[]     ஷோபாசக்தி நேர்காணல்கள் ஷோபாசக்தி   அட்டைப்படம் : த.சீனிவாசன் - tshrinivasan@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை - Creative Commons Attribution-Non-commercial-No Derivatives 4.0 International License.                  பொருளடக்கம் 1. மெளனம் என்பது சாவுக்குச் சமம் 4  2. மே 2007, புதுவிசை இதழில் வெளியான நேர்காணல் 8  3. புத்தக சந்தையை விழுங்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் 19  4.மாலதி மைத்ரி 27  5. இன்றெமக்கு வேண்டியது சமாதானமே 33  6. யுத்தம்: தலித் கேள்வி 38  7. போர் இன்னமும் ஓயவில்லை 40  8. நான் எப்போது அடிமையாயிருந்தேன்! 42  9. என்னுடைய தேசிய இனம்: இலங்கை அகதி 50  10. அறுபத்தைந்து கட்சிகளுக்கும் அவர்களே தலைவர்கள் 59  11. நான் சாத்தியமற்றதையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன் 66  12. இலக்கியவாதிக்கு கூர்மையான அரசியல் உணர்வு தேவை – ம. நவீன் 76  12. ஈழத்து மக்களும் அவர்களது கனவுமே எனது ஆதர்சம் – தீபச்செல்வன் 85  13. இதற்கு மேல் பின்னொரு நாளில் பேசுவேன் – வ.ஐ.ச.ஜெயபாலன் 100  14. தன்னைத் தானே தகனம் செய்யுமாறு கட்டளையிடுவது அநீதி – லெ.முருகபூபதி 112  15. நடுவு நிலைமை என்பது எந்தப் பக்கமும் சாராது இருத்தலல்ல 120  16. நான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன் 125  17. அதிதீவிரவாதம் சிறுபிள்ளைக் கோளாறு 143  18. எவராலும் கற்பனை செய்ய முடியாத நான் 150  19. வரலாற்றுப் பார்வைகள் எனப்படுபவை வெறுப்பிற்கானவை 160  20. கத்னா 170  21. எனது ‘விகடன் தடம்’ நேர்காணல் 173  1. மெளனம் என்பது சாவுக்குச் சமம்     (‘மாத்யமம்’ மலையாள வார இதழில் 2005 மார்ச்25 ல் வெளியாகிய நேர்காணலின் தமிழ் வடிவம் )    நேர்கண்டவர் – T.T.ராமகிருஷ்ணன்    தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஈழத்தமிழ் இலக்கியத்தின் இடம் என்ன ?    ஆம்! அப்படியொரு காலம் இருந்தது. தமிழ் உரை நடையில் ஆறுமுகநாவலர் தொடக்கம் இலக்கிய விமர்சனத்தில் பேராசிரியர்கள் கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்களும் புனைகதையில் எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம் போன்றவர்களும் தலித் இலக்கியத்தில் கே.டானியலும் கவிதையில் பிரேமிளும் குறிப்பிடத் தகுந்த ஆளுமைகளாக இருந்ததோடு மட்டுமல்லாமல், இவர்கள் தமது துறைகளில் புதிய போக்குகளை வடிவமைத்தார்கள். யுத்தம் ஆரம்பித்ததோடு எல்லாம் முடிந்து போயிற்று. ஈழத்தில் எழுத்தாளர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு எழுத்தும் ஆயுதம் தாங்கியவர்களால் கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறது. எழுதியதற்க்காக மட்டுமே கொல்லப்பட்டவர்கள் என்று ரஜனி திரணகம, செல்வி போன்று ஒரு பட்டியலே உள்ளது. ஒரே ஒரு இயக்கம்! ஒரே ஒரு கருத்து! ஒரே ஒரு தலைவன் என்று விடுதலைப் புலிகள் தமது ஏகபிரதிநிதித்துவத்தை நிறுவுவதற்காக எதைச் செய்யவும் எவரைக் கொல்லவும் ஆயத்தமாயிருக்கிறார்கள். இப்போது விடுதலைப் புலிகளுக்கு வணங்கிய எழுத்தாளர்கள் ‘தலைவன்’ புகழ் பாடும் கவிதைகளையும் பாஸிஸச் சாய்வுச் சயனைட் இலக்கியங்களையும் எழுத இதை ஒப்பாத மாற்றுக் கருத்துள்ள எழுத்தாளர்கள் பெரும்பாலும் துப்பாக்கிகளின் முன் மெளனமாக இருக்கிறார்கள். அல்லது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளை எழுதுகிறார்கள். புலிகள் மட்டுமல்லாது அரச படைகள்,E.P.D.P போன்றவர்களும் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் மீது கொலைச் செயல்களையும் அச்சுறுத்தல்களையும் நிகழ்த்துகிறார்கள். பத்திரிகையாளர்களான நிமலராஜன், நடேசன் போன்றவர்களை அவர்களே கொன்றார்கள்.புலம் பெயர்ந்து வாழக் கூடிய ஈழத்து எழுத்தாளர்கள் ஓரளவு இந்த நச்சு வளையத்திலிருந்து தப்பியவர்கள். புகலிடச் சிறுபத்திரிகைகள் அனைத்து அதிகாரங்களையும் கேள்விக்குள்ளாக்கின.எண்ணம், சிந்தனை, அறுவை, தூண்டில், மனிதம், சுவடுகள், சுமைகள், அஆஇ, உயிர்நிழல், எக்ஸில், அம்மா, தேடல், பள்ளம், தாயகம், கண், சக்தி, மரபு, அசை, புன்னகை, பனிமலர், ஊதா, சமர், ஓசை,நமதுகுரல், மார்க்ஸிய முன்னோக்கு, நான்காவது பரிமாணம், தேசம், அக்னி உள்ளிட்ட புலம்பெயர் சிறுபத்திரிகை இயக்கம் மட்டுமே ஒரு அவலமான காலகட்டத்தில் எந்தவித அதிகார சக்திகளிடமும் அடிபணிந்து போகாமல் எதிர்த்து நின்றது, மனித விழுமியங்களை எழுதிக் காட்டியது என்று வரலாறு பதிவு செய்து கொள்ளும்.    எழுத்தில் முதல் முறையாக எப்படி சம்மந்தப்பட்டீர்கள் ?    நான் எனது பள்ளிப்பருவத்தில் இருந்தே இயக்க அரசியலில் ஈடுபட்டு வந்தவன். இலங்கையில் என்னால் வாழ முடியாத சூழலில் நான் அகதியாக அய்ரோப்பாவுக்கு வந்தேன். இங்கே இன்று வரை எனக்கு எந்த அரசியல் உரிமையும் கிடையாது. வாக்குரிமை, பிரஜாவுரிமை ஏதும் கிடையாது. நான்கு வருடங்கள் சர்வதேச ட்ரொஸ்கிய முகாமில் “புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில்” இயங்கினேன். 1997 ல் அவர்களிடமிருந்து தொடர்பை நான் முறித்துக் கொண்ட போது என் முன்னே சூனியம் இருந்தது. இங்கே இருக்கக் கூடிய எல்லாவித இடதுசாரி இயக்கங்களும் வெறும் தொழிற் சங்கங்களாகக் குறுகியுள்ள நிலையில் அனார்கிஸ்டுடகள் தமது எல்லாவித கலகக் குரல்களையும் நிறுத்திக்கொண்டு பசுமைப் புரட்சி, எய்ட்ஸ் ஒழிப்பு எனறு தடம்புரண்ட போது என் முன்னே இருந்தது அரசியல் இருள்வெளி. தனியனாக எழுத ஆரம்பித்தேன். எனக்கு முறையான கல்வியறிவோ இலக்கியப் பரிச்சயமோ கிடையாது என்றாலும், எனக்குத் தெரிந்த நான் பார்த்த அனுபவித்த கதைகளைச் சொல்ல ஆரம்பித்தேன்.    நவீன தமிழ் இலக்கியத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?    தமிழில் வரும் இலக்கியங்களைப் பொத்தாம் பொதுவாக நவீன தமிழ் இலக்கியம் என்னும் ஒரே வரையறைக்குள் நிறுத்திவிட முடியாது. இங்கே ஆதிக்க சாதியினரும் எழுதுகிறார்கள், தலித்துக்களும் எழுதுகிறார்கள். ஆண்கள் எழுதுகிறார்கள், பெண்களும் எழுதுகிறார்கள். பெரிய பொலிஸ் அதிகாரியும் எழுதுகிறான், பொடா அரசியல் கைதியும் எழுதுகிறான். ஆகவே ஓவ்வொரு தனி எழுத்துக்குப் பின்னும் அவர்கள் சார்ந்த அரசியல், சாதி, அதிகாரங்கள் இன்னபிற விரவிக் கிடக்கின்றன. எனினும் தற்போது நீண்ட காலமாகத் தமிழ் இலக்கியத்துக்குள் ஆதிக்கம் செலுத்தி வந்த பார்ப்பனார்களின் ஆதிக்கம் ஒழிந்து விட்டது என்றே நான் கருதுகிறேன். என் தலைமுறையில் குறிப்பிட்டுப் பெயர் சொல்ல ஒரு பார்ப்பன எழுத்தாளன் தமிழில் கிடையாது. தலித் எழுத்துக்கள் ராஜ்கெளதமன், ம.மதிவண்ணன், அழகியபெரியவன் என்று பலரிடமிருந்து உத்வேகத்தோடு வெளிப்படுகின்றன. இன்னொரு புறத்தில் பிரேம்-ரமேஷ், சாருநிவேதிதா, மாலதி மைத்ரி, ஜே.பி. சாணக்யா போன்றவர்கள் தமிழ் இலக்கியத்தை இன்னொரு வெளிக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். அந்த வெளி அனைத்து அதிகாரங்களையும் ஒழுங்குகளையும் விசாரணை செய்கிறது. வாழ்வையும் உடலையும் கொண்டாடுகிறது. விடியல் சிவா, அடையாளம் சாதிக், போன்றவர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களைப் பதிப்பித்து வெளியிடுகிறார்கள். பிரம்மராஜன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் ஒரு வெறியோடு உலக இலக்கியங்களைத் தமிழில் அறிமுகப்படுத்துகிறார்கள். ஒரே ஒரு நாவல் சாதியச் சாய்வுடனோ இந்துத்துவச் சாய்வுடனோ வெளியானால் உடனே நமது தோழர்கள் இறங்கி அடிக்கிறார்கள். உடனுக்குடன் எதிர்வினை புரிகிறார்கள். இந்த மத்திய தரவர்க்க கூப்பாடு இலக்கியங்கள் உள்ளொளி, தரிசன இலக்கியப் பம்மாத்துக்கள் எல்லாம் – அது சுந்தரராமசாமி அசோகமித்திரன் போன்றவர்கள் எழுதினால் கூட- இனி நிராகரிக்கப்படும் என்றே நம்புகிறேன்.    நவீன தமிழ் எழுத்துக்கும் பின் நவீனத்துவ உலக இலக்கியத்துக்கம் என்ன சம்மந்தம் ?    தெரியாது ..!    கொரில்லா என்ற நாவல் பற்றிச் சொல்லலாமா ?    கொரில்லா என்னுடைய முதலாவது நாவல். அது தன்வரலாறும் புனைவும் கலந்த முறையில் எழுதப்பட்டது. நான் விடுதலை இயக்கத்தில் இயங்கிய நாட்களையும் எனது அகதி வாழ்வையும் மட்டும் அல்ல, என் போன்ற மற்றும் சிலருடைய அனுபவங்களையும் தொகுத்து அந்த நாவலை எழுதினேன். அது மிக நேரடியான ஒரு அரசியற் பிரதிதான். எனினும் நிலவும் ஈழ அரசியல் நிலைமைகளைக் கருதி பல இடங்களில் நாவலில் சுய தணிக்கைகள் செய்திருந்தேன், என்பதையும் நான் வெட்கத்தை விட்டு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். வேறு என்ன சொல்ல? என் நாவல் பற்றி நாவலில் சொல்லாத எதை நான் நாவலுக்கு வெளியே சொல்லிவிட முடியும் ?…    உங்கள் எழுத்தின் அரசியல் என்ன ?    நான் இப்போது எந்தவொரு அரசியல் அமைப்பையும் சார்ந்தவனல்ல. அதற்காகக் கவிஞர் சேரன் சொல்வது போல “அமைப்புக்களுக்குள் கட்சிகளுக்குள் கட்டுப்படாமல் விட்டு விடுதலையாகிக் கலைஞனாக நிற்கிறேன்” என்று சொல்லக் கூடியவனும் அல்ல. நான் “விடுதலை” இயக்கத்திலும் கொம்யூனிஸ்ட் இயக்கத்திலும் நீண்ட காலங்களை முழுமையாகச் செலவு செய்திருக்கிறேன், மக்களுக்கு விடுதலையை அளிப்பார்கள் என நான் விசுவாசித்த அந்த அமைப்புகள் மக்களுக்கு அதிகாரங்களையும் ஒடுக்குமுறைகளையுமே பரிசளித்தன. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான, அதிகாரங்களை மேலிருந்து திணிக்காமல் கீழிருந்து எளிய மனிதர்கள் அதிகாரங்களைச் செலுத்தும், மக்கள் விடுதலையை நேசிக்கும், ஓர் இயக்கத்தையோ ஒரு கட்சியையோ நான் கண்டடையும் போது கண்டிப்பாக, நான் ஒரு உறுதியான இயக்கக்காரனாகவோ கட்சிக்காரனாகவோ ஆகிவிடுவேன். அதுவரைக்கும் நான் தனியனாக அதிகாரங்களுக்கு எதிராக எனது பலவீனமான குரலைத் தன்னும் ஒலித்துக் கொண்டேயிருப்பேன். மெளனம் என்பது சாவுக்குச் சமம்!    உங்களுக்கும் விடுதலை இயக்கத்துக்கும் தொடர்பு வந்தது எப்படி ?    நான் என் நினைவு தெரிந்த பருவத்தில் இருந்தே தமிழ்த் தேசியப் பிரச்சாரங்களுக்கு இடையில் வாழ்ந்தேன். தமிழர் விடுதலைக் கூட்டணியும் பின்பு விடுதலை இயக்கங்களும் ஈழப் புலத்திலே மிகுந்த செல்வாக்கோடு திகழ்ந்தார்கள். 1977 மற்றும் 1981, 1983 ல் தமிழர்கள் மீது இலங்கை இனவாத அரசு பெரும் இனப்படுகொலைகளை நிகழ்த்திய காலத்தில் நான் வாழ்ந்தேன். ஆயுதந் தாங்கிய தமிழ் இயக்கங்களின் எழுச்சிக்கு பின்பாக அதுவரை கணிசமான மக்கள் ஆதரவோடு இயங்கி வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும சாதியொழிப்பு இயக்கங்களும் துப்பாக்கிகளால் மெளனமாக்கப்பட்டன. தமிழ்க் குறுந்தேசியத்துக்கு எதிரான எந்தவொரு கருத்தும் போராளிகளால் அனுமதிக்கப்படவில்லை. இன, பண்பாட்டு, சாதிய, வர்க்க ஒடுக்குமுறைக்கான தீர்வும், விடுதலையும் தனித் தமிழீழத்திலேயே சாத்தியம் என்று நாங்கள் நம்ப வைக்கப்பட்டோம். வெலிகடச் சிறையில் 53 அரசியல் கைதிகள் அரசின் சதியால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் தெற்கு, மேற்குப் பிரதேசங்களிலிருந்து வடக்குக்கு தமிழர்கள் கப்பல்களில் அகதிகளாய் வந்து சேர்ந்த தருணங்களும் என்னை இயக்கின. இயக்கத்தில் இணைந்து கொண்டேன். அப்போது எனக்குப் பதினைந்து வயது -குழந்தைப் போராளி- எனினும் இயக்கத்தின் சுத்த ஆயுதக் கண்ணோட்டத்தினுள்ளும் அவர்களின் அப்பட்டமான வலது சாரித்தனத்தினுள்ளும் ஒரு பாஸிஸ இயக்கத்தை ஒத்த அவர்களின் இயக்க ஒழுங்கு முறைகளுக்குள்ளும் என்னால் மூன்று வருடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.    இயக்கத்தை விட்டு வெளியே வந்த பின்பு என்ன செய்தீர்கள் ?    எதுவுமே செய்ய முடியாமல் பைத்தியம் பிடித்தவன் போல இருந்தேன்.அப்போது எனக்குப் பதினெட்டு வயது. என் முன்னே எந்த வழிகளும் இருக்கவில்லை. அடுத்த வருடம் இந்திய அமைதிப்படை அங்கு வந்து சேர்ந்தது. இந்திய இராணுவத்துக்கும் புலிகளுக்கும் யுத்தம் மூண்ட உடனேயே தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் கூட அனுபவித்திராத அடக்குமுறைகளை இந்திய இராணுவம் தமிழர்கள் மீது ஏவியது. அதுவரையில் இலங்கை இராணுவம் செய்திருந்த கொடுமைகளை இந்திய இராணுவம் ஒரே வருடத்தில் செய்து முடித்தது. இந்திய இராணுவத்தால் இரண்டாயிரத்துக்கும் அதிகமான அப்பாவிகளும் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இந்திய இராணுவம் கணக்கற்ற பாலியல் வல்லுறவுகளை சிறுமிகள் மீதும் பெண்களின் மீதும் நிகழ்த்தியது.பொதுமக்களின் குடியிருப்புகள் மீது விமானங்களில் இருந்து குண்டு பொழிந்தது. காரணங்களே இல்லாமல் மக்கள் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். அவமானப் படுத்தப்பட்டார்கள். உண்மையில் இலங்கை இராணுவத்தாலோ புலிகளாலோ செய்யப்பட முடியாத ஒன்றை என் விடயத்தில் இந்திய இராணுவத்தினர் நிகழ்த்தினார்கள். இந்திய இராணுவத்தாலேயே அப்போது நான் நாட்டை விட்டு வெளியேறினேன். அவர்களின் காட்டாட்சியின் கீழ் எங்கள் கிராமங்கள் இருந்த காலங்களில் தான் நான் என் நாட்டிலிருந்து துரத்தப்பட்டேன்.    பிரான்சுக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள் ?    அப்போது பிரான்சுக்கு வருமளவுக்கு என்னிடம் பணம் இருக்கவில்லை. இலங்கையிலிருந்து முதலில் தாய்லாந்துக்குத் தான் போனேன். அய்க்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் பராமரிப்பின் கீழ் அரசியல் அகதியாகச் சில வருடங்கள் பாங்கொக்கின் புறநகர் ஒன்றில் வாழ்ந்தேன். அப்போது ஆசியாவில் இருந்து அய்ரோப்பா அமெரிக்காவுக்கு புலம்பெயரும் அகதிகளின் -வெள்ளையர்களின் மொழியில் சொன்னால்- சட்ட விரோத குடியேற்றவாசிகளின் ஒரு சந்திப்பு சந்திப்பு மையமாக, இடைவழியாக பாங்கொக் இருந்தது. அங்கிருந்து 1993 ல் பிரான்சுக்கு வந்தேன்.    இப்போது L.T.T.E அமைப்பு குறித்தும் விடுதலைப் போராட்டம் குறித்தும் உங்கள் கருத்து என்ன ?    சிங்களப் பேரினவாத அரசின் தொடர்ச்சியான ஒடுக்கு முறைகள் தான் விடுதலைப் புலிகளின் இருப்புக்கு காரணம் என்பதில் எனக்கு எதுவித மாற்றுக் கருத்தும் கிடையாது. அரச ஒடுக்கு முறைகள் தோற்றுவித்த ஒரு விடுதலை இயக்கத்தின் இன்றைய நிலை எவ்வாறு இருக்கிறது? இன்று விடுதலைப்புலிகள் முற்றுமுழுதான வலதுசாரிகளாக உருவெடுத்து இருக்கிறார்கள். அமெரிக்காவினதும் அய்ரோப்பிய யூனியனதும் ஒவ்வொரு உத்தரவுக்கும் அவர்கள் அடிபணிகிறார்கள். தங்களுடைய பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கை தான் என்று புலிகளின் தலைவர் அறிவித்திருக்கிறார். வெட்கம்! பிரபாகரனின் இடம் இப்போது ஒரு விடுதலை இயக்கத் தலைவனின் இடம் அல்ல. அவர் ஒரு யுத்தப் பிரபு ( war lord) மட்டுமே. ஏனெனில் ஒரு மக்கள் விடுதலை இயக்கத்துக்குரிய எந்தப் பண்புகளும் L.T.T.E இயக்கத்திடம் அறவே கிடையாது. என் சமூகத்தில் நிலவும் கொடூரமான சாதியத்தை ஒழிக்கப் புலிகள் எந்தத் திட்டத்தையும் முன் வைக்கவுமில்லை நடைமுறைப்படுத்தவுமில்லை. இது தவிர காலம் காலமாக ஈழத்து தமிழர்களோடு இணைந்து வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மீது அவர்கள் நடத்திய வன்முறையை மன்னிக்கவே முடியாது. வடபகுதியில் வாழ்ந்த அத்தனை முஸ்லீம்களையும் புலிகள் ஒரே இரவில் வடபகுதியை விட்டு வெளியேற்றினார்கள். அதுவும் எப்படி? முற்று முழுதாக முசுலீம்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்ட பின்பே விரட்டினார்கள். பரம்பரை பரம்பரையாய் அந்த மண்ணில் வாழ்ந்த இஸ்லாமிய மக்கள் தம்மோடு 500 ரூபாய்கள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.கடந்த மூன்று வருடங்களாக இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு இது சமாதான காலமாக இரு தரப்பினராலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமாதான காலத்தில் மட்டும் மாற்று இயக்க உறுப்பினர்களில் 300 பேர் வரையில் புலிகள் கொன்றிருக்கிறார்கள். நடந்த பேச்சு வார்த்தைகளில் வடக்கு கிழக்குக்கான அதிகாரத்தை தமது இயக்கத்திற்க்கு பெற்றுக் கொள்வதே புலிகளின் நோக்கமாக இருந்தது. அதாவது இன்று நிலவும் சமூக ஒழுங்குகளுக்குள் தமக்கான அதிகாரம். இன்று இலங்கை மீதான அமெரிக்காவின் வல்லாண்மை சந்தேகத்திற்க்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது. அமெரிக்க இராணுவத்துடன் இலங்கை இராணுவம் கூட்டுப்பயிற்சிகளில் – இந்தியா கூட – ஈடுபடுகிறது. தாய்லாந்தில் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சு நடந்த போது இரு தரப்புக்கும் அமெரிக்கப் படையினர் தான் பாதுகாப்பு வழங்கினார்கள், அல்லது கண்காணித்தார்கள். ஏகாதிபத்தியத்தினதும் புலிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ் மேட்டுக்குடியினரதும் வர்க்க நலன்கள் ஒன்றானவை. இந்த இடத்தில் புலிகளைச் சில மேற்கு நாடுகள் தடை செய்துள்ளனவே? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதே மேற்கு நாடுகள் தான் புலிகளை ஈழத் தமிழ்-முசுலீம்களின் ஏகப்பிரதிநிதிகளாக அங்கீகரித்துப் பேச்சுவார்த்தை மேசைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள், பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன் மேற்கு நாடுகளினதும் இலங்கை ஆட்சியாளர்களினதும் விடுதலைப் புலிகளினதும் வர்க்க நலன்கள் பொதுவானவை.எந்த நேரத்திலும் புலிகள், அவர்களைத் தடைசெய்த அதே நாடுகளின் செல்லப் பிள்ளைகளாக எடுபிடிகளாக ஆகச் சாத்தியங்கள் உருவாகாது எனறு கூறி விடுவதற்கான அரசியல் தருக்கங்கள் ஏதாவது நம்மிடம் உள்ளனவா? அதற்கான தடயத்தைத் தன்னும் புலிகள் நமக்கு விட்டு வைக்கவில்லையே! தமது கடந்த கால அரசியல் நடவடிக்கைகளின் மூலம் தம்மையொரு ஏகாதிபத்தியச் சாய்வுள்                                                                                            2. மே 2007, புதுவிசை இதழில் வெளியான நேர்காணல்   உரையாடல்: நீலகண்டன், சிராஜுதீன்    Rogue படைப்பாளி எனத் தமிழ்ச் சூழலில் உங்களைப் பற்றிய விம்பம் குறித்து?    அப்படியா சொல்கிறார்கள்? சமூக ஒழுக்கங்கள் எனச் சொல்லப்படுபவற்றை நான் கடை பிடிக்காததினாலும் சொந்த வாழ்விலும் எழுத்திலும் காதல், சேர்ந்து வாழ்வது, குடும்பம், குழந்தைகள் போன்றவற்றை நான் மறுத்து வருவதாலும் வேலை, தொழில் போன்றவற்றில் அக்கறையற்றிருப்பதாலும் எனது போதைப் பழக்கத்தாலும் என் குறித்து இப்படியொரு விம்பம் ஏற்பட்டிருக்கலாம்.ஆனாலும் கட்டாய உழைப்பை வலியுறுத்தும், மனிதர்களைத் தொடர் கண்காணிப்பிற்குள் வைத்திருக்கும் அய்ரோப்பிய நவீன முதலாளிய சமூக அமைப்பில் முழுமையான Rogue மனநிலையில் வாழ்வது முடியாத காரியமாய்த்தானிருக்கிறது. வீரத்தையும் தியாகத்தையும் தனிமனித ஒழுக்கத்தையும் ஆண்மையையும் தேசபக்தியையும் மொழிப்பற்றையும் உழைப்பையும் கொண்டாடும் நமது தமிழ்ச் சூழலிலோ இயக்கப் போராளியாகவோ கட்சி ஊழியனாகவோ இருப்பதைவிட Rogue மன நிலையில் வாழ்வது சவாலானது. வன்முறையும் ஒழுங்குகளும் நிறைந்த இந்தச் சமூக அமைப்பில் பித்துநிலை அல்லது Rogue மனநிலையைத் தக்க வைத்திருப்பதால் மட்டும்தான் ஒருவர் தன்னைச் சுதந்திர உயிரியாகத் தன்னளவில் உணர்ந்துகொள்ள முடியும் என்றே நான் கருதுகிறேன்.   போர்ச்சூழலும் நாடோடித்தன்மையும் கொண்ட உங்களது வாழ்வியற் பின்னணியிலிருந்து கொண்டு உங்களால் எப்படி இவ்வளவு நக்கலும் நையாண்டியுமாகக் கதை சொல்ல முடிகிறது?    நான் போரைப் பற்றியும் புகலிடத்தைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் தேசியவாதத்தைப் பற்றியும் சாதியைப் பற்றியும் காதலைப் பற்றியும்தானே கதைகளைச் சொல்கிறேன். இவைகள் அனைத்தும் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவைகள்தானே! இந்த வலிமை பொருந்திய சாமான்களை எதிர்கொள்ள நையாண்டியைத் தவிர என்னிடம் வேறெந்த ஆயுதங்களும் தற்போது கைவசமில்லை.   இன்றைக்கு வரைக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகயிருந்தவர்டி எனத் தமிழ்த் தேசியர் களால் விதந்தோதப்படும் இந்திராகாந்தியின் மரணம் உங்கள் கொரில்லாவில் ‘ஒரு மாடு செத்துப்போனது மாதிரியான கவலைதான் ஈழத்திலிருந்தது’ என்பது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது?    நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். கொரில்லா நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ள என்னுடைய கிராமம் ஈழத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமல்ல. எனது கிராமத்தில் மக்களுக்கு 1984களில் அன்றாட அரிசியையும் மீனையும் பெற்றுக்கொள்வதுதான் ஒரே அரசியல். அரசியல் கட்சிகளின் கிளைகளோ கொடிகளோ உறுப்பினர்களோ எங்கள் கிராமத்தில் கிடையாது. தீப்பெட்டியென்றால் யானை மார்க் தீப்பெட்டி, சவர்க்காரமென்றால் சன்லைட் சவர்க்காரம், சைக்கிளென்றால் ரலி சைக்கிள் வாக்குப் போடுவதென்றால் உதய சூரியனுக்குப் போடுவது என்பவைதான் கிராம மக்களின் வாழ்க்கையாயிருந்தது.அவர்களின் ஏழ்மையும் அறியா மையும் அவர்களைத் தமக்கான அரசியல் குறித்துச் சிந்திக்கவிடவில்லை. அவர்களில் பலர் ‘மகாத்மா’ காந்தியின் மகள்தான் இந்திராகாந்தி என்றுகூட நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம்தான் இந்திராவின் மரணம் ஒரு மாடு செத்தது போன்ற சலனத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்திராகாந்தியின் சாவு யாழ்ப்பாணத்து மேட்டுக்குடிகளிடையேயும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களின் இளைஞர்களிடம் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருந்தது. அப்போது எங்களின் கைகளில் சீக்கியர்கள் யாராவது சிக்கியிருந்தால் யாழ்ப்பாணத்தில் அவர்களை உயிருடன் சமாதியாக்கியிருப்போம். அவ்வளவுக்கு எங்களுக்கு இந்திரா கிறுக்குப் பிடித்திருந்தது. யாழ்ப்பாணம் முழுவதும் இந்திராகாந்தியின் சாவையொட்டிக் கண்ணீர் அஞ்சலிகளும் வீரவணக்கக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.அப்போது ஆயிரக்கணக்கான ஈழப்போராளிகள் தமிழகத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் இந்திய இராணுவத்தினரால் பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ‘1985 பொங்கலுக்குத் தமிழீழம்’ என்று கட்டிவிடப்பட்டிருந்த கதையாடலின் மீது பெருத்த இடியாக இந்திராவின் சாவு இறங்கியது. 1977ல் இலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியைக் கைப்பற்றியதுடன் அவரின் வெளிப்படையான அமெரிக்கவுடனும் சீனாவுடனுமான உறவுகள், சுதந்திர வர்த்தக வலையம் என்ற பெயரில் மேற்கு நாடுகளின் தொழிலாதிக்கம் இலங்கையில் நிலவ வழிசெய்தது, சிறிமாவோ பண்டாரநாயக்க அதுவரை கடைப்பிடித்து வந்த இந்தியாவுக்கு அடிபணியும் கொள்கையை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கைவிட்டது போன்ற காரணிகளால் இந்திய ஆளும் வர்க்கம் இலங்கையில் அரசியல் உறுதிப்பாடற்ற நிலைமைகளைத் தோற்றுவித்து இலங்கை அரசைத் தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே ஈழப்போராளிகளைக் கருவிகளாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தது. போதிய அளவுக்கு உள்நாட்டு யுத்தம் மூண்டதும் அதைச் சாக்காக வைத்து இந்தியா இலங்கையின் இறைமையில் நேரடியாகவே தலையிட்டது. 1985ல் திம்புவில் நடந்த பேச்சு வார்த்தைகளும் 1987ல் செய்யப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தமும் அதைத் தொடர்ந்த இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்பும் முற்று முழுதாக இந்திய ஆளும் வர்க்கங்களின் பிராந்திய நலன் என்ற நிலையிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. அதனால் தான் இலங்கை – இந்திய ஒப்பந்தம் சிங்கள மக்களாலும் எதிர்க்கப்பட்டது, தமிழர்களாலும் எதிர்க்கப்பட்டது. ஆனால் தொண்ணூறுகளில் சோவியத் யூனியனின் உடைவால் உலக அரசியலில் அமெரிக்கா தனிப் பெரும் வல்லரசாக உருவாகியது, இலங்கையில் மேற்கு நாடுகளின் மூலதனமும் மேற்கு நாடுகளில் இலங்கை அகதிகளும் குவிந்து கிடப்பது போன்ற காரணிகளால் இந்தியாவால் இப்போது நேரடியாக இலங்கை அரசிய லில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இலங்கை இப்போது மேற்கு நாடுகளினதும் ஜப்பானினதும் இந்தியாவினதும் வலிமைகளைப் பரிசோதிக்கும் களமாக மாற்றப்பட்டுள்ளது. உண்மையில் இலங்கை தனது அனைத்து அரசியல் பொருளியல் இறைமைகளையும் இழந்து முற்றுமுழுதாக மறுகாலனியாக்கப் பட்டுள்ளது. இலங்கை அரசின் கதியே இதுவென்றால் விடுதலைப்புலிகளின் கதியை யோசித்துப் பாருங்கள்! இல்லாத இறைமையை அவர்கள் எங்கே போய் இழப்பது. இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமான அமைதிப் பேச்சுவார்த்தையை மட்டுமல்ல யுத்தத்தையும் தீர்மானிக்கும் நெறிப்படுத்தும் தீர்மானகரமான சக்திகளாக இந்த அந்நிய வல்லாதிக்கவாதிகளே இருக்கிறார்கள். ஒருகாலத்தில் இலங்கையின் இறைமை வெளிகளில் இந்தியா மட்டுமே நுழைந்தது. ஆனால் இப்போது நடப்பது கூட்டுக் கொள்ளை. ஆனால் இன்னமும் இந்திரா காந்தியை மட்டுமல்ல எம்.ஜி.ஆரையும் ஈழத்தமிழர்களின் காவல் தெய்வங்களாகக் கொண்டாடும் தமிழ்த் தேசியர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் ஈழத்து அரசியலில் செல்வாக்குப் பெற்றவர்களாகவுமிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் நிலைப்பாடே அப்படித்தானேயிருக்கிறது!   உரிமைகளுக்காகப் போராடும் ஈழத் தமிழர்களுக்கு சர்வதேசத்தின் புரட்சிகரத் தோழமைகள் முக்கியமானவை. குறிப்பாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் எங்களது தோழமை கொம்யூனிஸ்டுகளுடனும் நக்ஸல்பாரிகளுடனும் தானிருக்க வேண்டும். ஆனால் ஈழப் போராட்டத்தை தலைமை தாங்கியவர்களின் தாங்குகிறவர்களின் குறுந்தேசியவாதமும் இஸ்லாமிய எதிர்ப்பும் கலாசார அடிப்படைவாதமும் அதிவலதுசாரித்தனமும் ஈழப் போராட் டத்தின் ஆதரவு சக்திகளாக வைகோவையும் நெடுமாறனையும் ராமதாஸையும் பால்தாக்கரேயையும் தான் திரட்டி வைத்திருக்கிறது. ‘குருட்டுப் பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும்’ என்பார்கள்.   உலகமயச் சூழலில் திரும்பத் திரும்ப இயக்கமாக வேண்டிய தேவைகள் இந்தியா இலங்கை போன்ற மூன்றாம் உலகநாடுகளின் தேவையாயுள்ளபோது நீங்கள் தொடர்ந்து இயக்கங்களைத் தாக்கியும் விமர்சித்தும் வருகிறீர்களே?    நான் ஒருபோதும் இயக்கங்களின் அமைப்புகளின் தேவையை மறுத்துப் பேசியதில்லை. எதிரி அமைப்பாகத்தான் இருக்கின்றான். அவன் அந்த அமைப்பைக் கட்டிக் காப்பதற்கு பொலிஸ், ஆயுதப்படைகள், நீதிமன்றம், சிறைச்சாலை என்று உபஅமைப்புகளையும் தன்னைக் காப்பாற்றும் சட்ட ஒழுங்குகளையும் தன்னை நியாயப்படுத்தும் தத்துவங்களையும் கட்டிவைத்திருக்கின்றான். பண்பாட்டுக்கூறுகளில் தன் நலனைப் பிரதிபலிக்கும் கருத்தாக்கங்களை மறைத்தும் வைத்திருக்கின்றான். இத்தனை தந்திரமாகவும் உறுதியாகவும் நிறுவப்பட்டிருக்கும் அமைப்புக்கு எதிராகப் போராடுவதெனில் எதிரி உருவாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களைச் சிதைப்பதெனில் நாம் நிச்சயம் அமைப்பாக வேண்டும். புரட்சிகரக் கட்சியாக வேண்டும்.   ஆனால் வரலாறு முழுவதும் நமது புரட்சிகரக்கட்சிகளின் பண்புகளை மீள்மதிப்பீடு செய்து பாருங்கள். அவர்களின் இலட்சியங்கள் முதலாளியத்திற்கு அதிகாரத்திற்கு எதிராகவிருக்கும் வேளையில் அவர்களின் அமைப்பு கட்சி வடிவங்கள் முதலாளித்துவக் கட்சிகளின் மாதிரியிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சனநாயகத்துவ மத்தியகுழு, புரட்சிகர நிறைவேற்றுக்குழு என்ற ஏதோவொரு குழுதான் அமைப்பின் முழு வேலைத்திட்டத்தையும் நிர்ணயிக்கிறது. பரந்துபட்ட மக்கள்திரளின் வித்தியாசம் வித்தியாசமான பிரச்சினைகளை வர்க்கமென்றோ தேசிய இனமென்றோ இதுவரையான நமது அமைப்புக்கள் சாராம்சப்படுத்தி வந்திருக்கின்றன. வித்தியாசங்களைச் சாராம்சப்படுத்துவது, அதிகாரத்தை ஓரிடத்தில் குவிப்பது போன்ற பண்புகளின்றி அதிகாரம் பரவலாக்கப்பட்ட புரட்சிகர அமைப்புக்களைத்தான் நாம் கண்டடைய வேண்டும். அமைப்புகள் கட்சிகள் குறித்து விமர்சனங்களை அய்ரோப்பியச் சூழலிலும் சரி தமிழகச் சூழலிலும் சரி முன்வைத்த நவீனத்துக்குப் பிந்திய முக்கிய சிந்தனையாளர்கள் இடதுசாரிகளாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகவும் தீவிர சமூக அக்கறையாளர்களாகவுமே இருந்தார்கள். ஆனால் இங்கே என்ன நடக்கிறதென்றால் என்.ஜி.ஓ க்களிடமும் வலதுசாரி அறிவுத்துறைக் கட்டமைப்புகளிலும் தஞ்சம் புகுந்திருக்கும் அறிவுத்துறையினர், அமைப்புகள் – கட்சிகள் குறித்த நவீனத்துக்குப் பிந்திய சிந்தனைகளை எளிமைப்படுத்தித் தமது குற்ற உணர்ச்சிகளைத் தணிப்பதற்கான ஒளடதமாகத் தடவிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவாதங்களுக்கு அப்பால் நமது சூழலைப் பொறுத்தவரை ஒருவகையான நக்ஸல்பாரி மனநிலை அறிவுஜீவிகளுக்குத் தேவை என்று சொல்லும் அ.மார்க்சுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்.   உலகமயமாக்கலை இந்தியாவும் இலங்கையும் முழுமையாக ஏற்றுக்கொண்டன. இந்தியாவில் பல்வேறு இயக்கங்களும் உலகமயமாக்கலை எதிர்க்கின்றன. இலங்கையில் LTTE யின் நிலை என்ன?    2002லேயே வன்னியில் புலிகள் கூட்டிய பத்திரிகையாளர் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் தலைவர் தமது இயக்கத்தின் பொருளாதாரக்கொள்கை திறந்த பொருளாதரக் கொள்கைதானென்று பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தினார். இலங்கையில் மின்சாரம், நீர் வழங்கல் போன்ற பொதுச்சேவைகள்கூட அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலே வீழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள சம்பூரில் ஒரு அனல்மின் நிலையத்தை அமைக்கவிருக்கிறது. ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா’ இன்னும் இலங்கையில் இயங்கிக் கொண்டி ருக்கிறது. இது குறித்தெல்லாம் புலிகள் எப்போதுமே வாய் திறந்ததில்லை. நவீன உலக அரசியல் வரலாற்றிலேயே விடுதலைப் புலிகளைப்போல ஏகாதிபத்திய அடிவருடிகளான ஒரு தேசிய ‘விடுதலை’ அமைப்பை நீங்கள் கண்டிருக்க முடியாது. அண்மையில் ஈராக்கிய அதிபர் சதாம் உசேன் அமெரிக்காவால் தூக்கிலிடப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட நிகழ்வை எடுத்துக்கொள்ளுங்கள், இதுவரையில் புலிகள் சதாமின் கொலைக்கு வாயளவிலான ஒரு கண்டனத்தைத் தன்னும் தெரிவித்தார்களில்லை. புலிகள் முதலாளியத்தினதும் உலகமயமாக்கலின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல விசுவாசமான பாதுகாவலர்களும் கூட. வாரத்திற்கு ஒருமுறை வெளிநாட்டுத் தூதுவர்களையும் இராசதந்திரிகளையும் சந்திக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர், 1987 சுதுமலைப் பொதுக்கூட்டத்திற்குப் பின்பு கடந்த இருபது வருடங்களாகப் பொதுமக்களைச் சந்திக்கவேயில்லை என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.   சரி அங்குள்ள இடதுசாரிகளின் எதிர்ப்பு எப்படி உள்ளது?    சோஸலிச சமத்துவக் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி போன்ற மிகச்சிறிய அமைப்புகள் உலகமயமாக்கலைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி போன்ற பெரும் கட்சிகள் இடதுசாரிப் பாதையிலிருந்து இனவாதப் பாதைக்கு நகர்ந்து வெகுநாட்களாகின்றன.அவர்கள் அரசின் அமைச்சரவையில் இடம் பிடித்துக் கொண்டு உலகமயாக்கலுக்கு ‘கொள்கை’ விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்று சிங்களக் கிராமப்புற மக்களிடமும் மாணவர்களிடமும் பெரும் செல்வாக்கைக் கொண்டிருக்கும் ஜேவிபி தனது கடந்த கால ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரியத்தைக் கைவிட்டு வாக்குப் பொறுக்கிகளின் கூடாரமாகி விட்டது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பொறுத்தளவில் அங்கே எந்த இடதுசாரிக் கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இயங்குவதற்கு அனுமதியில்லை. மக்களின் கருத்துரிமை, பேச்சுரிமை அரசியல் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் உரிமைகள் அனைத்துமே பாஸிசப் புலிகளால் மறுக்கப்பட்டுள்ளன. மக்களுக்குச் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைகூடக் கிடையாது. உங்களுக்கு ஒரு பாப்பாப்பட்டி கீரிப்பட்டிதான். ஆனால் எங்கள் தேசம் முழுவதுமே பாப்பாப்பட்டி கீரிப்பட்டியாய்க் கிடக்கிறது.   உலக மார்க்ஸியர்களால் ஓடுகாலிப் பட்டம் சூட்டப்பட்ட டிராட்ஸ்கியை நீங்கள் ஆதரிப்பது?    இப்படி எடுத்தவீச்சுக்கு ஓடுகாலி, கந்தலாண்டி, திரிபுவாதி, திருத்தல்வாதி, கலைப்புவாதி, காட்சிவாதி, துரோகி என்று பட்டங்கள் கட்டித்தானே நாசமாய்ப்போய் நடுத்தெருவில் நிற்கிறோம். இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராகயிருந்த கொல்வின் ஆர்.டி. சில்வாவும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களும் ட்ராட்ஸ்கியவாதிகளே. 1939ல் கட்சி ஸ்டாலினின் தலைமையிலான மூன்றாவது அகிலத்தின் மீது நம்பிக்கையின்மைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. உலகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகளிலிருந்து ட்ராட்ஸ்கிஸ்டுகள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது இலங்கையின் முதலாவது இடதுசாரிக்கட்சி, கட்சியிலிருந்த ஸ்டாலினிஸ்டுகளை வெளியேற்றியது. ஆக இலங்கையைப் பொறுத்தளவில் ஓடுகாலிப்பட்டம் ஸ்டாலினிஸ்டுகளுக்கு என்பது வரலாற்றின் முரண்நகை.   மலையக மக்களின் பிரசாஉரிமையை சேனநாயக்க அரசு பறித்தபோது அதற்கெதிராக ல.ச.ச. கட்சி தீவிரமாகப் போராடியது. தனிச்சிங்களச் சட்டமசோதா விவாதத்தின்போது ட்ராட்ஸ்கிஸ்டுகளான என்.எம்.பெரேராவும் கொல்வின் ஆர்.டி.சில்வாவும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் முக்கியமானவை, தீர்க்கதரிசனமானவை. “உங்களுக்கு அமைதியான அய்க்கியமான ஒரு இலங்கை வேண்டுமா அல்லது இரண்டாகத் துண்டாடப்பட்ட இரத்தப் பெருக்கெடுத்த ஏகாதிபத்தியப் பிசாசுகளால் விழுங்கப்படப்போகும் இரண்டு இலங்கைகள் வேண்டுமா? அதனால் இந்து சமுத்திரம் முழுவதும் ஏகாதிபத்தியப் பிசாசுகளுக்கு இரையாகும்”, “இரண்டு மொழிகளென்றால் ஒருநாடு! ஒரு மொழியென்றால் இருநாடு!” என்றார் கொல்வின் ஆர்.டி. சில்வா. 1964ல் ல.ச.ச.கட்சி அரசோடு இணைந்துகொண்டதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து வெளியேறியவர்களால் 1968ல் தோழர். கீர்த்தி பாலசூரியாவை செயலாளராகக் கொண்டு புரட்சிக் கொம்யூனிஸ்ட் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. கழகம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக்கான பிரிவாயிருந்தது. 1990களில் புரட்சிக் கொம்யூனிஸ்ட் கழகம் ‘வடக்குக் கிழக்கிலிருந்து சிறிலங்கா இராணுவமே வெளியேறு! தமிழ் – முஸ்லீம் -சிங்களப் பாட்டாளிகளின் அய்க்கியம் ஓங்கட்டும்!!’ என்பதையே தனது முதல் முழக்கமாய்க் கொண்டு இயங்கியது. நான் 1993லிருந்து 1997வரை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்காகப் பிரான்ஸில் வேலை செய்தேன். இங்கிருந்து வருகிறது என் ட்ரொட்ஸ்கியப் பாரம்பரியம்.   இப்பொழுது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சோஸலிச சமத்துவக் கட்சியாகப் பெயரையும் பண்பையும் மாற்றிக் கொண்டுவிட்டது. எனக்கும் கட்சியின் மீது ஆயிரெத்தெட்டு விமர்சனங்கள் உள்ளன. ஸ்டாலினிசமா? ட்ராட்ஸ்கிஸமா? என்று புகலிடப் பத்திரிகைகளில் முரட்டுத்தனமான விவாதங்களில் ஈடுபட்ட காலத்தையும் நான் கடந்து வந்துவிட்டேன். ஆனால் லியோன் ட்ரொட்ஸ்கி என்ற ஆளுமைமீது எனக்குள்ள ஈடுபாடு இன்னமும் அப்படியேதானுள்ளது. மார்க்ஸிய இயக்கத்திற்குள் காரல் மார்க்சுக்கு அடுத்தபடியாகத் தோன்றிய இலக்கிய ஆளுமை ட்ரொட்ஸ்கியே என்பார்கள். பிரஞ்சு எழுத்தாளர் ஆந்ரே பிரட்டனும் மெக்ஸிகோ ஓவியர் ரிவேராவும் இணைந்து 1938ல் வெளியிட்ட புகழ்பெற்ற அறிக்கையான ‘சுதந்திரமான புரட்சிகரக் கலையை நோக்கி’ என்ற அறிக்கைக்குப் பின்னணியிலிருந்தவர் ட்ராட்ஸ்கியே. கலை இலக்கியத்தின் சுதந்திரம் குறித்த அவரின் கருத்துக்களே எனக்கு இப்போதும் வழிகாட்டி.   ஈழத்தில் சாதியில்லை எனத் திரும்பத் திரும்ப பத்மநாபா அய்யர் சொல்வதிருக்கட்டும், எஸ். பொவும் சொல்கிறாரே?    ஈழத்தில் சாதியில்லை என்றால் பத்மநாபன் தன் பெயருக்குப் பின்னால் இன்னமும் எதுவித குற்றவுணர்வுமில்லாமல் போட்டிருக்கும் ‘அய்யர்’ பட்டத்தையும் இயல் விருதோடு சேர்த்து இவருக்கு ரொரன்டோ பல்கலைக்கழகமா கொடுத்தது? இந்த மாபாவி வெறும் சாதி அபிமானி மட்டுமல்ல அய்ரோப்பிய புலம்பெயர் இலக்கியச்சூழலில் ஆட்காட்டியாக, தலையாட்டியாகவும் இருந்து வருகிறார். ‘மூன்றாவது மனிதன்’ என்றொரு சிற்றிதழ் இலங்கையிலிருந்து வெளியிடப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.அந்த இதழ் சனநாயத்தையும் கருத்துரிமையையும் முக்கிய கோரிக்கைகளாக முன்னிறுத்தித் தோழர்.எம்.பௌஸரால் நீண்ட காலங்களாகவே வெளியிடப்படுகிறது. கடந்த வருடம் இலண்டனில் நடந்த இலக்கியச் சந்திப்புக்காகத் தோழர்களால் பௌஸரும் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவில் இடம் பெற்றிருந்த பத்மநாபன் பௌஸரின் வருகையைத் தடுத்து நிறுத்த முயன்றார். எனினும் மற்றைய சந்திப்பு ஏற்பாட்டுத் தோழர்கள் பௌஸரை அழைப்பதில் உறுதியாக நின்றார்கள். உடனே சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவிலிருந்து விலகிய இந்தத் துட்டப் பார்ப்பனர் பௌஸர் ஒரு இஸ்லாமியப் பயங்கரவாதி, அல்கைதாவின் கூலிப்படை என்றெல்லாம் வதந்திகளை உருவாக்கி உலவவிட்டார். இந்த வதந்தி புலி ஆதரவு இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டது. இதனால் பௌஸருக்கு பெருத்த சிரமங்கள் ஏற்பட்டன. இது குறித்து பௌஸர் வழங்கிய நேர்காணலைத் தோழர்கள் இப்போதும் thenee.com என்ற இணையத்தளத்தில் படிக்கலாம். ஆனால் பத்மநாபனைக் கேட்டால் ஈழத்தில் சாதிமட்டுமா இல்லை… முஸ்லீம்கள் மீதான புலிகளின் அடக்குமுறையும் தானில்லை என்றுதான் சொல்வார்.   எஸ். பொ. ஈழத்தில் சாதியில்லை என்று ஒருபோதும் சொல்லியிருக்கமாட்டார். அவர் அண்மையில் எழுதிய தன்வரலாற்று நூலான வரலாற்றில் வாழ்தலில் கூட ஈழத்தின் சாதிக்கொடுமைகளைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கொம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரான து.வைத்தியலிங்கம் கூடத் தன்னிடம் சாதி பாராட்டியதை அவர் அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆனால் புலிகள் தலையெடுத்த பின்பு ஈழத்தில் சாதியொடுக்குமுறைகள் குறைந்திருக்கின்றன என எஸ்.பொ சொல்லியிருக்கக்கூடும். இன்று ஈழத்தில் தீண்டாமைக் கொடுமைகள் ஓரளவுக்கு குறைந்திருக்கிறதென்றால் அதைக் குறைத்த பெருமை எஸ்.ரி.என்.நாகரத்தினம், கே.டானியல் போன்றவர்கள் தலைமை தாங்கிய தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தையே சேரும். புலிகள் உட்பட எல்லாத் தேசிய விடுதலை இயக்கங்களுமே சாதிப்பிரச்சினைகளை கையிலெடுக்கத் தயங்குகிறார்கள். என்றைக்கு அவர்கள் சாதிய ஒழிப்பை முழுவதுமாக உண்மையாக முன்னெடுக்கிறார்களோ அன்று அவர்கள் ஈழத்து வெள்ளாளர்களால் முற்று முழுவதுமாகக் கைவிடப்படுவார்கள் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். சாதியத்தின் வேர்கள் அதன் வரலாற்றுரீதியான இயங்குமுறைமைகள், இந்துப் பண்பாட்டுத்தளத்தில் அதன் அசைக்க முடியாத வலிமை, ஈழத்து ஆதிக்க சாதிகளின் சாதியக் கூட்டுமனம், அரசியல்- பொருளியல்- பண்பாடு – இலக்கியம் என அனைத்துத் தளங்களிலும் நிறைந்திருக்கும் அதன் ஆதிக்கம் என்பவற்றைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் தொடர்ச்சியால்தான் நாம் எதிர்கொள்ள முடியும். சாதிய விடுதலையை மையச் சிந்தனையாக இலட்சியமாக வரித்துக் கொண்ட தலித்துகளின் தலைமையில் அமைந்த ஓர் அமைப்பால்தான் ஈழப்புலத்திலிருந்து சாதியை ஒழிக்கும் திசையில் நேர்மையுடனும் உறுதியுடனும் செயற்பட முடியும். அதை விடுத்து சாதியத்தை ஒரு பேசுபொருளாகவே கொள்ளாத தமிழ்த் தேசியம் சாதியத்தை வெற்றிகொள்ளுமென்பது மடமைத்தனம். புத்தராலும் மார்க்ஸியத்தாலும் சாதிக்க முடியாததைக் கேவலம் பாஸிசம் சாதித்துவிடுமென்றா எஸ்.பொ நம்புகிறார்!   தமிழகத்தில் தலித் இலக்கியத்திற்கு முக்கிய இடமொன்று உருவாகியுள்ளது. ஆனால் உங்களால் டானியலை பருமனாக்கிய அளவுக்கு அரசியலாக்க முடியவில்லையே ஏன்?    பதில் மிகவும் எளிமையானது. உங்களுக்கு ஒரு ஜோதிபா பூலேயும் அயோத்திதாஸரும் அம்பேத்கரும் பெரியாரும் இருந்தார்கள். எங்களுக்கென்று யாருமில்லையே. நாங்கள் கே.டானியலை தலித் இலக்கிய முன்னோடி என்று நிறுவுவதை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ டானியல் இப்போது உயிருடன் இருந்தால் அவர் நிச்சயமாக ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். டானியல் தனது இறுதிக்காலம் வரை கொம்யூனிஸ்டாகவே வாழ்ந்தவர். அவர் சாதிய ஒழிப்பிற்காகத் தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்துப் போராடிய போதிலும் அவர் கட்சியின் விதிகளுக்கு உட்பட்டே இயங்கவேண்டியிருந்தது. அவர் அங்கம் வகித்த சீனச் சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சி ஈழத்துச் சமூக அமைப்பின் பிரதான முரணாகச் சாதியத்தை அடையாளம் காணவில்லை. தவிரவும் இந்துமத ஒழிப்பையோ தலித்துகள் பவுத்த மதத்தில் இணைவதையோ அவர்கள் ஆதரிக்கவுமில்லை. கட்சியின் தலைமை வெள்ளாளர்களிடமே இருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். டானியல் கட்சியில் நிம்மதியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. அவர் நான்கு தடவைகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்த நீக்கங்களை டானியலின் சாதிய விடுதலை முன்னோக்கும் கட்சியின் வர்க்க விடுதலை முன்னோக்கும் இடைவெட்டிக் கொண்ட புள்ளிகளாகத்தான் நாம் கருத வேண்டியிருக்கிறது. டானியலின் எழுத்துக்களிலிருந்து அவரும் மரபு மார்க்ஸியர்களைப் போலவே சாதியத்தை நிலமானிய சமூக அமைப்பின் விளைவாகவும் சாதி வர்க்கப் புரட்சியுடன்தான் முடிவுக்கு வரும் என்றும் கருதிக் கொண்டிருந்தார் என்றுதான் உணர முடிகிறது. இது சாதியம் புலிகளால்தான் முடிவுக்கு வரும் என்ற கருத்தைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு மேலானது என்றாலும் இன்றைய தலித் அரசியலுக்குப் பொருந்தாத பார்வை. இதைத்தான் எங்களிடம் பெரியாரும் அம்பேத்கரும் இருந்திருக்கவில்லை என்று சொன்னேன்.இங்கேதான் டானியலை அரசியலாக்க முடியாத பிரச்சினையிருக்கிறது. டானியலும் அவரது தோழர்களும் விட்ட இடத்திலிருந்து நாங்கள் தொடங்கலாமேயொழிய அவர்களின் அரசியலை அடியொற்றிச் செல்வது முடியாத காரியம். இதில் காலக் குழப்பம் எதுவுமில்லை. புத்தரும் அம்பேத்கரும் பெரியாரும் டானியல் காலத்திலும் தலித் விடுதலை அரசியலுக்கு வழிகாட்டிகளாக ஆசான்களாக இருந்திருக்கிறார்கள். இன்றைய தலித் விடுதலை அரசியலுக்கும் வழிகாட்டிகளாக யிருக்கிறார்கள்.   பின்நவீனத்துவம் அய்ரோப்பியச் சூழலுக்கு பொருந்தும் நமது சூழலுக்குப் பொருந்தாது என இங்குள்ளவர்கள் சொல்கிறார்களே?    பின்நவீனத்துவநிலை என்பது ஒரு தத்துவமோ அரசியல் இயக்கத்தின் வேலைத்திட்டமோ இலக்கியக் கோட்பாடோ கிடையாது. அது அறிதல் முறைகளின் தொகுப்பு. பின்நவீன அறிதல்முறைகள் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அது மேற்கிலேயே காலாவதியான போக்கு என்று டெர்ரி ஈகிள்டன் போன்றவர்களைச் சான்றாதாரங்களாக நிறுத்தி இங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று மேற்கத்திய அறிவுத்துறையை பின் நவீனத்துவப் பூதம் பிடித்து ஆட்டிக்கொண்டுதானிருக்கிறது. இலக்கிய, அரசியல், மொழியியல் துறைகளில் ஆரம்பித்த பின்நவீனத்துவ ஆய்வுமுறைகளின் வீச்சு இன்று பல்கலைக்கழக பாடவிதானங்களிலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. எனவே இப்போது என்னயிருந்தாலும் பின்நவீனத்தவம் நமது சூழலுக்குப் பொருந்தாது என முனக ஆரம்பித்திருக்கிறார்கள். நவீனத்துவத்தின் ஒற்றைப்படைத்தன்மைக்கும் பன்மைகளின் நிராகரிப்புக்கும் எதிராகக் கேள்விகளை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கும் ஓர் அறிதல் முறைமை நமது சூழலுக்குத் தேவையில்லை என்று சொல்வதில் ஏதாவது அறிவுநாணயம் இருக்க முடியுமா? பின்நவீனத்துவம் அறிதல் முறைகளின் தொகுப்பு என்பதை மீறி பின்நவீனத்துவம் ஒரு விடுதலை மார்க்கம், விடுதலை அரசியல் வேலைத்திட்டம், எல்லா ஒடுக்குமுறைகளுக்கு மான தீர்வென்றெல்லாம் யாரும் சொல்லவில்லையே.   பின்நவீனத்துவம் கடவுளுமல்ல அபினுமல்ல.   சமீபகாலமாய் பெண் எழுத்துக்கள் குறித்து ஆபாசம் விளம்பரம் தேடுகின்ற உத்தி என்றெல்லாம் பேசப்படுகின்றதே சக படைப்பாளியாய் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?    இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் எத்தனை நேர் காணல்களில் எத்தனை பத்திரிகைகளில்தான் இந்தத் தேய்ந்து போன கேள்வியையே கேட்டுக்கொண்டி ருக்கப்போகிறீர்கள்? நானே பத்திரிகைகளில் மூன்றாவதோ நான்காவதோ தடவையாக இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். ஆபாசம், விளம்பரம் தேடும் உத்தியென்றெல்லாம் எவன் சொன்னான்? அப்துல் ரகுமான், சிநேகிதன், பழனிபாரதி, பொன்னீலன் போன்றவர்களின் உளறல்களுக்கெல்லாம் இன்றைய நவீன இலக்கிய விமர்சனப் பரப்பில் ஏதாவது மதிப்பிருக்கிறதா? சில வருடங்களுக்கு முன்பு பெண்ணிய எழுத்துகள் குறித்து எனக்கு ஒரு விமர்சனமிருந்தது. அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் உடலரசியல், காதல், குடும்ப மதிப்பீடுகளைத் தாண்டிச் செல்ல மறுக்கிறார்கள் என்ற கருத்தை ஒரு நேர்காணலில் கூட நான் சொல்லியிருந்தேன். ஆனால் இன்று அணங்கு, பனிக்குடம் போன்ற இதழ்களையும் livingsmile.blogspot.com போன்ற இணையங்களையும் படித்துப்பாருங்கள். பெண்ணிய அரசியல், உடல் அரசியல் என்பவற்றோடு மட்டும் நின்றுவிடாமல் அவர்கள் பரந்துபட்ட அரசியல், இலக்கிய கருத்துகளையும் விவாதங்களையும் முன்னெடுக்கிறார்கள். புனைவு, அ-புனைவு நாடகம், ஆவணப் படங்கள், நேரடி அரசியல் என அவர்கள் ஆர்த்தெழுந்திருக்கும் இந்தக் காலகட்டம் தமிழில் பெண்ணிய வெளிப்பாடுகளின் திருப்புமுனைக் காலகட்டம் என்றே நான் கருதுகிறேன். குறிப்பாக இவர்களுக்குப் பார்ப்பன சாதிப் பின்புலம் கிடையாது. உண்மையில் இவர்கள் தங்கள் தலைமுறையைச் சார்ந்த ஆண் எழுத்தாளர்களை விடத் தீவிரமாக இயங்குகிறார்கள். விவாதங்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்கிறார்கள்.   சுகிர்தராணியும் மாலதி மைத்ரியும் பேசுகின்ற அரசியல் முக்கியமானது என்பதில் கருத்து வேறு பாடில்லை. ஆனால் காலச்சுவட்டோடு அவர்கள் நின்று பேசுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?    நான் இந்தத் தடவை தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து பார்க்கிறேன், என்ன யாரைப் பார்த்தாலும் காலச்சுவடு பூச்சாண்டியே காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? நாங்கள் எல்லோரும் கூண்டோடு அச்சப்படுமளவிற்கு அது என்ன சிறப்பு அதிரடிப்படையின் ஆயுத முகாமா? அது மாதத்திற்கு அய்யாயிரமோ பத்தாயிரமோ விற்கும் ஓர் பத்திரிகை! காலச்சுவடு பெரியாரைக் கொச்சைப்படுத்தியது, தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பும் களமாய் இருக்கிறது, அது சுந்தர ராமசாமியின் காலந்தொட்டே இடதுசாரி எதிர்ப்பைக் கடைப்பிடிக்கிறது, பார்ப்பன சங்கத்தின் விளம்பரங்களை வெளியிடுகிறது, சமயத்தில் ஒரு மது விலக்குப் பிரச்சாரப் பத்திரிகை போல எழுதுகிறது என்றெல்லாம் எனக்கு நீண்டகாலமாகவே காலச்சுவட்டின் மீது கடும் விமர்சனங்களிருக்கின்றனவே தவிர இதில் பதற்றப்படுவதிற்கு எதுவுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காட்டில் துட்ட மிருகங்கள் ஆயிரமிருந்தாலும் பூனைக்கு எலிதான் எதிரி என்பது மாதிரி யிருக்கிறது உங்களின் காலச்சுவடு மீதான அணுமுறை.   பெரியாரிய, இஸ்லாமிய, இடதுசாரி எதிர்ப்பு என்பதெல்லாம் குட்டி பிஜேபி நிலைப்பாடுதான். இப்படியான அதிவலதுசாரிப் பத்திரிகையோடு கலகப் பிரதிகளையும் இந்துத்துவ எதிர்ப்புப் பிரதிகளையும் எழுதுவதாகச் சொல்பவர்களால் எப்படி இணைந்திருக்க முடியும்?    உங்கள் கொள்கைப்பற்று வரவேற்கத்தக்கது என்றாலும் கூட நீங்கள் தமிழ் இதழியல் பதிப்புச் சூழல்களையும் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே மிகச்சில மூத்த எழுத்தாளர்களையும் மு.க.கனிமொழியையும் தவிர்த்து மற்றவர்களுக்கான பிரசுர வாய்ப்புக்கள் இன்னமும் சிக்க லாகத்தானிருக்கின்றன. நமது தோழமைக்குரிய எல்லா எழுத்தாளர்களும் நானும்கூட குமுதம், விகடன் குழும இதழ்களில் எழுதிக்கொண்டுதானிருக்கிறோம். எழுதுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி நமது கருத்துக்களைச் சமரசமில்லாமல் சொல்வதென்பது வேறு வாய்ப்புகளுக்காகவே சமரசம் செய்துகொண்டு வாய்ப்பளிப்பவர்களின் அல்லக்கைககளாகச் செயற்படுவதென்பது வேறு. அல்லக்கைகளை விட்டுவிடுவோம். காலச்சுவட்டில் எழுதிக்கொண்டிருக்கும் மாலதியும் சுகிர்தராணியும் பேசுகின்ற அரசியல் முக்கியமானது என்பதில் நீங்களும் உடன்படுகிறீர்கள். காலச்சுவட்டுக்காக அவர்கள் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து இறங்கி வரவில்லை. இலக்கியத்தைப் பொருட்படுத்தாத தமிழ்க் கூட்டு மனநிலையைக் கருத்தில் வைத்துத்தான் நாம் தனி எழுத்தாளர்களை மதிப்பீடு செய்ய முடியும். இந்த இலக்கிய மறுப்புச் சமூகப் படுகுழியிலிருந்து அரவத்தையோ அல்லது கயிற்றரவையோ பிடித்துத்தான் ஏற வேண்டியிருக்கிறது.   புலம்பெயர்ச் சூழலில் பெண் படைப்பாளிகள் பெரிதாக உருவாகாத காரணங்கள் என்ன?    அப்படிச் சொல்லிவிட முடியாது. அய்ந்தரைக் கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து எத்தனை பெண் படைப்பாளிகள் உருவாகியிருக்கிறார்கள்? மாமிகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் கவனிக்கத்தக்க பெண் எழுத்தாளர்களாக ஒரு இருபது பேர்கள் இருப்பார்களா? அப்படிப் பார்த்தால் அய்ந்து இலட்சத்திற்கும் குறைவாகயிருக்கும் புலம் பெயர்ந்த எங்களிடையேயிருந்தும் ஆழியாள், பிரதிபா தில்லைநாதன், நிரூபா, றஞ்சினியென்று நான்கு பேர் உருவாகித்தானேயிருக்கிறார்கள். பெண் படைப்பாளிகளென்றில்லை புகலிடத்தில் ஆண் படைப்பாளிகளை எடுத்துக் கொண்டாலும் அவர்களிலும் கவனிக்கத்தக்க எழுத்தாளர்களாக நான்குபேர்தானேயிருக்கிறார்கள். இதற்கு மேலும் குறிப்பிடக்கூடிய படைப்பாளிகள் உருவாகாததற்கும் வலுவான காரணங்கள் இருக்கின்றன. புகலிடச் சூழலில் தமிழர்கள் செறிவற்று வாழ்வதால் தொடர்ச்சியான இலக்கிய உரையாடல்களை நடத்துவதற்கும் படைப்பு மனநிலையைத் தக்க வைத்திருப்பதற்குமான வாய்ப்புகள் குறைவு. புகலிடப் படைப்பாளிகளில் யாருமே கல்வித்துறை சார்ந்தவர்களல்ல. சீவியத்திற்காக இரவுபகலாக வேறு துறைகளில் உழைத்துக்கொண்டு இலக்கிய வாசிப்புக்கும் இலக்கியப் பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குவதும் கடினம். இதைத் தவிர நேரடியான அரசியல் வேலைகளிலும் புனர் வாழ்வுப் பணிகளிலும் அவர்கள் தங்களது நேரத்தில் பெரும்பகுதியைச் செலவழிக்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக புகலிட எழுத்தாளர்கள் தொடர்ச்சியான கண்காணிப்புக்குள் இருக்கிறார்கள். எழுதுவதாலும் பத்திரிகைகள் வெளியிட்டதாலும் புகலிட எழுத்தாளர்கள் பலதடவைகள் புலிகளால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகையை விற்ற தோழர்கள் பாரிஸ் வீதிகளில் வைத்துப் புலிகளால் இரண்டு தடவைகள் தாக்கப்பட்டார்கள். ‘மனிதம்’, ‘தாயகம்’ போன்ற பல பத்திரிகைகள் புலிக் குண்டர்களால் மிரட்டப்பட்டிருக்கின்றன. இவ்வளவு பிரத்தியேகமான சிக்கல்களையும் எதிர்கொண்டுதான் புகலிடத்திலிருந்து எழுத வேண்டியிருக்கிறது.   கருணையால் உலகு தழுவிய பவுத்தம் இலங்கையில் இனவாதத்திற்குப் பலியாகி விட்டது தானே?    ஒருபோதுமில்லை. இன்று இத்தனை வருட யுத்தத்திற்குப் பின்னும் சிங்களவர்களின் பகுதியான கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் தமிழர்கள் ஆபத்தில்லாமல் வாழ்கிறார்கள், தொழில் செய்கிறார்கள், கல்வி கற்கிறார்களென்றால் பெரும்பாலான பவுத்தர்கள் இனவாதிகள் இல்லையென்றுதானே அர்த்தம். ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நுழையும் ஒரு சிங்களவர் உயிரோடு திரும்பிச் செல்ல முடியாதே.   அரசும் அரசியலதிகாரத்தைச் சுவைக்கத் துடிக்கும் மதத்தலைவர்களும் சிங்கள மக்களைப் பவுத்தத்தின் பெயரால் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக அணி திரட்டப் பல வருடங்களாகவே முயன்றுவருவது உண்மைதான். ஆனால் எப்படிப் பரந்துபட்ட தமிழ் மக்கள் இந்த யுத்தத்தை விரும்பவில்லையோ அது போலவே சிங்கள மக்களும் இந்த யுத்தத்தை வெறுக்கிறார்கள். தமிழ்த் தேசிய – சிங்கள இனவாத சக்திகளின் தடுப்பரண்களையும் மீறி சுனாமி அனர்த்தத்தின் போது அந்த மக்கள் ஒருவர் மீதான மற்றவரின் வாஞ்சையை மறுபடியும் நிரூபித்துக் காட்டினார்கள். சுனாமி நிவாரண நிதியாகக் கிடைத்த வெளிநாட்டுப் பணத்தை எப்படிக் கொள்ளையடிப்பது என்று அரசும் புலிகளும் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது சத்தமேயில்லாமல் பாதிக்கப்பட்ட தமிழ் – முஸ்லீம் மக்களுக்குச் சிங்கள மக்கள் உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.   சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கின்ற கருத்தாக்கத்தை உலகுக்கு வழங்கிய பிரான்ஸிலிருந்து பேசுகிறீர்கள். பிரான்ஸ் ஈழத் தமிழர்களை கருப்பர்களை இஸ்லாமியர்களை எப்படி நடத்துகின்றது?    பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே நமது கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார். நமக்குப் பிரஞ்சுக்காரர்கள் கேளிர்தான். ஆனால் நாம் பிரஞ்சுக்காரர்களுக்குக்கு நாம் கேளிரா? என்பதுதான் பிரச்சினையே! மூன்றாம் உலகநாடுகளில் வெள்ளையர்கள் கொலனி பிடித்துக் கொள்ளையடிக்கும்வரை கொள்ளையடித்து, ஒட்ட உறிஞ்சிவிட்டு வெளியேறியபோது உருவாக்கி வைத்துவிட்டுவந்த தேசிய இனச்சிக்கல்களாலும், இனக்குழு மோதல்களாலும், வெள்ளையர்கள் தங்கள் ஆயுத வணிகத்திற்காக மூன்றாம் உலகநாடுகளில் War lordகளை உருவாக்கிவிட்டதாலும் போர்களால் நாடிழந்து வீடிழந்து ஏதிலிகளாகத் தஞ்சம்கோரி ஓடிவரும் மூன்றாம் உலக மக்களை வரவேற்பதற்காக அய்ரோப்பிய அரசுகள் தமது எல்லைகளில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று வரவேற்பு வளைவுகளை வைத்திருப்பதில்லை.அவர்கள் எல்லைகளில் கொழுத்த வேட்டை நாய்களையும் இனவெறி பிடித்த பொலிஸ் குண்டர்களையும்தான் வைத்திருக்கிறார்கள். அய்ரோப்பாவின் எல்லைகளுக்குள் நுழைய முற்படும் ஈழ, இஸ்லாமிய, கறுப்பு, சீன அகதிகள் நாள்தோறுமே கிழக்கு அய்ரோப்பாவின் பனிப்பாலைகளில் நடந்து வருகையில் விறைத்தும் போலந்தின் ஆறுகளில் மூழ்கியும் இறக்கிறார்கள். அத்திலாந்து சமுத்திரத்தில் படகுகளோடு ஜலசமாதி அடைகிறார்கள். மீறியும் மேற்கு அய்ரோப்பிய எல்லைகளைத் தொடுபவர்களில் கணிசமானோர் உடனடியாகவே அவர்களின் சொந்த நாடுகளுக்குக் கொலைக்களங்களுக்கு கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.   அய்ரோப்பாவில் அகதிகளை வரவேற்பதற்கான சட்டமான ‘Geneva 25 July 1952 ‘அகதிச் சட்டம் நிறைவேற்றப்படும்போது அய்ரோப்பாவின் சமூக பொருளியல் நிலைமைகள் வேறுமாதிரியிருந்தன. அது அய்ரோப்பிய முதலாளியத்தின் செழுமைக் காலமாயி ருந்தது. அய்ரோப்பிய மூலதனத்துக்குப் பெருமளவிலான கூலிகள் தேவைப்பட்ட காலமது. தவிரவும் நடந்து முடிந்திருந்த இரண்டாம் உலகப்போரின் வடுவும், அப்போதைய சோவியத் யூனியனிலிருந்தும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலிருந்தும் வெளியேறிய முதலாளியச் சாய்வுச் சிந்தனையாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஸ்டாலினிஸ எதிர்ப்பாளர்களுக்கும் புகலிடம் கொடுத்து அவர்கள் மூலம் கொம்யூனிஸ எதிர்ப்பைப் பரப்புரை செய்வதும் ஜெனிவா அகதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான மற்றைய காரணங்கள். இந்த மூன்று காரணிகளும் இன்றைய அய்ரோப்பியச் சமூக, பொருளியல் சூழல்களில் பெருமளவு அர்த்தமற்றுப் போய்விட்டன. 1980களில் தொழிற்துறையில் நிகழந்த தகவல் தொழில்நுட்பப் புரட்சியுடன் அய்ரோப்பிய முதலாளியம் அபரிமித உற்பத்தி நெருக்கடிக்குள் மறுபடியும் ஒருமுறை சிக்கிக்கொண்டது. பல்கிப் பெருகிய உற்பத்தி சக்திகளால் முதலாளிய சந்தையில் கடும் போட்டிகள் உருவானதால் மலிவு விலையில் உற்பத்திப் பொருட்களை வழங்கும் நிறுவனங்களே சந்தைப்போட்டியில் வெற்றியடையும் நிலையுருவாகியது. இந்தச் சிக்கலிலிருந்து தப்பிப்பதற்காக மலிவான கூலித்தொழிலாளர்கள் நிறைந்திருக்கும், தொழிற்சங்க உரிமைகள் வலுவற்றிருக்கும் மூன்றாம் உலக நாடுகளை நோக்கி உலக முதலாளியம் மூலதனங்களையும் தொழிற் சாலைகளையும் நகர்த்தியது. இப்போது Nike இந்தோனேசியாவிலும் Coke இந்தியாவிலும் கொடி கட்டிப் பறக்கின்றன.மேற்குநாடுகளில் தொழிற்சாலைகள் பெருமளவு மூடப்பட்டதாலும் ஆட்குறைப்பாலும் அய்ரோப்பியத் தொழிலாளர்களுக்கு வேலை பறந்தது. இன்று பிரான்ஸில் வேலையில்லாதோரின் தொகை 12 விழுக் காடாயிருக்க, அய்ரோப்பிய யூனியனில் வேலையில்லாத இளைஞர்கள் தொகையின் சராசரி 15 விழுக்காடாயிருக்க அய்ரோப்பிய அரசுகள் தமது கதவுகளை அகதிகளுக்கு இறுக மூடிக்கொள்கின்றன. இப்போது அய்ரோப்பிய முதலாளியத்திற்கு மூன்றாம் உலகநாடுகளிலிலிருந்து மூன்றாம் உலக மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்று முடித்த விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் கணனி நிபுணர்களும்தான் தேவையேயொழிய அகதிகள் என்ற சிறப்புப் பெயரில் அழைக்கப் படும் கூலித் தொழிலாளர்கள் தேவையில்லை.இன்று பிரான்ஸில் மட்டும் 300000 நிராகரிக்கப்பட்ட அகதிகள் ‘Sans Papiers ‘என்ற பரிதாபத்துக்குரிய அடையாளத்தோடு வதிவிட உரிமை, மருத்துவ உதவி, வேலை செய்வதற்கான உரிமை, சமூகநல உதவிகள் எதுவுமற்றுத் திருடர்கள்போல வாழ்ந்து துன்பத்தில் உழன்று கொண்டி ருக்கிறார்கள். அரசியல் அகதிகளைப் புதிதாக ஏற்றுக் கொள்ள பிரான்ஸ் மறுப்பதற்கு இன்னொரு புனிதக் காரணமும் உள்ளது. பிரான்சுக்கு அகதிகளாக வருபவர்களில் பெரும்பாலானோர் முசுலீம்களே. இவர்கள் ஆப்கானிஸ்தான்,, ஈரான், ஈராக், சூடான், நைஜீரியா, செனகல், மாலி, அல்ஜீரியா, துனிசியா, மெராக்கோ, துருக்கி, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலிருந்து வருகிறார்கள்.ஏற்கனவே கூலித்தொழிலாளர்களாக வட ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டு இரண்டு மூன்று தலைமுறைகளாக பிரான்ஸிலேயே தங்கிவிட்ட முசுலீம்களோடு கடந்த இருபது ஆண்டுகளில் அகதிகளாகப் பிரான்சுக்கு வந்து சேர்ந்த முசுலீம் மக்களும் சேர்ந்தபோது பிரான்ஸின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் மாறிவிட்டது. பிரான்ஸில் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க அரசியல் சக்திகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். பொறுக்குமா சிலுவைப் போராளிகளின் வாரிசுகளுக்க ு? அவர்கள் அகதிகளுக்கு மூடிய கதவுகளில் முசுலீம்களின் பெயரால் ஒருபெரிய பூட்டையும் இப்போது தொங்க விட்டிருக்கிறார்கள்.எதிர்வரும் அதிபர் தேர்தலில் இன்றைய ஆளும் கட்சியான UMPயின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் நிக்கொலா சார்க்கோஸியின் குரல் ஒரு நியோ நாஸியின் குரல் போலவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் பிரான்ஸின் முதன்மையானதும் உடனடியானதுமான பிரச்சினையாக குடியேற்றவாசிகளையும் அகதிகளையும்தான் குறிப்பிடுகிறார். சென்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லியனல் ஜோஸ்பனை முந்திக்கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் பச்சை இனவாதியான லூ பென். லூ பென்னின் பெருகிவரும் செல்வாக்கும் சார்க்கோஸி போன்றவர்கள் நாட்டின் அதிஉயரடி பீடத்தில் அமருவதும் நம்மை நெருங்கிவரும் அபாயங்களை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. “Liberté, Égalité, Fraternité” என்று முழங்கியபடியேதான் இவர்கள் வியட்நாமிலும் அல்ஜீரியாவிலும் வகைதொகையில்லாத கூட்டுப் படுகொலைகளை நடத்தி முடித்தார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று சொல்லியபடியேதான் கடல் கடந்த மாகாணங்கள் என்ற பெயரில் நான்கு நாடுகளையும் பதினொரு தீவுகளையும் இன்றுவரை பிரஞ்சுக் கொலனிகளாக வைத்து சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பேசும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதெல்லாம் அய்ரோப்பியர்களுக்கு மட்டும்தான். “ஓர் அய்ரோப்பியனைக் கொல்வது ஒரே கல்லில் இரு பறவைகளைக் கொல்வதாகும். அது ஒடுக்குபவனையும் அவனால் ஒடுக்கப்படுபவனையும் ஒரே சமயத்தில் ஒழித்துக்கட்டுவதாகும்: அங்கே கிடப்பது ஒரு பிணம்; அங்கே இருப்பது ஒரு சுதந்திர மனிதன்” என்று சார்த் சும்மாவா சொன்னார்?   பார்ப்பனர்களே இல்லாத ஈழம் – புலம்பெயர் சூழலிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் நீங்கள் பார்ப்பன எதிர்ப்பை முன்வைத்துப் பேசுவதற்கான முகாந்திரங்கள் என்ன?    சிங்களவர்களையே கண்ணால் பார்த்திராத நீங்களெல்லோரும் சிங்கள எதிர்ப்புப் பேசுகிறீர்களே அதுபோல் நான் நிச்சயமாகப் பேசவில்லை. ஈழத்துச் சூழல் பார்ப்பனர்களே இல்லாத சூழல் என்று சொல்வது சரியாகாது. அவர்கள் அற்பசொற்ப தொகையிலிருந்தாலும் அவர்களின் வாழ்க்கைமுறை பார்ப்பனிய வாழ்க்கை முறையாகவேயிருக்கிறது. அவர்கள் பார்ப்பனர்களாகத்தான் வாழ்கிறார்கள். இன்றும் பார்ப்பனர்கள் ஈழத்தில் முற்று முழுவதுமாகத் தீண்டாமையைக் கடைபிடிக்கிறார்கள். அவர்கள் அரசியலிலும் பொருளியலிலும் நேரடி ஆதிக்கசக்திகள் இல்லைதான். ஆனால் இந்துப் பண்பாட்டுத்தளத்தில் அவர்கள்தான் உச்சத்திலிருக்கிறார்கள். பார்ப்பனியம் என்பது வெறுமனே சாதியடுக்கில் உச்சத்திலிருப்பது மட்டுமல்ல சாதியத்தை வடிவமைத்துக் காத்து வருவதும் அதுதான் என்ற புரிதல் எனக்கிருக்கிறது.   இன்னொரு முக்கியமான விசயமுமிருக்கிறது. இந்திய ஆளும்வர்க்கம் ஈழத்தமிழர்களின் பிரச்சனையையை தனது நலன்களது நோக்கிலேயே ஆரம்பம் முதலே அணுகிவருகிறது. அது அதற்காக அமைதிப்படையின் காலத்திலே எங்கள் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்தது. சிறுமிகளையும் பெண்களையும் பாலியல் சித்திரவதைகள் செய்து புதைத்தது. ஆயிரக் கணக்கான இளைஞர்களை அங்கயீனம் செய்தது. இந்திய ஆளும் வர்க்கம் என்பது யார்? இந்திய அரசின் பெரும்பாலான உயரதிகாரிகளும் படைத்தளபதிகளும் இந்திய அரசின் கொடுமைகளை இன்றுவரை நியாயப்படுத்திக்கொண்டிருக்கும் ஊடகச் செல்வாக்குமிக்கவர்களான ‘இந்து’ ராம் போன்றவர்களும் யார்? அவர்கள் பார்ப்பன- பனியா நலன்களை மட்டும் கருத்திலே கொண்ட சாதிப்பற்றாளர்கள், சனநாயக விரோதிகள். இந்தியப் பார்ப்பனர்களின் அதிகார விருப்புகளும் ஆதிக்க எல்லைகளும் இந்தியாவுடன் மட்டும் நின்று விடுவதில்லை. அது ஈழம் வரைக்கும் தனது விஷ நாவை எறிந்துதான் வைத்திருக்கிறது. அது அரசியலில் என்றாலும் சரி! பண்பாட்டில் என்றாலும் சரி! இலக்கியத்தில் என்றாலும் சரி!   சிறுபத்திரிகைகளின் காலம் முடிந்து விட்டதென அசோகமித்திரன் சொல்கின்றாரே?    அவர் அதை மட்டுமா சொன்னார்? ‘சங்கராச்சாரியார் மீது விசாரணை தொடங்க முன்னமே பத்திரிகைகள் சங்காரிச்சாரியரைக் கொச்சைப்படுத்திவிட்டன’ என்றார். ‘தமிழகத்தில் பார்ப்பனர்களின் நிலைமை நாஸிகளின் கைகளில் அகப்பட்ட யூதர்களைப் போலாகிவிட்டது’ எனச் சொன்னார். சிறுபத்திரிகையொன்று நடத்துவதற்காக அவரின் வீடேறிக் கதை கேட்கப்போன தோழர்களை ‘பார்ப்பனர்களைத் திட்டத்தானே பத்திரிகை தொடங்குகிறீர்கள்?’ எனத் திட்டித் துரத்திவிட்டார். இப்போது சிறுபத்திரிகைகளின் காலம் முடிந்து விட்டதெனச் சாபமிட்டிருக்கின்றார். அசோகமித்திரனுக்கு மட்டுமல்ல தமிழக, ஈழத்து ஆதிக்கசாதி எழுத்தாளர்கள் பலருக்கும் எண்பதுகளிற்குப் பிந்திய சிறுபத்திரிகைகளின் போக்குகள் உவப்பில்லாமல்தான் போய்விட்டன.அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற புதிய சிந்தனை முறைமைகளும் அவை சார்ந்த கலை, இலக்கிய வெளிப்பாடுகளும் விமர்சன மரபுகளும் ஒரு பேரலையெனத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் நுழைந்து அதுவரையிருந்த இலக்கிய பீடங்களையும் ரசிகமணி விமர்சகர்களையும் கவிழ்த்துப் போட்டதை அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. ‘கண்டதையும் தின்றுவிட்ட வாலைத் தூக்கிக் கழிக்கும் மிருகங்கள்’ என்றார் சுந்தர ராமசாமி. ‘சமூக விரோத எழுத்துக்கள்’ என்றார் யமுனா ராஜேந்திரன். கொஞ்சம் புத்திசாலிகளான ஆதிக்கசாதி விமர்சகர்கள் ‘இவர்களுடைய எழுத்துக்கள் புரிவதேயில்லை’ என்றார்கள். இப்படி இவர்களால் அழுக்காறு கொள்ள முடிந்ததே தவிர இவர்களால் இந்தப் புதிய சிந்தனைகளைக் கோட்பாட்டுத் தளத்திலோ புனைவுத் தளத்திலோ எதிர்கொள்ள முடியவில்லை. முக்கியமாக இந்தப் புதிய சிந்தனைமுறைமைகள் குறித்த அறிமுகங்களும் ஆக்கபூர்வமான உரையாடல்களும் பார்ப்பனர்கள் அல்லாதவர்களால் நடத்தப்பட்ட சிறு பத்திரிகைகளில்தான் முழுவதுமாக முன்னெடுக்கப்பட்டன. இந்தப் புதிய சிந்தனைமுறைகளும் கோட்பாடுகளும் இலக்கியத்தளத்தில் தலித், பெண்ணிய, விளிம்பு நிலை மனிதர்களின் பிரதிகளை முன்னிறுத்த தலித், பெண்ணிய, விளிம்புநிலைப் பிரதிகள் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பேசுபொருட்களாயின. புதிய புதிய எழுத்தாளர்கள் பல்வேறு நிலப்பகுதிகளிலிருந்தும் சிறப்பான இலக்கியப் பிரதிகளை எழுதத் தொடங்கினார்கள். பார்ப்பன எழுத்தாளர்களின் பீடங்கள் ஆட்டங்காணத் தொடங்கின. எண்பதுகளுக்குப் பிந்திய சிறுபத்திரிகை இயக்கத்தில் அவர்களுக்கு இடமேதுமில்லை. இந்த வயிற்றெரிச்சலோடுதான் அசோகமித்திரன் சிறு பத்திரிகைகளின் காலம் முடிந்து விட்டது என்கிறார். பொறுத்திருந்து பாருங்கள் அசோகமித்திரன் போன்றவர்கள் தமிழ் இலக்கியத்தின் காலம் முடிந்துவிட்டது என்றும் விரைவில் சாபமிடுவார்கள்.   ஒரு இலக்கியவாதியாகவும் செயல்பாட்டாளராகவும் இருக்கும் நீங்கள் பிரான்சின் மீதான விமர்சனங்களை எழுதியோ பேசியோ வெளிப்படுத்திவிடுகிறீர்கள். புலம்பெயர்ந்து பிரான்சில் அடைக்கலம் கண்டுள்ள மற்றவர்கள் இவ்விமர்சனங்களை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்? அப்படி வெளிப்படுத்திக் கொள்வதற்கான சுதந்திரம் அங்கிருக்கிறதா?    முதலாளிய அமைப்புமுறையை நடத்திச் செல்வதற்கு அவசியமான அளவிற்குப் பிரான்ஸின் ஆட்சியாளர்கள் முதலாளிய சனநாயகத்தை அனுமதித்திருக்கிறார்கள். அகதிகளுக்கான அமைப்புகளும் வதிவிட அனுமதி நிராகரிக்கப்பட்டவர்களுக்கான சங்கங்களும் போர் எதிர்ப்பு இயக்கங்களும் G நாடுகளுக்கான எதிர்ப்பு இயக்கங்களும் பிரான்ஸில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவர்களின் போராட்டங்களை இந்தியப் பொதுவுடமைக் கட்சிகளின் தொழிற்சங்கங்களின் போராட்ட வடிவங்களோடு நாம் ஒப்பிட்டுச் சொல்லலாம். அந்த ரேஞ்சுக்கு மேல் எதுவுமில்லை. சொல்லப்போனால் இந்தியாவில் பொதுவுடமை இயக்கங்களாவது அற்ப சொற்ப வெற்றிகளைச் சாதிக்கின்றன. பிரான்ஸிலோ ஒரு மாலைநேர ஒன்றுகூடல், மத்தியதர வர்க்க இளைஞர்களின் சாகசம் என்பவற்றை மீறிப் போராட்டங்கள் வெகுசனங்களின் கவனயீர்ப்பையோ குறிப்பிடத்தகுந்த வெற்றிகளையோ அண்மைக்காலங்களில் பெறுவ தில்லை. ஈராக்கின் மீதான அமெரிக்காவின் யுத்தம் குறித்தோ சதாம் உசேனின் படுகொலை குறித்தோ ‘ப்ச்’ என்ற இதழ் வெடிப்பைத் தாண்டி இன்னொரு சத்தம் பிரான்ஸிலிருந்து எழவில்லை. எங்காவது அறிவுத்துறையினர் மத்தியிலிருந்தோ பல்கலைக் கழகங்களின் மண்ட பங்களிலிருந்தோ ஏதாவது ஈனசுரம் எழுந்திருக்கலாம். ஆனால் அது என் காதுகளிலோ அல்லது பாரிஸ் தெருக்களிலோ சதுக்கங்களிலோ விழவில்லை. 2005 ஒக்ரோபரில் இரண்டு வடஆபிரிக்க இளைஞர்கள் பொலிஸாரால் துரத்தப்படும்போது மின்மாற்றியில் சிக்கி உயிரிழந்தபோது கறுப்பின இளைஞர்களாலும் அரபு இளைஞர்களாலும் முன்னெடுக்கப்பட்ட தன்னெழுச்சியான அரச எதிர்ப்புப் போராட்டத்தின்போது அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவியது. போராட்டக்காரர்கள் ஒளிந்திருப்பதாகக் கூறிக் காவற்துறை ஒரு பள்ளிவாசலுக்குள் புகுந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியது. மூவாயிரத்துìகும் மேலான இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். குற்றவாளிகள் எனக் கருதப்பட்டவர்களை நாடு கடத்துவதற்குச் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அய்ம்பது வருடங்களிற்குப் பின் குறிப்பிட்ட நகரங்களில் அவசரகாலச் சட்டமும் ஊரடங்குச் சட்டமும் அமுலுக்கு வந்தன. சுருக்கமாகச் சொன்னால் சட்டங்களை மீறாமல் சட்டங்களை எதிர்த்துப் போராடலாம் என்பதுதான் பிரான்ஸின் கண்கட்டி சனநாயகம். இந்த பெயரளவிலான சனநாயகத்திற்குக் கூட ஆபத்து வருவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. சீனா போன்ற நாடுகளில் சனநாயக அமைப்பே இல்லாத போதும் அங்கே முதலாளியம் வேகமாக வளர்ந்து வருவதால் முதலாளிய வளர்ச்சிக்குச் சனநாயக அமைப்பு இன்றியமையாததுதானா என்ற திசைகளில் முதலாளித்துவ அறிவுஜீவிகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.   சிங்கள பேரினவாதத்தை அரச வன்முறை மூலம் நிலைநிறுத்துகிற இலங்கை ஆட்சியாளர்கள் ஒரு புறம். சாதிய மேலாதிக்கத்திலும் முஸ்லிம் வெறுப்பிலும் ஏகாதிபத்திய ஆதரவிலும், மாற்றுக் கருத்துக்களை,அமைப்புகளை சகித்துக்கொள்ளாத அ-ஜனநாயகப் போக்கிலும் சிக்குண்டிருக்கும் விடுதலைப் புலிகள் மறுபுறம். இவ்விரு கருத்தோட்டங்களுமே நிராகரிக்கப்பட வேண்டியது என்பதை மிக வலிமையாக தங்களது கொரில்லா, ம், வேலைக் காரிகளின் புத்தகம் ஆகியவை தெரிவிக்கின்றன. எனில் இலங்கைக்கு எத்தகைய சமூகத்தை மாற்றாக முன்மொழிகிறீர்கள்?    இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் தமது சொந்த அரசியல் நலன்களை முன்னிறுத்தியே காய்களை நகர்த்தி வருகின்றனர். இருதரப்புகளுக்கும் முட்டுக்கொடுத்து நிற்கும் சிங்களப் பேரினவாத மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகள் சிங்கமும் புலியும் தின்றதுபோக எஞ்சும் மிச்சம் மீதிக்காக அடித்துக்கொண்டு கிடக்கிறார்கள். இந்த யுத்தம் மக்களின் யுத்தமல்ல. இந்த யுத்தத்திற்கும் வெகுசனங்களின் நலன்களுக்கும் எதுவித நேர்மறையான தொடர்புகளுமில்லை.அரசு நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்காகப் பயங்கரவாதத்தோடு யுத்தம் செய்வதாகச் சொல்கிறது. புலிகளோ தமிழ் மக்களின் விடுதலைக்காக யுத்தம் செய்வதாகச் சொல்கிறார்கள். இவர்களின் இந்த யுத்த சன்னதத்திற்குள் கொல்லப்படுபவர்களும் காணமற் போனவர்களும் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்களும் யார்? ஏழைச் சிங்களக் கிராமப்புற இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள். புலிகளோ மும்முரமாகப் பிள்ளை பிடிப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசங்களில் வாழும் மக்கள் குடும்பத்திற்கு ஒரு பிள்ளையைக் கொலைகாரப் புலிகளுக்கு தாரைவார்த்தே ஆகவேண்டும் என்பது கட்டாயம். இளைஞர்களும் யுவதிகளும் இராணுவத்திற்கு ஒளிந்து திரிந்த காலம் போய் இப்போது புலிகளுக்கு ஒளிந்து திரிகிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இளையவர்கள் வெளியேறுவதற்கும் மணம் முடிப்பதிற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த அர்த்தமற்ற யுத்தம் முப்பது வருடங்களாகத் தமிழ் முஸ்லீம் மக்களுக்குச் சாதித்த நன்மைகள் என்ன? தமிழர்களாலேயே பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் முஸ்லீம்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கானோர் புலிகளால் நாட்டிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். இருபது வருடங்களாக அரசும் புலிகளும் விட்டுவிட்டுத் தொடரும் பேச்சுவார்த்தைகளால் விளைந்த நன்மைகள் என்ன? அரசின் சிறைகளில் காலவரையற்ற தடுப்புக் காவல்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். போதாதற்கு 1980ளில் சித்திரவதைகளுக்கும் கொலைகளுக்கும் பெயர்பெற்ற ஸ்தலமாயிருந்த பூசா தடுப்புமுகாமை மீண்டும் திறக்கப்போவதாக மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். வடபகுதியிலிருந்து புலிகளால் கொள்ளையிடப்பட்டு விரட்டப்பட்ட முஸ்லீம்களால் இன்னும் வடபுலத்தில் மீளக் குடியேற முடியவில்லை.இன்று நமக்குத் தேவையாயிருப்பது தமிழ்- சிங்கள- முஸ்லீம் மக்களின் அய்க்கியம்தான். ஆனால் இந்த அய்க்கியம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் சிங்கள, தமிழ் இனவாதிகள் மட்டுமல்லாது ஈழப்பிரச்சினையில் செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருக்கும் அந்நிய சக்திகளும் கவனமாயிருக்கிறார்கள். இலங்கை உழைக்கும் மக்களின் அரசியல் அய்க்கியம் மட்டும்தான் பேரினவாத அரசையும் பாஸிஸப் புலிகளையும் தோற்கடிக்கும். அந்த அய்க்கியம்தான் இலங்கையின் இறைமைவெளிகளில் அத்துமீறி நுழையும் சர்வதேச வல்லாக்க சக்திகளையும் மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்து நிற்கும். அந்த அய்க்கியம்தான் தீவின் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அரசியல் உரிமைகளையும் தீர்வையும் வழங்கும். இனவாதமும் யுத்தமும் தமிழ், சிங்கள முதலாளிய அரசியலாளர்களின் நலன்களிலிருந்தே உயிர் வாழுகின்றன என்ற புரிதலோடு இடதுசாரி அரசியல் இயக்கங்களின் வழியேதான் நாம் இந்தத் திசைவழியை நோக்கி நகரமுடியும். உண்மையில் இந்த அரசியல் வழியில் முன்கை எடுக்க வேண்டியவர்கள் சிங்கள இடதுசாரிகளே. அவர்களின் செயற்திறன்தான் பெரும்பான்மை இனத்தின் மீது சிறுபான்மை இனங்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். தமிழ்                                                             3. புத்தக சந்தையை விழுங்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்   மாற்று அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கான புத்தகங்களை வாசிப்பவர்களுக்கும் மிகவும் பரிச்சயமான பெயர் நீலகண்டன். ‘கருப்புப் பிரதிகள்’ மூலம் எதிர் அரசியல் புத்தகங்கள் மற்றும் பிரசுரங்களை வெளியிட்டு, அவற்றை தோள்மீது சுமந்து கொண்டு தமிழகம் முழுவதும் விற்று வருபவர். ‘அநிச்ச’ இதழின் ஆசிரியராக இருந்தவர். ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கீற்றுவுக்காக சந்தித்து உரையாடினோம்.    கருப்புப் பிரதிகள் பதிப்பகம் எப்படி உருவானது?    கருப்புப் பிரதிகள் பெரிய பின்புலத்தோடோ, பணமுதலீட்டோடோ, திட்டமிட்டோ தொடங்கப்பட்டதல்ல. ஐ.ஐ.டிக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருந்த பிரசுரத்தையும், தலித் முரசு வெளியிட்டிருந்த ‘வடநாட்டுப் பெரியார், தென்னாட்டு அம்பேத்கர்’ பிரசுரத்தையும் விற்பனை செய்யும் வேலையாகத் தான் முதலில் ஆரம்பித்தேன். அப்போது தான் பிரசுரங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.   அதன் பின் தலித்துகளுக்கு ஆதரவாக அ.மார்க்ஸ் எழுதிய ஒரு பிரச்சாரப் புத்தகத்தை வெளியிட்டோம். பிரசுரங்கள் ஏற்படுத்திய பாதிப்பும், அது கொடுத்த அரசியல் அனுபவமும் தான் ‘கருப்புப் பிரதிகள்’ உருவாகக் காரணமாய் இருந்தது. கருப்புப் பிரதிகள் இதுவரை வெளியிட்ட அத்தனை புத்தகங்களும் அரசியல், சமூகம் சார்ந்த இலக்கியங்கள் மட்டுமே. பொழுதுபோக்கு இலக்கியம் என்பது என் பதிப்பகத்தில் எதிர்காலத்திலும் வெளிவராது.   தமிழ்ப் பதிப்பகச் சூழல் தற்போது எப்படி உள்ளது?    பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுப் பத்திரிகைகளோ, புத்தகங்களோ நடத்துவது என்பது கனவாகத் தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை ஓரளவுக்கு மாறியிருக்கிறது. மாற்றுக் கருத்துக்களுக்கும் இடம் வேண்டும் என்ற சிந்தனையோடு இடதுசாரிகள் பதிப்பகத் துறையில் கால்வைத்திருப்பது இதற்கு ஒரு காரணம். பாரதி புத்தகாலயத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஈழத்தமிழர்கள் தான் தமிழ் புத்தகங்களை அதிக அளவு வாசிப்பவர்கள். ஆனால் அவர்களிடம் நமது மாற்றுச் சிந்தனை புத்தகங்கள் போய்ச் சேருவதில்லை. உயிர்மை, காலச்சுவடு பதிப்பகங்கள்தான் தங்கள் புத்தகங்களை அவர்களிடம் அதிக அளவில் விற்று வருகின்றன. இவர்கள் விற்பனையில் செலுத்துகிற கவனத்தை புத்தகங்களின் அரசியலை, எழுத்தின் தன்மையைக் கவனிப்பதில் செலவிடுவதில்லை. இங்குள்ள பதிப்பகத்தார் மாற்றுச் சிந்தனைகளை புத்தகங்களாகக் கொண்டு வருவதில் காட்டிய ஆர்வத்தை, உலகம் முழுவதும் புத்தகங்களைக் கொண்டு செல்வதில் காட்டவில்லை. குறிப்பாக பாலியல் தொழிலாளிகள் குறித்த பார்வையை, அவர்கள் வாழ்க்கையை விளக்கும் சொற்களை மாற்றியமைத்தது பெரியாரியத் தோழர்களும், இடதுசாரித் தோழர்களும் தான். அரசியலை உற்பத்தி செய்த தளம் நம்முடையதாக இருந்தாலும், விற்பனைத் தளம் காலச்சுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்களிடம் தான் இருக்கிறது. அரசு சார்ந்த இடங்களில் தன்னுடைய ஆட்களை அனுப்பி அதன் அனுகூலங்களை பெறுபவர்கள் காலச்சுவடு பதிப்பகத்தினர். நூலக ஆணையை எதிர்பார்த்து தான் பதிப்பக ஆட்கள் இயங்குகிறார்கள். ஆனால் அரசின் நூலக ஆணையும், கோடிக்கணக்கான பணமும் மாற்றுச் சிந்தனையாளர்களின் பதிப்பகங்களுக்கோ, எழுத்தாளர்களுக்கோ போய்ச்சேருவதில்லை. எந்தவித வரலாறும், போராட்டங்களும் தெரியாமல் சாப்பிட்டு, குடித்து கும்மாளம் அடிப்பவர்களுக்குத் தான் இந்தப்பணம் போய்ச் சேருகிறது. மேலும் புத்தக பதிப்பிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்துவிட்டன. அவர்களிடமும் ஒரு அரசியலும் இல்லை. ஈழத்தமிழர்களின் பிரச்சனை ஓயும்போது இங்குள்ள பதிப்பகங்கள் அரசியல் சார்ந்த பதிப்பகங்கள், அரசியலற்ற பதிப்பகங்கள் என இரண்டாகப் பிரியும். அப்போது தான் அரசியல் சார்ந்த பதிப்பகங்களின் செயல்பாடுகளை நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.   ஈழத் தமிழர்களின் வாசிப்பு அனுபவம் எந்த மாதிரியாக இருக்கிறது?    நாவலாசிரியை ரமணிச்சந்திரனை சிற்றிதழ் உலகில் யாருக்கும் தெரியாது. ஆனால் அவரது புத்தகங்களைத் தான் ஈழத்தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். ஐரோப்பாவிற்கு புத்தகம் ஏற்றுமதி செய்கிறவர்களைக் கேட்டால் நீங்கள் ரமணிச்சந்திரன் நாவலைப் போடுங்கள் அதிகம் விற்பனையாகும் என்றுதான் சொல்கிறார்கள். சோளகர் தொட்டி பற்றியோ, ஷோபா சக்தியின் நாவல் பற்றியோ அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. பதிப்பகத் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்துவிட்டதை பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர்களது அரசியல் என்னவாக இருக்கிறது?    கார்ப்பரேட் நிறுவனங்கள் சேகுவேரா பற்றி புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சமூக அக்கறையும் கிடையாது. சேகுவேரா இவர்களுக்கு ஒரு Icon அவ்வளவுதான். பார்ப்பனர்கள் சேகுவேரா டி ஷர்ட்டை போட்டுக்கொண்டு திரிவார்கள். அம்பேத்கர் படத்தையோ, பெரியார் படத்தையோ போடமாட்டார்கள். அவர்கள் இருவரும் தான் உள்நாட்டுப் பிரச்சனைகளையும், இங்குள்ள சாதீய உள்கட்டமைப்பு குறித்தும் பேசியவர்கள்.சேகுவேரா லத்தீன் அமெரிக்க நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியவர். நம் தமிழ்ச் சமூகத்தில் இப்போது அமெரிக்காவை எதிர்ப்பது என்பது ஒரு பேஷனாகி விட்டது. அதைத்தான் இதுபோன்ற புத்தகங்களை வெளியிடுபவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ம.க.இ.க.வைப் போல் அதை ஒரு கடமையாகச் செய்வதில்லை. தாமிரபரணியை உறிஞ்சும் கோக்கை எதிர்த்து ம.க.இ.க.தோழர்கள் தான் அடி, உதை வாங்கினார்கள். சித்திரவதைகளை மீறி துண்டுப் பிரசுரங்கள் விற்றார்கள்.   எப்போதுமே ஒரு பிரச்சனைக்காக உழைப்பது நாமாகவும், அதன் பயனை அனுபவிப்பது அவர்களாகவும் இருந்துகொண்டு இருக்கிறார்கள். தலித் பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும் அதற்காக போராடியது நம்முடைய இயக்கங்கள்தான். சொந்த வேலையையும் பார்த்துக் கொண்டு இயக்கங்களுக்காக புத்தகங்களை பல கிலோமீட்டர் சைக்கிளில் போய் விற்று தோழர்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள். இந்த அரசியலை உருவாக்குவதற்காக பெரும்பாடுபடுபவர்களாகவும், சிறைக்குச் செல்பவர்களாகவும் நாம் இருக்க, சந்தைப்படுத்தி விற்று இலாபம் பார்ப்பவர்களாக கார்ப்பரேட் பார்ப்பன நிறுவனங்கள் இருக்கின்றன.   அவர்களது சந்தையை ஏன் நம்மால் கைப்பற்ற முடியவில்லை?    சேகுவேரா ஒரு அரசியல், சமூக அடையாளமாக இருக்கலாம். ஆனால் ‘கிழக்குப் பதிப்பகம்’ போடும் புத்தகத்தில் அரசியலற்ற தன்மை தான் இருக்கும். அதேபோல் பதிப்பகத்துறையில் அட்டை வடிவமைப்பு, அச்சு போன்றவற்றிலும் உலகமயமாக்கலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை என்.ஆர்.ஐக்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பொதுவாகவே பார்ப்பனர்கள் சிறுபத்திரிகை உலகிற்கு அடிக்கடி வருவார்கள். திரும்பி தங்களது அக்ரஹாரத்திற்குள் சென்று பச்சைப் பார்ப்பனர்களாகவும் நடந்து கொள்வார்கள். அதாவது பொழுதுபோக்கிற்காக இலக்கியம் பேசுவார்கள். இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் இடம் ஒரே நாளில் உருவானதல்ல. ஏற்கனவே தன்னுடைய புத்தகத்தைத் தானே அச்சிட்டு சலித்துப்போன எழுத்தாளர்களும் சேர்ந்துதான் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பெரியாரிய வழியில் வந்த எனக்கு எப்போதுமே தமிழ் இலக்கியம் குறித்து ஒரு அச்சம் இருக்கும். சாதி, மதங்களின் பெயரால் இங்கு நடக்கும் அடிமைத்தனத்தையும், அநியாயங்களையும் பார்த்து கொதித்துப்போய் இருக்கும் எனக்கு இந்த இலக்கியத்தில் என்ன இடம் என்ற கேள்வி இருந்ததுண்டு. இங்கு இருக்கிற எல்லாப் பத்திரிகைகளும் புரியாத தன்மையோடும், ஒரு மிரட்டல் தன்மையோடும் தான் இருந்தது.‘நிறப்பிரிகை’க்குள் தான் என்னால் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் நுழைய முடிந்தது. பெரியார் ஏற்படுத்தியிருந்த பார்ப்பனர் அல்லாத அச்சமற்ற தன்மையை இலக்கியத்திற்குள் நிறப்பிரிகை மட்டுமே ஏற்படுத்தியிருந்தது. இன்றைக்கு இருக்கிற தலித் அரசியலின் கச்சாப்பொருள் எனக்குத் தெரிந்து நிறப்பிரிகை தான். ஆனால் இன்றைக்கு அது காணாமல் போய்விட்டது. வணிக நோக்கிலான பத்திரிகைகள் தான் இதற்குக் காரணம்.   நிறப்பிரிகையில் இருந்த ஆ.சிவசுப்பிரமணியம், தொ.பரமசிவம் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் இன்று ‘காலச்சுவடு’ பதிப்பக வெளியீடாக வருகின்றன. சிவசுப்பிரமணியத்தின் அரசியலில் தான் நாங்கள் உருவானோம். இலக்கியம் தான் கலாச்சாரத்தை கற்றுக்கொடுக்கிறது, இதற்குள் பார்ப்பனர்கள் எப்படி நுட்பமாக இயங்குகிறார்கள் என்று பார்க்க சொல்லிக்கொடுத்தவர்கள் ஆ.சிவசுப்பிரமணியமும், தொ.பரமசிவமும். ஆனால் இன்று அவர்கள் காலச்சுவடு பதிப்பகத்தில் தங்கள் புத்தகத்தை வெளியிடுகிறார்கள். வணிக நோக்கோடு தங்கள் புத்தகத்தை இன்னும் அதிகம் பேரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று இவர்கள் நினைக்கக்கூடும். 90களுக்குப் பிறகு மாற்று அரசியலையும் சார்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ்ச் சூழலில் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இரண்டு தலித்துகள் இருந்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியலில் இதற்கு முன்பு எப்போது செய்தி ஒலிபரப்புத் துறை தலித்துக்கு கொடுக்கப்பட்டது? காலச்சுவடாக இருக்கலாம், தமிழக அரசாக இருக்கலாம். இந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தது?தலித் அரசியலை நேர்மையாகப் பேசக்கூடிய ஒரு தோழர், தன்னுடன் தலித் ஒருவர் இருந்தால் தான் தான் பேசுவது நேர்மையாக இருக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இது அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல் அவர்களையும் தங்கள் வியாபாரத்தில் இணைத்துக் கொள்ளும் முயற்சி.   தலித் அரசியலை முன்னிலைப்படுத்திய, அம்பேத்கர் புத்தகங்களை அதிக அளவில் கொண்டுவந்த பல பதிப்பகங்கள் தங்கள் செயலை விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. ஆனால் ராஜ்கவுதமனையும், ரவிக்குமாரையும் வைத்துக்கொண்டுள்ள காலச்சுவடின் தொனி வேறுவிதமானது. அதாவது தங்களது பார்ப்பன, சனாதன முகங்களை மறைத்துக்கொள்ளத்தான் இந்த கார்ப்பரேட் பதிப்பகங்கள் சமூக அக்கறையுடன் புத்தகங்கள் வெளியிடுவதாய் காட்டிக்கொள்கிறார்கள். புத்தகங்களை சந்தைப்படுத்தும்போது பதிப்பகத்தின் அடிப்படை கட்டமைப்பை அதிகப்படுத்த வேண்டும். அப்போது பதிப்பகங்கள் நிறுவனங்களாகி விடுகின்றன. எனக்கு இருக்கிற அடிப்படை அரசியல் காரணமாக என்னுடைய பதிப்பகத்தை நிறுவனமாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.   புத்தகச்சந்தை நடத்தும் பபாசி மாதிரியான நிறுவனங்கள் சிறு பதிப்பகங்களுக்கு எந்த மாதிரியான ஆதரவைத் தருகின்றன?    ஒரு ஆதரவும் இல்லையென்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. கார்ப்பரேட் கலாச்சாரத்திற்குள் முழுமையாக நுழைந்து விட்ட ஒரு சங்கமாக பபாசி மாறிவிட்டது. இதன் விளைவாக எளிமை என்கிற என் கொள்கையின் மீதே எனக்கு அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் வந்துவிட்டன. புத்தகங்களின் வடிவமைப்பு எங்கேயோ போய்விட்டது. நானும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையான தரத்தில் புத்தகங்களைப் போட வேண்டிய நிலையில் இருக்கிறேன். எல்லோருக்கும் பபாசி இடம் கொடுக்கிறதா என்றால் என்னைப் போல் சிறு பதிப்பகங்கள் கோபத்தோடும், விமர்சனங்களோடும் இல்லையென்று சொல்ல வேண்டியிருக்கிறது.   உறுப்பினராகச் சேர்வது கூட சிரமமான காரியமா?    கடந்த வாரத்தில் நண்பர் ஒருவர் எனக்குப் போன் செய்தார். இன்னும் அரைமணி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் செக் எடுத்துக் கொண்டு வந்தால் உறுப்பினராக சேர்ந்திடலாம் என்று. அரைமணி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் திரட்டும் அளவுக்கு எனக்கு பலம் இல்லை. ஒரு பத்தாயிரம் ரூபாய் கிடைத்தால் இன்னுமொரு புத்தகம் கொண்டு வந்துவிடலாம் என்ற நிலையில் தான் நான் இருக்கிறேன். என்னுடைய முதலீடு, உழைப்பு என எல்லாமே புத்தகங்கள் கொண்டு வருவதற்காக செலவாகிறது. இங்கு என்னுடைய கேள்வி, உறுப்பினர் சேர்ப்பதை பபாசி பகிரங்கமாக அறிவித்துச் செய்ய வேண்டாமா? பதிப்புச் சார்ந்த தளங்களிலாவது அறிவிக்கப்பட வேண்டாமா என்பதுதான்.   கடந்த புத்தகச் சந்தையின்போது கூட கிழக்கு, ஆனந்த விகடன் பதிப்பகங்கள் தான் அதிகம் புத்தகங்களை விற்றன. ஏன் இவர்களது இடத்திற்கு நம்மால் செல்ல முடியவில்லை?    நம்முடைய பதிப்பு முயற்சி என்று தனியாக எதுவுமில்லை. நம்முடைய அரசியல் முயற்சிதான் நம்முடைய பதிப்பு முயற்சி. என்னுடைய புத்தகங்களை நான் புழுதி நிறைந்த வீதிகளில் தான் விற்கிறேன். மறுபடியும் மறுபடியும் தூசி தட்டித் தான் விற்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவர்கள் அப்படியல்ல. வாங்க வரும் வாசகன் அந்தப் புத்தகத்தை ஒரு referenceக்கு கூட பார்த்து விடக்கூடாது என்று பிளாஸ்டிக் அட்டைகளில் பூட்டி வைக்கிறார்கள். காலங்காலமாக வேறு யாரும் கல்வி கற்கக்கூடாது என்று பூட்டிவைத்த மனநிலைதானே இது.   உதவித்தொகை வாங்கிக்கொண்டு ஒண்டுக்குடித்தனம் நடத்தும் ஒரு மாணவனுக்கு ஆய்வுக்காக என்னால் ஒரு புத்தகத்தை காசு வாங்காமல் கொடுக்க முடியும். நான் கற்ற அரசியல் அப்படி. ஆனால் அவர்களால் முடியாது. படிக்க ஆர்வமுள்ள ஒரு மாணவனால் ஒரு புத்தகத்தை விலைகொடுத்து வாங்க முடியாத சூழ்நிலையும் இங்குதானே நிலவுகிறது. அவன் புத்தகத்தை பிரித்துக்கூட பார்க்கக்கூடாது என்று பூட்டி வைக்கிறார்கள். இதை உடைத்தெறிவதற்கான சாத்தியங்களோ, பலமோ என் போன்றோரிடம் கிடையாது.   புத்தகக் கண்காட்சிகளில் சுய முன்னேற்ற நூல்கள், வாஸ்து, ஜோதிடம், சமையல் புத்தகங்கள் தான் அதிகம் விற்பனையாவதாகத் தெரிகிறது. வாசகர்களின் ரசனை இப்படித்தான் இருக்கிறதா?    இப்படித்தான் இருக்கிறது என்பதை விட இப்படித்தான் உருவாக்கியிருக்கிறோம். இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாட்டில் அதிக விவாதங்கள் நடைபெற்றன. ஆனால் எங்காவது போராட்டம் நடந்ததா என்றால் இல்லை. தமிழ்நாடு தான் இட ஒதுக்கீட்டை முதன் முதலில் பேசி சட்டமாக்கியது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வும் தற்போது அதிகரித்துள்ளது.ஆனால் நம் இரண்டாம், மூன்றாம் தலைமுறை இளைஞர்கள் பெரும்பாலும் இடதுசாரி, வலதுசாரித் தன்மைக்கு நடுவில் இருக்கிறார்கள். வாசிப்பைப் பொறுத்தவரை வலதுசாரிகள் தங்கள் புத்தகங்களை இந்த இளைஞர்களிடம் எளிதில் கொண்டு போய் சேர்த்து விடுகிறார்கள். அச்சு ஊடகங்களை விட காட்சி ஊடகங்கள் தாங்களே காட்சிகளைக் கொண்டு போய் இளைஞர்களிடம் சேர்த்து விடுகின்றன. எந்த விஷயம் தங்களுக்கு எளிதாகக் கிடைக்கிறதோ அந்த விஷயம் சார்ந்து தான் வாசகர்களும், இளைஞர்களும் இயங்குகிறார்கள்.இந்த இளைஞர்களிடம் கிரிக்கெட்டும், தேசபக்தியும் தான் மீடியாவால் கொண்டு சேர்க்கப்படுகின்றன. நவீன சமூகம் சார்ந்த இலக்கியங்களோ, அரசியலோ போய்ச் சேருவதில்லை. நம்முடைய இயக்கங்களும் இளைஞர்களுக்கு அரசியல் கல்வி எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளன. இதில் திராவிட இயக்கங்களோடு ஒப்பிடும்போது இடதுசாரி இயக்கங்கள் பரவாயில்லை என்று தோன்றுகிறது.   சேது பாலம் விவகாரத்தில் தீக்கதிர் பத்திரிகை தான் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இந்த விஷயத்தில் ‘முரசொலி’, ‘விடுதலை’ போன்ற பத்திரிகைகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளன. கலைஞர் தன்னுடைய தனிக்கருத்தாக சேது பாலம் பற்றிப் பேசுகிறார். எனக்குத் தெரிந்து அவருடைய அரசியல், வாசக தளத்தில் “ஏன் தலைவர் இந்த விஷயத்தில் எல்லாம் தலையிடறார்” என்று கேட்கும் மனநிலையில்தான் இருக்கிறது. டீக்கடையில் தி.மு.க. தொண்டனுக்கு கலைஞரின் பேட்டியைப் புரியவைக்கும் வேலையை என்னைப் போன்றவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. இதன் விளைவு ஒரே நாளில் இந்த இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி வலதுசாரிகள் கைப்பற்றிக் கொள்ளக் கூடிய சாத்தியம் இருக்கிறது. நாம் இயங்காத தளங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் வாஸ்துவையும், சமையலையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெருந்தீனி தின்னும் சமூகமாகத் தானே நம்முடைய சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது. நுகர்வோர் கலாச்சாரமும், உலகமயமாக்கலும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. உடல் உழைப்பற்ற சமூகத்தை தானே நாம் உருவாக்க ஆசைப்படுகிறோம். கார்ப்பரேட் கம்பெனியில் வேலைபார்ப்பது தான் கவுரவமாக கருதப்படுகிறது. உழைப்பு சார்ந்த சமூகம் வேகமாக பின்னுக்குத் தள்ளப்படுகிறது. அப்படியானால் முன்னேறுவதாக நாம் கூறும் சமூகத்தை பின்பற்றித்தானே புத்தகங்கள் விற்கப்படும்.   ஆனாலும் புத்தகம் விற்பதே சிரமம் என்ற நிலையில் இருந்து ஆயிரத்து இருநூறு புத்தகங்கள் விற்கப்படும் நிலையை இன்று நாம் உருவாக்கியிருக்கிறோம். புத்தகச் சந்தைகள் மூலம் மட்டுமே இந்த நிலையை மாற்றி விட முடியாது. இயக்கங்களால் மட்டுமே முடியும். பாரதி புத்தகாலயத்துக்குப் பின்புலமாக ஓர் அரசியல் இயக்கம் இருப்பதைப் போல் நிறைய புத்தகாலயங்கள் உருவாக வேண்டும். இயக்கத்தின் மூலம் குறிப்பிட்ட இளைஞர்களைத் தான் அரசியலோடு உருவாக்க முடியும். ஆனால் அந்த இளைஞர்களுக்கும் பிற இளைஞர்களுக்கும் ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும்.   மாற்றுப் பதிப்பகங்கள் நடத்துபவர்களுக்கு அரசிடம் இருந்து ஏதாவது உதவிகள் கிடைக்கிறதா?    பெரிய உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. ஒரு பதிப்பகத்தில் இருந்து சிரமப்பட்டு நாற்பது புத்தகங்கள் வெளிவருகிறது என்றால் இரண்டு மூன்று புத்தகங்களை நூலக ஆணைக்கு எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அனைத்து புத்தகங்களுமே இந்த சமூக மாற்றத்துக்கான புத்தகங்களாக இருக்கும். பழமைவாதங்களோடு, பார்ப்பனியத்தை ஆதரிக்கும் பதிப்பகங்களில் இருந்து எடுக்கப்படும் புத்தகங்கள் அளவுக்கு மாற்று பதிப்பகங்களில் இருந்து வாங்கப்படுவதில்லை. புத்தகங்களைத் தேர்வு செய்பவர்களுக்கு பதிப்பகங்களின் அரசியல் குறித்து எதுவும் தெரியாது. காலச்சுவடு பதிப்பகம் தங்கள் ஆட்களை எல்லா இடங்களிலும் வைத்துக் கொண்டு வேலைகளை செய்து கொள்கிறது.பதிப்பக சிக்கல்களுக்கு என்னதான் தீர்வு?இயக்கங்கள் நடத்துவதன் மூலமாக மக்களிடம் நேரடியாகச் சென்று புத்தகங்கள் விற்கலாம். இதை பாரதி புத்தகாலயம் ஓரளவு நன்றாகவே செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இதன் மூலம் கட்சி சார்ந்த வாசகர்கள் மட்டுமே உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் தலித் எழுத்தை எப்படி படிப்பார்கள்? எனவே ஒரு பரந்த வாசிப்பை இவர்களிடம் உருவாக்க வேண்டும்.அரசு இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளாக புத்தகங்களை அச்சடித்து வைத்துக்கொண்டு நூலக ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் புத்தகங்கள் வாங்கப்படும் விலை இருபது ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. இப்போது தயாரிப்புச் செலவு அதிகரித்து விட்டது. காகிதத்திற்கான வாட் வரி மட்டும் 12 சதவீதம். ஒவ்வொன்றிலும் விலை ஏறிவிட்டது. பெரிய பதிப்பகங்களுக்கு இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. விளம்பரங்கள், அரசியலற்ற தன்மை போன்றவற்றால் அவர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். என்னைப் போன்றவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம்.   தேர்வுக்குழு என்ன மனநிலையோடு புத்தகங்களைத் தேர்வு செய்கிறது என்பது எனக்கு இன்றுவரை புரியவேயில்லை. தமிழில் கடந்த பத்து வருடங்களில் வெளிவந்த எந்த இலக்கியத்தோடு ஒப்பிட்டாலும் மிகச்சிறந்தது ஷோபாசக்தியின் ‘ம்’ நாவல். அதற்கு கடந்த இரண்டு வருடங்களாக நூலக ஆணை கிடைக்கவில்லை. இது போன்ற செயல்களால் நான் தளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறேன். நூல்களைத் தேர்வு செய்வதில் பாரபட்சம், விற்பனை விலையை உயர்த்துவது போன்றவற்றை அரசு உடனடியாக கவனிக்க வேண்டும்.இன்னொருபுறம் அரசு நூலகத்துறையை மட்டும் சார்ந்தே பதிப்பகங்கள் இயங்குவதை நான் ஆரோக்கியமான ஒன்றாகக் கருதவில்லை.   முற்போக்கு எழுத்தாளர்கள் என்று காட்டிக்கொண்ட பலர் பார்ப்பன பத்திரிகைகளுக்கு தொடர்ச்சியாக எழுதுகிறார்கள். என்ன மாதிரியான உறவு இது?    இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களிடம் காத்திரமான அரசியல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. காத்திரத்தோடு இயங்கிய முதல் தலைமுறை ஓய்ந்து விட்டது. இரண்டாவது தலைமுறை உயிர்மை பதிப்பகத்திற்கும், காலச்சுவட்டிற்கும் எழுதிக் கொண்டிருக்கிறது. அ. முத்துலிங்கம் சுவாரஸ்யமாக எழுதுகிறார் அவ்வளவுதான். அவரிடம் எந்த அரசியலும் இல்லை அதனால் தான் அவரால் காலச்சுவட்டில் எழுத முடிகிறது.அதே நேரத்தில் ஷோபாசக்தி தன்னுடைய நாட்டின் ஜாதீய சமூகத்தோடு வேறுபடுகிறார். மத, ஜாதி, தேசியம் என்கிற எல்லாவற்றோடும் முரண்படுகிறார். அதற்குள்ளே ஒழுங்குகளை கட்டமைப்பவர்களோடும் சண்டையிடுகிறார். இது எதுவும் இல்லாதவர்தான் அ.முத்துலிங்கம். காலச்சுவடுக்கு காத்திரமான படைப்புகள் தேவையில்லை. பக்கங்களை நிரப்பும் பிரதிநிதிகளைத் தான் அது தேர்ந்தெடுக்கிறது. இது புரியாமல் பெண் எழுத்தாளர்களும் அதில் போய் எழுதுகிறார்கள்.ஆண்களின் எழுத்தில் இருந்து விடுபட்டு தன்னைப்பற்றி அவர்கள் எழுத வந்தது சந்தோஷமான விஷயம் தான். பெண்ணுடல் அடிமைப்படுத்தப்பட்டதற்குக் காரணம் இந்து மதமும், இங்குள்ள ஜாதிய கட்டமைப்பும் தான் என்பதை அவர்கள் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். காலச்சுவடில் இருந்து விலகி நிற்கும் குட்டிரேவதி போன்றவர்களால் தான் இதைச் சொல்ல முடிகிறது.   பெண் எழுத்தாளர்களில் காத்திரமான படைப்புகளை எழுதும் மாலதி மைத்ரி ஏன் காலச்சுவடுக்கு எழுதுகிறார்? காலச்சுவடு இஸ்லாமிய பயங்கரவாதம் என்று ஓர் இதழ் போடுவதைப் பற்றி மாலதிக்கு என்ன கருத்து இருக்கிறது? அதில் அவருக்கு கருத்து முரண்பாடு இருப்பதாகக் கூறியிருக்கிறார். அப்படியானால் அந்தப் பத்திரிகையோடு அவரால் எப்படி இயங்க முடிகிறது? மாலதியின் இயக்கமற்றப் போக்குதான் காலச்சுவடோடு இணைந்து வேலை செய்ய வைக்கிறது.காலச்சுவடின் செயல்பாடு மிகவும் தந்திரமானது. தஸ்லிமா நஸ்ரின் பிரச்சனையில் களந்தை பீர்முகம்மதுவை வைத்துத்தான் எழுத வைப்பார்கள். அ. மார்க்ஸ்க்குப் பதில் எழுத ரவிக்குமாரைப் பயன்படுத்துவார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் பதில் எழுத தனித்தனியாக ஆள் வைத்திருக்கிறார்கள். இதெல்லாமே ஒருவித தந்திரம் தான். இது தெரியாமல் அதில் இந்த எழுத்தாளர்கள் போய் விழுந்து விடுகிறார்கள். எழுதவரும்போது தங்கள் அரசியலை அடையாளமாகக் கொண்டு எழுத வருகிறார்கள். கொஞ்சம் வளர்ச்சி அடைந்த பிறகு பரந்துபட்ட இடத்திற்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனந்த விகடனிலோ, குமுதத்திலோ எழுதுவது பரந்துபட்ட இடம் என்று நினைத்தால் கூட பரவாயில்லை. காலச்சுவடையும், உயிர்மையையும் பரந்துபட்ட இடம் என்று நினைக்கிறார்கள். ஆதவன் தீட்சண்யா, அழகியபெரியவன், மதிவண்ணன் போன்றவர்கள் தான் யாருக்கு எழுதுகிறோம் என்பதில் தெளிவாகவும், தன்னுடைய ஒவ்வொரு எழுத்தையும் காத்திரமாகவும் வெளிப்படுத்துகிறார்கள்.   தலித், முஸ்லிம், விளிம்புநிலை எழுத்தாளர்கள் என்று அடையாளங்களோடு தான் முதலில் எழுத வருகிறார்கள். இந்த அடையாளங்களை அரசியல் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யத் தவறி விடுவதால் தான் காலச்சுவடு, உயிர்மை போன்றவற்றில் போய் தஞ்சமடைந்து விடுகிறார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கார்த்திகேயனுக்கு எதிராக திராவிட இயக்கத் தோழர்கள் தான் போராடினார்கள். பார்ப்பன எழுத்தாளர்கள் அனைவரும் மரணதண்டனை தவறானது என்ற கோஷத்தில் போய் ஒழிந்து கொண்டார்கள். சுந்தரராமசாமியும் அந்த கோஷத்தில் கலந்து கொண்டார். அதை வைத்துக்கொண்டு சுந்தரராமசாமி மரண தண்டனைக்கு எதிரானவர் என்று இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்சலுக்கு ஆதரவாகப் பேசுவதற்கு இவர்கள் யாரும் தயாராக இல்லை. அவருக்கு ஆதரவாக இடதுசாரி, பெரியாரிய, நக்சலைட் தோழர்கள் தான் பேசுகிறார்கள்.   ஆரம்பத்திலிருந்தே காலச்சுவடை கடுமையாக விமர்சித்து வருகிறீர்கள். அதன் பார்ப்பனத் தன்மையை எப்போது கண்டு கொண்டீர்கள்?    நான் நிறப்பிரிகையில் இருந்து வந்தவன். பெரியாரும், அம்பேத்கரும் கற்றுத்தந்த அரசியல் எனக்கு மற்றவர்களைப் புரிந்து கொள்ள உதவியிருக்கிறது. ஆரம்பத்தில் காலச்சுவட்டின் பார்ப்பனத் தன்மையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது அவர்கள் நம்ப மறுத்தார்கள். அதன்பின் ஒவ்வொரு கட்டுரையிலும் காலச்சுவடு தன்னுடைய பார்ப்பனத் தன்மையை தோலுரித்துக் காட்டியது. பெரியார்-125 இதழ், இஸ்லாமிய பயங்கரவாத இதழ், உச்சகட்டமாக சுந்தர ராமசாமி இறந்தபோது அவர்கள் நடத்திய கூத்துகள் அவர்களை தோலுரித்துக் காட்டின.   நண்பர் ஷோபாசக்தி சமீபத்தில் புதுவிசை பேட்டியில், ‘காலச்சுவடு என்று ஏன் பூச்சாண்டி காட்டுகிறீர்கள் அது அவ்வளவு பெரிய விஷயமா’ என்று கேட்டிருந்தார். இது மிகவும் தவறு. ஆயிரத்து ஐநூறு பிரதிகள் விக்கிற புத்தகம் தானே என்று விட்டுவிடக் கூடாது.ஆரம்பத்தில் அது ஒரு இலக்கியப் பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் வணிகப் பத்திரிகையாக தன்னை விரிவுபடுத்திக் கொண்டு இயங்க ஆரம்பித்தது. வந்தோமா, சம்பாதித்தோமா என்பதைத் தாண்டி வரலாறு, இலக்கியம் எல்லாவற்றிற்கும் ஒரு ஆவணக்காப்பகம் போல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு செயல்பட ஆரம்பித்தது.நான், அ.மார்க்ஸ், வீ.அரசு போன்றவர்களிடம் தான் அவர்களைப் பற்றிய இந்த நுட்பமான பார்வை இருக்கிறது. நடிகர் சிவாஜி கணேசனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் காலச்சுவடு இன்று வரை அந்த இடத்தில் சிவாஜிக்குப் பதிலாக ஒரு பார்ப்பன ஆளை நிறுத்தப் பார்க்கிறது. வரலாற்றில், இலக்கியத்தில் என எல்லா இடங்களிலும் காலச்சுவடு இந்த மாதிரியான திரிபு வேலைகளைத் தான் செய்கிறது.Visual Communication படிக்கிற மாணவர்கள் தங்களது Referenceகாக ஏதாவது ஒரு காலச்சுவடு புத்தகத்தை படிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அந்தப் புத்தகத்தில் இருக்கும் வரலாறு நிஜமானதல்ல, காலச்சுவடால் திரிக்கப்பட்டது. இதன் மூலம் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். தூவிக்கொண்டிருக்கின்ற விஷத்தை காலச்சுவடும் நுட்பமாக தூவிக்கொண்டே இருக்கிறது. வரலாறு, சமூகம், பண்பாடு போன்றவை ஒன்று கிடையாது. அதற்குள் எத்தனையோ பிரிவுகள் இருக்கிறது என்று பேசத்தொடங்கியது நிறப்பிரிகைதான். இந்த நோக்கில் நகர்ந்திருந்தால் காலச்சுவடு ஜனநாயக அரசியலை நோக்கி நகர்ந்திருக்கும். ஆனால் காலச்சுவடு பார்ப்பனீயம், இந்துத்துவம் போன்றவற்றைத் தான் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கிறது.இஸ்லாமியர்களை தொடர்ந்து பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பது, தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவது இதுதான் காலச்சுவடின் வேலை.   சங்கராச்சாரியார் கைதின் போது எழுத்தாளர்கள் இதைக் கண்டிக்க வேண்டும் என்று சுந்தரராமசாமி எழுதினார். அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட எழுத்தாளர் பிரபஞ்சன், “சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டால் சுந்தரராமசாமி ஏன் வருந்த வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.சுந்தரராமசாமியால் அரசை எதிர்த்து எழுதவும் முடியவில்லை. அதே நேரத்தில் ஒரு அதிகாரமிக்க பார்ப்பான் கைது செய்யப்பட்டதையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த சங்கராச்சாரியார் கைது செய்யப்படுவதற்கு முன் தனி விமானத்தில் போய் முஸ்லீம்களை மிரட்டிக் கொண்டிருந்தவர். அவர் கைது செய்யப்பட்டபோது தமிழ்ச் சமூகம் அவ்வளவு சந்தோஷப்பட்டது. ஆனால் காலச்சுவடின் குரலும், சுந்தரராமசாமியின் குரலும் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.அந்த நேரத்தில் சங்கரமடத்தின் அள்ளக்கையாக சரியாக செயல்பட்டவர் ரவிக்குமார். பிற்படுத்தப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் சங்கரமடம் என்று பார்ப்பனர்களை மிஞ்சும் வகையில் புளுகியிருந்தார் அவர்.   சமீபத்தில் உத்திரப்பிரதேச தேர்தலில் மாயாவதி வெற்றி பெற்றதைப் பற்றி குட்டிரேவதி ஒரு பத்திரிகையில் கருத்து சொல்லியிருந்தார். “மாயாவதி பார்ப்பனர்களோடு இணைந்து கொண்டு செயல்படப்போகும் இந்த வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.அதை மேற்கோள் காட்டி காலச்சுவடு பத்திரிகையில் கண்ணன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் காமராஜரும் பார்ப்பனர்களோடு இணைந்து ஆட்சியைக் கைப்பற்றினார் என்றொரு பச்சைப் பொய்யை எழுதியிருந்தார். காங்கிரசில் இருந்த பார்ப்பனர் அல்லாதவர்களை இணைத்துக்கொண்டு தான் காமராஜர் வெற்றி பெற்றார். மேலும் பெரியார் உக்கிரமாக இருந்த காலகட்டம் அது. பெரியார் மாநாட்டில் பேசுகிற விஷயங்கள் காமராஜர் ஆட்சியில் செயல்திட்டமாக மாறுவதாக கல்கி பத்திரிகை தலையங்கமே எழுதியது. ஆனால் கண்ணன் அதை திரிக்கப் பார்க்கிறார்.காலச்சுவடில் குட்டிரேவதியின் கருத்து குறித்து கண்ணன் எழுதியதன் அர்த்தம் இதுதான். ‘உங்கள் நாடார் இனத்தைச் சேர்ந்த காமராஜர் ஜெயிப்பதற்கு பார்ப்பனர்கள் தேவை, அதேபோல் மாயாவதி பார்ப்பனர் ஆதரவோடு ஜெயித்தால் என்ன’ என்பதுதான் அது. நீ யாரைப் பற்றியாவது பேசினால் நான் உன் ஜாதியைச் சொல்லி உன்னைத் தாக்குவேன் என்கிற தந்திரம் தான் அது. மேலும் அ.மார்க்ஸ் இதுகுறித்து பேசக்கூடாது, பேசினால் அவரையும் ஜாதியைச் சொல்லித் தாக்கலாம் என்கிற தந்திரமும் அதில் அடங்கியுள்ளது. ஏனெனில் மார்க்ஸ் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். பொதுவாகவே இம்மாதிரியான செயல்களினால் காலச்சுவடு மீது எல்லோருக்கும் ஒரு அதிருப்தி இருக்கத்தான் செய்கிறது.   மிகக் காத்திரமான மாற்று இதழ் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலமே காலச்சுவடின் தந்திரத்தை முறியடிக்க முடியும். எங்கள் ‘அநிச்ச’ இதழ் அந்த நோக்கத்தில் தான் கொண்டு வரப்பட்டது. ஆனால் நுட்பமாக இயங்குபவர்களுக்குள்ளும் பிரச்சனைகள் வரும் என்பதால் அது தடைபட்டு விட்டது. இப்போதிருக்கும் நிலையில் ஆதவன் தீட்சண்யாவின் புதுவிசையைத் தவிர வேறு எதுவும் காத்திரமாக இயங்கவில்லை. தலித் முரசு அரசியல் பத்திரிகையாக வருகிறது. இலக்கியத்திற்கான இடம் அங்கு நிரப்பப்படவேயில்லை.   காலச்சுவடின் அரசியலில் இருந்து உயிர்மை என்ன மாதிரியாக வேறுபடுகிறது?    