[]     ஸ்ரீ வைகுந்த வாழ்வளிக்கும் கருடசேவை   - கைலாஷி   muruganandams@rediffmail.com  அட்டைப்படம் : பிரசன்னா -  udpmprasanna@gmail.com    மின்னூலாக்கம் :சீ.ராஜேஸ்வரி - sraji.me@gmail.com    வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை : Creative Commons Attribution -NonCommercial-ShareAlike     உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம், விற்பனை கூடாது            ஸ்ரீவைகுந்த வாழ்வளிக்கும் கருட சேவை []   திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம் அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பா! நிகரில்புகழாய்!  உலகம்மூன்றுடையாய்! என்னையாள்வானே! நிகரிலமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே! புகலொன்றில்லா அடியேன் உன்னடிக்கீழமர்ந்து புகுந்தேனே.     பொருளடக்கம் பாராட்டுரை 8  வாழ்த்துரை 9  ஆசிரியர் உரை 12  பாகம் – 1 14  கருடனின் சிறப்புகள் 14  1. கருடன் 14  2. கருட சரிதம் 18  3. கருடனின் சிறப்புகள் 29  4. பல்வேறு சிறப்பு கோலங்களில் கருடன் 34  5. ஸ்ரீவைகுந்த வாழ்வளிக்கும் கருட சேவை 40  6. பெரியாழ்வார் வைபவம் 47  7. கஜேந்திரமோட்சம் 51  8.திருஅட்டபுயகரம் 62   9. கண்ணன் கபிஸ்தலம் 64  10. திருவிழி மலரும் கரி வரதராஜப்பெருமாள் 66  11. அரவப் பகையோன் 68  12. கருட கம்பம் 74  13. கருடாழ்வார் 80  பாகம் -2 86  சிறப்புக்கோல கருடன்கள் 86  14. திருவல்லிக்கேணி நித்ய கருட சேவை 86  15. எண்கண் ஆதிநாராயணப் பெருமாள் 89  நித்ய கருட சேவை 89  16. அம்பாசமுத்திரம் புருஷோத்தமப் 91   பெருமாள் நித்ய கருட சேவை 91  17. சகாவாக கருடன் – பத்ரிநாதம் 93  18. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏக சிம்மாசனம் 96  19. திருக்குளந்தையில் ஏக சிம்மாசனம் 100  20. தேரழுந்தூரில் சகாவாக கருடன் 102  21. திருக்கண்ணபுரத்தில் கர்வம் தீர்ந்த கருடன் 109  22. திருக்கண்ணங்குடி நியம கருடன் 115  23. திருவரங்கம் அமர்ந்த கோல கருடன் 119  24. திருநறையூர் கல் கருடன் 123  25. திருவெள்ளியங்குடி சதுர்புஜ கருடன் 130  26. திருநாகை அமர்ந்த கோல கருடன் 135  27. திருமெய்யம் மூன்று கருடன்கள் 140  28. மன்னார் போளூர் கண்ணீர் பெருக்கும் கருடாழ்வார் 142  29. மூல கருடன் 144  பாகம் -3 147  கருட சேவைகள் 147  30. திருவரங்கம் கருடசேவை 147  31. திருமலை கருடசேவை 150  32. திருச்சானூர் பத்மாவதித் தாயார் கருடசேவை 156  33. திருநாங்கூர் பதினோரு கருட சேவை 163  34. ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை 171  35. ஸ்ரீவில்லிபுத்தூர் ஐந்து கருட சேவை 186  36. காஞ்சிபுரம் கருடசேவை (தொட்டாச்சாரியார் சேவை) 190  37. நாச்சியார் கோவில் கல் கருடசேவை 196  38. தவளைக்கு மோட்சம் அளித்த கருட சேவை 201  39. திருக்குடந்தை அட்சய திருதியை 204  பதினான்கு கருட சேவை 204  40. தஞ்சை இருபத்திமூன்று கருட சேவை 206  41. திருவல்லிக்கேணி கருட சேவைகள் 209  42. கல்கியின் கருட சேவை 216  43. பரதவர் குல மருமகன் கருட சேவை 221  44. வைத்தியர் கருட சேவை 224  45. நீர் வண்ணர் கருட சேவை 229  46. மேல் கோட்டை வைர முடி கருட சேவை 235  47. கள்வனை மாற்றிய கருட சேவை 241  48. பூவிருந்தவல்லி மூன்று கருடசேவை 246  49. சத்ய நாராயணப் பெருமாள் கருட சேவை 251  50. திருவஹீந்திரபுரம் - கருடனும் வேதாந்த தேசிகரும் 255  51. ஸ்ரீகருட தண்டகம் 258  52. கருட பஞ்சாசத் 262  53. கருட பத்து 266  54. கருட பஞ்சமி 271  55. ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் 273  56. கருட யாத்திரை 294  57. பூரண சரணாகதி 295                                  சமர்ப்பணம் []   அடியேன்  தமக்கைக்கு   பாராட்டுரை   ஸ்ரீமதே ராமானுஜாய நம: []   “ஸ்ரீவைகுந்த வாழ்வளிக்கும் கருட சேவை” எனும் தலைப்பில் சென்னைத் திரு.முருகானந்தம் அவர்கள் ஒரு நூலாகவே படைத்துள்ளார். அழகிய மணவாளப்பெருமாள் அருளிச்செய்த “ஆசார்ய ஹ்ருதயம்” எனும்  நூலில் மூன்றாம் ப்ரகரணத்தில் முதலில் “சேர்ப்பாரைப் பக்ஷிகளாக்கி ஜ்ஞான கர்மங்களைச் சிறகென்று குரு ஸப்ரஹ்மச்சாரி புத்ர சிஷ்ய ஸ்தாநே   பேசும்” எனக்காண்கிறோம். இதனால் பக்ஷிகளைப் பற்றிக் கூறப்படுவதன் உள்ளுறை பொருள் யாதெனின் பகவத் விஷயத்தில் கொண்டு சேர்க்குமவர்கள் பக்ஷிகளாகக் கொள்ளப்படுவார்கள் என்பதாம். ’வீசும் சிறகால் பறத்தீர்’ ’அஞ்சிறை மடநாராய்’ போன்ற சொற்றொடர்களில் சிறகாகச் சொல்லப்படுகிறவை ஞானமும் அனுட்டானமும் ஆகும். இவ்வகையில் பக்ஷிகளுக்கு அரசனான கருடன் தலைமையிடத்தைப் பெறுகிறான். பெருமாள் கோவில்களில் கருட சேவை முதலிடத்தைப் பெறுகிறது. வேத சொரூபனான கருடன் என்பதால் அவன் நிறைந்த ஞானம் உடையவன் என்பதும் அவன் பெருமான் இட்ட வழக்காய் உற்ற துணையாய்த் துலங்குவதால் உயர்ந்த ஒழுக்கம்  உடையவன் என்பதும் பெறப்படுகின்றன. எனவே அத்தகு கருடசேவை பற்றி விரிவாக ஆய்வு நூலாக இல்லாமல் அனுபவ நூலாகத் திரு.முருகானந்தம் எழுதியிருப்பது பாராட்டத்தக்கதாகும். கருடனைப்பற்றிய வரலாறும் அவன் சேவை எந்தெந்தத்தலங்களில் சிறப்பாகக் காணப்படுகின்றன என்னும் செய்தியையும் சிறப்பாக விளக்கியுள்ளார். பெரும்பாலான இடங்களில் கருடனின் திருக்கரங்கள் எம்பெருமான் திருவடிகளையே தஞ்சமாய்க் கொள்ள வேண்டும் என உணர்த்தப்படுகிறது. பல்வேறு வினைகளால் பல்பிறவி கொண்டுள்ள நாம் எம்பெருமானை சரணடைவது ஒன்றுதான் உய்யும் வழியாகும் என்பதைத்தான் கருட சேவை எடுத்துக் காட்டுகிறது. இந்த செய்தியை நூலாசிரியர் தக்க சான்றுகளுடன் விளக்கியிருப்பதும் உரிய தத்துவப் பொருள்களை எடுத்தியம்பியுள்ளதும் போற்றற்குரியனவாகும். வள்ளலார், அருணகிரிநாதர் போன்றோர்களின் பாடல்களையும் சேர்த்திருப்பது நூலாசிரியரின் புலமைக்கு சான்றாகும். நூல் முழுவதையும் படித்ததால் அடியேன் பல திவ்ய தேசத்துக் கருட சேவை கண்டு களித்தது போலாயிற்று. முருகு என்னும் அழகும் ஆனந்தமும்(மகிழ்ச்சியும்) கருட சேவையில் கிட்டுகின்றன என்பதைத் திரு.முருகானந்தம் மூதலித்துள்ளார். அவர்க்கு என் உளமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொலிக.  பொலிக. பொலிக.  அடியன் கு.அரங்கநாதன் (விஞ்சிமூர் சுதர்ஸனம் அரங்கநாதச்சாரியார், வரிச்சிக்குடி, காரைக்கால்)    வாழ்த்துரை வித்யாசுப்ரமணியம் எழுத்தாளர் சென்னை                                      இனிய  நட்புக்கு,   சின்ன  வயதில்,  எந்த  ஒரு  பெருமாள்  கோயிலுக்குப் போனாலும் பெருமாளைப்  பார்த்தபடி, விரித்த சிறகுகளும், அஞ்சலி  ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் தனி சந்நிதியில் இருக்கும் கருடாழ்வானைக்  காண்பதுண்டு. சிவனுக்கு நந்தி  மாதிரி நாராயணனுக்கு கருடன்  என்கிற அளவில்தான்  என்  சிறு  வயதில் கருடனைப்  பற்றி  எனக்குத்  தெரியும். வினதைச்  சிறுவன்,  புள்ளரையன்,  பக்ஷிராஜன், நாராயண ரதம், அரவப்பகையோன்,  காய்சினப்புள், வைநதேயன், சுபர்ணன், உவணன்,  இன்னும்  பல்வேறு நாமங்களால்  அறியப்படும்  பெரிய திருவடியாகிய  கருடனைப்  பற்றி பின்னர்  நிறைய  அறிந்திருக்கிறேன். முக்கியமாக  கருடனின்  பிறப்பு  என்னை மிகவும்  கவர்ந்த  ஒன்று. அவன்  ஸ்ரீமன்நாராயணனால்  வரம் தரப் பெற்று பெரிய திருவடியாய் உயர்ந்ததன்  பின் புலத்தில் இருக்கும் அவனது  தாயன்பு, அடிமைத்தளையிலிருந்து தன்  தாயை  மீட்க  அவன்  செய்த  சாகசங்கள்  இவை எல்லாம் என் மனதிலும்  ஒரு  உயர்ந்த ஸ்தானத்தை  அவனுக்களித்தது.  இது குறித்து கொஞ்ச நாள் முன்பு நான்  எழுதிய வெண்பாவை  இங்கு அளிப்பதில் பெருமையடைகிறேன். கடாசலம் கச்சமுண்டு கட்கிலியாய்ச் சென்றாய் கடாட்சமு மின்னமிழ்தும் கொண்டுநீ வந்தாய்   உடற்றந்த வன்னை யிடர்தீ ருவணா!  கடற்கிடந்தோன் தந்தான் உவண் விளக்கம்: தன் தாயாகிய வினதையை அடிமைத் தளையிலிருந்து மீட்க அமிர்தம் கொண்டுவரச் சென்ற போது தந்தை கசியப மகரிஷியின் அறிவுரைப்படி யானையும், ஆமையும் உண்டு யாரும் புக முடியாத பொறிக்குள், தன் உடலை சிறிதாக்கிக் கொண்டு யார் கண்ணுக்கும் புலப்படாமல் உள்ளே சென்று அமிர்தத்துடன் திருமாலின் கடாட்சமும் பெற்று வந்து அன்னையின் இடர் தீர்த்த கருடப்பட்சியான உனக்கு ஒரு உயர்ந்த இடம் தந்தான் திருமால்.  இந்தப்  புத்தகம்  கிடைத்த பிறகுதான் கருடனைப் பற்றி  அறிவதற்கு  இன்னும் எத்தனையெத்தனை விஷயங்கள்  இருக்கின்றன  என்பது  புரிந்தது. மலைத்துதான்  போய்  விட்டேன்.  இனி  கருடனைப்  பற்றி  சொல்வதற்கு  ஒன்றுமில்லை எனும்  அளவுக்கு இந்த  ஒரே  நூலில் அத்தனை  அரிய  தகவல்களையும்  ஒன்று  விடாமல் கூறியிருக்கிறார்  ஆசிரியர்  திரு. முருகானந்தம். கருடனின்  பிறப்பிலிருந்து  ஆரம்பிக்கும்   இந்நூல் அத்தனை  வைணவத் தலங்களுக்கும்  நம்மை அழைத்துச் சென்று  கருடசேவை  செய்ய வைக்கிறது.  அடடா  எத்தனை  புராணக் கதைகள்,  ஸ்தல புராணங்கள், எத்தனை விதமான  கருடசேவைகள். வியந்து  நிற்கிறேன். இந்த  நூலை  வாசிக்க  ஆரம்பித்ததிலிருந்து மாபெரும்  சிறகுகள்  விரித்த  கருடப்  பட்சியொன்று  இரவும்  பகலும்,.  விழிப்பிலும், உறக்கத்திலும் எனக்குள் பறந்து கொண்டிருக்கிறது. அதன் நிழலில்தான் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன்  எனலாம்.   பறவைகளில்  நான்  கருடன் என்று கீதையில் கண்ணனால் பெருமைப்படுத்தப் பட்டவர் கருடன்.  கருடபுராணம்  பாவங்களுக்கான தண்டனைகளை பற்றியும்,  மரணத்திற்குப்  பின் ஆத்மாவின் நிலை  பற்றியும் கூறும்  அற்புதமான நூல். கருடன்  மீது  நாராயணன்  ஏறியமர்ந்து  விட்டான் என்றால்  யாரையோ இரட்சிக்கப்  போகிறான்  என்று அர்த்தம். கஜேந்திரனை முதலையின் பிடியிலிருந்து அவன் காத்தது  நீங்கள்  அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால்  கஜேந்திர  மோட்சம்  பற்றி  நாமறியாத  பல விஷயங்களை இந்நூலாசிரியர் விவரிக்கும் போது என் விழிகள்  விரிந்தன. இந்தியாவில் மட்டுமல்லாது தாய்லாந்து இந்தோனேஷியா, நேபாளம் ஆகிய உலக  நாடுகளில்  உள்ள  கோவில்களில் காணும் கருடனின்  சிற்ப வடிவங்களைப்  பற்றிக் கூட விரிவாக  விவரித்திருக்கிறார். இந்நூலில் இவர் குறிப்பிடும் ஷேத்திரங்களையும், தலபுராணங்களையும்,  அங்குள்ள கருடனின் சிறப்பையும்  அறியும் போது,  உடனே  அந்த  கோயில்களுக்கெல்லாம் சென்று வர  வேண்டும்  என்ற ஆவல்  எழும்புகிறது. காஞ்சிக்கு  அருகே  காவேரிப்பாக்கம்  சுந்தரவரதர்  கோவிலில், கல்யாண  வரம்  தரும்  கருடனாக,  திருவண்ணாமலை  சுந்தர வரதராஜ பெருமாள்  கோவிலில் பரிந்துரைக்கும்  கருடனாக, திருக்கண்ணங்குடியில் நியம கருடனாக,  திருக்கண்ணபுரத்தில்  கர்வம்  தீர்ந்த கருடனாக,  திருக்கண்ணமங்கையில் புடவை  அணிந்தவராக என்று எத்தனை கோலங்கள்!  எத்தனை  எத்தனை  தலபுராணங்கள். இந்தியாவில்  உள்ள  அத்தனை  வைணவ ஆலயங்கள்,  அதில் உள்ள கருடாழ்வார்,  அத்தலம்  பற்றிய ஆழ்வார்களின்  பாடல்கள்,  தல புராணம், அங்கு  அங்கு  நடைபெறும் கருட சேவையின்  சிறப்பு என்று ஒன்று  விடாமல் இத்தனை தகவல்கள் அளிக்க  நூலாசிரியர்  எவ்வளவு  உழைத்திருக்க வேண்டும்! அவரே ஒரு கருடனாக  மாறி அத்தனை  ஷேத்திரங்களுக்கும் பறந்து சென்று  கண்டு, வணங்கி, அறிந்து  நமக்கும் இந்நூல்  மூலம்  தரிசனம்  செய்து வைத்திருக்கிறாரோ என்றுதான் நினைக்கத்  தோன்றுகிறது. சமீபத்தில்தான் நான் அஹோபிலம் சென்று  வந்தேன். அத்தனை  நரசிம்மர்களையும் தரிசித்தேன்.  ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்கும்  போது  எதிரே சிறகு  விரித்த  கருடாத்ரி மலையையும்  கண்டேன். கருடனுக்கு உக்கிர மூர்த்தியாய்  காட்சியளித்த அஹோபில நரசிம்மரையும்  தரிசித்தேன்.  ஆனால் அங்குதான்  கருடன் கருடாழ்வாராக  உயர்த்தப் பட்டான்  என்பதை  இந்நூல்  மூலமே அறிந்தேன்.  மங்களாசாசனம் செய்து பாடல்கள்  பாடியவர்களே  ஆழ்வார்கள்  எனப் பட்டார்கள்.  அனால்  அப்படி  எதுவும்  செய்யாமல்  ஆழ்வாராக  போற்றப்பட்டவர்கள்  கருடனும்,  பிரகலாதனும். என்பதை  இப்போதுதான்  அறிந்தேன். எத்தனை  விதமான  கருடசேவைகள்  உண்டோ அத்தனையும்  மிக  விரிவாக சொல்லப் பட்ட ஒரு நூல் இது. கருடன் மீதமர்ந்த பெருமாளுக்கு பல்லாண்டு பாடிய  பெரியாழ்வார்,  விஷ்ணு  சித்தராக இருந்து  எவ்வாறு  பெரியாழ்வார் என்ற  நாமத்தை  அடைந்தார் என்ற  சம்பவத்தை  படிக்கும்  எவருக்கும் மேனி  சிலிர்க்கும். கஜேந்திர  மோட்சத்தில்  இத்தனை  விஷயங்கள் புதைந்திருக்கிறதா?  கஜேந்திர மோட்சத்தையே   தல புராணமாகக்  கொண்ட திரு அட்டயபுயகரம்,  கபிஸ்தலம் போன்ற  கோயில்களைப் பற்றியும் இந்நூல்  மூலமாகவே அறிந்தேன். விழி மலரும் கரி வரதராஜப் பெருமாள் பற்றி  இந்நூலில்  படித்ததும்  உடனே நெற்குன்றம்  சென்று,  இருட்டில்  திருக்கண்களுக்கு  நெய்தீபம்  காட்டும்  பொது  பெருமாளின்  விழிகள்  விழித்து  பார்க்கும்  அழகைக்  காண  வேண்டும் என்ற  ஆவல்  தோன்றுகிறது. இக்கோயிலிலும்  தல புராணம்  கஜேந்திர  மோட்சம்தானாம். நாச்சியார் கோயில்  கல்கருடனின் சிறப்பை அறியாதோர் இருக்க முடியாது. அதன்  ஆச்சர்யமான  தலபுராணத்தை  சுவாரசியமாய் விவரிக்கிறார் ஆசிரியர்.   ஆழ்வார்  திருநகரியில் கண்டு பிடிக்க முடியாமல்  போன  நம்மாழ்வார் திருவுருவை  வானில்  வட்டமிட்ட  கருடன்  மூலம் கண்டறிந்த  கதை வியக்க  வைத்தது.   காவேரி விரஜா ஸேயம் வைகுந்தம்  ரங்க  மந்திரம்  - ஸ்ரீரங்கத்து  கருட  சேவை  பற்றி  வெகு அழகாய் சொல்லியிருக்கிறார். மயிலைக்கு வெகு அருகில்  இருக்கும்  திருவல்லிக்கேணி  தலம் குறித்தும்,  கருடன்  குறித்தும்  கூட  பல  தகவல்களை அறிந்தேன்.  அடுத்த  முறை  அங்கு செல்லும் போது  இவற்றை  எல்லாம்  ரசிக்க  வேண்டும். இப்படி  ஒவ்வொரு  கோயிலும்,  அங்கு  நிகழ் பெறும் கருட சேவையும், தலபுராணமும் பற்றி  சொல்லிக்  கொண்டே போனால்  இம்முன்னுரையே முழு  நூலாகி  விடக்கூடும்.   மொத்தத்தில்  கருடன் மங்களம் அளிப்பவன். எந்தக் கோயிலில் மங்கள காரியங்கள்  நடந்தாலும் அங்கு  வானில் வட்டமிட்டு மங்களம்  அருள்பவன். மிக உயரே சிறகு விரித்து   பறக்கும் கருடனைக் காண்பதே  நன்மைகளை பயக்கும் பேரின்பம்தான். எனது கயிலை யாத்திரையின் போது கயிலை மலையை பலமுறை வலம் வந்த கருடனை  நான்  கண்டிருக்கிறேன். அரவப் பகையோனாகிய இவன், பிரமனும் இந்திரனும் வேண்டியதால் அரவங்களையே தன் ஆபரணங்களாக  அணிந்து  கொண்டான். இனி எந்தக் கோயிலுக்கு  சென்றாலும் அங்குள்ள  கருடனை  உற்றுப்  பாருங்கள். வாசுகியைப்  பூணூலாக  அணிந்த,  குளிகனை  வலக்கை கங்கணமாகவும், ஆதிசேஷனை இடக்கை  கங்கணமாகவும், தட்சகனை  அரையணி யாகவும், கார்கோடகனை மாலையாகவும், பத்மனை வலது  காதிலும்,  மகாபத்மனை இடதுகாதிலும்  குண்டலமாகவும்,  சங்கபாலனை  திருமுடியிலும்  அணிந்த அந்த  பெரிய  திருவடியை  ரசித்துப்  பாருங்கள். கருடசேவை  மும்மலங்களை  அழிக்கக்  கூடியது. அதை  எப்படி காணவேண்டும்  என்பதை  இந்நூல் அழகாக  விவரிக்கிறது.  எந்த ஒரு பெருமாள்  கோவிலுக்கு  செல்வதற்கு  முன்பும்  இந்நூலை  ஒரு  முறை  புரட்டி  அத்தலத்தைப்  பற்றி அறிந்து  கொண்டு  சென்றால்  பக்தி மட்டுமல்லாது  ஆழ்ந்த அறிவுடனும் கூட  அனைத்தையும்  ரசித்து  இறை தரிசனம் செய்ய முடியும். இத்தகைய  ஒரு  உயர்ந்த  நூலை  எழுதி  புத்தகமாக  கொண்டுவரும் திரு.முருகானந்தம் அவர்களுடைய உழைப்பிற்கு  தலை வணங்குகிறேன்.   அன்புடன் வித்யா சுப்ரமணியம்                            ஆசிரியர் உரை ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நம:   []   ஏதும் அறியாத வயதிலேயே பெருமாளை கருட வாகனத்தில்  சேவித்திருக்கின்றேன். சிறு வயதில் மார்கழி மாதத்தில் நடுங்கும் குளிரில் அதிகாலை எழுந்து  பிரசண்ட விநாயகர் கோவிலுக்கு ஓடித் திருப்பாவையும் திருவெம்பாவையும் இசைப்போம். அம்மாதத்தில்  வைகுந்த ஏகாதசியன்று அதிகாலை பரமபதவாசல் திறக்கும் போது பெருமாள் கருட வாகனத்தில் தரிசனம்  தருவார். எங்கள் ஊர் உடுமலைப்பேட்டையில் ஒரு கோவிலில் அல்ல மூன்று கோவில்களில் அன்று  கருட வாகனத்தில் பெருமாளைத்  தரிசிப்போம். பின்னர் பெருமாள் ஊர்வலம் வருவார் சிறுவர்களாகிய நாங்களும் அவருடன் கூடவே வலம் வருவோம். அது அப்படியே மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்து விட்டது.  அப்போது கருட சேவை பற்றிய விளக்கம் எல்லாம் ஒன்றும்  தெரியாது. பின்னர் வேலை நிமித்தமாக வெளியே வந்த சமயம் பல்வேறு ஆலயங்களில் கருடசேவையைச் சேவித்த போது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு உண்டாகியது.  பின்னர் மனதில் இவ்வளவு வாகனங்களில் பெருமாள் பவனி வரும் போது கருட சேவைக்கு மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம் என்ற ஒரு வினா மனதில் இயற்கையாகவே தோன்றியது. அதற்கு விடை தேடிய போது, அடியேன் சிறு ஞானத்தன் அறிந்து கொண்டதைப் புரிந்து கொண்டதை,  “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த நூல். கருடசேவையின் தாத்பர்யம் என்ன  என்று கற்றறிந்தோரிடம் கேட்டு, பல் வேறு நூல்களைப் படித்து, பல் வேறு திவ்ய தேசங்களின் சிறப்பு மிக்க கருடசேவைகளைச் சேவித்து, அவற்றின் மூலம் கிடைத்த  அனுபவங்களின் தொகுப்பே இந்நூல்.   இந்நூலில் உள்ள செய்திகள் எல்லாம் காலம் காலமாக நமது முன்னோர்கள் நமக்குக் கூறி சென்றவையே புதிதாக அடியேன் ஒன்றையும் கூறவில்லை. அடியேன் முதலில் கருடசேவை (http://garudasevai.blogspot.com) என்ற  வலைப்பூவில் ஒவ்வொரு கருடசேவையையும் சேவித்த பின்  கட்டுரையாகப் படங்களுடன் பதிவிட்டு வந்தேன். அவையனைத்தையும் ஒரு கோர்வையாகக் கோர்த்து ஒரு மாலையாக அளிக்க முயற்சி செய்துள்ளேன். பல் வேறு நூல்களில்  படித்த, பல் வேறு வலைத் தலங்களைப் பார்த்த, பல் வேறு அறிஞர்களிடம் உரையாடிய பல செய்திகள் இப்புத்தகத்தில் உள்ளன.  அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.   பல் வேறு திவ்ய தேசங்களுக்கு அடியேனை அழைத்துச் சென்ற திருமலை இராமானுஜ நம்பி சுவாமிகள், நண்பர் திருவல்லிக்கேணி S.A.நரசிம்மன், அடியேனுடன் அதிகம் பயணம் செய்த நண்பர் திரு.தனுஷ்கோடி, திரு கோபால். புகைப்படங்கள் பல எடுத்தளித்த நண்பர் திரு.லா.சுந்தர்,  தாயாரின் கருட சேவைக்குக் கவிதை எழுதி வழங்கிய கவிநயா இவர்கள் எல்லாம் மறைமுகமாக இந்நூல் உருவாகக் காரணமாக இருந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் அடியேனது  நன்றி. முனைவர் இரா.வ. கமலக்கண்ணன்  அவர்களது நாலாயிர திவ்ய பிரபந்த உரை நூல்  பாசுரங்களின் பொருளைப் புரிந்து கொள்ள  மிகவும் உதவியாக இருந்தது அவருக்கும் அடியேனது நன்றி.  கருட தண்டக விளக்கத்திற்காக ஒப்பிலியப்பன் கோயில் வரதாச்சாரி சுவாமிகளுக்கும், கருட பஞ்சாசத்  தமிழ் பாசுரங்களுக்கு அன்பில் எஸ்.ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் மிக்க நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன். http://anudinam.org என்னும் வைணவ வலைத்தளத்தில் கருடனைப் பற்றிய பல அரிய தகவல்கள் கிட்டின.   இந்நூலைப் படித்து,  பாராட்டுரை வழங்கிய திரு. விஞ்சிமூர் சுதர்சனம் அரங்கநாதச்சாரியார், வரிச்சிக்குடி, காரைக்கால் அவர்களுக்கும்,  திருமதி வித்யா சுப்ரமணியம், சென்னை அவர்களுக்கும், அட்டைப் படம் வடிவமைத்துக் கொடுத்த திரு.பிரசாத், ஜெயங்கொண்டம், அவர்களுக்கும் அடியேனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக.  வேத சொரூபனான கருடனில் பெருமாள் பவனி வரும் வைகுந்த வாழ்வளிக்கும் கருடசேவையின் தாத்பரியத்தையும்  அவரது வாகனமும் கொடியுமான கருடாழ்வாரின் பெருமையும், எவ்வாறு கருட சேவையானது பூரண சரணாகதித் தத்துவத்தைக் குறிக்கின்றது என்பதையும், பல்வேறு ஆலயங்களில் ஓடும் புள்ளேறி பெருமாள் எழிலாக பவனி வந்து அருள் பாலிக்கும் அழகையும்,  அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்நூல்.   தெள்ளா வரும்பொன்னி சூழ்அரங்கா! ஒரு தேவரையும் உள்ளாது  எனது உள்ளம்; யான் என் செய் வேன்? – விண்ணில் ஓர் உவணப்  புள்ஆகி, வேதப்பொருள்ஆகி, உன்னைத்தன் பொற் கழுத்தில்  கொள்ளா வருகின்ற கோலம்உள் ளேகண்டு கொண்ட பின்னே. (தி.மா 105)  பொருள்: தெளிவில்லாது ஓடி வருகின்ற காவிரி ஆறு சூழ்ந்த திருவரங்கத்து நாதனே! வானத்தில் ஒப்பற்ற பெரிய திருவடி வேதார்த்த வடிவுடையவராய்த் தனது பொன் மயமான கழுத்தின் மேல் உம்மை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு  விரைந்தோடி வருகின்ற அழகைக் சேவித்த பின் அடியேனின் மனம் வேறொருவரையும் மதியாது; யான் என்ன செய்வேன்? என்று “திருவரங்கத்து மாலை”யில் திவ்யகவி பிள்ளைப் பெருமாளையங்கார்  கருடசேவையைக் குறித்துப் பாடுகின்றார்.   வாருங்கள் முந்நீர் ஞாலம் படைத்த முகில்வண்ணன், அமலன், அளவிலா ஆரமுது, அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்த அருளாளன், பேருமோராயிரம் பிற்பலவுடைய வெம்பெருமான், வானோர் தலைவன், திருமகளார் தனிக்கேள்வன், பூவினில் நான்முகனைப் படைத்தவன், தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஒத்தவன், ஆராவமுதமான எம்பெருமான், பூவை வண்ணர், பைங்கண் மால் யானை படுதுயர் காத்தளித்த செங்கண்மால், இருஞ்சிறைப்புள் ஊர்ந்து வரும் அழகையும், அப்புள்ளரசனைப் பற்றிய பல கதைகளையும், பல்வேறு திவ்ய தேசங்களின் கருட சேவைகளையும், கருடனைப் பற்றிய பல பாசுரங்களையும் இந்நூலில் விரிவாக காணலாம்.  (முடிந்தவரை இப்புத்தகத்தில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அடியேன் சரியானதா என்று விசாரித்து அல்லது தரிசித்து உறுதி செய்துள்ளேன். அதை மீறியும் ஏதாவது தகவல் சரியானது அல்லது என்று நினைத்தால் அடியேனுக்கு muruganandams@rediffmail.com  என்ற இம்மின்னஞ்சல் மூலம்  தெரிவிக்கவும். )  அடியேன் சு.முருகானந்தம் பாகம் – 1 கருடனின் சிறப்புகள் 1. கருடன் []   “மன்னு புகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனை, பாரிடந்து    பாரையுண்டு, பாருமிழ்ந்து, பாரளந்து, பாரையாண்ட பேராளனை,  இன்பப் பாவினை, பச்சைத் தேனை, பைம்பொன்னை, அமரர் சென்னிப் பூவை, அனைத்துயிர்களிலும் உறைபவனாகவும்,  அனைத்து உயிர்களிடத்தும்  அருளுடையவனாகவும் விளங்கும் அந்த ஸ்ரீமந்நாராயணனனைத் தாங்கும் பெருமைக்குரிய வாகனமாகவும், அவர் அமர்ந்திருக்கும் ஆசனமாகவும்,  அவர் தலைக்கு மேல்  கொடியாகவும், சிறகால் விசிறும்  குளிர்ந்த ஆலவட்டமாகவும், வெற்றி மாலையாகவும், பகவான் அசுரரை மாய்க்கும் போது மேலாப்பாகவும், வைகுந்தத்தில் நித்ய சூரியாகவும் மற்றும்  சேவை செய்யும்  தாசனாகவும், இணை பிரியாத தோழனாகவும், பரமபக்தனாகவும், துணைவனாகவும், அவரது கல்யாண குணங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், அவரை  நமக்குக் காட்டியருளும் ஆச்சாரியனாகவும், பகவானுக்கு வேறு துணை  வேண்டாத்துணையாய் திகழ்பவர்  கருடன்”.  கருடாழ்வான், பெரிய திருவடி, வைனதேயன், வினதைச்சிறுவன், ஆடற்பறவை, செழும் பறவை, வெங்கண் பறவை, அஞ்சிறைப் பறவை,    கொற்றப்புள், தெய்வப்புள், அருளாழிப்புள், வெஞ்சிறைப்புள், இருஞ்சிறைப்புள், அஞ்சிறைப்புள், காய்சினப்புள், ஓடும்புள், பொருச்சிறைப்புள், தூவியம்புள், கொடியப்புள், வேதஸ்வரூபன், பறவையரையன், புள்ளரையன்,  சுபர்ணன், விஜயன், உவணன்,  பன்னகாசனன், மங்களாயன், புன்னரசு,  கடும்பறவை, விஹாகேஸ்வரன்,   கருத்மான், பக்ஷிராஜன், தார்க்ஷ்யன், நாராயண ரதம், பறக்கும் தெய்வம் என எண்ணற்ற திருநாமங்கள் இவருக்கு உண்டு.  ஸ்ரீவைகுந்தத்தில் எம்பெருமானுக்கு தொண்டு செய்யும் நித்திய  சூரிகளில் முதலாமவர்  விஷ்வக்சேனர்,   இரண்டாமவர் கருடாழ்வார்,  மூன்றாமவர் அனந்தன். கருடனும் ஆதிசேஷனும் பகைவர்கள் என்றாலும் இருவரும் பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்யும் நித்ய சூரிகள் என்பது சிறப்பு.  எம்பெருமானை தாங்குவதில் முதன்மையானவர் கருடன்  எனவே வைணவ சம்பிரதாயத்தில் இவர் “பெரிய திருவடி” என்றழைக்கப்படுகிறார். சிறிய திருவடி இராமாவதாரத்தில் பெருமாளைத் தாங்கிய ஆஞ்சநேயர் ஆவார்.   மனித முகத்துடன், பெரிய மீசையுடனும், கருடன் போன்ற அலகுடனும், உடல் முழுவதும் எட்டு நாகங்களை ஆபரணமாகத் தரித்து, ஒரு காலை முழங்காலிட்டு மடித்தும் மற்றொரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில், இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களைத் தாங்குவதற்காக நீட்டி பெரிய அழகிய இறக்கைகளுடன் கூடிய கருடாழ்வாரின் அழகே அழகு.  “வைநதேயஸ்ய பக்ஷிணாம்” அதாவது “பறவைகளுக்குள் நான் கருடன்” என்று கண்ணன் கீதையில் கூறிய கருடாழ்வார் மகாபலமும், சர்ப்பங்களை விழுங்கும் சக்தியும், அழகான முகமும், விரிந்த இறகுகளையும், உறுதியான நகங்களையும், சிறந்த கூர்மையான கண்களையும், பருத்த கழுத்தையும், குட்டையான கால்களையும், பெரிய தலையையும் உடையவர். எல்லாத் திசைகளிலும் வேகமாகப் பறக்கும் ஆற்றலைப் பெற்றவர்.  “கருட” என்றால் சிறகு, இப்பதத்திலிருந்து கருடன் என்னும் நாமம் தோன்றியது. எனவே கருடன் என்றால் “அழகிய சிறகுகளை உடையவன்” என்று பொருள். கருடனின் மற்றொரு பெயரான கருத்மன் என்பதும் இறகுகளை உடையவன் என்று பொருள்படும்.  கருடன் மங்கள வடிவினர், வானத்தில் கருடன் வட்டமிடுவதைப் பார்த்தால் சிறந்த சகுனம் என்பது ஐதீகம். திருக்கோவில்களில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும் போது கருடன் வருவது ஒரு நல்ல அறிகுறி. கருடன் வானத்தில் பறக்கும் போது தரிசனம்  செய்வதும், கருடனின் குரலைக் கேட்பதும் நன்மையை நல்கும். திருக்கோவில்களில் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளிச் சேவை சாதிக்கும் போது, மேலே வானில் கருடன் பறப்பதைக் காணலாம். திருமலையில் ஒரு இரதசப்தமியன்று சங்கு, வில், வாள், தண்டு, சக்கரமேந்திய திருமலையப்பன் கருடசேவை சாதிக்கும்  போதும், ஆழ்வார் திருநகரியில் ஒன்பது கருட சேவையை தரிசிக்க சென்ற போதும், திருமயிலையில் கும்பாபிஷேகத்தின் போதும் கருடன் வந்து வட்டமிட்டதை அடியேன் தரிசித்துள்ளேன். திருக்கயிலை நாதரை தரிசிக்கும் போது ஒரு தடவை கருடன் வந்து மூன்று தடவை வட்டமிட்டு சென்றதை சேவிக்கும் பாக்கியமும் அடியேனுக்கு வாய்த்தது.  சபரிமலையில் ஐயப்பனின் திருவாபரணங்களை கொண்டு வரும் போது ஊர்வல பாதை முழுவதும் கருடன் வட்டமிட்டபடியே இருக்கும்.  கருட தரிசனம் கிடைக்கும் போது கை கூப்பி வணங்காமல் மனதால் நினைத்து வணங்க வேண்டுமென்று கூறப்படுகிறது. கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்பர். “கருடாய நமஸ்துப்யம் சர்வ சர்பேந்த்ர சத்ரவே  வாகனாய மஹாவிஷ்ணோ: தார்க்ஷாய அமித தேஜஸே.”  பதினென்புராணங்களுள் ஒன்று கருடபுராணம், ஸ்ரீமந்நாராயணன் கருடபகவானுக்கு உபதேசம் செய்ததால் இது கருடபுராணம் என்று வழங்கப்படுகின்றது. நீதிவிளக்கம், தண்டனைகள், மற்றும் திருத்தங்களைப் பற்றியும், மரணத்திற்குப் பின் ஆத்மாவின் பிரயாணத்தைப் பற்றியும் கருடபுராணம் விளக்குகின்றது. இந்நூலினைப் படித்தால் தவறு செய்ய அஞ்சி அனைவரும் நல்வழிப்படுவர் எனவே இப்புராணத்தைப் படிக்க வேண்டியது அவசியமாகும்.  பக்தர்களைக் காப்பதற்காகத் திருமால் கருட வாகனத்தில் எழுந்தருளுவார். கஜேந்திரனைக் காக்க கருட வாகனத்தில் அதிவேகமாக வந்த நிகழ்வு மூலம் இதை அறியலாம். இதனை, “ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து சென்று நின்றாழி தொட்டானை” என்கிறார் திருமங்கை மன்னர்.  கருட சேவையின்போது, “காக்க நீ வருவாயே கருடனேறி” என்று பக்தர்கள் பாடிப் பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்பார்கள் பெரியோர்கள்.  பக்தர்களுக்கு தரிசனமளித்து, சச்சிதானந்தத்தை வழங்குவதே கருடசேவையாகும்.   திருக்கோவில்களில், கருவறைக்கு எதிரே கைகூப்பி நின்ற கோலத்தில் எம்பெருமாளைச் சேவித்த வண்ணம் இருக்கும் கருடபகவானை முதலில் சேவித்து,  “மால் தாங்கும் மேலோனே, மால் விழியை அகலானே  வணங்கிடும் நல்குணவானே, குறை நீக்கி அருள்வாயே“  என்று வணங்கி பின் துவாரபாலகர்களை வணங்கி அனுமதி பெற்றுப் பின்னரே பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்பது நெறிமுறையாகும்.   பாகவதனைப் பற்றிக் கொண்டால் பகவானை எளிதாக அடையலாம். ஆகவே நாம் கருடனை பற்றிக்கொண்டு பக்தி, ஞானம் என்ற இரண்டு சிறகுகளின் துணை கொண்டு அவன் தன் இரு கரங்களில் ஏந்தி இருக்கும் பெருமாளின் திருவடிகளை எளிதில் அடையலாம் என்பதை உணர்த்துவதே கருட சேவை.   கருடாய நமஸ்துப்யம் நமஸ்தே பக்ஷீணாம்பதே |  ந போகமாதி ராஜாய ஸுபர்ணாய நமோ நம : |  விநதா தந்த ரூபாய கச்யபஸ்ய ஸுதாயச |  அஸூராணாம் வைரிணே துப்யம் விஷ்ணு பத்ராயதே நம: ||  ரக்தரூபாயதே பக்ஷீந் ஸ்வேத மஸ்தக பூஜிதே |  அம்ருதா ஹரணே ஹ்ருஷ்ட தஸ்மை தேவாயதே நம: ||  என்று ஸ்ரீகருடபகவானை அவருக்குரிய மாலை நேரத்தில் விளக்கேற்றி அர்ச்சனை செய்து தியானிக்க நற்பலன்களும் நற்செய்திகளும் கிட்டும். கருடனுக்குச் சிவப்பு பட்டு அணிவித்து மல்லிகை, மருக்கொழுந்து,  செண்பக மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷம்.   ஸ்ரீகருடபகவானைத் தினமும் வழிபடக் கிடைக்கும் நன்மைகள்: ஞாயிறு : பாவங்கள் குறையும், மனக்குழப்பம் தீரும், திருமணத் தடைகள் விலகும்.  திங்கள் : சுகம் கிட்டும் செவ்வாய் : குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் குறையும், மகிழ்ச்சி கிட்டும்.  புதன் : பகைவர்கள் மறைந்து போவார்கள்   வியாழன் : காரியசித்தி,  எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம். ஆயுள் வளரும்  வெள்ளி :   செல்வ வளம் பெருகும். சனி :  கொடிய நோய்கள் மறையும், , ஆர்வமும் நம்பிக்கையும் வளரும்.  கருடனை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும், கண்பார்வை குறைபாடுகள் அகலும். பகையும் பிணியும் நீங்கும், செல்வ வளம் கொழிக்கும். நாராயண  பட்டத்திரி தமது நாராயணீயத்தில்,  தனது தாயான தேவஹூதிக்கு  கபிலவாசுதேவராக எம்பெருமான் உபதேசித்த கபில கீதையில் “இமய நிமயங்களை அனுஷ்டிக்கின்றவர்கள் கருடாரூடராக தன்னை மனதில் நினைத்துக்கொண்டு தியானம் செய்ய வேண்டும்”  என்று உபதேசிக்கின்றார். விமலமதி: உபாத்தை: ஆசாநாத்யை: மதங்கம் கருட ஸமதீரூடம் திவ்ய பூஷாயுதாங்கம் ருசி துலித தமாலம் சீலயேத் அநுவேலம் கபிலதநு: இதி த்வம் தேவ ஹூத்யை ந்யகாதீ: (நா 15-4) பொருள்: யோகம் மற்றும் ஆசனங்களை பயில்பவன் மனத்தெளிவு பெறுகின்றான். அப்படிப்பட்டவன் என்னுடைய திருமேனியை கருடன் மீது உள்ளதாகவும், பலவிதமான ஆபரணம் மற்றும் ஆயுதங்கள் கொண்டதாகவும், தமால மலர் போன்ற நீலநிறம் உடையதாகவும் எப்போதும் தியானித்து இருக்க வேண்டும் என்று நீ உபதேசம் செய்தாய் அல்லவா கிருஷ்ணா!, குருவாயூரப்பா? என்று நாராயணபட்டத்திரி வினவ குருவாயூரப்பனும் ஆமென்று தலை அசைத்து ஆமோதிக்கின்றார்.    கருடசேவையை “பெரிய திருவடி சேவை”  என்றும் கூறுவர். திருவரங்கம், திருமலை, காஞ்சி, திருநாங்கூர், நாச்சியார் கோவில் கல்கருடன், நவதிருப்பதிகள், திருநாராயணபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், போன்ற தலங்களின் கருடசேவைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. வாருங்கள் கருடனைப் பற்றிய பல கதைகளையும், பல் வேறு வைணவத்தலங்களில் அவர் எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகையும், சில சிறப்பு வாய்ந்த கருடசேவைகளையும் சேவிக்கலாம்.                                                         2. கருட சரிதம் []   மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக் கண்டீரே?  மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே. (நா.திரு 14-3) பொருள்: பெண்களிடம் உண்டான அன்பே ஒரு வடிவாய்க்கொண்டு பிறந்த நம்பியை, அன்பே செய்கின்ற மணவாளப்பிள்ளையாய், பொருந்தாத பொய்களைச் சொல்லுகின்ற கண்ணபிரானை இங்கே வரப்பார்த்தீர்களோ?  மேலே பரவிய வெயிலை (திருமேனியில் படாமல்) தடுப்பதற்காகக் கருடனுடைய சிறகாகின்ற விதானத்தின் கீழ் எழுந்தருளும் அப்பெருமானை பிருந்தாவனத்தே கண்டோம் - என்று சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் பாடியபடி எம்பெருமானுக்கு வெயில் படாதபடி தன் பரந்து விரிந்த அழகிய சிறகால் காப்பவன் கருடன்.   அவன்  விநதை  சிறுவன், எனவே  வைநதேயன்  என்றும்   அழைக்கப்படுகின்றான்.   குறிப்பாக கிருஷ்ணாவதாரத்தில் கோகுலத்திலிருந்து பிருந்தாவனத்திற்கு பசுக்களை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்ற போது இவ்வாறு நிழல் கொடுத்தவன் கருடன். ’கருட’ என்ற சொல்லுக்கு "சிறகு' என்பது ஒரு பொருள். அதனால் தான் வினதையின் மகன் கருடன் என்று குறிப்பிடுவதற்குப் பதில் " சிறகு” என்று குறிப்பிட்டாள் ஆண்டாள்.  அவனது சரிதத்தைக் காண்போமா?  மஹாபாரதத்தில் ஆதி பர்வத்தில் கருடனுடைய வரலாறு விரிவாக கூறப்பட்டுள்ளது. தட்சபிரஜாபதிக்கு நான்கு குமாரிகள் அவர்களுள்  இரு அழகிய குமாரத்திகளான கத்ரு மற்றும் விநதையை, சப்தரிஷிகளில் ஒருவரான மரீசி மஹரிஷியின் குமாரனான, காசியபருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். தன் இரு மனைவியராலும் பெரும் இன்பம் பெற்ற காசியபர் மிகவும் மனம் மகிழ்ந்து அவர்களுக்கு வரம் அளித்தார். கத்ரு சம ஆற்றல் கொண்ட ஆயிரம் பாம்புகள் தனக்கு மகன்களாக வேண்டும் என்று வேண்டினாள். விநதையோ கத்ருவின் அந்த ஆயிரம் பிள்ளைகளின் வல்லமை எல்லாவற்றையும் (பலம், ஆற்றல், உருவம், வீரம்) விஞ்சும் இரு புத்திரர்கள் வேண்டும் என்று வரம் கேட்டாள். காசியபரும் “அப்படியே ஆகட்டும்!” என்று வரமளித்தார். விநதையும் பெருமகிழ்ச்சி அடைந்து, ஆற்றல் மிக்க இரு மகன்களையும், கத்ரு ஆயிரம் மகன்களையும் அடைந்தனர். உங்கள் கருக்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று தனது மனைவியர் இருவரையும் வாழ்த்திவிட்டு காசியபர் தவம் செய்ய கானகம் சென்று விட்டார்.  வெகு காலத்திற்குப் பிறகு, காசியபர் அருளிய வரத்தின் படி  கத்ரு ஆயிரம் முட்டைகளையும், வினதை இரு முட்டைகளையும் இட்டனர். அவர்களது பெண் உதவியாளர்கள் அந்த முட்டைகளைத் தனியாக வெதுவெதுப்பான பாத்திரங்களில் இட்டு பாதுகாத்து வந்தனர். ஐந்நூறு  வருடங்கள் இப்படியே சென்றன, கத்ருவால் இடப்பட்ட ஆயிரம் முட்டைகளும் வெடித்து, நாகக்குஞ்சுகள் வெளியே வந்தன.  ஆனால் வினதையின் இரட்டையர்கள் வெளிப்படவில்லை. பொறாமையால் உந்தப்பட்ட வினதை, தன் முட்டையில் ஒன்றை உடைத்தாள்.  கரு, மேலே வளர்ச்சியடைந்து, கீழே வளர்ச்சியடையாமல் இருந்தது. இதனால் அந்த முட்டையிலிருந்த வந்த குஞ்சு,  அருணன் கோபம் கொண்டு, “தாயே நீ காலங்கனியாதற்கு முன்பே  முட்டையை உடைத்ததால், நீ அடிமையாகச் சேவகம் செய்வாய்.  உனது பொறுமையின்மையால் இன்னொரு முட்டையையும் உடைத்து அதையும் பாதி வளர்ந்த கருவாய் ஆக்கி விடாதே.  முட்டை வளர்ச்சியடைய இன்னும் ஐநூறு வருடங்கள் பொறுத்திரு, அதில் பிறக்கும்  மைந்தன் உன்னை உனது அடிமைத்தனத்திலிருந்து மீட்பான். அக்குழந்தை பலம் பெற முட்டையை அக்காலம் வரை பத்திரமாகப் பாதுகாத்திரு" என்று  தன் தாய்க்குச்  சாபம் கொடுத்து விட்டு அருணன்   வானத்துக்குப் பறந்தான்.  அமிர்தம் பங்கிடும் போது தனக்கு ஏற்பட்ட அவமானத்தினால்,  கதிரவன் கோபம் கொண்டு  அனைத்து உலகங்களையும் தன் கொடுங்கதிர்களால் சுட்டெரிக்க தீர்மானிக்கும் நேரத்தில், பிரம்மாவின் ஆசிப்படி காசியபரின் புத்திசாலி மகனான  அருணன் தனது பெருத்த உடலுடன், பெரிய காந்தியுடனும், கதிரவன் முன்பு சென்று நின்று, அவனை சாந்தப்படுத்தி அவனுக்கு சாரதியாக இருந்து, கிழக்குப் பகுதியில் அமர்ந்து அனைத்து உலகங்களையும் காத்தான்.   இவ்வாறு இருக்கும் சமயம் ஒரு நாள் சக்களத்திகள் இருவரும், பாற்கடலைக் கடைந்த போது வந்த தேவர்களால் வழிபடப்படும், குதிரைகளின் இரத்தினமான, தெய்வீகமான அருள் நிறைந்த, நித்திய இளமை கொண்ட, அளவற்ற வீரியம் கொண்ட, அனைத்து நற்குறிகளையும் கொண்ட உச்சைஸ்ரவஸ் என்றழைக்கப்படும்   குதிரை தூரத்தில்  மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டனர். கத்ரு விநதையிடம்,  “மனதிற்கினிய மூத்த சகோதரி, இந்த உச்சைஸ்ரவஸ் எந்நிறம் கொண்டது என்பதை அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் சொல்” என்று கேட்டாள். விநதையையும் இந்தக் குதிரைகளின் இளவரசன் நிச்சயமாக வெள்ளை நிறம்தான், நீ என்ன நினைக்கிறாய் சகோதரி?” என்றாள். அதற்கு கத்ரு, “ஓ இனிமையாக புன்னகைப்பவளே இக்குதிரையின் வால் பகுதி கருப்பு என்று நான் நினைக்கிறேன், அழகானவளே நமக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொள்ளலாம், யார் தோற்கிறார்களோ அவர்கள் வெல்பவர்களுக்கு அடிமை” என்றாள் வஞ்சகமாக கத்ரு.   "இப்படி வெல்பவருக்குத் தோற்பவர் அடிமை என்று பந்தயம் கட்டி, மறுநாள் அருகில் சென்று அக்குதிரையைச் சோதித்துப் பார்ப்பது என்று முடிவு செய்து அவ்விரு சகோதரிகளும் தங்கள் இல்லத்திற்குச் சென்றனர். கத்ரு, தன் தமக்கையை ஏமாற்ற எண்ணங்கொண்டு தன் ஆயிரம் மைந்தர்களான பாம்புகளையும்  வேகமாகச் சென்று அந்தக் குதிரையின் வால் பகுதியில் முடியாக மாறி இருக்கும் படி பணித்தாள். ஆனால் அவள் மக்களாகிய அந்தப் பாம்புகள், அவள் பணித்த வேலைக்குப் பணிய மறுத்தனர். அதனால் அவள் அவர்களை நோக்கி, "பாண்டவப் பரம்பரையில் வரும் விவேகமுள்ள மன்னன் ஜனமேஜயன் நடத்தும் பாம்பு வேள்வியில், அக்னி உங்களை உட்கொள்வானாக", என்று சபித்தாள்.   "தாயின் ஆசை, நிராசையானால் அவள் தங்கள் மீது வைத்திருக்கும் பாசத்தைத் துறந்து தங்களை எரித்து விடுவாளோ என்ற பயத்தில், பின்னர் பாம்புகள் தங்களுக்குள் கலந்து பேசி, அவளது ஆணையை நிறைவேற்றுவது என்று முடிவு செய்தனர். மற்றொருபுறம், அவள் கருணை தங்களுக்குக் கிடைக்குமானால், தங்களை சாபத்திலிருந்து விடுவிப்பாள் என்ற எண்ணத்தில், "நாம் நிச்சயமாக குதிரையின் வாலைக் கருப்பாக்குவோம்" என்று சொல்லிச் சென்று அக்குதிரைக்கு வால் முடியாக மாறினர்.  மறுநாள் சகோதரிகள் இருவரும் குதிரையின் அருகில் சென்று பார்த்தனர். உடல் முழுவதும் சந்திரனைப் போன்று வெண்மையாகவும், வாலில் கருமுடிகளுடன் அப்போது அந்தக் குதிரையைக் கண்டனர். வாலில் நிறைய கருமுடிகள் இருப்பதை கூர்ந்து கவனித்த கத்ரு, ஆழ்ந்து வருத்தமுற்றிருந்த விநதையை தனது அடிமையாக்கிக் கொண்டாள். இப்படி, தான் பந்தயத்தில்  (வஞ்சகத்தால்) தோற்று, தன் இளைய சகோதரியிடம் அடிமையானதற்காக விநதை மிகவும் வருந்தினாள்.     அதே வேளையில், கருடன் முழுமையாக வளர்ச்சியடைந்தவுடன் தாயில்லாமல் தன் முட்டையை உடைத்துக் கொண்டு பிரகாசமாக ஒளிரும் நெருப்புக் குவியலைப் போல பெரும் ஒளி கொண்டு, எங்கும் தன் விருப்பம் போல் செல்ல முடிந்த, எவ்வளவு சக்தியை வேண்டுமானாலும் தனது இச்சைப்படி பெருக்கிக்கொள்ள முடிந்த, நினைத்த உருவை உடனே அடைய முடியும் படியான சக்திகளை தன்னகத்தே கொண்டு பிறந்தான். பிறந்தவுடனே வேகமாக உருவத்தால் வளர்ந்து வானத்தில் தனக்கு படைக்கப்பட்ட உணவைத் தேடிப்   பறந்தான் கருடன்.    தெய்வாம்சம் பொருந்திய கருடனைப் பெற்றதால் விநதையைச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் தனது “நாச்சியார் திருமொழியில்”  மங்களாசாசனம் செய்துள்ளாள்.   கருடனின் ஒளி வடிவைக் கண்டு அஞ்சி தேவர்கள் அனைவரும் அக்னியிடம் சரணடைந்து அது யார் என்று  வினவ, அக்னியும் தாங்கள் காண்பது  பெரும்பலம் பொருந்திய கருடன். ஓளியில் என்னை ஒத்திருப்பவன், வினதையின் மகிழ்ச்சியைப் பெருக்கப் பிறந்தவன், காஷ்யபரின்  புதல்வன். நாகங்களை அழிப்பவன், தேவர்களைக் காப்பவன், இராட்சதர்களுக்கும், அசுரர்களுக்கும் இவன் எதிரி. இவனைக் கண்டு கலக்கமடையாதீர்கள் என்று கூறினார். பின்னர் தேவர்கள் வேண்டிக்கொண்டபடி,  கருடன்  தனது  சக்தியையும்  காந்தியையும் குறைத்துக் கொண்டான்.   "எவ்விடத்திற்கும் தன்னுடைய விருப்பப்படி செல்லக்கூடிய அந்தப் பெரும்பலம் பொருந்திய வினதை செல்வன், தன் தாய்  தங்கியிருந்த கடற்கரையில் சென்று இறங்கினான். அங்கே வினதை பந்தயத்தில் தோல்வியுற்றுத் தனது தங்கைக்கு அடிமையாகச் சோகத்துடன் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் கத்ரு, வினதையைக் கூப்பிட்டு, கருடன் முன்பாக , "ஓ வினதா, நடுக்கடலில் ஒரு அழகான இடம் இருக்கிறது, அந்த இடம் பாம்புகளின் வசிப்பிடமாக இருக்கிறது. என்னை  அங்கே கூட்டிச்செல்" என்றாள். அந்த அழகான இறகுகளுடைய கருடனின் தாய் வினதை, தனது தோளில் தனது தங்கையான  கத்ருவை சுமந்து சென்றாள். கருடன் தனது தாயின் வேண்டுதல்படி, பாம்புகளைத் தனது முதுகில் தூக்கிச் சென்றான்.  பின்னர்ப் பறவைகளின் அரசனான சக்தி நிறைந்த கருடனிடம் கத்ருவின் பிள்ளைகளான நாகங்கள் "நீ வானில் பறந்து செல்லும் போது நிறைய அழகான இடங்களைக்  கண்டிருப்பாய்", எங்களை அங்கெல்லாம் அழைத்துச் செல் என்று கட்டளையிட்டனர். கருடன் சிறிது நேரம் யோசித்து விட்டு தன் தாய் வினதையிடம், "இப்பாம்புகள் சொல்வதையெல்லாம் நான் ஏன் கேட்க வேண்டும் தாயே?" என்று வினவினான். இதற்கு வினதை, தன் மகனிடம் "ஓ பறவைகளில் சிறந்தவனே, என் கெட்ட நேரத்தால் நான் எனது தங்கையிடம் அடிமையானேன். இப்பாம்புகள், ஏமாற்று வேலை செய்து, என்னைப் பந்தயத்தில் தோற்கடித்தன. அதனால் என் நிலைமை இப்படியாயிற்று" என்றாள்.   தன் தாய் இப்படிக் கூறியதைக் கேட்டு, கருடன் மிகவும் துன்பங்கொண்டு, அப்பாம்புகளிடம், "பாம்புகளே, நான் எந்தப் பொருளைக் கொண்டு வந்தால், அல்லது எந்த ஞானத்தை அடைந்தால், அல்லது எந்த வீரச்செயலைச் செய்தால், இந்த அடிமைத்தனத்திலிருந்து நானும் தாயும்   விடுபடுவோம் சொல்லுங்கள்" என்று கேட்டான். இதைக் கேட்ட பாம்புகள், "உனது பலத்தால் அமுதத்தைக் கொண்டு வா. அப்போது நீங்கள் உங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவீர்கள்" கருடனால் அந்த  அரிய செயலைச் செய்ய முடியாது  என்று எண்ணிக்கொண்டு அலட்சியமாக கூறினர்.  “இப்படிப் பாம்புகள் சொல்ல, அதைக் கேட்ட கருடன் தன் தாயிடம், “ நான் சென்று அமுதத்தை கொண்டு வருகிறேன். வரும் வழியில் அதில் சிறிது நானும் அருந்த ஆசைப்படுகிறேன், எனக்கு நல்வழி காட்டுங்கள் என்றான். வினதையும் “தொலை தூரத்தில் நடுக்கடலில், மீன் பிடித்து வாழும் நிஷாதரர்களின் (செம்படவர்கள்)  வசிப்பிடம் உள்ளது. அங்குச் சென்று அந்த ஆயிரக்கணக்கான மீன்பிடிப்பவர்களை உண்டு பலம் பெற்று நீ அமிர்தத்தை கொண்டு வா”, என்று அறிவுரை கூறினாள்.   பாம்புகளால் ஏமாற்றப்பட்டு, அடிமையாகி பெருந்துன்பத்திற்குள்ளான விநதை தனது இளைய மகனின் ஒப்பற்ற பலத்தை அறிந்திருந்தாலும், “வாயு உனது சிறகுகளைக் காக்கட்டும், உனது முதுகெலும்பை சூரிய சந்திரர்கள் காக்கட்டும், அக்னி உனது சிரசையும், வசுக்கள் உனது உடல் முழுவதையும் காக்கட்டும். நானும் உனது நன்மைக்காக  தியானத்தில் அமர்கின்றேன். ஓ, குழந்தாய், செல். உனது காரியத்தை வெற்றியுடன் முடி”, என்று இதயப்பூர்வமாக பூரண ஆசி வழங்கி அனுப்பினாள்.  தன் தாயிடம் இருந்து  ஆசி பெற்ற கருடன் அவளை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தன் அழகிய பெரிய  சிறகுகளை விரித்து, வானத்தில் பறந்தான். அந்தப் பெரும்பலம் கொண்ட கருடன் விரைவாகச் சென்று, பசி கொண்ட எமனைப் போல நிஷாதரர்கள் மீது விழுந்தான். பெரும் தூசிப் படலத்தை கிளப்பினான், மலைகளில் வளரும் மரங்களைக் குலுக்கினான், கருடனின் திறந்த வாயினுள், திடீர் காற்றினால் ஏற்பட்ட மர அசைவினால் பயந்த பறவைகள் எவ்வாறு அலறிக்கொண்டு வானில் கிளம்புமோ அதுபோல கருடன் கிளப்பிய தூசிப்படலத்தில், அந்தச் செம்படவர்கள்  குருடாகி, அவர்களை வரவேற்க விரிந்து திறந்திருந்த கருடனின் வாயில் போய் தாமே  விழுந்தனர். தனது குறிக்கோளை நோக்கி வேகமாக நகரும் கருடன், தனது வாயை மூடி கணக்கிலடங்காத நிஷாதரர்களைக் கொன்று, அம்மீனவர்களின் தொழிலைத் தானே செய்தான். ஆயினும் அவனது கடும்  பசி அடங்கவில்லை.   பிறகு அப்பறவைகளின் அரசன் மனோ வேகத்துடன் விண்ணில் ஏறினான். அப்போது அவன் தன் தந்தையான காசியப முனிவரைக் கண்டான் அவரை வணங்கி நின்றான் ஒப்புயர்வற்ற கருடன்.  அந்தப் பெரும் முனிவர்  “ஓ குழந்தாய் கருடா! நீ நன்றாக இருக்கிறயா? நாளும் உனக்கு தேவையான உணவு கிடைக்கின்றதா? என்று வினவினார்.  கருடன் தந்தையே! எனது தாயும், தமையனும், நானும் நலமாக உள்ளோம். ஆனால் எனக்கு எப்போதும் சரியாக உணவு கிடைப்பதில்லை. அதனால் எனது உள்ளத்தில் அமைதியில்லை. அற்புதமான அமுதத்தைக் கொணரப் பாம்புகளால் நான் அனுப்பப்பட்டிருக்கின்றேன்.   என் தாயை அடிமைக் கட்டிலிருந்து விடுவிக்க அதை நான் கொணர வேண்டும். அவள் கூறியபடி ஆயிரக்கணக்கில் நிஷாதரர்களை உண்ட பின்னும் எனது பசி அடங்கவில்லை. எனவே, “ஓ போற்றுதலுக்குரிய குருவே! அமுதத்தைக் கைப்பற்றிக் கொண்டு வரும் அளவுக்கு நான் பலவானாக, என் பசியையும் தாகத்தையும் தணித்துக் கொள்ளத் தகுந்த உணவை சுட்டிக் காட்டுங்கள்”, என்று வேண்டி நின்றான்.   காசியபரும் கருடனிடம், நீ காணும் இந்த ஏரி மிகவும் புனிதமானது. இதில் தன் தமையனான ஆமையை இழுத்துக் கொண்டிருக்கும் ஒரு யானை உள்ளது. முற்பிறவியில் இருந்தே இருவருக்குள்ளும் பகை தொடர்கிறது. அவர்களது கதையைக் கேள் என்றார்.  முன்பொரு காலத்தில்   விபவசு என்னும் ஒரு முனிவர் இருந்தார் அவர் மிகுந்த முன் கோபி, அவருக்கு சுப்ரிதிகா என்ற இளையவன் இருந்தான். பின்னவன் எப்போதும் தனது செல்வத்தை தனது தமையனுடன் கூட்டாக அனுபவிக்க விருப்பமில்லாமல் எப்போதும் பாகப்பிரிவினையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான். சில காலம் கழித்து விபவசு, தன் தம்பியைப் பார்த்து, “செல்வத்தின் மீதுள்ள கண் மூடித்தனமான ஆசையினால், மனிதர்கள் தங்கள் பரம்பரை செல்வத்தைப் பிரித்துக் கொள்வது பெரிய முட்டாள்தனமாகும். பரம்பரை சொத்தைப் பிரித்துக் கொண்டால், ஒருவர் சொத்தில் மற்றொருவர் பொறாமை கொண்டு, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டே இருப்பர். சொத்துக்களை பிரித்துக்கொண்ட பிறகும் நண்பர்கள் போர்வையில் இருக்கும் எதிரிகளால், அப்பாவிகளுக்கும் சுயநலம் கொண்டவர்களுக்கும் இடையே குறைகளைக் சுட்டிக்காட்டப்பட்டுப் பேதங்கள் உருவாக்கப்பட்டு, சண்டை பெரிதாகி, சகோதரர்களாகிய இருவரும் வீழ்வர். எனவே விவேகம் உள்ளவர்கள் பிரிவினையை ஆமோதிக்கமாட்டார்கள். ஆனால் நீயோ சாத்திரங்களை பின் தள்ளி விட்டு, எனது அறிவுரையையும் ஏற்காமல் எப்போதும் பிரிவினையிலேயே நாட்டம் கொண்டுள்ளாய், உனது தனிப்பட்ட செல்வத்திற்கு ஏற்பாடு செய்வதற்காகவே விரும்புகிறாய், எனவே “நீ யானையாகக் கடவாய்” என்று சாபமிட்டார். இப்படி சபிக்கப்பட்ட சுப்ரிதிகா தனது தமையனைப் பார்த்து, “நீயும், நீர் நடுவில் நகரும் ஆமையாகக் கடவாய்”, என்று பதிலுக்குச் சபித்தான்.     இப்படி இருவரும் செல்வத்தின் காரணமாகச் சபித்துக் கொண்டு  யானையாகவும், ஆமையாகவும் தாழ்ந்தார்கள். தங்களின் கோபத்தினால் இப்படித் தரந்தாழ்ந்து மிருகங்களாயினர். இப்போதும், தங்கள் பெரும்பலத்திலும், உடல் எடையிலும் கர்வங்கொண்டு தங்களுக்குள் பகையை வளர்த்துக்கொண்டு வருகின்றனர். இதோ பார் இப்போது பெருத்த உடலுடைய அந்த அழகான யானை சண்டையிடத் தொடங்குகிறது. அதன் பிளிறலைக் கேட்ட  ஏரியில் வசிக்கும் ஆமையும் ஏரியை முரட்டுத்தனமாக கலக்குகின்றது.  ஆமையைக் கொல்ல யானை தன் தந்தத்தாலும், தன் துதிக்கை, கால்கள் மற்றும் வாலின் அசைவால் மீன்கள் நிறைந்த இந்த ஏரி நீரைக் கலக்குகின்றது. ஆமையும் தனது தலையைத் தூக்கி யானையை தாக்க முன்னே வருகின்றது. பைத்தியகாரத்தனமாக ஒருவரை ஒருவர் கொல்லத் தயாராக இருக்கும் இந்த இருவரையும் உணவாகக் கொண்டு நீ விருப்பப்படும் காரியத்தை நிறைவேற்று, பெரும் பலம் பொருந்தியவனே நீ தேவர்களுடன் போரிடும் போது  வேதங்களும், புனிதமான வேள்வி நெய்யும், அனைத்து உபநிஷத்துகளும் உன்னை வலிமையாக்கட்டும்  என்று ஆசி கூறினார் காசியபர்.  பின்னர் கருடன் அந்த விசாலமான ஏரிக்கு அருகில் வந்து தன் தந்தையின் வார்த்தைகளை மனதில் கொண்டு, யானையை ஒரு காலிலும், ஆமையை மற்றொரு காலிலும் இறுகப்பற்றிக் கொண்டு உயரமாக விண்ணுக்கு பறந்து, பல தெய்வீக மரங்கள் நிறைந்த ஆலம்வா என்ற புனிதமான இடத்தை அடைந்தான்.  கருடன் சிறகுகள் எழுப்பிய காற்றின் தாக்கத்தால் அங்கிருந்த மரங்கள் குலுங்கத் தொடங்கின. தங்கக் கிளைகள் கொண்ட அந்த மரங்கள் உடைந்து போகுமோ என்று அஞ்சி கருடன் மற்ற மரங்களை நாடிச் சென்றான். அந்த மாபெரும் விருட்சங்களில் தங்கம், வெள்ளியிலான கனிகளும் மற்றும் விலை மதிப்பற்ற இரத்தினங்களால் ஆன கிளைகளும் இருந்தன. அங்குள்ள மரங்களில் மிக விசாலமான ஒரு பெரு ஆலமரத்தை அந்த பறவைகளின் அரசன்  மனோ வேகத்துடன் நெருங்கும் போது, அந்த மரம், எனது பெரிய கிளையில் அமர்ந்து யானையையும் ஆமையையும் உண்பாயாக என்று அழைத்தது. பெரும் மலையை ஒத்த கருடன் பல ஆயிரக்கணக்கான  பறவைகள் வசிக்கும் அந்தக் கிளையில்  பெரும் வேகத்துடன் இறங்கினான். இலைகள் நிறைந்த   அக்கிளை ஆட்டம் கண்டு ஒடிந்து விழுந்தது.    கிளை ஒடிந்து விழுவதைப் பார்த்த கருடன்  அதில் குள்ள தோற்றமுள்ள  வாலகில்ய முனிவர்கள் நால்வர் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தவமியற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான். அந்தக்கிளை கீழே விழுந்தால் அந்த முனிவர்கள் நால்வரும் கொல்லபடுவர் என்பதை உணர்ந்த பெரும் பலம் வாய்ந்த கருடன் யானையையும், ஆமையையும் தனது  திருக்கரங்களால் இன்னும் இறுகப் பற்றிக் கொண்டு, முனிவர்களைக் காக்க வேண்டி அந்தக் கிளையை தனது கூரிய அலகால் பற்றிக்கொண்டு சிறகுகளை அடித்து உயர்ந்தான். அந்த மாமுனிவர்கள்  இந்தச் செயலைக் கண்டு வியந்து, இது தேவர்களுக்கும் முடியாத செயல் என்பதை உணர்ந்து அந்தப் பெரிய பறவைக்குக்  “கருடன்” (பெரும் சுமையைச் சுமப்பவன்)  என்று  பெயர் கொடுத்தனர்.   விரும்பியபடி வாலகில்ய முனிவர்களை காத்த கருடன் நிதானமாக வானத்தில் பறந்து, யானையையும் ஆமையும் உண்ணச் சரியான  இடத்தைத் தேடிப் பார்த்து கந்தமாதன  மலைக்கு சென்றான். அங்கு அவன் தந்தை காஷ்யபரைக் கண்டான். தெய்வீக வடிவு கொண்டவனை, அதிக பிரகாசமும், பலமும் சக்தியும் கொண்டவனை, வாயு வேக மனோ வேகம் கொண்டவனை, புத்திக்கு எட்டாதவனை, விவரிக்க முடியாதவனை, பெரும் வலிமையுள்ளவனை, அக்னி போல் பிரகாசிப்பவனை, தேவர்களும், அசுரர்களும் வெல்ல முடியாதவனை, மலையைப் பிளந்து  பெருங் கடலைக் குடித்து மூன்று உலகங்களையும் அழிக்க வல்லவனை, மூர்க்கமாக யமனைப் போல காட்சியளிப்பவனை காசியபரும் கண்டார்.     பல அற்புத சிற்பங்கள் நிறைந்த “தக்க மரத்தின் தாழ்சினையேறி தாய் வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிறவுண்ணும்”  திருக்குறுங்குடி திவ்ய தேசத்தில்,  யானையையும் ஆமையும் திருக்கரங்களில் சுமந்தபடி வாலகில்ய முனிவர்கள் தொங்கும் கிளையை அலகிலும் கொண்டு கருடன் பறக்கும் அற்புதமான  சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அங்குப் நம்பியைச் சேவிக்கச் செல்பவர்கள் இச்சிற்பத்தையும் கண்டு வாருங்கள்.    []   காசியபர் கருடனிடம் சூரியக் கதிர்களை குடித்து உயிர் தாங்கிக் கொண்டிருக்கும் வாலகில்ய முனிவர்களைப் பத்திரமாக இறக்கி விட கூறினார். பின்னர் அவர்களிடம் கருடன் செய்ய செல்கின்ற பணியில் வெற்றி பெற ஆசி கூறுமாறு வேண்டினார். அவர்களும் அவ்வாறே கருடனை வாழ்த்திவிட்டு இமயமலைச் சாரலில்  தவம் செய்யச்   சென்றனர். கருடன் தோன்றுவதற்கும் இந்த வாலகில்ய முனிவர்கள்தான்  காரணமாக இருந்தனர். அக்கதை  இதோ.  "முன்பொரு காலத்தில், உயிரினங்களின் தலைவர் காசியபர், புத்திரப்பேறுக்காக வேள்வி நடத்தினார், முனிவர்களும், தேவர்களும், கந்தர்வர்களும் அவருக்கு உதவி செய்தனர். காசியபர், இந்திரனையும் அவனுக்கு உதவியாக வாலகில்யர்களையும், மற்ற தேவர்களையும் வேள்விக்குத் தேவையான எரிபொருளைக் கொணர்வதற்கு நியமித்திருந்தார். தேவர்களுக்கு தேவன் இந்திரன், மலைக்கு நிகரான பெரும் சுமையைத் தனியொருவனாக தனது பலத்தால் ஒரு சிரமுமின்றி கொண்டு வந்தான். வரும் வழியில், கட்டைவிரல் அளவே உள்ள வாலகில்ய முனிவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பலாச இலையின் தண்டைச் சுமந்து கொண்டு வருவதைக் கண்டான். அந்த முனிவர்கள் சோற்றுக்கில்லாமல் மிகவும் உடல்மெலிந்து, அவர்கள் உடலுக்குள்ளே உடல் மறைந்திருந்தனர். மாடுகளின் குளம்புகள் ஏற்படுத்திய பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி மிகவும் சிரமப்படும் அளவுக்குப் பலவீனமாக அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பின் வந்த புரந்தரன், தனது பலத்தில் கர்வங்கொண்டு, அவர்கள் தலைக்கு மேல் தாண்டிச் சென்றது மட்டுமல்லாமல் அவர்களைத் திரும்பிப்பார்த்து, கேலியாகச் சிரித்தும் அவமதித்தான். இப்படி அவமதிக்கப்பட்ட முனிவர்கள் மிகுந்த கோபமும் துன்பமும் கொண்டு ஒரு பெரிய வேள்விக்கு ஏற்பாடு செய்து, இந்திரனைப் பீதியடையச் செய்தனர்.  தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற, விரதங்களை மேற்கொள்ளும் ஞானமுள்ள அந்த சிறந்த முனிவர்கள் வேள்வித்தீயில், சுத்தமான நெய்யை விட்டு, சத்தமாக, "நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடங்களுக்குச் செல்லும், செயலுக்குத் தகுந்தவாறு சக்தியைத் தானே ஏற்படுத்திக் கொள்ளும், இன்னுமொரு இந்திரன் தேவர்களில் உதித்து இப்போதுள்ள தேவர்களின் தலைவனை நீக்கட்டும். எங்களது ஆன்மிகத் தவப்பயன்களால், மனோ வேகத்துடனும், பயங்கரமாகவும் ஒருவன் உதிக்கட்டும்." என்று மந்திரங்களைச் சொன்னார்கள். ஆயிரம் வேள்விகளைச் செய்த தேவர்களின் தலைவன் இதைக் கேள்விப்பட்டு, மிகுந்த பயங்கொண்டு,  வேள்வி நடத்தும்  காசியபரிடம் தஞ்சம் புகுந்தான்.  பிரஜாபதியான காசியபர், இந்திரனிடம் இருந்து எல்லாவற்றையும் கேட்டு, வாலகில்யர்களிடம் சென்று அவர்களது வேள்வி வெற்றிகரமாக முடிந்ததா? என்று கேட்டார். அந்த உண்மை பேசும் முனிவர்கள், "நீங்கள் சொல்வது போலவே நடக்கட்டும்" என்றனர். பிரஜாபதியான காசியபர் அவர்களை அமைதிப்படுத்தி, "பிரம்மனின் வார்த்தைகளால், இவன் மூன்று உலகங்களிலும் தேவர்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டான், நீங்கள் மற்றுமொரு இந்திரனை உற்பத்தி செய்யப்பாடுபடுகிறீர்கள்! சிறந்தவர்களே, பிரம்மனின் வார்த்தைகள் பொய்யாக நீங்கள் வழி வகுக்கக்கூடாது. நீங்கள் பாடுபடும் இந்தக் காரியம் நிறைவேறாமல், சிறகுள்ள உயிரினங்களில் பெரும்பலம் கொண்ட இன்னொரு இந்திரன் உற்பத்தியாகட்டும். உங்கள் முன் பணிந்து நிற்கும் இந்த இந்திரன் மீது கருணை கொள்ளுங்கள்", என்று கேட்டார்  காசியபரால் இவ்வாறு வேண்டிக்கொள்ளப்பட்ட வாலகில்யர்கள், முனிவர்களில் முதல்வரான பிரஜாபதி காசியபருக்கு தங்கள் மரியாதைகளைச் செலுத்திவிட்டு பேச ஆரம்பித்தனர். "ஓ பிரஜாபதி, எங்கள் எல்லோராலும் நடத்தப்படும் இந்த வேள்வியானது ஒரு இந்திரனுக்காக நடைபெறுகிறது! அவன் உமக்கு மகனாகப் பிறக்கவே இந்த வேள்வி நடைபெறுகிறது. இதன் முடிவை உம் கையிலேயே விடுகிறோம். எது நன்மையாகவும் சரியாகவும் இருக்குமோ அதைச் செய்யும்", என்று சொன்னார்கள்.  "அதே வேளையில், மனதிற்கினியவளும், நற்பேறு பெற்றவளும், நோன்பு நோற்பவளும் தட்சனின் நன்மகளுமான வினதை, பிள்ளைப்பேறின் மீதுள்ள ஆசையால், தன் நோன்புகளை முடித்துக் குளித்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, தன் நாயகனை நெருங்கினாள். காசியபர் அவளிடம், "மரியாதைக்குரியவளே, நான் நடத்திய வேள்வி இப்போது கனி தந்திருக்கிறது. நீ என்ன ஆசைப்பட்டாயோ அது உனக்குக் கிடைக்கும். மூன்று உலகங்களையும் ஆளக்கூடிய இரண்டு வீர மகன்கள் உனக்குப் பிறப்பார்கள். எனது வேள்வியின் பயனாலும், வாலகில்யர்களின் தவப்பயனாலும், உனது நல்லாசையாலும், அம்மகன்கள் மிகுந்த நற்பேறு பெற்றவர்களாகவும், மூவுலகங்களால் வழிபடத் தகுந்தவர்களாகவும் இருப்பார்கள்", என்று கூறினார். சிறப்புமிக்க காசியபர் மீண்டும் அவளிடம், "இந்த அநுகூலமான விதைகளை, மிகுந்த கவனத்துடன் சுமந்து வா. இந்த இருவரும் சிறகுள்ள உயிரினங்களுக்கு தலைவர்கள் ஆவர். நினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவை அடையும்  வீரமிக்க அவர்கள், மூன்று உலகங்களாலும் மதிக்கப்படுவார்கள்", என்று வரமளித்தார்.  நடைபெற்ற காரியங்களால் மகிழ்ந்த  தட்சபிரஜாபதி, ஆயிரம் வேள்வி செய்த இந்திரனிடம், "பெரும் பலமும் வீரமிக்க இரு சகோதரர்கள் உனக்கு உதவி செய்ய கிடைப்பார்கள். அவர்களால் உனக்கு எந்த துன்பமும் ஏற்படாது. அதனால் நீ வருத்தப்படாதே, நீயே எல்லோருக்கும் தலைவனாக இருப்பாய். இனி எப்போதும், பிரம்மனின் பெயரை உச்சரிப்பவர்களை சிறுமைப்படுத்தாதே. அக்கோபக்காரர்களை, இடியைப் போன்ற வார்த்தைகளை உச்சரிப்பவர்களை அவமதிக்காதே", என்று அறிவுரை கூறினார். இதைக் கேட்ட இந்திரன் பயத்தை விட்டு, தேவலோகம் சென்றான். வினதையும், தனது காரியம் நிறைவேறியதால், மிகவும் மகிழ்ந்தாள். அவள் அருணன் மற்றும் கருடன் ஆகிய இரு மகன்களைப் பெற்றாள். அருணன் குறை உடலுடன் பிறந்து சூரியனுக்கு சாரதியாக நின்றான். கருடனுக்கு பறவைகளின் தலைமை கொடுக்கப்பட்டது. இவ்வாறு கருடன் பிறப்பதற்கு வால்கிய முனிவர்கள் காரணமாக இருந்தனர்.  தந்தை கூறியபடி கருடன் அப்பெரும் கிளையை ஆள் நடமாட்டமில்லாத ஒரு மலையில் எறிந்து விட்டு அம்மலை உச்சியில் அமர்ந்து யானையையும் ஆமையையும் வயிறார உண்டுவிட்டு தன் தாயின் அடிமைக் கட்டை அறுக்க அமிர்தம் கொண்டு வர தேவலோகம் நோக்கிச்  சிறகடித்து  வேகமாக பறந்தான்.    இவ்வாறு அவன் பறந்த போது தேவலோகத்தில் பல துர்நிமித்தங்கள் தோன்றின. ஆகாயத்திலிருந்து நட்சத்திரங்கள் பகலில் கூட விழுந்தன. தேவர்களின் கழுத்தில் இருந்த பூமாலைகள் வாடின அவர்களின் வீரம் குன்றியது.  இவ்வாறு பல்வேறு தீய சகுனங்களைக் கண்ட தேவர்கள் கட்டுக்கடங்காத பயம் கொண்டனர். இந்த இருண்ட தடைகளைக் கண்டு பயத்தால் குழம்பிப்போன இந்திரன் மற்ற தேவர்களுடன் சென்று பிரகஸ்பதியிடம், “ஓ குருவே. இந்த இயற்கை சீற்றங்கள் எதனால் ஏற்படுகின்றன”? என்று வினவினான். அதற்கு அவர், “ஓ தேவர்களின் தலைவனே, இதற்கெல்லாம் உன்னுடைய தவறும், கவனக்குறைவும், வாலகில்ய முனிவர்களின் தவமுமே காரணம் ஆகும். பெரும் பலம் பொருந்தியவனும், நினைத்த உருவத்தை நினைத்த மாத்திரத்தில் அடைபவனுமான காசியபர் மற்றும் விநதையின் புத்திரன், சோமத்தை அபகரிக்க நெருங்கி வருகிறான். அவனால் எல்லாம் கூடும் என்று கூறினார். குரு பகவான் கூறிய வார்த்தைகளைக் கேட்ட இந்திரன் கலக்கமடைந்து  அமிர்தத்தை காக்கும் காவலர்களிடம் “பெரும்பலமும் சக்தியும் கொண்ட ஒரு பறவை அமுதத்தை அபகரிக்க வருகின்றான் எனவே ஜாக்கிரதையாக இருங்கள்” என்று எச்சரித்தான். மற்ற தேவர்களும் தங்கள் ஆயுதங்களுடன் காவலாக நின்றனர்.    இப்படி தேவர்கள் போருக்குத் தயாராக இருக்கையில், பறவைகளின் மன்னன் கருடன், அவர்கள் முன் விரைவாக வந்தான். அவனது அதிபலத்தைக் கண்ட தேவர்கள் பயங்கொண்டு நடுங்கி, அனைத்து ஆயுதங்களுடன் மோதினர். கருடன், தனது சிறகுகளால் பெரும் புயலை ஏற்படுத்தி, உலகங்களை இருளில் முழ்க வைத்து, தேவர்களை விஞ்சினான். தேவர்கள் அங்கு ஏற்பட்ட புழுதியால் தாக்கப்பட்டு, மூர்ச்சையாகி விழுந்தனர். தூசிப்படலத்தால் குருடாகியதால், அமுதத்தைக் காத்த அமரர்களால் கருடனைக்காண இயலவில்லை.  இப்படிக் கருடன் தேவலோகத்தைக் கலங்கடித்தான். தன் சிறகுகளாலும் அலகுகளாலும் தேவர்களைத் துவைத்தெடுத்து காயங்கள் உண்டாக்கினான். பிறகு, பலம் வாய்ந்த வாயுதேவன் அப்புழுதியை விரட்டியடித்தான். இருள் மறைந்த பிறகு, தேவர்கள் கருடனைத் தாக்கினர். அப்பெரும்பலம் வாய்ந்தவன் தேவர்களால் தாக்கப்படும் போது, யுக முடிவில் வரும் பெரும் மேகம் போலப் பெரும் உறுமல் உறுமி அனைத்து உயிர்களுக்கும்  அச்சத்தை ஏற்படுத்தினான். எதிரி வீரர்களைக் கொல்லும் சக்திமிக்க அப்புள்ளரையன், தன் சிறகுகளைப் பயன்படுத்தி உயர்ந்தான்.   இருபுறக்கூர் கொண்ட வாட்கள், கூர்முனை முட்கள் பதித்த இரும்பு கதைகள், கூர் ஈட்டிகள், கதைகள், பளபளப்பான கணைகள், சூரிய வடிவிலான பல சக்கரங்கள், ஆகியவற்றைக் கொண்ட தேவர்களும் இந்திரனும் கருடன் தங்கள் தலைக்கு மேல் அதி வேகமாக  உயர்வதைக் கண்டனர். அப்புள்ளரையன், அவர்களை அனைத்து திக்குகளிலிருந்தும் பல தரப்பட்ட ஆயுதங்களால் அடித்துச் சிறிதும் தள்ளாடாமல் கடும் போர் புரிந்தான். சிறிது நேரமே நீடித்த ஒரு பெரிய மோதலுக்குப் பிறகு, வைநதேயனின்  கூர் நகங்களாலும், அலகாலும், சிறகுகளாலும் அடிபட்டு இறந்து கிடந்தது போல் பல தேவர்கள்  தரையில் கிடந்தனர்.  கருடன், யட்சர்களுடனும், பெரும் வீரமிக்க அஸ்வகிரந்தா, ரைனுகா, துணிவு மிக்க கிரதானகா, தபனா, உலுகா, ஸ்வஸனகா, நிமேஷா, பிராருஜா மற்றும் புலினா ஆகியோருடனும் பெரும் போர் புரிந்தான். யுக முடிவில் பிநாகம் ஏந்தி எதிரிகளைத் தண்டிக்கும் சிவனைப் போலக் காட்சியளித்தான். பெரும் வீரம் கொண்ட யட்சர்கள் கருடனால் துவைக்கப்பட்டு, அடர்ந்த இரத்தத்தைப் பொழியும் கரும் மேகக்குவியல் போல கிடந்தனர்.  இவ்வாறு தேவர்களை வென்ற கருடன் அமுதம் இருக்கும் இடத்திற்குச் சென்றான். அங்கே அது நாற்புறமும் நெருப்பால் சூழப்பட்டிருப்பதைக் கண்டான். அந்நெருப்பின் சுடர்கள் வானத்தை மூடி இருந்தது. அச்சுடர்கள் பெரும் காற்றால் அசைக்கப்பட்டு, சூரியனையே எரித்துவிடுவது போல இருந்தன. தொண்ணூறு மடங்கு தன்னைப் பெரிதாக்கிக் கொண்டு, பல நூறு  வாய்களுடன், பல நதிகளின் நீரை அந்த வாய்களுக்குள் அடைத்து, வேகமாகத் திரும்பி வந்து, சிறகுகளையே தனது வாகனமாய்க் கொண்டு, சிறப்பு மிக்க அக்கருடன் தான் கொண்டு வந்த நீரால், அந்நெருப்பை அணைத்தான். நெருப்பை அணைத்து விட்டு, சோமத்தை எடுக்க மிகவும் சிறிய உருவெடுத்து, மிக சாமர்த்தியமாக  உள்ளே நுழைந்தான்.  அப்புள்ளரையன் கதிரவனின் பொன்னிறம் பெற்றுக் கடலில் சங்கமிக்க செல்லும் நீரோட்டம் போல பெரும் சக்தியுடன் அமிர்தம் உள்ள இடத்திற்குள் நுழைந்தான். ஈட்டியைப் போன்று கூர்மையான முனைகள் கொண்ட ஒரு இரும்புச் சக்கரம் ஒன்று சுழன்று கொண்டிருந்தது. அமுதத்தைக் காக்கத் தேவர்கள் செய்த பொறி அது. அருகில் வருபவர்களை கண்டந்துண்டமாக வெட்டி விடக்கூடியது அது. கருடன் சமயோசிதமாகத் தனது உருவத்தை மிகவும் சிறிதாகக் குறுக்கிக் கொண்டு அந்த வாள்களின் ஆரத்தில் நுழைந்தான். உள்ளே  மின்னல் போன்ற நாக்குகளுடன்  எப்போதும் நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கும் இரு நாகங்கள் காவல் காப்பதைக் கண்டான்.    மிகுந்த வேகத்துடன் அந்த அரவப்பகையோன் அந்நாகங்களின் கண்களில் தூசியைத் தூவி அவற்றை தாக்கி அவற்றைத் தன் வலிமை வாய்ந்த அலகால் துண்டு துண்டுகளாக்கி துவைத்தெடுத்தான். அதற்குப் பிறகு காலந்தாழ்த்தாமல் அமிர்த கலசத்தை எடுத்துக்கொண்டு தன் அழகிய சிறகுகளை அடித்துக்கொண்டு சுழன்று கொண்டிருந்த பொறிகளை அடித்துத் தூள் தூளாக்கிவிட்டு  அந்த அமிர்தத்தை தானே குடிக்காமல் வெளியே வந்தான். அதன் பிறகு சிறிதும் சோர்வோ தளர்ச்சியோ கொள்ளாமல், சூரியனின் ஓளியை மங்கச்செய்யும் அற்புத  காந்தியுடன் வந்த வழியில் திரும்பினான்.  இவ்வாறு விநதை சிறுவன் அமிர்த கலசம் தாங்கி வான் வழியே வரும் போது ஸ்ரீமந்நாராயணன் அவனுக்கு சேவை சாதித்தான். கருடனின் தன்னலமற்ற செயலாலும், தாய் பாசத்தினாலும் பெரிதும் மகிழ்ந்த மஹாவிஷ்ணு, கருடனிடம், ஓ கருடா!  நான் உனக்கு வரம் தர விரும்புகிறேன் என்றார். அதற்கு கருடன், “நான் அமுதத்தை பருகாமலே நோயற்றவனாகவும்,  மரணமற்றவனாகவும், திகழ வேண்டும், மேலும் நான் தங்களுக்கு மேலிருக்க வேண்டும் என்று இரு வரம் கேட்டான்.   மஹாவிஷ்ணுவும் அவ்வாறு அருளினார். பிறகு கருடன் அவரிடம்     “நானும் உமக்கு வரம் தருகின்றேன். அறுகுணம் கொண்ட நீர் என்னிடம் கேட்கலாம்”, என்றான். மஹா விஷ்ணுவும் பெரும் வல்லமை படைத்த கருடனைத் தனது வாகனமாகக் கேட்டார். தனது தேரின் கொடிமரத்தில் அப்பறவையின் இந்திரனுக்கு இடம் கொடுத்து, “நீ இப்படியும் எனக்கு மேலிருக்கலாம்” என்று அருளினார். பெரும் வேகம் கொண்ட கருடன் நாராயணனிடம் “அப்படியே ஆகட்டும்” என்று கூறி தன் தாயைக் காக்க காற்றை பழிக்கும் வேகத்தில் விரைந்து சென்றான்.    சிறகுள்ள உயிரினங்களின் முதல்வன் இவ்வாறு அமிர்த கலசத்துடன் பறந்து செல்லும் போது இந்திரன் தனது வஜ்ராயுதத்தை அவன் மீது ஏவினான். கருடன் சிரித்துக் கொண்டே இனிமையான வார்த்தைகளினால்,  “தனது முதுகெலும்பை உனது வஜ்ராயுதத்திற்காக கொடுத்த  ததிச்சி முனிவரை மதிக்கின்றேன். வஜ்ராயுதத்தையும் மதிக்கின்றேன். ஆயிரம் வேள்விகள் செய்த உன்னையும் மதிக்கின்றேன். ஆகவே எனது ஒரு சிறகை உதிர்க்கின்றேன். அதை உன்னால் அடைய முடியாது. வஜ்ராயுதத்தின் தாக்குதலால் எனக்கு சிறு வலி கூட ஏற்படவில்லை” என்று ஓர் இறகை உதிர்த்தான். கருடனின் சிறகு அப்படிப் பறந்ததை எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியுடன் கண்டு, அச்சிறகின் அழகையும் கண்டு கருடனை  “சுபர்ணன் – அழகிய இறகுகள் கொண்டவன்”  என்று அழைத்தனர்.   கருடனின் வலிமையை உணர்ந்த இந்திரன். “ஓ பறவைகளில் சிறந்தவனே நான் உன்னுடைய பலத்தின் எல்லையை அறிய விரும்புகிறேன். நான் உன்னுடன் நட்புக் கொள்ள விரும்புகிறேன்” என்றான்.  அதற்குக் கருடன் தன்னைத் தானே உயர்வாக பேசிக் கொள்வது தவறு ஆயினும் இந்திரனே நீ கேட்டதால் கூறுகின்றேன். எனது ஒரு இறகால், ஓ சாகரா, இந்த பூமியை என்னால் எளிதாகச் சுமக்க இயலும், சோர்வில்லாமல் அனைத்து உலகங்களையும், அதனுள் இருக்கும் அசைவன, அசையாதன ஆகியவற்றையும் ஒன்றாக சேர்த்து என்னால் சுமக்க முடியும் என்று அறிந்து கொள்” என்றான்.  பின்னர் இந்திரன் கருடனிடம், “என்னுடைய உண்மையான நட்பை ஏற்றுக்கொள், அமுதத்தை வைத்துக் கொண்டு எனக்கு எந்த பலனும் இல்லை என்றால் , அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விடு. நீ யாரிடம் இதைக் கொண்டு போகிறாயோ, அவர்கள் உனது எதிரிகள்”, என்று மறுமொழி கூறினான். அதற்குக் கருடன், “நான் அமிர்தத்தை எனது அன்னையை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க மட்டுமே எடுத்துச் செல்கின்றேன், இதை யாரையும் குடிக்க விடமாட்டேன். ஓ! ஆயிரங்கண் கொண்டவனே நான் அமிர்த கலசத்தை கீழே வைத்தவுடன் நீ அதை மீண்டும் எடுத்து வந்து விடு என்றான்”. அதற்குப் பெரிதும் மகிழ்ந்த இந்திரன் ஏதாவது வரம் கேள் என்றான்.    []   அமிர்த கலச கருடன்  கருடனும் கத்ருவின் மைந்தர்களை நினைவில் கொண்டு ஏமாற்று வேலையால் தன் தாய் அடிமைப்பட்டதை நினைவு கூர்ந்து, “ஓ சாகரா, பாம்புகள் எனக்கு உணவாகட்டும்” என்று   வரம் கேட்டான். இதைக் கேட்ட தானவர்களை வெல்பவன் அவ்வண்ணமே வரம் அளித்தான். பின்னர் அழகிய இறகுகளைக்   கொண்ட  கருடன்  தனது  தாயின்  இருப்பிடத்தை  நோக்கி அதிவேகமாக  பறந்து சென்றான்.   மிகுந்த மகிழ்ச்சியுடன் கருடன் நாகங்களிடம், “இதோ பாருங்கள், நான் அமிர்தத்தை கொண்டு வந்து விட்டேன். இங்கே அமர்ந்து இந்த தர்ப்பைப் புல்லில் அமிர்த கலசத்தை வைக்க விடுங்கள். நீங்கள் அனைவரும் சென்று உங்களை தூய்மைப்படுத்திக்கொண்டு, வழிபாடுகளையும் முடித்துக்கொண்டு வந்து அமுதத்தை அருந்துங்கள் என்றான். மேலும் நான் நீங்கள் கூறியபடி செய்துவிட்டதால் என் தாயை அடிமைக் கட்டில்  இருந்து இப்போதே விடுவியுங்கள்” என்று கேட்டான். பாம்புகளும் மிக்க மகிழ்ச்சியுடன் கருடனிடம் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன்  என்ன நடக்கப் போகின்றது என்பதை அறியாமல் தங்களை சுத்தப்படுத்திக்கொள்ளச் சென்று விட்டன.  அதே சமயத்தில் இந்திரன் வந்து அமுதத்தை எடுத்துக்கொண்டு தேவலோகம் சென்று விட்டான். ஆவலுடன் அமிர்தம் பருக திரும்பி வந்த பாம்புகள் அமுதம் வைத்திருந்த தர்ப்பைப் புற்கள் கொண்ட தரை காலியாக இருப்பதைக் கண்டன. தாங்கள் ஏமாற்றியதற்கு பதிலாக தாங்களே ஏமாற்றப்பட்டதை அறிந்தன. அப்படியும் விடாமல் அமிர்தம் வைத்திருந்த அப்புற்களை தங்கள் நாவால் நக்கின. இந்த செயலால் அவைகளின் நாவு இரண்டாக பிளந்தன. அமிர்தத்தின் தொடர்பால் தர்ப்பைப் புற்கள் தெய்வீகத் தன்மை கொண்டதாகியது. இவ்வாறு கருடன் தன் தாயை பாம்புகளிடமிருந்து மீட்க அமிர்தம் கொணர்ந்து பாம்புகளின் நாவைப் பிளந்தான்.  அன்று முதல் நாகங்கள் எல்லாம் கருடனுக்கு பகைவர்கள் ஆயின. இவ்வாறு கருடன் அமிர்த கலசத்தை கொண்டு வந்த போது அமிர்த கலசத்தில் ஒட்டிக்கொண்டு வந்த தேவலோகப் புல்லே பூவுலகில் விழுந்து விச்வாமித்திரம் எனப்படும் தர்ப்பைப் புல் ஆனது.   அதன் பிறகு அந்த அழகான இறகுகளைக் கொண்ட வைநதேயன் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன்னைப் பெற்ற தாயின் வயிற்றைக் குளிரச் செய்து  அந்த அழகான கானகத்தில் அவளுடன் வாழ்ந்தான். கருடன் பின்னர் நாகங்களைக் கொன்று வந்தார்.  இதற்கு முடிவு கட்ட எண்ணிய  பிரம்மா  தேவர்களின் வேண்டுகோளுக்குப் பின் ஆலோசனை கூற சூரியன் தனது தேரின் லகானாக ஒரு நாகத்தையும், சிவபெருமான் பாம்புகளை ஆபரணமாகவும், திருமால் ஆதி சேஷனை தனது படுக்கையாகவும், கருடனே பல நாகங்களை ஆபரணமாகவும் அணிந்து காத்தருளினர்.    இதுவரை  கருடனின் பிறப்பையும் அவன் தன் தாயைக் காக்க அமிர்தம் கொணர்ந்த தீரத்தையும் பெருமாளுக்கு எவ்வாறு கொடியும் வாகனமும் ஆனான் என்பதையும் பார்த்தோம். வாருங்கள்  இனி கருடனின் மற்ற சிறப்புகளைப் பற்றிக் காணலாம்.                                                  3. கருடனின் சிறப்புகள்   கருடன் செம்பருந்து வகையை சார்ந்த பறவை. செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியில் வெண்ணிறம் உடைய பருந்து. எந்தப் பறவையும் பறக்காத உயரத்தில் பறக்கக் கூடியது கருடன். ஒப்பற்ற ஒளியும் காற்றையும் விட வேகமாக பறக்க வல்லது, மற்ற பறவைகளை போலக் கருடன் சிறகுகளை விரித்துக்கொண்டு பறப்பதில்லை, கருடனின் பார்வையும் மிகவும் கூர்மையானது. கருடன் எழிலானது, கம்பீரமானது. கருடனின் வலிமை, வீரம், பொறுமை, வேகம், அழகு, கோபம் ஆகியவற்றுக்கு மெச்சி மஹாவிஷ்ணு கருடனைத் தனது வாகனமாக ஆக்கிக் கொள்கின்றார் என்று அபிதான சிந்தாமணி கூறுகின்றது.  அன்று முதல் இன்று வரை அந்த விநதைச் செல்வன் மேல் ஆரோகணித்து சகல அண்டங்களையும் தன் வயிற்றில் அடக்கிய  பெருமாளை நினைத்த நொடியில் தன் பக்தர்கள் இருக்கும் இடம் சென்று அவர்கள் துயர் துடைத்து வருகின்றார் அசுரர்களை துவம்சம் செய்து வருகின்றார்.                அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும் படியான், கொடி மேல் புள் கொண்டான் – நெடியான் தன்  நாமமே ஏத்துமின்கள்; ஏத்தினால் தாம் வேண்டும்  காமமே காட்டும் கடிது.  (இ.தி 92) பொருள்: முன்னர் கிருஷ்ணாவதார காலத்தில் திருவடியினால் கம்சனை உதைத்துக் கொன்றதால் தேவர்கள் துதிக்கும்படியாக உள்ளவனும், கருடப்பறவையை கொடியாக உடையவனும் சர்வேஸ்வரனுடைய  திருநாமங்களையே கொண்டு தோத்திரம் செய்யுங்கள்; அப்படித் தோத்திரம் செய்தால் தாங்கள் விரும்பும் பயனை விரைவாக (அத்திருநாமம்) பெறச் செய்யும் - என்று கொடிய கம்சனை மாய்த்து வான்புகழ் கொண்ட பகவான் கண்ணனை, நெடியானை “கருடக் கொடியோனே” என்று அழைத்து ஆராதனை செய்தால் நம்முடைய எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும் என்று பூதத்தாழ்வார் பாடுகின்றார்.  கருடன் வேறு, பகவான் வேறு என்று நினைக்க வேண்டாம். பகவானே கருடனாக அவதரித்து விஷ்ணு என்றும் கருடன் என்றும் பெயர் பெற்றார் என்று மஹாபாரதம் கூறுகின்றது.  தெய்வப்புள்ளான கருட பகவான் ஒப்பற்ற மேன்மையுடையவர். மஹாவிஷ்ணுவின் இரண்டாவது வியூகமான ஸ்ரீ சங்கர்ஷண மூர்த்தியின் அம்சமாக விளங்குபவர். கருடனுக்கு ருத்ரை, சுகீர்த்தி என்று இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர்கள் இருவரையும் நாம் வணங்க ஆனந்தம்(ருத்ரை) மற்றும் புகழ்(கீர்த்தி) இரண்டையும் நாம்  பெறலாம்.   காலத்தின் ரூபம் கருடன் அவர் இரு சிறகுகள், தக்ஷியாண, உத்தராயண காலங்களைக் குறிக்கின்றது.  வேத சொரூபனான கருடனை வணங்குவதால் ஆணவம், கன்மம், மாயை என்னும்  மும்மலம் நீங்கும் ஸ்ரீவைகுந்தப்பேறு  கிட்டும்.    நான்கு பெரும் பேறுகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை வழங்குபவர் கருடன்.  மனித உடலிலுள்ள ஐந்து வாயுக்களான ப்ராணன், அபாநன், வ்யாநன், உதாநன், ஸமாநன் என்பவற்றுக்கு  ஸத்யர், ஸுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர். விஹாகேஸ்வரர்  என்னும் ஐந்து மூர்த்திகளாய்க் கருடாழ்வார்  விளங்குகின்றார். இதனால்தான்  சுவாமி தேசிகர் தமது கருட தண்டகத்தில்  “மருத் பஞ்சகாதீஸ ஸத்யாதி மூர்த்தே” என்று அருளியுள்ளார்.  கருடன்  ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ்  என்னும் ஆறு குணங்கள் உடையவர்.  ஷடகம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஏழு ஸ்வரங்கள் உடைய ஸாமவேத வடிவானவர் கருடன்.  கருடனை வழிபடுவோர் அணிமா- உடலை சிறிதாக்குதல், மஹிமா- உடலை பெரிதாக்குதல், லகிமா-உடலை லேசாக்குதல், கரிமா- உடலை பளுவுடைய தாக்குதல், வசித்வம்- எல்லாவற்றையும் தன் வயமாக்குதல், ஐஸ்வர்யம்- எல்லாரையும் அடக்கியாளும் தலைவனாய் இருத்தல், பிராப்தி- தான் நினைத்ததைப் பெறுதல்,  ப்ரகாமம்- நினைத்தவிடம் செல்லுதல் எனும் “அஷ்டமா சித்திகளும்”  அடையப் பெற்றவர்.  கருடனின் அழகான விரிந்த பெரிய  இறக்கைகள் “யக்ஞங்கள்” என்றும், காயத்ரி மஹாமந்திரமே அவருடைய கண்கள் என்றும், ஸ்தோத்திர மந்திரங்கள் அவருடைய தலை என்றும், சாம வேதமே உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.  இவ்வாறு வேதஸ்வரூபனாக திகழ்கிறார் கருடபகவான்   இராமாவதாரத்தின் போது   இராமபிரானின் தூதனாக இலங்கைக்குச் சென்று சீதாபிராட்டியைச் சந்தித்தவர் அனுமன். அது போல, கிருஷ்ணாவதாரத்தில் தாயார் ருக்மணி கொடுத்த ஓலையை ஸ்ரீகிருஷ்ணரிடம் அளிக்கத் தூது சென்றவர் கருடன். அனுமனும் கருடனும் பகவானின் தூதர்கள், தொண்டர்கள், பெருமானைத் தாங்கும் திருவடிகள். இவர்களிடம் மனமுருக வேண்டினால் நம் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை பகவானிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்பது ஐதீகம்.  இராம இராவண யுத்தத்தின் போது இந்திரஜித்தின் நாகபாசத்தினால், இளைய பெருமாள் மற்றும் வானர வீரர்கள்  கட்டுண்டு கிடந்த போது தன் சிறகு காற்றால் அதை அறுத்தவன் வைநதேயன். கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் மாடு மேய்க்கச் சென்ற போது வெயில் படாமல் இருக்க நிழல் தந்தவன் கருடன். சத்யபாமா பாரிஜாத மலரை தான் தன் தலையில் சூடி மகிழ வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க கண்ணனும் தேவலோகத்தில் இருந்த அப்பாரிஜாத மரத்தை, வேருடன் பறித்து தன் அருகில் இருந்த வேத ஸ்வரூபியான கருடனின் முதுகில் ஏற்றி வைக்க அவரும் தன் இரு சிறகுகளுக்கிடையில் மறைத்து பாரிஜாத மரத்தை பூலோகம் கொண்டு வந்து சேர்த்தார்.   புத்திரப்பேறு வேண்டி கிருஷ்ணன் உபமன்யு முனிவரிடமிருந்து தீட்சை பெறத் தவம் இருந்த போது துவாரகையைக் காத்தவர் கருடன். ஒரு முறை  பாற்கடலில் உள்ள சுவேத்தீவில் இருந்து பால்கட்டிகளைத் தனது பிடரியில் கருடன் சுமந்து வந்த  போது  அவை பூலோகத்தில் சிதறின பின் இவையே சுவேத மிருத்திகையாக (திருமண்) மாறியதாகக் கூறுவர். ஒரு சமயம் தேவேந்திரன் அளித்த வைரமுடி என்னும் வைணவ தேவ முடியைச் திருநாராயணபுரம் (மேல்கோட்டை) எம்பெருமான் யதிராஜ சம்பத் குமாரருக்கும், விமானத்தைத் தேரழுந்தூர் தேவாதிராஜனுக்கும்  சமர்ப்பித்தார்.  ஸ்ரீவைகுந்தத்தின் எட்டு விமானங்களில் ஒன்றான கிரீடாசலத்தை திருமலைக்குக் கொண்டு வந்து, அதில் திருவேங்கடவனை எழுந்தருளச் செய்தார். கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன்தான் வைகுந்தத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினார் என்பது ஐதீகம்.  திருக்கோவில்களின் பிரம்மோற்சவத்தில் கருடசேவையன்று எம்பெருமானைத் தன் மேல் எழுந்தருளச் செய்து சேவை செய்கிறார். கஜேந்திராழ்வார் போன்ற பக்தர்களைக் காக்க எம்பெருமாள் விரைவாகச் செல்ல உதவுகிறான். இதைப் பெரியாழ்வார் “உதவப் புள்ளுர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த” என்று தம் பாசுரத்தில் பாடுகின்றார்.  பெருமாள் அரக்கர்களைக் கொல்ல செல்லும் போது கருடனில் பறந்து சென்று அவர்களை அழித்து தேவர்களை காக்கிறார். இராமருக்கும் மால்யவானுக்கம் பாதாளத்தில் போர் நடந்த பொது தன் சிறகுகளை விரித்து அவருக்கு நிழல் அளித்தவன் கருடன். கேரளாவிற்குச் சென்ற இராமனுஜருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் காத்து அவரைத் திருக்குறுங்குடிக்குக் கொண்டு வந்து சேர்த்தவன் கருடன். எவ்வொரு முக்கியமான செயலைத் தொடங்கும் போதும் கருடனை தியானித்து கருட துதியைக் கூறினால் காரியசித்தி தரும் எனக்கூறப்பட்டுள்ளது. கருடனுக்கென்று தனி காயத்ரிகளும்  உள்ளன ஓம் தத்புருஷாய வித்மஹே  சுவர்ண பட்சாய தீமஹி தந்நோ கருட ப்ரசோதயாத் ||  ஓம் ககோத்தமாய வித்மஹே  வைநதேயாய தீமஹி தந்ந தார்க்ஷ்ய ப்ரசோதயாத் ||  கருடன் அருள் பெற்றால் நல்ல ஞாபகசக்தி, வேதாந்த ஞானம், பேச்சாற்றல் கிட்டும் என “ஈச்வர சம்ஹிதை” கூறுகின்றது. கருடன்  அருள் பெற்றால் பல அபூர்வசக்திகள் சித்திக்கும் என்று “பத்ம புராணத்தில்” கூறப்பட்டுள்ளது. அதர்வண வேதங்களில் வரும் 32 வித்யைகளில் கருட வித்யையே முதலிடம் வகிக்கின்றது.  கருடனின் நிழல் விழும் பூமியில் பயிர்கள் சிறந்து வளரும் என்பது நம்பிக்கை. கருடன் வானத்தில் கம்பீரமாக  சிறகுகளை அசைக்காமல்  ஒரே நிலையில் பறக்கும் போது  சேவிப்பது  கோபுர தரிசனத்திற்கு ஈடாகும் என்பர் பெரியோர்கள். மங்கள வாத்தியங்களின் 16 வகையான தொனி, ஆதோத்யம் எனப்படும். அதன் நாதமே கருடன் எழுப்பும் ஓசையாகும். வானத்தில் கருடனைப் பார்ப்பதும், கருடனின் குரலைக் கேட்பதும் சுபசகுனமாகக் கருதப்படுகிறது. கருடத்வனி இசை நயமிக்கது, மங்களகரமானது, சாம வேதத்திற்கு ஒப்பானது. இந்த இராக ஆலாபனை திருமாங்கல்யதாரண சமயத்தில் வாசிப்பது சிறந்தது    கார்க்கோடகன் எனும் நாகத்தின் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனி தோஷம் போகும் என்பது ஐதீகம். அக்கார்க்கோடக நாகம்  கருடனுள் அடக்கம். கருட பகவான் நவக்கிரக தோஷம், குறிப்பாக இராகு, கேது சர்ப்ப தோஷங்களை நீக்கி மங்களம் அருளுகிறார். மேலும் ஜாதகத்தில் புத்திர தோஷம், ரோகம், சத்ரு பீடை, பில்லி, சூனியம் அகற்றி சகல சௌபாக்கியங்களையும் அருளுபவர். ஆபத்துக் காலங்களில் விரைந்து நம் துன்பங்களைப் போக்குவதுடன், மரண பயதையும் போக்குபவர்.   வீட்டின் முன் கருடக்கிழங்கை கட்டினால் அவ்வீட்டில் எவ்வித விஷ ஜந்துக்களும் நுழையாது என்பார்கள். கருடன் பறக்கின்ற நிலையில் படைகளை நிறுத்திப் போரிட்டால் எதிரியின் படைகளைப் பாழ்படுத்தி வெற்றி பெறலாமென்று போர்முறை கூறுகின்றது. இதனை அறிந்த பாண்டவர்கள் ஒரு நாள் கருட வியூகம் அமைத்துப் போரிட்டுக் கௌரவர்களை வென்றனர் என்று மஹாபாரதம் கூறுகின்றது. “குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச |  விஷ்ணு வாகன நமஸ்துப்யம் பட்சி ராஜாயதே நம: ||”  என்னும் கருட மந்திரம் விஷத்தைப் போக்கும்  மந்திரங்களுள் தலை சிறந்ததாகும். இம்மந்திரத்தை ஓதி சௌனகர், பிருகஸ்பதி, நாரதர், கச்யபர், தேசிகன் ஆகியோர் சித்தி பெற்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன. (சமஸ்கிருத மந்திரங்களை  குரு மூலம் பெற்று பின்னர் ஜெபிப்பதே உத்தமமானது)  கீழ் கண்ட விஷ்ணு சகஸ்ரநாம நாமாக்கள் கருடனை குறிக்கின்றன. சுபர்ணாய நம: – அழகிய சிறகுகளை உடையக் கருடனை வாகனமாக கொண்டவன்; சம்சார சாகரத்தை கடத்துவிப்பவன்.   வாயு வாஹனாய நம: -  வாயுவாகிய அனுமனை வாகனமாகக் கொண்டவன், விழுந்தவர்களை விரைவாக கருடனின் சிறகுகளால் எழுப்புபவன்.   கருடத்வஜாய நம: - எம்பெருமான்  கருடனை தன்னுடைய கொடியில் கொண்டவன்.  .  கருடன் மட்டுமல்ல கருட குடும்பம் முழுவதுமே பெருமாளுக்குச் சேவை செய்தது. இராமாவதாரத்தில் கருடனின் தமையனான அருணனின் மைந்தர்களான சம்பாதியும், ஜடாயுவும் மலையதனால் அணைகட்டி மதிலிலங்கை அழித்த  ஸ்ரீராமருக்குச் சேவை செய்தனர். அதில் ஜடாயு சீதாதேவியை இராமன் தூக்கிச்சென்ற போது அவனுடன் போரிட்டுத் தம் உயிரையும் இழந்தார். இராமரும் ஜடாயுவிற்கு அந்திம சமஸ்காரம் செய்தார். திருப்புட்குழி மற்றும் புள்ளபூதம்குடி ஆகிய  இரு தலங்களின் ஐதீகம் இந்த ஜடாயு மோட்சம் ஆகும்.   கருடன் பெயரில் கருடகங்கை என்றொரு ஆறு உள்ளது. பத்ரிநாத் செல்லும் வழியில் பீபல்கோட் என்ற இடத்திற்கு 5 கி.மீ தூரத்தில் உள்ள கிராமத்தில் கருடனுக்கு இவ்வாற்றின் கரையில் ஓர் ஆலயம் உள்ளது. பெருமாள் லக்ஷ்மி நாராயணராக அருள் பாலிக்கின்றார். நாகங்களை கொன்ற பாவம் தீர கருடன் இத்தலத்தில் தவம் செய்ததாக ஐதீகம். இக்கருட கங்கையில் புனித நீராடினால், சர்ப்ப தோஷம் விலகும், மற்றும் இவ்வாற்றில் கிடைக்கும் கூழாங்கற்களை கொண்டு வந்து இல்லத்தில் வைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது . ஆழ்வார்களில் பெரியாழ்வாரும், மதுரகவியாழ்வாரும் கருடனின் அம்சமாக அவதரித்தவர்கள் ஆவர். மௌரியர்களின் அதிர்ஷ்டக் கடவுளாகக் கருட பகவான் வணங்கப்பட்டிருக்கிறார். குமார குப்த, சமுத்திர குப்த மன்னர்கள் காலத்தில் செலாவணியான பொற்காசுகளில் கருட முத்திரை இட்டதால் சுபிட்சம் மேலோங்கியது என்கிறது வரலாறு.  சந்திரகுப்த விக்கிரமாதித்யன் டெல்லியில் ஒரு கருடகம்பத்தை ஸ்தாபித்தான்.  தேவகிரி யாதவர்களின் சின்னமும் கொடியும் கருடன்தான். தாய்லாந்து மற்றும் இந்தோனேஷிய அரசுகளின் சின்னம் கருடன் ஆகும். அமெரிக்காவின் சின்னம், கருடன். அதனால்தான் அந்நாடு செல்வச் செழிப்புடன் திகழ்கிறது என்பார்கள்.  இந்தோனேஷியாவின் விமான போக்குவரத்தின் பெயர் 'கருடா' என்பதாகும்.  தாய்லாந்து நாட்டு மன்னரின் அரசமுத்திரை கருடன் ஆகும். அவர்கள் முடி சூட்டிக்கொள்ளும் போது திருப்பாவையும் சேவிக்கப்படுகின்றது.     அமுதகலசம் தாங்கிய கருடனை பௌத்தர்கள் வழிபடுகின்றனர்.  ஐந்து தியான புத்தர்களுள் ஒருவரான அமோக சித்தரின் வாகனம் கருடன் ஆகும். ஞானத்தின் ரூபம் கருடன். புத்த மதத்தில்  கருடன் என்பது நாகங்களின் விஷத்தால்  ஏற்படும் வியாதிகளை நீக்குவதற்காக புத்தர் எடுக்கும் அவதாரம்  என்பது ஐதீகம். இங்கு விஷம் என்பது ஆசை, வெறுப்பு மற்றும் மூடத்தனத்தை குறிக்கின்றது.  பௌத்தர்கள் கருடனை இரண்டு வட்ட வடிவ கண்கள், இரு கொம்புகள், நெற்றியில் நாகங்களிடமிருந்து பறித்த மாணிக்கம் அணியாக விளங்க, நீட்டிய கரங்களில் ஒரு நாகம் அதை தனது அலகால் கொத்தும் வண்ணம் அமைக்கின்றனர்.    []    கருட பதாகை நேபாள நாட்டில் எல்லாக் கோவில்களின் முகப்பிலும் இது போன்று கருடன் திகழ்கின்றான் இரு கால்களிலும் நாகத்தை தாங்கிய வண்ணம் கருட பதாகையை அனைத்து திருக்கோவில்களின் முகப்பிலும் தரிசிக்கலாம்.  விஷ்ணுவாலயங்களில் அழகிய  கருடஸ்தம்பம் உள்ளன. அதன் மேல் சிறகுகளைக் கீழ் நோக்கி விரித்துக் கொண்டு எழிலாக நாகாபரணங்களுடன் அமர்ந்த கோலத்தில் உள்ள கருடனை சேவிக்கலாம்.  காத்மாண்டு விமான நிலையத்தில் அழகிய அமர்ந்த நிலையில் உள்ள கருடன் அனைவரையும் வரவேற்கின்றார்.  'கருட நாக யுத்தம்' என்ற பெயரில் மிகப் பெரும் விழா கொண்டாடப்படுகிறது என்று கருடனின் சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்.   இதுவரை கருடனின் பல்வேறி சிறப்புகளைப் பற்றிக் கண்டோம் வாருங்கள் அன்பர்களே இனி பல்வேறு ஆலயங்களில் சிறப்புக் கோலத்தில் சேவை சாதிக்கும் அழகைக் காணலாம்.                           4. பல்வேறு சிறப்பு கோலங்களில் கருடன்   திருவடி ஆஞ்சநேயர் போல பெரிய திருவடிக்கு தனிக்கோவில் இல்லை என்றாலும்  அனைத்து  விஷ்ணுவாலயங்களிலும் பெரும்பாலும்   பெருமாளுக்கு எதிராக சிறகுகள் விரிந்த நிலையில்,   அஞ்சலி ஹஸ்தத்துடன்    அதாவது இரு கரம் குவித்து  பெருமாளை வணங்கும்  நிலையில் நின்ற கோலத்தில் கருடாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. சில ஆலயங்களில் வைநதேயன்  பல்வேறு சிறப்பு கோலங்களிலும் சேவை சாதிக்கின்றார். அவற்றில் சிலவற்றை சேவிக்கலாமா    அன்பர்களே?  முதலை பிடித்த யானைக்கு அருளும் கோலத்தை கபித்தல திவ்ய தேசத்தில் சேவிக்கலாம். அழகர் கோவில், திருவல்லிக்கேணி, அட்டபுயகரம், சோளிங்கரில் தக்கான் குளக்கரை ஆகிய திவ்யதேசங்களில் பெருமாளைச் சுமந்த படி “நித்ய கருட சேவையில்” பெருமாளை சேவிக்கலாம் .  திருவரங்கத்தில் பிரம்மாண்டமான அமர்ந்த கோலக் கருடனை நான்காவது சுற்றில் சேவிக்கலாம். மேலும்  தாயைக் காக்க தேவ லோகத்திலிருந்து  அமிர்தம் கொணார்ந்த அமிர்த கலச கருடனாகவும் சேவிக்கலாம். கும்பகோணம் அருகே உள்ள திருவெள்ளியங்குடி கோலவில்லி இராமர் ஆலயம்,  ஆழ்வார் திருநகரி ஆகிய தலங்களில் கருடன் சங்கு, சக்கரத்துடன் நான்கு திருக்கரங்களுடன் அருட் காட்சி தருகிறார்.   கருடன் தவம் செய்து கருடாழ்வார் ஆகும் பேறு பெற்ற அஹோபில க்ஷேத்திரத்தில் அனைத்து நரசிம்ம மூர்த்தங்களும் கருடன் தாங்கிய வண்ணமே அமைந்துள்ளன என்பது ஒரு தனி சிறப்பு.   ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் திருக்குளந்தையில் மாப்பிள்ளைத் தோழனாக  சுபர்ணணுக்குப் பெருமாளுடன் சம ஆசனம் தரப்பட்டுள்ளது.  தேரழுந்தூரில் சகாவாகவும், பத்ரிநாத்தில் தாசனாகவும்  பெருமாளுடன் சேவை சாதிக்கின்றார் கருடாழ்வார். திருக்கண்ணபுரத்தில் பெருமாளுக்கு இடப்புறம்  கர்வம் நீங்கிக் கை குவித்து வணங்கும் கோலத்தில் கருவறையில் சேவை சாதிக்கின்றார்.   அமிர்த கலச கருடனாக திருத்தண்கா திவ்யதேசத்திலும், திருவரங்கத்தில் தனி சன்னதியிலும் சேவிக்கலாம். இத்தலங்களில் திருக்கரங்களில் சுபர்ணன்  நாகமும், அமிர்த கலசமும் தாங்கி தாயை அடிமைத் தளையிலிருந்து விடுவித்த கோலத்தில் எழிலாக  சேவை சாதிக்கின்றார்.  திருநறையூர் திருத்தலத்தில் பெருமாள் சன்னதிக்கு இடப்புறத்தில்  தனி சன்னதியில் ஒன்பது நாகங்கள் அலங்கரிக்க கல் கருடன் மூலவராக சேவை சாதிக்கின்றார். வருடத்தில் இரு நாட்கள் இவரே வாகனமாக விளங்கப் பெருமாள் கல் கருடசேவை சாதித்தருளுகின்றார். நவதிருப்பதிகளில் நம்மாழ்வார் கோவில் கொண்டிருக்கும் ஆதி க்ஷேத்திரமான திருக்குருகூரில் சந்நிதி கருடன் சங்கு சக்கரம் தாங்கி சதுர் புஜ கருடனாய் சேவை சாதிக்கின்றார்.  மற்ற இரு திருக்கரங்களில் ஒன்றில் நாகம் மறு  கரம் பெருமாள் போல ஆசி வழங்கும் அபய கரமாக   இருப்பது தனிச் சிறப்பு. தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் ஆலயத்தில் கருடாழ்வார் இடப்புறமாக விலகியுள்ளார். வேதம் ஓதியபடி தன்னைச் சேவிக்க வரும் பக்தர்களுக்கு அருள் செய்யவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியைப் பார்க்கவும் பெருமாள் கருடாழ்வாரை விலகி இருக்கும்படி கூறினாராம்.    ஸ்வயம்வக்த ஸ்தலமான ஸ்ரீவரமங்கை என்னும் தோத்தாதிரியில் பெருமாள், கருடன் உட்பட 11 மூர்த்தங்கள் சுயம்பு ஆகும். இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, ஸ்ரீவரமங்கை நகர் என்னும்  பல்வேறு பெயர்களும் உண்டு. மூலஸ்தானத்திலுள்ள தோதாத்திரி நாதன், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன் சந்திரன், பிருகு ரிஷி, மார்க்கண்டேயர் ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது மூர்த்தங்களும், அர்த்தமண்டபத்தில் உள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக பதினொரு மூர்த்திகள் சுயம்பு மூர்த்திகள் ஆகும்.    இத்தலத்தில் கருடன் எப்போது புறப்படத் தயாரக உள்ள நிலையில் சேவை சாதிக்கின்றார்.  திருநாங்கூர்ப்பதிகளில் ஒன்றான மணிமாடக்கோவிலுக்கு பத்ரிநாராயணர் சிவபெருமானைச் சாந்தப்படுத்த வந்த போது கருடன் மேல் வராமல் தேரில் வந்தார். எனவே  கருடன் சுவாமியைச் சுமக்க வாய்ப்புத் தரும்படி வேண்டினார். இதனை உணர்த்தும் விதமாக சுவாமியின் திருப்பாதத்திற்கு நேராக இருக்க வேண்டிய கருடன்  இங்கு கொடிமரத்திற்கு அருகில் அமர்ந்த கோலத்தில் சுவாமியின் பாதத்திற்கு கீழே உள்ளார். தை அமாவாசைக்கு அடுத்த நாள் பதினோரு கருடசேவை சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்விழாவில் 11 திவ்யதேசப் பெருமாள்களும் கருடவாகனத்தில் சேவை சாதிக்கின்றனர். கருடனின் வேண்டுகோளுக்கு இரங்கி பெருமாள் 11 மூர்த்திகளாக இருந்து கருடசேவை சாதிப்பதாக ஐதீகம்.   பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவரும் இரு வேறு காலத்தே தாமே பகவானைத் தாங்குவதாக எண்ணம் கொண்டனர். விளைவு  இருவருக்கும் போட்டியும் வெறுப்பும் வளர்ந்து பகையாக மாறியது. ஆதிசேஷன் இந்தப் பகை விலக எண்ணம் கொண்டு சிறுபுலியூர் வந்து  தவமிருந்தார். அவர் தவத்துக்கு இரங்கி தரிசனமளித்த பெருமாள், ஆதிசேஷன் மடியில் அனந்த சயனம் கொண்டு குழந்தையாக பாலசயனக் கோலத்தில் கோயில் கொண்டார். இங்கே ஆதிசேஷன் உயரத்திலும் கருடன் தரைக்கு  கீழேயும் அமைந்துள்ளனர்.  பெருமாள் ‘எங்கே படுப்பது?’ என்று கேட்கும் விதமாக ‘எவ்வுள்?’ என்று வினவியதால் ‘திருஎவ்வுளூர்’ என்று பெயர் பெற்று, இன்று ‘திருவள்ளூர்’ என்று அழைக்கப்படும்  வீரராகவப் பெருமாள் ஆலயத்தில், சிம்மம் தாங்கும் தூண்கள் உள்ள இரு பதினாறு கால் மண்டபங்களுக்கிடையில் அழகாய் அமைந்துள்ளது கருடன் சன்னதி. கணமும் கண்ணிமைக்காமல் பெருமாளை தரிசித்தபடி அமர்ந்த நிலையில் சேவை சாதிக்கின்றார் கருடாழ்வார். திருவரங்கத்தில் உள்ளது போலவே இங்கும் கோலம் ஆனால் கல்லால் ஆன இக்கருடன் அவ்வளவு பிரம்மாண்டமில்லை. ஒவ்வொரு நாகமும் ஒவ்வொரு விதமாக செதுக்கப்பட்டுள்ளது ஒரு தனி சிறப்பு. இடுப்பிலே ஐந்து தலை நாகம்,  வலத் தோளில் உள்ள நாகம் எழிலாக இறங்கி வரும் கோலம். பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அற்புத திருமேனி. அருகிலேயே நின்ற கோலத்தில்  செப்புத் திருமேனியாக உற்சவர் கருடனும்  சேவை சாதிக்கின்றார்.  திருக்கண்ணங்குடியில் உற்சவ கருடர்  இரு கைகளையும் கட்டிக் கொண்டு வைகுந்தத்தில் உள்ளது போல உற்சவப் பெருமாளுடன்  சேவை சாதிக்கின்றார்.  இவர் “நியம கருடன்”  என்றழைக்கப்படுகின்றார். பெருமாளின் ஆணைக்குக் காத்திருப்பதாக ஐதீகம்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரத்தில் ஒன்றானதும் கிருஷ்ண மங்கள க்ஷேத்திரமுமான திருக்கண்ணமங்கையில் கருடாழ்வார்,  பட்சிராஜன் எனும் பெயருடன் பெருமாளை நோக்கி கைகூப்பிய நிலையில் நின்ற கோலத்தில் பிரம்மாண்டமாகச் சேவை சாதித்து அருள் பாலிக்கிறார். திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேலை வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க வேண்டுபவர்கள் இவரை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள். கருடனுக்குப் பக்தர்கள் புடவையைக் காணிக்கையாக அணிவிக்கின்றனர். பாம்புக்கு கருடன் பகையாதலால் பாம்பின் தோலை உரித்து புடவையாக கருடன் அணிந்து கொள்வதாக ஐதீகம். எட்டு கஜத்திற்கும் நீளமான, கட்டங்கள் அச்சிடப்பட்ட புது சேலைகளை கருடனுக்கு சார்த்தப்படுகின்றது.   இதனால் சர்ப்ப தோஷம் விலகுகிறது என்பது ஐதீகம். மிகவும் வரப்பிரசாதியான இவரை ஞாயிற்றுக் கிழமைகளிலும், இவரது திருநட்சத்திரமான ஸ்வாதியன்றும் விசேஷமாக திருமஞ்சனம் செய்தும் அமிர்த கலசம் நிவேதனம் செய்யும் அன்பர்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறப் பெறுகிறார்கள்.    திருநாகை திவ்யதேசத்தில் அமர்ந்த கோலத்தில் கருடன் சேவை சாதிக்கின்றார். இத்தலத்தில் தாயாரின் பிரம்மோற்சவத்தின் போது தாயார் கருடி (பெண் கருடன்) வாகனத்திலும், சௌந்தரராஜப் பெருமாள் கருட வாகனத்திலும் ஒரே நேரத்தில் சேவை சாதிக்கின்றனர். ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின் போது ஆண்டாள் நாச்சியாரும் கருடி வாகன சேவை தந்தருளுகின்றார். பெண் கருட வாகனம் இந்த திவ்ய தேசத்தின் சிறப்பு ஆகும்.    கடும்பரிமேல்கற்கியைநான் கண்டுகொண்டேன்  கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே   என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்கடல் மல்லையில் பெருமாள் ஆதி சேஷன் மேல் பள்ளி கொள்ளாமல், தரையில் தலசயனமாக சேவை சாதிக்கின்றார். இத்தலத்திலும் கருடன் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.   “உன் வடிவழகை மறவாதார் பிறவாதாரே” என்று  வேதாந்த தேசிகர் போற்றிய திருவஹீந்திரபுரம் தேவநாதசுவாமி ஆலயத்தில் மூலவரின் எதிரில் கருடாழ்வார் கைகளைக் கட்டிக் கொண்டும், இராமர் சன்னிதியில் ஆஞ்சநேயர் வாயைப் பொத்தியபடியும் நிற்பது வேறு எங்கும் காணப்படாத சிறப்பு அம்சமாகும். இந்த தலத்தில் உள்ள பெருமாளுக்கு ஆதிசேஷன் பாதாள கங்கையையும், கருடன் விரஜா தீர்த்தத்தையும் கொண்டு வந்து தாகம் தீர்த்ததாகக் கூறப்படுகின்றது. பாதாள கங்கை - ஆதிசேஷன் தீர்த்தம் என்றும், விரஜாநதி - கெடிலநதி (கருடநதி) என்றும் அழைக்கப்படுகின்றன. அடியவர்கள் கேட்கும் பலனை தேவநாயகன் தவறாது அருளுவதால் இவர் அடியவர்க்கு மெய்யன் என்று போற்றப்படுகிறார். ஔஷத மலையில் லக்ஷ்மி ஹயக்ரீவருடன் அமர்ந்த கோலத்தில் சின் முத்திரையுடன் கருடனை சேவிக்கலாம்.  தில்லை சித்ரகூட திவ்யதேசத்தில்  உடையவர் சன்னதியில் தெய்வப்புள்ளேறி வருவானாக நித்ய கருட சேவையில் பெருமாளை சேவிக்கலாம். அச்சன்னதியில், பதஞ்சலி, கண்வ முனிவர்கள், உடையவர், கூரத்தாழ்வான் மற்றும் யோக நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வாரையும் சேவிக்கலாம். இத்திவ்ய தேசத்தின் வாயிலின் இரு புறமும் கருடனையும், திருவடியையும் சேவிக்கலாம். அதில் கருடன் நடந்த கோலத்தில்,  அனுமன் சௌகந்தி மலரை ஏந்தியிருப்பது போல,  ஐந்து தலை நாகத்தை இடக்கரத்தில் ஏந்தி  சிறப்பாக  சேவை சாதிக்கின்றார். திருமயம் என்றழைக்கப்படும் திருமெய்யம்  திவ்யதேசத்தில் பெருமாளின்  இரண்டு கருவறைகளிலும் கருடன் பெருமாளுடன் சேவை சாதிக்கின்றார். கருடன் தன் தாயின் அடிமைத் தளையைத் தீர்க்க அமிர்தம் கொண்டுவர சக்தி வேண்டி   பெருமாளிடம் பிரார்த்திக்க  அதற்கான சக்தியை பெருமாள்  பிரத்யட்சமாகி  கருடனுக்கு அருளியதாக   ஐதீகம் எனவே கருவறையில் கருடன் எழுந்தருளியுள்ளான்.   திருக்கோட்டியூரில்,  காரேய் கருணை இராமானுஜர் தான் ஒருவன்  நரகம் சென்றாலும் பரவாயில்லை உலகத்தோர் உய்ய வேண்டும் என்று இத்தலத்தில்  போதித்த “ஓம் நமோ நாராயணாய” என்னும் எட்டெழுத்து மந்திரத்தை . குறிக்கும் வகையில் மூன்று நிலைகளைக் கொண்ட அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் நர்த்தனக் கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் மாதவப்பெருமாள் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது தளத்தில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாவது தளத்தில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுந்த பெருமாள்) என நடன, சயன, நின்ற,  இருந்த கோலத்தில் அருள் வழங்கிக்கொண்டிருக்கிறார். மாதவப்பெருமாளுக்கு எதிரில் கருடன் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார். அவரே திருமதிலின் ஈசான மூலையில் இரு பக்கமும் சிம்மத்துடன் மூலை கருடனாகவும்  அருள் பாலிக்கின்றார். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மகாமகத்தின் போது பெருமாள் கருட வாகனத்தில் பிரகாரத்தில் உள்ள மஹாமக கிணற்றுக்கு எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.   இராமபிரான் தர்ப்பசயனத்தில் அருள் பாலிக்கும் திருப்புல்லாணி திவ்யதேசத்தில் ஆதிஜெகநாதருக்கு எதிரே அமைந்துள்ள சன்னதி கருடன் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிப்பது சிறப்பு. இவரது சந்நதியில் நான்கு புறமும் ஜன்னல்கள் அமைந்திருப்பதும் ஒரு தனி சிறப்பு.  இத்தலத்தில்  மூலை கருடனாகவும் அருள் பாலிக்கின்றார்.  திருவெள்ளறை திவ்யதேசத்தில்  கர்ப்பகிரகரகத்தில் செந்தாமரைக் கண்ணனனுடன் வலப்புறம் கருடனும், இடப்புறம் ஆதிசேடனும் ஆக  நித்யசூரிகள் இருவரையும் பெருமாளுடன் சேவிக்கலாம்.  மும்மூர்த்தித் தலமான சுசீந்திரத்தில் சிவபெருமான் தாணுமாலயனாக மும்மூர்த்தி ரூபத்திலும், பெருமாள் திருவேங்கட விண்ணகர பெருமாளாகவும், பள்ளிக்கொண்ட பெருமாளாகவும் சேவை சாதிக்கின்றனர். திருவேங்கட விண்ணகரப்பெருமாளுக்கு எதிரே மண்டப கருடன் எழிலாக ஆளுயரத்தில் சேவை சாதிக்கின்றார். அஞ்சலி ஹஸ்தத்துடன்  இறக்கைகள் கீழ் நோக்கியவாறு அருமையாக சேவை சாதிக்கின்றார். கருடாழ்வார். மண்டபத்தின் தூண்களில் அரசர்களின் சிலைகளும் உள்ளன. மண்டபம் முழுவதும் ஒரே கல்லால் ஆனதாம். கருடன் கற்சிலை  உலோகம் போல வழவழப்பாக இருக்கின்றது. இத்தலத்தில் திருவாதிரை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாள் காலை கருடன் காட்சி சிறப்பாக நடைபெறுகின்றது. அன்று  அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், காலை 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் திருக்கோவில் முன் சாமி  வெள்ளி ரிஷப வாகனத்திலும்,   அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும். பெருமாள் வெள்ளி கருட வாகனத்திலும் எழுந்தருள இவர்கள் மூவர்களையும் கருடன் வலம் வரும் கருட தரிசன  அற்புத காட்சியைக் காணலாம்.   திருவள்ளூர் மாவட்டம், ஆவடியிலிருந்து சுமார் 3கி.மீ தூரத்தில் அமைந்துள்ள  கோவில்பதாகை  சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல கருடன் வைகுந்தப் பெருமாள் எதிரே அமைந்துள்ளார். சுமார் 250 வருடங்கள் பழமையான இக்கோயில் தொண்டைமான் சக்கரவர்த்தியினால் கட்டப்பட்டது.  சுந்தர்ராஜப்பெருமாள் எதிரில் நின்ற நிலையிலும்  கருத்மான் அருள் பாலிக்கின்றார். இவ்வாறு இரு கோலங்களில் கருடனை இத்தலத்தில் சேவிக்கலாம். மாங்காடு கனகவல்லித் தாயார் சமேத  வைகுந்த வாசப் பெருமாள் சந்நிதி கருடன் சிறகுகளைக் கீழே  மடக்கிக் கண்களை மூடித் தவம் செய்ய  அமர்ந்த கோலத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார். மார்க்கண்டேய முனிவருக்காக மாங்காட்டில் உபய நாச்சியார்களூடன் அமர்ந்த கோலத்தில்  வைகுந்தவாசராக சேவை சாதிப்பதாக ஐதீகம்.  இவ்வாலயத்தில் பெருமாள்  வலக்கீழ்திருக்கரத்தில் தங்கை காமாக்ஷிக்கு சீர் தர வந்த  கணையாழியுடன் சேவை சாதிக்கின்றார். எனவே இவர் “சீதனப் பெருமாள்” என்றழைக்கப்படுகிறார். இவரின் வலமேற்கரத்தில் பிரயோகச்சக்கரம் உள்ளது சிறப்பு. திருக்கல்யாணம் இங்கு நடைபெறவில்லை என்பதால் அப்படியே அமர்ந்து சேவை சாதிப்பதாக ஐதீகம், எனவே கருடனும் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றான். இடத்தோளில் நாகம் எட்டிப்பார்க்கின்றது.    வைகுந்த வாசல் கிடையாது. வைகுந்த ஏகாதசியன்று பெருமாள் கருட சேவை தந்தருளுகின்றார்.  கோவிலின் துவார பாலகர்கள் அமர்ந்த கோலத்தில் கையில் தண்டத்துடன் இருப்பது ஒரு தனி சிறப்பு.    வந்தவாசியின் அருகில் உள்ள இஞ்சிமேடு தலத்தில் யக்ஞராமன் சன்னதியில் ஒரு புறம் பெரிய திருவடியும் மறு புறத்தில் கல்யாண வரத ஆஞ்சநேயராக சிறிய திருவடியும் சேவை சாதிக்கின்றனர். இராமாயணத்தில் நாகபாசத்தால் இலக்குவன் மயங்கி விழுந்த போது கருடன் பறந்த வந்த போது அவன் சிறகின் காற்றுப் பட்டு இலக்குவன் நாக பாசக் கட்டு விலகி எழுந்த பிறகு இராமபிரானின் ஒரு புறம் பெரிய திருவடியும் மறுபுறம் சிறிய திருவடியும் இராமனை வணங்கும் அற்புத காட்சி இது.   காஞ்சியிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் உள்ள காவேரிப்பாக்கம் ஸ்ரீ சுந்தரவரதர் கோவிலில் உள்ள கருடாழ்வார் “கல்யாண வரம் தரும் கருடாழ்வார்” என்றுப் போற்றப்படுகிறார். இடக்காலை மடித்து ஊன்றி வலக்காலை மடித்து முழங்காலைத் தரையில் ஊன்றி எந்நேரமும் பறக்க ஆயுத்தமான தோற்றத்தில் நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கருடாழ்வாரை தரிசிக்கும் பக்தர்கள் பரவசம் அடைகின்றனர்.  இவர் திருமேனியை அஷ்ட நாகங்கள் அலங்கரிக்கின்றன. திருமணத்தடை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்ள தடை நிச்சயம் நீங்கும். வளர்பிறை பஞ்சமியன்று தேனால் அபிஷேகம் செய்து தயிர் அன்னம் நைவேத்தியம் செய்தால் திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம்.   திருவண்ணாமலை ஸ்ரீசுந்தர வரதராஜப் பெருமாள் கோவிலில் சுபர்ணன் பெருமாளின் திருவடியின் கீழ் அமர்ந்து வணங்கிய கோலத்தில் உள்ளார். இவரை வலக்கையில் ஆசீர்வாதம் செய்யும் கோலத்தில் பெருமாள் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இந்த கருடாழ்வார் பக்தர்களின் குறைகளைப் பரந்தாமனிடம் பரிந்துரைத்து நிவாரணம் செய்பவர் என்பதால் இவர் “பரிந்துரைக்கும் கருடாழ்வார்” என்று அழைக்கப்படுகின்றார். வைகாசி விசாகத்தில் பெருமாள் கருட சேவை சாதிக்கின்றார்.     கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வெங்கடாம்பேட்டை ஊரில் உள்ள ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி ஆலயத்தில் அமர்ந்த கோலத்தில் ஆதிசேஷன் குடை பிடிக்க  வைகுந்த நாராயணப்பெருமாளும், 7 தலை ஆதிசேஷனில் பள்ளி கொண்ட கோலத்தில்  சீதாப்பிராட்டி பாதம் வருட இராமபிரானும் என்று மூன்று கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். இந்த மூன்று பெருமாள்களையும் கண் குளிரத் தரிசிக்கக் கருடாழ்வார் பத்மாசனத்தில், யோக முத்திரையில் அமர்ந்த கோலத்தில், திருச்செவியில் பத்ர குண்டலங்கள் தவழத் திருமேனியில் 12 நாகங்களை ஆபரணமாக அணிந்து கொண்டு எழிலாக சேவைச் சாதிக்கின்றார்.    மும்மூர்த்தித்தலமான பாண்டிக்கொடுமுடியில் பள்ளி கொண்ட கோலத்தில்  காவிரி கண்ட பெருமாளாக சேவை சாதிக்கின்றார் கருவறையில் பெருமாளுடன்  பெரிய திருவடி மற்றும் சிறிய திருவடியும் சேவை சாதிக்கின்றனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் மன்னார் போளூர் கிருஷ்ணசுவாமி ஆலயத்தில் 9 அடி உயரத்தில் பெருமாளை விட உயரமாக கர்வம் தீர்ந்த கண்ணீர் வடிக்கும் கருடனின் தோற்றம் நெகிழ்ச்சியானது. இத்தலத்தில் ருக்மிணி பிராட்டி இல்லாமல் ஜாம்பவதி மற்றும் சத்யபாமாவுடன் அழகு கிருஷ்ணர் சேவை சாதிக்கின்றார். []   கண்டம் என்னும் கடிநகர் எனப்படும் தேவப்பிரயாகை திவ்யதேசத்தின் கருடன் வடநாட்டுத் திருப்பதிகளான திருப்பிருதி என்னும் ஜோஷிர்மட்டில் வாசுதேவர் ஆலயத்திலும்  மற்றும் கண்டம் என்னும் கடிநகர் ஆகிய தலங்களில்  வாகனம் போல  வலக்காலை மடக்கி  ஆனால்  அஞ்சலி ஹஸ்தத்துடன் உலோகத்தால் ஆன  கருடனைச் சேவிக்கலாம். நாமக்கல்லில் அர்த்தமண்டபத்தில் வைகுண்ட நாதர், உக்கிர நரசிம்மர், வராகர், மற்றும் வாமனர்- த்ரிவிக்ரமர் புடைப்பு சிற்பங்கள் உள்ளன. அதில்  வாமன மூர்த்திக்கு பலி சக்கரவர்த்தி மூன்றடி நிலம் தர தாரை வார்ப்பதை அசுரகுரு சுக்ராச்சாரியார் தடுக்க அவரை கருடன் தண்டிப்பது போன்ற ஒரு அரிய சிற்பம் உள்ளது. இவ்வாலயத்தில்  சன்னதி கருடன் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிப்பது ஒரு சிறப்பு. பாதங்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்தவாறு யோக கோலத்தில் சேவை சாதிக்கின்றார் விநதை செல்வன். சதுரங்கபட்டினம் மலைமண்டலப்பெருமாள் ஆலயத்தில் கருடன் அஷ்டநாக கருடன் என்று சிறப்பாக வணங்ப்படுகிறார். கிரி வரதராஜப்பெருமாள் உயரமான சிறு குன்றில் சேவை சாதிக்கின்றார். அவருடைய திருவடியும், அடிவாரத்தில் அமைந்துள்ள அஷ்டநாக கருடனின் திருமுடியும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது. இவருக்கு அமிர்த கலசம் (ஒரு வகை கொழுக்கட்டை) நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர் பக்தர்கள். இவ்வாலயத்தின் இன்னொரு சிறப்பு கருடதீபம். இத்தீபத்தின் மேற்புறத்தை கருடன்களும், நாகங்களும் தாங்குகின்றன. கீழ்ப்புறத்தில் கிளிகள் தாங்குகின்றன. கலையழகுடன் மிளிர்கின்றது மகிமை வாய்ந்த இவ்விளக்கு. இவ்விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டால் வாழ்க்கை ஒளிரும் என்பது நம்பிக்கை. புரட்டாசி திருவோணத்தன்று இத்தீபத்திற்கு சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றது.  