[] []                                                                                                                       ஸ்மார்ட் உலகத்து கதைகள்                                                                    ம்ரின்சோ நிர்மல்  நூல் : ஸ்மார்ட் உலகத்து கதைகள் ஆசிரியர் :  ம்ரின்சோ நிர்மல் மின்னஞ்சல்  : nirmalcb@gmail.com  அட்டைப்படம் : டானியா    மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                                                       எதிர்காலத்தை கற்பனை செய்து பார்ப்பதன் மூலம்                                                    இன்றைய அபத்தங்களிலிருந்து                                          கொஞ்சமாவது நழுவிச் செல்ல முடியுமா? பொருளடக்கம் அறிமுகம் 8  1. ஸ்மார்ட் குட் மார்னிங் 10  2. ஸ்மார்ட் நிலைக்கண்ணாடி 12  3. ஸ்மார்ட் ஞாயிறு 14  4. ஸ்மார்ட் செக்ஸ் 17  5. ஸ்மார்ட் தூக்கம் 18  6. ஸ்மார்ட் வாசிப்பு 20  7. ஸ்மார்ட் உறவுகள் 25  8. ஸ்மார்ட் தனிமை 27  9. ஸ்மார்ட் குளியல் 31  10. ஸ்மார்ட் கவிஞன் 34  11. என் டைரி குறிப்புகள் 37  12. ஸ்மார்ட் ரேசிங் 41  13. ஸ்மார்ட் மரணம் 44      என் அன்புக்குரிய ,                                          சாரு நிவேதிதாவுக்கு அறிமுகம்    ‘Black Mirror’ எனும் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து, அதன் பாதிப்பில் எழுதப்பட்ட கதைகள் இவை. இன்று மலிவான சரக்காகிப்போனதில் மிக முக்கியமானது “எழுத்துக்கள்”. அந்த வகையில்  இதுவும் ஒரு வித மலிவான சரக்கெனக் கொள்க. எழுத்தைக் குறித்து எவ்விதப் புனிதத்தன்மையும் இல்லாமல் இருப்பதையே விரும்புகிறேன். எனவே  இதை டவுன்லோட் செய்யலாம். ப்ரிண்ட் எடுக்கலாம். கிழிக்கலாம். அழிக்கலாம். தீ வைத்துக் கொளுத்தலாம். குப்பையில் எறியலாம். அடுத்தவரிடம் வாசிக்கச் சொல்லலாம். பத்திரப்படுத்தியும் வைக்கலாம். மேலும் உங்கள் மனதில் தோன்றும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். வாசகனுக்கு அனைத்து உரிமையும் உண்டு.   நன்றி   அட்டைப்படம் வரைந்து கொடுத்த என் மகள் டானியாவுக்கும், பிழை திருத்தம் செய்து உதவிய சசிகலா, ராணி விக்டோரியாவுக்கும் மற்றும் எழுத ஊக்கம் தந்த ஃபேஸ்புக் நண்பர்களுக்கும்!   ஃபார்வெட் செய்றேன் படித்துச் சொல்லுங்கள்:   என் இன்பாக்ஸை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தேன். அதாவது,  தேவையில்லாத மெயில்களை அழித்துக்  கொண்டிருந்தேன். பத்திரப்படுத்த வேண்டிய அளவுக்கு எதுவுமில்லை. எல்லாமே விளம்பர குப்பைகளும், ஃபார்வேர்ட் மெயில்களாகவும் இருந்தது சலிப்பைத் தந்தது. சலிப்பு – தவிர்க்க இயலா  மனித அனுபவம் என்பது  நினைவுக்கு வந்தது.        அந்த குப்பைக்குள் எப்பொழுது வந்தது ?    யாரிடமிருந்து வந்தது ?    எதற்காக வந்தது ? என கண்டுபிடிக்க முடியாத ஒரு மெயில் இருந்ததை தற்செயலாகக் கண்டு கொண்டேன். ஆமாம் தற்செயலாகத்தான் கண்டு கொண்டேன். ‘நாம் தற்செயலின் விளைவை  மிகக் குறைவாகவே மதிப்பிட்டு வருகிறோம்,’  என்பார் என் நண்பர் பிச்சை.      தற்செயலாகக் கண்டதை என்னால் அழிக்கவும் முடியவில்லை. எனவே, சரி என்னதான் இருக்கிறதென திறந்தேன். அது நாவல் போலவும் அல்லாமல் சிறுகதைகள்  போலவும் அல்லாமல் சில கதைகள் கிடைத்தன.  இடை இடையே சம்பந்தம் இல்லாத குறிப்புகள், சில வாக்கியங்கள் என எந்த ஒழுங்குமின்றி இருந்தது. ஜாலியாக வாசித்தேன்.  ஒரு கதைக்கும் இன்னோரு கதைக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா என என்னால் முடிவு செய்ய முடியவில்லை. எனவே என் சக மனிதர்கள் போல  கூர்ந்து வாசிக்க விருப்பமின்றி தற்செயலாகக் கண்ட அந்தக் கதைகளை என்னிடமிருந்த எல்லா முகவரிகளுக்கும் ஃபார்வெர்ட் செய்கிறேன். பழிக்கு பழி..!!  அனுப்பியதும் அழிந்துவிட்டது.   1. ஸ்மார்ட் குட் மார்னிங்   விக்ரிதா வழக்கம் போல் தூங்கி எழுந்தாள். தலைக்கு அருகில் இருந்த மொபைலை எடுத்து ஆன் செய்ததும் ‘குட் மார்னிங்’ என டிசைன் செய்யப்பட்ட அழகிய எழுத்து அவளது மொபைல் திரையில் மின்னி மறையவும், வழக்கமாக வர வேண்டிய குட்மார்னிங் வந்துவிட்டது என மொபைல் சிணுங்கியது. வால்நூலைத்  திறந்து மேய்ந்தாள். ‘இதே நாளில்’ என பழைய நினைவுகள் வரிசையாக மொபைல் திரையில் வந்து  நின்றன. எதுவும் சுவாரஸ்யமானதாக இல்லை என உதடு சுழித்துக் கடந்தாள்.    இன்று குட்மார்னிங் மெசேஜ் அனுப்ப வேண்டியவர்களுக்கு பதிவாக அனுப்ப Good Morning செயலியை  திறந்து, க்ளிக்கி, முன்னரே செட்டிங் செய்து வைத்திருந்த Good Morning For Normal Day எனும் தேர்வு பொத்தானை அழுத்திக் கொண்டே ‘குட் மார்னிங்’ என தனது கீச்சுக் குரலில் சொன்னாள். அவள் சொன்ன  ‘குட் மார்னிங்’  குரல் பதிவு செய்யப்பட்டு மொபைலிலிருந்து ஒலித்தது.   அதைக் கேட்டதும் மொபைலில் Analyse Voice எனும் பொத்தானைத் தேடி அழுத்தி, மொபைல் செயலி  அவளது குரலை ஆய்வுக்கு உட்படுத்தி அனுப்பும் பதிலுக்காக காத்திருந்தாள். கடந்த ஒரு மாதத்தில் இவள் சொன்ன குட்மார்னிங்கை ஆய்வு செய்து அதை இன்று சொன்ன குட்மார்னிங்கோடு  ஒப்பிட்டு சில பல புள்ளியியல்  வரைபடங்களாக திரையில் வந்து விழுந்து, இன்றைய குரலில் உற்சாகம் கம்மியாக இருக்கிறது என்றும், இதுவே இந்த மாதத்தில் உற்சாகம் மிக கம்மியான   தொனியோடு ஒலித்த குரல் என்றும் சொன்னது.    ‘உற்சாகக் குறைவுக்கான காரணம் அறிய அடுத்த பொத்தானை அமுக்கவும்’ என திரையில் ஒரு வாசகம் மின்னிக்கொண்டிருந்தது. ஆனால், காரணம் தேடி அலுத்துப் போக விரும்பாத விக்ரிதா, வழக்கம்போல ‘Need Make Over’ என்ற பொத்தானைத் தேடி அமுக்கினாள். அது அவளின் குட்மார்னிங்கை மெறுகூட்டியது. பின்னர்  அவளது ‘குட் மார்னிங்’ தேனில்  குழைந்து, வெண்ணையில் விழுந்து, இன்னும் உற்சாகமாய், கம்பீரமாய், அவள் பதில் அனுப்ப வேண்டியவர்களுக்கும் அவள் பதிவாக குட்மார்னிங்  அனுப்புகிறவர்களுக்கும் பிடித்த முறையில் போய்ச் சேர்ந்தது.   சீரற்ற, எந்த நோக்கமும் இன்றி பகடைக்காய்கள் போல ஆடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான  நியூரான்களின்  ஆட்டத்தில்   தன்   நினைவுகளாலும்,  அனுபவங்களாலும் , தேவையாலும்    உந்தப்பட்டு மொழியால் எழுதப்பட்டு வரும் எழுத்துக்கள்  தன்  நினைவுகளுக்கும் அனுபவத்திற்கும் அப்பாற்பட்ட யாரோ ஒரு வாசகனின் நியூரான்களை தூண்ட  வைக்க முடிகிறதா என்பதே எழுத்தின் மிகப் பெரிய சவால். 2. ஸ்மார்ட் நிலைக்கண்ணாடி   விக்ரிதா  தன் ஸ்மார்ட் குளியலறைக்குள் நுழைந்தாள். அவள் வரவை உணர்ந்த ஸ்மார்ட் டெண்ட்டல் கேர் யூனிட், தானாக தன்னை உயிர்ப்பித்துக் கொண்டது. விக்ரிதா தன் பல் துலக்கியை எடுத்து வாயில் வைத்ததும் ‘வாய் சோதனை முடிந்தது’ என டெண்ட்டல் யூனிட் அறிவித்தது. அடுத்து  வாயில் இருந்த ப்ரஷ்ஷை எடுத்து யூனிட்டுக்குள் நுழைத்தாள். வாயின் அசுத்த அளவிற்கு ஏற்றவாறு மஞ்சள், பச்சை, ஊதா நிறத்தில் பற்பசை கலக்கப்பட்டு ப்ரஷ் மேல் விழுந்தது.  அவள் விறுவிறுவென பல் துலக்கும்போது, ‘புகைப்பதை குறைத்துக் கொள் விக்’ என வாஞ்சையாய் சன்னமான குரலில் டெண்ட்டல் யூனிட் சொல்லக் கேட்டு புன்னகைத்தாள்.        இன்று ராகனை சந்திப்பதாக ப்ளான். பல முறை சந்தித்திருந்தாலும்  அவளுக்கு ராகனை இன்று பார்ப்பதில் தனி கிக். தொடர்ந்து நிகழ்ந்த பல சந்திப்பில், ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசிக்கொண்டார்கள். மற்ற ஆண்களைப் போல வெறும் செக்ஸ் முனைப்போடு இல்லாமல், பழைய காலத்து ரொமான்ஸ் செய்ய முனையும் இளைஞன் போல் ராகன் இருந்தது விக்ரிதாவுக்கு பிடித்திருந்தது. நேர்த்தியான அழகு, எடுப்பான முகம், விரிந்த கண்கள் என ஈர்த்தான்  ராகன்.      பல் துலக்கி முடித்ததும்,  அவள் முன் இருந்த டிஜிட்டல் நிலைக் கண்ணாடி தன்னைத் தானே இயக்கி உயிர்ப்பித்துக் கொண்டு  ‘Good Morning விக்’ என இசையாய் சொல்லி முடித்தது. ‘Analysing Face’ எனச் சொல்லி பிங்க் நிற பொம்மை பிம்பம் ஒன்று கண்ணாடியின் ஓரத்தில் தோன்றி, தன் அழகிய கண்களை கவர்ச்சியாய் மூடி மூடி திறந்து கொண்டிருந்தது. விக்ரிதா தன் முடியை சரி செய்து கொண்டு அசையாமல் கண்ணாடியைப் பார்த்து நின்று கொண்டிருந்தாள். இரு நொடிகளுக்குப் பிறகு, கண்ணாடியில் தெரிந்த அவளின் பிம்பத்துக்கு அருகில் சில பல புள்ளியியல் வரைபடங்கள் குட்டியாக எட்டிப் பார்த்தன. ஒவ்வொன்றாகத் தொட்டு, பெரிதாக்கி பார்த்து முடித்ததும், ‘முகத்தின் முழு சோதனை முடிந்தது.  