வியாபாரத்திற்காக வாசகனை முட்டாளாக்குகிற வேலையைத் தான் அதுவும் செய்து கொண்டிருக்கிறது. என்றாலும் காலச்சுவடோடு ஒப்பிடும்போது உயிர்மை பரவாயில்லை. அது சுதாரித்துக்கொண்டு தன்னுடைய செயல்பாடுகளை மாற்றியிருக்கிறது. ஆனாலும் சுஜாதா என்கிற பார்ப்பானை கடவுளாகக் கொண்டாடுவதை மட்டும் நிறுத்தவேயில்லை. உயிர்மையில் எழுதும் சாருநிவேதிதா உலகத்தில் உள்ள எல்லோரையும், எல்லா சம்பவங்களையும் விமர்சிப்பார். சுஜாதாவை மட்டும் அவர் விமர்சிப்பதேயில்லை.   ‘அநிச்ச’ வெளிவந்த இரண்டு இதழ்களிலும் மனுஷ்யபுத்திரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தீர்கள். அதன்பிறகு அவர் நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா?  மனுஷ்யபுத்திரன் பத்திரிகை ஆரம்பித்ததற்கு பெரிய சமூக நோக்கம் எதுவும் கிடையாது. அவர் காலச்சுவடில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கான காரணத்தை அவர் சொல்லத் தயாராக இல்லை. தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காக அவர் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். தனக்கென்று ஒரு அரசியலோடு பத்திரிகையில் தலையங்கம் எழுதுவதை நிறப்பிரிகை தான் ஆரம்பித்து வைத்தது. அதனால் பின்னால் வந்தவர்களுக்கு தலையங்கங்கள் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.பத்திரிகை முழுவதையும் எந்த அரசியலும் இல்லாத இலக்கியத்தால் நிரப்பினாலும் அரசியலோடு தலையங்கம் எழுதுவது அவசியமாகி விட்டது. அரசியல் முகம் இல்லாமல் ஒரு பத்திரிகை நடத்த முடியாது என்பதே நாம் இங்கு ஜெயித்திருக்கிறோம் என்பதன் அடையாளம் தான். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக பத்திரிகையின் எல்லாப் பக்கங்களும் அரசியலாகத் தான் இருக்க வேண்டும் என்பதாகத் தான் இருக்க வேண்டும். இந்த நிலை வந்தால் உயிர்மையால் நிற்க முடியாது.அப்சல் குரு விவகாரம் பரபரப்பாக இருந்தபோது ஒரு கூட்டத்தில் மனுஷ்யபுத்திரன் இவ்வாறு பேசியிருக்கிறார். ‘உயிர்மை தொடங்கப்பட்ட பத்தாண்டுகளில் எவ்வளவோ கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம். ஆனால் அப்சலுக்கு ஆதரவாக வெளியிட்ட கட்டுரை பெரிய பிரச்சனைகளைக் கிளப்பிவிட்டது. நீங்கள் இஸ்லாமிய மனோபாவத்தோடு செயல்பட்டு அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார்கள். நண்பர்கள் என்று நினைத்தவர்களே எதிரிகளாகி விட்டார்கள். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது’ என்று பேசினார்.ஒருநாள் இந்தப் பிரச்சனையை அனுபவிக்கும்போதே மனுஷ்யபுத்திரனுக்கு இவ்வளவு கோபமும், ஆயாசமும், மன விகசிப்பும் வருகிறதே, அப்படியானால் என்னைப் போன்ற மாற்றுப் பத்திரிகையாளர்களின் நிலை என்ன? இது தொடர்பாக ஒவ்வொரு நாளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மனிதனைப் பற்றிய பதிவுகள் உயிர்மை புத்தகத்தில் என்னவாக இருந்திருக்கிறது? ஒரு பிரசுரத்தைக் கொண்டு போய் விற்று விட்டு வருவதற்குள் போலிசிடமிருந்து, பிற இயக்கத்தினரிடம் இருந்து எவ்வளவு பிரச்சனைகளை மாற்று இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் எதிர்கொள்கிறார்கள்.   ரொமான்டிக்காக ஒரு பத்திரிகை நடத்தி விட்டுப் போகலாமென்று நினைக்கிறார் மனுஷ்யபுத்திரன். அது நடக்காது. ‘சோளகர் தொட்டி’ வெளிவந்தபோது காலச்சுவடு அதை நிராகரித்தது. ஆனால் அந்தப் புத்தகம் இப்போது ஐந்து பதிப்புகள் விற்று விட்டது. காலச்சுவடு, உயிர்மை பத்திரிகைகளுக்கு தமிழ்ச் சூழலில் எதையும் தீர்மானிக்கிற இடம் கிடையாது. இளைஞர்களைத் திசைதிருப்பி விடலாம் அவ்வளவுதான். ‘பார்ப்பனர்களால் நல்ல படிப்பாளிகளாக இருக்க முடியும், படைப்பாளிகளாக இருக்க முடியாது’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டது கண்முன்னே நிதர்சனமாகிக் கொண்டிருக்கிறது. நமக்குக் கிடைக்கும் வாழ்க்கைமுறை, அனுபவம் போன்றவற்றால் தான் ஒருவன் எழுத முடிகிறது. எனக்குக் கிடைத்த அனுபவத்தோடு ஒப்பிடும்போது நீ வெகு கீழே இருக்கிறாய். என்ன அனுபவம் இருக்கிறது உனக்கு? நிறப்பிரிகைக்குப் பிறகு அரசியலோடு தலையங்கங்கள் எழுத வேண்டிய அவசியமும், பார்ப்பனத் தன்மை அற்றதாக தன்னை காட்டிக்கொள்ள வேண்டி பெண்கள், தலித் போன்றவர்களை ஆசிரியர் குழுவில் அமர்த்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்படி ஆசிரியர் குழுவில் இடம் பெற்றவர்கள் தாங்கள் எங்கேயிருந்து வந்தோமோ அந்த இடத்தின் பிரதிநிதிகளாக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.    புத்தகத்தில் எல்லாமே அரசியலாகத்தான் எழுத வேண்டும் என்றால் தனிமனித உறவுகள் இல்லையா, அதை எழுதக்கூடாதா?    எல்லா உறவுகளும் சமூகத்தில் நடைபெறும் அரசியலின் விளைவால் ஏற்படுபவை தான். இதன் பிரதிபலிப்பாகத்தான் இலக்கியம் இருக்க முடியும். தொலைக்காட்சித் தொடர்களைக் கூட இதன் அருகில் வைத்துத்தான் பார்க்க வேண்டும் என்று பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுவார். இந்த இடத்தில் நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். எல்லா ஆண் எழுத்தாளர்களும் வெட்கமேயில்லாமல் டி.வி. சீரியல் பார்க்கும் பெண்களைத் திட்டுவார்கள். சமீபகாலமாக இது அதிகரித்து விட்டது. இங்கு இயங்கும் சமூக இயக்கங்கள் பெண்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பதால் தான் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து சீரியல்களைப் பார்க்கிறார்கள். வெளிக்கலாச்சாரம், வெளிப்பண்பாட்டில் பெண்களை நாம் அழைத்து வரவில்லை என்பதால் தானே டி.வி.க்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். நம்மால் அரைமணி நேரம் பார்க்க முடியாத தொடர்களை பெண்கள் மாய்ந்து மாய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நம் வாழ்க்கை முறையும் அவர்கள் வாழ்க்கை முறையும் வேறு வேறு என்றுதானே அர்த்தம். இதில் எல்லா ஆண்களுக்கும் பங்கு இருக்கிறது.ஆண்களுக்கு ஒருநாளைக்கு ஒரு லட்சம் காட்சிகள் காணக் கிடைக்கிறதாம். ஆனால் பெண்களுக்கு குடும்பத்தைத் தாண்டி என்ன இருக்கிறது? பெண்களை குடும்பம் என்கிற அமைப்பிற்குள் பூட்டி வைத்து விட்டு அவர்கள் குடும்பக்கதைகள் வரும் தொடர்களையே பார்க்கிறார்கள் என்று சொல்வது என்ன நியாயம்?   நிறப்பிரிகைக்குப் பிறகு நல்ல பத்திரிகைகள் என்று எதையாவது குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?    மிகக்குறைவு தான். நிறப்பிரிகை அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு நம்பிக்கை தரக்கூடிய இதழாக ‘புதுவிசை’ வெளிவருகிறது. விசையின் சமீபத்திய இதழ்கள் பிரமாதமாக இருக்கின்றன. ‘உயிர் எழுத்து’ பத்திரிகையும் அரசியல் அடையாளத்தோடு வெளிவருகிறது. மாற்று அரசியல் சார்ந்த புத்தகங்களை வெளியிடும் தங்களைப் போன்றவர்களுக்கு, மாற்று அரசியல் இயக்கங்கள் காட்டும் ஆதரவு எத்தகையதாக இருக்கிறது?இன்றைக்கு இருக்கிற இயக்கங்கள் விளிம்பு நிலை மக்களுக்காக போராடினாலும் அவர்களது வரலாறு விருப்பு வெறுப்புகளோடு தான் பதிவு செய்யப்படுகிறது. பாடநூல்களில் வரலாற்றை பாரதீய ஜனதா மாற்றி எழுதியது. இதை அ.மார்க்ஸ், நான், ‘அயன்புரம்’ ராஜேந்திரன் மூவரும் தான் இங்கே தெரியப்படுத்தினோம். பிறகு இடதுசாரித்தோழர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் இதில் இணைந்ததன் விளைவாக அது பெரிய வீச்சாக அமைந்தது.   இந்த வரலாற்று திரிப்பு தொடர்பாக மார்க்ஸ் எழுதிய நூலை எங்கள் குழு கலைஞரை சந்தித்துக் கொடுத்தது. இது தொடர்பாக தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணியில் இருந்தபோதும், பாரதீய ஜனதா மீது ஒரு குற்றச்சாட்டாக தி.மு.க. வைத்தது. இதில் எங்களுக்கு இருந்த பங்கை எந்தப் பத்திரிக்கையும் பதிவு செய்யவில்லை. தீக்கதிர் போன்ற இடதுசாரி பத்திரிகைகளும், த.மு.மு.க.வின் ஒற்றுமை என்கிற பத்திரிகையும் தான் இதைப் பதிவு செய்தன. திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடக் கழகத்தின் ஏடுகளில் கூட இதுகுறித்து எந்தப் பதிவும் இல்லை. நான் அங்கிருந்து வெளியேறியவன் என்பது கூட காரணமாக இருக்கலாம்.நான் இறந்தபிறகு என்னை எப்படி இந்த சமூகத்தில் அடையாளப்படுத்துவது? உங்கள் சிந்தனையோடு, கருத்துக்களோடு நான் முரண்பட்டிருக்கலாம். அதற்காக என்னைப் பற்றி பதிவு செய்யாமல் இருப்பது என்ன நியாயம்? எங்கேயோ இருந்த சேகுவேராவை நாம் கொண்டாடுவதன் காரணம் அவரது வரலாறு பதிவு பெற்றிருப்பது தானே. விருப்பு வெறுப்புகளற்ற எந்தப் பதிவும் நம் சூழலில் கிடையாது. இதைச் சொன்னால் தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்வதாக சொல்வார்கள். ஆம் அப்படித்தான் செய்ய வேண்டியிருக்கிறது. பார்ப்பன பத்திரிகைகள் ஏற்படுத்திய இந்த விருப்பு வெறுப்பு மனோபாவம் நம்மிடமும் தொற்றிக் கொண்டு விட்டது. அதனால் தான் அவன் ஆளு, இவன் ஆளு என்று குழுக்களாக சிதைந்து கிடக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் நம்முடைய செயல்பாடுகளையும் சேர்த்தே வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமிருக்கிறது. இடதுசாரி பதிப்பகங்கள் என்னுடைய புத்தகத்தை வாங்கி விற்பதில்லை என்ற கழிவிரக்கம் எனக்கு உண்டு. ஆனால் அந்த கழிவிரக்கத்தோடு நான் நின்றுவிட முடியாது. தொடர்ந்து இயங்குவதன் மூலமே நான் வாழ்ந்தேன் என்ற சந்தோஷம் எனக்கு இருக்கும்.  நேர்கண்டவர்கள்: மினர்வா – நந்தன்    நன்றி: கீற்று இணையத்தளம்.             4.மாலதி மைத்ரி   சமகாலத் தமிழ் அரசியல்- இலக்கியச் சூழலில் உறுதியாகவும், உரத்தும், இடையறாது ஒலிக்கும் குரல் மாலதி மைத்ரியுடையது. கவிதைகளில் பெண்மொழியின் உச்சபட்ச சாத்தியத்தை நிகழ்த்திக்கொண்டிருப்பவரும் மாலதி மைத்ரிதான். ‘ஆபாச எழுத்துகள்’, ‘அதிர்ச்சி மதிப்பீட்டுக்கான எழுத்துகள்’ என்றெல்லாம் கலாசார காவலர்கள் இன்றைய பெண் எழுத்துகளை தூற்றும் போதெல்லாம் அந்தக் காவலர்கள் மீதான முதல் அடியாகவும் ஆமான அடியாகவும் மாலதியின் குரல் ஒலிக்கிறது.   மாலதி மைத்ரி வெறுமனே இலக்கியச் செயற்பாடுகளோடு நின்றுவிடுபவரல்ல. பெண்ணியம், பெரியாரியல், தலித்தியம், உலகமயமாதலுக்குத் தீவிர எதிர்ப்பு என அவரது அரசியல் ஈடுபாடுகள் விரிந்தவை. அவரது இந்த நேர்காணலிலும் கூட “பெண்ணியம் அரசியல் நீக்கம் செய்யப்பட்டதாக இருக்க முடியாது” எனத் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டார்.   பெண்ணிய இதழான ‘அணங்கு’ சிற்றிதழை நடத்திவரும் மாலதியின் மூன்று கவிதைத் தொகுப்புகளும் (சங்கராபரணி, நீரின்றி அமையாது உலகு, நீலி) ஒரு கட்டுரைத் தொகுப்பும் (‘விடுதலையை எழுதுதல்’) இதுவரை வெளியாகியுள்ளன. இம்மாதத் தொடக்கத்தில் கனடாவில் நிகழ்ந்த பெண்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக கனடா சென்றிருந்த மாலதி மைத்ரி இந்தியா திரும்பும் வழியில் பாரிஸுக்கு வந்திருந்தார். மாலதி மைத்ரியுடன் ‘சத்தியக் கடதாசி’க்காக ஒரு நேர்காணல்:   கனடாவில் நடந்த பெண்கள் சந்திப்பில் கலந்துவிட்டு வந்திருக்கிறீர்கள்.பெண்கள் சந்திப்பு அனுபவங்கள் எப்படியிருந்தன? ஐரோப்பிய பெண்கள் சந்திப்புப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்கள் சந்திப்பு மலர்கள், சந்திப்புகள் தொடர்பாக வெளியாகும் கட்டுரைகள் என பெண்கள் சந்திப்பு பற்றிய விடயங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்தப் பெண்கள் கூடிக் கூடிப் பேசிக் கலைகிறார்களே எந்த விதமான ஆக்கபூர்வமான, திருப்திகரமான செயல்பாடுகள் எதுவும் இல்லையே என்று பெண்கள் சந்திப்பு மீதான ஒரு தொடர் குற்றச்சாட்டு பொதுப்பரப்பில் இருந்த வண்ணமே இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன என நான் எண்ணுகிறேன்.    தமிழ்நாட்டிலோ அல்லது இலங்கையிலோ இவ்வாறாகப் பெண்கள் சந்திப்பு நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. ஐரோப்பாவுக்கு வந்த பின்பு பெண்ணியவாதிகளுடனோ பெண்ணிய இலக்கியங்களுடனாகவோ பரிச்சயம் ஏற்பட்டு இவற்றின் மூலமாக ஒரு கோட்பாடு அறிமுகமாகும் போது நாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் எனும் நோக்கில், ஆர்வத்தில் இப் பெண்கள் சந்திப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். சாத்தியமில்லாத ஒரு விடயத்தை இவர்கள் இத்தனை தூரம் சாத்தியமாக்கியதே ஒரு பெரிய விடயம் என நான் எண்ணுகிறேன்.   தொடர்ந்து 15 வருடங்களாக பெண்கள் சந்திப்பு தொடர்ச்சியாக இயங்கி வருவதே மகிழ்ச்சி தரும் செய்திதான். பெண்கள் சந்திப்பின் மூலம் பல நல்ல முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன. சிலரின் ஆளுமைகளை வெளிக்கொண்டு வருவதற்க்கும் பல படைப்பாளிகளை அடையாளம் காண்பதற்கும் இச் சந்திப்புகள் உதவியாக இருந்திருக்கின்றன. மற்றும் ஆங்காங்கே சிதறுண்டு கிடக்கும் பல பெண்கள் ஒன்று சேர்ந்து பல விதமான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சூழல் கூட புத்துணர்சியை, உற்சாகத்தைத் தரும் விடயமாகவே நான் கருதுகிறேன்.   இருப்பினும் பெண்கள் சந்திப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு வலுவான அரசியல் பின்புலமுடைய பெண்கள் இன்னமும் வரவில்லை, அதனால் ஒரு தேக்கம் இருக்கத்தான் செய்கிறது. செயற்பாடுகளை எத்திசையில் கொண்டு செல்வது என தெரியாத ஒரு தடுமாற்றத்தையும் அவதானிக்க முடிந்தது.   இம்முறை கனடா சந்திப்பில் நாங்கள் சில முடிவுகளை எடுத்துள்ளோம். தொடர்ந்து கூடிக் கூடிப் பேசி கலைந்து செல்வதோடு, சில பெண்ணியப் படைப்பாளிகளின் நூலை அறிமுகமோ விமர்சனமோ செய்வதோடு அல்லது பெண்கள் சந்திப்பு மலர்களை கொண்டு வருவதோடு மட்டும் நிற்காமல் எவ்வாறாகப் பெண்கள் சந்திப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது, உலகளாவிய அளவில் பெண்கள் சந்திப்பு என்கிற வலைப்பின்னலை உருவாக்குவது என விவாதித்தொம். இந்த வலைப்பின்னல் மூலம் அந்தந்தப் பகுதிப் பெண்களின் பிரச்சினைப்பாடுகளைப் பகிர்ந்து கொண்டு வேலைத்திட்டங்களை நகர்த்துவது, அந்தப் பிரச்சினைகளுக்கு நாங்கள் எவ்விதத்தில் எதிர்ப்பை கண்டனங்களை தெரிவிக்க முடியுமோ அவற்றைப் பதிவு செய்வது என முடிவெடுத்துள்ளோம். நாம் திட்டமிட்டுள்ள செயற்பாடுகள் எப்படி அமையும் என்பதை எதிர்காலத்தால்தான் சொல்ல முடியும். சந்திப்புக்கு வந்திருந்த பெரும்பாலானோர் இந்த அடுத்த கட்ட நகர்வுக்குத் தங்கள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துச் சென்றிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் கனடாவில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு, பெண்கள் சந்திப்பு வரலாற்றில் ஒரு அடுத்த கட்ட நகர்வு எனத்தான் எண்ணுகிறேன்.   அடையாள அரசியல் குறித்த சிந்தனைகள் தீவிரமாக எழுந்திருக்கும் காலமிது. தலித் பெண்கள், சிறுபான்மையின முஸ்லிம் பெண்கள், விளிம்புநிலைப் பெண்கள் போன்றோரையும் வெள்ளாள – பார்ப்பன சாதிப் பின்புலத்தையும் மேட்டுக்குடிப் பின்புலத்தையும் கொண்ட பெண்களையும் ‘பெண்ணிய அரசியல்’ எனும் ஒற்றை அடையாளத்துள் அமுக்கிவிடுவதில் ஆபத்துள்ளது. இந்தப் பிரச்சனையை பெண்கள் சந்திப்பாளர்கள் கவனத்தில் எடுத்திருப்பதாகக் கருதுகிறீர்களா? ஆரம்பத்திலிருந்தே பெண்கள் சந்திப்பில் தலித் பெண்களையும் இணைத்தே செயற்பட்டு வந்துள்ளனர். எழுத்தாளர்கள் பாமா, சிவகாமி, புதியமாதவி, வழக்கறிஞர் ரஜினி போன்றவர்களைப் பெண்கள் சந்திப்புக்களுக்கு அழைத்துப் பேச வைத்திருக்கிறார்கள். பன்முகத்தன்மையோடு செயற்பட வேண்டும் என்கிற அக்கறையும் கவனமும் ஆரம்ப காலம் முதல் இருந்தே வந்துள்ளதை நான் ஒரு முக்கியமான விடயமாகவே பார்க்கிறேன். பொதுவான ஒற்றை அடையாள அரசியல் தன்மையோடு இவர்கள் பெண்கள் சந்திப்பை நடத்தவில்லை. பன்முகத்தன்மையோடுதான் நடத்தி வருகிறார்கள்.    மிகவும் கவனமாக தெரிவு செய்து, ஒற்றை அரசியல் அடையாளமற்ற பொறுப்புணர்வுடன் செயற்படக் கூடியவர்களேயே பெண்கள் சந்திப்புக்கு வெளிநாடுகளில் இருந்து அழைக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தனிக் குழு சார்ந்த அரசியல் பார்வை இருப்பினும், பெண்ணியம் என்கிற அடையாளத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த சிந்தனையாளர்கள், சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த தோழர்கள் ஆகியோரை முன்னிறுத்தியே பெண்கள் சந்திப்பை நடத்திவருகிறார்கள்.   கனடா பெண்கள் சந்திப்பு வெறும் புலி எதிர்ப்புப் சந்திப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது எனச் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்நதி தனது வலைப்பூவில் விமர்சித்திருக்கிறாரே? சந்திப்பில் பதினைந்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. தமிழ்நதி குறிப்பிடும் நிர்மலாவின் கட்டுரை மட்டுமே முழுக்க முழுக்க தமிழ்த் தேசியக் கட்டமைப்பில் பெண்களின் நிலை பற்றியிருந்தது. அவரின் கட்டுரையில் “அரச பயங்கரவாதம் எந்த அளவுக்கு பேசப்பட வேண்டுமோ அந்த அளவுக்கு புலிகளின் பயங்கரவாதமும் பாஸிச அரசியலும் பேசப்பட வேண்டும்” என்ற கருத்தை நிர்மலா முன்வைத்தார். அவரின் உரையை ஒட்டித்தான் தமிழ்நதி குறிப்பிடும் ‘புலி எதிர்ப்பு’ விமர்சனங்கள் அரங்கில் எழுந்தன. அத்தோடு அது முடிந்தது. பிற பேச்சாளர்கள் பல தளங்களில் பெண்களின் வாழ்வியல், அரசியல், இலக்கியம், சமூகவியல், அவர்கள் சமூகத்தில் சந்திக்கும் ஒடுக்குமுறைகள், மொழி – இனம் சார்ந்த ஒடுக்கு முறைகள் பற்றிப் பேசினார்கள். ஆகவே இதை ஒட்டு மொத்தமாக ‘புலி எதிர்ப்பு’ சந்திப்பு எனக் குறுக்கிவிடுவது நேர்மையான விமர்சனமாகாது.    பெண்கள் சந்திப்பைத் தமிழ் தேசியவாதிகள் மட்டுமல்ல, தமிழ் தேசியச் சார்பற்றவர்கள், பல்வேறு மாற்று அரசியல் கருத்துகளைக் கொண்டவர்கள் என அனைவரும் பங்கு பெறும் கருத்துச் சுதந்திரம் பேணும் பெண்ணிய நிகழ்வாகவே நான் கருதுகிறேன். ஒரே ஒரு கட்டுரையை மட்டும் எடுத்துக் கொண்டு ‘புலி எதிர்ப்பு’ என்று கூறிவிட முடியாது என நான் கருதுகிறேன்.   புகலிடப் பெண்களின் எழுத்துகளுக்கும் தமிழகப் பெண்களின் எழுத்துகளுக்குமிடையில் எவ்வகையான ஒற்றுமை வேற்றுமைகளைக் காண்கிறீர்கள்? புகலிடப் பெண்களின் படைப்புகளுக்கும் தமிழகப் பெண்களின் படைப்புகளுக்குமிடையில் வேற்றுமைகள் பல உள்ளன. புகலிடப் பெண்கள் மட்டுமல்ல, குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன் வந்த செல்வி, சிவரமணியின் கவிதைகளை எடுத்துக் கொண்டால் காத்திரமான பெண்ணிய நிலைப்பாடு, அரசியல் நிலைப்பாடு கொண்ட எழுத்துக்களைப் பார்க்கக் கூடியதாக உள்ளது.    அன்றைய காலகட்டத்தில் எவருமே தமிழ் இலக்கியத்தில் அரசியல் நிலைப்பாடுடன் கவிதைகளை எழுதுவதில்லை, பெண்ணிய நிலைப்பாடு கூட அல்லாத பொது நிலைப்பாடு சார்ந்த கவிதைகளே அப்போது பெரும்பாலும் எழுதப்பட்டு வந்தன. தொண்ணூறுகளின் பின்னர்தான் கவிதையின் முகம் குறிப்பான மாற்றத்தை அடைந்தது. அக்காலத்தைப் பெண்ணியம் பேசும் கவிதைகளின் ஆரம்பக்காலம் எனலாம். பெண்ணியம், பெண்ணுடல், பெண்மொழி என்னும் அரசியல் அடையாளங்களுடனான கவிதைகள் படைக்கப்பட்டன.   புகலிடப் பெண் எழுத்தாளர்களையும் தமிழ்நாட்டுப் பெண் எழுத்தாளர்களையும் ஒப்பிட்டு மதிப்பிட்டீர்களேயானால் வித்தியாசங்கள் நிறையவேயுள்ளன, களங்கள் முற்றிலும் மாறுபட்டவையாகவே உள்ளன. புகலிடப் பெண்கள் இன, தேசிய ஒடுக்குமுறைகளைச் சந்தித்தவர்கள். பல்வேறு வகையிலும் ஒடுக்குமுறைகளைச் சந்தித்துப் புகலிடம் வரும்போது இங்கே வேறுவிதமான அரசுசார் ஒடுக்குமுறைகளை எதிர் நோக்குகின்றனர். இவ்வாறான சூழ்நிலைகளில் அவர்களுடைய படைப்புகள் வெளிவரும் போது அரசியல் நிலைப்பாடு உடையவையாக, வேறு களத்திலே சர்வதேச பார்வையுடையவையாகவே அவர்களுடைய இலக்கியங்கள் பயணிக்கின்றன. தமிழ்நாட்டில் இத்தகைய பார்வை மிகவும் குறைவு. எழுத்துகளை சூழல்தான் தீர்மானிக்கிறது. சொந்த நிலத்திலோ, அந்நிய நிலத்திலோ இப்பெண்கள் சரியான முறையில் ஒரு தடத்தைப் பிடித்து இலக்கியங்களைப் படைக்கிறார்கள். குறிப்பாகச் சொல்லப் போனால் ஆழியாள், தமிழ்நதி, அனார், பஹிமா, ரேவதி போன்ற பல பேர்கள் சிறப்பான முறையில் எழுதி வருகிறார்கள். பெண்களுக்கான பத்திரிகை எனப் பார்க்கும் போது ‘சுவிஸ்’ ரஞ்சியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தொகுப்புகளாக வராத போதும் கூட இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் பல பேர், குறிப்பாகப் பிரதீபாவின் படைப்புகள் காத்திரமான அரசியல் நிலைப்பாடுடையவை. சர்வதேச பெண்ணிய நிலைப்பாடு அதன் அரசியல் சூழலை உள்வாங்கி எழுதும் எழுத்துகளாக உள்ளன.   பெண்களின் எழுத்துகள் தொடர்ந்து இலக்கியச் சூழலில் புறக்கணிக்கப்படுகின்றன. “இந்த இலக்கியப் பரப்பில் தொடர்ந்து இயங்குவது சிரமமானது” எனக் கூறிச் சில பெண் எழுத்தாளர்கள் சோர்வடைந்து கிட்டத்தட்ட எழுதுவதையே நிறுத்திவிட்டார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை இதுதான் சூழல் என்ற புரிதலோடுதான் இலக்கியத்துக்குள் வந்துள்ளேன். சூழல் அப்படித்தான் இருக்கும். சூழல் நம்மை தூக்கி நிலைநிறுத்தும் என்று நாம் ஒருபோதும் எதிர்பார்க்கக் கூடாது. மதிப்புரையோ, விமர்சனமோ, அதை ஊடகங்களின் வழி முன்னிறுத்துவதிலோ பல உள் அரசியல் காரணிகள் உள்ளன. ஏனென்றால் ஊடகங்கள் அனைத்தும் ஆண்களின் கையிலேயே உள்ளன. பெண்களின் படைப்புகளை முன்னிறுத்துவதை அவர்கள் பெரிதும் விரும்புவதில்லை. ஒரு சில பெண்கள்- அரசியல் பின்புலம் உள்ள பெண்கள்- மட்டுமே ஊடகங்களால் அடையாளம் காட்டப்படுகிறார்கள்.    என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய புத்தகங்களுக்கு இதுவரையில் விமர்சனக் கூட்டங்கள் நடத்தியதும் இல்லை, மதிப்புரை எழுதித் தருமாறு யாரையும் கேட்டதுமில்லை. நம்மை நாம் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமாயின் எழுதுவதைத் தவிர மற்றவையெல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டுத் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். விமர்சனக் கூட்டம், மதிப்புரை, ஊடக முன்னிறுத்தல் என்று நம்மை நாம் பலிக்கடா ஆக்குவோமாயின் நமது அடையாளம் தான் அழிந்து போகும். இது தற்கொலைக்குச் சமமானது. அதனாலேயே இப்படியான செயலற்ற புலம்பல்களில் எனக்கு உடன்பாடு கிடையாது.   “பெரியாரின் காலத்து மதிப்பீடுகளை வைத்து இன்றைய பார்ப்பனர்களை மதிப்பிடக் கூடாது இன்று பார்ப்பனர்கள் மாறியிருக்கிறார்கள். இதைப் பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று சில பார்ப்பனிய எழுத்தாளர்கள் சொல்கிறார்களே? பெரியாருக்கு பின்னான காலம் என்று சொல்வதிலும் பார்க்க உலக மயமாக்கலின் பின்னர் அதிகாரத்தில் பார்ப்பானர் அல்லாதவர்களின் கைகள் ஓங்கியிருக்கின்றன எனச் சொல்வது இன்னும் பொருத்தமாயிருக்கும். ஊடகம் பார்ப்பானியர்களின் ஆதிக்கத்திலிருந்த காலம் போய் காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் போன்றவை பார்ப்பானர்கள் அல்லாத சக்திகளின் கைகளில் வந்த பிறகு இந்த மாற்றங்களைப் பார்ப்பானர்களும் கிரகித்துக் கொள்கிறார்கள். சகல ஊடகங்களிலிருந்தும் பார்ப்பானிய ஆதிக்கம் போய் அதிகாரம் வெவ்வேறு கைகளில் இருக்கும் நிலையில் இங்கு தங்களையும் தக்க வைத்துக் கொள்வதற்காக; தங்களை மையமாக வைத்துக் கொள்ளவதற்காக; தங்களைச் சாதிப் பாசமில்லாதவர்களாக வெளிப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு முற்போக்கு முகமும் தேவையாக இருக்கும் படசத்தில் அணிசேராமை, கருத்துச் சுதந்திரம் போன்றவற்றைத் தாமும் பேசி ஒற்றை அரசியல் குற்றச்சாட்டை தவிர்ப்பதற்காக ஒப்புக்கு அதில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஓரிருவருக்கு இடமும் கொடுத்து கூட வைத்துக் கொள்வார்கள். இப்படியான ஒரு நிலைப்பாட்டிலேயே அவர்கள் செயற்பாடுகள் இப்போது இருந்து வருகின்றன. அவர்கள் மேல் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடியே இந் நிலைக்கு இம் மாற்றங்களுக்கு அவர்களை முன் தள்ளியுள்ளது. மற்றபடி இது முற்று முழுதான மனமாற்றமோ சாதியற்ற இலக்கியச் செயல்மாற்றமோ கிடையாது.    மிகவும் முக்கியமான பெண்விடுதலை எழுத்தாளர்களாக முன்னிறுத்தப்பட்ட சல்மா, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் போன்றவர்கள் தி.மு.கவில் சங்கமித்திருக்கிறார்கள். இவர்களின் மைய நீரோட்ட அரசியல் நுழைவைச் சக படைப்பாளியாக எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? அறிவுஜீவிகள் அரசியலில் நுழைந்து அரசியலை ஐனநாயகப்படுத்த முடியுமென்றால் அது ஒரு நல்ல விடயமே. ஆனால் இங்குள்ள அரசியலில் இது எந்த விதத்திலும் சாத்தியமற்ற விடயம்.    இவர்களின் அரசியல் பிரவேசத்தை ஒரு அடையாளச் சிக்கல் சார்ந்த பிரச்சினையாகத்தான் நான் பார்கிறேன். இவ் அரசியல் பிரவேசங்களால் அரசியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடலாம், புரட்டிப் போட்டு விடலாம் என்பது தவறான கணிப்பாகும். அவர்களால் ஒன்றும் மாற்றிவிட முடியாது. அரசியல் நுழைவால் தங்களுக்கு அரசியல் – அதிகார லாபங்கள் கிடைக்கும் என்ற ஆசையில் போனார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இவர்கள் பெண்ணியம் பற்றி சுதந்திரம் பற்றி உரக்க முழங்குவதால் மட்டுமே இவர்களால் இவ் அரசியலில் இம்மியளவு மாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. இவர்களால் அங்கிருந்தபடி பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவோ அல்லது வேறெந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவோ குரல் கொடுக்கத் தங்கள் கட்சியை நிர்ப்பந்தித்து விட முடியாது. கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு இவர்கள் கட்டுப்பட்டவர்கள். பொதுவாகச் சொல்லப் போனால் கட்சிக்குள் பெண் என்ற அடையாளத்தோடு நுழையும் போதே அக்கட்சியின் ‘ட்ரஸ் கோட்டை’ நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இந்தத் தொடக்கப் புள்ளியிலேயே நமது தனித்துவம், சுதந்திரம் கட்சிக்குள் அடிபட்டுப் போகிறது பின்பு எப்படி நமது கருத்துச் சுதந்திரம் பற்றியும் கொள்கைச் சுதந்திரம் பற்றியும் கட்சிக்குள் பேச முடியும்! பெண் என்ற பார்வையே கட்சிக்குள் வேறு விதமாக உள்ளது. ஒரு சராசரி ஆண் பொதுப்புத்தியில் என்ன மதிப்பீடு பெண்களுக்கு உள்ளதோ அதே மதிப்பீடுதான் கட்சிக்குள்ளும் உள்ளது. கட்சி ஒரு முடிவை எடுத்து பொது மனித சமூகப் பரப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஆனால் இது ஒரு பெண் சார் விடயமென்பதால் கட்சி இவ் விடயங்களைப் பற்றிச் சிந்திப்பது கூட இல்லை. ஆகவே பெண்கள் தங்களது தனித்துவம், பெண்ணுரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை யாவற்றையும் பலி கொடுத்துத்தான் கட்சிக்குள் இயங்க முடியும்.   ‘குடும்பம் என்பது வன்முறை நிறுவனம்’ என்றார் கார்ல் மார்க்ஸ். ‘பெண்கள் கர்ப்பப் பையைத் தைத்துவிட வேண்டும், பிள்ளைகள் பெறுவதை விட்டுத் தொலைக்க வேண்டும்’ என்றெல்லாம் சொன்னார் பெரியார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இன்றைக்கு குடும்ப அமைப்பு சிதைந்திருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. கலப்புத் திருமணங்கள் ஜாதி அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஆகையால் கலப்புத் திருமணங்களை சுயமரியாதைத் திருமணமாக ஆதரிக்க வேண்டுமென்றார் பெரியார். ஆனால் ஒரு சதவீதம் கூட சமூகத்தில் மாற்றம் ஏற்படவில்லை.    குடும்பம் தனது அதிகாரத்தை புதுப்பித்த வண்ணமே இருக்கிறது. பெண் ஒடுக்குமுறை நவீன குடும்ப அமைப்புக்குள்ளும் வெவ்வேறு வழிகளில் தனது கால்தடங்களைப் பதித்து விட்டது.   ஆகவே இந்த குடும்ப அரசியலை தகர்ப்பது என்பது பெரியார் சொன்ன முறைகளில் ஒருபோதும் சாத்தியமில்லை. வேறு விதமான ஒரு வாழ்க்கை முறையினால் மட்டுமே சாத்தியமாகும். இங்கு பெண்கள் உள் நுழைந்து பெண்ணியம் பேசும்போது சமூகம் சீரழிந்து போகிறது என்னும் ஒரு பெரிய குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இன்று வரை உலகில் ஏற்பட்ட நடந்து கொண்டிருக்கிற அழிவுகளுக்கு எல்லாம் காரணம் ஆண்கள். இவர்களின் போர்வெறி, அதிகாரவெறி, ஆக்கிரமிப்புக் கொள்கை, இயற்கை வளங்களைக் கொள்ளை அடித்தல், போன்ற பேராசைகளால் நடந்த வன்முறையின் வரலாறே மனித சமூகத்தின் வரலாயிருக்கிறது.   இதனாலேயே உலகம் பலமுறை அழித்து அழித்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்க்கை முறையினால்தான் உலகம் அழிந்து போகும், சீரழிந்து போகும் என்ற போலியான குற்றச்சாட்டை உருவாக்கிக் காலம் காலமாக சமூகம் பெண்ணை அச்சுறுத்திக் கொண்டே, அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கிக் கொண்டே யிருக்கிறது. பெரியார் சொன்னது போல கர்ப்பப்பையை தைத்துக் கொண்டால், குழந்தை பெறாமல் இருந்தால் பெண் சுதந்திரமாக இருக்க முடியும் என்னும் கூற்றுக்கு இன்றைய காலகட்டத்தில் சாத்தியங்கள் நிறையவே உள்ளன. அப்படியிருந்தும் பெண் ஒடுக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.   ஏனென்றால் இந்த உலகில், நிர்மாணிக்கப்பட்ட நகரம், கிராமம், துறைகள், நிர்வாகம், அலுவலகம் எதுவாகயிருப்பினும், எந்தவொரு நிர்மாணத்திலும் பெண்களுக்கான இடமே கிடையாது. இங்கு பாரிஸ் வீதிகளில் ஒரு பொதுக் கழிப்பிடத்தைத் தேடிப் பல மணி நேரம் அலைய வேண்டியுள்ளது. ஒரு நகரத்தை வடிவமைப்பதில் கூடப் பெண்ணைப் பற்றி இவர்கள் சிந்திப்பதே இல்லை. பெண் மூத்திரம் பெய்யாமல் வாழ்ந்திட முடியுமா? இந்தச் சமூகத்தில் தனியாக இருக்கிற பெண் எங்கே தூங்குவாள்? தனியாக எங்காவது தங்கிட முடியுமா? ஆகவே கர்ப்பப்பையை தைப்பதோ, குழந்தை பெறாமல் இருப்பதோ கூட பிரச்சினை கிடையாது. இங்கு பெண்ணுடலைத்தான் முக்கியமான விடயமாகக் கருதுகிறேன். யோனிதான் மையமாக உள்ளது. யோனிசார் அடக்குமுறைதான் இங்கு அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது.   உலகம் முழுவதும் இன்று தேசிய விடுதலைப் போராட்டங்களிலும் சரி, அரச இராணுவங்களானாலும் சரி, யுத்தப் பிரபுக்களின் படையணிகளிலும் சரி, பெண்களும் குழந்தைகளும் உள்வாங்கப்படுகிறார்கள். பெண்கள் ஆயுதம் ஏந்தி அரசியல் வெளிகளுக்கு வருவதால் ஆணாதிக்க சமூக அமைப்பில் ஒரு உடைப்பு ஏற்படுத்தப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து? ஒரு சமூகமே விடுதலைக்கான போராட்டத்தில் கலந்து கொள்ளும் போது ஆண்களும் பெண்களும் போராட்டத்தில் சரிசமமாகக் கலந்து கொள்வதென்பது சரியான விடயமாகவே எனக்குப் படுகிறது. ஆனால் குழந்தைகளைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதென்பது ஒரு சமூகத்தின் சுய அழிவுக்கே சமூகத்தை இட்டுச் செல்லும். இது ஒரு போதும் விடுதலையை நோக்கி இட்டுச் செல்லாது. இளைய தலைமுறையைப் பலி கொடுத்துவிட்டு விடுதலைப் போராட்டத்தை யாருக்காக நடத்துகிறீர்கள்? எதற்காக இத்தனை குழந்தைகளின் மரணங்கள்? நாம் போராடி இளைய தலைமுறைக்கு விடுதலையைப் பெற்றுத்தருவது நமது கொள்கை, ஆனால் குழந்தைகளைப் பலியிட்டு நாம் வாழ வேண்டும் என்பதில் வேறு ஏதோ நோக்கம் இருக்கிறது. விடுதலைப் போராட்டம் இப்படியொரு பாதையை எடுக்குமாயின், இவ் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றாலும் அது ஒரு ஜனநாயக அரசை அமைக்க வாய்ப்பே கிடையாது, அது சர்வதிகார அரசாகவே மாறும்.    ஆனால் பெண்கள் யுத்தத்தில் பங்கேற்கும் போது அவர்கள் பல்வேறுவிதமான பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள். விடுதலைப் போராட்டம் பெண்ணிய விடுதலையும் சார்ந்த போராட்டமில்லாமல், தனியே மண் சார் விடுதலையாக, அதிகாரக் கைப்பற்றலாக மாறும் போது போராட்டம் முடிவுக்கு வரும் பட்சத்தில் பெண்களின் நிலை பெரிய சிக்கல்களுக்குள் உள்ளாகும் வாயப்புகளே அதிகமாக உள்ளது. அதாவது பெண்கள் தங்கள் மதிப்பீடுகளை முற்றிலுமாக இழக்கிறார்கள். அவர்களுக்குப் பொதுச் சமூகத்தில் சராசரியான உறவுகள் அமைவதில் சிக்கல்கள் எழுகின்றன. இத்தருணத்தில் அவள் தனித்து விடப்படுகிறாள். ‘வீரம்’, ‘தியாகம்’ என்று பெண்களை யுத்தத்தில் ஈடுபடுத்தி, யுத்தம் முடிவுக்கு வரும் காலங்களில் அவர்களை அநாதைகளாக -பெற்றோர்களால் கூட ஏற்கப்படாமல் – நடுத் தெருவில் விடுவது என்ற நிலையை மாற்ற வேண்டும்.   விடுதலைப் போராட்டத்தை நடத்துகின்ற அரசோ, அமைப்போ பொதுமக்களின் மனோபாவத்தை முதலில் விடுதலை அரசியல் மயப்படுத்த வேண்டும். யுத்தத்துக்கு முன் – பின் வாழ்க்கை முறைகளைப் புரிய வைக்க வேண்டும். பெண்களை, சக போராளிகளின் மனநிலையை, ஆண், பெண் உறவு சார் முறைகளையும் அரசியல் மயப்படுத்த வேண்டும்.   ஆகவே பெண்களுக்கான அடிப்படைப் பிரச்சினைகளை மாற்றாமல் போராட்டம் என்றவுடன் அவர்களைப் பிடித்துச் சென்று கைகளில் துப்பாக்கியைக் கொடுத்து சுடச் சொல்லி போராட்டம் முடிவுக்கு வரும் போது துப்பாக்கியைப் பிடுங்கிப் பெண்களை தெருவில் தூக்கி எறிவது வெறுமனை பெண்ணை ஒரு கருவியாக உபயோகப்படுத்துவதேயாகும். இதில் கொஞ்சம் கூட எனக்குஉடன்பாடில்லை..   சில விடுதலைப் போராட்டங்களை பெண்களே முன்னின்று நடத்தினாலும் உதாரணமாகப் பாலஸ்தீனப் போராட்டத்தில், அங்கு அவர்கள் தனியே வாழ்வுரிமைப் பிரச்சினையை முன் வைத்தே போராடுகிறார்கள், மத ஒடுக்குமறைக்கு எதிரான பெண்கள் நிலைப்பாட்டை அவர்கள் தொடவேயில்லை, ஆகையால் இந்தப் போராட்டம் முடிவுக்கு வரும் போதும் வேறு விதமானவொரு ஒடுக்குமுறையே பெண்களுக்கு கையளிக்கப்படும்.   இன்றைய ஆபத்தான இந்துத்துவ சூழ்நிலையை பெண்ணிய அரசியலாளர்கள் எவ்வாறு அணுக வேண்டும் எனக் கருதுகிறீர்கள்? இந்து மத எதிர்ப்பு என்பது பெண்ணிய விடுதலையின் முதன்மையான விடயமாகவே கருதப்பட வேண்டும். பன்முகத் தன்மையற்று ஒற்றைப் பரிமாணத் தன்மையில் பொதுவாகப் பேசுவோமாயின் பெண் விடுதலை ஒரு போதும் சாத்தியமற்றது. ஜாதி ஒழிப்பை பெண் விடுதலையாளர்கள் தங்கள் கைகளில் நிச்சயமாக எடுக்க வேண்டும். வேறு எத்தனை விதமான ஒடுக்குமுறைகள் நம்மீது பிரயோகிக்கப் படுகிறதோ அத்தனைக்கும் எதிராகப் போராடும்போதுதான் பெண்ணியம் சாத்தியமாகும். எவற்றோடும் சமசரம் செய்யும் படசத்தில் பெண்ணியம் சாத்தியமற்றுப் போய்விடும்.    பெண்ணியம் என்பது வேறு பெண் நிலைப்பாடு என்பது வேறு. அதாவது பெண்ணியம் என்பது அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு பெண் பொதுநிலை. பெண் நிலைப்பாடு என்பது அரசியல் நீக்கப்பட்ட ஒரு தன்நிலை. இங்கு பல பெண்கள் பெண் நிலைப்பாட்டில் இருந்தே எழுதி வருகிறார்கள். நாம் நகர வேண்டியது பெண்ணிய அரசியலை நோக்கியே!         5. இன்றெமக்கு வேண்டியது சமாதானமே     தீராநதி: ஒக்டோபர் – 2008 விமர்சனமற்ற முறையில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது, அல்லது விடுதலைப் புலிகளை எதிர்ப்பது என்கிற வகையில் இலங்கை அரசையும்கூட ஆதரிக்கும் நிலையை எடுப்பது என்கிற இரு எதிரெதிர் நிலைப்பாடுகளுக்கிடையே ஈழப் பிரச்சினையில் நடுநிலையான ஒரு பார்வையைத் தொடர்ந்து பேணி வருபவர் எழுத்தாளர் ஷோபாசக்தி. சென்ற மாதத்தில் நான் பிரான்ஸ் சென்றிருந்தபோது ஈழப் போராட்டம் இன்றொரு தேக்கநிலையை எட்டியிருப்பது குறித்து அவரிடம் நானெடுத்த பேட்டி இது. இன்றைய தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகிய ஷோபாசக்தியின் இக்கருத்துக்களை வேறும் நேர்காணலாகவன்றி உடன்பாட்டுடன் முன்வைக்கிறேன். பாரிசிலிருந்து சுமார் 800 கி.மி. தொலைவிலுள்ள Pau என்னும் நகரில் சென்ற ஆகஸ்ட் 3 அன்று பதிவு செய்யப்பட்டது இது. -அ. மார்க்ஸ் ஜூலை 83 இனப்படுகொலையின் 25-ம் நினைவு நாளை நீங்கள் எவ்விதமாக நினைவு கூர்கிறீர்கள்? இன்றைக்கு மிகவும் துக்ககரமாகவும், வெட்கப்படக்கூடிய நிலையிலும் நமது முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களும், உதிரிகளாய் இருக்கும் முன்னாள் போராளிகளும் யூலைப் படுகொலைகள் இலங்கை அரசால் திட்டமிட்டுச் செய்யப்பட்டதல்ல என்றும், அங்கே நடந்தது இன அழிப்பு அல்லவென்றும் பிரச்சாரம் செய்யக்கூடிய நிலையை நாங்கள் பார்க்கிறோம். ஏதோ பாலும், தேனும் ஓடிக்கொண்டிருந்த ஒரு தேசத்தில் தமிழ் இளைஞர்கள், தமிழர்களின் உரிமைகளைக் கேட்டு ஆயுதம் தாங்கிய காரணத்தினாலேயே இலங்கை அரசு அப்படுகொலைகளை நிகழ்த்தியதென ஒரு சப்பைக் காரணம் சொல்லிக் கொண்டுள்ளனர். ஆனால், இலங்கை அரசால் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு, தெற்குப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களது வீடுகள், வியாபார நிறுவனங்கள் முதலானவை குறித்த தகவல்கள் துல்லியமாகத் தொகுக்கப்பட்டு, வெளிக்கடைச் சிறை ஆணையாளரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, மிக நிதானமாக, கட்டங்கட்டமாக இப்படுகொலைகளைச் செய்து முடித்தார்கள். ஆயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்ட அப்படுகொலை குறித்து இன்றுவரை ஒருவர் கூடச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டதில்லை.    இத்தனை தியாகங்கள், உயிரிழப்புகள், புலப்பெயர்வுகளுக்குப் பின் இன்று ஈழப் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள தேக்கம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?   ஏற்கெனவே ஈழத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், சாதி ஒழிப்புப் போராட்ட இயக்கங்கள் ஆகியவற்றால் உணர்வு பெற்றிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள்தான் இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து தமிழர் தேசியப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்க வந்தனர்.   `சோஷலிசத் தமிழ் ஈழம்’ என்பது அன்று அவர்களின் பிரதான முழக்கமாக இருந்தது. இதற்குப் புலிகளும்கூட விலக்கல்ல. முக்கியமாக இந்தப் பண்பு பல அறிவுஜீவிகளை, இளைஞர்களை ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகத் திருப்பியது. ஆனால் போராட்டம் உக்கிரமடைந்த காலகட்டத்திலே, ஒரு பக்கம் போராட்டம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இன்னொரு பக்கம் இந்திய அரசுக்கு இந்த இளைஞர்கள் முழுமையாக அடிபணிந்தார்கள். ஒட்டுமொத்த இயக்கங்களின் ஆயுத பலத்தை மட்டுமல்லாமல், அவர்களின் போராட்ட நெறிகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக `ரோ’ (Raw) அதிகாரிகளும், இந்திய ராஜதந்திரிகளும் விளங்கினர். ஆக போராட்டத்தைத் தொடங்கும்போதே இவர்கள் தாங்கள் வைத்திருந்த இடதுசாரி, சோஷலிசக் கருத்தாக்கங்களை ஒவ்வொன்றாகக் கைவிட்டுக்கொண்டே வந்தார்கள். எந்த முழக்கங்களால் பரவலாக இளைஞர்களிடமும், வெகு ஜனங்களிடமும் அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தார்களோ, அவை வெறும் வெற்று முழக்கங்களே என்பது எங்களுக்குப் புரியத் தொடங்கியது.   அனைத்துப் பெரிய இயக்கங்களுமே அப்பாவி மக்களைக் கொலை செய்தனர். எல்லோரும் எல்லோரையும் கொலை செய்தனர். சகோதர இயக்கங்களின் மீதும் படுகொலை நிகழ்த்தினார்கள். இந்தியாவின் கருணை, தங்கள் இயக்கத்தின் சொந்த வளர்ச்சி, இவற்றைத் தவிர மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தோ, அங்கே நிலவிய சாதியச் சிக்கல்கள், தமிழ், முஸ்லிம் முரண்பாடு, வடகிழக்கு முரண்பாடு குறித்தோ இவர்கள் சிந்தித்தது கிடையாது. இடைவிடாது மாறிக்கொண்டுள்ள சர்வதேச அரசியலைக் கவனித்து அதற்கு ஏற்றவாறு அவர்களின் போராட்ட உத்திகளை வகுத்ததும் கிடையாது. குறிப்பாக புலிகள் இயக்கத்தினுடைய அதிஉச்சமான அராஜகங்களாலும், மாற்று அரசியல் சக்திகளை அவர்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கியதாலும், விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி, தமக்கான பாதுகாப்பைத் தேடி மற்றைய இயக்கங்கள் இலங்கை அரசுக்கு அடிபணிந்ததாலும், அமைதிப்படை காலகட்டத்தில் அதை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திடம் புலிகள் தஞ்சம் புகுந்ததாலும் போராட்டத்திலிருந்து மக்கள் அந்நியப்பட்டனர். தமிழ் மக்களைப் போராட்ட சக்திகளாகக் கருதாமல் வெறுமனே தங்களுக்குக் கப்பம் கட்டும் மந்தைகளாகவும் தமது இராணுவத்திற்குப் பிள்ளைகள் பெற்றுத் தருபவர்களாகவும் மட்டுமே புலிகள் ஆக்கி வைத்துள்ளனர்.   இன்றைய தமிழ் இளைஞர்களின் போராட்ட அரசியல் என்பது, சோஷலிசம், இடதுசாரித் தத்துவமல்ல. வேறெந்தத் தத்துவமும்கூட அவர்களுக்குக் கிடையாது. எல்லாவற்றிலுமே அரசியல் நீக்கம் செய்யப்பட்ட குட்டிக் குட்டி யுத்தப் பிரபுக்களின் வலிமைகளைப் பரிசோதிக்கும் களமாக இன்று அது மாற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் வெளிகளில், தமிழ் மக்களுக்கு நீதியுடனான சமாதானத்தை வழங்குவதற்கு அருகதையுள்ள, விசுவாசமுள்ள எந்த ஒரு அரசியல் சக்தியும் இன்று கிடையாது. நாங்கள் ஒரு போராட்டத்தைத் தோற்றுவிட்டு நிற்கிறோம்.   இதிலிருந்து மீண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் தென்படுகின்றனவா? யுத்தத்தின் மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வு என்பதில் முன் எப்போதையும்விட இன்றைய அரசு உறுதியாக நிற்கிறது. அது அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்துக்கொண்டுள்ளது. கிழக்கு முற்றுமுழுதாக இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. வடக்கில் புலிகளிடம் எஞ்சியிருக்கும் சிறு நிலப் பகுதியும்கூட எந்த நேரமும் இலங்கை இராணுவத்தால் வெற்றி கொள்ளக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. தமிழீழம் நிராகரிக்கப்பட்டு `ஒற்றையாட்சி’ என்பதை தமிழர்களின் பல்வேறு இயக்கங்கள், சக்திகள், அமைப்புகள் ஏற்றுக்கொள்கின்றன. கூர்ந்து அவதானித்தோமானால் விடுதலைப்புலிகள் உள்ளிட்டு எந்த இயக்கங்களும் நீண்டகாலமாகத் தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை முன் நிறுத்தவில்லை. இடைக்காலத் தன்னாட்சி நிர்வாகம் என்பதே பேச்சுவார்த்தைகளில் புலிகளின் கோரிக்கையாக இருந்தபோதும் அதையுங்கூட இலங்கை அரசு ஏற்கவில்லை. புலிகள் தொடர்ந்து ஏகப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்திக் கொண்டுள்ளனர். வேறு யாரையும் பேச அழைக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இலங்கை அரசும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாக இருந்த நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா முதலான நாடுகளும் அதை ஏற்றுக்கொண்டன. இத்தனைக்குப் பின்னுங்கூட யுத்தத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவலம் குறித்தோ, இந்த அர்த்தமற்ற போரை நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தோ, நிரந்தரமான சமாதானத் தீர்வை நோக்கி நாம் போகவேண்டிய அவசியம் குறித்தோ எந்தக் கரிசனையும் இல்லாமல், தங்களது இயக்கத்திற்கு அதிகாரங்களைப் பெற்றெடுப்பதிலேயும், இந்தப் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தி மாற்று அரசியல் இயக்கங்களை ஒழித்துக்கட்டுவதிலேயும் மட்டுமே புலிகள் குறியாக இருந்தனர். போர் நிறுத்த காலத்தில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட மாற்று இயக்கங்களின் முக்கியஸ்தர்களைப் புலிகள் கொன்றொழித்துள்ளனர்.   அன்று நீங்கள் உரையில் குறிப்பிட்டதுபோல அரசாங்கம் இன்று யுத்தத்தை மட்டுமே நம்பியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டிற்கு புலிகள் தவிர்த்த மற்ற இயக்கங்கள் இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.   பேச்சுவார்த்தைகளில் புலிகள் மற்ற இயக்கத்தவரையும் அனுமதித்திருந்தால் இந்நிலை தவிர்க்கப்பட்டிருக்குமா?   அனுமதித்திருந்தாலுங்கூட இலங்கை அரசு எந்த அளவிற்கு யோக்கியமாக நடந்துகொள்ளும் எனச் சொல்ல இயலாது.   இதர அம்சங்களைப் பொறுத்தமட்டிலாவது புலிகள் பேச்சுவார்த்தைகளில் நேர்மையாக நடந்துகொள்கிறார்களா? பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் மட்டுமல்ல, புலிகளும் நேர்மையாகவும், உண்மையாகவும் இல்லை. அதனால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன. இருவருமே யுத்தத்தை விரும்புகின்றனர். யுத்தத்தின் மூலமாகவே இருவரும் தமது அதிகாரத்தையும், செல்வாக்கையும் நிலைநிறுத்திக் கொள்கின்றனர். இடையில் புகுந்து குட்டையைக் குழப்பும் அந்நிய வல்லாதிக்க சக்திகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மட்டுமல்லாமல், யுத்தத்தைத் தீர்மானிப்பதிலும் இவர்களுக்கு ஒரு பங்குள்ளது. அந்நிய வல்லாதிக்க சக்திகள் என நீங்கள் எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்? இந்தியாவிற்கு முக்கியப் பங்குள்ளது. இலங்கையின் பல பகுதிகளில் இந்திய முதலாளிகள் முதலீடுகளைச் செய்து கொண்டுள்ளனர். உலக மகா போலீஸான அமெரிக்காவும், தன் பங்கைச் செவ்வனே ஆற்றுகிறது. குறிப்பாக இந்தியாவின் பொருளாதார நலன்கள் முக்கியமாக உள்ளது. இலங்கையில் அனல் மின் நிலையம் அமைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கையின் மிகப் பெரிய சீமெந்துத் தொழிற்சாலையை இன்று இந்திய முதலாளிகள் வாங்கியுள்ளனர். தவிரவும் நாடு முழுவதிலும் இந்திய முதலாளிகள் நிலங்களையும், சொத்துக்களையும் வாங்கிக் குவிக்கின்றனர். இதற்குச் சிறு எதிர்ப்பும்கூட இலங்கையில் கிடையாது.   இந்திய விஸ்தரிப்பு வாதத்தை மையமாக வைத்து இயங்கிய ஜே.வி.பி. இயக்கம் கூடவா எதிர்ப்புக் காட்டவில்லை? இந்திய விஸ்தரிப்பை எதிர்த்துப் போராடிய ரோஹண விஜயவீரவின் ஜே.வி.பி.க்கும் இன்றைய ஜே.வி.பி.க்கும் நிறைய வேறுபாடு உண்டு. இன்று ஜே.வி.பி. அரசின் பங்காளியாக உள்ளது. இனவாதத்தைக் கக்குவதில் `ஹெல உருமைய’ போன்ற இனவாதக் கட்சிகளுக்கு இணையாக இன்று அவர்கள் உள்ளனர். இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடு என்கிற கருத்து இருந்தால்தானே இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றிய உணர்வு இருக்கும். ஆனால் இன்று ஜனாதிபதி உட்பட யாருக்கும் இலங்கை ஒரு இறையாண்மையுடைய நாடு என்கிற கருத்து கிடையாது. இந்தப் போரைச் சாக்காக வைத்து நாட்டில் பல பத்து வருடங்களாக நடைமுறையிலுள்ள அவசர நிலை தொடர்கிறது. இந்த அவசரகால நிலை உள்ளதாலேயே மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காகப் போராட இயலாத நிலையுள்ளது. இதன் விளைவாகவே எந்த எதிர்ப்புமின்றி இந்தியா தனது விஸ்தரிப்பு நடவடிக்கைகளை நிறைவேற்றி வருகிறது.   நான் இங்கு வந்துள்ள சில நாட்களில் பல தரப்பட்ட ஈழத் தமிழர்களையும் சந்தித்துப் பேசும்போது கிழக்கு மக்கள், முஸ்லிம்கள், தலித்துகள் எனப் பல்வேறு பிரிவினரும் தமது தனித்துவத்தை வலியுறுத்துவதும், `ஈழத் தமிழர்’ என்கிற ஒற்றை அடையாளத்திற்குள் தம்மை நிறுத்திக்கொள்ள விரும்பாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதையும் உணர்கிறேன்… உண்மைதான். ஆனால் இந்த நிலைமை எப்போதிலிருந்து தொடங்குகிறது என்பதைக் கவனிக்கவேண்டும். 90களுக்குப் பின்புதான் இது உருவாகிறது. நான் தொடக்கத்தில் சொன்னதுபோல இந்தப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் ‘சோஷலிசத் தமிழ் ஈழம்’ என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இன்றுள்ள சூழலில் அது வேடிக்கையாகத் தோன்றினாலுங்கூட, அன்று அது சாத்தியம் என்கிற நம்பிக்கை நான் உள்ளிட்ட பலருக்கும் இருந்தது. அதை ஒட்டியே பல தலித் இளைஞர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், கிழக்கு மாகாணத்தினர் எல்லோரும் ஈழப் பேராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள நேர்ந்தது. நிகரகுவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இத்தகைய அணி சேர்க்கைக்கு ஊக்குவிப்பாக அமைந்தது. ஆனால் போகப் போக ஈழப் போராட்டம் இந்த சோசலிசம் முதலான எல்லாவித அரசியல், தத்துவப் பார்வைகளையும் விட்டுவிட்டு, ஜனநாயக நடைமுறைகளையெல்லாம் ஒழித்துவிட்டு, சக இயக்கங்களையெல்லாம் அழித்துவிட்டு, முழுக்க முழுக்க யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட ஒரு ஆதிக்க, அதிகாரப் போராட்டமாக மாறத் தொடங்கியது. இதன் விளைவுதான் இன்று தலித்களும், கிழக்கு மாகாணத்தினரும் தமது தனித்துவத்தை வலியுறுத்தி, தமிழ் ஈழக் கோரிக்கையிலிருந்து விலகி மட்டுமல்ல, அதற்கு எதிராகவும் நிற்க வைத்துவிட்டது. ஆனால் அதே நேரத்தில் உலக அளவில் பல விடுதலைப் போராட்டங்கள் இந்த வேறுபாடுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு செயல்பட்டதால் இன்று முன்னோக்கி நகர்ந்துள்ளன. நேபாளம் ஒரு நல்ல உதாரணம்.   `தலித் சமூக மேம்பாடு முன்னணி’ என்னும் அமைப்பைத் தோழர்கள் தேவதாசன், நாதன் முதலியோர் முன் முயற்சி எடுத்து உருவாக்கியுள்ளனர். பாரிசிலும், லண்டனிலும் இரு மாநாடுகளும் நடைபெற்றுள்ளன. இதுகுறித்துக் கொஞ்சம் சொல்லுங்கள். சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு ஈழத்தில் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. குறிப்பாக 60களின் இறுதியிலும் 70களின் தொடக்கத்திலும் சாதி ஒழிப்புப் போராளிகள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைச் சாதித்தார்கள். முன்னைவிட இப்போது ஈழத்தில் சாதிப் பிரச்சினை சற்றுத் தளர்வாக உள்ளதென்றால் அதை ஏற்படுத்திய பெருமை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியையும், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தையும், உலகளாவிய மாற்றங்களையும்தான் சாருமேயொழிய தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இதில் எந்தப் பங்குமில்லை. டானியல் சொன்னது போல அடிமையும், எஜமானனும் ஒன்றிணைந்து, ஒரு சேரக் கலந்து தமிழ் ஈழத்தைக் கட்டுவது சாத்தியமில்லை. ஆனால் அதைத்தான் தேசிய இயக்கங்கள் முயன்றன. தமிழ்த் தேசியவாத அலையில் `தமிழர் ஒற்றுமை’ என்கிற முழக்கமே சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் நீர்த்துப் போவதற்குக் காரணமாயின. சாதி ஒழிப்புப் போராட்ட அமைப்புகள், தமிழ் ஈழப் போராளிகளால் துப்பாக்கி முனையில் மௌனமாக்கப்பட்டன. முப்பது வருட காலமாகக் கவிந்த இந்த மௌனத்தை முதன்முதலாக இன்று `தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ கலைத்துள்ளது. ‘புதிய ஜனநாயகக் கட்சி’ போன்ற அமைப்புக்கள் சாதி ஒழிப்பைத் தொடர்ந்து பேசி வந்துங்கூட, சாதியம் குறித்த அவர்களது பார்வைகள் மரபு மார்க்சீயத்தைத் தாண்டமுடியாமல் இன்றுவரை தேங்கிப்போயுள்ளன. ஆனால் இன்று இந்தியாவிலும், தமிழகத்திலும் தலித்தியம் குறித்துப் பல சிந்தனைப் போக்குகள் உருவாகியுள்ளன. தீண்டாமை மற்றும் சாதியத்தை வெறுமனே நிலப்பிரபுத்துவத்தின் ஓரங்கமாகப் பார்க்காமல், அதை இந்து மதத்துடன் தொடர்ப்படுத்தியும், இந்து மதத்தை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பது போலவும் அங்கே பார்வைகள் உருவாகியுள்ளன. தலித்துகளின் தனித்துவம், அவர்களுக்குத் தனித்துவமான கட்சி ஆகியன பற்றியும் இன்று பேசவேண்டிய நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்ட வகையிலேயே த.ச.மே. முன்னணி, மற்றைய இதற்கு முந்திய சாதி ஒழிப்பு இயக்கங்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. இந்த அடிப்படையின்கீழ் இன்று த.ச.மே. முன்னணித் தோழர்கள் ஒரு உரையாடலை உருவாக்கியுள்ளனர். இது ஒரு முக்கியமான மாற்றம் என்பதில் ஐயமில்லை. ஈழ தேசியப் போராட்டத்தின் ஆரம்பத்தில் `ரவுடிகள்’ என அடையாளங்காட்டப்பட்டுப் பல தலித் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் உண்மையில் தத்தம் பகுதிகளில் தலித் மக்களைத் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து பாதுகாத்தவர்களாகவுமிருந்தது குறிப்பிடத்தக்கது. யாழ் பொது நூலகத் திறப்பு விழா, தலித் மேயரான செல்லன் கந்தையனின் தலைமையில் நடக்கக்கூடாது என்பதற்காகவே பல்வேறு சாக்குப் போக்குகளையும் சொல்லி தடுத்து நிறுத்தப்பட்டது. அதேபோல வரலாற்றிலேயே முதன்முறையாக யாழ்ப்பாணத்தின் பாரம்பரியமிக்க யாழ் மத்திய கல்லூரிக்கு ராஜதுரை என்கிற தலித் ஒருவர் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து அவர் சாதி ரீதியாகப் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இறுதியில் 2005-ல் அவர் கொல்லவும்பட்டார். எல்லோரும் இந்தக் கொலையை ஒரு ஜனநாயக விரோதச் செயலாக மட்டுமே பார்த்து, இதற்குப் பின்னாலிருந்த சாதியக் காரணங்களைக் கண்டுகொள்ள மறுத்தனர். த.ச.மே. முன்னணி மட்டுமே நான் இப்போது குறிப்பிட்ட இந்தப் பிரச்சினைகளிலெல்லாம் பின்புலமாக இருந்த சாதியக் காரணங்களை அடையாளம் காட்டியது. இன்று புதிய ஜனநாயகக் கட்சியெல்லாம்கூட இந்த நோக்கிலிருந்து பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில்தான் த.ச.மே. முன்னணியின் முக்கியத்துவத்தை நாம் வரையறுக்கவேண்டி இருக்கிறது. ஐரோப்பாவிலிருந்துகொண்டு இதைச் செய்வதிலுள்ள எல்லைகள், வரம்புகள் ஒரு பக்கம் இருந்தபோதிலும் இன்று இதன்மூலம் உருவாகியுள்ள உரையாடல் குறிப்பிடத்தக்கது.   தமிழ்நாட்டிலுள்ள தலித் இயக்கங்களிடமிருந்து போதிய ஆதரவு இம் முயற்சிக்குக் கிட்டியுள்ளதா? த.ச.மே. முன்னணி ஒரு இளம் அமைப்பு. புதிதாக உருவாகியுள்ள ஒன்று. இன்றும் இப்படியொரு இயக்கம் உருவாகியுள்ள செய்தி உலக அளவில் பரவலாகவில்லை. எங்களாலும் விரிவாகத் தமிழகம் தழுவிய அளவில் கொண்டு செல்ல இயலவில்லை. இப்படி ஒரு அமைப்பு உருவாகியுள்ளதும், அது தலித் மாநாடுகளை நடத்தி வருவதும், தமிழ்ச் சிறு பத்திரிகை சார்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ள நிலையுள்ளது. இது ஒரு காரணமென்றபோதிலும் இன்னொரு முக்கிய காரணத்தையும் நாம் மறந்துவிட இயலாது. இன்று தமிழக தலித்களின் முக்கிய பிரதிநிதியாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுக்க முழுக்க விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. புலிகளை ஆதரிப்பது அவர்களது உரிமை அல்லது அரசியல் என நாம் ஏற்றுக்கொண்ட போதிலும், ஒரு தலித் கட்சி என்கிற வகையில் அது அங்குள்ள சாதி, தீண்டாமைப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாதிருப்பதும், ஈழத்தில் சாதிப் பிரச்சினை விடுதலைப்புலிகளுக்குப் பின் ஒழிந்துவிட்டது என்பது போன்ற கருத்துக்களைத் தமது மவுனத்தின் மூலம் ஆதரிப்பதும் விடுதலைச் சிறுத்தைகளுடனும், அவற்றின் தலைவர் திருமாவளவனிடமும் ஒரு உரையாடலை ஏற்படுத்துவதை இதுவரை சாத்தியமில்லாமற் செய்துவிட்டது. தேசிய விடுதலைப் போராட்டத்தினூடாக இன்று சாதிப் பிரச்சினை சற்றே குறைந்துள்ளது எனக் கருதுகிறவர்களுங்கூட, இன்று அங்கு சாதிப் பிரச்சினையே இல்லை எனச் சொல்வதில்லை.   ஆனால் விடுதலைச் சிறுத்தைகளோ அங்கே சாதிப் பிரச்சினையே இல்லை என்பது போல பேசுவது மற்றும் இணங்குவதன் மூலமும், முஸ்லிம் மக்களுக்கும், கிழக்கு மாகாணத்தினருக்கும் விடுதலைப் புலிகள் செய்துவிட்ட துரோகத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலமும் தலித் மக்களுக்குத் துரோகமிழைக்கின்றனர். இதுகுறித்து `தேனி’ இணையதளத்தில், கிழக்கு மாகாணத்தினரின் தனித்துவத்தை வற்புறுத்தி இயங்குபவரும் `எக்ஸில்’ இதழாசிரியருமான எம்.ஆர். ஸ்ராலின் திருமாவளவனுக்கு எழுதிய திறந்த மடல் குறிப்பிடத்தக்கது. எனினும் ஒரு முக்கிய தலித் கட்சி என்கிற வகையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புடன் ஒரு உரையாடலுக்கு த.ச.மே. முன்னணித் தோழர்கள் தயாராகவே உள்ளனர்.   இன்று கிழக்கிலுள்ள நிலைமை குறித்து சற்று விரிவாகச் சொல்லுங்கள்.   விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து வந்த இரண்டு நாட்களில், இங்கே ஒரு வானொலி நிலையத்தில் அது குறித்த ஒரு உரையாடல் நடைபெற்றது. கோவை நந்தன், தேவதாஸன் கலந்துகொண்ட அந்த உரையாடலில் நான் தொலைபேசி மூலம் என் கருத்துக்களைச் சொன்னேன்.   “பிரிந்து வந்தவுடன், கிழக்கு மாகாணத்தினர் தொடர்ந்து புறக்கணிப்புச் செய்யப்படுவது, கிழக்கின் சுயாட்சி பற்றியெல்லாம் கருணா பேசியது வரவேற்கத்தக்கதுதான் என்ற போதிலும், இந்தப் பேச்சு ஒரு தவறான மனிதரின் வாயிலிருந்து வருகிறது” என நான் அன்று சொன்னேன். பிரபாகரன் ஒரு ‘ஹிட்லர்’ என்றால் கருணா ஒரு ‘முஸோலினி’ என்றும் சொன்னேன். தொடர்ந்து அவரது செயற்பாடுகளும், பேச்சுக்களும் அதை நிரூபித்தன. கிழக்கின் சுயாட்சி பற்றியவை தவிர அவரது மற்ற பேச்சுக்கள் எல்லாம் கிட்டத்தட்ட புலிகளைப் போலவே இருந்தன. ஆள் கடத்தல், கொலை செய்தல் இவை எல்லாம் தொடர்ந்தன. இராணுவத்துடன் சேர்ந்து செயல்படும் நிலையும் இருந்தது. இந்நிலையில், சர்வதேச அழுத்தத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்றையும் அரசு நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் `தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ தவிர மற்றெல்லா அரசியல் கட்சிகளும் பங்குகொண்டன. தேர்தலும் பெரிய அராஜகங்களின்றி நடைபெற்றது. அரசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முதலமைச்சரானார். தொடர்ந்து இன்று கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. முதலில், பல ஆண்டுகளுக்குப் பின் முதன்முதலாக அங்கே போர் ஒழிந்து மக்கள் அமைதியாக உள்ளனர். கொலைகள், ஆட்கடத்தல்கள் எல்லாம் வெகுவாகக் குறைந்துள்ளன. குறிப்பாக ஏராளமான குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டு, போர்முனையில் நிறுத்திக்கொல்லப்படும் அவலம் நின்றுவிட்டது.   தவிரவும் இன்று கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் பல நல்ல, முக்கியமான ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் ஏற்கெனவே நிறைய இழந்துவிட்டோம். போரில் களைத்துப் போய்விட்டோம். ஏராளமான விலையைக் கொடுத்துவிட்டோம். “பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்” என்றெல்லாம் கோஷம் போட எங்களுக்குச் சக்தியில்லை. ஆயுதக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, அனைவருமே ஜனநாயக அரசியல் நெறிகளுக்குத் திரும்பவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வற்புறுத்துகின்றோம். இலங்கை அரசியலிலே கிட்டிய ஒரு அண்மை உதாரணம் ஜே.வி.பி. கடுமையான ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட ஜே.வி.பி. இன்றுள்ள அரசியல் சூழலில் அதைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியுள்ளது. ஆயுதப் போராட்டத்தை நடத்தும்போது மக்களிடம் எந்த அளவு ஆதரவு பெற்றிருந்ததோ, அதைக் காட்டிலும் பலமடங்கு ஆதரவைப் பெற்றதோடு, இலங்கை அரசாங்கத்திலும் பங்கெடுத்துள்ளனர்.   நாளை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், ஆயுதக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி, தேர்தலில் நின்றாரானால் அதைவிட மகிழ்ச்சிகரமான செய்தி தமிழ் மக்களுக்கு இருக்கமுடியாது. அதை நாங்கள் வரவேற்கிறோம். அந்த அடிப்படையிலேயே இன்று `தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்’ (TMVP) தேர்தல் அரசியலுக்குத் திரும்பியதை நாங்கள் வரவேற்கிறோம். இதனுடைய அர்த்தம் சிவனேசதுரை சந்திகாந்தன் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாளர் இல்லை என்பதோ, அவர் ஒரு நீதிதேவன் என்பதோ அல்ல. அவரது அரசியல் நெறிகள் மீது நமக்குக் கடும் விமர்சனம் எப்போதும் உண்டு.   கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் முதலீடுகளை வரவேற்போம் எனக் கருணா இரண்டு நாட்களுக்கு முன் சொல்லியிருப்பது ரொம்பவும் ஆபத்தானது, கண்டிக்கத்தக்கது. இந்த விமர்சனங்களுக்கப்பால் அவர்கள் ஒரு ஜனநாயக எல்லைக்குள் நின்று தம் அரசியலைச் செய்வது வரவேற்கத்தக்கதுதான்.   துக்ககரமான வேடிக்கை என்னவென்றால் ஈ.பி.ஆர்.எல்.எப், பிளாட், ஈ.பி.டி.பி., டெலோ முதலிய அமைப்புகளெல்லாம் தேர்தல் பாதைக்குத் திரும்பியபோது மகிழ்ந்து வரவேற்ற யாழ் அறிவுஜீவிகளும், ஜனநாயகத்தைப் பேசுபவர்களும் இன்று சந்திரகாந்தன் தேர்தல் பாதைக்குத் திரும்பியதை அங்கீகரிக்க மறுப்பதுதான். தமிழ் மக்களின் முக்கிய அறிவுஜீவிகளாகவும், சிந்தனைப் பிரதிகளாகவும் உள்ள இவர்களே இதை மறுப்பது ஒன்றே கிழக்கு மாகாணத்தின் சுயாட்சி உரிமைக்கு நிரூபணமாகிறது.     6. யுத்தம்: தலித் கேள்வி யாழ்-மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களின் அரசியற் படுகொலையில் ஆரம்பித்த தமிழ்த் தேசிய அரசியல் எவருடைய கடைசிக் கொலையில் முடிவுறும் என்று இன்னுங்கூட நிச்சயிக்கமுடியாத நிலையிலும் முடிவுறும் என்பதுமட்டும் முடிவாகத் தெரிகிறது.    சமகால இலங்கை அரசியலில் சாட்சிகளாக இருப்பதைக்காட்டிலும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது பாதுகாப்பானது என்கிற நிலைமையும் தர்க்கமும் இருந்தபோதிலும் இந்த யுத்தத்தில் சாட்சிகள், பாதிக்கப்பட்டோர், கைதிகள், காரணவர் என யாவருமே ஒன்றில் மற்றொன்றாய் மாறிமாறி வினைபுரிந்தும் தேசத்தின் முதல் மகனிலிருந்து கடைசி மனிதர்வரை பங்காளிகளாக இருக்கிறார்கள்,இருக்கக்கூடும்,இருக்கமுடியும்.எல்லோருமே ஒருவகையில் நிரபராதிகள் எனவும்கூடும்.   யாரைத்தான் விட்டுவைத்தது இந்த யுத்தம்?   கொலையாளிகள் இருவர் தாம் செய்யப்போகும் கொலையை கடும்பிரயத்தனத்திலும் நிறுத்தமுடியாமல் போகும் நிலையைச் சொல்லும் லத்தீன் அமெரிக்க நாவல் கூறும் சூழ்நிலையை இலங்கைக்குப் பொருத்தமுடியாவிடினும் மூன்று பத்தாண்டுகளாக கொலைகளை நிறுத்தவும முடியவில்லை.   கொலைகளுக்கெதிரான மறுப்பறிக்கைகளினதும் கண்டன அறிக்கைகளினதும் தேவையும் இப்போது இல்லை. சமுகத்தின் பொது அறம், தர்மநியாயங்கள்பற்றிய கதை கூறுதலும் இப்போது இல்லை. அளவுகளும் இல்லை.   யுத்த தர்மம்! ஆம் யுத்த தர்மம் மட்டுமே நியாயமென்றாகி நீண்ட காலமாகிவிட்டது. சர்வதேசிய மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்புகள்கூட நவீன யுத்த தர்மத்தின் விழுமிய நியாயத்திலேயே கருத்துக்களையும் கண்டனங்களையும் ஆணித்தரமாகவும் பவ்வியமாகவும் வைக்கின்றன. ஆதிகால யுத்த தர்மங்களைத் தற்போது நோக்குமிடத்து ஆச்சரியமளிக்கின்ற அதேவேளை ஆராதிக்கத் தகுந்ததாகவும் போற்றுதலுக்குரியதாகவும் ஆகிவிட்டது.   1) நேரடியாக தம் எதிரிக்குத் தூதரை அனுப்பி நிலைமையை தெரிந்துகொள்ளல். 2) புலவோரை எதிரியிடம் அனுப்பி ஏற்படப்போகும் விபரீதங்களை அளவளாவுதல், உசாவுதல் 3) மீண்டும் மேலுமொரு விசேட தூதரை அனுப்பி நிலைமையை நிச்சயித்துக்கொள்ளல் 4) தன்படை, நேச படை, ஆதரவளிக்கும் அண்டைநாட்டு மன்னர் நிலை, இவற்றின் பலங்களையும் எதிரியின் பலம் பலவீனங்களையும் படைப்பலத்தையும் கணக்கிடுதல். 5) வெற்றியை உறுதிப்படுத்தல் 6) தோல்வி நிச்சயம் எனில் சரண் அடைதல்,சமாதானமாகப்போதல். 7) களபூமி என்றழைக்கப்படும் இருபடையினருக்கும் பொருத்தமான யுத்தப்பிரதேசத்தைத் தேர்ந்துகொள்ளல். 8, குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், முதியோர், துறவிகள், அறவோர், ‘அந்தணர்’, மாடுகள், வளங்கள், இவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் 9) போருக்கான நாள் நேரம் இவற்றை பரஸ்பரம் அறிவித்து (றாந்தே- வூ கொடுத்து) ஏற்றுக்கொள்ளச் செய்தல் 10) எதிரியைக்கொண்டே போருக்கான நாள் குறித்தல் 11) அன்றைய நாளிற்கான யுத்தத் தொடக்கத்தையும் முடிவையும் பரஸ்பரம் அவற்றிற்கான சங்கை ஊதி பின் தம் முகாங்களுக்குத் திரும்புதல்.   இவற்றைப்பார்க்கும்போது போரிற்கென ஒரு தர்மம் இருந்தது தெரிகிறது. ஊதுவதற்குச் சங்கு இல்லையே தவிர தற்போதைய போரிலும் தர்மம் இருக்கத்தான் செய்கிறது. மக்களைப் பாதுகாப்பான இடங்களிற்கு அப்புறப்படுத்திவிட்டு போரில் ஈடுபடும் இருதரப்பினரினதும் இழப்புகளை நிகழ்வுகளைக் கலிங்கத்துப் பரணியையும் விஞ்சும்வண்ணம் முழு ஈடுபாட்டோடு பார்த்து கேட்டு அபிநயித்து ஆதாரமாகக் கொண்டு உலகு தழுவி இந்த யுத்தத்தின் முடிவை எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள்.   உற்பத்தி-பரிவர்த்தனை பொருளாதாரத்தை விஞ்சி யுத்தப் பொருளாதாரமும் யுத்தத்தோடு இணைந்த வாழ்க்கைமுறைமை, அதுசார்ந்த கலை, அழகியல், பண்பாடு, யுத்தம் தந்த புதிய மனிதர்கள், யுத்தமேற்படுத்திய நேச உறவுகள், எதிரிகள், புதிய வாழ் நிலங்கள் என இந்த யுத்தம் விட்டுச்செல்லும் விழுமியங்கள் மிகவும் காத்திரமானவை.   மிகப்பெரும் ஆளுமைகளை இந்த யுத்தம் தந்திருக்கிறதா இல்லையா?   ‘நம்மிற் சிலர் இது வேண்டாம் நாம் பழைய நிலைக்கே போய்விடலாம்’ என்று இரண்டு பத்தாண்டுகளிற்குமேலாகவே கூறிவருகிறார்கள்.குறிப்பாக கவிஞர் அருந்ததி 1986 இல் தனது முதலாவது கவிதைத் தொகுப்பிற்கு “சமாதானத்தின் பகைவர்கள்” என்றே பேரிட்டார்.“துப்பாக்கிக் கலாசாரத்திலிருந்து மீள்வது எப்போது” என்று ஆதிகால ‘தூண்டில்’ சஞ்சிகையில் தயபால திரணகம கட்டுரை எழுதியிருந்தார். போர் எதிர்ப்பு, சமாதானத்தைக் கோருதல் என்பது துரோகச் செயலாக நிறுவப்பட்டபோதிலும் அதைப் பெருமையாகவே ஏற்றுக்கொண்டு போர்நிறுத்தத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி நாம் பழைய நிலைக்கே போய்விடலாம் என்று எப்போதும் போலவே சிலர் இப்போதும் சொல்லிவருகிறார்கள். தமிழ்த்தேசியவாதம் நம்மைக் கொண்டுவந்துவிட்டிருக்கும் நிலையைப்பார்த்தீர்களா? என்று சிவசேகரம் இப்போதும் கேட்கவே செய்கிறார்.    இந்த அழகிய நாட்டை ரயில் பாதைகளால் எப்படி அழகாக இணைக்கலாம் என அவரொத்தவர்கள் கனவுகாணுகிறார்கள். தோழர். டக்ளஸ் தேவானந்தா எல்லோரும் இணைந்தால் இன்னும் இரண்டு வருடத்திலேயே மீண்டும் சீரழிந்தவற்றைச் சீர்செய்துவிடலாம் என்கிறார்.   யுத்தம் முடிந்து புதிய இலங்கை பழைய இலங்கையின் நிலையை அடைய எடுக்கும் காலத்தில் உலகம் எப்படி மாறியிருக்கும் என்பதை 2025 ஆம் ஆண்டிற்கான மேற்குலகின் திட்டமிடல்கள் ஓரளவு காட்சிப்படுத்துகின்றன.   தலித்துகளாகிய நாம் யுத்தமுடிவின்பின் எவ்வாறு எதிர்கொள்ளப்படுவோம்?அதற்கான சிறந்த உதாரணத்தையும் எச்சரிக்கையையும் இறந்தகாலமும் நிகழ்காலமும் நமக்குச் சொல்கின்றன. 1986 இல் நடந்தது இது: தலித் சமூகத்தைச்சேர்ந்த இரு அரசாங்க நிருவாக உயர் அதிகாரிகள் அரசாங்க அதிபர்களாகிக்கொள்வதற்கு சேவை, திறமை, அனுபவம், நேர்மை போன்ற தகுதிகள் இருந்தும் அவர்களது சாதிகாரணமாக ஒருபோதுமே அப்பதவிக்கு அவர்கள் நியமிக்கப்படவில்லை. யாழ்.உதவித்தேர்தல் ஆணையாளராகப் பதவி வகித்தவரை 1986 இல் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பதவிக்கு கொழும்பில் இருந்த சில சிங்கள உயர் அதிகாரிகள் சிபாரிசு செய்தனர். அன்றைய ஐ.தே.க. அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த அத்துலத்முதலி ‘அவ்வாறான அரசாங்க அதிபர் நியமனத்தை ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு வழங்குவதை யாழ்ப்பாண சமூகம் ஏற்றுக்கொள்ளாது’ எனக்கூறி அச்சிபாரிசினை மறுத்துவிட்டார். அவ்வாறே யாழ். உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரியான தாழ்த்தப்பட்டவர் மன்னார் அரசாங்க அதிபர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டபோதும் அவரது சாதி காரணமாக அந்நியமனம் கிடைக்கவில்லை. இதேபோன்று கல்வித்துறையின் உயர் நிர்வாகப் பதவிகளிலும் சாதியம் மிக நுணுக்கமாகப் பார்க்கப்பட்டது.   யுத்தமுடிவின் பின்னான மீள் நிர்மாணங்கள் சிவில் சமூக நிலைகள் எல்லாம் சீர்செய்யப்படும்போது சாதியம் எப்படிப் பரிமாணம் எடுக்குமென 2002 இன் சமாதான காலத்தில் நாம் அனுபவித்தோம். இந்த முப்பது வருட யுத்தச் சூழலிலும் தமிழீழ விடுதலை இயக்கங்கள், இலங்கை அரசு, இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், சர்வதேச சமாதான இயக்கங்கள், கண்காணிப்புக் குழுக்கள், தன்னார்வக் குழுக்கள், இடதுசாரிகள் என எல்லாவற்றிற்கும் யாழ் வெள்ளாள சமுகம் தண்ணிகாட்டிவிட்டு இன்னும் அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கும் நிலையில் நமக்குத் தேவை அதிகார சக்திகளுடன் பேரம் பேசும் பிரக்ஞை.     -சுகன்    7. போர் இன்னமும் ஓயவில்லை     ‘நான் ஒரு தேச மறுப்பாளன்’ எனப் பிரகடனப்படுத்திக்கொள்கிற ஷோபாசக்தி ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். கொரில்லா,தேசத் துரோகி, ம், எம்.ஜி.ஆர் கொலை வழக்கு என்று பல படைப்புகளை எழுதியுள்ள ஷோபாசக்தியின் எழுத்துகள் எப்போதும் அதிகாரத்தை கிண்டல் செய்து கேள்வி கேட்பவை.    1983 முதல் 1986 வரை விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் போராளியாக இருந்து பின் இயக்கத்தில் முரண்பட்டு வெளியேறி, இப்போது பிரான்சில் வசித்துவரும் ஷோபாசக்தி, 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் அங்கு குடியுரிமை வாங்கவில்லை. ஈழத்தில் போர் ஒரு துயரமான முடிவுக்கு வந்த சூழ்நிலையில், தற்போது தமிழகம் வந்திருக்கும் ஷோபாசக்தியைச் சந்தித்தேன்.    இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபோது என்ன கருதினீர்கள்? அந்த அறிவிப்பு அடிப்படையில் பிழையானது. உண்மையில் போர் இன்னமும் முடியவில்லை. வான்வழித் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள் ஆகியவை நின்றிருக்கலாம். ஆனால்,காரணமற்ற கைதுகள், ஆள் கடத்தல்கள் ஆகியவை தொடர்கின்றன. தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகளும் ஜனநாயகமும் வழங்கப்படும் போதும்தான் போர் உண்மையான அர்த்தத்தில் முடிவுக்கு வந்ததாக அர்த்தம்.    பிரபாகரன் மரணமடைந்த செய்திகள் வெளியான போது உங்கள் மனநிலை என்ன? நான் வருத்தப்பட்டேனா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், உண்மையாக மகிழ்ச்சியடையவில்லை. பிரபாகரன் மட்டுமில்லை, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் யுத்ததின் இறுதி நாட்களில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான புலிப் போராளிகளும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 7,000 சிங்கள ராணுவ வீரர்களும் போரினால் மரணமடைந்துள்ளனர் .இந்த சிங்கள ராணுவ வீரர்கள் யார்? ராணுவ உடை போர்த்தப்பட்ட ஏழை விவசாயிகள். இப்படியாகப் பலரையும் கொன்று போட்டுத்தான் சாவை விழுங்கி யுத்தம் தன் ஆவேசத்தை முடித்திருக்கிறது. எந்தச் சாவுமே எனக்குத் துக்கமானதுதான்.    1983ல் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற தமிழர்களின் போராட்டங்களும், தற்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெறும் தமிழர்கள் போராட்டங்களுக்கும் என்ன வித்தியாசங்கள் இருப்பதாகக் கருதுகிறார்கள்? அப்போதும் இப்போதும் எப்போதும் தமிழகத்து மக்கள் ஈழத் தமிழர்கள் துயர்மீது கொண்ட அக்கறை நெகிழ வைப்பவை. ஈழத் தமிழர்களின் ஆதரவு என்பது புலிகள் ஆதரவாகத்தான் இருந்தது என்று எனக்கு விமர்சனங்கள் இருந்தது உண்டு. என்றாலும், அதற்காக அரசின் கடுமையான ஒடுக்குமுறைகளைச் சந்தித்த கொளத்துர் மணி மாதிரியான தோழர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு .  ஆனால் தமிழகத்தில் அதை ஒரு அரசியல் இயக்கமாக, மக்கள் இயக்கமாக மாற்றத் தவறி விட்டார்கள். புலிகளை ஆதரித்த பலருக்கு உறுதியான அரசியல் பார்வைகள் இல்லை. ஒரு மையமான மனிதாபிமான அடிப்படையில் தான் இன்றைக்கும் பலர் ஈழ ஆதரவு பேசுகிறார்களே தவிர சித்தாந்தரீதியான நிலைப்பாடுகள் பலரிடத்தில் இல்லை. இந்தியா, இலங்கை உள்பட தன்னைச் சுற்றியுள்ள சின்ன நாடுகளின் மீதும் மேலாதிக்கத்தை விரித்துவருகிறது. இருந்தும், உருத்திர குமாரன் போன்றவர்கள் இந்தியா எங்களுக்கு நண்பன் என்றுதான் பேசுகிறார்கள்.இந்தியாவின் மேலாதிக்கத்தை எதிர்க்காமல் ஈழத்தமிழர்களின் உரிமை பற்றி பேச முடியாது    ஈழப் போராட்டத்தின் பின்னடைவுகளுக்கு எவையெல்லாம் காரணங்கள் என்று கருதுகிறீர்கள்?    ராணுவ ரீதியாக யாராலும் வெல்ல என்று கருதப்பட்ட புலிகள் இயக்கத்தின் ராணுவரீதியான படுதோல்வி யாரும் எதிர்பாராதது. கடந்த ஆண்டுகளில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இன்றுவரையிலும் புலிகளும், தமிழ்த் தேசியவாதிகளும் கணக்கில் எடுத்ததாகத் தெரியவில்லை . இவைதான் மாபெரும் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். 90 களுக்குப் பிறகு உருவான உலகமயக்கொள்கை, ஆயுதப் போராட்டங்களை விரும்பவில்லை. எந்தப் போராட்டமும் எதிர்ப்பும் அற்ற சந்தையைத்தான் மேலை நாடுகள் விரும்புகின்றன. எனவே, மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு இந்த நாடுகள் மற்ற நாடுகளின் அரசுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்கின்றன. இதில் சர்வதேச சமூகம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை.  இரண்டாவதாக, 2001 செப்டம்பர் 11க்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் எந்த அரசாங்கமும் எத்தகையக் கொலைகளையும் செய்யலாம் என்றாகிவிட்டது. இந்தக் கொலைகளில் இப்போது நியாயம் பேசும் அமெரிக்கா உட்பட்ட அனைத்து நாடுகளும் கூட்டு களவாணிகள்தான். மேலும் இப்போது இந்தியா,சீனா, ஜப்பான் நாடுகள் பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகின்றன. மேற்கத்திய நாடுகளுக்கு சவால்விடும் வகையில் ஆசியப் பொருளாதரம் ஒன்று உருவாகி உள்ளது.  லத்தின் அமெரிக்க நாடுகளை சந்தைகளாகப் பயன்படுத்தி வணிகத்தை நடத்தி வருபவையே ஆசிய நாடுகள்தான். எனவே இலங்கையைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றன. போருக்குப் பிறகு இலங்கையில் புனரமைப்புப் பணி என்ற பெயரில் இந்திய முதலாளிகள் பிஸினஸ் செய்யப்போகிறார்கள். ஆனால், ஈழத்தமிழர்கள் மீதான இனப் படுகொலைகளுக்குப் பின்னணியில் இருந்த பொருளாதரப் பின்னணி குறித்து புலிகளும் சரி, புலிகளை ஆதரிப்பவர்களும் சரி கணக்கில் எடுக்கவேயில்லை.    போருக்குப் பிறகு அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?    எல்லா இலங்கை அரசுகளுமே இனவெறி அரசுகள்தான். தமிழர்களுக்காக இலங்கை அரசு அமைத்து இருக்கும் முகாம்களை பார்வையிட்ட சிலர், வசதியான முகாம்கள் என்று பச்சைப் பொய்யை பரப்புகின்றனர். என் அக்கா குழந்தைகள் அங்கு முகாம்களில் தான் இருக்கிறார்கள். மூன்று லட்சம் கொடுத்தால் முகாமைவிட்டு வெளியேற்றுவதாக ராணுவம் சொல்கிறதாம். முதலில் முகாம் என்பதே அயோக்கியத்தனமானது. அகதிகளாக வேறு நாட்டுக்கு வந்தவர்களுக்குத்தானே முகாம்! சொந்த நாட்டு மக்களுக்கு எதற்கு முகாம்? இலங்கை அரசிடம் ஜனநாய சக்திகளும் மனித உரிமையாளர்களும் இரண்டு கோரிக்களை வலியுறுத்த வேண்டும். ஒன்று, உடனடியாக முகாம்கள் கலைக்கப் படவேண்டும். இரண்டாவதாக, ராணுவத்தால் கைது செய்யப்பட்ட போராளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது, உலகளாவிய மனித உரிமைச் சட்டங்களுக்கு உட்பட்டு வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.    இனி, தமிழீழம் அமைவதற்கு சாத்தியங்கள் உள்ளனவா? இல்லை    – ரீ.சிவக்குமார்      ஆனந்த விகடன் 22.7.09                                            8. நான் எப்போது அடிமையாயிருந்தேன்!   நேர்காணல்: புஸ்பராணி    ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழியர் புஸ்பராணி. தலைமறைவுப் போராளிகளிற்குச் சோறிட்டு வீட்டிற்குள் தூங்கவைத்துவிட்டு, பட்டினியுடன் வீட்டு வாசலில் காவலிருந்த ஒரு போராளிக் குடும்பத்தின் மூத்த பெண்பிள்ளை. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” தந்த மறைந்த தோழர் சி.புஸ்பராஜாவின் மூத்த சகோதரி. அறுபது வயதை நெருங்கும் பராயத்திலும் அரசியற் கூட்டங்கள், இலக்கியச் சந்திப்புகள், பெண்கள் சந்திப்புகள், தலித் மாநாடுகள் என உற்சாகமாகத் தனது பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருப்பவர். தனக்குச் சரியெனப்பட்டதை எந்தச் சபையிலும் சந்தர்ப்பத்திலும் எதற்கும் அஞ்சாமல் துணிந்து பேசிக்கொண்டிருக்கும் கலகக்காரி.    தமிழரசுக் கட்சியின் தொண்டராக ஆரம்பிக்கப்பட்ட அவரது அரசியல் வாழ்வு எழுபதுகளின் ஆரம்பத்தில் ஆயுதந் தாங்கிய இளைஞர் போராட்டக் குழுக்களின் பக்கம் அவரைக் கூட்டிவந்தது. சில வருட இயக்க அனுபவங்களிலேயே போராட்ட இயக்கங்களுக்குள் பெரும் கசப்புகளைச் சந்திக்க நேரிட்ட அவர் இயக்க அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டாலும் தொடர்ந்தும் இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிட்டது. புஸ்பராணி 1986ல் ஃபிரான்சுக்குப் புலம் பெயர்ந்தார்.    ஈழப் போராட்டத்தில் தனது அனுபவங்களை நூலாக எழுதி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் புஸ்பராணியைச் சந்தித்து ‘எதுவரை” இதழிற்காகச் செய்யப்பட்ட இந்நேர்காணல் அவரின் புத்தகத்திற்கான ஒரு முன்னுரைபோல அமைந்துவிட்டதில் மகிழ்ச்சியே. ஒன்றரைமணி நேரங்கள் நீடித்த இந்த நேர்காணல் பாரிஸில் 20.06.2009ல் பதிவு செய்யப்பட்டது.    சந்திப்பு: ஷோபாசக்தி     நான் யாழ்ப்பாணத்தின் கடற்கரைக் கிராமமான மயிலிட்டியில் 1950ல் பிறத்தேன். எனக்கு ஆறு சகோதரர்கள், ஆறு சகோதரிகள். குடும்பத்தில் நான் நான்காவது. மறைந்த புஸ்பராஜா எனக்கு அடுத்ததாகப் பிறந்தவர். எனக்கும் தம்பி புஸ்பராஜாவுக்கும் ஒருவயதுதான் இடைவெளி. வசதியான குடும்பம் இல்லையென்றாலும் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த குடும்பம் எங்களது.    எங்களது கிராமத்தில் கரையார்களே ஆதிக்கசாதியினர். அவர்கள் மத்தியில் நாங்கள் ஒரேயொரு தலித் குடும்பம். என் இளமைப் பருவத்தில் எல்லாவிதமான தீண்டாமைகளும் எங்கள் கிராமத்தில் நிலவின. தேநீர்க் கடைகள், ஆலயங்கள் போன்றவற்றுக்குள் எங்களை அனுமதிப்பதில்லை. சமூகத்திலிருந்து நாங்கள் புறமாக வைக்கப்பட்டிருந்ததால் எங்களுக்கு நாங்களே துணைவர்கள், தோழர்கள். குடும்பத்தில் எல்லாப் பிள்ளைகளும் மிகுந்த ஒற்றுமையாக இருப்போம். அரசியல் குறித்தோ புத்தகங்கள் குறித்தோ உரையாட வேண்டியிருந்தாலும் எங்களுக்குள்ளேயே உரையாடுவோம். ஆதிக்க சாதியினரின் தேநீர்க் கடைகளுக்குப் போய் போத்தலில் தேநீர் குடிக்கவோ, கோயிலுக்கு வெளியில் நின்று சாமி கும்பிடவோ நாங்கள் தயாரில்லை. புறக்கணிப்புக்கு புறக்கணிப்பையே நாங்கள் பதிலாகக் கொடுத்தோம். எங்கள் காலத்தில் எங்கள் குடும்பம் சாதித் தொழிலிலிருந்து வெளியே வந்துவிட்டது. எனது தந்தையாரும் மூத்த சகோதரர்கள் இருவரும் புகையிரதத் திணைக்களத்தில் வேலை பார்த்தார்கள். வழி தெருவில், பாடசாலையில் ஆதிக்க சாதியினரின் கிண்டல்களுக்கோ பழிப்புகளுக்கோ நாங்கள் ஆளாகும்போது வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்.   ஒரு ஆடு போய் அடுத்த வீட்டு இலையைக் கடித்தால் போதும் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்து விடுவார்கள். சண்டையின் முதலாவது கேள்வியே ‘எடியே உங்களுக்கு கரையார மாப்பிள்ளை கேக்குதோ” என்பதாகத்தானிருக்கும். ஆட்டுக்கும் கரையார மாப்பிள்ளைக்கும் என்ன சம்மந்தம்? நாங்கள் பதிலுக்கு எங்களைக் கலியாணம் கட்டத் தகுதியுள்ள கரையான் இங்கே இருக்கிறானா? எனத் திருப்பிக் கேட்போம்.   எங்கள் கிராமத்தில் நான் அறியாத காலத்தில் எங்களைத் தவிர வேறு சில தலித் குடும்பங்கள் இருந்தனவாம். அவர்கள் எல்லோரும் பிழைப்புக்காகவும் வேறுகாரணங்களிற்காவும் அங்கிருந்து இடம்பெயர்ந்த பின்பும் கூட எனது தந்தையார் அங்கிருந்து போக விரும்பவில்லை. எங்கள் அய்யா எங்களை ராங்கியாகத்தான் வளர்த்தார். சாவது ஒருமுறைதான் எதுவந்தாலும் எதிர்ந்து நில்லுங்கள் என்று சொல்லிச் சொல்லித்தான் எங்களை வளர்த்தார். நாங்களும் அப்படித்தான் வளர்ந்தோம். வாயால் பேச வேண்டிய இடங்களில் வாயாலும் கையால் பேச வேண்டிய இடங்களில் கைகளாலும் பேசினோம். எங்கள் குடும்பமே ஒரு தீண்டாமை ஒழிப்பு இயக்கம் போலத்தான் இயங்கி வந்தது. நான் பத்தாவது வரைக்கும் மயிலிட்டி கன்னியர் மடத்தில் படித்தேன். பொதுவாக இந்துக்கள் கன்னியர் மடங்களில் படிப்பதற்கு வருவதில்லை. இந்துப் பாடசாலைகளிலோ அப்போது தலித்துகள் வேண்டாப் பிள்ளைகளாக நடத்தப்பட்டார்கள். கன்னியர் மடத்திலும் நான் சாதிக் கொடுமைகளை அனுபவித்தேன். அங்கிருந்த ஓரிரு கன்னியாஸ்திரிகளைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே சாதிய உணர்வுடனேயே நடந்துகொண்டார்கள். அந்தக் கன்னியாஸ்திரிகள் பணக்காரர்களுக்குப் பல்லிளித்து ஏழை மாணவிகளைத் துரும்பாக மதித்தார்கள். நான் படிப்பில் கெட்டிக்காரியாயிருந்த போதும், உயர்கல்வியைத் தொடர இளவாலை கன்னியர் மடத்தில் எனக்கு இடம் கிடைத்தபோதிலும் குடும்பச் சூழ்நிலையால் என்னால் பத்தாவதுக்கு மேல் படிக்க முடியவில்லை.   அப்போது கிராமங்கள் தோறும் பெண்களிற்கு விழிப்புணர்வைத் தூண்டும் வண்ணம் மாதர் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. எங்கள் கிராமத்திலும் அவ்வாறான ஒரு மாதர் சங்கத்தை ஆரம்பிக்க வேண்டுமென எனக்கு ஆர்வமிருந்தபோதிலும் ஆதிக்க சாதிப் பெண்கள் என்னுடன் இணைந்து பணியாற்ற மறுத்ததால் அந்த எண்ணம் நிறைவேறவேயில்லை. நான் ‘தமிழரசுக் கட்சி’யில் ஈடுபாடு காட்டத் தொடங்கினேன்.   அறுபதுகளில் தலித் மக்கள் மத்தியில் கொம்யூனிஸ்ட் கட்சிகள்தான் செல்வாக்கோடு திகழ்ந்தன. நீங்கள் எப்படித் ‘தமிழரசுக் கட்சி’யிடம் ஈர்க்கப்பட்டீர்கள்?    எங்களது தந்தையார் நீண்டகாலமாகவே தமிழரசுக் கட்சியின் ஆதராவாளராயிருந்தார் என்பது ஒரு காரணமாயிருந்தாலும் அன்றைய காலத்தில் கொம்யூனிஸ்ட் கட்சிகள் சிறிமாவின் கூட்டரசாங்கத்தில் சேர்ந்திருந்ததாலும் அந்தக் கட்சிகளின் தலைமையில் சிங்களவர்களே இருந்ததாலும் எனக்குக் கொம்யூனிஸ்ட் கட்சிகளிடம் எதுவித ஈர்ப்புமிருக்கவில்லை. தமிழரசுக் கட்சியின் கூட்டங்களைப் பார்க்கப் போவது என்றளவில்தான் முதலில் என்னுடைய அரசியல் ஈடுபாடு இருந்தது. எழுபதுகளின் தொடக்கத்தில் புஸ்பராஜா யாழ்ப்பாணத்திற்குப் படிக்கச் சென்றபோது அவருக்கு பத்மநாபா, வரதராஜப் பெருமாள், பிரான்ஸிஸ் (கி.பி.அரவிந்தன்) போன்றவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. இந்த இளைஞர்கள் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார்கள். தனிநாடு குறித்து இவர்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டும் விவாதித்துக்கொண்டுமிருப்பார்கள். ‘தமிழர் கூட்டணி’யினரின் செயலற்ற தன்மையில் அதிருப்தியடைந்த இவர்களைப் போன்ற இளைஞர்கள் இணைந்து 1973ல் புஸ்பராஜாவின் தலைமையில் ‘தமிழ் இளைஞர் பேரவை’யை உருவாக்கினார்கள். தவராஜா, சரவணபவன், வரதராஜப்பெருமாள், பத்மநாபா, பிரான்ஸிஸ் (கி.பி. அரவிந்தன்) போன்றவர்கள் இளைஞர் பேரவையைத் தொடக்கியதில் முக்கியமானவர்கள்.   புஸ்பராஜாவை என்னுடைய தம்பி என்பதை விட என்னுடைய அரசியல் தோழர் என்று சொல்வதே பொருந்தும். ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்தாலோ ஒரு நாவலை வாசித்தாலோ அவர் என்னோடு அதுகுறித்துத் தீவிரமாக உரையாடுவார். அதுபோலவே அரசியல் குறித்தும் என்னோடு ஆழமாக விவாதிப்பார். புஸ்பராஜாவின் வழியாகத் தமிழ் இளைஞர் பேரவையில் நானும் இயங்கத் தொடங்கினேன்.   தமிழர் கூட்டணியின் பாராளுமன்ற நாற்காலி அரசியலுக்கு மாற்றாக தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் பேரவையின் அரசியல் திட்டங்களும்கூட கூட்டணியை அடியொற்றிய வெறும் தேசியவாதமாகத்தானேயிருந்தது. சாதியம், யாழ்மையவாதம் போன்ற உள்முரண்களை அவர்களும் கண்டுகொள்ளவில்லையே?    இப்போது அந்தத் தவறை நான் உணர்கிறேன. ஆனால் அப்போது எங்களுக்குத் தமிழர்கள் என்ற ஒற்றையடையாளமும் தனிநாடு என்ற இலட்சியமுமே முக்கியமானதாகப்பட்டது. அந்த இலட்சியத்தை அடைந்துவிட்டால் மற்றைய முரண்களைத் தீர்த்துவிடலாம் என்றே கருதினோம். நாங்கள் அமைக்கப்போகும் தமிழீழம் சாதிமத பேதமற்ற நாடாகவிருக்கும் என நம்பினோம். இன முரண்பாடுக்கே நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம்.   அப்போது நீங்கள் தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து ஒருபோதும் இந்த நாட்டில் வாழ முடியாது என்பதில் உறுதியாயிருந்தீர்களா?  ஆம் மிகவும் உறுதியாயிருந்தேன். யாழ்ப்பாணத்துத் தமிழர்கள்தான் அரசின் சேவைத்துறைகளில் நிறைந்திருந்தார்கள் என்றொரு பேச்சு உண்டு. உண்மையில் காலனிய காலத்தில்தான் அரச சேவைத் துறைகளுக்குள் தமிழர்கள் நிறைந்திருந்தார்கள். நாடு சுதந்திரம் பெற்ற பின்பு சிங்களத் தேசியவாதம் வீரியத்துடன் உருவாகி வந்தபோது தமிழர்கள் வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டார்கள். இராணுவத்திலும் பொலிஸ்துறையிலும் தமிழர்கள் அரிதாகவே சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். நடந்த இனக் கலவரங்களும் இத்தகைய புறக்கணிப்புகளும் முக்கியமாகத் தரப்படுத்தல் முறையும் எங்களை அந்த முடிவை நோக்கித் தள்ளின. தரப்படுத்தல் திட்டம் ஒரு இனவாதத் திட்டம் என இப்போதும் கருதுகிறீர்களா?    இல்லை. பின்தங்கிய பகுதிகளுக்கு முன்னுரிமை என்றவாறு தரப்படுத்தல் திட்டம் சீரமைக்கப்பட்டபோது இலங்கையின் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு முன்னுரிமைகள் கிடைத்திருக்கின்றன. யாழ்ப்பாணம் தவிர்ந்த பிற தமிழ் மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் முன்னுரிமையும் நன்மையும் பெற்றிருக்கின்றன. ஆனால் அதையும் யாழ்ப்பாணத்தான் இயன்றளவு தட்டிப்பறிக்க முயன்றதுதான் சோகம். யாழ்ப்பாணத்து மாணவர்கள் பின்தங்கிய பிரதேசங்களில் பதிவுசெய்து அங்கிருந்து பல்கலைக் கழக அனுமதியைக் குறுக்கு வழியில் பெற்றுக்கொண்டதும் நடந்தது. ஆனால் கடந்த இருபத்தைந்து வருடங்களாக நடந்த போரால் யாழ் மாவட்டம் வெகுவாகப் பாதிப்புற்றிருக்கிறது. சகல உள்கட்டுமானங்களும் நொறுங்கியுள்ளன. எனவே இப்போது யாழ் மாவட்டத்தையும் பின்தங்கிய பகுதியாக அறிவித்துக் கல்வியில் முன்னுரிமை வழங்குவது அவசியமானது. வெறுமனே கல்வியில் மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகள், நாடாளுமன்ற உறுப்புரிமை போன்ற சகல துறைகளிலும் ஒடுக்கப்பட்டவர்களிற்கும் பின்தங்கியவர்களிற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.   தமிழ் இளைஞர் பேரவை ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் என்பதில் உறுதியாயிருந்தா?    ஆம். அது மேலுக்கு உண்ணாவிரதம், பேரணிகள் என்று அறப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தாலும் ஆயுதப் போராட்டம் ஒன்றைத் தொடக்குவதற்கான முயற்சியில் அது ஈடுபட்டிருந்தது. ஆனால் அதற்கான நிதிவசதி அதனிடமில்லை. யாழ்ப்பாணத்தில் தங்குவதற்கு இடம் பெறுவதிலிருந்து தபாற் செலவுகள், பயணச் செலவுகள் போன்றவற்றிற்கும் அது தமிழர் கூட்டணியையே நம்பியிருந்தது. தமிழர் கூட்டணியோ இந்தத் துடிப்பான இளைஞர்களை தங்களது பாராளுமன்ற அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்த முயன்றுகொண்டிருந்தது. புஸ்பராஜா, பத்மநாபா, தங்கமகேந்திரன் போன்ற இளைஞர்கள் கைகளில் துருப் பிடித்த துப்பாக்கியும் ஈழக் கனவுமாகத் திரிந்துகொண்டிருந்தார்கள்.   ஒருசில இளைஞர்களையும் துருப்பிடித்த துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு ஆயுதப்போராட்டத்தின் மூலம் இலங்கை அரசை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை உங்களுக்கு எது கொடுத்தது?    அது அரசியல் சித்தந்தப் பலமற்ற ஒரு வீரதீர மனநிலையும் பொறுப்பற்ற முட்டாள்தனமும் என்பதை நான் இப்போது ஒப்புக்கொள்வேன். ஆனால் அன்றைய நிலையில் வெகு சுலபமாகத் தனிநாட்டுக் கோரிக்கையின் பின்னால் தமிழர்களை அணிதிரட்டி ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஈழத்தை வென்றெடுக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். 1975ல் நான் ஹட்டன் நகரில் ஒரு கூட்டத்தில் பேசியபோது எப்போது தமிழீழத்தை அடைவீர்கள் என்று என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நான் ‘இன்னும் அய்ந்து வருடங்களில் நாங்கள் ஈழத்தை வென்று விடுவோம்’ எனப் பதில் கூறினேன். அது உண்மையென்றும் நினைத்தேன். அந்தக் கூட்டத்தில் என்னிடம் இன்னொரு கேள்வியும் கூட்டணியின் ஆதரவாளர்களால் கேட்கப்பட்டது. தமிழரசுக் கட்சியாலும் பின்பு தமிழர் கூட்டணியாலும் வளர்க்கப்பட்ட, ஆதரிக்கப்பட்ட இளைஞர்கள் கூட்டணியினருக்கு எதிராகவே திரும்புவது என்ன நியாயம் எனக் கேட்டார்கள். ‘நல்லாசிரியன் எல்லாக்காலமும் தவறிழையான் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை, இப்போது கூட்டணியினர் பாராளுமன்றப் பதவிகளிற்காகத் தமிழர்களின் உரிமைகளை அடகு வைக்கத் தயாராகிவிட்டார்கள்” என்றேன் நான். இந்த இடத்தில் நான் இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன். கூட்டணியினர் தமது அப்புக்காத்து மேட்டுக்குடிக் குணங்களை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்தார்களில்லை. கூட்டணித் தலைவர்களில் பலர் மேட்டுக்குடிச் செருக்கும் திமிரும் கொண்டவர்கள் என்பதே எனது அனுபவம்.   ஆனால் தமிழ் இளைஞர் பேரவை கூட்டணியின் ஒரு பிரிவுபோல, அடியாட்கள் போல செயற்பட்டதாக ஒரு கருத்துள்ளதே?    இல்லை. அது தவறான கருத்து. தமிழ் இளைஞர் பேரவை எக்காலத்திலும் கூட்டணிக்குக் கட்டுப்பட்டதாக இருக்கவில்லை. இந்த உண்மையை புஸ்பராஜா தனது நூலிலும் பதிவு செய்துள்ளார். சொல்லப்போனால் மாணவர்களினதும் இளைஞர்களினதும் தன்னெழுச்சியானதும் அமைப்புரீதியானதுமான போராட்டங்களின் முன்பு கூட்டணிதான் தனது செல்வாக்கை மக்களிடம் மெதுமெதுவாக இழந்துகொண்டிருந்தது. இளைஞர்களின் நிழல்களில் நின்றுதான் கூட்டணி அதற்குப் பின்பு தனது அரசியலைத் தொடர வேண்டியிருந்தது. நாங்கள் அய்ம்பது இடங்களில் நடத்திய தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களில் கூட்டணியினர் தங்களை வலியப் புகுத்த வேண்டியிருந்தது.   நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு அனர்த்தங்களின்போது நீங்கள் அங்கிருந்தீர்களா?  ஆம். நான் அங்குதானிருந்தேன். மேடையில் நயினார் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, தமிழகத்திலிருந்து மாநாட்டுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த ‘உலகத் தமிழர் இளைஞர் பேரவை’த் தலைவர் இரா. ஜனார்த்தனன் மேடையில் தோன்றி மக்களைப் பார்த்துக் கையசைத்தார். அப்போது, பொலிசார் மாநாட்டைக் குழப்பினார்கள். துப்பாக்கிச் சூடுகளும் கண்ணீர்புகை வீச்சுகளும் நடந்தன. மக்கள் கலைந்து ஓடத்தொடங்கினார்கள். துப்பாக்கிச் சூட்டால் மின்சாரக் கம்பிகள் அறுந்து சனங்கள்மீது விழுந்தன. அன்று ஒன்பதுபேர்கள் கொல்லப்பட்டார்கள். ஒரே துப்பாக்கி வெடிச்சத்தமும் ஓலக்குரல்களுமாய் தமிழராய்ச்சி மாநாடு சீர்குலைந்தது. அப்போது பொன். சிவக்குமாரன் தமிழாராய்ச்சி மாநாட்டுத் தொண்டர்படையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்த அனர்த்தம் எங்கள் எல்லோரையும் விட சிவக்குமாரனைத்தான் அதிகம் பாதித்திருந்தது. அவருடைய போராட்ட முனைப்புகள் அதிதீவிரம் பெற்றன. ஆறு மாதங்களிற்குள்ளாகவே, தோல்வியில் முடிந்த கோப்பாய் வங்கிக் கொள்ளையின்போது தப்பிக்க முடியாமல் எப்போதும் சிரித்த முகத்தோடும் எள்ளளவும் சுயநலமுமில்லாத உள்ளத்தோடும் இயங்கிய சிவக்குமாரன் சயனைட் அருந்தி இறந்துபோனார்.   அரசியற் பிரச்சினைகளைத் தனிநபர்களை அழித்தொழிப்பு செய்வதன் மூலம் அணுகும் கொலைக் கலாச்சாரத்தை சிவக்குமாரன் தொடக்க முயன்றாலும் அல்பிரட் துரையப்பாவைக் கொலை செய்ததன் மூலம் பிரபாகரன் தொடக்கி வைத்தார். துரையப்பாவின் கொலையை நீங்கள் எவ்விதமாகப் பார்த்தீர்கள்?    நாங்கள் அந்தக் கொலைச் செய்தியைக் கேட்டதும் மகிழ்ந்தோம். நான் குலமக்கா வீட்டுக்குச் சென்றபோது எனது சக இயக்கத்தோழி கல்யாணி என்னைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார். துரையப்பா ஒன்றும் இலேசுப்பட்ட ஆளல்ல. தமிழர் கூட்டணியின் ஆதரவாளர்களைத் தேடித் தேடித் தனது நகரபிதா பதவியின் முலம் அவர் தொல்லைகள் கொடுத்தார். குலமக்காவின் வீட்டு மதிற்சுவர் கூட துரையப்பாவின் உத்தரவின் பேரில் இடித்துத் தள்ளப்பட்டது. ஆனால் இன்று சிந்திக்கும்போது அரசியல் முரண்களைத் துப்பாக்கியால் தீர்க்கும் அந்தக் கலாச்சாரம் இன்று தனது சொந்த இனத்துக்குள்ளேயே துரையப்பாவில் தொடங்கி சபாலிங்கம் வரைக்கும் ஆயிரக் கணக்கானவர்களை அழித்துவிட்டதையும் என்னால் உணர முடிகிறது.   இந்தப் பதற்றமான காலகட்டத்தில் உங்களின் அரசியற் செயற்பாடுகள் எதுவாயிருந்தன?    துரையப்பா கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தமிழ் இளைஞர் பேரவை பிளவுபட்டுப் போயிற்று. அப்போது மக்கள் மத்தியில் வேகமாகச் செல்வாக்குப் பெற்றுவந்த இளைஞர் பேரவையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக் கூட்டணியினர் முயன்றனர். மங்கையயற்கரசி அமிர்தலிங்கம் மேடைக்கு மேடை இது மாவை சோனாதிராசாவால் தொடங்கப்பட்ட அமைப்பு என்று பிரச்சாரம் செய்தார். ஆனால் உண்மையில் மாவை சேனாதிராசா தமிழ் இளைஞர் பேரவையில் இருக்கவேயில்லை. இளைஞர் பேரவைக்குள்ளும் கனக மனோகரன், மண்டூர் மகேந்திரன், மதிமுகராஜா, மன்னார் ஜெயராஜா போன்ற கூட்டணியின் ஆதரவாளர்கள் குழப்பங்களைத் தொடங்கினர். இறுதியில் இளைஞர் பேரவை பிளவுற்று தங்கமகேந்திரன், சந்திரமோகன், புஸ்பராஜா, பிரான்ஸிஸ், வரதராஜப்பெருமாள், முத்துக்குமாரசாமி போன்றவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்தைத் (T.L.O) தொடங்கினார்கள். துரையப்பாவின் கொலையைத் தொடர்ந்து புஸ்பராஜா உட்பட பெரும்பாலான தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். புலோலி வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து நானும் கைதுசெய்யப்பட்டேன்.   புலோலி வங்கிக் கொள்ளையில் உங்கள் பங்கு என்ன? இயக்கம் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபடுவதை நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்தீர்களா?    இயக்கத்தை வளர்ப்பதற்கான நிதியாதாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான கொள்ளைகள் அவசியம் என்றுதான் நான் கருதினேன். தங்கமகேந்திரன், சந்திரமோகன், வே. பாலகுமாரன் (முன்னைய ஈரோஸ் தலைவர்), கோவை நந்தன் போன்றவர்களின் திட்டமிடலிற்தான் புலோலி வங்கி கொள்ளையிடப்பட்டது. கொள்ளைப் பொருட்களை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு இரகசியமாக் கடத்திச் செல்வதற்கு அவர்களிற்கு நானும் கல்யாணியும் உதவி செய்தோம். வங்கிக் கொள்ளையைத் துப்புத் துலக்கிக்கொண்டிருந்த பொலிஸாருக்கு பிரதீபன் என்றொருவர் துப்புகளை வழங்கிக்கொண்டிருந்திருக்கிறார். பிரதீபன் அப்போது இயக்க ஆதரவாளராக நடித்து தங்கமகேந்திரனின் நட்பைப் பெற்றிருந்தார். இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் துரையப்பா கொலையைத் தொடர்ந்து சிறைப்பட்டிருந்த நிலையில் தங்கமகேந்திரனும் சந்திரமோகனும்தான் இயக்கத்தை தலைமைதாங்கி வழிநடத்திக்கொண்டிருந்தார்கள்.   அந்த உளவாளி பிரதீபன் தன்னை தங்கமகேந்திரனின் நண்பர் என்று அறிமுகப்டுத்திக்கொண்டு என்னிடம் வந்தார். தங்கமகேந்திரனும் அவர் தனது நண்பரென்றும் இயக்க ஆதரவாளரென்றும் என்னிடம் உறுதிப்படுத்தினார். முடிவில் அந்த உளவாளி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் என்னைத்தேடி வீட்டுக்கு வந்தபோது நான் வீட்டின் பின்புறத்தால் ஓடித் தப்பித்துக்கொண்டேன். பொலிஸார் எனது பெற்றோர்களையும் எனது தம்பி, தங்கைகளையும் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். எனது பெற்றோர்களும் சகோதரனும் சகோதரிகளும் பொலிஸ்நிலையத்தில் வதைக்கப்பட்டனர். எனது தம்பி வரதன் அனுராதபுரம் சிறைக்கு அனுப்பப்பட்டார். தங்கை ஜீவரட்ணராணி வெலிகடைச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.   அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை கேட்க நான் தங்கமகேந்திரன், சந்திரமோகன் போன்ற தலைமைத் தோழர்களைத் தேடிப் போனேன். அவர்கள் குருநகரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தார்கள். பொலிஸார் என்னை வேறுகாரணங்களிற்காகத் தேடியிருக்கலாம் எனவும் வங்கிக் கொள்ளை குறித்துப் பொலிஸாருக்குத் துப்புத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையெனவும் கூறி அந்த அதிபுத்திசாலித் தோழர்கள் என்னைப் பொலிஸாரிடம் சரணடையுமாறு சொன்னார்கள். நான் ஒரு வழக்கறிஞர் மூலம் யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தேன். நான் பொலிஸ் நிலையத்திற்குள் கால் வைத்ததுமே பொலிஸார் கேட்ட கேள்விகளிலிருந்து புலோலி வங்கிக்கொள்ளை குறித்து எல்லாத் தகவல்களையும் பொலிஸார் ஏற்கனவே திரட்டி வைத்திருக்கிறார்கள் எனப் புரிந்துகொண்டேன். நான் எனது வழக்கறிஞரிடம் இரகசியமாகச் சொன்னேன்: “தங்கமகேந்திரனிடம் போய்ச் சொல்லுங்கள், அவர்கள் என்னைத் தூக்கு மேடைக்கு அனுப்பியிருக்கிறார்கள்” .   விசாரணை என்ற பெயரில் நான் உயிரோடு தூக்குக்கு அனுப்பப்பட்டேன். நான் பொதுவாக பாவாடை, சட்டை அணிவதுதான் வழக்கம். பொலிஸ் நிலையம் போவதற்காகத் தெரிந்த ஒருபெண்ணிடம் சேலை இரவல் வாங்கி உடுத்திப் போயிருந்தேன். விசாரணையின் ஆரம்பமே எனது சேலையை உரிந்தெடுத்ததில்தான் தொடங்கியது. மிருகத்தனமாக நான் தாக்கப்பட்டேன். தொடர்ந்து இருபத்துநான்கு மணிநேரம் வதைக்கப்பட்டேன். எனது அலறல் பொலிஸ் குவாட்டர்ஸ்வரை கேட்டதாகப் பிறகு சொன்னார்கள். கல்யாணியும் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுவரப்பட்டார். இரண்டு நாட்களில் தங்கமகேந்திரன், சந்திரமோகன் போன்றவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள்.   என்னை அடித்த தடிகள் என்கண் முன்னேயே தெறித்து விழுந்தன. நான் அரைநிர்வாணமாக அரைமயக்க நிலையில் கிடந்தேன். அடித்த அடியில் எனக்குத் உரிய நாளுக்கு முன்னமே மாதவிடாய் வந்துவிட்டது. வழிந்துகொண்டிருந்த உதிரத்தைத் தடுப்பதற்கு எந்த வழியுமில்லை. ஒரு பொலிஸ்காரர் அழுக்கால் தோய்ந்திருந்த ஒரு பழைய சாரத்தை என்னிடம் கொண்டுவந்து தந்தார். அதில் துண்டு கிழித்து நான் கட்டிக்கொண்டேன். கல்யாணி என்னிடம் அந்தத் துணியைப் பத்திரமாக வைத்திருக்குமாறும் தனக்கு மாதவிலக்கு வரும்போது அது தேவைப்படும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்தத் துணியைத் துவைத்துத்தான் பின்பு கல்யாணி உபயோகிக்க வேண்டியிருந்தது.   குறிப்பாக எங்கள் இயக்கத்தோடு தொடர்புடைய பெண்கள் குறித்தே என்னிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள். வங்கிக்கொள்ளை குறித்த தகவல்கள் எதுவும் அவர்களிற்குத் தேவையாயிருக்கவில்லை. ஏனென்றால் அவற்றை எனது தோழர்கள் முன்னமே படம் போட்டுப் பொலிஸாருக்கு விபரித்திருந்தார்கள்.   உங்கள்மீதான விசாரணைக்குப் பொறுப்பாயிருந்தவர் சித்திரவதைகளிற்கு பேர்போன இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை என்று அப்போது செய்திகள் வந்தன. அவர்தானா உங்களை விசாரணை செய்தார்?    இல்லை. என்னை இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தலைமையிலான குழுவே விசாரணை செய்தது. அந்த பஸ்தியாம்பிள்ளையும் இந்தப் பத்மநாதனும் பின்னர் புலிகளால் கொலைசெய்யப்பட்டனர். என்னை சித்தரவதை செய்ததில் சண்முகநாதன், கருணாநிதி, ஜெயக்குமார் போன்ற அதிகாரிகளுக்கும் முக்கிய பங்கிருந்தது. இவர்களும் அடுத்தடுத்த வருடங்களில் கொல்லப்பட்டனர். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் விசாரணை அதிகாரிகள் எல்லோரும் வெள்ளாளர்களாகவேயிருந்தனர். அவர்களிடம் சிக்கிய நானும் கல்யாணியும் தலித்துகளாகயிருந்தோம். நாங்கள் தாக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் பள்ளி, நளத்தி என்று எங்கள் சாதிப்பெயர்களால் இழிவு செய்யப்பட்டே தாக்கப்பட்டோம். பத்மநாதனைப் பொறுத்தவரை இந்த வழக்கை முடித்துவைத்து பதவி உயர்வு பெறவேண்டும் என்ற அதீத துடிப்பு அவரிடம் காணப்பட்டது. ஆனாலும் நானும் கல்யாணியும் பெண்கள் என்ற வகையில் அவர் எங்களை ஓரளவு கண்ணியமாகவே நடத்தினார். மற்றைய பொலிஸாரிடமிருந்து பாலியல்ரீதியான தொந்தரவுகள் வந்தபோது அவரே எங்களை அவற்றிலிருந்து காப்பாற்றினார். ஆனால் சித்திரவதைகளில் அவர் குறை வைக்கவில்லை. என்னைக் குப்புறப்படுக்கப் போட்டுவிட்டு அவர்கள் பொல்லுகளால் என்னைத் தாக்கியபோது நான் ‘அடியுங்கடா என்னை! கொல்லுங்கடா என்னை” என்று அலறினேன். அந்தச் சத்தம் முழு யாழ்ப்பாணத்திற்கும் கேட்டிருக்கும். அதைப் பார்த்துக்கொண்டிருந்த செல்வரத்தினம் என்ற பொலிஸ்காரர் கண்ணீர்விட்டு அழுததை என்னால் மறக்க முடியாது. செல்வரத்தினம் இப்போது பிரான்ஸில்தான் வாழ்கிறார். எனது போராட்ட அனுபவங்களை நூலாக எழுதி வெளியிடும் முயற்சியில் நான் இப்போது ஈடுபட்டிருக்கிறேன். எனது நூலை செல்வரத்தினத்தைக் கொண்டுதான் நான் வெளியிடுவேன். எப்போது வெலிகடைச் சிறைக்கு அனுப்பப்பட்டீர்கள்?    யாழ்ப்பாணப் பொலிஸ்நிலையத்திலிருந்து அழைத்துச்செல்லப்பட்டு முதலில் யாழ் கோட்டைக்குள்ளிருந்த கிங் ஹவுஸில் அடைத்து வைக்கப்பட்டோம். இரண்டு வாரங்களில் அங்கிருந்து வெலிகடைச் சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டோம். வெலிகடைச் சிறையில்தான் நான் ஜே.வி.பி கிளர்ச்சியில் ஈடுபட்டு தெனியாயச் சண்டையில் தலைமை வகித்துப் போராடிய தோழிகளான புத்த கோறளையையும் சந்திரா பெரேராவையும் சந்தித்தேன்.   அவர்களுக்கும் உங்களுக்குமான உறவுகள் எப்படியிருந்தன?    அவர்கள் அற்புதமான தோழிகள். அவர்கள் எங்களிடம் தமிழ் படித்தார்கள். நான் அவர்களிடம் சிங்களம் படித்தேன். நாங்கள் அரசியல் விவாதங்களையும் உரையாடல்களையும் மனம்விட்டுச் செய்தோம். அந்தச் சிங்களத் தோழிகள் என்னையும் கல்யாணியையும் சிறைக்குள் தாய் மாதிரிப் பாதுகாத்தார்கள். அப்போது சிறைக் கண்காணிப்பளாராயிருந்த சைமன் சில்வாவும் அருமையான மனிதர். அவரின் நற்பண்புகள் குறித்து அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காசி. ஆனந்தன் ஒரு கவிதையே எழுதியிருக்கிறார். எனவே சிறை வாழ்க்கையில் பெரிய துன்பங்கள் எதையும் நான் எதிர்கொள்ளவில்லை. நான் சிறையிலிருந்த காலங்களில் நிறையவே வாசித்தேன். சிறை நூலகத்திலிருந்து புத்தகங்கள் கிடைக்கும். அந்த நூல்கள் ஆண்கள் சிறையிலிருந்த எங்களது இயக்கத் தோழர்களுடன் நாங்கள் இரகசியமாகத் தகவல்களைப் பரிமாறவும் எங்களுக்கு உதவின. நாங்கள் நூலகத்திற்குத் திருப்பியனுப்பும் புத்தகங்களை அவர்களும் அவர்கள் அனுப்பும் புத்தகங்களை நாங்களும் பெற்றுக்கொள்வோம். புத்தகங்களின் பக்கங்களில் மெல்லிய கோடுகளிட்டும் ஓரங்களில் எழுதியும் சங்கேதங்களாய் நாங்கள் செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம்.   புகழ்பெற்ற வழக்கறிஞர்களால் நிரம்பியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உங்களின் விடுதலைக்காக ஏதாவது முயற்சி எடுத்ததா?    அப்போது நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த என். நவரத்தினம் நாடாளுமன்றத்தில் நான் கைது செய்யப்பட்டது குறித்த பிரச்சினையை எழுப்பியிருந்தார். அப்போது பிரதமாராயிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் “நீங்களும் ஒரு பெண். அந்தத் தாயுள்ளத்துடன் நீங்கள் புஸ்பராணியை விடுதலை செய்ய வேண்டும்” என அவர் கேட்டபோது சிறிமாவோ “நான் பெண் என்பதிலும்விட நான் இந்த நாட்டின் பிரதமர் என்பதே எனக்கு முக்கியமானது” என்றார். ஆறுமாதச் சிறைவாசத்திற்குப் பின்பு நான் விடுதலையானேன். வழக்குத் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. 1980ல் தீர்ப்பு வழங்கப்பட்டபோது தங்கமகேந்திரன், ஜெயக்கொடி, கோவை நந்தன், நல்லையா ஆகியோருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. நான் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டேன். வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே நந்தனும் நல்லையாவும் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள். தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்த தங்கமகேந்திரனும் ஜெயக்கொடியும் மட்டக்களப்புச் சிறையுடைப்பில் தப்பிச் சென்றார்கள்.   அதற்குப் பின்னான உங்களது அரசியல் நடவடிக்கைகள் எவ்வாறிருந்தன?    சிறையிலிருந்து வெளியில் வரும்போதே நான் இயக்கத்தின்மீது வெறுப்புற்றுத்தான் வெளியே வந்தேன். ஈழவிடுதலைக்காக உயிரையும் தருவார்கள், பொலிஸில் அகப்படும் நிலைவரின் சயனைட் தின்று வீரச்சாவடைவார்கள் என நான் நம்பியிருந்த தோழர்கள் என் கண்முன்னாலேயே பொலிசாரின் முன் மண்டியிட்டு அழுததையும் என்னைக் காட்டிக்கொடுத்ததையும் என்னால் சீரணிக்க முடியவில்லை. தம்மைச் சுற்றி வீரதீரப் படிமங்களைக் கட்டியெழுப்பி வைத்திருந்தவர்கள் அந்தப் படிமங்கள் சிதறிவிழ எதிராளியிடம் மண்டியிட்டார்கள். ஈழப் போராட்ட வரலாற்றில் இந்த அவலம் திரும்பத் திரும்ப நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. நமது விடுதலை இயக்கங்களின் ஆரம்பநிலைகளிலேயே இளைஞர்களிடையே அதிகார விருப்பும் பதவிப் போட்டிகளும் தோன்றிவிட்டதையும் நான் கவனித்து வெறுப்புற்றிருந்தேன். இயக்கத்தில் என்னுடன் கல்யாணி, டொறத்தி, பத்மினி போன்றவர்கள் தீவிரமாக இயங்கினாலும் பெண்கள் என்றரீதியல் நாங்கள் இயக்கத்திற்குள் இளைஞர்களால் அலட்சியமாகவே நடத்தப்பட்டதையும் நாங்கள் உணர்ந்திருந்தோம். சிறையிலிருந்து வெளிவந்த என்னைச் சமூகமும் கொடூரமாகத்தான் எதிர்கொண்டது. பொலிஸாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவள் என நான் ஒதுக்கப்படலானேன். அப்போது இயக்கம், விடுதலைப் போராட்டம் பற்றியெல்லாம் பொதுப்புத்தி மட்டத்தில் எந்த அறிவுமிருக்கவில்லை. எனக்கு கொள்ளைக்காரி என்ற முத்திரை குத்தப்பட்டது. அப்போது இருபத்தாறு வயதேயான இளம்பெண்ணாயிருந்த நான் மனதால் உடைந்துபோனேன். விடுதலை அரசியலில் எனக்கு ஈடுபாடு இருந்தபோதிலும் அந்த ஈடுபாடு இன்றுவரை தொடரும்போதும் நான் இயக்கத்துடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் என்னை இயக்க அரசியலுக்கு அழைத்தபோதும், தோழர் பத்மநாபா போன்றவர்கள் என்னை இயக்க அரசியலுக்குத் தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருந்தபோதும் நான் இயக்க அரசியலில் ஈடுபட மறுத்துவிட்டேன். எப்போது பிரான்சுக்கு வந்தீர்கள்?    