சிறிய திருவடியை நாம் பல தலங்களில் பஞ்ச முக ஆஞ்சநேயராகவும் சேவிக்கின்றோம், ஆனால் பெரிய திருவடியை வேறு திருமுகத்துடன் தரிசிப்பது மிகவும் அரிது. சுபர்ணன் நரசிம்மரைப் போல சிம்ம முகத்துடன் சேவை சாதிக்கும் தலம் ஆவணியாபுரம் ஆகும்.  ஒருவர் கருட முகத்துடனும், ஒருவர் சிம்ம முகத்துடனுமாக இரண்டு கருடன்கள் சேவை சாதிக்கின்றனர். இத்தலத்தில் பெருமாள், தாயார் கருடன் மூவரும் சிம்ம முகத்துடன் சேவை சாதித்தருளுகின்றனர். வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் சிறகுகளை விரித்துக் கொண்டு  அமர்ந்த கோலக்   கருடனின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்.  திருக்கோவிலை கருட பகவான் காவல் காப்பதாக ஐதீகம். இவ்வாறு பெருமாள் கோவிலின்  வெளி மதில் சுவரில் அமைக்கப்பட்டுள்ள கருடன்களில், பாண்டி நாட்டு திருப்பதிகளான  ஆழ்வார் திருநகரி, திருப்புல்லாணி, திருக்கோஷ்டியூர், மற்றும்  அரியக்குடி ஆகிய தலங்களில் ஈசான மூலையில் அமைந்துள்ள  கருடன் விசேஷமாக ஆராதிக்கப்படுகின்றார்.  திருமதில் சுவரில் ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால் இவர்  மூலைக் கருடன்,   மூலக் கருடன், மதில் கருடன் என்றழைக்கப்படுகின்றார்.  இவை பல தலங்களில் சிறப்புக் கோலங்களில் கருடாழ்வார் சேவை சாதிக்கும் பாங்காகும்,  இனி எவ்வாறு கருட சேவை என்பது வைகுந்த வாழ்வளிக்கும் என்பதைக் காணலாமா அன்பர்களே.                                             5. ஸ்ரீவைகுந்த வாழ்வளிக்கும்  கருட சேவை []   திருக்கோவில்களில் பிரம்மோற்சவ காலங்களின் பெருமாள் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில், கோவிலுக்குள் வந்து வழிபட முடியாதவர்களான முதியவர்கள், முடியாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்குத் தரிசனம் அளிக்க   எளி வந்த கருணையால் தானே கோவிலுக்கு வெளியே திருவீதியில்  வந்துச் சேவை சாதிப்பார். இவ்வாறு பல்வேறு வாகனங்களில் சிறப்பான ஆபரண, மலர் அலங்காரங்களுடன் இறைவன் தானே வந்து சேவை சாதிப்பது  "வாகன சேவை" எனப்படும்.  மஹாவிஷ்ணு தனது வாகனமும் கொடியுமான கருடனில் இவ்வாறு ஊர்வலம் வந்து சேவை சாதிப்பது சிறப்பாக “கருடசேவை”  எனப்படும் என்பது சாதாரணமான விளக்கம். எம்பெருமானைக் கருட வாகனத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு “வைகுந்த பேறு உண்டு,  மறு பிறவி கிடையாது” என்பது ஐதீகம். எனவே கருடசேவையைச் சேவிப்பது   மிகவும் புண்ணியம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது அது ஏன் அவ்வாறு என்பதன் உள்ளார்த்தத்தைக் காண்போமா?   தாஸஸ் ஸஹா வாஹந மாஸநம் த்வஜ: யஸ்தே விதானம் வ்யஜனம் த்ரயீமய:  |  உபஸ்திதம் தேந புரோ கருத்மதா த்வதங்க்ரி ஸ்ம்மர்த கிணாங்க  சோபினா ||  என்று ஆளவந்தார் தமது “ஸ்தோத்ர ரத்தினத்தில்” போற்றியுள்ளபடி   1. சேவை புரியும் அடிமையாக, எப்போதும் அவர் திருவடிகளைத் தாங்கி இருக்கின்ற பெரிய திருவடி,  2. தோழனாகவும், எப்போதும் பெருமாளின் அருகில் இருப்பவர்,  3. பெருமாளுக்கு வாகனமாகவும் பிரகாசமான கொடியாகவும் விளங்குபவர்,  நம்மாழ்வார் இதை  “ஊரும்புட்கொடியும் அஃதே” என்று மங்களாசாசனம் செய்துள்ளார்  4. எம்பெருமானின் சீரிய சிம்மாசனம், மேற்கூரை, கண்ணாடியாகவும் விளங்குபவர்,  5. பெருமாள் ஆரோகணித்துச் செல்லும் போது அவரது திருவடி நெருக்கத்தினால் உண்டான  தழும்பை  உடையவர்,  6. பெருமாள் ஏறிச் செல்லும் போது அவருக்குச் மகிழ்ச்சி அளிக்கும் சாமரம் போன்று வீசும் இரு அழகிய சிறகுகளை உடையவர்,  7. எங்கே பெருமாள் செல்ல வேண்டுமென்றாலும்  அவரைக் கூட்டிச் செல்லக்  கை கட்டி தயார் நிலையில் நிற்பவர். 8. வேதங்களையே தன் அவயவங்களாகக் கொண்ட நிகரில்லாத கருடன். வேத சொரூபியாகவும் இருந்து வேதப் பரம்பொருளான பெருமானை  அடையாளம் காட்டுகின்றார். ஆதிமூலமே! என்று கஜேந்திரன் அலறிய மறு நொடி இந்த ஓடும் புள்ளேறி   (பறவை) எம்பெருமான் யானைக்கு மோட்சம் கொடுக்கப் பறந்து வந்தான். இது எம்பெருமான் எப்போதும் தன் பக்தர்களுக்கு உதவ காத்திருக்கும் எளிமையைக் குறிக்கின்றது.  இந்நிகழ்வை குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக் கோள்   முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று நிலத்திகழும் மலர்சுடரேய் சோதீ! என்ன நெஞ்சிடர்   தீர்த்தருளிய என் நின்மலன் காண்மின் மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு   வந்து உந்தி வயல்கள் தொறும் மடைகள் பாய அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து   அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே. (பெ. தி 7–8-3)  பொருள்: (காவிரி ஆறு) செய்ய மலையிலிருந்து சந்தன மரங்களையும், அகில் கட்டைகளையும், பொன்னையும், இரத்தினங்களையும் திரட்டிக் கொணர்ந்து தள்ளி வயல்களிலெல்லாம், நீர் பாயும் வழிகளிலே பாய்ந்து  செல்லும்படி அலை எறிந்து கொண்டு வரும். அதனால் செழிப்பு மிகப் பெற்ற சிறப்புடைய அணி அழுந்தூர் நின்றுகந்த அமரர் கோன் யார் என்றால் நல்ல சாதியில் பிறந்த யானைகளின் தலைமையுடைய கஜேந்திராழ்வான் தடாகத்தில் இறங்கிய போது வலிமையை உடைய முதலையானது தன்னைப் பிடித்திழுத்ததால் அதற்கு அஞ்சி நின்று ஓளி விளங்கும் சந்திரனை ஒத்த குளிர்ந்த ஓளியை உடையவனே! கருணை என்று ஓலமிட்டுத் துதிக்க அதன் மனத்துன்பத்தை நீக்கியருளிய எமது குற்றமற்ற கடவுள் ஆவார்   என்று போற்றுகின்றார் திருமங்கையாழ்வார்.  தன்னுடைய தாய் மாற்றாந்தாயிடம் அடிமையாக இருப்பதைக்கண்டு மனம் பொறுக்க முடியாமல் அமிர்தம் கொண்டு வர இந்திரலோகம் சென்று பெருமாளுடனும் சண்டையிட்டு தன் வீரத்தையும்  மாத்ரு பக்தியையும்  (தாய்ப்பாசம்)  உணர்த்தியவன் கருடன். இவ்வாறு தாயைக் காத்த தனயன் கருடன். அமிர்தம் கொண்டு வரும் போது எம்பெருமானுக்கும் கருடனுக்கும் கடும் போர் ஏற்பட்டது இதில் கருடனுக்கே வெற்றி ஏற்பட்டது. கருடனின் வீரத்தை பகவான் மிகவும் புகழ்ந்து , 'நீயொரு வரம் கேள் கொடுக்கிறேன் என்றார்". கருடன் கேட்பதற்கு முன்பாகவே எம்பெருமானே, " நீ எனக்கு வாகனமாக இருக்க வேண்டும். அதே போல எனது கொடியில் எப்போதும் இருந்து கொண்டு வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்"  என்றார். எனவே கருட த்வஜனான எம்பெருமானுக்கு என்றும் தோல்வியே கிடையாது என்றும் கூறுவர்.  ஆகவே தான் பெருமாள் உவண கேதனன், உவண முயர்த்தோன்,  வெஞ்சிறை புள் உயர்த்தான், அரவப்பகை கொடியோன், கருடத்வஜன், கருட கமனன், ஆடும் கருளக்கொடியுடையான், வெற்றிக் கொடியுடையான் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார்.  மேலும் புட் கொடியாய்!, ஊரும் புட்கொடியும் அஃதே, ஏறுஞ் இருஞ்சிறைப்புள் அதுவே கொடியாயுயர்த்தான், கொடியா புள்ளுடையான்!, ஆடும் புட்கொடி ஆதிமூர்த்தி,   சுருளக்கொடி யொன்றுடையீர்!, புள்ளூர் கொடியான், நிறை புகழ் அஞ்சிறைப்புள்ளின் கொடியான், சுருளப் புட்கொடி சக்கரப்படை வானநாடன், ஆடும் கருளக்கொடியான், புட்கொடியுடைய கோமான், வெற்றிக் கருளக்கொடியான், கொடிப்புள் முன்னுயர்த்து பாற்கடல் துயின்ற பரமன், கொடி மன்னு புள்ளுடை அண்ணல், வெஞ்சிறைப்புள் உயர்த்தார், வலங்கொள் புள்ளுயர்த்தாய், கொடியா வடுபுள்ளுயர்த்த வடிவார் மாதவனார், ஆடற் பறவையுயர் கொடி எம்மாயன், பொன் புரை மேனி கருளக்கொடியுடை புண்ணியன், நிறை புகழ் அஞ்சிறைப்புள்ளின் கொடியான்,  கருட தாரணன் என்றெல்லாம் வைநதேயன் மஹா விஷ்ணுவின் கொடியாக விளங்கும் பாங்கை ஆழ்வார்கள் பலவாறு அனுபவித்துப்  பாடியுள்ளனர்.  நாமும் “உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ”– கருடக்கொடியானே கோவிந்தனே திருக்கண் மலர்ந்தருள்வாய்”  என்று திருப்பள்ளியெழுச்சி பாடுகின்றோம். இனி எவ்வாறு கருடசேவையை காண்பது வைகுந்த வாழ்வளிக்கும் என்பதைக் காணலாம்.  சில தலங்களில் கருட சேவையின் போது ஒரு வெள்ளைத் துணியை கருட வாகனத்தின் அலகால் கிழித்து நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன்றாகத் தூக்கி எறிவார்கள். இது ஜீவாத்மாவின் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவை அவனிடமிருந்து கிழிக்கப்பட்டு திசைக்கு ஒன்றாக வீசப்பட்டு அது தூய்மையாவதைக் குறிக்கின்றது.  எனவே கருடசேவையைக் காணும் போது நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கும் (நீக்க நாம் முயற்சி செய்தால்) இவ்வாறு மலங்கள் நீங்கும் போது மனிதன் நிர்மலன் ஆகின்றான். அவன் தன்னை உணர்கிறான். இறை தரிசனம் கிட்டும். முக்திக்கு வழி பிறக்கும் எனவேதான் பெருமாளின் கருடசேவையைக் காண்பதால் வைகுந்த வாழ்வளிக்கும் என்பது ஒரு ஐதீகம்.  மோட்சப் பேறு என்பதற்கான இன்னொரு விளக்கம். வேதங்கள் தொலைந்த போது அதை மீட்டெடுத்துக் கொடுத்தவர் எம்பெருமான், ஏனென்றால் வேதங்கள் அவரே பரம்பொருள் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன. கருடன்  அவ்வேத மயமானவன், அதாவது "வேதஸ்வரூபன்". எனவே ஸ்ரீஆளவந்தார் “வேதாத்மா விஹகேஸ்வர:” அதாவது கருடன் வேதாத்மா  என்று போற்றுகின்றார். விநதையின் புதல்வனான கருடனின் ஒவ்வொரு அவயமும் வேதத்தின் பகுதி.  முக்கூர் சுவாமியின் “மட்டப்பல்லியில் மலர்ந்த மறை பொருள்” என்ற புத்தகத்தில் படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.    ஸூபர்ணோஸி கருத்மாந்த்ரி வ்ருத்தேசிரோ காயத்ரம் சஷீஸ் ஸ்தோம ஆத்மாஸாம தே தநுர் ப்ரஹத்ரதந்தரே யஜ்ஞாயஜ்ஞியம் புச்சம் – என்பது யஜுர் வேத வ்யாக்யானம்.  ஸ்ரீவைநதேயனின் திருமேனியில் ஒவ்வொரு அவயமும் வேதத்தின் பகுதியாகவே உள்ளது. “ஸ்தோமம்” என்கிற சாமவேத பாகமே அவருக்கு ஆத்ம சொரூபம், “காயத்ரம்” என்கிற சாமம் அவருக்கு கண்ணாய் விளங்குகின்றது. காயத்ரி மந்திரம் எவ்வாறு ஜபிப்பவர்களை காக்கின்றதோ அது போல கருடனின் திருவிழிகள் அவரது பக்தர்களைக் காக்கின்றது.  “த்ரிவ்ருத்”  என்கிற சாமம் அவருக்கு தலையாக இருக்கின்றது.  யஜுர் வேதங்கள் அவருடைய பெயர்களாகின்றன. சந்தஸ்ஸுகள் அவருடைய திருக்கரங்கள். “த்ஷ்ண்யம்” என்று சொல்லப்படும் வேள்வி மேடைகள் அவருடைய திருக்கால்  பாதங்களாகின்றன.  “வாமதேவ்யம்” என்கிற சாமம் அவருடைய திருமேனியாகவும், “ப்ருஹத்”, “ரதந்த்ரம்”  என்னும் ஸாமங்கள் அவருக்குச் சிறகுகளாகின்றன.  “யஜ்ஞாயஜ்ஞியம்” என்ற  சாமம் அவருக்கு வாலாகின்றது. இப்படி வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனியி்ன் பகுதிகளாய் விளங்குவதால் கருடனை வேதஸ்வரூபன் என்கிறார்கள் மஹான்கள்.  பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் திருவரங்கத்து மாலையின் ஒரு பாடலில் இதே கருத்து கூறப்பட்டுள்ளது.   சிரம் சேதனன் விழி, தேகம், சிறை, பின்சினை, பதம், கந்-  தரம், தோள்கள், ஊரு, வடிவம், பெயர், எசுர் சாமமும் ஆம்  பரந்தே தமது அடியார்க்கு உள்ள பாவங்கள் பாற்றி, அருள்  சுரந்தே அளிக்கும் அரங்கர் தம் ஊர்திச் சுவணனுக்கே. ( தி.மா 88) தம் அடியார்களுக்கு இருக்கும் தீவினைகளை அழித்துக் கருணை பொழிந்து அருளும் அரங்கருடைய வாகனம் ஆன சுபர்ணன் எனப்படும் கருடனுக்கு தலை, உயிர், கண்கள், திருமேனி, சிறகுகள், பின்புறம், கழுத்து, தோள்கள், தொடை, உருவம், திருநாமம், ஆகிய யாவும் யஜுர் வேதமும், சாமவேதமும் ஆகும்.   இப்படி வேதஸ்வரூபனான பொன் மலையான  கருடனில் பச்சைப் புயலென பெருமாள் வரும்போது அதைப் பார்த்து அதன் தாத்பர்யத்தை உணர்ந்து பூரண சரணாகதி அடைந்தால் மோட்சம் நிச்சயம். எனவே கருடசேவையைப் பார்த்தால் வைகுந்த வாழ்வளிக்கும் என்று கூறினார்கள் நம் முன்னோர்கள். இவ்வாறு பெரிய திருவடி என்றும் புள்ளரையன் என்றும் காகேந்திரன் என்றும் போற்றப்படும் பக்ஷிராஜனான கருடன் மேல் பெருமாள் ஆரோகணித்து பவனி வரும் போது நாம் காண்பது என்ன? கருடன் வேத சொரூபி.  எம்பெருமான் அவ்வேதத்தினால் அறியப்படுபவன், போற்றப்படுபவன், எனவே பெருமாள் கருடசேவை தந்து எழுந்தருளும் போது  "மறை போற்றும் இறை"  இவனே என்றும்.  "மறைமுடி"  இவனே என்றும் காட்டித் தருகின்றது.  அதாவது வேதங்களால் போற்றப்படும் பரம் பொருள் இவன் தான் என்று காட்டித்தருகிறான் கருடன்.  அந்த வேதச் செழும்பொருளை நாம் உணர்ந்தால் நமக்கு மோட்சம் தானே எனவே தான் கருடவாகனத்தில் பெருமாளை தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.  எனவே அடுத்த தடவை கருடசேவையைக் காணும் போது “மும்மலம் நீக்கி. முக்தி தா பெருமாளே!” என்று வேண்டிக் கொண்டு சேவியுங்கள். கருவுடை முகில் வண்ணன், காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், கமல வண்ணன்   பெருமாளை வேண்டினால் முக்தி நிச்சயம் என்பதை மனதில் கொள்ளவும்.   கருடசேவை மிக, மிக அரிதானது! காய்சினப்புள் - பெரிய திருவடியின் கருணைப் பார்வையிலும், காய்சின ஆழியின் பாதுகாப்பிலும், காய்சின வேந்தனின் வெது, வெதுப்பிலும் தங்கள் வினைகள் எல்லாம் அழிந்து வைகுந்தம்  பெறுவது உறுதி.  பாகவதனைப் பற்றிக் கொண்டால் பகவானை எளிதாக அடையலாம். ஆகவே நாம் கருடனை பற்றிக் கொண்டு பக்தி, ஞானம் என்ற இரண்டு சிறகுகளின் துணை கொண்டு அவன் தன் இரு கரங்களில் ஏந்தி இருக்கும் பத்தராவியை நித்திலத் தொத்தினை, திருமாலை அம்மானை, புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை  பெருமாளின் திருவடிகளை எளிதில் அடையலாம் என்பதை உணர்த்துவதே கருடசேவை. நமக்குப் பெருமாளைக் காட்டி தரும் ஆச்சாரியனாக இருந்து நாம் வைகுந்த வாழ்வு பெறக் கருடாழ்வார் உதவுகின்றார்.   பெருமாளின் எதிரிகளை அழிப்பதில் முதலானவர் கருடன் ஆழ்வார்கள் இதனால்தான் கருடனை காய்சினப்பறவை, வெஞ்சிறைப்புள் என்று குறிப்பிடுகின்றனர்.     பவளம்போற் கனிவாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண்தயங்க நின்றருளாய் பவள நன்படர்க் கீழ்ச் சங்குறை பொருநல் தண் திருப்புளிக் கிடந்தாய்! கவளமா களிற்றினிடர் கெடத்தடத்துக் காய்சினப் பறவையூர்ந்தானே! (திரு  9-2-5) பொருள்: கஜேந்திரன் என்ற யானையின் துன்பத்தைத் தீர்த்த பெருமானே! கவளமாக உணவு கொள்ளூம் அந்த யானை தடாகத்துக் கரையில் முதலையால் துன்பம் அடையவும், அத்துன்பத்தை நீக்கச் சினம் கொண்ட கருடப்பறவையின் மீது ஊர்ந்து தோன்றியவனே! பவளக்கொடியின் கீழே சங்குகள் திரண்டு காணப்படும் தாமிரபரணிக் கரையிலுள்ள  திருப்புளிங்குடித்தலத்திலே  பள்ளி கொண்டவனே! பவளம் போல  உன் உதடு சிவந்து தோன்ற, பல்லாகிய வெண் முத்துக்கள் ஒளி பரப்ப, தாமரைக்கண்கள் விளங்கப் புன்னகை செய்தவாறு வந்து நீ எனக்கு அருள் செய்ய வேண்டும்.    அது என்ன காய்சினப் பறவை? கொத்திப் புரட்டி எடுத்து விடும் கோபம் கொண்ட பறவை (கருடன்). ஆனால் யாரைக்  கொத்தும் பக்தர்களையா? இல்லை! இல்லை! பெருமாள் பக்தர்களை காப்பவர் அல்லவா? அவரது பக்தர்களை கருடன் ஒன்றும் செய்ய மாட்டான். ஆனால் பெருமாளின் பகைவர்களை பெருமாளுக்கு சிரமம் கொடுக்காமல் தானே முதலில் சென்று கொத்தி புரட்டிப் போட்டு விடுவான். இவ்வாறு கருடனில் ஆரோகணித்து திருவுக்கும் திருவாகிய செல்வன்  வரும் அழகை  வேதம் தமிழ் செய்த மாறன்  நம்மாழ்வார் எவ்வாறு பாடுகின்றார் பாருங்கள்.  காய்சினப் பறவையூர்ந்து பொன் மலையின் மீமிசைக்கார் முகில் போல் மாசின மாலி மாலி மானென்று அங்கு அவர்படக் கனன்று முன் நின்ற காய்சினவேந்தே! கதிர்முடியானே! கலிவயல் திருப்புளிங்குடியாய்! காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே! (திரு 9-2-7) பொருள்: மேருமலையின் மேல் தங்கும் நீருண்ட கருத்த மேகம் போல் கோபம் கொண்டு தாக்கவல்ல கருடப்பறவையின் மீது ஏறி வந்து  நீ மிக்க சினம் கொண்டு மாலி, சுமாலி என்னும் இரு அரக்கர்களையும் அழித்தாய். (காய்சின வேந்தன் என்னும் திருநாமம் பெற்றாய்). காய்சின வேந்தே! ஓளி மிகுந்த  திருமுடி உடையவனே! வளம் மிகுந்த  வயல்கள் சூழப்பட்ட திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டவனே! காய்கின்ற சினம் கொண்ட  சக்கரம், சங்கு, வாள், வில், தண்டு, ஆகியவற்றைத் தாங்கிக்கொண்டு காட்சி தரும்  நீ என் துயரத்தை  நீக்குபவன் அன்றோ! எனக்கு அருள்வாயாக.     கோபப்பறவையான கருடனில் ஒய்யாரமாக அமர்ந்து ஜிவ்வென்று பறந்து பெருமாள் வரும் அழகானது பொன் மலை மீது ஒரு கார் முகில் அமர்ந்திருப்பது போல் இருக்குமாம்.  எம்பெருமானும் கோபமாகச் சென்று தன் எதிரிகளை அழிப்பவன், தீ உமிழும் கோபச் சக்கரமும், சங்கும், தண்டமும் ஏந்தி பக்தர்கள் துன்பங்களைக் களைபவன்.    நீள்நாகம் சுற்றி நெடுவரை நட்டு ஆழ்கடலை பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை பூணார மார்வனை; புள் ஊரும் பொன் மலையை  காணாதார் கண் என்றும் கண் அல்ல; கண்டாமே. (பெ.தி 11-7-1)  பொருள்: நீண்ட வாசுகி என்னும் நாகத்தை கயிறாகச் சுற்றிப் பெரிய மந்தர மலையை மத்தாக நாட்டி ஆழ்ந்த பாற்கடலை மதியாதவனாகிக் கடைந்து அமுதத்தை எடுத்து  தந்து திருவுள்ளம் உவந்த பெருமானும், ஆரங்களை அணிந்த திருமார்பை உடையவனும் பெரிய திருவடியை ஏறிச்செலுத்துகின்ற பொன் மலை போன்றவனுமான  பெருமாளை சேவிக்கப் பெறாதவர்களுடைய கண்களானவை ஒரு நாளும் கண்களே அல்ல, இதை நாம் நன்கறிவோம் என்கிறார் திருமங்கையாழ்வார்.  திவ்வியக்கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்  தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் திருச்செங்குன்றூர் திவ்விய தேச எம்பெருமானிடம்   வரவேண்டும் கண்டாய் மதிகலங்கி விக்குள் பொரவே உயிர்மாயும் போழ்து – பரமேட்டி!  செங்குன்றூர் மாலே! சிறைப்பறவை மேல்கனகப்  பைங்குன்று ஊர் கார்போல் பறந்து. ( நூ. தி. அ 64)  பொருள்: பரமபதத்தில் வீற்றிருப்பவனே! திருச்செங்குன்றூர் எனும் திருப்பதியில்  எழுந்தருளியிருக்கின்ற திருமாலே! எனது அறிவு ஒடுங்கி விக்கலானது துன்பம் செய்ய  உயிர் போகும் அக்காலத்தில் அழகிய சிறகுகளையுடைய சுபர்ணன் மீது, பசும் பொன் மயமான மலையின் மீது ஏறி வருகின்ற காளமேகம் போல, விரைந்து எழுந்தருளிச் சேவை சாதிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார்.    ஆழ்வார்கள் மட்டுமா? மால் மருகனைப் (முருகனை) பாடிய  அருணகிரி நாதரும் திருமாலை கருடாசனன் என்று   இவ்வாறெல்லாம் பாடுகின்றார்.  இரணியணை மார்பீறி வாகை புணை உவணபதி நெடியவன்;  உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத உவணமூர்தி மாமாயன்;  நச்சு வெண்பட மீதணை வார்முகில் பச்சை வண் புயனார் கருடாசனர்;   இரணியனது மார்பை வஜ்ர நகங்களால் பிளந்து வாகை சூடிய  கருடனின் தலைவன் நெடிய திருமால், ஓங்கி உலகளந்த உத்தமனாய் தனது திருத்தாளினால் விண்ணும் மண்ணும் அளந்த மாமாயன்,  பாற்கடலில் நாகணையில் பள்ளி கொள்ளும்    திருமால் கருடன் மேல் ஆரோகணித்து வருகின்ற பச்சைப்புயல் என்று அருணகிரி நாதரும் பாடுகின்றார். (சுபர்ணன் என்பதின் தமிழ்ப்பதம் உவணம்)  ஆகவே  கருடசேவையைப் பற்றிப் பார்க்கும் போது இப்படி கற்பனை செய்து பாருங்கள் அந்த ஆனந்தம் உங்களுக்குப் புரியும்.  ஒவ்வொரு திருமால் ஆலயத்திலும் கருடசேவைத் திருவிழா பலமுறை நடக்கின்றது. திருக்கோயில்களில் பிரம்மோற்சவத்தின் போது மூன்றாம் நாள் காலை அல்லது ஐந்தாம் நாள் இரவு பெருமாள் கருடசேவை தந்தருளுகின்றார். சித்திரையில் அட்சய திருதியையன்று திருக்குடந்தையில் 14 கருட சேவையில் .ஆராவமுதனை சேவிக்கலாம். சித்ரா பௌர்ணமியன்று  திருமாலிருஞ்சோலை கள்ளழகர்  தேனூர் எழுந்தருளி வைகையில் இறங்கி, துர்வாச முனிவரின் சாபத்தால்  மண்டூகமான (தவளை) சுபதஸ் ரிஷிக்கு மோட்சம் அளிக்கும் போது கருடசேவை தந்தருளுகின்றார்.   ஆழ்வார் திருநகரியில், வைகாசியில், நம்மாழ்வாரின் அவதார உற்சவத்தில் ஐந்தாம் நாள் நவதிருப்பதி பெருமாள்களின்  9 கருட சேவையும் நம்மாழ்வாரை அன்ன வாகனத்திலும் சேவிக்கலாம். வைகாசியில்தான் மிகவும் சிறப்பு மிக்க கச்சி வரதரின்   தொட்டாச்சாரியார் சேவை கிட்டுகின்றது.  இதே வைகாசி மாதம் தஞ்சாவூரில் 23 கருட சேவை நடைபெறுகின்றது.  ஆனியில் பெரியாழ்வாரின் அவதார நன்னாள் கருட வாகனத்தில் பெருமாளையும், அவருக்கு  பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரை யானை வாகனத்திலும் சேவிக்கலாம்.  ஆடியில் பல தலங்களில் கஜேந்திர மோட்ச வைபவம் நடைபெறுகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆண்டாளின் ஆடிப்பூர  உற்சவத்தின் போதும் பங்குனி உத்திர கல்யாண உற்சவத்தில்  5 கருட சேவையைக் கண்டு, மாலவனின் அருளும், பறவை அரசனின் அருளும் பெறலாம். ஆவணி மாதம் மார்க்கண்டேய க்ஷேத்திரமாம் திருவிண்ணகரில், நிகரில்லாத பெருமாள் கருடனுக்கும், காவிரிக்கும், தர்ம தேவதைக்கும், மார்க்கண்டேயருக்கும் பிரதட்சயமான  ஓப்பிலியப்பனுக்கு ஐந்து நாள் பவித்ரோற்சவம். ஆவணி திருவோணத்தன்று சூரிய உதயத்தின் போது ஒப்பிலியப்பன் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் இது “சூரியோதய கருட சேவை” என்றழைக்கப்படுகின்றது.   பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் பல்வேறு ஆலயங்களில் கருட சேவை உற்சவம் சிறப்பாக  நடைபெறுகின்றது.  உற்சவர் திருமலையப்பன், மூலவராக கருட சேவை சாதிப்பதும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் கருடசேவையின் போதுதான். திருமலையில் பௌர்ணமியன்று மாலை கருட சேவை தந்தருளுகின்றார் மலையப்பசுவாமி. வைகுந்த ஏகாதசியன்றும் கருட சேவையில் பகவானை பல் வேறு ஆலயங்களில் தரிசிக்கலாம்.  முக்கோடி  ஏகாதசி பிரம்மோற்சவத்தின் போதும், பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் போதும் திருநறையூரில் கல் கருட சேவை  கண்டு களிக்கலாம்.  தை மாத அமாவாசையில் திருநாங்கூரில் 11 கருட சேவை உற்சவத்தைக் கண்டு ஆனந்தம் அடையலாம். தை மாதம் இரதசப்தமியன்று செடியாய வல்வினைகள் தீர்க்கும் நெடியோன் மலையப்பசுவாமி, திருமலையில் பெருமாள் கருட சேவையுடன் ஒரே நாளில் ஏழு வாகன சேவை அருளுகின்றார்.  மாசி மகத்தன்று கருட சேவையில் பகவான் திருக்கோயில்களின் அருகேயுள்ள புஷ்கரணிக்கோ, ஆறு அல்லது சமுத்திரங்களுக்கோ சென்று தீர்த்த வாரி கண்டருளுகின்றார். பங்குனியில் மேல்கோட்டையில் வைரமுடி சேவை கருட சேவை மிகவும் சிறப்பு.  திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் சனிக்கிழமை தோறும் கருடசேவைதான். பிரம்மோற்சவத்தின் போது சித்தர்களுக்கு அருளும்  ஐந்து கருட சேவை ஐந்தாம் நாள் இரவு நடைபெறுகின்றது. நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலை நம்பி, பாற்கடல் நம்பிகள் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி ஊர்வலம் வந்து மேற்கு நோக்கி எழுந்தருளி மகேந்திர மலையை கடாக்ஷித்து தேவ கந்தர்வ சித்தர்களுக்கு  காட்சி அளிக்கின்றனர். பூவிருந்தவல்லியில் திருக்கச்சி நம்பிகளுக்காக பங்குனியில் மூன்று கருட சேவை. மேலும்  சிறப்பாக சம்ப்ரோட்சண தினத்தன்று பெருமாள் கருடசேவை தந்தருளுகின்றார்.  திருவல்லிக்கேணியில் பங்குனி உத்திரத்தன்று அரங்கநாதரின் அருமையான கண்ணாடி கருடசேவையை கண்டு அருள் பெறலாம்.  இவ்வாறு வருடம் முழுவதும் நாம் கருட சேவையை கண்டு அருள் பெறலாம். பிரம்மோற்சவத்தின் போது பாஞ்சராத்ர ஆகம ஆலயங்களில் மூன்றாம் நாள் காலை கருட சேவை நடைபெறும். அப்போது அதிகாலை சூரிய உதய நேரத்தில் கோபுர வாசல் சேவை சிறப்பு. வைகானச ஆகம ஆலயங்களில் ஐந்தாம் நாள் இரவு கருடசேவை நடைபெறுகின்றது. கருட சேவைக்கு எழுந்தருளும் போது பெருமாள் ஊஞ்சல் சேவையும், ஒய்யாளி சேவையும் தந்தருளுகின்றார்.   தாமிரபரணி பாயும் நெல்லை சீமையில் கரிசூழ்ந்தமங்கலம் என்ற ஊரில் உள்ள அலர்மேல் மங்கை உடனுறை வேங்கடாசலபதி ஆலயத்தில் “நேர்த்திக் கடன் கருடசேவை”  சிறப்பாக நடைபெறுகின்றது. இக்கோவிலில் , வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் போதும், திருமணம் போன்றவற்றின் போதும் பிரார்த்தனை செய்து கொண்டு கருடசேவை நடத்துகிறார்கள். திருமணத்தடைகளோ, காரியத்தடைகளோ ஏற்பட்டால் கருடசேவை நடத்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள்.  வேண்டுதல் நிறைவேற்றியவுடன் கோலாகலமாக கருடசேவையை நடத்துகின்றார்கள். வருடத்தில் சுமார் 60 நாட்கள் இவ்வாலயத்தில் கருடசேவை நடக்கின்றது.   இந்நூலின் மூலம் தாங்களும் பல்  வேறு கருடசேவைகளை சேவித்த  அனுபவத்தைப் பெறலாம்.                           6. பெரியாழ்வார் வைபவம் []   கருடசேவை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் சிறப்புகள் இரண்டு முதலாவது ஸ்ரீமந்நாராயணனே பரம் பொருள் என்று நிரூபித்து விஷ்ணுசித்தர் பொற்கிழி பெற்று யானையின் மேல் நகர்வலம் வரும் போது பெருமாள் பெரியபிராட்டியுடன் கருடன் மேல் ஆரோகணித்து வந்தார், எங்கே  அவருக்கு கண்ணேறு பட்டு விடுமோ என்று பயந்து பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடியது. இரண்டாவது பூரண சரணாகதி தத்துவத்தையும் பெருமாளின் சௌலப்பியத்தையும் விளக்கும் கஜேந்திர மோட்சம். முதலில் பெரியாழ்வார் வைபவத்தைப் பற்றிக் காண்போமா அன்பர்களே?  வாழ்த்தின் பயன் வாழ்த்து பெறுபவர்க்கு மட்டுமல்லாமல் வாழ்த்துபவர்களுக்கும் பயன்படுகின்றது. நம்மை விடப் பெரியவர்களை நாம் வாழ்த்தும் போது அவர்கள் மனமகிழ்ந்து நமக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கின்றனர். இவ்வாறே நாம் இறைவனை வாழ்த்தினால் அந்த கருணாமூர்த்தி நம் கவலைகளைப் போக்கி நமக்கு எல்லா நன்மைகளையும் அருளுவார் அல்லவா?. இவ்வாறு அந்த ஆதிமூலனுக்கே பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார்.  இவர் கலி பிறந்த 47-வதான க்ரோதன வருடம்  ஆனி மாதம், சுக்லபட்சம், ஏகாதசி, ஞாயிற்றுக்கிழமை கூடிய  சுவாதி நட்சத்திரத்தில்,  வேயர் குலத்தில் புதுமையாருக்கும், முகுந்தாச்சார்யாருக்கும் புத்திரராக,  கருடனின் அம்சமாக  அவதாரம் செய்தார்.  பெருமாள் நரசிம்மராக அவதாரம் செய்ததும், பெரியாழ்வார் பிறந்ததும்,  கருடன் பிறந்த ஜோதிட சாஸ்திரத்தில் உயர்வாக சொல்லப்படும் சுவாதி நட்சத்திரத்தில் தான்  .  இவரது இயற்பெயர் விஷ்ணு சித்தர், மஹாவிஷ்ணுவை எப்போதும் சித்தத்தில் உடையவர் என்று பொருள். எம்பெருமானை மட்டுமே தன் உள்ளத்தில் கொண்டு தொண்டு புரிந்து வந்தவர். ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபெருங்கோயிலுடையானுக்கு (வடபத்ரசாயிக்கு) நந்தவனம் அமைத்து மலர் மாலைகள் கட்டி சமர்பித்துக் கைங்கர்யம்  செய்து வந்தார். இவரே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள், ஆண்டாள் நாச்சியாரை வளர்த்து, அரங்கனுக்கே அளித்து, அவருக்கு  மாமனார் ஆகும் பேறு பெற்றார்.  அப்போது கூடல் நகராம் மதுரையை வல்லபதேவன் என்ற தென்னவன் கூர் வேல் கோ நெடுமாறன் என்ற  பாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். ஒரு சமயம் அவன் இரவில் நகர் வலம் வந்த போது திண்ணையில் உறங்கிய  ஒரு  புதியவனைக்  கண்டான், அவனை நீ யார்? என்று வினவ அவனும் நான் ஒரு அந்தணன், கங்கையில்  நீராடி வருகிறேன் என்றான்.  மன்னன் அவனை  உனக்கு தெரிந்த நீதி ஒன்றைச் சொல் என்று கேட்க அவனும் “மழைக் காலத்தின் தேவையை  மற்ற எட்டு மாதங்களிலும், இரவின் தேவையை பகலிலும், முதுமையின் தேவையை இளமையிலும், மறுமையின் தேவையை இம்மையிலும் தேட முயல வேண்டும்” என்றான்.   இதைக் கேட்ட மன்னன், தாம் மறுமைக்கு இதுவரை ஒன்றும் செய்யாமல் காலம் கழித்தோமே என்று வருந்தினான். வைணவப் பெரியாரான செல்வ நம்பிகளிடம் அரசன் தன் வருத்தத்தைக் கூறினான். செல்வ நம்பிகளும் நாடெங்கும் பறை அறிவித்து, வித்வான்களைத் திரட்டி, வேத அர்த்தங்களைக் கொண்டு பரம்பொருளைப் பற்றி நிர்ணயித்து, அவ்வழியாலேயே பெறலாம் என்றார். எனவே அரசனும் ஒரு சதஸ் நடத்தினான். தங்கக் காசுகளை துணியில் முடிந்து, அப்பொற்கிழியை சபை நடுவே கட்டி வைக்க ஏற்பாடு செய்தான் தனது தவத்திறமையினால் எந்தவிதப் பிடிப்புமில்லாமல் ஆகாயத்தில் நிறுத்தினான்,  தனது கேள்விக்கு யார் சரியான விடை அளிக்கின்றார்களோ அவரது காலடியில் அப்பொற்கிழித் தானாக விழும் என்றும் அறிவித்தான்.   செய்தி திருவில்லிபுத்தூரையும் அடைந்தது. அங்கே கோயில் கொண்ட வடபெருங்கோயிலுடையான் தனக்குப்  பூ மாலை கட்டி அழகு பார்க்கும் விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றி, "நீர் போய் அச்சதஸில் கலந்து கொண்டு  பொற்கிழியை அறுத்து வாரும்' என்று கட்டளையிட்டார். விஷ்ணு சித்தரோ, "அது சகல சாத்திரங்களும் கற்ற பண்டிதர்கள் செய்யவேண்டியது... நானோ சாத்திரம் முழுதும் கற்றவன் அல்லேன். சகலகலா வல்லவர்களான அம்மாயாவாத பண்டிதர்கள் நிறைந்த சபையில் எப்படி நான் பரதத்துவ நிர்ணயம் செய்யப் போகிறேன்?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இறைவன், "அதைப்பற்றி உமக்கு என்ன கவலை? செய்யப் போவது நாமே... நீர் செல்லும்' என்று ஆணையிட்டார்.  விஷ்ணுசித்தரும் பெருமாளின் ஆணையை  ஏற்றுக் கூடல் நகருக்குப் பயணமானார். செய்தி மன்னனுக்குக் கிடைக்க, செல்வநம்பியோடு சேர்ந்து அவரை எதிர்கொண்டு அழைத்தான். வேதத்தின் விழுப்பொருளான பரதத்துவத்தை நிச்சயித்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்தான்.  விஷ்ணுசித்தரும் சார்ங்கம் உதைத்த சரமழை போல்  வேதத்தின் விழுப்பொருளை உரைக்கலானார். "இந்த உலகுக்குக் காரணமான வஸ்து எவரோ அவனே தியானத்துக்குரியவர். எவரிடத்திலிருந்து அனைத்துப் பொருளும் உண்டாகின்றனவோ, எவரால் இவை யாவையும் நிலை பெற்றிருக்கின்றனவோ, முடிவில் எவரிடத்தில் இவையனைத்தும் லயமாகின்றனவோ அவரே பரபிரும்மம்.  சிலந்திப் பூச்சியானது எவ்வாறு நூலை உருவாக்கிக்கொண்டு, உணவாகிற பூச்சிகளைப் பிடித்துக் கொள்ளுமோ அவ்வாறே சகல உயிர்களையும், பொருள்களையும் அப்பரன் படைத்தார், அவரே விஷ்ணு என்னும் பெயருடையவராய், சாத்விகனாய், அனைவராலும் தொழப்படுகின்றவராய் இருக்கிறார் என்றும், ஓம்கார வடிவினனான அவ்விஷ்ணு ஒருவரே என்றும், வேத வசனங்களுக்கும் நாயகன் அவரே என்றும், ஜீவர்கள் அந்த ஓம்காரத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே நலன் அடைகிறார்கள் என்றும், அந்நாராயணன் ஒருவரே பாவங்களைக் களைபவர் என்றும், ஸ்ரீமந்நாராயணனிடத்திலிருந்து பிரம்மா, ருத்ரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும் பிறந்தார்கள் என்றும், நாராயணனே பரபிரும்மம் என்றும், பகவான் வியாசரும், எந்தக் காலங்களிலும் நாராயணனுக்கு மிஞ்சிய பர தெய்வமில்லை என்று வேதங்களும், புராணங்களும் சத்ய பூர்வமாகச் சொல்லி இருப்பதை ரிஷிகளாகிய உங்கள் மத்தியில் பிரமாண பூர்வமாகச் சொல்ல விழைகிறேன் என்றும் கையை மேலே உயர்த்தி சத்தியம் செய்து, நாராயணன் ஒருவனே பரனாயிருப்பது போல, சர்வ மந்திரங்களில் அஷ்டாட்சரம் ஒன்றே பரதத்வ நிர்ணயம் செய்யவும் உயர்ந்த மந்திரமாக இருக்கிறது என்றும் அருளிச் செய்தார்.  இவ்வாறு வேத வாக்கியம், ஸ்ம்ருதி, இதிகாசம், புராணம் முதலான பிரமாணங்களைக் கொண்டும் அனைத்து வித்வான்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் "விஷ்ணுவே முழு முதற் கடவுள், வைணவ சமயமே மிகச் சிறந்த சமயம்" என்பதை நிரூபித்தார். பொற்கிழி இவர் பக்கம் தாழ வளைய இவரும் அக்கிழியை அறுத்துக் கொண்டு உருவினார். இதனைக் கண்ட அரசன், மற்ற வித்வான்கள் வியந்தனர்.  “வேதங்களோதி விரைந்து கிழியறுத்த” விஷ்ணுசித்தரை வல்லபதேவன் தனது பட்டத்து யானையின் மேல் ஏற்றி,  குடை, கொடி, சாமரம்,  திருஆலவட்டத்துடன், நகர் வலமாக அழைத்துச் சென்றான். விஷ்ணு சித்தருக்கு “பட்டர்பிரான்” அதாவது“ அறிவாளிகளின் தலைவன்” என்னும் பட்டம் அளித்து கௌரவித்தான் அரசன். இந்நிகழ்வை   பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று ஈண்டியசங்க மெடுத்தூத – வேண்டிய   வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று என்று பாண்டிய பட்டர் போற்றுகின்றார். விருது, சங்கம் போன்ற பல வாத்திய கோஷங்களுடன் பட்டத்து யானையின் மேல் விஷ்ணுசித்தர் எழிலாக நகர்வலம் அழகைக் காண வியப்பூட்டும் வகையில் வானில் கூடலழகர், வானோர் தனித்தலைவர், அயர்வரும் அமரர்கள் அதிபதி, பத்துடையடியவர்க்கு எளியவன், மூவேழுகுக்கும் நாதன், சார்ங்கம் என்னும் வில்லாண்டான் ஆராவமுதமான பவித்திரரான   திருமால், பரமேட்டியான  பெரிய பிராட்டியார் மற்றும் பரிவாரங்களுடன் கருடாரூடராக வானில் வருகின்றார்.   இவ்வாறு பெரிய திருவடியில் தண் துழாய் மாலையுடன் பெருமாளைக் கண்டவுடன் , "எங்கே பெருமாளின் திருவுருவத்திற்கும் பெருமைகளுக்கும் கண்ணேறு பட்டு விடுமோ" என்று அஞ்சி அவரை வாழ்த்திப் பரபரப்புடன் யானை மேலிருந்த மணிகளையே தாளமாகக் கொண்டு  திருப்பல்லாண்டைப் பாடத்தொடங்கி எம்பெருமானுடைய தோளுக்கும், தாளுக்கும் ஒரு சேர மங்கலாசாசனம் செய்தார் விஷ்ணுசித்தர். இவ்வாறு பரந்தாமனுக்கே பல்லாண்டு பாடியதால் இவர் "பெரியாழ்வார்" என்று அழைக்கப்படலானார்.  மற்ற ஆழ்வார்கள் பெருமாளிடம் மோட்சம் வேண்ட இவர் மட்டுமே அவருக்கு எந்த தீங்கும் வந்து விடக்கூடாது என்று பல்லாண்டு பாடியதால், “பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர்  பட்டர்பிரான் பெற்றார்  பெரியாழ்வார் என்னும் பெயர்”  என்று பெரியவர்கள் போற்றுவர்.   மார்வமே கோயில் மாதவனே தெய்வம் அவனிடத்தில் கொள்கின்ற ஆர்வமே மலர்”  என்று வாழ்ந்தவர் பெரியாழ்வார். எம்பெருமான் தன்னுள்ளே உறைகின்றான் என்பதை உணர்ந்து ”மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார், பைக்கொண்ட பாம்பணையோடும் என்று தனது பாசுரங்களில் சாதிக்கின்றார் பெரியாழ்வார். இவர் தம்மை யசோதையாக பாவித்து  வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூரில் கண்ணன் கேசவன் நம்பி பிறந்ததைப் பாடிக்  கண்ணனது வடிவழகைக் காண பவளவாய் கோபியரை அழைத்து, தொட்டிலிலிட்டு தாலாட்டி,  அசைத்தாட்டி, சப்பாணி கொட்டி, அம்புலி அழைத்து, புறம் புல்க அழைத்துப் பாடி, கிருஷ்ணாவதார இராமாவதாரங்களின் பண்புகளைப் பாடி,  திருவடி பிராட்டியாரிடம் கணையாழி கொடுத்ததைப் பாடி, தன் வயமாகி  நாரணன் தன் அன்னை நரகம் புகாள் என்று கூறி திருமாலிருஞ்சோலை, திருக்கோட்டியூர், தேவப்ரயாகை, திருவரங்கம், திருவேங்கடம், வடதிசைமதுரை, சாளக்கிராமம், வைகுந்தம் துவரையயோத்தி வதரி பாடி,!  கருளக்கொடியானே! பறவையேறும் பரம்புருடா! என்று பாடிய பெரியாழ்வாரின் கருடனைப் போற்றும் ஒரு பாசுரம்  நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமு மத்தாணிச் சேவகமும் கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் மெய்யிட நல்லதோர் சாந்தமுந்தந்து என்னை வெள்ளுள்ளுயிராக்க வல்ல பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்  பல்லாண்டு கூறுவனே. (தி - 8) பொருள்:  பெருமாளே! நெய்யோடு நல்ல ஒப்பற்ற உணவையும், எப்போதும் பிரியாமல் நெருங்கிச் செய்கின்ற சேவையையும், வெற்றிலைப் பாக்குகளையும் நீ கொடுத்தாய். அத்துடன் கழுத்திலும், காதிலும் அணிந்து கொள்ள வேண்டிய ஆபரணங்களையும், உடம்பில் பூசிக்கொள்ளச் சிறந்த சந்தனத்தையும், நான் விரும்பியபடியே கொடுத்தாய். இப்படி சம்சாரியாய்க் கிடக்க என்னை ஞானம் பெறச்செய்தாய். பாம்பிற்குப் பகையாகிய கருடனைக் கொடியில் கொண்டுள்ள எம்பெருமானே! உனக்குப் பல்லாண்டு எனச் சொல்லிப் பாடுவேன்.    “இவ்வாறு பெரியாழ்வார் “பரதத்துவ நிர்ணயம்” செய்த விழா, மார்கழி மாதம்  மதுரை கூடல் அழகர் திருக்கோயிலில் பெரும் உற்சவமாகக் கொண்டாடப் படுகிறது. மற்றும்  எல்லா பெருமாளின் திருத்தலங்களிலும் (கருடாழ்வாரின்) பெரியாழ்வாரின் திருநட்சத்திரமான ஆனி சுவாதி அன்று இந்த பரத்துவ நிர்ணயத்தை விளக்கும் வகையில்  கருட சேவை நடைபெறுகின்றது. இது “ஆனி கருடன்” என்று அழைக்கப்படுகின்றது. அன்று பெருமாள் கருட வாகனத்திலும் பெரியாழ்வார் யானை வாகனத்திலும் எழுந்தருள   பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு. (தி - 1) பொருள்: மல்லர்களை வென்ற வலிமையுள்ள தோள்களையுடைய நீல இரத்தினம் போன்ற நிறத்தையுடையவனே! பற்பல ஆண்டுகளிலும், அனேக கோடி இலட்சம் ஆண்டுகளிலும் உமது சிவந்த திருவடிகளின் அழகுக்குக் குறைவற்ற பாதுகாப்பு உண்டாவதாக.   அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைப்போர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. (தி – 2)  பொருள்: அடியவர்களான எங்களுக்கும் சுவாமியான தங்களுக்கும், பிரிவு இல்லாமல் பல ஆயிரம் ஆண்டுகள் நித்திய மங்களமாய்க் கழிய வேண்டும். உனது திருமேனியின் பிரகாசத்திற்கு காரணமாய், தங்களின் மார்பின் வலப்பக்கத்தில் வாழும் மகா லட்சுமியும் பல ஆண்டுகளிலும் மங்களத்துடன் இருக்கவும். உன் வலத் திருக்கையில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்  சக்கரமும், போரிலே பேரொலியைச் செய்யும் பாஞ்ச்சன்னியம் என்னும் சங்கமும் எப்போதும் மங்களம் உள்ளவையாய் இருக்க வேண்டுமென்று அன்பர்கள் பல்லாண்டு சேவிக்கின்றனர்.  ஸ்ரீசுகரே பாகவதத்தில் சரித்திரங்களை தமிழில் பாட ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்தார் என்று கொள்ளலாம். பெரியாழ்வார் பதிகங்களே தமிழ் மொழியில் பிள்ளைத்தமிழ் இலக்கிய வகையை தோற்றுவித்தது.     பெருமாளுக்கும், பெரிய பிராட்டிக்கும், பாஞ்சஜன்யம், திருவாழிக்கும்  பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.              7. கஜேந்திரமோட்சம் []   திருமயிலை ஆதிகேசவப்பெருமாள்   விசிஷ்டாத்வைதத்தின் மையக் கருத்தே பூரண சரணாகதி தான். அச்சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சிதான் கஜேந்திர மோட்சம். ஜீவாத்மாவாகிய கஜேந்திரன் தன் பலத்தின் மேல் ஆணவம் கொண்டு சம்சாரமாகிய குளத்தில் உள்ள துன்பம் மற்றும் இறப்பாகிய முதலையுடன் ஆயிரம் வருடங்கள் போராடியும் அதனால் முதலையின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. அது தன் ஆணவத்தை விட்டு பூரண சரணாகதியுடன் "ஆதிமூலமே" என்று அலறிய அடுத்த கணமே அதிருங்கடல் வண்ணன், அஞ்சன வண்ணன், கொண்டல் வண்ணன், பூவைப் பூ வண்ணன், நீல மேனி  மணி  வண்ணன், வேத சொரூபியான கருடன் மேல் ஆரோகணித்துக் கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து யானையின் துயர் தீர்த்தான். ஆகவே பூரண சரணாகதியை விளக்குவதே இக்கஜேந்திர மோட்சம்.  பெருமாளின் முத்தொழிலை விளக்குவதே கஜேந்திர மோட்சம்.  உலக இன்பமாகிய மலர்களை பறிக்க இறங்கிய யானை கஜேந்திரனை உலக பற்றாகிய முதலை பற்றிக் கொண்டு முக்தி அடைய முடியாமல் தடுக்கின்றது. அதனை மறைத்து  மோட்சம் அருள விரும்பிய பெருமாள் உலக பற்றாகிய முதலையை அழித்து  மறைத்து இன்பமாகிய வீட்டை அருளுகிறார் என்றொரு விளக்கமும் தருவர் பெரியோர். வாழ்க்கையில் வறுமைப் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள், தொழிலில் நஷ்டமடைந்து வேறு எதுவும் செய்வதறியாமல் துடிப்பவர்கள், விரோதிகளின் மத்தியில் மாட்டிக் கொண்டு உயிருக்குப் பயந்து கொண்டிருப்பவர்கள், நல்லவர்களின் சாபத்தினால் பலவாறு அவதிப்படுபவர்கள், நோயினால் ஒவ்வொரு நாளும் துடித்துக் கொண்டிருப்பவர்கள். அத்தனை பேர்களும் தங்கள் துன்பம் நீங்க பிரார்த்தனை செய்து சரணாகதி செய்தால் அவர்களுக்கு பகவான் கருடன் மூலம் பறந்து வந்து கஷ்டங்களைப் போக்கி உயிர் காத்து அருள்வான் என்பதை உணர்த்துவதே கஜேந்திர மோட்சம் ஆகும்.   கஜேந்திரனும், பிரஹலாதனும், திரௌபதியும் ஆபத்தை அடைந்த போது அவர்களை பகவான் ரக்ஷித்தது பிரசித்தம். இதனை எம்பார் சுவாமிகள் குறிப்பிடும் போது, இவர்கள் மூவருக்கும் ஆபத்து வந்தது என்பதை விட எம்பெருமானுக்கே “மூன்று ஆபத்து வந்து கழிந்தது” என்று கூறுவார். இவர்களை ரக்ஷிக்காமல்  விட்டிருந்தால் மக்கள் “பகவான் இருந்தால் காப்பாற்றியிருப்பானே?” என்று ஈச்வரத்வத்தையையே சந்தேகப்படுவார்கள் அதனாலன்றோ அவர்கள் இரட்சணம் என்பார். எனவே அவர் பெருமாளை பெரியாழ்வார் “நம்பன்” என்று மங்களாசாசனம் செய்கின்றார்.   தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் பிள்ளைப் பெருமாளையங்கார் மதயானைக் கோள்விடுத்து, மாமுதலை கொன்ற   கதையால் இதயம் கரையும் – முதல் ஆய  புல்லாணி மாலே! – புறத்தோர் புகழ் இருப்பு  வல்ஆணி: என் செவிக்கு மாறு. ( நூ. தி. அ 44) பொருள்: முழுமுதற் கடவுளாகிய திருப்புல்லாணி என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள திருமாலே! மதம் பெருகும் தன்மையுள்ள கஜேந்திராழ்வானது துன்பத்தைப் போக்கி பெரிய முதலையை கொன்ற வரலாற்றால் மனம் உருகும், பிற தெய்வங்களின் புகழ் அடியேனது காதுகளுக்கு  வினோதமான வலிய இரும்பு ஆணி போன்றதாம் என்று இந்த கஜேந்திர மோட்ச கதை மனதை உருக்கும் என்று சிறப்பித்துப் பாடுகின்றார்.    பரிக்ஷித் மஹாராஜாவிற்குச் சுகபிரம்ம ரிஷி கூறிய பாகவத புராணத்தின் 8வது ஸ்கந்தத்தில் இவ்வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது.   இனி பாகவதத்தில் கஜேந்திர மோட்சம் எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போமா? கிருத யுகத்தில் நான்காவது மனுவான தாமஸமனுவின் காலத்தில் திரிகூட மலையில் நடந்த சரித்திரம் இது. பாற்கடலால் சூழப்பட்டதும், பதினாயிரம் யோஜனை உயரமும் உள்ளதுமான திரிகூடம் என்றொரு பர்வதம் உண்டு. அதில் மூன்று முக்கிய சிகரங்கள் உண்டு. அம்மலையின் தாழ்வரையில் வருணன் உருவாக்கிய ருதுமத் என்ற அழகிய தோட்டம் ஒன்றும் உண்டு. அதன் அருகில் மிக அழகிய  இரு குளமும் இருந்தன.   கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகளுடனும் குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவிக் கொண்டிருந்தது அதன் அச்சப்தத்தைக் கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள் பயந்து ஓட மற்ற சிறிய மிருகங்களான மான், முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டிருந்தன.  அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது. உடனே தனது பரிவாரங்கள் சூழ அப்பொய்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு அப்பொய்கையை அடைந்த கஜராஜன் தன் துதிக்கையால் தாமரைப்பூ, அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிர பருகி, அந்நீரை தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான். பின் ஒரு தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்ப்பிக்க பறிக்கப் பொய்கைக்குள் காலை வைத்த போது அப்பொய்கையிலிருந்த முதலை, கஜேந்திரனின் காலைக் கவ்விக்கொண்டு அதனை நீருக்குள் இழுக்க முயன்றது.  பின்னிருந்து மற்ற பெண் யானைகளும், குட்டிகளும் சேர்ந்து வெளியே இழுத்தன ஆனால் முதலைக்கு தண்ணீரில் பலம் அதிகமல்லவா? இந்த இழுபறி நீடித்தது. ஒரு நாள் இரு நாள் அல்ல, ஆயிரம் வருடங்கள் நீடித்தது. ஒரு காலை பிரதிகூல சத்ருவான முதலை இழுக்க, மற்ற மூன்று கால்களை அனுகூல சத்ருவான உறவினர்கள் இழுத்தனர். இவர்கள் இருவருக்கிடையில் தவித்தான் கஜேந்திரன். தேவர்கள் எல்லாரும் கூடி நின்று இப்போராட்டத்தைக் கண்ணுற்றனர்.  500 வருடங்கள் இது ஒரு தண்ணீரில் வாழும் ஜந்துதானே அதை  தரையில் இழுத்து தேய்த்து விடலாம் என்று தன் பலத்தின் மேல் கொண்ட அகங்காரத்தினாலும், மேலும் 500 வருடங்கள் மற்ற யானைகள் தன்னைக் காப்பாற்றும் என்று மமகாரத்திலும் யானை  முதலையை இழுத்துக் கொண்டு இருந்தது. மெள்ள மெள்ள கஜேந்திரன் தன் சக்தி குறைந்து வருவதை உணர்ந்தான், மற்ற பிடிகள் எல்லாம் இனி பயனில்லை என்று கஜேந்திரனை விட்டு,   ஓடி விட்டன, கஜேந்திரன் தன் துர்கதியான நிலையை உணர்ந்தான், அதன் உடலிலும் சோர்வு, மனதிலும் சோர்வு, ஆத்மாவிலும் சோர்வு.  மரணத்தின் வாயிலில் நின்ற அவ்வேளையில் அப்பரம்பொருளைத் தவிர தனக்கு எந்த பற்றுக்கோடும் இல்லை என்று உணர்ந்தான். முன் ஜென்மத்தில் தான் அந்த ஆதிமூலத்தை துதித்த துதிகள் அவனுக்கு ஞாபகம் வந்தன. அவன் அவற்றை பாராயணம் செய்தான்.   அத்துதியின் பொருள், யாரால் இப்பிரபஞ்சம் உருவாகி, உயிரூட்டப்பட்டதோ அப்புருஷனாகவும், பிரகிருதியாகவும் விளங்கும் பரம்பொருளுக்கு வந்தனம் செய்கின்றேன். யாருடைய வடிவாக இப்பிரபஞ்சம் விளங்குகின்றதோ, யார் காரிய காரணத்திற்கப்பாற்பட்டவரோ, தானாகவே தோற்றமானவரோ, அப்பரம்பொருளை சரணமடைகிறேன். யார் தேவர்களாலும், ரிஷிகளாலும் அறிய முடியாதவரோ, அவர் என்னை காத்து இரட்சிக்கட்டும். யாருக்கு பெயர், குணம், தொழில்,  வடிவம், முதலியவை இல்லாமல் இருப்பினும் உலகத்தின் நன்மைக்காக இவற்றைத் தன் மாயையால் காலத்திற்கேற்றவாறு அடைகிறாரோ, யார் அளவற்ற சக்தியுடைய பரம்பொருளோ, வடிவமுள்ளதும், வடிவமற்றதுமான பரபிரம்மமோ அவருக்கு என்  வந்தனம்.  பரிசுத்த மனமுடையவர்களாலும், ஞானிகளாலும் மட்டுமே அடையக்கூடியவர் எவரோ, ஞானத்தின் ஸ்வரூபமாக விளங்குபவர் எவரோ, எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும், பிரபுவாகவும் விளங்குபவர் எவரோ, இந்திரியங்களின் போக்குக்கு காரணமாக இருப்பவரும், அனைத்திற்கும் காரணமாக விளங்குபவரும், தனக்குக் காரணம் இல்லாதாவரும், சரணமடைந்தோரின் தளைகளைக் களைபவரும், அளவு கடந்த கருணையுள்ளம்  கொண்டவராக இருப்பவர் எவரோ அவருக்கு வந்தனம்,   யார் அனைத்துயிரினுள்ளும் அந்தர்யாமியாய் உறைகிறாரோ, ஆத்ம ஸ்வரூபமாக விளங்கும் அப்பரம்பொருளை வணங்குகின்றேன். யாருடைய மாயா சக்தியினால் சூழப்பட்ட ஜீவன், அந்த ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளவில்லையோ, யாருடைய ஸ்வரூபத்தை, யோகத்தில் சித்தியடைந்த யோகிகள் தம் அகக்கண்களினால் காண்கின்றனரோ, அப்பரம் பொருளுக்கு வந்தனம்,   நான் மோட்சத்தையே விரும்புகின்றேன், மாயத்தால் சூழப்பெற்ற இந்த யானைப் பிறவியால் ஆவது ஒன்றுமில்லை, ஆகவே பரப்பிரம்மமும், பரமபதமுமாக விளங்குகின்ற பகவானை சரணமடைகின்றேன்.  உன்னை விட்டால் எனக்கு வேறு பற்றுக்கோடு யாருமில்லை, உன் சரணமே சரணம். “ஆதிமூலமே!” என்று தாமரைப் பூவை தனது தும்பிக்கையில் வைத்துக்கொண்டு அலறினான் கஜேந்திரன்.  கஜேந்திரனின் அந்த அபயக் குரல் கேட்டவுடனே தெய்வத் திருமாமலர் மங்கை தங்கு மார்பன், பன்றியாய் அன்று பார் மகள் பயலை தீர்த்த பஞ்சவர் பாகன், சரணமாகும் தான்தாளடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கம் பிரான்,   வேத சொருபனான அஞ்சிறைப்  புள்ளேறி, கையில் சுதர்சன சக்கரத்துடன் விரைந்து வந்து சுதர்சன  சக்கராயுதத்தால் முதலையை வதைத்தார். முதலையும் சாப விமோசனம் பெற்று பகவானை சுற்றி வந்து வணங்கி தன் இருப்பிடம் சேர்ந்தான். இவ்வாறு கஜேந்திரனைக் காப்பாற்றி அவனுக்கு மோட்சமும் அளித்தான் அப்பக்தவத்சலன். கஜேந்திரனும் மஞ்சள் பட்டு அணிந்து சதுர் புஜங்களுடன் சாரூப நிலையை அடைந்தான்.  மேலும் பகவான், “யார் இந்த கஜேந்திர மோட்ச சரிதத்தைப்  பக்தியுடன் பாராயணம் செய்கின்றார்களோ, கேட்கிறார்களோ, விடியற்காலையில் ஸ்மரிக்கிறார்களோ, அவர்களின் பிராண பிராயண காலத்தில் என்னை நினைக்கும் தெளிவான மதியை அளிக்கின்றேன்” என்று அருளிவிட்டு, சங்க நாதம்  முழங்க கஜேந்திரனுடன் வைகுந்தம் அடைந்தார்.     இக்கதையைப் படித்தவுடன் தங்களுக்கு சில சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம் அதற்கான விடைகள் இதோ. முதலாவது அத்தனை யானை கூட்டத்தில் கஜேந்திரனை மட்டும் முதலை இழுக்க காரணம் என்ன? முற்பிறவியில் யானை பாண்டிய மன்னன் இந்திரதும்யுனாக பிறந்து மஹாவிஷ்ணு மீது மிகவும் அதீத பக்தி கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தான். இவன் கண்ணனெம்பெருமானுக்கு பூஜை செய்யும் போது மிகவும் ஈடுபாட்டுடன் செய்பவன்,  ஒரு  சமயம் அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது அகத்திய முனிவர் அவனைக் காணவந்தார். பூஜையில் ஈடுபட்ட மன்னன் முனிவரை வெகுநேரம் காக்க வைத்துவிட்டான். அதனால் கோபமடைந்த அகத்தியர், என்னை மதிக்காமல் மதம் கொண்டு நடந்த நீ, மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து வேண்டி, இனி வரும் பிறவிகளிலும்  பெருமாள்  மேல் தான் கொண்ட பக்தி தொடர வேண்டும் என்று வேண்ட, முனிவரும்  நீ யானையாக பிறக்கும் போது சிறந்த விஷ்ணு பக்தனாய் இருப்பாய், எம்பெருமானுக்காக பூப்பறிக்க செல்லும் போது, குளத்தில் ஒரு முதலை உன் காலைக் கவ்வும், நீ ஸ்ரீமந் நாராயணனை ரக்ஷிக்க கூப்பிடும் போது அவர் வந்து முதலையையும் ஒழித்து உன் சாபத்தையும் தீர்ப்பார்  என்று  வரம் கொடுத்தார் இவ்வாறு  அந்த மஹாவிஷ்ணுவாலேயே உனக்கு மோட்சமும் கிட்டும் என்று சாப விமோசனமும் அளித்தார்.  இனி முதலை, முற்பிறவியில் அவன் ஹூஹூ என்னும் கந்தர்வனாக இருந்தான். பொய்கைக்குக் கால் கழுவ வருபவர்களின் காலைப் பற்றி இழுத்து விளையாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒரு சமயம் தேவல முனிவரின் காலை இவ்வாறு இழுத்த போது முனிவர் அவனுக்குத் தண்ணீரில் கிடந்து தவிக்கும் முதலையாக ஆகும் சாபம் அளித்தார். அவன் தன் தவறை உணர்ந்து சாபவிமோசனம் வேண்ட மஹாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம் பட்டு உனக்குச் சாபவிமோசனம் ஏற்படும் என்றார்.  கஜேந்திரன் ஏன் ஆயிரம் வருடங்கள் காத்திருந்தான் ஏன் முதலிலேயே சரணாகதி அடைந்திருக்கக் கூடாது?. மனித மனம் இவ்வாறு தான் உள்ளது. சம்சார மாயையில் மயங்கி நாம் ஏதோ நாம் தான் நம் உறவினர்களைத் தாங்குவது போல் மாயையில் உழல்கின்றோம். “அவனன்றி ஒரு அணுவும் அசையாது”  என்பதை உணர்ந்து எப்போது நாம் பூரண சரணாகதி அடைகின்றோமோ அப்போது அவன் அருள் நமக்கு கிட்டும்.  பெருமாள் ஏன் ஆயிரம் வருடம் காத்திருக்க வேண்டும், உடனே வந்து காத்திருக்கக் கூடாதா? அது வரை கஜேந்திரன் தன் வலிமையின் மேலும் தனது பிடிகள் தன்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலும் இருந்ததால் பகவான் தன் பஞ்சாயுதங்களுடன் எப்போதும் தன் பக்தர்களைக் காப்பாற்ற தயாராக இருந்தாலும், அவன் உண்மையை உணரும் வரை காத்திருந்தார்.  ஏன் தானே வந்திருக்க வேண்டும்? சுதர்சன சக்கரத்தை அனுப்பியிருந்தாலும் பணி முடிந்திருக்குமே? அவரது சௌலப்பியத்தையும், பக்தவத்சல குணத்தையும் காட்டத்தான்,  ஸ்ரீஹரி, தானே கருடன் மேல் ஏறி வந்தார்.   பூர்வாசார்யர்கள் இதை “வைகுந்தம் எவ்வளவு தூரம்? கூப்பிடு தூரம் தான்”,  ஆதி மூலமே என்று அழைத்த குரல் கேட்ட உடனே வந்து அவனைக் காப்பற்றினார் என்று கூறுவர். எனவே தான் பராசரபட்டர் தமது போற்றியில் தங்களது கருணையை விட கஜராஜனை காப்பாற்ற தாங்கள் வந்த  தங்களது அவ்வேகத்திற்காக தலை வணங்குகின்றேன் என்று பாடுகின்றார்.  முக்கூரார்,  தமது  உபன்யாசத்தின்  போது  கஜேந்திரனைக்  காக்க பெருமாள்  கொண்ட அவசரத்தை சுவை பட இவ்வாறு  கூறுவார்! 'ஆதிமூலமே' என்ற கஜேந்திரனின்  அலறலைக்  கேட்ட  மாத்திரத்தில், வைகுந்தத்தில் பிராட்டியுடன் அளவளாவிக்  கொண்டிருந்த  பெருமாள்  அவசர  அவசரமாகக்  கிளம்ப  யத்தனித்த போது,  அவரது  உத்தரீயம்  (மேல் துணி)  தாயாரின் கையில் சிக்கிக்  கொள்ள, அதையும் விடுத்து  பெருமாளின்  எண்ணம்  புரிந்த  கருடன் அவரை விட வேகமாக பறந்து  வந்து  அவர்  முன்  நிற்க, சக்ராயுதமானது,  பெருமாள் கருடன்  மேலேறி பயணத்தைத்  தொடங்கி  விட்டபடியால்,  தானாகவே  பறந்து  வந்து  அவரது  வலது திருக்கரத்தில்   சரியாக  அமர்ந்து  கொள்ள, ரத்ன பாதுகைகளை அணியாமல்,   பகவான்  அதி விரைவில்  சென்று,  கஜேந்திரனுக்கு  அபயம்  அளித்ததாக  அழகாக விளக்கம் கூறுவார் .  தன்னை  வேண்டி அழைத்த  அடியவரைக்  காக்க  விரைந்த  பெருமாளுக்குக்  கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை!  அபயம் அளிப்பது ஒன்றே குறி! அப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி எம்பெருமான்  ஆவார்! கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி  ஆசுவாசப்படுத்தி ஆறுதல் சொல்ல எப்படி ஒரு  தாய் அவசரமாக ஓடி வருவாளோ,  அது போலவே,  எம்பெருமான்  ஓடோடி  வந்து,  தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பார் என்பது திண்ணம். வேண்டியதெல்லாம் அகங்காரம் மமகாரம்  நீங்கி  பூரண சரணாகதி ஒன்றே, நான், எனது என்றிருக்கும் வரையில் அவர் அருள் கிட்டாது. நீயே சரணம் என்று சரணமடைவதே உய்ய வழி.   இவையனைத்திலும் நாம் கற்கும் பாடம் கண்ணன் கீதையிலே கூறியபடி ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோட்சயிஷ்யாமி மாசுச:  ||  அதாவது மோட்சத்திற்கு உதவும் மற்ற எல்லா தர்மங்களையும் விடுத்து என்னை மட்டுமே உபாயமாகப் பற்றினால் உன்னைச் சகல பாவங்களிலும் விடுத்து உன்னை கடைத்தேற்றுவேன் என்று கீதா சரம ஸ்லோகத்தில்   அருளியபடி பூரணசரணாகதி ஒன்றே நாம் உய்யும் வழி. இனி இந்த கஜேந்திர மோட்சத்தை ஆழ்வார்கள் எப்படிப் பாடியுள்ளனர் என்று பார்ப்போமா?  தாழைத் தண்ணாம்பல் தடம் பெரும் பொய்கை வாய் வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண் வேழந்துயர்  கெட விண்ணோர் பெருமானாய் ஆழிப் பணி கொண்டானாலின்று முற்றும் அதற்கருள் செய்தானாலின்று முற்றும். (பெரி. தி 3-2–8)  பொருள்: யசோதையே! இக்கண்ணன் கரையில் தாழை மடல்களையும், நீரில் குளிர்ந்த ஆம்பல்களையுமுடைய பெரிய குளத்திலே வசிக்கின்ற முதலையாகிய  வலையிலே அகப்பட்டுக்கொண்டு துன்பப்பட்ட கஜேந்திராழ்வானது துன்பம் தீர, தேவர்களுக்கு தலைவன் என்று தோன்ற கருடன் மேல் வந்து சக்ராயுதத்தை ஏவி முதலையைக் கொன்று அந்த யானைக்குக் கருணை செய்தான். ஆனால் (தன் அருகிலேயே நிற்கும் நாங்கள் வருந்தும்படி) எங்களிடம் கருணை காட்டாமல் இருக்கின்றான். இவனால் நாங்கள் அழிவோம் - என்று கோபியர்கள் யசோதையிடம் சென்று கண்ணன் மேல் குற்றம் கூறுவது போல் உண்மையில் அவரது பெருமையைப் பாடுகின்றார் பெரியாழ்வார்.  பெண்ணுலாம் சடையினானும் பிரமனு முன்னைக் காண்பான் எண்ணிலா வூழியூழி தவம் செய்தார் வெள்கிநிற்ப விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக் கருளையீந்த கண்ணறா உன்னையென்னோ? களை கணாக் கருதுமாறே ( திரு.மா– 44)  பொருள்: கங்கை இருக்கும் சடையை உடைய சிவனும், பிரம்மாவும் உன்னை காண்பதற்காக பல ஊழி காலமாகத் தவம் செய்தவர்கள் காண முடியாமையால் வெட்கி தலை கவிழ்ந்திருக்கின்றனர். அக்காலத்திலே கஜேந்திர ஆழ்வானுக்காக மடுவின் கரைக்கு வந்து நித்ய சூரிகளும் ஆச்சரியப்படும்படியாகக் கருணை செய்து அருளிய உன்னை எல்லாருக்கும் தஞ்சமாக நினைப்பது எவ்வாறு?  என்று பிரமனுக்கும் சிவனுக்கும் கிடைக்காத பாக்கியத்தை யானைக்கு அருளியதை போற்றுகின்றார் தொண்டரடிப் பொடியாழ்வார்.  திருமங்கையாழ்வார்  திருவெழுக்கூற்றிருக்கையில் நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை…..  ஒரு காலத்தில் நான்கு திசைகளில் உள்ளவர்களும்  நடுங்கும்படியாக, மிகுந்த கோபம் கொண்டு, அழகிய சிறகையுடைய பெரிய திருவடியின் மீது ஏறிக்கொண்டு, ஆழமான நீரையுடைய மடுவின் கரையிலே எழுந்தருளி தொங்குகின்ற வாயையும், மூன்று மதநீர் பெருக்கையும், இரண்டு பெரிய காதுகளையும் உடையவனாய், தனியனாய், “ஆதி மூலமே” என்று அலறி நிர்க்கதியாய் நின்ற  கஜேந்திராழ்வானுடைய துக்கத்தை நீக்கியருளினாய். என்று பாடுகின்றார்.  ஐந்து இந்திரியங்களாகின்ற முதலைகளால் அநாதி  காலமாக வலிமையற்ற  அடியேன் நலிவதைப் பார்த்து பொறுத்திருக்கலாமா? விரைவாக வந்து இரட்சிக்க வேண்டும் என்று பொருள். ஆழ்வார்களின் மற்ற அருளிச்செயல்கள் பின் பகுதியில் விரிவாக கூறப்பட்டுள்ளது.   வேழந்துயர் கொடுத்த விண்ணோர் பெருமான், ஆனைக்கருள் புரிந்த பிரான், பருந்தாட் களிறுக்கருள் செய்த பரமன், விண்ணூளார் வியப்ப வந்து ஆணைக்கருளையீந்த கண்ணன்,  ஆனையின் அருந்துயர் தீர்த்த அரங்கத்தம்மான், காரானையிடர் கடிந்த கற்பகம், திண் கைம்மா துயர் தீர்த்தவன், தூம்புடைத்திண் கை வன் தாள் களிற்றின் துயர் தீர்த்தவன், வாரணம் கொள் இடர் கடிந்த மால், யானை படிதுயரங் காத்தளித்த செங்கண்மால், மதமொழுகு வாரணமுய்யவளித்த எம் அழகனார், கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகில், சூழி மால் யானைத்துயர் கெடுத்த தூயவன், என்று பலவாறு ஆழ்வார்கள் அனைவரும் பெருமாளின் எளிமையை பலவாறு மங்களாசாசனம் செய்துள்ளனர்.  மால் மருகனுடன் திருமாலையும் “பத்துத் தலை தத்தக் கணைதொடு ஒற்றைகிரி மத்தைப் பொருதொரு பட்டப் பகல் வட்டத்திகிரி யிலிரவாகப் பத்தற்கிரதத்தைக் கடவிய  பச்சைப்புயல்”  என்றும் “இலங்கையினிலாதிக்க முண்டதொரு முட்டாளரக்கர் தலை யிற்றே விழக்கணைகளே தொட்ட கொண்டலுருவாகிச் சுமந்ததிக மட்டார் மலர்க்கமல முற்றாசனத் திருவைமார்பிற் புணர்ந்த ரகுராமன்”  என்றும் “உரகபட மேல் வளர்ந்த பெரியபெருமாள் அரங்கருலகளவு மால்”  என்றும் “அலைகடலடைத்தே மகா கோர ராவணனை மணிமுடி துணித்தாவியேயான ஜானகியை அடலுடனழைத்தே கொள் மாயன்” என்றும்   பலவாறு  பாடிய அருணகிரிநாதர் கஜேந்திர மோட்ச லீலையை ஆலமொன்று வேலையாகி யானை யஞ்சல் தீரு மூல ஆழியங்கை ஆயன் மாயன்  . . . .   கடகரியஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்துதவும் புயலிந்திரை கணவன ரங்க முகுந்தன்  . . . . கரி கூப்பிட்ட நாள் கராப்படக் கொன்று அக்கரி போற்ற நின்ற கடவுள்  . . . . மதசி கரி கதறி முது முதலை கவர்தர நெடிய  மடு நடுவில் வெருவியொரு விசை ஆதி மூலமென வரு கருணை வரதன் . . . . செருமுதலி மேவு மாவலி யதிமதிக போல மாமலை தெளிவினுடன் மூலமேயென முந்தச் சிந்தித்தருருள்  மாயன் .. . .   என்றெல்லாம்  பலவாறு போற்றிப்  பாடியுள்ளார்.  தமது நள சரிதத்தின் கடவுள் வாழ்த்தில் புகழேந்திப்புலவர் திருமாலை ஆதித்தனிக் கோலம் ஆனான் அடியவற்காக சோதித் திருத்தூணில் தோன்றினான் – வேதத்தின் முன்னின்றான் வேழம் முதலே  என அழைப்ப என்னென்றான் எங்கட்கிறை  - என்று அழைத்த போது பிரகலாதனுக்கும், கஜராஜனுக்கும் அருளியதைப் போற்றிப்பாடுகிறார்.  கஜேந்திர மோட்சத்தில் ஆதி மூலமே என்றழைத்தவுடன் பெருமாள் விரைந்து வந்து கஜேந்திரனைக் காத்தருளியதால், வேதத்தில் கூறியுள்ளபடி அவனே பரம்பொருள் என்று நிலை நிறுத்தப்பட்டது என்றும் கூறுவார்கள் பெரியோர்கள். இதைக் கம்பநாட்டாழ்வார் தமது கம்பராமாயணத்திலே பலவாறு கூறுகின்றார். பால காண்டத்தில், ஆதி மூலமே கூப்பிட்டவுடன் இரட்சித்த ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் எவனோ அம்மெய்ப்பொருளுக்கே இராமன் என்று பெயரிட்டனர்  அவனே பரம்பொருள்,  நம்மை பத்துத்தலை இராவணன் என்னும் முதலையிடமிருந்து காப்பாற்ற அவதாரம் செய்துள்ளான் என்று பாடுகிறார்.   அயோத்தியா காண்டத்தில் கைகேயி என்னும் முதலையிடம் மாட்டிக் கொண்ட தசரதன் என்னும் கஜேந்திரனை  காப்பாற்ற நாராயணனாகிய  இராமன், (இரண்டு வரம் என்ற வாக்கைக் காப்பாற்ற) வனம்  சென்றான் என்று பாடுகிறார். அது போலவே ஆரண்ய காண்டத்தில் விராதன் என்னும் அசுரனை திருவடியால் அனுகிரகித்தப்போது அன்று யானையாவது அழைத்த போது சென்று காப்பாற்றினாய் இன்று நான் அழைக்காத போதே அதுவும் அரக்க ரூபத்தில் அனைவரையும் துன்புறுத்தி வந்த போது தானே வலிய வந்து    இரட்சித்த  தனி மூல முதலே  நீயே பரமாத்மா என்று கூறுவதாக  பாடுகிறார்.  கிஷ்கிந்தா காண்டத்தில் வாலி மோட்சத்தில் மறைந்திருந்து என் மேல் அம்பு போட்டாயே? இது தர்மமா? என்று வாலி வினவ. அதற்கு இராமன் நீ உன்னிடம் சரணம் அடைந்த சுக்ரீவனை தண்டித்தாய், அவனது மனைவியையும்  அபகரித்துக் கொண்டாய் இது தவறல்லவா? என்றார். அதற்கு வாலி நாங்கள் விலங்குகள்  எங்களுக்கு உங்கள் மனித தர்மம் எங்களுக்கு கிடையாது என்றான். அதற்கு இராமபிரான் எப்போது தர்மம் என்பது என்ன தெரிந்ததோ அதனால் நீ விலங்கு அல்ல மனிதன் தான். ஒன்றை தெரிந்து கொள் அன்று அக்கஜேந்திரன் ஆதி மூலமே என்று அழைத்ததே அது விலங்கின் செயலையா செய்தது மனிதனை விட மேம்பட்ட செயலைச் செய்தது அதனால் அதற்கு உதவினேன். இன்று நீ தவறு செய்ததால் தண்டித்தேன் என்றார். இதன் மூலம் தவறு செய்தால் எப்படி வேண்டுமானாலும் தண்டிக்கலாம், நற்செயலை செய்தால் எப்படி வேண்டுமானாலும் உதவி செய்யலாம் என்று தர்மம் மாறிச் சென்ற வாலிக்கு உணர்த்துகிறார் இராமபிரான்.  சுந்தர  காண்டத்தில் இராமனின் கணையாழி பெற்றுக்கொண்டு இலங்கை சென்று சீதா பிராட்டியைக் கண்டு சூடாமணி பெற்று பின் இலங்கைக்கு தீயிட்டுப் பின்னர் இந்திரஜித் விடுத்த பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு இராவணன் முன் நின்ற போது,  அவன் வானரமே! நீ யார்? என்று வினவ அதற்கு அனுமன் கூறுகின்றார் “அன்று முதலை தாமரைத் தடாகத்தில் சிறைப்பிடித்து வைத்திருந்த கஜேந்திரனைக் காப்பாற்றிய முழு முதற் கடவுள் இன்று நீ சிறைப்பிடித்து வைத்துள்ள பிராட்டியையும், தேவர்களையும் காப்பாற்ற வந்திருக்கும்  இராமபிரானின் பிரதிநிதி நான்” என்று பதில் அளிக்கிறார் சொல்லின் செல்வன்.   யுத்த காண்டத்தில் பிரகலாதன் சரிதம் கூறும் போது இரணியன் யானையை விட்டு பிரகலாதனைக் கொல்ல ஏவியபோது, யானையிடம் “உன் முன்னோரான கஜராஜன் ஆதி மூலமே என்று அழைத்த போது காத்த ஆதி மூலம் என் இதயத்தில் உள்ளான், நீ நன்றி மறந்து  அவரையா  நீ கொல்ல வந்தாய்”  என்று  வினவ அவ்வேழம் அஞ்சி அகன்று சென்று விட்டது. மற்றும் விபீஷணன் சரணாகதி செய்ய வந்த போது மற்றவர்கள் வேண்டாம் என்று கூற இராமபிரான், அன்று கஜராஜன் கூப்பிட்ட போது இன்று ஏன் கூப்பிட்டான் ஆயிரம் வருடம் ஏன் கூப்பிடவில்லை என்றா யோசித்தார் அவனை காத்தாரல்லவா? அது போல இன்று சரணாகதி என்று வந்த விபீஷணை ஏற்றுக் கொள்வதே முறை என்று ஏற்றுக்கொள்கிறார் கருணைக் கடல் இராமர். மூன்றாவதாக சேது பந்தனத்தின் போது சமுத்திரராஜன் மூன்று நாட்களாக வராததால் கோபம் கொண்டு கோதண்டத்தில் அம்பை பூட்டிய போது சமுத்திரராஜன் ஓடி வந்து அவர் காலில் விழுந்து வணங்கி அன்று கருணையினால் அக்கரியின் துன்பம் தீர்க்க கருடன் மேல் வந்து இரட்சித்த வள்ளலே தாமதமாக வந்த என்னையும் இரட்சி என்று பல  விதத்தில்  கம்பநாட்டாழ்வார் கஜேந்திர மோட்சத்தைப் பாடுகின்றார்.  இதனால் நாம் கற்கும் பாடம் மரணப்படுக்கையில் நாம் படுத்துக்கொண்டிருக்கும் போது பஞ்சேந்திரியங்கள் என்னும் முதலை என்ற எதிரி  நம்மை கட்டி வைக்கும் போது நாம் கஜேந்திரன் போலத் தினமும் நாம் அவன் அடியில் மலர் இட்டு வணங்க வேண்டும், இறைவனின் நாமத்தை கூறினால் அது நம்மை காப்பாற்றும் என்று கஜராஜன் உணர்த்தியபடி அவன் நாமத்தை ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அன்று எமன் வந்து எதிரே நிற்கும் போது நம்மால் அவன் நாமம் கூறமுடியாது எனவே தினமும் ஹரி நாராயண!  ஹரி நாராயண! என்று அவன் நாமம் கூறவேண்டும். இதையே துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத் துத்துணை யாவரென்றே ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்தமையால் எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே  சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணை பள்ளியானே (பெரி.தி 4-10-1) பொருள்: இந்திரியங்களும் மனமும் தளர்ச்சியடைகின்ற காலத்திலே துணையாக இருப்பார்கள் என்றல்லவோ வல்லமையுடையவர்களை சேர்வது! நான் உன்னிடம் சரணமாக அடைய தகுதி இல்லாதிருப்பினும்  நீ கஜேந்திராழ்வானுக்கு கிருபை செய்து காப்பாற்றியதால் உன்னை சரணடைந்தேன். அந்திம காலத்தில் இளைப்புத்தோன்றி வருத்தும் போது அச்சமயத்தில் நான் உன்னைச் சிறிதும் நினைப்பதற்குச் சக்தி இல்லாதவன். ஆகவே திருவரங்கத்தில் திருவனந்தாழ்வான் படுக்கையில் பள்ளி கொண்டிருப்பவனே! அவ்வேளையில் சொல்வதற்குப் பதிலாக இப்போதே சொல்லி வைத்தேன்.  என்று சொல்லி வைத்தார் பெரியாழ்வார்.  எனவே யானைக்கும் அருள் செய்த அந்த பரமனிடம் நாமும் இப்போதே சரணமடைவோம்.   “முதலை (தனது சாப விமோசனத்திற்காக) யானையைப் பிடித்தது. யானையோ (தனது சாப விமோசனத்திற்காக) ஆதி மூலத்தை, எல்லாவற்றுக்கும் முதலை, ஸ்ரீமந்நாராயணனை பற்றியது. ஆசார்யன் கிருபையினால் பற்றற்றான் பற்றினைப் பற்றினால் பற்று விட்டுப் பரமபதம் அடைவோம் என்பதில் ஐயமென்ன”.  இதை உணர்ந்து கருட சேவையைச் சேவித்தால்  ஸ்ரீவைகுந்தம்தானே.  திருவரங்கத்தில் சித்ரா பௌர்ணமியன்றும் பல்வேறு தலங்களில் ஆனி கருடன், ஆடி கருடன் என்று அந்தந்த மாதங்களில் பௌர்ணமி தினங்களிலும் கருடசேவையுடன் கஜேந்திர மோட்சம் சிறப்பாக நடைபெறுகின்றது. சென்னை திருமயிலை ஆதி கேசவர் ஆலயத்தின் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் சந்திர பிரபையில் எழுந்தருளும் போது கஜேந்திர மோட்ச கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.  (மேலே உள்ள படம்)  இனி கஜேந்திர மோட்சத்தைப் பற்றிய ஒரு கீர்த்தனை இதோ: பல்லவி மூலமென்றழைத்த யானையைக் காத்தருள் முகுந்தனை பணி நெஞ்சே   அனு பல்லவி சீலமேவும் பத்மாசனன் வணங்கும் திருவரங்தரவணைமிசையுறங்கும் நீலமேனியனை நிறை பரஞ்சோதி நித்திய நிர்மல நிராமய ஆதி (மூல)   சரணங்கள் மழையென மும்மதம் பொழியும் விகடதட மத்தகஜங்கள் கொடி இரு –   மருங்கு மணியணியாய் நெருங்கி தொடர்ந்து வர வனத்தில் நடந்தோடி ஏழு கடலாமென யலைகள் பொன்மணிகொழித் தெறியுமடுவைத் தேடிவண் டிரைத்த கமலம் விண்டு சுரக்குஞ்செந்தே னிறைத்தினித் தண்புனல்நாடி அழகோடிறங்கயதில் முழுகியே பைய அலைப்புத்தணியப்பல சலக்கிரீடை செய்ய மழைநிகர்வாய் திறந்தனல்விழி பெய்ய முதலைப் பிடித்தளவிற் கதறியேயுய்யற (மூல)   காலனைப்போலுக்ர மானகராவினைக் கண்டதனோடூடி வெகு –  காலமணுவளவும் வெறுப்பு சலிப்பில்லாமல் கடுமையோ டூடாடி ஸ்தூலசரீரமகமேரு நிகருடலஞ் கப்பல் போல வாடிக் கால் –  துவண்டு பராக்கிரங் குறைந்து நடுங்கி விழி சொருகிக் கண்மூடி ஞாலமேலெதிர்ந்த தீவினைப்பழுது நமக்கென்ற தலைமிசை துதிக்கை வைத்தழுது ஓலமிட்டண்டசராசர முழுதும் உடையவனெவனெவன் கதி என்று அழுது (மூல)   அடுத்துச் செவியில் வந்து நுழைய அபய- மென்னுமந்தக் குரலைக் கேட்டு பால்- அலைவழாழியிற் பெரியபிராட்டியோ டாடியவிளை யாட்டு விடுத்துயர் கருடன்மே லேறியாயிரம் படம் விரித்தெழுமணிச் சூட்டிச் சேஷ- மெத்தைதுறந்துதிரு மார்பிற்பளபளென விளங்கியெழில் காட்டி வடந்தணி கவுஸ்துவமசைய பொன்னடை வங்கயபசுந்துளப பரிமளவாடை எடுத்திடவுருவஞ்செந் தாமரையோடை எனச்சிறந்திட ட்சணத் தொழிந்திடப்பீடை மிக்கதிர் சூரியனுந்தன் னொலிமயங்கிப்பிர மித்துக்கண்கள் கூச முடி –  மீதுகவிந்தநவ ரத்னநெடுமகுடம் விண்ணிடை வெளியில் வீச எரிமணிப்பிரயை திகழ் வாகுலமேகத் திந்திரதனுமிசை யேகக்கையில் –   ஏந்தியபாஞ்ச சன்னியசக்ராயுத மிலங்கிடக் கைலாச வரையுறைசிவன்முத லோரிதுவென்ன மாயமோவென்றிஞ்சித் திறம்பன்னத் திருமுகம் வேர்த்துளங் குறுநகைதுன்னச் சித்தமிரங்கிக் கிருபை பெருகியே மின்ன  (மூல)   காதினிற்குண்டல ஜோதியினாலிருள் பாதகலகத்தகன் றோட மிகக் –  கெனவர்மலர்மாரி சொரியத்தேவ கானங்கின்னரர் பாட கோதறவயிற்றில் வைத்திடு சகலாண்டமும் குலுங்க நான்மறை தேடச்செழ –பூங்  கொத்து மலர்மாலை சரிந்திட அந்தர துந்துபியொலி வெகுவாய் நீட மாயவர்களித்திட வேகமொடு சென்று மரகத மலைபோலெதிர் நின்று நீதிகைத்தஞ்சாதே யஞ்சாதேயென்று நெடிய முதலையைக் கொன் றிடர்தொலைத்தன்று (மூல) கஜேந்திர மோடசத்தைத் தலவரலாறாகக் கொண்ட சில திவ்யதேசங்களைப் பற்றி அடுத்துக் காணலாம் அன்பர்களே. []   வண்ண மின்னொளியில் திருமலை கருடபகவான்                                     8.திருஅட்டபுயகரம் []   எழிலார்ந்த கஜேந்திர மோட்ச கற்சிற்பம் (திருக்கண்ணமங்கை) கஜேந்திர மோட்ச வைபவம் பல தலங்களின் தலவரலாறு சம்பந்தப்பட்டதாக இருந்த போதும், குறிப்பிட்ட சில தலங்கள் - அதாவது திருஅட்டபுயகரம், கபிஸ்தலம், திருமோகூர் ஆகிய தலங்கள் கஜேந்திர மோட்ச தலங்களாக போற்றப்படுகின்றன. அவற்றுள் அட்டபுயகர திவ்யதேசத்தைப் பற்றி முதலில்  காணலாமா? அன்பர்களே.   திருஅட்டபுயகரம் - 108 திவ்ய தேசங்களுள் எட்டுக் கரங்களுடன் நின்ற கோலத்தில்  பெருமாள் சேவை சாதிப்பது இந்த ஒரு திவ்ய தேசத்தில் மட்டுமே "செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்க மொண் வாள் உம்பரிரு சுடராழி யோடு கேடக மொண் மலர் பற்றி யெற்றே" வெம்புசினத்து அடல்வேழம் வீழ வெண்மருப்பொன்று பறித்து இருண்ட அம்புதம்போன்று இவரார்கொல்? என்ன அட்டபுயகரத்தேனென்றாரே.” (பெ .தி 2-8-3)  பொருள்: வலத்திருக்கரத்தில் பொன்னால் செய்யப்பட்ட அம்புகளையும், சார்ங்கம் என்னும் வில்லையும், கௌமோதகி என்னும் கதையையும், பாஞ்சசன்யம் என்னும் சங்கினையும், இடத்திருக்கரத்தில் நந்தகம் என்னும் வாளையும், சுதர்சன சக்கரத்தையும், கேடயத்தையும்,  தாமரை மலரையும் தாங்கிக்கொண்டு  கோபமுள்ள குவாலயாபீடம் என்னும் யானை அழியும்படி அதன் தந்தங்களைப் பிடுங்கிய கறுத்த மேகம் பொன்றிருக்கும் இவர் யார்? என்று வினவ, அட்டபுயகரத்தோன் என்றார்.   அட்டபுயகரப்பெருமாள் வல நான்கு திருக்கரங்களில் அம்பு, வில், கதை, சங்கம் ஆகியவையும், இடத் திருக்கரங்களில் வாள், சக்கரம், கேடயம், மலர்  தாங்கி,  எதிர்த்து வந்த அரக்கர்களைப் பணியச் செய்து, பயம் நீக்கி, யாக சாலையின் வாயு மூலையை பாதுகாக்கப் பணித்து, கஜேந்திரனுக்கு திருவருள் புரிந்த கோலத்தில்,  பெருமாள் சேவை சாதிக்கின்றார்.   பொதுவாகப் பெருமாள் கோவில்களில் இராஜ கோபுரமும், பரமபத  வாசலும் வெவ்வேறு திசையில் இருக்கும், இரண்டும் வடக்கு நோக்கி இருப்பது இந்த திவ்ய தேசத்தின் சிறப்பு. இத்தலத்தின் புஷ்கரணியும் கஜேந்திர புஷ்கரிணியாகும்.   இனி இந்தத் திவ்ய தேசத்தின்  தல வரலாறு. முன்னொரு காலத்தில் மஹாசந்தன் என்ற முனிவர் இந்தப் பூவுலக வாழ்க்கையை முடித்து விட்டு இறைவனின் திருவடி அடைய விழைந்தார். அதற்காகப் பெருமாளை நோக்கி நீண்ட காலம் தவமிருந்தார். பயந்து போன இந்திரன், தேவ கன்னிகைகளை அனுப்பினான், ஒன்றும் பயன் ஏற்படவில்லை, இந்திரனும் அழகிய யானை வடிவம் எடுத்து முனிவர் இருப்பிடம் சேர்ந்தான். யானையின் அழகில் மயங்கிய முனிவர் தானும் யானையாக உருமாறி யானைகளுடன் காடுகளில் அலையும் போது சாளகிராமத்தில் நீராடும் போது,  தனது யோக வாழ்க்கை நினைவிற்கு வந்தது. மிகவும் வருந்திய யானை பல திவ்ய தேசங்களுக்குச் சென்று பெருமாளை வழிபட்டு பரிகாரம் தேடியது. பின்னர் மிருகண்டு முனிவரின் ஆலோசனைப்படி திருக்கச்சி நகர் வந்து வரதராஜப் பெருமாளைச் சாப விமோசனத்திற்காக வழி பட்டு வரும் நாளில் அட்டபுயகரத்தம்மானைக் கண்டவுடன் அவர் வடிவழகில் மயங்கி அங்கேயே தங்கி புஷ்கரணியில் இருந்த தாமரை மலர்களைப் பறித்து பெருமாளுக்குச் சேவை செய்து வந்தது. ஒரு நாள் மலர்  கிடைக்காமல் போக அருகில் இருந்த குளத்தில் சென்று மலர் பறிக்கும் போது அதிலிருந்த முதலை அதன் காலைப் பற்றிக்கொள்ள, யானை பயந்து அஷ்டபுஜப் பெருமாளை “ஆதி மூலமே”  என்று விளிக்க அவரும் தெய்வப்புள்ளேறி வந்து சக்கரத்தினால் முதலையைத் துணித்து முனிவரைக் காப்பாற்றினார்.                திருஅட்டபுயகரத்தில் கருடாரூடனாக ஒரு திவ்யமங்கள விக்ரஹம் இதற்குச் சான்றாய் அமைந்துள்ளதைக் காணலாம். கஜேந்திரனுக்கு திருவருள் புரிந்த அட்டபுயக்கர பெருமாளைப் மங்களாசாசனம் செய்த பேயாழ்வார் தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான் அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று – குட்டத்துக்  கோள்முதலை துஞ்சக் குறித்தெறித்த சக்கரத்தான்    தாள் முதலே நங்கட்குச் சார்வு  (மூ. தி – 99)  பொருள்: முன்னொரு நாள், தாமரை மலர்ப் பொய்கையில், வலியதோர் முதலையிடம் அகப்பட்ட தன் பக்தனான கஜேந்திரனைக் காக்க தன் சுதர்சன சக்கரத்தை எறிந்த திருமால், "அட்டபுயகரத்தான்" என்ற பெயரில் திருக்கச்சியில்  அட்டபுயக்கரம் என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கிறான். தன்னை அண்டியவரைக் காக்க எட்டுக் கரங்களிலும் ஆயுதம் தரித்திருக்கும் கோலத்தில் அவன் இங்கு காட்சியளிக்கிறான். அவன் விடுக்கும் ஆயுதங்கள் எவையும் என்றும் தோல்வியை அடைந்ததே இல்லை. என்றும் வெற்றியை உடைய அத்திருமாலின் பாதங்களே நமக்கு அடைக்கலம் என்று பேயாழ்வார்  மங்களாசாசனம் செய்கின்றார்.  ஸ்வாமி தேசிகனும் அஷ்டபுஜாஷ்டகத்தின் முதல் ஸ்லோகத்தில், “திருவட்டபுயகரத்து பெருமானே! உலகப் பொருள்கள் முதலைகளைப் போல அடியேனை கவ்வித் தம் வழியில் இழுக்கின்றன, முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திராழ்வானை நீ விரைந்து வந்து காப்பாற்றினாய் அல்லவா?  உலக சுகங்களில் மயங்கி கிடக்கும்  அடியேனையும் நல்வழிப்படுத்தி அவ்வாறே காத்தருள வேண்டும். உன்னுடைய பெருமை, ஞானம், கருணை எல்லாம் அளவற்றவை. ஆகவே சாதுக்களுக்கு உற்ற தோழனாகிய நீ, அவர்களைக் காக்கும் பொருட்டு எட்டு திருக்கரங்களிலும்  எட்டுத் திவ்ய ஆயுதங்களுடன் விளங்குகின்றாய்! உன்னையே சரணமடையும் அடியேனை காப்பாற்றி அருளப்  பிரார்த்திக்கின்றார். ஆனைக்கு அருள் புரிந்த ஆதி மூலமாக எம்பெருமான் அருள் புரியும் மற்றொரு திவ்யதேசத்தைப் பற்றிக் காணாலாம் அன்பர்களே.   9. கண்ணன் கபிஸ்தலம்   நாம் மேலே சேவித்த கஜேந்திர மோட்சத்தைத் தல புராணமாக கொண்ட இன்னொரு திவ்யதேசம் “ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்” என்று திருமழிசையாழ்வர் பல்லாண்டு பாடிய  கண்ணன் கபிஸ்தலம் ஆகும். கண்ணனின் பெயரைத் தாங்கிய கிருஷ்ணாரண்யத் தலங்கள் ஐந்தனுள் இது ஒன்றாகும். மற்றத் தலங்கள்  திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், மற்றும் திருக்கோவிலூர் ஆகும்.   கானமர்  வேழமான கஜேந்திரன், நாண்மலர் கொய்வதற்காக  மீனமர் பொய்கையில் (இத்தலத்தின் முன் பக்கம் கிழக்குப்பகுதியில் உள்ள கபில தீர்த்தத்தில்)  சென்றிழிந்தான். முதலை(கரா) அதன் காலினை கதுவ   ”நாராயணா! ஓ! மணிவண்ணா! நாகணையாய்! வாராய் என் ஆரிடர் நீக்காய்” என்று அலறிற்று. எம்பெருமானும் விண்ணுளார் வியப்ப, பெரிய திருவடி மேல் ஆரோகணித்து, ஓடி வந்து, செம்புலால் உண்ணும் முதலை மேல் சீறி வந்து சுடராழியைப் பிரயோகித்து  முதலை தலை துணித்து யானைக்கு அருளை ஈந்தான். யானைக்கு பாப விமோசனம் கிடைத்தது. இந்தக் கதை நடந்தது, அதனால் இந்த  புஷ்கரணி கஜேந்திர புஷ்கரிணி என்று பெயர் பெற்றது. எம்பெருமானும் கஜேந்திர வரதனாக சேவை சாதிக்கின்றார்.   திருவடியான அனுமனுக்கும் (கபி என்றால் குரங்கு)  எம்பெருமான் கஜேந்திர மோட்சத்தை காட்டியருளியதால் கபிஸ்தலம்  என்றும் பெயர் பெற்றது. கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகையறிந்தேன் – ஆற்றங்  கரைகிடக்கும் கண்ணன் கடற் கிடக்கும் மாயன் உரைகிடக்குமுள்ளத்தெனக்கு. (நா. தி 50) பொருள்: திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருள்கின்ற எம்பெருமான், திருக்காவேரிக் கரையான  கபிஸ்தலத்திலே திருக்கண் வளர்ந்தருளுகின்றார், அவரது ஸ்ரீசூக்தியான சரம ஸ்லோகம்  என்னுடைய நெஞ்சிலே பதிந்திருக்கின்றது. எனவே மரண பயம் என்னை அணுகாது, கொடிய பாவங்கள் என்னை அணுகாது கெட்ட விஷயங்கள் ஒன்றும் அணுகாது என்ற உபாயத்தை அறிந்தவன் ஆவேன் என்று திருமழிசையாழ்வார் மங்களாசாசனம் செய்த இத்திருத்தலத்தின்   மூலவர்: ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன், கஜேந்திர வரதர், ஆதி மூலம் என்றும் அழைக்கப்படுகின்றார். கிழக்கே திருமுக மண்டலம்,    புஜங்க சயனம்.     தாயார் : இரமாமணி வல்லி, பொற்றாமரையாள், செண்பகவல்லி  உற்சவர்: கஜேந்திர வரதன் விமானம்: கனகாக்ருதி விமானம் தீர்த்தம் : கபில தீர்த்தம், கஜேந்திர புஷ்கரிணி.   தல விருட்சம்: மகிழ மரம் இத்தலத்தில் கண்ணன் தனது அடியார்களின் பாபங்களை ஒழித்து பக்தி புரிவதற்கு வகை செய்கின்றான். பெருமாள் ஆதி சேடன் மேல் கிடந்த கோலத்தில் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார். தூய்மையான பக்தி கொண்டு வணங்குவோருக்கு இத்தலத்து பெருமாள் மோட்சம் அளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன.  வலதிருக்கரத்தில் சின் முத்திரையுடன் ஆதிமூல பெருமாள் புஜங்க சயனமாக காட்சியளிக்கிறார். நாபிக் கமலத்தில் பிரம்மன் அமர்ந்திருக்கிறார். பொற்றாமரை வல்லி தாயார், கனகவல்லி தாயார். உடனிருக்கின்றனர். முற்காலத்தில் செண்பக வனமாக இருந்ததால் உற்சவர் தாயாருக்கு  செண்பகவல்லி என்று திருநாமம்.  மஹா மண்டபத்தில் வரதர், சக்கரத்தாழ்வார்,  யோக நரசிம்மர், ஆண்டாள்  அருள் பாலிக்கின்றனர்..  கர்ப்பகிரகத்தின் சுவற்றில் ஹனுமன், பராசர முனிவர் மற்றும் கஜேந்திர மோட்ச காட்சிகள் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், இராமானுஜர், முதலியாண்டான், பிள்ளை லோகாச்சாரியார் மணவாள மாமுனிகள் ஆகிய ஆழ்வார் ஆச்சார்யர்களையும் சேவிக்கலாம். மேலும் கருடன் மேல் ஆரோகணித்து  ஆனையின் துயர் கெடுத்த அம்மானாய் சேவை சாதித்தும் அருளுகின்றார்.  கண்ணன் கபிஸ்தலத்தில் ஆற்றங்கரை கிடப்பதற்கு ஆழ்வார் கூறும் விளக்கம், ஒரூரில் ஒருவனை தேட நினைப்பவன், அவன் எப்படியும் குளிக்க ஆற்றுக்கு வருவான் என்ற எண்ணத்தாலே ஆற்றங்கரையில் நின்று தேடுவது போல  தன்பால் சிறிதளவேனும் ஆசையுடையாரைத் தேடி, ஆற்றங்கரையிலே கிடக்கிறான். அந்த கண்ணன் கீதையின் நிறைவாகச்  சரம ஸ்லோகம் உரைத்தான்:    ஸர்வ த்ர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ |  அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோட்சயிஷ்யாமி மாசுச: ||   என்ற கண்ணனின் நம்பிக்கையூட்டும் வார்த்தை ஆழ்வாரின் உள்ளத்தில் படிந்திருக்கின்றது.  அதனால் , இனி பாபங்களைப் பற்றிய பயமோ, அதன் பயனான யமபயமோ தன்னை அண்டாது என்று ஆழ்வார் உறுதியாகக் கூறுகின்றார்.  மூலமே யென்ற கரி முன் வந்திடர் தொலைத்து நீலமேகம் போல் நின்றான்  -    என்பது பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் வாக்கு.  மஹா பாரதம் இத்தல வரலாற்றை இவ்வாறு கூறுகின்றது. கூற்றுரல் கராவின் வாயின்றழைத்த குஞ்சர ராஜன் முன் அன்று- தோற்றிய படியே தோற்றினான் – முடிவும்  தோற்றமும்  இலாத பைந்துழாயோன். இந்தத் தலத்தின் சிறப்பு ஐந்தறிவே படைத்த பெரிய உருவில் இருக்கும் யானைக்கும், சிறிய உருவான குரங்கிற்கும் பெருமாள் அருள் புரிந்ததாகும். சகல உயிரினங்களுக்கும் பெருமாள் அருள் புரிவார் என்பதைக் காட்டித்தரும் தலம். இத்தலத்தின் சிறப்பு வழிபாடு தலைக்கு மேல் கைகளை உயர்த்தி என்னால் இயல்வது ஒன்றும் இயலாது, பெருமாளே! ஆதி மூலமே  நீயே சரண் என்னை காப்பாற்று என்று வேண்டுவதே ஆகும்.   கபிஸ்தலத்தில் கிடக்கும் கண்ணன் நம்முடைய அனைத்து பாவங்களையும் போக்குகின்றார். கபிஸ்தலத்தில் எனவே எம்பெருமான் “பாப விமோசகத்வம்” என்னும் குணத்தைக் காட்டி அருளுகின்றான்.    ஆடி பௌர்ணமியன்று நடைபெறும் கஜேந்திர மோட்ச லீலை, வைகாசி விசாகத் தேர்த் திருவிழா, பிரம்மோற்சவம் ஆகியவை மூன்றும் இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் ஆகும். நம்முடைய அனைத்துப் பாவங்களையும் நொடியில் தீர்க்க கண்ணன் கபிஸ்தலத்தில் ஆற்றங்கரையில் நமக்காக காத்திருக்கின்றான். கபியான அனுமன் போல நாமும் அவன் திருவடியில் கிடந்து உய்வோமாக. அடுத்து கஜேந்திர மோக்ஷத்துடன் தொடர்புடைய இன்னொரு தலத்தைப் பற்றிக் காணலாம்.      10. திருவிழி மலரும் கரி வரதராஜப்பெருமாள் []   கஜேந்திர மோட்ச சுதை சிற்பம் (கூடலழகர் விமானம்)  எங்காவது சுவாமி விக்கிரகம் கண் திறந்து பார்க்கின்றது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? என்ன காதில் பூ சுற்றுகிறீர்களா? என்று தானே கேட்பீர்கள். வாருங்களேன் சென்னை நெற்குன்றம் கரிவரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு, பெருமாளை சேவித்த பின் தாங்களும் நான்கு பேரிடம் இது போல அதிசயமான ஒரு கோயில் உள்ளது என்று நிச்சயம் சொல்வீர்கள். இனி இக்கோவிலைப் பற்றிய விவரங்கள்.  யானைக்கும் முதலைக்கும் அருள் புரிந்த கரிவரதராஜப் பெருமாள் இவர், நின்ற கோலத்தில் உபய நாச்சியார்களுடன்  சேவை சாதிக்கின்றார். இக்கோவிலின் அதிசயம் என்னவென்றால். இருட்டில் பெருமாளின் திருக்கண்களுக்கு அருகில் நெய் தீபம் காட்டும் போது அப்படியே பெருமாள் திருக்கண் விழித்துப் பார்த்து அருள்வது போல் உள்ளது. நேரில் சேவிக்கும் போது அப்படியே உடல் சிலிர்க்கின்றது. நெய் விளக்கை கண்களுக்கருகில் காண்பிக்கும் போது விழிகள் அப்படியே நகர்வது போல் உள்ளது. அவசியம் அனைவரும் சென்று சேவிக்க வேண்டிய பெருமாள் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை.     இத்தலத்தின் ஐதீகம் என்னவென்றால் நாம் அனைவரும் அறிந்த  கஜேந்திர மோட்சக் கதைதான். இந்திரத்துய்ம்னன் என்ற அரசன் ஒரு  சிறந்த   விஷ்ணு பக்தன், அகஸ்திய முனிவரின் சாபத்தால் யானையாக மாறி விடுகின்றான். சாப விமோசனம் வேண்ட மஹா விஷ்ணுவினால் உனக்கு மோட்சம் உண்டாகும் என்று அருளுகிறார் அகத்தியர். ஹூஹூ என்ற கந்தர்வனும் முனிவரின் சாபத்தினால் முதலையாக மாறி அந்த யானை மலர் பறித்து பெருமாளுக்குச் சமர்ப்பணம் செய்யும்  புஷ்கரணிக்கு தனது சாப விமோசனம் பெற வந்து சேருகின்றது.   ஒரு நாள் அம்முதலை யானையின் பாதத்தைப் பற்றித் தண்ணீருக்குள் இழுக்க, தன் தும்பிக்கையில் உள்ள மலர் வாடுகின்றதே என்று, யானை  “ஆதி மூலமே” என்று அலறுகின்றது. இங்கு ஒரு  சிறு மாற்றம்  பெருமாள் கருடன் மேல் விரைந்து வந்து சுதர்சனாழ்வாரை அனுப்பி யானை முதலை இரண்டையும் தூக்கித் தரையில் போடுமாறு அனுப்புகின்றார். சக்கரத்தாழ்வாரும் அவ்வாறே செய்ய தரையில் வந்தவுடன் யானைக்கு பலம் கூடி முதலைக்குப் பலம் குறைந்து விட்டதால் யானை காலை விடுவித்துக்கொண்டு தன் துதிக்கையில் இருந்த மலரை அந்த ஆதிமூலத்தின் பாத கமலங்களில் சமர்ப்பணம் செய்யப் பெருமாள் யானை, முதலை இருவருக்கும் வைகுந்தப்பேறு அளித்த பக்த வத்சலனாக,  பரம காருண்ய மூர்த்தியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.   யானை, முதலை இரண்டிற்கும் அருளிய பெருமாள் என்பதால் தன்னிடம் வந்து சரணடையும் பக்தர்களின் குறைகள் அனைத்தும் தீர்த்து அருளுகின்றார் அத்தன் எந்தை ஆதிமூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த எம்பெருமான் இவரிடம் வேண்டிக் கொண்டு திருமணம் முடித்தவர்கள்,  குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் அநேகர். இவரிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் எல்லாம் நிச்சயமாக நிறைவேறுகின்றன. தங்களின் கோரிக்கை நிறைவேற அன்பர்கள் தங்களது ஜாதகத்தை 27 ரூபாய் செலுத்தி (ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு ரூபாய் வீதம்) பெருமாளின் திருவடிகளில் வைத்து  ஆரத்தி காட்டும் போது  யானைக்கும் முதலைக்கும் அருளிய அருளானன் தன் திருக்கண்கள் மலர்ந்து அருள்வதால்  இருக்கின்ற தோஷங்கள் எல்லாம் விலகி அனைத்து நன்மைகளும் நினைக்க முடியாத வேகத்தில் நடந்து முடிகின்றன. அத்திருக்கோவிலின்   மூலவர்:  ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள்  உற்சவர்: சத்திய நாராயணப் பெருமாள்  தாயார் : பெருந்தேவித்தாயார். (தாயாருக்கும், ஆண்டாளுக்கும் தனி சந்நிதி தற்போது அமைக்கப்பட்டுள்ளது.)   மற்ற சந்நிதிகள்: திருவடி, இராமானுஜர் மற்றும் சேனை முதலியார்.   பௌர்ணமியன்று சத்ய நாராயண பூஜை நடைபெறுகின்றது. ஆனி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி 3 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. முதல் நாள் திருமஞ்சனம், இரண்டாம் நாள் கருட சேவை, மூன்றாம் நாள் திருக்கல்யாணம் இரவு சேஷ வாகன சேவை. பெருமாளுக்கு நெல்லிகாய் நிவேதனம் மிகவும் விசேஷம்.  இத்தலத்தில் அடியேனுக்கு ஒரு அருமையான பாடம் கிட்டியது அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். பொதுவாக வைணவ ஆலயங்களில் தீர்த்தம் பெற்றபின் அதை கண்ணில் ஒற்றிக்கொண்டு பருகிய பின் அதை தலையில் தேய்த்துக்கொள்ளும் பழக்கம் பலருக்கு உண்டு அது போன்ற பழக்கம் அடியேனுக்கும் இருந்தது. இத்தலத்தில் அவ்வாறு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினர், அதற்கான  அருமையான விளக்கத்தையும் அளித்தனர். தீர்த்தம் கொடுத்த பின்பு பக்தர்களுக்கு சடாரி சாதிப்பார்கள், அந்த சடாரி என்பது பெருமாளின் திருப்பாதங்கள், நமது எச்சில் பெருமாளின் பாதத்தில் படலாமா? ஆகவே தீர்த்தம் பருகிய பின் அதை தலையில் தேய்க்ககூடாது. மேலும் தீர்த்தத்தில் பச்சைக் கற்பூரம் சேர்க்கப்படுவதாலும் அதை முடியில் தடவுவது  நல்லதல்ல என்றனர். அவர்களே தீர்த்தம் எவ்வாறு பெற வேண்டும் என்றும் கூறினர். ஆண்கள் அங்கவஸ்திரம் அல்லது துண்டால் வலது கையைப் பிடித்துக்கொண்டு தீர்த்தம் வாங்கிப் பருகிய பின், இடது கையால் துண்டு கொண்டு  வலது கையைத் துடைத்துக்கொள்ள வேண்டும், பெண்கள் புடவைத் தலைப்பால் வலது கையைப் பிடித்துக்கொண்டு தீர்த்தம் வாங்கிப் பருகியபின், கீழே சிந்தாமல் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்ள வேண்டும்..    பெருமாளை ஆனைக்கு அருள் புரிந்த ஆதிமூலப் பெருமாளாக சென்னை வடபழனியில் சேவிக்கலாம். வடபழனி முருகன் கோவிலுக்கு  அருகிலேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது. பெருமாள் ஆதிலக்ஷ்மி சமேத ஆதிமூல பெருமாளாக இவ்வாலயத்தில்  சேவை சாதித்து அருளுகின்றார்.  மூலவர்  பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சன்னதி முகப்பில் கஜேந்திர மோட்ச சிற்பம் எழிலாக உள்ளது. தாயார் ஆதி லக்ஷ்மி தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். தாயாரை   சர்வ மங்கல மாங்கல்யே! சிவே ஸர்வார்த்த ஸாதிஹே |   சரண்யே த்ர்யம்பஹே தேவி நாராயணி நமோஸ்துதே ||  என்று 108 முறை ஜபித்து வலம் வர எல்லாக் குறைகளையும் நீக்கி அனைத்து நலங்களையும் அருளுகின்றாள்.  இவ்வாலயத்தில் ஒரு பிரம்மாண்ட அரச மரத்தின் அடியில் கரு காக்கும் லக்ஷ்மி, வழக்கறுக்கும் விநாயகர், பிள்ளை வரம் அருளும் சந்தான கோபாலன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இதுவரை கஜேந்திர மோட்சத்துடன் தொடர்புடைய சில ஆலயங்களை சேவித்தோம் அடுத்து அரவப்பகையோனாக சுபர்ணன் விளங்கும் பாங்கைக் காணலாம் அன்பர்களே.        11. அரவப் பகையோன் []   பெரியாழ்வார் தம் பல்லாண்டில் பெருமாளைப்  "பையுடை நாகப்பகைக் கொடியான்"  என்று மங்களாசாசனம் செய்துள்ளார். அதாவது நாகங்களின் பகைவன் கருடன் ஏனென்பதை நாம் அறிவோம், தன் தாய் அடிமையாகக் காரணமாக இருந்தவை நாகங்கள் என்பதால் மாற்றான் தாய் மக்கள் என்றாலும் நாகங்கள் கருடனுக்குப் பகையாயின. வீரமாக அமிர்தம் கொணர்ந்து சாமர்த்தியமாக நாகங்களை ஏமாற்றிய பின் தன் தாயை அடிமைப் படுத்திய அவற்றை அழித்து சின்னா பின்ன படுத்த ஆரம்பித்தான், பின்னர் பிரம்மா, இந்திரன் வேண்டிக்கொண்டதால், தன் அண்ணன் ஆலோசனைப்படி சிறந்த அரவங்களை கருடன் அடக்கி தனது மேனி முழுவதும் ஆபரணமாக அணிந்துள்ளான்.  அவையாவன    பூணூல் : வாசுகி  வலக் கை கங்கணம்: குளிகன்  இடக் கை கங்கணம் : ஆதிசேஷன்  அரையில் அணி: தட்சகன்  மாலை: கார்கோடகன்.  வலக் காது குண்டலம்: பத்மன்  இடக் காது குண்டலம் : மஹாபத்மன்  திரு முடியில் : சங்கபாலன்  கருடன் அரவப்பகையோன் என்பதை ஆழ்வார்கள் இவ்வாறு கூறியுள்ளனர். பையுடை நாகப்படைக் கொடியான், வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பி, அரவப்பகையூர்தியுடையவன் என்று பெரியாழ்வார் பாடியுள்ளனர். அது போலவே பெருமாளின் பாம்பணை ஆதி சேஷனைப் புள்ளின் மெய்ப்பகை என்றும் பாடியுள்ளார் திருமழிசையாழ்வார். குலசேகராழ்வார் இராமபிரான் தனது அவதார நோக்கம் முடிந்து வைகுந்தம் செல்லும் போது அயோத்தி மாநகரிலுள்ள சங்கமம், தாவரம்  முதலான  அனைத்து  உயிர்களையும் பரமபதத்திற்குப் போக செய்து வலிமையுடைய பாம்புகளுக்கு பகைவனான கருடன் மேல் ஏறிக்கொண்டு சென்றதை  அடல் அரவப்பகையேறி என்று பாடியுள்ளார்.   நாக பாசத்தால் இந்திரஜித் இளைய பெருமாளைக் கட்ட, அவர் மயங்கி விழுந்த போது இரண பூமிக்கு வந்து  அக்கட்டிலிருந்து விடுவித்தவன் வைநதேயன். அதற்காக இராமபிரானின் தழுவுதலைப் பெற்றவன்.  "ககநகர கனககிரி கரிமதர நிகம் மயநிஜ கருட கருத நிலலவ களித விஷவத நக்ரகதந"  என்று ஸ்வாமி தேசிகன் இவ்வைபவத்தை பாடுகின்றார்.  யுத்த களத்திற்கு சுபர்ணன் வந்த அழகைக் கம்பர் இவ்வாறு பாடுகின்றார். இளைய பெருமாளின் நிலையைக் கண்டு மனச்சோர்வு அடைந்த வள்ளலான இராமபிரானின் துயரம் தீர்க்கக் கோடிக்காத தூரம் உள்ளவற்றைப் பார்க்கும் வல்லமை பெற்றவனும், நாகக்கணையை ஒழிக்கும் ஆற்றல் மிக்கவனுமாகிய கருடன், குளிர்ச்சி மிக்க கடல் அலைகளைச் சிந்தும்படியாக, உலகின் இருள் நீங்கும்படியாக  தன் அழகிய இரு சிறகுகளையும் அடிக்கும் ஒலி வேத மந்திர ஒலி போல் ஒலிக்க, நாகங்கள் தளர்ச்சி அடையச் சகலத் திசைகளிலும் அழியாத ஒளியைப் பரப்பிய வண்ணம் இருளைச் சுருங்க செய்து, தனது அழகிய கழுத்தில் அணிந்த கோடிக்கணக்கான நாகங்களின் மணி பதித்த மாலைகளோடு, குளிர்ச்சி பொருந்திய மலர்  மாலைகளும், செம்பொன் மாலைகளும். இலைகளால் ஆன வனமாலைகளும்  அவன் சிறகடித்து பறக்கும் போது  எழிலாக அவன் மார்பில் அசையவும், பொன் நெற்றிப் பட்டம் மின்னவும்,   மின்னலால் உருவாக்கப்பட்ட  ஒரு மலை வானத்தில் தோன்றி விளங்குவது போல, கதிரவன் தெற்கில் உதித்து வடக்கு நோக்கி வருவது போல வந்து மலைமேல் அமர்ந்து நெடுநாள் பிரிந்த தனது தலைவனான இராமனின்  திருமேனியைக் கண்டு தொழுது அவன் புகழ் பாடினான். பல்லாயிரத்தின்முடியாதபக்கம்      அவைவீச, வந்துபடர்கால் செல்லாநிலத்தின்இருள்ஆதல்செல்ல,      உடல்நின்றவாளிசிதறுற்று, எல்லாவிதத்தும்உணர்வோடுநண்ணி      அறனேஇழைக்கும்உரவோன் வல்லான்ஒருத்தன்இடையேபடுத்த      வடுஆன, மேனிவடுவும்………..  என்று பல  ஆயிரக்கணக்கில்  அடக்க முடியாத   இறகுகளை    உடைய  கருடனின் இரண்டு சிறகுகளும்  அடித்துக்  கொள்வதால்  பரவுகின்ற காற்றானது   நாகக்கணையால் கட்டுண்டு   விழுந்து  கிடக்கும்   இலக்குவன்  மற்றும்   வானர  வீரர்களுடைய உடலில் குத்தி   நின்ற   அம்புகள்   சிதறிப் போயின;   அவர்களின்  உடல்களில்  ஏற்பட்ட  பழியாகப்   பொருந்திய உடல் தழும்புகளும்  எல்லாவகையிலும் அறிவோடு பொருந்தி அறத்தையே செய்யும் மனவலிமை  மிக்க ஒரு ஞானியின் பால் இடையில் தோன்றிய   பாவத்தைப் போல் நீங்கின என்று கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில் நாக பாச படலத்தில் கம்பர் பாடுகின்றார்.  அப்போது பெரிய திருவடியைப் பார்த்து இராமன் தாங்கள் யார் என்று கேட்க?, “நான் உமக்கு பிரிய தோழன்! உமது பிராணனே வடிவம் எடுத்து வெளியில் சஞ்சரிப்பது போல இருப்பவன். உமக்கு உதவி செய்யவே  வந்தேன்”  என்று   கூறினான்   பெருமாளின் தோழனான கருடன்.       பரம பக்தனான பிரகலாதனை தீண்ட  ஹிரண்யகசிபு பாம்புகளை ஏவிய போது அப்பாம்புகளை துரத்தியவர் கருடன். பாம்பின் விஷத்தை நீக்கும் சக்தி கருடன் இறகு வீசும் காற்றுக்கு உண்டு. அக்கால வழக்கப்படி திருவரங்கத்தில் மேட்டழகிய சிங்கர் ஆமோதிப்புடன் கம்பர் தமது இராமாயணத்தை அரங்கேற்றம் செய்த பிறகு  தில்லையில் மறுபடியும் இராமகாதையை கூறும் போது நாகபாச படலத்தைக் கூறும் அன்று,   பாம்பு தீண்டி இறந்த தில்லை வாழ் அந்தணச் சிறுவன், கருடன் வானில் வந்தவுடன் அவன் காற்று பட்டவுடன் இளைய பெருமாள் உட்பட அனைத்து வீரர்களும்   துள்ளி எழுந்தனர் என்று அவர் பாடிய போது சிதையிலிருந்து  துள்ளி எழுந்தான். கருடனின் சிறப்பைக் கூறும் நாக பாச படலத்தின் சிறப்பு  ஆகும் இது.  எதிரிகளை வெல்ல, விஷங்களை முறிக்க, மந்திர தந்திர தீயசக்திகளை ஒடுக்கக் கருட மந்திரத்தை ஜபிக்கலாம். கார்க்கோடகன் என்னும் நாகத்தை மாலையாக அணிந்துள்ளதால் கருடன் சனி பகவானின் விளைவுகளைத் தடுக்கிறார். இவ்வாறு விடமுடைய பாம்பின் உடம்பையும் உயிரையும் உண்ணும் பறவை கருடன். அக்கருடனுடைய அரைக் கச்சையாக, கைகளில் தோள் வளைகளாக, முடிமேல், காது குண்டலங்களாக விளங்கும் ஆபரணங்கள் எல்லாம் பாம்பு, குடையும் பாம்பு என்று திருமாலின் கருடக்கொடியைப் பற்றிய  பரிபாடல் கூறுகின்றது.      விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம் அவன்   மடிமேல் வலந்தது பாம்பு தொடி பாம்பு தலை மேலது பாம்பு   இறை தலையன பாம்பு படி மதம் சாய்த்தோய் பசும்பூனலை   கொடி மேலிருந்தவன் தாக்கு இரையது பாம்பு.  பொருள்: கொடிய விஷத்தை கொண்ட பாம்புகளை உண்பவன் கருடன். அவன் இடையில், கங்கணமாக,  கீரீடத்தில். ஆபரணமாக உடல் முழுவதும், தலையில், சிறகுகளில் எல்லாம் பாம்பு. அழகிய ஆபரணங்களை அணிந்து பகைவர்களை வென்ற திருமாலே! உனது கொடியில் உள்ள கருடன் பாம்புகளை அழித்து அவற்றை திருவமுது செய்கின்றான்.   திருமுருகாற்றுப்படையில் நக்கீரரும்  திருமாலை அரவப்பகை கொடியோன் என்று இவ்வாறு பாடுகின்றார்  கடும்போடு ஓடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று  அழல் என  உயிர்க்கும் அடுகவரு கடுந்திறல்  பாம்புப்படப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்  புள்அணி நீர்க்கொடி செல்வன்.  பொருள்: நச்சுப்பல் உடையதும், தனல் போல் மூச்சு விடுவதும், அஞ்சத்தக்க ஆற்றல் பெற்றதுமான பாம்பை அடித்துப் புடைக்கும் வலிய சிறகு கொண்ட கருடனைக் கொடியாக உடைய திருமால்.   பெருமாளுக்கு நித்ய சூரிகளாகக்  கைங்கரியம் புரியும் அதே சமயம் பகைவர்களான அனந்தனும் கருடனும் தவம் இயற்றிய தலம் ஒன்று உண்டு அது ஸ்ரீவரமங்கை தலம் ஆகும். ஒரு சமயம்  விநதையின் மைந்தனான கருடன் தன் மாற்றாந்தாய் மக்களாகிய நாகங்களைக் கண்டு வரலாமென்று சென்றான். அப்போது நாகங்கள் கருடனை இகழ்ந்து பேச கருடன் நாகங்களைத் தாக்கினான். விவரம் கேள்விப்பட்ட ஆதிசேஷன் அங்கே வந்து, ‘‘நாம் இருவருமே திருமாலுக்குச் சேவை புரிபவர்கள்; இவ்வாறு இவர்களுடன் நீ சண்டையிட்டாயானால் அது பரந்தாமன் பெயரைக் கெடுக்குமல்லவா?’’ என்று கேட்டு கருடனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான். உடனே கருடன், ‘‘உனக்கென்ன நீ எப்போதுமே உன் தலைகளால் திருமாலுக்குக் குடை பிடிக்கிறாய்; உன் உடலே அவருக்கு படுக்கையாகிறது; எனக்கு அத்தகைய பேறு உண்டா? எப்போது திருமால் வெளியே போகிறாரோ அப்போது மட்டும்தானே நான் அவரைத் தாங்கியபடி உடன் செல்கிறேன்!’’ என்று ஏக்கமாகக் கூறினான்.   அதுகேட்ட ஆதிசேஷன், ‘‘அப்படியானால் நீ நான் தவம் செய்து பெருமாளுக்கு அணையாகும் பாக்கியம் பெற்ற  ஸ்ரீவரமங்கை தலத்துக்குச் சென்று தோத்தாத்ரிநாதரை துதித்து வா; உன் விருப்பம் ஈடேறும்’’ என்றான். அதன்படியே கருடனும் திருமாலைத் துதிக்க, தோத்தாத்ரிநாதன் அவனுக்குக் காட்சி தந்து, ‘‘நீதான் எனக்கு வாகனமாகவே இருக்கிறாயே, இன்னும் என்ன குறை உனக்கு?’’ என்று கேட்டார். ‘‘எனக்கும் ஆதிசேஷனைப் போல உங்களுடனேயே இருக்கும் பாக்கியம் வேண்டும்’’ என்று கேட்டான். திருமால் யோசித்தார். பிறகு சொன்னார்: ‘‘ஆதிசேஷன் நிறைவேற்றும் பொறுப்புப் போல உனக்கு நான் இப்போதைக்கு அளிக்க முடியாது. ஆனால், வைகுந்தத்தில் என் வாசலில் எப்போதும் என்னைச் சுமந்து புறப்படத் தயாரான நிலையில் நீ இருக்கலாம். கலியுகம் வரப்போகிறது. பக்தர்களுக்கு என் சேவை அடிக்கடி தேவைப்படும். அப்போது நீ தயாராக இருந்தால் நான் உன் மீதமர்ந்து என் பக்தர்களுக்கு உதவ முடியும். அதாவது கிட்டத்தட்ட நான் உன் மீது நாளெல்லாம் பயணிக்கும் சூழ்நிலை வரும்’’ என்றார், தோத்தாத்ரிநாதர். காலத்தையே நிர்ணயிக்கும் அவருடைய பதிலால் திருப்தியடைந்தான் கருடன். தோத்தாத்ரிநாதர் அமர்ந்திருப்பதால் அவரது ஒரு பாதத்தை மட்டுமே தரிசிக்க முடிகிறது. பெருமாள் பிரயோக சக்கரம் ஏந்தியிருப்பது, கருடனுக்கு அவர் கொடுத்த வாக்கை நினைவூட்டுகிறது.  இத்தலத்தில் சுயம்பு கருடன் எப்போதும் புறப்பட தயாரான நிலையில் சேவை சாதிக்கின்றார்.   சிறுபுலியூர் திவ்யதேசத்தின்  தல வரலாறும்  இக்கருட நாக  பகைமையை அடிப்படையாகக்  கொண்டதே.  இத்தலத்தைப் பற்றிய வரலாறு கருட புராணத்தில் பேசப்படுகிறது.  பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது . இருவருக்கும் போட்டியும் வெறுப்பும் வளர்ந்து   பகையாக    மாறியது. இந்தப் பகை விலக எண்ணம் கொண்டு இத்தலத்தில் வந்து ஆதிசேஷன் தவமிருந்தார்.  அவர் தவத்திற்கிரங்கி மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தன்று அவருக்கு சேவை சாதித்த பெருமாள், ஆதி சேஷன் மடியில் சிறு குழந்தையாக “பால சயனத்தில்” கோயில் கொண்டார். அதாவது பாற்கடலில் மிதக்கும் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் கோலத்தில் சேவை சாதித்தார். எனவே இத்தலத்தில் உயரே ஆதிசேஷன்  சன்னதி அமைந்திருக்க  பூமிக்குக்கீழ் கருடனுக்கு சன்னதி அமைந்துள்ளது. “கருடா சௌக்கியமா?”  என்று கேட்டதற்கு அவரரவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் சௌக்கியம் என்று சொல்லப்பட்ட தலம்.    சலசயனம், பால வியாக்ரபுரம்,  என்றும் அழைக்கப்படுகின்றது.  சலசயனன் என்றது பெருமாளுக்கு திருநாமமாய் ஜலசயனன் வர்த்திக்கிற இடம் சலசயனம் என்று ஊருக்கு பெயராகிறது  என்பது வியாக்கியான சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் வியாக்கியானம். திருநாகையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் இத்தலம் அமைந்துள்ளது.   இனி இத்தலம் சிறுபுலியூர் என்று ஏன் அழைக்கப்படுகின்றது என்பதைக் காணலாமா அன்பர்களே.  வியாக்கிரபாதர் என்னும் புலிக்கால் முனிவர் சிதம்பரத்தில் தவமியற்றி தனக்கு மோட்சம் வேண்டுமென்று நடராஜரிடம் கேட்க, மோட்சம் கொடுக்க வல்லவர் மகாவிஷ்ணுவே என்று நடராஜர் கூற, அவ்வாறாயின் அதற்குரிய தலத்தை எனக்கு காண்பியும் என்று முனிவர் வேண்ட நடராஜர் சிவலிங்க ரூபமாக வழிகாட்ட அவரை விரைந்து பின்பற்றுவதற்கு தாம் பெற்ற வலிமையால் விரைந்து செல்லும் புலியின் கால்களால் இத்தலத்திற்கு வந்து சேர்ந்து முக்திபெற்றதால் இதற்குச் சிறுபுலியூர் என பெயர் வந்ததென்பர்.   கள்ளம்மனம்விள்ளும்வகை கருதிக்கழல்தொழுவீர் வெள்ளம்முதுபரவைத் திரைவிரிய கரையெங்கும் தெள்ளும்மணிதிகழும் சிறுபுலியூர்ச்சலசயனத் துள்ளும் எனதுள்ளத்துள்ளும் உறைவாரை உள்ளீரே  (பெ.தி 7-9-1) பொருள்:  மனத்திலிருந்து வஞ்சகச்செயல் விட்டு நீங்க வேண்டும் வகையை விரும்பி இருப்பவர்களே! கடலின் அலைகளால் உண்டான வெள்ளமானது கரைகளில் பரவ அதனால் கொணரப்பட்ட இரத்தினங்கள் விளங்கும் சிறுபுலியூரில் சலசயனம் என்னும் சன்னதியிலும், என்னுடைய உள்ளத்திலும் நித்திய வாசம் செய்யும் பெருமானை சிந்தனை செய்யுங்கள் என்று இத்தலத்தில் வாசம் செய்யும் பெருமாளே தன் உள்ளத்திலும் வாசம் செய்கின்றார் என்று மங்களாசானம் செய்த  இச்சிறுபுலியூர் தலத்தின்    மூலவர்:  சலசயனப் பெருமாள், தெற்கே திருமுக மண்டலம்,   புஜங்க சயனம்.  உற்சவர்:   கிருபா சமுத்திரப் பெருமாள்  - தாயார்:      திருமாமகள் நாச்சியார், உற்சவர்:      தயாநாயகி  தீர்த்தம்:     மானச புஷ்கரிணி  விமானம்:     நந்தவர்த்தனம்  தல விருட்சம் : வில்வம்  பிரத்யட்சம் :  வியாசர், வியாக்ரபாதர். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108  திவ்ய தேசங்களுள் இத்தலம் 11வது தலமாகும். பெருமாள் தெற்கு நோக்கிய திருமண்டலத்துடன் சேவை சாதிக்கும் தலங்களுள் ஒன்று மற்றது திருவரங்கம் ஆகும்.  இங்கு சிறு குழந்தை வடிவத்திலும் திருவரங்கத்தில் பெரிய வடிவனராகவும் சேவை சாதிக்கின்றார்.   பெருமாளை நெடியோனாகச் சேவித்தவர்களுக்கு  இந்த பால வடிவம் வித்தியாசமாக தோன்றலாம். இந்த ஏமாற்றம் திருமங்கையாழ்வாருக்கும் ஏற்பட்டது. புலிக்கால் முனிவர் சேவிக்க வந்த போது பெரிய வடிவில் இருந்த பெருமாளை தான் ஆராதிக்க முடியாது என்று வேண்ட பெருமாள் தன்னைத்தானே சுருக்கிக்கொண்டார். ஆனால் இது ஆழ்வாருக்கு திருப்தியளிக்கவில்லை. எனவே பெருமாள் அசரீரியாக “நீ காண விரும்பும் வடிவை  திருக்கண்ணமங்கையில் காண்பாயாக” என்று அருளிச்செய்தார். திருவனந்தபுரத்தில் மூன்று வாயில்களுக்கிடையில்  சிரசு, மார்பு, திருவடி என்று தலையை இட ஒரத்திற்கும், வல ஓரத்திற்கும் அசைத்து சேவிக்க வேண்டிய அவசியம் போல திருக்கண்ணமங்கையில் தலையை கீழிருந்து மேலாக கழுத்தை வளைத்துப் பார்க்கவேண்டியது அவசியம்.   பகவானின் அண்ணாந்த  நெடிய தரிசனத்துக்கு முன்னால் கழுத்து வலி தெரியுமா என்ன? திருக்கண்ணபுரத்தில் வேறு அமைப்பில், பிரம்மாண்டமாகத் தமக்குத் தரிசனம் தர உத்தரவாதம் அளித்திருக்கும் பெருமாளின் கருணையில் நெகிழ்ந்து  இந்தத் திருச்சிறுபுலியூர் பெருமாளை உள்ளம் உருகி    கருமா முகிலுருவா!  புனலுருவா! கனலுருவா!  பெருமால்வரையுருவா! பிறவுருவா! நினதுருவா!                        திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச்சலசயனத்து அருமாகடலமுதே! உனது அடியே சரணாமே !  (பெ.தி 7-9-9)  பொருள்:  கரிய பெரிய மேக வண்ணனே! அன்பில்லாதவர் அணுக முடியாதபடி நெருப்பைப் போலும் உருவமுடையவனே!  நீர் போல குளிர்ந்த வடிவுடையவனே! பெரிய மலை போன்ற உருவத்தை உடையவனே! மற்றுமுள்ள பொருள்களின் வடிவமாக உள்ளவனே!    அசாதரணமானவனே திவ்ய மங்கள வடிவானவனே!  பெரிய பிராட்டியார் பொருந்தி வாழும் சிறுபுலியூர் சலசயனத்து அரிய கடலமுதம் போன்றவனே! உன்னுடைய திருவடிகளே அடியேனுக்கு புகலிடமாகும் என்று  அருமா கடலமுதே என்று பெருமாளையும், திருமாமகள் என்று தாயாரையும்  சிறுபுலியூர் சலசயனம் என்று தலத்தையும் ஒரே பாசுரத்தில்  மங்களாசாசனம் செய்திருக்கிறார் திருமங்கையாழ்வார்.  ஏழு நிலை  ராஜகோபுரத்துக்கு அடியிலேயே பால ஆஞ்சநேயர், பெருமாளின் பால சயனத் தோற்றத்துக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்துள்ளார். வித்தியாசமாக ஆண்டாள் சன்னதி தனியாக வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. ஆண்டாள் சன்னதிக்கு அருகில் பக்த ஆஞ்சநேயர் விநயத்துடன் சேவை சாதிக்கின்றார். இவர்களுக்கு எதிரே யாக சாலையும் ஆழ்வார்கள் சன்னதியும் அமைந்துள்ளது.   சிறு குழந்தை போலச் சல சயனத்தில் சேவை சாதிக்கும் மூலவரை தரிசித்துவிட்டு கருவறையை வலம் வந்தால், விநாயகரையும் அவர் முன் பலிபீடத்தையும் காணலாம்.  கோஷ்டங்களில்  மஹாவிஷ்ணுவின் பல்வேறு கோலங்கள், விஷ்ணு துர்க்கையும் அருள் பாலிக்கின்றாள்.  தாயார் திருமாமகள் நாச்சியார் தனிச் சன்னிதியில் அருள் பாலிக்கின்றாள். உற்சவர் தயாநாயகி என்ற திருநாமத்துடன் கருணையின் முழு வடிவமாக  எழிலாக உடன்  சேவை சாதிக்கின்றாள்.  பூமிக்குக் கீழ்க் கருடனுக்கு தனி சன்னதி. ஆதி சேஷன் அனந்த புஷ்கரணிக் கரையில் எழுந்தருளியிருக்கிறார். .  இவர் அனைத்து  வகையான நாக தோஷங்களையும் சர்ப்ப கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளையும்  தீர்க்க வல்லவர்; மகப்பேறும் அருள்பவர்.  கிழக்கு நோக்கி மணவாள மாமுனிக்கு மூன்று  நிலை இராஜகோபுரத்துடன் தனி சன்னதி உள்ளது. பெருமாள் இராஜ கோபுரமும், ஆச்சார்யார் இராஜகோபுரமும் அருகருகே உள்ள அமைப்பு அருமையாக உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வருகிறார்கள்., காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம்,  திருமணத்தில் தடை, நவக்கிரக பரிகாரம் என, பல்வேறு தடை சிரமங்களைச் சந்திப்பவர்களுக்கு இந்தப் பெருமான் அருள்புரிந்து ஆறுதல் தருகின்றார் என்பது நம்பிக்கை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், இங்கே வந்து, சிறப்பு  வழிபாடுகளைச்  செய்து, நலம் பல பெற்றுச் செல்கின்றனர்                             12. கருட கம்பம் []   இராஜமன்னார்குடி கருடகம்பம் முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன், பூ மன்னு மாது பொருந்திய மார்பன், மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பன், விஷ்ணு பகவானின் வாகனமான கருடனுக்கு மட்டும் ஒரு தனி சிறப்பு உண்டு அது என்னவென்றால் வைஷ்ணவ ஆலயங்களில் கொடி மரம் “கருட கம்பம்”  என்று அழைக்கப்படுகின்றது.   பெருமாள் ஆலயங்களில் துவஜஸ்தம்பங்களில் பெரிய திருவடி நித்ய வாஸம் செய்வதால் அவை கருடஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகின்றன என்பது ஐதீகம். தன் தாயின் அடிமைத் தளையை நீக்க வைநதேயன் அமிர்தம் கொணர்ந்த போது,   பெருமாள் கருடனை வாகனமாக ஏற்ற போது வெற்றிக்கு அறிகுறியாக நீ எனது கொடியிலும் விளங்குவாய் என்று வரம் கொடுத்தார் எனவே எம்பெருமானின் கொடியிலும் கருடனே விளங்குகின்றான். இதை நம்மாழ்வார் ஏறுமிருஞ் சிறைப்புள் அதுவே கொடியாவுயர்த்தான், , ஊரும் புட் கொடியும் அஃதே என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.   பெருமாள் கருட வாகனன் என்பதை பறவையேறும் பரம்புருடன், புள்ளின் தலைவன், பறவையரையன், புள்ளூரும் கள்வன், ஆடற்பறவையன், புள்ளூர்ந்த செல்வன், அஞ்சிறைப்புள் தனிப்பாகன், பொறிகொள் சிறை உவணமூர்ந்தான், புள்ளூர்தி, பொலிந்த கருடன் மேல் கொண்ட கரியான், பொழிலளந்த புள்ளூர்தியான், அசுரர் மங்கக் கடாவிய வேகப்பறவையின் பாகன், அருளாழி புள்கடவர், தூவியம் புள்ளுடையாய், செழும் பறவை தானேறித் திரிவான், புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர்  குலங் கெடுத்தான்,  செழும் பறவைத் தானேறித் திரிவான், பாய் பறவையொன்று ஏறி வீற்றிருந்தான், வெங்கண் பறவையின் பாகனெங்கோன், பறவை முன்னுயர்த்து பாற் கடல் துயின்ற அஞ்சிறைப் புட்பாகன், ஆடும் பறவை மிசையான், வெங்கண் புள்ளுர்ந்து வந்து நெஞ்சம் கவர்ந்த செங்கண் கருமுகில், மீளியம் புள்ளைக் கடாய், கறையணி மூக்குடைப்புள்ளைக் கடாவி அசுரரை காய்ந்தவம்மான், பொருசிறைப்புள்ளை கடாவிய மாயன் ஆயன், மாவியம் புள் வல்ல மாதவன், கொடியா வடு புள்ளுடையான், பொருசிறை புள் வந்தேறும்  பூமகளார் தனிக் கேள்வன், என்று ஆழ்வார்கள் பலவாறு பாடியுள்ளனர்.  மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்து   புள்மிசை கொடியோனும்,  தண் துழாய் மார்பன் திருமால் புட்கொடியோன்  என்று பரிபாடல் கூறுகின்றது.  மையோ! மரகதமோ, மறிகடலோ, மழைமுகிலோ ஐயோ! இவன் வடிவழகென்பதோர்  அழகுடைய எம்பெருமானின் எதிரே சேவை சாதிப்பவர் கருடன். எவ்வாறு நிலைக்கண்ணாடி தன் எதிரே உள்ள பிம்பத்தை பிரதிபலிக்கின்றதோ அது போல எம்பெருமானின் திவ்ய சொரூபத்தை, திவ்ய கல்யாண குணங்களை காட்டியருள்பவர் கருடன்.  ஆகமம் என்றால் வருகை என்று பொருள். உபதேச வழியாக வருபவை அவை. ஆன்மாக்கள் மோட்சம் அடைய மலநாசம் செய்பவை ஆகமங்கள். திருக்கோவில் கட்டுவதற்கு நிலம் தேர்ந்தெடுப்பது முதல் பூஜை முறைகள் முடிய அனைத்தும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. ஆகமங்களின் படி ஐந்து நாட்களுக்கு மேற்பட்ட திருவிழாக்களின் போது கொடியேற்றம் அவசியம். எனவே வைணவத்தலங்களில் பிரம்மோற்சவத்தின் போது எம்பெருமானுடைய கொடியாகிய கருடக்கொடி ஏற்றப்படுகின்றது. அது ஏற்றப்படும் கொடிக்கம்பம் கருடகம்பம் என்றும் அழைக்கப்படுகின்றது.   பிரம்மோற்சவ துவக்கமாக துவஜாரோகணத்தின் போது முதலில் கருடக்கொடி புறப்பாடாகி வருகின்றது, பின்னர் அதில் வேத மந்திரங்கள் ஓதி கூர்ச்சத்தினால் தொட்டு பிராணப் பிரதிஷ்டை செய்யப்படுகின்றது. அப்போது “கருத்மான்! நீரே மஹா விஷ்ணுவின் வாகனம், வேதாத்மா, அளவற்ற காந்தி உடையவர், தாயை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க அமிர்தம் கொண்டு வந்தவர், அரவப் பகையோன், பெருமாளின் திரு முன்பு அஞ்சலி ஹஸ்தத்துடன் நின்று கொண்டிருக்கிறீர், உம்மை துதிப்பதால் எல்லா நன்மைகளும் உண்டாகும்,  எல்லாவற்றிலும் ஜெயம்”  என்று துதிக்கப்பட்டு கருடக்கொடி கருடகம்பத்தில்  ஏற்றப்படுகின்றது.   []     உயரப் பறக்கும் கொடி மூலம் உயர உயரப் பறக்கும் கருடக்கொடி ஏற்றிய பின், கருடன் தேவலோகம், சத்யலோகம் மற்றும் அனைத்து லோகங்களுக்கும் சென்று  தேவேந்திரன், அக்னி, வாயு, எமதர்மன், அஸ்வினி குமாரர்கள், சப்த ரிஷிகள், கின்னரர், கந்தர்வர்கள் அனைவரையும் பெருமாளின் பிரம்மோற்சவத்தை வந்து காணுமாறு அழைப்பதாக ஐதீகம்.  சில தலங்களில் இராஜ கோபுரத்திற்கு வெளியே எந்தப் பறவையும் பறக்க முடியாத உயரத்தில் பறக்கும் கருடனுக்கு ஒரு ஸ்தம்பத்தின் மேல் உயர்ந்த சன்னதி அமைக்கின்றனர்.  இவையும் கருடகம்பம் என்றே அழைக்கப்படுகின்றன. இவ்வாறு கருங்கல்லால் அமைக்கப்பட்ட சில உயர்ந்த சிறப்பு மிகுந்த  கருடகம்பங்களை தரிசனம் செய்யலாமா? அன்பர்களே.  மிக உயர்ந்த கருடகம்பத்தை நாம் ஸ்ரீமுஷ்ணத்தில் தரிசிக்கலாம். நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன், பந்திருக்கும் மென்விரலாள் பனிமலராள் வந்திருக்கும் மார்பன், எம்பெருமான்  பூவராகராக  எழுந்தருளி அருள் பாலிக்கும் அபிமான தலம் ஸ்ரீமுஷ்ணம். பெருமாள் தானே தோன்றிய ஸ்வயம்வக்த க்ஷேத்திரங்களுள் ஒன்று. இங்கு பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்புமூர்த்தியாக சேவை சாதிக்கின்றார். தானே தோன்றிய மூர்த்திகளைக் கொண்ட வைணவத்தலங்கள் எட்டு அவையாவன. 1. ஸ்ரீரங்கம் 2.ஸ்ரீமுஷ்ணம் 3. திருப்பதி 4. வானமாமலை 5. சாளக்கிராமம் 6. புஷ்கரம் 7. நைமிசாரண்யம் 8. பத்ரிகாச்ரமம்  ஆகும்.  இரண்யாட்சனை வதைத்து பூமிபிராட்டியாரை மீட்ட பெருமாள் இங்கே முஸ்லீம்களும் வணங்கும் பெருமாளாய்ச் சேவை சாதிக்கின்றார். பெருமாளையும் ஏழுநிலை இராஜகோபுரத்தின் உயரத்திற்கு இனையாக ஓங்கி உயர்ந்திருக்கின்றது கருடகம்பம். அதன் உச்சியில் உள்ள கருடமண்டபத்தில் கருடாழ்வார் எழிலாக  சேவைச் சாதிக்கின்றார்.   பெருமாள் ருக்மிணி பெருமாட்டியாருடன் ஸ்ரீவித்யா இராஜகோபாலராய் திருக்கரத்தில்  செண்டாயுதம் ஏந்தி ஒய்யாரமாய் எழில் கொஞ்சும் குழந்தையாக எழுந்தருளி சேவை சாதிக்கும் இராஜமன்னார்குடி அபிமான தலத்தில் உள்ள கருட கம்பம் இரண்டாவது உயரமான கருடகம்பம் ஆகும். மன்னார் குடியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பரவாசுதேவப் பெருமாள், நின்ற கோலத்தில் மூலவராகக் காட்சியளிக்கிறார். திருப்பதி கோயில் போன்று, கீழே தரைப் பகுதியிலிருந்து (பீடமின்றி) நின்ற ஆஜானுபாகுவான 7 அடி உயரத்தில் நெடியோனாகச் சேவை சாதிக்கின்றார். இவரை தங்க கவசத்தில் சேவிக்க கோடிக்கண் கூட போதாது.   உற்சவர் ருக்மணி-சத்யபாமா சமேத ராஜகோபாலன், மாடு மேய்க்கும் திருக்கோலமாக பசு மீது சற்றே சாய்ந்தபடி காட்சியளிக்கின்றார். ஒற்றை ஆடையுடன் ஒரு காதில் குண்டலத்தையும், மற்றொரு காதில் கோபியர் தோட்டையும் அணிந்து கொண்டு, ஒரு கையின் நுனியில் மூன்று வளைவுள்ள  செண்டு எனும் தங்கக் கோலை ஏந்தியும், இடத் திருக்கரத்தால் சத்யபாமாவின் திருத்தோளை அனைத்தபடியும் அருள்காட்சி தருகின்றார். வலப்புறத்தில் ருக்மணியுடன், நெற்றியில் கஸ்தூரி திலகமும், உதடுகளில் விரிந்த புன்னகையும், இமைகளில் மானுடத்தைக் காக்கும் எண்ணமும், உடலில் பெண்ணுக்குரிய நளினமும் கொண்டு, ஆயிரம் மன்மதனைப்போல அழகிற்கு அழகு சேர்க்கும் ராஜகோபாலனின் திருக்காட்சி காணக் காணப் பரவசம். சந்தேகமேயின்றி, "கோபியர் கொஞ்சும் ரமணனாக இந்த வித்யா இராஜகோபாலன் சேவை சாதிக்கின்றார்.  இத்தலத்தில் எம்பெருமான் காட்டிய திருக்கல்யாண குணம் அநந்ய தைவதவம் ஆகும் அதாவத தன்னையொழிய வேறு தெய்வமில்லை என்பதாகும். கண்களில் சொக்கவைக்கும் மாயப் புன்னகையுடன், ஒரே ஒரு துணியை மட்டும் அணிந்து கொண்டு (ஏக வஸ்திரதாரியாக) இடைக்குலத்தவரைப் போல தலையில் அதே துணியாலேயே முண்டாசு கட்டி ஒய்யாரமாகச் சாய்ந்து நிற்கும் அக்கவின் அழகைக் காணும்  கண்கள் பேறு பெற்றவை என்பதில் எந்தச் சந்தேகமும் தேவையில்லை. திருவடியான ஆஞ்சனேயர் ஸ்ரீஇராமாவதாரத்தின் போது இராமரின் தூதராக இலங்கைக்கு ஸ்ரீசீதாபிராட்டியாரிடம் சென்றது போல, பெரிய திருவடியான ஸ்ரீகருடன் கிருஷ்ணாவதாரத்தில் தாயாரான ஸ்ரீருக்மணிபிராட்டியார் எழுதிக்கொடுத்த ஓலையை எடுத்துக்கொண்டு எம்பெருமானான ஸ்ரீகிருஷ்ணனிடம் தூது சென்றார். அக்கருடன்  54அடி  கருட கம்பத்தின் உச்சியில்  தனி சந்நிதியில் சேவைச் சாதிக்கின்றார். இராஜகோபுரத்திற்கு வெளியே நெடிதுயர்ந்து விளங்குகின்றது இந்த கருட கம்பம்.  பஞ்ச கிருஷ்ணத் தலங்களில் முதலாவதானதும், நாலாயிர திவ்ய பிரபந்தம்   முதலில் தோன்றிய தலமும்,  ஓங்கி உலகளந்த உத்தமன்,  அன்றிவ்வுலகம் அளந்தான்,  அம்பரமூடுறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் என்றெல்லாம் கோதை நாச்சியார் மங்களாசாசனம் செய்த திரிவிக்கிரமனாகவும். மஹாபலியிடம் யாசகம் பெற சென்ற வாமன மூர்த்தியாகவும்  பெருமாள் இடது திருவடியால்  பூமியை அளந்து, வலது திருவடியால்  வானுலகை அளந்து மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று மஹாபலியிடம் தனது வலது கரத்தின் விரலால் கேட்கும் பாவனையில் உயர்த்திய வலது திருவடிக்கு பிரம்மா பாதபூஜை செய்ய நெடியோனாய் பெருமாள் எழிலாக மஹாபலியை தன்னுடன் சேர்த்துக் கொண்ட மகிழ்ச்சியில்  வலக்கரத்தில் சங்கமும், இடக்கரத்தில்  சக்கரமும் எந்தி ஞானம் வழங்கும் கோலத்தில் சேவை சாதிக்கும்   திருக்கோவலூர் திவ்ய தேசத்தில் 40 அடி உயர கருட கம்பத்தின் உச்சியில் கருடனை சேவிக்கலாம்.         []     மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கருடசேவை மலை நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான  திருவல்லவாழ் என்னும் தலத்தில் பெருமாள் திருவாழ்மார்பனாக அற்புதமாக சேவை சாதிக்கின்றார். இத்தலத்தில் துவஜஸ்தம்பத்திற்கு சற்று பின்னால் 50அடி உயரமுள்ள கோபுர வடிவிலான மண்டபத்தில்  தமது இரு கரங்களையும் விரித்துக் கொண்டு இதோ பறக்கப் புறப்படுகின்றேன் என்ற கோலத்தில் அருமையான பஞ்ச லோக பெரிய கருடன் சிலை உள்ளது..  இந்த தோற்றத்தைக் காணும் போது மிகவும் வியப்பாக உள்ளது. காலைச் சூரிய ஒளியில் கருடன் மின்னும் அழகே தனி.  மிக புதுமையாக மண்டபத்தின்    சுவரில் அருமையான கருடனின் ஓவியங்கள் உள்ளன. மண்டபத்தின் முன்னால் சாய்வாக ஒரு பாறை சிதறு காய் போடுவதற்கு ஏதுவாக அமைத்துள்ளனர்.   கர்நாடகாவில் உள்ள குக்கே சுப்ரமண்யா தலத்தில் கருவறைக்கு முன் மண்டபத்தில் வெள்ளிக் கவசத்துடன் கூடிய 20 அடி உயர கருடஸ்தம்பம் உள்ளது. கருவறையை வலம் வரும் போது இந்த ஸ்தம்பத்தையும் சேர்த்துத்தான் வலம் வர வேண்டும். கருட மந்திரம் கொண்டு நிறுவப்பட்டுள்ளதால் இந்த ஸ்தம்பம் விஷ தோஷங்களை நீக்குகின்றது என்பது ஐதீகம். கருட கம்பத்தின் மேலே கலசம் அமைத்துள்ளனர்.     இது வரை சில நெடிதுயர்ந்த கருட கம்பங்களை சேவித்தோம். அடுத்து கருடன் கருடாழ்வான் ஆன சரிதத்தைக் காணலாமா அன்பர்களே.                                                                 13. கருடாழ்வார் []   ஆழ்வார்கள் எம்பெருமானின் திருவருளினால் மயர்வற மதிநலம் பெற்றுத் திருமாலாகிய அவரின் பேர் எழிற் பொய்கையுள் ஆழ மூழ்கிக் கவி பாடியவர்கள். ஆழ்வார்கள் திவ்ய சூரிகள். திவ்ய பிரபந்தத்தை அருளியவர்கள். ஆழ்வார்களின் அருளிச் செயல்களான திவ்யபிரபந்தங்கள் உபயவேதாந்தங்கள் ஆகும்.  எனவே தான்   ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி  ஏழ் பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தான் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்த்து – (உ.ர 3)  பொருள்: பொய்கையார் முதலான ஆழ்வார்கள் வாழ்க! அவர்கள் தாழ்வு ஏதும் இல்லாது அருளிச் செய்த திவ்யபிரபந்தங்கள் வாழ்க!  எம்பெருமானார் முதலான ஆச்சாரியர்கள் வாழ்க!  ஏழுலகங்களும் உய்ய இவ்வாசிரியர்கள் அருளிச்செய்த ஸ்ரீசுக்திகள்  செம்மையான வேதங்களோடு சேர்ந்து வாழ்க என்று வாழ்த்துகின்றார் மணவாள மாமுனிகள்.   எம்பெருமானின் கல்யாண குணங்களில் ஆழ்ந்து பாசுரங்கள் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆயினும் ஆழ்வார் என்று அழைக்கப்படுபவர்கள் இன்னும் சிலரும் உண்டு.  இவர்கள்  கருடாழ்வார், இளையாழ்வார், அனந்தாழ்வார், பிரகலாதாழ்வார், கஜேந்திராழ்வார், சக்கரத்தாழ்வார், விபீஷணாழ்வார், சுவாமி நம்மாழ்வார் திருக்குறுங்குடியில் 14 வருடம் அமர்ந்து ஞானம் பெற்ற புளியாழ்வான் ஆகியோர் ஆவர். இப்பதிவில் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் பெரிய திருவடியாம் கருடன் எவ்வாறு கருடாழ்வார் என்னும் சிறப்புப் பெற்றார் என்பதைக் காண்போம்.  அதற்காக நாம் அஹோபிலம் செல்ல வேண்டும், செல்வோமா?  கிருத யுகத்தில் இந்த அஹோபிலம் தான் ஹிரண்யகசிபுவின் அரண்மனை, தன் தமையனாகிய ஹிரண்யாட்சனை வதம் செய்து மஹாவிஷ்ணு பூமிப்பிராட்டியாரை மீட்டதால் ஹிரண்யகசிபு அவர் மேல் கடும் கோபம் கொண்டிருந்தான், மேலும் அரிய வரங்கள் பெற்றுத் தானே கடவுள் என்றும் யாரும் விஷ்ணுவை வணங்கக்கூடாது என்று கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்தான்.   ஆனால் இறைவனின் திருவுள்ளப்படி அவன் மகனாகப் பரம பக்தனாக, தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே நாரத மஹரிஷியின் மூலம்  "ஓம் நமோ நாராயணாய"  என்னும் அஷ்டாட்சர மந்திர உபதேசம் பெற்றவனாகப் பிரகலாதன் பிறந்தான். அவன் வளர வளர அவனது விஷ்ணு பக்தியும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்தது. அவனைக் கண்டு ஹிரண்யகசிபுவின் கோபமும் வளர்ந்தது. மகன் என்று கூடப்பாராமல் பல்வேறு வழிகளில் அவனைக் கொல்லப் பார்த்தான் ஆனால் ஒவ்வொரு முறையும் நாராயணன் தன் பக்தனைக் காப்பாறினார். இறுதியாக ஒரு நாள் கோபம் தலைக்கேறி  "எங்கிருக்கிறான் உன் நாராயணன்" என்று ஆணவத்துடன் கேட்டான் ஹிரண்யகசிபு ஆக்ரோஷத்துடனும், ஆணவத்துடனும் தன் எதிரே பயமுறுத்தும் விதத்தில் நின்று மிரட்டிய தன் தந்தையானவனை கண்டு சிறிதும் கலங்காமல் திடபிரக்ஞனாய் அந்த சர்வேஸ்வரன் மேல் கொண்ட பக்தியால் அவர் எப்படியும் தன்னைக் காப்பார் என்ற நம்பிக்கையுடன் பிரகலாதன் அமைதியாக அவர்  "தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்"  என்று பதிலிறுத்தான். மூர்க்கமாக தன் கதாயுதத்தால் தனது அரண்மணை மண்டபத்தின்   ஒரு தூணைத் தாக்கினான் ஹிரண்யன்.  அதே நொடியில் "அண்டமெல்லாம் நடுங்கும்படி அத்தூண் பிளந்தது அதிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் வஜ்ர நகங்களும் கொண்டு சிங்கப்பெருமான் ஆவிர்பவித்தார்"  பெருமாள் தன் அன்பன் சொன்ன சொல்லை மெய்பிக்க அப்போதே தோன்றிய  இந்த அற்புதத்தை பெரியாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்  அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்கவுருவாய் உளந்தொட்டிரணியன் ஒண்மார் வகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலையுண்டானே! சப்பாணி. (பெரி.தி 1-6-9)  பொருள்: இரணியன் தானே அளந்து கட்டிய தூணை அவனே தட்ட, அவன் தட்டிய இடத்திலேயே கூர்மையான நகங்களையுடைய  நரசிங்க மூர்த்தியாய் வளர்ந்த வடிவுடன் தோன்றி, அவனது  மனத்தைத் பரிசோதித்துப் பார்த்துப் பின்பு அவ்விரணியனுடைய மார்பு முழுவதுமே வஜ்ர நகத்தால் பிளந்த  கைகளால் சப்பாணி கொட்டுக. பேயாக வந்த பூதணையின் முலைப்பால் உண்டவனே சப்பாணி கொட்டுக.  பெருமாள் அவனுடைய மனதில் சிறிதாவது ஈரம் ஒட்டிக்கொண்டிருக்கிறதா? என்று துழாவிப் பார்த்து விட்டு ஏதும் இல்லை  என்பதால் அவன் மார்பை பிளந்தான் என்று பூர்வர்கள் இப்பாசுரத்திற்கு விளக்கம் தருவர். இரண்யன் பெற்ற வரத்தின்படி, மனிதனாகவோ, மிருகமாகவோ, பறவையாகவோ, தேவராகவோ இல்லாத பெருமாள், உள்ளேயோ வெளியேயோ இல்லாமல் வாசற்படியில் அமர்ந்து ஆகாயத்திலோ, பூமியிலோ இல்லாமல் தனது மடியில் ஹிரண்யனை போட்டுக்கொண்டு பகலோ இரவோ அல்லாத சந்தியா காலத்தில் ஆயுதமே அல்லாத தனது கூரிய வஜ்ர நகங்களால் அவனது மார்பைக் கிழித்து அவனது குடலை மாலையாக அணிந்து கொண்டு  ஜ்வாலா நரசிம்மராக அவனை வதம் செய்தார். “ஓம் நமோ நாராயணா” என்னும் நாமத்தின் மகிமையையும் பிரகலாதாழ்வானின் பக்தியின் பெருமையையும் நிலை நாட்டினார் பெருமாள். பெருமாளின் சீற்றம் கண்டு சகல தேவர்களும் நடுங்கி நிற்க பிரகலாதன் மட்டும் தனக்காக அவதாரம் எடுத்தப் பெருமாளை பக்தியுடன் நோக்கி அவரைச் சாந்தமடையும்படி வேண்டி பெருமாளை சாந்தப்படுத்தினான். இவ்வாறு பெருமாளின் பக்தியிலே ஆழ்ந்ததால்தான் பிரகலாதன், “பிரகலாதாழ்வான்”  என்று போற்றப்படுகின்றான்.  பிரகலாதன் ஸ்ரீமந்நாராயணன் மேல் கொண்டது திட பக்தி எனவே தான் பெருமாள் அவன் எங்கிருப்பான் என்று சொல்லுவான் அங்கு ஆவிர்பரிக்கலாம் என்று சகல இடங்களிலும் பெருமாள் காத்திருந்தாராம். பிரகலாதன் தூண் என்று கூறியவுடன் அளந்து அவனே அமைத்த தூணை ஹிரண்யன் தன் கதையால் தாக்க அதே நொடியில் சீரிய சிங்கமாகத் தோன்றினார் பெருமாள் என்று அருமையாக  விளக்கம் தருவார் கிருஷ்ண பிரேமி சுவாமிகள்.   பிரகலாதாழ்வான் சொன்ன வார்த்தையை மெய்ப்பிக்க பெருமாள் அதே நொடியில் ஹிரண்யனின் அரண்மனைத் தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி  வராமல்,   கருடனை விடுத்து தனியாக வந்தார். அதனால் மிகவும்   துக்கம் கொண்ட கருடன் பெருமாளிடம் தனக்கு நரசிம்ம அவதார சேவையை காட்டி அருளுமாறு வேண்டினான். கருடனின் பெருமையை உலகத்தோர்க்கு அறிய செய்ய திருவுளம்  கொண்ட பெருமாள்  நீ அஹோபிலம் சென்று தவம்  செய்,  தக்க  சமயத்தில்  நான்  வந்து  சேவை  சாதிக்கின்றேன் என்றருளினார்.   பெருமாள் “கூடாவிரணியனைக் கூருகிரால் மார்பிட அவதாரம் செய்த புண்ணிய பூமியான  அஹோபிலத்தில் வந்து கருடன் பெருமாளின் நரசிம்ம அவதார தரிசனம் வேண்டி கடுமையான தவம் செய்ய ஆரம்பித்தான். கருடனின் தவத்தால் பூலோகம் மட்டுமல்ல தேவலோகமும் ஸ்தம்பித்தது. பயம் கொண்ட தேவேந்திரன், கருடனின் தவத்தைக் கலைக்க ஊர்வசியை அனுப்பினான்.  ஊர்வசியும் பல அப்சரஸ்களுடன் அஹோபிலம் வந்து  சேர்ந்தாள். தன் இனிமையான  பாடல் மற்றும் ஆடலால் அவனை மயக்க முயன்றாள். முதலில்  கருடன்  பேசாமல்  இருந்து  விட்டான். பிறகு  மறுபடியும் இரக்கத்தால்  கருடன்  சில  வார்த்தைகளைச்  சொல்லத்  தொடங்கினான்.  "ஊர்வசியே! !  நீ  உன்  இருப்பிடம்  செல்.  உன்னுடைய  விருப்பம்  என்னிடத்தில்  பயன்  பெறாது.  கொட்டு  மழையால்  தாக்குண்டாலும்  மலைகள்  எப்படித்  துன்பத்தை  அடைவதில்லையோ  அது போல்  பகவானிடத்தில்  மனத்தைச்  செலுத்தியவர்கள் எந்த விதத்திலும்  துன்பப்பட மாட்டார்கள்.  அச்சுதனிடத்தில்  ஈடுபட்டவர்களின்   உயர்ந்த குணம்  எங்கே?  பெண்,  புதல்வன்,  மனைவி,  பணம்   இவ்விஷயத்தில்  அறிவிலிகள்  கொள்ளும்  பற்றுதல்  எங்கே?  தம்  விருப்பப்படி  இந்தப் பூலோகத்தில்  ஏற்படும் சுகங்களில்  ஈடுபட்டு  நன்மை   தீமை  ஒன்றும்  அறியாத  ஆண்களுக்குத்   தீங்கும்  இன்பமாகப் படுகிறது. கையில்  சிரங்கு வந்த  போது அதை சொறிந்தால் மேல்  தீமை ஏற்படும் என்றறிந்தும்  தற்காலத்தில்  உண்டாகும்  இன்பத்திற்காக  சொறிவது போல்  உள்ளது  மக்களின்  செயல். ஆக தீங்கும்  இன்பமாகத் தோன்றும். ஆகையினால் அன்றோ  மாமிசம்,  ரத்தம்  முதலியவற்றின் சேர்க்கையைப்  பெற்ற  கொடிய  அழுக்கு  உடம்பின் மேல்   மூடர்கள்    ஆசை       காட்டுகின்றனர்!    இப்படிப்   பட்டவர்கள்       நரகத்திடமும்  ஈடுபாடு  கொள்வார்கள்.   வெறுப்புக்     காட்ட மாட்டார்கள்’’  இப்படிப்      பல வகையில்  வினதையின் சிறுவனான  கருடன்  ஊர்வசியை  கடிந்து  கூறி,  ஹரியின்  திருவடிகளில்  மனத்தைச்  செலுத்தி  பெருமாளை  நரசிம்மராய்  தரிசிக்க வேண்டி ஒரே  மனதுடன்  ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப்பாடிக் கண்ணீர்   மல்கி எங்கும் நாடி நாடி  நரசிங்கா!   என்று  ஊனும்  உள்ளமும்  உருக  கடும்  தவத்தைத்  தொடர்ந்தான் .  ஊர்வசியும்  வெட்கத்தால்    முகந்தாழ்ந்து தோல்வியடைந்து        தேவேந்திரனிடம்  திரும்பிச்  சென்றாள்.  இந்திரனைப்  பார்த்து  "ஓ புரந்தரா!       முன்பு  பல இடங்களுக்கு என்னை  அனுப்பியிருக்கிறாய்.  நானும் என்னுடைய  திறமையைக்  காட்டி பலரின்           தவத்தை  கலைத்து  உனது  விருப்பத்தை  நிறைவேற்றிக்  கொடுத்திருக்கிறேன்.  ஆனால்  இந்த               கருடனிடம்  என்  முயற்சி  பலன்  அளிக்கவில்லை. "கருடன்  தேவ லோகத்தையோ  உன்னுடைய       பதவியையோ  பிரம்மாவின்  ஸ்தானத்தையோ  விரும்பித்  தவம்  புரியவில்லை.             பகவானின்  திருவடித் தாமரைகளை        காண வேண்டும் என்று விரும்பியே  தவம் புரிகின்றான்.            இதை  நான்  நன்கு     அறிவேன்" என்று  சொல்லி  இந்திரனுடைய  பயத்தை ஒருவாறு  போக்கினாள் ஊர்வசி.  கருடனின் திட பக்தியைக்  கண்டு  மகிழ்ந்த பெருமாள்  சத்திய  சொரூபனாய்  மலைக் குகையில்  நெருப்பின்  உக்ரத்தோடு  அவன்  விரும்பியபடியே உக்ர நரசிம்மராய்  அன்று  எவ்வாறு  இருந்தாரோ அது போலவே சேவை  சாத்தித்தார்.   பிரகலாதாழ்வான்  கை  கூப்பி  நிற்க  இரணியனை  மடியில் போட்டுக் கொண்டு  உக்ரமாய்  அவனது  மார்பைப்  பிளக்கும்  கோலத்தில்  முன்  நரசிங்கமதாகி  அவுணன் முக்கியத்தை  முடிப்பான்  என்ற படி  பெருமாள் கருடாழ்வாருக்கு  சேவை சாதித்தார்.  சங்கம்,  சக்கரம்,  கதை  முதலிய ஆயுதங்களை  தரித்தவரும்,  நான்கு கைகளை  உடையவரும்,  தேவர்களால்   பூஜிக்கப்பட்டு  நீர்  உண்ட  மேகத்திற்கு  ஒப்பானவரும்  செந்தாமரைக் கண்ணை  உடையவரும்  ஒரே  சமயத்தில்  உதித்த  கோடிக்கணக்கான  சூரியர்களின்  ஒளியைப்  பெற்ற  கிரீடத்தால்  விளங்கியவரும்,  அழகிய  உன்னதமான  மூக்குடன்  கூடியவரும்  கருத்த  கேசங்களுடன்  கூடியவரும்  அழகிய  தளிர் போன்றவரும்,  குண்டலதாரியாய்   கெளஸ்துபம்  உடையவரும்,  பீதாம்பரதாரியுமான நரசிம்ம பகவானைக்  கருடன்  தன்  கண்களால்  கண்டு  ஆனந்த  பரவசனாய்  நின்றான்.    நட்சத்திர  மண்டலத்தோடு  கூடிய சந்திரன்  போலவும்,  மேருமலையின்  நடுவிலுள்ள  சூரியன்  போலவும்,  அநந்தன்  முதலிய  திவ்ய சூரிகளோடு சேவை  அளிக்கும்  பகவான்,  கருடனின்  முன் வந்து அழகிய வார்த்தை  சொல்லத் தொடங்கினார். "குழந்தாய்!  விநதையின்  மனத்துக்கு  இனியவனே!  உனது  உக்கிரமான  தவத்தால்  மகிழ்ச்சியுற்றேன்.  எழுந்திருப்பாய். உன் விருப்பம் என்ன?  நான்  அதை நிறைவேற்றுகிறேன்"  என்றார்.  இதைக்  கேட்டதும்  கருடன் பல தடவை  பகவானை வணங்கி  அபூர்வமான  அவரது  ரூபத்தைக்  கண்டு மலர்ந்த கண்களைப்  பெற்றவனாய்  உடல்  முழுவதும்  மயிர்க் கூச்சலடைந்தவனாய்  பெருமாளை  துதி  செய்ய  ஆரம்பித்தான்.      "எல்லா  உலகத்தையும்  ஆக்கவும்,  நிலை பெறுத்தவும்,  அழிக்கவும், திறமை பெற்ற  உம்மை  வணங்குகின்றேன்.  காரிய  காரண  ரூபனான உம்மை வணங்குகின்றேன்.  பல  ரூபங்களை  எடுத்து  எங்கும் வியாபித்த  உம்மை  வணங்குகிறேன்.  சார்ங்கம்  முதலிய  ஆயுதங்களை  ஏந்திய  உம்மை  வணங்குகிறேன்.  அடியவர்களிடத்தில்   இரக்கமுள்ளவரே!  உம்   மகிமையைச் சொல்லி  துதி செய்ய  யாருக்குத்தான்  சக்தி  உண்டு?   ஜகத்குருவே!  மந்த மதியுள்ளவனான  நான்  எப்படித்  துதிப்பேன்? என் நாக்கு எப்படி முன் வரும் ? என்று  கருட பகவான்  துதி  செய்து விநயத்துடன் நின்றான்.  மிகத்   தெளிவு    பெற்ற   முகத்துடன்   பகவான்  கருடனைப்  பார்த்து  சொல்லத்  தொடங்கினார்:    "விநதையின்  புதல்வா!  நான்  உன்  தவத்தை மெச்சுகிறேன்.  உனக்கு எல்லா  மங்களங்களும்      உண்டாகட்டும்.     உன்  விருப்பம்  என்ன?  சொல்லாய்!  அதை    நான்  நிறைவேற்றி  வைக்கிறேன்"  என்றார்.  கருடன்  "தேவ தேவா! நான் பூமியிலோ மூன்று உலகங்களிலோ  ஜயம்  பெற விரும்பி  தவம்  புரியவில்லை.  இன்று  முதல்  வாகனமாக  எனது  தோளில்  தேவரீர்  அமர  வேண்டும்.  இதுவே  எனக்கு  மகிழ்ச்சியைக்  கொடுக்கக்  கூடியது.  எல்லாவற்றுக்கும் ஆதாரனான  உமக்கு  நான்  ஆதாரமாக வேண்டும்.  இம்மகிமை  எவருக்கும்  கிடைக்கத் தகுந்ததன்று.  இந்தப்  பெரும்  பாக்கியம்  எனக்கு கிட்டவேண்டும்"  என்றான்.  பின்பு  அவன்  மேலும்  சொல்லத்  தொடங்கினான்.   "புருஷோத்தமா!  இந்த மலையில் இருந்து கொண்டு  நான்  கடும்  தவம்  புரிந்தேன்.  இங்கே  என்  தவம்  வெற்றி  அடைந்தது.  உம்மை  தரிசிக்கும்  பாக்கியத்தை  கொடுத்தபடியால்  இந்த  மலைக்கு  ஒரு  பெருமை  ஏற்பட்டுள்ளது.  எனவே,   இதற்கு  கருடமலை என்ற பெயர் வழங்க  வேண்டும் தாங்களும்  இந்த கருடாசலத்தில் எனக்கு சேவை சாதித்தது போலவே எப்போதும் சேவை சாதிக்க வேண்டும். இந்த  இரு வரங்களையும் கொடுக்க வேண்டும்"  என்று  கேட்டுக்  கொண்டான்.  பகவான், கருடா!  நீ  இளம்பிராயம்  உள்ளவனாக  இருந்த போதிலும் புத்தியால் பெரியவனாக  விளங்குகிறாய்.  உன்னைக் காட்டிலும்  உயர்ந்தவன்  யாரும்  இல்லை. முனிவர்கள்  பலர்  தவம்  புரிந்தனர்.  நானும் அவர்களுக்கு சேவை  சாதித்தேன்.  அவர்கள் அனைவரும்   வேறு  எதையோ  பலனாக  விரும்பி  வேண்டிக்  கொண்டார்களே  தவிர  தன்னை வாகனமாக்கிக்  கொள்ள   யாரும் கோரவில்லை.  நீ  விரும்பியபடி இரு  வரமும்  தந்தேன். உன்னை  கருடன்  என்றும்,  சர்ப்பங்களுக்கு சத்ரு என்றும், வேத ஸ்வரூபி  என்றும்,  பக்ஷிராஜன்  என்றும்,  நாராயண ரதம்  என்றும் சொல்லி அழைப்பார்கள்"  என்று  சொல்லி,  பகவான்  அங்கேயே  அந்தர்த்தியானமானார். கருடன் இவ்வாறு கடுமையான தவம் செய்து நரசிம்மப்பெருமாளின் தரிசனம் பெற்றதால் இத்தலம் “தார்க்ஷ்யாத்ரி”  என்றும் அறியப்படுகின்றது.   இன்றும்  கருடாத்ரியில்  ஒரு  குகையில்  பெருமாள்  அஹோபில  நவ நரசிம்மர்களுள்    முக்கியமானவராக  அஹோபில  நரசிம்மராக, உக்ர நரசிம்மராக இன்றும்  சேவை  சாதிக்கின்றார்.  குகையில்  பெருமாளுக்கு எதிரே  கருடன்  தவ  நிலையில்  சேவை   சாதிக்கின்றார். இவ்வாறு  பெருமாள்  அவதாரம்  செய்த  தலத்தில்  நாம்  எல்லோரும் உய்ய     பெருமாள்  கோவில்  கொள்ள  காரணமாக இருந்தார்  கருடன்.  இவ்வாறு மாறாத   பக்தி  கொண்டு  பகவான் சேவையே  பிரதானம்  என்று  அவரிடம் பூரண சரணாகதி  அடைந்ததால் அவரது திருவடிகளைத் தாங்கும் பேறு பெற்றதால்,  கருடாழ்வார்  என்று போற்றப்படுகின்றார் விநதையின் சிறுவன்.  இந்த சிங்கவேள் குன்றத்தின் சிறப்பை திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.   அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓராளரியாய் அவுணன் பொங்கஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்ச் செங்கணாளி இட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே (பெ.தி  1-7-1) பொருள்: பிரகலாதன் நாராயணன் இருப்பதாகச் சொன்ன அவ்விடத்திலேயே உலகில் உள்ளாரெல்லாம் நடுங்கும்படி ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய், ஹிரண்யன் கிளர்ந்த அளவிலே அவன் உடலைக் கூரிய நகங்களினாலே பிளந்த பெருமான் எழுந்தருளியிருக்கும் இடமாவது, சிவந்த கண்களை உடைய சிங்கங்கள், யானைகளுடைய தந்தங்களில் கொண்டு பக்தியினாலே அவன் திருவடிகளிலே படைத்து வணங்கும் சிங்கவேள் குன்றமாகும்.      பெருமாள் நரசிம்மராக  அவதாரம் செய்த உக்ர ஸ்தம்பத்திலிருந்து கருடாத்ரியைப் பார்த்தால் அப்படியே கருடன் தன் இரு அழகிய  சிறகுகளையும் விரித்து மத்தியில் உயர்ந்த அலகுடனும் மூன்று பகுதிகளாகவும் அஞ்சலி ஹஸ்தத்துடன் (கைகூப்பிய நிலையில்) நிற்பதை இன்றும் காணலாம். அஹோபிலத்தில் இன்று கருடாத்ரிக்கும் வேதாத்ரிக்கும் இடையே பிறவிப்பிணியை நீக்கும் பவநாசினி ஆறு ஓடுகின்றது. கருடாத்ரியில்  நவநரசிம்மரில் இன்னொரு நரசிம்மரான பாவன நரசிம்மர்  செஞ்சு லக்ஷ்மித்தாயாருடன் லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிக்கின்றார்.   இனி அஹோபில க்ஷேத்திரத்தின் சிறப்புகள் சில அஹோபிலே கருடசைல மத்யே க்ருபா வசாத்கல்பித ஸந்நிதாநம் லக்ஷ்ம்யாஸ மாலிங்கித வாமபாகம் லக்ஷ்மிந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே - என்றபடி அஹோபில க்ஷேத்திரத்தில் கருடமலையின் கர்ப்பத்தில் கருணையின் காரணமாக கோவில் கொண்டு இடப் பக்கத்தில் பெரிய பிராட்டியாரை அணைத்த வண்ணம் சேவை சாதிக்கும் லக்ஷ்மி ந்ருஸிம்ஹரை சரணம் அடைகின்றேன்.  இவ்வாறு எப்போதும் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்தே இருக்கும் மாலோலனாகவும் மற்றும் எட்டு கோலங்களிலும் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கும் தலம் அஹோபிலம். திருமங்கையாழ்வார் தம் பாசுரத்தில் ஒரு பாடலில் "தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும் சிங்கவேள் குன்றம்” என்று பாடிய தலம். காசியில் ஆயிரம் யுகங்கள், பிரயாகையில் இருபது யுகங்கள், கயையில் நூறு யுகங்கள் வாழும் பயனை அஹோபில க்ஷேத்திரத்தில் ஒரு நாள் வாசம் செய்தால் கிட்டும் என்பது அஹோபிலத்தின் சிறப்பு.  அனைத்து நரசிம்ம மூர்த்தங்களும் கருடன் தாங்கிய நிலையில் உள்ளன.   முக்கூரர் நரசிம்ம பெருமாளை ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி சேவித்து  துதிக்குமாறு அருளியுள்ளார் மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:  ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா  ந்ருஸிம்ஹ:  வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:  ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:  இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:  யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:  ந்ருஸிம்ஹ: தேவாத் அபரம் நகிஞ்சித்  தஸ்மாத் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!    நரசிம்மனே தாய் நரசிம்மனே தந்தை சகோதரனும் நரசிம்மனே தோழனும் நரசிம்மனே அறிவும் நரசிம்மனே செல்வமும் நரசிம்மனே எஜமானனும் நரசிம்மனே எல்லாமும் நரசிம்மனே இந்த லோகம் முழுவதும் நரசிம்மனே பரலோகத்திலும் நரசிம்மனே எங்கெங்கு செல்கின்றாயோ அங்கெல்லாம் நரசிம்மனே நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை ஆகவே நரசிம்மனே உம்மைச் சரணடைகின்றேன்.   நரசிம்மரை வழிபட முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும், நாளை என்பது நரசிம்மரிடம் இல்லை.  பங்குனி மாதத்தில் கீழ் அஹோபிலத்தில் லக்ஷ்மி நரசிம்மர் கருட சேவை தந்தருளுகின்றார். கருட பஞ்சமியன்று பிரகலாதாழ்வான்  கருட சேவை கண்டருளுகின்றார்.  இனி இன்னொரு ஆழ்வான் அனந்தாழ்வான் சிறப்பு. இராமாவாதாரத்தில் இராமருக்கு  இளையவராக இலக்குவனாகப் பிறந்து அவர் சேவை ஒன்றையே எப்போதும் சிந்தித்து இராமரை இணை பிரியாது எப்போதும் தொண்டு செய்து பின் கிருஷ்ணாவதாரத்திலே அவருக்கு மூத்தவராக பலராமராக அவதாரம் செய்து, இக்கலிகாலத்தில் இராமானுஜராக (இளையாழ்வான்) அவதாரம் செய்த பெருமாளின் பாம்பணையாம் ஆயிரம் பணங்களார்ந்த ஆதிசேஷன் திருவனந்தாழ்வான்  என்றும் கொண்டாடப்படுகிறான். பெருமாள் நரசிம்மராகவும், திருவேங்கடவனாகவும் சேவை சாதிக்கும் திருக்கோவில்கள் அமைந்துள்ள   மேற்கு தொடர்ச்சி மலையே ஆதிசேஷன் என்பது ஐதீகம். ஆதிசேஷனின் தலை - திருவேங்கடம், முதுகு – ஸ்ரீசைலம், வால் - அஹோபிலம் ஆகும்.  திருமலையில் வேங்கமாம்பாள் அன்ன கூடத்தில்  ஒரு அருமையான ஓவியத்தில் இம்மலையில் பல்வேறு ஆலயங்கள் அமைந்துள்ளது அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.   இது வரை கருடனின் சரிதம், கருட சேவையின் சிறப்பு, ஆகியவற்றைக் கண்டோம் இனி  அடுத்த பாகத்தில்,  சில தலங்களில்  சிறப்பாக  கருடன் சேவை சாதிக்கும் அழகைக் காணலாம் அன்பர்களே.                  பாகம் -2 சிறப்புக்கோல கருடன்கள்   14. திருவல்லிக்கேணி  நித்ய கருட சேவை   பொதுவாகப் பெருமாள் ஆலயங்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த, நடந்த கோலங்களில் சேவை சாதிப்பார், அவருக்கு எதிரில் கருடாழ்வார் நின்ற கோலத்தில் சிறகு விரித்த நிலையில்  அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை  சாதிப்பார். அபூர்வமாகச் சில தலங்களில் கருவறையில் பெருமாளுடன் கருடனும் சேவை சாதிப்பார்.   இன்னும் சில தலங்களில் பெருமாள் மூலஸ்தானத்தில் கருட வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அப்படிப்பட்ட சில தலங்களை  முதலில் சேவிக்கலாமா அன்பர் களே!.     சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம் நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்  புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு. ( மு.தி 53)    பொருள்: பிராட்டியோடு கூடயிருக்கின்ற பெருமானுக்குத் திருவனந்தாழ்வான் (அப்பெருமான்)  உலாவினால் குடையாக உருவெடுப்பான், எழுந்தருளும் போது சிம்மாசனமாய் இருப்பான். நின்று கொண்டிருந்தால் பாதுகையாவான். பாற்கடலில் சயனிக்கும் போது எப்போதும் திருப்பள்ளி மெத்தையாவான். மங்கள தீபமாவான். அழகிய திருப்பரிவட்டமாவான். தழுவிக் கொள்ளுதற்குரிய அணையும் ஆவான் - என்று ஆதிசேஷனாகிய நாகம் திருமாலுக்குச் செய்யும் சேவைகளைப் பட்டியலிடுகின்றார் பொய்கையாழ்வார்.  அது போல பெரிய திருவடியாம்  கருடன் செய்யும் சேவைகள் என்னவென்று பார்ப்போமா?   அவுணரைக் கொல்லச் செல்கையில் மேலாப்பாம் வெற்றிக் கொடியாம் குளிர் விசிறியாம் – காய்சின  பறவையாம் பரிபூணாத இரதமாம் உற்ற துணைவனாம் திருமாற்குப் புள்ளரையன்.   அதாவது  பெருமாள் அசுரரை கொல்லச் செல்லும் போது, "மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப்பின் கீழ் வருவானை"  என்று ஆண்டாள் நாச்சியார் பாடியபடி அவருக்குக் குடையாய் நிழல் தருபவனும், தன் பெரிய சிறகுகளால் பெருமாளுக்குத் திருஆலவட்டக் கைங்கரியம் செய்து அவரைக் குளிர்விப்பவனும், அவர் திருவடிகளைத் தாங்கும் வாகனமாயும், அவரது தலைக்கு மேலே வெற்றிக் கொடியாகவும், பல சமயங்களில் பெருமாளுக்குச் சிரமம் தராமல் தானே சென்று பகைவர்களைக் கொத்திப் புரட்டி எடுத்து விடுகின்ற காய்சினப் பறவையாகவும், (பரனூர் மகான் இதை நகைச்சுவையாக பெருமாள் பல சமயம் கருடனை அனுப்பி விட்டு தான் ஹாயாக அமர்ந்து விடுவார் எல்லாவற்றையும் கருடன் கவனித்துக் கொள்வான் என்று கூறுவார்), பெருமாள் எங்குச் செல்ல விழைகின்றாரோ அங்கு அவரை அக்கணமே கூட்டிச் செல்கின்ற குதிரை பூட்டாத நாராயண இரதமாகவும், பெருமாள் எங்குச் சென்றாலும் அவருக்கு உற்ற துணைவனாயும் விளங்குபவன் சுபர்ணன் என்னும் அழகிய சிறகுகளை உடைய கருடன்.  பொதுவாக அனைத்து தலங்களிலும் நின்ற கோலத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் (பெருமாளை வணங்கிய நிலையில்) பெருமாளுக்கு எதிரில் கருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். மிகச் சில தலங்களில் மட்டுமே பெருமாளுடன் கருவறையிலேயே தோளோடு தோள் இணைந்து தோழனாய் கருடன் சேவை சாதிக்கின்றான். சில தலங்களில் கருடன் தோள் மேல் அமர்ந்த கோலத்தில் பெருமாள் சேவை சாதிப்பார். இவ்வாறு பெருமாள் கருட வாகனத்தில் மேலிருந்து மூலவராக,  கஜேந்திர வரதனாக அனு தினமும் "நித்ய கருட சேவை"   சாதிக்கும் ஒரு திவ்ய தேசத்தைப் பற்றி  பார்ப்போம். அத்திவ்யதேசம் "இரவியின் கதிர்கள் நுழைந்தறியாத  திருவல்லிக்கேணி”   என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்  செய்த திவ்யதேசம் .  இத்திவ்ய தேசத்தில் நெடியோனாய் நின்ற கோலத்தில், தேர்  சாரதிக்கு உரிய முறுக்கு மீசையுடன் வலத்திருக்கரத்தில்  சங்கமேந்தி சக்கரம் இல்லாமல்,   “மாம் ஏகம் சரணம் வ்ரஜ” அதாவது  “என்னைச் சரணடைவாயாக நான் உன்னை ஈடேற்றுவேன்” என்று இடக்கரம் திருப்பாதத்தை சுட்ட  வேங்கடகிருஷ்ணன் என்ற திருநாமத்துடன் அண்ணன் பலராமன், ருக்மணித் தாயார், தேர் சாரதி சாத்யகி,  மகன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக மூலவராகவும், பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு சாராதியாக, தேர் ஓட்டிய போது திருமுக மண்டலத்தில் பீஷ்மரின் அம்புகளால் ஏற்பட்ட  காயங்களின் வடுக்களுடன் “பார்த்தசாரதி” என்று  உபய நாச்சியார்களுடன் உற்சவராகவும், வால்மீகி முனிவர் வணங்கும் இராவணனாந்தகனாய்  மைதிலி மற்றும் தம்பிகள் இலக்குவன், பரதன், சத்ருக்னன் ஆகியோருடன்   சக்கரவர்த்தி திருமகனும், பள்ளிகொண்ட ஸ்ரீமந்நாதராய்  அரங்கனாகவும், பிரகலாதனுக்கு அருள் புரிந்து யோக நிலையில் அமர்ந்த  தெள்ளிய சிங்கராகவும், நித்ய கருட சேவை வழங்கும் கஜேந்திர வரதராகவும்  பெருமாள் ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்.  ஐந்து  பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் தனித் தனியாக மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது சிறப்பு.   மேலே சேவித்த ஒர பாசுரத்தில் பொய்கையாழ்வார் பாடியபடி  “நின்றால் மரவடியாம்”  என்றபடி திருவனந்தாழ்வான் பாதுகையாக விளங்கும் அழகைத் திருவல்லிக்கேணியில்  சேவிக்கலாம்.  யானையின் துயர் தீர்த்த கஜேந்திர வரதர்  சன்னதி, உள் பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் தனி சன்னதியாக அமைந்துள்ளது. இவர்  சப்தரோமருக்காக இத்தலத்தில்  பிரத்யட்சம்.  பெருமாள் கருடனின் தோளில்  ஆரோகணித்த கோலத்தில் மேற் கரங்களில் சங்கு சக்கரம்  தாங்கி  மூலவராக சேவை தந்தருளுகின்றார். பெருமாளின் திருப்பாதங்களைக் கருடனின் கரங்கள் தாங்கும் அழகை சேவிக்க கண் கோடி வேண்டும். இவ்வாறு  “நித்ய கருட சேவை”  தந்தருளும் கஜேந்திர வரதரை திருமங்கையாழ்வார் இவ்வாறு மங்களாசாசனம் செய்துள்ளார்    மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த கானமர் வேழம் கையெடுத்தலற கரா அதன் காலினைக் கதுவ  ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானைத்  தேனமர் சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே. (பெ.தி 2-3-9)   பொருள்: பெருமாளின்  புஷ்ப கைங்கர்யத்திற்காக  வேண்டி, கயல்  மீன்கள்  துள்ளி  விளையாடும்  தடாகத்திலிருந்து  தினம்   தாமரை  மலர்களை  பறித்து  வந்த, காட்டில்  உற்சாகமாகச்  சுற்றித்  திரியும்,  கஜேந்திரன்  என்ற  யானையின்  காலை,  ஒரு சமயம்  புலால் உண்ணும் முதலை யொன்று  கவ்வ,  அப்போது அந்த  கஜேந்திரன்  தன்  தும்பிக்கையை உயர்த்தி,  "ஆதிமூலமே"  என்று  பெருங்குரலெடுத்து  அலற,  கருடனில் விரைந்து பறந்து  வந்த  பெருமாள்,  தன் சக்ராயுதத்தை வீசி முதலையை அழித்து, அந்த  யானையை  துயரிலிருந்துக்  காத்தார். இவ்வாறு அடியவர்  துயர்  தீர்க்கும்  அப்பேர்ப்பட்ட  வரதராஜப் பெருமாளை,  தேன்  மலர்கள்  பூத்துக்  குலுங்கும்  சோலைகள்  சூழ்ந்த,  மாடங்கள் மிகு  மாமயிலைக்கு  அருகில்  உள்ள,  திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !  என்று பாடுகின்றார் திருமங்கை மன்னன்.  ’ஆழி தொட்டானை' என்பதற்கு  “யானைக்கு  பாதிப்பு  இல்லா  வண்ணம்,  முதலை  மட்டும்  அழியும்படியாக திருச்சக்கரத்தை வீசிய எம்பெருமான்”  என்று பொருள்  கொள்க ! என்று பூர்வாசிரியர்கள் அற்புதமாக வியாக்கியானம் கூறியுள்ளனர்.  தனி சன்னதியில் பெருமாளை தன் தோள்களில் தாங்கிய கோலத்தில் உள்ள கருடன். இத்திருக்கோவிலில் கிழக்கு வாயிலில் பார்த்தசாரதிப் பெருமாளை சேவித்தவாறும், மேற்கு வாயிலில் தெள்ளிய சிங்கரை சேவித்தவாறும் இரு சன்னதிகளிலும் தரிசனம் தருகின்றனர். இவ்வாறு மூன்று கருட மூலவர்களை இத்தலத்தில் சேவிக்கலாம். மேலும் ஆழ்வார்கள் ஆச்சாரியர்களுடனும் உற்சவ மூர்த்தியாகவும் எழுந்தருளியுள்ளான். திருவல்லிக்கேணியில் கஜேந்திர வரதருக்கு  வருடாந்திர பிரம்மோற்சவம் வைகாசி திருவோணத்தை ஒட்டி பத்து நாள் நிகழ்ச்சியாகச் சிறப்பாக நடைபெறுகின்றது  பிரம்மோற்சவத்தின் போது மூன்றாம் நாள் காலை தங்கக் கருட வாகனத்தில் கோபுர வாசல் தரிசனம் தந்தருளி, பெரிய மாட வீதி புறப்பாடு, மண்டகப்படி கண்டருளி பின் ஏகாந்த சேவை சாதிக்கின்றார்.  கரி வரதராக பெருமாள் திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் சேவை சாதிக்கும் அழகைக் கண்டோம்.  திருவிழாக்களில் இத்தலத்தின் பெருமாள்கள் அளிக்கும் தங்க கருட சேவை மற்றும் கண்ணாடிக் கருட சேவைகளை பின்னொரு அத்தியாயத்தில் சேவிப்போம் அன்பர்களே.                       15. எண்கண்  ஆதிநாராயணப் பெருமாள்   நித்ய கருட சேவை   []     முன்னொரு சமயம் பிருகு முனிவர் சமீவனம் (வன்னி மரக்காடு) என்றழைக்கப்படும் இத்தலத்தில் ஸ்ரீமந்நாராயணைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது சோழ மன்னன் ஒருவன் தன் படைகளுடன்  பெருங்குரல் எழுப்பியபடி சிங்க வேட்டையாட வந்தான். இந்த சப்தத்தினால் முனிவருடைய தவம் கலைந்தது. கோபம் கொண்ட முனிவர்,  வனத்தில் சிங்க வேட்டையாட வந்து தவத்தைக் கலைத்ததனால்   அரசனை சிங்க முகத்துடன் அலையும் படி சபித்தார். மனம் வருந்திய மன்னன் தனக்குச் சாப விமோசனம் தரும்படி வேண்ட, மனம் இரங்கிய முனிவர் விருத்தகாவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபட்டு வா, ஒரு தைப்பூச நன்னாளில் கருட வாகனத்தில் மாலும்,  மரகத மயில் வாகனத்தில் மால் மருகன் முருகனும் எழுந்தருளி ஒன்றாக  சேவைச் சாதிப்பர்  அப்போது உனக்கு சாப விமோசனம் ஆகும் என்று வரமளித்தார். அரசனும் வெற்றாற்றில் நீராடி தினமும் பெருமாளை வழிபட்டு வர ஒரு தைப்பூச நாளன்று திருமால் கருடவாகனத்திலும், முருகர் பச்சை மயில் வாகனத்திலும் வன்னி மரத்தடியில் ஏக காலத்தில்  சேவை சாதித்தனர். மன்னனின் சாபமும் நீங்கியது அவன் தனது சுய உருவை அடைந்தான். முனிவரும் இருவரையும் தரிசனம் பெற்று பெரும் பேறு பெற்றார். பின்னர் அரசன் பல் வேறு வாகனங்களில் பெருமாளை ஏழப் பண்ணி திருவிழா நடத்தினான்.   அன்று அரசனுக்கு கருடன் மேல் சேவை சாதித்த கோலத்தில் இன்றும் மூலஸ்தானத்தில் ஆதி நாராயணப் பெருமாள் நித்ய கருட சேவாரூடராய் சேவை சாதிக்கின்றார்.  கருடாழ்வாரும் பெருமாளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது இம்மூர்த்தியின் சிறப்பாகும்.  உற்சவர்  பிரயோக சக்கரத்துடன் ஸ்ரீதேவி  பூதேவி சமேத நாராயணப் பெருமாளாக சேவை சாதிக்கின்றார்.  மூலவர் கருடவாகனத்தில் சேவை சாதிப்பதால் பௌர்ணமியன்று வழிபடுவோர்களுக்கு நாக தோஷம், பக்ஷி தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறுவர். மேலும்  மிருகசிரீடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகாரத் தலமாக இத்தலம் விளங்குகின்றது. படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள், நல்ல சம்பளத்துடன் கூடிய உயர் பதவி வேண்டுபவர்கள் புதன் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.  தைப்பூச பிரம்மோற்சவத்தின் போது கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. கருட வாகனத்தில் பெருமாளும், மயில் வாகனத்தில் ஷண்முகரும் ஒரே சமயத்தில்  எழுந்தருளி மன்னனுக்குச் சாப விமோசனம் அளிக்கும் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.                                                   16. அம்பாசமுத்திரம் புருஷோத்தமப்  பெருமாள் நித்ய கருட சேவை   []     திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ தொலைவில், அம்பாசமுத்திரத்தில் உள்ள புருஷோத்தமப் பெருமாள் கோயிலில் பெருமாள் அலர் மேல் மங்கைத் தாயாருடன்  கருட வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் நித்ய கருட சேவை சாதிக்கின்றார். வாருங்கள் இத்தலத்தின் சிறப்புகளைப் பற்றி காணலாம்.   துவாபரயுகத்தில், வசிஷ்டர் இவ்வாலயத்திற்கு வந்து  பெருமாளை வழிபட்டு வந்தார். அனுதினமும் வான் வழி சென்று கங்கை நதியின் புனித நீரை எடுத்து வந்து பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து பூஜை புரிந்து வந்தார். ஒரு முறை ஆழ்ந்த தியானத்திலிருந்தமையால், கங்கை நீரைக்கொண்டு வரும் வேளை பிசகிற்று. மனம் வருந்தி கண்ணீர் மல்கிய ரிஷியின் துயர் துடைக்க, புருஷோத்தமர் நேரில் கருடாரூராகத் தோன்றி, தாமிரபரணி நதிக்கரையில் ஒரு இடத்தில் கங்கையே வருக என்றார். பெரும் ஊற்றெடுத்து பொங்கிய கங்கை நீரை எடுத்து வசிஷ்ட மகரிஷி புருஷோத்தமப் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்தார். அப்படி வைகுந்த வாசனால் தோற்றுவிக்கப்பட்டதே இத்தலத்தின் புண்ணிய தீர்த்தமாம் ‘பொங்கிக்கரை தீர்த்தம்’ என்றழைக்கப்படுகின்றது.  பெருமாள் கருடாழ்வார் மேல் சேவை சாதிப்பதால், இவரை ‘நித்ய கருட சேவைப் பெருமாள்’ என்று போற்றுகின்றனர். இத்தலத்தில் மாதவனாம் மகாவிஷ்ணு ஒரு தாயாருடன் மட்டும் சேவை சாதிப்பதனால், இவரை ‘‘புருஷோத்தமன்’’ என்றும் அழைக்கின்றனர்.  இவருக்கு ‘‘ஏக பத்தினி விரதன்’’ என்றும் நாமம் வழங்குகின்றது. ஆதி சேஷன் ஏழு படங்களுடன் குடையாக விளங்க, இரண்டு சக்கரங்கள், இரண்டு சங்குகள் ஏந்தி “அஷ்ட புயகரனாய்”  நித்ய கருட சேவை சாதிக்கும் புருஷோத்தமரை  புதுமணத் தம்பதியர் இவ்வாலயத்தில் ஒருமித்த மனத்துடன், சிரத்தையுடன் சரணடைந்தால் கணவன், மனைவியைத் தவிர பிற மங்கையை ஒரு போதும் எண்ணமாட்டான். எல்லாப் பிறப்பிலும் பெண்கள் நித்ய சுமங்கலியாக வாழ்வார்கள்.    சங்கு, செல்வத்தின் வடிவம். ஒலிக்கு ஆதாரம். சக்கரம், ஆற்றலின் வடிவம். ஓளிக்கு ஆதாரம்.  பெரும் பணம் சம்பாதித்தாலும், அதனை அடக்கி, நல்வழியில் வாழ்வு அளித்து கீர்த்தி, ஆயுள், ஆரோக்கியம், குடும்ப மேன்மை என அனைத்து ஆற்றல்களையும் தருபவர் இந்த மூர்த்தி. ஏவல், சூனியம், திருஷ்டி போன்ற தோஷங்களினால் வருந்தும் மாந்தரைக் காக்க நரசிம்மர் பாதம் இவ்வாலயத்தில் உள்ளது. பெருமாள் மடியில் மஹாலட்சுமித் தாயார் அமர்ந்த கோலத்தில் இருப்பதனால் நவராத்திரி காலத்தில் திருமகளை தொழுவார் தம் மாங்கல்ய பலம் கூடும், சர்வ வியாதி நிவாரணம் ஆகும், உயர் பதவி கிட்டும்.  புரட்டாசி மாதத்தில் கருடசேவை காண்பது பெரும் புண்ணியமும் பாக்கியமும் ஆகும். அக்கருட சேவையை இவ்வாலயத்தில்  சேவிப்பது கூடுதல் சிறப்பு. ஏனெனில், சக்கரத்தாழ்வானே, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் இக்கோயிலில் மானிட வடிவு தாங்கி கருடனை ஆராதித்து செல்கின்றார் என்பது ஐதீகம்.  சக்கரத்தாழ்வார் தம்மைத் தொழுவார்க்கு, எதிரிகள் பயமும் இல்லை, யம பயமும் இல்லை. தாயார் அலர்மேலு மங்கையுடன் கருடன் மேல் அமர்ந்தே சேவை சாதிக்கும் புருஷோத்தமப் பெருமாளை  இதய நோயுடையோரும் இதய நோய் ஏதும் வாராது விலக வேணுமென்ற எண்ணம் கொண்டோரும் கண்டிப்பாகத் தொழவேண்டும். ஏனென்றால் கருடாழ்வாரின் தோள் மீது அமர்ந்த கோலத்தில் புருஷோத்தமர் அருள் பாலிக்க இடக் கையில், திருமகளின் மலர்ப்பாதத்தைக் கருடாழ்வான் தாங்குகின்றான். எனவே  இங்கு நெஞ்சார உருகித் தொழுவார் தமக்கு இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் வாராது, வந்துற்ற பிணியும் நீங்கப்பெறுவர். தலவிருட்சம் புன்னை மரம். விமானம் இந்திர விமானம் ஆகும். தேவர்களும்  கொண்டாடும்  தாயாருடன் நித்யாரூட கருட சேவை சாதிக்கும் பெருமாளைச் சரணடைய எல்லாச் சம்பத்துகளும் கூடும் என்பதில் ஐயமில்லை. பெருமாள் நித்ய கருட சேவை சாதிக்கும் திருவல்லிக்கேணி  முதலிய சில   தலங்களை  இது வரை சேவித்தோம்.  இனி  பெருமாளுடன் தோளோடு தோள் இணைந்து கருடன் சேவை சாதிக்கும் இன்னும்  சில தலங்களைச் சேவிக்கலாமா  அன்பர்களே?                                   17. சகாவாக கருடன் – பத்ரிநாதம்   []     பெருமாளுடன் கர்ப்பகிரகத்தில் கருடனும் சேவை சாதிக்கும் தலங்களில்  நாம் முதலில் சேவிக்கப் போகின்ற தலம் “சார்தாம்” அதாவது நமது பாரத தேசத்தின்   நான்கு பரம பவித்திரமான தலங்கள் என்றழைக்கப்படும் தலங்களில் ஒன்று.  அவையாவன  வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், தெற்கில் இராமேஸ்வரம், மேற்கில் துவாரகை ஆகிய நான்கு தலங்களே இவை. இவற்றுள் பார்வதி தேவியை மகளாகப் பெற்ற பனி படர்ந்த இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாத்தில்தான் பெருமாள் கருடனுடன் நமக்கு சேவை சாதிக்கின்றார். இந்த பத்ரிநாதத்தின் சில பெருமைகளைப் பற்றிக் காண்போமா?  மஹாலக்ஷ்மித்தாயாருக்கு மிகவும் உகந்த தலம்.  பத்ரி எனப்படும் இலந்தை மரத்தினடியில் மஹாலக்ஷ்மித்தாயார் தவம் செய்ய அதற்கு பிரசன்னமாகிப் பெருமாள் அதே இலந்தை மரத்தடியில் சேவை சாதித்து நமக்கு முக்தி வழங்கும் முக்தித்தலம். அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்த தலம். பெருமாள் நரநாராயணர்களாக அவதாரம் செய்து தவம் செய்து நாம் எல்லோரும் உய்ய நலம் தரும் தானே குருவாகவும், சீடனாகவும் “ஓம் நமோ நாராயணாய நம:” என்னும் திருமந்திரத்தை அருளிய தலம். அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ள தலம். பெருமாள் தானே தோன்றிய ஸ்வயம்வக்த தலம்.  சங்கராச்சாரியருக்கு பெருமாள் நரசிங்கமூர்த்தியாக சேவை சாதித்த தலம். தந்தத்தை உடைத்து முழுமுதற் கடவுள் விநாயகப்பெருமான் மஹாபாரதம் எழுதிய தலம். இந்த பூவுலகில் பெருமாள் பிரத்யட்சமாக ஆச்சாரியனாக சேவைச் சாதிக்கும் தலம்.  புத்தர் காலத்தில் குளத்தில் வீசிய இந்தச் சாளக்கிராம மூர்த்தியை ஆதிசங்கரர் கண்டெடுத்து இக்கோவிலில் புனர்பிரதிஷ்டை செய்தார். பனிக்காலத்தில் ஆறு மாதங்கள் திருக்கோவில் மூடியிருக்கும், அப்போது உற்சவமூர்த்தி ஜோஷிர்மட் நரசிம்மர் ஆலயத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பார். அப்போது பத்ரிநாதரை நாரதர் பூஜை செய்வதாக ஐதீகம். திருக்கோவில் மூடும் போது ஏற்றப்பட்ட விளக்கு ஆறு மாதம் கழித்து மீண்டும் திறக்கும் போது அப்படியே அணையாமல் இருக்கும் அற்புதம் நடக்கும் தலம்.   இரண்டு அடி உயரத்தைக் கொண்ட – சாளக்கிராம மூர்த்தமான பத்ரிநாராயணர், ஜடாமுடியோடு சதுர்புஜராக, சங்கு சக்கரம் ஏந்தி மடியில் மற்ற இரு கரங்களை யோக முத்திரையுடன் வைத்து பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் சேவை சாதிக்கின்றார். நாரத முனிவர், தனாதிபதி குபேரன், கருடன் ஆகியோர் வலப்பக்கம் சேவை சாதிக்கின்றார். இடப்புறத்தில் உத்தவர், நர, நாராயண முனிவர்களின் மூர்த்திகள், நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.    மஹாவிஷ்ணுவின் வாகனமும் கொடியுமான கருடபகவான் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பெருமாளை வணங்கும் கோலத்தில் பெருமாளுடன் கர்ப்பகிரகத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பது ஒரு தனிச்சிறப்பாகும். கருடனுக்கு  வெள்ளிக் கவசம் சார்த்தியுள்ளனர். அனு தினமும் காலையில் பெருமாளுக்குத் திருமஞ்சனம் ஆகும் போது  இவருக்கும் திருமஞ்சனமாகித் தங்க கிரீடத்துடன் அலங்காரம் சிறப்பாக நடைபெறுகின்றது. தாயாரின் பெயர் அரவிந்தவல்லி  திருச்சுற்றில் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கின்றாள். ஆதிசங்கரருக்கும் தனிச் சன்னதி உள்ளது. தீர்த்தம் வெந்நீர் குண்டமான தப்தகுண்டம் அதன் கரையிலும் கருடாழ்வார் சேவை சாதிக்கின்றார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3113 மீ (10170 அடி) உயரத்தில் அமைந்துள்ளது இத்தலம். நரநாராயண மலை சிகரங்களுக்கிடையில் அமைந்துள்ளது, பின்னணியில் நீலகண்ட சிகரத்தை அதி காலையில் தரிசனம் செய்யலாம்.  பத்ரிநாதர் ஆலயத்தின் அருகில் ஐந்து புனிதப் பாறைகள் உள்ளன. அவையாவன நாரத ஷிலா, கருட ஷிலா, மார்க்கண்டேய ஷிலா, வராஹ ஷிலா, நரசிங்க ஷிலா ஆகும். இவற்றுள் கருடன் கந்தமாதன பர்வதத்தில் இந்தப் பாறையில் அமர்ந்து கடும் தவம் செய்தார். பெருமாளும் பிரசன்னராகி கங்கையை வரவழைக்க கருடனும் பெருமாளுக்கு பாத பூஜை செய்தார். பின்னர்க் கருடன் வேண்ட அவருக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருக்க வரமளித்தார். மேலும் தான் தவம் செய்த பாறையை தரிசிப்பவர்களின் பாவம் எல்லாம் மறைய  வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வாறே வரம் அளித்தார். கருட சிலாவை  ஆதி கேதாரீஸ்வரர் சன்னிதிக்கு அருகில் சேவிக்கலாம். இவ்வதரி திவ்யதேசத்தை திருமங்கையாழ்வார் 22 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் அவற்றுள் இரண்டு பாசுரங்களை சேவிப்போம்.   எய்த்தசொல்லோடு ஈளையேங்கி இருமியிளைத்து உடலம்  பித்தர் போலச்சித்தம் வேறாயப்பேசி அயராமுன்   அத்தன் எந்தை ஆதிமூர்த்தி ஆழ்கடலைக்கடைந்த   மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே.  (பெ.தி 1-3-6)    பொருள்: தவித்த பேச்சாலும் கோழையாலும் இளைத்து, இருமலால் வருந்தி உடம்பு மிகவும் மெலிந்து, பைத்தியம் பிடித்தவர்களைப் போல ஒன்றை நினைத்து மற்றொன்றை பேசித் தளருவதற்கு முன்பே, அனைவருக்கும் தலைவனாய், அடியேனுக்கு தந்தையாய், உலகத் தோற்றத்திற்கு காரணனாய், ஆழ்கடலைக் கடைந்த, கரிய  ஓளியுடைய  எங்கள் இறைவன் கோயில் கொண்டிருக்கும் திருவதரியை வணங்குவோம்.  முதுமை வந்து நலிவதற்கு முன்னரே திருவதரியை வணங்குங்கள் என்றும்         ஏனமுனாகி இருநிலமிடந்து அன்று  இனையடி இமையவர்  வணங்க தானவனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்  தேனமர் சோலைக்கற்பகம் பயந்த தெய்வ நல்நறுமலர் கொணர்ந்து   வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்  வதரியாசிரமத்துள்ளானே.(பெ.தி 1-4-1)  பொருள்: முன்பு பன்றி வடிவம் கொண்டு பெரிய மண்ணுலகைக் குத்தி எடுத்து, அது கண்டு தன்னுடைய இரு திருவடிகளையும் பிரமன் முதலிய வானவர்கள் வணங்க இருந்தவனும், இராவணனுடைய  உடல் மண்ணில் புரளும்படியாக  பெரிய வில்லை வளைத்தவனும்  ஆகிய அடியேனுடைய நாயகனாகிய நம்பெருமான், தேன் மிகுந்த சோலைகளில் உள்ள  கற்பக மரத்தில்  பூத்த தெய்வத்தன்மை பொருந்திய நல்ல மணம் மிக்க மலர்களைக் கொண்டு வந்து, தேவர்கள்  வணங்குகின்ற கங்கையின் கரையில்  திருவதரியாசிரமத்தில் எழுந்தருளியுள்ளான்.   பத்ரிநாதர் குளிர் காலத்தில்  வந்து தங்கும் தற்போது ஜோஷிர்மட் என்றழைக்கப்படும்    மறங்கொளாளரியுருவெனவெருவர ஒருவனது அகல் மார்வம்  திறந்து வானவர் மணிமுடிபணிதர இருந்தநலிமயத்துள்  இறங்கி ஏனங்கள் வளைமருப்பிடந்திடக் கிடந்தருகெரிவிசும்  பிறங்குமாமணியருவியொடிழிதரு பிருதி சென்றடை நெஞ்சமே!   (பெ.தி 1-2-4)    பொருள்: ஏ, மனமே! சீற்றத்தைக் கொண்ட நரசிங்கத்தின் வடிவுகொண்டு இரணியனது மார்பைப் பிளந்து நின்றார் பெருமாள்.அச்செயலைக் கண்ட தேவர்கள் தங்கள் மணிமுடிகள் அணிந்த தலையால் அவரின் திருவடிகளை வணங்கிட   எம்பெருமான் அமர்ந்திருக்கும் இமயமலையில் பன்றிகள் தலைதாழ்த்தித் தம் கொம்புகளாலே அம்மலைகளைப் பிளந்திட, அருகில்  கிடந்து ஒளி வீசும் மாணிக்கங்கள், மலையிலிருந்து விழும் அருவிகள் விழும் திருப்பிருதியை சென்றடைவாயாக  - என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பிருதி திவ்யதேசத்திலும் நரசிம்மருடன் கருடன் சேவை சாதிக்கின்றான். இவ்வாலயத்தில் நரசிம்மர், அவருக்கு வலப்புறத்தில் பத்ரிநாதர் அவருக்கு வலப்புறத்தில் உத்தவர் மற்றும் குபேரன் சேவை சாதிக்கின்றனர். நரசிம்மருக்கு இடப் புறத்தில் அஞ்சலிக் கோலத்துடன் நின்ற நிலையில் கருடன் சேவை சாதிகின்றார் மற்றும் பிராட்டியுடனும், இளவலுடனும் இராமர் சேவை சாதிக்கின்றார்.  உற்சவ மூர்த்திகளாக நாராயணர், அனுமனும் உடன் சேவை சாதிக்கின்றனர்.  இவ்வாலயத்தின் மற்றொரு பகுதியில் வாசுதேவரின் ஆலயத்தை மையத்தில் கொண்டு அஷ்டபுஜ விநாயகர்,  அம்பாள் காளியாகவும்,  சூரியன்,  மணக்கோலத்தில் கௌரி சங்கர் என்று நான்கு சன்னதிகள் நான்கு திக்குகளிலும் பஞ்சாயதான முறையில் அமைந்திருக்கின்றன. வாசுதேவருடன் அவர் தமையன் பலராமரும் சேவை சாதிக்கின்றார். வாசுதேவர் ஆலயத்தில் ஒரு சிறு சன்னதியில்  ஒரு காலை மடக்கி அஞ்சலி ஹஸ்தத்துடன் உலோகத்தால்  ஆன அருமையான கருடனை சேவிக்கலாம். கங்கையின் கரையில் புருஷோத்தமனாக பெருமாள் அருள் பாலிக்கும்,  கண்டம் என்னும் கடிநகர் என்று பெரியாழ்வார்  மங்களாசாசனம் செய்த தேவ பிரயாகையிலும் இதைப் போன்றே கருடனை திவ்யமாக சேவிக்கலாம். அவர் அருளால் வதரி சென்று பத்ரிநாராயணரை  கருடபகவானோடு  சேவிக்குமாறு வேண்டுகிறேன். அடுத்துப் பெருமாளுடன் கருடாழ்வார் சேவை சாதிக்கும் இன்னும் சில தலங்களின் சிறப்பைக் காணலாம்.            18. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏக சிம்மாசனம்   []   இனிக் கருடன் பெருமாளுடனும் தாயாருடனும் ஏக சிம்மாசனச் சேவை சாதிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர்த் தலத்தைப் சேவிக்கலாமா அன்பர்களே? கருடன்  வேதஸ்வரூபர் மட்டுமல்ல நாதஸ்வரூபரும் கூடத்தான். ஷடகம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஸப்தஸ்வர வடிவானவர் கருடன். பெரிய திருவடியான  இவர் இராமாவதாரத்தில் இந்திரஜித் விடுத்த நாகபாசத்தினால் கட்டுண்டு கிடந்த இளைய பெருமாளையும் மற்ற வானர சேனைகளையும் விடுவித்து பெருமாளுக்கு கைங்கர்யம் புரிந்தார். அது போலவே  அவர் கிருஷ்ணாவதாரத்தில் பிராட்டியான ஸ்ரீருக்மணியிடமிருந்து  அவர் அழகாக எழுதிக்கொடுத்த மடலை எடுத்துக்கொண்டு சென்று ஸ்ரீகிருஷ்ணரிடம் கொடுத்து கைங்கர்யம் செய்தார்,  இவ்வாறே பல் வேறு திவ்யதேசங்களிலும் கருடன் செய்த கைங்கரியங்களினால் அவர் பெருமாளுடன் சமமாக நின்று சேவை சாதிக்கும் பேறு பெற்றார். அத்தகைய திவ்யதேசங்களுள் முதலாவதானது ஸ்ரீவில்லிபுத்தூர்.    கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்  சோதி மணிமாடந் தோன்றுமூர்  நீதியால் நல்ல பத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்  வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.   என்று பல பெருமைகளைக் கொண்ட தலம் இத்தலம். வில்லி, புத்தன் என்பவர்களால் உருவாக்கப்பட்ட ஊர் என்பதால் வில்லிபுத்தூர் என்றழைக்கப்பட்டது, ஆண்டாளின் திருஅவதாரத்திற்குப் பிறகு  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆனது.    ஏக சிம்மாசனச் சேவை: சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள், பெரியாழ்வார் திருமகளாய் திருஅவதாரம் செய்து, ஆயனுக்காகக் கனாக் கண்டு, அரங்கனை கைப்பிடித்த  மென்னடையன்னம் பரந்து விளையாடும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், கருடன் மற்றும் ரங்கமன்னார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் நின்ற கோலத்தில் சேவை சாதித்து அருளுகின்றனர். இத்தலம்  அரையர் சேவை இன்றும் நடைபெறும் ஒரு தலம்.  இத்தலத்தில் பெருமாள் வடபத்ர சாயியாகப் போக சயனத்தில் சேவை சாதிக்கின்றார். திவ்ய தேசங்களில்  உயரமான கோபுரத்தைக் கொண்ட திவ்யதேசம் இது. இந்தக் கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாக விளங்குகின்றது.  இத்தலத்தின் தேரும் மிகவும் உயரமானது. இத்தேரில்தான் ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னாருடன் தன் திருவவதார தினமான திருவாடிப்பூரத்தன்று வலம் வந்து அருள் பாலிக்கின்றாள்.    ஆண்டாள் நாச்சியாரின் திருவவதாரம் வராக அவதார காலத்திலேயே முடிவு செய்யப்பட்டது என்பர் பெரியோர்கள். ஹிரண்யாட்சன் பூமிப்பிராட்டியரை எடுத்துக்கொண்டு போய்ப் பாதாளத்தில் ஒளித்து வைத்துவிட பெருமாள் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாட்சனை அழித்துப் பூமிதேவி நாச்சியாரைத் தன் கோரைப்பற்களின் மேலாக மூக்கில் வைத்துக்கொண்டு வரும் போது தாயார்  மூன்று பிரதிக்ஞை செய்தார் அவையாவன  1.பெருமாளின் திருவடிகளில் மலர்  இட்டு அர்ச்சனை செய்வது.  2.அவர் நாமத்தை உரக்கச் சொல்லுவது.  3.அவர் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணம் செய்வது.  பட்டர் பிரான் திருமகளாகக் கோதை நாச்சியாராக இப்பூவுலகில் பிறந்த போது இந்த பிரதிக்ஞைகளை நிறைவேற்றினார் பூமிபிராட்டியார்.  கீதாசாரத்தை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் சொல்லி உலகத்தில் உள்ளவர்களை திருத்தவும், மேற்சொன்ன பிரதிக்ஞைகளை நிறைவேற்றவும்,  மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கருடனின் அம்சமான, பெருமாளுக்கே வாத்சல்ய பாவத்துடன் திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் புஷ்ப நந்தவனத்தில் ஒரு துளசிச்செடியின் அருகில் ஆடிப்பூரத்தன்று குழந்தையாய் தோன்றினாள் தாயார்.  உளம் மகிழ்ந்த பெரியாழ்வார் அக்குழந்தையை உச்சி மோந்து எடுத்து கோதை என்று பெயரிடப்பட்டு வளர்ந்து வரும் காலத்தில் அவளுக்கு கிருஷ்ண பக்தி என்னும் அமுதினை அளித்தார். நாச்சியாரும் கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், கமல வண்ணன் ஒருவனையே தன் நாயகனாக வரித்து மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே, என்று  மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத  முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்  மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து  கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி! நான் ( நா தி 6-6)  பொருள்: தோழீ! மத்தளங்கள் கொட்டவும், இருரேகைகளையுடைய சங்குகள் நீண்ட நேரம் ஊதவும்,  மைத்துனன்மை முறையுடையவனாய், பூர்ணனான கண்ணபிரான் முத்துக்களையுடைய மாலைத்திரள்கள் தொங்க விடப்பெற்ற பந்தலின் கீழே வந்து என்னை திருமணம் செய்தருள நான் கனாக் கண்டேன்.  என்று  வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை கனவு கண்டு சீராக வளர்ந்து  வந்தாள்.  ஒரு நாள் பெரியாழ்வார் வடபத்ரசாயிக்கு தொடுத்து வைத்திருந்த மலர் மாலையை கோதை அணிந்து கிணற்றில்  அழகு பார்ப்பதைக் கண்டு பதைத்து. வேறு ஒரு மாலை கட்டி  பெரிய பெருமாளுக்குச் சமர்பித்தார் பெரியாழ்வார். அன்று இரவு அவர் கனவில் தோன்றிய பெருமாள். ஆண்டாள் அணிந்த மாலையே தனக்கு மிகவும் உகந்தது என்று உணர்த்தினார். அன்று முதல் நாச்சியாரும் "சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்" என்னும் திருநாமம் பெற்றார்.  இவ்வாறு தன்னை ஒரு கோபிகையாக பாவித்து, பெரிய பெருமாளைக் கிருஷ்ணராகவும், கோவிலையே நந்தகோபன் மாளிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்ப்பாடியாகவும் பாவித்து பாவை நோன்பு நோற்பதற்காகத் திருப்பாவை 30 பாடல்கள் பாடினாள். இதில் முதல் பத்தில் பெருமாளின் நாமங்களை போற்றுகின்றாள், இரண்டாம் பத்தில் அவரது உயர்வான திருவடிகளில் அர்ச்சனை செய்கின்றாள், மூன்றாம் பத்தில் “எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோம்“  என்று ஆத்ம சமர்ப்பணம் செய்து  வராக அவதாரத்தின் போது செய்த பிரதிக்ஞைகளை நிறைவேற்றுகின்றாள்.  மேலும் நாச்சியார் திருமொழியில் மாசி மாதம் காமனைத் தொழுது, சிற்றில் சிதையேல் என்று வேண்டி, கூடல் இழைத்து, குயிலைக் கூவக்கூறி, ஆயனுக்காக கனாக் கண்டு, கவர்ந்த கூறைகளை வேண்டிப் பாஞ்சசன்யத்தை அசூயையுடன் வினவி, வேங்கடக்கோனுக்கு மேகத்தைத் தூது விட்டு, மாலிருஞ்சோலை நம்பிக்கு அக்காரவடிசல் அர்ப்பணித்து, பிரிவாற்றாது வருந்தி, திருவரங்கத்துறை செல்வனை அவன் இருக்கும் தலங்களுக்கு தன்னை உய்த்திடுங்கள் என்று உற்றாரை வேண்டி, அவன் திருமேனி தொடர்புடைய பொருள் ஏதாவது ஒன்றை கொண்டு வந்து என் உயிரை காப்பாற்றுங்கள் என்று வேண்டி, விநதை சிறுவன் சிறகென்னும் மேலாப்பின் கீழ் வரும் பரந்தாமனை விருந்தாவனத்தே கண்டதை 143 பாடல்களில்  பாடினாள். இவ்வாறு பூமாலையும், பாமாலையும் சூடிக்கொடுத்தாள் சுடர்க்கொடியாள், பாடிக்கொடுத்த பைங்கிளி கோதை நாச்சியார்.  திருமண வயதடைந்த கோதா தேவி, ‘அரங்கனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிட மாட்டேன்!’ என்றாள். பெரியாழ்வார் குழம்பினார். மீண்டும் அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் தெய்வப்பிறவி. அவளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று அருளி மறைந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் வந்த கோதை, காவிரிக் கரையை அடைந்ததும், தன் கணவன் இருக்குமிடத்தில் பல்லக்கில் செல்வது அவருக்கு மரியாதை தருவதாக இருக்காது என எண்ணினாள்  எனவே, தன்னை ஆட்கொள்ளும்படி ரெங்கமன்னாரிடம் வேண்டினாள். ரெங்கமன்னாரும் அவளை தன்னுடன் சேர்த்துக்கொண்டார். இதனிடையே, தன் மகளைக் காண பல்லக்கிற்குள் பார்த்தார் பெரியாழ்வார். ஆனால் ஆண்டாள் அங்கில்லாததைக் கண்டு திகைப்படைந்தார்.  கோதை தனக்குத் திருவடிச்சேவை செய்வதை பெரியாழ்வாருக்குக் காட்டியருளினார்  பெரிய பெருமாள்.  ஆனால், ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்து தான் கோதையை மணம் முடிக்க வேண்டுமென்று பெரியாழ்வார்  பெருமாளை வேண்டினார். அதன்படி ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையை திருமணம் செய்து கொண்டார் அரங்கநாதர் என்கிறது தலபுராணம். இப்படி கோதை ஆண்டவனை ஆட்கொண்டதால்  ஆண்டாள் எனச் சிறப்பிக்கப்பட்டாள். இதன் அடிப்படையில் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும், தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.  இனி ஏன் கருடனுக்கு சம ஆசனம் என்று யோசிக்கின்றீர்களா? அதற்கும் ஆண்டாள் அரங்கர்  கல்யாணத்திற்கும் சம்பந்தம் இருக்கின்றது.  குறித்த நேரத்திற்கு அரங்கர் திருமணத்திற்கு வரமுடியாமற் போய் விட்டது, பெரியாழ்வார் உட்பட திருக்கல்யாணத்திற்காக கூடியிருந்த அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, அனைவரின் நிலையை உணர்ந்த கருடன் விரைந்து சென்று காலம் தாழ்த்தாமல் பெருமாளைப் பிராட்டியாரிடம் சேர்த்தான்.   இதற்குக் கைமாறாக ஆண்டாள் ரெங்கமன்னாரிடம் பரிந்துரைக்க பெருமாளும் தங்களுடன் கருடனும் சரிசமமாக நின்று சேவை சாதிக்கும் பேற்றை அளித்தார்.  கருடாழ்வார் திருவரங்கத்திலிருந்து பெருமாளை அழைத்து வந்ததால் “மாப்பிள்ளைத் தோழனாகவும்” விளங்குகின்றார் என்பது ஐதீகம். மேலும் எப்போதும் கருடன் பெருமாளையும் பிராட்டியாரையும் வணங்க விருப்பப்பட்டதாலும் எப்போதும் அருகில் இருப்பதாக ஐதீகம்.  அர்த்த மண்டபத்தில்  தங்க முலாம் மஞ்சத்தில், வலப்புறம் கோதை நாச்சியாரும், நடுவில் ரங்கமன்னாரும், இடப்புறம் கருடன் என மூவரும் ஒன்றாகச் சேவை சாதிக்கின்றனர்.  ரங்கமன்னார் நின்ற கோலத்தில் வலக்கையில் பெந்துகோல் (தற்காப்புக்கோல்), இடக்கையில் செங்கோல், இடையில் உடைவாள், கால்களில் திருப்பாதுகைகள் என்று இராஜாங்க கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆண்டாள் கொண்டை முடி அலங்கரித்து  இடக்கரத்தில் கொஞ்சும் கிளியைத் தாங்கி, வலக்கரம் திருவடிகளைச் சுட்டிக்காட்ட, வைரமூக்குத்தி மின்ன எழிலாக சேவை சாதிக்கின்றாள். கருடன் அஞ்சலி ஹஸ்தத்துடன் திவ்ய தம்பதிகளை வணங்கும் நிலையிலும் நின்று சேவை சாதிக்கும் அழகே அழகு.  ஓம் என்னும் பிரணவத்தின் வடிவாக சேவை சாதிக்கின்றனர் மூவரும். கல்யாண கோலத்தில் ஆண்டாள் மற்றும் கருடனுடன் பெருமாள் சேவை சாதிப்பது ஒரு தனிச் சிறப்பான அம்சமாகும்.   ஓம் என்னும் பிரணவ கோலம்: அ + உ + ம் = ஓம் அல்லவா? இதில் அ = பெருமாள் என்னும் பரமாத்மா, ம = ஆண்டாள் நாச்சியார் , ஜீவாத்மா, சரணாகதியின் மூலம் இருவரையும் பாலமாக இனைக்கும் கருட பகவான் = உ.  இதன் மூலமும் நாம் கற்பது சரணாகதிதான். எல்லாவற்றையும் பெருமாளின் காலடியில் விடுத்து சரணமடைய அவர் மோட்சம் அளிப்பார் என்பது சத்தியம்.  கணவன் எப்படிப்பட்ட உயரிய பதவியில் இருந்தாலும் மனைவி விரும்பியதை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும் என்பதற்கு உதாரணமாக இத்தலத்தில் பெருமாள் திகழ்கின்றார்.  கண்ணனையே தன் நாயகனாக அடைய வேண்டும் என்று வேயர் குல விளக்கு விரும்பியதால் ரங்கமன்னாரே -  கிருஷ்ணர், ஆண்டாள் -  ருக்மணி, கருடன்  - சத்யபாமா என்று அருளுகின்றனர் சிலர்.  “கருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமனார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன், சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார்”.  இத்தலத்தில் வருடத்தில் இரு முறை ஐந்து கருடசேவை சிறப்பாக நடைபெறுகின்றது.  கோதை நாச்சியாரின் திருஅவதார தினமான ஆடிப்பூர உற்சவத்தின் ஐந்தாம் திருநாளன்றும், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் ஐந்தாம் திருநாளன்றும் இரவு  ஐந்து கருடசேவை சிறப்பாக நடைபெறுகின்றது.  ஏழாம் திருநாளன்று நாச்சியாரின் மடியில் தலை வைத்த சயன கோலத்தில் பெருமாள் சேவை சாதித்தருளுகின்றார்.  கருட சேவை பாகத்தில்  பின்னர் ஐந்து கருட சேவையைப் பற்றி விரிவாகக் சேவிக்கலாம்.                                       19. திருக்குளந்தையில் ஏக சிம்மாசனம்   தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவதிருப்பதிகளுள் ஒன்று திருக்குளந்தைத் திருத்தலம், திருநெல்வேலியிலிருந்து இருந்து திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 38 கி.மீ தூரத்திலும்,  மற்ற  நவதிருப்பதித் தலங்களான திருப்புளிங்குடி தலத்தில் இருந்து 5 கி.மீ தூரத்திலும், ஸ்ரீவைகுந்தம் தலத்தில் இருந்து 7 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.     பெருமாள்: ஸ்ரீநிவாசன் (வேங்கடவாணன்), நின்ற கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.  உற்சவர் : மாயக்கூத்தன் (சோர நாட்டியன்)  தாயார் : குளந்தைவல்லி (கமலா தேவி), அலர்மேல்மங்கை. தனிச் சன்னதி இல்லை.  விமானம்; ஆனந்த நிலையம்.  தீர்த்தம்: பெருங்குளம்.  பிரத்யட்சம்: பிரகஸ்பதி.  மங்களாசாசனம்: நம்மாழ்வார் 1 (8ம் பத்து -2ம் திருவாய் மொழி) பாடலால் மங்களாசாசனம் செய்துள்ளார்.   கிரகம்: சனி ஸ்தலம்  திவ்ய தேசங்களுள் 86வது நவதிருப்பதிகளில் 7வது. சிறப்பு: கமலாவதியை மார்பில் ஏற்றது. கருடன் (ஆடல்பறவை) ஏக ஆசனத்தில் உற்சவருடன் எழுந்தருளியுள்ளார்.   கமலாவதியை மார்பில் ஏற்றது: தொலைவில்லி மங்கலத்திற்கு வடகிழக்கில் உள்ள தாடக வனம் என்ற இத்தலத்தில் விப்ர குலத்தைச் சார்ந்த வேதசாரன் என்ற அந்தணன் தன் மனைவி குமுதவல்லியுடன் மகப்பேறு வேண்டி பகவானை வழிபட்டு வந்தான். பெருமாளின் அனுகிரகத்தினால் அவர்களுக்கு அலர்மேல் மங்கை அம்சமாக ஒரு பெண் மகவு  பிறந்தது. அக்குழந்தைக்கு “கமலாதேவி” என்று பெயரிட்டுச் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். அவளும்  கோதை நாச்சியார்  “மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே”,  என்று பாடியது போலத் தானும்   பெருமாளையே மணப்பேன் என்று, பெற்றோர் உற்றார், உறவினர், கூறியும் கேளாமல் வனம் சென்று அருந்தவம் இயற்றினாள். தயாபரன் தவம் செய்யும் தையல் முன் தோன்றி இவ்விளம் வயதில் இவ்வாறு கடும் தவம் இயற்றக் காரணம் யாது? என்று வினவ, அவளும் ஸ்ரீமந்நாராயணனையே மணாளனாக அடைய என்று மறு மொழி கூறினாள். பகவானும் தம் கௌஸ்துபமணியோடு அவளை ஆலிங்கனம் செய்து கொண்டார். தேவர்கள் பூமாரி பொலிந்தனர். பாலிகை தவம் செய்த இடமாதலால், 'பாலிகைவனம்' என்ற பெயர் அடைய வேண்டும் என்று தேவர்கள் வேண்டினார்கள். வேதசாரனும் தன் செல்லப் புதல்வியை பெருமாள் தனது மார்பில் தாங்கியிருப்பதைக் கண்டு மகிழ்ந்து பெருமாளை பூசித்து வந்தான்.   மாயக்கூத்தாடியது (சோர நாட்டியன்): ஒரு நாள் வேதசாரனின் மனைவி குமுதவல்லி குளத்திற்கு நீராட சென்ற போது அச்மநாரன் என்ற அவுணன் அவளை அபகரித்துச் சென்று இமயமலையில் ஒரு குகையில் சிறை வைத்தான். வேதசாரன் பூச நட்சத்திரத்துடன் கூடிய ஒரு தை பௌர்ணமியன்று  கலச தீர்த்தத்தினால் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்து, பெருமாளே! “அடியேன் மனையாளை ஒரு அவுணன் அபகரித்துச் சென்று விட்டான், மனைவி இல்லாதவன் ஒரு கர்மத்திற்கும் பாத்திரவானல்லன் எனவே அருள் புரிய வேண்டும் என்று வேண்டினான்.  உடனே பகவான் கருடவாகனத்தில் ஆரோகணித்து இமயமலை சென்று  குமுதவல்லியை மீட்டு வேதசாரனுக்கு அருள் புரிந்தார். இதை அறிந்த அச்மநாரன் பெருமாளுடன் போர் புரிய பாலிகாவனம்  வந்தான். பெருமாள் அவனை காலைப் பிடித்து தரையில் மோதி அவனது தலையில் நின்று நர்த்தனம் புரிந்து அவனை வதம் செய்தார். தேவர்கள் மகிழ்ந்து கங்கா தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்தனர். சோரன் மேல் நாட்டியம் செய்தபடியால்  பகவானுக்கு “சோர நாட்டியன்” அதாவது மாயக்கூத்தன் என்ற திருநாமம் ஏற்பட்டது.  இங்கிருந்து கருடாழ்வார் மீது பெருமாள் புறப்பட்டு இமயம் சென்றதால் கருடன் இங்கு உற்சவராகவும் எழுந்தருளியுள்ளார். மேலும் உதவி புரிந்த கருடாழ்வாருக்கு   உற்சவர் மற்றும் உபயநாச்சியர்களுடன் ஏக ஆசனம் அளித்துள்ளார் பெருமாள். கருடன் இங்கே சிறகுகளை உயரே தூக்கிய வண்ணம் பறக்கும் கோலத்தில் ஆடல் பறவையாகக் சேவை  சாதிக்கின்றார். இத்திருக்கோயிலின் மதிலின் ஈசான்ய மூலையில் வீற்றிருக்கும் கருடனுக்குப் பெருமாளுக்குச் சாற்றிய பூச்சட்டையை மறு நாள் சாற்றுவது வழக்கம். இதன் பிறகே பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகம் செய்யப்படுகின்றது. இத்தலத்தைப் மங்களாசாசனம் செய்த நம்மாழ்வார் “ஆடல் பறவை” என்று  கருடனையும் மங்களாசாசனம் செய்துள்ளார். இதோ பாடல்  கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன் கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம் பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தேன் மாடக்கொடிமதின் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக்கூத்தன் ஆடல் பறவை உயர்த்த வெல்லோர் ஆழிவலவனை ஆதரித்தே!!  (தி.மொ. 8-2-4)  பொருள்: மாடங்களையும் கொடிகள் கட்டிய மதில்களையுமுடைய அழகிய திருக்குளந்தை என்னும் திருத்தலத்தில் மேற்கு திக்கில் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருக்கின்றான் வண்மையுடைய  மாயக் கூத்தன். கருடப் பறவையைக் கொடியிலே உயர்த்திய போரிலே வெல்லுகின்ற திருவாழியை வலது திருக்கரத்தில் உடையவன்  எம்பெருமான். அப்பிரானை விரும்பிக் கலவியின் நிமித்தம் சென்றேன்; என்னுடைய அழகிய வளை, மனம்  முதலியவை எல்லாம் என்னிடத்திலிருந்து நீங்கி ஒழிய இழந்து, பலவகையான வளையல்களை அணிந்த இப்பெண்களுக்கு முன்னே நாணமும் நீங்கினேன்; இனி எதனைக் கொடுப்பேன்.     இத்தலத்திற்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அங்கு ஆண்டாள் திருவவதாரம் செய்து எம்பெருமானுக்கே  மாலையிடுவேன் என்று  திருமணங்கொண்டாள். அதே போல இங்கு கமலாதேவி அவதரித்து எம்பெருமானை திருமணங்கொண்டாள். அங்கும் ஆண்டாள் அரங்கமன்னார் கருடன் ஏக சிம்மாசனம். இங்கும் மாயக்கூத்தர் உபய நாச்சியார்கள் கருடன் ஏக சிம்மாசனம். இரு தலங்களில் பெருமாள் மற்றும் நாச்சியார்களுடன்  கருடன் ஏக சிம்மாசனத்தில் விளங்கும் அழகைக் கண்டோம், இனி தேரழுந்தூரிலே கருடன் கருவறையில் ஒன்றாக சேவை சாதிக்கும் அழகைக் சேவிக்கலாம்.                  20. தேரழுந்தூரில் சகாவாக கருடன்   []     கருடனும் பெருமாளும் ஒன்றாகச் சேவை சாதிக்கும் தலங்களில் அடுத்ததாக நாம் சேவிக்கப்போகும் திவ்யதேசம் தேரழுந்தூர் ஆகும். இத்தலத்தில் பெருமாள் தேவாதி ராஜனாக நின்ற கோலத்தில் சங்கு சக்கரம், பத்ம முத்திரையுடன் சேவை சாதிக்கின்றார். பெருமாளுக்கு இடப்பக்கத்தில் மிக்க பக்திமையுடன் கருடன் உடன் சேவை சாதிக்கின்றார். இவ்வாறு பெருமாளுடன் கருடாழ்வார்  சேவை சாதிக்க என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா வாருங்கள் அடியேனுடன் ? தேவேந்திரன் ஒரு சமயம் ஒரு விமானத்தையும் வைரமுடியையும் அளித்து இவற்றை எந்தெந்த பெருமாளுக்கு உகந்ததோ அங்குச் சமர்பித்து விடு என்று பணித்தான். கருடனும் வைரமுடியை கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகில் உள்ள திருநாராயணபுரத்தில் செல்லப்பிள்ளை சம்பத்குமாரரருக்கும் விமானத்தை தேரழுந்தூரில் தேவாதிராஜனுக்கும் சமர்ப்பித்தான். எனவே இத்தலத்தின் விமானம் கருடவிமானம் ஆகும். விமானம் சமர்பித்த கருடனுக்கு “ என்ன வரம் வேண்டும்? என்று தேவாதிராஜப் பெருமாள்  வினவ , கருடனும் அர்ச்சை நிலையில் தேவரீர் இருக்க அடியேன் எதிரே நின்று எல்லா தலங்களிலும் சேவிக்கிறேன். ஆனால் அருகிலே நின்று அடியேன் தேவரீரின் பொன்னடிகளைச் சேவிக்க வேண்டும் என்று வரம் வேண்ட பெருமாளும் கருடனை அருகில் நிறுத்திக் கொண்டதாக ஐதீகம்.    ஸ்ரீஆளவந்தார் தனது  ஸ்தோத்ர ரத்தினத்தில்  தாஸ ஸகா வாஹன ஆஸனம் த்வஜோ   யஸ்தேவிதாநம் வ்யஜனம், த்ரயீமய    என்று கருடன் பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்யும் தாசன், அவரை சுமந்து செல்லும் வாகனம், அவர் அமரும் ஆசனம், அவரது கொடியில் விளங்குபவர் ,மற்றும் விதானமாக விளங்கும் பாங்கை   விவரிக்கும் பட்சத்தில் ஸகாவான (தோழன்) நிலையை இந்த திவ்யதேசத்தில் நாம் சேவிக்கலாம். ஆமருவியப்பனுடன் கர்ப்பகிரகத்தில் கருடன் இடப்பக்கத்தில் நிற்பதற்கான  காரணம் தர்மத்திற்கும் அவருக்கும் உள்ள விசேஷ உறவே. தர்மங்கள் எல்லாம் வேதங்களுள் அடங்கியவை. கருடனோ வேதஸ்வரூபி!. கருடனின் வேத ஸ்வரூபத்தை வேதாந்த தேசிகர் “யத் பட்சஸ்த்தா த்ரிவேதி …… த்ரிதாம்னா வாஹன இந்த்ர:” என்று கருட பஞ்சாசத்தில் கூறுகின்றார்.  அதாவது கருடபகவானுடைய சிறகுகளில் மூன்று வேதங்களும் அடங்கியுள்ளது  எனவேதான் தேசிகர் இவ்வாறு கருடனை மங்களாசாசனம் செய்தார். மேலும் வேத வடிவான திருமேனி கொண்ட கருட பகவான் மூன்று இடங்களில் நிலைத்திருக்கும் எம்பெருமானின் வாகனம் என்பதை நிகமாந்த தேசிகர் “த்ரிதாம்ன வாஹன இந்த்ர:” என்ற வாக்கியத்தின் மூலம் உணர்த்துகின்றார். மஹா விஷ்ணுவின் மூன்று ஸ்தானங்கள் திருப்பாற்கடல், சூரிய மண்டலம்,  முனிவர்களின் உள்ளம் ஆகும். எனவே விஷ்ணுவிற்கு த்ரிதாம்னா என்று பெயர். இந்த த்ரிதாம்னனுக்கு சிறந்த வாகனமாக சேவை செய்பவன் கருடன். மேலும்   அவரே கருட தண்டகத்தில் வைனதேயன் வேத புருஷன் என்பதை “கருடம் அகில வேத நீட அதிரூடம்”  என்று கூறுகின்றார். அதாவது கருடன் சகல வேதங்களாகிய கூட்டினுள் அமர்ந்திருக்கும் வேத புருஷன் என்று வணங்குகிறார். எனவேதான் தர்மங்களுக்கு பிரமாணமான வேதங்களை பிரதிபலிக்கும் வேத ஸ்வரூபி  கருடன் என்பதை எல்லாரும் உணர்ந்து கொள்ள வேண்டுமென்று தன் அருகிலேயே நிறுத்திக்கொண்டார். பக்ஷிராஜனுக்கு   விசேஷமான இடம் கொடுத்தார்.  என்று பெரியோர்கள் விளக்கம் தருவர்.   கருட விமானமாகிய விதானத்தின் கீழ் நாச்சியார் (சத்யபாமா) இடத்தை தான் எடுத்துக்கொண்டு கருடனும் பெருமாளுக்குச் சரிசமமாக பக்தியுடன் உயிரோட்டத்துடன், விரித்த அழகிய சிறகுகளுடனும், அஷ்ட நாகங்கள் திருமேனியெங்கும் விளங்க கூரிய நகங்களுடனும், சீரிய நோக்குடனும், முகமலர்ச்சியுடன் கரம் குவித்து சந்தோகா! பௌழியா! தைத்திரியா! சாமவேதியனே! நெடுமாலே! எனப் பாடப்பெற்ற பெருமாளுக்கு, வேதசொரூபனான வைநதேயன் தன் சிறகுகளால் விசிறிக்கொண்டு, பிற ஒலிகள் கேட்காவண்ணம் சாமகானம் பாடிக்கொண்டிருக்கிறார்.   மற்ற இடங்களில் பிராட்டியின் சொல் கேட்டு அருள் புரியும் எம்பெருமான் இங்கே தன் நண்பனின் சொல் கேட்டு அருள் செய்து கொண்டிருக்கின்றான். எனவேதான்  "புனிதா புட்கொடியாய் நெடுமாலே"  என்று மங்களாசாசனம் செய்கின்றார் மங்கை மன்னன்.  பெருமாளுக்கு வலப்பக்கத்தில் பிரகலாழ்வானும் வணங்கியபடி எழுந்தருளியுள்ளான். இரணியனை அழித்த பிரகலாதனுக்கு அருள் புரிந்த நரசிம்ம மூர்த்தியின் உருவத்தைக்கண்டு அஞ்சாமல் அருகில் வந்த பிரகலாதனின் பக்தியை மெச்சி அவனுடைய வேண்டுகோளுக்கிணங்கி கண்ணனாக ஆமருவியப்பனாகச் சேவை சாதித்தார். மேலும் முக்திப்பேறு வேண்டி தொழுத மார்க்கண்ட முனிவர் கருவறையில் பெருமாளுக்கு அருகில் வலப்புறத்தில் குக்குடாசனம் என்ற ஆசன நிலையில் அமர்ந்தபடி சடைமுடியுடன் அஞ்சலி செய்த வண்ணம் தவக்கோலத்தில் இருக்கின்றார். மேலும் அகத்தியரின் சாபம் தீர கங்கையினும் புனிதமான காவிரித்தாயாரும் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் இருக்கின்றாள். இவ்வாறு கர்ப்பகிரகத்தில் கருடாழ்வார், பிரகலாதாழ்வார் புடை சூழ, மார்க்கண்டேயர், காவிரித்தாய் வணங்கும் அற்புத கோலத்தில் சேவை சாதிக்கின்றார் தேவாதிராஜர். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சோழநாட்டு நாற்பது திவ்யதேசங்களில் இது 24வது திவ்யதேசம். மயிலாடுதுறை கும்பகோணம் மார்க்கத்தில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 3கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. உற்சவர் ஆமருவியப்பன் சதுர்புஜத்துடன், அருகே ருக்மணி, சத்யபாமா முதலியோருடன், பசு மற்றம் கன்றுகளுடனும் சாட்சாத் கிருஷ்ணனாக சேவை சாதிக்கின்றார். கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தலம். ஒரு காலத்தில் கரிகால் சோழன் தலைநகராகவும் திகழ்ந்திருக்கின்றது இத்தலம்.   மூலவர்:  தேவாதிராஜன்; வடமொழியில்  கோசகன்.  இதன் தமிழாக்கமே ஆமருவியப்பன் என்பதாகும். சாளக்கிராம திருமேனி; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், நின்ற திருக்கோலம். சிற்பக்கலையின் உச்சிநிலைக்கும் மேம்பட்ட வடிவழகு. மூலவரின் திருமேனியில் நரம்புகள், நகங்கள், அழகு செய்யும் திருமுகம் சேவிக்க சேவிக்க தெவிட்டாதது. அவரது எழில் எழுத முடியாதது அதனால் தானே திருமங்கை மன்னன் ஆமருவியப்பனைத்  "திருவுக்கும் திருவாகிய செல்வா"  என்று கண்டு சொக்கி நின்று தன்னைப் பரகாலநாயகியாக பாவித்துப் பாசுரங்கள் பாடினார்.  திருவுக்கும் திருவாகிய செல்வா! தெய்வத்துக்கரசே! செய்யகண்ணா!  உருவச்செஞ்சுடராழி வல்லானே! உலகுண்ட ஒருவா! திருமார்பா!  ஒருவற் காற்றியுய்யும் வகையின்றால், உடன் நின்றைவர் என்னுள் புகுந்து ஒழியா   தருவித்தின்றிட, அஞ்சி நின்னடைந்தேன் – அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே! (பெ.தி 7-7-1)    பொருள்: மஹாலக்ஷ்மிக்கும் லக்ஷ்மிகரமான செல்வனே! நித்திய சூரிகளுக்கு தலைவனே! சிவந்த திருக்கண்களை உடையவனே! அழகிய வடிவையும், சிவந்த சுடரையும், உடைய திருவாழியை செலுத்துவதில் வல்லவனே! பிரளய காலத்தில் உலகங்கள் அனைத்தையும் அமுது செய்த ஒப்பற்றவனே! பெரிய பிராட்டியைத் திருமார்பில் உடையவனே! திருவழுந்தூரில் மேல் திசையில் எழுந்தருளி இருக்கும் பெருமானே! ஒரு இந்திரியத்திற்கு தப்பிப் பிழைக்கும் வழியில்லை. அந்தோ! ஐந்து பொறிகள் நெருங்கி இருந்து என்னுள் புகுந்து ஓயாமல் அலைத்து நெருக்க, அதற்கு அஞ்சி உன்னை சரணடைந்தேன்.   உற்சவர்: உபயநாச்சியார்களுடன் ஆமருவியப்பன்.திரு வுக்கும் திருவாகிய செல்வனாகப் பட்டு பீதக ஆடை மிளிர பொன்னிற்கும் அழகு தரும் பேரொளி மேனியுடன், மனித குலத்தின் அடையாளமான பசு “அந்தோ நின்னடியின்றி மற்றறியேன் என்று கூறுவது போல ஆமருவியப்பனின் திருவடிகளைத் தன் நாவினால் தடவ, “ஆஆ என்றடியேற்கு இறையிரங்காய்” என்றுரைப்பது போல கன்றுக்குட்டி பெருமாள் திருமுகம் நோக்க கோசகனாய்த் திருமகளும், புவிமகளும் உடனிருப்ப எழிலாகச் சேவை சாதிக்கின்றார். இவரது சௌந்தர்யத்தில் மயங்கித் திருமங்கையாழ்வார் பரகாலநாயகியாகி மங்களாசாசனம் செய்துள்ளார்.  தாயார்: செங்கமலவல்லி. அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா” என்றபடி விளங்குபவள் பெரியபிராட்டியார் என்கிற திருமகள். இத்தலத்தில் தாயார் இருபுறமும், யானைகள் மாலை கொண்டு வழிபடும் நிலையில் செழுந்திருக்கோலம் கொண்டு சேவை சாதிக்கின்றாள். பிராட்டியின் அழகையும் கருணையையும் திருமங்கையாழ்வார், ’செங்கமல திருமகளும் புவியும்’ என்று தொடங்கும் பாசுரத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். மூலவருக்கு முன்னால் உற்சவர் “சுவர்ண ரஜஸ்ருதாம்” என்றபடி பொன்னணிகள் திருமேனியெங்கும் மிளிர வெள்ளியாலான மண்டபத்தில் செல்வம் அளிக்கும் திருமகள் சேவை சாதிக்கின்றாள். அடியவர்களின் வேண்டுதலுக்கு உடனே அருள்புரிபவள் தாயார். தாயார் சன்னதியின் முன் மண்டபத்தில் அஷ்டலக்ஷ்மிகளின் சுதைச் சிற்பங்கள் வாகனங்களுடன் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.    தீர்த்தம் : தர்ச புஷ்கரிணி, காவேரி, கஜபுஷ்கரிணி.  விமானம்:  கருடவிமானம்   ப்ரத்யட்சம்:  தர்மதேவதை, உபரிசரவஸு, காவேரி, கருடன், அகத்தியர்.  மங்களாசாசனம் :  திருமங்கையாழ்வார்.     தந்தை காலில் பெருவிலங்கு தாள விழ நள்ளிருட்கண் வந்த    எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்  முந்தி வானம் மழை பொழிய மூவா உருவின் மறையாளர் அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே. ( பெ.தி 7-5-1)   பொருள்: திருவழுந்தூர் என்னும் திருப்பதியில் யாகம் செய்வதற்கு முன்பே மழை பெய்யும். கிழத்தனமற்ற உருவமுடைய அந்தணர்கள் முச்சந்தியும் ஹோமம் வளர்ப்பர். அழகு மிக்க திருவீதிகள் அங்கு உண்டு. அது, தகப்பனாராகிய வசுதேவருடைய காலிலே பூட்டப்பட்டிருந்த பெரிய விலங்கு இற்று விழும்படியாக நடுநிசியிலே திருவவதாரம் செய்த எம்பெருமான் நித்தியவாசம் செய்யப் பெற்ற திருத்தலமாகும்.    என்பது இத்தலத்தைப் பற்றி  ஆலிநாடன் மங்களாசாசனம் செய்த  முதல் பாசுரம் ஆகும்.  யமுனையிலிருந்து கண்ணன் தேரழுந்தூருக்கு எழுந்தருளிய வரலாறு: கோகுலத்தில் ஒரு நாள் ஸ்ரீகிருஷ்ணர் ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது நீர் பருகக் கண்ணன் சில நண்பர்களுடன் யமுனை ஆற்றுக்கு சென்ற போது நான்முகன் அந்த ஆநிரைகளை கள்ளத்தனமாக ஓட்டிக்கொண்டு வந்து தேரழுந்தூரிலே மறைத்து வைத்தான். திரும்பி வந்து பசுக்கூட்டங்களைக் காணாமல் திகைத்த ஆயர்களின் துயர் தீர, மாயம் செய்யும் மாலவன் நொடிப்பொழுதில் பிரம்மனின் செயலை அறிந்து புதியதொரு ஆநிரையை உருவாக்கி ஆயர்களை மகிழ்வித்தான். ஒரு வருட காலம் இவ்வாறு தானே அனைத்துமாக மாயம் காட்டினான் கண்ணன், தன் தோல்வியை உணர்ந்து நான்முகன் கண்ணனின் அடி பணிந்து வணங்கி, மாலே! மணிவண்ணா! நெடியானே! கமலக்கண்ணா! விண்ணவர்க்கு மேலாய்!, அடியேனின் பிழை பொறுத்து, அறியாமையினால் நான் ஒளித்து வைத்த ஆநிரைகளுடன் தேரழுந்தூருக்கு எழுந்தருளி திருக்கோயில் கொள்ள வேண்டும்  என்று வேண்டக் கண்ணன், தானே பரமபதத்தில் விளங்கும் மாலவன் என்பதை உலகத்தினருக்கு உணர்த்த நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரம் தாங்கி, ஆமருவி, நிரை மேய்க்கும் நிலையில் இன்றும் எழிலாகச் சேவை சாதிக்கின்றார். பெருமாள் இங்குக் கோசகனாக வந்ததற்கு இன்னொரு வரலாறும் உண்டு. ஒரு சமயம் திருமாலும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடினார்கள். உமையம்மை ஆட்ட நடுவராக இருந்தாள். ஆட்டம் முடிந்தது. திருமாலே வென்றதாக உமை கூற சிவபெருமான் சினம் கொண்டார், அன்னையை பசுவாக மாறும் படி சபித்தார். உமையைப் பிரிந்த சிவபெருமான் அந்தணர் வேடம் பூண்டு சந்தனமரத்தின் கீழ் வேதம் ஓதி வந்தார். சிவபெருமான் வேதபுரீசர் ஆனார். பசுவைக் காக்க வேண்டியவராக இருந்த பெருமாள், கோஸகனாக, ஆமருவியப்பனாக ஆனார். இவ்வாறு கௌரியின் சாபம் தீரும் வரை காப்பது தன் கடமை என்று தன்னருகிலேயே வைத்துக் கொண்டார் பெருமாள். கண்ணன் பசுமேய்த்த தலம் மேய்த்தமங்கலம் (மேக்கிரிமங்கலம்), தொழுவம் இருந்த இடம் தொழுதலாங்குடி என்றும், பசுக்கள் நிறைந்த பகுதி என்பதால் கோமல் என்றும் ஆ - பசு நான்கு ஊர்களில் மலிந்த பகுதி ஆனாங்கூர் என்றும், ஆ- ஆடுகின்ற காவிரித்துறை ஆடுதுறை என்றும் உமையாகிய பசு முக்தி பெற்ற தலம் கோமுத்தீச்சுரம்- திருவாவடுதுறை என்றும் இப்பகுதியில் உள்ள ஊர்களின் பெயர்கள் அமைந்துள்ளன. இவ்வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் மாசிப்புனர்பூச நாள் மாலை பெருமாள் வில்லேந்திய இராமனாகத் திருக்கோலம் கொண்டு, வேதபுரீசருக்கு சேவை சாதிக்கும் நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகின்றது. இனி இத்தலத்திற்குத் தேரழுந்தூர் எனப் பெயர் வர என்ன காரணம் என்று பார்ப்போமா? உபரிசரவஸு என்னும் மன்னன், வானில் உலாவரும் தேரினைப் பெற்றிருந்தான். அவன் பெற்ற வரத்தின் விளைவால், அவனது தேரின் நிழல் எந்த உயிர்களின் மீது பட்டாலும் அவ்வுயிர்கள் துன்பம் அடைந்து வந்தன. இதானால் ஆணவம் கொண்டிருந்த மன்னன் ஒரு சமயம் ஆமருவியப்பர் ஆநிரை மேய்த்துக்கொண்டிருந்த போது மேலே தன் தேரிலே சென்றான், அத்தேரின் நிழல்பட்டு பசுக்கள் துன்பம் அடைந்தன, மன்னனின் செருக்கை ஒடுக்க கண்ணன் அந்நிழல் மீது தன் திருவடி விரலை அழுத்த அடுத்த கணமே அத்தேர் கீழே அழுந்திற்று, தேர் மட்டுமா அழுந்தியது? மன்னனின் ஆணவமும்தான். அவன் கண்ணன் தாள் பணிந்து பிழை பொறுக்க வேண்டினான். பின் அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி தர்ஷபுஷ்கரிணியில் நீராடி அதன் கரையில் அமர்ந்து எம்பெருமானின் அருளை வேண்டித் தவம் செய்ய பெருமாள் அவனுக்கு ப்ரத்யட்சமாகி சேவை சாதித்தார். இவ்வாறு உபரிசரவஸு என்ற மன்னனின் தேர் இங்கே அழுந்தப் பெற்றமையால் இத்தலத்திற்கு தேரழுந்தார் என்ற பெயர் வந்தது.  அதே போல இத்தலத்திற்கு திருவழுந்தூர் என்ற பெயரும் உள்ளது. திரு – திருமகள், அழுந்துதல் – நிலை பெற்றிருத்தல் என்ற பொருளில் திருமகளாகிய மஹாலக்ஷ்மித்தாயார் நிலை பெற்ற ஊர் என்று கூறப்படுகின்றது. இத்தலத்தின் புராணப்பெயர் கிருஷ்ணாரண்யம் (கிருஷ்ணன்   காடு) ஆகும். காவிரியின் தென்கரையில் அமைந்த திவ்யதேசங்களில் இது பத்தாவது திவ்யதேசம்.  மற்றொரு வரலாறும் உண்டு. உபரிசரவஸு தன் மனைவியுடன் புஷ்பக விமானத்தில் சென்று கொண்டிருந்த போது தேரழுந்தூருக்கு வந்ததும் அரசி கீழே இறங்கி தேவராஜனை வணங்க விரும்பினாள். அரசன் மமதையுடன் “ இவன் என்ன என்னை விடப் பெரிய ராஜனோ!” என்று சொல்லி விமானத்தை இறக்க மறுத்தான். தேவாதிராஜன் அரசனை திருத்த எண்ணினான். உடனே கருடன் விமானத்தின் நிழலை தன் கால் பெருவிரலால் தொட்டார். விமானம் கோயிலின் முன்பு உள்ள குளத்தில் விழுந்தது. அரசன் நீந்தி வந்து அங்கு தவம் புரியும் அகத்தியரை வணங்கி உய்யும் வழி வேண்டினான். அவர் சொல்படி தவம் புரிந்து எம்பெருமான் தரிசனம் பெற்றான். இரண்டு வரங்களையும் வேண்டினான். குளத்தில் விழுந்த விமானம் மேலே வரவும், இக்குளத்தில் நீராடி தேவாதிராஜனை தரிசிக்கும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுக்கும் படியும் வேண்டினான். ஆகவே இன்றும் தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு எல்லா நலங்களையும் வளங்களையும் அருளுகின்றார் ஆமருவியப்பன். பெருமாளைச் சேவித்தும் மன்னன் ஆணவம் அடங்கவில்லை. எனவே ஆமருவியப்பன் “மன்னனே! நீ செய்த பிழைக்குப் பரிகாரமாக எமக்கு அன்று கடைந்த வெண்ணெய் நிரம்பிய ஆயிரம் குடங்களைக் காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும்” என்று கேட்க மன்னனும் தன் செல்வச் செருக்கால், நம்மால் முடியாததா? என்று நினைத்து அவ்வாறே செய்வதாக உறுதி கூறினான். தன் அரசு பதவியைப் பயன்படுத்தி குறிப்பட்ட நாளில் 999 குடங்களைப் பெற்று விட்டான். ஒரு குடம் வெண்ணெய் மட்டும் கிடைக்கவில்லை. இப்போதாவது தன் இயலாமையை எம்பெருமானிடம் தெரிவித்திருக்கலாம் ஆனால் ஆணவம் தடுத்தது, ஒரு குடம் தானே! மூடி வைத்து விட்டால் எம்பெருமான் ஒவ்வொன்றாகவா பார்க்கப்போகிறான் என்று எண்ணி வெண்ணெய் குடங்களுக்கிடையில் வெறும் குடத்தையும் வைத்துவிட்டான். எல்லாம் அறிந்த மாயன் மன்னனின் அறியாமையை நீக்க எல்லா குடத்திலிருந்த வெண்ணையையும் மறையுமாறு செய்து விட்டார். எந்த குடத்தைத் திறந்து பார்த்தாலும்  வெண்ணெய் இருக்கவில்லை. மன்னன் தனது தவறை உணர்ந்தான். பெருமாள் வெண்ணெய்க்காக வரவில்லை தன்னைத் திருத்தி பணி கொள்ள வந்தான் என்று உணர்ந்து வெட்கி நின்று எம்பெருமானின் திருவடியில் புகல் அடைந்து நின்றான். இந்நிகழ்ச்சி நடைபெற்றது தை அமாவாசை. அன்று தான் உபரிசரவஸு தை அமாவாசையன்று திருக்குளத்தில் நீராடி அருள் பெற்றதால் இக்குளம் தரிசபுஷ்கரணி என்று அழைக்கப்படுகின்றது. தரிசம் என்றால் அமாவாசை. எனவே தை அமாவாசையன்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறந்தது. அன்று பெருமாள் வெள்ளி கருடவாகனத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலிக்கின்றார். மேலும் சித்திரை அட்சய திருதியையன்று காலை, வைகாசி பிரம்மோற்சவத்தின் 4ம்நாள் இரவு, புரட்டாசி திருவோணம் ஸ்ரீதேசிகர் திருநாள் காலை, ஐப்பசி திருவோணம் பவித்ரோத்சவம் காலை என்று வருடத்தில் ஐந்து முறை ஓடிவரும் புள்ளில் அமர்ந்து கருடசேவை அருளுகின்றார்.  அகத்திய முனிவர் வாதாபி என்னும் அசுரனை உண்டு ஜீரணம் செய்த பாவம் தீர தென்னழுந்தையில் மன்னி நின்ற ஆமருவியப்பனின் அடிபணிந்து வீடு பேறடைந்தார். இவ்வரலாற்றுக்கு ஆதாரமாக அகத்தியர் ஸ்ரீவாசுதேவர் சன்னதியில் காட்சி தருகின்றார். பிரகலாதன் நரசிம்ம அவதாரத்தைக் கண்டு பயந்து பெருமாளின் சாந்த சொரூபத்தை காட்ட வேண்டும் என்று வேண்ட சினம் தணிந்த சிங்கபெருமானாக சேவை சாதிக்க பிரகலாதன் அச்சம் குறையாதிருக்க இந்ததலத்தில் அமர்ந்துள்ள ஆமருவியப்பனாக சேவை சாதித்ததால் இத்தலத்தில் பெருமாளுடன் பிரகலாதனும் இடம் பெற்று நித்யபூஜைகள் பெறுகின்றார். பெருமாள் சன்னதிக்கு இடப்புறம் நரசிம்மர் சன்னதி உள்ளது.   அகத்திய மாமுனிவர் ஒரு சமயம் காவிரித்தாயை அணுகி தன்னை மணந்து கொள்ள விண்ணபிக்க காவிரி அதனை மறுக்க, இதனால் கோபமடைந்த அகத்தியர் காவிரியைக் குடத்தில் அடைக்க, ஒரு சமயம் தரையில் வைக்கப்பட்ட அக்குடத்தை காக்கையாக வந்த  விநாயகர் சாய்க்க காவிரி வழிந்தோடியது இதனால் சினம் கொண்ட அகத்திய முனிவர் காவிரியால் வளம் பெரும் பகுதியில் உள்ளோர் அனைவரும் துன்பமுற்று வறுமையுறட்டும் என்று சாபம் தர, இச்சாபத்தை போக்க காவிரித்தாய் தேரழுந்தூரில் தேவாதிராஜனைக் குறித்து தவமிருந்து இந்த சாபத்தைத் துடைத்தாள் என்பது ஐதீகம். எனவேதான் கருவறையில் காவிரித் தாயும் தவநிலையில் எழுந்தருளியுள்ளாள். “கம்பன் பிறந்தவூர், காவேரி தங்கும் ஊர்,  கும்ப முனி சாபம் குலைந்த ஊர்” என்னும் பழம் பாடல் இவ்வரலாற்றை இயம்புகின்றது.  ஆமருவி நிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றான் என்று திருநெடுந்தாண்டகத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கையாழ்வார்.   குன்றால் மாரி தடுத்தவனைக் குலவேழம் அன்று பொன்றாமை அரனுக்கு அருள் செய்த போரேற்றை   அன்றாலின் நறுநெய் அமர்ந்துண்ண அணியழுந்தூர்   நின்றானை அடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே. (பெ.தி 7-6-4)  பொருள்: கோவர்த்தன மலையைக் கொண்டு பெரு மழையை தடுத்தவனும், கஜேந்திராழ்வான்  அழிந்து போகாமல் அன்று அதற்கு அருள் புரிந்தவனும், போர் செய்யவல்ல காளை போன்றவனும், பசுவின் நெய்யை விரும்பி அமுது செய்ய அன்று முதல் திருவழுந்தூரில் நிற்பவனுமான பெருமானை அடியேன் கண்டு கொண்டு குறைவற்றவனானேன். இந்த திவ்யதேசத்தில் அமைந்துள்ள மற்றச் சன்னதிகள் வாசுதேவர் சன்னதி, நரசிம்மர் சன்னதி, இராமர் சன்னதி, விஷ்வக்சேனர் சன்னதி, தேசிகர் சன்னதி, ஆழ்வார்கள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கம்பர் சன்னதி மற்றும் அனுமன் சன்னதி ஆகும். கம்பரும் அவரது மனைவியும் பெருமாளை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றனர். திருமங்கையாழ்வார் 45 பாசுரங்களினால் அணியழுந்தூர் நின்ற கோவை மங்களாசாசனம் செய்துள்ளார்.  இவர் இவ்வூருக்கு வந்து பாடிய வரலாறு மிகவும் சுவையானது. ஊருக்குள் நுழைந்தவுடன் ஆழ்வார் கோவிலுக்குச் சென்று பெருமாளின் திருநாமத்தை விசாரித்தார். “தேவாதிராஜன் என்று பதில் கிடைத்த்து. “நான் பெருமாளையும் அவனது அடியார்களையும் மட்டுமே பாடுபவன்; செருக்குடைய அரசர்களைப் பாடுவதில்லை என்று சொல்லி திரும்பி நடக்க   ஆரம்பித்தார். பெருமாளின் உள்ளக் குறிப்பினால் ஒரு இடத்தில் ஆழ்வார் நடக்க முடியாமல் தளர்ந்து நின்றார். திரும்பி நோக்கினார். கருவுடை முகில் வண்ணன்,  காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், கமல வண்ணனை கண்ணனை மன்மதனும் தோற்கும்கும்படியான அழகன், அலங்காரன், கன்று பசுக்களுடன் ஆமருவியப்பனை சேவித்தார். தேவாதி தேவனை, அணி அழுந்தூர் நின்ற கோவை, அஞ்சனக் குன்றம் தன்னை, காரார் கருமுகிலைக் கண்டு களித்தார். பல்லாண்டு பாடினார்.   தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் –தேனதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும்   பூமருவியினிதமர்ந்து பொறியில்ஆர்ந்த – அறுகால  சிறுவண்டே  தொழுதேன் உன்னை   ஆமருவி நிரை மேய்த்த அமரர் கோமான்  அணி அழுந்தூர்  நின்றானுக்கு இன்றே சென்று,   நீ மருவி அஞ்சாதே நின்று ஒரு மாது நின் நயந்தாள் என்று இரையே இயம்பிக் காணே! (தி.நெ 12)    பொருள்: தேன் வெள்ளம் மிகுந்திருக்கும் மலர்களில் மதுவுண்டு, உன் பெடையொடு உறவாட மகிழ்ந்து வரும் ஆறுகால்களையுடைய சிறுவண்டே! உன்னை முதலில் வணங்குகிறேன் என்று கூறினார். (ஞான வெள்ளம் நிறைந்தோர்களினூடே சென்று அறிவைப் பெற்று வரும் ஆசாரியர்களாகிய குருவையும், குருவின் மனைவியையும், குருவின் மகனையும் வணங்குகிறேன் என்பது உள்ளுறை கருத்து). உன்னை  முன்னிலையாக ஒன்று வேண்டுகின்றேன். பசுக்கூட்டங்களை விரும்பி மேய்ப்பவனும், அணியழுந்தூரிலே நின்று காப்பவனும் ஆகிய எம் தலைவனிடம் இப்போதே சென்று அஞ்சாமல் அதோ உன்னை விரும்பி உன் அருளுக்காக ஏங்கி, நின்னை நயந்து நிற்கின்றாள் ஒரு பேதை என்று மட்டும் சொல்லி வா என்கிறாள் பரகாலநாயகி. (வண்டாகிய குருவின் மூலம் ஒரு வார்த்தை சொன்னால் போதும் பெருமாள் உடனே அருள் புரிவான் என்பது கருத்து). “நீல மேனி ஐயோ! நிறை கொண்டது! என் நெஞ்சினையே என்று அரற்றி எப்படியாவது எம்பெருமானிடம் தன் காதலை சொல்ல வேண்டும் எனத்தவிக்கிறாள் பரகால நாயகி. அப்போது ரீங்காரம் செய்து கொண்டு தன் பெடையுடன் கூடி இருக்கும் வண்டைக்கண்டு, இவ்வண்டு பெருமாளின் திருமார்பை அலங்கரிக்கும் துழாய் மாலையில் அமரக்கூடியது என்பதையறிந்து ஆழ்வார் வண்டை தூது விடும் பாவத்தில் இப்பாசுரத்தை படியுள்ளார்.  மேலும் மணவாளமாமுனிகளும் இத்தலத்து தேவாதிராஜனை மங்களாசாசனம் செய்துள்ளார். தேரழுந்தூரில் எம்பெருமான் ரட்சகத்வம் என்னும் உயரிய குணத்தை காட்டி அருள்கின்றான். இதை ஆழ்வார்கள் காக்கும் இயல்பினன் கண்ணன் என்று போற்றுகின்றனர். வான்பொய்ப்பினும் தான் பொய்யாத வளமுடைய காவிரி நதிக்கரையில், தேரழுந்தூரில்  ஆமருவியப்பன் பக்தர்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொண்டு கருட விமானத்தின் நிழலில் நிற்கின்றார். சக்ரவர்த்தி திருமகனின் திவ்ய சரிதத்தை தமிழில் பாடி ஜனங்களின் பக்தியை வளர்க்க தன் தலத்தில் கம்பர் என்னும் மஹாகவியை பிறக்க வைத்த பெருமை ஆமருவியப்பனுக்கு உண்டு.  தர்மானுஷ்டத்தின் அவசியத்தை உணர்த்த பெருமாள் சுபர்ணனை தன் அருகில் நிறுத்திக் கொண்ட அழகை சேவித்தோம்.   அடுத்து நாம்,  கர்வம் தீர்ந்த கோலத்தில் கருவறையில் பெருமாளுடன் கருடன் சேவை தரும் ஒரு தலத்தைப் பற்றிக் காணலாமா? அன்பர்களே.                                    21. திருக்கண்ணபுரத்தில் கர்வம் தீர்ந்த கருடன்   கண்ணனின் பெயரைத் தாங்கிய கிருஷ்ணாரண்யத் தலங்கள் தலங்கள் ஐந்து உள்ளன. அவையாவன திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கண்ணன் கபித்தலம், மற்றும் திருக்கோவிலூர் ஆகும். இந்து ஐந்து தலங்களில் திருக்கண்ணபுரத்திற்கு ஒரு தனிச் சிறப்பும் பெருமையும் உண்டு அது என்ன என்றால் இத்திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கின்ற சௌரிராஜன் என்னும் நீலமேகப்பெருமாள் மீனவர் குல ராஜகுமாரியை மணந்து, பரதவர் குல மருமகனாகத் திகழ்கின்றார். அம்மீனவர்களும் பெருமாளை “மாப்பிள்ளை சுவாமி!, மாப்பிள்ளை சுவாமி!” அன்பொழுக தங்கள் வீட்டுக்கு வந்த மருமகனை எப்படி கவனிப்போமோ அது போல கௌரவப்படுத்துகின்றனர். இவ்வாறு  உள்ளத் தூய்மையோடு இறைவனிடம் பக்தி செய்பவர்களுக்குச் சாதி, மதமோ ஒரு தடை இல்லை  என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் சௌரிராஜப்பெருமாள்.  தல வரலாறு:  கண்டவர் தம் மனம் உருக்கும் திருக்கண்ணபுர தலத்தில் சில முனிவர்கள் உணவு, நீர் கொள்ளாமல் பெருமாளைக் குறித்துக் கடுந்தவம் மேற்கொண்டதால் நெற்கதிர்களைப் போன்று மெலிந்தனர்.   திருமாலிடம் எட்டெழுத்து மந்திரம் கற்ற உபரிசரவஸு என்ற மன்னன் இந்திரனின் யாகத்தை காக்க அசுரர்களை கொன்று  பூலோகத்திற்கு இந்திர விமானத்தில் வரும்போது, தூய நீரோடையையும் நெற்கதிர்களையும் கண்டு இறங்கி கதிர்களாய்த் தோற்றமளித்த முனிவர்களை அறுக்க முற்படும் போது இரத்தம் வந்தது அப்போது  தேஜோமயமான ஒரு  16 வயது சிறுவன்  தோன்றி  கதிர் அறுக்க வேண்டாம் என்று  எச்சரிக்கை செய்தான். மன்னன் அதை சட்டை செய்யாமல் இருக்க இருவருக்கும் போர் மூண்டது. போரிட்ட படைகளும், மன்னனும் களைத்தனர். இறுதியாக  நாராயணாஸ்திரத்தை ஏவினான் மன்னன். அஸ்திரம் சிறுவனின் தோளில்  மாலையாகியது. தன்னை எதிர்த்துப் போரிட்டது எம்பெருமான் என்று உணர்ந்த மன்னன் மன்னிப்பு வேண்டினான்.  பெருமாளும்  “புஷ்கரணியில் நீராடி வா, உண்மை சொரூபம் காட்டுகின்றேன்” என்றார். பின்னர் மன்னனுக்கு துளசி மாலையுடன், சங்கு சக்கரம் ஏந்தி கோடி சூரியப் பிரகாசத்துடன்   நீலமேகப் பெருமாளாகக் காட்சியளித்து அவன் விருப்பப்படி இங்கே கோயில் கொண்டார் திருமால். இத்தலத்தின்   மூலவர்: நீல மேகப்பெருமாள், சௌரிராஜன், நின்ற திருக்கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், பிரயோக சக்கரம்.  தாயார்: கண்ணபுரநாயகி  உற்சவர்: சௌரிராஜப்பெருமாள்  விமானம் : உத்பலாவதக  விமானம்  தீர்த்தம்:  நித்ய புஷ்கரிணி  இத்தலத்தின் விமானம் உத்பலாவதக விமானம், பலம் என்றால் சதை, உத்பலம் என்றால் சதை இல்லாத முனிவர்கள் என்று பொருள்,  மஹா விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் செய்வதாக ஐதீகம், எனவே இங்கு விமானத்தை தரிசனம் செய்யமுடியாதபடி சுற்றி பிரம்மாண்ட மதில் எழுப்பப்பட்டுள்ளது.  எந்த வைணவத் தலத்திற்கும் இல்லாத மற்றொரு சிறப்பு இந்தத் தலத்திற்கு உண்டு. அது குலசேகர ஆழ்வார், பெருமாளை குழந்தையாக பாவித்து நீலாம்பரி ராகத்தில், "இராகவனே தாலேலோ' என்று அனுபவித்துப் பாடியுள்ளார் அதில் ஒரு பாசுரத்தை  சேவிப்போம்.  மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!  தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்திவித்தாய்! செம்பொன்சேர்  கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே!  என்னுடையவின்னமுதே! இராகவனே! தாலேலோ!. (பெரு. தி 8–1)  பொருள்: “நிலைத்த புகழுடைய கோசலையின் அழகிய திருவயிற்றிலே பிள்ளையாக வந்து அவதரித்தவனே! தென்னிலங்கைக்கு இறைவனான  இராவணனுடைய பத்துத்தலைகளும் சிதறி ஓடும்படி செய்தவனே! செம்பொன்னிலே செய்யப்பட்டதாய் அழிவில்லாததாய், அழகான பெரிய திருமதில்களால் நாற்புறமும் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கின்ற நீல மணி போன்ற எம்பெருமானே! எனக்கு இனிய அமுதாயிருப்பவனே! இராகவனே! தாலேலோ!”  