இன்று உற்சாகமும், களையும், அழகும் குறைவு’ என்ற செய்தியை ஒரு முறை தன்னை பெரியாதாக்கிக் காட்டி விட்டுச் சுருங்கிக்கொண்டது அந்த பிங்க் நிற பொம்மை உருவம். இன்றைய தன் சோதனை முடிவை, வால்நூலிலும், இன்னும் பிற சமூக வளைதளத்திலும் “தூங்கி எழுந்த அழகு” என்கிற தலைப்பில்  பகிரவா என கேள்வி கேட்டது நிலைக்கண்ணாடி, அதோடு, விக்ரிதாவின் தோழிகளான ஷிம்மி, மிஞ்ஞிலி போன்றோர் பகிர்ந்த தூங்கி எழுந்த அழகு குறித்த சிறு குறிப்பையும் காட்டியது.... ‘புல் ஷிட்’ என அதை மூடிக்  கடந்தாள், இப்பொழுது பிங்க் நிற பொம்மை மீண்டும் தன் கண்களை பாவமாக காட்டிச் சிமிட்டியது.   விக்ரிதா குளிக்க நகர்ந்ததும் கண்ணாடி தன்னைத் தானே அணைத்துக் கொண்டது. குளித்து முடித்து, வழக்கமாக செய்யும் தன் ஒப்பனையை செய்து முடித்துக் கொண்டு மீண்டும் கண்ணாடி முன் வந்து நின்றாள்.  திரும்பவும் முக ஆய்வு  நடத்தியது கண்ணாடி. முடிவில், 'இந்த மாதத்தில் இன்று தான் அழகு குறைவாகவும், களை இழந்தும், உற்சாகம் குறைவாகவும் முகம் காணப்படுகிறது' எனச் சொன்னது.   மீண்டும் பிங் நிற பொம்மை - “குளித்த பின் அழகு” என்கிற தலைப்பில் வால்நூலில் பகிரவா எனக் கேட்டது. “ஆஸ் ஹோல்” என திட்டி நகர்ந்தாள் விக்ரிதா.   ‘ஷிட்’ எனச் சொல்லி, தன் மொபைலிலிருந்து ராகனுக்கு ‘இன்று சந்திக்க முடியாது, இன்னோரு நாள் பார்ப்போம்’ என மெசேஜ் அனுப்பி விட்டு, தன் வீடியோ கேம் அறைக்குள்  சென்றாள். ‘வெல்கம்’ என கேம் சிஸ்டம் தன்னைத்தானே உயிர்ப்பித்துக் கொண்டு அவளை வரவேற்றது.  ஆன்லைன் கேமுக்குள் தன் போலி ஐடியான ‘பேய்கேமி’ எனும் ஐடி வழியாக நுழைந்து, தனது வழக்கமான கேம் சகாவை தேடினாள். அதே நேரத்தில் ராகனும் தனக்குப் பிடித்த ஆன்லைன் கேம் சகா பேய்கேமி வந்ததை அறிந்து ‘ஹாய் பேய்கேமி’ என தனி மெசேஜ் ஒன்றை அனுப்பினான்.   ‘தேங் காட். நல்லவேளை இன்று டேட்டிங் கேன்சல் ஆனது’ என இருவருக்கும் தோன்றியது. 3. ஸ்மார்ட் ஞாயிறு   விக்ரிதா நீண்ட நாட்களுக்குப் பிறகு, அந்த ஓய்வு நாளில் தனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கான கேக் செய்யும் வேலையை ஆரம்பித்தாள்.  முதலில் கேக் செய்வதற்குத் தேவையான பொருட்களை எடுத்து வரிசைப்படுத்தி வைத்துக் கொண்டு, அவற்றைத் தன் மொபைலில் க்ளிக்கி ‘ ரெட் வெல்வெட் கேக் செய்யப்போறேனே   ’ என பதிவு ஒன்றை வால்நூலில் எழுதினாள். மின்னல் வேகத்தில் விழுந்த லைக்குகளோடும், தான் எதிர்பார்த்தவர்களிடமிருந்து வந்த கமெண்ட்டுகளின் உற்சாகத்தோடும்  கேக் ரெடியானது. அவளின் தோழியான விகா லைக் இட்டிருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டாள். ஏனென்றால் விகா  செய்த ஐஸ்க்ரீம் பற்றிய பதிவுக்கு இவள் லைக் இட்டிருந்தாள். மேலும் இவளின் கேக் போட்டோவை தாரா எனும் தோழி அவள் பக்கத்தில் பகிர்ந்தது மிகுந்த நெகிழ்வை தந்தது, அடுத்த முறை தாராவின் இருவரி கவிதைகளுக்கு மறக்காமல் லைக் செய்ய வேண்டுமென்றும் நினைத்துக் கொண்டாள்.   கேக்கை வெட்டுவதற்கு முன் ஒரு ஃபோட்டோ. அதை நேர்த்தியாக வெட்டிய பிறகு அதன் இழை நயம் தெரிகிறவாக்கில் ஒரு ஃபோட்டோ. வெட்டிய கேக் துண்டை வெனிலா நிறத்து பீங்கான் தட்டில் வைத்து ஒரு ஃபோட்டோ. கேக் சாப்பிட மட்டும் பயன்படுத்தும் அவளது வெள்ளி கரண்டியால் கேக் துண்டை எடுத்து  தான் சாப்பிடுவது போல் ஒரு ஃபோட்டோ. அந்த ஃபோட்டோவில் அவளது லிப்ஸ்டிக்கின் நேர்த்தி சரியில்லாததால் மீண்டும் ஒரு முறை உதட்டுச்சாயம் திருத்தப்பட்டு, அதன் பின் ஒரு போட்டோ என எடுத்து, அந்த ஃபோட்டாவை  ‘முகம் மிளிர வை’ எனும் செயலியில்  செலுத்தி ‘ரெட் வெல்வெட் கேக் எனும் அற்புதம் “ என ஃபோட்டோக்களை பதிவேற்றினாள்.       வால்புக்கில் அவள் பதிவேற்றிய ஃபோட்டோக்களுக்கு உடனடியாக லைக்ஸ், பாராட்டு, கமெண்ட் என குவிந்த வண்ணம் இருந்தன.  அவளுடன் வேலை பார்க்கும் மேனசி மட்டும் ‘ரெ வெல்வெட் கேக்கின் நிறம் தேவைக்கு அதிகமான அடர் நிறம்’ என கமெண்ட் செய்திருந்தாள்.   ’அப்படியா… இல்லியே?’ என விக்ரிதா அதற்குப் பதில் சொல்ல, ‘2016 ம் வருடம் ரெட் வெல்வெட் கேக் கலர் எப்படி இருக்க வேண்டும்?’ என்பதைப் பற்றி தான்  எழுதியிருந்த பதிவின் லிங்க்கை கமெண்டாக இட்டாள் மேனசி. ‘கண்டிப்பாக பிறகு வாசிக்கிறேன்’ என பதில் எழுதி, அத்தோடு இரண்டு ஸ்மைலிகளையும் இணைத்து  மேனசியின் கமெண்டுக்கு கீழ் பதிலாய் இட்டாள் விக்ரிதா. ‘போடி வெண்ணை என அர்த்தம் இந்த  ஸ்மைலிக்கு’ என தனக்குள் சொல்லிக் கொண்டாள் விக்ரிதா.      ‘Baking Cake is an Art’ என்கிற மேனசியின் அடுத்த கமெண்ட் எதிர்பாராததாகவும், மிக குறுகிய நேரத்திலும் வந்து விக்ரிதாவை எரிச்சலூட்டியது. தன்னை அறியாமல் ‘So What?’ என பதில் கமெண்ட் இட்டாள் விக்ரிதா. அடுத்து வந்த மேனசியின் Animation Emoji யில் கடுப்பாகி மேனசியை உடனே அன்ஃப்ரெண்ட் செய்தாள்.    அந்த ஓய்வு நாளில், மேனசியின் இந்த செயலைப் பற்றி விரிவான ஆய்வு செய்யவும், இன்டர்நெட் எதிக்ஸ் படி, எதுவரை ஒருவர் பின்னூட்டம் செய்ய வேண்டும், எப்படியெல்லாம் பின்னூட்டம் இட வேண்டும் என்பதைப் பற்றியும் ஒரு டஜன் நட்புக்களோடு தொலைபேசியில் பேசினாள் விக்ரிதா.     இன்னும் பலரோடு உள்பெட்டியிலும் அரட்டை செய்து இதைக் குறித்து பேசினாள். ஒருவரை எப்பொழுது அன்ஃப்ரெண்ட் செய்ய வேண்டும், அதன் சாதக  பாதகம் என்ன போன்றவற்றை பற்றி அறிஞர் பாகு எழுதிய கட்டுரை அன்ஃப்ரெண்ட் எனும் மனித குணத்தை பற்றிய  நீண்ட சரித்திரத்தை சொல்லுவதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அறிஞர் பாகு எழுதிய கட்டுரையில் ம்ரின்சோ நிர்மல் என்பவர் 2017 ஆம் ஆண்டிலே  “அன்ஃப்ரெண்ட் செய்த பொழுதிலே” எனும் பின் நவீன கவிதையை குறித்து சொல்லியிருந்தது விக்ரிதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது        தொடர்ந்து விக்ரிதா பல நண்பர்களோடு இந்த மேனசியை தான் அன்ஃப்ரெண்ட் செய்தது சரிதானா என்பதைப் பற்றி விவாதித்தாள்.  விக்ரிதாவின் கேள்விகளுக்கு, அவர்கள் தங்களுக்கு இதற்கு முன் நடந்த இதுபோன்ற அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டனர். ‘நண்பர்கள்தான் பெரும்பாலும்  இப்படி நம்மை கடுப்படிக்கும் தொனியில் பின்னூட்டம் இடுகிறார்கள்.  இதெல்லாம் வெறும் பொறாமை உணர்வே’ என்கிற மாபெரும் கண்டுபிடிப்பை கண்டு பிடித்தாள் விக்ரிதா. மேலும், மேனசியின் செயலைக் குறித்து விவாதித்த கருத்துக்களைத் தொகுத்து, அதை  நச்சென பதிவாக இட்டாள். பதிவு போட்ட பின் சிறிது நிம்மதி அவளுக்குள் குடியேறியது.  ஆனால், அவள் எதிர்பார்த்த லைக்குகள் இந்த பதிவுக்கு கிடைக்காததால் தூக்கம் வராமல் உலாவிக் கொண்டிருந்தாள். அவளின் ஃபேக் ஐடியில் சென்று அவளே லைக்கிட்டுக் கொண்டாள்.    வெனிலா நிறத்து பீங்கான் கோப்பையில் வெட்டி வைத்து சாப்பிட மறந்த ரெட் வெல்வெட் கேக் போல அவள் முகம் இப்போது சிவந்திருந்தது.   ஆதியில் எழுத்துக்கள் தெய்வீகமாக இருந்தது, அதை வாசகன் தொழுதான். பின்னர் அதுசட்டமாக இருந்தது, அதற்கு வாசகன் அடிமையானான். நேற்று  அது பண்டமாக இருந்தது, அதை நுகர்ந்தான். இன்று அது மிகச் சிறந்த பண்டமாக மாற்றமடைந்திருக்கிறது,  அதை நுகரும் பெரும் நோயாளியாகி இருக்கிறான் வாசகன். 4. ஸ்மார்ட் செக்ஸ்   விக்ரிதாவும் ராகனும் இன்று செக்ஸ் வைத்துக் கொள்ள முடிவு  செய்திருந்தார்கள். சென்ற முறை போல் இல்லாமல் 21ஆம் நூற்றாண்டில்  செக்ஸை மனிதர்கள் எப்படி கொண்டாட்டமாக அனுபவித்தார்களோ, அது போல் அனுபவிக்க வேண்டும் என்பது விக்ரிதாவின் ஆசை. இதற்காக இருவரும்  ஹீலர் கிலிபன்   அறிமுகம் செய்து வைத்த Sex As In Olden Days (SINow) எனும் செயலியை நிறுவியிருந்தார்கள். அது இன்றைய வாழ்க்கை சூழலில் பழைய முறைகளை செய்ய சொல்லித் தரும் செயலி.   சின்நவ்வின் முதல் பயிற்சியாக, இருவரும் முதலில் சந்தித்து காதலில் விழுந்த பொழுது,  ஒருவருக்கு ஒருவர் பறிமாறிக் கொண்ட காதல் உரையாடல்கள், மோகன வரிகள், விரச வாக்கியங்கள், அன்புக் கவிதைகள், காமக் கவிதைகள் போன்றவற்றை பரிமாறிக் கொண்டார்கள். நினைவுகளே மனிதன். அந்த நினைவுகளை துலக்குதல் சின்நவ்வின் முதல் வேலை. வார்த்தைகள்  அவர்களின் உணர்வுகளைத் தூண்டியது. உணர்வுகளை வெளிக்காட்ட எழுதிய அதே வார்த்தைகள், இன்று உணர்வுகளை எழுப்புவதை ரசித்துக்கொண்டாள் விக்ரிதா. அந்த செயலியின் வழிகாட்டல் படி அடுத்த கட்டமாக இருவரும் Fore Play நிலைக்குச் சென்றனர். ஒருவருக்கு ஒருவர் தங்கள் உடலின் மறை பாகங்களை போட்டோ எடுத்து அனுப்பி கிளர்ச்சி அடைந்து கொண்டார்கள். ராகன் தனக்குப் பிடித்த மாதிரியான ஃபோட்டோக்களை அனுப்புமாறு கேட்க, விக்ரிதாவும் அனுப்பிக் கொண்டிருந்தாள். ராகனின் எழுச்சி விக்ரிதாவையும், விக்ரிதாவின் திரட்சி ராகனையும் சூடேற்றியது. விரிந்த உதடோடும், துடிப்போடும் ஆடை அவிழ்த்து, ராகன் தன் அறையை விட்டும், விக்ரிதா மெல்ல கசிந்துருகும் ஊற்றாய் அவள்    அறையை விட்டும் ஹாலுக்கு வந்து புணர்ந்து முடித்து பெருமூச்சு விட்டு எழுந்தனர்.   Rate Our Apps என SINnow மின்னிக் கொண்டிருந்தது. மொபைலை எடுத்து ராகன் அதற்கு ஐந்து நட்சத்திர மதிப்பைக் கொடுத்தான்.   