1986ல் வந்தேன். இடையில் 1981ல் எனக்குக் கல்யாணம் நடந்தது. நான் மணம் செய்வதில் பல சிக்கல்கள் இருந்தன. சிறையில் இருந்தவள், கொள்ளைக்காரி என்று எனக்குக் குத்தப்பட்ட முத்திரையால் எனது முப்பத்தொரு வயது வரையிலும் எனக்குத் திருமணம் அமையவில்லை. கடைசியில் புஸ்பராஜாவின் நண்பர் ஒருவருடன் எனக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. எனக்குத் திருமணத்தில் எந்த ஆர்வமும் இல்லாதிருந்தபோதும் இந்தச் சமூகத்தில் திருமணமாகாத ஒரு பெண்ணாய் நான் எதிர்கொண்ட பிரச்சினைகளாலும் என் பெற்றோரின் விருப்பத்திற்காவும் நான் திருமணத்துக்குச் சம்மதித்தேன். அந்தச் சம்மதம் என் வாழ்க்கையைத் துன்பத்திற்குள் தள்ளியது. என் திருமண வாழ்வு மகிழ்ச்சியாய் அமையவில்லை. பிரான்ஸ் வந்ததன் பின்பாக நான் விவாகரத்துச் செய்துகொண்டேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களோடு வாழ்ந்துவருகிறேன். பிரான்சுக்கு வந்ததன் பின்னாகப் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பெண்கள் சந்திப்புகளிலும் தொடர்ச்சியாக் கலந்து வருகிறேன். இங்கேயும் பல்வேறு தமிழ் அரசியல் இயக்கங்கள் இயங்கிவந்த போதிலும் எவர் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதனால் இயக்க வேலைகளில் நான் என்னை ஈடுபடுத்தவில்லை. தனிப்பட்ட பல தோழர்கள் மீது எனக்கு நம்பிக்கையும் மரியாதையும் இருந்தபோதும் அவர்கள் சார்ந்த இயக்கங்களின் வேலைத்திட்டங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தைச் சேராதவளாயிருந்போதிலும் மறைந்த தோழர் பத்மாநாபாவின் மீது எனக்கு அளப்பெரிய தோழமை உணர்வும் மரியாதையும் உள்ளது என்பதை இந்த நேர்காணலில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.   நீங்கள் ஒரு தீவிரமான இலக்கிய வாசகி என்பது எனக்குத் தெரியும், அது குறித்து?    மிகச் சிறிய வயதிலேயே நான் வாசிப்புக்கு அடிமையாகிவிட்டேன். இன்றுவரை ஏதாவது ஒன்றைப் படிக்காமல் நான் உறங்கச் செல்வது கிடையாது. எனது சிறுவயதில்; ‘படிக்கிற பிள்ளை கதைப் புத்தகம் வாசிக்கக் கூடாது” என வீட்டில் கண்டிப்பு இருந்தது. நான் பாடப் புத்தகங்களுக்குள் மறைத்து வைத்துக் கதைப் புத்தகம் படிப்பேன். துப்பறியும் கதைகள், சாண்டில்யன், அகிலன் என வாசிப்புத் தொடங்கியது. நா. பார்த்தசாரதியின் குறிஞ்சிமலரை வாசித்து அரவிந்தன் இறந்தபோது இரவிரவாகக் தனிமையிலிருந்து கண்ணீர் வடித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் ஜெயகாந்தனால் முற்றாக ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். அந்தக் காலத்தில்தான் எழுதவும் தொடங்கினேன். இலங்கை வானொலியிலும் ‘லண்டன் முரசு’ என்ற பத்திரிகைக்காவும் நிறைய எழுதினேன். அப்பொழுது சதானந்தனை ஆசிரியராகக்கொண்டு லண்டனிலிருந்து அந்தப் பத்திரிகை வெளியிடப்பட்டது. நான் இலங்கையிலிருந்து அந்தப் பத்திரிகைக்கு சம்பளமில்லாத நிருபராக வேலைபார்த்தேன். அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த கி. பி. அரவிந்தன் எங்களுடைய வீட்டில் ஏறக்குறைய ஒரு வருடமளவில் தலைமறைவாக ஒளிந்திருந்தார். நாங்கள் கவிதைகள் குறித்து விவாதிப்போம், பேசுவோம். நானும் அவரும் இணைந்து புஸ்பமனோ என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறோம். அரவிந்தனிற்கு மனோகரன் என்ற பெயருமுண்டு. என் திருமண வாழ்க்கையும் அதனால் எற்பட்ட மனச்சிதைவுகளும் என்னை எழுதுவதைக் கைவிட வைத்தன. ஆனால் இன்றுவரை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். வார இதழ்களிலிருந்து நவீன இலக்கியம்வரை கையில் கிடைப்பதையெல்லாம் வாசிக்கிறேன். பிரபஞ்சனும் சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் என்னை மிகவும் ஈர்த்த இலக்கிய ஆளுமைகளாகயிருக்கிறார்கள்.   புஸ்பராஜாவின் ஈழப் போராடத்தில் எனது சாட்சியம் நூல் பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் மறுப்புகளையும் உருவாக்கியிருந்தது. அந்த நூல் குறித்து உங்களின் பார்வை என்ன?    புஸ்பராஜா இலங்கையிலிருந்தபோதும் சரி, பிரான்ஸிலிருந்தபோதும் சரி எப்போதும் என்னோடு தொடர்ச்சியான அரசியல் உரையாடல்களை நடத்திக்கொண்டேயிருந்தார். அவரின் தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, போராட்ட வாழ்வானாலும் சரி நான் எல்லாவற்றையும் அறிந்துவைத்திருக்கிறேன் என்றே நம்புகிறேன். எனக்குத் தெரிந்தவரை மிக நேர்மையாக புஸ்பராஜா தனது சாட்சியத்தைப் பதிவு செய்திருக்கிறார். புஸ்பராஜா ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மகாணசபை ஆட்சிக்காலத்திலும் அதற்குப் பின்பும் அந்த இயக்கத்திற்காக வேலை செய்தது எனக்கு பிடிக்கவில்லையென்றபோதும் அந்த அனுபவங்களையும் பாரபட்சமில்லாமல் தனது நூலில் அவர் பதிவு செய்திருக்கிறார் என்றே கருதுகிறேன். அந்த நூலில் புஸ்பராஜா அளவுக்கு அதிகமாகத் தன்னை முன்னிலைப்படுத்துகிறார் என்றொரு விமர்சனத்தைக் கூட நீங்கள் ‘சத்தியக்கடதாசி’ இணையத்தளத்தில் பிரசுரித்திருந்தீர்கள். ஆனால் உண்மையிலேயே புஸ்பராஜா எல்லா விசயங்களிலும் முன்னுக்குப் போகிற ஆளாகவும் விறைப்பான ஆளாகவுமேயிருந்தார். அதுதான் நூலிலும் பதிவாகியிருக்கிறது. சோதிலிங்கம், வசீகரன், பேபி சுப்பிரமணியம் போன்றவர்களின் போராட்டத்திற்கான பங்களிப்புகள் நூலில் போதியளவு முக்கியத்துவம் கொடுத்துப் பதிவாகவில்லை என்றொரு குறை எனக்கிருக்கிறது. என்நூலில் அவர்கள் குறித்து விரிவாக எழுதுவேன். குறிப்பாக பேபி சுப்பிரமணியம் தினந்தோறும் எங்கள் மயிலிட்டி வீட்டுக்கு வருவார். மிகுந்த அமைதியான குணமும் அன்புள்ளமும் கொண்ட அவர் எப்படி இவ்வளவு காலமாகப் புலிகள் இயக்கத்திலிருக்கிறார் என்பதுதான் எனக்கு விளங்கவேயில்லை.   வெளிநாட்டு வாழ்வை எப்படி உணர்கிறீர்கள்? குறிப்பாக ஆணாதிக்கம், சாதியம் போன்ற அடிமைத்தளைகளிலிருந்து ஓரளவாவது விடுதலையை இந்தச் சூழல் உங்களிற்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது என நினைக்கிறீர்களா?    நான் எப்போது அடிமையாயிருந்தேன் இப்போது விடுதலை பெறுவதற்கு! சமூகத் தளைகளை எதிர்கொண்டபோது எந்த இடத்திலும் நான் பணிந்துபோனதில்லை. உறுதியாக எதிர்த்தே நின்றிருக்கிறேன். எதிர்ப்பு என்பதே என்னைப் பொறுத்தளவில் விடுதலைதான். புகலிடத்திலும் நான் சார்ந்த தலித் சமூகம் ஆதிக்கசாதித் தமிழர்களால் புறக்கணிக்கப்படுகிறது. எனது மகள் இரவு பன்னிரெண்டுமணிக்கும் தனியாக வீடுவரும் போது நமது தமிழர்களால் ‘கறுவல்கள்’ எனப் பழிக்கப்படும் ஆபிரிக்கர்களோ ‘அடையார்’ எனப் பழிக்கப்படும் அரபுக்களோ என் மகளைத் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் என் மகளால் தனியாக லா சப்பல் (பாரிஸில் ஈழத் தமிழர்களின் கடைத்தெரு) போக முடியாமலிருக்கிறது. அவளை ஒரு கும்பல் தமிழ் இளைஞர்கள் சுற்றிவளைத்து ‘எடியே நீ தமிழாடி? நில்லடி!” எனச் சேட்டை செய்கிறார்கள். மோசமான கெட்டவார்த்தைகளைக் கொட்டுகிறார்கள். தமிழர்களின் ஒற்றுமை, தமிழர்களின் பண்பாடு என்றெல்லாம் எழுபதுகளில் மேடைமேடையாய் நான் தொண்டைத்தண்ணி வற்றக் கத்தியதை நினைத்தால் இப்போது சிரிப்பாயிருக்கிறது. சிரிப்புக்குப் பின்னால் விரக்தியிருக்கிறது.   தமிழீழப் போராட்டம் தோல்வியைத் தழுவியதற்கு முதன்மையான காரணம் எதுவென நினைக்கறீர்கள்?    முதன்மையான காரணமும் கடைசிக் காரணமும் விடுதலை இயக்கங்களின் அராஜகங்கள்தான். எதிரியைக் கொல்கிறோம் எனப் புறப்பட்டவர்கள் எமது சமூகத்தின் போராளிகளையும் அறிவுஜீவிகளையும் ஒழித்துக்கட்டினார்கள். முஸ்லீம் மக்களை விரட்டியது, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்ற தலைவர்களைக் கொன்றது, பத்மநாபா போன்ற நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொன்றது என எத்தனை அராஜகங்கள். இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தப் புகலிடத் தேசங்களிலும் இன்று ஒவ்வொரு தமிழனும் வாயைத் திறக்கவே பயப்படுகிறான். அங்கே ஆரம்பிக்கிறது தமிழீழப் போராட்டத்தின் தோல்வி.                   9. என்னுடைய தேசிய இனம்: இலங்கை அகதி   நேர்காணல்: மீனா    ஈழத்தின் மரணப் போராட்டங்களை; சாதிய, இன, அதிகார வெறிகளால் மக்களுக்கு நேர்ந்த அவலங்களை, பிறந்த மண்ணைப் பிரிந்த அகதியின் மனநிலையை; அழுகுரலெடுக்கும் பெருஓலங்களாலோ, ரத்தக் கண்ணீர்களாலோ அல்லாமல் அசாதாரண எழுத்துகளால் உறைய வைத்து நமது நனவிலியைப் பிடித்தாட்டிய தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லி, ஷோபாசக்தி. நவீன இலக்கியத்தில் தனி முத்திரையைப் பதித்ததோடு இடதுசாரி அரசியல் வழிநின்று அரச பயங்கரவாதத்துடன் புலிகளின் பயங்கரவாதத்தையும் தொடர்ந்து கண்டித்து வருகிற வகையில், புலிகளைப் புனிதத் திருஉருக்களாக கட்டமைப்பவர்களால் உட்செரிக்க இயலாதவர். பதினைந்து வயதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக தமது அரசியலைத் துவக்கி இன்று புலம்பெயர் சூழலில் மாற்று அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழர்களைக் காப்பதற்கே யுத்தம் என்று பச்சையாய் புளுகி மீண்டுமொரு இனப்படுகொலையை அரங்கேற்றிய ராஜபக்சே அரசு, யுத்ததிற்கு பிறகும் பயங்கரவாதத்தின் கோரப்பசிக்கு தமிழர்களைத் தின்று தீர்க்கிறது. இந்நிலையில், ஈழத்தமிழரின் சனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து குரலுயர்த்தி வருகிற ஷோபாசக்தியோடு  ஈழத்தமிழரின் நிலைகுறித்தும், தமிழ்ச்சூழலில் நடைபெற்று வருகிற ஈழ அரசியல் குறித்தும் ‘அம்ருதா’ இதழிற்காக உரையாடினோம். அவற்றிலிருந்து..    மீனா: போர்க்குற்றங்களைத் தொடர்ந்தும் தமிழ் இளைஞர்களின் நிர்வாண படுகொலைகள், திசநாயகம் கைது என அடுக்கடுக்காய் இனவெறி வெட்ட வெளிச்சமாகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இதனை கண்டித்திருக்கின்றன. போர்க்குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய அழுத்தங்கள் தொடர்வதன் மூலம் தமிழர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமா?  ஷோபாசக்தி: ‘சானல் நான்கு’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த வீடியோ ஆதாரங்களைப் பொய் என்கிறது இலங்கை அரசு. எந்த கண்டனத்திற்கும் அஞ்சாமல் திசநாயகத்தின் கைதையும்  நியாயப்படுத்தி வருகிறது. சர்வதேச சமூகத்தின் மனிதாபிமானக் குரலை ராஜபக்சே மயிரளவும் மதிப்பதில்லை. சமீபத்தில் நாட்டிலிருந்து யுனிசெப் அதிகாரியும் வெளியேற்றப்பட்டார். இலங்கை அரசின் பயங்கரவாதம் எந்த அழுத்ததிற்கும் வளைந்து கொடுக்காது.    மீனா: ஈழத்தில் தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்கள் வசதிகளுடன் இருப்பதாகவும் அவர்களுக்கு அரசு போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் இந்து என்.ராம் போன்றவர்கள் சொல்கிறார்களே?    ஷோபாசக்தி: கிடையாது. அதெல்லாம் சுத்த அயோக்கித்தனமான பேச்சு. எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தால் கூட மக்களை முகாமில் வைத்திருக்க மகிந்த ராஜபக்சேவிற்கு உரிமை கிடையாது. மக்களை அவர்களது சொந்த நிலங்களிலிருந்து பிரித்து முகாம்களில் கட்டாயமாக வைத்திருப்பதை அனுமதிக்கவே முடியாது. கண்ணிவெடி அச்சுறுத்தல் என்றெல்லாம் அரசு சொல்வது அப்பட்டமான பொய். கண்மூடித்தனமாக விமானங்களிலிருந்து குண்டு வீசியும் எறிகணைகளை ஏவியும் மக்களைக் கொன்றவர்கள், கண்ணி வெடியிலிருந்து மக்களைப் பாதுகாப்பது பற்றியெல்லாம் பேசுவது நம்பக்கூடியதல்ல. மகிந்த அரசு நடத்தி முடித்தது ஒரு இனப்படுகொலை. அந்த இனப்படுகொலை இப்போது வெவ்வேறு வடிவங்களில் நடத்தப்படுகிறது. அதிலொன்றுதான் இந்தக் கட்டாயத் தடுப்பு முகாம்கள். இந்த முகாம்களிலிருந்து மக்களை விடுவிக்குமாறு அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. அத்தகைய பிரசார இயக்கங்களை வலுப்படுத்துவதும் அந்த மக்களின் விடுதலைக்கான உடனடி வழிகளைக் கண்டடைவதும் நம் முன்னாலிருக்கும் இன்றைய முதலாவது சவாலும் பணியும்.    மீனா: தடுப்பு முகாம்களில் இருக்கும் அகதிகளுடன் நீங்கள் பேசியிருக்கிறீர்களா, அவர்களின் நிலை எப்படியிருக்கிறது?  ஷோபாசக்தி: எனது உறவினர்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்களில் இளவயதினர் பணம் செலுத்தித் தங்களை அங்கிருந்து மீட்க உதவி செய்யுமாறு மன்றாடுகிறார்கள். இராணுவத்திற்கோ அல்லது இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுத இயக்கங்களைச் சேர்ந்தவர்களிடமோ லஞ்சம் கொடுத்தால் அவர்கள் முகாம்களிலிருந்து அழைத்துச் சென்று வெளியே விடுகிறார்கள். ஆளையும் கொண்டுபோய்ச் சேர்க்கும் இடத்தையும் பொறுத்து மூன்று இலட்சத்திலிருந்து பத்து இலட்சம் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அங்கே கைதுகள் நிகழ்கின்றன. ஒரு முகாமில் நாளொன்றுக்கு முப்பது வரையான இளம் வயதினர் கைது செய்யப்படுகிறார்கள். எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்; குறிப்பாகக் கைதுசெய்யப்படும் யுவதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியிருக்கின்றன என்ற எந்த அறிக்கையும் தகவலும் அரசால் வெளியிடப்படுவதில்லை. அவை நலன்புரி முகாம்களல்ல, சிறைச்சாலைகள்.    மீனா: சொந்த மண்ணிலேயே கைதிகளாய் அடைக்கப்பட்டிருக்கும் இந்த அப்பாவி மக்கள் புலிகளின் நிர்வாகத்தில் இருந்த போது எப்படியிருந்தார்கள்?  ஷோபாசக்தி: புலிகளிடம் மக்கள் அனுபவித்த துன்பங்கள் ஒன்றும் இந்தத் துன்பங்களிற்குக் குறைந்ததல்ல. 1990களிலிருந்தே புலிகளும் ‘பாஸ்’ என்றொரு நடைமுறையைத் திணித்துப் பணம் பெற்றுக்கொண்டுதான், தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்த இளவயதினரை வெளியேற அனுமதித்தார்கள். குழந்தைகளையும்  இளைஞர்களையும் கட்டாயமாக அரைகுறைப் பயிற்சி கொடுத்து யுத்த முன்னரங்கத்திற்கு அனுப்பிவைத்துச் சாகக் கொடுத்தார்கள். இயக்க விரோதிகள், துரோகிகள், சமூகவிரோதிகள், திருடர்கள், பாலியல் தொழிலாளர்கள் என்ற குற்றச்சாட்டுகளில் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டவர்களின் கணக்குத் தனியானது. ஆயிரக் கணக்கானோர் புலிகளின் பங்கர் சிறைகளில் நாயினும் கீழாக வதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 2002க்குப் பிந்திய சமாதான காலத்தில் மட்டும் தங்களுக்கு ஒவ்வாத 400க்கும் மேற்ட்ட தமிழ் அரசியலாளர்களையும் எழுத்தாளர்களையும் அறிவுஜீவிகளையும் புலிகள் கொன்றிருக்கிறார்கள் எனத் துல்லியமாக அய்.நா. அவையின் சமூகப் பொருளாதரக் கவுன்சிலின் ஆய்வாளர் பிலிப் அல்ஸ்டன் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்.    மீனா: ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்களுக்காகவும் மெனிக் பண்ணையின் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கும் தமிழர்களுக்காகவும் ஆதரவாய் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள், நீங்கள் குறிப்பிடுபவை பற்றியும் தொண்ணூறுகளில் புலிகளால் வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள் பற்றியும் பேசுவதில்லையே, ஏன்?  ஷோபாசக்தி: பாரிசில் இருந்து வெளிவரும் ‘ஈழமுரசு’ பத்திரிக்கை 12 செப்டம்பர் 2009 இதழில், ‘பாகிஸ்தான் அணுகுண்டு செய்வதற்கு இலங்கை முஸ்லீம்கள் உதவினார்கள்’ என்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. காலம்காலமாக தமிழ் தேசியவாதிகளும் -குறிப்பாக – புலிகளும், முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட முறையில் இனப்பகைமையை பிரசாரம் செய்து வருகிறார்கள். யாழ்ப்பாண சாதிய உணர்வு தலித்துகளை ஒடுக்கியதைப் போல தமிழ்த்தேசிய உணர்வு முஸ்லீம்களை ஒடுக்கியது. ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க மறுப்பவர்களை ஆதிக்கத்தின் எடுபிடிகள் என்றல்லாமல் வேறெப்படி புரிந்துகொள்வது.    மீனா: இப்போது, இலங்கை அரசோடு இயைந்துபோய் தமிழர்களிற்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளுதல் என்றவாறாக ஈழத் தமிழ் அறிவுஜீவிகளில் ஒரு பகுதியினர் பேசுகிறார்களே?    ஷோபாசக்தி: ஆயுதப் போராட்டத்தினால் கடந்த முப்பது வருடங்களில் நாம் சந்தித்த இழப்பு மிகப் பெரிது. ஒரு சின்னஞ் சிறிய இனமான எங்களால் தாங்க முடியாத அளவிற்கு இழப்புகள் ஏற்பட்டுவிட்டன. ஆயுதப் போராட்டம் என்பது இப்போது இலங்கையில் சாத்தியப்படாத ஒன்று. சர்வதேசப் புறச் சூழல்களும் ஆயுதப் போராட்டத்திற்குச் சாதகமாயில்லை. எனவே, வேறுவகையான அரசியல் முன்னெடுப்புகளாலும் போராட்ட முறைமைகளிற்குள்ளாகவும் அழுத்தங்கள், பேச்சுவார்த்தைகள் ஊடாகவுமே இனி ஈழத் தமிழர்களின் உரிமைக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இலங்கை அரசு தனது பேரினவாத அரசியல் என்ற நிலையிலிருந்து கீழிறங்காதவரை அரசோடு இயைந்துபோவது என்பதெல்லாம் அயோக்கித்தனம். இந்தப் பாசிச அரசை எந்த விதத்திலும் நியாயப்படுத்தும் போக்குகள் ஈழத் தமிழர்களிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இலங்கை மக்களிற்குமே இழைக்கப்படும் துரோகம்.    மீனா: போராட்டத்தை முன்னெடுக்க சமீபமாய் நாடு கடந்த அரசாங்கம் அமைப்பது பற்றி பேசப்பட்டு வருகிறது. இந்த முறை எவ்வளவு சாத்தியம்?  ஷோபாசக்தி: எங்கள் மீது தன்னிச்சையாக அரசையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்தும் அதிகாரத்தை இவர்களிடம் யார் கொடுத்தார்கள்? இவர்களின் நாடுகடந்த அரசின் அரசியல் பண்பு என்ன? வலதா, இடதா, இல்லைப் பாசிசமா? முதலில் அதைச் சொல்லட்டும். எங்கள் ராஜினி திரணகமவையும் விஜயானந்தனையும் கொன்றவர்களுடன் சேர்ந்து பீற்றர் சால்க்கும் கரண் பார்க்கரும் எங்களுக்கு அரசமைத்துக் கொடுக்கப் போகிறார்களா? புலிகளின் போராட்டம் ஆயுதப் போராட்டமாயிருந்தாலென்ன, அரசியற் போராட்டமாயிருந்தாலென்ன அவர்களின் அரசியலில் அறம் வந்து சேரும்வரை அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேசமெங்கும் சிதறிக்கிடக்கும் புலிகளின் சொத்துகளையும், புலிகளும் அவர்களின் முகவர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் சுகித்த அதிகாரங்களையும் காப்பாற்றிக்கொள்ளவே இந்த நாடுகடந்த அரசாங்கம் என்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்படுகிறது.    மீனா: இப்பொழுதும் மக்களிடம் பணம் வசூலிப்பது தொடர்கிறதா?  ஷோபாசக்தி: இன்றுள்ள சூழலில் புகலிடத்தில் கட்டாயக் காசு கேட்டால் சனங்களே காவற்துறையிடம் புலிகளைப் பிடித்துக் கொடுப்பார்கள். ஆனாலும், கடந்த பல வருடங்களாக புலம்பெயர் நாடுகளில் புலிகள் திரட்டிய ஏராளமான பணம் வர்த்தக நிறுவனங்களாகவும் இந்துக் கோயில்களாகவும் தொலைக்காட்சி, பத்திரிகை நிறுவனங்களாகவும் திரண்டு இருக்கிறது. இந்த நிறுவனங்கள் இப்போதும் இலாபம் சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தப் பணத்தைக் பகிர்ந்துகொள்ளத்தான் வெளிநாட்டுப் புலிகள் இப்போது தமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் புலிகள் மீது கொண்டிருந்த அச்சம் பெருமளவு நீங்கிவிட்டது. புகலிடப் புலிகள் தங்களுக்குள் தாங்களே அடித்துக்கொண்டிருப்பதால் புலிகள் மீது சனங்கள் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச அனுதாபமும் பயமும் காணமலேயே போய்விட்டது. இணையங்களைத் தொடர்ச்சியாகக் கவனிப்பவர்களால் புலிகளை முன்பு தீவிரமாக ஆதரித்த நபர்களே இப்போது இந்த வெளிநாட்டுப் புலிகளைக் கண்டித்துப் பேசுவதைத் தெரிந்துகொள்ள முடியும்.    மீனா: ‘புலிகளின் வீழ்த்தப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், அவர்களின் தவறுகளை விமர்சிப்பதால் இனிமேல் ஆகப்போவது ஒன்றும் இல்லை‘ என உங்களைப் போன்றவர்கள் பற்றி பரவலாக ஒரு கருத்து நிலவுகிறதே?  ஷோபாசக்தி: புலிகள் தாங்கள் மட்டும் அழியவில்லை. தங்களோடு சேர்த்து ஈழத் தமிழர்களின் அரசியல் உணர்வையும் அழித்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். கடந்த இருபத்தைந்து வருடங்களாகவே நமது மக்கள் அரசியலிலிருந்து புலிகளால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். மக்களுக்கு விமர்சனங்களேயில்லாமல் புலிகளை ஆதரிக்கும் ஒரு கடமையைத் தவிர வேறெந்த அரசியல் உரிமைகளையும் புலிகள் வழங்கவேயில்லை. ஈழத்து அரசியலில், ஒரு ஈழக் குடிமகனது அரசியல் உரிமை, பிரபாகரனின் சிந்தனைக்கும் கட்டளைக்கும் கீழ்ப்படிவது என்பது மட்டுமாகவே வரையறுக்கப்பட்டிருந்தது. புலிகள் ஆதரவைத் தவிர்த்து வேறெதையும் பேசும், எழுதும் உரிமைகள் துப்பாக்கி முனையில் மக்களிற்கு மறுக்கப்பட்டிருந்தன. புலிகளைத் தவிர வேறெந்த அரசியல் போக்குகளையும் புலிகள் தமது பரப்பில் அனுமதிக்கவில்லை. இதைப் புலிகள் ஏகபிரதிநிதித்துவம் என்றார்கள். நாங்கள் பாசிசம் என்றோம்.    சாதியொழிப்பு இயக்கங்கள், சீர்திருத்த இயக்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் எவையுமே அங்கே இயங்க அனுமதிக்கப்படவில்லை. புலிகளின் தடையை மீறிய போதெல்லாம் கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கவாதிகளும் மாற்று அரசியலாளர்களும் தலித் மக்களின் வழிகாட்டிகளும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் புலிகளால் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். சிறைப்பிடிக்கப்பட்டு மனித நாகரிகமே இல்லாமல் நிர்வாணமாக வருடக்கணக்கில் தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டார்கள். ஒரு வருடமல்ல, இருவருடமல்ல, இருபத்தைந்து வருடங்களாகப் புலிகள் இந்த அட்டூழியங்களைச் செய்தார்கள். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கிளிநொச்சி வீழ்ந்த பிறகுதான் புலிகள் மக்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவத்தொடங்கினார்கள் என்பதில்லை. அவர்கள் தங்கள் பிறப்பிலிருந்தே அப்படித்தானிருந்தார்கள்.   புலிகளிடம் அரசியலே இருக்கவில்லை. அவர்கள் சுத்த இராணுவவாதக் கண்ணோட்டத்துடன் இயங்கினார்கள் என்று இப்போது புதிது புதிதாய் சிலர் கண்டு பிடிக்கிறார்கள். ஆனால், அது தவறான கண்டுபிடிப்பு. புலிகளிடம் தெளிவான வலதுசாரி அரசியல் நிலைப்பாடும் மேற்கு ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடும் கலாசார அடிப்படைவாதமும் இருந்தது. அவர்கள் நடத்திய இஸ்லாமியச் சுத்திகரிப்புக்குப் பின்னால் ஒரு உறுதியான குறுந்தமிழ்த் தேசிய அரசியலிருந்தது. அவர்களின் இத்தகைய படுபிற்போக்கான அரசியல் வேலைத்திட்டம் அரசியல் எதிரிகளையும் தங்களை மறுப்பவர்களையும் விமர்சிப்பவர்களையும் கொலை செய்வதன் மூலம் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்ற கேவலமான அரசியலில் அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தியது. எல்லாவித முற்போக்கு அரசியலையும் ஈழப் புலத்திலிருந்து துடைத்தெறிந்த புலிகள், அவர்களின் கொலை அரசியலை மட்டுமே அங்கே விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தக் குறுந்தமிழ்த் தேசியவாதக் கொலைகார அரசியலை செல்வாக்கு இழக்கச் செய்து, மாற்று அரசியலை நோக்கி நகருவதற்கு நம் மக்களிடம் நாம் புலிகளின் தவறுகளையும் அரசியலையும் நுணுக்கமாகத் தோலுரித்துக்காட்ட வேண்டியிருக்கிறது.   தவறுகளைப் பேசுவது, குற்றங்களைப் பட்டியலிடுவதற்காக மட்டுமல்ல; பாடங்களைக் கற்றுக்கொள்வதற்காகவும் தான். மீனா: ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு இனி உரையாடலுக்கு தயார் என புலிகள் அறிவித்திருக்கிறார்களே?    ஷோபாசக்தி: புலிகளுடைய இன்றைய அரசியல் பிரபாகரன் காலத்து அரசியலின் நீட்சிதான். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு வேறுவழிகளில் போராடப்போகிறோம், எல்லோருடனும் உரையாடத் தயாராயிருக்கிறோம் என்ற அவர்களது அறிவிப்புகள் வெளியானாலும் அவர்கள் புலிகளின் கடந்தகால பிற்போக்கு அரசியலிலிருந்து தங்களது அரசியல் வேலைத்திட்டத்தை எவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவ்வகையான எந்தவொரு அரசியல் மாற்றத்தையும் அவர்களிடம் காண முடியவில்லை. அவர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு மைய அரசியலுக்கு வந்தாற் கூட அவர்களது அரசியல் வேலைத்திட்டம் தமிழ்க் குறுந்தேசியவாத, வெறும் வலதுசாரி அரசியற் திட்டமாய் இருக்கும் வரையில் அவர்களின் அரசியல் மக்கள் விரோத அரசியலாகவேயிருக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.    இன்று புலிகள் தங்களிடம் அரசியல் இருக்கவில்லை என்று சொல்வதை அவர்கள் ஏதோ தங்களது பிற்போக்கு அரசியலின் மீது அதிருப்திகொண்டு புதிய மாற்றத்தைக்கோரி பேசுவதாக நீங்கள் கருதவேண்டியதில்லை. தொடர்ச்சியாக அவர்களின் அறிக்கைகளையும் உரையாடல்களையும் நீங்கள் கவனித்துப் பார்த்தால், கடந்த காலங்களில் இந்திய அரசையும் மேற்கு நாடுகளையும் தாங்கள் சரியாக ‘டீல்’ செய்யவில்லை என்ற வருத்தத்திலேயே அவர்கள் பேசுவது தெரியும். அவர்கள் அரசியல் தோல்வியென்று தங்கள் ‘டீல்கள்’ தோல்வியடைந்ததையே குறிக்கிறார்கள். மற்றப்படிக்கு புலிகளின் கடந்த கால பிற்போக்கு அரசியலிலிருந்து அவர்கள் மீள்வதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.   மீனா: புலிகள் இயக்கம் தனது தலைமைப் பொறுப்புகளில் தலித்துகளை அமர்த்தியிருந்தது. அதேவேளையில் செல்லன்கந்தையன், கணபதி ராசதுரை போன்றோர்களிடம் தனது ஆதிக்க முகத்தைக் காட்டியது. புலிகள் சாதியத்தை எப்படி எதிர்கொண்டதாக நினைக்கிறீர்கள்?    ஷோபாசக்தி: ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றிலேயே வெள்ளாளர்கள் அல்லாத ஒரு தலைமையாக உருவாகி ஒரு உடைப்பை ஏற்படுத்திய இயக்கம் புலிகள் இயக்கம்தான். எனது ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ என்ற கட்டுரையில் இதை விரிவாகப் பேசியுள்ளேன். புலிகள் இயக்கத்தில் குறிப்பிட்ட காலம் செயற்பட்டவன் என்ற முறையில் இயக்கத்திற்குள் சாதி ஏற்றத்தாழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டதில்லை என்பதையும் என்னால் கூற முடியும். இயக்கத்தில் தனிநபர்கள் சாதிய உணர்வோடு எங்காவது வெளிப்பட்டிருந்தாலும் கூட அதை இயக்கத்தின் பொதுப் பண்பாக வரையறுக்க முடியாது. இயக்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் தலித்துகள் இருந்தார்கள் என்பதும் உண்மையே. புலிகள் குறிப்பிட்ட பகுதிகளில் குடிமைத் தொழில் முறையையும் ஒழித்திருந்தார்கள். இந்த உண்மைகளோடுதான் சாதியும் புலிகளும் என்பது குறித்துப் பேசமுடியும். ஆனால், புலிகள் சாதியொழிப்புப் போராட்டத்தை காத்திரமாகச் சமூகத்தளத்தில் முன்னெடுக்கவில்லை. அந்த முன்னெடுப்புகள் பெரும்பான்மையாயிருக்கும் ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திவிடும் என அவர்கள் கருதினார்கள். இதை அடேல் பாலசிங்கம் தனது சுதந்திர வேட்கை நூலில் ஒப்புக்கொண்டிருப்பதையும் நான் எனது கட்டுரையில் விரிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். சமூகத்தில் சாதிய முரண்கள் எழுந்தபோதெல்லாம் அங்கே எப்படிப் பிரச்சினைகளை ஊத்திமூடி அமைதியைக் கொண்டுவருவது என்றே புலிகள் முயற்சித்தார்களே தவிர அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினரின் பக்கத்தில் நின்று அவர்களின் உரிமைகளிற்காகக் குரல் கொடுத்தார்களில்லை. புலிகளின் ஆட்சிக்காலத்திலேயே வடபுலத்தில் ஏராளமான கோயில்களும் பொது இடங்களும் தலித்துகளிற்கு மூடியே கிடந்தன. இவற்றைத் திறந்துவிடுவதற்கான அதிகாரம் புலிகளிடமிருந்தும் கூட அவர்கள் அதைச் செய்யவில்லை. குறிப்பாக இந்து மதத்திற்கும் சாதிக்குமான உறவுகள் குறித்தெல்லாம் அவர்கள் அக்கறையே காட்டவில்லை. அவர்களே இந்து மரபுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள். புலம்பெயர் நாடுகளில் புலிகள் இந்துக் கோயில்களை நடத்தினார்கள். இந்த அடிப்படையில்தான் புலிகள் மீது நான் விமர்சனங்களை வைத்தேன். நிலவும் சமூக ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளாமலிருப்பது என்பது அந்த ஒடுக்குமுறையைக் காப்பாற்றுவது என்றுதான் பொருள்படும். தமிழீழம் கிடைத்த பின்பு உள்முரண்கள் தீர்க்கப்படும் என்று புலிகள் ஆதரவு அறிவுஜீவிகள் சொன்னதற்கெல்லாம் ஏதாவது பொருளிருக்கிறதா?  மீனா: சாதியத்தின் நச்சு வேர் ஆழப்புதைந்து கிளை பரப்பி இருந்த காலத்திலேயே ‘அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை’, ‘தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்’ ஆகியவை கலகக் கிளர்ச்சிகள் செய்து தங்கள் உரிமைகளை நிலைநாட்டின. இன்றைக்கு தலித்தியம் பெருவலிமை பெற்றிருக்கிறது. இந்த பின்புலத்தில் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் [அய்ரோப்பா] செயற்பாடுகள் எவ்விதமிருக்கின்றன?  ஷோபாசக்தி: சாதியொழிப்புக் குறித்து மேலும் சில உரையாடல்களைத் தொடக்கி வைத்தது என்பதற்கு அப்பால் மேலே நகர முடியாமல் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி ஒரு தேக்கத்தைச் சந்தித்திருக்கிறது. ஒரு சாதியொழிப்பு முன்னணி, சமூகத்தில் இருக்கக் கூடிய சாதிய ஒடுக்குமுறை வடிவங்களை மட்டுமே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டு உயிர்வாழ முடியாது. அது சாதியொழிப்பிற்கான செயற்திட்டங்களை நோக்கி நகர வேண்டும். தலித் மக்களை அமைப்புமயப்படுத்த வேண்டும்.    சாதிய விடுதலை குறித்து நாம் பேசும்போது மற்றைய அடிமைத்தளைகள் குறித்த, குறிப்பாக இனஒடுக்குமுறை குறித்த, கேள்விகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். இந்தக் கேள்விகளை நேர்மையுடன் அணுகாதபோது ஒரு அரசியல் இயக்கத்தின் தேக்கம் தவிர்க்க முடியாததே. எனது அவதானிப்பில் இலங்கை தலித் முன்னணி அரசை அனுசரித்து நின்று ஏதாவது செய்துவிடலாம் என்று கனவு காண்கிறது. 40 வருடங்களிற்கு முன்பு தலித் தலைவர்களான எம்.சி.சுப்பிரமணியம் போன்றவர்கள் அரசோடு இணைந்து செயற்பட்டு தலித் மக்களுக்கான சில நலத்திட்டங்களை பெற்றுக்கொண்டதுபோல இப்போதும் செயற்படலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். எம்.சி.சுப்பிரமணியம் தன்னுடைய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பின்பலத்தோடு அரசோடு பேரம் பேசியவர். அப்போதைய அரசின் அமைச்சரவையில் கம்யூனிஸ்டுகளும் பங்கெடுத்திருந்தார்கள். கொல்வின்.ஆர்.டி.சில்வா, என்.எம்.பெரேரா, பீட்டர்  கெனமன் போன்ற இடதுசாரி நட்சத்திரங்கள் அரசின் போக்கைத் தீர்மானிக்கக் கூடியதாயிருந்த காலமது. ஆனால், இன்று அரசுப் பொறுப்பிலிருப்பவர்கள் அப்பட்டமான தரகு முதலாளிய கொள்ளைக்காரர்களும் இனப் படுகொலைக்காரர்களுமே என்பதை தலித் முன்னணி புரிந்துகொண்டு, தனது செயற்திட்டங்களை வகுக்காதவரை இந்தத் தேக்கத்திலிருந்து அதனால் வெளியே வரமுடியாது என்றே கருதுகிறேன்.   மீனா: நீங்கள் இலங்கை அரசின் உளவாளியென்றும், அரசிடமிருந்து பணம் பெறுகிறீர்கள் என்றும், தமிழகத்துப் பத்திரிகையாளர்களிடையே இலங்கை அரசிற்காக ஆள்பிடிக்கிறீர்கள் என்றும் தொடர்ந்து ‘கீற்று‘ இணையத்தளத்தில் குற்றம் சாட்டப்படுகிறீர்களே?  ஷோபாசக்தி: இத்தகைய ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளாலும் அவதூறுகளாலும்  எதையும் சாதித்துவிட முடியாது. இந்தப் புறணி பேசும் கூட்டத்தால் என்னிலிருந்து ஒரு மயிரைக் கூட உதிர்த்துவிட முடியாது.    மீனா: உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் பதில் சொல்லாமல் இருப்பது அந்த விமர்சனங்களை உண்மை என்று ஆக்கிவிடாதா?  ஷோபாசக்தி: நான் பொதுவிவாதங்களில் பங்கெடுக்க மறுப்பவனல்ல. என்னுடைய எழுத்தின் பெரும்பகுதி எதிர்வினைகளிலும் விவாதங்களிலும் பதில்களிலுமே செலவிடப்பட்டிருக்கிறது. எத்தகைய மாறுபட்ட கருத்துள்ளவருடனும், எனக்கு முற்று முழுதான எதிர் அரசியல் நிலைபாடுகளை உடையவருடனும் கூட நான் உரையாடவோ, விவாதிக்கவோ பின்நின்றதில்லை. அண்மையில் கூட ‘வடலி’ பதிப்பகம் தோழர்களின் ஏற்பாட்டில் தோழர்.தியாகுவுடன் மூன்று மணிநேரங்கள் ஈழத்து அரசியல் குறித்து விரிவாக விவாதித்திருந்தேன். அந்த உரையாடல் ஒரு நூலாக வடலி பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கிறது. ஆனால் உளவாளி, பணம் வாங்குகிறான் என்று புறணி பேசுபவர்களுடன் எல்லாம் என்னால் விவாதிக்க முடியாது. இத்தகையை இழிவான குற்றச்சாட்டுகளைப் பேசும்போது ஆதாரங்களுடன் பேசவேண்டும் என்ற யோக்கியமோ, ஆதாரமற்ற அவதூறுகளை இணையத்தில் அனுமதிக்கக் கூடாது என்ற கடப்பாடு இல்லாதவர்களிடமோ நான் எதை விவாதிக்க முடியும்.    என்னுடைய இத்தனை வருட காலத்து எழுத்தில், பேச்சில் இலங்கை அரசுக்கோ, இந்திய அரசுக்கோ ஆதரவான ஒரு வார்த்தையைக் கூட இந்தப் புறணி பேசும் கூட்டத்தால் காட்ட முடியாது. கடந்த பத்து வருடங்களில் இலங்கை அரச பயங்கரவாதத்தையும் யுத்தத்தையும் எதிர்த்து நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் உரைச் சித்திரங்களாகவும் என்னளவிற்கு இலக்கியத்தில் பதிவு செய்தவர்களும் யாருமில்லை. அதே தருணத்தில் நான் புலிகளையும் தமிழ்த் தேசிய வெறியையும் கடுமையாக விமர்சித்து எழுதும்போது அதை எதிர்கொள்ளத் திராணியோ, கருத்துப்பலமோ, தார்மீகமோ அற்றவர்கள் என்னை அரச அதரவாளன் என்று நியாயமற்ற முறையில் தீர்ப்பிடுவதன் மூலமே என்னுடைய புலிகளின் மீதான விமர்சனத்தை எதிர்கொள்ள முயலுகிறார்கள்.   மிகவும் நெருக்கிப் பிடித்து விவாதிக்கும்போது அவர்கள் தாங்கள் புலிகளை விமர்சனத்துடன் ஆதரிப்பதாகச் சொல்லி மழுப்புவதுமுண்டு. ஆனால், புலிகளைப் போன்ற வலதுசாரி அரசியல் சக்தியையும் பாசிஸ்டுகளையும் என்னால் விமர்சனத்தோடு என்றாலும் கூட ஆதரிக்க முடியாது. அண்மையில் ஒரு கட்டுரையாளர் குறிப்பிட்டது போல, பிரபாகரன் தான் இறப்பதற்குத் தயாராயிருந்த ஒரே காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்களைத் தன்னுடன் தடுத்து வைத்திருந்து கொல்லக் கொடுத்ததையெல்லாம், தப்பியோடி வந்த மக்களைச் சுட்டுக் கொன்றதையெல்லாம் விமர்சனத்துடன் ஆதரிக்குமளவிற்கு நான் கொடூரமானவனோ, அயோக்கியனோ கிடையாது.   இந்த நேர்காணல் வெளியானதும் கூட என்னை இலங்கை அரசின் ஆதரவாளன் என்றுதான் அவர்கள் எழுதப் போகிறார்கள். இந்த நேர்காணலில் நான் புலிகள் குறித்துச் சொல்வது மட்டும்தான் அவர்களது பிரச்சினையாயிருக்கும். என்னிடம் பணமோ, சாராயமோ பெற்றுக்கொண்டு என்னை நேர்காணல் செய்து பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறீர்கள் என்ற அவமானத்தை நீங்களும் சந்திக்க நேரிடும்.   மீனா: நீங்கள், உங்களை இலங்கைக் குடிமகன் என்று ஒரு கட்டுரையில் சொன்னதுகூட இங்கே சர்ச்சையாக்கப்பட்டது…  ஷோபாசக்தி: பா.செயப்பிரகாசம் தான் வழக்கம் போலவே ‘நொள்ள’ கண்டுபிடிந்திருந்தார். நான் என்னை இலங்கைக் குடிமகன் என்று அழைத்துக்கொள்ளாமல் பிரஞ்சுக் குடிமகனென்றா அழைத்துக்கொள்ள முடியும்?    செயப்பிரகாசம் தன்னை இந்தியக் குடிமகன் இல்லை என்று சொல்வது அவரின் உரிமை. ஆனால், நான் என்னை இலங்கைக் குடிமகன் என்று சொல்வதைக் கேள்வி கேட்பதற்கு அவருக்கு உரிமை கிடையாது. இலங்கை என்னுடைய நாடு. எனக்கு அந்த நாட்டில் ஒரு குடிமகனுக்குரிய எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஆனால், அந்த உரிமைகள் எனக்கு இலங்கை அரசால் மறுக்கப்பட்டிருப்பதற்காக நான் என்னுடைய உரிமைகளை விட்டுக்கொடுத்திட முடியாது. என்னை இலங்கைக் குடிமகன் இல்லையென்று சொல்ல ராஜபக்சேவிற்கே உரிமை கிடையாது என்றபோது பா. செயப்பிரகாசத்திற்கு கேள்வி கேட்க எங்கிருந்து உரிமை வந்தது?   பா.செயப்பிரகாசம், தன்னை ஒரு சர்வதேச மனிதனாக உணருகிறேன் என்கிறார். அவரிடம் இந்தியக் கடவுச் சீட்டோ, அவருக்கு இந்திய அரசு இயந்திரத்துடன் வேறெந்தக் கொடுக்கல் வாங்கலோ இல்லாதிருக்கலாம். என்னுடைய நிலையும் அவரைப் போன்றதுதான். எனக்கும் இலங்கை அரசுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் கிடையாது; என்னிடம் இலங்கைக் கடவுச் சீட்டும் கிடையாது; பிரஞ்சுக் கடவுச் சீட்டும் கிடையாது. அகதிகளிற்கான பயணப் பத்திரம்தான் வைத்திருக்கிறேன். என்னுடைய தேசிய இனம் இலங்கை அகதி என்றுதான் எல்லா விமான நிலையங்களிலும் அலுவலகங்களிலும் தூதரகங்களிலும் பதிவுசெய்யப்படுகிறது. நான், செயப்பிரகாசம் போல குடியுரிமையை விரும்பித் துறந்தவனல்ல. அது என்னிடமிருந்து பிடுங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மறுத்தாலும் என்னுடைய குடியுரிமையை விட்டுக்கொடுக்க நான் தயாரில்லை.   மீனா: ‘இந்திய அமைதிப்படை எங்களுக்கு ஆதரவாகத்தான் வந்தது. மாகாண சுயாட்சி அமைக்க வேண்டும் என்று வந்தது. நல்ல அதிகாரம் உள்ள சுயாட்சியாக இருந்தும் பிரபாகரன் அதை விரும்பவில்லை’ என்று கருணா ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இதன் பின்புலம் என்ன?  ஷோபாசக்தி: கருணா அரசாங்கத்தின் அங்கம். இலங்கை அரசின் குரலில் தான் இப்படி பேசி இருக்கிறார். மக்களுக்கு சொல்லொணா துயரங்களைக் கொடுத்தும், பாலியல் வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டும் மூன்று வருடங்களுக்குள் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்கள் இலங்கை அரசு இத்தனை வருடங்கள் செய்ததற்குக் குறைந்ததில்லை. அமைதிப்படை, புலிகளையும் அழிக்கக் கருதியே தொழிற்பட்டது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் ஆளும் வர்க்க நலன் தான் கருத்தில் கொள்ளப்பட்டதே தவிர, மக்களின் நலன் அல்ல. கருணாவின் குரல் தமிழர்களின் குரல் கிடையாது. அது இலங்கை அரசாங்கத்தின் குரல்    மீனா: ஆனால், இப்பொழுதும் இந்தியா மீதான நம்பிக்கை சில அறிவுஜீவிகளால் வளர்த்தெடுக்கப்படுகிறதே?    ஷோபாசக்தி: இந்திராகாந்தியின் காலந்தொட்டே இந்திய அரசு ஈழப்போராளிகளை இலங்கை அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் அமைப்புகளாக வைத்திருந்து, இலங்கை அரசைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்பியதே அல்லாமல், அது தனிநாட்டுக் கோரிக்கைக்கு எப்போதும் ஆதரவாயிருக்கவில்லை. இந்திய அரசின் அழுத்தங்களிற்குப் புலிகள் பணிய மறுத்தபோது அது போராகவும் வெடித்து, இந்திய அமைதிப்படை ஈழத்து மக்களைக் கொன்றும் குவித்தது. இலங்கை அரசு முற்றுமுழுதாக இந்தியாவிற்கு அடிபணிந்தபோது அது இலங்கை அரசிற்காக ஒரு போரையும் வெற்றிகரமாக நடத்திக் கொடுத்திருக்கிறது. அந்த வெற்றிக்கான விலையை இந்தியா இனித்தான் இலங்கை அரசிடம் கேட்கயிருக்கிறது. முழு இலங்கையும் இந்தியப் பெருமுதலாளிகளின் காலனியாவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.    ஈழத்தமிழர்கள், இந்திய அரசின் நண்பர்கள்; ஈழம் அமைவதுதான் இந்தியாவிற்குப் பாதுகாப்பு; இந்தியா சிதறாமல் இருப்பதற்கு இந்திய அரசுக்கு ஈழத்தமிழர்களை விட்டால் வேறு மார்க்கமில்லை என்றெல்லாம் கவிஞர் கி.பி.அரவிந்தன் அண்மையில் ஒரு இதழில் சொல்லியிருப்பதைப் படித்திருப்பீர்கள். இது அவருடைய கருத்து மட்டுமல்ல. புலிகள் ஆதரவாளர்களில் பலர் இப்படித்தான் சொல்லி வருகிறார்கள். இவர்கள் பிராந்திய வல்லரசு என்னும் இந்தியாவின் ஆக்கிரமிப்புப் பாத்திரத்தைப் புரிந்துகொள்ளாமல் இதைப் பேசவில்லை. காஷ்மீரும் வடகிழக்கு மாநிலங்களும் இந்தியவிலிருந்து சிதறினால் இவர்கள் எதற்குக் கவலைப்பட வேண்டும். இந்திய வல்லரசைப் பாதுகாப்பதா ஈழத் தமிழர்களின் வேலை? இதென்ன கோணல் கதை!   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.விற்குப் பரிந்து பேசியது, சங்கராச்சாரியைச் சந்தித்து ஆசி பெற்றது, கோவையில் இந்து முன்னணியினரின் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஈழத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள் என சிவாஜிலிங்கம் எம்.பி. பேசியது, எல்லாவற்றையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்திய மத்திய அரசை அதன் முதலாளிய இந்துத்துவ ஆதிக்க சாதிப் பண்புகளுடன் நாம் புரிந்துகொள்ளும்போது இந்திய அரசிற்கு ஈழத்தமிழர்கள் நண்பர்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. இந்திய அரசும் எக்காலத்திலும் ஈழத்தவர்களிற்கு நண்பனாய் இருக்கப் போவதும் கிடையாது   மீனா: தமிழீழம் சாத்தியமில்லை என்று நீங்கள் சொன்னதையும் கி.பி. அரவிந்தன் விமர்சித்திருக்கிறாரே?    ஷோபாசக்தி: என்னத்த விமர்சித்தார்! “நரிகள் ஊளையிடுவதால் சூரியன் மறைந்துவிடாது” என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் ஒரு அரசியல் விமர்சனமா? தமிழீழம் சாத்தியமெனில் அதைத் தடுக்க நான் யார்? அதற்கு எனக்கு என்ன சக்தியிருக்கிறது. இன்றைய இலங்கை, இந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு நான் சாத்தியமில்லை என்றேன். தமிழீழம் சாத்தியம் என நம்பும் அரவிந்தன் அதற்கான தருக்கங்களை முன்வைத்துத் தனது கருத்தை நிறுவவேண்டும். அதைவிடுத்து இந்த நரி, நாய் உவமையெல்லாம் பேசி இன்னும் இன்னும் மக்களை ஏமாற்றலாமென்றும், கொல்லக் கொடுக்கலாம் என்றும் அவர் கருதக்கூடாது.    மீனா: ஈழத் தமிழர்களிற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழும் குரல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?  ஷோபாசக்தி: நன்றியுடன் பார்க்கிறேன். ஆனால், மனிதாபினம், இனவுணர்வு இவற்றின் அடிப்படையில் எழுந்த குரல்கள் அரசியல்ரீதியாகச் சரியாக ஒன்றிணைக்கப்படவில்லை. அவ்வாறு ஒன்றிணைந்த சில தருணங்களில் அவர்கள் தவறான தலைமைகளால் வழிநடத்தப்பட்டார்கள். ஈழம் கிடைப்பதற்கு ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போடுங்கள் என்றளவிற்குத்தான் அந்தத் தலைமைகளின் அரசியல் யோக்கியதையும் இருந்தது. வெட்கமாயில்லையா?    ஈழத்து மக்களிற்கு ஆதரவாய் எழுந்த குரல்களை ஒரே மாதிரி மதிப்பிடுவதை நான் என்றைக்குமே செய்யப் போவதில்லை. வெறும் புலி ஆதரவாளர்களிடமிருந்தும் புலி ரசிகர்களிடமிருந்தும் விலகி நின்று ஈழத் தமிழ் மக்களிற்காகப் போராடிய சக்திகளும் தனிநபர்களும் இருக்கிறார்கள். அந்தக் குரல்கள் எங்களின் பாடுகளின் பொருட்டு இன்னும் வலுக்க வேண்டும். இந்தியாவில் இவர்கள்தான் ஈழத்துத் தமிழர்களின் நட்புச் சக்திகளே தவிர, கி.பி.அரவிந்தன் சொன்னது மாதிரி இந்திய அரசு இயந்திரமல்ல.   மீனா: புலிகளே தங்கள் தலைமையின் இழப்பை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், “பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார். மீளெழுச்சி கொண்டு அவர் தலைமையில் போராடுவோம்“ என்கிறார் பழ.நெடுமாறன்; “ஐந்தாம்கட்ட ஈழப்போர் வெடிக்கும், அது பிரபாகரன் தலைமையில் நடக்கும்“ என்கிறார் சீமான். இவையெல்லாம்…?    ஷோபாசக்தி: இது அடுத்தவனைச் சாகக் கொடுத்துவிட்டு அந்தப் பிணம் எரியும் நெருப்பில் வெளிச்சம் பெறவிரும்பும் பேச்சு. உருத்திரகுமாரன் போன்றவர்களே ஆயுதப் போராட்டம் குறித்துப் பேசாமல் வேறு சாத்தியங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, இவர்கள் அய்ந்தாம் கட்ட ஈழப்போர் என்று பேசுவதையெல்லாம் யார் நம்பப் போகிறார்கள்? யார் நம்பினாலும், ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பிரபாகரன் வந்து படை நடத்துவார் என்று இன்னமும் பேசிக்கொண்டிருக்கும் பொய்யர்களின் பேச்சுக்கெல்லாம் பெறுமதி ஏதுமில்லை. ‘உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும்’ என்றொரு பழமொழி ஈழத்தில் உண்டு    மீனா: தமிழர்கள், தலித்துகள், இஸ்லாமியர்கள், மலையக மக்கள் என சகலருக்கும் ஏற்புடைய அரசியல் தீர்வு அமைய வேண்டுமானால் அது எப்படியிருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?  ஷோபாசக்தி: பிரச்சினை என்று இருந்தால் அதற்கு கண்டிப்பாக எங்கேயோ ஒரு தீர்வும் ஏற்கெனவே இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. இப்போது முன்மொழியப்படும் தீர்வுகள் குறித்தும், சம்மந்தப்பட்ட தரப்புகள் கூடிப் பேசித்தான், சமரசங்களும் விட்டுக்கொடுப்புகளும் மூலம்தான் அமைதிக்கான பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். அதன் மூலம்தான் ஒரு சாத்தியமான தீர்வை வடிவமைக்க முடியும். ஆனால், இன்றைய ராஜபக்சே அரசு தீர்வு குறித்துப் பேசவே மறுக்கிறது. தீர்வுக்குப் புலிகள் சம்மதிக்கவில்லை என்று இவ்வளவு காலமாக இருந்த அரசுகள் சொல்லிவந்தன. அதில் உண்மையும் இல்லாமலில்லை. ஆனால், இப்போது ஒரு தீர்வை முன்வைப்பதில் அரசுக்கு என்ன தடையிருக்கிறது? ஆனால், ராஜபக்சே அடுத்த ஜனாதிபதி தேர்தலிற்குப் பின்புதான் தீர்வு குறித்தெல்லாம் பேச முடியும் என்கிறார். இந்த பொம்மை மகாணசபை ஏற்பாட்டுடனேயே திருப்தியடைய தமிழர்கள் நிர்பந்திக்கப்படுவது மட்டும்தான் இனி நடக்கயிருக்கிறது.  இலங்கையில் இன அடையாளங்களுடன் அரசியல் கட்சிகள் இயங்குவதைத் தடை செய்யும் சட்டமொன்றைக் கொண்டுவர இலங்கை அரசு அண்மையில் முயன்றது. நீதிமன்றம் அந்த முயற்சிக்கு இப்போது தடைபோட்டிருக்கிறது. எனினும், அரசு சிறுபான்மை இனங்களின் அரசியலுக்கு முடிவுகட்டி அவற்றின் தனித்துவத்தை நீர்த்துப்போகச் செய்யவே முயற்சிக்கிறது. நாடு முழுவதையும் பேரினவாதக் கட்சிகளே பிரதிநிதித்துவப்படுத்தும் திட்டத்தை நோக்கியே இலங்கை அரசு நகர்கிறது. ராஜபக்சேவுடன் கூட்டுச் சேர்ந்த கட்சிகள்தான் கிழக்கில் மகாண சபையையும் யாழ் நகரசபையையும் கைப்பற்றியிருக்கின்றன.   இப்போதைக்குத் தீர்வென்றெல்லாம் ஏதுமில்லை. அதை ஏதாவது ஒரு தரப்பு மட்டும் முடிவுசெய்துவிட முடியாது. ஒரு தீர்வுத் திட்டத்திற்கு வருமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய அரசியல் சக்திகள் இப்போது தமிழர்களிடம் கிடையாது.   மீனா: புலிகள் அவ்வாறான சக்திகளாக முன்பு இருந்தார்களல்லவா?  ஷோபாசக்தி: நிச்சயமாக இருந்தார்கள். ஆனால், பல்லாயிரம் உயிர்களைப் பலிகொடுத்து அதன்மேல் கட்டப்பட்ட அந்தச் சக்தியைப் புலிகள் தவறாக விரயம் செய்தார்கள். அவர்களின் இராணுவவாத அரசியலும் சர்வதேசச் அரசியல் சூழல்களைப் புரிந்துகொள்ள அவர்கள் மறுத்ததும்தான், இறுதி நேரத்தில் புலிகள் யுத்த நிறுத்தத்திற்குத் தயார் என்று அறிவித்தபோது கோத்தபாய ராஜபக்சே இது நல்ல நகைச்சுவை என்று கேலி பேசி அந்தக் கோரிக்கையை நிராகரிக்குமளவிற்குப் புலிகளைக் கொண்டுவந்து நிறுத்தியது; இறுதியில் அவர்களை அழித்தும் போட்டது.  புலிகள் வழியிலான அரசியல் வெறும் தோல்வி அரசியல் மட்டுமல்ல; தார்மீகம் அற்ற அரசியலும் என்பதைக் காலம் நிரூபித்துள்ளது. வெறுமனே தமிழ்த் தேசிய உணர்வில் நின்று பேசாமல், இன்றைய சர்வதேச அரசியல் சூழல்களையும் இலங்கைக்கும் அந்நிய வல்லாதிக்கவாதிகளுக்குமான தொடர்பையும், அதில் இருக்கும் பொருளியல் காரணிகளையும் விளங்கிக்கொள்ள முடிந்தவர்களால் மட்டுமே இனித் தமிழர்களிற்குச் சரியான அரசியல் தலைமையை வழங்க முடியும். அரச பயங்கரவாதத்திற்கு எதிரான, விட்டுக்கொடுக்காத எதிர்ப்புணர்வும் சனநாயக அரசியல் நெறிகளின் மீது நம்பிக்கையும் கொண்ட ஒரு அரசியல் போக்கு வெற்றிடத்திலிருந்து உருவாக வேண்டியிருக்கிறது   மீனா: ‘வடக்கின் வசந்தம்’ தமிழரின் வாழ்வில் வீசுமா?  ஷோபாசக்தி: அரசியல் தீர்வினை வழங்கி ராணுவத்தை மீளப்பெற்றுக்கொள்வதன் மூலம் தான் வசந்தம் வருமே தவிர, இலங்கை அரச படைகளை தமிழர்களின் குடியிருப்புகளில் செருகிக்கொண்டு போவதன் மூலம் வராது. மாகாண சபை போன்ற அற்ப சொற்ப சலுகைகளுடன் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை முடக்குவதற்கான கவர்ச்சி கண்துடைப்பே இந்த ‘வடக்கின் வசந்தம்’.    மீனா: ‘வசந்தம்’ இல்லையென்றாலும், போர்ப் பீதிகளற்ற வாழ்வாவது சாத்தியமென்றால் உங்கள் கிராமத்திற்குத் திரும்புவீர்களா?  ஷோபாசக்தி: இரண்டு அல்லது மூன்று வருடங்களில் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தான் எனது கிராமத்திலிருந்து கிளம்பினேன். இருபது வருடங்களாகிவிட்டன. அய்ரோப்பாவில் அகதி வாழ்க்கை மிகவும் கசப்பான வாழ்க்கை என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். எனது கிராமத்தின் மீது எனக்குப் பெரிய பற்றிருக்கிறது என்பதுமில்லை. ஆனால், ஈழப் போராட்டத்தில் பங்கெடுத்தவன் என்ற முறையிலும் ஒரு இடதுசாரி என்ற வகையிலும் எனது எழுத்தும் அரசியலும் வாழ்வும் முற்று முழுதாக ஈழத்துடன்தான் பிணைந்திருக்கிறது. ஊருக்குப் போக வேண்டும்; அதற்கான சூழலும் தருணமும் விரைவில் எனக்குக் கிட்டவேண்டுமென்று என்னை வாழ்த்துங்கள் மீனா!    மீனா: நிச்சயமாக ஷோபா! உங்களுக்கும் உங்களைப் போலவே காத்துக்கொண்டிருக்கும் அத்தனை ஈழத் தமிழர்களுக்கும் அத்தருணம் விரைவில் கிடைக்க எனது உளமார்ந்த வாழ்த்துகள்!    ‘அம்ருதா‘ (நவம்பர் 2009) இதழில் வெளியாகிய நேர்காணல்                  10. அறுபத்தைந்து கட்சிகளுக்கும் அவர்களே தலைவர்கள்   நேர்காணல்:அ.தேவதாசன்   தோழர் தேவதாசன் 1956ல் வேலணைக் கிராமத்தின் தலித் குறிச்சியொன்றில் பிறந்தவர். கிராமத்து நாடகக் கலைஞனான தேவதாசன் ஓவியம், பாடல் போன்ற துறைகளிலும் தடம் பதித்தவர். 1983ல் அய்ரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த தேவதாசன் முதலில் ‘தமிழீழ விடுதலைப் பேரவை’யிலும் பின்னர் ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி’யிலும் இணைந்திருந்தவர். தொண்ணூறுகளின் மத்தியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலிருந்து விலகிக்கொண்டார். புகலிடத்தில் சினிமா, நாடகம், இலக்கியச் சந்திப்புகள் எனத் தொடர்ந்து செயற்பட்ட தேவதாசன் ‘புன்னகை’ என்றாரு சிற்றிதழையும் வெளியிட்டார். இன்று தலித் விடுதலை அரசியலில் இயங்கிக்கொண்டிருக்கும் தேவதாசன் ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யின் தலைவராகவும் இலங்கையில் எழுபது வருட போராட்ட வரலாற்றைக்கொண்ட தலித் விடுதலை இயக்கமாகிய ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யின் வெளிநாட்டுத் தொடர்பாளராகவும் செயற்படுகிறார். எதிர்வரும் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் சுயேடச்சைக் குழுவாக ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ போட்டியிடுவது குறித்தும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் அரசியல் இயங்குதிசை குறித்தும் தோழர் தேவதாசனிடம் உரையாடினேன். இந்த உரையாடல் 23 மார்ச் பாரிஸில் பதிவு செய்யப்பட்டது. -ஷோபாசக்தி    ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யின் தேர்தல் அறிக்கை மிக எளிமையாக எழுதப்பட்ட ஒரு விண்ணப்பம் போலவே இருக்கிறது. இன்றைய தலித் அரசியலின் இயங்குதிசையையும் சமூகநீதிக் கோரிக்கைகளையும் மகாசபை புரிந்து கொண்டதற்கான தடயங்கள் அறிக்கையில் இல்லையே?  ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யும் ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யும் அரசியல் வழிமுறைகளில் வேறுவேறானவை என்பதை நீங்கள் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். சாதி ஒழிப்புத்தான் இரு அமைப்புகளின் பொது இலக்கு எனினும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் அரசியல் அம்பேத்கரியலிலும் பெரியாரியலிலும் வேர்கொண்டது. இந்துமத அழிப்பும், சமூகநீதியும், கலாசார புரட்சியும் அதன் முதன்மைப் போராட்ட இலக்குகள். ஆனால் சிறுபான்மைத் தமிழர் மகாசபை மரபு மார்க்ஸியத்தில் தனது வேரைக் கொண்டுள்ளது. சாதியொழிப்புக்கு மரபு மார்க்ஸியத்தால் வழங்கப்பட்ட தீர்வுகளை மகாசபை கடந்து இன்றைய தலித் அரசியலை நோக்கி வராததற்கான நிலையை இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக நிகழ்ந்த யுத்தமும் யுத்தம் சார்ந்த அரசியலையும் வைத்தே நாம் புரிந்துகொள்ள முடியும்.   ஆயுதம் தாங்கிய தமிழ் விடுதலை இயக்கங்கள் தலையெடுத்ததற்குப் பின்னாக ஈழத்து அரசியலில் சனநாய மறுப்பு எனபது சர்வ சாதாரணமாகிப் போனது. ஆயுதம் தாங்கிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களைத் தவிர வேறெந்த அமைப்புகளும் அங்கே இயங்க முடியாத நிலையிருந்தது. சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் அப்போதைய புலிகளின் தளபதி கிட்டுவால் தடைசெய்யப்பட்டது. தோழர் எம்.சி.சுப்பிரமணியத்தின் வீட்டின் ஒருபகுதியில் இயங்கிக் கொண்டிருந்த மகாசபையின் அலுவலகம் புலிகளால் கொள்ளையிடப்பட்டு மகாசபையின் பெறுமதிமிக்க ஆவணங்கள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டன. மூளையற்ற துப்பாக்கிகளின் முன்பு அந்தச் சாதியொழிப்பு இயக்கம் மவுனமாக்கப்பட்டது.   அதன்பின்பு ஈழத்தில் சுதந்திரமான கருத்துப் பரிமாறல்களை மட்டுமல்ல சுதந்திர வாசிப்பைக் கூடப் புலிகள் கட்டுப்படுத்தத் தொடங்கினார்கள். கடந்த முப்பது வருடங்களில் உலகளாவியரீதியில் மார்க்ஸியத்திலும் தலித் அரசியலிலும் நிகழ்ந்த மாற்றங்களை புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் எங்களைப் போன்றவர்கள் பயில்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. குறிப்பாக அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டையொட்டித் தமிழகத்தில் புதிய அலையாய் எழுந்த தலித் அரசியல் முன்னெடுப்புகளிலிருந்து நாங்கள் உத்வேகத்தைப் பெற்றோம். இதற்கெல்லாம் ஈழத்தில் வாய்ப்பிருக்கவில்லை. அங்கே அன்றாடம் உயிர் வாழ்வதற்கான போராட்டம்தான் அவர்களிற்கான அரசியலாயிருந்தது.   மே பதினெட்டுக்குப் பிறகு புலிகளின் ஆதிக்கம் தகர்ந்த சூழலில் மீண்டும் மகாசபை இயங்க முற்பட்டது. கடந்த நவம்பர் மாதம் மகாசபை மீண்டும் புதிதாகச் சீரமைக்கப்பட்டு அமைப்பு வடிவமாக்கப்பட்டது. மகாசபையின் உறுப்பினர்கள் தங்களது முன்னைய போராட்ட அனுபவங்கள் என்ற பலத்துடனும் யுத்தத்தால் சிதைக்கப்பட்ட அரசியல் கலாசாரத்தின் சுமையுடனும்தான் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள்.   சனநாயகம் வேண்டும் என வாயளவில் பேசிக்கொண்டிருந்தால் போதாது. சனநாயகச் செயற்பாடுகளில் பங்கெடுத்து சனநாயத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு. இன்றிருக்கும் சமூக அமைப்பில் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க சனநாயகரீதியிலான தேர்தலைவிட வேறெந்த வடிவமும் லாயக்கற்றவை என்று கருதுகிறோம். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மைச் சொல்லிக்கொள்ளும் பெரும் கட்சிகள் தலித்துகளிற்கு உரிய பிரதிநிதித்துவத்தை தங்களது வேட்பாளர்கள் தெரிவில் வழங்குவதேயில்லை. ஒரு இராசலிங்கம், ஒரு சிவநேசன், இப்போது ஒரு இராஜேந்திரம் என்றளவிலேயே அவர்கள் தலித் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள். இன்று யாழ் மாவட்ட சனத்தொகையில் தலித்துகள் 40 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரேயொரு தலித் வேட்பாளரையே நிறுத்தியிருக்கிறது.   எனவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்ச்சைக் குழுவாகப் போட்டியிட சிறுபானமைத் தமிழர் மகாசபை முடிவெடுத்தது. இங்கே சில ஆதிக்க சாதி அரசியல் விமர்சகர்கள் ‘ஏற்கனவே அறுபத்தைந்து கட்சியிருக்கிறது நீங்கள் எதற்குப் புதிதாகக் கட்சி தொடங்குகிறீர்கள்?’ எனக் கேட்கிறார்கள். அறுபத்தைந்து கட்சியிருந்தாலும் அறுபத்தைந்துக்கும் அவர்களே தலைவர்களாகயிருக்கிறார்கள். அறுபத்தாறாவது கட்சியாவது தலித்துகளின் தலைமையில் இருக்கட்டும். தலித் மக்களின் நலனை முதன்மைப்படுத்திச் செயற்படட்டும்.   EPRLF, EPDP ஆகிய இரு கட்சிகளும் தலித் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்களல்லவா?    மிக்க நன்றி. ஆனால் அந்தக் கட்சிகளது முதன்மையான இலக்கு சாதியொழிப்போ தலித் மக்களின் முன்னேற்றமோ கிடையாது. அதற்காக அவர்களிடம் எந்தக் கோட்பாட்டுப் புரிதலோ ஆழமான வேலைத் திட்டமோ கிடையாது. எனவேதான் தலித் மக்களின் முன்னேற்றத்தையும் சாதியொழிப்பையும் முதன்மை இலக்குகளாக வரித்துக்கொண்டிருக்கும் சிறுபான்மைத் தமிழர் மகாசபை தனித்துநின்று தேர்தலைச் சந்திக்கிறது.   சாதியொழிப்பை பாராளுமன்ற அரசியல் ஊடாகச் செய்துவிடலாம் எனக் கருதுகிறீர்களா?    அவ்வாறான மூடநம்பிக்கையை எங்களைப் போன்ற பகுத்தறிவு இயக்கத்திடம் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. நாடாளுமன்றத்திற்குள் நுழைவதன் மூலம் எங்களது பிரச்சினைகளை நாடு தழுவிய அளவில் எடுத்துச் செல்லமுடியும் என எதிர்பார்க்கிறோம். நாடாளுமன்றப் பிரதிநிதிகள் மூலம் தலித் மக்களின் நலனிற்கான புதிய திட்டங்களை வரைந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். அரசு தொகுதி மேம்பாட்டுக்கு என வழங்கப்படும் நிதி சிந்தாதல் சிதறாமல் மக்கள் நலத் திட்டங்களில் செலவிடப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக நாடாளுமன்ற அதிகாரத்தில் எங்களுக்குரிய பங்கை நாங்கள் கோருகிறோம். நாங்கள் பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் எனச் சொல்லிவிட்டுத் தேர்தல் புறக்கணிப்புச் செய்தால் என்ன நடக்கும்? எல்லா இடங்களையும் ஆதிக்கசாதியினரே கைப்பற்றுவார்கள். இதை அனுமதிக்க இனியும் தலித் மக்கள் தயாரில்லை.   தலித் மக்களை அரசியல்ரீதியாக ஒன்றிணைப்பதற்கு சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் நாடாளுமன்ற நுழைவு உதவலாம் எனக் கருதுகிறீர்களா?    நிச்சயமாக! மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் அவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்து கொடுப்பதும் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான ஆகச் சிறந்த வழி. தத்துவம் கதைப்பதைக் காட்டிலும் செயல்களே மக்களை அணிதிரட்டும் வல்லமையைப் பெற்றவை. எங்களது இந்தத் தேர்தல் அரசியல் முன்னெடுப்புகள் – தேர்தல் வெற்றி தோல்விகளிற்கு அப்பால் – தலித் சமூகத்திற்குள் ஒரு உரையாடலையும் அதன்வழி விழிப்புணர்வையும் தோற்றுவித்திருக்கிறது. எனினும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகமுள்ளது.   ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யை மகிந்த ராஜபக்சதான் தூண்டிவிட்டு நிதியும் வழங்கித் தேர்தல் களத்தில் இறக்கிவிட்டிருப்பதாக ஒரு விமர்சனம் எழுந்துள்ளதே?    அது விமர்சனமல்ல அருவருப்பான வதந்தி. அயோக்கியத்தனத்துடன் ஆதிக்க சாதியினரால் பரப்புரை செய்யப்படும் வதந்தியிது. கணனி மார்க்ஸியவாதிகள் மட்டுமல்லாமல் எங்களைத் தோற்கடிப்பதற்காகத் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ போன்ற ஆதிக்க சாதிக் கட்சியினரும் இவ்வாறான பொய்ச் செய்திகளைப் பரப்புகின்றனர். தமது குற்றச்சாட்டிற்கு ஒரு ஆதாரத்தைத் தன்னும் இந்த வதந்தி மன்னர்களால் வழங்க முடியுமா? ஆனால் இந்தப் பரப்புரைகளை மக்கள் நம்பத் தயாரில்லை. அவர்கள் கம்யூட்டரை நம்புவதைவிட தங்களோடு களத்தில் கூடவேயிருக்கும் தோழர்களைத்தான் நம்புவார்கள். புதிய ஜனநாயக் கட்சியோ, சோசலிச சமத்துவக் கட்சியோ தேர்தலில் நிற்கும்போது எதிர்கொள்ளாத இந்தக் குற்றச்சாட்டை இவர்கள் சிறுபான்மைத் தமிழர் மகாசபை மீது சுமத்துவதை என்னவென்பது. இதை ஆதிக்கசாதித் தந்திரம் அல்லது சாதித் துவேஷம் என்றே சொல்வேன்.   நாங்கள் தேர்தல் செலவுகளுக்கே திண்டாடி விழி பிதுங்கி நிற்கிறோம். இந்த இலட்சணத்தில் எங்களிற்கு ராஜபக்ச பணம் வழங்குகிறார் எனப் பரப்பப்படும் வதந்திக்கு ஒரு துயரமான புன்னகை மட்டுமே எனது பதிலாயிருக்கும். நாங்கள் தேர்தல் செலவுகளிற்கு வெளிநாடுகளில் வாழும் தலித் மக்களிலேயே தங்கி நிற்கிறோம். தலித் அரசியல் மீது அக்கறைகொண்ட தலித் அல்லாதவர்கள் சிலரும் உதவினார்கள்.   எங்களது வேட்பாளர்கள் தொழிலதிபர்களோ நிலப்பிரபுக்களோ கிடையாது. எங்களது பன்னிரெண்டு வேட்பாளர்களிடம் ஒருவரிடம் மட்டுமே கணனி வசதி உள்ளது. எங்களது கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் கட்சி மட்டுமல்ல ஏழைகளின் கட்சியும்தான்.   சிறுபான்மைத் தமிழர் மகாசபை தலித்துகளின் உட்பிரிவுகளையும் வேட்பாளர் தேர்வில் கவனத்தில் எடுத்துள்ளதா?    வேட்பாளர்களை நாங்கள் தேர்வு செய்தோம் என்பதைக் காட்டிலும் வேட்பாளர்களைக் கண்டுபிடித்தோம் என்பதே சரியானது. முதலில் தேர்தலில் நிற்பதற்குப் பலர் தயங்கினார்கள். தொடர்ச்சியான உரையாடல்கள் மூலமே அவர்களை வேட்பாளர்களாக நிற்பதற்குச் சம்மதிக்க வைத்தோம். தலித் சமூகத்தின் உட்பிரிவுச் சாதியினர்கள் எல்லோரையும் முடிந்தளவிற்கு ஒன்றிணைத்துள்ளோம்.   சிறுபான்மைத் தமிழர் மகாசபை அறுபதுகளில் வீரியமாக இயங்கியது போல மறுபடியும் தீவிரமான சாதியொழிப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கச் சாத்தியங்கள் உள்ளனவா?    உண்மையில் இப்போது சிறுபான்மைத் தமிழர் மகாசபை தனது பழைய உறுப்பினர்களுடனேயே இயங்கத் தொடங்கியிருக்கிறது. திரளான இளைஞர்கள் இன்னும் மகாசபைக்குள்ளே வரவில்லை. எனினும் எங்களது இந்தத் தேர்தல் பிரவேசமானது பரந்துபட்ட இளைஞர்களுடன் உரையாடல்களைத் தொடங்குவதற்கு எங்களிற்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. இளைஞர்கள், பெண்கள், மாணவர்களுடைய சக்தி ஒரு போராட்ட அமைப்பின் முதுகெலும்பு.   முன்னைய போராட்ட வழிகளின் போதாமையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். குறிப்பாக சாதியத்தின் மூலவேரான இந்துமதத்தை மகாசபையோ, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமோ தங்களது முதன்மை எதிரியாக அடையாளப்படுத்தவில்லை. இந்துமத எதிர்ப்பு, கலாசார புரட்சி இவை இரண்டையும் முன்னிறுத்தி நாம் நமது இளைஞர்களைத் திரட்டவேண்டியுள்ளது. இன்னொரு பக்கம் பிற்போக்குத் தமிழ்த் தேசிய மாயையிலிருந்தும் அவர்களை விடுவிக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் தலித் பெண்ணிய அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. தலித்துகளிற்கான தொழிற்சங்கங்களை அமைக்க வேண்டியிருக்கிறது. இவை எல்லாவற்றையுமே முப்பது வருடங்களாக அரசியல் கலாசாரமும் சனநாயமும் மறுக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்திற்குள்தான் நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இன்னொருபுறம் தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்குள் சமூகம் அழுந்திக்கொண்டிருக்கிறது. எனினும் நமது கடும் உழைப்பும் தலித் மக்களின் பரம்பரை முதுசொமான போர்க்குணாம்சமும் சிறுபான்மைத் தமிழர் மகாசபையை மறுபடியும் வீரியமான அமைப்பாகக் கட்டியெழுப்பும் என்றே நம்புகிறேன்.   இலங்கையைப் பொறுத்தவரை தலித் என்ற சொல்லே அந்நியமானது என்றொரு விமர்சனம் உள்ளதே?    நீங்கள் ஒன்றைக் கவனித்தீர்கள் என்றால் இலங்கையிலுள்ள மார்க்சியர்கள் கூட பூசாரிக் கூட்டத்தைப் ‘பார்ப்பனர்கள்’ என்று சொல்லாமல் ‘பிராமணர்கள்’ எனச் சொல்வதைக் காணமுடியும். ‘ஏனெனில் பார்ப்பனர்கள் என்ற சொல் இலங்கை வழக்குக் கிடையாது’ என்பார்கள் மார்க்ஸியர்கள்.  அப்படியானால் பிராமணர்கள் என்பது மட்டும் யாழ்ப்பாணத்து வழக்கா? அது வடமொழிதானே. பார்ப்பனர்கள்தான் சுத்தமான தமிழ்ச்சொல். சங்க இலக்கியங்களில் காணப்படும் சொல். பெரியார் பார்ப்பனர்களைப் பிரமாணர்கள் என அழைப்பதை பஞ்சமா பாதகங்களில் ஒன்றாக வரையறுப்பார். ஏனெனில் நாம் அவர்களை பிராமணர் என்று சொன்னால் அது நம்மை நாமே இழிபிறவிகள் என்று ஏற்றுக்கொள்வதாக ஆகிவிடும். எனவே சொற்கள் வடக்கா கிழக்கா என்பதை விடுத்து அதனில் பொதிந்துள்ள அரசியலை அடையாளம் காண்பதே சரியானது.   இங்கே அய்ரோப்பாவில் நாங்கள் முதலிலே தலித் என்று சொன்னபோது அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆனால் இப்போது என்னவானது. தலித் என்ற வார்த்தை சர்வ சாதாரணமாகப் புழக்கத்திற்கு வந்துவிட்டது. ஆனால் அதற்காக நாம் இடைவிடாது போராட வேண்டியிருந்தது. இதே போலத்தான் இலங்கையிலும் அந்தச் சொல் ஏற்றுக்கொள்ளப்படும். இப்போதே ஒருபகுதியினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். மூத்த தலித் போராளியும் படைப்பாளியுமான தோழர் டொமினிக் ஜீவா போன்றவர்கள் தங்களைத் தலித் படைப்பாளிகளாகவே அடையாளப்படுத்துகிறார்கள். தலித் என்ற அடையாளம் தாழ்த்தப்பட்ட சாதியினரை உட்பிரிவுகளைக் கடந்து ஒன்றிணைக்கும் அடையாளம் என்ற புரிதலும் அந்த அடையாளம் பல்வேறு நிலப் பகுதிகளிலும் சிதறிக்கிடக்கும் தாழ்த்தப்பட்டவர்களை ஒன்றிணைக்கும் அடையாளமும் என்ற புரிதல் வரும்போது அனைத்து தலித் மக்களாலும் அந்த அடையாளம் முன்னிறுத்தப்படும்.   தலித் சமூக மேம்பாட்டு முன்னணி ஒரு தேக்கத்தைச் சந்தித்துள்ளதே?    தலித் சமூக மேம்பாட்டு முன்னணி தேர்தல் அரசியல் சார்ந்த கட்சி கிடையாது. அது பெரியாரியலைப் பின்தொடரும் ஒரு சமூக இயக்கம். எல்லாவிதப் புனிதங்களையும் சமூக ஒழுங்குகளையும் பெரியார் சொன்னதுபோல தலைகீழாக்க வேண்டுமென்பது அதன் அரசியல் வழி. அதனாலேயே அது ஒட்டுமொத்த அதிகார சக்திகளால் தனிமைப்படுத்தப்படுகிறது. தலித் முன்னணி ஆரம்பித்தபோது அதைத் தமது அரசியல் விருப்புளுக்கேற்ப வளைத்துக்கொள்ளலாம் என முன்னணிக்கு ஆதரவுக் கரம் நீட்டிய அமைப்புகள் தனிநபர்கள் எல்லோராலும் இப்போது முன்னணி தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக தேர்தலில் நிற்கும் மகாசபைக்கு நாங்கள் ஆதரவை வழங்கியபோது ஆதிக்சாதி அறிவுஜீவிகளும் அமைப்புகளும் எங்கள்மீது அதிருப்தியைச் சொரிந்தார்கள்.   கடந்த சனாதிபதித் தேர்தலில் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி மகிந்த ராஜபக்சவை ஆதரித்ததே?    அந்தத் தேர்தலைப் பொறுத்தவரை அய்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் ராஜபக்சவா அல்லது அய்க்கிய தேசியக் கட்சியால் நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகாவா என்பதுதான் கேள்வி. அய்க்கிய தேசியக் கட்சி பச்சையான முதலாளியக் கட்சி என்பது நீங்கள் அறிந்ததே. அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இடதுசாரியம் பேசும் முதலாளியக் கட்சிகளின் கூட்டுத்தான். எனினும் அய்க்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவது நாட்டுக்கு மிகப்பெரும் தீமையையும் ராஜபக்சவின் வெற்றி மிதமான தீமையையும் கொண்டுவரும் என்ற நிலைப்பாட்டிலிருந்தே நாங்கள் ராஜபக்சவிற்கு வாக்களிக்கச் சொன்னோம். இன்னொருபுறம் வரலாற்றுரீதியாகவே கம்யூனிஸ்டுகளும் தலித்துகளும் சுதந்திரக் கட்சியுடனேயே நின்றிருக்கிறார்கள். தமிழ் முதலாளிகளும் தமிழரசுக் கட்சியும் அய்க்கிய தேசியக் கட்சியுடனேயே நின்றிருக்கிறார்கள். இம்முறையும் அதுதான் நிகழ்ந்தது.   நடந்து முடிந்த இறுதி யுத்த நாட்களில் மட்டும் நாற்பதாயிரம் தமிழ்ப் பொதுமக்களை மகிந்தவின் அரசு கொன்றிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் துல்லியமாகத் தெரிவிக்கின்றன. இன்றுவரை கைதுகளும் கடத்தல்களும் அரசால் செய்யப்படுகின்றன. இவை குறித்தெல்லாம் நீங்கள் பேசுவதில்லையே? நீங்கள் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் விமர்சனங்கள் உள்ளனவே?    நாங்கள் ஒருபோதும் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததில்லை. நாங்கள் யுத்த நிறுத்தத்தையும் போரைப் பேச்சுவார்த்தைகளின் முலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதையுமே வலியுறுத்தினோம். மகிந்த அரசின் படுகொலைகளையும் மனிதவுரிமை மீறல்களையும் நாங்கள் நியாயப்படுத்தவுமில்லை. ஒரு இலங்கைக் குடிமகனாக இலங்கையின் இறையாண்மையில் அக்கறையுள்ளவனாக மகிந்தவின் அரசை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் மனிதவுரிமை என்ற பெயரிலும் அரசு சாரா நிறுவனங்கள் என்ற பெயரிலும் மேற்கு ஏகா திபத்தியங்களின் விருப்புகளிற்காகச் செயற்படுவது வேறு என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இங்கு அரசு சாரா நிறுவனங்கள் என்றெல்லாம் ஏதுமில்லை. எல்லாமே அவற்றிற்கு நிதி வழங்கும் அரசுகள் சார்ந்த நிறுவனங்களே. இந்த நிறுவனங்கள் இலங்கையில் மனிதவுரிமைகள் குறித்துப் பேசுவது இலங்கையின் மக்கள் மீது கொண்ட அக்கறையிலிருந்து வருவதல்ல. தங்களை ஊட்டி வளர்க்கும் மேற்கு அரசுகளின் நலன்களிற்காகவே அவை இலங்கையில் தலையீடு செய்கின்றன. மேற்கு நாடுகளின் எதிர்ப்பாளனாக இருக்கும் மகிந்த ராஜபக்ச மீது மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரை மேற்கு நாடுகளிற்குப் பணிய வைக்கும் முயற்சியையே இந்த அமைப்புகள் செய்து வருகின்றன.   உலகமயமாக்கலின் முழு ஆதரவாளராயும் நாட்டின் பொதுச் சொத்துகளை அந்நிய நிறுவனங்களிற்கு விற்றுத்தள்ளிக்கொண்டிருப்பவருமான மகிந்த ராஜபக்சவை நீங்கள் மேற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்று சொல்வது பொருத்தமாயில்லையே?    நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்? இந்த உலகமயமாக்கல் சூழலில் ஒரு சே குவேராவிற்காக நீங்கள் வேண்டுமானால் காத்திருக்கலாம், ஆனால் நான் நடப்பு நிலவரங்களிலிருந்துதான் பேசுவேன். இந்த உலகமயமாக்கல் சூழலில் முற்று முழுதான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்று நீங்கள் யாரையும் வரையறுத்துக் காட்டிவிட முடியாது. ஆனால் மேற்கு ஏகாதிபத்திய அணி, அதற்கு எதிரான அணி என இரு அணிகள் இருக்கின்றன. அய்க்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலம் முழுதும் இலங்கை மேற்கு ஏகாதிபத்திய ஆதரவு அணியிலிருந்தது. ஆனால் இப்போது இலங்கை மேற்கு ஏகாதிபத்திய நாடுகளை எதிர்க்கும் மூன்றாமுலக நாடுகளின் அணியிலிருக்கிறது. சீனா, இந்தியா, வியட்நாம், லிபியா, ரஷ்யா, கியூபா, வெனிசுலா, பாலஸ்தீனம் இருக்கும் அணியில் இலங்கை இருக்கிறது.   இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக எதை முன்வைக்கிறீர்கள்?    இலங்கையின் அரசியல் சாசனம் திருத்தப்பட்டு அதன் மூலம் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த அதிகாரப் பகிர்வு என்பது சிங்கள முதலாளிகளிடமிருந்து தமிழ் முதலாளிகளுக்கு மாற்றிக்கொடுக்கப்படும் அதிகாரக் கையளிப்பாக இருக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ மற்றைய தமிழ்க் கட்சிகளோ ஒட்டுமொத்தத் தமிழர்களின் பிரதிநிதிகளல்ல. அவர்கள் தமிழ் ஆதிக்க வர்க்கத்தினரின் பிரதிநிதிகள் மட்டுமே. சிங்களவர்களிடமிருந்து அதிகாரம் கைமாற்றப்பட வேண்டும் என்பது ஒரு எளிமையான கூற்று மட்டுமே. ஏனெனில் அதிகாரம் அரசின் கைகளில் மட்டுமே குவிந்திருக்கிறது அல்லாமல் கடைக்கோடி சிங்கள மக்களிடம் அது இருக்கவில்லை. தீவின் ஒடுக்கப்படும் மக்கள் அனைவருக்கும் அதிகாரம் பரவலாக்கம் செய்யப்படும் வகையில் ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். இதை அரசியல் போராட்டத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.   நாடு கடந்த அரசை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா?  இந்த நாடு கடந்த அரசாங்கம் என்ற முனகல் புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழ்த் தேசியவாதிகள் கொள்ளையடிப்பதற்காகக் கண்டுபிடித்த ஒரு திட்டம். அவர்கள் தமிழ்த் தேசியவாதத்தை அணையவிடாமல் காப்பாற்றுவதற்கு இந்தத் திட்டத்தின் மூலம் முயற்சிக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் புலம் பெயர்ந்த மக்களிடம் பணச் சுண்டலை மட்டுமல்லாமல் கேவலமான உணர்வுச் சுரண்டலையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். முன்னைய மாவீரர் தின உரைகளையும் இன்றைய தமிழத் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் அறிக்கைகளையும் பார்த்தீர்களானால் அவை புலம் பெயர்ந்த தமிழ் மக்களையே இலக்காக வைத்துத் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். ஆனால் தலித் சமூக மேம்பாட்டு முன்னணிக்கோ சிறுபான்மைத் தமிழர் மகாசபைக்கோ புலம் பெயர்ந்த மக்களைத் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் ஏதுமில்லை. எங்களது பணிகள் இலங்கையிலிருக்கும் நமது மக்களை மய்யப்படுத்தியே அமைந்திருக்கின்றன. இந்த நாடு கடந்த அரசுக் கூச்சலோ வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்புப் பொறுக்கித்தனமோ பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி இலங்கை அரசின் கையையே வலுப்படுத்தக் கூடியவை. இவற்றைக் காரணம் காட்டியே அவசரகாலச் சட்டம் மேலும் மேலும் நீட்டிக்கப்படும். அரசின் சிறைகளிலிருப்பவர்கள் பாதுகாப்புக் காரணங்கள் என்ற சாட்டின் பேரில் ஆயுள் முழுதும் சிறையில் அழுந்த நேரிடும். இங்கே பூனைக்கு விளையாட்டு, அங்கே சுண்டெலிக்கு உயிர் போகிறது.   இலங்கை அரசின் சிறைகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான புலிகள் நீதிமன்ற விசாரணைகள் ஏதுமின்றித் தடுத்துவைக்கப்பட்டிருப்பது குறித்து?    இப்போது யுத்தம் முடிவடைந்துவிட்டது. குறைந்தபட்சம் புலிகள் அமைப்பில் கட்டாயமாச் சேர்க்கப்பட்டவர்களையாவது அரசு உடனடியாக நிபந்தனையில்லாமல் விடுதலை செய்ய வேண்டும். மற்றவர்களிற்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்து அவர்களின் மறுவாழ்விற்கான வழிகளை அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அரசின் இனவாத நடவடிக்கைகள் இல்லாதிருப்பின் புலிகளும் இல்லை என்ற வரலாற்று உண்மையை அரசு விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும்.   வடக்கு – கிழக்கு இணைப்புக் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?    கிழக்கு வெறுமனே தமிழ் மக்களின் பூமி மட்டுமல்ல. மூவின மக்களும் வாழ்ந்துவரும் பூமி. அவர்கள் தனித்திருப்பதா அல்லது வடக்கோடு சேர்வதா மேற்கோடு சேர்வதா என்பதெல்லாம் அந்த மக்கள் தீர்மானிக்க வேண்டியது. வெளியிலிருந்து அவர்களிற்கு யாரும் கட்டளை இடமுடியாது. சரி ஒரு வாதத்திற்காக அது தமிழர்களின் பூமியே என்று வைத்துக்கொண்டால் கூட அவர்களின் விருப்பம் தனித்திருப்பது எனின் அதைத் தடுக்க இந்த யாழ்ப்பாணிகள் யார்? சிங்களவர்களிற்கு ஏழு மகாணங்கள் என்றால் தமிழர்களிற்கு ஒன்றிற்கு இரண்டாக இரு மகாணங்கள் இருந்துவிட்டுப் போகட்டுமே.   புலிகளின் ஆட்சிக் காலத்தில் சாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறார்களே?    சாதி ஒழிக்கப்பட்டிருந்தால் சிறுபான்மைத் தமிழர் சபை ஏன் சுயேட்சைக் குழுவாகத் தேர்தலில் போட்டியிகிறது. புலிகள் சாதி ஏற்றத்தாழ்வுகளை விரும்பவில்லை. ஆனால் அவர்கள் அதை ஒழிப்பதற்கான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை. சாதியொழிப்பு நடவடிக்கைகள் பெரும்பான்மை ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திவிடும் என்று புலிகள் அஞ்சினார்கள். மற்றைய தமிழ்த் தேசிய இயக்கங்களின் நிலையும் இதுதான்.   நீங்கள் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தேர்தல் அறிக்கையைப் படித்துப் பார்க்கும்போது இப்போதும் வடபுலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதைத் தெரிந்துகொள்ளலாம். விவசாயக் கூலிவேலைகளிற்குச் செல்பவர்களிற்கு இப்போதும் பல கிராமங்களில் சிரட்டையில் தேநீரும் பனையோலையில் உணவும் வழங்கப்படுகிறது. அதை ஏற்று வாங்கிச் சாப்பிடுமளவிற்கு தலித்துகளின் மனநிலையும் உள்ளது எனில் இதுதானா கடந்த முப்பது வருடங்களாகத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்கள் நடத்திய சாதியொழிப்பும் சமூகப் புரட்சியும்?   ஆலய நுழைவு அனுமதி மறுப்பு, தேநீர்க் கடைகளில் சமத்துவமின்மை, பொதுக் கிணறுகளில் நீரெடுப்பதற்குத் தடை எனப் பல வகைகளில் யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் தலித்துகளிற்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதை நான் பாரிஸில் உட்கார்ந்திருந்து யதார்த்தம் புரியாமல் பேசுகிறேன் என்று நீங்கள் ‘சிம்பிளாக’ எடுத்துவிடக் கூடாது. இந்தப் பிரச்சினைகளை இலங்கையிலிருக்கும் மகாசபை தான் முன்வைத்திருக்கிறது.   இன்னும் ஏராளமான தலித் குடும்பங்கள் கோயில் காணிகளில் குத்தகைக்குக் குடியிருந்து வருகிறார்கள். குடியிருப்பவர்களிற்கே நிலம் சொந்தம் எனக் குரல் கொடுக்க அங்கே ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ கிடையாது. புலிகளின் ஆட்சிக்காலத்தில் அவர்கள் நினைத்திருந்தால் அந்த நிலங்களைக் கோயிலிடமிருந்து கைப்பற்றிக் குடியிருக்கும் தலித்துகளிற்கே வழங்கியிருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை.   தலித் இலக்கியத்திற்கு ஈழம் முன்னோடி. ஆனால் இன்று ஈழத்திலோ புகலிடத்திலோ தலித் இலக்கியம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவிற்கு எழுதப்படுவதில்லையே?  ஈழத்தில் இலக்கியவாதிகளிற்கு யுத்தச் சூழல் பெரும் தடையாகயிருந்தது. கருத்து – எழுத்து மறுப்புச் சூழலுக்குள் அவர்கள் அழுந்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் புகலிடத்தில் தலித் இலக்கியம் முனைப்புப் பெறாததற்கு வேறொரு பரிதாபமான காரணமுள்ளது. இங்கிருக்கும் தலித் படைப்பாளிகள் சாதி அடையாளத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கதைசொல்லியாக இருக்க வேண்டிய வரலாற்றுக் கடமையிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். சாதி இழிவு தங்கள்மீது சுமத்தப்பட்ட ஒன்றாகக் கருதிப் போரடாமல் சாதி அடையாளத்தை மறைத்து வைக்க அவர்கள் முயற்சிப்பது பரிதாபமானது.   தமிழகத்து தலித் அரசியல் கட்சிகள் உங்களிற்கு முன்மாதிரியாக உள்ளனவா?    ஆரம்பத்தில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடனேயே தமிழக தலித் அரசியல் கட்சிகளைப் பார்த்தோம். குறிப்பாகத் தொல் திருமாவளவன் மிகுந்த நம்பிக்கை அளிப்பவராக இருந்தார். ஆனால் இன்று தமிழ்த் தேசியம் என அவர் தடம்மாறி நிற்பதைப் பார்க்கும்போது வருத்தமாயிருக்கிறது. கடைசிப் பெரியாரிஸ்டும் 1973ல் இறந்து போனார் என்றொரு சொல்வழக்கு இருக்கிறது. பெரியாரைத் தவிர எங்கள் முன்னோடிகளாகக் கொள்ளத் தமிழகத்தில் யாருமில்லை. இலங்கையில் உங்கள் நட்புச் சக்திகளாக யாரைக் கருதுகிறீர்கள்?    சாதியொழிப்பில் அக்கறை உள்ளவர்கள் எல்லோருமே எமது நட்புச் சக்திகளே. ஆனால் வெறும் வார்த்தை நட்பு எதைச் சாதித்துவிடப் போகிறது. குறிப்பாக ஆயுதம் தாங்கிப் போராடிய இயக்கங்கள் இன்று அரசியல் கட்சிகளாயிருக்கின்ற போதும் அவற்றிற்கு மக்களிடம் ஆதரவு கிடையாது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற மிதவாதக் கட்சிகளிற்கு சாதகமாகப் போய்விடுகிறது. நான்கு பக்கமும் எதிரிகளால் சூழப்பட்டிருக்கும் தலித் சமூகத்திற்கு நட்பு சக்திகளை அடையாளம் காண்பதைவிட எதிர்ப்பு சக்திகளை அடையாளம் காண்பதே இலகுவாயிருக்கிறது. அது அவசியதானதும்கூட. EPDP, EPRLF ஆகிய இரு கட்சிகளிற்கும் தலித் மக்களிடம் ஓரளவு செல்வாக்குள்ளது. அந்தக் கட்சிகளில் கணிசமான தலித் இளைஞர்கள் இணைந்திருக்கிறார்கள். இந்த வளங்களை வைத்து அந்தக் கட்சிகள் சாதியொழிப்பு வேலைத்திட்டங்களை முன்வைத்தால் அந்த வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அவர்களோடு சேர்ந்து செயற்பட நாங்கள் தயங்கமாட்டோம்.   முதலாவது தலித் மாநாட்டை ஃபிரான்ஸிலும் இரண்டாவது தலித் மாநாட்டை லண்டனிலும் நடத்தினீர்கள். அடுத்த தலித் மாநாடு எங்கே?    அடுத்த தலித் மாநாடு இலங்கையில்.     11. நான் சாத்தியமற்றதையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்   ‘எதுவரை?’ மே – ஜுன் 2010 இதழில் வெளியாகிய  ஷோபாசக்தியின் நேர்காணல். நேர்கண்டவர்: எம். பெளஸர். ‘எதுவரை?’ இதழைப் பெற்றுக்கொள்ள: eathuvarai@gmail.com – அழைக்க: 07912324334 (U.K) 0773112601 (இலங்கை) 9443066449 (இந்தியா).    என்னுடனான உரையாடலின் போது வாசிப்பு மீதான உங்களது தீராத ஆவலை வெளிப்படுத்தியதுடன் இலக்கியப் பிரதியை எழுதுவது என்பது உங்களுக்கு சலிப்பூட்டக் கூடிய வேலை என்றும் சொல்லியுள்ளீர்கள். ஆனால் சர்ச்சைக்குரிய பல்வேறு விவாதங்களில் மிக ஆர்வத்துடன் நீங்கள் இறங்குவதிலும் கருத்துப் போர்களை நடத்துவதிலும் சளைக்காமல் தானே இருக்கிறீர்கள். இதுவும் உங்களுக்கு அலுப்பை, மனத் தளர்வை ஏற்படுத்தவில்லையா?  நான் அளவுக்கு அதிகமாகக் கருத்துப் போர்களில் ‘மினக்கெடுகிறேன்’ என்றொரு விமர்சனம் நீண்ட காலமாகவே உள்ளதுதான். என்னுடைய அரசியல் – இலக்கிய நிலைப்பாடுகள், மதிப்பீடுகள் காலத்திற்குக் காலம் மாறி வந்தவைதான். ஆனால் நான் ஒரு நிலைப்பாட்டில் இருக்கும்போது அந்த நிலைப்பாட்டை முழுமையாக நம்பும்போது அந்த அரசியல் அல்லது இலக்கிய நிலைப்பாட்டிற்காக ஓயாமல் போரிடுவதுதான் நேர்மையான செயல் என்று நான் கருதுகிறேன். இதில் அலுப்பென்றும் சலிப்பென்றும் எதுவுமில்லை.    சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் இருப்பது போலவே இலக்கியத்தளமும் வர்க்கங்களாலும் சாதியாலும் பால்நிலையாலும் மேல் கீழாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. பாஸிசத்தின் அடிவருடிகளும் இந்துத்துவ வெறியர்களும் சாதியப் பற்றாளர்களும் குறுந் தேசியவாதிகளும் இலக்கியத்தளத்தினுள் தீவிரமாக இயங்கும்போது நாம் அவர்களைத் தீவிரமாக எதிர்த்து விரட்டியடித்தேயாக வேண்டும். இதிலென்ன சலிப்புள்ளது. உண்மையில் இதுவொரு உற்சாகமான வேலை.    தவிரவும் இலக்கியத்தளத்திலோ அரசியல் வெளிகளிலோ நான் வரித்துள்ள கருத்துகள் மிக மிகச் சிறுபான்மையினரின் கருத்துகளாகவே இருக்கும் போது எனக்கு இன்னும் பொறுப்பும் வேலையும் அதிகமிருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களிலும் நான் ஒருவனே ட்ரொஸ்கியவாதி. நான் புலம்பெயர் சிறுபத்திரிகைகளில் எழுதத் தொடங்கிய காலத்தில் ட்ரொஸ்கியம் சார்ந்தே எனது கருத்துப் போர்கள் நிகழ்ந்தன. ‘அம்மா’ மற்றும் ‘எக்ஸில்’ இதழ்களைத் தளமாகக்கொண்டு நாங்கள் மிகச் சிலர் தலித்தியம், பின்நவீனத்துவம், விளிம்புநிலை அரசியல் குறித்த உரையாடல்களை, விவாதங்களைப் புகலிடத்தில் ஆரம்பித்தபோதும் சுற்றி நின்ற கொடும்பகையை எதிர்கொள்ள ஓயாமல் கருத்துப்போர் நடத்த வேண்டியிருந்தது.    ஈழப் போராட்டத்து அரசியல் என்று வரும்போது நான் புலிகளையும் இலங்கை அரசையும் கடுமையாக எதிர்த்து எழுதுபவன். நம்மிடையே இரண்டில் ஒரு பக்கமும் சாயாத இலக்கியவாதிகள் மிகச் சொற்பமானவர்களே. இந்த நிலையில் புலிகள் ஆதரவு எழுத்தாளர்களையும் அரசு ஆதரவு எழுத்தாளர்களையும் கடுமையாக எதிர்த்து, புலிகளாலும் அரசாலும் கொல்லப்பட்ட மக்களின் இரத்தத்தின் பேராலும் கண்ணீரின் பேராலும் எழுதாமலிருக்கும் ஒருவன் நானுமொரு எழுத்தாளன் என என்ன மயிருக்கு சொல்லிக்கொள்ள வேண்டும். புலிகளின் ஆதரவாளர்களையும் அரசு ஆதரவாளர்களையும் எதிர்த்து எழுதுவதில் அலுப்போ சலிப்போ ஈவிரக்கமோ காட்டவே கூடாது.    என்மீதான அரசியல் விமர்சனங்களிற்கு அப்பால் அவை அவதூறுகள் என்ற நிலையை அடையும்போது அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லைத்தான். ஆனால் அந்த அவதூறுகளின் துணையால் எனது அரசியல் நிலைப்பாடுகள் மீது சேறடிக்கும்போது அந்த அவதூறுகளிற்கும் உடனுக்குடன் பதில் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. வேறு என்னத்தைச் செய்ய!    விவாதங்களிலும் தடாலடிப் பதில் போரிலும் இறங்கி உங்கள் படைப்புத்திறனை, அதன் விளைச்சலை சுருக்கிக் கொள்கிறீர்களே?  படைப்புத்திறன் என்ன ஒரு கோப்பை நீரா தீர்ந்துபோய்விட? இறைக்கிற கிணறுதான் சுரக்கும். நேரம் ஒரு பிரச்சினைதான், எனினும் நேரத்தைச் சாட்டுச்சொல்லி பிற்போக்குவாதிகளின் கருத்துகளை மௌனமாகச் சகித்துக்கொண்டிருப்பதைவிட மேலும் ஒரு மணிநேரம் கண் விழித்திருந்து அவர்களிற்கு எதிர்வினையாற்றவே நான் விரும்புகிறேன்.    ஆயுதப் போராட்ட அரசியலின் கசப்புகள் அதன் விளைவுகள் மட்டும்தான் உங்கள் இலக்கியமும் அரசியலும் என்று சொல்லலாமா?    யுத்தம் மட்டும்தானே வாழ்க்கையாயிருந்தது. வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும், யுத்தம் என்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன. எனக்கு ஏழு வயதாயிருந்தபோது பிரபாகரனால் துரையப்பா பொன்னாலையில் கொல்லப்பட்டார். எனக்கு நாற்பத்தொரு வயதாயிருந்தபோது பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார். இடைப்பட்ட காலமென்பது யுத்தமும் யுத்தம் சார்ந்த வாழ்வும் தானே. பிரான்ஸுக்கு ஓடிவந்துவிட்டாலும் மனமும் செயலும் தாய்நிலத்தை மையப்படுத்தித்தானேயிருந்தன. பிரான்சுக்கு வந்த இந்தப் பதினேழு வருடங்களில் தேடியது ‘அந்நியன்’ என்ற புறக்கணிப்பையும் கடனையும் நோயையும் தவிர வேறெதுவுமில்லை. ஒரு தீவிர, சுறுசுறுப்பான அரசியல் பிராணியான எனக்கு பிரஞ்சு அரசியலிலோ பிரஞ்சு இலக்கியத்திலோ பிரஞ்சுக் கலாசாரத்திலோ ஒட்டவே முடியாமல் போய்விட்டது. இன்றுவரை தடக்குப்படாமல் எனக்குப் பிரஞ்சுமொழி பேசவராது. நான் யுத்தத்தின் குழந்தை. என்னைப் போன்றவர்களிற்கு எங்களின் மரணம்வரை யுத்தத்தின் வடுக்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.    ஆயுதப் போராட்டம் வெறுமனே கசப்புகளை மட்டும்தான் எனக்குக் கொடுத்தது என்றும் சொல்லமாட்டேன். நூற்றாண்டுகளாய் அரசியல் உணர்வின்மையாலும் அடிமைக் கருத்தியலிலும் உழன்றுகொண்டிருந்த ஈழத் தமிழ்ச் சமூகத்தை ஆயுதப் போராட்டம் விழித்தெழச் செய்தது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த சமூகத்தையும் அது சிங்களப் பேரினவாத அரசுகளிற்கு எதிரான அரசியல் கூட்டு மனநிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது. சமூகத்தின் அடித்தளத்தில் ஒதுக்கப்பட்டிருந்த மனிதர்களும் பெண்களும் அரசியல்வெளிக்கு வந்தார்கள். ஆயுதப் போராட்டம் ஈழ மக்களின் பிரச்சினையை சர்வதேச அளவில் பரப்புரை செய்வதற்கு காரணியாயிருந்தது. ஈழப் போராட்டம் கசப்பான பக்கங்களை மட்டுமல்ல இத்தகைய அருமையான பக்கங்களையும் கொண்டதுதான்.    என்னுடைய அரசியலும் இலக்கியமும் ஈழப் போராட்டத்தை மையப்படுத்தித் தொடங்கியது எனினும் கடந்த இருபது வருடப் புலம்பெயர்ந்த வாழ்வு பல்வேறு வகையான அரசியல் போக்குகளையும் இலக்கியப் போக்குகளையும் பயிலும் வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளது. யாரும் ஏற்றுக்  கொள்கிறார்களோ இல்லையோ நான் என்னை ஒரு மார்க்ஸியவாதியாகவே அடையாளப் படுத்துவேன். என் இன்றைய அரசியலும் இலக்கியமும் மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டது.    மார்க்ஸியம் என்றால் எவ்வகைப்பட்ட மார்க்ஸியம்? மார்க்ஸியத்துக்குள்ளும் பல்வேறு போக்குகள் உள்ளனவே?  மார்க்ஸியம் என்பது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான அறம், ஒரு குறியீடு. மரபு மார்க்ஸியத்தின் போதாமைகள், இன்றைய உலகச்சூழலில் மார்க்ஸியம் எதிர்கொள்ளும் கேள்விகள், மார்க்ஸிய அமைப்புகளின் இறுகிய அதிகார வடிவங்கள் இவை குறித்தெல்லாம் ஏராளமான கேள்விகளையும் உரையாடல்களையும் மார்க்ஸியர்களே நடத்தியிருக்கிறார்கள். இந்த உரையாடல்கள் தொடருகின்றன. மார்க்ஸியத்தின் அடிப்படையில் புதிய பார்வைகளும் விமர்சனங்களும் கோட்பாடுகளும் உருவாக்கப்படுகின்றன. இது இடையறாது நடக்கும் ஒரு அரசியற் செயற்பாடு. இந்தச் செயற்பாடுதான் எனக்கான மார்க்ஸியம்.    உங்களுடைய கதைப் பிரதிகள் பல்வேறு காலகட்டங்களையும் முக்கியமான சம்பவங்களையும் ஆவணப்படுத்தும் பங்களிப்பை வழங்குகிறது. ஆனால் இதில் உண்மைச் சம்பவங்கள் எவை, புனைவு எவை என்கிற குழப்பமும் வரலாற்றுத் தடுமாற்றமும் வாசகருக்கு ஏற்படுகிறதே? இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?    உங்கள் கேள்வியில் ஒரு குற்றம் சாட்டும் தொனியை நான் அடையாளம் காண்கிறேன். எது வரலாறு, எது புனைவு என வாசிப்பவருக்கு ஒரு மயக்கத்தை ஏற்படுத்துமளவிற்குப் புனைவை நம்பகமான மொழியில் நான் எழுதுகிறேன் என்பதற்காக முறைப்படி நீங்கள் என்னைப் பாராட்டியிருக்க வேண்டும். கிடக்கட்டும் விடுங்கள்.    வரலாற்று நிகழ்வுகளின், பாத்திரங்களின் பின்னணியில் ஒரு புனைவை உருவாக்குவது மிக வழமையான ஒன்றுதான். எடுத்துக்காட்டுகளிற்கு வேறெங்கும் போகத் தேவையில்லை, ஈழப் போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ‘லங்காராணி’, ‘புதியதோர் உலகம்’ நாவல்கள் அவ்வகைப்பட்டவையே.    வரலாற்றுத் தடுமாற்றம் ஒரு தேர்ந்த வாசகருக்கு ஏற்பட வாய்ப்பேயில்லை. மார்க்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலை அவர் பாவெலின் கதையாகவே படிக்கிறார். சோவியத் புரட்சி குறித்த துல்லியமான வரலாறு அவருக்குத் தேவைப்பட்டால் அவர் ‘ஜோன் ரீடு-ன் ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ நூலைப் படிக்க வேண்டியதுதான்.    உங்கள் பிரதிகளை வெறும் புனைவாக மட்டுமே அணுகவேண்டுமென சொல்கிறீர்களா? அதற்கு வேறு தளங்கள் இல்லையா?    வரலாற்று இலக்கியப் பிரதியை முழுமையான வரலாற்று ஆவணமாக வரையறுக்கத் தேவையில்லை. அப்படி வரையறுத்தால் ராமர் பாலம் போலவும் ராம ஜென்மபூமி போலவும் வேண்டாத இழவுகள்தான் பிரச்சினைகளாகக் கிளம்பும். வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இலக்கியப் புனைவுப் பிரதிகள் வரலாற்று ஆவணங்கள், வாய்மொழிக் கதைகள், தகவல்கள் போன்றவற்றொடு புனைவையும் கலந்தே எழுதப்படுகின்றன. இதற்குத் தமிழின் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக ப.சிங்காரத்தின் ‘புயலில் ஒரு தோணி’யையும் சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவலையும் நான் சொல்வேன்.    வரலாற்றுச் சம்பவங்களை நான் திரித்திருக்கிறேன் என்று நீங்கள் சொன்னால் அதைக் குறித்து விவாதிக்கலாம். அதைவிடுத்து வரலாற்றையும் புனைவையும் கலந்து எழுதுகிறீர்களே எனக் கேட்டால் அதை இலக்கியம் அனுமதிக்கும் என்று மட்டுமே சொல்லலாம்.    தமிழ்ச்சூழலின் எதிர்ப்பிலக்கிய எழுத்தில் முக்கியமானவர் நீங்கள், இந்த எதிர்ப்பிலக்கியம் அல்லது மாற்று இலக்கியத்தின் அடைவுகளாக இன்று நீங்கள் காண்பது எதனை?    நாங்கள் இயங்கிக்கொண்டிருக்கும் சிறுபத்திரிகைகள் சார்ந்த இலக்கியப் பரப்பு மிகச் சிறிது. தமிழ்த் தேசியம், சாதியப் பிரச்சினைகள், இஸ்லாமியர்களின் மற்றும் பால்நிலையால் கீழாக்கி வைக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள், கலாசார அடிப்படைவாதம் போன்றவை குறித்துச் சிறுபத்திரிகைத் தளத்திலும் அறிவுத்தளத்திலும் ஒரு மாற்றுப் பார்வையை உருவாக்க முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறோம். அடைவுகள் என்று குறிப்பிட்டுச் சொல்ல இதுவரை ஏதுமில்லை. அவ்வளவு சுலபமாக எல்லாம் ஆதிக்க சக்திகள் நமக்கு வழிவிட்டுவிட மாட்டார்கள்.    எதிர்ப்பிலக்கியம் எதிர்கொள்ளும் சவால்களை நாம் உணரமுடியும். அதுவும் இலங்கைத் தமிழ்ச் சூழல் சார்ந்த எதிர்ப்பிலக்கியவாதிகளுக்கு ஏற்படும் நெருக்கடிகள், மன அழுத்தங்கள் இதனை நீங்கள் எப்படி எதிர்கொண்டு வருகிறீர்கள்?  எழுத்தின் வழிதான் எதிர்கொள்கிறேன். ஓயாமல் செயற்படுவதால் மட்டுமே இந்த நெருக்கடியை எதிர்கொள்ள முடியும். பாஸிசத்தை எதிர்கொள்வதற்கான ஒரேவழி அதன் கண்களை விடாமல் உற்றுப் பார்ப்பதுதான் என்பார் தருண் தேஜ்பால்.    விடுதலைப் புலிகளையும் அரசாங்கத்தையும் தொடராக விமர்சித்தே வந்திருக்கிறீர்கள், விடுதலைப்புலிகளின் இராணுவ அரசியல் தோல்வியையும், அரசாங்கத்தின் இராணுவ, அரசியல் வெற்றியையும், கடந்த ஒரு வருடத்துக்குள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?    விடுதலைப் புலிகளின் தோல்வி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அவர்கள் எப்போது மக்கள்மீது அதிகாரப்போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்களோ அப்போதிலிருந்தே அவர்களின் அரசியல் தோல்வி தொடங்கிவிட்டது. இலங்கை அரசின் புலிகளின் மீதான இராணுவ வெற்றி என்பது சர்வதேச வல்லாதிக்கவாதிகளின் இராணுவ, நிதி மற்றும் திட்டமிடல் உதவியுடன் சாத்தியமாகிய ஒன்று.    அநேகமாக இனிப் புலிகள் குறித்துப் பேசுவதற்கு எதுவுமே இல்லை என்றுதான் கருதுகிறேன். புலித்தலைமை இயக்கத்தின் அனைத்து அதிகாரங்களையும் செயற்பாடுகளையும் மையத்திலேயே குவித்து வைத்திருந்ததால் தலைமையின் அழிவோடு அந்த இயக்கமும் முற்றாகச் செயலிழந்துபோனது. புலிகள் இயக்கம் இனிக் கட்டியெழுப்பப்பட முடியாத ஒன்று. ஆயுதப் போராட்டம் இனி ஈழத்தில் சாத்தியமே கிடையாது என்பதை அரசின் இராணுவப் பலத்திலிருந்து அல்லாமல் ஈழத் தமிழ் மக்களின் பட்டுக் களைத்துப்போன மனநிலையிலிருந்து சொல்கிறேன்.    இப்போதைய பிரச்சினை மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசுதான். மகிந்த ஒட்டுமொத்த இலங்கைத் தீவு முழுவதும் தனது எல்லையற்ற அதிகாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். சட்டம், நீதி எல்லாமே அவரினதும் அவரின் குடும்பத்தினரினதும் சட்டைப் பைக்குள்தான் கிடக்கின்றன. சிங்கள இராணுவ உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களையே இந்த அரசு நீதிக்குப் புறம்பாகச் சிறையிலடைத்தும் கொலைசெய்தும் வரும்போது சிறுபான்மை இனங்களின் நிலையை என்னவென்று சொல்வது.    அண்மைய பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய சக்திகள் பலகூறாக தேர்தலை எதிர்கொண்டன, இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி குறித்து…?    உண்மையில் அவை ஆயுதக் கலாசாரத்திற்கு எதிரான வாக்குகளே என்று கருதுகிறேன். பொதுப் புத்தியை நாடிபிடித்து அறிவதில் பழம்தின்று கொட்டைபோட்ட தமிழரசுக் கட்சியின் மூத்த தலைகள் புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அனுப்பிவைக்கப்பட்ட பத்மினி, கஜேந்திரன் போன்றவர்களைப் புத்திசாலித்தனமாகக் கழற்றி விட்டு சமூக ‘மதிப்பு’ப் பெற்ற வெள்ளை வேட்டிக் கனவான்களான சரவணபவன் போன்றவர்களை உள்வாங்கிக்கொண்டார்கள். கடும் தேசியவாதம் பேசிய சிவாஜிலிங்கம் போன்றவர்கள் கடுமையாகத் தோல்வியைத் தழுவ மிதவாதம் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை அதிகளவில் பெற்றுக் கொண்டுள்ளது. இருபத்தைந்து வருடங்களிற்கு முன்னால் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட அதே திருட்டுக் கும்பல் மறுபடியும் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குச் சென்றிருப்பதே தமிழ் மக்களின் அரசியல் வீழ்ச்சிக்கான அடையாளம். ஆனால் தேர்தலில் போட்டியிட்ட மற்றக் கட்சிகள்  எல்லாம் இவர்களை விட மோசமானவர்கள் என்பதுதான் தீவின் ஒட்டுமொத்த அறம் சார்ந்த அரசியல் வீழ்ச்சிக்கான அடையாளம்.    இலங்கையின் ஆளும்வர்க்கம், பிராந்திய, உலகளவிலான அதிகாரவர்க்கத்திற்கு முழு நாட்டினையும், நாட்டு மக்களின் இறைமையையும் தாரைவார்த்து வருவது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?  பொதுச் சொத்துக்கள் பன்னாட்டு நிறுவனங்களிற்கு விற்றுத்தள்ளப்படுவதாலும் உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிறுவனத்திடமும் மேற்கு நாடுகளிடமும் அபிவிருத்தி என்ற போர்வையில் இலங்கை அரசு வகை தொகையில்லாமல் கடன்களை வாங்குவதாலும் இலங்கையின் மீது வல்லாதிக்கவாதிகளின் பிடி இறுகிக்கொண்டே வருகிறது. இவற்றைச் செய்து கொடுப்பதால் இலங்கை அரசின் அதிகார வர்க்கமும் நாட்டின் மிகச்சில செல்வந்தக் குடும்பங்களும் ஊழல் பணத்தாலும் ஒப்பந்தக் கூலிகளாலும் கொழுத்துப் போய்க் கிடக்கிறார்கள்.    இது தவிர்க்க முடியாது என்று வாதிடுபவர்களும் உள்ளனர், இன்றைய சர்வதேச அரசியல் சூழல், மறு காலனியாக்கம், உலகமயமாக்கம் போன்ற விடயங்கள், இலங்கையில் எந்தளவிலான தாக்கத்தையும் அனுகூலத்தையும் பிரதிகூலத்தையும் விளைவிக்கும்?  தவிர்க்க முடியாது என்றால் அதை எதிர்ப்பே இல்லாமல் ஏற்றுக்கொண்டு நாம் அழிந்துபோவதா? உலகமயமாக்கலால் எந்த மூன்றாம் உலக நாட்டு மக்களிற்கும் நன்மை கிடையாது. அது அபிவிருத்தி என மத்தியதர வர்க்கம் மயங்கலாம். தரகு முதலாளிய வர்க்கம் எரிகிற வீட்டில் பிடுங்கலாம். ஆனால் நாட்டின் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களிற்கு உலகமயமாக்கம் என்பது பேரழிவே.    இலங்கையின் பொதுத் துறைகளை வாங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மலிவு கூலியில் தொழிலாளர்களை வதைத்தெடுக்கின்றன. நாட்டின் சுதந்திர வர்த்த வலயங்களில் தொழிலாளர்களிற்கு எதுவித தொழிற்சங்க உரிமைகளும் கிடையாது. இலங்கைக்குக் கடனை வழங்கும் உலக வங்கி போன்ற நிறுவனங்களும் வல்லாதிக்க நாடுகளும் இலங்கையில் பொதுமக்களிற்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்த அரசுக்கு உத்தரவிடுகிறார்கள். மானிய வெட்டினால் உணவுப்பொருட்களின் விலைகள் எகிறிப்போகின்றன. மருத்துவம், கல்வி, வீடு போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் ஏழைகளிற்குத் தூரமாக்கப்படுகின்றன.    இலங்கையின் அரசியல் ஒரு தடத்திலும் இந்தத் தாராளமயமாக்கல் இன்னொரு தடத்திலும் செல்வதில்லை. அவை ஒன்றையொன்று ஆழமாகப் பாதிக்கின்றன. இன்றைய இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் என்பது தாராளமயமாக்கலுக்கு எதிரான போராட்டம்தான். இன்றைய தாராளமயமாக்கலுக்கு எதிரான போராட்டம் என்பது இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம்தான்.    இந்தப் பின்னணியில் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலம்? சிறுபான்மை இன அரசியல்?    யுத்தத்தால் வாழ்வை இழந்து நிற்கும் மக்களிற்கு மீளவும் வாழ்வை அமைத்துக் கொடுப்பதே இன்றைக்குத் தேவையான அரசியல் என்று சொல்லப்படுகிறது. அந்த மக்களிற்கு மீள் வாழ்வை அளிப்பது மிக முக்கியமான ஒன்றுதான். ஆனால் அத்துடன் தமிழர்களுடைய அரசியல் நின்றுவிட வேண்டும் என்று இலங்கை அரசு மட்டுமல்ல மற்றைய அரசியல் கட்சிகளும் விரும்புவதுதான் கொடுமை. நாட்டுடைய அபிவிருத்தியை முன்னிறுத்தி எப்போது பார்த்தாலும் சனாதிபதி பேசிக்கொண்டிருக்கிறார். அவர் அபிவிருத்தி என்று சொல்வதெல்லாம் பொதுத்துறைகளை பன்னாட்டு நிறுவனங்களிற்கு விற்பதும் தாளமுடியாத கடன் சுமைக்குள் இலங்கையை அமிழ்த்தி விடுவதும்தான் என முந்தைய பதிலில் உங்களிற்குச் சொல்லியிருக்கிறேன்.    இந்த மீள்வாழ்வு, அபிவிருத்தி போன்ற போர்வைக்குள் சிறுபான்மை இனங்களின் அரசியல் பிரச்சினையை மூடி மறைத்துவிட அரசு முயற்சிக்கிறது. அரசு ஆதரவுச் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும் இந்த விடயத்தில் அரசுக்கு ஒத்துழைக்கிறார்கள். உண்மையில் இன்று மிகுந்த பலத்தோடு இருக்கும் மகிந்தவின் அரசை எதிர் கொள்வதற்குச் சிறுபான்மையினரிடம் ஒரு அரசியல் சக்தியோ, தலைமையோ கிடையாது.    இனப்பிரச்சினைக்கான தீர்வாக எதைத்தான் கருதுகிறீர்கள்?  தீர்வென்றெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஏதும் கிடையாது. இங்கே பிரச்சினைதான் இருக்கிறது. நாட்டின் இறைமை குறித்தோ, சிறுபான்மை இனங்களிற்கு நீதியான தீர்வு கிடைக்க ஒரு நேர்மையான அரசியல் வேலைத் திட்டத்தை உருவாக்குவது குறித்தோ எந்த அரசியல் கட்சிக்கும் அக்கறை கிடையாது. அதிகாரத்துக்கும் பொதுச் சொத்துகளைக் கொள்ளையடிப்பதற்குமான நெடிய அரசியல் சூதாட்டத்தையே அரசியல் கட்சிகள் நடத்திக்கொண்டிருக்கின்றன. சிறுபான்மையினரின் கட்சிகள், ஜே.வி.பி, பொதுவுடமைக் கட்சிகள் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். எவையும் யோக்கியம் கிடையாது. கடந்த வருடம் வன்னியில் இலங்கை அரசு மாபெரும் இனப்படுகொலையை பொதுமக்கள்மீது கட்டவிழ்த்து விட்டபோது எந்த அரசியல் கட்சி மக்களுக்காகப் பேசியது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே யுத்த நிறுத்தத்தைக் கேட்டது.    கூட்டமைப்புக்கு மக்கள்மீது அக்கறையிருப்பின் மக்களை விடுவிக்குமாறு புலிகளிடமும் கேட்டிருக்கும். இன்றைக்கு நியாயம் பேசும் சம்பந்தனோ, மாவை சேனாதிராசாவோ அன்று புலிகளிடம் மக்களை விடுவிக்குமாறு கோரிக்கை வைக்கவில்லையே. அன்றும் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தானே, அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்திலோ வெளியில் மக்களைத் திரட்டியோ எதுவித போராட்டத்தையும் நடத்தவில்லையே. ஆகக் குறைந்தது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் கூடத் துறக்கவில்லையே. இவர்கள் இம்முறையும் நாடாளுமன்றத்திற்குச் சென்று எதையும் சாதிக்கப்போவதில்லை. தமிழ் மக்களிற்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு இவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் கிடையாது.    முன்பு ஆயுத இயக்கங்களாயிருந்து இன்றைக்கு அரசியல் கட்சிகளாக மாறியிருக்கும் அமைப்புகளிடமும் சிறுபான்மையினரின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எந்த அரசியல் வேலைத்திட்டமும் கிடையாது. அகதிகளுக்கு நிவாரணம், மீள்குடியேற்றம் என்பதற்கு அப்பால் அவை அரசியல்ரீதியாக முன்னே செல்லத்தயாரில்லை. மறுபடியும் சொல்கிறேன் நிவாரணமும் மீள் குடியேற்றமும் அவசியமானவைதான். ஆனால் சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமைகளும் மிக முக்கியமானவையே. நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதுதான் அரசியல் கட்சிகளுடைய வேலையென்றால் தமிழர்களுக்கு கட்சிகளே வேண்டியதில்லை. செஞ்சிலுவைச் சங்கமே தமிழர்களிற்குப் போதுமானது. இதில் இன்னொரு நன்மையுமுண்டு, செஞ்சிலுவைச் சங்கம் வெள்ளை வானில் ஆட்களைக் கடத்துவதில்லை. ஆட்களைக் கடத்தி வைத்துக்கொண்டு பணயத்தொகை கேட்பதுமில்லை, பணயத்தொகை கிடைக்காவிட்டால் கொல்வதுமில்லை.    இன்றைய நிலையில் எந்தவகையான அரசியல் வேலைத் திட்டத்தை எதிர்பார்க்கிறீர்கள்?  ஓர் இடதுவகைப்பட்ட எதிர்ப்பு அரசியல் இயக்கம் நமக்கு இன்று மிக அவசியமானது. அதை எங்கிருந்து தொடங்குவது என்பதெல்லாம் கடும் சிக்கலான பிரச்சினையே. மாற்று அரசியல் செயற்பாடுகளை கொடும்கரம் கொண்டு அடக்கத் தயங்காத சர்வ அதிகாரமும் பெற்ற மகிந்த ராஜபக்சவின் அரசை எதிர்ப்பதும் அதற்கு எதிராக மக்கள்திரளை அணிதிரட்டுவதும் மிகக் கடினமான பணிகளே. இலங்கை அரசை விமர்சிப்பவர்களும் பத்திரிகையாளர்களும் இன்றும் நாட்டைவிட்டுத் தப்பியோடிக்கொண்டிருக்கையில் மாற்று அரசியல் முன்னெடுப்பு என்பது இப்போதைக்கு நடைமுறைச் சாத்தியமில்லாதது போன்று தோற்றமளிக்கலாம். அப்படியானால் எதுதான் சாத்தியம் என்ற கேள்வியிருக்கிறதல்லவா! மகிந்த ராஜபக்சவின் அரசோடு அணைந்துபோய் அரசியல் செய்வதுதான் புத்தியான காரியம் என்று சில தமிழ் அறிவாளர்கள் சொல்கிறார்கள். அரசோடு அணைந்துபோய் எதைச் சாதித்துவிட முடியும்? வீதிகளைத் திருத்துவதும் கூடாரங்கள் அமைக்க தகரங்கள் பெற்றுக் கொடுப்பதுமா அரசியல் செயற்பாடுகள்? இவையா ராஜபக்ச அரசின் தமிழ் மக்களுக்கான தீர்வுகள்? தாங்கள் யுத்தத்தில் அழித்தவற்றை மக்களின் வரிப்பணத்தில் தங்கிநிற்கும் அரசாங்கம் மறுபடியும் செப்பனிடுவது மிகச் சாதாரணமான செயல். இதை அரசின் சாதனையாகவும் கருணையாகவும் கொண்டாடுபவர்களை என்ன சொல்வது!    சோசலிஸப் புரட்சி போன்ற கனவுகள் குறித்தெல்லாம் நான் பேசவில்லை. சனநாயகமே அற்ற பயங்கரவாத அரசை எதிர்த்து இடது அரசியலைக் கட்டியமைப்பது குறித்தே நான் பேசுகிறேன். இது சாத்தியமில்லாமல் கூட இருக்கலாம். ஆனால் இனவாத அரசின் கால்களை நக்குவதும், அபிவிருத்தி, புனரமைப்பு என்ற பெயர்களில் சிறுபான்மை இனங்களின் உரிமை கோரிய அரசியலை கருணை கோரிய அரசியலாய் சிதைப்பதும்தான் இலங்கையில் சாத்தியமென்றால் நான் சாத்தியமற்றதையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். சாத்தியமாகும் தீமையைவிட சாத்தியமாகாத நன்மை எப்போதுமே சிறந்தது.    சாதிய அரசியலை முன்னிறுத்துவதும், சாதியொழிப்பு அரசியலுக்கு குரல் கொடுப்பதும் வெவ்வேறானவை, இந்த வேறுபட்ட அரசியல் போக்கை, சாதியம் தொடர்பான நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?  ஈழத்தைப் பொறுத்தவரை ஆதிக்கசாதியினர் எப்போதுமே எல்லாவற்றிலும் சாதியை முன்னிறுத்தியே செயற்படுகிறார்கள். வெளிப்படையான சாதிச் சங்கங்கள் அவர்களிடம் இல்லாவிட்டாலும் அரசியல், பொருளியல், கல்வி, மதம் என அனைத்து சமூக நிறுவனங்களும் அவர்கள் வசமே உள்ளன. அங்கே ஒவ்வொரு நிறுவனங்களும் மறைமுகமான ஆதிக்கசாதியச் சங்கங்களே. புகலிடத்தில் கூட இந்துக்கோயில்களும் பெரும்பாலான ஊர்ச் சங்கங்களும் பழைய மாணவர் சங்கங்களும் மறைமுகமான ஆதிக்கசாதிச் சங்கங்களே.    ஆனால் அதே ஆதிக்கசாதியினர்; சாதியொழிப்பை முன்னிறுத்தும் தலித்துகள் அமைப்பானால் தலித்துகளின் அமைப்புகள் மீது சாதிச் சங்கங்கள் என்ற முத்திரையைக் குத்துகிறார்கள். ஆதிக்கசாதியினர் சாதியத்தைப் பாதுகாக்க அமைப்பாகிறார்கள். தலித்துகள் சாதியத்தை ஒழிக்க அமைப்பாகிறார்கள். இன்றைய ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபையோ’, ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணியோ’ சாதிச் சங்கங்கள் இல்லை. அவை ஒரு தனித்த சாதிக்கான அமைப்புகள் இல்லை. அவை தீண்டாமைக்கு உட்பட்ட அனைத்து சாதிகளையும் இணைத்துச் செல்வதற்கான அமைப்புகளே.    வெள்ளாளர்கள், பார்ப்பனர்கள் போன்ற ஆதிக்கசாதி அறிவுஜீவிகள் இப்போது தங்களைத் தலித் அமைப்புகள் புறக்கணிப்பதாக மூக்குச் சிந்த ஆரம்பித்திருக்கிறார்கள். சாதியொழிப்பில் தங்களுக்கும் அக்கறையிருக்கிறதென்றும் அதைத் தலித்துகள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்றும் அவர்கள் சொல்லுகிறார்கள். அவ்வாறான அக்கறையுள்ளவர்களிற்கு தலித்துகளிடம் சொல்வதற்கு ஏதுமில்லை. ஏனெனில் தலித்துகள் சாதி இழிவு நீங்கவேண்டும் என்ற உணர்மையுடனே இருக்கிறார்கள். இந்த ஆதிக்கசாதியினர் தங்கள் சொந்தச் சாதியினரிடத்தில் சாதியத்திற்கு எதிரான பிரச்சாரத்தைச் செய்யட்டும். அதைச் செய்து முடிக்கவே அவர்களிற்கு ஆயுள் போதாது. தங்கள் சொந்தச் சாதியினரிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்படும் சாதியச் சங்கங்களை அவர்கள் ஒழிக்க முயற்சி செய்யட்டும். அதன்பின்பு தலித்துகள் வைத்திருப்பது சாதியச் சங்கமா அல்லது சாதியொழிப்புச் சங்கமா போன்ற விவாதங்களில் அவர்கள் ஈடுபடலாம்.    