என்று கணபுரத்தம்மானை குலசேகர ஆழ்வார் ஸ்ரீராமனாகவே எண்ணி  தன்னை கௌசலையாக பாவித்து தாலாட்டுப் பாடியிருக்கிறார்.   முக்தி அளிக்கும் தலங்களான திருவரங்கம் – ஓம், திருவேங்கடம் - ந,  ஸ்ரீமுஷ்ணம் - மோ, வானமாமலை - நா, சாளக்கிராமம் - ரா, புஷ்கரம் – ய,  பத்ரிகாஸ்ரமம் - ணா, நைமிசாரண்யம் - ய  என்று  எட்டெழுத்துக்களின் ஒவ்வொரு எழுத்தாக இயங்கும் பெருமாள் மொத்த எழுத்துக்களாக அருளும் திருத்தலம்! இத்தலம். எனவே இத்தலம் “அஷ்டாக்ஷர சித்தி தலம்”  என்று அழைக்கப்படுகின்றது. மேலும் “நாதாய சௌரேய  நம:” என்னும் மந்திரத்தைப் பெருமாளே இங்கு அருளினார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் உள்ள “சூர, சௌரி, ஜனேஸ்வர” என்னும் நாமாக்கள் இப்பெருமாளை குறிக்கின்றன.    தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள தலம். எனவே “சப்த புண்ணிய க்ஷேத்திரம்” ஆகும்.  இவ்வமைப்புள்ள இடத்தில்தான் அஷ்டாக்ஷர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம்.  பத்ம புராணத்தில் திருக்கண்ணபுரம் கிருஷ்ணாரண்யம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  திருப்புட்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை (பாயசம்) கும்பகோணத்தில் தோசை (பால் பாயசம்) போன்று இங்கு முனையதரைன் பொங்கல் சிறப்பு.  முனையதரையன் என்ற குறுநில மன்னன் பெருமாளை வணங்காமல்  உணவு உண்பதில்லை  என்ற வழகத்தை கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர்  மன்னனுக்குத் திறை கூட செலுத்தாமல் அனைத்துப் பொருளையும் பெருமாள் திருப்பணியில் செலவிட்டதால்  மன்னன் அவரை  சிறையில் அடைத்தான். மன்னனின் கனவில் பெருமாள் தோன்றி விடுவிக்கச் சொன்னதால்  முனையதரையன் விடுவிக்கப்பட்டார். இரவில் வீடு திரும்பியவருக்கு உண்பதற்குப் பொங்கல் மட்டுமே இருந்தது. மானசீகமாகப் பெருமாளுக்குப் படைத்துவிட்டு உண்டார். மறுநாள் கோயிலைத் திறந்த அர்ச்சகருக்கு அதிர்ச்சி! பெருமாளின் உதட்டோரத்தில் பொங்கல்! ஆலயம் எங்கும் பொங்கல் மணம்! இன்றும் அர்த்த சாமத்தில் முனையதரையன் பொங்கல் பெருமாளுக்குப் படைக்கப்படுகிறது.   நம்மாழ்வார் இவரை “வைகுந்தம் கொடுக்கும் பிரான்” என்றும், திருமங்கையாழ்வார் “மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ” என்றும் குலசேகராழ்வார் “தேவரையும் அசுரையும் திசைகளையும் படைத்தவனே” என்றும் பெரியாழ்வார் “கண்ணபுரத்தமுதே” என்றும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் “காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்” என்றும் மங்களாசாசனம் செய்துள்ளனர். நீலாத்ரிமிவதிஷ்டந்தம் – கருவறை போல் நின்றானை என்று திருமங்கையாழ்வாரின் திருவாக்கின்படி நெடியோனாய், பிரயோக சக்கரத்துடன் ஓங்கி உயர்ந்து எழுந்தருளியுள்ளார் சௌரிராஜப்பெருமாள் உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேட்சணம் | ஸ்ரீசௌரிராஜமஹம் வந்தே ஸதா ஸர்வாங்க ஸுந்தரம் || என்பது இவரது தியான ஸ்லோகம் ஆகும். முன் ஒரு காலத்தில் இவ்வாலயத்திற்கு ஏழு பிரகாரங்கள் இருந்துள்ளன. சோழ மன்னன் ஒருவன் இங்கிருந்த மதில்களை இடித்து சிவாலயம் கட்ட கற்களைக் கொண்டு சென்றான் இதுகண்டு வெகுண்ட அரையர் என்னும் பரமபக்தர், “பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை” என்பது பொய்த்ததோ என்று தம் கைத்தாளத்தைப் பெருமானின் மீது விட்டெறிய, பெருமாள் தமது பிரயோகச் சக்கரத்தை ஏவி மன்னனைக் கொன்றார். இதனால் இப்பெருமானின் நெற்றியில் தாளம் பட்டுப் புண்ணான “நெற்றி வடு” இன்றும் உள்ளதைக் காணலாம். 6 மதில்களை இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான்!  108 திவ்ய தேசங்களுள் மேலை வீடு திருவரங்கம், வடக்கு வீடு - திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில்) என அமைந்த வரிசையுள் கீழை வீடாகத் திருக்கண்ணபுரம் திகழ்கின்றது!   மண்ணிலும் உண்டு விண்ணகரம் மாதவன்  வாழ்கின்ற கண்ணபுரம்! என்றபடி இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் சொர்க்க வாசல் இல்லாத திருத்தலம்!. நீராடுபவர்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கவல்லது இங்குள்ள நித்ய புஷ்கரணி!. பாத்மபுராணத்தில் இப்புஷ்கரணியின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. இத்தலத்தின் ஸப்த  புண்ணியங்களுள் ஒன்று. மற்ற திருக்குளங்களில் நீராடி புனிதம் பெற கால நியமங்கள் உண்டு. ஆனால் எப்போது நீராடினாலும் அவர்களை தூய்மைப் படுத்துவதால் இப்புஷ்கரணிக்கு நித்திய புஷ்கரணி என்று பெயர்.   95 அடி உயரமுள்ள கம்பீரமான ராஜ கோபுரத்திற்கு முன்னால், ஒன்பது படித்துறைகள் கொண்ட "நித்ய புஷ்கரணி' பாற்கடல் போலிருக்கும். பரந்து விரிந்த இந்தக் குளம் 450 அடி நீளமும் 415 அடி அகலமும் கொண்டது என்பதோடு, காவிரியின் உபநதிக்கரையில் உள்ளதால், நம்மாழ்வார் அருளியபடி "வண்டு பாடும் பொழில் சூழ் கண்ணபுரம்' என்பதற்கேற்ப நீர் வளத்தால் வந்த நெல் வளமும், நெல் வளத்தால் உயர்ந்த வளமான வாழ்வும் பெற்றது திருக்கண்ணபுரம்.  உத்தராயண காலத்தில் மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தைப் போக்கிக்கொள்கின்றன. அப்போது நீராடி சௌரிராஜப் பெருமாளை தரிசிக்க மக்கட்பேறு முதலிய அனைத்து நலன்களையும் பெறலாம்.  இது கடலைச் சார்ந்த புண்ணிய தீர்த்தம் என்பதற்கு சாட்சியாக கடல் சிப்பிகள் இக்குளத்தில் கிடைக்கின்றன,  இதில் அமாவாசை அன்று நீராடி கோவிலை வலம் வந்து விபீடணுக்காக சௌரி முடி தரித்து  சௌரிராஜப் பெருமாள் தரும் கைத்தல சேவையை தரிசித்தால் இப்பிறவி பலனைப் பெறலாம். அமாவாசை தினத்தில் பித்ரு பூஜை செய்ய கயை தலத்தில் பித்ரு கர்மம் செய்த பலனைப் பெறலாம் என்று பாத்ம புராணத்தில் கூறியுள்ளது.   இத்தீர்த்தத்தை அருந்தினால் மறு பிறவியில்லை. இதில் நீராடி உத்பலாவதக விமானத்தை வலம் வந்து ஐஸ்வர்யம் தேஹி பகவந்! அந்நே தவ பதம் சமே|| உத்பலாவத காதீச! ஸ்வாமிந்! ஸர்வேச் வரேச்வர: ||     என்றும் திருவெட்டுழுத்து  மந்திரத்தையும் ஜபம் செய்ய, இவ்வுலகில் இன்பமும், பின்னர் எம்பெருமானது பரமபதமும் பெறலாம். இதன் குளக்கரையில்  தெற்கு நோக்கிய ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. இச்சன்னதிற்கு முன்னர் உள்ள மாடத்தின் உள்பகுதியில் தசாவதாரக் கோலங்கள் எழிலாக வரையப்பட்டுள்ளன.   இந்திரன் இத்தலத்திற்கு வந்து அஸ்வமேத யாகம் செய்து  நவக்கிரக பிரதிஷ்டை செய்து பெருமாளை வணங்கி தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றான். இந்நவக்கிரக சக்கரம்  இராஜகோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்குப் பார்த்தப்படி அமைந்திருக்கின்றது. இந்நவக்கிரகம் சுற்றிலும் 12  இராசிகளுடன் இருப்பது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். தினசரி இரண்டு கால பூசை நடைபெறுகின்றது. இந்நவகிரக சக்கரத்தை வழிபட உயர்கல்வி, கணிதம், பேச்சாற்றல், நுண்கலைகள் ஆகியவற்றில் உயர்வான தேர்ச்சி பெற்று வாழ்வில் உயர்வு பெறுவது திண்ணம்.   தாமோதர கிருஷ்ணர் சன்னதியும் இராசகோபுரத்தில் உள்ளது. அடுத்து பலிபீடம் கொடி மரம் அமைந்துள்ள மண்டபம். இரண்டாவது சிறிய கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் பிரகாரம்.   இப்பிரகாரத்தில் முனையதரனுக்கு தனி சன்னதி உள்ளது. அருகே ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் சன்னதி. அப்புறம் உபரசவசு மன்னர்  சன்னதி.  இராமரை சேவித்தவாறு விபீஷணர் சன்னதி. பிரகார வலம்  வரும் போது ஆண்டாள் நாச்சியாருக்கும் தனி சன்னதி.      பெருமாளின் கர்ப்பகிரத்திற்கு இணையாக அழகிய தூண்களைக் கொண்ட மண்டபத்துடன் செங்கமல வல்லித்தாயாரின் தனி சன்னதி. இரு கரங்களில் தாமரைகளை ஏந்தி அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றாள் தாயார்.   கருட  மண்டபம் தூண்களுடன் சிறப்பாக அமைந்துள்ளது. இம்மண்டபத்துள் நுழையும் போது  ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட பெருமாளின் அருமையான சுதை சிற்பம். எதிரே இராமர் சன்னதி. மைதிலி, இலக்குவனுடன் எதிரே உள்ள விபீஷணாழ்வாருக்கு சேவை சாதித்தவாறு எழுந்தருளியுள்ளார்.   இம்மண்டபத்தில்  கண்ணாடியறை மற்றும்  முனையரதன் பொங்கலுக்கான நெய்யை அளக்கும் மணிய சௌரிராஜர் சன்னதியும், கருடன் சன்னதியும் அமைந்துள்ளது. கருடன் சன்னதியில் இரண்டு கருடன்கள். கருடன் சன்னதியின் முன்னர் முனையரதன் காதலி விரதிபோகத்தின் சிலையை காணலாம். இம்மண்டபத்தில் ஆழ்வார்களின் அருளிச்செயல்களை கல்வெட்டாக அமைத்துள்ளனர்.   கருடனை வணங்கி நெடிதுயர்ந்த அழகிய  துவாரபாலகர்களிடம் அனுமதி அர்த்தமண்டபத்துள் நுழைந்தால் வலப்புறம் தங்க கருடவாகனம். கர்ப்பகிரகத்தில் உபய நாச்சியார்களுடன் சர்வாங்க சுந்தரனாகக்  காமனும் வியக்கும் அழகுடன் வலப்புறம் தண்டக முனிவரும்,  இடப்புறம் அஞ்சலி ஹஸ்தத்துடன் கருடனும்  உடன்  இருக்க அற்புதமாக கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நெடியோனாக நின்ற கோலத்தில்   சேவை சாதிக்கின்றார் நீலமேகப்பெருமாள். திருமங்கையாழ்வாருக்கு காட்சியளித்தபடி, "கருவறைபோல் நின்றானை கண்ணபுரத்து அம்மானை' என்றபடி, கருவறையில் வானத்திற்கும் பூமிக்குமாய் காட்சி தரும் நெடுமாலை சேவிக்கின்றோம்.  மற்ற தலங்களில் அபயக் காட்சியோடு பெருமாள் இருப்பார். இங்குள்ள பெருமாள் தானம் பெற்றுக் கொள்பவர் போல தான ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார். இதன் பொருள் நம் கஷ்டங்களைப் பெருமாள் வாங்கிக் கொள்கிறார்! என்பதாகும்.   விகடாட்சன் என்ற அசுரன் விலங்குரு கொண்டு கிருஷ்ணாரயண்யத்தின் முனிவர்களை துன்புறுத்தினான் எம்பெருமான் குதிரை மேலேறி அசுரர்களை கொன்று விகடாட்சனையும் சக்கரத்தால்  நிக்ரஹம் செய்தார்.   மஹரிஷிகளின்  பிரார்த்தனைப்படி சக்கரப்பிரயோகம் செய்த  கோலத்தில் இன்றும்  சேவை சாதிக்கின்றார்.   செய்வினை தோஷங்கள், சத்ருக்கள் தொல்லை, பொறாமையால் பிறர் தரும் துன்பங்கள் ஆகியவற்றைப் போக்கக்கூடிய வீரியம் பிரயோக சக்கரத்திற்கு உண்டு. இத்தலம், திருவெள்ளறை, திருவரங்க பிரணவாகார விமானம், உறையூர் ஆகிய தலங்களில்  நாம் பெருமாளை பிரயோக சக்கரத்துடன் சேவிக்கலாம். உற்சவர் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் மிகவும் அழகு வாய்ந்தவர். அவரை வடிவழகன் என்றே ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். வடமொழியில் இவரை "ஸர்வாங்க சுந்தரன்' என்கின்றனர். அவரது உருவத்திலுள்ள ஒவ்வொரு அங்கமும் அழகு வாய்ந்த தாமரை மலர்களாகப் போற்றப்படுகிறது. "அடித்தலமும் தாமரையே அங்கை கணும் பங்கயமே  என்கின்றாளால்”  -  என்று மங்கலாசாசனம் செய்கின்றார்  மங்கை மன்னன்.  உற்சவப்பெருமாள் சௌந்தரராஜப்பெருமாளும் பிரயோகச் சக்கரத்துடன் சேவை சாதிப்பது ஒரு தனி சிறப்பு. இனி கருடன் பெருமாளுடன் சேவை சாதிக்கக் காரணம் என்னவென்று பார்க்கலாமா? தன் தாயை, சிற்றன்னையின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க  அமுதம் கவர்ந்து சென்ற  நிகழ்வை நாம் முதலில் கருட சரிதத்தில் அனுபவித்தோம்.  இவ்வாறு   தேவர்களைத்தவிர யாருக்கும் கிடைக்காத  அமிர்தத்தைத் தேவர்களை வென்று கொண்டு வருவதை எண்ணி கருடன்  மனம் கர்வம் கொண்டது. கர்வத்துடன் அவர் சென்றதால் தன் சக்தி இழந்து கடலில் வீழ்ந்தார். தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி கடலினுள் இருந்த  ஒரு மலையின் மீது பெருமாளை வேண்டிக் தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாக ஏற்றுக்கொண்டார். ஆகவே இன்றும் பெருமாளை வணங்கிய நிலையில்  பெருமாளுக்கு இடப்பக்கத்தில்  கர்வம் தீர்ந்த கருடனை  நாம் சேவிக்கலாம் வலப்பக்கத்தில் தண்டக மஹரிஷியை சேவிக்கலாம்.   மாசி மகத்தன்று  கடற்கரைக்கு எழுந்தருள்வது கருட பர்வதத்தை பார்வையிட என்று கூறுவாறும் உண்டு. சௌரிராஜப்பெருமாள் தங்க கருட வாகனத்தில் திருமலைராயன் பட்டினம் என்னும் மீனவ கிராமத்திற்கு எழுந்தருளி சேவை சாதிக்கும் அழகை இன்னொரு அத்தியாயத்தில் சேவிக்கலாம்.      விபீஷணுக்குச் சேவை சாதித்த தலம் இது. நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காண வேண்டும் என்று வீபிஷணர்  வேண்ட, “கண்ணபுரத்தில் காட்டுவோம் வா” என்று வீபீடணணுக்கு நடையழகு காட்டி அருளிய பெருமாள்!.  இன்றும் ஒவ்வொரு அமாவாசையிலும் மதியம் சௌரி முடியுடன் கைத்தல சேவையில்  நாம் நடையழகைக் காணலாம்!   இவ்விடத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார். வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் திருநாளில் “ஸ்திதி காத்தருளும்” நிலையில் மஹாவிஷ்ணுவாகவும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரைக்கு மத்தியில் படைப்பு நிலையில் பிரம்மாவாகவும், விடியற்காலையில் வெள்ளை சாத்தி ஒரு முகூர்த்த நேரம் அழிக்கும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார். 108 திவ்யதேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு!. இப்பிரமோற்சவத்தின் 4ம் திருநாள் இரவு கருடசேவை தந்தருளுகின்றார் சௌரிராஜப்பெருமாள். 8ம் திருநாள் பத்மினித்தாயாருடன் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.   சௌரிராஜப் பெருமானிடம் திருமங்கையாழ்வார் இரண்டாவது  மந்திர உபதேசம் பெற்றார்.  நன்றிக்கடனாக ஆழ்வார் பெருமானைக் குறித்துப் பாடிய பாடல்கள் 100. திருநறையூருக்கு அடுத்து (110) திருமங்கை ஆழ்வார் பதிகம் அதிகம் மங்களாசாசனம் செய்தது   இவரைத்தான்.    மற்றும் ஓர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கடிமை மற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்தும் கற்றுநான் கண்ணபுரத்துறையம்மானே! ( பெ.தி 8 -10- 3) பொருள்: கண்ணபுரத்துறையம்மானே! உன்னைக் காட்டிலும் வேறொரு தெய்வம் வணங்க உரியதாக உண்டு என்று நினைத்திருப்பவர்களோடு இணங்க மாட்டேன்.. உனது திருவெட்டெழுத்து மந்திரமானது அறிய வேண்டிய எல்லாப் பொருள்களையும் சொன்னாலும் அதை நான் கற்று அறிந்து கொண்ட பொருள் பாகவதர்களுக்கு அடிமையாக இருத்தலேயாகும்.  என்று அதைப் பாடுகின்றார் திருமங்கையாழ்வார். மேலும் நம்மாழ்வார்,  பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், ஆண்டாள் ஆகிய ஆழ்வார்கள் இப்பெருமானை மங்கலாசாசனம் செய்துள்ளனர்.  இவர் சௌரிராஜன் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு சுவையான கதை உண்டு. கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த அரசனுக்குப்  பிரசாதமாக அளிக்கப்பட்ட மலர் மாலையில் தலை முடி இருந்ததைக் கண்டு அரசன் கோபப்பட, அர்ச்சகரும் பெருமாள் திருமேனியில் தலையில் சௌரி இருப்பதாக சொல்லிச் சமாளித்தார். இதை சோதனை செய்ய அரசன் மீண்டும் வந்த போது, தன் பக்தனைக் காப்பாற்ற பெருமாள் தன் தலையில் கட்டு குடுமியோடு சேவை சாதித்தாராம். எனவே உற்சவருக்கு இத்தலத்தின் சிறப்பான கிரீடம் வைரம் அல்ல சௌரிதான்.   இக்கோவிலின் இன்னொரு சிறப்பம்சம், இத்தலத்தில் நான்கு தாயார்கள் அருள் பாலிக்கின்றனர், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன், ஆண்டாளும், பத்மாவதி நாச்சியாரும் அருட் காட்சி தருகின்றனர்.   சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம்  மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அரணமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத் தரணியாளன் தனதன்பர்க்கன்பாகுமே      (தி.மொ 9-10-5) பொருள்: பகவான் தன் திருவடிகளை சரணம்  அடைந்தவர்களை எல்லா விதத்திலும் காப்பாற்றுகின்றான். ஒருவனது ஆன்மா அவன் உடலை விட்டு விலகும் போது அவனுக்கு  பரமபத்தை அருளுகின்றான். காப்பாக அமைந்த மதில்கள் சூழ்ந்த திருக்கண்ணபுரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற அவர் எல்லாரையும் ஆள்கின்றவன் ஆவார். அவர் அன்பின் வடிவமாக அடியார்களிடத்தில் அன்பு காட்டுகின்றார்.   எம்பெருமானிடம் சரணாகதி அடைபவர்க்கு வைகுந்த பதவி அளிப்பான் என்று ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருப்பதால், திருக்கண்ணபுரத்திலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் உள்ள வைணவ பாகவதர்கள், தங்களின் வயது முதிர்ந்த காலத்தில் திருக்கண்ணபுரத்திற்கு வந்து தங்கி, நித்ய புஷ்கரணியில் நீராடி, திருக்கண்ணபுரப் பெருமானாகிய ஸ்ரீ சௌரி ராஜனை காலையும் மாலையும் தொழுது வந்தால், நிச்சயம் தமக்கு வைகுந்தம் அருளுவான் என்று நம்மாழ்வார் மேற்கண்ட பாசுரத்தில் கூறியுள்ளதை உறுதியாக நம்புகிறார்கள். இன்றளவும் பல பாகவதர்கள் திருக்கண்ணபுரத்தில் தங்கி, திருநாடு செல்ல ஆயத்தமாய் வந்து வணங்கி வாழ்கிறார்கள். பல பாகவத பெருமக்கள் வடக்கு மடவளாகத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கள் வாழ்நாளைக் கழித்து, திருநாடு செல்வதைப் பெரும்பேறாகக் கருதி வாழ்ந்து வருவதைக் காணலாம்.  பிறப்பாலோ, செயலாலோ, தாழ்ந்தவர்களாக இருந்தாலும் சௌரிராஜப் பெருமாளின் திருவடிகளை சரணமாகப் பற்றினால் பரமபதத்தையே கொடுக்கின்றான். ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி அடிமை செய்யும் பேற்றினை அருளுகின்றான். இதையே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்னும் ஆச்சார்யர் "சரண்ய முகுந்தத்வம் உத்பலாவதகத்திலே பிரசித்தம்” என்று தமது ஆசார்ய ஹ்ருதயம் என்னும் நூலில் அருளிச் செய்துள்ளார். சரண்யன் என்றால் மோட்சத்திற்கு வழியாக அனைவராலும் பற்றத் தகுதியுடையவன். சரணாகதர்களாகிய நாம் சரண்யனான சௌரிப் பெருமாளிடம் சரணாகதி பண்ண வேண்டும். அப்படிப் பண்ணினால் அவன் முகுந்தனாக நமக்கு “மு” என்றால் மோட்சம்; “கு” என்றால் பூமி; “த” என்றால் வழங்குகிறான் என்று பொருள். ஆக “சரண்ய முகுந்தன்” என்றால் தன்னிடம் சரணாகதி பண்ணியவர்களுக்கு மோட்ச பூமியை அளிப்பவன்   என்று பொருள்.  கண்ணபுரம் செல்வோம் சௌரி முடி அழகில் ஈடுபட்டு அவர் திருவடியில் சரணடைந்து நிறைவாக கைங்கர்யத்தைப் பெறுவோம்.  அடுத்து இன்னொரு கிருஷ்ணாரண்ய தலமான திருக்கண்ணங்குடி நியம கருடனை சேவிக்கலாம்,.                              22. திருக்கண்ணங்குடி நியம கருடன் []   நமது தமிழகமெங்கும்  கிருஷ்ண பரமாத்மாவுக்கு நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. கிருஷ்ணரின் நாமம் கொண்டு திகழும் இத்தலங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் அற்புதமான பரிகார தலங்களாகத் திகழ்கின்றன. அவற்றுள் திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ண மங்கை, கபிஸ்தலம் ஆகிய 5 தலங்களும் பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்ற சிறப்புப் பெற்றவை.  பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்றான  திருக்கண்ணமங்கையில் கருடன் உற்சவர் பெருமாளுடன்  ஏகாசனத்தில் சேவை சாதிக்கின்றார். ஆனால் இங்குச் சாதாரணமாக உள்ளது போல் அஞ்சலி ஹஸ்தத்துடன் இல்லாமல் கைகளைக் கட்டிக்கொண்டு, பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்வதற்குத் தயாராக எப்போதும் திருவைகுந்தத்தில் இருப்பது போல நியம கருடனாகச்   சேவை சாதிக்கின்றார்.   இத்தலம் பஞ்ச நாராயணத்தலங்களில் ஒன்றாகும் மற்ற தலங்கள்     1. தெற்கில்     - ஆபரணதாரி என்ற பதியில்  ஆனந்த நாராயணன்                                                                                                                                                                             2. தென்மேற்கில்    -   பெரிய ஆலத்தூர் வரத நாராயணன்  3. தென்மேற்கில்    -   தேவூர் என்ற பதியில் தேவ நாராயணன்   4. தென்மேற்கில்    -   கீவளுர் என்ற பகுதியில் யாதவ நாராயணன்  இந்த ஐந்து தலங்களும் சுமார் 6 கி.மீ சுற்றுவட்டாரத்திற்குள்ளாகவே அமைந்துள்ளன.  வாருங்கள் திருமங்கை மன்னரின் தீரா வழக்கு ஒன்று உள்ள இந்த திவ்யதேசத்தைச் சேவிக்கலாம். ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம் இவை ஐந்தினாலும் புகழ்பெற்ற இத்தலம்  பஞ்ச பத்ரா என்று புகழ் பெற்றது.  மூலவர்: லோகநாதப் பெருமாள். சியாமளமேனிப் பெருமாள் (நீல மேக வண்ணன்) என்றும் அழைக்கப்படுகிறார். பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார். உற்சவர் : தாமோதர நாராயணன். ஸ்ரீதேவி, பூதேவியுடன் கையை இடுப்பில் வைத்துக்கொண்டு கண்ணனாகவே சேவை சாதிக்கின்றார். தாயார்: லோகநாயகி  அரவிந்தநாயகி  தாயார். விமானம்: உத்பல விமானம்  தல விருட்சம்: மகிழ மரம்  தீர்த்தங்கள்: சிரவண புஷ்கரணி தீர்த்தம் இத்தீர்த்தத்தின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே நம்முடைய எல்லா பாவங்களும் விலகும்.   தல வரலாறு: கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் மீது பக்தி கொண்ட வசிஷ்ட முனிவர் அக்கண்ணனுக்கு மிகவும் பிரியமான  வெண்ணையால் கிருஷ்ண விக்கிரகம் செய்து வழிபட்டு வந்தார். அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக அவ்விக்கிரகம் உருகாமல் இருந்து வந்தது. ஒரு நாள் அவரது  பக்தியை உலகத்தினத்தினர்களுக்கு உணர்த்த கிருஷ்ணர் சிறுவனாக வசிஷ்டரின் வீட்டுக்குள் நுழைந்து வெண்ணைய் விக்கிரகத்தைச் சாப்பிட்டு விட்டு வெளியே ஓடினார். ஓடிய சிறுவனைத் துரத்திச் சென்றார் வசிஷ்டர். கண்ணன் ஓடிக்கொண்டே கிருஷ்ணாரன்யத்தை அடைந்தான்.  அங்கு  ஒரு மகிழ மரத்தடியில் முனிவர்கள் சிலர் அமர்ந்து கிருஷ்ணரைத் தியானம் செய்து கொண்டிருந்தனர். ஓடி வந்த சிறுவன் கிருஷ்ணரே என அவர்கள் புரிந்து கொண்டனர்.  தங்கள் பாசக் கயிற்றால் அவனைக் கட்டிப் போட்டனர். கண்ணன் சொன்னான், சீக்கிரம் என்ன வேண்டுமோ கேளுங்கள், வசிஷ்டர் துரத்திக் கொண்டு வருகிறார். அவர்களோ, "கண்ணா உன் தரிசனத்துக்காகத்தானே நாங்கள் தவமிருந்தோம். எங்களுக்குக் காட்சியளித்தது போல் நீ, இங்கே வரும் பக்தர்கள் எல்லோருக்கும் காட்சி தந்து அருள வேண்டும்”. அதே நேரம் வசிஷ்டரும் வந்தார். கண்ணன் காலைப் பிடித்துக் கட்டிக் கொண்டார். இப்படி கண்ணன் தாம்புக் கயிறால் கட்டுண்டதால் தாமோதரன் ஆனான். வசிஷ்டரின் பிடிக்குள் கட்டுண்டு நின்றதால் ஊர் கண்ணன்குடியானது. அவ்விடத்தில் லோகநாதப் பெருமாள் கோவில் கோபுரத்துடன் எழுப்பப்பட்டது. பரந்த வளாகத்தில் 5 அடுக்கு இராஜ கோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் பக்த உலா மண்டபம், சோபன மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கொண்டு இக்கோவில் அமைந்துள்ளது.  இங்கே பெருமாள், பிருகு முனிவர், பிரம்மா, உபரிசரவஸு, கௌதம ரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு பிரத்யட்சமாகி அருள் புரிந்துள்ளார். திருமங்கையாழ்வார் பத்து பாசுரங்களால் இந்தப் பெருமாளைப் பாடியுள்ளார். மேலும், வைணவ ஆச்சார்யரான மணவாள மாமுனிகள் மனமுவந்து கொண்டாடிய பெருமாள் இவர். திருக்கண்ணங்குடியின் சிறப்பு என்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்சவரும் ஒரே ஜாடையில் சேவை சாதிக்கின்றனர். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர். மற்ற திவ்ய தேசங்களில் இரு கரம் குவித்த நிலையில் கருடாழ்வார் இருப்பார். ஆனால்  உற்சவர் கருடர், கருவறையில் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கும்  உற்சவருடன், இரு கைகளையும் கட்டிக் கொண்டு நியம கருடனாக வைகுந்தத்தில் உள்ளது போல சேவை சாதிக்கின்றார். மூலவர் கருடன்  சிறிதாகப் பெருமாளுக்கு எதிராக அஞ்சலி ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில்தான் சேவை சாதிக்கின்றார்.  இந்தத் தலத்தைப் பற்றிக் கூறும்போது, ஒரு பழமொழியாக "காயாமகிழ், உறங்காப்புளி, ஊறாக்கிணறு, தோலா வழக்கு - திருக்கண்ணங்குடி'' என்பார்கள். அது என்ன என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளாதா? வாருங்கள் திருமங்கையாழ்வார் இத்தலத்தில் செய்த லீலைகளைக் காணலாம்.  உறங்காப்புளி: திருமங்கையாழ்வார் அரங்கன் ஆலயத்தில் மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். கட்டடப் பணிக்கு வேண்டிய திரவியம் இல்லை. அப்போது "நாகப்பட்டினத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை உள்ளது. அதைக் கொண்டுவந்து மதில் கட்டலாம்' என்று இவரது சீடர்கள் கூற, ஆழ்வாரும் நாகை வந்து  அச்சிலையைக் கண்டு, உனக்கு ஈயம், இரும்பு, மரம், பித்தளை போன்றவற்றால் சிலை செய்தால் ஆகாதோ பொன்னும், வேண்டுமோ என்று அறம் பாடியவுடன் சிலையின் வடிவம் மட்டும் அவ்வாறேயிருக்க சுற்றி வேயப்பட்ட தங்கம் முழுவதும் அவர் கையில் வந்து விழுந்ததாம். இதோ அப்பாடல்  ஈயத்தாலாகாதோ இரும்பினாலாகோதோ   பூயத்தால் மிக்கதொரு பூதத்தலாகாதோ பித்தளை நற்செம்புக லாகாதோ மாயப்பொன்னும் வேண்டுமோ மதித்துன்னைப் பண்ணுகைக்கே. அப்பொன்னை  எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் செல்லும்போது, இவ்வூரின் வழியாக வந்தவர் கால்கள் நோவு எடுக்க சாலையோர சேறு சகதி நிறைந்த நிலத்தில் அதைப் புதைத்துவிட்டு புளியமரத்தினடியில் படுத்துறங்க எண்ணினார். புளிய மரத்தைப் பார்த்து "நான் அயர்ந்து தூங்கினாலும் நீ தூங்கக் கூடாது' என்று கூறி கண்ணயர்ந்தார். மறுநாள் விடிந்தபொழுது, வயலுக்குச் சொந்தக்காரன் உழத் தொடங்க, புளிய மரம் இலைகளை உதிர்த்து ஆழ்வாரை எழுப்பியதாம். எனவே அவர் மரத்தைப் பார்த்து "உறங்காப்புளி வாழ்க' என்றாராம். இப்போதும் சிறு மேடாக உறங்காப்புளி இருந்த இடத்தைக் காணலாம். தீரா வழக்கு!:  பின்னர் ஆழ்வாருக்கும் நிலத்தின் சொந்தக்காரனுக்கும் நிலப்பிரச்னை எழுந்தது. வாதம் முற்றி, ஊர்ப் பஞ்சாயத்தில் சென்றது. நிலத்துச் சொந்தக்காரன் தனது உரிமைப் பட்டாவை பஞ்சாயத்தாரிடம் காட்டினான். பஞ்சாயத்தார் ஆழ்வாரிடம் கேட்க, "எனக்கு பட்டா ஸ்ரீரங்கத்தில் உள்ளது. இன்று ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். இங்கே தங்கியிருந்து நாளை சென்று நானும் உரிமைப் பட்டயத்தைக் கொண்டு வருகிறேன்' என்றார். ஊர்ப் பஞ்சாயத்தும் இதை ஆமோதித்தது. ஆனால் திருவரங்கம் சென்ற ஆழ்வார் திரும்பி வரவேயில்லை. வழக்கும் முடிவுறாமல் போனது. அன்று முதல் இன்று வரை இந்த ஊரில் எந்த வழக்கு ஏற்பட்டாலும் சரியான தீர்ப்பில்லாமல் தீரா வழக்காகவே (தோலா வழக்காகவே, தீராத வழக்காகவே) இருந்து வருகின்றதாம்.  ஊறாக்கிணறு!: ஒரு நாள் தங்கிச் செல்ல அவகாசம் கேட்ட ஆழ்வாருக்கு சிறிது நேரத்தில் தாகம் எடுத்தது. கிணற்றடியில் நீர் இறைத்த பெண்களிடம் தாகம் தணிக்க நீர் கேட்டார். இவர் நிலத்துக்கு வழக்குரைத்தது போல் நம்மிடமும் ஏதாவது செய்தால் என்னாவது என்று எண்ணி தண்ணீர் தரமுடியாது என்றனர். வருந்திய ஆழ்வார், "இந்த ஊரின் கிணறுகளில் நீர் ஊறாமல் போகக் கடவது' என்று சபித்துவிட்டார். அது இன்றும் தொடர்கிறதாம். கிடைக்கும் நீரும் உப்புநீராகத்தான் உள்ளதாம். அதிசயமாக கோயிலுக்குள் திருமஞ்சனத்துக்காக எடுக்கப்படும் மடப்பள்ளி கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.  காயா மகிழ்!: பசி மயக்கத்தில் மகிழ மரத்தடியில் அமர்ந்தார் ஆழ்வார். அப்போது ஸ்ரீகிருஷ்ணனே தீர்த்தமும் பிரசாதமும் ஏந்தி வந்து இவரைத் தட்டியெழுப்பி, உணவைக் கொடுத்தார். தன்னை மறந்த நிலையில் உணவுண்டு ஏறிட்டுப் பார்த்த ஆழ்வார், வந்தவனைக் காணாது ஆச்சர்யம் அடைந்தார். அந்த மகிழ்வில் மகிழ மரத்தைப் பார்த்து "நீ என்றும் பசுமையுடன் இளமை குன்றாமல் காயா மகிழ மரமாக இருப்பாய்' என்றார். இவ்வாறு இத்தலத்துக்கென சில தடங்களைப் பதித்த ஆழ்வார் அன்று இரவோடு இரவாக வயலில் இருந்து தங்கத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் சென்று விட்டார். இந்த காயா மகிழ் சமீப காலம் வரை இருந்து புயலில் விழுந்து விட்டதாம். தற்போது அவ்விடத்தில் ஒரு புதிய மகிழ மரத்தை நட்டு வைத்துள்ளனர், பசுமையோடு அந்த காயா மகிழ்  ஆழ்வாரின் வரலாற்றை நினைவு கூறும் அழியாச் சின்னமாக நின்று கொண்டிருக்கிறது. இத்தல விருட்சமான காயா மகிழின் விதைகளைப் போட்டால் முளைப்பதில்லையாம் இதனாலும் காயா மகிழ் என்ற பெயருண்டாயிற்று என்பர்.  காயாமகிழின் கீழிருந்து பசி தீர்த்த திருமங்கைமன்னன்  இரவோடிரவாக தங்கத்தை  எடுத்துக்  கொண்டு ஸ்ரீரங்கமோடும் போது,  தனது பசி தீர்த்தவன் யார்  என்ற ஐயம் ஆழ்வாரின்  நெஞ்சை வருடிக்கொண்டேயிருக்க நடுவழியில் இவரை ஒருவன் மறிக்க, யார் என்று திருமங்கையாழ்வார் கேட்க,  நான்  “தலையாரி” என்றவன் சொல்ல அருகில் வந்து சற்றே உற்று நோக்கியவர்க்கு அவனிடம் சங்கும், சக்கரமும் தெரிந்து மறைய, வழிப்போக்கன் என்று நாம் கூறியதால் வழிப்போக்கனாகவே வந்து கண்ணங்குடியானே காட்சி கொடுத்தான், உண்டியும் இவனே கொடுத்தான் என்று தெரிந்து, தெளி விசும்பு  சேர்வாரொப்ப தேஜசுடன் தென்னரங்கம் வந்தடைந்தார்.  இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் “திருநீறணி விழா” என்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறும். இதற்கு அனைவரும் விபூதி அணிந்தே வருவார்களாம்.  இத்தலத்தில்  சென்று  பெருமாளை வழிபட்டால் பரம்பரைச் சொத்துக்கள் நம் கையை விட்டுப் போகாது. ஒருவேளை போய் இருந்தால் திரும்ப கிடைத்து விடும். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுவர்களின் குறைகளை இத்தலத்து பெருமாள் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.   திருக்கண்ணங்குடியில் எம்பெருமான் பரத்வ சௌலப்ய  கல்யாண குணங்களை காட்டி அருளுகின்றான். அதாவது மேன்மை எளிமையின் எல்லைகளை காட்டி அருளுகின்றான். இது வரை பெருமாளுடன் பல் வேறு நிலைகளில் கருடன் சேவை சாதிக்கும் அழகைக் கண்டோம் இனி பல் வேறு கை கூப்பி  நின்ற கோலம் அல்லாமல் மற்ற  சிறப்புக்கோலங்களில் கருடன் சேவை சாதிக்கும் அழகை அனுபவிப்போம் அன்பர்களே.                                       23. திருவரங்கம் அமர்ந்த கோல கருடன்   பெரிய பெருமாள் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கவிமானம் திருப்பாற்கடலில் இருந்து வெளி வந்தபோது அதை ஏந்தி வந்தவன் ஸ்ரீகருடன். அமர்ந்த கோலத்தில் உள்ள அதிசய கருடனை நாம் திருவரங்கத்தில்,  திருமங்கை ஆழ்வார் அமைத்தருளிய  நான்காவது “ஆலிநாடன் திருச்சுற்றில்”  சேவிக்கலாம்.   ஸப்த ப்ரகார மத்யே ஸரஸிஜமு குளோத் பாஸமானே விமானே  காவேரீ மத்யதேஸே ம்ருதுதர பணிராட் போக பர்யங்க பாகே  நித்ரா முத்ராபிராமம் கடிநிகட ஸிர: பார்ஸவவின்யஸ்த ஹஸ்தம்  பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம்.  என்றபடி ஏழு பிரகாரங்கள் கொண்ட உத்தமாதோத்தம க்ஷேத்திரத்தில் காவிரி மாலையாக இரு பக்கமும் பாய   அரங்கநாதர் பாம்பணையில் திருக்கண் வளரும் திருவரங்கத்தில் எல்லாம் பெரியது தான்.  கோவில் – பெரிய கோவில், பேரும் பெரிது, ஊரும் பெரிது. பெருமாள் – இராம பெருமான் வழிபட்ட பெரிய பெருமாள், தாயார் – பெரிய பிராட்டி, ஊர் - பேரரங்கம்.  தளிகை – பெரிய அவசரம், வாத்யம் – பெரிய மேளம், பட்சணம் – பெரிய திருப்பணியாரம் என்று அனைத்துமே பெரியது தான். அதுபோல இங்கு அமைந்துள்ள சன்னிதிக் கருடனும் பெரியவர்தான். செப்புச்சிலை வடிவில், 5அடி பீடத்தில் 14அடி உயரத்தில் அமர்ந்த கோல, அஞ்சலி ஹஸ்த கருடன் மிகவும் அற்புதம். இவர் சுண்ணாம்புச் சுதையால் ஆனவர் . வலக் காலை தரையில் ஊன்றி முட்டியை மடித்த படியும், இடது கால் முட்டி தரையில் ஊன்றிய கோலத்தில், அஞ்சலி ஹஸ்தத்துடன்,   சிலையை எங்கும் காண்பது அரிது. கருடாழ்வார் சன்னிதி சுவர்களில் அற்புதமான ஓவியங்கள் உள. கருடனது திருக்கரங்களும் திருப்பாதமும் கருடனின் பாதம் போல கூரிய நகங்களுடன் அமைத்திருப்பது ஒரு சிறப்பு. மேலும் கருடனை அலங்கரிக்கும் நாகங்கள் அனைத்தும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பாக இடது திருக்கர கங்கணமான ஆதி சேஷனை ஐந்து தலை நாகமாக அமைத்து கோபமாக கருடனை காணும் வகையில் அமைத்திருப்பதைக் காண கண் கோடி வேண்டும். இச்சன்னிதி அமைந்துள்ள கருடமண்டபத்தில்  212 தூண்கள் உள்ளன. அவற்றில் பல மன்னர்களை கருடனை வணங்கியபடி  சிலைகளாக வடித்துள்ளனர். கருடனின் முன்புறம்  சுக்ரீவனுக்கும் அங்கதனுக்கும் சிறு சன்னதிகள் உள்ளன. அவர்கள் இருவரும் துவாரபாலகர்கள் போல விளங்குகின்றனர். இவருக்கு 30 அடி நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமையில் கொழுக்கட்டை படைக்கப்படுகின்றது. மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுக்கின்றனர்.  அநேகமாக எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் பெரிய திருவடியை அழகிய சிறகுகளை விரித்த நிலையில் நின்ற கோலத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன்  பெருமாளை வழிபடும் கோலத்திலேயே சேவிப்போம். ஆனால் இங்குத் திருவரங்கத்தில் அவர் அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார் அதற்குக் காரணம் என்னவென்று காணலாமா அன்பர்களே?  பெருமாள் வைகுந்தத்தை விடுத்து நாம் எல்லோரும் உய்ய கங்கையினும் புனிதமான  காவிரியின் இடையே  வந்து கோவில் கொண்டு விட்டதால் இனி எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவே “கருடா! தயாராக நிற்க வேண்டாம், அமர்ந்தே இரு” என்று பெருமாள் பணித்ததால் அமர்ந்து சேவை சாதிப்பதாக ஐதீகம்.   []   திருவரங்கம் அமிர்தகலச கருடன்   சன்னிதி கருடன் தவிர மேலும் அமிர்தகலசக் கருடன் சன்னிதியும் திருவரங்கத்தில் உள்ளது, தன் தாயின் அடிமைத் தளையை நீக்கக் கருடன் தேவலோகம் சென்று இந்திரனை வென்று அமிர்த கலசம் கொண்டு வந்த கதையை முன்னர் பார்த்தோம், அந்த அமிர்தகலசம் தாங்கியவனாகவும் இங்குச் சேவை சாதிக்கின்றார் வேதசொரூபனான கருடன்.    துன்னிய பேரிருள் சூழ்ந்துலகை மூட மன்னியநான்மறை முற்றும்மறைந்திட பின்னிவ்வுலகினில் பேரிருள் நீங்க அன் றன்னமதானே! அச்சோவச்சோ அருமறைதந்தானே!  அச்சோவச்சோ  (பெரி.தி. 1.8.10)   பொருள்: நிலையான நான்கு வேதங்களும் மறைந்து விட, அதனால் அஞ்ஞானமாகிய  இருள் பரவி உலகங்களை மறைத்துக் கொள்ள, பின்பு இந்த உலகினில் இருந்த அந்த அஞ்ஞானமாகிய  இருள் நீங்கும்படி அக்காலத்தில் அன்னமாய்த் தோன்றியவனே! என்னை அணைத்துக் கொள். அருமையான வேதங்களை உபதேசித்தவனே! அணைத்துக் கொள். என்று பெரியாழ்வார் பாடியபடி, பெருமாள் காத்த நால் வேதங்களை அமிர்த கலசத்தில் ஏந்தியிருக்கின்றார் கருடன் என்பர் சிலர்.      சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு செல்லும் வழியில் இடப்புறம் உள்ளது அமிர்த கலச கருடாழ்வார் சந்நிதி.. அடேயப்பா அந்த கருடரின் அழகே அழகு.  அபூர்வமான கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டு மிளிர்கிறார் கருடாழ்வார். தட்டிப் பார்த்தால் இனிமையான  ஓசை வருமாம். அக்கருடர் சிலையின் சிற்ப வடிவமைப்பு மிக மிக நுணுக்கமாக உள்ளது. வலது மேற் கரத்தில் அமிர்த கலசம் ஏந்தியிருக்கிறார். இடது மேற்கரத்தில் நஞ்சுமிழ் நாகம் ஏந்தியுள்ளார்.. அஞ்சலி ஹஸ்தத்துடன் அருமையாகச் சேவை சாதிக்கின்றார். மூன்று தலைகளுடன் நெளியும் நாகத்தை ஏந்தியுள்ள நளினமே ஒரு அழகு. அவரின்  ஒவ்வொரு பகுதியிலும் பட்டர் தீபம் காட்டும் போது வியந்து போவோம். இடது காலை நன்கு மடக்கி , முட்டி மேலே இருக்க, பாதத்தைக் கீழே பதித்திருக்கிறார். வலது கால் மடங்கி கீழிறங்கி முட்டி தரையைத் தொட்டபடி இருக்கிறது அவ்வளவு அற்புதமாக   செதுக்கப் பட்டிருக்கிறார் கருடன்.   கருடகம்ப மண்டபத்தில் பஞ்சராத்ர ஆகமப்படி கருடனின் கொடி வரையப்பட்டுள்ளது. அருகிலே கருடனின் திருமேனியை அலங்கரிக்கும் நாகங்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர். சந்தனு மண்டபத்தில் கண்ணாடி அறையின் மேல் பெருமாளைப் பார்த்தபடி கருடன் சுதை சிலையாகவும், அவரது இரு மனைவியரான ருத்ரையும் சுகீர்த்தியும் வண்ண சிற்ப வடிவிலும் பெருமாளை சேவித்தபடி உள்ளனர்.   .திருவரங்கத்தில் வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் பொருட்டு கருடன் புரிந்த ஒரு அற்புதத்தை காணலாம் அன்பர்களே. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவர், முருகப் பெருமானை நேருக்கு நேராகத் தரிசித்தவர்; வள்ளி நாச்சியாரின் திருக்கரத்தால், விபூதி அளிக்கப் பெற்றவர்; கோவில்களில் உயிர் பலியிடும் பழக்கத்தை தடுத்து நிறுத்தியவர்; இவர் தமிழில் வண்ணம் பாடியும், வண்ணத்தியல்பு என்னும் இலக்கணநூல் யாத்தும் தமிழிசைக்கு உயிரூட்டினார். முருகனின் அடிமையாக ஒளிர்ந்த இவர், மற்ற கடவுளர்களையும் போற்றினார். வைணவப் பெரியார்களான பெரியாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார்  ஆகியோர்களை உயர்வாகப் பாடியுள்ளார்.  அறு சமய கடவுளர்களுக்கும்   ஆயிரம் பாடல்களாக ஆறாயிரம் துதிப்பாடல்கள் பாடியுள்ளார்,   நடராஜப் பெருமான் பற்றி  தில்லைத் திருவாயிரம்' மற்றும் திருமகள் அந்தாதி, சடகோபர் சதக்கந்தாதி முதலிய இலட்சத்திற்கும் அதிகமான  துதிப்பாடல்களை எழுதினார். ஆனால்   தற்போது ஐம்பதாயிரம் பாடல்கள்தான் கிடைத்துள்ளன. மேனி முழுவதும் திருநீறு, நெற்றியில் குங்குமம், இடது தோளில் வடகலைத் திருநாமம், வலது தோளில் தென்கலைத் திருநாமம் தரித்திருப்பார். அக்கமணி மாலை, பாதக்குறடு, கோவணத்துடன், தண்டாயுதம் ஏந்தி வலம் வந்ததால் இவரை ‘தண்டபாணி சுவாமிகள்’ என்றனர் மக்கள். அகப்பொருளின் துறைகளை அமைத்து சந்த யாப்பில் ‘வண்ணம்’ என்ற பெயரில் பாடல்களைப் பாடியதால் ‘வண்ணச்சரபம்’ என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது. தமிழகத்தில் அவிநாசி உள்ளிட்ட 218 ஊர்களுக்கும் கேரளம், இலங்கைக்கும் சென்று பக்தி நெறியைப் பரப்பிய இவர், ஒருமுறை, திருத்தல யாத்திரை செய்தவாறு, திருவரங்கத்திற்கு வந்தார். அப்போது, திருவரங்கப் பெருமானைக் குறித்து தாம் பாடிய, 'திருவரங்கத் திருவாயிரம்' எனும் அருந்தமிழ் நூலை, அங்கே அரங்கேற்ற நினைத்தார். அடியவரின் உள்ளம் அரங்கனுக்குப் புரியாமல் போகுமா? திருவரங்கத்தில் இருந்த அடியார்கள் கனவில் தோன்றி, தண்டபாணி சுவாமிகள் பாடிய, 'திருவரங்கத் திருவாயிரம்' எனும் நூலை, அரங்கேற்றம் செய்யுமாறு கட்டளையிட்டார். அரங்கேற்றம் துவங்கியது;  வண்ணச் சரபத்தின் வார்த்தை அமுதத்தைப் பருகிக் கொண்டிருந்தனர், அடியார்கள் கூட்டம். அப்போது, அடியார் ஒருவரின் மகளை, பாம்பு கடித்து, அவள் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல் வந்தது. அரங்கேற்றம் தொடர்ந்து நடக்குமோ, நடக்காதோ என்ற நிலை! ஆனால், தண்டபாணி சுவாமிகள் கவலைப்படவில்லை. அவர் வேகமாகப் போய், கருடன் முன் நின்று, அரங்கன் திருமுன் அமரும் கருடா இரங்கி இரங்கிப் பார்ப்பனப் பெண் ஏங்கச் சிரங்கொண்ட, பொல்லாவிடத்தைப் பொடியாக்கிப் பூவுலகோர் நல்லான் என்று ஓத அருள் நல்கு!  என வேண்டி, திருநீறு தந்து, அப்பெண்ணுக்கு பூசச் சொன்னார். அப்போது, கருட பகவான், ஓர் அந்தணன் வடிவில் தண்டபாணி சுவாமிகளுக்குக் காட்சியளிக்க, அவரைப் பார்த்து, 'உங்கள் பெயர் யாது?' எனக் கேட்டார் தண்டபாணி சுவாமிகள். 'என்  பெயர் கருடாச்சாரி...' என்று சொல்லி, சற்று நேரம் சுவாமிகளிடம் உரையாடி, அங்கிருந்து திடீரென மறைந்தார். அதே விநாடியில், பாம்பு தீண்டியப் பெண், எந்தவித பாதிப்பும் இல்லாமல், பூரணமாகக் குணம் பெற்றாள் என்ற தகவல் வந்தது. 'ஏதும்  அறியாத  சாதாரண மனிதனைப் போலத் தோன்றி, என்னோடு உறவாடி, கருடன் செய்த அருள், அதிசயம்...' என்று இதைப்  பாடினார் தண்டபாணி சுவாமிகள். அருளாளர்களின்  வார்த்தைகளுக்கு ஆண்டவன் கட்டுப்பட்டு, அல்லல்களைக் களைவார் என்பது, திருவரங்கத்தில் இவ்வாறு கருடன் மூலம் நிரூபணமானது. வாருங்கள் இனி நாச்சியார் கோவிலின் சிறப்புக் கல்கருடனைச் சேவிக்கலாம்.                                                         24. திருநறையூர் கல் கருடன்   []     நாச்சியார் கோவில் என்று தாயாரின் பெயரால் அழைக்கப்படும் திருநறையூர் திவ்யதேசத்தின் சிறப்புக்கள் இரண்டு. ஒன்று இத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம். இரண்டாவது கல் கருடன்.  திருநறையூரிலே கல் கருட சேவை மார்கழி வைகுந்த ஏகாதசி மற்றும் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் போது  நான்காம் நாள் மாலை  நடைபெறுகின்றது. இவ்வாறு வருடத்தில்  இரு முறை  கல்கருடனில் பெருமாளும் அன்ன வாகனத்தில் வஞ்சுளவல்லித் தாயாரும் புறப்பாடு கண்டருளுகின்றனர்.   இத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம், அபிஷேகம், நைவேத்யம் எல்லாம் முதலில் தாயாருக்குதான். அது ஏன் என்பதற்கான வரலாறு.   பொதுவாக வைணவத்தலங்களில் மஹாலக்ஷ்மித்தாயார், பெருமாளுக்கு வலப்பக்கம் தனி சன்னதியில் நான்கு திருக்கரங்களுடன்  தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் எழிலாக  சேவை சாதிப்பார். ஆனால் இத்தலத்தில்  பெருமாளுடன் கருவறையில் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார் என்பது ஒரு சிறப்பு. சோழநாட்டு திருப்பதிகளில் புறப்பாட்டின் போது பொதுவாக பெருமாளின் இடுப்பில் சாவிக்கொத்து கொண்டு அலங்கரிப்பார்கள். இத்தலத்தில் தாயாருக்கு முதலிடம் என்பதால்  தாயாரின் இடுப்பில் சாவிக்கொத்து இருக்கும்.  நம்மைப் பற்றி பெருமாளிடம் பரிந்துரைப்பவர் தாயார். ஸ்ரீபாரிசு என்பதே சிபாரிசு ஆனது.   ஆதி காலத்தில் இத்தலத்தில் மேதாவி என்ற முனிவர் ஸ்ரீமஹாலக்ஷ்மித் தாயாரே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டுமென்று கடும் தவம் செய்தார். தாயாரும் மனமிரங்கி ஒரு பங்குனி உத்திர நட்சத்திரத் திருநாளில் ஒரு வஞ்சுள மரத்தடியில் (நீர் நொச்சி) குழந்தையாக அவதாரம் செய்தாள். முனிவரும் அன்னையை எடுத்து உச்சி முகர்ந்து சீராட்டி வஞ்சுளவல்லி என்று திருநாமமிட்டு வளர்த்து வந்தார். தாயாரும் சீராக வளர்ந்து திருமணப் பருவத்தை அடைந்தார்.  அங்கே வைகுந்தத்தில் திருமாலை விட்டுத் திருமகள் பிரிந்ததால் தேவலோகமே ஓளியிழந்தது, அசுரர்களின் கை ஓங்கியது. தேவர்கள் துன்பப்பட்டனர். பிரம்மாவின் தலைமையில் மஹாவிஷ்ணுவைச் சரணடைந்தனர். அப்போது திருமகளைத் தேட வேண்டுமே என்று கவலைப்பட்டார் பெருமாள். அருகிலிருந்த பெரிய திருவடி விண்ணப்பம் செய்தார். தாங்கள் இராமசந்திர மூர்த்தியாக அவதாரம் செய்த போது அன்னை சீதா பிராட்டியுடன் தங்களைச் சேர்த்து வைத்த பெருமை அனுமனுக்குக் கிட்டியது.  அதே போல எனக்கும் பேறு கிட்ட, பிராட்டியார் எங்கிருக்கிறார் என்று  தேடிக் கண்டு வர எனக்கு அனுமதி  கொடுங்கள் என கருடன் கேட்கத் திருமாலும் அனுமதி அளித்தார். மகிழ்ச்சியோடு கிளம்பிய கருடன், திருநறையூர் தலத்தில் மணிமுத்தாறு நதிக்கரையில் மேதாவி முனிவரின் ஆசிரமத்தில் மஹாலக்ஷ்மித் தாயார் வளர்வதை கண்டு பூரிப்படைந்தார். திருமாலிடம்  தகவலைச் சொல்லி  மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். தாயாரை விட்டுப் பிரிந்து இருந்த மஹா விஷ்ணு, அவரைக் கைத்தலம் பற்ற பூலோகம் வந்தார். வந்தவர் ஒருவராக வரவில்லை, வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் என்று ஐந்து வியூக மூர்த்திகளாக வந்தார். சுய ரூபத்தில் வராமல் மானிட ரூபத்தில் அதிதியாக ஐவரும் வந்தனர். வந்த அதிதிகளை வரவேற்று அன்னமளித்தார் மேதாவி முனிவர், அவர்கள் கை கழுவ செல்லும் போது தண்ணீர் ஊற்ற சென்றார் வஞ்சுள வல்லித்தாயாரும்,  வந்த விருந்தினர்களைச் சரியாக கவனிக்க வேண்டுமல்லவா? அதற்காக. எல்லோரும் கையைக் கழுவிக்கொண்டு சென்று விட வாசுதேவன் மட்டும் தாயாரின் கையைப் பற்றினார். இவ்வாறு அதிதியாக வந்தவர் அடாத செயல் செய்ய வஞ்சுளவல்லி சத்தமிட மேதாவி முனிவர் ஓடி வந்து பார்த்த போது ஐவரையும் காணவில்லை அங்கே கையில் கனலாழி, வெண் சங்கம், வெய்ய கதை, சார்ங்கம் தாங்கி, மந்தகாச புன்ன்கையுடனும் பட்டுப் பீதாம்பரம் துலங்க மார்பில் வனமாலை அசைய, அஞ்சனக்குன்றம் போல்   மஹாவிஷ்ணு சேவை சாதித்துக் கொண்டு நின்றார். தான் பெற்ற பாக்கியத்தினால் தன் முன் மஹாவிஷ்ணுவே நிற்பதைக் கண்ட மேதாவி முனிவர் பெருமாளே வேண்டுவது என்ன என்று வினவ, "தங்கள் புதல்வி வஞ்சுளவல்லியை எனக்கு கன்னிகாதானம் செய்து தரவேண்டும் என்று பெருமாள்  வேண்டினார்.  அதற்கு மேதாவி முனிவர் மூன்று நிபந்தனைகள் விதித்தார். (இப்போது காலம் மாறி விட்டது பாருங்கள் அக்காலத்தில் பெண்ணைப் பெற்றவர்கள்தான் மாப்பிளைக்கு நிபந்தனை போட்டனர்)   1. தமக்கு மோட்சம் அளிக்க வேண்டும்  2.  பெருமாளே இந்த ஊருக்கு மருமகனாக வருவதால் இவ்வூரில் உள்ள அனைவருக்கும் மோட்சம் அளிக்க வேண்டும்.  3.  இத்தலத்தில் தம் பெண்ணுக்கே எல்லாவற்றிலும் முதலிடம் பெற வேண்டும். கருட வாகனரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு வஞ்சுளவல்லித்தாயாரை மணம் புரிந்து நாம் எல்லோரும் உய்யக் கோவில் கொண்டு அருளினார். கர்ப்பகிரகத்தில் தாயார் ஒரு அடி முன்னால் நிற்க பெருமாள் மணக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். கருவறையில் பெருமாள் வலப்பக்கம் நான்முகன் மற்றும் சங்கர்ஷணனையும், இடப்பக்கம் அநிருத்தன், பிரத்தியும்னன், மற்றும் சாம்பன் எனும் புருஷோத்தமனையும் கொண்டு, குடும்ப சகிதமாக  நின்ற திருக்கோலத்தில் பஞ்சவியூகமாக காட்சி தருகின்றபடியால் இத் திருத்தலம் பஞ்சவியூகத் திருத்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.   தாயாரின் திருமணம் கருடாழ்வார் முன்னர் நடந்தது. அப்போது பெருமாள் கருடனிடம் நான் இத்தலத்தில் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே நீ இங்கேயே இருந்து  நான் பக்தர்களுக்கு அருளுவது போல அருள் வழங்க வேண்டும்  என்று ஆணையிட கருடனும் தனிச் சன்னிதியில் சேவை சாதிக்கின்றார்.     திருநறையூர் என்றால் திருவாகிய லக்ஷ்மிக்கு தேன் போல் இனிக்கும் இடம் என்று பொருள். மலர்ச்சோலைகளில் வண்டாலும் தேன் பாய்வதால் இப்பெயர் என்றும் தலபுராணம் கூறுகின்றது. தாயாரின் பெயரால் நாச்சியார் கோயில் என்றே அழைக்கப்படுகின்றது. மூன்று திவ்ய தேசங்களில் தாயார் பிரதானம் அவையாவன திருநறையூர் - ஸ்ரீதேவி, ஓப்பிலியப்பன் கோயில் - பூமி தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் - நீளா தேவி அம்சம் என்பர் பெரியோர்கள்.   உறையூரில் கமலவல்லி தாயாரின் கோயிலைப் போலவே இத்தலமும் நாச்சியார் கோயில் என்றழைக்கப்படுகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் மாளிகை என்றழைக்கப்படுகின்றது.  பாரை ஊரும் பாரம் தீரப் பார்த்தன் –தன்  தேரை ஊரும் தேவதேவன் சேரும் ஊர்  தாரை ஊரும் தண் தளிர் வேலி புடை சூழ  நாரை ஊரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே  (பெ.தி 6-5-9)  பொருள்: இப்பூவுலகில் நடமாடும்  சுமையானது குறையும் படியாக பார்த்தனது சாரதியாகத் தேரை நடத்திய தேவாதிதேவன் நித்திய வாசம் செய்தருளும் திருத்தலம்  எதுவென்றால்; தேனின் வெள்ளம் பெருகும் குளிர்ந்த தளிர்கள் நிறைந்த வேலிகள்  நாற்புறமும் சூழப்பெற்று செங்கால் நாரைகள் உலாவப் பெற்ற நல்வயல்களால் சூழப்பெற்ற  திருநறையூராகும்  என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருநறையூர் என்றழைக்கப்படும் இத்தலத்திற்குச் சுகந்தவனம், சுகந்தகிரி என்ற பெயர்களும் உண்டு. சண்டன், ஹேமன் என்ற இரண்டு அரக்கர்கள் மக்களுக்கு துன்பம் விளைவித்து வந்தனர். இதைக் கண்ட இந்திரன், கருடனை அழைத்து அவ்வரக்கர்களை வதம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். கருடன் மிகுந்த வாசனையுள்ள மேருமலையின் முடியைப் பெயர்த்தெடுத்து அரக்கர்கள் மீது வீசியெறிந்து கொன்றார். வாசனை உள்ள மரங்களைக் கொண்ட மலைச்சிகரம் திருநறையூரில் விழுந்ததால் இது சுகந்தவனம், சுகந்தகிரி என்றழைக்கப்படுகின்றது. பெருமாளும் சுகந்தவனநாதன் என்றும் அழைக்கப்படுகின்றார். “தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே” என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளதால் திருவேங்கடத்திற்கு இணையான தலமாகக் கருதப்படுகின்றது.  கோப்பெருஞ்சோழன்  மிகவும் நேர்மையான அரசனாக திகழ்ந்தான். ஒரு சமயம் அவன் வெளியூர் சென்றிருந்த போது எதிரிகள் அவனது நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் முனிவர்களின் ஆலோசனைப்படி மன்னன் மணிமுத்தாறில் நீராடி வாசுதேவனைச் சரணடைய, பெருமாள் அனுகிரகத்தினால் மணிமுத்தாற்றிலிருந்து உடைவாளும், குதிரையும் பெற்று எதிரிகளைத் துவம்சம் செய்து இழந்த இராச்சியத்தை பெற்றான். ஈசனுக்கு 76  மாடக்கோயில் அமைத்த அவன் அதே மாடக்கோவில்  அமைப்பில்  யாழி சிற்பங்களுடன் இக்கோவிலை அமைத்தான்.  இராஜ கோபுரத்தில் நாம் நின்று கர்ப்பகிரகத்தில் உள்ள  பெருமாளை சேவிக்கும் வண்ணம் இவ்வாலயம் அமைந்துள்ளது என்பது சிறப்பு. எனவே  திருமங்கையாழ்வார்  மணிமாடக்கோவில் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.   மணிமுத்தாறு முதலில் சாதாரண நதியாகத்தான் இருந்தது. ஒரு சமயம் திருப்பாற்கடலிலிருந்து திருநாராயணபுரத்தில் உள்ள எம்பெருமானுக்குச் சமர்ப்பணம் செய்வதற்காக  வைர முடியைக்  கருட பகவான் எடுத்துச்  சென்ற போது  அதிலிருந்து வைரமும், முத்துக்களும் சிதறி இவ்வாற்றில் விழுந்தமையால் மணிமுத்தாறு என்று பின்னர்ப் புகழ் பெற்றது என்றொரு கதையும் வழக்கத்தில் உள்ளது.  இவ்வளவு சிறப்புப்பெற்ற இத்தலத்தின்  மூலவர்   : திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாசன், சுகந்தவன நாதர்  தாயார்    : வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார்,   உற்சவர்   : இடர்கெடுத்த திருவாளன்  தல விருட்சம் : வகுளம் (மகிழம்)  தீர்த்தம் : மணி முத்தா ஆறு, சங்கர்ஷணம், பிரத்யும்னம், அனிருத்தம்,    சாம்ப தீர்த்தம்.  மணக்கோலத்தில் வலத்திருக்கரத்தில் சக்கரமும், இடத்திருக்கரத்தில்  சங்கும் ஏந்தி சற்றே முன்புறம் வருவது போல் திருமங்கையாழ்வாருக்குப்  பஞ்ச சமஸ்காரம் செய்ய முற்படுதல் போல்   ஆகம சிற்ப சாஸ்திரத்தில் கூறப்பட்ட அனைத்து இலக்கணங்களுக்கும் ஒருங்கே பொருந்தியிருக்க எம் பெருமான் இங்கு எழுந்தருளி இருக்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும். இது போன்ற அழகுத் திருமேனியை வேறு எந்த திவ்ய தேசத்திலும் சேவிக்க முடியாது. கருவறையில் தனக்கு அருகிலேயே நின்றிருக்கும் பிரம்ம தேவரால் நாள்தோறும் பூஜிக்கப்படுபவர் இத்தல நாயகன்.  திவ்ய தேசத்தின் பெயரோடு நம்பி என்று சேர்த்தழைக்கப்படும் திவ்ய தேசங்களுள் இதுவும் ஒன்று. இவ்வகையில் திருக்குறுங்குடி நம்பியும், திருநறையூர் நம்பியும் மிகுப்புகழ் பெற்றவர்கள்.  இப்பெருமானை நம்பி என்று மொழிந்தார் திருமங்கையாழ்வார். நம்பி என்றால் பரிபூரணர் என்றும். நற்குணங்களால் நிறைந்தவர் என்றும் பொருள்.   தாயார் வஞ்சுளவல்லி, வலத்திருகரத்தில் வரத முத்திரையுடனும், இடத்திருக்கரத்தை தொங்க விட்டுக்கொண்டு மணப்பெண்ணுக்கே உரிய திருக்கோலத்துடன் மூலவருடன் கருவறையிலேயே சேவை சாதிக்கின்றார். மூலவருடன் தாயாரைக் கருவறையிலேயே வேறு எந்தத் திருத்தலங்களிலும் தரிசனம் செய்ய முடியாது. இத்திருக்கோயில் அனைத்துச் சன்னதிகளுக்கும் தனி விமானம் கொண்டு மொத்தம் 7 விமானங்களையும், 4 கோபுரங்களையும் கொண்டுள்ளது. மூலவர் விமானம் இராஜ கோபுரம் போல இருப்பது ஒரு தனி சிறப்பு.  பெரிய மதில், 4 தல விருட்சம் உடைய தலம் இது.  பெருமாளின் திருநாமங்கள் திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாசன், வாசுதேவன். தாயாரின் திருநாமங்கள் வஞ்சுள வல்லி, நம்பிகை நாச்சியார். தாயாரின் பெயரால் இத்திவ்ய தேசம் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகின்றது மேதாவி முனிவருக்கு அன்று கொடுத்த வாக்கைக் காப்பற்ற வேண்டி புறப்பாட்டின் போது தாயார் தான் முன்னே செல்கின்றார், பெருமாள் பின்னே தொடர்கின்றார்.  பெருமாள் இத்திவ்ய தேசத்தில் உபய நாச்சிமார்கள் இல்லாமல் ஸ்ரீதேவி அம்சமான வஞ்சுளவல்லித் தாயாருடன் மட்டுமே சேவை சாதிக்கின்றார். எனவே முதலில் அன்ன வாகனத்தில் தாயார் புறப்பாடு கண்டருளும் அழகையும், , பெருமாள் கல் கருடனிலும் ஒன்றாகச் சேவை சாதிக்கும் அழகையும் காணலாம்.  இத்திவ்யதேசத்தில் மட்டுமே உள்ள ஒரு புதுமை, கல் கருடன் சன்னதி பெருமாளுக்கு எதிராக இல்லாமல் தனி சன்னதியாக கருவறைக்கு சிறிது கீழே வடப்பகுதியில் தெற்கு நோக்கி   அமைந்துள்ளது. எனவே கோபுர வாசலில் இருந்து நேராக நாம் பெருமாளை தரி்சிக்க முடியும்.  ஆண்டாளின் தகப்பனாரன பெரியாழ்வார் இவரது சொரூபமே. இச்சன்னதியில் பெரிய திருவடி சாளக்கிராம வடிவத்தில் நீள்சிறகும், நீள்முடியும், நீண்டு வளர்ந்த திருமேனியுடன் கம்பீரத் தோற்றத்தில்  எழுந்தருளியுள்ளார், வலக் காலை முழங்காலிட்டு இடக்காலை மடித்து, கரங்களை விரித்து, அழகிய சிறகுகள் விரிந்த நிலையில் விளங்க வலக்கரக் கங்கணமாக குளிகனும், இடக்கர கங்கணமாக  ஆதி சேஷனும், வாசுகியை பூணூல் கயிறாகவும்,  தட்சனை அரை ஞாண் கயிறாகவும், கார்கோடகனை மாலையாகவும், பத்மனை வலக்காதணியாகவும், மஹாபத்மனை இடக்காதணியாகவும், குளிகனை திருமுடி ஆபரணமாகவும் அலங்கரிக்க அற்புதமாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்..  கருடன் சந்நிதிக்கு எதிரேதான் பரமபதவாசல் அமைந்துள்ளது.   எல்லாக் கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும் ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன, ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.  பெரிய திருவடியாகிய கருடன் பெருமாளுக்கு எப்படி எப்படியெல்லாம் சேவை செய்கின்றார் பாருங்கள். பெருமாள் அசுரர்களைக் கொல்லும் போது மேலாப்பாய், குளிர்ந்த விசிறியாக எம்பெருமானின் வெற்றிக் கொடியாக காய்சினப் பறவையாய் பெருமாளின் பகைவர்களுக்கு தானே எதிரியாகக் குதிரை பூட்டாத தேராய் பெருமாளுக்கு வாகனமாய்  புறக்கணிக்க முடியாத அடியவராய்  இவ்வாறு பல் வேறு நிலைகளிலும் பெருமாளுக்கு வேறு துணை வேண்டாத துணையாய் திகழ்பவன்தான் கருடன். கருடனில் வந்து யானையின் துயரத்தை திருநறையூர் நம்பி தீர்த்த அழகை அவரிடம் பஞ்ச சமஸ்காரம் பெற்று ஸ்ரீவைஷ்ணவர் என்று முத்திரை பெற்ற திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.  தூவாய புள்ளுர்ந்து வந்து துறை வேழம்  மூவாமை நல்கி முதலை துணித்தானைத்  தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை   நாவாயுளானை நறையூரில் கண்டேனே. (பெ.தி 6-8-3)  பொருள்: பரிசுத்தமான வாயை உடைய கருடாழ்வாரை வாகனமாகக் கொண்டு மடுவின் கரையிலே வந்து சேர்ந்து கஜேந்திராழ்வான்  துன்பம் அடையாதபடி அருள்புரிந்து முதலையை இரு துண்டமாக்கி ஒழித்தவனும், நித்திய சூரிகளுக்கு தலைவனும், செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவனும், திருநாவாய் என்னும் திருப்பதியில் இருப்பவனுமான எம்பெருமானை திருநறையூரில் கண்டேன்.  என்று தமக்கு சங்கு சக்கர இலச்சினை இட்டு ஆச்சார்யனாக விளங்கும் பெருமாள் என்பதால் திருமங்கையாழ்வார் இவரை 100 நூறு பாசுரங்களுக்கு மேலாக மங்களாசாசனம் செய்துள்ளார்.   இனிச் சிறப்பு மிக்க  கல் கருடன் இத்தலத்திற்கு வந்த வரலாறு. அருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஒரு சிற்பி கல்லினால் கருடன் செதுக்கி சிறகுகளை அமைத்து பிராணப்பிரதிஷ்டை செய்த போது அக்கல் கருடன் திடீரென்று பறக்க ஆரம்பித்து விட்டதாம், அதைக்கண்ட சிற்பி ஒரு கல்லை வீச அது கருடனின் அலகை தாக்க கருடன் திருநறையூரில் விழுந்ததாம். பெருமாள் கருடனை இங்கேயே இருக்க வரம் அளித்தார். எனவே கல் கருடன் தனிச் சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.  இவர் விநாயகர் போல மோதகப்பிரியர் இவருக்கு அமிர்த கலசம் என்னும் மோதகம் நைவேத்யம் செய்யப்படுகின்றது, இவ்வாறு மோதகம் படைத்து வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மற்றும் எல்லாச் செல்வங்களும் அருளுகின்றார் இவர்.  இவருக்குரிய கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் முதலியவைகளை வாழை இலையில் கலந்து இவரது திருமேனியில் சார்த்தினால், சார்த்துவோர் அனைத்து வித இஷ்ட சித்திகளையும் பெறுவர்.  இவருக்கு பட்டு முதலிய வஸ்திரங்களை சார்த்த நினைத்தவை நடந்திடும். ஆடி மாதச் சுக்கில பஞ்சமி திதியில் இவரை வணங்க நன் மகப்பேறு கிடைக்கும். மணமாகாத, திருமணம் தடை பட்டு வரும் கன்னிப் பெண்களுக்குத் திருமணம் கை கூடி வரும். இவரது ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் இவரை அர்ச்சிப்பது மிகச் சிறந்த பலனைத் தரும். இவரை நினைத்து வணங்கினால் விஷ ஜந்துக்களிடமிருந்து, முக்கியமாகப் பாம்புகளிடமிருந்து காத்தருள்வார். வியாழக் கிழமைகள் மாலை வேளைகளும், சனிக் கிழமைகள் காலை வேளைகளும் இவரைத் தரிசனம் செய்ய சிறந்த காலங்களாகும்.  நவசர்ப்பங்களை தன்னுடலில் தரித்து பிரார்த்தனாவாதியாய், கண் கண்ட தெய்வமாய் விளங்கும் இங்குள்ள கல்கருட பகவானுக்குத் தொடர்ந்து ஏழு வியாழக்கிழமைகள் அர்ச்சனை செய்து ஏழாவது வாரம் அமிர்த கலசம் செய்விக்க திருமணம் கை கூடல், உத்தியோக உயர்வு, குழந்தை பாக்கியம், தொழில், வியாபார அபிவிருத்தி போன்ற பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. ஆடி மாத கருட ஜயந்தியன்று  காலை சிறப்பு கருட ஹோமம் நடைபெறுகின்றது. சுவாதி தீபம் ஏற்றப்படுகின்றது.   மாலை பெருமாள் தாயாருடன்  இவர் சன்னதிக்கு எழுந்தருளுகின்றார். மூவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து  அருள் பாலிக்கின்றார்.   கருடரால் சிறப்புப்பெற்ற இத்தலத்தில் சில வருடங்களுக்கு முன்பு வரை உச்சிக்கால பூஜையில் இரண்டு கருடன்கள் வந்து நைவேத்யத்தை  சுவீகரித்துக் கொண்டிருந்தன. இவற்றின் மறைவிற்குப் பிறகு  பிரகாரத்தில் அவைகளுக்கென தொரு சிறு சன்னதி அமைக்கப்பட்டிருக்கின்றது.  அங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.  []   நாச்சியார் - பெருமாளுடன் கல்கருடன்   கருட ஜெயந்தியன்று உற்சவர் பெருமாளும் தாயாரும் கருடன் சன்னதிக்கு எழுந்தருளுகின்றனர். கருட ஹோமம் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகின்றது. பின்னர்  சிறப்பு அலங்காரத்தில் மூவரையும் அன்றைய தினம் நாம் சேவிக்கலாம்.   பிரகாரத்தில்  சக்கரத்தாழ்வார் கீழே நவகிரகங்கள் மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டிருக்க அதன் மத்தியில் பிரயோக கோலத்தில் சேவை சாதிக்க மேதாவி முனிவர் அவரை வணங்கியபடி உள்ளார்.   108 திவ்ய தேச திருத் தலங்களின் பெருமாள்களையும் ஒரு சேர இங்குள்ள கருட மண்டபத்தில் தரிசிக்கலாம். இந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் 108 திவ்ய தேச பெருமாள்களுக்கும் ஒவ்வொரு மாதம் சிரவணத்தன்று திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறுகின்றது.   குமுதவல்லி நாச்சியார் வேண்டிக் கொண்டபடி,  திருமங்கையாழ்வார்  திருவைணவராக   திருநறையூர் நம்பி அவருக்கு ஆச்சாரியனாக   இருந்து பஞ்ச சமஸ்காரம் செய்து வைத்தார். எனவே இன்றும் பெருமாள் சங்கு சக்கரங்களை ஆழ்வாரின் தோளில் முத்திரையிடும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அப்பஞ்ச சமஸ்காரங்கள் என்னவென்று பார்ப்போமா?  1. தீயிற் பொலிந்த  சங்கு சக்கர முத்திரை பெறுதல்.  2. 12 திருமண்கள் உடலில் இட்டுக்கொள்ளும் வகை பெறுதல்.  3. இயற்பெயரை மாற்றி பெருமாளின் அல்லது ஆச்சாரியர்களின் நாமம்(தாஸ்ய நாமம் பெறுதல்)  4. ஓம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தை பொருள் உணர்ந்து உச்சரித்தல்.    5. பெருமாளுக்கு படைத்து பூசை செய்த பின்னரே உண்ணுதல்.  திருநறையூர் நம்பி தன் ஆச்சார்யர் என்பதாலோ என்னவோ அவரை 100க்கும் மேற்பட்ட பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கையாழ்வார்.  அவற்றுள் சிறப்பானவை மடல்கள். திருவரங்கன் அழ்வாரிடம் மதிள் கட்டி முடித்து விட்டீர்கள் மடல் வேண்டும் என்று கேட்க  மடல் அங்கே மதில் இங்கே என்று ஆழ்வார் பதிலிறுத்தார் என்பார்கள். திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் மதில் கட்டினார். ஆனால் மடல்களை திருநறையூர் நம்பிக்கே அர்ப்பணித்தார். மடலேறுதல் என்பது சங்ககால தமிழர் மரபு. தலைவியை அடைய முடியாத தலைவன் தன் காதலை உலகிற்கு உணர்த்த பனை மடலால் குதிரை செய்து, காதலியின் உருவத்தை  கொடியில் வரைந்து கண்ணீர் சிந்தி குதிரை மீது வலம் வருதல் மடலேறுதல் எனப்படும். ஆண்கள்தான் மடலேறுவார்கள், ஆனால் இங்கு திருமங்கையாழ்வார் தன்னை பரகால நாயகியாக பாவித்து, தனக்குத் திருநறையூர் நம்பி திருமுகங்காட்டாதிருந்தால் மடலூர்வேன் என்று தன் காதலை வெளிப்படுத்த இரு மடல்களை இடுகின்றார். மரபை மாற்றி தலைவி மடலேறுவதாகப் புதுமை செய்துள்ளார்.   சிறிய திருமடலில் செங்கண்மாலை தெருவில் கண்ட தலைவி, அவனைப் பார்த்த மாத்திரத்தில் அவளின் மணி நிறமும் கை வளையும் நீங்கியதால், கட்டுவிச்சியை அழைத்து  தாயார்  குறி கேட்க அவள் சுளகில் சிறிது நெல்லை வீசி, நும் மகளை நோய் செய்தவன் இவன் என திருமாலின் அவதாரப்பெருமைகளை தொகுத்துக்கூறும் முறையில் பாடியுள்ளார்.  பெரிய திருமடலில் பரகால நாயகியின் பெண்மை நலன் திருமாலின் நுகர்வுக்குரியது. நுகரப்படாத கொடி மலர் போல அது வீணாகி விடக்கூடாது. தலைவி மூப்படைவதாலும் அவள் அழகு நலன் பயனற்று போய் விடும். அவள் மூப்படையாதிருக்க மருந்து உண்டா? மருந்தறிவார் யார்? என்னும் தேடுதலாக பெரிய திருமடல் அமைந்துள்ளது. இதில் ஆழ்வார் அத்திருமால் உறையும் பல்வேறு திவ்யதேசங்களையும் பட்டியலிடுகின்றார். திருநறையூர் நம்பியின் பேரெழிலை திருமங்கை மன்னன் பெரிய திருமடலில்  இவ்வாறு பாடியுள்ளார்.  என் உறு நோய் யான் உரைப்பக் கேம்மின் இரும்பொழில் சூழ் மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல் பொன்னியலு மாடக்கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண்களிப்ப நோக்கினேன் -நோக்கலும் மன்னன் திருமார்பும் வாயுமடியிணையும் பன்னுகரதலமும் கண்களும் – பங்கயத்தின் பொன்னியல் காடு ஓர் மணிவரை மேல் பூத்தது போல் மின்னியொளி படைப்ப வீழ்நாணும் தோள்வளையும் மன்னிய குண்டலமும் ஆரமும் நீள்முடியும் துன்னு வெயில்விரித்த சூளாமணியிமைப்ப மன்னு மரகதக்  குன்றின் மருங்கே ……….. பொருள்:  எனக்கு நேர்ந்த நோயை நான் உரைக்கின்றேன், கேட்பீர், பரந்த சோலைகளுடன், வேதம் வல்லவர் வாசம் செய்யும் திருநறையூரில், பெரிய மலை போன்ற பொன்மயமான அழகிய மாடக்கோவிலின் திருக்கதவைக் கடந்து நான் உள்ளே சென்றேன். என்னுடைய கண்கள் களிக்குமாறு நோக்கினேன். பார்த்த அளவில் சுவாமியின் திருமார்பும்,  தாமரை மல்ர் போன்ற திருவாயும் இணையடியும், விவரிக்க முடியாத அழகுடைய திருக்கைகளும் கண்டேன். அன்றியும் நீலமணிமயமான ஒரு மாலையின் மேல் பொன் போலும் ஒரு தாமரைக் காடு பூத்தது போல விரும்பப்படும்   அரைநாணும், தோள்வளைகளும்  திருச்செவிகளில் பொருந்திய குண்டலங்களும், திருமார்பில் ஆரமும் நீண்ட திரு முடியும் பளபளவென   மின்ன, நெருங்கிய ஒளியைப் பரப்பும் திருமுடியின் நுனியிலுள்ள மாணிக்கமானது மற்றை ஆபரணங்களின் ஜோதியை மறைக்கும். இவ்வாறு அழகு மயமான மரகதமலை போன்ற எம்பெருமானை நான் கண்டேன் என்று பரகாலநாயகியாக பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.   இவ்வாறு மடல் பெற்ற சிறப்புப் பெற்றது  இத்திருத்தலம், கல்கருடன் அருள் பாலிக்கும் திருநறையூர். பின்னர் ஓர் அத்தியாயத்தில் இத்தலத்தில் நடைபெறும் சிறப்புக் கல் கருட சேவையைச் சேவிக்கலாம் அன்பர்களே    25. திருவெள்ளியங்குடி சதுர்புஜ கருடன் []     கங்கையினும் புனிதமாய காவிரியின் கரையில் வெள்ளியார் வணங்க அருள் புரிந்த கோலவில்லி இராமர் ஆலயத்தில் கருடாழ்வார் மேல்திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி சதுர் புஜங்களுடன் நின்ற கோலமும் அமர்ந்த கோலமும் இல்லாமால் எழிலாகச் சேவை சாதிக்கின்றார் வாருங்கள் அந்த எழிலைக் காணலாம். இத்தலத்தில் கோலவில்லி இராமரை சேவித்தால் 108 திருப்பதி பெருமாள்களையும் சேவித்த பலன் கிட்டும் என்பது ஐதீகம். வாமனாவதாரத்தில் தான் இழந்த கண்ணை இத்தலத்தில் தவம் செய்து திரும்பப்பெற்றதால் சுக்கிர பகவான் அணையாத் தீபமாக இத்தலத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். எனவே இத்தலம் சுக்கிரத் தலமாகவும் போற்றப்படுகின்றது. இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் என்று வாழையடி வாழையாக இருந்து வருகின்றது.  இத்தலத்தின் அருகில்தான் வியாக்கியான சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளையின் அவதாரத் தலமான சேங்கனூர் உள்ளது.       ஆநிரை மேய்த்து அன்று அலைகடலடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களையுருட்டி  கார்நிறை மேகம் கலந்த தோருருவக் கண்ணனார்க் கருதியகோவில்      பூநிரைச் செருத்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரிவண்டுமிண்டி  தேனிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திருவெள்ளியங் குடியதுவே (பெ.தி 4-10-2)    பொருள்: (முன்னொரு காலத்தில் கோபால கிருஷ்ணனாய்ப் பிறந்து) பசுக்கூட்டங்களை மேய்த்தவனும், அலை வீசுகின்ற கடலில் அணைகட்டி இலங்கை சென்று அரக்கர்களுடைய தலைகளை அறுத்துத் தள்ளியவனும், மழைக்கால மேகம் போன்ற ஒப்பற்ற வடிவை உடைய கண்ணனானவனும் திருவுள்ளம் உவந்து எழுந்தருளியுள்ள  திருத்தலம் எதுவென்றால் வரிசை வரிசையாக பூத்திருக்கின்ற சுரபுன்னை மரங்கள், முத்துப்போன்ற  மொக்குகள் அரும்பியுள்ள புன்னை மரங்கள் ஆகியவற்றின் பொந்துகளிலே வண்டுகள் நெருங்கி இருந்து தேனை ஆரவாரத்தோடு பருகி இனிய இசைகளைப் பாடும் திருவெள்ளியங்குடியாகும்  என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த இத்தலத்தின்    மூலவர்: கோலவில்லி இராமர், க்ஷீராப்திநாதன் புஜங்க சயனத்தில் வர்ண  கலாபத்தில் சேவை சாதிக்கின்றார்.  உற்சவர்: சிருங்கார சுந்தரர். தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் விருப்பம் உள்ளவர்.      தாயார் : மரகதவல்லி  விமானம் : புஷ்கலா வர்த்தக விமானம்.  தல விருட்சம்: செவ்வாழை  தீர்த்தம்: சுக்கிர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம். விமானம் : புஷ்கலாவர்த்தக விமானம். மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்   திருஇந்தளூரில் பரிமள ரங்கநாரின்  சேவை தனக்குக் கிடைக்கத் தாமதம் ஆனதால், மனம் நொந்தார் திருமங்கை ஆழ்வார். இவரைச் சாந்தப்படுத்தும் விதமாக திருவெள்ளியங்குடி பெருமாளான க்ஷீராப்திநாதரே, தன் தலத்துக்குத் திருமங்கை ஆழ்வாரை அழைத்துத் தரிசனம் தந்ததாகக் கூறுவர். க்ஷீராப்திநாதரே இங்கு மூலவர் என்றாலும், 'ஸ்ரீகோலவில்லி ராமர்' என்கிற திருநாமமே மங்களாசாசனப் பெயர். எனவே, மூலவரை “கோலவில்லி ராமர்” என்றே அழைப்பது வழக்கத்தில் இருக்கிறது.  திருவெள்ளியங்குடி எனும் இந்தத் திருத்தலம் நான்கு யுகங்களிலும் புகழ் பெற்று இருந்துள்ளது. கிருத யுகத்தில் - பிரம்ம புத்திரம் என்றும், திரேதா யுகத்தில் - பராசரம் என்றும், துவாபர யுகத்தில் - சைந்திர நகரம் என்றும், கலியுகத்தில் - பார்க்கவபுரம் என்றும் திருவெள்ளியங்குடி போற்றப்படுகிறது. சுக்கிரன், பிரம்மன், பராசரர், இந்திரன், பிருகு முனிவர், அசுர சிற்பியான மயன், மார்க்கண்டேய மகரிஷி, பூமாதேவி ஆகியோருக்கு பெருமாள் பிரத்யட்சம்.  ஒவ்வொரு தலமாகத் தரிசித்தபடி சோழ நாட்டில் பயணித்துக் கொண்டிருந்தார் திருமங்கை ஆழ்வார். திருவெள்ளியங்குடி திருத்தலத்துக்கு வந்தவர், மூலவர் க்ஷீராப்திநாதர் திருமேனியின் அழகில் சொக்கிப் போனார்.   காற்றிடைப் பூளை கரந்தன அரந்தையுறக் கடலரக்கர்தம் சேனை கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன்றன் கோயில் ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி சேற்றிடைக் கயளலுகள் திகழ் வயல்சூழ் திருவெள்ளியங்குடியதுவே (பெ.தி 4-10-6) பொருள்:  வீசுகின்ற பெரும் காற்றிலே இலவம் பஞ்சானது தன் அடையாளத்தை எங்கேயோ தொலைத்து அழிந்து போய் விடுகிறது. அதுபோல், அரக்கர்களுடைய கடல் போன்ற பெரும் படைகள் தோல்வியுற்று, அல்லலுற்று மெள்ள மெள்ள எமலோகம் சென்று சேர்கின்றன. இது எப்படி நிகழ்கிறது? தன்னிடம் உள்ள அழகிய வில்லில் - கொடிய அம்புகளைத் தொடுத்து இந்த அரக்கர் படைகளை அழித்தாராம் ஸ்ரீராமபிரான். இத்தகைய “ஸ்ரீகோல வில்லிராமர்”  (அழகிய வில்லை உடைய ராமர் என்பது பொருள்) திருக்கோயில் கொண்டுள்ள திருக்கோயில் எதுவென்றால், நீரூற்று உள்ள நிலங்களில் முளைத்திருக்கின்ற வாழை மரங்களிலிருந்து  இற்ற உதிர்ந்த பழங்களை கயல் மீன்கள் மேல் விழந்து  தின்று  சேற்று நிலங்களிலே துள்ளி விளையாடப் பெற்ற வயல்கள் சூழ்ந்த  திருவெள்ளியங்குடி ஆகும். இத்தலத்தின் தல விருட்சமான செவ்வாழையையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார் ஆழ்வார்.  தலவரலாறு: புராண காலத்தில் தேவர்கள், அசுரர்கள் என்று இரு பிரிவினர் இருந்தனர். தேவர்களின் சிற்பியாக விஸ்வகர்மாவும், அசுரர்களின் சிற்பியாக மயனும் இருந்து வந்தனர். மயன், இராவணனின் மனைவி  மண்டோதரியின் தகப்பனார் ஆவார். தேவர்களுக்கான மாளிகைகளைக் கட்டிக் கொடுத்து நற்பெயர் பெற்றார் விஸ்வகர்மா. அதோடு, ஸ்ரீமந் நாராயணன் உறையும் திருக்கோயில்களை - அவரது பரிபூரண அருள் பெற்று, நிர்மாணிக்கும் பேறு பெற்றார் அவர்.  தேவ சிற்பியான விஸ்வகர்மாவுக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால், இதே ஆசை அசுர குல சிற்பியான மயனுக்கும் வந்தது. அதாவது, சர்வ வியாபியான ஸ்ரீநாராயணனின் அருள் பெற்று, அழகிய விமானத்துடன் கூடிய திருக்கோயில் ஒன்றை அப்பரந்தாமனுக்குக் கட்ட விரும்பினான். விஸ்வகர்மாவுக்குக் கிடைத்த பேரும் புகழும் தனக்கும் கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டான் மயன்.  எனவே மயன் பிரம்மதேவரை அடி பணிந்து தனது விருப்பத்தைத் தெரிவித்தான். பிரம்மதேவரும், “இதுவும் அந்நாராயணரின் விளையாட்டுத்தான் போலும்!” என்று  மெள்ளப் புன்னகைத்தார். “ ஓர் உபாயம் உள்ளது. புண்ணிய நதியான காவிரியின் கரையில் உனக்கு பிடித்தமான ஓர் இடத்தில் அமர்ந்து நாராயணனை நினைத்து தவம் செய், உனக்கும் தேவ சிற்பி விஸ்வகர்மாவிற்குக் கிட்டிய பாக்கியம் கிட்டும்” என்று ஆசி வழங்கி அனுப்பினார்.  பிரம்ம தேவரின் அறிவுரைப்படி , பூலோகம் வந்து காவிரிக் கரையோரமாக பயணித்து தவம் இருப்பதற்குத் தகுந்த இடம் தேடினான் மயன். இப்போது திருவெள்ளியங்குடி என்று அழைக்கப்படும் இந்த திருத்தலத்துக்கு வந்தான். இங்கு மார்க்கண்டேய முனிவர் தவம் செய்வதைக்கண்டு  தானும் இங்கு தவத்தில் அமர்ந்தான்.   ஸ்ரீமந்நாராயணரும் மயனின் தவத்திற்கு மகிழ்ந்து சேவை சாதித்தார். எப்படித் தெரியுமா?  தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் முதலான ஆயுதங்களைத் தரித்துத் திருமாலாக மயனுக்குக் காட்சி கொடுத்தார். ஆனால், இரண்டே திருக்கரங்கள் கொண்டு  அவற்றில் வில்லும் அம்பும் தரித்துக் கோலவில்லி ராமனாக தனக்குக் காட்சி தர வேண்டும் என்று வேண்டினான் மயன். பக்தனது வேண்டு கோளுக்கு இணங்கி, தன் மேற்கரங்களில் இருந்த சங்கு,  சக்கரம் ஆகிய ஆயுதங்களை அருகில் இருந்த கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு, மயன் விரும்பிய கோலத்திலேயே அவனுக்குக் காட்சி தந்தாராம் பெருமாள். சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய்த் திகழ்கிறார் இக்கருடாழ்வார்.  இதில் பெரிதும் மகிழ்ந்த மயன்  அழகிய மதில்கள், சுற்றுப் பிராகாரங்கள், மண்டபங்கள், விமானங்கள் என்று இந்த ஆலயத்தை அழகுற அமைத்ததாகத் தலபுராணம் கூறுகிறது.  மயனுக்குக் கோலவில்லி ராமனாகக் காட்சி தருவதற்காகத் தம் கைகளில் இருந்த சங்கு மற்றும் சக்கரத்தைக் கருடாழ்வாரிடம் கொடுத்தார் அல்லவா? அப்போது கருடாழ்வார் அதை எப்படிப் பெற்றுக் கொண்டார் தெரியுமா? அமர்ந்த நிலையிலும் இல்லாமல், நின்ற நிலையிலும் இல்லாமல் எழுகின்ற நிலையில், பெருமாளிடம் இருந்து இந்த ஆயுதங்களை பெற்றுக் கொண்டாராம்!  எனவே, திருவெள்ளியங்குடியில் மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரே அருள் பாலிக்கும் கருடாழ்வாருக்கு நான்கு திருக்கரங்கள். ''இப்படியொரு கோலத்தில் அருள் பாலிக்கும் கருடாழ்வாரை வேறு எங்கும் தரிசிப்பது அபூர்வம். இந்த கருடாழ்வாரை வழிபடுவோர்க்கு சகல நலன்களும் கிடைக்கும். வாகனங்களில் செல்பவர்கள் இவரை வேண்டி வழிபட்டால், விபத்துகள் எவையும் நிகழாது'' என்பது ஐதீகம்.  இந்தத் தலம், ஸ்ரீமந்நாராயணனின் தசாவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்துடனும் தொடர்பு உடையது. மஹாபலியின் செருக்கை அடக்க வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாள், அவனிடம் மூன்றடி நிலத்தை யாசகமாகக் கேட்டார். மகா பலிக்குக் குருவாக இருந்தவர் சுக்கிராச்சார்யர். அசுர குலத்துக்கே இவர்தான் குரு. 'வந்திருப்பவன் சாதாரணமானவன் அல்ல ஸ்ரீமந் நாராயணனே' என்பதை அறிந்த சுக்கிராச்சார்யர், வாமனன் கேட்டபடி மூன்றடி நிலத்தை மகாபலி தாரை வார்த்துக் கொடுக்கக் கூடாது என்று விரும்பினார். திருமாலின் அவதார நிகழ்வையும், தானம் கொடுத்த பின் மகாபலியின் நிலையையும் சுக்கிராச்சார்யர் நன்றாகவே அறிவார். இருந்தாலும், தாரை வார்த்துக் கொடுப்பது என்கிற தன் முடிவில் இருந்து பின்வாங்க மறுத்தான் மகாபலி சக்ரவர்த்தி.  மகாபலி தானம் கொடுப்பதைத் தடுக்க நினைத்த சுக்கிராச்சார்யார், ஒரு முடிவுக்கு வந்தார். மகாபலியின் கமண்டலத்தில் இருந்து நீர் வரும் வழியை, ஒரு வண்டு உருவில் வந்து அடைத்துக் கொண்டார் சுக்கிராச்சார்யார். எனவே, மகாபலியின் கமண்டலத்தில் இருந்து நீர், வாமனன் கையில் வந்து விழவில்லை. வாமனன், சாமான்யனா? ஒரு தர்ப்பைப் புல்லால் கமண்டலத்தின் துளையில் சரேலென்று குத்தினார். அத்தர்ப்பைப் புல், வண்டின் ஒரு கண்ணை ஏகத்துக்கும் பாதிக்கச் செய்து விட்டது.  பெரியாழ்வார் இந்த செயலை இவ்வாறு பாடுகின்றார் மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில் தக்கதிதறென்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பாற்கிளறிய சக்கரகையனே! அச்சோவச்சோ சங்கமிடத்தானே! அச்சோவச்சோ.   (பெரி.தி 1-8–7)  பொருள்: மிகுந்த புகழினை உடைய மகாபலிச் சக்கரவர்த்தி செய்த யாகத்திலே நீ வாமனனாய் சென்று மூவடி மண் வேணடினாய், மகாபலி நீ கேட்டதை தர முயலும் போது, நீ கொடுக்கின்றது தகுதியானதன்று என்று முறையிட்டு, பூமி தானத்தை (அவன் தத்தம் செய்யும் போது நீர் விழவொட்டாமல் தடுத்த  அவனது குருவான)  சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை  உன் கையில் அணிந்திருந்த தர்ப்ப பவத்திரத்தின் நுனியால்  கலக்கிய  சக்கராயுதமேந்திய   பெருமானே! என்னை வந்து அணைத்துக் கொள்! பாஞ்சஜன்யம் என்னும் சங்கை இடக்கையில் தரித்திருப்பவனே!  என்னை வந்து அணைத்துக் கொள்!    தனது தகாத செயலால் இப்படி ஆகி விட்டதே என்று வருந்திய சுக்கிராச்சார்யர், இழந்த பார்வையை மீண்டும் பெற இந்தத் தலத்துக்கு வந்து வண்டு வடிவில் ஒரு மண்டல காலம் தவம் இருந்தார். இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடினார். அப்போது, தான் சேகரித்து வைத்திருந்த தேன் துளிகளை எல்லாம், இந்தத் தீர்த்தத்தில் கலந்தாராம். அவரது தவத்துக்கு இரங்கிய எம்பெருமான், உளம் கனிந்து அவருக்குக் காட்சி தந்து பார்வையையும் கொடுத்து அருளினார். அன்று சுக்கிரனுக்குக் கொடுக்கப்பட்ட ஒளி, இப்போதும் தூண்டா விளக்காக (நேத்திர தீபம்) கருவறை அருகே, இரவும் பகலும் சுடர் விட்டுப் பிராகாசிக்கிறது. சுக்கிர பகவானுக்குப் பெருமாள் தந்த ஒளி, இன்றும் இந்த தீபத்தில் உயிர்ப்புடன் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே நந்தா விளக்கிற்கு எண்ணெய் கைங்கர்யம் செய்கின்றனர் பக்தர்கள்.     சுக்கிர பகவான் வணங்கியதால், இது சுக்கிரபுரி ஆயிற்று. சுக்கிரனுக்குத் தமிழில் வெள்ளி என்று பெயர். எனவே, இந்தத் திருத்தலம், 'திருவெள்ளியங்குடி'. தஞ்சை மாவட்டத்தில் உள்ள வைணவ நவக்கிரகத் தலங்களில், இது சுக்கிரனுக்கான திருக்கோயில் (இதர தலங்கள்: சூரியன்- சாரங்கபாணி திருக்கோயில், குடந்தை; சந்திரன்- ஸ்ரீநாதன் கோயில், நந்திபுர விண்ணகரம்; அங்காரகன்- திருநறையூர், நாச்சியார்கோவில்; புதன்- திருப்புள்ளபூதங்குடி; குரு- திருஆதனூர்; சனி- திருவிண்ணகர், ஒப்பிலியப்பன்கோயில்; ராகு- கபிஸ்தலம்; கேது- திருக்கூடலூர், ஆடுதுறை பெருமாள்கோயில்). சுக்கிர தோஷம் உள்ளவர்களும், சுக்கிரனின் அருள் வேண்டுபவர்களும் இங்கு வந்து தரிசித்துச் சென்றால் நற்பலன்கள் விளையும். பார்க்கவ முனிவர் இந்தத் தலத்தில் நீண்ட காலம் தவம் இருந்ததால் பார்கவபுரி என்றும், தான் இழந்த சிருஷ்டி பதவியை இந்தத் தலத்தில் தவம் இருந்து மீண்டும் பிரம்மன் பெற்றதால் பிரம்மபுரி என்றும் அழைக்கப்படுகின்றது.  கிழக்கு நோக்கிய பிரமாண்ட திருக்கோயில். மூன்று நிலை இராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றதும், பலிபீடம்; கொடிமரம். கருடாழ்வார் சந்நிதி. சங்கு சக்கரத்துடன் அருள் பாலிக்கும் அற்புதமான திருமேனி. இடக் காலை மடித்து, வலக் காலைக் குத்திட்டு அமர்ந்திருக்கும் வடிவம். இரண்டாம் பிராகாரத்தில் மரகதவல்லித் தாயார் மற்றும் ஆண்டாளின் சந்நிதிகள். மரகதவல்லித் தாயாரின் சந்நிதி விஸ்தாரமானது. நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கும் பச்சைக்கல் வடிவம். அமர்ந்த நிலை. தவிர யோக நரசிம்மர், வரதராஜ பெருமாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், குலசேகர ஆழ்வார், ராமானுஜர், தேசிகர், விஷ்வக்சேனர் சந்நிதிகள் உள்ளன. ஆலயத்துக்கு வெளியே ஸ்ரீஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார்.  மூலவர் க்ஷீராப்திநாதர்  அத்தி மரத்திருமேனியர். புஜங்க சயனத்தில் பெருமாளின் பிரமாண்டத் திருமேனி. சிலா விக்கிரத்தின் மேல் வர்ண கலாபம் பூசப்பட்டுள்ளது, அழகான திருக்கோலம். க்ஷீராப்திநாதரின் தலைமாட்டில் ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷியும், கால்மாட்டில் பூதேவியும் தரிசனம் தருகிறார்கள். இனி கருடன் அமர்ந்த கோலத்தில்  சேவை சாதிக்கும், உற்சவங்களின் போது  கருடி வாகனத்தில் தாயார் சேவை சாதிக்கும் தலத்தைப் பற்றிக்   காணலாமா அன்பர்களே.                                                26. திருநாகை அமர்ந்த கோல கருடன் கருடனுக்கு பகைவனே என்றாலும் நாகங்கள் கூட எம்பெருமானை சரணடைந்து பெரிய திருவடியின் கோபத்தில் இருந்து தப்பியுள்ளன என்று ஆழ்வார்கள் பாடியுள்ளனர்   அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன்றோடி  படுத்த பெரும் பாழி சூழ்ந்த – விடத்தரவை  வல்லாளன் கைகொடுத்த மாமேனி மாயவனுக்கு  அல்லாது மாவரோ ஆள்? (மு.தி 80)  பொருள்: பாதாளத்தில் வாழ்ந்த வாசுகி என்னும் நாகராஜனின் மகன்  கமுகன் என்றொரு பாம்பினைக் கருடாழ்வார் திருவமுது செய்ய வேண்டுமென்று நினைத்த போது, அதையறிந்த கமுகன் எம்பெருமானுடைய திருப்பள்ளிக்கட்டிலாகிய ஆதிசேடனை  கட்டிக்கொண்டு அவரிடம் சரணடைந்தது. பெரிய திருவடி கமுகன் நிலையைக் கண்டு இழிவாகப் பேச எம்பெருமான் திருவாழியை அக்கருட பகவானிடம் கொடுத்து அதன் பலத்தை சோதித்தார். தோல்வியடைந்த பெரிய திருவடி எம்பிரானிடமே சரணடைந்து தன்னைப் பொறுத்தருளுமாறு வேண்டினான். எம்பெருமானும் பெரிய திருவடியின் கையிலேயே அப்பாம்பினைக் கொடுத்து இரட்சித்தார். அச்சிறந்த திருமேனியை உடைய எம்பெருமானுக்குத் தவிர (மற்ற தெய்வங்களுக்கு) அடிமை ஆவார்களோ? என்று வினவுகிறார் பொய்கையாழ்வார்.   இதையே திருமங்கையாழ்வார்  நஞ்சுசேர்வதோர் வெஞ்சினவரவம் வெருவ வந்து நின் சரணெனச்சரணா  நெஞ்சில் கொண்டு நின்னஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்ததறிந்து  வெஞ்சொலாளர்கள் நமன்தமர்கடியர் கொடிய செய்வனவுள அதற்கு அடியேன்     அஞ்சி வந்து நின்னடியிணையடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!.  (பெ.தி 5-8-4)  பொருள்: திருவரங்கத்து அம்மானே! நஞ்சை உமிழ்வதும், கொடிய கோபத்தை உடையவனுமான கமுகன் என்னும் ஒரு பாம்பானது, (தன்னைக் கொல்ல இருக்கின்ற கருடனுக்கு) பயந்து தங்களிடம் வந்து “ தங்களுக்கு அடைக்கலப்பொருளாகிறேன் நான்” என்று சொல்லிச் சரணடைய, தாங்கள் அதற்குப் பாதுகாப்பவனாகி தங்கள் திருவுள்ளத்தில் கொண்டு தங்கள் அடியவனான கருடனிடம் அப்பாம்பை அடைக்கலப்பொருளாக ஒப்புவித்து பாதுகாத்து அருளிய திறத்தை அடியேன் தெரிந்து கொண்டு கொடிய சொற்களைப் பேசும் யமதூதர்கள் செய்யும் கொடுந்தொழில்கள் பலவற்றிற்கு அஞ்சி வந்து நன் திருவடிகளைச் சரணமாக அடைந்தேன் - என்று திருவரங்கத்தாமானிடம் சரணம் அடைகின்றார்.  அந்த கமுகன் என்னும் நாகம் வழிபட்ட பெருமாள்தான் நாகபட்டினம் சௌந்தரராஜப்பெருமாள்.   பிரம்மாண்ட புராணத்தின் உத்தர பாகத்தில் 10 அத்தியாங்களில்  இந்த  சௌந்தாரண்யத்தின் மகிமை கூறப்பட்டுள்ளது.  கிருத யுகத்தில் ஆதிசேஷன் இந்த சௌந்தாரண்யத்தில் தவம் செய்து எப்போதும் பெருமாளுக்குச் சயனமாக இருக்க வரம் பெற்றான். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது..     அதே யுகத்தில் உத்தானபாத மகாராஜாவின் குமாரன் துருவன் தன் தந்தை மாற்றாள் மகனை ஏற்றுத் தன்னை உதாசீனப்படுத்துவதை கண்டு மனம் வெறுத்து நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்து ஸ்ரீமந்நாராயணனைக் குறித்து கடும் தவம் செய்தான். அவன் தவத்தை கலைக்க தேவர்கள் முயன்றும் முடியவில்லை. அவன் தவத்தால் மகிழ்ந்த பெருமாள் கருடன் மேல் அமர்ந்து பேரழகு பொருந்தியவராக சேவை சாதித்தார். உலகை ஆளவேண்டும் என்ற வரம் செய்த துருவன் பெருமாளின் சௌந்தர்யத்தில் மயங்கி தான் கேட்க நினைத்தை மறந்து அதே கோலத்தில் பெருமாள் இங்கே  சேவை சாதிக்க வேண்டும் என்று வேண்டினான். எனவே பெருமாளும் இங்கே நின்ற கோலத்தில் “சௌந்தர்யராஜனாக” இன்றும் சேவை சாதிக்கின்றார்.  திரேதாயுகத்தில் பூமாதேவியும், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயரும் தவமிருந்த திருத்தலம். கலியுகத்தில் சாலிசுக சோழன் என்னும் மன்னன் இப்பெருமாளின் அருளால் நாககன்னிகையைக் கண்டு காதல் கொண்டான். அவள் ஒரு பிலத்துவாரத்தில் மறைந்ததைக் கண்டு பெருமாளிடம் தங்கள் இருவரையும் இனைத்து வைக்குமாறு  வேண்ட பெருமாளும் நாகராஜனிடம் தனது கன்னிகையை சாலிசுக மன்னனுக்கு மணம் முடித்து கொடுக்குமாறு பணிக்க இருவர் திருமணமும் இனிதாக நிறைவேறியது. சாலிசுக மன்னன்     தற்போதைய ஆலயத்தை அமைத்தான். பிரம்மோற்சவமும் நடத்தினான்    இந்தச் சௌந்திரராஜப் பெருமாளின் சௌந்தர்யத்தில் மயங்கிய திருமங்கைமன்னன்,  9 பாசுரங்களைப் பாடிவிட்டு பத்தாவது பாடலில்தான் இத்தலத்தின் பெயரைக் குறிப்பிடுகின்றார். பொன்னிறக்  கருடன் மேல் கரிய புயல் போல் பெருமாள் ஆரோகணித்து வரும் அழகை, தன்னைப் பரகால நாயகியாக பாவித்துக்கொண்டு  “அச்சோ, ஒருவர் அழகியவா! என்று  இவ்வாறு மங்களாசாசனம் செய்துள்ளார்.     மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ் சோலை மணாளர் வந்து, என்  நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று, நீங்கார் நீர் மலையார் கொல்? நினைக்கமாட்டேன்  மஞ்சு உயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்று உளர் வந்து காணீர்!  அஞ்சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார் அச்சோ, ஒருவர் அழகியவா! (பெ.தி 9-2-8)  பொருள்: மேக மண்டலத்தளவும் உயர்ந்ததாய் சந்திரன் படும்படியாக உயர்ந்திருப்பதான திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கின்ற மணவாளர் அவ்விடத்தை விட்டு வந்து என் நெஞ்சினுள்ளும் கண்களினுள்ளும் நிலை நின்று நீங்க மாட்டாமல் இருக்கின்றார். திருநீர்மலை எம்பெருமானோ இவர்? இன்னாரென்று  தெரிந்து உணரமாட்டேன். “அழகிய சிறகுகளை உடைய பெரிய திருவடியின் மீது ஏறி வந்த இவர் மேக மண்டலத்தளவும் ஓங்கிய ஒரு பொன் மலை மேல் எழுந்த காளமேகம் போன்று இருக்கிறார், வந்து வணங்குங்கள். அச்சோ! ஒருவர் அழகை என்னென்பேன்”. என்று கருடன் மேல் சௌந்தரராஜப்பெருமாள்   ஆரோகணித்து வரும் அழகை கண்டு அதிசயிக்கின்றாள் பரகால நாயகி.  இவ்வளவு சிறப்புகள் பெற்ற இத்தலத்தின்   மூலவர்: “நாகை அழகியார்” என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த  நீலமேகப்பெருமாள், நின்ற திருக்கோலம்  கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். மேலும் அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் சேவை சாதிக்கின்றார்.  உற்சவர்: சௌந்தர்யராஜப்பெருமாள்  தாயார்: சௌந்தர்யவல்லித்தாயார்.  உற்சவர்: கஜலக்ஷ்மித் தாயார்  தீர்த்தம்: சார புஷ்கரிணி  விமானம்: சௌந்தர்ய விமானம்  தலமரம்: மா மரம்  பிரத்யட்சம்: ஆதி சேஷன் (நாக ராஜன்), துருவன், திருமங்கையாழ்வார், சாலிசுக மன்னன்   நின்ற, இருந்த, கிடந்த என்று மூன்று திருக்கோலத்தில் பெருமாள் இத்தலத்தில் சேவை சாதிக்கின்றார். மூலவர் நீலமேகப் பெருமாள் நின்ற கோலத்திலும், வீற்றிருந்த பெருமாள் என்று அமர்ந்த கோலத்திலும், அரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் சேவை சாதிக்கின்றனர். நாகராஜனுக்கு இந்த மூன்று கோலங்களிலும் சேவை சாதித்ததாக ஐதீகம். கண்டன், சுகண்டன் என்ற இரண்டு அந்தண சகோதரர்கள் எண்ணற்ற கொடுஞ்செயல்கள் செய்து இறுதியில் ஒரு நாள் இங்குள்ள ஆதி சேஷன் உருவாக்கிய  சார புஷ்கரிணியில்   தம் உடலை நனைத்து வைகுந்தம் பெற்றனர்  இவ்விருவரின் சிற்பங்களும் அரங்கநாதரின் சன்னதியில்   கைகூப்பிய நிலையில் அமைந்துள்ளன.  70 அடி ஏழு நிலை இராஜகோபுரத்துடனும், மூன்று பிரகாரங்களுடனும்,  உயர்ந்த மதில் சுவர்களுடனும்    பிரம்மாண்டமாக அமைந்துள்ளது ஆலயம். பெருமாள், தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவம் நடைபெறுவதால் மூன்று கொடி மரங்கள் அமைந்துள்ளன இத்தலத்தில். இராஜகோபுரத்தைக் கடந்தவுடன் நான்கு கால் மண்டபம், அடுத்து கொடிமரம், கொடி மரத்தை அடுத்து கருட மண்டபம் அதன் மையத்தில்  கருடன் சன்னிதி. சிறகுகளை விரித்த நிலையில் யோக கோலத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் அமர்ந்த கோலத்தில்  எழிலாக  சேவை சாதிக்கின்றார் கருடாழ்வார். இவ்வாலயத்தில் உள்ள அனைத்து தெய்வ மூர்த்தங்களும் சௌந்தர்யமாக அமைந்துள்ளது போல கருடாழ்வாரும் சௌந்தர்யமாக உள்ளார். அடியேன் இவரை தரிசித்த போது தங்கக் கவசத்தில் இவரின் அழகு பல மடங்கு அதிகமாகத் தெரிந்தது.  ஆழ்வார்கள் சன்னதி மற்றும் வசந்த மண்டபம் வலப்பக்கம் உள்ளன அதன் அருகில் சௌந்தர்ய புஷ்கரணி. ஆதி சேஷன் உருவாக்கிய  சார புஷ்கரணி ஆலயத்திற்கு வடக்கில் உள்ளது. சௌந்தர்ய புஷ்கரணியின் தெற்கில் வீற்றிருந்த கோலத்தில் அருள் பாலிக்கும் வைகுந்த நாதர் சன்னிதி அமைந்துள்ளது.    மூலஸ்தானத்திற்குள் நுழையும் போது  துவாரபாலகர்களின் கண்கள் நவரத்தின கற்கள் என்பதால் மின்னுகின்றன. இவர்களுக்கும் தங்க கவசம் சார்த்தியிருந்தனர். ஜக்குலு நாயக்கர் மண்டபத்தில் நின்று நாம் பெருமாளைத்  தரிசனம் செய்கின்றோம். இவர் டச்சுக்காரர்களின் அதிகாரியாக இருந்தார் இவ்வாலயத்தில் திருப்பணிகள் செய்துள்ளார். கலங்கரை விளக்கம் கட்டுவதற்கான பணத்தைக் கொண்டு இராஜகோபுரத்தை இவர் கட்டினார். இதன் உச்சியில் ஒரு காலத்தில் விளக்கு ஏற்றப்பட்டது அது இப்பகுதியில் வந்த மரக்கலங்களுக்கு வழிகாட்டியாக இருந்தள்ளது. இவர் மற்றும் இவர் துணைவியாரும் விழுந்து பெருமாளை வணங்கும் சிற்பத்தை இம்மண்டபத்தில் அமைத்துள்ளனர்.   கருவறையில் நின்ற கோலத்தில் நெடியோனாக  வடிவாய் மார்பில் பெரிய பிராட்டியாருடன்,   சங்கு, சக்கரம், கதை தாங்கி தான முத்திரையுடன் எழிலாக, மந்தகாச புன்னகையுடன்   திருமங்கையாழ்வாரை மயக்கிய நாகை அழகியாராக நீலமேகப்பெருமாள் சேவை சாதிக்கின்றார். தங்கக் கவசத்தில் பெருமாளைச் சேவிக்க ஆயிரம் கண் வேண்டும். இவர் இடையை இத்திருத்தலத்திற்கே உரிதான சிறப்பான தசாவதார ஒட்டியாணம் அலங்கரிக்கின்றது. உற்சவர் சௌந்தர்யராஜ பெருமாள் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கும் அழகே அழகு. “அன்னமும் கேழலும் மீனும் ஆய ஆதியை நாகை அழகியாரை” அதாவது முன்னம் அன்னமாகவும். வராகமாகவும், மீனாகவும் அவதரித்து உலகிற்கு முழுமுதற் கடவுளாக திருநாகையில் எழுந்தருளியுள்ள அழகிற் சிறந்த பெருமாள் என்று திருமங்கையாழ்வார் “அச்சோ ஒருவர் அழகியவா!” என்று ஆச்சரியப்பட்டுப் பாடிய பெருமாளை விட்டு அகல வெகு நேரம் பிடித்தது. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், திருக்குருகைப் பெருமான் கவிராயர், முத்துசுவாமி தீக்ஷிதர் ஆகியோரும் பெருமாளின் அழகில் சொக்கிப் பாடல்கள் பாடியுள்ளனர்.  இம்மண்டபத்தின் வடக்குப்பகுதியில் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கும் அரங்கநாதர் சன்னிதி அமைந்துள்ளது.  இந்த சன்னிதியில்  எழிலான சிஷ்ட பரிபாலன துஷ்ட நிக்ரஹ நரசிம்மர் மூர்த்தம் உள்ளது.  எட்டுக்கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள் பாலிக்கின்றார். ஒரு கரம் பிரகலாதனை ஆசீர்வதிப்பது போலவும், ஒரு கரம் அபய முத்திரையாகவும் மற்ற கரங்கள்  கூடா இரணியணை வதம் செய்யும் கோலத்திலும், மேற்கரங்களில்  சங்கமும், சக்கரமும் தாங்கி  அற்புதமாக சேவை சாதிக்கின்றார்.  ஒரே சமயத்தில் பக்தனான பிரகலாதாழ்வானை காத்து அதே சமயம் துஷ்டனான இரணயனின் மார்பை பிளக்கும் அருமையான கோலம்.  கோஷ்டத்தில் அமைந்துள்ள அஷ்டபுஜ துர்க்கையும்  மிகவும் சக்தி வாய்ந்தவள். இம்மண்டபத்தின் உட்புற சுவரில் இந்த திவ்யதேசத்தின் புராணம் எழில் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. ஆலயம் மிகவும் சுத்தமாகப் புது வர்ணக் கலாபத்துடன் மின்னியது. இரண்டாம்  பிரகாரத்தில் பிரம்மோற்சவ  காட்சிகளை அற்புத ஓவியமாக்கி அலங்கரித்துள்ளனர்.  மூலவரின் விமானம் ஐந்து தங்கக் கலசங்களுடன் தனிச் சிறப்பாக அமைந்துள்ளது. இவ்விமானம் சௌந்தர்ய விமானம் என்றும் பத்ரகோடி விமானம் என்றும் அழைக்கப்படுகின்றது.    தாயாரின் சன்னதிக்கு எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபம் எழிலாக பளபளக்கும் கருப்பு கிரேனைட் கற்களால் அருமையாக அமைந்துள்ளது. தாயார் மற்றும் ஆண்டாள்  விமானத்தில் கருடிகள்  காவல் காக்கின்றன. ஆண்டாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.    []   தாயார் கருடி வாகனத்திலும் பெருமாள் கருட வாகனத்திலும் சேவை  ஸ்ரீசௌந்தரராஜப்பெருமாள் ஆலயத்தில் மட்டுமே, ஸ்ரீசௌந்தர்யவல்லி தாயாருக்கு “கருடி வாகனம்” என்பது வேறெங்கிலும் இல்லாத தனிச்சிறப்பு. இத்திருக்கோயிலில் கருடபகவானை  ஸ்ரீசௌந்தரராஜ  பெருமாளே வீற்றிருக்கச் செய்ததால், இந்த சந்நிதியில் மட்டும் கருடபகவானுடன்  கருடியும் வாகனமாக சேர்ந்து எழுந்தருளி உள்ளார்.  ஆகையால், பெருமாள் கருடவாகனத்திலும், தாயார் கருடிவாகனத்திலும் சேர்ந்து எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பர்.   அதன் படி,  ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயாரின் ஆனி பிரம்மோற்சவத்தின் நான்காம்   திருநாள் காலை 10 மணிக்கு மூலவர் ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயாருக்குச் சிறப்பு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. மாலை 6 மணிக்கு உற்சவர் ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயார், வெள்ளிக் கருடி வாகனத்திலும், ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் வெள்ளிக் கருட வாகனத்திலும் எழுந்தருளி , கோயில் நந்தவனத்தில் வலம் வந்து சேவை சாதிக்கின்றனர். கருட வாகனத்தின் சிறகுகள் மேல் நோக்கிய நிலையில் உள்ளன. கருடி வாகனத்தின் சிறகுகள் கீழ் நோக்கிய நிலையில் உள்ளன.  []     சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் கருடி வாகன சேவை  கோதை நாச்சியாரும் திருவாடிப்பூர அவதார பிரம்மோற்சவத்தின் போது நான்காம் திருநாள் இரவு கருடி வாகனத்தில் சேவை சாதிக்கின்றார்.  வாருங்கள் இனி திருமெய்யத்தின் மூன்று கருடன்களை சேவிக்கலாம்.                  27. திருமெய்யம் மூன்று கருடன்கள்   சத்திய க்ஷேத்திரம் என்றழைக்கப்படும் குடவரைக் கோவிலான திருமெய்யம் திவ்யதேசத்தில் சத்திய மூர்த்தி மற்றும் திருமெய்யர் என்று இரண்டு மூலவர்கள்  சேவை சாதிக்கின்றனர்.  இருவருடனும்  கருடன் சேவை சாதிக்கின்றார். மேலும் சத்திய மூர்த்திப் பெருமாளுக்கு எதிராகவும் அற்புதமான கிளி கிரீடத்துடன் பிரம்மாண்ட மேனியராகவும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் வாருங்கள் அந்த அழகைக் காணலாம்.   மெய்யராக அனந்தன் மேல் பள்ளி கொண்ட கோலத்தில் எழுந்தருளியுள்ள சன்னதியில் மது கைடபர்களை ஆதி சேஷன் தனது மூச்சுக் காற்றால் துரத்தும் அற்புத கோலத்தில் புஜங்க சயன கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். இத்திருஉருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. பெருமாளின் பங்கயற் கண்கள் அரைக்கண்ணாக மூடியிருக்க இதழ்களில் மெல்லிய புன்னகையுடன் பாம்பணை மேல் பள்ளி கொண்ட நிலையில் வலக்கரம் ஆதிசேஷனை அணைத்துக் கொண்டு காட்சி தரும் அழகே அழகு.   யுக முடிவில்  பெருமாள் பாற்கடலில்  பாம்பணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது அவர் காதிலிருந்து தோன்றிய மது கைடப அசுரர்கள்,  ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களை அபகரிக்க வருகின்றனர். அது கண்டு அஞ்சி பூதேவி பெருமாளின் திருவடிக்கருகிலும் ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் ஒளிந்து கொள்கின்றனர். பெருமாளின் நித்திரையை கலைக்க மனமில்லாது ஆதிஷேசன் தன் வாயிலிருந்து விஷ ஜவாலையை கக்கி  அரக்கர்களை விரட்டி விடுகிறான்.  பெருமாளின் அனுமதியின்றி அவ்வாறு செய்ததற்காக  ஆதிசேஷன்  பயந்து இருக்கையில் பெருமாள் என் அனுமதியின்றி செய்தாலும் நல்லதே செய்திருக்கிறாய் பாராட்டுக்குரிய செயல் என்று கூறியதாக ஐதீகம். இதை மெய்ப்பிக்கும் வகையில் இத்தலத்தில் ஆதிசேஷன் தன் தலையை அஞ்சி சுருங்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது.  ஆதி சேஷனின் ஜுவாலைக்கு அஞ்சி அரக்கர்கள் இருவரும் நடுங்கி ஓடுவதை தத்ரூபமாகக் காணலாம்,   பெருமாளுடன்  கையை கூப்பி நின்ற கோலத்தில் பாற்கடலில்   அரி துயில் கொள்ளும் பெருமாளின் ஆணைக்கு காத்து நிற்கும் கருடனாக இந்த சன்னதியில் சேவை சாதிக்கின்றான். சுற்றிலும் தேவர்கள்,  ரிஷிகள், கின்னரர், கிம்புருடர் பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மா, எமதர்மன், சித்திரகுப்தன்,  சூரிய சந்திரர்கள், இராகு ஆகியோர் அழகாக செதுக்கப்பட்டுள்ளனர். மேலும் பழங்கால வாத்தியங்கள் பல காணக்கிடைக்கின்றன.  மேலும் சத்தியமூர்த்தி எனும் திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ் ஒரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன் மற்றொரு கரத்தில் சங்குடன் எழுந்தருளி மற்றொரு மூலவர்  பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் கைகளைக்கூப்பி நின்ற கோலத்தில் கருவறையில் பெருமாளுடன் கருடனும் புரூரவ சக்கரவர்த்தியும்   எழுந்தருளியுள்ளனர்.  கருடன் தன் தாயின் அடிமைத் தளையைத் தீர்க்க அமிர்தம் கொண்டு வர சக்தி வேண்டி   பெருமாளிடம் பிரார்த்திக்க  அதற்கான சக்தியை பெருமாள்  பிரத்யட்சமாகி  கருடனுக்கு அருளியதாக   ஐதீகம் எனவே மூலவர் சத்தியமூர்த்திப் பெருமாளுடன் கருடன் சேவை சாதிக்கின்றான்.   இவருக்கு எதிராகவும் தனி சன்னதியில் நெடியோனாக அற்புதமாக  கிரீடத்தில் கிளிகளுடன் கை கூப்பி நின்ற கோலத்தில் கருடன் சேவை சாதிக்கின்றான். இவ்வாறு மூன்று கருடன்களை இந்த திவ்ய தேசத்தில் நாம் சேவிக்கலாம். திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த தலம். ”மெய்யமென்னும் தடவரை மேல் கிடந்தானையென்றும்”, ”திருமெய்யத்து இன்னமுத வெள்ளத்தை” என்றும், ”திருமெய்ய மலையாளா” என்றும், ”மெய்யம் அமர்ந்த பெருமாளை” என்றும், ”மெய்ய மணாளர்” என்றும் பாடி மகிழ்கிறார் மங்கை மன்னன்!   மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் கொய்யார் குவளையும், காயாவும் போன்றி இருண்ட மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும் கையானை, கை தொழாக் கையல்ல கண்டோமே! (பெ. தி 11-7-5)  பொருள்: கருங்கடலையும், நீலமணிமயமான மலையையும், காளமேகத்தையும், பறிக்கக் தூண்டுகின்ற நீலோற்பலத்தையும், காயாம்பூவையும் போன்ற கறுத்த திருமேனியை உடையவனும்,   திருமெய்ய மலையில் கோயில் கொண்டவனும், சங்கேந்தும் திருக்கையை உடையவனுமான பெருமானை வணங்காத கைகள் கைகளே அல்ல. இதனை நாம் நன்கறிவோம் என்கிறார்  நம் கலியன்!  அடுத்து கண்ணீர் பெருக்கும் கருடாழ்வாரை சேவிக்கலாமா அன்பர்களே?                                                      28. மன்னார் போளூர் கண்ணீர் பெருக்கும் கருடாழ்வார் []   ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டை-காளஹஸ்தி பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ள மன்னார் போளூர் கிருஷ்ண சுவாமி கோயிலில் இரு சிறப்புகள்.  ஸ்ரீகிருஷ்ணர் ருக்மிணியில்லாமல்  ஜாம்பவதியுடன் சேவை சாதிக்கின்றார். கர்வம் தீர்ந்த கருடாழ்வார் பிரம்மாண்டமாக கிருஷ்ணரை விட உயரமானவராக  சேவை சாதிக்கின்றார். ஆகவே, இவர் தரை மட்டத்திற்குக் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.  கிருஷ்ணனின் கருணையை வியந்து,  கண்களிலிருந்து  நீர் பெருகி, கன்னங்களை நனைக்கும் இத்தோற்றம்  அற்புதமானது இத்தலத்தில் கருடாழ்வார் இவ்வாறு கண்ணீர் பெருக்கும் கருடாழ்வாராக பிரம்மாண்ட கோலத்தில் சேவை சாதிப்பதற்கான காரணம் என்னவென்று காணலாம்.   சத்ராஜித் என்னும் மன்னன் சூரியனை குறித்து கடுமையான தவத்தை மேற்கொண்டான். அவன் தவத்திற்கு மகிழ்ந்த சூரிய பகவான் அவனுக்கு சியமந்தக மணி என்ற உயர்ந்த இரத்தினத்தை அளித்தான். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஒருமுறை இந்த சத்ராஜித்  மன்னரை பார்க்கச் சென்றார். அவன் அந்த இரத்தினத்தை அணிந்து கொண்டு இருக்கும்போது அவனது உடலே சூரியனைப்போல ஒளிவீசியது. இதைக் கண்ட கிருஷ்ணர் அந்த இரத்தினத்தை வாங்கி பார்க்க வேண்டும் என்று கேட்க சத்ராஜித் மன்னன் மறுத்து விடுகிறான். பின்னர் கிருஷ்ணர்  துவாரகைக்கு  திரும்பி விடுகிறார்.  பிறகு ஒரு சமயம் சத்ராஜித்தின் சகோதரன் பிரசேனன் என்பவன்  இரத்தினத்தை அணிந்து கொண்டு காட்டிற்கு  வேட்டையாட செல்லும் போது சிங்கம் ஒன்றினால் கொல்லப்படுகிறான். சிங்கம் அந்த இரத்தினத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது. சத்ராஜித் மன்னனும் மற்ற பொதுமக்களும் கிருஷ்ணர் மேல் சந்தேகப்பட்டு பேசுகிறார்கள். இதனால் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவமானப்பட நேர்ந்தது. ஒரு சமயம் கரடி இனத்தலைவர் ஜாம்பவான் அச்சிங்கத்தைக் கொல்ல சியமந்தக மணி  அவர் கைக்கு சென்றது அவர் அதை எடுத்துச்சென்று தன் புதல்வி ஜாம்பபதிக்கு பரிசாகக் கொடுத்தார். தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க ஸ்ரீகிருஷ்ணர் தாமே அந்த இரத்தினத்தை தேடி செல்ல முடிவு செய்து காட்டில் தேடுகிறார். காட்டில் பிரேசனது சடலத்தையும் மற்ற அடிச் சுவடுகளையும் கண்டு அதைப் பின்பற்றி  ஜாம்பவானின் குகையை அடைந்தார்.  ஜாம்பவான் கிருஷ்ணர்தான் இராமனாகவும் அவதரித்தவர் என்று தெரியாமல் மல்யுத்தம் புரிகிறார்.  ஒரு மாதம் யுத்தம் புரிந்த பின்னர்  வந்தவர் இராமர்  என்று தெளிந்து மன்னிப்பு கோருகிறார். ஜாம்பவானுடன் ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. அவருடைய பெண் ஜாம்பவதியைக் கல்யாணம் செய்து கொண்டால் சியமந்தக மணியைத் திருப்பித் தருவதாகச் சொன்னார். கண்ணனுக்கு அடித்தது யோகம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரு பெண் மற்றும் ஒரு வைரம் அந்த சியமந்தக மணியை திரும்ப ஜாம்பவானிடமிருந்து பெற்றார். துவாரகைக்குத் திரும்பி வந்தார்.  சத்ராஜித் மன்னனிடம் சியமந்தக மணியை ஒப்படைத்து தனக்கு ஏற்பட்ட  அவமானத்தை தீர்த்துக்கொள்கிறார். சத்ராஜித் மன்னன் தவறாக சந்தேகப்பட்டதற்கு வருந்தி தன் மகள் சத்யபாமாவை ஸ்ரீகிருஷ்ணருக்கே மணமுடித்து கொடுக்கிறான். ஜாம்பவான் ஸ்ரீகிருஷ்ணருடன் சண்டையிட்ட இடம் மன்னார் போளூர் என்பது ஐதீகம். ஜாம்பவான் சமயந்தக மணியை பகவானுக்கு அளித்ததால் மணி மண்டப க்ஷேத்திரம் என்றழைக்கப்பட்டது. ஹரியுடன் (ஸ்ரீகிருஷ்ணர்) ஜாம்பவானுக்கும் இடையே மல்யுத்தம்  நடந்த இடமானதால் மல்ல ஹரி போரூர்  (போர்+ஊர்) என்பது மருவி இன்று மன்னார் போளூர் என்று இன்றழைக்கப்படுகின்றது. இத்தலத்தில்  ஸ்ரீகிருஷ்ணர் சத்யபாமா மற்றும் ஜாம்பவதியுடன் சேவை சாதிக்கின்றார். ருக்மணித்தாயார் சௌந்தரவல்லித் தாயாராக  தனி சன்னதியில் சேவை சாதிக்கின்றாள். ஜாம்பவானுக்கு ஒரு தனி சன்னதி உள்ளது. சீதாராமருக்கும் தனி சன்னதி உள்ளது.  வாருங்கள் இனி கருடனின் கர்வத்தை கிருஷ்ணர் அடக்கிய வரலாற்றைக் காணலாம். அனைத்து அண்டங்களையும் தன் வயிற்றடக்கிய எம்பெருமானையே தாங்கிச் செல்வதால் தான் மிகுந்த பலசாலி என்னும் கர்வம் கருடனுக்கு இருந்தது. கருடனின் கர்வத்தை அடக்க கிருஷ்ணர் இமயமலைக்கு சென்று அங்கு தவம் செய்யும் திருவடியான அனுமனை மணி மண்டப க்ஷேத்திரத்திற்கு அழைத்து வருமாறு அனுப்பினார். அனுமன் இராம பக்தர் என்பதால் மறுத்து விடுகிறார். இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. அதில் அனுமன் கருடனை தோற்கடிக்க, வெட்கத்துடன் கருடன் திரும்பினார். பின்னர் கிருஷ்ணர் சத்யபாமாவை அனுப்புகின்றார். கிருஷ்ணருடன் எப்போதும் இருப்பதால் தான் மிகுந்த அழகி என்ற கர்வம் சத்யபாமாவிற்கும் இருந்தது. சீதையின் வேடத்தில் இமயமலை சென்று அனுமனை அழைத்தும் அனுமன் மறுத்துவிட சத்யபாமாவும்  திரும்பி வந்து விடுகின்றார். எனவே ருக்மணியை அனுப்ப அவரும் சீதையை போல சென்று அனுமனை மணி மண்டப க்ஷேத்திரத்திற்கு அழைத்து வருகின்றார். எனவே இத்தலத்தில் ருக்மணித்தாயார் சௌந்தர வல்லியாக அருள் பாலிக்கின்றார். கர்வம் தீர்ந்த கருடன் 9 அடி உயரத்தில் கண்ணீர் பெருக்கும் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இவ்வளவு உயர என்பதால் இவர் பூமிக்குக் கீழிருந்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கருடன் முகமும் கண்ணீர் பெருக்குவதைப் போல அமைந்துள்ளது. இதுவரை வித்தியாசமான கோலங்களில் அருள் பாலிக்கும் சில கருடாழ்வார்கள் சிலரை  சேவித்தோம், இனி சில ஆலயங்களின் மூலைக் கருடனைச் சேவிக்கலாமா அன்பர்களே.                      29. மூல கருடன் []   அனைத்து வைணவ ஆலயங்களிலும் வெளிப் பிரகார  மதில் சுவர்களின் மூலையில் சிறகுகளை விரித்த நிலையில் அமர்ந்த கோலக் கருடனின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்.  திருக்கோவிலைக் கருட பகவான் காவல் காப்பதாக ஐதீகம். இவ்வாறு பெருமாள் கோவிலின்  வெளி மதில் சுவரில் அமைக்கப்பட்டுள்ள கருடன்களில், பாண்டிநாட்டுத் திருப்பதிகளான   ஆழ்வார் திருநகரி, திருப்புல்லாணி, திருக்கோஷ்டியூர், அரியக்குடி ஆகிய தலங்களில் ஈசான மூலையில் அமைந்துள்ள கருடன் விசேஷமாக ஆராதிக்கப்படுகின்றார்.  