[] [cover image] விழி காணாக் கனவுகள் கார்த்திகா சுந்தர்ராஜ் FreeTamilEbooks.com CC BY-NC-SA-ND விழி காணாக் கனவுகள் 1. விழி காணாக் கனவுகள் 2. என்னுரை 3. நூலுரை 4. சாமானிய சமுதாயம் 1. 1. சாமானியன்… 2. 2. தீண்டாமைக்கு உரியவன்… 3. 3. வேஷம்… 4. 4. எச்சம்… 5. 5. உயிர் பேசுகிறேன் 6. 6. பாத்திரம்… 7. 7. உழவன்… 8. 8.அயல்நாட்டு மோகம்… 9. 9. மாறாதது… 10. 10. ஏகாதிபத்தியம்… 11. 11. மூட நம்பிக்கை… 12. 12. சாதி… 13. 13. ஊமை விழிகள்… 5. பெண்ணியல் 1. 14. விதி வழி… 2. 15. கள்ளி… 3. 16. வெறி… 4. 17. மணம்… 5. 18. பண்பாடு… 6. 19. பிச்சை… 7. 20. எதிர்பார்ப்பு… 8. 20. தட்சணை… 9. 21. விலை… 10. 22. பெண் வீட்டார்… 11. 23. குடிமகன்களுக்கு மட்டும்… 12. 24. வேகம்… 13. 25. பிறவி… 14. 26. ஆண்களுக்காக… 15. 27. அமாவாசை… 16. 28. உண்மை… 17. 29. பாவனை… 18. 30. விதி… 19. 31. பிச்சை பாத்திரம்… 6. அச்சமில்லை அச்சமில்லை 1. 32. நானும் பெண் தான்… 2. 33. அடிமைகள் அல்ல அழிக்கும் சக்திகள்… 3. 34. ஆண்மை… 4. 35. இவள் பெண்… 5. 36. வேலுநாச்சி வீரம்… 7. எதிர்நீச்சல் 1. 37.தோற்றுப் பார்… 2. 38. எண்ணம்… 3. 39. என் பயணம்… 4. 40. விதை… 5. 41. கற்பனை… 6. 42. புரிதல்… 7. 43. தெளிவு… 8. 44. முயல்… 9. 45. ஏக்கம்… 10. 46. துணிந்து செல்… 11. 47. சிரிப்பு… 12. 48. கற்றது கையளவு… 13. 49. வெற்றி… 8. கூடு 1. 50. அம்மா… 2. 51. காமமல்ல காதல்… 3. 52. கருவறை காதல்… 4. 53. ரணம்… 5. 54. சமநிலை… 6. 55. அப்பா… 7. 56. கிளிப் பேச்சு… 8. 57. தோள்… 9. 58. தோழமை… 9. இது காதல் களம் 1. 59. வினா… 2. 60. விருப்பம்… 3. 61. கெஞ்சல்… 4. 62. தெரியும்… 5. 63. காதல்… 6. 64. அவனும் நானும்… 7. 65. தூரம்… 8. 66. பேப்பரும் பேனாவும்… 9. 67. கிறுக்கல்… 10. 68. தேடல்… 11. 69. விதியின் ஓசை… 12. 70. காத்திருப்பு… 13. 71. வேற்றுமை… 14. 71. மெய்… 15. 72. கைபேசி காதல்… 16. 73. பொழுது… 17. 74. பிறப்பு… 18. 75. ஆசை கள்வனுக்கு அன்பு விண்ணப்பம்… 19. 76. மறவேன் உனை… 20. 77. ஆசை… 21. 78. மெளனம் பேசுதே… 22. 79. காதல் அழைப்பு… 23. 80. அன்புள்ள காதலனுக்கு… 24. 81. சில்லறைக் காதல்… 25. 82. ஏங்கும் நெஞ்சம்… 26. 83. சேமிப்பு… 27. 84. காதல் கணை… 28. 85. இப்படிக்கு உன்னவள்… 29. 86. நியூட்டன் விதிகள்… 30. 87. காதல் பதிப்பு… 31. 88. மணம் விரும்புதே உன்னை… 32. 89. பௌர்ணமி… 33. 90. கள்வனின் காதலி… 10. மறவாயோ மனமே 1. 91. ஆயுள்… 2. 92. விட்டுச் செல்லாதே… 3. 93. புரியாமை… 4. 94. காதல் மொழி… 5. 95. கனம்… 6. 96. மன மயக்கம்… 7. 97. பாடம்… 8. 98. அறிவுறுத்தல்… 9. 99. முகமூடி… 10. 100. ஐயம்… 11. 101. காதலிக்க வருவாயோ… 12. 102. கண்ணீர் ஓவியம்… 13. 103. முதல் தோல்வி… 14. 104. ஏற்ப்பாயா எனை… 15. 105. செந்நீர்… விழி காணாக் கனவுகள் விழி காணாக் கனவுகள்   கார்த்திகா சுந்தர்ராஜ்   karthikasundarraj2221997@gmail.comதமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC BY-NC-SA-ND கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Vizhi_Kaanaa_Kanavugal} என்னுரை [] வணக்கம்! இதுவரை தமிழில் இரு வேறு தளங்களில் வெளியிடப்பட்ட என்னுடைய கவிதைகள் முதன் முறையாக இந்நூலில் புத்தக வடிவில் களம் காண்கின்றன. இந்நூலில் வரும் அனைத்து பதிவுகளும் என் தனிப்பட்ட கருத்துக்களை மட்டுமே மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை. எவரையும் எவ்விதத்திலும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டவை அல்ல. என் எழுத்துக்களுக்கு ஊக்கம் அளித்து நான் இந்நூலினை வெளியிடுவதற்கு காரணமாய் அமைந்த என் பெற்றோர், வழிகாட்டிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு, ப்ரியமுடன் உங்கள், கார்த்திகா சுந்தர்ராஜ் நூலுரை ஒரு எழுத்தாளனுக்கு கிடைத்த வெற்றி என்பது அவன் எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். எண்ணங்கள் கருவுற்றிருந்து அனுபவங்களாய் முதிரும் பொழுது எழுத்துக்களாய் களம் கண்டு ஆழ்மனதை தட்டி எழுப்புகின்றன. எண்ணமும் எழுத்தும் படிப்பவர் மனதில் திண்ணமாய் பதிந்து விடில் அதை காட்டிலும் ஒரு எழுத்தாளனின் வெற்றிக்கு முகாந்திரம் வேண்டியதில்லை. இந்நூலில் நாம் ஒவ்வொருவரும் ஒரு சாதாரண மனிதனாய் நம் நடைமுறை வாழ்வியலில் கடந்து வரும் திருப்பங்களை எழுத்து வடிவில் பகுத்துள்ளேன். என்னைப் பொறுத்தவரையில் நான் இந்நூலில் முக்கியமானவையாகக் கருதுவது யாதெனில் இன்றைய உலகில் பெண்களுக்கு எதிராகப் பரவி வரும் ஆணாதிக்க வன்மங்களையும் சமூக விரோத செயல்களையும் (பெண்ணியல்) அதற்கெதிராக