[]     நூல் : வேட்கை (கவிதைத் தொகுப்பு) ஆசிரியர் : மா. கார்த்திக் மின்னூல் வெளியீடு : freetamilebooks.com உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மின்னூலாக்கம் : விவேக்பாரதி (tamiludanvivekbharathi@gmail.com) அட்டைப்படம் : அரவிந்த் ராஜ் (arveerj@gmail.com)       அணிந்துரை   இன்றைய இலக்கிய உலகில் கவிதை என்பது பல்வேறு வகைகளில் வளர்ந்து வருகின்றது. இன்றைய வாசிப்பு முறை மாறிவரும் நிலைமையில் புத்தக வாசிப்பு என்பது குறைந்து மின்னனு வாசிப்பு வளர்ந்து வருகின்றது. இந்நிலையில் தம்பி கவிஞர் மா.கார்த்திக் அவர்களின் கவிதைத் தொகுப்பு கொண்டு வருவது மிகச் சிறப்பான செய்தி. தனது முதல் தொகுப்பைக் கொண்டு வரும் கவிஞர் தன்னைத் தான் சார்ந்த இந்த உலகைப் பாதித்த செய்திகளை முதன்மையாகக் கொண்டு தன் உணர்வையும், சமூக உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளார்.   இன்றைய தமிழனே ! உறங்கியது போதும் உதித்திடுவாய் ! புதிய வரலாற்றை அந்நியப் பாடத்தில் சேர்த்துவிடு ! இன்றைய தமிழனே ! நம் கையில் உள்ளது தமிழின வளர்ச்சி ! தலை நிமிர்வோம் தலைகணம் இல்லா நெஞ்சோடு !   “யார் என்று கண்டுபிடி” என்னும் கவிதை மிகவும் ஈர்ப்பு கொண்ட கவிதை. இவனைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று என்று கவிஞர் கூறுவது மிகவும் அருமை.   “என்னுயிர்” என்னும் தலைப்பில் தாயின் தனித் தன்மையைக் , கடல் காற்றின் உப்புவாசம் கடவுளைப் போல் கொடுத்தாய் சுவாசம் ! கருவறையில் சுமந்தாய் பத்து மாசம் ! கண்கள் கலங்கச் சென்றாயே மர்ம தேசம் !   மறுபிறவி என்னும் மூன்று வரிக் கவிதை அன்னையின் அன்பையும் வலியையும் மேன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. “நட்பு” என்னும் கவிதை வரிகளில்,   உன் மூச்சுக் காற்றையும் உன் வியர்வை வாசனையையும் திரும்பப் பெறுவேனா??   என்னும் வரிகள் தோழனின் மகிமையையும் உறவையும் விளக்குகிறது.   “பிரிவில்லையே” என்னும் தலைப்பில்,   நதி மண்ணோடு போகும் வாழ்க்கை கேட்கிறேன் ! பிரியாமலிருக்க ! கடல் நம்மைப் பிரித்தால் கவலை வேண்டா ! சகி மீண்டும் மழையாகத் தொடர்வோம் !!   இக்கவிதை இயற்கையின் வழிகளையும் வாழ்க்கையையும் நமக்குச் சொல்லித் தருகின்றன. “விவசாயியின் துயரம்” என்னும் கவிதையில் உழவனின் மன நிலையையும் வாழ்வையும் சித்தரிக்கிறார்.   உரத்தைக் கேட்டேன் ! பணத்தைக் கேட்டாய் ! கொடுத்தேன் ! உணவைக் கேட்கிறாய் பணத்தைக் கேட்டால் பேரம் பேசுகிறாயே !!   தந்தையைப் பற்றிய கவிதையில்,   அன்று மீசையை மழித்ததற்கு என்னை அடித்தாயே இன்று மீசையை மழிக்க வருகிறார்கள் படுத்துக்கொண்டிருக்கிறாய்.. என்றும் மண்ணின் புழு மனிதனைத் தின்னுமே மனிதன் ! புழுவைத் தின்ற மீனைத் தின்னுவான் ! இவை வாழ்வின் விதி !   என்றும் மனிதனோடு பிற உயிர்களின் நிலையாமை தத்துவத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.   பத்து பேருக்குச் சோறு போட்டா கடவுள் என்று சொன்னாங்க மொத்த உலகுக்கும் சோறு போட்டா வெவசாயின்னு சொன்னாங்க ! என்றும் இவன் வாய் கொப்பளிக்கப் பன்னீர் கேட்கவில்லை ! விதை விதைக்கத் தண்ணீர் கேட்கிறான்   என்றும் விவசாய மக்களின் இன்றியமையாமையைக் கூறுகின்றார். மேற்காணும் கவிதைகளில் துப்பறியும் பாங்கும், தாய்மையின் மகத்துவமும், தந்தையின் கருணையும் வெகுவாகச் சுட்டப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் பார்க்கும்போது இளைஞருக்கே உரிய துடிப்பும் முயற்சியும் பாராட்டத் தக்கது. நவீன கருவிகளோடு காலம் கடத்தும் இளைஞர்களின் மத்தியில் இந்தியாவின் எதிர்காலத்தைச் சிந்திக்கக் கூடிய அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு இளைஞய கவிஞனை நாம் எல்லோரும் கொண்டாட வேண்டும். இவர் இன்னமும் பல கவிதைகள் எழுதுவதோடு செயல் தலைவராகவும் முன்னேற எல்லாம் வல்ல பரம்பொருள் துணை நிற்க வாழ்த்துகிறேன்.   இப்படிக்கு பேரா. முனைவர். ப. முருகன் தமிழ்த்துறைத் தலைவர் தூ.கோ வைணவக் கல்லூரி சென்னை – 600106           வாசகன் பேசுகிறேன்   தமிழ்மொழி தன்னுள் தினமும் அழகான விஷயங்களைப் புதுப்பித்துச் சேர்த்துக்கொண்டு தான் வருகிறது. குறிப்பாக கவிதை வடிவத்தில் தனக்கென்று அது கொண்டுள்ள இலக்கியத் தரத்தை வேறு எந்த மொழியும் இதுவரையில் கொள்ளவில்லை என்பது நாம் அனைவரையும் பெருமைப்படவும் வியப்படையவும் செய்கிறது. கவிதை எழுதுவது ஒன்றும் சொல்வது போல அவ்வளவு சுலபம் கிடையாது. "எது கவிதை ?" என்று கேட்ட காலம் சென்று "எதற்குத்தான் கவிதை ?" என்று வினவும் காலம் வந்துவிட்டது. இந்நிலையில் சொற்களைக் கொண்டும், சீரிய ஓசைகள் மற்றும் கற்பனைகளைக் கொண்டும் மாயங்கள் செய்யும் கவிஞர்களின் வரிசையில் இன்று இன்னொருவர் சேர்ந்திருக்கிறார். என் நண்பர், நல்ல பண்பாளர் மா.கார்த்திக். அவரின் இந்தக் கவிதைத் தொகுப்பை முதலில் படித்தவன் என்ற முறையில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். புதுப்புது உணர்ச்சிகளைப் புதுப்புது பாணிகளில் கொடுத்திருக்கிறார். புத்தகத்தின் தலைப்பிலேயே தன் உள்ளத்தை வைத்துவிட்டார் இந்தக் கவிஞர்.   "வேட்கை" என்ற சிறந்ததொரு உணர்ச்சியை இந்தத் தொகுப்பின் பெயராகச் சூட்டியிருக்கும் இந்தக் கவிஞர் உண்மையில் வேட்கை மிக்கவர் தான். தாய் மொழியான தமிழின்பால் கொண்ட வேட்கை தேசத்தின் மீது கொண்ட வேட்கை உறவுகளின் மீது கொண்ட வேட்கை நட்புக்குத் தேவையான வேட்கை இயற்கையின் பால் கொண்ட வேட்கை ஊக்கம் தருவதற்கான வேட்கை காதல் சமூகம் மற்றும் தலைவர்கள் காட்டிய வேட்கை என்று இவர் கவிதைகளை அடுக்கிய விதமே வியக்கத்தக்க விஷயமாக இருக்கிறது. கவிதைகளை இவர் படைத்திருக்கும் விதம் இவர் படித்திருக்கும் விதத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. வைகை நதி தந்த கவிதைத் தென்றலான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகளில் இவர் ஊறித் திளைத்திருக்கிறார் எனலாம். மூலை முடுக்கிலெல்லாம் அவரது பாணி தட்டுப்பட்டு இவரையும் அவரையும் உயர்த்துகிறது. தனது தின நாளேட்டில் எழுதுவது போலவும், நண்பரோடு சகஜமாகப் பேசுவது போலவும் இவர் கவிதைகள் எதார்த்தத்தின் உருவமாக விளங்குகின்றன. இதனைப் படிக்க எடுத்த கணத்தில் ஒரே மூச்சாகப் படித்து முடிக்கும் அளவிற்கு ஆர்வம் குறையாதவாறு அமைத்திருக்கிறார். தமிழ்ப் பற்று என்பது தமிழ்க் கவிஞன் அனைவருக்கும் இருக்கும் ஒரு இன்றியமையாத உணர்வு. புலம்பெயர்ந்த தமிழரின் சோகத்தை இப்படிச் சொல்லி நம்மையும் உருக்குகிறார் !   உள்ளங்கை ரேகையாக அழியாமலிருக்க வேண்டாம் நெற்றியின் சந்தனமாக ஒரே நாளில் அழிக்காதீர் !"   இவர் இடையிடையே வைத்திருக்கும் யார் என்று கண்டறியவும் என்ற பகுதி ஸ்வாரசியத்தின் உச்சமாகவே இருக்கிறது. ஒவ்வொன்றும் கடக்கின்ற வேளையில் அடுத்தென்ன அடுத்தென்ன என்ற ஏக்கமும் விடையை அவரே சொன்னதும் இதை விட்டுவிட்டோமே என்ற அசட்டுச் சிரிப்பும் தானாகத் தவழ்கிறது. அழகான உறவின் நிதர்சனங்களைக் கவிதையில் பதிக்கிறார் கவிஞர். கல்லூரி நட்பையும் அந்த நண்பர்களையும் பெரிதும் நேசித்திருக்கும் கவிஞர் அவர்களது பிரிவை நியாயப்படுத்தும் அழகைப் பாருங்கள்   கல்லூரி என்பது கிளை ! நாமோ அதில் உதிரும் இலை ! ஒவ்வொரு மே மாதத்திலும் உதிரத்தானே செய்யும் கசப்பாக இருக்கும் பிரிவைப்போல ஒவ்வோரு மெய்யும் !   வாழ்க்கை என்னவென்று கவிஞரைக் கேட்டால் இப்படிச் சொல்லுவார் போல...     வானென்பது பிறையையும் பகலவனையும் மாற்றி மாற்றித் தரும் வாழ்வென்பது இன்பத்தையும் துன்பத்தையும் மாற்றி மாற்றித் தரும் !   காதல் பகுதியின் நினைவுக் கத்தியும் காதல் விஞ்ஞானியுடனான உரையாடலும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்ற அற்புதங்கள். சின்னச் சின்னக் கவிதைகளால் காதலோடு தாஜ்மஹாலையும் சேர்த்தே அசைக்கிறார். தற்கொலைக்கு எதிராகக் கவிஞர் கவிதை ஆயுதத்தைத் தூக்கிக் காட்டும் விதம் உயர்ந்து நோக்கத் தக்கது.   காதலென்பது பருவப் பிழை ! இதற்கு உன்னுயிரா விலை   தற்காலத்தில் கவிதைகளின் வாசிப்பும் நேசிப்பும் வெகுவாக குறைந்து வரும் போதிலும் கார்த்திக் போன்ற புதுப்புது எழுத்தாளர்கள் அதனைத் தூக்கி நிறுத்திக் கவிதையால் உலக மக்களை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தனது கன்னிப் புத்தகத்தைப் படைத்திருக்கும் என் நண்பர் இன்னும் நிறைய படித்து இதை விடத் தரத்திலும் வளத்திலும் சிறந்த பல புத்தங்களைப் படைக்க வாழ்த்துமாறு என் பராசக்தியை நான் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க தமிழ் ! வாழ்க கவிதை ! வாழ்க பாரதம் ! ஓம் சக்தி   வித்தக இளங்கவி விவேக்பாரதி   வாழ்த்துக்கவி   வைரமுத்தின் தாசன் இவன் ! இயற்கை அழகின் நேசன் இவன் ! இளமையில் புத்தகம் புனைந்த இளவனிவன் ! இயற்கையில் பற்று கொண்ட புலவனிவன் !   