திருமதில் சுவரில் ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால் இவர்  “மூலைக் கருடன்,   மூல கருடன், மதில் கருடன்” என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார்.  ஆழ்வார் திருநகரி திவ்ய தேசத்தில்  திருமதிலின் ஈசான மூலையில் அருள் பாலிக்கும் கருட பகவான் மிகவும் விசேஷமானவர். இவரை “அருள் பக்ஷிராஜர்” என்று அன்புடன் பக்தர்கள் அழைக்கின்றனர். அந்நியப் படையெடுப்பின் போது, இத்திருக்கோவிலின் உற்சவ மூர்த்திகளைக் பாதுகாக்கக்  கேரளாவிற்கு எடுத்து சென்றனர். அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட ஆழ்வார் திருநகரியின் நம்மாழ்வார் திருவுருவைக் கோழிக்கோடு பகுதியில் மறைத்து  வைத்திருந்தனர்.  நிலைமை சீரான போது  நம்மாழ்வாரை எழுந்தருளப் பண்ண சென்றவர்களுக்கு எந்த இடத்தில்  அவர் உள்ளார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போயிற்று.  அவர்கள் நீலகண்ட கசம் என்ற குளம் அமைந்துள்ள பகுதியில் தேடிய போது வானில் கருடன் வட்டமிட்டார், அதே பகுதியில் ஆழ்வாரும் கிட்டினார். இவ்வாறு ஆழ்வாரை தேடச்சென்ற குழுவில் தோழப்பர் என்பவரும்  ஒரு குறவரும் இருந்தனர். நம்மாழ்வாரைத் திரும்ப எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வரும் போது தோழப்பர் கால் தடுக்கி ஒரு குளத்தில்  விழுந்து வைகுந்தம் ஏகினார். குறவன் பல சிரமங்களைக் கடந்து ஆழ்வாரை ஆழ்வார் திருநகரி கொண்டு வந்து சேர்த்தார்.  இதன் காரணமாகத்தான்  இன்றும் திருமஞ்சனத்திற்கு பிறகு நம்மாழ்வாருக்கு குறவன் கொண்டை அலங்காரம் செய்யப்படுகின்றது. இவ்வாறு வேத வடிவான கருடன் வேதம் தமிழ் செய்த மாறனைக் கண்டு பிடிப்பதில் உதவினார்.  ஆழ்வார் திருநகரியில் மதில் மேல் சிம்மம்  புடைசூழ அமைந்துள்ள கருட பகவானுக்குச்  சிறப்பு ஆராதனைகள் தினமும் உண்டு. பலரின் குலதெய்வமாக இவர் விளங்குகின்றார். இவருக்குப் பிரதி வருடமும் 10 நாட்கள் சிறப்பு விழா கொண்டாடப்படுகின்றது. ஆடித்திருவாதிரை அன்று திருவிழா ஆரம்பமாகி ஆடி சுவாதி (கருட ஜெயந்தி) வரை நடைபெறுகின்றது. பத்து நாட்களிலும் இவருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகின்றது, இவருக்கு மிகவும் பிடித்தமான அமிர்தகலசம் (பெரிய மோதகம்) நைவேத்தியம் செய்யப்படுகின்றது. நம்மாழ்வாரின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றது. அரையர் சேவையுடன் சாற்றுமறையும் உண்டு. மதில் சுவரில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதைத் “தேங்காய் விடல் சமர்ப்பணை” என்றழைக்கின்றனர். ஆடி சுவாதியன்று மட்டும் ஆயிரக்கணக்கில் தேங்காய் விடல் கொடுப்பர். மேலும் பால் குடம் எடுத்தல், மற்றும் விஷப் பூச்சிகளின் உருவங்களைக் காணிக்கையாகச் செலுத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களையும் அன்று செலுத்துகின்றனர். அன்று கருடாழ்வாருக்குச் சாய பரிவட்டம் சார்த்துகின்றனர். பாம்பு, தேள், பூரான் போன்ற பூச்சிகள் வரையப்பட்ட  பெரிய வஸ்திரமே சாய பரிவட்டம் ஆகும். நெடிதுயர்ந்த மதிலின் மேல் அமர்ந்திருக்கும் வைநதேயரின் திருவடிகள் தரையில் கீழே உள்ளன. தரையில் ஒரு மேடையில் ஒரு சன்னிதி அமைத்துள்ளனர் சன்னிதியின் விமானத்தில் அருமையான சுதை கருடசேவையினை நாம் தரிசிக்கலாம்.  இத்திருவடிக்கு அருகில் கலை வேலைப்பாடுகள்  நிறைந்த கல்லாலான இரு அழகிய தீப ஸ்தம்பங்கள் பித்தளைக் கவசத்துடன் அமைத்துள்ளனர். இதில் ஒன்றில் நெய்யும் மற்றொன்றில் எண்ணெயும் சேர்த்துத் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.  மதில் மேல் ஏறிச்சென்று சேவிக்க படிக்கட்டுகள் உள்ளன. விஷப்பூச்சிகளால் ஏற்படும் தீமைகளைக் கருட வழிபாடு நீக்கும், மேலும் தொலைந்து போன பொருட்களும் திரும்பக் கிட்டும்.    ஸ்ரீராமன் தர்ப்பசயனம் செய்த திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் ஆலயத்தில்  கம்பீரமாக ஈசான்ய மூலையில் இருக்கும் கருடன் அபார சக்தி படைத்தவர். இவரும் சிம்மங்கள் காவல் காக்க எழிலாக அமர்ந்த கோலத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார்.  இவருக்கு நேர் கீழே ஸ்ரீகருட மண்டபம் உள்ளது. இங்குள்ளவர்களுக்கு, என்ன கோரிக்கை என்றாலும் நடத்திக் கொடுப்பவர் இவர். இவரைப் பிரார்த்தித்து ஒரு சிதறு காய் போட்டால் எப்பேர்ப்பட்ட சிரமமான காரியம் என்றாலும் எளிதாக நடந்து விடுகின்றது. இவருக்கு ஆடி ஸ்வாதி அன்று மட்டும் மிக விசேஷமாகத் திருமஞ்சனம் நடைபெற்று அமிர்தகலசம் படைக்கப்படுகின்றது. 400 ஆண்டுகள் பழமையான தென்திருப்பதி என்று வழங்கப்படும் அரியக்குடியில் சேவுகஞ்செட்டியாருக்காகப் பெருமாள் ஸ்வேத வராஹ உருவில் வந்து கோவில் கொண்டார். பெருமாள் திருவேங்கமுடையான் தாயார் அலமேலு மங்கைத் தாயார். திருவரங்கத்தில் இராமாநுஜர் ஆராதித்த பெருமாள் விக்கிரம், திருப்பதியிலிருந்து கொண்டு வந்த ஸ்ரீசடாரி, திருமயம் ஸ்ரீசத்தியமூர்த்தி ஆலயத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அக்னி ஆகிய மூன்றும் இக்கோயிலில் நிறுவப்பட்டுள்ளன. எனவே திருவரங்கம், திருப்பதி, திருமயம் ஆகிய திவ்ய தேசங்களைத் தரிசித்த பலன் உண்டு.  இக்கோவிலின் திருமதிலின் ஈசான மூலையில் உள்ள கருட பகவானும் இதே போல சிறப்பாக மூல கருடன் போற்றி வணங்கப்படுகின்றார். ஈசான்ய மூலையில் கோபுரத்துடன் கூடிய  தனி சந்நிதியில், இரு புறமும்  சிம்மங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றார் கருடாழ்வார். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு 108 குடங்களில் திருமஞ்சனமும் பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆடி மாத மஹா சுவாதி அதி விசேஷம். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் இவருக்குப் பக்தர்கள் சிதறு தேங்காய்களை தரையில் உடைப்பதில்லை. வானில் வீசி உடைப்பது போலச் சுவர் மீது உயர  வீசி உடைக்கின்றார் . இவரைத் தரிசித்து வழிபட்டால், ஏவல் பில்லி சூனியம், மன வியாதி அகலும். சத்ருபயம் நீங்கி வளம் பெருகும். நினைத்த காரியம் நிறைவேறும். கருட ஜெயந்தியன்று  அலங்காரத்  திருமஞ்சனத்தி|ற்கு பிறகு அமிர்த கலசம் படைக்கின்றனர். இது வரை சில தலங்களில் சிறப்பாகப் பெருமாளுடனும், தனியாகவும் கருடன் சேவை சாதிக்கும் அழகைக் கண்டோம் இனி சில சிறப்புமிக்க கருட சேவைகளைச் சேவித்து மகிழலாமா? அன்பர்களே. []   வடுவூர் இராமர் கருடசேவை                                        பாகம் -3 கருட சேவைகள் 30. திருவரங்கம் கருடசேவை   []     காவேரி விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் |  ஸ வாஸுதேவோ ரங்கேஸ: ப்ரத்யட்சம் பரமம் பதம் |  விமானம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்புதம் |  ஸ்ரீரங்க ஸாயி பகவான் ப்ரணவார்த்த ப்ரகாஸ: ||    வைகுந்தத்தில் உள்ள விரஜா என்னும் நதியே இங்கு காவிரி நதியாக உள்ளது, ஸ்ரீவாசுதேவனே அரங்கநாதராகச் சேவை சாதிக்கின்றார். இதுவே வைகுந்த லோகம். தேவர்களே பிரணாவாகார விமானமாக உள்ளனர். அரங்கநாதர் அதில் எழுந்தருளி பிரணவார்த்தங்களைப் பிரகாசிக்க செய்து வருகின்றார். ஆகவே பூலோக வைகுந்தமே திருவரங்கம்.    அனைத்து ஆழ்வார்களும் (தம் ஆச்சாரியரை மட்டுமே பாடிய மதுரகவியாழ்வார் தவிர) மங்களாசாசனம் செய்த ஒரே திவ்ய தேசம் திருவரங்கம் ஆகும். திவ்ய தேசங்களுள் முதன்மையானது, வைணவர்களுக்கு கோவில் என்றளவிலே குறிக்கப்படுவது. திருவரங்கா என்று ஓர் முறை சொன்னால் இனிக் கருவரங்கரத்தில் அல்லல் படத்தேவையில்லை என்று தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய பெருமாள்  கோவில். ஆராத அருளமுதம் பொதிந்த கோயில் அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்களித்த கோயில் தோலாத தனிவீரன் தொழுத கோயில் துணையான வீடணர்க்குத் துணையாம் கோயில் சேராத பயனெல்லாம் சேர்க்கும்    கோயில் செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில் தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில் திருவரங்கம் எனத் திகழும் கோயில் தானே   என்று  ஸ்வாமி  தேசிகன் திருவரங்கத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.   "பூலோக வைகுந்தம்" என்றும் குறிக்கப்படுவது. காவரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் ஏற்பட்ட அரங்கத்தில் பச்சை மாமலை போல் மேனியுடனும், பவளவாய் கமலச் செங்கண்ணுடனும் தெற்கு நோக்கி எம்பெருமான் அனந்தாழ்வார் மேல் பள்ளி கொண்டிருக்கும் திருவரங்கம். அந்தத் திருவரங்கத்து உற்சவர்  அழகிய மணவாளப் பெருமாள். திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களுடனும் அஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், பிரசன்ன முகமும், முறுவலும், ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையிலே அருட்காட்சி தருகின்ற அந்த அழகிய மணவாளப் பெருமாள் நம்பெருமாளாக உற்சவராகவும் சேவை சாதிக்கும் திவ்யதேசம்.   கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற்சங்கம் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்  காலார்ந்த கருடனென்னும் வென்றிக் கடும்பறவையிவையனைத்தும் புறஞ்சூழ்காப்ப  சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்தரவணையில் பள்ளி கொள்ளும்  மாலோனைக் கண்டின்பக் கலவியெய்தி வல்வினையேனென்று கொலோ வாழும் நாளே ? (பெரு.தி 1-8)  பொருள்: “அம்புகளோடு கூடிய பெரிதான சார்ங்கம் என்னும் வில்லும், வளைந்த நல்ல பாஞ்சசன்னியம் என்ற சங்கமும், எதிரிகளைக் கொலை செய்யவல்ல சுதர்சன சக்கரமும், பகைவர்களுக்குக் கொடுந்தொழில் புரிகின்ற கௌமோதகி என்னும் கதையும், வெற்றி பெற்று ஓளி மிக்க நாந்தகம் என்னும் பெயருடைய வாளும்,  வாயு வேகம் போன்ற மிகவும் விரைந்த நடையையுடைய பெரிய திருவடி என்னும் வெற்றி மிக்க பறவையரசனான கருடாழ்வாரும் ஆகிய இவை எல்லாம் நாற்புறமும் சூழ்ந்து கொண்டு பெரிய பெருமாளுக்குக் காவலாக இருக்க, மீன்கள் நிரம்பிய விசாலமான வயல்களாலும், சோலைகளாலும் சூழப்பட்ட  திருவரங்கத்துப் பாம்பணையில் பள்ளி கொள்ளும் எம்பெருமானைக் கொடிய வினையேனாகிய அடியேன் நான் கண்டு வணங்கி மகிழ்ந்து வாழும் நாள் எந்நாளோ?”  என்று ஏக்கத்துடன் குலசேகரப் பெருமாள் பாடிய திவ்ய தேசம். இந்த திவ்யதேசத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட அமர்ந்த கோல கருடன் மற்றும் அமிர்தகலச கருடன் பற்றி முன்னரே பார்த்தோம். செருவாளும் புள்ளாளன் மண்ணாளன் செருச் செய்யும் நாந்தகமென்னும்  ஒருவாளன் மறையாளனோடாத படையாளன் விழுக்கையாளன் இரவாளன் பகலாளனென்னையாளன் ஏழுலகப்பெரும் புரவாளன் திருவாளனினிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே. (பெரி.தி 4-9-10)  பொருள்:  அசுரர்களை அழிக்கத் தானே தனியே சென்று போர் புரிய வல்ல ஸ்ரீகருடாழ்வாரை வாகனமாகக் கொண்டவரும், இவ்வுலகை ஆள்பவரும், போர் செய்யும் நாந்தகம் என்னும் வாளை உடையவரும், வேதங்களை ஆள்பவரும், போரில் பின் வாங்காத படைகளை உடையவரும், அடியார்க்கு வேண்டியன அருளும் திருக்கரங்களையுடையவரும், இரவு-பகல் ஆகியவற்றுக்குத் தலைவரும், அடியேனை ஆள்பவரும், ஏழுலகையும் ஆள்பவரும்,  திருமகளைப் பட்டத்தரசியாக உடையவராகிய எம்பெருமான் இனிதாக யோக நித்திரை செய்யும் திருக்கோயில் திருவரங்கம் ஆகும் என்றும் கருடனையும் திவ்யாயுதங்களையும் திருவரங்கத்தையும்  பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.  இத்தலத்தில் கஜேந்திர மோட்சம் சித்திரை பௌர்ணமியன்று காவிரி நதிக்கரையில் அம்மா மண்டபத்தருகில் நடைபெறுகின்றது. பிறவி என்னும் நோய்க்கு மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணன் நம்பெருமாள் அன்று தங்கக் கருடனில் சேவை சாதிக்கின்றார். காலை நம்பெருமாள் வழி நடை உபயங்கள் கண்டருளி அம்மாமண்டபக் கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுகின்றார். மாலையில் நம்பெருமாள் காவிரி ஆற்றில் இறங்குகிறார். காவிரியில் கிழக்கு நோக்கி நம்பெருமாளும், மேற்கு நோக்கி கோயில் யானை ஆண்டாளும் நிற்கின்றனர். அப்போது கோயில் யானை ஆண்டாள் முதலை காலைப்பிடித்து கவ்வி இழுப்பது போல் ஸ்ரீரங்கம் நம்பெருமாளை நினைத்து 3 முறை காப்பாற்று, காப்பாற்று என்பது போல் பிளிறுகின்றது.  நம்பெருமாளின் சடாரியை எடுத்து வந்து யானை மீது பட்டர்கள் வைக்கின்றனர். இவ்வாறு யானை ஆண்டாள் சாப விமோசனம் பெற்றதை நடத்திக் காட்டி அன்று நடந்த கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி .மறுபடியும் நடத்திக் காட்டப்படுகின்றது. மேலும் தை, மாசி, பங்குனி மாத உற்சவங்களின் போதும் நம்பெருமாள் கருடசேவை தந்தருளுகிறார். இவற்றுள் மாசி கருடசேவை மிகவும் சிறப்பு பெற்றது.  நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் சேவை சாதித்தருளுகின்றார்.  மாசி கருடன் காசிக்குப் போனாலும் கிடைக்காது  என்பது வழக்கு.  கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்  முடியும் வண்ணம் ஓர் முழுவலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்ப  கொடிய வாய் விலங்கினுயிர் மலங்கக் கொண்ட சீற்றமொன்றுண்டுளதறிந்துன்  அடியேனும் வந்து அடியிணையடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!. (பெ.தி 5-8-3)   பொருள்: அரங்கத்து அம்மானே!  மணம் வீசும் மலர்கள் நிறைந்த  சோலைகளால் சூழப்ப்பட்ட அழகிய பொய்கையிலே இருந்த தாமரை மலரை பூசைக்காக பறித்த யானையானது மிகுந்த ஆபத்தை அடையும்படி மிக்க வலிமையுள்ள ஒரு முதலையானது பிடித்துக் கொள்ள  அதனால் வருந்திய அந்த யானையானது (தன் வலைமையினால் விடுவித்துக்கொள்ள இயலாமல்) தங்களது திருவடிகளை தியானிக்க, அப்போது தாங்கள் அம்முதலையின் உயிர் நீங்கும்படி வருவித்துக் கொண்ட ஒரு கோபம் உண்டானதைத் தெரிந்து கொண்டு அடியேன் வந்து தங்கள் திருவடிகளை அடைந்தேன். அது போலவே தனக்கு எதிராக இயங்கும் ஐம்பொறிகளை  அடக்கி தன்னைக் காக்க வேண்டும் என்று  திருவரங்கத்தம்மானிடம் சரண் அடைகின்றார் திருமங்கையாழ்வார்.   திருவரங்கத்தின்  அக்கருட சேவையை கண்டு களித்தோம் இனி திருமலை கருட சேவையைப் பற்றிக் காணலாமா? அன்பர்களே.            31. திருமலை கருடசேவை []   பாசுரங்களின் எண்ணிக்கைப்படி திருவரங்கத்திற்கு அடுத்தபடி பாசுரங்கள் பாடப்பெற்ற திவ்யதேசம் திருப்பதி - திருமலை. பெருமாள் கண் கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலாய் , நெடியானாய் வேங்கடவனாய் சேவை சாதிக்கும் தலம்.  மதுரகவியார், தொண்டரடிப் பொடியாழ்வார் தவிர மற்ற பத்து ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்த திவ்யதேசம்.  திருமலையின் ஏழுமலைகள் சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், அஞ்சனாசலம்,  ஸ்ரீவேங்கடாசலம், விருஷபாசலம், அனந்தாசலம் ஆகியவை ஆகும்.  ஆதிசேஷன் ரூபத்தில் இருப்பதால் - சேஷாசலம்.  வேதங்களால் நிறைந்திருப்பதால் - வேதாசலம்.  கருடனால் வைகுந்தத்திலிருந்து பூலோகத்திற்குக் கொண்டுவரப்பட்டதால் -கருடாசலம்.  விருஷாபாசுரனை சம்ஹரித்து அவனுக்கு மோட்சம் கொடுத்ததால் - விருஷபாசலம்.  திரேதாயுகத்தில் அஞ்சனாதேவி தவம் இருந்து அனுமனைப் பெற்றதால் -அஞ்சனாசலம்.  துவாபர யுகத்தில் ஆதிசேஷனையும் வாயு பகவானையும் தூண்டி அனந்த பர்வதத்தையும் கொண்டு வந்ததனால் - அனந்தாசலம்.  சர்வ பாவங்களும் தஹிக்கப்பட்ட புண்ணிய க்ஷேத்திரமானதால் - வேங்கடாசலம்.  ஹிரண்யாட்சன் பூமிதேவித்தாயாரை கவர்ந்து சென்று  கடலில் கொண்டு மறைத்த போது பெருமாள் வராஹ அவதாரம் எடுத்து அவனுடன் சண்டையிட்டு அவனை வென்று பிராட்டியை மீட்டார். இந்நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க  பூமியில் பெருமாள் தங்க நினைத்து  கருடனை அனுப்பி கிரீடா பர்வதத்தைக் கொண்டு வரச்செய்து அதன் மேல் அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் கருடனுக்கு இன்னுமொரு சிறப்புமுண்டு. கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன் தான் வைகுந்தத்து விரஜாநதியில் இருந்து உருவாக்கினான் . வேங்கடம் என்றால் இரண்டு அர்த்தங்கள் உண்டு அதாவது வேம் - அழிவில்லாத கடம் – ஐஸ்வர்யம் நீங்காத செல்வம் நிறைந்திருக்கும் தலம். வாஸ்து சாஸ்திரத்திற்கு ஒரு நல்ல உதாரணம் திருமலைக் கோவில். வேம் - பாவங்களின் குவியல்  கடம்- பொசுக்குத்தல் அதாவது நமது பாவங்களை எல்லாம் தீயினில் தூசாக பொசுக்கி விடும்  தலம்  எனவே திருவேங்கடம்.  புரட்டாசி மாதம் திருவோண நடசத்திரம் எம்பெருமான் கண்கண்ட தெய்வம் கலியுகவரதன் வேங்கடவனின் அவதாரத் திருநாள், அந்நாளை தீர்த்த நாளாக கொண்டு திருப்பதி திருமலையிலே எழுமலையானுக்கு, எங்கள் குலதெய்வத்திற்கு, பார் புகழும் பாலாஜிக்கு, பரந்தாமனுக்கு, ஸ்ரீநிவாசனுக்கு, மலையப்பசுவாமிக்கு ஒன்பது நாள் கோலாகலமாக பிரம்மோற்சவம்.  பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்னின்று இருகணிள மூங்கில் வாங்கி - அருகிருந்த  தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர் வான் கலந்த வண்ணன் வரை.  ( இ.தி 75 )  பொருள்: பெருகுகின்ற மதநீரையுடைய யானையானது தனது தனது சிறந்த பெண் யானையின் முன்னே நின்று, இரண்டு கணுக்களையுடையதாய்  இளையதான மூங்கில் குருத்தைப் பிடுங்கி, அதை தேனிலே தோய்த்து அப்பெண் யானைக்கு கொடுப்பதற்காகத்  துதிக்கையை நீட்டும் திருமலையன்றோ, மேக வண்ணனின் இருப்பிடமான மலையாகும்,  என்று  பூதத்தாழ்வார் பாடிய திருமலையில் பிரம்மோற்சவத்தின் சில சிறப்புகள்  1) முதல் நாள் கொடியேற்றம் மாலையில் நடைபெறுவது, 2) இரண்டு தடவை சேஷவாகன சேவை, 3)தங்கத்தேர். 4) கருடசேவையன்று மூலவராக உற்சவர் சேவை சாதிப்பது. 5) நாச்சியார் கோலத்தில் பெருமாள் எழுந்தருளும் போது கிருஷ்ணர் உடன் எழுந்தருள்வது.    []     காலையும் மாலையும் வெவ்வேறு வாகனங்களில் மலையப்பசுவாமி அற்புத அலங்காரத்தில், சர்வாபரண பூஷிதராக, விலையுயர்ந்த முத்தும், பொன்னும் மணியும், மாலைகளும் இலங்க வைகுந்த நாதனாய், கலை மகளாய், நரசிம்மராய், புள்ளின் வாய் கீண்டானாய், காளிய நர்த்தனராய், கோபால கிருஷ்ணராய், நவநீத கிருஷ்ணராய், இராமனாய், கல்கியாய்  நாம் எல்லோரும் உய்ய மாடவீதி வலம் வந்து சேவை சாதிக்கின்றார். திருமலையெங்கும் இந்த ஒன்பது நாட்களும் ஒரே கோலாகலம்தான்.  எல்லா ஆலயங்களிலும் மோட்சமளிக்கும் கருடசேவை சிறப்பு, திருமலையில் இன்னும் சிறப்பு என்னவென்றால் கலியுகத்தில் பெருமாள் ஸ்ரீநிவாசராகத் திருப்பதி வந்தபோது அவர் ஓடி விளையாட வைகுந்தத்தில் உள்ளது போல இயற்கை அழகுமிக்க இடம் வேண்டுமென்று பெருமாள் சொல்ல கருடன் வைகுந்தமலையை பெயர்த்து பூலோகத்திற்கு கொண்டு வந்தார். ஏழுமலையும் சேர்ந்து பூலோகம் வந்தன. இதற்காகத் தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் வாசலில் அமர்ந்திருக்கும் கருடனைத் தரிசித்த பின்னரே தன்னை வணங்க வேண்டும் என்று அருள் பாலித்தார். அதன்படி எல்லா பெருமாள் கோவில்களிலும் வாசலில் கருடனைத் தரிசிக்கலாம்.  புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருடசேவை.  தங்கக் கருடனில் மலையப்பசுவாமி மூலவராக சேவைச் சாதிக்கின்றார். மூலவருக்கு அணிவிக்கப்படும் லக்ஷ்மிஹாரம், சகஸ்ரநாமஹாரம், மகரகண்டி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் மாலை, கிளி, வஜ்ரகிரீடம், அற்புத ஆபரணங்கள் அணிந்து ஆனந்த சேவை சாதிக்கின்றார் ஸ்ரீவேங்கடாசலபதி.  மூலவரே அன்று வெளியே வந்து சேவை சாதிப்பதாக ஐதீகம் என்பதால் ஒரு காலத்தில் கருடசேவை முடியும் வரை நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் கருதிச் சில நிமிடங்கள் மட்டுமே அடைக்கப்படுகின்றது. மலையப்பனை தெய்வப்புள் ஏறி வலம் வரும் போது தரிசித்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், மேலும் சகஸ்ரநாமஹாரம், லக்ஷ்மிஹாரம், மகரகண்டி அணிந்து பல லட்சம் பேர் தரிசிக்க தானே வேங்கடாசலபதி வெளியே வருவதால் அவரைச் சேவிப்பதால் பீடை விலகி அஷ்ட ஐஸ்வர்யங்கள் ஒரு சேர கிடைக்கும் என்பதால் தான் திருமலையில் அன்று என்றுமில்லாத பக்தர் கூட்டம் லட்சக்கணக்கில்  கூடுகின்றது. மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்கள்! பாம்பணையான் வார்த்தையென்னே! கதியென்றும் தானாவான் கருதாது ஓர் பெண்கொடியை வதை செய்தானென்னுஞ்சொல் வையகத்தார்மதியாரே (நா.திரு 8-9) பொருள்: திருமலையை இருப்பிடமாகக் கொண்டு வாழ்கின்ற, மதயானை போல செருக்கிக் கிளர்த்தவையாக உள்ள காளமேகங்களே! பாம்பைப் படுக்கையாகக் கொண்ட எம்பெருமானுடைய வார்த்தையானது யாது? அவ்வெம்பெருமான் தான் எப்பொழுதும் பாதுகாப்பவனாய் இருந்து நினையாமல் ஒரு பெண் பிள்ளையைக் கொலை செய்தான் என்கின்ற சொல்லை இவ்வுலகில் உள்ளவர்கள் மதிக்கமாட்டார்களோ?   என்று அக்குளிரருவி கோவிந்தனுக்காகவே கனவு கண்ட கோதை நாச்சியார், கருடசேவைக்காகவே தான் அணிந்த  ஒரு மாலையை அனுப்புகின்றாள், கூடவே தான் கரத்தில்  தாங்கியிருந்த கிளியையும் அனுப்புகிறாள். மலையப்ப சுவாமி கருடசேவையன்று அந்த மாலையை அணிந்து கொண்டு பக்தர்களுக்கு சேவை சாதித்து   அருளுகின்றார்.   அசுரர்களிடமிருந்து பெருமான் வேதங்களை மீட்டெடுத்தார் ஏனென்றால்,  அந்த   பிரமேயமான பரம் பொருளான நாராயணனை  அவை சுட்டிக்  காட்டுவன அந்த  பிரமாணமான வேதங்கள், கருடன் அந்த  வேத ஸ்வரூபன்,  எனவே அவர்  பிரமாணமாக இருந்து பிரமாதா ஆன ஜீவாத்மாக்களாகிய  நமக்கு பரம்பொருளை சுட்டிக் காட்டுகின்றார். திருமலையில் பெருமாளை கருடனில் சேவிக்கும் போது, அதை உணர்ந்து அந்த குறையொன்றுமில்லா கோவிந்தனை சரணமடைய நலமிந்தல்லது ஓர் நாட்டை  அடைவது நிச்சயம்.    செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!  நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்  அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்  படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே. (பெரு. தி 4-9)  பொருள்: செடிபோல் அடர்ந்துள்ள கொடிய வினைகளைப் போக்கியருள்கின்ற  பெருமானே! பெரியோனே! திருவேங்கட முடையானே! உனது சன்னிதியின் உள் வாசலிலே பாகவதர்களும், மற்றை தேவர்களும், அரம்பையர் போன்ற மாதர்களும் இடைவிடாது இயங்கப்பெற்ற படியாய்ப் பொருந்தி உனது பவளம் போன்ற  திருவதரத்தை காண்பேனாகக் கடவேன்” என்று குலசேகராழ்வார் வேண்டிய ஏழுமலையப்பன் பிரம்மோற்சவம் தவிரக் கருடசேவை தந்தருளும் நாள்  தை மாத இரதசப்தமி நாள்  ஆகும். தைமாதத்தின் வளர்பிறை சப்தமி என்னும் ஏழாம் நாள்  இரதசப்தமி  என்றும் சூரியஜெயந்தி  என்றும் கொண்டாடப்படுகின்றது. இரதசப்தமியன்று  கருடனின் தமையன் அருணன் சாரதியாக இருந்து செலுத்தும்  ஏழு குதிரைகள் பூட்டிய சூரியநாராயணரின் இரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம்.   சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாள் என்பாரும் உண்டு.   இரதசப்தமி என்னும் இந்நாளில் சூரியனுக்கு விசேஷ ஓளி பிறப்பதாக புராணங்கள் கூறுகின்றன.  இரதத்தை எப்படிச் செழுமையாக செலுத்த வேண்டுமோ அது போல ஐம்புலன்களால் பல்வேறு திசைகளில் இழுக்கப்பட்டு தடுமாறும் மனத்தை இறைவனிடம் செலுத்த  வேண்டும் என்பதை உணர்த்தும் நாள் இரதசப்தமி நாள்.  தலையிலும், கண்கள், செவிகள், கை, கால், தோள்களில் ஏழு எருக்கம் இலைகள் வைத்து குளிக்கும் நாள். இவ்வாறு சூரிய ஒளி நம் மேல்பட நீர் நிலைகளில் குளிப்பது ஞானம் பெற இது உதவுதாக ஐதீகம். தென் இந்தியாவில் அனைத்து வைணவத் திருதலங்களிலும் பெருமாள் அதிகாலை சூரிய உதயம் தொடங்கி, சூரிய அஸ்தமனம் வரை பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் நாள். சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் துவக்கும் நாளில் சூரியன் பெருமாளை வணங்கி தன் பயணத்தைத் தொடங்க பெருமாள் சேவை சாதிப்பதாக ஐதீகம். திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அம்மலைகளைச் சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். “அர்த்த’ என்றால், “பாதி!’ பொதுவாகப் பத்து நாள் விழாக்களைத்தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருகின்றார், மதியம்  சுவாமி புஷ்கரணியில் சக்ரஸ்நானம் நடைபெறுகின்றது. பக்தர்கள் ஏழு எருக்க இலை வைத்து சுவாமி புஷ்கரணியில் ஸ்நானம் செய்கின்றனர். இவ்வாறு சக்கரஸ்நானமும் நடைபெறுவதால் “ஒரு நாள் பிரம்மோற்சவம்” என்றும் அழைக்கப்படுகின்றது. திருமலையில் ஆண்டிற்கு நான்கு முறை சக்கர ஸ்நானம் நடைபெறுகின்றது.   1. புரட்டாசி திருவோணம், 2.இரத சப்தமி, 3.மார்கழி முக்கோடி துவாதசி, 4.அனந்த பத்மநாப சதுர்த்தசி. இரத சப்தமியன்று திருமலையில் அதிகாலையில் மலையப்ப சுவாமி, சூரியப் பிரபையில் சேவை சாதிக்கின்றார், பின் சின்ன  சேஷவாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம்,  நிறைவாக சூரிய அஸ்தமன காலத்தில் சந்திரப் பிரபை வாகனத்தில்  வைர வைடுரிய நகைகள் மின்ன சர்வ அலங்காரத்தில் சேவை சாதிக்கும் நாள்.  ஒரு வருடம் திருமலையில் இரதசப்தமியன்று மலையப்ப சுவாமி தக்ஷிணாயன உத்திராயண  காலங்களை தன் சிறகுகளாகக் கொண்ட கருடனில் பெருமாள்   கருடசேவை சேவிக்கும் போது நிஜ கருடன் வானில் வந்து பெருமாளை சேவித்து விட்டு செல்வதைக் காணும் பாக்கியம் கிட்டியது.  மேலும் கருட பஞ்சமியன்றும்  காலை மலையப்ப சுவாமி கருட சேவை தந்தருளுகின்றார். பிரம்மோற்சவத்தின் போது கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பதாலும் பல பக்தர்களால் அன்று வந்து திருமலையப்பனை சேவிக்க முடியாது என்பதாலும், பல பக்தர்கள் சேவிக்கும் பொருட்டு கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு பௌர்ணமியன்றும் இரவு பெரிய திருவடியில் சேவை சாதிக்கின்றார் மலையப்ப சுவாமி.  திருமலை செல்லும் வழியில் அலிப்பிரிக்கு அருகில்  மிக பிரம்மாண்டமான பெரிய திருவடி மற்றும்  திருவடியின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.  மற்றொரு பிரம்மாண்ட சிலையில் ஒரு புறம் பெரிய திருவடியும் மறு புறம்  திருவடியும் அமைந்துள்ள சிலையையும் திருமலை செல்பவர்கள் அவசியம் இவர்களைச் சேவிப்பீர்கள். ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தில் கருடசேவை பிரம்மோற்சவமாம் பிரம்மோற்சவம் எங்கள் மலையப்பசுவாமிக்கு பிரம்மோற்சவம்  புரட்டாசி மாதம் ஆனந்த பிரம்மோற்சவம் திருவோணநட்சத்திர பிரம்மோற்சவம். (பிரம்மோ)  காலையும் மாலையும் கோலாகலம் விதவித வாகனங்களில் அற்புத ஊர் கோலம்  சேஷவாகனத்தில் வைகுந்தநாதன்அன்ன வாகனத்தில் கலைமகள் கோலம் (பிரம்மோ)  சிம்ம வாகனத்தில் அவர் யோகநரசிம்மம் முத்துப்பந்தலில் புள்ளின் வாய் கீண்ட கோலம்  கற்பக விருட்சத்தில் அவர் கலியுக வரதர் சர்வ பூபால வாகனத்தில் அவரே ஜகந்நாதர் (பிரம்மோ)  மோகினியாய் வருபவரும் அவரே  தெய்வப்புள்ளின் மேல் மூலவராய் திருக்கோலம் சிறிய திருவடியில் ஸ்ரீராமர் அவரே  தங்கத்தேரிலே அற்புத வீதி உலா (பிரம்மோ)  அத்தி வாகனத்திலே அற்புத சக்கரவர்த்தி சூரியப்பிரபையிலே சூரிய நாராயணர் சந்திரப் பிரபையிலே வெண்ணெய்த்தாழி கண்ணன் திருத்தேரிலேஉல்லாசஇரதோற்சவம் (பிரம்மோ)  பாயும் பரியிலே ஸ்ரீரங்கராஜா  சுவாமி புஷ்கரணியில் சக்ர ஸ்நானம் கோலாகலமாய் பிரம்மோற்சவம்  பிரம்மன் நடத்தி வைத்த பிரம்மோற்சவம்.(பிரம்மோ)  இந்தக் கவிதையை எழுதியவர் கவிநயா அவர்கள். அடியேன் கருடசேவை (http://garudasevai.blogspot.com) என்னும் பெருமாளின் கருடசேவைகளைப் பற்றி எழுதி வரும் வலைப்பூவின் வெள்ளிப் பதிவிற்காக ஒரு கவிதை எழுதித் தாருங்கள் என்று கேட்டபோது அவர் எழுதிய கவிதை இது அவரது கவிதைகளை (http://kavinaya.blogspot.com) என்ற வலைப்பூவில் காணலாம்.      காவியும் நீலமும் வேலும் கயலும் பலப்பலவெண்  ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரரை செற்ற  மாவியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்  தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே   (திருவிருத்தம்-67)  மிகப்பெரிய அற்புதமாக கருடனை  வாகனமாகக் கொண்டவன் மாதவன், பசுக்களைக் காத்த அந்த கோவிந்தன் வாசம் செய்யும் மலை திருவேங்கடம். அத்திருவேங்கடவனின் கருடசேவைகளை பற்றி கண்டோம். வாருங்கள்  பிராட்டியின் சில  கருட சேவைகளையும் சேவிப்போம்.                                32. திருச்சானூர் பத்மாவதித் தாயார் கருடசேவை []   அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்  என்றபடி பூவில் மணமும், சூரியனிடம் கிரணமும், இரத்தினத்தில் ஒளியும் அகலாதிருப்பது போல எம்பெருமானின் திருமார்பை விட்டுக் கணநேரம் கூடப் பிரியாமல் நித்ய வாசம் செய்பவள் பிராட்டி என்பதால் அநேகமாக அனைத்து ஆலயங்களிலும் கருடசேவையின் போது பெருமாள் தனியாகத்தான் சேவை சாதிக்கின்றார். வெகு சில தலங்களில் தான் பெருமாள் தாயார்களுடன் கருடசேவை தந்தருளுகின்றார்.  ஒரு தலத்தில் தாயார் தனியாகக் கருடசேவை தந்தருளுகிறாள் இவ்வாறு தாயார் தனியாக கருடசேவை தந்தருளும் தலம்தான் திருச்சானூர்.   திருச்சானூரில் பத்மாவதித் தாயாருக்குக் கார்த்திகை பஞ்சமியை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. மலையப்ப சுவாமியைப் போலவே பத்மாவதித்தாயாரும் பல்வேறு வாகனகங்களில் காலையும் மாலையும் மாட வீதிகளில் வலம் வந்து  சேவை சாதிக்கின்றாள். ஆறாம் நாள் மாலை  பூமன்னு மாது, மாமலர் மன்னிய மங்கை, பந்திருக்கும்மெல் விரலாள் பனிமலராள், மைய கண்ணாள் மலர்மேல் உறைவாள் கருடசேவை கண்டருளுகிறாள்.   ஸ்ரீ,  நித்யஸ்ரீ,  அலைமகள், மஹாலக்ஷ்மி, திருமகள்  என்றெல்லாம் அழைக்கப்படும் பெரிய பிராட்டியாரின் சிறப்பை அவள் அவதரித்த பாற்கடல் முழுவதையும் மையாகக் கொண்டு எழுதினாலும் எழுத முடியாது. பெருமாளையே நாம் ஸ்ரீ:பதி என்றும் ஸ்ரீமந் நாராயணன், அதாவது ஜகன்மாதாவாகிய பெரிய பிராட்டியாரை தன் திருமார்பிலே அகலாதவளாக வைத்துள்ளார் கல்யாண குணநிதியான எம்பெருமான் என்று திருமகள் கேள்வராகத்தானே அடையாளம் காட்டுகின்றோம். வைணவ சம்பிரதாயமும் ஸ்ரீவைஷ்ணவம் என்று தாயார் பெயரால் தானே அறியப்படுகின்றது. தீந்தமிழில் பெருமாளைத் திருமால் என்று தாயாருடன் சேர்த்துதானே அன்புடன் அழைக்கின்றோம். நம்முடைய குற்றங்களையும் குணமாக எடுத்துக்கொண்டு பெருமாளிடம் புருஷகாரம் செய்து மன்னிக்க வேண்டுபவள்  தாயார் தானே. தாயார் கடைக்கண் பார்த்தாலே போதுமே, எல்லா சுபிட்சங்களும் மழையெனக்கொட்டும், கிருஷ்ணாவதாரத்தின் போது குசேலன் கொண்டு வந்த அவலை ஸ்ரீகிருஷ்ணர் ருசித்த பின் அவர் வந்த திசை நோக்கி ருக்மணி பிராட்டியார் பார்த்ததுதான் தாமதம் அந்த திசை முழுவதுமே செல்வத்தில் நிறைந்தது. ஆதி சங்கரர் முடியாத ஏழ்மை நிலையிலும் நெல்லிக்கனி பிச்சையிட்ட பெண்மணியின் ஏழ்மை நீங்க கனகதாரா ஸ்தோத்திரம் பாடியபோது தங்க நெல்லிக் கனி மழை பொழிவித்தவள் அல்லவா ஸ்ரீமஹாலக்ஷ்மித்தாயார்.  கச்சியம்பதியில் வேதாந்த தேசிகர் ஏழை பிரம்மசாரியின் திருமணத்திற்காகச் செல்வம் வேண்டிய போதும் பெருந்தேவித் தாயார் கனக மழை பொழிவித்தாள். அவளுடைய கொடியும் வாகனமும் கருடனே எனவேதான் தாயாரை “கருடாரூடே” என்று அழைத்து மகிழ்கிறோம்     நமஸ்தே(அ)ஸ்து மஹா மாயே ஸ்ரீ பீடேஸுர பூஜிதே   சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே    நமஸ்தே கருடாரூடே கோலஸுர பயங்கரி  ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே    ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வதுஷ்ட பயங்கரி  ஸர்வ துஃகஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே    ஸித்தி புத்திப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி  மந்த்ரமூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே    ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி   யோகஜ்ஞே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோ (அ)ஸ்துதே    ஸ்தூலஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்திமஹோதரே  மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே    பத்மாஸன ஸ்த்திதே தேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி   பரமேசி ஜகந்மாத: மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே    ச்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே   ஜகத்ஸ்த்திதே ஜகந்மாத: மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே    மஹாலக்ஷ்ம்யஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:   ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம்ப்ராப்னோதி ஸர்வதா    ஏககாலே படேந் நித்யம் மஹாபாப விநாசனம் த்விகாலம்  ய: படேந் நித்யம் தனதான்ய ஸமந்வித    த்ரிகாலம் ய: படேந் நித்யம் மஹாசத்ரு விநாசனம்   மஹாலக்ஷ்மீர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா சுபா.    தாயார் ஆறாம் நாள் இரவு  கருடசேவை கண்டருளும் போது தாயாருக்கு மலையப்ப சுவாமியின் தங்கத் திருப்பாதங்கள் சார்த்தப்படுகின்றன. கருடவாகனத்தில் தாயார் இவ்வாறு  பெருமாளின் திருப்பாதங்களை அணிந்து வலம் வரும் போது  தாயாருடன் ஏழு மலையானும் ஒன்றாக சேவை சாதிப்பதாக ஐதீகம்.     திருமலையில்  ஏழுமலையானுக்கு நடைபெறுவது போலவே, திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கும், இரதசப்தமி தினத்தன்று ஒருநாள் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. அன்று, காலை முதல் இரவு வரை, தாயார் பெரிய சேஷ வாகனம் , சிம்மம், குதிரை, கருடன், தங்கப் பல்லக்கு, சந்திரபிரபை, யானை உள்ளிட்ட வாகனங்களில், மாடவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கின்றாள். மதியம் 3 மணிக்கு தாயாருக்கு, திருமஞ்சனம் நடைபெறுகின்றது. இவ்வாறு இரதசப்தமியன்றும் பத்மாவதித் தாயார் கருடசேவை தந்தருளுகின்றாள்.  திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்குக் கார்த்திகை பிரம்மோற்சவம் நடைபெறும்  போது தமிழகத்தில், பெருமாள் திருமலையப்பனாக சேவை சாதிக்கும்  பல் வேறு தலங்களிலும் தாயாருக்குப் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. ஒரே ஒரு வித்தியாசம். திருச்சானூரில் தாயார் கோவிலுக்கு வெளியே வந்து மாடவீதியில் புறப்பாடு கண்டு அருள் பாலிக்கின்றாள் ஆனால் தமிழக ஆலயங்களில் தாயாரைப் படிதாண்டா பத்தினி என்று கொண்டாடுவதால் தாயார் கோவிலை விட்டு வெளியே வருவதில்லை உள் புறப்பாடுதான் கண்டருளுகின்றாள். திருமயிலை  வேதாந்த தேசிகர் தேவஸ்தான ஆலயத்திலும்  பத்மாவதி தாயாருக்குப் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. அலர் மேல் மங்கைத் தாயார் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் உள் புறப்பாடு கண்டு அருளுகின்றாள். அதில்   கருட சேவையும் உண்டு. தாயாரை கருட வாகனத்தில் சேவிக்கும் போது இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி அவள் அருள் பெறலாம். []   திருமயிலை அலர்மேல் மங்கைத் தாயார் கருட சேவை  சேவித்து எழுந்திருந்தேன் தேவி வடிவம் கண்டேன்  வச்சிர கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்  முத்துக்கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்  உரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக்கண்டேன்    பின்னழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்  சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்  கமலத்திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்  மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்    கைவளையல் கலகலென்னக் கனையாழி மின்னக்கண்டேன்  தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்  காலில் சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்  மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்    அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும் அம்மா  வந்த வினை அகற்றி மஹாபாக்கியம் தாரும் அம்மா  தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்  மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்.  பெண் கருட வாகன (கருடி) சேவை :   திவ்ய தேசங்களில் திருநாகையில் மட்டுமே தாயாருக்குச்  கருடி வாகனம் உள்ளது என்பது சிறப்பு.  தாயாருக்கு  ஆனி மாதத்தில்   தனி பிரம்மோற்சவம்  சிறப்பாக நடைபெறுகின்ற போது நான்காம் நாள் மாலை சௌந்தர்யவல்லித்தாயார் வெள்ளி கருடி வாகனத்திலும், சௌந்தரராஜப்பெருமாள் வெள்ளி கருட வாகனத்திலும் நந்தவனத்திற்கு எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின் போது நான்காம் நாள் மாலை தனிக்கோயில் நாச்சியாராக எழுந்தருளி அருள் பாலிக்கும்  பட்டர்பிரான் கோதை வெள்ளிக் கருடி வாகனத்தில்  மாடவீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.    []   கருடி வாகனம்  சென்னை சௌகார்பேட்டை ஜெனரல் முத்தையா முதலி தெரு, பைராகி மடம் என்றழைக்கப்படும்  பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில்  அலர்மேல் மங்கைத் தாயாரின் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் போது ஆறாம் திருநாளன்று மாலை  தாயார் பெண் கருட வாகனத்தில் (கருடி வாகனம்)  சேவை சாதிக்கின்றார். அது போலவே பெண் திருவடியில் எட்டாம் நாள் தாயார் சேவை சாதிக்கின்றார்.  தமிழகக் கோவில் என்பதால் இவ்வாலயத்திலும் தாயார் உள்புறப்பாடுதான் கண்டருளுகின்றாள்.   அனைவரும் போற்றும் நெடுமாலும் நீயும் அடற் கருடன் தனை எழில் வாகனமாகக் கொண்டு என் உள் வரும் சத்தியத்தைப் பினையுள்ள பேர் அறியத் தக்கவாறருள் பெய்வது என்றோ மனை எனத் தாமரை பூவை எல்லாம் கொள்ளும் மாணிக்கமே!   பொருள்:  தாமரை மலரை வீடாகக் கொண்டிருக்கும் திருமகளாகிய மஹாலக்ஷ்மியே! மாணிக்கம் போன்றவளே! கருடனை வாகனமாகக் கொண்ட  நீயும் திருமாலும் அடியேன் உள்ளத்தில் வீற்றிருக்கும் உண்மை நிலையை அனைவரும் அறியுமாறு செய்யும் நாள் எந்நாளோ!  என்ற பாடல் தாயார் கருட சேவை தந்தருளும் அழகைப் பற்றிக் கூறுகின்றது.  இனிப் பெண் கருட வாகனம் / பெண் அனுமந்த வாகனம்  எதற்காக என்று  இக்கோவிலில் வினவிய போது ஸ்ரீமந் நாராயணனைத் தவிர வேறு  ஆண்கள் யாரையும் தாயார் தீண்டாதவள் என்பதால், அவள் புறப்பாடு கண்டருளுகின்ற வாகனங்களும் பெண் பாலாகவே இருக்க வேண்டும் என்று இவ்வாறு எல்லா வாகனங்களையும் பெண்ணாக அமைத்தனர் முன்னோர்கள் என்று விளக்கம் அளித்தனர்.   கருடசேவை வலைப்பூவின் வெள்ளிப் பதிவு “தாயாரின் கருட சேவை” அதற்காக கவிநயா அவர்கள் எழுதியனுப்பிய இரண்டாவது கவிதை இது.   புள்ளேறி வருகின்றான் வாசன் - கருடப் புள்ளேறி வருகின்றான் எங்கள்        ஸ்ரீநி வாசன்  மின்னும் தங்க மலை யொன்று சிறகை விரிக்க விரிந் திருக்கும் சிறகிரண்டும் வானம் மறைக்க எடுத்து வைக்கும் அடி களிலே புவியும் அதிர உடுத்திக் கொண்ட நாகங் களும் அதிர்ந்தே நிமிர –  தா யடிமைத் தளை நீக்க அமிர்தம் கொணர்ந்தான் மா லவனின் மனம் மகிழ தினமும் சுமந்தான் காற்றை வெல்லும் வேக முடன் கடுகிப் பறப்பான் கார் முகிலின் வண்ண னுக்கு கொடியாய் இருப்பான் –  அந்தப் - புள்ளேறி வருகின்றான் வாசன் - ஜொலிக்கும் புள்ளேறி வருகின்றான் எங்கள் ஸ்ரீநி வாசன்  காய் சினப் பறவையதன் மீதேறி வருகின்றான் கரு மேகப் புயல் போலப் பாரெங்கும் நிறைகின்றான் தண் துழாய் சூடிக் கொண்டு தரணிவலம் வருகின்றான் வாசம் மிகு மலர் சூடி காசினிக்கு அருள்கின்றான்  திகிரி யுடன் சங் கேந்தி திருமலையான் வருகின்றான் திக் கற்ற அடி யவரின் திசைநோக்கி அருள்கின்றான் ஸ்ரீ லக்ஷ்மி தாயாரை தன்மார்பில் ஏந்தியவன் பதம் பணியும் பக்தர் களைப் பரிவோடு பேணும் அவன்  புள்ளேறி வருகின்றான் வாசன் - தங்க புள்ளேறி வருகின்றான் எங்கள் ஸ்ரீ நிவாசன்  தா யாரும் அவ னோடு திருக்காட்சி தருகின்றாள் தேடி வரும் பிள்ளை கட்குத் தாயாக அருள்கின்றாள் பாற் கடலில் தோன்றி யவள் பாலமுதம் போலும் அவள் தெவிட் டாத தே னாக நெஞ்சுக்குள்ளே இனிக்கும்அவள்  பட்டாடை இடை உடுத்தி பூவாடை தோள் உடுத்தி தங்கத் திருமாங்கல்யம் சங்குக் கழுத்தில் தொங்க முத்து மணி யாரங்கள் மேனியினை அலங்கரிக்க நூபுரங்கள் ஒலித்திடவே நீள்நிலங்கள் போற்றிடவே  புள்ளேறி வருகின்றாள் தாயார் - கருட புள்ளேறி வருகின்றாள் எங்கள் ஸ்ரீ லக்ஷ்மி தாயார்!  நாம் மஹாலக்ஷ்மி தாயாருக்குக் கருட வாகனம் என்கிறோம் ஆனால் வட நாட்டில் மஹாலக்ஷ்மி தாயாருக்கு என்ன வாகனம் என்று தெரியுமா? அதற்கான பதில் ஆந்தை, ஆமாம் நாம் அபசகுன பறவையாகக் கருதும் ஆந்தைதான் தாயாரின் வாகனமாக கருதப்படுகின்றது. வங்காளத்தில் துர்கா பூஜையின் போது துர்க்கையம்மனுடன் மகள்களாக மஹாலக்ஷ்மியும், மஹா சரஸ்வதியும் எழுந்தருளும் போது ஆந்தை வாகனத்தைத் காணலாம். வாருங்கள் இனி சிறப்பு மிக்க திருநாங்கூரில் நடைபெறும் பதினோரு கருடசேவையை சேவித்து  மகிழலாம்.                                                              33. திருநாங்கூர் பதினோரு கருட சேவை   []   சிந்தனைக்கினியானுடன் குமுதவல்லி நாச்சியார் சமேத திருமங்கையாழ்வார்   பாற்கடலிலே திருமகளும், நிலமகளும், நீளாதேவியும், நித்திய சூரிகளும் புடை சூழப்  பரவாசுதேவனாக மாயத் துயில் கொண்டுள்ள அம்மாமாயன், வைகுந்தத்திலே வியூக நிலையிலே அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி சேவைச் சாதிக்கின்றார். அவரே தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காக்க அவதாரங்கள் எடுத்து விபவ ரூபமாக அருள் வழங்கினார், அப்பரம்பொருளே அந்தர்யாமியாக எல்லா ஜீவ ராசிகளிலும் விளங்குகின்றார். நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு , ஒரு பெயரும், ஒரு உருவமும் இல்லாத அப்பரம்பொருள் அர்ச்சாவதாரமாக பூவுலகிலே பல் வேறு தலங்களிலே எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இந்த ஐந்து நிலைகளுக்கும் உரியவன் அவன் ஒருவனே.  அத்தகைய திருக்கோவில்களில், மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றவை  திவ்யதேசங்கள் எனப்படுகின்றன. இத்திவ்யதேசங்களுள் வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் தஞ்சை தரணியிலே 40 திவ்ய தேசங்கள் உள்ளன, அவற்றுள் சீர்காழியிலிருந்து 8கி.மீ தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர்  திருத்தலத்தை சுற்றி பதினோரு திவ்ய தேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. சோழநாட்டுத் திருப்பதிகளில் நடு நாயகமாக இத்திருநாங்கூர் திவ்யதேசங்கள் விளங்குகின்றன. இத்திவ்யதேசங்களின் தனி சிறப்பு என்னவென்றால் வைணவ சம்பிரதாயத்தில் முக்கியமாகக் கருதப்படும் மூன்று சுலோகங்களும் எம்பெருமானாலேயே இத்திவ்ய தேசங்களில் உபதேசிக்கப்பட்டன. முதலாவதான " ஒம் நமோ நாராயணா நம:"  என்னும் நலம் தரும் அஷ்டாத்திர மந்திரத்தை ஆழ்வார்களில் கடைக்குட்டியான திருமங்கை ஆழ்வாருக்கு திருமணி மாடக் கோவில் நாராயணப் பெருமாளால் உபதேசிக்கப்பட்டது.  இரண்டாவதான " ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நமஹ " என்ற த்வய மந்திரத்தை ஸ்வேத ராஜனுக்கு திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் உபதேசித்தார்.   கீதையிலே  " ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ   அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோட்ச யிஷ்யாமி  மாசுச: "   என்னையே தஞ்சம் சரணமடைந்து விடு நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்து மோட்சத்தை அளிப்பேன் என்று கீதோபதேசத்தின் போது கூறிய சரம சுலோகத்தை பார்த்தன்பள்ளியிலே கண்ணன் அர்ஜுனனுக்கு மீண்டும் உபதேசித்தார்.   இத்திவ்யதேசங்களின் மற்றொரு சிறப்பு, பிரளய காலத்திலும் அழியாமல் இருந்தது. பலாச வனத்தில் வடக்கே மண்ணியாற்றையும், தெற்கே திருவரங்கக் காவிரியாற்றையும் கிழக்கே பூம்புகார் கடலையும், மேற்கே தரங்கம்பாடியையும் எல்லையாகக் கொண்ட இந்த நாகபுரி க்ஷேத்திரம் என்னும் திருநாங்கூரைச் சுற்றிய இந்தப் பகுதி மட்டும் பிரளய காலத்தும் அழியாமல் இருந்தது. இப்பகுதியில் வைணவ மற்றும் சைவ சமயங்களின் ஏகாதச திருக்கோவில்கள் உள்ளன. இவ்வாறு சைவம் மற்றும் வைணவத்தின் பதினொரு கோவில்கள் உள்ளதற்கான ஐதீகம் என்னவென்றால், மஹா பிரளயத்திற்குப் பிறகு தட்சன் ஒரு யாகம் நடத்தினான் அதில் கலந்து கொள்ள சிவபெருமானுக்கு ஆணவத்தால் அவன் அழைப்பிதழ் அனுப்பவில்லை. தட்சன் மகளான தாட்சாயணியும் அங்கு சென்று அவமானப்பட்டு, பின் சிவலோகம் செல்ல விருப்பமில்லாமல் பலசவனம் வந்து, மதங்க மகரிஷியின் மகளாகப் பூங்கோதை என்ற திருநாமத்துடன் வளர்ந்து வரும் காலத்தில், சிவபெருமானும் மண்ணியாற்றங்கரையில் வந்து தக்ஷிணாமூர்த்தியாக யோகத்திலாழ்ந்தார். மஹா விஷ்ணுவும் வைகுந்தத்தை விடுத்து பூலோகம் வந்தார். சிவனும், விஷ்ணுவும் இல்லாததால் அசுரர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றுவாரில்லாமல் கவலையடைந்த தேவர்கள் மதங்க முனிவரிடம் வந்து வேண்ட, மதங்க முனிவரின் பிரார்த்தனைக்கிரங்கி பத்ரிகாசரமத்திலிருந்த பெருமாள், நான்கு வேதங்களே நான்கு குதிரைகளாகவும், சந்திர, சூரியர்களையே தேர்க்காலாகவும் கொண்ட திவ்ய திருத்தேரிலே நாங்கூரில் உள்ள இந்திர புஷ்கரணியிலே சேவை சாதித்தார். ஞான திருஷ்டியால் பூங்கோதைதான் பார்வதி என்பதை அறிந்த மஹா விஷ்ணு, யோகத்திலிருந்த சிவபெருமானுக்கு அதை உணர்த்தி அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பின்னர் சிவபெருமான் பதினோரு ருத்ர வடிவம் எடுத்தும், மஹா விஷ்ணுவும் அதே போல் பதினோரு அர்ச்சாவதாரங்கள் எடுத்து இருவரும் இனைந்து அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தனர்.  பின் அதே ரூபத்தில் இருவரும் பதினோரு திருக்கோவில்களில் அமர்ந்தருளினர் என்பது ஒரு ஐதீகம். எனவே தான் திருநாங்கூரைச் சுற்றி பதினோரு சைவ மற்றும் வைணவ திருக்கோவில்கள் அமைந்துள்ளன.  இவ்வாறு பத்ரிநாராயணர் சிவபெருமானின் இங்கு  வந்த  போது கருடன் மேல் வராமல் தேரில் வந்ததால், கருடன் சுவாமியை சுமக்க வாய்ப்புத் தரும்படி வேண்டினார். இதனை உணர்த்தும் விதமாக சுவாமியின் திருப்பாதத்திற்கு நேராக இருக்க வேண்டிய கருடன்  இங்கு கொடிமரத்திற்கு அருகில் அமர்ந்த கோலத்தில் சுவாமியின் பாதத்திற்கு கீழே உள்ளார். கருடனின் வேண்டுகோளுக்கு இரங்கி பெருமாள் 11 மூர்த்திகளாக இருந்து  தை அமாவாசைக்கு மறுநாள் கருடசேவை சாதிப்பதாக ஐதீகம்.    இத்திருநாங்கூரைச் சுற்றி ஏகாதச சைவ மற்றும் வைணவ திருத்தலங்கள் இருப்பதற்கான மற்றொரு ஐதீகமானது, ஒரு சமயம் ஆணவம் கொண்ட பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்ததால் அவரை பிரமஹத்தி தோஷம் பற்றியது. அந்த தோஷத்தைப் போக்க சிவ பெருமான் ஏகாதச ருத்ர அவதாரங்கள் எடுத்து ஏகாதச ருத்ர அசுவமேத யாகம் செய்தார், யாகத்தின் இறுதியில் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சேவை சாதித்து சிவபெருமானுக்கு அபய பிரதானம் அளித்து சாபம் நீங்க அருள் செய்தார். இத்திவ்யதேசங்களில் வந்து வணங்குவோர்களுக்கும் அதே போல கருணை புரிய வேண்டும் என்ற சிவபெருமானின் வேண்டுகோளுக்கிணங்கி ஏகாதச திவ்ய தேசங்களில் அர்ச்சாவதார மூர்த்தியாக கோவில் கொண்டருளினார் பெருமாள். சிவபெருமானும் எகாதச தலங்களில் கோவில் கொண்டருளினார். இப்பதினோரு திவ்யதேசங்களையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது தனிச் சிறப்பு. தமது பெரிய திருமொழியில் திருநாங்கூர் திருப்பதிகள் என்றே பரகாலர் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.   திருநறையூர் (நாச்சியார் கோவில்) பெருமாளால் வைணவராக சமாஸ்ரணம் செய்யப் பெற்ற, திருமங்கை மன்னன், பரகாலன், நீலன், ஆலிநாடன், கலிகன்றி, மங்கையர் கோன், மங்கை வேந்தன், கலியன் என்றெல்லாம் அழைக்கப்படும் திருமங்கை ஆழ்வார் இந்தத் திவ்ய தேசங்களில் திருக்குறையலூரிலேதான் அவதரித்தார். மணக்கோலத்தில் பெரிய பிராட்டியாரோடு வந்த பெருமாளால் திருமணங்கொல்லையில் அஷ்டாட்சர  மந்திரோபதேசமும் பெற்றார், இந்த பதினோரு திவ்யதேசங்களையும் இவர் மட்டுமே மங்களாசாசனமும் செய்துள்ளார். திருமங்கையாழ்வாரோடு பெரிதும் தொடர்புடையவை இத்திவ்ய தேசங்கள்.  இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருநாங்கூர் திவ்ய தேசங்களாவன:    []   திருநாங்கூர் திருவைகுந்த விண்ணகரம் வைகுந்தநாதர்    1. திருமணி மாடக்கோவில்,  2. திருவைகுந்த விண்ணகரம், 3. திரு அரிமேய விண்ணகரம், 4. திருத்தேவனார் தொகை,  5. திருவண்புருடோத்தமம், 6. திருச்செம்பொன் செய்கோவில், 7. திருத்தெற்றியம்பலம், 8. திருமணிக்கூடம், 9. திருக்காவளம்பாடி, 10. திருவெள்ளக்குளம்(அண்ணன் கோவில்) இத்தலத்திலே தான் திருமங்கை ஆழ்வாரின் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியார் கண்டெடுக்கப்பட்டார், 11. திருப்பார்த்தன் பள்ளி.    இவ்வாறு பொன்னி நதி பாய்ந்து வளம் சிறக்கும் திருநாங்கூர்ப்பதிகளை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வரும், இந்தத் திவ்ய தேசப் பெருமாள் அனைனவரும் கலந்து கொள்ளும் மிக சிறப்பு வாய்ந்த ஏகாதச கருட சேவை திருவிழா வெகு சிறப்பாக ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறு நாள் நடைபெறுகின்றது. "  கண்ணனைக் கடல் கடைந்தமுதங்கொண்ட  அண்ணலை அச்சுதனை அனந்தனை  மாலை   பெருமாளை பெரிய திருவடியாம் கருட வாகனத்தில் சேவித்தால் மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்", இங்கு பதினோரு பெருமாள்களையும் ஒரே நேரத்தில் கருட வாகனத்தில்  சேவிக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைக்கின்றது.   இத்திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக தை அமாவாசையன்று திருமங்கையாழ்வாருக்கு "மஞ்சள் குளி திருவிழா"  நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் திருமங்கையாழ்வார் தங்கியிருந்த போது அரங்கநாதர் முன் திருநெடுந்தாண்டகம் சேவித்தார், அதனால் மிகவும் பிரசன்னமான பெருமாள் ஆழ்வாரை ஏதாவது வரம் வேண்டுமாறு கூற, அவரும் புரட்டாசி மாதம் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் சாற்றுமறை செய்ய அருள் புரிய வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வண்ணமே அருளிச் செய்தார். அன்று முதல் நாலாயிர திவ்விய பிரபந்தமும் அத்யயன உற்சவத்தின் போது சாற்றுமறை செய்யப்படலாயிற்று. ஆழ்வாரின் இந்தப் பக்திக்காக, பெருமாள் ஆழ்வாரை சிறப்பிக்க வேண்டித் தனக்கு நடை பெறும் மஞ்சள் குளி இனி அவருக்கும் நடைபெற வேண்டும் என்று அருள் பாலித்தார்.  திருமங்கை ஆழ்வாருக்கு ஒவ்வொரு வருடமும் வட காவேரியாம் கொள்ளிடக் கரையில் மஞ்சள் குளி நடைப்பெற்றது, முதல் குளியலை நம்பெருமாளே, தானே தன் கையால் நடத்தி வைத்தார். ஆழ்வாரின் அந்திம காலத்திற்குப் பிறகு அவரது சகோதரியின் கணவர், திருவரங்கத்தை விடுத்து ஆழ்வாரின் அவதாரத் தலமான திருக்குறையலூர் வந்து தங்கினார். ஆழ்வாரின் மூர்த்திக்கு நாங்கூரை ஒட்டி ஓடும் மணிகர்ணிகை ஆற்றங்கரையில் அவர் மஞ்சள் குளியல் உற்சவத்தை 8ம் நூற்றாண்டிலே தொடங்கினார் அன்று முதல் இன்று வரை அது தொடர்கிறது.   தை அமாவாசையன்று அதிகாலை 3 மணிக்கு திருவாலி - திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார், தன் தர்மபத்தினி குமுதவல்லி நாச்சியாருடன், அவர் ஆராதித்த உபய நாச்சியார்களுடன்  சிந்தனைக்கினியான் பெருமாளும், பல்லக்கில் புறப்பாடு கண்டருளி வயல் வழியில் இறங்கி பயிரை மிதித்துக்கொண்டு முதலில் திருக்குறையலூர் ஸ்ரீ உக்ர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார். அடுத்து ஸ்ரீ வீர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார் பரகாலர். பின்னர் திருநாங்கூரில் உள்ள  திருக்காவளாம்பாடி ஸ்ரீ கோபாலனை , "காவளம்பாடி மேய கண்ணனே! களை கண் நீயே" என்று சேவிக்கின்றார்  கலிகன்றி.   உச்சிக் காலத்திற்கு முன் மணிகர்ணிகை ஆற்றை அடைகிறார். பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் இடுப்பளவு தண்ணிரில் ஆழ்வாரின் பெரிய திருமொழியில் இருந்து ஆழ்வாரின் ஆச்சாரியரான திருநறையூர் நம்பியையும், திருவரங்கத்து அழகிய மணவாளானையும் மங்களாசாசனம் செய்து ஆழ்வார் பாடிய பாசுரங்களை சேவிக்கின்றனர். இவ்விருதிவ்ய தேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை மற்றும் பீதாம்பரங்களினால் பரிவட்டம் கட்டபெற்று ஆழ்வாருக்கு மரியாதை செய்யப்படுகின்றது. பின் மஞ்சள் குளியல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆழ்வாருக்கு சஹஸ்ர தாரா மஞ்சள் குளி என்னும் திருமஞ்சனம் நடை பெறுகின்றது. சஹஸ்ர தாரை தட்டில் ஆழ்வார் ஆராதித்த “சிந்தனைக்கு இனியான்” என்னும் பெருமாளின் திருமூர்த்ததிற்கு செய்யப்படும் மஞ்சள் நீர் முதலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆகி பின் ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் ஆகின்றது. பின் திருப்பாவை சாற்று மறை நடைபெறுகின்றது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட அருள்மாரி  திருமணிமாடக்கோவில் ஸ்ரீ நாராயணப் பெருமாளை  "மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே" என்று மங்களாசாசனம் செய்கின்றார்.  திருமணிமாடக் கோவிலில் ஆழ்வார் ஆஸ்தானம் பின், நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் வாழும் திருவண்புருடோத்தமத்தில் ஸ்ரீபுருஷோத்தமனை  மங்களாசாசனம் செய்கின்றார் மான வேற் கலியன்.  திருவைகுந்த விண்ணகரத்தில் ஸ்ரீ வைகுந்த நாதனை  நாங்கூர் "வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே" என்று மங்களாசாசனம் செய்கிறார் வாள் கலியன். திருசெம்பொன்செய் கோவிலில் அல்லி மாமலராளுடன் ஸ்ரீசெம்பொன் செய் அரங்கரை "நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே கடல்நிறவண்ணன் தனனை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே" என்று மங்களாசாசனம் செய்கிறார் நம் கலியன். ஒரு கிளி மற்றொரு கிளிக்குக் கல்வி கற்பித்ததை  திருத்தெற்றியம்பலத்தில் ஸ்ரீ பள்ளி கொண்ட பெருமாளை  "திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே" என்று வணங்குகிறார் குமுதவல்லி மணாளர். பின்னர்  அரிமேய விண்ணகரத்தில் குடங்களை எடுத்தேற விட்டு கூத்தாடிய கோவை " அண்டமுறும் அலைகடலினொலி திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே" என்று அனுபவிக்கின்றார் ஆழ்வார். அரங்கனே நடத்தி வைத்த மஞ்சள் குளி, மணிகர்ணிகையாற்றில் கண்ட ஆழ்வாரும் குமுதவல்லி நாச்சியாரும், சிந்தனைக்கினியானும் திருமணிமாடக் கூடத்தில் ஆஸ்தானத்தில் இரவில் எழுந்தருளுகின்றனர். இங்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறுகின்றது.  பதினோரு கருடசேவையன்று காலை முதலில் ஆழ்வார் முன் திருப்பாவை சாற்றுமுறை செய்யப்படுகின்றது. கருடசேவைக்காக மற்ற பத்துத் திவ்யதேசத்துப் பெருமாள்களும் தோளுக்கினியானில் திருமணிமாடக்கூடத்திற்கு எழுந்தருளுகின்றனர். ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒவ்வொரு வித அலங்காரம். தன் அன்பனைக் காண அற்புத அலங்காரத்தில் வருகின்றனர் பெருமாள்கள் அனைவரும். அவர்கள் வந்த அழகு இவ்வாறு இருந்தது.  திருமணிமாடக்கூடக் கோவில் மற்றும் புஷ்கரிணிக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள  பிரம்மாண்ட  பந்தலுக்கு வேடார் திருவேங்கடம் மேய விளக்கான  திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் பட்டுப் பீதாம்பரங்கள் தொங்க எழிலாக பல்லக்கில் வந்தார். திருசெம்பொன்செய்  கோயிலினுள்ளே அல்லிமாமலராள் தன்னொடும் அஞ்சனக்குன்றம் நின்ற தொப்ப  ஹேமரங்கர் திருமேனி முழுவது செம்பொன்னாக மின்ன வந்தார் .  மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிர தன்னகரிற் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த  திருவைகுந்த விண்ணகரத்து வைகுந்த நாதர் ஆதி சேஷன் குடை பிடிக்க அழகாக பல்லக்கில் அமர்ந்து வந்தார்.  அங்கையால் அடி மூன்று நீரேற்று அயன் அலர் கொடு தொழுதேத்த கங்கை போதரக்கால் நிமிர்த்தருளிய  திருவண்புருடோத்தமத்து புருடோத்தமர்  செங்கோல் தாங்கி அன்ன நடையிட்டு செழுமையாக வந்தார்.  கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன், காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழை தடுத்த  திருஅரிமேய விண்ணகத்து குடமாடு கூத்தர்  எழிலாக கூத்தாடி வந்தார்.  இவ்வாறு மெல்ல மெல்ல எல்லா திவ்ய தேசத்துப் பெருமாள்களும் எழுந்தருளுகின்றனர் பந்தலுக்கு முதலில் சிறிதாக இருந்த பக்தர் கூட்டம் பெரிதாகிக் கொண்டே போகின்றது, ஒவ்வொரு பெருமாளாக வர வர மலர்களை நாடி வண்டுகள் செல்வது போல பக்தர்களின் கூட்டம் அப்பெருமாளைச் சேவிக்க நகர்ந்து செல்கின்றனர். புகைப்படம் எடுப்பவர் சிலர், சலனப் படம் எடுப்பவர் சிலர், பாசுரம் சேவிப்போர் சிலர், பெருமாளை கண்ணாரக் கண்டு சேவிப்போர் பலர் என்று தமிழகத்தின் அனைத்து பிரதேசங்களிலிருந்து வந்த பக்தர்கள் பந்தலில் குழுமுகின்றனர். சுமார் பன்னிரண்டு மணியளவில் அனைத்து பெருமாள்களும் வந்து சேர அவர்களை மங்களாசாசனம் செய்ய மணவாள  மாமுனிகளுடன் திருமங்கையாழ்வார்  எழுந்தருளுகின்றார்.  மங்களாசாசனம் துவங்குகின்றது ஒவ்வொரு பெருமாளாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கும் போது அப்பெருமாளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார் அத்திவ்ய தேசத்து பாசுரத்தின் முதல் பாடலை பக்தர்கள் அனைவரும் சேவிக்கின்றனர். பின் ஆழ்வார் பெருமாளை வலம் வருகின்றார், ஆழ்வாருக்கு அந்தந்த திவ்ய தேசங்களிலிருந்து வந்த பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்படுகின்றது. பதினோரு திவ்ய தேசப் பெருமாள்களின் மங்களாசாசனம் நிறைவுற்றதும்  மணவாள மாமுனிகள்  எழுந்தருளுகின்றார்.   அவர் தம் ஆச்சார்யராம் திருமங்கையாழ்வாரை தாம் திருமங்கையாழ்வாரின் வடிவழகிலீடுபட்டு அருளிய வடிவழகு சூர்ணிகையும் மற்றும்  வேலணைத்தமார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை  மாலுரைக்கத்தாழ்த்த வலச்செவியும்,  தாளிணைத் தண்டையும், தார்க்கலியன் நன்முகமும்  கண்டு களிக்குமென்கண்    என்று மற்ற தனியன்களாலும் மங்களாசாசனம் செய்கின்றார். அப்போது பக்தர்களும் அத்தனியன்களை உடன்  சேவிக்கின்றனர். பின் அனைத்து பெருமாள்களும் மணிமாடக்கோவிலின் உள்ளே எழுந்தருளுகின்றனர். மாலை 4 மணி அளவில் பதினொரு திவ்ய தேசத்து எம்பெருமான்களுக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் ஏக காலத்தில் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. திருமங்கையாழ்வாரின் சிறப்பு ததியாரதனை (அன்ன தானம்) என்பதால் அனைத்துத் திவ்ய தேசங்களிலும் ததியாராதானை சிறப்பாக நடைபெறுகின்றது. பதினோரு கருட சேவைக்குச் செல்பவர்கள் உணவைப் பற்றி கவலைப்படத்தேவையில்லை. மாலை 6 மணியளவில் திருமஞ்சனம் முடிந்துப் பெருமாள்கள் அனைவரும் கருட வாகனத்திலும் குமுதவல்லி நாச்சியாருடன் ஆழ்வார் அன்ன  வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். பின்னர் அலங்காரம் துவங்குகின்றது. மாலைகள் வர ஆரம்பிக்கின்றன. மாலைகள் மேல் மாலைகள் பெருமாள்களின் திருத்தோள்களில் அமர்கின்றன, நடு நடுவே பட்டு பீதாம்பரங்கள் வருகின்றன அவையும் பெருமாள்களுக்கு சார்த்தப்படுகின்றன. பதினொரு கருட சேவையைக் காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது, கூட்டம் அலை மோதுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். அலை அலையாக பக்தர்கள் ஒவ்வொரு பெருமாளாக சென்று சேவித்து புறப்பாட்டிற்காகக் காத்து நிற்கின்றனர். அன்று நள்ளிரவு பிரம்பு நாற்காலியில் மணவாள மாமுனிகள் முன் செல்ல, அன்ன  வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் குமுத வல்லித் தாயாரும் தொடர, ஏகாதச பெருமாள்களும் எம்பெருமானை எப்போதும், எல்லாக் காலத்திலும் தாங்கும் பேறு பெற்ற பெரிய திருவடியாம், வேத சொரூபன் கருட வாகனத்தில் எழுந்தருளிச் சேவை சாதிக்க திருவீதிப் புறப்பாடு நடைபெறுகின்றது. பதினோரு பெருமாள்களும் தெய்வப்புள்ளேறி ஒரே சமயத்தில் திருநாங்கூரின் நான்கு மாட வீதிகளையும் சுற்றி வரும் அந்த அழகைக் காணக் கண் கோடி வேண்டும். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் மட்டுமே அத்தெய்வீக அழகைக் காணும் பேறு நமக்குக் கிட்டும். புறப்பாடு நிறைவு பெற அதிகாலை ஆகி விடும்.  []     மறு நாள் காலை ஆழ்வாருக்கு திருமஞ்சனம் திருப்பாவை சாற்றுமுறை நடைபெறுகின்றது. மாலை திருநாங்கூரிலிருந்து புறப்பட்டு, திருவெள்ளக்குளத்து ஸ்ரீஅண்ணன் பெருமாளை இடர் களைய சரணம் புகுகிறார், பிறகு வரிவண்டு தேதென என்று இசைபாடும் அழகை திருத்தேவனார் தொகையில் ஸ்ரீமாதவனை அனுபவித்து மங்களாசாசனம் செய்கிறார் நீலன். பிறகு திருவாலி எழுந்தருளி ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை மங்களாசாசனம் செய்கின்றார் ஆழ்வார். திருநகரியை அடையும் போது பெரிய திருவடியில் வயலாலி மணவாளன் இராஜகோபுரத்தின் முன்னே ஆழ்வாரை எதிர் கொள்ள காத்திருக்கின்றார். பின் ஆழ்வார் அங்கு அடைந்தவுடன் , பெருமாளும் ஆழ்வாரும் திருக்கோவிலில் செல்வதுடன் திருநாங்கூர் பதினோரு கருட சேவை இனிதே நிறைவு பெறுகின்றது. அப்போது     கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே  பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை  வற்றா நீர் வயல் சூழ் வயலாலி அம்மானைப்  பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேன். ( பெ.தி 8-9-8)    பொருள்:  கற்றுணர்ந்த விவேகிகள் இதன் தொடர்பே நமக்கு வேண்டாம் என்று வெறுத்து ஒழிக்கும்படியான சம்சாரமாகிய பெருங்கடலையே இனிமையாகப் பற்றி இங்கு அடியேன் வந்து பல பிறப்பும் பிறந்தேன். இப்படிப் பிறந்து வருமளவில், வற்றாத நீர்வளமுடைய வயல்களால் சூழப்பட்ட வயலாளி என்று திருநாமம் பெற்ற திருவாலியில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானைப் பெற்றேன். அவரைப் பெற்றதால் மறுபிறவி இல்லாமை பெற்றேன்.  என்ற பாசுர சாற்று மறையுடன் இந்த தெய்வீக விழா இனிதே நிறைவடைகின்றது. அடுத்த நம்மாழ்வாரின் தீந்தமிழைப் பருக நவதிருப்பதிகளின் பெருமாள்கள் வரும் ஒன்பது கருட சேவையை சேவிக்கலாம் அன்பர்களே.                                                         34. ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை []   நம்மாழ்வார் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினனாகிய மாறன் சடகோபன் திருக்குருகூராகிய ஆழ்வார்திருநகரியில் காரியாருக்குப் புதல்வராய் தோன்றி கருவிலேயே திருவுடையவராய் திருப்புளியினடியில் தவமிருந்து மாண்புடைய மதுரகவியாழ்வாருக்குத் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழிகளைத் திருவாய்மொழிந்தருளி அவாவற்று வீடுபெற்ற பின்பு மதுரகவியாழ்வாரால் கோயில் கொண்டருளப்பெற்று ஆண்டு தோறும்  உண்டோ வைகாசி விசாகத்துக் கொப்பொருநாள்  உண்டோ சடகோபர்க் கொப்பொருவர் ? உண்டோ  திருவாய்மொழிக்கொப்பு ? தென்குருகைக்குண்டோ  ஒருபார் தனிலொக்குமூர்? (உ.ர 15)  என்றபடி,  திருவாய்மொழி அருளிய  சுவாமி  நம்மாழ்வார் திருவைகாசித் திருநட்சத்திரத்தில் ஆழ்வார் திருநகரியில்  பத்து நாள் உற்சவம் கண்டருளுகிறார். இந்த உற்சவத்தின் ஐந்தாம் திருவிழாவில் உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் என்றிருக்கும் இவரை விடமாட்டாதே தாங்களே அனுபவிக்க ஆசைகொண்டு தன்பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றின் இருகரையில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான்கள், ஆழ்வாருடைய அருளிச் செயல்களில் முதலாவதான திருவிருத்தத்தில் “மெய்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்கிற பாசுரத்தைக் கேட்டும் அவாவுடன் ஆழ்வாரைக் கண்டு அருள் புரிய ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளி காலையில் ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்று, இரவில் கருடாரூடராய் நம்மாழ்வாருக்குச்  சேவை சாதித்து,  திருவீதி எழுந்தருளி திருவந்திக்காப்புக்குப் பிறகு திரும்பவும் பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்று விடைபெற்று செல்கின்றனர்.   முதலில் நம்மாழ்வாரின் சிறப்புகளைக் காண்போமா? காரியாருக்கும் உடைய நங்கையாருக்கும் திருமகவாக வைகாசித் திங்கள், விசாக நட்சத்திரம் சதுர்த்தசி கூடிய நன்னாளில் ஆழ்வார் திருநகரி என்று  இன்று அழைக்கப்படும் திருக்குருகூரில் திருவவதாரம் செய்தார் ஆழ்வார். திருக்குறுங்குடி நம்பியே  நம்மாழ்வாராக அவதாரம் செய்ததாக ஐதீகம்.  திருமாலது அம்சமும் அவரது கௌஸ்துபத்தின் அம்சமும், விஷ்வக்ஸேனரது அம்சமும் பொருந்தியவர் ஆவார் இவர், பிறந்த குழந்தையைப் போலல்லாது உலக இயற்கைக்கு மாறாக அழுதல், பாலுண்ணல் முதலிய செயல்கள் இல்லாமல் இருந்தார். கருப்பையில் அறியாமை தீண்டாத கருவைச் சடமென்ற வாயு தீண்டி அறியாமைக்குள்ளாக்கி அழுதல், அரற்றுதல் முதலிய செய்கைகளை தூண்டுகின்றது என்பர். அந்த சடம் என்ற வாயுவை ஹும் என்று ஒறுத்ததால் ஆழ்வார் ’சடகோபர்’ என்னும் திருநாமம் பெற்றார்.  கழிமின் தொண்டீர்காள்! கழித்து  தொழுமின் அவனைத் தொழுதால்  வழிநின்ற வில்விணை மாள்வித்து  அழிவின்றி யாக்கம் தருமே. (திரு 1-6-8)  பொருள்: அடியவர்களே! உலகப்பற்றினை நீக்குங்கள்; நீக்கி  இறைவனை வணங்குங்கள்; அவனை வணங்கினால்.  தொடர்ந்து வருகின்ற  கொடிய வினைகளை எல்லாம் நீங்கச்செய்து , பின் மோட்ச உலகில் செய்யப்படும் தொண்டாகிய  செல்வத்தினை அழிவில்லாதபடி கொடுப்பான்.     என்று சரணாகதித் தத்துவத்தை அருளிய காரி மாறப் பிரான் நான் மறைகளுக்கொப்பாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களைத் திருவாய் மலர்ந்தருளினார். அதைத்  தம் சீடர் மதுரகவியாழ்வாருக்கும் உபதேசித்தருளினார். திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களும் அந்தாதியாக அமைத்துப் பாடியுள்ளார்.  ஆடி ஆடி அகங்கரைந்து இசை  பாடிப் பாடிகண்ணீர் மல்கி எங்கும்  நாடி நாடி நரசிங்கா! என்று  வாடி வாடும் இவ்வாணுதலே ( திரு  2-4-1)    பொருள்: ஒளி பொருந்திய நெற்றியுடைய இவள், நின்ற இடத்தில் நில்லாமல் பல இடங்களில் உலாவி, மனமும் கரைந்து, இசையோடு பல காலம் பாடிக்கொண்டு, கண்ணில் நீர் பெருக, எல்லா இடங்களிலும்  தேடித்தேடி, “நரசிங்கனே”! என்று மிகவும் வாடுகின்றாள்  என்று தன்னையே பராங்குச நாயகியாகப் பாவித்து தாய்ப்பாசுரம் பாடினார்.  புயல் கருநிறத்தன், அடலாழியம்மான், உருளும் சகடம் உதைத்த பெருமானார், கோலக் கூத்தன், தேனும் பாலும் கன்னலும் அமுதுமொத்த பிரான், அற்புதன், நாராயணன், அரி வாமனன் மாய கூத்தன், கொண்டல் வண்ணன்,  திருஅமர் மார்வன் என்றெல்லாம் பெருமாளை பாடிப்பரவிய நம்மாழ்வார் அமர்ந்திருந்த புளிய மரத்தடிக்கே பெருமாள் பெரிய பிராட்டியுடன், வினதைச் சிறுவன் மேலாப்பின் மேலே இருந்து சேவை சாதித்தார். மேலும் பல திவ்ய தேசங்களில் அர்ச்சையாக கோயில் கொண்டவாரும் காட்சி தந்தருளினார். பெருமாளின் அருள் மழையில் நனைந்த ஆழ்வார் அங்கிருந்தபடியே  பெரு மகிழ்ச்சியின் போக்கு வீடாகவே நான்கு வேதங்களுக்கொப்பாக நான்கு பிரபந்தங்களை திருவாய் மலர்ந்தருளினார்.   குன்றமேந்தி குளிர் மழை காத்தவன்  அன்று ஞாலமளந்த பிரான் பரன்  சென்று சேர் திருவேங்கட மாமலை  ஒன்றுமே தொழ நம்வினையோயுமே. (திரு 3-3-8)   பொருள்: எம்பெருமான் கோவர்த்தனமென்னும்  மலையை கொற்றக்குடையாக தூக்கி குளிர்ந்த மழையிலிருந்து பசுக்களையும் ஆயர்களையும் காத்தவன்; அக்காலத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன்; எல்லாருக்கும் மேலானவன்; இவ்வாறான அப்பெருமான் தங்கியிருக்கின்ற திருவேங்கடம் என்னும் மலை ஒன்றையுமே வணங்க, நம்முடைய வினைகள் நீங்கும்  - என்று பெருமாளின் பெருமையைப் பாடிப்பரவிய ஒப்புயர்வற்ற பராங்குசர் எம்பெருமானது திருவடிகளாகவே கருதப்படுவதால் திருக்கோயில்களில் திருமாலின் பாதுகைகள்  ஸ்ரீசடகோபம்’  என்றோ ஸ்ரீசடாரி’  என்று வடமொழியில் வழங்கப்படுகின்றது. திருமால் ஆலயங்களில் தீர்த்த பிரசாதம் வழங்கிய பின் ஜாதி மத பேதமில்லாமல் அனைவருக்கும் சடகோபம் சார்த்தப்படுகின்றது. துளசி பிரசாதம் வழங்கப்படுகின்றது.  பிறந்தவுடன் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் பெற்றோர் இவருக்கு “மாறன்” என்று  பெயரிட்டு அழைத்தனர்.  திருக்குருகூரில் கோயில் கொண்டுள்ள பொலிந்து நின்ற பிரான் மாறனார்க்குப் பரிசாக மகிழ மலர் மாலையணிவித்தது குறித்து ஆழ்வாருக்கு ’வகுளாபரணர்’ என்னும் திருநாமம் ஏற்பட்டது. பிற மதங்களாகிய யானைகளுக்கு சடகோபரின் நூலில் காணும் கொள்கைகள் மாவெட்டி போன்றுள்ளதால் ஆழ்வார் ’பராங்குசர்’ என்றழைக்கப்பட்டார்.   ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந்நோய்க்கும் ஈதே மருந்து  ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமினுன்னித்தே.   என்று நம்முடைய எல்லா வினைகளுக்கும் மருந்து அக்கண்ணன் நாமமே என்று அறுதியிட்டு கூறுகின்றார் நம்மாழ்வார். கவியரசரான கம்பர் தமது இராம காதையைத் திருவரங்கத்தில் நம் பெருமாள் முன்பு அரங்கேற்றப் புக, " நம் சடகோபனைப் பாடினையோ?" என்று பெயர் பெற்று இப்பெயரையே புகழ் பெற்ற பெயராக கொண்டுள்ளார்.  நம்மாழ்வாரை அவயவி என்று உடலாகவும், மற்ற ஆழ்வார்களை அவயங்கள் என்று கூறுகளாகவும் கருவது வைணவ மரபு. இந்த உருவத்தில் பூதத்தாழ்வார் தலையாகவும், பொய்கையாழ்வார் மற்றும் பேயாழ்வார் கண்களாகவும், பெரியாழ்வார் முகமாகவும், திருமழிசையாழ்வார் கழுத்தாகவும், குலசேகரப் பெருமாள் மற்றும் திருப்பாணாழ்வார் கைகளாகவும், தொண்டரடிப்பொடியாழ்வார் மார்பாகவும், திருமங்கையாழ்வார் கொழ்ப்பூழாகவும், மதுரகவியாழ்வார் பாதம் என்பதும் ஐதீகம். [] ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான்  நவதிருப்பதிகள் அனைத்தும் நெல்லைச்சீமையில் தாமிரபரணி ஆற்றின் இரு கரையிலும் அமைந்துள்ளன.  வைகுந்தநாத விஜயாசன பூமிபால தேவேச பங்கஜவிலோசன சோரநாட்ய நிக்ஷேபவித்த மகராய கர்ணபசௌ நாதம் நமாமி வகுலாபரணேன சார்த்தம் என்று  மணவாள மாமுனிகள்  நவதிருப்பதி பெருமாள்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இந்த ஒன்பது திவ்ய தேசங்களும்  நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றவை.   ஸ்ரீவைகுண்டம், வரகுணமங்கை, திருப்பெருங்குடிப் பெருமாள்களை ஒரு  பாசுரத்தினாலும் (9.2.4), தொலைவில்லி மங்கலத்தின் இரு பெருமாள்களையும் பத்துப் பாசுரங்களாலும்  (6.5), பெருங்குளம் மாயக்கூத்தரை இரு பாசுரங்களிலும் (8.2.1 & 8.2.4), தென்திருபேரை மகரநெடுங் குழைக்காதரைப் பத்து பாசுரங்களாலும்  (7.3), திருக்கோளூர் வைத்த மாநிதியை பத்துப் பாசுரங்களாலும்  (6.7), ஆழ்வார் திருநகரி ஆதிப்பிரானை பத்துப் பாசுரங்களாலும் (4-10)  நம்மாழ்வார்  மங்களாசாசனம் செய்துள்ளார்.     இத்தலங்களுக்கு உள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால், ஆதி க்ஷேத்திரமான திருக்கூருகூரில் பெற்றோருக்கு உரிய மரியாதை தராமல் அதனால் சாபம் பெற்ற  இந்திரன் சாப விமோசனம் பெற்றான், திருக்கோளூரில் குபேரன் சாப விமோசனம் பெற்றான், திருப்பேரையில் தனது  குருவை அவமரியாதை செய்த வருணன் சாப விமோசனம் பெற்றான், ஸ்ரீவைகுண்டத்தில் தன் கொள்ளையடித்த பொருட்களில் பாதியை பெருமாளுக்கு   அர்ப்பணித்த கள்வன் சாப விமோசனம் பெற்றான், வரகுண மங்கையில் சாவித்திரி தனது கணவனின் உயிரை மீட்டாள், திருப்புளிங்குடியில் யக்ஞ சர்மா சாப விமோசனம் பெற்றான்,  தொலை வில்லி மங்கலத்தில் தராசாக இருந்த ஆணும், வில்லாக இருந்த பெண்ணும் சாப விமோசனம் பெற்றனர். இவ்வாறு  சாப விமோசனம் அளித்து பரமபதம் அருளுபவனாக பெருமாள் இந்த நவதிருப்பதிகளில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றான். நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான் சகலமும் கிருஷ்ணார்ப்பணம் என்று அவன் திருவடியைப் பற்றிப் பூரண சரணாகதி அடைவதுதான்.  வம்மின் தொண்டர்களே இனிச் சிறப்புப் பெற்ற  ஒன்பது கருட சேவையை  சேவிக்கலாம்.     []   பெருங்குளம் மாயக்கூத்தர் ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி பிரம்மோற்சவம்  சிறப்பான ஒன்றாகும். சுவாமி நம்மாழ்வார் திருவவதார தினத்தை முன்னிட்டு இந்தத் திருவிழா நடைபெறுகின்றது. திருவைகாசி மாத திருவிசாகத்தில் ஆழ்வார் திருமஞ்சனம் கண்டருளப் பத்து நாள் உற்சவம்  வைகாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் தொடங்கி விசாக நட்சத்திரத்தில்  நிறைவடைகின்றது. தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். முதல் திருநாள் காலை கொடியேற்றம், இரவு வெள்ளி இந்திர விமானம், இரண்டாம் திருநாள்  இரவு புஷ்பப் பல்லக்கு,  மூன்றாம் திருநாள் இரவு தங்கப் புன்னை மர வாகனம், நான்காம் திருநாள் இரவு தங்கத் திருப்புளி வாகனம்.  இந்த உற்சவத்தில் 5ம் நாள் உற்சவத்தில் ஒன்பது கருட சேவை காணக் கண்கொள்ள காட்சியாகும். இக்காட்சியைக் கண்டவர்கள் தேவாதி தேவர்களை விடவும் மேலான பிறப்புடையவர்களாக கருதப்படுகின்றனர். ஆறாம் திருநாள் மாலை தண்டியல் புறப்பாடு, இரவு வெள்ளி யானை வாகனம், ஏழாம் திருநாள் காலை உடையவர் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தி திருமஞ்சனம், இரவு வெள்ளி சந்திர பிரபை. எட்டாம் திருநாள் காலை அப்பன் சன்னதிக்கு எழுந்தருளி ஆழ்வார்  தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம், இரவு தங்கக்குதிரை வாகனம். ஒன்பதாம் திருநாள்  காலை கோரதம், இரவு பல்லக்கில் தாழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம். திருவைகாசி விசாகம் காலை பத்தாம் திருநாளன்று தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி, இரவு வெட்டிவேர் சப்பரம் வெள்ளி தோளுக்கினியான். பின்னர் பதினொன்றாம் நாள் ஆழ்வார் ஆஸ்தானம் எழுந்தருளுகின்றார். பின்னர் நான்கு நாட்கள் விடாயாற்று என்று சிறப்பாக நடைபெறுகின்றது.      நான்காம் திருநாள் இரவே மற்ற திருப்பதிகளில் இருந்து கருட வாகனங்கள் ஆழ்வார் திருநகரி வந்து சேர்கின்றன. இந்தத் திருவைகாசி திருவவதார திருவிழாவின் ஐந்தாம் திருநாள், ஊர் முழுவதும் ஸ்ரீவைணவர்களால் நிறைந்திருக்கின்றது. இன்னும் பல அன்பர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். சன்னிதி தெரு முழுவதும் மேலே பந்தல், தரையில் கோலங்கள் அலங்கரிக்கின்றன. அன்றைய தினம்   “மாலரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தனென்று”  ஓலமிட்ட நம்மாழ்வாரின் தீந்தமிழ்ப் பாசுரத்தை அருந்த வரும் எம்பெருமான்கள் எவர் எவர்  என்று பார்ப்போமா?  1.ஸ்ரீகள்ளபிரான் – ஸ்ரீவைகுண்டம், 2. ஸ்ரீஎம் இடர் கடிவான் – ஸ்ரீவரகுண மங்கை (நத்தம்),                                  3. ஸ்ரீகாய்சினவேந்தன் – திருப்புளிங்குடி, 4. ஸ்ரீதேவர்பிரான் – இரட்டைத் திருப்பதி, 5. ஸ்ரீசெந்தாமரைக் கண்ணன் – இரட்டைத்திருப்பதி, 6. ஸ்ரீமாயக்கூத்தன் திருக்குளந்தை (பெருங்குளம்), 7. ஸ்ரீநிகரில் முகில் வண்ணன் – தென்திருப்பேரை 8. ஸ்ரீநிக்சோபவித்தன்(வைத்தமாநிதி) – திருக்கோளுர், 9. ஸ்ரீபொலிந்து நின்ற பிரான் – ஆழ்வார் திருநகரி.    ஐந்தாம் திருநாள் காலை அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன் தன் மேல் நண்ணி நன்குறைகின்றானை ஞாலமுண்டுமிழ்ந்த மாலை மங்களாசாசனம் செய்த  நம்மாழ்வாரின்  தீந்தமிழ்ப் பாசுரங்களை செவி மடுக்க சகல அலங்காரத்துடன், பட்டுப் பீதாம்பரம் தரித்து அழகான கிரீடங்களுடன் கையில் எழிலாகக் கிளி ஏந்தியவாறு  தோளுக்கினியானில் நவதிருப்பதிகளில் கோயில் கொண்டுள்ள  எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளுகின்றனர். நல் வளஞ்சேர் பழனத் திருக்கோளுரிலிருந்து  நிக்சோபவித்தன் பெருமாளும், மதுரகவியாழ்வாரும், தேன்மொய்த்த பூம்பொழில் தண்பணை சூழ் தென் திருப்பேரையிலிருந்து நிகரில் முகில் வண்ணனும், மாடகொடி மதிள் திருக்குளந்தையிலிருந்து ஆடற்பறவையுயர்த்த வெல்போர் ஆழி வலவன் மாயக்கூத்தரும், நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல்லோங்கு செந்தாமரை வாய்க்குந் தண்பொருநல் வடகரை வண் தொலைவில்லி மங்கலம், இரட்டைத் திருப்பதியிலிருந்து  செந்தாமரைக் கண்ணரும், தேவர் பிரானும் இரண்டு பெருமாள்களாக ஆழ்வார் திருநகரி ஆலயத்தின் அருகேயுள்ள நாயக்கர் மண்டபத்தில் ஒருவர் ஒருவராக எழுந்தருளுகின்றனர்.  (ஆழ்வார் மங்களாசாசனம்  செய்த திவ்ய தேசமாக பார்க்கும் போது தொலைவில்லி மங்கலம் ஒரே திவ்ய தேசம் ஆகும், ஆனால் தாமிரபரணியின் நவதிருப்பதி என்று பார்க்கும் போது இரண்டு ஆலயங்களாக கணக்கிடப்படுகின்றது).   புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று என்று ஆழ்வார் பாடிய ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான், ஸ்ரீவரகுணமங்கை எம் இடர் கடிவான், ஸ்ரீபுளிங்குடி காய்சின வேந்தன் ஆகிய எம்பெருமான்கள் திருக்குறுங்குடி மண்டபத்தில் வந்து காத்திருக்கின்றனர்.     திருக்குருகூரின் இராமாயண மண்டபத்தில்  ஆழ்வார் பெருமாள்களை வரவேற்க சர்வ அலங்காரத்துடன்  காத்திருக்கின்றார். ஆழ்வாரின் பாசுரங்கள் மாலை அவரை சிறப்பாக அலங்கரிக்கின்றது. பக்தர்கள்  மங்களாசாசன நிகழ்ச்சி  எப்போது துவங்கும் என்று  எதிர்பார்ப்புடன் கிடைத்த இடத்தையெல்லாம்  அடைத்துக் கொண்டு ஆவலாகக் காத்து நிற்கின்றனர்.   எல்லாத் திவ்யதேச பெருமாள்களும் வந்தவுடன் மங்களாசாசனம் நிகழ்ச்சி துவங்குகின்றது. மற்ற ஆழ்வார்கள் திவ்யதேசங்களுக்குச் சென்று பெருமாளை மங்களசாசனம் செய்தனர், ஆனால் நம்மாழ்வார் திருப்புளியினடியில் அமர்ந்திருக்க பெருமாள்கள் அனைவரும் அவ்விடம் வந்து  அவருக்குச் சேவை சாதிக்க ஆழ்வார் அவர்களை மங்களாசாசனம் செய்தார். எனவே  இங்கு ஆழ்வார்திருநகரியில், ஆழிநீர் வண்ணனை அச்சுதனை, தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்! துணைமலர்க் கண்களாயிரத்தாய்! தாள்களாயிரத்தாய்!  பேர்களாயிரத்தாய் என்று பாடிய   ஆழ்வாரின் செந்தமிழ்ப் பாசுரங்களை செவி மடுக்க நவ திருப்பதி எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரி எழுந்தருளுகின்றனர். ஆழ்வார் அங்கேயே இருந்து அவர்களை வரவேற்கின்றார், நம்மாழ்வார் தங்கத் தோளுக்கினியானில் மங்களாசாசனத்திற்கு  திருப்பந்தலில் எழுந்தருளுகின்றார், தென்குறுங்குடி நம்பியே   நம்மாழ்வாராக அவதாரம் செய்ததாக ஐதீகம்.  அந்த திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் அடியேன் கருடசேவையை தரிசித்த வருடம்   இந்த மங்களாசான உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.  வேளுக்குடி ஸ்ரீ உ.வே. க்ருஷ்ணன் ஸ்வாமிகள் பாசுரங்களைச் சேவித்து அரிய விளக்கங்களையும் அளித்தார். ஆழ்வாரின் பக்தியில் ஒரு துளியாவது நமக்கு ஏற்படவேண்டுமென்றுதான் நாம் இந்த உற்சவங்களில் நாம் கலந்து கொள்கின்றோம் என்று அவர் அழகாக கூறினார். ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் போது  ஒவ்வொரு பெருமாளின் பரிவட்டமும் மாலையும், சடாரியும் அவருக்குச்  சார்த்தப்படுகின்றது பின்னர் கற்பூர ஆரத்தி  காட்டப்படுகின்றது. அப்போது குல்லா அணிந்த அரையர் சுவாமிகள் ஆழ்வாரின் பாசுரங்களை தாளத்துடன் சேவிக்கின்றனர். ஆழ்வாரின் திருவாசியில் நவதிருப்பதி எம்பெருமான்களையும் நாம் சேவிக்கின்றோம். ஆழ்வாரின் அலங்காரத்தில் அவரது திருக்கூர் திவ்யதேசத்தின் பாசுரங்களின் வெள்ளி மாலை அலங்கரிக்கின்றது.   ஆழ்வாரின் செந்தமிழ் பாசுரத்தை முதலில் புளிங்குடி, வரகுணமங்கை, திருவைகுண்டம் ஆகிய  மூன்று திவ்யதேசப் பெருமாள்களும் செவி மடுக்கின்றனர். அந்தப் பாசுரம் இதோ.   புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று  தெளிந்த வென் சிந்தையகங் கழியாதே என்னையாள்வாய்! எனக்கருளி  நளிர்ந்த சீருலக மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப  பளிங்குநீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீகாண வாராயே   (திரு. 9.2.4)  பொருள்: பெருமானே! நீ திருப்புளிங்குடியிலே உன்பள்ளி கொண்ட அழகைக் காட்டினாய்; வரகுணமங்கை திருப்பதியில் இருந்த இருப்பைக் காட்டினாய்; ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற கோலத்தில் சேவை சாதித்து அருள்கின்றாய். இவ்வாறு மூன்று நிலைகளிலும் தெளிவு பெற்ற என் உள்ளத்துள் நிலைத்து நின்று என்னை ஆள்கின்றாய். நினைத்தவர்கள் மனம் குளிரும்படியாக உன் சீல குணத்தாலே மூவுலகத்தில் உள்ளவர்கள் ஆச்சரியப்படும்படி நீ வரவேண்டும். நாங்கள் உன் குணங்களில் மூழ்கி ஆனந்தப்பட்டுக் கூத்தாடுவோம், பளிங்கு போன்ற தெளிந்த தண்ணீரை முகந்து வரும் மேகத்திலே பவளக் கொடி படர்வதைப் போலக் கனிந்த உன் திருவாய் சிவந்து  அழகுடன் விளங்க நீ வருவதை நாங்கள் கண்டு மகிழ வேண்டும் என் எதிரே உன் அழகு காண நீ வர வேண்டும்.     ஆச்சாரியாரின் அழகிய விளக்கம்:  நம்மாழ்வார் தனது பாசுரத்தில், "புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று'' என்று மங்களாசாசனம் செய்துள்ளதை . "பசியாக இருக்கும் ஒருவர் சமையல் முடியும் வரையில், படுத்திருந்து காத்திருப்பார். பசி அதிகமாகும் போது, ஆர்வத்தில் எழுந்து அமர்ந்து கொள்வார். சமையல் முடிய இன்னும் தாமதமானால் பொறுமையிழந்து எழுந்து நிற்பார். இதைப்போலவே, நம்மாழ்வாருக்கு அருள வந்த பெருமாள், அவர் பக்தியில் உயர் நிலை அடையும் வரையில் முதலில் புளியங்குடியில் கிடந்தும் (படுத்த கோலம்), பின் வரகுணமங்கையில் அமர்ந்தும், இத்தலத்தில் நின்றும் காட்சி தருகிறார்,'' என வைணவ ஆச்சாரியாரான அழகிய மணவாளப்பெருமான், நம்மாழ்வாரின் இந்த  பாசுரத்திற்கு அற்புதமான விளக்கம் சொல்லியுள்ளார். ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற கோல வைகுண்டநாதர்-கள்ளபிரானையும், ஸ்ரீவரகுணமங்கை (நத்தம்) அமர்ந்த கோல விஜயாசனர்-எம்இடர்கடிவானையும், “ஸ்ரீபுளியங்குடி சயனக்கோல பூமிபாலகரையும்-காய்சினவேந்தரையும், “புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று” என்று   ஒரே பாசுரத்தில் வகுளாபரணர்  மங்களாசாசனம் செய்துள்ளார். தெளிந்தவென் சிந்தை என்பதன் மூலம் பராங்குசர் நம் மனதில் உள்ள குழப்பத்தையெல்லாம் எம்பெருமான் நீக்கியருள நாம் கண்ணில் ஆனந்த கண்ணீர் சொரிய நிற்கும் காட்சியை  பவளச்செங்கனிவாய் சிவப்பக் காண வாராய் என்று கூப்பிட, ஆழ்வாரின் சொல்லை நிரூபிப்பது போல, பக்தனுக்காகப் பகவான் வருவதற்கு இந்த உற்சவமே ஒரு சாட்சி. பின்னர் ஆழ்வார் மூன்று பெருமாள்களையும் வலம் வந்து வணங்கியபின், ஆழ்வாரின் தீந்தமிழ்ப் பாடலைச் செவி மடுத்த மகிழ்ச்சியில் பெருமாள்கள் மூவரும் ஒவ்வொருவராக  ஆனந்தமாக ஆடி ஆடித்  திருக்கோவிலுக்குள் எழுந்தருளுகின்றனர்.   புளிங்குடி எம்பெருமான் மேல் நம்மாழ்வார் மேலே சேவித்த பாடலுடன்  பத்துப் பாசுரங்கள்   மங்களாசாசனம் செய்துள்ளார் அவற்றுள் இன்னுமொரு  பாசுரம்    பண்டைநாளாலே நின்திருவருளும் பங்கயத்தாள்திருவருளும் கொண்டு நின்கோயில் சீய்த்துப்பல்படிகால் குடிகுடிவழிவந்தாட் செய்யும் தொண்டரோர்க்கருளிச் சோதிவாய்திறந்து உன்தாமரைக்கண்களால் நோக்காய் தெண்திரைப்பொருநல்தண்பணைசூழ்ந்த திருப்புளிங்குடிக்கிடந்தானே.      ( திரு 9-2-1)    பொருள்: பெருமாளே! மிகப்பழைய காலம் முதலாகவே நாங்கள் உன்னுடைய திருவருளையும், அதற்கு காரணமாகத் தாமரைப் பூவில் அமர்ந்துள்ள பெரிய பிராட்டியார் திருவருளையும் பெற்றிருக்கின்றோம். ஆகவே உனது திருக்கோவிலில்  பலவிதமான கைங்கரியங்களச் செய்யும் பாக்கியத்தை வம்ச பரம்பரையாக பெற்று உனக்கு ஆட்பட்டுள்ளோம். அதிலும் திருஅலகிடுதல் முதலிய சிறப்பான கைங்கரியம் அல்லவா வாய்க்கப்பெற்றோம். அப்படிப்பட்ட உன் அடியார்களான எங்களை உன் தாமரைக் கண்களால்  குளிரப்பார்த்து உன் சோதி வாய் திறந்து பேசி அருள் செய்ய வேண்டும். தெளிந்த அலைகள் தவழும் தாமிரபரணி  ஆற்றங்கரையில் வயல் சூழப்பட்ட திருப்புளிங்குடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளவனே! உன் திருக்கண் நோக்கு என்மேல் ஏற்பட அருள் செய்ய வேண்டும்.   ஸ்ரீவைகுண்டம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்த பெருமாளையும்,   உறங்குவான் போல் யோகு செய்த புளிங்குடிப் பெருமானையும்,  கூந்தல் மலர் மங்கைக்கும்  மண்மடைந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் வரகுணமங்கை பெருமாளையும்  ஆழ்வார் மங்களாசாசனம் செய்த பின் அவர்கள் அந்த ஆனந்தத்தில் கோவிலுக்குள் ஆடிக்கொண்டே எழுந்தருளுகின்றனர். []    தொலைவில்லி மங்கலம் அரவிந்தலோசனர் கருடசேவை  பின்னர் ஆழ்வாருக்குச்  சேவை சாதிக்க இரண்டு பெருமாள்கள் வருகின்றனர். இவர்கள் நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல்லோங்கு செந்தாமரை வாய்க்குந் தண்பொருநல் வடகரை வண் தொலைவில்லி மங்கலம் என்னும்  இரட்டைத் திருப்பதியின் ஸ்ரீனிவாசன் – தேவர்பிரான், அரவிந்த லோசனர் -  தாமரைக் கண்ணன்  பெருமாள்கள் ஆவர். முன்னரே கூறியது போல திவ்ய தேசம் என்று பார்த்தால் தொலைவில்லி மங்கலம் ஒரே திவ்யதேசம். நவதிருப்பதி என்று பார்க்கும் போது இரண்டு திருப்பதிகள். சிந்தையாலும் சொல்லாலும்  செய்கையினாலும் தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த வண்குருகூர்ச் சடகோபன் தன்னிலையிழந்து, ஆண் தன்மையினை விட்டு, நாயிகா பாவத்தில் பராங்குச நாயகியாய் காதலனை கூட விரும்பும் காதலி நிலையில் உள்ளதை  தோழி தாய்மாரை நோக்கிக் கூறும்  பாசுரத்தாலே ஆழ்வார் எம்பெருமானிடத்து ஈடுபட்டமையை பேசும் பாவனையில்   இந்தத் திவ்ய தேசத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்.   திருந்துவேதமும்வேள்வியும் திருமாமகளிரும்தாம் மலிந்  திருந்துவாழ்பொருநல் வடகரைவண்தொலைவில்லிமங்கலம்  கருந்தடங்கண்ணிகைதொழுத அந்நாள்தொடங்கிஇந்நாள்தொறும்  இருந்திருந்தஅரவிந்தலோசன! என்றென்றே நைந்திரங்குமே. ( திரு 6.5.8)    பொருள்: தாய்மார்களே! தாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ளது வளம் பொருந்திய திருத்தொலைவில்லி மங்கலம் என்னும் திருத்தலம். இங்கு திருந்திய வேதங்களும் யாகங்களும் செல்வமும் நிறைந்துள்ளன; பிராமணர்கள் நிறைந்து வாழ்கின்றனர்; அத்திருத்தலத்தைக் கரிய  விசாலமான கருணை பொங்கும் கண்களையுடைய இவள் கைகூப்பி வணங்குகின்றாள்; அந்நாள் தொடங்கி  இந்நாள் வரையில்  தாமரைக் கண்ணா! என்று என்றே உருக்குலைந்து மனமும் கரைகின்றாள். இப்பாசுரத்தில் பெருமாள் அரவிந்த லோசனர் – தாமரை கண்ணன், தாயார் கருந்தடங்கண்ணி மட்டுமல்லாமல்  தொலைவில்லிமங்கல திருப்பதியையும்   ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.   குமுறுமோசைவிழவொலித் தொலைவில்லிமங்கலம்கொண்டுபுக்கு  அமுதமென்மொழியாளை நீருமக்குஆசையின்றியகற்றினீர்  திமிர்கொண்டாலொத்துநிற்கும் மற்றிவள் தேவதேவபிரானென்றே  நிமியும்வாயொடுகண்கள்நீர்மல்க நெக்கொசிந்துகரையுமே ( திரு 6.5.2) பொருள்: தாய்மார்களே! பல்வகையான ஓசைகள் முழங்கத் திருவிழாக்காணும் தலம் திருத்தொலைவிலி மங்கலம் ஆகும், அமுதமாய் இனிய வார்த்தை  பேசும் இப்பேதையை  அத்திருத்தலத்திற்குக் கொண்டு புக்கு அகன்று போகும்படி செய்து விட்டாயிற்று; இனி உமக்கு அவளைத் திரும்பப்பெற ஆசை இருந்து ஒரு பயனும் இல்லை. இவளோ அனுபவிக்க வேண்டிய விஷயத்தை  அனுபவிக்கவும் மாட்டாதே செயலற்ற  நிலையில் நிற்கின்றாள். இவள் இதற்கு மேல் பேசினால் “ தேவ  தேவ பிரான் “ என்று கூறி உதடு நெளிகிற வாயுடன் கண்களின் நீர்நிரம்ப நெகிழ்ந்து கரைந்து உருகின்றாள்.    பெருமாளோ தாமரைக் கண்ணன் அந்த திருத்தாமரைகளை மலரச்செய்கின்ற சூரியன் நம்மாழ்வார், அவர்  உபதேச முத்திரையால் நமக்கு அருள் வழங்குகின்றார். அவரை சரணாகப் பற்றிக்கொள்ள அவர் நம்மை வைகுந்தம் சேர்ப்பார் என்று அருமையாக விளக்கம் அளித்தார்  வேளுக்குடி ஸ்ரீ உ.வே. க்ருஷ்ணன் ஸ்வாமிகள் அவர்கள்.  இதையே  ஆழ்வாரும் தன் பாசுரத்தில் இவ்வாறு கூறுகின்றார். சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே   தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர்ச் சடகோபன்  முந்தை ஆயிரத்துள் இவை தொலைவில்லி மங்கலத்தைச் சொன்ன  செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வர் திருமாலுக்கே. ( திரு 6.5.11)  பொருள்: வளமான திருக்குருகூரிலே உள்ளவர்களுக்குத் தலைவரானவர் ஸ்ரீசடகோபர் ஆவார். அவர்  தொலைவில்லி மங்கலம் தேவபிரானையே தந்தை தாய் என்று மனம், மெய் வாக்கு என்ற மூன்றாலும்  அடைந்தவர். அவர் அருளிய பழமையான ஆயிரம் பாசுரங்களுள், திருத்தொலைவில்லி மங்கலம் என்னும் திருத்தலத்தைப் பற்றிச் செந்தமிழால் அருளிச்செய்த இந்தப் பத்து பாசுரங்களை சேவிப்பவர்கள்  (வைகுந்தத்தில்) திருமாலுக்கு அடிமையாக சேவை  செய்வார்கள்.    முன் போலவே மாலை, பரிவட்டம்  சடாரி, கற்பூர ஆரத்தி நடைபெற்றபின் ஆழ்வாரின் பாசுரங்களை கேட்ட ஆனந்தத்தில் பெருமாள்கள் இருவரும் ஆடிக்கொண்டே திருக்கோவிலின் உள்ளே எழுந்தருளினர்.   அடுத்து மாடங்களையும் கொடிகள் கட்டிய மதிள்களையுடைய அழகிய திருக்குளந்தை மாயகூத்தர் ஆழ்வாருக்கு சேவை சாதித்தார். கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன்? கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்  பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தேன்  மாடக்கொடி மதிள் தென்குளந்தை வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்  ஆடல்பறவை உயர்த்த வெல்வோர் ஆழிவலவனை ஆதரித்தே (திரு 8.2.4)    என்று நம்மாழ்வார் தமக்கு உலக வாழ்க்கையில் வெறுப்புண்டானதை, தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி பேச்சாலே அவரை மங்களாசாசனம் செய்தார்.  பொருள்: மாடங்களையும் கொடிகள் அலங்கரிக்கும் மதில்களையுமுடைய அழகிய திருக்குளந்தை என்னும் திருத்தலத்தில் மேற்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் திருக்கோலமாய் எழுந்தருளியுள்ளான் வண்மையுடைய மாயக்கூத்தன். கருடப்பறவையைக் கொடியியிலே  உயர்த்திய போரிலே வெல்லுகின்ற திருச்சக்கரத்தை வலக்கையிலேயே  உடையவன் எம்பெருமான். அப்பிரானை விரும்பிக் கலவியின் நிமித்தம் சென்றேன்; என்னுடைய அழகிய வளையல், மனம் முதலியவற்றை என்னிடத்திலிருந்து நீங்கி ஒழிய இழந்து பலவகையான வளையல்களை அணிந்த இப்பெண்களுக்கு முன்னே நாணமும் நீங்கினேன்; இனி எதனைக் கொடுப்பேன்?  என்று தோழியரின் முன்னர் தாம் நாணம் இழந்ததைக் கூறுகின்றார் நம்மாழ்வார்.  அடுத்து வேதவொலியும் விழாவொலியும் பிள்ளைக்குழா விளையாட்டொலியும் மறாத் தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணர் வகுளாபாரணருக்குச் சேவை சாதித்தார். இவரை ஆழ்வார் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். வெள்ளைச்சுரிசங்கொடாழியேந்தித் தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற வாற்றைக்காணீர் என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்! வெள்ளச் சுகமவ வீற்றிருந்த வேதவொலியும் விழாவொலியும்  பிள்ளைக் குழா விளையாட்டொலியுமராத் திருப்பேரெயில் சேர்வன் நானே. ( தி.வா 7.3.1) பொருள்: தாய்மார்களே! தாமரைக் கண்களுடைய எம்பெருமான் உள்ளே  சுழித்த வெண்சங்கையும் சக்கரத்தையும்  தரித்தவனாய்ப் பெரிய திருவடியாகிய கருடப்பறவை மீதேறி என் நெஞ்சிற்குள்ளே உலா வருகின்றான். அவன் தன்மையை என்ன வார்த்தைகளைக் கொண்டு உங்களுக்குச் சொல்லுவேன்? பேரின்ப வெள்ளத்தையுடைய எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற வேதங்களின் ஒலியும், திருவிழாக்களின் ஒலியும், குழந்தைக் கூட்டங்கள் விளையாடுகின்ற  விளையாட்டின் ஒலியும் நீங்காமல் இருக்கின்ற திருப்பேரெயில் என்ற திருத்தலத்தை நான் அடைவேன் என்கின்றாள்.   நகரமும் நாடும் பிறவும்தேர்வேன் நாணெனக்கில்லை என்தோழிமீர்காள்  சிகரமணி நெடுமாடநீடு தென்திருபேரெயில் வீற்றிருந்த  மகரநெடுங்குழைக்காதன் மாயன் நூற்றுவரையன்று மங்கநூற்ற  நிகரில்முகில்வண்ணன் நேமியான் என் நெஞ்சங்கவர்ந்தென்னை   யூழியானே.    (தி.வா 7.3.10)    பொருள்: என்னுடைய தோழிகளே! (எம்பெருமானை) நகரங்களிலும் நாடுகளிலும் பிற இடங்களிலும் தேடுவேன்; எனக்கு நாணம் இல்லை: ஏன்? என்றால் சிகரங்களையுடைய  அழகிய நீண்ட மாடங்கள் நிலைத்திருக்கின்ற, தென்திருப்பேரையில் எழுந்தருளியிருக்கின்ற மகரநெடுங் குழைக்காதனும் மாயனும் துரியோதினாதியார்கள் அன்று அவியும் படியாக மந்திரித்த ஒப்பில்லாத முகில் வண்ணனும், சக்கரத்தண்ணலுமான பெருமான் என் மனத்தினைக் கொள்ளை கொண்டு எத்தனை ஊழிக் காலத்தை உடையான்? தென்திருப்பேரை பெருமாள் மகரநெடுங்குழைக்காதர், மகர மீன் வடிவத்தில் உள்ள நீண்ட குழை என்னும்  காதணியை அணிந்த  பெருமாள்  பராங்குச நாயகியின்  உள்ளத்தைக் கொள்ளை கொண்டான்  ஆகவே அவள்    தாய்மாரும் தோழிமாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரைக்குச் செல்வேனென்று துணிந்ததைக் கூறும் வகையில் செல்லுவன்  என்று கூறுகிறார் என்றும்,  பொதுவாக மாயம் என்றால் பொய் ஆனால் வைணவ சம்பிரதாயத்தில் மாயம் என்றால் ஆச்சரியம் என்று என்று அருமையாக விளக்கம் அளித்தார்  வேளுக்குடி ஸ்ரீ உ.வே. க்ருஷ்ணன் ஸ்வாமிகள் அவர்கள்.   அடுத்துத் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் மற்றும் மதுரகவியாழ்வார் எழுந்தருளினர் செங்கண் கருமுகிலைச்  செய்யவாய் செழுங்கற்பகத்தை ஆழ்வார் இருப்பு, வளர்ச்சி, இன்பம் இவை எல்லாம் கண்ணனென்று உணர்ந்து  திருக்கோளூரிலீடுபட்டதை, தலைவன் நகர் நோக்கி சென்ற தலைமகளைப் பற்றித் தாய் இரங்கும்  பத்து பாசுரத்தாலே மங்களாசாசனம் செய்துள்ளார். உண்ணுஞ்சோறுபருகுநீர் தின்னும்வெற்றிலையுமெல்லாம்  கண்ணன் எம்பெருமானென்றென்றே கண்கள்நீர்மல்கி  மண்ணிணுளவன் சீர் வளம்மிக்கவனூர்வினவி  திண்ணம் என்னிளமான்புகுமூர் திருக்கோளூரே.  (தி.வா 6.7.1)    பொருள்: இளமானைப் போன்ற என் மகள் தனக்கு எல்லாம் கண்ணனே என்கின்றாள். அவள் உண்கின்ற உணவும்,  குடிக்கின்ற தண்ணீரும், வாய் மெல்லுகின்ற வெற்றிலையும் ஆகிய எல்லாமே கண்ணனாகிய எம்பெருமானே  என்று  திரும்பத்திரும்பக் கூறி கண்ணீர் விட்டு உருகுகின்றாள்;  அந்த எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களையும், அவனையே தனிச்செல்வமாக பெற்ற வளம் கொண்ட அவன் ஊரையும் பற்றிக் கேட்டுக்கொண்டு செல்கின்ற என் மகள் முடிவில் புகும் ஊரே திருக்கோளூர் ஆகும். நிச்சயம் என் பெண் திருக்கோளூர் புகுந்து விடுவாள்; என்கிறார் திருத்தாயார்.    திருக்கோளூரிலே புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிய திருமண்டலத்துடன்   பெருமாள் குபேரனுக்கு  செல்வமளந்த மரக்காலை தலைக்கு வைத்து கையில் அஞ்சன மை தடவி நிதி எங்கு இருக்கின்றது என்று பார்த்துக்கொண்டிருப்பதாக ஐதீகம். நவ திருப்பதிகளில்  இரண்டு திருப்பதிகளில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிக்கின்றார் அவையாவன திருக்கோளூரும் புளிங்குடியும் ஆகும் இந்த இரு திருப்பதிகளையும் ஆழ்வார் ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். அப்பாசுரம் இதோ   கொடியார்மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்  மடியாதின்னே நீதுயில் மகிழ்ந்துதான்  அடியாரல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்  படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே (தி.வா 8-3-5)    பொருள்: கொடிகள் அலங்கரிக்கும் மாடங்களையுடைய திருக்கோளூர்  என்ற திவ்ய தேசத்திலும், திருப்புளிங்குடி என்ற திவ்ய தேசத்திலும் இப்படித் திருக்கண் வளர்ந்திருக்கின்ற பெருமாளே! இவ்வாறு பள்ளி கொண்டது பல அவதாரங்களை எடுத்து அடியார்களுடைய  துன்பத்தை நீக்கிய தளர்ச்சியோ! அல்லாமல் த்ரிவிக்ரம அவதாரத்தில் இவ்வுலகத்தை தாவி அளந்த தளர்ச்சியோ? அருளிச்செய்ய வேண்டும் என்று வினவுகின்றார் ஆழ்வார்.   வைத்த மாநிதியாம் மதுசூதனையே அலற்றி  கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன  பத்து நூற்றுள் இப்பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே  சித்தம் வைத்து  உரைப்பார் திகழ் பொன் – உலகு ஆள்வாரே. (தி.வா 6-7-11)    பொருள்: திருக்கோளூர்ப் பெருமான் சேர்த்து வைத்த சேமநிதி போன்றவன்; அந்த மதுசூதனனாகிய  எம்பெருமானைக் கொத்து கொத்தாய் மலர்கள் மலரும் சோலைகள் சூழ்ந்த திருக்குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாசுரங்களில் துதித்துள்ளார். அவற்றுள் இப்பத்து  பாசுரங்களையும் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோளூரை எண்ணி அவனை நெஞ்சில் பதித்துக் கொண்டு சொல்ல  வல்லவர்கள் உயர்ந்த பரமபதத்தை ஆள்வர். நிக்ஷோபவித்த பெருமாளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த பின் பெருமாள் மட்டும் திருக்கோவிலுக்குள்ளே எழுந்தருளுகின்றார்.  பின்னர் ஆழ்வார் திருநகரி பெருமாளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த  இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் வலிந்துவாது செய்வீர்களும் மற்றுநுந்தெய்வமுமாகி நின்றான் மலிந்து செந்நெல் கவரிவீசும் திருக்குருகூரதனுள் பொலிந்துநின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே    (தி.வா  4.10.5)   பொருள்: இலிங்க புராணத்தைக் காட்டி பேசுவோரே! சமணர்களும் பௌத்தர்களும் மற்றும் வலிந்து வாது செய்யும் வைசேடிகர்களும், நீங்கள் வணங்கும் தெய்வங்களுக்குள்ளும் உங்களுக்குள்ளும், ஆத்மாவாகத் தங்கி இருப்பவன் எம்பெருமான் ஒருவனே. நெற்கதிர் கவரி போல் வீசும் அழகு பொருந்திய திருக்குருகூரில் கல்யாண குணங்களுடன் பொலிந்து நின்ற  கோலத்துடன் சேவை சாதிப்பவன் ஆதிநாதன் ஆவான். நான் கூறும் இவற்றுள் சிறிதும் பொய்யில்லை; எனவே அவனையே வணங்கித் துதியுங்கள். அரையர் சுவாமிகள் இந்தப் பாசுரத்தை தாளத்துடன் விண்ணப்பம் செய்கின்றார்.  ஆழ்வாருக்கு பொலிந்து நின்ற பெருமான் மாலை, பரிவட்டம், சடாரி சார்த்தப்படுகின்றது. ஆனால் பெருமாள் பந்தலுக்கு எழுந்தருளுவதில்லை.  பின்னர் மதுரகவியாழ்வார் தம் குருநாதர் வகுளாபரணரை மங்களாசாசனம் செய்கின்றார்.     நம்மாழ்வாருக்கு அவர் தம் வாழ்நாளில் நிறைய பணிவிடைகள் புரிந்த மதுரகவியாழ்வார், இந்தத் திருக்கோளூர் திருத்தலத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக  விஷ்ணுநேசர் என்பவருக்கு புத்திரனாக அவதரித்தவர்.    இவர்   தமது குருநாதரான நம்மாழ்வாரை கடவுளாகக் கருதி தாம் பாடிய  “கண்ணி நுண் சிறு தாம்பினால்”  என்னும் பாசுரத்தினால் மங்களாசாசனம் செய்தார், நம்மாழ்வாரின் மாலை மதுரகவியாழ்வாருக்கு அணிவிக்கப்பட்டது.  நம்மாழ்வாரை மதுரகவி ஆழ்வார் மூன்று முறை  வலம் வந்து உள்ளே செல்ல மங்களாசாசன  உற்சவம் சிறப்பாக நிறைவேறியது.     ஆழ்வாரின் செந்தமிழ் பாசுரங்களை கேட்டு அனுபவித்த பின் பெருமாள்கள் அனைவரும் தங்களுடைய மண்டபங்களுக்கு எழுந்தருளினர். பின்னர் ஆழ்வாருக்கும் எல்லா பெருமாள்களுக்கும்  திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது. திருமஞ்சனம் நிறைவு பெற்ற பின் பெருமாளின் தீர்த்தம் அனைவருக்கும் கிட்டியது. பின்னர் எளிய அலங்காரத்தில் அனைத்து பெருமாள்களும் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். நம்மாழ்வார் அருகே அன்பர்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி, மற்றும் திருவாய்மொழியின் நவதிருப்பதி திவ்ய தேசங்களின் 100 பாசுரங்கள் சேவித்தனர்.    []   மதுரகவியாழ்வார் திருமஞ்சனத்திற்குப்பிறகு கருட வாகனத்தில் பெருமாள்களின் அலங்காரத்திற்காகத் திருக்கதவங்கள் சார்த்தப்பட்டன. பக்தர்கள் அனைவரும் பெருமாள்களுக்கும் ஆழ்வார்களுக்கும் அலங்காரம் ஆகி வெளியே எழுந்தருள கோபுரக் கதவின் மேல் விழி வைத்து  காத்துக் கொண்டிருக்கிறனர்.   நேரமாக  நேரமாக கூட்டமும் அதிகமாகிக்கொண்டே போகின்றது.    இரவு சுமார் 10 மணியளவில் மெல்ல மெல்ல திருக்கதவங்கள் திறக்க முதலில் பூரண அலங்காரத்துடன்  தங்க  ஹம்ச வாகனத்தில் நம்மாழ்வார் சேவை சாதித்து எம்பெருமான்களின் கருட சேவையை சேவிக்க ஏதுவாக வெளியே வந்து திருக்கதவத்தை நோக்கி நிற்கின்றார். பின்னர் மதுரகவியாழ்வார் பரங்கி நாற்காலியில் எழுந்தருளி திருக்கதவத்தின் இடப் பக்கம் நின்றார்.     முதலில் ஆழ்வார் திருநகரி பொலிந்து நின்ற பிரான்  ஆழ்வாருக்கு சேவை சாதிக்கின்றார். பக்தர்கள் அனைவரும் கோவிந்தா! கோவிந்தா!  என்று பரவசத்துடன் கருட வாகனத்தில் பெருமாளையும் அன்ன வாகனத்தில் ஆழ்வாரையும் சேவிக்கின்றார். பெருமாள் கோபுர வாசல் சேவை சாதிக்கும் போது மத்தாப்புக்கள் ஏற்றப்படுகின்றன. பல வர்ணங்களின் பெருமாளின் அழகு அப்படியே பக்தர்களின் மனதில் பதிவாகின்றது. பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி நடைபெறுகின்றது. இரட்டைத் திருவாசியுடன் (இரண்டு திருவாசிகளுடன் பிரம்மாண்டமாக பெருமாள்  கருட சேவையை முதல் தடவையாக சேவிக்கும் பாக்கியம்  அடியேனுக்கு இங்குக் கிட்டியது ). ஒவ்வொரு பெருமாளும் ஒவ்வொரு விதமான அழகு, அருமையான ஆபரணங்கள்,  பல  வர்ணக் கிளிகள், ஆப்பிள் மாலைகள், பிரம்மாண்ட மலர் மாலைகள், பாசுர மாலைகள், சிறப்பு பரிவட்டங்கள், கருடனுக்கும் சிறப்பாக  மலர் மாலை அலங்காரம், தாமரை மலர் மாலைகள்  என்று ஆனந்தமாக இவ்வரிசையில்  பெருமாள்கள் கோபுர வாசல் சேவை சாதிக்கின்றனர். இரண்டாவதாக திருவைகுந்தம் வைகுந்தபதியும், மூன்றாவதாக திருவரணகுணமங்கை எம் இடர் கடிவானும், நான்காவதாக திருப்புளிங்குடி காய்சின வேந்தரும், ஐந்தாவது ஆறாவதாக  திருத்தொலைவில்லி மங்கலத்தின்  செந்தாமரைக் கண்ணரும், தேவர்பிரானும், ஏழாவதாக திருக்குளந்தை மாயக்கூத்தரும், அடுத்து தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணரும் நிறைவாக திருக்கோளூர் நிக்ஷேபவித்தரும் கோபுர வாசல் சேவை சாதிக்கின்றனர். பின்னர் அனைத்து பெருமாள்களும் ஆழ்வார்களும் மாடவீதி வலம் வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் அருகில் வந்து பெருமாள்கள் அனைவரையும் அற்புதமாக சேவித்து செல்கின்றனர். மாடவீதி புறப்பாடு முடிந்து பெருமாள்கள் அனைவரும் திருக்கோவிலுக்கு எழுந்தருளும் போது அதிகாலை ஆகி விடுகின்றது. பின்னர் பெருமாள்கள் அனைவரும் தோளுக்கினியானில் எழுந்தருளுகின்றனர். ஆழ்வார் திருநகரியின் திருவைகாசி பிரம்மோற்சவத்தின் ஆறாம் திருநாள் காலை விடையாற்றி உற்சவம்.  