[] 1. Cover 2. Table of contents விளை நிலம் விளை நிலம்   தீக்கதிர்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Creative Commons Attribution Share Alike 4.0 India கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/vilai_nilam மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc சாதி ஒழிப்பு மூலிகை -ஏப்ரல் 21, 2019 முருகபாலன் - வளர்மதி இவர்களின் திருமணம் வித விதமான அதிர்வலைகளை அந்தப் பகுதியில் ஏற்படுத்தத் தவறவில்லை. வெறும் வாய்களை மெல்லும் திண்ணைப் பேச்சு தெருவாசிகளுக்கு அது அவலாய் ஆகிப் போயிற்று. இந்த விசயத்தை ரொம்ப ரொம்ப ஆர்வமாகப் பேசினார்கள். அக்கம் பக்கம் யார் வருகிறார்கள் என்று கூட கவனிக்காமல் அலசி ஆராய்ந்தார்கள். யாராவது இந்த கல்யாண வீட்டாருக்கு வேண்டியவர்கள் வந்துவிட்டால்.. அவ்வளவுதான்… பேச்சை திசை திருப்பினார்கள்… ‘மோடி ஆட்சி சரியில்லை… எடப்பாடிக்கு ஆளத்தெரியல..’ என்று உரையாடலை வேறு தளத்திற்கு மாற்றினார்கள். பஞ்சமா பாதகம் ஒன்றும் இங்கு நடந்து விடவில்லை. முருகபாலன் - வளர்மதி இருவரும் ஒருவருக்கொருவர் ஒருவருக்கும் தெரியாமல் காதலித்து விட்டார்கள். இரண்டு பேர்களும் தக்க சமயத்தில் அவரவர் பெற்றோர்களிடம் காதல் குறித்து தெரிவித்து.. பெற்றவர்களும் முகம் சுளிக்காமல் முறைப்படி பேசி… கலந்துரையாடி காதல் மற்றும் ஏற்பாட்டுத் திருமணமாக இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்து விட்டார்கள். அவ்வளவுதான்… இந்த சங்கதிக்குத்தான் எட்டு திக்குகளில் இருந்தும் விமர்சனக் குரல்கள் வித்யாசமாக வெளிவந்தன.வளர்மதி பற்றிப் பேசும் போது, அமைதியான பொண்ணு… அடக்க ஒடுக்கமான பிள்ளை.. வேற்று ஆண்கள் யாரிடமும் வீண் பேச்சுப் பேசாதவள்… தெருவிலோ, உள்ளூரிலோ, கல்லூரியிலோ அநாவசியமான அரட்டை அடித்தாள் என்கிற அவப் பெயர் எடுக்காதவள்…முருகபாலன் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரன்… யாரையும் எளிதில் ஈர்க்க கூடிய திறமைசாலி… அவனது அளவளாவல் பாணியால் உம்மணா முஞ்சிகளையும் உற்ற நண்பர்களாக்கி விடுவான்….. பிறருக்கு உதவும் குணம் கொண்டவன்….இரண்டு பேர்களையும் நன்கறிந்தோர், இவர்கள் மீது இது போன்ற அபிப்ராயங்களுக்கு சொந்தக்காரர்களாகத்தான் இருந்தார்கள்.. இப்படிப்பட்டவர்கள் இணைவதில் தவறென்ன… என்றால் மட்டும்… அது… வந்து… என்ன இருந்தாலும்.. சாதி வேற இல்லையா…? என்று வார்த்தைகளை ஜவ்வாய் இழுத்தார்கள்…. ஆமா இந்த திருமணத்தை ஆதரிப்போரைக் காட்டிலும் எதிர்ப்பவர்களே ஏராளமாகத் தென்பட்டார்கள்.“எதிர்பாராத விபத்து ஒண்ணு நடந்து போச்சு… உங்க உயிரக் காக்க ரத்தம் வேணும்.. உங்க ரத்த வகைக்கு வேற சாதிக்காரரோட ரத்தந்தான் பொறுந்திது… அப்ப என்ன செய்வீங்க… வேறு சாதிங்காரங்கரோட ரத்தத்த செலுத்த வேண்டாம்… எங்க சாதி ஆட்களத் தேடிப் பிடிங்கன்னு சொல்லுவீங்களா…?” இப்படியொரு கேள்வியைக் கேட்டால்… ‘இது வேற அது வேற’ என்று மழுப்பினார்களே தவிர சரியான பதிலை எதிர்ப்பாளர்கள் யாரும் தரவில்லை.கானல்பிரியன் என்பவர் அந்தத் தெருவில் வசித்து வருகிற கவிஞர். ‘சாதி ஒழிய வேண்டும்’ ‘சாதி வித்யாசம் பார்க்க கூடாது’ ‘பள்ளிக் கூடத்திலேயே சாதி பெயரைக் கேட்க்கக் கூடாது’ என்கிற கருப்பொருளில் புதுக்கவிதை, வசன கவிதை, ஹைக்கூ கவிதை என்று நிறையக் கவிதைகள எழுதிக் குவிப்பவர். வார, மாத ஏடுகளில் இவரது கவிதைகள் அடிக்கடி பிரசுரமாகும். உள்ளூரில் அவ்வப்போது நடைபெறும் இலக்கிய கூட்டங்களில் கவிதைச் சாரல்களால் கவிதைச் சுவைஞர்களை நனையச் செய்வார். இவ்வாறு முற்போக்குப் படைப்புக்களின் முன்னோடியாய்த் திகழ்ந்த இவரால் யதார்த்தத்தில் இந்தக் காதல் கல்யாணத்தை ஜீரணிக்க இயலவில்லை. “என்ன ஒங்க நண்பர் இப்பிடிப் பண்ணிட்டாரு.. பொண்ணு விரும்புச்சுன்னு வேற சாதி பையனுக்குப் பண்ணிக் கொடுத்து… சொந்த சாதிக்காரங்க எதிர்ப்ப சம்பாதிச்சிட்டாரு…”வளர்மதியின் தந்தைக்கு நெருக்கமான தோழரான சீனிவாசனிடம் இப்படியொரு கேள்வியைத் தொடுத்தார் கவிஞர் கானல்பிரியன். சீனிவாசன் நிஜமான முற்போக்காளர். வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளிகள் இருக்க கூடாது என்று நினைப்பவர். முடிந்தளவு இடைவெளிகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்பவர். “என்ன சார்…; சாதி ஒழியணும்னு கவிதை எழுதினாப் போதுமா…? சாதி ஒழிஞ்சிடுமா…? செயல்ல இறங்க வேண்டாமா…? நீங்க எழுதினதோட நின்னுட்டிங்க… நம்ம தோழர் அத செயல்படுத்திக் காட்டிட்டாரு…”“அவரு பொண்ண வேற சாதிப் பையனுக்கு கொடுத்திட்டா மட்டும் சாதி ஒழிஞ்சிடுமா..?”“மாப்பிள்ளைப் பையன் முருகபாலன் மனதுல ஆழமா வேர்விட்டிருந்த சாதிச் செடிய இந்தக் கல்யாணம் மூலம் பிடிங்க எரிஞ்சாச்சில்ல…”“எப்பிடி…?”"முருகபாலன் அவன் சார்ந்த சாதி மீது பற்று மிகுந்தவன் தெரியுமா…? என்னய அண்ணன்னு கூப்பிடுவான்… ஏன் தெரியமா…? நான் அவுங்க சாதியாம்… ஒண்ணோட வயசில அவருக்குப் பையன் இருக்கான்… அவரப் போயி அண்ணன்னு கூப்பிடுறேன்னு யாராவது கேட்டா… அவர் எங்காளு தெரியுமா…? அண்ணன்னு கூப்பிட்டா கோவிச்சுக்கிட மாட்டாருன்னு பதில் கொடுப்பான்… அது மட்டுமில்ல…சுதந்திரப் போராட்டப் போராளி ஒருத்தர் அந்த சாதிக்காரராம்… அவர் பேர்ல இளைஞர் அமைப்புத் தொடங்கி செயல்பட்டு வந்தான்… இதெல்லாம் இந்தக் கல்யாணத்துக்கு பிறகு அவன்ட்ட இருந்து காணாமப் போயிடுச்சு தெரியுமா…? “அப்பிடியா…?’”ஆமா கல்யாணப் பத்திரிகையில யார் பேர்லயும் சாதி போடல… அந்த சுதந்திரப் போராட்ட போராளி படத்த அவுங்க வீட்டுல இதுவரைக்கும் நடந்த கல்யாணப் பத்திரிகையில போடாம இருந்ததில்ல… ஆனா இந்தப் பத்திரிகைல அவர் படத்தப் போடல… என்னய அவனோட சாதி ஆளுன்னு அண்ணன் கூப்பிட்டவன் இப்ப சார்னு அழைக்க ஆரம்பிச்சிட்டான்… வந்தவுங்களுக்குத் தந்த தாம்பூலப் பையப் பாத்திங்களா…? ஒரு பக்கம் பாரதியார் படம் போட்டு… அவரோட “சாதிகள் இல்லையடி பாப்பா” வரிகள்.. மறுபக்கம் வள்ளுவர் படம் போட்டு ’அன்பும் அறனும் உடைத்தாயின்" குறள். இதெல்லாம் தூக்கிப் பிடிச்ச சாதிய தூரப் போட்டிட்டான்னு தெரியலையா…?" இந்த மனப்போக்கு முருகபாலனோட நிக்காது… அவுங்க வீட்டுக்குள்ளயும் மெல்ல மெல்லப் பரவும்… ."………………………………………………………………………………………………….. "“ஒருவரை ஒருவர் புரிஞ்சு சாதி பத்தி கவலப்படாம காதிலிச்சு கல்யாணம் பண்ணிட்டு இனிமேலும் ‘எங்காளுங்க’ ‘நம்மாளுங்கன்னு’ சொன்னா மனச்சாட்சி உறுத்துமில்லையா..? சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ற போது இப்பிடித்தான் சாதி அபிமானம் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சு… அப்பறம் மறஞ்சு போகும்… அதனாலதான் பெரிய பெரிய சீர்திருத்த வாதிகள் எல்லாம் சாதி ஒழிக்கிற மூலிகை சாதி மறுப்புத் திருமணம்னு சொல்லி இருக்காங்க.. சொல்ல வேண்டிய கருத்த சுலபமா சொல்ல இலக்கணத்த ஒதுக்கி வச்சிட்டு புதுக்கவித வசன கவிதன்னு எழுதுறீங்க… அது மாதிரிதான் இதுவும்…. இலக்கியத்தில மரபு மீறும்போது… யதார்த்த வாழ்க்கையில மரப மீறாம சாதியப் பிடிச்சு தொங்கிறது நியாயமா சொல்லுங்க..”சீனிவாசனின் சின்ன சின்ன விளக்கங்கள் கானல்பிரியனின் கடின மனதைக் கரைக்கத் தவறவில்லை. சாதி ஒழிய சரியான மருந்து கலப்பு மணந்தான் என்கிற விதை அவர் மனதுள் விழுந்தது. இந்த திருணமத்திற்கு எதிர் நிலை எடுத்தவரை சீனிவாசனின் இயல்பான உரையாடல், அவரை ஏற்பு நிலைக்கு மாற்றியது.அன்பு மகளின் காதல் திருமணம், அவரால் ஆதரிக்கப்படுகிறது… இவரால் எதிர்க்கப்படுகிறது…. அந்தப் பெரிய மனிதர் தவறாகக் கருதுகிறார்… முக்கியப் பிரமுகர் முகம் சுளிக்கிறார்…. என்பதற்காக வளர்மதியின் அப்பா தேவபாரதி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை…. ஆம் அவர் இடது மனதுக்காரர். அதனால்…..போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரிதூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்…ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம்ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன்… அஞ்சேன்…என்கிற கவியரசர் கண்ணதாசன் கவிதை வரிகளை அசைபோட்டபடி கம்பீரமாக வலம் வந்தார். குப்பைமேனி -மே 19, 2019 -செல்வகதிரவன் அதிகாலை நடைபயிற்சியை முடித்துவிட்டு, கை நிறைய பசுமையான சின்னஞ் சிறு செடிகளுடன் வீட்டுக்குள் வந்தான் வரதராஜன். “இந்த மனுசன் எதுக்கு செடிகளப் பிடிங்கிட்டு வந்திருக்காரு..” என்று எண்ணியவாறு கணவன் கையில் இருந்த செடிகளைக் கூர்ந்து பார்த்தாள் கவிதா. “என்ன பாக்குற… இதுக்குப் பேரு குப்பை மேனிச் செடி.. ஒரு வாரமா கால்ல ஒரே அரிப்பா இருக்கு… இத அம்மியில வச்சு அரச்சு.. அத அரிக்கிற எடத்தில அழுத்தித் தடவிட்டுக் குளிச்சா அரிப்பு காணாமப் போயிடும்” “அப்படியா…? எனக்கும் வலது கால்ல அடிக்கடி அரிக்கிதுங்க…”“அப்ப நாளைக்கி வாக்கிங் போயிட்டு வரும்போது குப்ப மேனியப் பிடிங்கிட்டு வர்றேன்.. நீயும் அரச்சு தேயி… சரியாப் போயிடும்…”“ம்… கூம்… எனக்கு இந்த பைத்தியக்கார வைத்யமெல்லாம் ஒத்து வராது… நான் ஸ்கின் ஸ்பெசலிஸ்ட்டுகிட்ட போய்க்கிடுறேன்… என்னத்தயாவது தேச்சு… ஏடாகூடாமா எதாவது ஒடம்புக்கு வந்திடப் போகிது…”“இல்ல கவிதா… சின்னப் பையனா இருக்கும் போதே எனக்கு அரிப்பு வந்தா எங்கம்மா குப்பமேனி இலையைத்தான் அரச்சுத் தேய்ப்பாங்க… அன்னைக்கே சரியாப் போயிடும்..”