சீர் திருத்தச் சிந்தனை கொண்டவன் இவன் ! சிந்திக்க வைக்கும் சிற்பி இவன் ! காதல் கவிதை ஊற்று இவன் ! கவிப்பித்தர்களின் சுவாசக் காற்று இவன் ! எளிமையான கவி வடிப்பவன் இவன் ! வலிமையான வரியில் முடிப்பவன் இவன் ! ஒத்த நூல் படைத்த எம் மாணவன் இன்னும் கொத்து நூல் படைத்திட வாழ்த்துகிறேன் !   முனைவர் கவிஞர். துளசி உமாபதி உதவி பேராசிரியர் (நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்) து.கோ வைணவக் கல்லூரி சென்னை – 600106                       என்னுரை   உள்ளத்திலெழுந்த புது உணர்ச்சி இது உள்ளத்தின் உணர்வைப் புறம் தள்ளும் புது முயற்சி இது ஆதரவை தந்திடுக தமிழ் நெஞ்சங்களே !!   புதுக்கவிதைகள் முலம் உள்ளக் கருத்தைச் சொல்ல நினைக்கும் இந்த கவிஞனின் கவிதைகள் படிக்க காத்திருக்கும் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். புதுக்கவிதையில் பல்வேறு கவிஞர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்த பிறகு இவனென்ன சொல்லி விடுவான் என நினைக்கிறீர்களா. ஆம் உன்மை தான் ஒத்துக்கொள்கிறேன் புதுக்கருத்தைச் சொல்லவில்லை ஆனால் புதுமையான முறையில் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனவே உங்கள் முன்னே இதைச் சமர்ப்பிக்கிறேன் படித்த பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்; தவறுகள் இருப்பின் மன்னித்து விடுங்கள்.   இவ்விடத்தில் நான் சிலருக்கு பட்ட நன்றி கடனை சொல்ல நினைக்கிறேன். முதலில் இறைவனுக்கு இப்பிறவி தந்தமைக்கு. அடுத்து என் பெற்றோருக்கு. என்னை பெற்று வளர்த்து ஆளாக்கி உலகில் ஒரு நல்ல மனிதனாக்கியதற்கு .மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள் அவ்வரிசையில் என்னுடைய ஆசிரியரான முனைவர் து.உமாபதி அவர்களுக்கு. ‘‘ஊக்கம் ஒன்றை தந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்’’.எனும் வாலியின் வாய்மொழிக்கிணங்க என்னை ஊக்கப்படுத்திய என் ஆசிரியர்க்கு நன்றி. அடுத்து என் மானசீக குருவான கவிப்பேரரசு வைரமுத்து ஐயா அவர்களுக்கு நன்றி. இவரின் இந்த கவியின் தேன் சுவையினால் நான் புத்தகம் புனைய விளைந்தேன். அடுத்து என் நண்பர்களான விவேக்பாரதி, ஹேமந்த், மெட்டில்டா, ஆஷா ஆகிய அனைவருக்கும் என் நன்றிகள் சொல்வதில் பெறுமிதம் கொள்கிறேன். ஏற்கனவே கரங்கள் பதிப்பகம் மூலம் அச்சாகி வெளியாகி இருக்கும் இந்நூலின் மின் வடிவத்தை உலகமெங்கும் பரப்ப இசைவு தந்த Free Tamil EBooks வலைதளத்தினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. நான் விழும் போது என்னை தாங்கி நிறுத்திய அனைவருக்கும் நன்றி.   கவிஞர் மா.கார்த்திக்   பொருளடக்கம்       அணிந்துரை வாசகன் பேசுகிறேன் வாழ்த்துக்கவி என்னுரை தமிழ்த் தாய் தேசிய ஒருமைப்பாடு நாம் தான் இனி இன்றைய தமிழா ஏன் தமிழா ? யார் என்று கண்டுபிடி என்னுயிர் அழகியவள் ஏழை மகள் தாலாட்டு ஞாலம் கொண்டேன் மகளின் கண்ணீர் அப்பா மனு மறு பிறவி பிரித்து விட்டார்களே ! தந்தை தாலாட்டு இனியில்லை கவலை கிளையில் உதிர்ந்த இலை பிரிவில்லையே தோழிகளே கரங்கள் தருவீர்களா ? நீயும் நம்பி விட்டாயா ? ஏழை உழவன் விவசாயி நியாய தர்மம் இந்திய முதுகெலும்பு ஓர் ஆயுட்காலம் யார் என்று கண்டறியவும் விலைக்கு வாங்கிய அலை தத்தளித்தோம் தீதும் நன்றும் பிறர்தர வாரா யார் என்று கண்டுபிடி காட்டின் கண்ணீர் வலிக்கிறது தாயே இமயம் ஏறிடுவோம் வா இலட்சியம் படித்தது போதும் படைப்போம் ! வானமா வாழ்க்கையா ? இறப்பு குறி தவறாதே தோழனே வெற்றி நமதே ! போராடு போராடு முத்து வேண்டும் மூலதனம் பாசி தொடுவதற்குள் துரோகி போட்டி தீ புத்தி யார் என்று கண்டுபிடி நினைவுக்கத்தி வரம் கொள்ளை காதலியே மன்னிப்பு வேண்டும் காதல் செய் உறுதியாய் விளக்கு ஆழி காதல் விஞ்ஞானியுடன் தாஜ்மஹால் பூத்தேர்தல் காதல் இலக்கணம் யார் என்று கண்டுபிடி புரட்சிக் கனல் பாரதி கவிப்பேரரசு கவித் தலைவனுக்கு நா முத்துக்குமார் ஒப்பாரி தமிழ் மகளிர் திருந்துங்களேன் அழுக்கு யார் என்று கண்டுபிடி இறைவனே சரி செய் இறைப்பிள்ளை உலகக் குழந்தை திருநங்கைகள் போதை புலம் பெயர்ந்த தமிழர்கள் விழியற்றவன் வலி சாதி வேண்டாம் கடவுளிடம் பிரார்த்தனை சில சொப்பணங்கள் யார் என்று கண்டுபிடி ஏனடா ? எமலோகம் கவிஞரைப் பற்றி   தமிழ் மற்றும் தேசிய பற்று தமிழ்த் தாய்   எட்டுத்திக்கும் பரவிடுவோம் ஏளனமாய் பார்த்தவனை எட்டி உதைத்திடுவோம் !   எம் வீரவரலாற்றை நிலவிலும் பதித்திடுவோம் ! உன் இனிமையை என்றும் சுவைத்திடுவோம் !   தமிழ் தாயே ! என் குலத்திற்கு பெருமை நீயே !   தமிழெனும் தாயை வைத்து என் தாயைப் போற்றினேன் ! தமிழெனும் தீயை வைத்து தவறில் தீ ஏற்றினேன் !   தமிழெனும் ஊசி வைத்து உடலெனும் உணர்வில் புகுந்தேன் ! தமிழால் உடல் சிலிர்த்து மயக்கம் அடைகிறேன் !                   தேசிய ஒருமைப்பாடு   தேசிய ஒருமைப்பாடு இருக்க வேண்டும் ! இந்தியன் உணர்வை வளர்க்க வேண்டும் !   மதம் இனம் மொழியால் பிரியாதே இந்தியனாய் வாழ் ! இவை எதுவும் தெரியாதே !   இரத்தத்தைச் சிந்தாமல் தானம் செய்வோம் ! மதச் சண்டைகளைத் தூரம் செய்வோம் ! இதயத்தில் இறங்கட்டும் இந்தியன் எனும் உணர்வு ! இனி சண்டையில்லை ! அனைவரும் உறவு !   நாம் தான் இனி   கோ மாபெரும் கோ உன்னைச் சூழ்ந்தாலும் நம்பிக்கை கொள் நண்பா !   வா எழுந்து வா மன்னை ஆளும் தமிழர் நாம் நண்பா !   தீ காட்டு தீ போல நீயும் படர்ந்திடு என் தோழா !   தேன் மலைத்தேன், கேட்டால் தமிழைக் கொடுத்திடு என் தோழா !   நிலவைப் பறித்து அதைப் பாற்கடலில் நனைத்து வைரம் சேர்த்துப் பரிசளிப்போம் தமிழ் தாய்க்கு !   கருவறையில் கற்றுக் கொண்டோம் வாள் வீச்சு தமிழ் தான் எங்கள் உயிர் முச்சு அந்நிய மொழிக்காரர்களுக்கு தெரிந்ததோ வாய்ப் பேச்சு அந்நிய மொழி அடிமைப்படுத்திய காலம் மலை ஏறிப்போச்சு !   இன்றைய தமிழா   இன்றைய தமிழனே ! உன் பழைய புராணம் பேசுகிறாயே நீ எப்போது படைக்க போகிறாய் ?   இன்றைய தமிழனே ! உன் இனிய தமிழ்மொழியை உலக முதல் மொழியாய் எப்போது ஆக்க போகிறாய் ?   இன்றைய தமிழனே உன் இளைய தமிழனாம் ஈழத்தமிழனை எப்போது காக்கப் போகிறாய் ?   இன்றைய தமிழனே நீ உணவு உண்ண உடல் கொடுத்த நிலத்தையும் நிலத்திற்கு உயிர் கொடுத்த உழவனையும் எப்போது உயர்த்த போகிறாய் ?   இன்றைய தமிழனே உறங்கியது போதும் உதித்திடுவாய் ! புதிய வரலாற்றை அந்நிய பாடத்தில் சேர்த்துவிடு;   இன்றைய தமிழனே நம் கையிலுள்ளது தமிழின வளர்ச்சி தலை நிமிர்வோம் ! தலைகணமில்லா நெஞ்சத்தோடு !         ஏன் தமிழா ?   வெள்ளம் ஒன்று வந்தால் தான் நமக்கு வெள்ளை மனம் வருமா ?   வெள்ளையன் ஒருவன் வந்ததால் தான் நமக்கு வெள்ளை மனத்தலைவர்கள் வந்தார்கள்   வெள்ளை மனம் வருவதற்கு வெள்ளத்தையும் வெள்ளை மனத்தலைவர்கள் வருவதற்கு வெள்ளையனையும் கொண்டுவர முடியுமா??   முடியாது அவை சாத்தியமற்றவை எவ்வாறு இருக்கிறோம் தமிழா ?   உலகிற்குத் திருக்குறளை அளித்தவர்களென்ற திமிர் இருக்க வேண்டும் !   உலகிற்கு வீரத்தைக் காட்டியவர்களென்பது நினைவிலிருக்க வேண்டும் !   ஆனால் நாம் வேற்றுமொழியைத் தானே தேடுகிறோம் ! அதன் பின்னே தானே ஓடுகிறோம் !! ஏன் ??? இவ்வாறு இருக்கிறோம் தமிழா ????     யார் என்று கண்டுபிடி   இவனுள் நல்லவனும் உள்ளான் கெட்டவனும் உள்ளான் ! இவனோ நேராக மட்டுமே செல்வான் !   இவனுள் இருக்கும் நிறமோ வெள்ளை ! இவனால் மரங்களுக்கு என்றுமே தொல்லை !   பல சேர்ந்தாலும் ஆசிரியர்க்கு ஈடாக மாட்டான் ! இவன் பல இல்லையெனில் ஆசிரியர் உருவாகவே மாட்டார் !   இவனோடு மட்டுமே சென்றேன் பள்ளிக்கூடம் இவனால் தானே கற்றேன் பல பாடம் !   இன்னுமா இவனைக் கண்டறியவில்லை ? அட ! பள்ளியில் அணைத்துக் கொள்வோமே இவனைப் "புத்தகம்" என்று !!!                     உறவுகள் என்னுயிர்   கடல் காற்றின் உப்பு வாசம் !! கடவுளைப்போல் நீ கொடுத்தாய் சுவாசம் !!   கருவறையில் சுமந்தாய் பத்து மாசம் !! கண்கள் கலங்கச் சென்றாயே மர்மதேசம் !!   உதடுகள் வீங்கக் கொடுத்தாய் முத்தம் ! உணவுர்கள் தாங்க இருந்தாய் நித்தம்!!   உறவு என்னும் வார்த்தையின் மொத்தம் ! உன் முகம் காணாததால் என் மனதிலே யுத்தம் !! தாயே என்னுயிர் நீயே !!!               