பெண்கள் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களையும் (அச்சமில்லை அச்சமில்லை) பதிவுகளாகத் தொகுத்து இரு களங்களின் கீழ் குறிப்பிட்டுள்ளேன். மேலும் சாமானியனிடத்தில் ஒரு சமூகத்தின் பார்வை எவ்விதம் பதிகிறது என்பதை மேலுமொரு களத்தில் (சாமானிய சமுதாயம்) என் வரிகளின் மூலமாகப் பதிந்துள்ளேன். இவ்விரு களங்களில் உள்ள பதிவுகளை வாசகர்கள் படிக்கும் கணத்தில் மனதளவில் இவ்வித கொடுமைகளுக்கு எதிராக சிறிதளவு மாற்றம் நிகழ்ந்தால் கூட அதுவே என் எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். என் எழுத்துக்களுக்கு வலிமையிருப்பின் மாற்றம் கட்டாயமாக்கப்பட்டது என நம்புகிறேன். -கார்த்திகா சுந்தர்ராஜ் சாமானிய சமுதாயம் 1. சாமானியன்… [] அண்டம் அழகிழக்கிறது ஆண்டவனின் அர்த்தமற்ற படைப்புகளால், உலை கொதிப்பது கனவாகிறது சில களைச் செடிகளின் இடைமறைப்பால், ஒரு வாய் சோற்றுக்கு ஊசலாடும் உயிர்களும் பல உண்டு, ஈசலைப் போல் ஒரு தினத்தில் முடித்துக் உயிர்களும் ஏராளம் இங்கே, பட்டினியில் வாழும் அவர்களுக்கு பட்டுத் துணி ஏது? சாக்கினை போர்த்திக் கொள்ளும் ஜனங்களுக்கு மத்தியில் தான் சாக்கடைகளும் ஓடுகின்றன, செருக்கும் சில சில்லறைகளால் செருப்பற்றவர்களின் வாழ்வு சிதைக்கப் படுகிறது, சமூகத்தால் புதைக்கப் படுகிறது சாமானியனின் கனவு, நவீன நாகரிகத்தின் மத்தியில் நாசமாகிறான் அவன், அறிவற்ற சிலரால் அடையாளம் தொலைக்கிறான் அகதியைப் போல, எடுக்கும் பிச்சைக்கு ஏராளம் வரிகள், அதிலும் கூட பங்கு உண்டு என் அரசாங்கத்திற்கு, நான் இந்நாட்டவன் என நினைவில் கொள்வதற்காக. 2. தீண்டாமைக்கு உரியவன்… [] இவன் தீண்டத் தகாதவன் தான்,  அதில் என்ன ஐயம் உங்களுக்கு???  நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் இவனது வலிமையை??? சமூகத்திற்க்காக உழைக்கும் ஒருவனின் சேவை, இவர்களை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை, நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் இவனது வலிமையை???  சமூகத்திற்க்காக உழைக்கும் ஒருவனின் சேவை, இவர்களை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை,  ஒதுக்காமல் இருந்தால் போதும் உயர்வர் ஒரு நாள், உள்ளத்தில் வலிமை உள்ள ஒருவனை ஊக்கம் உயர்த்தும்,  உண்மை தனை உலகிற்கு உணர்த்தும் காலம் வெகு தூரம் அல்ல,  அப்போது தான் புரியும் அத்தீண்டத்தகாதவனின் அருமை. 3. வேஷம்… [] கண்கள் கலங்கத்தான் செய்கின்றன, நீ கல் சுமக்கும் தருவாயில், கனவுகளை களைத்து விட்டனரா கல்வி வரி விதித்த காமுகர்கள், பேனா கிறுக்கும் கரங்கள் பேப்பர் பொறுக்கும் அவலம், கற்கை நன்றே, பிச்சை புகினும், கலங்கப்பட்டு விட்ட கல்வி வணிகத்தால், வாடகை வசிப்பிடத்திற்கும் வழியற்றுப் போய் வறுமையில் திளைக்கும் வருங்கால இந்தியாவின் தூண்கள், இப்போது கூறுங்கள் யாரிடம் தெரிவிக்க வேண்டும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை??? செங்கல் சுமக்கும் சிறுவனித்திலா??? அல்ல சிதைக்கப்பட்டு விட்ட சாமானிய சந்ததியிடமா??? 4. எச்சம்… [] காதல் நலிந்து காமம் முற்றியதால் கருவாய் கனிந்த நான் கண் திறக்கும் முன்பே களையறுக்கப்பட்டேன் வேண்டாத பயிரினைப்போல், கற்ப்பின் சிறப்பினை அறியாத கயவர்களால் கருவறையில் மட்டும் வாழ்ந்து காணாமல் போனேன்; ஆடைதனை களைவதைப்போல அற்பத்தனமாய் களையப்பட்டு, ஆசையால் திரண்டு அவமனச் சின்னமாகிய நான் உயிரற்ற எச்சங்களாய் உங்கள் கண் முன்னே. 5. உயிர் பேசுகிறேன் [] காண்டமோ கருத்தடையோ காலம் கடக்கும் முன் செய்து தொலையுங்கள், மேனிக்கவர்ச்சியோ, ஹார்மோன் சேட்டையோ, காரணம் என்னவோ கலவி ஒன்றுதான், விளக்கணைக்கும் ஆசையில் விதைத்த பின் வினையறுக்காதீர்கள், காமம் கடந்து கருவறுத்த பாவிகள் சோகமின்றி சுற்றித் திரிய, அசைவின்றிக் கிடக்கிறேன் அங்குமிங்குமாய், இச்சைகளால் விட்டுச் சென்ற எச்சங்களின் மிச்சமாக நான். 6. பாத்திரம்… [] பிழை என்னவோ இவர்கள் பிறப்பில்????  உப்பிட்டவரை உயிர் வரை நினைப்பதன் பயன் என்ன???  முடிந்தால் இவர்களிடம் ஒரு முறை கேட்டுப் பாருங்கள், அப்போது புரியும் வழ்வின் அருமை,  இருப்பதை விடுத்து பறப்பதற்கு வழிதேடுகிறோம் ஓவ்வொருவரும், முடிந்தால் உங்கள் எதிர் பார்ப்புகளை விடுத்து இவர்களின் ஏக்கம் தணியுங்கள், அப்பொழுது தான் மலரும் மாண்புமிகு சமுதாயமது. 7. உழவன்… [] நிலமகள் நிர்வாணமாக நிர்மூலமாகிறான் நீதியின் மாறன். 8.அயல்நாட்டு மோகம்… [] உன் ஆசைக்காக நீ அயல்நாடு செல்லலாம், ஆனால் உனக்கு சோறு போடுவது சொந்த ஊர் தான், பணத்திற்காக பலதேசங்களைப் பார்க்கலாம், பண்பினை   விதைத்தது தாய்மடிதான், தூரதேசம் சென்று தூக்கத்தை தொலைக்காதே, தூக்கம் தொலைத்து துக்கத்தில் திலைக்காதே, தனித்துவம் பெற்றாலும் தாய் மடியை மறவாதே, கனவுகள் ஜெயித்தாலும் கருவறையை மறவாதே.  9. மாறாதது… [] சாமானியனாய் பிறந்தால் சாமர்தியமாய் இருந்து விடு இல்லையேல், சமூகத்தால் சாகடிக்கப் படுவாய். 10. ஏகாதிபத்தியம்… [] பிச்சை கேட்கின்றன பிணந்தின்னி கழுகுகளின் எச்சங்கள் மிச்சம் இருந்தால் சொச்சம் கொடுங்கள் என்று. 11. மூட நம்பிக்கை… [] தெருஓர பிச்சைக்காரனைக் கண்ட ஓர் இளைஞனின் பெருமை_ என் தந்தை முதியோர் இல்லத்தில் நலமாக உள்ளார் என்பது. 12. சாதி… [] நல்ல வேலை எழுத்துக்களுக்கிடையில் சாதி இல்லை இல்லையேல், கவிதைகளில் கூட காதல் இணைந்திருக்காது. 13. ஊமை விழிகள்… [] காதல், அன்பு, சோகம், கண்ணீர், உவகை, வியப்பு அனைத்தையும் தாங்கிக் கழித்த விழிகள் தீக்கும் மண்ணுக்கும் தினவாகாமல் தேவைப்படுவோரிடம் ஒப்படைக்கப்பட்டால் தீண்டாமையும் தீர்ந்தொழியும். பெண்ணியல் 14. விதி வழி… [] ஆத்தா நான் அழுக, ஆத்துல மீன் அழுக, ஆவாரம்பூ அழுக, பூப்போல பொறந்த மக போன தெச தெரியலியே, நெல்ல குடுத்து கொன்னுப்புட்டு நித்தமும் சாகுறனே, போக்கத்த வீட்டுல பொம்பளயா நான் பொறக்க, வாக்கப்பட்ட பாவத்துக்கு வயித்துல நீ பொறந்த, பால் குடிச்ச ஈரப்பச பாவிமக மறக்கலையே, வயித்துல பொறந்த புள்ள வாழம போயிருச்சே, நெஞ்சுல அனலடிக்க கண்ணுல நீர் வத்த பொம்பள பொழப்புல பொழுது விடியலயே, ஆணா நீ பொறந்தா ஆளாம போகமட்ட, பொண்ணா நீ பொறந்து பொதஞ்சதென்ன பூமிக்குள்ள??? பொன்னே பூந்தேரே, பொத்தி வச்ச மல்லிகையே, கண்ணே கற்பகமே கலங்காம நீ உறங்கு, மானே மரகதமே மயங்காம நீ உறங்கு, ஆத்தா நான் அழுக அசையாம நீ உறங்கு. 15. கள்ளி… [] அத்திப்பூ மாளக் கண்டு ஆலம்பூ அழுகிறதாம், கள்ளிப்பால் தித்திப்பில் காலத்தின் கணக்கில் சிக்கி. 16. வெறி… [] பூக்கள் பறிக்கப் பட்டன பொறுமை காத்தோம், பொழுது போகட்டும் என்று, விளைவு மொட்டுகள் வேட்டையாடப் படுகின்றன வேலியற்ற சமூகத்தால். 17. மணம்… [] பூக்களைப் பறிக்காதீர் புத்தகம் ஏந்தும் தருவாயில், மொட்டுக்கள் மலரட்டும் முகாந்திரம் ஏதுமின்றி, பிஞ்சுகள் பழுக்காட்டும் பிறகு பார்த்துக் கொள்ளுங்கள், கடமைகள் வேண்டாம் கனா காணும் தருவாயில், கைச்சிறை தேவையில்லை காலம் கழியும் வரை, கனவுகளுக்கு மதிப்பளியுங்கள் மணவறை சேரும் முன், விளையாட்டு பொம்மையை விதவையாக்காதீர், வீண் விரயம் விலாசம் தேடி வரும். 18. பண்பாடு… [] இராமன் வேடமிட்ட இராவணன்களால் சீரழிக்கப்பட்டு வேசியாக்கப்படுகின்றனர் இக்கால சீதைகளில் சிலர். 19. பிச்சை… [] வணிகம் நடக்கிறது வாடா மல்லியை வாடும் முன் விற்பதற்கு. 20. எதிர்பார்ப்பு… [] வெண்டை மணமாக சுண்டை ஏங்கியதாம் என்னவனெங்கே என்று? 20. தட்சணை… [] வயது வந்த நாள் முதல் வாயில் நோக்கி காத்திருந்தேன், வாக்கப்படும் வரம் கேட்டு வேண்டாத கணமில்லை, வரன்கள் சலித்தும் வாழ வழியில்லை, காரணம் மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்ய வேண்டாம், மாதவள் தந்தையிடம் பணமிருந்தால் போதும், திண்டாடிக் கழித்து திருமணமே வேண்டாம் எனும் முடிவுக்கு வந்து விட்டேன், ஏனெனில் எனக்கும் பெண் குழந்தை பிறந்தால்??? 21. விலை… [] மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்ய வேண்டாம்,  மாதவள் தந்தையிடம் செல்வம் இருந்தால் போதும்,  மணவாளன் கரம் கோர்க்கும் வாய்ப்பது கிட்டும்,  மதியற்ற மாந்தர் சிலரின் சதி வலைதனில் சிக்கி மங்கையவள் படும் துயர் மனம் பொறுக்குதில்லையே, மகத்தற்ற பிறவியென சான்றோர் உரைத்தாலும் மனமதனை  ஏற்க்காது இந்நிலை மாறும் வரை, புவியரசி பொறுமைக்கு ஒப்பற்ற எல்லை உண்டு, புத்துலகம் கனியுமா நங்கையவள் வாழ்வு மலர??? 22. பெண் வீட்டார்… [] நாலு மறக்கால் நெல் விற்று நடுக் கழுத்துச் சங்கிலியாம், கடலைக் காடு இரையானது கல் மூக்குத்தியின் பிடியில், சினம் கொள்ள முடியவில்லை சீர் வரிசை கண்டு, காலம் கடக்கும் முன் கரை சேர்க்க வேண்டிய கட்டாயத்தால், மாறா மனதுடன் மாப்பிள்ளை வீட்டார், மன்றாட இயலவில்லை மானம் காக்கும் பொருட்டு, அனைத்தும் முடிந்ததென்று அசதியில் அமர்ந்தால், வரிசை கட்டி நிற்கின்றன ஆடியும் தீவாளியும், பேச ஏதுமில்லை, பெண் பெற்று பிச்சைக்காரன் ஆனவர்களில் நானும் ஒருவன். 23. குடிமகன்களுக்கு மட்டும்… [] அன்னை கருவுற்ற போது நினைத்தாளாம் நான் ஆண்மகன் என்று, பிறப்பின் போது உறுதியானது பெரும்செலவு உள்ளதென்று, பூக்கள் பறித்து விளையாடிய தருணம் போய் பூப்பொய்திய காலம் வந்தது, சிறையெடுக்கப் பட்டேன் சிதைக்கப்பட்டு விடுவேனோ என்ற பயத்தில், பட்டம் பயில ஆசைதான் ஆனால் பள்ளி தாண்ட இயலவில்லை, திருமணத் தேதி குறித்தனர் தீர்க்கமான முடிவுடன், வழியின்றி வளைந்து கொடுத்தேன் உற்றார் சொன்ன காரணத்தால், கனவுகளுடன் கரம் கோர்த்தேன் கண்ணிமைக்கும் நேரத்தில், வாழ்க்கை பட்ட ஆறே மாதத்தில் வாரிசுக்கு வழி வந்தது, குடியுடன் அல்லவா குடித்தனம் நடத்தினான், குழந்தையின் பசி எவ்வாறு புரியும்? மதியிழந்து விதி முடிந்து சென்று விட்டான், வீதியில் நிற்கிறேன் விதவை எனும் பட்டத்தோடு. 24. வேகம்… [] அரை நொடி அவசரத்தில் ஆயுள் இழந்தாயோ??? குருதி வேகம் உயிரை பறித்ததோ??? முந்திச் செல்ல முயன்று முட்டிக் கொண்டாயோ??? காலன் அழைத்தனோ கைபேசி வழியே??? முத்தமிட்ட உதடுகள் இரத்தத்தில் திளைக்க மூச்சடைத்துப் போனேன் முகம் பார்த்த தருணத்தில், பிணவறையில் முகம் காட்டவா மணவறையில் கரம் கோர்த்தாய்??? உருக்குலைந்த பின் உடற்கூறு எதற்கு??? கனவா கண்டேன் காலம் முடியுமென??? சற்று பொறுத்திருந்தால் சகலமும் கண்டிருப்போமே, சத்தமில்லாமல் போய் விட்டாயே சாதக மற்ற தருணத்தால்??? கதறி அழக் கூடத் தெம்பில்லை காரியம் நடக்கும் காலத்தில், மைனாக்கள் கொஞ்சக் கண்டு மணாளன் ஞாபகங்கள், மணநாள் அல்லவா கல்லறையில் காத்திருக்கிறேன் கண்ணாளன் கரம் கோர்க்க. 25. பிறவி… [] காத்திருப்புகள் பல கடந்து, கனவுகளை கற்பனையில் புதைத்து, காலம் கரையும் வரை கனிவுடன் கடமைபுரியக் காத்திருக்கும் அவளை கட்டில் பொம்மையாக மாத்திரம் எண்ணாதீர்கள். 26. ஆண்களுக்காக… [] பெண்கள் சீதையாக வேண்டுமெனில் உங்கள் மனைவிக்கு மட்டும் இராவணனாய் இருங்கள். 27. அமாவாசை… [] வானவன் நிலவை விவாகரத்து செய்தானாம் விளைவு அமாவாசையாம். 28. உண்மை… [] ஆயுள் கால ஆசையை கூட அரை நொடியில் தூக்கி எரியும் அசாத்திய துணிவு பெண்களுக்கு மட்டுமே. 29. பாவனை… [] உதிர்க்கப்படும் புன்னகையினுள் எத்தனை வலிகள் புதைந்திருக்குமோ யாருக்குத் தெரியும்? 30. விதி… [] பெண்ணாய் பிறந்தால் போதும், பிணமாகும் வரை பொறுமை பழகி விடும், அடக்கம் செய்யும் வரை அமைதி காக்கப்படும். 31. பிச்சை பாத்திரம்… [] சோறூட்டி வளர்த்த பாவமோ என்னவோ சோற்றுக்கு அல்லாடுகிறாள். அச்சமில்லை அச்சமில்லை 32. நானும் பெண் தான்… [] பேசாவிடில் ஊமை என்பர், பேசினால் ஆணவம் என்பர், தவறிழைக்கும் நேரம் தவிர்த்து எக்கணமும் எவரிடமும் தலை குனிய மாட்டேன், அடக்க நினைக்கும் ஆண்மகனிடம் அகதியாய் வாழ்பவளல்ல நான், உங்கள் அகராதியில் அது திமிர் என்றால் எனக்கு அது சுய மரியாதை, மாற வேண்டியது நானல்ல இந்த சமூகம், ஏனெனில் நான் பெண்ணாய் பிறந்தது பிழையல்ல, அதற்காக நான் வருந்தியதுமல்ல, மாறாக பெருமைப் படுகிறேன். ** 33. அடிமைகள் அல்ல அழிக்கும் சக்திகள்… []   நாங்கள் ஒன்றும் உங்கள் காலணிகள் அல்ல, உங்கள் காலடிகளில் பணிந்து கிடப்பதற்க்கு, அடிமைகள் அல்லர், ஆண்களின் ஆசை தீர்ப்பதற்க்கு; பேசா மடந்தையாய் இருக்கப்போக பேதங்கள் எங்களைச் சூழ்ந்திருந்தன, பெண்ணியம் பேசும் பேராண்மையில் பேதங்கள் யாவும் ஒழிந்து போகும், மூடத்தனத்தை முற்றுப்போலியாக்க முன்னறிவுடன் முயல்வோம் நாங்கள், கண்ணியம் கொண்டு களைந்திடுவோம் கட்டுப்பாடற்றவிதிமுறைகள் தனை, கண்களாய் கருதி கற்றிடுவோம் கடமை புகுத்தும் கல்விதனை, காலமது கனியும் எங்கள் மாண்பினைக் கண்டு, உணர்ந்து கொள்ளுங்கள் இது உண்மை என்று, ஊரார் போற்றும் காலம் வரும். 34. ஆண்மை… [] அச்சம் அடங்கிப் போன ஆணவமாய் கூட இருக்கட்டும், அதிலும் பெருமைதான் அழுத்தமாய்க் கூறுவோம், வளைக் கரங்கள் வாளேந்தும் வானாளும் பலத்துடன், களையருக்கும் கைகள் வினையருக்கும் வேளையிலே, சீரிய வேங்கைகள் சினத்துடன் சிதைக்கப் படும், பதுங்கி பாய்ந்த வெம்புலியின் வேகம் கண்டு விரோதம் பதறியோட, வெறி கொண்ட உங்களுக்கு வேடிக்கை மட்டுமே மிஞ்சியிருக்கும், செங்கனல் விழிகள் சிறப்பாய் கொதித்தெழ, சின்னாபின்னமாய் சிதைக்கப்படும் உங்களின் ஆணாதிக்க பாவனை, வேசிப் பட்டம் சூட்டும் வீணர்களே, இராவணன் கூட தகுதி இழந்தான் உங்களது தன்மானமற்ற பார்வையில், ஆண்மை என்று கூறிக் கொள்ளாதீர், அவமானம் என்னவோ உங்களுக்குத்தான், சீக்கிரம் திருத்திக் கொள்ளுங்கள் உங்கள் ஆணாதிக்க அகராதியை, இல்லையேல், சீதைகள் சிதை ஏறிய காலம் போய் சீக்கிரம் கொழுத்தப் படுவீர். 35. இவள் பெண்… [] அடக்கம் அவசியம் தான் அடிமையாகி விடாதே, நாணம் தேவை தான் நாளும் வேண்டாம், அச்சம் இருக்கட்டும் அனைத்திற்குமல்ல, பொறுமை அழகுதான் போதுமான அளவிற்கு, பெருமைப் பட்டுக் கொள்ளாதே பெண்ணாய் பிறந்தமைக்கு, பெண்ணடிமைவாதிகள் முற்றிலும் ஒழியட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம், வாளேந்தும் பலமில்லை வாதாடி வென்றிடலாம், கடமையற்ற சமூகத்தை களையருக்க வேண்டாமா??? வீணர்கள் சூழ்ந்திருக்க விவாதம் பலிக்காது, விழிப்புடன் விரைவாய் விடியலை நோக்கி. 36. வேலுநாச்சி வீரம்… [] விரித்தெழுந்த தலைமயிரும் விண் முட்டும் கொடுவாளும், போர்க்களம் நீ புக புதைபடும் வஞ்சகமும், ஆயிரம் படை தகர்த்து ஆளப் பிறந்த அம்பிகையே, பெண்புலியின் சீற்றம் கண்டு வெள்ளயனும் வெகுண்டோட, தினவெடுத்த அந்நியனின் திமிரறுத்த பெண்ணினமே, பாரதி பார்த்திருப்பின் பாடாமல் ஓய மாட்டான், வரலாறு மறைக்கப்படினும் வற்றாப் புகழின் வாயிலாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள். எதிர்நீச்சல் 37.தோற்றுப் பார்… [] ஆயிரம் வெற்றிகள் உன்னை ஆசுவாசப் படுத்தினாலும் தக்க நேரத்தில் நீ பெற்ற தோல்வி மட்டுமே உன்னை வழி நடத்தும், தோற்றுப் பார் வாழ்க்கை புரியும், கண்ணீரே காயங்களுக்கு மருந்தாகும், தோற்றுப்பார் வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொள்வாய், தோற்றுப் பார் உலகம் புரியும், அரை நொடி அவமானங்கள் கூட அழகாய் தெரியும் உன் வெற்றிக்கு வேரூன்றுவதாய், தோல்வி பிழை அல்ல, தோற்காவிடில் வாழ்க்கை அல்ல, ஆகையால் தோற்றுப் பார். 38. எண்ணம்… [] விடியலை நோக்கி காத்திராது வெளிச்சத்தை நோக்கி விரையும் விட்டில் பூச்சியாய் இருங்கள், வெற்றி விலாசம் தேடி வரும். 39. என் பயணம்… [] எனை விரும்பி ஏற்றவர்களை விட வெறுத்துச் சென்றவர்களே அதிகம், இருப்பினும் விருப்பத்துடன் பயணிக்கிறேன் கடந்த பாதை மாறிடினும் காலம் மாறும் எனும் நம்பிக்கையில். 40. விதை… [] தூக்கி எறியப்பட்டதை எண்ணி வருந்தாதே, கனியை காட்டிலும் விதைக்குத்தான் மதிப்பு அதிகம்! 41. கற்பனை… [] விண் முட்டி மண் சேரும் பட்டம் போல தான் வாழ்வும் நம்பிக்கை எனும் இடைநூலின் வாயிலாக. 42. புரிதல்… [] வாழ்க்கை கற்றுக் கொடுப்பது ஒன்றுதான், வெறுப்பவர்களை தேடாதே, விரும்பியவர்களை வெறுக்காதே, வெறுப்பவர்களை தேடினால் காரணம் கூறுவார்கள், விரும்பியவர்களை வெறுத்தால் கலங்கிவிடுவார்கள், நான் வெறுத்ததுமில்லை விரும்பியதுமில்லை, ஆதலால் தேட வேண்டிய அவசியம் இல்லை. 43. தெளிவு… [] வாழ்க்கை என்பது காகிதம் போன்றது, ஓவியமாக மாற்றுவதோ அல்ல ஒன்றுக்கும் உதவாமல் செய்வதோ உங்கள் கையில். 44. முயல்… [] கவலைகள் துரத்திடினும் கனவுகளை நோக்கி பயணியுங்கள், கடந்த பாதை மாறாவிடினும் காலம் மாறும் என்ற நம்பிக்கையில். 45. ஏக்கம்… [] எதிர்பார்ப்புகள் தவறல்ல, நிராகரிப்புகளை தாங்கும் வலிமை இருந்தால். 46. துணிந்து செல்… [] எவரையும் எக்கணமும் எதற்காகவும் சார்ந்திருக்காதே, வெளிச்சம் இல்லையேல் நிழல் கூட துணை நிற்காது. 47. சிரிப்பு… [] ஆயிரம் கனங்கள் இருக்கட்டும், அனைத்தையும் தாண்டி புன்னகியுங்கள், துக்கம் துவண்டு போகும் வரை. 48. கற்றது கையளவு… [] கருவிலிருக்கும் போதே கற்றுக் கொள்கிறோம் கால்பந்து விளையாடுவது எப்படியென்று, கல்விச்சாலையில் கற்றுக் கொள்கிறோம் கண்டிப்பு என்றால் என்னவென்று, தாயிடம் கற்றுக் கொள்கிறோம் நிர்வாகப் பொறுப்பினைப் பற்றி, தனிமைதனைக் கற்றுக் கொள்கிறோம் கல்லூரிக் காலத்தில், வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருந்தால் வாழும் வரை கற்க்கலாம், மனிதர்களின் மனங்களை படித்தால் மார்க்கம் உண்டு அனைத்திற்கும், கற்றது கைமண்ணளவாக இருப்பினும் கற்றுவித்தல் சிறக்க வேண்டும். 49. வெற்றி… [] மண்ணில் விழும் விதைகூட உணரும் தான் விருச்சமாகப் போவதினை, மனித வாழ்வினை உணரும் தகுதி உனக்கு இல்லையா?  உணரும் பொழுது வரும் வரை நீ மரம் தான் மற்றொன்றுமல்ல, மானுடம் பேசும் மாண்பினை மனிதன் என்ற முறையில் உணர்ந்து கொள், மற்றவை அனைத்தும் கானலாய் கலைந்து போகட்டும், வெற்றியின் வழி தேடி விரைவாய் மானுடனே. கூடு 50. அம்மா… [] பொட்டல் காடு பூப்பூக்கும், புழுதிக் காற்று மணம் வீசும், கரிசல் காடு காத்திருக்கும், கண்மாய் கரை களைத்திருக்கும், கதிரறுத்த கையினிலே காயமின்னும் ஆறவில்லை, காட்டுக்குள் விறகு வெட்டி கருவாடு சமைக்கிறாயோ??? கள்ளி முள் சூழ்ந்திருக்க காடை வேட்டை அவசியம் தானா??? களையறுத்தது போதும் கறுக்கும் முன் திரும்பி வா, முள் தைத்த பாதத்தில் முப்பொழுதும் ரணமிருக்க, மூங்கில் காட்டு நினைவு மூழ்காமல் இருக்கிறதா??? உச்சி முத்தம் கொடுத்தவளே, மூச்சுக் காற்றுப் பட்டு முன் ஜென்மம் செழிக்குதாம்மா!!! அம்மி அரைக்கும் கைகள் அசராமல் உழைப்பதென்ன??? சோறூட்டும் கைகள் சோர்வுறத் தேவையில்லை, உச்சி முதல் பாதம் வரை உன்னுதிரம் படையெடுக்க, பிச்சிப்பூ கூந்தலிலே என் கைகள் விளையாட, தொட்டிலிடும் தாலாட்டு தூக்கம் பறிக்குதம்மா!!! கனவோ கற்பனையோ காற்றாய் பறந்துவிட்டாய், காணாமல் தவிக்கிறேன் கணம் தோறும் இரணமுடன். 51. காமமல்ல காதல்… [] அந்தி சாய்ந்த வேளை, ஆர்ப்பரிக்கும் அழுகுரல், என்னுடல் தீண்டிய முதலாம் எதிர் பாலினம், கண்களில் கனவுகளுடன் கரங்களில் தாங்கிய நொடிகள், உள்ளத்தில் ஆசைகளுடன் உச்சி நுகர்ந்திட்ட முதல் முத்தம், அனைத்தையும் மூன்றெழுத்தில் விளங்கச் சொன்னால் அவர்தான் அப்பா. 52. கருவறை காதல்… [] இருட்டறையில் இன்பம் எனில் அது உன் கருவறையில் மட்டும் தான். 53. ரணம்… [] அம்மா! உன் கருப்பை தொட்டிலிலே முட்டிய போதெல்லாம் கனம் என்று கருதாமல் தினம் என்னை சுமந்தாய்! அம்மா! என் உயிரை பிணைத்தது உன் தொப்புள் கொடி! அது தொப்புள் கொடி அல்ல! உன் அன்பின் பிள்ளையார் சுழி!!! 54. சமநிலை… [] பெண்ணின் கனம் ஈரைந்து மாதங்கள் எனினும் ஆணின் ரணம் ஆயுள் முழுதும் தொடர்கிறது. 55. அப்பா… [] அப்பா, என் தாய் தந்த முதல் அறிமுகம், நான் பெற்ற முதல் அங்கீகாரம், நாங்கள் கட்டிலில் தூங்குவதற்காக காலம் மறந்து உழைப்பவர், கண்ணீரை மறைத்து என் கனவுகளை வளர்த்தவர், கவலைகள் நெருங்கா வண்ணம் கண்இமைபோல் காத்தவர், ஒழுக்கத்தை கற்றுவித்த ஒப்பற்ற ஆசான், உரிமையுடன் கூடிய உன்னதமிக்க உறவு முறை. 56. கிளிப் பேச்சு… [] நீ செய்த அழகிய பிழைகளுள் ஒன்று, அம்மா எனும் சொல்லை அரைகுறையாய் ஒலித்தது. 57. தோள்… [] எட்டிப் பார்த்தேன் எதுவும் இல்லை சுற்றிப் பார்த்தேன் உலகமே என் கையில் உன் நட்பின் வரவால். 58. தோழமை… [] கண்ணில் சுமந்த காதலைக் காட்டிலும் நெஞ்சில் புதைத்த நட்பே நீங்காமல் நெருடுகிறது உன் நினைவுகளால். இது காதல் களம் 59. வினா… [] ஆயிரம் முறை சோதித்து விட்டேன், கண்படும் இடமெங்கும் தென்படும் உன் பிம்பம், ஒருவேளை பார்வை கோளாறோ என்ற பயத்தில் நான். 60. விருப்பம்… [] உறவாட ஆசைதான் உணர்வுகள் தடுக்கின்றன, மனம் திறக்க ஆசைதான் மார்க்கம் திரும்பவில்லை, என்றும் நீங்கா நினைவுகளில் நித்தமுன் சிந்தனையுடன், சத்தமாய் கூறும் சந்தர்ப்பமின்றி ஓசைகள் அடங்கிய ஓர் ஊமையின் பதிவு. 61. கெஞ்சல்… [] தப்பிக்க வழியின்றி தானாய் புலம்புகிறேன் எப்போது விடுவிப்பாய் உன் விழிச்சிறை வழியே. 62. தெரியும்… [] என் எழுத்துக்களின் நோக்கம் என்னவோ ஒன்றுதான், என்னால் தொலைக்கப்பட்ட பக்கங்கள் உன்னால் தேடப்படும் என்பதே. 63. காதல்… [] பேனா அழ காகிதம் கைகுட்டையானது உன் நினைவால். 64. அவனும் நானும்… [] புத்தகமாய் பிறக்க ஆசைதான் நீ என்னை முழுதாய் படிக்கும் பட்சத்தில். 65. தூரம்… [] பிரிவுகள் ஆழமில்லை, பிணைப்பில் வலுவிருப்பின். 66. பேப்பரும் பேனாவும்… [] ஓராயிரம் முறை உதறிடினும் ஒட்டிக் கொண்டு உறவாடும் உன் நினைவுகள், உறைந்து விட்ட மை தான் போல என் மனம் எனும் மாற மறுக்கும் காகிதத்தில். 67. கிறுக்கல்… [] எனக்கு கவிதையெல்லாம் எழுதத் தெரியாது, காரணம் என்னவோ நீ மட்டும் தான்! 68. தேடல்… [] வானம் விளக்கணைக்க, வாகை மணமிழக்க, அல்லி பூத்திருக்க, அந்தி சாய்ந்திருக்க, சுந்தரியின் சொப்பனமோ சொக்கனின் வரவை நோக்கி. 69. விதியின் ஓசை… [] அயிரை சாகக் கண்டு குரவை தூக்கிட்டதாம் பாவம் காதல் தோல்வி போலும். 70. காத்திருப்பு… [] பேனா குழம்புகிறது, எழுதியது உன் பெயரல்லவா, மையுரையும் கணம் முன் மையல் தீர்க்க வருவாயா??? 71. வேற்றுமை… [] காதலுக்கும் காமத்திற்கும் சிறு இடைவெளிதான், மனங்கள் சங்கமித்து விழிகள் பேசிக் கொண்டால் அது காதல், விழிகளின் சந்திப்பில் மனங்கள் தடுமாறினால் அது காமம். 71. மெய்… [] என் அன்பில் ஆழமில்லாமால் இருக்கலாம் ஆனால் அர்த்தமில்லாமல் இருக்காது. 72. கைபேசி காதல்… [] கைபேசி சிணுங்குகிறது, உன்விரல் தீண்டாதா எனும் ஏக்கத்தோடு, கதைக்க வேண்டாம், அணைத்து விடு, உன் இருப்பை உறுதி செய்ய. 73. பொழுது… [] ஆவாரை பூத்திருக்க, அரவம் சூழ்ந்திருக்க, வெள்ளிநிலா வானளக்க, விடியல் தொலைவிருக்க, தாமரை குளத்தருகே, தாரகை தலை சாய்ந்தாள் தலைவன் மடியில். 74. பிறப்பு… [] உணர்வுகள் உயிர்த்தெழும் போதுதான் உறவுகள் மலர்கின்றன. 75. ஆசை கள்வனுக்கு அன்பு விண்ணப்பம்… [] கனவுக் கள்வா அறிவாயா நீ நான் உன்னவள் என்று??? நித்தமொரு கானா கண்டு நிம்மதி இழக்கிறேன் கனவுகளுடன் கை கோர்க்கும் நாள்தனை எண்ணி, காதலை அறியாதவளாய் கண்ணியத்துடன் காத்திருக்கிறேன் என் கள்வனின் வரவை எண்ணி, இமைகளின் ஏக்கங்களை இக்கணமே தீர்த்திட காதலுடன் விரைவாய் காட்டாற்று வெள்ளமென, காதலுடன் காத்திருக்கிறேன் கரை தாண்டா புயலைப் போல் என் கள்வனுக்காக. 76. மறவேன் உனை… [] சைக்கிள் ஸ்டண்ட், சைகை காட்டும் பெல் சத்தம், சாப்பாட்டு மணி, வருகை பதிவேடு, வட்ட மேசை மாநாடு, சாயங்கால வகுப்பு, சற்றும் சலிக்காத பேச்சு, உப்புக்கு நெல்லிக்காய், உரப்புக்கு ஊறுகாய், பெட்டிக் கடை பாட்டி, கடன் வைத்த கடலை மிட்டாய், திருட்டுத் தின்பண்டம், திமிர் பேச்சு, சாக்பீஸ் சத்தம், சங்கமிக்கும் பார்வைகள், புன்னகிக்க வைக்கும் புனைபெயர்கள், சின்னதாய் ஒரு சண்டை, சிட்டாய் பறந்த தருணங்கள், சொல்லிக் கொண்டே போக எனக்கும் ஆசை தான், சொன்னாலும் மீளப் போவதில்லை, இவை அனைத்தையும் உன்னிடம் இழந்தவளாய் நான். 77. ஆசை… [] மாலை நேர வகுப்பு, பாதி கலைந்த தலைமுடி, அதனை நீ கோதும் விதம், பேருந்துப் பயணம், ஜன்னலோர இருக்கை, தேகம் வருடும் காற்று, யாருக்கும் தெரியாமல் நீ வாங்கித் தரும் கடலை மிட்டாய், உன்னை பார்க்க வைத்து தின்னும் புளிப்பு மாங்காய், சற்றும் இடைவெளியற்ற உன் பார்வை, நாணம் மறைக்கும் என் புன்னகை, தோழிகளின் கேலிப் பேச்சு, அனைத்தும் முடிந்து விட்ட அரைமணி நேரப் பயணத்தில், இவை அனைத்தையும் உன்னிடம் இழந்தவளாய் நான். 78. மெளனம் பேசுதே… [] பேசும் வார்த்தை கூட பேசா மெளனத்திடம் தோற்றுத்தான் போகும், ஏனெனில் ஊமையாக்கப்பட்டவை ஓசைகள் மட்டும்தானே தவிர உணர்வுகளல்ல. 79. காதல் அழைப்பு… [] பார்த்த பார்வைகள், பழகிய நாட்கள், பகல் கனவாய் தொலைந்த பலரின் பள்ளிப் பருவக் காதல். 80. அன்புள்ள காதலனுக்கு… [] இதழ்கள் உலர்ந்ததடா உன் முத்தங்களின் துணையற்றுப் போய், கண்கள் மயங்கக் காத்திருந்தேன் என் கள்வனின் வரவை எண்ணி, மூச்சினுள் உன் சுவாசம் நீங்காமல் நிறைந்திருக்க மூர்ச்சை தனை அளிக்கும் என்னவன் எங்கே? கனவிலாவது வந்துவிடு உன் காதலியின் கவலை தீர்க்க, கண்மணியினுள் பூட்டிவிடு என் காதலனின் நினைவுகளை, காத்திருக்கும் காலம் யாவும் கனவாய் கலைந்துவிட;  காதலுடன் விரைவாய் நான் கல்லறை தனை அடையும் முன்பே. 81. சில்லறைக் காதல்… [] மங்கையவள் கண்ணில் விழுந்தாள் மாலை மய‌ங்கிய நேரம் தனில், சிற்றுந்தில் ஏறியவள் சீட்டினை பெற்றுக் கொண்டாள் என்னிடம், சிரிப்புடன் எனை நோக்க சிந்தை தெளியாமல் நின்றேன் நான், சன்னலில் சாய்ந்தவள் விழிகளை மறைத்துக் கொண்டாள், கண்கள் ஏங்கின அவள் கடைக்கண் பார்வைக்காக, சற்று நிமிடங்களில் நிமிர்ந்தவள் ஆவலுலன் எனை நோக்க, சற்றும் எதிர் பாராதவனாய் ஆசையுடன் சென்றேன் அவள் வசம், சில்லறை பாக்கியை கேட்ட அவளிடம் திகைத்துப் போய் நின்றேன் செய்வதறியாமல். 82. ஏங்கும் நெஞ்சம்… [] ஆசை வேண்டாம் அன்பு போதும், பணிவு வேண்டாம் பாசம் போதும், கருணை வேண்டாம் கனிவு போதும், கலவி வேண்டாம் காதல் போதும், பூக்கள் வேண்டாம் புன்னகை போதும், உரிமை வேண்டாம் உண்மை போதும், உணர்வு வேண்டாம் உறவே போதும், நினைவுகள் நீங்காது உடனிரு போதும். 83. சேமிப்பு… [] ஒதுக்கப்பட்ட கூந்தல், ஓரவிழிப் பார்வை, மறைக்கப்பட்ட நாணம், மாறா நினைவுகள், பேசப்பட்ட வார்த்தைகள், பேசா உணர்வுகள், ஆழமாகச் சொன்னால், அனைத்தும் உனக்காக. 84. காதல் கணை… [] ஓசையிடும் மரங்கள், ஒளிந்து கொண்ட நிலா, பூட்டப்பட்ட அறைகள், புறத்தில் அமைதி காக்க, வீசும் காற்றின் விளக்கம் அறியா என் ஜன்னலோர பார்வைகள், இமைகளின் நோக்கம் யாதென அறியாமல் இரவைக் கழிக்கின்றன. 85. இப்படிக்கு உன்னவள்… [] காதலித்துக் கரம் கோர்க்க ஆசைதான், காலம் ஏமாற்றிவிடில் என்செய்வேன்??? காத்திருப்புகளுக்குப் பஞ்சமில்லை, கனவிலாவது கை சேர மாட்டாயா எனும் கலக்கத்தோடு, மணவறையில் இணை சேரும் நாள் நோக்கி மயக்கத்துடன் காத்திருக்கிறேன், எட்டாக்கனியாய் நான் இருந்தும் எட்டிப் பறிப்பாய் எனும் நம்பிக்கையில், விழியோரக் கனவுகள் விரதம் இருக்கின்றன, உன் கடைக்கண் ஆகாரத்தை வேண்டி, நீங்கா அன்புடன் நெற்றி முத்தம் கேட்கிறேன், நிழலோடு மாத்திரம் உறவாட விடுகிறாய், தோள் சாய வேண்டுகிறேன் சீக்கிரம் வந்து விடு, மடி சாய்ந்து தூங்க வேண்டும் மறுக்காமல் ஒப்புக்கொள், கனவிலும் களம் மாறேன் கண்ணாளனே, என்னவன் இருக்க அந்நியன் எதற்க்கு??? 86. நியூட்டன் விதிகள்… [] அன்பே ஆசிரியர் அத்தனை முறை விளக்கியும் அறிவிற்கு எட்டவில்லை நியூட்டன் விதிகள்,  அரை கணம் பார்த்தாய் நீ அப்போதே உணர்ந்தேன் அம்மூன்றையும்! உன் கண்கள் தந்த புறவிசையின் செயல்பாட்டால் அடங்கிக் கிடந்த என் நெஞ்சம் அலை பாயத் தொடங்கிய கணம் அது, பெண்ணே உன் காதல் உந்தத்தை என் மீது செலுத்தினால் மட்டும் போதும், மாறாக என் காதலுக்கு இணையான எதிர் விசையை ஒருபோதும் செலுத்தி விடாதே.  87. காதல் பதிப்பு… [] மோகினியே உன்னை ஒன்று கேட்கவா?  உன் வெக்கத்தின் இரகசியம் என்னவோ?  நகங்கள் முழுவ‌தையும் கடித்துத் தின்றுவிட்டாய்!  பாவம் அந்த விரல்களையாவது விட்டுவை நான் முத்தமிடுவதற்க்கு, வேண்டுமெனில் என் விரல்களைத் தின்று உன் வெக்கவெறியை தீர்த்துக் கொள்,  பாவம் அந்நகங்களை விட்டுவிடு,  நீ செல்லமாய் கில்லும் போது உன் நினைவை அது பதிக்கும். 88. மணம் விரும்புதே உன்னை… [] மங்கை அவளை மணம் பேச வந்தனர் மாப்பிள்ளை வீட்டார், மனதில் ஆவலுடன் மெளனமாக நின்றாள் அவள், மை எழுதிய கண்கள் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தன, தரை தட்டும் சேலையுடன் தலை கவில்ந்து நின்றாள் அவள், தன்னை பெண் என்று அவள் உணர்ந்த தருணம் அது, பெண்மை கொண்ட நாணத்தால் கன்னங்கள் சிவந்தன, பெருகிப் படர்ந்த கூந்தலை மலர்கள் அலங்கரித்தன, கண் இமைகள் கதை கூறின, பவளவாய் தந்த பொன்சிரிப்பைக் கண்டு மயங்காதவர் இலர், அடங்காக் குணம் கொண்ட அவள் அவையோர் முன் அமைதியானாள், மணவாளன் முகம் பார்த்ததும் மங்கை மனதில் பூக்கள் பூத்தன. 89. பௌர்ணமி… [] அன்று அமாவாசை,  பொட்டிடாத விதவையின் நெற்றியைப் போல‌ காட்சியாளித்தது மேகம்,  எங்கும் காரிருள் சூழ்ந்திருக்க,  எல்லாம் நிசப்தமாக இருந்தது, ஆலய‌ வாயிலில் நின்று கொன்றிருந்தேன் நான்,  ஆனந்த‌ சிரிப்பொலி ஒன்று கேட்டேன் அக்கணமே,  ஆர்ப்பரிக்கும் புன்னகையுடன் அழகாய் நின்றவளைக் நோக்க,  ஆச்சர்யத்தில் உறைந்தேன் அக்கணமே,  அமவாசை ஒன்று பௌர்ணமி ஆனதே அவள் வருகை கண்டு. 90. கள்வனின் காதலி… [] கண்கள் கவி பாட,  இமைகள் இளைப்பற, கள்வனவன் காத்திருந்தான் காதலியின் கரம் கோர்க்க, கண்ணிமைக்கும் நேரத்தில் கனவாய் சிதறியவள் காதலைப் பதித்தாள் கள்வனின் இதயத்துள். மறவாயோ மனமே 91. ஆயுள்… [] மறைக்கப்பட்ட காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும், உன் நினைவிருக்கும் வரை அல்ல, என் மூச்சிருக்கும் வரை. 92. விட்டுச் செல்லாதே… [] விலகிச் சென்றால் விரட்டிப் பிடிப்பேன், வெறுத்துச் சென்றால்??? 93. புரியாமை… [] உண்மை புரிந்தும் உள்ளம் மறுக்கிறது தேவைப் படுவது நெருக்கமா, அல்ல விலக்கமா என்ற குழப்பத்துடன். 94. காதல் மொழி… [] காக்கப் பட்ட அமைதி என்று களையுமோ தெரியவில்லை, முப்பொழுதும் கண்ணீருடன் கழிகிறது காரணம் அறியாமல். 95. கனம்… [] பொய்யான அன்பை விட மெய்யான வெறுப்பே அழகானது, வெறுக்காவிடினும் விலகி இருங்கள், காதலின் வலி கொடியதுதான் இருப்பினும் காலங்கள் ஆற்றா காயங்கள் இல்லை. 96. மன மயக்கம்… [] தொலைந்தவர்களைத் தேடுங்கள் தவறல்ல ஆனால் ஒளிந்தவர்களை நாடாதீர்கள். 97. பாடம்… [] வெறுப்பவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள் அன்பின் வலியை அவர்களை காயப்படுத்த அல்ல பிறர் காயப்படாமல் இருக்க. 98. அறிவுறுத்தல்… [] பாசம் வையுங்கள், பலியாகி விடாதீர்கள், வேஷமிடும் உலகில், வேதனை தான் மிஞ்சும். 99. முகமூடி… [] மறுக்கப்படா காயங்களும், மறக்கப்படா ரணங்களும், மறைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன புன்னகை பூக்களின் வாயிலாக. 100. ஐயம்… [] அன்பு கலந்த என் நினைவுகள் அவசரமாய் களைக்கப்பட கரணம் என்னவோ, ஒரு வேளை அம்னீசியா ஆட்கொண்டதோ??? 101. காதலிக்க வருவாயோ… [] காத்திருப்பது தவறல்ல, ஆனால் ஏமாந்து விடாதே, ஏனெனில் வார்த்தைகளை விட கண்ணீருக்கு வலிமை அதிகம், விலையற்றவர்களுக்காக அவற்றை ஒருபோதும் இழக்காதே. 102. கண்ணீர் ஓவியம்… [] உயிரே உண்மைதான் ஒப்புக் கொள்கிறேன்;  உன் ஓவியங்கள் அழகானவை நீ அழிக்கும் வரையில்;  உன் விழிகள் தீட்டிய ஓவியங்களை எங்கணம் மறவேன்?  காதலால் தீட்டிய என்னை களைத்து விட்ட காரணம் என்னவோ??? கனவுகள் கலைவதைப் போல் நம் காதலையும் நினைத்தாயோ???  கானல் உலகில் எங்கணம் தேடுவேன் உன்னை???  மூச்சிருக்கும் வரை ஏங்குவேன் உன் வரவை எண்ணி;  சீக்கிரம் வந்துவிடு அதுவரை உன் காதல் ஓவியம் கரைந்தோடும் என் கண்ணீரில். 103. முதல் தோல்வி… [] என்னை தொட்டுச் சென்ற நீ விட்டுச் செல்லும் போது தான் உணர்ந்தேன் உன் அன்பின் ஆழத்தை, பிரிந்ததை மறந்தாலும் இணைந்ததை மறப்பாயோ? பெண்ணே நீ மிகவும் அடக்கமானாவள், உண்மைதான், உணர்ந்தது கொண்டேன், உணர்த்திவிட்டாய் சில நாட்களிலேயே, நாணம் பூத்த முகமது வெறுப்பில் வீழ்கிறது என்னைக் கண்டதும், வெறுப்பினையாவது தொடர்ந்து காட்டிவிடு, அப்போதாவாது என் நினைவுகள் கொஞ்சம் மிஞ்சட்டும் உன் நெஞ்சில். 104. ஏற்ப்பாயா எனை… [] பெண்ணே ஒரு முறையாவது வரம் கொடு, உன் காலடியில் செருப்பாய் பிறப்பதற்க்கு, அப்பொழுதாவது தீர்த்துக் கொள்கிறேன் என் ஆவலை உன்னை சுமப்பதன் மூலமாக, வேண்டாம் எனில் விட்டுவிடு, என்றாவது ஒரு நாள் புலம்புவாய் என்னைத் தொலைத்ததற்காக, அப்போது   புரிந்தும் பயனில்லை, ஏனெனில் மற்றொருவனுடைய மனைவி என் காதலி ஆக வாய்ப்பில்லை. 105. செந்நீர்… [] அன்பே நீ சிந்தும் கண்ணீர் துளிகள் அர்த்தமற்றவை,  ஆயிரம் முறை கூறினேன் உன்னிடம்,  அடிக்கும் போது உணராத வலிதனை நீ அணைக்கும் கணம் உணர்ந்தேன்,  இருவிழி கொண்டு ஈர்க்காதே என்னை, இன்றுடன் மறந்து விட்டேன் உன் இதழ் முத்தங்களை;  கண்ணீர் சிந்தாதே இனி கனவிலும் தீண்டேன் உன்னை,  தண்ணீர் அல்ல நான் அருந்துவது,  உன் நினைவுகளை விரட்ட நான் சிந்தும் செந்நீர்.