பெருமாள்கள் அனைவரும் மீண்டுமொரு முறை சடகோபரின் தீந்தமிழ் பாசுரங்களைச் செவி மடுத்துவிட்டு விடைபெற்றுச் செல்கின்றனர். முதலில் திருக்குளந்தை மாயக்கூத்தரை   []     உபய நாச்சியார்களுடன் பெருமாள் கருட சேவை கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன்  …என்ற பாசுரத்தால் மங்களாசாசனம் செய்கின்றார். அம்மகிழ்ச்சியில் தனது திருக்கோவிலுக்கு கிளம்புகின்றார் மாயக்கூத்தர். அடுத்து திருப்புளிங்குடி காய்சினவேந்தர், திருவரகுணமங்கை எம் இடர் கடிவான், திருவைகுந்தம் கள்ளர்பிரான் ஆகிய மூன்று பெருமாள்களும் புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று பாசுரம் செவிமடுத்து ஆழ்வாருக்கு பிரியாவிடை கொடுக்கின்றனர். அடுத்து நம்மாழ்வாரிடம் மங்களாசாசனம் பெற்று  விடைபெறுபவர்கள் இரட்டைத்திருப்பதி பெருமாள்கள் ஆவர். சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே  தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர்ச் சடகோபன் -என்று திருத்தொலைவில்லி மங்கலத்தின் தேவர்பிரானையே தனது தந்தை தாய் என்று நம்மாழ்வார் கொண்டதால்  இவர்களை தானே கூடவந்து  வழியனுப்பி வைக்கின்றார் வகுளாபரணர். கிழக்கு மாட வீதியின் நாயக்கர் மண்டபம் தாண்டும் வரை இவர்களை நம்மாழ்வார் வந்து வழியனுப்பி வைக்கிறார். நவகருடசேவையின் நிறைவாக திருதென்திருப்பேரையின் நிகரில் முகில் வண்ணரும், திருக்கோளூரின்  நிக்ஷேபவித்தரும் நம்மாழ்வாரின் மங்களாசாசனம் பெற்று மீண்டும் அடுத்த வருடம் தங்களின் செந்தமிழ் பாசுரங்களை செவிமடுக்க வருகின்றோம் என்று விடைபெற்றுச் செல்கின்றனர். மதுரகவியாரும் தம் குருநாதரிடம் விடைபெற்று உடன்  செல்கின்றார். பின்னர் இந்த நவகருட சேவையின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான நம்மாழ்வாரின் புறப்பாடு மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. கோயில் மரியாதையுடன் நம்மாழ்வார் பந்தல் மண்டபத்தில் இருந்து உள் சன்னதிக்கு எழுந்தருளுகின்றார். அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும் பக்தர்களின் வெள்ளத்தில் மெல்ல மெல்ல நீந்தி நம்மாழ்வார் சன்னதி அடைய சுமார் மூன்று மணி நேரம் ஆகும். ஒவ்வொருவரும் தம் வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய உற்சவம் ஆகும். வாருங்கள் இனி ஸ்ரீவில்லிபுத்தூரின் ஐந்து கருட சேவையை சேவிக்கலாம்.                              35. ஸ்ரீவில்லிபுத்தூர் ஐந்து கருட  சேவை []   முன் ஒரு அத்தியாயத்தில் கோதை பிறந்த கோவிந்தன் வாழும் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாள், ஆண்டாள் மற்றும் கருடன் ஏக சிம்மாசனத்தில் ஓம் என்னும் பிரணவ ரூபமாகச் சேவை சாதிக்கும் அழகைச் சேவித்தோம், இனி இத்தலத்தின் ஐந்து கருட சேவையை சேவிக்கலாமா அன்பர்களே.  ஐந்து கருட சேவையில் பெரிய பெருமாள் வடபத்ரசாயி, ரெங்கமன்னார், காட்டழகர் கோவில்  சுந்தரராஜப் பெருமாள், திருவண்ணாமலை திருவேங்கடமுடையான், மற்றும் அருகில் உள்ள திவ்யதேசமான திருத்தண்கால் அப்பன் ஆகிய பெருமாள்கள் கலந்து கொள்கின்றனர்.  காட்டழகர் வைபவம்: சுதபா முனிவர் வராஹ க்ஷேத்திரத்தில் அழகர் மலையானை நினைத்துத் தவம் செய்ய அங்கே எழுந்தருளிய திருமாலிருஞ்சோலை மலையான் சுதபா முனிவரின் வேண்டுக்கோளுக்கிணங்கிப் பக்தர்கள் துயர் தீர்க்க இங்கேயே நித்யவாசம் செய்கின்றார். எனவே இத்தலம் காட்டழகர் கோவில் என்றும், காட்டழகர் சுந்தரராஜப் பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. இங்குப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகச் சேவை சாதிக்கின்றார். இக்கோவிலின் முன்புறமுள்ள நூபுர கங்கையில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டிருக்கும்.  இத்தலம் மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் செண்பகத்தோப்புப் பகுதியில் உள்ளது. இங்குச் செல்ல செண்பகத் தோப்பு பகவதிநகர் வரை சென்று பின்னர்  சுமார் 6 கி.மீ தூரம் மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும்.  ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து   சுமார் 4 கி.மீ தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தென் திருப்பதி என்னும் திருவண்ணாமலை தலம் உள்ளது. இங்குப் பெருமாள் ஸ்ரீநிவாசனாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். திருப்பதி வேங்கடவனுக்குச் செலுத்த வேண்டிய வேண்டுதல்கள், பிரார்த்தனைகளை இங்கே செலுத்துகின்றனர் பக்தர்கள்.  இனி திருத்தண்கால் திவ்யதேசத்தின் சிறப்புகளைப் பற்றிக் காணலாமா அன்பர்களே    பொங்கார் மெல்லிளங் கொங்கை பொன்னே பூப்பப்           பொரு கயல் கண்ணீரரும்பப் போந்து நின்று      செங்கால மடப்புறவம் பெடைக்குப்பேசும்           சிறு குரலுக்குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே      தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித்           தண்கோவலூர் பாடியாடக் கேட்டு      நங்காய் நங்குடிக்கிதுவோ நன்மை? என்ன           நறையூரும் பாடுவாள், நவில்கின்றாளே ( தி.நெ 17)  பொருள்: மென்மையுடைய இவள் தனங்கள் நிறமிழந்தன. கயல் மீன் போன்ற கண்கள் நீர்த்துளியைப் பெருக்கின. தாயாகிய நான் இருக்கும் இடத்தை விட்டு வந்து தரித்து நிற்கிறாள் இவள். சிவந்த கால்களையுடைய ஆண் புறாக்கள் தங்கள் அறிவழிந்து  கிடந்து தம் பெடைகளுக்குச்  சொல்லுகிற சிறிய குரலைக் கேட்டு இவள் உருகுவாள். தலைவன் முறைகெடப் பரிமாறும் படியை நினைத்து அவன் உகந்தருளிய திருத்தலங்களான திருத்தண்காவையும், திருக்குடந்தை நகரையும், திருக்கோவலூரையும் பாடிக்கூத்தாட, அவ்வொலியை நான் கேட்டு, பெண்ணே! வாய் விட்டுக் கூப்பிடுகின்ற இது நமது குலத்திற்கு ஏற்றதோ? என்று சொல்ல, திருநறையூரையும் அவ்வளவில் பாடத் தொடங்கினாள்    என்று திருமங்கையாழ்வார் தாய்ப்பாசுரமாக  மங்களாசாசனம் செய்த திருத்தங்கலில், பெருமாள் நின்ற நாராயணப் பெருமாளாக சேவை சாதிக்கின்றார். மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரனுக்கு உஷை என்ற மகள் இருந்தாள். ஒருமுறை, தன் கனவில் அழகிய ராஜகுமாரனைக் கண்டாள். தன் தோழி சித்ரலேகையிடம் அவனைப் பற்றி கூறி, ஓவியமாக வரையக் கூறினாள். வரைந்த பிறகு தான், அவ்வாலிபன், பகவான் கிருஷ்ணரின் பேரனான அநிருத்தன் என்பது தெரிய வந்தது. அவனையே திருமணம் செய்ய வேண்டுமென அடம் பிடித்தாள். சித்ரலேகை துவாரகாபுரி சென்று, அங்கு உறங்கிக் கொண்டிருந்த அநிருத்தனை கட்டிலுடன் தூக்கிக் கொண்டு, வாணனின் மாளிகைக்கு வந்தாள். விழித்து பார்த்த அநிருத்தன், தன் அருகே அழகி ஒருத்தி இருப்பதை கண்டான். நடந்ததை அறிந்து, உஷையை காந்தர்வ மணம் புரிந்து கொண்டான். இதையறிந்த வாணாசுரன் அவர்களைக் கொல்ல முயன்றான். அப்போது அசரீரி தோன்றி, “வாணா இவர்களை கொன்றால் நீயும் அழிந்து போவாய்’ என ஒலித்தது. இதைக்கேட்ட வாணன், அநிருத்தனை சிறை வைத்தான். இதையறிந்த கிருஷ்ணர், வாணாசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்து, நின்ற நாராயணப் பெருமாள் என்ற பெயரில் இங்கேயே தங்கிவிட்டார். துவாரகையில் இருந்து கிருஷ்ணனாக வந்து, பெருமாளாக இங்கு தங்கியதால் இவ்வூரை, “தென் துவாரகை’ என்பர். விரும்பும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புபவர்கள், இத்தலத்து பெருமாளை வணங்கலாம். பெருமாளுடன் அன்னநாயகி (ஸ்ரீதேவி), அம்ருதநாயகி (பூமாதேவி), அனந்தநாயகி (நீளாதேவி), ஜாம்பவதி ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஜாம்பவதியை, இத்தலத்தில் தான் பெருமாள் திருமணம் செய்து கொண்டார் என்பது ஐதீகம்.    இத்தலத்தில் உள்ள  கருடாழ்வார் சதுர் புஜராகத்  தாயைக் காத்த தனயனாக கையில் அமிர்த கலசமும்  வாசுகி நாகமும்  தாங்கி அஞ்சலி ஹஸ்தத்துடன் அமிர்த கலச கருடனாகச் சேவை சாதிக்கின்றார் தனக்கு எதிரியான பாற்கடலைக் கடைய பயன்படுத்தப்பட்ட வாசுகி பாம்பை நண்பனாக தன் கையில் ஏந்தியிருப்பதால், எலியும், பூனையுமான தம்பதிகள் இவரை வழிபட்டால், ஒற்றுமையுடன் திகழ்வர், எதிரிகளால் துன்பப்படுபவர்கள் இவரை வழிபட்டால் அவர்கள் நண்பர்களாகி விடுவார்கள் என்பது ஐதீகம்.   தமருள்ளம்தஞ்சை தலையரங்கம்தண்கால் தம்ருள்ளந்தண்பொருப்புவேலை – தமருள்ளும் மாமல்லைகோவல் மதிள்குடந்தையென்பரே ஏவல்லவெந்தைக்கிடம்.  ( இ.தி  70) பொருள்:  பக்தர்களுடைய இதயம் – தஞ்சை மாமணிக்கோயில், சிறந்ததான திருவரங்கம், திருத்தண்கால், பக்தர்கள் தியானிக்கின்ற அழகிய திருமலை, திருப்பாற்கடல், பக்தர்கள் சிந்திக்கின்ற திருக்கடல்மல்லை, திருக்கோவலூர், திருமதில்களோடு கூடிய திருக்குடந்தை ஆகிய இத்தலங்களிலெல்லாம் எதிரிகளை வெல்ல வல்லவனான எம்பெருமானுக்கு இருப்பிடமென்பர்.   என்று பூதத்தாழ்வார்  ஒரு பாசுரத்தாலும், திருமங்கையாழ்வார் நான்கு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். ஐந்து கருட சேவைக்கு முதல் நாள் மதியமே திருத்தண்கால் அப்பன் நின்ற நாராயணப்பெருமாள் தோளுக்கினியானில் புறப்படுகின்றார். சுமார் 25 கி.மீ தூரம் என்பதால் வழியில்  பல மண்டகப்படிகளைக் கண்டபடி அவர் ஸ்ரீவில்லிபுத்தூரை நோக்கி வருகின்றார்.  கருடசேவையன்று காலை சுமார் 10 மணியளவில்  பெரியாழ்வார் ஐந்து பெருமாள்களையும் வரவேற்க கிழக்கு வாயிலை அடைகின்றார். முதலில்  நெடிய 192 உயர இராஜ கோபுரத்திற்குள் வரும் பெரிய பெருமாளை  பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர்குலபதிபோல் திருப்பொலிந்த சேவடி என்சென்னியின் மேற்பொறித்தாய் மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்! என்றென்றும் உன் வாசகமே உருப்பொலிந்த நாவினேனை உனக்குரித்தாக்கினையே. (பெரி. தி 5-4-7) பொருள்: இமயமலையில் தனது மீன் கொடியை நாட்டிய பாண்டிய மரபு அரசனைப் போல, அழகு விளங்கும் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை என் தலையின் மீது அடையாளமாக நாட்டியருளியவனே! என்றும் குவாலயாபீடம் என்னும் யானையின் கொம்பை முறித்தவனே  வாசகமான திருநாமங்களைக் கூறுவதால் தழும்பேறிய நாக்கை உடைய அடியேனை உனக்கு உரிய  இடமாக்கினாய் என்ற பாசுரத்துடன் வரவேற்கின்றார். அடுத்து காட்டழகர் வருகின்றார், அவரை    சிந்துரச்  செம்பொடிபோல் திருமாலிருஞ்சோலை யெங்கும்  இந்திரகோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் மந்தரம்நாட்டி அன்றுமதுரச்கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத்தோளுடையான் கழலையில்நின் றுய்துங்கொலோ? ( நா தி 9-1)  பொருள்: திருமாலிருஞ்சோலையில் பார்த்த இடமெங்கும் பட்டுப்பூச்சிகளானவை சிவந்த சிந்தூரப்பொடி போலே மெலெழுந்து பரவிக் கிடக்கின்றன. அந்தோ! அன்று பாற்கடலில் மந்தர மலையை மத்தாக  நாட்டி கடலைக் கடந்து , மிகவும் அமுத ரசம் போன்ற பிராட்டியை எற்றுக்கொண்ட ஸ்ரீசுந்தரதோளுடையவன் சூழ்வலையில் நின்றும் பிழைப்போமோ? என்று நாச்சியார் துவாராபதி பெருமான், ஆலினிலை பெருமான் மாலிருஞ்சோலை மலைப் பெருமானை மங்களாசாசனம் செய்த பாசுரத்தால் வரவேற்கின்றார் பெரியாழ்வார்,  அவருக்கு மாலை பரிவட்டம் மரியாதை செய்யப்படுகின்றது.   அடுத்து திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் வந்தார் அவரை   சங்க மாகடல் கடைந்தான் தண்முகில்காள்! வேங்கடத்துச்  செங்கண்மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்  கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பழியப்புகுந்து ஒரு நாள்  தங்கு மேல் என்னாவி தங்குமென் றுரையீரே. (நா. திரு 10-8-7)  பொருள்: சங்குகளை உடைய பெரிய கடலைக் கடைந்தருளிய  பெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருமலையில் திரிகின்ற மேகங்களே! சிவந்த திருக்கண்களையுடைய அவ்வெம்பெருமானுடைய செவ்விய திருவடிகளின் கீழ் அடியேனுடைய விண்ணப்பம். எனது கொங்கை மேல் பூசப்பட்டுள்ள குங்குமக் குழம்பானது நன்றாக அழிந்து போகும்படி ஒரு நாளாகிலும் எம்பெருமான் வந்து கூடுவானாகில் என் உயிர் நிலை நிற்கும்- இதை அவருக்கு உரையுங்கள். என்னும்  நாச்சியார் மொழி பாசுரத்தினால் வரவேற்கின்றார் பெரியாழ்வார். அதற்கு பிறகு முதல் நாளே புறப்பட்ட திருத்தண்கால் அப்பன் வந்து சேருகின்றார்.     பேரானை  குறுங்குடியெம்  பெருமானை  திருத்தண்கா  லூரானை   கரம்பனூருத்தமனை முத்திலங்கு  காரார்திண்கடலேழும் மலையேழவ்வுலக்கேழுண்டும் ஆராதென்றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே  (பெ..தி 5-6-2)    பொருள்: திருப்பேர் நகரில் உறைபவனும், திருக்குறுங்குடியில் எழுந்தருளி அருள் பாலிப்பவனும், திருத்தண்காவில் நித்தியவாசம் செய்பவனும், திருக்கரம்பனூரில் உத்தமனாய் விளங்குபவனும். முத்துக்கள் ஒளி வீசும்  கருநிறமுள்ள ஏழு கடல்களையும், ஏழு மலைகளையும், ஏழு உலகங்களையும், பிரளய காலத்தில் அமுது செய்தும் திருப்தி அடையாதவனாயிருந்த பெருமானைத்  திருவரங்கத்தே கண்டேன்,  என்ற  பெரிய திருமொழி பாசுரத்துடன் பெரியாழ்வார் வரவேற்கின்றார்.   பின்னர் தம்பதிகளாக சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளும் ரெங்கமன்னாரும் வருகின்றனர். தன் மகளையும் மருமகனையும் வரவேற்கின்றார் ஆழ்வார். ஒவ்வொரு பெருமாளின் மங்களாசாசனம் முடிந்த பின் அவர்களின் மாலை மற்றும் பரிவட்டம் பெரியாழ்வாருக்குச் சார்த்தப்படுகின்றது.   பின்னர் கோஷ்டி தீர்த்த பிரசாதம். பின்னர் அலங்கார மண்டபத்தில்  அனைத்துப் பெருமாள்களுக்கும்  ஏககாலத்தில் திருமஞ்சனம் நடைபெறுகின்றது.    பின்னர்க் கருட வாகனத்தில் அனைத்து பெருமாள்களும், அன்ன வாகனத்தில் பெரியாழ்வாரும், ஆண்டாளும் எழுந்தருள அலங்காரம் ஆகி அனைவரும் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கின்றனர்.  இரவு கருட சேவை துவங்குகின்றது, பெரியாழ்வார் பெரிய அன்ன வாகனத்தில் எதிர் சேவை சாதித்தவாறு முன் செல்ல அவருக்குச் சேவை சாதித்தவாறு சுந்தரராஜ பெருமாள் செல்கின்றார். பின்னர் ஸ்ரீநிவாச பெருமாள், ரெங்கமன்னார், திருத்தாங்கல் அப்பன் இறுதியாக சிறிய அன்ன வாகனத்தில் ஆண்டாள் சேவை சாதிக்கக் கருட சேவை மாட வீதிகளில் நடைபெறுகின்றது. பக்தர்கள் ஆனந்தத்துடன் வந்து சேவித்துவிட்டுச் செல்கின்றனர்.  அதிகாலையில் பெருமாள்கள் அனைவரும் அலங்கார மண்டபத்திற்குத் திரும்பி வருகின்றனர்.   விடையாற்றியின் போது ஆண்டாள் சூடிக் களைந்த மாலை திருத்தங்கல் அப்பனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. திருவரங்கருக்கு சித்திரை பிரம்மோற்சவத்தின்  போது ஆண்டாள் சூடிக் களைந்த மாலை அனுப்பப்படுகின்றது. கள்ளழகருக்குச் சித்திரைத் திருவிழாவின் போது சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் மாலை அனுப்பப்படுகின்றது. திருமலையப்பனுக்கு புரட்டாசி பிரம்மோற்சவ கருட சேவையின் போது நாச்சியாரின் மாலையும், கிளியும் அனுப்பப்படுகின்றது.  பெரிய பெருமாள் வடபத்ரசாயி தினமும் ஆண்டாளின் மாலையை சார்த்தி மகிழ்கின்றார்.  ஆண்டாளின் மாலையைப் பெற ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் ஒரே திவ்யதேச பெருமாள் திருத்தங்கல் அப்பன் ஆவார். இவ்வாறு ஐந்து கருடசேவை ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பாக நடைபெறுகின்றது.    36. காஞ்சிபுரம் கருடசேவை (தொட்டாச்சாரியார் சேவை) []     வரதராஜப் பெருமாளாய், தேவாதி தேவனாய், பேரருளாரராய், அத்தி கிரி வரதராய், கஜேந்திர வரதனாய் அத்தியூரனாய், தேவப்பெருமாளாய், பிரணதாரத்திஹரனாய், ஸ்ரீசெல்வராய், ஸ்ரீ மணவாளராய், பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம் கச்சியம்பதி. இக்கச்சி வரதனைக் கஜேந்திரன் பல காலம் ஆராதித்தான் என்று ஸ்தல புராணம் கூறுகின்றது. அதனாலும் அது அஸ்திகிரி (கரிகிரி); பெருமாள் (கஜேந்திர) வரதன், என்றழைக்கப்படுகின்றார். திருக்கச்சி நம்பிகள் தேவாதிராஜனிடம் தனக்கொரு பெயர் சூட்டுமாறு பிரார்த்திக்கப் பெருமாள் அவருக்கு “கஜேந்திர தாசன் என்று பெயரிட்டாராம். இக்கச்சியம்பதியின் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது, ஏனென்றால்  தன் அன்பன் ஒருவனுக்காக கச்சி  வரதர் நடத்திய   ஒரு அற்புதம். அது என்ன என்பதைப் பார்ப்போமா?  காஞ்சிபுரத்தின் கிழக்குக் கோடியில் அமைந்துள்ள  இத்திவ்யதேசம் ஐந்து பிரகாரங்களைக் கொண்டது. மத்தியில் அனந்தசரஸ் என்கிற அழகான குளத்தில் “ஆதி அத்தி வரதர்” எழுந்தருளியுள்ளார்.  எனவே கச்சி “அத்தியூர்” எனவும் வழங்கப்படுகின்றது. பூதத்தாழ்வார் இப்பெருமாளை “அத்தியூரான்” என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.  ஆதி அத்திவரதருக்கு “அருளாளர்”, “வரதன்”, “ஹஸ்திகிரி நாதன்”, “ஹஸ்திபூஷணம்” என்ற திருநாமங்களுமுண்டு. “கரிகிரீஸா” என்கிறார் கூரத்தாழ்வார். மேலும் “தேவாதி தேவராஜன்”, “பிராணதார்த்திஹரண்”, “கரிவரதன்”, “மாணிக்கவரதன்” என்ற திருநாமங்களும் இவருக்குண்டு.    திருமங்கை ஆழ்வாருக்குத் தேவைப்பட்ட நிதி கிடைக்க உதவியருளிய  தேவராஜன் உறையும் இடமாக இத்தலம் திகழ்கிறது. இராமாநுஜர், கூரத்தாழ்வான், திருக்கச்சி நம்பிகள், வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் போன்ற சான்றோருக்கு உத்வேகம் அளித்த மூலஸ்தானம் என்பதால், இத்திருகோயில் ‘தியாக மண்டபம்’ என்றும் போற்றப்படுகிறது. புராணங்களில் திருக்கச்சி, ஹஸ்திகிரி, வேழமலை, அத்திகிரி என்னும் பலவித பெயர்களால் அழைக்கப்படுகின்றது. அத்தியூரானை சேவிக்க 24 படிகள் ஏறி அத்திகிரியை அடைய வேண்டும்.  இத்திவ்யதேசத்தை பூதத்தாழ்வார், பேயாழ்வார்,  திருமங்கையாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். வைணவத்தில் கோவில் என்றால் அது திருவரங்கம், மலை என்றால் திருமலை பெருமாள் கோவில் என்றால் திருக்கச்சி என்பது சிறப்பு. மூலவருக்கு தென்மேற்கே பெருந்தேவித்தாயார் தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றாள். திருக்குளத்திற்கு எதிரே 16 கரங்களுடன் சக்கரத்தாழ்வார் சன்னதியும், கோவில் வெளிப் பிரகாரத்தில் கண்ணன், இராமர், வராஹப் பெருமாள், ஆண்டாள், நம்மாழ்வார் , கரிய மாணிக்கப்பெருமாள் சன்னதிகளும் அமைந்துள்ளன. அனந்த சரஸ் குளத்தில் ஒரு மண்டபத்தில் கிடந்த கோலத்தில் அத்தி வரதர் எழுந்தருளியுள்ளார். இவரை 40  வருடங்களுக்கு ஒரு முறையே சேவிக்க முடியும். சித்ரா பௌர்ணமியன்று இன்றும் பிரம்மன் வந்து வரதராஜப் பெருமாளை ஆராதிப்பதாக ஐதீகம்.  இராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வான் பார்வை பெற்ற தலம் என்பதால் கண் தொடர்பான வியாதிகள் இத்தலத்தில் வழிபட சரியாகும். இத்தலத்தின் தலவிருட்சம்  அரசமரம் ஆகும், புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தை சுற்றி வந்து வழிபடுகின்றனர். தோஷ வர்த்திக்காக தங்க பல்லி தரிசனம் இக்கோவிலின் சிறப்பு. தடம் சுழ்ந்து அழகாய் கச்சி,  ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி,  மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி,  கல்லுயர்ந்த நெடுமதிள் சூழ் கச்சி என்று ஆழ்வார்கள் பாடிப்பரவிய சத்யவ்ரத க்ஷேத்திரத்தில், அன்று காலை வைகாசி திருவோண பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள், அன்றைய தினம் பராங்குசர், சடகோபன், காரி மாறப் பிரான், வகுளாபரணர், வேதம் தமிழ் செய்த மாறன் என்றெல்லாம் போற்றப்படும் நம்மாழ்வாரின் அவதாரத் திருநாளும் இனைந்து வந்ததினால் கூட்டம் தாங்க முடியவில்லை. லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்குக் கூடியிருந்தனர்.  ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒரு சிறப்பு உண்டு, திருமலையிலே ரதோற்சவம், திருவரங்கத்தில் குதிரை வாகன ஒய்யாளி, திருமாலிருஞ்சோலையிலே குதிரை வாகனம் சிறப்பு, திருக்கச்சியில் வரதருக்கு கருட சேவை சிறப்பு.  தனது யாகத்தில் தோன்றிய ஸ்ரீமந்நாராயண மூர்த்திக்கு பிரம்மனே உற்சவம் நடத்தியதாகவும், அதன் வழியாக வருடாவருடம் இவ்வுற்சவம் நடத்தப்படுகின்றது என்பது பக்தர்களின் நம்பிக்கை.   இவ்வளவு சிறப்பான பிரம்மோற்சவத்தின்  கருட சேவைக்கு முதல் நாளே மக்கள் கூட்டம் காஞ்சியில் குவியத் தொடங்கியது. அத்தி வரதா உன் தங்கக் கருட சேவை காணும் பாக்கியம் பெறப்போகிறோம் உனது கருணையே கருணை என்று ஆனந்த பரவசத்துடன் பக்தர் குழாம் கோவிந்த நாமம், விட்டலா, விட்டலா, பாண்டுரங்கா, பண்டரிநாதா, கண்ணா கார் மேக வண்ணா என்று பல வகையிலும் பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டு காத்திருந்தனர். இரவும் மெள்ள மெள்ள வளர்ந்து அருணோதய காலம் வந்ததும் கோபுர வாசலின் முன் பக்தர்கள் கூடத் தொடங்கினர். அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர் எப்போது கோபுர வாசல் கதவு திறக்கும் கச்சி வரதரின் மோட்சமளிக்கும் கருட சேவையைக் காணலாம் என்று சூரியனை எதிர்பார்த்து மலரக் காத்திருக்கும் தாமரை மலர் போல லட்சக்கணக்காண மக்கள் காத்துக்கொண்டிருந்தனர்.  கச்சிபதியெங்கும் ஒரே ஆரவாரம் மற்றும் மகிழ்ச்சி ஆனால் சோழ சிம்மபுரம் என்னும் திருக்கடிகையில், பெருமாள் யோக நரசிம்மராய் மலை மேலும், ஆக்வான முத்திரையுடன் பக்தோசிதராய் மலை அடிவாரத்திலும் எழுந்தருளி அருள் பாலிக்கும் சோளிங்கரில் மட்டும் ஒரு பக்தர் துடித்துக் கொண்டிருந்தார். அவர் தொட்டாச்சார்யார், அக்காரக்கனி யோக நரசிம்மருக்கு கைங்கர்யம் செய்து வந்தவர். அவருக்கு வயதாகி விட்டதால் காஞ்சி செல்ல முடியவில்லை தள்ளாமை அவரை சாய்த்து விட்டது, நினைவு தெரிந்த நாளிலிருந்து காஞ்சி வரதரின் கருட சேவையை தவற விட்டதில்லை அவர், சோழ சிம்ம புரத்திலிருந்து வருடம் தவறாமல் நடந்து சென்று கருட சேவையை தரிசித்து வந்தவர்.  ஆனால் இவ்வருடம் அவரால் நடந்து செல்ல முடியவில்லை, மதில் சூழ் அழகார் கச்சி செல்ல முடியவில்லை ஆனால் அவர் மனம் முழுவதும் அந்த வரதர் தான் நிறைந்திருந்தார். அவருடைய கருட சேவை கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தார்  முதலியாண்டான் வம்சத்தில் வந்த  "தொட்டாச்சாரியார் " என்னும்  அந்த  பரம பக்தர்.  ஆற்றாமையால் அந்த அன்பர் கதறிக்கொண்டிருந்தார்., பிரம்மா அன்று நடத்திய வேள்வியில் தோன்றிய பிரபுவே இன்று ஏன் இந்த நாயேனை இவ்வாறு செய்து விட்டீர்? கோபம் கொண்டு நதியாக ஓடி வந்த சரஸ்வதியின் குறுக்கே சேதுவாக படுத்த அவளது கோபத்தை அடக்கிய திருவெஃகா சொன்ன வண்ணம் செய்த பெருமாளே ஏன் இந்தச் சோதனை உன் அன்பனுக்கு?  திருமங்கை மன்னன், மன்னனுக்கு கட்ட பணம் இல்லாமல் தவித்த போது பொருள் காட்டி அவர் துயர் தீர்த்த பேரருளாளரே! இன்று மட்டும் ஏன் ஐயா தங்கள் மனம் உருகவில்லை? இராமனுஜரைக் காக்க காட்டுக்குள்ளே பெருந்தேவித் தாயாருடன் வேடுவ உருவில் சென்று காத்து இரட்சித்த கருணைக் கடலே என் தேவாதி தேவா! என் கூக்குரல் உன் காதில் விழவில்லையா ஐயனே உன் சித்தம் இரங்காதா? திருகச்சி நம்பிகளுடன் பேசி இராமானுஜர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்த அத்திகிரி வரதா! எனக்கு மட்டும் பதில் தர மனம் வரவில்லையா? கேட்டவர்க்கு கேட்ட வரம் அருளும் திருவரதா! களிற்றுக்கு அன்று அருள் புரிய கடுகிக் கருடனில் வந்த பிரபோ! என்னை உன் தரிசனம் காண அக்கருடனை அனுப்பி தூக்கிச்செல்ல சொல்லக் கூடாதா? கூரத்தாழ்வானுக்கு கண் ஒளியை திருப்பித் தந்த வரதா! என் கண்களுக்கு உன் கருடசேவையை காணும் பாக்கியம் இல்லாமல் போய் விட்டதே  என்றெல்லாம், அழுது துடித்துக் கொண்டிருந்தார் சோளிங்கரில் தொட்டாச்சாரியார்.  காலை நான்கு மணி வெளியே நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு பகவான் கருட வாகனத்தில் புறப்பட்டதற்கு அறிகுறியாக மேள சத்தமும், திவ்ய பிரபந்த ஒலியும், வேத ஒலியும் காதில் இன்ப நாதமாக வந்து விழுந்தன, தூங்கிக் கிடந்தவர்களை எல்லாம் எழுப்பினார்கள். எங்கும் வரதா, கோவிந்தா, கண்ணா, பெருமாளே என்ற சத்தம் அலை கடல் சத்தம் போல ஒலித்தது. வாண வேடிக்கைகள் இரவை பகலாக்கின.  வாகன மண்டபத்தில் இருந்து கருடவாகனத்தில் ஆரோகணித்து  புறப்படும் “அழைத்து வாழ வைத்த  பெருமாள்” என்னும் உற்சவர், நம்மாழ்வார் சன்னதி, தேசிகன் சன்னதி, இராமானுஜர் சன்னதிக்கு எழுந்தருளினார். இச்சன்னதிகளில் பெருமாளுக்கு மரியாதை செய்யப்பட்டது.   பின்னர் வரதர் கோபுர வாசலுக்கு வந்தார். மெதுவாக கோபுர வாசல் கதவுகள் திறந்தன எங்கும் அல்லோலகல்லம் சென்னியில் அஞ்சலி கூப்பி கச்சி வரதா! அத்தி வரதா! சத்ய வரதா!  என்று மெய் புளகாங்கிதம் அடைந்து கண்ணில் நீர் சோரப் பக்தர் குழாம் நின்றிருந்த போது தான் அந்த அதிசயம் நடந்தது.  “திடீரென்று வரதர் மாயமாய் மறைந்து விட்டார்”!  எங்கே வரதர்? எங்கே வரதர் என்ற கூக்குரல்கள் கிளம்பின. அன்பர்கள் அனைவரும் திகைத்து நின்றனர். யார் என்ன அபசாரம் செய்தோமோ? இவ்வாறு நடந்தது என்று அவர்கள் மயங்கி நின்ற வேளையில்...   அங்கே சோளிங்கரில் இது வரை நடக்க முடியாமல் படுக்கையில் கிடந்த தொட்டாச்சாரியார் எழுந்து ஓட ஆரம்பித்தார் தக்கான் குளத்தை நோக்கி, அக்குளக்கரையில் நின்று தான் முன்னர் கண்ட கருட சேவையை மனதில் கொண்டு வரத பஞ்சகம் என்ற துதியை  பாட ஆரம்பித்தார், அதிலிருந்து ஒரு பாடல்  ப்ரத்யக் கோ3புர சம்முகே2 தினமுகே2 பக்ஷீந்த்ர சம்வாஹிதம்  நிருத்யத் சாமர கோரகம் ந்ருபமாச் சத்ர த்வயீபா4ஷுரம்  சானந்தம் த்விஜ மண்டலம் விதாதம் சன்னாஹ சின்னாரவை:  காந்தம் புண்ய க்ருதோ ப4ஜந்தி வரதம் காஞ்ச்யாம் த்ருதியோஸ்தவே.  பொருள்: விஷ்ணு காஞ்சி புண்ணிய க்ஷேத்திரத்தில், வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் திருநாள் அதிகாலையில், பறவையரையனின் நீட்டிய கரங்கள் எம்பெருமானது  திருப்பாதங்களை தாங்க எழிலாக அத்திகிரி அருளாளன் சேவை சாதிக்கின்றார். அப்போது இரு புறமும் வெண் சாமரங்கள் ஒயிலாக மொட்டுகளைப் போல அசைகின்றன. எம்பெருமானின் திருமுடிக்கு மேலே அழகிய பெரிய முத்துக்குடைகள் எழிலாக ஆடுகின்றன.   பெருமாளின் திருமுகமண்டலம் பிரசன்னமாக அதிகாலையில் கூடியுள்ள  அடியார்களுக்கு அருளை பொழிகின்றது.  கருடசேவை துவங்கிவிட்டதற்கு அறிகுறியாக திருச்சின்னம் ஒலிக்கின்றது. வைணவர்கள் திவ்யபிரபந்தமும், வேதமும் பக்தியுடன் சேவிக்கின்றனர், அதை உவகையுடன் பேரருளாளன் கேட்டு மகிழ்கின்றான். இத்தகைய சிறந்த கருட சேவையை பாக்கியம் உள்ளவர்கள் மட்டுமே சேவிக்க முடியும் என்று   பாடி முடித்த   கணம் ....  அங்கே அவருக்காக வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் தக்கான் குளக்கரையில் சேவை சாதித்தார், என் அன்பனே, நீ வர முடியாவிட்டால் என்ன, நானே வந்து விட்டேன் உனக்காக என்று பறவை ஏறும் பரம்புருடன் சேவை சாதித்தான். தொட்டாச்சாரியார் தண்டனிட்டு பெருமாளை வணங்கி, கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய பெருமாளே, எமக்காக நீர் இவ்விடம் வந்தீரே உமது கருணையே கருணை நீர் உண்மையில் பக்த வத்சலன் தான், பக்தோஷிதன் தான், பேரருளாளர் தான் என்றும் பலவாறு துதி செய்து தண்டனிட்டு வணங்கினார்.  கருத வரம் தரும் தெய்வப்பெருமாள் வந்தார் முத்திமழை பொழியும் முகில் வண்ணர் வந்தார் – என்று ஆனந்தக்கூத்தாடினார்.  பிறகு காஞ்சியில் முன் போல் வரதர் ஒய்யாரமாக நின்றார். தனது அன்பரின் தூய பக்திக்காகத் தாம் சோளிங்கர் சென்று சேவை சாதித்ததை உணர்த்தினார் பெருமாள். பக்தர்கள் அனைவரும் பக்திப் பரவசத்தில் தெண்டனிட்டு வீழ்ந்து வணங்கினார் தேவராஜரின் கருணையை எண்ணி. எனவே இன்றும் கருடசேவையன்று கோபுர வாசல் சேவை முடிந்தவுடன் பெருமாளை வஸ்திரம் கொண்டு மறைக்கின்றனர். இச்சேவை  "தொட்டாச்சாரியார் சேவை"  என்று அழைக்கப்படுகின்றது.   இவ்வாறு பெருமாள் தொட்டாசாரியாருக்குச் சேவை சாதித்தது சுமார் 400  வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றது, இன்றும் அது  இடைவிடாமல்  தொடர்கின்றது. இந்த தொட்டாச்சாரியார் சேவையின் போது கருடன் வந்து வானில்  வட்டமிட்டுச் செல்கின்றான்.  (பெருமாள் யோக நரசிம்மராகவும், அனுமன் யோக அனுமனாகவும் இரு மலைகளில் அருள் பாலிக்கும் சோளசிம்மபுரம் என்றழைக்கப்படும் சோளிங்கரில் தக்கான் குளக்கரையில் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நித்ய கருட சேவையில் பெருமாளைச் சேவிக்கலாம்.)  பின்னர்  கோபுர வாசல் தரிசனம்,  தொட்டாச்சாரியார் சேவை முடித்து ஓடி புள்ளேறி சேவை சாதிக்கும் பேரருளாளர் நகர் வலம் வருகின்றார் முன் புறம் அத்யாபக கோஷ்டி திவ்ய பிரபந்தம் சேவித்து செல்கின்றது அந்தத் தமிழின் பின்னர்க் கருட வாகனத்தில் பெருமாள் ஒய்யாரமாக வருகின்றார்.   வரதர் மட்டுமல்ல கருடனும் நகைகளில் மின்னுகின்றார். நாகத்திடன் இருந்து பறித்த மணிகளையெல்லாம் தன் மேனியெங்கும் கருடன் அணிந்திருப்பது போலத் தோன்றியது.  பெருமாளின் பின்னே வேத பாராயண கோஷ்டி வேதம் ஓதிக் கொண்டு வருகின்றது. சூரிய மேளம், பேரி மேளம், கேரளாவின் செண்டை மேளம் முழங்க யானை, குதிரை புடை சூழ  லட்சக் கணக்கான மக்கள் வெள்ளத்தின் நடுவே அழகாக நடை போட்டு விளக்கொளிப் பெருமாள் ஆலயத்திற்கு எழுந்தருளி அங்கு எழுந்தருளியுள்ள வேதாந்ததேசிகருக்கு அருளுகின்றார். பிறகு பிள்ளையார் பாளையம், கச்சபேஸ்வரர் ஆலயம், மற்றும் கங்கணா மண்டபம் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார். நிறைவாக  6 கி.மீ தொலைவில் பெரிய காஞ்சிபுரத்தில், பாண்டவ தூதர் திருக்கோவிலுக்கு அருகில் உள்ள கங்கை கொண்ட சோழன் மண்டபம் சென்று மண்டகப்படி கண்டருளி மெள்ள நடையிட்டு திருக்கோவிலுக்குத் திரும்பி வருகின்றார்.  வழியெங்கும் லட்சக்கணக்கான மக்கள் கருடனில் ஆரோகணித்து வரும் வரதரைச் சேவிக்கக் காத்து நிற்கின்றனர். இத்தனை பேருக்கும் அருள் பாலித்து  கோவிலுக்குள் பெருமாள் நுழையும் அந்த நடையழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. கீழறங்கி ஒய்யாரமாக கண்ணாடி அறைக்கு எழுந்தருளுகின்றார் கச்சி வரதன், அத்தி வரதன், கரி வரதன்.  முடிந்தால் காஞ்சி சென்று தேவாதி தேவரின் கருட சேவையை கண்டு களியுங்கள், பிரம்மா நடத்திய வேள்வித் தீயில் இருந்து தோன்றிய அந்த அழகிய திருமுகத்தை மிக அருகில் இருந்து அற்புதமாகச் சேவிக்கலாம்.   நிச்சயம் அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும்.   உற்சவ தினங்களில் ஏழு கிலோமீட்டருக்குக் குறைவின்றி (கருட சேவையன்று சில கிராமங்கள் கூடவே) புறப்பாடு கண்டருளும் வழக்கம் கிருஷ்ண தேவராயர் காலம் தொட்டே முறைப்படுத்தப்பட்டுத் தொடரும் ஒன்றாகும். பெரிய குடைகள், பரிவாரங்கள் சகிதம் தோள்களிலேயே வாகனம் ஆரோகணித்து எழுந்தருள்வது வேறு எந்த ஊரிலும் காணமுடியாதது. ஆலயத்திற்குள் திரும்பிய பின் ஆயிரக்கணக்கில் ஸ்ரீவைஷ்ணவர்கள் வேதமோதி  பெருமாளின் அயர்வு தீர பிரார்த்திக்கின்றனர். வைகாசி விசாகம், ஆழ்வார்களுள் தலையாய நம்மாழ்வார் அவதரித்த தினம். அவர் இயற்றிய, திருவாய்மொழியின் தொடக்கப் பாசுரமே ‘உயர்வற உயர்நலம் உடையவன்’ எனத் தொடங்கி, ‘அயர்வறு அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுதெழன் மனனே’ என முடிவதால், இப்பாடல் ஸ்ரீதேவராஜனையே குறிக்குமெனப் பெரியோர் கூறுவர். இப்பாசுரத்துக்கு ஏற்றாற் போல், வேறு எத்தலத்திலும் இல்லாதபடி, இங்கு எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வாரின் வலக்கை விரல்கள் ஞான முத்திரையாய் இதயம் நோக்கிக் கவிந்திருப்பது சிறப்பாகும். யானை, குதிரை, வாண வெடிகள், பாண்டு, நாதஸ்வர இசையோடு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும், வடமொழி வேதத்தையும் சந்தம் சேரும் பொலிவுடன் இசைத்து வருவது வேறு எந்தத் தலத்திலும் நிகழாத அநுபவமாகும். இப்பெருமாளுக்கு ‘அருளிச் செயல் பித்தன்’ என்றே ஒரு பரிவுப் பெயருண்டு. திருமங்கை நின்றருளுந் தெய்வம்…….. கொடிமேல் புள் கொண்டான்……. அத்தியூரான் புள்ளையூர்வான் அணிமணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான்…… ( இ.தி 96) பெரிய திருவடியான கருடன் மேல் வருபவன் அழகிய மாணிக்கங்களையும், இனிய படப்பொறிகளையும் உடையவனான திருவனந்தாழ்வான் மேல் அறி துயில் கொண்டிருக்கும் மாயன். திருக்கச்சியில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத பிரம்மோற்சவத்தில் நடைபெறும்  வரதராஜப்பெருமாளின் சிறப்பான கருட சேவையை இத்தொடர் குறிப்பிடுகின்றது. வேதாந்த தேசிகரை பெருமாள் வைகுந்தத்திற்கு அழைத்தபோது, இங்கு காஞ்சியில் மிகவும் கோலாகலமாக கருட சேவை நடைபெறுவது போல வைகுந்தத்தில் நடைபெறாதே என்று காஞ்சியிலேயே இருக்கின்றேன் என்று பதிலிறுத்தாராம்.    15ம் நூற்றாண்டில் வாழ்ந்த  கவி காளமேகம் அவர்கள் இந்த அத்தி வரதனின் வைகாசி பிரம்மோற்சவ கருட சேவையின் போது ஓளி மிக்க கருடன் மீது பொன் வண்ணத் திருமேனியுடன் அத்திவரதன் திருவீதி வலம்  வரும் அழகைக் கண்டு  இகழ்வது போல் புகழும் நிந்தாஸ்துதி வகையில் இவ்வாறு பாடியுள்ளார்.   பெருமாளும்  நல்ல  பெருமாள்! அவர் தம் திருநாளும் நல்ல திருநாள்! – பெருமாள் இருந்திடத்தில்  சும்மா  இராமையினால், ஐயோ! பருந்து எடுத்துப் போகிறதே  பார்!.  கச்சியம்பதியில் ஒரு  கருடசேவையின் போது ஆணவம் கொண்ட ஆங்கிலேய அதிகாரியின் ஆணவத்தை நீக்கி தன் பக்தனாக்கிய நிகழ்வு மிகவும் சுவையானது. ஒரு வருடம் பெருமாள் கருடனில் ஆரோகணித்து பக்தருக்கு அருளிக்கொண்டு பவனி வரும் போது குதிரையில் வந்த இராபர்ட்கிளைவ் என்னும் ஆங்கில அதிகாரி பவனியை நிறுத்துமாறு ஆணையிட்டான். அதற்கு பட்டர்கள் வெயில் அதிகமாக உள்ளதால் பெருமாளுக்கு ஆகாது அவர் உடனடியாக திருக்கோவிலுக்கு திரும்ப வேண்டும் என்று பதிர்லிறுத்தனர். எள்ளி நகையாடிய அவன் இது ஒரு சிலை இதற்கு என்ன வெயில் என்று பரிகாசம் செய்தான். கோபம் கொண்ட ஒரு பட்டர் அவனிடமிருந்து ஒரு துணியைப் பெற்று பெருமாளின் திருமேனியை ஒற்றி அவனிடம் திருப்பித் தந்தார். சொத சொத என்று பெருமாளின் வியர்வையால்  நனைந்த அந்த துணியைத் தொட்ட கிளைவ மின்னல் தாக்கியது போல் அதிர்ந்தான். அவன் மனம் மாறியது. பெருமாளின் பக்தனானான். பெருமாளுக்கு ஒரு விலையுயர்ந்த மகர கண்டிகையை சமர்ப்பணம் செய்து வணங்கினான். இன்றும் சிறப்பு நாட்களில் இம்மகரகண்டி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகின்றது.   வைகாசி பிரம்மோற்சவம் தவிர புரட்டாசி மாத திருவிழா, வைகுண்ட ஏகாதசி போன்ற திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. திருக்கச்சியில் வைகாசித் திருவோண நாளை தீர்த்த நாளாகக் கொண்ட இந்த  பிரம்மோற்சவ கருட சேவையின் போது வரதராஜப்பெருமாள் இராஜ வீதிகளில் உலா வந்து அருளுகின்றார்.   ஒரு   வருடத்தில் மற்ற  இரண்டு தடவை கருட சேவை நடைபெறுகின்றது. ஆனி மாத சுவாதியன்று  பரதத்வ நிர்ணயத்தை குறிக்கும் ஆனி கருட சேவையின் போது மாட வீதிகளில் மற்றும் உலா வருகின்றார். ஆடியில் கஜேந்திர மோட்சத்தைக் குறிக்கும் கருட சேவை ஆகும். அன்று கோவில் குளத்திற்கு பெருமாள் எழுந்தருளி கஜேந்திர மோட்ச லீலையை காண்பத்தருளி பின்னர் மாடவீதி வலம் வந்து அருளுகின்றார்.  பொங்கலுக்கு மறு நாள்  பரந்தாமன் பாரிவேட்டைக்காகப் பழைய சீவரம் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளி மாலை பழைய சீவரம் நரசிம்மப்பெருமாள் மற்றும் முக்கூடல் அப்பன் வெங்கடேசப் பெருமாள்  ஆகியோருடன் சேவை தந்தருளுகிறார்.  சோளிங்கர் தக்கான் குளம் நித்ய கருட சேவை காஞ்சி வரதராஜப்பெருமாள்  இவ்வாறு தொட்டாச்சார்யார்  என்ற பக்தருக்காக  எளி வந்த கருணையினால் சோளிங்கரில் சேவை சாதித்ததை  உணர்த்தும் வகையில் சோளிங்கரில் தக்கான் குளக்கரையில் கருடன் மேல் அமர்ந்த கோலத்தில் வரதராஜப் பெருமாளாக சேவை சாதிக்கும் ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது.  புண்ணிய கோடி விமானத்தின் கீழ் “நித்ய கருட சேவை”  தந்தருளுகின்றார் பெருமாள். ஒரு கரத்தில் சக்கரம், மறு கரத்தில் சங்கு, மூன்றாம் கரத்தில் தாமரை, நான்காம் கரத்தில் கதை விளங்க அவசரமாக தன் அன்பன் தொட்டாச்சாரியாருக்கு சேவை சாதிக்க அவசரமாக  வந்ததினால் ஒரு திருவடி கருடனின் தோளிலும், ஒரு திருவடி அவன் கரங்களிலும் உள்ளவாறு சேவை சாதிக்கின்றார் பெருமாள். கருடனோ இப்பெருமாளை வணங்கினால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பதைக் காட்டும் வகையில் ஞான முத்திரையுடன் அருளுகின்றார். உற்சவர் அஷ்ட நாகங்களை ஆபரணமாக அணிந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.  இனி திருநறையூர் என்னும் நாச்சியார் கோவிலின் அற்புத கல்கருட சேவையைப் பற்றி காணலாம் அன்பர்களே.               37. நாச்சியார் கோவில் கல் கருடசேவை   நாச்சியார் கோவில் என்னும் திருநறையூரில் வருடத்தில் இரண்டு முறை கல் கருட சேவை உற்சவம் நடைபெறுகின்றது. அப்போது இரவில்  முதலில் தாயார் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளப் பின்னர்  கம்பீரமாகப் பெரிய கல் கருடனில் பெருமாள் புறப்பாடு கண்டருளுகிறார்.  பிரம்மோற்சவத்தின் நான்காம்  திருநாள் இரவு இந்த கல் கருடசேவை நடைபெறுகின்றது. அன்று மதியம் உற்சவர்கள்  தாயார் வஞ்சுள வல்லியும் பெருமாள் நறையூர் நம்பியும் திருமஞ்சனம் கண்டருளுகின்றனர்.   கல் கருடனக்கு அன்று சிறப்பு அலங்காரம் நடைபெறுகின்றது. மாடக்கோவில் அமைப்பில் அமைந்த கோவில் திருநறையூர் திவ்ய தேசம். 75 அடி உயர கோவில் கோபுரத்தில் கீழ் நின்று  நேராக நாம் பெருமாளைத் தரிசிக்கும் வகையில் அமைந்துள்ளது. படிப்படியாக ஏறிச் சென்று பெருமாளைச் சேவிக்கலாம். கல் கருடன் சன்னதி பெருமாள் சன்னதிக்கு இடப்புறத்தில் உள்ளது. இச்சன்னதியில் மூலவராக எழுந்தருளியுள்ளார் கருடாழ்வார். அவரே அன்றைய தினம் வாகனமாகவும் பெருமாளை தாங்குகின்றார்.    பாகவதர்கள் அனைவரும் கல் கருடன் எழுந்தருள்வதற்குக் காத்து நிற்கின்றனர். மாலை சுமார் 5 மணியளவில் கல் கருடனை அலங்கார மண்டபத்திற்கு எழுந்தருளப்பண்ணுகின்றனர். வெள்ளிக் கவசத்துடன், அழகிய மலர் மாலைகள் அலங்கரிக்கப் பட்டு சார்த்திக் கல் கருடன் சன்னதியை விட்டு வெளியே வருகின்றார் அப்போது வெறும் நான்கு பேர் மட்டுமே கல்கருடனை எழுந்தருளப் பண்ணுகின்றனர். பின்னர் அலங்கார மண்டபத்திற்காகக் கல் கருடன் புறப்படுகின்றார். அப்போது எட்டு பேர் அவரைத் தாங்குகின்றனர். செங்குத்தான படிகளில் படு வேகமாக கல் கருடாழ்வார்  கீழிறங்கி வந்து கொடி மரத்தின் அருகில் கருடன் வரும் போது  அங்கே  பதினாறு     பேர்   தேவைப்படுகின்றனர்.    கருடன்   பறக்கும் வேகத்தில் மூன்று முறை முன்னும் பின்னுமாகக் கல் கருடன் சென்று (பறந்து)  வருகின்றார். அது அப்படியே தனது அழகிய பெரிய சிறகை விரித்துச் சுபர்ணன் பறந்து வருவது போல உள்ளது.  இந்த அற்புதக் காட்சியைக் கண்டு பாகவதர்கள் அனைவரும் ஆனந்தத்தில் அப்படியே மெய் புளகாங்கிதம் அடைகிறனர். அந்த அற்புத அனுபவத்தை நேரில் பார்த்தால் மட்டுமே உணர முடியும்.  எப்போது ஆரம்பித்தது எப்படி முடிந்தது என்று தெரியாது படு வேகமாக கல் கருடன் அலங்கார மண்டபம் உள்ளே செல்ல திரைப் போடப்படுகின்றது. பெருமாளுடன் கருடன் அலங்காரம் நடைபெறுகின்றது.   []     கல்கருட சேவை கல் கருட சேவையின் போது இரு  அற்புதம் நடைபெறுகின்றது. முதலாவது  மேலே சொன்ன கருடனின் கனம் (எடை) அதிகமாகிக்கொண்டே போவதுதான். சன்னதியிலிருந்து வெளியே வரும்போது கருடனை ஸ்ரீபாதம் தாங்குவோர் நான்கு பேரால் எழுந்தருளப்பண்ண முடியும் அதுவே பிரகாரத்தைச் சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரண்டு பேர் வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு என்று நான்கின் மடங்கில் அதிகமாகிக் கொண்டே போகும் அதிசயம் நடைபெறும், அதே பெருமாள் திரும்பி வரும் போது அதே விகிதத்தில் எடை குறைந்து கொண்டே வரும். இவ்வாறு அஷ்ட மஹா சித்திகளில் கரிமா மற்றும் லகிமா ஆகிய சித்திகளை கருடபகவான் காட்டியருள்கின்றார்.   இரண்டாவது கல் கருட பகவானுக்கு வியர்வை பெருகும் அதிசயம். சன்னதியிலிருந்து வாகன மண்டபம் வந்து சேர்ந்தவுடன் கல் கருட பகவானுக்கு வியர்க்கும். ஆகவே அவருக்கு திரு ஆலவட்ட சேவை நடைபெறுகின்றது.    முனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம்   புனை வாளுகிரால் போழ்படஈர்ந்த புனிதனூர்   சினையார் தேமாஞ் செந்தளிர் கோதிக்குயில் கூவும்  நனையார்சோலை சூழ்ந்து அழகாய நறையூரே. (பெ.தி 6-5-2)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  பொருள்: போர் புரிவதில் பொருத்தமுடைய நரசிம்ம்மூர்த்தியாய் அவதாரம் செய்து இரணியன் முரட்டு மார்பை அழகும் ஒளியும் உடைய கூர் நகத்தால் கிழித்துப் போட்ட தூயவனான பெருமானுடைய திருத்தலம் எதுவென்றால் குயில்கள் மாமரங்களில் சிவந்த தளிர்களைக் கோதி கூவப்பெற்றனவும், மலர்மொட்டுக்கள் நிறைந்திருக்கப்பெற்றனவுமான சோலைகளால் சூழப்பட்டு அழகுடைய திருநறையூர் ஆகும்  இப்பாசுரம் திருநறையூர் நம்பியையே ஆச்சாரியனாக பெற்ற திருமங்கையாழ்வார்  இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்த 110 பாசுரங்களுள் ஒன்று.  இவ்வாறு ஏன் நடைபெறுகின்றது. ஒரு விளக்கம் பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரம், தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் அன்னமோ நளினமான பறவை, பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். கருடன் பலம் மிகுந்த அதே சமயம் வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே கருடன் அன்னத்தின் பின்னே செல்ல வேண்டுமல்லவா? எனவே கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்கின்றது. ஆகவே இப்போதும் தாயாருக்கு முதலிடம் .   இரண்டாவது விளக்கம். நாம் பெருமாளுடன் ஒன்றியிருக்கும் போது நம் வினைகளின் சுமை குறைவாக இருக்கும், அதுவே நாம் பெருமாளை விட்டு விலகி செல்லும் போது அதுவே மிகப்பெரிய சுமையாகி விடுகின்றது என்பதை இது குறிப்பால் உணர்த்துகின்றது. அதாவது பூரண சரணாகதி ஒன்று தான் நாம் உய்ய ஒரே வழி என்பதைத்தான் இதுவும் உணர்த்துகின்றது. பெருமாளைத் தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை அரும்பும் அதிசயத்தையும் சேவிக்கலாம்.  அத்தா! அரியே என்று உன்னை அழைக்க  பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை முத்தே! மணியே மாணிக்கமே! முளைக்கின்ற   வித்தே உன்னை எங்ஙனம் நான் விடுகேனே?  (பெ .தி. 7-1-8)  பொருள்: சுவாமியே! அரியே! என்று உன் திருநாமங்களை சொல்லி நான் உன்னை அழைக்கும் அளவில் அயலார் இப்படி அழைக்கும் என்னை நோக்கி அடா பித்தனே! என்று அழைக்கின்றனர். முத்துப் போன்றவனே! சிவந்த மாணிக்கம் போன்றவனே! முளைக்கின்ற விதை போல பயனளிப்பவனே! இப்படிப்பட்ட உன்னை அடியேன் எவ்விதமாக விட்டு ஒழிவேன்? என்று திருமங்கையாழ்வார் பாடிய திருநறையூர் நம்பியும் வஞ்சுளவல்லித்தாயாரும் சேவை சாதிக்கும் அழகைக் காணலாமா அன்பர்களே.   []     அன்னவாகனத்தில் வஞ்சுளவல்லித்தாயார் இரவு சுமார் 10 மணியளவில் பூர்ண அலங்காரத்தில் ஒயிலாக, நளினமாக  வெள்ளி அன்ன வாகனத்தில் வஞ்சுளவல்லித்தாயார் முதலில் கோபுரவாசல்  சேவை சாதித்து முன்னே செல்ல அவர் பின்னே கல் கருடனில் கம்பீரமாக ஆலத்திலையான் அரவினணை மேலான் நீலக்கடலுள் நெடுங்காலம் வளர்ந்தான் கொண்டல் வண்ணன், திருநறையூர் நம்பி எழுந்தருளுகின்றார். இருவரும் மாட வீதி வலம் வருகின்றனர். பெருமாளைத் தாங்கி கல் கருடன் வலம் வரும் போது அவரது முகத்தில் வியர்வை பொங்குகின்றது பட்டர்கள் அதைத் துடைக்கின்றனர். விசிறி, கவரி கொண்டு வீசுகின்றனர்.   பக்தர்கள் இரவு முழுவதும் மாட வீதிகளில் கூடி நின்று பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும்  சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை   கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை  நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே (பெ .தி. 6-8-9)  பொருள்: மேன்மேலும் அதிசயித்து வருகிற அளவற்ற ஒளியை உடைய திருவாழி ஆழ்வானும், சக்கரத்தாழ்வானும் குடிகொண்டு  இருக்கப்பெற்ற அழகிய பெரிய திருக்கரங்களையுடையவனும், பெருமை பொருந்தியவனும், தேன் மிகுந்த சோலைகளையுடைய  திருக்குடந்தையில் பள்ளி கொண்டிருப்பவனுமான நம் பெருமானைத் தேடி நறையூரில் கண்டேன்  - என்று திவ்ய தம்பதிகளை சேவித்து ஆனந்தம் அடைகின்றனர். பின்னர் அதிகாலை திருக்கோவிலுக்கு வந்த பின் கல் கருடன் திருக்கோவிலை வந்தடைந்து பின்னர் எடை குறைந்து தன் சன்னதிக்கு எழுந்தருளுகின்றார்.  புறப்பாடு முடிந்த பின் தாயாருடன் பெருமாள் கருடன் சந்நிதிக்கு எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.   அடுத்து நாம் காணப்போகின்ற கருட சேவை, யானைக்கு மட்டுமல்ல  தவளையான ஒரு  முனிவருக்கும் வைகுந்தப்பேறு அருள பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தரும் வைபவம் . வாருங்கள் அன்பர்களே  ஆண்டு தோறும் இன்றும் நடைபெறும் திருமாலிருஞ்சோலை கள்ளழகரின்  அந்த லீலையை காணலாம்..                                                             38. தவளைக்கு மோட்சம் அளித்த கருட சேவை   மஹாவிஷ்ணு இவ்வுலகை அளக்க தனது திருவடியை  அம்பரமூடுற உயர்த்தினார் அப்போதி பிரம்மன் அவரது உயர்த்திய பாதத்தை கழுவி பாதபூசை செய்தார்.  அப்போது மஹாவிஷ்ணுவின் கால் சிலம்பு (நூபுரம்)  அசைந்து அதிலிருந்து ஒரு நீர்த்துளி தெளித்து அழகர் மலை மேல் விழுந்தது. கங்கையை விட புனிதமான இத்தீர்த்தமே இன்றைக்கும் நூபுர கங்கை என்ற பெயரில் வற்றாமல் பாய்ந்து கொண்டிருக்கின்றது. சுதபஸ் என்னும் முனிவர் நூபுர கங்கையின் கரையில் அமர்ந்து விஷ்ணுவை நினைத்துத் தவமிருந்தார். அப்போது அவரைக் காண துர்வாச முனிவர் அங்கு வந்தார். சுதபஸ் முனிவர் அவரைக் கவனிக்கவில்லை.கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற துர்வாசர் "மண்டூகம் (தவளை) போல் கிடக்கும் நீ அதுவாகவே மாறிப் போ'' என்று சாபமிட்டார். உடனே தவளையாக மாறிவிட்டார் சுதபஸ் முனிவர். பின்னர் தன் பிழையைப் பொறுத்து மன்னிக்கும்படி துர்வாச முனிவரிடம் வேண்டிக்கொண்டார் அவர். மனம் இரங்கிய துர்வாசர் "தேனூர் வைகை ஆற்றில் தவம் செய்! சித்ரா பௌர்ணமி அன்று  திருமாலிஞ்சோலைப் பெருமாள் ஆற்றுக்கு வரும்போது உனக்கு விமோசனம் தந்தருள்வார்" என்று சாபவிமோசனம் அருளினார். துர்வாசர் கூறியபடி தேனூர் வைகை ஆற்றின் கரைக்கு தவளை வடிவில் வந்த சுதபஸ் முனிவர் பெருமாளை நினைத்து கடும் தவம் இயற்றினார். தன்னுடைய பக்தரான முனிவரின் தவத்துக்கு இரங்கிய பெருமாள், ஒரு சித்ரா பௌர்ணமி நாளில் தேனூர் வைகை ஆற்றில் தவம் இயற்றிக்கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு சாப விமோசனம் தந்து மோட்சமும் அளித்தார். இதன் காரணமாகவே இன்றும்  சித்ரா பௌர்ணமி அன்று  கள்ளழகர் தேனூரில் உள்ள வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகின்றது.  400 வருடங்களுக்கு முன் கள்ளழகர் சித்ரா பௌர்ணமியன்று  சோழவந்தான் அருகே உள்ள தேனூருக்கு எழுந்தருளி வைகையில் இறங்கி அங்கு துர்வாச முனிவரின்  சாபத்தால்   தவளையான ( மண்டூகம்) சுபதஸ் முனிவருக்கு மோட்சம் அளித்த  நிகழ்ச்சி நடைபெற்றது.  கிருஷ்ண தேவராயர் காலத்தில் அவர் சைவ –வைணவ ஒற்றுமைக்காக  அதுவரை மாசி மாதத்தில் நடைபெற்ற மீனாட்சி – சுந்தரேஸ்வரரின் பிரம்மோற்சவத்தை சித்திரை மாதத்திற்கு மாற்றி முத்தாய்ப்பாக  கள்ளழகர் மதுரை எழுந்தருளி  வைகையில் இறங்கும் விதமாக மாற்றி அமைத்தார் இன்று வரை இலட்ச கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் சிறப்பான பெருவிழாவாக இவ்விழா மதுரையில் நடைபெறுகின்றது. வாருங்கள் கள்ளழகர் எவ்வாறு அருளுகின்றார் என்று காணலாம்.  கள்ளழகர் என்று பெருமாளுக்கு திருநாமம் ஏன் என்றால் இவரது அழகு மக்கள் மனதை கொள்ளைகொண்டதால் இவர் கள்ளழகர் ஆனார். எனவே நம்மாழ்வாரும் இவரை ’வஞ்சக்கள்வன் மாமாயன்’ என்று மங்களாசாசனம் செய்துள்ளார். ஸ்ரீஅழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் மண்டூக முனிக்கு வைகுந்தப்பேறு அளிக்க  முதலில் ஆலயத்தில் உள்ள அழகிய தூண்களில் நரசிம்மர், கிருஷ்ணன், கருடன், மன்மதன், இரதி, த்ரிவிக்ரமன். இலக்குமி, வராஹமூர்த்தி சிற்பங்கள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர்  அழகர் மலையில் இருந்து  கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி  கள்ளழகர் வேடத்தில் இறங்கி சகல கோலாகலகங்களுடன் தங்கப் பல்லக்கில் பதினெட்டாம்படி கருப்பணசாமி மண்டபத்திலிருந்து  வாணவேடிக்கை முழங்க மதுரை நோக்கிப் புறப்பட்டு வருகிறார். அவருடன் பல பக்தர்கள் கள்ளழகர் வேடமணிந்து பின் தொடர்ந்து வருகின்றனர். வழியெங்கும் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். மதுரைக்கு எழுந்தருளும் அழகருக்கு மூன்று மாவடியில் பக்தர்கள் பெருமாளை எதிர்கொண்டழைக்கும் எதிர்சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. அடுத்து மதுரையில் தல்லாக்குளத்தில் எதிர்சேவை நடைபெறுகின்றது. அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி ஆலயத்தில் திருமஞ்சனம் கண்டருளி    நாறு பொழில் திருமாலிருஞ்சோலை நம்பிக்கு நூறு தடாவில் - என்று ஏங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாள் அனுப்பிய மாலையை அணிந்து கொண்டு பக்தர்களுக்கு தங்கக்குதிரை வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். சித்ரா பௌர்ணமியன்று அதிகாலை தல்லாக்குளம் கருப்பண்ண சுவாமி கோவிலுக்கு எழுந்தருளி ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். பின்  வைகை ஆற்றில் இறங்குவதற்காக ஆற்றுக்குச் செல்லும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளும் காட்சியை காண கண் கோடி வேண்டும். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நாளில் அதிகாலை 2 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள்,  கோயிலிலிருந்து புறப்பட்டு, யானைக்கல் வழியாக அழகர் ஆற்றில் இறங்கும் நேரத்துக்குச் சரியாக எழுந்தருளிவிடுவார். அழகர் ஆற்றில் இறங்கியதும், வீரராகவ பெருமாள் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே அழகரை எதிர்கொண்டு அழைப்பார். பின்னர், கள்ளழகர் சார்பாக வீரராகவ பெருமாளுக்கு மாலை, பரிவட்டம் போன்ற மரியாதைகள் செய்யப்படும். அழகர் ஆற்றில் இறங்கும்போது, 'வாருங்கள் அண்ணா!' என்று வீரராகவ பெருமாள் மனம் நிறைய அழைக்கும் இந்த வைபவத்தை பக்தர்கள் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக தரிசிக்கிறார்கள்.  கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வைகை ஆற்றங்கரைகளில் நேற்று இரவு முதலே பக்தர்கள் குவியத் தொடங்குகின்றனர்.. அதிகாலைக்குள் சுமார் 10 லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்து விடுகின்றனர். அதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படுகின்றது. . கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வாராரய்யா!  வாராரு!  கள்ளழகர் வாராரு என்று  வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்கின்றர். . தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பக்தர்கள் மீது பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். கள்ளழகர் வைகையாற்றில் காலை வைக்கும் அந்த நாளில் வைகை நதியெங்கும் தண்ணீர் வெள்ளத்தை மட்டுமல்ல மக்கள் வெள்ளத்தையும் காணலாம். கோவிந்தா! கோவிந்தா! என்று கூப்பிட்டு பக்தி பரவசத்துடன்  அழகரை தரிசிக்கின்றனர் பக்தர்கள். வெயில் காலம் அல்லவா? அழகருக்கு வியர்க்குமே என்று   தோப்பறையில் (தோல் பை) கொண்டு வரும் தண்ணீரை அழகர் மேல அடிக்கும் பக்தர்கள் அநேகம் . அழகர் மேலும் பீய்ச்சுவதோடு அவரை தரிசிக்கும் பக்தர்கள் மேலும் பீய்ச்சுகின்றனர்.   மேலும் திரும்பிய பக்கமெல்லாம் ஆசி வழங்கும் திரியாட்டக்காரர்களையும் காணலாம்.  வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் போது அணிந்திருக்கின்ற பட்டின் நிறத்தைப் பொறுத்து அவ்வருடம் எவ்வாறு இருக்கும் என்று பக்தர்கள் கணிக்கின்றனர். பச்சைப் பட்டுத்தி ஆற்றில் இறங்கினால் அவ்வருடம் நல்ல மழைபெய்து பயிர்கள் செழிப்பாக வளரும் என்பது நம்பிக்கை.  கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது பக்தர்கள் செம்புகளில் சர்க்கரையை நிரப்பி வாழை இலை சுற்றி சூடம் ஏற்றி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்கின்றனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை போட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். பின்னர் ஆற்றின் நடுவில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார் அழகர்.  இன்று பகல் 12 மணிக்கு கள்ளழகர்,  இராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள். வேடம் அணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெறுகின்றது. அங்கிருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார்  வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலில் அழகருக்கு காலை 6 மணி அளவில் ஏகாந்த சேவையும், தொடர்ந்து திருமஞ்சனமும் நடைபெற்றது. வண்டியூரில் பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் கண்டருளுகின்றார் கள்ளழகர்.   காலை 11 மணிக்கு வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலை வலம் வந்து  அங்கிருந்து, சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேனூர் மண்டபம் வந்து தங்குகின்றார். தேனூர் மண்டபம் என்ற பெயரில் மன்னர் திருமலை நாயக்கர் மதுரை வண்டியூர் அருகே வைகையாற்றில் ஒரு மண்டபம் கட்டினார். இந்த மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு அழகர் சாப விமோசனம் வழங்கும் நிகழ்வும், தேனூர் மக்களுக்கு மரியாதை அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இம்மண்டபத்தில் காலை திருமஞ்சனம் கண்டருளி பின் தங்ககருடவாகனத்தில் சேவை சாதிக்கும் கள்ளழகர் அங்கு சாப விமோசனமத்திற்கு காத்திருக்கும்  மண்டூக முனிவருக்கு வைகுந்தப்பேறு அருளுகின்றார். . மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கவே அழகர் மதுரை வைகையாற்றுக்கு வருகிறார் என்பதால், இந்த முக்கிய நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். பிற்பகலில் அனுமார் கோவிலில் அங்கப்பிரதட்சணம் நடக்கின்றது.  அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு இராமராயர் மண்டபத்தில் இரவு எழுந்தருளுகிறார். அங்கு விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. பல்வேறு அவதாரங்களில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மறு நாள்  காலை மோகன அவதாரத்துடன் பக்தி உலா வருகிறார். அதன்பின்  மதியம்  திருமஞ்சனம் கண்டருளி அனந்தராயர் பல்லக்கில் இராஜாங்க திருக்கோலத்துடன் எழுந்தருளுகிறார். இவ்வாறு அழகர் கோவிலிலிருந்து மதுரை வந்து, மீண்டும் அழகர் கோவில் திரும்பி செல்லும் வரை  மொத்தம் எழு வாகனங்களில் சேவை சாதிக்கின்றார்.  அன்றிரவு தல்லாகுளத்தில் உள்ள இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி  நள்ளிரவுக்குப் பின் கள்ளழகர் பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார். மறுநாள்  காலை  கருப்பணசுவாமி கோவிலில் பிரியாவிடை பெற்று வையாழியானவுடன் அழகர் மலைக்கு புறப்படுகிறார். அன்று இரவு அப்பன் திருப்பதியில் திருவிழா நடக்கிறது. பின்னர்  அழகர் மலையை  அடைகிறார் பெருமாள். வருடா வருடம் கள்ளழகர் மதுரை எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கி பின்னர் தேனூரில் தவளை வடிவத்தில் இருக்கும் சுபதஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் கருட சேவையை திவ்யமாக சேவித்தோம். வாருங்கள் இனி திருக்குடந்தையில் சித்திரை அட்சய திரிதியையன்று நடைபெறும் 14  கருட சேவையை  சேவிக்கலாம் அன்பர்களே.             39. திருக்குடந்தை அட்சய திருதியை பதினான்கு  கருட சேவை   []   திருக்குடந்தை ஆராவமுதன் கருடசேவை முதலில்  ‘அட்சய திரிதியை’  என்றால் என்னவென்று பார்ப்போமே?. ‘அட்சய’  என்றால்  எடுக்க  எடுக்கக்  குறையாதது என்று  பொருள்.  அள்ள  அள்ளக் குறையாது, அள்ளித்  தரும்  அற்புதத்  திருநாள்  இது.  இதற்கு உண்மையான  அர்த்தம்  என்னவென்றால்  இந்நாளில்  செய்யப்படும்  எந்த நற்காரியமும், தான தருமங்களும் அதிகப்  பலன்களைத்  தரும்  என்பது  தான்.  அட்சய  பாத்திரம்  தமிழிலக்கியத்திலும்   உண்டு.  மணிமேகலைக்கு பசிப்பிணி  போக்கும்  ‘அட்சய பாத்திரம்’  கிடைத்தது.  அன்று  முதல்  மக்களின்  பசியைப்  போக்குவதையே  தன்  கடமையாகக்  கொண்டு  வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு  பின்  தெய்வமாகப் போற்றப்பட்டாள். ‘திரிதியை’  என்பது அமாவாசை அல்லது  பௌர்ணமியிலிருந்து  மூன்று  நாள்  கழித்து  வரும்  நாள். ‘அட்சய திரிதியை’  என்பது சித்திரை  மாதம்  அமாவாசை  முடிந்த     வளர்பிறையின்  மூன்றாம் நாள் ஆகும். வளர்பிறைக்கே  ஒரு  சிறப்புண்டு.  இருளாய்  இருந்த  வானத்தில் நிலா  ஒவ்வொரு  நாளும்  வளர்ந்து முழு நிலவாய் மாறுவதே ஒரு  அழகுதான். இதை  வைத்துப்  பார்க்கையில்  அட்சய திரிதியை  அன்று  செய்யும்  காரியங்கள் வளர்பிறை போல வளரும்; அட்சய  பாத்திரம் போலக்  குறைவின்றி  இருக்கும்  என்று  பொருளாகின்றது.    சித்திரை மாதம்  அமாவாசையை அடுத்து வரும் மூன்றாம்  பிறை  நாளான  த்ரிதியை  தினத்தில்தான், கிருதயுகத்தை  பிரமன் படைத்ததாகச்  பவிஷ்ய  புராணத்தில் கூறப்பட்டுள்ளது.  ஒரு  யுகம்  முடிந்து  மறு யுகம்  தொடங்கும்  நாளை  ‘யுகாதி’ என்பர்.  அந்த வகையில் அட்சய த்ரிதியை தினமும்  யுகாதிதான். ‘மாலோடு’ ‘திரு’  சேர்ந்து,  மஹாவிஷ்ணு  ‘திருமால்’  ஆன  தினம் என்பதால், திரிதியை  திதி,  பொதுவாகவே  லக்ஷ்மி  கடாட்சம் நிறைந்தது. இந்நாளில் ஸ்ரீமஹாலக்ஷ்மி, ஸ்ரீமஹாவிஷ்ணுவைச்  சேவித்து வழிபடக் குபேரனுக்கு இனையான  பொன்னும் புகழும் வந்து சேரும் என்பது ஐதீகம்.     பார்வதி  தனது  பிறந்த  வீட்டுக்கு  வந்ததும்,  பரசுராமர்  அவதரித்ததும்  அட்சய திருதியையன்றுதான். இன்றுதான்  வேத வியாசர்  மஹாபாரத  இதிகாசத்தை  விநாயகர் எழுதச்  சொல்லிக் கட்டளையிட்டார்.  செல்வத்திற்கு  அதிபதியான  கடவுளர்  குபேரரே  செல்வத்திற்கு அதிபதி . அவரே அட்சய திரிதியையன்று   விஷ்ணுவையும் மஹாலக்ஷ்மித் தாயாரையும் வணங்குகிறார்  என “லக்ஷ்மி  தந்தரம்”   கூறுகிறது.  இந்த  நாளில், குபேர லக்ஷ்மி  பூஜை  நடத்தப்படுகிறது.  அதில்  லக்ஷ்மி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஸன குபேர  யந்தரமும்  ஒன்றாக  வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. கிருதயுகத்தில்  வறுமையில்  வாடிய  குசேலர்  தனது  பால்ய  நண்பர்  கிருஷ்ணரை  சந்திக்க   தன்  கந்தலான மேலாடையில் ஒரு படி  அவலை எடுத்துக் கொண்டு  வந்த போது,  அந்த  அவலை  பாசத்துடன்  உண்ட கிருஷ்ணர்  ‘அட்சயம்’  என சொல்ல,  குசேலரின் மண்  குடிசை  மாளிகையாகி  குசேலர்  வற்றாத  பெரும் செல்வத்துக்கு  அதிபதியானார்,  இது   நடந்ததும்  அட்சயத் திருதியை  அன்றுதான்.  அட்சய திருதியை  அன்று  புனித நதியில் நீராடி,  தான தர்மங்கள்  செய்தால் உடல் பிணிகள்  நீங்கும்.  இந்நன்னாளில்  சிவபார்வதி,  ஸ்ரீமந்நாராயணன், ஸ்ரீலட்சுமி  ஆகியோரை  பூஜித்தால்  சகல சௌபாக்கியங்களும்  கிட்டும்.  அன்று  பித்ருக்களுக்கு  சிராத்தம்,  பூஜை செய்தால் பாவ  விமோசனம்  பெறலாம்.  கர்நாடக  மாநிலத்தில்  உள்ள  பெண்கள்  அட்சய  திருதியை  அன்று   “சுவர்ண கௌரி  விரதம்” என்று  கடைப்பிடிக்கிறார்கள். அன்று, கௌரி  எனப்படும்  பார்வதி தேவி  தனது  பிறந்த  வீட்டுக்கு  வருவதாகவும், மறு நாள் அன்னைக்குப்  பாதுகாப்பாக  ஸ்ரீவிநாயகர்  வருவதாகவும் ஐதீகம்.  திருமணமான  பெண்கள்,  இந்த  நாளில் சுமங்கலி பூஜை  செய்து,  மற்றவர்களுக்கு  ஆடை வழங்குவது வழக்கம்.   தயிர்சாதம்  தானம் செய்தால்,  ஆயுள் பெருகும்.  இனிப்புப் பொருட்கள்  தானம் செய்தால், திருமணத் தடை அகலும்.  உணவு தானியங்களை  தானம் செய்தால்,  விபத்துகள்  அகால  மரணம்  போன்றவை சம்பவிக்கா. கால்நடைகளுக்குத்    தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும். அன்று பொன் பொருள் வாங்கினால் பல மடங்காகப் பெருகும்.  அட்சய த்ரிதியையன்று அதிகாலை பல பெருமாள் கோயில்களில் கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. அதில் குறிப்பாகத் திருக்குடந்தையின்  14 கருட சேவை! மிகவும் சிறப்பானது.   கும்பகோணம்  மற்றும்  அதன்  சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள  பதினான்கு  பெருமாள்   கோயில்களில் இருந்து புறப்படும் சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமசுவாமி, இராஜகோபால சுவாமி, ஆதி வராஹப்பெருமாள், அஹோபில மட லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீநிவாசப்  பெருமாள், நவநீத கிருஷ்ணர், வேணுகோபால சுவாமி,  வரதராஜப் பெருமாள், பட்டாச்சார்யார் வீதி நவநீத கிருஷ்ணர், சோலையப்பன் வீதி இராமசுவாமி, வரதராஜப்பெருமாள், வேதநாராயணப் பெருமாள் ஆகியோர் கருடனில் ஆரோகணித்து பெரிய தெருவிற்கு எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.  பெரிய திருவடியில் அருள் பாலிக்கும் பெருமாள்களுடன்  திருவடியும், திருக்குடந்தையை மங்களாசாசனம் செய்த   திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகிய ஆழ்வார்களும்  சேவை சாதித்து அருளுகின்றனர். வாருங்கள் இனி தஞ்சையில்  நடைபெறும் 23 கருடசேவையை சேவிக்கலாம்.    40. தஞ்சை இருபத்திமூன்று கருட சேவை   தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத் திருக்கோவில்களுள் தஞ்சை மாமணிக்கோவில்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்ய்ப்பட்ட திருப்பதிகளுள் மூன்றாக விளங்குபவை இவை. தஞ்சையில் நடைபெறும் 23 கருடசேவை வரலாற்றோடு தொடர்புடைய விழாவாகும். வைணவ ஆலயங்களில் அதிக அளவில் கருட சேவை ஒரே நேரத்தில் நடைபெறுவது இந்த தஞ்சை திவ்ய தேசத்தில்தான் என்பது இதன் தனி சிறப்பு.   தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரைப் பகுதியில் அமைந்துள்ள தஞ்சை நீலமேகப்பெருமாள், மணிகுன்றப்பெருமாள், வீரசிங்கப்பெருமாள் ஆகிய மூன்று ஆலயங்களும் வைணவ திவ்யதேச வரலாற்றுடன் தொடர்புடையது. பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டவை. 108 திவ்யதேசப் பெருமாள்களும் திருமங்கையாழ்வாருக்குக் கருட சேவை சாதித்ததாக ஐதீகம், இவ்வாறு பெருமாள்கள் சேவை சாதித்த நாள் வைகாசி திருவோண நாள் ஆகும் இதைக் கொண்டாடும் வகையில் இன்றும் தஞ்சையில் 23 கருடசேவை நடைபெறுகின்றன.    இந்தக் கருட சேவை உற்சவத்தில் அன்ன வாகனத்தில்  திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்து கொண்டு முன்  செல்ல அருள்மிகு நீலமேகப்பெருமாள் உற்சவர் நாராயணனும்,  ஆண்டாளும் கருட வாகனத்தில் முன்னே வர, தொடர்ந்து வீரசிங்கப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள் என அனைவரும் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக 23 கருட வாகனங்களில் காட்சி தருவதைக் காணக் கண் கோடி வேண்டும்.  தஞ்சை யாளி பெருமாள்,    நீலமேகப் பெருமாள்,  மணிகுன்றப் பெருமாள் எனும் திருப்பெயர்களில் எம்பெருமான் குடிகொண்டிருக்கும் இந்த தஞ்சை மாமணிக்கோயிலைத்தான் திருகுடந்தைக்கு அடுத்தபடியாக   திருமங்கையாழ்வார் தம் பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.     எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த எம் அண்ணல் வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி, நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம். (பெ.தி 1-1-8) பொருள்: பக்தி மிக்க அன்பர்களே! எனக்கு உதவுபவனும்,  எனக்கு தந்தையும், எனக்கு எல்லா உறவு முறையும், என்னை ஆள்கின்றவனும், எனது வாழ்நாளும், அன்பினால் அரக்கர் அஞ்சிடுமாறு அவர்கள் உயிரைமுடித்த  எங்கள் தலைவனும் ஆகிய பெருமாள் எந்நாளும் உறையும் மணம் வீசும் சோலைகளையும் பெரிய மதிலையும் உடைய தஞ்சை மாமணிக்கோவிலை வணங்கி நாராயணா என்னும் நாமத்தை நான் உய்யும் வண்ணம் கண்டு கொண்டேன்.          . பாரம்பரியமாக நடைபெற்று கொண்டிருந்த கருட சேவைப் பெருவிழா ஓயாத சண்டை சச்சரவு, அரசியல் குழப்பங்கள், அந்நியர் படையெடுப்பு போன்ற பல காரணங்களினால் தடைப்பட்டிருந்தது. பின்னர்ப் பல காலம் கழித்துத் தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் வசித்த கருடாழ்வார்தாசன் என்னும் மகானால் பன்னிரு கருட சேவையுடன் கோலாகலமாகத் துவங்கப்பட்டது. எனவே இவர் துவாதச கருடாழ்வார் தாசன் என அன்புடன் அழைக்கப்பட்டார். அந்த விழாவே தற்போது 23 கருட சேவையாகச் சிறப்புடன் நடைபெறுகின்றது.  வைகாசி திருவோணம் தொடங்கி மூன்று நாட்கள் இந்த உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. முதல் நாள் பெருமாள்கள் அனைவரும் வந்து சேர்தல் இராஜ வீதிகளில் கருட சேவை, இரண்டாம் நாள் நவநீத சேவை, மூன்றாம் நாள் விடையாற்றி.     தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் தமருள்ளும் தண்பொருப்பு வேலை – தமருள்ளும் மாமல்லைகோவல் மதிட்குடந்தையென்பரே ஏலவல்லவெந்தைக்கிடம். ( இ தி 70)   பொருள்: பக்தர்களுடைய இதயம் - தஞ்சை மாமணிக்கோவில், சிறந்ததான திருவரங்கம், திருத்தண்கால், பக்தர்கள் தியானிக்கின்ற அழகிய  திருமலை, திருப்பாற்கடல், பக்தர்கள் சிந்திக்கின்ற திருக்கடல் மல்லை, திருக்கோவலூர், திருமதில்களோடு கூடிய திருக்குடந்தை ஆகிய இத்தலங்களெல்லாம்  எதிரிகளை வெல்ல வல்லவனான  எம்பெருமானுக்கு இருப்பிடமென்பர் என்று பூதத்தாழ்வார்  பாடிய தஞ்சை கருடசேவையில்    1)ஸ்ரீநீலமேக பெருமாள் –  2)ஸ்ரீவீரநரசிம்ம பெருமாள், 3)ஸ்ரீமணிகுன்றப் பெருமாள்,  4)ஸ்ரீவரதராஜ பெருமாள், வேளூர் 5)ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள், வெண்ணாற்றாங்கரை 6)ஸ்ரீகோதண்டராமர், பள்ளி அக்ரஹாரம் 7)ஸ்ரீலட்சுமிநாராயண பெருமாள், சுங்காந்திடல் 8)ஸ்ரீயாதவ கண்ணன், கரந்தை 9)ஸ்ரீவெங்கடேச பெருமாள் ,கரந்தை 10)ஸ்ரீயோகநரசிம்ம பெருமாள், கொண்டிராஜபாளையம் 11)ஸ்ரீகோதண்டராமர், கொண்டிராஜபாளையம் 12)ஸ்ரீவரதராஜ பெருமாள், கீழராஜவீதி 13)ஸ்ரீகலியுக வேங்கடேச பெருமாள், தெற்குராஜவீதி 14)ஸ்ரீராமஸ்வாமி, அய்யங்கடைத்தெரு (பஜார்)  15)ஸ்ரீஜனார்த்தன பெருமாள், எல்லையம்மன் கோவில் தெரு 16)ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்,கோட்டை 17)ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள், கோட்டை 18)ஸ்ரீரங்கநாத பெருமாள், மேல அலங்கம் 19)ஸ்ரீவிஜயராமஸ்வாமி,  மேலராஜவீதி 20)ஸ்ரீநவநீத கிருஷ்ணஸ்வாமி, மேலராஜவீதி 21)ஸ்ரீபூலோககிருஷ்ணன், சகாநாயக்கன்தெரு 22)ஸ்ரீநவநீதகிருஷ்ணன்,  மானம்புச்சாவடி 23)ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள், மானம்புச்சாவடி    ஆகிய 23 பெருமாள்கள் கலந்து கொள்கின்றார்கள். முதல் நாள் 23 திருக்கோயில்களின் பெருமாள்கள் சர்வ அலங்காரமாகக் கருட வாகனத்தில் எழுந்தருளிக் கொடிமரத்து மூலையில் இருந்து  கிளம்பித் திருமங்கையாழ்வார் அன்ன வாகனத்தில் மங்களாசாசனம் செய்து கொண்டே எதிர் சேவையுடன் முன் செல்ல பெரிய திருவடியில் பெருமாள்கள்  அனைவரும் சேவை சாதித்துக்கொண்டு கீழராஜவீதி,   தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக பக்தர்களுக்குக் சேவை சாதித்து மீண்டும் கொடிமரத்து மூலையை வந்தடைகின்றனர்.  அங்கு மஹா தீபாராதனை நடை பெறுகின்றது.   என்செய்கேன் அடியேனுரையீர் இதற்கென்று  மென்மனத்தேயிருக்கும் புகழ், தஞ்சை யாளியைப் பொன்பெயரோன்றன்  நெஞ்சமன்றிடந்தவனைத் தழலேபுரை மின்செய் வாளரக்கன் நகர் பாழ்படச் சூழ் கடல்சிறை வைத்து இமை யோர்தொழும், பொன்செய் மால்வரையை மணிக்குன்றினை  அன்றியென்மனம் போற்றி என்னாதே (தி.மொ 7-3-9)  பொருள்: அடியேன் பெருமான் செய்த பேருதவிக்கு என்ன கைம்மாறு செய்வேன். சொல்லுங்கள் . எக்காலமும் என் உள்ளத்திலேயே குடியிருப்பதனால் ஏற்பட்ட புகழை உடையவனும், தஞ்சை மாமணிக்கோவிலை ஆள்பவனும், நரசிம்ம அவதாரத்தில்  இரணியனுடைய மார்பைப் பிளந்தவனும், நெருப்புப் போன்றவனாய் ஒளி விடும் வாட்படையை உடையவனான இராவணனின் நகரமாகிய இலங்கை பாழாகும்படி அந்நகரைச் சூழ்ந்து  அகழியாய் இருந்த கடலில் அணை கட்டியவனும், தேவர்களால் வணங்கப்படுபவனும், பெரிய மலை போன்றவனும், நீலமணிமயமான மலை போன்றவனுமான  நறையூர் நம்பியைத் தவிர மற்றொரு தெய்வத்தை  என் மனமானது போற்றாது என்று திருமங்கை மன்னன் மங்களாசாசனம் செய்துள்ளார்.  இத்திருக்கோவிலின் கருட சேவை உற்சவத்தின் இரண்டாம் நாள் நவநீத சேவை, தவழும் கண்ணன் கோலத்தில் கொடி மரத்து மூலையில் இருந்து கிளம்பி இராஜ வீதிகளில் சேவை சாதிக்கின்றனர் பெருமாள்கள். மூன்றாம் நாள் விடையாற்றி, வெண்ணாற்றங்கரையில் நீராட்டு விழா. வீரநரசிம்மர் ஆலயத்தில் திருமஞ்சனம், தீபாரதனை. பின்னர் பெருமாள்கள் அனைவரும் திரும்பிச் செல்கின்றனர். வாருங்கள் இனி பெருமாள் ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கும் திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தின் கருட சேவைகளை சேவிக்கலாம் அன்பர்களே.                           41. திருவல்லிக்கேணி  கருட சேவைகள் []     பார்த்தசாரதிப்பெருமாள் கருடசேவை   மாடமா மயிலை திருவல்லிக்கேணியில்  நின்ற, கிடந்த, அமர்ந்த கோலங்களில் ஐந்து பெருமாளாக சேவை சாதிக்கின்றார். ஐவருக்கும் பிரம்மோற்சவம் தனித்தனியாக நடைபெறுகின்றது. சித்திரையில் ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் பிரம்மோற்சவம். வைகாசியில் கஜேந்திர வரதர் பிரம்மோற்சவம்,  ஆனியில் ஸ்ரீஅழகிய சிங்கர் பிரம்மோற்சவம், பங்குனியில் இராம நவமியை ஒட்டி ஸ்ரீராமர் பிரம்மோற்சவம். பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீமந்நாதர் கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார். வைகானச ஆகமப்படி உற்சவங்கள் நடைபெறுவதால் மூன்றாம் நாள் அதிகாலை கோபுர வாசல் தரிசனத்துடன்  தங்க கருடசேவை அனைத்து பெருமாள்களின் பிரம்மோற்சவத்தின் போதும் நடைபெறுகின்றது. மேலும் ஆடிப் பௌர்ணமியன்று  “கஜேந்திர மோட்ச உற்சவம்”  ஆடி கருடன்  என்று நடைபெறுகின்றது. மாசி மகத்தன்று அதிகாலை சமுத்திரக்கரைக்கு தங்க  கருட வாகனத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகிறார்.  பங்குனியில் இராம நவமியை ஒட்டி சக்கரவர்த்தி திருமகனுக்கு பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் காலை   பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்  இரவும் நன்பகலும் துதிசெய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை  குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால  இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.  ( பெ. தி. 2-3-7)    பொருள்: பரதாழ்வானும் சத்ருக்னாழ்வானும், இலக்குவனோடு சீதையும் இடைவிடாது வணங்கும்படி   எழுந்தருளியிருக்கின்ற, இராவணனைக் கொன்றவனான எம்பெருமானை, குரவ மலர்கள் மணக்கும் குளிர்ந்த சோலைகளில் பாடும் குயில்களோடு கூட நின்று மயில்கள் ஆட, சூரியனின் கதிர்கள் ஒரு காலும் உள்ளே நுழைந்தறியாத திருவல்லிக்கேணியில் கண்டேன். என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த ஸ்ரீராமர்  தங்க கருட சேவை தந்தருளுகின்றார். பங்குனி உற்சவ சேர்த்தி உற்சவத்தின் போது மாலை  ஸ்ரீரங்கநாதசுவாமி கண்ணாடி கருடசேவை  தந்தருளுகின்றார். இவ்வாறு வருடம் முழுவதும் பல்வேறு கருட சேவைகளை நாம் இத்திவ்யதேசத்தில் சேவிக்கலாம்.    பார்த்தசாரதி சுவாமி கருடசேவை:  பிரம்மோற்சவ  கருட சேவையின் போது பார்த்தசாரதிப் பெருமாள் மேற்கு மாட வீதியில் வழங்கும் அற்புத நடனத்தை  கட்டாயம் கூற வேண்டும் ,  முதலில் வட மேற்கில் உள்ள கங்கை கொண்டான்   மண்டபம் வரை பக்தர்களின் தேங்காய் பழம் மற்றும் பட்டு துண்டுகளை ஏற்றுக் கொண்டு சேவை சாதித்துச் சென்ற  பெருமாள் மண்டபம் வந்தவுடன் அப்படியே பின் நோக்கி மாட வீதியின் இறுதி வரை திரும்பி வருகின்றார்.  அது வரை பக்தர்களால் நிறைந்திருந்த மாட வீதி காலி ஆகின்றது. அனைவரும் ஓரமாக ஒதுங்கி நின்று எதையோ எதிர்பார்த்துக் காத்து நின்றனர். அடியேனுக்கு ஒன்றும் தெரியவில்லை ஏன் பெருமாள் திரும்பி வந்தார் என்று யோசிக்கின்றீர்களா?  சிறிது நேரம் பக்தர்களுடன் காத்திருங்கள். நரசிம்மர் சன்னதியும் தாண்டி மேற்கு மாட வீதியின் முனைக்கு வந்த பார்த்தசாரதிப் பெருமாள்  அங்கிருந்து  பின்னர் கருடனில் பறந்து வருவது போலவே அற்புதமாக மேள சத்ததிற்கு ஏற்றவாறு அருமையாக   நடனம் ஆடியவாறு மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார்.   அந்த அழகை எப்படி வர்ணிப்பது  என்றே தெரியவில்லை. நெற்றிச் சுட்டி ஆட ஆட, .மலர் மாலைகள் தானாட, அர்ச்சக சுவாமிகள் இருவரும் இரு பக்கமும் நேர்த்தியாக கவரி வீச. குடைகளின் குஞ்சங்கள் மேலும் கீழுமாக அசைந்தாட அன்பர்களின் தோளில் பார்த்சாரதிப் பெருமாள் அப்படியே கருடனின் இரு சிறகுகள் அசைவது போலவும் அதில் அவசரமாக கஜேந்திரனை காக்க ஒரு கரத்தில் சுடராழி ஏந்தி, தோளில் அங்க வஸ்திரம் நின்றாட அவசர அவசரமாக  பறந்து வந்த கோலத்தையும், மேலும் அன்று பார்த்தன் தேரில் நின்றவாறே சாரத்தியம் செய்த அழகையும்.   நேரில் வந்து  தரிசித்தால் மட்டுமே அதை உணர முடியும். இந்த சேவையை ஏசல் என்று அழைக்கின்றனர் பக்தர்கள். கருட சேவை, யானை வாகனம், மற்றும் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் போது ஏசல் சேவை தந்தருளுகின்றார் பார்த்தசாரதிப் பெருமாள். பின்னர் கங்கை கொண்டான் மண்டபத்தில் நுழைவதற்கு முன்  வெள்ளைத் துணி கிழித்து வீசப்படுகின்றது. பின்னர் மண்டபத்தில் மண்டகப்படி கண்டு அருளுகிறார் பெருமாள். சுமார் ஒரு மணி நேரம் மண்டபத்தில் பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார்.  பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் வடக்கு மற்றும் கிழக்கு மாடவீதிகள் வழியாக அலங்கார மண்டபம் அடைந்து பின்னர் அங்கிருந்து ஏகாந்த சேவை சாதித்து ஆலயத்திற்குள் வருகின்றார் பெருமாள்.   முன்னும் பின்னும் பூரண நகை அலங்காரத்துடன் திருப்பாதங்கள் மற்றும் திருக்கரங்கள் வைரத்தில் மின்ன,  வெறும் ஒரு ரோஜா மாலை மட்டுமே அணிந்து அற்புதமாக பக்தர்களின் தோளில் ஆடி ஆடி ஆஸ்தானம் வருகின்றார் திருவோணத்தான், ஐந்தலைய பைநாகத்தலை பாய்ந்தவன், குடையாக் காலி காப்பவன்,  இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டைத் தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாளப்புரட்டிய மாயன், கள்ளச் சகடமும் மருதும் கலக்கழிய உதைத்த பிள்ளை அரசு, கரிய குழல் செய்ய வாய் முகத்து காகுத்த நம்பி,  பின்னை மணாளன் பார்த்தசாரதிப் பெருமாள். மிகவும் அருமையாக பெருமாளை அப்போது சேவிக்கலாம். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த அற்புதமான ஏகாந்த சேவையை நாம் சேவிக்க முடியும். இந்த ஏகாந்த சேவையை தரிசிப்ப்பவர்கள் பேறு பெற்றவர்கள் என்பதில் எந்த வித ஐயமும் தேவையில்லை.   விற்பெருவிழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை பற்றலர் வீயக்கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே. (பெ.தி 2-3-1)   பொருள்: வில் விழா என்னும் கொண்டாட்டமும், கம்சனும், சாணுரன், முஷ்டிகன் என்னும் மல்லர்களும், குவலாயாபீடம் என்னும் யானையும் அதன் பாகனுமாகிய அனைத்தும் விழும்படி அழித்தவனை, திரிபுரம் எரித்த சிவனடைந்த துன்பத்தை நீக்கிய தலைவனை, பகைவர்கள் அழியும்படி சாட்டையைக் கையில் கொண்டு அர்ச்சுனன் தேரின் முன்னே பார்த்தசாரதியாக நின்றவனை, தன் சிறிய தாயாகிய கைகேகியின் சொல்லால் முடிதுறந்த பெருமாளை திருவல்லிக்கேணியில் கண்டேனே.  என்று பார்த்தன் தேர் சாரதியாக எம்பெருமான் திகழ்ந்ததை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஏன், “பற்றலர் வீயக் கோல் கொண்டு பார்த்தன் தேர் முன் நின்றானை”  என்று ஆழ்வார்  மங்காளாசாசனம் செய்துள்ளார் என்று யோசிக்கின்றீர்களா?  பொதுவாக சாரதிகள் அமர்ந்து தானே சாரத்தியம் செய்வர் ஆனால் இங்கு ஏன் ஆழ்வார் நின்றானை என்று பாடியுள்ளாரே, அது ஏனென்றால்.  பீஷ்மரின் அம்பிலிருந்து அருச்சுனனைக் காப்பாற்றத்தான்.  ஸ்ரீகிருஷ்ணன் தனது மார்பிலும் முகத்திலும் பீஷ்மரின் அம்புகளை எல்லாம் தாங்கிக் கொண்டான்.  இவ்வாறு   மஹாபாரதப்போரில் பீஷ்மரின் அம்பு பட்ட காயங்களின் வடுக்களை பெருமாளின் முகத்தில் தெளிவாகக் காணலாம். தன் அன்பன் அர்ச்சுனுனனுக்காக ஏற்ற  புண்களை பெருமாள் இந்த கலிகாலத்திலும் தன்னுடைய எளிமையை காட்டி அருள் பாலிக்கின்றான்.  மூன்று முறை இந்த பார்த்தசாரதிப் பெருமாளை வார்த்த போதும் முகத்தில் இவ்வாறு வடுவுடன் பெருமாள் அமைந்தாரம், பின்னர் அசரீரியாக பெருமாள் இவ்வுண்மையை உணர்த்தினார் என்பார்கள் பெரியோர்கள். மேலும் பெருமாளின் இடுப்பில் யசோதை உரலில் கட்டிய கயிற்றின் தழும்பும் உள்ளது என்றும் கூறுகின்றனர். எனவே பெருமாளுக்கு தங்கக் கவசம் சார்த்தி மிகவும் பத்திரமாக காக்கின்றனர். பிரம்மோற்சவம் சித்திரை மாதத்தில் நடைபெறுகின்றது என்பதால் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பெருமாள் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று திருமேனி முழுவதும் சந்தனம் சார்த்தியிருக்கும் அந்த பக்தியை என்னவென்று சொல்ல.  மாசி மக தீர்த்தவாரி கருட சேவை: மாசி மகத்தன்று பார்த்தசாரதிப் பெருமாள் கடற்கரைக்குத் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தருளுகின்றார். வழியெங்கும் பக்தர்கள் பெருமாளை சேவிக்கக் காத்து நிற்கின்றனர். கடற்கரையில் வெயில் காலம் ஆரம்பமாகின்றது என்பதால் பெருமாளை சேவிக்க வருபவர்களுக்கு தண்ணீர், நீர் மோர், பானகம் கொடுக்க பக்தர்கள் காத்து நிற்கின்றனர். காலை இளஞ்சிவப்பு சூரிய ஒளியில் பெருமாளை சேவிப்பதே ஒரு ஆனந்த அனுபவம். கடல் அலைகள் தங்களை ஆசீர்வதிக்க ஓடும் புள்ளேறி வரும் ஆதி முதல்வனை வரவேற்க ஆர்ப்பரிப்புடன் வந்து தரையை தொட்டுவிட்டுச் செல்கின்றன. அதிகாலையில் பறவைகள் பூபாளம் பாட பக்தர்களின் தோளில் ஆடிக்கொண்டே பார்த்தசாரதிப் பெருமாள் வருகின்றார். கடலை அடைந்தவுடன் தண்ணீரில் இறங்குகின்றார் பெருமாள் பக்தர்கள் அனைவரும் அவருடன் கடலில் இறங்குகின்றனர்.  பின்னர்க் கடற்கரையில் வந்து சூரியனுக்கு  காட்சி தந்தபடி நிற்கின்றார் பார்த்தசாரதிப் பெருமாள்,  பக்தர்கள் சுற்றி நின்று பக்தவத்சலனுக்குப் பல்லாண்டு பாடுகின்றனர். பின்னர் சக்கரத்தாழ்வார்த் தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். அவருடன் பக்தர்கள் அனைவரும் கடல் நீராடுகின்றனர். கடற்கரையில் சுதர்சனாழ்வாருக்குத் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. சுமார் இரண்டு மணி நேரம் கடற்கரையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்னர் பெருமாள் கோவிலுக்குத் திரும்ப எழுந்தருளுகின்றார். மாசி மகத்தன்று காலையில் கருட சேவை சாதித்த பெருமாள் மாலை சேஷ வாகன சேவை தந்தருளுகின்றார். கண்ணாடி கருட சேவை: பங்குனி உத்திரத்தன்று தான் சீதா இராமர் திருக்கல்யாணம் நடைபெற்றது. பூலோக வைகுந்தமாம் திருவரங்கத்தில் இன்று தான்  "நம்பெருமாளும், அரங்க நாயகித் தாயாரும் சேர்த்தி சேவை" சாதிக்கின்றனர்.  அது போலவே பல வைஷ்ணவ ஆலயங்களில் அன்று திருக்கல்யாணமும், சேர்த்தி சேவையும் நடைபெறுகின்றது. திருநறையூர், திருவாலி திருநகரி வேடு பறி உற்சவம், தேரழுந்தூர், திருவிந்தளூர்,  திருநறையூரில் கல் கருட சேவையுடன் கூடிய   பிரம்மோற்சவம் என்று  பல திவ்யதேசங்களில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இந்தத் திருவல்லிக்கேணி  திவ்ய தேசத்திலும் பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீமந்நாதர் என்னும் அரங்கநாதர் மற்றும் வேதவல்லித் தாயார் சேர்த்தி உற்சவம்  நடைபெறுகின்றது. திருவல்லிக்கேணியில்  "என்னையாளுடையப்பன்" (மந்நாதன் என்னும் வடமொழிப் பெயரின் தமிழாக்கம்)  என்று அழைக்கப்படும்  அரங்கநாதர்,  வெங்கடகிருஷ்ணருக்கும்  முன்பாக  இங்கு   கோவில்   கொண்டதாக   ஐதீகம்.  ஒரு  சமயம்  பெரிய  பிராட்டியார்  திருமாலுடன்    கோபம்  கொண்டு துளசி செடிகள் நிறைந்த  இந்த  பிருந்தாரண்யத்தில்  அல்லி  மலர்கள்  நிறைந்த   கைரவணி  புஷ்கரணி  தடாகத்தில்  ஒரு  அல்லி  மலரில்  தோன்றினார்.  பிருகு மகரிஷிக்கு அந்தக் குழந்தை வேத  ஸ்வரூபமாக  காட்சியளித்ததாலும் அல்லி  மலரில் தோன்றியதாலும்  "வேதவல்லி"  என்று  பெயரிட்டு வளர்த்தார்.  வேதவல்லித்தாயார்    திருவரங்கனை  தம்  நாதனாக  ஏற்று வாரீர்  "எம் நாதரே"  என்று  அழைக்கவே  இத்தலத்தில் ஸ்ரீ ரங்கநாதர்  "ஸ்ரீமந்நாதன்"  என்றும் போற்றப்படுகின்றார்.  தாயாரை  திருக்கல்யாணம் செய்து  கொள்வதற்காக  ஸ்ரீரங்கநாதர்  இத்திருத்தலத்திற்கு   எழுந்தருளினார்  என்பது ஐதீகம்.   []   கண்ணாடி கருடனில் ஸ்ரீமந்நாதர்    பார்த்தசாரதி பெருமாளின்  கருவறைக்கு முன்பாக  இடப்புறத்தில்  அரங்கநாதரின் சன்னதி  அமைந்துள்ளது. பாம்பணையில்  புஜங்க  சயனத்துடன்  பள்ளி     கொண்ட  கோலத்தில்  இரு  புறமும்  தேவியர்  அமர்ந்திருக்க,  நாபியிலிருந்து     பிரம்ம      தேவருடன்  சேவை  சாதிக்கின்றார்  பெருமாள். அனந்த சயன  பெருமாளுக்கு  அருகே  உள்ளே மறைவாக சிரித்தபடி வராகரும் அமர்ந்திருக்கின்றார். உற்சவர்  ஸ்ரீதேவி  பூதேவி  தாயார்களுடன் சேவை  சாதிக்கின்றார். பங்குனி உத்திரத்தன்று கண்ணாடி கருடனில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார் மற்றும்     வேதவல்லித் தாயார் - அரங்கநாதர்  திருக்கல்யாணமும் அன்றைய தினம் நடைபெறுகின்றது.     இவரைத்  திருமங்கையாழ்வார்  வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்   கோதிலின் கனியை நந்தனார்க் களிற்றைக் குவலயத்தோர் தொழுதேத்தும்   ஆதியை அமுதை என்னையாளுடை யப்பனை ஒப்பவரில்லா   மாதர்கள் வாழும்  மாடமாமயிலைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே   ( பெ.தி 2-3-2) பொருள்:  வேத வடிவாய் இருப்பவனை, வேதத்தினால் பெறப்படும் இனிய பயனாய் இருப்பவனை, சனகர் முதலாகிய முனிவர்கள் உண்ணும் குற்றமற்ற பழம் போன்றவனை, நந்தகோபரின் திருமகனை ,உலகத்தார் பணிந்து துதிக்கும் முதல்வனை, அமுதம் போன்று இனியவனை, என்னை அடிமை கொண்ட தலைவனை, ஒப்பற்ற பெண்கள் வாழ்கின்ற மயிலாப்பூரின் திருவல்லிக்கேணியில் கண்டேனே.    என்று  மங்களாசாசனம் செய்துள்ளார். பங்குனி உத்திரத்தை ஒட்டி ஸ்ரீமந்நாதருக்கு ஐந்து நாட்கள் பல்லவ உற்சவம் நடைபெறுகின்றது. ஐந்து நாட்களும் பெருமாள் முன்பு  "ப்ருந்தாரண்ய புராணம்"  என்னும் திருவல்லிக்கேணி புராணம் பகலில் சேவிக்கப்படுகின்றது. இரவு அரங்கநாதப்பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டருளுகின்றார்.  நிறை நாள் பங்குனி உத்திரத்தன்று மாலை பௌர்ணமி நிலவொளியில் ஸ்ரீரங்கநாதர் கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார். இத்தலத்தில் மற்ற கருட சேவைகள் எல்லாம் அதிகாலையில் நடைபெற இவ்வொரு கருடசேவை மட்டும் மாலை நடைபெறுகின்றது என்பது சிறப்பு. அற்புதமாக திருக்கர  விரல்களில் நவரத்ன மோதிரங்கள்,  திருக்கரம் மற்றும் திருப்பாத  நகங்களில் கண்ணாடி,  திருக்கர கங்கணங்கள், கிரீடம், மேல் நோக்கிய இறக்கைகள்  ஆகியவற்றில் பல வர்ண கண்ணாடிகள், திருப்பாதத்தில் கண்ணாடி கொலுசு, திருவிழிகள் மாணிக்கம் போல் மின்ன,   மற்றும் பிரபை முழுவதும் அற்புதமாக கண்ணாடி வேலைப்பாட்டுடன் எழிலாக, பொன் வண்ணத்தில்  கருடன் விளங்க, அந்த வேத சொரூபனில்,  சர்வ அலங்கார பூஷிதராக,  கல்யாண மாப்பிள்ளையாகப்  பெருமாள் கண்ணாடிக் கருடனில்  சேவை சாதித்தருளுகின்றார். மூலவரை முத்த‘க்கியிலும், வேங்கட கிருஷ்ணரையும் ருக்,மணித் தாயாரையும் புஷ்பங்கியிலும் சேவிக்கலாம். பௌர்ணமி நிலவொளியில் பெரிய மாட வீதியில் சேவை சாதித்த பின் பெருமாள் ஆஸ்தான மண்டபம் எழுந்தருளி சேஷ வாகனத்தில் மறு அலங்காரம் கண்டருளி தாயார் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். சர்வலங்கார பூஷிதையாகத் தாயார் தம் நாதருக்காக காத்திருக்கின்றாள். மாலை மாற்றிய பின் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. சேர்த்தி சேவையின் போது உடையவர் எழுந்தருளுகின்றார்,    கத்ய த்ரயம் சேவிக்கப்படுகின்றது. (கத்யத்ரயம் என்பது இராமானுஜர் இயற்றிய சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் என்ற மூன்று நூல்கள் ஆகும். சரணாகதி கத்யம் பிரபத்தி என்ற சரண் புகுதலைப் பற்றியது. ஸ்ரீரங்க கத்யம் ரங்கநாதப்பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது, வைகுண்ட கத்யம் மஹாவிஷ்ணுவின் இருப்பிடமான வைகுந்தத்தை நேரில் பார்ப்பது போல விவரிப்பது).  இதன் மூலம் இராமானுஜர் சரணாகதி செய்து கொண்டு இறைவனை அடைந்தார்.  பெருமாளுடன் தாயார் இருக்கும் சமயமாகப் பார்த்து திருவரங்கத்த்தில் இராமானுஜர் கத்ய த்ரயம் சேவித்தார் என்பார்கள். அதனால் இன்றும் இந்த உற்சவத்தின் போது கத்ய த்ரயம் சேவிப்பது வழக்கம். தாயாரின் சிபாரிசு கிடைக்கும் அல்லவா?  நாமும்  பங்குனி உத்திரநாளில் மோட்சமளிக்கும்  (கண்ணாடி) கருட சேவையை சேவித்து, திவ்ய தம்பதிகளிடம் பிரபத்தி செய்து முக்தியடையோமாக.   ஸ்ரீபிரசன்ன  வேங்கட நரசிம்மப் பெருமாள் கருட சேவை  சித்திரை திருவோண நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பார்த்தசாரதி பெருமாளுக்கு  பிரம்மோற்சவம்    நடைபெறுவது  போலவே,      சென்னை சைதாப்பேட்டை  ஸ்ரீபிரசன்ன  வேங்கட நரசிம்மப் பெருமாள்.  ஆலயத்திலும் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது.  இத்தலத்தில் பெருமாள் வேங்கடவராகவும் நரசிம்மராகவும், உபய நாச்சியார்களுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். கருட சேவையும் ஒரே சமயம் நடைபெறுகின்றது.  பிரம்மோற்சவம் ஒன்றாக நடைபெறும் இந்த இரண்டு திருகோவில்களுக்கும் இனி ஒரு சம்பந்தமும் உண்டு. தைமாதத்தில் திருவூரல் உற்சவத்திற்காக ஈக்காட்டுத்தாங்கல் எழுந்தருளும் ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் இத்தலத்திற்கு விஜயம் செய்கின்றார். பின்னர் இரு பெருமாள்களும் ஒன்றாக மாடவீதி வலம் வருகின்றனர்.     இவ்வாலயத்தின்  வாகனங்கள்  செய்த  காலத்தில்  சிறப்பாக இங்கிலாந்திலிருந்து   இறக்குமதி  செய்யப்பட்ட சிறப்பு கண்ணாடி குண்டுகள் அனைத்து வாகனங்களிலும் பதிக்கப்பட்டனவாம். எனவே கண்களில் ஓளி விழும் போது அப்படியே கண் விழித்து அருள்வது போலத் தோன்றும்.  மூன்றாம் நாள் இரவு பெருமாள் அனுமந்த வாகனத்தில் பெருமாள் சேவை சாதிக்கும் போது  திருவடிக்கு வடை மாலை சார்த்துவது இத்தலத்தின் சிறப்பு.                                                           42. கல்கியின் கருட சேவை []     மாசி மகத்தன்று பார்த்தசாரதிப் பெருமாள் கடற்கரைக்கு எழுந்தருளி கருடசேவை சாதிப்பது போலவே பல்வேறு வைணவ ஆலயங்களிலும் பெருமாள் கடற்கரைக்கு எழுந்தருளி கருடசேவையில் தீர்த்தவாரி கண்டருளுகின்றார். இவ்வாறு மாசி மகத்தன்று தீர்த்தவாரி கண்டருளும் திவ்யதேசம் திருக்கடல்மல்லை. இத்தலத்தின் கருட சேவைகளைக் காணலாமா அன்பர்களே.  ஆழ்வார்களின் கடைகுட்டி, பெருமாளிடமே அஷ்டாட்சர மந்திரோபதேசம் பெற்று, அதிகமான திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்த  திருமங்கையாழ்வார் கடல் மல்லை தலசயனப்பெருமாளை கல்கி என்று  மங்களாசாசனம் செய்திருக்கின்றார்.    உடம்புருவில் மூன்றொன்றாய். மூர்த்தி வேறாய் உலகுய்ய நின்றானை அன்று  பேய்ச்சி  விடம்பருகுவித்தகனைக் கன்றுமேய்த்த விளையாடவல்லானை, வரைமீகானில்  தடம்பருகுகருமுகிலைத் தஞ்சைக்கோயில்  தவநெறிக்குஓர்பெருநெறியை,வையம்காக்கும்   கடும்பரிமேல்கற்கியைநான் கண்டுகொண்டேன் கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.(  பெ.தி 2-5-3)  பொருள்: உலகம் பிழைக்கும் பொருட்டு உடம்பின் வடிவில் மூன்று வகையாக இருப்பவை ஒன்றாகவும் (பிரமன், விஷ்ணு, சிவன்) உண்மையில் வடிவம் வேறாகவும் அமைந்து நிற்பவனும், கண்ணனாக பிறந்த போது  பூதனையின் விடம் கலந்த பாலை குடித்தவனும், கன்றுகளை மேய்த்து விளையாட வல்லவனும், மலை மேல் உள்ள காடுகளில் குளங்களிலே கன்றுகள் நீர் குடிப்பதற்காகத் தான் முன்னே இறங்கி கையை முதுகிலே கட்டிக்கொண்டு தண்ணீர் குடிக்கும் காளமேகம் போன்றவனும், தஞ்சை மாமணிக் கோயிலை அடையும் வழிகளில் சிறந்த வழியாகத் தானே இருப்பவனும், உலகைக் காப்பதற்காகக் குதிரையின் மேல் கல்கியாக அவதாரம் செய்ய இருப்பவனுமாகிய பெருமானைச் சோலைகள் சூழ்ந்த கடல் மல்லை தலசயனத்தே நான் கண்டு கொண்டேன்.  என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த கடல் மல்லை திவ்யதேசத்தின்    பெருமாள்: தல சயனப் பெருமாள் (ஆதி சேஷன் இல்லாமல் தரையில் நான்கு திருக்கரங்களுடன், வலத் திருக்கரத்தை திருமார்பில் ஞான முத்திரையாக, கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன், ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு பெருமாள் சேவை சாதிக்கின்றார்)  தாயார் : பெருமாள் போலவே தாமரை இல்லாமல் நிலத்தில் அமர்ந்து சேவை சாதிக்கும் நில மங்கைத் தாயார்.  உற்சவர் : உலகுய்ய நின்றான், தலசயனத்துறைவார். இவர் திருக்கரத்தில் தாமரை மலர் உள்ளது.  விமானம் : ஆனந்த விமானம்  திருமங்கை மன்னன் இத்தலசயனப் பெருமாளை  நின்றவூர் நித்திலமாகவும் கண்டு சேவித்திருக்கின்றார். இனி இத்தலத்தின் மற்ற சிறப்புகளைக் காண்போமா?  திருக்கடல் மல்லை என்னும் இத்தலம் மாமல்லபுரம், மஹாபலிபுரம் என்றும் அழைக்கப்படுகின்றது. மஹாபலி சக்கரவர்த்தி வாமனனிடம் கேட்டுப்பெற்ற வரத்தின் மூலம் இந்த ஊரை ஆண்டு வந்ததால் மஹாபலிபுரம் என்று ஆயிற்று என்பர். நரசிம்மவர்ம பல்லவன் மாமல்லன் என்று அழைக்கப்பட்டான் அவன் ஆண்ட ஊரானதால் மாமல்லபுரம் என்றாயிற்று என்பர்.  தமருள்ளம் தஞ்சை தலையரங்கம்தண்கால்  தமருள்ளந் தண்பொருப்பு வேலை -   தமருள்ளும் மாமல்லை கோவல்   மதிக்குடந்தையென்பரே ஏவல்ல எந்தைக்கிடம்  ( இ.தி 70) -   என்று பெருமாள் உறையும் இடங்களை பட்டியிலிட்ட முதல் ஆழ்வார்களில் ஒருவரான, கவுமோதகி என்னும் கதையின் அம்சமான பூதத்தாழ்வார் ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் குருக்கத்தி மலரில் திருஅவதாரம் செய்த தலம்.  பெருமாள் 27 திவ்ய தேசத்தில் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அவற்றில் ஆதிசேஷன் இல்லாமல் நிலத்தில் ஸ்தல சயனப் பெருமாளாக (தரை கிடந்தான்)  சேவை சாதிக்கும் தலம். மனித உருவில் வந்ததால் சங்கு சக்கரங்களும் இல்லை, ஸ்ரீதேவி , பூதேவியும் நாபியில் இருந்து பிரம்மனும் இல்லை. புண்டரீக முனிவர் சமர்பித்த ஆயிரம் இதழ் தாமரையில் திருவடிகளை வைத்த வண்ணம் சேவை சாதிக்கின்றார் பெருமாள். புண்டரீக முனிவருக்காக பாற்கடலில் இருந்து நிலமங்கையுடன் ஓடிவந்து தரிசனம் தந்த தலம்.  அயோத்தி, மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சி, அவந்திபுரி, துவாரகை என்னும் மோட்சத்தலங்களில் கிடைக்கும் புண்ணியத்தை விட பல ஆயிரம் மடங்கு புண்ணியம் கிடைக்கும் ஸ்தலம்.    மாசி மகத்தன்று (கும்ப மாதம் பௌர்ணமி) சூரிய உதய காலத்தில் தீர்த்த ஸ்நானம் செய்ய புண்ணியம் வழங்கும் ஸ்தலம்.  திருமங்கையாழ்வார் 26 பாசுரங்களாலும், பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும் பெருமாளை மங்களாசாசனம் செதுள்ளனர்.  பூதத்தாழ்வார் தாம் பாடிய இரண்டாந்திருவந்தாதியில் "அன்பே தகளியா" என்னும் பாசுரத்தில், நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான் என்று பாடியிருப்பதால், இவரை "பெருந் தமிழன்" என்று அழைக்கின்றனர்.  தல புராணம்:  புண்டரீக முனிவர் ஒரு சமயம் பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனுக்கு ஆயிரம் இதழ் கொண்ட ஓர் அற்புதத் தாமரை மலரை அர்ப்பணம் செய்ய அவா கொண்டார். அதற்காக கடலைக் கடப்பதற்காக கடல் நீரை தன் கைகளினாலேயே இறைத்து வற்றச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். கடலைக் கையால் இறைப்பது என்பது ஆகின்ற காரியமா? இல்லைதான் ஆனாலும் பெருமாளின் மேல் அதீத நம்பிக்கைக் கொண்ட புண்டரீக முனிவர் பெரும் நம்பிக்கையில் அப்பணியில் ஈடுபட்டார். தன் கருமத்திலேயே கண்ணாக ஈடுபட்டிருக்கும் புண்டரீக முனிவருக்கு அருள அந்த க்ஷீராப்தி நாதன் நிலமங்கைத் தாயாருடன் ஒரு வயோதிகர் உருவத்தில் வந்து என்னய்யா? கடல் தண்ணீரைக் கையால் இறைப்பது சாத்தியமா? என்று வினவினார். முனிவரும் சளைக்காமல் அகத்தியர் கடல் முழுவதையும் குடிக்கவில்லையா? என்று பதில் தர, முனிவரின் திட பக்திக்கு பிரசன்னமான பெருமாள் ஐயா நானும் உங்களுடன் இறைக்கிறேன் என்று கூறி சிறிது நேரம் இறைத்தபின், தான் களைத்து விட்டதாகவும் எனவே தனக்குப் பசிப்பதாகவும் உணவு தருமாறு புண்டரீக முனிவரிடம் வேண்ட தமது பர்ணசாலைக்கு சென்று உணவு கொண்டுவந்து பார்த்த போது முதியவரைக் காணவில்லை. ஆனால் அவர் கண்டது பெருமாளை வலக் கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு இருக்கரங்களால் தனது திருவடியே உய்யும் வழி என்று சுட்டிக்காட்டும் கோலத்தில் தாமரை மலரில் கால்களை வைத்த வண்ணம் ஸ்தல சயனப் பெருமாளாக சங்கு சக்ரதாரியாக, வைர கிரீடத்துடன், பீதாம்பரதாரியாய், ஸ்ரீவத்ஸம், வனமாலாதாரியாய் சேவை சாதித்துக் கொண்டிருந்தார். இன்றும் கை கூப்பிய நிலையில் பெருமாளை சேவிக்கும் புண்டரீக ரிஷியை கருவறையில் சேவிக்கலாம்.  உற்சவர் உலகுய்ய நின்றான் தமது திருக்கரத்தில் புண்டரீக மஹரிஷி சமர்பித்த தாமரை மலரை ஏந்திய வண்ணம் சேவை சாதிக்கின்றார். அதாவது  புண்டரீகரின் பக்தியை உலகத்தோர்க்கு உணர்த்தும் வண்ணம் பெருமாள் சேவை சாதிக்கின்றார்.  பெருமாள் தன் கரத்தினால் கடல் அலைகளைத் தொட்டுச் சாந்தி படுத்தியதால் இக்கடல் "அர்த்த சேது" என்று அழைக்கப்படுகின்றது. மாசி மகத்தன்று அதிகாலை சூரிய உதய காலத்தில் நீராட புண்ணியம். வருடத்தில் 365 நாட்களும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யலாம்.  முதலில் கடற்கரையில் கோவில் இருந்திருக்க வேண்டும், 14ம் நூற்றாண்டில் விஜய நகர மன்னன் பராங்குசன் தற்போது ஊர் நடுவில் உள்ள இக்கோவிலை கட்டியுள்ளார்.  தாயார் நிலமங்கைத்தாயாருக்கு துளசி அர்ச்சனை செய்ய கணவன் மனைவியிடையே ஒற்றுமை வளரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தாயார் சந்நி்தி முகப்பில் நெய்யால் மெழுகி சக்கரையினால் கோலமிடுகின்றனர்.  ஏனத்தினுருவாகி நிலமங்கையெழில் கொண்டான்  வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள  கானத்தின் கடல்மல்லை தலசயனத்து உறைகின்ற  ஞானத்தினொளியுருவை நினைவார் என் நாயகரே ( பெ.தி 2-6-3)  பொருள்: பெருமான், வராக வடிவம் எடுத்து நிலமகளின் அழகு கெடாதவாறு அண்டச்சுவரினின்று எடுத்து காத்தான். அமரர்கள்  தங்கள் தங்கள்  நிலைக்கு தகுதியாக மகிழ்ச்சி கொண்டு சுற்றி வருவதற்கேற்பக் காட்டின் நடுவே கடல் சார்ந்த திருக்கடல் மல்லையில் துயில்கின்ற ஞான ஒளி பொருந்திய வடிவை உடையவரை  நினைப்பவர் எனக்கு தலைவராவார்.  என்று நிலமங்கைத்தாயாரையும், பெருமாள் ஞானப்பிரானாக விளங்கும் பாங்கையும் மங்களாசாசனம் செய்கின்றார் ஆலி நாடன். இந்த மஹா வராகர் அகிலவல்லித் தாயாரை வலத்தொடையில் தாங்கி சரமச் சுலோகத்தை உபதேசிக்கும் கோலத்தில் சேவை தனிக் குடவறைக் கோவிலில் வலவெந்தையாக சேவை சாதிக்கின்றார்.  சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தை தீர்த்த நாளாகக் கொண்டு பத்து நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. விசாகத்தன்று புண்டரீக புஷ்கரிணியில் தீர்த்தம் கொடுக்கின்றார் பெருமாள். இப்பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது.  கருடசேவைக்காக மாலை  வைர அங்கியில் கையில் செங்கோல் தாங்கி எழிலாகப் பக்தி உலாத்தல் கண்டருளி வாகன மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார் பெருமாள். உலகுய்யநின்றான் அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும். அற்புதமாகப் பக்தர்களின் தோளில் ஒயிலாக ஆடியபடியே எழுந்தருளும் அழகே அழகு.  பின் அலங்காரம் ஆகி பெருமாள் புறப்பாடு ஆகும் போது இரவு 10  மணி ஆகிவிடுகின்றது. பின்னர் மாட வீதி வலம் வந்து அருளுகிறார் தலசயனத்துறைவார்.       ஐப்பசியில் பூதத்தாழ்வார் பத்து நாள் அவதாரத்திருவிழா, திருத்தேரில் பூதத்தாழ்வார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். 10ம் நாள் இவர் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகின்றது. மாத அவிட்ட நட்சத்தி்ரத்தன்று இவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. கோவில் எதிரே இவர் பிறந்த நந்தவனம் உள்ளது.  கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிப் பேர் மல்லை என்று   மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே   என்று திருகுறுந்தாண்டகத்தில் திருமங்கையாழ்வார் எம்பெருமான் உறையும் திருப்பதிகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே உய்ய முடியும் என்று அறுதியிட்டு கூறுகிறார். ஆதி வராகர் : இப்பகுதியை ஆண்ட ஹரிசேகர மன்னன், இடவெந்தைப்பிரானான, திருவிடந்தைப் பெருமாளைத் தினமும் சேவித்த பின் அடியவர்களுக்கு அன்னமிட்டு அதன் பின்னரே உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒரு நாள் மஹா விஷ்ணு பூமிதேவித் தாயாருடன் மனித ரூபத்தில் வந்து மன்னரிடம் உணவு கேட்டார். மன்னன் தான் வராகரைத் தரிசித்த பின் அன்னமிடுவதாக கூறியும் அவர்கள் கேட்காததால் அவர்களுக்கு அன்னம் படைத்தான். அதை உண்ட மஹாவிஷ்ணு வலதுத் தொடையில் தாயாரை அமர்த்தி லக்ஷ்மிவராகராக சேவை சாதித்தார். அதைக் கண்டு மகிழ்ந்த மன்னன் வராகருக்குத் தனிக்கோவில் அமைத்தான். ஸ்தல சயனப் பெருமாளுக்கும் முந்தைய மூர்த்தி என்பதால் இவர் ஆதி மூர்த்தி என்று அழைக்கப்படுகின்றார்.    புலங்கொள் நிதிக்குவையோடு புழைக்கைம்மா களிற்றினமும்  நலங்கொள் நவமணிக்குவையும் சுமந்து எங்கும் நான்றொசித்து  கலங்களியங்கும் மல்லைக் கடல்மல்லைத்தலச்சயனம்  வலங்கொள்மனத்தாரவரை வலங்கொள் என்மடநெஞ்சே. (பெ.தி 2-6-6)    பொருள்: எனக்கு கீழ்ப்படிந்திருக்கும் மனமே! பொற்குவியல்களோடு பெரிய யானைக் கூட்டத்தையும், நவமணிக்குவியல்களையும் சுமந்து கொண்டு எங்கும் கப்பல்கள் சுற்றிக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட கடலின் கரையில் அமைந்துள்ள கடல் மல்லையில் அமைந்த தலசயனத்தைச் சுற்றி வர வேண்டும் என்னும் எண்ணமுடையவர்களை வலமாக சுற்றி வருவாயாக.       என்று திருமங்கையாழ்வார் தன் மனத்திற்கு அறிவுறுத்தும் மாமல்லபுரம் ஸ்தல சயனப்பெருமாள் கோவிலில் மாசி மகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மாசி மகத்தன்று காலையில் உலகுய்ய நின்றான் பெருமாள் மற்றும்  ஆதிவராகப் பெருமாளும் கருட சேவை சாதிக்கின்றனர். இருவரும் கருடனில் ஆரோகணித்து கடற்கரைக்கு எழுந்தருள  தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறுகின்றது. புண்டரீக மகரிஷிக்காக திருமாலே கடல்நீரை இறைத்ததால் இக்கடல்  ‘அர்த்த சேது’ என அழைக்கப்படுகிறது. மாசி மகத்தன்று  இங்கு நீராடினால் இராமேஸ்வரத்தில் நீராடிய பலனும், வறுமை விலகி செல்வமும் பெறுவர் என்பது ஐதீகம். இனி மாப்பிளையாகப் பெருமாள் மாசி மகத்தன்று கடற்கரைக்கு எழுந்தருளும் அற்புத கருட சேவையைக் காணலாமா அன்பர்களே.                                                      43. பரதவர் குல மருமகன் கருட சேவை []   ஒவ்வோர் ஆண்டும் மாசி மகத்தன்று திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப்பெருமாள் 30கி.மீ தூரம் பயணம் செய்து பத்மாவதி நாச்சியாரின் கிராமமான திருமலைராயன் பட்டினத்திற்கு எழுந்தருளிகிறார். கடற்கரையில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.   திருமலைராயன் பட்டினத்திற்குச் செல்லும் வழியில் உள்ள பட்டினஞ்சேரி என்ற கடற்கரைக் கிராமத்தில் உள்ள மீனவ இன மக்கள் ஊர் எல்லையில் பெருமாளை பட்டும், மாலைகளும் ஏந்தி எதிர் கொண்டு அழைக்கின்றனர். தங்கள் மாப்பிள்ளையை, நெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரிராஜப் பெருமாளை எழுந்தருளப்பண்ணி தங்கள் தோள்களில் தூக்கி வைத்துக் கொண்டு   மாப்ளே! மாப்ளே! என்று கூப்பிட்டவாறே குலுக்குகின்றனர்.    இவருடன் திருமருகல் வரதராஜப்பெருமாளும் உடன் வருகின்றார்.  தங்கள் பகுதிக்கு வரும்  இவர்களைக் காரைக்கால் பகுதியை சார்ந்த திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீவீழிவரதராஜப் பெருமாள், ஸ்ரீவைகுந்தப்பெருமாள், நிரவி ஸ்ரீ கரிய மாணிக்கப் பெருமாள்,   காரைக்கால் ஸ்ரீ நித்ய கல்யாணப்பெருமாள், கோவில்பத்து கோதண்டராமர், ஆகிய எழு பெருமாள்கள் எதிர் கொண்டு  கடற்கரைக்கு அழைத்துச் செல்கின்றனர். கடற்கரைக்கு வந்த பெருமாள் கடலில் இறங்கி தீர்த்தம் கொடுத்தருளுகின்றார். பின்னர்  கரையில் கட்டு மரங்களால் அமைக்கப்பட்டு, மீன் வலை கொண்டு  விதானம் கட்டபட்ட பந்தலில் மீன் காய வைக்கும் பாயை ரத்ன கம்பளமாக விரிக்கின்றனர். அன்று பெருமாள் நெற்கதிர்களால் எழிலாக அலங்கரிக்கப்பட்ட பவளக் கால் சப்பரத்தில் சௌரி முடியுடன் தங்க கருடவாகனத்தில் சேவை சாதித்து அருளுகின்றார்.  மற்ற எட்டு பெருமாள்களும் தோளுக்கினியானில் கடற்கரையில் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கின்றனர்.   ஸ்ரீ சௌரிராஜப்பெருமாள் தங்கள் கிராமத்திற்கு எழுந்தருளுவதை ஒட்டி இந்த மீனவர்கள் முதல் நாளும், மாசிமகத்தன்றும் மறு நாளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதில்லை. புலால் உணவு உண்பதையும் தவிர்க்கின்றனர். பெருமாள் தங்கள் சேரிக்குள் நுழையும் போது, அந்த மீனவக்குலப் பெண்கள் நேராக வந்து வணங்குவதில்லை. மருமகனுக்கு முன்னால் வந்து பெண்கள் நிற்கக் கூடாது என்பது மரபாம். மீனவர்களுக்கு அதாவது பெண்  வீட்டாருக்கு வெற்றிலை, பாக்கு துளசி மாலை ஆகியவற்றுடன் பத்துத் தோசைகளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இத்தலத்தில் வருடத்தில் ஒரு நாள்  இந்த மீனவர் குலத்தினருக்காக ஆண்டுக்கொரு முறை விசேஷ பூஜைகள் ஆராதனைகள் செய்யப்படுகின்றன.     ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் தங்கள் இல்லங்களில் பணியாளாக இருந்து, தங்கள் இனத்தை சார்ந்த பத்மாவதி என்ற இராஜ குமாரியை விரும்பி மணம் செய்து, தன்னோடு அழைத்துச் சென்றதாக ஒரு கர்ண பரம்பரை கதையைச் சொல்லி இவர்கள் மகிழ்கின்றனர்.   கீழைக் கடற்கரைக்கு செல்ல திருமலைராயன்பட்டினம் கிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரம் வயல்வெளிகளில் நடந்து செல்ல வேண்டும். அறுவடை முடிந்த பின் வெற்றாக இருக்கும் நிலத்தின் வரப்பில் நடந்து செல்வதே ஒரு தனி அனுபவம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் அனைத்து பெருமாள்களையும் காணச் செல்லுவதை காண்பதே ஒரு பரவசம். கடற்கரையில் மீன் வலைப்பந்தலில்  தங்கக் கருட வாகனத்தில் சௌரி கிரீடத்துடன் சவுரிராஜப்பெருமாளை  பாதம்நாளும் பணியத்தணியும்பிணி ஏதம்சாரா எனக்கேலல் இனியென்குறை?  வேதநாவர்விரும்பும் திருக்கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லலில்லையே  ( திரு 9-10-9) பொருள்: அவனது திருவடிகளை வணங்க  இதற்கு முன் நாள் தோறும் ஈட்டிய நோய்கள் எல்லாம் நீங்கும்; இனி ஒரு நோயும் வராது; ஆதலால், இவ்வாறான பின்னர் எனக்கு என்ன குறை உள்ளது? வேதங்களை ஓதுகின்ற பிராமணர்கள் வாழ்கின்ற  திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்ற ஆதிமூர்த்தியான எம்பெருமானை அடைந்தவர்களுக்கு  ஒரு துன்பமும் இல்லையாம்.   