அழகியவள்   கோடி உறவு இருந்தாலும் உலகில் என்னை நேசிப்பவள் அழகியவள் !!   இலட்சம் பேர் என்னைத் தவறாகச் சொன்னாலும் நம்பாதவள் அழகியவள் !!   பத்து ஆயிரம் செல்களில் தொடங்கிப் பலகணம் தாங்கியவள் அழகியவள் !!   ஆயிரம் அன்பையும் ஆயிரம் உணர்வையும் எனக்கு அளித்தவள் அழகியவள் !!   ஓரு முறையாவது என்னுள் சுமப்பேன் என் தாயை ஆம் ! அவள் அழகியவள் !                   ஏழை மகள் தாலாட்டு   ஆரோ ஆரிராரோ அன்பே நீயுறங்கு !   சூரியனை மறைத்து வைத்தேன் ! நிலவைக்கூட தேய்த்து வைத்தேன் ! நீ உறங்கிட !!   ஆரோ ஆரிராரோ உயிரே நீயுறங்கு !   விண்மீன்கள் சத்தம் குறைத்தேன் ! காலில் தேள் கடித்தும் பொறுத்தேன் ! உன் தூக்கம் கலையாமல் இருக்க ! பலநூறு தவமிருந்தேன் நீ பிறக்க !   ஆரோ ஆரிராரோ கண்ணே நீயுறங்கு !   குயிலைக் கூவச் சொல்லிடலாம் ! செல்பேசி அலையாலே குயிலெல்லாம் செத்ததடி !   பால்சோறு தந்திடலாம் நிலவக் காட்டி அமாவாசை இன்றைக்கென்று வான்கூட சொன்னதடி !   இல்லாத உணவை உண்ண வைப்பதும் எதைக்காட்டி ? புரிந்துக்கொள் என் தங்கமே ! நீயுறங்கு !       ஞாலம் கொண்டேன்   என்னை பெத்த என்னோட மகராசியே ! எனக்காக உலகில் உள்ள ஒரு வாசியே ! வாய்வலிக்கும் உம் பெருமை பேசியே ! காலமெல்லாம் உம் மடியிலிருக்க ஒருவழி யோசியே !   எட்டுத்திக்கும் எவ்வழி போனாலும் பொட்டு வைச்ச உம்முகத்த பாத்துட்டு போனாதாம்மா உம்புள்ள உயரம் தொடுவேன் ! வெற்றிக்கல்லத் தூக்கி வருவேன் !   அந்தக் கல்லச் செதுக்குனாலும் அழகான உம் முகம் தானே வரும் ! உன் தியாகம் எல்லாம் நினைக்கையில கண்ணோ கண்ணீர் தரும் !   ஒரு நாளும் எனை நீ திட்டாம இருந்ததில்ல ! எனக்கு எப்போதும் பாசம் நீ கொட்டாம கிடந்ததில்ல ! உனக்கொரு தேசம் எப்போதும் நீ கொண்டதில்ல ! இதனால் தான் தாயுறவ எவ்வுறவும் வென்றதில்ல !           மகளின் கண்ணீர்   இயற்கை தாயே உம்புள்ள ஒன்னு சென்னை ஓரம் வந்து நின்னு மக்கட்தொகையக் கொஞ்சம் குறைச்சிடிச்சு ! பல மகளிருக்கு வெள்ளைச்சோலை கொடுத்திடிச்சு !   வெள்ளமொன்று வந்ததற்கு அரசாங்கம் காரணமா ? அடியே நீ காரணமா ? காரணம் யாதொன்னும் தெரியலையே ! கண்டாங்கி கட்டிய என் தாய காணலையே !   உம்புள்ளய அனுப்பி வச்சு எந்தாய தின்னுப்புட்ட ! எந்தாயும் பத்தலன்னு பலதாய கொன்னுப்புட்ட !   பாதகத்தி பலநூறு தவமிருந்தாலும், பத்து மாசம் சுமந்தவளத் தரமுடியுமா ? சிவன் தலையில் பிறையெடுத்து தந்தாலும் அம்மாவ திரும்பத் தான் பெற முடியுமா ?   மருதாணி கூட சிவக்க மறக்கும் ! மல்லிக கூட மணக்க மறக்கும் ! மடியொன்னு கொடுக்க எந்தாயும் மறக்கல, அதைபாத்துங் கூட நீயேன் பொறுக்கல ?   பறிச்சுக்கிட்டியேடி எந்தாய ! எனக்கு பாரத்தத் தான் தந்தாயே !!           அப்பா   என்னுடைய ரத்தத்திற்குச் சொந்தக்கார மன்னவர் என்னுடைய சந்தோஷத்திற்கு என்றுமே விண் அவர் !   உன் வாழ்வில் கிடைக்கா இன்பம் தந்தாய் ! உன் வாழ்வில் கிடைத்த துன்பம் மறைத்தாய் ! அன்று வாழ்வில் தைரிய விதையை விதைத்தாய் ! இன்று என் கைகளால் வைகையில் கறைந்தாய் !   அன்று மீசையை மழித்ததற்கு என்னை அடித்தாயே இன்று மீசையை மழிக்க வருகிறார்கள் படுத்துக்கொண்டிருக்கிறாய்..?   கண்கள் கலங்கக் கூடாது என்றாய் நீ இப்போது கண்கள் கலங்குகிறது துடைப்பாயா நீ ?   எழுந்து வா என் அப்பா ! மீண்டும் பிறந்து வா என் அப்பா !!           மனு   அழகியே நீ பேரழகியே நீ ! என் நிழலும் நீ !! உனக்கு விழலும் நான் !   உன் கால் கொலுசு இளையராஜா இசை ! நீயோ நியுட்டனின் புவியீர்ப்பு விசை !   கவர்கிறாய் கவர்கிறாய் நிலவையே நீ கவர்கிறாய் ! வளர்கிறாய் வளர்கிறாய் கண்கள் பார்த்தபடி வளர்கிறாய் !   பிரிவு பல கண்டிருக்கிறேன் வலித்ததில்லை ! என் இரண்டாம் தாயே ! வலிக்கிறது இன்று உன்னால் உன் பிரிவால் !   என் மனம் வலியை மறைக்கிறது ! ஆனால் கண் என்னும் எட்டப்பன் கண்ணீரால் காட்டிக் கொடுக்கிறது !   கட்டபொம்மன் வாள்பட்டாலும் என்னிதயம் தாங்கும் ! மகளே ! எனை விட்டு நீ சென்றால் அதில் உயிர் நீங்கும் !     கடவுளிடம் வேண்டிக்கொள் தங்கமே ! வேண்டினால் என்னுயிர் உன் கருவறையில் தங்குமே !   இந்தத் தந்தையை ஏற்றுக்கொள்ளடி தாயே !!   என் கல்லரைக்குப் பின் உன் கருவறையில் !!     மறு பிறவி   நான் பிறக்கும் போது தானே நீயும் பிறந்தாய் மறு பிறவியெடுத்து ? அம்மா !!                 பிரித்து விட்டார்களே !   கால்கள் நீட்டி உறங்கவும் இடமில்லை ! கைகள் கட்டிக் கதை கேட்கவும் முடியவில்லை !!   ஓரிடத்திலேயே தனியே அமைதியாய் இருக்கிறேன் ! இருந்த இடத்திலேயே உணவை பெறுகிறேன்!!   உலகிலேயே இது தான் சிறந்த வகுப்பறை ! இங்கு கற்பது தான் கட்டையில் போகும் வரை !!   இங்கிருந்து போக வரவில்லை மனம் ! இங்கே இருக்கக் கடவுள் கொடுத்ததோ முந்நூறு தினம் !!   என்னை இங்கிருந்து பிரித்து விட்டார்கள் பிரித்ததால் கதறி அழுகிறேன் ஒருவர் சிரித்துக் கொண்டு வருகிறார் ஏதேதோ செய்ய உருள்கிறது காலம் நினைவு வந்ததும் தான் தெரிகிறது   சிரித்தது தந்தை நான் இருந்தது தாயின் கருவறை என்று !       தந்தை தாலாட்டு   அசைகின்ற அழகு சித்திரமே ! உன்மேனி முழுதும் பத்திரமே !   என்குருதியில் பிறந்த பவள முத்தே ! உன் பாசத்திற் கீடில்லை உலக சொத்தே !   ஆரீராரோ ஆராரோ ஆரீராரோ ஆராரோ !!   தந்தை பாடும் தாலாட்டு ! தவழும் நிலவே தலையாட்டு ! தவனைச் சிரிப்போ பூ மொட்டு ! மழலை பேச்சோ தேன்சொட்டு !   ஆரீராரோ ஆராரோ ஆரீராரோ ஆராரோ !!   உன் சிரிப்பை வாடகைக்கு எடுக்குமே மலையருவி ! உன் மேனி வாசமோ திரண்ட பாலருவி !   நீ அன்பை மட்டும் அளிக்கும் ஆண்டவனின் கருவி ! நீயே என் குடும்பக் கோயிலின் தனி இறைவி !   ஆரீராரோ ஆராரோ ஆரீராரோ ஆராரோ !!           நட்பு இனியில்லை கவலை   விதையைப் போல ஆரம்பித்தோம் ! விழல் வரும் வரை வந்துவிட்டோம் ! வினாடி பல நூறு கோடி வாழ்ந்து விட்டோம் ! இருந்தும் உன் தோள்களைப் பிரிய வரவில்லை மனம் ! இதயம் துடிக்கிறது இரண்டாயிரம் முறை இனி உன்னைக் காண்பேனா தினம் ?   அரும்பு மீசையுள்ள என் தந்தையாக நினைத்தேன் ! இருந்தும் என் கைகளால் பலமுறை உன்னை அடித்தேன் ! உன் முச்சுக்காற்றையும் உன் வியர்வை வாசனையையும் திரும்பப் பெறுவேனா ??   இனி விதையாக மாறிடுவோம் விதைந்திடுவோம் திரும்பவும் வளர்ந்திடுவோம் இவ்வாறு இருந்திடுவோம் இனியில்லை பிரிவு !!   திரும்பவும் கோடாறி எனும் பிரிவு நம்மை பிரித்தால் மண்ணாக மாறிடுவோம் இனியில்லை கவலை நண்பா !!       கிளையில் உதிர்ந்த இலை   நண்பா !! உன் இதயத்தில் பல யுகங்கள் வாழவா ? உன் அன்பிற்கு முன்னால் என்றும் வீழவா ?   ஏழேழு சென்மத்திலும் உன் நண்பனாய்ச் சேரவா ? உன் நெஞ்சத்தில் அழகிய நினைவோடு ஊறவா ?   தற்சமயப் பிரிவால் கவலை கொள்ளாதே தோழா ! உன் கண்களின் கண்ணீர் எனைக் கொட்டுகிறது தேளாய் !   மேகம் விட்டு மழை பிரிந்தாலும் ஆவியாகி மேகத்தைச் சேருமடா ! இப்பிரிவின் காயம் சீக்கிரம் ஆறுமடா !   சோர்ந்து விடாதே ! சோகம் கொள்ளாதே ! தியாகம் செய்தால் தான் அடுத்தபாதை !   கல்லூரி என்பது கிளை ! நாமோ அதில் உதிரும் இலை ! ஒவ்வொரு மே மாதத்திலும் உதிரத்தானே செய்யும் ! கசப்பாகத் தான் இருக்கும் பிரிவைப்போல ஓவ்வோரு மெய்யும் !   வாழ்வின் முக்கிய பகுதி இது! பிரிவு ! அனைவருக்கும் பொது ! நட்பிலென்றும் பிரிவு இல்லை ! இவையொன்றும் முறிவு இல்லை !   கவலை கொள்ளாதே ! உலகில் உள்ளவரை உனை நினைப்பேன் ! என் உலகம் நீ என்றே உன்னை அணைப்பேன் !!     பிரிவில்லையே   நதி மண்ணோடு போகும் வாழ்க்கை கேட்கிறேன் ! பிரியாமலிருக்கக் கடல் நம்மை பிரித்தால் கவலை வேண்டாம் சகி ! மீண்டும் மழையாகத் தொடர்வோம் !!                     தோழிகளே கரங்கள் தருவீர்களா ?   தோழிகளே !! தோல்விகள் பல கண்டு விட்டேன் தோழிகளே !! துரோகம் பல பெற்று விட்டேன் !!   மரமொன்று கிளைகள் பல கொள்ளலாம் ஆனால் வேரின்றி நிற்காது அதுபோல நான் நண்பர் பல கொள்ளலாம் உங்கள் துனையின்றி வெற்றியில்லையே !!   நம்பினேன் பல களைகளைப் பிறகறிந்தேன் அந்த துரோகத் துளைகளைக் காலம் வரையில் கைகள் தருவீர்களா ?? காயம் அகற்றக் கரங்கள் தருவீர்களா ??   மன்னின் புழு மனிதனைத் தின்னுமே மனிதன் புழுவைத்தின்ற மீனைத் தின்னுவான் இவை வாழ்வின் விதிகள் இதையறியாமல் செய்தார் பல சதிகள் இதைச்சரி செய்ய வேண்டும் உங்கள் மதிகள் !!   அதற்காகவேனும் காலம் வரையில் கைகள் தருவீர்களா ? காயம் அகற்றக் கரங்கள் தருவீர்களா ?       நீயும் நம்பி விட்டாயா ?   தோழியே தோழியே ! முடர்கள் பேச்சை நம்பி விட்டாயே !   உன்னிடம் நான் பேசிய நட்பின் உரைகளை எல்லாம் காதல் வசனமாக நினைத்தவன் தாய் மகன் உறவையும் தவறாக நினைப்பானோ ?   உனைத் தாயெனப் பலமுறை மனதில் உரைத்தேன் எனை நீயின்று பலமுறை உடைக்காமல் உடைக்கிறாய் !   நீ வருவாயெனக் காத்திருப்பேன் என் கண்னே கடைசி வரையில்லை என் கல்லரையில் !   உன் கண்ணீரால் என் கல்லறையைக் கழுவி விடாதே   உன் சிரிப்புப் பூக்களால் அலங்காரம் செய்து விட்டுப் போ !!                   விவசாயம் மற்றும் இயற்கை ஏழை உழவன்   பத்து பேருக்குச் சோறு போட்டா கடவுள்னு சொன்னாங்க ! மொத்த ஊருக்கு சோறு போட்டேன் விவசாயினு சொன்னாங்க !   ஒத்த நாளு பத்து ருபாய் சம்பளமே தந்தாங்க ! மத்த நாளு மொத்தமும் தான் பட்டினி தான் சொன்னாங்க !   உரமெல்லாம் போடாம நிலமெல்லாம் வளர்ந்ததடா நான் நிலமுன்னு சொன்னதெல்லாம் வெறும் கல்லாக இருக்குதுடா !   வயிறு எறியுதடா என் வயிறு எறியுதடா என் வயித்துச் சூடு பட்டுக் குளமெல்லாம் குறையுதடா !                   விவசாயி   தாயின் மறு உருவம் இவன் தானடா இருந்தும் இவனைக் கொல்வது ஏனடா ??   இவன் வாய் கொப்பளிக்கப் பன்னீர் கேட்கவில்லை இவன் விதை விதைக்கத் தண்ணீர் கேட்கிறான் !   உழைத்தால் உயரலாம் என அறிஞர்கள் கூறினர் அப்படியானால் இவன் அடைந்திருக்க வேண்டும் வானின் உச்சம் ஆனால் இவன் அடைந்ததோ பெரும் பஞ்சம் !   கடவுள் என்னிடம் வரம் கேட்டால் உயிர் கொடுத்து உயிர் எடுக்கும் வரம் கேட்பேன்   கிடைத்ததும் உழவனைக் கொல்வேன் ! இல்லா அவனது அருமையை நீங்கள் உணர்ந்த பின்   உயிர் கொடுப்பேன் அவனுக்கு ! அவன் காலில் விழுவோம் நாம் உணவுக்கு   அவன் தாய் தானே, உணவு தருவான் கவலைப் படாதே என் பாரதமே !!     நியாய தர்மம்   விதையை கேட்டேன் பணத்தைக் கேட்டாய் கொடுத்தேன் !   உரத்தைக் கேட்டேன் ! பணத்தைக் கேட்டாய் கொடுத்தேன் !   உணவைக் கேட்கிறாய் ! பணத்தைக் கேட்கிறேன் ! பேரம் பேசுகிறாயே !   இருந்தும் உணவைத் தருகிறேன் உணவு விளைந்த இடத்திலே எனையும் கொன்று புதைக்கிறாயே !   மானிடா !! இது என்னடா நியாயம் ? இது என்னடா தர்மம் ?                   இந்திய முதுகெலும்பு   உலகத்துக்கே சோறு போட்ட பூமியடா இது உழவனுக்கே கேடு செய்யும் பூமியடா இது   நல்லியெலும்பு தின்ன நாய் கூட நன்றி மறப்பதில்ல ! நாலு வேளையும் வாங்கித் தின்ற மனிஷனுக்கு நன்றி உறைப்பதில்ல உழவனுக்கு நன்றியுரைப்பதில்ல !   நன்றி எதிர்பார்த்து அவன் உணவும் கொடுப்பதில்ல நமக்கு செய்த சேவைக்கு அவன் பலனும் பெறுவதில்ல   உண்ன உணவளித்த அவனை யாரும் வாழவிடுவதில்ல ! உயிர் வாழவிடுவதில்ல !   விவசாயிகளின் தற்கொலை விகிதம் இந்தியாவில அதிகம் ! இந்தியனாக இருப்பவனுக்கு இது மிகப்பெரும் அசிங்கம் !   அசிங்கத்த எல்லாம் மறச்சிக்கிட்டு அமைதியாக இருக்காதே ! அடுத்த தலைமுறை உன்பதற்கு உணவே கிடைக்காதே !   விழித்திடு தோழா விழித்திடு விழிக்காவிடில் உன் கருவை அழித்திடு உணவில்லாமல் இறப்பதை விட உடலுக்குள்ளே இறக்கலாம் !   விவசாயிகளின் தற்கொலை குறையட்டுமே நம் தேசத்தின் இழுக்கு மறையட்டுமே !! ஓர் ஆயுட்காலம்   மழை இல்லை ஊரை விட்டுச் செல்லவும் மனமில்லை ! இருந்தும் செல்கிறேன் ! மழை வந்தால் கொண்டு வா என்னைப் பிணமாக புதைத்த இடத்தில் மரமாகவேனும் வாழ்வேன் இன்னுமோர் ஆயுட்காலம் !                                   யார் என்று கண்டறியவும்   இவள் சிறு மில்லி அளவில் வெள்ளியாக விழுவாள் ! இவள் என் அங்கத்தைக் கடும் கள்ளியாகத் தழுவுவாள் !!   அழகு இளவரசி மயிலின் நடன குரு ! இவள் அதிகம் பட்டால் இரும்பில் ஏறும் துரு !!   இவளுக்கும் ஐஸ்கிரிமிற்கும் என்றும் சண்டை இவர்கள் இருவரால் சளியில் நிரம்புமென் தொண்டை   இவள் கொட்டினால் தான் விலங்குகளுக்குத் தழை அட ! இவள் தான் ! சென்னையில் விடாது கொட்டிய மழை !!                       விலைக்கு வாங்கிய அலை   ஆயிரம் ஆயிரம் பிணங்கள் பொறுக்கினோம் ! கண்ணீர் காட்டாமல் மனங்கள் இறுக்கினோம் !   எங்கோ கேட்டது, தாயின் கதறல் ! எங்கோ கேட்டது, சேயின் குமுறல் ! தாயின் கதறல், சேயின் உடலால் சேயின் கதறல், பிணங்களின் திடலால் !   சுனாமி !   கடவுள் விளையாடிய விளையாட்டா ? இந்த எமனும் இயற்கையும் ஒருகூட்டா ?   டிசம்பர் இருபத்து நான்கு கருப்பு தினம் எங்களுக்கு ! பிணங்களைக் குவித்த உலக கோப்பை உங்களுக்கு !   இலட்சப் பிணங்கள் குவிந்தன கடற்கரை ஓரம் சுடுகாட்டில் இடமில்லாமல் அழுததோ பல வாரம் !   எத்தனை வெள்ளைச் சேலைகள் கொடுத்து விட்டாய் ? எத்தனை குடும்பச் சோலைகள் அழித்து விட்டாய் ?   உன்றன் மீன்களை உண்டதற்கு, என்றன் மழலைத் தேன்களை உண்டாயே !   உன்றன் பலமிக்க வீச்சுகளை இந்தப் புழு புச்சிகளை அழிக்கக் காட்டினாயே !   தேசிய கீதத்திற்கு அனைவரும் அசையாமல் நிற்பார் உன் தேசிய கீதம் சொல் நீ வந்தால் ! பாடுகிறேன் !!                     தத்தளித்தோம்   தத்தளித்தோம் மழையெனும் சகதி நீரில் ! இன்னும் போடவில்லை சாலை சரியான தாரில் !   அன்று உலகம் அழிந்தது 2ஆம் உலகப்போரில், இன்று சென்னை அழிந்தது பெருகிய நீரில் !!   வீட்டிற்கு அருகில் வந்தது படகு எரிய வைத்தும் எரியவில்லை விரகு பறவைப்போல் கிடைத்திருந்தால் இரண்டிறகு பறந்திருப்பேன் நானும் பல பொழுது !!                                 தீதும் நன்றும் பிறர்தர வாரா   முட்டாள் மனிதா இயற்கையை முட்டும் மனிதா ! மரத்தை வெட்டும் மனிதா ! பின்போ குடிநீர்க்குத் தட்டும் மனிதா !   நாளைய சந்ததி வாழ்ந்திட வேண்டுமே குடிப்பதற்குப் பலநதி இருந்திட வேண்டுமே !   காவிரி தென்பென்னை பாலாறென்றான் பாரதி இங்கில்லையின்று உருப்படியாக ஒரு நதி !   மழையை மட்டும் நம்பியிங்கு வாழ்கிறோம் மரத்தை வெட்டுவதால் அதிலும் கூடத் தோற்கிறோம் !   மின்சாரம் தந்தும் கையைக்கட்டிக் கேட்கிறோம் தண்ணீர் மரத்தை வெட்டாமலிருந்தால் தானாய் சேர்ந்திருக்கும் இந்நீர் !   பிள்ளையைக் கிள்ளும் மிருகங்கள் இங்கே தான் ! பின்பு தொட்டிலை ஆட்டும் நடிகர்களும் இங்கே தான் !   பெயருக்குத் தானுள்ளது "மழை நீர் சேகரிப்புத் தொட்டி" மழை வராமலிருக்க மனிதன் மரத்தை அழிக்கிறான் வெட்டி !   போதும் மனிதனே போதும் இயற்கையை மோதிய விளையாட்டு ! பின்பு அவள் பாடுவாள் மரணத் தாலாட்டு !   அதற்குமுன் உன் தீய செயலுக்குப் போட்டிடொரு பூட்டு !!       யார் என்று கண்டுபிடி\   இவள் ஒரு திருடி! குறைவான வெளிச்சம் அதிகமான மணத் துகள் !!   இவள் மார்பில் கொடி நாட்டியவன் அமெரிக்கன் இவளே வானின் வட்ட அரிக்கன் !   இவள் முகத்தில் இல்லை கறை இவளே மனதைத் திருடும் நிலவுப் பிறை !!                   காட்டின் கண்ணீர்   ஆலமரம் அழுது துடிக்குதுங்க ! வேப்பமரம் வெம்பிக்கிடக்குதுங்க ! இருப்பினும் இவை அயல்நாடு பறக்குதுங்க ! அரசாங்கம் இதைப்பாக்க மறக்குதுங்க !   கடல்சுறா கறஞ்சு கருவாடா ஆனதுப்போல் காடெல்லாம் கறைஞ்சு வெறும்கூடா போகுதுங்க !! இதனால விலங்குகளுக்கோ பெறும்பாடா ஆனதுங்க !   இயற்கைத் தாயோட சேலையைக் கிழிக்காதீங்க இருக்கின்ற இயற்கை நியதியையும் சுத்தமா ஒழிக்காதீங்க !   அனிமேசனில் காட்டைக் காண வைக்காதீங்க பின்பு இயற்கையின் கோவத்தால் அவளையே பழிக்காதீங்க !   இயற்கையின் வயிறுச்சுட்டால காடெல்லாம் எறியுதா ? சில களப்பிரர்கள் அலட்சியப் போக்கால காடெல்லாம் மறையுதா ?   கடவுளே உன்னோட கண்ணுக்கு இதெல்லாம் தெரியுதா ? தெரிந்த போதிலும் தவறொன்றேனும் குறையுதா ??       வலிக்கிறது தாயே   தாயே உன்னோட குழந்தையென்ன அழித்துக்கொண்டே இருக்காங்க ! இதையெல்லாம் தடுக்காம வீட்டிற்கொரு இலவசம் அரசியல்வாதி கொடுத்தாங்க !   அயல்நாடு அனுப்பி வைக்க ரம்பத்தால எனை அறுத்தாங்க ! மழைக்காலம் வந்தாலும் வெக்க தாங்காம வெயிலத்தான் பொறுத்தாங்க !   வீட்டிற்கொரு மரம் வளர்க்க சொல்லிச்சு சர்காரு இதைச் சரியாக செஞ்சது இங்கதான் எத்தனை பேரு ?   நாங்க தான் உலகத்தின் ஆணி வேரு எங்க தான் இருக்கு எங்களை அழிக்காத ஊரு ? இனிமேலும் எங்களை அழிச்சுப் போடாதீங்க கூறு !   மக்கட்தொகை மட்டும் குறைக்காம மரமாக பிறந்த எங்களக் குறைச்சீங்க மனிதநேயமில்லாம மண்ணிடமிருந்து எங்களப் பிரிச்சீங்க !   மானமேயில்லாம என்னிடமிருந்து பழத்தை பரிச்சீங்க ! வீட்டுமனைக்காக எங்கயினத்தை பாதியா சரிச்சீங்க !   காலொன்னு இருந்தா கூட கடகடவென ஓடியிருப்போம் ! கையொன்னு இருந்தா கூட தற்காப்பு தேடியிருப்போம்   வேரொன்னு இருந்ததால மண்ணுலேயே மாட்டிக்கிட்டோம் வேறொன்னும் செய்யாம மண்ணுலேயே ஒட்டிக்கிட்டோம் !   கோடாறி கொண்டு வந்து எங்களைத் தான் வெட்டிப்புட்டான் கோபுரம் போல மாடிவீடு எங்களால கட்டிப்புட்டான் !   மனிதநேயமில்லாம வெட்டாதிங்க மரத்த ! அறிவாக யோசியுங்க இந்தக் கொடுமைய நிறுத்த !!                                             முன்னேற்றம் இமயம் ஏறிடுவோம் வா   தனித் தீவோடு நீயிருக்க வேண்டாம் தீபோல நீயிருந்தால் போதும் !   திமிரோடு நீயிருக்காதே - நெஞ்சத் தீயை நீ அணைக்காதே !   காளை போல உடல் பலம் வேண்டாம் கத்திப்போல மதிக்கூர்மை வேண்டும் ! கலங்கிய கண்கள் வேண்டாம் கறைபடாத கைகள் வேண்டும் !   யாரிடமும் பொறாமை வேண்டாம் ! விண்போல் புகழ் பெறாமை வேண்டும் ! பித்தன் போல் அறியாமை வேண்டாம் புத்தன் போல் வாய்மை வேண்டும் !   இவ்வாறிருந்தால் இமயம் ஏறிடுவாய் நண்பா இதுபோலிருந்தால் மாறிடுவாய் நீ தெம்பாய் !!                     இலட்சியம்   இலட்சியப் பாதையைக் அலட்சியமாய்க் கடக்காதே ! நிச்சயம் அடைய முடியாததல்ல இலட்சியம் ! உன்றன் மனதோ மரத்தின் பச்சையம் ! கொளுத்த முடியாதது அதில் உன் இலட்சியம்   உன் மனதோ போரின் கூர்வாள் வரலாற்றில் உனைப்பற்றி எழுத வை பேனாவால் !   நித்தம் நித்தம் ரத்தம் உறையக் கத்திச்சொல்   “அடைவேன் இலட்சியம் இல்லை அலட்சியம் !” என்று !!                       படித்தது போதும் படைப்போம் !   ஆலமர விதை நீ விவேகானந்தர் பாதை நீ நீ இந்திய மரத்தின் வேர் ! உழைக்கப் பல கைகளைச் சேர் !   சேர்த்தால் பெற்றிடலாம் வெற்றி கனி ! இந்தியா தான் வல்லரசு நாடு இனி ! சுறுசுறுப்பிற்குப் பல இலட்சத் தேனி, எடுத்துக்கொள் நம்பிக்கையென்ற தோணி !! இதுவே வெல்பவரின் பாணி !   இரத்தச் சூட்டினால் தவற்றைக் கொளுத்து உன்னால் முடியுமென்பதைப் பிறருக்கு உணர்த்து !   இந்தியப் பெருமையைப் பெட்ரோல் விலை போல் உயர்த்து !   இனி மாற்றம் நேர, அரசாங்கமே நீ இளைஞனைப் பணியில் அமர்த்து !               வானமா வாழ்க்கையா ?   வானம் ஒரு மாயம் ! வாழ்வும் ஒரு மாயம் ! வந்தாளும் பல காயம் ! வாழ்ந்திடு உறுதியாய் நீயும் !   நிலவே பலமுறை தேய்கிறது.. நீ தேய்ந்தால் என்னடா ? வானென்பது பிறையையும் பகலவனையும் மாற்றி மாற்றித் தரும் வாழ்வென்பது இன்பத்தையும் துன்பத்தையும் மாற்றி மாற்றித் தரும் !   இது உன் அறிவுக்கு எட்டினால் நீயோ அசைக்கமுடியாக் காட்டு மரம் ! இதை நீ உன் நெஞ்சில் ஒட்டினால் கூர்மையான கோடாறியே உன் கரம் !   சிரித்தவனெல்லாம் சீருடன் உள்ளான் ! அழுதவனெல்லாம் போருடன் உள்ளான் ! என்று வெதும்பாதே ! உன் நிலையை நீயே குறைக்காதே ! நிமிர்ந்து நில் ! மனதில் தைரியம் கொள் !   வாழ் ! வாழும் போதே வாழ்வை ரசி ! வாழ் ! வாழ்ந்த பின் வாழ்க்கை உன்னை ரசிக்கும் படி !   வாழ்க்கையெனச் சொல்வது வாழ்ந்த தருணங்கள் அல்ல ! தருணங்களைத் தந்த மனங்கள் !       இறப்பு   மண்ணில் தின்போம் பல உணவுகளை மண்ணும் தின்னும் நம்முடல் உறுப்புகளை !   மாணிக்கம் பல தந்தாலும் மறைந்த மாயமறிய முடியாதே ! மந்திரம் பல சொன்னாலும் மாண்டவன் திரும்ப இயலாதே !   தேவைப்படும் போது வந்திட மாட்டான் தேவை முடிந்ததும் எடுத்துச் செல்வான் பயணத்தின் பாதியில் இறங்கிட நினையாதே பயனம் முடிந்ததும் வாழ முனையாதே !   பிரம்மன் கொடுத்தான் வாடகைக்கு முச்சு தேதி முடிந்தால் மெத்தமும் போச்சு இது தெரிந்த பிறகெதற்கு அழுகைப் பேச்சு   பிறந்தோம் இறந்தோமென வாழாதே சாதனை புரியாமல் சாகாதே ! வாழும் போது நமக்கிது தோணாதே...   சொல்கிறேன் கேள் ! சிநேகிதா ! ஒருநாள் வாழ்ந்தாலும் பட்டுப்புச்சியைப் போல் வாழடா !!!       குறி தவறாதே   வெடிகள் வீசினாலும் படிகள் தாண்டிச்செல் ! குறி தவறா அர்சுணன் போல் உன் குறிக்கோளை வெல் !   நம் முயற்சிகள் யாவும் எரிமலை முயற்சி செய் ! ஆவியாகும் கடலலை !   உலகம் உனைக் கொட்டிக்கொன்டு தான் இருக்கும் கொட்டும் கைகளை வெற்றிக் கோடாறியால் வெட்டு ! பின்பே உனக்குக் கிடைக்கும் கைத்தட்டு !   ஒரு வெற்றிக்கு ஒருபடி முன்னேற்றம் ! ஒரு தோல்விக்கு இருபடி முன்னேற்றம் !   தோல்வி எனும் தேனி தான் வெற்றித் தேனை ஊற்றும் ! இவையுனக்குத் தெரிந்த பிறகு ஊரே உனைப் போற்றும் !   நம்பிக்கையோடு முயற்சிசெய் நிற்கும் சூறாவளிக் காற்றும் ! நம்பிக்கை நண்பனைக் கூட்டிச்செல் உயரம் உன்னை ஏற்றும் !!     தோழனே வெற்றி நமதே !   மலையை தூக்கிவிடுவேன் என்றால் அது முயற்சி ! வெறும் கையால் தூக்கிவிடுவேன் என்றால் அது வீண்முயற்சி ! விளக்கவே முடியாத புதிர் தானடா வாழ்க்கை ! வெட்டத்தான் முடியுமா வெறும் கையால் தேக்கை !   கோடாறியால் ஒரே நிமிடத்தில் வெட்டிவிடலாம் அதுவே முயற்சியும் வீண்முயற்சியும் !   சில முறை மூடன் சொல்வான் முயற்சியையும் வீண்முயற்சியெனத் ! துளிர் விட்ட செடியும் நிழல் தராதென்பான் ! நிழல் தந்த பின்போ கனி வராதென்பான் ! கனி வந்த பிறகும் சுவையிருக்கா தென்பான் !   தட்டிக்கழித்தவனைத் தகர்த்து விடு ! உன் திறமை தீயினால் அவனை எறித்து விடு ! உன் வாழ்க்கையை வரலாறாக மாற்றி விடு !   உன் தடையைச் சீனப்பெருஞ் சுவராக நினைக்காதே ! சிற்றெறும்பு கூடாக நினைத்திடு தாண்டிடலாம் ! தகரத்தையும் தங்கமாக மாற்றிடலாம் ! தோழனே நம்பிக்கை வை வெற்றி நமதே !!   போராடு போராடு   போராடு போராடு ! வெற்றி பெறும் வரை போராடு ! வெற்றி வந்தாலும், வெறியோடு போராடு ! தோல்வி வந்தாலும், துணிவோடு போராடு !   போராடு போராடு ! நாடொரு காடு, இரண்டு கால் விலங்குகளோடு கவனமாய் உறவாடு ! வைத்திடு ஒரு கோடு ! என்றைக்கும் அதைத் தாண்டாமல் உறவாடு ! எப்போதும் விளையாடு !!                         முத்து வேண்டும்   வெற்றி முத்து வேண்டுமா ? கடலில் முழ்கினால் போதுமா ? கண்ணில் தேடிட வேண்டுமே ! வெற்றி முத்துகள் தோன்றுமே !   சிப்பியென்ற வாய்ப்பினுள் முத்து என்ற வெற்றியுண்டு ! கடலென்ற வாழ்க்கையில் சிப்பியென்ற வாய்ப்புமுண்டு ! வாழ்ந்து பார்த்தால் தானடா வாய்ப்பென்ற சிப்பி கிட்டும், வாழவில்லை என்றால் வாழை கூட உன்னை வெட்டும் !   வாய்ப்பு ஒன்றை நீயும் பெற்று வெற்றி வாகை சூடிடு ! வாழ்க்கையில் நீ தோற்கும்போதும் இக்கருத்தை மீண்டும் தேடிடு !   ஒருமுறை பெற்ற வெற்றிக்கே வேகம் யாவையும் குறைக்காதே ! ஆமையிடம் தோற்ற முயலைப்போல் ஆறியாமையில் இருக்காதே ! ஒரு பூ பூத்த செடிக்குப் பெருமை எதுவும் கிடையாதே ! ஓரு முறை வீசிய வெடிக்கு மலைகள் எதுவும் உடையாதே ! ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்று வெற்றிச் சிகரம் ஏறிடு ! காலமெல்லாம் அடித்துக் கிடக்கும் அலையை போல மாறிடு !!       மூலதனம்   வெற்றி கிடைத்ததற்கு ஆணவம் வந்தால் அது முடத்தனம் !   அடுத்த முறை அடையும் தோல்விக்கு அந்த ஆணவமே மூலதனம் !!     பாசி   நித்தமும் தோல்வி உனை ஆள நேர்ந்தாலும், குளத்தின் தண்ணீர் போல நின்றுவிடாதே !   நின்றுவிட்டால், சோம்பேறித் தனமெனும் பாசிப்படிந்துவிடும் ! ஓடிக்கொண்டேயிரு கடல் பக்கம் தான் !!     தொடுவதற்குள்   "நீ என்னைத் தொடுவதற்குள் என் நண்பனை நான் தொட்டுவிடுவேன் !" வாழ்க்கை சொன்னது மரணத்திடம் சாதனையும் வாழ்க்கையும் நண்பர்களாம் !!       துரோகி   துரோகிகள் இறக்கத்தான் வேண்டுமெனில் வேட்பாளன் சுடுகாட்டில் தான் சுற்ற வேண்டும் ! பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்திட !!     போட்டி   வெற்றி கிடைத்தாலும் பரவாயில்லை தோல்வி கிடைத்தாலும் பரவாயில்லை கலந்துக்கொள்ளாமல் மட்டும் இருந்து விடாதே அது தோல்வியால் வரும் துன்பத்திலும் வெற்றியால் வரும் கர்வத்திலும் கொடுமையானது !!     தீ   பட்டாசு வெடிப்பதற்கு முன் வைக்கும் தீ தான் வெற்றி கிடைப்பதற்கு முன் வரும் தோல்வி !!     புத்தி   புத்தி என்றும் கத்திக் கத்திச் சொல்லட்டும் கத்தி வேண்டாமென !!           யார் என்று கண்டுபிடி   இவனைக் காணாத ஆளில்லை ! இவனைக் கண்டால் அந்த ஆளில்லை !   பிரிவென்ற சொல்லுக்கு மறு பெயர் ! இவன் வந்துவிட்டால் நிகழும் துயர் !   இவன் இருந்தாலும் தொல்லை ! இவன் இல்லாவிடினும் தொல்லை ! இவனைக் காணும் நேரம் என்றுமே மர்மம் ! இவனிடமிருந்து கர்ணனைக் காத்தது அவன் செய்த தர்மம் !   இவனைக் கண்டால் பல ரகசியத்தை அறிவோம் ! நம் உண்மை உறவின் உள்ள நிலை தெளிவோம் !   சிவன் நமக்கு செய்யும் சேவை இவன் ! இவனைப் பெறாத ஆள் உலகில் எவன் ?   கண்டுபிடித்தவருக்கு சபாஷ் !! ஆம் இவனே மரணம் நம் சுடர் அணையும் தருணம் !       காதல் நினைவுக்கத்தி   உன்னோடு சென்ற இடமெல்லாம் உன்னோடு பேசிய வார்த்தையெல்லாம் நினைவாக வந்து நெஞ்சைக் கிழிக்கிறதே !!   ஆமாம் அன்றே தெரிந்திருக்கவில்லை ! என் நெஞ்சை கிழிக்கப்போகும் கத்திக்குத் தான் சானைப்பிடிக்கிறேனென !!     வரம்   கடவுள் என்னிடம் வரம் கேட்டால் உருவம் மாறும் வரம் கேட்பேன் !   என்னை அழகுப்படுத்திக்கொள்ள அல்ல நீ இழந்த உன் தந்தையை என்னில் காட்டிட !!                   கொள்ளை   வள்ளுவன் தோற்றுப் பொகிறான் இவள் குரல் கேட்டு !   கம்பனும் பிறக்க நினைக்கிறான் இவள் எழில் பாட !   அகத்தியனும் ஐயம் கொள்கிறான் இவள் உடல் தமிழ் எழுத்தோ ? என்று   இராஜ இராஜ சோழன் துன்பம் அடைகிறான் ! இவள் விழி வாளால் தான் காயப்படவில்லையே என   சாஜகான் அழுகிறான் கல்லைரையில், தன்னுடைய மும்தாஜ் எனக்காகப் பிறந்துவிட்டாளென !   இவர்கள் ஐவரும் எனை கொல்லப் பார்க்கிறார்கள் இவள் மனதை நான் கொள்ளை கொண்டதால் !!                 காதலியே மன்னிப்பு வேண்டும்   கண்கள் கலங்குதடி ! துடைக்க வர மாட்டாயா ? எனை மன்னித்து விட மாட்டாயா !   என் காதலியே ! என்னுயிர்க் காதலியே !   என் தாய் போலிருந்தாய் ! இருந்தும் எனையேன் மன்னிக்க மறந்தாய் !   உனக்காக என் வரிகள் உனக்காக என் விரல் நுனிகள் என்றும் கவி தந்திடும் ! உன்னைக் கவி பாடிடும் !   நீ எனை உருவாக்கிய சிற்பி உன் பாசத்தை எனக்கும் கொஞ்சம் கற்பி !   நான் தண்ணீரில்லா மரம் ! உன் பாசத்தண்ணீர் ஊற்று உயிர் வரும் !   ஊற்றுவாயா ? எனைத் தேற்றுவாயா ?   இனியாவது எனைப் புரிந்து கொள்ளடி இல்லையேல் என் உயிரை பறித்துச் செல்லடி !!           காதல் செய் உறுதியாய்   உடலில் இருந்து குருதி சிந்த, உயிர் உடலை விட்டு முந்த, உடலையும் உயிரையும் உனக்கு தந்த, உன் பெற்றோரை நீ விசுவாசி ! இருப்பினும் உன் காதலையும் நீ நேசி ! உயிரோடு உயிராக அதை சுவாசி !   காதலென்பது தவறல்ல அது தவம் ! தவத்தைக் கடவுள் கலைத்தால் அதுவும் தவறல்ல அது உனக்கும் வைக்கும் பரிட்சை ! அதை வென்று விடு உன் தடைகளைத் தான்டி நின்று விடு நின்று விட்டால் அவ்வாறு உன் தடைகளைக் கொன்று விட்டால் கடவுள் இருப்பான் உன்னோடு கல்லாக அல்ல தாய் தந்தையெனும் சொல்லாக !!       விளக்கு   வெண்ணிலவே வெண்ணிலவே உன்னை வெல்ல ஒருத்தி வந்துவிட்டாள் ! உனைப்போலவே என் நெஞ்சில் இவள் நிரந்தரமாகத் தங்கிவிட்டாள் !   நிலவின் பட்டு மேனி தென்றல் கூட்ட இராணி என் மனதில் ஏன் வந்தாய் நீ காதல் நோயை ஏன் தந்தாய் நீ   குழந்தை முகச்சரிப்பில் முழ்கடித்தாய் ! சுனாமி அன்பில் சாகடித்தாய் ! கடும் இரும்பு வாள் வீசினாலும் வீழாத மனது எனது ! உன் விழிகளிரண்டால் வீழ்ந்ததடி ! மண்ணோடு மண்ணாகச் சாய்ந்ததடி !   என்னை எப்போது மாற்ற போகிறாய் ? என் வீட்டு விளக்கை எப்போது ஏற்ற போகிறாய் ?     ஆழி   நின்று விடும் என்றுதான் நினைக்கிறேன் நிற்காமல் நீடிக்கிறது அலையை தான் சொல்கிறேன் ! அவளின் மீதான நினைவைப்போல நிற்காமல் நீடிக்கிறது !!           காதல் விஞ்ஞானியுடன்   நான்:   கடவுளே கன்னி மனதைக் கண்டறியும் கருவியொன்று செய்யக் காதல் விஞ்ஞானியை அனுப்பிடு !   கடவுள் அனுப்பிய காதல் விஞ்ஞானியே ! கன்னி மனதில் வைக்கும் ஒலிப்பெருக்கியொன்று செய் ! அப்போதாவது அவள் நினைப்பது கேட்கிறதாவெனப் பார்க்கலாம் !   காதல் விஞ்ஞானி :   கடவுள் படைத்த கன்னி மனதைக் கடவுளே நினைத்தாலும் கண்டறிய முடியாது !   கடவுள் படைத்த நான் எப்படிக் கண்டறிவேன் ? கருவறையில் பெண்ணுடலில் தானே இருந்தாய் ! அப்போது தெரியலையா ?? பெண் மனம் !! ஹாஹாஹா ! நான்:   நீ ஒருமுறை கருவறைக்குச் செல் பின் பெண் மனதைப் பற்றிச் சொல் ஹாஹாஹா !!   (அவன் செல்ல முற்பட்டு திரும்பிய பிறகு)   காதல் விஞ்ஞானி :   புரிந்து கொண்டேன் என் தோழனே ! உணர்ந்து கொண்டேன் என் நண்பனே !   விளக்க முடியாத புதிர் வாழ்க்கை மட்டுமில்லை வாழ்வின் பாதியாகும் பெண்களூம் தான் !   விளக்க முடியாத அனைத்தும் கடவுள் ரசிப்பதற்குப் படைத்தவை கன்னியை அறிந்துக்கொள்வதை விட இரசித்துக்கொள் ! காலம் வசந்தமாகும் ! இன்பம் நிலையானதாகும் !!             தாஜ்மஹால்   தாஜ்மஹால் போன்ற அழகைக் கொண்டவளே ! சாஜகான் காலத்தில் நீயில்லை ! இருந்திருந்தால் அவன் தாஜ்மஹாலைக் கட்டாமல் உன்னைக் கட்டியிருப்பான் ! காதல் தேனைக் கொட்டியிருப்பான் !!     பூத்தேர்தல்   அவளின் கூந்தல் நறுமணமா ? உலகப் பூக்கள் நறுமணமா ? எவையென்று தெரியத் தேர்தல் கேட்டன பூக்கள் தேர்தல் தேவையில்லை "தோல்வி உனக்கே என்றேன்" பூக்களிடம்!!                         காதல் இலக்கணம்   ஒருவரை இழக்காமல் இருக்க ஒருவன் பலரை இழக்கிறான் ! அந்த ஒருவரை அவன் இழக்கும் போது அவன் அவனையே இழக்கிறான் ! இதுவே காதல் ! இது தான் காதல் !!     யார் என்று கண்டுபிடி   இவன் ஓரு வன்முறையாளன் இவனில்லா நாடுமில்லை இவன் சந்திக்கா ஆளுமில்லை !   இவன் இயற்கையின் கடைசிப் பிள்ளை இவனால் என்றும் தொல்லை இவனிருந்தால் போரில் போகும் இவன் சென்றால் பாரில் போகும் இவனே முன்று எழுத்து முத்து இவனே மொத்த உலகின் சொத்து அவனே காதல் காதல் காதல் !!                                 மதிப்புக்குரியவர் புரட்சிக் கனல்   மீசைகள் முறுக்கிய காட்டுத் தீ மின்னல்கள் போன்றவன் நீ ! பாரதி !   மொட்டுகள் விரிந்திடும் உன் பாட்டினிலே மழைச்சொட்டுகள் பின்செல்லும் உன் பேச்சினிலே !   உன் கவிக்குப் பித்தானவன் பலகோடி உலகம் அழைக்கிறது உன் கவியை நாடி !   கத்தியில்லாமல் கவியால் வெள்ளையனை வீழ்த்தியவனே ! புத்தியில்லாமல் கிடந்தவனை விதையாக மேலெழ வைத்தவனே ! தேனீக்கள் கூடு கட்டியதோ உன்றன் வாயில் ? பின்பெவ்வாறு உன்கவிகள் வடிகிறது தேனில்.....?   சாதிகள் பல கோடியை இம்மண்ணில் வெட்டி வீழ்த்தியவனே ! யுக்திகள் பலகோடி இம்மண்ணில் கொட்டித் தீர்த்தவனே !   என்றன் தமிழ்க் கவியின் பிதாமகனே ! நீ சென்ற பாதையில் நானும் செல்வேனே ! நீ போற்றிய தமிழை நானும் சொல்வேனே !!   பாரதி   கொட்டும் மழையும் நின்று விடும் பட்டுப்புச்சியும் மொட்டில் சென்று விடும் வெட்டிய மரமும் மண்ணில் ஊன்றி நின்று விடும் இந்த மாமனிதன் பாட்டினால் இந்த மகாகவி தான் பாடினால் !!                               கவிப்பேரரசு   "மழையொன்று பொய்கையிலே நட்சத்திரம் இருக்காது நட்சத்திரம் இருக்கையிலே மழையொன்று பொய்யாது" என்று இயற்கை சொன்னால்,   "அடி போடி கிறுக்கி உன் பேச்சிலின்று வாய்மையொன்று இல்லையடி என் கவியரசன் எழுதிய பேனாவில் மையென்ற மழையும் கவியென்ற நட்சத்திரம் உள்ளதே அது எவ்வாறு ?" என்பேன் நான் !!   தேனியில் பிறந்ததால் உன் கவியெல்லாம் இனிக்கிறதா ? நீ பிறந்ததால் தான் தேனியென்ற பெயர் இருக்கிறதா ?   கவிதையில் நீயொரு தோணியாக இருக்கிறாய் ! கவித்தாகம் அடைந்தவனுக்குக் கேணியாக இருக்கிறாய் !   நீ கசக்கிப்போட்ட கவியும் ஒரு கோடி பெறுமே ! நீ உருகிப்போட்ட கவியில் உலகம் உனைத் தேடி வருமே !   அழகென்ற சொல்லுக்கு முருகரசன் கவியென்ற சொல்லுக்கு நீ கவியரசன் !!     கவித் தலைவனுக்கு   உன் விரல் நுனி பெற்ற புகழ் பெற்றால் போதும் என் கவி தலைவனே !   என் ஆயுள்வரை காத்திருப்பேன் என் கவி தலைவனே !   கவி வேண்டுமென்றால் காதலியைப் புருவமிடையில் வைக்க சொன்னாய் வைத்தேன் கவி வரவில்லை..... நீ தான் வந்தாய் !   என்னை மன்னித்துவிடு கவித் தலைவனே உன் கவி வரிகள் தந்த மயக்கத்தில் மயங்கி எழுதத் துவங்கி விட்டேன் ! நீயே பெரும் கவி தொகுப்பே நீ கூறியது சரி தான்   உன் தாய் கவிதைகள் கண்டு தானோ என்னமோ தாயின் மீது அளவு கடந்த பாசம் கொண்டேன் அவள் நேசம் புரிந்தேன் !   வைரமுத்து என்னும் என் கவித்தலைவனே உனக்கு நன்றியோடு இவன் !!     நா முத்துக்குமார்   மலையொன்று உடைந்துப் போயிற்று ! மனமிங்கு உடைந்த கண்ணாடி ஆயிற்று ! கடலொன்று வற்றிப் போயிற்று கண்கள் கண்ணீர் கடலில் முழ்கிற்று !   உன்கவிகள் யாவிலும் செந்தமிழ்ப் பூவின் வாசம் உன் பாடல் யாவிலும் கம்பன் தமிழின் வேஷம் !   பாரதியைப் போல் பல வருடம் நீயில்லையெனினும் அவன் கவி போல் பலயுகம் மக்கள் மனதில் வாழ்வாய் !   வள்ளுவன் கவி போலச் சிறிய அளவில் நீயிருந்தாலும் அதன் புகழைப்போலப் பல நூறாண்டு மண்ணில் வாழ்வாய் !   பூக்கள், மலைகள் கண்ணீர் வடிக்கின்றன ! இயற்கைத் தாயும் வெள்ளம் வடிக்கிறாள் ! இனி தங்களை வர்ணிக்கக் கவிஞனில்லையென ! அவற்றுடன் சேர்ந்து நானும் அழுகிறேன் ஐயா !!               ஒப்பாரி   தமிழ் முத்து இராசா எனை விட்டு போணீரு நீரோ போன பின்பு என் கண்ணில் கண்ணீரு !   கவிதைத் தேரெடுத்து ஞாலம் சுற்றி வந்தீரு ! உங்கள் வரிகளில் பல தீமைகளைக் கொன்னீரு மேலுலக தீமைகளைக் களைய அங்கு சென்றீரோ ? காம்பற்ற ரோஜா அலங்கரித்தது ஐயா உன்னை காம்புடைய ரோஜாவைக் கவியால் நீ அலங்கரித்ததால் !   உன் தேகம் இந்த ஞாலம் விட்டு பிரிந்தாலும் நின் கவி மோகம் இந்த ஞாலம் விட்டு பிரியாது !   நீ எழுதியவை யாவும் சின்னதோர் பலப்பத்தால் எழுதியவையல்ல   மேகத்தில் எழுதியவை ! சூரியனில் எழுதியவை நிலாக்களில் எழுதியவை கருவறையில் எழுதியவை! அழியாதவை ஐயா !       சமுகம் தமிழ் மகளிர்   பூக் காம்பை வெட்டி அங்கு கத்தி வைத்து விடு ! மயில் தோகையில் இரும்பு துகளைக் கோத்து விடு !   வைரமுத்து கவியழகை இன்னும் கூட்டி விடு ! காவிரி நீரின் சுவையை இன்னும் சேர்த்து விடு !   கண்ணிமைக்காமல் தமிழர் வீட்டைப் பார்த்து விடு ! நான் கூறியவை தமிழ் பெண்களென்பதை அறிந்து விடு !   இராணுவத்திற்கும் அனுப்பி வைக்கலாம் தமிழ்ப் பெண்களை ! அனுப்பினால் பூமியின் கீழ் தான் எதிரிகள் தலை ! இத்தகு வீரம் இருந்தும் அன்பிற்கே இவர்கள் விலை !   காந்திஜியின் பொறுமைக்கும் இவர்களே எடுத்துக்காட்டு நேதாஜியின் வீரத்திற்கும் இவர்களே எடுத்துக்காட்டு ! இவர்கள் பெருமையை உலகிற்கு எடுத்துக் காட்டு ! கவிதை தீட்டு !! இசை பாட்டு !! திருந்துங்களேன்   தண்ணீரில் எழுதப்பட்டதோ பெண்களின் பாதுகாப்புச் சட்டம் ? இன்றைய கலாச்சாரம் மாறி விட்டதே மகா மட்டம் !   தாயும் கூடப் போர்த்த வேண்டியுள்ளது தேகம் ! கிழவனால் கூடப் பருவப்பெண் நிலைமை சோகம் !   கற்பழிப்பைச் செய்பவனை உயிரொடு கொளுத்து ! மங்கையராய் பிறந்தவர்களோ தமிழின் மெல்லின எழுத்து !   தடைசொல்லி அடைத்து வைக்கத் தாலிக்கட்டி உன்னிடம் அனுப்பவில்லை ! ஆழியும் அலையுமாய் அன்பாய் இருக்க அனுப்பி வைத்தனர் !   சந்தேகப் பார்வையாலே சாதிக்க நினைத்தவளைச் சமாதியில் அடைத்து விட்டாய் ! அவள் கனவுகளைச் சுக்கு நூறாக உடைத்து விட்டாய் ! கடவுளே ! இவர்கள் வாழ்வை ஏன் இவ்வாறு படைத்து விட்டாய் ?   நிறுத்தப்பட வேண்டும் பெண்களுக்கு எதிரான கொடுஞ்செயல் படித்துப்பார்த்துத் திருந்துகளேன் திருக்குறளின் எத்தனை இயல் ?   அழுக்கு   முட்டாள் ஆணே ! முட்டாள் ஆணே ! பெண்களை அழிக்காதே ! முச்சைக் கொடுப்பவர் பெண்கள் தானே என்பதை மறக்காதே !   வயிற்றினில் உன்னை நெஞ்சினில் உன்னை சுமப்பவள் பெண் தானே ! மனதினில் உன்னை மதிதனில் உன்னைக் காப்பவள் பெண் தானே !   இவ்வாறிருந்தும் பெண்னை அழித்தால் முடன் நீ தானே இதையறிந்த பின்னும் கண்ணைத் திறக்காதிருக்கும் ஆண்மை வீண் தானே !   பெண்கள் பெற்ற பெயரை ஆறுகள் பெற்றதால் தானோ, தற்கால பெண்களைப்போல் அவையும் வற்றி வருகின்றன ??   இவை யாவும் நம் தேசம் பெற்ற அழுக்கு தோழனே !   இவை யாவும் ஒவ்வோரு ஆணுக்கும் இழுக்கு தோழனே !   படிந்த அழுக்குகள் எல்லாம் பதிந்தது போதும் ! அணைந்த விளக்குகள் எல்லாம் அழிந்தது போதும் !   கொத்துக்கொத்தாகக் கல்லறை சென்ற பூக்களும் போதும்!   சொட்டுச்சொட்டாகக் கற்கள் கசிந்த கண்ணீர்த் துளிகளும் போதும் !!             யார் என்று கண்டுபிடி   இவன் கண்களால் காணமுடியாத தராசு இவன் பின்னே செல்லும் அரசு   இவன் ஒவ்வொரு நாட்டிலும் மாறுப்படுவான் இவன் அவதூறு செய்தால் கோவப்படுவான் !   இவன் இங்கே மட்டும் சரியாயில்லை எனவே தீயவர்களால் என்றும் தொல்லை   இவனை அறிய அணிய வேண்டும் கருப்புக்கோட்டைப் பின்பு காக்க வேண்டும் இந்த நாட்டை இவன் வில் அம்பு போன்றவன் எளிதில் வளைத்து விடலாம் !   இவன் பல துளைகளை கொண்டவன் எனவே பல பெருச்சாளிகள் தப்பிச் செல்கின்றன !   ஏழைகளை மட்டும் கொட்டும் இவனோ இந்தியாவின் சட்டம் !!               இறைவனே சரி செய்   ஒரு நாளுக்கு ஓரு முறை சாப்பிடு ! மற்ற நேரம் பம்பரமாய்ச் சுற்றிடு ! உன் வியர்வையை அருவியாய்ச் சிந்திடு ! பின்பு என்னிடம் திரும்ப வந்திடு !   இப்போது உனக்குப் புரிந்திருக்கும் ! குழந்தை தொழிலாளரின் துயர் தெரிந்திருக்கும் ! கண்ட பின்பு கண்ணீர் வடிந்திருக்கும் ! துயரக் கடலில் மனதோ மிதந்திருக்கும் !   அந்தப் பிஞ்சுக் கைகளில் பஞ்சம் இருந்த காரணத்தால் தஞ்சம் அடைந்த வைரத்தைக் கொஞ்சங் கூட இரக்கமின்றி கெஞ்சும் அளவிற்கு உழைக்க செய்கிறார் ! இறைவனே நீயறிவாய் இவர் துயரம் ! இனி சிந்தக்கூடாது இவர்களின் உதிரம் !   இனி நிகழக்கூடாது இந்தக் கருப்பு சரித்திரம் ! இனி நிகழ்ந்தால் உலகமே உனை வெறுத்திடும் !!       இறைப்பிள்ளை   தாய்மடிக்கு ஏங்கும் பிஞ்சுகளே ! உங்களை விதைத்தவர்கள் நஞ்சுகளே !   அழாதீர் அவர்கள் வரமாட்டார் ! அன்பை அவர்கள் தரமாட்டார் !   நீங்கள் இறைவன் பிள்ளைகள் ! அவன் கழுத்தின் முல்லைகள் !   கவலை வேண்டாம் கண்ணீர் பூக்களே ! கண்ணீர் வேண்டாம் சுவைத் தேனீக்களே !   உலகில் அனைவரும் அனாதை தான் ! சொந்தமென்பது பெயர்க்கு மட்டும் தான் !   பூக்களில் இருந்து தேனைப் பிரித்தால் தேனும் அனாதை தான் ! கவிதையில் இருந்து கருத்தைப் பிரித்தால் கவிதை அனாதை தான் !   மரத்தை வெட்டி மேசை செய்தால் மண்ணும் அனாதை தான் ! பெற்றோர் பணி செய்யும் வீட்டில் குழந்தையே அனாதை தான் !   அன்பு மொட்டுகளே ! தனிமையைக் கண்டு ஏங்காதீர் தன்னம்பிக்கை இருக்கத் தயங்காதீர் !             உலகக் குழந்தை   ஓரு வகுப்பறையில் விடுபடும் கணத்தில் அடுத்தொரு வகுப்பறையில் அடைபடுவாய் !   பெயர் வைக்கவும் ஆளில்லை ! பெயரால் அழைக்கவும் ஆளில்லை !   எந்த மதமும் இல்லை ! எந்த இனமும் இல்லை !   செடியில் மலராத முல்லை ! தாய் மடியில் வளராத பிள்ளை !   நீயே உலகக் குழந்தாய் ! நீயே தானாக வளர்ந்தாய் !   மனிதா இவனை ஏனடா தெரிந்தும் காக்காது விடுத்தாய் ? மரத்தில் உதிரும் இலையென உதிர்த்தாய் !!                       திருநங்கைகள்   ஆண்மையின் தன்மை கொன்று பெண்மையின் தன்மை கொன்டு தாய்மையின் தன்மை அற்று மலட்டுத்தாயாக வாழ்பவள் ! பிள்ளைப்பேறு நிகழாமல் இறப்பவள் !   கடவுளின் கை நடுக்கமா ? தந்தையின் உடல் குழப்பமா ? இவர்களின் இந்த நிலை ! இவர்களோ சந்திப்பிழை ! இவர்களோ கானல் நீரின் மழை ! கடவுளே ! இனியாவது சரியாக விளை !   வாசம் இருந்தும் பூக்கள் இல்லை ! வண்ணம் இருந்தும் வானவில் இல்லை ! சோதனை இருந்தும் சோர்வது இல்லை ! சாதனை புரிந்தும் மனிதராக மதிப்பதில்லை !   இனியாவது திருந்துவோம் நண்பா ! திருங்கையரை வளர்ப்போம் நண்பா !   திருநங்கையருக்கு தனிவரிசை கொடுப்போம் ! தினம் அவர் காணும் கொடுமைகளைத் தீர்ப்போம் !!   அவர்களைக் காப்போம் !! நல்ல சமுதாயம் பார்ப்போம் !!       போதை   நம் பண்பாட்டை நாமே மறந்து விட்டோம் ! தீய போதையிலே பலரை இழந்து விட்டோம் !   பல சந்ததி நாமோ கடந்து விட்டோம் ! கலாச்சாரத்தை நாமே நாடு கடத்தி விட்டோம் !   அன்றோ பல பெண்கள் நல்ல போதனைக்கு அடிமை இன்றோ சில பெண்களும் தீய போதைக்கு அடிமை !   இதனால் கெட்டு அழிகிறது இளைஞர்கள் தேகம் ! என்று வருமா மதுவிலக்கெனும் உலகம் ?   பல அறிஞர்கள் அழிந்ததும் இந்த போதையில் தான் பல இளைஞர்கள் அழிவதும் இதில் போகையில் தான் ! இளைஞனே உன் இலட்சியப் பாதைக்கு அடிமையாகலாம் ! உன் இச்சை போதைக்கு அடிமையாகலாமா ?   உன் சக்தியே இந்தியாவின் கண்ணாகும் நீயே போதைக்கு அடிமையானால் இந்தியா நிலை என்னாகும் ??     புலம் பெயர்ந்த தமிழர்கள்   புலம் பெயர்ந்த தமிழர்கள் நாங்கள் இலங்கை அகதிகள் இல்லை நாங்கள்   உடல்கள் நூறு துண்டாக வீழ்ந்தாச்சு விவசாய நிலத்தில் ரத்தவெள்ளம் பாய்ந்தாச்சு !   உள்ளங்கை ரேகையாக அழியாமலிருக்க வேண்டாம் நெற்றியின் சந்தனமாக ஒரே நாளில் அழிக்காதீர் !   தமிழனை அழிப்போமென்பதா உங்களின் தேசிய கீதம் ? செய்த பாவம் துரோகம் யாவும் போதும் !   வெட்ட வெட்ட வந்து கொண்டே இருப்போம் வெட்டினால் வீழ்வதற்கு மரமில்லை ! மரத்தை உருவாக்கும் மேகங்கள் ! மேகத்தை வெட்டுதலாகுமா ? காட்டில் தீ வைக்க முடியும், காற்றில் தீ வைக்க முடியுமா ?   எம்முடலை உம்மால் எறிக்க முடியும், என்னினத்தை உம்மால் குறைக்க முடியாது !!   கடவுளே !   பெரிய பள்ளம் செய்திடு ! பெரும் காந்தகத்தால் அனைத்து ஆயுதத்தையும் பறித்திடு ! அவ்வாயுததங்களை அப்பள்ளத்தில் புதைத்திடு ! இந்த இரத்த போராட்டத்தை இப்படியேனும் நிறுத்திடு !!           விழியற்றவன் வலி   நான் காண வேண்டாம் தீயதைக் காண வேண்டாம் என்பதே உன் முடிவோ ? நீ இருளென்பதென் மரூஉவா ? உனைத் தினம் காண்பதற்கா எனைக் குருடாக்கினாய் கண்ணைத் திருடிக்கொண்டாய் ?   