எழுத்திற்கான அங்கீகாரம், அங்கீகார மறுப்பு பற்றிய மனச்சிக்கல்கள் தமிழ் எழுத்துலகில் தொடர்ந்தும் நிலவி வருகிறது, ஒரு படைப்பாளன் என்ற வகையில் இந்த விடயத்தில் உங்கள் அனுபவம்தான் என்ன?    எழுத்தை அங்கீரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டே அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதால்தானே வருகிறது. என்னைப்பொறுத்தவரை அங்கீகாரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு பயிரும் பண்ண முடியாது என்றுதான் கருதுகிறேன். என்னுடைய எழுத்துகள் நிராகரிப்புகளையே அதிகம் பெற்றிருக்கின்றன. ‘துரோகி’, ‘அரசாங்கக் கைக்கூலி’ என்று எத்தனை பட்டங்கள் என்மீது சுமத்தப்பட்டன. மறுபுறத்தில் ‘கொரில்லா’ வெளியானபோது அது புலிகள் ஆதரவு நாவல் என்று கற்சுறா, எம்.ஆர். ஸ்டாலின் போன்றவர்கள் விமர்சித்தார்கள். ‘அய்ந்து சதத்திற்கும் பெறுமதியில்லாத பிரதியது’ என்று எழுதினார் கற்சுறா. ஊடகப் பலத்தைத் தங்கள் கையில் வைத்திருக்கும் தமிழ்த் தேசியவாதிகளும் அவர்களது ஊடகங்களும் என்னுடைய எழுத்துகளை ‘துரோகி’ என்ற ஒரு சொல்லினால் நிராகரித்துச் சென்றனர். இதனால் எனக்கு எந்த நஷ்டமும் கிடையாது. இலக்கியத்தின் நோக்கம் அங்கீகாரத்தைக் கோருவதாக இருக்கக்கூடாது. அங்கீகாரத்தை நோக்கி எழுத ஆரம்பித்தால் அங்கேயே சமரசம் தொடங்கி விடும். அதன்பின்பு அங்கே இருப்பது இலக்கியமல்ல. அங்கேயிருப்பது அங்கீகாரம் கோரிய வெறும் விண்ணப்பம் மட்டுமே. நான் எனது நூல்களுக்கு முன்னுரை கூடப் பெறுவதில்லை. எனக்கு அந்த அங்கீகாரம்கூட வேண்டியதில்லை. இதையெல்லாம் நான் எதோ படைப்புத் திமிரினால் பேசுவதாக நீங்கள் தயவு செய்து கருதக் கூடாது…நான் இலக்கியத்தை உச்சமான அழகியலோடு எழுகிறனோ இல்லையோ நான் உண்மையை எழுதுகிறேன். அதை மட்டுமே எழுதுகிறேன். என்னுடைய அரசியல் கருத்துகளைப் பரப்புரை செய்யும் ஆனால் அளவில் சற்றுப் பெரிதான துண்டுப் பிரசுரங்களாகவே நான் எனது கதைகளைக் கருதுகிறேன். அந்த அரசியற் கருத்துகள் பெருமளவில் நிராகரிப்பை பெறக்கூடியவை என்று தெரிந்தே நான் எழுதுகிறேன். அதனால் அங்கீகாரம் ஒரு பிரச்சினையே கிடையாது. கிடைத்தால் மகிழ்ச்சி, அவ்வளவுதான். அதற்காக இந்தியாவில் அங்கீகரிக்கிறார்களில்லை, இங்கிலாந்தில் அங்கீகரிக்கிறார்களில்லை என்று ஒரு படைப்பாளி புலம்பிக் கொண்டா இருப்பது. என்னயிது அழுகுணித்தனம்! படைப்பாளி என்றால் ஒரு ‘கட்ஸ்’ வேண்டாமா!    புலம்பெயர் இலக்கியச் சூழல் எப்படியிருக்கிறது?  புலம்பெயர் இலக்கியத்தின் மையம் என முன்னர் பிரான்ஸைச் சொன்னார்கள். அப்படியொரு மையம் இருந்திருந்தால் அது இப்போது கனடாவுக்கு நகர்ந்திருக்கிறது என்று கருதுகிறேன். டி.சே.தமிழன், பிரதீபா, அருண்மொழிவர்மன், மெலிஞ்சிமுத்தன் என்று வாசிப்பிலும் எழுத்திலும் தீவிர ஈடுபாடுடைய இளைய தலைமுறையொன்று அங்கிருக்கிறது. அ.முத்துலிங்கம், செழியன், செல்வம் அருளானந்தம், சேரன், சுமதி ரூபன், சக்கரவர்த்தி, ஜெயகரன், தேவகாந்தன், திருமாவளவன் போன்றவர்களும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.    புகலிட இலக்கியம் தேக்கநிலையை அடைந்திருக்கிறது என்று சொல்பவர்களுமுண்டு. எனக்கு அந்தக் கருத்தில் உடன்பாடு கிடையாது. முற்போக்கு இலக்கியம், தூய இலக்கியம் என்ற இரு வகைகளைத்தான் நீண்ட நாட்களாகப் புகலிடத்தில் எழுதிக்கொண்டிருந்தார்கள். இப்போது பெருங்கதையாடல்களின் வன்முறையைப் புரிந்துகொண்டு விளிம்புநிலைகளை முன்னிறுத்திய பிரதிகள் உருவாகி வருகின்றன என்றே கருதுகிறேன். தமிழ்த் தேசியக் கருத்தியலும் புலிகள் மீதான அச்சமும் புகலிட இலக்கியத்தை ஆட்டிப்படைத்த காலத்தில் அரசியல் சரியும் துணிவுமே எழுதுவதற்கான முன்நிபந்தனையாகப் புகலிட இலக்கியத்திற்கு இருந்தது. இலக்கிய அழகியலின் மதிப்பீடுகளின்படி நமது பிரதிகள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் ஓர் கொடூரமான அடக்குமுறை நிலவிய காலத்தில் அதை சமரசமின்றி எதிர்த்து நின்றது என்ற பெருமை புகலிட இலக்கியத்திற்கு உண்டு. இப்போது அந்த அடக்குமுறையும் அற்றுப்போன சூழலில் புகலிட இலக்கியம் மேலும் தழைத்துவரும் என்றே எதிர்பார்க்கிறேன்.    நீங்கள் சினிமா விமர்சனங்களும் எழுதியிருக்கிறீர்கள். தீவிரமான எம்.ஜி.ஆர் இரசிகராகவுமிருக்கிறீர்கள். அண்மையில் தமிழ் சினிமாவில் பணியாற்ற தமிழகத்திற்கும் சென்றிருந்தீர்கள், தமிழ்ச் சினிமா குறித்த உங்களின் பார்வை குறித்துச் சொல்லுங்கள்?  எனக்குத் திரைப்படக் கலை குறித்த கோட்பாடுகளோ காட்சி ஊடக நுட்பங்களோ தெரியாது. சர்வதேசச் சினிமாக்கள் குறித்துப் போதிய பரிச்சயமும் எனக்குக் கிடையாது. நான் எழுதிய திரைப்பட விமர்சனங்கள் திரைப்படக் கலையை மையப்படுத்தியவையல்ல. அந்தத் திரைப்படங்கள் திரைப்படத்திற்குப் புறம்பாக உருவாக்கிய அரசியல் உரையாடல்களை மையப்படுத்தியே நான் அந்த விமர்சனங்களை எழுதினேன். எனினும் இப்போது சரமாரியாக இலக்கிய இதழ்களிலும் இணையங்களிலும் எழுதப்படும் சினிமா விமர்சனங்களைப் படிக்கையில் மேத்தாவின் வரிகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. “நாடு இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் நாங்களே மறுபடியும் நாடாளலாம் என்று நினைக்கிறோம்” எனச் செருப்புச் சொன்னதாக அந்தக் கவிதை இருக்கும். நான் கூட ‘அங்காடித் தெரு’ சி.டி.க்குச் சொல்லிவிட்டிருக்கிறேன், கிடைத்ததும் விமர்சனம் எழுதிவிட வேண்டியதுதான்.    பொதுவாக இலக்கியத்தில் ஒருவரை இன்னொருவர் எழுத்தால் காலிபண்ணிவிடுவது என்பது நடவாத ஒன்று. ஆனால் அதை நடத்திக் காட்டியவர் சாரு நிவேதிதா. முன்பு தமிழ் இலக்கிய இதழ்களில் தொடர்ந்து மோசமான திரைப்பட விமர்சனங்களை எழுதிவந்த பேராசிரியர் அ.ராமசாமியை அதைவிட மோசமான திரைப்பட விமர்சனக் கட்டுரைகளை எழுதிக் காலிபண்ணியவர் சாரு நிவேதிதாவே. ‘குரு’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ போன்ற படங்களுக்கு சாரு நிவேதிதா எழுதிய விமர்சனக் கட்டுரைகளைப் படிக்கும் ஒருவர் தமிழ்த் திரைப்படங்களைவிட அவை குறித்த விமர்சனக் கட்டுரைகள் படுகேவலமாயிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.    எனக்கும் சினிமாவிற்குமான தொடர்பு நிரம்பவும் உணர்வுபூர்வமானது. மிகவும் பின்தங்கிய ஒரு தீவில் வளர்ந்தவன் நான். எங்கள் கிராமத்தில் எழுபதுகளில் நாங்கள் எல்லோரும் கொஞ்சம் ‘அடிமைப்பெண்’ எம்.ஜி.ஆர். போலத்தான் அங்கே வளர்ந்துகொண்டிருந்தோம். கடவுள், சாதியம், வறுமை, பெண்கள் கணவன்மார்களால் வதைக்கப்படுவது எல்லாமே இயற்கையானவை, மாற்றமுடியாதவை என்ற மனநிலைதான் எங்களுக்கிருந்தது. இதை மறுத்துப் பேச அங்கே யாருமில்லை. பத்திரிகைகள் படிக்கும் வழக்கமெல்லாம் அங்கே கிடையாது. கொம்யூனிஸ்ட் கட்சிகளின் கால்கள் இந்த 2010வரை எனது கிராமத்தை மிதித்ததேயில்லை.  சாதி ஒழிக்கப்பட வேண்டியது, பணக்காரன் ஏழையைச் சுரண்டக்கூடாது, தாயை மதிப்புச் செய்ய வேண்டும் என்று எனக்கு எம்.ஜி.ஆரின் படங்களே முதன் முதல் சொல்ல நான் கேட்டேன். ‘கடவுள் இறந்துவிட்டார்’ என நீட்ஷே சொன்னாராம். ஆனால் எனக்கு அதை முதலில் கலைஞர் கருணாநிதிதான் சொன்னார். கிராமத்தின் திருமண வீடுகளில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிக் குழாய்களின் வழியே வந்த கலைஞரின் திரைப்பட வசனங்களே கடவுள் இல்லையென்று எனக்கு முதலில் அறிவித்தன. ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘ரத்தக் கண்ணீர்’ போன்ற படங்களின் வசனங்களைச் சுருக்கி ஒருமணிநேர ஒலிநாடாவில் பதிவுசெய்து ஒலிபரப்புவார்கள். அதை ஒலிச்சித்திரம் என்போம். மேலே சொன்ன ஒலிச் சித்திரங்களுடன் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’, ‘திருவிளையாடல்’, ‘வசந்தமாளிகை’ போன்ற படங்களின் வசனங்கள் எனக்கு அப்போது தலைகீழ் பாடம். எம்.ஜி.ஆரின் தனிப்பாடல்கள் எல்லாமே கரைந்தபாடம். எந்தப் படமென்றாலும் ரசித்துப் பார்த்தேன். எந்தப் பாடலென்றாலும் மனமுருகிக் கேட்டேன். இன்றுவரை அந்தப் பழக்கம் என்னில் தொடர்கிறது. இப்போது ரசித்துப் பார்க்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும் சகித்துக்கொண்டு பார்க்கிறேன். ஏதாவது ஒரு படத்தை பார்க்கத் தவறிவிட்டால் மனது பதற்றமாகிவிடுகிறது. அந்தப் படத்தில் ஏதாவது ஒரு நல்ல அம்சமிருந்து நான் தவறவிட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமது.    வெறுமனே படங்கள் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வதுமில்லை. திரைப்பட நடிகர்கள், பாடகர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் குறித்த விபரங்களையும் எனது மூளை எப்படியோ துல்லியமாகத் திரட்டி வைத்துக்கொள்கிறது. படிக்கும் ஒரு கவிதையோ, அரசியல் கட்டுரையோ அடுத்த சில நாட்களிலேயே மறந்துபோகையில் இந்த விபரங்கள் மட்டும் என் மண்டையிலேயே அழியாமல் தங்கிவிடுகின்றன. இளமையில் கல்வி சிலையில் எழுத்தென்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்.    தமிழ்த் திரைப்பட வரலாற்றில் திராவிட இயக்கத்தினர் திரைப்படத்துறையில் இயங்கிய காலத்தையே நான் உச்சமான காலம் எனச் சொல்வேன். திராவிட இயக்கத்தினரின் சினிமாவும் இலக்கியமும் ஒரு வரலாற்றுக் கறை என்று சொல்பவர்களோடு எனக்கு உடன்பாடு கிடையாது. அவை வரலாற்றின் கொடை என்றே நான் சொல்வேன். தந்தை பெரியார் போல “சினிமாவை ஒழித்தால்தான் நாடு உருப்படும்” என்பவர்கள் சினிமாவைத் திட்டும்போது சேர்த்து திராவிட இயக்கத்தினரின் சினிமாவையும் திட்டினால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்றைய வணிகச் சினிமாக்களைப் பாராட்டி விமர்சனங்கள் எழுதுபவர்களிற்கும் அந்தச் சினிமாக்களில் பங்கெடுப்பவர் களுக்கும் திராவிட இயக்கத்தினரின் சினிமாவைக் குற்றஞ் சொல்ல எந்த அருகதையும் கிடையாது.    திராவிட இயக்கத்தினருக்குப் பிறகு இயக்குனர் பாரதிராஜாவின் பங்களிப்பே முதன்மையானது. ‘பதினாறு வயதினிலே’ படத்தில் தமிழ் வாழ்வையும் பண்பாட்டுக் கூறுகளையும் நெருங்கிவந்தவர் ‘கிழக்கே போகும் ரயில்’-ல் கதைநாயகனாக ஒரு முடிதிருத்தும் தொழிலாளியை சித்திரித்து சாதிய ஒடுக்குமுறையை மையப்படுத்தி அன்றைக்கான திரை அழகியலோடு படத்தை உருவாக்கியிருந்தார். ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘கருத்தம்மா’ என்று சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி அவர் படங்களை உருவாக்கியிருக்கிறார். அவரை இன்னும் தாண்ட முடியாமல் தமிழ்ச் சினிமா சடமாகக் கிடக்கிறது என்பதுதான் என் மதிப்பீடு.  நீங்கள் விடாக் குடிகாரன் என்றும், உங்கள் எழுத்து ஆளுமையை பெண்களின் உடல் மீதான கவர்ச்சி வலையாக கொண்டிருக்கிறீர்கள் என்றும் குற்றச்சாட்டுகளும் கருத்துக்களும் உலாவுகின்றனவே?  இதெல்லாம் ஒரு கருத்தா பௌஸர்? குடிப்பது என்பதெல்லாம் ஒரு குற்றச்சாட்டா? எனக்கும்தான் குடிக்காதாவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஆனால் அதை நான் குற்றச்சாட்டாகச் சொல்ல முடியுமா? இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். நான் குடித்துவிட்டு மற்றவர்களைத் தொந்தரவு செய்யாதவரை மற்றவர்களிற்கு என் குடிப்பழக்கத்தை விமர்சிக்க எந்த உரிமையும் கிடையாது. போதையில் உணர்வுகள் மிகையாகத் தூண்டப்படுவது உண்மையே. போதையால் கோபம், வெறுப்புப் போன்ற உணர்வுகள் மட்டுமல்ல அன்பு, நட்பு, காதல் போன்ற நல்லுணர்வுகளும் மிகையாகத் தூண்டப்படுகின்றன. நாம் எந்தப் பக்கத்தில் என்பதுதான் கேள்வி. நான் எல்லோருடைய மகிழ்ச்சியையும் கருதிக் குடிப்பவன்.    “ஒருவன் மற்றவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விரும்புகிறானோ அதைப் போன்றே அவனும் மற்றவர்களிடம் நடந்துகொள்வது தான் ஒழுக்கமாகும்” என்பார் தந்தை பெரியார். இதைத் தவிர்த்து காதல், பாலுறவு போன்றவை உட்பட எனக்கு எவ்விதமான ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளும் கலாசாரத் தளைகளும் கிடையாது. எனது எழுத்து ஆளுமையைப் பெண்கள் மீதான கவர்ச்சி வலையாகக் கொண்டிருக்கிறேன் என்பதெல்லாம் கருத்தோ விமர்சனமோ கிடையாது. அவை அருவருக்கத்தக்க இன்னும் சொன்னால் பெண்களை வெறும் பண்டங்களாய் மதிப்பிடும் கொழுப்பெடுத்த பேச்சுக்கள். இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு அவர்களது தனிப்பட்ட தேர்வு. இதில் மதம், சட்டம், கலாசாரம் போன்றவற்றிற்கு எந்த வேலையும் கிடையாது. இலக்கிய விமரிசனம் இருவரது உறவைக் கண்காணிக்கும் நாட்டாமைத்தனத்திற்குச் சரிந்திருப்பது கேவலம்.    இனி வேறுதளத்திற்கு செல்வோம், நீங்கள் இந்துத்துவத்தை எதிர்த்து எழுதுவதைப் போன்று இஸ்லாமிய அடைப்படைவாதத்தை எதிர்த்து எழுதுவதில்லை என்றொரு விமர்சனம் கிளம்பியிருக்கிறதே?  ஈழத்தைப் பொறுத்தளவிலோ அல்லது நான் வாழும் பிரான்ஸிலோ இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பிரச்சினை தூலமாகக் கிடையாது. இந்த இரு இடங்களிலும் இஸ்லாமியர்கள் மதத்தின் பெயரால் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. அடிப்படைவாதம் என்பது எந்த மதத்திடமிருந்து வந்தாலும் அது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதும் எதிர்க்க வேண்டியதுமாகும். நமது சூழலைப் பொறுத்தவரை சாதியத்தின் அடிவேராக இருக்கும் இந்துமதத்தை எதிர்ப்பதற்கே நான் முன்னுரிமை கொடுக்கிறேன். அதேபோல நான் பிறந்த கத்தோலிக்க மதமும் சாதியால் முழுவதுமாக உள்வாங்கப்பட்ட மதமாகவே உள்ளது. ஈழத்தைப் பொறுத்தளவில் இந்து மதத்திற்கும் கத்தோலிக்க மதத்திற்கும் வேறுபாடுகள் ஏதுமில்லை. இரண்டுமே சாதியத்தைக் காப்பாற்றும் அதிகார நிறுவனங்களே. ஒரு மார்க்ஸியவாதியாக நான் கடவுள் நம்பிக்கையற்றவன் என்ற போதிலும் சாதியத்தை ஏற்றுக் கொள்ளாத மார்க்கங்கள் என்றவகையில் எனக்கு பவுத்தத்தின்மீதும் இஸ்லாம்மீதும் ஈடுபாடிருக்கிறது.    அண்மையில் பிரான்ஸில் பர்தா அணிவதைத் தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டதே?  இஸ்லாமிய சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் பெண்கள் மீதான அடக்குமுறைகள் இன்றைய மனித விழுமியங்களிற்கு ஒவ்வாதவை. முகத்திரை இடுவதையெல்லாம் கலாசாரம் அல்லது தனித்த இனக்குழு வழக்கங்கள் என்றெல்லாம் சொல்லி நியாயப்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில ஆபிரிக்க இனக்குழுக்களிடம் பெண்களை பாலியல்ரீதியாக அடக்கிவைக்க பெண்ணுறுப்பின் கிளிட்டோரிஸ் பகுதியைத் துண்டித்துவிடும் வழக்கமிருக்கிறது. பிரான்ஸில் குடியேறி வாழும் அந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் கூட அதைச் செய்துகொள்கிறார்கள். பிரஞ்சு அரசாங்கம் அந்த வழக்கத்தைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது. பிரஞ்சு அரசாங்கம் வரலாற்றுரீதியாகவே ஆபிரிக்க – இஸ்லாமிய விரோத அரசுதான். இதற்காக அவர்கள் இயற்றிய கிளிட்டோரிஸ் துண்டிப்புத் தடைச் சட்டம் தவறென்று சொல்ல முடியுமா? அவ்வகையான துண்டிப்பு ஆபிரிக்க இனக்குழுக்களின் கலாசாரம் என்று சொல்லி நாம் நியாயப்படுத்த முடியுமா? அவ்வாறு பார்த்தால் சாதிப்பாகுபாடு, குழந்தை மணம், தேவதாசி முறை என்பவையைல்லாம் கலாசாரமும் மரபும்தானே. ஒரு இனக்குழுவின் அல்லது மதக்குழுவின் கலாசாரத்திலோ மரபிலோ அந்நியர்கள் தலையீடு செய்யக் கூடாது எனச்சொல்லி அவற்றைக் கேட்டுக்கேள்வியில்லாமல் விட்டு வைக்கலாமா?    பிரான்ஸில் வாழும் பல இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்ககளில் முகத்திரை அணிபவர்கள் ஒரு விழுக்காடுக்கும் குறைவாகவே இருப்பார்கள் என நினைக்கிறேன். அவ்வாறானால் முகத்திரை அணியாத பெரும்பான்மையினர் மார்க்க விரோதிகளா? மரபு, கலாசாரம் எல்லாமே ஆண்களால் கற்பிக்கப்பட்டவை. ஆண்களால் சட்டமாக்கப்பட்டவை. மரபும் கலாசாரமும் ஆண்களால் பெண்கள்மீது சுமத்தப்பட்டவையே தவிர பெண்களின் கருத்தொருமிப்புடன் ஏற்படுத்தப்பட்டவையல்ல. ஒரு சமூகத்தில் உள்ள உள் ஒடுக்குமுறைகள் மீது உள்ளிருந்தே போராட்டம் நடத்தப்படுவதுதான் மிகச் சரியாக இருக்கும். அதற்காக வெளியிலிருந்து வைக்கப்படும் விமர்சனங்கள் எப்போதுமே சரியற்றவை என ஆகிவிடாது.    பாரிஸ் வாழ்க்கை உங்கள் எழுத்தின் இன்னொரு தளமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. கலைத்துறையை சேர்ந்த உங்களுக்கு இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது? நெருக்கடியாக இந்த வாழ்க்கையை உணர்கிறீர்களா? இதற்கிடையில் எழுத வாசிக்க எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள்?  நான் பிள்ளை குட்டி, வீடு வாசல் எனப் பொறுப்புகளற்ற மனிதன். எனது தேவைகளும் மிகக் குறைவானவை. அவ்வப்போது வேலைக்குச் செல்வது, வேலைக்குச் செல்லாதபோது வேலையிழப்புக் காப்பீட்டுப் பணத்தில் வாழ்வது என்று குத்துமதிப்பாக வாழ்கிறேன். அதனால் வாசிக்கவும் எழுதவும் பயணங்கள் செய்யவும் எனக்கு நேரங்கள் கிடைக்கின்றன.    யுத்தத்தின் முடிவுக்குப்பின் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குச் சென்று வருகிறார்கள். நீங்கள் இலங்கைக்கு செல்லாததற்கு விசேட காரணங்கள் உண்டா?  நான் அரசியல் அகதிக்கான கடவுச்சீட்டையே வைத்திருக்கிறேன். அந்தக் கடவுச்சீட்டுடன் நான் சட்டப்படி இலங்கைக்குள் நுழைய முடியாது. வேறுவழிகளில் இலங்கைக்கு போக முயற்சிக்கலாம்தான். ஆனால் எனது பாதுகாப்புக் குறித்த அச்சங்கள் எனக்கு இருக்கின்றன. யுத்தம்தான் முடிந்திருக்கிறது. ஆனால் கடத்தல்களும் கொலைகளும் இன்னமும் நடந்தபடியேதான் உள்ளன. ராஜபக்ச அரசாங்கம் புலிகளின் பயங்கரவாதத்தைத்தான் முடித்து வைத்திருக்கிறது. ஆனால் அரசின் பயங்கரவாதமும் அரசோடு இணைந்து செயற்படும் தமிழ் ஆயுத இயக்கங்களின் பயங்கரவாதமும் இன்னமும் அங்கே இருக்கின்றன. வயதாகிறதல்லவா! இளமையிலிருந்த துணிவும் சாகசங்களின் மீதான விருப்பும் வரவர எனக்குக் குறைந்துகொண்டே வருகின்றன பௌசர்.                                                            12. இலக்கியவாதிக்கு கூர்மையான அரசியல் உணர்வு தேவை – ம. நவீன்   மலேசியத் தமிழ் இலக்கியப் பரப்பில் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் அடையாளம் ம. நவீன். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்து என இடையறாது எழுதிக்கொண்டிருக்கும் நவீன் ‘வல்லினம்’ (vallinam.com.my) இணைய இதழின் ஆசிரியராகவும் ‘முக‌வ‌ரி’ எனும் மாத‌த்திற்கு இரு முறை வெளிவ‌ரும் இத‌ழின் ஆசிரியராகவுமிருக்கிறார். ‘வல்லினம்’ பதிப்பகத்தின்  மூலம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த‌ ஆண்டுத் தொட‌க்க‌த்தில் சிலாங்கூர் மாநில‌ அர‌சால் வழங்கப்ப‌ட்ட‌ தமிழ் மொழிக்கான ‘இள‌ம் க‌விஞ‌ர் விருது’  நவீனுக்குக் கிடைத்த‌து. ‘தாமான் மெலாவாத்தி’  த‌மிழ்ப்ப‌ள்ளியில் த‌மிழ் ஆசிரிய‌ராக‌ப் பணிசெய்யும் நவீனுடனான இந் நேர்காணல் மின்னஞ்சலூடாகவும் தொலைபேசி வழியேயும் நிகழ்த்தப்பட்டது.    – ஷோபாசக்தி  18.07.2010 நான் பிற‌ந்த‌து மலேசியாவின் ‘கெடா’ மாநில‌த்தில். 4-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வ‌ரை கெடா மாநில‌த்தின் ஒரு ப‌குதியில் (க‌டார‌ம்) க‌ட‌ல் வ‌ழி வாணிப‌ம் ந‌ட‌ந்த‌தற்கான‌ சான்றுக‌ள் உள்ள‌ன. இந்து ம‌த‌ம், பௌத்த‌ம், ச‌ம‌ண‌ ம‌த‌ம் போன்ற‌வை அங்கு இருந்த‌த‌ற்கான‌ த‌ட‌ய‌ங்க‌ளும் சிலைக‌ளும் சிவ‌லிங்க‌ங்க‌ளும் இன்னும் அர‌சால் வேறு வ‌ழியில்லாம‌ல் ‘பூஜாங் ப‌ள்ள‌த்தாக்கு’ எனும் இட‌த்தில் காட்சிக்கு வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. சோழ‌ ம‌ன்ன‌ன் ப‌டைக‌ள் அங்கு வ‌ந்த‌தாக‌வும் த‌க‌வ‌ல் உள்ள‌து. பண்டைக் காலத்தில் த‌மிழ் மொழி அங்கு புழக்க‌த்தில் இருந்த‌த‌ற்கும் சான்றுக‌ள் உண்டு. கெடா மாநில‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் பொதுவாக‌வே த‌மிழ்மொழியிலும் இல‌க்கிய‌த்திலும் ஆளுமை மிக்க‌வ‌ர்க‌ளாக‌ உள்ள‌த‌ற்கு இம்ம‌ண்ணின் வ‌ர‌லாற்றுத் த‌ன்மையைக் கார‌ண‌மாக‌க் கூறுவ‌தால் ம‌ட்டுமே இத்த‌க‌வ‌லை இங்கு ப‌திவு செய்கிறேன். எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன், மா.ச‌ண்முக‌சிவா, சீ.முத்துசாமி, கோ.புண்ணிய‌வான், யுவ‌ராஜ‌ன், சிவா பெரிய‌ண்ணன் போன்ற பல எழுத்தாள‌ர்க‌ள் பிற‌ந்த‌ மாநில‌ம்.    அம்மாநில‌த்தில் ‘லுனாஸ்’ எனும் சிற்றூரில் இன்று முழுதுமாக‌ இல்லாம‌ல் போய்விட்ட‌ செட்டி க‌ம்ப‌த்தில் எங்க‌ள் வீடு. என‌க்கு விப‌ர‌ம் தெரிந்த‌ நாள்முத‌ல் அப்பா ப‌ல்வேறு வேலைக‌ளைச் செய்துள்ளார். அனைத்தும் சிறு சிறு வ‌ணிக‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வை.பொருளாதார‌ போதாமையால் சிங்க‌ப்பூருக்கு பிற‌கு கோலால‌ம்பூருக்கு என‌ அவ‌ர் வேலைக‌ள் தொட‌ர்ந்த‌ன‌. அப்பாவைப் பின்ப‌ற்றி நாங்க‌ளும் கோலால‌ம்பூர் சென்றோம்.ஆர‌ம்ப‌கால‌ம் தொட்டே க‌ல்வி குறித்து என‌க்கு எந்த‌ப் பிர‌க்ஞையும் இருந்த‌தில்லை. நாவ‌லும் சிறுக‌தையும் க‌விதையும் ப‌டிப்ப‌து போன்று பாட‌ புத்த‌க‌ங்க‌ளைப் புர‌ட்டுவ‌து உவ‌ப்பான‌தாக‌ இருந்த‌தில்லை. வீட்டில் உள்ளோர் தூண்டுத‌லால் ஆசிரிய‌ர் வேலைக்குப் ப‌டித்தேன். க‌ல்லூரி என‌க்கு நிறைய‌ச் சொல்லிக் கொடுத்த‌து.அடிப்ப‌டையில் என‌க்கிருந்த‌ கோப‌மும் வ‌ன்முறை சார்ந்த‌ ம‌ன‌மும் இந்த‌ச் ச‌மூக‌த்தின் மேல் ஒட்டுமொத்த‌மாக‌த் திரும்பிய‌து. நான் எவ்வ‌ள‌வு சுர‌ணைய‌ற்ற‌ ஒரு ச‌மூக‌த்தில் வாழ்கிறேன் என்ப‌தை உண‌ர்ந்தேன். ஆரோக்கிய‌மான‌ அடுத்த‌த் த‌லைமுறையை உருவாக்க‌ வேண்டிய‌ ஆசிரிய‌ர்க‌ள் கொஞ்ச‌ம் கூட‌ ச‌மூக‌ அக்க‌றையும் மொழிப்ப‌ற்றும் இல்லாம‌ல் அர‌சாங்க‌ ச‌ம்ப‌ள‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌ர்க‌ளாக‌ ம‌ட்டுமே இருந்தன‌ர்.க‌ல்லூரியில் த‌னிமையானேன். ஒரு ம‌னித‌ன் தீவிரமாக‌ச் சிந்திக்க‌ இந்த‌த் த‌னிமை போதும் என்று தோன்றுகிற‌து.    பூஜாங் ப‌ள்ள‌த்தாக்கை ‘வேறு வ‌ழியில்லாம‌ல் ப‌ராம‌ரிக்கின்ற‌ன‌ர்’ என்று சொல்வ‌தன் கார‌ண‌ம் என்ன‌?    நான் சிறுவ‌னாக‌ இருந்த‌போது அங்கு சென்றுள்ளேன். அத‌ன் பின்ன‌ர் மூன்று – நான்கு முறை அங்கு சென்ற‌போது தொட‌ர்ச்சியான‌ ஏதோ வெறுமை உருவாகி வ‌ருவ‌தை உண‌ர்கிறேன். ‘பூஜாங் ப‌ள்ள‌த்தாக்கு’ தொட‌ர்ச்சியான‌ ஆய்வுக்குட்ப‌டுத்த‌ வேண்டிய‌ ஒரு ப‌குதி. அத‌ற்கு ம‌லேசிய‌ அர‌சாங்க‌ம் நிச்ச‌ய‌ம் வாய்ப்ப‌ளிக்காது. ம‌லேசிய‌ வ‌ர‌லாறு இஸ்லாம் ம‌த‌த்திலிருந்தே தொட‌ங்க‌ வேண்டும் என்று அர‌சாங்க‌ம் விரும்புகின்ற‌து. அத‌ற்காக‌வே பாட‌ப் புத்த‌க‌ங்க‌ளில் ம‌லாக்காவின் முத‌ல் ம‌ன்ன‌னான‌ ப‌ர‌மேஸ்வ‌ரர் என்ற இந்து அரசனின் பெயரை வரலாற்றிலிருந்து இருட்டடித்து ப‌ர‌மேஸ்வ‌ர‌ர் இஸ்லாம் ம‌த‌த்திற்கு மாறிய‌பின்  வைத்துக்கொண்ட  இஸ்க‌ண்டார் ஷா எனும் பெயரையே வரலாறாக்குகிறது. வ‌ர‌லாற்றை த‌ன‌க்கு சாத‌கமாக‌ மாற்றும் ஒரு தேச‌த்தில் பூஜாங் ப‌ள்ள‌த்தாக்கு இன்னும் எத்த‌னை ஆண்டுக‌ள் தாக்குப் பிடிக்கும் என்ப‌து ச‌ந்தேக‌ம்தான். பூஜாங் ப‌ள்ள‌த்தாக்குக் குறித்து நான‌றிந்து முழுமையாக‌ ஆய்வு செய்த‌வ‌ர் டாக்ட‌ர் ஜெய‌பார‌தி. மூன்று முறை ந‌ட‌ந்த‌ உரையாட‌லில் அவ‌ரிட‌ம் நான் பெற்ற‌த் த‌க‌வ‌ல்  சொற்பம்தான். ப‌ல்வேறு துறைக‌ளிலும் ஆழ்ந்த‌ ஆய்வுக‌ளைச் செய்துள்ள‌ அவ‌ர் பூஜாங் ப‌ள்ள‌த்தாக்குத் தொட‌ர்பான‌ ப‌ல‌ உண்மைக‌ளை சேக‌ரித்திருந்தும்  இன்னும் வெளியிடாம‌ல் இருக்கிறார். அந்த ஆய்வுகள் வெளிவரும்போது பல வரலாற்று உண்மைகள் வெளிப்படும் என்றே நம்புகிறேன்.    உங்களுடைய முன்னோர்கள் தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்து மலேசியா வந்தார்கள் எனத் தெரியுமா? தமிழகத்திலுள்ள உங்களது உறவுகளுடன் இப்போதும் தொடர்புள்ளதா?    அம்மாவின் த‌ந்தை த‌ஞ்சையில் ப‌ட்டுக்கோட்டைப் ப‌குதியைச் சேர்ந்தவர். அம்மாவின் தாயார் திருநெல்வேலிப்ப‌குதி. இருவ‌ரும் இங்குதான் -ம‌லேசியாவில் – திரும‌ண‌ம் செய்து கொண்ட‌ன‌ர். என் தாயார் ம‌லேசியாவில்தான் பிற‌ந்தார். என் அப்பாவின் பூர்வீக‌ம் தெரிய‌வில்லை.என் அப்பாவின் தாத்தாவும் பாட்டியும் ம‌லேசியாவில் பிற‌ந்த‌தால் அவ‌ருக்கு முந்தைய‌ த‌லைமுறை குறித்து  எதுவும் தெரியவில்லை. இப்போது த‌மிழ‌க‌த்தில் உள்ள‌ உற‌வுக‌ளோடு எந்த‌த் தொட‌ர்பும் இல்லை.    எதன் வழியே யார் வழியே இலக்கியத்தை வந்தடைந்தீர்கள்?    16 வ‌ய‌தில் பெரும் தாழ்வு ம‌ன‌ப்பான்மையால் எழுத‌த் தொட‌ங்கினேன். அப்போது என‌து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு மாண‌விக‌ளின் ம‌த்தியில் த‌ங்க‌ளை அடையாள‌ம் காட்ட‌ கார‌ண‌மாக‌ இருந்த‌ காற்ப‌ந்து விளையாட்டு என‌க்கு வ‌ராம‌ல் போன‌தால் ஏற்ப‌ட்ட‌ தாழ்வு ம‌ன‌ப்பான்மை அது. ஒழுங்காக‌ப் பேச‌வும் வ‌ராது. மூன்று வார்த்தைக்கு ஒரு வார்த்தை திக்குவேன். அப்போதுதான் ம‌லேசியாவில் முக்கிய‌ எழுத்தாள‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் நான் ப‌யின்ற‌ த‌மிழ்ப் ப‌ள்ளிக்குத் த‌லைமையாசிரியாராக‌ வ‌ந்தார். என் ஆர்வ‌த்தை அறிந்து எனக்கு முறையான‌ வாசிப்புப் ப‌ழ‌க்க‌த்தை அறிமுக‌ம் செய்தார். யாரையெல்லாம் ப‌டிக்க‌லாம் என்று ஆலோச‌னைக் கூறி ஒரு புத்த‌க‌க் க‌டையிலும் வேலைக்குச் சேர்த்துவிட்டார். பின்னாளில் தீவிர‌மான‌ வாசிப்பும் சக‌ ந‌ண்ப‌ர்க‌ளுட‌னான‌ உரையாட‌ல்க‌ள் மூல‌ம் எழுதும் நோக்க‌ம் மாற்ற‌ம் க‌ண்ட‌து. எல்லையில்லா உரிமை கொடுத்து விவாதிக்க‌வும் க‌ருத்து கூற‌வும் என‌க்கு வாய்ப்ப‌ளித்த‌வ‌ர் டாக்ட‌ர் சண்முக‌சிவா. அவ‌ர் என் வாசிப்பை மேலும் தீவிர‌ப்ப‌டுத்த‌ உத‌வினார். என் போதாமைக‌ளை உண‌ர‌ச்செய்தார். இவை குறித்தெல்லாம் ‘வ‌ல்லின‌ம்’ அக‌ப்ப‌க்க‌த்தில் ‘திற‌ந்தே கிட‌க்கும் டைரி’ எனும் தொட‌ரில் எந்த‌ ப‌ல‌வீன‌ங்க‌ளையும் ம‌றைக்காம‌ல் எழுதி வ‌ருகிறேன்.    இன்றைய மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்து?  முன்னிலும் ஆரோக்கிய‌மாக‌ இருக்கிற‌து. முன்பு ஊட‌க‌ங்க‌ள் த‌னிப் பெரும் ச‌க்திக‌ளாக‌, வேண்டிய‌வ‌ர் – வேண்டாத‌வ‌ர் என்ற‌ பாகுபாடுட‌ன் ப‌டைப்புக‌ளை வெளியிட்டு வ‌ந்த‌ன.முற்போக்கான‌ அல்ல‌து மாற்றுச் சிந்தனை கொண்ட‌ எழுத்துக‌ளை அவை பொருட்ப‌டுத்திய‌தில்லை. பெரு.அ.த‌மிழ்ம‌ணி அவ‌ர்க‌ளால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ‘காத‌ல்’ இத‌ழ் இத‌ற்கு ஒரு நிவார‌ணியாக‌ இருந்த‌து. ப‌ழ‌ம் பெரும் ப‌த்திரிகையாள‌ரான அவ‌ர் ‘காத‌ல்’ இத‌ழை உருவாக்க‌ இளைஞ‌ர்க‌ளுக்கு வாய்ப்ப‌ளித்தார். நான், ம‌ணிமொழி, யுவ‌ராஜ‌ன், தோழி, ச‌ந்துரு என‌ப் புதிய‌ சிந்த‌னை கொண்ட‌ குழுவின‌ரால் ‘காத‌ல்’ இத‌ழ் உருவான‌து.மாற்றுச் சிந்த‌னைக‌ள் கொண்ட‌ இல‌க்கிய‌ப் பிர‌திக‌ள் இதில் வெளிவ‌ந்த‌ன‌. இதை தொட‌ர்ந்து ‘வ‌ல்லின‌ம்’ இத‌ழ் ம‌லேசியாவில் உள்ள‌ தீவிர‌ எழுத்தாள‌ர்க‌ள் ஒன்றிணைய‌ ஒரு க‌ள‌மாக‌ இருந்த‌து. அத‌ன் பின்ன‌ர் ‘அந‌ங்க‌ம்’ வ‌ந்த‌து. இதேபோல‌ ‘மௌன‌ம்’ எனும் க‌விதைக்கான‌ சிற்றித‌ழும் ம‌லேசியாவின் க‌விதை போக்கை மாற்றிய‌மைக்க‌ முனைப்புக் காட்டி வ‌ருகிற‌து.  நான் இங்கு இல‌க்கிய‌ம் ப‌ற்றி கூறாம‌ல் இத‌ழிய‌ல் தொட‌ர்பாக‌க் கூற‌க் கார‌ண‌ம் ம‌லேசியாவில் ஒட்டுமொத்த‌மாக‌ ம‌லேசிய‌ இல‌க்கிய‌ப் போக்கை அடையாளம் காட்ட‌ இதுபோன்ற‌ இத‌ழ்க‌ள் துணை நிற்ப‌தால்தான்.    இன்று ம‌லேசியாவில் ம‌ர‌பான‌ சிந்த‌னையை உடைத்துக்கொண்டு ந‌வீன‌ப் போக்குக‌ள் கொண்ட‌, மாற்றுச்சிந்த‌னை கொண்ட‌ பிர‌திக‌ள் அதிக‌ம் வ‌ருகின்ற‌ன‌.அவை இன்னும் ஈழத்து எழுத்துக‌ள் போன்றோ த‌மிழ‌க‌ எழுத்துக‌ள் போன்றோ தீவிர‌மான‌ ஒரு த‌ள‌த்தில் இய‌ங்காவிட்டாலும் குறிப்பிட்ட‌ சில‌ எழுத்தாள‌ர்க‌ள் ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்தின் போதாமையை அறிந்து வைத்துள்ள‌ன‌ர். ந‌ம‌து போதாமையை அறிவ‌தே அடுத்தடுத்த‌ ந‌க‌ர்வுக்கு வ‌ழிவ‌குக்கும் என‌ ந‌ம்புகிறேன்.    தமிழ்நாட்டு இலக்கியப் போக்குகள் மலேசியத் தமிழ் இலக்கியத்தை எவ்விதம் பாதித்துள்ளன?  ம‌லேசியாவிற்கு வ‌ந்து சென்ற‌ பிற‌கு, சுந்த‌ர‌ ராம‌சாமி அகில‌ இந்திய‌ வானொலி நிலைய‌த்திற்கு வ‌ழ‌ங்கிய‌ ஒரு நேர்காண‌லில் “ம‌லேசிய‌ இல‌க்கிய‌ம் அதிக‌ம் உற்சாக‌ம் கொள்ளும்ப‌டி இல்லை. ந‌ம் ஜ‌ன‌ர‌ஞ்ச‌க‌ இத‌ழ்க‌ளில் ந‌ட‌க்கும் காரிய‌ங்க‌ள் அவ‌ர்க‌ளுக்குத் தெரிகின்ற‌து. சிற்றித‌ழ் சூழ‌லில் ந‌ட‌க்கும் காரிய‌ங்க‌ள் பெரும்பாலும் தெரிவ‌தில்லை” என்றார். இந்நிலை இன்றும் தொட‌ர்கிற‌து.    ஒரு வ‌ச‌திக்காக‌ நாம் ம‌லேசிய‌ இல‌க்கிய‌ப் போக்குக‌ளை மூன்றாக‌ப் பிரிக்க‌லாம். முத‌லாவ‌து ர‌க‌த்தின‌ர், சுந்த‌ர‌ ராம‌சாமி சொன்ன‌து போன்று இன்ன‌மும் த‌மிழ‌க‌ ஜ‌ன‌ர‌ங்ச‌க‌ இத‌ழ்க‌ளை அடியொட்டி வ‌ருப‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் இன்ன‌மும் குமுத‌ம், குங்கும‌ம், ஆன‌ந்த‌ விக‌ட‌ன் போன்ற‌ இத‌ழ்க‌ளில் வ‌ரும் ந‌கைச்சுவை துணுக்குக‌ளையும் ஒரு ப‌க்க‌க் க‌தைக‌ளைப்  ப‌டித்தும் அது போன்று எழுதியும் த‌ங்க‌ள் ‘எழுத்தாற்ற‌லை’ நிரூபித்து வ‌ருகின்ற‌ன‌ர்.    இர‌ண்டாம் ர‌க‌த்தின‌ர், த‌மிழ‌க‌ச் சிற்றித‌ழ்க‌ளாக‌த் த‌ங்க‌ளை வருணித்துக் கொள்ளும் பிர‌திக‌ள் முன்வைக்கும் க‌ருத்தையும் த‌மிழ‌க‌ ந‌வீன‌ இல‌க்கிய‌த்தின் அடையாள‌மாக‌த் த‌ங்க‌ளை பிர‌திநிதித்துக்கொள்ளும் இல‌க்கிய‌வாதிக‌ளின் விவாதிப்பையுமே இறுதியான‌ இல‌க்கிய‌க் க‌ருத்தெனக் கொண்டு த‌ங்க‌ள் மூளையிலும் எழுத்திலும் வ‌லிந்து திணிப்ப‌வ‌ர்க‌ள்.த‌மிழ‌க‌ இல‌க்கிய‌வாதி விடும் குசுவிற்குக் கூட‌ தீவிர‌மான‌ அர்த்த‌ம் உண்டென‌ வாத‌டுப‌வ‌ர்க‌ள். எல்லா விவாத‌ங்க‌ளின் இறுதியிலும் தான் ந‌ம்பும் இல‌க்கிய‌வாதியின் கூற்றை முழுமுற்றான‌ தீர்ப்பாக‌ நிறுவ‌ முய‌ல்ப‌வ‌ர்க‌ள்.    மூன்றாம் ர‌க‌த்தின‌ர் ம‌லேசியாவில் எல்லாக் கால‌த்திலும் இருந்தே வ‌ருகின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ள் சிறு குழுவின‌ர். எல்லாப் பிர‌திக‌ளையும்  விம‌ர்ச‌ன‌ங்க‌ளோடு அணுகுப‌வ‌ர்க‌ள். ஒருவேளை சுந்த‌ர‌ ராம‌சாமி க‌ண்க‌ளுக்கு இவ‌ர்க‌ள் அக‌ப்ப‌டிருக்க‌ மாட்டார்க‌ள். ம‌ற்ற‌ப‌டி இவ‌ர்க‌ள் ப‌டைக்கும் இல‌க்கிய‌ம் ம‌லேசிய‌ வாழ்வின் அச‌லான‌ த‌ன்மையை அத‌ன் அர‌சிய‌லோடு வெளிப்ப‌டுத்தியே வ‌ருகின்ற‌து.    அய‌ல‌க‌ த‌மிழ் எழுத்தாள‌ர்க‌ளின் வ‌ருகை ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்திற்கு எவ்வித‌ம் ப‌ங்க‌ளிக்கிற‌து?  என்ன‌ள‌வில் நிறைய‌ ஆரோக்கிய‌மான‌ மாற்ற‌ங்க‌ளைக் கொண்டுவ‌ந்துள்ள‌ன‌. ‘காத‌ல்’ இத‌ழ் மூல‌மாக‌ 2006ல் ம‌னுஷ்ய‌ புத்திர‌னை ம‌லேசியாவிற்குக் அழைத்திருந்தோம். அப்போது ம‌னுஷ்ய‌ புத்திர‌ன் ஒரு க‌விஞ‌ராக‌ இருந்த‌தாலும் வியாபாரியாக‌ இல்லாத‌தாலும் அவ‌ருட‌னான‌ க‌ல‌ந்துரையாட‌ல்க‌ள் மிகுந்த‌ உற்சாக‌ம் ஊட்ட‌க்கூடிய‌வையாக‌ இருந்த‌ன‌. அவ‌ருட‌ன் க‌விதை குறித்தான‌ உரையாட‌ல்க‌ள் என‌க்குள் ப‌ல‌ திற‌ப்புக‌ளுக்குக் கார‌ண‌மாக‌ இருந்த‌ன‌. அதே போல‌ க‌விஞ‌ர் சேர‌னுட‌னான‌ உரையாட‌ல்க‌ளும் க‌விதை தொட‌ர்பான‌ புரித‌ல்க‌ளுக்கு வித்திட்ட‌ன‌. அண்ண‌ன் அறிவிம‌தியின் ந‌ட்பும் க‌விதை தொட‌ர்பான‌ சில‌ எளிய‌ அறிமுக‌ங்க‌ளை வ‌ழ‌ங்கிய‌து.    ‘காத‌ல்’ இத‌ழ் மூல‌மாக அழைத்துவ‌ர‌ப்ப‌ட்ட‌ ம‌ற்றுமொருவ‌ர் ஜெய‌மோக‌ன். ஜெய‌மோக‌னுட‌னான‌ உரையாட‌ல்க‌ள் எந்த‌ திசையில் வேண்டுமானாலும் ப‌ய‌ணிக்கும் சுத‌ந்திர‌ம் கொண்ட‌து. ப‌ய‌ண‌ம் தோறும் ஜெய‌மோக‌ன் ஒரு வ‌ழிகாட்டியாக‌ பாதைக‌ளை முன் நின்று விள‌க்கிய‌ப‌டி செல்வார். இல‌ங்கையிலிருந்து ம‌லேசியாவிற்கு வ‌ந்து ஒரு வ‌ருட‌ங்க‌ள் பேராசிரிய‌ராக‌ப் ப‌ணியாற்றிய‌ எம்.ஏ.நுஃமானின் ஆளுமை என்னைப் பெரிதும் க‌வ‌ர்ந்த‌து. அவ‌ர‌து அத்த‌னை ஆளுமைக‌ளை விட‌வும் ஆழ்ந்த‌ அன்பும் பிரிய‌மும் அடிக்க‌டி அவ‌ரைச் ச‌ந்திப்ப‌த‌ற்கான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளைக் கொடுத்த‌து.அவ‌ரிட‌ம் நான் க‌ற்றுக்கொண்ட‌து நிறைய‌. ச‌ட்டென‌ யோசிக்கையில் அவையெல்லாம் நினைவுக்கு வ‌ராம‌ல் அவ‌ரும் அவ‌ர் துணைவியாரும் வ‌ழ‌ங்கிய‌ பிரிய‌த்தின் க‌ண‌ங்க‌ள் ம‌ட்டும் நினைவுக்கு வ‌ருகிற‌து.    இதேபோல‌ சிங்கை இள‌ங்கோவ‌னின் வ‌ருகை கொழுந்து விட்டெரியும் தீ ஜுவாலை போல‌ உஷ்ண‌ங்க‌ளை ஏற்றிய‌து. ஒரு ப‌டைப்பாளியினுடைய‌ ரௌத்திர‌த்திட‌னும் ஆயுத‌ங்க‌ளுட‌னும் த‌ன்ன‌ந்த‌னியாக‌ அதிகார‌த்தை எத்தி உதைக்கும் அவ‌ர் ப‌டைப்பின் வீரிய‌ம், எழுத்தின் ப‌டைப்பின் ப‌டைப்பாளியின் அச‌ல் த‌ன்மையை அத‌ன்  ர‌த்த‌க்க‌வுச்சி மாறாம‌ல் க‌ண்முன் கொண்டு வ‌ந்த‌து.    சோர்ந்து போயிருக்கும் ம‌ன‌ நிலையில் புதிய‌ சிந்த‌னையும் பார்வையும் கொண்ட‌ அய‌ல‌க‌ எழுத்தாள‌ர்களின் வ‌ருகை என்ன‌ள‌வில் உற்சாக‌ம் கொள்ள‌க்கூடிய‌தே. இவையெல்லாம் என‌க்கும‌ட்டும‌ல்ல‌ ஒவ்வொரு கால‌க்க‌ட்ட‌த்திலும் இணைந்திருந்த‌ எழுத்துல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் ந‌ட‌ந்திருக்கும். அவ‌ர்க‌ளின் ம‌ன‌நிலை மாற்ற‌ங்க‌ளை நான் சொல்வ‌து ச‌ரியாக‌ இருக்காதென்ப‌தால் என் க‌ருத்தை ம‌ட்டும் ப‌திவு செய்துள்ளேன்.    மலேசியத் தமிழ் இலக்கியப் பரப்பில் பெண் எழுத்துகளின் வீச்சுக் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?  ம‌லேசியாவில் பெண் எழுத்து என‌ எதை அடையாள‌ப்ப‌டுத்துவ‌தென‌ தெரிய‌வில்லை. ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில் இருந்தே ம‌லேசியாவில் உள்ள‌ பெண் ப‌டைப்பாளிக‌ளின் நாவ‌ல்க‌ளைச் சிறுக‌தைக‌ளை வாசித்திருக்கிறேன். பாவை, க.பாக்கிய‌ம், நா.ம‌கேஸ்வ‌ரி, நிர்ம‌லா பெருமாள், நிர்ம‌லா ராக‌வ‌ன், க‌ல்யாணி ம‌ணிய‌ம், பாமா, சு.க‌ம‌லா, வே.ராஜேஸ்வ‌ரி என‌ இன்னும் சில‌ர் ம‌லேசியாவில் ப‌ல‌ கால‌மாக‌ எழுதிவ‌ருகிறார்க‌ள். இவ‌ர்க‌ளில் சில‌ரை ப‌ல‌கால‌மாக‌ எழுதுவ‌தால் ம‌ட்டுமே இங்குக் குறிப்பிடுகிறேன். ம‌ற்ற‌ப‌டி இவ‌ர்க‌ளின் ப‌டைப்பில‌க்கிய‌த்தில் எந்த‌ வ‌கையான‌ ஈர்ப்பும் என‌க்கு இருந்த‌தில்லை. இவ‌ர்க‌ள் க‌தைக‌ளில் வ‌ரும் பெண்க‌ளின் குர‌ல் ச‌மைய‌ல் அறையிலிருந்து ஒலிப்ப‌தும் ஆண்க‌ளின் குர‌ல் வ‌ர‌வேற்ப‌றையிலிருந்து ஒலிப்ப‌துமே கால‌ம் கால‌மாக‌ ந‌ட‌ந்து வ‌ருகிற‌து.    இது போன்ற‌ பார்வை ஒருபுற‌ம் இருக்க‌, எழுத‌ப்ப‌ட்ட‌க் கால‌த்தைக் க‌ண‌க்கில் கொண்டு எழுத்தாள‌ர் பாவையின் எழுத்துக‌ளை முக்கிய‌மான‌வையாக‌க் க‌ருதுகிறேன். அவ‌ருக்கு சுவார‌சிய‌மாக‌க் க‌தை சொல்ல‌ தெரியும். க‌.பாக்கிய‌ம் போன்று எழுத்து ம‌ட்டும் அல்லாது இய‌க்க‌வாதிக‌ளாக‌வும் உற்சாக‌மாக‌ச் செய‌ல்ப‌டும் ஆளுமைமிக்க‌வ‌ர்க‌ளும் ம‌லேசிய‌ இல‌க்கிய‌ உல‌க‌த்துக்கு கிடைத்திருப்ப‌து உற்சாக‌ம் அளிக்க‌க்கூடிய‌து. இதும‌ட்டும் அல்லாது என‌து த‌னிப்ப‌ட்ட‌ உரையாட‌ல்க‌ளில் க‌ண‌வ‌னிட‌ம் கொடுமை அனுப‌வித்து எழுதுவ‌த‌ற்குப் ப‌ல‌ த‌டைக‌ள் வ‌ந்த‌போதும் ப‌ல‌ நாவ‌ல்க‌ளை எழுதி வெளியிட்ட‌ ஒரு சில‌ மூத்த‌ப் ப‌டைப்பாளிக‌ளையும் இவ்வேளையில் நினைவு கூர்கிறேன்.    இவ‌ர்க‌ளோடு ஒப்பிடும்போது இன்றைக்கு எழுதுப‌வ‌ர்க‌ளின் நிலை க‌வ‌லை அளிப்ப‌தாக‌வே உள்ள‌து. எளிய‌ உண‌ர்வுக‌ளையும் எளிய‌ அனுப‌வ‌ங்க‌ளையும் சின்ன‌ச் சின்ன‌ சிலிர்ப்புக‌ளையும் க‌விதைக‌ளில் ம‌ட்டுமே இன்றைய‌ பெரும்பாலான‌ பெண் ப‌டைப்பாளிக‌ள் ப‌கிர்கிறார்க‌ள். தோழி, ம‌ணிமொழி,யோகி, தினேசுவ‌ரி, பூங்குழ‌லி,சித‌னா, ராஜ‌ம் ர‌ஞ்ச‌னி என‌ ம‌லேசியாவில் எழுதும் ஒரு சில‌ருக்கு ந‌ல்ல‌ வாசிப்பும் க‌ருத்துக‌ளும் இருந்தாலும் அவ‌ற்றை எழுத்தில் கொண்டுவ‌ர‌ தீவிர‌ம் இல்லை என்றே சொல்ல‌த் தோன்றுகிற‌து. எழுதுவ‌தற்கான‌ விரிந்த‌ க‌ள‌மும் வாசிப்புக்கான‌ நிறைய‌ மூல‌ங்க‌ளும் உள்ள‌ இச்சூழ‌லை அவ‌ர்க‌ள் த‌வ‌றவிடுவ‌து வ‌ருத்த‌ம‌ளிக்கிற‌து. வாசிப்புக்கான‌, எழுதுவ‌த‌ற்கான‌ இவ‌ர்க‌ள் கொண்டிருக்கும் சோம்ப‌லுக்கு அவ்வ‌ப்போது த‌ரும் த‌த்துவ‌ப்பூர்வ‌மான‌ கார‌ண‌ங்க‌ள் ம‌ட்டும் எப்போதும் என்னை எரிச்ச‌ல‌டைய‌ச்செய்யும்.    க‌விதைக‌ளின் போக்கு எவ்வாறு உள்ள‌து ?  ஆரோக்கிய‌மாக‌ உள்ள‌து. அகில‌ன் ம‌ற்றும் சிவ‌த்தின் க‌விதைக‌ள் த‌னித்துவ‌மான‌வை.ஆர‌ம்ப‌த்தில் அகில‌னிட‌ம் இருந்த‌ சில‌ எழுத்தாள‌ர்க‌ளின் பாதிப்பு இப்போது இல்லாத‌தை உண‌ர்கிறேன். ப‌ர‌ந்த‌ வாசிப்பு ப‌ல‌ர‌து க‌விதை சொல்லும் மொழியை மாற்ற‌ம‌டைய‌ வைத்துள்ள‌து. அதில் முக்கிய‌மாக‌ ஏ.தேவ‌ராஜ‌ன் ம‌ற்றும் ப‌ச்சைபால‌னைக் குறிப்பிட‌லாம்.சிவ‌த்தின் க‌விதைக‌ள் என்னைப் பெரிதும் க‌வ‌ர்ந்த‌வை. தோட்ட‌ வாழ்வு சார்ந்த அவ‌ர‌து க‌விதைக‌ள் அதில் முக்கிய‌மான‌து. ஆனால் க‌ட‌ந்த‌ தீபாவ‌ளிக்கு அவ‌ரும் ‘தீபாவ‌ளி க‌விதை’ எழுதிய‌துதான் என‌க்கு அச்ச‌த்தை அளித்த‌து. பெரும்பாலும் என‌க்கு விழாக்கால‌ க‌விஞ‌ர்க‌ளைக் க‌ண்டால் ஏற்ப‌டும் அச்ச‌ம் அது. அதே ப‌த்திரிகையில் அவ‌ர் ம‌.இ.கா க‌ட்சியில் இளைஞ‌ர் பிரிவில் முக்கிய‌ப் பொறுப்பில் ப‌ட‌த்துட‌ன் வெளிப்ப‌ட்ட‌போது ந‌டுந‌டுங்கிப் போனேன். என‌க்கு ம‌ட்ட‌மாக‌த் தெரியும் ம‌.இ.கா அவ‌ருக்கு ம‌க‌த்தான‌தாக‌த் தெரிவ‌தில் த‌வ‌றில்லை.அதே போல‌ என‌க்கு ம‌க‌த்தான‌தாக‌த் தெரியும் ஒன்று ச‌க‌ இல‌க்கிய‌வாதிக‌ளுக்கு ம‌ட்டமாக‌த் தெரிய‌லாம்.ஆனால் ஒரு க‌விஞ‌ன் தான் கொண்டிருக்கும் க‌ட்ட‌ற்ற‌ சுத‌ந்திர‌த்தை ம‌த‌மும், க‌ட்சிக‌ளும், அமைப்புக‌ளும், இய‌க்க‌ங்க‌ளும் ப‌றித்துக்கொள்ளும் என‌ தீர்க்க‌மாக‌ ந‌ம்புகிறேன். நான் வாழும் கால‌த்தில் ஒரு ந‌ல்ல‌ க‌விஞ‌ன் இவ்வாறு சிறைப‌டுவ‌தால் ஏற்ப‌டும் ந‌டுக்க‌மாக‌ அது இருக்கலாம்.    ம‌ணிமொழி , தோழி, தினேஸ்வ‌ரி, யோகி, போன்ற‌வ‌ர்க‌ளும் ந‌ல்ல‌ க‌விதைக‌ளைத் தொட‌ர்ந்து ப‌டைத்து வ‌ருகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளின் க‌விதை குறித்தான‌ பார்வை இன்னும் தீவிர‌ம‌டைந்தால் மேலும் ந‌ல்ல‌ க‌விதைக‌ள் பிற‌க்கும். ரேணுகா என்ப‌வ‌ரும் இப்போது அதிக‌ம் எழுதிவ‌ருகிறார். க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ க‌விஞ‌ராக‌ இருக்கிறார்.    மலேசியத் தமிழ் இலக்கியத்தின் தனி அடையாளமாக எதைக் கருதுவீர்கள்?  கால‌ம் கால‌மாக‌ த‌மிழ‌க‌ இல‌க்கிய‌ங்க‌ளையும் எழுத்துக‌ளையும் ப‌டித்துப் ப‌ழ‌கிவிட்ட‌வ‌ர்க‌ள் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ள். ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ங்க‌ளிலும் த‌மிழ‌க‌ இல‌க்கிய‌ங்க‌ள்தான் பாட‌ங்க‌ளாக‌ உள்ள‌ன.அதுவும் மு.வ‌, ந.பா, அகில‌ன் இப்ப‌டி. இந்த‌ச் சூழ‌லில் தனித்துவமான இலக்கிய மொழிரீதியான‌ மாற்ற‌ம் உட‌ன‌டியாக‌ நிக‌ழாது. சில‌ர் முய‌ன்றுள்ள‌ன‌ர். சீ.முத்துசாமியும் கோ.முனியாண்டியும் அதில் முக்கிய‌மான‌வ‌ர்க‌ள். சு.யுவ‌ராஜ‌னின் க‌தைக‌ளில் அச‌லான‌ தோட்ட‌ வாழ்வின் உயிர் இருக்கும். அவ‌ரின் ம‌ற்றெல்லா ப‌டைப்புக‌ளை விட‌வும் தோட்ட‌ வாழ்வு சார்ந்த‌ சிறுக‌தைக‌ள் என் வாசிப்புக்கு நெருக்க‌மான‌வை. தோட்ட‌ வாழ்வை த‌விர‌ ந‌க‌ர‌ நெருக்க‌டியால் சித‌றுண்ட‌ ந‌வீன‌ ம‌னித‌னின் ம‌ன‌தை ம‌ஹாத்ம‌னின் சிறுக‌தைக‌ள் வெளிப்ப‌டுத்துகின்ற‌ன‌.  அவ‌ர் அனுப‌வ‌மே அவ‌ர் க‌தைக‌ளின் அடையாள‌ம். இதே போல‌ ந‌வீன‌ ம‌னித‌னின் அக‌ம் சார்ந்த‌ சிக்க‌ல்க‌ளைப் பேசும் ச‌ண்முக‌சிவாவின் க‌தைக‌ளும் த‌னி அடையாள‌த்தைக் கொண்டுள்ள‌ன. ம‌லேசிய‌ இல‌க்கிய‌வாதிக‌ள் உண்மையான‌ த‌ங்கள் வாழ்வை எழுதுவ‌து ம‌ட்டுமே ம‌லேசிய‌த் த‌மிழ் இல‌க்கிய‌த்துக்கு த‌னி அடையாள‌ம் த‌ர‌ முத‌ற்ப‌டி என‌ நினைக்கிறேன்.    தமிழகத்தில் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் அடையாளமாகப் சை.பீர்முகமது போன்றவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்களே?  ‘ம‌லேசிய‌ எழுத்தாள‌ர்க‌ளின் சிறுக‌தைக‌ளைத் தொகுத்து ‘வேரும் வாழ்வும்’எனும் தொகுதியைச் சொந்த‌ செல‌வில் போட்டார்; ஜெய‌காந்த‌னை அழைத்து வ‌ந்தார்; த‌மிழ‌க‌ மேடைக‌ளில் ம‌லேசிய‌ எழுத்துக‌ளைப் ப‌ற்றி உர‌க்க‌ச் சொல்கிறார்’ இது போன்ற‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ சை.பீர்முக‌ம‌து அப்ப‌டி அடையாள‌ம் காட்ட‌ப்ப‌டுகிறார் என்றால் க‌ருணாநிதியையும் க‌லைஞ‌ர் என்று கூறுவ‌திலும் எந்த‌க் கூச்ச‌மும் நாம் அடைய‌ வேண்டியிருக்காது. பொதுவாக‌வே த‌மிழ‌ர்க‌ள் ஓர் இல‌க்கிய‌வாதியையும் இய‌க்க‌வாதியையும் ஒரே நேர்கோட்டில் பார்ப்பதால் ஏற்ப‌டும் கோளாறுக‌ள் இவை. சை.பீர்முக‌ம‌துவின் இல‌க்கிய‌த் த‌ர‌ம் என்ன‌? எனும் கேள்விக்கு சாத‌க‌மான‌ ப‌தில் சொல்ல‌ முனையும் ஒருவ‌ர் க‌ட‌க்க‌ வேண்டிய‌ அவ‌மான‌ங்க‌ள் ஏராள‌ம்.    இங்கே இன்னுமொரு பிர‌ச்ச‌னையும் உண்டு. இன்றைய‌ த‌மிழ‌க‌ச் சிற்றித‌ழ்க‌ளாக‌த் த‌ங்க‌ளை அடையாள‌ம் காட்டிக்கொண்டு வெளிவ‌ரும் ஏடுக‌ளுக்கு க‌மிஷ‌ன் வாங்காம‌ல் ம‌லேசியாவில் இத‌ழ்க‌ளை அறிமுக‌ப்ப‌டுத்த‌வும் ச‌ந்தா வாங்கி அனுப்ப‌வும் ப‌டைப்புக‌ளை சேக‌ரித்துத் த‌ர‌வும் மொத்த‌த்தில் அவ‌ர்க‌ளது இத‌ழ் த‌மிழ‌ர்க‌ள் வாழும் இத‌ர‌ நாடுக‌ளில் விற்றுத்த‌ரும் புரோக்க‌ர்க‌ளாக‌ச் செய‌ல்ப‌ட‌ சில‌ எழுத்தாள‌ர்க‌ள் த‌மிழ‌க‌ப் ப‌திப்ப‌க‌ங்க‌ளுக்குத் தேவை.எழுத்தாள‌ர்க‌ளுக்குக் க‌மிஷ‌ன் த‌ர‌ அவ‌சிய‌ம் இருக்காது. வாயார‌ நாலு வார்த்தைப் புக‌ழ்ந்தால் போதும்.கூடுத‌லாக‌ ந‌ன்மை செய்கிறேன் என்று போகிற‌ போக்கில் அவ‌ர்க‌ள் ப‌திப்ப‌க‌த்திலேயே இந்த‌ எழுத்தாள‌ர்க‌ளின் புத்த‌க‌த்தையும் அடித்துக் கொடுத்தால் புள‌ங்காகித‌ம் அடைந்துவிடுவார்க‌ள். அதில் சில‌ நூறு புத்த‌க‌த்தை அதே எழுத்தாள‌ர் த‌லையில் கட்டி விற்றுவிட்டால் ப‌திப்ப‌க‌ங்க‌ளின் பிர‌ச்சனை தீர்ந்த‌து.    த‌மிழ‌க‌ப் ப‌திப்ப‌க‌ங்க‌ளால் கொண்டாட‌ப்ப‌டும் வெளிநாட்டு த‌மிழ‌ர்க‌ளைக் கொஞ்ச‌ம் உற்றுப் பார்த்தாலும் அவ‌ர்க‌ள் மேல் இந்த‌ ஏஜெண்ட் க‌றை ப‌டிந்திருப்ப‌தைக் காண‌லாம். என்ன‌… சை.பீர்முகமது ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ ஏஜ‌ண்டாக‌ இருப்ப‌தால் க‌றை கொஞ்ச‌ம் அதிக‌ம்.    கருணாநிதியைக் கலைஞராக ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை, அவரை ஒரு திரைப்பட, நாடகக் கலைஞராகக் கூட ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா?  ஏன் ஏற்றுக்கொள்ள‌ முடியாது. தாராள‌மாக‌ ஏற்றுக்கொள்ள‌லாம். அத‌ற்கு முன் ‘கால‌ச்சுவ‌டு’ க‌ண்ண‌னை ஓர் எழுத்தாள‌ர் என்று ஏற்றுக்கொள்ளவேண்டி வ‌ரும்…அவ‌ரும் புத்த‌கம் வெளியிட்டுள்ளார் அல்ல‌வா! சுந்த‌ர‌ ராம‌சாமியை ந‌வீன‌ மொழி ந‌டையின் த‌ந்தை என‌ ஏற்றுக்கொள்ள‌வேண்டி வ‌ரும்; வைகோவை ஒரு போர‌ளி என‌ ஏற்றுக்கொள்ள‌வேண்டி வ‌ரும்; எங்க‌ ஊர் கார்த்திகேசுவின் நாவ‌ல்க‌ள் தீவிர‌மான‌வை என‌ ந‌ம்ப‌வேண்டிவ‌ரும், ம‌லேசிய‌ எழுத்தாள‌ர் ச‌ங்க‌த் த‌லைவ‌ரை ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்தைக் காக்க‌ வேண்டி அவ‌தார‌ம் எடுத்த‌வ‌ர் என‌ வ‌ண‌ங்க‌ வேண்டி வ‌ரும்; இப்ப‌டி நிறைய‌ ‘வ‌ரும்’க‌ள் வ‌ரும். க‌லை என்ப‌தை அது உருவாகும் நோக்க‌ம், அத‌ன் அர‌சிய‌ல், அத‌ன் உள் அடுக்குக‌ளை ஆராயாம‌ல் காற்ற‌ழுத்தத்தில் குபீரென‌ உப்பும் ப‌லூனை க‌ண்டு எழும் விய‌ப்போடு ம‌ட்டுமே அவ‌தானிப்போமேயானால் மேற்க‌ண்ட‌ எல்லோரையுமே த‌ங்குத்த‌டையின்றி அவ‌ர‌வ‌ர் இருக்கும் பிம்ப‌ங்க‌ளுட‌ன் கொண்டாட‌லாம்.    ஓர் இலக்கியவாதி கூர்மையான அரசியல் உணர்வுள்ளவராக இருக்கவேண்டும் எனக் கருதுகிறீர்களா?  அப்ப‌டி இல்லாம‌ல் போனால் அவ‌ன் இல‌க்கிய‌வாதியாக‌ இருப்ப‌த‌ற்கான‌ பொருள்தான் என்ன‌? அதிகார‌ வ‌ர்க்க‌ங்க‌ளிட‌மிருந்து ந‌ம‌க்குக் கிடைக்கும் எதிர்ப்பைவிட‌ ந‌ட்புக‌ர‌த்தையே ச‌ந்தேக‌ம் கொண்டு பார்க்க‌வேண்டியுள்ள‌து. நான் பார்த்த‌வ‌ரையில் எந்த‌ ஒரு ச‌ட்ட‌த் திருத்த‌மோ அமுலாக்க‌மோ அதிகார‌ம் உள்ள‌வ‌ர்க‌ளுக்கே இறுதி ப‌ல‌னை த‌ருவ‌தாக‌ உள்ள‌தே த‌விர‌ சிறுபான்மை ம‌க்க‌ளுக்கு அல்ல‌. எந்த‌ நேர‌மும் பாதுகாப்ப‌ற்ற‌ ஓர் உண‌ர்வில்தான் சிறுபான்மை ம‌க்க‌ளுட‌ன் க‌ல‌ந்துள்ள‌ ஓர் இல‌க்கிய‌வாதி இருக்க‌ வேண்டியுள்ள‌து. கால‌ங்கால‌மாக‌ அதிகார‌த்தில்  உள்ள‌வ‌ர்க‌ள் எழுத்தாள‌ர்க‌ளையே த‌ங்க‌ளுக்குச் சாத‌க‌மான‌வ‌ர்க‌ளாக்கிக் கொள்ள‌வும் விரும்புகிறார்க‌ள். எழுத்தே அதிகார‌ வ‌ர்க்க‌ங்க‌ளின் நாடித்துடிப்பை ம‌க்க‌ளிட‌ம் முத‌ல் அறிமுக‌ம் செய்வ‌தால் எழுத்தாள‌னை சுற்றிலும் வித‌வித‌மான‌ க‌ண்ணிக‌ள் அவ‌ன் ப‌ய‌ண‌ம் தோறும் விரிக்க‌ப்ப‌டுகின்ற‌து. க‌ண்ணியில் சிக்குவ‌தா இல்லையா என்ப‌து எழுத்தாள‌னின் தேர்வுதான்.    இன்று மலேசியாவில் தமிழ் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு எவ்விதமுள்ளது?  அர‌சிய‌லில் ஈடுப‌ட‌ ஆர்வ‌ம் செலுத்துகின்ற‌ன‌ர். ஆளுங்க‌ட்சி – எதிர்க்க‌ட்சி என‌ அனைத்திலும் அவ‌ர்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு உள்ள‌து. ஆனால் அர‌சிய‌லில் அவ‌ர்க‌ளுக்கான‌ இட‌ம் கிடைத்த‌வுட‌ன் நீங்க‌ள் கூறிய‌ ‘த‌மிழ் இளைஞ‌ர்க‌ளாய்’ அவ‌ர்க‌ள் இருப்பதில்லை.அவ‌ர்க‌ள் இர‌த்த‌ங்க‌ளில் ஏதோ ஒரு அசுத்த‌மான‌ இர‌சாய‌ன‌ம் க‌ல‌ந்துவிட்ட‌துபோல‌ ச‌ராச‌ரி த‌மிழ‌ர் வாழ்விலிருந்து வில‌கிவிடுகின்ற‌ன‌ர். தேர்த‌ல் கால‌ங்க‌ளில் ஓட்டுக‌ளைப் பெற‌ தாங்க‌ள் சார்ந்த‌ க‌ட்சிக்கு ஆத‌ர‌வாக‌ப் பிர‌ச்சார‌ம் செய்வ‌தோடு ச‌ரி. தேசிய வளர்ச்சியில் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ள் விடுபட்டுள்ளதை அறிந்தும் அத‌ற்காக‌ எந்த‌ ஆரோக்கிய‌மான‌ செய‌ல்திட்ட‌ங்க‌ளையும் இவ‌ர்க‌ள்  முன்னெடுப்பதாக‌ இல்லை. த‌ங்க‌ளுக்கு மேல் இருக்கும் த‌லைமையின் தாள‌ங்க‌ளுக்குத் த‌ப்பாம‌ல் அபிந‌ய‌ம் பிடிக்கும் இவ‌ர்க‌ளிட‌ம் இருக்கும் கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ ச‌மூக‌ சிந்த‌னையும் இவ‌ர்க‌ள் த‌லைமை பீட‌ங்க‌ளுக்கு வ‌ரும்போது முற்றிலும் இற‌ந்திருக்கும். இதில் சில‌ர் குண்ட‌ர் கும்ப‌ல்க‌ளை வ‌ழிந‌ட‌த்தியும் வ‌ருகின்ற‌ன‌ர் என்ப‌து நான் நேரில் அறிந்த‌ உண்மை. இந்த‌ நிலையில் சுய‌ சிந்த‌னை கொண்ட‌ இளைஞ‌ர்க‌ள் ப‌ல‌ரும் அர‌சிய‌ல் ஈடுப‌ட்டு தானாக‌ விலகிக் கொள்வ‌து விலக்க‌ப்ப‌டுவ‌தும் தொட‌ர்ந்து ந‌ட‌ந்து வ‌ருகின்ற‌து.  ‘ம‌.இ.கா’ டத்தோ சாமிவேலுவின் அரசியல் குறித்துச் சொல்லுங்கள்…    நான் சின்ன‌ வ‌ய‌தாக‌ இருக்கும் போதிலிருந்தே அவ‌ரை எதிர்ப்ப‌வ‌ர்க‌ளும் ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ளும் இருந்தே வ‌ருகின்ற‌ன‌ர். இதில் விசேஷ‌ம் என்ன‌வென்றால் நான் வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ அவ‌ரை எதிர்த்த‌ ப‌ல‌ரும் அவ‌ருட‌ன் ஏதோ ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் இணைந்து கொள்வ‌தைக் காண்கிறேன். ப‌க்கா அர‌சிய‌ல்  சந்தர்ப்பவாதம் உள்ள‌வ‌ர்க‌ளால்தான் இவ்வாறு எளிதில் எவ‌ரையும் ஏற்றுக்கொள்ள‌முடியும். வாழ்க்கை முழுதும் ஒரு வில்ல‌னாக‌வே வாழ்ந்து எதிரிக‌ளை வெல்வ‌து இவ்வ‌ள‌வு சாத்திய‌மா என‌ ஆச்ச‌ரிய‌மாக‌ உள்ள‌து. அமைச்ச‌ர் ப‌த‌வியில் அவ‌ர் இருந்த‌ கால‌த்தில் இந்திய‌ர்க‌ளுக்கு அவ‌ர் செய்ய‌வேண்டிய‌தை முறையாக‌ச் செய்யாம‌ல் விட்ட‌தோடு அர‌சாங்க‌ம் த‌மிழ‌ர்க‌ளுக்குக் கொடுத்த‌ கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ ச‌லுகைக‌ளையும் சுய‌லாப‌த்துக்காக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தை இன்ற‌ள‌வும் எந்த‌ ம‌லேசிய‌த் த‌மிழ‌னும் ம‌ற‌ந்திருக்க‌மாட்டான். ம‌லேசிய‌ இந்திய‌ காங்கிர‌ஸ் எனும் க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ ப‌ல‌ ஆண்டுக‌ள் இருந்துவிட்டார். எந்த‌ அர‌சு ப‌தவியிலும் இப்போது இல்லாத‌ அவ‌ர் இன்னும் ம‌.இ.கா க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ இருக்க‌ வேண்டும் என‌ ஆவ‌ல் கொண்டுள்ளார்.இவை ஒரு புற‌ம் இருக்க‌ அவ‌ருக்கு ச‌ற்றும் ச‌ளைக்காத‌ வேறொரு கூட்ட‌த்தின‌ர் அவ‌ர் ம‌.இ.காவில் த‌லைவ‌ர் ப‌த‌வியில் இருப்ப‌தையும் எதிர்க்கின்ற‌ன‌ர். எதிர்க்கும் கூட்ட‌த்தின‌ரையும் அவ‌ர்க‌ளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு ஒத்து ஊதும் ட‌த்தோ சுப்ர‌ம‌ணிய‌த்தையும் ஒருத‌ர‌ம் நினைத்துப் பார்க்கும் போது சாமிவேலு ப‌ர‌வாயில்லையோ என‌த் தோன்றுகிற‌து.    மலேசியாவில் தமிழர்கள் சமஉரிமைகளுடன் மலேசிய அரசால் நடத்தப்படுவதாகக் கருதுகிறீர்களா?  எப்போது ‘பூமி புத்ரா’ என்ற‌ அந்த‌ஸ்தை ம‌லாய்க்கார‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் வ‌ழ‌ங்கி அந்த‌ உரிமையைக் கேள்வி கேட்ப‌து ச‌ட்ட‌ விரோத‌ம் எனும் ச‌ட்ட‌த்தை அர‌சாங்க‌ம் அம‌ல்ப‌டுத்திய‌தோ பின்ன‌ர் எங்கிருந்து வ‌ரும் ச‌ம‌ உரிமை. ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் ப‌டிப்ப‌த‌ற்கு வாய்ப்புக் கிடைப்ப‌தில் தொட‌ங்கி , க‌ல்விக் க‌ட‌னுத‌வித் திட்ட‌ம், அர‌சாங்க‌ வேலை வாய்ப்பு என‌ எல்லாவ‌ற்றிலும் த‌மிழ‌ர்க‌ளுக்கு இருட்ட‌டிப்பே நிக‌ழ்கிற‌து.    தொலைவிலிருந்து பார்ப்பவ‌ர்க‌ள் ம‌லேசியாவின் அக‌ன்ற‌ சாலைக‌ளும் உய‌ர்ந்த‌ க‌ட்ட‌ட‌ங்க‌ளும்  த‌ரும் பிர‌மிப்போடுதான் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்களையும் அணுகுகின்ற‌ன‌ர். உண்மையில் ம‌லேசிய‌த் த‌மிழ‌னுக்கும் அந்தப் போலி அல‌ங்கார‌ங்க‌ளுக்கும் எந்த‌த் தொட‌ர்பும் இல்லை. இப்போது புதிதாக‌ வ‌ந்த‌ பிர‌த‌ம‌ரும் இந்த‌ வேற்றுமைக‌ளில் எதையும் மாற்ற‌ம் செய்யாம‌ல் ‘ஒரே ம‌லேசியா’ எனும் கோட்பாட்டை நாடு முழுதும் போஸ்ட‌ர் அடித்து பிர‌ச்சார‌ம் செய்கிறார்.பாவ‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆதிக்க‌ வ‌ர்க்க‌த்தின‌ரின் போலி அர‌சிய‌ல் குறித்து விள‌க்க‌  ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள் ப‌ல‌ரும் த‌யார் இல்லை. ச‌மூக‌த்திற்கு ச‌ம‌ உரிமை கிடைக்க‌ புற‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ரும் அர‌சின் கைக் கூலிக‌ளாக‌ மாறிவிடும் சூழ‌லில் உங்க‌ள் கேள்வி ஓர் அற்புத‌மான‌ க‌ன‌வு த‌ரும் சுக‌த்தை ஏற்ப‌டுத்துகிற‌து.    மலேசியத் தமிழர்கள் புலம்பெயர்ந்து  இரண்டு நூற்றாண்டுகளாகிவிட்டன. இன்னும்  சமூகத்தில் சாதியம் உள்ளதா?  இர‌ண்டு நூற்றாண்டுக‌ளாக‌ எதை பாதுகாத்தார்க‌ளோ இல்லையோ சாதியை ம‌ட்டும் ப‌த்திர‌மாக‌ப் பாதுகாத்து வைத்திருக்கும் ச‌மூக‌மாக‌ ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். நான் சிறுபிள்ளையாக‌ இருக்கும் போது சாதி குறித்தான‌ பேச்சுக‌ள் ஒரு கொச்சை வார்த்தைக்கு நிக‌ராக‌ மிக‌ ர‌க‌சிய‌மாக‌வும் குசுகுசுப்பாக‌வுமே ப‌ல‌ராலும் பேச‌ப்ப‌ட்ட‌து. இப்போது ப‌கிர‌ங்க‌மாக‌வே சாதிச் சங்க‌ங்க‌ள் ம‌லேசியாவில் உருவாகி வ‌ருகின்ற‌ன‌. அதில் பெரும் வ‌ணிக‌ர்க‌ளும் அர‌சிய‌ல்வாதிக‌ளும் ம‌றைமுக‌மாக‌வும் வெளிப்ப‌டையாக‌வும் ஈடுபட்டு வ‌ருகின்ற‌ன‌ர். ம‌.இ.கா எனும் இந்திய‌ர்க‌ளின் அர‌சிய‌ல் க‌ட்சியிலும் இந்த‌ சாதி அடையாள‌ம் பெரும் ப‌ங்கு வ‌கிக்கிற‌து. 200 ஆண்டுக‌ளுக்கு முன் ச‌ஞ்சிக்கூலிக‌ளாக‌ வ‌ந்து ஒருவேளைச் சாப்பாட்டுக்கு ஆங்கிலேய‌னிட‌மும் ஜ‌ப்பானிய‌னிட‌மும் கூழைக்கும்பிடு போட்ட‌ ஒரு ச‌மூக‌த்தின‌ர், கொஞ்ச‌ம் த‌லையெடுக்க‌த் தொட‌ங்கிய‌தும் எங்கிருந்துதான் இந்த‌ ம‌யிரு ஜாதியைத் தேடி அடைகிறார்க‌ளோ என்று தெரிய‌வில்லை. த‌மிழ‌க‌ம் போன்று இங்கு  தீண்டாமைக் கொடுமையெல்லாம் இல்லை. ஆனால் பெரும்பாலும் திரும‌ண‌ங்க‌ளின் போது ஜாதி த‌லை நீட்டிவிடுகிற‌து. ப‌த்திரிகைக‌ள் ஜாதி ச‌ங்க‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளை இப்போதெல்லாம் தாராள‌மாக‌ப் பிர‌சுரிக்கின்ற‌ன‌. எக்கேடு கெட்டால் ந‌ம‌க்கென்ன‌ என்று இருக்க‌வும் முடியாது. ஏதாவ‌து செய்தாக‌த்தான் வேண்டும்.    ஹிண்ட்ராப் அமைப்புக் குறித்து?  ஆர‌ம்ப‌த்தில் என‌க்கு அவ்வ‌மைப்பின் மீது நிறைய‌ ச‌ந்தேக‌ங்க‌ளும் விம‌ர்ச‌ன‌ங்க‌ளும் இருந்த‌ன‌‌. அது ஆர். எஸ். எஸ்சுட‌ன் தொட‌ர்புடைய‌ அமைப்பு என்ப‌து அதில் முக்கிய‌மான‌து. மேலும் அந்த‌ அமைப்பில் ஏற்ப‌ட்டிருந்த‌ பிள‌வுபாடுக‌ளும் என்னைப் பெரும் ச‌ந்தேக‌ம் கொள்ள‌ச் செய்த‌து. இவ‌ற்றையெல்லாம் மீறி  அவ்வ‌மைப்பு ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் உண்மையான‌ ம‌ன‌ உண‌ர்வை வெளிப்ப‌டுத்தும் வித‌மாக‌ 25 நவம்பர் 2007ல் ஏற்பாடு செய்திருந்த‌ பேர‌ணி, ம‌லேசிய‌ அர‌சாங்க‌ம் ‘அர‌சிய‌ல்’ ந‌ட‌த்த‌ அதுவ‌ரை வெளிதோற்ற‌த்தில் க‌ட்ட‌மைத்திருந்த‌ ச‌முதாய‌ ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கிய‌து. ம‌லேசியாவில் ந‌ட‌ந்துவ‌ரும் பாரப‌ட்ச‌மிக்க‌ ஆட்சிமுறையை அப்போதுதான் அறிந்துகொண்ட‌ உல‌க‌ நாடுக‌ள் அனேக‌ம். தொட‌ர்ந்த‌ எச்ச‌ரிக்கைக‌ளுக்குப் பிற‌கும் ப‌ல‌த்த‌ பாதுகாப்புக்குப் பிற‌கும் 25 நவம்பர் 2007ல் குழுமிய‌ ப‌ல‌ ல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ளுக்கு உண்மையில் ஹிண்ட்ராப் குறித்த‌ எந்த‌க் கேள்வியோ ச‌ந்தேக‌மோ விம‌ர்ச‌ன‌மோ இருந்திருக்காது. ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் அழுத்த‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ சாம‌ன்ய‌ ம‌க்க‌ளின் வெடிப்பு அது. அந்த‌ உண‌ர்ச்சி வெளிப்ப‌ட‌ வ‌ழிய‌மைத்த‌ ஹிண்ட்ராப் த‌லைவ‌ர் உத‌ய‌குமார் மீது என‌க்கு நிர‌ம்பிய‌ ம‌ரியாதை இருந்த‌து. அந்த‌ ம‌ரியாதையுட‌னும் ம‌ன‌தில் தேங்கிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளுட‌னுமே அவ‌ரைக் க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் ந‌ண்ப‌ர்க‌ளோடு இணைந்து ஒரு நேர்காண‌ல் செய்தேன்.    ம‌ற்றெல்லா ஊட‌க‌ங்க‌ளையும் விட‌ ஹிண்ட்ராப் ம‌ற்றும் அத‌ன் இன்றைய‌ நிலை குறித்து  ‘வ‌ல்லின‌ம்’ நேர்காண‌லில் விரிவாக‌ வாசிக்க‌லாம். ம‌ற்றொரு விசய‌த்தையும் இங்கு சொல்ல‌வேண்டிய‌ அவ‌சிய‌ம் உண்டு. ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் ம‌ன‌ம் மொழியைவிட‌ ம‌த‌த்திற்கு அதிக‌ம் முக்கிய‌த்துவ‌ம் அளிக்க‌க்கூடிய‌து. அத‌ற்கு முக்கிய‌க் காரண‌ம் இன்றைய‌ ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளில் பாதிக்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளில் த‌மிழைப் பின்புல‌மாக‌க் கொள்ளாத‌வ‌ர்க‌ள். ம‌லாய் ப‌ள்ளிக‌ளில் க‌ல்வி க‌ற்ற‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு த‌ங்க‌ள் இன‌த்தின் அடையாள‌மாக‌ ந‌ம்புவ‌து கோயிலையும் ம‌தத்தையும் ம‌ட்டுமே. என் அனுமான‌த்தில் ஒருவேளை மொழியை மைய‌மாக‌ வைத்து ஹிண்ட்ராப் ந‌க‌ர்ந்திருந்தால் அத‌ற்கு ப‌ர‌வ‌லான‌ ஆத‌ர‌வு கிடைத்திருக்காது. அண்மையில் ந‌டந்த‌ ‘எஸ்.பி.எம் பாட‌ விவ‌கார‌ பேர‌ணியே’ அத‌ற்கு ஒரு சான்று. ஹிண்ட்ராப் பேர‌ணி கோயில் உடைப்பு ம‌ற்றும் சிறையில் த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌தை முன்வைத்து ந‌க‌ர்த்த‌ப்ப‌ட்ட‌து. ஹிண்ட்ராப் போர‌ட்ட‌த்தை வெறும் இந்துத்துவ‌ பின்புல‌த்தைக் கொண்டு ம‌ட்டும் பார்ப்ப‌து ச‌ரியாகாது என‌ அந்த‌ நேர்காண‌லுக்குப் பின் உண‌ர்ந்தேன். ஹிண்ட்ராப் பேர‌ணியால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஓர‌ள‌வேனும் விழிப்புண‌ர்வு ஏற்ப‌ட்டுள்ள‌து என்றே க‌ருதுகிறேன். த‌மிழ‌க‌த்தோடு ஒப்பிடுகையில் ம‌லேசியாவில் ம‌த‌ம் ப‌ங்காற்றும் வித‌ம் வேறாக‌ உள்ள‌து. வெறும் இன‌க் க‌ட்சிக்குள் ந‌ட‌க்கும் ச‌ர்ச்சைக‌ளை ம‌ட்டுமே பேசித் திரிந்த‌வ‌ர்க‌ளுக்கு ம‌த்தியில் ஹிண்ட்ராப் நேராக‌ அர‌சாங்க‌த்திட‌மே எம் உரிமைக்காக‌ வாதாடுகிற‌து. ‌ ஒரு அதிகார‌ ச‌க்தியை எதிர்க்க‌ அத‌ற்கு ஆயுத‌ம் ஒன்று தேவைப்ப‌டுகிற‌து. அது ம‌த‌மாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் தற்காலிக‌மாக‌க் கையில் எடுப்ப‌து த‌வ‌றில்லை என்றே நினைக்கிறேன்.    மலேசியாவைப் பொறுத்தவரை இந்துமதம் அரசால் ஒடுக்கப்படும் மதம் என்பது உண்மைதான் என்றாலும் இந்து மதம் தனக்குள்ளேயே சாதி போன்ற ஒடுக்குமுறைகளைக்கொண்ட மதமாகவும்தானே உள்ளது. தவிரவும் தமிழர்கள் இந்து மதத்தால் இணைகிறார்களெனில் தமிழ்மொழியைப் பேசும் இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் அந்த இணைப்பிலிருந்து விலக்கிவைக்கப்பட்டவர்கள் ஆகிவிடமாட்டார்களா?  நீங்க‌ள் கேட்ப‌தில் நியாய‌ம் உண்டு. ஆனால் நான் ந‌டைமுறைச் சிக்க‌ல் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். த‌மிழ்மொழி அல்ல‌து த‌மிழ்ப்ப‌ள்ளிக‌ள் தொட‌ர்பான‌ சிக்க‌ல்க‌ள் ம‌லேசியாவில் எழும்போதெல்லாம் அத‌ற்காக‌க் குர‌ல் கொடுக்க‌ வ‌ருப‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை ப‌ரிதாப‌மான‌து. அப்ப‌டியே வ‌ருப‌வ‌ர்க‌ளின் பின்ன‌ணியை ஆராய்ந்தால் அவ‌ர்க‌ள் பிள்ளைக‌ளுக்கே த‌மிழ் தெரியாம‌ல் இருக்கும். இங்கு மொழியை வைத்துப் பிழைப்ப‌வ‌ர்க‌ளில் முக்கிய‌மான‌வ‌ர்க‌ள் த‌மிழ்ப்ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ள், த‌மிழ் வானொலி – தொலைக்காட்சியில் ப‌ணியாற்றுப‌வ‌ர்க‌ள், த‌மிழ்ப் ப‌த்திரிகை ந‌ட‌த்துப‌ர்க‌ள், த‌மிழ் பேராசிரிய‌ர்க‌ள், த‌மிழ் எழுத்தாள‌ர்க‌ள்,அர‌சிய‌ல்வாதிக‌ள் என‌ அடுக்க‌லாம். இவ‌ர்க‌ளில் எத்த‌னைப் பேர் த‌ங்க‌ள் பிள்ளைக‌ளைத் த‌மிழ்ப்ப‌ள்ளிக்கு அனுப்பியுள்ள‌ன‌ர்?; எத்த‌னை பேரின் பிள்ளைக‌ளுக்குத் த‌மிழ் ப‌டிக்க‌த் தெரியும்?; எத்த‌னை பேரின் பிள்ளைக‌ளுக்குத் த‌மிழ் பேசினால் புரியும்? என்ப‌து என் கேள்வி. மிக‌ எளிதாக‌ என்னால் பேராசிரிய‌ர்க‌ள் தொட‌ங்கி த‌மிழ் எழுத்தாள‌ர்க‌ள் வ‌ரை அவ‌ர‌வ‌ர் பிள்ளைக‌ளின் நிலை குறித்துக் கூற‌ முடியும்.    இதை நான் சொல்ல‌வ‌ந்த‌த‌ற்குக் கார‌ண‌ம், ச‌மூக‌த்திற்கும் மொழிக்கும் ந‌ன்றியுட‌ன் இருக்க‌வேண்டிய‌வ‌ர்க‌ளின் நிலை மிக‌க் கேவ‌ல‌மாக‌ இருக்க‌ சாமானிய‌ர்க‌ளின் ம‌ன‌ நிலையின் இய‌க்க‌ம் எப்ப‌டி இருக்கும்?  மாண‌வ‌ர்க‌ள் போதாமையால் 1200லிருந்து 800 ஆகி இப்போது 523 என்றளவுக்கு தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.. இது இன்னும் குறையும். இது தொட‌ர்பான‌ அபாய‌ம் குறித்து விழிப்புண‌ர்வு ப‌ர‌ப்ப‌ப்ப‌ட்டாலும் பெரிதாக‌ எந்த‌ மாற்ற‌மும் இல்லை. இதில் நான் இந்து, முஸ்லிம், கிறித்துவ‌ர்க‌ள் என்ற‌ அடிப்ப‌டையில் பேச‌வில்லை.பொதுவாக‌வே த‌மிழ‌ர்க‌ளின் ம‌ன‌ப்போக்கு அப்ப‌டிதான் உள்ள‌து.    இந்து ம‌த‌ம் த‌ன்னுள் சாதி ஒடுக்குமுறைக‌ளைக் கொண்டிருப்ப‌து உண்மைதான். அது சாதி ஒடுக்குமுறையை ம‌ட்டுமே கொன்டிருக்கிற‌து என்ப‌து உண்மைய‌ல்ல‌வே.  ஒடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் முத‌லில் ஒன்றிணைய‌ ஒரு த‌ள‌ம் தேவைப்ப‌டுகிற‌து.இதில் உள்ளே புகுந்து ம‌த‌ ஒழிப்பு பிர‌ச்சார‌மெல்லாம் செய்ய‌ முடியாது.  ஹிண்ட்ராப் கூட்ட‌த்தில் க‌லந்துகொண்டவ‌ர்க‌ள் எந்த‌ சாதியையும் ம‌ன‌தில் கொண்டு க‌ள‌த்தில் இற‌ங்கியிருக்க‌ மாட்டார்க‌ள்.  மலேசியாவில் தமிழர்களுக்கான ஒரு தமிழ்த் தேசியவாதக் கட்சி உருவாகுவதற்கு வாய்ப்புகளுள்ளனவா?    உருவாகி என்ன‌ செய்வ‌து? ம‌லேசியாவில் அத்த‌கைய‌தொரு க‌ட்சியை உருவாக்குவ‌த‌ற்கு பெரிய‌ த‌டை இருக்காது. ஆனால் செய‌ல‌ற்று கிட‌க்கின்ற‌ எக்க‌ச்ச‌க்க‌மான‌ க‌ட்சிக‌ளோடு அதுவும் இணைந்துகொள்ளும்.1.8 மில்லியன் மக்களைக் கொண்ட ம‌லேசிய‌ இந்திய சமூகம் பல்வேறு குழுக்களாக பிளவுபட்டுள்ளது. இச்சிறுபான்மையின‌ர் தேர்வு செய்வதற்கு குறைந்தது ஆறு அரசியல் கட்சிகளாவது உள்ளன.மஇகா (மலேசிய இந்தியர் காங்கிரஸ்), பிபிபி (பல இனக் கட்சியாக இருந்தாலும் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்), ஐபிஎப் (இந்தியர் முன்னேற்ற முன்னணி), மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள மலேசிய மக்கள் சக்திக் கட்சி, ஹிண்ட்ராப் குழுவின‌ரின் எச்.ஆர்.பி என‌ப்ப‌டும் ம‌னித‌ உரிமை க‌ட்சி என‌ இருக்கும் இவ‌ற்றால் எளிய‌ த‌மிழ் ம‌க்க‌ள் ச‌ந்திக்கும் நிராக‌ரிப்புக்கு முழுதுமாக‌த் தீர்வு பிற‌க்க‌வில்லை. இதில் த‌மிழ்த் தேசிய‌வாத‌ம் எனப் பேசும்போது இருக்கின்ற‌வ‌ர்களும் ப‌ய‌ந்து ஓடிவிடுவ‌ர். த‌லைமையேற்று ந‌ட‌த்த‌த் த‌மிழ் தெரிந்த‌ த‌லைவ‌ர் யாரும் இருக்க‌ மாட்டார்க‌ள். த‌லைவ‌ரின் ம‌க‌ன் ஆங்கில‌ப் ப‌ள்ளியில் ப‌யின்றுகொண்டு மேட்டுக்குடி ம‌ன‌துட‌ன் இருப்பான். த‌மிழ் தெரிந்த‌ த‌மிழ‌ருக்கு இன்றைய‌ அர‌சிய‌ல் சித்து புரியுமா என்ப‌தும் ச‌ந்தேக‌ம்தான். இதில் சாதி அடையாள‌ங்க‌ள் வேறு புகுந்துகொள்ளும். இப்ப‌டி ஒரு க‌ட்சி ம‌லேசியாவில் உண்டு என‌ கூற‌ ம‌ட்டும் அது ப‌ய‌ன்ப‌ட‌லாம்.ம‌ற்ற‌ப‌டி ஆக்க‌க‌ர‌மான‌ ஒரு ந‌க‌ர்வுக்கு க‌ட்சி ப‌ய‌ன்ப‌டும் என‌ என‌க்குத் தோன்ற‌வில்லை.    இரண்டாம் உலகப்போர் காலத்தில் புகழ்பெற்ற கம்யூனிஸட் இயக்கத்தைக் கொண்டிருந்த மலேசியாவில் இன்றைக்கு கம்யூனிஸ்ட் இயக்கங்களின் நிலையென்ன? சிறியளவிலாவது கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இயங்குகின்றனவா?  ம‌லேசிய‌ சோசலிச‌க் க‌ட்சி என்று ஒரு க‌ட்சி உள்ள‌து. 1998ல் உருவாக்க‌ம் க‌ண்ட‌து. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்த‌ல் த‌ரும் என‌ ப‌ல‌ கால‌மாக‌ அர‌சாங்க‌ப் ப‌திவு நிராக‌ரிக்க‌ப்ப‌ட்டு 2008ல் ப‌திவு பெற்ற‌து. அத‌ன் செய‌ற்பாடுக‌ள் வீரிய‌மாக‌ இல்லை. நிச்ச‌ய‌ம் அக்க‌ட்சி ம‌லேசியாவில் முழு சுத‌ந்திர‌த்துட‌ன் செய‌ல்ப‌ட‌ முடியும் என‌ நான் ந‌ம்ப‌வில்லை.    மலேசியாவில் வாழும் இலங்கை வம்சாவளித் தமிழர்களுக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்குமிடையேயான உறவுகள் எவ்விதமுள்ளன?  எந்த‌வித‌மான‌ தொட‌ர்பும் இல்லையென்றுதான் சொல்ல‌வேண்டும். இங்கு ந‌டைபெரும் எவ்வ‌கையான‌ மொழி, இல‌க்கிய‌, அர‌சிய‌ல் கூட்ட‌ங்க‌ளிலும் அவ‌ர்க‌ளின் ப‌ங்க‌ளிப்பை நான் பார்த்த‌தில்லை. பெரும்பாலோர் செல்வ‌ந்த‌ர்க‌ள்தான். இய‌ல்பாக‌வே அவ‌ர்க‌ள் மேட்டுக்குடி ம‌ன‌ நிலையில்தான் உள்ள‌ன‌ர். பெரும் ப‌ண‌ம் செல‌வு செய்து கோயில்க‌ளில் அன்ன‌தான‌ம் செய்வ‌தை தூர‌த்திலிருந்து பார்த்திருக்கிறேன். அவ‌ர்க‌ளுக்கென்று ச‌ங்க‌ம்கூட‌ உள்ள‌து. அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளைத் த‌னித்து அடையாள‌ம் காட்ட‌ எண்ணுகிறார்க‌ள் என‌ நினைக்கிறேன். இருந்துவிட்டுப்போக‌ட்டுமே.    நீங்கள் பத்திரிகையாளராகவுமிருக்கிறீர்கள், உங்கள் பத்திரிகை அனுபவங்கள் குறித்து?  என‌து இத‌ழிய‌ல் செய‌ல்பாடுக‌ள் ‘ம‌ன்ன‌ன்’ எனும் சனரஞ்சக இத‌ழிலிருந்து தொட‌ங்கிய‌து. மாத‌ இத‌ழான‌ அதில் ப‌ணியாற்ற‌ அத‌ன் ஆசிரிய‌ர் எஸ்.பி.அருண் எல்லா சுத‌ந்திர‌ங்க‌ளையும் கொடுத்திருந்தார். ச‌ம்ப‌ள‌ம் என்று எதுவும் இல்லை. ம‌திய‌ வேளை உண‌வு கிடைக்கும். எந்த‌ ச‌ம்பள‌மும் இல்லாம‌ல் முழு நேர‌மாக‌ப் ப‌ணியாற்றும் அள‌விற்கு என‌க்கு ஆர்வ‌மும் வீட்டில் எந்த‌ப் பொறுப்பும் இல்லாம‌லும் இருந்த‌து. சில‌ க‌ருத்து வேறுபாடுக‌ளால் அவ்வித‌ழிலிருந்து வில‌கினேன்.    அத‌ன் பிற‌கு ‘காத‌ல்’ எனும் இல‌க்கிய‌ இத‌ழ் ம‌லேசியாவில் முத‌ன்முத‌லாக‌ உருவான‌து. ப‌த்திரிகையாள‌ர் பெரு.அ.த‌மிழ்ம‌ணி அவ‌ர்களோடு ஏற்ப‌ட்டிருந்த‌ ந‌ட்பில் அவ‌ர் நிர்வாக‌ ஆசிரிய‌ராக‌ இருக்க‌ நானும் ம‌ணிமொழியும் இணைந்து இத‌ழை ந‌ட‌த்தினோம். ந‌வீன‌ சிந்த‌னை கொண்ட‌ ம‌லேசிய‌ எழுத்தாள‌ர்க‌ள் ஒன்றிணைந்த‌து அவ்வித‌ழ் மூல‌ம்தான். சுமார் ப‌த்து இத‌ழ்க‌ள் வெளிவ‌ந்த‌ பின்ன‌ர் பொருளாதார‌ப் பிர‌ச்ச‌னையால் இத‌ழ் நின்ற‌து. ம‌லேசியாவில் ந‌வீன‌ சிந்த‌னை கொண்ட‌ எழுத்தாள‌ர்க‌ள் ப‌ல‌ரும் இருப்ப‌தை அறிந்த‌பின் நான் ‘வ‌ல்லின‌ம்’ எனும் இத‌ழை அர‌சாங்க‌த்திட‌ம் ப‌திவு செய்து தொட‌க்கினேன்.    முத‌ல் இத‌ழ் வெளிவ‌ர‌ த‌மிழ‌க‌த்திலிருந்து ம‌னுஷ்ய‌ புத்திர‌னும், சிங்கையிலிருந்து ல‌தாவும், ல‌ண்ட‌னிலிருந்து என்.செல்வ‌ராஜாவுமே கார‌ண‌ம் என்பதை நினைவு கூற‌க் க‌ட‌மைப்ப‌ட்டுள்ளேன்.சுமார் எட்டு இத‌ழ்க‌ள் வெளிவ‌ந்த‌ பின்ன‌ர் வ‌ல்லின‌த்தை இணைய‌ இத‌ழாக‌ மாற்றினோம். இணைய‌ இத‌ழாக‌ உருவாக‌ ந‌ண்ப‌ர் சிவா பெரிய‌ண்ண‌ன் துணைப்புரிந்த‌து போல‌வே வ‌ல்லின‌த்தின் த‌ள‌த்தை மேலும் விரிவாக்க‌ ந‌ண்ப‌ர் யுவ‌ராஜ‌னின் ஆலோச‌னைக‌ள் துணைபுரிந்த‌ன‌. உண்மையில் வ‌ல்லின‌ம் எங்க‌ள் மூவ‌ரின் கூட்ட‌ணியில் புதிதான‌ ஒரு ப‌ரிமாண‌த்தை எடுத்த‌து என்றுதான் சொல்ல‌வேண்டும்.    வ‌ல்லின‌ம் ஒரு குறிப்பிட்ட‌ வாச‌க‌ர்களையே சென்ற‌டைவ‌தாக‌ இருந்த‌து. தீவிர‌ இல‌க்கிய‌ முத்திரை விழுந்துவிட்ட‌து அத‌ற்குக் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம். இல‌க்கிய‌ம் த‌விர்த்து நாங்க‌ள் – இங்கு நாங்க‌ள் என்ப‌து இள‌ம் த‌லைமுறை எழுத்தாள‌ர்க‌ளைக் குறிக்கிற‌து -ச‌ம‌கால‌ ம‌லேசிய‌ அர‌சிய‌ல் குறித்தும் எழுத‌த் தொட‌ங்கியிருந்த‌ ஒருநிலையில் எங்க‌ள் எழுத்தை ம‌லேசிய‌ த‌மிழ் ம‌க்க‌ளிட‌ம் கொண்டு செல்ல‌ ஓர் அச்சு ஊட‌க‌த்திற்குக் காத்திருந்தோம்.’முக‌வ‌ரி’ உருவான‌து. மாத‌ம் இருமுறை வெளிவ‌ரும் அதில் என்னோடு யுவ‌ராஜ‌ன், ம‌ணிமொழி, தோழி என‌ இளம் த‌லைமுறை எழுத்தாள‌ர்க‌ள் இணைந்துள்ள‌ன‌ர்.    இதைத‌விர‌ யுவ‌ராஜ‌ன் ஆசிரிய‌ராக‌ இருக்கும் தும்பி எனும் ‘அறிவிய‌ல்’ இத‌ழில் ஆசிரிய‌ர் குழுவில் என் பெய‌ரையும் ‘சும்மா’ இணைத்திருக்கிறார்க‌ள். ஒவ்வொரு இத‌ழுக்கும் ஒரு அறிவிய‌ல் க‌தை எழுதிக்கொடுப்ப‌தோடு ச‌ரி. ம‌ற்றெல்லாவ‌ற்றை விட‌வும் இத‌ழிய‌ல் என் ஆன்மாவோடு மிக‌ நெருங்கி இருப்ப‌தாகப்ப‌டுகிற‌து. ஒரு வேளை நான் ஒரு த‌மிழ்ப்ப‌ள்ளி ஆசிரிய‌ராக இல்லாம‌ல் இருந்திருந்தால் எப்போதோ முழுநேர‌ப் ப‌த்திரிகையாள‌னாகியிருப்பேன். ப‌த்திரிகையைவிட‌ என் ச‌மூக‌த்தை மிக‌ நெருங்கிப் பார்க்கும் ப‌ர‌ப்பை த‌மிழ்ப்ப‌ள்ளிகள் என‌க்குத் த‌ருகின்ற‌ன‌.    இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?  எழுதுவ‌து குறித்து நிறைய‌ கேள்விக‌ள் எழுந்த‌ப‌டி உள்ள‌ன‌. மொழி, தீவிர‌ இல‌க்கிய‌ம், த‌மிழ் என‌ப் பேசிக்கொண்டு அதிகார‌த்திட‌ம் கூனிக்குறுகி இருக்கும் ஏதாவ‌து ஓர் எழுத்தாள‌னைச் செருப்பைக் க‌ழற்றி அடித்துவிட்டு பிற‌கு எழுதுவ‌துதான் ச‌ரி என்றும் ப‌டுகிற‌து. ம‌லேசிய‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு கிடைக்க வேண்டிய‌ உரிமைக‌ளைத் த‌ராம‌ல் தேர்த‌ல் கால‌ங்க‌ளில் ம‌ட்டும் வாக்குறுதி அளிக்கும் அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கு எதிராக‌ வ‌ன்முறை ஒன்றுதான் ச‌ரியான‌ தீர்வோ என்றுகூட‌ அவ்வ‌ப்போது தோன்றுகிற‌து. க‌ச‌க‌ச‌ப்பான‌ இந்த‌ அர‌சிய‌ல் இல‌க்கிய‌ச் சூழ‌லில் அவ்வ‌ப்போது சில‌ க‌ட்டுரைக‌ளையும் க‌விதைக‌ளையும் எழுதி ப‌டைப்பு ம‌ன‌த்தை உயிர்ப்பித்துக் கொள்கிறேன்.    ஒரு ச‌ம‌ய‌ம்  ஒரு தோழியிட‌ம் கூறினேன். “நான் ஒரு பென்சில் போல‌வோ என‌ ஆழ் நிலையில் சிந்திக்கும் போது தோன்றுகிற‌து. ஒரு ப‌க்க‌ம் இருக்கும் அழிப்பான் ச‌தா எதையாவ‌து அழிக்க‌வே முற்ப‌டுகிற‌து; கூறிய‌ க‌ரிமுனையும்  த‌ன் ப‌ங்குக்குக் வ‌ன்முறையோடே காகிக‌த்தைக் கிழிக்கிற‌து…ஆக‌ மொத்த‌த்தில் என்னில் இர‌ண்டு ப‌க்க‌மும் அழிக்கும் ச‌க்திதான்” என்றேன் . அத‌ற்கு அவ‌ர் நிதான‌மாக‌ “இர‌ண்டுமே விரைவில் தேய்ந்து அழிந்து இல்லாம‌ல் போய்விடும்” என‌க்கூறிச் சிரித்தார். ந‌ட‌க்க‌ப்போகும் உண்மைக‌ளைப் பெண்க‌ள் எப்ப‌டியோ தெரிந்தே வைத்திருக்கிறார்க‌ள்.  13. ஈழத்து மக்களும் அவர்களது கனவுமே எனது ஆதர்சம் – தீபச்செல்வன்     கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் பிறந்த தீபச்செல்வன் கவிதை, பத்தி எழுத்து, ஆவணப்படம், திறனாய்வு, ஊடகவியல் எனப் பல்துறைகளில் இயங்கிக்கொண்டிருப்பவர். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ (காலச்சுவடு 2008), ‘ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’ (உயிர்மை 2009), ‘பாழ் நகரத்தின் பொழுது’ (காலச்சுவடு 2010) ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. போரைக் குறித்தும் போரின் வடுவைக் குறித்தும் அலைந்து திரியும் ஏதிலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர். ‘தீபம்’ என்ற வலைப்பக்கத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் நடத்திவருகிறார் (deebam.blogspot.com). தற்போது யாழ் பல்கலைக்கழக ஊடக நிலையத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றும்  தீபச்செல்வனுடனான இந்நேர்காணல் மின்னஞ்சலூடாகக் கேள்விகளை அனுப்பியும்; பெற்றுக்கொண்ட பதில்களிலிருந்து துணைக் கேள்விகளை அனுப்பிக் கூடுதல் பதில்களைப் பெற்றும் நிகழ்த்தப்பட்டது.  – ஷோபாசக்தி 23.07.2010    யுத்தத்திற்கும் உங்களிற்கும் ஒரே வயது, அதிலிருந்து தொடங்குவோமா?  1983இல் இனக்கலவரம் நடந்து முடிந்த காலத்தில் நான் பிறந்தேன். தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் காலத்தில் நான் பிறந்து வளர்ந்து கொண்டிருந்தேன். எனக்கு ஞாபகம் தெரியத் தெரிய அந்தச் சூழலைத்தான் பார்க்கத் தொடங்கினேன். போராளியாக இருந்த அண்ணாவை (பெரியம்மாவின் மகன்), இளைஞர்களை அழைத்துச் செல்லும் இந்திய இராணுவத்தை, இலங்கை இராணுவத்தைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்ந்தேன். யுத்தமோ குழந்தையாக இருந்த எனக்கு முன்னால் சாதாரணமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. ஏன் யுத்தம் நடக்கிறது என்பது முதலில் தெரியாதுவிட்டாலும் பின்னர் ‘ஆமி’ வந்து ஹெலிகப்டரில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபொழுது எங்கள் ஊரில் உள்ள மக்களுடன் குழிகளுக்குள் பதுங்கிக் கிடந்தேன். ஆனால் கிட்டத்தட்ட ஆறு வயதில் ஏன் யுத்தம் நடக்கிறது, எங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்துவிட்டது. எங்களுக்கு என்ன நடக்கிறது? நாங்கள் யார்? என்று புரிந்து கொண்டேன். ஆமிக்கு பயந்து வாழும் வாழ்க்கை எனக்கு அந்த வயதிலேயே தெரிந்தது.    யுத்தத்திற்கும் எனக்கும் ஒரே வயது என்று நீங்கள் குறிப்பிடுவதுபோல வெற்றியும் தோல்வியும் நிறைந்த, கனவுகள் – ஏமாற்றங்கள் நிறைந்த யுத்தம் எனது குழந்தை வாழ்வு முதல் இன்று வரை தொடர்ந்து வந்து என்னைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது முதல் இன்றுவரை சிதைவடைந்த தேசத்தை, சூழலைத்தான் பார்த்து வருகிறேன். பள்ளியில் குண்டு வீசப்பட்டு உடைந்த வகுப்பறை, காணியில் வெற்றுத் துப்பாக்கி ரவைகளைப் பொறுக்கி விளையாடுவது, இராணுவம் அலைந்த சப்பாத்துகளின் அடையாளங்களைக் காலையில் தேடுதல் என்றுதான் என் குழந்தைப் பருவம் கழிந்தது. இப்படி நடந்த யுத்தம் என்னை அழிவுகளால், சத்தங்களால், இராணுவங்களால் அஞ்சும் ஒரு குழந்தையாக்கியது. சிறிய வயதில் இராணுவம் ஷெல் மழை பொழியப் பொழிய பொதிகளைத் தூக்கிக்கொண்டு ஓடும்பொழுது எனக்கு முன்னால் நிகழ்ந்த துயர் வாழ்க்கை யுத்தம் கையளித்த பெரு அபாயங்களாக, அச்சுறுத்தல்களாக மனதில் படிந்து விட்டன.    யுத்தம் மீண்டும் மீண்டும் துயர் மிக்க வாழ்க்கையை விரித்துக் கொண்டே சென்றது. யுத்தம் மீண்டும் மீண்டும் அலைச்சல்களையும் இழப்புகளையும் தந்தது. பதுங்குகுழிகளை வெட்ட முடியாத வயதில் தரைகளில் பதுங்குவதும் பின்னர் நிலமெங்கும் பதுங்குகுழிகளை வெட்டுவதுமாகக் கழிந்தது எங்கள் வாழ்க்கை. எனது சனங்களை வதைத்த யுத்தத்தைக் கண்டு நான் அஞ்சி ஓடி ஒளிந்திருக்கும் பொழுது எனது ஒரே அண்ணன் யுத்தத்திற்கு எதிராகப் போராடும் மனநிலையில் இருந்தான். தனது பத்தாவது வயதிலேயே அவன் இயக்கத்தில் சேர்ந்தான். 16 வயது வரை அவன் ஐந்து தரம் போராட்டத்தில் சேர்ந்து சேர்ந்து திருப்பி அம்மாவுடன் இணைக்கப்பட்டான். விமானங்களைக் கண்டு நான் ஒளிந்து கொண்டிருக்கையில் அண்ணா கோடரியின் பிடியை எடுத்துத் துப்பாக்கி மாதிரி வானை நோக்கி நீட்டி ‘பட பட’ என்று சுட்டு விளையாடிக் கொண்டிருப்பான்.    இறுதியில் அண்ணா கனவுக்காக வீரமரணம் அடைந்த பொழுதுதான் நான் நிறைய விடயங்களைப் புரிந்து கொண்டேன். அண்ணாவின் நெஞ்சார்ந்த கனவு என்னை மிகவும் பாதித்தது. அதுநாள்வரை இருந்த யுத்த அனுபவங்கள், அண்ணாவின் மனம் என்பன என்னை படிக்கத் தூண்டியதோடு சமூக, தேசபற்றுக் கொண்ட பொறுப்பான மாணவனாக வாழ வளரத் தூண்டியது. அந்தக் காலத்தில் வன்னியில் என்னைச் சுற்றி உணர்வு மிக்க போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஈழம் பற்றிய கனவுடன் வன்னியில் போராளிகள் மிக உன்னதமாக போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி இரத்தினபுரத்தில் எனது சிறிய பருவத்தில் இருந்த போராட்ட சூழல், பின்னர் மணியங்குளம் ஸ்கந்தபுரத்தில் இருந்த அகதி வாழ்க்கை, மீண்டும் சிதைவடைந்த கிளிநொச்சி நகரத்திலிருந்த வாழ்க்கை, பின்னர் கொலை நகரமாயிருந்த யாழ்ப்பாண வாழ்க்கை, அடிக்கடி ஏற்பட்ட இடப்பெயர்வுகள், அலைச்சல்கள், வறுமையென்று இவைகள் எல்லாமே யுத்தத்தினால் எப்பொழுதும் அச்சுறுத்தப்பட்ட வாழ்வைத்தான் தந்தன.    சிறிய வயதில் அப்பா எங்களைக் கைவிட்டுச் சென்றார். மரணித்த அண்ணாவைத் தவிர ஒரு தங்கை இருக்கிறார். அம்மா அத்தருணங்களில் வலிமை மிக்க பெண்ணாகயிருந்து எங்களை நம்பிக்கை ஊட்டி வளர்த்தாhர். என் அண்ணாவைப்போல, எங்கள் மக்களைப்போல அம்மாவும் தங்கையும்கூட கனவு மிகுந்தவர்கள். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் படிக்கத் தொடங்கினேன். இடம்பெயர்ந்த இடங்களில் பல பாடசாலைகளில் படித்தேன். மீண்டும் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரம் படித்தேன். யாழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் சிறப்புக் கலை கற்கையை கடந்த வருடம் முடித்திருக்கிறேன்.    ஒரு உக்கிரமான யுத்தச் சூழலுக்குள் வளர்ந்த நீங்கள் ஆயுதப் போராட்டத்திலிருந்து எவ்வாறு விலகியிருக்கக்  கூடியதாயிருந்தது?  யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த பொழுது நான் குழந்தையாகவும் சிறுவனாகவும் இருந்தேன். நான் வளர்ந்து சாதாரணதரம், உயர்தரம் படிக்கும் காலத்தில் சமாதானம் வந்தது. அண்ணாவின் மரணம் என்னிடமிருந்த அச்ச உணர்வுகளை அகற்றிவிட்டது. நான் ஆயுதம் தூக்கிப் போராடவில்லை என்றாலும் ஆயுதம் தூக்கிப் போராடிய எங்கள் நிலையை வலுவாக ஆதரித்தேன். இன அழிப்பிற்கு எதிராகவும் உரிமை மறுப்புகளிற்கு எதிராகவும் சிறுவனாய் நான் பார்த்துக்கொண்டிருக்க எத்தனையோ இளையவர்கள் அணிதிரண்டு சென்றார்கள். அவர்களது உணர்வுகள் மிக முக்கியமானவை. மதிக்கப்பட வேண்டிய உன்னதம். ஆனால் நான் ஆயுதப் போராட்டத்திலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அதற்குத் தயாராக இருந்தேன். போராளிகளில் பலர் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அன்பழகன் என்ற எனது நண்பன் ஒருவன் விடைபெற்றுச் சென்று சில நாட்களிலேயே வீரமரணம் அடைந்திருந்தான். ‘என்னையும் களத்திற்கு கூட்டிச் செல்’ என்ற வார்த்தையை நான் அவனிடம் சொல்லாத நாட்களில்லை.    அப்பாவால் கைவிடப்பட்ட அம்மா மற்றும் தங்கையின் எதிர்காலம் என்பவற்றால் நானாகவே போராட்டத்தில் சென்று இணைய முடியாத நிலையிருந்தது. ஆனால அன்பழகனைப் போன்ற பல போராளிகள் துப்பாக்கிகளை ஏந்தியபடி எமது மக்களுக்காக வைத்திருந்த மனக் கனவு உன்னதமானது என்பதை மிக நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்து ஆயுதம் தூக்கிக் களத்திற்கு செல்லுவது எத்தனை உன்னதமானது. அதற்கான சூழல் எனக்கிருக்கவில்லை என்பது குற்ற உணர்வைத்தான் தருகிறது. போராட்டத்திற்கு செய்ய வேண்டிய வேறு பல பணிகள் இருந்தன. அவற்றைச் செய்துகொண்டிருந்தேன். மிக நெருக்கடியான காலத்தில் முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறேன்    ஆயுதப் போராட்டத்தில் மரணம் எதிர்பார்க்கப்படுவதுதான். உரிமைக்காக, கனவுக்காக மக்களுக்காக அதை எதிர்கொள்ளும் மனோதிடம் இயல்பாக ஏற்படும். நீங்களும்கூட அப்படித்தான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பீர்கள்.    ஆயுதப் போராட்டத்தில் மரணம் எதிர்பார்க்கப்படுவது உண்மைதான். புலிகள் உன்னதமான போராட்டத்தை நடத்தினார்கள் என்றும் சொன்னீர்கள். ஆனால் பள்ளிச் சிறுவர்களைத் துப்பாக்கிமுனையில் துரத்திப் பிடித்துக் கட்டாயப் பயிற்சியைக் கொடுத்து அவர்களின் விருப்பமில்லாமலேயே அவர்களைப் புலிகள் போர்முனைகளில் நிறுத்தி மரணத்திற்குள் தள்ளியது என்னவகையான நியாயம், என்னவகையான உன்னதப் போராட்டம்?    வீட்டுக்கொருவர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதை நமது மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அது சாதாரணமான உடன்பாடல்ல. மிகவும் கஷ்டமானது. பெற்றோர்களே பிள்ளைகளைப் போராட்டத்தில் இணைப்பது என்பது மிகத் துயரம் தருவது. ஆனால் அதைவிட எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை. வயது குறைந்த பிள்ளைகள் மீளவும் பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டார்கள். நாங்கள் எங்கள் மக்களுக்காக நடத்திய போராட்டத்தை எப்படியாவது விடுதலை நோக்கி நகர்த்த வேண்டியிருந்தது. அதற்காகப் பல இழப்புக்களையும் வலிகளையும் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது.    பலவந்தமாகச் சிறுவர்களை இணைத்தது தொடர்பில் பல்வேறு விதமான கருத்துக்கள் இருக்கின்றன. பல சம்பவங்கள் தலைமைக்குத் தெரியாமல் நடந்திருக்கின்றன. போராளிகளுக்கும் போராட்டத்திற்கும் களங்கம் ஏற்படும் விதமாகக் குறித்த காரியங்கங்களில் ஈடுபட்டவர்கள் இன்று இராணுவத்தினருடன் நிற்கிறார்கள். போராட்டத்தில் இணைந்தவர்களில் சிலர் போராட்டத்தைச் சரியாக உணராமல் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை வைத்து ஈழப் போராட்டத்தைத் தவறாக மதிப்பிட முடியாது.    அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராகப் பல்லாயிரம் போராளிகள் கனவுக்காக உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் நெஞ்சார்ந்த கனவைப் பலவேறு விதமாகச் சொல்லியிருக்கிறார்கள். போராடும் குரலை உன்னதமாகக் காட்டியதன் அடிப்படையில் ஈழப் போராட்டத்தை உன்னதமான போராட்டம் என நான் கருதுகிறேன். இப்பொழுது உள்ள நிலமையில் எமது மக்கள் அப்படித்தான் கருதுகிறார்கள்.    எழுத்தையும் இலக்கியத்தையும் நோக்கி உங்களை எது நகர்த்தியது?  யுத்தம்தான் என்னை உன்மையான எழுத்தையும் இலக்கியத்தையும் நோக்கி நகர்த்தியது. பாடசாலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது படிக்காமல் கவிதை எழுதிக் கொண்டிருந்திருக்கிறேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு கால கட்டத்திலும் பாடக்குறிப்புக்களை எழுதும் கொப்பிகளுடன் எனது கவிதை எழுதும் கொப்பி ஒன்றும் இருக்கும். 2005 -இலிருந்து பத்திரிகைகளில் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். 2006ல் யுத்தம் மீண்டும் மூண்டபொழுது எமது மக்களின் முன்னே விரிந்த துயர்தரும் காலம் என்னை எழுதத் தூண்டியது. 2006 -இற்கு முன்னர் இருந்த உற்சாகமான எழுத்து, இலக்கியச் சூழல் யுத்தம் தொடங்கிய பொழுது மிகவும் குறைந்துவிட்டது. மிகச் சிலரே எழுதிக்கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்தவர்கள் அச்சுறுத்தல்களால் எழுத முடியாத சூழலில் இருந்தார்கள். வன்னியில் எழுத அவகாசமற்ற வகையில் மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். பொன்காந்தன், அமரதாஸ், வேல்.லவன் போன்றவர்களுடன் பேராளிப் படைப்பாளிகளின் எழுத்துகள் பல அழிந்து விட்டன.    எனது மக்களின் இந்தச் சாபகரமான அலைச்சலும் அச்சுறுத்தலும் அவலமும் நிரம்பிய வாழ்க்கைதான் என்னை நிகழும் எல்லா கொடுமைகளைக் குறித்தும் எழுத வைத்தது. ஈழத்தின் நான்காம் கட்டப் போரில் அதை நான் ஒரு முக்கிய பணியாகவே எடுத்தேன். எந்தத் தருணத்திலும் எழுதிப் பதிவு செய்து கொண்டிருந்தேன். எழுத்தில் – இலக்கியத்தில் சாதனை நிகழ்த்த வேண்டும், விருது வாங்க வேண்டும்,; பரிசு வாங்க வேண்டும் என்றெல்லாம் எழுதவில்லை. எமது மக்கள் பற்றிய எனது பதிவுகள் நமது நாட்டு ஊடகங்களில் பிரசுரிப்பதற்கு அஞ்சும் எழுத்துகளாகின. யுத்தம் மூண்ட காலத்தில் யுத்தம் பற்றிய எனது கவிதைகள், எழுத்துகள் ஈழத்து – இலங்கை இதழ்களில்  மிகக் குறைவாகவே வெளியாகின. வலைப்பதிவிலும் தமிழக இதழ்கள் சிலவற்றிலும்தான் எழுதிக்கொண்டிருந்தேன். அம்மாவும் தங்கையும் எனது சனங்களும் மரணங்களும் யுத்தம் தின்ற வன்னிப் பெருநிலமும் அறியப்படாத கொலைகளால் உறைந்து போயிருந்த யாழ் நகரமும்தான் என்னை எழுதத் தூண்டின. நான் ‘கொல்லப்படுவேன்’ என்று எனக்கு நிகழ்த்தப்பட்ட அச்சுறுத்தல்களைத் தொடர்ந்தும் ஓயாமல் எழுதிக் கொண்டிருந்தேன். எழுத்துக்காகவும் கனவுக்காகவும் நான் மரணத்திற்குப் பயப்படவுமில்லை. எனக்கு நிகழ்ந்த எல்லா அனுபவங்களையும் எழுதிக்கொண்டிருந்தேன்.    உங்களின் இலக்கிய ஆதர்சம் என யாரைச் சொல்வீர்கள்?  இலக்கிய ஆதர்சம் என்று யாரும் இல்லை ஷோபா. நல்ல கவிதைகளைப் படிக்கும் பொழுது பிரமிப்பு ஏற்படுகிறது. ஈழத்து கவிஞர்களான உருத்திரமூர்த்தி, நீலாவணன், சிவசேகரம், முருகையன் போன்றவர்களது கவிதைகளில் ஈழத்திற்கே உரிய வாழ்வைப் பாடியிருக்கிற தன்மை என்னை மிகவும் பாதித்தது. வன்னியிலிருந்து 1990களில் எழுதிய கவிஞர்களில் நிலாந்தன், கருணாகரன் மற்றும் போராளிக் கவிஞர்களான மேஜர் பாரதி, கப்டன் கஸ்தூரி, மலரவன், புதுவை இரத்தினதுரை போன்ற கவிஞர்களது கவிதைகள் பாதிப்பை ஏற்படுத்தின. குறிப்பாகப் போராளிகளின் கவிதைகளில் இருந்த மனித ஏக்கம், யுத்தகள வாழ்வு, விடுதலை பற்றிய கனவு என்பன மிகுந்த ஈர்ப்பைத் தந்தன.    நான் கவிதை எழுதத் தொடங்கிய பொழுது என்னை முதலில் நிலாந்தன், பின்னர் வ.ஐ.ச. ஜெயபாலன், பின்னர் கருணாகரன், பொன்காந்தன் முதலியவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். தவிர புலம்பெயர்ந்திருக்கும் பிரதீபா, றஞ்சனி, மாதுமை, ஹரிகரசர்மா, தமிழ்நதி போன்றவர்களும் ஊக்கப்படுத்தினார்கள். நீங்களும்கூட ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள். இந்த ஊக்கப்படுத்தல்களும் கருத்துக்களும் கவிதை எழுதத் தூண்டியதுடன் செம்மைப்படுத்தவும் உதவியிருக்கின்றன.    நான் இங்கு குறிப்பிட்ட கவிஞர்களில், நண்பர்களில் உடன்பாடுகளுடனும் உடன்பாடுகளற்ற தன்மையுடனும் முரண்பாடுகளுடனும் ஈர்ப்புடனும் எல்லோரையும் வாசித்து வருகிறேன் – இப்பொழுது கருணாகரனைக் கடுமையாக நிராகரிக்கிறேன் என்ற விடயம் ஒன்று இருக்கிறது – ஆனால் என்னைச் செம்மைப்படுத்தியவர்கள்கூட எனது கவிதையின் வடிவத்தை – மொழியைத்தான் செம்மைப்படுத்தினார்களே தவிர எனது கவிதைகளின் பொருளை மக்களும் போராட்டமும் எனது வாழ்க்கைச் சூழலும்தான் தீர்மானித்தன. ஒருவரை ஆதர்சம் என்றிருப்பது விரிவான வாசிப்பை, சிந்தனையைத் தராது என நினைக்கிறேன். அது எனக்கு உடன்பாடான விடயமுமல்ல. போரும் அலைச்சலும் பிரிவுகளும் என்னை எழுதத் தூண்டின. ஒருவகையில் சொன்னால் ஈழ மக்களும் மக்களுக்குரிய கனவும்தான் எனது ஆதர்சம் எனச் சொல்லுவேன்.    இறுதி யுத்த நாட்களில் நீங்கள் எங்கிருந்தீர்கள், யுத்தத்தின் முடிவு இவ்வாறுதானிருக்கும் என அனுமானித்திருந்தீர்களா?  2006இல் நாலாம் கட்டப் போர் தொடங்கிய பொழுது  நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். அப்பொழுது யாழ் – கண்டி வீதி மூடப்பட்டிருந்தது. பசியிலும் இருட்டிலும் யாழ் நகர மக்களுடன் வாழ்ந்தேன். கொலைகளும் இரத்தமும் அச்சுறுத்தலும் எனச் சுமார் 45 நாட்கள் வாழ்ந்த பிறகு கப்பல் மூலம் திருமலை ஊடாக கிளிநொச்சிக்குச் சென்றேன். கிளிநொச்சியில் யுத்த தாக்குதல்கள் நிறைந்த சூழலில் வாழ்ந்தேன். இரவிரவாக விமானங்கள் குண்டுகளைப் பொழிந்துகொண்டிருக்கப் பதுங்குகுழிக்குள் வாழ்க்கை கழிந்தது. சுமார் ஒரு வருடம் வன்னியில் யுத்த சூழலில் வாழ்ந்த பிறகு மீண்டும் படிப்பதற்காக யாழ்ப்பாணம் கப்பல் மூலம் சென்றேன். அன்று முதல் இறுதி யுத்த நாட்கள் வரை யாழ்ப்பாணத்தில்தான் தங்கியிருந்தேன்.    யுத்தம் நடந்துகொண்டிருந்த பொழுதும் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். நான் இறுதி யுத்தகளத்தில்தான் வாழ்கிறேன் என்று என்னை விசாரித்துப் பல மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. நான் யாழ்ப்பாணத்தில் வாழ்வதை வெளியில் குறிப்பிட முடியாத சூழலில்தான் இருந்தேன். யுத்தவலயத்தில் எமது இனத்தின்மீது திணித்த அதே மாதிரியான அழிப்பை, அச்சுறுத்தலை அரசு யாழ்ப்பாணத்திலும் திணித்தது. யாழ் பல்கலைக்கழகத்தில் அப்பொழுது படித்துக் கொண்டிருந்தேன். அத்தோடு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் செயலாளராகவும் இருந்தேன். நான் கடுமையான உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு மரண எச்சரிக்கை குறிக்கப்பட்டவனாக வாழ்ந்தேன்.    யுத்தத்தில் நாங்கள் வெற்றியடைவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் இருந்துகொண்டு போரை நிறுத்தவும் இன அழிப்புக்கு எதிராகவும் பகிரங்கமாகக் குரல் கொடுத்தோம். போரை நிறுத்தி, மனித அவலத்தை நிறுத்தி தமிழ் மக்களைக் காப்பாற்றும்படி கேட்டோம். ‘மௌனப் போராட்டம்’ என்று அன்றைய சூழலில் அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தினேன். பல்கலைக்கழக மாணவர்களின் குரல்களும் தமிழ் மக்களின் ஒட்டு மொத்தக் குரல்களுடன் நிராகரிக்கப்பட்டன. எல்லாவற்றையும் நான் கைவிட வேண்டும் என்றும் ஈழக்கனவில் இருந்து ஒதுங்க வேண்டும் என்றும்  இராணுவம் அச்சுறுத்தியது. இலங்கை அரசு உலகில் உள்ள யுத்த அழிவுகளில் விருப்பம்கொண்ட எல்லா நாடுகளையும் இணைத்து எங்கள்மீது யுத்தம் நடத்தியது. மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் மனிதாபிமானமற்ற வகையில் நடந்த இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு எதைச் செய்தாவது  யுத்தத்தில் வெற்றிபெறுவதென எங்கள் மண்ணை ஆக்கிரமிக்க நின்றது. தமிழ் மக்களின் வாழ்வுக்கான குரலை உலகம் புரிந்தும் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் கைவிடப்பட்டவர்களானோம். அதனால் எல்லோரும் சேர்ந்து எங்களைத் தோற்கடித்து அழித்து முடிக்கப்போகிறார்கள் என்று அனுமானித்திருந்தேன். இதற்குள்தான் எங்கள் மக்களின் கனவு நிறைவேறுமா என்ற ஏக்கமும் என்னை எப்பொழுதும் தொடர்ந்துகொண்டிருந்தது.    யுத்த நிறுத்தத்திற்காவும் இராணுவத்தின் இனப்படுகொலைக்கு எதிராகவும் குரல்கொடுத்த பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் புலிகளால் மனிதத் தடுப்பரண்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான மக்களை விடுவிக்குமாறு புலிகளிடம் ஏன் கோரிக்கை வைக்கவில்லை? அங்கிருந்து தப்பிவந்த மக்களைப் புலிகள் முதுகிற் சுட்டு வீழ்த்திய துரோகத்தைக் குறித்து ஏன் பேசவில்லை?    விடுதலைப் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள் என்பதை நான் மறுக்கிறேன். கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பிறகு மக்கள் இராணுவத்தினரிடம் சரணடையத் தொடங்கிவிட்டார்கள். சரணடைந்த மக்கள், படைகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல்தான் சரணடைந்தார்கள். அரசு உணவு, மருந்துத் தடைகளைப் போட்டுப் பல களமுனைகளைத் திறந்து மக்களையும் விடுதலைப் புலிகளையும் பிரிக்கச் சதித் திட்டம் வகுத்துத் தாக்குதல்களை நடத்தியது. அவற்றை முகம் கொடுக்க முடியாத மக்கள் எதிரியாகப் பார்த்த படைகளிடம் சரணடைய நேரிட்டது. மக்கள் சரணடைவதற்குப் போராளிகள் பாதைகள் எடுத்துக் கொடுத்தாக நான் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனது அம்மா யுத்தத்தின் இறுதிவரை அதாவது மே 17 அதிகாலை வரை யுத்தகளத்தில் இருந்தார். அம்மாவையும் தங்கையும் அவர்களுடன் பதுங்குகுழிகளில் இருந்த மக்களையும் விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கவில்லை. எனது அம்மா படைகளிடம் சரணடைய விரும்பாமல்தான் அங்கிருந்தார்.    யாழ் பல்கலைக்கழகம் சார்ப்பான நாங்கள் விடுதலைப் புலிகளைப் பகிரங்கமாக ஆதரித்தோம். ஏனென்றால் அவர்கள் எங்களுக்காக நடத்திய போராட்டத்தின் நியாயத்தின் பொருட்டு அவர்களை ஆதரித்தோம். நாங்கள் இணைந்து குரல் கொடுத்தோம். வன்னி யுத்தம் நடக்கும் பொழுது நான்தான் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையாக இருந்தேன். நான் உட்பட பல மாணவர்களுக்கு, விரிவுரையாளர்களுக்கு இராணுவம் கொலை அச்சுறுத்தல் விடுத்தது. என்னை நேரடியாக வந்து விசாரணை செய்து அச்சுறுத்தியது. எங்களைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் எமது மக்களை பாதுகாப்பவர்கள் என்றே கருதுகிறோம். எமது மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்து போராட்டத்தை அழித்துக்கொண்டிருந்த அரசை அதை நிறுத்த வேண்டும் என்று கேட்டோம். விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேசசு வார்த்தைக்கு போக வேண்டும் என்றும், உலகம் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்தோம்.    விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுக்கு விருப்பம் தெரிவித்து அழிவற்ற பாதையை விரும்பிய பொழுது அரசு விடுதலைப் புலிகளை வேருடன் அழித்து ஈழ மக்களைப் போராட முடியாத நிலைக்குத் தள்ள அழிவு யுத்தத்தை நடத்தி மக்களை அழித்தது. அதனால் அரசுதான் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.    களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு களங்கம் ஏற்படும் விதமாகப் படைகள் மக்கள்மீது துப்பாக்கி சுடுகளை நடத்தியிருக்கின்றன. இதில் காயமடைந்த பலரை சிகிச்சையளிக்கக் கொண்டு செல்கிறோம் என்று சொல்லிவிட்டு கொண்டுபோன இராணுவம் அவர்களை திருப்பிக் கொடுக்கவில்லை. ஈழப் போராட்டத்தையும் ஈழப்போராளிகளையும் தவறாக காட்டுவதற்கு இராணுவம் இறுதி யுத்தகளத்தில் செய்த கொடுமைகள் குறித்து நான் நிறைய அறிந்திருக்கிறேன்.    புலிகளின் தோல்விக்கு முதன்மையான காரணமென எதனைச் சொல்வீர்கள்?  யுத்தம் முடிந்தவுடன் யார் வென்றார்கள், யார் தோற்றார்கள் என்று சொல்ல முடியாதளவில் ஈழத்துச் சூழல் குழம்பியிருந்தது. ஆனால் ஒரு வருடம் கடந்த இன்றைய நிலையில் இன்னும் வன்னி இறுதி யுத்தம் பற்றிய கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. இப்பொழுது புலிகள் உண்மையில் தோற்றார்களா என்பதை மறுபடியும் யோசித்துப் பார்த்தால், நான் நினைக்கிறேன் புலிகள் தோற்கவில்லை. இப்பொழுது யுத்தம் நடந்த களங்கள், இடங்களுக்கு சென்று வருகிறேன். தவிர இலங்கை அரசு தாங்கள் எப்படி யுத்தம் நடத்தினோம் என்பதையும் யார் யார் யுத்தத்திற்கு உதவினார்கள் என்பதையும் அறிவித்துக்கொண்டிருக்கிறது.    தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போராட்ட அமைப்புமீது உலகில் வல்லமையுள்ள யுத்தவெறி கொண்ட பொருளாதார, அரசியல் நோக்கம் கொண்ட எத்தனையோ நாடுகள் தாக்குதல் நடத்தின. அரசாங்கம் புலிகளை அழிப்போம், யுத்தத்தை முடிப்போம், இடங்களைக் கைப்பற்றுவோம் என்று சில தேதிகளை குறிப்பிட்டது. அந்த அவகாசங்களைப் புலிகள் முறியடித்தார்கள். உலகமே சேர்ந்து தொடுத்த யுத்தத்திற்கு அவர்கள் முகம் கொடுத்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இந்த யுத்தம் அவர்களுக்குத் தோல்வியில்லை. ஈழப் பிரச்சினையை உலக அரங்கில் கொண்டு சென்றார்கள். எவ்வளவுதான் போராடினாலும் உலகம் எப்படிப் புரிந்து கொள்ளும், எப்படி அழிக்கும் என்பதையும் அரசுக்கும் உலகத்திற்கும் எப்படிச் செலவு வரும், எப்படி நெருக்கடிகள் வரும் என்பதையும் அவர்கள் புரிய வைத்திருக்கிறார்கள். உலகம் அமைத்த கொடுமையான யுத்தகளங்களுக்கு எப்படி முகம் கொடுத்தார்கள் என்று வியந்து பார்கிறேனே தவிர அவர்கள் தோற்றாக எனக்குத் தோன்றவில்லை.    புலிகளைச் சிதைத்து உறங்க வைத்ததன் மூலம் மக்களைத்தான் அரசு  தோற்கடித்திருக்கிறது. இந்தப் போராட்டத்திற்காக மக்கள் செய்த எல்லாவிதமான தியாகங்களும் சிதைக்கப்பட்டன. கனவுக்கான எல்லா முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. கடைசியில் போராட்டத்தின் தடங்களாக மண்ணிற்குள் இருந்த போராளிகளின் எலும்புக் கூடுகளைக்கூடப் படைகள் விட்டு வைக்கவில்லை. யுத்தம் முடிந்த பிறகும் மீண்டும் மீண்டும் இன, பண்பாட்டு, நில, அடையாள அழிப்புக்களை மேற்கொண்டு அரசு எங்களைத் தோற்கடித்து வருகிறது. மக்கள்தான் தோற்றார்கள் என்பதுதான் தாங்க முடியாதது. ஆனால் மக்களின் தோல்விகள்தான் போராட்டங்களை உருவாக்குகின்றன என்று நான் கருதுகிறேன்.    இந்தத் தோல்வியில் புலிகளுக்குப் பங்கேயில்லையா? சகோதர விடுதலை இயக்கங்களை அவர்கள் ஆயுதபலத்தால் அகற்றியதும் ஈழப்பரப்பில் பிற அரசியற் போக்குகளைச் செயற்பட அனுமத்திக்க மறுத்ததும் அப்பாவிச் சிங்கள மக்களையும் இஸ்லாமிய மக்களையும் அவர்கள் கொன்றுபோட்டதும் அவர்களைத் தனிமைப்படுத்தவில்லையா? சர்வதேச நாடுகளில் அவர்கள் செய்த பயங்கரவாத நடவடிக்கைகளும் கொலைகளும் போதைப்பொருள் கடத்தலும் ராஜீவ் காந்தி கொலையும் அவர்களின் தோல்வியில் முக்கிய பங்கு வகிக்கவில்லையா?    ஷோபாசக்தி! நீங்கள் விடுதலைப் புலிகள் தொடர்பாக நிரந்தரமான எதிர்ப்பை வைத்துக் கொண்டு என்னுடன் பேசுகிறீர்கள். நானோ விடுதலைப் புலிகள் தொடர்பான எனது நிரந்தரமான விருப்பை வைத்துக்கொண்டு பேசுகிறேன். விடுதலைப் புலிகள் சிதைக்கப்பட்ட ஒரு சூழலில்தான் நீங்களும் நானும் பேசிக் கொண்டிருக்கிறோம். புலிகளைத் தாக்குவது மட்டும்தான் உங்கள் நோக்கம் போல எனக்குத் தெரிகிறது. இதைக் கடந்த காலத்தில் நீங்கள் மட்டுமல்ல பலர் செய்திருக்கிறார்கள். அவை விடுதலைப் புலிகளுக்கு அறிவுரை சொல்லும் விதமாக இருக்கவில்லை. விடுதலைப் புலிகளை அழிக்கும் விதமாகவே இருந்தது. அதுவே தமிழ் மக்களையும் அழித்தது.    விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று சொல்லிக் கொண்டு அரசையும் அரசின் படுகொலைகளையும் அரசின் யுத்தத்தையும் ஆதரித்தார்கள். இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள், சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள் எனபதை நான் வளர்ந்த பிறகுதான் அறிந்தேன். அதை யார் செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அப்பாவிச் சிங்கள மக்களையும் முஸ்லீம் மக்களையும் கொல்வது தீர்வல்ல என்று விடுதலைப் புலிகள் கருதியவர்கள் என்பதை நான் அறிவேன்.    இயக்கங்களில் முரண்பாடுகளை, சகோதரப்  படுகொலைகளை  யாரும் விரும்பவில்லை. அவைகள் நடந்து முடிந்து விட்டன. எங்கள் இனம் முதலில் தோல்வியடைந்தது அதனால்தான். ஆனால் மக்களின் கனவை விடுதலைப் புலிகள் முன்னெடுத்ததால் அதற்குப் பிறகு மக்கள் முழுமையாக விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் அந்த சூழலில்தான் நான் வளர்ந்தேன்.    2002ல் தொடங்கி 4 வருடங்கள் நீடித்த சமாதான காலத்தில் உங்களது எண்ணப்பாடுகள் எவ்வாறிருந்தன?  சமாதானம் வரும்பொழுதுதான் சாதாரணதர வகுப்பிலிருந்து உயர்தர வகுப்புப் படிக்கப் பாடசாலை சென்றேன். சமாதானம் கடதாசிப் பூவைப்போல கவர்ச்சியாக இருந்தது. அது கிழித்தெறியப்படக்கூடியது என்று முதலில் தெரியவில்லை. சமாதானம் சூழ்ச்சியானது என்றும் தெரியவில்லை. ஆனால் கவர்ச்சியாக வந்தது. மூடுண்ட வன்னிக்குள் இருந்த எங்களுக்குப் பாதைகள் திறக்கப்பட்டன. தடைசெய்யப்பட்ட பொருட்கள் வந்தன. அப்பொழுதுதான் கொகோகோலா, பெப்சி, பியர் எல்லாம் வந்தன. அத்தோடு பாரிய யுத்தம் ஒன்றுக்கான சூழ்ச்சியும் வந்தது.    சமாதானம் எங்கள் நகரங்களுக்குத் தந்த செழுமை பின்னர் அதைவிடப் பெரிய பன்மடங்கு அழிவைக் கொண்டு வந்தது. சிதைவைக் கொண்டு வந்தது. சமாதானம் தந்த ஆறுதல், அவகாசம் பின்னர் மாபெரும் அலைச்சலை, ஓட்டத்தை, இடரை வழங்கியது. சமாதான காலத்தில் கட்டப்பட்ட சுவர்கள் இருந்த இடத்தில் யுத்தம் பெருங் கிடங்குளைக் கிண்டியது. சமாதான காலத்தில் ஒரு வலிமையான பதுங்குகுழியை நாங்கள் கட்டியிருக்க வேண்டும். ஆனால் அதையும் சிதைத்துப்போடும் பலத்தையும் தந்திரத்தையும் சமாதானம் அரசுக்கு வழங்கிவிட்டது.    ஆனால் மக்களோ சமாதானத்தின் சூழ்ச்சியை அறியாதவர்களாய் இருந்தார்கள். சமாதானம் நீடிக்கும் என்றும் நீடிக்க வேண்டும் என்றும் யுத்த அழிவுகள் இனியில்லை என்றும் இருந்தார்கள். ஆனால் எப்பொழுதும் போர் மூண்டுவிடும் அவநம்பிக்கையையும் சமாதானம் வைத்திருந்தது. போராட்டத்திலிருந்து விடுபட்டுச் செல்லும் போலி வண்ணங்களாலான கனவுகளும்கூட சமாதானத்தின் மூலம் கடத்தப்பட்டிருந்தது. சமாதான காலம் ஒரு ஏமாற்ற காலமாகவும் தோல்வியின் முதல் காலமாகவும் தெரிகிறது.    அரசோ அல்லது புலிகளோ சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முழுமையான ஈடுபாட்டோடு இருந்ததாக நினைக்கிறீர்களா?  நான் முதலில் குறிப்பிட்டபபடி சமாதானம் யுத்தத்தின் விளைவாக இருப்பதைபோல சமாதானத்தின் விளைவாக யுத்தம் ஏற்படுவதையும் இரண்டு தரப்புக்களும் உணர்ந்திருந்தன. சமாதானப் பேச்சுகள் நம்பிக்கை தரும்படியாகவும் நேர்மையாகவும் அமையவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் முதற்கட்டப் பேச்சுகளிலேயே இனப் பிரச்சினையை தீர்க்க அரசு முன்வரும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். அரசோ  சமாதானத்தை வைத்துப் புலிகளின் போர்த் தந்திரங்களை அழித்து விடவும் சூறையாடவும் நினைத்தது. எங்கள் தலைவர் பிரபாகரன் பல தடவைகள் இலங்கை அரசை கால தாமதமின்றி தீர்வுக்கு வர வேண்டும் எனக் கேட்டார். குறைந்தபட்ச இடைக்கால தீர்வுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றில்கூட அரசு ஒத்துழைக்கவில்லை. மாறாகப் புலிகளை அழிக்கவும் ஈழப்போராட்டத்தைச் சிதைக்கவும் சமாதானத்தை அரசு பயன்படுத்தியது. அத்தோடு சமாதானத்தை யுத்தகால ஓய்வாகவும் பயன்படுத்தியது.  தமிழீழ விடுதலைப் புலிகளும் அதற்குரிய எதிர்வேலைகளில் ஈடுபட்டார்கள். சமாதானத்தில் இருந்த நம்பிக்கையீனங்களைப் பார்த்து போரில் நம்பிக்கை வைத்தார்கள். சமாதானத்தின் மூலம் போராட்டங்கள் சிதைக்கப்பட்ட பல பாடங்கள் நமக்கு முன்னாலிருக்கின்றன. தமிழர்களிடம் போராடும் பலமிருக்கிறது என்பதை உணர்ந்து அரசாங்கம் தீர்வுக்கு வர வேண்டும் என்றும் அதன்மூலம் கனவுக்காக தியாகம் செய்யும் உயிர்களைக் காப்பாற்றி தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பினார்கள். அதை அரசு முழுமையாகத் தனது சூழ்ச்சியான தந்திரங்களுடன் பயன்படுத்தி சமாதானத்தில் ஈடுபாடற்று இழுத்துச் சென்றது. அப்படியான சமாதானத்தில் புலிகளும் முழுமையான ஈடுபாடு காட்டாமல் போராடித்தான் தீர்வை அடைய வேண்டும் என்பதை உணர்ந்தார்கள்.    புலிகளும் தங்களது பங்குக்கு சமாதான முன்னெடுப்புகளைச் சிதைத்தார்கள் அல்லவா! சமாதான காலத்தில் மட்டும் அவர்கள் 400க்கும் மேற்பட்ட மாற்று இயக்க உறுப்பினர்களையும் கலைஞர்களையும் கல்வியாளர்களையும் கொன்றொழித்தார்கள். மாவிலாறு அணையை மூடிப் புலிகள்தானே மீளவும் யுத்தத்தைத் தொடக்கி வைத்தார்கள்?    சமாதானத்தைக் குழப்ப அரசு பல உபாயங்களைக் கையாண்டிருக்கிறது. சமாதான காலத்தில் யுத்தத்திற்கான எல்லாவிதமான தயார் நிலைகளையும் எடுத்துக் கொண்டது. சமாதான காலத்தில் பல மக்கள் கொல்லப்பட்டார்கள். அந்த கொலைகளை யார் யார் நடத்தினார்கள் என்பது எப்படித் தெரியும்? அதை அரசே நடத்தி சமாதானத்தைக் குழப்பியிருக்கலாமல்லவா? மாவிலாறு அணையை மூடியதற்காக யுத்தம் தொடங்க வேண்டும் என்றில்லை. அதைப் பேசித் தீர்த்திருக்கலாம். அரசு எப்பொழுது யுத்தம் நடத்தலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. மாவிலாறு அணை நோககித் தனது எறிகணைகளை, பல்குழல் பீரங்கிகளை எதிர்பாராதவிதமாகப் பெரு விருப்பத்துடன், வெறியுடன் திருப்பியது. அதைச் சாட்டாக வைத்துக் கொண்டு தொடர்ந்து களங்களைத் திறந்து யுத்தத்தை நடத்தியது. புலிகள் யுத்த வழிமுறைகளில் செல்வதை விரும்பவில்லை. அவர்கள் சமாதானத்திற்காக இறுதிவரை அழைத்தார்கள். அரசுதானே யுத்தத்தில் பெரிய ஈடுபாடு காட்டியது.    இன்றைய நிலையில் தமிழர்களிடையே நம்பிக்கை தரக் கூடிய சக்திகளாக யாரைச் சொல்வீர்கள்?  எங்கள் மக்களின் மனதை சரியாகப் புரிந்துகொண்டு செயற்படுவர்களைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். அவர்கள் எங்கள் மக்களின் கனவை, உணர்வுகளைப் புரிந்துகொண்டவர்களாக இருக்க வேண்டும். அரச தரப்பைவிட எங்களிடம் ஆளுமை மிக்க பல சக்திகள் இருக்கின்றன. ஈழப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது இந்தச் சக்திகள் எல்லாம் ஓரணியில் நின்று மக்களின் கனவை நிறைவேற்ற முற்பட்டன. இன்று தங்கள் தங்கள் சுயநலன்களுக்காகப் பிரிந்து நிற்கிறார்கள். சுயநலன் உள்ளவர்கள் நிச்சயமாக மக்களின் கனவை நிறைவேற்றிவிட முடியாது. மக்களுக்காக எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட நலன்களுக்காக எமது மக்களின் அரசியலைப் பலியிடுவது, புதிய புதிய குழப்பங்களை ஏற்படுத்துவது, அரசின் இனவாத ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவது என்பனதான் எங்கள் மக்களை தோல்வியடைய வைத்த எம்மிடம் தோன்றிய ஒற்றுமையீனங்கள்.    எமது மக்கள் அடையாளமற்ற, தனித்துவமற்ற வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் ஆக்கிரமிப்பின்றி, அச்சுறுத்தலின்றி வாழ விரும்புகிறார்கள். நிவாரணங்களும், அனர்த்த கால சேவைகளும் எமது மக்களின் அரசியல் உரிமைகளாகிவிட முடியாது. யுத்தகளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட, சரணடைய வைக்கப்பட்ட மக்கள் அரசின் கொள்ளைகளுக்கு உடன்பட்டவர்களாகி விட்டார்கள் என்று கருத முடியாது. ஈழ மக்கள் இராணுவப் பிரசன்னமற்ற விடுதலையுடன் அமைந்த தங்களது வாழ்வைத் தாங்களே இயக்கும் அதிகாரங்கள் கொண்ட வாழ்வைத்தான் விரும்புகிறார்கள். இதற்காக அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து நம்பிக்கை தரும் விதமாகச் செயற்பட வேண்டும்.    ஈழமக்கள் பலர் தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கு ( TNA) ஆதரவளிக்கிறார்கள். தமிழ் மக்களின் கனவைக் குறித்து நன்கு புரிந்து அதற்காக போராடி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நான் நம்பிக்கையான அமைப்பாக பார்க்கிறேன். ஏனெனில் மக்கள் அந்த அமைப்புமீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அரசும் உலகமும் எமது மக்களுக்கு அநீதி இழைத்துவரும் சூழலில் TNA அதை மக்களின் குரலாக நின்று எதிர்ப்பதால் அவர்களை நம்பிக்கை மிக்க சக்தி என்று நான் குறிப்பிடுகிறேன். தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஏனைய சக்திகள் செயற்பட வேண்டும் என்பதையும் இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதையும் விரிந்த நுண்தன்மை மிக்க ஒரு சிந்தனையாளர்கள் கூட்டமைப்பும் செயற்பாடுகளில் இணைய வேண்டும் என்பதையும் மக்களின் எதிர்பார்ப்பு சார்பாக முன்வைக்கிறேன்.    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்தான் என்ன? புலிகளிருந்தவரை புலிகளின் ஊதுகுழலாய் இருந்துவிட்டு இப்போது அவர்கள் இந்திய அரசின் பக்கம் சாய்வதாகத் தெரிகிறது. வாக்குப் பொறுக்கி அரசியலைத் தவிர வேறு முற்போக்கான அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் அரசியல் நடத்துவதாகத் தெரியவில்லையே?  விடுதலைப் புலிகளால் ஈழப் போராட்ட சிந்தனையுடன் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இன்று இந்த விடயம் தொடர்பாக நாம் விரிவாகப் பேசுவது அந்தக் கட்சியை இல்லாமல் செய்யும் விடயமாக அமைந்து விடக்கூடாது. அது புலிகள்மீது மாற்றுக் கருத்து வைக்கிறோம் என்று விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் அழித்த நடவடிக்கை போலத்தான் இருக்கும். புலிகள் பேசும் விடயத்தைப் பேச வேண்டும் என்றுதான் அவர்களைத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அது எமது போராட்டத்திற்கு ஜனநாயக வழிமீது இருந்த ஈடுபாடும் பயணமும்.    இன்று புலிகள் இல்லாத சூழலில் கூட்டமைப்புத்தான் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் பேசி தமிழ் மக்களுக்கு இனி வகிக்க வேண்டிய பங்கை எடுத்துக் கூற வேண்டும். அது தவிர்க்க முடியாதது. இலங்கை அரசுடனும் பேச வேண்டும். இலங்கை அரசு என்ன செய்கிறது, என்ன சொல்கிறது எம்முடன் எதைப் பகிர வருகிறது என்பதற்கு அப்பால் மக்கள் சார்பாக அதைப் பேச வேண்டி நிர்ப்பந்தம் கூட்டமைப்பிற்கு இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவது, தமிழ் மக்களின் வாக்குகளை காப்பாற்றுவது என்பது முக்கியமானது. இப்பொழுது ஈழத்தில் உள்ள முக்கியமான வேலை இது என்று நான் நினைக்கிறேன்.    இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கும் நீங்கள் புலிகள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம் போன்ற பல மிதவாத தமிழ்த் தலைவர்களைக் கொன்றொழித்ததை இன்று எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?  அவர்கள் கொல்லப்படும் பொழுது நான் குழந்தையாகவும் சிறுவனாகவும் இருந்தேன். யாரையும் கொலை செய்வதை நான் ஆதரிக்கவில்லை. அவர்களைப் புலிகளா கொன்றார்கள் என்பது பற்றியும் நான் அறியவில்லை. நான் உன்னதமான போராட்டம் நடந்த சூழலில்தான் இருந்தேன்.    ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்து முற்போக்கான புதியதொரு அரசியல் இயக்கம் தோன்றுவதற்கான வாய்ப்புகளுள்ளதாகக் கருதுகிறீர்களா?  ஈழத்தமிழ் மக்களை அரசு எந்தளவுக்கு ஏமாற்றுகிறதோ அந்தளவுக்கு அதற்கான வாய்ப்பு இருக்கிறது. உலகம் எந்தளவுக்குப் பின்தள்ள நினைக்கிறதோ அந்தளவுக்கு வாய்ப்பிருக்கிறது. ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை உலகம் மறுக்கிறது. வாழ்வின்மீது மிக நுட்பமாக ஆக்கிரமிப்புக்களை, வன்முறைகளை, மீறல்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. இவைகளால் காலமும் சூழலும்தான் அதற்குரிய விடயங்களை, வடிவங்களை உருவாக்கும் சந்தர்ப்பங்களை வழங்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் வெறும் அரசியல் கட்சியாக அது இருக்க முடியாது. ஏனெனில் முப்பது வருடங்களுக்கு மேலாகப் போராடிய எமது மக்கள் உண்மையில் மக்களுக்கான இயக்கத்தைச் சுலபமாகக் கண்டு பிடிப்பார்கள்.    