என்று நம்மாழ்வாரின் பாசுரம் சேவித்துக் கத்தும் கடற் கரையில், உப்பு காற்றின்  மணத்தில் மணலில் நடந்து தோளுக்கினியானில் மற்ற பெருமாள்களையும் கருட வாகனத்தில் திருமாமகள் தன் கேள்வன், நினைத்ததை நிறைவேற்றும் பேராற்றல் பெற்றவன், தாயெடுத்த கோலுக்கு உளைந்தோடி அத்தயிருண்ட வாய் தொடைத்த மைந்தன், கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்தாம்மான், கிருஷ்ணன் கண்ணபுரத்து அமுதன், வைகுந்தம் வழங்குபவன், காவிரி நல் நதி பாயும்  கண்ணபுரத்து என் கண்மணி, சௌரிப்பெருமாளை  சேவிப்பதே ஒரு அற்புதப் பரவசம். அவசியம் சென்று சேவியுங்கள் அதை எப்போதும் மறக்கமாட்டீர்கள்.  இல்லையலல் எனக்கேல் இனியென்குறை  அல்லி மாதரமரும் திருமார்பினன்  கல்லிலேய்ந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம்  சொல்ல நாளும் துயர் பாடு சாரவே. ( திரு 9-10-10)  பொருள்: தாமரை மலரில் அமரும் திருமகளை  மார்பிலே பெற்ற எம்பெருமான் எழுந்தருளியுள்ள தலம் திருக்கண்ணபுரம் ஆகும். கற்களால் கட்டப்பட்ட மதில் சூழ்ந்த அந்த திருக்கண்ணபுரத்தை அடைய முடியாதவர் கூட, அத்தலத்தின் பெயரை சொல்கின்ற அளவிலேயே துன்பம் அவர்களை நெருங்காது; சௌரிப்பெருமாள் அருள் செய்வான். அதனால் ஒரு நாளும் எனக்குத் துக்கம் இல்லை; இனி என்ன குறையுண்டு.  திருக்கண்ணபுரத்தில் மாசிமக பிரம்மோற்சவம் தேரோட்டம், மாசி மக சமுத்திர தீர்த்தவாரி, வெள்ளி இரதம், தெப்போற்சவத்துடன் 14 நாட்கள் மிக சிறப்பாக நடைபெறுகின்றது. முதலாம் திருநாள் கொடியேற்றம், நான்காம் திருநாள் இரவு தங்க கருட வாகன சேவை, ஏழாம் திருநாள் திருத்தேரோட்டம், எட்டாம் நாள் இரவு நடுநிசி தங்கப் பல்லக்கில் மாசி மக சமுத்திர தீர்த்தவாரிக்காக தங்கப் பல்லக்கில் திருமலைராயன் பட்டிணத்திற்காகப் புறப்படுகின்றார் சௌரிராஜப்பெருமாள். ஒன்பதாம் திருநாள் காலை  9 மணியளவில் ஆலங்குடிச்சேரி மண்டபத்தில்  பக்தர்களுக்கு சேவை திருமண்டபம்,  பகல் 12 மணியளவில் திருமலைராயன் பட்டிணம் வெள்ளை மண்டபம் எழுந்தருளல். மாலை மூன்று மணிக்கு தங்க கருட சேவை, மாலை 5 மணியளவில் பட்டினச்சேரியில் சமுத்திரத்தில் தீர்த்தவாரி, இரவு 7 மணிக்கு ஸ்ரீ வீழி வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளி திருக்கைத்தல சேவை, பின்னர் 9:30 மணிக்கு திருமஞ்சனம். இரவு 1 மணிக்கு தங்கத் தோளுக்கினியானில் .பட்டினப்பிரவேசம். பத்தாம் திருநாள் அதிகாலை 5 மணிக்கு வெள்ளை மண்டபம் எழுந்தருளி பின் 8 மணிக்கு ஆலங்குடி மண்டபத்தில் திருமண்டபம். மதியம் 1 திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவில் திருமண்டபம் எழுந்தருளல், பின்னர் சன்னதி எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளி திருக்கண்ணபுரம் திரும்புகின்றார். பதிமூன்றாம் திருநாள் விடையாற்றி திருமஞ்சனம், வெள்ளி இரதப்புறப்பாடு. பிரம்மோற்சவ நிறைவாக பதினான்காம் நாள் தெப்போற்சவம்.   தமிழகத்தை சுனாமி தாக்கிய வருடம்   இந்த விழாத் தடைப்பட்டது. இவ்வளவு தூரம் பெருமாள் சென்று  வர வேண்டுமா? என்று ஒரு வாதம் எழுந்து இவ்விழா நின்று விடும் நிலை ஏற்பட்டபோது இந்த பரதவ குல மக்கள் முடியாது தங்கள் மாப்பிள்ளை தங்கள் ஊருக்கு வந்தே ஆக வேண்டும் என்றும் அதற்காக எந்த சிரமமானாலும் தாங்கள் ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இருப்பதாக கூறியதால் இன்றும் பெருமாள் மாசி மகத்தன்று திருமலைராயன் பட்டினம் எழுந்தருளி அந்த எளிய பக்தர்களுக்குச் சேவை சாதித்து அருளுகின்றார்.     திருக்கண்ணபுர பெருமாள் பத்மாவதி நாச்சியாரின் பிறந்த  ஊருக்கு கருட வாகனத்தில் எழுந்தருளுவது போலவே இன்னொரு திவ்ய தேசப்பெருமாளும் கருட சேவையின் போது கனகவல்லி தாயாரின் பிறந்த  ஊருக்கு எழுந்தருளுகின்றார். வாருங்கள் அவருடைய கருடசேவையையும்  திவ்யமாகச் சேவிக்கலாம்.                                         44. வைத்தியர் கருட சேவை []     திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் தை மாத பிரம்மோற்சவக் கருட சேவையின் போது, கனகவல்லித் தாயார் பிறந்த வீடான ஈகாடு சென்று வருகிறார். இவர்  சாலிஹோத்ர முனியின் பர்ணசாலையில் தானே வந்து  கிடந்த பெருமாள். வீக்ஷாரண்யத்தில்  மது கைடபர்களை அழித்து வேதியர்களைக் காத்த பெருமாள். வள்ளலாரின் தீராத வயிற்று வலியை தீர்த்து வைத்த  வைத்திய வீரராகவப்பெருமாள். பாண்டவர்களுக்காக தூது சென்ற பெருமாள்.      முன்ஓர்தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாளமுனிந்து அவனே பின் ஓர் தூது ஆதிமன்னர்க்காகி பெருநிலத்தார்  இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே ( பெ.தி 2-2-3)    பொருள்: இராமபிரானாய்த் தோன்றிய காலத்தில் தூது செய்தியினை அனுமன் வழியாக சொல்லியனுப்பி, இராவணது இலங்கையை அம்பினால் அழித்தவனே, கிருஷ்ணாவதார காலத்தில் பாண்டவர்களுக்கு ஒரு தூதுவனாய் தானே சென்று, உலகத்திலுள்ளவர்கள் இவன் பாண்டவர் தூதன் என்று சொல்லும்படி நிலை பெற்று நின்ற எம்பெருமான் எவ்வுளில் பள்ளி கொண்டான் என்று பெருமாளின் எளிமையை மங்களாசாசனம் செய்கின்றார் நம் கலியன்.       இக்கலியுகத்தில் சாலிஹோத்ர முனிவரின் தலைமேல் கையை வைத்த நிலையில் புஜங்க சயனத்தில் அற்புதமாக சேவை சாதிக்கும் பெருமாள் . திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமாள். இன்றும் தன்னை நம்பி வந்து சரணடைபவர்களின் உடல் நோயை மட்டும் அல்ல பிறவி நோயையும் தீர்க்கும் பெருமாள்.                                      தனது தீராத வயிற்று வலியை தீர்த்து வைத்த  வைத்திய வீரராகவரைப் போற்றி சைவரான வள்ளலார் “ ஸ்ரீவீரராகவர் போற்றி  பஞ்சகம்” பாடியுள்ளார் அதில் இரு பாடல்கள்.    தண்ணமர் மதி போல் சாந்தத் தழைத்த தத்துவனே போற்றி வண்ணமா மணியே  போற்றி மணிவண்ணத் தேவா போற்றி அண்ணலே எவ்வுளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி விண்ணவர் முதல்வா போற்றி வீரராகவனே போற்றி.   பொருள்: சந்திரன் போன்று குளிர்ந்தவனே போற்றி, அழகிய மாணிக்க மணியே போற்றி, மணியின் நிறம் கொண்ட தேவனே போற்றி, திருவள்ளூரில்  அமர்ந்த ஆதி மூர்த்தியே போற்றி, தேவர்களில் முதல்மையானவனே போற்றி வீர்ராகவப்பெருமாளே போற்றி.      இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே களங்கமில் விபீடணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி விளங்குநல் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி   பொருள்: சீதாபிராட்டியாரை கவர்ந்து சென்ற இராவணனை அழித்து அவன் இளையவன் குற்றமில்லாத வீபீடணருக்கு அரசை அளித்தவனே போற்றி, முனிவர்களின் துயரை துடைத்தவனே போற்றி, திருவள்ளுரில்  வாழ்கின்ற வீரராகவனே போற்றி.     அற்புதத்திருவை மார்பில் அனைத்தபே ரழகா போற்றி பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி வெற்புயர்  எவ்வூ ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.   பொருள்: திருமகளாம் பெரிய பிராட்டியாரை மார்பில் கொண்ட பேரழகனே போற்றி, திருக்கரங்களில் சக்கரமும், சங்கும் ஏந்திய புனிதனே போற்றி, என்னுடைய தீரா நோயைத் தீர்த்து என்னை மகிழ்வித்த வைத்திய வீரராகவனே போற்றி,  .உயர்ந்த மதில்களைக் கொண்ட திருவள்ளூரில் வாழ்கின்ற வரதனே போற்றி.     இந்த வீக்ஷாரண்ய க்ஷேத்திரத்தில் பத்ரிகாசிரமத்திலிருந்து வந்த சாலிஹோத்ர முனிவர், ஹ்ருதபாப நாசினி குளக்கரையில் பர்ணசாலை அமைத்து ஸ்ரீமந்நாராயணை நினைத்து பரமபதம் வேண்டித் தவம் செய்து வந்தார். சாலிஹோத்ரர் என்பது காரணப்பெயர்.  சாலி என்றால் நெல் அளக்கும் படி. இவரது பெற்றோர் சந்தான பாக்கியம் வேண்டி 28000 சாலி நெல் கொண்டு ஒரு வருடம் யாகம் செய்து, இவரைப் பிள்ளையாகப் பெற்றனர். எனவே இவருக்கு சாலிஹோத்திரர் என்று பெயரிட்டனர்.    இவர் ஒரு வருடம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து,  வருடம் முழுவதும் சேகரித்த நெல்லைக் கொண்டு அமுது பண்ணி அதை தை அமாவாசையன்று பெருமாளுக்கு நிவேதனம் செய்தார். அந்த நிவேதனத்தை வரும் அதிதிக்கு முதலில் அளித்து மீதமுள்ளதை தான் உண்ணலாம் என்று காத்திருந்தார்.  அப்போது ஒரு முதிய வேதியர் அங்கு வந்தார், தங்கள் பர்ணசாலைக்கு வந்த அதிதியை அன்புடன் வரவேற்று அவருக்கு பாத பூஜை செய்து அவருக்கு அன்னத்தின் ஒரு பகுதியை அளித்தார். அதை உண்ட முதியவர், இன்னும் பசியாக உள்ளது என்று மறு பகுதியையும்  வாங்கி  அன்னம் முழுவதுமாக உண்டு விட்டு சென்றார். சாலிஹோத்திரர் பசியுடனே தவத்தை தொடர்ந்தார்.  அடுத்த வருடம் அதே நாள், அதே தை அமாவாசை, அதே முதியவர் வந்தார், இப்போதும் அவரை உபசரித்த சாலிஹோத்ர முனிவர் அவருக்கு அன்னத்தைப் படைத்தார். அனைத்து அன்னத்தையும் உண்ட முதியவர் உண்டு முடித்த பின் படுக்க எவ்வுள்? என்று வினவினார். அதாவது எங்கே படுத்து சிறிது சிரமப்பரிகாரம் செய்து கொள்ளலாம் என்றார். முனிவரும் தனது பர்ண சாலை குடிசையைக் காட்ட அதில் சென்று படுத்துக் கொண்டார் அந்த முதியவர்.  உறங்கிய முனிவருக்கு ஒரு போர்வையை போர்த்தினார் சாலிஹோத்ர முனிவர். அதே போன்ற  போர்வையைத்தான் இன்றும் வீரராகவர் தினமும் சார்த்திக் கொள்கிறார். அப்போர்வை பப்ளி வேஷ்டி என்று அழைக்கப்படுகின்றது. பெருமாளின் அருளால் நோய் தீர்ந்தவர்கள் பெருமாளுக்கு பப்ளி வேஷ்டி (வெள்ளை சிவப்பு கட்டம் போட்ட வேட்டி இத்திருக்கோயிலேயே கிடைக்கின்றது)  சார்த்துவது இத்தலத்தின் ஒரு சிறப்பு  பிரார்த்தணையாகும்.   மாலை நேரம் ஆகியும் உறங்கச் சென்ற அதிதி வெளியே வராததைக் கண்ட முனிவர் சன்னலின் வழியே உள்ளே நோக்க அப்படியே ஆனந்தத்தில் கூத்தாட ஆரம்பித்து விட்டார்.உள்ளே பெருமாள் தனது பாம்பணையில் ஒய்யாரமாக சயனித்து பீதம்பரதாரியாய், சங்கு சக்கரம் ஏந்தி, மார்பில் ஸ்ரீவஸ்தம், கௌஸ்துபம் மின்ன, வனமாலை, துளசிமாலை அசைந்தாட பிரசன்ன வதனத்துடன் ஒய்யாரமாக சேவை சாதித்து கொண்டிருந்தார்.  திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளே, நஞ்சரவில் துயில் கொண்ட நாதனே, படுத்த பைந்நாகணைப் துயிலமர்ந்த வேந்தே, அரவினணை மேலானே , அனந்த சயனனே, பையரவினணைப் பாற்கடலுள் பள்ளி கொண்ட பரம மூர்த்தியே இங்கு அடியேன் பொருட்டு தானே வந்து சேவை சாதித்தீரே என்று அவரைப் பலவாறு போற்றிய சாலிஹோத்ர முனிவரைப் பார்த்து என்ன வரம் வேண்டும் என்று பெருமாள் வினவ, ஐயனே எமக்குச் சேவை சாதித்த கோலத்திலேயே இங்குத் தாங்கள் இருந்து பக்தர்களின் குறை தீர்க்க வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வாறே நாம் எல்லோரும் உய்ய இன்றும் அதே கிடந்த கோலத்தில் புஜங்க சயனத்தில் இன்றும்  சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார்.  சாலிஹோத்ர மஹரிஷியின் ஆஸ்ரமமே திருஎவ்வுள் என்ற பெயர் பெற்றது பின்னர் திருஎவ்வுளூர் என்று மாறி தற்போது திருவள்ளூர் என்றழைக்கப்படுகின்றது.  வீரராகவ சுவாமியை தரிசிக்க செல்லும் போது சுவாமியின் சன்னதி கதவில் வெள்ளி தகட்டில் இந்த   சம்பவங்களும் தசாவதார சிற்பங்களும் எழிலுற அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம் அன்பர்களே.   பெருமாள் கேட்ட எவ்வுள் என்ன என்று யோசித்தீர்களா? எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவர் பெருமாள். ஆகவே உன் இதயத்தின் உள்ளேயா அல்லது இந்த வீட்டின் உள்ளேயா? என்று பெருமாள் கேட்டார் அது போலவே வெள்ளறை என்பது களங்கமே இல்லாத தூய உள்ளம் அவ்வாறு “நிஷ்களங்கமான உள்ளமே அந்த பரமனின் வீடு”  என்று பரனூர் மகாத்மா அவர்கள் எவ்வுள் என்பதற்கு அருமையான விளக்கம் தருவார்.  இத்தலத்துடன் இணைந்துள்ள இன்னொரு ஐதீகம்,  இராஜா தர்மசேனனின் புதல்வியாக வஸுமதி என்ற பெயரில் தோன்றிய மகாலக்ஷ்மியை இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டு    இங்கேயே வசிப்பதாக வாக்குக் கொடுத்து (மாமனர் இல்லத்திலே) அதன் படி இங்கேயே எழுந்தருளி இருப்பதாகவும் தலபுராணம் கூறுகின்றது. பாலனாகி ஞாலமேழுமுண்டு பண்டு ஆலிலை மேல்   சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக்கண்ணன், எண்ணில்  நீலமார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி  ஏலநாறும் பைம்புறவில் எவ்வுள் கிடந்தானே. (பெ.தி 2-2-5)  பொருள்: ஆராய்ந்து பார்த்தால் முன்பு ஊழிக்கால இறுதியில் சிறு பிள்ளையாய் உலகங்கள் ஏழையும் தனது வயிற்றில் அடக்கிக் கொண்டு ஆலந்தளிரிலே நெடுங்காலம் கிடந்த பெருமான், நீல நிறம் பொருந்திய, வண்டுகள் தேனை உண்டு வாழும் நெய்தல் மலர்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களையும், மணம் வீசும் சோலைகளையும் உடைய எவ்வுளில் கிடந்தானே.   இத்தலத்தின் தீர்த்தம் ஹிருதபாப நாசனி என்று அழைக்கப்படுகின்றது. கங்கையினும் புனிதமான இக்குளத்தின் நீர் எவருடைய உடலில் படுகின்றதோ அவர்களின் பாபங்கள் எல்லாம் கரைந்து விடுகின்றன. மனக்குறைகள் எல்லாம் தீருகின்றன. அமாவாசை தினத்தில் அதுவும் பெருமாள் இத்தலம் வந்து கிடந்த தை அமாவாசையன்று இத்தீர்த்தத்தில் வந்து நீராடி விஜய கோடி விமானத்தில் பள்ளி கொண்ட இப்பெருமாளை சேவிக்க அனைத்து பாபங்களிலும் இருந்தும் விடுபடுவர் என்பது ஐதீகம்.  இத்தலத்தில் பெருமாளை வேண்டிக்கொண்டு உப்பும் மிளகும் சேர்த்து ஹிருதபாப நாசினி தீர்த்தத்தில் வெல்லம் கரைத்து வழிபட்டும் நோய் தீர்ந்தவர்கள் பல்லாயிரம் பேர்.  சர்ம நோய் தீர பால் மற்றும் வெல்லத்தை இக்குளத்தில் கரைக்கின்றனர். வெல்லம் கரைவது போல நோய் கரைகின்றது என்பது ஐதீகம். வருடத்தில் இரண்டு முறை இக்குளத்தில் வீரராகவப்பெருமாள் தெப்போற்சவம் கண்டருளுகிறார்.  ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இருந்த இந்த புனிதமான குளம் இன்று  தகுந்த பராமரிப்பு இல்லாமல்  சுருங்கி விட்டது. நீர் தற்போது நீராழி மண்டபத்தை சுற்றி மட்டுமே உள்ளது. மற்ற இடத்தை பூஞ்சோலை ஆக்கிவிட்டனர்.   தாயார் கனகவல்லி தனிச் சன்னதியில் அழகான மண்டபத்தில் அருள் பாலிக்கின்றாள். தாயார் சன்னதியில் துவார பாலகிகள் கரங்களில் தாமரை தாங்கி காவல் காக்கின்றனர்.  மேலும்  சீதா இலக்குவனுடன் இராமர், சதுர்புஜ  வேணு கோபாலன், ஸ்ரீநிவாசர், ஆண்டாள், நம்மாழ்வார், திருக்கச்சி நம்பிகள், இராமானுஜர் சன்னதிகள் இத்தலத்தில் அமைந்துள்ளன. இத்தலத்தில் கருடாழ்வார் ஒரு சிறப்பு கோலத்தில் சேவை சாதிக்கின்றார் அது என்ன என்று காணலாமா அன்பர்களே? இந்த ஆலயத்தில், சிம்மம் தாங்கும் தூண்கள் அமைந்த இரு பதினாறு கால் மண்டபங்களுக்கிடையில் அழகாய் அமைந்துள்ளது கருடன் சன்னதி. கணமும் கண்ணிமைக்காமல் பெருமாளைத் தரிசித்தபடி அமர்ந்த நிலையில்  எழிலாகச் சேவை சாதிக்கின்றார் கருடாழ்வார். திருவரங்கத்தில் உள்ளது போலவே இங்கும் கோலம் ஆனால் கல்லால் ஆன இந்த கருடன் அவ்வளவு பிரம்மாண்டமில்லை. ஒவ்வொரு நாகமும் ஒவ்வொரு விதமாகச் செதுக்கப்பட்டுள்ளது  ஒரு தனிச் சிறப்பு. இடுப்பிலே இடது பக்கம்  ஐந்து தலை நாகம்,  அருகிலேயே நின்ற கோலத்தில்  செப்புத் திருமேனியாக உற்சவர் கருடன்,  வலது தோளில் உள்ள நாகம் எழிலாக இறங்கி வரும் கோலம். பார்க்க பார்க்க தெவிட்டாத அற்புத திருமேனி. இருவரும் அருமையாக  சேவை சாதிக்கின்றார்.  தை அமாவாசையை மையமாகக் கொண்டு ஒரு பிரம்மோற்சவம். மற்றும் சித்ரா பௌர்ணமியை தீர்த்தநாளாகக் கொண்டு ஒரு பிரம்மோற்சவம் என வருடத்தில் இரு பிரம்மோற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை தங்கக் கருட சேவை தந்தருளுகின்றார் பெருமாள்.     தை மாதம்  குளிர் காலம் என்பதால் கருட சேவை கோபுர வாசல் தரிசனம் காலை 5.30 மணியளவில், பின்னர் மாமியார் வீடான ஈகாடு செல்கின்றார் பெருமாள். ஈகாடுதான் மஹாலக்ஷ்மித்தாயாரின் பிறந்த வீடு. தர்மசேனன் என்னும் மன்னன் மகளாக பிறந்து வசுமதி என்னும் திருநாமத்துடன் வளர்ந்து வந்தாள். தாயாரை ஆட்கொள்ள பெருமாள் ஒரு இராஜகுமாரனாக வந்து  ஒளிந்திருந்த மது கைடபர்களை அழிக்க சுதர்சன சக்கரம் ஏவி அவர்களை அழித்து, பின் வசுமதியைக் கண்டு சொக்கி தர்மசேனனிடம் வசுமதியின் கரம் வேண்டினார். தன் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அங்கேயே தங்கி விட வேண்டும் மன்னன் நிபந்தணை விதிக்க அதற்கு ஒத்துக்கொண்டு வசுமதியை திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கி விட சம்மதிக்கின்றார். எனவே இருவர் திருமணமும் சிறப்பாக நடைபெறுகின்றது.  அவர்களின் குல வழக்கப்படி புது மணமக்கள் வீரராகவப்பெருமாளை சேவிக்க சென்றனர். அப்போது அனைவரும் வியக்கும் விதத்தில் இருவரும் மறைந்தனர். பின்னர் இராஜகுமாரனாக வந்து தங்கள் ஊர்  மகளை மணந்தது பெருமாளே என்று அனைவரும் உணர்ந்தனர். அன்று தாயாரை மணந்த போது கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பெருமாள், தை பிரம்மோற்சவத்தின் கருட சேவையன்று ஈகாடு சென்று அவர்களுக்கு  அருளுகின்றார்.    சித்திரை பிரம்மோற்சவம் கோடைக் காலம் என்பதால் கோபுர வாசல் சேவை அதிகாலை 4 மணிக்கே நடைபெறுகின்றது. அஞ்சிறைப் புள்ளேறி ஆனந்தமாக வைத்திய வீரராகவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து திருவமுது கண்டருளி திருக்கோவிலுக்குத் திரும்பி மதியம்  வருகின்றார். இரவு தங்க அனுமந்த வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். குழற்கோவலர் மடப்பாவையும் மண்மகளும் திருவும்   நிழற்போல் வளர்கண்டு நிற்கும் கொல்? மீளும் கொல் !   அழற்போல் அரும் சக்கரத்தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்   தழற்போல் சினந்த அப்புள்ளின் பின்போன தனி நெஞ்சம். (திருவிருத்தம் -3)   பொருள்: குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலை அணிந்தவனும், நெருப்பினைப் போல அழிக்கும் ஆற்றல் பெற்ற திருச்சக்கரத்தை ஏந்தியவனும், நித்திய சூரிகள் தொழுது வணங்கும்படியாக தீப்போலும் சினமிக்க கருடாழ்வானை வாகனமாகக் கொண்டு விளங்கும்படியானவனுமான  எம்பெருமான் அக்கருடப் பறவை ஏறிச்செல்லும் போது என் தனியான மனதானது அக்கருட வாகன எம்பெருமான் மீது சென்று விட்டது . ழலூதும் ஆயர் குலத்தில் தோன்றிய நப்பின்னைப் பிராட்டி, பூமி பிராட்டியும், பெரிய பிராட்டியும் எப்போதும் நிழல் போல் பிரியாது விளங்கும் அவர்களைக் கண்டு எனது மனம் அவ்விடத்து விடாது நிற்குமோ? அல்லது என்னிடம் திரும்பி வருமோ? - என்று வழியெங்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள்  பெருமாளைச் சேவிக்கும் அழகை நேரில் பார்த்தால் மட்டுமே விளங்கும். அன்றைய தினம்  அக்கம் பக்கத்து கிராம மக்கள் அனைவரும் திருவள்ளூரில் இருப்பர். வாருங்கள் அன்பர்களே  நீர் சூழ்ந்த மலையாக விளங்கும் இன்னொரு திவ்யதேசத்தில் நடைபெறும் சிறப்பான கருட சேவைகளை கண்டு மகிழலாம்.                 45. நீர் வண்ணர் கருட சேவை []   அரங்கநாதர் கருடசேவை  அன்றாயர் குலக்கொடியோடு அணிமாமலர்மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு என்தானும்  இரக்கமிலாதவனுக்கு     உறையுமிடமாவது இரும்பொழில் சூழ்  நன்றாய புனல்நறையூர் திருவாலி குடந்தை     தடம்திகழ் கோவல்நகர்  நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மாமலையாவது நீர் மலையே.      (பெ.தி 2.4.1)    பொருள்: கண்ணனாக அவதரித்து போது நப்பின்னை பிராட்டியோடும், திருமகளோடும் அன்புடன் கலந்து, எக்காலத்தும் அசுரர்களிடம் இரக்கமின்றி இருப்பவருக்கு என்றும் இருக்கும் இடமாக இருப்பது திருநீர்மலையாகும். சோலைகளால் சூழப்பட்ட நீர் வளமுடைய திருநறையூர், திருவாலி, திருக்குடந்தை, திருக்கோவலூர் ஆகிய இடங்களில் முறையே நின்றவனும், அமர்ந்தவனும், படுத்தவனும், நடந்தவனுமாகிய பெருமானுக்கு இடமாகிய மலையாக இருப்பது திருநீர்மலையாகும்.  இவ்வாறு  திருமங்கையாழ்வார் மங்கலாசாசனம் செய்த, இத்திவ்யதேசத்தில்  பெருமாள் நின்ற கோலத்தில்  அணி மாமலர் மங்கையுடன் நீர்வண்ணராகவும், இருந்த கோலத்தில் சாந்த நரசிம்மராகவும், அரங்கநாயகித் தாயாருடன் மாணிக்க சயனத்தில் கிடந்த கோலத்தில் அரங்கநாதராகவும், நடந்த கோலத்தில் திரிவிக்கிரமனாகவும் சேவை சாதிக்கும் இத்திருநீர்மலை திவ்யதேசத்தை திருமங்கையாழ்வார் சேவிக்க வந்த போது இத்திவ்யதேசத்தை சுற்றி ஒரே தண்ணீர்க் காடாக இருந்ததாம். எதிரே இருந்த மலையிலே ஆறு மாதம் தண்ணீர் வடிய பரகாலன் தங்கியிருந்தாராம்,  அக்காலத்தில் அவ்வளவு நீர் வளம் மிகுந்த பகுதியாக இப்பகுதி இருந்துள்ளது. அவ்வாறு பெருமாளை தரிசிக்க திருமங்கை மன்னன் தங்கிய ஊர் திருமங்கையாழ்வார்புரம் என்று அழைக்கப்படுகின்றது.   இத்திருநீர்மலை திவ்ய தேசத்தில் பெருமாள்களை சேவித்தால் திருநறையூர், திருவாலி, திருக்குடந்தை, திருக்கோவலூர் ஆகிய நான்கு திவ்ய தேசப்பெருமாள்களை சேவித்ததற்கு சமம் என்று  திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.   பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள் பயின்றதுவும் வேங்கடமே பன்னாள்- பயின்றது  அணி திகழுஞ் சோலை அணிநீர்மலையே  மணித்திகழும் வண்தடக்கைமால்  ( இ.தி. 46)   பொருள்: நீலமணி போல் விளங்குபவனும் வள்ளன்மையாய் நீண்ட திருக்கைகளை உடையவனுமான எம்பெருமான், நித்தியவாசம் செய்தருளுமிடம் திருவரங்கமும், திருக்கோட்டியூருமாம்; அநாதிகாலம் நித்திய வாசம் செய்யுமிடமும் திருமலையுமாம்; பல நாள் பயின்றதுவும் அழகு விளங்குகின்ற சோலைகளையுடைய இந்நிலவுலகுக்கு அலங்காரமான திருநீர்மலையாம்  என்று   முதலாழ்வாரான பூதத்தாழ்வார்  இத்திவ்விய தேசத்தை பூலோக வைகுண்டமாம்  திருவரங்கம், திருக்கோட்டியூர், திருவேங்கடம் ஆகிய திவ்ய தேசங்களுக்கு இணையானது என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.   இப் பெருமாளின் அழகில் மிகவும் ஈடுபட்ட திருமங்கை மன்னன் 19 பாசுரங்கள் பாடியுள்ளார்.  அதுவும் தன்னை பரகாலநாயகியாக பாவித்து    நீர்வண்ணன் நீர் மலைக்கே போவேனென்றும். . . .    வருநல்தொல்கதி ஆகிய மைந்தனை நெருநல் கண்டது நீர்மலை . . . .    அலங்கெழு தடக்கை ஆயன்வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் என்னும் புழங்கெழு பொருநீப்புட்குழிபாடும் போதுமோ நீர்மலைக்கு? என்னும்  . . . . .    அருவிசோர் வேங்கடம் நீர்மலை யென்று வாய்  வெருவினாள் மெய்யம் வினவியிருக்கிறாள்   . . . .   மாலிருஞ்சோலைமணாளர் வந்து என் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலையார் கொல் . . . .  என்றெல்லாம்  நீர்வண்ணப்பெருமாளின்  சௌந்தர்யத்தில் திளைத்து பாசுரங்கள் பாடியுள்ளார்  மங்கை மன்னர்,  மேலும் சிறிய திருமடலில்  சீரார் திருவேங்கடமே திருக்கோவ லூரே மதிட்கட்சியூரகமே பேரகமே பேராமருதிறுத்தான் வெள்ளறையேவெஃகாவே பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் – கணமங்கை  காரார்மணிக் கண்ணணூர் விண்ணகரம் சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர் காரார் குடந்தை கடிகை கடல்மல்லை ஏரார் பொழில்சூழ் இடவெந்தை நீர்மலை  சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்………   என்று எம்பெருமானின் இருப்பிடங்களை பட்டியலிடுகின்றார்  திருமங்கையாழ்வார்.    பெரிய திருமடலில் அன்னவனை ஆதனூராண்டளக்குமையனை நென்னலையின்றினை நாளையை -நீர்மலை மேல்  மன்னுமறை நான்குமானானை புல்லாணித் தென்னன் தமிழை....      என்று கொண்டாடுகின்றார் குமுதவல்லி மணாளர்.    இத்தலத்தை சேவித்தால் 108 திவ்ய தேசங்களில் நான்கு திவ்ய தேசங்களை ஒருங்கே சேவித்த பலன் கிடைக்கும் ஒப்பற்ற திருத்தலம். திருமால் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு திருக்கோலத்தில் அருள் புரியும் அற்புத திருத்தலம். திருமால் 108 திவ்ய தேசங்களிலும் இந்நான்கு திருக்கோலத்தில் மட்டுமே சேவை சாதிக்கிறார். இத்தகு சிறப்பு வாய்ந்த காட்சியாக நான்கு மூர்த்திகளையும் ஒருங்கே காணக் கிடைப்பது புண்ணியம் நிறைந்த ஒன்றாகும்.  நான்கு புண்ணிய தீர்த்தங்களை ஒருங்கே பெற்றுள்ள மகிமை வாய்ந்த திருத்தலம். சுமார் 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த திருத்தலம்.108 திவ்ய தேசங்களில் 61வது திவ்ய தேசமாகும். பிருகு, மார்க்கண்டேயர், வால்மீகி ஆகியோரின் தவத்திற்கு இரங்கி பெருமாள் இத்தலத்தில் சேவை சாதித்தாராம்.  பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார், மங்கலாசாசனம் செய்த திருத்தலம். இவ்வாறு ஏராளமான பெருமைகளையும் சிறப்புகளையும் உள்ளடக்கிய அற்புத திருத்தலம்.  இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் பிரம்மாண்ட புராணத்தில் விரிவாக உள்ளன. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமியை தரிசிக்க எண்ணிய "பிருகு முனிவர்" மற்றும் "மார்க்கண்டேய முனிவர்" நீர் சூழ்ந்த இந்த மலையின் மீது நீண்ட காலம் தவம் செய்தனர். அவர்களின் தவத்திற்கு இரங்கித்  திருமால்" மாணிக்க  சயனத்தில்  அரங்கநாதர் திருக்கோலத்தில் காட்சி தந்து அருளினார். நீர்  சூழ்ந்த மலை என்பதால் இவ்விடம் "நீர்மலை" என்றும் திருமால் வந்து அவதரித்த மலை என்பதால் "திருநீர்மலை" என்றும் பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. பழங்காலத்தில் இவ்வூர் தோயாசம், காண்டவ வனம்,  தோயாத்ரி க்ஷேத்திரம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கின்றது. தோ என்றால் தண்ணீர் த்ரி என்றால் மலை அதாவது தண்ணீர் சூழ்ந்த மலை.  அரங்கநாதராக பெருமாள் சேவை சாதிப்பதால் “மத்ய அரங்கம்” என்றும் அழைக்கப்படுகின்றது. மலைக்கோவிலுக்கு செல்ல சுமார் 200 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். மலை மேல் உள்ள கோவிலில்  அரங்கநாதர் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன்  கோவில் கொண்டு அருள்கிறார். அவர் காலடியில் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். நாபிக் கமலத்தில் பிரம்மன். இவர்களை சேவித்த வண்ணம் பிருகு முனிவர் மற்றும் மார்க்கண்டேய முனிவர் ஆலய முகப்பில் உள்ளனர். அரங்கநாதர் சுயம்பு திருமேனி எனவே அவருக்கு திருமஞ்சனம் கிடையாது தைலக்காப்பு மட்டும் தான். சங்கு சக்கரத்துடன் கூடிய சதுர் புஜத்துடன் மாணிக்க சயனத்தில் சேவை சாதிக்கின்றார். திருமகளான இலட்சுமி தாயார் அருள்மிகு அரங்கநாயகி தாயார் என்ற திருநாமத்தில் கிழக்கு நோக்கி தனிச் சன்னதி கொண்டு அருள்கின்றார். மூலவர் அருள்மிகு அரங்கநாதர் மலையின் மீதும் உற்சவர் அழகிய மணவாளப் பெருமாள் மலை அடிவாரத்திலும் எழுந்தருளியிருக்கிறார்கள். இங்கு அருள்மிகு அரங்கநாதர் சுவாமியே முதல் மூர்த்தியாக விளங்குகிறார்.  திரிவிக்கிரமன் இடது காலை உயர்த்தி உலகத்தை அளக்கும் "திரிவிக்ரம அவதாரம்" திருக்கோலத்தில் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார். இவ்வடிவத்தை திருமங்கையாழ்வார் "நடந்தான்" என்று பாடுகிறார்.  இங்கு நரசிம்ம சுவாமி பால நரசிம்மராக சேவை சாதித்தருள்கின்றார். அழகிய வடிவத்தில் வீற்றிருந்த கோலத்தில் (அமர்ந்த கோலத்தில்) கிழக்கு திசை நோக்கி தனி சன்னதியில் அருள்கின்றார். இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் உக்கிரமாக இருந்தார். பெருமாளின் உக்கிர கோலத்தைக் கண்டு பிரகலாதன் பயந்தார். அவருக்காக அவனைப் போலவே வா என்று அழைக்கும் ஆவாஹன முத்திரையுடன் பால ரூபத்தில் சேவை சாதிக்கின்றார். இவருக்கு பின்புறம் நரசிம்மர் சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் சேவை சாதிக்கின்றார். பால ரூபம், சுய ரூபம் என்று இரு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம். துவாபர யுக பிரளயத்திற்குப்பின்  நரசிம்மர் இம்மலையில் நரசிம்மர் அர்ச்சுனனுக்கு அஸ்வமேத யாகம் மூலம் காட்சியளித்தார்.   ஸ்தலாதிபதி நீர்வண்ணப் பெருமாள்  நின்ற திருக்கோலத்தில் மலை அடிவாரத்தில் கிழக்கு நோக்கியவாறு தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். பெரும்பாலான கோயில்களில் கொடிமரம், பலிபீடம், கோபுரம் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும். ஆனால் இங்கே கொடி மரமும் பலிபீடமும் இராசகோபுரத்தை விட்டு சற்று விலகி தனியே அமையப் பெற்றுள்ளன. கோபுரம் இராமருக்கு கொடிமரம் நீர் வண்ணருக்கும் என்று  அமைந்திருப்பது ஒரு சிறப்பு. நீர்வண்ணர் சன்னதிக்கு செல்லும் நுழைவாயிலும் பக்கவாட்டில் அமைந்துள்ளது. வாயிலில் நுழைந்தவுடன் அழகிய மணவாளப் பெருமாளை சேவிக்கின்றோம். நீர் வண்ணப் பெருமாள். எதிரே ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் சன்னதி. நீர்வண்ணப் பெருமாள் உடன் உறையும் இலட்சுமி பிராட்டிக்கு "அணிமாமலர் மங்கை தாயார்" என்பது திருநாமம். கிழக்கு நோக்கியவாறு தனி சன்னதியில் அருள்கின்றாள். ஆண்டாள் நாச்சியாருக்கும் தனி சன்னதி உள்ளது.  "ஸ்ரீமத் இராமாயணம்" இயற்றிய வால்மீகி முனிவருக்கு ஒரு முறை அருள்மிகு இராமபிரானை திருமணக் கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. உடனே திருநீர்மலை அடிவாரம் வந்து இராமபிரானை மனதில் நிறுத்தி தியானித்தார். அவருக்கு தவத்திற்கு இரங்கி  அரங்கநாதர் இராமபிரானாகவும், இலட்சுமி தாயார் சீதா தேவியாகவும், ஆதிசேசன் இலக்குவனாகவும், பெருமாளின் ஆயுதங்களான சங்கு, சக்கரங்கள் பரத சத்ருக்கனனாகவும், விஷ்வக்சேனர் சுக்ரீவனாகவும், கருடன் அனுமனாகவும் "திருமண கோலத்தில்" எழுந்தருளி காட்சி தந்ததாக தல வரலாறு கூறுகிறது. இராமர் கருவறையில் வால்மீகி முனிவரையும் சேவிக்கலாம்.  இவருக்கு நீல முகில் வண்ணர்  என்றும் இன்னொரு திருநாமம். திருநீர்மலை முதல் பாசுரத்தில் தாயாரை  அணிமாமலர் மங்கை என்று மங்கலாசாசனம் செய்த ஆழ்வார் ஐந்தாம் பாசுரத்தில்  மாலும் கடலார மலைகுவடிட்டு அணைகட்டி வரம்புருவ மதிசேர்  கோலமதிலாய இலங்கைகெடப் படை தொட்டு ஒருகால் அமரிலதிர  காலமிதுவென்று அயன் வாளியினால் கதிர்நீள்முடி பத்தும் அறுத்தமரும்  நீலமுகில்வண்ணனெமக்கிறைவர்க்கு இடம் மாமலையாவது நீர்மலையே (பெ.தி 2-4-5)  பொருள்: முன்னர் கடல் நிறையும்படி மலைகளைப் போட்டு அக்கரையிலே சென்று சேரும்படி அணையை அமைத்து மதில்களை உடைய இலங்கை நகர் அழியும்படி படைக்கலங்களை நடத்தி போரில் அதிரும்படி செய்தவன். மேலும் இராவணனை  முடிப்பதற்கு  இதுவே தக்க சமயம் என்று கருதி பிரம்மாஸ்திரத்தினால் அவன் தலைகள் பத்தையும் வெட்டி, திருஅயோத்தியில் எழுந்தருளியுள்ள  நீல மேகம் போலவும் நிறமுடைய  நம் தலைவனான பெருமானுக்கு இடம் திருநீர்மலையாகும் என்று மங்கலாசாசனம் செய்கின்றார்.  இத்தலத்தின்   மூலவர்கள் : நீர் வண்ணர், அரங்கநாதர், சாந்த நரசிம்மர், திரிவிக்கிரமன், இராமர்  தாயார்: அணிமா மலர் மங்கை, அரங்க நாயகி. சயனம் : மாணிக்க சயனம்  விமானம்: தோயகிரி விமானம்.  தீர்த்தம் : மணிகர்ணிகா தடாகம், க்ஷீர புஷ்கரிணி, காருண்ய புஷ்கரிணி, ஸித்த  புஷ்கரிணி, ஸ்வர்ண புஷ்கரிணி.  தல விருட்சம் : வெப்பால மரம். மங்கலாசாசனம்: திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார். ஒரே திருக்குளத்தில் நான்கு தீர்த்தங்கள் அமைந்துள்ளது இத்தலத்தின்  இன்னுமொரு  தனி சிறப்பு. இக்குளத்தின் மையத்தில் நீராழி மண்டபம் உள்ளது.  இக்கோயிலின் எதிரிலுள்ள மணிகர்ணிகா தடாகம் நான்காக பிரிக்கப்பட்டு நான்கு பெருமாள்களுக்காக நான்கு தீர்த்தங்களாக உள்ளது.  க்ஷீர புஷ்கரிணி, காருண்ய புஷ்கரிணி, ஸித்த  புஷ்கரிணி, ஸ்வர்ண புஷ்கரிணி என்று நான்கு தீர்த்தங்கள். இரு பிரம்மோற்சவங்களின் போதும், வைகுண்ட ஏகாதசிக்கு மறு நாள் ஆகிய மூன்று நாட்களில் தீர்த்தவாரி நடைபெறுகின்றது. இத்தீர்த்தவாரி முக்கோடி துவாதசி தீர்த்தவாரி என்றழைக்கப்படுகின்றது. கதியேலில்லை நின்னருளல்லது எனக்கு நிதியே! திருநீர்மலை நித்திலத்தொத்தே! பதியே! பரவித்தொழும் தொண்டர்தமக்குக்  கதியே! உன்னைக்கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (பெ.தி 7-1-7) பொருள்: அன்பர்களுக்கு வைத்தமாநிதி போன்றவனே! திருநீர்மலையில் எழுந்தருளியுள்ள முத்து மாலை போன்றவனே! அடியேனுக்கு உன் அருள் அல்லாமல் வேறொரு புகல் இல்லை.  திருத்தலங்களை ஏத்தித்தொழுகின்ற பாகவதர்களுக்கு கதியானவனே! உன்னைக் கண்டு கொண்டு பிழைத்துப் போனேன் என்று திருமங்கையாழ்வார் தனது ஆச்சார்யனான திருநறையூர் நம்பியை மங்களாசாசனம் செய்த போது பாடியுள்ளார்.  வருடத்தில் இரண்டு பிரம்மோற்சவங்கள். பங்குனி திருவோண நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் நீர்வண்ணருக்கு, சித்திரை திருவோண நாளை தீர்த்த நாளாக கொண்டு பிரம்மோற்சவம் அரங்கநாதருக்கு. சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் கொடியேற்றத்தன்றும், கொடி இறக்கத்தன்றும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் அரங்கநாதர் அரங்கநாயகித்தாயார்  திருக்கல்யாணம் ஆகிய  மூன்று நாட்களிலும் அழகிய மணவாளப் பெருமாள் மலையின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இம்மூன்று நாட்கள்  மட்டுமே உற்சவரையும் மூலவரையும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் மூலவர் மலை மீதும் உற்சவர் மலை அடிவாரத்திலும் சேவை சாதிக்கின்றனர்.  அழகிய மணவாளப் பெருமாள் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பரமபதவாசல் சேவை தந்தருள்கிறார். மாசி மகத்தன்று இவரே கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இரதசப்தமியன்று ஏழு வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். சித்திரை உத்திரத்தன்று நீர்வண்ணர் – அணிமாமலர்த் தாயார் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. மேலும் தை மாத இரத சப்தமியன்றும், மாசி மகத்தன்றும் கருட சேவை தந்தருளுகின்றார். நரசிம்ம சுவாமிக்கு ஆனி மாதத்திலும் உலகளந்த பெருமாளுக்கு ஆடி மாதத்திலும் ஒரு நாள்  உற்சவம் நடைபெறுகின்றது. அன்று அடிவாரத்திற்கு எழுந்தருளி கருட சேவை தந்தருளுகின்றனர்.  இத்தலத்தில் வைகாசன ஆகமப்படி பூசைகள் நடைபெறுவதால் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு தங்க கருட சேவை தந்தருளுகிறார். பள்ளியறையிலிருந்து எழுந்தருளி முதலில் ஊஞ்சல் சேவை தந்தருளுகின்றார். பின்னர் ஒய்யாளி சேவை பல்வேறு நடைகளில்  பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார். பின்னர் கருட வாகனத்தில் சேவை சாதித்து மாட வீதி வலம் வருகின்றார். இரவு சுமார் பத்து மணி அளவில் ஆரம்பமாகும் கருடசேவை புறப்பாடு திருக்கோயிலை வந்து சேரும் போது அதிகாலை ஆகிவிடுமாம்.   இத்தலத்தில் பல்வேறு ஆண்டு முழுதும் பல்வேறு  கருடசேவைகளை கண்டு களிக்கலாம் சமயம் கிட்டும் போது இத்தலம்  சென்று ஒரு கருட சேவையை கண்டு களியுங்கள் அன்பர்களே. இனி இராமானுஜர் பல வருடம் தங்கியிருந்த மேல்கோட்டையில் கருடன்  கொண்டுவந்த வைரமுடி தரித்து தாயார்களுடன் பெருமாள் சேவை சாதிக்கும் அழகைக் காணலாம் வாருங்கள்  அன்பர்களே.   ******** []   கருடசேவை பின்னழகு கருடசேவையின் முன்னழகை காணக் கண் கோடி வேண்டும் என்றால் பின்னழகும் அதற்கு சற்றும் குறைந்தது அல்ல. கருடனின் திருப்பாத்த்தை பின்னழகில் தான் சேவிக்க முடியும். எனவே அடியேன் எப்போதும் பின்னழகையும் சேவிப்பது வழக்கம். தாங்கள் மேலே சேவிப்பது திருமயிலை மாதவப்பெருமாள் கருடசேவையின் பின்னழகு.     46.  மேல் கோட்டை வைர முடி கருட சேவை []     இனி  நாம் காணப்போகும் கருடசேவை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு கருட சேவை.  ஆம் இந்த கருட சேவையின் போது செல்லப்பிள்ளை,  இராமப்பிரியன்,  யதிராஜ சம்பத்குமரன் கருடனே கொண்டு வந்து தனக்குச் சமர்பித்த வைரமுடி அணிந்து கொண்டு வேத சொரூபனாம் கருடனில் ஆரோகணித்து உபய நாச்சியார்களுடன்  அனைவருக்கும் அருள் பாலிக்கின்றார்.    இந்த “வைரமுடி சேவை” நடைபெறும் தலம் கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரம்,  வடக்கில் உள்ள பத்ரிகாஸ்ரமம் போல இத்தலம் தெற்கில் உள்ள தலம் ஆகும். எனவே தக்ஷிண பத்ரிநாதம் என்றும் அறியப்படுகின்றது.  காரேய் கருணை இராமானுஜருடன் நெருங்கிய தொடர்புடையது இத்தலம். மேல்கோட்டையின் சிறப்புகளையும்  இத்தலத்தில் இராமானுஜரின் கைங்கர்யங்களையும் இறுதியாக  வைரமுடி மற்றும்  இராஜமுடி  சேவையையும் சேவிக்க.செல்வோமா அன்பர்களே?  தேவேந்திரன் ஒரு சமயம் ஒரு  விமானத்தையும்  வைர முடியையும்  கருடனிடம் அளித்து  இவற்றை எந்தெந்த பெருமாளுக்கு உகந்ததோ  அங்கு  சமர்பித்து விடு  என்று  பணித்தான்.  கருடனும்  வைர முடியை  கர்நாடக மாநிலத்தில்  மைசூர்  அருகில்  உள்ள  திருநாராயணபுரத்தில்  செல்லபிள்ளை  சம்பத்குமாரரருக்கும் விமானத்தை தேரழுந்தூரில்  ஆமருவியப்பனுக்கும்  சமர்பித்தான்.   ஒரு சமயம் ஸ்ரீமஹாவிஷ்ணு பாற்கடலில் யோக நித்திரையில் இருந்த போது மஹாபலியின் பேரனான விரோசனன் என்ற அசுரன் பெருமாளுடையத் திருமுடியை கவர்ந்து சென்று பாதாளத்தில் ஒளிந்து கொண்டான். கருடன் பாதாளம் சென்று அவனை வென்று அந்தத் திருமுடியை திரும்ப கொணர்ந்தார். பின் பெருமாள் இந்தத் திருமுடியை பூலோகத்தில் எதாவது ஒரு பெருமாளுக்கு சமர்பித்துவிடு என்றார். அந்த வைரமுடி செல்லப்பிள்ளைக்குப் பொருந்தியதால் அதை இவருக்கு கருடன் சமர்பித்தான் என்றொரு ஐதீகமும் உள்ளது. பாதாளத்தில் இருந்து வந்தபோது அவன் தன் திருமேனியில் ஒட்டி வந்த மண்ணை திருநாராயணபுரத்தில் உதிர்த்தான் . அதுவே இன்று வைணவர்கள் இட்டுக்கொள்ளும் திருமண் ஆகும்    அந்தக் கருடன் கொண்டு வந்த வைரமுடியில்  வேத ரூபமான கருடனில் பெருமாள் பங்குனி மாதம் புஷ்ய நட்சத்திரத்தன்று  உபய நாச்சியார்களுடன் கருட சேவை சாதிப்பதே  மேல்கோட்டை வைர முடி சேவை என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது. வாருங்கள் நாமும் அந்த பேரழகை சேவிப்போம்.     முதலில் திருநாராயணபுரத்தின் சிறப்புகளைக் காண்போமா? புராணங்களில்  மேல்கோட்டை  1. பத்மகூடா,  2. புஷ்கரா,  3. புத்மசேகரா , 4.அனந்தமாயா,  5. யாதவகிரி, 6. நாராயணாத்ரி,  7. வேதாத்ரி , 8. வித்யா (ஞான)  மண்டல்,  9. தக்ஷிண பத்ரி  என்று பல பெயர்களில்  அழைக்கப்பட்டுள்ளது.  இத்தலம் தென்  இந்தியாவில் கர்னாடக  ராஜ்யம், மாண்ட்யா மாவட்டம்,  பெங்களுரிலிருந்து  சுமார் 140 கி.மீ, மைசூரிலிருந்து சுமார் 40 கி.மீ.  தொலைவில் உள்ளது.  பெங்களூர் - மைசூர் ரயில் பாதையில்  பாண்டவபூர்  ரயில்  நிலையத்திலிருந்து  சுமார் 20 கி.மீ. உள்ளது. யதுகிரி பர்வதத்தில் அமைந்துள்ள இத்தலம்  ஒரு மலை வாசஸ்தலம்.  சமுத்திர மட்டத்திலிருந்து 1200 மீட்டர்  உயரத்தில் அமைந்துள்ள இத்தலத்தில்  இரண்டு முக்கிய  கோயில்கள்,  பல  மடங்கள்,  புனித தீர்த்தங்கள்,  மற்றும்  பல  தர்மசாலைகளும்  உள்ளன.  பெருமாள் தம் கருணையினால் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன அவையாவன:  1. தெற்கு திசை -ஸ்ரீரங்கம் - கருணா நிவாசன் (தமிழ்நாடு) ஸ்ரீ ரங்கநாதன்.  2. கிழக்கு திசை - காஞ்சீபுரம், (தமிழ்நாடு) ஸ்ரீ வரதராஜன்.  3. வடதிசை - திருமலை / திருப்பதி (ஆந்திரா) திருவேங்கடவன்.  4. மேற்கு திசை - மேல் கோட்டை (கர்னாடகம்) யதுசைல ரூபம் -திருநாராயணபுரம்.  இவ்வளவு சிறப்புப் பெற்ற  இந்த  திவ்ய ஸ்தலம்   திருநாராயணபுரம்  நான்கு  யுகங்களும்  பிரசித்தி  பெற்றது.  பிரம்மனின் முதல் குமாரர்களில் ஒருவரான சனத்குமாரர் பூமிக்கு வந்த போது கால் பதித்த தலம் இது.  கிருதயுகத்தில் அவர் நாராயணனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால்  நாராணாத்ரி  என்று அழைக்கப்பட்டது.   த்ரேதா  யுகத்தில் தத்தாத்ரேயர் நான்கு வேத புருஷர்களையும் நான்கு சீடர்களாகக் கொண்டு வாசம் செய்தார். அவர் தவம் செய்த புஷ்கரிணி வேத புஷ்கரிணி என்றும் மலை  வேதாத்ரி  என்றும்  அழைக்கப்பட்டது. த்வாபர  யுகத்தில்  ஸ்ரீ பலராமன் கிருஷ்ணர் மாடு மேய்த்துக்கொண்டு இங்கு வந்தனர். சனத்குமாரர் பிரதிஷ்டை செய்த நாராயண மூர்த்தியை வணங்கி ஆராதித்துவிட்டு சென்றனர். யாதவக்கொழுந்தின் வருகை இம்மலையை யாதவாத்ரி  ஆக்கியது.  இக்கலியுகத்தில் யதிராஜரால் யதிஸ்தலமென்றும்  வழங்கப்படுகின்றது.  மேலும்   ஸ்ரீரங்கத்தைப் போக மண்டபமென்றும்,  திருமலையைப்  புஷ்ப மண்டபமென்றும்  பெருமாள் கோயிலைத்  தியாக மண்டபமென்றும்  திருநாராயணபுரத்தை - ஞான மண்டபமென்றும்    பெரியோர்கள் கூறுவர்.மேலும்   "நடை அழகு" ஸ்ரீரங்கம் எம்பெருமானுக்கு பிரசித்தம்.  திருவேங்கடமுடையான் அமுது செய்யும் பிரசாதங்களில் “வடை” பிரசித்தம்.  பெருமாள் கோயிலில் பேரருளாளனுக்கு சமர்ப்பிக்கப்படும் "குடை"  மிகப்  பெரியது.  திருநாராயணனுக்கே  “முடி” (கிரீடம்) உரிய  அழகு பொருத்தமாக விளங்குகிறது.  இந்த இராமாநுஜரின் அபிமான ஸ்தலத்தில் இரண்டு திருக்கோவில்கள் அமைந்துள்ளன.   மலை மேல்,  கோட்டையில் அவையாவன நரசிம்மர் ஆலயம், இரண்டாவது   நாராயணர் ஆலயம். ( கன்னடத்தில் செலுவ நாராயணர்.) கீழ் தளத்தில் உள்ள செலுவ நாராயணர் ஆலயத்தில்  மூலவர் : திருநாராயணன் / திருநாரணன்  சங்க  சக்ர,  கதை,  முதலியவைகளுடன்    நின்ற  திருக்கோலம்,   மேற்கே  திருமுக  மண்டலம்,  சரணங்களில்  பீபீ நாச்சியார் (வெள்ளிக் கவசத்துடன்)  சரணங்களில்  வணங்கிய படி.  உற்சவர் :  யதிராஜ ஸம்பத்குமாரர் , இராம ப்ரியர்,  செல்வ பிள்ளை,  செல்வ  நாராயணன்.  தாயார் :  யதுகிரி நாச்சியார்,  பூமி தேவி, வரநந்தினி நாச்சியார், செல்வ நாயகி.  தீர்த்தம் :  கல்யாணி தீர்த்தம்,  வேத  புஷ்கரிணி,  தனுஷ் கோடி தீர்த்தம், முதலிய  8 தீர்த்தங்கள்.  விமானம் :  ஆனந்தமய விமானம்  பிரத்யட்சம் :   கருட பகவான்  தலமரம் : இலந்தை(பத்ரி) மரம்.  இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இதர மூர்த்திகள் :  வண்புகழ் நாரணன்  ஸ்நபனபேரர், (நாராயண  பகவான்  பக்கத்தில்)  நித்ய  திருமஞ்சனம்  கண்டருளிகிறார். வாழ்  புகழ்  நாரணன்,  பலி  செல்வர்,  செல்வப் பிள்ளை  சந்நிதியில்  சேவை சாதிக்கின்றார்.  நம்மாழ்வாரின்  திருவாய்மொழியில்  செல்வ நாரணன், (செல்வ நாரணனென்ற சொல் கேட்டலும் மல்கும் கண்பனி நாடுவன் மாயமே…) திருநாரணன், (… பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர் திருநாரணன்தாள் காலன் பெறச் சிந்தித்துய்ம்மினோ) வண்புகழ் நாரணன்,  (…எண்பெருக்கந்நலத்து ஒண்பொருளீறில வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே) வாழ்புகழ் நாரணன் (சூழ் விசும்பணி முகில் தூரியம் முழக்கின ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின ஏழ் பொழிலும் வளமேந்திய என்னப்பன் வாழ்புகழ் நாரணன் தமரைக் கண்டுகந்தே)  என்று  நான்கு  திருநாமங்களையும்  அனுபவிக்கலாம்.    கிருமி கண்ட சோழன்  என்ற அரசன்  சைவ  மதப்பற்றினால்  ஸ்ரீவைஷ்ணவ துவேஷியானான்.  அதனால்  ஸ்ரீரங்கத்தில்  இருந்த  இராமானுஜருக்கு  பல  தொல்லைகள்  கொடுத்தான்.  இதனால் கூரத்தழ்வாரின் ஆலோசனைப்படி இராமானுஜர்  வெள்ளை சாத்தி, தமிழ்நாட்டை விட்டு  கர்நாடக  தேசத்துக்கு  சத்தியமங்கலம்  வழியாக  தொண்டனூர் வந்தார்.  அப்போது  ஜைன மதத்தை  ஆதரித்து  வந்த பிட்டிதேவன் என்ற மன்னன்  இவ்விடத்தை  ஆண்டு  வந்தான்.  அவனது  மகளுக்கு  சித்தபிரமை பிடித்திருந்தது. அதனை  நீக்க  ஜைனத் துறவிகளால்  முடியாமல்  போக,  இராமானுஜர்  உதவியால்  அது நீங்கியது.  இதைக்   கண்ட  பிட்டி தேவன்  ஜைன  மதத்தைத்  துறந்து,    ஸ்ரீவைஷ்ணவன் ஆனான். இராமானுஜர்  அவனுக்கு  விஷ்ணுவர்தனன்  என்ற பெயரைச் சூட்டினார். இம்மன்னன்   மேல்கோட்டை கோயிலுக்குப் பல  உபயங்கள்  செய்துள்ளான். உதயகிரி மலையில் திருக்கோவிலைக் கட்டியவன் இவனே.  மேல்கோட்டையிலிருந்து  20 கிமீ  தூரத்தில்  இருக்கும்  தொண்டனூர் ஏரி  இராமானுஜர்  ஏற்படுத்தியது . அவர்  தொண்டனூரில் வசித்து  வந்த போது அவரது  நெற்றியில்  அணியும்  திருமண்  தீர்ந்து விட,  அன்று இரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி,  திருநாராயணபுரத்திற்கு  செல்லும்  வழியைச் சொல்லி  அங்கு  ஒரு  புற்றில்  இருக்கிறேன்  என்றும்  தன்னை வெளியே கொண்டு  வரவேண்டும்  என்று  கூறினார்.  இராமானுஜர்  பெருமாள் சொன்ன  வழியாக  திருநாராயணபுரத்துக்கு வந்து  அங்கு வேத புஷ்கரணியில் குளித்துவிட்டு  திருமண்  அணிந்து கொண்டு,  கல்யாணி  குளத்துக்குப்  பக்கத்தில்  இருந்த எறும்புப் புற்றை, ஊர்  மக்கள்  உதவியுடன்  பால்,   மற்றும்  தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார்.  திருநாராயணர்  திவ்ய  மங்கள  விக்ரஹத்தை இராமானுஜர் பிரதிஷ்டை  செய்தார். இராமானுஜருக்கு  இங்கே  திருமண்  கிடைத்தால்  இன்றும்  மேல்கோட்டையில் திருமண் கட்டி  சிறப்பு.  ஆதியில் தனது குலதனமான தான் ஆராதித்து வந்த  அரங்கனை விபீஷணுக்கு  அளித்த பின்  இந்த இராமப்பிரியனை ஸ்ரீராமர் ஆராதித்துள்ளார். பின்னர் குசனின் மகளான கனகமாலினி அவரிடமிருந்து பெற்று ஆராதித்து வந்தாள். முன்பொரு காலத்தில்  முகம்மதிய படையெடுப்பின்  போது  டில்லி  சுல்தான்  கோயிலை  இடித்து விக்ரகங்களையும், பொன்  பொருள்  எல்லாவற்றையும் கொள்ளையடித்துச்  சென்றான்  அவன்,  திருநாராயணனின்  உற்சவர் மூர்த்தியையும்  எடுத்துச் சென்று விட்டான்.  உற்சவர் எங்கே  என்று இராமானுஜர்  தேடிய போது,  தான் டில்லியில் இருப்பதை சுவாமி இராமானுஜருக்கு உணர்த்தினார். எனவே  இராமானுஜர்.  மன்னன் உதவியுடன் சில சீடர்களை உடன் அழைத்துக் கொண்டு  டில்லி  சுல்தானை நேரில்  கண்டு  உற்சவ மூர்த்தியைத்  திரும்பத் தருமாறு  கேட்டுக்கொண்டார்.  சுல்தானுக்கு  இராமானுஜரைக்  கண்டு  வியப்பும்  ஆச்சரியமும்  ஏற்பட்டது.  அவரைப்  பற்றி  முன்னரே  கேள்விப்பட்டிருந்தான்.  தன்  மகள்  ஆசைப்பட்டாள்  என்பதற்காக  அந்த விக்ரகத்தை அவளுக்கு  விளையாடக்  கொடுத்திருந்தான்.  அதைத்  திரும்பப்  பெறுவதென்பது   அவ்வளவு         எளிதல்ல.  எனவே   ஒரு   நிபந்தனையுடன்   அதை  எடுத்துச்  செல்லலாம்   என்றான்.  நிபந்தனை  இதுதான்  இராமானுஜர்  உற்சவ மூர்த்தியை அழைக்க  வேண்டும்  விக்கிரகம் தானாகவே  அவரிடம்  வந்து  சேர வேண்டும்  என்றான். உடனே  இராமானுஜர்  ஒரு  குழந்தையை  அழைப்பது போல்  ''என் செல்லப்  பிள்ளாய்  வருக''  என்று  குழைவாக  அழைத்தார் என்ன ஆச்சரியம்! சிலைவடிவில் இருந்த இராமப்பிரியன் விக்கிரகம்  மாறி  ஒரு குழந்தை வடிவில் சலங்கை ஜல் ஜல் என்று ஒலிக்க அனைவரும் வியந்து நோக்க  நடந்து  வந்து  அவர்  மடியில்  அமர்ந்து  கொண்டு மீண்டும்  சிலையாயிற்று.  சுல்தான்  மலைத்துப்  போனான்.  நிபந்தனைப்படியே  உற்சவ மூர்த்தியை எடுத்துப்போக  அனுமதித்து  அத்துடன்  பொன்னும்  பொருளும்  தந்து அனுப்பி வைத்தான். எனவே மேல்கோட்டை உற்சவமூர்த்தி  'செல்லப்பிள்ளை'  என்றும்  "யதிராஜ சம்பத் குமாரன் "  என்றும் அழைக்கப்படுகின்றார். செல்வப்பிள்ளை  திருநாராயணபுரம்  வந்த  நாளான  மாசிக்  கேட்டை  “டில்லி உத்சவம்”  என்று  இன்றும் கொண்டாடப்படுகிறது.  எங்காவது விக்கிரகம் பேசுமா? அல்லது நடந்து வருமா? என்று சந்தேகம் கொண்டு எள்ளி நகையாடுபவர்களுக்குப் பரனூர் மகான் கொடுக்கும் பதிலடி, அது இராமானுஜரின் திடபக்தியால் ஏற்பட்ட அற்புதம் நாமும் திடபக்தி கொண்டு அவனை சரணடைந்தால் அவனைக் காணலாம் பேசலாம். சுல்தானின் மகள் சிலையைப் பிரிந்திருக்க  முடியாமல்  மேல்கோட்டையைத்  தேடி  ஓடி வந்து  உற்சவ மூர்த்தியை  ஆரத்தழுவிக்  கொண்டாள்.  அடுத்த  நிமிடம்  அச்சிலையுடன்  ஐக்கியமாகி விட்டாள்.  அவள் அன்பைப் பாராட்டி  அவளைப்  போலவே  ஒரு  சிலை  செய்து  “பீபீ நாச்சியார்''  என்ற  பெயரில்  நாராயணனின் திருவடிகளில்  அமர்த்தி  விட்டார்  இராமானுஜர்.  தாயார் இத்தலத்தில் பெருமாளின் திருவடிகளில் அமர்ந்து பெரியாழ்வார் “திருப்பொலிந்த திருவடி”  என்று மங்களாசாசனம் செய்தபடி நமக்கெல்லாம் அருள் பாலிக்கின்றாள் என்பது ஒரு தனிச் சிறப்பு ஆகும்.  சரம ஸ்லோகத்தை இது உணர்த்துகிறது என்பர்கள் பெரியோர்கள்.   இது மட்டுமா?  டில்லி சுல்தானிடமிருந்து  சிலையைக்  கொண்டு  வரும்  வழியில்          வழிப்பறிக்  கொள்ளைக்காரர்கள்  அவரை  எதிர்த்து  சிலையையும்,  சுல்தான்  கொடுத்த  பொன்  பொருள்  ஆகியவற்றையும் கவர்ந்து  கொள்ள முயன்ற போது  உடன் வந்தவர்கள்  அலற,  இராமானுஜர்  ''அவனைக்  காப்பாற்றிக் கொள்ள  அவனுக்குத்  தெரியும்''  என்று சொல்லி  அமைதிப்படுத்தினார்.  அருகிலிருந்த சேரிமக்கள் இவர்கள் அலறல் கேட்டு திரளாக  ஓடி வந்து  கொள்ளைக்காரர்களை  விரட்டி,  இராமானுஜரையும்  மற்றவர்களையும்  ஊரின்  எல்லை வரைக்கும்  கொண்டு வந்து  சேர்த்தனர்.  கோயிலுக்குள்  நுழைய  தங்களுக்கு அனுமதியில்லை  என்று சொல்லி  விடை  பெற்றுக் கொள்ள  முயன்ற  போது, இராமானுஜர்  இறைவனைக்  காப்பாற்றிய  அவர்களுக்குத்தான்  உண்மையிலேயே  அதிக  உரிமை  உண்டு என்று  சொல்லி  அவர்களையும்  கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். ஆயிரம்  ஆண்டுகளுக்கு  முன்னரே சேரி  மக்கள் என்று  தாழ்த்தப்பட்ட  நிலையில் ஒதுக்கி  வைக்கப்பட்டிருந்தவர்களை  இவர்கள் தான் உண்மையான ஹரிஜனங்கள் என்று கூறி ஆலயப்  பிரவேசம் செய்து  யதிராசர் அக்காலத்திலேயே ஒரு புரட்சியை செய்துள்ளார்.  இராமானுஜர்  மேல்கோட்டையில்  12 வருடங்கள்  இருந்து விட்டுத் திரும்ப ஸ்ரீரங்கம்   புறப்பட்ட போது,  அங்கிருந்த அவரது சீடர்கள்  துயரமாக இருப்பதைக் கண்டு  அவரை  மாதிரியே  ஒரு  விக்ரஹம்  செய்து  அதை  அவர்களுக்குத் தன் நினைவாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்.  இந்த விக்கிரகம்  இன்றும்  ‘தமர்  உகந்த  திருமேனி’ என்று  போற்றப்படுகிறது.  ஊர் மக்கள், அவரைப்  பார்த்தால்  உங்களிடம்  பேசுவது போல  இருப்பதால்,  இந்த  விக்ரஹத்தைப்  ‘பேசும்  ராமானுஜர்’ என்று  அழைக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது  "தானுகந்த திருமேனி”, திருவரங்கத்தில் உள்ளது  "தானான  திருமேனி".  மேல்கோட்டை நாராயணபுரத்தில்  பங்குனி  மாதத்தில் நடைபெறும் கருடன் கொண்டு வந்த  'வைரமுடி சேவை'  விழாத்  தனிச்சிறப்புடையது. இராமானுஜர் சந்நிதிக்கு  எதிரில்  உற்சவ  மூர்த்தியை  நாச்சியாருடன்  எழுந்தருளச் செய்து வைரமுடி  அணிவித்து விழா  கொண்டாடுகின்றனர்.  “இராமன் முடி சூட்டு விழாவைக்  காண  தசரதருக்குக் கிடைக்காத பேறு இராமானுஜருக்கு  கிடைத்தது”.  இராமாயண காலத்தில் இளைய பெருமாளாக   இருந்த இராமானுஜர் இராமருக்கு முதலில் நிச்சியித்தபடி கைகேயியின் வரத்தினால்  முடி சூடாமல் போன ஏக்கம் தீர இராமப்பிரியருக்கு  வருடா வருடம்  முடி சூட்டி சேவிப்பதாக ஐதீகம்.  பங்குனி  மாதத்தில் நடைபெறும்   இவ்வுற்சவம் பத்து நாள் பிரமோற்சவ உற்சவம் ஆகும், அதில் நான்காம் திருநாள் இரவு  புஷ்ய நட்சத்திரத்தில் வைர முடி சேவை மிக  விமர்சையாக  அனுஷ்டிக்கப்படுகிறது. (ஏகாதசி அல்லது துவாதசி திதியில்) மேலும் பிரகலாதன் பரிபாலனம், கஜேந்திர மோட்சம், இரதோற்சவம், தெப்போற்சவம் என்று பதினைந்து நாட்கள் இப்பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது.   பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து இந்த சிறப்பு மிக்க கருட சேவையைக் சேவிக்க  திரள் திரளாக  வருகின்றனர்.  இதைத் தவிர  இராஜமுடி, (க்ருஷ்ணராஜமுடி)  சேவையும்  கொண்டாடப்படுகிறது.  பங்குனி புஷ்ய நாளில் அரை வட்ட வடிவ இரட்டை யாளி முகம் கொண்ட  தங்கப்பிரபையின் நடுவில் உபய நாச்சியார்களுடன் வேத ஸ்வரூபனான கருடனில், அவன் சமர்ப்பித்த வைர முடியுடன் பெருமாள் பவனி வரும் அழகை  விவரிப்பது மிகவும் கடினம் நேரில் சென்று அனுபவித்தால் மட்டுமே அதை உணர முடியும்.   முதலில் கருடாழ்வார்  கோயிலைச் சுற்றி வலம்  வருகின்றார். வைரமுடி மாண்ட்யா கஜானாவில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது. வைரமுடி சேவையன்று பலத்த பாதுகாப்புடன் வைரமுடியும், இராஜமுடியும் கருவூலத்திலிருந்து   மாவட்ட ஆட்சியரால் சகல மரியாதைகளுடனும் திருக்கோவிலுக்கு கொண்டு வரப்படுகின்றது. சாலையின் இரு மருங்கும் பக்தர்கள் கூடி நின்று இரண்டு முடிகளையும்  சேவிக்கின்றனர். பிறகு இரு கிரீடங்களும்   பல்லக்கில்    ஏற்றப்பட்டு   கோயிலைச்    சுற்றி   வருகின்றது.     வருடத்திற்கு     ஒரு  முறை   அதுவும் சில மணி நேரம்  மட்டுமே இந்த விலை  உயர்ந்த  கிரீடம்  பெருமாளுக்கு  அணிவிக்கப்படுகின்றது மற்ற நேரங்களில் கருவூலத்தில் இருக்கும்.  மாலை சுமார்  7:30 மணிக்கு   கருடன் கொண்டு வந்த அற்புத வைரமுடியை  அணிந்து கொண்டு  உபய நாச்சியார்களுடன் பல்லக்கில் வெளியே வருகிறார்  சம்பத் குமாரர். பின்னர் வாகன மண்டபத்தில் இருந்து  கருட சேவை துவங்குகிறது  உபய நாச்சியார்களுடன்  பெருமாள் கருட சேவை சாதிப்பது  இத்தலத்தின்   ஒரு தனி   சிறப்பு.    நான்கு இராஜ வீதிகளிலும் மக்கள் வெள்ளத்தின் நடுவே பெருமாள் அன்பர்கள் கவரி வீச ஒயிலாக சேவை    சாதிக்கின்றார்.  நாலாப்புறமும் திரும்பி நின்று சேவை சாதிக்கின்றார் பெருமாள். பின் புறத்திலிருந்தும் வைர முடியை திவ்யமாக  தரிசிக்கும் வண்ணம் அலங்காரம் செய்யப்படுகின்றது.    காணக்கண் கோடி வேண்டும் என்று அன்பர்கள் கூடி நின்று அந்த அழகை கண்ணார மனதார சேவிக்கின்றனர்.  தாம் பெற்ற ஜன்மம் சாபல்யம் அடைந்தது என்று குதூகலிக்கின்றனர். பிறகு  விடியற் காலை   கிட்டதட்ட  2 மணிக்கு  திரும்பவும்   கோயிலுக்கு  எதிரில்  உள்ள வாகன  மண்டபத்துக்குச்  வந்தடைகின்றார்  பெருமாள்  அங்கே  வைரமுடி  அகற்றப்பட்டு  பெட்டியில் வைத்து   கஜானாவில் வைக்க முத்திரை இடுகின்றனர்.  பிறகு  ராஜ முடி அணிந்து சேவை  சாதிக்கின்றார்  செல்லப்பிள்ளை.      இராஜமுடி(கிருஷ்ணராஜ முடி) சேவை:  மைசூர் அரச பரம்பரையில் வந்த மன்னர்களில் கிருஷ்ணராஜ  உடையார்  வைர முடியைப் போலவே மற்றொரு கிரீடத்தை அளித்தார்.  இதை  கிருஷ்ணராஜ  முடி  என்று  புத்தகங்கள்  சொன்னாலும்,  கூட்டம்  இராஜமுடி என்று  அழைக்கிறது.  இராஜமுடி அணிந்து கொண்டு  நிஜமாகவே யதிராஜ சம்பத்குமாரர் இளவரசன் போல நடந்து  செல்கிறார்  டெல்லியிலிருந்து இராமானுஜர்  கூப்பிடக் குரலுக்காக ஒடி  வந்த இராமப்பிரியர் . நம்மாழ்வார்  பாடிய   “கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்” என்றபடி இளமையிலேயே வைர முடி,  ராஜமுடி  நிச்சயம்  சேவிக்க   வேண்டிய  ஒன்று என்பதில் எந்த ஐயமுமில்லை. சமயம் கிடைத்தால் நிச்சயம் சென்று சேவியுங்கள். வாருங்கள் இனி பெருமாள் தாயாருடன் கல்யாணக் கோலத்தில் கருட சேவை சாதித்தருளும் ஒரு சிறப்பு கருட சேவையை சேவிக்கலாம்.                                                    47. கள்வனை மாற்றிய கருட சேவை வேடுபறி உற்சவம் []   ஆடல்மாவில் திருமங்கையாழ்வார்  பன்னிரு ஆழ்வார்களுள் கடை குட்டி திருமங்கையாழ்வார், அதிகமான திவ்யதேசங்களில் உள்ள அர்ச்சா மூர்த்திகளை மங்களாசாசனம் செய்த பெருமை இவருக்கு உண்டு, அதல்லாமல் மற்ற ஆழ்வார்களைப் போல் இல்லாமல் இவருக்கு உள்ள ஒரு தனிச்சிறப்பு பெருமாளிடமே திருமந்திர உபதேசம் பெற்றது தான், இவ்வைபவம் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தின் போது வேடுபறி உற்சவம் என சிறப்பாகத் திருவாலி-திருநகரி திவ்யதேசத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது.  திருவாலி-திருநகரி இரண்டும் 5 கி.மீ தூரத்தில் உள்ள தனித்தனி ஆலயங்கள் என்றாலும் இரண்டும் இணைந்து ஒரே  திவ்யதேசமாகக் கருதப்படுகின்றது.  திருவாலி தலவரலாறு:  திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது  ஹிரண்யகசிபுவை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்து போன தேவர்களும், முனிவர்களும் பூலோகம் மேலும் அழியாமல்  காக்கப்பட வேண்டும் என்று மஹாலக்ஷ்மியை வேண்டினர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலத் தொடையில் அமர, தேவியைப் பெருமாள் ஆலிங்கனம் (அனைத்தல்) செய்து கொண்டார். எனவே பெருமாள் திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தமையால், இவ்வூர் திருஆலிங்கனபுரம் என்ற பெயர் பெற்று திருவாலி என ஆயிற்று. இப்பகுதியை  (ஆலிநாடு) ஆண்ட மன்னனுக்கு  திருமங்கை ஆழ்வாருக்கு "ஆலிநாடன்” என்ற பெயர் உண்டாயிற்று.   ஆலிங்கனபுரம் என்று அழைக்கப்படும் திருவாலியில் பெருமாள் லக்ஷ்மிநரசிம்மராக சேவை சாதிக்கின்றார். இத்தலம் பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்களில் ஒன்று. இத்தலத்தில் வலத்தொடையில் பெருமாளை வணங்கிய கோலத்தில் பெரிய பிராட்டியார் சேவை சாதிக்கின்றார். பத்ரிகாசிரமத்திற்கு அடுத்ததாகப் பெருமாள் திருமந்திரத்தைத் தானே உபதேசம் செய்த இடமாதலால் இத்தலம் பத்ரிநாத்துக்கு இணையானது. இத்தலத்தைச் சுற்றி குறையலூர் உக்கிர நரசிம்மன், மங்கைமடம் வீர நரசிம்மன். திருநகரி யோக நரசிம்மன் மற்றும் மற்றொரு நரசிம்ம தலமான ஹிரண்ய நரசிம்மன் ஆகிய தலங்களும் உள்ளன.  இத்தலத்தில் மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டாட்சர விமானம் எனப்படுகின்றது.  திருநகரி தலவரலாறு: பிரம்மாவின் புத்திரன் கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான். இவனுக்கு தரிசனம் தர பெருமாள் தாமதம் செய்ததால், வருத்தமடைந்த இலட்சுமி பெருமாளிடம் கோபம் கொண்டு, இத்தலத்தில் குளத்தில் இருந்த தாமரை மலருக்குள் தன்னை ஒளித்து கொண்டாள். பெருமாள் இலட்சுமியைத் தேடி இத்தலம் வந்து இலட்சுமியை ஆலிங்கனம் செய்து கொண்டார்.  பெருமாள் இங்கு வேதராஜனாக அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றார். உற்சவர் கல்யாண ரங்கநாதர். தாயார் அமிர்தவல்லி. திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனிச் சன்னதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே ஒரு கொடிமரமும், பெருமாளுக்கு எதிரே ஒன்றும் என இரண்டு கொடி மரங்கள் உள்ளன.  அன்று கள்வனாக உள்ள  திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லக்ஷ்மி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். பெருமாள் கூறியபடி மஹாலக்ஷ்மி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.  இந்த நிகழ்ச்சி திருவாலி திருநகரியில் பங்குனி உற்சவத்தின் போது வேடுபறி உற்சவமாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.  திருவாலி திருநகரியில் பங்குனி உற்சவத் திருவிழா பத்து நாள் திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகின்றது.  இத்திருவிழாவின் 9ம்நாள் இரவு வேடுபறி உற்சவம். பகலில் திருவாலியில் திருக்கல்யாணம்  சிறப்பாக நடைபெறுகின்றது. இரவு வேடுபறி உற்சவம் ஆடல்மாவில் கள்வனாக வந்த திருமங்கை மன்னனை திருமங்கையாழ்வாராக மாற்றிய   பெருமாளும் தாயாரும் கல்யாணக் கோலத்தில் கருட சேவை சாதிக்கின்றனர். மறுநாள் காலையில் பங்குனி உத்திரத்தன்று பெருமாளும் ஆழ்வாரும் தனித்தனித்தேரில் சேவை சாதித்தருளுகின்றனர் பின் தீர்த்தவாரி. வாருங்கள் வேடுபறி உற்சவத்தைப் பற்றி விரிவாக காணலாம்.  திருநகரியில் இருந்து கல்யாண ரங்கநாதரும் அமிர்தவல்லித் தாயாரும் கள்வனாக இருக்கும் திருமங்கை மன்னனை திருத்திப்பணி கொள்ள திருவாலிக்கு பல்லக்கில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். வேடுபறி உற்சவத்தின் ஒரு முக்கிய நிகழ்ச்சி திருவாலியில் நடக்கும்  திவ்ய தம்பதியரின் திருக்கல்யாணம் ஆகும். நாம் எல்லோரும் உய்ய திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. புது திருமாங்கல்யத்துடன் அமிர்தவல்லித்தாயார் சேவை சாதிக்கும் அழகைக்காண கண் கோடி வேண்டும்.  திருக்கல்யாணம் முடிந்து பல்லக்கில் உடல் மறைத்து முக மண்டலம் மட்டும் காட்டி கள்வனிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள (கள்வனாக உள்ள நீலனைத் திருத்திப்பணி கொள்ள அல்லவா?) அன்று பெருமாளும் தாயாரும் தங்கள் திருப்பாதம் பூமியில் பட நடந்து வந்தனர், இன்று அவர்கள் பல்லக்கில் திருவாலியில் இருந்து  வருகின்றனர். திவ்ய தம்பதிகள் வேதராஜபுரம் என்னும் கிராமத்தில் வந்து தங்குகின்றார். இங்கே திருநகரியில் கருட சேவைக்காக தங்க கருடன் தயாராக உள்ளான் அதே சமயம் திருமங்கை மன்னர் தமது ஆடல்மா என்னும் பஞ்சகல்யாணி குதிரையில் சர்வ அலங்காரத்துடன்  தனது ததியாராதனைக்கு பெரும் பொருள் தேவைப்படுவதால்,  காட்டு வழியில் வருபவர்களை கொள்ளையடிக்கத் தயாராக உள்ளார். இன்றைய தினம் ஆழ்வாரின் அழகு அப்படியே நம்மை சொக்க வைக்கும்,  தங்க ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்த நீல நிற வெல்வெட்  அங்கியும், உடைவாள், கேடயம் மற்றும் ஈட்டியும், திருவடிகளில் பாதுகையும், வைர மணி ஆபரணங்களும், வைர கிரீடமும் தரித்து ஆழ்வார் ஆடல்மாவில் வரும் அழகே அழகு அதைக் காணக் கண் கோடி வேண்டும்.    நள்ளிரவில் திருமங்கை மன்னனின்  தோழர்களான  நீர் மேல் நடப்பான், நிழலிலொதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன்  ஆகிய நால்வரும் புதுமணத்தம்பதிகள் நிறைய நகைகளுடன் வந்து கொண்டிருப்பதை திருநகரியில்  தயாராக காத்திருக்கும் நீலனிடம் வந்து இவ்வாறு கூறுகின்றார். ஜெய விஜயீபவ, ஆலி நாடா பராக்!, மங்கை மன்னா பராக்!, குமுதவல்லி மனதிற்கு பிரியமானவரே பராக்!, மங்கை மன்னரே காட்டு வழியில் புதுமணத்தம்பதிகள் நிறைய வைணவர்களுடன் வந்து தங்கியுள்ளனர். அவர்கள் மேனி முழுவதும்  வைரமும், மணியும்,  பொன்னுமாக மின்னுகின்றது, தாங்கள் வந்து கொள்ளையடித்தால் ததியாரதனைக்கு ஆகும் என்று தூது கூறுகின்றனர். இன்றும் நான்கு வைணவர்கள் தூதர்கள் போல் வேடமணிந்து வந்து ஆடல்மாவில் தயாராக காத்திருக்கும் திருமங்கை மன்னருக்கு  தூது சொல்லி சேவை செய்கின்றனர்.   உடனே ஆயிரக்கணக்கான தீவட்டிகளின் ஒளியில் ஆடல் மாவில் கொள்ளைக்கு திருமங்கை மன்னர் புறப்படுகின்றார். திருநகரி கிராம இளைஞர்கள் அனைவரும் பலவிதமான  தீவட்டி கையில் தாங்கி , ஆ! ஆ! ஊ! ஊ! என்று சத்தம் எழுப்பிக்கொண்டு முன் செல்ல, கையில் ஈட்டி  தாங்கி  தங்கக் குதிரை வாகனத்தில்  பின் செல்கின்றார் மங்கை மன்னர். இந்த சேவையை பந்தக் காட்சி என்று அழைக்கின்றனர் பக்தர்கள்.   திருமங்கைமன்னரின்வடிவழகு அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும்,  ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,  பரந்த விழியும், பதித்த நெற்றியும், நெறித்த புருவமும்  சுருண்ட குழலும், வடிந்த காதும் அசைந்த காது காப்பும்,  தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும்,  திரண்ட தோளும் நெளித்த முதுகும், குவிந்த இடையும்,  அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும்  தொங்கலும் தனி மாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும்  சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும்,  தஞ்சமான தாளினையும், குந்தியிட்ட கனைக்காலும்,  குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும்,  வயலாளி மணவாளனும், வாடினேன் வாடி (என்று)  வாழ்வித்தருளிய , நீலிக்கலிகன்றி, மருவலர்தம் உடல் துணிய  வாள் வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே.   என்ற படி வாள், கேடயம் அணிந்து கொண்டு மன்னனுக்குரிய அற்புத அலங்காரத்தில் ஆழ்வார் சேவை சாதிக்கின்றார். வானத்தில்  பூர்ண நிலவு ஒளிர ஆழ்வாரை ஏழப்பண்ணும் அன்பர்கள் அப்படியே குதிரையில் டக் டக் என்று ஆழ்வார் செல்வது போலவே பரிகதியில் ஏழப்பண்ணும் அழகைச் சொல்வதா, ஆயிரக்கணக்கான தீவட்டிகள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து செல்லும் அழகைச் சொல்வதா? பட்டர்கள் இருவர் ஆழ்வாருக்கு ஒயிலாக கவரி வீசும் எழிலைச் சொல்வதா? ஆழ்வார் ஆடி வரும் அழகை வார்த்தைகளில் வர்ணிப்பது சாத்தியமல்ல நேரில் சென்று தரிசித்தால் மட்டுமே அந்த அற்புத உணர்வைப் பெற முடியும். அப்படியே குதிரை ஒடும் போது எப்படி முன்னும் பின்னும் அதில் அமர்ந்திருப்பவர் ஆடுவாரோ அது போல முழுநிலவு மேலே தனது பதினாறு கலைகளுடன் ஒளிர ஆயிரம் தீவட்டிகளின் ஒளியில் முகம் சிவந்து ஒய்யாரமாக பாய்ந்து  வருகின்றார் மங்கை மன்னர் .  அந்தக் கொண்டையும், சடையும் அதில் அற்புதமாக மலர்களும். மேலங்கியின் அழகும், அற்புத நவரத்ன நகைகளும் இடையில் வாளும், கட்டாரியும், முதுகில் கேடயமும். கையில் வில்லும், திருப்பாதங்களில் இராஜபாதுகைகளும் விளங்க, ஒரு கரத்தில் பஞ்சகல்யாணிக் குதிரையை செலுத்தும் பாங்கும், மறு கையில் ஈட்டியும் விளங்க, நீல நிற ரத்ன அங்கியில் நீலன் வரும் அழகை எப்படி வர்ணிப்பது. அற்புதமாக ஆடல் மாவில் ஆலிநாடன் வந்து கொண்டிருக்கும் போது அங்கே வேதராஜபுரம் என்னும் இடத்தில் ஒரு பெரிய மைதானத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் பெருமாளும் தாயாரும் கருடனும் காத்திருக்கின்றனர். கூடவே திருமாலடியார்களின் கூட்டமும் எப்போது ஆழ்வார் வருவார் என்று வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.    திவ்ய தம்பதிகள் தங்கியிருக்கும் தற்போதைய வேதராஜபுரத்தை (அன்று திருமணங்கொல்லை) நெருங்க  நெருங்க குமுதவல்லி மணாளரின் வேகம் அதிகமாகின்றது, மைதானத்தில் நுழையும் போது அப்படியே ஒரு புயல் வேகத்தில் வருகின்றார் மங்கை மன்னன். வேக வேகமாக பெருமாளைச் சுற்றத் தொடங்குகிறார். உடனே அருமையான வாண வேடிக்கைகள் ஆரம்பமாகின்றது. மிக வேகமாக இரண்டாவது சுற்று வரும் போது பெருமாள் மண்டபத்தில் இருந்து மந்திரோபதேசம் தர இறங்கி வருகின்றார். மூன்று சுற்றுகள் முடித்ததும் நடந்தது என்ன என்று பார்ப்பதற்கு முன் அன்று என்ன நடந்தது என்று பார்ப்போமா?  தன் அன்பனைத் திருத்த புதுமணத் தம்பதிகளாக திருமேனி முழுவதும் நகைகளுடன் மற்ற சுற்றத்தார்களுடன் திருப்பாதம் மண்ணில் பட பெருமாளும் பெரிய பிராட்டியாரும் திருவாலியிலிருந்து  நடந்து வரும் போது தேவராஜபுரம் அருகே ஆடல்மாவில் வேகமாக வந்த திருமங்கை மன்னன்  வாள் கொண்டு அவர்களை மிரட்டுகின்றார். எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுக்குமாறு ஆணையிடுகிறார், மங்கை மன்னரின் மிடுக்கையும் மிரட்டும் தொனியையும் கண்டு பயந்தவர் போல் பெருமாள் தன்னுடைய எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்து தன் மனைவியையும் அவ்வாறே செய்யச் சொல்கின்றார். பெருமாள் கால் விரலில் உள்ள மெட்டி மட்டும் அப்படியே இருக்கின்றது, அதையும் விட மனமில்லாமல் கழற்றிக் கொடுக்க ஆணையிடுகின்றார். மணமகனோ, நீயே கழற்றிக்கொள் என்று கூற கையால் கழற்ற முடியாததால் வாயால் கடித்து கழற்ற முயல்கிறார். அதைக் கண்டு பெருமாள் அவரைக் “கலியன்” என்று அழைக்கிறார் ஆலிநாடருக்கு பெருமாளின் திருவடி சேவையும் கிட்டுகின்றது.   பின் எல்லா நகைகளையும் மூட்டையாகக் கட்டித் தூக்க முயன்ற போது அவரால் தூக்க முடியவில்லை என்பதால், மணமகனைப் பார்த்து என்ன மந்திரம் போட்டாய்? என்று வெருட்ட மந்திரம் உபதேசம் செய்யத்தானே வந்திருக்கின்றேன் என்று அவர் காதில் "ஓம் நமோ நாராயணா" என்னும் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசிக்கின்றார் பெருமாள். மந்திரோபதேசம் பெற்ற கள்வன் ஆழ்வாராக மாறுகின்றார். அன்றிலிருந்து பெருமாளுக்கு தன் சேவையை தொடங்குகின்றார்.     வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து  கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கலவியே கருதி  ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து  நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும்  நாமம் ( பெ.தி 1-1-1)  பொருள்: மிகுந்த துன்பத்திற்கு இடமாய், துன்பங்களுக்கெல்லாம் காரணமான உடலில் உண்டாகி, உடல் என்றும் உயிர் என்றும் பகுத்து அறிய முடியாதவாறு  ஒன்றாய் பொருந்தினேன். இப்படி நெடுங்காலம் பொருந்தி இருந்து, இளம் பெண்கள் தருகின்ற சுகத்தையே நினைந்து அவர்கள் போன அதிவழியே பின் தொடர்ந்து ஓடினேண். இவ்வாறு ஓடி சிற்றின்ப நாட்டம் கொண்ட மனத்தால் துன்பப்பட்டேன். வாட்டம் கொண்டேன். அவ்வாட்டத்தை உடையவனாய் இருந்து, பிறப்பதற்குக் காரணமான ஒப்பற்ற இறைவன் அருளால் அறிவாகிய பெரிய இடத்தை இருந்தபடியே அறிந்து, நன்மை தீமைகளை ஆராய்ந்தேன். ஆராய்ந்து திருநாமம்  சொல்வதற்கும் தகுதியற்ற நான், நாராயணா என்னும் திருநாமத்தைக் கண்டு கொண்டேன். - என்று பாசுரங்கள் பாடத் தொடங்கி திவ்யதேசம்,  திவ்யதேசமாகச் சென்று  பெருமாளை மங்களாசாசனம் செய்து  வடமொழி  வேதங்கள் நான்குக்கொப்பான  நம்மாழ்வாரின்  அருளிச்  செயல்களுக்கு  ஆறு  அங்கங்கள்  போன்று  பெரிய  திருமொழி,  திருகுறுந்தாண்டகம்,  திடுநெடுந்தாண்டகம்,  திருவெழு கூற்றிருக்கை,  சிறிய  திருமடல்,  பெரிய திருமடல்  என்னும்  ஆறு  திவ்விய  நூல்களை  அருளினார்.  பெருமாள் அந்த நலம் தரும் சொல்லை, வளங்கொள் மந்திரத்தை ஆலிநாடருக்கு அன்று அருளியது ஒரு அரசமரத்தினடியில் இதை நான்கு அரசு என்று வைணவ சம்பிரதாயத்தில் கூறுவர். ஆழ்வார் - ஆலி நாட்டிற்கு அரசு, பெருமான் – தெய்வங்களுக்கு எல்லாம் அரசு, உபதேசம் செய்யப்பட்ட திருமந்திரம் – மந்திரங்களுக்கு அரசு, மந்திரம் அளிக்கப்பட்டது ஒரு அரசின் அடியில். எனவே நான்கு அரசு. இனி இன்றைய நிகழ்ச்சிக்கு வருவோம், மங்கை மன்னன்   மிகவும்    வேகமாக இரண்டாம் சுற்று வரும் போது பெருமாள் மண்டபத்தில் இருந்து இறங்கி மைதானத்தின் நடுவே வந்து நிற்கின்றார். வேக வேகமாக சுற்றி வந்த ஆலிநாடன்  பல்லக்கிற்கு அருகில் சென்று வாள் கொண்டு வெருட்டுவது போல முன்னும் பின்னும் ஆவேசமாக செல்கின்றார். மூன்றாவது முறை செல்லும் போது பல்லக்கிடம் அப்படியே சிறிது குனிந்து மந்திரோபதேசம் பெறுகின்றார் ஆழ்வார்.   திவ்ய தம்பதிகளை கருட வாகனத்தில் எழுந்தருளப்பண்ணி அலங்காரம் செய்யும் நேரத்தில் ஆழ்வார் ஒரு தனி மண்டபத்தில் சென்று தங்குகின்றார். மைதானத்தில் இருந்த திருமாலடியார்கள் அங்கு சென்று ஆழ்வாரைச் சுற்றி வந்து சேவித்து ஆழ்வாரின் சௌந்தர்யத்தில் திளைக்கின்றனர். மண்டபத்தில்  ஆழ்வாரின் திருமுகமண்டலம்  சாந்தமாக உள்ளது முதலில் இருந்த கோபம் தற்போது இல்லை.  இந்த வேடுபறி உற்சவ கருடசேவையின் ஒரு தனிச்சிறப்பு தாயாரும் பெருமாளும் ஒன்றாக சேர்ந்து திருக்கல்யாணக் கோலத்தில்  கருடனில் சேவை சாதிப்பதுதான்.  முதல் தடவையாக அடியேன் தாயார் மற்றும் பெருமாளின் கருடசேவையைக் கண்டு மகிழ்ந்தேன்.   பெருமாள் கருடவாகனத்தில் தாயாருடன் சேவை சாதித்து வரும் போது ஆழ்வார் அன்ன நடைபோட்டு அவர்களைச் சுற்றி வந்து சேவித்து நிற்கின்றார். கள்வனாக இருந்த போது இருந்த வேகம் போய்விட்டது விவேகம் வந்து விட்டது. இப்போது அவர் திருமுகமண்டலம் சாந்தமாக விளங்குவதைக் கண்கூடாகக் காணலாம். முன்பு வேக வேகமாக பாய்ந்து ஆடல்மாவில் வந்த ஆழ்வார் இப்போது மெதுவாக வருகின்றார். தாம் இந்த பூவுலகில் வந்த நோக்கத்தை தாங்களே வந்து திவ்யதம்பதிகள் உணர்த்திய பிறகு மெய்ப்பொருளுணர்ந்து தனது சேவையை ஆரம்பிக்கின்றார். திவ்யதேசம் திவ்யதேசமாக சென்று பெருமாளை மங்களாசாசனம் செய்கின்றார்.  அதை உணர்த்தும் வகையில்  வைணவர்கள் அனைவரும் ஆழ்வாரின் முதல் பாசுரமான வாடினேன் வாடி வருந்தினேன்  தொடங்கி சேவித்துக் கொண்டே திருநகரி வந்தடைகின்றனர். ஆழ்வார் திருநகரியை அடையும் போது அதிகாலை 5 மணி ஆகி விடுகின்றது.  திருநகரி அக்ரஹாரத்தில்  பெருமாள் தன்னைத் திருத்திப்பணி கொண்ட ஆனந்தத்தில் நடனம் ஆடுகின்றார். இது வையாளி என்று அழைக்கப்படுகின்றது. சுமார் அரை மணி நேரம் ஆழ்வார் வையாளி நடனம் தந்தருளுகின்றார்.    இவ்வாறு வேடுபறி உற்சவம் ஆண்டு தோறும் சிறப்பாக பத்துநாள் திருவிழாவாக சிறப்பாக திருவாலி- திருநகரியில் நடைபெறுகின்றது. இனிப் பேரருளானே நேரில் உரையாடிய ஆச்சார்யர் திருக்கச்சி நம்பிகளுக்காக நடக்கும் மூன்று கருடசேவையை சேவிக்கலாமா அன்பர்களே?.                           48. பூவிருந்தவல்லி மூன்று கருடசேவை []   தருமமிகு சென்னையின் மிக அருகில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலம்.   ஸ்ரீ ராமானுஜருக்கு குருவாகிய விளங்கியவரும் கச்சி வரதருக்கு புஷ்ப கைங்கர்யம் மற்றும் ஆலவட்ட கைங்கர்யம் செய்தவருமான அருள் நிறை  ஸ்ரீதிருக்கச்சி நம்பிகளின் திருஅவதார ஸ்தலம். பெருமாள் இவருக்காக சூரிய மண்டலத்துடன்  காஞ்சி வரதராஜராகவும், மேலும்  அரங்கநாதராகவும், திருவேங்கடவனுமாக சேவை சாதிக்கும் தலம். இம்மூவரையும் சேவித்தால் 106 திவ்யதேச பெருமாள்களையும் சேவித்த பலம் கிட்டும் என்பது ஐதீகம்.   தர்மமே வெல்லும் என்ற நியதியின் படி பாரதப்போரில் வெற்றி வாகை சூடிய தருமன், இத்தலத்தில் தவம் செய்து மன அமைதி பெற்றதால்  தருமபுரி என்று அழைக்கப்படும் தலம். இத்தலத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீபுஷ்பவல்லித்தாயார் மல்லிகைப் பூவிலிருந்து தோன்றியதால்  பூவிருந்தவல்லி என்றழைக்கப்படும் தலம். திருகச்சி நம்பிகள் இங்கு நந்தவனம் அமைத்து மலர்த் தொண்டு செய்து வந்ததால்   புஷ்பமங்கலம்  என்றும்    புஷ்பபுரி என்றும் அறியப்படும் தலம். முதற்பராந்தக சோழன் காலத்து பழைய கல்வெட்டில் தொண்டை நாட்டின் புலியூர் கோட்டத்துப் பூந்தண்மலி என்று  குறிப்பிடப்படும் தலம். தற்போது பேச்சு வழக்கில்  பூந்தமல்லி  என்றும் ஆங்கிலத்தில்  பூணமல்லி  என்றழைக்கப்படும் தலம்.   இச்சிறப்புகள் பெற்ற பூவிருந்தவல்லியில் அவதரித்த திருக்கச்சி நம்பிகளின் பெருமையைப் பார்ப்போமா?  நகரேஷூ காஞ்சி  என்னும் கச்சியம்பதியில் சேவை சாதிக்கும் தேவராஜப் பெருமாளுக்கு புஷ்ப கைங்கரியமும், ஆலவட்ட (விசிறி வீசுதல்) கைங்கர்யமும் செய்து வந்தவர் திருக்கச்சிநம்பிகள். அர்ச்சா திருமேனியரான அத்திகிரி வரதனுடன் அனுதினமும் நேரில் பேசும் பெரும் பேறு பெற்றவர். ஸ்ரீஇராமானுஜருக்காக ஆறு வாக்கியங்களை வரதராஜரிடம் பெற்று அனைவரும் உய்ய வழங்கியவர்.   இவரது முதுமைக் காலத்தில் கச்சி செல்ல முடியாத நிலையிலும் கால்கள் தேய செல்ல முயன்ற போது பேரருளானனே சூரியமண்டலத்தில் இவருக்கு சேவை சாதித்து இவருக்காக இத்தலத்திலேயே  கோவில் கொண்டார். இவருடன் திருவரங்கத்து அமுதனும், திருவேங்கடவனும் இங்கு திருக்கோவில் கொண்டனர். தம் தந்தையைத் தொடர்ந்து  திருமழிசையாழ்வாருக்கு சேவை செய்து வந்ததால்  “பார்க்கவப்பிரியர்”   என்னும் நாமமும் பெற்றார். திருமழிசையாழ்வாரின் திருச்சந்தவிருத்தத் தனியன்கள் இவர் இயற்றியவை. காஞ்சி வரதருக்கு புஷ்ப கைங்கரியமும், ஆல வட்ட கைங்கரியமும் செய்து வந்து அவருடன் உரையாடும் பாக்கியமும் பெற்றதால் “ காஞ்சிபூரணர்”  என்னும் திருநாமமும் இவருக்கு உண்டு. இவ்வளவு சிறப்புகள் பெற்ற இத்தலத்தில் பரமபாகவதர் திருக்கச்சி நம்பிகளுக்காக பங்குனி மாதம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மூன்று கருடசேவையை இப்பதிவில் காணலாம் அன்பர்களே.  திருக்கச்சி நம்பிகள் வரலாறு:  சாலிவாஹன சகாப்தம், ஆங்கில 1009ம் ஆண்டு, சௌம்ய வருடம் மாசி மாதம் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் ஸ்ரீவீரராகவ செட்டியாருக்கும் ஸ்ரீமதி கமலையாருக்கும் நான்காவது திருக்குமாரனாக திருஅவதாரம் செய்தார். இவரது இயற்பெயர் கஜேந்திரதாசன் ஆகும். சிறு வயது முதலே இவர் திருமால் மீது பக்தி கொண்டவராய் வளர்ந்தார்.  இவரது தந்தையார் தமது முதுமைக்காலத்தில் தனது சொத்துக்களையெல்லாம் தம் நான்கு மகன்களுக்கும் சமமாகப் பிரித்துக்கொடுத்து, வைசியர்கள் என்பதால் வணிகம் செய்து இந்த செல்வத்தை இன்னும் பெருக்கிக் கொண்டு வளமாக வாழுங்கள் என்ற அறிவுரை கூறினார். மற்ற மூவரும் அவ்வாறே செய்ய, கஜேந்திரதாசர் மட்டும் செல்வத்தை பற்றி எண்ணாமல் திருமாலுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே காலத்தைக் கழித்தார். தந்தை அளித்த செல்வத்தில் பூவிருந்தவல்லியில் நிலம் வாங்கி நந்தவனம் அமைத்து, பல்வேறு மலர்ச்செடிகளை பேணி வளர்த்து, மலர்மாலை கட்டி காஞ்சிப் பேரருளானுக்கு புஷ்பகைங்கர்யம் செய்து வந்தார்.  பின்னர் ஆலவட்ட கைங்கரியமும் செய்யும் பேறு பெற்றார். இவரது சேவைக்கு மகிழ்ந்த  தேவராஜப்பெருமாள் இவருடன் தினமும் உரையாடினார்.  ஆலவட்ட கைங்கர்யம்:  ஒரு சமயம் இவர் திருவரங்கத்தில் தங்கியிருந்து  திருவரங்கனை கண்டு கண்  குளிர சேவித்து, அரங்கனுக்கு திருஆலவட்ட கைங்கரியத்தை செய்யத் திருவுள்ளம் கொண்டு தம்மை அருளும்படி திருவரங்கனிடம்  விண்ணப்பித்தார். அதற்கு அரங்கனும் அன்புடன் அவரை நோக்கி தாம் கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவு பாட்டு, சோலைகளின் தென்றலினால் குளிர்ச்சியாக  பள்ளி கொண்டிருப்பதால் தனக்கு ஆலவட்ட சேவை தேவையில்லை, நீ   திருமலை சென்று  திருவேங்கடவனுக்கு சேவை செய் என்று அருளினார். ஆகவே இவரும் அரங்கனது ஆணையைச் சிரமேற்  கொண்டு, திருமலை சென்று திருமலையப்பனை கண்ணார சேவித்து  தம் விருப்பத்தை விண்ணப்பிக்க, வேங்கடவாணரும் குளிரருவி பாயும் மலையில் தான் சேவை சாதிப்பதால் அந்த மேகங்கள் சூழப் பெற்று மெல்லிய தென்றல் காற்றே சுகமாக உள்ளது. எனவே காஞ்சிபுரம் செல், பிரம்மா நடத்திய யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவராஜப்பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வா என்று அருளினார்.  நம்பிகளும் அவ்வாறே பூந்தமல்லி வந்து  காஞ்சி பேரருளாருக்கு மலர் மாலை சாற்றியும், விசிறி வீசியும் சேவை செய்து வந்தார். காஞ்சியில் நம்பிகள் வசித்து வந்த  இடத்தில் இன்றும் இவர் சன்னதி உள்ளது.  பொதுவாக ஆலயங்களில் பட்டர்கள் பெருமாளின் வலப்புறம் நின்று பூசை செய்வார்கள். ஆனால் தேவராஜப்பெருமாளுக்கு இடதுபுறம் நின்றே பூசை செய்கின்றனர் ஏனென்றால் வலப்புறத்தில் திருக்கச்சி நம்பிகள் இன்றும் நின்று ஆலவட்ட கைங்கர்யம் செய்கின்றார் என்பது ஐதீகம்.  திருக்கச்சி நம்பிகளுக்காக பெருமாள் குடைப் பிடித்தது: நம்பிகளுடைய வேலைக்காரின் பெயரும் வரதன். ஒரு நாள் நல்ல மழை, நள்ளிரவு, விசிறி வீசும் கைங்கர்யத்தை முடித்தவுடன், வீடு திரும்ப தன் வேலைக்காரனை பெயரிட்டு அழைத்தார், வேலைக்காரனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். வரதராஜப்பெருமாள், தன் தீவட்டி, குடை சகிதமாக நம்பிகளை அவரது வீடு வரை கொண்டு சேர்த்தார். உறங்கி எழுந்த வேலைக்கார வரதன், தன் தவறை உணர்ந்து, நம்பிகளிடம் மன்னிப்பு கேட்க , நம்பிகளும் முதல் நாள் தன்னை கொண்டு விட்டது அத்திகிரி எம்பெருமான்தான் என்று உணர்ந்து கண்ணீர் மல்கினார். காஞ்சி வரதராஜர் மீது “தேவராஜ அஷ்டகம்” பாடினார்.   நம்பிகளுக்கு காட்சி கொடுத்து அருளியது: காலம் கழிந்தது இவ்வாறு நம்பியும் முதுமை எய்தினார். ஆயினும் தான் செய்து வந்த திருத்தொண்டை விட மனமில்லாமல் தினமும் பூந்தமல்லியிலிருந்து காஞ்சி சென்று வந்து கொண்டிருந்தார். ஒரு நாள் அதிகாலையில்  தள்ளாத வயதில், உடல் தளர்ச்சியால், நடக்க முடியாமல் அவர் முழங்கால் தேய  வரதா! வரதா! இவ்வாறு ஆகிவிட்டதே உனக்கு  கைங்கர்யம் செய்ய முடியாமல் போய் விடும் போல உள்ளதே, ஓ! யானைக்காக உடனே ஓடி வந்த ஆதி மூலமே சரணம், பாண்டவர்களுக்காகத் தூது சென்ற பரமனே சரணம், பிரகலாதனுக்காகத் தூணில் தோன்றிய வள்ளலே சரணம், திரௌபதியின் மானத்தைக் காத்த அண்ணலே சரணம், யசோதை அன்று கயிற்றால் கட்ட,  கட்டுப்பட்ட தாமோதரா சரணம் என்று பலவாறும் போற்றிக் கொண்டே,   கண்ணில் நீர் சொரிய, தவழ்ந்து செல்ல முயன்ற போது காஞ்சி  வரதர் சூரிய உதய வேளையில் கோடி சூரிய பிரகாசனாக  சூரிய மண்டலத்தில் தோன்றி இவருக்கு சேவை சாதித்தருளினார். உடன் திருவரங்கனும், திருவேங்கடவனும் சேவை சாதித்தனர். இனி மேல் தாங்கள் காஞ்சி வர வேண்டாம் நாங்கள் மூவரும் உங்களுக்காக இங்கேயே சேவை சாதிக்கின்றோம் என்று மூவரும் பூவிருந்தவல்லியில் நிரந்தரமாக  கோவில் கொண்டனர். வரதராஜப் பெருமாள் சூரிய மண்டலத்துடன் சேவை சாதிப்பது இத்தலத்தின்  ஒரு தனிச் சிறப்பாகும். இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் வருடத்தில் ஒருநாள் பங்குனி மாதம் ஞாயிற்றுக்கிழமை மூன்று கருடசேவை சிறப்பாக இத்தலத்தில் நடைபெறுகின்றது.       []   திருக்கச்சி நம்பிகள்   அற்புதங்கள் ஆறு – அருளாளன் வாக்கு:   இளையாழ்வாருக்கு(இராமானுஜருக்கு) ஏற்பட்ட சந்தேகத்தை திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்.   1. “அஹ மேவ பரம் தத்துவம்”  நாமே உயர்ந்த தத்துவம், நாராயணனே பரம்பொருள்.   2. “தர்சநம் பேத ஏவச”  சித்தாந்தம் ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.   3.“உபாயேஷு ப்ரபத்திஸ் யாத்”  மோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம்.  சரணாகதியே மோட்சத்திற்கு வழி.  சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி. 4. ”அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”  அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.    5. “தேஹா வஸாகே முக்கிஸ்யாத்”  சரீர முடிவில் மோட்சமுண்டு – பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.    6.  “பூர்ணாசார்ய ஸ்மாச்ரய”  பெரிய நம்பிகளையே நாட வேண்டியது. அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.   இந்த  "ஆறு வார்த்தைகளை" தாமே ஆசிரியர் போல இருந்து விளக்கினார் திருக்கச்சி நம்பிகள். நம்பிகள் மூலம் காஞ்சி தேவப்பெருமாளிடம் பெற்ற இந்த ஆறு வார்த்தைகள் தான் ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கைப் போக்கை தீர்மானித்தது. இவ்வாறு இராமானுஜர் என்ற மகானை உருவாக்கிக் கொடுத்ததில் எல்லாமாக இருந்தவர் திருக்கச்சி நம்பிகள்.  இத்தலத்தில் திருக்கச்சி நம்பிகள் அஞ்சலி ஹஸ்த்துடன் கையில் வரதனுக்கு வீசிய ஆலவட்டத்துடன் (விசிறி) நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மாசியில் மிருகசீரிஷ நட்சத்திரத்தன்று காஞ்சி வரதராஜர் கோவிலிலிருந்து இவருக்காக மாலை பரிவட்டம், பட்டு இங்கு வரும். அன்று காலை வரதராஜப்பெருமாள்  மூலவர் சன்னிதிக்கு எழுந்தருளி சேவை சாதிப்பார். அப்போது அன்பர்கள் திருக்கச்சிநம்பிகள் பாடிய தேவராஜ அஷ்டகம் சேவிக்க வருடத்தின்  ஒரு நாள் மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறும். ஸ்ரீபெரும்புதூரில் சித்திரை திருவாதிரை உற்சவத்தின் போது இங்கிருந்து மாலை, பரிவட்டம் பட்டு ஸ்ரீபெரும்புதூர் செல்லும்.   ஆனி மிருகசீரிஷத்தன்று 108 கலச பூஜை செய்து வரதராஜர், புஷ்பவல்லித்தாயார், ஆண்டாள், திருக்கச்சிநம்பிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். ஆடியில் திருக்கச்சிநம்பிகளின் ஆச்சார்யன் ஆளவந்தாருக்கு திருவிழா நடைபெறுகின்றது. திருக்கச்சி நம்பிகளை    மருவாரும் திருமல்லி வாழ வந்தோன் வாழியே மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே ஆறு மொழி பூதூரர்க்கு அளித்த பிரான் வாழியே திரு ஆலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே   என்று வாழ்த்துகின்றனர் வைணவர்கள். . வரதராஜப் பெருமாள் கோபுராஹார விமானத்தின் கீழ்  ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் சூரிய மண்டலத்துடன் மேற்கு நோக்கிய முக மண்டலத்துடன்  அன்று திருக்கச்சி நம்பிகளுக்கு சேவை சாதித்த அதே கோலத்தில் அற்புதமாக சேவை சாதிக்கின்றார். ஜோதிட ரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வரதராஜ பெருமாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபட நன்மை. பொதுவாக தாயார் மற்றும் ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலுமாக இருக்கும் ஆனால் இத்தலத்தில் மாறியுள்ளது. தாயார் பூவில் இருந்தவள் என்பதால் பூவிருந்தவல்லி,  புஷ்பவல்லி என்பது தாயாரின் இன்னொரு திருநாமம். தாயார் சன்னதி தனிக் கோவிலாக  பல அற்புத கற்சிற்பங்கள் கொண்ட அர்த்த மண்டபம் மற்றும் மஹா மண்டபத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.  மல்லி வனத்தில் மல்லிகைப்பூவில் இருந்த புஷ்பவல்லித் தாயாருக்கு மல்லிகை மாலை சார்த்தி வழிபடுவது மிகவும் விசேஷம். வைகாசி பிரம்மோற்சவத்தின் போது தாயாருக்கு புஷ்பயாகம் நடைபெறும் அன்று சுவாமி பள்ளியறைக்கு சயன கோலத்தில் சேவை சாதிப்பார். பங்குனி உத்திரத்தன்று வரதராஜர், ஸ்ரீதேவி, பூ தேவி, புஷ்பவல்லித் தாயார் ஆண்டாள் ஆகியோருடன் சேர்த்தி சேவை அளிக்கின்றார். தாயார் சன்னதிக்கு இடப்புறம் திருக்கச்சி நம்பிகளின்  ஆச்சாரியரும் நாதமுனி அவர்களின் பேரனுமான, ஆளவந்தாருக்கு   தனி சன்னதி கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் இவர் சன்னதியிலும் மஹா மண்|டபம் அர்த்த மண்டபம் உள்ளது. இவருக்கு ஆடியில் திருநட்சத்திர விழா நடைபெறுகின்றது. வேங்கடேசர் சன்னதி இராஜ கோபுரம் தீபஸ்தம்பத்திற்கு அருகில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நெடியோனாக நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கின்றார் பெருமாள். இவர் சன்னதியின் முன் மண்டபம் அருமையான கற்தூண்களில் சிற்பங்களுடன் எழிலாக அமைந்துள்ளது. இனி இத்தலத்தில் பங்குனி மாதம் நடைபெறும் மூன்று கருடசேவையை சேவிக்கலாமா அன்பர்களே. அருமையான அலங்காரத்தில் மேனா பல்லக்கில் திருக்கச்சி நம்பிகள் எழுந்தருள  வரதர், அரங்கர், திருவேங்கடவர் மூவரும் அவருக்குக் கருடசேவை தந்தருளுகின்றனர்.  முதலில் ஒவ்வொருவராகக் கோபுர வாசல் சேவை தந்தருளுகின்றனர். பின்னர் இராஜ கோபுரத்தின் முன்னர் மூவரும் ஒன்றாக சேவை சாதிக்கின்றனர். வைணவர்கள் அனைவரும் வந்து மூன்று கருடசேவையை கண்டு  அருள் பெறுகின்றனர். பின்னர் மாடவலம் வந்தருளுகின்றனர்.  வாருங்கள் அடியேன் அனுதினமும் சேவிக்கும் சத்யநாராயணப் பெருமாளின் வைபவத்தைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.           49. சத்ய நாராயணப் பெருமாள் கருட சேவை []   ஸ்ரீயப்பதியாய், அவாப்த ஸமஸ்த காமனாய், ஸகல கல்யாண குணாத்மகனாய், ஸ்ரீவைகுந்த நிகேதனாய் ஸ்ரீ, பூமி, நீளாதேவி ஸமேத ஸ்ரீமந்நாராயணன், உலகோர் உய்யுமாறு ஸ்ரீமஹாலக்ஷ்மி ஸமேத ஸ்ரீசத்யநாராயண பெருமாளாக  எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம் தான் “மாபில க்ஷேத்திரம்” என்று அழைக்கப்படும் சென்னை மேற்கு மாம்பலம்  சத்ய நாராயணர் ஆலயம்  ஆகும்.  .ஆந்திர மாநிலம் அன்னவரத்தில் மலைக்கோவில் கொண்டு சேவை சாதிக்கும் சத்யநாராயணப் பெருமாளை இங்கு நாம் எல்லாரும் சேவித்து, அருள் பெருமாறு 1956 ஆண்டு பிரதிஷ்டை செய்தனர் பின் 1976, 1998, 2008 ஆண்டுகளில் இத்திருக்கோவிலுக்கு சம்பரோட்சணம் நடைபெற்றது.   சமீபத்திலே நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் என்றாலும் தன் கருணையினாலும் மகிமையினாலும் அநேக பக்தர்களைத் தம்மிடம் ஈர்த்து அருள் பாலிக்கின்றார் ஸ்ரீசத்யநாராயணர். அடியேன் தினமும் சேவிக்கும் பெருமாள் இவர். ஒரு சமயம் ஒரு பெரும் சிக்கலில் இருந்த போது இக்கோவிலின் லக்ஷ்மி நரசிம்மர் சந்நிதியில் வேண்டி நின்ற போது தீர்த்தத்தில் சாமந்தி மலர் கொடுத்து அந்த சிக்கலைத் தீர்த்த பெருமாள். தீர்த்தத்தில் துளசி வரும் ஆனால் இவர் அருளால் மலரே வந்தது. அத்யயன உற்சவத்தின் போது இவர் திரு முன் திவ்ய பிரபந்தம் சேவிக்க வாய்ப்பளித்த பெருமாள் எனவே இவர் பெருமையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.   ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டு செல்லும் பக்தர்களின் கூட்டமே இந்த பெருமாளின் சக்திக்கு ஒரு சான்று.  மூலவர் ஸ்ரீசத்ய நாராயணப்பெருமாள், வடக்கு நோக்கிய திருமுகமண்டலம், பிரசன்ன வதனத்துடனும், கமல நயனங்களுடன், பவழம் போல சிவந்த இதழில் குமிண் சிரிப்புடன், நிர்மலமான பட்டுப்பீதாம்பரங்களுடன், கிரீட, ஹார, கேயூர கடகாதி திவ்ய ஆபரணங்களுடன், சங்கும், சக்கரமும், கதையும் தாங்கி அபய ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் செடியாய வல் வினைகள் தீர்க்கும் நெடியானாக அற்புதமாக சேவை சாதிக்கின்றனர். முத்தங்கியில் பெருமாளையும், தாயாரையும் தரிசிக்க ஆயிரம் கண் வேண்டும் அவ்வளவு சௌந்தர்யம் எம்பெருமானுக்கும் தாயாருக்கும். கல்யாணக் கோலமாக பெருமாளுக்கு வலப்பக்கத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் மேற்கரமிரண்டிலும் பத்ம மலரை ஏந்தி கீழ்க்கரங்களில் அபய, வரதஹஸ்தங்களுடன் நமக்குப் பதினாறு செல்வங்களையும் வழங்கும் ஐஸ்வர்ய லக்ஷ்மியாய் மஹாலக்ஷ்மித்தாயார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.  சக்ரவர்த்தி திருமகன் கையிலே வில்லேந்தி கோதண்டராமராக, அன்னை ஜானகி, மற்றும் இளைய பெருமாளுடன் தனிச் சன்னிதியிலும், திருவடியாம் மாருதி வலக்கையிலே சஞ்சீவி மலையையும் இடக்கையில் சௌகந்தி மலரையும் ஏந்திய வண்ணம் சஞ்சீவி ஆஞ்சனேயராகவும் சேவை சாதிக்கின்றனர். லக்ஷ்மி நரசிம்மருக்கும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கும்,  தனி சன்னதிகள் உள்ளன. சகல கலைகளையும் நமக்கு வழங்க வல்ல சரஸ்வதி தாயாருக்கே குருவான லக்ஷ்மி ஹயகிரீவருக்கும் ஒரு சன்னதி இத்தலத்திலே உள்ளது. வியாழக்கிழமையன்று ஏல மாலை சார்த்தி இவரை வழிபட்டால் மாணவர்களுக்கு நன்றாகக்கல்வி விருத்தியடையும் என்பது ஐதீகம். முன்பக்கம் அறுகோணசக்கரத்தில் பதினாறு கரங்களுடன் சக்கரத்தழ்வாரும், பின்பக்கம் முக்கோண சக்கரத்தில் யோகநரசிம்மரும் விளங்கும் சக்கரத்தாழ்வாருக்கும் தனிச் சன்னதி உள்ளது. வடகலை சம்பிரதாய இத்திருக்கோவிலில், வைகாசான ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.  வருடம் முழுவதும் கோலாகலமாக பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றது இத்திருக்கோவிலில். தமிழ் வருடப்பிறப்பன்று புஷ்பாங்கியில் பெருமாளும் தாயாரும் சேவை சாதிக்கின்றனர்,  மற்றும் இரவு புஷ்பப்பல்லக்கிலே ஊர்வலம் வருகின்றார். ஆனி மாதம் அவதார உற்சவத்தை யொட்டி 10நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. பத்து நாட்களும் காலையும் மாலையும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிப்பதுடன், பத்தி உலாத்தலும், ஊஞ்சல் சேவையும் தந்தருளுகின்றார். திவ்யதேசங்களிலே உள்ளது போல் பெருமாள் சத்யகோடி விமானத்ததில் 10ம்நாள் இரவு சேவை சாதிக்கின்றார். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருடசேவை தந்தருளுகின்றார் சத்ய நாராயணப் பெருமாள் . 2008ம் ஆண்டு நடைபெற்ற சம்ப்ரோட்சணத்தின் போது அன்பர்கள் புது தங்க முலாம் கருடன் சமர்ப்பணம் செய்தனர்.  திருமலையில் எவ்வாறு மலையப்ப சுவாமி மூலவரின் லக்ஷ்மி ஹாரம் அணிந்து மூலவராக சேவை சாதிக்கின்றாரோ, அது போலவே சத்யநாராயணப் பெருமாளும் கருட சேவையின் போது  லக்ஷ்மி ஹாரம் அணிந்து செங்கோல் தாங்கி ஓடும் புள்ளேறி நாம் எல்லோரும் உய்ய பவனி வரும் அழகை எப்படி வர்ணிப்பது என்றே புரியவில்லை.  இவ்வாலயத்திற்கே  உரித்தான  பிரத்யேக  பூஜை  பௌர்ணமி தினத்தன்று நடை  பெறும்  சத்ய நாராயண பூஜை ஆகும். அன்னவரத்தில் உள்ள சத்யநாராயணப் பெருமாளே இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதால் இப்பூசை மிகவும் சிறப்பு பெற்றது ஆகும். இப்பூஜையின்  மகத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்வோமா?  பௌர்ணமியன்று காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறுகின்றது. பின் காலை பத்து மணியளவில் சத்ய நாராயண பூஜை  நடைபெறுகின்றது.  மாலை  பெருமாள் சந்திரப் பிரபையில் திருவீதி  புறப்பாடு  நடைபெறுகின்றது.  சத்ய நாராயண  பூஜையின்  போது  பாராயணம் செய்யப்படும்  கதைகளைப்  பார்போமா?  ஒரு சமயம் நைமிசாரண்யத்தில்  சனகாதி  முனிவர்கள்  ஸூத  பௌராணகரிடம்,    சுவாமி  விரும்பிய  பலத்தை  வரத்தாலும்  தவத்தினாலும்   விரைவில்  பெரும் வகை  என்ன?  என்று   வினவ,  ஸூதரும், எம்பெருமான் நாரத  முனிவருக்கு  கூறிய  சத்ய நாராயண  விரத  மகிமையைப்  பற்றி  கூறுகின்றார்.  கலியுகத்திலே பூலோகத்திற்கு வந்த நாரதர் அவர்கள் படும் துன்பத்தைக் கண்டு வருந்தி  பிறர்க்கருள்  புரிய  நாரதர், " இவர்களது துன்பத்தைத்  துடைக்கும் வழி  என்ன"?  என  எம்பெருமானிடம் வினவ,  மஹா விஷ்ணுவும், ' உன்னிடம் அன்பால்  ஸத்ய நாராயண விரதத்தைப் பற்றி  சொல்லுகின்றேன்   கேள்.  ஏதேனும்   ஒரு  தினத்தில்  சுற்றம்  சூழ  அந்தணர்களுடன்  இவ்விரதத்தை  செய்யலாம். பக்தியுடன்  நிவேதனங்களை  ஸமர்பிக்க  வேண்டும்.  கோதுமை மாவு,  அரிசி மாவு,  பால்,  நெய்,  சர்க்கரை,  பட்சணங்கள்,  முதலியவற்றை  நிவேதனம்  செய்து,  அந்தணனிடம்  விரத  மகிமையைக்  கேட்டு  தக்ஷிணை அளித்து  அனைவருக்கும்  போஜனம்  செய்வித்து  வீடு திரும்ப வேண்டும்'. "இந்த  கலியுகத்திலே  ப்ரதக்ஷ்யமாக  பலனளிக்க  வல்லதாம்"  என்று  கூறினார்.  ஒரு   சமயம்  காசி  நகரில்  ஒரு  ஏழை  அந்தணன்  பசி தாகத்தினால் மிகவும் வாடி  துன்பப்பட்ட  போது  அவனுக்காக  இரங்கி  பகவான்   கிழரூபத்தில்  வந்து,  அந்த  அந்தணனுக்கு  சத்ய நாராயண பூஜையின் மகிமையும்,  அந்த  விரதத்தை  அனுஷ்டிக்கும்  முறையையும் கூறி  மறைய , அந்த  அந்தணனும்  விரதத்தை  முறையாக செய்து  முடித்தான்.  பின்  பெருமாளின்  அருளால்  துயர்  நீங்கி  செல்வந்தன்   ஆனான்.  இறுதியில்  அவனுக்கு  முக்தியும் கிட்டியது.  ஒரு சமயம் ஒரு  ஏழை  அந்தணனின் வீட்டில் நடை  பெற்ற  சத்ய நாராயண  பூஜையில்  ஒரு  விறகு  வெட்டியும் கலந்து கொண்டு,  பிரசாதத்தையும் புசிக்க  அடுத்த  நாள் அனைத்து விறகுகளும் விற்று  தீர்ந்து விட்டன.  சத்ய நாராயண  விரதத்தின்  மகிமையை  உணர்ந்த  விறகு வெட்டி,  பிராமணனிடம் இவ்விரதத்தை கடைப்பிடிக்கும் முறையைக்  கேட்டு, தானும் பின்  இப்பூஜையை  செய்து  செல்வந்தன்  ஆனான்  அவனுக்கும்  மோட்சம்  கிட்டியது.   உல்காமுகன் என்ற மன்னனின் இராணி சத்ய நாராயண விரதத்தை செய்வதை  கண்ட ஒரு வணிகன்  வந்து கேட்க சந்தான சம்பத்துக்களைவிரும்பிச் செய்வதாகஇராணியும் கூறினாள். வணிகனும் புத்ரபாக்கியம்  உண்டானால்  விரதம்  இருப்பதாக  கூற  பெண்  மகவும் பிறந்தது.  அவனும்  மனைவியிடம் பெண்ணுக்கு கல்யாணம் முடிந்தவுடன் பூஜை செய்வதாக கூறி மறந்து விட்டான்.  ஒரு நாள்  மருமகனுடன் வியாபாரம் செய்ய  ரத்னஸார  நகரம் சென்று ஒரு  சத்திரத்தில்  இரவு  தங்கினான்.  அந்த  இரவில்  அரண்மனையில்  கொள்ளையடித்த பொருட்களை   அந்த சத்திரத்திலே  போட்டு விட்டு  கொள்ளையர்கள்  சென்று விட,  காலையில்  காவலர்கள்  இருவரையும்  அரண்மணையில்  கொள்ளையடித்ததாக  கைது  செய்து  சிறையிலடைத்தனர்.  அங்கே  மனைவியும்       மகளும்   எல்லா பொருள்களையும்  களவு  கொடுத்து  உண்ண    உணவின்றி  தவித்தனர்.  ஒரு நாள்  மகள்  ஒரு  பிராமணன்  வீட்டில்  சத்ய நாராயண  பூஜை  நடப்பதை  பார்த்து ,  பிரசாதம் புசித்து   வந்து  தானும்  பூஜை  செய்ய,  பகவான்  மன்னன்  கனவில்  தோன்றி  உண்மையைக்  கூற இருவரும் விடுதலை அடைந்தனர்.  அரசன் கொடுத்த பொன்னையும், வெள்ளியையும் இருவரும்  ஒரு  ஓடம் ஏறி  நகரம் செல்ல,  பகவானும் ஒரு பிரம்மச்சாரி வேடத்தில் வந்து ஓடத்தில் என்ன  என்று வினவ,  எல்லாமே கொடி , இலை என்றனர்,  பிரம்மச்சாரியும் அவ்வாறே ஆகுக  என  எல்லா தங்கமும்  வெள்ளியும்  இலையும்  கொடியுமாகியது.  மருமகன் பிரம்மச்சாரியை  சரணடைந்து  வேண்ட  சரியாயிற்று.  நகர் சென்றதும், சத்ய நாராயண பூஜை செய்து கொண்டிருந்த  மகள்,  மருமகன்  வந்த செய்தி  கேட்டவுடன் பிரசாதத்தை  சுவீகரிக்காமல்  மறக்க, பகவான்  மருமகனுடன் ஒடத்தை மூழ்கும் படி  செய்ய ,  அவளும்  மூழ்க  முயல, வணிகன் சத்ய நாராயண பூஜை  செய்ய  நேர்ந்து  கொள்ள, வணிகனே உன் மகள் பிரசாதம்  உட்கொள்ள  மறந்து விட்டாள்.  அது பெரிய  அபராதம்.  இவள் பிரசாதம் சுவீகரித்துக் கொண்டவுடன் தன் கணவனை காண்பாள் என்று  அசரீரி   கூற,  அவ்வாறே  அவளும் பிரசாதம் சுவிகரித்தவுடன்  ஓடத்துடன்  தன்  கணவனைக்  கண்டாள்.  சத்ய நாராயண பூஜை செய்வதால் இக மற்றும் பர சுகங்கள் இரண்டும் கிடைக்கின்றன.  பௌர்ணமி  மற்றும்  சங்கராந்தி தினங்களில் செய்யும்  பூஜை  மிகவும் சிறந்தது.  துங்கத்வஜன் என்ற மன்னன் ஒரு சமயம் காட்டிலே  வேட்டையாட சென்ற போது அங்கு  இடையர்கள் சத்ய நாராயண பூஜை செய்வதைப் பார்த்தான்.  அவர்கள் பூஜை பிரசாதத்தை  கொடுக்க  மன்னன் அதை உதாசீனம் செய்ய  அவனுடைய  100  பிள்ளைகளும்  உடனே  மாண்டனர்.  அவனது  தன  தான்ய சம்பத்தும் அழிந்தது. தன் தவறை உணர்ந்த மன்னன் பின்  சத்ய நாராண பூஜை செய்து  சம்பத்தையும்  புதல்வர்களையும்  திரும்பப்  பெற்றான். சத்ய நாராயண பூஜை  செய்து  அதன்  சரித்திரத்தையும் ச்ரவணம் செய்பவன் ஸத்ய நாராயணர், ஸத்ய தேவர், சத்யர், காமி தேவன் என்று அன்புடன் அழைக்கப்படும் சுவாமியின் அனுகிரகம்  பெற்று ,  ஏழ்மை விலகும், சிறை தண்டனை  பெற்றவன்  விடுதலை அடைவான்,  பயம்  நீங்கும், விரும்பிய  அனைத்தும்  கிடைக்கும்.  இந்த  ஆறு  கதைகளும் சத்ய  நாராயண பூஜையின் போது ச்ரவணம் செய்யப்படுகின்றன.  இனி சத்ய நாராயண பூஜை செய்தவர்கள் அடுத்த பிறவியில் பெற்ற பேற்றைக்  காண்போமா?  அந்தணன்  குசேலாராகப் பிறந்து  கிருஷ்ணரின்  நண்பனும் ஆகி  பெரும் பேறு பெற்றான். விறகு வெட்டி  குகனாகப் பிறந்து  இராம பிரானுக்கு  சேவை செய்யும் பாக்கியம் பெற்றான். உல்காமுகன்  தசரத  மஹாராஜாவாகப்   பிறந்து அரங்கனாதரின் திவ்ய கடாட்சம்  பெற்று  முக்தியும்  அடைந்தான்.  வணிகன்  மோரத்வஜனாக பிறந்து தன் உடலின் மேல் பற்றில்லாமல் தன்  உடலை அறுத்துத் தந்து மோட்ச லோகமும்  போனான்.  துங்கத்வஜன்  நான்முகனானன்.  கருடசேவையன்று எப்போதும் போல் முதலில் பக்தி உலாத்தல் கண்டருளி திருக்கோவிலிலிருந்து வாகன மண்டபத்திற்கு நடையலங்காரத்துடன் எழுந்தருளுகின்றார் சத்ய நாராயணப் பெருமாள். பின் வாகன மண்டபத்தில் ஊஞ்சல் சேவை தந்தருளுகின்றார். பின் கருட வாகனத்தில் எம்பெருமானின் அலங்காரம் நடக்கின்றது. வெளியே புள்ளூர்தியில் பெருமாளைச் சேவிக்க அன்பர்கள் தவம் கிடக்கின்றனர். அலங்காரம் முடிந்து திரை விலக்கப்படுகின்றது திவ்ய தரிசனம் கண்டு ஆனந்தம் அடைகின்றனர் அன்பர்கள். பின்னர் . ஆச்சாரியார் வேதாந்ததேசிகர் மூலவரின் லக்ஷ்மி ஹாரத்துடன் எழுந்தருளுகின்றார். பின்னர் லக்ஷ்மி ஹாரம் பெருமாளுக்கு சார்த்தப்பட்டு தீபாராதணை நடைபெறுகின்றது. பக்தர்கள் அனைவரும் ஆனந்த பரவசத்தில் கண்ணீர் மல்க பெருமாளை சேவிக்கின்றனர். ஒரு வருடம் சிறப்பாக அஹோபில மட ஜீயர்களும் எழுந்தருளி சத்யநாராயணப் பெருமாளை மங்களாசாசனம் செய்தனர்.  புதிய தங்க முலாம் கருடவாகனத்தை அன்பர்கள் சென்ற சம்ப்ரோட்சணத்தின் போது பெருமாளுக்கு  சமர்பித்தனர். எல்லா உற்சவங்களும் வெகு சிறப்பாக இத்திருக்கோவிலில் நடைபெறும் சிறப்பை சமயம் கிடைத்தால் வந்து சேவித்து ஸ்ரீமஹாலக்ஷ்மி சமேத சத்யநாராயணர் அருள் பெறுமாறு பிரார்த்திக்கின்றேன். அடுத்து கருட தாண்டகம், கருட பஞ்சாசத் ஆகிய கிரந்தங்களை பாடிய  நிகமாந்த மஹா  தேசிகர் வழிபட்ட திருவயிந்திரபுரம் சேவிக்கலாம் அன்பர்களே.                                      50. திருவஹீந்திரபுரம் - கருடனும் வேதாந்த தேசிகரும் []   வேதாந்த தேசிகர் தாயின் துயர் தீர்க்க அமிர்தம் கொணர்ந்த போது  பெருமாளுடன் விவாதம் செய்ததற்கு வருந்தி கருடன் வழிபட்ட தலம் திருவயிந்திரபுரம் ஆகும். பெருமாளை ஆராதிக்க கருடன் தனது அலகால் கீறி உருவாக்கிய நதி கருட நதி. தற்போது கெடில நதி என்று அழைக்கப்படுகின்றது.   அவன் பகைவனான ஆதிசேஷனும்  இங்கு பெருமாளை ஆராதித்தான். ஔஷத மலையில் பல அரிய மூலிகைகளை அயிந்திரன் நட்டான் என்பது இத்தலத்தின் ஒரு ஐதீகம்.   ஒரு காலத்தில் அகம்பாவம் பிடித்த தேவர்கள் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டார்கள். அவர்கள் ஔஷதாசலத்திற்கு வந்து மஹாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய பெருமாளும் அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார். அசுரர்கள் பிரம்மனிடம் முறையிட அவரும் பரமனைத் துணை கொண்டு யுத்தம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார். அசுரர்களுக்குத் துணையாக சிவபெருமான் நின்றார். சிவனால் தேவர்கள் தாக்கப்பட்டு அல்லலுறுவதைக் கண்டு நாராயணன் தனது சக்ராயுதத்தை ஏவினார். சுதர்சன சக்கரமும் அசுரர்களை விரட்டிச்சென்று கொன்று குவித்தது. இறுதியில் அனைவரும் ஸ்ரீமந்நாராயணனிடம் சரணடைய அனைவரையும் பகவான் அரவணைத்தார். தாமே மும்மூர்த்தியாக காட்சியளிப்பதாக கூறிய பகவான் தனது திருமேனியில் பிரம்மனையும், சிவனையும் காட்டி அனைவரையும் மகிழ்வித்தார். தேவர்களுக்கு தலைவனாக இருந்ததால் இவருக்குத் தேவநாதன் என்று திருநாமம். ஆகவே இவர் மூவராகிய மூர்த்தி என்றும் அழைக்கப்படுகின்றார்.    திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலம். இத்தலத்தில் தேவநாதப் பெருமாள் அருளும் ஆலயம் ஒன்றும், அதன் எதிரே மலை மீது ஹயக்ரீவர் ஆலயம் ஒன்றுமாக இரண்டு ஆலயங்கள் உள்ளன. தேவநாதப் பெருமாளை 'தாழக் கோவிலில்' வழிபட்டு விட்டு, கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால், சிறிய செந்நிற மலை காணப்படும். 'ஔஷதகிரி' என்று அழைக்கப்படும் இந்த மலை மீது 74 படிகள் உள்ளன.  இலங்கைக்கு சஞ்சீவி பர்வதத்தை அனுமன் எடுத்து சென்ற போது அந்த சஞ்சிவி மலையிலிருந்து சிறிதளவு சரிந்து இந்த மலையில் விழுந்தால் இது ஔஷதாசலம் என்றழைக்கப்படுகின்றது.    இந்த மலை மீதுள்ள அச்வத்த மரத்தின் கீழ் அமர்ந்து தான், காஞ்சிபுரத்தை அடுத்த தூப்புல் என்னும் தலத்தில் அவதரித்த திருவேங்கடமுடையானின் கண்டாவதாரமான  ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன், கருட மந்திரத்தை ஜெபித்தார். அப்போது கருடாழ்வார் தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார். ஆயக் கலைகள் அறுபத்து நான்கையும் நமக்கு அருளும் சரஸ்வதியின் குரு ஹயக்ரீவர் ஆவார்.  நான்கு வேதங்களையும் பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்ற அரக்கர்கள் கைப்பற்றிச் சென்றனர். பெருமாள், ஹயக்ரீவ அவதாரம் எடுத்து அந்த அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டு, பிரம்மதேவரிடம் ஒப்படைத்தார். ஹயக்ரீவர் கல்வி, ஞானம் ஆகியவற்றிற்கு ஆதாரமாக உள்ளவர். லலிதா  சகஸ்ர  நாமத்தை அகத்தியருக்கு அருளிச் செய்தவர் இவர்.  தேசிகன் தவம் புரிந்து ஹயக்ரீவரின் அருள் பெற்ற இந்த ஔஷத மலையில் ஹயக்ரீவர், லட்சுமி ஹயக்ரீவராய் அருள் பாலிக்கிறார். அருகில் வேணு கோபாலன்,  மற்றும் சின் முத்திரையுடன் அமர்ந்து ஜபம் செய்யும் கோலத்தில்  கருடாழ்வாரும் அருள்புரிகிறார். ஹயக்ரீவருக்கு ஏலக்காய்மாலை சூட்டி, வெல்லம் கலந்த சுண்டல் நைவேத்தியம் செய்து  ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதம்   ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே  ஞான மயமாக களங்கமற்ற தூய ஸ்படிகம் போல் திகழும் பரிமுகம் கொண்ட  இந்த தேவனே சகல வித்தைகளுக்கும் ஆதாரம் என்று  வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் அடையலாம். மேலும் ஞானம், வித்தைகளில் மேன்மையும் கிட்டும். இத்தலத்தில் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நாம் தினந்தோறும் தேசிகன் இயற்றிய 'ஹயக்ரீவ ஸ்தோத்திரம்' படித்து வந்தால், கல்வியில் உயர் நிலையையும், ஞானத்தையும், செல்வத்தையும் பெறலாம்.  வேதாந்த தேசிகருக்கு இது மாதுலர் கிருஹம். அவரது தாய் மாமன் அப்புள்ளார்.  புள் என்றால் பறவை,  அப்புள் என்றால் அழகிய பறவை, இங்கு அது பக்ஷிராஜனான கருடனை குறிக்கின்றது. அப்புள்ளார் தேசிகருக்கு  கருட மந்திரத்தை உபதேசித்தார். இவரும் கருட மந்திரத்தை பல லட்சம் முறை ஜபிக்க கருடன் தோன்றி ஹயக்ரீவ மந்திரத்தை அளித்தான்.  