கடவுளே ! கவிதையென்ற உடலில் கருத்தென்ற விழியைச் சேர்க்காத முட்டாள் கவிஞன் நீ தெய்வப் புலவனிடம் கருத்தைப்பற்றிக் கற்று வா விழியில்லாதவனின் துயரம் பற்றிக் கேட்டு வா !   மது அருந்திவிட்டுச் செதுக்கினாயோ ? காலை நேரம் விழியோரமுள்ள தூக்கத்தில் என் விழியைப் பறித்தாயோ ?   இனி தவறு செய்தால் இந்திரலோகத்தின் நீதிமன்றத்தில் பதிவேன் வழக்கை செய்தால் பாழாகி விடும் உன் வாழ்க்கை இனியாவது வேலையைச் சரியாக செய் !!     சாதி வேண்டாம்   சாதி வேண்டுமென்றால் உணவை உண்ணாதீர் ! உணவு உருவாக்கிய விவசாயி பள்ளன் !   சாதி வேண்டுமென்றால் உடையை உடுத்தாதீர் ! உடையைத் துவைப்பவன் அவனொரு வண்ணான் ! சாதி வேண்டுமென்றால் அழகாக இருக்காதீர் ! முடி வெட்டுபவன் அம்பட்டன் !   சாதி வேண்டுமென்றால் தேனைக் குடிக்காதீர் ! தேனை எடுப்பவன் குறவன் !   கடவுள் படைத்த மனிதனென்றால் மட்டும் அனைத்து உதவியையும்' பெறுங்கள் !   "சாதியென்பது உயிர் முச்சு வறட்டு கௌரவமென்பது இதயம் மதமென்பது எந்தன் இரத்தம்" என நினைக்கும் முடர்களே !   இவை மூன்றும் சென்ற பிறகு உமைப் புதைப்பவனும் வேறு சாதிக்காரனென உணர்ந்த பின்பெதற்கு சா'தீ'யைக் கொண்டாடுகிறீர் !   பள்ளியிலும் கல்லூரியிலும் உள்ள படிவத்தில் மட்டும் பயன்படுத்தலாம் சாதிச் சண்டையில்லா நாடென்பதை மற்றவருக்கு நாம் உணர்த்தலாம் !   வாருங்கள் ! என் தோழர்களே ! அன்பெனும் இதமான தண்ணீரால் சாதியெனும் காட்டுத்தீயை அணைக்கலாம் ! வாருங்கள் ! என் நண்பர்களே ! பாசமெனும் இளகிய கரங்களால் மனிதனெனும் கடவுள் படைப்பை இணைக்கலாம் !                                         கடவுளிடம் பிரார்த்தனை   தாய் மடி மீது தூக்கம் தாயிடம் ஒரு வாய் சோறு ! தந்தை போல் கூரிய மீசை ! அவரிடமே திருடும் உடல் மொழி !   தம்பியிடம் ஒரு நிமிடச் சண்டை ! சண்டை முடிந்ததும் ஒன்றாகும் பாசம் ! நண்பனுக்குக் கொடுக்கும் செல்ல உதை! உதைத்தாலும் உடையாத இனிய நட்பு !   தோழியின் குரலால் இனிய அறிவுறை ! அறிவுறை முடிந்ததும் தவறைச் செய்தல் !   காதலியின் உதட்டில் காதலிக்கிறேனென்ற வார்த்தை ! அதே உதட்டில் இறுக்கமான முத்தம் !   மனைவியின் அன்பான சந்தேகம் ! சந்தேகத்தை விளக்கும் சந்தோஷ முயற்சிகள் ! குழந்தையின் பால் முகச்சிரிப்பு ! வளர்ந்ததும் அதன் இனிய மழலை உச்சரிப்பு !   இறுதிவரை முதியோர் இல்லம் செல்லாதிருத்தல் ! இருவருக்குமே உயிர் ஒன்றாக பிரிதல் ! அடுத்த பிறவி இல்லாமல் கல்லறையில் இருவருக்கும் இனிய தூக்கம்!   தீண்டிப் பார்க்காத வேதனை இவையே இந்த மனதின் பிரார்த்தனை !!     சில சொப்பணங்கள்   சில சொப்பணங்கள், என் மனதைச் சொக்க வைகின்றன !   அரசியல்வாதி தேர்தல் வாக்குறுதி தருகிறான் !   "வீட்டிற்கொரு விதை ! அது மரமாகும் ! பின் ஒவ்வோர் இலையும் பணமாகும் !"   அதற்குத்   "தண்ணீரில்லாமல் விதைக்க விதையெதற்கு"   என்கிறானொரு உழவன் !   சில சொப்பணங்கள், என் மனதைச் சொக்க வைகின்றன !   குருவியெல்லாம் கூட்டமாகக் கூட்டிற்குச் செல்கின்றன ! குருவிக் கூட்டிலொரு குயில் சத்தம் ! அது குருவியின் அழைப்பேசி சத்தம் !   குருவிகள் பேசப்பேச மனிதர்கள் மாண்டு விழுகின்றனர் !   "இப்படித்தானே இறந்தோம் நாங்களும்"   சிரிப்புடன் சொல்கிறது குருவி சில சொப்பணங்கள், என் மனதைச் சொக்க வைகின்றன !   விவசாயிகள் விதைகளை விதைக்காமல் விந்துத் துளிகளை விதைக்கின்றனர் ! விஷமற்ற மனிதன் வருவானாயென்று !   மரங்களுக்ககெல்லாம் இறக்கை முளைக்கிறது வேறு பூமித்தேடி அவை உயரப் பறக்கின்றன ! எங்கு செல்கிறீரென மனிதன் கேட்க,   "தவித்த வாய்க்குத் தண்ணீர் தருதல் தான் மரபு என்பீர் மழை தரும் எங்களுக்கே தண்ணீரில்லை என்பீர் !"   என்று சொல்லி இறுதியிலும் கண்ணீர்த் துளிகளைத் தந்துவிட்டுச் செல்கின்றன !   சில சொப்பணங்கள், என் மனதைச் சொக்க வைகின்றன !                     யார் என்று கண்டுபிடி   இவனை எவனும் விட்டுச் செல்ல மாட்டான் ! தன்னை விதைத்தவனை விழுங்கிய மாற்றான் !   கருப்பு வெள்ளை நிற போதை அதிகம் இருந்தால் மனிதனாவான் பேதை ! காந்தியைக் கொன்றவன் இவன் தான் உலக சாந்தியைக் கொல்பவனும்; இவன் தான் இவன் கையில் தொடக்கூடிய தீ சரியான வழியில் பயன்படுத்து நீ   உயிர் உடல் விட்டுப் பிரிந்தால் பிணம் இதற்கிடையில் வாட்டும் இவனோ பணம் !!                   ஏனடா ?   எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை முடிவல்ல ! உனக்கு உரிமை இல்லை உன்னுயிரைக் கொல்ல !   உலகில் பல உண்டு உன்னறிவால் வெல்ல ! எப்படி மனம் வருகிறதோ பெற்றோரை விட்டுச் செல்ல !   காதலென்பது பருவப் பிழை ! இதற்கு உன்னுயிரா விலை ?   வாழ்க்கையோ அழகிய வானவில் மழை ! வாழ்ந்து செல்லடா ! செய்யாதே தற்கொலை !   கடவுள் கொடுத்த உயிர் இதுவே ! மரணமென்பது அனைவருக்கும் பொதுவே !   கடவுள் கொடுத்ததை அவனே எடுப்பான் ! இன்பத்தையும் துன்பத்தையும் அவனே கொடுப்பான் !   இதற்காகத் தற்கொலை பாதைக்கு செல்லலாமா ? தைரியமாக இருந்தால், உலகையே வெல்லலாம் !! வா !   தேறி விடுவாயா ? வாழ்க்கைப் படியை ஏறி விடுவாயா ?   மாறி விடும் ! வாழ்வின் காயம் சீக்கிரத்தில் ஆறி விடும் !!           எமலோகம்   எமலோகத்தில் ஒருநாள் வழக்கமான ஆள் சேர்க்கை   "எமன் :   அடே ! சித்திர குப்தா ! வந்த மானிடரை வரிசையில் வரச்சொல் கேட்கும் கேள்விக்குப் பதில்களைத் தரச்சொல் !   சித்திரன் :   உத்தரவு எமனே ! உம் முன் அனைவரும் சமனே !   மாந்தர் மந்தையே வரிசையில் வா ! வந்து நின்று பதில்களைத் தா !   எமன் :   இவர்களது பாவ புண்ணியங்களைப் பட்டியலிடு !   சித்திரன் :   இவன் ஒரு அரசியல்வாதி இவன் சமூகத்தின் தீரா வியாதி ! இவன் சேவை செய்ய வரவில்லை ! ஏழைகளின் சாவைச் செய்ய வந்தவன் !   இரத்த தானம் செய்ததே இவன் செய்த புண்ணியம் ! பல மனைவிகளை வைத்திருந்தது பாழாய்ப் போன இவன் கண்ணியம் !   எமன் :   நெருப்பை மூட்டித், தீயில் வாட்டி வறுத்தெடுங்கள் ! இவன் உடலைக் கூராம் அரிவாளாலே அறுத்தெடுங்கள் !   அதற்குமுன் ஓராண்டு சொர்க்கம் பெறட்டும் !!   சித்திரன் :   அடுத்தவன் இவனோ கூலிப்படைத் தலைவன் ! காசை வாங்கி ஆளைக் கொன்றான் ! அது தான் அவனது தர்மம் என்றான் ! அவனே எமனாம் சொல்லிக் கொண்டான் ! அரசியல்வாதி வில்லென்றால் இவன் தான் பாணம் !   ஒருமுறை அன்ன தானம் செய்தான் பலமுறை பலரின் தலைகள் கொய்தான் !   எமன் :   நெற்றி வழியாகக் கடப்பாறையை இறக்குங்கள் ! இவனது விரல்கள் இருபதையும் பொடியாய் நறுக்குங்கள் !!   அதற்குமுன் ஓராண்டு சொர்க்கம் பெறட்டும் !!     சித்திரன் :   அடுத்தவள் பெண் ! இவளொரு வேசி ! முகத்தில் அலங்காரம் பொய்யாய்ப் பூசி ஆண்களைக் கட்டிலுக்கு இழுத்தாள் பல குடிகளைக் கெடுத்தாள் ! இவளது உடலைப் பல மனிதருக்குத் தானம் செய்ததோடு உறுப்புகளை மருத்துவமனையிலும் தானம் செய்துள்ளாள் !! இதுவே இவளது புண்ணியம் !!   எமன் :   அட்டைப் பூச்சியை மேலே விட்டு உதிரம் குடிக்கச் செய்யுங்கள் ! பாம்பின் விஷத்தைக் குடத்தில் நிரப்பி முழுதும் குடிக்க வையுங்கள் !!   அதற்குமுன் ஓராண்டு சொர்க்கம் பெறட்டும் !!   சித்திரன் :   இறுதியில் வந்தவன் ஒரு குடிகாரன் ! குழந்தை என்று தன்னைக் கூறுவான் ! போதை மதுவில் நாளும் ஊறுவான் !   குடும்பம் கனவைத் தொலைத்து அழுது கிடக்கும் ! போதைக் கனவில் இவன் மிதந்து கிடப்பான் !   மழையும் வெயிலும் இவன் கூரையைக் கடக்கும் ! சோகத்தோடே இவன் குடும்பப் பொழுதுகள் நடக்கும் !!   செய்த புண்ணியம் ஒன்றுமே இல்லை ! சொர்க்கம் புகும் வழியும் இல்லை !!   எமன் :   மாட்டின் கொம்பில் குத்துங்கள் !! ........   (அதற்குள் குடிகாரன் உரத்த குரலில்)   குடிகாரன் :   தர்மம் அறிவாய் ! எம தர்ம ராஜனே !   நானோரு குடிகாரன் தான் ! புண்ணியம் அற்றவன் தான் !   என்றன் பணத்தை அரசியல்வாதி எடுத்தான் ! அதில் தான் இரத்த தானம் கொடுத்தான் ! அவனிடம் பணத்தை அடியாள் பெற்றான் அன்ன தானமும் அதில் வந்ததுதான் !     மீதியை அவனும் வேசிக்குத் தந்தான் அதில் வளர்த்த உறுப்பே தானமானது ! எனவே, கணக்குப் போட்டால் எனக்கும் இங்கே நான்காண்டு சொர்க்கம் நல்குக" என்றான் !!   சிறிது நேரம் யோசித்த எமனோ நால்வருக்கும் நரகமே நல்லது என்றான் !!   ______*****______   கவிஞரைப் பற்றி   பெயர் : மா. கார்த்திக் பெற்றோர் : ஏ. மாரி மா. மகாலட்சுமி பிறந்த தினம் : 04.10.1997 ஆர்வம் : கவிதை, கதை, திரைக்கதை கல்வித் தகுதி : இளங்கலை பொருளியல் கல்லூரி : து.கோ வைணவக் கல்லூரி ஈர்த்த கவிஞர்கள் : வைரமுத்து, பா. விஜய் தொலைபேசி : 7358522448 நோக்கம் : சமூக நலன், இலக்கியத் தேடல்