விக்ரிதா ராகனை பார்த்து ‘ஆசம் பேபி, யூ ராக்ட்’ எனச் சொல்லி, ஒரு நட்சத்திர மதிப்பெண்ணை மட்டுமே  அளித்து விட்டு குளியலறைக்குள் சென்று தன் விரலை கழுவி  தயாரானாள். தன்னை  நிறைவு செய்துக்  கொள்ள. 5. ஸ்மார்ட் தூக்கம்   ராகன் தூங்கச் செல்லும் முன், வழக்கம் போல் தன்னை ட்ரீம் கனெக்ட் செய்து கொண்டான். டிரீம் கனெக்ட் செய்து  கொள்ள சிறிய ஸ்மார்ட் டாட்டூ வரைந்து கொண்டால் போதுமானது. ட்ரீம் டாட்டூ இப்பொழுது மிகப் பிரபலமானதொரு முறை. இந்த ட்ரீம் டாட்டூ, முதுகுத் தண்டின் நுனியில் வட்ட வடிவ டாட்டூவாக வரையும் ஒரு நவீன தொழில்நுட்பம்.    இந்த முறை டாட்டூவில், வழக்கத்திற்கு மாறாக மையிற்கு  பதிலாக நுண்ணிய பயோ சிப்களை தோலோடு ஒட்டியிருக்கும் நரம்பின் நுனியோடு இணைத்து விடுவார்கள். இந்த பயோ சிப்களை இயக்கச் செய்தால், அது தூங்கும் பொழுது கூட நம்மை இணையத்தில் இணைத்து வைத்திருக்கச் செய்யும். புரட்சிகரமான இந்தத் தொழில் நுட்பம், இணைய இணைப்பு தொழில் நுட்பத்தின் புதிய சரித்திரம் என வெகுவாக புகழப்பட்டு அமேசிங் கண்டுபிடிப்புக்கான விருதையும் பெற்றுள்ளது.    இந்தக் கண்டுபிடிப்பு வருவதற்கு முன், மக்கள் இணையத்தில் தங்களுக்கு விருப்பமானவர்களோடு இரவெல்லாம் கண்விழித்து இணையத்தில் தொடர்பில் இருந்தார்கள். இதனால், இரவில் அதிக நேரம் கண் விழிக்க ஊக்க மருந்துகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.  அதன் விளைவாக, தொழில் மற்றும் வர்த்தகம் மிகவும் ஸ்தம்பிக்க ஆரம்பித்தது. ‘தி க்ரேட் ரியன்ஸ்’ எனும் தொழில் நுட்ப நிறுவனம், இந்த ட்ரீம் கனெக்ட் முறையை சந்தைப்படுத்திய பிறகு, மக்களால் தூங்கும் போது கூட தங்களுக்கு விருப்பமானவர்களுடன் தொடர்பிலேயே இருக்கமுடிகிறது என்பதால், இது பெரும் வரவேற்பை பெற்றது. அதாவது, நாம் தேர்ந்தெடுக்கும்  குறிப்பிட்ட சிலரோடு  தூங்கும் பொழுதும் தொடர்பில் இருக்க முடியும். இதனால் தூக்கமும் பாதிக்காது. எப்பொழுதும் இணையத்திலேயே இருக்கலாம் என்பது போன்ற காரணங்கள் இதை மேலும் பிரபலமடையச் செய்தது.   ராகன் வழக்கம் போல் அவனுக்குப் பிடித்த நடிகை தாமீயை இன்று தேர்ந்தெடுத்துக் கொண்டான். இப்போதெல்லாம் அவன் தேர்ந்தெடுத்த  நபரைப் பற்றிய செய்தி, அவரைப் பற்றி பகிரும் பதிவுகள், குறுஞ்செய்திகள், ஃபோட்டோக்கள், அவரின் பேட்டிகள் என தூங்கும் பொழுதும் அவனால்  தாமீயை பார்த்துக்கொள்ள முடிகிறது.     ராகன் கண் மூடியதுமே தூங்கிப் போனான். வரப்போகும் புது படத்தில்  தாமீயின் உடை அலங்காரம் எப்படி இருக்க வேண்டும் என்கிற இணைய உரையாடலில் கலந்துகொண்டே தூங்கிக் கொண்டிருந்தான். தாமீயின் அடுத்த படத்தின் நாயகன் முத்திரை நடிகர் மூத்ரன் என்றதும், ராகன் மகிழ்ச்சி அடைந்தான்  வி்க்ரிதாவின் நினைவும் அவனுக்கு  வந்தது. தூக்கத்திலேயே விக்ரிதாவுக்கு மெசேஜ் தட்டிவிட்டான். அது பார்க்கப்படாமலேயே  இருந்தது. விக்ரிதா   டிரீம் கனெக்டில் தன்னை ப்ளாக் செய்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.   கட்டிலில் அவனுக்கு அருகில் விக்ரிதா தனக்குப் பிடித்த ஆன்மீக அறிஞர் ஸ்ரீஜாபாவின் அமெரிக்க  உரையை கேட்டுக் கொண்டும், அதைக் குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டும் தூங்கிக் கொண்டிருந்தாள்.  இருவரும் ஒரே கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் விரல்கள் மட்டும்  க்ளிக்,க்ளிக் , க்ளிக் டபுள் க்ளிக் , க்ளிக்  டச், டிராக், டச், டிராக்  ஜூம்  என துடித்துக் கொண்டே இருந்தது.  அவர்களை தேடி வந்த கனவு, புக இடமில்லாமல் ஆன்லைனில் அலைந்து கொண்டே  இருந்தது. 6. ஸ்மார்ட் வாசிப்பு   விக்ரிதா வழக்கம் போல், தான்  வாசிக்கும்  நபரான ஃப்க்ஃபூலின்   வால்நூல் பக்கத்திற்கு செல்ல முயற்சி செய்தாள். அந்தப் பக்கம் அவள் மொபைலில் திறக்க முடியாமல் வெற்றுத் திரையை காண்பித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக ஃப்க்ஃபூலின் வால்நூல் பக்கத்தை அவள் வாசித்து வருகிறாள். சுவாரஸ்யமான தகவல்களும், அரசியல் நையாண்டியுமாய் அங்கு எழுதப்படும் குட்டிக் குட்டிப் பதிவுகளுக்கு  ரசிகை அவள். அவளது டைம் லைனில் எப்பொழுதும் முதல் இடத்தை  பிடிக்கக் கூடிய எழுத்துக்கள் அவை. ‘யார் இந்த ஐடி?’ என யாருக்கும் தெரியாது. ஆனால், ‘அது ஓர் ஆண்’ என்பது மட்டுமே எல்லோருக்கும் தெரியும். மீண்டும் மீண்டும் அந்த ஐடியைத் தேடி, அதை திறக்க முயற்சி செய்யும் போதெல்லாம் வெறும் திரையை காட்டிக்கொண்டு, ஸ்கிரீனில் ‘Searching’ என்று வந்து அவளை எரிச்சல் படுத்தியது.   விக்ரிதா இன்னும் அவளது நட்பு பட்டியலில் இருக்கும் மற்றவர்களின் பக்கத்தை திறந்து பார்க்க முயற்சி செய்தாள். எளிதாக பக்கங்கள் திறந்தன. அவர்கள் எழுதியதை வாசிக்கவும்  முடிந்தது. இருந்தும் எதையும் வாசிக்க அவளுக்கு விருப்பமில்லை. மீண்டும் ஒரு முறை ஃப்க்ஃபூலின் ஐடியை ஓப்பன் செய்ய முயற்சி செய்தாள்.  ‘கடவுளே, கடவுளே... ஓப்பன் ப்ளீஸ்’ என மனதுக்குள் சின்னதாக தனக்கு விருப்பமான கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள். வழக்கம் போல வேண்டுதல் நிறைவேறாமல் போனதும் ராகனுக்கு மெசேஜ் அனுப்பினாள். “டேய், மாக்கா, ஃப்க்ஃபூலின்  ஐடி உனக்கு ஓப்பன் ஆகுதான்னு பார்த்து சொல்லு?"  "ஏன்?” என பதில் அனுப்பினான் ராகன். “ஃப்க்ஃபூலின்  வால்நூல் பக்கத்தை திறக்க முடியல. ஏன்... ஏன் சொல்லு மாக்கா?” என பதில் மெசேஜ் அனுப்பினாள்.   மொகவா கட்டையை சொறியும் இமோஜியோடு ராகனின் பதில் வந்தது.   "எனக்கு தெரியனும்.மாக்கா...!” என இரு கோப இமோஜி சேர்த்து பதில் அனுப்பினாள் விக்ரிதா.   "வெயிட்" என ராகனிடம் இருந்து பதில் வந்தது. "பாத்தியா?” “என்னாச்சி?” “உனக்கு ஓப்பன் ஆகுதா?” போன்ற தொடர் மெசேஜ்களுக்கு பிறகு, “ஆமாம்... எனக்கு திறக்கிறதே” என்றான் ராகன்.   ராகனது பதில்  அவளது மொபைலில் தோன்றியதும், ‘K’ என்கிற ஒற்றை வார்த்தையை பதிலாய் அனுப்பி, சிறிது நேரம் அமைதியாக இருக்க முயன்றாள் விக்ரிதா.     "அப்ப, எனக்கு மட்டும் ஓப்பன் ஆகல! ஷிட், ஏன்? ஏன்? ஏன்?"...இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல் அடுத்த வேலை செய்ய மனமில்லாமல்  இருந்த போது, அவளது தோழி பவியிடமிருந்து,  "அவசமாக என்னை அழைக்க  முடியுமா?" என மெசேஜ் வந்தது.   ‘ஷிட்’ என கோவத்தில் ‘ராகூல்’ செயலிக்கு சென்று,  ‘வால்நூல் ஐடியின் பக்கம் ‘தனக்கு’ என டைப் செய்ததும், ‘ராகூல்’ செயலி அதற்கு அடுத்து என்ன வார்த்தைகள் வரும் என யூகித்து ‘வால் நூல் ஐடி ‘தனக்கு மட்டும் திறக்காத  காரணம் என்ன?’ என  அதுவாக நிரப்பியது.  தன்னைப் போல் பலரும் இதை தேடியிருப்பார்கள், தேடிக் கொண்டிருக்கிறார்கள் போல என நினைத்துக் கொண்டே ‘தேடு’ என்கிற கட்டளையை இட்டு பதிலுக்காய் காத்திருந்தாள் விக்ரிதா.   ராகூல் செயலி  அவள் கேட்ட கேள்விக்கான பதிலைத் தேடி கிட்டத்தட்ட ஆயிரம் இணைய பக்கங்களை  அவள் முன் அள்ளிக் கொட்டியது. ஆயிரம் பக்கங்களை என்ன செய்ய என தெரியாமல் விழி பிதுங்கி நின்றாள் விக்ரிதா. ராகூல் செயலி தந்த முதல் இணைப்பை சொடுக்கி உள்ளே சென்றாள். அது பாபா கிரிஐசக் ஹூசைனின் இணைய தளம். அதில் ‘வால்நூலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு’ என்கிற கட்டுரை இருந்தது. அதை வாசிக்க ஆரம்பித்தாள்...வால்நூல் பிரச்சனையிலிருந்து விடுபட தன் வால்நூல் பக்கத்தை லைக் செய்யுமாறு கேட்டதற்கு இணங்க பாபா  கிரிஐசக் ஹூசைனின் வால் நூல் பக்கத்தை லைக் செய்தாள். உடனே அவளுக்கு இமெயில் வந்தது, அதில் கிரிஐசக் ஹூசைனின் புகைப்படங்கள், முகவரிகள், இன்னும் பல இணைப்புக்கள் இருந்தன, வால்நூல் பிரச்சனைகைகளுக்கு தீர்வு என்கிற இணைப்பை சொடுக்கினாள் விக்ரிதா.   கிரிஐசக் ஹூசைன் சொன்ன தீர்வை படிக்க ஆரம்பிக்கும் பொழுது, இவள் பாபா கிரிஐசக் ஹூசைனின் பக்கத்தை லைக் செய்ததை பார்த்து புதியதாக நாற்பது பேர் விக்ரிதாவிடம் நட்பு விருப்பம் தெரிவித்ததாக மெசேஜ் வந்தது. இன்னும் முப்பது பேர் விக்ரிதாவை டிஸ் லைக் செய்தார்கள். ‘அய்யோ, என்ன நடக்கிறது!’ என தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த வேளையில் மீண்டும் ‘பவி காலிங் யூ’ என பாட்டு பாடிய மொபைலை "இவ வேற" என எரிச்சலோடு கட் செய்தாள்  விக்ரிதா. உடனடியாக தன்னுடைய தோழி நால்வருக்கு ஃபோனை போட்டு விஷயத்தை தெரிவித்தாள். தனக்கு பிடித்த ஃப்க்ஃபூலின்     ‘வால் நூல் பக்கம்  விக்ரிதாவுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?’ என்பதைப் பற்றி பேசும்போது நால்வரும் வருத்தம் அடைந்தார்கள். அப்படி அவர்கள் வருத்தம் அடைந்தது விக்ரிதாவுக்கு பிடிக்கவும் செய்திருந்தது. இவளின் போன் நம்பரை வால்நூலிலிருந்து எடுத்து கிரிஐசக் ஹூசைனின் ஆஸ்ரமத்திலிருந்து அவளின் போனுக்கு மெசேஜ் வந்தது. கிரிஐசக் ஹூசைனின் புதிய திட்டமான நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு    ஆதரவாக மிஸ்ட்  கால் கொடுக்கவும் என எழுதியிருந்தது விக்ரிதாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. எதற்கும் உதவி செய்வோமென நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு மிஸ்ட்  கால் கொடுத்தாள் விக்ரிதா. நதி மெல்ல இணைந்து கொண்டே இருக்கிறது... காத்திருக்கவும் என  பதில் மெசேஜ் வந்ததில் மகிழ்ந்தாள் விக்ரிதா.... அப்பொழுது மீண்டும் "Can I call you vikritha?" என தன் தோழி  பவியின் மெசேஜை  பார்த்து இன்னும் எரிச்சலாய் பவியை அடுத்த 24 மணி நேரத்திற்கு ப்ளாக் செய்தாள்  விக்ரிதா. அந்த நேரத்தில்தான் ஒருவேளை ஃபக்ஃபூல்  தன்னை ப்ளாக் செய்திருக்கலாமோ என்கிற சந்தேகம் வந்தது....   ‘எதையாவது போட்டு உடைக்கலாமா? இல்லை, இதைப் பற்றி வால்நூலில் எழுதலாமா... என்ன செய்யலாம்?. எப்படி என்னை அவன் ப்ளாக் செய்யலாம்?’ போன்ற கேள்விகள் அவள் மனதை குடைந்துக் கொண்டே இருந்தது.     ‘Why the fuck he blocked me?’ என நடந்த விபரத்தைச்  சொல்லி அவள் ஃப்ரெண்ட் தகிலாவிற்கு ஒரு மெசேஜ் அனுப்பினாள் விக்ரித்தா. ‘வெயிட்’ என பதில் வந்த அடுத்த நிமிடம் அவள் மொபைலுக்கு தகிலாவிடமிருந்து அழைப்பு வந்தது. விக்ரிதாவும் தகிலாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட  செல்ஃபி படத்தோடு ‘தகிலா இஸ் காலிங்’ என திரையில் தோன்றியது.    "ஏன்டி என்னை அவன் ப்ளாக் செஞ்சான்?"   "இருக்காது டி.... நீ எதாச்சும் அவனை பற்றி  தப்பா எழுதினியா..,?"   "இல்லையே... டாமிட்." "கொஞ்சம் யோசித்து பார்." "இல்ல." அவனுக்கு பிடிக்காதவர்களின் பதிவுக்கு லைக் போட்டியா? இல்லை   அவனுக்கு பிடித்த நடிகர் இணைய தளபதி பற்றி தப்பா ஏதாச்சும் ஷேர் செய்தியா? இல்லை. அவனுக்கு பிடிக்காத ஃப்ர்ண்டான விக்ஸ்லினின் நண்பனான மார்க்கின் கோ வோர் சில்ஸ்க்கு லைக் போட்டியா? இல்லையே...   "கமெண்ட் எதாவது தப்பா போட்டியா..?"   "இல்ல... மே பி"....நெற்றியை சுருக்கி யோசித்தாள் விக்ரிதா.   "என்ன எழுதின, விக்?"   "ஆஹான்.. அப்படின்னு ஒரு கமெண்ட் போட்டேன்".   "ஆஹான்" அதான் உன்னை ப்ளாக் செஞ்சிருக்கான் அந்த ராஸ்கல். இரு டீ,  நானும் அவனை ப்ளாக் செய்யறேன். ஒரு தடவை அவன் என் பதிவில் கூட இப்பிடித்தான் ஏதோ sarcasticஆ கமெண்ட் செஞ்சான்..." என்று தகிலாவும் தன் பங்கிற்கு ஆத்திரத்தைக் காட்டினாள்.   "ஓகே... தேங்ஸ் டீ. இப்பதான் கொஞ்சம் ரிலீஃபா இருக்கு" என ஃபோனை வைத்து விட்டு தகிலாவின் எல்லா பதிவுகளுக்கும் லைக் போட்டாள் விக்ரிதா. ஆனாலும், அந்த பெயர் தெரியாத, தனக்கு எந்த விதத் தொடர்பும் இல்லாத ஃப்க்ஃபூல் தன்னை அசிங்கப்படுத்திவிட்டதாக உள்ளுக்குள் பொங்கிக் கொண்டே இருந்தாள். தகிலாவும், விக்ரிதா லைக் செய்த கிரிஐசக் ஹூசைனின் பக்கத்தை லைக் செய்தாள், தொடர்ந்து நதிகள் இணைய மிஸ்ட்  காலும் கொடுத்தாள்.   யார் யாரோடெல்லாமோ தொடர்ந்து பேசினாள் விக்ரிதா. இரவில், அமெரிக்க தோழர்களிடம் அழுதாள். எல்லோரும் விக்ரிதாவை அந்த நபர்  ப்ளாக் செய்தது தவறென சொல்லியது, அவளுக்கு ஆறுதலாக இருந்தது.   விக்ரிதா ப்ளாக் செய்யப்பட்டதைக் குறித்து, அவளுடைய கல்லூரி, பள்ளி, தெரு மற்றும் குடும்ப வாட்ஸ்அப் க்ரூப்களிலும்  விவாதிக்கப்பட்டது.   அதில் ஒரு க்ரூப்பில், ‘இப்படி வால்நூலில் ப்ளாக் செய்வதால் துவளும் மனங்களின் ஆறுதலுக்காக, பல ஆண்டுகளுக்கு முன்பே யோசித்து பாடல் எழுதிய, தமிழ் கவிஞர் பற்றி நம்மில் எத்தினி பேருக்கு தெரியும்?’ என்கிற பாடலின் லிங்க் அனுப்பப்பட்டது. வால்நூல் என ஒரு விஷயம்  நூறாண்டுகள் கழித்து வருமென யூகித்து எழுதிய தமிழ் கவியை நினைத்து பார்ப்போமென நீண்ட அந்த பதிவிலிருந்த லிங்கை மட்டும் சொடுக்கி பாடலை கேட்டாள் விக்ரிதா.   நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதியில்லை தேவியில்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதியில்லை தேவியில்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா     என சோகக் குரலில் பாடிய பாடலைக் கேட்டு கண்ணீர் விட்டழுதாள் விக்ரிதா. அழுது அழுது துவண்டு அப்படியே தூங்கிப் போனாள்.     பவியை விக்ரிதா ப்ளாக் செய்து 24 மணி நேரம்  முடிந்திருந்தது. பவி காலிங் என மொபைல் அமைதியாக உருமிக் கொண்டிருக்க, விக்ரிதா மன தளர்ச்சியில் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள்.  நதிகளும் மெல்ல மெல்ல இணைய கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தன, நதிகள் இன்னும் ஸ்மார்ட் ஆகவில்லை. அதுவே இணைய கஷ்டப்படுகிறது என பொதுவாக பேசிக் கொண்டிருந்தார்கள். 7. ஸ்மார்ட் உறவுகள்   ராகனும் விக்ரிதாவும் கடற்கரை டீ கடையில்  அமர்ந்திருந்தார்கள். அலை கடல் ஒசை, கட்டுமரங்கள், கடல் பறவைகள், கடற்கரை மணல், தூரத்தில் மெல்ல மெல்ல சாய்ந்து கொண்டிருக்கும் சூரியன் என அன்றைய மாலைப் பொழுது ரம்மியமாக இருந்தது.     "விக், இந்த ஜித்துங்கிற லேடி யாரு? என் எல்லா போஸ்டுக்கும்,  ஃபோட்டோவுக்கும் லைக் போட்டுக்கிட்டே  இருக்கே?" என்று அவளிடம் கேட்டான் ராகன்.    "அவுங்க ஒரு டான்சர். உனக்கு தெரியாதா ராகன்?" என்றாள் விக்ரிதா.   "அது தெரியும். பட், அவங்களுக்கும் விகில்க்கும் என்ன தொடர்பு? உன் ப்ரெண்ட் தானே விக்?” சடக்கென்று கேட்டான்.   "ஓ, ஆமா. ஆனா, இப்ப இல்லை. அந்த விகிலும், இந்த ஜித்தும் ஓவரா குழஞ்சி குழஞ்சி, மாத்தி மாத்தி வால்நூல்ல சொறிஞ்சிக்குவாங்க..."   "ஆமா விக்ரிதா, அதனால தான் உங்கிட்ட கேட்டேன்." "ராகன், இந்த விகிலும் மாசியும்தான் மொதல்ல லவ்வர்ஸ். மாசியும்  ஜித்தும் ப்ரெண்ட்ஸோ, க்ளாஸ்மேட்டோ... ஏதோ சம்திங். மொதல்ல அவங்க நல்ல ஃப்ரெண்ட்ஸா தான் இருந்தாங்க. ஆனா, விகிலும் நானும் ப்ரெண்ட்ஸா பழக ஆரம்பிச்சது மாசிக்கு பிடிக்கல போல. அதனால, அதை விகில் என்கிட்ட ஓப்பனா சொல்லிட்டே பிரிஞ்சான். He is a gentle man தெரியுமா?"  என்றவளை பதிலேதும் பேசாமல் ராகன் பார்க்க, விக்ரிதா மீண்டும் தொடர்ந்தாள்.   “அப்புறம், விகில் ஜித்தோட டான்ஸ் போட்டோக்களை அடிக்கடி  பகிர ஆரம்பிச்சதும்       மாசிக்கு பத்திக்கிச்சி. ஆனா, விகில் இந்த முறை மாசிக்கு அடிபணியாம தொடர்ந்து ஜித்தோடு பழகிட்டு வந்தான்.     இதனால மாசி கோவமா ஒரு பதிவெழுதிட்டு   ரெண்டு பேரையும் அன்ஃப்ரெண்ட் செஞ்சிட்டாள். இப்ப மாசியும் கிர்லும் தான் ஃப்ரெண்ட்ஸ். இவங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ். உனக்கு கிர்ல் தெரியுமா? அவன் எனக்கு அடிக்கடி லைக் போடுற பார்ஜோட ஃப்ரெண்ட். பார்ஜோட ஃப்ரெண்ட் விஜிலாவும் மாசியும் வாட்ஸ்அப் ஃப்ரெண்ட்ஸ். ஆனா, விஜிலாவும்  ஜித்தும் வால்நூல் ஃப்ரெண்ட்ஸ். ஜித்துவோட தங்கை சைத்து, விகிலின் கேம் மேட். சைத்துக்கும் எனக்கும் ஆகாது. she is so mean. ஜித்தும் மாசியின் ப்ரதர் வர்ஷூம் யோகா ஃப்ரெண்ட்ஸ். வர்ஷும் விகிலும் ராகூல்  ப்ளஸ் ஃப்ரெண்ட்ஸ். ஜித்துவோட பழைய லவ்வர் தான் பார்ஜி. பார்ஜியும் மாசியும் பேலியோ க்ரூப் ஃப்ரெண்ட்ஸ். அதே பேலியோ க்ரூப்புல தான்  நீயும் இருக்கே ராகன்" என்றாள்  மூச்சுவிடாமல்.   "ஓ, குட் குட். அப்ப விகிலின் லவ்வரா டான்சர் ஜித்து?” சந்தேகத்தோடு கேட்டான் ராகன்.   "அப்பிடி சொல்ல முடியாது ராகன். ஏன்னா, ஜித்து விகில் கூட மட்டுமில்ல, ராடன் கூடயும் க்ளோஸ்.  ராடனும் ஜித்தும் வைபர் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க. ராடனும் மாசியும் ஹெல்த்தி லைஃப் க்ரூப் ஃப்ரெண்ட்ஸ். விகில் நல்ல டைப். விகில் இருந்த இலக்கிய க்ரூப்புக்கு எதிர் க்ரூப் இந்த ராடன் க்ரூப்.  இப்ப விகில் ரெண்டு இலக்கிய க்ரூப்பிலும் இருக்கான்" என்றாள் காற்றில் அலைபாய்ந்த தலை முடியைக் கோதியபடி.   "சரி புரிஞ்சது . இந்த மாலை கடற்கரை போர் அடிக்குது விக். அடுத்த ஹாலுக்கு போலாம் வா" என அந்த டீ கடையின்  அடுத்த ஹாலான அதிகாலை கடற்கரைக்கு  இருவரும்  சென்றார்கள். ராகனுக்கு அந்த அதிகாலை கடற்கரை சூழல் மிகவும் பிடித்து விட்டது. ஆளுக்கொரு ஹெட் போன் மாட்டிக்கொண்டு இருவரும் ஜாகிங் செல்ல ஆரம்பித்தார்கள். இதுவரை எழுதியதை எடிட்டருக்கு அனுப்பி வைத்தேன். படித்துப் பார்த்துவிட்டு ராகனுக்கும்  விக்ரிதாவுக்கும் என்ன தொடர்பு?, என்ன உறவு? என்று கதையில் சொல்ல வேண்டும். எனவே, அவர்களின் உறவு தொட்டு கதை போனால்தான் நன்றாய் இருக்கும் என திருப்பி அனுப்பிவிட்டார்.    மாலை கடற்கரை அலுத்து விட்டதென காலை கடற்கரைக்கு செல்ல முடிகிற இந்தக் காலத்தில்  யார் யாருக்கு, என்ன என்ன உறவென  தீர்மானிக்க முடியாமல் கதையை தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். 8. ஸ்மார்ட் தனிமை   விக்ரிதா அதிகாலையிலே ராகனின் குட்மார்னிங் மெசேஜூக்கு பதில் குட்மார்னிங் சொல்லிவிட்டு “பீலிங் லோன்லி. ஏதோ தனிமையா உணர்கிறேன்”  என்ற மெசேஜையும் சேர்த்து அனுப்பி விட்டு, டிவி முன் வந்து அமர்ந்தாள். விக்ரிதாவின் வருகையை உணர்ந்து டிவி தானாகவே தன்னை இயக்கிக்கொண்டது.   விக்ரிதாவின் பதிலை பார்த்ததும் ராகன் கலங்கி, "நானும் தான் விக்.. நானும் ரொம்ப தனிமையா இருப்பது போல ஃபீல் பண்றேன்" என பதில் அனுப்பினான். ராகனின் பதில் விக்ரிதாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. "ஏன் ராகன்?" என பதில் அனுப்பி, அடுத்த மெசேஜாக "ஏன், நீ ஒரு ஓட்டப்பந்தய வீரன் தானே. நீ ஓடினாலே எத்தனை க்ளாப்ஸ் உனக்கு கிடைக்குது" என பதில் மெசேஜ் எழுதி அனுப்பினாள்.   ராகன் : “யெஸ், ஆனா போரிங் விக். உன் சாட் மேட்டேல்லாம் எங்கே விக்? சாட் பண்ணு. நாலு பேர் கூட சாட் செஞ்சா மனசு லேசாகிடும்.”   விக்ரிதா : “சாட்டிங் செஞ்சிகிட்டேதான் இருக்கேன். ஆனாலும், தனிமையா இருக்கு. நீ ஏன் ஆன்லைன் கவிதை போட்டியில் கலந்துக்கக் கூடாது?”    ராகன் : “இல்ல, கவிதை போட்டி போரிங். நீ ஏன் வால்நூலில் எழுதல. வால்நூல் ஒரு தனிமை விரட்டின்னு லக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் கண்டு பிடிச்சிருக்கு. அதைப் பற்றி கூட மிஸ்ரா எனும் தமிழ் எழுத்தாளர் சமீபத்தில் பேசியிருக்கிறார். மேலும், வால்நூல் தமிழர்களின் தமிழ்ச்சங்க மரபின் நீட்சியென கூட தமிழ் அறிஞர்கள் சொல்லிருக்கிறார்களே?”     விக்ரிதா : “ஓ, ரியலி. அப்படினா கரெக்ட்டா தான் இருக்கும். இன்னிக்கி வால்நூல்  போர். அதுவும் சன்டே அவ்வளவு ஆக்டிவா இருக்காது. ரா..  நீ டிவிட்டர்ல ஏன் ஆக்ட்டிவா இல்லை. நீ ஆக்ட்டிவா இருந்தா தனிமையை உணர மாட்டே. நீ எழுது, உன் ட்வீட்கள் நல்லாருக்கும்.   ப்ளீஸ், நீ தனிமையா உணர்றது எனக்கு கஷ்டமா இருக்கு.”   ராகன் : “தேங்ஸ் விக். எனக்கும் நீ தனிமையா இருக்கிறது கஷ்டமா இருக்கு. கூகுள்ல தேடினேன். கேக் செய்தல், பிஸ்கட் செய்தல்னு  எதுலயாவது ஆக்ட்டிவா இருந்தா தனிமையை விரட்டலாம்னு படிச்சேன், நீ ஏன் ட்ரை செய்யக் கூடாது?”   விக்ரிதா : “இல்ல ரா, எனக்கு கேக் செய்றது பிடிக்கல. நீ ஏன் mine craft கேம் விளையாடக்கூடாது. ட்ரை. The whole world is addicted to it.”    ராகன்: “எனக்கு அந்த கேம் பிடிக்கல விக். ரொம்ப கிட்டிஷ்ஷா இருக்கு. குட்டி பசங்க கேம் அது. நீ ஏன் ஏதாவது ஆன்லைன் ஆக்ட்டிவிசத்தில் ஈடுபாட்டோடு இருக்கக் கூடாது?”    விக்ரிதா: “நீ எந்த  ஆக்ட்டிவிசத்த சொல்ற?”   ராகன் : “பொலிட்டிக்கல் ஆக்ட்டிவிட்டீஸ், இயற்கை பாதுகாப்பு, பசு வதை, சிறு குழந்தைகள் பாதுகாப்பு, முதியோர் நலம், இலக்கியம், மார்க்ஸியம்னு நிறைய இருக்கே விக்.”  வெளியில் மழை பெய்கிறதென இருவர் மொபைலிலும் செய்தி  வந்தது.  இருவரும் அந்த செய்தியை லைக் செய்தார்கள். ராகன் ஷேர் செய்தான். விக்ரிதாவுக்கும் அனுப்பினான்.    சாட் மீண்டும் தொடர்ந்தது.    விக்ரிதா: “ரா... மழை பெய்கிறதுன்னு எனக்கும் மெசேஜ் வந்திருக்கு. நீ ஏன் எனக்கு அனுப்பினே?”   ராகன் : “யெஸ், அந்த செய்தி வானிலை நிலவரம் குறித்த செய்திக் குறிப்பு. எல்லோருக்கும் வந்திருக்கும் தானே. சாரி.”   விக்ரிதா : “டேய், அது ஸ்மார்ட் செய்தி.. எல்லாருக்கும் வராது.”   ராகன் : “அய்யோ, விக் குழப்பாதே, எல்லாருக்கும் வராதுன்னு சொல்ற. அப்புறம் உனக்கு எப்படி வந்தது?”   விக்ரிதா : “நாம ரெண்டு பேரும் ஒரே ஊர்ல, ஒரே ஏரியால தான இருக்கோம்!” ராகன்: “ஆமா…”   விக்ரிதா: “அதான் நம்ம ரெண்டு பேருக்கும் வந்திருக்கு. எனக்கும்  வந்திருக்கு. அது ஸ்மார்ட் மெசேஜ் . நம்ம  ஸ்மார்ட் போன்ல இருக்குற  GPS மூலமா நாம இருக்குற இடம் தெரிஞ்சி அனுப்புற ஸ்மார்ட் மெசேஜ் அது. ஒருவேளை நீ திருநெல்வேலியில இருந்திருந்தா, இந்த மெசேஜ்  உனக்கு வந்திருக்காது.”    "இட்ஸ் சோ கூல் யா" என  பதில் அனுப்பிவிட்டு விக்ரிதாவுக்கு ஏற்ற ஆக்ட்டிவிச பக்கங்கள் சிலவற்றின் லிங்கை அவளுக்கு அனுப்பி வைத்தான் ராகன்.   விக்ரிதா: “நல்ல ஐடியா. தேங்க் யூ. நான் ட்ரை செய்றேன். நீயும் ஏதாவது ஆன்லைன் டிஸ்கொத்தேக்கு போ. இப்படி தனிமையில கிடந்து   உழலாதே!”   ராகன் : “யெஸ், அங்க போய் ரொம்ப நாள் ஆயிடுச்சு. ஒரு காலத்துல டிஸ்கொத்தேயே கதினு கெடந்தேன்.”   விக்ரிதா : “யெஸ்... எதாச்சும் செஞ்சிகிட்டே இருக்கனும். நான் காளான் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு க்ரூப்பில் சேர்ந்து போராடப் போறேன். ஐ லவ் மஷ்ரூம்ஸ். பழைய நம் பாரம்பரிய காளான்களெல்லாம்  இப்ப இல்லாம செஞ்சிட்டாங்க தெரியுமா... காளான் குறித்து காளான் புலவர் பாடிய இலக்கியங்களையெல்லாம் நாம் தொலைத்து விட்டோம்.”   ராகன் : “குட் குட்...”   விக்ரிதா : “ஓகே. பை. மிஸ் யூ.”   ராகன் : “மிஸ் யூ டூ. Don't feel lonely.”   ராகன் ஷேர் செய்த மழை செய்தியை ரிக் ரீ ஷேர் செய்தான், தாரிஷ் தன் ஃப்ரெண்ட்ஸ்க்கு ஃபார்வேர்ட் செய்தான். அந்த ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டில் ராகனும் இருந்ததால் ராகனுக்கும் அந்த மேசேஜ் மீண்டும் வந்தது. அந்தச் செய்தியைப் பார்த்ததும் ‘We are so connected’ என்று பூரித்தபடி மிகவும்  சந்தோஷமாகிப் போனான் ராகன்.        எங்கிருந்து வருகிறதென்றே தெரியாமல் ஊர், பெயர், முகவரி  என எதுவும் இல்லாமல் ராகனுக்கும் விக்ரிதாவுக்கும் அடிக்கடி சிறு கதைகள் ஈமெயிலில் வருவதுண்டு. அந்தக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பெயர் விக்ரிதா, ராகனென்றே இருக்கும்.  யாரோ வேலை வெட்டி இல்லாத Smart  Anti National எழுதிய கதைக்கு வாசிக்கிறவர்களின் பெயரே கதாபாத்திர பெயராக வரும் படி ப்ரோகிராம் செய்து அனுப்புகிறான் என இருவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, அதை வாசிப்பதுமில்லை.  அதேப் போல் இன்று ஸ்மார்ட் தனிமை எனும் கதை வந்தது.   வழக்கம் போல இருவரும் ஸ்மார்ட் ஷிட் என டிலிட் செய்தார்கள். 9. ஸ்மார்ட் குளியல்   ராகன் காலையில் எழுந்ததும் தன் மொபைலை எடுத்து, வர வேண்டியவர்களிடமிருந்து குட்மார்னிங் செய்தி வந்து விட்டதை அறிந்ததும், தனது அன்றைய நாளுக்கான உணவு மற்றும்  ஆரோக்கிய திட்டம் என்ன என்று  தெரிந்து கொள்ள ஸ்மார்ட் ஹெல்த் செயலியைத் திறந்தான் .       அவன் எத்தனை மணி நேரம் தூங்கினான்,  அவன் மூளை தூங்கும் பொழுது ட்ரீம் கனெக்ட்டால் எவ்வளவு மகிழ்வாக இருந்தது என்கிற விபரங்களையெல்லாம் துல்லியமாகக்  கணக்கிட்டு, அந்த செயலி அவன் மொபைலில் காட்டியது. மேலும், அவன் மூளையின்   இருள் பகுதியின் செயல்பாடு இரவில் இல்லை என்பதால் நல்ல தூக்கத்தை உறுதி செய்கிறது என அறிவித்தது.         ஸ்மார்ட் ஹெல்த் எனும் செயலி ட்ரீம் கனெக்ட்டின் துணைச்  செயலி, தூங்கும் பொழுது ராகனின் செயல்பாடுகளை கண்காணித்து, காலையில் அவன் மொபைலில் அறிக்கையை அனுப்பி வைக்கும். குறிப்பாக,  அவன் மூளையின் இருள் பகுதி  என அழைப்படுகிற  உணர்வுகளை (emotional) மேலாண்மை செய்யும் பகுதியில், எந்த வித செயல்பாடுகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ளும். மூளையின் தேவையில்லாத அந்தப் பகுதியின் செயல்பாடு, மனிதனின் திறன் மற்றும் செயல்பாடுகளைக் குறைக்கும் என உறுதியாக நம்பப்பட்டது. அது மனிதனுக்கு தேவையில்லாத கற்பனை செய்ய வைக்கிறதென்பதால் மூளையின் மிக மோசமான இடமென உறுதியாக நம்பினார்கள் மருத்துவர்கள். பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இந்த இருள் பகுதியின் செயல்பாட்டை கண்காணிக்கும்  இந்த ஸ்மார்ட் “ஹெல்த் செயலி” உருவாக்கம் மனித வரலாற்றின் திருப்பு முனை என சொல்லப்பட்டது. ராகன் ஒரு ஸ்மார்ட் லீக் ஓட்டப் பந்தய வீரன். எனவே, அவனின் உணவு, உடற்பயிற்சி போன்றவற்றைப் பற்றிய அறிவுறுத்தல்களை தினந்தோறும் இந்த ஸ்மார்ட் ஹெல்த் செயலி தந்துவிடும். அதை  ராகன் அப்படியே பின்பற்றினால் போதும்.     இன்று அவன் செய்ய வேண்டிய செயல்கள் எவையெவை என்பதை பார்த்துவிட்டு, முதல் காரியமாக  பல் விளக்கினான். ‘பல் விளக்கும் பொழுது ஏதாவது இரத்த நிற திட்டுகள் இருந்ததா?’ என மீண்டும், மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தது அந்தச் செயலி. "இல்லை" என பதில் அளித்தான் ராகன்.  அடுத்து, அவன் காலைக் கடனை முடித்தான். மலம் டாய்லட்டில் மிதக்கிறதா?...... அமிழ்கிறதா? என்கிற விபரத்தை கேட்டுக் கொண்டே இருந்தது  ஸ்மார்ட் ஹெல்த் செயலி. "அமிழ்கிறது" என பதில் அனுப்பினான் ராகன்.    அடுத்து, ராகனுக்கு குளிக்கும் பொழுது இன்று ஷாம்பூ போடலாமா? வேண்டாமா? என குட்டியாக சந்தேகம் வந்தது. என்றாலும், இன்று ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும் என்பதே அவனது ஆசையாகவும் இருந்தது. ஆனாலும், செயலியை கேட்காமல் எதுவும் முடிவு செய்வதில்லை என்பதால், குளியலறையில் மாட்டியிருந்த தன் மொபைலை எடுத்து ஹெல்த் ப்ளஸ்க்கு தன் கேள்வியை அனுப்பிவிட்டு, பதில் வரும் வரை காத்திருந்தான். ஐந்து நிமிடம் ஆன பிறகும் பதில் வராததால் என்ன செய்வதென தெரியாமல் குளியலை பாதியிலே நிறுத்தி விட்டு குளியலறையை விட்டு வெளியே வந்தான்.   ராகன் மீண்டும் ஒரு முறை ஷாம்பூ போடலாமா என தன் கேள்வியை  அனுப்பினான். பதில் வரும் வரை விக்ரிதாவுடன் சாட் செய்தான். வால்நூலில் தன் இலக்கிய வட்டத்தில் சென்று கொண்டிருந்த ஒரு விவாதத்தில் அவனின் நேர்மையான, தெளிவான கருத்தை முன் நிறுத்தினான். அந்த வட்டத்தில் அவனது  மரியாதைக்குரிய இலக்கிய ஜாம்பவான் வீதரி அவனது கருத்துக்களுக்கு லைக் போட்டதை ஸ்க்ரின் ஷாட் எடுத்து அதை ஒரு தனிப் பதிவாக இட்டான்.    அடுத்து சிறிது நேரம் கேம் ஆடினான். கேம் ஆடும் பொழுது அவனது கேம் சிஸ்டத்தில் ‘ஆர்டர் ஃபுட் ஆன்லைன்’ என மின்னியது. விளையாடிக் கொண்டே ஒரு ப்ளேட் டயட் பிரியாணியை ஆர்டர் செய்தான். விளையாட்டு சுறுசுறுப்பாக சென்று கொண்டிருக்கும் பொழுது, அவனது மொபைலில் டயட்  பிரியாணி வாசலில் காத்திருப்பதாக மெசேஜ் வந்தது. அதற்கான பணத்தை உடனடியாக அந்த மொபைலுக்கு டிரான்ஸ்பர் செய்தான். அவன் விளையாட்டை நிறுத்தாமல் கேமை மொபைல் ஃபோனுக்கு மாற்றி விளையாடிக் கொண்டே, வீட்டுக் கதவை சிறிய அளவு திறந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த டயட் பிரியாணியை எடுத்து வந்தான். மீண்டும் விளையாட்டை சிஸ்டத்துக்கு மாற்றி விளையாடிக் கொண்டே சாப்பிட்டான். தங்கள் டயட் பிரியாணி எப்படி என மதிப்பெண் அளிக்குமாறு திரையில் கேள்வி ஒன்று எட்டி பார்க்க, நான்கு ஸ்டார்களை பதிலாக அனுப்பினான். விளையாடிக் கொண்டிருக்கும்போதே காலையில் அவன் அனுப்பிய கேள்விக்கு  ‘இன்று ஷாம்பூ போடுவதும், போடாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்’ என பதில் வந்தது .    ‘நன்றி’ என பதில் அனுப்பிவிட்டு, குளியலறைக்குள் சென்று குளிக்க ஆரம்பித்தான் ராகன். ஷாம்பூ போட ஷாம்பூ பாட்டிலை திறந்தான். அது காலியாக இருக்க, ‘ஓ ஷிட், அடுத்த முறை ஸ்மார்ட் ஷாம்பூ வாங்க வேண்டும்’ என்று கூறிக்கொண்டே குளியலறை விட்டு வெளியே வந்தான் ராகன்.   ஸ்மார்ட் ஷாம்பூ அதன் அளவை தானே கண்காணித்து, பாட்டில் காலி ஆகும் முன் மொபைலுக்கு செய்தி  அனுப்பக் கூடியது. அப்பொழுது தான் புதியதாக மார்கெட்டில் வந்திருந்தது.   சமுதாயம் எழுத்துக்கள் போலத்தான் இயற்கையும் எழுத்துக்கள்  போலத்தான்  சக மனிதர்களும் எழுத்துக்கள் போலத்தான்    அவைகளை  நுகர்வதைத் தாண்டி  அதற்கு அர்த்தம் தருகிறவர்களாக நாம் இல்லை  என்பதை அறிவாயா? 10. ஸ்மார்ட் கவிஞன்   ராகனுக்கு தன்னை கவிஞனாக இந்த உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பது ஆசை. அவனின் கவிதை எழுதும் திறமை வால்நூல் முழுக்க பிரசித்தம். எப்படியாவது அவனது வால்நூல் கவிதைகளை புத்தகமாக்கிவிட வேண்டுமென்பது அவனது ஆசையும் கூட. சில பதிப்பகத்தாரோடு அது குறித்து பேசிப் பார்த்தான். சில பதிப்பாளர்களுக்கு  வால்நூலில் சொம்படித்தும் பார்த்தான்,  அதிலும் இவனை விட சிலர் நன்றாக சொம்படிப்பதால்  பதிப்பாளர் ராகனை விட்டுவிட்டு நன்றாக சொம்படித்த கவிஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டார். சிறிது காலம் அந்த பதிப்பாளர் மீதும், அவர் தேர்ந்தெடுத்த கவிஞர்கள் மீதும் காண்டாகி, சில பதிவுகள் எழுதி தன் கோபத்தை தீர்த்துக்கொண்டான்.    இந்தச் சமயத்தில் தான், ராகன்  இணையத்தில் ஒரு மாபெரும் கவிதைப் போட்டி ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டான். உடனே, தன் இரு கவிதைகளை போட்டிக்கு அனுப்பி வைத்தான். கவிதை அனுப்பி  நான்கு மணி நேரத்திற்குள், அது அடுத்த நிலைக்கு தேர்வாகிவிட்டது எனவும், இன்னும் மூன்று நிலை கடந்தால், ராகனின் கவிதை தங்கள் ‘நூற்றாண்டு கவிதைகள்’ எனும் புத்தகத்தில் இடம்பெறும் என்றும், அவர்கள் அனுப்பிய இமெயில், ராகனுக்கு அளவு கடந்த மகிழ்ச்சியைத் தந்தது. எப்படியும் இந்தப் போட்டியில் தனது கவிதை வெற்றி பெறும்  என அவன் எதிர்பார்த்திருந்தான் .   அடுத்த நிலைக்கு செல்ல ராகன் அவனது கவிதையை வால்நூலில் பதிவாக இட வேண்டும். அந்தக் கவிதை எத்தனை லைக்குகள் வாங்குகிறதோ, அதை வைத்து அடுத்த நிலைக்கு செல்லும் தகுதியை அது பெரும். கவிதைக்கு கிடைக்கும் லைக்குகள் மிக முக்கியம். அந்தக் கவிதையை பதிவாகப் போடும் பொழுது, இந்தப் போட்டியை நடத்தும் ‘தி வின்னர் லைக்ஸ்’ கம்பெனியின் பெயரை போட்டியாளர்கள் டாக் செய்ய வேண்டும்.  ராகனும் தன் நண்பர்கள், உற்றார் உறவினர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் காதலர்கள் என எல்லோரையும் படுத்தி லைக் போட வைத்தான். விக்ரிதாவும் தன் பங்குக்கு தன் காதலனின் கவிதைக்கு பலரை லைக் போட வைத்தாள். அதில் மாவடி பண்ணையில் இருக்கும் தன் தோழன் பிசாக் மட்டும் லைக் செய்யவில்லை என்பதைக் கண்டு  அவனை அன்ஃப்ரெண்ட் செய்தாள், பிசாக் தன்னை விக்ரிதா  அன்ப்ரெண்ட் செய்தது சரியா? தவறா? என அவன் நட்பு வட்டத்தில் பட்டிமன்றம் வைத்து வாதம் செய்து கொண்டிருந்தான். இந்த விவாதம் மூலம்  பிசாக்கின் நண்பன் குணாங்கி, பினாங்கி, அனங்கு போன்றோர்க்கு விக்ரிதா பற்றி தெரிய வந்ததால் அவர்கள் விக்ரிதாவுக்கு நட்பு விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அனுப்பினர், விக்ரிதாவுக்கு தெரியும் வகையில் ராகனின் கவிதைக்கு லைக்கும் இட்டனர்.  “ஒருவனை அன்ஃப்ரெண்ட் செய்தால் இன்னும் பலர்  நட்பாவார்கள்”  என பாஸ்டர் உக்ராதி குருவாதித்தன்  சொன்ன வாக்கு  பலித்ததை  நினைத்து மகிழ்ந்தாள் விக்ரிதா. ஜெய் குரு நாதா, ஜெய் உக்ராதி எனச் சொல்லி ராகனுக்கு இந்த செய்தியை அனுப்பினாள், ராகனும் அதை ஷேர் செய்தான், அதை குணாங்கி, பினாங்கி, அனங்கு ஆகியோர் வரவேற்றனர். இதைக் கண்டு பிசாக் அவன் நண்பர்களான குணாங்கி, பினாங்கி, அனங்கு ஆகியோரை அன்ஃப்ரெண்ட் செய்தான்...   இதைப் பற்றி அருகில் படுத்திருந்த தன் மனைவியிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டே தூங்கி போனான். பிசாக்கின் மனைவி, அனங்குவுக்கு are you online? என செய்தி அனுப்பினாள்...    விக்ரிதா மற்றும் ராகனின்  இந்த அதி தீவிர உழைப்பு வீண் போகவில்லை. ராகனின் கவிதை அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. ராகன் தன் மகிழ்ச்சியை பார்ட்டி வைத்து கொண்டாடினான். குடி வெறியில் பேப்லோ நெருதாவுக்கு சவால் விட்டான், பாரதியின் வாரிசாக தன்னை புகழ்ந்து கொண்டான். அதை வால் நூலிலும் பதிவாக போட்டுக் கொண்டான். குடி போதை தெளிந்ததும் அதை டிலிட் செய்து விட்டான். ஆனால், அவன் டிலிட்  செய்யும் முன் அவனின் வால் நூல்  ஃப்ரெண்ட் லிஸ்டில் இருந்த கரிலா, எதற்கும் தேவைப்படுமென, அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டாள்.  அதை யாருக்கு அனுப்பலாமென தன் ஃப்ரெண்ட் லிஸ்ட்டை மேய்ந்து கொண்டிருந்தாள் கரிலா.     ராகன் இரவு ட்ரீம் கனெக்ட்டில் இப்பொழுது நடிகை தாமிக்கு பதில் தன் கவிதை பகுதியை இணைத்திருந்தான். அப்பொழுது அவன் அடுத்த நிலைக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும், அதற்கு அடுத்த நிலைக்கு செல்ல, இனி அவன் கவிதையை பெரும் கவிஞர் குழு ஒன்று தேர்ந்தெடுக்கும் என்றும், அப்படி அடுத்த சுற்றுக்கு செல்ல மிக குறைந்த கட்டணம் ஒன்றை அனுப்ப வேண்டும் என்றும், அப்படி அனுப்பினால் ராகனின் கவிதை அடுத்த சுற்றில் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அறிவிப்பு ஒன்று அவனுக்கு வந்தது. காலையில் எழுந்ததும் அந்த நிறுவனம் கேட்ட பணத்தை அவர்களுக்கு அனுப்பினான். அடுத்த சில மணி நேரத்தில் சிறந்த கவிதையில் ஒன்றாக ராகனின்   ‘உறைந்து போன பிம்பம்’ எனும் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக  அவனுக்கு மெசேஜ் வந்தது. அதை வால்நூலில் ஷேர் செய்தான். டஸ்டரில்  டஸ்ட்  செய்தான்.  நண்பர்கள் அனைவருக்கும் மெசேஜ் செய்தான். யார் யார் லைக் இடுகிறார்கள், என்ன என்ன கமெண்ட் செய்கிறார்கள் என்பது பற்றி  உள்பெட்டியில் அவனும் விக்ரிதாவும் மனம் விட்டு பேசிக் கொண்டார்கள்.  ராகனின் கவிதைக்கு பாலிநி எனும் பெண் லைக் இட்டதைப்  பார்த்து பாலிநி யார் ? ஏன் ராகனுக்கு லைக் போடனும் ? இருவருக்கும் என்ன தொடர்பு ? போன்றவற்றை பற்றி ஆராய ஆரம்பித்திருந்தாள், விக்ரிதா. ராகனுக்கும் உள் பெட்டியில் “ஹாய் நைஸ் கவிதை” என ஸ்மைலியோடு ஒரு மெசேஜ் வந்தது பாலிநியிடமிருந்து. விக்ரிதாவிடமிருந்து மெசேஜ் எதுவும் வரவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. பாலிநிக்கு “தேங்க்ஸ்”  என்று பதிலனுப்பினான். விக்ரிதா இப்பொழுது பாலிநி அடிக்கடி லைக் போடும் வாகனின் பக்கத்தை மேய்ந்து கொண்டிருந்தாள்.   இனி ராகனின் கவிதை  ‘நூற்றாண்டு கவிதைகள்’ புத்தகத்தில் இடம் பெறும். அந்தக் கவிதைப் புத்தகம் சாதாரணமான புத்தகமில்லை.       அந்த புத்தகத்தை எந்தக் கடையிலும் வாங்க முடியாது. அப்படி வெகு சிறப்பு வாய்ந்தது. யாருக்காவது தேவையென்று ஆர்டர் செய்தால், அதை நேர்த்தியாகவும், நாம் விரும்பும் வடிவிலும் ப்ரிண்ட் செய்து தருவார்கள்.     ராகனும் மிகுந்த செலவு செய்து அந்த புத்தகத்தை வாங்கினான். கிட்டத்தட்ட அவனின் ஒரு மாத சம்பளத்தை அதற்கு இணையாகக் கொடுத்தான். ராகனின் கவிதை முதல் பக்கத்தில் வந்திருந்தது . இதே போட்டியில் தென்காசியில் இருந்து கலந்து கொண்ட ஆகஸ் வாங்கிய புத்தகத்தில், ஆகஸின் கவிதை முதல் பக்கத்தில் வந்திருந்தது. மொடத்தான்விளை பொரா எனும் கவிஞர் வாங்கிய புத்தகத்தில், பொராவின் கவிதை முதல் பக்கத்தில் வந்திருந்தது. கல்லிடைக்குறிச்சி இச்சைக்காரன்  என்பவன் வாங்கிய புத்தகத்தில், அவன் கவிதை முதல் பக்கத்தில் இருந்தது.   எல்லோரும் தங்கள் கவிதை முதல் பக்கத்தில் வந்திருப்பதை ஆசையோடு வால்நூலில் பகிர்ந்து கொண்டார்கள்.  ஸ்மார்ட் கவிஞர்கள் என இவர்கள் சேர்ந்து தமிழ் இலக்கியத்தை மாற்றும் தீர்க்கமான முனைப்போடு ‘ஸ்மார்ட் கவிஞர்கள்’ எனும் க்ரூப்பை ஆரம்பித்தார்கள். 11. என் டைரி குறிப்புகள்   கடந்த நூற்றாண்டுகளில் வாசகனை பெரும் நுகர்வாளனாக மாற்றி அவனுக்கு ஏற்ற படைப்புகளை படைக்க முயன்றனர், இந்த முயற்சியின் ஸ்மார்ட் உலகத்து கண்டுபிடிப்புதான் “ஸ்மார்ட்  சிங்க்” எனும் தொழில் நுட்பம். இந்த “ஸ்மார்ட் சிங்க்” எனும் தொழில் நுட்பம் கொண்டு எழுதப்படும் படைப்புகளை நாம் நம் கணிணியிலோ அல்லது புத்தக வாசிப்பு  கருவியிலோ வாசிக்கும் பொழுது, அது வாசகனின் அனைத்துத் தகவல்களையும் திரட்டி அவனுக்கு ஏற்ற மாதிரி படைப்பை மாற்றிக் கொள்ளும். அது மட்டுமல்லாது பிரதியை வாசிக்கும்  வாசகன் எந்த மனநிலையில் இருக்கிறானோ  அதே மனநிலைக்கு ஏற்றவாறும் பிரதியை  மாற்றிக் கொள்ளும். அதன் முக்கியக் கொள்கை வாசகனை தன் பிரதியில் கட்டிப்போடுவதே. வாசகனை தன்னோடு  கட்டிப் போடும் நேரத்தின் அளவை பொருத்து ஒரு படைப்பின் அங்கீகாரமும் கிடைக்கும்.  இதன் மூலம் வாசகனை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாத, அழகிய, அவனுக்கு பிடித்தமான  படைப்புகளாக வாசிக்கிறவர்களுக்கு அமையும். இதுதான் ஸ்மார்ட் சிங்க் எனும் தொழில் நுட்பத்தின் ஆச்சரியம்.         எழுத்துக்களுக்கு அர்த்தம் தருவது வாசகனே என்பதை உணர்த்த சில எழுத்தாளர்கள் பல நுணுக்கமான முறைகளை கடைபிடித்தார்கள். ஆனால் எதுவும் அவனை மாற்றவில்லை, அவனுக்கு தேவையாக இருந்தது எழுத்தின் தெய்வீகம், எழுத்தின் அடக்குமுறை, எழுத்து என்கிற பண்டமே. அதைத் தொழுதான், அடிமையானான், நுகர்ந்தான். இதைத் தவிர்த்து அதோடு நெருங்கிப் பழகியதில்லை. எழுத்து என்பது மலட்டுதன்மை கொண்டது. வெறும் புள்ளிகளாலும்   கோடுகளாலும்  ஆனதுதானே. அதை மொழி கொண்டும் தன் ஆற்றல் கொண்டும், நாம்தான்  அர்த்தப்படுத்திக் கொள்கிறோம் எனக் கடைசி வரை அவனுக்குப் புரியவேயில்லை.      இதை உணர்த்திப் பலர் எழுதி பார்த்தனர். ஆனாலும் அவனுக்கு எழுத்துக்களைத் தொழவே ஆசையாக இருந்தது. மேலும்  நீ தான் எழுத்தை அர்த்தமாக்குகிறாய் என உணர்த்தும் எழுத்துக்களை எல்லாம் அழித்து விட்டார்கள். இப்பொழுது எழுத்துக்குள் மூலம் வாசகனை எப்படிக் கட்டிப்போடுவது என்பதை குறித்து மட்டுமே யோசிக்கிறார்கள். வாசகனை விடுதலை செய்யக் கூடிய எந்த எழுத்துக்களும் இப்பொழுது இல்லை.     தகு மொழி தேவதை குறித்த குறிப்புகள்    இணைய உறவுகள், மனிதர்களுக்கு இடையில்  உணர்வுபூர்வ பிணைப்பு இல்லாமல் செய்துவிட்டது ஏன் ?  இணையத்தால் பிணைக்கப்பட்டிருக்கும் மனிதர்கள் வெறுமையில் உழல்வது ஏன் ? இணைய வாழ்கை மனிதர்களை மன வலிமையற்றவர்களாக்கியது எப்படி?      இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாமல் அலைந்து கொண்டிருந்தேன்.   இணைய உரையாடல்கள் வால் நூல் பதிவுகள் வலைபூக்கள் செய்திகள்  எழுத்துக்கள் சிலைகள்   குறியீடுகள்  வாசக பலகைகள்   ஓவியங்கள்  கக்கூஸ் கிறுக்கல்கள்   பிட் நோட்டீஸ்கள்    ........என எல்லாமே எழுத்துக்கள் தான். இவற்றின் மூலம் செய்திகளையும்,   அர்த்தங்களையும் அவற்றுள் இருக்கும்  உணர்வுகளையும்   புரிந்து கொள்கிறோம். ஆனால் உண்மையான செய்தியும், அர்த்தங்களும், உணர்வுகளும் புரிந்து கொள்ளப்படுகிறதா? அல்லது எழுதப்படுகிறதா?   எழுத்தாளனின் திறமையும் வாசகனின்  நுண்ணறிவையும் பொருத்தே எழுத்துகள் மூலம், உணர்வுகளின் பரிமாற்றம் சாத்தியப்படுகிறது. அப்படியென்றால் எங்கே உண்மை எனத் தேடி அலைந்தேன். அப்பொழுதுதான் வீழந்து போன தேவதை ஒன்றை கண்டேன். அவளின் இரத்தத்தைத் தொட்டுதான் முதல் எழுத்து  எழுதப்பட்டது. அவளைச் சிறைப்படுத்தி வைத்த சிறை வாசலில்தான் முதல் வார்த்தை எழுதப்பட்டது. அவளின் கண்ணீரைத் தொட்டுத்தான் முதல் கவிதை புணையப்பட்டது. அவளைப் பற்றித்தான் முதல் கதை எழுதப்பட்டது. அவள் தகு மொழி பேசியதாலே வீழ்த்தப்பட்டாள்.    தகு மொழி:   பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மொழிதான் தகு. அதை தேவதைகளின் மொழி என்பார்கள்.    தகு மொழி ‘த’, ‘கு’ எனும் இரு ஒலிகளை  மட்டுமே கொண்டது.  அதை யாரும் எழுதுவதில்லை. எழுதினாலும் யாருக்கும் அது புரியப்போவதுமில்லை. எதிலுமே அச்சிட முடியாத மொழி அது. முழுமையான, உண்மையான, நேர்மையான  உணர்வுகளைச் சொல்ல மட்டுமே தகு மொழிக்கு சாத்தியம்.       நேருக்கு நேர் நின்று முகம் பார்த்து மட்டுமே அதைப் பேச முடியும். புருவ உயர்த்தலிலும், கண் நோக்கலிலும், முக சுளித்தலிலும், இமைகளின் நடனத்திலும், கண் விரிகின்ற அளவாலும், கண்ணின் நிற மாறுதலாலும், கண்ணின் நீர் அளவாலும், அதன் மினுக்கத்தாலும்,  முக நிற         மாற்றங்கள் மூலமும், குரலில் ஏற்ற இறக்கங்களோடும், அதன் சப்தங்களோடு  உணர்வுகளை காட்டி மட்டுமே பேச முடியும்.     தகு தகு கு கு கு  த த தகு தகு தகு த கு தகுகு ... என்கிற பதங்கள்  ஒவ்வொரு நேரத்திலும் வெவ்வேறு பொருள் தரக்கூடும். ஆனால் அவை  உண்மையாக இருக்கும். உண்மை தகு மொழியில் மட்டுமே சாத்தியம். அதனாலே அது அழிந்தும் விட்டது. காற்றில் கலந்து விட வேண்டிய வார்த்தைகள் எழுத்தில் பதிய ஆரம்பித்த பொழுதே ஆரம்பித்துவிட்டது இக்குழப்பம்.   எழுத்துக்களுக்கு - மனிதனுக்கும் இடையிலான உறவின் சரித்திரத்தை உணராது தன் கேள்விகளுக்கு பதில் கிடைக்காதென புரிந்தது.  12. ஸ்மார்ட் ரேசிங்   ராகனுக்கு இது முக்கியமான நாள். இது நாள் வரை அவன் பயிற்சி செய்து உடலையும், மனதையும் திடமாக்கியதெல்லாம் இந்த ஒரு நாளுக்காகவே.  ‘ஓர் உலகத்தர  ஓட்டப் பந்தய வீரனாக தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய நாள் இன்று’ என ராகனின் உள் மனது சொல்லிக்கொண்டே இருந்தது .    இந்தப் போட்டி அவனுடைய சிறப்பை, பெருமையை மட்டுமின்றி, எதிர்கால பொருளாதாரத்தையும் நிலைப்படுத்தும் என்கிற எதிர்பார்ப்போடே,  ராகன் ஓட்டப் பந்தயத்திற்கான உடையும், கண்டிப்பாக அணிய வேண்டிய ஸ்மார்ட் வாட்ச்சையும் அணிந்துகொண்டு,   போட்டி நடத்தும்  ‘தி ஸ்மார்ட் லீக்’ அளித்த ஸ்மார்ட் சிப்பையும் தன் ஷுவில் ஒட்டிக் கொண்டான். ஸ்மார்ட் வாட்ச்சை ஷு சிப்போடு சிங் செய்தான்.    ‘போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாட்சுகளை ரேஸ் மாஸ்டரோடு இணைக்கவும்’ என்கிற அறிவிப்பை அடுத்து, ராகன் மற்றும் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அவர்களது கையில் கட்டியிருந்த வாட்ச்சின் பொத்தானை அழுத்தி, போட்டியின் கண்காணிப்பாளர் கணினியோடு இணைத்துக் கொண்டார்கள். எல்லா போட்டியாளர்களின் வாட்சும் இணைக்கப்பட்டன.  ‘இனி உங்கள் வாட்சில் வரும் கட்டளைகளைப் பின்பற்றவும்’ என்ற அறிவிப்புக்கு பின் எல்லோரும் வாட்ச்சை கவனமாக  கவனிக்க ஆரம்பித்தனர்.   வாட்ச் திரையில் படிப்படியாக கட்டளைகள் வர, ராகனும் அந்த Tread Millல் ஏறி நின்றான். அவர்களுக்கு முன் ஆள் உயர ஸ்க்ரீன் ஒன்று தன்னைத் தானே உயிர்ப்பித்துக் கொண்டு ‘உலக ஸ்மார்ட் ஓட்டப் பந்தயத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்’ என வீரமும் தீரமும் தெறிக்கும் எழுத்துருவில் மின்னியது. ராகன் போட்டிக்குத் தயாரானான். உங்கள் ஹெட் ஃபோனை மாட்டிக் கொண்டு, மெஷினோடு இணைத்துக் கொள்ளவும்’ எனும் உத்தரவு மெல்லிய அதிர்வோடு அறிவிப்பாய் வந்து ராகனின் வாட்ச் திரையில் தோன்றியதும், ஹெட் ஃபோனை எடுத்து ராகனும் மற்ற போட்டியாளர்களும் அணிந்து கொண்டார்கள்.    ஹெட் ஃபோன் போட்டியின் மெயின் மாஸ்டர் கணினியோடு ப்ளு டூத் மூலம் இணைக்கப்பட்டது. ‘போட்டி இன்னும் சிறிது நேரத்தில் துவங்க இருக்கிறது. எனவே, உங்களுக்கு பிடித்த ஓட்டக்களத்தை தேர்வு செய்யவும்’ என்று ராகனுக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் முன்     இருந்த திரையில் அறிவிப்போடு சேர்த்து பல வித ஓடு களங்களின் படமும் தோன்றியது.    ராகன் அவனுக்கு பிடித்த கிராமத்து நதியோர களத்தை தேர்வு செய்தான். மற்ற போட்டியாளர்கள் மலையோரம், கடற்கரை, பாலைவனம், பனிமலை போன்ற ஓடுகளத்தை தேர்வு செய்திருந்தார்கள். போட்டி ஆரம்பிக்க  ‘3....2...1.....ஸ்டார்ட்’ எனும் எழுத்து திரையில் தோன்றியதும், போட்டியாளர்கள் ஓட ஆரம்பித்தார்கள். 52 கி.மீ  நின்ற  இடத்திலே  இந்த tread millல் ஓட வேண்டும் .    ராகன் ஓட ஆரம்பித்தான். அவனுக்கு முதல் 10 கிலோ மீட்டர் வார்ம்-அப் போல தான் இருந்தது. அதனால் சீரான  வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான். அவன் முன்னிருந்த திரையின் பிம்பம், அவன் ஓடும் வேகத்துக்கு ஏற்ப நகர்ந்து கொண்டே இருந்தது. திரையின் ஓரத்தில்  பந்தயத்தில் போட்டியாளர்களின் நிலை என்ன என்பதை, ஒன்று... இரண்டு... என அவர்கள் ஓடும்  வரிசை படி காட்டிக் கொண்டிருந்தது. ராகன் மூன்றாவது இடத்தில் தற்சமயத்தில் இருந்தான் .    போட்டியின் நிலையை ஆன்லைன் வழியாக இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பார்வையாளர்கள். ஆன்லைனில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவும் வழி செய்யப்பட்டிருந்தது.  வீரர்களை ஆன்லைனில் உற்சாகப்படுத்த வீரர்களின் போட்டோவிற்கு கீழ்  ‘கை தட்டல்’ குறியீடு கொடுக்கப்பட்டிருந்தது. அதை ஆன்லைன் பார்வையாளர்கள் அமுக்கினால், ஓடும் வீரர்கள் முன்னால் இருக்கும் திரையில் கைதட்டும் இமோஜி தோன்றி போட்டியாளர்களை கைதட்டி உற்சாகப்படுத்தும். மேலும், கைதட்டும் ஓசை அவர்கள் ஹெட் ஃபோனிலும் கேட்கும். எவ்வளவு அதிகமாக ஆன்லைன்  கைதட்டல் அமுக்கப்படுகிறதோ அவ்வளவு அதிகமாக வீரர்கள் உற்சாகப்படுத்தப்படுவர்.  இந்த உற்சாகம் ராகனுக்கு தேவையாக இருந்தது. ஆனால், ஏனோ ராகனுக்கு மெல்ல மெல்ல கைதட்டல் ஒலி காதில் விழுவது குறைந்து கொண்டே வந்தது. அவனுக்குத் தெரிந்த நண்பர்கள் எல்லாம் நினைவுக்கு வந்தார்கள். தன் முன்னேற்றத்தில் அக்கறை உடையவர்கள் என அவன் கருதியவர்கள் அனைவரும் அவன்  நினைவுக்கு வந்தார்கள். ‘அட்லீஸ்ட் விக்ரிதா ஏன் தன்னை உற்சாகப்படுத்தவில்லை?’ என்பது போன்ற சிந்தனையிலிருந்து விடுபட இன்னும் வேகமாக ஓடினான். தேவைக்கும் அதிகமான வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம் என தெரியாமல் மெல்ல மெல்ல களைப்பாகி ஓடிக் கொண்டிருந்தான் அவன்.       ‘எனக்கு ஏன் க்ளாப்ஸ் இல்லை?’, ‘ஏன் யாரும் கைதட்டவில்லை?’, "ஏன் என்னை யாரும் உற்சாகப்படுத்தவில்லை?’, ’ஏன் க்ளாப்ஸ் வரவில்லை?’ என களைத்து, சோர்ந்து விழுந்தான். அவன் ஓடிக் கொண்டிருந்த டிரெட் மில் மெளனமாகியது.  13. ஸ்மார்ட் மரணம்   அந்த ஸ்மார்ட் ஆய்வுக் கூடம் எங்கும் பல கணினிகளும், மின் திரைகளும் இருந்தன. நடுவில் வட்ட வடிவ மேஜை அங்கும் இங்கும் கோணாலாக்கப்பட்டு, விசித்திர தோற்றத்தோடு இருந்தது. எனக்கு அதைப் பார்த்ததும் ‘அமீபா’ எனும் ஒரு செல் நுண்கிருமியின்  பொய்க் கால்கள் நினைவுக்கு வந்தன. நான் ஓர் எழுத்தாளன் என்கிற முறையில், இந்த ஆய்வின் இறுதி அறிக்கையை எழுதி முடிப்பதற்காக அமர்ந்திருக்கிறேன். என்னோடு சமூக விஞ்ஞானி கர்பாஸ், அறிவியல் வல்லுநர் ஷிறி, நாட்டின் முதன்மை மருத்துவர் சங்விர மற்றும் மனோதத்துவ மா அறிஞர் மரினூஸ் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்.      ராகன் எனப்படும் ஓட்டப்பந்தய வீரருக்கு ஏற்பட்ட மரணம் குறித்த ஆய்வறிக்கையை இன்று இறுதி வடிவம் கொடுத்து, அதை தேசிய மனிதவள அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். முதலில் மருத்துவர் சங்விர பேசினார். “பாருங்க ஃப்ரெண்ட்ஸ், இந்த மரணத்தில், இருதயம் மிகக் குறுகிய காலத்தில் எந்தவித முன் சமிக்ஞையும் இல்லாமல் நின்றிருக்கிறது. ஆரோக்கியமான உடலைக் கொண்ட ராகனுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருப்பது எங்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இருதயம் நின்று போகும் முன், உடல் உபாதைகள், வலி போன்றவை ஏற்படும். ஆனால், ராகனுக்கோ மிக ஆச்சரியமாக யாரோ ப்ளக்கை புடுங்கியது போல சட்டென்று இதயத் துடிப்பு நின்றுவிட்டது. அதனால், கண்டிப்பாக இது மனம் சம்பந்தமான மேட்டராக தான் இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்" என்றார்.     அவரைத் தொடர்ந்து மனோதத்துவ நிபுணர் மரினூஸ் பேசுகையில் "ஆமாம், இது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் தான். என்னைப் பொருத்தவரை ராகனுக்கு உடல் மற்றும் மனம் நல்ல ஆரோக்கியமானதாகவே இருந்திருக்கிறது. ஆனாலும், என்னைப்  பொறுத்தமட்டில் இந்த மரணம் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனென்றால், வீரர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த க்ளாப் கவுண்ட் கிடைக்காமல்  மனமுடைந்து,  அந்த அதிர்வில் இருதயம் நின்று போயிருக்கக் கூடும். ராகனின் பயிற்சியின் போது அவருக்கு பதிவாக ஐந்தாயிரம் க்ளாப்புகள் கிடைத்து வந்திருக்கிறது. எனவே, நடந்து முடிந்த இறுதிப் போட்டியில் அவர்தான் வெற்றி பெறுவார் என அதிகம் பேரால் கணிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட நபருக்கு அன்று கிடைத்த க்ளாப்ஸ் வெறும் 35 தான். பின்னர் எப்படி உயிர் இருக்கும்? எனவே, The cause of death is insufficient clap counts" என தன் சார்பு முடிவை தீர்க்கமாக வைத்தார்.    "க்ளாப் கிடைக்காமல் மனித உயிர் பிரிகிறது என்பது ஒரு odd situation"  என நான் பேச ஆரம்பித்தேன். "ராகனின் மரணம் எந்த அளவுக்கு க்ளாப்ஸ் அண்டு  கவுண்ட் எனும் உப்பு சப்பு இல்லாத ஒரு மேட்டரோடு, நாம் உணர்வு பூர்வ இணைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம் என்று காட்டுகிறது. இது அவசியமே இல்லாத ஒரு நிலை. 2000 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு நிலை மனிதனுக்கு வந்ததே இல்லை. ஒரு பூ மலர்கிற சத்தம் ஒன்றே போதும், அவன் உற்சாகமடைய. ஒரு குட்டிக் குழந்தையின் சிரிப்பொலி போதும், அவன் முகம் மலர. இதோ மனிதர்களை இணைக்கிறோம் என சாதனத்தின் வழியே, ஒரு பொய்யான இணைப்பை இந்த மனித குலத்துக்கு அளித்துள்ளோம். இப்படி பொய்யான நெருக்கத்தால், எத்தனை நிஜமான நெருக்கங்களை நாம் இழந்து  இந்த சாதனங்களுக்கு  அடிமையாகி செத்துக் கொண்டிருக்கிறோம்" என்றேன். நான் பேசிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்த ஷிறி  "இவர் அறிவியலாலும், ஆன்மீகத்தாலும் தவறென நிறுவிய கருத்துகளைப் பேசுகிறார். இவர் கூறுவது புராண காலத்து மேஜிக்ஸ். பூ பூக்கும் ஓசையாம்? குழந்தையின் சிரிப்பொலியாம்? What a humpback. They don't exist. மனித குலத்தை சாதனங்கள் மூலம் நெருக்கமாக்குதல் என்பது ஒரு உன்னத செயல். எனவே ராகனின் மரணம் மிக இயற்கையானதே" என்றார். “இல்லை இல்லை, கடந்த காலங்களில் மனிதர்களுக்கு தங்களின் தனிமையைப் போக்க சக மனிதர்களைச் சந்திப்பதும், அவர்களோடு பழகுவதுமே மிகச் சிறந்த மருந்தாக இருந்தது. ஆனால், இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி மனித உறவுகளின் உணர்வை கெடுத்து விட்டது” என்றேன் நான்.   “மிஸ்டர் எழுத்தாளர், உங்கள் கருத்தை ஏற்க முடியாது, மனித உறவுகளால் பெரும் போர்களும், சண்டைகளும் நிகழ்ந்து, மனித அழிவுகளே முற்காலங்களில் சாத்தியமாய் இருந்திருக்கிறது என்பதுதான் சரித்திரம். நீங்கள் என்ன புதுக் கதை சொல்கிறீர்கள்?” என்றார் சமூக விஞ்ஞானி கர்பாஸ். மேலும், மனோதத்துவ மா அறிஞர் மரினூஸ் “நீங்கள் மனித மனம் அறியாமல் பேசுகிறீர்கள். மனிதர்கள், தாங்கள் செய்யும் எந்த காரியத்திற்கும் போதிய அளவு அடுத்தவர்களிடமிருந்து  கண்டு கொள்ளுதல் கிடைக்கவில்லையெனில்  மரணிக்கும் மிக மெல்லிய மனம் கொண்டவர்கள்.   20 ஆம் நூற்றாண்டு கரடு, முரடு, கல், மனம் படைத்த மனிதர்கள் நாம் அல்ல மிஸ்டர் எழுத்தாளர். எனவே, இந்த மரணம், தன் ஓட்டப் பந்தையத்திற்கு வால்நூலில் எதிர்பார்த்த கைத்தட்டல் எண்ணிக்கை குறைவாக வந்ததாலே நிகழ்ந்துள்ளது” என்றார். மேலும் “நீங்கதான் இங்கு பலருக்கும் சிறுகதைகளை அனுப்புகிற Smart Anti Nationalist என்றும் சந்தேகிக்கிறோம்,” என்றார்கள்.    நான் கோபத்தில் எழுந்து வெளியே வந்து, நான் ஸ்மார்ட் உலகத்தை குறித்து எழுதிய அனைத்தையும் வழக்கம் போல என் மனதில் தோன்றிய ஒரு மெயில் ஐடிக்கு க்ராவிட்டி மெயில் மூலம் அனுப்பி வைத்தேன். என்ன பெயர் எழுதினேன் என்று கூட மீண்டும் வாசிக்கவில்லை. எப்பொழுதுமே அப்படித்தான். கண்ணை மூடிக் கொண்டு மனதில் தோன்றும் பெயருக்கு மெயில் அனுப்புவேன். இன்றும் அப்படியே.         இனி எதுவும் எழுதப் போவதில்லை என, என் உடல் முழுக்க இருந்த ஸ்மார்ட் சாதனங்களை கழட்டி வீசி எறிந்துவிட்டு அங்கேயே நிர்வாணமாய் தெருவில் நின்றேன் என்ன செயவதென அறியாமல்.                                                            முற்றும்