ஈழப் போராட்டம் கணிசமான பெண்களை வீடுகளிலிருந்து அரசியல் வெளிக்கு அழைத்து வந்தது. இந்நிகழ்வு சமூகத்தில்  பெண்ணடிமை நிலையில் எவ்வாறான மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது?  ஈழப்போராட்டம் பெண்களுக்கு வழங்கிய அனுபவமும் இடமும் முக்கியமானது. தமிழ்ச் சூழலிலே பெண்களுக்குப் புதிய அனுபவத்தைப் போராட்டம் வழங்கியது. முக்கிய பதவிகளுக்குப் பெண்கள் வருவதற்கிருந்த தடைகள் ஒழிக்கப்பட்டன. பெண்கள் ஆயுதம் தூக்கிப் போராடினார்கள். பெண்ணெழுச்சியின் வடிவங்களாக வீரம் மிகுந்த பல பெண்கள் ஈழத்தில் தோன்றினார்கள். மாலதி, சோதியா, அங்கயற்கண்ணி போன்ற மாவீரர்கள் பெண்கள் பற்றிய புதிய அர்த்தத்தைத் தந்தார்கள். தமிழ்ச் சமூகத்தில் பெண்களை வீட்டிற்குள் அடக்கி வைத்திருக்கும் ஒடுக்குமுறை நிலமையிருக்க இலங்கைப் படைகள் வடக்குக் கிழக்கில் நுழைந்த பொழுது பாலியல்ரீதியான வன்முறைகளையும் நிகழ்த்தத் தொடங்கியது. இவை பெண்களைப் பொதுவான சமூக அநீதிகளுக்கு எதிராக எழுச்சி கொள்ள வைத்தன.    பெண்குரல்கள் தீவிரமாக வலுப்பெற்றன. ஈழ வரலாற்றையும் யுத்தகால அனுபவங்களையும் மனிதாபிமானம் மிக்க வகையில் பெண்குரல்கள் எடுத்துச் சொல்லின. பெண் கவிதைகளில் வீரியம் மிக்க எழுத்துகளை தமிழுக்கு ஈழத்துக் கவிதைகள் கொடுத்திருக்கின்றன. ஈழத்தில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு யுத்தகளங்களில் மக்களுக்கு பல்வேறு பணிகளையும் ஆற்றினார்கள். ஈழத்தில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புக்கும் அவலத்திற்கும் எதிராகப் பணியாற்ற ஏராளமாகப் பெண்கள் திரண்டிருந்தமை முக்கியமான விடயம். ஆனாலும் தமிழ்ச் சமூகத்தில் பெண்களை அடிமைப்படுத்தி வதைக்கும் சூழல் இன்னும் இருக்கிறது. முக்கியமாக வன்னியில் பெண்கள்மீது மேற்கொள்ளப்படும் பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் வெளியில் சொல்லப்படாத நிலையில் அமுங்கியிருக்கின்றன. ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மீண்டும் பெண்களை வதைக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. ஈழத்தில், தமிழ் பெண்களிடம் இப்பொழுது எழுத்து – ஊடகத்துறை  மீதான ஈடுபாடு வெகுவாகக் குறைந்து விட்டது.    பெண்கள் ஆயுதம் ஏந்திக் களத்தில் நின்ற நிகழ்வு ஈழத்து ஆணாதிக்கச் சமூகக் கட்மைப்பில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே பெண்கள் ஆயுதத்தை இழந்திருக்கும் இன்றைய சூழலில் அவர்கள் மறுபடியும் அதே கிடுகு வேலிக் கலாசாரத்துக்குள்தான் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றால், சீதனம் போன்ற கொடுமைகள் தொடருமெனில் இடைப்பட்ட 20 ஆண்டுகாலப் போராட்டம் நிகழ்த்திய மாற்றம்தான் என்ன?  தமிழர்களிடமிருந்த ஆயுதம் பாதுகாப்பையும் நிமிர்வையும் வழங்கியிருந்தது. இப்பொழுது பெண்கள்மீது துன்புறுத்தல்கள், மீறல்கள் நிகழ்த்தப்படுகின்றன. பொதுவாக எங்கள் மக்கள்மீது நிகழ்த்தப்படுகின்றன. அது ஆயுதப் போராட்டச் சூழலை இழந்திருப்பதனால் ஏற்பட்ட நிலமை. பெண்களை கிடுகுவேலிகளுக்கு நிலமை தள்ளியதாக நான் குறிப்பிடவில்லை. ஊடகத்துறை, எழுத்துதுறையில் ஈடுபடும் இளம் பெண்களைத்தான் காண முடியவில்லை. பெண்கள் பல துறைகளில் முன்னேறியிருக்கிறார்கள். தலைமைத்துவம் வகிக்கிறார்கள். ஈழப்போராட்டம் பெண்களைத் தலைமை தாங்கும், நிர்வாகிக்கும் தன்மைகளில் வலுவாக வளர்த்திருக்கிறது.    இன்றைய நிலையில் ஈழத்தில் சாதியம் எவ்வாறிருக்கிறது. தீண்டாமை இன்னும் பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அறிகிறோமே?  ஈழப்போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முக்கிய நடவடிக்கையாயிருந்தது. விடுதலைப் புலிகள் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை குறைந்திருந்தது. வன்னியில் தீண்டாமை முற்றாக ஒழிந்துவிட்டதைப் பார்த்திருக்கிறேன். யுத்தமும் அவலமும் அந்த மக்களை ஒற்றுமையாகத் திரட்டி வைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் தீண்டாமை சில இடங்களில் இன்னும் இருந்து வருகிறது. கோயிலுக்குள் பிரவேசிக்கவும், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும் சில மக்கள் தடுக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளில் தனிப் பாத்திரங்களில் உணவு கொடுக்கப்படுகின்றன. சாதிய  ஒடுக்குமுறையை, மீறலை பேசும் இலக்கியங்கள் இன்று காலத்திற்கு ஏற்ப ஈழத்தில் எழவில்லை.    சாதியத்துக்கும் இந்துமதத்துக்குமான தொடர்புகள் குறித்துப் புலிகளுக்கு அரசியல் புரிதல் இருந்ததாகக் கருதுகிறீர்களா? சாதியத்தின் வேரே இந்துமதம்தான் என்ற புரிதல் அவர்களிடமிருந்ததா? சாதியத்தை ஒழிப்பதற்கான என்ன அரசியல் வேலைத்திட்டத்தைப் புலிகள் வைத்திருந்தார்கள்?  புலிகள் ஏதும் மதத்தை அமைப்பின் அந்தஸ்து மதமாக அறிவித்தார்களா? இல்லைத்தானே. அவர்கள் தமிழ் மக்களின் கனவான தமிழத் தேசியம், தமிழர் தாயகம், உரிமை இந்த விடயங்களைத்தான் புரிந்து முன்வைத்தார்கள். சாதியம் குறித்து விடுதலைப் புலிகளுக்கு நல்ல புரிதல் இருந்தது.  அமைப்பில் தலைமை வகித்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்கள். நான் அறிந்தவரை வன்னியில் அப்படி ஒரு பாகுபாடு இருக்கவில்லை. தொடக்க காலத்தில் சாதியத்தை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்கள். நீங்கள் உட்பட பல போராளிகள் அதில் ஈடுபட்டிருந்தீர்கள் என்று அறிந்தேன். யாழ்ப்பாணம் புலிகளது ஆட்சியின் கீழ் இருக்கவில்லை என்பதனால் சாதிய ஒடுக்குமுறை இருக்கலாம்.    விடுதலைப் புலிகள் குறித்து நமது மக்களின் இன்றைய மதிப்பீடு எதுவாயிருக்கிறது?  ஈழத்திற்காக விடுதலைப் புலிகள் போராடும் விதம், அவர்களது அர்ப்பணிப்பு, தியாகம், வாழ்க்கை என்பன எனக்குச் சிறிய வயதிலிருந்து மிகுந்த வியப்பை ஏற்படுத்தின. ஈழத்திற்காகப் போராடுபவர்கள் புலிகள் மட்டும்தான் என்ற நிலைதான் என்னிடம் சிறிய வயதில் இருந்தது. வேறு இயக்கங்கள் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. போராளி இயக்கங்களிற்கிடையில் எத்தனையோ விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் ஈழப் போராட்டத்தைக் கையில் எடுத்து அந்த இலட்சியத்திற்காக இறுதிவரை போராடினார்கள். விடுதலைப் புலிகள் மரணத்தை முக்கியமான ஆயுதமாக எடுத்தார்கள். அவர்களை மரணம் எப்பொழுதும் கௌரவித்தது. புலிகள் மரணத்தை எதிர்கொள்ளும் விதம் மக்களிடம் பெரியளவிலான ஆதரவை பெற்றது. எமது மக்கள் போராடி வீழ்ந்த போராளியின் முன் அவரை வணங்கினார்கள். நான் பிறந்து வளர்ந்த காலங்களில் இப்படித்தானிருந்தது.    அதேமாதிரித்தான் இன்றும் நிலமையிருக்கிறது. இலங்கை அரசின் அடக்குமுறைகளும் உரிமை மறுப்புக்களும்தான் ஈழப் போராளிகளை உருவாக்கின. அரசாங்கம் இந்தத் தீவில் அதை என்றுமே நிறுத்தப் போவதில்லை. அதனால் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு என்றும் இந்த மண்ணில் இருக்கும். புலிகளின் காலம் எங்களுக்கு ஏதோ ஒரு திருப்தியைத் தந்தது. பாதுகாப்பைத் தந்தது. நம்பிக்கையை ஊட்டியது. மக்கள் இப்பொழுது “நாங்கள் எல்லோரும் செத்துப் போயிருக்கலாம்” என்று கூறுகிறார்கள். “புலிகள் காலத்தில் குப்பி விளக்கிலும் வெளிச்சம் மிகுந்திருந்தது” என்று சொல்லுகிறார்கள். இப்பொழுது வன்னி எங்கும் நிலமை மோசமாக இருக்கிறது. போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த உதவிகள், வாழ்க்கைகள் துயரைத்தான் வழங்கியிருக்கின்றன.   முகாங்களிலும் சொந்த நிலத்திலும் அடிமைகளைப்போல மக்கள் நடத்தப்படுகிறார்கள்.    ஆனால் “புலிகள் இறுதி யுத்தத்தில் மக்களைச் சுட்டார்கள், மனிதக் கேடயங்களாக வைத்திருந்தார்கள்” என்று பல இடங்களில் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அப்படியொரு சூழலை அரசும் உலகமும்தான் உருவாக்கியது. கண்மூடித்தனமான யுத்தகளத்தை உலகின் வல்லமையுள்ள நாடுகள் பலவற்றைத் திரட்டி மகிந்த ராஜபக்சவின் அரசு ஏற்படுத்தியிருந்தது. யுத்தம் போராளிகளை நிலைகுலையச் செய்தது. அவர்கள் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்காகவும் போராடிக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரம் மக்கள் இறுதிப் போரில் இறந்து போனார்கள். போராட்டம் என்றால் இரத்தம் சிந்துவது தவிர்க்க முடியாதது. நாங்கள் எங்களுக்கான வாழ்வை வாழ இதைவிட என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. முன்பு குறிப்பட்டதைப் போலவே விடுதலைப் புலிகள் ஈழமக்களின் நெஞ்சில் இருக்கிறார்கள். கல்லறைகளைத் தடயங்களை அழித்தாலும் எமது மக்களின் நினைவுகளை அழித்துவிட முடியாது.    நமது மக்களின் மரணம் குறித்து இனவாத இலங்கை அரசுக்கும் சர்வதேச அரசுகளுக்கும் அக்கறையில்லை. ஆனால் அந்த அக்கறை தமது சொந்த மக்களின்மீதே புலிகளுக்கு இல்லாமல் போனதுதானே அவர்கள் கடைசியில் நமது மக்களைப் பணயக் கைதிகளாகத் தடுத்துவைத்திருக்கக் காரணமாயிருந்தது? இதில் புலிகளுக்குப் பொறுப்பில்லை என எப்படிச் சொல்ல முடியும்?    விடுதலைப் புலிகள் எமது மக்களை அழிக்கவில்லை. அரசும் உலகமும்தான் எமது மக்களைக் கொன்று குவித்தது. விடுதலைப் புலிகள் அந்த அநீதிக்கு எதிராகப் போராடியவர்கள். தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் நான் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. மக்களிடமிருந்துதான் போராளிகள் உருவாகினார்கள். விடுதலைப் புலிகள்மீது எமது மக்கள் கொண்ட விருப்பமும் தேவையும்தான் இன்றும் அவர்கள் தேவை என்ற நிலமையையும், அவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.    யுத்தம் முடிந்ததின் பின்பாகவும் நமது இளைஞர்கள் புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளுக்குச் செல்லும் விருப்பங்களுடனா இருக்கிறார்கள்?  இளைஞர்கள் வடக்கு – கிழக்கின் பாதுகாப்பற்ற தன்மைகளால் புலம்பெயர நினைக்கிறார்கள். இராணுவமயமும் புலனாய்வு நடவடிக்கைகளும் இளைஞர்களைப் பயமுறுத்துகின்றன. தொழில் இல்லை. யுத்தத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.  சில இளைஞர்கள் புலம்பெயர விரும்புகிறார்கள். ஆனால் யுத்தகாலத்தில் இருந்த ஆர்வம் இப்பொழுது இல்லை. நமது மண்ணை விட்டுச் சென்று எல்லோரும் புலம்பெயர்ந்து வாழ்வது நல்லதில்லை என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. ஆக்கிரமிப்பு அன்றாடம் நிகழ்த்தும் வாழ்க்கைச் சவால்களை முறியடித்துச் சமாளித்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கிருக்கிறது.    உரிமை மறுக்கப்படுதலுக்கும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் புலம்பெயர்வது ஒரு தீர்வாகாது. ஏனென்றால் புலம்பெயர்ந்த பின்னர் தாயகத்தை நினைத்து மீண்டும் திரும்பி வரத் தவிக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன். முப்பது வருடங்களாக நாம் வாழ்வுக்காகப் போராடியிருக்கிறோம். எனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுத் தொழில் இல்லாத நிலை, அச்சுறுத்தல், குடும்பநிலை என்பன நீங்கள் கேட்பதைப்போல மேற்குலக நாடுகளுக்குப் புலம்பெயர இளைஞர்களை நிர்பந்திக்கின்றன.    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள எது காரணம்?  தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் கூடுதலான வாக்குகளைப் பெற்றதற்கு காரணம் அந்த அமைப்பு விடுதலைப் புலிகளின் சிந்தனைகளுடன் அவர்களால் உருவாக்கப்பட்டதும் அந்த அமைப்பில் உள்ள மூத்த அரசியல்வாதிகள்மீது மக்கள் கொண்ட நம்பிக்கையும்தான். அந்த வகையில் மக்கள் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். தமிழ் பேசும் ஈழ  மக்களினது போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான மரபு வழித் தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்ற வாழ்வுரிமைகளை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்க எமது மக்கள் தயாராக இல்லை. அது எமது மக்களின் அடையாளம். அதற்காகவே எமது மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டார்கள். தமிழத் தேசியக் கூட்டமைப்பு அந்த விடயங்களை நிதானமாகத் தெளிவாக உண்மையாகக் கொண்டு செயற்படுகிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.    தமிழர் தாயகத்தை, அவர்களது கனவை நிராகரிக்கும் எந்த நிலையையும் தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த தேர்தல் சூழலில் தமிழ் மக்களின் வாக்குகளைச் சூறையாடிப்  பிரதிநிதித்துவங்களை அள்ளிச் சென்று தமிழ் மக்கள் விரும்பாத கதைகளை அளக்கவே அரசு முயன்றது. அரசு எங்கள் மண்ணில் நடத்தும் எந்தத் தேர்தலையும் நாங்கள் புத்தி சாதுரியமாக எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. வன்னி யுத்தத்தின் பின்னர் இப்பொழுது அரசின் அடுத்த போர் தமிழ் மக்களின் வாக்குகளை, பிரதிநிதித்துவத்தை இலக்குவைத்து நடந்துகொண்டிருக்கிறது. போர் தந்த வலிகள், போராட்டத்தின் தோல்வி நிலை என்பன எமது மக்களின் வாக்களிக்கும் மனிநிலையை பாதித்துவிட அதையும் தமக்குச் சாதகமாக அரசு பயன்படுத்த நினைக்கிறது. இதில் எமது மக்கள் தொடர்ந்து தெளிவாக இருக்க வேண்டும்.    யாழ் மேலாதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழும் கிழக்கின் அரசியற் குரல்களை எவ்வாறு மதிப்பீடு செய்கிறீர்கள்?  மட்டக்களப்பு, வன்னி மக்கள் மீதான மேலாதிக்கப் போக்கு சில பின்தங்கிய இடங்களில் இருக்கின்றது. ஆனால் முழுமையாக அப்படியொரு ஆதிக்கம் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. எங்களுடன் பல்கலைக்கழகத்தில் கிழக்கிலிருந்து வந்து படித்த தமிழ் – முஸ்லிம் மாணவர்களுடன் மிக நெருக்கமான உறவு இருந்தது. அறை நண்பர்களாக இருந்திருக்கிறோம். பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவிகளில் கிழக்கைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். புலிகள் அமைப்பில்கூட கிழக்கைச் சேர்ந்தவர்கள் முக்கிய இடங்களில் இருந்தார்கள். ஈழப் போராட்டத்தில் கிழக்கு உறவுகள் முக்கிய இடம் வகித்தார்கள்.    அண்மையில் கிழக்கில் கிரான் என்ற இடத்திற்குச் சென்றபொழுது மக்களுடன் பேசினேன். அவர்களும் எங்களைப்போலவே வாழ்கிறார்கள். அவர்களது விருப்பம், கனவு, நிலைப்பாடு எல்லாம் எங்களைப்போலவே ஒன்றாக இருந்தது. போக்குவரத்துகள் ஓரளவு சீரடைந்திருப்பதால் இப்பொழுது மீண்டும் வடக்கு – கிழக்கு உறவு வலுவடைந்து வருகிறது.    நீங்கள் குறிப்பிடும் அரசியற் குரல்கள் தங்கள் சுயநலத்திற்காக, தங்கள் நடவடிக்கைகளின் காரணங்களுக்காக, தங்கள் அரசியலுக்காக அப்படிச் சொல்கின்றன. ஆனால் அப்படியான வாதங்கள் எங்களை, பொதுவாகத் தமிழ் சமூகத்தை தோற்கடித்து விடும். எங்களது தோல்விக்கு இப்படியான ஆதிக்கப் பிரச்சனைகளும் காரணமாகின்றன.    நீங்கள் வடக்குக்கும் கிழக்குக்குமான உறவுக்கு மிக எளிமையான சில சம்பவங்களை உதாரணமாகச் சொல்கிறீர்கள். ஆனால் யாழ் மையவாத அரசியல் காலங்காலமாகக் கிழக்கை ஒடுக்கிவருவதற்கு வலுவான வரலாற்று ஆதாரங்களே பலவுண்டு. நமது அரசியல் கட்சிகள், நமது விடுதலை இயககங்கள் எல்லாமே யாழ் மையவாதத் தலைமையைத்தானே கொண்டிருந்தன. கருணா புலிகளிலிருந்து பிரிந்து சென்றபோது ‘கிழக்குக்குப் புலிகளால் நியமிக்கப்பட்ட 33 நிர்வாகிகளில் ஒருவர்கூட கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை” என்ற குற்றச்சாட்டையும் சொல்லியிருந்தார். தவிரவும் வடக்குக் கிழக்கு இணைப்பு என்பதில் கிழக்கிலிருக்கும் இஸ்லாமியர்கள், சிங்களவர்கள் ஆகியோருடைய விருப்பத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டுமல்லவா?  கருணா அம்மான் இயக்கத்தில் முக்கியமான இடத்திலேதான் இருந்தார். போராட்டத்தை தொடக்கிய தலைவர் யாழ்ப்பாணமாக இருந்தார். அதனால் அது யாழ் மையவாதம் என்று குறிப்பிட்டுவிட முடியாது. தலைவருக்கு நெருங்கிய தோழனான சாள்ஸ் அன்ரனி திருமலையைச் சேர்ந்தவர். எமது போராட்டத்தில் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் முக்கியமான இடத்தில் இருந்திருக்கிறார்கள். அப்படியொரு வாதத்தை நான் பார்க்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கிழக்குத்தானே. கிழக்கைச் சேர்ந்தவர் தொடர்ந்தும் தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இப்பொழுது தாயகத்தில் இருக்கிறது. கருணா அம்மான் போராட்டத்தில் இருந்து பிரிந்து சென்றதை வடக்கு மக்களோ கிழக்கு மக்களோ விரும்பவில்லை. தான் செய்த எல்லா தவறுகளையும் நியாயப்படுத்தவும் தனது அரசியலை நியாயப்படுத்தவும் தொடர்ந்து முன்னெடுக்கவும் அப்படி நிறையச் சொல்வார். தமிழர்களுக்குத் தமிழ்த் தேசியம் உள்ளதைப்போல முஸ்லீம் மக்களுக்கு முஸ்லீம் தேசியம் என்பது உண்டு. வடக்கு – கிழக்கு முஸ்லீம்கள் தமிழீழத்து முஸ்லீம்கள் எனப்படுவார்கள். வடக்கு – கிழக்கை இணைப்பத்தில் முஸ்லீம்களின் ஒத்துழைப்பு இருக்கிறது. வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்ற வகையில் அது தமிழ் பேசும் மக்களின் கனவும் கோரிக்கையும் என்று நான் கருதுகிறேன்.  முறிந்துபோன தமிழர் – இஸ்லாமியர் உறவை மறுபடியும் சரி செய்வதற்கான சூழ்நிலைகள் காணப்படுகின்றனவா?  தமிழர் – முஸ்லீம் உறவுகள் மனதளவில் முறியவில்லை என்பதை உணர்கின்றேன். எங்களது போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு முக்கியமானது. தமிழ் பேசும் மக்களின் தாயகத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தமிழுக்காவும் அவர்கள் பல பணிகளை ஆற்றியிருக்கிறார்கள். முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது மிகுந்த துயரமான சம்பவம். முஸ்லீம் மக்களால் மறக்க முடியாதது. மீண்டும் முஸ்லீம்கள் தாயகம் திரும்புவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் யுத்தம் நடக்கலாம் என்ற அச்சத்தினால் முஸ்லீம்கள் பெரியளவில் திரும்பவில்லை. சில இடங்களில் முஸ்லீம்கள் மீள் குடியமர இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.    அண்மையில் கிளிநொச்சி ‘ கோணாவில்’ பாடசாலைக்குச் சென்றபொழுது இரண்டு குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தார்கள். பூங்காவில் தமிழ்க் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. தமிழர் – முஸ்லீம் உறவுகள் மனதளவில் முறியவில்லை. அவர்கள் தமிழ் மக்களை அழித்த யுத்தத்திற்கு எதிராக இருக்கிறார்கள். தமிழ் மக்களை ஒடுக்குவதைப்போலவே முஸ்லீம் மககளையும் அரசு ஒடுக்கிக்கொண்டுதானிருக்கிறது. முஸ்லீம் மக்களின் குரல்களும் சிறுபான்மை  இனத்தின் குரல்களாக ஒடுக்கப்படுகின்றன. தமிழ் – முஸ்லீம் உறவுகள் வலுவடைவதன் வாயிலாகவே தமிழ் பேசும் மக்களின் குரல் வலிமைபெறும்.    புலிகளின் ஏகபிரதிநிதித்துவக் கொள்கையென்பது வடக்குக் கிழக்கில் இஸ்லாமியர்களின் அரசியல் இருப்பை நிராகரித்த செயல். நீங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற ஒற்றை அடையாளத்தினூடே இஸ்லாமியர்களையும் தமிழ்த் தேசிய அடையாளத்துள் அடைக்க முயற்சிக்கிறீர்களா?  தமிழ் பேசும் மக்கள்  அவர்கள் என்று குறிப்பிட்டேனே தவிர தமிழ் தேசியத்திற்குள் முஸ்லீம்களை அடக்கவில்லை. அவர்களின் இனம், சமயம், அடையாளம், பண்பாடு என்று அவர்களுக்குரிய தேசிய அடையாளங்கள் இருக்கின்றன. அவற்றை யாரும் நிராகரிக்கவும் அடக்கவும் முடியாது    மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார அரசுக்கு எதிராகச் சிங்கள முற்போக்குச் சக்திகளிடையே பலமான ஓர் எதிர்ப்பியக்கம் தோன்ற வாய்ப்புள்ளதா?  மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகாரத்திற்கு எதிராகவோ, அரசியலுக்கு எதிராகவோ எந்த இயக்கம் தோன்றினாலும் அதை அழித்து அகற்றவே ஜனாதிபதி முற்படுவார். ஜே.வி.பி மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்திருந்து விட்டுப் பின்னர் பிரிந்து மகிந்தவின் சர்வாதிகாரப் போக்கை எதிர்ப்பதாகச் சொன்னது. ஜே.வி.பியிடம் ஏற்பட்ட எதிர்ப்பு எந்தளவுக்கு முற்போக்கானது என்பதுதான் பிரச்சினை. இன்று தமிழ் மக்களின் சில பிரச்சினைகள் குறித்தும் ஜே.வி.பி பேசுகிறது. ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளையும் கோரிக்கையும் அது ஏற்றுக் கொள்ளாது. தன்னுடைய கட்சி அரசியலிற்காக முற்போக்கு என்ற ஆயுதத்தை அது எடுத்திருக்கிறது. அது இன்னொரு சர்வாதிகாரத்தை ஆதரிக்கக்கூடியது. மகிந்த ராஜபக்சவோ தனக்கு எதிராக ஜே.வி.பி செயற்படுகிறது என்பதால் அந்தக் கட்சியைச் சின்னாபின்னமாக்கியிருக்கிறார். ஜே.வி.பிற்கு மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளுக்கு இப்படி நடந்திருக்கின்றது. ‘முற்போக்கு’ ஜே.வி.பி விடுதலைப் புலிகளுடனான சமாதானத்தைக் கிழித்தெறிந்து யுத்தத்தை நடத்த ஆணையிட்டதை நாம் மறந்து விடமுடியாது.    இயக்கமாக அல்லாது தனிப்பட முற்போக்குக் குரல்கள் பல இருக்கின்றன. அவை தமிழ் மக்களுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருந்த பொழுது அதற்கு எதிராகப் பேசின. ஆனால் தமிழ் மக்கள் விடயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முற்போக்கு சக்திகள் இல்லை. அல்லது எந்த சக்திகளின் குரல்களுக்கும் சர்வாதிகார அரசு அசையாது என நினைக்கிறேன். தமிழர்களின் பிரச்சனைகளையும் பொதுவாக மக்களின் பிரச்சினைகளையும் பேசிய, மகிந்தவின் சர்வாதிகாரத்தை எதிர்த்த பல குரல்கள் நசுக்கப்பட்டுவிட்டன. முற்போக்கு இயக்கமாகச் செயற்படும் வாய்ப்புகள் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அதற்கான சூழலை சர்வாதிகார அரசு இல்லாமல் செய்துவிட்டது.    தமிழ் இளைஞர்களிடையே மார்க்ஸியத்தின் மீதான ஆர்வம் காணப்படுகிறதா? வடக்கு கிழக்கில் ஒரு மார்க்ஸிய இயக்கம் தோன்ற வாய்ப்புள்ளதா?  வடக்கு கிழக்கில் அப்படி ஒரு இயக்கம் தோன்ற வாய்ப்பில்லை. 90களுக்குப் பின்னரான போரும் அரசியல் நிலமைகளும் தமிழ்த் தேசியப் போராட்டம் பற்றிய பிரக்ஞையைத்தான் இளைஞர்களுக்கு ஊட்டியிருக்கின்றன. மார்க்ஸியம் தொடர்பான கல்வி வெறும் கல்வியாகவே இருக்கிறது. அது மாணவர்களுக்கு ஒரு சமூகப் பார்வையை, ஈடுபாட்டை வழங்கவில்லை. மார்க்ஸியத்தை ஈழப் போராட்டத்துடன் பொருத்திப் பார்த்த பலர் இப்பொழுது ஈழத்தில் இல்லை. ஆனால் மார்க்ஸியத்தின் தாக்கம் மிகக் குறைவான சிலரிடம் இருக்கிறது. இளைஞர்களிடம் மார்க்ஸியம் மீதான ஆர்வம் முற்று முழுதாக இல்லை என நினைக்கிறேன்.    இந்த உலகமயமாக்கல் சூழலில் மார்க்ஸிய அரசியலின் மீதான நிராகரிப்பு நமக்குப் பெரும் அபாயமல்லவா?  ஆனால் மார்க்ஸியம் என்று இலங்கையில் – ஈழத்தில் பலர் அரசியல் கட்சியாகப் பிரசாரம் செய்கிறார்கள், தமிழ் மக்களைப் பொறுத்தவரை அதைப் புரிந்துகொள்ளவோ ஈடுபாடு காட்டவோ முடியவில்லை. ஏனென்றால் ஈழக் கனவுடன்தான் தொடர்ந்தும் எமது மக்கள் வாழ்கிறார்கள்.    உலகமயமாக்கல் வடக்குக் கிழக்கை எந்தவகையில், எவ்வாறு எட்டியுள்ளது? அதன் விளைவுகள் என்ன?    உலகமயமாக்கல் வடக்குக் கிழக்கை அதன் அடையாளங்களைத் தகர்க்கும் அளவில் எட்டியிருக்கிறது. அந்நிய மேலாதிக்கங்கள் மக்களின் போராட்ட உணர்வையும் சுதேச உணர்வையும் சிதைக்கும் எண்ணத்துடன் உலகமயமாக்கலைத் திணித்திருக்கின்றன. 2000 -இற்கு முன்னர் உலகமயமாக்கலின் தாக்கம் மிக குறைந்திருந்தது என நினைக்கிறேன். இப்பொழுது அது மனிதர்களிடையே இருக்கும் நெருக்கத்தைக் குறைக்குமளவில், சுதேச உணர்வைச் சிதைக்குமளவில் ஈழத்தைப் பாதித்திருக்கிறது. அதன் விளைவாக எங்களுக்குப் போராட்டரீதியாக, வரலாற்று ரீதியாக, பண்பாட்டுரீதியாகப்  பல தோல்விகள் ஏற்பட்டிருக்கின்றன.    ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு எதுவாயிருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?  தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உண்மையுணர்வுடன் இந்தியா பங்கு வகிக்க வேண்டும் என நினைக்கிறேன். எங்கள் போராட்டம் அழியவும், மக்கள் கொல்லப்படவும் இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. யுத்தத்திற்கான ஆசியையும், ஆதரவையும், உதவியையும் வழங்கியது. பலிக்குப் பலி என்று எத்தனை இலட்சம் மக்களை இந்தியா பலியெடுத்து விட்டது. ஆனால் ஈழத் தமிழர்களின் பிரச்சினையை இந்தியா நன்கு புரிந்து கொண்ட நாடு. மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நாடு. தனது வல்லமையை தமிழர்களைக் கொல்லவே இந்தியா பயன்படுத்தியது. இப்படியான பங்கையே இந்தியா இதுவரை வகித்தது.    இனியாவது இந்தியா ஈழத் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உதவ வேண்டும். தனது அரசியல் – பொருளாதார நலன்களிற்காக எங்களைப் பலியிடாமல் இருக்க வேண்டும். இந்தப் பங்கை எதிர்பார்ப்பதற்கு முக்கிய காரணம் ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இருக்கும் உறவும் ஈழத் தமிழர்களின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டதும்தான். இந்தியா அவ்வாறான பங்கை வழங்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.    ஈழப் பிரச்சினையில் வைகோ, சீமான், திருமாவளவன் போன்றோர் செய்யும் அரசியலை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?    தாயகத்தில் இருக்கும் மக்களைப் பொறுத்த வரையில் நமது பிரச்சினையில் வைகோ, சீமான், திருமாவளவன் போன்றவர்கள் எழுப்பும் குரல் ஆறுதலைக் கொடுக்கிறது. ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது கருணாநிதியின் சுயநலமிக்க ஆட்சி பூனையைப்போல அமைதியாக இருந்தது. தமிழக மக்கள் எத்தனை உயிரை தியாகம் செய்து ஈழத் தமிழர்களை காப்பாற்றும்படி கோரினார்கள். எதற்கும் கருணாநிதி அசையவில்லை. தன்னலமிக்க, ஆற்றலற்ற கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்பொழுது தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளைக் கொண்டுசென்று அவற்றுக்காக வைகோ, சீமான் போன்றவர்கள் நடத்திய போராட்டங்கள் எமது மக்களை ஆறுதலடையச் செய்திருக்கின்றன. ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழக மக்களிடம் இருக்கும் எல்லயைற்ற நெருக்கம் முக்கியமானது. ஈழப் பிரச்சினையில்  வைகோ, சீமான் போன்றவர்களது செயற்பாடுகள் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியவை என நினைக்கிறேன்.    வெறும் பேச்சுகள் என்பதைத் தவிர்த்து ஈழத்து அரசியலில் அவர்கள் இதுவரை எந்தத் தாக்கத்தையும் செலுத்தவில்லையே. தவிரவும் அவர்கள் தம்மளவில் நேர்மையற்ற அரசியல்வாதிகளாயும்தானே இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் திருமாவளவன் காங்கிரஸையும் வைகோவும் சீமானும் ஜெயலலிதாவையும் ஆதரித்தார்களே? காங்கிரஸ் அப்போது இலங்கையில் யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்தது. ஜெயலிலதா ஈழத்து மக்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மானுட இனத்துக்கே விரோதியல்லவா?    அவர்களது பேச்சுகள் சாதாரணமானவையல்ல. தாக்கத்தை, அதிர்வை உண்டு பண்ணக்கூடியவை. அவர்கள் ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஒற்றுமையுடன் குரல் கொடுக்கிறர்கள் என்ற அபிப்பிராயம் இங்கு பரவலாக இருக்கிறது. ஜெயலலிதா ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அவர்கள் மாற்றம் பெற்று உண்மையில் மக்களுக்காகச் செயற்பட வேண்டும் என்பதற்காக அவரை ஆதரித்திருக்கலாம். தமிழகத்தில் எல்லா வழிகளிலும் ஈழத் தமிழர்களுக்காக தமிழக அரசியல் குரல்கள் அழுத்தங்களைக் கொடுக்கின்றன, கேள்விகளை எழுப்புகின்றன என்ற அபிப்பிராயம் இங்கு இருக்கிறது. விடுதலைப் புலிகள்கூட அதை விரும்பினார்கள்.    மறுபடியும் நமது மக்களிடமிருந்து தமிழீழக் கோரிக்கை வீரியமுடன் கிளம்ப வாய்ப்பிருக்கிறதா? ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு எது தீர்வாகயிருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?  ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஈழம்தான் தீர்வு என நான் கருதுகிறேன். அதற்குரிய சூழலைத்தான் இலங்கை அரசும் உலகமும் தமிழர்களுக்கு மீண்டும் நிர்ப்பந்திக்கிறது. வடக்குக் கிழக்கை சிங்கள, இராணுவமயமாக்க வேண்டும் என்பதும் வடக்குக் கிழக்கு மக்களின் அதிகாரங்களை வழங்காமல் பேரினவாத்தின் பிடியில் வைத்திருக்க நினைப்பதும் தமிழ் மக்களை மீண்டும் ஈழத் தீர்வுக்கு வலிறுத்துகின்றன. தமிழ் மக்களை அரசு ஏற்றுக் கொள்ளாதவரை, ஏமாற்ற நினைக்கும்வரை, தமிழ் மக்களின் உரிமையை வைத்து நாடகம் போடும்வரை இந்தப் பிரச்சனை நீளத்தான் போகிறது.    விடுதலைப் புலிகளை சிதைத்ததன் வாயிலாக ஈழக் கோரிக்கையை அழித்து விட்டதாக நினைத்துக் கொண்டு அரசு செயற்படுகிறது. ஈழக் கோரிக்கை என்கிற கனவு எமது மக்களிடம் ஒரு பொழுதும் அழிந்து விடாது. அரசு தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்துகொண்டிருக்குமானால் மீண்டும் நமது மக்களிடமிருந்து தமிழீழக் கோரிக்கை தோன்ற வாய்ப்பிருக்கிறது. தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கை வெறுமனே அரசு ஆக்கிரமித்து நிற்கவில்லை. வடக்கு கிழக்கிலிருந்து நிலங்களைச் சுருட்டவும், தமிழர்களின் உரிமையைப் பறிக்கவும் அரசு நிகழ்ச்சி நிரல்களை வடிவமைத்திருக்கையில் எமது மக்கள் மீண்டும் போராட வேண்டிய நிலமைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.    யுத்தத்தின் பின்னான இந்த ஓராண்டு காலத்தில் இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து?  யுத்தத்தின் பின்னர் என்பதைவிட யுத்தம் நடந்துகொண்டிருக்கும் பொழுதே தனது செயற்பாடுகளை இலங்கை அரசு ஆரம்பித்துவிட்டது. அதற்கு முதலிலும்கூட ஆரம்பித்துவிட்டது. தமிழர்களின் தாயகத்தை அழித்து மாற்றிக் கொண்டிருப்பது. தமிழர்களுக்கு மகிந்தவினால் தரக்கூடிய தீர்வையும் தராமலிருப்பது. உரிமைகளை மறுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்துக் கொண்டிருப்பது. இப்படி பல நடவடிக்கைகளை அரசாங்கம் செய்துகொண்டிருக்கிறது. யுத்தத்தின் பின்னர் வதை முகாங்களைத் திறந்து தமிழ் மக்களை அடைத்துச் சித்திரவதை செய்தது.    தமிழர் நிலங்களில் அழிப்பு நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு பல்வேறு வதைகளுடன் மீண்டும் மக்களை ஆடுமாடுகள் போலச் சாய்த்துக்கொண்டு போனது. ஆயுதப் போராட்டத்தை அழித்துவிட்டோம் என்று வெற்றிக் கூச்சல்களுடன் அரசியல் உரிமையை அழிக்கத் தொடங்கியது. நம்பிக்கை தரக்கூடிய எந்தச் செயற்பாடுகளுக்கும் அரசு இடமளிக்கவில்லை. மீண்டும் மீண்டும் தமிழ் மக்களைத் துன்புறுத்தும் செயற்பாடுகளை நடத்திக்கொண்டிருக்கிறது. அகதி மக்களுக்காக வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களைக்கூட அரசு சூறையாடியிருக்கிறது. கூடாரத் துணி கூட வழங்கப்படாமல் பல இடங்களில் மக்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்.    வதை முகாங்களிலிருந்து மக்களை விடுவிக்கிறோம் என்று விழாக்கள் நடத்திக்கொண்டு, அறிக்கைகள் விட்டுக்கொண்டு மீண்டும் வேறு முகாங்களுக்குக் கொண்டு சென்றதும் கூரையில்லாத கட்டிடங்களுக்கு கூரைபோட்டு, சிறிய உடைவுகளுக்கு சீமென்ட் பூசி மூடிவிட்டு திறந்து வைத்ததும்தான் இந்த ஓர் ஆண்டுக்குள் அரசாங்கம் செய்த சாதனைகள். கூடாரங்கள் நிரம்பிய நிலமாக மாற்றியதும், மரங்களுக்குக் கீழாக மக்களைக் கொண்டு சென்றதும், சிதைவுகளை மேலும் சிதைத்ததும்தான் இந்த ஓர் ஆண்டுக்குள் அரசாங்கம் செய்த சாதனைகள்.    நாடு கடந்த தமிழீழ அரசு குறித்துத் தாயக மக்கள் என்ன கருதுகிறார்கள்?    உண்மையில் தாயகத்தில் உள்ள பல மக்கள் நாடு கடந்த அரசு பற்றி அறியவில்லை. தலைவர், பொட்டம்மான் தப்பிச் சென்றிருக்கிறார்கள், போராளிகள் மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகிறார்கள் என்ற கதைகளை என்னிடமே பல மக்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இலங்கை அரசோ நாடு கடந்த தமிழீழ அரசால் மிகப் பீதியடைந்து போயிருக்கிறது. ஈழத் தமிழர்கள் ஈழம் பற்றி எங்கு கதைத்துக்கொண்டிருந்தாலும் அது அரசாங்கத்திற்குப் பீதியை உண்டாக்கிறது.    நான் நினைக்கிறேன், நாடு கடந்த அரசு தாயகத்தில் அரசியல் நிலையில் அதிர்வை ஏற்படுத்தக்கூடியது. அரசாங்கத்தை மறைமுகமாக நிர்ப்பந்திக்கும். அதை நாடு கடந்த தமிழீழ அரசு நிகழ்த்த வேண்டும். தோற்கடிக்கப்பட்ட சில நாட்டுக் கனவுகள் நாடு கடந்த அரசு மூலம் வெற்றி பெற்றிருக்கின்றன. நாடு கடந்த அரசு பற்றி அறிந்த மக்கள் அது தாயத்தில் மகிந்த அரசை நிர்ப்பந்தத்திற்கு கொண்டு வந்து அழுத்தத்தை தரும் என நினைக்கிறார்கள். நாடு கடந்த அரசால் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய முடியாது என நினைக்கிறேன்.    ஆனால் இங்கே நாடு கடந்த அரசு என்பதே பெரும் கோமாளித்தனமாயல்லவா உள்ளது. நாடு கடந்த அரசு குறித்த கருத்தாக்கத்தை உருவாக்கிய குமரன் பத்மநாபன் இப்போது இலங்கை அரசோடு சேர்ந்து இயங்குகிறார். புலிகளின் நெடியவன் அணியினர் நாடு கடந்த அரசுக் குழுவினரை எதிர்த்து நிற்கிறார்கள். நாடு கடந்த அரசு என்ற கதையாடலில் மக்களுக்கும் ஆர்வமில்லை. வெறும் 100 வாக்குகள் பெற்றவரெல்லாம் நாடு கடந்த அரசின் பிரதிநிதிகளானார்கள். இதில் கள்ள வாக்குகள் வேறு. நாடு கடந்த அரசுக்கான தேர்தலில் ஊழல். வாக்குப் பெட்டிகள் கடத்தல். பின்பு அவர்களுக்குள் லண்டனில் அடிதடியும் வன்முறையும். இதில் எப்படி அவர்களால் இலங்கை அரசுக்குப் பீதியை உண்டாக்க முடியும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாடு கடந்த அரசாங்கத்தை ஏற்கவில்லையே?    நாங்கள் அனைவரும்  ஒன்றுபட்டு மக்களுக்காகச் செயற்பட வேண்டும். போர் காரணமாக மக்களுக்குச் சில குழப்பங்கள் ஏற்பட்டதனால் வாக்களிப்புக் குறைந்திருக்கலாம். இலங்கை அரசு நாடு கடந்த அரசினால் மிகப் பதற்றமடைந்து அதைக் குழப்ப பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. அதனால்கூட இந்தப் பிரச்சினைகள் ஏற்படலாம். இது தொடர்பாக மேலதிகமாக உண்மையான நிலவரங்களை நாடு கடந்த உறவுகள்தான் பேச வேண்டும்.    ஈழத்து அரசியலில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் பங்கு எவ்வாறிருக்க வேண்டும், அல்லது எவ்வாறிருக்கக் கூடாது எனக் கருதுகிறீர்கள்?  ஈழத் தமிழினத்தில் கால்வாசிப்பேர் புலம் பெயர்ந்து விட்டார்கள் என நினைக்கிறேன். இன்று தாயகத்து மக்கள் அடிமைகளாக்கப்பட்டு இருக்கும்பொழுது புலம்பெயர்ந்த மக்கள் குரல் கொடுக்கும் சூழலில் இருக்கிறார்கள். நம் உறவுகள் எவ்வளவோ குரல் கொடுத்துமிருக்கிறார்கள். ஆனால் எதையும் யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பது வேறு விடயம். புலம் பெயர்ந்திருக்கும் படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் ஈழத்து மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளைப் பகிரங்கப்படுத்துகிறார்கள். மக்களுக்காக வலுவான குரல்கள் ஒலிக்கின்றன.    போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புலம்பெயர்ந்த உறவுகளின் உதவிகள் பல வழிகளில் கிடைத்து வருகின்றன. அப்படி உதவிகளைப் புரிந்து மக்களின் வாழ்வை மீட்டெடுக்கப் புலம் பெயர் மக்களின் வேலைத் திட்டங்கள் அவசியமானவை. நமது மக்களிடமிருந்து வரும் கோரிக்கையை நிறைவேற்ற புலம் பெயர்ந்த உறவுகளின் கடுமையான உழைப்பு தொடர்ந்தும் இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.    தாயகத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை புலத்தில் பல பிரிவுகளைத் தூண்டியுள்ளன. அப்படியான விரோதங்கள், கரிபூசல்கள், பொறாமைகள், வசைபாடல்கள் பொதுவாக ஈழ மக்களின் குரலையே பாதிக்கவல்லவை. ஈழப் பிரச்சினையை முன்னிருத்தி ஒவ்வொருவரும் ஆளாளுக்குக் குற்றம்சாட்டித் தனிப்பட்ட நலன்களைக் கவனிப்பது அபாயமானது. அதை முக்கியமாகத் தவிர்க்க வேண்டும். நாங்கள் முப்பது வருடங்களாகத் தோற்றுக்கொண்டிருப்பதற்கு அதுதானே முக்கிய காரணம்.                                      14. இதற்கு மேல் பின்னொரு நாளில் பேசுவேன் – வ.ஐ.ச.ஜெயபாலன்   கடந்த நாற்பது வருடங்களிற்கு மேலாகத் தனது எழுத்துகளாலும் அரசியற் செயற்பாடுகளினாலும் ஈழச் சமூகத்திலும் அனைத்துலகத் தமிழ் இலக்கியப்பரப்பிலும் தனது குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு அறிமுகம் தேவையற்றது. எனினும் இளைய வாசகர்களிற்காகச் சில குறிப்புகள்: 1944ல் ஈழத்தின் உடுவில் கிராமத்தில் பிறந்தவர் ஜெயபாலன். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பல்வேறு துறைகளிலும் பங்களிப்புச் செய்தவர். மரபு அளித்த கொடையாக சந்தங்களாலும் ஓசைநயத்தாலும் நவீன கவிதையை எழுதிய ஈழத்தின் முதன்மையான கவிஞன். 1984ல் ‘ தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லீம் மக்களும்’ என்ற ஜெயபாலனின் முதல் நூல் வெளியாகியது. சூரியனோடு பேசுதல், நமக்கென்றொரு புல்வெளி, ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும், ஒரு அகதியின் பாடல்,  பெருந்தொகை, தோற்றுப் போனவர்களின் பாடல்,  சேவல் கூவிய நாட்கள், அவளது கூரையின்மீது நிலா ஒளிர்கிறது  ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன. கலை – இலக்கிய விமர்சகர் இந்திரனுடன் ஜெயபாலன் நடத்திய கவிதை சார்ந்த உரையாடல் ‘கவிதை அனுபவம்’ என்ற பெயரில் 2004ல் நூலாக வெளியாகியது. ஜெயபாலனின் நேர்காணல்களின் தொகுப்பு ‘ ஈழம்: நேற்று – இன்று – நாளை’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தவிரவும் அரசியல் நாடகப் பிரதிகளையும் பல இசைப் பாடல்களையும் ஜெயபாலன் எழுதியுள்ளார். தற்போது நோர்வேயில் தரித்து நிற்கும் ஜெயபாலனோடு மின்னஞ்சலூடாகவும் தொலைபேசியிலும் இந்நேர்காணல் நிகழ்த்தப்பட்டது.    – ஷோபாசக்தி 09.09.2010   ஜெயபாலனின் தனித்துவமான மண்சார்ந்த, மக்களின் பண்பாடு சார்ந்த கவிமொழி எங்கிருந்து உருவாகியது?    எனக்கு ஐந்து வயதாக இருக்கும் போது எனது மூதாதையரின் ஊரான நெடுந்தீவுக்கு வந்தேன். நாடு பிடிக்க வந்த போர்த்துக்கேயருக்கும் டச்சுக்காரருக்கும் எதிராகக் கிளர்ந்த என் மூதாதையர்களது கதைகளை இங்குதான் அறிந்து கொண்டேன். இந்தத் தீவில் மக்கள் – குறிப்பாக முதியவர்களும் பெண்களும் – பேச்சு மொழியில் கவிதை கலந்து பேசுவதைக் கேட்டேன். எனக்குக் கவிதை சொல்லும் ஆற்றல் இப்படித்தான் வந்திருக்க வேண்டும்.    என்னுடைய அப்பா நெடுந்தீவு. அம்மாவுக்கு ஒரு அடி நெடுந்தீவு, மறு அடி உடுவில். நானும் என்னுடைய  மூத்த சகோதரியும் உடுவிலில்தான் பிறந்தோம். என்னுடைய இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் நெடுந்தீவில் பிறந்தார்கள்.    1824ல் ஆசியாவிலேயே முதலாவது பெண்கள் பாடசாலை உடுவிலில் தான் ஒருசில அமெரிக்க மிஷன் பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. மழைக்கு ஒதுங்கிய இரண்டு சிறுமிகள் தான் முதல் மாணவிகள். அமெரிக்கச் சுதந்திரப் போரின் பின்னர் ஒப்பீட்டுரீதியாகக் கிளர்ச்சிப் போக்குள்ள ஒரு காலம் அமெரிக்க மிஷனுக்கு இருந்தது. யாழ்ப்பாணத்தில் பெண்கள் விடுதலையின் பொறி அங்குதான் மூண்டது எனலாம். என்னுடைய அம்மாவும் வீட்டுக்கு எதிராகக் கிளர்ந்த போதெல்லாம் உடுவில் ‘பெண்கள் பாடசாலை விடுதி’ அம்மாவுக்குப் புகலிடமாயிற்று. பின்னர் அம்மா அங்கு ஆங்கில ஆசிரியையாகவும் இருந்தார். அப்பா மத்துகமவில் பிரபல வணிகர். அம்மாவை அடித்து முடக்கிப்போட அவர் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்தார். மோசமாக அடிபட்ட போதும் அம்மா எப்போதும் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான  சமூகப் பணிகளைக் கைவிடவில்லை. அம்மா தலித் சமூகத்தின் மீது வெறும் இரக்கத்தைத் தாண்டிய நட்புணர்வையும் மரியாதையையும் வைத்திருந்தார். இவையெல்லாம் தான் என் எழுத்துகளின் கருவறையானது. சண்டைகள், கருத்து மோதல்களுடனும் தனிப்பட்ட நட்பைப் பேணும் பண்பையும் அம்மாவிடம் இருந்துதான் வரித்துக் கொண்டேன்.    அம்மா 1920களிலிருந்து 1940களின் ஆரம்பம் வரைக்கும் உடுவில் மகளிர் கல்லூரியில் படித்த ஆங்கில, தமிழ்க் கதை – கவிதைப் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார். பாரதியாரின் ‘ தேசிய கீதம்’ முதற் பதிப்புப் பிரதியும் அவரிடம் இருந்தது. அம்மா எனது சிறு வயதிலேயே ஆங்கிலக் கதைகளையும் கவிதைகளையும் மொழி பெயர்த்து  எனக்குச் சொல்லுவார். அம்மாவும் அப்பாவும் தாங்கள் வாசிக்கும் நல்ல கவிதைகளை வெட்டிச் சேகரிப்பார்கள். அவற்றை அம்மா நோட்டு புத்தகத்தில் பிரதி பண்ணி வைப்பார். இவற்றையெல்லாம் வாசித்தபடிதான் நான் வளர்ந்து விடலைப் பையனானேன். மோதல் வாழ்வில் அம்மாவும் அப்பாவும் சந்தித்த ஒரே காதல் புள்ளி கவிதைதான் எனத் தோன்றுகிறது. நெடுந்தீவிலும் பின்னர் வன்னியிலும் பல அற்புதமான கதை சொல்லிகளைச் சந்திக்க முடிந்தது. தொடர்ச்சியான கேள்வியும் வாசிப்பும் தான் என்னை இலக்கியத்தில் ஈடுபட வைத்தது என்று தோன்றுகிறது.    உங்களுடைய அரசியல் ஈடுபாட்டின் தொடக்கப்புள்ளியாக எது அமைந்தது?    1968ல் வன்னிக்கு வந்தபோது அந்த இயற்கையும் வளமும் பண்டாரவன்னியன் கதைகளும் என்னை ஈர்த்தன. காடுகளைப் பார்த்துவிட்டு இலங்கைத் தீவில் புரட்சி சாத்தியம் என்று கருதினேன். இதனால் விரைவில் வருகிறது என நம்பிய புரட்சிக்கான ‘இராணுவ புவியியல்’ (Military geography) பற்றிய தேடல்களில் சின்ன வயதுகளிலேயே என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அந்த நாட்களில் திரு. SJV செல்வநாயகம் அவர்களது தலைமையில் தமிழரசுக் கட்சி தமிழருக்கு இணைப்பாட்சி கோரிப் போராடியது. எனது தந்தையாரும் ஒரு தீவிர ‘பெடரலிஸ்ட்’. லெனினின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான இணைப்பாட்சி பொதுவுடமையே எனது கொள்கையாக இருந்தது. இணைப்பாட்சி அடிப்படையிலான புரட்சியை நான் கனவு கண்டேன். ஆனால் சிங்களப் பேரினவாதிகள் பலம்பெறப் பலம்பெற சிங்கள மிதவாதிகளதும் இடதுசாரிகளதும் மத்தியில் சிங்களத் தேசியவாதிகளோடு சமரசம் செய்வது அவசியம் என்கிற கருத்து வலுபெற்று வந்தது. இத்தகைய போக்கு அதிகரிக்க அதிகரிக்க இடதுசாரி அமைப்புகளுக்குள் இணைப்பாட்சிக் கருத்துக்கு எதிர்நிலை உருவானது.    1970ல் இருதய நோயாளியாக இருந்த ஜே.வி.பி தலைவர் ரோகண விஜேவீரவை வைத்தியசாலையில் சந்தித்து, தமிழரது போராட்டத்தையும் புரட்சியையும் இணைப்பது தொடர்பாகப் பேசினேன். அவர் என்னை எஸ்.டி.பண்டாரநாயக்கவை சந்தித்து இது குறித்துப் பேசுமாறு சொன்னார். எஸ்.டி.பண்டாரநாயக்க “சோவியத் யூனியன் போல இணைப்பாட்சி அடிப்படையிலான பொதுவுடமை சமூக அமைப்பு இலங்கைக்கு ஏற்றதல்ல” என்று கூறினார். சீனா மாதிரியில் அமைந்த கிராமிய கொம்யூன்கள் அமைப்பில் இனப் பிரச்சினைக்கு இடமே இருக்காது என்பதே அவரது விவாதமாக இருந்தது. இதனால் அவர்களோடு என்னால் தொடர்ந்து செல்ல முடியவில்லை.    அரசியல் வேறுபாடுகளுக்கு வெளியே புதுவை இரத்தினதுரை, டானியல் அண்ணா, தோழர் எம்.சி சுப்பிரமணியம், தோழர் இக்பால், மகாகவி, காசி ஆனந்தன், சண்முகம் சிவலிங்கம், சுபைர் இளங்கீரன், மு.நித்தியானந்தன், நிர்மலா, புஸ்பராசா, மாவை சேனாதிராசா காரைநகர் அ.தியாகராசா என்று பரந்த அரசியல் புலத்தில் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். ஆச்சரியப்படத்தக்க விதத்தில் தமக்கு எதிரானவர்களோடு நான் நட்புப் பாராட்டுவது தொடர்பாக யாரும் என்னைச் சந்தேகப்பட்டதோ புறக்கணித்ததோ இல்லை. இந்தப் பாக்கியம் என் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. “சண்டை பிடித்துக்கொண்டே நண்பர்களாய் இருக்கலாம்” என்பதை ஜெயபாலனிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ‘மூன்றாவது மனிதன்’ பௌசர் சொல்லுவான். அவனும் நானும் போடாத சண்டையா!    இந்தக் காலங்களில் சாதி – வர்க்கச் சிக்கல்களில் நிர்வாகச் சேவைகளிலிருந்த அதிகாரிகளையும் பொலிஸ்காரர்களையும் நான் தாக்கியதாக வழக்குகளில் பலதடவைகள் கைது செய்யப்பட்டு நான் விளக்க மறியலில் இருக்க நேர்ந்தது. பொலிசாரும் நிர்வாக சேவை அதிகாரிகளும்  என்னைக் கொலை வழக்கு உட்பட பல வழக்குகளில் சிக்க வைக்க முயன்றுகொண்டிருந்தார்கள். 1972ல் பொலிசார் என்னைச் சுட்டுக் கொல்லவும் திட்டமிட்டிருந்தனர். எல்லாத் தரப்பிலும் என்னை விரும்புகிறவர்கள் இருந்ததால் எப்போதும் எனக்கு எதிரான நகர்வுளைப் பற்றிய தகவல்கள் எனக்குக் கிடைத்துக்கொண்டேயிருந்தன. என் சாதுரியத்தாலும் தற்செயல்களாலும் நான் பல தடவைகள் என் உயிரைக் காப்பாற்றியுள்ளேன்.    கொஞ்சம் கிளர்ச்சிக்காரன், கொஞ்சம் சமூகச் சண்டியன், கொஞ்சம் புரட்சிச் சிந்தனை, கொஞ்சம் ரொமான்டிக்கான கவிஞன் என  வாழ்ந்த காலங்களவை.    1970பதுகளின் ஆரம்பத்தில் கலாநிதி கைலாசபதி அவர்களை நான் சந்தித்தபோது அவர் என்னைப்பற்றி உலாவும் கதைகளை வைத்து இ.சிவானந்தன் ‘காலம் சிவக்கிறது’ என்று ஒரு நாடகம் எழுதியிருப்பதாகச் சொன்னார். பின்னர் சிவானந்தனும் இதனை என்னிடம் சொன்னார். ஷோபா, நீங்களும் என் இளவயதுக் கிளர்ச்சிகள்  குறித்து உலாவும் கதைகளைக் கொண்டு  உங்களது  ‘ம்’ நாவலில் கலைச்செல்வன் என  ஒரு பாத்திரத்தை உருவாக்கியிருப்பதாகச் சொன்னீர்களல்லவா. ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் விரும்புகிறவர்களைக் கதைகளாகக் கொண்டாடுவார்கள். எனது பதின்ம வயதுகளில் என்னைப் பற்றி உலாவிய கதைகளைக் கேட்டு நானே ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் என்னைபற்றி உருவாக்கிய பிம்பங்கள் தான் என்னை எப்போதும் சமரசம் செய்து கொள்ள முடியாத அரசியல் சூழலுக்குள் வைத்திருந்தன. எனது தன்னிலையை மக்கள் தீர்மானித்துக்கொண்டேயிருந்தார்கள்.    என்னுடைய பதின்மப் பருவத்தில் தம்முள் மோதிக் கொண்ட  ருஷ்ய சார்பு – சீனச் சார்பு  இடதுசாரி அமைப்புகளுக்கு வன்னியில் தளம் இருக்காததால் இரு தரப்பினருக்குமே நான் பயன்பட்டேன். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் ஏழை விவாசாயிகளுக்குச் சார்பான வன்முறையாளனாகவே என்னுடைய இளைய வயதுகள் எனக்கு ஞாபகம் வருகிறது. சிறு வயதிலிருந்தே தோழர்களதும் பெண்களதும் அன்பும் நிழலும் எனக்கு எப்போதுமே வாய்த்தது. ஒன்றுக்கொன்று முரண்பட்ட அமைப்புகளில் எனக்குத் தோழர், தோழியர்கள் இருந்தார்கள். என் இளம்வயதுத் தோழர்களுள் டானியல் அண்ணாவும் தோழர் எம்.சி.சுப்பிரமணியமும் மிகவும் முக்கியமானவர்கள்.    என்னுடைய கல்வி அறுந்து அறுந்து தொடர்ந்தது. 1960ல் இருந்து 1974 வரைக்கும் நான் மிகத் தீவிரமாக இருந்த காலம். வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதால் கல்வி முற்றாகத் தடைப்பட்டது. அம்மா வீட்டில் களவெடுத்து என்னை ஆதரித்தார். எனது தோழர்களின் ஆதரவு எனக்கு எப்போதுமிருந்தது. இவை பற்றியெல்லாம் என்னுடைய ‘சேவல் கூவிய நாட்கள்’ குறுநாவலில் சிறிது பேசியிருக்கிறேன். எனினும் என்னுடைய இளமைக் காலம் குறித்து இன்னும் விரிவாகச் சுய விமர்சனங்களோடு எழுதவேண்டும் என்பது எனது விருப்பம்.    மொழிவாரித் தரப்படுத்தல், புதிய இனவாத அரசியல் யாப்பு, தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள், சிவகுமாரனின் மரணம் எனக் கொந்தளித்துக்கொண்டிருந்த 70களில் ‘தமிழ் இளைஞர் பேரவை’ போன்ற அமைப்புகளில் நீங்கள் இணையாமலிருந்தது எப்படி?    நான் தமிழரசுக் கட்சியின் இணைப்பாட்சிக்கான போராட்டத்தை ஆதரித்தேன் ஆனால் சாதி – வர்க்கப் பிரச்சினைகளில் இடதுசாரிகளோடு சேர்ந்து தமிழரசுக் கட்சியை எதிர்த்தேன். ஆனாலும் சிங்களப் பேரினவாதிகள் பலம்பெறப் பலம்பெற இடதுசாரிகள் மத்தியில் அதிகரித்த இணைப்பாட்சி தொடர்பான தளம்பல்களை விமர்சிக்கவும் நான் தவறியதில்லை. தமிழ் இளைஞர் பேரவையினர் சாதிய   ஒடுக்குமுறைகள் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியில் தீர்ந்துவிடும் என்கிற கொள்கையையே வைத்திருந்தனர். தமிழ் இளைஞர் பேரவையின் அத்தகைய வலதுசாரித் தேசியவாதப் பார்வையே என்னை அவர்களோடு இணையவிடாமல் தடுத்தது.    அரசியல் உணர்மையுள்ள தமிழ் இளைஞர்கள் பல்கலைக்கழகங்களைத் துறந்து ஆயுதப் போராட்டத்திற்குள் நுழைந்த காலத்தில் நீங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்றீர்கள்..?    ஏறக்குறைய 14 வருட அஞ்ஞாதவாசத்தின் பின்னர், என்மீது எஞ்சியிருந்த வழக்குகளை அவற்றைத் தொடுத்த பொலிஸ் அதிகாரிகளையும்  நிர்வாக சேவை அதிகாரிகளையும் துப்பறிந்து அவர்களை மிரட்டியே வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வைத்தேன். என்னை விடுதலை செய்த நீதிபதி சுந்தரலிங்கம் ‘உன் கொள்கைகள் சரி, வழிகள் பிழை, மேலே படித்து முறைப்படி அரசியல் செய்’ என்று நன்னெறிச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தியே என்னை விடுதலை செய்தார். அதனால் தான் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சை எழுதினேன். பல்கலைக்கழகம் போகும் போது நான்கு வருடங்கள் அமைதியாக இருக்கத் தீர்மானித்தேன். ஆனால், பகடிவதைக்கு எதிராக முதல்நாளே கலகமாகி விட்டது. ராக்கிங் நடந்துகொண்டிருந்த போது மாணவர் தேர்தலும் வந்தது. தமிழ் மாணவர்கள் – சிங்கள மாணவர்கள் எனப் பிளவுபட்டுத் தேர்தலில் நின்றார்கள். ஒற்றுமையை ஏற்படுத்த முயன்றவர்கள் துப்பாக்கி இளைஞர்களின் மிரட்டல்களுக்குப் பயந்து பின்வாங்கினர். துப்பாக்கி இளைஞர்கள் பலரோடு நான் விவாதங்களில் ஈடுபட்டேன். தமிழர்களின் உரிமை வேறு, இனவாதம் வேறு என்பதே என் நிலைப்பாடாக இருந்தது. இந்தச் சூழலில் யாழ் – வன்னி – கிழக்கு – மலைய தமிழர்களையும் முஸ்லிம்களையும் பரவலாக பிரதிநிதித்துவப்படுத்தும் அணியொன்றை உருவாக்கித் தேர்தலில் வென்றோம். அப்போது விரிவுரையாளர்களாக இருந்த மு.நித்தியானந்தனும், நிர்மலாவும் எங்களோடு துணை நின்றார்கள். தமிழ்த்துறையிலிருந்த சிவலிங்கராசா  போன்ற பல சக மாணவர்கள் துப்பாக்கி மிரட்டல்களுக்கு அஞ்சாமல் எனது மெய்க்காப்பாளர்கள் போலவே என்னுடன் திரிந்தார்கள். இந்தக் காலங்களில் தான் எனக்கு மலையக மக்கள் மீதும் முஸ்லிம் மக்கள் மீதுமான ஈடுபாடு ஏற்பட்டது.      நீங்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் வளாகம் இலக்கியவாதிகளாலும் இடதுசாரிகளாலும் நிரம்பியிருந்தது. உங்கள் பல்கலைக்கழக வாழ்வு உங்களது இலக்கியம் – அரசியல் குறித்த நிலைப்பாடுகளில் செழுமையான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்ததா?    ஆம். யுத்தமில்லாமல் இருந்திருப்பின் அவற்றுக்கு ஒரு செழுமையான தொடர்ச்சி அமைந்திருக்கும். யுத்தம், அகதி இடப் பெயர்வுகளால் அறிவு மற்றும் கலை – இலக்கியத் தலைமுறைகளின் தொடர்புக் கண்ணிகள் உடைந்து போய்விட்டதுதான் பெரும் சோகம். நான் பெரிதும் மதிக்கும் கலாநிதிகளும் மற்றும் ஆற்றல் மிக்கவர்களுமான கைலாசபதி, சிவத்தம்பி, சு.வித்தியானந்தன், மௌனகுரு, சித்திரலேகா, எம்.ஏ.நுஃமான், மு.நித்தியானந்தன், நிர்மலா, மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்கள் அங்கிருந்தனர். விரிவுரையாளர்கள் மௌனகுரு, மு.நித்தியானந்தன், நிர்மலா போன்றவர்கள் தார்சீசியஸ், சண்முகம் சிவலிங்கம், பாலேந்திரா போன்றவர்களது ஆதரவுடன் நாட்டுப்புற மற்றும் நவீன நாடகங்களுக்குப் பெரிய அளவில் பங்களிப்புச் செய்துகொண்டிருந்தார்கள். அந்த நாட்களில் விரிவுரையாளரும் கவிஞருமான எம்.ஏ.நுஃமான் தமிழில் மொழி பெயர்த்த ‘பாலஸ்தீனக் கவிதைகள்’ பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.    ஆனால், யாழ்ப்பாணச் சமூகம் தொடர்ச்சியாக அவர்களுக்கு நிறையக் கொள்கை சார்ந்த சவால்களை உருவாக்கிக் கொண்டிருந்தது.  ஆறுமுக நாவலரை  மறுத்து யாழ்ப்பாண ‘உயர்’ சமூகங்களின் அங்கீகாரத்தைப் பெற முடியாது. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் அக முரண்பாடுகளின் ஆரம்பப் புள்ளிகளுள் ஒன்றாக இருந்தது என்பதையும் இங்கே கசப்புடன் பதிவுசெய்ய விரும்பகிறேன். மார்க்ஸிய கலாநிதிகளான கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களே விமர்சனமின்றி ஆறுமுக நாவலரின் புகழ் பாட ஆரம்பித்தபோது என்னுள் பல தங்கக் கோபுரங்கள் சரிந்துபோயின.    ஈழத் தமிழ்க் கவிதையின் உருவம், உள்ளடக்கம் மட்டுமன்றி தளமும் மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருந்தது. ஆண்கள் அகப்படுத்தி வைத்திருந்த கவிதை உலகம் மெல்ல மெல்ல பெண்களின் கைகளிற்குப் போக ஆரம்பித்தது அப்போதுதான். ஊர்வசி, செல்வி, அவ்வை, மைதிலி அருளய்யாவிலிருந்து சிவரமணி வரைக்கும் மிகத் தீவிரமானதொரு கவிஞர்களது அணி முளைத்துச் செழித்தது.    போராட்டங்களில் மாணவர்கள் மட்டுமல்ல, கலை இலக்கியத்துறையினரும் பங்கு பற்றினோம். அரசியல்வாதிகளும் போராளிகளும் விரும்பிய மாதிரித்தான் கலைஞர்கள் எழுத வேண்டுமென்கிற எதிர்பார்ப்புகளும் கட்டுப்பாடுகளும் கமிஷார்த்தனமான நாட்டாமைகளும் அப்போது அதிகம் இருக்கவில்லை.    தமிழர் மத்தியில் செழுமையான விவாதங்கள் நடந்த கடைசிக் காலக் கட்டங்களவை. எனினும் ஆரோக்கியமான விவாதங்களைவிட அதிகரித்து வந்த இன ஒடுக்குதலும் போரும் புலபெயர்வுகளும் தான் வந்த நாட்களில் எங்கள் வாழ்வைத் தீர்மானித்தன என்பது எங்களது கெடுநேரம்.    ஆயுதம் தாங்கிய இயக்கங்களின் தோற்றத்தின் போது இயக்கங்கள் குறித்த உங்கள் மதிப்பீடு எவ்வாறிருந்தது?  சிறு வயதில் இருந்தே ஆயுதப் போராட்டம் தொடர்பான ஆர்வத்தோடும் தேடலோடும் அலைந்த மூத்தவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களுள் பலர் சுபாஸ் சந்திரபோஸ் அபிமானிகள். சிலர் மா சே துங் அபிமானிகள். இரண்டு அணிகளிலும் ஆயுதப் போராட்ட கனவுகளும் சிறு முயற்சிகளும் நிறையவே இருந்ததன. ஏற்கனவே சாதி ஒடுக்குமுறைகளிற்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இருந்த மாவோயிஸ்ட்டுகள் நாட்டு வெடிகுண்டுகளைக் கொண்டும் வேட்டைத் துப்பாக்கிகளைக் கொண்டும் சிறு சிறு தற்காப்புத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தனர். மாவோயிஸ்ட்டுகளும்  தமிழரசுக் கட்சியின் தொழிற்சங்கங்களும் – குறிப்பாக பஸ் தொழிலாளர்கள் – ஆயுதங்களைச் சேகரித்தனர். இரண்டு தரப்போடும் எனக்குச் சின்ன வயதுகளில் இருந்தே தொடர்பிருந்தது. இணைப்பாட்சி அடிப்படையிலான பொது உடமைப் புரட்சியே என்போன்ற சிலரின் கனவாக இருந்தது. ஆனால் பெரும்பாலான இடதுசாரிகளிடம் தமிழர் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான இனத்துவ நீதி நிலைபாடும் பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளிடம் ஒடுக்கப்பட்ட சாதி வர்க்க மக்களுக்கான சமூக நீதி நிலைப்பாடும் இருக்கவில்லை. ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கிற விருப்பமுள்ளவர்கள் அன்றும் இருந்தார்கள். பின்னர் சிங்களப் பேரினவாதத் தலைமையுடனான சமரசப் போக்கால் இடதுசாரிகள் பலவீனப்பட்டார்கள்.  தமிழ்த் தேசியவாதிகளைக் கொழும்புத் தமிழர் சிங்களப் பேரினினவாதத் தலைமையுடன் சமரசப்படுத்திய போது இடதுசாரிகளைப் போலவே தமிழ்த் தேசியவாதிகளும் இணைப்பாட்சிக் கொள்கையைக் கவிட்டார்கள். இப்படித்தான் நாடாளுமன்ற தேசியவாதத் தலைமையும்  மக்கள் மத்தியில் பலவீனப்பட்டது. பாராளுமன்றத்தில் நம்பிக்கை இழந்த இளைஞர்கள் எதிர்ப்பு அரசியலில் முன்னிலைப்பட்டார்கள். 1971 ஜேவிபி கிளர்ச்சியும் எங்கள் தலைமுறை கிளர்ச்சிக்காரர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் என் போன்ற சிலரின் இணைப்பாட்சி அடிப்படையிலான இனசமத்துவமும் புரட்சியும் என்ற கனவு வெற்றி பெறவில்லை.    நம்முடைய இயக்கங்களின் இயங்குமுறைக்கும் சனநாயகத்திற்கும் ஏதும் தொடர்பில்லை என அவர்களிடம் பேசியுள்ளீர்களா?    உலக வரலாற்றின் விடுதலை மற்றும் புரட்சிகர ஆயுத இயக்கங்களின் பிரச்சாரங்களைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் ஜனநாயகம் பற்றிய பிரச்சினைகள் பல பொதுவாக இருந்தமை புலப்படும். விடுதலை – புரட்சி வரலாறு நெடுகவே எதிரியோடு மட்டுமன்றி விமர்சிக்கும் ஜனநாயக சக்திகள்மீதும் துரோகி என்றோ எதிர்ப் புரட்சியாளர்கள் என்றோ முத்திரை குத்தப்பட்டு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஆனால் பிரச்சினை அதுவல்ல. போராளிகளின் சர்வாதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக அடித்தளமும் ஜனநாயக நோக்கமும் இருந்ததா என்கிற கேள்வி இருக்கிறது. இந்தக் கேள்விக்குச் சாதகமான பதில் என்னிடம் இல்லை. நான் முஸ்லிம் மக்களதும் மலையக மக்களதும் உரிமைகள், பெண்களதும் தலித்துகளதும் உரிமைகள், ஆயுதப் போராட்டத்தில் சாத்தியமான ஜனநாயகம் போன்ற விடயங்களில் சமரசம் செய்து கொள்ளவில்லை.    சிறுவயதில் வீட்டில் களவெடுத்து அம்மாவும் , பின்னர் வறுமையுடன் போராடி என் மனைவி வாசுகியும் என்னை ஆதரித்ததால் எனக்கு நிமிர்ந்து நிற்பது சாத்தியமாக இருந்தது. இப்போது  எனது பிள்ளைகளது ஆதரவும் எனக்கு உள்ளது.    தோழன் புதுவை இரத்தினதுரை என்னிடம்  ‘உனக்கு என்ன வேண்டுமென்றாலும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். பிறகு ஏன் காடையன் போல இயக்கத்தில் எல்லோருடனும் சண்டை போடுகிறாய்?” என்று கேட்டார். வேறு பலரிடமும் உதாரணத்துக்கு, லண்டனில் அ.இரவியிடமும் இது பற்றிக் கூறிக் கவலைப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். எனக்கும் கஸ்ரோவுக்கும் கடுமையான கருத்து முரண்பாடும் மோதலும் இருந்ததும், கஸ்ரோ என்னை அழித்துவிட முயன்றதும் ஒன்றும் இரகசியமல்ல. சாவுக்கு நான் எப்போதும் தயாராகவே இருந்தேன். முன்னர் ஈரோஸ் தவிர்ந்த ஏனைய இயக்கங்களோடும் ஒரிரு சந்தர்பங்களில் ஆயுதம் தாங்கிய ஓரிரு முஸ்லிம் குழுக்களோடும் இதே சிக்கல் இருந்தது. ஆனாலும் யாருக்கும் நான் தங்களைக் காட்டிக் கொடுத்து விடுவேன் என்கிற சந்தேகம் இருக்கவில்லை. அதுதான் வாழ்நாள் முழுவதும் என் கவசமாய் இருந்தது.    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் (PLOTE) உங்களுக்குமான உறவுகள் குறித்து?    வெளிவாரியான உறவுகள்தான். எட்டத்தான் வைத்திருந்தார்கள். நான் பெரும்பாலும் டெல்லியில் இருப்பதையே தலைமை அதிகம் விரும்பியது. இராணுவ புவியியல், அரசியல் உத்திகள் தொடர்பாக  என்னிடம் அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தனர். சமகாலத்தில் நான் ஏனைய இயக்கங்களோடும் சுதந்திரமாகத் தொடர்பில் இருந்ததை அவர்கள் ரசிக்கவில்லை. உமாமகேஸ்வரனுக்கும் வே.பாலகுமாருக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது நான் பாலகுமாரை ஆதரித்ததை அவர்கள் இரசிக்கவில்லை. பல்வேறு இயக்கத் தலைவர்களிடையே ஒத்த பண்புகள் அதிகமாக இருந்தன. சிலர் வென்றார்கள், சிலர் வெல்லவில்லை அதுதான் வேறுபாடு. பின்னர் உட்கொலைகள் மலிந்தபோது எனக்கு புளொட்டின் உளவுத்துறைப் பொறுப்பாளர் கந்தசாமியுடன் மோதல் ஏற்பட்டது. இயக்கத்தைப் பலவீனப்படுத்தி உள்ளே அகப்பட்டவர்களை தப்பவைக்க ஈஸ்வரன், அசோக் போன்றவர்கள் முனைந்தபோது அவர்களை ஆதரித்தேன். முரண்பட்டு எட்ட இருந்த என்னைத் திம்புப் பேச்சுவார்த்தைகளுக்காகப் போக அழைத்தபோது எனக்குப் பதிலாக ஒரு முஸ்லிம் தோழரை அனுப்பும்படி கேட்டு ஒப்புக்கொள்ள வைத்தது இன்றும் மகிழ்ச்சியைத் தருகிறது.    புதியதோர் உலகம் நாவல் குறித்து?  நாவல் வடிவம் தொடர்பாகப் பேசவில்லை. வரலாறு தொடர்பாக ‘லங்காராணி’க்கும் ‘புதியதோர் உலகத்துக்கும்’ நிரந்தரமான இடம் உள்ளது. ஒன்று இயக்கங்களின் ஆரம்ப சூழலையும் அடுத்தது இயக்கங்கள் அழியத் தொடங்கும் ஆரம்ப சூழலையும் விவரிக்கின்றன.    இதுவரை எத்தனை கொலைமுயற்சிகளிலிருந்து உயிர் தப்பியுள்ளீர்கள்? எவ்விதம் தப்பினீர்கள்?  1960பதுகளின் பிற்பகுதியில் சாதி ஒழிப்புப் போராட்ட காலங்களிலேயே நான் இந்த வன்முறைக்கும் கொலை முயற்சிகளுக்கும் பழக்கப்பட்டுவிட்டேன். 1972ல் ஜேவிபி கிளர்ச்சியின் ஆண்டு நிறைவைச் சாக்காக வைத்து என்னைச் சுட்டுக்கொல்ல காவல்துறை முயன்றது. அந்த நாள்பார்த்து என்னைப் பார்க்க அமெரிக்க தத்துவ மாணவர் ஒருவர் வந்திருந்தார். அந்தத் தற்செயல் என் உயிரைக் காப்பாற்றிற்று. வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் தப்பினேன்.  1986 – 1987களில் இந்தியாவில் வைத்தும் யாழ்ப்பாணத்தில் வைத்தும் வன்னியில் வைத்தும் கொழும்பில் வைத்தும் புளொட் கந்தசாமியின் ஆட்கள் என்னைக் கொல்ல முயன்றனர். யாழ்ப்பாணத்தில் புளொட் இராணுவ பொறுப்பாளராக இருந்த மெண்டிஸ்  “உங்களைக் கொலை செய்ய  உத்தரவு. ஆனால் நான் அதைச் செய்யமாட்டேன்” என்று என்னிடம் கூறினார். பின்னர் இத்தகைய ஓர் உத்தரவு தொலைத்தொடர்பில் வேலை செய்த தோழர்களால் அப்படியே அமுக்கப்பட்டு தகவல் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதைப் போல இலங்கை அரசுத் தரப்பினால் எனக்கு ஆபத்திருந்த போதெல்லாம் நான் அறிந்த, அறியாத முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சிங்களத் தோழர்களும் எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் என்னை காப்பாற்றியிருக்கிறார்கள். இலங்கை உளவுத்துறையில் இருந்த முஸ்லிம்கள் நான் வாழவேண்டுமென்று விரும்பினார்கள் என்று அறிந்தேன். தெற்கில் பசீர் சேகுதாவுத், ஜனாப் ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் கிங்ஸ்லி பெரேரா, ஜோதிகுமார் போன்ற சிங்கள மற்றும் மலையக நண்பர்கள் என் பாதுகாப்பில் அக்கறையாக இருந்தார்கள்.    வடகிழக்கு முஸ்லிம்களின் பெரும் தலைவரான ஜனாப் அஸ்ரப் அவர்கள் 1984ல் நான் வெளியிட்ட ‘தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்’ என்ற  ஆய்வு நூல் தன்னில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கும் சிந்தனைக்கு அது உதவியது என்றும் சொல்லுவார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பசீர் சேகுதாவுதில் இருந்து ‘மூன்றாவது மனிதன்’ பௌசார் வரைக்கும் பலர் இதனை என்னிடம் தெரிவித்திருக்கின்றார்கள். காலமெல்லாம் இத்தகைய சொற்கள் மந்திரம்போல என்னைப் பாதுகாத்துக் காப்பாற்றின.    1990 ஓகஸ்டில் முஸ்லிம்களை நான் குழப்புவதாகக் குற்றம்சாட்டி மட்டக்களப்பில் வைத்து என்னைப் புலிகள் கடத்தினார்கள். தடுப்புக்காவலில் கருணா வந்து என்னைப்  பார்த்தார். பின்னர் கிரான் சுடலைக்கு மண்வெட்டியோடு அழைத்துச் சென்றனர். அவர்களோடு போராடிச் சாகத் தயாராகவே இருந்தேன். கடைசி நேரத்தில் வன்னியில் இருந்து அழைப்பு வந்ததால் வன்னிக்கு அனுப்பப்படடேன். அங்கு மன்னிப்புக்கோரி விடுவித்தார்கள்.    1990 செப்டம்பரில் நோர்வேஜியத் தூதரகத்தில் பணியாற்றிய சிங்கள அதிகாரி லீனசேனவின் தூண்டுதலால் இலங்கை இராணுவம் என்னைக் கடத்தும் முயற்சி நல்வாய்ப்பாகத் தோல்வியடைந்தது. பின்னர் அவரது தூண்டுதலால் என்னைக் கைது செய்து ஒரு பகல் தடுத்து வைத்தனர். அதைத் தொடர்ந்து நோர்வேஜியத் தூதரகம் என்னை மீண்டும் ஒஸ்லோவுக்கு அனுப்பிவைத்தது.  ஒரு குத்து மதிப்பாக ஏறக்குறைய 16 கொலை முயற்சிகளிலிருந்து தப்பியிருக்கிறேன் என நம்புகிறேன்.    கருணா கொல்ல முயன்றாரென்றும் வன்னி விடுதலை செய்யச் சொன்னதுமென்றால் உங்களைக் கொல்ல எடுத்த முடிவு கருணாவின் தனி முடிவா? ஏன் கேட்கிறேன் என்றால், கிழக்கில் நடந்த இஸ்லாமியர்கள் அழிப்பு போன்ற புலிகளின் அட்டுழியங்களுக்கு கருணாவே பொறுப்பென்றும் அதற்கும் தலைமைக்கும் எந்தப் பொறுப்புமில்லை என்றொரு கருத்து இப்போது சிலரால் சொல்லப்படுகிறதல்லவா?  கருணாவென்று சொல்லவில்லை. கருணாவின் கீழ் பணிபுரிந்த டேவிட் என்னைக் கைது செய்தார். கருணா வந்து பார்த்தார். பின்னர் கிரான் சுடலைக்கு என்னைக் கொலை செய்ய அழைத்துச் சென்றனர். வன்னியில் இருந்துவந்த கடைசி நிமிட அழைப்பு என்னை விடுவித்தது.    முஸ்லிம் அழிப்புக்கு இயக்க தலைமையல்ல கருணாவே முழுப் பொறுப்பென்றால் இயக்கத்தலைமை 1990களிலேயே கருணாமீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேலும், வடபகுதி முஸ்லிம் மக்களை இயக்கத் தலைமை காப்பாற்றி இருக்க வேண்டும் அப்படி ஏதும் நடக்கவில்லையே.    தொண்ணூறுகளின் இறுதிப் பகுதிகளில் நீங்கள் புலிகளை ஆதரித்துப் பேசினீர்கள். விமர்சனத்துடன்தான் ஆதரித்தீர்கள். எனினும் புலிகளின் அரசியல் வேலைத்திட்டமே முழுமையாகத் தவறானது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கவில்லையா?  முஸ்லிம் மக்களுக்குப் புலிகளால் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான எனது விமர்சனங்கள் பலர் அறிந்ததே. பாரிஸில் கொல்லப்பட்ட சபாலிங்கத்திற்கான அஞ்சலிக் கவிதையை மீண்டும் வாசித்துப் பாருங்கள். அதில் முன்னுதாரணமில்லாத அளவுக்குக் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. அது போலவே கொலை செய்யப்பட்ட தோழி ராஜினி திரணகம, மறைந்த தோழன் புஸ்பராசா போன்றவர்கள் மீதான அஞ்சலிக் கவிதைகளும் நேரடி விமர்சனப் பாங்கானவை. இவற்றைவிடக் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ச்சியாக வன்னியில் நேரடியாகப் புலிகள் முன் வைத்து வந்திருக்கிறேன்.    1996ல் மட்டக்களப்பு முஸ்லிம் விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளது கோரிக்கைகளோடு ஒரு சில தடவைகள் படுவான்கரையில் நான் விடுதலைப் புலிகளைச் சந்தித்தேன். அத்தகைய சந்திப்பு ஒன்றின்போது கிழக்கிற்கு வந்திருந்த யாழ்வேந்தன் என்னைச் சந்தித்துச் சில உதவிகளைக் கேட்டார். இராணுவ புவியியல், இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவது, மேற்கு நாடுகளுடனான உறவுகள் தொடர்பாக தங்களது வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்புகளை வைக்காமல் நேரடியாகத் தங்களிற்கு உதவுமாறு புலிகளின் தலைமை சார்பாகக் கேட்டார். இதுதான் எனக்கும் புலிகளிற்குமான உறவின் அடிப்படை. முஸ்லிம் மக்கள் தொடர்பாகச் சில வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டன. ஆனால் புலிகளின் மட்டக்களப்புச் செயலகம் பெரிதாக ஒத்துழைக்கவில்லை. என்னுடைய விமர்சனங்களை நான் தொடரவே செய்தேன்.    மக்களது அரசியல் எப்போதும் தெரிவுகளுக்கூடாகவே செயற்படுகிறது. ஒருபோதும் தெரிவுகள் தூய்மையானதாக இருப்பதில்லை. இத்தகைய பருமட்டான தெரிவுகளுக்கூடாகத்தான் என்னுடைய வாழ்வும் அரசியலும் நகர்கிறது. வன்னியில் கவிஞர் கருணாகரனின் நூல் வெளியீட்டு விழாவில் புலிகளின் ‘நந்தவனம்’ செயலகத்தையும் புலிகளின் காவற்துறையையும் கடுமையாகக் கண்டித்துப் பேசினேன். வன்னி வரலாற்றில் அவ்வாறான விமர்சன முன் உதாரணம் இல்லை என்றார்கள். நான் பேசி முடிய நண்பன் மு. திருநாவுக்கரசு ‘உனக்குப் பிரச்சினையில்லை விழாவை ஒழுங்கு செய்தவர்களுக்கல்லவா பிரச்சினை” என்றார். ஆச்சரியப்படத்தக்க வகையில் பாலகுமாரனும் கூட்டத்துக்கு வந்திருந்த சில பெண் போராளிகளும் பார்வையாளர்கள் சிலரும் என் பேச்சைத் துணிந்து பாராட்டினார்கள்.    வன்னிக்குச் சென்று புலிகளுக்காக சில வேலைகளைச் செய்தீர்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். என்னவகையான வேலைகளை அவர்களுக்காகச் செய்தீர்கள்?    புலிகள் என்னிடம் ‘”எங்களை விமர்சித்தபோதும் நீங்கள் தேச பக்தன் என்பதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். இத்தகைய கருத்து ஆரம்பத்தில் புதுவை இரத்தினதுரையால் சொல்லப்பட்டு வந்ததுதான். ஆனால் 1996ல் யாழ்ப்பாணம் விழுந்த பிற்பாடு அவர்களது அணுகுமுறையில் பாரிய வேறுபாடு தெரிந்தது. “உங்கள் விமர்சனங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தொடர்பாக உங்களது அறிவுபூர்வமான விமர்சனங்கள் எங்களுக்குப் பிரச்சினை இல்லை, ஆனால் நீங்கள் உணர்வுபூர்வமாகப் பிரச்சினைகளில் ஈடுபாடு காட்டுவதுதான் பிரச்சினை” என்று என்னிடம் சொன்னார்கள். ஜெயதேவன் பிரச்சினையில் வன்னியில் வைத்தே நான் கஸ்ரோவின் நந்தவனம் செயலகத்தைக் கடுமையாக விமர்சித்தேன். ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் எனது விமர்சன அறிக்கைகளை அவர்கள் கோரினார்கள். இதற்கு மேல் பின்னொரு நாளில் பேசுவேன்..    உங்களது நெருங்கிய தோழராயிருந்த தராகி சிவராம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?    எனக்கு அவன்மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவன் கிழக்கு மாகாணத்தின் மிகப் பெரும் அறிவாளன் என்பதில் சந்தேகமில்லை. அவன் யாழ் மையவாதத்தை எதிர்த்தான் என்பதிலும் கிழக்கு மாகாணத்தை நேசித்தான் என்பதிலும் வடகிழக்கு இணைப்புக்காகப் பணியாற்றினான் என்பதிலும் சந்தேகமில்லை. கருணாவின் பிளவின்போது “பிரபாகரனுக்கு மட்டக்களப்புப் போராளிகளைச் சுட மக்கள் ஆணை இல்லை, போராளிகள் வீடுகளுக்கு அனுப்பப்படவேண்டும், கருணா பிரச்சினையை உள்ளேயே பேசித் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும்” என்கிற எனது அறிக்கையை ‘சூரியன் F.M’மில் வெளியிட்டார்கள். அப்பொழுது ‘குளோபல் தமிழ் நியூஸ்’ குருபரன் சூரியன் F.Mமில் பணியாற்றினார். அந்த அறிக்கையை வீரகேசரியும் வெளியிட்டது. அதன்பின்னர் நான் வன்னிக்குப் புறப்பட்டபோது எனது நண்பர்களும் உறவினர்களும் கண்ணீருடன் தடுத்தார்கள். சிவராமும் என் பாதுகாப்புக் குறித்துக் கவலைப்பட்டான். பின்னர் நான் வன்னியில் இருந்து திரும்பி வந்ததும் எனக்கு மது விருந்து தந்து கொண்டாடினான். அவனுடைய மரணம் அவனைப்போல பணியாற்றிய புத்திஜீவிகள் அனைவரையும் பாதித்தது.    முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டதற்குப் பின்னால் ஏதாவது சதி முயற்சிகள் உள்ளதாகக் கருதுகிறீர்களா?  புலம் பெயர்ந்தவர்களில் பலர் திரு. பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் தாயகத்தில் பலர் அவர் இறந்துவிட்டதாகவும் நம்புகிறார்கள். சர்வதேச அரங்கிலும் இறந்துவிட்டார் என்கிற கருத்தே உள்ளது. இதுபற்றிச் சந்தேகம் கிளப்பப்பட்ட புகைப்படங்களைத் தவிர விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் கொல்லப்பட்ட சூழல் குறித்துத் தெரியாமல் பதில் சொல்ல முடியாது. வெள்ளைக் கொடியுடன் சரணடைய சென்றபோது நடேசன், புலித்தேவன் போன்றவர்கள் கொல்லப்பட்டது அப்பட்டமான  போர்க்குற்றச் செயலாகும்.    அப்படியானால் பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்றா சொல்ல வருகிறீர்கள்?    இரண்டு கருத்துகள் உள்ளன என்றேன். எனது கவலை எல்லாம் மக்கள் உயிர்த்தெழுந்து மீள் குடியமர வேண்டும், அவர்களது வாழ்வு சுதந்திரமாக மேம்பட வேண்டும் என்பதுதான்.    இந்தியாவை ஈழத் தமிழர்களின் நட்பு சக்தி என்றே சொல்லிவருகிறீர்கள். இந்திய அரசு ஒரு பிராந்திய வல்லரசு என்ற நிலையிலிருந்தே அரசியலை நடத்தி வருகையில் அவர்கள் எமக்கு எசமானர்களாகப் பார்க்கிறார்கள் என்று சொல்வதை விடுத்து நட்பு சக்தி என அழைப்பது எப்படிப் பொருத்தமாயிருக்கும்?    நான் இதை மேலெழுந்தவாரியாக இலட்சிய நோக்கில் மட்டுமே பார்க்கவில்லை. கொஞ்சமும் நெகிழ்வில்லாத சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள், எமது பிராந்தியத்தில் நெடுங்காலமாக சிங்களப் பேரினவாதிகளின் மூல உபாய அடிப்படையிலான உறுதியான நண்பனாக சீனா இருப்பது, வளர்ந்துவரும் இந்திய – சீன முரண்பாடு, இதன் ஆடுகளமான இந்து சமுத்திர அரசியல், உலகமயமாதல் பின்னணியில் பலமடைந்து வரும் தமிழகத்துடனும் உலகத் தமிழர்களுடனுமான எங்களது கலாச்சார உறவுகள், மற்றும் எங்களது மட்டுப்பட்ட வளமும் வாய்ப்புகளும், எம் இனத்தின் மிக சிறிய மக்கள் தொகை, அதிலும் உழைக்கும் பருவ மக்களில் கணிசமான தொகையினர் அகதிகளாக வெளியேறி விட்டமை இப்படிப் பல காரணங்களை முன்வைத்தே நான் இந்தப் பிரச்சினையைப் பார்க்கிறேன். குறுங்காலச் செயற்பாடுகளை விட இந்து சமுத்திர அரசியலில் எமக்குள்ள வாய்ப்புகள், உலகத் தமிழர்களது நீண்டகால வரலாறு, பொது நலன்கள் என்பவற்றை முன்னிலைப்படுத்தியே அவ்வாறு சொல்லி வருகிறேன்.    யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் இசுலாமியர்களை வெளியேற்றியதற்கான காரணம் எதுவெனக் கருதுகிறீர்கள்? இனச் சுத்திகரிப்பா?    இந்த வன்கொடுமையை உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் எதிர்த்தவர்களுள் நானும் ஒருவன். 1990களிலும் அதன் பின்னும் என்மீது நடந்த கொலைமுயற்சிகள் பலவற்றுக்கு எனது சமரசமில்லாத எதிர்ப்புக் காரணமாக இருந்தது. ஆனால் 1995ன் பின்பு விடுதலைப் புலிகள் என்னையும் என் விமர்சனங்களையும் மென்மையாகக் கையாண்டதற்கு முஸ்லிம் மக்கள் தொடர்பான ஒரு விடயம் முக்கிய காரணமாகும். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட ஐந்தாவது வருட நினைவு நிகழ்வில் கவிதை வாசிக்கும்படி  வடபகுதி முஸ்லிம் அகதிகள் அமைப்பின் தலைவர் சுபியான் மௌலவி என்னை அழைத்திருந்தார். நான் அங்கு அழுது அழுது  ‘அழுவதே விதியென்றால்’ என்கிற கவிதையை வாசித்தேன். அந்தக் கவிதையின் இறுதிப் பகுதி இப்படி அமைந்திருந்தது.    பாதகத்துக்கு வருடங்கள் ஐந்தாச்சு. தவறு, வருத்தம், திருத்துவோம் என்றபடி தலைவர்கள் வாக்களித்து வருடங்கள் இரண்டாச்சு. என்ன தமிழர்களே எல்லோரும் நித்திரையா?    எல்லாம் அபகரித்து நட்பில்லாச் சூரியனின் கீழே உப்புக் களர்வழியே ஓடென்று விரட்டி விட்ட குற்றம் ஏதும் அறியா இக் குணக் குன்று மானிடங்கள் ஐந்து வருடங்கள் கண்ணீரும் சோறும் கலந்தே புசிக்கின்றார்.    இன்னும் தமிழர் எல்லோரும் நித்திரையா? இதுதானா தலைவர்களின் வாக்குறுதி  முத்திரையா? ஆறாம் வருடமும் இவர்கள் அழுவதே விதியென்றால்    அழியட்டும் இந் நாடு அழியட்டும் எனது இனம் அழியட்டும் என் கவிதை அழியட்டும் எனது தமிழ்.    இதுபற்றி அறிந்த எனது நண்பர் கவிஞர் வில்வரத்தினம் ‘கவிஞர்கள் அறம் பாடக்கூடாது, நீ அறம் பாடியிருக்கிறாய்’ என்று சொன்னார். இக்கருத்தே வன்னியில் பலருக்கும் இருந்தது. 1995ம் வருடம் தமிழர்களிற்கு ஆய்க்கினைகள் மிக்க வருடமாக ஆரம்பித்தது. 1995  ஒக்டோபரில், அய்ந்து வருடங்களற்கு முன்பு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட அதே மாதத்தில் – திகதியில் அதே வழியால் தமிழர்கள் யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு அகதிகளாக வெளியேற நேர்ந்தது. இந்தத் தற்செயல் நிகழ்வுக்குப் பின்னர் என்னுடனான வன்னியின் அணுகுமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள என்னுடைய கவிதை வரிகளில் உங்களது கேள்விக்கான பதில் உள்ளது.    இன்று குமரன் பத்மநாதன் ஊடகங்களில் உதிர்த்துவரும் சொற்களை எவ்வாறு மதிப்பிடுகிறீரர்கள்?    இன்றைக்கு தமிழர்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் தோல்வியின் படுகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அந்த மக்களின் நிவாரணம், புனர்வாழ்வு, பாரம்பரிய நிலங்களைப் பாதுகாத்தல், சுயநிர்ணய உரிமை எனப் பல்வேறு விடயங்களையும் ஒரே அமைப்பால், ஒரே அரசியல் அணுகுமுறையால், ஒரே உத்தியால் கையாள முடியாது. இலங்கை அரசுடனும் இந்திய அரசுடனும் செயற்படக்கூடிய அமைப்புகள் மூலம்தான் நிவாரணப் பணிகளையும் நிர்மாணப் பணிகளையும் செய்ய முடியும். அதுதான் இன்றைய உடனடித் தேவை. ‘நாடு கடந்த அரசு’ போன்ற அமைப்புகள் சர்வதேசத்தை அணி திரட்டுவது போன்ற பணிகளில் ஈடுபடமுடியும். இன்றைய சூழலில் மீள் குடியேற்றம், புனர்வாழ்வுப் பணிகள் முடிகிறவரைக்கும் இலங்கைப் பாராளுமன்றத்துக்குள்ளும் அரசின் சட்ட ஆட்சிக்குள்ளும் பணியாற்றக் கூடிய அமைப்புகளின் பணி தான் மிக முக்கியமாய் இருக்கும். அதே சமயம் போர்க் குற்றச்சாட்டு, மண் பாதுகாப்பு, சுயநிர்ணயம் போன்ற பணிகளில் புலம் பெயர்ந்தோர் அமைப்புகள் செயற்படுவதும் அவசியம். இலங்கை அரசு மீது போர்க் குற்றத்தை நிறுவுவது  தொடர்பான முன்னேற்றத்துக்கு ‘ஹிரு’ போன்ற சிங்கள இடதுசாரி அமைப்புகள் உயிரைப் பணயம் வைத்துக் கடத்தி வந்த ஆதாரங்களே வழிவகுத்தன. இதனை எல்லாத் தரப்புகளும் மனதில் வைத்துச் செயற்பட வேண்டும். எல்லா நிலைகளிலும் முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடலையும் அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்துவது அவசியம். பல்வேறு நிலைகளில் செயற்படுகையில்  ஒருவருக்கு ஒருவர் துரோகிப் பட்டம் சூட்டாமல் புரிந்துணர்வுடன் செயற்படுவது முக்கியம்.    மீள்குடியேற்றம், புனர்வாழ்வுப் பணிகள் முடிந்த பின்னர் வடகிழக்குத் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான – விடுதலைக்கான அமைப்புகள் முன்னிலைப்படுவதே சாத்தியம். இந்தியாவுடனான நல்லுறவை வென்றெடுப்பது எதிர்கால வெற்றிக்கான அடிப்படை என்றே கருதுகிறேன்.    இலங்கையில் இன சமத்துவங்களை நோக்கிய வளர்ச்சிப் பாதை அல்லது இனமுரணுக்கான தீர்வு எதுவாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?  வட கிழக்கு மாகாணம் தமிழரதும் முஸ்லிம்களதும் பாரம்பரியத் தாயகம் என்று எப்போதுமே உரத்துச் சொல்லி வருகிறேன். எனவே தமிழரதும் முஸ்லிம்களதும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலேயே இத்தீர்வு அமைய வேண்டும். வட கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் தீர்வு உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய தீர்வின் போது கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்கள் முக்கியமானவை.    அதாவது வட கிழக்கு மாகாணம் தமிழரதும் முஸ்லிம்களதும் பாரம்பரிய மண்ணாகும் இங்கு பாரம்பரியமாகச் சிறிய அளவில் பழைய சிங்களக் கிராமங்கள் சிலதும் வேடர்களது கிராமங்கள் சிலதும் இருக்கின்றன. இந்த விடயங்களை நாம் மனதில் இருத்தத் தவறக் கூடாது.  இன்று வட கிழக்கு மாகாண மனித வளத்தில் பெண்களது விழுக்காடு அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தலித்துகளது விழுக்காடு அதிகரித்துள்ளது ஆனால் தமிழ்க் கட்சிகளது தேர்தற் பிரதிநிதித்துவத்தில் இந்த மாற்றங்கள் ஒரு வகையிலும் பிரதிபலிக்கவில்லை. இந்தகைய சமூக அநீதிகள் களையப்பட வேண்டும்.    அண்மையில் வவுனியா நகரசுத்தித் தொழிலாளர்கள், இறந்து போன தங்களது சக தொழிலாளிக்கு நகரசபை மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் ஒழுங்கு செய்தார்கள். அதைச் சாதிப்  பெயர் சொல்லி இழிவுபடுத்திச் சில அதிகாரிகள் தடுத்துள்ளனர். இது பற்றி மேயரிடம் முறையிடச் சென்றபோது மேயரும் சாதிப் பெயர் சொல்லி இழிவுபடுத்தி அனுப்பியுள்ளார். இத்தனை மிருகத்தனமான அந்த நகர மேயர் இனி அம்மணமாகத் திரியலாம். இதைக் கண்டும் காணாமல் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடதுசாரித் தலைவர்களும் அம்மணமாகத் திரியலாம். இவர்கள் முகத்தில் காறி உமிழ்வதைத் தவிர வேறு என்ன செய்ய? இத்தகைய நிலமையே இன்னும் தொடர்கிறது. சாதிவாரி ஏற்றத்தாழ்வின் அடிப்படைகள் தகர்க்கப்பட வேண்டும். தலித்துகள் தமிழ் மக்களில்லையா? தமிழருக்காகக் குரல் கொடுக்கிற புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் இதைக் கண்டு கொள்ளாதது அதிர்ச்சியாக உள்ளது. இதுபற்றி வெட்கித் தலை குனிகிறேன்.    வன்னித் தமிழர்களதும் வடபகுதி முஸ்லிம்களதும் மீள் குடியேற்றம் பாரபட்சமில்லாமல் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். வெளியேற்றப்பட்ட வடபகுதி முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கலாச்சார இழப்புகளுக்கு ஈடு செய்யும் வகையிலான மீள்குடியேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும். மீள்குடியேற்றம் வரைக்கும் வடபகுதி முஸ்லிம்களின் காணிகளைத் தமிழர்கள் வாங்குவது தடை செய்யப்பட வேண்டும். ஏற்கனவே விற்கப்பட்ட காணிகள் சுவீகரிக்கப்பட்டு முஸ்லிம்களின் நலன்களுக்கு உகந்த வகையில் பயன்படுத்தப்பட வேண்டும்.    வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கு மக்கள் தொகை வெளியேற்றம் பெரும் தடைக்கல்லாக உள்ளது. நிலமை வடக்கில் மோசமாகவே உள்ளது. இதனைச் சரி செய்யும் நோக்குடன் மலையகத் தமிழ் மக்களும் கிழக்கு மாகாணம் மற்றும் தென்பகுதி முஸ்லிம் மக்களும் வடபகுதியில் குடியேற ஊக்குவிக்கப்பட வேண்டும்.    அம்பாறை மாவட்டத் தமிழர்களது பிரச்சினையும் மட்டக்களப்பு, திருகோணமலை, மற்றும் வடமாகாண முஸ்லிம்களது பிரச்சினையும் ஒரே மாதிரியான வகையில் தீர்க்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு முஸ்லிம்  விவசாயிகளினது நிலப் பிரச்சினை பற்றிய புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுவது முக்கியம்.    மகிந்த அரசு புலம் பெயர்ந்த தமிழர்களது ஒற்றுமைப்பட்ட அரசியலுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதற்காகத் தமிழ் மக்கள்மீது பாய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தமிழ் மக்களை அவர்களது வழியில் விட்டுவிட்டு மெல்ல மெல்லத் தமிழர்களின் நிலங்களைக் கையகப்படுத்தி வடபகுதியில் பாரிய சிங்கள – பௌத்த குடியேற்றங்களுக்கு வழி திறப்பதுதான் அவர்களது அணுகுமுறையாக உள்ளது. அதே சமயம் புலம் பெயர்ந்த தமிழர்களின் வருகையை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. இந்த அணுகுமுறை  ‘அரசபடையினர் மக்களுக்கு அன்றாடம் தொல்லை கொடுக்கிறார்கள்’ என்ற அடிப்படையிலான புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் பிரச்சாரங்களைப் புலம் பெயர்ந்த தமிழர் மத்தியிலேயே பொய்யாக்கிவிடும் என்பதுதான் அவர்களது சதுரங்கம்.  புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகள் பிளவுபட்டிருப்பதையும் அவை இன்னும் அறிவுத்துறையினரோடு சேர்ந்து சவால்களை எதிர்நோக்கத் தயாராக இல்லை என்பதையும் வைத்தே மகிந்தவின் அரச தரப்பினர் காய்களை நகர்த்துகிறார்கள். நாட்டில் வாழும் மக்களை நேரடியாகத் துன்புறுத்துவதைத் தவிர்த்தால், அறிவுத்துறையில்லாமல் மக்கள் தொகையைத் திரட்டிப் போராடும் புலம் பெயர்ந்த அமைப்புகள் ஸ்தம்பித்து விடும் என்பதே அவர்களது கருத்தாக உள்ளது போலத் தெரிகிறது.    இந்தச் சூழலைத் தாயகத்தில் மக்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் வடகிழக்கில் பரவலாகத் தேர்தலில் வாக்களிக்கும் சூழல் உருவாகவில்லை. இருந்தபோதும் வாக்களித்தவர்கள் வட – கிழக்கு இணைப்பையும் இணைப்பாட்சியையும் ஆதரிக்காதவர்களை நிராகரித்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர்.  மக்கள் வட – கிழக்கு இணைப்பின் அடிப்படையிலான சுயநிர்ணய உரிமையைக் கோருவதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதையே தமிழரதும் முஸ்லிம்களதும் சுயநிர்ணய உரிமை என்கிற திருத்தத்துடன் நானும் வலியுறுத்துகிறேன்.    தமிழர்களது சுயநிர்ணய உரிமை கொழும்பின் கீழ் சாத்தியம் என்று சிலர் நம்புகின்றனர். வேறு சிலர் பிரிவினை மூலமே சாத்தியம் என்கின்றனர். டெல்லியின் கீழ் மட்டும்தான் சாத்தியம், வேறு வகையில் சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்கிற கருத்தும் செல்வாக்குப் பெற்று வருகிறது. முஸ்லிம் மக்கள் இணைந்த ஒரு தீர்வு கொழும்புக்கு வெளியில் சாத்தியமா என்பது தெரியவில்லை. முஸ்லிம் மக்கள் விரும்பினால் பிரிந்து செல்வது எல்லா நிலைகளிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவற்றை விட இந்தியாவுக்கு எதிராகச் சீனச் சார்பு நிலை எடுப்பதன் மூலம் மட்டும்தான் தமிழர் வெற்றி பெற முடியும் என்கிற புதிய ஒரு குரலும் இப்போது கேட்க ஆரம்பித்திருக்கிறது.    இவை பற்றிய தெரிவுகள் சிங்கள ஆளும் வர்க்கத்தினுடைய அணுகுமுறையில் மட்டுமல்லாமல் சிங்கள முற்போக்குச் சமூக சக்திகளதும் எதிர்கால அணுகு முறையிலேயே தங்கியுள்ளது.    எதிர்வரும் சனவரியில் கொழும்பில் நடத்தப்படவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளனவே, நீங்கள் அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறீர்களா?    இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவது கேள்வி களத்தில், மக்கள் மத்தியில் கலை – இலக்கிய, சமூக செயல்பாடுகள் தொடர்பான மாநாடுகள் இடம்பெறக் கூடாது என்று சொல்ல களத்திற்கு வெளியில் வாழும் யாருக்காவது உரிமையுண்டா என்பது. இரண்டாவது, குறிப்பிட்ட மாநாட்டின் அரசியல் தமிழ் பேசும் மக்களது நலன்களுக்கு விரோதமானதா?    இக்கேள்விகளில் முதற் கேள்விக்குக் களத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய நன்மை தீமைகளைத் தாங்களே தீர்மானிக்க உரிமை உள்ளவர்கள் அவர்களுக்கு வெளியிலிருந்து உத்தரவிட யாருக்கும் அதிகாரம் இல்லை, அவர்கள் மத்தியில் வாழ்வு அதன் முழுமையோடு உயிர் பெற வேண்டும். இதுதான் எனது நிலைபாடு.  குறிப்பிட்ட அந்த மாநாடு களத்தில் வாழும் தமிழ் மக்களினது நலனுக்கு எதிரானது என்பது ஐயம் திரிபற உறுதிப்பட்டால் மட்டுமே நாம் அந்த மாநாட்டை எதிர்க்கலாம்.    காலமெல்லாம் கிளர்ச்சிக்காரனாகவும் கவிஞனாகவும் வாழ்ந்த ஜெயபாலன் கோடம்பாக்கத்து வணிகச் சினிமாவில் பங்கெடுப்பது ஒரு வீழ்ச்சியா?    என்னுடைய வாழ்க்கை தொடர்ச்சியான திருப்பங்களைக் கொண்ட சமூகக் கலாச்சார சாகசப் பயணமாகவே அமைந்துவிட்டது. இவை குறித்து எப்போதும் விமர்சனங்கள் இருந்தன, இனியும் இருக்கும். ஷோபா, நாம் இருவருமே சினிமாவில் ஈடுபட்டிருக்கிறோம். நீங்கள் பங்களித்த ‘செங்கடல்’, நான் நடித்த ‘ஆடுகளம்’ படங்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆடுகளம் ஒரு ‘மிடில் பிலிம்’ வகை சினிமாவாகவே எடுக்கப்பட்டது. எனினும்  நான் இன்னும் ‘ஆடுகளம்’ படத்தைப் பார்க்கவில்லை. இன்னும் சில வாரங்களின் பின்னர் படங்கள் வெளிவந்த பின்னர் நாமிருவரும் அவை குறித்துப் பேசுவதுதான் பொருத்தமானதாக இருக்கும், இல்லையா!    காதல், குடும்பம், சுதந்திரப் பாலியல் தேர்வுகள் இவை குறித்தெல்லாம் உங்கள் கருத்துகள் என்ன?  காதலிக்கிற, காதலிக்கப்படுகிற வரைக்கும் தான் ஒருவர் உயிர்ப்புள்ள கலைஞராகச் செழிக்க முடியும் என்று நம்புகிறவன் நான். காதலும் வீரமும் தான் என் இருப்பின் அடையாளங்களாக இருந்தன. இதுவே என் கல்லறையிலும் எழுதப்பட வேண்டும் என்று விரும்புவேன் நான்.    பாலுறவில் ஜனநாயகம் மட்டும் தான் கற்பு. பாலியல் தேர்வுகள் மனிதர்களின் அடிப்படை உரிமையாகும். இதை விட்டுக் கொடுக்க முடியாது. அது சம்பந்தபட்ட இருவர் பிரச்சினை. பாலியல் தேர்விலும் உறவிலும் அதிகாரமும் வன்முறையும் செயற்படாதவரைக்கும் அது சமூகப் பிரச்சினையல்ல.    பாலியல் தேர்வுகள் அவரவர் சொந்த விசயம். குடும்ப அமைப்பை ஏற்றோ அல்லது நிராகரித்தோ பாலுறவுகளை அமைத்துக்கொள்ளல், ஒருபால் புணர்ச்சி போன்ற தெரிவுகள் இன்று சில மேற்கு நாடுகளில் சட்டரீதியாகிவிட்டன. மானிட வாழ்வில் பன்முகப்பட்ட வாய்ப்புகளும் தெரிவுகளுமுள்ளன. இது அவரவர் பிரச்சினை. ஆனால் துணையின் சுதந்திரத்தையும் அடிப்படைச் சமூக நலனையும் பாதிப்பதாக ஒருவருடைய பாலியல் தேர்வுகளும் உறவும் அமையக்கூடாது என்று சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது.    இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?    ஏதாவது ஒரு காதல் இல்லாமல் எந்தப் படைப்பாற்றலும் வாழாது. காதல் அதன் எல்லாப் பரிமாணங்களிலும் பெண் மையமானது.    ‘ஆண் எழுத்தாளன் அரைக் குருடன்’ என்று நான் அடிக்கடி சொல்வேன். ஆண் குருடால் உலகில் பாதியான ஆண்கள் உலகை மட்டுமே பார்க்க முடியும். வேகமாக மாறி வருகிற பெண் உலகத்தினை பெண்களிடமிருந்துதான் சதா கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களிடமிருந்தும் இளையவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள ஆண்களின் அதிகாரத் தன்னிலை விடாது. ஆனால் பெண்கள் அதிகாரமில்லாமல் உறவாடி, தந்தை, சகோதரர்கள், தோழர்கள், ஆண் குழந்தைகள் என்று ஆண்களது உலகத்துக்குள்ளே போய் வரக்கூடியவர்கள். நான் என்னால் தரிசிக்க இயலாத உலகத்தைத் தொடர்ச்சியாகப் பெண்களிடமிருந்தும் இளையவர்களிடமிருந்தும் கற்று வருகிறவன். என்னுடைய எழுத்தில் ஏதாவது பலம் இருந்தால் அது இதுதான்.    காதலும் வீரமும் மண்ணும் பற்றிய கதைதான் என்னுடைய குறுங்காவியமான ‘ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்’. காதல் இல்லாத சமயங்களில் என்னால் போரிடவோ எழுதவோ முடிந்ததில்லை. காலனிவாதிகளான போர்த்துக்கேயருக்கு எதிராக எழுந்த கிளர்ச்சிகளில் ஆரம்பித்து சாதி எதிர்ப்புப் போராட்டம், பின்னர் தேசிய விடுதலைப் போராட்டமென்று தொடர்ந்த எங்களது வாழ்வில் நிகழ்ந்த காதலும் வீரமும் கலந்த உண்மைச் சம்பவங்களைக் காவியங்களாகச் சொல்லும் முயற்சியிலிருக்கிறேன்.                  15. தன்னைத் தானே தகனம் செய்யுமாறு கட்டளையிடுவது அநீதி – லெ.முருகபூபதி   இலங்கையில், நீர்கொழும்பு என்ற சிறுநகரத்தில் 1951ல் பிறந்த லெ.முருகபூபதி 1972ல் ‘மல்லிகை’ இதழில் வெளியான சிறுகதை மூலமாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1977ல் வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய முருகபூபதி, நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், இ.மு.எ.சவின் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் செயற்பட்டவர். 1975ல் வெளியான ‘சுமையின் பங்காளிகள்’ என்ற இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. 2003ல் ‘பறவைகள்’ நாவலுக்காக முருகபூபதிக்கு சாகித்திய விருது கிடைத்தது. 1985ல் சோவியத் யூனியனின் அழைப்பின் பேரில் உலக இளைஞர் – மாணவர் விழாவிலும் பங்கேற்றவர். 1987ல் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த முருகபூபதி, தொடர்ந்து பல்துறை சார்ந்தும் எழுதிவருபவர். இதுவரை பதினெட்டு நூல்கள் வெளியாகியுள்ளன. ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு உதவும் அமைப்பை கடந்த 20 வருடங்களாக நடத்திவருகிறார். கடந்த பத்து வருடங்களாக அவுஸ்திரேலியாவில் ‘தமிழ் எழுத்தாளர் விழா’வையும் முன்னின்று நடத்திவருகிறார்.    எதிர்வரும் ஜனவரியில் கொழும்பில் நடக்கவிருக்கும் ‘சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு’ மீது விமர்சனங்களும் கண்டனங்களும் கிளம்பியிருக்கும் சூழ்நிலையில் அம்மாநாடு குறித்து மாநாட்டின் அமைப்பாளரான லெ.முருகபூபதியிடம் கேள்விகளை  மின்னஞ்சலூடாக முன்வைத்தேன்.    -ஷோபாசக்தி 09.10.2010    சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை வடக்கிலோ கிழக்கிலோ அல்லது மலையகத்திலோ நடத்தாமல் நீங்கள் கொழும்பில்    நடத்துவதன் காரணம் என்ன?  எமது மாநாட்டை நீங்கள் குறிப்பிடும் பிரதேசங்களில் நடத்துவதற்கு எமக்கும் விருப்பம் இருந்தது. எனினும் அதற்கான ஒழுங்குகளை செய்வதில் பல சிரமங்கள் நீடிக்கின்றன. முக்கியமாகப் போர் முடிந்து மக்களின் மீள்குடியேற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் காலப்பகுதியில், தென்பகுதிக்கு முன்னர் இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் படிப்படியாக  தமது சொந்த நிலங்களிற்குத் திரும்பிக்கொண்டிருக்கையில்  அப்பகுதிகளில் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்வதிலிருக்கும் சிரமங்களை நேரடியாகவே பார்த்தேன். நாம் கள ஆய்வு செய்தபின்பே இந்த முடிவுக்கு வந்தோம். மிகவும் முக்கியமான காரணம் வெளிநாடுகளிலிருந்து வருகை தரவிருப்பவர்களுக்கான, குறிப்பாக அப்பகுதிகளில் உறவினர்கள் எவரும் இல்லாத தமிழக மற்றும் மலேசியா, சிங்கப்பூர் பிரதிநிதிகளின் வசதிகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியிருந்தது. கொழும்பில் வாராந்தம் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் விழாக்கள் நடந்தவண்ணமிருக்கின்றன. எமது மாநாட்டை  நான்கு நாட்களுக்கு கொழும்பில் நடத்துவது பலவிதத்திலும் வசதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமாகும். வடக்கு, கிழக்கு, மலையகத்தில் இட நெருக்கடிகளையும் பல்வேறு சிரமங்களையும் நாம் உட்பட வருகை தருபவர்களும் எதிர்நோக்க நேரிடும். வடக்கு – கிழக்குப் பகுதிகளுக்கு வெளிநாட்டவர்கள் செல்வதெனில சிலவேளை பாதுகாப்பு அமைச்சகத்தில் அனுமதிகளைப் பெறவேண்டியுமிருக்கும். எனினும் வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி ஆகிய இடங்களில் கொழும்பு மாநாடு முடிந்ததும் இலக்கிய சந்திப்புகளையும் கருத்தரங்குகளையும் நடத்தும் யோசனை எம்மிடம் உண்டு. அவை இடத்துக்கிடம் ஒருநாள் நிகழ்வுகளாகவும் இலக்கியச் சந்திப்புகளாகவும் அமையலாம்.    இந்த மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்ன தொடர்புகளுள்ளன?  இதுதான் அண்மைக்காலங்களில் சிலரால் முன்வைக்கப்படும் விசித்திரமான கேள்வி. இந்தக் கேள்விக்கு இந்த மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவே எந்தவொரு தொடர்பும் கிடையாது என்பதே எனது ஆணித்தரமான பதில்.  இலங்கையிலிருக்கும் பல எழுத்தாளர்களின் நீண்ட கால விருப்பம்தான் இந்த எழுத்தாளர் மகாநாடு. கடந்த பதினைந்து வருடங்களில் நான் இலங்கைக்கு பல தடவைகள் சென்று வந்திருக்கின்றேன். பல இலக்கிய சந்திப்புகளில் இவ்வாறு ஒரு மாநாட்டை நடத்துவது குறித்து நானும் சக எழுத்தாள நண்பர்களும் ஆலோசனை நடத்தியிருக்கின்றோம். அவுஸ்திரேலியாவில் 2001ம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவை வருடந்தோறும் முன்னின்று நடத்தி வருகின்றேன். இலங்கை, தமிழகம், உட்பட சில ஐரோப்பிய நாடுகளிலிருந்தெல்லாம் வருகைதந்த பல எழுத்தாளர்கள் அவுஸ்திரேலியா ஒன்று கூடலில் கலந்துகொண்டிருக்கிறார்கள். புதுவை இரத்தினதுரை, சேரன் உட்படப் பலரை விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றேன். ஆனால் அவர்களுக்கு வர விருப்பம் இருந்தும் வரமுடியாமல் போனது. ஷோபா உங்களைக்கூட அழைத்திருக்கிறேன்.. நினைவிருக்கிறதா? ஆனால் இலங்கையிலிருந்து எத்தனைபேரைத்தான் எம்மால் அவுஸ்திரேலியாவிற்கு அழைக்கமுடியும்? விமான டிக்கட்டுக்கான பணவசதி மற்றும் விஸா பிரச்சினைகள்… இப்படி எத்தனையோ இருக்கின்றன. அதனால் விடுமுறை காலத்திலாவது தாயகத்தில் அனைவரும் ஒன்று கூடலாம்தானே என்ற யோசனை உதித்தமையால்தான் இலங்கையைத் தெரிவுசெய்தோம். போர் முடிந்த பின்னர் இலட்சக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள்  தனிப்பட்ட முறையில் இலங்கைக்குச் சென்று திரும்பியிருக்கின்றனர். அத்துடன் பல தமிழகப் படைப்பாளிகள், கலைஞர்கள் மட்டுமன்றி புகலிடத் தமிழ் எழுத்தாளர்களும் தனிப்பட்ட பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு சென்று திரும்பக்கூடிய சூழ்நிலை இருக்கும்போது எமது ஒன்றுகூடலிலும் அவர்களால் கலந்துகொள்ள முடியும்தானே என்ற நம்பிக்கை எமக்கு இருந்தது. உதாரணமாக தமிழகத்திலிருந்து பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ் உட்பட பல எழுத்தாளர்கள் அண்மையில் இலங்கைக்குச் சென்று திரும்பியுள்ளனர். அங்கு தமிழ் ஊடகங்களில் தமது நேர்காணல்களைப் பதிவு செய்துள்ளனர்.  இதற்கு எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லை. அதுபோன்று கலை, இலக்கிய, ஊடகக் குடும்பங்களின் ஒன்றுகூடலாகவும் அதேசமயம் அனுபவப் பகிர்வு நிகழ்வாகவும் இந்த மாநாடு அமையவேண்டும் என்பதுதான் எமது விருப்பமாக இருக்கிறது.    இந்த மாநாட்டின் மூலம் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்துவதற்கு ஏதாவது செயற்திட்டங்களை வைத்திருக்கிறீர்களா? அல்லது இந்த மாநாடு வெறும் ஒன்றுகூடலும் இலக்கியச் சுற்றுலாவும் மட்டுமா ?    இது வெறுமனே ஓர் ஒன்றுகூடல் கிடையாது. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக மாநாட்டுக் குழு மிகத் தெளிவாக பன்னிரெண்டு செயற் திட்டங்களை வகுத்துக்கொண்டுள்ளது    தமிழ் இலக்கியம் சர்வதேச ரீதியாக கவனிப்புக்குள்ளாகியிருப்பதனால் தமிழ் இலக்கியப் படைப்புகளில் செம்மைப்படுத்தும் (செவ்விதாக்கம் – Copy editing) கலையை வளர்த்தெடுப்பது, தமிழ் இலக்கிய படைப்புகளை பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகளை ஊக்குவிப்பதற்காக இத்துறைகளில் ஈடுபடுபவர்களுடன் தொடர்புகளை பேணி வளர்த்து மொழிபெயர்க்கப்படும் தமிழ் படைப்புகளை சர்வதேசரீதியாக அறிமுகப்படுத்தல், தமிழ் இலக்கிய படைப்புகளை ஆவணப்படுத்துவது தொடர்பாக இதுகுறித்த சிந்தனைகொண்டவர்களுடன் இணைந்து இயங்குவது, இலங்கையில் இயற்கை அனர்த்தம், யுத்தம், விபத்து ஆகியனவற்றால் பாதிப்புற்ற தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை (Trust Fund) உருவாக்குவது, தொடர்ச்சியாக இலங்கையில் வெளியாகும் கலை, இலக்கிய சிற்றேடுகளுக்கு அரச மானியம் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆராய்ந்து மானியம் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பது, தமிழ் மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான பணிகளை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகளை பெறுதல், நடத்தப்படவிருக்கும் சர்வதேச எழுத்தாளர்  மாநாட்டில் கலை – இலக்கியத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களைப் பாராட்டிக் கௌரவித்தல், தமிழ் எழுத்தாளர்கள் – இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் – இதழாளர்கள் – ஊடகவியலாளர்கள் – ஓவியர்கள் மத்தியில் கருத்துப் பரிவர்த்தனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக உறவுப்பாலத்தை உருவாக்குதல், இலங்கையிலும் சர்வதேசரீதியாகவும் இலக்கியத்துறைகளில் ஈடுபடும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளின் பங்களிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை ஊக்குவித்தல், அத்துடன் சிறுவர் இலக்கியத்துறையை மேம்படுத்துதல், குறும்படம் தொடர்பான பிரக்ஞையை தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து தேர்ந்த சினிமா ரஸனையை வளர்த்தல், ஓவியக்கலை, ஒளிப்படக்கலை, கணினிக்கலை (Graphics ) முதலான துறைகளில் ஈடுபடும் இளம் தலைமுறையினருக்கும் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் மத்தியில் உறவுகளை ஏற்படுத்தும்விதமான காட்சிப்படுத்தும் (Demonstration ) கருத்தரங்கு அமர்வுகளை நடத்துதல், கூத்துக்கலை – நாடகம் – சிறுவர் நாடகம் தொடர்பான கருத்தரங்கு, பயிற்சிப் பட்டறை ஆகியனவற்றையும் அரங்காற்றுகைகளையும் நடத்துதல்  ஆகியவையே அந்தச் செயற்திட்டங்கள். இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இம்மாநாடு ஒரு திறப்பாகவும் களமாகவும் அமையும் என நம்புகிறோம்.    விழாவிற்கான நிதியை எவ்விதம் திரட்டப்போகிறீர்கள்? விழாவின் முன்தயாரிப்பு வேலைகளிற்காக இதுவரை செலவிடப்பட்டிருக்கும் பணம் எங்கிருந்து பெறப்பட்டது?    27 டிசம்பர் 2009 தினக்குரல் இதழில் இதற்கான பதிலை நான் ஏற்கனவே விரிவாகக் கூறியுள்ளேன். அவுஸ்திரேலியாவில் கலை, இலக்கியவாதிகளிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றுக் கடந்த பத்து ஆண்டுகளாக எழுத்தாளர் விழாக்களை நடத்திய அனுபவம் எனக்கும் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கும் இருக்கிறது. அதேபோன்று உலகெங்கும் பரந்துவாழும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட கலை, இலக்கிய ஆர்வம் மிக்க நண்பர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றே இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை நடத்தப்போவதாக அந்த நேர்காணலில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றேன். இதே கருத்தையே 03.01.2010 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டத்திலும் தெரிவித்திருக்கிறேன். புலம் பெயர்ந்து வாழும் எமது கலை, இலக்கியவாதிகளான நண்பர்களிடமிருந்து நிதியுதவி பெறுவதற்காக கொழும்பில் இம்மாநாட்டுக்காக நாம் ஒரு வங்கிக் கணக்கும் தொடக்கியுள்ளோம். இது குறித்துப் பலருக்கும் அறிவித்துமிருக்கின்றோம். இந்த தகவல்கள் சில இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன.    இதுவரையில் நடந்த செலவுகளுக்கான நிதியுதவியை நானும், கொழும்பில் நண்பர் பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங்கும், ‘ஞானம்’ ஆசிரியர் தி. ஞானசேகரனும் வழங்கியிருக்கிறோம். கடந்த ஜனவரி 3ம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பான செலவுகள் உட்பட பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களை  கூட்டத்திற்கு ‘ஓட்டோ’வில் ஏற்றி வந்த செலவுகளையும் நானே பொறுப்பேற்றேன். பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங் அனைவருக்குமான மதிய உணவுச் செலவுகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம், ஹட்டன், திருகோணமலை முதலான பிரதேசங்களில் நடந்த மாநாடு தொடர்பான தகவல் அமர்வுக் கூட்டங்களுக்கு ஞானசேகரன் தமது சொந்தச் செலவில் சென்றுவந்தார். இந்தச் செலவுகள் உட்பட மாநாட்டுச் செலவுகள் பற்றிய வரவு – செலவு அறிக்கை மாநாடு முடிந்து ஒரு மாத காலத்துள் அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளரின் மேற்பார்வையுடன் நிதியுதவி, நன்கொடை தருபவர்களுக்கு வழங்கப்படும்.  இதுதான் உண்மையே தவிர இம்மாநாட்டுக்கு இலங்கை அரசே நிதி பெய்கிறது என்ற செய்திகள் வெறும் வதந்தியே. இந்த வதந்திச் செய்திகளைப் பரப்புவர்கள் அவர்கள் பரப்பும் செய்திகளிற்கு ஆதாரங்களை வழங்க முடியாத நேர்மையற்றவர்கள்.    ‘குமுதம் ரிப்போட்டர்’ இதழ் விழாச் செலவுகளையும் பயணச்சீட்டுகளையும் எழுத்தாளர்களிற்கான சுற்றுலாவையும் இலங்கை அரசு ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதாக எழுதியுள்ளதே. நீங்கள் குமுதம் ரிப்போட்டருக்கு எதிர்வினை செய்திருக்கிறீர்களா?    ஷோபா! கருத்துக்களுக்குப் பதில் சொல்லலாம். ஆனால் கற்பனைகளுக்கு எப்படிப் பதில் சொல்லமுடியும். குமுதம் ரிப்போட்டரில் அப்படியான அவதூறு தகவல் வருவதற்கு முன்னர் எங்களது மூத்த படைப்பாளி எஸ். பொன்னுத்துரை, நாம் இலங்கை அதிபரிடமிருந்து லஞ்சம் வாங்கி மகாநாடு நடத்தவிருப்பதாக ‘கீற்று’ இணையத்தில் அபாண்டமாகப் பழி சுமத்தினார். என்னைப்பற்றி நீண்டகாலமாக  நன்கு தெரிந்த ஒருவரே இப்படி உண்மைக்குப்புறம்பாக அவதூறு பரப்பித் திரியும்போது என்னையோ மற்றும் இந்த மகாநாட்டில் இணைந்து பணியாற்றும் எவரையுமே தெரிந்திராத குமுதம் ரிப்போட்டருக்கு வழக்கம்போலவே பரபரப்புக்கு ஒரு செய்தி தேவைப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். எஸ்.பொன்னுத்துரை ‘தீராநதி’ இதழிலும் (செப்டெம்பர்) தனது எள்ளல்களைத் தூவியிருந்தார். அதற்கு ‘தீராநதி’ அக்டோபர் இதழில் எனது எதிர்வினையைப் பதிவு செய்துள்ளேன். குமுதம் ரிப்போட்டரில் சொல்லப்பட்டிருப்பதுபோல் எவருக்கும் இலங்கை அரசு விமானச் செலவுக்கும் இதர சுற்றுலாச் செலவுக்கும் பணம் கொடுத்திருந்தால் அதனைப் பெற்றுக்கொண்டவர்களின் பெயர் விபரங்களை ‘குமுதம் ரிப்போட்டர்’  வெளியிடலாம்தானே? Investigation Journalism செய்யும் ‘குமுதம் ரிப்போட்டர்’ இதனையும் துப்புத்துலக்கி வெளியிடலாம்.    எதிர்க்கவேண்டும், பகிஷ்கரிக்க வேண்டும் என்ற முன் தீர்மானங்களுடன் இயங்குபவர்கள் எதுவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு கீற்று இணையமும் குமுதம் ரிப்போட்டரும் இன்னுஞ் சில இணையங்களும் உதாரணங்கள். அவ்வளவுதான். இவர்களுக்கெல்லாம் உட்கார்ந்து வரிக்குவரி எதிர்வினையாற்றிக்கொண்டிருந்தால் எமது மாநாட்டுப் பணிகளை யார்தான் செய்வது? அப்படியாயின் அவதூறுகளுக்குப் பதில் சொல்வதற்கும் நாம் ஒரு குழுவைத்  தெரிவுசெய்ய வேண்டும். மாநாட்டை சீரியமுறையில் நடத்தி முடிப்பதுதான் நாம் இவர்களுக்கெல்லாம் சொல்லும் பதிலாக இருக்கமுடியும்.    விழாவில் இலங்கை அரசின் அமைச்சர்களோ அல்லது அதிகார வர்க்கத்தினரோ கலந்துகொள்வார்களா?    இதுவரையில் நாம் எந்தவொரு அரசியல்வாதிக்கும் அழைப்பு அனுப்பவில்லை. இது எழுத்தாளர்களின் மாநாடு. நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை எமது மாநாட்டு நோக்கங்களில் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம்.    இலங்கையில் எழுத்தாளர்களால் எதையும் சுதந்திரமாகப் பேசிவிட முடியாத நிலையிருக்கையில் இந்த மாநாடு சாதிக்கப் போவது என்ன என்ற கேள்விக்கு உங்களது பதில் என்ன?    மீண்டும் எமது நோக்கங்களையே பாருங்கள் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்று நாம்தான் வெளியிலிருந்து பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டுமிருக்கின்றோம். இதே சுதந்திரம் போர் முற்றுப்பெறுவதற்கு முன்னர் வடக்கிலிருந்ததா? கிழக்கிலிருந்ததா? குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் இருந்ததா? நீங்கள் ஐரோப்பாவிலிருந்து சுதந்திரமாக எழுதுவது போன்று, பேசுவது போன்று உங்களால் வடக்கிலிருந்து முன்பு பேச முடிந்ததா? எழுத முடிந்ததா? இந்த அவலச் சூழல்களிற்கும் உள்ளேயிருந்து இலங்கையில் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களை நாம் கைவிட்டு விடுவதா?    இன்று இலங்கையில் எழுத்தாளர்களின் தேவைகள் என்ன? அவர்களில் போரினால் அல்லது வறுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்கு நாம் என்ன செய்யப்போகின்றோம்? அவர்களின் குழந்தைகளின் கல்வி சம்பந்தமான எதிர்காலத்திற்கு நாம் தரப்போகும் நம்பிக்கைகள் என்ன? வன்னியில் எத்தனை பாடசாலைகள் போரினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.? இந்தக் கவலைகள் எத்தனை புலம்பெயர் எழுத்தாளனிடமிருக்கிறது? வாழ்வாதாரத்திற்காகப் புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் கையேந்திக்கொண்டிருக்கும் நாளைய தலைமுறை எமது படைப்புகளை, எழுத்துக்களைப் படிக்கவேண்டும் என்றால் அவர்களைப் பார்ப்பதற்காகவாவது மனிதாபிமானம் பற்றி வெளிநாடுகளிலிருந்து எழுதுபவர்கள், பேசுபவர்கள் இந்தச் சந்தர்ப்பத்திலாவது வந்து பார்க்கலாம்தானே. அந்தப் பிள்ளைகள் சுதந்திரமாக வாழ்வதற்கு, முதலில் அவர்களின் வாழ்வாதாரங்கள் பற்றி நாம் சிந்திக்கின்றோமா?  