“இவரு இப்பிடித்தான்… எதுக்கெடுத்தாலும் எங்கம்மா சின்னப் பிள்ளையில அதப் பண்ணினாங்க…. எங்க தாத்தா எண்ண தேச்சுக் குளிப்பாட்டி விட்டாருன்னு ஆரம்பிச்சிடுவாரு…”“காசு இல்லாத வைத்தியம்… கணப்பொழுதுல சரியாப் போயிடும்… விருப்பமின்னா செய்யி… இல்ல ஆஸ்பத்திரிக்கிப் போயி பணத்தக் கொட்டு..” “தோல் டாக்டர்கிட்டத்தான் நான் போகப் போறேன்… நீங்க குப்பமேனியத் தேய்ங்க… இல்ல கொடுக்காப் புளி இலையத் தேய்ங்க… என்னய ஆள விடுங்க…”வேண்டா வெறுப்பாக குப்பைமேனிச் செடிகளில் இருந்த இலைகளை ஆய்ந்து… அரைத்து காலியான தேங்காய் சிரட்டையில் போட்டுக் கொடுத்தாள் கவிதா. அதனை அரிக்கும் கால் பகுதியில் மட்டுமின்றி, உடல் முழுதும் தேய்த்து, உற்சாகமாய் குளித்தான் வரதராஜன். குளியலறையை விட்டு வெளியேறும் போது அரிப்பு போய்விட்டது போன்ற உணர்வு உருவாயிற்று. அந்த சின்ன நகரத்தில் தோல் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர் ஒருவர் மட்டுமே இருந்தார். அதனால் எப்போது பார்த்தாலும், அவரிடம் கூட்டம் அலை மோதும். எனவே முன் கூட்டியே அப்பாய்ண்மெண்ட்டு வாங்கி விட்டு வரவேண்டும் என்கிற நடைமுறையை அவர் அமல்படுத்தினார். அதன்படி அந்த டாக்டரைப் பார்க்க மறுநாள் பத்து மணிக்கு கவிதாவிற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. வரதராஜன், ஆபீசு விட்டு வந்த நேரங்களில் அவனுடன் இரு சக்கர வாகனத்தில் ஆஸ்பத்திரி, சாப்பிங், கோயில் என்று சுற்றி வருவது கவிதாவின் வழக்கம். வரதராஜனின் அலுவலக நேரம் காலைப் பத்து மணிக்கு ஆரம்பித்து மாலை ஐந்தரைக்கு முடியும். அதனால் இந்த ஸ்கின் டாக்டர் அப்பாய்ட்மெண்ட் கொடுத்திருந்த காலைப் பத்து மணிக்கு கவிதாவால் கணவருடன் போக இயலவில்லை. எனவே ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்குச் சென்றாள். அங்கு சென்றடைந்த ஐந்தாறு நிமிடங்களில் டாக்டரால் அழைக்கப் பட்டாள். அரிப்பு எடுக்கும் காலினை மேலோட்டமாகப் பார்த்த டாக்டர், பிறகு கேள்வி மேல் கேள்வியாய்க் கேட்டார். “எவ்வளவு நாளா அரிக்கிது…?” “என்ன சோப்பு போட்டுக் குளிக்கிறிங்க..?” "கத்திரிக்கா கருவாடு அதிகமாச் சாப்பிடுவிங்களா…?’ “ஒங்க அப்பா அம்மாவுக்கு இந்தத் தொந்தரவு இருந்திச்சா..?” இத்தனை கேள்விகளுக்கும் கவிதாவிடம் பதில்களைப் பெற்ற பிறகு, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கு சீட்டு எழுதிக் கொடுத்தார். “இப்போதைக்கு ஆயின்மெண்ட்டு ஒண்ணு தர்றேன்…. அத அரிக்கிற பகுதியில அப்ளைப் பண்ணுங்க.. நாளைக்கி டெஸ்ட் ரிப்போர்ட்டோட வாங்க… ரிப்போர்ட்டப் பாத்திட்டு என்ன ட்ரிட்மெண்ட் எடுக்கலாம்னு முடிவு பண்ணுவோம்…” என்று கூறி கவிதாவிற்கு விடைகொடுத்தார் ஸ்கின் ஸ்பெசலிஸ்ட்டு ஆஸ்பத்திரிக் கவுண்ட்டரில் ஆயின்மெண்ட், கன்ஸல்டிங் பீஸ் ஆகியனவற்றிற்கு கேட்ட பணத்தைச் செலுத்தி விட்டு, பரிசோதனை நிலையம் போய் ரத்தம், யூரின் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தாள். ஆட்டோ சார்ஜோடு செலவைக் கூட்டிப் பார்த்தால் அது ஆயிரம் ரூபாயைத் தொட்டது. மறுநாள் பரிசோதனை நிலையத்திற்கு வரதராஜனை அனுப்பி ரிப்போர்ட்டைப் பெற்ற பிறகு டாக்டருக்கு ஃபோன் செய்தாள். காலை பதினோரு மணிக்கு டாக்டரைச் சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் தரப்பட்டது. ரத்தம், யூரின் பரிசோதனை ரிப்போட்டைப் பேருக்குப் பார்த்துவிட்டு அலர்ஜிதான்… வேறொன்றுமில்லை என்றபடி, ஊசி போட்டுவிட்டு மாத்திரைகள் எழுதித் தர்றேன் ரெண்டு நாளைக்குச் சாப்பிடுங்கள் சரியாப் போய்டும் என்றார். ஆட்டோ கட்டணத்தோடு அன்றைய மருத்துவச் செலவு ஐநூறு ஆயிற்று. ஆக சாதாரண அரிப்புக்காக ஆயிரத்தி ஐநூறு ரூபா செலவாகி… அந்த மாதத்தின் பட்ஜெட்டை பள்ளமாக்கியது. அதன் பிறகு அஞ்சலக சேமிப்பில் பணம் எடுத்து விழுந்து பள்ளத்தை சரி செய்தார்கள். வரதராஜனுக்கு இருந்த அரிப்பு ஒரே நாள் குப்பைமேனித் தேய்ப்பால் ஓடிவிட்டது. கவிதாவின் நிலைமை அது மாதிரி இல்லை. ஊசி போட்டு… மாத்திரை விழுங்கி.. ஆயிண்மெண்ட் தடவி… இவ்வளவு பண்ணியும் எந்த மாற்றமும் ஏற்படக் காணோம். வேறு வழி தெரியாமல் குப்பைமேனிச் செடியை பிடிங்கி வரச்சொல்லி ரெண்டு நாட்கள் தேய்த்தாள். அவ்வளவுதான்….. அரிப்பு போன திக்குத் தெரியவில்லை.“டாக்டர் ஆலோசனை இல்லாமல் மருந்துக் கடையில், தலைவலி, காய்ச்சல், தடுமன்னு சொல்லி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவது தப்பு… பழைய மருந்துச் சீட்டுல எழுதின மாத்திரையை இன்னைக்கி வயித்த வலிக்கிதுன்னு வாங்கிச் விழுங்குவது அதிகப் பிரசங்கித்தனம்…. பல் வலிக்கு விக்ஸ் போடுறது முட்டாள்தனம்… அதுக்காக எதுக்கெடுத்தாலும் டாக்டர்கிட்ட போய் நிக்கிறது சரியில்ல… அரிப்புக்கு குப்பமேனிய அரச்சுத் தேய்க்கலாம்… சளிக்கி துளசி கசாயம் தயாரிச்சுக் குடிக்கலாம்… இருமலுக்கு முள்ளு முருங்கக் கீரையை அடை பண்ணிச் சாப்பிடலாம்…” என்கிற வகையில் வரதராஜன் அடுக்கிக் கொண்டே போனான். எப்பொழுதும் அவனின் சொல்லிற்கு எதிர்ச்சொல் சொல்லி ஏளனமாய் கிண்டலடிக்கும் கவிதா, இன்று ஏனோ அமைதியாகச் கேட்டுக் கொண்டிருந்தாள். அண்டப்புளுகனை வென்ற ஆகாசப்புளுகன் -ஜூன் 2, 2019 […] முன்பு ஒரு காலத்தில் இந்தியாவின் வடக்கு திசையில் புளுகு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் யார் பெரிதாகப் புளுகுகிறார்களோ அவர்களே ராஜா. அதைவிட கொஞ்சம் குறைவாகப் புளுகுகிறவன் முதல் மந்திரி. அதைவிட ஒரு படி குறைவாகப் புளுகுகிறவன் ராணுவ மந்திரி. அப்படியே நிதி மந்திரி, உணவு மந்திரி, என்று வரிசையாகப் பதவிகள் கிடைக்கும். யார் நன்றாகப்புளுகுகிறார்கள் என்று முடிவு சொல்வதற்கு புளுகு மந்திரி ஒருவர் இருந்தார். அவர் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை புளுகுப்போட்டி நடத்தி எல்லோரையும் தேர்வு செய்வார்.இப்போது அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்த ராஜாவின் பெயர் அண்டப்புளுகன். முதல்மந்திரியின் பெயர் அண்டாப்புளுகன், ராணுவ மந்திரியின் பெயர் குண்டாப்புளுகன், நிதி மந்திரியின் பெயர் கொப்பரைப்புளுகன், வெளியுறவுத்துறை மந்திரியின் பெயர் செப்பானைப்புளுகன், இப்படியே குத்துப்போணி புளுகன், சருவச்சட்டிப்புளுகன், வாணெலிப்புளுகன், கெண்டிப்புளுகன், தம்ளர்புளுகன் என்று அவர்கள் சொல்கிற பொய்களுக்கு ஏற்ப பெயர் வைத்துக் கொண்டார்கள். மக்கள் பாவம்! இவர்கள் சொல்கிற பொய்களைக் கேட்க முடியவில்லை. எதிர்த்துப் பேசவும் முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்க புளுகாத புளுகா? அப்படி என்ன புளுகி விட்டார்கள் என்று தானே கேட்கிறீர்கள்? ராஜா அண்டப்புளுகன், " நான் பிறக்கும் போதே என் தலையில் கிரீடத்துடன் தான் பிறந்தேன்.." என்று சொல்லுவான். யாராவது அம்மாவின் வயித்துக்குள்ளே கிரீடத்துடன் இருக்க முடியுமா? அப்புறம் கிரீடம் எப்படி வயித்துக்குள்ளே வந்துச்சுங்கிற கேள்வியும் இருக்கு. முதல் மந்திரி அண்டாப்புளுகன், “நான் நடந்து போனா கடல் ஒதுங்கி வழி விட்டுரும்..”என்று சொல்லுவான். சாலைகளில் உள்ள பள்ளத்தில் தேங்கிக்கிடக்கும் நீர் கூட வழி விடாது. குண்டாப்புளுகன், " நான் வாயைத்திறந்தா ஒரு லட்சம் படை வீரர்கள் என் வாயிலேர்ந்து வருவாங்க.." என்றான். ஆனால் குண்டாப்புளுகன் வாயிலிருந்து அவன் நேற்று தின்ற பிரியாணியின் கெட்டுப்போன வாசனை தான் வந்தது. கொப்பரைப்புளுகன், “என் உடலின் அத்தனை ஓட்டைகள் வழியாகவும் தங்கக்காசு கொட்டும்..?” என்று சொல்லுவான். ஆனால் அவன் உடலிலிருந்து கத்தாழை நாற்றம் அடிக்கும் வியர்வை தான் கொட்டும். அப்புறம் என்ன? செப்பானைப்புளுகன் சும்மா இருப்பானா?"நான் ஊம்னு சொன்னாப்போதும் உலகத்திலுள்ள அத்தனை நாட்டு ராஜாக்களும் தங்களுடைய நாட்டைச் சுருட்டிக் கொண்டு வந்து என் கையில் கொடுத்து விடுவார்கள்.. என்பான். ஆனால் எந்த நாட்டுக்கும் வரக்கூடாது என்று செப்பானைப்புளுகனுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்ல. தினமும் அரசாங்க அறிவிப்புகள் வேறு வரும். இனி யாரும் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது. தினமும் நம்முடைய குலதெய்வமான எலிமூத்திரத்தை குடித்தால் தீராத நோயெல்லாம் தீர்ந்து விடும் என்றோ புளுகு நாட்டு கடலுக்கடியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய கற்காலப்பாலம் இருக்கிறது அதனால் இனிமேல் மக்கள் அந்தப் பாலத்தில் தான் நடந்து செல்ல வேண்டும் என்றோ பூனையின் தலையை யானைக்கு வைத்துத் தைத்து மருத்துவத்தில் வெற்றி கண்ட நாடு என்பதால் இனி பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய நம் மூதாதையர் சொன்ன பாம் ஹீரீம்..மாம் ஹிரீம் என்ற மந்திரத்தைச் சொன்னால் போதும். ஆபரேஷன் நடந்து விடும் என்றோ மழை பெய்ய எல்லோரும் டம்ளருக்குள் உட்கார்ந்து மழையே மழையே போ போ என்று ஆங்கிலத்தில் பாடவேண்டும் என்றோ விசித்திரமான அறிவிப்புகள் வந்து கொண்டேயிருக்கும். இதையெல்லாம் மக்கள் சரியாகக் கடைப்பிடிக்கிறார்களா என்று புளுகர் படை ஒன்று கண்காணிக்கும். பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி களிலும் புளுகு மூட்டைகள் தினசரி அவிழ்த்து விடப்பட்டன. அண்டப்புளுகன் காலடி பட்டால் மண் பொன்னாகிறது. அண்டாப்புளுகன் கை பட்டால் வயலில் நெல் தானாக விளைகிறது. ஏனெனில் பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் நடத்திக் கொண்டிருப்பது அண்டப்புளுகன் தானே. மக்களுக்கு வாழவழியில்லை. விவசாய நிலங்களில் வீடுகள் வந்து விட்டன. படித்தவர்களுக்கு வேலையில்லை.ஏழை மக்கள் ஒரு வேளை உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டனர். புளுகு நாட்டின் கடைக்கோடியில் அண்டப்புளுகன் ஆட்சியைப் பிடிக்காத சில இளைஞர்கள் கூடி மக்கள் படுகிற துயரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அங்கே இருந்த இளைஞன் மகிழன், “அடுத்த போட்டியில் நாம் கலந்து கொண்டு. இந்த நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவோம்..” என்றான். எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.ஐந்து ஆண்டு முடிந்து புளுகுப்போட்டி தொடங்கியது.