அதை ஜபித்த வேதாந்த தேசிகருக்கு  ஹயக்ரீவர் பிரத்யட்சமாகி எல்லா ஞானத்தையும் வழங்கினார். அவர் ஆராதனை செய்ய அர்ச்சா மூர்த்தியான யோக ஹயக்ரீவரையும் அளித்தான்.  ஹயக்ரீவரை உபாசித்து தேசிகர் ஹயக்ரீவர் அருள் பெற்று ஹயக்ரீவ ஸ்தோத்திரம் இயற்றினார். கருடன் மேல் சுவாமி தேசிகர் இரு ஸ்தோத்திரங்கள் இயற்றியுள்ளார். அவையாவன கருடதாண்டகம், கருடபஞ்சாஸத் ஆகியவையாகும்.   ஒரு சமயம் சீடர்களின் விருப்பத்துக்கிணங்க தேசிகர் காஞ்சிபுரம் வந்து, அவர்களுடைய நெடுநாள் பிரார்த்தனையை நிறைவேற்ற, சித்தாந்த பிரவசனம் செய்து கொண்டிருந்தார். பாம்பாட்டியொருவன் தன்னிடமுள்ள சர்பங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று கேட்டு, அத்தனை விஷசர்ப்பங்களையும், பெட்டிகளிலிருந்து வெளிப்படுத்திவிட்டு ஓடவிட்டான். சுவாமி தேசிகர் சில கோடுகளை இட, அவைகளுக்கு அதை தாண்ட இயலவில்லை. ஒரு விஷசர்ப்பம் மட்டும் கோட்டைத்தாண்டி வர, கருடமந்திரம் உச்சரித்த வேளை, விண்ணில் வட்டமிட்ட கருடன் எல்லா சர்ப்பங்களையுமே கால்களிலும், அலகிலுமாகக் கொத்திச் சென்றது. பாம்பாட்டி பிழைப்பு போனதே என்று அலறி சுவாமி காலில் விழுந்து வணங்கினான். தேசிகரும் கருடனைப் பிரார்த்தனை செய்து ‘கருட தண்டகம்’ அருள, கருடன் எல்லாப் பாம்புகளையும் திரும்பக் கீழே போட்டுச் சென்றது. சுவாமி தேசிகர் கருடனை உபாசனை செய்தால் மன நோய், வாய்வு நோய், இதய நோய், தீராத விஷ நோய்கள் தீரும் என தன் கருடதண்டகத்தில்  அருளியுள்ளார்.  வேதாந்த தேசிகர் அருளிச் செய்த கருட பஞ்சாஸத் கருட பஞ்சாட்சரீ மந்திரத்திலுள்ள ஐந்து வித வர்ணனைகளாக  அமைந்துள்ளது.. அவை பரவியூகம், அமிர்தஹரணம், நாகதமனம், பரிஷ்காரம் மற்றும் அத்புதம் அல்லது ஸகாயம் ஆகும்.  இந்த கருட பஞ்சாஸத்தை தினமும் ஐந்து முறை கூறி வர விஷ ஜந்துகளால் ஏற்படும் வியாதிகள் தீராத நோய்கள், எதிரிகள் தொல்லை  தீரும், நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும், வாழ்வும் வளம் பெறும்.  கருடனைப் போற்றி தேசிகர் பாடிய சில நாமங்கள் வைநதேயன் – விந்தையின் குமாரன்.  பக்ஷி ராஜன்–பறவைகளின் அரசன்  வேத ஸ்வரூபன் – வேத ரூபன்.  சுபர்ணன் – அழகிய இறகுகளை உடையவன்.  தார் விகாரி – நாகப் பகையோன்  பத்ரி நாடா – பறவைகளின் யஜமானன்.  ஆசி விகாரி - நாகங்களின்(விஷ) பகைவன்.  காகேந்திரன் – பறவைகளின் அரசன்.  அருண அனந்தரன்- அருணனின் இளையோன்.  பக்ஷி இந்திரன் – பறவைகளின் அரசன்.  கருத்மான் – மஹா தீரன் (எவருக்கும் அஞ்சாதவர், நிகரற்றவர்).   இனி  தூப்புல் நிகமாந்த மஹா  தேசிகர் இயற்றிய கருட தண்டகத்தை பொருளுடன் பார்க்கலாம்.                            51. ஸ்ரீகருட தண்டகம் []   திருமயிலை வேதாந்த தேசிகர் தேவாஸ்தானம் - ஸ்ரீநிவாசர் கருட சேவை ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:  ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ  |  வேதாந்தார்சார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம ஸதாஹ்ருதி  ||  முதல் ஸ்லோகம் 32 எழுத்துக்களைக் கொண்ட  அநுஷ்டுப் சந்தஸ்ஸில் அமைந்துள்ளது. இறுதி ஸ்லோகமும் இதே சந்தஸ்ஸில் அமைந்துள்ளது முதல் ஸ்லோகம்:  நம: பந்நக நத்தாய வைகுண்ட்ட வஶ வர்த்திநே | ஸ்ருதி ஸிந்து ஸுதோத்பாத மந்த்ராய கருத்மதே || 1 அழகிய சிறகுகளை கொண்ட கருடபகவானுக்கு நமஸ்காரம். தங்களுடையத் திருமேனியை தாங்கள் வென்ற நாகங்கள் அழகு செய்கின்றன, அவை தேவரீருக்கு ஆபரணமாக விளங்குகின்றன. தாங்கள் ஸ்ரீவைகுந்தத்தில்  பெருமாளுக்கு அந்தரங்க தாசனாக இருந்து அவருக்கு கைங்கர்யம் செய்கின்றீர்கள். வேதங்களாகிய பாற்கடலை கடைந்து பிரம்ம வித்யா என்னும் அமிர்தத்தை அடைவது போல தங்களை வணங்கி இந்தப் பிரம்ம வித்யையை அடையலாம். கருத்மானாகிய தங்களுக்கு நமஸ்காரம்.    பாதம் 1  கருடமகில வேத நீடாதிரூடம், த்விஷத் பீடநோத் கண்டிதாகுண்ட்ட  வைகுண்ட்ட பீடிக்ருத ஸ்கந்தமீடே, ஸ்வநீடா கதிப்ரீத ருத்ரா ஸுகீர்த்தி  ஸ்தநா போக காடோபகூட ஸ்ப்புரத் கண்டக வ்ராத வேதவ்யதா வேபமாந த்விஜிஹ்வாதிபாகல்ப விஷ்பார்யமாண ஸ்ப்படாவாடிகா ரத்ந ரோசிஶ் சடா நீராஜிதம் காந்தி கல்லோலிநீ ராஜிதம். || 2.  கருட பகவானே  தாங்களே வேத ஸ்வரூபி, வேதங்கள் தங்களின் புகழைப் பாடுகின்றன. ஸ்ரீமந் நாராயணன் அசுரர்களை அழிக்க செல்லும் போது தங்களின் தோளில் அமர்ந்து செல்கின்றார். அவ்வாறு தாங்கள் சேவைச் செய்ய செல்லும்  போது தங்களது இரு மனைவியரான ருத்ரையும், ஸுகீர்த்தியும் தங்களை பிரிந்திருக்கின்றனர். பெருமாள் அசுரர்களை வென்று வந்த பின்,  தங்களை அவர்கள் ஆரத்தழுவிக் கொள்கின்றனர். அந்த புளகாங்கிதத்தில் தங்கள் திருமேனியில் உள்ள சிறகுகள் சிலிர்த்தெழுகின்றன. அவை தமது திருமேனியில் அணிந்துள்ள நாகங்களை கூர்பார்க்கின்றன. ஆகவே அவை பயந்து தங்களின் படங்களை விரிக்கின்றன. அப்போது அவற்றின் மாணிக்க கற்கள் மிளிர்கின்றன. அவ்வொளி தேவரீருக்கு கற்பூர ஆரத்தி போல உள்ளது.  கருடன் வேதஸ்வரூபனாக விளங்குவதையும், அவரை வேதங்கள் போற்றுவதையும் அவர் பெருமாளுக்கு வாகனமாகவும், கொடியாகவும் திகழ்வதையும், அவருக்கு ருத்ரை, ஸுகீர்த்தி இன்று இரு மனைவியர், மஹா நாகங்கள் அவரின் ஆபரணமாக விளங்குகின்றன என்பதை இந்த ஸ்லோகத்தில் நிகமாந்த மஹா தேசிகர் அற்புதமாக கூறியுள்ளார்.   பாதம் : 2  ஜய கருட ஸுபர்ண தார்வீகராஹார தேவாதிபாஹார ஹாரிந் திவௌகஸ் பதி க்ஷிப்த தம்போளி தாரா கிணாகல்ப கல்பாந்த வாதூல கல்போதயாநல்ப வீராயிதோத்யச் சமத்கார தைத்யாரி ஜைத்ர த்வஜாரோஹ நிர்த்தாரிதோத்கர்ஷ சங்கர்ஷணாத்மந் கருத்மந் மருத்பஞ்சகாதீஶ ஸத்யாதி மூர்த்தே ந கஶ்சித் ஸமஸ்தே நமஸ்தே புநஸ்தே நம: ||  3.  கருடாழ்வாரே! அழகிய சிறகுகளை உடைய சுபர்ணரே! மஹா நாகங்கள் தங்களுடைய உணவாகின்றன. தாயை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தேவலோகம் சென்று தேவர்களை வென்று அமிர்தம் கொணர்ந்தீர்! அப்போது இந்திரன் கோபம் கொண்டு வஜ்ராயுதத்தை தங்கள் மேல் ஏவினான். அதன் கூரிய முனை தங்கள் சிறகுகளிலும் திருமேனியிலும் ஏற்படுத்திய  வீரத்தழும்புகள் தற்போது தங்களுக்கு ஆபரணமாகி தாங்கள் இந்திரனை வென்றதை அறிவிக்கின்றன. தங்களது வீரச்செயல்கள்  பிரளய காலத்தின் மஹா வாயுவைப்போல உள்ளன. தாங்கள் பெருமாளின் கொடியில் அமர்ந்து அவரது வெற்றிக்கு அறிகுறியாக விளங்குகின்றீர்கள். அதுவே தங்களது பெருமையும் பறை சாற்றுகின்றது. தாங்களே பெருமாளின் வியூக மூர்த்தமான சங்கர்ஷணரின் அம்சமாக அவதாரம் செய்தீர்கள். தாங்களே சத்யர், சுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர், விஹாஹேஸ்வரர் என்ற ஐந்து வடிவாகி ப்ராணன், அபாநன், சமாநன், உதாநன், வ்யாநன் என்ற ஐந்து வாயுவாகி தேவனாக ஒளிர்கின்றீர். அழகிய பொன்னிற சிறகுகளை உடையவரே! தங்களுக்கு நமஸ்காரம் மீண்டும் ஒரு  முறை நமஸ்காரம்.    தேவர்களை வென்று அமிர்தம் கொணர்ந்து தாயின் அடிமைத் தளையை நீக்கிய வீரச்செயலையும், போர்க்களத்தில் பெருமாளுக்கு முன்னரே சென்று காய்சினப் பறவையாகி அசுரர்களை அழிக்கும் வீரத்தையும், பாற்கடலில் பரவாஸுதேவரின் வியூக மூர்த்திகளில் ஒருவரான சங்கர்ஷணரின் அம்சமாக திகழ்வதையும், ஐந்து வாயுக்களின் வடிவமாக திகழ்வதையும் இந்த ஸ்லோகத்தில் தூப்புல் வேதாந்த தேசிகர் பாடியுள்ளார்.       பாதம் : 3  நம: இத மஜஹத் ஸபர்யாய பர்யாய நிர்யாத பக்ஷாநிலாஸ்ப் பாலநோத்வேல பாதோதி வீசீ சபேடா ஹதாகாத பாதாள பாங்கார ஸங்க்ருத்த நாகேந்த்ர பீடா ஸ்ருணீ பாவ பாஸ்வந் நகஶ்ரேணயே சண்டதுண்டாய ந்ருத்யத் புஜங்க ப்ருவே வஜ்ரிணே தம்ஷ்ட்ரயா துப்யமத்யாத்ம வித்யா விதேயா விதேயா பவத் தாஸ்யமாபாதயேதா தயேதாஶ்ச மே || 4.  கருட பகவானே! ஞானிகள் இடைவிடாமல் தங்களை தியானிக்கின்றனர், தாங்கள் பறக்கும் போது தங்களின் இறகுகள் உண்டாக்கும் காற்று பெரிய கடல் அலைகளை உண்டாக்குகின்றன. அதன் சப்தம் பாதாள உலகத்தையும் எட்டுகின்றது. அந்த ஓசை அங்குள்ளவர்களை அறைவது போல அவர்களுக்கு தோன்றுகின்றது.  பயங்கரமான “பாம்” என்ற சப்தம் அப்போது உருவாகின்றது. அஷ்ட திக்கஜங்களும் அந்த சப்தத்தைக் கேட்டு அதிர்ந்து தங்களை தாக்க வருகின்றன. தங்களது கூரிய நகங்கள் அந்த யானைகளை அடக்கும் அங்குசமாகின்றன. தங்களது கூரிய அலகு தங்களது எதிரிகளின் மனதில் பய பீதியை உண்டாக்குகின்றது. தாங்கள் புருவத்தை நெரிக்கும் போது அது நாகம் படமெடுப்பது போல உள்ளது. தங்களது கோரைப்பற்கள் இந்திரனின் வஜ்ராயுதம் போல தங்கள் எதிரிகளின் மனதில் அச்சத்தை உண்டாக்குகின்றன. தங்களுக்கு அந்த அளவில்லா புகழுக்கு  நமஸ்காரம், தாங்கள் அடியேனுக்கு பிரம்ம வித்யையை அருள்வீர்களாக. கருணை கூர்ந்து தங்களுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் அருள்வீர்களாக.   ஆச்சார்யனாக இருந்து பிரம்ம வித்தையை வழங்கும் பான்மையையும், ஞானிகள் சதா சர்வ காலம் கருடபகவானை துதிப்பதையும் இந்த ஸ்லோகத்தில் ஆச்சார்யர் தேசிகர் கூறியுள்ளார்.   பாதம் : 4   மநுரநுகத பக்ஷி வக்த்ர ஸ்புரத் தாரகஸ் தாவகஸ் சித்ரபாநு ப்ரியா ஸேகரஸ் த்ராயதாம் ந:, த்ரிவர்க்காபவர்க்க ப்ரஸூதி: பரவ்யோம தாமந்  வலத்வேஷி தர்ப்பஜ்வலத் வாலகில்ய ப்ரதிக்ஞாவதீர்ண ஸ்த்திராம் தத்த்வ  புத்திம் பராம் பக்திதேநும் ஜகந்மூலகந்தே முகுந்தே மஹாநந்த  தோக்த்ரீம் ததீதா முதா காமஹீநாம் அஹீநாமஹீநாந்தக || 5.  கருடாழ்வாரே! வைகுந்தத்தில் உறைபவரே! தங்களுடைய மந்திரம் அதை உபாசிப்பவர்களுக்கு நான்கு பேறுகளையும் (அறம், பொருள், இன்பம், வீடு) வழங்குகின்றது. அந்த மந்திரம் ஐந்து எழுத்துக்களைக் கொண்டது. ஓம் என்னும் பிரணவம் அதன் முதல் எழுத்து. அதன் நிறை எழுத்து அக்னியின் மனைவியைக் குறிக்கின்றது. அந்த மந்திரம் எங்களைக் காக்கட்டும்.   ஒரு சமயம் இந்திரன் ஆணவம் கொண்டு  வாலகில்ய முனிவர்களை அவமதித்தான். அதனால் அவர்கள் எதிர்காலத்தில் சங்கர்ஷணரின் அம்சமாக பிறப்பவன் உன்னுடைய ஆணவத்தை அழிப்பான் என்று சாபமளித்தனர். தாங்கள் வாலகில்ய முனிவர்களின் வாக்கை காப்பாற்றி இந்திரனின் ஆணவத்தை அழித்தீர்கள். தங்களை பகைத்த நாகங்களுக்கு தாங்கள் யமனாக விளங்குகின்றீர்கள். உண்மையான ஞானத்தை அடியேனுக்கு வழங்குவீர்களாக. தங்களின் தலைவன் முகுந்தன் ஜகத்காரணர். அவருக்கு உண்மையான அன்பு பூண்டு, நிலையற்ற இவ்வுலக மாயையில் அழுந்தாமல், திட மனதுடன்   அவருக்கு பக்தி செய்யும் உண்மையான ஞானத்தை அடியேனுக்கு வழங்குவீராக.   கருடாழ்வார் மந்திர மூர்த்தியாக விளங்குவதையும், நான்கு புருஷார்த்தங்களையும் வழங்குவதையும், வாலகில்ய முனிவர்களின் தவத்தின் பயனால் கருடன் அவதாரம் நிகழ்ந்ததையும், பிரம்ம வித்தையை அளிக்கும் ஆச்சார்யனாக கருடபகவான் விளங்குவதையும் நிகமாந்த தேசிகர் இந்த  ஸ்லோகத்தில் கூறியுள்ளார்.     ஷட் த்ரிம்ஶத் கண சரணோ நர பரிபாடீ நவீந கும்ப கண: |  விஷ்ணுரத தண்டகோsயம் விகடயது விபக்ஷ வாஹிநீ வ்யூஹம் || 6  இந்த கருட தண்டகமானது ஒரே ஸ்லோகம். இதில் நான்கு பாதங்கள் உள்ளன. ஒவ்வொரு பாதத்திலும் 36 கணங்கள், ஒரு கணத்தில் மூன்று எழுத்துக்கள் (மொத்தம் 108 எழுத்துக்கள்) . இந்த கருட தண்டகம் தண்டக யாப்பில் சரியாக இயற்றப்பட்டுள்ளது.  நாகணங்களும், ராகணங்களும் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. இந்த கருட தண்டகத்தை ஜபிப்பவர்களின் எதிரிகளின் வியூகம்  காற்றில் அழிந்து போகும்.   இந்த ஸ்லோகம் தண்டகத்தின் யாப்பை விளக்குகின்றது. இது ஆர்யா ஸந்தஸ்ஸில் அமைந்துள்ளது.   விசித்ர ஸித்தித: ஸோsயம் வேங்கடேஶ விபஶ்சிதா |  கருட த்வஜ தோஷாய கீதோ கருட தண்டக:  ||  7  கருடக்கொடியையுடைய எம்பெருமானை  மகிழ்விக்க   அடியேன் வேங்கடேசன், இயற்றிய இந்த கருட தண்டகத்தை ஜபிப்பவர்கள் அவர் அருளால்  சகல மனோபீஷ்டங்களையும்  அடைவர்.   கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணஶாலினே |  ஸ்ரீமதே வேங்கடேஶாய வேதாந்த குரவே நம: ||  (நன்றி : ஒப்பிலியப்பன் கோயில் வரதாச்சாரி சடகோபன்)  இந்த கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் தொல்லை ஒழிந்து போகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஜந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது என்று பெரியோர் கூறுவர். வேதாந்த தேசிகரின் கருட தண்டகத்தை அநுசந்தித்தோம் அடுத்து அவர் இயற்றிய கருடன் ஐம்பதை அனுசந்திக்கலாம் அன்பர்களே.                                                   52. கருட பஞ்சாசத்  (திருக்கருடன் ஐம்பது)  வேதாந்த தேசிகர் அருளிச் செய்த கருட பஞ்சாஸத் கருட பஞ்சாட்சரீ மந்திரத்திலுள்ள ஐந்து வித வர்ணனைகளாக  அமைந்துள்ளது. அவை பரவியூகம், அமிர்தஹரணம், நாகதமனம், பரிஷ்காரம் மற்றும் அத்புதம் அல்லது ஸகாயம் ஆகும்.  இந்த கருட பஞ்சாஸத்தை தினமும் ஐந்து முறை கூறி வர விஷ ஜந்துகளால் ஏற்படும் வியாதிகள் தீராத நோய்கள், எதிரிகள் தொல்லை  தீரும், நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும், வாழ்வும் வளம் பெறும். இனி கருடனே வந்து தன்னைப்பற்றி பாடச்சொல்ல வேதாந்த தேசிகர் பாடிய கருட பஞ்சாசத்தில் இருந்து சில ஸ்லோகங்களின் தமிழாக்கத்தைக் காணலாம். (நன்றி: அன்பில் எஸ் ஸ்ரீனிவாசன்)  கருடனின் பெருமைகள் ஒருவராயும் விட்டுவிற்கு இரண்டாவது மூர்த்தியாயும் த்ரிநான்கு பேர்களேதான் நன்கறிய முடிந்ததான இரகசிய மந்திரமாம் ஐயெழுத்தின் தேவராயும் இருமூன்று குணங்களினால் இணையற்று விளங்குவரும் சுருதியான ஏழு ஸ்வர சாமத்தின் உறைவிடமும் இருநான்கு அணிமாதி ஐசுவரிய கொள்கலனும் திருமேனிநவமென்னும் புதிதாக அமைந்தவரும் இருவைந்து நூறான கண்ணுடைய இந்திரனின் விரோதியர்கள் பல்லாயிரர் தம்மோடு வினையாகும் சிறகுகளின் கூர்முனையை சிறப்பாக உடையவரும் உருக்களுமே எண்ணற்று உடையவரும், நாகங்களின் ஒரு பெரிய பகைவருமாய் உறுங் கருட பகவானே பெரிதாம் நம் சம்சார பயந்தன்னைப் போக்கிடுக (க. பஞ் -5) பொருள்: ஒப்பற்ற ஒருவராயும், இரண்டாவது வியூக மூர்த்தி சங்கர்ஷணர் அம்சமாகவும், மூவரும், நால்வரும் அறிய முடியாதவராகவும், ஐந்தெழுத்து மந்திரத்திற்கு உரியவரும், ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ்  என்னும் ஆறு குணங்கள் உடையவரும், ஷடகம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஏழு ஸ்வரங்கள் உடைய ஸாமவேத வடிவானவரும், அணிமா முதலான அஷ்டமா சித்திகளை அளிக்க வல்லவரும், திருமேனி புதிதாக உள்ளவரும், பத்து, நூறு  என்று ஆயிரம் கண்களுடைய இந்திரனின் பகைவர்களான  லட்சக்கணக்கான அரக்கர்களை அழிக்கக்கூடிய கூரிய சிறகுகளை உடையவரும், கோடிக்கணக்கான உருவங்களை உடையவரும், அரவப்பகைவருமான பெரிய கருடன் எங்களை இந்த சம்சார பயந்தன்னை போக்கட்டும் என்று ஒன்று, இரண்டு .... ஆயிரம் லட்சம் கோடி என்று பல்லாண்டு பாடுகிறார் வேதாந்த தேசிகர்.   எம்பெருமான் – கருடன் சிலேடை உன்னதமாம் நாகர்தம் உடலோடு சேர்ந்தவராம் தன்னகரில் வேதங்கள் தாமேயாம் உருவுளராம் தன்னுடைய திருமேனி திருமுகம்கை திருத்தொடையும் வன்மையுடை திருவடியும் விசித்திரமாய் பல்வகையாய் வர்ணங்களைத் தோற்றுவித்து விளங்குகின்ற பரம்பிரம்ம தன்மைதனை உடையவராம், சகலவுயிகளுக்குமுயிர் அன்னவராம், சாதுக்களின் நிதியாமவ் வானீசன் துன்பொழிக்க நம்மருகே துரிதமாக வரவேண்டும்! (க. பஞ் -7) பொருள்: எம்பெருமான்:  ஆதிசேஷனை உடலைத் திருப்படுக்கையாக கொண்டவர், எம்பெருமானையே உட்கருத்தாக கொண்டிருப்பதால் வேதங்கள் அவருக்கு சரீரமாக இருக்கின்றன. பல்வேறு ஜாதிகளை தோற்றுவித்த பரப்பிரம்மம், சகல ஜீவராசிகளிலும் அந்தர்யாமியாக இருப்பவராம், யோகிகளுக்கு முக்தி செல்வத்தை அளிப்பவராம், அந்த வைகுந்த நாதன் நம் துன்பத்தை அழிக்க விரைந்து வரவேண்டும்.   கருடன்: பாம்புகளை தன் திருமேனியில் ஆபரணமாக அணிந்தவர்,  வேதங்களின் வடிவமாக விளங்குகின்றவர், நீலம் முதலான வர்ணங்களை வெளியிடுபவர், பிராணிகளுக்கு பிராண வாயுவாக இருப்பவர், சாதுகளுக்கு சேமநிதி போன்றவர். விண்ணில் பறக்கும் பறவைகளுள் பேரரசனான கருடன். என்று  எம்பெருமானுக்கும் கருடனுக்கும் சிலேடையாகப் பாடுகின்றார் தேசிகர்.    கருடன் ஸ்ரீராமனுக்கு செய்த தொண்டு இலங்கை வேந்தன் தனைத்தீர்க்க இராமனும் மானிடராய் இவ்வுலகில் விளையாட்டாய் நடித்தபோது நாகபாசத் திலக்காகி மயக்கமுற்ற செய்தி கேட்டு, விரைந்திட்ட நம்கருடன் தனைக்கண்டு திகைத்து நின்றார் வானரரே! விலகினதே நாகபாசம்! மகிழ்ந்திட்ட இராமனுமே வைதேகியின் செவிப்பூவின் மனங்கமழும் தோளாலே வலிந்தணைத்த கருடனுமே, வீணாசையால் மனமிழந்த நாம் துன்பக்கடல் கடக்க ஓடமாக அமைய வேண்டும்! பொருள்: எம்பெருமான் இராவணனை அழிக்க இராமனாக அவதாரம் செய்து இப்பூவுலகிற்கு வந்து, யுத்த பூமியில் இந்திரஜித்தன் விட்ட நாகபாசத்தால் கட்டுண்டு கிடந்தபோது, அந்த செய்தியைக் கேட்டவுடன் கருடன் விரைந்து யுத்த பூமிக்கு வந்திறங்கினான். கருடனின் சிறகின் காற்றுப்பட்டவுடன்  நாக பாசம் விலகியது. அதற்காக மகிழ்ந்த இராமபிரான் ஜானகியின் மணம் கமழும் தன் தோளினால் கருடனை அணைத்துக்கொண்டார். அந்த கருடன் பல விதமான ஆசைகளை சுமந்து கொண்டு துன்புறும்  நம்மை அந்த துன்பக்கடலை கடக்க உதவட்டும்.     கருடனின் ஆபரணங்கள் பரமன்தனின் படுக்கையான ஆதிசேடன் இடக்கரத்தில் வளையாக பிரம்மசூத்திர நூலாக வாசுகியை தட்சகனாம் சர்பத்தை அரைப்பூணாய், எழிலான கார்க்கோடன் எனும் பாம்பை மாலையாக பெரிதான வலக்காதில் பதுமனெனும் அரவத்தையும் மகாபதும அரவத்தை இடப்புறத்து காதினிலும், திருமுடியில் சங்கபால அரவத்தையும் அணிந்ததுடன், வலப்புறத்து கரத்தினிலே குளிகனெனும் அரவத்தையும் அணிந்தவராய் அழகுடனே விளங்குகின்ற புள்ளரசன் கருடதேவன் எட்டணிகள் கூடியவராய் காத்தருள்க நமையெல்லாம் (க.பஞ் -36)  பொருள்: இடக் கை கங்கணம் : ஆதிசேஷன்  பூணூல் : வாசுகி  அரையில் அணி: தட்சகன்  மாலை: கார்கோடகன்.  வலக் காது குண்டலம்: பத்மன்  இடக் காது குண்டலம் : மஹாபத்மன்  திரு முடியில் : சங்கபாலன்  வலக் கை கங்கணம்: குளிகன்  என்று எட்டு நாகங்கள் கருடனின் மேனியை அலங்கரிக்கும் அழகைப் பாடுகின்றார் வேதாந்த தேசிகர்.   கருடன் பகவானுக்கு செய்யும் அற்புத  தொண்டுகள் பரமனுக்கு புரிகின்ற பல்வகையாம் பணிகளுக்கும் பல்வகையாம் வடிவங்களை புள்ளரசன் எடுக்கின்றார்! அரக்கர்தமைக் கொலச்செல்லும் பொழுதெல்லாம் வேகமுடன்      உடன் செல்லும் மேலப்பாய், தகுந்ததொரு விசிறியுமாம், பெரும்வெற்றிக் கொடிதானாய், பகைவருக்கு பகைவரான மித்திரனாய், போர்தனிலே பரியிலாத சயரதமாய் புறஞ்செயவிய லாவடியராய் துணை வேண்டா துணைவருமாய் பகைவெல்லும் கருடன் நம் பயத்தைக் களைந்திடுக! (க. பஞ் - 46) பொருள்: எம்பெருமானுக்கு செய்யும் பல்வேறு சேவைகளுக்காக கருடன் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றார். அரக்கர்களை அழிக்க செல்லும் போது அவருக்கு மேற்கூரையாக விளங்குகின்றார்.  எம்பெருமான் ஏறி வேகமாகச் செல்லும் போது சாமரமாக விளங்குகின்றார். பெருமானின் வெற்றிக் கொடியாகவும், வாகனமாகவும் விளங்குகின்றார், எம்பெருமானுக்கு உற்ற தோழனாகவும், எம்பெருமானுக்கு குதிரை பூட்டாத இரதமாகவும், எம்பெருமானுக்கு வேறு துணை வேண்டாத் துணைவராயும் விளங்கும் கருடன் நமது பயத்தை நீக்கட்டும்.   தாங்க முடியா கருடன் வேகம் பெருமுதலை வாய்ப்பட்ட பேரானையைக் காப்பதற்கே புறப்பட்ட பரமன்தனைத் தாங்கியராய் கருடனுமே விரைந்தபோதில், சிவனுடைய காளைதடு மாறியதே! வானவனின் அயிராவதம் நொண்டியாகிப் போனதுவே! பிரமனுடைய அன்னமுமே பெருங்களைப்பு அடைந்ததுவே! பார்த்தவைமேல் கருணையினால் வேகத்தைக் குறைத்தாலும், பரமன்தன் தடையிலாத பரிவுக்கும் முன் நின்ற புள்ளரசன் நமக்கென்றும் நரகிலாது காத்திடுக! (க. பஞ் - 47) பொருள்: முதலை வாய்ப்பட்ட கஜேந்திரனைக் காப்பாற்ற பெருமானை தாங்கிக்கொண்டு கருடன் விரைந்த போது சிவ பெருமானுடைய வாகனமான நந்தி தடுமாறியது, இந்திரனின் வாகனமான ஐராவதம் நொண்டியது, பிரம்மதேவரின்  வாகனமான அன்னமானது களைப்படைந்து விட்டது. அவற்றின் மேல் கருணை கொண்ட கருடன் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்ட கருணை மிகுந்த பறவைகளின் அரசனான கருடன் நாம் நரகம் புகாமல் காக்கட்டும் என்று கருடனின் வேகத்தைப் போற்றுகின்றார் தேசிகர். கருட தண்டகத்தையும், கருட பஞ்சாஸத்தில் சில ஸ்லோகங்களையும் பார்த்தோம் இனி புரட்டாசி சனிக்கிழமையன்று  விரதமிருக்கும் பக்தர்கள் சேவிக்கும் கருட பத்தை  பார்ப்போம்.                                                     53. கருட பத்து []   n வேங்கடேச சுப்ரபாதத்தில் வரும் ஒரு  ஸ்லோகம் இது    ஸ்ரீவைகுண்ட வ்ரக்தாய ஸ்வாமி புஷ்கரணி தடே ரமயா ரம மாணாய  வேங்கடேசாய  மங்களம்  பரமபதத்தில் பரவாசுதேவன் ரூபத்தில் இருந்துகொண்டு பக்தரட்சணம் என்னும் தன் காரியத்தை நன்கு நிறைவேற்ற இயலாமல் (இந்த  கலியுகத்தில்) எம்பெருமான் திருமலையில்  ஸ்வாமி புஷ்கரிணி தீரத்தில் திருவேங்கடமுடையான் ரூபத்தில் அர்ச்சையாய் எழுந்தருளியிருந்து பக்தரட்சணம் எனும் காரியத்தை நன்கு நிறைவேற்றுகிறான். மஹாலக்ஷ்மியும் திருமலையில் தனிக் கோயில் கொள்ளாமல் திருவேங்கடமுடையான் திருமார்பையே தன் கோவிலாகக் அமைத்துக் கொண்டாள் அத்தகைய திருவேங்கடையமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும். இவ்வாறு கண்கண்ட தெய்வம், கலியுக வரதன், ஏழுமலை வாசன், ஸ்ரீநிவாசன், நெடியோனாகிய திருவேங்கடவன் திருமலையில் இந்த கலியில் நாம் எல்லோரும் உய்ய கோவில் கொண்டு அருளியது புரட்டாசி மாதம் திருவோணத்தன்று. எனவே புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம். இதை பெருமாள் மாதம் என்றும் அழைப்பர். அதுவும் பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை அவரை வழிபட மிகவும் உகந்த நாள் ஆகும்.. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாகக் கூறுகின்றது அக்னி புராணம். எமபயம் நீங்கவும், துன்பங்கள் நீங்கி நன்மை கூடவும் புரட்டாசி மாத விரதம் இருப்பது நல்லது.   பலர் இம்மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பர். இன்னும் சிலர் புரட்டாசி சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்து பெருமாளை வழிபடுவர். பலர் இல்லங்களில் சனிக்கிழமையன்று வேங்கடேச பெருமாளுக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்து படையலிட்டு வழிபடுவர்.  நம்முடைய  பாவங்களை எல்லாம் பொசுக்கும் திருவேங்கடமாம் ஏழுமலையில்  செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமால், திருவேங்கடவன்  "புரட்டாசி மாத திருவோண நாளை" தீர்த்த நாளாகக் கொண்டு ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் கண்டருளுகின்றார். ஆதி காலத்தில் பிரம்மாவே இந்த உற்சவத்தை நடத்தியதாக ஐதீகம். பிரம்மோற்சவத்தின் ஒன்பது நாட்களும் மலையப்பசுவாமி காலையும் மாலையும் சிறப்பு அலங்காரத்தில்  பல் வேறு வாகன சேவை தந்தருளுகின்றார். இந்த பிரம்மோற்சவத்தின் சிறப்பு ஐந்தாம் நாள் இரவின் கருட சேவையாகும். அன்றைய தினம் மூலவருக்குரிய மகர கண்டி, லக்ஷ்மி ஹாரம், வைர முடி தாங்கி சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் அணிந்து அனுப்பிய மாலையில்  மூலவராகவே மாட வீதி வலம் வந்து  சேவை சாதிக்கின்றார் மலையப்ப சுவாமி.    புரட்டாசி மாதத்தில் புதன் உச்சம் புதனின் அதி தேவதை பெருமாள் ஆவார். ஆகவே  புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு மிகவும் நன்மை பயக்கும். நவக்கிரகங்களில், சனி பகவானை ஆயுள்காரகன் என்பர்.  இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். இவர் பிறந்ததும் புரட்டாசி சனி அன்று தான். அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த  உகந்த நாள் ஆயிற்று. இவ்வளவு சிறப்புகள் பெற்ற சனிக்கிழமையன்று பக்தர்கள் விரதம் இருப்பதால் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சௌபாக்கியம்,  ஆகியவை கிட்டவும், பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும், கர்ம வினைகள் தொடராமல் இருக்கும். உணவு கட்டுப்பாடுடன் தெய்வத்தை  மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும், ஆன்மாவிற்கும், அருமருந்தாகும். சனிக்கிழமை விரதம் எளிதானது.  காலையிலிருந்து திருவேங்கடனை மனதில் நிறுத்தி உபவாசம் இருக்க வேண்டும், முடியாதவர்கள் அவல் அல்லது பழங்கள் சிறிது உண்ணலாம். மாலை ஒரு ஆலயம் சென்று பெருமாளை வணங்கி விரதத்தை முடிக்கலாம்.   புரட்டாசி  விரதத்தை உண்மையான பக்தியுடன் அனுசரித்த ஒரு பக்தரின் அனுபவம் மிகவும் சுவையானது    தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. எனவே, பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய, சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து. திருப்பதி மலையில் தங்கினார். திருமலைக்கு அருகிலுள்ள கிராமத்தில், பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி வசித்தார். இவர், ஏழு மலையானின் தீவிர பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக இவர் உறுதியேற்றுக் கொண்டார். ஆனால், இதற்கு பலனாக, “மிக உயர்ந்த செல்வம்’ வேண்டும் என, அவர் பெருமாளிடம் வேண்டுதல் வைத்தார். அது என்ன தெரியுமா? பெருமாளின் திருவடியிலேயே நிரந்தரமாக  இருந்து சேவை செய்ய வேண்டும் என்பதே இந்த கோரிக்கை. இவர் தினமும் மண்பாண்டம் செய்து முடித்த பிறகு, கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை வீணாக்கமல். அந்த மண்ணைக் கொண்டு சிறு, சிறு பூக்கள் செய்வார். திருப்பதி பெருமாளை மனதில் எண்ணி, தன் முன் இருந்த மண் சிலைக்கு, ”ஏடுகொண்டலு  வாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, கோவிந்தா, ஆபத் பாந்தவா, அனாத இரட்சகா, கோவிந்தா, கோவிந்தா”,  என்றெல்லாம் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருப்பதி பெருமாளின் திருவடியிலேயே அந்த மண் பூக்களையே உண்மையான மலர் தூவுவதாக பாவனை செய்து, தூவி பிரார்த்திப்பார்.  அப்போது, திருப்பதி திருமலையை ஆட்சி செய்து வந்தார் தொண்டைமான் என்னும் சக்கரவர்த்தி. அவர் பெருமாளின் பக்தர் மட்டுமல்ல பெருமாளின் அருளுக்கு பாத்திரமான ஒருவர்.   ஒருநாள் அவர்  ஏழுமலையான் சன்னிதிக்குச் சென்றார். பெருமாளுக்கு  அர்ச்சனை செய்வதற்காக  அவர் தங்கப் பூக்களை உபயமாக அளித்திருந்தார்.  அவர் அங்கு போய் பார்த்த போது, மண்பூக்களாக  இருந்ததை கவனித்தார். தங்கப் பூக்களை அர்ச்சகர்கள் அபகரித்துக் கொண்டனரோ என சந்தேகப்பட்டார். எனவே, காவலர்களை நியமித்து, அர்ச்சகர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டார். மறுநாளும் அவர் திருவேங்கடவனின்  சன்னிதிக்கு வந்த சமயம், மண்பூக்களே பெருமாளின் திருவடியில் கிடந்ததைக் கண்டு  குழம்பிப் போனார்.  அவரது கனவில், சீனிவாசப் பெருமாள் தோன்றினார். “மன்னா,  பீமன் என்ற குயவன், என்னை மிகுந்த பக்தியுடன் மண் பூக்களால் அர்ச்சித்து வருகிறான்; அவற்றை நான் ஏற்றேன். அதனால், உன் தங்கப்பூக்களும், மண் பூக்களாக மாறிக் கிடக்கின்றன’என்றார். மறுநாளே, பீமனைப் பார்க்க சென்றானர் மன்னன்  அவர், பெருமாளின் மண் சிலைக்கு மண் பூக்களால் அர்ச்சனை செய்து  கொண்டிருந்ததைக் கண்டார் “எதற்காக மண் பூக்களால் அர்ச்சிக்கிறாய்; தோட்டத்துப் பூக்கள் கூட கிடைக்கவில்லையா?’ என்றார் தொண்டைமான் சக்கரவர்த்தி. அதற்கு அந்த பக்தர் “அரசே நானோ பரம ஏழை. இந்த வேலையை விட்டு, விட்டு பூப்பறிக்க நேரத்தை செலவிட்டால், பாண்டம் செய்யும் நேரம் குறையும். குடும்பம் மேலும் வறுமையில் வாடும். எனவே தான், என்னிடம் என்ன இருக்கிறதோ, அதனால் பூ செய்து அர்ச்சிக்கிறேன். மேலும், கல்வியறிவற்ற எனக்கு பூஜை முறையும் தெரியாது. ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்து, அவரது திருவடியை அடைய வேண்டும் என்பதே என் நோக்கம்’ என்றார். இதைக் கேட்ட தொண்டைமான் மன்னன்  மனம் நெகிழ்ந்து, அந்த ஏழைக் குயவனுக்கு வேண்டுமளவு  செல்வம்  அளித்தார்.  குசேலனைப் போல  ஒரே நாளில் செல்வந்தனாகி விட்டார் அந்தக் குயவர். நிஜ பக்திக்கு உரிய பலனை பெருமாள் கொடுத்து விட்டார். அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தொடர்ந்து பெருமாளுக்கு பூஜை செய்து, அவரது திருவடியை அடைந்தார். இதனால் தான், இப்போதும் அவர் நினைவாக  திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண் சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புரட்டாசி சனிக்கிழமையின் போது பல இல்லங்களில் கருடபத்து சேவிப்பது வழக்கம்.  “கருடன் மீதீல் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே” என்று இந்த கருடப்பத்தில் வருவதால் அன்று “ஆதி மூலமே”  என்றழைத்த யானைக்கு கருடன் மீதில் அமர்ந்து வந்த காத்தருளிய கண்ணன் நம்மையும் காத்தருள்வான் என்பது திண்ணம். இதோ கருட பத்து.    ஸ்ரீ:   கருடப்பத்து   ஓம் பூரணனே பதினாறு திங்கள் சேரும் பொருந்தியேய ருக்கன் பதினெட்டுஞ்  சேரும்  காரணனே கருமுகில் பொன்மேனி சேருங் கருணைபெரு மஷ்டாட்சரங் கலந்து வாழும் வாரணனே லட்சுமியோடெட்டுஞ் சேரும் மதிமுகம் போல் நின்றிலங்கு மாயா  நேயா ஆரணனே ரகுராமா கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (1)    மந்திரமோ அஷ்டசித்து மெட்டுஞ்சேரும் வாழ் கிரக மொன்பதுமே வந்து சேரும், கந்தர்வர் கணநாத ராசி வர்க்கம் கலைக்கியான நூல் வேதங் கலந்து வாழும்  நந்தி முதல் தேவர்களுங் கவனயோகம் நமஸ்கரித் துன்பாதம் நாளும் போற்ற அந்தரமாய் நிறைந்திருக்கும் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள்  செய்வாயே. (2)    மூலமுதலோரெழுத்து நீர்தானாகும் மூன்றெழுத்து மைந்தெழுத்து  மொழியலாமோ சீல முதல் ஓம் அங் உங் மங் றீங் கென்றே சிவனுடைய திருநாமம் நீதானாகும் காலமுதல் ஓம் அங் உங் மங் றீங் கென்றே கருணை பெருமிவ்வெழுத்து  நீர்தானாகும் ஆலவிஷங் கையேந்துங் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள்  செய்வாயே. (3)    நவ்வென்றும் கிலியென்றும் ஓம் சிவாய வென்றும் நம நம சிவ சிவ   ராரா  வென்றும் சவ்வென்றும் ஓங்கார ரீங்காரமாகித் தவமுடைய இவ்வெழுத்தும் நீதானாகும், ஒவ்வொன்றும் ஓம் நமோ நாராயணா வென்று உன்பாத முச்சரித் துகந்து போற்ற  அவ்வென்று ரகுராமா கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (4)    உதிக்கின்ற சிவசொரூப முனக்கேயாகும் ஓம் அவ்வும் உவ்வும் கிலியுமென்றே பதிக்கிசைந்த ஐந்தெழுத்தை வெளியில் விட்டே பச்சைமுகில் மேனியனே  பனிந்தேனுன்னை  விதிக்கிசைந்த மெய்ப்பொருளே அரிகோவிந்த விளக்கொளி போல் மெய் தவமே விரும்பித் தாதா   அதற்கிசைந்த நடம் புரியுங் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள்  புரிவாயே. (5)    வேதமுதலாயிருந்த சிங்கரூபம் விளங்குகின்ற விரணியனை வதையே  செய்தாய்  பூதமுதலாம் பிறவும் புண்ணியநேயா புகழ்ந்தவர்க்குத் துணை வருவாய்  யசோதை புத்ரா நாதமுதல் வித்துவா யுயிர்க்கெல்லாம் நயம் பெறவே நிறைந்திருக்கும் வாத பிரம யாதவன்  போல்  நிறைந்திருக்கும்  கருடன்  மீதில்  அன்புடனே  ஏறி வந்தருள்   செய்வாயே.(6) முக்கோண நாற்கோண மொழிந்தைங்கோண முச்சுடரேயறு கோண மெண் கோண மாகும் ஷட்கோண நாற்பத்து மூன்று கோணம் தந்திரமுஞ் சிதம்பரமுஞ் சகல சித்தும்  இக்கோணம் இது முதலாய் வகாரமட்டும் இறைவனாய்த் தானிருந்து ரட்சித்தாலும்        அக்கோண மீதிருந்து கருடன் மீதில் அன்புடனே ஏறிவந்தருள் செய்வாயே. (7)    பச்சை முகில் மேனியனே உனக்கு இந்த பார்தனிலே பத்தவதாரமுண்டு  மச்யமென்றும் கூர்மமென்றும் வராக மென்றும் வாம(ன) மென்றும் ராமன்  என்றும் பவித்யமென்றும்   துஷ்டரையடக்க மோகினி வேடங் கொண்டு தோன்றினாயுன் சொரூபமெல்லாம்   அறிவாருண்டோ அச்சந்தீர்த்தெனையாளக் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே.(8)    வேதியனாய்த் தோன்றி வந்தாய் மாபலிக்கு விண்ணவர்க்காய் நரசிங்க ரூபமானாய்  சாதியிலே   யாதவனாய்க் கிருஷ்ணனாகத் தானுதித்து வந்திருப்பாய் தரணி வாழ்க             சோதனைகள் பார்த்திடுவோர் துடிப்போர் தம்மை துஷ்டரையும் வதை செய்து  லோகமாள்வாய்   ஆதிமுதலோரெழுத்தே நீ கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள்  செய்வாயே. (9)    மாயவனே ரகுராமா அருகே வாவா வஞ்சனைகள் பறந்தோட நெஞ்சில் வாவா    காயம் பூ நிறமுடனே கனவில் வாவா கருமுகில் மேனியனே என்  கருத்தில்  வாவா         நாயகனே யென்னாவிலிருக்க வாவா நாள்தோறு முன்பாதந் துதிக்க வாவா     ஆயர் குலத்துதித்தவனே கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள்  செய்வாயே. (10)    முப்புரத்தை யெரித்தவனே இப்போ வாவா முகில் நிறத்தவனே ஜகந்நாதா  முன்னே வாவா எப்பொழுதுந் துதிப்பவர் பங்கில் வாவா ஏழைபங்கிலிருப்பவனே இறங்கி  வாவா    ஒப்பிலா மணி விளக்கே யொளிபோல் வாவா ஓம் நமோ  நாராயணா வுகந்து வாவா அப்பனே ரகுராமா கருடன் மீதில் அன்புடன் ஏறி வந்தருள் செய்வாயே. (11)    துளசிமணி மார்பழகா சுகத்தைத் தாதா சுருதியே மெய்ப்பொருளே வரத்தைத்தாதா  களப கஸ்தூரியனே கடாட்சந்தாதா கஞ்சனைமுன் வென்றவனேகருணை  தாதா     பரம்பொருளே சிவஜோதி பாக்கியந் தாதா பக்தி முக்தி சித்தி செய்யவுன்  பாதந்தாதா அளவிலா மெய்ப்பொருளே கருடன் மீதில் அன்புடனே ஏறிவந்தருள் செய்வாயே.(12)  சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாதச் சனிக்கிழமை மிகவும் விசேஷம் இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது “அகலகில்லேன் இறையும் என்றும் அலர்மேல் மங்கை உறை மார்பனாம் திருவேங்கடவனின் திருப்பாதம் சரண் அடைந்து”,   விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும், நீண்ட ஆயுளும் இறுதியாக வைகுந்தப் பதவியும்  பெறுவர். பெருமாளின் ஒரு விரதத்தைப் பற்றிக் கண்டோம். வாருங்கள் இனி கருடனுக்கான ஒரு விரதத்தைப் பற்றிக் காண்போம் அன்பர்களே.                                          54. கருட பஞ்சமி []   அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்று பாடியுள்ளார் ஔவையார். ஆம் கிடைத்தற்கரியது மானிடப்பிறவி. நாம் முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனாக இந்த கர்மபூமியில் நமக்கு இறையருளால் மனிதப்பிறவி கிட்டுகின்றது. இவ்விதம் அமையும் பிறவியில் நமக்கு இறைவன் பால் ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் தூய நெறியுடன் வாழவும் அவரது அருள் வேண்டும். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை அல்லும் பகலும் அனவரதமும் இதயக்கமலத்தில் நிறுத்திப் பூஜிக்கவும், அவருடைய திவ்ய தரிசனத்தை பெறவும் நாம் முற்பிறவியில் நற்காரியங்கள் செய்திருக்க வேண்டும். மேலும் மறுமையில் முக்தி நிலை அடையவும் தூய நெறியில் வாழ்வது அவசியம். நமது தர்ம நெறியின் ஒவ்வொரு விதிக்கும் விஞ்ஞானபூர்வமான ஓர் அர்த்தம் உண்டு. இறைவனுக்கு அருகில் செல்ல உள்ளம் பக்குவப்பட வேண்டும், உள்ளம் பக்குவப்பட உடல் பக்குவப்பட வேண்டும், உடல் பக்குவப்பட உணவும் அதை உண்ணும் முறையும் பக்குவப்பட வேண்டும் இவ்வாறு உணவு, உடல் உள்ளம் மூன்றும் பதப்பட உதவுவனவே விரதங்கள். பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஒன்று உண்டு.  கருடன் அவதரித்த ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆந்திர மற்றும் வட மாநிலங்களில் இவ்விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது.   தமிழ்நாட்டில் கருட பஞ்சமி விரதம் மிகவும் பரவலாக அனுஷ்டிக்கப்படுவதில்லை. சிலர் சதுர்த்தியன்று நாக சதுர்த்தியாகவும் விரதம் இருக்கின்றனர். கருட பஞ்சமியன்று  கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும், உடல் மனம் நலம் பெறும், சகல விதமான செல்வங்களையும் பெறலாம்.  கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும், விவேகியாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்புப் பூஜைகள் செய்கின்றனர்.மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணங்களாக விளங்குவையும் அஷ்ட நாகங்களே. இது என்ன கருட பஞ்சமியன்று ஆதிசேஷனுக்குப் பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள் தானே நாகங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சியினால்தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவலோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாள்  கருடனின் திறமைகளைக்  கண்டு அவனைத் தனது வாகனமாக ஆக்கிக் கொள்ள கருடனுக்கு   பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளைத் தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருடபஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். கருட பஞ்சமியன்று  சகோதரிகள் தங்களின் சகோதர்களின் நலன் வேண்டி  செய்யும் விரதம் என்றும் கூறுவர் அதற்கான கதை இதோ.  முன்னொரு காலத்தில் ஏழு அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டிப் பிழைக்கிறவர்கள். அப்படி ஒருநாள் அந்தத் தங்கை தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒரு நாகத்தைக் கௌவிக்கொண்டு சென்றது. அந்த நாகம் தங்கை கொண்டு செல்லும் கஞ்சியில் விஷம் கக்கிவிட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அதே கஞ்சியை வழங்கினாள். அதை உண்ட அண்ணன்கள் அனைவரும் இறந்துவிட்டனர். தினமும் செய்வது போலத்தானே செய்தோம், இன்று என்ன இப்படி ஆகிவிட்டது என்று வருத்தப்பட்ட அந்தத் தங்கை தெய்வத்தை நினைத்து அழுது தொழுதாள். அந்த வழியாக வந்த பார்வதியும் பரமேஸ்வரனும் அவளைப் பார்த்து, நடுக்காட்டில் இருந்துகொண்டு ஏன் அழுகிறாய் என்று கேட்டார்கள். அவள் நடந்ததைக் கூறினாள். ‘இன்று கருடபஞ்சமி. அதை மறந்துவிட்டு பூஜை செய்யாமல் நீ வந்துவிட்டாய். அதுதான் இதற்குக் காரணம். இங்கேயே இப்போது நாகருக்குப் பூஜை செய். கங்கணக் கயிறில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண் எடுத்து, அட்சதை சேர்த்து இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் முதுகில் குத்தவும். அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்” என்று சொல்லிக் கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை உணர்த்தினர். அவளும் அதே போல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தார்கள்.  இப்போதும் கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப் பெற்றுக்கொள்கிறார்கள்.  இவ்வாறு கருட பஞ்சமி தம் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழப் பெண்கள் மேற்கொள்ளும் நோன்பு என்பாரும் உண்டு.   பல ஆலயங்களில் கருட பஞ்சமியன்று கருட சேவை ஆடி கருடன் என்று கொண்டாடப்படுகின்றது. சிறப்பாக காரைக்காலில் கருடபஞ்சமியன்று நித்யகல்யாணப்பெருமாள் ஆலயத்தில் காரைக்கால் பகுதியை சார்ந்த 7 பெருமாள்களின் கருடசேவை சிறப்பாக நடைபெறுகின்றது. திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள், நிரவி ஸ்ரீ கரிய மாணிக்கப் பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், தென்னங்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர், ஆகிய பெருமாள்கள், காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் ஆலயத்திற்கு பல்லக்கில் காலை எழுந்தருளுகின்றனர். அவர்களை நித்ய கல்யாணப் பெருமாள் எதிர் கொண்டழைக்கிறார். மதியம் ஏழு பெருமாள்களுக்கும் ஏக காலத்தில் சிறப்பு  திருமஞ்சனம். பின்னர் மாலை காரைக்காலம்மையார் சந்திர தீர்த்தக் கரையில் சப்த கருட சேவை தந்தருளுகின்றனர். மஹா தீபாரதணைக்குப் பிறகு  எழு பெருமாள்களும்  திருமங்கையாழ்வாருக்கு சேவை சாதித்தபடி ஊர்  வலம் வந்தருளுகின்றனர்.  கருட பஞ்சமியன்று கருட சேவையில் பெருமாளைத் தரிசிப்பதன் மூலம் பல்வேறு தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை அகன்று வாழ்க்கையில் சுகம் ஏற்படுமென்பது பக்தர்களின் நம்பிக்கை.   கீழ் அஹோபிலத்தில் அன்றைய தினம் காலை கருட பகவானுக்குச் சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடை பெறுகின்றது. மாலை கருட வாகனத்தில் பிரகலாதாழ்வார் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். கருட பஞ்சமியன்று திருமலையில் மலையப்ப சுவாமி கருட சேவை தந்தருளுகின்றனர். வாருங்கள் இனி கருடனைக் குறித்து ஆழ்வார்களின் அருளிச்செயல்களைக் சேவிக்கலாம்.           55. ஆழ்வார்களின் அருளிச்செயல்கள்   கருடன் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும், அரவப்பகைவனாகவும் விளங்கும் பாங்கையும், கஜேந்திர மோட்சத்தை பற்றியும் பாடியுள்ள  சில   ஆழ்வார்களின் அருளிச் செயல்களை பொருளுடன் பார்ப்போம். முதலாவதாக திருமழிசையாழ்வார் திருச்சந்த விருத்தத்தில் புள் என்ற வார்த்தையைக்கொண்டு சிலேடையாகப் பாடிய பாசுரத்தை காணலாம்.    புள்ளதாகி வேதநான்கும் ஓதினாய் அதன்றியும் புள்ளின் வாய்ப்பிளந்து புட்கொடிப்பிடித்த பின்னரும் புள்ளையூர்தியாதலால் அதென்கொல்? மின் கொள் நேமியாய்! புள்ளின் மெய்ப்பகைக் கடல் கிடத்தல் காதலித்தே. (தி. ச 19)   புள் என்றால் பறவை அதை திருமழிசைபிரான் எவ்வாறு எடுத்து ஆண்டிருக்கின்றார் பாருங்களேன். புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் - அன்னமாகி நான்கு வேதங்களும் ஓதிய பெருமாளே. புள்ளின் வாய்ப் பிளந்து - கொக்காக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்த பெருமாளே. புட்கொடி பிடித்த - கருடப்பதாகை கொண்ட பெருமாளே. புள்ளையூர்தியாதலால் - வேத சொரூபியான கருடனில் உலா வரும் பெருமாளே. புள்ளின்மெய்ப்பகை - கருடனின் பகைவனான பாம்பணையில் பாற்கடலில் மாயத்துயில் கொண்ட பெருமாளே.   அடுத்து திருமழிசையாழ்வாரின் இன்னொரு பாசுரம் தோடுபெற்றதண்துழாய் அலங்கலாடு சென்னியாய்!   கோடுபற்றியாழியேந்தி அஞ்சிறைப்புள்யூர்தியால்  நாடு பெற்ற நன்மை நண்ணமில்லையேனும், நாயினேன்  வீடுபற்றிறப்பொடும் பிறப்பறக்குமாசொலே. ( தி.ச 46)  பொருள்: இதழ் விரியப்பெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையையும், அடியவர்களிடம் அசைகின்ற திருமுடியையும் உடையவனே! ஸ்ரீபாஞ்சசன்னியம் என்னும் சங்கைத் தரித்து, சக்கரத்தாழ்வானை ஏந்தி அழகிய திருச்சிறகையுடைய கருடாழ்வாரை வாகனமாக நடத்திச் செல்கின்றாய். அந்தோ! அக்காலத்திலிருந்த  மக்கள் பெற்ற இக்காட்சியை அடியேன் அடைய இயலவில்லை. ஆயினும் நாய் போன்று இழிந்தவனான அடியேன் மோட்சத்தை அடைந்து, இச் சரீர நீக்கம் பெற்று, இனி ஒரு சரீரம் எடுப்பதைப் போக்கும் உபாயத்தை அருளிச் செய்ய வேண்டும்.   ***********   இனி பெரியாழ்வாரின் சில பாசுரங்கள் என்குற்றமே யென்று சொல்லவும் வேண்டாகாண் என்னைநான் மண்ணுண்டேனாக  அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே   வன்புற் றரவின் பகைக்கொடி வாமன நம்பீ! உன் காதுகள் தூரும்  துன்புற் றனவெல்லாம் தீர்ப்பாய் பிரானே! திரியிட்டு சொல்லுகேன் மெய்யே. (பெரி 2-3-8)  பொருள்:  “அம்மா, நான் இப்போது உனது சொல்லைக் கேட்பதில்லை, அது என் குற்றமென்று நீ சொல்ல வேண்டாம்” என்றான் கண்ணன். அதற்கு யசோதை, ’பின்பு  யாருடைய குற்றம்?’ என்று வினவ கண்ணன் ’உன் மீது குற்றமில்லையோ?’ என்றான். “ நான் உன்னை என்ன செய்தேன்?” என்றாள் யசோதை. “நான் மண் தின்னாமல் இருந்த போதே தின்றேன் என்று சொல்லி என்னைப் பிடித்தும், அன்புடையவள் போல என் வாயைப் பார்த்தும், என்னை அடித்தும் எல்லோருக்கும் நீ காட்டவில்லையா அம்மா?” என்று கூறினான். அதற்கு யசோதை, பாம்புக்குப் பகையாயுள்ள கருடனை கொடியாகக்(வாகனமாக) கொண்டுள்ள வாமன மூர்த்தியே! இவ்வாறு நீ ஒன்று சொல்ல பொழுது போகின்றது. குத்திய உனது காதுகள் தூர்த்துவிடும். என்னை அடைந்த அடியார்களின் துன்பங்களையெல்லாம் தீர்ப்பவனே! உன் காதில் திரியை இட்டு நான் அடிக்க மாட்டேன்” என்று நான் சபதம் செய்கின்றேன்.   என்நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்  தன் நாதன் காணவே தண்பூ மரத்தினை  வன் நாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட  என் நாதன் வன்மையைப் பாடிப் பற!  எம்பிரான்  வன்மையைப் பாடிப் பற!  (பெரி. 3-9-1)  பொருள்: என்னுடைய தலைவனான கண்ணனுடைய தேவியான சத்தியபாமைக்குப் பாரிஜாத மலரை இந்திராணி கொடுக்கவில்லை. அதனால் அவள் கணவனான தேவேந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கருடாழ்வாரைக் கொண்டு  அம்மரத்தை வலுவிலே பிடுங்கிக் கொண்டு வந்த எனது தலைவனான கண்ணனது வலிமையைப் பாடிக்கொண்டு உந்தி பற, எம்பிரானின் வலிமையைப் பாடி உந்தி பற!.  என்று பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.  ஆமையாய்க் கங்கையாய் ஆழ்கடலாய் அவனியா யருவ ரைகளாய்,  நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த் தானு மானான்,  சேமமுடை நாரதனார் சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான் கோயில்,  பூமருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ்குழறும் புனல ரங்கமே ( பெரி 4-9-5)  பொருள்: பிரமபாவனையுடைய நாரதமுனிவர் ஆமை முதலியவற்றிடம் சென்று வணங்கும்படி அம்முனிவருக்கு தன் மேன்மையைக் காட்ட தானே ஆமையாய், கங்கையாய், ஆழம் மிகுந்த கடலாய், பூமியாய், மலைகளாய், இவற்றையெல்லாம் படைக்கின்ற பிரம்மனாயும், வேதங்களாகவும், யாகமாகவும் அதற்கு வேண்டிய தட்சிணையாகவும் தானாகியும் நின்றான் பெருமாள். அவ்வெம்பெருமான் பள்ளி கொண்டிருக்கும்  கோயில்  பறவைகளின் கூட்டம் மலர்களில் பொருந்தி தங்கள் அரசன் கருடனின் புகழ் பாடும் திருவரங்கமாகும் என்று பாடுகிறார் பெரியாழ்வார்.   வாக்குத்தூய்மையிலாமையினாலே மாதவா! உன்னைவாய்க்கொள்ளமாட்டேன்  நாக்குநின்னையல்லாலறியாது நானதஞ்சுவனென் வசமன்று மூர்க்குப்பேசுகின்றானிவனென்று முனிவாயேலும் என் நாவினுக்காற்றேன் காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர் காரணா! கருளக்கொடியானே (பெரி 5-1-1)  பொருள்:  மாதவனே! (கருடக்கொடியை உடையவனே!) எனது வாக்கு பரிசுத்தமாக இல்லை. அதலால் உன்னை அடியேன் போற்றும் வல்லமை உடையவன் அல்லேன். ஆனாலும் எனது நாக்கானது உன் திருநாமம் அன்று வேறு ஒன்றையும் சொல்ல அறியாது. அடியேன் அதைக் குறித்துப் பயப்படுவேன். நாவை அடைக்கலாம் என்றால் அது என் கட்டுப்பாட்டில் இல்லை. இவன் மூர்க்கத்தனமாகச் சொல்கின்றான் என்றாலும் என் நாக்கை அடக்கும் வல்லமை அடியேனுக்கு இல்லை. ஆகவே அடியேனது போற்றுதலை நீ ஏற்றுக்கொண்டே ஆக  வேண்டும். இதனால் உனக்கு ஒரு குறைவுமில்லை.  எப்படி என்றால் உலகத்துக்கெல்லாம் காரணனே! கருடக்கொடியை உடையவனே! உலகத்து மக்கள் காக்கையின் வாயிலிருந்தும் நற்சொல்லைக் கொள்வார்கள்.     உறகலுறகலுறகல் ஒண்சுடரழியே! சங்கே!   அறவெறி நாந்தகவாளே! அழகிய சார்ங்கமே! தண்டே!  இறவுபடாமலிருந்த எண்மருலோகபாலீர்காள்!  பறவையறையா! வுறகல் பள்ளியறைகுறிக்கொண்மின். (பெரி 5-2-9)  பொருள்:  ஒளிர்கின்ற  சுதர்சன சக்கரமே!  பாஞ்சசன்யம் என்னும் சங்கே! நாந்தகம் என்னும் வாளே! சார்ங்கம் என்னும் வில்லே! கௌமோதகி என்னும்  கதாதயுதமே! உறங்காதிருங்கள்! காத்தல் தொழலில் தவறு படாமல்  இருக்கின்ற அஷ்டதிக் பாலகர்களே! பறவைகளின் அரசன்  கருடாழ்வாரே! உறங்காதிருங்கள். பகவான் பள்ளிகொண்டிருக்கின்ற அறையாகிய இவ்வுடலைக் கருத்தோடு பார்த்துக்கொள்ளுங்கள்.  பறவையேறும் பரம்புருடா! நீயென்னைக்கைக்கொண்டபின்  பிறவியென்னுமங்கடலும் வற்றிப் பெரும்பதமாகின்றதால்  இறவுசெய்யும்பாவக்காடுதீக்கொளீஇவேகின்றதால்  அறிவையென்னுமுதவாறு தலைப்பற்றி வாய்கொண்டதே (பெரி 5-4-2)  பொருள்: பெரிய திருவடியான கருடாழ்வார் மேல் ஏறுகின்ற புருஷோத்தமனே! நீ என்னை ஆட்கொண்ட பிறகு இந்த சம்சாரமாகிய கடலும் வறண்டு போய் அதனால் பெரிய நன்மை உண்டாகிறது. இந்த ஆன்மாவை நல்வழியில் போக விடாது தடுத்து தீ வழியில் கொண்டு போய் முடிக்கின்ற பாவங்களின் கூட்டம் தீயினால் கொள்ளப்பட்டு வெந்து கொண்டிருக்கின்றது. ஞானம் என்னும் அமுத நதியானது தலை வரையிலும் பரவி என்னைக் கொண்டு விட்டது  என்று மங்களாசாசனம் செய்துள்ளார் பெரியாழ்வார்.   ********************  இனி ஆண்டாள் நாச்சியாரின் சில பாசுரங்கள்  பாடும் குயில்காள்! ஈது என்ன பாடல் நல் வேங்கட  நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்  ஆடும் கருளக்கொடி உடையார் வந்து அருள் செய்து  கூடுவாராயில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே. ( நா.திரு. 10- 5)   பொருள்: பாடுகின்ற குயில்களே! இக்கூச்சல் என்ன பாட்டு? நன்மையுடைய திருவேங்கடவர் எனக்கு வாழ்வு தந்தால் அப்போது வந்து பாடுங்கள். ஆடுகின்ற பெரிய திருவடியை கொடியாகக் கொண்டிருக்கும் அப்பெருமான் அருள் கொண்டு வந்து சேருவாராகில் அப்போது உங்களை வரவழைத்து உங்களது பாட்டுக்களைக் கேட்போம்.  பழகு நான்மறை யின்பொரு ளாய்மதம்  ஒழுகு வாரண முய்ய வளித்தஎம்  அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்  குழக னார்வரில் கூடிடு கூடலே ( நா.திரு. 4-10)   பொருள்: அநாதியான நான்கு மறைகளின் உட்பொருளானவன், மதநீர் பெருகும் கஜேந்திராழ்வானின் துயர் தீர அருள் செய்தவன், எம்மை  ஈடுபடுத்தவல்ல  அழகன், அழகிய கோபியர்களின் நெஞ்சிலே குழைந்தவனுமான  கண்ணபிரான்  வரக்கூடுமாகில் கூடலே! நீ கூடிடு என்று கூடலிழைத்து கருடன் மேல் பறந்து வந்து கஜேந்திரனை காத்த எளிமையைப் பாடுகின்றார் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள் நாச்சியார்.     இனி தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரங்கள் சில    நாட்டினான் தெய்வம் எங்கும்; நல்லது ஓர் அருள் தன்னாலே  காட்டினான் திருவரங்கம், உய்பவர்க்கு உய்யும் வண்ணன்,  கேட்டீரே நம்பீர்காள்! கெருடவாகனனும் நிற்கக்  சேட்டைதன் மடியகத்து செல்வம் பார்த்து இருக்கிறீரே. (திரு.மா 10)    பொருள்: எல்லா இடங்களிலும்  பல தெய்வங்களை நிலை நிறுத்தினான்.  கடைத்தேற விருப்பமுள்ளவர்களுக்கு  கடைத்தேறலாம் படி தனது ஒப்பற்ற  கருணையினால் திருவரங்கத்தைக் காட்டினான். இறை வழியில் நிறைந்த பற்றுள்ளவர்களே! இச்சொற்களைக் கேட்டீர்களா? கருடனை வாகனமாக கொண்ட எம்பெருமான் இருக்கவும், மூதேவியின் பக்கம் செல்வம் வேண்டி நிற்கின்றீர்களே.  இவ்வாறு கருடவாகனான எம்பெருமானே பரம் என்று அறுதியிட்டு கூறுகின்றார் தொண்டரடிப்பொடியாழ்வார்.     உம்பராலறியலாகா ஓளியுளார், ஆனைக்காகி  செம்புலாலுண்டு வாழும் முதலைமேல் சீறிவந்தார் நம்பரமாயதுண்டே? நாய்களோம்  சிறிமையோரா  எம்பிராற்காட்செய்யாதே என்செய்வான் தோன்றினேனே? (திரு.மா 28)    பொருள்: தேவர்களும் இப்படிப்பட்டதென்று அளவிட்டு அறியமுடியாத ஓளிமயமான பரமபதத்திலுள்ள  எம்பெருமான், கஜேந்திராழ்வானைக் காப்பாற்ற சிவந்த மாமிசத்தை சாப்பிட்டு  வாழும் முதலை மேல் கோபித்து  மடுவின் கரைக்கு வந்தருளினான்.  இப்படிக்கு அடியார்களை காப்பவனிருக்க நம்முடைய பாதுகாப்பில் நமக்குப் பாரமானதுண்டோ? நாய் போல கேவலமான நம்முடைய குற்றம் பொறுக்கும் எம்பெருமானுக்கு அடிமை செய்யப்பெறாமல் எதற்காகப் பிறந்தேன்? என்று பெருமாளுடைய எளிமையையும் நம்முடைய அறியாமையும் பற்றிப் பாடுகின்றார் தொண்டரடிப்பொடியாழ்வார்.       கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக் கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ  எழுந்தன மலர் அணைப் பள்ளி கொள் அன்னம் ஈன்பனி நனைந்தன தம் இருஞ்சிறகு உதறி விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய் வெள் எயிறு உற, அதன் விடத்தினுக்கு அனுங்கி  அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.   (தி.ப 2)  பொருள்: பூத்துக் குலுங்கும் முல்லைக் கொடிகள் அவற்றை அணைத்துக்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    கொண்டு  கிழக்கு திசையில் இருந்து வீசும் இனிய காற்று; மலர்களில் இரவில் சுகமாக உறங்கிய அன்னப்பறவைகள் தங்கள் அழகிய சிறகுகளில் இரவெல்லாம் பெய்த பனித்துளிகளை உதறிக்கொண்டு எழுந்து விட்டன. பெரிய பள்ளம் போன்ற வாயையும் கோரைப் பற்களையும் நஞ்சையும் உடைய  முதலையிடம் அகப்பட்டுத் துடித்த கஜேந்திரன் என்ற யானையின் துன்பத்தை நீக்கிய அரங்கத்து அம்மானே! பள்ளி எழுந்தருள்வாயாக! என்று தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கனைப் பள்ளி எழுப்புகின்றார். இனி கோழியர் கோன் குலசேகராழ்வாரின் ஒரு பாசுரம்   அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி அடல் அரவப்பகையேறி, அசுரர் தம்மை  வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி, சென்று இனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத் தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்  என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே! (பெரு.தி 10-10)   பொருள்: (இராமாவதார நோக்கம் முடிந்து) வைகுந்தத்திற்கு  எழுந்தருள்கின்ற அந்நாளில் அயோத்தி மாநகரிலுள்ள தாவர, ஜங்கமங்கமுமான  அனைத்து உயிர்களையும் பரமபதத்திற்கு போகச் செய்து, வலிமையுடைய பாம்புகளுக்குப் பகைவனான கருடன் மேல் ஏறிக்கொண்டு அசுரர்களை வெற்றிக் கொண்டு வெற்றிச்செல்வி விளங்கப்பெற்ற, அழகிய நீண்ட தன் திருக்கைகள் நான்கும் விளங்க, பரமபதத்திலுள்ளவரெல்லாம் எதிர் கொண்டு உபசரிக்கும்படி தனது பழமையான அப்பரமபதத்திலே போய்ச் சேர்ந்து, தன் மேன்மை எல்லாம் தோன்றும்படி இனிமையான சிம்மாசனத்திலே எழுந்தருளியிருந்த அம்மான் தன்னைத் தில்லை திருசித்திரக்கூடத்துள் எந்நாளும் நமக்காக வசித்தருளும் அப்பெருமானே என்றறிந்து துதித்து, அவனுக்கு அடியவர்களான நீங்கள் நாள் தோறும் எப்பொழுதும் வணங்கி உய்வீர்களாக என்று அறிவுறுத்துகின்றார் குலசேகரப்பெருமாள்.   *********************    இனி திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் சில   இலங்கைப்பதிக்கு அன்று இறை ஆய அரக்கர் குலம் கெட்டு அவர் மாளக், கொடிப்புள் திரித்தாய்!  விலங்கல் குடுமி திருவேங்கடம் மேய அலங்கல் துளப முடியாய்! அருளாயே. (பெ.தி 1-10-2)    பொருள்: இலங்கை நகரத்திற்கு எப்போதும் அரசர்களாய் இருந்த (மாலி முதலிய) அரக்கர் இனம் அழிக்க கொடியாகிய கருடனை வாகனமாக நடத்தியவனே! திருமலையில் உறைகின்ற திருத்துழாய் மாலையால் அழகு செய்யப்பட்ட முடியை உடையவனே, அருள் புரிவாயாக என்று மங்களாசாசனம் செய்கின்றார் திருமங்கையாழ்வார்.    தாங்கரும் போர் மாலிபட பறவையூர்ந்து தராதலத்தோர் குறை முடித்த தன்மை யானை  ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்க்கு ஆரமுதமானான் தன்னை கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலை குழாவரிவண்டு இசை பாடும் பாடல் கேட்டு தீங்கரும்புகண் வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே. (பெ.தி 2-10-4)    பொருள்: மாலி என்னும் அரக்கன் முடியுமாறு கருடாழ்வாரை நடத்தி உலகிலுள்ளோர் குறைகளைப் போக்கிய இயல்புடையவனும் பகைவரை அழித்த சமயத்தில் கண்ணீர் பெருகி வழிகின்ற அடியவர்களுக்கு அமுதம் போன்றவனும், கோங்க மலர்களும், சுரபுன்னைகளும், குரவு மரங்களும் செறிந்த சோலைகளிலே அழகிய வண்டுகள் இசைக்கின்றப் பாடலைக் கேட்டு கரும்புகள் கணு ஏறி வளர்கின்ற வயல்கள் சூழ்ந்த திருக்கோவலூரதனுள் நான் கண்டு கொண்டேன் என்று மங்களாசாசனம் செய்கின்றார் திருமங்கையாழ்வார்.    எய்யச்சிதைந்தது இலங்கை மலங்கவருமழைகாப்பான் உய்யப்பருவரைதாங்கி ஆநிரை காத்தானென்று ஏத்தி வையத்தெவரும் வணங்க அணங்கெழு மாமலை போல தெய்வப்புள் ஏறி வருவான்  சித்திரக்கூடத்துள்ளானே.  (பெ.தி 3-3-6)  சிறையார் உவணப்புள்ளொன்று ஏறி அன்று  திசை நான்கும் நான்கும் இரிய  செருவில்  கறையார் நெடுவேலரக்கர்  மடியக்  கடல் சூழிலங்கை கடந்தான் இடந்தான் முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர்  ஐவேள்வி ஆறங்கர் ஏழினிசையோர் மறையோர் வணங்கப்புகழெய்து நாங்கூர்  மணி மாடக் கோயில் வணங்கு என்மனனே! (பெ.தி 3-8-4)    பொருள்: முன்னொரு காலத்தில் அழகிய சிறகுகளையுடைய கருடப்பறவையின் மீது ஏறிச்சென்று போரில் எதிர்த்த ரத்தக்கறை  நிரம்பிய பெரிய வேற்படையை உடைய அரக்கர்கள் எட்டு திசைகளிலும் சிதறி ஓடும்படி செய்து இலங்கையை வென்ற பெருமான் உடைய  இருப்பிடம் திருநாங்கூர் ஆகும். அங்கு முறைப்படி ஓமம் செய்து மூன்று தீயை வளர்த்து, நான்கு வேதங்களையும் ஓதி, ஐந்து வேள்விகளையும் செய்து, வேதாந்தங்கள் ஆறையும் பயின்று, ஏழு சுரங்களையும் அறிந்தவர்களான பிராமணர்கள் வசித்துக்கொண்டு பெருமானை வணங்குகின்றனர். அந்த மணிமாடக் கோயிலை  வணங்கு என்மனமே என்றும் மங்களாசாசனம் செய்கின்றார் திருமங்கையாழ்வார்.   பொருள்: அடியார்களைக் காத்தருளப் பெருமாள் பெரிய திருவடியின் மேல் ஆரோகணித்து  எழுந்தருளும் போது அதை கண்டவர் சிலர் “ஒரு அம்பைத் தொடுத்து விட்ட அளவில் இலங்கை ஒழிந்து அழிந்தது” என்பர். சிலர் பசுக்களின் கூட்டம் துன்பமடைய ஓயாமல் பெய்த மழையை தடுத்து அந்த ஆவினங்களை காப்பாற்றப் பெரிய மலையை எடுத்துப் பிடித்தான் என்று சொல்லித் துதிப்பர். இப்படிப்பட்ட பெருமைகளை உடைய பெருமான் சித்திரக்கூடத்தில் உள்ளான் என்றும் மங்களாசாசனம் செய்கின்றார் திருமங்கையாழ்வார்.  . வண்கையான் அவுணர்க்குநாயகன் வேள்வியில் சென்று, மாணியாய் மண்கையால் இரந்தான் மாமரமேழும்எய்தவலத்தினன் எண்கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலைமேவிய எம்பிரான் திண்கைம்மாதுயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே! (பெ.தி 1-8-5)    பொருள்: வள்ளலாகவும் அசுரர்களுக்கு தலைவனாகவும் இருந்த மாவலியினது வேள்விச் சாலையில்  பிரம்மச்சாரியாய் சென்று மூவடி மண்ணை வேண்டி நின்றவனும், ஏழுமராமரங்களைத் துளைத்த ஆற்றல் உடையவனும், எண்ணற்ற தோள்களை உடையவனும், இமயமலையில் திருப்பிருதியில்  எழுந்தருளி இருப்பவனும்,  துதிக்கையை உடைய யானையின் துன்பத்தை போக்கியவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவேங்கடம் அடை நெஞ்சமே என்று அறிவுறுத்துகின்றார் திருமங்கையாழ்வார்.    தூம்புடைத் திண்கைவன்தாள் களிற்றின்  துயர்தீர்த்து அரவம் வெருவ முனநாள்  பூம்புனல் பொய்கைபுக்கானவனுக்கு இடந்தான் தடம்சூழ்ந்து அழகாய கச்சி…. …….பரமேசுவர விண்ணகரமதுவே. (பெ.தி 2-9-5)    பொருள்: துதிக்கையும் உறுதியான கால்களையுமுடைய கஜேந்திரன் என்னும் யானையினது துன்பத்தைப் போக்கி, காளியன் என்னும் நாகம் அஞ்சும்படி முன்பு பொய்கையில் பாய்ந்தவனுக்கு இருப்பிடமாவது அழகிய காஞ்சி மாநகரிலே சோலைகளையும் மதில்களையுமுடைய  பல்லவ மன்னன் பணிந்த பரமேசுவர விண்ணகரம் அதுவே ஆகும் என்று மங்களாசாசனம் செய்கின்றார் திருமங்கையாழ்வார்.   கொழுந்தலரும் மலர்ச் சோலை குழாங்கொள் பொய்கைக்கோள் முதலை வாளெயிற்றுக் கொண்டற்கு எள்கி  அழுந்திய மாகளிற்றுனுக்கு அன்று ஆழியேந்தி அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை எழுந்த மலர் கரு நீலம் இருந்தில் காட்ட இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன் காட்ட செழுந்தட நீர்க்கமலம் தீவிகை போல் காட்டும்திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே. (பெ.தி 2-10-3)   பொருள்: தளிர்களையும் மலர்களையுமுடைய சோலைகளின் பூக்கள் சூழ்ந்த தடாகத்திலே வலிய முதலை தன் காலை கவ்வியதற்கு வருந்திய கஜேந்திராழ்வான் “ஆதி மூலமே” என்று அலற, அக்கணமே சக்கரப்படையேந்தி  வானத்தில் வந்து தோன்றி அந்த யானைக்கு அருள் புரிந்தவனை, நீரிலிருந்து வெளிப்பட்ட கருநெய்தல் பூவானது கரியை காட்டவும், புன்னை மரங்கள் தங்கள் மொட்டாலே முத்துக்களைக் காட்டவும், அவை மலர்ந்து பசும்பொன்னைக் காட்டவும், குளங்களிலுள்ள தாமரைகள் விளக்குப்போல விளங்கும் திருக்கோவலூரில் நான் கண்டேனே என்றும்      முதலைத்தனிமா முரண்தீரஅன்று  முதுநீர்தடத்துச் செங்கண்வேழம் உய்ய விதலைத்தலைச்சென்று அதற்கேஉதவி  வினை  தீர்த்த அம்மானிடம் விண்ணளவும் பதலைக்கபோதத்தொளி மாடநெற்றிப் பவளக்கொழுங்கால் புறவம் மதலைத்தலை மென்பெடை கூடுநாங்கூர்  மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!  (பெ.தி 3-8-2)    பொருள்: முன்பொரு காலத்தில் பொய்கைக் கரையில்  முதலையினுடைய மிகப்பெரிய பகைமை தீரும்படியாகவும், கஜேந்திராழ்வான் பிழைக்கும்படியாகவும் அந்த யானை நடுங்கிக் கிடந்த சமயத்திலே எழுந்தருளி அதற்கு உதவி, அதன் துன்பத்தைப் போக்கிய பெருமாள்  எழுந்தருளி இருக்கும் தலம், வானளாவி  இருப்பனவும்,  கலசங்களையும் உடையவனவாய் ஒளி பெற்றனவான  மாட மாளிகைகளினுடைய முகப்பில் பவழத்தூண் போன்ற காலை உடைய புறா மெல்லிய பெடையுடனே கலவி செய்யப் பெற்ற திருநாங்கூர் மணிமாடக் கோயிலை  வணங்கு என் மனமே என்றும் மங்களாசாசனம் செய்கின்றார் திருமங்கையாழ்வார்.  .   கொலைப்புண்தலைக்குன்றமொன்றுஉய்யஅன்று  கொடுமாமுதலைக்குஇடர்செய்து கொங்குஆர்  இலைப்புண்டரீகத்தவளின்பம் அன்போடு  அணைந்திட்ட அம்மானிடம் ஆளரியால் அலைப்புண்டயானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண்சாமரையோடு பொன்னி மலைப்பண்டமண்டத்திரையுந்த கூடுநாங்கூர்  மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!  (பெ.தி 3-8-3)    பொருள்: முன்னொரு காலத்திலே கொலைத் தொழில் செய்ய வல்லதும், புண்பட்ட தலையை உடையதும், மலை போன்ற ஒரு யானை பிழைக்கும்படியாக ஒரு கொடிய முதலைக்கு துன்பம் உண்டாக்கி, தாமரை மலர் மேவும் பெரிய பிராட்டியின் சேர்த்தி இன்பத்தை அன்புடன் அனுபவிக்கப் பெற்ற சுவாமி கோயில் கொண்டிருக்கும் இடம் யாது எனில் காவிரி நதியானது சிங்கங்களால் அழிக்கப்பட்ட யானைகளின் தந்தங்களையும், அகில் மரங்களையும், முத்துக்களையும், வெண் சாமரங்களையும், மலையில் விளைந்த பல பொருட்களையும் அலைகளாலே தள்ளிக்கொண்டு வந்து சேர்க்கும் திருநாங்கூர் மணிமாடக் கோயிலை  வணங்கு என்மனமே என்றும் மங்களாசாசனம் செய்கின்றார் திருமங்கையாழ்வார்.    தூம்புடைப் பனைக்கை வேழம் துயர்கெடுத்தருளி மன்னு  காம்புடைக்குன்றமேந்தி கடுமழை காத்த எந்தை பூம்புனற் பொன்னி முற்றும் புகுந்து பன்வரண்ட எங்கும் தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே! (பெ.தி 4-5-1)    பொருள்: துளையை உடையதாய் பனை போன்ற துதிக்கையை உடைய கஜேந்திராழ்வானது துன்பத்தைப் போக்கி அருளியவனாயும், மூங்கில்களை உடைய கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துப்பிடித்து, பெருமழையைத் தடுத்தவனுமான எம்பெருமான், அழகிய  நீரை உடைய காவேரியானது எங்கும் பாய்ந்து பொன் குவியல்களைக் கொண்டு வந்துத் தள்ளப் பெற்றதும், அனைத்து இடங்களிலும் சோலைகள் மணக்கும் திருநாங்கூரில், திருமணிக்கூடம் என்னும் திருப்பதியில் உள்ளான்.     கறவைமுன் காத்து கஞ்சனைகாய்ந்த காளமேகத்திருவுருவன் பறவைமுன்உயர்த்து, பாற்கடல்துயின்ற பரமன்ஆர்பள்ளி கொள்கோயில்  துறைதுறைதோறும் பொன்மணிசிதறும் தொகுதிரை மண்ணியின்தென்பால் செறிமணிமாடக் கொடி கதிர்அணவும் திருவெள்ளியங்குடியதுவே. (பெ.தி 4-10-4)    பொருள்: முற்காலத்தில் பசுக்களைப் பாதுகாத்தவனும், கம்சனைச் சீறி முடித்தவனும், காள மேகம் போன்ற திருமேனி உடையவனும், கருடனை முன் கொடியாக எடுத்தவனும், திருப்பாற்கடலிலே யோக நித்திரையில் உள்ளவனுமான எம்பெருமான் (கோல வில் இராமன்) பள்ளி கொள்ளுமிடம் எதுவென்றால்? எல்லாத்துறைகளிலும் பொன்னையும், மணியையும், கொழிக்கின்ற திரண்ட அலைகளை உடைய மண்ணியாற்றின் தென் கரையில் மாட மாளிகைகளிலுள்ள கொடிகள் சூரிய மண்டலத்தை தொட்டுக்கொண்டிருக்கும்  திருவெள்ளியங்குடியாகும்.     ஊழியாய் ஓமத்துச்சியாய் ஒருகா லுடைய தேரொருவனாய் உலகில் சூழிமால் யானைத்துயர் கெடுத்துஇலங்கை மலங்க அன்று அடுசரம் துரந்து  பாழியால் மிக்க பார்த்தனுக்கருளிப் பகலவனொளிகெட பகலே ஆழியால் அன்றங்கு ஆழியை மறைத்தான் அரங்கமாநகரமர்ந்தானே! (பெ.தி 5-7-8)    பொருள்: காலத்திற்கு தலைவனாய், யாகங்களுக்கும் தலைவனாய், ஒற்றைச் சக்கரத்தேருடைய சூரியனுக்கு அந்தராத்மாவாய், முகபடாத்தை உடைய பெரிய கஜேந்திரன் என்னும் யானையினுடைய  துன்பத்தைப் போக்கியவனாய் முன்பு இலங்கையானது அழியுமாறு கொலை அம்புகளைச் செலுத்தியவனாய் அன்று வலிமை  மிகுந்த அருச்சுனனுக்கு அருள் கூர்ந்து  சூரியனுடைய ஒளி மழுங்கும் படி பகல் பொழுதிலேயே  சக்கராயுதத்தால் சூரியனை மறைத்தவனானப் பெருமான் திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கிறான்.   கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்  முடியும் வண்ணம் ஓர் முழுவலிமுதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்ப  கொடிய வாய் விலங்கினுயிர் மலங்கக் கொண்ட  சீற்றமொன்றுண்டுளதறிந்துன்  அடியேனும் வந்து அடியிணையடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!. (பெ.தி 5-8-4)  பொருள்: மணம் நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற அழகிய பொய்கையிலே இருந்த தாமரை மலரை பூஜைக்காக  பறித்த யானையானது மிகுந்த ஆபத்தை அடையும்படி மிக்க வலிமையுள்ள முதலை பிடித்துக் கொள்ள அதனால் வருந்திய யானை உனது திருவடிகளை தியானிக்க ,அப்பொழுதே நீவிர் அம்முதலையின் உயிர் நீங்கும்படி கோபம் கொண்டதை அறிந்து அடியேன் தங்களது  திருவடிகளை அடைந்தேன். அவ்வாறே அடியேனுக்கு எதிர் செய்யும் ஐம்பொறிகளையும் அடக்கி காக்க வேண்டும் என்று திருமங்கை மன்னர் திருவரங்கத்தம்மானிடம்.  சரணடைகிறார்.    இலையார் மலர்ப்பூம்பொய்கைவாய் முதலை – தன்னால்அடர்ப்புண்டு கொலையார் வேழம் நடுக்குற்றுக்குலைய அதனுக்கு அருள் புரிந்தான் அலைநீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் கலைமாச் சிலையால் எய்தான் ஊர், கண்ணபுரம் நாம் தொழுதுமே. (பெ.தி 8-6-7)  பொருள்:  கொலைத்தொழிலை இயல்பாக உள்ள யானை, மலர்களை உடைய அழகிய பொய்கையில் முதலையால் துன்பமடைந்து நடுங்கி கை ஓய்ந்து நிற்க, அந்த யானைக்கு அருள் செய்தவனும், இலங்கை மன்னன் இராவணனின் தம்பியான விபீஷணுக்கு அரசு அளித்தவனும், முன்னர் மாரீசனாகிய மானை ஒரு வில்லாலே அம்பெய்து கொன்றவனுமான பெருமானுடைய ஊர் திருக்கண்ணபுரம் ஆகும். அதை நாம் வணங்குவோம்.  கைம்மானமதயானை இடர்தீர்த்த கருமுகிலை  மைம்மானமணியை அணிகொள் மரகதத்தை  எம்பிரானை ஈசனை என்மனத்துள்  அம்மானை அடியேன் அடைந்துய்ந்து போனேனே (பெ.தி 8-9-1)  பொருள்: நீண்ட துதிக்கையையுடைய மதங்கொள்ளும் இயல்புள்ள கஜேந்திரனுடைய துயரத்தைப் போக்கி அருளிய காளமேகம் போன்றவனும், மை போன்ற  நிறம் உடையவனும், மிகுந்த மதிப்புள்ள நீல இரத்தினம் போன்றவனும், அழகுள்ள மரகதப் பச்சை போன்றவனும், எமக்கு சுவாமியும், எம்பெருமானும், சர்வேசுவரனும், அடியேனின்  நெஞ்சினுள்  இருக்கும் சௌரிராஜப் பெருமானை அடியேன் அடைந்து பிழைத்துப் போனேன்.  கவளமாகதத்தகரியுய்ய பொய்கைக் கராம்கொளக்கலங்கி உள் நினைந்து  துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட சுடுபடை துரந்தோன்  குவளை நீள் முளரி குமுதமொண் கழுநீர் கொய்ம்மலர் நெய்தலொண் கழனி திவளும் மாளிகை சூழ் செழுமணிப் புரிசைத் திருக்கண்ணங்குடியில் நின்றானே. (பெ.தி 9-1-2)  பொருள்: கருநெய்தல், தாமரை, ஆம்பல், செங்கழுநீர், நெய்தல் ஆகிய மலர்களால் நிறைந்த வயல்களையும், ஓளி வீசும் மாளிகைகளால் சூழப்பட்டதும், இரத்தினமயமான திருமதிலை உடையதுமான திருக்கண்ணங்குடியுள் நின்ற பெருமான், கவளம் கொள்ளும் இயல்பும், மதத்தை உடையதுமான  கஜேந்திராழ்வான் என்னும்  ஒரு யானை  பொய்கையில் உள்ள முதலையால் கவ்வப்பட்டு கலக்கமடைந்து எம்பெருமானை சிந்தித்து வருந்தி  இருக்க, அது பிழைக்கும்படி வான் வழியாக எழுந்தருளி வலிய அந்த முதலை துண்டாக அறும்படி ஓளி உமிழும் சக்கரப்படையை செலுத்தியவன் என்று மங்களாசாசனம் செய்கின்றார் ஆலி நாடன்.   தேடற்கு அரியவனைதம் திருமாலிருஞ்சோலை நின்ற ஆடல் பறவையானை அணி ஆய் இழை காணும் என்று  மாடக்கொடி மதிள் சூழ் மங்கையர் கலிகன்றி சொன்ன பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை – பாவங்களே! (பெ.தி 9-9-10)  பொருள்: யாரும் தானாக தேடிப்பிடிக்க முடியாதவனும், திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருப்பவனும், ஆடல்ப் பறவையான பெரிய திருவடியை வாகனமாக உள்ள சுந்தரபாகுவை, அழகிய ஆபரணங்களை உடைய என் மகள் காணப்பெறுவள் என்று மாடங்களிலுள்ள கொடிகளோடு கூடிய மதில்களால் சூழப்பட்ட திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பாடலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் கற்பவர்களுக்கு  பாவம் தொலையும் என்று தாய்ப் பாசுரமாக பாடியுள்ளார் கலிகன்றி..  கருளக்கொடியொன்றுடையீர்! தனிப்பாகீர்!  உருளச்சகடமது உறக்கில் நிமிர்த்தீர்! மருளக்கொடுபாடிவந்து இல்லம் புகுந்தீர் இருளத்து இதுவென்? இதுவென்? இதுவென்னோ? (பெ.தி 10-8-3)  பொருள்: கருடக்கொடியை உடையவரே! அக்கருடனை செலுத்துவதில் வல்லவரே!  தூங்கும் போது அசுரனால் ஆவேசிக்கப்பட்ட வண்டியானது உருமாய்ந்து போகும்படி திருவடியை தூக்கியவரே! இவ்விராப்பொழுதிலேப் பெண்கள் மோகிக்கும்படியாக இசை பாடிக் கொண்டு வீட்டினுள் வந்து சேர்ந்தீர். இது என்?  இது என்?  இது என்ன?  என்று கோபிகையாய் தன்னை பாவித்துப் பாடுகின்றார்  திருமங்கையாழ்வார்.   பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர  மேவிநின்று நான் கண்ட தண்டமோ?  வீவிலங்கணை வில்லி அம்புகோத்து  ஆவியே இலக்காக எய்வதே (பெ.தி 11-1-7)         பொருள்: ஐந்து மலர் அம்புகளை உடைய மன்மதனானவன் சிறிது பொழுதும் ஒய்வு இல்லாமல் தன் மலர்க்கணைகளை தொடுத்து என் உயிரையே இலக்காகக் கொண்டு செலுத்துவதானது காயாம்பூ வண்ணரான பெருமாள் பெரிய திருவடியின் மீது எழுந்தருள நான் விரும்பி நின்று கொண்டு கண்டதற்கான தண்டனையோ?  என்று தன்னை பரகால நாயகியாக பாவித்து பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.    இருந்தான் என்னுள்ளத்து  இறைவன் கறைசேர்  பருந்தாட்களிற்றுக்கு அருள்செய்த செங்கண்  பெருந்தோள் நெடுமாலைப் பேர்பாடியாட  வருந்தாதுஎன்கொங்கை ஒளிமன்னும் அன்னே!  (பெ.தி 11-3-2)  பொருள்:  அடியேனின்  நெஞ்சினுள்ளே இருப்பவரும், சர்வ சுவாமியும், உரல் போன்ற பருத்த கால்களையுடைய கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்தவனும், செந்தாமரைக் கண்ணனும், பெருமை தங்கிய  திருத்தோள்களை உடையவனுமானச்  சர்வேசுரனுடைய  திருநாமங்களை வாயாரப்பாடிக் கூத்தாட  என் கொங்கை வருத்தம்  நீங்கி ஒளி பெறும் என்று தன்னை பரகால நாயகியாக பாவித்துப் பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.      …………………               திருத்துழாய்த்  தாரார்ந்த மார்வன் தடமால்வரை போலும்  போரானை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றலறி  நீரார் மலர்க்கமலம் கொண்டு ஓர்நெடுங்கையால்  நாராயணா! ஓ மணி வண்ணா! நாகணையாய்!  வாராய் என்னாரிடரை நீக்காய் – என வெகுண்டு  தீராத சீற்றத்தால் சென்றிரண்டு கூறாக  ஈராவதனை யிடர்கடிந்தான் எம்பெருமான் ( சி. திரு)  பொருள்:  அகன்ற பெரிய மலை போன்ற மதமிக்க  யானை, நீர் நிறைந்த பொய்கையினிடத்து முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்டு செய்வதறியாது வருந்தி நின்று. நீண்ட தன் துதிக்கையினால் அன்றலர்ந்த தாமரை மலர்களை ஏந்திக் கொண்டு நாராயணனே! நீலமணி வண்ணனே! பாம்பணையில் துயில் கொள்ளூம் ஆதி மூலமே! இவ்விடம் வந்தருள வேண்டும், என்று பிளிறி எனது துயரம் தீர இம்மலர்களை ஏற்று அருள வேண்டும் என்று அப்பிளிறலைக் கேட்ட எம்பெருமான், சேவையைத் தடுக்கும் முதலையை கோபித்து அடங்காத சீற்றத்துடன் பொய்கைக் கரைக்கு  எழுந்தருளி, அந்த முதலையை இரு துண்டுகளாக பிளந்து அந்த கஜேந்திர ஆழ்வானின் துன்பத்தைப் போக்கி காத்தான் என்று சிறிய திருமடலில் திருமங்கையாழ்வார் கஜேந்திர மோட்ச வைபவத்தை பாடியுள்ளார்.  இனி நம்மாழ்வாரின் சில பாசுரங்கள்  அருளாத நீரருளி அவராவிதுவராமுன்  அருளாழிப்புள்கடவீர் அவர்வீதியொருநாளென்று  அருளாழியம்மானைக் கண்டக்காலிதுசொல்லி  யருள் ஆழிவரிவண்டே! யாமும் என் பிழைத்தோமே? (திரு 1-4-6)  பொருள்: வட்டமான வரிகளை உடைய வண்டே! அருட்கடலான எம்பெருமானைக் கண்டால், “அருள் செய்யாத நீர் திருவருள் புரிந்து, தலைவினுடைய உயிர் உலர்வதற்கு முன்னர், அருட் கடலான கருடப்பறவையினை அவள்  வீதியில் ஒரு நாள் மட்டும் செலுத்துவீர்” என்னும்  இவ்வார்த்தைகளைச் சொல்லி அருள்; நாமும் என்ன குற்றம் செய்தோம்? என்று எம்பெருமானின் தரிசனத்திற்கு ஏங்கும் பராங்குச நாயகியாய்ப் பாடியுள்ளார் நம்மாழ்வார்.  கடிவார் தீயவினைகள் நொடியாருமளவைக்கண்  கொடியாவடுபுள் ளுயரத்த வடிவார் மாதவனாரே. (திரு 1-6-10)  பொருள்: பகைவரைக் கொல்லும் கருடப்பறவையைக் கொடியாக உயர்த்தி, அழகு பொருந்தியப் பெரிய பிராட்டிக்குக் கணவர், ஆதலால், நொடிக்கும் அளவைக்குள் தீய வினைகளை எல்லாம் போக்குவார் என்று பராங்குச நாயகியாய் பாடுகின்றார் நம்மாழ்வார்.    ஓடும் புள்ளேறி  சூடும் தண் துழாய்  நீடு நின்று அவை  ஆடும் அம்மானே (திரு 1-8-1)      பொருள்: குளிர்ந்த துளசி மாலை அணிந்த என் சுவாமியானவன், தன் பக்தர்களைக் காக்க கருடன் மீதேறி விரைந்து வருவான். தன் பிரிவை பொறுக்க மாட்டாத அடியார்களுக்கு தரிசனம் தரவும் புள்ளேறி விரைந்து வருவான். அல்லது தனக்கு கைங்கர்யம் செய்ய வேண்டி கருடன் விரும்பினால், அந்த விருப்பை நிறைவேற்ற கருடாரூடனாக உலாவி வருவான். 'காலம்' என்ற தத்துவம் உள்ள வரையில், இவ்வாறு அவன் தன்னிடம் அன்பு பாராட்ட நினைக்கும் அடியார்களிடம், தன் அன்பினை பரிமாறிக் கொள்வான். என் தலைவனின் இந்த அற்புதமான செயல்கள் என் மனத்தில் நிலைத்து நின்று ஆனந்தம் கொடுக்கும் என்று பராங்குச நாயகியாய் பாடுகின்றார் நம்மாழ்வார்.    கள்வா! எம்மையும் ஏழுலகும் நின்  னுள்ளே தோற்றிய இறைவ! என்று  வெள்ளேறன்நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்தேத்துவரே (திரு 2-2-10)      பொருள்: வெண்மை  நிறமடைய  இடபத்தை வாகனமாகவுடைய சிவபெருமானும், பிரம்ம தேவரும், தேவேந்திரனும் மற்றை தேவர்களும், “ கள்வனே!  எங்களையும் மற்ற உலகங்களையும்  நின்னிடத்தினின்றும் தோன்றச் செய்த இறைவனே!” என்று கருடவாகனத்தை உடைய இறைவனின்  திருவடிகளை வணங்கித் துதிப்பார்கள் என்று மங்களாசாசனம் செய்கின்றார் நம்மாழ்வார்..     அஞ்சிறை மடநாராய்! அளியத்தாய்  நீயும்நின்   அஞ்சிறைய சேவலுமாய் ஆவா! என்றெனக்கருளி வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு என்விடுத்தூதாய்ச் சென்றக்கால்  வன்சிறையிலவன் வைக்கில் வைப்புண்டாலென் செய்யுமோ? (திரு 2-4-1)     பொருள்: “அழகிய சிறகுகளையும் மடப்பத்தையுமுடைய நாரையே! அருள் உள்ள நீயும், அழகிய சிறகுகளை உடைய உனது சேவலுமாகி, “அந்தோ!” என்று இரங்கி அருள் செய்ய வேண்டுகிறேன்;  கொடிய சிறகுகளை உடைய கருடனைக் கொடியில் உயர்த்திய இறைவனிடம் யான் விடுகின்ற  தூதாகச் செல்ல வேண்டுகிறேன். அப்பொழுது அந்த எம்பெருமான் உங்கள்  முகம் பார்த்து கேளாமையாகிய கொடிய சிறையில் வைத்து விட்டால்,  நீவிர் சிறைத்துயரம் அனுபவித்தால் அதனால் என்ன கெடுதல் உண்டாகும்?” என்று எம்பெருமானது பிழை பொறுத்தலைப் பற்றாகக் கொண்டு பறவை முதலியவற்றை தூது விடும் பராங்குச நாயகியாக பாடுகின்றார்  நம்மாழ்வார்..    இலங்கைசெற்றவனே! என்னும் பின்னும் வலங்கொள் புள்ளுயர்த்தாய்! என்னும் உள்ளம்  மலங்க   வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக் கலங்கிக் கைதொழும்   நின்றிவளே  (திரு 2-4-4)     பொருள்: இவள், “இலங்கையை அழித்தவனே!” என்கிறாள்; அதற்கு மேல்,     “வெற்றியைக் கொண்ட கருடப்பறவையினைக் கொடியாக உயர்த்தியவனே!” என்கிறாள். மனமானது கலங்கும்படி நெருப்பைப் போன்று பெருமூச்சு விடுகின்றாள்; கண்களில் நீர் பெருகும்படி நின்று அறிவு கலங்கிக் கைதொழுகின்றாள் பராங்குச நாயகி  என்று தாய்ப்பாசுரமாகப் பாடியுள்ளார்  நம்மாழ்வார்.    மாறிமாறிப்பல பிறப்பும்பிறந்து அடியையடைந்துள்ளந்தேறி ஈறிலின்பத்திருவெள்ளம் யான் மூழ்கினன் பாறிப்பாறியசுரர்தம் பல்குழாங்கள் நீறெழ பாய்பறவையொன்று  ஏறி வீற்றிருந்தாய்! உன்னையென்னுள் நீக்கேலெந்தாய்! (திரு 2-6-8)    பொருள்: அசுரர்களின் பல  கூட்டங்கள் சாம்பலாய் வெந்து போகும்படி பாய்கின்ற கருடாழ்வான் மேல் ஆரோகணித்து வருபவரே!  எந்தையே!  மாறிமாறிப் பல பிறப்புகள் பெற்று முடிவில் உன் திருவடிகளை அடைந்து உள்ளம் தெளிவு பெற்று முடிவில்லாத உன் அருள் வெள்ள இன்பத்தில் திளைக்கின்றேன். இனி நீர் எம்மை விட்டு நீங்கலாகாது என்று வேண்டுகிறார் நம்மாழ்வார்..    எம்மாவீட்டுத் திறமும்ச்செப்பம் நின்  செம்மாபாதபற்புத் தலைசேர்த்து ஒல்லை கைம்மாத்துன்பம் கடிந்த பிரானே!  அம்மா! அடியேன் வேண்டுவதீதே. (திரு 2-9-1)    பொருள்: துதிக்கையையுடைய யானையினது துன்பத்தை நீக்கிய எம்பெருமானே!  எத்தகைய மோட்சத்தின் தன்மையைப் பற்றியும் பேச மாட்டோம்; நினது பெருமை பொருந்திய திருவடித்தாமரைகளை அடியேனின் தலையில் விரைவில் சேர்க்க வேண்டும். அடியேன் விரும்புவது இப்பேறே ஆகும்.      மழுங்காதவைந்நுதிய சக்கரநல்வலத்தையாய் தொழுங்காதற்களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே  மழுங்காதஞானமே படையாக மலருலகில் தொழும்பாயார்க்களித்தால் உன்சுடர் மறையாதோ?  (திரு 3-1-9)    பொருள்: பேரன்பு கொண்டு உன்னை தொழுது அழைத்த யானையைக் காப்பதற்காக உடனே தோன்றியவனே! கூரிய  நுனியைக் கொண்ட சக்கரத்தை வலத்திருக்கரத்திலே ஏந்தி, கருடாழ்வான் மீதேறி வந்தவனே! இவ்வுலகில் குறைவற்ற ஞானமே கருவியாகக் கொண்டு உன் அடிமை உகந்த அடியார்க்கு நீவிர் அருள் செய்தால் தங்களின் பேரொளி மறையாதோ? மறையும்.    கண்களாற் காண வருங்கொல்?  என்றாசையால் மண்கொண்டவாமனன்  ஏறமகிழ்ந்து செல் பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து  திண்கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே (திரு 3-8-5)    பொருள்: மண்கொண்ட வாமனனாகிய  அப்பெருமான் கண்களால் காணும்படி வருவானோ? அவன் கருடாழ்வார் மேல் ஏறி  வருவான்; கருடப்பறவையினது சாம வேதத்தின் ஒலியையுடைய  சிறகின் ஒலியைக் கேட்க வேண்டுமன்று என் செவிகள் விரும்புகின்றன என்று பாடுகின்றார் நம்மாழ்வார்..    ஆவியே! ஆரமுதே! என்னையாளுடை தூவியம்புள்ளுடையாய்! சுடர்நேமியாய்!  பாவியேன்  நெஞ்சம் புலம்பப்பலகாலும் கூவியும் காணப்பெறேன் உன்கோலமே (திரு 3-8-7)    பொருள்: “எனது உயிரே! சுவை நிறைந்த அமுதமே! என்னை அடிமை கொண்டுள்ள அழகிய சிறகுகளையுடைய கருடப் பறவையை வாகனமாக உடையவனே! சுடர் பொருந்திய சக்கரத்தை உடையவனே!  பாவியேனுடைய மனமானது புலம்பும்படி பலமுறை கூவியும் உன் கோலத்தைக் கண்டு அனுபவிக்கப் பெறுகிலேன்” என்று பெருவிடாய்ப்பட்டுப் பேசுகிறார் நம்மாழ்வார்..    கொள்வன்நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள்துணித்த புள்வல்லாய்! உன்னைஎஞ் ஞான்று பொருந்துவனே? (திரு 3-8-9)    பொருள்: மாவலியிடம் சென்று,” மூன்று அடி நிலம் கொடு , நான் ஏற்றுக் கொள்வேன்” என்று கூறிய கள்வனே! கம்சனை கொன்றவனே. வாணாசுரனின் மனவலிமை தீரும்படி அவனுடைய ஆயிரம் தோள்களையும் துண்டித்தவனே. கருடனை வாகனமாகக் கொண்டவனே! உன்னை நான் என்றைக்கு சேருவேன் ஏக்கத்துடன் கேட்கிறார் நம்மாழ்வார்.   சன்மம்பலபலசெய்துவெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம்வில் ஒண்மையடையவுலக்கையொள்வாள் தண்டுகொண்டுபுள்ளூர்ந்து உலகில்  வன்மையுடையவரக்கர் அசுரரை மாளப்படைபொருத நன்மையுடையவன்சீர் பரவப்பெற்ற நானோர் குறைவிலனே. (திரு 3-10-1)    பொருள்: அடியார்களைக் காப்பதற்காக  எம்பெருமான் பலகாலும் வந்து திருவவதாரம் செய்து அருள்கின்றான். பலப்பல பிறவிகளை எடுத்துக் கண்களுக்கு முன்னே தோன்றுகின்றான். சங்கம், சக்கரம்,  வில்,  உலக்கை, வாள், தண்டு ஆகிய ஆகிய ஆயுதங்களை ஏந்தி  கருடன் மேல் பறந்து வந்து வலிய அரக்கர்களைப் படைகளுடன் அழிக்கின்றான். இந்த எம்பெருமானின் நற்குணங்களை துதிக்கின்ற அடியேன்  எந்த ஒரு குறையும் இல்லாதவன் ஆவேன் என்று  அறிவிக்கின்றார் நம்மாழ்வார்.     குறைவில்தடங்கடல்கோளரவேறித் தன்கோலச் செந்தாமரைக்கண்  உறைபவன்போலவோர்யோகுபுணர்ந்த ஒளி மணிவண்ணன் கண்ணன் கறையணி மூக்குடைப்புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்  நிறைபுகழேத்தியும் பாடியுமாடியும் யானொரு முட்டிலனே. (திரு 3-10-2)    பொருள்: நீலமணி நிறத்தை உடைய கண்ணபிரான் பெரிய பாற்கடலிலே ஆதிசேஷன் மேல் ஏறித் தனது அழகிய செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களாலே உறங்குபவனைப் போல யோக நித்திரை செய்கிறான். அலகில் வடுவை உடைய கருடப்பறவையைச் செலுத்தி அசுரரை அழித்த அம்மான் அவர்;  அவருடைய  நிறைந்த புகழை ஏத்தியும் பாடியும் ஆடியும்  செல்கின்ற அடியேன் ஒரு தடையினை உடையேன் அல்லன்; என்கிறார் நம்மாழ்வார்.    படிமன்னுபல்கலன் பற்றோடறுத்து ஐம்புலன்வென்று செடிமன்னு காயஞ்செற்றார்களும்  ஆங்கவனையில்லார்  குடிமன்னுமின்சுவர்க்கமெய்தியும் மீள்வர்கள்மீள்வில்லை கொடிமன்னு புள்ளுடை அண்ணல்கழல்கள் குறுகுமினோ. (திரு 4-1-9)    பொருள்: தவம் செய்பவர்கள் இப்பூமியின் மேல் உள்ள பற்றை விட்டுவிடுவர்; அணிகலன்கள் மேல் உள்ள ஆசையையும் விடுத்து, தம் ஐந்து புலன்களையும் அடக்கி தவம் செய்வர். அவர்களின் உடம்பெல்லாம் செடி மண்டும். இவ்வாறு கடுந்தவம் செய்வோரும் எம்பெருமானைப் பற்றாவிட்டால் அவர்களுக்கு சுவர்க்கம் கிட்டாது.  குடிகள் மன்னும் சுவர்க்கத்தை அவர்கள் அடைந்தாலும், எம்பெருமானின் திருவருள்  இல்லையென்றால் மீண்டும்  இங்கே திரும்பி வருவர். ஆதலால் கருடக்கொடியுடைய  பகவானுடைய திருவடிகளைப் பற்றினால் அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டை அடையலாம் என்று மூதலித்துப் பேசுகின்றார்  நம்மாழ்வார்.    ஓடியோடிப்பலபிறப்பும்பிறந்து மற்றோர் தெய்வம்                                                                                                                                                                                                                                                                                                                                                      பாடியாடிப்பணிந்து பல்படிகால்வழியேறிக் கண்டீர் கூடிவானவரேத்த நின்ற திருக்கூரதனுள்  ஆடுபுட்கொடியாதி மூர்த்திக்கு அடிமைபுகுவதுவே (திரு 4-10-7)    பொருள்: சம்சார சக்கரத்தில் ஓடி ஓடிப் பலப்பல யோனிகளிலே  பிறந்து வம்ச பரம்பரையாக பிற தெய்வங்களை பலப்படியாக வழிபட்டு பலன் கைவரப்பெறாமை  கண்டீர்கள்; தேவர்கள் எல்லாம் கூடி வந்து துதிக்கும்படி திருக்குருகூரில்  எழுந்தருளி இருக்கின்ற ஆடும் பறவையான கருடக்கொடியை உடைய ஆதிநாதப் பெருமானுக்கு அடியராய் இருங்கள், ஸ்ரீமந்நாராயணே பரம்பொருள் என்று முதலித்து பேசுகின்றார்  நம்மாழ்வார்.    கருளப்புட்கொடிசக்கரப்படை வானநாட! என்கார்முகில் வண்ணா  பொருளல்லாதவென்னைபொருளாக்கி அடிமை கொண்டாய்! தெருள்கொள் நான்மறைவல்லவர்பலர்வாழ் சிரீவரமங்கல நகர்க்கு அருள்செய்தங்கிருந்தாய்! அறியேனொரு கைம்மாறே. (திரு 5-7-3)   பொருள்: கருடக்கொடியினையும் சக்கரப்படையினையுமுடைய வைகுந்தநாதனே! எம் கார்முகில் வண்ணனே! பொருள் அல்லாத அடியேனை ஒரு பொருளாக்கி அடிமை கொண்டாய்; நான்கு வேதங்களிலும் வல்லவரான  ஸ்ரீவைஷ்ணவர்கள் பலர் வாழ்கின்ற ஸ்ரீவரமங்கலத்திற்கு திருவருள் செய்து அங்கே தங்கியிருக்கின்றவனே! ஒரு பிரதி உபகாரத்தை நான் அறியேன் என்று வானமாமலைப் பெருமானிடம் சரண் புகுகிறார் நம்மாழ்வார்.   அடியேன் மேவியமர்கின்றவமுதே! இமையோரதிபதியே!  கொடியாவடுபுள்ளுடையானே! கோலக்கனிவாய் பெருமானே!  செடியார் வினைகள் தீர்மருந்தே! திருவேங்கடத்தெம் பெருமானே!  நொடியார் பொழுதும் உனபாதம் காணநோலாதாற்றேனே. (திரு 6-10-7)    பொருள்:  அடியேன் அடைந்து அனுபவிக்கின்ற அமுதே! நித்திய சூரிகளுக்கு தலைவனே! பகைவரைக் கொல்லும் கருடனைக் கொடியில் உடையவனே! கோவைப்பழம் போன்ற திருவாயினை உடையப் பெருமானே!  செடி போல மண்டிக்கிடக்கின்றத் தீவினைகளைத் தீர்க்கின்ற மருந்தே! திருவேங்கடத்து எம்பெருமானே! உனது திருவடிகளைக் காண்பதற்கு அடியேன்  எந்த ஒரு நோன்பும் மேற்கொள்ளாமலிருந்தும் ஒரு கணநேரமும் தரித்திருக்க மாட்டாமல்  துவள்கின்றேன் என்று  தோள்களாயிர, முடிகளாயிர, துணைமலர்க்கண்களாயிர, தாள்களாயிர, பேர்களாயிர பெரியவப்பனை திருவேங்கடவனை புற்கொடியான் என்று நம்மாழ்வார் பாடுகின்றார்.     அன்றிமன்றொன்றிலம்நின்சரணேயென்று அகலிரும் பொய்கையின்வாய் நின்றுதன்நீள்கழலேத்திய ஆனையின் நெஞ்சிடர்தீர்த்தபிரான்  சென்றங்கினிதுறைகின்ற செழும்பொழில்சூழ் திருவாறன்விளை ஒன்றிவலஞ்செய்யவொன்றுமோ? தீவினையுள்ளத்தின் சார்வல்லவே (திரு 7-10-8)   பொருள்:  அகன்ற  பொய்கையில் முதலை வாய்ப்பட்ட யானை எம்பெருமானை நோக்கி, “ உன் திருவடிகளே சரணம் என்னை காக்கவல்லது ஏதும் இல்லை “ என்று அழைத்தபோது ஓடி வந்து அதன் துன்பத்தை நீக்க அங்கு தோன்றி , முதலையை வதைத்துப் பகவான் காப்பாற்றினான்.  அப்பெருமான் வீற்றிருக்கும் தலம் திருவாறன்விளை ஆகும் அத்தலத்தை அடைந்து வலம் வந்து அவனைத் தொழுதால் பாவங்கள் நம்  நெஞ்சைப் பொருந்தா. ஆகவே இத்திருத்தலத்தை அடைவேனோ என்று மங்களாசாசனம் செய்துள்ளார் நம்மாழ்வார்.    அடியானிவனென்று எனக்காரருள் செய்யும் நெடியானை நிறை புகழ் அஞ்சிறைப்புள்ளின்  கொடியானை குன்றாமல் உலகமளந்த  அடியானை அடைந்து அடியேனுய்ந்தவாறே! (திரு 9-4-10)   பொருள்: “இவன் எனக்கு அடியவன்” என்று கூறும்படி எம்பெருமான் எனக்கு பெரிய அருளைச் செய்துவிட்டான். அந்த நெடியவனான பெருமான், நிறைந்த புகழும் அழகிய சிறகுகளும் பெற்ற  கருடாழ்வானைக் கொடியாகக் கொண்டான்.  உலகிலுள்ள எப்பொருளும் விலகாதபடி தன் திருவடியால் பூமி முழுவதையும் அளந்தான். இந்த பெருமானை அடைந்து உய்வு பெற்றேன். என்று மங்களாசாசனம் செய்கிறார் நம்மாழ்வார்.     ஊரும்புட்கொடியுமஃதே உலகெல்லாமுண்டுமிழ்ந்தான்  சேருந்தண்ணனந்தபுரம் சிக்கெனபுகுதிராகில் தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணம்நாம் அறியச் சொன்னோம்  பேருமோராயிரத்துள் ஒன்று நீர் பேசுமினே  (திரு 10-2-3)    பொருள்: எம்பெருமான் கருடப்பறவையை வாகனமாகக் கொண்டு நடத்துகிறார். அவரது கொடியும் அந்த பெரிய திருவடியே. அனைத்து உலகங்களையும் பிரளய காலத்தில் உண்டு  மீண்டும் உமிழ்ந்தவனான எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருவனந்தபுரம் என்னும் திருத்தலத்தை விரைவில் சென்று அடைவீராகில்,  நோய்களும் அதற்கு காரணமான தீவினைகளும் நீங்கும்; இது உறுதியாகும்; நாம் அறியும்படி சொன்னோம்; ஒப்பற்ற ஆயிரம் திருநாமங்களில் யாதாயினும் ஒன்றை சொல்லி  அனுபவியுங்கள் என்று அறிவுறுத்துகின்றார்  நம்மாழ்வார்.    திகழ்கின்றதிருமார்பில் திருமங்கைதன்னோடும் திகழ்கின்றதிருமாலார் சேர்விடம் தண்வட்டாறு புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம் கெடுத்தான்  இகழ்வின்றி என்னெஞ்சகத்து எப்பொழுதும் பிரியானே. (திரு 10-6-9)    பொருள்: தம் விளங்குகின்ற திருமார்பிலே பெரிய பிராட்டியாரோடும் விளங்குகின்ற திருமால் வசிக்கின்ற இடம் குளிர்ந்த திருவாட்டாறு என்னும் திருத்தலமாகும். நிலைத்த புகழுடையக் கருடனை வாகனமாக உடையவர் அவர். போர் செய்கின்ற அரக்கர் குலத்தினை அழித்தவர் அவர். விருப்பு வெறுப்பு இல்லாமல் எப்பொழுதும்  அடியேனின் மனத்தில்    பிரியாமல் இருக்கிறார் என்று எம்பெருமானது பேரருளைப் பாராட்டிப் பாடுகின்றார் நம்மாழ்வார்.    குழற்கோவலர் மடப்பாவையும் மண்மகளும் திருவும் நிழற்போல்வனர் கண்டு நிற்குங்கொல்! மீளுங்கொல்! தண்ணந்துழாய் அழற்போலடுஞ்சக்கரதண்ணல் விண்ணோர் தொழக்கடவும் தழற்போல் சினத்த அப்புள்ளின் பின் போனதனி  நெஞ்சமே (திவி 3)  பொருள்: குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலை அணிந்தவனும், நெருப்புப்போல அழிக்கின்ற திருவாழியை எந்தியவனுமான எம்பெருமானுக்கு மூன்று தேவியர் உள்ளனர். புல்லாங்குழலை இசைக்கும் ஆயர் குலத்தில் தோன்றிய நப்பின்னைப் பிராட்டியும், பூமிப்பிராட்டியும், பெரிய பிராட்டியும் எப்போதும்  அப்பெருமானுக்கு நிழல் போல இருப்பர். தீப்போலும் சினம் கொண்ட கருடாழ்வானை வாகனமாகக் கொண்டவன், அப்பறவை மீதேறி அவர் செல்லுங்கால் தேவர்கள் அனைவரும் அவரைத்தொழுவர், எனது தனியான மனமானது கருட வாகனனான அப்பெருமான் பின்னே சென்று விட்டது அது திரும்பி வருமோ அல்லது அங்கேயே நிற்குமோ என்று  நெஞ்சழிந்த பராங்குச நாயகியாகத் தன்னை பாவித்துப் பாடுகின்றார் நம்மாழ்வார்.    தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணந்துழாயர்க்கு  இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே  முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப் பனி நஞ்ச மாருதமே! எம்மது ஆவி பனிப்பு இயல்வே? (திவி 4) பொருள்: பராங்குசநாயகியின்  நெஞ்சத்தை முன்னரே அந்த எம்பெருமானுடைய கருட வாகனம் கவர்ந்து சென்று விட்டது. இந்நிலையில் வாடைக் காற்றும் வந்து வருத்தியது. அப்போது நாயகி என்னுடைய மனதை முன்னரே எம்பெருமானுடைய கருட வாகனம் கவர்ந்து சென்று விட்டது, எனவே அவரது திருத்துழாய் மாலையை கவர்ந்து செல்வதற்கு இனியொரு மனம் என்னிடம் இல்லை. இவ்வாறிருக்க வஞ்சனையாக வந்த பூதனையின் முலையை சுவைத்து உண்ட பிரானுடைய திருமுடியில் சூடப்பட்ட திருத்துழாய் போன்று குளிர்ச்சியை உடைய விஷம் போன்ற  வாடைக்காற்றே நீ இடையிலே புகுந்து  ஏற்கனவே வருந்தியிருக்கின்ற எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது உமக்கு தகுதியோ? தகாது என்று பராங்குச நாயகி பாவனையில் கருடனின் அழகை நம்மாழ்வார் பாடுகின்றார்.   தடாவியவம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு  கடாயினகொண்டொல்கும் வல்லியீதேனும் அசுரர் மங்க   கடாவிய வேகப்பறவையின் பாகன் மதன செங்கோல்  நடாவிய கூற்றங்கண்டீர் உயிர்காமின்கள் ஞாலத்துள்ளே. (திவி 6)  பொருள்:  வளைந்த அம்புகளையும், ஒடிந்த விற்களையும் தவிர்த்து விட்டுப் பயனுடைய அம்புகளையும் விற்களையும் ஏந்தி துவண்டு நடக்கின்ற அழகுடைய இப்பெண் எமன் என்றே கூறலாம். அசுரரை அழிக்க வேண்டிப் பறவை அரசனான கருடன் மீது ஏறி வரும் பாகனான எம்பெருமானின் புதல்வன் மன்மதனாவான். அவன் ஆட்சி நடத்துவதைப் போல அழகிய வடிவம் கொண்ட  இத்தலைவி  இவ்வுலகிலே உள்ளாள். ஆகவே நீங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகின்றார் ஆழ்வார்.    காவியும் நீலமும் வேலும் கயலும் பலப்பலவென்று  ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரரைச் செற்ற  மாவியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்  தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணைமலரே   (திவி 67)  பொருள்:  எம்பெருமான் மிகப்பெரிய அற்புதமாகக் கருடனை  வாகனமாகக் கொண்டு அசுரர்களை அழித்த   மாதவன், திருமகள் கேள்வன்,  பசுக்களைக் காத்த அந்த கோவிந்தன் வாசம் செய்யும் மலை திருவேங்கடத்தில் அழகுடைய பெண் அன்னம் போன்ற என் தலைவி வாழ்கின்றாள். அவள் கண்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரு தாமரை  மலர் போன்றவை. செங்கழுநீர்ப்பூ, கருநெய்தல்பூ, வேல், கயல்மீன், மற்றும் மான் விழி போன்ற அனைத்தையும் இவள் கண்கள் வென்று விடும் அழகு கொண்டவை. இவை இரண்டும் என்னை வதைக்க அடிகோலிய பரப்பு என் மென்மையான உயிரின் தன்மைக்கு ஏற்ற அளவல்ல.    ***************** இனி முதலாழ்வார்களின் சில அருளிச்செயல்கள் அடியும் படிக்கடப்பத் தோள் திசை மேற் செல்ல  முடியும் விசும்பளந்த தென்பர் –   வடியுகிரால் இரணியதாகம் இருஞ்சிறைப்புள்  ஊர்ந்தான் உலகளந்த நான்று. ( மு.தி 17)  பொருள்:  கூர்மையான வஜ்ர நகங்களினால் இரணியது மார்பை பிளந்தவனும், பெரிய அழகிய சிறகுகளை கருடன் மேல் ஊர்பவனுமான எம்பெருமான் உலகளந்த காலத்திலே, திருவடி பூமியை அளந்து கொள்ள, திருத்தோள்கள் திக்குகளிலே பரவிச்செல்ல, திருமுடி மேலுலகத்தை அளந்தது என்று சொல்வார்கள்,  ஐயோ அடியேன் நேரில் சேவிக்கப்பெறவில்லையே என்று பாடுகிறார் பொய்கையாழ்வார்.  நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்  சென்று திசையளந்த செங்கண்மாற்கு – என்றும்  படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்  அடையாழி நெஞ்சே! அறி. (மு.தி 21)  பொருள்:  மாவலியின் யாகசாலையில் சென்று நின்றுத் தனது அழகிய திருக்கரங்களினால் பூமி தானம் வாங்கி பின் திரிவிக்கிரமானாகி  மூவடியால்  எல்லா இடங்களையும் உடைமை ஆக்கிக் கொண்ட செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானுக்கு  சக்கரமானது ஆயுதம், கருடன் வாகனம். கம்பீரமான மனமே!  நான் சொல்வதை ஆராய்ந்து  கொள். பாம்பை அணையாகக் கொண்ட அப்பெருமானுடையத் திருவடிகளை அடைந்திடு என்கிறார்  பொய்கையாழ்வார்.  அறியுமுலகெல்லாம் யானேயுமல்லேன்  பொறிகொள்சிறையுவணமூர்ந்தாய் – வெரீ கமழும்  காம்பேய்மென்தோளி கதைவெண்ணெயுண்டாயை  காம்பேகொண்டார்த்த தழும்பு  (மு.தி 22)   பொருள்:  பல வண்ணங்களையுடைய இறகுகளையுடைய கருடாழ்வான் மேல் ஊர்ந்து செல்லும் எம்பெருமானே! மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய யசோதையினால் கடையப்பட்டு மணம் வீசப்பெற்ற வெண்ணையை உண்ட உன்னை அந்த ஆய்ச்சித் தாம்பு கொண்டு கட்டியதால் உண்டான தழும்பை அறிபவன் நான் ஒருவனே அன்று, உலகத்தில் உள்ள எல்லாரும் அறிவார் என்று பாடுகிறார் பொய்கையாழ்வார்.    இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்  அறை புனலும் செந்தீயுமாவான் – பிறை மருப்பின்   பைங்கண் மால் யானை படுதுயரம் காத்தளித்த  செங்கண் மால் கண்டாய் தெளி.   (மு.தி 29)  பொருள்: நெஞ்சமே! ஸ்ரீவைகுந்தநாதனாகவும், நிலம், வானம், காற்று நீர் நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களான லீலா விபூதியையுடையவனாகவும் இருக்கின்ற எம்பெருமான், பிறை போன்ற தந்தத்தையும் பசிய கண்களையும்  உடைய கஜேந்திராழ்வான் பட்டத்  துன்பத்தை நீக்கி காத்தருளிய செந்தாமரைக் கண்ணனான பெருமாள் காண்!  நீ இதைத் தெரிந்து கொள் என்று கஜேந்திர மோட்சத்தைப் பாடுகின்றார் பொய்கையாழ்வார்  இடரார் படுவார்? எழுநெஞ்சே! வேழம்  தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த - படமுடைய  பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதகம்  கொய்ந்நாகக் பூம்போது கொண்டு. (மு.தி 78)  பொருள்:  கஜேந்திரன் என்ற யானையை பின் தொடர்ந்து சென்று கொடிய முதலையை அழித்தவனும், படத்தையுடைய  பரந்த ஆதிசேடனை படுக்கையாக உடையவனுமாகிய  எம்பெருமானை, கொய்த அழகிய புன்னை மலர்களைக் கொண்டு தொழுவோம். அவனுக்கு அடிமைப்படாமல் கிடந்து துக்கப்பட வல்லவர் யார்? எனவே நெஞ்சே! விரைவாக எழுந்திரு என்கிறார் பொய்கையாழ்வார்.   அத்தியூரான் புள்ளையூர்வான் அணிமணியின்  துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான் – முத்தீ மறையாவான் மாகடல்நஞ்சுண்டான் தனக்கும் இறையாவான் எங்கள் பிரான். (இ.தி 96)  பொருள்:  ஸ்ரீஅத்திகிரியிலே எழுந்தருளியுள்ள எம்பெருமான் பெரிய திருவடியை வாகனமாக கொண்டவன், அழகிய மாணிக்கங்களையும் படப்பொறிகளையும் உடைய ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டவன், மூன்று அக்னிகளால் ஆராதிக்கப்படுபவன்; வேதங்களால் போற்றப்படுபவன்; பாற்கடலில் இருந்து  உண்டான நஞ்சை உட்கொண்டவனான சிவனுக்கும் சுவாமியாக இருப்பவன். என்று மங்களாசாசனம் செய்கிறார் பூத்த்தாழ்வார்   பொலிருந்திருண்டகார்வானில் மின்னேபோல் தோன்றி  மலிந்துதிருவிருந்த மார்வன் – பொலிந்த  கருடன்மேற்கொண்ட கரியான் கழலே  தெருடன் மேற்கண்டாய் தெளி. (மூ.தி 57)  பொருள்:  செறிந்த இருளையுடைய கார்காலத் தெழுகின்ற கருத்தட மேகத்தில் மின்னல் போல பிராட்டியானவள் பிரகாசித்து வீற்றிருக்கின்ற திருமார்பையுடைவனாக விளங்குகின்றக் கருடன் மீது சேவை சாதிக்கின்ற  எம்பெருமானுடைய திருவடிகளே ஞானத்திற்கு மேற்பட்டதான பக்திக்கு விஷயமென்று (நெஞ்சே!) தெளிந்திரு என்று அறிவுறுத்துகிறார் பேயாழ்வார்.                  56. கருட யாத்திரை   கருடனின் சிறப்புகளைப் பகரும் இந்த நூலை எழுதும் போதுச் சிறப்பு கோலங்களில் கருடன் சேவை சாதிக்கும் ஆலயங்களைச் சேவிக்கலாம் என்ற அவா மனதில்  தோன்றியது. எனவே ஒரு வார இறுதியின் போது மூன்று நாள் விடுமுறை கூடி வந்தபோது ஒரு யாத்திரை கிளம்பினோம்.   முதல் நாள் காலை சென்னையிலிருந்து கிளம்பி  திருவெள்ளியங்குடி சென்று சதுர்புஜ அமர்ந்த கோலக் கருடனை முதலில் சேவித்தோம். பின்னர் திருருநறையூர் சென்று கல் கருட பகவானைச் சேவித்தோம். அருகில் உள்ள ஒப்பிலியப்பனைச் சேவித்த பின்னர், திருக்கண்ணமங்கை செல்லும் வழியில் திருச்சேறையில் சாரநாதப் பெருமாளை தங்கக் கவசத்தில் பஞ்சாயுதங்களுடன் திவ்யமாகச் சேவித்தோம். பின்னர் திருக்கண்ணமங்கையில் பக்ஷிராஜனைச் சேவித்தோம். முதல் நாளின் நிறைவாக  எண்கண்ணில் நித்ய கருட சேவை தந்தருளும் ஆதி நாராயணப்பெருமாளைச் சேவித்தோம்.  இரண்டாம் நாள் அதிகாலை  திருக்கண்ணங்குடியில் உற்சவக் கருட பகவானை வைகுந்தத்தில் உள்ளது போல நியம கருடனாகச் சேவித்தோம். அடுத்து திருநாகை சென்று அமர்ந்த கோல கருடனை தங்கக் கவசத்தில் அற்புதமாகச் சேவித்தோம். (வழியில் சிறுப்புலியூரில் ஆதிசேஷன் உயரத்திலும் கருடன் கீழேயும் சேவை சாதிக்கும் கோலத்தையும் சேவிக்கலாம். முடிந்தவர்கள்  சென்று சேவிக்கலாம்).  பின்னர் திருக்கண்ணபுரம் சென்று பெருமாளுடன் கருடன் கருவறையில் கர்வம் தீர்ந்த கருடனையும் சேவித்தோம். இரண்டாம் நாளின் நிறைவாக தேரழுந்தூரில் சகாவாக கருடன் பெருமாளுடன் சேவை சாதிக்கும் அழகைச் சேவித்தோம்.   மூன்றாம் நாள் திருஇந்தளூரில் பரிமள ரங்கரை சேவித்துவிட்டு, நிறைவாக  திருநாங்கூர் திவ்ய தேசங்களை சேவித்தோம், அவற்றில் மணீமாடக்கோவிலில்  பெருமாளின் பாதத்திற்கு மிகவும் கீழாக கொடி மரத்திற்கு அருகில் சேவை சாதிக்கும் அமர்ந்த கோல கருடனையும் சேவித்து இந்த யாத்திரையை நிறைவு செய்தோம்.                                 57. பூரண சரணாகதி இது வரை கருட சரிதம் முதலாகக் கருடன் பெருமாளுடன் சரிசமமாக சேவை சாதிக்கும் அழகையும், சிறப்பாகப் பல்வேறு கோலங்களில் சேவை சாதிக்கும் பாங்கையும்  பல்வேறு சிறப்பு மிக்க கருட சேவைகளையும், ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும் சேவித்தோம். இவையெல்லாம் நமக்கு உணர்த்துவது  என்னவென்றால் அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டை அடைய பூரண சரணாகதிதான் ஒரே வழி. இதை ஆண்டாள், திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் எவ்வாறு கூறியுள்ளார்கள் என்பதைச் சேவித்து  கருட சேவையை நிறைவு செய்வோம்.     அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பா!  நிகரில்புகழாய்! உலகம்மூன்றுடையாய்! என்னையாள்வானே!  நிகரிலமரர் முனிக்கணங்கள் விரும்பும்  திருவேங்கடத்தானே!  புகலொன்றில்லா அடியேன் உன்னடிக்கீழமர்ந்து புகுந்தேனே! (தி.வா 6-10-10)    பொருள்:  உங்களை  விட்டு கண நேரமும் பிரியேன் என்று பெரிய பிராட்டியார் அலர்மேல் மங்கை நித்திய வாசம் செய்கின்ற மார்பினை உடையவனே! மூன்று உலகங்களையும் உடையவனே! என்னை ஆள்கின்றவனே! ஒப்பில்லாத நித்திய சூரிகளும் முனிவர் குழாங்களும் விரும்புகின்ற திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடவனே! வேறு கதி ஒன்றும் இல்லாத அடியேன் உனது திருவடியிலே பொருந்தி அடைந்தேன் என்று பெரிய பிராட்டியை முன்னிட்டு திருவேங்கடவனிடம் சரணடைகின்றார் நம்மாழ்வார்.     தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்   நோயே பட்டொழிந்தேன்; உன்னைக் காண்பதோர் ஆசையினால்   வேய் ஏய் பூம்பொழில் சூழ் விரையார் திருவேங்கடவா!  நாயேன் வந்தடைந்தேன்; நல்கி ஆளென்னைக் கொண்டருளே. ( பெ. தி 1-9-1)    பொருள்: மூங்கில்கள் நிறைந்து பூஞ்சோலைகள் சூழ்ந்து மணம் நிறைந்த திருமலையில் எழுந்தருளியுள்ள பெருமானே! தாய், தந்தை, மனைவி, சுற்றம், பிள்ளைகள் என்று உறவு அல்லாதவர்களை உறவாக நினைத்து துன்பப்பட்டேன். நாயைப் போலும் தாழ்ந்தவனாகிய நான் மெய்யான உறவாகிய உன்னை வணங்க வேண்டுமென்ற ஆசையால் உன்னிடம் வந்து தஞ்சம் புகுந்தேன். அடியவனான என்னைக் குளிர நோக்கி அடிமை கொண்டருள்வாய் என்று திருவேங்கடவனிடம் சரணமடைகிறார் திருமங்கையாழ்வார்.     []     திருமயிலை மாதவப்பெருமாள்    சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்  பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்  பெற்றம் மேய்த்துண்ணுங் குலத்தில் பிறந்து நீ  குற்றேவலெங்களைக் கொள்ளாமற் போகாது  இற்றைப்பறைகொள்வா னன்றுகாண்கோவிந்தா!  எற்றைக்கும் எழேழ்பிறவிக்கும்  உன்தன்னோடு  உற்றோமேயாவோம் உனக்கேநாமாட்செய்வோம்  மற்றைநங்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய். (தி பா 29)    பொருள்: (குறையொன்றுமில்லாத கோவிந்தனே) மிக்க விடியற்காலத்திலேயே நீ இருக்கும் இடத்தில் வந்து உன்னை வணங்கி, உன் அழகிய தாமரை போன்ற திருவடிகளையே நாங்கள் மங்களாசாசனம் செய்வதன் பயனைக் கேளாய். நீ மாடுகளை மேய்த்து அவை உண்டது கண்டபின் உண்கின்ற குலத்திலே பிறந்து, எங்களிடம் பணிவிடைகளைக் கொள்ளாமல் விட்டுவிடுவது உனக்கு தகாது. இப்போது நாங்கள் வந்தது  பறையை கொள்ளும் பொருட்டாக அன்று. கோவிந்தனே! நாங்கள் எப்போதும் நீ எடுக்கும் எல்லா அவதாரங்களிலும் இப்போது இருப்பது போலவே உன்னோடு பொருந்தியவர்களாகவே இருக்க வேண்டும். உனக்கே அடிமை செய்பவர்களாகவே இருக்க வேண்டும். இவற்றை விட வேறு எந்த விருப்பமும் வராமல் போக்குவாயாக என்று  குறை ஒன்றும் இல்லாத  கோவிந்தனிடம் சரணமடைகின்றாள் நாச்சியார்.     ஜீவாத்மாக்களுக்கு பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும், பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரை சேர்ந்தால்தான் முக்தி கிட்டும். முக்தி அடைய சரணாகதிதான் சிறந்த மார்க்கம். "ஜீவாத்மா பாவச்சுமையை அகற்றுவதற்கு இறைவனிடம் சரணாகதி அடைய வேண்டும் என்று பகவத்கீதை கூறுகின்றது. சரணாகதி நெறியானது வேதம் முதலான நூல்களால் வித்தாக விதைக்கப்பட்டு இதிகாச புராணங்களால் வேர் ஊன்றப்பெற்று ஆழ்வார்களால் மரங்களாக்கப்பட்டு ஆச்சார்யார்களால் மலரச்செய்யப்பட்டுள்ளது. இந்த சரணாகதி நெறியைப் பின் பற்றி நாமும் உய்வோமாக. அந்த சரணாகதியை உணர்த்துவதே கருடசேவை சமயம் கிட்டும் போது தங்கள் இல்லத்தின் அருகில் உள்ள கோவிலில் நடைபெறும் கருடசேவையை  அவசியம் சென்று சேவியுங்கள்.                                          தி : திருப்பல்லாண்டு திரு: திருவாய் மொழி திபா : திருப்பாவை தி.ப : திருப்பள்ளியெழுச்சி திவி : திருவிருத்தம் நா. திரு  நாச்சியார் திருமொழி  திரு.மா : திருமாலை தி.ச : திருச்சந்த விருத்தம் மு.தி: முதல் திருவந்தாதி இ.தி இரண்டாம் திருவந்தாதி  மூ.தி மூன்றாம் திருவந்தாதி நா.தி நான்முகன் திருவந்தாதி பெ.தி பெரிய திருமொழி பெரி.தி பெரியாழ்வார் திருமொழி  பெரு.தி : பெருமாள் திருமொழி தி.நெ: திருநெடுந்தாண்டகம்  சி, திரு : சிறிய திருமடல் தி.மா : திருவரங்கத்து மாலை  உ.ர :உபதேச ரத்தின மாலை  நூ.தி.அ: நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி