக பேசினார். உபரிமதிப்பு என்கிற கருத்தாக்கத்தை உலகிற்கு அவர் அளித்தார். மூலதன சுரண்டலின் இரகசிய முடிச்சை மார்க்ஸ் அவிழ்த்ததாக அவரின் நெருங்கிய சகாக்கள் பெருமிதம் கொண்டனர். முதலாளித்தும் வீழ்த்தப்படக்கூடிய ஒன்றுதான் - பாட்டாளிவர்க்கம் அதை சாதிக்க இயலும் என்கிற நம்பிக்கை முதன்முதலாக முன்மொழியப்பட்டது. பாட்டாளிகளின் பெரும் ஆயுதமாக மார்க்ஸ் மாறினார். மார்க்சியம் தனது வலுவான அடித்தளத்தை மூலதனம் மூலம் உலகில் போட்டது. வழக்கம்போல் உதாசீனம் செய்து அதை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்புகளும் நடந்தன. ஆனால் எங்கெல்ஸ் பெரும் சவாலாக எடுத்துக்கொண்டு பல்வேறு புனைபெயர்களில் மூலதனத்தை தாக்கி எழுதும் கட்டுரைகளை கொணர்ந்து அதற்கு விவாத பரப்பை உருவாக்கினார். மூலதனம் குறித்து எப்படியாவது பேசவைத்துவிடுவேன் என்கிற பெரும் முயற்சியில் எங்கெல்ஸ் இறங்கினார். எங்கெல்ஸ் மான்செஸ்டர் பணியில் கவனம் செலுத்தவேண்டிய சூழல் இருந்தது.. அவரது தந்தை 1864ல் மறைந்தபிறகு ஆலையின் பங்குதாரராக ஆனார். அங்கு வில்ஹெல்ம் உல்ப், சாமுவேல்மூர், ஸ்கார்லெம்மர் போன்றவர்களும், சார்ட்டிஸ்ட்களும் தோழர்களாயினர். அங்கு மேரிபர்ன்ஸ் உடன் சேர்ந்து எங்கெல்ஸ் வாழ்ந்தார்.. ஜனவரி 6, 1863ல் பர்ன்ஸ் மறைந்ததை பெரும் இழப்பாக எங்கெல்ஸ் உணர்ந்தார். தனது இளமை புதையுண்டதாக எழுதினார்.  வாழ்க்கை தோழியின் மரணம் குறித்து அவர் மார்க்சிற்கு தெரிவித்தார்.  அன்பான மூர் மேரி மரணம் அடைந்தார்.  இரவு படுக்கைக்கு நேரத்திற்கு முன்பாகவே மேரி சென்றார். லிஸ்ஸி நள்ளிரவில் பார்த்தபோது மேரி இறந்துவிட்டதை உணரமுடிந்தது. இதய கோளாறாக இருக்கலாம்.  காலையில் நன்றாக இருப்பதாக மேரி சொன்னார். என் உணர்வுகளை என்னால் வெளிப்படுத்த இயலவில்லை.  அந்தப் பெண் என்னை இதயபூர்வமாக காதலித்து அன்பு செலுத்தினாள் என்ற கடிதத்தை எங்கெல்ஸ் மார்க்சிற்கு எழுதினார். இந்த நேரத்தில் மார்க்சின் பதில் கடிதம் அவருக்கு போதிய ஆறுதலை தராமல் மனம் புண்படுத்தவைத்துவிட்டது. அதை சுட்டிக்காட்டி எங்கெல்ஸ் அது சரியான தருணமா உங்களின் மேலானவன் என்கிற தன்மையை இப்போதுதான் காட்டவேண்டுமா என்கிற வகைப்பட்ட கோபத்தை  எங்கெல்ஸ் வெளிப்படுத்தினார்.. மார்க்ஸ் தனது வருத்தத்தை தெரிவித்து மிகவும் நேசத்துடன் கடிதம் எழுத நண்பர்கள் மனதால் ஆரத்தழுவும் கடிதங்களை எழுதிக்கொண்டனர். உடன் நிதி உதவியையும் எங்கெல்ஸ் செய்யத் தவறவில்லை. அடுத்து மேரிபர்ன்ஸ் சகோதரி லிஸ்ஸியுடன் எங்கெல்ஸ் வாழத்துவங்கினார். பின்னர் எழுதிய கடிதங்களில் மேடம் லிஸ்ஸி என விளித்து விசாரித்து எழுதலானார் மார்க்ஸ். மார்க்சின் மகள் எலியனார் எனும் டஸ்ஸிக்கு அவர்கள் அங்கிள்- ஆண்ட்டியாயினர்.  எங்கெல்சின்  உற்ற நண்பர் உல்ப் 1864ல் மரணமடைந்தார். உல்ப் தனது மறைவின்போது மார்க்சிற்கு நிதியை ஏற்பாடு செய்து மறைந்திருந்தார். அவருக்குத்தான் மார்க்ஸ் தனது மூலதனம் முதல் தொகுதியை அர்ப்பணித்திருந்தார். தனது மான்செஸ்டர் வியாபார உலகிலிருந்து விடுபட எங்கெல்ஸ் விழைந்தார். ஜூலை1, 1869 தான் சுதந்திர மனிதனாகிவிட்டதாக அறிவிக்கிறார். சுமையிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியில் மார்க்சின் கடைசி மகள் எலியனார் உட்பட நண்பர்களுடன் கொண்டாடுகிறார். பெரும் ஷாம்பெயின் பார்ட்டியில் திளைத்தோம் என்கிறார் எலியனார். தனக்கு 10 வயது குறைந்துவிட்டது- மேலும் அதிகம் இனி உழைக்கலாம் என்றார் எங்கெல்ஸ். லிஸ்ஸி பர்ன்ஸ், எலியனாருடன் அயர்லாந்த் சுற்றுப்பயணம் செல்கிறார். அயர்லாந்த் பிரச்சனைகளை நேரில் கற்கிறார். வரலாற்று பின்புலத்துடன் கற்கவேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்ததால் இப்பயணத்தை மேற்கொண்டார். அய்ரிஷ் விடுதலைக்கு இங்கிலீஷ் தொழிலாளிவர்க்கம் முழுமையாக நிற்கவேண்டும் என்கிற அறிவுரையை தந்தார். மேரிபர்ன்ஸ் இருந்தபோது சில அய்ரிஷ் போராளிகளை தன் வீட்டில் எங்கெல்ஸ் தங்க வைத்திருந்தார். மார்க்சின் முதல் பெண் ஜென்னி ’சின்பின்’ அய்ரிஷ் இயக்கம் பற்றி எழுதினார் என்பதை அறிந்த மேரிபர்ன்ஸ் பெருமிதம் அடைந்ததாக எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். ஆனால் சின் பின் இயக்கத்தின் சதி நடவடிக்கைகள் உதவாது என்கிற கருத்து எங்கெல்சிடம் இருந்தது. VI மான்செஸ்டர் வாழ்க்கையை முடித்துக்கொண்டு 1870ல் மார்க்ஸ் வீட்டிற்கு மிக அருகாமையில் லண்டனில் எங்கெல்ஸ் குடியேறினார். தினந்தோறும் சந்திப்புகள், விவாதங்கள், குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு அடுத்து செய்யவேண்டிய வேலைகள் என நாட்கள் அங்கு நகர்ந்தன. மே மாதம் 1871ல் பிரான்சில் சிவில் யுத்தம் குறித்து அகிலத்தில் மார்க்ஸ் பேசினார். பாரிஸ் கம்யூனின் வரலாற்று முக்கியத்துவத்தை அவர் கவுன்சில் உறுப்பினர்களுக்கு உணர்த்தினார். ஏற்கனேவே அடக்குமுறை கருவியாக இருந்த அரசு எந்திரத்தை தகர்த்து பாட்டாளிகளின் நலனுக்கு உகந்த புதிதான ஒன்றை கட்டுவது என்பதில் மார்க்ஸ் அழுத்தம் கொடுத்து பேசினார்.  லண்டன் கவுன்சில் சார்ந்த ஒட்ஜர் போன்றவர்கள் மார்க்சின் கம்யூன் கருத்தில் உடன்பாடில்லை என்றனர். அவர்கள் வெளியேறினர். அதேபோல் பகுனின் ஆதரவாளர்களுடன் கருத்துவேற்றுமை ஏற்பட்டது, பாட்டாளிகளின் அரசு என்பதும் அடக்குமுறை கருவிதான் – அரசு என்பதே கூடாது என்கிற அராஜக வாதம் சில நாடுகளில் அய்ரோப்பாவில் செல்வாக்குடன் இருந்தது. பகுனினுடன் எங்கெல்ஸ் பெரும் விவாதம் ஒன்றை மேற்கொண்டார். மார்க்சியத்தின் பொருத்தப்பாட்டை அவர் எடுத்து விளக்கினார். அரசியலற்ற சோசலிசம் (Unpolitical socialism) என்பதை ஏற்கமுடியாது என வாதிட்டார். அரசியல் திட்டத்தில் சில விவரங்கள் நாட்டிற்கு நாடு வேறுபடலாம். ஆனால் மூலதனம்- உழைப்பு உறவுகள் அனைத்து இடத்திலும் ஒன்றுதான். மேலை நாடுகளிலாவது தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் திட்டம் இலக்கு ஒத்தவகையில் இருக்கும் என்பதை அவர் பகுனிஸ்ட்களுக்கு சுட்டிக்காட்டினார். கட்சி என்பது புரட்சிக்கு அவசியம் என்பதை அவர் அழுத்தமாக தெரிவித்தார். தொழிலாளிவர்க்கத்தின் கூட்டான சக்தி அரசியல் கட்சியாக அவ்வர்க்கம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் சாத்தியமாகாது என எங்கெல்ஸ் விளக்கினார். அதிகாரம்- மய்யம் (Authority  Centralisation ) என்கிற இரு கருத்தங்களையும் பகுனின் எதிர்த்தார். இந்த இரண்டும் இல்லாததால்தான் பாரிஸ்கம்யூன் வீழ்ந்தது என்றார் எங்கெல்ஸ். இந்த இரண்டும் இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை என்பதற்கு எங்கெல்ஸ் அழுத்தம் தந்தார். தான் எழுப்பிய நடைமுறை சார்ந்த பல கேள்விகளுக்கு பகுனிடத்தில் மெளனம்தான் பதிலாக இருக்கிறது என்கிற விமர்சனத்தையும் எங்கெல்ஸ் வைத்தார். பகுனிஸ்ட்களை விமர்சித்து அகிலம் இரகசிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. பாட்டாளிகளை ஆயுதமற்றவர்களாக்கிட செய்திடும் தந்திரம் என பகுனின் கருத்துக்கள் அதில் விமர்சிக்கப்பட்டிருந்தது.  1872ல் அகிலம் ஹேகில் கூடியது. பிரதிநிதிகளில் பெரும்பான்மையோர் மார்க்சை ஏற்பவர்களாக இருந்தனர். பகுனினின் அகிலத்திற்கு விரோதமான நவடிக்கைகளை விசாரிக்க கமிட்டி ஒன்று போடப்பட்டது. அக்கூட்டத்தில் அகிலத்தின் தலைமையகம் இனி நியுயார்க்  என்கிற தீர்மானத்தை எங்கெல்ஸ் கொணர்ந்தார். திடுக்கிட்ட பலர் மாற்றுக்கருத்துக்களை வெளிப்படுத்தினாலும் அது நிறைவேற்றப்பட்டது. தங்களுக்கு ஏராள ஆய்வு கடமைகள் இருப்பதால் நேரடி கவனம், பொறுப்பு ஏற்க இயலாது என மார்க்ஸ்- எங்கெல்ஸ் தெரிவித்தனர். நியுயார்க்கில் பிரடெரிக் அடால்ப் சோர்கே பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். எங்கெல்ஸ் அகிலம் குறித்த விவரங்களை சோர்கேவிற்கு அனுப்பினார். எங்கெல்ஸ்  ‘On Authority’   ‘The Bakunists at Work’  போன்ற ஆக்கங்களை எழுதினார். அகிலம் செயல்படமுடியாத சூழலில் 1876ல் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு பதில் தரவேண்டிய பொறுப்பை எங்கெல்ஸ் உணர்ந்தார். 1875ல் கோதா வேலைத்திட்டம் விமர்சனத்திற்கு உள்ளானது. முதலாளித்துவ சமூக வீழ்ச்சி- அமையும் எதிர்கால கம்யூனிச சமுதாயம் குறித்து அவ்விமர்சனம் வழிகாட்டுகிறது என பின் நாட்களில் லெனின் எழுதினார்.  மார்க்ஸ் ”முதலாளித்துவம் கம்யூனிஸ்ட் சமூகங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒன்று மற்றதாக புரட்சிகர வடிவில் மாற்றம் கொள்கிறது. இதற்குரிய அரசியல் மாற்றமும் இக்காலத்தில் நடைபெறுகிறது. எனவேதான் இக்காலத்தில் அரசு என்பது பாட்டாளிவர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பதை தவிர வேறாக இருக்காது” என எழுதினார். டூரிங் தனது சுற்றுப்பயணம் மூலம் ஏராள கருத்துக்களை பேசியும் எழுதியும் வந்தார். அவருக்கு பொறுப்பான எதிர்வினை ஆற்றவேண்டிய கடமை எங்கெல்ஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.   வோர்வார்ட்ஸ் எனும் சோசலிச இதழில் தொடராக 1877-78களில் டூரிங்கிற்கு மறுப்பு வந்தது. டூரிங்கிற்கு மறுப்பு நல்ல வரவேற்பை பெற்றது. அரசியல், பொருளாதாரம், தத்துவம் பற்றிய மார்க்சிய கருத்துக்களை முறைப்படுத்தி தருகின்ற வேலையை எங்கெல்ஸ் செய்தார். டூரிங் பொருளாதார நிர்ணயவாதம், மத்தியத்துவம் போன்ற கோட்பாடுகளை தாக்கி பேசிவந்தார்.  சோசலிச பொருளாதார கம்யூன்கள்- சுயேட்சையான தொழிலாளர் கம்யூன்கள்   என டூரிங் பரிந்துரைத்தார். மார்க்சை  வேடிக்கையின் விஞ்ஞான மனிதர் என்று கிண்டல் செய்தார். மார்க்ஸ்- எங்கெல்சை சயாமிஸ் ட்வின்ஸ் இணைந்த இரட்டையர்கள் என்றார்..  மார்க்சின் காபிடல் சக்தி வாய்ந்த படைப்புத்தான். ஆனால் டூரிங்கிற்கு எதிர்ப்பு மூலம்தான் நாம் காபிடல் குறித்து புரிந்து கொள்ள முடிந்தது. எங்கெல்சின் அப்படைப்பு என் மீது பெரும் செல்வாக்கை செலுத்தியது என காட்ஸ்கி எழுதினார். ஆனால் பின் நாட்களில் லூகாச், சார்த்தர், அல்தூசர் போன்றவர்கள் எங்கெல்ஸ் தொகுத்துக் கொடுத்தது மார்க்சிசம் அல்ல என்கிற கருத்தை வைத்தனர். நார்மன் லெவின் மார்க்சியத்தின் முதல் விலகல் எங்கெல்ஸ் இடம் துவங்குகிறது என்றார்.  எங்கெலிசம்தான் வறட்டுவாதம் உருப்பெற அடிப்ப்டையாக அமைந்தது. ஸ்டாலினின் பொருள்முதல் இலட்சியவாதம் உருவாகவும் காரணமாக இருந்தது என்றார் லெவின். டூரிங்கிற்கு மறுப்புக்கு பின்னர்  கற்பனாவாத சோசலிசம் விஞ்ஞான சோசலிசம் குறித்து எழுதினார் எங்கெல்ஸ். பாட்டாளிவர்க்க தலைமையில் மனிதகுலம் ’அவசியம் எனும் ராஜ்யத்திலிருந்து சுதந்திரம் எனும் ராஜ்யம் நோக்கி’ பயணிப்பர் என்றார் எங்கெல்ஸ்  எங்கெல்ஸ் அடுத்த துயரையும் சந்தித்தார். அவரின் இரண்டாவது துணைவியார் லிஸ்ஸி செப் 12 1878ல் மறைகிறார். கனவான் உயர்குடும்பத்து பெண்களுக்கு இணையாக இத்தொழிலாளிவர்க்க அய்ரிஷ் பெண் எனக்கு பெரும் உதவியாக இருந்தார் என எங்கெல்ஸ் வருத்தம்கூடிய பதிவை தந்தார். தங்களின் 15 ஆண்டு தாம்பத்ய வாழ்க்கை கடவுளுக்கு முன்னால் ஏற்கப்படவேண்டும் என லிஸ்ஸி பர்ன்ஸ் விழைந்ததால் தனது நாத்திக கொள்கைகளையும் மீறி செயிண்ட் மார்க் சர்ச்சிலிருந்து  ரெவரெண்ட்  காலோவே பாதிரிமாரை எங்கெல்ஸ் அழைத்துவந்தார். சர்ச் ஆப்  இங்கிலாந்தின் சடங்குப்படி அவர்கள் மணம் முடிக்கப்பட்டது.   எங்கெல்ஸ் மார்க்சிற்கு மட்டுமல்ல அவரின் இரண்டாவது மருமகன் லபார்க் கேட்டபோதெல்லாம் பண உதவி செய்து வந்தார். ஜென்னி மார்க்ஸ் கான்சரால் கடும் தொல்லைக்கு உள்ளாகி டிசம்பர் 2 1881ல் மறைந்தார். இறுதி வாரங்களில் ஜென்னி தனியே அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். மார்க்சின் உடல் பலவீனமான நிலையில் அவர் ஜென்னியின் இறுதிசடங்கு நிகழ்வுகளில் பங்கேற்கமுடியவில்லை. மார்க்ஸ் பிராங்காடிஸ் தொல்லையால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். ஜனவரி 1883ல் முதல் மகள் ஜென்னிலாங்கேயின் மரணம் நேர்ந்தது. அவரை அது மேலும் உலுக்கியது. மார்க்ஸ் அவர்களும் எங்கெல்ஸ் குடியிருப்பிற்கு அருகாமை மையிட்லாந்த் பார்க் சாலை குடியிருப்பில் மார்ச் 14 1883 மதியம் தனது சாய்வு நாற்காலியிலேயே உயிர் துறந்தார்.  எங்கெல்சின் 122 ரிஜண்ட்ஸ் பார்க் தெரு என்பது சர்வதேச புரட்சிகரவாதிகளின் மெக்கா என அறியப்படலானது. ஜூலை 1870ல் ஜென்னிதான் எங்கெல்ஸ்க்கு உகந்த வீட்டு சூழல் கொண்ட இடத்தை பார்வையிட்டு அவர் வந்து தங்கிட ஏற்பாடு செய்தார். எங்கெல்ஸ் பொறுத்தவரை மார்க்ஸ் வீட்டிலிருந்து 10 நிமிடத்தில் வீடு என்பதே நிறைவு எனக் கருதினார். இப்போதும் லண்டனில் அந்த வீட்டிற்கு முன்னர் அரசியல் தத்துவவாதி எங்கெல்ஸ் வாழ்ந்த இடம் என போடப்பட்டுள்ளதாக த்ரிஸ்ட்ராம் ஹண்ட் தெரிவிக்கிறார். பெர்ன்ஸ்டைன் அங்கு தினசரி வந்து போவார். வா இளைஞனே என எங்கெல்ஸ் அழைப்பார். பிரான்சின் புகழ்வாய்ந்த பொர்டா ஒயினை அவரே கிளாசில் எடுத்து கொடுக்கும் அற்புத உள்ளம் படைத்தவர் எங்கெல்ஸ் என்பார் பெர்ன்ஸ்டைன். பாரிஸ் கம்யூன் காலத்தில் தன் மகனை கெடுத்தது மார்க்ஸ்தான் என்கிற எண்ணத்தை எங்கெல்சின் தாயார் வைத்திருந்தார். ஆனால் மார்க்சை குறை சொல்லாதே என தாயாருக்கு எங்கெல்ஸ் விளக்கத்தை தந்துகொண்டிருந்தார். எங்கெல்ஸ் குதிரை சவாரி பயிற்சி உடையவர். சொந்த குதிரையும் அவரிடம் இருந்தது. வேட்டையாடும் கலையையும் கற்றிருந்தார். அவர் குடும்பத்தில் சகோதரர்கள் மத்தியில் சொத்து பிரிவினை நேர்ந்தபோது அவர் தாயாருக்கு உனக்காக அனைத்தையும் நான் பொறுத்துக்கொள்ள முடியும் என தனது முதல் மகன் என்கிற பொறுப்பில் எழுதினார். என்னால் வேறு பல வியாபாரங்களை செய்திடமுடியும் ஆனால் இரண்டாவது தாய் என்பதை பெற முடியாது என நெகிழ்ந்தும் அதே நேரத்தில்  தனது வருத்தத்தையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்..     VII ஜெர்மன் சோசியல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் பேசப்பட்ட  தவறுகளை சரி செய்திடும் கடமையும் எங்கெல்ஸ்க்கு வந்தது. முதல் மாநாட்டிலேயே 1880ல் சிலர் வெளியேற்றப்பட்டனர். 1882ல் அது உடைவை சந்தித்தது. எங்கெல்ஸ் இந்த அனுபவத்திலிருந்து எழுதினார்.   பெரிய நாடுகளில் தொழிலாளர் கட்சி உட்கட்சி போராட்டங்களில்தான் வளர்கின்றன. வளர்ச்சியின் பொதுவான விதிகளுக்கு உட்படுகின்றன போலும் என எங்கெல்ஸ் தெரிவித்திருந்தார். பொதுவாக தியரி என்பதில் தொழிலாளர் விருப்பத்துடன் இருப்பதில்லை என்பதை மார்க்ஸ்- எங்கெல்ஸ் கண்டுணர்ந்தனர். 1881ல் லேபர் ஸ்டாண்டர்டில் எங்கெல்ஸ் பல கட்டுரைகளை எழுதினார். கூலி அடிமை வர்க்கம்- இதுதான் கடும் போராடங்களுக்கு பின்னரும் நாம் பெறும் அனுபவமா- பிரிட்டிஷ் தொழிலாளர்களின் ஆக உயர் லட்சியமும் இதுதானா என்கிற வருத்தம் தோய்ந்த கேள்விகளை எங்கெல்ஸ் எழுப்பினார். லிபரல் கட்சிகளின் ஒட்டுப்போல் தொழிலாளர் இயக்கம் இருப்பதை அவர் விமர்சித்தார். முதலாளிகள் இல்லாமல் நிறுவனங்களை நடத்தமுடியும் என்றார். எங்கெல்ஸ் இயற்கையின் இயக்கவியல் என்கிற புத்தகம் எழுதுவதில் கவனம் செலுத்தினார். ஆனால் அப்புத்தகம் 1925ல் சோவியத்யூனியனில்தான் வெளியானது.  1883 ல் மார்க்சின் மரணத்தை தொடர்ந்து  மார்க்ஸ் விட்டு சென்றவைகளை முறைப்படுத்தும் பெரும்பணியை அவர் ஏற்றுக்கொண்டார். மூலதன எழுத்துக்களை சரிபார்த்து வெளிக்கொணர தனது 63ஆம் வயதிலும் களைப்பின்றி செயல்பட்டார்.  நோய் தாக்குதலால் ஆறுமாத காலம் அவர் படுக்க நேர்ந்தது. அப்போதும் உதவியாளர் மூலம் தனது பணிகளை விடாமல் செய்தார். மார்க்சின் கையெழுத்தையும் அவர் சொல்லும் பொருளையும் புரிந்துகொள்ளும் தோழன்  என்கிற வகையில் இப்பணியில் அவர் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. மார்க்சை எங்கெல்சால் மட்டுமே விளக்க இயலும்  என்பது பொதுவாக ஏற்கப்பட்டது.   எங்கெல்ஸ் காபிடல் வால்யூம் இரண்டை மே 1885ல் வெளியிட்டார். 1894ல் மூன்றாவது வால்யூம் வெளியிடப்பட்டது. அவரின் சார்ட்டிஸ் இயக்க நண்பர் ஜூலியன் ஹார்னே எங்கெல்சின் தன்னலமற்ற உழைப்பை பாராட்டினார்.  இப்படி தன்னலமற்ற நட்பின் அடையாளத்தை யாரும் நவீன காலத்தில் பார்த்திருக்க முடியாது. மார்க்ஸ் அதை எங்கெல்சிடம் கண்டுகொண்டிருக்கிறார் என்பதாக அப்பாராட்டு இருந்தது. மார்கன் பற்றி சில குறிப்புகளை மார்க்ஸ் எழுதிவைத்தது எங்கெல்ஸ் பார்வைக்கு வந்தது, ஆகஸ்ட் பெபல் பெண்கள்- நேற்று, இன்று நாளை எழுதினார். எங்கெல்ஸ் குடும்பம், தனிசொத்து, அரசு எழுதினார்.   மார்க்சின் வார்த்தை ஒவ்வொன்றும் தங்கத்தைவிட ஜாக்கிரதையாக கையாளப்படவேண்டியவை என எங்கெல்ஸ் வியந்து தெரிவித்தார். மார்க்சியத்தின் அடிப்படைகளை நிறுவுவதில் எனக்கு பங்களிப்பு இருந்தாலும் மார்க்ஸ்தான் அதற்கான முதன்மை பாத்திரம் வகித்தவர். நாங்கள் புத்திசாலிகள்.. ஆனால் மார்க்ஸ் ஜீனியஸ் என்றார் எங்கெல்ஸ்.  லுத்விக்பாயர்பாக்- ஜெர்மன் செவ்வியல் தத்துவ முடிவு என்கிற ஆக்கத்தை 1888ல் எங்கெல்ஸ் எழுதினார். நியு ஜெயிட் வெளியிட்டுவந்தது. வரலாற்று பொருள்முதல்வாதம் கொச்சைப்படுத்தப்படுவதை விளக்கி 1890ல் ஜோசப் பிளாக் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.  வரலாற்றில் தீர்மானகரமான அம்சம்  எதார்த்த வாழ்வின் உற்பத்தி மறு உற்பத்தி என்பதே. இதைத்தாண்டி மார்க்சோ நானோ வேறு அழுத்தம் எதையும் தரவில்லை என்கிற விளக்கம் எங்கெல்ஸால் தரப்பட்டது. ஜெர்மன் பொருளாதார அறிஞர் வெர்னர் சோம்பார்ட்டிடம் ”மார்க்சின் சிந்தனை முறை என்பது தயாராக உள்ள வறட்டு கோட்பாடுகள் அல்ல. அவை தொடர்ந்து சிந்திப்பதற்கு வழிவகுக்கும், அப்ப்டி சிந்திப்பதற்கு உதவும் முறையியலாகும்” என எங்கெல்ஸ் தன் மறைவிற்கு சில மாதங்களுக்கு முன்பு கூறினார். 1884ல் சிட்னி வெப் போன்ற அறிவுஜீவிகளால் பாபியன் சொசைட்டி நிறுவப்பட்டது. அக்கட்சி லிபரல் கட்சி போன்றதுதான் என எங்கெல்ஸ் கருதியதாக எங்கெல்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஸ்டெப்பனோவா கூறுகிறார். பிரஞ்சு தொழிலாளர் கட்சி சார்பில் ஜூலை 14 1889ல் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக அழைப்பு விடப்பட்டது. இரண்டாவது அகிலம் சந்தர்ப்பவாதம் எதிர்த்து போரிடாமல் நிலைபெறமுடியாது என எங்கெல்ஸ் கருதினார். மே 1, 1890 முதல் சர்வதேச மே தினம் என்பதை கூட்டம் அறைகூவலாக தந்தது. 1891, 93 அமர்வுகளில் இடது அனார்க்கிசம் எதிர்த்தும் கடுமையாக போராடவேண்டிய தேவை இருந்தது. ஜூரிச்சில் எங்கெல்ஸ்  கெளரவிக்கப்பட்டார். சோசலிசம் என்பதற்காக 50 ஆண்டுகள் உழைத்துள்ளோம். எனக்கு பரிசோ பாராட்டோ வேண்டாம் உழைப்பவரின் திரட்சியை, அவர்கள் அச்சமற்று நிற்பதையே நான் விழைகிறேன் என எங்கெல்ஸ் பேசினார். விவசாய பிரச்சனைகள் குறித்து பல்வேறு சோசலிச தலைவர்களின் கருத்துக்களுக்கு தெளிவு தர  பிரான்ஸ், ஜெர்மனியில் விவசாய பிரச்சனைகள் என்பதை 1894ல்  எங்கெல்ஸ் எழுதினார்.  நாம் ஆட்சி அதிகாரத்தில் என்றால் சிறு விவசாயிகளின் நிலங்களை ஈடு கொடுத்தோ கொடுக்காமலோ பறித்துவிடமாட்டோம். ஆனால் நிலப்பிரபுக்களிடமிருந்து பறிப்போம். சிறுவிவசாயிகளின் தனியார் உடைமையை மெதுவாக கூட்டுறவுமுறைக்கு மாற்ற முயற்சிப்போம். ஆனால் அது கூட கட்டாய முறையில் இருக்கக்கூடாது.  மாதிரிகள் மூலம்  அதை எடுத்துக்காட்டி செய்திடவேண்டும். என்று எழுதினார்.விவசாய கொள்கை- நடைமுறைக்கு இக்கட்டுரை மிக முக்கியமானது என்கிறார் ஸ்டெப்பனோவா. சோசியல் ஜனநாயக கட்சித் தலைவர்கள் காட்ஸ்கி, பெர்ன்ஸ்டைன், லீப்னெக்ட் போன்றவர்களைவிட ஆகஸ்ட் பெபல் மீது சற்றுக் கூடுதல் நம்பிக்கை எங்கெல்ஸ்க்கு இருந்தது. ஆனாலும் பெபலும் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை உறுதியாக எதிர்த்து போராடவில்லை என்கிற மதிப்பீடும் இருந்தது. கோதா திட்டம் மீதான விமர்சனத்தை நியு ஜெயிட்டில் வெளியிடக்கோரி எங்கெல்ஸ் காட்ஸ்கியை பணித்தார். ஒருவேளை தயக்கம் இருந்தால் அதை ஆஸ்திரியா தலைவர் விக்டர் அட்லருக்கு அனுப்பிவிடுங்கள் என எங்கெல்ஸ் கூறியிருந்தார். ஆனால் காட்ஸ்கி தனது இதழில் கோதா திட்ட விமர்சனத்திற்கு மாற்று என்பதை வெளியிட்டார். லீப்னெக்ட் கருத்தான நாங்கள் லசேல்வாதிகளுமல்லர்- மார்க்சியர்களுமல்லர்  சோசியல் டெமாக்ரட்கள் என்கிற கருத்தும் அதில் வெளியானது. நாடாளுமன்றம் ரீச்ஸ்டாக்கில் அக்கட்சியின் பிரதிநிதி கிரில்லென்பெர்கர் என்பார் மார்க்சின் பாட்டாளிவர்க்க சர்வதேசியம் என்பதில் எங்கள் கட்சிக்கு உடன்பாடில்லை என்பதை தெரிவித்தார். இந்த சூழலில் பிரான்சில் வர்க்க போராட்டங்கள் என்பதற்கு எங்கெல்ஸ் அறிமுகவுரை ஒன்றை தந்தார். பாரிஸ் கம்யூன் அனுபவம்  வழக்கத்தில் இருந்த ஒடுக்குமுறை நிறுவனங்களை அகற்றி விடவேண்டிய அவசியம் என்கிற தெளிவு தேவை என்றார் எங்கெல்ஸ். ஜெர்மனியில் அமைதியான சட்டரீதியான சோசலிச மாற்றம் என்பதற்கான வாய்ப்பில்லை என்றார். 1888ல் மார்க்சின் மகள் எலியனாருடன் அவர் அமெரிக்கா சென்றார். பின்னர் நண்பர்களுடன் நார்வே சென்றார்.  பல்வேறு நாடுகளின் இயக்கங்களுடன் தொடர்பை வைத்திருந்தார். லண்டனில் அவர் வீட்டிற்கு வரும் தபால்காரர் தினமும் கட்டுக்கட்டாக பத்ரிக்கைகளை கொணர்ந்து சேர்ப்பார். அனைத்தையும் பார்க்க நேரம் ஒதுக்கி எதிர்வினையாற்றவும் செய்தார் எங்கெல்ஸ். பால் லபார்க் அவரைப்பற்றி எழுதும்போது, எங்கெல்ஸ் தனது தேவைகளை மிகவும் குறைத்துக்கொண்டு சிக்கனமாகிவிட்டார். ஆனால் கட்சிக்கு, தோழர்களுக்கு, பத்ரிக்கை வாங்குவதற்கு அவர் தாராளம் செலவு செய்தார். அவரிடம் அவ்வளவு படிக்க வந்து கொண்டிருந்தாலும் படிப்பறை ஒழுங்காக இருக்கும். கீழே துண்டு பேப்பர்கூட கிடக்காது. அவர் வீட்டில் பல மொழிகளில் விவாதங்கள் நடந்துகொண்டேயிருக்கும் என்றார். நானோ மார்க்சோ எங்களை முன்வைத்துக்கொள்ளாமலே  (no public demonstration) இருக்க விரும்பினோம் என்றார் எங்கெல்ஸ். தனது 70 ஆம் வயதில் குவிந்த பாராட்டுகளுக்கு தனது பதிலாக மார்க்சின் புகழை நான் அறுவடை செய்துகொள்வது விதிவசமேயாகும் என்றார். நான் போராடமுடியாதவனாக என்று ஆகிறேனோ அன்று நான் சாகவேண்டியவனாகிறேன்  என்றார். VIII அக்டோபர் 1888ல் காட்ஸ்கி தனது துணைவி லூசியை விடப்போகிறேன் என்றபோது அப்பெண்ணிற்கு ஏற்படும் துன்பம் பற்றி கவலையுடன் எங்கெல்ஸ் சொன்னதாக த்ரிஸ்ட்ராம் ஹண்ட் தனது பதிவில் குறிப்பிடுகிறார். ஆனாலும் விவாகரத்தை செய்தார் காட்ஸ்கி. எங்கெல்ஸ்- காட்ஸ்கி குறித்து டிராட்ஸ்கி கீழ்கண்ட பதிவை தந்துள்ளார். டிராட்ஸ்கியின் பதிவில்.. ”ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்த காருண்ய பார்வை கொண்டவராக வாழ்நாள் முழுதும் எங்கெல்ஸ் இருந்தார். இந்த உலக குடிமகன் என்சைக்ளோபீடியா மனிதர் மிகச் சாதாரண அய்ரிஷ் தொழிலாள பெண்ணை மணந்தார். அவர் மறைவிற்கு பின்னர் அவர் சகோதரியுடன் வாழ்ந்தார். அவர் மனைவி இறந்தபோது மார்க்ஸ் எழுதிய கடிதம் உறவில் சற்று வருத்தத்தை தந்தாலும் அந்த ஒரு நேரம் தவிர அவர்களின் 40 ஆண்டுகள் நட்பு நீடித்த ஒன்றாக இருந்தது.  மார்க்சின் புதல்விகளை தனது குழந்தைகளாகவே நடத்தியவர் எங்கெல்ஸ். அவர்கள் வாழ்க்கை நிகழ்வுகளில் மார்க்சிற்கு அப்போது ஆலோசனை வழங்கக்கூடியவராகவும் இருந்தார். குறிப்பாக எலியனார் மார்க்ஸ் மீது பெரும் பிரியத்துடன் இருந்தார். எலியனார் மற்றும் அவரது காதலன் நண்பர் உறவுக்காலத்தில் எலியனாருகு பெரும் உதவியாக இருந்தார். காட்ஸ்கி அவரது துணவியாருடன் பல ஆண்டுகள் எங்கெல்ஸ் உடன் தங்கியிருக்கிறார். அவர் தனது துணைவியை விவாகரத்து செய்கிறார் என்ற செய்தி எங்கெல்ஸ்க்கு பெரும் வருத்தத்தை உருவாக்கியது. அவர் லூசி காட்ஸ்கியை தன்னுடன் வந்து தங்கி குடும்ப நிர்வாகத்தை பார்த்துக்கொள்ள செய்தார். லூசி மறுமணம் செய்துகொண்டு கணவனுடன் எங்கெல்ஸ் வீட்டிலேயே தங்கவும் செய்தார். தனது வாரிசுகளில் ஒருவராக  லூசியை அவர் அறிவித்தார்.  . லூசியின் அக்கணவர்தான் எங்கெல்ஸ்க்கு கான்சர் இருப்பதை முதலில் அறிந்து வியன்னா டாக்டரும் சோசலிஸ்ட் தலைவருமான அட்லருக்கு தெரிவித்தவர்.  டிராட்ஸ்கி இச்செய்திகளை நேர்மையாக பதிவு செய்துள்ளதை  காணமுடிகிறது. மார்க்ஸ் மறைவிற்கு பின்னர் குடும்ப உதவியாளர் ஹெலன் டெமுத் எங்கெல்ஸ் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார்.  அவர் நவம்பர் 1890ல் மறைந்தார். அதற்கு பின் எங்கெல்ஸ் வீட்டை பராமரிக்க காட்ஸ்கியின் விவாகரத்து பெற்ற துணைவியார் லூசி அழைக்கப்பட்டார். எங்கெல்சின் இறுதி நாட்களில்  அவரின் தனி உதவியாளராக லூசி சிறக்க பணியாற்றினார். அவரின் எழுத்துக்களை முறைப்படுத்துவது, பிழை திருத்துவது போன்றவற்றிற்கு உதவியாக இருந்தார். ஆகஸ்ட் பெபல்க்கு எங்கெல்ஸ் முப்பது வயது லூசி பற்றி எழுதிய கடிதத்தில் வந்த வதந்திகளுக்கு பதில் சொல்கிறார். எங்களுக்கு இடையில் இருக்கும் வயது வித்தியாசம் திருமண உறவு என எதையும் ஏற்படுத்தவில்லை என குறிப்பிட்டார். மார்க்ஸ் பெண்களைப்போல லூசியும் எனக்கு பெண்தான் என அவர் சொல்லத்துவங்கினார். 1895 மார்ச்சில் எங்கெல்ஸ்க்கு கான்சர்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது...வியன்னா டாக்டர், சோசலிச தலைவர் அட்லருடன் கலந்து பேசி ஈஸ்ட்பர்ன் பகுதியில் அவர் ஓய்வுக்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன... அவர் தனது இறுதி முடிவு வருவதை உணரத்துவங்கினார். அதனால் உயில்  தயாரித்தார். அவரது சொத்துமதிப்பான 20378 பவுண்டில் மார்க்சின் மகள் லாராவிற்கு 3 பாகம், அடுத்த மகள் எலியனாருக்கு 3 பாகம், மீதி இரண்டு பாகம் காட்ஸ்கி முன்னாள் துணைவியும் அப்போது டாக்டர் ஃப்ரேபெர்கர் துணைவியுமான லூசிக்கும் என்று பிரித்தார். மார்க்சின் முதல் மகள் ஜென்னியின் குழந்தைகளுக்கு டிரஸ்ட் நிதியாக  கொஞ்சம் ஒதுக்கினார். அதே போல் மூலதனம் புத்தகத்தின் ராயல்டியை மார்க்சின் மகள்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்.. எங்கெல்ஸ் துணைவி பர்ன்ஸ் உறவினர்பெண் எங்கெல்ஸ் உடன் இருந்தாள்- அப்பெண்ணிற்கு 2230 பவுண்டு என எழுதிக்கொடுத்தார். இவர்கள் எங்கெல்ஸ் இடம் அவ்வப்போது கடன் என்ற பெயரில் வாங்கி சென்ற அனைத்தையும் தரவேண்டாம் என சொன்னார். சோசலிச கட்சி தேர்தலுக்காக 1000 பவுண்டை ஆகஸ்ட் பெபல் வசம் கொடுத்தார். தனது தந்தையின் ஆயில் பெயிண்ட் படத்தை சகோதரரிடம் ஒப்படைத்தார். இன்று பார்க்கையில் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை அவர் இவ்வாறு தனது தோழன் குடும்பத்திற்காகவே கொடுத்துள்ளார். தனது சகோதர சகோதரிகள் குடும்பத்தை சார்ந்த எவருக்கும் ஒதுக்கவில்லை. ஆகஸ்ட் 5 1895 இரவு 10.30க்கு அவர் மறைந்தார். எனது உடலை எரித்து சாம்பலை கடலில் தெளியுங்கள் என அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார். அவரது  இறுதி நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 அன்று 80 தோழர்கள் சூழ நடந்தது. லீப்னெக்ட், பெபல், லபார்க், எலியனார். ஏவ்லிங் போன்றவர்கள் பங்கேற்றனர். பின்னர் அவர் விருப்பப்படி அவர் ரசித்த ஈஸ்ட்பர்ன் கடல் பகுதியில் பெர்ன்ஸ்டைன், டஸ்ஸி (எலியனார் மார்க்ஸ்) அவர் கணவன் எவ்லிங், பிரடெரிக் லெஸ்னர் நால்வரும் வாடகை படகு பிடித்துக்கொண்டு போய் இங்கிலீஷ் கால்வாயில் 5 மைல் சென்று கடலில் எங்கெல்சின் அஸ்தியை கரைத்தனர். எந்தவித   குடும்ப கல்லறை (family tomb) கூட மகத்தான அத்தோழனுக்கு இல்லை... ஆகஸ்ட் 6 1895 இரவில் 11.30க்கு அவர் மறைந்த செய்தி கிடைத்ததாக காட்ஸ்கி எழுதியுள்ளார். மதியம் முதல் நினைவின்றி அவர் இருந்தார். அவருக்கு அவ்வாண்டு மார்ச்சில் ( cancer in the esophagus ல்) தொண்டையிலிருந்து வயிற்றுப்பகுதிவரை கான்சர் இருந்தது என்பது சில நெருங்கிய தோழர்களுக்கு மட்டுமே தெரியும். அது அவரை குலைத்துவிட்டது. அவர் இறந்தபோது தோழர் பெர்ன்ஸ்டைன் மட்டுமே உடன் இருந்தார். அவர் இரு மாதங்கள்  ஈஸ்ட்போர்ன் பகுதிக்கு ஓய்விற்காக சென்றிருந்தார். சில நாட்களுக்கு முன்பிலிருந்தே அவர் அதிகம் பேசமுடியாமல் எழுதி காட்டத்துவங்கினார். அவர் தனது உடைகளை மாற்றிக்கொள்ளக்கூட உதவிவேண்டியவராக இருந்தார். அப்படி உடைமாற்ற சென்ற லிஸ்ஸிதான்  அவர் மரணமுற்றதை உணர்ந்து  எல்லாம் முடிந்துவிடது  என வெளியே வந்து தெரிவித்தார்.  மார்க்ஸ் எங்கெல்ஸ் தொழிலாளிவர்க்கத்தின் உன்னத தலைவர்கள். ஆரோக்கியமாக நம்மிடம் இதுநாள் வாழ்ந்த எங்கெல்ஸ் இடுகாட்டில் புதைக்கப்படுகிறார். உலகம் பெரும் துயரில் ஆழ்ந்துள்ளது. தொழிலாளிவர்க்கத்துடன் சோசலிச இணைப்பு என்பதன் மூலம் அவர்கள் நவீன  விஞ்ஞான  சோசலிசத்தை நமக்கு தந்துள்ளனர் என்றார் காட்ஸ்கி. 1850களின் ஆரம்பத்தில் இருவரும் முற்றிலுமாக ஜெர்மானிய தொடர்பறுந்து இருந்தனர். ஜெர்மன் பத்ரிக்கைகள் கட்டுரைகளை வெளியிட மறுத்தன. அவர்கள் எழுதியதை கொண்டுவர வெளியீட்டாளர்கள் முன்வரவில்லை என காட்ஸ்கி தெரிவிக்கிறார். 1850-70 ஆகிய 20 ஆண்டுகள் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இல்லை என்றாலும் அறிவார்ந்த விவாதங்களை தொடர்ந்துகொண்டிருந்தனர். எங்கெல்ஸ் எழுத்துக்களை விளக்கங்களைப் படித்துவிட்டு மார்க்சின் மூலதனத்தை படிப்பது உதவிகரமாக இருக்கும் என்பார் காட்ஸ்கி.  மார்க்ஸ்- எங்கெல்ஸ்க்கு முன்பிருந்த பல சோசலிஸ்ட்கள் மக்களுக்கு நல்லெண்ணத்தை விதைத்து சோசலிசம் என்கிற அமைதியான கனவை வைத்திருந்தனர். வர்க்கபோராட்டம் என்றோ, பாட்டாளிகள் இயக்கம் என்றோ அவர்கள் அதை புரிந்து முன்னெடுக்கவில்லை. அரசியல் தொழிலாளர் இயக்கம்(Political labour movement) என்ற உருவம் கொடுத்தவர்கள் மார்க்ஸ்- எங்கெல்ஸ் என்றார் காட்ஸ்கி.. தன்னைப்போன்ற ஏராள இளைஞர்களையெல்லாம்விட மிக சுறுசுறுப்பாக 67 வயதில் எங்கெல்ஸ் மூலதனத்தின் அடுத்த இருபாகங்களின் வேலையில் ஈடுபட்டதை காட்ஸ்கி வியப்புடன் பதிவு செய்துள்ளார். நாங்கள் எங்கள் காலத்திற்காக காத்திருந்தோம். அதேபோல் உங்கள் காலத்திற்காக காத்திருங்கள் என அவர் அறிவுரை கூறியதாகவும் காட்ஸ்கி சொல்கிறார். கற்றுக்கொடுத்தல் மட்டுமல்ல நம்வேலை- கற்றுக்கொள்ளலும்தான் என்றார் எங்கெல்ஸ்.   எங்கெல்ஸ் தனது 73ஆம் வயதில் லீப்னெக்ட் மற்றவர் அழைத்து போட்ட கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது 50 ஆண்டுகளுக்கு மேலான எங்கெல்சின் சேவைகளை லீப்னெக்ட் பாராட்டி சொல்லிக்கொண்டிருந்தார். பதில் உரையில் எங்கெல்ஸ்  நான் சிறந்த சொற்பொழிவாளன் அல்ல, நாடாளுமன்றவாதியுமல்ல. வேறுதளத்தில் செயல்பட்டவன். படிப்பு ஆய்வுகளில் பேனா மூலம் செயல்பட்டவன் (You know that I am not an orator or parliamentarian; I work in a different field, chiefly in the study and with the pen) என மக்களுக்கான தனது போராட்டமுறையை எடுத்துரைத்தார். மார்க்சின் தளபதி எங்கெல்ஸ் மார்க்சுடன் இணைந்தும் தன்னளவில் தனித்துவமாகவும் மார்க்சியம் என்கிற பொது அடைவில் உள்ளார்ந்து நிற்கிறார். மார்க்ஸ் மறைந்தபோது இடுகாட்டில் நின்ற 11 தோழர்கள் மத்தியில் எங்கெல்ஸ் ஆற்றிய  புகழஞ்சலி உரை இன்றுவரை  மங்காமல் அனைவராலும் மெச்சப்படும் வகையில் நிற்கிறது. கோடானுகோடி தோழர்கள் உலகம் முழுதும் அவ்வுரையை சுட்டிக்காட்டி இன்றளவும் பேசிவருகின்றனர்.   மார்க்ஸ் மறைவிற்குப்பின் எங்கெல்ஸ் ஆற்றிய பணியை ஹரால்ட் லாஸ்கி தனது சொந்த திறமையை வெளிப்படுத்தி காட்டிக்கொள்ளாமல் தனது தோழனை மிக உச்சத்திற்கு கொண்டு சென்ற அருமையான தோழர் எங்கெல்ஸ் என்று  குறிப்பிட்டார்.. மார்க்சியம் காபிடலால் வெளித்தெரிந்த்து என்பதிவிட எங்கெல்ஸ் எழுதிய சிறு பிரசுரங்கள் மூலம்தான் பலரிடம் சென்றடைந்தது என த்ரிஸ்ட்ராம் ஹண்ட் மதிப்பிடுகிறார்…     Ref; : Engels- Yevgenia Stepanova Engels- Karl Kautsky Marx's General- Engels Revolutionary Life by Tritsram Hunt Engels- Kautsky by Trotsky பகுனின் போராட்ட வாழ்வும் அனார்க்கிச சிந்தனையும் மிஷேல் அலெக்ஸாண்ட்ரோவிட்ச் பகுனின் மே மதம் 8 ஆம் தேதி 1814ல் ப்ரமுக்கினா (Premukhino, tver) என்கிற பகுதியில் பிறந்தார். இப்பகுதி மாஸ்கோ- பீட்டர்ஸ்பர்க்  (லெனின்கிராடுக்கு) இடையில் இருக்கிறது.  செல்வந்தர் குடும்பமது. அப்போதெல்லாம் எவ்வளவு அதிக எண்ணிக்கையில் அடிமைகள் ஒருவர் வைத்திருக்கிறாரோ அந்த அளவு அவர் பெரும் தனக்காரர் என அறியப்படுவார். அவர்கள் குடும்பத்திற்கு 2000 அடிமைகள் இருந்தனர். அவர்களை விற்க அவர்கள் முழு உரிமை படைத்தவராக இருந்தனர். பகுனின் பாட்டனார் மிஷேல் வசிலெவிச் பகுனின் ருஷ்யாவின் அரசியார் இரண்டாம் காத்ரின்  அரசவை கவுன்சிலராக இருந்தவர். அவருக்கு பிறந்த மூன்றாவது மகன் பகுனின் தந்தையான அலெக்சாந்தர் பகுனின். ஒன்பதாவது வயதில் அவரது உடல்நிலை கருதி இத்தாலி பிளாரன்ஸ்க்கு அனுப்பப்படுகிறார். அங்கு ரஷ்ய தூதரக உறவுக்காரர் வீட்டில் தங்கவைக்கப்படுகிறார். மீண்டும் 25 ஆண்டுகள் கழிந்துதான் தனது 35ஆம் வயதில்தான்  அவர் ருஷ்யா திரும்பமுடிகிறது . இத்தாலியில் படித்த அலெக்சாந்தர் பகுனின்  பதுவா பல்கலையில் தத்துவ டாகடர் பட்டம் பெற்றார். அவர்களது குடும்பம் தங்கியிருந்த ரஷ்யாவின் ப்ரெமுகினோ பகுதியில் தன் தந்தை மறைவை ஒட்டி சர்ச் ஒன்றை அக்குடும்பம் கட்டியது. அரசர் மகாபீட்டர்  மேற்கு அய்ரோப்பிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி உயர்தட்டினருக்கு பழக்குபவராக இருந்தார். பெண்கள் பொதுஇடங்களுக்கு வருதல், தாடி மழித்தல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்புதல் என்பதும் சமுகத்தில் நுழைந்த காலமது. மகாராணி இரண்டாம் காத்ரின் இலக்கிய ஆர்வம் நிறைந்தவராக இருந்தார். அவர் வால்டேர் உடன் பரிமாற்றங்களை வைத்திருந்ததாக தெரிகிறது. நாகரீக வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காத்ரீன். அவரிடம் பகுனின் தந்தையின் மாமா பணியாற்றிவந்தார். பகுனின் தந்தைக்கு நல்ல இலக்கிய தத்துவ பின்புலம் கிடைக்க இச்சூழல் உதவியது.  ருஷ்யா வந்த தந்தையார் அரசாங்க பணிகளை விட்டு வீட்டு சூழலில் ஆர்வம் காட்டுகிறார். வீட்டிற்கு ஏராள நண்பர்கள் வந்து போயினர். இரகசிய கழகம் ஒன்றிற்கு அவரை தலைவராக்கிட அவர்கள் முயற்சித்தனர். 1815-25 ஆண்டுகளில் தலைமை எடுக்காவிட்டாலும் இரகசிய கழகத்தில் பகுனின் தந்தை பணியாற்றினார். இயற்கையை நேசிப்பது, சிந்தனையில் ஆழ்வது என்கிற இரு செயல்களில் அவர் பெருவிருப்பம் கொண்டவராக இருந்தார். நீங்கள் ஏன் சுதந்திர வேட்கை கொள்ளக்கூடாது என அடிமைகளிடம் திடீரென பேசுவார்.   அண்டை வீட்டில் குடிவந்த பிரபுத்துவ குடும்ப பெண் 18 வயதான வர்வராமுரவீவ் என்பவரிடம் காதல்வயப்பட்டு 40 வயதில் அலெக்சாந்தர் பகுனின் அப்பெண்ணை மணக்கிறார். அவர்களுக்கு முன்றாவது குழந்தையாக பகுனின் பிறக்கிறார்.. பகுனின் சேர்த்து அவர்களுக்கு 11 குழந்தைகள் பிறந்தன. அவர்களது குழந்தைகள் பொதுவாக தாயிடம் ஒட்டுதலாக இல்லை..ஆரம்பத்தில் வீட்டில் தாராள கருத்துக்கள் நிலவினாலும் சூழல் ஜாரிடம் விசுவாசமாக இருப்பதை அவசியப்படுத்தின. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 14 வயதில் பகுனின் ஆர்ட்டில்லெரிக்கு இராணுவ பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார். ருஷ்ய மொழி தவிர பிரஞ்சு, கொஞ்சம் ஆங்கிலம், ஜெர்மனி மொழிகள் பழக்கமாயின.  வீட்டிற்கு பாதிரிமார்கள் வந்துபோனாலும் மதம் குறித்த எந்த கட்டாயமும் பகுனினுக்கு இல்லாமல் இருந்தது. அவர் கடவுள் மத நம்பிக்கையற்ற தன்மையில் வளர்வதற்கு வீடு தடையாக இல்லை.  பல நேரங்களில் அவர் உள்ளொளியிலிருந்து பேசத்துவங்கினார். ’பிரின்சிபில்ஸ்’ என்பதெல்லாம் வைத்துக்கொள்ளாமல் இருந்தார். அநீதி எனப்பட்டுவிட்டால் எதிர்த்து வந்தார். அதற்கு காரணகாரியங்களை தேடவில்லை. தந்தை அலெக்சாந்தர் குழந்தைகளிடத்தில் தான் பலநாடுகளுக்கு சுற்றிய கதைகளை சாகசங்களை அவர்கள் வியந்து கேட்கும்படி சொல்வார். புதிய உலகங்களுக்கு பயணிக்கவேண்டும் என்ற ஆர்வம் பகுனினுக்கும் ஏற்பட்டது. வீட்டைவிட்டு வெளியேறவேண்டும் பயணிக்கவேண்டும் என்கிற தாகம் அவரை விரட்டியது. பகுனின் அதிகாரி ரேங்கில் ஆர்ட்டிலெரி பயிற்சியிலிருந்து வெளியே வந்தாலும், தந்தை மற்றும் உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளால் அவர் சிறு கிராமத்திற்கு அனுப்பப்பட்டார். அவருக்கு என  குடிசை ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவரின் ஒத்துழையாமையால்  இராணுவ சேவையிலிருந்து ராஜினாமா செய்திட வற்புறுத்தப்பட்டார். பின்னர் அவர் மாஸ்கோ வந்தார். அங்கு நண்பர்கள் குழாமுடன் ஹெகல் தாக்கத்திற்கு உள்ளானார். இரவு முழுதும் அவரது புத்தகங்களை வரிக்குவரி படித்து விவாதம் நடைபெறும்.  பாயர்பாக் எழுத்துக்களும் பகுனினுக்கு பழகின. 1827ல் ஹெர்சன் என்பார் மாஸ்கோ பல்கலைகழகத்தில் இருந்தார். ஜாரின் ஆட்சியில் ஆசிரியர்கள் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டனர். சுயசிந்தனைக்கு தடையிருந்த சூழல். ஆட்சியாளர்களின் ஆணை எனும் எல்லைக்குள் நின்றுதான் சொற்பொழிவுகள் நடந்தன. வால்டேர், ரூசோ போன்றவர் சிந்தனைகள் மாஸ்கோ கல்லூரிக்குள் நுழையமுடியவில்லை. ஹெர்சன் மீறி எழுதியதால் கைதானார். பின்னர் விடுதலை செய்யப்பட்டு பகுனின் குழாமில் சேர்ந்தார். ஜெர்மன் தத்துவஞானக்குழாம் என பகுனின், பிரஞ்சு புரட்சிகர சிந்தனை குழாம் என ஹெர்சன்  செயல்பட்டதால் வேறுபாடுகள் உருவாயின. ருஷ்ய சமூகம் ஜெர்மானிய சிந்தனைகளை மேற்கொள்ளவேண்டும், பிரஞ்சு சிந்தனைகளை அல்ல என்பதை பகுனின் வலியுறுத்தி வரலானார். பகுனின் தீவிர கருத்தாக்கங்கள் ஹெர்சனை கவராமல் இல்லை. கடவுள் மறுப்பில் அவரின் தீவிரம் உணரப்பட்டது. 1841ல் அவர் பெர்லின் சென்றார். அங்கு ’சிவப்பில் அதி சிவப்பு’ என தன்னை வெளிப்படுத்தினார். 1842ல் அவர் ரூகேவின் பத்ரிக்கையில்  The Reaction in Germany   என்ற கட்டுரையை எழுதினார்.  பிரான்சில் புருதான் மீது பகுனினுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. புருதான் சொத்து என்பது திருட்டு என்றார். தீர்க்கதரிசி என்கிற வகையிலும் சமுகத்தை மறுகட்டுமானம் செய்வேன் என நம்பிக்கை வைத்தவர் என்கிற வகையிலும் அவர் ஏசுவை கொண்டாடியவர்..   இலக்கியவாதி துர்கனேவ் பகுனின் நண்பரானார். ஹெகல் மறைந்தபின் பெர்லினில் புகழ்வாய்ந்த உரைகளை தந்துவந்த பேராசிரியர் வெர்டெர், ஷெல்லிங் வகுப்புகளுக்கு பகுனின் சென்றார்.  வெர்டர் உரைகளால் அவர் ஈர்க்கப்பட்டார். 1843ல் கம்யூனிச கருத்துக்களை பேசிவந்த வைட்லிங்குடன் ஏற்பட்ட சந்திப்பு அவரை நடைமுறை புரட்சிகர கருத்துக்களுக்கு கொண்டுசேர்த்தது. வன்முறை மூலம் மாற்றம் என்பதை அவர் ஏற்றார். வைட்லிங் ஏசு குறித்து எழுதியவை பிரச்சனையாகி கைது செய்யப்படுகிறார். அவரின் குறிப்புகளில் பகுனின் பெயர் பல இடங்களில் இருந்தது. இதை அறிந்த ருஷ்ய அரசாங்கம் 1843ல் பகுனின் தந்தைக்கு எந்தவித நிதி உதவியையும் பகுனினுக்கு செய்யக்கூடாது, மகனை உடன் ருஷ்யாவிற்கு அழைத்துவரவேண்டும் என்றது. தந்தை பணிவுடன் தான் பணம் அனுப்புவது இல்லை என்றும் மகனின் நடவடிக்கைகளை ஏற்கவில்லையென்றும் மரியாதையுடன் பதில் அனுப்பினார்.  1844 துவக்கத்தில் பகுனின் பாரீஸ் சென்றார். அங்கு   ஹெர்வே, ரூகே, மார்க்ஸ் ஆகியவர்களை சந்திக்கிறார். மார்க்ஸ் உடன் சந்திப்பு முதல்முறையாக மார்ச் 1844ல் நடக்கிறது. பாரிசில் அவர் பிரஞ்சு, இங்கிலீஷ் கற்கிறார். 1845ல் அவர் புருதானால் கவரப்படுகிறார். சொத்து என்பது திருட்டு. கடவுள் இல்லையெனில் சொத்துடையோர் இருக்கமுடியாது.  அரசியல் அமைப்பு சட்டத்திற்குள் நிற்கமுடியாது போன்ற கருத்துக்கள் அப்போது புகழ்பெற்று இருந்தன. பகுனின் புருதானுக்கு ஹெகலை அறிமுகப்படுத்துகிறார். புருதான் பற்றி நல்ல மரியாதையை பகுனின் கொண்டிருந்தார். கோட்பாட்டு சோசலிஸ்ட்களைவிட  புருதான் மேலானவர் என்பார் பகுனின். ஹெகலின் கட்டுமானம் என்பதில் அழிவு என்பதும் பகுதிதான் என்பதை ஏற்றவர் புருதான். சமுக அமைப்பு அரசியல் அமைப்பின் மோதல் வேறுபாடுகளை தாமஸ் பெயின் சொன்ன வகையில் ஏற்றவர் புருதான். இவைகளை கொண்டு தனது அனார்க்கிச சாரத்தை  வெளிப்படுத்தியவர். ஆரம்பத்தில் பகுனின் முழுமையாக புருதானை புரட்சிகரவாதி என கொண்டாடினாலும் மார்க்சைபோல் பின்னாட்களில் விமர்சன பார்வையுடன் அவரை ஐடியலிஸ்ட், மெடாபிசிசியன் என்கிற வகையில் விளக்கத் துவங்கினார். 1873ல் புருதான் குறித்த மார்க்சின் விமர்சனத்தை ஏற்பதாகவும் தெரிவித்தார்.  பொருள்முதவாத வரலாறு மார்க்சின் உன்னத பங்களிப்பு என பகுனின் இக்காலத்தில் பேசத்துவங்கினார். பாரிசில் மார்க்சை சந்தித்தபின் பாராட்டுக்களை தந்தார். மார்க்ஸ் என்னைவிட பெருமளவு முன்னேற்றகரமான சிந்தனையில் இருந்தார். அதிகம் கற்றவராக இருந்தார். அப்போது எனக்கு அரசியல் பொருளாதாரம் என்னவென்றுகூட தெரியவில்லை. எனது சோசலிசம்  உள்ளுணர்வு வசப்பட்ட ஒன்றாகவே இருந்தது. என்னைவிட இளையவர் என்றாலும் 1847லேயே சில அடிப்படைகளை அவர் நிறுவினார். நாங்கள் அடிக்கடி சந்தித்தோம். அவரின் கற்கும் தீவிரம், உழைப்பு என்பது மரியாதைக்குரியது.  சிலநேரம் தனிப்பட்ட கர்வம்  மார்க்சிடம் தெரிந்தாலும் பாட்டாளிகளுக்காக உழைக்கிறார் என்கிற பதிவை மனம் திறந்து பகுனின் செய்தார். பகுனின் போலந்து நண்பர்களுடன் சுவிட்ஜர்லாந்த் சென்றார். அங்கு சோசலிஸ்ட்களின் வழக்கில் சிக்கி தனது ருஷ்யா ராணுவ அதிகாரிக்குரிய அனைத்தையும், நோபிலிட்டி  பிரபுக்குல சிறப்பு சலுகையையும் இழந்தார். சுவிஸ் நாட்டின் பல்வேறு உட்கிராமங்களில் அலைந்து திரிந்தார். நவ 29 1847 போலந்து எழுச்சி வார்சாவில் ஏற்பட்டது. பகுனின் போலந்து ஆதரவு உரை சிறப்பாக வரவேற்கப்பட்டது. ருஷ்யனாக இருந்தாலும் போலந்தின் விடுதலைக்காக கலகக்கார்களுடன் பகுனின் நிற்பதை ருஷ்யா கண்ணுற்றது. ருஷ்யாவும் புரட்சியை காணும் என அவர் பேசினார். பிறகுதான் பாரிசில் மார்க்ஸ் தொடர்பு அவருக்கு கிட்டியது.. பார்சிலிருந்து பகுனின் வெளியேற வேண்டும், அவர் தலையை கொணர்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபிள் என ஜார் அறிவித்தார். வெளியேற்றப்பட்ட பகுனின் மார்க்சைப்போலவே பிரஸ்ஸல்ஸ் சென்றார். 1848 ஜூனில் அவர் ஸ்லோவியர்- போலந்தினர் காங்கிரஸ் அமர்விற்கு சென்று அவர்களின் திட்டம் ஒன்றை எழுதினார். ஆங்கில வியாபாரிபோல தனது தலைமுடியை மாற்றி மாறுவேடத்தில்தான் அவர் செல்லவேண்டியிருந்தது 1847-48களில் அவர் ருஷ்யன் ஏஜண்ட் என்கிற தாக்குதலுக்கு ஒருபுறம் உள்ளானார். மற்றொருபுறம் ஜார் அரசனை கொல்ல ஏஜெண்ட்களை ஏற்பாடு செய்து அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றசாட்டும் எழுந்தது. பகுனின் கைது செய்யப்பட்டு அவர் எழுத்துக்களில் ஜெர்மன், போலந்து புரட்சிகர தொடர்புகள் இருப்பதாக உறுதி செய்தனர். பிரஷ்ய அரசு அவரை செப்டம்பர் 1848ல் வெளியேற்றியது மாறுவேடத்தில் அவர் பயணிக்கவேண்டியதானது. II பகுனின் பொறுத்தவரை அவர் புரட்சியை பெரும் சிந்தனைக்கு பின்னர் வரும் ஒன்றாக கருதவில்லை. தன்னெழுச்சி (Revoultion is  instict rather than thought) என்கிற புரிதலுடன் இருந்தார்.  அவர் ஜெர்மன் மொழியில் எழுதுவதைவிட பிரஞ்சில் எழுதுவதை எளிதாக கருதினார். ஆரம்பகால ருஷ்ய சோசலிஸ்ட்கள் பகுனினால் ஈர்க்கப்பட்டார்கள். புருதான் அதிகாரம் என்பது அதுயார் கையில் இருந்தாலும் ஒடுக்குதலையே செய்ய விழையும் என்றார். 1848ல் பிரான்சில் நடந்த எழுச்சியை புருதான் விவாதித்தார்.. அதிகாரம் என்பது முன்முயற்சியற்றது.  முன்முயற்சியோ சமூக மாற்றத்திற்கு மிக அவசியமானது. எனவே அதிகாரம் புரட்சிகரமான ஒன்றல்ல என்றார் புருதான்.  மனித மூளையில் புரட்சி முதலில் பற்றவேண்டும். சமுக மாற்றத்திற்கு வன்முறை அவசியமற்று போகலாம் என்றார். ஹெர்சன், பகுனின் இருவரும் புருதானுடன் நெருக்கமாக இருந்தார்கள்.   ஹெர்சன்  ருஷ்யா திரும்பினார். தொடர்ந்து ஜாருக்கு எதிராக எழுதியதால் ருஷ்யாவிலிருந்து முழுமையாக 1848ல் வெளியேறினார். பழைய உலகம் சாகட்டும்! அழிவும் குழப்பமும் நீடிக்கட்டும்! குழப்பத்திலிருந்து சோசலிசம் பிறக்கட்டும் போன்ற முழக்கங்களை ஹெர்சன் வைத்தார். ஹெர்சன் மாஸ்கோவில்தான் புரட்சி உருவாகவேண்டும் என்றார். அய்ரோப்பிய நாகரீகம் வீழவேண்டும் என்றார். கிராஜுவலிசம் என்கிற தன்மையை அவர் ஏற்கவில்லை.. சில நேரங்களில் மார்க்ஸ்- எங்கெல்ஸ் புரட்சிகர தன்மைகளை நீர்த்து போக வைக்கிறார்கள் என்கிற குற்றசாட்டை முன்வைத்தார் ஹெர்சன். புரட்சிகர பாராளுமன்ற நிராகரிப்பு (Revolutionary negation of parliamentarism)  என ஹெர்சன் சிந்தனையை கை ஆல்ட்ரெட் மதிப்பிடுகிறார்.  1848 புரட்சிக்கு பின்னர் பகுனின் எழுதிய ஸ்லாவியர்களுக்கு வேண்டுகோள் என்பது பல ஆய்வாளர்களால் முக்கிய ஆக்கமாக சொல்லப்படுகிறது. அதில் அவர் பூர்ஷ்வாக்கள் எதிர்புரட்சியாளர்கள், தொழிலாளிவர்க்கத்தின் கைகளில் புரட்சியின் எதிர்காலம், ஆஸ்திரியா சாம்ராஜ்யத்தின் தகர்வு மத்திய கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் குடியரசிற்கு முன்நிபந்தனை போன்ற கருத்துக்களை தந்திருந்தார். எங்கு வெகுமக்கள் கேடுகெட்ட வாழ்க்கை சூழலில் அவதிப்படுகிறார்களோ, கல்வி மறுக்கப்படுகிறதோ, ரொட்டிக்கு அல்லாடுகிறார்களோ, ஓய்வு கூட கொடுக்கப்படாது சுரண்டப்படுகிறார்களோ அங்கு சுதந்திரம் என்பதெல்லாம் பெரும் பொய் என உலகம் உணரட்டும். எனவே சுழலை முற்றிலுமாக மாற்ற போராடவேண்டும். இந்த சமூக அமைப்பை தூக்கி வீசுவது என்பது தலையாய சமுக பிரச்சனை என எழுதினார் பகுனின்.  1849ல் இசைகலைஞர் வாக்னருடன் பகுனின் தங்கினார். ஏப்ரல் 1849ல் பகுனின் ரிச்சர்ட் வாக்னரின் பீதோவன் 9வது சிம்பெனி நிகழ்வில் பங்கேற்கிறார். உலகில் அனைத்து இசைகளும் அழியும்போதுகூட அவை இந்த இசையை காப்பாற்றவேண்டும் என உறுதிமொழியை எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்லி வாக்னரை அவர் பாராட்டுகிறார். நட்பு பலப்பட்டு வாக்னர் இல்ல விருந்தாளியாக அடிக்கடி பகுனின் சென்றார். வாக்னர் துணைவியார்  இந்த விருந்தாளி நண்பர் இப்படி இறைச்சியை அள்ளி சாப்பிடுகிறாரே, ஒயினுக்கு பதில் பிராந்தியுடன் இருக்கிறாரே என வியந்து போனார். காட்டுமிராண்டிப்போல் இருக்கும் அந்த நண்பர் விவாதங்களில் சாக்ரடிஸ் போல் பளிச்சிடுகிறார். அவர்தான் வலுவான வாதங்களை எப்போதும் வைத்து வெல்கிறார் என வாக்னர் பதிவு செய்துள்ளார். நண்பர்கள் உபசரிப்பில் அவர்களிடமிருந்து பெறும் உதவித்தொகை கடன்களில்தான் பகுனின் வாழ்க்கை நடந்துகொண்டிருந்தது. மே 10 1849ல்  இரவில் அவர் கைது செய்யப்படுகிறார். சிறை வாழ்க்கையில் ஏது வாழ்க்கை, சிந்தனை மட்டுமே மிஞ்சுகிறது  என்ற அனுபவம் பகுனினுக்கு ஏற்பட்டது. ஷேக்ஸ்பியர், பிரஞ்சு வரலாறு போன்ற புத்தகங்கள் கொடுக்கப்பட்டாலும் , தினசரி பத்ரிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 1850 ஜூனில் அவர் பிரேக் சிறைக்கு அழைத்துவரப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்குப்பின்னர் அவருக்கு 1851ல் மரணதண்டனை என்கிற தீர்ப்பை தந்தனர். கடுங்காவல் ஆயுள் தணடனையாக பின்னர் அதை  அவர்களே மாற்றினர். ஜாரின் அதிகாரி கவுண்ட் ஆர்லவ் என்பார் ஜூலை 1851ல் சிறையில் பகுனினை சந்தித்து மரணதண்டனை நிறைவேறாமல் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் கருணை வேண்டுகோள் மனு ஒன்றை நீதிமானுக்கு வேண்டுகோள் போல் அல்லாமல் ஆன்மீக ஆத்மார்த்த தந்தைக்கு எழுதுவதுபோல் ஜார் மன்னருக்கு எழுத அறிவுறுத்தினார். பகுனினின் கருணை மனு சென்றது . நிகோலஸ் மன்னர் எந்த ஒரு பாவியும் வருந்தி பிராயசித்தம் கேட்டால் மன்னிக்கவேண்டும். காப்பாற்றப்படவேண்டும். ஆனால் உண்மையானதாக இருக்கவேண்டும் என கருணைமனுவில் குறிப்பு எழுதினாலும் அவர் பகுனின் விடுதலை குறித்து எந்த அவசரமும் காட்டவில்லை.  ஆறு வருடங்களாக குடும்பத்தார் பார்க்க முடியாமல் இருந்த பகுனினை சிறையில் பார்ப்பதற்கு அவர் தந்தை சகோதரிக்கு அனுமதியை மன்னர் தந்தார். கண்பார்வை மங்கிய 83 வயது தந்தை 3 நாட்கள் பயணித்து சென்றால்தான் பகுனினை பார்க்க இயலும் என்ற நிலையில் சகோதரர் ஒருவருக்கு அனுமதி அளித்தனர். இருட்டறை கொடும் சிறைவாசத்தால் 1854ல் பகுனின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. சிறைஉணவு மூலவியாதியை அவருக்கு உருவாக்கியது. எலும்புருக்கி நோயும் ஏற்பட்டது. எப்போதும் காதில் சத்தம் கேட்க துவங்கியது. பற்கள் விழத்துவங்கின. அடிக்கடி பார்க்கவந்த சகோதரியிடம் அவர் மனம் உடைந்து எழுதிய பென்சில் குறிப்புகளை தந்தார். உயிருடன் புதைக்கப்படுவது போன்ற நிலை. சாகசங்கள், புரட்சிகர கனவுகள் இருந்தாலும் நான்கு சுவருக்குள் அடைப்பட்டு நான் இற்று வீழ்கிறேன் . புகழ்வாய்ந்த நெப்போலியனாக இருந்தாலும் கருணை வடிவமாக ஏசுவே ஆனாலும் இந்த சிறையிருட்டில் பைத்தியமாகிவிடுவார்கள்.  அவர்களே ஆகிப்போவார்கள் என்றால் என்ன புத்தி இருந்தால் என்ன நான் எம்மாத்திரம் என வேதனை விம்மல்கள் அக்குறிப்பில் பட்டுத்தெறித்தன...  பகுனின் ஆகஸ்ட் 1849 முதல் மே 1850 வரை கொனிஸ்டெயின் எனும் சிறையில் வைக்கப்பட்டார். அவரை விசாரித்து மரணதண்டனை என தீர்ப்பிடப்பட்டது. அவர் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் பிரேகிற்கு அனுப்பபட்டார். மரணதண்டனைக்கு பதிலாக.. அங்கு அவர் சுவர்களுடன் சங்கிலியால் ஆறுமாதம் பிணைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆஸ்திரியா அரசாங்கம் மீண்டும் மரணதண்டனை என்றது. பிறகு அதை ஆயுள் தண்டனை என குறைத்தனர். 1851ல் அவருக்கு பிணைக்கப்பட்டிருந்த முரட்டு சங்கிலியின் அளவு குறைக்கப்பட்டது. 1851ல் அவர் அலெக்சிச் எனும் கோட்டையில் அடைக்கப்பட்டார்.  ஜார் மன்னன் தூதன் ஒருவனின் மூலம் பகுனின் தனது புரட்சிகர நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை ஒன்றை தரவேண்டும் என சொல்லப்பட்டது.  தனது அவமதிப்பை பொறுத்துக்கொண்டு அதை பகுனின் செய்ததாக ஆல்ட்ரெட் தெரிவிக்கிறார். பகுனின் தாயாரும்  இரண்டாம் நிகோலஸ் அலெக்சாந்தர்க்கு விண்ணப்பித்தார். உங்கள் மகன் உயிருடன் இருக்கும்வரை அவர் சுதந்திரமாக இருக்கமுடியாது என்ற பதிலை அரசாங்கம் அனுப்பியது. பிப்ரவரி 4, 1857ல் பகுனின் மறுபடியும் பெட்டிஷன் வேண்டுகோள் மனு அனுப்பினார். அதில்  எனது கடந்தகால வாழ்வை என்னவென்று சொல்வது.. குற்றங்கள் தவிர வேறு எதுவும் நான் செய்யவில்லை. அவற்றை எனது இரத்தத்தால் துடைக்கவிழைகிறேன். எனது பலவீனத்திற்காக நான் வெட்கப்படவில்லை. காராக்கிருக தனிமை சிறையில் இருப்பது சாவைவிட பயங்கரமாக இருக்கிறது. எனது இதயத்தின் அடிஆழத்திலிருந்து  கேட்டுக்கொள்கிறேன். மிக அதிகமான இத்தண்டனையிலிருந்து என்னை விடுவிக்க வேண்டுகிறேன் என வேண்டியிருந்தார்.  ஆகஸ்ட் 1856ல் அலெக்சாந்தர் ஜார் பலரை விடுவித்தார். ஆனால் பகுனின் விடுவிக்கப்படவில்லை.. சைபீரியாவிற்கு கடின உழைப்புமுகாமிற்கு கடத்தப்படுதல், சொத்து பறிப்பு என உத்தரவு இடப்பட்டது.  1857ல் அவர் மேற்கு சைபீரியவிற்கு அனுப்பபட்டார்.  அங்கு  உள்ளார்ந்த தோம்ஸ் பகுதி ஒன்றில் அவர் வசிக்க அரசாங்கம் அனுமதி தந்து இடம் கொடுத்தனர். சைபீரியாவில் கடத்தப்பட்டு வாழ்க்கை நடத்துபவர்கள் பெரும் அறிவுஜீவிகளாகவும் போராட்டக்காரர்களாகவும் இருப்பர். அரசியல் காரணமாக அங்கு அனுப்பப்பட்டவர்கள் செலவை தாங்களே பார்த்துக்கொள்ளவேண்டும். கடினமான வாழ்க்கை சூழலை பகுனின் சந்திக்கவேண்டியிருந்தது. இந்நிலையில் அங்கு க்வியாகோவிஸ்கி என்கிற போலந்து வர்த்தகர் குடும்பத்தாருடன் நட்பு  ஏற்பட்டது. அவரது பெண் அந்தோனியாவுடன் காதல் மலர்ந்து திருமணம் என இருவரும் முடிவெடுத்தனர். அந்தோனியாவிற்கு வயது 18. மணவாழ்க்கை எனில் குடும்பம் நடத்த பணம் தேவை. அரசாங்கம் அவருக்கு அங்கு குமாஸ்தா வேலை கொடுத்தது. மாபெரும் ருஷ்யா ஜார் குடும்ப உறவினர், ராணுவ அதிகாரியாக இருந்தவர்,  மரண தணடன பிறப்பிக்கப்பட்டவர் சைபிரியாவில் கடத்தப்பட்டு குமாஸ்தாவாக வாழ்ந்துகொள் என சொல்லப்பட்டதை வேண்டாம் என உதறினார் பகுனின். 1858ல் அந்தோனியாவை மணம் முடித்தார். 1859ல் ருஷ்யா கைப்பற்றிய அமுர் எனும் பகுதியில் தங்கிட பகுனின் அனுமதிக்கப்பட்டார். பகுனின் உறவுக்காரர் கிழக்கு சைபீரியாவின் கவர்னர் ஆக வந்தார். அவர் வந்தபின் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பகுனினுக்கு வேலை கிடைத்து வர்த்தகம் தொடர்பாக சைபீரியா முழுமையும் சுற்றும் வாய்ப்பு கிடைத்தது. பகுனின் தாயார் ஜாரிடம் தொடர்ந்து வின்ணப்பித்து வந்தார். சைபீரியா கவர்னரும் அவரை ரஷ்யா திரும்பிட ஏற்பாடுகள் செய்ததாக சொன்னார். பகுனின் உடல்நிலை தேறியது. மீண்டும் புரட்சிகர எண்ணங்கள் அவரை உந்தி தள்ளின இத்தாலியில் கரிபால்டி சுதந்திர கொடியை உயர்த்தினார்.  பகுனின் தனது புரட்சிகர என்ணங்களை அடக்கி கொள்ள முடியாமல் வெளியேற முயற்சித்தார். ஜாருக்கு எழுதிய கருணை மனுக்களை அவர் மறந்தார்.   கம்பெனியிடமிருந்து இரு வருட ஊதியம் என 5000 ரூபிள்கள் பெற்றுக்கொண்டு மனைவியையும் அழைத்துக்கொள்கிறேன் என உறுதி  தந்துவிட்டு 1861 ஜூனில் வெளியேறுகிறார். 2000 மைல்கள் 4 வாரங்களில் அவர் பயணித்தார் என வரலாற்று அறிஞர் ஈ எச் கார் சொல்கிறார். ஆகஸ்ட் 4 1861ல் ஜப்பானிய துறைமுகம் ஒன்றை அடைந்தார். அக்டோபர் 14 அன்று சான்பிரான்சிஸ்கோ வந்தார். பின் நியுயார்க், போஸ்டன் சென்றார். லிவர்பூல் சென்று டிசம்பர் இறுதியில் லண்டனை வந்தடைந்தார்.   பகுனின்  தன் பிரஞ்சு நண்பர் தரும் நிதியை கொண்டு லண்டன் வாழ்க்கையை நடத்தினார். போட்கின் என்ற அந்த நண்பர் 23 பவுண்ட்கள் தருவார். பழைய நண்பர் ஹெர்சன் 10 பவுண்ட்கள் தருவார். துர்கானேவ் வருடத்திற்கு 1500 பிராங்கிற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். ஆனால் பகுனின் அதைப்பெற ஆர்வம் காட்டவில்லை என்கிறார் இ எச் கார். தான் பாரிசிலோ கல்கத்தாவிலோ இருக்கவேண்டும் என ஹெர்சன் விரும்பியதாக குறிப்பு ஒன்றை பகுனின் கடிதம் மூலம் அறியமுடிகிறது. பகுனின் போலந்து, ரஷ்யா, இத்தாலி புரட்சிகர சக்திகளுடன் தொடர்புகொண்டு செயல்படத்துவங்கினார். பேசக்கூடிய அளவிற்கு ஆங்கில புலமையை வளர்த்துக்கொண்டார். மாஜினியுடன் சிறிது காலம் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார்.   பகுனின் 1862ல் தனது முழுகவனத்தையும் ரஷ்ய ரகசிய குழுக்களுடன்  குவித்தார். அவர் நெறியாளராகவும் ஹெர்சன் வெளியீட்டாளராகவும் செயல்படத்துவங்கினர். அவர்கள் பயன்படுத்திய ரகசிய  சமிக்ஞைகள் போலிசாரால் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவையாக இருந்தன. பகுனினுக்கு பிரைக்லாவ் என்கிற ரகசிய பெயரிடப்பட்டிருந்தது. ரஷ்ய பயணிகள் சிலரை நம்பி பகுனின் கரிபால்டி உட்பட பலருக்கு எழுதிய கடிதங்கள் ருஷ்யா அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. துர்கனேவ் போன்றவர்கள் பீட்டர்பர்க்கிற்கு 1863ல் விசரணைக்கு அழைக்கப்பட்டனர். பகுனினின் ரகசிய குழு முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஹெர்சனின் முழக்கமான  நிலம்- சுதந்திரம் (Land and Liberty)  சிலரை கவ்விப்பிடித்தது. 1862 ஆகஸ்டில் அவர் பாரிஸ் செல்லும்போது அவர் தொடர்ந்து ஆதரிக்கும் போலந்து புரட்சியாளர்கள், முந்திய ராணுவ தளபதிகளை சந்தித்தார். போலந்து விடுதலைக்குரிய கட்டுரைகளை ஹெர்சன், பகுனின்  தாங்கள் நடத்திய தி பெல் இதழில் இடம்பெற செய்தனர். III 1863 ஜனவரி இறுதியில் போலந்து எழுச்சி ஏற்பட்டது, கொரில்லா போர்முறை கையாளப்பட்டது. பகுனின் எழுச்சி நடைபெறும் இடங்களில் இருக்கவேண்டும் என விழைவுகொண்டவர். ருஷ்ய ராணுவம் போலந்தினரை கடுமையாக தாக்கி அழித்தது. வார்சா புரட்சிகர கமிட்டிக்கு தனது  சேவையைத்தர பகுனின் முன்வந்தார். ருஷ்யர்களை பற்றிய அவநம்பிக்கை அந்த புரட்சிகாரர்களிடம் இருந்தது. ஸ்வீடன் சென்ற பகுனினுக்கு அங்குள்ள தீவிர நண்பர்கள் சிலர் வரவேற்பை தந்தனர். ஸ்டாக்ஹோமில் அவர் பெயர் பரவத்துவங்கியது. பகுனின் மற்றும் அவர் துணைவியார் அக்டோபர் 1863வரை ஸ்டாக்ஹோமில் இருந்தனர். பின்னர் அவர்கள் இத்தாலி சென்றனர். கரிபால்டியின் உதவியாளர்கள் அக்குடும்பத்தை வரவேற்று உபசரித்தனர். இத்தாலியில் பகுனின் செல்வாக்கு பெறத்துவங்கினார். கரிபால்டி தங்கியிருந்த இடத்திற்கு சென்று சந்தித்து விடுதலை இயக்க நிலைமைகள் குறித்து உரையாடினர். பின்னர் பிளாரன்சில் அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கரிபால்டிக்கு கடவுள் நம்பிக்கையும் மனித வரலாற்று கடமை உணர்வும் இருந்தது.  கடவுள் இருப்பால் மனிதன் அடிமையாக இருக்கிறான். மனிதன் சுதந்திரமானவன். எனவே கடவுள் இல்லை. இந்த குழப்பத்தில் தெளிவாக இருத்தல் வேண்டும் என்கிற சிந்தனையை பகுனின் வெளிப்படுத்தினார். அகிலத்திற்கு மார்க்ஸ் உடன் இணைந்து பகுனின் பயன்படலாம் என்கிற எண்ணம் சிலருக்கு உருவானது. இதையடுத்து நவம்பர் 3 1864ல் 16 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. மார்க்ஸ் எங்கெல்ஸ்க்கு எழுதிய கடிதத்தில் இந்த 16 ஆண்டுகளில் முன்னேற்றம் தெரியும் வகையில் அவர் மாறியுள்ளார். அவரை பிடிக்கிறது என எழுதினார். பின்னர் பகுனினுக்கு அடுத்த மாதங்களில் மூன்று கடிதங்களை மார்க்ஸ் எழுதினார். அகிலத்தின் அறிக்கையை கரிபால்டிக்கு தந்து இத்தாலியில் மொழிபெயர்க்க வேண்டினார்.  பகுனினுக்கு இத்தாலியின் மாஜினி, கரிபால்டி ஆகியவர்களின் தேசியவாதம் புரட்சிகரமாக தோன்றவில்லை. அவர் தனது  புரட்சிகர தெளிவு அறிக்கை (Revoultionary Catechism)  மூலம் தன்னை தேசியவாத எல்லைக்கு வெளியே நிறுத்திக்கொண்டார்.  இருக்கின்ற  மத, அரசியல், பொருளாதார சமூக  மற்றும் அனைத்துவகைப்பட்ட நிறுவனங்களையும் தீவிரமாக அழிப்பது- மாற்றாக சுதந்திரம் , பகுத்தறிதல், நீதி, உழைப்புகொண்ட சமூகத்தை நிலைநிறுத்தல் அவசியம் என்றார்.  இத்தாலியில் அவர் இருந்த 1864-67 காலத்தில் அவரிடம் அனார்க்கிச கருத்துக்கள் உயர் வடிவங்களை எய்தின. 1864ல் அவர் ரகசிய புரட்சிகர சர்வதேசம் என்கிற அமைப்பை உருவாக்கினார். அதன் திட்ட அறிக்கை 1865-66 காலங்களில் உருப்பெற்றது. அவரது  Revoultionary Catechism, National catechism போன்றவை அனார்க்கிச இயக்கத்தின் அடிப்படைகளாக என மதிப்பிடப்படுகின்றன. 1867-72 காலங்களில் தன்னை அரசியல் புரட்சிகர சிந்தனையாளராக தனது பேச்சு எழுத்துக்கள் மூலம் பகுனின் வெளிப்படுத்திகொண்டார். ஜனநாயகவாதிகளே திரளுங்கள் என்கிற அழைப்புடன் 10 ஆயிரம்பேர்கள் கையெழுத்திட்ட 6000 பேர் பங்கேற்ற ஜெனிவா காங்கிரஸ் 1867 செப்டம்பர் 9 அன்று கூடியது, கரிபால்டி பங்கேற்றார். பகுனின் ருஷ்ய பிரதிநிதியாக வந்தார். ஜான் பிரைட், ஸ்டூவர்ட் மில் போன்றவர்கள் கூட ஆதரவாக இருந்தனர். கரிபால்டி ’ரிலிஜன் ஆப் காட்’ என்றார். சிலர் சோசலிசம் என்றனர். பகுனின் பிரஞ்சு மொழியில் பேசினார். ருஷ்யா காப்பற்றப்பட அங்கு பெடரலிசம், சோசலிசம் தேவை என்றார்.  மையப்படுத்தப்பட்ட அரசுகள் இருக்கும்வரை உலகில் அமைதி நிலவ முடியாது. அவற்றின் அழிவை நாம் விரும்பவேண்டும். கீழிலிருந்து தன்விருப்பத்தில் கம்யூன்கள் ஒன்று சேர்ந்து பிராந்தியங்கள்,  தேசங்கள், அய்க்கிய அய்ரோபிய நாடுகள் போன்றவை உருவாக்கப்படவேண்டும் என்றார். மையப்படுத்தப்பட்ட அரசு எனில் அங்கு அமைதிக்கு வாய்ப்பில்லை எனவே அரசை அழித்தல் அவசியம் என்பது அவரது கோட்பாடானது. 1869ல் பகுனின் தனது துணைவியாருடன் ஜெனிவாவில் வசித்தார். அங்கு பாட்டாளிவர்க்கம் அரசியல் தொடர்பில் இருந்தார். 1869 செப்டம்பர் 6ல் அகிலத்தின் 4வது காங்கிரஸ் கூடியது. இதில் பகுனின் பங்கேற்றார். மார்க்சின் நம்பற்குரிய தோழர் எக்காரியஸ் பங்கேற்றார். மோசஸ் ஹெஸ் ’பாலே காங்கிரசில் கம்யூனிஸ்ட்களும் கலெக்டிவிஸ்ட்களும்’ என கட்டுரை எழுதினார். பகுனின்  தன் மீதான விமர்சனத்திற்கு பதில் தந்தார். அனார்க்கிஸ்ட்களாகிய தங்கள் மீது விமர்சன கணைகள் வருவதற்கு மார்க்ஸ்தான் மூல காரணம் என பகுனின் எழுதினார். அவர் என்னைப்பற்றி என்ன சொன்னாலும், அகிலத்திற்கு அளப்பரிய சேவை செய்து வருகிறார். நான் மார்க்ஸ் மீது சண்டை தொடுத்தால் அகிலத்தின் பெரும்பான்மை என்மீது பாயும். எனக்கு வேலை செய்ய கிடைத்துள்ள அந்த இடமும் இல்லாமல் போய்விடும் என எதார்த்த நிலையை எழுதினார் பகுனின். மார்க்ஸ் எங்கெல்சிடம் இந்த ருஷ்யன் அய்ரோப்பிய தொழிலாளிவர்க்கத்தின் எதேச்சதிகாரியாக என்னை பார்க்கிறார் என தெரிவித்தார். ருஷ்ய பதிப்பாளர் ஜெனிவாவில் பகுனினை சந்தித்து காபிடலை மொழிபெயர்க்க சொன்னார். பகுனின் நிதி கஷ்டத்தைப்பார்த்து முன்பணமாக 300 ரூபிளும் தரப்பட்டது. தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் 784 பக்கமுள்ள காபிடலை தினம் மூன்று பக்கம் கூட மொழியாக்கம் செய்யமுடியவில்லை என பகுனின் எழுதினார். விரைவில் 10 பக்கம் என்ற அளவிற்காவது செல்லவேண்டும் என்ற உறுதி அவரிடம் ஏற்பட்டது.  அவரது இளம் நண்பர் நீசாவ் (Nechaev) நேரிடையாக புரட்சிக்கு பணியாற்றாமல் இப்படிப்பட்ட செக்கமாட்டு வேலையிலிருந்து பகுனின் விடுபடவேண்டும் என வற்புறுத்தினார்.  அந்நண்பர்  மோசடியானவர் என்பதை பகுனின் பின்னர் உணர்ந்தார். கார்லோ காம்புஸ்ஸி என்கிற இத்தாலிய அனார்க்கிஸ்ட் உடன் பகுனின் துணைவியாருக்கு உறவு இருந்து குழந்தை பிறந்தது. 1871 ஜனவரியில் பகுனின் தன் வறுமைச் சூழல் பற்றி குறிப்பு ஒன்றை விட்டு சென்றுள்ளார். மணிபர்ஸ் காலியாகவுள்ளது. அந்தோனியாவிற்கு 5 பிராங்க் மட்டுமே கொடுக்க முடிந்தது. வாங்கிய கடன்கள் எல்லாம் செலவாகிவிட்டது. வீட்டில் தேநீர் போடக்கூட வழியில்லை. அந்தோனியா எழுதிய கடிதம் ஒன்றிலும் இச்சூழல் உணர்த்தப்படுகிறது. எனக்கும் வயதாகிவிட்டது, எனது ரொட்டியக்கூட சம்பாதிக்க முடியாத நிலயில் இருக்கிறேன். நான் ரொம்ப நாள் வாழமுடியாது. பொருளாதார கஷ்டம் பகுனினை வாட்டுகிறது. அவர் தனது சக்தி மற்றும் நெறி அனைத்தையும் இழந்து வருகிறார். தன்னைப்பற்றி நினைக்காமல் ஒவ்வொரு மனிதனின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவரின் நிலை இப்படியாகவுள்ளது என அந்தோனியா எழுதியுள்ளார். ஓரிரு மாதங்களுக்கு பின்னர் பகுனினுக்காக இல்லாவிட்டாலும் அந்தோனியா குழந்தைகளுக்காக 1000 பிராங்க்ஸ் பணத்தை அவரது காதலன் காம்புஸ்ஸி அனுப்புகிறார். அந்தோனியா பெற்றோர் குடும்பம் மாதம் 50 ரூபிள் என அனுப்பத்துவங்கியது. 1871 நவம்பரில் குடும்பத்தில் இறைச்சி என்பதே இல்லை. விளக்கு ஏற்ற மெழுகுவர்த்திகள் இல்லை. அடுப்பெரிக்க  விறகு இல்லை என்ற நிலை இருந்ததாக கார் பதிவு செல்கிறது. வீட்டில் மிஞ்சி இருந்த 25 பிராங்க்  அந்தோனியா சகோதரன் இறந்ததற்கு இரங்கல் தந்தி கொடுக்க செலவாயிற்று. 1872ல் அந்தோனியா குழந்தைகளுடன் பிராங்க்பர்ட் சென்றார்.  பிரிவு எவ்வளவு மாதங்களுக்கு அல்லது நிரந்தரமா என சோகம் ததும்பும் பகுனின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. இக்காலத்தில் இளைஞர் ஆர்மண்ட் ராஸ் என்பவர் பகுனிக்கு ஆறுதலாக இருக்கிறார். 1873ல் அந்தோனியா இல்லாத தனிமை இரவு முழுதும் விழிப்பு, வோட்கா அருந்துதல், நண்பர்களுடன் விவாதம் சச்சரவு என கழிந்தது, ஆஸ்த்மா நோய் அவரைத் தொற்றியது.  1873 செப்டம்பர் அக்டோபரில் கடும் சோர்வால் பகுனின் பாதிக்கப்பட்டார். மார்க்ஸ் உள்ளிட்டவர்களின் தாக்குதலை அவர் சந்திக்க வேண்டியிருந்தது.  அவர் மனம் நொந்து ஒதுங்கிவிடுவதாக எழுதினார்.  பொதுவாழ்க்கை வெறுப்பாகிவிட்டது. பல போராடங்களை நடத்தி களைப்பு வந்துவிட்டது. அறுபதை கடந்துவிட்டேன். அன்பிற்கு ஏங்கும் வாழ்க்கை வயதாக அதிகமாகிறது. அடுத்த தலைமுறை இளைஞர்கள் இனி பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு செயல்படட்டும். சிசிபஸ் வேலையை இனியும் உருட்டிக்கொண்டிருக்க எனக்கு தெம்போ நம்பிக்கையோ இல்லை. இனி பட்டியலில் நான் இல்லை. இனி என்னை அமைதியாக இருக்க அனுமதியுங்கள். நான் ஒதுங்கிவிடுகிறேன். ஏச்சு பேச்சுக்கள் கேட்டு சலித்துவிட்டது என்ற நிலைக்குப் போனார். நான் பிறப்பால், வசதியான குடும்பத்திலிருந்து வந்த பூர்ஷ்வா. உங்கள் மத்தியில் சில பரப்புரைகளை செய்தேன். கடந்த 9 வருடங்களாக அகிலத்தில் உலக தேவைகளுக்கு தீர்வு என்பதைவிட சிந்தனைகளுக்கான சண்டைதான் அதிகமாக நடந்துள்ளது என்றும் அவர் எழுதினார்.  இந்த உலகம் சிந்தனைகளால் காப்பாற்றபட்டுவிடும் எனில், நான் எவரையும் மறுத்து புதிய ஒன்றை கண்டுபிடிப்பேன்.  கோட்பாட்டு அம்சங்களுக்கான பெரும் பேச்சுக்கள், எழுத்துக்களுக்குரிய காலமல்ல இது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்,.. நேரம் செயலுக்கானது. பாட்டாளிவர்க்க அமைப்பு பாட்டாளிக்குரியதாக இருக்கவேண்டும் என்றார். IV பகுனின்  மேற்கோள் வாசகமான (dictum) அழிவிற்கான பேரார்வம் என்பதும் படைப்பிற்கான தாகமே (The passion for destruction is also a creative passion) என்பது புகழ் பெறத்துவங்கியது  ஹெகலிடமிருந்தே மார்க்ஸ் போலவே பகுனின் துவங்கினாலும் ’ரீஆக்‌ஷன் இன் ஜெர்மனி’ என்கிற கட்டுரையில் பாயர்பாக் தனது நல்லாசிரியர் என்கிறார் பகுனின். மார்க்சின் விடுதலை குறித்த பார்வை ஒடுக்கப்படும் வர்க்கத்தின் விடுதலை என்பதாக இருந்தது. பகுனின் அதீத அளவில் தனிமனித விடுதலை என வற்புறுத்தினார். சமுக அரசியல் முறையில் தனித்துவம் என்பதே பகுனினுக்குரிய  சாரமான சிந்தனையாக மார்க்சின் மறுப்பாக இருக்கிறது என்கிற மதிப்பீட்டை வரலாற்றாய்வாளர் கார் தருகிறார். 1873ல் வினோத முரண்பாட்டில் பகுனின் சிக்கினார். சுவிஸ் நாட்டில் வீடு சொத்து இருந்தால் தேச உரிமை பெறலாம் என நண்பர்கள் சொல்ல அவர் அதற்கு முயற்சி எடுத்து வீடும் வாங்குகிறார். தனிச்சொத்து பற்றி பெரிதாக பேசிய அவருக்கு இது சோதனைதான் என கார் எழுதுகிறார். சில நேரம் அடுத்தவேளை சோற்றுக்கே வழியில்லை என்ற நிலையில் இருந்த பகுனின் சில மாதங்களில் நண்பர்கள் உதவிட சொத்து பெறமுடிந்தது. கார்லோ கபியெரோ (Carlo Cafiero)  என்கிற தெற்கு இத்தாலி சார்ந்த அனார்க்கிஸ்ட் தலைவர் தனது சொத்துக்களை விற்று பகுனின் வாழந்திட சுவிட்சர்லாந்தில் வீடு வாங்கிக் கொடுத்தார். அவ்வீடு புரட்சியாளர்களின் புகலிடமாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டது. முதலில் 50 ஆயிரம் ப்ராங்க் கார்லோ அனுப்பினார். அதே போல் மற்றொருமுறையும் அனுப்பியதற்கான செய்தியை கார் தருகிறார். 1874ல் அந்தோனியா தனது மூன்று குழந்தைகளுடனும், தாயாருடனும் அங்கு வந்து சேர்கிறார். ஆனால் பகுனினுக்கு ராஸ் மற்றும் கபியெரோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வீட்டை இருந்த பசுமாடுகள், குதிரைகளுடன் கபியோரேவிற்கே எழுதிக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தோனியாவிற்கு இந்த விஷயங்கள் எதுவும் தெரியாத நிலையில் பகுனின் மிகவும் அவதிக்குள்ளானார். அந்தோனியா வந்த சில நாட்களில் பகுனின் ராஸ் உடன் இத்தாலி சென்றார். அங்கிருந்து அந்தோனொயாவிற்கு அவ்வீடு குறித்த விவரங்களை   விளக்கி எழுதினார்.  போல்கோனா (Bolgona) என்கிற பகுதியில் கலகக்காரர்களுடன் தபுருனி என்கிற பெயரில் பகுனின் மறைந்து வாழ்ந்தார். அங்கு கலகம் தோற்றவுடன் தற்கொலை செய்து கொண்டுவிடலாம் என கருதினார். பின்னர் அவர் முழுமையாக முக சவரம் செய்துகொண்டு மாறுவேடத்தில் நாட்டுப்புற பாதிரியார் போல பல இடங்களுக்கு சென்றார். பிறகு அவர் வீடு வாங்கிய சுவிட்ஜர்லாந்தின் லோகார்னோவிற்கு திரும்ப நினைத்தார். பகுனின் விளக்கம் வருவதற்கு முன்னரே அந்தோனியா ராஸ் மூலம் அவ்வீடு புரட்சிக்கார்களுக்கு சொந்தமானது அவரது கணவருக்கல்ல என்பதை தெரிந்துகொண்டார். பகுனின் தாஸ்தவஸ்கி சூதாட்டம் ஆடிய காசினோவிற்கு சென்று வரத்துவங்கினார். அந்தோனியா தன்னை ஏற்றுக்கொள்ளாமல் காதலன் காம்புஸியிடம் போக முடிவானால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வழியில்லை என்ற மனநிலை அவருக்கு உருவானது. ஆனால் செப்டம்பர் 1874ல் தன்னுடன் லுகானோ எனும் பகுதிக்கு வந்து சேரும்படி அந்தோனியா கடிதம் எழுதினார். பகுனின் அக்டோபர் 7, 1874ல் அந்தோனியா இருப்பிடத்திற்கு சென்று சேர்ந்தார். சில நாட்களில் அப்பகுதியில் மாஜினி ஆதரவு பேராசிரியர்களுடன் நட்பு பூண்டார். காம்புஸி அவ்வப்போது அங்கு வந்து சென்றார். லுகோனாவில் காலையில் காபி பத்ரிக்கைகள் படிப்பது, நண்பர்களுடன் விவாதம்,  மாலை 4 மணியிலிருந்து 8 மணிவரை உறக்கம், சிறிது நேரம் அந்தோனியாவுடன், பின்னர் இரவு வெகுநேரம் கண்விழித்து படித்தல், எழுதுதல் என்கிற முறையை கையாண்டு வந்தார். அங்கும் அவருக்கு கடன்  இல்லாமல் இல்லை.  பகுனின் தொழிலாளர்களுக்கு அனார்க்கிசம் பற்றி எடுத்துரைக்க துவங்கினார். நாம் நிறைய பேசிவிட்டோம். இனி வயதான காலத்தில் கற்றுக் கொள்வதுதான் உகந்தது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. ஜான் ஸ்டூவர்ட் மில், ஷோபன்ஹேர் புத்தகங்களை தினமும் படிப்பவரானார். திரும்ப காபிடல் புத்தகம் வேண்டி நண்பர் ஆடால்ப் வோக்ட்க்கு எழுதினார். பூர்வீக ஊரான பிரேமுகினோவில்  சொந்தமாக இருந்த காடுகளை விற்றால் பகுனின் பங்காக லட்சம் பிராங்க் கிடைக்கும் என சகோதரர் மத்தியில் பேச்சு எழுந்தது. பிப்ரவரி 1875ல் 28000 பிராங்க் கொடுத்து லுகனான் நகருக்கு அருகில் வில்லா ஒன்றை அவர் வாங்கியதாக குறிப்பு கிடைக்கிறது. தான் இடுகாட்டிற்கு போவதற்கு முன்னர் சொந்த ஊர் வந்து உறவினர் அனைவரையும் பார்க்க விரும்புவதாக பகுனின் எழுதினார். விவசாயம் என்பதில் ஆர்வம் கொண்டு உரங்கள் குறித்து தெரிந்து கொள்ள கெமிஸ்ட்ரி படித்தார் பகுனின். பலவகை விதைகளை தருவித்தார்.  பகுனின் உடல்நிலை தளரத்துவங்கியது. ஆஸ்த்மா, இதயநோய், கால் வீக்கம், காதுகேளமையால் அவதிப்பட்டார். இத்தாலி தொழிலாளர் இருவர் காலை மாலை வந்து அவருக்கு ஆடை அணிவித்திட உதவினர். ராஸ், கபியெரோ போன்றவர்கள் அந்தோனியாவிற்கு தெரியாமல் பகுனினை பார்த்து சென்றனர். 1876ல் அலெக்சாந்திர வெபர் எனும்  இளம் ருஷ்ய பெண் தினம் பகுனினை பார்க்க வரத்துவங்கினார். அவருக்கான தனி சிறுஅறையில் பல்வேறு மொழி புத்தகங்கள் , தினசரிகள் எழுதுகோல் மருந்துகள் ஆங்காங்கே முறையற்று காணப்பட்டன. வெபரிடம் அடிக்கடி ருஷ்யா தற்போது எப்படி இருக்கிறது எனக்கேட்டு அறிந்து வந்தார். அவரது சகோதரி தத்யானா அடிக்கடி சொல்லும் சாவது எப்படி அருமையாக இருக்கிறது என்பது அவருக்கு அடிக்கடி கேட்கத்துவங்கியது.  அந்தோனியா இத்தாலி போய்விட்லாம் என வற்புறுத்த துவங்கினார். அரசியலில் ஈடுபடபோவதில்லை என ஆட்சியாளர்களுக்கு தெரிவித்து தங்கிவிடலாம் என்றார். வெபர் கடுமையாக இதை ஆட்சேபித்தார். பகுனின் தன் வரலாற்றை, பெருமிதத்தை இழந்துவிடுவார் என்றார் அந்த இளம் பெண் வெபர். ஆனால் அந்தோனியா பேச்சை பகுனினால் தட்ட முடியவில்லைல். தனது நம்பிக்கைகுரிய செருப்பு தொழிலாளியுடன் அவர் ஜூன் 1876ல் லுகானோ விட்டு புறப்பட்டார். வழியில் பெர்னேவில் அடால்ப் வோக்ட் அவரை ரயில் நிலயத்தில் வந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பழம்பெரும் நண்பர்கள் பலர் மருத்துவமனை வந்து பார்த்தனர். அவர்களிடம் என் நினவுகளை நான் எழுதினால் யார் படிக்கப்போகிறார்கள் என வினவினார். ஷோபன்ஹார் புத்தகங்களை படிக்க வேண்டினார்.  அவரது உடல்நில ஒத்துழைக்க மறுத்து அவர் ஜூன் 28 1878ல் கோமாவிற்கு சென்றார். முன்னதாக அவரை தினமும் பார்த்து இசை குறித்து ரெய்ச்சேல் குடும்பத்தினர் பேசிவந்தனர்.  ஜூலை 1, 1876ல்  சனிக்கிழமை மதியம் அவர்கள் வந்தபோது அவர் மறைந்த செய்திதான் கிடைத்தது. உடல் நிறம் மாறிப்போனது.  ஜூலை 3 அன்று அவரின் இறுதி சடங்குகள் நடைபெற்றன. நாற்பதுபேர்களுக்கு குறைவாக பங்கேற்றனர். எவ்வளவு பெரிய சவப்பெட்டி என அவ்வேலை செய்யும் தொழிலாளர்கள் சிரித்துக்கொண்டே பேசியதை கார் குறிப்பிடுகிறார். மிக எளிய முறையில் இறுதி சடங்குகள் முடிந்தன. வாழ்நாள் போராளி, அதிகாரத்திற்கு எதிரான குரல் எழுப்பிய போரளி எந்த பகட்டும் இல்லாமல் சவப்பெட்டிக்குள் அடங்கிப்போனார் என்கிறார் கார். அப்போது நேப்பிள்ஸ் நகரில் இருந்த அந்தோனியா பெர்ன் வருகிறார். அங்கிருந்த நண்பர்களுடன் நடந்தது குறித்து கேட்டறிகிறார். V  அகிலத்தில் மார்க்ஸ் உடன் பகுனின் பணியாற்றியபோது வேறுபாடுகள் எழுந்தன.  மார்க்ஸ் பகுனை ஜாரின் ஏஜெண்ட் என விமர்சித்தார். ஆனால் பகுனின் சிறைவதைகளை அறிந்த ஹெர்சன், மாஜினி இருவரும் மார்க்ஸ் தனது வார்த்தைகளை திரும்ப பெறவேண்டும் என வற்புறுத்தினர். மார்க்ஸ் திரும்பபெறவில்லை. லண்டனில்  வாழ்ந்த பகுனினையே அங்கிருப்பவர் அறிந்திருந்தனர். அவர் குறித்த ருஷ்ய ஆவணங்கள் 60 ஆண்டுகளுக்கு பின்னர்தான் வெளியாயின. 1847-48 ல் பிரஸ்ஸல்சில் மார்க்சை பகுனின் சந்தித்தார். அவரது நண்பர் ஹெர்வேவிற்கு மார்க்ஸ் குறித்த தனது எண்ண ஓட்டத்தை பகுனின் எழுதியிருந்தார்.. மார்க்ஸ் சூழலை விஷமாக்குகிறார். கர்வம், கோட்பாட்டில் தற்பெருமை- நடைமுறையில் பயங்கொள்ளித்தனம், பிறர் குறித்து வம்பளப்பு, வாழ்க்கையில் இல்லாமை என்பன அவரது குணங்களாக இருக்கின்றன என்ற கடும் விமர்சனத்தை அதில் அவர் வைத்தார்.  1862-72 காலங்களில் பகுனினுடைய மிக உயர்ந்த கருத்துக்கள் வெளியாயின. இக்காலம்தான் அவருக்கு சிந்தனை  மற்றும் உடல்ரீதியாக முக்கிய காலம் என்று தெரிவிக்கிறார் ஆல்ட்ரெட். பிளாங்கி சொல்வதுபோல ஒருவரை அவரது நேரடி ரிசல்ட் என்பதிலிருந்து அல்லாமல் அவர் ஏற்படுத்தும் மறைமுக விளைவுகளிலிருந்தும் எடைபோடவேண்டும். பகுனிடம் எந்த ரெடிமேட் பார்முலாவும் இல்லை. ஒருவர் தனது சொந்த மூளையை கசக்கி கொள்ளாமல் அவரது புத்தகங்களில் விடைதேடிக்கொண்டிருந்தால் கிடைக்காது என்கிறார் அல்ட்ரெட். 1869ல் பகுனின் சமாதானம் மற்றும் விடுதலை காங்கிரஸ் லீகில் உரையாற்றினார். சிலர் மட்டும் மதிப்புமிகு மனித வாழ்க்கை வாழ்ந்திட பெரும்பான்மை உழைப்பாளர் மிருகத்தனமாக நடத்தப்படும் நாகரீகத்தை அவர் சாடினார்.  தனிநபராகவும் வர்க்கங்களாகவும் பொருளாதார சமூக சமத்துவம் என பேசினார்.   தான் கலெக்டிவிசம் என கம்யூனிசத்தை விளக்குவதாக குறிப்பிட்டார்.   கம்யூனிசம் என்கிற சிந்தனையை நான் எதிர்க்கவில்லை, மார்க்சியர் பேசும் அதன் அதிகாரத்தன்மையையே எதிர்க்கிறேன். சமூகம் கட்டப்படுவது என்பதானாலும், பகிர்வு என்றாலும் மேலிருந்து  அதிகாரத்துவத்திலிருந்து தரப்படுவதாக இல்லாமல் கீழிலிருந்து  நடைமுறை ப்படுத்தப்படவேண்டும். வாரிசு சொத்துரிமை கூடாது. அது அரசின் விளவுதான் என்றார். தன்னை அவர் கம்யூனிஸ்ட் என அழைத்துக்கொள்வதை விட கலெக்டிவிஸ்ட் என அழைத்துக்கொண்டார். 1848ன் பிரஞ்சு எழுச்சி ஒடுக்கப்பட்டதில் மனம் ஒடிந்தார் ஹெர்சன். ருஷ்யா ஏன் முதலாளித்துவத்தை அடையாமல் சோசலிச குடியரசாக மலரக்கூடாது என்ற கேள்வியை அவர் எழுப்பினார். அது தொழிலாளர் விவசாயிகள் குடியரசாக எழட்டும் என்றார். லண்டனில் இருந்த பகுனின் உடன் தொடர்புகளை தொடர்ந்தார். கான்ஸ்டிட்யூஷன் என்பதெல்லாம் மாஸ்டருக்கும் அடிமைக்கும் இடையேயான ஒப்ப்ந்தம் என்றார். குரோப்ட்கின் பகுனின் செல்வாக்கை அவரது எழுத்துக்களை மட்டும் வைத்து மார்க்சை எடைபோடுவதுபோல் போடவேண்டாம் என்றார். தொழிலாளர்வர்க்கம் தங்களின் உயிர்ப்பான வர்க்கப்போராட்டத்தை மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரவர்க்கத்திடம் சர்வாதிகாரம் என்கிற பெயரில் சரண்டர் செய்து கொண்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கையை பகுனின் விடுத்தார். அவரின் சிறந்த படைப்பாக  கடவுளும் அரசும் (God and State)  விளங்குகிறது. மானுடத்தை மறுப்பதுதான் அரசு என்றார். அரசு என்பதை வைத்துக்கொண்டு உலக சமாதானம் என்றெல்லாம் பேசுவது அப்பாவித்தனமானது என்பதை அழுத்தமாக தெரிவித்தவர் பகுனின்.  மார்க்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் தன்னைப்பற்றி ஜார் ஏற்பாட்டில் ஷாம்பெயின் பார்ட்டி, பெண்களுடன் கொண்டாட்டமாக இருப்பதாக எழுதுகின்றனர். சிறைக்கொட்டடியில் வதைப்பைட்டிருந்த தன்னைப்பற்றி அவ்வாறு எழுதியதை அவர்  முட்டாள்தனமானது  என்று  விமர்சித்தார்.  மார்க்ஸ் பகுனின் இருவரும் 1864ல் 16 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துகொண்டனர். சந்திப்பு குறித்து இருவரும் பதிவிட்டுள்ள்னர். மார்க்ஸ் பகுனின் சந்திப்பு குறித்து எங்கெல்ஸ்க்கு தெரிவித்தார்.  மார்க்ஸ் அவரை எனது பழைய நண்பன் என குறிப்பிடுகிறார். மார்க்சின் அரசியல் குழாம் மர்றும் நண்பர்கள் வட்டம் பற்றி பகுனின் தனது விமர்சன மதிப்பீட்டை கொண்டிருந்தார்.  மார்க்ஸ் சுயக்காதல் கொண்டவர்.  அவர் தற்பெருமைக்கு சிறிய காயத்தைக்கூட அனுமதிக்கமாட்டார். அவரை நீங்கள் தொழவேண்டும்.  அவரது அன்பு கிடைக்க வேண்டுமெனில் அவரிடம் பயந்து நடந்துகொள்ளவேண்டும். அவரைச்சுற்றி புகழ்பாடிகளும் எடுபிடிகளும் இருப்பதையே அவர் விரும்புகிறார்  என்கிற கடும் விமர்சனத்தை பகுனின் வைத்தார். மார்க்சின் மேதாவிலாசம் மீது பகுனினுக்கு  மரியாதையும் இருந்தது. கம்யூனிஸ்ட் அறிக்கையை பகுனின் 1862ல் ருஷ்யனில் மொழிபெயர்த்தார். காபிடல் படித்துவிட்டு பிரமிப்பை வெளிப்படுத்தினார். ஹெர்சனுக்கு எழுதிய கடிதத்தில் தன்னைப்பற்றிய சுயவிமர்சனத்துடன் மார்க்சை அங்கீகரித்து அவர் எழுதினார்.  கடந்த 20 ஆண்டுகளாக சோசலிசத்திற்காக மிகத்திறமையாக பெரும் உழைப்பை மார்க்ஸ் நல்கிவருகிறார். இதில் அவர் முன்நின்று தலைமைதாங்கி வருகிறார். அவரின் பயந்தரும் இச்செல்வாக்கை எனது சுயவிருப்பங்களுக்காக குறைத்து அழிக்க நினைப்பது மன்னிக்கமுடியாத செயல். அவரை எத்ர்த்த எனது போராட்டம் தொடரும். அவர் என்னை காயப்படுத்தியதற்காக அவரை எத்ர்த்து நான் போராடவில்லை.அவரின் அரசு சோசலிசம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என தான்  மார்க்சிடமிருந்து வேறுபடும் இடத்தை  பகுனின் தெளிவுபடுத்தினார். ஜெனிவாவில் பிலிப் பெக்கர் எனும் கம்யூனிஸ்ட் மார்க்சின் காபிடலை பகுனினுக்கு கொடுக்கிறார்.  மிக முக்கிய, ஆழமான, கற்றறிந்த விஷயங்கள் கொண்ட ஆனால்  புலனாகாத (abstract)  புத்தகம் என்று சொன்ன பகுனின்  தான் மார்க்சிற்கு நன்றி தெரிவித்தோ பாராட்டியோ எழுத மறந்ததாக சொல்கிறார். தனது மறதி மார்க்ஸிற்கு இழைக்கப்பட்ட மரியாதை குறைவாக பார்க்கப்பட்டுவிட்டது என்பதையும் பகுனின் உணர்கிறார். ஜென்னியும் பகுனின் ஒருவார்த்தைக்கூட எழுதாதை பற்றி குறிப்பிட்டு ருஷ்யர்களை நம்பவே முடியாது என பெக்கருக்கு கடிதம் எழுதுகிறார்   லீப்னெக்ட், பெபல் போன்றவர்கள் தங்கள் பத்ரிக்கை எழுத்துக்கள் மூலம் பகுனினை விமர்சித்து ஜாரின் கைகூலி என எழுதினர். அகிலத்தில் கருத்துவேறுபாடுகள் முற்றிய நிலையில்கூட நண்பர் ஒருவருக்கு பகுனின் ஜனவரி 28 1872 கடிதத்தில் ஜெர்மன் குழுவின் தலைவர் மார்க்ஸ் போன்றவர்கள் லண்டனில் அகிலத்தில் கடுமையாக உழைத்துவருகிறார்கள் என்றே எழுதினார். ஆனால் இந்த மதிப்பிற்குரிய மனிதர்கள் என்னை பகைவனாக சித்தரிக்கிறார்கள். அவர்களுக்கு நான் பகைவன் இல்லை என உணராமல் தவறிழைக்கின்றனர். அவர்களது அறிவுத்திறன், பாட்டாளிகள் பக்கம் நிற்கும் உறுதிப்பாடு ஆகியவற்றை நான் மதிக்கிறேன். நமது காலத்தின்  பொருளாதார மற்றும் சோசலிசத்தில் ஜீனியஸ் மார்க்ஸ் என குறிப்பிட்டார் பகுனின். மார்க்சின் நண்பர் எங்கல்ஸ்கூட பெரும் புத்திமான் என்றார் பகுனின். அவர்களது சேவையை முக்கியத்துவத்தை அங்கீகரிக்காமல் இருப்பது நன்றிகொன்றமைக்கு சமம் என்றார் அவர். பகுனின் தான் மார்க்ஸ் இடமிருந்து வேறுபடுவதை சுட்டிக்காட்டுகிறார். மார்க்ஸ் அரசு மூலம் நிர்வாகம் என மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்காக நிற்கிறார். சர்வாதிகாரம் என்று சொல்கிறார். நிலம் மற்றும் அனைத்து மூலதனங்களும் அரசிற்கே சொந்தம். அரசாங்க அதிகாரிகள், வல்லுனர்கள் நிர்வாகம் செய்வர் என அங்கு நம்பப்படுகிறது. நான் சொல்வதும் அரசியல் சமுக சமத்துவம்தான். ஆனால் அரசு இல்லாமல் என்பதுதான் அதில் முக்கியமானது. நாம் கட்டமைக்க விரும்பும் சமூகம் மேலிருந்த கட்டளைகளால் அமையக்கூடாது- சுதந்திரமாக கூட்டிணைவு கொண்ட தொழிலாளர்களால் சமூகம் கட்டமைக்கப்படவேண்டும் என்றார் பகுனின். மார்க்ஸ் குறித்த மற்ற விமர்சனம் அவரது இயல்பு குறித்ததாக இருந்தது. மார்க்ஸ் மற்றவர் புகழ் அடைவதை சகிக்காமல் இருந்தார். பொறாமைக்கூட கொண்டார். புருதானை தேவையில்லாமல் அவர் அடைந்துவந்த புகழுக்காகவே தாக்கினார். மார்க்ஸ் எப்போதும்  எனது சிந்தனை  என பேசுவார்.  ideas என்பது பொதுவானது- அனைத்து மிகச்சிறந்த எண்ணங்களும் பலரின் கூட்டுழைப்பின் வெளிப்பாடு என்பது தானே சரியானது என பகுனின் தனது வாதத்தின் மூலம் மார்க்சை விமர்சித்தார். மார்க்ஸ்- எங்கெல்ஸ் சோசலிச ஜனநாயக அலையன்ஸ் மற்றும் அகிலம் எனும் அறிக்கை மூலம் பகுனின்மீது கடும் விமர்சத்தை முன்வைத்தனர். மார்க்ஸ் வரலாற்றை எழுதிய ஒட்டோரூல், மெர்ரிங் கூட இதை ஏற்கவில்லை என்கிறார் அல்ட்ரெட். பகுனின் மார்க்சின் விமர்சனத்தை  பாரா மிலிட்டரி  வகைப்பட்ட கண்டனம் (gendarme denunciation)  என சொல்லிவிட்டு அகிலத்திலிருந்து தான் விலகுவதாக  அறிவித்தார்.  பகுனின் மறைந்த ஜூலை 1, 1876ல் அகிலம் தனது செயலையும் முற்றிலுமாக இழந்திருந்தது. ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்காவில்கூட அனார்க்கிஸ்ட்கள் செல்வாக்கும் போராட்டங்களும் தொடர்ந்தன. பகுனினை தோல்வியின் பரிதாபகர ஆளுமையாக சித்தரிப்பதை அல்ட்ரெட் விமர்சிக்கிறார்.. வன்முறை மூலம்தான் புரட்சி என்பதில் அவர் மார்க்ஸ் உடன் நின்றாலும் மார்க்ஸ் சொல்லும் ஒழுங்கமைந்த வர்க்க திரட்சி மூலம் புரட்சி என்பதற்கு பதிலாக அப்போதைய கோபத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் மனித கூட்டம் கொள்ளும் எழுச்சிதான் புரட்சி என கருதினார் பகுனின். உண்மையில் புரட்சிக்காரர்கள் இரத்தம் சிந்தப்படுவதை விரும்புவதில்லை- என்ன செய்வது முடியாட்சிகளும் அரசாங்கத்தையும் பயமுறுத்த அவ்வாறு சொல்ல வேண்டியுள்ளது என்றும் அவர் நண்பர்களுக்கு எழுதுகிறார். அனைத்துவகைப்பட்ட அதிகாரங்களும் வக்கரிப்புகளே- அனைத்துவகை பணிந்துபோதலும் அவமானகரமானவையே (All exercise of authority perverts, and all submission to authority humiliates)  என்பார் பகுனின். தொழிலாளிவர்க்க அரசியல் அதிகாரம் மூலம் சாதித்துவிடலாம் என கம்யூனிஸ்ட்கள் கருதுகின்றனர். ஆனால் புரட்சிகர சோசலிஸ்ட்களாகிய நாங்கள் அரசியலற்ற அமைப்புகள் மூலம் அரசியல் அதிகாரம் என்பதற்கு எதிர்நிலை எடுப்பதன் மூலம் தொழிலாளர்கள் திரளவேண்டும் என விழைகிறோம் என பகுனின் எழுதினார். பகுனின் இச்சிந்தனை அவரது தடுமாற்றத்தைக் காட்டுவதாக கார் மதிப்பீடு செய்கிறார். அகிலத்தில் ஏற்பட்ட வேறுபடுகள் காரணமாக பகுனின் அவரது ஆதரவாளர்கள் செப்டம்பர் 1872 ஹேக் காங்கிரசில் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து செய்தி வெளியானது. பகுனின் லிபர்டி பத்திரிகை எடிட்டருக்கு எழுதினார். மார்க்ஸ் விஞ்ஞானபூர்வமாக முழுமுதல் உண்மை ஒன்றை கண்டுபிடித்ததுபோல் கற்பனை செய்து கொள்கிறார் என சொல்லி அவரை நான் க‌ஷ்டப்படுத்த விரும்பவில்லை. அரசை அழிப்பது என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். அரசினுள் இருந்து அரசு மூலம் மக்களுக்கு தொழிலாளர்களுக்கு சுதந்திரம், விடுதலை  தரமுடியும் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை. மார்க்சிஸ்ட்கள் கவர்மெண்டலிஸ்ட்களாக உள்ளனர். வெற்றியின் களிவெறியில் மார்க்ஸ் இருக்கலாம். இரு அணிகளின் கருத்து முரண்பாட்டில் இம்மி கூட தீரவில்லை என்றார் பகுனின். சீரானதாக இல்லாவிடினும் மார்க்ஸ் புரட்சிகர தாகம் நிறைந்தவர். ஆனால் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எவ்வாறு பிரச்சனையை தீர்க்கும் என்பதை ஏன் அவர் காணத்தவறினார் . இந்த விஷயம் தனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது என்றார் பகுனின். அகிலத்தின் பிரச்சனைக்கு மார்க்சே காரணம். அவரின் சர்வாதிகாரமே காரணம். அகிலத்தின் துவக்க கர்த்தா மார்க்ஸ் என்றாலும் அதன் தந்தை என அவர் தன்னைக் கருதிக்கொள்கிறார். அவரின் இறுமாப்புதான் பிரச்சனையாகிறது எனவும் பகுனின் மார்க்சை விமர்சித்தார். அவர் மருத்துவச்சியாக இருக்கலாம் அகிலத்தின் பெற்றோர் அல்ல. ஹேக் காங்கிரசிலேயே மார்க்ஸ் அகிலத்தை கொன்றுவிட்டார். அதிகாரபூர்வ கொள்கை என அறிவித்துவிட்டால் அதற்கு பின்னர் என்ன விவாதம் நடைபெறமுடியும்.  விஞ்ஞானபூர்வமான அதிகார உண்மையை அப்பெரும் மண்டை தனியாக உழைத்து  கண்டுபிடித்து உலகிற்கு கொடுத்துவிட்டதாக மார்க்சிஸ்ட்கள் சொன்ன பிறகு ஏது விவாதம். அந்த கமாண்ட்மெண்ட்களை மனப்பாடம் செய்யவேண்டியதுதான் என அவர் கேலியாக கேள்விகளை முன்வைத்தார்.   மாஜினியையும் மார்க்சையும் ஒப்பிட்டு பகுனின் பேசுகிறார். மாஜினி கடவுளை நம்பி அரசு குறித்து பேசினார், மார்க்ஸ் கடவுள் நம்பிக்கையாளர் அல்ல. ஆனால்    மாஜினியின் கடவுளே பரவாயில்லைப்போல் உள்ளது என விமர்சித்தார். அவ்வப்போது அவர் எங்கெல்ஸ் குறித்தும் மார்க்சின் வலக்கரம் என பேசியுள்ளார். எங்கெல்ஸ், லசேல் போன்ற மார்க்சிய சோசலாஜிஸ்ட்கள்  பொருளாதார வளர்ச்சியின் கட்டங்கள், சோசலிச புரட்சி என்று பேசுவது குறித்து தனது கருத்துக்களை பகுனின் முன்வைத்தார்.  தவிர்க்கமுடியாத பொருளாதார கட்டங்கள் என பிற அனைத்தையும் நீக்கிவைத்து பேசுவது என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது என பகுனின் எழுதினார் தற்காலத்தில் பிஸ்மார்க் எப்படியோ அப்படி அவரின் வழித்தோன்றலாக எதிர்கால பிஸ்மார்க்காக மார்க்ஸ் எனக்குப்படுகிறார் எனவும் பகுனின் எழுதினார். மார்க்சை தான் இழிவுபடுத்துவதாக கருதவேண்டாம் என தெரிவித்துவிட்டு அவ்வாறு எழுதினார் பகுனின். மார்க்சை ஒப்பிடும்போது பகுனின் செல்வாக்கு மிகுந்த ஈர்ப்புகொண்டதாக இருக்க முடியவில்லை. ருஷ்யாவில் டால்ஸ்டாய், குரொபோட்கின் போன்றவர்கள் வன்முறையற்ற அனார்க்க்சிசம் பக்கம் நின்றனர். ஸ்பெயின், இத்தாலியில்தான் பகுனின் செல்வாக்கு நீடித்ததாக இருந்தது.  VI   சோசலிசம் இல்லாத சுதந்திரம் நீதியற்றது. அதேபோல் சுதந்திரம் இல்லாத சோசலிசம் மிருகத்தனமானது (Liberty without Socialism is privilege, injustice; socialism without liberty is slavery and brutality)   என எழுதினார் பகுனின். அவர்  முறைப்படுத்தப்பட்ட சிந்தனை எதையும் தரவில்லை என பொதுவாக கருதப்படுகிறது. கோட்பாடுகளால், புத்த்கங்களால், தயாரிக்கப்பட்ட சிஸ்டம் ஒன்றால் இவ்வுலகை எவரும் காப்பாற்றிவிடமுடியாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தான் தேடிக்கொண்டிருப்பவன் (I am a true seeker)  என்பார்.  குரோப்ட்கின் சொல்வது போல அவர்   அறிவார்ந்த விற்பன்னராக இல்லாமல் இருக்கலாம் ஆனால் தார்மீக ஆளுமைக்குரியவர் (moral personality  rather than intellectual authority).  அவர் எழுத்துக்கள் அவரை கோட்பாடற்ற கிளர்ச்சிக்காரர் (undoctrinaire insurrectionist)  என அடையாளப்படுத்துகின்றன.  வளர்ச்சி பெறாத நாடுகளின் அடிமட்ட மக்களிடமிருந்துதான் புரட்சி என அவர் கருதினார். சொத்தில்லாத, அன்றாடவேலை இல்லாத, எதுவுமே கிடைக்கப் பெறாதவர்கள்தான் அவரின் புரட்சிகரபகுதி- ஒழுங்கமைந்த தொழிலாளிவர்க்கமல்ல. ஆஸ்திரிய பேரரசை அழித்து பல ஸ்லாவியர் குடியரசுகளை உருவாக்குதல்தான் அய்ரோப்பிய புரட்சியின் நம்பிக்கையாகும் என அவர் கருதினார்.  . ஹெர்சன் பகுனினை அமெரிக்கா இல்லாத கொலம்பஸ் மட்டுமல்ல  கப்பலே இல்லாதவர் என்பார்.  முற்ற முடிவான மய்யப்படுத்தப்பட்ட செயற்கை உல்கு அவருக்கு ஏற்புடையதல்ல. அதிலிருந்து தப்ப விரும்பும் மனிதனாக அவர் இருந்தார். ஆய்வுக்கூட சோதனைகளின் பார்முலாக்களில் வாழ்க்கையில்லை எனக் கருதினார். அது பெரும் கொடுமையானது என்றார். உலக ராணுவ அரசுகள் அடித்துக்கொண்டு அழியும்- ஒன்று மற்றதை விழுங்கும் என  அச்சமுற்றார்.  ஒவ்வொரு கட்டளையும் சுதந்திரத்தின் கன்னத்தில் விழும் அறையே (Every command slaps liberty in the face)  என்றார் பகுனின். அவரைப் பொறுத்தவரை இந்த அரசாங்கம் மோசம் அந்த அரசாங்கம் நல்லது என்பதெல்லாம் இல்லை. அரசாங்கம் என்பதே ஆபத்துதான் மோசமானதுதான். மனிதகுலமே சுதந்திரமாக சமதையாக இருந்தால்தான் எனக்கும் சுதந்திரம். அதாவது எனது சுதந்திரத்தை வரையறுக்காத கட்டுப்படுத்தாத அடுத்த மனிதர்களின் சுதந்திரம் என்பதுமாக அது இருக்கிறது என்றார். பிரிந்துபோகும் உரிமை இல்லாத ஃபெடெரலிசம் என்பதை பகுனின் ஏற்கவில்லை. அது உண்மையான ஃபெடெரலிசம் ஆகாது என்றார். கண்ணுக்கு தெரியாத புரட்சிகரகுழுக்களாக நாம் செயல்படவேண்டும். இருக்கின்ற அரசை அழிக்கவேண்டும். புதிய அரசை அதிகாரத்தை கட்டுவதல்ல  நமது வேலை என்றார்.   பாட்டளிவர்க்க சர்வாதிகாரம் உலக புரட்சியில் தலைமை பொறியாளராக  மக்களை நெறிப்படுத்தும் அதிகாரமாக செயல்படும் என்பதே அனைத்து மக்கள் இயக்கங்களையும் திசை திருப்பும்- புரட்சியை கொன்றுவிடும் என்பதை மார்க்ஸ் பார்க்க தவறிவிட்டார். எந்த வகையிலும் அரசியல் சர்வாதிகாரம் அரசு மறுகட்டுமானம் எனப்பேசுவது ஆபத்தானதே என்ற பார்வையை வைத்தார் பகுனின். வறுமையும் தாழ்வுற்ற நிலையும் மட்டுமே புரட்சியை உருவாக்கிவிடாது. தலமட்ட கலகம் எழலாம். ஆனால் மக்களிடம் சர்வாம்ச கொள்கை பற்ற வேண்டும். அது உரிமைக்கான ஆழமான பற்றுறுதி தாகமாக இருக்கவேண்டும். இந்த சிந்தனையும் வெகுஜன நம்பிக்கையும் இணையும்போது  சமுக புரட்சி அருகாமைக்கு வரும் என்றார் பகுனின். வேர்க்கால் சமூகம் தனது அனுபவங்களின் வழியாக விருப்பங்களை உணர்ந்து வடிவங்கொடுக்கும் புதிய சமூக கட்டுமானத்தை செய்திடும். இப்படித்தான் சரியான சமூக புரட்சி சாத்தியம் என பகுனின் என விளக்கம் அளித்தார் .   .  சமதையான மனிதர்கள் மத்தியில் மட்டுமே மனிதனின் உண்மையான சுதந்திரம் சாத்தியமாகும். ஒருவன் அடிமையாக இருந்தால்கூட அனைவரின் விடுதலை என்பது இல்லாமல் போய்விடும் என்பார் பகுனின். சமுக ஸ்தாபனங்கள் அனைத்திலும் சுதந்திரம், தனிநபர் சுதந்திரத்தில் சமுக ஒழுங்கு என சொன்னார் அவர். அனைத்து வர்க்கங்கள், ரேங்க் என்பதை தாண்டி அனைவருக்குமான அரசியல் உரிமை, சர்வஜன வாக்கெடுப்பு என அவர் வற்புறுத்தினார். நீதிமான்கள் கூட சமுகத்தால் தேர்ந்த்தெடுக்கப்படுவர். அனைத்து மையப்படுத்தப்பட்ட அரசாங்க  நிர்வாக நிறுவனங்கள் கலைப்பு என்றார். அடிப்படை நிறுவனம் கம்யூன். அதன் அனைத்துவகை நிர்வாகிகளும் வயதுவந்த அனைவராலும் தேர்ந்த்தெடுக்கப்படுவர். கம்யூன், பிராவின்ஸ், தேசம் என்கிற வகையில் கட்டமைப்பு இருக்கும். சுயேச்சையான பிரதேசங்களின் சமஷ்டியாக தேசம் இயங்கும். தனிமனித சமத்துவம் என்பதற்கு அவர் விளக்கம் தந்தார்.  ஒவ்வொரு தனிநபருக்குமிடையேயான வேறுபாடுகளை சரிப்படுத்துவதல்ல சமத்துவம். திறமைகளில், இனவழியில், பாலினத்தில், வயதில் வேறுபாடுகள் வித்தியாசங்கள் இருக்கலாம். பிறந்ததிலிருந்து வளர்ந்து வரும் காலத்தில் வாய்ப்புகளில் சமத்துவம் என சொல்கிறோம். கல்வியில் வாழ்வதற்கு தேவையானவற்றில் சம் வாய்ப்புகள் என்கிறோம். வழிவழி சொத்துரிமை ஒழிக்கப்படும் என்பதை பகுனின் ஏற்றார். உழைப்பு மனித கெளரவம் என்கிற உணர்தல் இருக்கும். உடல் உழைப்பு, அறிவு உழைப்பு என பாகுபாடுகள் இல்லாமல்  கூட்டு உழைப்பு  என சொல்கிறார் பகுனின்.  குடும்ப இயற்கையை அல்ல சட்டரீதியான சொத்து மரபுரிமையை ஒழிப்பது பற்றியே பேசுகிறோம் என்றார். மதரீதியான திருமணம், சிவில் திருமணம் என்றில்லாமல் சுதந்திர திருமணம்  என வரையறுத்தார். குழந்தைகள் ’பெற்றவருக்கோ, சமுகத்திற்கோ சொந்தம்’ என உரிமை கொண்டாடமுடியாது. அவர்கள் வளர்க்கப்பட்ட பின்னர் சுதந்திரமானவர்கள். மதசார்பற்ற கல்விமுறை அனுசரிக்கப்படும். வயதானவர், நோயுற்றவர், முடியாதவர் கம்யூனால் பராமரிக்கப்படுவர். ஒவ்வொருவருக்குமான அரசியல், பொருளாதார சமூக சமத்துவம் என்பது அவரது கனவு எனலாம். சமாதானம் மற்றும் சுதந்திரத்திற்கான் லீக் என்பதில் விக்டர் ஹ்யுகோ, மில், கரிபால்டி ஆகியோர் ஆர்வம் காட்டினர். ஜெனிவாவில் அதன் முதலாம் காங்கிரஸ் 1867ல் நடந்தது. அங்கு பகுனின் கருத்து ஏற்கப்படாததால் அவர் 1868ல் வெளியேறினார். பெடரலிசம் என்கிற முக்கிய கருத்தாக்கம் குறித்து அவர் பேசினார். சோசலிசம் உருவாக்கம் என்பதற்கு பல நூற்றாண்டுகள் பிடிக்கலாம் என்றார். அய்க்கிய அய்ரோப்பிய நாடுகள் அமைக்கலாம் என்றார். நான் மட்டுமே ஆளத்தகுதி நிறைந்தவன் என்று நல்ல மனிதனைக்கூட அதிகாரம் சீரழித்துவிடும். அவர்களுக்கு கட்டளையிட நான் பிறந்துள்ளேன் என்கிற அருவருப்பான பார்வை ஒருவருக்கு பலப்பட்டுவிடும் என்றார் பகுனின். அதிகாரம் என்பதைவிட மனித மூளையை இதயத்தை ஊழல்படுத்தும் ஒன்று வேறில்லை என்றார். அனார்க்கிசம் என்பது சுதந்திரமடைந்த மனிதர்களின் கட்டற்ற வெளிப்பாடு .சமத்துவம் சுதந்திரம் என்பதில் பிறக்கும் புதிய ஒழுங்கு. அதிகாரம் எங்கிருந்து என்பதல்ல-  தேவாலயமா, முடியாட்சியா, அரசியல் அமைப்பு சட்ட ஆட்சியா, முதலாளித்துவ குடியரசா, புரட்சிகர சர்வாதிகாரமா எங்கிருந்து அதிகாரம் என்பதல்ல பிரச்சனை. அதிகாரத்தின் அனைத்து வடிவங்களையும் நாங்கள் நிராகரிக்கிறோம் என்பதை அவர் உறுதிபட சொல்லிவந்தார். எந்த தேசிய புரட்சியும் சமுக புரட்சி வடிவம் கொள்ளாது வெற்றிபெற முடியாது. அதேபோல் அது அரசு என ஒன்றை அழிக்காதும் வெற்றிபெறமுடியாது என்றார் பகுனின். ஏனெனில் அது மக்களால் மக்களின் நெறிசார்ந்து நடைபெறுவது. புரட்சி என்ற பெயரால் மேலிருந்து கட்டளைப்போட்டு தேசத்தை நடத்தும் அரசால் விடுதலையை அனைத்து மனிதர்களுக்கும் தரமுடியாது என்பது அவரது அழுத்தமான கருத்தாக இருந்தது.   VII  சம்ஷ்டி ஆட்சி, சோசலிசம், இறையியல்மறுப்பு (Federalism, Socialism , Anti Theologism)  என்பதை அவர் முழக்கமாக தந்தார். 1869 பாசல் காங்கிரஸ் அகிலத்தின் கூட்டத்தில் அரசிடம் அனைத்து சொத்துக்களும் என வாதாடிய கம்யூனிஸ்ட்கள் (State- Authoritarian Communists)   மற்றும் அனைத்து சொத்துக்களும் தொழிலாளர் அமைப்புவசம் என வாதாடிய  (anti authoritarian communist federalists- anarchists) அனார்க்கிஸ்ட்கள்  என இரு பிரிவுகள் மோதிக்கொண்டதாக  அனார்க்கிச வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.. உழைப்பவர்கள் கூட்டாக செல்வ உற்பத்தி செய்வர். அதை கூட்டாக சொந்தம் கொண்டாடுவர். அவரைப்பொறுத்தவரை படித்த கோட்பாட்டு விளக்க சோசலிஸ்ட்களைவிட உண்மையான சோசலிஸ்ட்கள் அன்றாட கடும் உழைப்பால் சமுக அவலங்களை சந்திக்கும் படிப்பறிவற்ற வாழ்க்கையில் ஏதும் கிடைக்காதவர்களே. ஏற்கனேவே உள்ளுணர்வால் உணரப்பட்ட அவர்களிடத்து சோசலிச சிந்தனைகள் கொண்டு செல்லப்பட்டு விழிப்படைய வைத்துவிட்டால் அச்சக்தி வெற்றி பெறும் என்றார்.  1870-71 பாரிஸ் கம்யூன் காலத்தில்  The letter to Albert Richard  என்பதில் புரட்சிகர சிறுபான்மையினருக்கும் வெகுமக்களுக்குமான உறவு என்பதை பகுனின் விவாதித்தார். அக்கடிதத்திலும் மார்க்சியர்கள் கருதியமைக்கும் தனக்கும் இருந்த ’புரட்சி அதற்கு பின்னரான அரசு அமைத்தல்’  நடவடிக்கைகள் குறித்த வேறுபாடுகளை அவர் சுட்டிக்காட்டுகிறார் . தன்னைப் பொறுத்தவரை பாரிசில்தான் எழுச்சி என்பதல்ல எங்கு வேண்டுமானாலும் எழலாம். ஆனால் அவை வேர்க்கால் இயக்க வலுவால் அவற்றின்  தேவைக்கேற்பே எழும்பும் என்றார். . எந்த மையப்படுத்த இடத்திலிருந்து எக்கட்டளையும் கூடாது என்பதை பல்வேறு வடிவங்களில் அவர் விளக்குவதை நம்மால் உணரமுடியும். ஒரே வரியில் அவர் தன்னை விளக்கிக்கொண்டார்.  அவ்வரி எந்தவொரு கட்டளையும் சுதந்திரத்தின் கன்னத்தில் விழும் அறையே  என்பதாக இருக்கிறது. . பிரஞ்சுகாரர்களுக்கு கடிதம் என்பதும் அவரது முக்கிய ஆக்கமாக அனார்க்கிஸ்ட்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. விவசாயிகளின் புரட்சிகர தன்மை என்பதை பகுனின் வற்புறுத்தினார். அவர்களிடம் அறியாமை இருந்தாலும் பொது புத்தி, பாராட்டக்கூடிய திறமை வெளிப்பாடுகள் இருக்கிறது என்றார்.. புரட்சி எனப் பேசுவதை நாம் நிறுத்திக்கொள்வோம். தொடர்ந்த செயல்களில் கவனம் செலுத்துவோம்.  சுதந்திரத்திற்கு உத்தரவாதம் தராமல் கொடுங்கோன்மையை கொணரும் புரட்சி எப்படி புரட்சியாகும். அதிகாரத்தின் அனைத்து வடிவங்களையும் அரசையும் தூக்கி எறிவதுதான் புரட்சியாக இருக்கமுடியும்  என தன்நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.   அரசு சோசலிசம் என்பதை அவர் விளக்கினார்.  உழைப்பை அரசாங்கம் அமர்த்திக்கொள்ளும். அதுவே வங்கியாளர்- மூலதன சேகரிப்பாளார், நெறியாளர், ப்கிர்ந்தளைப்பாளர். இதுதான் கம்யூனிஸ்ட்கள் முன்வைக்கும் இலட்சிய சமூகம். நவீன கம்யூனிசம்- அதிகாரவர்க்க கம்யூனிசம். அரசு சோசலிசம் என விமர்சித்தார் பகுனின். நவீன உலகின் நடப்புகள் நமக்கு ஒன்றை தெளிவுபடுத்தியுள்ளன. எந்த வடிவத்தில் அரசு ஆனாலும் அது எதேச்சதிகாரத்திற்கே போகும் என தனது கவலையை அவர் பகிர்ந்து கொண்டார்   கடவுளும்   அரசும்  (God  and State)   அவரின் அற்புத கருத்தாக்கம். தவறிழைக்காதவர் என எந்த அதாரிட்டி மீதும் தனக்கு நம்பிக்கையில்லை. ஒரு தனிநபரின் நேர்மை, உழைப்பு அனைத்திலும் நான் கொள்ளும் மரியாதை என்பது அவரை தாண்டி எனக்கு நம்பிக்கை வேறு எங்கும் இல்லை என்பதற்கானதல்ல என்றார் பகுனின். சில ’சிறப்பு திறமையாளர்களை’ நாம் போற்றலாம், கொண்டாடலாம் என்பது வேறு. அவர்கள் மீது முற்று முழுதான நம்பிக்கை கொள்வது என்பது வேறு என்றார்  நான் பெறுவது போல கொடுக்கிறேன். ஒவ்வொருவரும் நெறிப்படுத்துகிறோம் நெறிப்படுத்தப்படுகிறோம். நிரந்தரமான முழுமுதல் அதிகாரம் எவரிடத்திலும் இல்லை. ஒருவருக்கொருவர் இசைந்து அவ்வப்போது பெறும் அதிகாரம் -  சுய விருப்பத்தில் பணிதல் மட்டுமே அவசியமாகி்றது என அவர் மனித உறவுகளின் ஊடாட்டத்தை தெளிவுபடுத்துகிறார். மனித முயற்சிக்கும் சுதந்திரத்திற்கும் சமுகம் வேர் என்பதை பகுனின் ஏற்கிறார். அவனது கூட்டு சமுக உழைப்பில்தான் அவன் தன்னை சுதந்திரமாக்கிக் கொள்ளமுடியும் என்பதையும் சொல்கிறார். மற்றவர்கள் இருந்தால்தான், அவர்கள் முன்னர்தான் நான் சுதந்திரமானவன் என்கிற உணர்வே வெளிப்படும் என்கிறார் அடிமை என இருந்துவிட்டால் அதுவே என் சுதந்திரத்திற்கு தடையாகிவிடுகிறது. சமுகம் இயல்பானது என அவர் கருதினார். அரசை எதிர்ப்பதற்கு உள்ள அவசியம் போல் சமுக எதிர்ப்பிற்கான் அவசியம் இராது என கருதினார். தொழிற்சங்க அதிகாரம் (Union Bureacracy)  என்பது பற்றியும் அவர் பேசினார். தொழிலாளிகளை கலந்து பேசாமலே முடிவெடுப்பதை அவர் விமர்சித்தார்.  தொழிற்சங்கத்தலைவர்கள் தாங்கள் முழுமுதல் அதிகாரம் படைத்தவர்களாக தங்களைக் கருதிக்கொள்வதை அவர் விமர்சித்தார். குறிப்பிட்ட காலத்திற்காக மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை என்றார்.  அகிலத்தை பொறுத்தவரை அது ஏழ்மையானது. நிதி பற்றாக்குறை கொண்டது. அங்கு அவ்வித ஊழலுக்கு தலைவர்கள் இரையாக முடியாது ஆனால் அங்கு வேறுவகைப்பட்ட ஊழல் மலிந்துள்ளது. வெற்று ஜம்பம், பகட்டான குறிக்கோள் என விமர்சித்தார். மனிதகுல வரலாற்றில் சாத்தான் ஒன்று உள்ளது என்றால் அது கட்டளைக்கோட்பாடுதான். வெகுமக்களின் அறியாமையாலும் முட்டாள்தனத்தாலுமே அது வாழ்கிறது. இல்லையெனில் அது நொடிப்பொழுது கூட நிற்காது தனிப்பட்ட தனது நெறியை காத்துக்கொள்ளவேண்டும் என நினைப்பவர் அதிகாரத்தில் அதிக காலம் இருக்க மாட்டார்கள். அவர்கள் இருந்தால் விழிப்பாகவும் எதிர்கருத்துகளுக்கு இடமளித்தும்தான் இருக்க வேண்டும். அகிலத்தில் யார் வேலை செய்கிறோம்.  தொழிலாளர்கள் . எதற்காக சோசலிச சிந்தனையை கொண்டு  என கேள்விகேட்டு தனது விளக்கத்தை அவர் தந்தார். ஒரு துறைசார்ந்த தொழிலாளியிடம் போய் உலகம் இப்படி இருக்கிறது என பேசிக்கொண்டு நீங்கள் போகமுடியாது. அவன் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை புரிந்துகொண்டுதான் பேசவேண்டும். அவனிடம் போய் நமது அனைத்து சோசலிச திட்டங்களையும் பேசுவது  எதிர் விளவுகளை கூட உருவாக்கிவிடும் என எச்சரித்தார். தொழிலாளர் இயக்கம் இல்லாமல் வெறும் அகிலத்தின் மையம் என்றால் அது உடலற்ற வெற்று ஆன்மா போன்றாகிவிடும் என்றார் .  அனைத்துவித சமுக வாழ்வும் மக்கள்திரளின் தனிநபர்களின் ஒருவொருக்கு ஒருவரான செயல் ஊடாட்டமே. ஆகச்சிறந்த அறிஞர் என்பானும் கூட மக்கள் செயலின் விளைப்பாடே என்றார் பகுனின். அகிலமே தன்னை அரசாக வடிவமைத்துக்கொள்ளக்கூடாது. அரசு என்பதை அழிப்பது என்றில்லாமல் அகிலத்திற்கு தன்னைப் பொறுத்தவரை அர்த்தம் இல்லை என்றார். அனார்க்கிஸ்ட்கள் பாரிஸ் கம்யூன் குறித்து பேசினர். பாரிஸ் கம்யூனை அதாரிட்டேரியன் சோசலிச மாடலின் தோல்வி என்றனர். நான் அறிஞரோ, தத்துவவாதியோ, தொழில்முறை எழுத்தாளரோ அல்ல. என்னை தற்காத்துக்கொள்ள என பேசியிருப்பேன், எழுதியிருப்பேன். என்னை அதிகம் வெளிப்படுத்திகொண்டவனுமல்ல. சுதந்திர வெறியன் நான். பொறுமையின்றி உண்மையை எப்போதும் தேடிக்கொண்டிருப்பவன். சமுக பொருளாதார சமத்துவத்திற்காக நிற்பவன் என மிகச் சரியாக புரிந்துகொண்டு தன்னை வெளிப்படுத்தினார் பகுனின். அரசுவாதமும் அராஜகவாதமும் என்கிற ஆக்கத்தை அவர் 1873ல் எழுதினார். ருஷ்ய மொழியில் அது எழுதப்பட்டது. அனைத்துவகை அரசாங்க வடிவங்களுக்கும் நாங்கள் விரோதிகள் என அறைகூவி சொல்கிறோம் என எழுதினார். மார்க்ஸ் மற்றும் லசேல் சொல்வது போல் பாட்டாளிகளை ஆளும்வர்க்க்கமாக உயர்த்துவது- மக்கள் அரசு என்பதை ஏற்பதற்கில்லை. அடிமையில்லாமல் அரசு என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை (State without slavery is unthinkable) .   அனைத்து பாட்டாளிகளும் ஆளமுடியுமா- எனவே அவர்களுக்காக சிறு பிரதிநிதி குழு என்கின்றனர். அவர்கள் தேர்ந்த அறிவார்ந்த சோசலிஸ்ட்கள் என்கின்றனர். ஆனால் அவர்கள் தொழிலாளர்களாக தொடர்வதில்லை. ஆகா அற்புதம்..  கல்வியற்ற மக்கள் நிர்வாக கவலைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் ஆட்டுமந்தைதனத்தில் ஒழுங்குபடுத்தப்படுவார்கள். ஆகா அழகான விடுதலை என கேலி செய்தார் பகுனின். மக்கள் அரசை அழிக்காமல் இருப்பதுடன் அதை விரிவுபடுத்தி வலிமையாக்கிடவும் வேண்டும் என மார்க்ஸ் நினைக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அதாவது மார்க்ஸ் மற்றும் தோழர்கள் காப்பாளர்களாக, ஆசான்களாக அவர்களது வழியில் மக்களை விடுவிப்பார்களாம். அறியாமையில் உள்ள மக்களுக்கு வலுவான பாதுகாவலர்கள் என்பதால் அனைத்து நிர்வாக அதிகாரங்களும் அவர்களின் வலிமையான கரங்களில் இருக்குமாம்...  என மிக உக்கிரமான தாக்குதலை மார்க்சிய வரையறைகளின் மீது பகுனின் தொடுத்தார். எவ்வளவுதான் பாதுகாப்பு அரவணைப்பு தருவதாக தெரியும் அரசாங்கமாக இருந்தாலும் அது எதிர்ப்பை சகிக்காது. அதன் அரசியல் மேலாண்மையை விட்டுக்கொடுக்காது. அதனிடத்தில் விசுவாசமாக இருப்பதற்கு பணிந்து நடப்பதற்கு அமைதியான, தாஜா செய்வது உட்பட செய்து பார்க்கும். முடியாத நேரத்தில் அடக்கி ஒடுக்கும். நவீன அரசு அதன் வடிவத்தில் இராணுவ அரசுதான். அது படையெடுக்கும்- விரிவுபடுத்திக்கொள்ளும் அரசுதான் என புரிந்து கொள்ளவேண்டுமென்றார் பகுனின். தேசியம் என்பது ஏதோ மனிதாபிமான கொள்கையின் அடையாளமல்ல. அது வரலாற்றின் விளைபொருளாக பொறுத்துக்கொள்ளப்படும்  மெய்மையில் ஒன்றுதான் என்றார். அரசின் நுகத்தடியிலிருந்து விடுபட பொருளாதார அரசியல் விடுதலை பெறுவது இரத்தம் சிந்தும் போராட்டங்களாலேயே சாத்தியம் என அவர் கருதினார். சோசலிச சமுகப் புரட்சி அதன் சாரத்தில் சர்வதேசத்தன்மையானதாகவும் இருக்கிறது. தனது இறுதி ஆண்டுகளில் தனக்கு நெருங்கியவர்களுக்கு தான் ஒதுங்கிவிடப்போவதாக கடிதம் எழுதினார். தன்மீது எழுப்பப்படும் அவதூறுகள் கண்டு சலிப்படைந்ததாகவும் தெரிவித்தார். மார்க்சியர்களிடமிருந்து அமைப்பை காப்பாற்றிட அனார்க்கிஸ்ட்கள் இத்தாலி போன்ற நாடுகளில் நடத்திவரும் போராட்டத்தை பாராட்டினார். ஆனால் மனசோர்வை, நிராசையை, தன் கனவின் தகர்வை அவர் வெளிப்படுத்தி வந்தார். பகுனின், மார்க்ஸ் இருவரின் மறைவிற்கு பின்னரும் அவர்களது வேறுபாடுகள் தொடர்ந்த விவாதங்களுக்கு இன்றளவிலும் உள்ளாகிவருகின்றன. பகுனின் சிந்தனைகளை மனோராஜ்ய கற்பனைவாதம் என மார்க்சியர்கள்  விமர்சித்தனர். சிறு சிறு கம்யூன் பகுதிகளில் வட்டார அளவில்தான் ஜனநாயகம் சமத்துவம் சாத்தியம் என்கிற பகுனின் சிந்தனை தவறானது மட்டுமல்ல போலியானது என மார்க்சியர்  விமர்சனம் அமைந்தது. அவரின் பல கருத்துக்கள் நகைப்பிற்கு இடம் தருபவன என ட்ராட்ஸ்கியவாதிகள் தாக்கினர்.  மையப்படுத்தப்பட்ட அதிகாரம் எதிர்த்து போராடியதாக சொல்லப்பட்ட பகுனின் தனது இரகசிய அமைப்புகளில் தனது அதிகாரத்தை செலுத்துபவராகவும் தன்னை சிட்டிசன் பி என்றுதான் அழைக்கவேண்டும் என கட்டளை இட்டதாகவும் விமர்சனம் வந்தது. அரசே வேண்டாம் என்றவர்கள் சில நேரங்களில் பூர்ஷ்வா அரசாங்கங்களில் பங்கேற்றவர்களாக இருந்தார்கள் என்கிற விமர்சனமும் அனார்க்க்சிசவாதிகள் மீது எழுந்தது. 1850ல் எங்கெல்ஸ் அரசை ஒழிப்பது எப்போது என பேசுகிறார் .கம்யூனிஸ்ட்களை பொறுத்தவரை அரசை ஒழிப்பது என்பதற்கு அர்த்தம் இருக்கிறது.  வர்க்கங்கள் இல்லாமல் போகும்போது எந்த வர்க்கத்தின் திரட்டபட்ட அதிகாரமும் தேவைப்படாதபோது அரசு அவசியமில்லாமல் போகும். ஒழிந்துபோகும்’- மார்க்ஸ்- எங்கெல்ஸ் காலத்தில் அரசு ஒழிப்பு என எழுந்த குரலை அபத்தமான இலட்சியவாதம் என இருவரும் கருதினர். அதேபோல் எங்கெல்ஸ் தனது மிலான் நகர் நண்பருக்கு எழுதும் கடிதத்தில் அரசுதான் மூலதனத்தை உருவாக்குவதாக பகுனின் சொல்கிறார். அரசின் கருணையால்தான் மூலதனம் என்கிறார். அரசை ஒழித்துவிட்டால் முதலாளித்துவம் ஒழிந்துவிடும் என்கிறார். நம்மை பொறுத்தவரை சிறு குழாம் கையில் இருக்கும் அனைத்து உற்பத்திவடிவங்களையும், மூலதன குவியலையும் ஒழிக்கமுடியும் என்றால் அரசும் வீழ்ந்து போகும் என்கிறோம் என எழுதினார். பகுனின் எழுதிய  Statism and Anarchy யை ருஷ்ய மொழி கற்று மார்க்ஸ் படித்ததாகவும் தெரிகிறது. படித்த அம்மொழியிலேயே தனது நோட்டு குறிப்புகளை வைத்திருந்ததாகவும் ஸ்டீவ் கோல்மேன் என்பாரின் 1982ல் எழுதப்பட்ட கட்டுரை மூலம் அறிய முடிகிறது.  1846ல் புருதானை விமர்சித்து மார்க்ஸ் அன்னென்காவ் என்பாருக்கு எழுதிய கடிதத்தில்  அனார்க்கிஸ்ட்களுகு சரியான பதிலை மார்க்ஸ் தந்ததாக  ஸ்டிவ் சொல்கிறார். டிராட்ஸ்கி அனார்க்கிஸ்ட்களை பூர்ஷ்வாக்கள் சிந்த்னாவாதிகளுடன் ஒப்பிட்டு  பேசினார். இருசாராரும் தொழிலாளரை அரசு அதை தொட்டுவிடாதே’ என்பதில் உடன்படுகின்றனர். ஒருவர் அது எங்கள் புனித கடமை என ஒதுங்க சொல்கின்றனர். மற்றவர் புரட்சிகர கடமை தொடாதே என்கின்றனர். மார்க்சியர்களாகிய நாம் தொடு, கைப்பற்று என்கிறோம் என எழுதினார்..  மார்க்சியர்- அனார்க்கிஸ்ட்கள் இடையில் அரசு குறித்த விவாதம் முடிந்தபாடில்லை..  Ref: BAKUNIN      GUY  ALDRED Michael Bakunin  E H CARR A Marxist Critique of Anarchism, Steve Coleman Bakunin on Anarchy - Sam Dolgoff God and State- Bakunin ஆசிரியரின் பிற நூல்கள் []   ஆசிரியரின் பிற நூல்கள் 1. மார்க்சிய தடங்கள் 2. ரோசாலக்ஸம்பர்க் 3. போராளிகளின் குரல் 4. பகவத்கீதை பன்முகக் குரல்கள் 5. Trade Justice in Telecom 6. Selected Ides of O.P Gupta   www.pattabiwrites.in  E-mail  pattabieight@gmail.com