எத்தனை புகலிட, ஈழத்துப் படைப்பாளிகளுக்கு இதுகுறித்த சிந்தனைகள் இருக்கின்றன? தங்கள் நூல்களை வெளியிடுவதிலும் அதற்கு விளம்பரம் தேடுவதிலும் ஆர்வம்கொண்டிருப்போர் ஈழத்தில் வருங்கால தலைமுறை குறித்து ஏதும் ஆக்கபூர்வமாக செய்ய முன்வருவார்களா?    நாம் மகாநாட்டு நோக்கங்களுக்காக ஒரு நிகழ்ச்சி நிரலை வடிவமைத்துள்ளோம். அதன் பிரகாரம் மாநாடு நடைபெறும். இம்மாநாடு இலங்கையுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. முதலாவது மாநாட்டைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் மாநாடு எந்தெந்த நாடுகளில் நடைபெறப்போகிறதோ அதற்கான அமைப்புக் குழுக்களும் தெரிவுசெய்யப்படும். எனவே வருகைதரும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் இயங்கவேண்டியிருப்பதனால் நாம் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டியவர்களாக இருக்கின்றோம்.    மாநாட்டின் மீது விமர்சனங்களை வைத்த நமது மூத்த எழுத்தாளர் எஸ்.பொ.மீதும் அதை வெளியிட்ட ‘கீற்று’ இணைய இதழ் மீதும் நீங்கள் வழக்குத் தொடுக்கப்போவதாக எழுதியிருந்தீர்கள். எழுத்தாளர்களிடையே பரிமாறிக்கொள்ளப்படும் விமர்சனங்களையும் நடக்கும் கருத்துப் போர்களையும் நீதிமன்றம்வரை எடுத்துச் செல்வது எவ்வளவு தூரம் சரியானது என நீங்கள் கருதுகிறீர்கள்? இவை எழுத்துப் பரப்பிலேயே தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளல்லவா?    எஸ்.பொ. கீற்று இணைய இதழில் கருத்தா சொல்லியிருந்தார்? அவர் விஷம் கக்கியிருந்தார். நீங்களும் அவர் ஏதோ கருத்துச் சொல்லியிருப்பதாக அல்லவா பார்க்கிறீர்கள். ‘லஞ்சம்’ என்ற சொல்லை அவர் பயன்படுத்தியதன் மூலம் எமது எழுத்தாளர்கள் அனைவரையுமே அவமானப்படுத்தியிருக்கிறார். அவருடன் இந்த மகாநாடு சம்பந்தமாகத் தொடர்புகொண்டு பேசுவதற்குப் பல தடவைகள் முயன்றேன். அது அவருக்கு நன்கு தெரியும். ஒரு மூத்த படைப்பாளி என்ன செய்திருக்கவேண்டும்? என்னுடன் கலந்துரையாடியிருக்கலாம். அல்லது அவருக்கு நன்கு நெருக்கமான எமது மாநாட்டு இலங்கை இணைப்பாளர் ‘ஞானம்’ ஆசிரியருடன் தொடர்பு கொண்டு உரையாடியிருக்கலாம். ஆனால் இப்படி ஆரோக்கியமான புரிந்துணர்வுடன் எதனையும் முன்னெடுக்காமல், நாம் கொழும்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஏழு மாதங்கள் கடந்தபின்னர் திடீரென்று ‘கீற்று’ இணைய இதழில் பரபரப்பாக, உண்மைக்குப் புறம்பாக எழுதும்போது நாம் என்ன செய்ய முடியும்? சொல்லப்பட்ட அவதூறை நிரூபியும் அல்லது மானநட்ட வழக்கைச் சந்திக்க நேரும் என்றுதானே சொல்லமுடியும்.    பொன்னுத்துரை எழுத்துப்பரப்பிலே தீர்த்துக்கொள்ளத்தக்க கருத்துக்களையா முன்வைத்தார்? தயவுசெய்து எனது ‘தீராநதி’ பதிலைப் படியுங்கள். ஒன்றுக்கொன்று முரணாக, பரபரப்புக்காகவே அவர் செய்த திருகுதாளம்தான் அந்த வஞ்சனையான கூற்றுகள். சகோதர எழுத்தாளர்களைக் காயப்படுத்துவதில் அவர் கைதேர்ந்தவர். அவரது வரலாற்றில் எத்தனைபேரை இப்படி அவதூறு பொழிந்து காயப்படுத்தியிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியும். அவர் ஏன் சுமார் ஏழு மாதங்கள் கடந்து இப்படி விஷம் கக்கினார் என்பதன் ரிஷிமூலம் எமது மாநாட்டின் பின்னர் வெளியாகும். அதுவரையில் பொறுத்திருங்கள்.    இந்த மகாநாட்டை நீங்கள் நடத்தத் திட்டமிட்டபோது யார் யாருடன் கலந்தாலோசனை செய்தீர்கள்? உங்களது திட்டத்திற்கு அவர்களின் எதிர்வினை எவ்வாறிருந்தது.?    இலங்கையில் மல்லிகை ஆசிரியரும் மூத்த படைப்பாளியுமான டொமினிக் ஜீவா, ஞானம் சிற்றிதழின் ஆசிரியர் உட்பட வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை பிரதேசங்களையும் சேர்ந்த பல படைப்பாளிகள், இலக்கியவாதிகளான சில பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வீரகேசரி – தினக்குரல் – தினகரன் ஆசிரியர் குழுக்களைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள்… இப்படிப் பலருடனும் இலங்கை செல்ல முன்னரே கடந்த வருடத்தின் இறுதியில் பல நாட்கள் உரையாடியிருக்கின்றேன். இந்தப் பட்டியலில் சுமார் நூறு பேர்கள் இருப்பார்கள். அத்துடன், அவுஸ்திரேலியா, கனடா, அய்ரோப்பிய நாடுகளில் வதியும் எழுத்தாளர்களுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றேன்.  கனடாவில் பூரணி மகாலிங்கம், பொ.கனகசபாபதி, உட்பட  பலருடனும் மின்னஞ்சலில் தொடர்புகொண்டேன். சேரன், செல்வா கனகநாயகம். அ.முத்துலிங்கம், ரஞ்சகுமார், கனடா உதயன் லோகேந்திரலிங்கம், தேவா ஹெரால்ட், ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா, நிலக்கிளி பாலமனோகரன், டென்மார்க் ஜீவகுமாரன், தருமகுலசிங்கம், நூலகர் செல்வராஜா, மு.நித்தியானந்தன் அளவெட்டி சிறிசு கந்தராஜா, நான்காவது பரிமாணம் நவம், வி.ரி. இளங்கோவன்  உட்பட பலர் மின்னஞ்சலில் தொடர்புகொண்டனர். சிலர் வரமுடியாதிருப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய விஸா சம்பந்தப்பட்ட காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். எல்லோருமே இது ஒரு நல்ல முயற்சி என்றுதான் பொதுவாகவே சொன்னார்கள்.    தமிழகத்திலிருந்து பா.செயப்பிரகாசம் கூட  கடந்த பெப்ரவரி மாதம் வரவேற்று எழுதியிருந்த மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன். கொழும்பு உட்பட ஏனைய பிரதேசங்களில் நடந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு பலரும் என்னுடன் கடிதம், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். அந்தனி ஜீவா உட்பட பலர் எனக்குக் கடிதங்கள் எழுதியிருப்பதுடன் மகாநாட்டுப் பணிகளில் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கின்றனர். மேமன் கவி, ஸ்ரீதரசிங், திக்குவல்லை கமால், பேராசிரியர்கள் எம்.ஏ. நுஃமான், மௌனகுரு, மல்லிகை ஜீவா, ஓ.கே. குணநாதன், அன்னலட்சுமி ராஜதுரை, வசந்தி தயாபரன், தெணியான், கலாமணி, பத்மா சோமகாந்தன், ஜின்னாசரிபுதீன் மற்றும் பத்திரிகை – ஊடக நண்பர்களுடன் அடிக்கடி தொலைபேசித் தொடர்பில் இருக்கின்றேன்.  சிலரது கடிதங்கள் ‘மல்லிகை’, ‘ஞானம்’ உட்பட சில ஊடகங்களிலும் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன.    நான் தொடர்புகொண்டவர்களிடமிருந்து எனக்குப் பெருத்த ஆதரவே கிடைத்தது.  அவர்கள் பயனுள்ள யோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.    இப்போது மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அறிவித்துள்ளார். செம்மொழி மாநாடு விடயத்தில் செய்ததுபோலவே ஒரு அந்தர் பல்டியடித்து இந்த மாநாட்டில் அவர் கலந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறதாகக் கருதுகிறீர்களா?    பேராசிரியர் சிவத்தம்பி நான் பெரிதும் மதிக்கும் கல்விமான். இலங்கை செல்லும்போதெல்லாம் அவரை நான் சந்திக்கத் தவறுவதில்லை. அவர் என்னிடத்தில் எத்தகைய அன்பு வைத்திருக்கிறார் என்பது பரஸ்பரம் எம்மிருவருக்குமே தெரியும். அவரிடம் நான் வைத்திருக்கும் அளவற்ற மரியாதை குறித்து என்னை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். எனினும் அவரது முரண்பாடான சில கருத்துக்கள் சகிக்க முடியாதவைதான். கொழும்பில் ஜனவரி 3ம் திகதி மாநாட்டுக்கான திட்டமிடல் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் சொன்ன கருத்துக்கள், அவை வெளியான இதழ்கள் அனைத்தும் நான் கைவசம் வைத்திருக்கின்றேன். அவர் அந்தர்பல்டி அடித்து இந்த மாநாட்டுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனச் சொன்னதும், நான் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “என்ன சேர்… இப்படிக் காலை வாரிவிட்டீங்களே?” என்றுதான் கேட்டேன். அதற்கு அவர், “”இந்த மகாநாட்டை நானும் சேர்ந்து நடத்துவதாகப் பொன்னுத்துரை சொல்றானடாப்பா! நீங்கள் வந்து பேசச் சொன்னீங்க… வந்து பேசினேன். இப்ப உன்னோட ரெலிபோனில எல்லாத்தையும் கதைக்க ஏலாது, யாரையாவது வந்து என்னைச் சந்திக்கச் சொல்லு.” என்றார். சிவத்தம்பி அப்படிச் சொன்னதற்கும் பொன்னுத்துரைதான் காரணம் என்று நான் நினைக்கின்றேன்.    பொன்னுத்துரை, “பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களினால் நடத்தப்படும் மாநாடு” என்றும் சொல்லிவிட்டார் அல்லவா! ஏற்கனவே சிவத்தம்பி கலைஞருடைய அழைப்பால் செம்மொழி மாநாட்டுக்குச் சென்றுவந்து ஏச்சுப்பேச்சு வாங்கிக்கொண்டிருக்கிறார். பொன்னுத்துரை அப்படிச் சொன்னதும் அதிலிருந்து தப்பிக்க ஏதாவது சொல்லவேண்டும்தானே. அவர் மட்டுமல்ல, எஸ். பொன்னுத்துரை எமது மாநாட்டுக்கு வந்தாலும் நாம் அன்புடன் வரவேற்கத் தயாராகத்தான் இருக்கின்றோம்.  நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அறிந்ததைப் பகிர்ந்து, அறியாததை அறிந்துகொள்வதற்காகவும் தமிழ் இலக்கிய வளர்சிக்கான சில பணிகளை முன்னெடுக்கவுமே நாங்கள் இந்த மாநாட்டை நடத்துகின்றோம்.    நேரடியான அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால் நின்று எழுதிக்கொண்டிருக்கும் எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் கூட மகாநாட்டுக்கு வர மறுத்துள்ளார்களே?    அவரது பெயரும் குறிப்பிடப்பட்டு ‘கீற்று’  இணையத்தில் அந்தச் செய்தி வெளியானதும் நான் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நீண்டநேரம் உரையாடினேன். அதுவரையில் நானும் இந்த மாநாட்டின் பின்னணியிலிருப்பது அவருக்குத் தெரியாது. ஆதியோடு அந்தமாக எல்லாவற்றையும் நான் அவருக்கு விளக்க நேர்ந்தது.    இப்படித்தான் ‘ஸீ தமிழ் தொலைக்காட்சி’ கலாநிதி மற்றும் ‘ஜூனியர் விகடன்’ கதிர்,  கவிஞர் தாமரை ஆகியோருக்கும் விளக்க நேர்ந்தது. அவர்களுக்கு மின்னஞ்சலூடாகவே கடிதங்களை அனுப்பியிருந்தேன். அதனால் தாமரைக்கு அனுப்பிய கடிதம் பா. செயப்பிரகாசம் உட்பட பலருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியிலிருக்கும்  கருணாகரமூரத்தியுடன் சுமார் ஒரு மணிநேரம் பேசியிருக்கின்றேன். அவருக்கும் மாநாட்டுக்கு வருவதற்கு விருப்பம் இருந்தது. பொன்னுத்துரையின் அபாண்டப் பழிச்சொற்களுக்குப் பிறகு அவரும் உங்களைப் போன்று என்னிடம் துருவித் துருவி விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தார். இப்படியே பலருக்கும் விளக்கம் சொல்வதிலேயே எனது பொழுது கழிந்திருப்பின் எனது நிலை என்ன என்பதைச் சீர்தூக்கிப்பாருங்கள்.    சந்தேகம் பொல்லாத வியாதி. முதலில் எவருக்கும் தன்னம்பிக்கை இருக்கவேண்டும். பிறகு மற்றவர்கள் மீது புரிந்துணர்வுள்ள நம்பிக்கை தோன்றவேண்டும். இல்லையேல் தாமும் சோர்ந்து மற்றவர்களையும் சோர்வடையச் செய்துவிடுவார்கள்.  2020ம் ஆண்டளவில் உலகை இந்த ‘சோர்வு’ என்ற கொள்ளை நோய்தான் ஆக்கிரமிக்கப்போகிறது என்று சமீபத்தில்தான் படித்தேன்.    இந்த மாநாடுக்கு எதிராக இதுவரை ஈழத்திலிருக்கும் எழுத்தாளர்கள் பகிரங்கமாகவோ அல்லது உங்களிடம் நேரடியாகவோ எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளார்களா?    ஒரே வார்த்தையில் ‘இல்லை’ என்பதுதான் எனது பதில்.    எஸ்.பொ.வின் கண்டனம் மற்றும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச எழுத்தாளர் கூட்டமைப்பின் கண்டன அறிக்கை இவற்றின் பின்னால் உண்மைகள் இல்லாத பட்சத்தில் அவர்கள் இவ்வாறு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராகத் தீவிரமாகப் பரப்புரை செய்வதன் காரணமென்ன?    அவர்களைத்தான் கேட்கவேண்டும். ஈழப் போராட்டம் தொடர்பாக உணர்வுபூர்வமாகச் சிந்தித்தவர்கள் தமிழக எழுத்தாளர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பொன்னுத்துரை சகட்டுமேனிக்கு பொய்யும் புரட்டும் சொன்னதும் அவரது கூற்றுக்களை உண்மை என்று அவசரப்பட்டு நம்பிவிட்டார்கள். யாருக்காவது பொன்னுத்தரையிடம், நீங்கள் வைக்கும் குற்றசாட்டுகளிற்கு ஆதாரம் என்ன? என்று திருப்பிக் கேட்கத் தோன்றவில்லை. சரவணன் என்பவர் மாத்திரம் கீற்று இணையத்தில் நிதானமாகக் கருத்துக்களைச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.    இதுவரை தமிழ்த் தேசியவாதச் சாயம் பூசிக்கொண்டவர்கள் மட்டுமே மாநாட்டை விமர்சித்தார்கள். ‘ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு’ என்றொரு அமைப்புக் கூட எழுத்தாளர் விழாவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் இப்போது இடதுசாரியச் சிந்தனைகொண்டவராக அறியப்படும் யமுனா ராஜேந்திரன் போன்றவர்களும் கண்டனக் களத்திலும் கையெழுத்துச் சேகரிப்பிலும் இறங்கியிருப்பதை எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்?    இந்த மாநாட்டோடு ஒபாமாவுக்கு என்ன கருத்துவேறுபாடு என்பது புரியவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப் பிறகு ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பல புதிய அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. இதில் பொதுநல நோக்கின்றி அவர்களது சுய தேவைகள் கருதி உருவான அமைப்புகளும் உள்ளன. ஈழத்து இலக்கிய உலகு பற்றியோ, புகலிட இலக்கியம் பற்றியோ இதுவரையில் அக்கறை காண்பிக்காதவர்களும்கூட எமது மாநாடு பற்றித் தெரிந்தவுடன் தத்தமது அமைப்புகளின் ஊடாக அறிக்கைகள் வெளியிடத் தொடங்கியுள்ளனர். இதன் மூலமாவது அவர்களுக்கு ஈழத் தமிழ் இலக்கியம், எழுத்தாளர் ஒன்று கூடல் பற்றிய பிரக்ஞையை நாம் உருவாக்கியிருக்கிறோம் என்ற ஆறுதல் எமக்குண்டு.    யமுனா ராஜேந்திரனின் நிலையும் எஸ். ராமகிருஷ்ணனின் நிலை  போன்றதுதான். பொய்யுரைகளை நம்பினார்களேயன்றி பகுத்தறிந்து, மாநாட்டு ஏற்பாட்டாளர்களுடன் குறைந்தபட்சம் சிறு உரையாடலைக்கூட நடத்தாமல் உணர்ச்சி வேகத்தில் இயங்கத் தொடங்கியுள்ளனர். வெற்று உணர்ச்சிகளினாலேயே நாம் மிகப் பெரிய அவலங்களைச் சந்தித்திருக்கின்றோம். விவேகத்துடன் இயங்குவதன் மூலம் வருங்கால தலைமுறையினருக்காவது நம்பிக்கையைக் கையளிக்க முடியும் என நம்புகின்றேன்.    இந்த  மகாநாட்டை ஊக்குவிப்பதற்காக இலங்கை அரசு ஏதாவது நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளதா? அவ்வாறு எடுத்தால் அது சரியானது என நீங்கள் கருதுகிறீர்களா?  மீண்டும் எமது நோக்கங்களைப் பாருங்கள். இலங்கை அரசு இலங்கை மக்களின் வரிப்பணத்திலும் மக்களின் வாக்குகளிலும் இயங்குகிறது. அரசிடம் எதனை முன்னிட்டும் மக்கள் கோரிக்கைகளை முன்வைப்பது அடிப்படை உரிமை. குறிப்பாக ‘மானியம்’ பற்றி அறிந்திருப்பீர்கள். மேலை நாடுகளில் அரசுகள் பல்தேசிய கலாசார ஆணையங்கள் மூலம் கல்வி, கலை, இலக்கிய, கலாசாரப்பணிகளுக்காக மானியங்கள் ஒதுக்குவதை அறிந்திருப்பீர்கள். இலங்கையில் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் ஆகியனவற்றில் இயங்கும் நூலகங்களுக்கு கல்வி அமைச்சின் ஊடாக மானியம் வழங்கி நூல்களைக் கொள்முதல் செய்ய உதவும் நடைமுறை இருக்கிறது. இது சீராக நடைபெறுகிறதா என்பது குறித்துச் சில விமர்சனங்கள் இருக்கின்றன என்பது வேறு. தமிழகத்தில் நூலக அபிவிருத்திச் சபை மூலம் தமிழ் நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதை அறிவீர்கள். வணிக இதழ்கள் தவிர்ந்த சில இலக்கிய சிற்றிதழ்களுக்கும் அரசின் ஆதரவு இந்த விநியோகத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.    இலங்கையிலும் இப்படியான மானிய உதவியை அரசிடம் கோருவதில் ஏதும் தவறு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? இதுவிடயத்தில் அரசுடன் பேசவேண்டிய தேவை இலங்கையில் நீண்டகாலம் சிற்றிதழ்களை நடத்துபவர்களுக்கு உண்டு. அதனால் அதனை வலியுறுத்துவதும் அதற்காக அரசுக்கு அழுத்தம் பிரயோகிப்பதும் எமது கடமைகளில் ஒன்றென நினைக்கின்றோம்.    இந்த மகாநாடு  குறித்து இதுவரை அரசு தரப்பிடமிருந்தோ அதிகார வர்க்கத்திடமிருந்தோ விழாக் குழுவினருக்கு ஏதாவது அழுத்தங்கள் வந்துள்ளனவா?    இதுவரையில் இல்லவே இல்லை. இப்படி ஒரு மாநாடு நடக்கவிருக்கும் தகவலே இனிமேல்தான் தெரியவரலாம். கலை, இலக்கிய ஆர்வம் உள்ள பல தமிழ், சிங்கள, முஸ்லிம் எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அவர்களுடன் கூட நாம் இதுவரையில் இதுபற்றி இன்னமும் பேசவில்லை என்பதும் உண்மை.    எழுத்தாளர் மாநாட்டில் இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் குறித்தும் மகிந்த குடும்பத்தினரின் அராஜக ஆட்சி குறித்தும் பேசுவதற்கான வாய்ப்புள்ளதா?    இதுதான் மிகமிகச் சுவாரஸ்யமான கேள்வி. கண்ணதாசனின் பாடல்வரி ஒன்று இருக்கிறது. “இருக்கும் இடத்திலிருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே”. வெளியிலிருந்துகொண்டு சௌகரியமாக எதுவும் கேட்கலாம். சிறு துரும்பைக்கூட எடுத்துப்போடாமல், முடங்கியிருந்துகொண்டு ஓடுவது எப்படி என்று சொல்லிக்கொண்டிருக்க முடியும். சூப்பர் ஸ்டாரின் எந்திரன் பட வசனகர்த்தாவிடம் இப்படி ஒரு கேள்வியை நிச்சயமாகக் கேட்கமாட்டீர்கள். ஆனால் சூப்பர் ஸ்டாரின் படங்களில் என்ன வசனங்கள் எப்படி வந்தாலும் எத்தனை முறை வந்தாலும் இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களிலும் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வசூலைக் குவித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும்.  ஆனால்  ஒன்றுகூடல் போன்ற அனுபவப் பகிர்வின் மூலம் தன்னை வளர்த்துக்கொள்ள விரும்பும் படைப்பாளியோ, கலைஞனோ ஊடகவியலாளனோ நீங்கள் எதிர்பார்ப்பதுபோன்று பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். தமிழகத்திலிருந்து ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வரும் வைரமுத்து, ஜெயமோகன் போன்றவர்கள் கூட அரசியல் பேசுவதைத் தவிர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் எரியும் சூழலுக்குள் வாழ்ந்துகொண்டிருப்பவன் தன்னைத்தானே தகனம் செய்துகொள்ளவேண்டும் என்று வெளியிலிருந்து குரல் கொடுக்கிறீர்கள், கட்டளையிடுகிறீர்கள்.. இது என்ன நியாயம்? இது கொடுமை.    இந்த மாநாட்டை  இந்தியாவில் நிகழ்த்தாமல் யுத்தக் குற்றவாளியான இலங்கை அரசின் தலைநகரில் ஏன் நிகழ்த்த வேண்டும் என்ற கேள்வியில் நியாயமில்லை என்றா கருதுகிறீர்கள்?    இவ்வளவு காலமும் இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் ஏன் இப்படி ஒரு மாநாடு பற்றிச் சிந்திக்கவில்லை.? இந்திய திரைப்படங்கள், இந்திய நூல்கள் இலங்கை வரலாம், விற்பனையாகலாம். ஆனால் ஈழத்து நூல்கள், ஈழத்துத் தமிழ் திரைப்படங்கள் அங்கு சந்தை வாய்ப்பை பெற முடியாது. இதுதான் இந்திய மத்திய அரசின் சட்டம். இதுபற்றி இதுநாள் வரையில் எந்தவொரு இந்தியத் தமிழ் எழுத்தாளனோ கலைஞனோ சிந்தித்திருப்பானா? தாய் நாடு – சேய் நாடு என்று சொல்லிச் சொல்லியே எங்களை நாமே ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறோம். காலம்பூராவும் வல்லாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு தொங்குதசையாகவே நமது ஈழத்து கலை, இலக்கிய உலகம் வாழவேண்டும் என்பது எழுதாத விதியா?    இப்படிச் சொல்வதனால் என்னைப் பிழையாக விளங்கிக்கொள்ள வேண்டாம். இந்தியா எமது அயல்நாடு. தமிழக படைப்பாளிகள் பலர் எமது இனிய நண்பர்கள். அவர்கள் இலங்கை வரும்போதும் புகலிட நாடுகளுக்கு வருகைதரும் போதும் ஏற்றிப்போற்றுகின்றோம்.தமிழாராய்ச்சி மகாநாட்டுக்கு வித்திட்ட எங்களது அருட்தந்தை தனிநாயகம் அடிகளாரையே அவர்கள் மறந்துவிட்டார்களே!  நவாலியூர் சோமசுந்தரப் புலவரை தெரியாதவர்கள் பலர் தமிழகத்தில் ஊடகங்களில் இருக்கிறார்கள் என்ற தகவல்கூட சமீபத்தில்தான் எனக்குத் தெரியவந்தது. “ஆறுமுக நாவலரைத் தெரியாது, நாவலர் நெடுஞ்செழியனைத்தான் தெரியும்” என்றாரே பயணக்கதை மன்னன் மணியன். ஈழத்துப் படைப்புகளுக்கு அடிக்குறிப்பு போட வேண்டும் எனறாரே கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜா. இப்படியாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.    இலங்கையில் தமிழர்கள் இரத்தம் சிந்தி உயிரைத் துறந்து தமிழை வளர்த்திருக்கிறார்கள், தக்கவைத்திருக்கிறார்கள். ஈழத் தமிழன் பாதுகாப்பின் நிமித்தம் ஏதிலியாக ஓடியபோதும் தமிழைக் கைவிடவில்லை. தமிழ் இலக்கியத்தை விட்டு விட்டு ஓடவில்லை. இந்தியச் சினிமா, இந்தியப் பதிப்பகங்களின் வெளிநாட்டு சந்தைக்கும் புலம்பெயர் ஈழத் தமிழர்தான் இருக்கிறார்கள். இலங்கை தலைநகர் பற்றிக் கேட்கிறீர்கள், எண்பது வருடங்கள் கடந்தும் கொழும்பில் வீரகேசரி என்ற தமிழ்த் தேசிய தினசரி தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கிறது. இந்த எண்பது வருடகாலத்துள் 1958, 1977, 1981, 1983 வந்து போயிருக்கிறது. இனக் கலவரங்கள் வந்துற்றபோதும் கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ் விழாக்கள் நடந்துகொண்டுதானிருக்கின்றன. வருடந்தோறும் ஆடி மாதம் வேல் ரதம் காலி வீதியில் நகர்ந்துகொண்டுதானிருக்கிறது. ஏராளமான தமிழ்ப் பாடசாலைகள் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் இயங்கிக்கொண்டுதானிருக்கின்றன.    முருகபூபதியின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் என்ன?    முருகபூபதி அரசியல்வாதியோ, வியாபாரியோ, பிரமுகரோ இல்லை. முழுமையான இலக்கியவாதி. சிறிதுகாலம் வீரகேசரியில் பணியாற்றியமையால் ஒரு பத்திரிகையாளன் என்ற முகமும் உண்டு. மனிதாபிமானம்தான் எனது  இயங்குதிசை. அந்த நிலைப்பாடு என்னிடமிருப்பதனால்தான் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த பின்பும் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மாணவர்களுக்கு உதவும் பணிகளில் பலருடன் இணைந்திருக்கின்றேன். எனது இலக்கிய செயற்பாடுகளும் மனிதாபிமானம் சார்ந்ததுதான். சுருக்கிச் சொல்வதெனில் மானிட நேயம்தான் எனது அரசியல்.              16. நடுவு நிலைமை என்பது எந்தப் பக்கமும் சாராது இருத்தலல்ல   இலங்கையிலிருந்து வெளியாகும் ‘ஞானம்’ சஞ்சிகையின் 150வது இதழில் (நவம்பர் 2012) வெளியாகிய எனது நேர்காணல். மின்னஞ்சல் வழியே நேர்காணலை நிகழ்த்தியவர்: லெ.முருகபூபதி.    தங்களது படைப்புகளின் ஊடாகவே தங்களது சிந்தனைகளை வாசகர்கள் தெரிந்துகொள்கின்றனர். புலம்பெயர்ந்து வாழும் பல படைப்பாளிகளுக்கு மத்தியில் தாங்கள் மிகவும் துணிச்சலுடன் கருத்தாடலில் ஈடுபடுபவர். தங்களுடன் கருத்தியல் ரீதியாக முரண்படுபவர்கள் கூட தங்களின் படைப்புகளை விரும்பிப் படிப்பதாக அறிகின்றோம். ஈழத்து வாசகர்களுக்கு தங்களது எழுத்துலகப்பிரவேசம் பற்றிய தகவல்களை சொல்லுங்கள்?    மிகச் சிறிய வயதிலேயே எனக்குத் தமிழ் தேசியப் போராட்டத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டுவி்ட்டது.  அரசியல் முழக்கங்களை உருவாக்கி சுவர்களில் எழுத ஆரம்பித்து, அரசியல் துண்டறிக்கைகள், கவிதைகள், நாடகம் எனப் பரப்புரை எழுத்துகளை எழுதியவாறே நான் எழுத்துத் துறைக்குள் நுழைந்தேன். பரப்புரை எழுத்துகள் என்பதற்கு அப்பால் தீவிர இலக்கியம் நோக்கி நகருவதற்கு ஏதுவான நிலைமைகள் அப்போது என் சூழலில் இருக்கவில்லை.    எனது இருபத்தைந்தாவது வயதில் பாரிஸ் வந்தேன்.  இங்கே ‘புரட்சிக் கொம்யூனிஸ்ட்  கழகம் ’ என்ற சர்வதேச ட்ரொட்ஸ்கிய அமைப்போடு தொடர்பு ஏற்பட்டது. அமைப்போடு இணைந்திருந்த அந்த நாட்களில் செவ்வியல் இலக்கியங்களும் நவீன இலக்கியங்களும் எனக்குக்  கட்சித் தோழர்கள் மூலமாக அறிமுகமாயின. அந்த நாட்களில் நான் அரசியலில் மாத்திரமல்லாமல்  கலை, இலக்கியத்திலும்  கட்சியால் பயிற்றுவிக்கப்பட்டேன்.  பீற்றர் ஸ்வாட்ஸ், நிக் பீம்ஸ், ஸ்டீவ், ஞானா போன்ற மிகச் சிறந்த ஆளுமைகளிடம் கற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. கட்சித் தோழர்களுடனான விவாதங்கள், உரையாடல்கள் மூலம் நான் எனக்கான எழுத்தைக் கண்டடைந்தேன்.    புலம் பெயர்ந்து சென்ற பின்னரே தாங்கள் எம்மவர் மத்தியிலும் ஏனையோர் மத்தியிலும் (பிறமொழிகளில் தங்கள் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டதனால்) நன்கு அறிமுகமானவர். தங்கள் இலக்கியப்பிரதிகள் தொடர்பாகவும் கருத்துக்கள் பற்றியும் வெளியாகும் எதிர்வினைகளுக்கு முகம்கொடுக்கும்போது தங்கள் உணர்வுகளை வீச்சான மொழிகளில் வெளிப்படுத்துகிறீர்கள். அதனால் தங்களது உணர்வுகளின் பின்புலம் (அரசியல் ரீதியாகவும்) பற்றிச்சொல்ல முடியுமா?    தேசியம், இனம், சாதி, மொழி போன்ற எந்த வடிவில் அதிகாரம் மக்கள்மீது செலுத்தப்பட்டாலும் சமரசமில்லாமல் அதை எதிர்த்து நிற்க வேண்டும். இதுவே எழுத்தாளனுக்கான அடிப்படை அறம். நிறுவப்பட்டிருக்கும் நீதி அமைப்பும், சட்டங்களும், தத்துவங்களும், தேசியம் குறித்த கற்பிதங்களும், பொதுப் பண்பாடும் இச் சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திணிப்புகள் தேசியத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் கலாசாரத்தின் பெயராலும் இனவுணர்வின் பெயராலும்  சமூகத்தின் பொதுப்புத்தியால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் இவை குறித்து கேள்வி எழுப்பவர்கள் மிகச் சிறுபான்மையினரே. எனவே  கேள்வி எழுப்பும் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மைப் பொதுப்புத்தியின் அதிருப்தி இருந்தேயாகும். அந்த அதிருப்தி சப்பைக் குற்றச்சாட்டுகளாகவும் சிலவேளைகளில் அவதூறுகளாகவும் வெளிப்படும். கேள்வி எழுப்புவர்கள்  மீது பொது அவமானமும் சமூகப் புறக்கணிப்பும் நிகழும்.இது ஒரு கருத்துப் போராளி தனது எழுத்துக்காகக் கொடுத்தேயாக வேண்டிய விலை.    நாங்கள் எங்களுக்காக மட்டுமல்லாமல் எங்கள்மீது நிராகரிப்புகளையும் அவதூறுகளையும் கொட்டுபவர்களுக்காகவும் சேர்த்துத்தான் அதிகாரத்திடம் கேள்விகளை எழுப்புகிறோம்  என்ற எங்களது உறுதியான நம்பிக்கைதான் எங்களது துணிச்சலுக்கும் எங்களது வீச்சான கருத்துப் போருக்குமான அடிப்படை.     தமிழர்கள் யூத இனத்தவர்கள் போன்று தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கிக்கொள்ளத் தவறிவிட்டார்கள் என்று தமிழ் புத்திஜீவிகள் சொல்லிவருகின்றனர். இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ முடியாதா? இதுபற்றி என்ன கருதுகிறீர்கள்?    சிங்களப் பெரும்பான்மை இனத்துடன் ஏனைய சிறுபான்மை இனங்கள் ஒற்றுமையாகச் சேர்ந்து வாழ்வதென்பது சிங்கள இனத்தவர்களின் கைகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. சிங்கள மக்களுக்குள்ள அரசியல், பொருளியல், பண்பாட்டு உரிமைகள் ஏனைய இனங்களிற்கும் நீதியுடன் பகிரப்பட்டால் மட்டுமே ஒற்றுமை சாத்தியாகும். சிறுபான்மை இனங்களின் தனித்துவமான மொழியும் பண்பாடும் பாரம்பரிய நிலமும் பெரும்பான்மை இன அரசால் சிதைக்கப்படக் கூடாது.    இலங்கையின் ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனங்களின் மீது இன வெறுப்பைக் கக்குவதை நிறுத்துவதே இனங்களிற்கிடையேயான ஒற்றுமைக்கான முதல் நிபந்தனை. தமிழர்களோ மற்றைய சிறுபான்மை இனங்களோ பெரும்பான்மை இனத்தின்மீது அரசியல் ஐயுறவு கொள்ளவும் பிரிந்து செல்வது குறித்து யோசிக்கவுமான காரணங்களை இலங்கை இனவாத அரசுகளே உருவாக்கின. அந்தக் காரணங்கள் இன்னும் அப்படியேதானுள்ளன.    இப்போது ‘இணக்க அரசியல்’ என்றொரு சொல்லாடல் சில தமிழ் அரசியற் தரப்புகளால் முன்வைக்ப்படுகிறது. அரசுடன் இணங்கி மக்களிற்கான அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். அரசிடமிருந்து அபிவிருத்தித் திட்டங்களையும் சமூகநல உதவிகளையும் பெறுவது மக்களது அடிப்படை உரிமை. அதைச் செய்து கொடுக்க வேண்டியது அரசுடைய கடமை.    இந்த அபிவிருத்திட்டங்களிற்காக அரசினுடைய இனவாதப் போக்கைக் கண்டுகொள்ளாமலிருப்பதும் அரசுடைய அராஜகங்களின் முன் வாய் பொத்தி நிற்பதும் இன்னுமொரு படி கீழிறங்கி இலங்கை அரசுக்கு இடதுசாரிப் பாத்திரத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாராட்டுப் பத்திரத்தையும் இந்த இணக்க அரசியலாளர்கள் வழங்குவது மக்களுக்குச் செய்யும் மோசமான துரோகமாகும்.இணங்கி வாழ்வதற்கும் அடிமைகளாக வாழ்வதற்கும் நிறைய வேறுபாடுகளுள்ளன. கைளில் விலங்குடன் இன்னொருவருடன் கைகளைக் குலுக்கிக்கொள்ள முடியாது.    இன்றைய அவலத்திற்கு அரசுகளும் ஆயுதம் ஏந்திய இயக்கங்களும்தான் காரணம் எனில், ஒரு படைப்பாளி என்ற முறையில் அவலங்களிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் விடுபடுவதற்கும் மீண்டும் பேரவலங்கள் தோன்றாதிருப்பதற்கும் தங்களது கருத்துக்கள் என்ன?    இலங்கைத் தீவின் இன முரண்களையும் இனங்களிற்கு இடையிலான பரஸ்பர சந்தேகங்களையும் அதிருப்திகளையும்  ஒருபோதும் ஆயுதத்தாலோ இராணுவ நடவடிக்கைகளாலோ  போக்கிவிட முடியாது என்பதைப் போராடும் சிறுபான்மை இனங்கள் மட்டுமல்லாமல் ஆளும் தரப்பும் பெரும்பான்மை இன மக்களும் விளங்கிக்கொள்வது முக்கியமானது.  இலங்கையின் புவியியல், பொருளியல், பண்பாடு எனத் தீர்க்கமாகச் சிந்திக்கையில் இலங்கை வரலாற்றுரீதியாகவே இந்திய வல்லரசின் கீழேயே இருக்கிறது. இலங்கையின் இறையாண்மை சுயாதீனமானதல்ல. இந்த அரசியல் உண்மையை நாம் கசப்புடன் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.  இலங்கையில் ஓர் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமெனில் அதற்கு இந்திய அரசினது முழுமையான ஒப்புதல் கிடைத்தேயாக வேண்டும். இனப் பிரச்சினையில் சிங்களவர்களும் தமிழர்களும் இஸ்லாமியர்களும் மட்டுமல்லாமால் இந்திய ஆட்சியாளர்களும் ஓர் அசைக்க முடியாத தரப்பே என்ற உண்மையை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.  இலங்கை – இந்திய உடன்படிக்கை முழுமையாக அமுல்படுத்தப்படுவதும் மாகாணசபைகளிற்கு காணி, காவற்துறை உள்ளிட்ட முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டு ஓரளவுக்காவது அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதுமே இன முரண்களைக் களைவதற்கான சரியான தொடக்கமாக இருக்க முடியும்.    மாறாக இலங்கை  அரசு வடக்குக் கிழக்கில் காணி பிடிப்பதாலும், போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் மீது கழிவு எண்ணையை ஊற்றுவதாலும், வெள்ளை வான் கடத்தலாலும், கட்டாயக் குடியேற்றங்களால் இனச் சனத்தொகை வீதாசாரங்களை மாற்றியமைப்பதன் மூலமும் இனப் பிரச்சினையை முடித்துவிடலாம் என நினைக்கிறது. இதுதான் இலங்கைத் தீவின் நிரந்தரப் பேரவலம்.    அண்மையக் காலங்களில் தமிழகத்திற்குச் செல்லும் இலங்கை யாத்திரிகர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் பின்னணியில் தொழிற்படும் காரணங்கள் எவையாயிருக்கும் எனக் கருதுகிறீர்கள்?    ஈழத் தமிழர்கள்மீது உள்ள அக்கறையால்தான் இத்தகைய வன்முறைக்கான எத்தனிப்புகளோ வன்முறைகளோ நிகழ்கின்றன என்பதை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். ஈழத் தமிழர்கள் மீது இந்த வன்முறையாளர்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்களாக இருந்திருப்பின் வன்னியில் மக்கள் புலிகளால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த போதும், தப்பியோடிய மக்களைப் புலிகள் சுட்டுக்கொன்ற போதும் இந்த வன்முறையாளர்கள் புலிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பார்கள். மாறாக இந்த வன்முறையாளர்கள் இன்றுவரை புலிகளின் புகழ் பாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வன்முறையாளர்களிடம் இருப்பது வெறும் புலியாபிமானம் மட்டுமே. அதை  ஈழத் தமிழர்கள் மீதான  அக்கறையாக விளங்கிக்கொள்ளத் தேவையில்லை.    தமிழகத்திலுள்ள இத்தகைய வன்முறைக் குழுக்களிற்கு ஈழத்து அரசியலின் வரலாறோ, உள்ளார்ந்த பிரச்சினைப்பாடுகளோ தெரிவதில்லை. தமிழர்களிற்கும் சிங்களவர்களிற்கும் கூட அவர்களுக்கு வேறுபாடு தெரியவில்லை.    இந்தக் குழுக்களுடைய அரசியல் பண்பு என்னவென்பதை அறிய தமிழக அரசியலிலும் தமிழக மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளிலும் இவர்கள் என்ன நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்தாலே தெரியும். அப்பட்டமான வலதுசாரிகளாகவும் கலாசார அடிப்படைவாதிகளாகவுமே இவர்கள் அங்கு இயங்குகிறார்கள். இந்த வன்முறைகள் குறித்து தமிழகத்தின் சொற்ப மனிதவுரிமையாளர்கள் கவனமெடுத்திருப்பதும் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பதும் நம்மைச் சற்று நிம்மதியடைய வைத்தாலும் இந்த வன்முறையை ஆதரித்து பலர் எழுதுவதும் பெரும்பாலானோர் மவுனம் சாதிப்பதும் அச்சத்தையூட்டுகிறது.    போர்க்கால இலக்கியங்கள் எவ்வாறு அமையவேண்டும்? செய்திகளே வரலாறாகின்றன. வரலாறுகளே இலக்கியப் புனைவுகளுக்கு ஆதாரமாகின்றன. என்பதனால்தான் இந்தக்கேள்வியையும் தங்களிடம் கேட்கின்றோம்.    எந்தவகை இலக்கியமெனினும் அது நடுவு நிலையோடு இருக்க வேண்டும். அரசியலில் நடுவு நிலைமை என்பது எந்தப் பக்கமும் சாராது இருத்தலல்ல. எந்தச் சந்தர்ப்பத்திலும் உண்மையை மறைக்காது பேசுதலே அரசியல் நடுவுநிலைமை.    செய்திகளே வரலாறாகின்றன, வரலாறே இலக்கியப் புனைவுகளிற்கு ஆதாரங்களாகின்றன என்ற உங்களது ‘பொயின்டை’ நான் விளங்கிக்கொள்கின்றேன். செய்திகளாயிருந்தாலும் வரலாறாயிருந்தாலும் அவை அவற்றைக் கட்டமைப்பவரின் பார்வைக் கோணத்திலிருந்தே கட்டமைக்கப்படுகின்றன. ஆகவே  ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு வரலாறுகள் சாத்தியமே.    எடுத்துக்காட்டாக ஒரு வரலாற்று நிகழ்வுக்கு மூன்று விதமான வரலாறுகள் வெவ்வேறு பார்வைக் கோணம் கொண்ட மூன்று தரப்புகளால் கட்டமைக்கப்படுகின்றன என வைத்துக்கொள்வோம். ஓர் இலக்கியவாதிக்கு இந்த மூன்று வரலாற்றுக் கோணங்களுமே முக்கியமானவை. இந்த வரலாறுகளின் அடிப்படையில் இலக்கியவாதியால் இன்னொரு வரலாறைக் கட்டமைக்க முடியும். அது நான்காவது வரலாற்றுக் கோணம்.  இலக்கியவாதியின் தரப்பு அது. எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட வரலாற்றை அப்படியே பிரதியெடுப்பதல்ல இலக்கியம். வரலாற்றின் நுண் அலகுகளிற்குள் ஊடுருவி வரலாற்றை மறு ஆக்கம் செய்வதே படைப்பிலக்கியம். இலக்கியத்தை  உபவரலாறு என்பார்கள்.    நீங்கள் சிறுகதை, நாவல், பத்தி எழுத்துகள்,விமர்சனங்கள் எழுதிவருபவர். ‘செங்கடல் ‘என்ற திரைப்படத்தில் தங்களது ஈடுபாட்டினையடுத்து தங்களுக்கு திரைப்படத்துறையிலும் ஈடுபாடு இருப்பதை அறிகின்றோம். இது குறித்து  சொல்லுங்கள்.    சினிமாவுக்கும் இலக்கியவாதிகளிற்குமான தொடர்பு புதுமைப்பித்தன் காலத்திலிருந்து இன்றைய எஸ். ராமகிருஷ்ணன் வரைக்கும் இருக்கிறது. இலக்கியவாதிகள் சினிமாவில் பங்கெடுப்பது மூலம் தமிழ் சினிமா ஒருபடி தன்னும் முன்னேற வேண்டும். ஆனால் சினிமாவுக்குள் நுழையும் இலக்கியவாதிகளும் வணிகச் சினிமா எனும் சகதிக்குள் மூழ்கிவிடுவதே இங்கே நடக்கிறது. முப்பது வருடங்களாக இலக்கியம் எழுதிவரும் சாரு நிவேதிதா ஒரு மகா கேவலமான திரைப்படத்தில் கண்ணிமைக்கும் நேரமே தோன்றி குத்துப் பாட்டிற்கு புட்டத்தை நெளிக்கும் அவலம்தான் இங்கே நடக்கிறது. உலகச் சினிமாவைக் கரைத்துக் குடித்ததாகச் சொல்லும் ஓர் எழுத்தாளன் இவ்வாறா சீரழிய வேண்டும் . எனக்கு அவ்வாறான ஆர்வங்கள் ஏதுமில்லை. தமிழ்ச் சினிமா இன்டஸ்ரி என்பது வெறும் சந்தை. சந்தை விதிகளே அங்கே செல்லுபடியாகும்.    ‘செங்கடல்’திரைப்படம் சந்தைப்படுத்தும் நோக்கத்தை முதன்மைப்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட திரைப்படம். வணிக நிறுவனங்களின் கட்டுகளிற்குள் நிற்காமல் சுயாதீனமாக உருவாக்கப்பட்ட சினிமா அது. அந்தத் திரைப்படத்தின் கதை நேரடியாக அரசியலைப் பேசும் கதை. இராமேஸ்வரத்திலிருக்கும் ஈழத்து அகதிகள் குறித்தும் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் குறித்தும் அந்தப் படம் பேசியது. வணிக மதிப்புள்ள அல்லது தொழில்முறை நடிகர்களைக் கொண்டல்லாமல் அகதிகளையும் மீனவர்களையும் நடிக்க வைத்து உருவாக்கப்பட்ட மக்கள் பங்கேற்புச் சினிமா ‘செங்கடல்’. அதனால் தான் அத்திரைப்பட உருவாக்கத்தில் நான் பங்கெடுத்தேன்.    தங்களது அல்லைப்பிட்டி கிராமம் பற்றி சொல்லுங்கள்? எப்போது தாயகம் திரும்புவீர்கள்?    எனது கிராமம் யாழ் நகரத்திலிருந்து  மூன்றரைக் கிலோ மீற்றர்கள் தொலைவிலிருக்கிறது. மிகவும் பின்தங்கிய தீவகக் கிராமம்.யுத்தத்தால் அல்லைப்பிட்டிக் கிராமம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மூன்று மிகப்பெரிய கூட்டுப் படுகொலைகளை எனது கிராமத்தில் இராணுவம் செய்திருக்கிறது. இப்பொழுதும் எனது கிராமம் இராணுவத்தின் கைகளிலேயே இருக்கிறது.  தாயகம் திரும்ப வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் கனன்றுகொண்டேயிருக்கிறது. எனினும் சிங்கள ஊடகவியலாளர்களே மகிந்த ராஜபக்ச அரசுக்கு அஞ்சி வெளிநாடுகளிற்குத் தப்பி ஓடி வருகையில் நான் அங்கு செல்வது எவ்வளவு சாத்தியம் என்ற கேள்வி எனக்குள் இருக்கின்றது. ஏனெனில் ஒரு சுற்றுலாப் பயணியாகாவோ அல்லது வாய் பேசாப் பிராணியாகவோ இலங்கைக்கு வர எனக்கு விருப்பமில்லை. நான் அகதியாக அய்ரோப்பாவுக்கு வருவதற்கு என்ன காரணங்களிருந்தனவோ அதே காரணங்கள் இப்போதும் நீடிக்கின்றன.    அரசின் இத்தனை ஒடுக்குமுறைகளிற்கும் கண்காணிப்புகளுக்குள்ளும்  இருந்துகொண்டு எந்த அரசியல் பின்பலமோ அமைப்புப் பலமோ இல்லாமல் உண்மைகளை எழுதிவரும் தோழர்களை நான்  மரியாதையுடன் வணங்குகிறேன்.  அவர்களை நான் தாயகத்தில் சந்திக்க வாய்ப்பிருப்பதைக் காட்டிலும் அவர்கள் என்னை அய்ரோப்பாவில் சந்திப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக நான் கருதுகிறேன்.    தங்களது கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றுபவர்களுக்கும் தங்கள் மீது பொய் அவதூறு கற்பிப்பவர்களுக்கும் பதிலடிகொடுப்பதற்காக அதிக நேரம் செலவிடுவதாகவும் அதற்காக உழைப்பதாகவும் வரும் விமர்சனங்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?    அத்தகையை விமர்சனங்களும் இத்தகையை கேள்விகளும் எப்போதும் என்மீது வைக்கப்படுகின்றன. நானும் ஒரே பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். என்மீது வீசப்படும் குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும்  ஷோபாசக்தி என்ற தனிநபர் மீது வைக்கப்படுவதில்லை. அந்த அவதூறுகள் மூலம் எனது அரசியல் நிலைப்பாடுகளையும் விமர்சனங்களையும் தாக்குவதும் திரிப்பதுமே அவதூறாளர்களது குறியாயிருக்கிறது. அதை என்னால் அமைதியாக அனுமதிக்க முடியாது தானே.    உங்களது சில கருத்துக்களிலிருந்து நீங்கள் ஒரு ட்ரொஸ்கியவாதியாகவும் இனம்காணப்படுகிறீர்கள். ட்ரொக்ஸி குறித்து பல வாதப்பிரதிவாதங்கள் அரசியல் சிந்தனையாளர்களிடமிருக்கின்றன. உங்களில் ட்ரொக்ஸியின் சிந்தனைகள் எத்தகைய தாக்கத்தை உருவாக்கின? அவரை நீங்கள் கீர்த்திமிக்கவராக கணிப்பதற்கு?    பொதுவுடமை இயக்க வரலாற்றில் கார்ல் மார்க்ஸிற்கு அடுத்ததாக கலை இலக்கியத்தின் மீது அக்கறை செலுத்திய மிகப்பெரும் ஆளுமை ட்ரொஸ்கியே. இலக்கியம் குறித்த அவரது சுதந்திரக் கோட்பாடுகள் எனக்கு இன்றும் வழிகாட்டுவன.    பொதுவுடமைத் தத்துவத்தைப் பொறுத்தவரை ட்ரொஸ்கியின் ‘நிரந்தரப் புரட்சி’ குறித்த கோட்பாடு மிக முக்கியமானது. இந்தளவுக்குத்தான் இப்போது ட்ரொஸ்கியத்தின் மீது எனக்கு ஈடுபாடுண்டு. ட்ரொஸ்கியின் எழுத்துகளையும் கடந்து வந்துதான் இன்றைய உலகமயமாதல் சூழலை அடித்தள மக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, எமது சாதியச் சூழலில் அம்பேத்கரும் பெரியார் ஈவெராவுமே அடித்தள மக்களின் விடுதலைக்கான முதன்மையான வழிகாட்டிகள் எனக் கருதுகின்றேன். நமது சமூகத்தின் ஒவ்வொரு தனிநபருக்குமான முதன்மையான சமூக அடையாளம் வர்க்க அடையாளம் கிடையாது. அந்த அடையாளம் அவரது சாதியாகவேயிருக்கிறது. எனவே சாதிய விடுதலை சாத்தியமில்லால் நமது சமூகத்தில் வேறெந்த விடுதலையும் சாத்தியமாகாது.                    17. நான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன்   வன்னிக் காடுகளின் புதல்வி தமிழ்க்கவி. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருபது வருடங்களாகப் பல்வேறு துறைகளிலும் இயங்கியவர். கடைசிவரை புலிகளுடன் களத்தில் இருந்தவர். தமிழீழ சட்டக் கல்லூரியில் கற்றுத் தேறிய சட்டவாளர். புலிகள் இயக்கத்தின்  நட்சத்திர மேடைப் பேச்சாளர். ‘புலிகளின் குரல்’ வானொலி, ‘தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி’ ஆகியவற்றில் முதன்மையான நிகழ்ச்சித் தயாரிப்பாளர். சிறுகதை, நாவல், பத்தி எழுத்து, நாட்டாரியல், நடிப்பு, இசை, ஒலி – ஒளிப்பதிவு, மொழிபெயர்ப்பு எனக் கலையின் வெவ்வேறு பரிமாணங்களையும் வசப்படுத்திக்கொண்டவர்.    இவ்வருடத்தின் தொடக்கத்தில் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ நாவலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டபோது அனைத்துலகத் தமிழ் இலக்கிய வாசகப்பரப்பிலும் தமிழ்க்கவி கவனம் பெற்றார். இறுதி யுத்தத்திற்குள் சிக்கியிருந்த மூன்று இலட்சம் மக்களது சாட்சியமாக அந்த நாவல் இருந்தது. இலங்கை அரச படைகளது இனவழிப்பையும் கொடூரங்களையும் நிணமும் தசையுமாக முன்னே வைத்த நாவல்; விடுதலைப் புலிகள் தமது சொந்த மக்களையே கொன்றொழித்ததையும் அவர்களது மனிதவுரிமை மீறல்களையும்கூட பதிவு செய்யத் தவறவில்லை. தன்னை உறுதியான தமிழ்த் தேசியவாதியாகப் பிரகடனப்படுத்தும் தமிழ்க்கவி என்ற படைப்பாளியின் நேர்மைத்திறனான சாட்சியம் அந்த நாவல்.    இராணுவத்தின் பிடியிலும் புலனாய்வாளர்களின் கண்காணிப்பிலும் கிடக்கும் வன்னி நிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்க்கவியிடம் மின்னஞ்சலூடாக நிகழ்த்திய இந்த நேர்காணலைத் தொகுக்கும்போது பதற்றமும் துயரும் என்னோடிருந்தன. தமிழ்க்கவி அம்மா வாரிப் பலிகொடுத்த அவரது மூத்த மகனுக்கும் எனக்கும் ஒரே வயது. போராட்டத்திற்காக தமிழ்க்கவியும் அவரது குடும்பமும் செய்த தியாகங்கள் மிகப்பெரிது.  கண்ட இழப்புக்களும் பட்ட வலிகளும் ஏராளம்.  அந்த வலிகளைத் தாண்டியும் திமிர்த்து நிற்கும் போராளியின் – படைப்பாளியின் நேர்காணலிது. அதேவேளையில் வன்னியின் சாமான்ய மனுஷியின் கதையுமிது.    – ஷோபாசக்தி  29.05.2014. நான் வவுனியா மாவட்டத்திலுள்ள சின்னப்புதுக்குளம் கிராமத்தில் ஒரு செத்தை வீட்டுக்குள் இரண்டாவது பெண் குழந்தையாகப் பிறந்தேன். கந்தப்பு என் தந்தை. தாயார் பெயர் லட்சுமி. என் உடன் பிறப்புகள் பதினொருவர். இப்போதும் உயிருடன் அய்ந்து சகோதரங்கள் உள்ளனர்.    என் தந்தை காடுவெட்டி, விவசாயி, வேட்டைக்காரன், கடின உழைப்பாளி. அப்பு இரண்டாம் வகுப்புப் படித்தவராம்.  அம்மா அவரிடம் எழுத வாசிக்கக் கற்றிருந்தார். அப்புவுக்கு கல்கி,கலைமகள்,ஆனந்த விகடன் இவற்றுடன் தினசரி வீரகேசரியும் வேண்டும். காலையில் தன் கொட்டப்பெட்டியிலிருந்து பத்துச்சதம் எடுத்து என்னிடம் தருவார். நான் அதை வைத்துக்கொண்டு படலைக்குள் நின்று பேப்பர்காரரிடம் ஒரு ‘வீரகேசரி’ வாங்குவேன். அதில் டார்ஸான், உதயணனின் கடற்கன்னி, கிருஷ்ணாவதாரம் என்பவற்றைப் படித்துவிட்டு அப்புவுக்காக வைத்திருப்பேன்.    ஏழுவயதிலேயே சேனைப்புலவுக்கு குரங்குக் காவல். மந்துக்காடுகளில் மாடு கலைக்க, வட்டுக்காய் குருவித்தலைப் பாகற்காய் ஆய, வற்றுக்குளத்தில் மீனுக்கு கரப்புக் குத்த, சீலைவார, ஊர்ப் பொடியளோடு கிட்டியடிக்க, மாபிளடிக்க, அப்பு பன்றிக்கு வெடிவைத்தால் நெருப்புமூட்ட, வாட்ட, மான்மரைக்கு வெடிவைத்தால் இறைச்சி விற்பனையைப் பார்க்க, காடுகளில் கதிகால் வெட்ட, அப்புவோடு காட்டுக்குப் போக என்றெல்லாம் இயங்கியவள் மேலதிகமாக ஒருமைல் தொலைவிலிருந்த பாடசாலைக்கும் போவேன். பாடசாலை விட்டு வந்ததும் சாணியள்ளி பட்டிகூட்ட, மாடுகளைச் சாய்த்துப் பட்டியடைக்க என்று முடிக்க எப்படியும் இருளும். இருண்டதும் சாப்பிட்டுவிட்டு நேரத்தோடு படுத்து நேரங் கழித்து எழுவேன். அப்பு செல்லம், அவரோடுதான் உறங்குவேன். அவரோடு காடு கரம்பையெல்லாம் திரிவேன். வேட்டைக்காடுகளில் தடயம் பார்ப்பது எல்லாம் அத்துப்படி.    என்னுடைய படிப்பை  அய்ந்தாம் வகுப்போடு நிறுத்தினார் அப்பு. “பிள்ளைக்கு எழுத வாசிக்க ஏலுந்தானே இனிக் காணும். பிலவுக்கு குரங்கு வருதம்மா விட்டா இந்த வரிச உழைப்புப் போச்சு” என்றார்.    “ஓ”என்று மகிழ்ச்சியாகத் தலையாட்டி ஏற்றுக் கொண்டேன். அதற்கு முந்தைய வருடம் அய்ந்தாம் வகுப்புக்கான அரசாங்கப் பரீட்சையில் மாகாணத்தில் முதல் மாணவியாகத் தேறியிருந்தேன். அது எனக்கும் தெரியாது, என் வீட்டுக்கும் தெரியாது. ஆனால் பாடசாலைக்கு அதற்கான விருது வந்து விட்டது. அப்போது நான் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்தியிருந்தேன். பாடசாலையிலிருந்து முத்துலிங்கம் ஆசிரியர் வந்து என் தந்தையைக் கண்டித்து மீண்டும் என்னைப் பாடசாலைக்கு இழுத்துச்சென்றார்.    நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரித்தது. அப்போது எனது படிப்பு மீண்டும் நின்று போனது. அதற்குப் பிறகு பதினான்கு வயதில் எனக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள், பதினைந்து வயதில் தாயானேன். முப்பத்தியிரண்டு வயதில் எனக்குப் பேத்தி பிறந்தாள். அது என் வாழ்வின் இருண்ட காலம். இளவயதுத் திருமணங்கள் பற்றி யாரும் பேசினாற்கூட என் உடலும் உள்ளமும் நடுங்குகின்றன .    பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான உங்களது போராட்ட வாழ்வின் ஆரம்பச் சுழிஎங்கே தொடங்குகிறது?    1956-ல் வவுனியாவில்  தமிழரசுக் கட்சியின் மாநாடு நடந்தபோது எனக்கு எட்டு வயது. அப்பு அந்த மாநாட்டு ஊர்வலங்களிலெல்லாம் என்னைத் தனது தோள் மீது ஏற்றி நடந்துசென்றார்.    ‘துப்பாக்கிக் குண்டு விளையாடும் பந்து’, ‘சிறைச்சாலை பூஞ்சோலை’  என்ற கோஷங்களிலெல்லாம் நானும் குரல் கொடுத்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து வந்த இன வன்செயலில் பாதிக்கப்பட்ட  தமிழ்மக்களை எங்களது வீட்டுக்கருகே புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கூட்டுறவுக் கட்டடத்தில்தான் கொண்டுவந்து தங்கவைத்தனர். அந்த அகதிகளைப் பராமரிக்கும் பணியில் ஊர்ப் பெரியவர்களுடன் என் தந்தையும் கலந்து கொண்டார்.  அதனால் நானும் அப்புவுடன் அங்கெல்லாம் சென்றேன். புரிந்தும் புரியாமலும் தெரிந்த அவலம் எனக்குச் சிங்களவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்தியது. சில மாதங்களுக்குள்ளாகவே அரசாங்கம் அகதிகளை அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பக் கட்டளையிட்டு நிவாரண உதவிகளை நிறுத்தியது. அநேக மக்கள் திரும்பிப் போக விரும்பவில்லை. எனவே நம் ஊரவர்கள் அந்தக் குடும்பங்களை பங்கு போட்டு தமது வீடுகளில் தங்க வைத்தனர். அந்த வகையில் எமது வீட்டுக்கு மூன்று குடும்பங்கள் வந்தன.    வீட்டோடு ஒத்தாப்பு இறக்கி ஒரு குடும்பமும், கூடத்தில் ஒரு குடும்பமும், மால் என்ற பகுதியை இரண்டாகத் தடுத்து ஒரு குடும்பமும் குடியிருத்தப்பட்டனர். அவர்களிடமிருந்து நான் கேட்ட அதிர்ச்சிதரும் கதைகள் அரசாங்கத்தின்மீது எனக்குக் கோபத்தை ஏற்படுத்தியது என்றாலும் நான் என்ன செய்யமுடியும்.. நான் சிறுமியல்லவா! 1981 – 1983 இன வன்செயல்களிலிலும்  பாதிக்கப்பட்ட மக்கள் எமது கிராமத்துக்கு இடம் பெயர்ந்து வந்தனர்.    1977-ம் வருடம் தமிழீழத்துக்கான பிரச்சாரக் கூட்டங்களில் முன்வரிசையில் இருந்தும் அரசியல் விளக்கம் கற்றோம். எமது கிராமத்தில் இவ்வகைப் பிரச்சாரக் கூட்டம் நடந்த போது மாதர் சங்கத் தலைவி என்ற முறையில் நான் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிப் பேசினேன். தொடர்ந்து வந்த இன வன்செயல்களில் எங்களது கிராமம் பாதிக்கப்படவில்லை எனினும் எமது அயற் கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சிங்களவர்களால் எமது கிராம வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. கால்நடைகள் களவாடப்பட்டன. பெரும்பாலும் உழவு செய்யும் மாடுகளைக் கடத்திச் சென்று கப்பம் வசூலித்தபின் திருப்பிக் கொடுத்தனர்.    அது குறித்து பொலிஸில் முறைப்பாடு கொடுத்தால் மாடு மேசைக்கு கறியாகப் போய் விடும். நல்ல விதைப்புக் காலத்தில் இந்தக் களவு நடப்பதால் மாடுகளை மீட்கவே விவசாயிகள் விரும்புவார்கள். இந்தக் களவுக்கு  சில தமிழர்கள் ஊருக்குள்ளேயே திருடர்களிற்கு உதவியாக இருந்தார்கள். பயிர் விளையும் தருணத்தில் சிங்கள மக்கள் ஆண்கள் – பெண்கள் – குழந்தைகளெனக் கூட்டமாகத் தமிழர்களுடைய வயல்களில் இறங்கி கதிராகவே அறுத்துக்கொண்டு போனார்கள். திருடர்களைத் துரத்திச் சென்றவர்கள் கத்தியால் குத்தப்பட்டனர். அதைப்பற்றி முறைப்பாடு செய்யப் பொலிஸ் நிலையத்திற்குப் போனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராகப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்தச் சம்பவங்களெல்லாம் இவர்களை எதிர்க்க – தட்டிக்கேட்க யாருமே இல்லையா? என்ற கொதிப்பை சினிமாப் பாணியில் என்னுள் வளர்த்தன.  எனது அரசியல் ஆர்வப்புள்ளி அங்குதான் ஆரம்பமானது. அதற்கான சந்தர்ப்பம், இயலுமை வந்தபோது நான் ஒரு குடுப்பத் தலைவியாக குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியிலிருந்தேன். அதுவும் என்னை அரசியலுக்குள் வலிந்திழுத்தது. அதுதான் விதி!    உங்களது இரு மகன்களும் புலிகள் இயக்கத்தில் இணைந்தபோதும் அவர்களதுமரணத்தின் போதும் ஒரு தாயாக எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?    எனது சின்ன மகன் பதினான்கு வயதில் இயக்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது நான் எனது இன்னொரு மகனைத் தேடி யாழ்ப்பாணத்துக்குப் பயணமாகியிருந்தேன். வாகனங்கள் எதுவும் அப்போது ஓடுவதில்லை. எனவே புலிகளின் வவுனியா மாவட்டப் பொறுப்பாளரிடம் ஒரு கடிதம் வாங்கிக்கொண்டு வன்னியின் இருண்ட காடுகள் ஊடாக சைக்கிளில் யாழ்ப்பாணத்திற்குப் பயணமானேன். ஏ-9 வீதி மக்களுக்கு மறுக்கப்பட்டு இராணுவம் அங்கே குடியிருந்தது. மாங்குளம், ஆனையிறவு இரண்டும் பெரிய முகாமகள்.  பூநகரியே கடவைப் பாதை, எனவே காட்டுவழி. எந்தப் பிரதேசத்திலும் புதியவர்கள் நடமாட முடியாது. புதியவர்களைக் கண்டால் புலிகள் பிடித்துக்கொள்வார்கள். எனவேதான் எங்கள் பகுதிப் பொறுப்பாளரிடம் கடிதம் வாங்கிச் செல்லவேண்டியிருந்தது. அப்படியிருந்தும் பாண்டியன்குளத்திலும் பிடிபட்டு, பின் யாழ்ப்பாணத்திலும் ஒருநாள் அடைபட்டேன். பெண்புலிகளிடம் என்னை இரவு ஒப்படைக்க முயன்றபோது அவர்கள்தான் என்னை மீட்டார்கள்.    தனியொரு பெண்ணாக இருண்ட வனத்தினூடாக என்மகனைத் தேடிச்சென்றேன். இந்தியப்படையின் காலத்தில் நடந்த பிள்ளைபிடியில் என் மகனை ‘ஈ.என்.டி.எல்.எவ்.’ இயக்கத்தினர் பிடித்துச் சென்றிருந்தனர். அப்போது இந்திய அமைதிப்படையோடு இயங்கிய எல்லா இயக்கங்களும் இப்படி ஏராளமான பிள்ளைகளைப் பிடித்துச் சென்றிருந்தன. பிடிக்கப்பட்ட பிள்ளைகளிற்கு இந்திய இராணுவம் கட்டாய இராணுவப் பயிற்சி கொடுத்தது. எங்கு பார்த்தாலும் பெற்றார் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாகத் திரிந்தனர். அவர்களுள்  ஒருத்தியாக நானும் திரிந்தேன்.    இந்திய இராணுவம் வெளியேறிக்கொண்டிருந்தபோது நான் என் மகனைத் தப்ப வைத்திருந்தேன். பிரபாகரன் -பிரேமதாஸ தேன்நிலவுக் காலத்தில் புலிகள் வெளியே வந்தனர். “மாற்று இயக்கங்களில் பயிற்சியெடுத்தவர்கள் யாராகயிருந்தாலும் எம்மிடம் சரணடையவேண்டும், நாங்களாகத் தேடிக் கண்டுபிடித்தால் விடமாட்டோம்” என்ற அறிவித்தலை ஒலிபெருக்கிகள் வழியே புலிகள் தெருவெங்கும் ஒலிபரப்பினார்கள். என்ன எங்கேயோ கேட்டமாதிரி இருக்கா! ஆம் ஓமந்தையில் 2009-ல் இதே வாக்கியத்தைத்தான் இராணுவத்தினரும் ஒலிபரப்பினார்கள். புலிகளின் அறிவிப்பைக் கேட்ட நான் எனது மகனை அழைத்துப்போய் புலிகளிடம் சரணடைய வைத்தேன். புலிகள் தாம் விசாரித்த பின்பு இரண்டு நாட்களில் என் மகனை என்னிடம் அனுப்புவதாகச் சொன்னார்கள். மகனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி வந்துவிட்டேன். ஆனால் பத்து மாதங்கள் கழிந்த பின்னும் மகன் திரும்பி வரவேயில்லை. புலிகளிடம் சரணடைந்த பலர் திரும்பிவரவில்லை. நான் புலிகளிடம் சென்று கேட்டபோது ‘அவன் இயக்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்தான் அதனால் அவனை யாழ்ப்பாணம் அனுப்பிவிட்டோம்’ என்றனர். நான் அவனைத் தேடி வனங்களிலும் இருளிலும் தனியாக அலைந்தேன்.    பலநாட்கள், பலமாதங்கள், பலமுகாம்கள் என அலைந்தேன். அவன் இன்னமும் இவர்களிடம் கைதியாகத்தான் இருக்கிறானோ என்ற சந்தேகமும் என்னைக் கலங்க வைத்தது. இந்நிலையில் விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்பட்ட சிலரை நான் சந்தித்து அவர்களிடம் மகனைப் பற்றிக் கேட்டேன். அவர்களில் யாரும் அவனைப் பார்த்திருக்கவில்லை. எனினும் புலிகளிடமுள்ள  சித்திரவதை முறைகள், விசாரணை முறைகள் பற்றி அவர்கள் கதைகதையாக என்னிடம் சொன்னார்கள்.    ‘கடவுளே! என்மகன் புலிகளிடம் கைதியாக இருந்தால் அவனைக் கொன்றுவிடு’ என்று கோயில் வாசலில் கிடந்து கதறினேன். ஆனால் என் மகனைப் பற்றிய செய்தி நான் புலிகள் இயக்கத்தில் இணைந்து எனக்கென ஓர் இடத்தை தக்கவைத்த பின்பே எனக்குக் கிடைத்தது. நான் இயக்கத்தில் இணைந்து பல முக்கியஸ்தர்களை அறிமுகமாக்கி, தலைவருக்கு கடிதத்துக்குமேல் கடிதம்போட்டு -அப்போது நான் ஒரு அடிமட்டப் போராளிப் பேச்சாளர்- என் மகனைத் தேடிக்கொண்டிருந்தேன். பதினான்கு வயதில் இயக்கத்துக்குப் போயிருந்த என் இன்னொரு மகன் ஆனையிறவுச் சமரில் வீரச்சாவடைந்திருந்தான். அப்போது அவனுக்கு வயது பதினாறு. அவனுடைய சாவுச்செய்தி  இரண்டு மாதம் கழித்துத்தான் என்னிடம் வந்தது. அப்போது நான் யாழ்ப்பாணத்தில் பெண்புலிகளின் முகாமொன்றிலிருந்தேன். வவுனியாவிலிருந்து மகனின் சாவுச்செய்தியைக் கொண்டுவந்தவரை  மனதை இறுக்கிக்கொண்டு வரவேற்று உபசரித்து அனுப்பியதன் பின்பு முகாம் பொறுப்பாளரிடம் மகனின் சாவுச் செய்தியைக் கொடுத்தேன். அந்தத் துக்கத்தைக் கொண்டாட என்னை வீட்டுக்கு அனுப்பினார்கள். நான் புறப்பட்டு என் மகளுடைய வீட்டுக்குப் போனேன். சிற்றூர் அவையினரும் ஊர்ப் பெண்களும் சாவீட்டுக்கு வந்தார்கள் அவர்களுக்கு பிஸ்கட், தேநீர் கொடுத்தோம். வீரமகனைப் பெற்றேன் என்ற பெருமை என்னுள் இருந்தாலும் உள்ளே மனம் குமைந்து கொட்டுப்பட்டுக் கொண்டிருந்தது. நான் வெளிப்படையாக அழவில்லை. ஆம்! துக்கம் விசாரிக்க வந்த பெண்களைக் கட்டியழ வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. மகன் எப்போது இயக்கத்துக்குப் போனானோ அப்போதே இந்த செய்தியும் எதிர்பார்த்ததுதானே.    ஆனையிறவுச் சமர் நடந்து கொண்டிருந்தபோது, நான் ‘பத்தினியார் மகிழங்குளம்’ புலிகளின் முகாமில்தான் இருந்தேன். அன்றாடம் வித்துடல்கள் வரும். இரண்டு, மூன்று, சில நாட்களில் ஆறேழு வித்துடல்கள். நித்தமும் செத்தவீடு. தினமும் சாவீடுகளிலும் இடுகாட்டில் மண்போடவுமாகத் திரிந்தோம். குறிப்பாக என் மகன் இறந்த அன்று இரு சாவீடுகளில் நான் நின்றிருக்கிறேன். ஆனால் என்மகன் ஆனையிறவிலே, அந்தக் கானல் வெளியிலே நாய்நரி கழுகுகளுக்கு இரையாகிப் போன செய்தி இரண்டு மாதங்கள் கழித்துத்தான் எனக்கு வந்திருக்கிறது.    “களத்திலே வீழ்ந்து பட்ட கணக்கற்ற புலிகளின்  பிணக்குவியலோடு சேர்ந்து நீ வரவில்லை.  நாள்முழுதும் பார்த்தழுது நான் தாங்க மாட்டேனென்றா  பூமாலை கட்டிப் பல புகழுடலில்போட்டுவிட்டாய்  போதுமம்மா கைவலிக்கும் என்றெண்ணிக் கொண்டாயா “    என என் துயரங்களை நான்கு பக்கக் கவிதையில் கொட்டி இரவு முழுதும் அழுது தீர்த்தேன்.  அப்படி அழுதாலும் மற்றவர்கள் புகழ, வீரத்தாயாக வீரத் திலகமிட்டு மகவையும் மற்றவர்களையும் போருக்கு அனுப்பிவிட்டு வீட்டிலிருந்த புறநாநூற்றுத் தாயாக நான் இராமல் நானும் தொடர்ந்து போர்ப்பணிகளில் ஈடுபட்டேன். ஏனென்றால் என்னிடம் மீதமிருந்த ஒரேமகனும் தானும் இயக்கத்துக்குப் போகப்போவதாகச் சொன்னான். ‘என்ன மசிர் வாழ்க்கை! இவங்களுக்காக இவங்களைக் காப்பாற்ற நான் எவ்வளவு துன்பமனுபவித்தேன். இவங்களுக்காகத்தானே வாழ்ந்தேன். இவங்களே போனா நான்?…இயக்கத்துக்குப் போக எனக்கும் தெரியாதா’ என்ற வீம்பு அதுவரை இயக்கத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறு ஊதியத்துக்காக வேலை செய்துகொண்டிருந்த என்னை முழுமையாக இயக்கத்திற்குப் போக வைத்தது.    இவ்வளவும் நடந்ததற்குப் பின்பாக, சற்றேறக்குறைய இரண்டு வருடங்களின் பின்பாக; நான் புலிகளிடம் சரணடைய வைத்த, நான் அல்லும் பகலும் தேடிக்கொண்டிருந்த  என்மகன் கொல்லப்பட்டான் என்று புலிகளின் தலைமைச் செயலகம் தந்த செய்தியை வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் எனக்கு அறியத்தந்தாள். நான் உடனேயே எழுந்து நின்று ‘என்மகன் கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன ?’  என்று கேட்டேன்.  ‘எனக்குத் தெரியாது, இவ்வளவு தகவலும்தான் தந்திருக்கிறார்கள், கூடவே மன்னிப்பும் கேட்டார்கள்’ என்றாள். நான் எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு மாங்குளத்திலிருந்து புறப்பட்டேன். எமது முகாம் இருந்த பத்தினியார் மகிழங்குளத்தை நோக்கி என் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன்.    என் மூன்று மகவுகளிலே ஒருவன் வீரச்சாவடைந்தான், ஒருவன் களத்திலிருக்கும் போராளி, ஒருவன் கொல்லப்பட்டான், நான் இரண்டுங்கெட்டான். புளியங்குளம் கடந்து பெருங் காட்டோரமாக மிதிவண்டியைக் கீழே போட்டுவிட்டு ஒரு பாலைமரத்தின் கீழே மல்லாந்து விழுந்தேன். தாகம் நாவை வரட்டியது, தொண்டைக்குழிக்குள் எதுவோ முள்ளுப்பத்தை போல அடைத்துக்கொண்டது. மேலே பாலைமரம் மஞ்சள் நிறமாகிப் பழுத்துக் குலுங்கிக் கிடந்தது. பறவைகள் வருவதும் போவதும் கடிபடுவதுமாகத் திரிந்தன. நான் கண்விழித்தபோது ஒரு குடிசையில் கிடந்தேன். வவுனியா மாவட்டத் தளபதி தேவன்தான் என்னை அங்கே கொண்டு வந்ததாக அந்தக் குடிசையிலிருந்த மலையகப் பெண் தெரிவித்தாள்.கொஞ்சம் நீரருந்தினேன். புறப்பட ஆயத்தமான போது ‘ஒங்கள இங்கனயே வெச்சிக்கிறச் சொன்னாங்கம்மா  அவிங்க வருவாங்களாம்’ என்றாள் அந்தப்பெண்.எனக்குள் எந்த உணர்ச்சியுமில்லை. தலை மட்டும் விறைத்துப்போயிருந்தது. கொஞ்ச நேரத்தில் ‘பிக்கப்’ வாகனம் வந்தது. அவர்கள் எனக்கு உணவு கொண்டுவந்தார்கள். நான் உண்ண மறுத்துவிட்டேன். மிதிவண்டியையும் என்னையும் ஏற்றிக்கொண்டு சென்று எமது முகாமில் இறக்கிவிட்டனர். இந்தச் செய்தியை எங்களது முகாமில் யாரும் அறிந்திருக்கவில்லை என அவர்களுடைய நடவடிக்கையிலறிந்தேன்.    அடுத்த வாரம் அறிக்கை கொண்டுசெல்லும் போராளிகளுடன் நானும் யாழ்ப்பாணம் புறப்பட்டேன். தலைமைச் செயலராக கண்ணன் இருந்தார். நான் நீதி கேட்டு மதுரைக்குச் சென்ற கண்ணகியாகியிருந்தேன். இரண்டு தினங்களில் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா வந்தார் .  “உங்களது மகன் பயிற்சிக்காக துணுக்காயில் இருந்தபோது விமானத் தாக்குதல் நடந்தது,  அவனை பயிற்சியிலிருப்போருக்கான உணவுத் தயாரிப்பில் விட்டிருந்தோம். இறந்தவர்களின் விபரங்களை உடனடியாகத் திரட்ட முடியவில்லை. வேறிடங்களையும் சரிபார்க்க வேண்டியிருந்தது, அதனால் நீங்கள் எங்களை மன்னிக்க வேண்டும்” என்றார் மாத்தையா.    அந்தக்கணத்தில் என்மனம் ஒரு நிலைக்கு வந்தது. என்னுள் இருந்த கலக்கம் விடைபெற நிதானத்துக்கு வந்தேன். இல்லாத ஒன்றுக்காக இரண்டு வருடங்களுக்கு மேலாக அலைந்ததை எண்ணிப்பார்த்தேன், அவ்வளவுதான்.    என்னைப் பொறுத்தவரை நான் உங்களுடைய இக்கேள்விக்கு சரியாகத்தான் பதிலளித்திருக்கிறேன்.    விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணையும்போது உங்களுக்கு வயதென்ன?    நான் இயக்கத்தில் இணைந்த போது எனக்கு வயது நாற்பத்து மூன்று. நான் படிப்படியாக இலக்கு வைத்தே இயக்கத்துக்குள் உள்ளிளுக்கப்பட்டேன் என்று லெப்.கேணல் நளாயினி கூறியிருக்கிறாள். அது ஒரு பெரிய கதை.    இயக்கத்தில் எத்தகைய பணிகளைச் செய்தீர்கள்?    ஆரம்பத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கமர்த்தப்பட்டேன். வைத்திய வசதியற்ற பகுதியாதலால் இரண்டு பிரசவங்களும் பார்த்தேன். பாம்பால் தீண்டப்பட்ட இருவரைக் காப்பாற்றினேன். தரப்பட்ட மருந்துகளை மக்களுக்கு வழங்கினேன். எனது வீடு பணியிடத்திலிருந்து இருபத்துநான்கு மைல்கள் தொலைவில் இருந்தது. எனவே நான் அருகிலிருந்த முகாமில் தங்கி வேலை செய்தேன். சனிக்கிழமை எனது ஊருக்கு மிதிவண்டியில் போய் ஞாயிறு மாலை திரும்பி வருவேன். மாலையில் முகாமில் போராளிகளுக்கு கல்வியில் உதவினேன். அறிக்கை தயாரிப்பதிலும் தொகுப்பதிலும் உதவினேன்.பிரதேசங்கள் பற்றியும் கடந்த கால அரசியல்பற்றியும் பேசுவோம். எனது வேலை நேரத்தில் எழுத நிறைய நேரம் கிடைத்தது.  கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதினேன். அப்போது  சர்வதேச மகளிர் தின நிகழ்வொன்று புளியங்குளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.  அதற்குத் தலைமை தாங்க ஓர் ஆசிரியையை  ஒழுங்கு செய்திருந்தார்கள். அக்காலத்தில் புலிகளுடன் இணைந்து வேலை செய்தால் வவுனியா நகரத்துக்குள் போக முடியாது. போனால் திரும்ப முடியாது.  பலர் நகரத்துக்குள் போய் நின்றுவிட்டனர். இந்த ஆசிரியையும் அப்படிப் போய்விட்டார். இறுதியாக உப்புக்குச் சப்பாணியாக  முகாமிலேயே தங்கி வேலைசெய்த என்னைத் தலைமை தாங்கக் கேட்டார்கள். நான் சரியென்று போனேன். பேச்சு.. அதுவும் பெண்ணியம் சார்ந்தது. நாங்க ‘மைக்’கப் புடிச்சா விடமாட்டமே!அன்றிலிருந்து வவுனியா மாவட்டப் பொதுக்கூட்டங்களிலெல்லாம் நானும் ஒரு கோயில் மேளமாகப் பரிணமித்தேன். அத்தோடு மேடை நாடகங்களை எழுதித் தயாரிப்பதிலும் ஈடுபட்டேன். நான் எழுதியதெல்லாம் ஒரு உரப்பையை நிறைத்து நிமிர்ந்தாலும் எதுவும் பிரசுரமாகவில்லை.    யாழ்ப்பாணத்திலிருந்து வரும் உயர்மட்டப் போராளிகள் அவற்றைக் கேட்டு வாங்கிப் படிப்பார்கள். பாராட்டுவார்கள், பின்பு என்னிடம் தந்துவிட்டுப்போவார்கள். அப்போது சுதந்திரப்பறவைகள், விடுதலைப்புலிகள், வெளிச்சம் போன்ற பத்திரிகைகள் வன்னியில் பெரிதாகக் கால்பதிக்கவில்லை.  தினசரியான ‘ஈழநாதம்’ அது வெளிவந்த மறுநாள் மாலையில்தான் எமக்குக் கிடைக்கும். பாவம் அதுவும் கிளாலிக் கடல் கடந்து வரவேண்டுமல்லவா. இவைகளுக்கு எழுதப் போதிய எழுத்தாளர்கள் யாழ்ப்பாணத்திலேயே இருந்தார்கள். அப்படித் தப்பித் தவறி மட்டு – அம்பாறை – திருமலை – வன்னி எழுத்துகள் வருமாயின் அவற்றை அந்தந்தப் பகுதி தளபதிகள் கொண்டுசென்று கொடுத்திருப்பார்கள்.    இயக்கத்தில் பயிற்சியெடுக்காத சீருடையணிந்த போராளிகள் பலரிருந்தனர்.  சீருடையணியாத போராளிகளும் இருந்தனர். ஆனையிறவுச் சமரின்போது அவசர வேலைகளுக்காக இவர்கள் களமிறக்கி விடப்பட்டனர் . உடல்களை அடக்கம் செய்ய, வீரச்சாவு வீடுகளுக்குப் போக, புதிய போராளிகளை இணைக்க, மருத்துவ நிலையங்களில் சேவையாற்ற என்றவாறாக இவர்கள் செயற்பட்டனர். இவர்கள் முகாமில் போராளிகளாகக் கணிக்கப்படவில்லை. இவர்கள் பொறுப்பாளரால் அலட்சியப்படுத்தப்பட்டார்கள். எந்த விடயத்திலும் முன்வந்து பேசவோ கருத்துச் சொல்லவோ முடியவில்லை. இத்தகைய சீர்கேடுகளைக் கண்டபின் நான் ஆயுதப் பயிற்சியெடுத்து முழுப் போராளியாக மாற முடிவு செய்தேன். தவைருக்கு எழுதிப் போட்டேன். பயிற்சி முகாமுக்குப் போனேன்.    ஆயுதப் பயிற்சி முகாம்கள் குறித்து ‘புதியதோர் உலகம்’ கோவிந்தன் எழுதியதையும் ‘கொரில்லா’ ஷோபாசக்தி எழுதியிருந்தவற்றையும் நான் அப்போது படித்திருக்கவில்லை. உண்மையிலேயே பயிற்சி முகாம் என்பது சாவதற்காகப் பயிற்சி எடுக்கும் இடமே. அங்கு நடக்கும் ஓட்டு மாட்டு , தில்லுமுல்லு, அதுஇது எல்லாவற்றையும் வென்று பயிற்சியை முடித்தேன். தாய்மை என உலகால் புகழப்படும் பெண்களை  அதிகாரம்  எப்படிப் பேய்களாக மாற்றியிருந்தது என்பதை அங்கு கண்டுகொண்டேன்.    கடின உழைப்பாளியான எனக்கு பயிற்சி ஒரு தூசு! பயிற்சிக்காலத்தில் – சொன்னால் நம்பமாட்டீங்க –  ‘லாஸ்ட் ரண் பாஸ்ட்’ என்றால் நூற்றைம்பது பேராவது என்னை விரட்டிக்கொண்டு வருவார்கள். அதேயளவில் விட்டத்தில் மந்தி போல் சுழன்று வருவேன். துப்பாக்கிப் பயிற்சியில் ‘டச்’ அடிக்கையில் ‘புல்புல்’லாகக் குறிபார்த்து அடித்து ஒரு ரைபிளைப் பரிசாகப் பெற்றேன்.    பயிற்சி முடிந்து அரசியற்துறைக்கு அனுப்பப்பட்டதும் முதல் வேலையாக அந்தத் துப்பாக்கியை எடுத்து பொறுப்பாளரிடம் கொடுத்துவிட்டேன். பிறகு  நூலகத்தில் எனக்கொரு வேலை போட்டார்கள். குடிகாரனுக்கு சாராயக்கடையில வேலைகிடைத்த மாதிரியாகிவிட்டது. வெறிகொண்டு படிக்க ஆரம்பித்தேன். லெனின், மாவோ, சே குவேரா, ஹிட்லர், ஹோசிமின், பிடல் கஸ்ரோ என எல்லோரையும் படித்தேன். படிக்கக் கூடாதவை படிக்கக் கூடியவை எதையும் விடவில்லை. மொழிபெயர்ப்புகள், விருது பெற்ற நூல்கள் முடிந்ததா.. ஆங்கில நாவல்களிலும் தாவினேன். ஆச்சரியம், அற்புதம் மிகுந்த உலகில் சஞ்சரித்தேன். யாழ் பல்கலைக் கழகத்தில் ‘இதழியல் வெளிவாரி கற்கைநெறி’யைக் கற்றேன். உளவியலையும் அதேபோல கற்றேன்.  நான் திரும்பவும் வன்னிக்கு அனுப்பப்படவில்லை. எனக்கென காத்திரமான வேலை எதுவும் தரப்படவில்லை. ஒருதடவை நானே  பொறுப்பாளரிடம் வலியச் சென்று “என்னை வீட்டுக்கு அனுப்புங்கள், இங்கே சும்மா இருப்பதைக்காட்டிலும் நான் அங்கே தோட்ட வேலைகள் செய்வேன்” என்றேன்.    அப்போதெல்லாம்  எங்காவது தாக்குதலுக்குத் திட்டமிடும்போது, தாக்குதலில் இழக்கப் போகும் போராளிகளின் வெற்றிடத்தை  நிரப்ப புதிய போராளிகளைத் திரட்டப் புலிகளின் நிர்வாகங்கள் அனைத்தும் களத்தில் இறக்கிவிடப்படும். புலிகளின் குரல், நிதர்சனம் தொலைக்காட்சி, நீதி – நிர்வாக சேவை, பொருண்மிய மேம்பாடு அமைப்பு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம்,  மாணவர் அமைப்பு, மாவீரர் பணிமணை என அனைத்துப் பிரிவுகளும் களமிறங்கும்.பெரிய பொறுப்பாளர்களுடன் இரண்டு – மூன்று பேச்சாளர்கள் பிரச்சாரத்துக்கு இறக்கிவிடப்படுவார்கள். வீதி நாடகங்கள்,  தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளி வீச்சு, ஆங்கிலப் படங்களை ஒளிபரப்புதல் எனத் தமக்குரிய வட்டங்களில் தீவிர பிரச்சாரத்தைச் செய்து இயக்கத்துக்கு ஆட்களைத் திரட்டுவார்கள். மகளிர் அமைப்பிலிருந்தும் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பேச்சாளரைக் கொடுத்தாக வேண்டும். 1993-ல் பூநகரித் தாக்குதலுக்கான திட்டம் என நினைக்கிறேன், செப்ரம்பர் மாதம் பிரச்சாரம் ஆரம்பமாகியது. மகளிர் அமைப்பு சார்பில் யாழ் வட்டம் செல்ல வேண்டியவளாக தேன்மொழி இருந்தாள். தேன்மொழி, மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகத்தின் மகள். யாழ் மாவட்ட பதில் பொறுப்பாளராக அவள் இருந்தாள். ஒக்ரோபர் 10-ம் தேதி வரயிருந்த தமிழீழ மகளிர் நாளான ‘மாலதி நினைவு தின’த்திற்கு முன் கோப்பாய் -கைதடி வீதியில், மாலதி உயிர்விட்ட இடத்தில் ஒரு நினைவுத் தூபியைக் கட்டிக் கொடுக்க வேண்டியிருந்தது. அதனால் அவளால் போக முடியவில்லை. மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளரிடம் வந்து “வேறு யாரையாவது அனுப்புங்கள் அக்கா, நான்  இரண்டு மூன்று நாட்களிற்குள் வந்திருவேன்” என்று கெஞ்சினாள். அனைவரையும் பிரித்துக் கொடுத்தாயிற்றே. இப்போது நான் மட்டுமே நூலகத்தின் புத்தகங்களோடு தனித்திருந்தேன். என்னைப் பார்த்து “போறீங்களா.. ஒரு இரண்டு நாளைக்குத்தான்..” என்று பொறுப்பாளர் கேட்டாள். சரி என்று  என் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு யாழ் வட்டச் செயலகத்திற்குச் சென்றேன். அங்கே இயக்கத்தின் மிகச் சில புத்திஜீவிகளில் ஒருவரான டொமினிக் இருந்தார். அப்போது யாழ்ப்பாணத்தில் என்னை யாருக்கும் தெரியாது.எனக்கும் எல்லோருடைய பெயர்களைத் தெரிந்திருந்தாலும் ஆட்களைத் தெரியாது. டொமினிக் நகைச்சுவையாக எதையும் நெற்றிக்கு நேரே சொல்லக் கூடியவர். என்னுடன் பேச்சாளராக அம்பாறை மாவட்ட மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் வின்சன் வந்திருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மட்டு – அம்பாறைப் போராளிகள் பின்வாங்கி வந்து யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாளில் தங்கியிருந்தனர். அப்படிப் பின்வாங்கி வந்தவர் தான் வின்சன். மிரட்சியோடு அமர்ந்திருந்தார்.    டொமினிக் வந்தார். “எங்கே மகளிர் தரப்புப் பேச்சாளர்?” என்றார்.    “அன்ரி வந்திருக்கா” என்றனர் பெண்கள். என்னை திரும்பிப் பார்த்த டொமினிக் உடனேயே “ஏன் தேன்மொழி வரவில்லை, இந்தக் கிழவியை வச்சு நான் என்ன செய்கிறது?” என்றார்.    “இரண்டு நாளைக்குத் தானாம் அண்ணை, அங்கால அக்கா வந்திடுவா” என்றாள் என்னை அழைத்து வந்தவள்.    “ரவிராஜண்ணை ஒருக்கா ரிகர்சல் பாருங்க, இதுகள் என்னக் கவுட்டுப் போடுங்கள் போல” என்றார் டொமினிக். அப்போது அவருக்கு ‘வோக்கி’ அழைப்பொன்று வந்தது. எழுந்து போய் விட்டார். நான் ஏதோ பேருக்கு பேச வேண்டிய விடயங்களைக் கூறினேன். சும்மா எப்படியாம் பேசிக் காட்டுவது!    மாலையில் நாச்சிமார் கோயிலடியில் யாழ்ப்பாணத்தின் எனது முதல் அரங்கு. எந்த அறிமுகமும் இல்லாமல் ஒலிவாங்கியைக் கையில் எடுத்தேன். இருபது நிமிடங்கள் ‘சிச்சுவேசன் ரிப்போர்ட்’ . முடிவு உங்கள் கையில் என்று விட்டு வெளியே வந்தேன். நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்… ரவிராஜ் என்னிடம் ஓடி வந்தார். “உங்களை டொமினிக் அண்ணை கூப்பிடுகிறார்” என்றார். நான் சற்று யோசித்தவாறே அவரைப் பின் தொடர்ந்தேன். ஓர் அழகிய சிவப்புக் காரின் பின் கதவைத் திறந்து “ஏறுங்கள்” என்றார். நான் உள்ளே ஏறினேன். உள்ளே டொமினிக் அமர்ந்திருந்தார். “அன்ரீ நீங்கள் ஆர் அன்ரீ.. இனி எனக்கு தேன்மொழி  வேண்டாம். உங்கள விட ஏலாது” என்றார். அன்று முதல் நான் பேச்சாளர், மக்களைக் கவர்ந்த பேச்சாளர்!    பிரச்சாரக் காலம் முடிந்தவுடன் பழையபடி புத்தகங்களுடன் கொட்டாவி விட ஆரம்பித்தேன். சோம்பல் மிகுந்தால் சும்மா யாழ் வீதிகளில் சுற்றிவருவேன். ஒருநாள் நல்லூர் வீதியால் வரும்போது வின்சனைக் கண்டேன். என்னை வரவேற்ற அவர் தனது அலுவலகத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றார். அது ‘புலிகளின் குரல்’ செயலகம். “இங்கே நான் பதில் பொறுப்பில் இருக்கிறேன் அன்ரி, நீங்கள் இவ்வளவு நன்றாகப் பேசுகிறீர்கள்.. உங்களால் எழுதவும் முடியும் கதை, நாடகம் என்று ஏதாவது எழுதித் தாருங்கள்” என்றார். நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த ஒரு சிறுகதையைக் கொடுத்தேன். அது ஒலிபரப்பாகும் நாளை எனக்கு வின்சன் கூறினார். காத்திருந்து கேட்டேன். அதுவே வெளிவந்த எனது முதற்படைப்பு. எனக்குள் ஆனந்தம் சிறகடித்தது. பின்னர் நாட்டார் பாடல் நிகழ்ச்சிக்கு உண்மையான நாட்டார் பாடலுடன் பிரதி கொடுத்தேன். மெட்டுகள் சிதைந்து விடாமல் நானே பாடினேன். ‘புலிகளின் குரல்’ ஒட்டிக் கொண்டது. வாரம் ஒரு பிரதி கொடுத்தேன். அக்காலப் போக்கில் சுதந்திரப்பறவைகளோ,ஈழநாதமோ, வெளிச்சமோ என்னை மட்டுமல்ல வெளி மாவட்டப் போராளிகளையே ஏற்கவில்லை. புலிகளின் குரல் வன்னிக்கு இடம் பெயர்ந்த பின் ‘குயிலோசை’ நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என்னை அந்த நிகழ்ச்சியை முழுமையாகத் தயாரிக்கப் பழக்கினார். ‘பறை’ என்ற பெயரில் பறை பற்றி நான் நடத்திய நிகழ்ச்சி தலைவரை எட்டியது. தலைவருடைய விருப்பத்தின்படி அந்த நிகழ்ச்சி எனது பொறுப்பில் விடப்பட்டது. நானும் அத்துறையில் படித்தும் கேட்டும் என் அறிவை விருத்தி செய்தேன். பிரச்சாரத்தின்போது அறிமுகமான நிர்வாக சேவைக்கெனப் பயிற்றப்பட்ட போராளிகள் என்னுடன் நெருங்கிப் பழகினார்கள் . ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களைச் சந்திக்கப்போவேன். அருகிலேயே கல்விக்குழுப் போராளிகள் இருந்தார்கள். அதன் பொறுப்பில் ஆர்த்தி இருந்தாள். ஆங்கில நாவல்களைத் தந்து படிக்கச் செய்தாள்.  ‘ஈவ்’ என்ற ஆங்கில நாவலைப் படித்தபோது எனக்கும் சில விடயங்களை எழுத வேண்டும் போல் இருந்தது. என் இளைய மகனை நான் பிரசவித்த தருணம் பற்றி எழுதத் தொடங்கினேன்.    நாற்பது தாள் குறிப்பேட்டில் எனக்கு வலி கண்ட இடத்தில் ஆரம்பித்தேன். அது இப்படி வளருமென்று நான் நினைத்திருக்கவில்லை. எழுதியெழுதித் தாள்கள் தீர்ந்தன. அதைக் கொண்டுபோய் ஆர்த்தியிடம்  படிக்கக் கொடுத்தேன். படித்தவள் “தொடர்ந்து எழுது மனிசி,  உன்னால ஏலும்” என்று ஊக்குவித்தாள். ஒரு நுற்றியிருபது பக்கக் குறிப்பேடும் தந்தாள் . அடுத்தநாள் தொடர்ந்தேன். மூன்று தினங்களில் குறிப்பேடு தீர்ந்தது. ஆர்த்தியிடமிருந்து பெற்று நிர்வாக சேவை மாணவிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாசித்தனர். தொடர்ந்தேன், குறிப்பேடுகளை அவர்கள்தான் வாங்கித் தந்தார்கள். சுமார் இருபத்தெட்டு நாட்களில் நாவல் முடிந்தது. கட்டிப் பெட்டியில் போட்டேன்.    வன்னியிலிருந்து நாவல் வெளிவருவது அவ்வளவு சுலபமல்ல என்பதை ‘இனி வானம் வெளிச்சிரும்’ எனக்குக் கற்றுத் தந்தது. சுமார் ஏழு வருடங்கள் பல கைகளுக்கு மாறி, பாதி அடியோடு தொலைந்ததன் பின்பாக தலைவரிடம் கொடுத்த பிரதியை அவர் பத்திரமாகத் திருப்பித் தந்தார். அதனால்தான் அது உயிர் பெற்றது.  வன்னியைச் சேர்ந்த ஒருவரே அதைப் பதிப்பித்தும் உதவினார்.  இயக்கத்தில் பிரதேச வேறுபாடுகளைப் பார்க்காத ஒரே நபர் தலைவர் மட்டும்தான். இயக்கத்திற்குள் பிரதேச வேறுபாடு பேசுவது  கடுமையான கண்டனத்துக்குரியது, ஆதலால் யாரும் அதைப் பேசமாட்டார்கள்..ஆனால் பார்ப்பார்கள்.    புத்தகத்தை வவுனியாவில்தான் வெளியிட்டோம். அது சமாதான காலம். எனது நாவலுக்கு மாகாண சபையினதும் அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினதும் முதற்பரிசு கிடைத்தது. நான் பரிசைப்  பெறச் சென்றபோது என்னுடன் யாரும் வரவில்லை.  ‘எப்படி தமிழ்க்கவி அந்தப் பரிசைப் பெறலாம்’ என்றொரு கேள்வியையும் சிலர் கேட்டனர். ஆனாலும் மேலும் சில போராளிகளின் ஆக்கங்கள் வெளியில் பரிசுகளை வென்றபோது கமுக்கமாகப் போய் பெற்றுக்கொண்டனர்.    என்னை யாரும் எழுது என்று கேட்காத போதும் நான் எழுதினேன். ‘இனி வானம் வெளிச்சிரும்’ வெளியாகிய பின்பு ‘இருள் இனி விலகும்’ என்ற நாவலை எழுதினேன். நாட்டார் இலக்கியங்களில் ஈடுபாடு ஏற்பட்டபின் நிறைய ஆய்வுகளில் ஈடுபட்டேன்.    ‘சூரியக்கதிர்’ நடவடிக்கைக்குப்பின் வன்னிக்குள் நாங்கள் வந்ததோடு யாழ்ப்பாணத்து எழுத்தாளர்களின் பங்கு குறைந்தது. வன்னி –  மட்டு – அம்பாறை – திருமலை எழுத்தாளர்கள் பத்திரிகைகளிலும்  வானொலியிலும் கால்பதித்து முன்னேறினர். நான் வானொலிக்கு எழுதிவந்தாலும் ‘குயிலோசை’ நிகழ்ச்சியை நானே தயாரிக்க வேண்டிய கட்டாயச் சூழல் உருவானது. நான் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஏராளமான இரசிகர்களைத் தேடிக்கொண்டேன். வானொலி நாடகப் போட்டியில் முதற்பரிசை வென்றேன். ஒளிவீச்சிலும் எனக்கு பதினைந்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. நா.யோகேந்திரநாதன் ‘உயிர்த்தெழுகை’ என்ற தொடர் நாடகத்தை எழுதி இயக்கினார். அதில் ‘குஞ்சாத்தை’ என்ற பாத்திரம் எனக்குக் கிடைத்தது. வன்னி வழக்குத் தமிழில் வக்கணையாகவும் பழமொழிகளுடனும்  சுயமாகப் பேசும் வாய்ப்பை அந்த நாடகம் எனக்குக் கொடுத்தது. அந்தப் பாத்திரம் என் நடிப்புக்கு பெருமளவு வரவேற்பைப் பெற்றுத்தந்தது.    மகளிர் அமைப்பினர் எனக்கென எந்த வேலையும் தரவில்லையாயினும் எனது வேலைகளில் குறுக்கிடவும் இல்லை. புலிகளின் குரலில் வாரம் மூன்று நிகழ்ச்சிகளை எழுதித் தயாரித்தேன். புதன் ‘பார்வை’ சஞ்சிகை, வியாழன் ‘தீச்சுடர்’ பெண்களுக்கான நிகழ்ச்சி, சனி  ‘குயிலோசை’ நாட்டார் பாடல்களுடனானது. இந்த நிகழ்சியொன்றைக் கேட்ட தலைவர் நிலையத்துக்கு ஒரு நேயர் கடிதம் அனுப்பியிருந்தார். குறித்த நிகழ்ச்சியைத் தான் மிகவும் ரசித்ததாகவும் அந்நிகழ்ச்சியில் பங்குகொண்டோரைப் பாராட்டிக் கவுரவிக்க விரும்புவதாகவும் எழுதியிருந்தார் . பொறுப்பாளர் அக்கடிதத்தை எல்லோருக்கும் வாசித்துக் காட்டினார். நிலையத்தில் சிலர் பாராட்டினார்கள், சிலர் வெளிப்படையாகவே “நாங்கள் இத்தனை வருடங்களாக உழைக்கிறோம் எம்மை யாரும் இப்படிப் பாராட்டவில்லையே” என அங்கலாய்த்தனர்.    நிதர்சனத்தின் புதிய பயிற்சிக் கல்லூரி ஆரம்பமானது. ஆரம்ப விழாவுக்கு நானும் போனேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் செய்வதால் அதன் நுட்பங்களை அறிய விரும்பினேன். விழாவுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் வந்திருந்தார். “நானும் ஒலி-ஒளி படிக்க விரும்புகிறேன்” என்றேன். “தாராளமாக, படிக்க விரும்பும் எவருக்கும் அனுமதியுண்டு எனத் தலைவரே கூறியுள்ளார்” என்றார்.  நான் வகுப்பில் இணைந்தேன். வானொலியில் ஒலிப்பதிவு செய்யும் நேரத்தை மாற்றி இரவில் போட்டேன். பிரதிகளை அதிகாலையிலும் மதிய உணவு நேரத்திலும் எழுதினேன்.    தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி தொடங்கியது. ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தனது நிகழ்ச்சியில் என்னை நடித்துத் தரும்படி கேட்டார். எனது முகத்தை நான் ‘கமரா’வுக்குக் காட்டுவதில்லை. சின்ன வயதிலிருந்தே எனது முக லாவண்யம் குறித்து எனக்குத் தாழ்வுணர்ச்சி உண்டு. ஆனால் அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் விடுவதாயில்லை. தயக்கத்தோடு போனேன். என்பங்கை ஒரே ‘டேக்’கில் முடித்துவிட்டேன். முதல் நிகழ்ச்சியாதலால் பார்வையாளர்களும் அதிகமாக இருந்தனர். ‘எடிட்டிங்’ முடிந்ததும் கூப்பிட்டுக் காட்டினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதன் தயாரிப்பாளர் மாரடைப்பால் இறந்து போனார். அந்த நிகழ்ச்சியைக் கைவிட விரும்பாத பொறுப்பாளர் என்னிடம் அந்த நிகழ்ச்சியைப் பொறுப்பேற்குமாறு கேட்டார். எப்போதோ நான் கற்ற ஒலி -ஒளி பாடநெறிகளின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட ‘அம்பலம் ‘ என்ற அந்த நிகழ்ச்சி எனது தயாரிப்பில் உலகம் முழுவதும் போனது. வெளிநாடுகளிலிருந்து வருவோர் என்னை ‘அம்பலம் அன்ரீ’ என அழைக்குமளவுக்கு அந்நிகழ்ச்சி பிரசித்தமானது.    முதலிரு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும்போது லைட்ஸ், வாகனம் எனக் கொண்டுவந்து  தொலைக்காட்சி நிலையத்தினர் படப்பிடிப்பில் அமர்க்களப்படுத்தினர். அதன்பிறகு பகல் வெளிச்சத்தில் ஒரேயொரு கமெராவை வைத்துக்கொண்டு  மூன்று மணித்தியாலத்துக்குள் படப்பிடிப்பை முடித்தேன். லொக்கேசனுக்கும் அலையவில்லை. வேலியடைப்பு, சூடடிப்பு, பணியாரச்சூடு, கூரை வேய்தல், வேலிச்சண்டை,  வைக்கோற்கத்தைக் கட்டு, அரிவுவெட்டு என மண்வாசனையைக் கலந்து விட்டேன் .போட்டி, பொறாமை, இடையீடு,கேலி,எச்சரிக்கை எல்லாம் உள்ளிருந்தே வந்தன . அவற்றை எனது உழைப்பால் கடந்தேன்    ஒருகட்டத்தில் ‘புலிகளின் குரல்’ நிறுவனத்தில் பொறுப்பாளருடைய உறவினர்கள் ஊதியம் பெறும் ஊழியர்களாக வந்து சேர்ந்தனர். அவர்கள் என்னைப் போதியளவு அவமானப்படுத்தத் தவறவில்லை. அதுகுறித்து நான் பொறுப்பாளருக்கு அறிவித்தும் பயனில்லை. எனது ஒன்பது வருட ‘புலிகளின் குரல்’ சேவையைத் தூக்கிப் போட்டுவிட்டு வெளியே வந்துவிட்டேன். அய்ந்து வருடங்கள் அந்த எல்லைக்கே போகவில்லை. என்னை யாரும் கட்டுப்படுத்தவில்லை. கட்டளையிடவுமில்லை. நான் இயக்கத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் அவர்கள் கேட்ட வேலைகளைச் செய்து கொடுத்தேன். எனது தன்மானத்துக்கு இழுக்கு வரும்போது விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.    தமிழீழ சட்டக் கல்லூரி, வெளிவாரி கற்கைநெறியை ஆரம்பித்தது. கட்டணம்தான். நான் அரசியற்துறை நிதிப் பொறுப்பாளரிடம் போய், சட்டம் படிக்க அய்நூறு ரூபா கேட்டேன். அவன் “நானும் சட்டம் படிக்கிறேன் எனக்கும் சேர்த்துக்கட்டு” என்று ஆயிரம் ரூபா தந்தான். மாதக் கட்டணம் ஆயிரத்து அய்நூறு ரூபா தந்தார்கள். இடையிடையே சண்டை, சமர், இடப்பெயர்வு எல்லாம் கடந்து அய்ந்து ஆண்டுகள் தமிழீழ சட்டக் கல்லூரியில் கற்று சிறப்புத் தேர்ச்சி பெற்று சட்டவாளராக வெளியே வந்தேன்.    மகளிர் அமைப்பினர் என்னை எட்டி நின்றே பார்த்தனர். எனது வேலைகள் எனது விருப்பப்படி நடந்தாலும் செலவுகளை சு.ப.தமிழ்ச்செல்வனின் நிதிப்பிரிவே செய்தது. நான் கேட்டதெல்லாம் வாங்கித் தந்தார்கள். மின்சாரமில்லாத ஊரில் எனக்கு மின்சாரம் போட்டுக்கூடத் தந்தார்கள் எரிமலை, புலிகளின் குரல், ஐ.பி.சி, உலகத் தமிழர், ஈழமுரசு, சுதந்திரப்பறவைகள், நாற்று, தெகல்கா போன்ற பத்திரிகைகளில் எனது ஆக்கங்களோ பேட்டிகளோ வந்தன. சிலவற்றில் தொடர்களும் வந்தன. ஈழநாதம் எனக்கொரு பத்தியை ஒதுக்கியது. ‘காரசாரம்’ என்ற பெயரில் இயக்கத்தின் பலதுறைப் பொறுப்பாளர்களுக்கு மறைமுகமாகச் சூடு வைக்கவும் மக்களுடைய பிரச்சனைகளை வெளியே கொண்டுவரவும் முடிந்தது. நான் யாருக்கும் அஞ்சவில்லை! தலைவர் எனக்கு ஆதரவாக நின்றார்! சம்பந்தப்பட்டவர்களுக்கு கூட்டங்களுக்கு அழைப்பும் அறிவுறுத்தல்களும் போனதையும் அறிவேன். ‘தமிழ்க்கவி அன்ரியா.. அவ அறிஞ்சா பேப்பரில வரும் கவனம்’ என்ற கருத்து பொதுவாக நிலவியது. மக்களுக்கு எதிராக இயக்கப் பொறுப்பாளர்கள் அநீதி இழைத்தபோதெல்லாம் அதைத் தலைவர்வரை கொண்டுசென்று தீர்வு பெற்றுக் கொடுத்திருக்கிறேன். அது இன்றைக்கும் எனக்குப் பெருமையாக உள்ளது. அதே மரியாதையுடன இன்றும் என்னை மக்கள் நடத்துகிறார்கள்.    கிளிநொச்சியில் கணினி கற்கை நெறியை ஒரு நிறுவனம் 2007-ல் ஆரம்பித்தது. மாதம் மூவாயிரத்து அய்நூறு ரூபா நிதிப்பொறுப்பாளரிடம் வாங்கிக்கொண்டு போய் கட்டிப் படித்தேன். எனக்கு இயக்கத்தில் குடும்பக் கொடுப்பனவு இல்லை. உதவிப்பணமாக நாலாயிரம் ரூபா தருவார்கள். இயக்கத்தில் என்ன பணி செய்தீர்கள் என்றால் இதுதான் பதில். இதெல்லாம் பணியா என்பதில் எனக்கொரு சந்தேகமுமுண்டு.    ஒரு படைப்பாளியாக சுயமாகத் தடைகளற்று இயங்குவதற்கு உங்களது இயக்க வாழ்வுசாதகமாக இருந்ததா?    சுதந்திரமாக எல்லாவற்றையும் எழுத முடியவில்லை.போராளியல்லாதவர்களாலும்தான் சுதந்திரமாக எல்லாவற்றையும் எழுத முடியவில்லை. நான் என் எண்ணத்துக்கு வெளிப் பத்திரிகைகளுக்கு  எழுத முடியாது,எழுதக்கூடாது. எல்லா வெளிப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் எமக்குத் தடை. சினிமாப் படங்கள் முற்றாகத் தடையிலிருந்தன. சினிமாப் பாடல்களைத் திருமணமாகாத போராளிகள் கேட்கக்கூடாது. எல்லாப் பத்திரிகைகளையும் படிக்கப் பாக்கியம் கிடைத்தவர்கள் ஊடகத்துறைப் பொறுப்பாளர்களே. ஏனைய துறைப் பொறுப்பாளர்களுக்கும் சிலது வரும். உங்களுக்குத் தெரியுமோ ‘கொரில்லா’ என்ற நாவலை ஒரு பொறுப்பாளருக்காகக் காத்திருக்கையில் அவருடைய மேசையிலிருந்து எடுத்து திருட்டுத்தனமாகத்தான் படித்தேன்.    கட்டையில் நீண்ட கயிறுகொண்டு பிணைக்கப்பட்ட மாடுகள் கயிறு எட்டும் வரை சுற்றிச் சுற்றி மேய்வது போல குண்டுச்சட்டிக்குள் குதிரையோடினோம். களமுனைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும், மக்களை யுத்தத்தை நோக்கியே வைத்திருக்கவும் எழுதினோம். சுதந்திரமடைந்த நாடுகள் பற்றியும் களமுனைகளில் எமது போராளிகள் நிகழ்த்திய சாதனைகள் பற்றியும் எழுதினோம். அவையும் தணிக்கை என்ற பெயரில் உயிர்நிலை கிள்ளப்படாமல் வெளியே வரவேண்டுமே என்ற திகிலில் எப்போதும் இருப்போம். எழுத்துத்துறையின் ஆரம்ப அறிவேயின்றி, வாசிப்புப் பழக்கமேயில்லாதவர்கள் எனது பிரதியை தணிக்கை செய்வதை என்னால் தாங்கவே முடிவதில்லை. இது எல்லா ஊடகத்துறைகளிலும் இருந்தது. சில இடங்களில் எனது பிரதியை நிராகரித்துவிட்டு அதிலிருந்து தகவல்களைத் திருடி தனது நிகழ்ச்சில் சேர்த்த தணிக்கையாளர்களை அப்படியே விட முடியாமல் நிகழ்ச்சியையே இடைநிறுத்திவிட்டு தலைவர் மட்டத்தில் விசாரணைக்குப் போட்டிருக்கிறேன். அதில் வெற்றியும் பெற்றேன். என்பிரதியில் எனது சம்மதமின்றி எந்தத் திருத்தமும் செய்வதில்லை என்ற வாக்குறுதியையும் பெற்றிருந்தேன்.    குருதி, கல்லறை, ஆயுதம்,வீரச்சாவு,எதிரி, பதுங்குகுழி, களம், பொருளாதாரத்தடை, அரச பயங்கரவாதம், போராளி, இலக்கு, ஈகம்,கையிலேந்திய கருவி.. இவற்றில் ஒன்றோ பலதோ இல்லாமல் கதையில்லை கட்டுரையில்லை கவிதையில்லை! நாங்களும் அதற்குள்தான் எழுதினோம். கொஞ்சம் மிகையாகப் பெண்ணியமும் பேசினோம். நான் இன்னும் கொஞ்சம் மேலே போய் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளையும் எழுதினேன். இவற்றைக் கடந்து இருந்த யதார்த்தம் எமக்குப் புரியாமலில்லை. ஆனாலும் செக்கு மாடுகள்போலச் சுற்றிச் சுற்றி வந்தோம்.    புலிகள் இயக்கத்தில் இருந்த சக படைப்பாளிகளுடனான உங்களது உறவுஎப்படியிருந்தது?    படைப்பாளிகள் என்னை மிக மரியாதையுடன் அணுகினார்கள். என்னுடைய எழுத்து நடையும் மொழி நடையும் பாரம்பரிய பேச்சு வழக்குகளைக் கொண்ட தனித்துவமானது. அதை யாராலும் வசப்படுத்த முடியவில்லை. எனது பார்வையும் நான் தேர்ந்தெடுக்கும் விடயங்களும் வேறு கோணங்களில் இருந்தன. அதனால் என்னை எல்லோரும் வியந்தனர். யோசனை கேட்பார்கள். சுதந்திரப்பறவையில் எனக்கொரு பத்தி ஒதுக்குமளவுக்கு மனம் மாறினார்கள். ‘நாற்று’ என்ற சஞ்சிகையில் ‘பெண்களும் சட்டமும்’ என்ற பகுதியை தொடர்ந்து எழுதினேன். ஒருபோதும் அவர்கள் என்னோடு முரண்பட்டதில்லை. சிலவேளைகளில் வேடிக்கை செய்வார்கள். “அன்ரி தாறுமாறாகக் குத்தி எழுதுகிறாய், கவனம் மாட்டப் போகிறாய்” என்பார்கள்  . புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான உங்களது அனுபவங்களை எங்களுடன்பகிர்ந்துகொள்வீர்களா?    1991-ம் வருடம் நான் தலைவரை முதன் முதலில் பார்த்தேன். முதலாவது மகளிர் மாநாடு யாழ்ப்பாணம் வின்சர் தியேட்டரில் நடந்து முடிய எம்மில் இருபது பேர்கள் தலைவரைச் சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டோம். வல்வெட்டித்துறையின் ஒரு வீட்டு விறாந்தையில் அச் சந்திப்பு நிகழ்ந்தது. தலைவருக்கு மிக அருகில் எனக்கு இருக்கை கிடைத்தது. மூன்று தினங்களும் மாநாட்டில் நடந்த நிகழ்ச்சிகளை தலைவர் ஒளிநாடாவில் பார்த்திருந்தார். எம்மை அழைத்துச் சென்றவர்கள் தேவையற்ற வகையில் பேச வேண்டாம் என எம்மிடம் கூறியே கூட்டிச் சென்றிருந்தனர். இயக்க முகாமும் எனக்குப் புதிது. மகாராஜாக்கள் பாணியிலான பாதுகாப்பு ஒழுங்குகள் சற்றே பயத்தை ஏற்படுத்தினாலும்,  மாத்தையா தலைவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார் என்ற வதந்தி இந்திய இராணுவத்தால் பரப்பப்பட்டு அதை நம்பியும் நம்பாமலும் மக்கள் இருந்த காலமது. புன்னகையோடு இரு மெய்ப் பாதுகாவலர்களுடன் வந்து எம்முன்னே  கைக்கெட்டும் தொலைவில் தலைவர் அமர்ந்த அந்தக் காட்சி இன்னும் என் கண்களை விட்டு அகலவில்லை. “பிறகு …சொல்லுங்கோ…” என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் – நாம் சொல்ல நினைத்த எல்லாவற்றையும் – அவரே சொல்லி முடித்தார். பத்து நிமிடங்கள்தான் சந்திப்பு எனக் கூறியிருந்தனர். ஆனால் சுமார் ஒரு மணி நேரம் பேசினோம். தனித்தனிப் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டு விடைபெற்றபோது எம்மை இயக்கத்தில் இணைந்துகொள்ளும்படி தலைவர் கேட்டுக்கொண்டார். ஆனால் நாங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டோம்.    நான்கு வருடங்களின் பின்பாக ‘புலிகளின் குரல்’ ஆண்டு விழாவில் அவரிடமிருந்து பரிசு பெற்றேன். ஒரு வருடத்துக்குள் நாட்டாரியல் சார்ந்த ஒரு ஆக்கத்துக்காக மீண்டும் அவரிடமிருந்து ஒரு விருது கிடைத்தது. அவர் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளில் பார்வையாளராக இருந்தேன் .    எனது வளர்ச்சி இயக்கத்திற்குள் பலருக்குப் பிடிக்கவில்லை என்பது அவர்களது நடவடிக்கைகளில் தெரிந்தது. மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு முக்கிய சந்திப்பு நடந்தது. இது நிகழ்ச்சி பற்றிய ஆலோசனைக் கூட்டம்தான். தலைவர் பங்கு கொண்டிருந்தார் . ஆனால் என்னை  இந்தக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. மகளிர் அணியில் நான் முக்கிய பங்காற்றும் நிதர்சனப் பிரிவினர் முழுமையாகச் சென்றிருந்தனர். அரசியற்துறை மகளிரும் சென்றிருந்தனர். நான் இந்த இரண்டு அணியிலும் இல்லாமலாக்கப்பட்டேன். எனக்கு அசாத்தியக் கோபம்தான். பழிவாங்கக் காத்திருந்தேன். இயக்கப் போராளிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் வேலையை தலைமைச் செயலகம் செய்துகொண்டிருந்தது. அனைவரையும் பதிவு செய்த பின்பு எனது பெயர் விட்டுப் போயிருந்ததால் தலைமைச் செயலகத்தினர், என்னை அழைத்துவரும்படி அரசியற்துறையிடம் கேட்டனர். ஒரு போராளி என்னிடம் வந்தாள். நான் வீட்டிலிருந்துதானே வேலை செய்தேன். வீட்டுக்கு வந்தாள். நான் முகாமுக்குப் போனேன். வந்திருந்த தலைமைச் செயலகத்தினர் கேள்விக் கொத்தின்படி எந்தப்பிரிவு என்று கேட்டனர். நானும் ‘அரசியற்துறை மகளிர் பிரிவு’ என்றேன். அவள் ‘மகளிர் பிரிவு’ என்று எழுதினாள். நான் அதில் ஒப்பமிட மறுத்து விட்டேன். பிரச்சினை தலைவரிடம் போனது. நான் எனது தரப்பு நியாயத்தைச் சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு என்னை சு.ப.தமிழ்ச்செல்வனுக்குக் கீழ் பதிவு செய்யும்படி கூறிவிட்டார் .    தலைவரிடம் நான் அளப்பரிய மரியாதை வைத்திருந்தேன், வைத்திருக்கிறேன், வைத்திருப்பேன். வெறும் வாயை மெல்லுவோர் கூறுவது போல அவர் தன்னிச்சையாக ஒருபோதும் முடிவுகளை எடுப்பவரல்ல. அவர் ஒரு மத்திய குழுவை வைத்திருந்தார். முக்கியமான முடிவுகளைக் கலந்து ஆலோசித்தே எடுத்தார். எனக்கு நன்கு தெரியும்… ஒருவருக்கு மரணதண்டனை வழங்குவது பற்றி அவர் தனியே முடிவு எடுப்பதில்லை. எல்லாப் பொறுப்பாளர்களும் கூடிய சபையில் பிரச்சினை பேசப்பட்டு என்ன தண்டனை வழங்கலாம் என்று கேட்கப்பட்டு பெரும்பான்மையினரின் முடிவே தீர்ப்பாகியது. இயக்கத்தின் ஆரம்ப காதலர்களை சுட்டுக்கொல்வதாக முடிவெடுத்த பெண்கள் அது பற்றிப் பெருமையாகப் பேசியதை நான் அருகிலிருந்து கேட்டிருக்கிறேன். பின்நாளில் அந்தப் பெண்களும் காதலித்தே திருமணம் செய்தார்கள். தலைவர் காதலித்த போது அவருக்கெதிராக முடிவெடுக்க யாராலும் முடியவில்லை. அதனால்தான் இயக்கத்தில் காதல் வாழ்ந்தது.    எந்தப் பிரச்சினைக்கும் குழுவாக முடிவு எடுத்துவிட்டு ‘தலைவர் முடிவெடுத்தார்’ என்பதுதான் இயக்கத்தின் பொதுவான வழக்கு.    ஒரு பிரச்சினையில் ஒரு நல்ல முடிவை சிறுபிள்ளை எடுத்திருந்தால்கூட அதைத் தலைவர் வரவேற்பார். இது நான் கண்ட உண்மை. ஒருதடவை, பாலியல் வன்புணர்வுக்காக நீதிமன்றம் ஒருவனுக்கு மரண தண்டனை வழங்கியது. அந்த விசாரணைக் கோப்பு நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்வதற்காகத் தலைவரிடம் போனது. அந்த கேஸ் விபரங்களை முற்றாகப் படிக்கிற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அதை வாசித்தபின், சம்பவங்களிலுள்ள முரண்பாடுகளின்படி அங்கே ஒரு குற்றம் நடந்திருக்கவில்லை எனத் தனிப்பட தலைவருக்கு ஒரு கடிதத்தை எழுதி அவருடைய கைக்குக் கிடைக்கும்படி அனுப்பினேன். அதன்பின் சில நாட்களில் அந்த இளைஞன் விடுவிக்கப்பட்டான்.  வேறுகோணத்தில் வழக்கு விசாரணை மாற்றப்பட்டது .    புலிகளின் குரலில் நான் நடத்திய பிரதான நிகழ்ச்சியான ‘குயிலோசை’ நிகழ்ச்சியை நேரமுள்ள போதேல்லாம் தலைவர் கேட்பார். ஒரு நிகழ்ச்சியைப் பாராட்டி நிலையத்துக்கு நேயர் கடிதம் எழுதியிருந்தார். சில நாட்களின் பின் அந்நிகழ்ச்சியில் பங்குகொண்ட அனைவருக்கும் பரிசு வழங்கினார். என்னையும் அப்பாடலைப் பாடிய தவமலரையும் தனியே அழைத்து உரையாடினார். அப்போது எனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் தான் தவறவிடுவதேயில்லை என மனம் திறந்து சொன்னார். ஒரு முறை ‘ரீடர்ஸ் டைஜஸ்டி’ல் வந்த ஒரு சீனக்கதையை  மொழி பெயர்த்து ஒலிபரப்பினேன். மூன்று வாரங்கள் தொடராக வந்தது. ஒவ்வொரு வாரமும் அதை விடாமல் கேட்டது மட்டுமன்றி அந்த வாரம் நடந்த பொறுப்பாளர்களுக்கான கூட்டத்திலும் அது குறித்துப் பாராட்டிப் பேசினாராம். ‘புலிகளின் குரல்’ பொறுப்பாளர்  அதன்பிறகே அதன் ஒலிபரப்பை போட்டுக் கேட்டார்.    தனது ஒவ்வொரு போராளிமீதும் எவ்வளவு கண்டிப்பை வைத்திருந்தாரோ அவ்வளவு கரிசனையும் கவனமும் வைத்திருப்பார். ஒரு கூட்டத்தில் எமது தளபதி விதுசாவிடம் “ஏன் பிள்ளைகளுக்கு தலைக்கு எண்ணெய் இல்லையா? முகத்தை அலம்பி நல்ல ஆடைகளை அணிவதில்லையா? நான் பிள்ளைகளை வீதியில் பார்க்கும்போது வாட்டமாகப் போகிறார்கள், களமுனைகளில் நின்றால் பரவாயில்லை அங்கு இவற்றை செய்ய முடியாது, மக்களிடையே நிற்பவர்கள், திரிபவர்கள் கவனமாக இருக்க வேண்டாமா” என்றார்.    என்னிடம் “இந்தப் பாரம்பரியக் கலைகளை பெரிய அளவில் தயாரித்து ஆவணப்படுத்துங்கள் என்ன செலவானாலும் பரவாயில்லை” என்றார். அவர் அப்பால் போனதும் அவற்றை நிறைவேற்ற வேண்டிய துறைப் பொறுப்பாளர்கள் அசட்டையாக விட்டுவிடுவார்கள். வெளிப்பூச்சுக்கு தலைவருடைய ஆணையை உடனே செய்வதாகக் கூறுவார்கள். இதை நான் பலமுறை, பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன், கேட்டுமிருக்கிறேன். உயர்மட்டப் போராளிகள்  சிலர் தலைவருடைய கொள்கைக்கு மாறாக நடப்பதை அஞ்சாமல் சுட்டிக் காட்டியுமிருக்கிறேன். மிகச்சில விசுவாசிகள் தலைவரிடும் ஆணைக்கு தம்முயிர் கொடுத்துமிருக்கிறார்கள்.    “குமரிமுதல் இமயம்வரை  கொடிநாட்டிப் புகழ் கண்ட  கொற்றவர் கண்ட தமிழின்  நற்றவம்தான் எங்கள் நலமான வளமான  வல்வை நகர் தந்த வீரன்.  தலைவனிடும் ஆணைக்குத் தளராது களமாடி  தலைசிதறும் வீரமறவர் உளமார தம்மோடு  உணர்வாகக் கொண்டதோ தமிழீழமென்ற கனவு…”    என்று கவிதையெழுதி அதைக் கவியரங்கில் வாசித்திருக்கிறேன். இதன்பிறகே ஈழநாதத்தில் பத்தியெழுதும் பணி கிடைத்தது. 1997-ல் யாழ்ப்பாணம் சென்ற ‘பிஸ்டல்’ குழுவினருக்கு  கிறிஸ்துமஸ் விழாவுக்காக நாடகம் பழக்கினேன். அப்போது என் இரண்டாவது நாவலுக்காக அவர்களுடனேயே தங்கியிருந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். கரும்புலிகளின் ஆண் – பெண் குழுவினரும் நிகழ்ச்சிகளைக் கொண்டுவந்திருந்தார்கள்.    முக்கிய தளபதிகளுடன் தலைவர் முன்வரிசையில் அமர்ந்திருந்தார். எனது நிகழ்ச்சியை நாட்டுக் கூத்துப் பாணியில் அமைத்திருந்தேன். கருப்பொருள் தற்காலத்துக்கானது. பாத்திரமேற்றவர்களும் சிறப்பாகவே செய்தார்கள்.  ஆயினுமென்ன! அது சில பெண்போராளிகளைக் கவரவில்லை. நான் மேடையைவிட்டு இறங்கி வரும்போது முகத்தைக் கடுப்பாக்கி வைத்துக்கொண்ட போராளியொருத்தி “அண்ணைக்குப் போடுற நிகழ்ச்சியே உது? ச்சீக்.. பட்டிக்காடுமாதிரி” என்றாள். நான் இடிந்து போனேன். தலை குனிந்தவாறே போய் முன்வரிசையில் தரையில் அமர்ந்திருந்த போராளிகளுடன் அமர்ந்தேன். நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. அப்போது தணிகைச்செல்வியிடம் விதுசா “நிகழ்ச்சிய முதல் போட்டுப் பாக்கயில்லையா ? உவளவை என்ன பாத்தவளவை?” எனக் கண்டித்ததும் எனது நிகழ்ச்சி பற்றித்தான். அவள் அப்பால் நகர்ந்ததும் என்னருகே வந்த தணிகைச்செல்வி “விடு அன்ரீ கவலைப்படாதை, உங்களுக்குத் திருப்திதானே” என்று ஆறுதல்கூற, பெண்களை விலக்கிக்கொண்டு உள்ளே வந்த  அரசியற்துறை பதில் பொறுப்பாளர் தங்கன் “எங்கே ? தமிழ்க்கவி அன்ரி எங்கே” என்றவாறே வர நான் முன்னே சென்றேன் “அன்ரீ வாங்க அண்ணை கூட்டிவரட்டாம்” என்றான். நான் அவனைத் தொடர்ந்தேன், வெளியே ஒரு தென்னை மரத்தடியில் தலைவர் நின்றார் . “வணக்கம்” என்றார் நான் பதிலுக்கு “வணக்கம்” என்றேன் . “எனக்கு நல்லாப் பிடிச்சுது அக்கா உங்கட நிகழ்ச்சி. இப்பிடித்தான் எங்கட நிகழ்ச்சியள் இருக்கோணும். எங்கட பாரம்பரியங்கள விட்டிட்டு …என்ன கலை.  நவீன நாடகங்கள்ள பூடகமாகக் கருத்துச் சொல்லுறது சரியா இருக்கலாம், ஆனா இப்ப உள்ள நிலையில உதையெல்லாம் ஆர் குந்தியிருந்து யோசிக்கப்போறாங்கள். கருத்தை முகத்தில அறையிற மாதிரிச் சொன்னியள் நல்ல கரு”  என்று ஆரம்பித்து  நீண்ட நேரம் அது பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். மண்டபம் உணவுக்காகத் தயார் செய்யப்பட்டபின் வந்து கூப்பிட்டார்கள். தலைவர் என்னிடம் “அக்கா பன்னெண்டு மணியாகுது சாப்பிடுவம் வாங்க” என்றார். நான் தொடர்ந்தேன். பிள்ளைகளுக்கு மத்தியில் தலைவருக்கான மேசை இருந்தது. என்னையும் தன்னோடு அமரும்படி கேட்டுக்கொண்டார். அவருடன் அமர்ந்தேன். இந்த சமபந்தி போஜனம் பல தளபதிகளுக்குக் கூட வாய்த்ததில்லை. நான் யார்? என்னால் அவருக்கு ஆகப்போவது என்ன? அந்தஸ்துப் பாராது, யாரிடமிருந்தாலும் திறமைகளை ஊக்குவிக்கும் அவரது பண்பு எனக்குப் பிடித்தது.    அதன் பிறகு மேலும் இரு தடவைகள் அவரிடம் எனது பாடலுக்காகவும் எழுத்துக்காகவும் பரிசு பெற்றேன். அவ் வருடத்துடன் மகளிர் அரசியல் துறையினரின் பொறுப்பாளர் மாற்றம் நடந்தது. இடையிடையே பெரும் சமர்களும் நடந்தன. எனக்கும் பரப்புரை, நிகழ்ச்சித் தயாரிப்புகள் எனப் பணிகள் அதிகரித்தன. முள்ளியவளையில் இருந்து வட்டக்கச்சிக்கு ஒரு பேட்டி எடுப்பதற்காக மிதிவண்டியில் சென்று விட்டு திரும்பும்போது களைப்பினால் ஒரு மர நிழலில் நின்றேன். அப்போது கேணல் சங்கருடன் அவ்வழியே வந்த தலைவர் “எங்கத்தையால?” என்றார். நான் “வட்டக்கச்சிக்கு” என்றேன். “மிதிவண்டியிலா” என்றுவிட்டுப் போனார். ஒரு வாரத்தின் பின்பாக தமிழ்ச்செல்வன் என்னை அழைத்து “அக்கா மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரியுமா…” என்றார். தெரியும் என்றேன். அரதப்பழசான ‘எக்கணேபர்’ உந்துருளியைத் தந்தார். அதை வைத்துக்கொண்டு அவிவேக பூரண குருவும் சீடர்களும் குதிரையோடு மாரடித்த மாதிரி படாத பாடெல்லாம் பட்டு இயலாத இடத்தில் போட்டு விட்டு வந்துவிடுவேன். பின்னர் ஒரு நல்ல ‘எம்.டி. நைன்ரி’ உந்துருளி கிடைத்தது. முழங்காவில் தொடக்கம் முல்லைத்தீவு வரை வட்டக்கண்டல் தொடக்கம் தாளையடி வரை ஓடியோடி வேலை செய்தேன். அதை வட்டுவாகல்வரை கொண்டு வந்தேன்.    இந்த நிலையில், இயக்கத்தில் இருந்த என் மகனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். இதன்பின் என் சம்பந்தி அவர்களுடைய வீட்டுக்கு நான் அடிக்கடி போக வேண்டிய சந்தர்ப்பங்களும் தலைவரின் மனைவியார் மதிவதனியுடனான நெருக்கமும் ஏற்பட்டது. எல்லாத் தளபதிகளின் மனைவியருடனும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் எனது நிகழ்ச்சிகள் பெரிய மட்டங்களில் இரசிக்கப்படுவதையும், தலைவர் எல்லோரிடமும் அதைக் கேட்டீர்களா? இதைப் பார்த்தீர்களா? என வினவுவதையும் அறிந்தேன். அநேகமாக ஈழநாதம் பத்தியான ‘காரசாரம்’ ஏதாவது ஒரு துறையைக் கிண்டல் செய்துவிடும். அது அவர்களைத்தான் என்று என்னிடம் பேச முடியாதபடி மக்களை மையப்படுத்தி எழுதிவிடுவேன். இப்படி கிளிநொச்சி வைத்தியசாலைக் கட்டடம் பற்றி நான் எழுதிய ஆக்கம் வெளிவந்த மறுநாள் மதிவதனி என்னிடம் “சிரித்ததில் ஆளுக்கு புரையேறிவிட்டது” என்றார்.    நான் தலைவருடன் முரண்பட்ட சம்பவங்களும் உண்டு. நேருக்கு நேர் வாதத்திலும் ஈடுபட்டு மற்றப் போராளிகளிடம் திட்டும் வாங்கியிருக்கிறேன். ஆனால் அவர் சிறுபிள்ளை போல வாதித்துவிட்டு பின்பு புன்னகையோடு இருந்துவிடுவார். “ஆற்ற துறையப்பா எப்பிடிச் சமாளிக்கிறியள்?” என்று வேடிக்கையாகக் கூறுவார். வெளியிலே அவரைப்பற்றி ஏற்படுத்தப்பட்டிருந்தது பெரும் மாயை என்றும் அது சரியல்ல என்றும் கூறுவார். ஒரு பாடலில் ‘முருகனுக்கே அவன் நிகரானவன்’ என்ற வரி இடம் பெற்றிருந்தது. தலைவர் மிகுந்த வேதனையுடன் ‘இதெல்லாம் என்ன பேத்தல், இந்தப் பாடலை ஒலிபரப்ப வேண்டாம்’ என்றார்.  யார் கேட்டார்கள்! எந்த ஒலிநாடாவிலும் அவரைப்பற்றி ஒரு பாடல் கட்டாயம் போட்டார்கள். அவரிடமிருந்தது புகழ்ச்சிக்கு மயங்கும் குணம் என்ற பிரமை எனக்கும் உண்டு. அவர் காதலித்த பின்பாக காதல் சரி என்றது போல,  அரசனுக்குப் பின் இளவரசன் என்ற கொள்கையும், முன் வழுக்கையை மறைக்க அவர் தொப்பி அணியவேண்டி இருந்தபோது அனைத்துப் போராளிகளுக்கும் தொப்பி சீருடையின் ஒரு பகுதியானது எனவும் நான் நினைக்கிறேன். அவரும் சாதாரண மனிதர்தானே.    அவரை நாத்திகர் என்று சொல்வதுண்டு. அவர் எல்லா மதங்களையும் சமமாகப் பார்த்தார். மக்களிடையே போராளிகள் மதம் சார்ந்து அடையாளப்படுத்தப்படக் கூடாது என்றார். ஒருதடவை, போராளிகள் கோயில்களுக்குச் செல்வதைத் தடை செய்ய வேண்டும் எனப் பொதுக்குழுவில் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது “இது நடைமுறைச் சாத்தியமாகாது” எனத் தலைவர் கூறினார். ஆனால் பலர் உறுதியாக நின்றதால் போராளிகளை இப்படி ஒரு வாக்குறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வைப்பதாக முடிவெடுத்தனர். ஆனால் நான் அவையிலேயே மறுத்துவிட்டேன்.  ஏன் மறுக்கிறீர்கள்? எனக் கேட்டார் ஒருவர். “எனக்கு பிரபாகரனை எழுபத்தேழாம் ஆண்டுக்குப் பின்தான் தெரியும், பிள்ளையாரை பிறந்ததிலிருந்தே தெரியுமே” என்றேன். அந்த ஒப்பந்தத்தில் நானும் புதுவை இரத்தினதுரையும் ஒப்பமிடவில்லை.    இறுதிக் காலத்தில் தலைவர் தப்பிச் செல்ல பல சந்தர்ப்பங்கள் இருந்தபோதும், மக்களுக்கு நடப்பதே எனக்கும் என்று களத்திலேயே நின்றவர் அவர். ‘வெற்றி அல்லது வீர மரணம்’  என்ற அவருடை வீரம் போற்றப்பட வேண்டியதுதான். இப்படி ஒரு தலைவரின் கீழ் நின்றோம் என்பதில் எனக்குப் பெருமைதான். அவர் எல்லோரும் நினைப்பது போல தெய்வமில்லை. ஆசாபாசங்களுள்ள சராசரி மனித குணங்களுடன் கூடிய வீரன். அவ்வளவுதான்!  புலிகளது போராட்டம் வெற்றி பெறும் என்ற உங்களது நம்பிக்கை எப்போது தகர்ந்தது?    புலிகள் போரிட்டு நாட்டைப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. இது ஒரு வெல்லப்பட முடியாத யுத்தம் என்பதை  நான் இயக்கத்தில் இணைவதற்கு முன்பே என்னால் உணர முடிந்தது. தலைவரே ஒரு தடவை “நாம் இப்படித் தாக்குதல்களைச் செய்து நாட்டை அடையமுடியாது. அது ஒரு பேச்சுவார்த்தையில் தான் முடியும். நமது தாக்குதல்கள் மூலம் ஒரு நெருக்கடியை அரசாங்கத்துக்குக் கொடுத்து அதைப் பேச்சுவார்த்தைக்கு இழுப்பதே எனது நோக்கம்” என்றார்.    நீங்களே நினைத்துப் பாருங்கள்.. ஒட்டுமொத்தத் தமிழர்களில் ஈழத்தில் இருந்தவர்கள் அனைவரும் போரிட முன்வரவில்லை. போருக்கான நிதியைக்கூடப் பலவந்தமாகத்தான் திரட்ட முடிந்தது. போராளிகள் பலரது உறவினர்கள்  அநேகமாக வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். பொருளாதார வசதியற்றவர்களே நாட்டில் இருந்தனர். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். வல்வெட்டியில் என் சகோதரி இருந்தாள். அவளிற்கு இளந்தாரிப் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் வீட்டிற்கு மிக அருகே திலீபன் நினைவு உண்ணாவிரதப் பந்தல் போடப்பட்டிருந்தது. அங்கே மத்தியானப் பொழுதுக்கான பேச்சாளராக நான் போயிருந்தேன். நேரமிருந்ததால் என் சகோதரி வீட்டுக்கும் போனேன். அங்கே பிள்ளைகள் விளையாடப் புறப்பட்டார்கள். “ஏன் இங்கே திலீபன் நிகழ்வு நடக்குதே, இவங்கள் போக மாட்டாங்களா ?” என்று கேட்டேன். “சீக்.. அதுக்க நாலு பதினெட்டுச் சாதியும் வந்திருக்கும் இவங்கள் போமாட்டாங்கள்” என்றாள் சகோதரி. அந்தக் கிராமத்தின் மேட்டுக்குடிகள் எவரும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. என்றாலும்  நடந்த போரைக் காரணம் சொல்லி -பயன்படுத்தி – அவர்கள் இன்று வெளிநாடுகளில் வசதியாக வாழ்கிறார்கள். ஆக ஏராளமான மக்கள் புலிகளின் ஆட்சியை விரும்பவில்லை என்பது கண்கூடு.    ‘சூரியக்கதிர்’ நடவடிக்கையின்போது நான் மானிப்பாயில் நின்றிருந்தேன். மானிப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு போன்ற பகுதிகளிலிருந்த மக்கள் புலிகளோடு வெளியேற முனையவில்லை. அவர்களது விருப்பத்துக்கு மாறாகவே தென்மராட்சி நோக்கித் திருப்பி விடப்பட்டனர். சில யாழ்ப்பாண வர்த்தகர்கள் தமது கடைப் பொருட்களை சுழிபுரம், சண்டிலிப்பாய் நோக்கி நகர்த்தினர்.  இருந்துமென்ன அவர்கள் அனைவரும் வலிந்து தென்மராட்சிக்கு இயக்கத்தால் திருப்பிவிடப்பட்டனர். அப்போது, புலிகளுக்கு மக்கள் அனைவரும் தம்முடன் வந்து விட்டார்கள் என்ற பிரச்சாரத்துக்கு அது உதவினாலும் தென்மராட்சியிலிருந்து மக்கள் வடமராட்சி நோக்கி நகர்ந்த போது நிலைமை மாற்றமடைந்தது. இலவசப் படகுச் சேவை வழங்கி, மக்களை வன்னிக்கு நகர்த்த பெரும் பரப்புரை செய்யவேண்டியதாயிற்று. போராளிக் குடும்பங்களும் ஆதரவாளர்களும் தாமாக முன்வந்து வன்னிக்கு நகர்ந்தனர். இப்படியே வெளியே போய்விடலாம் என்ற குறிக்கோளுடன் நகர்ந்தவர்களும் உண்டு. ஏதோ ஒரு இக்கட்டு, இராணுவத்தைப் பற்றிய பயம் இவைதான் புலிகளைச் சகித்துக்கொண்டிருக்க வைத்தது. மேலும் தேசப்பற்றும் யார் குத்தியாவது அரிசியாக வேண்டுமென்ற நப்பாசையும் புலிகள்மீது மக்கள் நம்பிக்கை வைக்கக் காரணங்களாக அமைந்தன.    ஆயினும் வெளியே தெரிந்த புலிகளின் பிரமாண்ட பிம்பம்போல உள்ளே நிலைமைகள் இருக்கவில்லை. இவர்கள் வெல்லப்போவதில்லை. சாண் ஏற முழம் சறுக்கும் நிலையே இருந்தது. தலைவருடன் முன்னரங்கக் காவல் நிலைகளில் சாவை எதிர்பார்த்து எதிரிக்காகக் காத்து நின்றவர்களை மட்டுமே போராளிகள் எனக் கருத முடிந்தது. அதேவேளையில் இயக்கத்தின் உள்ளே அதிகாரப்போட்டி, பொறாமை ,தகடுவைத்தல் (கோள்சொல்லுதல்), காத்து இறக்குதல் (பதவி பறிப்பது), அதிகாரமுள்ளவருக்கு யாரையாவது பிடிக்காது போனால்  பிடிக்காதவரை முன்னரங்கக் காவல் நிலைக்கு அனுப்புவது எனப் பல சீர்கேடுகள் நிறைந்து கிடந்தன.    சக போராளிகளைக் குறித்துக் கேலி பேசினார்கள். அழகிய, படித்த, வேலைபார்க்கும் மனைவியையே தேடினார்கள். போராளிகள் சாதி பார்க்கக் கூடாது என்பதெல்லாம் போதனைக்கு மட்டுமே. கல்யாணத்திற்குத் தாலியும் கூறையும் வாங்கிய பின்பும் சாதியால் தடைப்பட்ட போராளிகளின் திருமணங்கள் உண்டு. இவற்றுக்கெல்லாம் இயக்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. “நான் சாதி பாக்கேல்ல …அதுக்காக ஆகவும் அடியில பாத்திடாதையுங்கோ” என்றவர்களும் முப்பத்தைந்து வயது கடந்தும் பதினெட்டு வயதுப் பெண் தேடியவர்களும் இயக்கத்தின் பெரும் தலைகளே. இவர்களை வைத்துக்கொண்டா சமதர்ம தமிழீழம் உருவாக்க முடியும்! தமக்கெனச் சொத்துச் சேர்க்கவும் தனிப்பட்ட வாழ்க்கையை வளப்படுத்தவும் அலைந்தோர் அதிகம்.    இவர்களிடையே அப்பழுக்கற்ற தியாக சிந்தையுடன் தமது சொத்துகளையும் இயக்கத்தில் கொண்டுவந்து போட்டுவிட்டு, திருமணமும் செய்யாமல் வீரச்சாவடைந்தவர்களும் இருக்கவே செய்தார்கள். ஆக எல்லாம் தேசப்பற்றில் நடக்கவுமில்லை. தேசப்பற்றில்லாமல் நடக்கவுமில்லை.  1991-ல் விடுதலைப் புலிகள் வசம் ஒரு பெரு நிலப்பரப்பு வந்தது எப்படி? போரிட்டு வென்றதா என்ன! இந்திய இராணுவத்தின் பிடி விலகியபோது பிரேமதாஸவுடனான  சங்காத்தத்தில் கிடைத்த பரிசு அது. இக்காலப் பகுதியில் ஒட்டுமொத்தத் தமிழர்களும் இவர்களுடைய கைகளில் போடப்பட்டனர். அழிக்க முடியாத கறை படிந்த வரலாற்றைப் புலிகள் உருவாக்கினர். இவர்கள் நமது பொது எதிரியைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை. தமது சொந்த இனத்தை அழிப்பதில் மும்முரமாக இயங்கினர். அது சிங்கள அரசை மகிழ்விக்கவும் இருந்திருக்கலாம். இந்தியப் படையின் துணையுடன் பலவந்தமாகப் பிடித்துச்செல்லப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்கள்  புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பொதுமன்னிப்புத் தருவோம் என்ற வாக்குறுதியுடன் கொண்டு செல்லப்பட்ட இளைஞர்களும் கொல்லப்பட்டனர். மற்றைய இயக்கங்கள் நாட்டை விட்டோடிவிட அந்த இயக்கங்களின் ஆதரவாளர்கள் என ஏராளமானவர்கள் ஆண்கள் – பெண்கள் என்ற பேதங்களின்றிப் புலிகளால் கொல்லப்பட்டனர்.    இதெல்லாம் கடந்து இவர்கள் போரிட்டு வென்ற சிறு நிலங்களைக்கூட வெகு நாட்களுக்கு இவர்களால் தக்க வைக்க முடியவில்லை. நான்கு லட்சம் மக்கள் வாழ்ந்த யாழ்ப்பாணத்தை வெறும் நாற்பதாயிரம் இராணுவத்தினரே தக்க வைத்திருந்தனர். பின் எப்படி இவர்கள் வெல்வார்கள் என நம்பலாம். நான் ஐம்பத்தைந்து வருடங்களாக நிகழ்வுகளை அலசிக்கொண்டிருப்பவள். நான் சிறுபிள்ளையில்லையே. ஒரு கட்டத்துக்குப்பின் பல முடிவுகளைத் தப்புத் தப்பாகவே புலிகள் எடுத்தனர்.”அதெல்லாம் இறுதி முடிவு தலைவர்தான்” என்பார்கள். ஆனால் அவர் எந்த முடிவையும் தனியாக எடுப்பதில்லை என்பது பலருக்கும் தெரியும். அவருக்கே இந்த நம்பிக்கை இல்லை. நடந்த போராட்டம் எங்கள் இருப்புக்காக மட்டுமே.    இறுதி யுத்தத்தின் போக்கு மாற்றப்படலாம் , அமெரிக்கக் கப்பல் வரும், இந்தியாவில்ஏற்படும் ஆட்சி மாற்றம் போரில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்றெல்லாம் அப்போதுவன்னியில் நிலவிய நம்பிக்கைகளை நீங்களும் கொண்டிருந்தீர்களா?    இல்லை! அது ரொம்ப சின்ன பிள்ளைத்தனமான நம்பிக்கை. அது எப்படிங்க, அமெரிக்கா தனக்கு இம்மியளவும் நன்மை பெற முடியாத தமிழீழ மண்ணுக்காக மூச்சுவிடும். இந்தியாவில் உள்ள தமிழர்களே எத்தனையோ விதமாக ஒடுக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் நகரங்கள் கேரள, கர்னாடக , வடநாட்டார்களின் முதலீடுகளில் நிரம்பிக்கிடக்கின்றன. தண்ணீருக்காகவும், மின்சாரத்திற்காகவும் தமிழக மக்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமா என்ன! போதாததற்கு மீனவர் பிரச்சினை வேறு. ‘தன்ரை குண்டி அம்மணமாம், தங்கச்சி குண்டிக்கு பச்சைவடம் கேக்குதாம்’ என்றொரு பழமொழி உண்டு. இலங்கைத் தமிழருக்காக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் ஒற்றைத் துரும்புகூட அனுதாபத்தோடு அசைவதில்லை. ஈழத் தமிழர்களான நாங்கள் அவர்களுக்கு வர்த்தகமும் அரசியலும் கலையும் வளர்க்க உதவுகிறோம். அவ்வளவுதான். நீண்டகாலமாக தமிழகத்து அகதி முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களது நிலை பற்றி நான் அறிவேன். அங்கிருந்து கள்ளதோணிகளில்  மீண்டும் இலங்கைக்குள் வந்த மக்களை நான் அப்போதே சந்தித்துப் பேசியிருக்கிறேன். சில ஆக்கங்களைக் கூட நான் எழுதினேன். ஆனால் எழுதியதைப் பிரசுரிக்கக் கொடுத்தபோது “நாங்கள் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கிறோம், இந்த நிலையில் இதைப் பிரசுரிக்கக் கூடது” என மறுத்துவிட்டனர். இலவு காத்த கிளியாக நான் இல்லை. எனக்கு அந்த நம்பிக்கையிருக்கவில்லை.    புலிகள், ஆயுதங்களை மவுனிப்பதாகச் சொல்லி தங்களது சரணடைவை அறிவித்த போதுஉங்களது மனநிலை எப்படியிருந்தது. போராளிகளது கூட்டு இலட்சியம் தகர்ந்ததருணமல்லவா?    புலிகள் சரணடைவதற்கான ஏற்பாடுகள் முள்ளிவாய்க்கால் கடந்துதான் செய்யப்பட்டன.  திரு.பா.நடேசனிடமோ, புலித்தேவனிடமோ மீதமுள்ள புலிகளின் தொகையோ,பட்டியலோ இல்லை. அப்படியொன்றைத் தயாரிக்க அவர்கள் முனைந்தாலும் அது உயிருடன் இருந்த முக்கியமானவர்களை மட்டுமே அடக்கியிருக்கும். ‘புலிகள் அனைவரும் வந்து அலுவலகத்தில் பதிவு செய்யுங்கள்’ என ஒலிபெருக்கியில் அறிவித்தாலும் அப்படியான அலுவலகம் எதுவுமிருக்கவில்லை. புலிகள் ஒன்றுகூடவும் முடியவில்லை.    நான் பிள்ளைகளுடன் வட்டுவாகல் வந்தேன். அவர்களுடனேயே ஓமந்தை வந்தேன். ஓமந்தையில் ஆயிரக்கணக்கானவர்கள் அறிவித்தல் மூலம் பிரிக்கப்பட்டனர். ‘இயக்க உறுப்பினர்கள் – ஒருநாள் இருந்தவரோ பல ஆண்டுகள் இருந்தவரோ – பதிவு செய்துவிட்டுப் போங்கள். யாராவது பதிவு செய்யாமல் மக்களுடன் சென்று அங்கிருந்து நாம் பிடித்தால் நீங்கள் கைதி. நீங்களாகப் பதிவு செய்தால் பொதுமன்னிப்பு வழங்குவோம்’ என அறிவித்தனர். என்னை நன்கு தெரிந்த போராளிகளே இராணுவத் தரப்பில் நின்று இதனை அறிவித்தனர். அவர்களில் ஒருவன் என்னிடம் வந்து “ஆரோடை வந்தனீங்கள் அன்ரி?” என்றான். “நான் பிள்ளையோடை வந்தனான்” என்றேன்.போராளிகள் பதிவுக்காக ஒரு புறமும் பொதுமக்கள் பதிவுக்காக ஒரு புறமுமிருந்தது. இயக்கத்தில் சம்பளத்துக்கு வேலை செய்தோருக்கும் போராளிக் குடும்பங்களிற்கும் பதிவு செய்யத் தனிப் பகுதிகள். என்னை அழைத்தவனுடைய பெயர் சுரேஷ். பழைய போராளி. என்னையும் என்னுடன் இருந்த காயமடைந்த போராளிகளையும் பதிவு செய்யும் இடத்திற்குக் கூட்டிக்கொண்டு போனான். எனக்கு முன்பே ஏராளமான போராளிகள் அங்கிருந்தனர்.நாம் வாயால் சொன்ன விபரங்களை எழுதினார்கள். நிழற்படங்கள் எடுத்தனர். பின்னர் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பினர். வேறெந்தப் பிரச்சினையுமில்லை. மனநிலை வெறுமையாக இருந்தது. அவ்வளவுதான்.  ‘ஊழிக்காலம்‘ நாவலுக்கு இலங்கையில் எவ்வகையான வரவேற்பு இருக்கிறது?    ‘ஊழிக்காலம்’ இங்கு வெளியிடப்படவில்லை. மிகச் சில நண்பர்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவந்தனர். வன்னியில் சம்பவத்துள் இருந்து வந்தவர்கள் நால்வர் படித்துவிட்டு, ” ஒவ்வொரு சம்பவத்துக்கும் பிறகு இதுதான் வருமென்று தெரிகிறதே,  நடந்தது எதையும் தவறவிடாமல் எழுதி இருக்கிறீங்க.. மற்றும்படி ‘திறில்’ இல்லை” என்றனர். சம்பவத்தில் சம்பந்தப்படாத ஒருவர் ஒரு பிரதியை இரவல் வாங்கிக்கொண்டு சென்றார். அதை நான்கு நண்பர்கள் படித்தனர். பன்னிரெண்டு கிலோ மீற்றர்கள் தொலைவிலிருந்து மிதிவண்டியில் வந்து பாராட்டினார்கள். கட்டாயம் செய்யவேண்டிய வரலாற்றுக் கடமை என்றார்கள். என்னை கண்டதிலேயே பரவசப்பட்டார்கள். சிங்கள அன்பர் ஒருவர் வாங்கிச் சென்றார். தான் மிகவும் ஆறுதலாக வாசித்ததாகவும் தாங்கமுடியவில்லை என்றும் சொன்னார். இதை மொழிபெயர்க்க கொடுக்கலாமா என்றும் கேட்டார்.  என்னை முன்னமே தெரிந்தவர்தான். சாதாரணமாகப் பழகியவர். இப்போது மிகுந்த மரியாதை கொடுக்கிறார். எனக்கு அது இடைஞ்சலாயிருக்கிறது என்றாலும் கேட்பதாயில்லை. அவர் ஒரு புலனாய்வாளர் கூட. நான் ஒரு பத்துப் புத்தகங்கள்தான் இந்தியாவிலிருந்து கொண்டுவந்தேன். வெளியிடும் அல்லது அறிமுகம் செய்யும் அளவுக்கு என்னிடம் பணபலம் இல்லை.    இராணுவக் கட்டுபாட்டுப் பகுதிக்கு தப்பி செல்ல முயன்ற மக்களை புலிகள் சுட்டுக்கொன்றது, புலிகள் பலவந்தமாக சிறுவர்களை இயக்கத்துக்குப் பிடித்துச் சென்றதுகுறித்தெல்லாம் நீங்கள் விபரமாக எழுதியிருப்பது தமிழ்த் தேசியத் தரப்புகளிடம்உங்களுக்கு கடுமையான விமர்சனத்தைப் பெற்றுத் தந்திருக்குமல்லவா?    உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடேலாது. மூன்றரை இலட்சம்  மக்களைச் சாட்சியாக வைத்து நடந்தவைகளை நான் எழுதுகிறேன். அதில் பொய்யாக ஒரு சொல் எழுத முடியுமா? அல்லது நடந்தவற்றைத் திரித்துத்தான் எழுத முடியுமா? இன்னுமொரு காலம் இதுபோன்ற போராட்டம் வரும். அந்தக் காலத்தில் எதுவெல்லாம் மக்களிடமிருந்து புலிகளைப் பிரித்தது என்பதை வருங்காலச் சந்ததி அறிய வேண்டும் என நான் நினைத்தேன். ‘மக்கள் கடல் போன்றவர்கள், அதில் வாழும் மீன்கள் போன்றவர்கள் புலிகள்’  எனத் தலைவர் வாக்கு ஒன்றிருக்கிறது. இரவல்தான்,  இது சீன விடுதலைப் போர்க் காலத்தே மாவோ சொன்னது. பிறகு எப்படி இந்தக் கடல் மாறியது. சந்திக்குச் சந்தி இராணுவம் நின்றபோது பத்துப் பதினைந்து இளைஞர்களோடு தொடங்கின இயக்கம்தானே. அப்போது காப்பாற்றிய மக்கள் ஏன் இப்போது இயக்கத்தை எதிர்க்கத் தொடங்கினார்கள்? இதை நான் எனது நாவலில் விசாரணை செய்கின்றேன்.    நமது வெற்றிகளையே கொண்டாடிப் பழகியவர்கள், தமது தவறுகளைச் சுட்டி காட்டியவர்களை இயக்கத்தை விட்டே துரத்தியவர்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்கிறீர்களா? என்னுடைய மனநினையில் இன்னும் ஏராளமான போராளிகள் இருக்கின்றனர் என்பதும், அவர்கள் இதைத் தம்மால் செய்ய முடியவில்லை என அங்கலாய்த்தனர் என்பதும் உண்மை. எதிர்ப்பு என் வீட்டிலேயே கிளம்பியது.”இயக்கத்தில் இருந்த நீ இதை எப்படி எழுதலாம்” என்று கதையில் நாயகனாய் வரும் என் பேரன் தினேஸ் கேட்டான். பழைய தளபதிகளின் மனைவிகள் கேட்டனர். இவர்களுக்கு எல்லாம் நான் அளித்த பதில்: “நான் இயக்கமாக இருந்துதான் எழுதுகிறேன்.”    இன்னமும் எனக்கு எனது சந்ததி சுதந்திரமாக வாழவேண்டும் என்ற நப்பாசை உண்டு. காரணமேயில்லாமல் இதை எழுதவில்லை. இது என்னுடைய கடமை. நான் தமிழ்த் தேசியத்தை நேசித்த -நேசிக்கும்- நேசிக்கவுள்ள எழுத்தாளர். எழுத்தும் பேச்சும் எனக்குக் கைவரப் பெற்றதே  மொழியையும் நாட்டையும் உணரவும் உணர்த்தவும்தான். எதிர்ப்பு இல்லாமல் எதுவுமில்லைத் தானே.    நீங்கள் நாவலில், புலிகள் இழைத்ததாகக் குறிப்பிடும் கொடுமைகளை அவர்கள் முன்பும்இழைத்தனர். கட்டாய ஆள்சேர்ப்பு வன்னியில் 2009-க்கு முன்னும் நடந்தது. அப்போதுநீங்கள் அமைப்பில்தானே இருந்தீர்கள்?    ஒரு குடிகாரத் தந்தை தன் பெண்ணை இன்னொரு குடிகாரனுக்குக் கட்டிவைத்து விட்டான். இங்கேயும் கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியைத் துன்புறுத்துகிறான், அடிக்கிறான். ஆனாலும் உடை, உணவு என்பவற்றையும் அன்பையும் கொடுக்கவே செய்கிறான். அவள் அடிவாங்கி அழும்போது பக்கத்து வீட்டுக்காரர்கள் தாங்க முடியாமல் ‘நீ உன் அம்மா வீட்டுக்குப் போய்விடு’ என்கிறார்கள். அம்மா வீடு இவளுக்கு இதை விடப் பெரிய கொலைக்களம்.  எப்படிப் போவாள்? வேறெங்காவது கடல் கடந்தும் போக முடியாது. முழுதாக ஆயிரம் ரூபாவைக்கூட கண்ணால் பார்க்க முடியாதவள் இலட்சக்கணக்கில் கொடுக்க எங்கே போவது? போதாததற்கு பிள்ளைகள் வேறு. அந்தப் பெண் ஆயுள் தண்டனையை ஏற்க வேண்டியதுதான்.    நான் அமைப்பில் விரும்பித்தான் சேர்ந்தேன். மறுபடியும் கழற்றிக்கொள்ள முடியாமல் நன்கு மாட்டிக்கொண்டேன். புலிகளின் மட்டு – அம்பாறை பகுதிதான் முதலில் கட்டாய ஆட்சேர்ப்பை 2003-2004 காலப்பகுதியில் செய்தது. வன்னியில் 2006-ன் பிற்பகுதியில் வீட்டுக்கொருவர் கட்டாயம் எனவும், இயக்கத்திலிருந்து விலகியவர்கள் கட்டாயமாக மீண்டும் இணைக்கப்பட்டதும் நடந்தது.  இயக்கத்திலிருந்து விலகக் கடிதம் கொடுத்து, தண்டனைக் காலம் இரண்டு வருடங்கள் முடிந்து வீட்டுக்குப் போனவர்கள் வர விரும்பவில்லை. அவர்களைக் காவற்துறையினர் வேட்டையாடிப் பிடித்தனர். அகப்பட்டவர்கள் கைதிகள் போல் ட்ரக்குகளில் ஏற்றப்பட்டு மணலாற்று காட்டுப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வீதியில் இந்த ட்ரக்குகளில் பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் கொண்டு செல்லப்படும்போது அழுதுகொண்டே செல்வார்கள். அப்போதெல்லாம் என் மனம் அழியும். போனவர்கள் போராட வேண்டுமல்லவா.. அவர்களை ஆற்றுப்படுத்த, பேசிச் சரிக்கட்ட என்னை அழைத்துப் போனார்கள். ‘இக்கட்டான சூழல்,  பயிற்சி எடுத்தவர்கள் கூடிக்  கைகொடுத்தால் தானே வெல்ல முடியும்’ என்று பலவாறு பேசினாலும் அவர்கள் என்னைக் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. பின்பு அவர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டு பலர் தப்பியோடினார்கள். பலர் கொல்லப்பட்டனர். புதியவர்களோடு பழைய போராளிகள் ஒட்டவேயில்லை. நாங்கள் இதை மூன்று வகையாகக் கூறுவோம். ஒன்று முதல் ஒன்பதாம் பயிற்சி அணிவரை  ‘கீழ்ப்படிவு – உத்தரவிற்குப் பணிதல்’குழு. பத்து முதல் பதினெட்டாவது பயிற்சி அணிவரை ‘நீ சொல்லு நான் விரும்பினால் செய்வன்’ குழு. பதினெட்டாவது பயிற்சி அணிக்கு மேல் ‘நீ யார் சொல்லுறது? நான் யார் கேட்கிறது?’ குழு.    2006 – 2007ல் இந்தப் பிரச்சாரப் பிரிவில் என்னையும் ஒரு அணியில் போட்டிருந்தாலும் நான் போகவில்லை. தமிழ்ச்செல்வன் கூப்பிட்டுக் கேட்டார். “அதுதான் கட்டாயமாக்கிற்றீங்களே..  போய்ப் பிடிக்கிற இடங்களில அடியும் நடக்குது. நம்மால முடியாது சாமி. அப்பிடிப் போகத்தான் வேணும் எண்டால் எழுதவோ நிகழ்ச்சிகள் செய்யவோ முடியாது” என்றேன். அப்போது என்னை விட்டு விட்டார்கள். மீண்டும் ஒரு தடவை  அப்படி என்னைக் கேட்டபோது “நீங்கள் வேண்டாம் அன்ரி நாங்களே செய்கிறோம்” என்று குழுத் தலைவனே மறுத்துவிட்டான். தலைவருடைய கட்டளைக்கு மாறாக நடக்கத் தொடங்கியிருந்தனர். நான் நின்றால் நடக்கும் அநீதிகள் உடனுக்குடன் நேரடி ஒலிபரப்பாகிவிடும் என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது.    ஒரு வீட்டில் உழைக்கும் பிள்ளை அதுதான் என்றிருந்தால் எடுக்க வேண்டாம்,  ஒரே பிள்ளை வேண்டாம், வீட்டுக்கு ஒரே ஆண்பிள்ளை மற்றது எல்லாம் பெண்பிள்ளை என்றால் வேண்டாம்,  வீட்டுக்கு ஒரே பெண் அடுத்ததெல்லாம் ஆண் என்றால் வேண்டாம், பதினாறு வயது நிரம்பியிருக்க வேண்டும், போராளி – மாவீரர் குடும்பங்களில் பிடிக்க வேண்டாம் என்றெல்லாம் கட்டளைகள் இருந்தன. இதை யார் கடைப்பிடித்தார்கள்.. எவருமில்லை! நாங்கள் மதிவதனி , திருமதிகள் சிலர் கூடிப் பேசி வேதனைப்படத்தான் முடிந்தது. ஒரு போராளி புதிய போராளியாக இணைந்த பெண்ணொருவரை பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்றும் பிடிபட்டது. எனினும் அவன் சிறு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டான். காரணம், பிள்ளை பிடியில் அவனை மிஞ்ச ஆளில்லை என்பதாகும். ஈற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் மக்கள் அவனைக் கொன்றனர்.  அவனுக்கு லெப்.கேணல் விருது கூட வழங்கப்பட்டது.  இப்படி நிறையச் சம்பவங்களுண்டு.    மக்களை விடத் தாங்கள் உயர்வானவர்கள், மக்களை விடவும் அதிகாரமும் சலுகையும்படைத்தவர்கள் என்ற எண்ணம் புலிகளிடம் இருந்ததாகக் கருதுகிறீர்களா?    தமக்கென ஒரு பெரு நிலப்பரப்பு, அதிகாரம், பதவி,  வரி வசூலிக்கும் இறை, சொத்துகளைக் கையகப்படுத்தும்  அதிகாரம், நீதி வழங்கும் அதிகாரம், காவற்துறை, ஆயுதப்படை எல்லாவற்றையும் கொண்டு தம் மக்களின் வெளியுலகத் தொடர்புகளைக் கட்டுப்படுத்தி, கடவுச்சீட்டு நடைமுறையைக் கொண்டு வெளிப் பயணங்களையும் கட்டுப்படுத்தி, வர்த்தக மேலாண்மையையும் தமக்குள் வைத்துக்கொண்டு அரச அதிகாரிகளையும் தம் கட்டுக்குள் வைத்துக்கொண்டிருந்த புலிகள் மக்களை விட மேலானவர்கள் தானே. என்னதான் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட காவற்துறை, நீதிமன்றம் என்பவை இருந்தாலும் வனத்துறை தானே கைது செய்து தானே தண்டனை வழங்கியது. பொருண்மிய மேப்பாட்டுத்துறையும் அவ்வாறே. நிர்வாக சேவை, புலனாய்வுத்துறையும் அவ்வாறே. திரைப்பட வெளியீட்டுத்துறையும் அவ்வாறே. இவ்வாறு ஏகப்பட்ட நீதிபதிகளுக்குப் பணிந்து மக்கள் வாழும்போது யார் பெரியவர்?    அது முந்தியொருகாலம்.. மூத்தண்ணர் இருக்குங் காலமொண்டு… சிங்கள இராணுவமும் பொலிசும் இருந்த காலத்தே மக்களே பெரிசு. புலிகள் சோத்துக்கும், பாதுகாப்புக்கும் மக்களை நம்பியிருந்த காலம்.. மக்கள் பெரிசு! வேறு ஏதாவது நல்ல கேள்வியாகப் போடுங்கோ.    இறுதி யுத்தத்தில் புலிகளின் தளபதிகளும் பொறுப்பாளர்களும் தலைமையின்கட்டளையை மீறி நடந்தார்கள் என்கிறீர்கள். தலைமை தனது தளபதிகள் மீதானகட்டுப்பாட்டை இழந்திருந்ததா?    உண்மை! 2007-ல் நடந்த பல அராஜகங்களை விசாரிக்க வேண்டும் எனக் கோரப்பட்டபோது “யுத்தம் நெருக்கமாக இருக்கும்போது நாம் விசாரணை அது இது என்று போட்டுக் கொண்டிருந்தால் அப்படி அப்படியே போட்டுட்டு போயிடுவாங்க, நான் பொறுத்துத்தான் போக வேண்டும்” என்று தலைவர் கூறினார். வாய் வார்த்தைக்கு ஆதாரம் கேட்காதீர்கள். கூட இருந்த இருவருமே கொல்லப்பட்டுவிட்டனர். மேலும் இவர்களிடம் நம்பிக்கையிழந்த தலைவர் ஆனந்தபுரச் சமருக்கு நேரடியாகவே இறங்கிவிட்டார். அவரை மீட்க நடந்த சமரில் தான் பெரிய தளபதிகள் இறந்தனர். இச் சமரில் என் பேத்தியும் நின்றிருந்ததால் என்னிடம் விபரம் சொன்னாள்.    எமது போராட்டத்தின் இயங்கு திசை இனி எதுவாக இருக்க வேண்டும் எனக்கருதுகிறீர்கள்?    புயல் ஓய்ந்த பின் முறிந்த மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும். இருக்கும் செடிகளை மீளெழுப்ப வேண்டும் . உடைந்த குளங்களைச் செப்பனிட வேண்டும். புதிய விவசாயிகளுக்கு விதை வேண்டும். இதையெல்லாம் யார் செய்கிறார்கள்? மக்கள் உறங்கிவிட்டார்கள் என்று எண்ணக்கூடாது. அவர்கள் பசி மயக்கத்தில் கிடக்கிறார்கள். அவர்கள் எழட்டும், நடக்கட்டும், தமது பாதைகளில் தடைகளை அகற்றவும், தமது வீடுகளிற்குள் அந்நியர் புகாமல் பாதுகாக்கவும், தாம் கைகளை வீசி நடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரியுமா? வன்னியில் இவ்வருடம் தேன் இல்லை. பாலைப்பழம் இல்லை. உடும்பு, முயல், பன்றி எதுவுமில்லை. காடுகளில் விறகு பொறுக்கக் கூட யாரும் போவதில்லை. எமது மக்கள் எங்கள் காடுகளில் காடேறிகள் உலாவுவதாக உணர்கிறார்கள். பேய்களுக்குப் பயந்து பெண்கள் போவதுமில்லை. எப்போது மீட்பர் வருவாரென்று தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். நாங்கள் எழுதலாம். வாசிப்போர் அருகிவிட்டனர். செத்த வீடு, கலியாணவீடு, சமூர்த்திக் கூட்டம் எல்லாயிடமும் உதுதான் கதையாம். பாலனைப் பொலிசு கொண்டு போட்டான் . கள்ள மரம் அரிஞ்சதாம். ‘அவன் பொமிற் எடுத்தவன் தானே’ , ‘பொமிற் மூன்று நாளைக்கு தானாம் அதுக்குள்ளை அரிஞ்சு கூரைக்கு ஏத்திப் போடணுமாம்’.  இல்லாட்டி வீட்டிலை கிடந்த மரமும் போச்சு அவனும் கைதி . பெண்டில் கதறுகிறாள் ஒன்றரை இலட்சம் கொடுத்து அழிஞ்சதாம். உள்ள நகையும் போச்சு மரமும் போச்சு. இந்த நிலை நீடிக்கிறது.பல முனைகளிலும். புதிய போராட்டத்திற்கு விதை ஊன்றியாகிவிட்டது. மக்கள் உணரவேண்டும், உணர்த்த வேண்டும்!    உங்களது மேடும் பள்ளமுமான நீண்ட வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப்பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? உங்களது இயக்க வாழ்வைப் பெருமிதமாகஉணர்கிறீர்களா?    நான் ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவள். மனிதனோ மற்றவையோ காரணமில்லாமல் காரியமில்லை. எனது வாழ்க்கை எந்த அசம்பாவிதமுமின்றி இருந்திருந்தால் இந்தப் பேனா என் கையிலிருந்திருக்காது. எனக்குப் பதினான்கு வயதில் கல்யாணம் ஆகாதிருந்திருந்தால் குடும்பச் சுமையை நான் இப்போதும் சுமந்திருப்பேன். இருபத்து நான்கு வயதுக்குள் பிரசவம் முடிந்தது. நாற்பத்து மூன்று வயதில் எந்தக் குடும்பப் பொறுப்பும் என்னிடமில்லை. காட்டாறு போன்ற என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுத்துப் பார்க்கலாம். எனக்குத் துன்பங்கள் வரும் போதெல்லாம் நான் வருந்தியிருக்கிறேன். அழுதிருக்கிறேன். துடித்திருக்கிறேன். ஒரு காலகட்டத்திற்குப் பின் நான் அழுததை யாரும் பார்த்திருக்க முடியாது. தியானம் என்னை வழிப்படுத்தியது. வாழ்க்கையில் நான் விரும்பிய அனைத்துமே எனக்குக் கிடைத்திருக்கிறது. அதற்கு என்னுள்ளேயே எனக்கு உருவம் கொடுத்து முயன்றேன்.  எனக்கு வெளியே கடவுள் இருப்பதை நான் நம்பவில்லை. ஆனால் என் எண்ணங்களின் சக்தியை எனக்குத் தெரியும். அதில் நல்ல எண்ணங்களையே விதைக்கப் பழகினேன். இன்பம்- துன்பம் எல்லாமே சமமாகிவிட்டது. அவமானம் என்று எதையும் கருதவில்லை. அவை எனக்களித்த பாடங்கள் தெளிவானதாக இருந்தன. கொடுப்பதில் இன்பம், அணைப்பதில் இன்பம்.    வாழ்கையில் எல்லாமே கற்பதற்கான செயல்கள் தான். அந்த வகையில் என் இயக்க வாழ்வு எனக்குப் பெருமிதமானது. அந்த வாழ்க்கையில் நான் அநேகருக்கு நன்மை செய்திருக்கிறேன். ஒரு கிராமத்தையே வாழ வைத்திருக்கிறேன். இன்றும் என்னிடம் அதே அன்புடன் பழகுகிறார்கள். வேறென்ன வேண்டும்! அன்புள்ளவர் எங்கிருந்தாலும் வாழ்வில் அன்பையே பெறுவார். நான் பெருமிதமாக உணர்கிறேன். பல மடங்கு பெருமிதமாக இப்போதும் உணர்கிறேன்.    இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? வாழ்வின் மீதியை எவ்வாறு கழிக்கவிரும்புகிறீர்கள்?    நான் சரணடைந்ததிலிருந்து விடுவிக்கப்பட்டதுவரை எழுதிவிட்டேன். ‘எங்கே அவள்’ என்றொரு சிறு நாவலை எழுதி பதிப்பகத்துக்குக் கொடுத்து விட்டேன். ‘ஊழிக்காலம்’ மூலம் பதினைந்தாயிரம் இந்திய ரூபாய்கள் கிடைத்தன. ஆனால் என்னுடைய இந்தியப் பயணம் நாற்பத்தைந்தாயிரத்தை விழுங்கி விட்டது. மேலும் மேலும் ஆக்கங்களைக் கோருவோர் எதுவும் தருவதில்லை.‘ஆம்பல்’ என்றொரு இணையப் பத்திரிகை மாதம் பத்தாயிரம் ரூபாய்கள் தந்தார்கள். அதுவும் இம்மாதத்துடன் நின்றுவிட்டது.  ஆனாலும் நான் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். வாழ்க்கையின் மீதிதான் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது. பார்க்கலாம்.. இயற்கை என்ன வழி வைத்திருக்கிறதோ! பொதுவாகவே புலமையும் வறுமையும் சேர்ந்துதானே இருக்கின்றன. மகளுடனும் பேத்திகளுடனும் சேர்ந்திருக்கிறேன். மகிழ்ச்சிதான். அது மனதைப் பொறுத்தது.  என்னை இதயம் திறந்து பேச வைத்ததற்கு நன்றி.                18. அதிதீவிரவாதம் சிறுபிள்ளைக் கோளாறு   []   இயக்குனர் பிரசன்ன விதானகேயின் புதிய திரைப்படமான ‘ஒப நத்துவ ஒப எக்க’ (With you Without you ) தாஸ்தயேவ்ஸ்கி 1876-ல் எழுதிய A Gentle Creature என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. போருக்குப் பின்னான இலங்கையில் தத்தளிக்கும் இனத்துவ உறவுகளைச் சித்திரிக்கும் இந்தத் திரைப்படம் சர்வதேசப் பரப்பில் மிகுந்த கவனத்தைப் பெற்று மதிப்புக்குரிய விருதுகளையும் வென்றிருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவின் முக்கியமான ஆறு நகரங்களில் பதினேழு திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. சென்னையில் திரையிடப்பட்ட பி.வி.ஆர். திரையரங்கிற்கு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்புகளால் படத்தைத் தொடர்ந்து திரையிட முடியாது எனத் திரையரங்க நிர்வாகம் அறிவித்தது.    [] இதைத் தொடர்ந்து, மாற்றுச் சினிமாவிற்கான களத்தையும் தளத்தையும் உருவாக்க கடினமாக உழைத்துக்கொண்டிருக்கும் ‘தமிழ் ஸ்ரூடியோ’ தோழர்களின் ஏற்பாட்டில் உடனடியாகவே ஆர்.கே.வி திரையரங்கில் ஒரு சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. இயக்குனர் பிரசன்ன விதானகேயும் கலந்துகொண்ட அத்திரையிடலில் பல சர்ச்சைகள் கிளம்பின. காவற்துறை தலையிடுமளவிற்கு குழப்பங்கள் தீவிரமடைந்திருந்தன. அங்கே கைகலப்புகளும் நிகழ்ந்ததாக  ஊடகங்கள் தாரளமாகப் பொய்ச் செய்திகளை வெளியிட்டன. கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் அந்தத் திரையிடலில் பங்குபற்றியதோடு தொடர்ந்து நடந்த கலந்துரையாடலிலும் கலந்துகொண்டிருந்தார்.    இத்திரைப்படம் எதிர்வரும் 13-ம் தேதி பாரிஸில் ( THEATER MENILMONTANT) திரையிடப்படவிருக்கும் நிலையில் திரைப்படம் குறித்தும் சென்னைத் திரையிடல் சர்ச்சைகள் குறித்தும் கவிஞர் ஜெயபாலனுடன் உரையாடினேன். இந்த உரையாடல் இணைய வழியிலும் அலைபேசியிலும் நிகழ்ந்தது.    -ஷோபாசக்தி  09.07.2014   இது தப்பான செய்தி. தாங்களும் தேசியவாதிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஒருசிலர் எதிர்த்தார்கள் என்றுசொல்லியிருக்கலாம்.    தமிழ்நாட்டில் கும்பல் தணிக்கை (Mob censorship ) செயற்படுவதாகபடத்தின் இயக்குனர் பிரசன்ன விதானகே ‘இந்து’ பத்திரிகைக்கு  அளித்த நேர்காணலில்  குறிப்பிடுவது  சற்று மிகையாகத்  தெரிகிறதே. எந்தக்குழுக்களும் அவரது படத்தைத் தணிக்கை செய்ய முயன்றதாகத்தெரியவில்லையே. தீவிரவாதிகள் என்ற வசனத்தை நீக்குங்கள் என்பதுகோரிக்கைதானே?  தீவிரவாதிகள் என்ற வசனத்தை நீக்குங்கள் என்பது கோரிக்கைதான். ஆனால் திரைப்படத்தில் தமிழ் பெண் பாத்திரம்,  சிங்கள இராணுவத்தை  வன்புணர்வு,  கொலை  தொடர்பாகத்  திட்டும் வசனம்  போலவே; இராணுவத்தினன் அந்தத் தமிழ் பெண்ணின் சகோதரர்களை  பயங்கரவாதி  என்று  சொல்வதும்  இயல்பானதே. அதை ‘நீக்குங்கள்’ எனக் கோரிக்கை  வைத்தவர்கள்  புரிந்து கொள்ளவில்லை.    தமிழ் ஸ்ரூடியோ நடத்திய திரையிடலின் பின்பு நடந்த விவாதங்கள்ஆரோக்கியமாக இருந்ததாகக் கருதுகிறீர்களா?  ஒரு விசயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். தமிழ் ஸ்ரூடியோ ஏற்பாடு செய்த திரையிடலில் இந்தப் படத்திற்கான எதிர்ப்புகள் ஆரம்பிக்கவில்லை. ஏற்கனவே படத்திற்கு எதிர்ப்புகள் இருந்ததாலேயே  தமிழ் ஸ்ரூடியோ திரையிடலை ஒழுங்கு செய்தது. அந்தத் திரையிடலிலும்  படத்தைப்  புரிந்துகொள்ளாமல் எதிர்க்கும் ஒருசிலரின் எத்தனங்கள் தொடர்ந்தன. திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே அரங்கில் எதிர் வசைகள் கேட்டன. பின்பு நடந்த கலந்துரையாடல் நிகழ்வும் ஒரு சிலரின் கூச்சலால் பதற்றமானபோது பொலிஸார்  சபையோரைக்  கலைந்து  போகும்படி  சொன்னார்கள். அதன் பின்னர் நான் பிரசன்னவுடன் நின்றுவிட்டு,இயக்குனர் கவுதமனோடு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். என் அனுபவத்தில் இதெல்லாம் சின்னப் பிரச்சினைகள். போராட்டத்தில் தோழனை பாதுகாக்கும் அடிப்படைக் கடமை உணர்வுதான் என்னை இயக்கியது.    அந்த விவாதத்தின் போது பலர் உங்களை நோக்கிக் கூச்சலிட்டதைகாணொளியில் பார்க்கக் கூடியதாகயிருந்தது. அப்படி என்னதான்பேசினீர்கள்?  [] பிரசன்ன விதானகே யாரென்றே தெரிந்திராத, அவரது இனவாதமற்ற, பிரிந்துசெல்லும் உரிமையை மதிக்கும் கலை மனதை அறிந்திராத இளைஞர்கள் பலர் படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும்போதே ‘சிங்களவன்’ என வசைபாடிக்கொண்டிருந்தனர். அவரை தமிழர் விரோதியெனக் கருதி கூச்சல் போடப் போகிறார்கள் என்பதை நான் முன்உணர்ந்தேன். அதனாலேயே திரைப்படம் முடிந்ததும் உச்சஸ்தாயியில் ‘நன்றி பிரசன்ன, இது தமிழர் சார்பான படம்’ எனக் குரல் கொடுத்தபடியே  பிரசன்னவுக்கு  அருகில் சென்று நின்றுகொண்டேன். அதனால் என்னைத் தெரிந்த பலர்மவுனமாகிவிட்டார்கள். மே 17 அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் எனக் காட்டிக்கொண்ட ஒருசிலரே கூச்சல்போட்டார்கள். வேறுசிலர் கேள்விகள் கேட்டனர்.  என்  குரலும்  உயர்ந்தே  இருந்தது.  நானும் நாகரீகமான தொனியில் பேசவில்லை. ஏனெனில் அதற்கான  சூழலோ  வாய்ப்போ அங்கிருக்கவில்லை.  தோழர் பிரசன்னா  தமிழர்களுடைய  போராட்டத்திற்கு ஆதரவானவர்.    வன்னியில் போராளிகளால் மதிக்கப்பட்டவர். அவரை எதிரியாகப் பார்ப்பதை அனுமதிக்க இயலாது என்பதையேநான் வலியுறுத்தினேன். நானும் கூச்சல் போட்டேன். பிரசன்ன, எழுப்பப்படும் கேள்விகளிற்கு விரிவாகப் பதில்களைச் சொல்லிவிட்டுஇலங்கைக்கு திரும்பிப்  போக முடியாத  நிலை  இருக்கிறது  என்பதைத் தயவு செய்து மனங்கொள்ள வேண்டும் . அத்தோடு  தன்படைப்பே  தன்னை நியாயப்படுத்தும் என்கிற பெரும் கலைஞனின் ஞானச் செருக்கு அவரிடமும் இருந்தது.    அரங்கில் குழப்பங்களோ எதிர்ப்புகளோ ஏதும் தொடங்கியிருக்காதநிலையில் நீங்கள் நாட்டாமை போல முன்னே சென்று அரங்கைக்கைப்பற்றியது சரியற்றதுதானே?  நிகழ்வுகளுக்கு வெளியில் தனிமைப்படுத்திப் பார்க்கும்போது நீங்கள் சொல்வது சரி. ஆனால் நிகழ்வு ஒரு சிலரின் யுத்த முஸ்தீபுகள்நிறைந்ததாக இருந்தது. அந்த ஒரு சிலர்  மத்தியில்  திரைப்படம்  ஓடிக்ககொண்டிருக்கும்போதே படம் முடிந்ததும் எதிர்ப்புகளைக்காட்டுவதற்கும் குழப்பங்களை விளைவிப்பதற்குமான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதை நான் கவனித்தேன். என்னிடமே அதுகுறித்துச் சிலர் பேசினார்கள். எனவே அந்த இடந்தில் நண்பன் பிரசன்னவைப் பாதுகாக்க நான் முன் கை எடுத்தேன். என் செயல் நல்லமரபல்ல. ஆனாலும் திரையிடலுக்கு முன்னமே நாட்டாண்மை போல நடந்துகொண்ட கும்பல், சபையிலும் நாட்டாண்மை செய்யத்தயாராக நின்ற சூழலில் எனக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. நான் மவுனமாக நின்றிருந்தால் சபையோரை நாட்டாண்மைசெய்யவந்த ஒருசிலரின் கூச்சலே வென்றிருக்கும். என்னுடைய ஒவ்வொரு  செயற்பாடுகளும்  சரியென்று  சொல்ல  மாட்டேன்.  ஆனால் அறம் சார்ந்து நின்றேன் என்று சொல்வேன்.    அறத்துக்கே அன்பு சார்பென்ப அறியார்   மறத்துக்கும் அஃதே துணை   உங்களிற்கும் வேறு சிலருக்கும் வாக்குவாதம் வரவே, காவற்துறைஅரங்கினுள் நுழைந்ததாகவும் தொடர் கூச்சல்களால் நிகழ்வைஇடையிலேயே முடித்துக்கொள்ள வேண்டியிருந்ததாகவும் தமிழ்ஸ்ரூடியோ அருண் பதிவு செய்துள்ளார். உண்மையிலேயேஉரையாடுவதற்கான சூழ்நிலை அரங்கில் இருக்கவில்லையா?  திரையிடலின் முன்னரே, தமிழர் விரோதமான சிங்களவர் படம் திரையிட அனுமதியோம் என நிலமை மோசமடைந்ததால்தான் அருண் மேற்படி திரையிடலை ஒழுங்குசெய்தார். மேற்படி சூழல் திரையிடலின்போது மோசமடைந்தது. உரையாடும் சூழல் இருக்கவில்லை.  உரையாடும்  சூழல்  இருந்ததாக  அருண் சொன்னால், பழியை அவர் என் தலையில்  போட  விரும்பினால்  நான் அதைத்  தோழமையுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நான் தலையிடாதிருந்திருந்தால் அவையை எதிர்பாளர்களே கைப்பற்றிநிகழ்வையும் அவர்களே வன்முறையுடன் தீர்மானித்திருப்பார்கள். அருண் மிகவும் மென்மையாகவே நடந்துகொண்டார். பொலிஸார் அருணின் அழைப்பில்லாமல் வந்ததாகவோ அவரது சம்மதமில்லாமல் எந்தக் காரியத்திலும் தலையிட்டதாகவோ நான்நினைக்கவில்லை. பொலிஸார் என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. பொலிஸார் நுழைந்தபோது அருணை நோக்கியும்பிரசன்னவை நோக்கியுமே எதிர்ப்பாளர்கள் கூச்சல்  போட்டுக்கொண்டிருந்தார்கள்.  அந்த  சமயம்  யாரும்  என்னோடு  கூச்சல்போடவில்லை.  எதிர்ப்பாளர்களின் கவனமும்  கூச்சலும்  பிரசன்ன  மற்றும்  அருண்மீதே  திரும்பியிருந்தன.    உங்களை, தமிழ் உணர்வாளர்கள் அடித்து உதைத்தார்கள் என்ற பொய்ச்செய்தி பரப்பப்பட்டதற்குப் பின்னணியில் இலங்கை தூதுவராலயம்இருக்கலாம் என்கிறீர்கள். ஆனால் இந்தச் செய்தியை புலம் பெயர்ந்தநாடுகளிலிருக்கும் தமிழ் தேசியவாத ஆதரவு ஊடகங்கள்தானே –குறிப்பாக ‘தமிழ்வின்’ – முதலில் பரப்பின?    புலம் பெயர்ந்த  தமிழர்  மத்தியில்  உள்ள  விடுதலை  ஆர்வலர்களுள்  ஒருசிலரும் , தமிழகத்தில்  அவர்களோடு தொடர்புள்ள ஒருசிலரும்அதிதீவிரவாதம் பேசியபடியே, ராஜபக்சவை எதிர்ப்பவர்களையே எதிர்க்கிறார்கள்.    உண்மையில், புலம் பெயர்ந்த  தமிழர்  மத்தியில்  உள்ள  உண்மையான  விடுதலை  ஆர்வலர்களையும்  அமைப்புகளையும்விமர்சனங்களோடு நான் ஆதரிக்கிறேன். அவர்களோடு தொடர்புள்ள தமிழக ஆதரவுச் சக்திகளையும் நான் மதிக்கிறேன். ஆனால்ஒருசிலர் விடுதலையின் பெயரில் தமிழகத்தில் சிலரை பிழையாக வழிநடத்த முனைகிறார்கள். அவர்களையே நான் எதிர்க்கிறேன். அவர்களும் என்னை எதிர்க்கிறார்கள்.    முதலில் ‘மாலை மலரி’ல்தான் நான் தாக்கப்பட்டதாகச் செய்தி  வந்தது  என  நினைக்கிறேன்.  இலங்கை  அரசு தன் கையாட்களின் மூலம்இச்செய்தியைப் பரப்புகிறது என்பதை உணர்ந்த பின்னர் ‘மாலை மலர்’ கவலை தெரிவித்து என் மறுப்பையும் வெளியிட்டார்கள். ஆனால் நான் தாக்கப்பட்டதாகச் செய்தி வெளியிட்ட ‘தமிழ்வின்’ செய்தி பிழையென்பது பகிரங்கமான பின்னரும்  மறுப்புச்  செய்தி வெளியிடவில்லை. அவர்களை மறுப்பு செய்தி வெளியிடாமல் எது தடுத்தது? இச் செய்தியின் பின்னணியில் இலங்கை உளவுத்துறைஇருக்கிறது என நான் கருத அடிப்படைகள் உள்ளன.    ‘தமிழ்வின்’ போன்ற ஊடகங்களுக்கு செய்திகளை உறுதிப்படுத்தும் பொறுப்புணர்வும் தவறுகளைத் திருத்திக்கொள்ளும்கண்ணியமும் இன்னமும் கைவரவில்லை. மாலை மலரின் மறுப்புச்  செய்தியையாவது  தமிழ்வின்  பிரசுரித்திருக்கலாம்.    இதற்குமேல் எதுவும் கேட்பதெனில் என்மீது  அவதூற்றுச்  செய்தியை  வெளியிட்டுவிட்டு  மறுப்பு  வெளியிட மறுத்துவிட்ட ‘தமிழ்வின்’உரிமையாளரிடமும் ஆசிரியரிடமும்தான் கேட்கவேண்டும். சட்ட நடவடிக்கையை நான் விரும்புவதில்லை. ஒரு கவிஞனால் அறம் பாடிச் சபிக்கத்தான் முடியும்.    பிரசன்ன விதானகேயை நீங்கள் நன்கறிவீர்கள். அவர் விடுதலைப்புலிகளிற்கு திரைப்படப் பயிற்சிப் பட்டறை நடத்தினார் என்ற செய்திகள்எவ்வளவிற்கு உண்மையானவை? புலிகள் போன்ற மனிதவுரிமைகளைமதிக்கத் தெரியாத  பச்சை  இனவாதிகளுடன்  பிரசன்ன  போன்ற  மனித உரிமைகள்   சார்ந்து  நிற்கும்  கலைஞன்  இணங்கி  வேலை செய்ததை  எப்படிப் புரிந்து கொள்வது?  சுதந்திரமாகப் பேச  முற்பட்ட  நமது  கலைஞர்களைப் புலிகள்  கொன்று கொண்டிருக்கும் அதே நேரத்தில் பிரசன்ன புலிகளுடன்வேலை செய்தார் என்பது என்ன?    நீங்கள் வைப்பது விமர்சனமா குற்றச்சாட்டா எனத் தெரியவில்லை. உண்மையில் இது மிகச் சிக்கலான கோட்பாடு ரீதியானபிரச்சினை. வரலாற்றில் அரச பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடிய தேசிய விடுதலை அமைப்புகளில் எல்லா வகையானபோக்குள்ளவர்களும் உள்ளே இருந்தார்கள். இதற்கு புரட்சிகர அமைப்புகள்கூட விதிவிலக்காகவில்லை. லெனினும் ஸ்டாலினும்த்ரொட்ஸ்கியும் ஒரே அமைப்பில்தானே இருந்தார்கள். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றையும் கலாச்சாரப் புரட்சியையும்ஆராய்கிறவர்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின், கலாச்சாரப் புரட்சி அணியின் குழந்தைதான் பொல்பொட் என்பதைஏற்றுக்கொள்வார்கள். இதனால் எல்லாம் நாம் ருசிய – சீனக்  கம்யூனிஸ்ட்  கட்சிகளோடு  தொடர்புகளை  வைத்திருந்தவர்களைக்குற்றம் சாட்ட முடியாது. 1996-ல்  இருந்து  வன்னியை  நான்  நன்கு அறிவேன். பாலகுமாரனையும் கஸ்ரோவையும் நான் எப்போதும்ஒரே தட்டில் வைத்துப் பார்த்ததில்லை. நிலாந்தன் தலைமையில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில்  நடந்த  கவிஞர்  கருணாகரனின்புத்தக  வெளியீடு நிகழ்வில், நிகழ்வை  ஒழுங்கு  செய்தவர்கள்  அஞ்சி  உறைய  கஸ்ரோவை விமர்சித்துப் பேசியவன் நான். விடுதலைவரலாறு முழுவதிலும் எதிரிக்கு எதிரான அமைப்புகளோடு மக்கள் சார்பான விமர்சனத்துடனும், எதிரிக்கு எதிரான இணக்கமுமாகச்செயற்படுவது விடுதலைக்கான கலைஞர்களதும் அறிஞர்களதும் பாதையாகவே இருந்துள்ளது. இதற்கு வெளியில் மேலோர்அங்கலாய்ப்புகளுக்கும் அனார்க்கிஸத்துக்குமே இடமிருந்தது.    இந்தப் பின்னணியில்தான் நான் பிரசன்னவைப் புரிந்து கொள்கிறேன்.    தமிழகத் தமிழ் உணர்வாளர்கள் நண்பர்களையும் எதிரிகளாக்கும்வேலையைச் செய்கிறார்கள் எனக் கவலைப்பட்டிருந்தீர்கள். இதைச் சரிசெய்ய முடியுமா? அதேவேளையில் புலிகளையோ தமிழ்த்தேசியத்தையோ விமர்சிப்பவர்களிற்கு இனி இவர்களது வெளிகளில்இடமேயில்லையா?    மேற்படி சம்பவத்தை வரலாற்று நிகழ்ச்சியாக எண்ணிக் குழப்பமடைய வேண்டாம். இது ஒருசிலரின் தனிப்பட்ட எதிர்ப்பு மட்டுமே. இது தமிழ் உணர்வாளர்களது இயக்கமல்ல.    ‘பிரபாகரன்’ திரைப்பட இயக்குனர் தாக்கப்பட்டது, எழும்பூர்மகாபோதியில் பவுத்த துறவிகள் தாக்கப்பட்டது, தஞ்சாவூரில்  பவுத்ததுறவி  தாக்கப்பட்டது,  சிங்கள  யாத்திரீகர்கள்  தாக்கப்பட்டது  ஆகியவற்றின் தொடர்ச்சிதானே  அன்று திரையரங்கில் நடந்த கும்பல் கலாட்டா. அப்போதெல்லாம்  மவுனமாயிருந்த தமிழக அறிவுஜீவிகள் இப்போது கலையின்  பெயரால்  வடிக்கும்  கண்ணீரை எப்படி மொழிபெயர்ப்பது?    சித்தாந்தத் தெளிவும் தெரிவும் உள்ளமுறையில்; இலங்கை சிங்கள பவுத்த அரச பயங்கரவாதிகளையும் அவர்களது அணியினரையும்தனிமைப்படுத்தும் வகையிலான தமிழக மக்களின் விழிப்பும் எதிர்ப்பும் அவசியம். இனப்படுகொலைக்குப் பிந்திய சூழலில் தமிழகமக்கள் ஆதரவு என்கிற கவசம் இல்லாவிட்டால் உலகின் கவனம் எங்கள்மீது திரும்பியிருக்காது. ‘புதுதில்லி’யின் நிலையில் சிறுமாற்றமும்கூட ஏற்பட்டிருக்காது இன்றும் நிர்க்கதியான எங்கள் மக்கள்மீதும் பெண்கள்மீதும் சிங்கள இராணுவ வெறியாட்டம்தொடர்ந்துகொண்டே இருந்திருக்கும். தமிழக மக்களின் ஆதரவு இனப்படுகொலைக்கு எதிரான தடையாக என்றும் எங்களுக்குஅவசியம்.    சிங்கள பவுத்த அரச பயங்கரவாதிகளுக்கு எதிரான தமிழக மக்களின் கோபம் நியாயமானது. ஆனால் சிங்கள பவுத்த பேரினவாதஅமைப்புகளுக்கு எதிராகச் செயலாற்றி ஆபத்துகளை எதிர்கொண்ட சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள், அரச பயங்கரவாததுக்குஎதிரான சிங்கள மக்கள்  இருக்கிறார்கள்  என்ற  சேதி தமிழக மக்கள் பலருக்கும் தெரியவில்லை. அவர்கள் இது குறித்துத் தெளிவு பெறவேண்டும்.    அன்று நடந்த விவாதத்தின் காணொளியைக் கவனித்தவரை சிங்களமக்களும் தமிழ் மக்களும் இலங்கையில் இணைந்து வாழ்வது என்றபேச்சுக்கே இடமில்லை என்றவாறாகவே தமிழ் உணர்வாளர்களின் வாதம்இருந்தது. நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? இரண்டு இன மக்களும் படிப்படியாக  பகைமையை மறந்து இணைந்து வாழ்வதைவிடஇலங்கைக்கு இன்னொரு நல்ல தலைவிதி சாத்தியமென நீங்கள்கருதுகின்றீர்களா?    பிரசன்ன விதானகேயின் திரைப்படம், புரிந்துணர்வில்லாத சூழலில் ‘இந்தியாவுக்கு அழைத்துச் செல்வது’ போன்ற  உயர்ந்த பட்ச சலுகைகளுக்காக சேர்ந்து வாழமுடியாது என்றே சொல்கிறது. சுயநிர்ணய அடிப்படையில் பிரிவு அல்லது கூட்டாட்சி அமையமுடியும். செர்பியர்களுக்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்கிறார்கள். கொசோவா மக்கள்இணைந்து வாழ முடியாது என்று முடிவெடுத்தார்கள். அண்மையில், எங்களைப் போன்ற  இன  ஒடுக்குதல்  சூழலை எதிர்கொண்டதென் சூடான் மக்களும் இணைந்து வாழ இயலாது என்ற முடிவை எடுத்தார்கள். வடக்கு சூடான் அரசுக்கும் சிங்கள அரசுக்கும் அதிகவேறுபாடுகளில்லை. உரிய தருணத்தில் எங்கள் மக்கள் எந்தத் தீர்வை முன்னெடுத்தாலும் அதை நான் ஆதரிப்பேன்.    இயக்குநரிடம் திரைப்படத்திற்கு வெளியே கேள்விகள் கேட்கப்பட்டதுசரியா தவறா என்ற வாதங்கள் ஒருபுறமிருக்க, இலங்கையில் நடந்தது ஓர்இனப்படுகொலையே என்பதை ஏற்றுக்கொள்வதில் பிரசன்னவிதானகேக்கு அப்படி என்னதான் சிக்கல்? கூர்மையான அரசியல்உணர்வுடைய அவரால் நடந்தது இனப்படுகொலை என ஏன் ஏற்றுக் கொள்ள  முடியவில்லை.  இயக்குனராக  அல்லாமல் இலங்கையின்மதிப்புமிக்க ஒரு பிரசை என்றளவில் அவர் தனது கருத்தைத்தெரிவித்திருக்கலாமே?  பிரசன்ன விதானகே மீது எனக்கு விமர்சனங்கள் இல்லையென்றில்லை. ஆனால் அவை பகை விமர்சனங்கள் அல்ல.    குறிப்பாக இந்தப் படத்தில், முன்னைநாள் சிங்கள இராணுவத்தினன் என்பதை  மறைத்து  ஏமாற்றி  திருமணம் செய்தது தொடர்பாகசிங்கள இராணுவக் கொடுமையால் பாதிக்கப்பட்ட கதாநாயகி கொதித்தெழுகிறாள். அவள் காதல் முறிவால் சிலகாலம்சஞ்சலப்படுவது இயல்பானதுதான். ஆனால் தனக்கு நிகழ்ந்த அநீதியான திருமணத்துக்கு எதிராகக் கொதித்தெழுந்த ஒரு பெண் குற்றஉணர்வில் உழல்வதும், மன்னிப்பாயா என்பதும் இயல்பில்லாமல் நெருடலாயிருக்கிறது. கதாநாயகன் அவளைப் புரிந்துகொள்ளமுயலவில்லை. ஆனால் சேர்ந்து வாழ இந்தியா போவது உட்பட எல்லாச் சலுகைகளும் அளிக்கத் தயாராக உள்ளான். கதாநாயகிபுரிந்துணரத் தயாரில்லாதவனின் சலுகைகளை நிராகரிக்கிறாள். அவளது  தற்கொலைக்கு அரச பயங்கரவாத இராணுவத்தின் மீதானவெறுப்பு, காதல் முறிவு , ஊரில் சென்றுகூட வாழமுடியாமல்  தொடரும்  உள்ளூர்  தமிழ்  தலிபான்களின்  நடவடிக்கைகள்தான் காரணமாக  இருந்திருக்க  முடியும். ஈழத்தில் நூற்றுக்கணக்கான  முன்னைநாள் பெண் போராளிகளின் தற்கொலைக்குக்  காரணமாயிருந்து, எஞ்சியவர்களை நிம்மதியாக வாழவிடாது ஒடுக்கும் இராணுவம், ‘செத்துப் போ!’ என வசைபாடும் உள்ளூர் தமிழ்க்  கலாச்சாரக்  காவலர்கள்  உட்பட்ட  பல்முனைச்  சிக்கல்கள்  கதாநாயகியின் தற்கொலைக்குக் காரணமாக  இருந்திருப்பின்  படம்தர்மத்துடன்  உயர்ந்த  தளத்தில்  நிறைவு பெற்றிருக்கும்.    உங்களுக்கு ஈழப் போராட்டத்தோடு கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள்நெருங்கிய உறவுண்டு. போராட்டத்தின் பங்காளி நீங்கள். ஆனால் “சுற்றுலா  விசாவில்  வந்துவிட்டு  அரசியல்  பேசுகிறாயா” என மே 17 இயக்கநபரொருவர் உங்களைக் கேட்டதாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.என்னதான் நடக்கிறது தமிழகத்தில்?    அய்க்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பையும் போர்க் குற்ற  விசாரணையை  ஆதரிக்கும்  நாடுகளையும்  மகிந்த ராஜபக்ச அரசுமுழு மூச்சாக எதிர்க்கிறது. அதே எதிர்ப்புப் பணியை  தம்  உணர்வின்  பேரில் சிலர் தமிழகத்தில் செய்கிறார்கள். இவை தற்செயல்நிகழ்வுகளா அல்லது “எதிரி செய்வதையே அதிதீவிரவாதிகளும் செய்து தம்மை அறியாமல் எதிரியைப் பலப்படுத்திப்போராட்டத்தைப் பின்னடையச் செய்வார்கள்” என ‘அதிதீவிரவாதம் சிறுபிள்ளைக் கோளாறு’ என்கிற கட்டுரையில் லெனின்சொல்லிய நிலையா ? என்பது நமது சிந்தனைக்குரியது, இத்தகைய  சூழல்கள்  ஊடுருவல் காரர்களுக்கு  மட்டுமே வாய்ப்பானதாகும். என்னைச் சுட்டுக் கொல்ல  வேண்டும்  என அவர்களுடன் வந்த ஒருவர் சொல்லியிருக்கிறார். அவர் வட்டுக்கோட்டையைச்சேர்ந்தவராம். சுற்றுலா விசாவில் வந்து அரசியல் பேசுவது பற்றி சிங்கள உளவுத்துறை சொன்னதையே அவர்களுடனிருந்த வேறுஒருவர் சொன்னார். அவர்கள் மே 17 அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று  அவர்களும்  பிறரும்  அடையாளம் காட்டினார்கள். தமிழகத்தில் இலங்கைத் தூதரகத்தின் ஊடுருவல் நடக்கின்றதா என்பது எனக்குத் தெரியாது.    அந்தக் கொலை மிரட்டிலின் பின்னணியில் இருக்கும் கும்பல் மனநிலை என்ன?   மே 17 அமைப்பின் தலைவருக்கும் ஆலோசகருக்கும்   என்னோடு பகை இருந்தது. ஒரு புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்ப் பெண்ணை டெல்லியில் தடுத்துவைத்துக் கொடுமைப்படுத்தியது தொடர்பாக முகநூலில் நான் அவர்களோடு  சண்டைபோட்டது பகிரங்கச் செய்திதான் . அமைப்பின் ஆலோசகர் என்னைக் கொல்லப்போவதாக,  வெட்டப்போவதாக எல்லாம் முகநூலில் எழுதியிருக்கிறார். ஏனைய தமிழ் உணர்வாளர்களது பெயர்கள் பாதிக்கப் படக்கூடாது என்கிற காரணத்தால் நாங்கள் காவற்துறையிடம் போகவில்லை. என் மனைவிக்கும் கொச்சை மின்னஞ்சல்களை  அனுப்பினார்கள். முன்னர், என்னைச் சுடுவதும் இழிவுபடுத்துவதும் தமிழ்ப் பெண்களை கொடுமை செய்வதும் கொச்சைப்படுத்துவதும் இலங்கை  உளவாளிகளின் விருப்பமாக இருந்தது. அவர்களை எதிர்ப்பதாகக் கூறுகிறவர்களும் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது ஆராய்ச்சிக்கும் விசாரணைக்கும் விமர்சனத்துக்கும் உரியதாகும்.    நித்திய கொலை அச்சுறுத்தல் தீர்க்க ஆயுள் என இதுவரை வாழ்ந்துவிட்டேன். எனவே இப்போதும் கலவரப்படவில்லை.    பிரசன்னவை ஆதரித்து நின்ற காரணத்தால் ஒரே இரவில் பல்வேறுநபர்களால் நீங்கள் துரோகி எனவும் ராஜபக்சவின் கைக்கூலி எனவும்வசைப்பாடப்பட்டீர்கள். துரோகிகளை வலிந்து உருவாக்கும் இந்தக் கலாசாரம் தமிழ்த் தேசியவாத அரசியலின் தவிர்க்கவே முடியாத ஒருகூறா?    அப்படி ஒன்றுமில்லை. கூச்சல் போட்ட  ஒருசிலரும்  அடங்கிவிட்டார்கள்.  அதன்பிறகு  ஈழத்தில்  இருந்தும் தமிழகத்தில் இருந்தும்புலம் பெயர் நாடுகளில் இருந்தும் ஆதரவாக விசாரிப்பது அதிகரித்துள்ளது. உண்மையில் ஈழ விடுதலையை ஆதரிக்கும் தமிழகமக்கள் மத்தியில் என்மீதான கரிசனையும் அதிகரித்துள்ளது.    நீங்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட  விடயத்தில் உங்களுக்கு  இலங்கை அமைச்சர்கள் இருவரோடு நெருங்கிய நட்புஇருப்பதாகவும் அவர்களிற்கு தெரிவித்துவிட்டே நீங்கள் இலங்கைசென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இனப்படுகொலைஅரசாங்கத்தில் பங்கெடுக்கும் இரு அமைச்சர்களுடன் கவிஞன்ஜெயபாலனுக்கு நல்லுறவு சாத்தியம்தானா?    1996-ல் இருந்து 2006- வரைக்கும் இருதரப்பும் கேட்டுக்கொண்டதற்கு அமைய நேரடியாக விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம்தலைமைக்கும் இடையில் தூதுவராகப் பணியாற்றினேன். அக்கால கட்டத்தில்  விடுதலைப் புலிகளும் முஸ்லிம் அமைச்சர்களும் என்பாதுகாப்பில் அக்கறையாக இருந்தார்கள். நானும் முஸ்லிம் அமைச்சர்களது பாதுகாப்புத் தொடர்பாகத் தொடர்சியாக வன்னியோடுதொடர்பில் இருந்தேன். 2006-ன்  பின்னர்  இணையத்தின்  ஊடாக  மேற்படி  பணிகளைச்  செய்தேன்.  அந்த வரலாற்றின்  தொடர்ச்சிதான்நான் இலங்கை சென்றபோது கோத்தபாய அணியினரை அச்சுறுத்தியது. மீண்டும் தூதுவராக நான் பணியாற்றுகிறேனோ எனஅவர்கள் சந்தேகப் பட்டார்கள்.    வரலாறு காணாத ஒரு நிகழ்வு நடந்தது. பயங்கரவாதியெனக் குற்றஞ்சாட்டி அரசு என்னைக் கைது செய்தபோது அதனைநியாயப்படுத்தவேண்டிய நீதி அமைச்சர் தோழமைக்குரிய ரவூப் ஹக்கீம், ‘ஜெயபாலன் ஒரு குற்றமும் செய்யவில்லை’ எனப்பிரகடனப்படுத்தினார். சர்வதேச சமூகம் அவரது நிலைபாட்டைப் பின்பற்றியது. தோழர் ரவூப் ஹக்கீமின் அறிக்கையில் இருந்தவாசகங்ளை அடியொற்றி எரிக் சொல்கைம் இலங்கை அரசை எச்சரித்தார்.    தமிழையே பேசினாலும் மலையகத் தமிழர்கள் தனி இனமென்கிற  பிரக்ஞையே  அரசில்  அமைச்சராக  இருந்த  அமரர் தொண்டமானைநாம் அங்கீகரித்து உறவாடும் அரசியல் வெளியை (Political space)  உருவாக்கியது. தமிழ் பேசுவதால் முஸ்லிம்கள் தனி இனம்இல்லையென்கிற மனோபாவம் இங்கு தடையாக இருக்கின்றது. ஆனாலும் விடுதலைப் புலிகளும்  ஏனைய  விடுதலை அமைப்புகளும்  அமரர்  பதியூன்  முஹமத், அமரர் ஹமீத், அமைச்சர் ரவூப் ஹக்கீம் போன்ற  முஸ்லிம்  தலைவர்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒப்பந்தமெல்லாம் செய்திருக்கிறார்கள். ஈழத்துக்குப் பங்காளிகளான முஸ்லிம் மக்களையும் அவர்களதுதலைமையையும் தனி இனமாக உணர்ந்தால் அவர்களோடும் அவர்களது தலைவர்களோடும் நட்பு வலிமையானதாக மாறிவிடும். ஈழ விடுதலையும் முஸ்லிம் மக்களின் தலைமைகளுடான நட்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்தான்.    முடிவாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?  சுய விமர்சனத்திற்கும் தயங்காமல் பிழைகளைக்  களைவதற்கும்  அதைத்  தொடரவிருக்கும்  பரந்துபட்ட  அய்க்கியத்துக்கும்விடுதலைக்கும் தயாராகுங்கள்!                        19. எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்       கிழக்கு இலங்கையின் சிற்றூர் ஒன்றில் 1982-ல் பிறந்த ஸர்மிளா ஸெய்யித் ‘சிறகு முளைந்த பெண்’ என்ற  கவிதைத் தொகுப்பு ஊடாக நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் தனது தடத்தைப் பதித்தவர். தொடர்சியாக, புனைவுப் பிரதிகளை மட்டுமல்லாமல் அ-புனைவுப் பிரதிகளையும் அவர் முனைப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறார். முப்பதாண்டு கால ஈழப் போருக்குப் பின்னான காலத்தில், போரின் காயங்களோடும் வடுக்களோடு அலைந்துறும் மாந்தர்களையும் இலங்கையின் இனத்துவப் பிரச்சினைப்பாடுகளையும் மையமாக வைத்து ஸர்மிளா ஸெய்யித் எழுதிய நாவலான ‘உம்மத்’  இந்த வருடத்தின் தொடக்கத்தில் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.    சமகால அரசியற் பிரச்சினைகளிற்குள் சிக்கிக்கொள்ளாமல் லாவகமாக நழுவப் பார்க்கும் அல்லது வலுவான காற்றடிக்கும் பக்கமாகச் சாயும் எழுத்துச் சந்தர்ப்பவாதியல்ல ஸர்மிளா ஸெய்யித். அரசியல் – மதம் – கலாசாரம் – உடல் என அனைத்தின்மீதும் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கும் ஸர்மிளா  ஸெய்யித் ‘என்மீதான தடைகளையும் அடக்குமுறைகளையும் என் கேள்விகளால் நான் மீறினேன்’ என்கிறார்.    தான் சொல்லிய கருத்துகளிற்காக மத அடிப்படைவாதிகளால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், இன்றுவரை சமூகப் புறக்கணிப்புகளை எதிர்கொண்டாலும்; கருத்துகளும் எழுத்துகளும் அரசால் மட்டுமல்லாமல் உப ஆயுதக்குழுக்களாலும் மதநிறுவனங்களாலும் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சபிக்கப்பட்ட ஈழ நிலத்திலிருந்துகொண்டு தனது உரத்த குரலை ஒளிவுமறைவின்றி இந்நேர்காணலில் நம்முன்னே வைத்திருக்கிறார்  ஸர்மிளா ஸெய்யித்.  இந்நேர்காணல் கேள்விகளை மின்னஞ்சலில் அனுப்பியும் பதில்களிலிருந்து துணைக்கேள்விகளை உருவாக்கி மேலும் பதில்களைப் பெற்றும் நிகழ்த்தப்பட்டது.    – ஷோபாசக்தி  17.07.2014.   ஏறாவூரில், கயறுநிஸா – ஸெய்யித் அகமது தம்பதியருக்கு நான் மகளாகப் பிறந்தேன். ஒரு சகோதரன், மூன்று சகோதரிகள் கொண்ட சலசலப்பு நிரம்பிய இயல்பான குடும்பம். முற்றிலும் இயற்கையின் கரங்களால் அணைக்கப்பட்ட ஊராக ஏறாவூர் அப்போது இருந்தது. எனது இளமைக்காலம் இன்பமயமானது, சாகசங்கள் நிரம்பியது. மட்டக்களப்பு மீன்பாடும் தேனாடு எனச் சொல்லப்படுகின்ற நகரம். மீன்பிடியும் விவசாயமும் பிரதான தொழில்கள். தந்தை கிழக்கிலங்கைக்கும் தலைநகருக்கும் ஏற்றுமதி – இறக்குமதி வியாபாரத்தினூடாக ஊரில் அறியப்பட்டவராக செல்வமும் செல்வாக்குமுடையவராக இருந்தார்.  அவரது பிரதான ஏற்றுமதிப் பொருளாக மீன் இருந்தது. வியாபாரத்தில் மும்முரமாகவிருந்த நிலை அவருக்கும் எங்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது. ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு பொழுதில் மட்டும்தான் தந்தையைச் சந்திக்கக் கிடைக்கும். பெரும்பாலும் அந்தப் பொழுது இரவுப் போசனமாக இருக்கும். இந்த நேரத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கக் கருதியோ என்னமோ அவர் எங்களைக் கண்டித்ததே கிடையாது. எங்களது குற்றங் குறைகளை ஆராய்வது, தோலுரிய அடித்துக் கண்டிப்பது எல்லாமும் உம்மாவின் காரியங்களாக இருந்தன. ஆனால் அவர் பாசமிக்க தாய். உம்மா, வாப்பா இருவரினதும் படிப்பு வாசிக்கவும் எழுதவும் அறிந்தது மட்டும்தான். எனினும் வெகு பவ்வியமாகக் கற்றுத்தேர்ந்தவர்களின் பிள்ளைகளைப்போல நூதனமாகச் சுதந்திரமாக, பாலியல் சமத்துவத்துடன், எல்லா வளங்களுடனும் வளர்க்கப்பட்டோம்.    பையனைப் போலவே நான் வளர்ந்தேன். ஏறாவூர் முற்றிலும் இஸ்லாமியச் சூழல் கொண்டது. பச்சிளம் பருவத்தில் குர்ஆன் மதரஸாவுக்கு கால்களை மறைக்கும்படியான நீண்ட உடைகளை அணிய முடியாதென்றதிலிருந்து பர்தா வரைக்கும் சர்ச்சைக்குரியவளாகவே வளர்ந்தேன். ஒழுக்கம், மதக் கட்டுப்பாடு என்ற வேலிகளால் சிறைப்பட்ட ஏறாவூரில் பையனைக்கூட பொத்திப் பொத்தியே வளர்த்தார்கள். ஒரு பையனுக்கு சைக்கிள் வாங்கித் தருவதற்கு அவன் பத்தாம் வகுப்புச் சித்தியடையும் வரைக்கும் காத்திருக்கச் செய்வதே பெரும்பாலான பெற்றோர்கள் செய்யக்கூடிய காரியமாக அப்போதைய காலம் இருந்தது. இந்த வேலிகளை நான்  ஒருபோதும் பொருட்படுத்தியவள் கிடையாது. ஆறு வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டினேன். பள்ளிக்கூடம் செல்வதற்கு கார், வேன் வாகனங்கள் வீட்டிலேயே இருந்தபோதும் சைக்கிளில் செல்லவே விரும்பினேன். பன்னிரெண்டு வயதிலும் முட்டிக்கால்  தெரியும் சட்டையும் இரட்டை ஜடையுமாக சைக்கிளோட்டித் திரிந்த என்னைப் பார்த்து மொத்த ஊருமே வியப்பில் ஆழ்ந்து கிடந்தது. ஒரு பெண் பிள்ளையை எப்படி வளர்ப்பதென்று என் பெற்றோருக்குப் பலரும் வகுப்பெடுத்தார்கள். ஆனால் அதே பெற்றோரினால் வளர்க்கப்பட்டுக்கொண்டிருந்த என் மூன்று சகோதரிகளையும் சந்திக்க நேர்ந்தவர்கள் வாயடைத்து நின்றார்கள். தங்கைகள் இஸ்லாமியப் பெண்கள் என்று சொல்லப்படக்கூடியவர்களின் பிரதியுருவங்களாக இருந்தார்கள். பெண் குழந்தையின் சிறுபராயங்களை அனுபவிக்கத் தராத, சிறுமியை அவளது ஏழு வயது முதலே பெண்ணாகப் பார்க்கிற ஊரில் நான் வளர்ந்த விதம் முற்றிலும் வியப்பூட்டக்கூடியது. என்னை மாற்றவும் எனது சுதந்திரக் குணாதிசயங்களைக் கட்டுப்படுத்தவும் பெற்றோரும் உறவினரும் எடுத்த எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. எனது சுதந்திரத்திற்காகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறேன். இருட்டறையில் பூட்டப்பட்டிருக்கிறேன். மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருக்கிறேன். இவற்றையெல்லாம் கடந்து எல்லோரதும் நம்பிக்கைகளைப் பொய்யாக்குகின்ற சுதந்திரமானவளாகவே நிமிர்ந்து வளர்ந்தேன்.    ஏறாவூர் அல் அஸ்ஹர் வித்தியாலயமே எனது ஆரம்பப் பள்ளி. கல்வி லாவகமாகக் கைவந்தது. ஒரு கலகக்காரியாகவே கவனிக்கப்பட்ட நான் படிப்பிலும் கெட்டித்தனமாகவே இருந்தேன். இன்னொன்றையும் சொல்லத் தோன்றுகின்றது. குர்ஆன் ஓதுவதற்கு கால்கள் வரையும் நீண்ட உடையும் பர்தாவும் அணிய முடியாதென்று அடம்பிடித்து முட்டிக்கால் சிவக்க அடிபட்டவள் ஆறு வயதுக்குள் குர்ஆனை முழுவதுமாக ஓதக் கற்றுக்கொண்டிருந்தேன். பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு முன்பாகவே குர்ஆன் ஓதுவது பரிச்சயமாகிவிட்டிருந்தது.    எட்டாவது வகுப்புக்குப் பின்னர் ஏறாவூர் றகுமானியா வித்தியாலயத்திற்கு, படித்தது போதும் என்ற வாப்பாவின் வாதத்தையும் மீறியே மாறினேன். வீட்டுக்கு அண்மைய பள்ளிக்கூடம் என் பறத்தலின் எல்லையை மட்டுப்படுத்தியிருப்பதாகத் தோன்றிய எண்ணமே றகுமானியாவுக்குச் செல்லக் காரணம். அது வீட்டிலிருந்து தொலைவில் இருக்கிற பள்ளிக்கூடம். உயர்தரம் வரைக்கும் அங்குதான் பயின்றேன். பாடசாலைக் காலம் மிகக் குதூகலமானது.  பையன்களே அதிகம் நண்பர்கள். நண்பர்களை வீட்டுக்கு அழைப்பது, கூடியிருந்து கதைபேசுவது அனைத்துமே எங்கள் சூழலுக்குப் பொருந்தாத காரியங்கள். ஆனால் எங்கள் வீட்டின் பெரும்பாலான பொழுதுகள் நண்பர்களாலே வழிந்தது. ஆரம்பத்தில் இவற்றைக் கண்டித்த பெற்றோர்கள், எந்தவொரு குற்றத்தையும் காணாதபோது கண்டுகொள்ளாமல் இருக்கப் பழகிக் கொண்டார்கள்.    பள்ளி மேற்படிப்புக்குப் பின்னர், கல்லூரிப் படிப்பை கொழும்பில் தொடர்ந்தேன். அதற்காகவும் கடுமையாகப் போராடவேண்டியும் பட்டினி கிடந்து ஆர்ப்பாட்டம் செய்யவேண்டியதாகவும் இருந்தது. என்னதான் சுதந்திரமாகவும் இளமைக் கொதிப்புடனும் வளர இடம்தந்தாலும் 340 கிலோமீற்றர்கள் தூரத்திலிருக்கிற பெருநகரத்திற்கு அனுப்ப உம்மா, வாப்பா இருவராலும் சம்மதிக்க முடியவில்லை. ஊரைவிட்டுத் தொலைவிலிருந்த நகரத்தை நோக்கிப் பயணிக்க எண்ணியதற்கு பிரதான காரணமாக இருந்தது ஊடகத்துறை. உயர்தரப் பரீட்சை முடிந்த பின்னர் பெறுபேறிற்காகக் காத்திருந்த காலமான ஆறுமாதங்களை உபயோகப்படுத்தும் பொருட்டும், வீட்டில் என்னை மேய்க்க முடியாதென்பதினாலும் மட்டக்களப்பு நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றில் கணினி டிப்ளோமா கற்கையொன்றில் சேர்த்துவிடப்பட்டிருந்தேன். எனது வாழ்வை மாற்றிய தருணம் அது.    ஏலவே கதைகள், சிலகவிதைகள், குறிப்புகளை எழுதியபடியும் பிரசுரத்திற்காகப் பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண்டுமிருந்த என்னை அப்போது, 2001-ம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து வெளியான ‘தினக்கதிர்’ நாளிதழ் ஈர்த்தது. அதில் எனது படைப்புகளும் அவ்வப்போது வெளியாகியபடியிருந்தன. ‘பயிற்சி பத்திரிகையாளர் தேவை’ என்ற விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்துவிட்டு ஒருநாள் நானும் நேர்காணலுக்குச் சென்றேன். பட்டப்படிப்பை முடித்துவிட்டுச் சான்றிதழ்களுடன் காத்திருந்தவர்கள் வரிசையில் கணினி வகுப்புப் புத்தகங்களுடன் அமர்ந்திருந்தேன். தினக்கதிர் நாளிதழின் உரிமையாளராகயிருந்த, மனோ இராஜசிங்கமே என்னை நேர்கண்டார். சிறுமியிடம் உரையாடுவதுபோலவே அவரது உரையாடல் இருந்தது. ”சாப்பிட்டியா?” என்றும் கேட்டார். ”நீர் இங்கு வந்தது அம்மா அப்பாவுக்குத் தெரியுமா?” என்பதே அவரது முதல் கேள்வி. நான் ”இல்லை” என்றேன். ”அவர்களுக்குத் தெரியாமலே வேலை செய்ய உத்தேசமோ?” என அவர் கேட்க, ”வேலை கிடைத்ததென்றால் சொல்லுவேன்” என்றேன். வீட்டுப் பொருளாதாரம் குறித்துக் கேட்டார். பரீட்சைப் பெறுபேறிற்காகக் காத்திருக்கப் பொறுமையின்றி வேலை தேடி அலைகிறளவிற்குப் பொருளாதாரச் சிக்கல் இல்லை என்ற பின்னணியைத் தெரிந்து கொண்ட பிறகு அவரது கேள்விகள் வேறாக மாறின. சமூகத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்? சமூகத்துக்கு நீ என்ன செய்ய முடியும்? இப்படியாகப் பல கேள்விகளைக் கேட்டபின்னர் என்னைப் போகலாம் என்றார். இது நடந்து ஒரு வாரத்தின் பின்னர் பயிற்சிப் பத்திரிகையாளராகத் தெரிவாகியிருப்பதை தொலைபேசியில் அறிகின்றவரைக்கும் அப்படியொரு எதிர்பார்ப்பு எனக்கிருக்கவே இல்லை. அந்த நேர்காணலை வழமையான எனது சாகச விளையாட்டுகளில் ஒன்றாகவே கருதியிருந்தேன். ஆயினும், திடுதிப்பென்று ஏற்பட்ட அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டேன். கணினி வகுப்பைத் தொடர்ந்தபடியே வீட்டுக்குச் சந்தேகம் வராமல் வேலையையும் தொடர்ந்தேன். எனது முதல் சம்பளக் கவரை உம்மாவிடம் நீட்டுகிற வரைக்கும் வேலைக்குச் செல்கிறேன் என்பதை யாரும் கண்டுபிடிக்கவேயில்லை. வீட்டுக்கு அது தெரிந்த பின்பு, விபரீதமான ஒரு துறையைத் தேர்வு செய்திருப்பதாகவும், அது பெண்களுக்கு ஆகாதது என்றும் நிச்சயமாக ஊடகத்துறைக்குள் போகவே கூடாதென்றும், மேலும் அது புலிகளின் பத்திரிகை என்றெல்லாம் பலவாறாக அச்சுறுத்திய எந்தக் கூக்குரலும் தண்டனையும் என்னைத் தடுக்கவில்லை.    இவற்றுக்கெல்லாம் பின்னர் வெளியான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கல்வியியல் கல்லூரிக்கான (Collage of Education) அனுமதியுடன் வந்தடைந்தது. கல்வியியல் கல்லூரியில் படிக்குமாறும், அது முடிந்ததும் ஆசிரியர் தொழில் சர்வநிச்சயம் என்றும் பெற்றோரும் உறவினரும் வற்புறுத்தினர். எனது விருப்பம் இதழியல் கற்பதென்பதாக மாறியிருந்தது. அதற்கு ஒருவரும் ஒப்புக்கொள்ளவில்லை. சண்டையும் சச்சரவும் பட்டினியும் பேசா விரதமுமாக எனது பிடிவாதங்களைத் தொடர்ந்தபடி தினக்கதிர் நாளிதழ் அலுவலகம் சென்றுவந்தேன். இவை அனைத்தும் பத்தோ, பதினொரு மாதங்கள் இடம்பெற்றன. 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி நள்ளிரவில் தினக்கதிர் நாளிதழ் காரியாலம் தீக்கிரையாக்கப்பட்டது.    எதிர்பாராத இந்த நிகழ்ச்சி என்னைப் பாதித்தது. கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்கான காலமும் கடந்துவிட்டிருந்தது. என்னுடன் கற்ற நண்பர்கள் அரையாண்டு காலக் கல்வியைப் பூர்த்தி செய்திருந்தார்கள். இதனால் வீட்டில் வசைகள் அதிகரித்தன.    கொழும்பு செல்லப் போகிறேன் என்றும், அங்கே மட்டும்தான் இதழியல் கற்பதற்கான வழிகள் உண்டென்றும் தொடர்ந்த எனது வாதாட்டத்திற்கு ஒருவரும் செவிசாய்க்கவில்லை. சிங்கள மொழி தெரியாத ஒருவரும் கொழும்பு நகரத்தில் காலத்தை ஓட்ட முடியாதென்றும், அதுவும் ஒரு பெண் தன்னந்தனியாக முடியவே முடியாதென்றும் எச்சரிக்கப்பட்டேன். ஆனால் பட்டினிப் போராட்டம் மரணத்தின் வாசல்களைத் தொடுகிறவரைக்கும் என்னை இழுத்துச் சென்றது. மயக்கமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் குறைந்தபட்சம் என்னை உயிரோடிருக்கச் செய்வதற்காக கொழும்பு செல்ல அனுமதிப்பதென்று வீட்டார் சம்மதித்தனர்.    கொழும்பு வந்ததும் கல்வி ஒரு தாகமாக மாறியது. அந்நிய மொழியும், அறிமுகமற்ற மனிதர்களுடனான நட்பும் அனுபவங்களும் என்னை நிறையவே மாற்றியது. கொழும்பு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் கல்வி முகாமைத்துவத்தில் பட்டப்படிப்பும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல்,  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உளவியல் என கற்றல் விரிவடைந்தது. இவை தவிர தொழில்முறை ஊடகவியலாளர்களிற்கான பயிற்சிகள், பயணங்கள், கள அனுபவங்கள், மனித உரிமைகள் தொடர்பான கற்கைகள் எனக்கு நிறையக் கற்றுத்தந்தன. சிறுபராயத்திலிருந்தே சட்டம் பயில்வது எனது ஆர்வமாயிருந்தது. 2012-ம் வருடம் சட்டக்கல்லூரி அனுமதிக்காகப் படித்துக் கொண்டிருந்தபோதே பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக்குவது தொடர்பான எனது நேர்காணல் பி.பி.ஸி. வானொலியில் ஒலிபரப்பாகியது. அதன் பின்னரான சூழ்நிலைகள் எனது வாழ்வைப் புரட்டிப்போட்டதில் படிப்பு உடனடியாகத் தடைப்பட்டது. அந்த அனுபவங்கள் சமூகத்துறை சார்ந்த கல்வியைப் பயில வேண்டிய அவசியம் இருப்பதை உணர்த்தியதன் விளைவாக சமூகப்பணி (Social Work) என்ற பட்டப் பின் படிப்பை தற்போது தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.    உங்களை இலக்கியத்தின் பக்கம் அழைத்து வந்தது எதுவெனக் கருதுகிறீர்கள்?    இலக்கியம் தொடர்பிலான எனது ஈடுபாடென்பது வேர் அறியமுடியாத ஒரு நிகழ்ச்சி. சிறுபராயம் முதல் புத்தகங்களைப் படித்துக் குவித்த அனுபவம் எனக்கில்லை. சிறுபராய, இளமைக்காலக் கட்டுப்பாடுகள், தடைகள், சுதந்திர மறுப்புகளிலிருந்து எழுத்துக்கூடாக விடுதலையடைந்தேன் என்றோ, கவிதையும் எழுத்துகளும் புத்தகங்களுமே என்னை விடுவித்ததென்றோ நிச்சயமாகச் சொல்லமாட்டேன். தடைகளைக் கடந்தே வந்தேன். விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விவாதத்திற்குள்ளாக்கினேன். கேள்விகளால் அவற்றை இல்லாது செய்தேன். மறுப்புக்கு வெளியே தெரிந்த வானத்தை சுதந்திரத்தின் சிறகுகளால் அளந்தேன். இத்தனையும் நான்  செயல்களாலேயே நிகழ்த்தினேன்.    நிஜவாழ்வில் கதவுகளுக்குள் ஒளிந்துகொண்டு மூலையில் குந்தி விம்மியவாறு ‘புரவியில் பறந்தேன்’ என்று கவிதையில்  காணுகிற சுதந்திரத்தை விரும்புகிறவளில்லை நான். நிச்சயமாகவே இல்லை! இவற்றுக்கு அப்பால் நான் எழுதினேன். எனது கவிதைகளில் என்னை எழுதினேன். அது கற்பனையான நான் இல்லை. எவராலும் கற்பனை செய்ய முடியாத நான். என்னில் நான் கண்ட வித்தியாசமே என்னை எழுதத்தூண்டியது. என்னை எழுதுவதற்காகவே நான் எழுதினேன். நான் வாழ்கிறேன் என்பதையும் என்னை அப்படியே உள்ளபடியாக உரித்துக் காட்டுவதற்காகவும் எழுதினேன். என்னைப் பற்றிய பதிவேடாகவே எழுத்தின் ஆரம்பம் இருந்தது. அதுவே இலக்கியத்தின் பக்கம் என்னை இழுத்து வந்திருக்கவேண்டும். உண்மையில் ‘சிறகு முளைத்த பெண்’ வெளிவருகிற வரைக்கும் இலக்கிய உலகு குறித்து எதுவுமே தெரியாதெனக்கு. இப்போது தெரிந்திருக்கிறேன் என்பதால் ஒரு மாறுதலையும் அடைந்துவிடவுமில்லை.    இலங்கையில், பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும் என நீங்கள் பி.பி.ஸி. செய்திச் சேவைக்கு சொன்ன கருத்துகளை பின்பு மீளப்பெற்றுக்கொண்டீர்களா?    மீளப்பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால், கருத்துகளை மீளப்பெற்றுக்கொண்டே  னா இல்லையா என்பதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவற்றினால் எந்த மாறுதலும் ஏற்பட்டுவிடப் போவதுமில்லை. வாழ்வின் நோக்கத்தை, செல்லவேண்டிய தூரத்தை, செய்ய வேண்டிய காரியங்களைத் தெளிவுபடுத்திய ஓர் அனுபவம் அது. எப்படியான சமூகத்துக்குள் இருந்துகொண்டிருக்கின்றேன் என்பதை, எனது சமூகம் பக்குவத்தில் இன்னும் பால்குடிக் குழந்தையே என்பதை எனக்குணர்த்திய அனுபவமாக மட்டுமே அதனைப் பார்க்கிறேன்.    பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக்கியிருக்கும் நாடுகளில் பாலியல் தொழிலாளர்களிற்கு தொழில் பாதுகாப்புக் கிடைக்கும் என்ற கருத்து தவறெனவும் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கினால் அது பெருகும்போது அதனுடன் காவற்துறைக்கான லஞ்சம், போதைப் பொருட்கள் பாவனை, சிறார் பாலியல் தொழில் போன்றவையும் சேர்ந்து வளரும் என்றொரு விமர்சனம் உள்ளதே? பாலியல் தொழிலில் விரும்பி ஈடுபடுபவர்கள் மிக மிகச் சொற்பமானவர்களென்றும் அநேகமானோர் சமூக நிர்ப்பந்தங்களாலேயே பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதும் உண்மையல்லவா?    பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதனூடாக, அத்தொழிலில் ஈடுபடுகிறவர்களை முற்றாகக் காப்பாற்ற முடியாது. அதேநேரம் பாலியல் தொழிலே லஞ்சம், போதைப் பொருள் பாவனை மற்றும் சிறார் பாலியல் தொழில் அதிகரிக்கக் காரணம் என்பதிலும் உண்மையில்லை. பாலியல் தொழிலில் விரும்பியோ, நிர்ப்பந்தம் காரணமாகவோ ஈடுபடுகிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வாறே பாலியல் தொழில் சட்ட நிமித்தத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் புரிந்து கொள்ளப்படவேண்டியதே. சட்ட அங்கீகாரம் குறிப்பிட்ட தொழிலைக் கட்டுப்படுத்துவதற்கோ, அதிகரிப்பதற்கோ ஏதுவாக இருக்காது. சட்ட அங்கீகாரம் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறர்களின் நலன் சார்ந்த – அவர்களது உரிமைகளை மதிக்கிற – பாரபட்சமற்ற சமூக நிலையை உறுதி செய்வதாக இருக்கும். அப்படியான சட்ட அங்கீகாரமே தேவையும்கூட.    பாலியல் தொழிலைச் சட்ட ரீதியாக அங்கீகரித்திருக்கும் நாடுகளில் இரண்டு வகையான அனுமதியைக் காணமுடியும். டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, எத்தியோப்பியா, மெக்ஸிகோ, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பாலியல் தொழில் முழுமையாகச் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ், மலேசியா, நோர்வே, ஜப்பான் போன்ற நாடுகளில் வரையறுக்கப்பட்ட அங்கீகாரம் உள்ளது. Brothel ownership  இந்த நாடுகளில் மறுக்கப்பட்டுள்ளது.    பாலியல் வன்முறைகள், பாலியலுக்கான மனிதக் கடத்தல்கள், லஞ்சம், ஊழல் குற்றங்கள் எல்லாவற்றுடனும் பாலியல் தொழில் எங்கு அதிகம் நடைபெறுகிறதென்றால் பாலியல் தொழிலை சட்ட ஏற்பாட்டுக்குள் கொண்டுவர மறுத்துக்கொண்டிருக்கிற நாடுகளில்தான் அவை நிகழ்கின்றன. ஆப்கானிஸ்தான், அங்கோலா, இந்தியா, இலங்கை, ஈரான், ஈராக், சவூதி அரேபியா, கென்யா, தென் ஆபிரிக்கா, உகண்டா, ருமேனியா எனப் பல நாடுகளை உதாரணம் சொல்லலாம். இந்த நாடுகளில் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரமில்லை. ஆனால் இங்குதான் பாலியல் ரீதியான அநீதிகளும் வன்கொடுமைகளும் அதிகம் இடம்பெறுகின்றன.    பி.பி.ஸியில் நீங்கள் சொன்ன அந்தக் கருத்துகளைத் தொடர்ந்து இலங்கையின் இஸ்லாமிய மத அமைப்புகள் சில உங்களைக் கடுமையாக விமர்சித்தன. உங்களை நடைமுறையில் அவை எவ்விதம்  எதிர்கொண்டன?    தனிப்பட்ட ஒருவரின் கருத்தை ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமானதாக எடுத்துக்கொண்டு காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறவையாக இஸ்லாமிய மத அமைப்புகள் இருக்கின்றன என்ற துயரத்தைச் சொல்லித்தானாக வேண்டும். பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என ஏறாவூர் பள்ளிவாசல் சம்மேளனமும் ஜமாஅத்தும் வலிறுத்தின, வீடு புகுந்து சமரசம் செய்கிற பாங்கில் எனது பெற்றோரை மிரட்டின, “எனது மகள் தவறானவர்களால் வழிநடத்தப்படுகிறாள், அவளை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று எனது தந்தை மன்றாடியதாகப் பொய்யான தகவலை ஊடகங்களுக்குத் தெரிவித்தன, ஊரிலிருந்த எங்களது பாலர் பாடசாலைக்கு தீ வைக்கப்பட்டபோது பாரமுகமாக இருந்தன. பொலிஸ் விசாரணைகளின்போது அரசியல் செல்வாக்குகளை உபயோகித்தது, தனிநபர்கள் மற்றும் குழுக்களால் அவமரியாதையாக எழுதப்பட்டு பள்ளிகளில் ஜூம்ஆத் தொழுகைகளுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களுக்குத் தடைவிதிக்காது மறைமுகமாக ஒத்துழைப்பு நல்கியது என்று எதிர்கொள்ளப்பட்ட விதங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.    இந்த நிகழ்ச்சிகள் இன்றுவரைக்கும் எனது சொந்த ஊருடனான தொடர்புகளை எனக்கு இல்லாது செய்திருக்கின்றன. பள்ளிவாசல் சம்மேளத்தினால், ஜமாஆத்தினால் நான் ஊரொதுக்கம் செய்யப்படவில்லையென்றபோதும் அப்படிச் செய்வதைவிடவும் மோசமாக நடத்தப்படக்கூடிய அனைத்துச் சூழல்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2012-ல் ஏறாவூர் நகர சபையினால் கௌரவிக்கப்படவிருந்தவர்கள் பட்டியலில் இருந்த எனது பெயரையும் அந்நிகழ்வுக்கான சிறப்பிதழில் இடம்பெறவிருந்த எனது படைப்புக்களையும் நீக்கம் செய்த சம்பவங்கள், மத நிறுவனங்களின் தொடர்பில்லாத அமைப்புகளின்  சுதந்திரத்தன்மையிலும் மதவாதம் தாக்கம் செலுத்துவதை உணர்த்தப் போதுமானது. 2014 மே 17-ல் ஊரையே பிரமிப்பில் ஆழ்த்தும்படியாகக் கொண்டாடப்பட்ட ‘சாதனையாளர் விருது’ நிகழ்ச்சியிலிருந்தும் நான் புறக்கணிப்பட்டேன்.    தமிழகத்தில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு இவ்வாறு ஒரு புறக்கணிப்பு நிகழ்ந்தபோது இஸ்லாமிய எழுத்தாளர்கள் உள்ளிட்ட தமிழக எழுத்தாளர்கள் ரசூலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். அதேபோன்று மத அடிப்படைவாதிகளிற்கு எதிராக உங்களது சக எழுத்தாளர்கள் உங்களோடு நின்றிருந்தார்களா?    இல்லை! இலங்கையில் புகழ்பெற்ற முற்போக்குக் கவிஞர்களாக, எழுத்தாளர்களாக செயற்படுகின்ற இஸ்லாமியர்கள்கூட எனது பி.பி.ஸி. நேர்காணலுக்குப் பின்பு என்னைப் புறக்கணிக்கிறவர்களாக, இரட்டை முகங்களும் இரு கருத்துகளும் உடையவர்களாகவே உள்ளார்கள். மறைமுகமாகவும் பொதுத்தளங்களிலும் இதன் பொருட்டு நான் இன்னமும் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றேன்.    இவற்றிலிருந்து  நேர்கிற அனுபவம் கசப்பானது, ஆனால் உண்மையானது. மதவாதம் கொள்ளை நோய். அது மத நிறுவனங்களை மட்டும் பீடிக்கிற நோய் கிடையாது. எல்லா மதத்தினரையும், அவர் எப்பேற்பட்டவராயினும் தாக்கக்கூடியது. சிலரிடம் அதைக் கண்டுகொள்ளலாம். சிலர் மறைத்துக் கொள்வார்கள். வித்தியாசம் அவ்வளவே.    ‘இத்தனை நபிகளுக்கு இடையில் ஏனில்லை ஒரு பெண் நபி’ என்ற கேள்வியை ஸர்மிளாவும் தனக்குள் எப்போதாவது கேட்டுக்கொள்வதுண்டா?    எப்போதுமே கேட்டுக்கொண்டதில்லை. ஏனெனில் பெண் இயற்கை.    இஸ்லாமிய மதம் பெண்களிற்கு சம உரிமைகளை வழங்குவதாக வஹாபி அமைப்புகள் தொடர்ந்து சொல்லி வருகின்றனவே?    நிச்சயமாக இல்லை. பெண்களின் உரிமைகள் என்று இஸ்லாம் பட்டியலிட்டுள்ளவை திருமறைக் குர்ஆனையும் பேச்சு மேடைகளையும் விவாத அரங்குகளையும் அலங்கரிக்கின்றனவே தவிர நடைமுறையில் இல்லை. பெண்ணுரிமை என்று அவர்களால் கூச்சலிடப்படுகின்றவை சமகாலத்துக்குப் பொருந்தக்கூடியனவாக இல்லை. அல்லது பொருந்த முடியாதவிதமாக மதவாதிகளால் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.  இஸ்லாமிய முறையில் பதிவு செய்யப்பட்ட விவாக – விவாகரத்துக்களை ஆராய்கிற ஹாதி நீதிமன்றில் ஒரு ஆண் நீதிபதியையும் இரண்டோ அதற்கு அதிகமாகவோ ஜூரிக்களையும் கொண்ட சபையில் ஏன் ஒரு பெண்ணுக்கு இடமில்லை? பெண் சட்டம் இயற்றக்கூடியவளில்லை என்றால் பெண்ணுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் என்பவை என்ன? பெண் உணர்ச்சிவயமானவள், அவளால் நீதி வழங்க முடியாதென்கிறார்கள். ஏன் ஆண்கள் உணர்ச்சிவயமானவர்கள் இல்லையா? நான்கு திருமணங்கள் செய்ய அவர்களுக்கிருக்கின்ற அனுமதியை என்ன விதமாக அவர்கள் கையாள்கிறார்கள்? ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைத் தெரிவு செய்யும்போது அறிவுபூர்வமாகத்தான் அணுகுகின்றானா?    ஆணும் பெண்ணும் சமம் என்றும் அவர்களின் நன்மைகளுக்குச் சமமான கூலிகளும், குற்றங்களுக்குச் சமமான தண்டனைகளுமே விதிக்கப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் பாரபட்சமற்றவன், நீதியானவன் என்ற குர்ஆன் வசனங்களிலிருந்தும்கூட பால் வேறுபாடு கிடையாதென்பதை விளங்கலாம். ஆனால் பள்ளிகளில் பெண்கள் தொழுவதற்கு அனுமதியில்லையே! நோன்பு காலங்களில் தராவீஹ் தொழுகைக்காக, பெருநாள் தொழுகைகளுக்காக பள்ளிகளில் பெண்களை அனுமதிக்க முடியுமென்றால் அன்றாட ஐந்து நேரத் தொழுகைகளுக்கு ஏன் பெண்களை அனுமதிக்க முடியாது? ஏனென்றால், பெண்கள் ஐந்து நேரம் பள்ளிக்குத் தொழுகைக்கு வருவார்களென்றால் வீட்டைக் கவனிக்கமாட்டார்கள், குழந்தைளைப் பராமரிக்கமாட்டார்கள், இப்லீஸ் நெஞ்சுகளில் புகுந்து செய்யக்கூடிய சேஷ்டைகளால் முக்கியமாக ஆண்கள் தன்னிலை இழந்து வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் புனித இல்லத்தை அசிங்கப்படுத்தக்கூடும் போன்ற சுயநலம் சார்ந்த காரணங்களால் மதவாதிகள் கொண்டுவந்திருக்கும் கட்டுப்பாடே அது.    இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். இப்படியான அடிப்படைத் தடைகளை நீக்காது, பெண்களின் சுதந்திரத்தைப் பற்றிப் பேச இஸ்லாமிய மதவாதிகள் எவருக்கும் தகுதியில்லை.    இலங்கை ஒரு பவுத்த நாடெனவும் அதை மற்றைய சிறுபான்மை இனங்கள் ஏற்று நடக்கவேண்டும் எனவும் நீங்கள் ‘இருளை இருளால் விலக்குதல்‘ என்ற கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள். இது ‘பொதுபல சேனா’வின் குரலை ஒத்ததல்லவா?    இல்லை. இலங்கையில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் அரசியலினூடாக அடையவேண்டிய இலக்குளை அடையாள ஆதிக்கத்தினூடாக அடைய முற்படுகின்ற முரண்பாட்டையே ‘இருட்டை இருட்டால் விலக்குதல்’ கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.    ‘இருட்டை இருட்டால் விலக்குதல்’ என்பது; ‘கொலைக்குக் கொலை’ என்ற நிலைப்பாட்டையும், அத்தகைய நிலைப்பாடு இனங்களுக்கிடையில் அமைதியை ஒருபோதும் கொண்டு வராது என்பதையும் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்பட்டதே. இலங்கையில் இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கான பிரதான காரணம் மேலாதிக்க மனோபாவமே. இந்த மனோபாவம் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவருக்கும் இருக்கிறது. இனமுரண்பாட்டின் அடிப்படை இழையாக இதுவே அமைகின்றது. இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு உருவாக மேலாதிக்க உணர்வு களையப்படவேண்டும். மேலாதிக்க உணர்வு அழியும்போதே சமத்துவம் உருவாகமுடியும்.    அந்தக் கட்டுரையில் நீங்கள் “இலங்கை சிங்கள பவுத்த நாடு என்கின்ற அடிப்படையை  ஏற்றுக்கொண்டு தமது கௌரவத்தை பேணிய வகையில் அமைதியாக வாழ்வதா  அல்லது அடையாளத்தை முன்னிறுத்தும் சண்டையில் அனைத்தையும் இழந்து அழிந்துபோவதா என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைக்கு இஸ்லாமியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதன் கருத்து இலங்கை சிங்கள பவுத்த நாடு என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சிறுபான்மை இனங்களிற்கு கௌரவமும் அமைதியும் கிட்டும் என்பதுதானே?    இலங்கை சிங்கள பௌத்த பெரும்பான்மை நாடு என்பது வேறு. இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்பது வேறு. முன்னையது பாசிசக் குறியீடு. பின்னையது எதார்த்தம். எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே அந்தக் கட்டுரையில் வலியுறுத்தியிருந்தேன். எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு சிறுபான்மையினர் தங்கள் அபிலாஷைகளையும் – தாங்கள் புறக்கணிக்கப்படுவதையும் பெரும்பான்மையினரிடம் எடுத்துச் சென்று நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். புதிய உலக ஒழுங்கில் புதிய அணுகுமுறைகளும் தேவை என்பதையே அந்தக் கட்டுரையில் உணர்த்தியிருந்தேன். வன்முறைகளுக்கூடாக அடைந்து கொள்ளும் வழிமுறைகள் அழிவுகளை உண்டாக்குமே தவிர ஒருபோதும் விடுதலையை, அமைதியைக் கொண்டுவராது.    இலங்கையில் தமிழர்களிற்கும் இஸ்லாமியர்களிற்கும் இடையே இனி அரசியல் ஒருமைப்பாடு வரவே வராதா?  தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையில் அரசியல் ஒருமைப்பாடு உருவாகுவதற்கான வழிகளொன்றும் இலங்கையில் இனி இல்லை என்பதே உண்மை. தமிழர் – இஸ்லாமியர் ஒருமைப்பாடென்பது சிங்களவர்களுக்கு எதிரான ஒருமைப்பாடாகவும் இருக்கக்கூடியது. அது ஆபத்தானது.    இஸ்லாமியர்கள் மீது தமிழர்கள் இழைத்த வன்முறைகளை தமிழ் சனநாயகவாதிகள் கண்டிப்பதுபோல, தமிழர்கள் மீது இஸ்லாமியர்களால் நடத்தப்பட்ட வன்முறைகளையும் கொலைகளையும் இஸ்லாமியத் தரப்பிலிருந்து அவ்வளவாக யாரும் கண்டிக்கவில்லை என்றொரு குற்றச்சாட்டு தொடர்ந்து தமிழர்கள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டு வருகிறதே?    இஸ்லாமியர்கள் மீது தமிழர்கள் இழைத்த வன்முறைகளை தமிழ் சனநாயகவாதிகள் கண்டித்தார்கள் என்பது உண்மையே. ஆனால் இஸ்லாமியர்களை, பாதிக்கப்பட்ட ஒர் இனத்தவரை ஆற்றுப்படுத்தும் நோக்கில் அவர்கள் அதனைச் செய்யவில்லை என்பதும் உண்மை. அதாவது நீங்கள் குறிப்பிடுகின்ற தமிழ் சனநாயகவாதிகள் என்போர் இரண்டு பிரிவினர். ஒரு பிரிவு இடதுசாரிகள். மற்றைய பிரிவு புலிகளுக்கு எதிரான தமிழ்த் தேசியவாதிகள். இஸ்லாமியர்கள் மீதான புலிகளின் வன்முறைகள் குறித்த விவகாரத்தில் நான் குறிப்பிட்ட முதல் பிரிவினர் பெரும்பாலும் மௌனமாகவே இருந்தார்கள். இரண்டாவது பிரிவினர் புலிகளின் ஜனநாயக விரோதச் செயல்களை அம்பலப்படுத்தவே இஸ்லாமியர் மீதான வன்முறைகளைக் கண்டித்தார்கள்.    செருப்படியான பதில் கொடுத்திருக்கிறீர்கள். இஸ்லாமியர்களின் தரப்பிலிருந்து தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளிற்கும் கொலைகளிற்கும் இஸ்லாமியத் தரப்புகளிடமிருந்து வலுவான கண்டனக் குரல்கள் எழாததற்கான காரணங்கள் எவையெனக் கருதுகிறீர்கள். இஸ்லாமிய முற்போக்காளர்களிடையே கூடக் கடுமையான தமிழின வெறுப்பு மேலோங்கியிருப்பதாக இதை எடுத்துக்கொள்ளலாமா?    தமிழர்கள் மீதான வெறுப்பல்ல அது.    தமிழர்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தியது அரச படைகளுடன் சேர்ந்திருந்த சில முஸ்லிம் நபர்களே! பெரும்பான்மைத் தமிழர்களின் ஆதரவைப் பெற்றிருந்த புலிகளைப் போன்று பெரும்பான்மை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய அமைப்பெதுவும் தமிழர்களின் மீதான தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கவில்லை. அரச படைகளுடன் சேர்ந்து இயங்கிய முஸ்லிம் நபர்களின் தாக்குதல் அரசின் தாக்குதலே என்ற புரிதலே இஸ்லாமிய முற்போக்காளர்களிடமிருந்து வலுவான கண்டனக் குரல்கள் எழாததற்கான காரணம் என்று நினைக்கிறேன்.    முஸ்லிம்களிற்குள்ளும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்று கிளம்பும் விமர்சனங்கள் சரியானவைதானா?    இலங்கையில் முஸ்லிம்களிற்குள் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உண்டென்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அதற்கு நிகராக பிரதேசவாதம் என்கிற பிரிவினை இருக்கிறது. இலங்கையில் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் பிரதேசவாதத்திற்கிருக்கும் வல்லமை இலங்கை முஸ்லிம் தேசியவாதத்திற்கு இல்லை.    தமிழகப் படைப்பாளிகளோடு உங்களுக்கு நெருங்கிய தொடர்புகளுண்டு. ஈழப்போராட்டம் குறித்தும் விடுதலைப் புலிகள் குறித்தும்  தமிழக அறிவுத்துறையில் நிலவும் மதிப்பீடுகளை எவ்விதம் நீங்கள் மதிப்பிடுகிறீர்கள்?    தமிழகப் படைப்பாளிகளுடனான எனது தொடர்புகள் இலக்கியம் சார்ந்தது மட்டுமே. தமிழக அறிவுத்துறையில் விடுதலைப் புலிகள் குறித்தும் ஈழப்போராட்டம் குறித்தும் இருக்கக்கூடிய அரசியல் தெளிவு பெரும்பாலும் புலிகளால் அல்லது புலிகள் சார்பானவர்களால் பரப்புச் செய்யப்பட்டது. ஆகவே, அது ஒருபக்கச் சார்பானது. தமிழ்நாட்டின் அரசியல் சதுரங்கத்தில் ஈழப்போராட்டம் நகர்த்தப்படுகின்ற ஒரு காய்.    முஸ்லீம்கள் மீது புலிகள் இழைத்த கொடுமைகளிற்கெல்லாம் அவர்கள் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுவிட்டார்கள், முஸ்லீம் தலைவர்களை வன்னிக்கு அழைத்துப் பேசினார்கள் என்றொரு வாதம் சொல்லப்படுகிறது.. அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?    புலிகள் மன்னிப்புக் கேட்டார்கள் என்பது உண்மைதான். மனம் வருந்தி, தவறை உணர்ந்து இதயபூர்வமாக அவர்கள் அதனைச் செய்யவில்லை. முஸ்லிம் தலைவர்களை வன்னிக்கு அழைத்துப் பேசியதும் மன்னிப்புக் கேட்டதுமெல்லாம் அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையைத் தற்காலிகமாகக் கையாளுவதற்கே! சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசும், புலிகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த தருணத்தில் தாங்கள் வரலாற்றில் இழைத்த தவறுகளிலிருந்து தப்பிக்கின்ற தந்திரோபாயமாகவே புலிகளின் இவ்விரண்டு செயல்களையும் நோக்க முடியும். இவ்விரண்டும் உண்மையானவையாக, இதயசுத்தியானவையாக இருந்திருந்தால் மாவிலாறில் தொடங்கிய இறுதிக்கட்ட யுத்தத்தின்போது புலிகள், மூதூர் முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றித் துடைத்தெறிந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது.    அளுத்கம – பேருவளை கொலைகளும் தாக்குதல்களும் வரலாற்றில் இனியும் தொடருவதற்கான வாய்புகளுள்ளன எனக் கருதுகிறீர்களா?இந்தத் தாக்குதல் வெறுமனே ‘பொதுபலசேனா’வினது முன்னெடுப்பு மட்டுமல்ல, இதற்குப் பின்னால் இலங்கை அரசின் கைகள் இருக்கின்றன எனச் சொல்லப்படும் கருத்துகள் குறித்து?    அளுத்கம – பேருவளை தாக்குதல்களும் கொலைகளும் ஒரு கட்டம் (Episode) நிறைவேறி முடிந்திருக்கிற உணர்வையே தருகின்றன. வரலாற்றில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் 1956,1958,1977,1981,1983 காலப்பகுதிகளிலும் அதன் பின்பு யுத்த காலத்தில் குறுகிய கால இடைவெளிகளில் ஏராளமாகவும் 2009-ல் மிகப்பெரிய அவலங்களாகவும் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதுபோன்றே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும் கட்டம் கட்டமாக நிகழ்த்தப்படலாம்.    ‘பொதுபலசேனா’ ஒரு கொந்துராத்து அமைப்பு, வழங்குநர் வேறு என்ற புரிதலே இலங்கை புத்திஜீவிகள் மத்தியில் நிலவுகின்றது. அது இலங்கை அரசின் கையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். வெளிநாட்டு சக்திகளின் செல்வாக்காகவும் இருக்கலாம். வன்முறையைத் தடுக்கத் தவறியது, சட்ட ஒழுங்கைப் பேணாதது என்ற அடிப்படையில் முதல் குற்றவாளி அரசே என்பது நிரூபணத்திற்குரியது. 1983-ல் நிகழ்ந்த இன வன்செயல்களிற்குக் காரணியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம் இருந்தது என்கின்ற பழி வரலாற்றுக் கறையாக இன்றுவரைக்கும் எப்படி அழியாதுள்ளதோ, அதேபோல மகிந்த ராஜபக்ச அரசும் கறைகள் நிரம்பிய வரலாற்றையே விட்டுச் செல்லும்.    பிரான்ஸிலே இஸ்லாமியப் பெண்கள் முகத்திரை அணிவது சட்டவிரோதமாக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்கே இருவேறு கருத்துகளிருந்தன. மதப் பண்பாண்டில் கைவைக்கக் கூடாது என்பது ஒரு கருத்து. முகத்திரை என்பது மதப் பண்பாடு அல்ல, அது ஆண்களால் பெண்கள்மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறை, முகத்திரை பெண்ணின் தேர்வு கிடையாது என்றுமொரு கருத்தும் சொல்லப்பட்டது. முகத்திரை இஸ்லாமியப் பெண்ணிற்கு தேர்வா அல்லது திணிப்பா?    முகத்திரை திணிப்பு மட்டும்தான், அது மதப்பண்பாடு என்று சொல்லப்பட்டாலும் கூட. முகத்திரைத் திணிப்பு வஹாபிஸத்தின் கொள்கைகளில் ஒன்று. அது ஆண் அடக்குமுறையின் அடையாளம்.    மிகக் குறைந்தளவு முஸ்லிம்கள் வாழும் இலங்கையிலிருந்து தமிழ் மொழியில் எழுதும் ஏராளமான முஸ்லீம் எழுத்தாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் அதிகளவு முஸ்லிம்கள் வாழும் தமிழகத்திலிருந்து மிகச் சில எழுத்தாளர்களே தோன்றியிருக்கிறார்கள். சமகாலத்து பெண் எழுத்துகளை எடுத்துக்கொண்டால் நீங்கள், அனார் ,பெண்ணியா, பஹிமா ஜகான் என நிறையப் பேர் எழுதுகிறீர்கள். தமிழகத்திலோ சல்மா மட்டும்தான் எழுதுகிறார். இதற்கான சமூகவியல் காரணங்கள் எதுவாகயிருக்கும் எனக் கருதுகிறீர்கள்?    கல்வி பிரதானமான காரணமாக இருக்கலாம். தமிழ் நாட்டில் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன்பாகவே இலங்கையில் பெண்கள் கல்வியில் ஆழக் கால் பதித்தவர்களாக இருந்தார்கள். குறைந்தபட்சம் அடிப்படைக் கல்வியைப் பெறுகின்ற உரிமையை, நூலகங்களைப் பயன்படுத்துகின்ற சுதந்திரங்களைப் பெற்றிருந்தார்கள். ஆனால் இதனை முழுக்காரணியாக ஏற்க முடியவில்லை. யுத்தம் ஒரு காரணமாக இருக்கலாம். இலங்கை முழுவதுமே யுத்தப் பிரதேசமாக இருந்தது, பெண்கள் யுத்தத்தின் பங்காளர்களாகவும் பார்வையாளர்களாகவும் இருந்தார்கள் என்கிற பாரிய அனுபவ வெளியும் தாக்கமுமாக இருக்கலாம். யுத்தப் பிரதேசத்திலிருந்து வெளிவருகின்ற பெண்களின் படைப்புகள் என்ற எதிர்பார்ப்பு வாசகர்களை அதிகமாக்கி படைப்பாளிகளைத் தூண்டியதன் விளைவாகவும் இருக்கலாம். ஆனால் இந்த ஊகங்கள் எல்லோருக்கும் பொருந்தக் கூடியதுமில்லை. ஒவ்வொருவருக்குமான அனுபவங்கள் பிரத்தியேகமானவை. எனினும், பொதுவானவையாக இவற்றைக் கொள்ள முடியும்.    தெற்குப் பகுதி முஸ்லிம்களில் ஒரு பகுதியினரின் வீட்டு மொழி தமிழிலிருந்து சிங்களமாக மாறிக்கொண்டிருக்கிறது எனச் செய்திகள் கிடைக்கின்றன. இது எந்தளவிற்கு உண்மை?    பள்ளிவாசலுக்குள் சிங்களம் பேசுவது ஹராம் என்று தெற்கு முஸ்லிம்கள் கருதிய ஒரு காலமிருந்தது. இன்று இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. வடக்கு – கிழக்கிற்கு வெளியே தமிழ் மொழி வழி சிறந்த பாடசாலைகள் இல்லை. வடக்கு – கிழக்கில் தமிழ் மொழி வழிப் பாடசாலைகள் சிறப்பாக உள்ளதுடன் அங்கு உத்தியோகபூர்வ மொழியாகவும் தமிழ் உள்ளது. ஆனால் தெற்கு முஸ்லிம்கள் அரச கருமங்கள் அனைத்தையும் சிங்கள மொழியிலேயே செய்ய வேண்டியிருப்பதுடன், சிங்களத்திலேயே பணியாற்ற வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள். இவைபோக சிங்களத்தில் கற்பது சிறந்த கல்வித் தேர்ச்சிக்கு அவசியமானதென படித்த மற்றும் வசதிபடைத்த முஸ்லிம்கள் நினைக்கின்ற மனப்பாங்கும் ஒரு காரணமென்று சொல்லலாம்.    தமிழகத்தைப் பொறுத்தளவில் முஸ்லிம்கள் தங்களைத் தமிழர்களாகவே கருதிக்கொள்கிறார்கள், ஆனால் இலங்கையில் முஸ்லிம்கள் தங்களைத் தனி இனமாக நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த வேறுபாட்டிற்கான அடிப்படைக் காரணங்களாக எவற்றைக் கருதுகிறீர்கள்?    தமிழக முஸ்லிம்களையும் இலங்கை முஸ்லிம்களையும் பொருத்திப் பார்ப்பதே ஒருவித முரண் அரசியல் நோக்கு என்பதே எனது அபிப்பிராயம்.    அரசியல், கலாசாரம் ஆகிய இரு பெருங் கூறுகள் இலங்கை முஸ்லிம்களையும் தமிழக முஸ்லிம்களையும் வேறுபடுத்தப் போதுமானது. முதலாவதாக, இலங்கை முஸ்லிம்களைப் போன்று தமிழக முஸ்லிம்கள் சக இனத்தின் பாசிச சக்தியொன்றின் அடக்குமுறைக்கும் இன அழிப்புக்கும் ஆளாகியவர்களில்லை. புலிகளின் தனி ஈழக் கோரிக்கையும், ஜனநாயக விரோதப் போராட்டமும், முஸ்லிம்களை இலக்குவைத்து அழித்ததுமே முஸ்லிம்கள் அடையாள அரசியல் செய்யவும், தங்களைத் தனி இனமாக நிறுத்திக் கொள்ளவும் காரணங்களாகின.    கலாசாரம், இரண்டாவது. தமிழக முஸ்லிம்களின் கலாசாரம் இந்து சமூகத்தின் நீட்சியாகப் பார்க்கக்கூடியது. இலங்கை முஸ்லிம்களின் கலாசாரமும் இந்து மற்றும் பௌத்தர்களின் வாழ்வியலுடன் கலந்ததாக இருந்தபோதும் இஸ்லாமியர்களுக்கே உரிய தனித்துவமான நாகரீகமாக அது மேம்படுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, தமிழகத்து முஸ்லிம் பெண்களைப் போன்று இலங்கை முஸ்லிம் பெண்கள் கூந்தலில் பூக்களைச் சூடுவதில்லை. பூக்கள் சூடுவது இஸ்லாமியக் கலாசாரம் இல்லை. இதுபோன்று உடை, அலங்காரம், திருமணச் சடங்குகள் போன்ற கலாசாரம் செல்வாக்குச் செலுத்துகின்ற பல உதாரணங்களைச் சொல்லலாம்.    ‘உம்மத்‘ நாவலை எழுத உங்களிற்கு உந்துதலாக இருந்தது எது?    என்னுடைய அனுபவமும் அறிந்த உண்மைகளும்.    நேர்காணலின் நிறைவாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?    சொல்ல நிறைய உள்ளது. இதுவரைக்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் தந்த என்னை இந்தக் கேள்வி பேசத் தூண்டுகிறது.    பெண் படைப்பாளிகளை மதிக்கவும், குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளவும் மறுக்கின்ற ஆணாதிக்கம் குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் பெற்றும், பெண் படைப்பாளிகள் கூட்டாக இணைந்து செயற்படக்கூடியதுமான ஆரோக்கியமான சூழல் உருவாகிவருகிறது.    பெண் படைப்பாளிகளைப் பெண் என்பதற்காகவே அவமரியாதை செய்கின்ற புறக்கணிக்கின்ற நிலை தமிழகத்தில் மட்டுமல்ல ஈழத்திலும் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இருப்பது போல பெண் படைப்பாளிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுச் செயற்பாடுகள் ஈழத்தில் இல்லை. ஈழத்துப் பெண் படைப்பாளிகள் தங்களுக்கு நேரும் அவமானங்களைத் தன்னந்தனியாகவே எதிர்கொள்ள வேண்டியுள்ளது.    எழுத்துப் பயணத்தை நம்பிக்கையிலிருந்து தொடங்கியவள் என்ற வகையில் எவ்வளவோ சொல்லத் தோன்றுகின்றது. யாரினுடைய சிபாரிசும் அறிமுகமும் இல்லாத, ஈழத்துக்கு வெளியே ஒருவரும் அறிந்திருக்க முடியாத, எந்தவொரு இலக்கிய சஞ்சிகைகளிலும் எழுதிப் பரிச்சயமற்ற  எனது கவிதைகளை 2011-ல் நம்பிக்கையுடனே ‘காலச்சுவடு’ பதிப்பகத்திற்கு அனுப்பிவைத்தேன். காலச்சுவடு இதழின் சந்தாதாரரோ தொடர் வாசகியோகூட இல்லை நான். ‘சிறகு முளைத்த பெண்’ கவிதைத் தொகுதி ஸர்மிளா ஸெய்யித் பெண் என்பதற்காக அல்ல, இவளது கவிதைகளுக்காவே பிரசுரத்திற்குத் தேர்வானது. கவிதை நூல் வெளியீட்டுக்குப் பின்னர் வாழ்த்தியவர்களை விடவும் காலச்சுவடு பதிப்பகத்திற்கு யார் சிபாரிசு செய்தார்கள் என்று கேட்டவர்களே அதிகம். சிலர் எனக்குத் தெரியாமலே தான்தான் சிபாரிசு செய்தேன் என்பதாகவும் கூறியிருந்தார்கள். இப்படியான நிகழ்ச்சிகள் படைப்புலக அரசியல் குறித்து மெல்லத் தெரிந்து கொள்ளச் செய்தது. இந்த அறிதல் ஒருவித எச்சரிக்கையுணர்வுடன் கொஞ்சம் விலகி இருக்கச் செய்துள்ளபோதும்; ஆழமான வாசிப்பும், விமர்சனப் பார்வையும், பெண் என்பதற்காக அல்லாமல் ஏற்கவும் நிராகரிக்கவுமானவர்களிடம் நெருங்கியிருப்பதிலிருந்து என்னைத் தடுக்கவில்லை. இந்த நம்பிக்கையோடு மிக உறுதியாகத் தெளிவாக எழுத்திலும் எதிர்காலப் பயணத்திலும் இன்னும் இன்னுமாக நம்பிக்கைகளை வளர்க்கிறேன். காலம் கடந்தும் எழுத்துகள் ஊடாகப் பேசவே விரும்புகிறேன்.  ***                                                         20. வரலாற்றுப் பார்வைகள் எனப்படுபவை வெறுப்பிற்கானவை       நேர்காணல்: லஷ்மி மணிவண்ணன்.    தென் தமிழகத்தின் பனங்கொட்டான் விளை கிராமத்தில் 23- 11-1969-ல் பிறந்த லஷ்மி மணிவண்ணன் வெளிவந்துகொண்டிருக்கும் வலிய இலக்கியச் சிற்றிதழ் ‘சிலேட்’டினது ஆசிரியர். புனைகதை, கவிதை, பத்தி எழுத்துகள், அரசியல் கட்டுரைகள், களச் செயற்பாடுகள் எனப் பல்வேறு தளங்களில் ஓய்வின்றித் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ‘சுந்தர ராமசாமியில்லாவிட்டால் என் எழுத்தும் பயணமும் வாழ்வும் இத்திசையிலிருந்திருக்காது’ என அறிவிக்கும் லஷ்மி மணிவண்ணன் இலக்கிய வெளியில் நடத்தும் பயணம் தீவிரமும் அர்ப்பணிப்பும் கொண்டது.    ஓம் சக்தி ஓம் பராசக்தி, வெள்ளைப்பல்லி விவகாரம், 36 A பள்ளம், அப்பாவின் வீட்டில் நீர் பாய்ந்து செல்லும் சுற்றுப்புறங்களிலெல்லாம் செடிகள் நிற்கும், வீரலட்சுமி, எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம், சித்திரக்கூடம், குழந்தைகளுக்கு சாத்தான் பெரியவர்களுக்கு கடவுள், சங்கருக்குக் கதவற்ற வீடு,அப்பாவைப் புனிதப்படுத்துதல் ஆகியவை லஷ்மி மணிவண்ணனது நூல்கள்.    இந்நேர்காணல் மின்னஞ்சல் வழியே நிகழ்த்தப்பட்டது.    – ஷோபாசக்தி 12. 01.2016  ***    எனது சிறுவயதிலேயே அம்மா தவறி விட்டார்.எனக்கு நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும். சாத்தூரில் உயர்நிலைப் பள்ளியில் அம்மா தமிழாசிரியையாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பா அப்போது அருகில் நடுவப்பட்டியில் தமிழாசிரியர். அம்மா என்னைப் பற்றிக் கவலை கொண்டவராகவே என் மனதில் சித்திரமாகி இருக்கிறார் .உறவினர்களும் அவ்வாறேதான் சொல்கிறார்கள்.    யாரேனும் கவலையின் பனிக்கட்டி போன்ற தன்மையை வெளிப்படுத்தும்போது இன்றுவரையில் அம்மாவின் மரணம் அளித்த கசப்புணர்ச்சியே மனதில் மேலோங்கும்.அதனை வேகமாகக் கடக்க முயல்வேன். அவரது தொடுவுணர்ச்சி எப்போதும் என்னிடம் உண்டு. அது என்ன என்பது தெரியும். அது எப்போதும் என்னுடன் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. என் உள்ளக்கிடக்கையில் அகத்தின் எல்லையாக மினுங்குவது அந்த தொடுவுணர்ச்சியின் தைலம்தான் . அதன் ரீங்காரமும் மணமும்தான் எனக்கு மனப்பதிவின் தொடக்கம்.எனக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கருத இடமுண்டெனில் அதற்குக் காரணமாகும் ரீங்காரமது. அவரது சில கையெழுத்துப் பிரதிகள் பலகாலம் என்னிடம் இருந்தன.அவர் எழுதிய கட்டுரைகள் அவை.    எனது சிறுவயது என்பதை, சிறு நகரத்திலிருந்து கிராமம் நோக்கித் திரும்புதல் என அர்த்தம் செய்யலாம். சாத்தூரிலிருந்து தொடங்கி எனது சொந்தக் கிராமமான பனங்கொட்டான் விளை நோக்கிக் கிளை பிரிந்து செல்லும் பாதை அது. அம்மாவுடன் இணைந்து சென்ற இரவு நேர ரயில் பயணங்கள், இரவின் மரண மினுங்கல் ஒளி ,சாத்துக்குடி வாசனை நிரம்பிய பேருந்து நிலையங்கள்,வெள்ளை நிற அலுமினியப் பேருந்துகள், இப்படியாகக் கிராமத்தில் நுழையும் பென்ஸ் பேருந்து,அவை கடக்கும் இருபக்கமும் வேலிகள் உயர்ந்த குறுஞ்சாலைகள்,எசலைகள்,கள்ளிகள் பூத்துக் குலுங்கும் கிராமம்.  கடற்கரையை ஒட்டி உள்ளிருந்த கிராமம் அது. மீன் பாரங்களை ஏற்றிச் செல்லும் பனி லாரிகள் ஊரின் குறுஞ்சாலையில் தினம் இரண்டு முறை செல்லும். ஒளி குறைந்த மின்சார விளக்குகள் கொண்ட நாலு கட்டு வீடு. நிறைய மரணங்களைக் கண்ட வீடு அது. இடை மரணங்கள்.என்னுடைய அப்பையாவைத் தவிர்த்துப் பிறர் எல்லோரிடமும் கண்களில் பாதுகாப்பின்மையின் நிழல் உண்டு.    என் அப்பையா ஜோதிடத்தில் நிபுணர். எங்கள் சுற்று வட்டாரம் முழுக்க பிறந்த குழந்தைகளுக்கு அந்தத் தலைமுறையில் பிறப்புக் குறிப்பு எழுதிக் கொடுத்தவர் அவராகத்தான் இருக்கும் . வில்லிசைக் கலைஞராய் இருந்து பின்னாட்களில் கைவிட்டவர். அப்பம்மை சீதா லெட்சுமி வைகுண்டசாமியின் குடும்பத்தில் பிறந்தவர்.    ஊரிலேயே பெரிய குடும்பம் நாங்கள்தான். நிலபுலங்கள்,நஞ்சைகள்,மாடுகள் எனச் செல்வாக்கான குடும்பம்.இப்போதும் எங்களுடைய குடும்பத்தின் பெயரைச் சொன்னால் சுற்றுவட்டாரத்திலுள்ள பழைய ஆட்களுக்குத் தெரியும்.    ஆனால் எனக்கு இளம்வயது மிகவும் கசப்புமிக்கதாக ஒரு புறமும்,கிராமிய தன்மையின் மயக்கம் மற்றொரு புறமாகவும் நினைவில் உள்ளது.    நாங்கள் சிறுவயதில் குழந்தைகளாக நீதியின்மையின் முன்பாகக் கிடந்தோம். இந்த நீதியின்மை இல்லாமையில் இருந்து உருவாகவில்லை.எல்லாமே இருந்தது. அம்மா தவறியதாலும் உருவானது. எல்லாமே இருக்கும் ஓரிடத்தில் ஏன் அநீதி நிகழவேண்டும்? பானை நிறையச் சோறிருக்கும் ஆனால் நாங்கள் ‘அலந்து’ கிடப்போம். இது ஏன் என இன்றுவரையில் எனக்கு விளங்கவில்லை. இருக்கிற இடத்தில் நாங்கள் குறைபட்டுக் கிடந்தோம். இதற்குக் குடும்பத்தில் உள்ள யாரோ ஓரிருவரைக் குறைப்படவில்லை. அதற்குப் பொறுப்பாளிகளாக அவர்களை மட்டும் கைகாட்டுதல் பொறுப்பற்றது. இது ஒரு விநோதமான நீதியின்மை. இதனை எல்லோரும் சில முணுமுணுப்புகளுடன் ஏற்றுக்கொள்ளப் பழகியிருந்தார்கள். அதிகாரம் பெற்றது எதுவோ அது செய்வதெல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் பாங்கு. இந்தியாவில் நான் பார்ப்பதும் இதனைத்தான். இங்கே எதுவும் இல்லாமலோ, பற்றாக்குறையாக இருபதாகவோ நான் கருதவில்லை. மிகப் பெரிய அநீதியின் முன்பாக எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்றே நினைக்கிறேன்.    இலக்கியம் மீதான உங்களது ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது என்பதை அனுமானிக்க முடிகிறதா?    வெளிபடுத்தாமல் நாம் வாழ முடியாது என்பதை எனது சிறுவயது நிறையப் பாடம் நடத்திவிட்டது. பசிக்கிறது என்று பொதுவில் சொல்லி விடவேண்டும். இல்லையெனில் சோறு கிடைக்காது. எனக்குத் தீங்கிழைக்கிறார்கள் எனக் கத்தி விடவேண்டும். பொறுத்துக் கொண்டிருந்தால் சோறு கிடைக்காது. தீமை அகலாது. நான் எனது குழந்தைகளுக்குக் கூறுகின்ற ஒரேயொரு அறிவுரை நீங்கள் உங்கள் வலியையோ, துன்பத்தையோ சொல்லிவிடுங்கள் பொறுத்துக் கொள்ளாதீர்கள் என்பது மட்டும்தான்.  சிறுவயது அநீதிகளுக்கும் எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீமைகளுக்கும்,வன்முறைகளுக்கும் எதிராக முதன் முதலாக நாட்குறிப்பு எழுதத் தொடங்கினேன். ஒருவேளை நான் இறந்து போனால் அந்த தீமைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே அந்த நாட்குறிப்புகளின் நன்னோக்கம். வேறொன்றுமில்லை.    பிறிதொரு குழந்தைக்குக் குடும்பத்திலேயே கிடைக்கின்ற விளையாட்டுப் பொருட்கள், பிரத்தியோகப் பதார்த்தங்கள், புதுத்துணிகள், சிறப்புகள் எங்களுக்குக் கிடைக்காது.  நல்ல மீன் வீட்டில் வாங்கக் கூடாது என நினைப்பேன். நெய் மீன்களும்,விள மீன்களும் வாங்கப்படும் நாட்கள் பிறருக்குரியவை என்பதை அறிவோம்.அன்று எங்களுக்குத் தலையோ செள்ளோ மிஞ்சும். நல்ல மீன் வாங்கினால் அவை எங்கள் வயிற்றுக்கு வராது. மலிவான மீன்கள் வாங்கப்படும் நாட்களில் மட்டுமே செழிக்கச் சாப்பிடுவோம்.    மிகவும் மனத் தொந்தரவுகளுக்கு ஆட்படுத்தப்பட்ட குழந்தையாகவே வளர்ந்தேன். அம்மா இருந்தவரையில் அதீத முக்கியத்துவம் கொண்ட குழந்தை, அவள் தவறியது தொடங்கி அனுபவித்த அநீதிகள்… இவை இரண்டுமே காரணங்கள். இப்படி நாட்குறிப்பிலிருந்தே எழுத்துக்குள் நுழைந்தேன்.    நீங்கள் சுந்தர ராமசாமிக்கு மிக நெருக்கமாயிருந்தவர். உங்களது பார்வையையும் எழுத்தையும் சுந்தர ராமசாமி எந்தளவிற்கு வழிப்படுத்தியுள்ளார்?    அவர் இல்லையானால் நீங்கள் காணுகிற இப்போதைய ‘நான்’ இல்லை. தினசரிப் பத்திரிகைச் செய்தி வாசிப்பவர்கள் மத்தியில் ஒருவேளை வேறோருவிதத்தில் புகழடைந்திருப்பேன்..ஒரு கொலைகாரனாகவோ,வழிப்பறிகாரனாகவோ.    அப்பாவை வெட்டிக் கொலை செய்து விடுவது எனும் நோக்கம் கூர்மைப்பட்டுத் திரிந்த காலத்தில்தான் நான் சுந்தர ராமசாமியைச் சந்திக்கத் தொடங்கினேன். அதற்கு முன்னரே கோணங்கியிடம் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. என்னைச் சுந்தர ராமசாமியை போய்ப் பார்க்கச் சொன்னவர் கோணங்கிதான். நான் சொல்வது தொண்ணுாறுகளின் தொடக்ககாலம். அதிலிருந்து எட்டு வருட காலங்கள் நெருங்கிய நட்பு. அவருடைய நற்பண்புகளின் கால்பகுதியேனும் மனதில் உறைக்கப் பழகிய காலங்கள் அவை.    அவர் என் வாழ்வின் மிகவும் மதிப்பு மிக்க நினைவு.அவரைப் பற்றிய நூல் ஒன்றை எழுதுகின்ற வாய்ப்பைக் காலம் வழங்குமெனில் பகிரப் பல விஷயங்கள் உள்ளன. அபூர்வமான பறவைகள் காணாமற் போய்விடுவதைப் போல அவர் காணாமற் போய்விட்டார். அவர் மரணத்தின்போது தீவிரமான மனச்சிதைவுக்கு உள்ளானேன். அவ்வளவுக்குக் கலங்கடித்த பிறிதொரு மறைதல் என்னிடம் இல்லை.    அவரது இலக்கியப் பெறுமதி என்பது யூ.ஆர்.அனந்தமூர்த்தி ,பாதல் சர்க்கார்,பேராசிரியர் ராமானுஜம் ஆகியோரைக் காட்டிலும் சிறப்புமிக்கது. அவர் நவீன காலத்தின் சாரம். இலக்கிய இயக்கம்.    தமிழ்ச் சமூகம் அவர்மீது கொண்டிருந்த பராதிகள் அனைத்துமே வெறும் அற்பத்தனமான அவதூறுகளே அன்றி பொருட்படுத்தும்படியானவை அல்ல. இன்றும் என்னிடம் அவரிடம் சாதி, மத துவேஷங்கள் இருந்தனவா எனக் கேட்பவர்கள் இருக்கிறார்கள். இவை அகன்றால்தான் ஒருவரைப் படைப்பாளி என ஒத்துக் கொள்வேன் என்னும் நிலை ஏதுமே என்னிடம் கிடையாது. மட்டுமல்லாமல் இந்த கேள்விகளைச் சுமந்தலைவதுதான் கோளாறே. சுந்தர ராமசாமி இதற்கெல்லாம் சிறிதும் பொருத்தமற்றவர். அவரின் மனப்பரப்பிற்குள்ளேயே இவற்றிற்கு ஏதும் வேலை கொடுக்காதிருந்தவர்.இத்தகைய விசாரணைகளில் சங்கடப்பட்டு நெளிபவர். அக்கறைப்படாதிருந்தவர்.    உரிமைகளின் பொருட்டு எல்லோரும் சமமாகப் பாவிக்கப்படுதல் வேண்டும் என்பதில் அவரிடம் எத்தகைய சமரசமும் கிடையாது.அவர் ஆகச் சிறந்த முற்போக்கு.ஆனால் அவரை முற்போக்கு என யாருக்கும் அடையாளம் காணத் தெரியவில்லை.    சுந்தர ராமசாமியை முற்போக்கு என அடையாம் காண்பதற்கு என்ன தடைகள் இருந்திருக்கக் கூடும் என நினைக்கிறீர்கள். அந்தத் தடையை அவரே உருவாக்கிக்கொண்டாரா என்ன?  அவரே எப்படி அவருக்கான தடையை உருவாக்குவார்? முற்போக்காளர்கள் தன்னைத் தெரிந்துகொள்ளத் தவறுகிறார்கள் என்கின்ற ஆதங்கம் அவருடைய உரைநடைகள் முழுவதிலுமே பாடுபொருளாக இருக்கிறது. பல எழுத்தாளர்கள் முற்போக்குக் கம்பனிகளைப் பொருட்படுத்துவதே இல்லை. பொருட்படுத்திய ஒருசில தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். முற்போக்கிகள் கருத்து நிலைப்பாடுகளைத் தாண்டி வர இயலாதவர்களாக இருப்பதற்காக அவர் அவரது உரைநடைகளிலேயே நிறையக் கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.    இப்போது ஜே.ஜே: சில குறிப்புகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?    இன்று எனக்கு அது முக்கியமான நாவலாகப் படவில்லை.அவருடைய சிறுகதைகள் காலம் கடந்து வாழும் திறன் படைத்தவை. அவரது நுட்பமும்,அழகுணர்ச்சியும் சிறுகதைகளில் மட்டுமே உள்ளன. ‘புளியமரத்தின் கதை’யை அவரது நீளமான சிறுகதை என்று சொல்லலாம்.கவிதைகளைப் பொறுத்தவரையில் ‘பின் திண்ணைக் காட்சி’, ‘ஆளற்ற லெவல் கிராசிங்கில்’ , ‘மூடு பல்லக்கு’ இன்னும் இவை போன்ற ஒன்றிரண்டு கவிதைகளில் ஆசையுடன் முயற்சி செய்து பார்த்திருக்கிறாரே அல்லாமல், இப்போது மீண்டும் வாசிக்கையில் கவிதைகளில் அவர் எழுதியவை மிகச் சிறந்த அறிவுரைகளாகவும்,அபிப்பிராயங்களாகவும் சரிந்து கிடக்கின்றன. உரைநடையில் தேர்ந்த நிபுணர். ஸ்டைலிஸ்ட் . சிறுகதைகளே அவரது ஆன்மா.    ஜே.ஜே சில குறிப்புகள் நாவல் தமிழில் ஒரு வாசகனுக்குப் புதிய திறப்பாக அமைய முடியும். நவீனத்தின் மீதான திறப்பாக. தமிழ் நவீனத்துவம் பெற்ற ஒரு முழுமையான வடிவம் அல்லது வடிவ தற்சோதனை அந்த நாவல் என்று சொல்லலாம். இன்று உங்களுடைய ‘கொரில்லா’,’BOX’ உட்பட இந்த வடிவப் பரிசோதனைக்குத் தொடர்ச்சி இருக்கிறது. இதற்கு முழுக் காரணம் சுந்தர ராமசாமிதான் என்று சொல்ல முடியாது. நகுலனில் இது தோன்றுகிறது, சுராவிடம் முழுமை பெறுகிறது. என்றாலும் நவீன காலகட்டத்திற்குப் பிற்பாடு ஜே.ஜே சில குறிப்புகள் நாவலின் உள்ளடக்கம் அலுப்பூட்டுவதாக மாறி விட்டது. அது ஒருவகையான நா. பார்த்தசாரதி வகையறா நாவல்தான்.    ஒரு காலகட்டத்தில் தோன்றும் படைப்பு பிறிதொரு காலத்திலும் செல்வாக்குப் பெற இயலாமற்போகுமெனில், அர்த்தம் பெறத் தடையாக இருக்குமெனில் அதில் ஆழப்பொருளும் அகப்பொருளும் இல்லையென்றே அர்த்தம். நவீன காலத்திலேயே உருவான அப்போது மதிக்கத் தவறிய எம்.வி .வெங்கட்ராமின் ‘நித்திய கன்னி’, ‘காதுகள்’ போன்ற படைப்புகள் மீண்டும் மினுங்குகின்றன. லா.ச.ரா நவீன காலத்தின் புறக்கணிப்பையும் தாண்டி நவீன காலத்தின் பிந்தைய நிலையில் புனர்ஜென்மம் பெறுவதையும் கவனிக்க வேண்டும் .    உங்களது இன்னொரு மிக முக்கியமான நண்பர் கவிஞர் விக்கிரமாதித்தனின் ஆளுமை உங்களின் இலக்கிய வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் எவ்வளவு தூரத்திற்குக் கலந்திருக்கிறது?    விக்கிரமாதித்தன் நம்பியின் போக்கும் என்போக்கும் வேறு வேறு.    அவர் என் மதிப்பிற்குரிய கவிஞர். ஏற்கனவே உருவான நிலைகளை பொதுவெளியில் வைத்து அவர் துகில் உரிந்திருக்கிறார் . சகல கருத்து நிலைகளையும் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறார். நிர்வாணத்திற்கு உட்படுத்தியிருக்கிறார் . அதுவே அவர் வெளிப்படையாக அடைந்த நிர்வாணமும். அதனை மறைக்க அவர் மேற்கொண்ட ஒரு முயற்சியும் கைகூடவில்லை. நரபலி மொழி விளையாட்டு எடுத்துக் கொண்ட நரபலி அவர். சகலத்தையும் கலைத்துப்போட்டிருக்கிறார். பொதுக் கருத்துக்களைத் துவம்சம் செய்திருக்கிறார்.    தமிழ்க் கவிதைகளை மதிப்பிடுவதில் அவருக்கு நிகராக ஒருவரையும் சொல்ல முடியாது.அவரது வாய்ப்பழக்கத்தில் உச்சரிக்கப்படாத ஒருவன் பிச்சமூர்த்தி காலம் தொடங்கி இன்று எழுதும் ஒருவன் வரையில் எவனும் கவியானதாக இல்லை. அந்த அளவிற்குக் கவிதையில் சிந்தனை திரண்டவர் .  அகப்பொருளற்ற கவிஞரவர். தேவதச்சனை அகப்பொருளின் கவிஞன் என்றால் விக்கிரமாதித்தன் நம்பியை அகப்பொருளற்ற கவிஞன் எனலாம். இருவேறு எதிரெதிர் துருவங்களும் தனகதியில் நிலைபெற தமிழ் மொழி சாத்தியம் கொண்டிருக்கிறது. அகப்பொருள் அற்றவர் விக்கிரமாதித்தன் . அகப்பொருள் கொண்டவரைப் போலத் தோற்றம் காட்டுபவர். அகப்பொருள் ஏதுமின்றி தமிழில் ஒரு கவி நிலைக்க முடியுமாயின் அது விக்கிரமாதித்தன் நம்பி அன்றி பிறிதொருவருக்குச் சாத்தியமில்லை.  எனது கவிதைகள் அகப்பொருட்களாலும் ஆனவை.    இன்றைய தமிழ் இலக்கியப் போக்கை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?  நவீன காலத்தின் மதிப்புகளை விற்றுப் பிழைக்கிறார்கள். பரிசோதனையும், புதிய கண்டுபிடித்தலும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. தமிழில் நவீன காலமே இலக்கியத்தின் பொற்காலம். அவர்களின் பார்வைகளை, தரிசனங்களை இப்போதும் விற்று முதலாக்கிக் கொண்டிருக்கிறோம்.    பரிசோதனையும்,புதிய கண்டுபிடிப்பும் இல்லாதவற்றை இலக்கியம் என்று எனக்கு ஒத்துக்கொள்ள முடிவதில்லை.கண்களுக்கெட்டாதவற்றைப் படைப்பு அறியப்படுத்தவேண்டும். எனக்கு ஏற்கனவே தெரிந்த சங்கதிகளை என்னிடம் கொண்டுவந்து மூடை மூடையாகத் தட்டுவதற்கு இலக்கியம் எதற்கு?    இளைஞர்கள் பரிசோதனைகள் பேரில் கவனமற்றவர்களாக இருக்கிறார்கள்.ஏதேனும் உடனடி அறுவடைக்கு ஏற்றவற்றை பயிரிடவேண்டுமென விழிப்புக்கொண்டிருக்கிறார்கள் .சமூக சரிதைகள் வண்டி வண்டியாகக் கொண்டு கொட்டப்படுகின்றன.    கலையும், இலக்கியமும் பயனின்மையின் சார்பில் இயங்குபவை. இந்த முரண் இங்கு இப்போது வேலை செய்யவில்லை. அதற்கான நெருக்கடியிலும் இவர்கள் இன்று இல்லை. அடுத்த தலைமுறையில் பெண்கள்தான் அதிகம் எழுத வருவார்கள் என நினைக்கிறேன். அவர்கள்தான் இப்போது நெருக்கடியில் இருக்கிறார்கள்    ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’ போன்ற இடைநிலை இதழ்களின் இடம் இன்றைய இலக்கியத்தில் என்னவாகயிருக்கிறது?    குமுதம், குங்குமத்தைக் காட்டிலும் தீமையாக நான் கருதுவது இவர்களைத்தான். பரிசோதனைகள் பேரில் ஆர்வம் சூழலில் கழன்று விழக் காரணமானவர்கள் இவர்கள். அந்த இடத்தையே இல்லாதொழித்தவர்கள்! ஒழித்தவனே காவலாளி வேடத்திலும் நடிப்பது போல, உலகமெங்கும் கலை இலக்கியக் காவலர்கள் போலத் தங்களைப் பிரபலப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒழியாமல் தமிழில் இனிப் புதிய முயற்சிகள் எதுவும் தோன்றாது .    இவர்கள் இரண்டு தறுதலைகள் உருவாகப்போக, தமிழில் இவர்களைப் பார்த்துக் கெட்ட, ஒத்த பத்துப் பதினைந்து தறுதலைகள் உருவாகிவிட்டார்கள். இவர்களின் முகவர்கள் இன்று உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். இலங்கையில், புலம்பெயர்ந்த நாடுகளில் என. இன்று இவர்களின் பிடிக்குள் சூழல் அகப்பட்டிருக்கிறது. பரிதாப நிலைக்குக் காரணம் இதுதான்.    வணிகம் பேரில் கொண்ட பாரம்பரியமான பார்வைகளால் இதனை நான் சொல்லவில்லை. தமிழ் போன்ற பழம் பெரும் மரபு கொண்ட மொழியில் வணிகமும் கலையிலக்கியப் புதிய முயற்சிகளும் ஒன்றிணைவது இயலாது.ஏனென்றால் பழம்பெரு மரபு கொண்ட மொழிகளில் மக்களின் பெருமிதம் என்பது பழம் பெருமைகளில் தேங்கி நிற்கக் கூடியது. வணிகத்தின் இணைப்புச் செல்வாக்குப் பெற புதிய முயற்சிகள் அதற்கு அவசியமில்லை. மலையாளம்,கன்னடம் எல்லாம் வேறு. அங்கே புதிய முயற்சிகளில் இருந்து மட்டும்தான் அவர்கள் தங்களின் பெருமையை நிலைநாட்ட முடியும்.    மலையாளத்தில் ‘மனோரமா’ போன்ற வெகுஜன வணிக இதழ்களுக்கும் கூடப் புதிய முயற்சிகளும் ஒரு வணிகத் தேவையாக இருப்பதையொப்ப இங்கோ, ஆந்திராவிலோ எதிர்பார்க்க முடியாது. மலையாளத்தில் வைக்கம் முகம்மது பஷீரை யாரென்று எந்த வெகுஜன இதழும் அறியாமல் உயிர் வாழ முடியாது. இங்கே புதுமைப்பித்தன் பிரபலமாவதற்கே இன்னும் நூறுவருடங்களாகும்.    நாலு பேர் சேர்ந்து நட்டப்படத் தயாராக இருக்கும் எத்தனையோ காரியங்களில் அன்றாடம் ஈடுபடத்தான் செய்கிறோம். கூட்டாக ஊர்களில் சேர்ந்து சாமி கொடைகள் நடத்துகிறோம். அதுபோல இலக்கியத்தில் ஈடுபடும் சிறுகூட்டமே இன்றைய தேவை. அவர்களால் மட்டுமே புதிய முயற்சிகள் தமிழில் இனி சாத்தியம். இடைநிலை இதழ்கள் ஈமு கோழி வளர்ப்புப் பண்ணைகள்.    நம்முடைய காரியங்கள் வணிகத்திற்கு அப்பாற்பட்ட சிறு சிறு கூட்டு முயற்சிகளால் மட்டுமே உருக்கொள்ள முடியும். பயனற்ற மடத்தனமான காரியங்களில் மனம் கொண்ட சில சாத்தியப்பாடுகளின் மூலமாக.    வணிகம் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும். காலச்சுவடும், உயிர்மையும் வணிகத்தை உலக முகவர்களை ஒன்று கூட்டி நிறுவனமாக்கிச் சதை திரண்ட மதம்போல மாற்றி வைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே கலை இலக்கியத்திற்கு, புதிய முயற்சிகளுக்கு எதிரான பெருந்தீமைகள். இவர்கள் இப்போது தமிழில் பிராய்லர் கோழி வளர்ப்புப் பண்ணைகளை ஒத்த ஸ்தியை அடைந்திருக்கிறார்கள். இவற்றிடமிருந்து தற்காத்துக் கொள்வதும்,விலகுவதுமே தற்போதைய அவசரம்.    இத்தகைய இடைநிலை இதழ்களைக் களமாக்கிக் காத்திரமான படைப்புகள் வெளியாகிக் கொண்டுதானேயிருக்கின்றன. அநேக படைப்பாளிகளின் முதல் புத்தகங்களை இவர்கள்தானே பதிப்பித்து வெளியிடுகிறார்கள். நம் காலத்தின் தீவிர சிந்தனையாளர்கள் எல்லோருமே ஏதோ ஒருவகையில் இத்தகைய இதழ்களில் பங்கெடுக்கிறார்களே..என் நீங்களே கூட ‘தீராநதி’யிலும் ‘அம்ருதா’விலும் தொடர்ந்து எழுதுகிறீர்களே?    காலச்சுவடு, உயிர்மை போன்றவற்றிலும் கூட நான் எழுதலாம். காலச்சுவட்டில் நிறைய எழுதியிருக்கிறேன். அது பிரச்சனை அல்ல. அவற்றைப் பற்றிய எனது கண்ணோட்டம் என்ன என்பதுதான் பிரச்சனை. ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன்…அணுவுலையில் வேலை செய்யும் ஒருவர் அணுவுலைகளுக்கெதிரான பார்வை கொண்டிருக்கக்கூடாது எனக் கண்டிக்க முடியுமா என்ன? நீங்கள் கேட்பது பழைய அறங்களை முன்வைத்து.    இன்று ஒருவர் சகலவிதமான எதிர்நிலைகளோடும் ஊடுபாவாமல் வாழ்தல் சாத்தியம் இல்லை. மிக மிக மட்டம் எனப் பிறர் நினைக்கக் கூடிய வெகுஜன இதழ்களிலும் எழுதியிருக்கிறேன், பணிபுரிந்திருக்கிறேன்.    கவிதா பதிப்பகமும் காலச்சுவடும் ஒன்று அல்ல. இவர்கள் நாங்கள்தான் சக்கரவர்த்திகள் என்கிற ஒரு சொம்பைத் தூக்கிக் கொண்டலைகிறார்களே அதன் பேரில் எனக்கு மதிப்பில்லை. ஒரு மதிப்பீட்டை மறைமுகமாகவும் நேரடியாகவும் உங்கள் தலையில் சுமத்துகிறார்கள். இவர்கள் மதிப்பீட்டை அடிப்படையாகக்கொண்டு வணிகம் செய்வதாக ஏமாற்றுபவர்கள். பிற பதிப்பகங்களைப் போல அல்ல. அவர்கள் வெறும் வணிகர்கள். உயிர்மையிடம் ஏன் மேலும் மேலும் பலர் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!    மிகச் சாதாரணமான சில பதிப்பகங்கள்தான் கழிந்த பதினைந்து வருடங்களில் முக்கியமான படைப்பாளிகள், கவிஞர்களைத் தமிழில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களும் செய்திருப்பார்கள். அதற்கும் இவர்கள் பேரில் நான் முன்வைக்கிற மதிப்பீட்டிற்கும் குற்றச்சாட்டிற்கும் ஒரு தொடர்பும் இல்லை.    நமது சுழலில் பிரசுர பாக்கியமே பெரிது என்னும் எண்ணம் கொண்டவர்களே அதிகம்.    ஈழத்துக் கவிதைகள் உரத்த குரலில் அரசியலைப் பேசுவதால் அவை உங்களைக் கவருவதில்லை என்ற பொருள்பட ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். போர்நிலத்தில் அது தவிர்க்க முடியாதவொன்றுதானே…ஈழத்துக் கவிதைகளைப் பாலஸ்தீனக் கவிதைகளுடன் ஒப்பிட முடியுமல்லவா?    சமகால நெருக்கடிகளுடன், சமகாலத்தன்மையைக் கவிதை அடைகிறதா இல்லையா என்பதுதான் பிரச்சனையே அன்றி அது எழுப்பும் குரலின் ஓசை எப்படி இருக்கிறது என்பது பிரச்சனையில்லை. சமகாலத்தன்மையில் தன்னிலை கரையும் கவிஞன் காரசாரமாகவும் பேசலாம், இதமூட்டவும் செய்யலாம்.    ஈழத்தின் விஷயங்களை எனக்குச் சரியாக விளங்கிக்கொள்ள இயலவில்லை. கவிதைகளில் காணக் கிடைக்கும் தன்மைகள் புரிதலுக்குப் போதுமானவையாக இல்லை. வெளிப்படையாகப் பேசுவதானால் ஓரளவிற்கு நான் தனிப்பட்ட முறையில் குலசிங்கத்துடனான நேரடியான உரையாடல்கள், சி.புஷ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’, மற்றும் உங்களுடைய படைப்புகள் வழியாக ஒரு சிறு வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறேன்.    சேரன் போன்றோரை எல்லாம் கவிஞராக எனது மனம் ஒத்துக்கொள்ளவே இல்லை. இலங்கை வைரமுத்து அவர் என்பதுதான் எனது எண்ணமாயிருக்கிறது. தளையசிங்கம் பேரில் எனக்கு மதிப்பிருக்கிறது. அனாரின் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். நுஹ்மான் மீது எனக்கு மதிப்பில்லை. இவர்கள் ஆகச் சிறந்த பரோவுபகாரிகளாகவும், சான்றோர்களாகவும், நற்சிந்தை கொண்ட நன்மனிதர்களாகவும் இருக்கலாம்.எனக்கு மறுப்பில்லை.அது பற்றி எனக்குத் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. உலகம் முழுதுமே நன்மனிதர்களின் எண்ணிக்கை அதிகம் என்றுதான் சொல்கிறார்கள். இவை ஒரு புறம் இருக்கட்டும் .    பாலஸ்தீனக் கவிதைகளுடன் ஈழத்துக் கவிதைகளை நிச்சயமாக ஒப்பிடயிலாது. பாலஸ்தீனக் கவிதைகள் சமகாலப் பிரக்ஞை குன்றாதவை. இரண்டும் வேறு வேறு காலத்திலும் மனோபாவத்திலும் இயங்குபவை. பாலஸ்தீனக் கவிதைகள் நவீன அரசாங்கங்களின் வன்முறையிலிருந்தும், நவீன அரசாங்கங்களின் கொடூரமான முகங்களிலிருந்தும் தோற்றம் கொள்பவை. இலங்கையில் உரத்தகுரல் நவீன அரசைச் சென்றடைவதில் உள்ள பண்ணை முதலாளிகளின், நிலப் பிரபுக்களின் இன, குழு,சாதிமேலாண்மைத் தடைகளிலிருந்து உருவாகின்றனவோ என்கிற சந்தேகம் எனக்குள் இருக்கின்றது. இன்று உலகத்தின் பல இடங்களிலும் ஆயுதம் தாங்கிய யுத்தக் குழுக்களின் பின் செயற்படும் உளப்பாங்கு பல்வேறு காரணிகளாலும் அமைந்திருக்கின்றது. வணிகமும் இதில் அடக்கம். ஆயுத வணிகம். நாம் நேரடியாகக் கருதிக் கொண்டிருப்பதைப் போல நோக்கத்தை மட்டும் கொண்டு இயங்குபவை அல்ல இந்தக் குழுக்கள்.    அவற்றை ஆதரிக்கும் அல்லது நிராகரிக்கும் போக்குகள் மட்டுமே அரசியல் தன்மை கொண்டிருக்கின்றன. அவற்றின் உள்ளீடான காரணங்களும் காரணிகளும் ஒன்றிற்கொன்று தொடர்பற்றவை. இவற்றிற்கிடைப்பட்ட விந்தை என்ன என்பதை அறியும் வேலை எழுத்தாளனையும் சார்ந்தது.    யுத்தம் முடிந்த பின்னர் இனி என்ன செய்யப் போகிறோம் என்கிற மனச்சோர்விற்குப் பெண் போராளிகள் இலக்கானதாக ஸர்மிளா ஸெய்யித்தின் பதிவொன்றில் படித்தேன். எழுத்தாளன் கண்டடைய வேண்டிய முக்கியமான இடம் இது என்பது எனது எண்ணம்.    புலம் பெயர்ந்தோர் தமிழ் இலக்கியப் போக்கை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?    தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இதுவரையில் கலை- இலக்கியத்தில் ஈடுபடவே தொடங்கவில்லை. மலேஷியாவிலிருந்து ‘வல்லினம்’ போன்ற குழுக்கள் செயற்படத் தொடங்கியிருப்பதை தவிர்த்து.    இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களே தீவிர இலக்கியத்தில் அக்கறையோடு இருக்கிறார்கள். இப்போது தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் பெண்களிடத்தில் தீவிர இலக்கியத்திற்கான தாக்கம் இருப்பதை உணர முடிகிறது. அவையெல்லாம் எப்படி வடிவமுறப் போகின்றன என்பதனை யூகித்துச் சொல்ல இயலவில்லை.    இப்போது தமிழ் சினிமா மாறிவருகிறது என்கிறார்கள் எழுத்தாளர்கள். வணிகச் சினிமாவை எழுதுவதற்கென்றே ‘காட்சிப் பிழை’யென்ற பத்திரிகை அறிவுஜீவிகளால் நடத்தப்படுகிறது. இலக்கிய மேடைகளிற்கு சூப்பர் ஸ்டார்களும் அசட்டு சினிமா இயக்குனர்களும் அழைக்கப்படுகிறார்கள். நாம் வெட்கமுற வேண்டுமா?    தான் செல்கிற அனைத்துப் பாதைகளையும் நியாயப்படுத்திக் கொண்டே செல்வது நமது பொது நோய். காட்சிப்பிழையை ஒரு சினிமா இதழாகவோ, அதில் எழுதுகிறவர்களை அறிவுஜீவிகளாகவோ நான் கருதவில்லை. இந்த சீசன் வியாபார அறிவுஜீவிகளில் பெரும்பாலோர் ‘போர்டு பௌண்டேஷன்’ போன்ற உளவு நிறுவனங்களில் போய் சேர இப்படிப் பயிற்சி எடுத்துக் கொள்வது தமிழ்நாட்டில் ஐந்தாண்டுத் திட்டம் போன்றதொரு பழக்கம். இப்படியான பயிற்சி இதழ்கள் பல வருவதையும் போவதையும் பொருட்படுத்த ஏதுமில்லை. மேலும் தமிழ்நாட்டில் அறிவுஜீவிகள் என்ற தரப்பினரே இன்னும் உருவாகவில்லை வெறுப்பற்ற பார்வை கொண்ட ஒருவர் கூட.    அ.மார்க்ஸ், எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ,வெங்கடேஷ் சக்கரவர்த்தி ,ராஜன் குறை, பிரேம் எல்லோரையும் கவனத்தில் எடுத்துக்கொண்டே இந்தக் கூற்றைச் சொல்கிறேன். அறிவுஜீவி தமிழில் இன்னும் உருவாகவில்லை.சாம்ஸ்கி, ழான் போத்திரியா, அசீஸ் நந்தி, டி.ஆர். நாகராஜ், அமர்த்தியா சென் போன்றோரே அறிவுஜீவிகள்.    சாகித்ய அகடாமி விருதுகளைத் திருப்பிக் கொடுப்பது குறித்து உங்களது பார்வையென்ன?    பொது இடர்பாடுகள் , பொதுவான உரிமைகளின் மீதான அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது கூட்டாகச் சேர்ந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் குரல் தரவேண்டும். அது ஒரு தார்மீக நிலைப்பாடு. நிலைப்பாட்டின் உள்ளர்த்தமும், அரசியலும் எவ்வாறு வேண்டுமாயினும் இருக்கலாம். அதனை இடர்பாட்டின் நேரத்தில் வெளிபடுத்தத் தேவையில்லை. அப்படிபட்ட நேரங்களில் நிலைப்பாட்டின் மீது அதிருப்தியை வெளிபடுத்துதல் நேர்மைக்குப் புறம்பானது.    எழுத்தாளர்களும், கலைஞர்களும் சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பிக் கொடுத்தது நல்ல எதிர்வினை. தமிழ்நாட்டில் இதற்கு ஆளில்லாமல் போனது வருந்தத்தக்கது. இவர்களின் சகலவிதமான முற்போக்கு முகமூடிகளும் அதிகாரத்தை மட்டுமே இலக்காக கொண்டவை என்பது தெளிவுபட்டுவிட்டது.    மணிவண்ணன் கொண்டாடும் சிறுதெய்வ வழிபாடும் பண்பாடும் உண்மையில் இந்து மதத்திற்கு வெளியேதான் இருக்கிறதா?    நானொரு இந்து. இந்து மதப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பவன்.சிறு தெய்வ வழிபாடு இந்து மதத்திற்கு உட்பட்டதுதான். நான் எதை வழிபடவேண்டும், எதை நான் வழிபட்டால் அது முற்போக்கானதாகக் கருதப்படும்? போன்ற எத்தகைய உயரிய ஆலோசனைகளையும், அபிப்ராயங்களையும் மேலாண்மை செய்யும் எந்த அசரீரிகளிடமிருந்தும் கேட்பதை நான் விரும்பவில்லை.    புத்தம் இலங்கையில் அநீதி. அதற்காகப் புத்தனைக் கழுவிலேற்ற முடியுமா? ரோமன் கத்தோலிக்கத்தை முன்வைத்துத்தான் நீட்ஷே கடவுளின் இறப்பை அறிவிக்கிறார். கிறிஸ்தவத்தை தூக்கிலிடப்பட்டவனின் மாயவரலாறு என்கிறார் அவர். அதற்காக என்ன செய்வது!    இந்தியாவின் மீது கொலோனியல் யுத்தம் ஒன்று தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. காலனிய வெளியேற்றம் நடைபெற்ற நாடுகள் அத்தனையிலும் வெளியேற்றத்திற்குப் பின்னரும் பிளவையும்,வெறுப்பையும் மட்டுமே முன்னிறுத்தி நடைபெறுகின்ற யுத்தமிது. அவர்கள் எனக்கொரு வரலாற்றை அணிவிக்க விரும்புகிறார்கள். எனது முற்போக்குத்தன்மைக்குச் சான்றிதழ் தர முயல்கிறார்கள் .இவற்றை நான் வேண்டவுமில்லை, பொருட்படுத்தவுமில்லை.    வரலாறு என்பது புனைவு. அதன் நோக்கம் உங்களிடம் பிளவையும், வெறுப்பையும், சந்தேகத்தையும் மட்டுமே சாதிக்கிறதென்றால் அது மாபெரும் கலோனியல் வரலாற்றுப் புனைவு. உங்களை எந்தத் திசையில் கட்டிவைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு கட்டப்படுகிற புனைவு அது. அது கட்டும் புனைவை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தும் கருவிகளை என்னுடைய தன்னிலையிலிருந்து தொடர்ந்து கழற்ற முயற்சித்துக்கொண்டிருப்பவன் நான். வரலாற்றைத் துண்டித்து விட்டு எனக்கு இனிமை தரும் எல்லாவற்றிலும் கலந்து கொள்ளவே விரும்புகின்றேன். ஒவ்வொரு பொருளிலும் அதன் அதிகாரம், வரலாறு உட்பட எழுப்பப்பட்டிருக்கும் புறக்கட்டுமானங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு நேரடியான மகிழ்ச்சிக்குச் செல்வதே எனது இலக்கு. அவற்றின் மீது கட்டப்பட்டிருக்கும் அதிகாரத்திற்கும் எனது தன்னிலையில் வேலையில்லை, வரலாற்றிற்கும் என்னிடம் வேலையில்லை.    எனக்கு சுடலைமாட சாமியும் ஒன்றுதான் நெல்லையப்பனும் ஒன்றுதான், அன்றாடத்தில் இடையூறை அவர்கள் ஏற்படுத்தாத வரையில். பிள்ளையாரின் நேர்மறையான, எதிர்மறையான சகல அம்சங்களையும் கழற்றிவிட்டு யோசித்துப் பாருங்கள். விந்தையான வினோத உருவம் அது. இப்படிப் பார்ப்பது சாத்தியம். இந்தச் சாத்தியம் மட்டும்தான் உங்களுடன் வரலாறு கொண்டு வந்து கொட்டியிருக்கும் சுய வெறுப்பையும் பிற வெறுப்பையும் கட்டுப்படுத்த உதவும். வரலாற்றுப் பார்வைகள் எனப்படுபவை கலவரங்களுக்கானவை, வெறுப்பிற்கானவை .    வரலாற்றின் பேரில் என் கழுத்தில் மாட்டப்படும் கொலோனியல் அடையாள அட்டைகளை மறுப்பது எனது பணியே. நான் இந்து மதத்தைச் சார்ந்தவன் என்பதில் எனக்கு ஒரு இடர்பாடுமே இல்லை. அது அசரீரிகள் அறிவிப்பது போல ஒற்றைப்படையானதும் இல்லை. அது எல்லா மதங்களையும் போலவே நன்மையையும், தீமையும் கொண்டது. வள்ளலாரும், ராமானுஜரும்,வைகுண்ட சாமியும்,சட்டம்பி சாமிகளும், ஸ்ரீ நாராயண குருவும், அய்யங்காளியும் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான்.    உன்னிடம் நடக்கும் நல்லவற்றிற்கெல்லாம் நாங்கள் பொறுப்பு, அவலங்களுக்கெல்லாம் நீ கொண்டிருப்பவை மட்டுமே பொறுப்பு என்பது கொலோனியல் மேட்டிமைத்தனம்.    சாதிய ஏற்றத்தாழ்வும் தீண்டாமையுமற்ற இந்துமதம் சாத்தியம் என்கிறீர்களா? நடைமுறையில் சிறுதெய்வ வழிபாடோ பெருந்தெய்வ வழிபாடோ எந்த வழிபாட்டு முறையைச் சேர்ந்த இந்துக்களும் சாதிக்கும் தீண்டாமைக்கும் வெளியிலில்லையே? ஒன்றில் அவர்கள் சாதியரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள் அல்லது ஒடுக்குகிறார்கள். ஒரே பதிலில் புத்தரையும் அம்பேத்கரையும் பெரியாரையும் ‘தலித்துகள் இந்துகள் இல்லை’ என்ற நவீன அரசியற் குரலையும் நிராகரிக்கிறீர்களா?    சாதிய ஏற்றத் தாழ்வும் தீண்டாமையும் இந்து மதத்தின் சாராம்சங்கள் இல்லை. ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர்களும் ஒரு சாதிக்குப் பிறந்தவர்கள் இல்லை. உலகின் எல்லா மதங்களிலும் தீமையும் உண்டு. கிறிஸ்தவர்கள் இங்கே கால்வைக்கத் தொடங்கும் போது சாதி பார்த்து ஆய்வுகள் மேற்கொண்டு கால்பதித்து சாதியை தீவிரப்படுத்தியவர்கள். சாதி எப்போதும் கொழுந்து விட்டெரிய வேண்டும் என நினைப்பவர்கள் அவர்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவ மதப்பிரிவும் ஒவ்வொரு சாதி ஏன்?    தலித்துகள் இந்துக்கள் இல்லை என்ற குரலே தவறானது. இந்தியாவில் பெரும்பான்மையான தலித்துகள் இந்துக்கள்தான். தலித்துகள் இந்துக்கள் இல்லை என்கின்ற வாதம் பொதுவானதொரு அரசியற் குரல் அல்ல. இந்து மதத் தலைமைப் பொறுப்பே பல சமயங்களில் தலித்துகளின் கைகளில் இருந்திருக்கிறது. அய்யன்காளி மிகப் பெரிய உதாரணம். ஏற்றத் தாழ்வுகள் எந்த வடிவத்தில் இருந்தாலும், எந்த பொருளில் வந்தாலும் களையப் படவேண்டுமேயன்றி அதற்கு இந்துமதத்தை மட்டுமே பொறுப்பாக்கக் கூடாது. இத்தகைய பார்வைகள் மரபான வரலாற்றாசிரியர்கள் கட்டுவித்தவை. ஆழ்வார்களிலும் நாயன்மார்களிலும் சித்தர்களிலும் தலித்துகள் உண்டு. இவர்கள் இல்லாத இந்து மதம் எப்படி சாத்தியம்? கோவில்களையும், மடங்களையும் யாரோ சம்பந்தமில்லாதவர்கள் முடக்கி வைத்திருக்கிறார்கள் என்றால் உடைத்து உள்ளே செல்ல வேண்டியதுதான். இந்து மதக் கோவில்கள், புராணங்கள் எல்லாம் எல்லோருக்கும் உரியவைதானே அன்றி பறிமுதல் செய்து வைத்திருப்பவனிடன் ஒப்படைத்து விட்டுக் கலைந்து செல்வதற்கானவை அல்ல.    சாதிய ஏற்றத் தாழ்வுகளும், தீமைகளும் தொடர்ந்து எல்லோராலும் வேறுவேறு காரணங்களுக்காகப் பேணப்படுகின்றன. அரசியல் காரணங்கள்,கொலோனியல் ஆர்வம் ஆகியவையும் இவற்றில் அடக்கம். இந்துமதத்தைக் காரணமும் முழுப் பொறுப்பும் ஏற்குமாறு நிர்பந்திப்பது சரியான அணுகுமுறையில்லை.    எங்கே உங்களது இரண்டாவது நாவல்?    முதலில் நான் எழுதியதே நாவல் அல்ல. நாவலுக்கானதொரு முயற்சி அவ்வளவுதான். இரண்டாயிரத்திற்கு  முன்னர் அது எழுதிப் பார்த்தது அவ்வளவுதான்.    தற்போது தமிழில் வெளிவரும் நாவல் எழுத்து பேரில் எனக்கு மதிப்பேதும் இல்லை. யாரிடமிருந்தாவது நாவல் எழுதப்போகிறேன் என்கிற தகவல் கிடைக்கும் போது அவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்ளலாம் என்றேபடுகிறது.    தமிழில் நாவல் எழுத்து என்பது தன்னிலையைப் பிதுக்கி பெரிதுபடுத்திக் காட்டுவதைப் போல உள்ளது. இதற்குத் துணிபவர்களைப் பதிப்பாளர்கள் ஊக்குவிக்கிறார்கள்.சிலர் சமூக சரிதைகளை அள்ளி எறிகிறார்கள் நாவல் என்கிற பெயரில்.    நானும் நாவல் எழுதுவேனாக இருக்கலாம். அதற்கான ஆசை எனக்குண்டு.ஆனால் அது இந்தப் பதிப்பக நெடியிலிருந்தோ, பரபரப்பிலிருந்தோ நிச்சயம் தொடங்காது. அது மட்டுமல்லாமல் நாவல் எழுதியே தீரவேண்டும் என்கிற கட்டாயம் ஏதும் கிடையாது. இப்போது என்னிடம் நாவல் எப்போது? என விசாரிப்பவர்கள்தான் என்னிடம் கெட்ட வார்த்தைகளால் திட்டும் வசையும் வாங்குவதில் முன்னணியில் இருக்கிறார்கள்.    தமிழில் இப்போது எழுதப்படுகிற நாவல்களில் பெரும்பாலானவை பதிப்பாளர்களால் எழுதப்படுபவையே அன்றி எழுத்தாளர்களால் எழுதப்படவில்லை. பதிப்பாளர்கள் விற்பனையின் நலம் கருதி ஆள்வைத்து வேறுவேறு பெயர்களில் நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.    ஆக்காட்டி -இதழ் 10  பெப்ரவரி 2016.                                                  21. கத்னா   உரையாடல்: இலங்கையில் கிளிட்டோரிஸ் துண்டிப்பு    எங்கோ சோமாலியாவிலும் சில ஆபிரிக்கப் பழங்குடிகளிடமும் மட்டுமே இருப்பதாகப் பொதுவாக அறியப்படும் ‘கிளிட்டோரிஸ் துண்டிப்பு’ இலங்கையிலும் முஸ்லீம் சமூகத்திடையே  இரகசியமாக நீண்டகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.    பெண்ணுறுப்பில் பாலியல் உணர்ச்சி நரம்புகளின் குவியமான ‘கிளிட்டோரிஸ்’ எனும் பகுதியை குழந்தைகளுக்குத்  துண்டித்துவிடும்  அல்லது சிதைத்துவிடும் இச் சடங்கு ‘கத்னா’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இச் சடங்கில் கிளிட்டோரிஸை வெட்டித் துண்டிக்கும் அல்லது சிதைத்துவிடும் பெண்மணி ‘ஒஸ்தா மாமி’ என அழைக்கப்படுகிறார். இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்பு குறித்து ரேணுகா சேனநாயக்கா 1996-ல் எழுதிய SRI LANKA-CULTURE: Mothers Watch as Daughters are Circumcised என்ற கட்டுரையில் தொண்டு நிறுவனமொன்று இலங்கை முஸ்லீம்களிடையே கிளிட்டோரிஸ் துண்டிப்புக் குறித்துக் கருத்துக்கேட்டபோது கருத்துத் தெரிவித்தவர்களில் 90 விழுக்காடானவர்கள் இந்தக் ‘கத்னா’ வழக்கத்திற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர் எனப் பதிவு செய்கிறார்.    கடந்த வருடம் இதுகுறித்து ‘த ஐலண்ட்’ பத்திரிகையில்  The Hidden Horrors of Female Genital Mutilation என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய நபீலா சபீர் இலங்கைச் சட்டங்களின்படி இச் சடங்கு தண்டனைக்குரிய குற்றமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சடங்கை அய்.நா. பெண்களிற்கு எதிரான வன்முறை என வரையறுத்திருக்கிறது. இக்கொடிய சடங்கு இன்று அய்ந்து கண்டங்களிலும்  எழுபத்தைந்துக்கு மேற்பட்ட நாடுகளில் வழக்கத்திலுள்ளது. Prevalence of female genital mutilation by country என்ற ‘விக்கிபீடியா’ கட்டுரை இலங்கையிலும் இந்தியாவிலும் இந்தச் சடங்கு வழக்கிலுள்ளதைச் சான்றுகளுடன் தெரிவிக்கிறது.    இலங்கையிலுள்ள தமிழ் வாசிப்போர் மத்தியில் இந்தக் கொடிய சடங்கு குறித்து ஒன்றிரண்டு பதிவுகளுள்ளன. அனார் இச்சடங்கு குறித்து ‘ப்லேட்’ (Blade) என்ற சிறுகதையை எழுதியுள்ளார். சமூக வலைத்தளத்தில் லபீஸ் ஸாகீட் ‘சில ஆண்டுகளுக்கு முன்பு உஸ்தாத் மன்சூர் தன்னுடைய ‘நகர்வு’ சஞ்சிகையில் இந்த வழமைக்கு எதிராக எழுதவும் அதற்கு சூபி செல்வாக்கு கொண்ட மதரஸாக்கள் கடுமையாக மறுப்பு வெளியிட்டமைக்கு நான் சாட்சி. சுருக்கமாக சொல்வது எனில் மரபு ரீதியான முஸ்லிம்களிடத்தில் இந்த வழமை இன்னும் செல்வாக்கு இழந்திடவில்லை என்பதே உண்மை’ எனப் பதிவு செய்துள்ளார்.    Naseeha Mohaideen தன்னுடைய முகநுால் பதிவொன்றில் “கிளிட்டோரிசை நீக்காமல் அதில் சிறுபகுதியை வெட்டுதல்/ கிளிட்டோரிஸை வெட்டி அதை முற்றாக நீக்குதல்  போன்ற வழக்கங்கள் இலங்கையில் உள்ளதாகத் தெரிகிறது…” எனக் குறிப்பிட்டு இந்தச் சடங்கிற்கு எதிரான பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.    கல்முனையைச் சேர்ந்த மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் ‘பெண்களுக்கு கத்னா செய்வது என்பது இஸ்லாமிய ஷரீஅத்தில் உறுதியாக கூறப்பட்ட விசயமாகும். இதில் சந்தேகப்பட வேண்டியத் தேவையில்லை. முஸ்லிம்கள் கத்னா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறும் பல ஹதீதுகள் வந்துள்ளன.’ என  ‘பெண்களுக்கு கத்னா செய்ய வேண்டுமா?‘ என்ற கட்டுரையில் (mailofislam.com) இரக்கமற்றுக் குறிப்பிட்டுள்ளார்.    இலங்கையில் இச்சடங்கு ஓர் இரகசியமான புதிர்த் தன்மையுடனேயே இன்னுமிருக்கிறது. இப்பேசாப் பொருளைப் பேசத் துணிந்தோருக்காக ஒரு தொகை  முஸ்லீம் பெண் மழலைகள் காத்துக்கிடக்கிறார்கள்.  அந்த மாசற்ற மழலைகளை ஒஸ்தா மாமிகளின் கைகளிற்கு ஒப்புக்கொடாமல் தப்புவிப்பதைத் தவிர வேறென்ன முக்கிய கடமை நமக்கிருக்கப்போகிறது?    ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதுபவரும்  derailedwords.com என்ற வலைப்பதிவில் பதிவிடுபவரும், தற்போது பாரிஸில் தரித்து நிற்பவருமான தோழர். முகமட் ஃபர்ஹான் அண்மையில் இக்கொடிய வழக்கத்தைக் கண்டனம் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அவருடன் ‘ஆக்காட்டி’க்காக ஒரு தொடக்க உரையாடல்    –ஷோபாசக்தி  இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்புச் சடங்கு இலங்கையில் எப்படி உருவாகி நீடித்து நிற்கிறது? இந்தச் சடங்கு இஸ்லாமியவழிமுறையா? அல்லது பழங்குடிப் பண்பாட்டு எச்சமா?    இச்சடங்கு அதிபழைமைவாதமான சூஃபி மரபிலிருந்து உருவானதாகவே கருதுகிறேன்.  வஹாபிகள் மட்டுமே இந்தச் சடங்கை இலங்கையில் சமகாலத்தில் எதிர்த்துக்கொண்டிருக்கும் ஒரே தரப்பாகும். அவர்கள், ஹதீதுகளில் இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்புச் சடங்கு குறித்துக் குறிப்பிடப்படவில்லை, அதனால் இச்சடங்கு இஸ்லாத்துக்கு எதிரானது என்கிறார்கள். மற்றைய வலுவான முஸ்லீம் தரப்புகள் -குறிப்பாகத்  தம்மை முற்போக்கெனப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் –  ஜமாத்  ஏ இஸ்லாமி, முஸ்லீம் பிரதர் கூட் (MFCD)போன்ற அமைப்புகள் இந்தக் காட்டுமிராண்டித்தனமான சடங்கு குறித்துப் பேசாமலேயே இருக்கிறார்கள். முஸ்லீம் சமூகத்திலுள்ள அறிவுஜீவுகள் மத்தியிலும் கல்விச் சமூகத்தின் மத்தியிலும் எழுத்தாளர்கள் மத்தியிலும் இச்சடங்கு குறித்து நீண்ட கள்ள மௌனமே இதுவரை சாதிக்கப்படுகிறது. இலங்கை முஸ்லீம்களால் நடத்தப்பட்ட-  நடத்தப்படும் சீரிய இலக்கியச் சிறுபத்திரிகைகள் கூட இந்த விடயத்தில் இதுவரை மௌனம் காத்துள்ளன. வானத்திற்கும் பூமிக்கும் நடுவிலுள்ள எல்லாவற்றைப் பற்றியும் தட்டச்சும் அவர்களது விசைப் பலகைகள் கத்னாவுக்குப் பலியாகும் சிறுமிகள் பற்றி எழுத மட்டும் தயங்கிக்கிடக்கின்றன.    இந்தச் சடங்கு இலங்கை முஸ்லீம் சமூகத்தினரிடையே தற்போது எவ்வளவிற்கு நிலைகொண்டிருக்கிறது? ரேணுகா சேனநாயக்க 90 விழுக்காடு முஸ்லீம்கள் இலங்கையில் இச்சடங்கை ஆதரிப்பதாகக் கூறுகிறாரே?    ரேணுகா சேனநாயக்க குறிப்பிடுவது மிகச் சரியெனவே நான் எண்ணுகின்றேன். இந்தச் சடங்கு  என்னுடைய குடும்ப உறவுகளிற்கே நடந்திருக்கிறது.  இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்புச் சடங்கு குறித்து  முஸ்லீம் பெண் ஆளுமைகளுடன் பேசியிருக்கிறேன். அவர்களும் இச்சடங்கிற்கு உள்ளாகியிருப்பதாகச் சொன்னார்கள். எனினும் இது குறித்து ஓர்மமான எதிர்ப்புக் குரலோ உரையாடலோ இன்னும் கிளம்பாமலிருப்பது மிகப் பெரிய துக்கம்.    எழுத்தாளர் றியாஸ் குரானா கிளிட்டோரிஸ் துண்டிப்பு குறித்துத் தான் அறிந்திருக்கவில்லை எனவும் ஆனால் குழந்தைகளின்பெண்ணுறுப்பில் சிறுதுளி இரத்தம் எடுப்பதுபோல ஒரு சடங்கு நிலவி வருகிறது எனவும் எழுதியிருக்கிறாரே?    றியாஸ் குரானா சொல்வதுபோலவே இச் சடங்கு சிறுதுளி இரத்தம் எடுப்பதுதான் என்று வைத்துக்கொண்டாலும் அதுவும் வன்கொடுமைதான். ஆனால் ,இலங்கையில் நடப்பது கிளிட்டோரிஸ் துண்டிப்பு அல்லது சிதைப்புத்தான். அதைத்தான் கத்னா என்கிறார்கள். நான் என் குடும்பத்திற்குள்ளும் வேறுபலரிடமும் பேசி உறுதிப்படுத்திக்கொண்டுதான் இதைச் சொல்கிறேன். றியாஸ் குரானா இது குறித்து அறியாதவர்போன்று நன்றாக நடிக்கிறார். அவருக்குள் உறைந்திருக்கும் பழைமைவாத முஸ்லீம்  இந்தக் கொடுமையைப் பூசிமெழுகிவிட முனைகிறார். ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகமே இது குறித்து உரையாட விரும்பாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.    ஆனால் இச்சடங்கு இப்போது அருகி வருகிறது என்று சிலர் சொல்கின்றார்களே?    நீங்கள் யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்களிடம் இப்போதும் சாதிமுறை இருக்கிறதா எனக் கேட்டுப்பாருங்கள்.  இப்போது அது அருகிவிட்டது என்பார்கள். ஆனால் உண்மையிலேயே சாதிமுறை பலமாக அங்கிருக்கிறது.    இந்தக் கத்னா சடங்கு இப்போது அருகிவிட்டதென இவர்கள் எந்த ஆய்வின், தரவுகளின் அடிப்படையில் சொல்கிறார்கள்? இவர்கள் சொல்வதற்குச் சான்றுகள் என்ன? இப்போதும் வழக்கத்திலிருக்கும் ஒரு மிகப் பெரிய சமூகக் கொடுமையை இப்படியான சப்பைக்கட்டுகளைக் கட்டி இவர்கள் மூடி மறைப்பது  வருத்தத்திற்குரியது. மதத்தின் பெயரால், பண்பாட்டின் பெயரால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளை மறைப்பதையும் சகித்துக்கொள்வதையும் அனுமதிக்கவே முடியாது.    இந்தச் சடங்கு குறித்து பரவலான எதிர்ப்பு இதுவரை தோன்றாததற்கான காரணமென்ன?    ஒன்றை யோசித்துப் பாருங்கள்… அனாரும் நஸீஹாவும் உஸ்தாத் மன்சூரும் இது குறித்துப் பேசியது கற்பனைத்தளத்திலிருந்தா? ஒரு உண்மையை அவர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால் இந்தக் குரல்களை என் சமூகம் நிராகரித்திருக்கிறது. கடுமையாக எதிர்க்கவும் செய்கிறது. மதவாதத்திற்குள் விழுந்து கிடப்பவர்கள் இந்தச் சடங்கை இயல்பானதொன்றாக ஏற்கும் மனநிலையிலிருப்பதே இதுவரை எதிர்ப்புத் தோன்றாததற்கான காரணம். அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்புக் குரல்கள் தோன்றும்போது கூட, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை எனப் பொய்ச்சாட்சியம் உரைப்பது மதவாத நோய்க் கூறாகும்.  இந்தச் சடங்கைத் தடுத்து நிறுத்துவதற்கான எதிர்ப்புச் செயற்பாடுகளை நாம் எங்கிருந்து தொடங்கவேண்டும் எனக் கருதுகிறீர்கள்?    கண்டிப்பாக முஸ்லீம்கள் மத்தியிலிருந்துதான்  எதிர்ப்புக் குரல்களைத் தொடங்க வேண்டும்.  முஸ்லீம் சிந்தனையாளர்களாலும் எழுத்தாளர்களாலும் இது குறித்த ஒரு விழிப்புணர்வைச் சிறிய அளவிலாவது  உண்டாக்க முடியும்.    இலங்கை முஸ்லீம்களிடையே இடதுசாரி இயக்கங்களோ தீவிர பெண்ணிய இயக்கங்களோ கிடையாது. எனவே மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள இஸ்லாமிய இயக்கங்கள் தான் இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்து இந்தக் கொடூரமான வழக்கத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அவர்களால் மட்டுமே முழுவதுமான மாற்றம் சாத்தியம்.    அப்படியானால் இந்தச் சடங்கைத் தீவிரமாக எதிர்க்கும் வஹாபிகளை நாம் இந்த விடயத்தில் ஆதரிக்கத்தானே வேண்டும்?    முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். வஹாபிகள் சிறுமிகள், பெண்கள் மீதுள்ள அக்கறையால் இச் சடங்கை எதிர்க்கவில்லை. ‘பித்ஹத்’ என்பதாலேயே எதிர்க்கிறார்கள். அதாவது இறைத்தூதர் செய்யாத, மொழியாத விடயமாக இந்தச் சடங்கை அவர்கள் பார்க்கிறார்கள். அதேவேளையில் இஸ்லாமியப் பெண்கள்மீது மட்டுல்லாமல் ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்தின் மீதும் வஹாபிகள் ஏராளமான அடக்குமுறைகளைத் திணித்துவருகிறார்கள் என்பதை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். 70-களில் இலங்கையில் காலுான்றிய வஹாபிஸம் இப்போது  வலுவான ஒரு தரப்பாகி முஸ்லீம் சமூகத்தை மத அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளிச் சீரழிக்கிறது. பிற சமூகங்களிற்கும் முஸ்லீம் சமூகத்திற்குமான நல்லிணக்க உரையாடல்களிற்கான சாளரங்களை  வஹாபிகளின் அடிப்படைவாதம் மூடியும்விடுகிறது. ஆக கிளிட்டோரிஸ் துண்டிப்புக்கு எதிரான வஹாபிகளின் எதிர்ப்பு அவர்களிற்கும் சூஃபி மரபுக்கும் இடையேயான போரின் ஒரு அம்சமே தவிர பெண்களின் நலனுடன் தொடர்புடையதல்ல.    இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்புச் சடங்கு முஸ்லீம்களிடையேயுள்ள பண்பாட்டுப் பிரச்சினை. இது குறித்து முஸ்லீம்கள் அல்லாதமேற்குலகும் பிறரும் பேசுவது ஒருவகையான மூக்கு நுழைப்பு,ஆதிக்கச் செயற்பாடு  எனக் கருதுகிறீர்களா?    மேற்குலகம் உட்பட எல்லாத் தரப்புகளும் தங்களது சொந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகக்கூடியவைதான். அதேவேளையில் நம்மிடையேயிருக்கும் கிளிட்டோரிஸ் துண்டிப்பு அல்லது சிதைப்பு போன்ற விடயங்கள் குறித்து அவர்கள் பேசும்போதும் தலையீடு செய்யும் போதும் நாம் அந்தக் குரல்களை முற்றிலுமாக மறுத்துவிட முடியுமா என்ன!  இலங்கையில் நடைபெறும் இந்தக் கத்னா சடங்கை இனியும் அனுமதிப்பது முஸ்லீம் சமூகத்திற்கு பெருத்த சுய அவமானமாகும். கத்னாவை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கான பண்பாட்டுத்தளத்திலான நடவடிக்கைகளை மட்டுமல்லாமல் சட்ட நடவடிக்கைகளையும் நாம் ஒருகணமும் தாமதியாது தொடங்கியாக வேண்டும்.    மதத்தின் பெயரால் கிளிட்டோரிஸ் துண்டிப்புக்கு உள்ளான ‘பாலைவனப் பூ’ வாரிஸ் டைரி தனது தன்வரலாற்று நுாலில் சொல்வதைக் கவனியுங்கள்:    விசுவாசத்தை காட்டுமிராண்டித்தனமான சடங்குகளின்  வழியே பெறுவதைவிட, நம்பிக்கையின் மூலம், அன்பின் மூலம் பெறமுடியும் என்பதை அறிய வேண்டும். துன்பங்களைச் சுமந்திருக்கும் பழைய முறைகளை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது!.    ஆக்காட்டி -ஏப்ரல் 2017 இதழில் வெளியானது.                22. எனது ‘விகடன் தடம்’ நேர்காணல்   சந்திப்பு: வெய்யில், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன்    படங்கள்: தி.விஜய், ரா.ராம்குமார்    ஷோபாசக்தி ஈழ இலக்கியத்தின் இன்றைய முகம். போரின் அழிவுகளை, சிங்களப் பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறைகளை, போராளி இயக்கங்களின் தவறுகளை, புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகளைக் காத்திரமான மொழியில் தன் படைப்புகளில் பதிவுசெய்த படைப்பாளி. சாதி ஒழிப்புக் கருத்தியலையும் தலித்தியத்தையும் ஈழத் தமிழர்களிடத்தில் கொண்டுசெல்ல இடைவிடாது உரையாடிக்கொண்டிருப்பவர். ஷோபாசக்தியின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவரது படைப்பின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வார்கள். இப்போது நடிகராகவும் மாறியிருக்கும் ஷோபாசக்தியை, சென்னைப் புத்தகக் கண்காட்சிக்காகக் கிளம்பிக்கொண்டிருந்த வேளையில் சந்தித்தோம்.    “உங்களுக்குப் பிடித்த பைபிள் வரிகளுடன் நேர்காணலைத் தொடங்கலாம்…”    “ ‘எகிப்திலே பிரேதக் குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு  எங்களைக் கொண்டுவந்தீர்?’    எங்களது அகதி வாழ்க்கையைக் குறிக்க இதைவிடச் சிறந்த வாக்கியம் ஏது? ‘ம்’ நாவலின் முகப்பில் இதைக் குறிப்பிட்டே கதையைத் தொடங்கினேன்.’’    [] p4a_1517206172.jpg   "ஷோபாசக்தி தன்னை, தனது வாழ்க்கையை எப்படி வரையறுத்துக்கொண்டார்/கொள்கிறார்?”     “யுத்தத்தின் ஊடாகவே வளர்ந்ததால், நான் எப்படி வளர்வேன்; என்ன ஆவேன்; என்ன செய்ய வேண்டும் எனத் திட்டமிடுவது எதுவும் என் கையில் இருக்கவில்லை. என்னைச் சூழ்ந்திருந்த புறக் காரணிகளே என் வாழ்க்கையைத் தீர்மானித்தன. இன்றுவரையும்கூட என் வாழ்க்கை அப்படித்தான். நான் இயக்கத்துக்குப் போவேன் என ஒருபோதும் நினைக்கவில்லை. மிகவும் வறுமைப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவன் நான். பொதுவாக, யாழ்ப்பாணத்துச் சமூகம் பிள்ளைகளைப் படிக்க வேண்டும் என்று சொல்லியே வளர்க்கும். நானும் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன்தான். அந்தக் காலகட்டத்தில் வழக்கறிஞர் தொழில்தான் கவர்ச்சிகரமான தொழில். தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்ற அரசியல் தலைவர்களும் வழக்கறிஞர்கள்தாம். சட்டம் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பமும். ஆனால், புறச்சூழல்கள் அனுமதிக்கவில்லை.    நான் பத்தாவது படித்த 83-ம் ஆண்டில்தான் இனக்கலவரம் நடைபெற்றது. அதை இனக்கலவரம் என்று சொல்லக் கூடாது; தமிழர்கள்மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. எங்கள் கிராமம்  வறண்ட பாலைநிலம். பெரிய அளவில் விவசாயமெல்லாம் செய்ய முடியாது. ஊரில் உள்ள பெரும்பாலானோர் கொழும்புக்குச் சென்று, அங்குள்ள கடைகளில் சிற்றூழியர்களாக வேலை பார்ப்பார்கள். என் அப்பாவும், அண்ணனும் அவ்வாறு வேலை செய்தவர்கள்தாம். 83-ம் வருடப் படுகொலைகளின் போது எங்கள் கிராமத்தில் பாதிப் பேர் கொழும்பில்தான் இருந்தார்கள். அப்போது அவர்களில் சிலர் கொல்லப்பட்டார்கள்; சிலர் காதறுக்கப்பட்டு, விரல்கள் துண்டிக்கப்பட்டு வந்தார்கள். முழு கிராமமும் யாழ்ப்பாணத்தையும் அல்லைப் பிட்டியையும் இணைக்கும் அந்தப் பாலத்தில் உட்கார்ந்திருந்தார்கள். தொலைபேசியும் இல்லை; செய்திகள் தெரிந்துகொள்ள வழியே இல்லை. வானொலிச் செய்திகள் மட்டுமேதான். வானொலியும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் பொய்ச் செய்திகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தது. அப்பா, அண்ணனுக்காக நானும் காத்துக்கொண்டிருந்தேன். பத்துநாள்கள் கழித்துத் தனித்தனியாகக் கட்டிய துணியுடன் வந்தார்கள். இதுபோன்ற சூழல்கள்தான் என்னை இயக்கத்துக்கு அனுப்பின.    மிகுந்த நம்பிக்கையோடுதான் இயக்கத்தில் இணைந்தேன். நான் மட்டுமல்ல, எங்கள் வகுப்பில் நாற்பது பேர் இருப்போம். திடீரென்று பத்துப் பேர் இல்லாமல் போய்விடுவார்கள். அடுத்து, ஐந்து பேர் போவார்கள். இப்படிக் கும்பல் கும்பலாக இயக்கங்களுக்குள் சேர்ந்தோம்.”    “உங்கள் விடுதலைப் புலிகள் இயக்க அனுபவங்கள்…”    [] “1983-ம் ஆண்டுக் கடைசியில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன். யூலை 25-ம் தேதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் குட்டி மணி, தங்கத்துரை, ஜெகன் உள்பட 35 பேர் கொல்லப்பட்டார்கள். அதற்கு அடுத்த இரண்டு நாள்களில் மறுபடி திட்டமிட்டு 27 பேர் கொல்லப்பட்டார்கள். அப்போதெல்லாம் குட்டிமணியும் தங்கத்துரையும் எங்களுடைய தேசிய நாயகர்கள். வெலிக்கடை சிறைப் படுகொலையை மையப்படுத்திதான் ‘ம்’ நாவலை எழுதினேன். அந்தச் சம்பவம்தான் என்னை, பள்ளிக்கூடத்தை, குடும்பத்தை விட்டு இயக்கத்தில் இணையத் தூண்டியது. போகும்போது பெரும் நம்பிக்கையோடு சென்றோம். எங்கள் ஊரில் அந்த நேரத்தில் பலரும் புளொட்டுக்குத்தான் சென்றார்கள். நான் எல்.டி.டி.இ-ல்தான் சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.”      “ஏன்?”    “அந்த நேரத்தில் எல்.டி.டி. இ மட்டும்தான் ஆயுத ரீதியாகச் செயல்பட்டு, கெரில்லாத் தாக்குதல்களைப் பரவலாகச் செய்துவந்தனர். மற்றவர்கள் மக்கள் மத்தியில் இறங்கி அரசியல் வேலைகளைச் செய்தார்கள். அரைகுறையாக சோசலிசக் கருத்துகளைப் பேசுவார்கள். எல்.டி.டி.இ மட்டும்தான் கெரில்லா இயக்கமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. அவர்களும் சோசலிசத் தமிழீழம் என்றே முழங்கினார்கள். அதனால் புலிகள் அமைப்பில் சேர முடிவெடுத்தேன். ஆனால், எல்.டி.டி.இ-யில் சேர்வதென்றால், அப்போது மிகக் கஷ்டம். தொடர்பே எடுக்க முடியாது. யாழ்ப்பாணத்திலிருந்து விலகியிருந்த எங்கள் தீவுக்குக் கடைசியாகத்தான் பஸ் வரும், கடைசியாகத்தான் கரன்ட் வரும். இயக்கமும் கடைசியாகத்தான் வந்தது. எல்.டி.டி.இ-ல் நான் சந்தித்த முதல் பொறுப்பாளர்  கவிஞர் நிலாந்தன். அவர் மூலம்தான் இயக்கத்தின் முழுநேர உறுப்பினரானேன். அவர் அப்போதே கவிதைகள் எழுதிவந்தார். நாங்கள் கெரில்லா வாழ்க்கையில் இருந்த காலத்தில்தான் ‘குமுதினி’ படகில் வந்த பயணிகள் 60 பேர் இலங்கைக் கடற் படையால் வெட்டிக் கொல்லப்பட்டனர். நாங்கள்தான் அந்த உடல்களைக் கரைக்குக் கொண்டுவந்து, மருத்துவமனையில் சேர்த்தோம். அன்றிரவு நிலாந்தன் ‘கடலம்மா’ என்ற புகழ்பெற்ற அந்தக் கவிதையை எழுதினார். இயக்கத்தில் இருந்த மிகச் சில சிந்தனையாளர்களில், கலைஞர்களில் நிலாந்தனும் ஒருவர். எழுத்தாளனாக என்னுடைய உருவாக்கத்தில் நிலாந்தனுக்கும் ஒரு பங்குண்டு. அவரை அடியொற்றித்தான் நான் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன்.    மக்கள், விடுதலை இயக்கங்களை அவ்வளவு ஆதரித்து நேசித்தார்கள். அப்போது, இன்று இருக்கும் வடக்கு, கிழக்குப் பிரிவு இருக்கவில்லை; தமிழர் – முஸ்லிம் பகை இருக்கவில்லை. இயக்கத்துக்குள் நிறைய இஸ்லாமியர்கள் இருந்தார்கள். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பாரூக், உஸ்மான் போன்றோர் இஸ்லாமியர்கள்தான். ஏறக்குறைய தமிழ் பேசும் அனைத்து மக்களுமே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த காலம் அது. போராட்டத்துக்கு இந்தியாவின் ஆதரவு இருந்த காலமும்கூட. போராளிகளை அழைத்து, பயிற்சி முகாம் அமைத்து, சாப்பாடு போட்டுப் பணம் கொடுத்து, ஆயுதங்களையும் தந்தது இந்திய அரசு. அதேவேளையில், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் உள்ள தொடர்பினால், போராளிகளில் ஒரு பகுதியினர் பாலஸ்தீனத்திலும் லெபனானிலும் பயிற்சி பெற்று வந்தனர். அதுவரை இலங்கை ராணுவம் எந்தவொரு சண்டையும் செய்திருக்கவில்லை. வெறுமனே சுதந்திர தினத்தில் குண்டு இல்லாத வெற்றுத் துப்பாக்கியைக்கொண்டு அணிவகுப்பு செய்துவந்த ராணுவம் அது. ஆக, நாங்கள் மிகப் பெரிய பயிற்சி பெற்ற படை. வலுவான இயக்கங்களாக ஐந்து இருந்தன. அதைத் தவிர சிறிய சிறிய இயக்கங்களும் இருந்தன. இருந்தாலும் இயக்கங்களுக்குள் பெரிய முரண்கள் இருக்கவில்லை. இயக்கத் தலைவர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். 85-ம் ஆண்டு நடுப்பகுதியில் எல்.டி.டி.இ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், டெலோ, ஈரோஸ் ஆகிய இயக்கங்கள் இணைந்து ஒரு முன்னணியையும் அமைத்திருந்தன [] p4c_1517206205.jpg.    காலத்துக்குக் காலம் தமிழ்த் தரப்புகள் பல்வேறு பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்களை நடத்தியிருக்கின்றன. ஆனால், எந்த ஒப்பந்தங்களையும் இலங்கை அரசு முறையாக நிறைவேற்றவில்லை. அதனால், இனி இலங்கை அரசோடு துப்பாக்கிக் குழல்களால் மட்டுமேதான் பேசுவோம் என்று முடிவெடுத்தோம். ‘ஆற்றல் மிகு கைகளில் ஆயுதம் ஏந்துவோம். மாற்று வழி நாம் அறியோம்’ என்பதே எங்கள் முழக்கமாக இருந்தது. ஆனால், 85-ல் இந்திய அரசின் நிர்பந்தத்தின் காரணமாக, திம்பு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம். இயக்கத் தலைவர்கள் வேறு வழியில்லாமல் சம்மதித்தார்கள். தமிழீழத்துக்குப் பதிலாக மாகாணசபை என்றெல்லாம் பேசப்பட்டது. நமது போராட்டம் திசைமாறுகிறதோ என முதற் குழப்பம் எனக்குள் ஏற்பட்டது. எங்களுடைய இயக்கம் நிகழ்த்திய அனுராதாபுரம் படுகொலை எனக்குள் பெரிய அதிர்ச்சியை விளைவித்தது. குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி சிங்களப் பொதுமக்கள் விடுதலைப் புலிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். ‘சோசலிசத் தமிழீழம்’ என்று பேசிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் இந்த நடவடிக்கை எனக்குள் ஆறாக் கசப்பை ஏற்படுத்தியது.    நாங்கள் விற்ற முதல் நூலே ‘சோஷலிச தமிழீழத்தை நோக்கி…’ என்பதுதான். பயிற்சி முகாமில், காலை நேரத்தில் நாங்கள் எடுக்கும் சத்தியப் பிரமாணமும் ‘எமது புரட்சிகர இயக்கத்தின் புனித இலட்சியமாம் சோசலிசத் தமிழீழத்தை அடைய…’ என்றுதான் ஆரம்பிக்கும். இடதுவயப்பட்ட இயக்கமாக இருக்கும் என நாங்கள் நம்பிய இயக்கம், அப்பாவி மக்களைக் கொன்றது. அதைத் தொடர்ந்து 86 -ம் ஆண்டு டெலோ இயக்கத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் தாக்கித் தடை செய்தது. அப்போதும் நான் இயக்கத்தில்தான் இருந்தேன். சமூக விரோதிகளை ஒழிக்கிறோம் என்று சிறிய திருடர்களை, பாலியல் தொழிலாளர்களை எல்லாம் மின்கம்பத்தில் கட்டி, சுட்டுக் கொன்றார்கள். இதைப் பல்வேறு இயக்கங்களும் செய்தனர். புலிகளும் செய்தனர். மனநிலை சரியில்லாமல் திரிந்தவனையெல்லாம் சி.ஐ.டி என ‘அடையாளம் கண்டு’ கொன்றனர். எங்கள் கிராமத்திலேயே சிலர் இயக்கங்களால் கொல்லப்பட்டனர். இவை எல்லாம் சேர்ந்து எனக்குள் ஒரு பாதிப்பை உண்டாக்கின. இயக்கத்தின் மீது என் கசப்பு உணர்வு விரிய ஆரம்பித்தது.”    “அப்போதே இந்த விஷயத்தில் தத்துவார்த்த ரீதியிலான புரிதல் உங்களுக்கு இருந்ததா?”    “அப்போது பெரியளவில் எந்தத் தத்துவார்த்தப் புரிதலும் எனக்கு இல்லை. ஆனால், ஏதோ தவறான விஷயம் நடந்துகொண்டிருக்கிறது என்று மட்டும் புரிந்தது. நான் மனதளவில் இயக்கத்தை விட்டு விலகத் தொடங்கினேன்”    “உங்களுக்கு இடதுசாரித் தத்துவத்தின் மீதான ஈர்ப்பு எப்படி ஏற்பட்டது?”    “சிறுவயதில் எம்.ஜி.ஆர் பாடல்கள்மூலம் தெரிந்தவைதான். ‘தனியுடைமை கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா… தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா…” – அவ்வளவுதான் தெரியும். நான் பிரான்ஸுக்குப் போனபின்புதான் மார்க்ஸியம் குறித்தும் இடதுசாரி இயக்கங்கள் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொண்டேன். ஆனால், இயக்கத்தில் எனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்பது பாலியல் தொழிலாளிகள், சிறிய திருடர்கள் கொல்லப்படுவதில், அப்பாவி சிங்கள மக்கள் கொல்லப்படுவதில் இருந்துதான் தொடங்கியது. மார்க்ஸியம், மனித உரிமைகள் குறித்தெல்லாம் பெரியளவிலான தத்துவார்த்தப் புரிதல் இல்லாவிட்டாலும் சாமானிய மக்கள் கொலைசெய்யப்பட்டதை, அதுவும் தமிழீழம் வாங்கித்தரும் என்று நான் நம்பிய லட்சியவாத இயக்கத்தால் செய்யப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”    “ஆனால், புலிகளின் ஆயுதச் செயற்பாடுகளில் ஈர்க்கப்பட்டுத்தானே, நீங்கள் இயக்கத்தில் இணைந்தீர்கள்?”     “ஆமாம், அந்தச் செயற்பாடுகள் இலங்கை கொலைகார ராணுவ ஆயுதப் படைக்கு எதிராக நடந்தவை. ஆனால், அதுவே சொந்த மக்களுக்கும் அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் எதிராகத் திரும்பும்போது, நான் எப்படி அதை ஏற்றுக்கொள்ள முடியும்? இந்தக் கொடுமைகளுக்கும் விடுதலைக் கருத்தியலுக்கும் என்ன தொடர்பு?”    “இதை எதிர்த்து இயக்கத்தில் கருத்துகளை முன்வைத்து விவாதிக்க முடிந்ததா?”     “விவாதத்திற்கெல்லாம் இயக்கத்தில் இடமிருக்கவில்லை. அவ்வளவு இறுக்கமான தலைமை அது. இயக்கத்தின் ஆரம்ப நாள்களில் அரசியல் மத்தியக் குழு என ஒன்று இருந்தாலும் அது பலவீனமாகவே இருந்தது. பின்பு மத்தியக் குழுவே இல்லாமல் போய்த் தனிநபர் தலைமை என்றானது. தலைமை எடுக்கும் முடிவிற்கு எதிராகக் கருத்துச் சொன்னவர்கள் ஒன்று இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். இயக்கத்தின் ஆரம்பக் காலங்களிலேயே ‘புதியபாதை’ சுந்தரம், மனோ மாஸ்டர், ஒப்ராய் தேவன் போன்ற பலர் தலைமையோடு முரண்பட்டு வேறு அரசியல் இயக்கங்களில் இயங்கினார்கள். இவர்கள் அனைவருமே பின்பு புலிகளால் கொல்லப்பட்டார்கள்.    புலிகளின் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்த ராகவன் போன்றோர் மாற்றுக் கருத்துகளை முன்வைத்து, முடியும் வரை போராடிப் பார்த்துவிட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட தருணத்தில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றார்கள். உட்கட்சிப் போராட்டம் என்பது அப்போதே தொடங்கிவிட்டது. அதேபோல, அந்தப் போராட்டம் கடுமையாக நசுக்கி அழிக்கவும்பட்டது.    நான் இயக்கத்தில் இருந்த நிலை என்பது தலைமையையோ, முன்னணித் தலைவர்களையோ நேரடியாகப் பார்த்து விவாதிக்கும் அளவுக்குப் பெரிதில்லை. அதிகபட்சம் எங்களைப் போன்றவர்களால் திலீபனைப் பார்த்து முறையிட முடியும். அவரும் நாம் சொல்வதைக் கேட்டுக்கொள்வார்; விவாதிக்க மாட்டார். நான் இருந்தது சிறிய கெரில்லா குழுவில். இயக்கத்தில் அப்போது அரசியல் வகுப்புகளே நடத்தப்படவில்லை. எளிய கிராமத்து இளைஞனாக,  நடப்பது தவறெனத் தெரிந்தது. ஆனால், என்ன செய்வது எனத் [] p4c_1517206221.jpg தெரியவில்லை. நமக்கு இறுதித் தீர்வு தமிழீழம்தான். அதற்காகப் புலிகள் இயக்கம் முன்னின்று போராடி வருகிறது. ஆக, அவர்களைவிட்டு வெளியேறவும் முடியாது. அப்போது புலிகள் இயக்கத்தில் சேரும்போதே சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டுக் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும். அதிலொரு நிபந்தனை: ‘இயக்கத்தைவிட்டு வெளியேறினாலோ, வெளியேற்றப் பட்டாலோ, அவர் வேறு எந்தவொரு அமைப்பிலும் சேரக் கூடாது. எவ்வித அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. இந்த நிபந்தனையை மீறினால், மரண தண்டனை வழங்கப்படும்.’    1986-ல் ஈ.பி.ஆர்.எல்.எஃபைப் புலிகள் இயக்கம் தாக்கி அழிக்கத் திட்டமிட்டபோது நான் வெளியேறினேன். வீட்டிலும் வறுமை. யாழ்ப்பாணத்துக்குப் போகக்கூட பஸ்ஸூக்குக் காசு இருக்காது. வீட்டிலிருந்தபோது புலிகள் பண்ணைப் பாலத்தில் புதைத்துவைத்த சிலிண்டர் கண்ணிவெடியைக் கிளப்பிவிட்டேன் எனப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுப் புலிகளால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டேன். புலிகளின் அப்போதைய ஆயுதப் பொறுப்பாளர் ஜொனி நீண்ட விசாரணையின் பின் என்னை விடுவித்தார். இனி அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்கக் கூடாது எனக் கடும் எச்சரிக்கை வேறு. அடுத்து என்ன செய்வது என்றும் தெரியாமலிருந்தேன்.    ஆறு மாதம் கழித்து, இலங்கை – இந்திய ஒப்பந்தம் வந்தது. இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்தது. புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் போர் மூண்டது.  ஒரு கட்டத்தில் புலிகள் பின் வாங்கி, காட்டுக்குச் சென்றார்கள். தமிழ்ப் பகுதிகள் முழுக்க அமைதிப்படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. கணக்கிட முடியாத கொலைகளை, பாலியல் வன்புணர்வுகளை, சித்ரவதைகளை, அவமானங்களை, அத்துமீறல்களை இந்திய ராணுவம் நடத்தியது. இறுதியில் ஒருநாள் அமைதிப்படை எங்கள் கிராமத்துக்கும் வந்தது. புலிகள், முன்னாள் புலிகள், அவர்களுக்கு உதவி செய்தவர்களை அமைதிப்படை தேடியது. அமைதிப் படைக்குத் துணைக் குழுக்களாக டக்ளஸ் தேவானந்தா, பரந்தன் ராஜன் போன்றவர்களால் வழிநடத்தப்பட்ட இளைஞர்களும் வந்தார்கள். புலிகளுடனான தங்கள் பகையை அமைதிப்படைக்குக் கூலிப்படையாக மாறி அவர்கள் நேர்செய்ய முயன்றார்கள்.    அவர்களுக்கு யார் யார் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று நன்றாகத் தெரியும். எல்லாருமே கிராமத்தில் எங்கள் மாமன் மச்சான்கள்தானே! என் வீட்டுக்கும் இரண்டு முறை இந்திய ராணுவம் தேடி வந்தது. நல்வாய்ப்பாக நான் தப்பிவிட்டேன். இதனால் என்னால் யாழ்ப்பாணத்தில் இருக்க முடியவில்லை. அங்கிருந்து தப்பி, கொழும்புக்கு ஓடி வந்தேன். நான் கொழும்புக்கு வரவும் புலிகளுக்கும்  இலங்கை அதிபர் பிரேமதாசாவுக்கும் ஓர் ஒப்பந்தம் வரவும் சரியாக இருந்தது. பிரேமதாசா ஆட்சிக்கு வந்ததும் இந்திய ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்பதில் அவர்  உறுதியாக இருந்தார். அமைதிப்படையை எதிர்த்துப் போரிட்ட புலிகளுக்கு நிதி மற்றும் ஆயுத உதவியும் செய்தார். 1990 மார்ச்சில் இந்திய ராணுவம் வெளியேறியதும் மறுபடியும் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் சண்டை ஆரம்பித்தது. என்னைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்து, சிறைக்கு அனுப்பினார்கள். அந்தச் சட்டத்தில் கைதுசெய்தால் விசாரணையின்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். நான் கைது செய்யப்பட்டது என் குடும்பம் உட்பட யாருக்கும் தெரியாது. தகவல் தெரிவிக்க வழியுமில்லை. என்ன ஆவேன் எப்படி வெளியே வருவேன் எனத் தெரியவில்லை. நான் கொழும்பில் இருந்தபோது எனக்கு சிங்களத் தோழி ஒருவர்  கிடைத்தார். அவர் தன்பகுதி அரசியல்வாதிகளை அணுகிப் பெருந்தொகை லஞ்சம் கொடுத்து எடுத்த முயற்சியால் நான்கு மாதங்கள் கழித்து, சிறையைவிட்டு வெளியே வந்தேன்.”    “வெளியே வந்ததும் உங்களது முதல் முடிவு என்னவாக இருந்தது?”    “நான் கொழும்பில் இருக்க முடியாத நிலை. தினந்தோறும் கொலைகள். இலங்கை ராணுவம், தமிழ் இயக்கங்கள், ஜேவிபி, ஜிகாத் எனும் இஸ்லாமிய ஆயுதக்குழு என யார், யாரைச் சுட்டுக்கொல்வார்கள் என ஒன்றும் தெரியவில்லை. இலங்கை ராணுவமே பல்வேறு ஆயுதக் குழுக்களை உருவாக்கியது. உதாரணமாக, ‘பச்சைப் புலிகள்’ என்றொரு அமைப்பு நேரடியாகவே ஜெயவர்த்தனே மகனின் கட்டுப்பாட்டில் கொலைகளைச் செய்தார்கள். தமிழர்களுக்குத் தங்க வீடு கிடைக்காது; விடுதி கிடைக்காது. முன்னாள் புலி என்பதால், இந்தியாவுக்கும் வர முடியாது. அப்படி வந்தால், நேரடியாகச் சிறைக்கு அனுப்பிவிடுவார்கள் என அஞ்சினேன். ஆக, வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதொன்றே என் முன் இருந்த தீர்வு.    என் அண்ணா ஜெர்மனியில் இருந்தார். அவர், ‘தாய்லாந்துக்குப் போ’ என வழிகாட்டினார். திருட்டுத்தனமாக ஒரு பாஸ்போர்ட்டைத் தயார் செய்து தாய்லாந்து சென்றேன். அங்கே மூன்றரை வருடங்கள் அகதியாக வாழ்ந்தேன். அங்கேயும் சில பிரச்னைகள். தாய்லாந்தில் எங்களை அகதியாக ஐ.நா-வின்  ‘அகதிகளிற்கான உயர் ஆணையம்’ ஏற்றுக்கொண்டது. ஆனால், தாய்லாந்து அரசு எங்களை அகதியாக ஏற்க மறுத்தது. பலமுறை சிறைவாசம். உலகின் கொடூரமான சிறைகளில் பாங்காக் சிறையும் ஒன்று.    1993-ல் அங்கிருந்து பாரிஸுக்கு எல்லா அகதிகளையும் போலவே நானும் பிரெஞ்சு கள்ளப் பாஸ்போர்ட்டில் போனேன். ஒருவேளை எனக்கு லண்டன் கள்ளப் பாஸ்போர்ட் கிடைத்திருந்தால், லண்டன் போயிருப்பேன். இப்படி என் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்தையும் புறச்சூழல்களே தீர்மானித்தன. இன்றைக்கும் நான் எந்த நாட்டில் இருக்க வேண்டும்; எத்தனை நாள்கள் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது, அந்தந்த நாட்டின் அரசுகள்தான். நான் இன்னமும் பிரெஞ்சுக் குடிமகன் கிடையாது; அகதிதான். பிரெஞ்சுக் குடிமகனுக்கு இந்தியா வர ஆறு மாத விசா வழங்கப்படுகிறது. ஆனால், என்னைப் போன்ற ஓர் அகதிக்கு ஒரு மாத விசாதான் தருகிறார்கள். அதிலும் இந்தியாவின் சில பகுதிகளுக்குச் செல்ல முடியாது. அதற்குச் சிறப்பு அனுமதி வாங்க வேண்டும்.’’    “சர்வதேச அளவில் முகம் தெரிந்த நடிகராகிவிட்டீர்கள். இப்போதும் இதுபோன்ற பிரச்னைகள் இருக்கிறதா?”    “2015-ல் டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு அழைப்பாளராகச் சென்றிருந்தேன். இதற்கு முன் ‘செங்கடல்’ திரையிடலுக்கு, அழைப்பாளராகக் கனடா சென்ற நிலையிலும் எமிகிரேசனில் படாதபாடு படுத்திவிட்டார்கள். ‘இப்போது அந்தப் பிரச்னை இருக்காது, நாம்தான் முகம் தெரிந்த நடிகராகிவிட்டோமே’ என்று நினைத்தேன். வாழ்க்கையில் முதல் முறையாக விமானத்தில் முதல் வகுப்பில் பிரயாணம். வந்திறங்கியபோது என் பெயர் தாங்கிய அட்டையுடன் விழாக்குழுவின் ஒருவர் காத்திருந்தார். ஏற்பாடெல்லாம் சிறப்பாக இருக்கிறதே என நினைத்தேன். எமிகிரேஷனில் பாஸ்போர்ட்டைப் பார்த்துவிட்டு, அனுமதிக்க முடியாது என்றார்கள். காரணம், நான் ஒரு முன்னாள் புலிப்போராளி. ‘அதெல்லாம் கன காலத்துக்கு முன்னால்’ என்றதற்கு, ‘தெரியும் தெரியும்’ என்றார்கள். ‘விசாவை கேன்சல் செய்கிறேன்’ என்றார்கள். பிறகு, போராடி விழா நடக்கும் 10 நாள்களுக்கு மட்டும் அனுமதி பெற்றேன். அதுவும் என் பாஸ்போர்ட்டை அவர்களே வைத்துக்கொண்டார்கள். திரும்பிவரும்போது எனது ஒரு வருட கனடா விசாவை ரத்துச் செய்து என்னை வெளியேற்றினார்கள்.”    “இவ்வளவுக்கு மத்தியில் உங்களுக்கு இலக்கிய, கலை ஆர்வம் எப்படி உருவானது?”     “எங்கள் கிராமமே நாடகவெறி பிடித்தது. இரவில் விடிய விடிய கிறிஸ்துவ தென்மோடிக் கூத்துகள் நடக்கும். முற்கூத்தில் ராஜாவாக ஒருவரும் பிற்கூத்தில் ராஜாவாக வேறொருவரும் நடிக்குமளவிற்கு நீண்ட கூத்துகள் அவை. கூத்தின் அளவு 8-9 மணி நேரங்களிருக்கும். கூத்திற்கான ஒத்திகை மாத்திரம் ஏழெட்டு மாதங்கள் நடக்கும். ஒத்திகையை வேடிக்கை பார்ப்பதற்கே மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.  நான் 10 வயதிலேயே கூத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் நடித்த முதல் பாத்திரமே துரோகி பாத்திரம்தான் (சிரிக்கிறார்). பண்டார வன்னியன் கூத்தில் நான்தான் காக்கைவன்னியன். பிறகு சமூகச் சீர்திருத்த நாடகங்கள் எழுதி நடிப்பது, நாடகங்கள் இடையே சினிமாப் படப்பாடல்களைப்போட்டு வாயசைப்பது என இருந்தோம். அப்போது நாங்கள் வாயசைத்த ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’ எம்.ஜி.ஆர். பாடல்தான் இப்போதும் என் செல்போன் ரிங்டோன்.  [] p4d_1517206241.jpg   இயக்கத்தில் இருந்த காலகட்டத்திலும் கவிதை எழுதுவது, மக்கள் மத்தியில் நாடகங்கள் போடுவது என இருந்தோம். நிலாந்தன் எழுதிய ‘விடுதலைக் காளி’ என்ற நாடகத்தை ஒரு நாளில் பத்து கிராமங்களில்கூட நடித்திருக்கிறோம். எனவே, கலையின் மீதான ஆர்வம் எனக்குச் சிறுபிராயத்தில் ஆரம்பித்தது.    15 வயதில் எனக்குக் கடவுள் நம்பிக்கை போய்விட்டது. சிறைக்குச் சென்றபோது கடவுள் நம்பிக்கை மறுபடியும் வந்தது. வெளியே வந்து தாய்லாந்து போனபோது நான் எடுத்துச் சென்றவை இரண்டே புத்தகங்கள். அவை பாரதியார் கவிதைகள் மற்றும் பைபிள். தாய்லாந்தில் தமிழில் படிப்பதற்கு ஏதும் கிடைக்காமல் பைபிளையும் பாரதியார் கவிதைகளையும் திரும்பத் திரும்பப் படித்தவாறிருந்தேன். எப்போது பைபிளைக் கசடறக் கற்றேனோ, அந்தத் தருணத்தில் என் கடவுள் நம்பிக்கை முற்றாக அழிந்தது. தாய்லாந்தில் இருக்கும்போதே, அங்கிருந்த முந்நூறு ஈழத் தமிழர்களுக்காக ‘நெற்றிக்கண்’ என்ற கையெழுத்து – ஜெராக்ஸ் பத்திரிகையை நடத்தினேன்.  பிரான்ஸுக்குப் போன பிறகு, ‘நான்காம் அகிலம்’ என்ற சர்வதேச ட்ராட்ஸிகிய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தேன். கட்சிக்குள் சென்ற பிறகுதான் என்னுடைய இலக்கிய வாசிப்பு சரியான முறையில் தொடங்கியது. கட்சித் தோழர்களுடனான உரையாடல்கள் மூலம்தான் எழுத்தாளன் ஷோபாசக்தி உருவானான்.”    “ `நான்காம் அகில’த்தில் உங்களுடைய செயல்பாடு என்னவாக இருந்தது, அங்கு ஏதும் முரண் ஏற்படவில்லையா?”    “நான் பிரான்ஸ் போய் ஒரு மாதம் இருக்கும். வேலை சோலி ஏதுமில்லை. முழு ‘தண்ணி’யில் சாலையில் போய்க்கொண்டிருந்தேன். தமிழ்க் கடைத்தெருப் பகுதியில் ‘தொழிலாளர் பாதை’ எனும் பத்திரிகையைச் சில தமிழ் இளைஞர்கள் விற்றுக்கொண்டிருந்தனர். நான் அந்தப் பத்திரிகையைக் காசு கொடுத்து வாங்கியதோடு, அவர்களிடமிருந்த சிறு பிரசுரத்தையும் வாங்கியதும் அவர்கள் பேரதிர்ச்சி அடைந்தார்கள். பொதுவாக யாரும் அந்தப் பத்திரிகையை வாங்குவதில்லை. அந்தப் பத்திரிகையின் மொழியே புரட்சிகரக் கரடுமுரடாயிருக்கும். பின்னாளில் நானே அந்தப் பத்திரிகையைத் தெருத்தெருவாக விற்றிருக்கிறேன்.    நான் வலியப்போய் பத்திரிகையை வாங்கியது அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். உடனே தொடர்பு எண் கேட்டார்கள். எண்ணைக் கொடுத்து விட்டேன். அடுத்த நாளே தொடர்பு கொண்டார்கள். அவர்களுடனான முதற் சந்திப்பில்தான் ட்ராஸ்கி எனும் பெயரை அறிந்தேன். அதைத் தொடர்ந்து ஏராளமான உரையாடல்கள். அவர்கள்தான் என்னைத் தேசியவாத அரசியலிலிருந்து வெளியே கொண்டுவந்தவர்கள். அந்த இயக்கத்தில் தமிழர்கள் மட்டுமல்ல, பிரெஞ்சுத் தோழர்களும் இருந்தனர். வருஷத்துக்கு ஒருமுறை சம்மர் கேம்ப் அழைத்துச் சென்று வகுப்புகள் நடக்கும். உலகம் முழுவதுமிருந்து வரும் ட்ராட்ஸ்கியர்கள் அந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்வார்கள். நான்கு வருடங்கள் கடுமையான பயிற்சியில் முரட்டு டிராட்ஸ்கியவாதியாக உருவானேன். அப்போதுதான் தமிழகத்திலிருந்து அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, ரவிக்குமார் ஆகியோர் இணைந்து நடத்திய ‘நிறப்பிரிகை’ இதழ்கள் வேறு தோழர்கள் மூலம் கிடைத்தன. சாதி, தலித்தியம் குறித்த கட்டுரைகளை ‘நிறப்பிரிகை’யில் வாசித்தேன். அது குறித்துக் கட்சியோடு உரையாடத் தொடங்கினேன். அதில் முரண் ஏற்பட்டது. ‘வர்க்கப் புரட்சி நடைபெற்றால், சாதி ஒழிந்துவிடும்’ என்ற வழமையான எளிய சூத்திரமே அவர்களிடமிருந்தது. நான் கட்சியிலிருந்து வெளியேறினேன்.    [] p4e_1517206269.jpg   98-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தேன். இந்தியாவில் என் அம்மா, அப்பா, தங்கை அகதிகளாக வாழ்ந்துவந்தார்கள். நான் பிரான்ஸிலிருந்து கிளம்பும்போது, தோழர் சுகன், அ.மார்க்ஸின் தஞ்சாவூர் முகவரியைக் கொடுத்து அ.மார்க்ஸைப் போய் அவசியம் சந்திக்கச் சொன்னார். நான் அவர் வீட்டுக்குப் போனேன். அங்கே ஒருநாள் முழுவதும் அவரிடம் உரையாடினேன். அங்கிருந்து சென்னைக்குக் கிளம்பியபோது, வளர்மதி, ராஜன் குறை ஆகியோரின் தொலைபேசி எண்களைத் தந்து அவர்களைச் சந்திக்கச் சொன்னார் மார்க்ஸ். இப்படித்தான் ‘நிறப்பிரிகை’ குழுவோடு உரையாடவும் பின் நவீனத்துவம், தலித்தியம், பெரியாரியம் ஆகியவற்றைக் கற்கவும் தொடங்கினேன்.”    “இன்னமும் உங்களுக்குப் பின்நவீனத் துவத்தில் நம்பிக்கை இருக்கிறதா? சில வலதுசாரிகளும் பின்நவீனத்துவத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்து கிறார்களே?”    “பின்நவீனத்துவம் என்ன கடவுளா, நம்பிக்கை வைக்க. என்னைப் பொறுத்தவரை பின்நவீனத்துவம் என்பது ஓர் ஆய்வுச் செல்நெறி. இலக்கியப் பிரதிகளையும் கலையையும் அரசியலையும் சமூகத்தையும் புரிந்துகொள்வதற்கான அணுகல்முறை. அதில் எனக்கு ஆர்வம் உண்டு.  வலதுசாரிகள் மட்டுமல்ல; இலக்கியப் போலிகளும் பின்நவீனத்துவம் எனப் போகிற போக்கில் உச்சரித்துச் செல்கிறார்கள். பின்நவீனத்துவத்தின் பெயரால் ஃபோர்னோ பட இணையங்களை ஆதரித்த கொடுமையும் இங்குதான் நடந்தது. அதை எதிர்த்துக் கடுமையாக எனது வலைதளத்தில் எழுதியிருந்தேன். வர்க்கப் பிரச்னைகள் குறித்தோ, பண்பாடு குறித்தோ உரையாடல் நடக்கும்போதெல்லாம், ‘பின் நவீனத்துவம் அனைத்தையும் கட்டுடைக்கும்’ என உளறிக் கொட்டுவார்கள். மிகக் கொச்சையாகப் பின்நவீனத்துவத்தைப் புரிந்துவைப்பவர்கள் இவர்களென்றால், பின் நவீனத்துவத்தை எதிர்ப்பவர்களோ அதை இன்னும் கொச்சையாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். பின்நவீனத்துவம் தத்துவங்களைக் கேள்விக்குள்ளாக்கும் ஓர் ஆய்வுமுறைமை. அதையே தத்துவமாக்குவதும் அரசியல் நிறுவனமாக்குவதும் சட்டகமாக்குவதும் அறியாமை.”     “ஆன்டனி என்ற பெயர் ஷோபாசக்தி ஆனது எப்போது?”    “ஆம். நான் பாரீஸுக்குப் போனவுடனே சிவசக்தி என்ற பெயரில் எழுதினேன். ‘சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்’ என்ற பாரதியின் வரியில் இருந்து எடுத்தது. அன்ரனிதாசன் என்ற பெயரிலும் சிலவற்றை எழுதினேன். அப்போது பணக் கஷ்டம், அகதி வழக்கை வேறு நடத்தியாக [] p4c_1517206205.jpg வேண்டும். அதனால் இரண்டு இலக்கியப் பரிசுப் போட்டிகளுக்குக் கதையும் கவிதையும் அனுப்பினேன். இரண்டு போட்டிகளிலுமே கதைக்கு இரண்டாம் பரிசு; கவிதைக்கு முதல் பரிசு. ஆனால், இந்த இடைவெளியில் கட்சியில் சேர்ந்துவிட்டேன். கட்சி இந்தப் பரிசுப் பணத்தை வாங்காதே என்றது. அதனால் நான் வாங்கவும் இல்லை. கட்சியைவிட்டு வெளியே வந்தபின் சிவசக்தி என்ற பெயரை விட்டுவிட வேண்டும் என்று என் அறவுணர்வு சொன்னது. பாரதிதாசன், சுப்புரத்தினதாசன் என்றெல்லாம் நமக்குப் பிடித்த ஆளுமைகளின் பெயரைச் சூடிக்கொள்வது நம் வழக்கமல்லவா. போதாக்குறைக்கு அப்போது ஜெயமோகனதாசன் என்றொருவர் வேறு சுற்றிக்கொண்டிருந்தார். அதனால், எனக்குப் பிடித்த கலைஞர் ஒருவரின் பெயரை நான் சூட்டிக்கொள்ள நினைத்தேன். ஜெயகாந்தனை எனக்குப் பிடிக்கும். ஆனால், ஜெயசக்தி என்ற பெயர் பிடிக்கவில்லை. எனக்கு நடிகை ‘பசி’ ஷோபாவை மிகவும் பிடிக்கும். அதனால் ஷோபாசக்தி என்று வைத்துக்கொண்டேன். ‘ஷோபாசக்தி’ ஆனபிறகு, எழுதிய கதைகளைத்தான் தொகுப்பாக்கியுள்ளேன். சிவசக்தி மற்றும் அன்ரனிதாசன் எனும் பெயரில் எழுதியவற்றை மூடி மறைத்துவிட்டேன். ஆனால், என் செல்ல விமர்சகர்கள் அவற்றைக் கண்டுபிடித்து இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள்.  அவையெல்லாம் தமிழ் தேசியத்துக்கு அறைகூவும் கதைகளும் கவிதைகளும். ஷோபாசக்தி என்கிற பெயரில் நான் எழுதிய முதல் கதை ‘எலி வேட்டை’. ”    “புலிகள் அமைப்பிலிருந்து விலகி, அகதி வாழ்க்கை, இலக்கியம் எனச் சென்ற நீங்கள் தீவிரமான புலி எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டுக்கு எப்போது வந்தீர்கள்?”     ‘‘நான் புலிகள் அமைப்பில் 83-ம் ஆண்டு சேர்ந்து 86-ம் ஆண்டு வெளியேறிவிட்டேன்.  ஆனால், புலிகளைப் பகிங்கிரமாக எழுதி எதிர்க்கத் தொடங்கியது 98-ல்தான். நான் அந்த இடத்துக்கு வந்து சேருவதற்கு 12 ஆண்டுகள் ஆனது. இந்தக் காலங்களில் நான் எழுதாமலும் இல்லை. ஏதோ சொற்பமாகவேனும் எழுதியுள்ளேன். இந்தக் காலத்தில் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான பிரதிகளையும் எழுதியுள்ளேன்.    இந்த தேசியவாதப் போக்கிலிருந்து நான் என்னைத் துண்டித்துக்கொண்டு தமிழ் தேசியத்தையும் புலிகளையும் தீவிரமாக எதிர்க்கும் நிலைக்கு வந்ததற்கு   முக்கியமான காரணம், நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கியபோது தேசியவாதம் குறித்து நடந்த உரையாடல்கள். அதைவிடவும் முக்கியமாகப் புலிகளின் செயற்பாடுகளே என்னை அவர்களை நோக்கி விமர்சிக்கத் தூண்டின. அவர்கள் முஸ்லிம்களைக் கட்டிய துணியோடு 24 மணி நேரத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றியது, நாடு கடந்து வந்தும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டது, பாரீஸில் தோழர் சபாலிங்கத்தைச் சுட்டுக்கொன்றது என்று ஏராளமானதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எழுதுவதற்காக ஒரு மனுசனைச் சுட்டுக்கொல்வதா? புலிகள் மேலும் மேலும் வன்கொடுமை அமைப்பாக மாறிக்கொண்டிருந்ததால், இனி விமர்சித்துத்தான் ஆக வேண்டும் என முடிவெடுத்தேன். இந்த முடிவை இயக்கத்தைவிட்டு வந்த மறுநாளே எடுக்கவில்லை. 12 ஆண்டுகளாயிற்று. நான் புலி எதிர்ப்பாளன் ஆவதற்குக் காரணம் புலிகளே. ஆம், அவர்களே என்னைப் புலி எதிர்ப்பாளன் ஆக்கினார்கள்”    “புலி எதிர்ப்பை முன்வைத்ததால், உங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்தனவா?”    “பலமுறை உடல்ரீதியான தாக்குதல் எத்தனங்கள் நிகழ்ந்தாலும் ஓரிரு தடவைதான் வசமாக அவர்களிடம் சிக்கினேன். புலிகள் – சந்திரிகா கூட்டின்போது இதன் பின்னால் உள்ளது சமாதானம் அல்ல, போர்த் தயாரிப்பு முன்னேற்பாடுகளே என  ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகையில் எழுதி, அதை மக்களிடம் எடுத்துச் சென்றோம். அதற்கு அடித்தார்கள். மே தின ஊர்வலத்தில்  வைத்துத் தாக்கினார்கள். தெருவில் பத்திரிகை விற்றுக்கொண்டு நிற்கும்போது தாக்கி, பத்திரிகைகளைப் பறித்துச் சென்றிருக்கிறார்கள். அவ்வப்போது சில பல மிரட்டல்கள் வரும். இப்போது இந்தத் தமிழகப்பயணத்தில்கூட ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்று வரும்போது ஒருவர், ‘டேய் ஷோபாசக்தி புக் ஃபேருக்கு வாடா… உதைக்கிறேன்’ என்று கத்தினார்.   [] p4f_1517206287.jpg   நான், ‘நன்றி தோழர்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். விசாரித்தபோது ஏதோ தமிழ் தேசிய அமைப்பைச் சேர்ந்தவராம். 2009-க்குப் பிறகு உடல்ரீதியான அச்சுறுத்தல்கள் குறைந்திருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பு பாரீஸில் கிழக்கு முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் நூல் வெளியீட்டு விழாவில், அந்த நூலைப் பெருமளவு மறுத்துப் பேசினேன். ஆனால், புலிகளின் ஆதரவாளர்களின் நோக்கமோ அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசவே கூடாது என்பதாக இருந்தது. அந்தக் கூட்டத்துக்கு முன், 30 பேர் கும்பலாக வந்து, அரங்குக்குள் போய் புத்தகங்களை எல்லாம் எடுத்து வந்து கொளுத்தி, எங்களை உள்ளே போகக் கூடாதென மிரட்டி, பிரச்னை பண்ணினார்கள். அவர்கள் அடிப்பதற்கு என்றே வந்திருக்கிறார்கள். நாங்களும் நிறைய பேர் இருந்தோம். ஆனால், சண்டை வேண்டாம் என அமைதியாக இருந்தோம். பிறகு ஆயுதப்படை போலீஸ் வந்து அவர்களை அப்புறப்படுத்தியதும் நிகழ்ச்சி நடந்தது. இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.    எழுதியதற்காகவும் மாற்றுக் கருத்துகளைப் பேசியதற்காகவும் ஐரோப்பாவிலேயே பல சிறுபத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். கனடாவில் ‘தேடகம்’ நுாலகத்தையே புலிகள் கொளுத்திப்போட்டார்கள். யாழ்ப்பாண நுாலகத்தை இலங்கை அரசு கொளுத்தியதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?’’    “2009-க்குப் பிறகு புலிகள் இல்லை. இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கவோ, தமிழர்களுக்காகப் போராடவோ யாரும் இல்லாத சூழல். ‘புலிகள் இருந்திருக்கலாமோ’ என்று நினைத்திருக்கிறீர்களா?”    “புலிகள் அழிய வேண்டும் என யாருக்கு ஆசை? புலிகள் தமது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைத்தானே அவர்கள் இருக்கும்போதிலிருந்தே வலியுறுத்தி வந்தேன்! அவர்கள் ஆயுதப் போராட்டத்தை நிறுத்திக்கொண்டு பேச்சு வார்த்தைக்குச் செல்ல வேண்டும், அதன்மூலம் ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்பதுதான் என் கோரிக்கையாக இருந்தது. அதற்கான வாய்ப்புகளும் நிறைய இருந்தன. புலிகளை இலங்கை அரசுக்குச் சமமாகச் சர்வதேசம் மதித்து ஐந்து பெரிய நாடுகளின் அனுசரணையிலேயே பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. அந்த வாய்ப்புகளைப் புலிகள் தவறவிட்டனர். இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளுக்கு நம்பகமானவர்களில்லை என்ற போதிலும் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்தில் ஓர் அமைதி உடன்பாட்டைக் கொண்டுவந்திருக்க முடியும். சர்வதேசத்தின் மத்தியஸ்தத்தில் அந்த உடன்பாட்டைக் காப்பாற்ற இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க முடியும். அமைதி உடன்பாடு இலங்கை அரசுக்கு அல்லாமல் எங்களுக்கே அவசியமாக இருந்தது. ஏனெனில், போரால் 90 விழுக்காடு பாதிப்புக்கு உள்ளாகிச் செத்துக் கொண்டிருந்தவர்கள் தமிழர்கள்தான்.    இந்த ஆயுதப்போராட்டம் நிச்சயம் நம்மை அழிவுக்குத்தான் இட்டுச் செல்லும் என அப்போதே கூறிவந்தோம். புலிகள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. அது இவ்வளவு பெரிய பேரழிவுக்குக் காரணமானது. எந்த மனிதர் இறப்பதும் கொல்லப்படுவதும் நமக்கு வருத்தம்தான். விடுதலைப் புலிகள் எனும் அமைப்பு இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் தங்கள் அரசியல் முகத்தை மாற்றியிருக்க வேண்டும்.    புலிகளுக்குப் பின்னான இந்தக் காலகட்டத்தைப் பார்த்தோம் என்றால், எம்மிடம் எந்த வலுவான அரசியல் தலைவர்களும் கிடையாது. எல்லாத் தலைவர்களையும் கொன்றொழித்தாகி விட்டது. புலிகள் கொன்றது பாதி; இலங்கை அரசும் அதன் துணைப்படைகளும் கொன்றது மீதி. 83-க்குமுன் நாங்கள் எந்த அரசியல் தலைவர்களை எதிர்த்து,  எந்தப் பாராளுமன்ற ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்து அரசியலில் இறங்கினோமோ, அந்த இடத்துக்கே மீண்டும் வந்து நிற்கிறோம். இயக்கங்கள் அரசியலில் நுழையும்போது வக்கீல்கள், நீதிபதிகள், வெள்ளை வேட்டிக் கள்ளன்கள் என அவர்கள்தான் மக்களிடம் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள். எங்களது போராட்டம் முதலில் அவர்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதாகவே இருந்தது. அதைச் செய்து முடித்தோம். ஆனால், மீண்டும் அவர்களே நமது மக்களுக்குத் தலைமை ஏற்றிருக்கிறார்கள். அவலம்!    [] p4g_1517206467.jpg   அடுத்த தலைமுறையாவது நம்பிக்கைத் தருவதாக அமைய வேண்டும். எதுவாகினும் சரி, நான் நாட்டைவிட்டு வந்து 25 வருடங்களாகின்றன. தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டியது அங்கேயிருக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்கள்தாம்.  முக்கியமாக, பகை மறப்பு நிகழ வேண்டும். முதல் கட்டமாக, தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும், அடுத்து சிறுபான்மையினரான தமிழர்கள், முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்கும்.    30 வருட யுத்தம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அனுபவம்; ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் இழப்பு; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வன்மம். இவையெல்லாம் ஆற காலம் எடுக்கும். அதற்கான வேலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எதிர்காலத்தில் இலங்கையின் அரசியல் போக்கைப் பாராளுமன்ற அரசியலே வழிநடத்தும். இப்போதும்கூடத் தமிழர்களுக்கு வாக்குப் பலம் இருக்கிறது. மைத்ரிபால சிறிசேனாகூடத் தமிழர்களின் வாக்குப் பலத்தில்தான் வென்றார். சிறுபான்மை இனங்கள் தங்களது வாக்குப் பலத்தை ஒன்றிணைத்து அரசியல் செய்வதின் வழியேதான் இனி, சிங்களப் பேரினவாத அரசியலை எதிர்கொள்ள முடியும்.’’  “புலிகள் இயக்கத்தில் முதல் நம்பிக்கை இழப்புக்குக் காரணமாக அவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதைச் சொல்கிறீர்கள். இப்போது, நீங்களே நாடாளுமன்றப் பாதை, பேச்சு வார்த்தையை நோக்கித் தமிழர்களை நகரச் சொல்கிறீர்களே?”    “இனிப் பேச்சுவார்த்தை இல்லை; ஆயுதப் போராட்டம்தான் எனக் கருதியது எண்பதுகளின் காலகட்டத்தில். அதற்குப் பின்னான காலங்களில் அனுபவமே பேராசானாக அமைந்தது. எல்லாத் தத்துவங்களைவிடவும் அனுபவமே பேராசான். 70-களுக்குப் பிறகு இலங்கையில் நடைபெற்ற ஆயுத எழுச்சிகள் எல்லாமே – அதைத் தமிழர்கள் முன்னெடுத்தாலும் சிங்களவர்கள் முன்னெடுத்தாலும் அந்த ஆயுத எழுச்சிகள் ரத்த வெள்ளத்திலே அரசால் தோற்கடிக்கப்பட்டன. இலங்கை மிகச் சிறிய நாடு. ஆனால், அது உள்நாட்டுப் போர்களில் கொடுத்த விலை மிக மிக அதிகம். லட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்தும் அற்ப வெற்றியையும் அடைய முடியாதவர்களானோம்.    அந்த அனுபவத்திலிருந்துதான் ஆயுதப் போராட்ட அரசியலே இனி வேண்டாம் என்கிறேன். இனி எந்தக் காலத்திலும் ஆயுதப்போராட்டம் பொருத்தமற்றது. எந்த நாட்டுக்கும் பொருத்தமற்றது. கியூபா போராட்டம், வியட்நாம் போராட்டக் காலங்களும் அரசியல் சூழல்களும் இன்றிலிருந்து முற்றிலும் வேறானவை. சோவியத் யூனியன் வலுவாக இருந்த காலம் அது. மேற்சொன்ன போராட்டங்களுக்கு எல்லாம் சோவியத் யூனியன் உற்ற துணையாக நின்றது. உலக முதலாளித்துவ அரசுகள் இன்று உள்ளதுபோல இறுக்கமான வலைப்பின்னலமைப்பும் மிருகத்தனமான ராணுவ வலிமையும் பெற்றிராத காலங்கள்அவை.    இன்று அரசுகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும்போது, ஓர் அரசுக்கு ஆதரவாகப் பல்வேறு அரசுகள் குவிந்துவிடுகிறார்கள். இதுதானே ஈழத்திலும் நடந்தது? ஈழ இறுதிப் போரில் மருத்துவக் குழு எனும் போர்வையில் இந்தியாவிலிருந்து ராணுவ நிபுணர்கள் வந்து இலங்கை ராணுவத்தை வழிநடத்தினார்கள். கடைசி நான்கு வருடங்கள் புலிகளுக்கு ஒரு துப்பாக்கிக் குண்டுகூட வெளிநாட்டிலிருந்து வரவில்லை. இந்திய ராணுவம், இலங்கைக் கடற்பரப்பின் பகுதிகளைக் கண்காணித்து, இலங்கை அரசுக்குத் தகவல் சொல்லி, புலிகளின் கப்பல்களை மூழ்கடிக்கச் செய்தது.    இலங்கை, இந்தியாவுக்குக் கீழே தொங்கிக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறு தீவாய்ப் புவியியல் ரீதியாக அமைந்ததுதான் பெரும் துன்பமாகப் போய்விட்டது. தனது விருப்பங்களுக்கு மாறாக இலங்கையில் சிறு அரசியல் மாற்றம் நிகழ்வதையும் இந்திய அரசு அனுமதிக்கப் போவதில்லை. இந்திரா காந்தி ஈழப் போராளிகளுக்கு ஆதரவு கொடுத்ததுகூட ஜெயவர்த்தனேவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளத்தான். எங்கள்மூலம் ஜெயவர்த்தனேவுக்குத் தலையிடியைக் கொடுத்து, அவர் இந்தியாவின் காலடியில் வந்தபிறகு, எங்களிடம், ‘போதும் பேச்சு வார்த்தைக்குச் செல்லுங்கள்’ என்று சொன்னது இந்திய அரசு. ஆக, எங்களது போராட்டத்தின் நிகழ்வுப்போக்கை இந்தியா உள்படப் பல ஏகாதிபத்திய நாடுகளே முடிவு செய்தன. இவை எல்லாவற்றையும் தீர யோசித்தே ஆயுதப் போராட்டத்தை நிராகரிக்கிறேன். நான் மட்டுமல்ல, இன்று இலங்கையிலிருக்கும் எந்த அரசியலாளரோ அறிவுஜீவியோ ஆயுதப் போராட்டத்தை முன்னிறுத்துவதில்லை.’’    “விடுதலைப் புலிகள், இலங்கை அரசாங்கம் இரண்டின் வன்முறையையும் பேசுகிறேன் என்கிறீர்கள். ஆனால், உங்களது பேச்சில் புலிகள் பற்றிய விமர்சனங்கள் மட்டுமே அதிகமிருப்பதாகப் படுகிறதே?”    “நான் தமிழில் மட்டும் இயங்குபவன் இல்லை. என்னுடைய புத்தகங்கள் பிற மொழிகளிலும் வருகின்றன. அவற்றாலும் திரைப்பட உலகிற்கு நான் சென்றதாலும்   ஏராளமான சர்வதேச அரங்குகளிலும் ஊடகங்களிலும் குரல் ஒலிக்கும் வாய்ப்புப் பெற்றுள்ளேன். வருடம் முழுவதும் பேசிக்கொண்டுதானிருக்கிறேன்.    எல்லா இடங்களிலும் இலங்கை அரசுக்கு எதிராக நான் குரல் கொடுத்துதான் வருகிறேன். அங்கெல்லாம் பெரும்பாலும் புலிகள் பற்றிப் பேசியதில்லை; பேச வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், தமிழ்ச் சூழலில் உங்களுடன் பேசும்போது இலங்கை அரசாங்கம் கொடுமையானது; இலங்கை அரசாங்கம் பாசிசமானது என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால், அது உங்களுக்கே நன்கு தெரியும். உங்களுக்குத் தெரியாத சில விஷயங்களைப் பற்றித்தான் உங்களிடம் நான் பேச வேண்டும். புலிகள் தரப்புப் பற்றி உங்களுக்குத் தெரியாது. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. அந்தச் சூழலில்தான் என்னைப் போன்றவர்கள் பேசுகிறோம். நான் புலி எதிர்ப்பாளர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது மட்டுமே நான் அல்ல. நான் இந்திய அரசு எதிர்ப்பாளன், இலங்கை அரசு எதிர்ப்பாளன், சாதி எதிர்ப்பாளன், பார்ப்பன எதிர்ப்பாளன், ஆணாதிக்க எதிர்ப்பாளன், இந்துத்துவ எதிர்ப்பாளன், பி.ஜே.பி. எதிர்ப்பாளன் எல்லாமும்தான். 2009-க்குப் பிறகு எல்லோரும் பேசலாம். ஆனால், இலங்கையில் புலிகளின் அராஜகத்திற்கு எதிராக அநேகர் குரல் கொடுக்கத் துணியாத காலத்தில், மூச்சுவிட்டாலும் சுட்டுக்கொல்லப்படும் சூழலில், நாங்கள் புலம் பெயர்ந்த நிலையில் 50 பேராவது இந்த அநியாயங்களுக்கு எதிராகச் சிறுபத்திரிகை நடத்தினோம், ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம், கருத்தரங்குகளை நடத்தினோம் என்கிற வரலாறு உண்டு எங்களுக்கு.’’    “நாடாளுமன்றப் பாதையில் புலிகள் சென்றிருக்க வேண்டும் எனச் சொல்கிறீர்கள். ஆனால், அந்தப் பாதையில் சென்ற டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான்களால் மக்களின் அரசியலை முன்னெடுக்க முடியவில்லையே?’’    “உண்மைதான். ஆனால் கருணா, பிள்ளையான் தொடர்ந்து ஆயுதம் ஏந்திப் போராடியிருந்தால், கிழக்கிலும் ஒரு முள்ளிவாய்க்கால் நிகழ்ந்திருக்கும். கிழக்கிலும் இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். நீங்கள் சொன்னவர்கள் ஜனநாயகத்தின் மீதுள்ள விருப்பால் நாடாளுமன்ற அரசியலுக்குத் திரும்பியவர்கள் அல்ல. புலிகளிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள இலங்கை அரசு பக்கம் சாய்ந்து, அதன் வழியே ஆயுதங்களை ஒப்புக்குக் களைந்துவிட்டு நாடாளுமன்றத்திற்குப் போனவர்கள். சமயம் கிடைத்தால் கொலை செய்யவும் தயங்காதவர்கள். செய்துமிருக்கிறார்கள்.  நான் சொல்வது நேர்மையும் ஜனநாயகப் பற்றுமுள்ள, இனவெறுப்பற்ற நாடாளுமன்ற அரசியல். இன்று உலகில் நடைமுறையில் இருக்கும் ஆட்சி வடிவங்களில் நாடாளுமன்ற அரசியல் முறையே சிறந்ததாக இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.”    “புலி எதிர்ப்பு, பிரபாகரன் மீதான விமர்சனங்களை முன்வைத்தாலும் தமிழகத்தில் பல மட்டத்தில் போராட்டக்களத்தில் நிற்கும் திருமாவளவன் தொடங்கி இன்றைய பல இளைஞர்கள் வரை பிரபாகரனையே தங்கள் ஆதர்சப் போராளியாக முன்னிறுத்துகிறார்கள். தலித் அரசியலைப் பேசும் கோபி நயினார்கூட ‘அறம்’ படத்தின் நாயகிக்கு மதிவதினி எனப் பெயர்வைக்கிறார். எல்லோருக்கும் ஆதர்சமான போராளியாகப் பிரபாகரன் இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”    “பிரபாகரனை ஆதர்சமாகக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை. அவர் தனது பதினாறாவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, தலைமறைவாக இருந்து, போராடி, பெரும் இயக்கத்தைக் கட்டியெழுப்பி, உலக அளவில் தமிழர்களின் பிரச்னைகளை அறியச் செய்தவர். அவர் நிச்சயமாகச் சாதி எதிர்ப்பாளர்தான். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. என்னுடைய விமர்சனம் அவரின் அரசியல் வழிமுறைகளைப் பற்றித்தான். நான் புலிகளின் எல்லா அரசியல் வழிமுறைகளையும் எதிர்க்கவில்லையே. ‘பொது இடத்தில் சாதி பேசினால் குற்றம், அதற்குத் தண்டனை’ எனச் சட்டம் போட்டார்கள், மணக்கொடைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இவற்றையெல்லாம் நான் எதிர்த்தேனா? புலிகளின் தவறான செயல்களை, தவறான அரசியல் நிலைப்பாடுகளைத்தான் நான் எதிர்த்தேன். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, எங்களது மக்களுக்கும் தெளிவில்லாத பல அரசியல் சிக்கல்கள் உள்ளன. அதை நாம் உடைத்துச் சொல்லித்தானே ஆக வேண்டும். அப்படிச் சொல்லும்போது அறம் உள்ளவர்கள் கேட்டுக்கொள்வார்கள்.    இப்போது கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைக் கேட்டு நாம் எப்படிக் கொதித்தெழுந்தோம், ெவகுசன மக்கள் எழாவிட்டாலும் எழுத்தாளர்களும் ஜனநாயகச் சக்திகளும் கொதித்தெழுந்தோம் இல்லையா? இதுபோல புலிகள் எத்தனை எழுத்தாளர்களைக் கொன்றொழித்தார்கள்? ரஜினி திரணகம, செல்வி, சபாலிங்கம் என எத்தனை பேர்? ஆக, கவுரி லங்கேஷுக்கு வைக்கப்படும் அதே அளவுகோல்தானே செல்விக்கும் வைக்கப்பட வேண்டும். புலிகளை ஆதரியுங்கள். அவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள். உயிரைப் பணயம்வைத்துப் போராடியிருக்கிறார்கள். அதில், ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதேவேளையில் நாம் சொல்லும் விமர்சனங்களையும் மன்றாட்டுகளையும் தயவுசெய்து காதுகொடுத்துக் கேளுங்கள். விமர்சனத்தையே ஏற்காத, மாற்றுக் கருத்தையே சகிக்காத ஒரு தலைமையாகப் பிரபாகரன் உருவெடுத்ததற்கு, விமர்சனமற்ற இந்த வழிபாடும் ஒரு காரணம் என்பதை உணருங்கள்.”     “சாதி பேசத் தடை, மணக்கொடைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை புலிகள் இயக்கம் கொண்டுவந்தார்களே, அது தமிழ் மக்களிடையே என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அது இன்று வரைக்கும் நீடிக்கிறதா?”    ‘‘சாதி பற்றி இழிவாகப் பேசினால் தண்டனை, மணக்கொடைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றைக் கொண்டுவந்தார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். மணக்கொடைத் தடைச் சட்டத்தை யாழ்ப்பாணத்தினர் எப்படிக் கையாண்டார்கள் தெரியுமா? கல்யாணம் இங்கே நடக்கும். பணப் பரிமாற்றம் வெளிநாட்டில் நடக்கும். சாதியைப் பொறுத்தவரை, புலிகளின் சட்டத்தில் இருந்தது; அவ்வளவுதான். இலங்கை அரசு  [] p4c_1517206205.jpg 1957-லேயே இந்தச் சட்டத்தைப் பிறப்பித்து இருந்தது. ஆனால், அவை சட்டமாகத்தான் இருந்தன. இந்தியாவில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்போல. இந்தச் சட்டங்களால் சாதியின் ஒரு வேரைக்கூடப் பிடுங்க முடியவில்லை. சாதி ஒழிப்பு என்பது எவ்வளவு பெரிய வேலைத் திட்டம்! சமூகத்தில் செய்ய வேண்டிய அடிப்படை வேலைத் திட்டம். அதைப் புலிகள் செய்யவில்லை என்பதுதான்  என் வருத்தம்.  ஈழ வரலாற்றிலேயே முதன்முதலாக எழுந்த வெள்ளாளர் அல்லாத தலைமை, புலிகளே. ஆனால், அவர்கள் சாதியொழிப்பில் கவனம் செலுத்தினால் யாழ்ப்பாணத்தின் ஆதிக்கச் சாதிகளிடமிருந்து குறிப்பாக, அனைத்து சமூக – பொருளியல் அதிகாரங்களையும் தங்கள் கைகளில் வைத்திருக்கும் வெள்ளாளர்களிடமிருந்து தாங்கள் ஆதரவை இழக்க வேண்டியிருக்கும் என நினைத்தார்கள். இதை அடேல் பாலசிங்கமே தனது நூலான ‘சுதந்திர வேட்கை’யில் சாடைமாடையாகக் குறிப்பிட்டிருப்பார்.”    “83-ல் தமிழீழம்தான் தீர்வு என இயக்கத்தில் சேர்ந்த நீங்கள், எந்த இடத்தில் அந்தக் கருத்திலிருந்து விலகினீர்கள்?”    “இன்றுவரைக்கும் எனக்குத் தமிழீழம் தவறான கோரிக்கை அல்ல. இதை நான் மட்டுமல்ல, டக்ளஸ் தேவானந்தாவைக் கேட்டால் அவரும் அப்படித்தான் சொல்வார். ஆனந்த சங்கரி சொல்லியே இருக்கிறார். நாங்கள் ஆயுதம் தூக்கியதற்கும் தமிழீழம் கோரியதற்கும் போதுமான நியாயங்கள் எங்களிடம் இருக்கின்றன. அவற்றை இலங்கை அரசே ஏற்படுத்திக் கொடுத்தது. ஏனென்றால், அவ்வளவு இனக் கலவரங்கள், அவ்வளவு இன ஒடுக்குமுறை, அவ்வளவு புறக்கணிப்புகளைச் சந்தித்திருக்கிறோம். ஆக, நாங்கள் தமிழீழம் கேட்டதில் எந்தப் பிழையும் இல்லை. இப்போது கிடைத்தால்கூட நாங்கள் அங்கே குடியேறிவிடுவோம். பிரச்னை என்னவென்றால், அதற்குச் சாத்தியமில்லை என்பதுதான்.    இந்த ஆயுதப் போராட்டம் வெல்லப்போவதில்லை என்பது எப்போது தெரியவந்தது என்றால், இந்தியா – இலங்கை ஒப்பந்தம் வந்தபோதுதான். இந்தியா நமது ஆயுதப் போராட்டத்துக்கு எதிராகத் திரும்புகிறது; பலவந்தமாக ஆயுதத்தை நம்மிடமிருந்து களைகிறது. இந்தியா எனும் பெரிய சக்தியை மீறி இலங்கையில் நாங்கள் தமிழீழத்தை ஏற்படுத்த முடியாது என்ற புரிதல் ஏற்பட்டது. இது ஓர் அவநம்பிக்கையான கூற்றாக உங்களுக்குப் படலாம். ஆனால், நான் சொல்வது புவியியல், ராணுவவியல், சர்வதேச அரசியல் போன்ற வலுவான காரணிகளின் அடிப்படையில். இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்பு நடந்த விஷயங்கள் அதை உறுதிப்படுத்தின.”    “நீங்கள் தலித் அரசியல் பேசியபோது, ‘ஈழச் சமூகத்தில் இல்லாத அரசியலை இறக்குமதி செய்வதாக’ விமர்சிக்கப்பட்டதே?”    “ `தலித்’ என்பது தமிழ் வார்த்தை இல்லை என்றார்கள். தேசியம் தமிழ் வார்த்தை இல்லை; துப்பாக்கி தமிழ் வார்த்தை இல்லை; அவ்வளவு ஏன், பிரபாகரன்கூடத் தமிழ் வார்த்தை இல்லைதான்! இதுவா அரசியல் விமர்சன அளவுகோல்?”    “எங்கயோ இருந்த கார்ல் மார்க்ஸ், லெனின், பிடல், சேகுவேரா எல்லாம்  ஈழத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால், அருகிலேயே இருக்கும் அம்பேத்கரையும் பெரியாரையும் நாங்கள் பேசினால், அது இறக்குமதியா? இன்றுவரை இட ஒதுக்கீடு குறித்தோ, இந்துத்துவ ஒழிப்பு குறித்தோ சிந்தித்தறியா ஒரு சமூகத்திடம் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், தர்க்கபூர்வமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். அதை எதிர்கொள்ள முடியாதபோது, இப்படியெல்லாம் முனகத்தான் செய்வார்கள்.”    “இன்றைக்கு அம்பேத்கரை முன்னிறுத்து பவர்கள் சிலர் பெரியாரை நிராகரிப்பது குறித்து?”    “அம்பேத்கரை முன்னிறுத்திப் பெரியாரை நிராகரிப்பவர்களை மட்டுமல்லாமல்,  பெரியாரை முன்னிறுத்தி அண்ணல் அம்பேத்கரை நிராகரிப்பவர்கள் குறித்தும் நாம் பேச வேண்டும். அண்ணல் அம்பேத்கரின், பெரியாரின் கருத்தியல்களை ஆழப் பயிலாமல் வெறும் பிம்ப வழிபாடு செய்பவர்களினால் எழும் கோளாறுகள் இவை. ஒருவர் தனது அரசியல் அடையாளமாக யாரை முன்னிறுத்துவது என்பது அவரது உரிமை. அண்ணல் அம்பேத்கரையே தனது முதன்மை வழிகாட்டியாக ஏற்ற ஒருவரிடம் போய், ‘நீ ஏன் பெரியாரைப் பேசவில்லை’ எனக் கேள்வி கேட்பது அவசியமற்றது. அவரவர் தனக்குச் சாத்தியமான வழியில் இந்தச் சாதியமைப்பு முறைக்கு எதிராகப் போராடட்டும். அதுதான் முக்கியம்.    அதேவேளையில் பெரியாரை முன்னிறுத்தி அம்பேத்கர்மீது அவதூறுகளோ அம்பேத்கரை முன்னிறுத்தி பெரியார்மீது அவதூறுகளோ அல்லது இவர்கள் இருவர் மீதும் மார்க்ஸியத்தை முன்னிறுத்தி அவதூறுகளோ செய்யப்படும்போது, நாம் எதிர்வினையாற்றியே தீரவேண்டும். ஆனால், நல்வாய்ப்பாகத் தமிழகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அம்பேத்கரியர்கள் – பெரியாரியர்கள்- மார்க்ஸியர்கள் இடையே ஆழமான கருத்து முரண்களோ பரஸ்பரப் பகையோ பெரிதளவில் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த 20 வருடங்களில் இந்தச் சக்திகளிடையே ஒற்றுமை அதிகரித்திருப்பதையும் நான் பார்க்கிறேன். இந்தப் பலம்தான் இன்னும் இந்தப் பூமி இந்துத்துவவாதிகளுக்கு எட்டாக் கனியாக இருப்பதற்குக் காரணம். அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை.    சென்றவாரம் இயக்குநர் பா.ரஞ்சித்தோடும் அவரது தோழர்களோடும் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தேன். ரஞ்சித் பெரியாரை நிராகரிப்பதாக ஒரு பேச்சு இங்கு உண்டு. அது குறித்து அவரிடம் கேட்டேன். அவர், ‘பெரியார்மீது தனக்கு விமர்சனங்கள் ஏதுமில்லை’ என்றுதான் சொன்னார். அப்படி இருந்தால்தான் என்ன? விமர்சனங்களைக் கவனமாகச்  செவி குவித்துக் கேட்கும் மரபல்லவா பெரியார் மரபு. மறு ஆய்வுகள் வழியே தன்னை மறுபடியும் மறுபடியும் புதுப்பித்துக் கொண்டிருந்தவரல்லவா பெரியார்.    நாட்டில் இருக்கிற பிரச்னையை எல்லாம் விட்டுவிட்டு ஒரு கோஷ்டி ‘கபாலி படத்தில் ஏன் பெரியார் படத்தைக் காட்டவில்லை’ எனக் கேள்வி கேட்கிறது. `கபாலி’ படத்தில், ‘பறவையைக் கூண்டில் அடைத்து வைக்காதே, அதைச் சுதந்திரமாகப் பறக்கவிடு’ எனக் கபாலி ஜீவகாருண்ய வசனமொன்று பேசுவாரல்லவா… அதைச் சொல்ல முதலில் ஒரு 50 பேரைச் சுடுகிறார். சொன்ன பின்பு 100 பேரை வதைத்துச் சுடுகிறார். ரஜினிகாந்தின் பெரும் பிம்பம் வழியே உருவாக்கப்பட்ட அந்த டான் சினிமாவில் நம் அரசியல் மேதைகளுக்கு ஓர் இடமும் தேவையில்லை.    முன்பு ரவிக்குமார், பெரியாரைப் பெருமளவு அவதூறு செய்தார். அதெற்கெல்லாம் அப்போதே பதில் கொடுக்கப்பட்டது. அவரும் அண்ணா விருதைப் பெற்றுக்கொண்டு ஓய்ந்துபோனார். திராவிட இயக்கத்தை விமர்சிக்கிறோம் எனச் சொல்லிக்கொண்டு, அ.தி.மு.க-வையெல்லாம் திராவிட இயக்கமாகச் சொல்வது வரலாற்றுக் கயமை. தி.மு.க-வை திராவிட இயக்கத்தின் கருத்தியல் நீட்சியாகப் பெயரளவிற்குச் சொல்லிக்கொள்ளலாம், அவ்வளவுதான். இந்த ஊழல் கட்சிகளை முன்வைத்துத் திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்களிப்பை அளவிடுவது சரியற்றது.”    [] p4h_1517206490.jpg   “2009- ஈழ இறுதிப் போருக்குப் பிறகு தமிழ்நாட்டில் உருவாகியுள்ள தமிழ் தேசிய எழுச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ‘தமிழ்நாட்டைத் தமிழன்தான் ஆளணும்’ என்பதுபோன்ற கோஷங்கள் முன்வைக்கப் படுகின்றனவே?”    “தமிழ் தேசிய முழக்கம் என்பது தமிழ்நாட்டுக்குப் புதியது அல்ல. ஆயுதம் ஏந்திய குழுக்கள்கூட இருந்தன அல்லவா! நிறைய பேர் இந்தக் கருத்தியலைப் பேசியிருக்கிறார்கள். 2009 என்பது ஒரு திருப்புமுனை. நம் பக்கத்தில் உள்ள நாட்டில் நம் மொழியைப் பேசும் மக்கள் கொத்துகொத்தாகக் கொல்லப்படும்போது, ‘இந்தியாவின் போரை நான் நடத்தியுள்ளேன்’ என ராஜபக்‌ஷே சொன்னபோது,   மக்கள் வீதிக்கு வருவது இயல்பானது; வரவேற்கக்கூடியது. எல்லா தமிழ்த்தேசிய குழுக்களும் மற்ற மொழியினரை விரட்டச் சொல்வது இல்லையே!    இன்றைக்குத் திராவிட இயக்கத்தினரின் செயலின்மையும் கம்யூனிஸ்டுகளின் உறுதியற்ற அரசியலும் தமிழ் தேசிய சக்திகள் வளர்வதற்கான ஒரு சிறுபாதையைத் திறந்துவிட்டுள்ளன. எல்லா அடிப்படை வாதங்களையும்போல தமிழ் அடிப்படைவாதமும் ஆபத்தான ஒன்றுதான். ஜனநாயத்தையும் பன்மைத்தன்மையையும் நிராகரித்து இவர்கள் இன வெறுப்பைக் கக்குவார்களானால், நீங்கள் ஒன்றுக்கும் கவலைகொள்ள வேண்டாம். இவர்களால் தமிழக மக்களிடம் செல்வாக்குப் பெறவே முடியாது. இவர்களது எழுச்சியெல்லாம் யூ-டியூப் அளவோடு நின்றுவிடும்.”    “உங்கள் கருத்தோடு முரண்படும் தியாகுவுடன் ஓர் உரையாடல் நிகழ்த்தி, அது புத்தகமாகவும் வெளியானது. அதுபோலப் புலிகள் இயக்கத்தினைச் சார்ந்தவர்களோடு நீங்கள் உரையாடியிருக் கிறீர்களா?”     “பகிங்கரமான உரையாடல் நிகழ்ந்ததில்லை. ஆனால், இயக்கத்தில் இருந்தவர்கள் என்னுடைய புத்தகங்களை வாசித்திருக்கிறார்கள். பொட்டு அம்மானின் மேஜையில்தான் ‘கொரில்லா’ புத்தகத்தைப் பார்த்தேன்’ என்று தமிழ்க்கவி அம்மா எங்கோ சொல்லியிருந்ததாக ஞாபகம். ‘ஷோபாசக்தி நூல்களை விற்கத் தடை வேண்டும்’ என்ற பேச்சு வந்தபோது ‘அவனை நீ எழுதித் தோற்கடி’ எனப் புதுவை இரத்தினதுரை சொன்னார் என்றொரு செய்தியையும் யாரோ எழுதியிருந்தார்கள். இப்படி மறைமுக உரையாடல் நடந்துகொண்டுதான் இருந்தது.’’    “ஷோபாசக்தி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, அவர் சுற்றுப் பயணம் செய்வதற்குப் பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதுதான். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?”    “நான் 25 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கிறேன். தேவையென்றால் வேலைக்குப் போவேன் அல்லது போக மாட்டேன். இந்தியாவுக்கு வந்துபோக விமான டிக்கெட் எவ்வளவு இருக்கும் என நினைக்கிறீர்கள். 30,000 லிருந்து 35,000 ரூபாய். மற்ற செலவுகளைக் கணக்கிட்டால் அதிகபட்சம் ஒரு லட்சம் ஆகுமா? அது நான் வேலைக்குப் போனால் வாங்கும் ஒரு மாதச் சம்பளத்திலும் குறைவான தொகை. வேலைக்குப் போகவில்லை என்றால், என் மாதச் சம்பளத்தில் ஒரு பகுதியை வேலையிழப்புக் காப்புறுதிப் பணமாக மாதா மாதம் அந்நாட்டு அரசாங்கம் தரும். இந்தச் சலுகைக்கும் ஆப்பு வைக்கத்தான் இப்போது பிரெஞ்சு அரசு தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறது. இது அவர்களது கவலை. இதைப்பற்றி உங்களுக்கு என்னப்பா வருத்தம். நான் வருடம் ஒருமுறை சென்னைப் புத்தகக் காட்சிக்கு வந்துபோவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா என்ன? என்னுடைய மற்ற பயணங்கள் எனது நுால்கள் மற்றும் சினிமாக்கள் சம்பந்தமானவை. கையில் வெறும் 300 ஈரோக்களோடு கியூபாவில் ஒரு மாதம் சுற்றித் திரிந்திருக்கிறேன். ’பயணம் செய்யக் காசு தேவையில்லை, கால்கள்தான் தேவை’ என்பார் கோணங்கி. என்ன சொல்கிறார்கள் இந்த விமர்சகர்கள்? வேலை என்ற பெயரில் என்னை பாரிஸின் குசினிகளுக்குள்ளேயே நெருப்போடும் புகையோடும் கிடந்து மடிந்துவிடச் சொல்கிறார்களா?”    “படைப்பாளிகள் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்திவிட்டால் படைப்புத்தன்மை கெட்டுவிடும் என்பார்கள். நீங்கள் அரசியல் விவாதங்கள் தொடங்கி இணைய விவாதம் வரை பல விஷயங்களுக்கு மல்லுக்கட்டுகிறீர்களே?”    “சமகாலப் பிரச்னைகளைப் பற்றிப் பேசி, விவாதித்து, மாறுபட்ட சக்திகளுடன் உரையாடிக் கருத்துகளைத் தொகுத்துக்கொள்வதன் மூலம்தான் ஒரு படைப்பாளி உத்வேகத்துடன் புதிய விஷயங்களைக் கண்டடைய முடியும். வீட்டு அறையைப் பூட்டி போட்டிருந்தால் ஒன்றும் எழுத முடியாது. அதனால்தான் அசோகமித்திரனின் படைப்புகள் எனக்குப் பிடிக்காமல் போனதோ என்னவோ!    இயங்கிக்கொண்டிருப்பவனால் மட்டுமே நல்ல இலக்கியத்தைப் படைக்க முடியும். ஜெயகாந்தனை அல்லது எஸ்.பொவை எடுத்துக்கொள்வோம். அவர்கள் போடாத சண்டையா, கூறாத கருத்தா, ஏறாத மேடையா? தொடர்ந்து இந்தச் சமூகத்துடனும் படைப்பாளிகளுடனும் முரண்பட்டவர்களுடனும் உரையாடிக்கொண்டே இருக்க வேண்டும். அதன்மூலம்தான் நம்மை வளர்த்துக்கொள்ள முடியும். புதியதைக் கண்டடைய முடியும்.”    “தமிழ் இலக்கியத்தில் உங்களை ஈர்த்தவர்கள் குறித்துச் சொல்லுங்கள்?”    “நிறைய பேர் இருக்கிறார்கள். கூத்துக் கலையிலிருந்து வந்ததால் குரு – சிஷ்யன் உறவில் எனக்கு நம்பிக்கை உண்டு. என்னை மிக ஆழமாகப் பாதித்த படைப்பாளி எஸ்.பொ. நான் எழுதும்போது பரிசுத்த ஆவிபோல என்னுள் இருப்பார். பூமணியின் ‘வெக்கை’ நாவல் என்னை மிகவும் பாதித்தது. சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென் ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’ நாவலைப் படித்ததும்தான் நாவல் கட்டமைப்பில் சிதறல்களையும் ஓட்டையையும் போட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது, ரமேஷ் – பிரேம் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். நிறைய உரையாடியிருக்கிறோம். என் இலக்கிய முன்னோடிகளில் கு.அழகிரிசாமி மிக முக்கியமானவர். சுருக்கிச் சொன்னால் என் முன்னோடிகள் அனைவரிடமிருந்தும் நான் கற்றுக்கொள்ள ஒரே ஒரு விஷயமாவது இருக்கவே செய்கிறது.”    “ஈழத்திலிருந்து எஸ்.பொ. பெயரை மட்டும்தான் குறிப்பிட்டிருக்கிறீர்கள்?”    “நவீன இலக்கிய எழுத்து என வரும்போது எஸ்.பொவை முன்னிறுத்தத் தோன்றுகிறது. அதேவேளையில் மக்களிடம் சென்று கற்றுக்கொண்டு, அவற்றைச் சமூக மாற்றத்திற்கான கதைகளாக உருவாக்கி, அதைக் கிராமம் கிராமமாக எடுத்துச் சென்று பரப்பியவர் தந்தை கே.டானியல். ஓர் எழுத்தாளனின் சமூகப் பொறுப்பையும் அச்சமின்மையையும் நான் அவரிடமிருந்து வரித்துக்கொண்டேன்.”    “இப்போது என்ன எழுதிக்கொண்டிருக் கிறீர்கள்?”    “ ‘இச்சா’ எனும் நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘சொந்த அனுபவங்களையே சலிப்பூட்டும் சுயசரிதைப் பாணியில் எழுதாமல், தான் அறியாத உலகத்தைத் தன் கற்பனையூடாக உருவாக்குவதே எழுத்தாளர்கள் முன்னுள்ள சவால்’ என்பார் சார்லஸ் புக்கோவ்ஸ்கி. நான் இம்முறை அவரது சவாலை ஏற்றிருக்கிறேன். சென்ற ஆண்டின் கடைசியில் எனது சுயசரிதை ‘shoba: itinéraire d’un réfugié’ பிரெஞ்சில் வெளியானது. இவ்வாண்டு எனது சிறுகதைகள் மொழியாக்கப்பட்டு பிரெஞ்சில் வெளியாகவுள்ளன. மொழிபெயர்ப்பவர் வேறொருவர்தான் என்றாலும் சில விஷயங்களை நான் உடனிருந்து விளக்க வேண்டியுள்ளது. அரைஞாண் கயிற்றை நான் மொழிபெயர்ப்பாளருக்கு விளக்கப் பட்டபாடு பெரும்பாடு. மொழிபெயர்த்தவர் பூணூல் என்று எழுதிவிட்டார். ஏப்ரல் மாதத்தில் அடுத்த படத்தில் நடிக்க வேண்டியிருப்பதால், அதற்குள் மொழிபெயர்ப்பு வேலைகளை முடிக்க வேண்டும்”.    “2009-ம் ஆண்டுக்குப் பிறகு கருணாநிதி மீது தமிழ் தேசிய இயக்கங்களுக்கு அதிருப்தி இருந்த நிலையில் நீங்கள் ஒரு புத்தகத்தை கருணாநிதிக்குச் சமர்ப்பித்திருந்தீர்களே?’’    “கலைஞருக்கு நான் என் புத்தகத்தைச் சமர்ப்பிக்க முடிவெடுத்தபோதே விமர்சனங்களையும் எதிர்பார்த்தேன். ஆனால், அதெற்கெல்லாம் நான் அசருவதாக இல்லை. நான் என் தமிழ் ஆசானிற்கு ஆற்ற வேண்டிய கடமை அது.”    “ஈழத்தில் திராவிட இயக்கத்தின் தாக்கம் எந்தளவு இருந்தது?”    “மலையகத்தில் மட்டும் சிறிதளவு இருந்தது. அங்கு, தி.மு.க-வின் கிளைகூட ஒன்று இருந்தது. ஜே.வி.பி-யின் முதலாவது கிளர்ச்சிக் காலத்தில் மலையகத்தில் அரசால் தி.மு.க. தடை செய்யப்பட்டது. அதன் தலைவரும் கைது செய்யப்பட்டார். இப்போது நமது சினிமா ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் ஏறுக்குமாறாய்  திரைப்படங்களில் பல குறியீடுகளைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அப்போதே ஜே.வி.பி ‘அடிமைப்பெண்’ படத்திலேயே குறியீட்டுக் குழப்பம் செய்தார்கள்.    எம்.ஜி.ஆர் அந்தப் படத்தில் பக்கத்து நாட்டில் உள்ள பெண்ணின் தலைமையிலான ஆட்சியை எதிர்ப்பார். அப்போது இலங்கையில் சிறிமாவோ பண்டார நாயகாவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ‘அடிமைப்பெண்’ படம் இதைத்தான் சுட்டுகிறது, இலங்கையைத் தாக்கி ஆட்சியைப் பிடிப்பதே தி.மு.க-வின் நோக்கம் என ஜே.வி.பி-யினர் சீரியஸாகவே பரப்புரை செய்தார்கள். அவர்களது கட்சியில் இணைபவர்களுக்கு ஐந்து வகுப்புகள் நடத்தப்படும். அதில் இரண்டாவது வகுப்பில்  தி.மு.க. எதிர்ப்பு வலுவாக இருக்கும்.    மலையத்தில் சிறிய அளவு திராவிட இயக்கத்தின் தாக்கம் இருந்ததைத் தவிர்த்துப் பார்த்தால், வேறெங்கும் திராவிட இயக்கத்தின் தாக்கம் இருக்கவில்லை. ஆனால், தி.மு.க.வி-லிருந்து சிலவற்றை அப்போது தமிழர்களின் மிகப்பெரிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி இரவல் வாங்கியிருந்தது. கூட்டணியினரின் சின்னமும் உதயசூரியன்தான். இங்கேயிருந்து கருத்துகளைக் கடன் வாங்கிப் பேசுவார்கள். அங்கேயும் தீப்பொறி அந்தனிசில் என்ற ஒரு பேச்சாளர் இருந்தார். ‘அடைந்தால் தனி நாடு; இல்லையேல் சுடுகாடு’ போன்ற முழக்கங்களும் கடத்திவரப்பட்டன. இவ்வளவுதான்.”    “கருத்தியல் ரீதியாக ஆழமான எந்த விளைவையும் திராவிட இயக்கம் ஏற்படுத்தவில்லையா?”    “திராவிட இயக்கத்தின் சாதி மறுப்பு, பெண்விடுதலை, இடஒதுக்கீடு, கடவுள் மறுப்பு போன்ற எந்தச் சிந்தனைகளையும் ஈழத்தமிழ் அரசியலாளர்களோ, அறிவுஜீவிகளோ உள்வாங்கிக் கொள்ளவில்லை. அண்ணல் அம்பேத்கரை இன்று வரை ஈழத்து அரசியலாளர்களும் அறிவுஜீவிகளும் உச்சரிக்கக்கூட மறுக்கின்றனர். கேட்டால், இவையெல்லாம் தமிழக இறக்குமதிச் சிந்தனைகள் எனப் பழிப்புக் காட்டுகின்றனர். மார்க்ஸியம், தேசியவாதம், மாவோயிஸம் போன்ற சிந்தனைகளை இவர்கள் ஒருபோதும் இறக்குமதிச் சிந்தனைகள் எனச் சொல்வதில்லை.”    “நீங்கள் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்திருக்கிறீர்கள் என்பதைப் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்களை எம்.ஜி.ஆர் எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறார்?”     “சிறுவயதில் சாதி என்பது இயல்பான விஷயம் என்று மனப் பதிவானது. சாதியைக் கேள்வி கேட்க வேண்டும் என்று யாரும் சொல்லித் தரவில்லை. எங்கள் ஊரில் மாலை ஏழு மணியானால் மனைவியை, கணவன் தெருவில் இழுத்துப்போட்டு அடிப்பது ஓர் இயல்பான விஷயம் என நம்பி வளர்ந்தவன் நான். ஆனால், இவை இயல்பில்லை என்ற அரிச்சுவடியைச் சிறுவயதில் எனக்குக் கற்றுத்தந்தவை எம்.ஜி.ஆர் படங்களும் கலைஞரின் வசனங்களும். எம்.ஜி.ஆர் படங்களின் முக்கியமான அம்சம், சாதி, மத அடையாளங்களை அவர் தன் படங்களில் தவிர்த்தது. அப்படி நடிக்க வேண்டியிருந்தாலும் மீனவ நண்பன், படகோட்டி, மதுரைவீரன் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் பாத்திரங்களை ஏற்று நடித்தார். சாதிவெறியூட்டும் இப்போதைய தமிழ் சினிமாக்களைவிட எம்.ஜி.ஆர். படங்கள் ஆயிரம் மடங்கு சிறந்தவை என்பேன். [] p4c_1517206205.jpg”    “தொடக்கத்தில் சினிமா வழியாகத்தான், சாதி மற்றும் பெண்ணடிமைக்கு எதிரான உணர்வைப் பெற்றதாகக் குறிப்பிட்டீர்கள். ஆனால், இன்றைக்கு சினிமாவில் இயங்குகிற சாதி குறித்து உங்கள் கருத்து என்ன?”    “எந்தப் புரட்சிகர அமைப்புகளோ, கம்யூனிஸ்டுகளோ, திராவிட இயக்கமோ, அம்பேத்கரியமோ அறியப்படாத என் கிராமத்து மண்ணில், திராவிட இயக்கத்து சினிமாக்கள் ஒரு தட்டுத் தடுமாறிய தொடக்கமாக எனக்கு அமைந்துபோயின.   இன்றைய தமிழ் சினிமாவில் நிகழும் சாதியப் பெருமிதக் கூச்சல்கள் சகிக்க முடியாதவை. அவை சாதியைத் திரை வழியே புலம்பெயர் தேசத்தில் வளரும் குழந்தைகள் வரை கொண்டுவந்து சேர்த்துள்ளன. ஏதாவதொரு திரைப்படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அண்ணல் அம்பேத்கர் உருவத்தையோ, பெரியாரின் தாடியையோ காட்டினால், உணர்ச்சிப் பெருக்கில் விம்மிடும் அளவிற்குத்தான் நமது பெரும்பாலான திரை விமர்சகர்களும் உள்ளார்கள். எப்பா! இதையெல்லாம் எம்.ஜி.ஆர் ‘உலகம் சுற்றும் வாலிபனி’லும் ‘பல்லாண்டு வாழ்க’விலும் 50 வருசத்துக்கு முன்னமே காட்டிவிட்டார். நாகராஜ் மஞ்சுளேயின் ‘ஃபன்ட்ரி’ போன்ற ஒரு அசலான சாதியெதிர்ப்புப் படத்தைத்  தமிழ்த்திரை காணும் நாள் எந்நாளோ என மனம் ஏங்கிக் கிடக்கிறது.”    “நீங்கள் ஈழத்துக் குடும்ப அமைப்பையும் பார்த்திருக்கிறீர்கள், ஐரோப்பியக் குடும்ப அமைப்பையும் பார்த்திருக்கிறீர்கள். இவற்றுக்கிடையிலான முக்கியமான வித்தியாசங்கள் என்ன? குடும்ப அமைப்பைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?”    “பெரியார் சொன்னதைத் தாண்டி நான் என்ன சொல்லிவிடப் போகிறேன்? திருமணம் செய்வதை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்றார் அவர். ‘குடும்பம் என்பது குட்டி அரசு’ என்றார் கார்ல் மார்க்ஸ். குடும்பம் என்பதே ஒரு வன்முறை அமைப்புதான். ஈழமோ, ஐரோப்பாவோ எல்லா வகையான குடும்ப அமைப்புகளும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. ஐரோப்பாவில் உள்ள சமூக நலக் கூடங்களில், ‘மனைவியை அடிப்பது தவறு’ என்று எழுதிப்போட்டுப் பிரசாரம் செய்யுமளவிற்கு அங்கே குடும்ப வன்முறைகள் பரவலாக நிகழ்கின்றன. ஐரோப்பாவில் நடக்கும் அதிகக் கொலைகள் தங்களை விட்டுச் சென்ற காதலியை அல்லது மனைவியைக் கொலைசெய்வது என்பதாகத்தான் இருக்கிறது. என்ன…. அங்கேயெல்லாம் எளிதாக விவாகரத்து வாங்கிப் பிரிந்துவிடுகிறார்கள். சமூகநல அரசுகள் என்பதால், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓரளவுப் பொருளியல் பாதுகாப்பை அரசே வழங்கிவிடுகிறது. இங்கே, விவாகரத்துக்குச் சட்டம் அனுமதித்தாலும் குடும்பச் சூழல்கள், பொருளாதாரக் காரணங்கள், கலாசாரக் காரணங்கள், குழந்தை வளர்ப்பு போன்ற காரணங்களால் ஆணும் பெண்ணும் குடும்ப அமைப்பைப் பெரும்பாலும் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது”    “உங்கள் பதிலிலிருந்து ஒரு முரணான கேள்வி. மனைவி, குழந்தைகள் என்று உங்களுக்கென்று ஒரு குடும்ப அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளாதது குறித்து வருத்தமிருக்கிறதா?”    “நிச்சயம் இல்லை. இந்த உலகமே என் குடும்பம்தான்!”    https://www.vikatan.com