அண்டப்புளுகன் தன்னுடைய புளுகைச் சொன்னான். “நான் பிறந்த அடுத்த நிமிடமே டிஜிடல் கேமிராவில் படம் பிடித்தேன்.. அந்தப் புகைப்படம் இதோ..” என்று ஒரு குழந்தையின் விரலில் கேமிராவின் வார் இருப்பதைப்போல இருந்த படத்தைக் காட்டினான். உடனே புளுகு மந்திரி " ஆகா.. ஆகா.. எப்பேர்ப்பட்ட புளுகு! அடுத்த ஐந்து வருடத்துக்கும் இவரே ராஜா.." என்று சொல்லி முடிக்கும் முன்னால் மகிழன் முன்னால் வந்தான்.“இருங்கள் புளுகு மந்திரியாரே! என்னுடைய புளுகையும் கேளுங்கள். அப்புறம் முடிவு பண்ணுங்கள்…”அண்டப்புளுகனும் புளுகு மந்திரியும் மகிழனை அலட்சியமாகப் பார்த்தார்கள். இவன் என்ன புளுகப்போறான்? புளுகுவதற்கு என்றே பிறந்தவர்கள் தாங்கள் தானே என்ற இறுமாப்பில்,“ம்ம் நீ யார்? உன் பெயர் என்ன?..” என்றார்கள். மகிழன், “ஐயா என் பெயர் ஆகாசப்புளுகன். நமது அண்டப்புளுகன் பிறந்த பிறகு தான் டிஜிடல் கேமிராவில் படம் எடுத்ததாகச் சொன்னார். நான் அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும்போதே டிஜிடல் கேமிராவில் என்னையே படம் எடுத்திருக்கிறேன்..”“என்னது அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும்போதா? புளுகறதுக்கும் ஒரு அளவில்லையா?”என்று புளுகு மந்திரி சொன்னான். மகிழன் சிரித்துக்கொண்டே," இதோ ஆதாரம்…" என்று வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்த படங்களைக் காட்டினான்.“இந்தப்படங்கள் கருப்பாக இருக்கின்றன.. நான் ஏத்துக்கிடமாட்டேன்..” என்று புளுகு மந்திரி சொன்னான். மகிழன் உடனே,“இருட்டிலிருந்து எடுத்ததாலே இருட்டாருக்கு.. என்ன மக்களே என்ன சொல்றீங்க?” என்று சுற்றியிருந்த மக்களைப் பார்த்துக் கேட்டான். உடனே மக்கள், “ஆமா இதுதான் ஆகாசப்புளுகு.. ஆகாசப்புளுகன் வாழ்க!” என்று கத்தினார்கள். வேறுவழியில்லாமல் புளுகு மந்திரி மகிழனையே புளுகு நாட்டின் ராஜாவாக முடி சூட்டினான். ராஜா மகிழன் முடி சூட்டியவுடன் செய்த முதல் வேலை அண்டப்புளுகனையும் அவனுடைய ஆட்களையும் நாட்டை விட்டே துரத்தினான். புளுகு நாட்டின் பெயரை அறிவுநாடு என்று மாற்றினான். ஆட்சியில் மக்களையும் பங்கெடுக்க வைத்தான். அறிவுநாடு அறிவுள்ள நாடாகத் திகழ்ந்தது. திசையற்று… -ஜூன் 9, 2019 […] செகந்திராபாத் ரயில் சந்திப்பில் ரயில் வருமுன்னே பொதுபெட்டி நிற்கக்கூடிய இடத்தில் பிச்சைக்காரர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். சீருடையில்லாக் காவலர்கள் கண்காணிப்பில் தரகர்கள் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். இவர்களை எங்கே கொண்டு செல்லப் போகிறார்கள் என்று எவருக்கும் தெரியவில்லை.! வெங்கட்டம்மா கெஞ்சும் குரலில் இவர்களை அழைத்து வந்த தரகரிடம் கேட்டாள். தரகர் காவலரைக் காட்டி அவரிடம் கேட்கச் சொன்னார். காவலர் முறுக்கு மீசையுமாய், மிரட்டும் கண்களுமாய் நின்றிருந்தார். அவரைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. அவரிடம் எப்படிக் கேட்பது; அவர் லத்தியால் அடித்தாலோ, லத்திகொண்டு ஒரு தள்ளு தள்ளி விட்டாலோ உயிர் போனால் பரவாயில்லை, கைகால், இடுப்பு ஒடிந்து விட்டால் பிச்சை எடுக்கக்கூட ஓரிடம் விட்டு இன்னோரிடம் நகர முடியாதே, எங்கோ குப்பைமேட்டிலோ சாக்கடை பள்ளத்திலோ விழுந்து புழுத்து அழுந்திச் சாகவேண்டியது தான். இந்த நினைப்பே பேரச்சத்தையும் பெருங்கவலையையும் உண்டாக்கியது. இதே நிலைதான் வெங்கட்டம்மா முதல் கொண்டு மெகுருநிசா பேகம் வரை, பேதம் இல்லாமல் விரவி இருந்தது. ராமா, கிருஷ்ணான்னு பாக்கியலட்சுமி கோயில் முன்னால கையேந்தி வந்தனமும் வாழ்த்தும் சொல்லி, நாலு காசு பிச்சை வாங்கிப் பிழைத்தோம். சார்மினார் பார்க்க வர்றவங்களும், பாக்கியலட்சுமியை தரிசனம் செய்ய வர்றவங்களும் தானம், தர்மம் செய்வாங்க. யாரோ அமேரிக்கவில இருந்து ஜனாதிபதி மக வர்றாளாம். அந்த மகராசி மூலமா அரசாங்கத்துக்கு நிறைய உதவி கிடைக்குமாம். நிறைய சலுகைகளும், தொழிலும் கிடைக்குமாம். அதனால அந்த மகராசி வந்து போறவரைக்கும் இந்த ஐதராபாத் பட்டினத்தில பிச்சைகாரங்களே கண்ணிலே படக் கூடாதாம்! இந்த மாநிலத்தை ஆளுற மவராசன் உத்தரவு போட்டுட்டாராம். ஆமாம், நாங்க கையேந்தக் கூடாதுன்னு சொல்லி, இந்த அரசாங்கம் கையேந்தப் போகுதாம் என்று நினைத்த வெங்கடம்மா சிரித்துக்கொண்டாள். “ஏய் கிழவி, என்ன மனுஷன் கத்தறது காதிலே விழுகலையா. ரயில் வந்து நிக்கிது. எல்லாரும் ஏறிகிட்டிருக்காக. நீ நட்ட நடுவுல நின்னுக்கிட்டு சிரிச்சுகிட்டு நிக்கிறீயே. பையித்தியம் எதுவும் பிடிச்சிறிச்சா. பல்லக் காட்டிகிட்டு நிக்கறியே!” என்று காவலர் திட்ட சுதாரித்து அவரிடம் சென்றாள் வெங்கட்டம்மா“. அய்யா, புண்ணியம் கிடைக்கட்டும் உங்களுக்கு!. தலை சுற்றி கண்ணு இருட்டிக்கிட்டு வருது. கொஞ்ச நேரம் உக்காந்து ஆசுவாசப்படுத்திக் கிட்டு அடுத்த ரயிலு ஏறறேன். கொஞ்சம் கருணை காட்டுங்க மகராசா!” என்று கெஞ்சினாள். காவலர் கருணைக்கண் திறந்து சைகை காட்ட, அவள் சற்றுத்தள்ளி இருந்த கல்பெஞ்சில் உட்கார்ந்தாள். உருது, இந்தி, தெலுங்கு என்று பலமொழிகளில் சொல்லப்பட்ட வார்த்தைகள் ‘ஐயோ வகுத்துக்கு சோறு போட்டு பாதுகாத்த பூமி, பழகின தேசத்தை விட்டு திசை தெரியா தேசத்துக்கு விரட்டி விடறாங்களே’ என்ற புலம்பல் தான். அரசாங்கத்துக்கு ஆயிரம் கண்ணு, ஆயிரம் காதுக இருக்கு. அது இந்த மாதிரி துயரங்களை பார்க்கவோ, கேட்கவோ முடியுமா. கல் உருகலாம். கல்லா நிற்கிற மனுஷன் இரங்குவானா.? தரகன் வந்தான்," என்னக் கிழவி வண்டியில ஏறாம வாயை மென்னுகிட்டு இருக்கே? பத்தி வந்ததில் ஒரு ஆளு குறையுதுன்னு தேடித்தேடி தவிக்கிறேன்.இங்கே வந்து வக்கனையா உக்காந்திருக்கவ.. எந்திரி கிழவி!" புண்ணியவானே கிறக்கமா தலை சுத்திகிட்டு வருதுன்னு, போலீஸ்கார தர்மதுரை கிட்டே கேட்டுட்டு உக்காந்துருக்கேன் சாமி. திக்கு தெரியாமப் போறோம். முதல் ரயிலில் போனா ஏன்னா, அடுத்த ரயிலில போனா என்ன புண்ணியவாளரே என்று வெங்கட்டம்மா கெஞ்சினாள். சரி, அடுத்த வண்டியிலே கண்டிப்பா எறிரோனும் என்று தரகர் கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு காவலரைப் பார்த்தான். காவலர் மீசையை முறுக்கியபடி பார்வையை சுழலவிட்டபடி இருந்தார். அவரது செவிமடல் விடைத்து இவர்கள் பேச்சைக் கேட்டபடி இருந்தது. அடுத்த அரைமணியில் இன்னொரு ரயில் வந்து நின்றது. அதற்கும் ஒரு கூட்டத்தை திரட்டிக்கொண்டு வந்தனர். தரகர் வெங்கட்டம்மாவிடம், ஏய் கிழவி இந்த ரயிலில் ஏறிரியா, பிச்சைக்கார ஆம்பிளைக மாதிரி, ஜெயிலுக்குப் போறீயா? என்று அதட்டி பிடரியைப் பிடித்து தள்ளாத குறையாக விரட்டி ரயில் ஏற்றி விட்டான். உட்கார இடமில்லை. கழிவறைக்குப் போகும் வழியருகே வாகாக சாய்ந்து உட்கார்ந்தாள். முதுகை முட்டுக்கொடுத்து உட்கார்ந்தது உடம்புக்கு இதமாக இருந்தது. வண்டி குலுக்கலோடு மெல்ல நகர்ந்தது. பிடிமானம் இல்லாதாததால் பெட்டியின் இரும்புச் சுவரில் மீண்டும் நன்கு சாய்ந்து கொண்டாள். ஐதராபாத் நகரை விட்டுப் போவது மனம் ஒப்பவில்லை. பிறந்து வளர்ந்து வாக்கப்பட்டு, பிள்ளைகளைப் பெற்று, கணவனையும் பறிகொடுத்து பேரப்பிள்ளைகளையும் காண வாய்த்த கிராமத்தை விட்டு மகனாலும் மருமகளாலும் விரட்டப்பட்டு வந்தபோது ஐதராபாத் நகரல்லவா வாழ மடி கொடுத்தது.! உறவு உதறி எறிந்த போதும் வறட்டு கவுரவம் பார்த்து உயிரை விட விருப்பமில்லை.வாழ விதிக்கப்பட்ட உயிரை வாழ்ந்தே தீர்ப்பது என்ற முடிவு தன்னைப் போன்று நூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்ததும் தோன்றியது. சார்மினாரைப் பார்க்க வருபவர்களும், பாக்கியலட்சுமி கோயிலுக்கு வருபவர்களும் தரும் காசும், தின்பண்டங்களும் வெங்கட்டம்மா போன்ற அபலைகள் உயிர் காத்தது. பிச்சை வாங்கிப் பிழைப்பது கேவலம் தான். ஆனால் திருடிப் பிழைப்பதை விடவோ, ஏயிச்சுப் பிழைப்பதை விடவோ மோசமானதல்ல. இப்படி பிழைக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியவர்களுக்கு இல்லாத கேவலமோ, அருவருப்போ தனக்கில்லை.தள்ளியவன் குற்றவாளியா, விழுந்தவள் குற்றவாளியா என்று தனக்குள்ளே கேட்டுக் கொள்வாள். ஆனால் வெங்கட்டம்மா சங்கராந்தியோ, பதுக்கம்மா பண்டிகையையோ, கிராமத் திருவிழாவோ நெருங்கி வந்துவிட்டால் கிராமத்துக்கு போய் தன்னிடம் உள்ள சேமிப்பைக் கொடுத்து பேரப்பிள்ளைகளைக் கொஞ்சிக் குலாவிவிட்டு மகள், மகனோடு உறவை உயிர்பித்துவிட்டு மூன்றாம் நாள் ஐதாராபாத் திரும்புவாள் பிச்சை எடுத்த காசு. உறவுகளுக்கு அருவருப்பில்லை.இப்படி திருவிழாக்களுக்கு போய் காசுகொடுத்து உறவாடி வருவது, தன்னை விரட்டிவிட்டவர்களை பழி தீர்த்துக் கொள்வது போல உணர்வு வெங்கட்டம்மாவுக்கு ஏற்படுவதுண்டு.பெருநகருக்கு வந்தபின்தான் தன்னைப் போல நூற்றுக்கணக்கான வெங்கட்டம்மாக்கள் இருப்பதை உணர்ந்து தன்னைத் தேற்றிக் கொண்டாள். இப்போது திக்கு தெரியாத ஊருக்கு விரட்டப்படுகிறோம்.ஊர் திரும்புவோமா, மாட்டோமா, திருவிழா தோறும் பார்த்து பாவனைக்கவது சிரித்துப் பேசும் சொந்தம் பந்தங்கள் தன்னைக் காணாது நினைத்தாவது பார்ப்பார்களா என்ற யோசனையோடு ரயிலின் தாலாட்டலில் கண்ணயர்ந்து விட்டாள். ஜனவெக்கையில் குளிர் தெரியவில்லை.பலர் பல மொழிகளில் பேசுவது புரிந்தும் புரியாமல் காதில் விழ கனவும் நனவுமாய் படுத்துக் கிடந்தாள். யாரும் இவளைப் பற்றி கவலைப் படவில்லை. இவளும் எவரைப் பற்றியும் கவலைப் படாதுபோல் படுத்துக் கிடந்தாள். உடல் அலுப்பும் மன அலுப்பும் அழுத்தப்படுத்திருப்பவர்கள் எழுந்திருக்கும் வரை பிணம் தான்.! படுத்துக் கிடக்கும் அவளை கடந்து செல்லும் எவரும் அவளைக் கண்டு கொள்ளவில்லை. சுற்றியுள்ள மனிதர் இறங்கியதால் வெக்கை குறையவும் வண்டியின் வேகத்தைக் கிழித்து நுழையும் குளிர்காற்று அவளை உயிர்ப்பித்தது. கண் திறந்து பார்வையை சுழற்றினாள். அருகருகே இடித்துக்கொண்டு குந்தியிருந்த சகப்பிச்சைகாரர்கள் இறங்கியிருந்தார்கள்.சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். இவள் ஒருத்தி மட்டுமே பிச்சை எடுப்பவள். மற்றவர்கள் பயணிகளாகத் தென்பட்டனர். அவளுக்கு திக்கென்றது. பேச்சுத் துணைக்குக்கூட சகபாடிகள் யாருமில்லையே என்ற ஏக்கம் தாக்கியது. எல்லோரும் இறங்கவேண்டிய இடம் நெருங்கி விட்டதுபோல் எல்லோரும் இறங்கத் தயாராகிக் கொண்டிருந்தனர். பெரும் பெரும் கட்டடங்களுக்கிடையே எதிரெதிர் திசையில் ரயில்கள் ஊர்வதும், விரைவதுமாக இருந்தன. அருகிருந்த ஒரு நடுத்தரவயதுப் பெண்ணிடம் எந்த ஊர் வரப் போகிறது என்று கேட்டாள். சென்னை. இதுதான் கடைசி ஸ்டேஷன் என்றாள். வெங்கட்டம்மா கழிவறை சென்று வந்து முகம் கழுவி தனது துணிப்பையை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானாள். எல்லோரும் இறங்கியபின் இறுதியாக இறங்கி தனக்கு முன்னே செல்பவர் பின்னே நடந்தாள். பயணிகள் வெள்ளத்தில் மிதந்து ஊர்ந்தாள். தன்னிடம் பேசிய பெண்ணை அடையாளாமாகக் கொண்டு நகர்ந்தாள். வாகன நெரிசலுகிடையில் கிடைத்த சந்தில் அந்தப்பெண்ணைப் பின்பற்றினாள்.சாலையைக் கடந்த பின் இன்னொரு ரயில்நிலையம் போனாள். பூங்கா ரயில் நிலையம் என்றார்கள். படிகளில் ஏற முயலும் கூட்டம் கண்டு தயங்கி நின்றாள். இதற்குள் தனது அடையாளப் பெண் கூட்டத்தில் கரைந்து விட்டாள். முன்னோக்கி இழுத்துச் செல்லும் இலக்கு இன்றி திகைத்து நின்றாள்.பசி கண்ணைக் கட்டியது. சிலர் போவோர் வருவோரிடம் கையேந்துவது கண்டதும் உறவினர்கள் சுற்றியிருக்கும் தெம்பு வந்தது. இவளும் மெல்லக் கையேந்தி தெலுங்கில் கெஞ்சியபடி படி ஏறினாள். திடீர் என்று கரைநோக்கி வரும் அலைகள் போல் பயணிகள் வருவதும், கடலுக்குள் திரும்பும் அலைகள் போல் வற்றிபோவது போலும் பயணிகள் வரத்தும் போக்கும் இருந்தது. வெங்கட்டம்மாள் கை ஏந்தியபடி மாடிப்படிகள் ஏறும்போது கூட்டம் வடிந்திருந்தது. இவள் அனிச்சையாக கையேந்தும் போது அவள் முன்னால் ஒரு வயதான பெண் ஒற்றைக்காலோடு அம்மா என்று கையேந்தி இருந்தாள். வெங்கட்டம்மாவுக்கு வெட்கம் வந்து விட்டது. பிச்சைக்காரியிடமே பிச்சை கேட்டுவிட்டோமே என்று ஒரு கணம் உறைந்து நின்றாள். இந்த நொடிபொழுதில், “அய்யோ பாவம்! பசி கிறக்கம் போல. இந்தாம்மா, இந்த இட்டலிப் பொட்டலத்தை சாப்பிடு.” என்று அந்தப்பெண் இட்டலிப் பொட்டலத்தை நீட்டினாள். “ஐயோ, கடவுளே, நீயே கால் முடத்தொடு ஒத்தைக்காலோடு சிரமப்படறே. இவ்வளவு உயரத்தில் படியேறி வந்து உக்கார எம்புட்டு சிரமப்பட்டு இருப்பே. உங்கிட்ட வாங்கறது எவ்வளவு பெரிய பாவம். நீ, சாப்பிடம்மா.” என்று வெங்கட்டம்மா கனிவாகச் சொன்னாள். அந்தப் பெண் சிரித்தாள். “உன்னை மாதிரி நான் ஒத்தப்பேரி இல்லம்மா.நாங்க பெரிய கூட்டம். எங்காளுகளே எனக்கு சாப்பிடக் கொடுத்து இங்க தூக்கிவந்து உக்காரவச்சிட்டுப் போயிருவாங்க. இது எனக்கு மத்தியானத்துக்கு திங்கத்தான். நீ தமிழ் தெரியாதவளாக இருக்கே. அதனால இதை சாப்பிட்டு விட்டு அங்கிட்டு வேற இடம் பாரு” என்றாள். “அப்படியா, அம்மா நான் உங்க கூட்டத்தோடு சேர்ந்துக்கவா” “ஐயோ கடவுளே, உலகம் தெரியாதவளா இருக்கே. இது பெரிய கொள்ளக் கூட்டம் தாயீ. தினசரி வசூல் குறைஞ்சா அடிச்சே கொன்னுருவாங்க. நான் மாட்டிக்கிட்டுப் படறது போதாதா. நீ என்னை மாதிரி சிக்கிக்காம சுதந்திரமா சுத்தி திரி தாயி. இந்தா இட்லியை சாப்பிட்டு பசிகிறக்கம் தீர்த்து, அங்கிட்டு நட” என்றாள் காலிழந்த பெண் . தனிமையே துணையாய்… -ஜூன் 16, 2019 ‘பானம்மா’ என்று மரியாதையாய் ஊரார் அழைக்கும் பானுவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போய் முழுதாய் மூன்று மாதமாகிறது. ஆனாலும் படுத்த படுக்கையாய் இல்லாமல் வீட்டிற்குள் நடமாடிக் கொண்டிருந்தாள். பல்லாண்டு காலமாய் உழைப்பை மட்டுமே வரித்துக் கொண்டு அன்றைய வாழ்வு அன்றைக்கு என்று இருந்தவள், மனதில் உடல்நிலை கெட்டதும் கடந்த கால வாழ்வு அடிக்கடி வந்து போனது. நீண்ட முயற்சிக்குப் பிறகு ஜாதகம் பொருந்திய நல்ல சேதி கிடைத்து. தன்னை பெண் பார்க்க வந்த சங்கரின் தோற்றம் அவளை ஈர்த்தது. நாள் குறித்ததும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தவள் மானசீகமாய் அவனைக் காதலிக்கவும் குடும்பம் பற்றி கனவு காணவும் துவங்கினாள். மணவாழ்வு துவங்கினால் மகள் இன்னும் கொஞ்சம் சௌகரியமாய் வாழ்வாள் என்பதே பெற்றவர்கள் மகிழ்ச்சிக்கு போதுமானதயிருந்தது. அண்ணன் தங்கை இருவர் மட்டுமே குழந்தைகளான அந்த வீட்டில் அண்ணன் கோபால் ஏற்கனவே திருமணமாகி வேலை நிமித்தம் வடக்கே நெடுந் தொலைவில் எங்கோ வசித்து வந்தார் . திருமண ஏற்பாடுகளில் கலந்து கொள்ள முடியாத போதும் குடும்பத்துடன் வந்து திருமணத்தை சிறப்பித்தார். வாழப் போன இடத்தில் வசதிக்கு குறைவில்லை. ஆனால் தான் நம்பிச் சென்ற காதல் கணவன் குடிப்பழக்கம் உள்ளவன் என்பது தெரிந்து அதிர்ச்சியானது. அப்பா அம்மாவிற்கு இது முன்னரே தெரிந்தும் ஜாதக பலன் காப்பாற்றும் எனும் நம்பிக்கையால் அவரை மாப்பிள்ளையாக ஏற்றனர் என்பதை அறிந்த போது இடிந்து போனாள். தன் ஆசைக் கணவர் எந்த சமயம் எப்படி வருவானோ எனும் பதற்றம் அவளைத் தடுமாற வைத்தது என்றுமே கேட்டறியாத அதிகாரக் குரலும். காரணம் அறியாத வகையில் வந்து விழுந்த சுடுசொற்களும் முகம் சுருங்க வைத்தன. பறந்து வரும் தட்டிலிருந்து சுடு சோறு முகத்தில் வழியும் போது மனசு மூலையில் முடங்கியது. வயிற்றில் எத்தும் போது உருவாகும் வலி சுருள வைத்தது. போதையில் அவன் மட்டையாகும் போது வாழ்வே சுருண்டு போனது. அவனுடன் வாழ்ந்த காலங்களில் மகிழ்வாய் இருந்த நாட்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த நாட்களின் இனிமையை நினைக்கும் போதெல்லாம் இந்த இனிமையை இயல்பாய் காட்டாமல் யாருக்காக எதற்காக அடைகாத்து வைக்கிறான் என்று தோன்றும். ஆனால் அவனிடம் வெளிப்படும் மூர்க்கத்தனம் அச்சத்தை உருவாக்கும். அதுவே நிரந்தரமாய் அவள் வாழ்வை நகர்த்தினாலும் அதை பெற்றோருடன் பகிர்ந்து உதவி தேட மனம் வரவில்லை. மாமனாரின் வழியில் வட்டித் தொழில் செய்து வந்தவன் நாளாக நாளாக அதையும் சரியாய் கவனிக்கவில்லை. மணமாகி சரியாய் மூன்றாண்டுகள்.. தட்டிக் கேட்க மாமனாரும் இல்லை என்றானது. பிறகு இப்படியே விட்டு வைத்தால் வயிற்றுப்பாட்டுக்கு வழி ஏது… என யோசித்து ஒரு முடிவெடுத்தாள். முடிந்தவரை அவன் அறியாமல் பாக்கி வசூல் செய்து சேமித்து வைக்க ஆரம்பித்தாள். ஆனாலும் எப்படியோ அவனுக்கு தெரிய வரும்போது குடிப்பதற்கு அந்தப் பணத்தைக் கேட்டு அடிப்பான். குடுத்த உடனே குடித்து தடுமாறி வருவான். மதுக்கடைகள் இருந்தால் தானே இந்தப் பிரச்சனைகள் வருகின்றன… அதுவே இல்லாமல் போனால் நிறைய பெண்களின் வாழ்வில் இந்தப் பிரச்சனை காணாமல் போய்விடும் என்று பக்கத்து வீட்டு லதா தன்னுடன் மதுக்கடை ஒழிப்பு போராட்டத்திற்கு வரச் சொன்னாள். அது நல்ல விசயமாயிற்றே என்று நினைத்து அவளுடன் சென்றாள். ஆனால் அவனுக்கு அது தெரிந்ததும் அவள் வாங்கிய உதையில் வயிறு வீங்கி ஆஸ்பத்திரியில் மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. குடிமறக்கும் சிகிச்சைக்கும் அவன் வர மறுக்க பத்தாண்டுகள் உருண்டோடியது. உடலை முழுமையாய் அரித்த குடியால் மரணம் தழுவினான். இறுதி நாட்களில் அவள் செய்த பணிவிடைகள் அவனுள் ஏற்படுத்திய உள நெகிழ்வை அவன் கண்களில் கசிந்த ஈரம் காட்டியது. அக்கம்பக்கத்தார் அவளின் பொறுமை பற்றி பேசும் போது உருவாகும் அதே மனகசப்பைத் தான் இறுதிநொடி உளநெகிழ்ச்சி உருவாக்கியது. மாமனார் விட்டுச் சென்ற வீடு அவளைப் பாதுகாக்க அவரின் பணத்தைக் கொண்டு ஒரு வருடத்தை நகர்த்தினாள்.. பிறகு அவள் கையே அவளுக்கு உதவி என்றானது. கிடைத்த வேலைகளை செய்யத் துவங்கினாள். சொல்லி வைத்தாற்போல் அவள் பெற்றோரும் ஒருவர் பின் ஒருவராய் மறைந்தனர். ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் அதைப் பற்றி யாரிடமும் புகார் பட்டியல் வாசிக்கவில்லை. ஆதரவும் கேட்கவில்லை. அண்ணனும் ஒரே தங்கையென அவள் மீது அளவு மீறின பாசம் கொள்ளவில்லை. தன் குடும்ப சூழலை சமாளித்து வாழ்வதே பெரும் விசயமாய் அவன் நினைக்க இவளும் அதைக் குறையாய் நினைக்காமல் வாழப் பழகிக் கொண்டாள் . கணவன் மறைவில் துக்கத்துடன் நிம்மதியும் இணைந்தே உருவானது. ஆனால், அதனால் உருவான தனிமை உணர்வு இளமையை விட முதுமையில் மிகவும் வாட்டி வதைத்தது.வேலைக்கு சென்று வந்தபோது பகல் பொழுதின் வேலைக் கடுமை அதை மறைத்தாலும் இரவின் தனிமை அவளைக் கொன்றது. வேலையில் கிடைத்த அனுபவங்களையோ, உடல்நோவையோ, உடன் வேலை செய்யும் நட்புகளால் கிடைக்கும் மகிழ்வையோ துக்கத்தையோ பகிர்ந்து கொள்ள தனக்கே தனக்கென ஓர் உறவு இல்லையே என்பது அவளை வேதனைப் படுத்தியது. ஒரு குழந்தை இருந்திருந்தால் இந்த வேதனை இவ்வளவு கொடூரமாய் இருந்திருக்காதோ என்னவோ? வேலைக்கு இனி அவள் லாயக்கில்லை என்று அவள் முயற்சித்த இடங்களில் எல்லாம் ஒதுக்கிய பிறகு தான் அவள் தன் முதுமையை முழுமையாய் உணர்ந்தாள். தன் இளமையும் முதுமையும் இப்படி அமைந்தது எதற்கான தண்டனை எனக் குமைந்தாள். வேலையை விட்டு நின்ற இந்த குறுகிய காலத்திலேயே அந்த வேதனை தன்னை மிக மூர்க்கமாய் தாக்குவதை உணர்ந்தாள். தன் வயதில் உள்ளவர்களுடன் கொஞ்ச காலம் வாழ்ந்தால் துன்பம் மறையுமோ என எண்ணி பக்கத்து ஊரில் இருந்த முதியோர் இல்லத்தில் ஒரு வருடம் வாழ்ந்து பார்த்தாள். இவள் பேச்சும் பழக்கமும் கூட அந்த இடத்திற்கு பொருந்தவில்லை. அவர்களின் அதீத சோர்வை போக்க உதவவில்லை. மாறாக அவர்களது சோர்வு இவளை ஆட்கொள்ள, பயந்து போனாள். தனிமையே சுகம் என தன் வீட்டிற்கே வந்து சேர்ந்தாள் .. அங்கிருந்து வந்தது முதல் ரத்த அழுத்தமும் இதய நோவும் மிகக் கடுமையாய் அவளைத் தாக்கியது. தன் கணவனைத் தாங்கும் தூணாய் இருந்தவளுக்கு தான் படுக்கையில் விழுந்தால் யார் கவனிப்பார்கள் எனும் கேள்வி எழுந்தது. பதில் இல்லாக் கேள்வியாய் அது விஸ்வரூபம் எடுக்க முடிந்த வரை டாக்டர் சொன்ன வழிமுறைகளின் படி நடந்து உடல் தொந்தரவுகளை கொஞ்சம் கட்டுக்குள் வைத்துக் கொண்டாள். அப்போது தான் அண்ணனைப் பற்றிய நினைவுகளும் அதிகமாகியது. பெற்றோர் மறைந்ததும் சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்த அண்ணன் இந்த வீட்டை விற்றுவிட்டு உடன் வந்திருக்க சொன்னார். அவர் சொன்ன விதத்தில் அவருக்கான ஏதோ ஒரு தேவை இருப்பதாக தோன்ற ‘இங்கேயே இருக்கிறேன்’ என சொல்லி அவரை அனுப்பி விட்டாள். இப்போது அது தவறோ எனத் தோன்றியது. ஒரே தங்கையான தன்னிடம் உதவி எதிர்பார்த்திருந்தாலும் தப்பில்லையே.. நாமே கொஞ்சம் துருவியிருந்தால் அவர் மனதில் இருப்பதை சொல்லியிருப்பார். அன்று நான் பேசிய தொனியில் என்ன நினைத்தாரோ அன்றிலிருந்து அண்ணன் தங்கை பேச்சுவார்த்தை முற்றிலும் முறிந்தது போல ஆகி விட்டது. பலதையும் நினைத்து படுத்திருந்த பானு மனதில், ‘அவரிடம் பேச வேண்டும். அவரின் குரலைக் கேட்க வேண்டும்’ எனும் தாபம் உருவானது. அதனை செயல்படுத்த தயக்கம் ஒரு புறம் இருக்க பாசம் வென்றது.. உடனடியாய் ஒரு கடிதம் எழுதிப் போட்டாள். இதுவரை போன் அவசியமில்லை என காலம் கழித்தவள் அண்ணனிடம் போன் இருப்பது தெரிந்ததும் உடனடியாய் போன் வாங்கினாள். இந்த ஒரு வாரமாய் அவரிடம் பேசிக் கொண்டிருந்ததில் அவரிடமும் மாற்றம் தெரிந்ததை அவளால் உணர முடிந்தது. இதுவரை தனியாக தன்னை சமாளித்துக் கொள்வது மகிழ்ச்சி தந்தாலும் இப்போது அண்ணனிடம் பேசத் துவங்கியதும் தான் யாருமற்ற அனாதை போல் கிடப்பது வேதனை தந்தது. அவளுக்குள் மாறிமாறி உருவான இந்த உணர்வுகளுடன் இதற்கு மேல் உடல்நலம் குறைந்தால் தன்னால் தனியாக சமாளிக்க முடியுமா எனும் அச்சமும் எழுந்தது. அதுவரை ‘தான் அழைத்து அவள் வர மறுத்தாள்’ என்பது மட்டுமே கோபாலின் நினைவில் தங்கிக்கொள்ளா கோபம் கொண்டிருந்தான். தங்கையின் குரல் காதில் விழுந்த கணத்திலிருந்து அந்த கோபம் மறையத் துவங்கியது. அந்த இடத்தை தங்கையின் மீதான கரிசனம் நிரப்ப ஆரம்பித்தது. இதுவரை அண்ணனாய் இருந்து தான் அவள் மீது கொண்ட அக்கறை என்ன? அவள் ஏன் தன்னை நம்ப வேண்டும் என்ற கேள்விகள் குடைந்தன.? வாரிசில்லா வீட்டின் சொத்தும் பணமும் தனக்கு உதவக் கூடாதா?’ எனும் எண்ணமே அன்று தன்னிடம் மேலோங்கி இருந்ததையும் நினைத்தவுடன் அவள் மீதான கோபம் முழுவதுமாய் மறைந்தது. எந்த அளவு அவள் மனம் காயப்பட்டிருக்கும் என சிந்திக்கவே இல்லையே.. தன் சுயநலத்திற்கு அன்றைய சூழல் காரணமாய் இருந்தாலும் தன் நினைப்பு சரியில்லை எனும் குற்றவுணர்வு இப்போது அதிகமானது. தனக்கு துணை இருக்கும் போதே வயது காரணமாய் வரும் உடல் தளர்ச்சி எத்தனை தள்ளாட்டம் தருகிறது? யாருமற்ற நிலையில் வாழும் தங்கை! அதை நினைக்கும் போதே பரிதாப நிலை மனதை வாட்ட கண்ணீர் சுரந்தது. அவளை சென்று பார்த்து வர வேண்டும் என்று எண்ணிய கணத்தில் சரியாக பானுவிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் கூறிய ‘வருகிறேன்’ எனும் ஒற்றைச் சொல் அவளிடம் ஏற்படுத்திய மகிழ்வை குரலில் உணர்ந்தவர் மனைவியிடம் கூறி அப்போதே கிளம்பினார். காலையில் அவளைப் பார்த்து விடுவோம் எனும் எண்ணத்துடன் சிறுவயதில் அவள் ஆசையாய் கேட்கும் பால்கோவாவும் கைமுறுக்கும் வாங்கிக் கொண்டு பஸ் ஏறினார். அவர் சொன்ன ‘வருகிறேன்’ எனும் ஒற்றைச் சொல் தந்த மகிழ்ச்சி இதுவரை தனியாய் இருந்ததெல்லாம் தானில்லை யாரோ என அவளை எண்ண வைத்தது. வெகுநேரம் வாசலில் அமர்ந்தவள் தெருவே அமைதியானதை உணர்ந்து வாசல் கதவைக் கூட தாழிட மறந்தவளாய் உள்ளே சென்று படுத்தாள். தூக்கம் மிக மெதுவாகவே வந்து தழுவியது விடியற்காலை ஆழ்ந்த தூக்கத்தில் கனவில் வந்த அண்ணனின் உருவம் நிஜமாய்த் தோன்ற சட்டென எழுந்து உட்கார்ந்து பரபரப்பாய் ‘வாங்க வாங்க ’என அழைத்தாள். ஒரு வாரமாய் தலையணைக்கு அடியிலேயே வைத்திருந்த உயிலைக் கையில் துழாவி எடுத்தவள் மாரடைக்க அப்படியே படுக்கையில் சாய்ந்தாள். தங்கையை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். உடமைகளை அவளைப் போல் தனித்து வாழும் பெண்களுக்கு உதவும் ஏதாவதொரு அமைப்பிற்கு தந்து உதவ வேண்டும். அதுதான் தன் தவறுக்கு பிராயசித்தம் என்று முடிவெடுத்து அங்கு வந்தவரை தங்கையின் உயிரற்ற உடல் வரவேற்றது. வாசல் கதவு தாழிடாமல் இருக்க உள்ளே நுழைந்தவர் தங்கை இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாளே என எண்ணியபடி அருகில் அமர்ந்து பாசவுணர்வு உந்த தழுதழுத்த குரலில் ’பானும்மா’ என அழைத்தபடி தொட்டார். சில்லீட்டன பானுவின் கைகள். இதை எதிர்பாரக்காத அவர். தன்னால் உணர இயலாத தங்கையின் துயர வாழ்வைப் போலவே, தான் எட்டிப் பிடிக்க இயலாத நெடுந்தொலைவுக்கு அவளின் பயணம் சென்று விட்டதை எண்ணி விக்கித்து நின்றார். வாழ்நாள் முழுவதும் தனிமைக்கு பழகிய பானுவின் முகம் இந்த பயணத்தையும் அமைதியாய் வரவேற்று ஏற்றது போல் சாந்தமாய்க் காட்சியளித்தது. நான்காவது இருப்புப் பாதை -ஊளை மணம் -ஜூன் 23, 2019 சோம்பல் அதிகமில்லாத காலைப் பொழுதுகளில் புதிதாகப் போடப்பட்ட நான்காவது இருப்புப் பாதை வழியாக திருவெற்றியூர் ஸ்டேஷனை அடைவது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை. இப்படி காலை வெயிலில் நடப்பதற்கு சற்று மன கெடலும்,சலிப்பு உணர்வு மிகைப்படாமல் இருத்தலும் போதுமானது. ஏழு நிமிடம் கிழக்கு வெயிலில் நனைந்து கொண்டு நடந்தால் பெயிண்ட் உரிந்த மஞ்சள் நிற சிமெண்ட் பெயர் பலகை உங்களை நடைமேடையில் வரவேற்க தவம் இருப்பது போல நின்று கொண்டிருக்கும். ஆனால் பஸ் டெப்போவின் கதை இவ்வளவு கடினமாக இல்லை. வீட்டிலிருந்து முழுமையாக ஒரு நிமிட தொலைவில் டெப்போ வந்துவிடும். ஆனால் என்ன செய்ய திருவொற்றியூரில் இருந்து திருவல்லிக்கேணிக்கு ஒரே பஸ்ஸாக இல்லேயே. முதலில் சென்ட்ரல் நிறுத்தத்திலோ அல்லது மவுண்ட்ரோடு சிம்சன் நிறுத்தத்திலோ இறங்கி பிறகு 32B பிடித்துப் போய் சேர வேண்டும். வெயிலில் திரிந்து கொண்டிருப்பது அவளுக்கு அலாதியான விருப்பம் போல! சூரியன் உச்சியில் இல்லை என்றாலும் இந்த நேரத்திற்கு நிழலை தேடாத தலைகளே இல்லை. கருவேலங் காட்டின் காய்ந்துபோன ஒற்றை பனையைப்போல திருவெற்றியூர் என்கிற மஞ்சள் போர்டுக்கு முன்னால் காய்ந்த தலையோடு, டிக்கெட் பரிசோதகரின் எதிர் நடைமேடையில் அந்த மோர் கிழவி நின்றுகொண்டிருப்பார். கண் பார்வை குறைபாடு உள்ளவராகவோ அல்லது தூரத்தில் இருந்து அவரை பார்ப்பவராகவோ நீங்கள் இருப்பீர்களானால் அவர் காலுக்கு கீழே விசித்திரமான உருவில் நாய் ஒன்று படுத்திருப்பதாக நினைத்துக் கொள்வீர்கள். பழக்கப்பட்ட கண்களுக்கு மட்டுமே அது அவ ருடைய மோர் கூடையென தெரியும். அலுவல கங்கள் எல்லாம் தென் சென்னைக்கும் தொழிற் சாலைகள் எல்லாம் வடசென்னைக்கும் என்பது சென்னையின் எழுதப்படாத விதி. வடசென்னை யில் இருப்பவர்கள் எல்லோருமே தொழிற் சாலை வாசிகள் கிடையாது, இங்கும் அலுவலக வாசிகள் பலரும் இறைந்து கிடக்கின்றனர். கடிகார முள் போல் அல்லாமல் கண்மாயில் புதிதாக விடப்பட்ட நெடுநாள் கண்ணாடி புட்டி மீனைப் போல எந்தவித நிபந்தனைகளுக்கும் கட்டுப்படாமல் வாழ்க்கை அது தன் இஷ்டத்திற்கு பயணிக்கிறது. அந்தப் பயணத்தில் நாம் எல்லாம் காற்றில் கரையும் புகையாகி போகிறோம். அந்த மோர் கிழவியின் கால்கள் ரயில் வந்து நிற்கும் நடைமேடைகளை நோக்கி சதா அலைந்து கொண்டே இருக்கின்றன. அலுவலகவாசிகள் ஓய்வு ஒழிச்சலின்றி அலுவலகங்களின் இருப்பிடங்களை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் போது இந்தக் கிழவியின் பிம்பம் தடுக்கி விழுபவர்கள் இவரிடத்தே சொற்ப வாடிக்கையாளர்கள் ஆனார்கள். நடுங்கும் விரல்களுடன் அவர் கொடுக்கும் மோருக்கு அப்படி ஒரு ஊளை மணம் இருந்தது. வெயில் ஏறி போன ஒரு காலைப் பொழுதில் நானும் அவருடைய சொற்ப வாடிக்கையாளர்களில் ஒருவனாகி போனேன். கிழவியை விட வயது குறைந்த நடுத்தர வயது பழவியாபாரி பெண்களின் பரிகாசத்திற்கும், அக்கறையுடன் கூடிய கேலி கிண்டலுக்கும் கிழவி அவ்வப்போது ஆளாவது உண்டு. வழக்கத்திற்கு மாறான ஒரு பகல் பொழுதில் ரயில் நிலைய நடைமேடையில் அவரைப் பார்க்க நேர்ந்தது. எப்பொழுதும் பழுப்பேறிய கண்களுடன் தென்படுபவர் இன்று உற்சாகமாகவும் சற்றே வயதிற்கு மீறிய சுறுசுறுப்புடனும் காணப்பட்டார். நான் செல்போன் நோண்டுவதை நிறுத்தி அவரை கவனிக்க தொடங்கினேன். பள்ளி முடித்து வீடு திரும்பும் ரெட்டை ஜடை சிறுமியைப் போல தன் இரு கால்களாலும் திருவெற்றியூர் ரயில் நிலையத்தையே அளந்தபடி என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அருகில் வந்து நின்று “மோர் வேணுமா சார்” என்றபடி என் பதிலுக்காக காத்து இருக்காமல் சில்வர் டம்ளரில் வழியும் அளவுக்கு மோர் எடுத்துக் கொடுத்தார். மோரை நான் சீரான இடைவெளியில் விழுங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் காலில் எதையோ மிதித்து விட்டதைப் போல நைந்து போய் தைக்கப்பட்ட தனது காட்டன் புடவையை கணுக்காலுக்கு மேலே தூக்கி பாவனை செய்து கொண்டிருந்தார். அவரின் உற்சாகத்துக்கும் வழக்கத்திற்கு மாறான சுறுசுறுப்புக்கும் காரணம் சிவப்பு பட்டி போட்ட ரப்பர் செருப்பாய் மின்னிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் இவ்வளவு நெருக்கடியி லும் இவர் மட்டும் எப்படி இவ்வளவு சந்தோஷ மாக எதை குறித்தும் கவலைப்பட்டு கொள்ளாத வராக இருக்கிறார் என எனக்கு பொறாமையாக இருந்தது. எனது பொறாமையின் உச்சமாய் “மோருக்கு நாளைக்கு காசு தரேன்” என வார்த்தையாய் வெளிப்படுத்தினேன். அவரும் பெரிதும் ஏதும் பொருட்படுத்தாதது போல் என்னி டமிருந்து விலகி ‘கும்மிடிப்பூண்டி’ மார்க்கமாக செல்லும் இரண்டாவது நடைமேடைக்கு, அவரது இரு கால்களாலும் ரயில் நிலையத்தோடு சேர்த்து எனது பொறாமையையும் அளந்தவாறு நடந்து கொண்டிருந்தார். என் தலைக்கு மேலே பலமான இரைச்சலுடன் விமானம் காற்றில் கரைந்து கொண்டிருந்தது. சில நிமிடங்களில் அவரின் உற்சாகம் எங்கிருந்தோ வந்து என்னையும் தொற்றிக்கொண்டது. எனது அலுவலகத்தையும், அதன் பணிச்சுமையும், என்னை கடந்து கொண்டிருக்கும் மனிதர்களையும், வந்து சேரவேண்டிய என் காத்திருப்பு ரயிலையும், தாமதம் ஆகிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும், மறந்து முற்றாக அந்த மோர் கிழவியை பற்றி யோசிக்கலானேன். அவர் பெயர் என்னவாக இருக்கும்? அவருடைய சிறுவயது எப்படி இருந்திருக்கும்? அவருக்கான லட்சியம் என்னவாக இருந்திருக்கும்? அவரின் நண்பர்கள் யார் யார்? அதில் இப்போது மீதமுள்ளவர்கள் எத்தனை பேர்? இவரைப் பற்றிய அவர்களுடைய சிந்தனை எவ்வாறு இருக்கும்? இவருடைய பிள்ளைகள் என்ன ஆனார்கள்? இவருக்கு குடும்பம் என்று ஒன்று உள்ளதா அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாளா? இவ்வாறாக சிந்தித்துக் கொண்டிருக்கையில், சென்னை கடற்கரை ரயில் மூன்றாவது நடைமேடையில் 20 நிமிட தாமதத்திற்கு பின் வந்து சேர்ந்தது. பின்பு என்னோடு சேர்த்து என் சிந்தனையும் திருவொற்றியூர் ரயில் நிலையத்தை விட்டு மெல்ல நகரத் தொடங்கி வேகம் எடுத்தது. ஒருநாள் மாலை 7 மணிக்கு திருவெற்றியூர் பஸ் டிப்போ அருகில் மாணிக்கம் நகர் மெயின் ரோட்டுக்கு நேர் எதிரே உள்ள டீக்கடையில், வடசென்னையின் பழைய நாடக கலைஞன் ‘தாஸ்’ அவர்களை சந்திக்க காத்திருந்தேன். வழக்கமான எங்கள் சந்திப்பு தான் என்றாலும், எனக்கு ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும் போதும் ஆவலாய் இருக்கும். (நாளடைவில் அவர் பேசுவதில் எனக்கு சலிப்பு தட்டினாலும் அவரை “முதல் ஆசிரியர்” நாவலில் வரும் “பழைய குதிரை வீரனாக” கற்பனை செய்து கொண்டேன்.) சொன்ன நேரத்திற்கு வந்து சேர்ந்த அவர் வந்த வேகத்திலேயே இரண்டு டீ சொல்லிவிட்டு, அவருக்கு சர்க்கரை தூக்கலாக கேட்டு இரண்டு பஜ்ஜியை வாங்கினார். எங்கள் விரல்களில் சிக்கிக் கொண்ட பஜ்ஜியை சுவைத்தோம். பின்பு இருவரும் கடற்கரையை நோக்கி நடைபயணமானோம். என்னுடைய கொஞ்சமும் முதிர்ச்சி இல்லாத சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு அவர் அலட்டிக் கொள்ளாமல் பதிலளித்தவாறு வந்து கொண்டிருப்பார். முன்னாள் எம்எல்ஏ ‘கேபிபி சாமியின்’ வீட்டை கடந்து மெயின் ரோட்டை அடைந்த உடனே கடலின் அலை ஓசை கேட்கத் தொடங்கிவிடும். கடலைப் பார்த்த மாத்திரத்தில் கேள்வி பதில்கள் எல்லாம் பறந்து போய் கடலின் அலையில் சிக்கி மண்ணோடு புதைந்து விடும் இருவருக்கும். புதைத்த இடத்தில் இருந்து தத்துவ ஞானத்தின் செடி அவருக்கு மட்டும் முளைக்க ஆரம்பித்துவிடும். திடீரென குடும்பம் பற்றிய கவலையில் “என் பையன் எவ்வளவு தப்பு பண்ணினாலும் நான் அவன்கிட்டே எதுவுமே கேட்க மாட்டேன். சரியா சொல்லனும்னா அவன் கிட்ட நான் பேசுறதே இல்லை.” என முணுமுணுத்துக் கொண்டிருந்தார். நான் “ஏன்?” என ஒற்றை வார்த்தையில் கேட்ட கேள்வி சிறுபிள்ளைத்தனமானது இல்லை என உணர்ந்தவராய் இறுகிய முகத்துடன் இப்படி சொன்னார். என்னுடைய மவுனம் நிச்சயம் அவனை உமையாகும். என சொல்லியவராய் என்னை பார்த்தார். நான் என் கண்களை தூரத்தில் நங்கூரம் இடப்பட்டு மின்னிக் கொண்டிருக்கும் கப்பலை நோக்கி சட்டென திருப்பிக் கொண்டேன். பொருளாதாரத்தில் எளியவரான மோர் கிழவியின் சந்தோஷத்தையும், ஓரளவு பொருளாதார பின்புலத்தில் இருக்கும் நாடகக் கலைஞன் ‘தாஸின்’ சலிப்பான மனநிலைமையையும் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மனிதர்கள் தான் எத்தனை விதம்! அடுத்து நான்கு நாட்களாக ரயில் நிலையத்தில் நான் மோர் கிழவியை பார்க்கவே இல்லை. பின்பு சில காரணங்களுக்காக நான் என்னுடைய வேலையை விட வேண்டியதாயிற்று. எனக்கும் ஸ்டேஷனுக்கும் இருந்த தொடர்பையும் கூட… அடுத்தடுத்த நாட்களில் திருவொற்றியூர் பஸ் டிப்போ தான் போக்குவரத்திற்கு ஒரே வழி என விழுந்து கிடக்க வேண்டியதாயிற்று. சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு வில்லிவாக்கத்தில் இருக்கும் நண்பனை சந்திக்க ரயில் நிலையம் செல்ல வேண்டி இருந்தது. நான் பார்த்தது நிஜம்தானா? அந்த மோர் கிழவிதான் அது. ஸ்டேஷனுக்கு போய் முட்டும் ரோட்டில் வேப்ப மரத்தடியில் ஒரு நாயோடு சேர்த்து ஒடுங்கி படுத்திருந்தார். வெய்யில் அவர் மீது சிவப்பு எறும்புகளை போல ஊர்ந்துக்கொண்டிருந்தது. நான் அவரைக் கடந்து தான் போய்க் கொண்டிருந்தேன். அவரின் இந்த நிலைமைக்கு நான் தான் காரணமா? அவருடைய மற்ற சொற்ப வாடிக்கையாளர்கள் எங்கே போய் தொலைந்தார்கள்..? நான் அவரை கடந்து தானே ஸ்டேஷன் வந்தேன் ஏன் அவரிடம் ஏதும் பேசவில்லை? ஒருவேளை அந்தப் பழைய நாடக கலைஞர் சொன்ன வாக்கியத்திற்கான அர்த்தம் இதுதானா? அந்த வாக்கியம் எதிரொலிக்கத் தொடங்கியது “என்னுடைய மவுனம் அவனை உமையாக்கும்.” “என்னுடைய மவுனம் அவனை உமையாக்கும்.” “எங்களுடைய மவுனம் உங்களை நிச்சயம் ஒரு நாள் ஊமையாகும்” என வார்த்தைகள் மாற்றமடைந்து. இரண்டு வாரங்கள் கழித்து பஸ் டெப்போவிற்கு எதிரான டீக்கடையை ஒட்டிய சுவற்றில் மங்கிய சோடியம் வெளிச்சத்தில் புதிதாக ஒட்டப்பட்டு பாதி கிழிந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றில் ‘மரியாள் என்கிற மரி’ என்ற பெயரோடு சேர்த்து மோர் கிழவியின் உருவப்படமும் காற்றில் அலைந்து கொண்டிருந்தது. இப்பொழுதும் நான் எப்போதாவது இஞ்சி, கருவேப்பிலை போட்டு மோர் சாப்பிடுவது உண்டு. ஆனால், நான் எவ்வளவு விரும்பியும் எப்போதும் எனக்கு அந்த ஊளை மணம் வந்ததே இல்லை. பழைய நாடகக் கலைஞன் தாஸ் வழக்கத்துக்கு மாறான சுறுசுறுப்புடனும் சற்றே உற்சாகத்துடனும் காணப்படுகிறார் இப்போதெல்லாம்.. ஒடிந்த சிறகுகள் -ஜூன் 30, 2019 […] வா.. கதிரு.. எல்லாம் முடிஞ்சுதா என்று கேட்ட வேலுவைப் பார்த்தவுடன், கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது கதிரவனுக்கு. ஆம்ப்பா… அஞ்சா நாள் சடங்கும் முடுஞ்சுது. அங்க இருந்தா துக்கம் கேக்க ஒறமொறைக இன்னும் வந்துக்கிட்டேதான் இருப்பாக.. போதும் அவ போயிட்டா.. இனிமேல யார் வந்து விசாரிச்சு என்னாகப் போகுது.. வந்துட்டேன்.. சரி சரி.. எல்லார்க்கும் நடக்கறதுதானே.. அவங்க முந்திக்கிட்டாக.. அவ்ளோதான். நீ அதையே நெனச்சுக்கிட்டு கெறங்கீறாத.. நம்ம பொழப்பைப் பாக்க வேண்டீதான். வேலுவின் ஆறுதலான பேச்சால் கதிரவனின் கண்ணீர்தான் அதிகமானது. ‘கொஞ்சம் முந்திப்போயிருந்தா அவளக் காப்பாத்திருக்கலாம். என்ன செய்ய… அவ பழனியில இருந்தா..வயசான காலத்துல இங்க திருப்பூர்லயே வீட்டைப் பார்த்துக் குடிவச்சுருக்கலாம். இந்தூர்ல கொறஞ்ச வாடகைக்கு வீடு கெடக்கல. தமிழ்நாடு மட்டுமா இங்க வேல பாக்குது. வடக்கிருந்து நமக்குப் போட்டியா மக்க வந்து வேல பாக்கறாக. அதுவும் நம்ம சம்பளத்துல பாதிக்கே நான் நீன்னுட்டு வந்துர்றானுக.. என்ன செய்யறது… பாவம் வடக்க இந்த வேலயும் கெடைக்காமத்தான பஞ்சம் பொழைக்க இங்க வர்றானுக..’ ‘விடு கதிரு.. உசுருபோற நேரம் தெரிஞ்சாத்தான் பரவாயில்லையே. நம்ம நெனைக்கறது எது நடக்குது சொல்லு’. ‘நீ சொல்றது நூத்துக்கு நூறு சரி வேலு. அன்னைக்கு நான் பகல் வேலதான் பாத்துக்கிட்டு இருந்தேன்.சுமார் பன்னண்டு மணி இருக்கும். ஓம் பொஞ்சாதிக்கு ஒடம்பு சரியில்லைன்னு சேதி வந்துருக்குன்னு சூப்பரைசர் சொன்னாரு. அப்பறம்..அப்பறம்…’ என்ற கதிரவனுடைய குரல் தழுதழுத்தது.. அவருடைய நினைவோட்டம் பின்னுக்கு இழுத்தது. திருப்பூரில் பழனிப் பேருந்தைப் பிடித்து உட்கார்ந்தது நினைவிருக்கிறது. வண்டி காங்கேயம் வந்ததோ சாலை பராமரிப்பு என்று ஓராண்டாய் வேலை நடந்து கொண்டிருக்கும் தாராபுரம் கரடுமுரட்டுச் சாலையைக் கடந்ததோ கதிரவனுக்குத் தெரியவில்லை. இந்த வயசுல அவளத் தனியா விட்டுட்டு நான் மட்டும் திருப்பூர் வந்தது ரொம்பத் தப்பாப் போச்சே. கொடுமையில கொடுமை தள்ளாத வயசுல தனிமைல கெடக்கறது. போனமாசம் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தபோது சொன்னாளே, ஏங்க.. அப்பப்பத் தலை கிறுகிறுன்னு வருது. நாந்தான் காதுகொடுத்துக் கேக்காம விட்டுட்டேன். கொஞ்சம் உப்பு, புளி, காரத்தைக் கொறச்சுக்கடியம்மான்னு பெரிய டாக்டர் போலச் சொல்லீட்டு வந்தேன். சரி சரின்னு தலையை ஆட்டினா. என்ன செஞ்சாளோ தெரியலையே! இப்பக் கீழ விழுந்துட்டான்னு சேதி வந்துருக்கு. எங்க அடிபட்டதோ! நடக்கும்போது தொணைக்குக் குச்சி புடிச்சுக்கன்னு சொன்னா, அதுக்கு வெக்கப்படறா? வயசானவங்க எல்லாம் தனக்கு அதிக வயசாச்சுன்னு நெனைக்கவே தயங்கறாங்க. பழைய நெனப்புடா பேராண்டின்னு நிமிந்து நடக்க வேண்டியது. அப்பறம் எங்காவது தடுக்கி விழுந்து படுகெடயாப்படுக்கறது. சும்மா எப்பிடீங்க இருக்கறது என்று புலம்பியபடி நூறுநாள் வேலைக்குக் கொஞ்சநாள் போனாளே. வெய்யில்ல வேலைசெய்ய முடியல என்று போகாமல் நின்றுகொண்டாள். இப்ப வீட்டுல சும்மா இருக்கும்போது எங்கன தடுக்கி விழுந்தாளோ.! பழனி வந்தாச்சு எறங்கு என்ற நடத்துனரின் குரல்கேட்டுத் தன்னிலைக்குத் திரும்பினார் கதிரவன்.வேகவேகமாக வீட்டை அடைந்தவருக்குப் பேரிடி காத்திருந்தது. வீட்டின் வெளிப்பக்கம் பச்சைப்பந்தல் போடப்பட்டிருந்ததைப் பார்த்தவுடனே நெஞ்சு பகீர் என்றது. கருப்பாயி.. என்ன விட்டுப் போயிட்டயே என்று கதிரவன் கதறியது எல்லோருடைய கண்களையும் நனைத்தது. கதிரு.. தகவல் சொல்லி ஆறு மணிநேரம் ஆச்சேப்பா என்று உறவினர் ஒருவர் கூறியதைக் கேட்டு அதிர்ந்தார் கதிரவன். கருப்பாயி காலைலே எந்திரிக்கும்போதே தவறி விழுந்துட்டாங்க போலிருக்குது. பக்கத்துல குடியிருக்கற நம்ம வரதராசு, வீடு தொறக்காமயே இருக்குதேன்னு தட்டிப் பாத்து, அரவமில்லாம இருக்கேன்னு கதவ ஒடச்சுத் தொறந்துபாத்தா.. கருப்பாயி கீழ விழுந்து தலைல அடிபட்டுக் கெடக்கறாங்க. நம்ம குருசாமி, கந்தசாமி தோழருங்க உங்களுக்குத் தகவல் கொடுத்துட்டு, ஆகவேண்டீதைப் பாத்துட்டு இருக்காங்க. கதிரவனுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. அந்தத் துக்க நேரத்திலும் ஓர் ஆறுதல். இந்த வீட்டுத் துக்கத்தைத் தன்வீட்டுத் துக்கமாக நினைத்து உதவுதற்குத் தோழர்கள் அமைந்தது பெரிய பாக்கியம். ‘கதிரு.. கதிரு.. சின்னப்புள்ளையாட்டம் மயங்கி மயங்கிக் கலங்குனேன்னா எப்பிடி’ என்ற வேலுவின் குரல் கதிரவனை நனவுலகுக்குக் கொண்டு வந்தது. ‘வேலு ஒரு சந்தேகம். ஏம் பொஞ்சாதிக்கு ஒடம்பு சரியில்லைன்னுட்டுச் சேதி எப்ப வந்தது தெரியுமா?’ ‘தெரியும் கதிரு… காலேல ஆறு மணிக்கே தெரியும். நீ வாசல்கதவுக்கிட்ட நின்னு உள்ள வர்றவங்களச் சோதன பண்ணிக் கிட்ட இருந்த. சூப்பர்வைசர் ஏங்கிட்டச் சொன்னாரு. ஆனா வாசல்காவலுக்கு வேற ஆளு ஏற்பாடு செஞ்சபின்னாடிச் சொல்லுன்னாரு. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. நான் ஓங்கிட்ட ஒடனே சொல்றன்னு வச்சுக்க. அப்பிடியும் நம்ம பொறுப்புக்கு வேற ஆளப் போடற வரைக்கும் நம்மைப் போகவிட மாட்டானுக. நம்ம ரெண்டு பேர் வேலைக்கும் ஒலை வச்சுருவானுக. என்ன மன்னுச்சுரு.’ எரிமலைக்குழம்பு கதிரவனின் நெஞ்சுக்குள் பொங்கியது. ‘அடப்பாவிகளா.. உங்க காலுக்குச் செருப்பா ஒழச்சாலும் எங்கமேல ஈவு இரக்கம் காட்டமாட்டீகளா?’ வேலு போய் சூப்பர்வைசரை ரெண்டு வாங்கு வாங்கீட்டு வரவா? என்று புறப்பட்ட கதிரவனின் தோள்களை அணைத்தபடி தடுத்தார் வேலு. ‘மொதலாளிங்க கொணமே அப்பிடித்தேன். எந்திரத்தோடு எந்திரமா நம்மளப் பாப்பாங்க. ஏன்னு கேட்டா சீட்டக் கிழிச்சு அனுப்பிடுவாங்க. ஒருத்தர் போய்ட்டா இன்னொருத்தர்க்கு வாய்ப்பு. பாதிப்பு நமக்குத்தான் கதிரு. ஈவு இரக்கம் உரிமை சமத்துவம் பாக்கற காலம் சீக்கிரம் வரும். அப்பத்தான் மனுசனுக்கு மதிப்பு வரும்.. போ பேசாம..’ வேலுவின் பேச்சில் இருந்த எதார்த்தம் கதிரவனைச் சுட்டது. விசை ஒடிந்த சிறகுகள் மீண்டும் எப்போது முளைக்குமோ என்ற எண்ணத்தில் வேலை பார்க்கத் தொடங்கினார் கதிரவன். கிறுக்குப் பாண்டி -ஜூலை 7, 2019 விபத்தில் ஒரு காலை இழந்த பிறகு சின்னச்சாமிக்கு கிறுக்குப்பாண்டி தான் சற்று ஆறுதலாக இருந்தான். விபத்தினால் வந்த இன்சுரன்ஸ் பணம் இரண்டு லட்சத்தை மனைவி பார்வதியும், மகன் குணாவும் பங்கு போட்டுக் கொள்வதில் ஆர்வமாய் இருந்தார்களேத் தவிர அவரை கவனிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. பணம் வாங்குவதற்கு முன் மூன்று வேளையும் விதவிதமாக தூக்குவாளியில் சமைத்துக் கொடுத்தவர்கள். இப்போது, ‘அவன் கெடக்கிறான் நொண்டிப்பய அவனுக்கு சாப்பாடு போடனுமாக்கும்’ என பார்வதியோடு குணாவும் சேர்ந்து சொல்ல, சின்னச்சாமியின் இதயத்தில் மீண்டும் ஒரு முறை வண்டி ஏறி இறங்கியது. அதன் பிறகு தனியாக ரோட்டு ஓரத்தில் பொறம்போக்கு இடத்திலிருந்த குடிசை வீடும், எதிர் வீட்டு முருகப்பா செட்டியார் கொடுத்த பழைய கட்டிலும், எங்கிருந்தோ வந்த கிறுக்குப்பாண்டியும் தான் இப்போதைக்கு சின்னசாமியின் சொத்துக்கள். ஒரு நாள் பீடி வாங்க பணம் தரவில்லை என்பதற்காக ஒரு முறை ஊராட்சி மன்ற தலைவரின் வழுக்கைத் தலையில் கல்லெரிந்து விட்டு ஓடியது முதல் பாண்டி, கிறுக்குப்பாண்டி என அழைக்கப்பட்டான். பாண்டிக்கு யாராவது பீடி வாங்க பணம் கொடுத்து விட்டால் அவர்கள் தான் அன்று கடவுள். மலபார் பீடி ஒரு கட்டும், ஒரு தீப்பெட்டியும் வாங்கிக் கொண்டு குளத்தங்கரையிலும், மந்தையிலும் அமர்ந்து புகைத்துக் கொண்டே நாள் முழுவதையும் கழித்து விடுவான். அப்படிப்பட்ட கிறுக்குப்பாண்டி, சின்னச்சாமி விபத்தில் அடிபட்ட பிறகு, குடிசை வீட்டிலே இருந்து கொண்டான். காலையில் சைவால் கடையில் டீ வாங்கியாந்து கொடுப்பதிலிருந்து இரவு மலபார் பீடி வாங்கி கொடுக்கும் வரை எல்லா வேலைகளையும் செய்து வந்த கிறுக்குப்பாண்டியை சின்னசாமி தன் மகனாகவே நினைக்க ஆரம்பித்தார். அப்பா அம்மா இல்லாமல் வளர்ந்ததினாலோ என்னவோ சின்னச்சாமியை பாசத்துடன் பெரியப்பா என்றே அழைத்து வந்தான். இரவு ஆனால் போதும் பாய் தலகானியை எடுத்துக்கொண்டு மந்தையில் மகாபாரதத்தைப் பார்க்க சின்னச்சாமியை கூட்டிட்டுப் போவான். அப்படி போனால் விடியக் காலையில் தான் வருவார்கள். அவரை அந்த ஓட்ட வண்டியில் வைத்து கிறுக்குப் பாண்டி தள்ளிக்கொண்டு வரும் அழகே அழகு தான். அரசாங்கம் சார்பாக, விபத்தில் ஒரு காலை இழந்ததற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான வண்டியும், பத்தாயிரம் பணமும் சின்னச்சாமிக்குத் தரப்போவதாக செய்தி பார்வதிக்குக் கேட்டதும், மீண்டும் தூக்கு வாளியில் சாப்பாடு குடிசை வீட்டுக்கு வந்தது. சின்னச்சாமி தூக்கு வாளியை தூக்கி ஏறிய, பார்வதி முகத்தில் விழுந்தது. ‘ஏண்டி காசுக்காக எதுவும்ம செய்யற நீ. எனக்கு சோறு கொண்டு வந்தீயா?’ அசிங்கப்பட்டு வீட்டிற்குப் போன பார்வதி, நான்கு நாட்கள் கழித்து மகன் ஊருக்குத் திரும்பியதும், மகனிடம் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். ‘நொண்டிப்பயலுக்கு அவ்வளவு கொழுப்பாயி போச்சா? இன்னையோடு அவன் சாகனும்’ என கோபத்துடன் குடிசை வீடு நோக்கிப் புறப்பட்டான். சூரியன் மெல்ல தன்னை மாய்த்துக் கொண்டிருந்த நேரம். எங்கிருந்தோ வந்த குருவிகள் சின்னச்சாமியின் குடிசை வீட்டில் அமரத் தொடங்கின. சில குருவிகள் கீச்சு கீச்சு என சத்தமிட்டு அழைத்தன. அதன் மொழியை புரிந்து கொண்ட சின்னச்சாமி வீட்டில் இருந்த தானியங்களை கட்டிலில் அமர்ந்த படியே தூவிவிட்டார். குருவி பசியை போக்கிக் கொள்ள தானியங்களை கொத்த துவங்கிய போது, குணா நேராகக் குடிசை வீட்டிற்குள் நுழைந்தான். பசியை மறந்து, உயிர் இருந்தால் போதும் என்பது போல பட படவென குருவிகள் பறந்து சென்றன. வீட்டிற்குள் நுழைந்ததும் பக்கத்தில் கிடந்த விறகு கட்டையால் சின்னச்சாமியை அடிக்கப் போக, நல்ல வேளையாக அடி கட்டில் காலில் விழுந்தது. அடுத்து அடி அடிக்கப் போவதற்கு முன், முருகப்பா செட்டியார் வந்து விலக்கிவிட்டார். ‘நொண்டிப்பயலே எவனுக்கோ பெறந்த அனாதைப் பயல கூட வச்சுக்கிட்டு பணத்தை அவனுக்கு குடுக்கலாம்னு நினைக்கிறீயா? அது மட்டும் நடக்காதுடா.’ குணாவின் வார்த்தை இடி சின்னச்சாமியின் காதில் விழுந்ததும், ஒரு நிமிசம் அப்படியே உறைந்து நின்றார். ‘நீயெல்லாம் மனுசனா? பெத்த அப்பனை இப்படிதான் பேசுறதா? மொத இடத்தை விட்டு கிளம்புய்யா’ அந்த இடத்தை விட்டு குணாவை அப்புறப்படுத்தியவர், ‘சின்னப் பய ஏதோ தெரியாமல் பேசிட்டான். பணம் படுத்துற பாடு அவனை இந்தளவுக்கு பேச வச்சுருச்சு. எதுவும் நினைச்சுக்காதைய்யா’ என்று முருகப்பா செட்டியார் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் கூட சின்னச்சாமியின் காதில் விழவில்லை. சின்னச்சாமியைப் போல பரிதாபமாகக் கட்டிலும் ஒரு கால் இல்லாமல் உடைந்து கிடந்தது. கிறுக்குப் பாண்டியும் மலபார் பீடியை புகைத்துக்கொண்டு, அப்போது தான் வந்து சேர்ந்தான். சின்னச்சாமி கண்ணில் கண்ணீருடன் அழுது கொண்டிருந்தார். ‘பெரியப்பா எதுக்கு அழுகிற’ என பாண்டி கேட்டதும் கட்டிலுக்கு கால் உடைந்த கதையை கண்ணீருடன் மெல்லச் சொன்னார் சின்னச்சாமி. ‘கட்டிலு காலு போனதுக்குத் தான் அழுகுறியா? இப்ப என்ன பண்ண பெரியப்பா?’ பாவம் என்ன நடந்தது என்று தெரியாமல் பேசினான் கிறுக்குப் பாண்டி. ‘ஆறுமுகம் அண்ணன் கடைக்குப் போய் நல்ல கயிறாப் பாத்து வாங்கிட்டு வா. ஒடஞ்ச கட்டில காலைக் கட்டனும்’ ஐந்தே நிமிடத்தில் கயிறு வாங்கிக்கொண்டு வந்தான். ‘நா கட்டவாப்பா’ என்றான். ‘இல்லப்பா நீ போ . மந்தையில மகாபாரதம் திரைக்கட்டி ஓட்டுறாங்கள்ல. இன்னையோடு கதை முடியுதாம். பாத்துட்டு வந்து முடிவச் சொல்லுறீயா?’ ‘ஏப்பா நீ வரலயா? ’எனக்கு மனசு சரியில்ல நீ போய்ட்டு வாப்பா’ கிறுக்குப் பாண்டி மந்தைக்குப் போனான். மார்கழி மாதப் பனியிலும் ஊரே அமர்ந்து வெண்திரையில் மகாபாரதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இவனும் சேர்ந்து பாயை விரித்து மகாபாரதத்தைப் பார்க்க ஆரம்பித்தான். அதிகாலை நாலு மணிக்கெல்லாம் மகாபாரதக் கதை முடிந்து விட்டது. கதையின் முடிவைச் சொல்ல ஆர்வமாய் குடிசைக்குள் வந்தான். கட்டிலில் படுத்திருந்த சின்னச்சாமியைக் காணவில்லை. சட்டை பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்து ஒரு குச்சிய எடுத்து பற்ற வைத்தான். கூரையின் முகட்டில் சின்னச்சாமி ஒத்தக்காலுடன் தூங்கில் தொங்கிக் கொண்டிருந்தார். காலையில் ஊரே கூடிவிட்டது. பார்வதியும் குணாவும் கதறிக் கதறி அழுது கொண்டிருந்தனர். எப்பேற்பட்ட இறப்பு என்றாலும் புதைப்பது தான் ஊர் வழக்கம். அதன் படி சின்னச்சாமியின் உடலை புதைக்கவே முடிவு செய்தனர். சுடுகாட்டில் இறந்த சோகத்தைப் போக்க சுடுகாட்டிற்கு வந்த எல்லாருக்கும் சுருட்டைக் கொடுத்தனர். கட்டுக் கட்டாக பீடி அடிக்கும் கிறுக்குப் பாண்டி அழுது கொண்டு, சுருட்டை வாங்க மறுத்துவிட்டான். அவன் வாய் பெரியப்பா பெரியப்பா என உச்சரித்துக் கொண்டே இருந்தது. சின்னச்சாமி மண்ணுக்குள் போனதும், சுடுகாட்டிலிருந்து குணா நேர டாஸ்மாக் கடைக்குள் நுழைந்தான். ஒட்டுமொத்த சோகத்தையும் ஒரு பாட்டில் மூலம் தீர்த்துக்கொண்டான். முப்பதாவது நாள் சின்னச்சாமி புதைத்த இடத்தில் சமாதியைக் கட்டி முடித்தான் குணா. சுடுகாட்டை சுற்றிலும் திரும்பிப் பார்த்தவன், மற்ற சமாதிகளை விட பெரிய சமாதியாகத் தெரிந்தவுடன் சந்தோஷப்பட்டுக் கொண்டான். வீட்டிற்கு வந்ததும் சின்னச்சாமியின் புகைப்படத்திற்கு மாலையை போட்டு, தொட்டு வணங்கினான். வீட்டின் வெளியே பார்வதியோ, ‘அவரு சமாதிக்குச் செலவு பண்ணதே ஐம்பதனாயிரம் இருக்கும்’ என பக்கத்து வீட்டுக்காரியுடன் பெருமை பட பேசிக் கொண்டிருந்தாள். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கல் பார்வதியின் தலையை பதம் பார்த்தது. சட்டென்று பார்வதி திரும்பிப் பார்த்தாள். கிறுக்குப் பாண்டி ஓடிக்கொண்டிருருந்தான்… மனுநீதி நாள் -ஜூலை 14, 2019 […] கடிகாரம் மணி ஒன்றைத் தொட்டது. அந்த அலுவலக ஊழியர்கள் டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். யாரும் தனியாக அவரவர் இருக்கையில் இருந்தபடி ‘லஞ்ச்’ சாப்பிடுவது அங்கு வழக்கமில்லை. தங்களுக்கு நெருக்கமான தோழர்கள், தோழிகனைத் தேடிப் போய் விடுவார்கள். அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளை அரைமணி நேரந்தான். அதாவது ஒன்று முதல் ஒண்ணரை வரை… அல்லது ஒண்ணரை முதல் இரண்டு மணி வரை. ஆனால் யாரும் இந்த நேர மேலாண்மையைக் கடைபிடிப்பது கிடையாது. ஒரு மணிக்கு உணவிற்காக கிளம்புபவர்கள் இரண்டு மணி வாக்கில் தான் இருக்கைக்குத் திரும்புவார்கள். எத்தனையோ கறாரான பேர்வழிகள் இந்த அலுவலகத்திற்கு தலைமை பொறுப்பிற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாருமே மதிய உணவு இடைவெளி விசயத்தில் தங்களது கறார் தன்மையைக் காட்;டியதில்லை. ஏனென்றால் அவர்களுமே ஒரு மணி நேரத்திற்கு குறைவாக உணவு இடைவேளையை எடுத்துக் கொள்வதில்லை. தாங்களே அப்படி நடந்து கொள்ளும் போது… மற்றவர்களை எப்படிக் கண்டிக்க முடியும்…? அதனால் எழுதாத விதியாக ‘லஞ்ச் பிரேக்’ என்பதே ஒன்று முதல் இரண்டு மணி வரை என்றாயிற்று. இது காலம் காலமாக கடைபிடிக்கப்படும் வழக்கமாயிற்று. ஒரு மணிக்குப் போகிறவர்கள் அரை மணி அளவில் ‘லஞ்சை’ முடித்து விடுவார்கள். அதன் பிறகு மகளிர்களின் பேச்சுக்கள் அவரவர் வீட்டு விசயங்களில் மூழ்கும். மாமனார்–மாமியார் தலையீடுகள், பிள்ளைகளின் படிப்பு, பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களின் போக்குகள் போன்ற திசைகளில் உரையாடல்கள் ஓடும். ஆண் அலுவல்கள் அரை மணி நேரத்தில் சாப்பாட்டை அவசரகதியில் முடித்துவிட்டு ஆபீசுக்கு வெளியில் போய்விடுவார்கள். பெட்டிக்கடைகளில்… அருகில் இருக்கும் மரத்தடிகளில் சிகரெட் தாகங்களைத் தணித்தவாறு உரையாடல்களில் ஈடுபடுவார்கள். அரசியல், ஆபீஸ் நிர்வாகம், யூனியன் சங்கதிகள், ஆண் பெண் ஊழியர் பற்றிய கிசுகிசுப்புக்கள் என்கிற தினுசில் அளவளாவல் அதிரும். அன்று கங்காதரன் காலதாமதமாக பெட்டிக் கடைக்கு வந்தார். அவருக்கு புகைக்கும் பழக்கம் கிடையாது. ஆனால் மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு கடலை மிட்டாய் ஒன்று சுவைத்தாக வேண்டும். கடலை மிட்டாயை வாங்கிக் கடிக்கும் போது “என்ன கங்காதரன் சார்… எங்க போய்ட்டு வர்றீங்க…”என்றார் சக ஊழியர் சதாசிவம். “நம்ம மேனேஜர் தாலுகா ஆபீசுக்குப் போயிட்டு வரச் சொன்னாரு…தாசில்தார்கிட்ட ஏதோ சர்டிபிகெட் வாங்கணுமாம்…. தாசில்தார் இல்ல… கலெக்டர் ஆபீஸ்ல கிரிவெண்ஸ டேயாம்… அங்க போய்ட்டு ஒரு மணிக்குத்தான் வந்தாரு… அவரப் பாத்து பேசி லெட்டரக் கொடுத்திட்டு வர்றதுக்குள்ள நேரமாயிடுச்சு…” “கிரிவெண்ஸ் டேயின்னா என்ன…?” “நம்மள மாதிரி பிரைவேட் கம்பெனியில வேல பாக்கிறவுங்ளுக்கு இதப் பத்தி ஒண்ணும் தெரியாது…. ஆனா கவர்ண்மெண்ட் ஆபிஸ்ல வேல பாக்கிறவுங்களுக்கு கண்டிப்பா தெரியும்… அதாவது மக்கள் குறை தீர்க்கும் நாள்னு தமிழ்ல சொல்லுவாங்க…” “இதுல என்ன செய்யுவாங்க…?” “அதாவது மாதந்தோறும் முதல் திங்கட்கிழம கலெக்டர் ஆபீஸ்ல பொது ஜனங்க, பட்டா மாறுதல், வீடு கட்ட பிளான் அப்ருவல், ரேசன் கார்டுல பேரு நீக்குறது சேக்கிறது… இப்படி எல்லா கோரிக்கைகளுக்கும் கலெக்டர்கிட்ட நேரடியா மனு கொடுக்கலாம்… மனுவ வாங்கின கலெக்டர் மனுவப்பெற்றதுக்கு ஒடனே ரசீது தரச் சொல்லுவாரு…. அப்பறம் சம்மந்தப்பட்ட ஆபீசுகளுக்கு மனுவ அனுப்பிச்சு…. ஆக்சன் எடுக்க வலியுறுத்தி எழுதுவாரு…” “இப்படி ஒரு நல்ல சிஸ்டம் கவர்ண்மெண்ட்டுல இருக்கா..?” “ஆமா எழுபதுகள்ல முதல்வரா இருந்த கவைஞர் கொண்டு வந்த முறை இது..” “கலைஞர் ஆரம்பிச்சதா..? அந்தம்மா இத எப்பிடி விட்டு வச்சிது…?” “கலைஞர் சமீபத்தில ஆரம்பிச்சிருந்தா ஜெயலலிதா மூடு விழா நடத்தி இருக்கும்… எழுபதுகள்ல தொடங்கினத அடுத்த வந்த எம்ஜிஆர் தொடர்ந்தாரு…அதனால எம்.ஜி.ஆர் தொடர்ந்தத இந்தம்மா முடிச்சிருச்சின்னு பேச்சு வந்திடப்பிடாதில்ல…. அதனால இந்த சிஸ்டம் மூடுவிழாவில இருந்து தப்பிச்சிருச்சு…” “இந்த சிஸ்டத்தால பப்ளிக் பயனடைகிறாங்களா சார்…?” “ஆரம்பத்தில பயன் இருந்திருக்கு…யாராவது கிரிவெண்ஸ்டேயில மனுக்குடுத்திடப் போறாங்கப்பான்னு அதிகாரிங்க பயந்தாங்க.. காலப் போக்கில இது ஒரு வழக்கமான சடங்கா மாறிப் போச்சு… ஆரம்பத்தில கலைஞர் இதுக்கு மனுநீதி நாள்னு பேர் வச்சாரு…” “பேர் வைக்கிறதில மன்னாதி மன்னரில்ல கலைஞரு…. மனுநீதி நாள்னா… மனு தர்மம்னு சொல்வாங்களே அந்த மனுவா…?” " இல்ல… அந்தக் காலத்தில மனுநீதிச் சோழன்னு ஒரு மன்னர் இருந்திருக்காரு.. அந்த சோழ மன்னர் மக்கள் குறை சொல்றதுக்கு மன்னரை அழைக்க அரண்மனை வாசல்ல பெரிய மணியக் கட்டி வச்சிருந்தாராம்… ஜனங்க யாராக இருந்தாலும் அந்த மணிய அடிச்சா… மன்னரோ மந்திரியோ மணி ஒலி கேட்டு வெளியில் வந்து மக்கள் குறையைக் கேப்பாங்களாம்…" “பொது ஜனங்களோட குறைகளுக்கு அக்கறை காட்டுன மன்னரும் அந்தக் காலத்தில இருந்திருக்காரு..” “பசுமாடு அடிச்ச மணி ஒலி கேட்டு மகனுக்கு தண்டண தந்திருக்காரு மன்னரு.. அதுவும் மரண தண்டன..” “அப்பிடியா..?” “மன்னரோட மகன் வேகமா ஓட்டிட்டுப் போன தேர்ல கன்னுகுட்டி ஒண்ணு அடிபட்டு செத்துப் போச்சாம்.. செத்துப் போன கன்னுக்குட்டியோட தாய்ப் பசு அரண்மனைக்கு வந்து கண்ணீர் மல்க மணி அடிச்சிதாம்… இதப் பாத்த ராஜா என்ன ஏதுன்னு விசாரிச்சு… பசுவோட கன்றைக் கொன்ன தனது மகன அந்தத் தேராலயே ஏத்திக் கொன்னு போட்டாராம்….” “இது என்ன சார் கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்லையே…?” “நடந்திச்சோ நடக்கலையோ இல்ல நியாயமா நாடாள்ற மன்னன் நடந்திக்கிடணும்னு கற்பனையாச் சொன்ன கதையோ தெரியல… அந்த மன்னரு பேர இந்தத் திட்டத்துக்கு கலைஞர் வச்சிருக்காரு” “சரிங்க சார் இது நடந்ததாகவே வாதத்துக்கு ஒத்துக்கிடுவோம்… பசுவோட கன்றைக் கொன்னவனுக்கு அதே மாதிரி தண்டன கொடுத்தாச்சு… அதே நோத்தில அந்தக் காலத்தில மன்னர் ஆட்சியில அப்பப்ப யாகம் நடத்தி இருக்காங்க… அந்த யாகத்தில பசுவத் தூக்கி தீயில போட்டு எரிச்சிருக்காங்க… அந்தப் பசுவோட தாய் மன்னர்கிட்ட போய் மணியடிச்சு முறையிட்டிருந்தா யாகத்தில பசுவத் தூக்கிப் போட்டவுங்கள மன்னரு தண்டிச்சிருப்பாரா..?” “இந்த மாதிரி கேள்விகளுக்கு ஒருத்தருக்கும் பதில் சொல்லத் தெரியாது… ஆனா கேள்வி கேட்டவுங்கள அதிகப் பிரசங்கி, அகராதி, ஏட்டிக்கு போட்டியா பேசுற நாத்திகன்னு பட்டம் கட்டி பயங்கரவாதி மாதிரி சித்தரிச்சிடுவாங்க…ஏன் தேசத் துரோகின்னு கூட முத்திர குத்துவாங்க….” இதற்குமேல் இவர்கள் உரையாடலை வளர்க்கவில்லை. மணி இரண்டாகிவிட்டது. இரண்டு மணி ஆகியும் இருக்கைக்கு வரவில்லை என்றால் உயர் அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலமை ஏற்படும். எனவே இரண்டு தோழர்களும் அவரவர் ‘சீட்’ நோக்கி சிட்டாய் பறந்தார்கள். விளை நிலம் -சேசுபட்டுஜீவா -ஜூலை 21, 2019 மனதுக்குள் சந்தோஷம் சேகருக்கு தாங்கவில்லை. அவன் மட்டும் சின்ன பையனாக இருந்தால் குதியாட்டம் போட்டிருப்பான். சொந்த ஊருக்கு போக வேண்டியிருந்ததால்தான் இந்த அவசரமும் பரபரப்பும். கோடை விடுமுறையில் ஸ்கூல் வேன், ஸ்கூல் பேக், ஹோம்ஒர்க் என்ற ஜெயில் வாழ்க்கை வாழும் தன் மகனுக்கு தன் சொந்த மண்ணை, சொந்த வீட்டை, தான் விளையாடி மகிழ்ந்த இடத்தை, தான் புகுந்து வெளிவந்த சந்து பொந்துகளை எல்லாம் நகரத்து வாழ்க்கைக்கு பழகியிருந்த தன் மகனிடம் காட்டி காட்டி மகிழ வேண்டும். ரயிலில் ஏறி முன்பதிவு செய்திருந்த இருக்கையில் அமர, ரயில் வேகமெடுக்கிறது. மாலைநேர சூரியன் மறைய துடிக்கிறான். ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மகனைப் பார்க்கிறான். ரயில் முன்னே செல்ல வெளியே பின்னால் செல்லும் மரங்களாக, அவன் நினைவுகளும் பின்னோக்கிச் செல்கிறது. “அப்பா, இன்னும் இந்த ஊரில இருந்து நீங்க கஷ்டப்பட்டு உழைச்சி என்ன பண்ணப்போறீங்க., பேசாம என்னோட வந்து இருக்காலாமேப்பா. ஏன் இங்க தனியா இருந்து சிரமப்படணும். நானும் வரும்போதெல்லாம் கூப்பிட்டுகிட்டே தான் இருக்கேன்”. “டேய் சேகரு எத்தனை முறை கூப்பிட்டா லும் என் பதில் ஒண்ணுதான்டா . நமக்கு இந்த ஊரு ,மண்ணு, மரம், வரப்புல காலாற நடந்து , சேற்றுல நனைஞ்சி, ஓடைல கழுவி , ஆத்துல குளிச்சி , ஆக்குனத சாப்பிட்டுட்டு நிம்மதியா இருக்கிறத விட்டுட்டு முற்றமில்லாத வாசல், குருவிகூடு மாதிரி வீடு , எதிர் வீட்டுல யாரு இருக்கான்னு கூட தெரியாத ஒரு பழக்கம். சே,சே, அதெல்லாம் நமக்கு சரிப்படாதுப்பா. இந்த மண்ணு என் ஆத்தாடா, அவ மடில இருக்கிறத விட வேற எந்த சொகமும் பெரிசில்லடா” அப்பாவின் வார்த்தைகளில் இருந்த உண்மை, சொந்த மண்ணை விட்டு பிரிய நினைக்காத அவருடைய தீர்க்கமான முடிவை காட்டியது. “அப்பா, அப்பா,” என்ற தன் மகனின் குரலில் நினைவுகளிலிருந்து மீண்டான். “என்னப்பா” “அப்பா, ஏன்பா மரமெல்லாம் பின்னாடி போகுது, பின்னாடியே போயி எந்த ஊருக்கு போகும்?” “அது பின்னாடி போகலப்பா, ரயில் வேகமாக முன்னால போறதுனால., மரமெல்லாம் பின்னால போற மாதிரி இருக்கு. அது அங்கேயே தான் இருக்கும்.” “அப்பா தாத்தா வீட்டுல மாடு எல்லாம் இருக்குதுன்னு சொன்னாங்கல்ல. எத்தனை இருக்குப்பா” “ரெண்டு இருக்குப்பா” அதுக்கு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு எல்லாம் போடுவாங்கதானே, எங்க மிஸ் தமிழ் லெசன்ல சொன்னாங்க. பசு பால் கொடுக்கும், பருத்திக்கொட்டை புண்ணாக்கு, புல் சாப்பிடும்" அப்பா, அப்பா அங்க பாருப்பா, “பீக்காக், பீக்காக்” ஜன்னல் வழியாக தெரிந்த மயிலைக் காட்டி கைதட்டி ரசித்தான். “பாபு, தாத்தா வீட்டுல பசு இருக்கும் மயில் இருக்கும், சேவல், கோழி, மைனா, குருவி, கிளி எல்லாம் இருக்கும். நீ எல்லாத்தையும் பார்க்கலாம்.” “அப்பா, அப்ப சிங்கம் இருக்குமா” “அதெல்லாம் காட்டுலதான் இருக்கும்பா” “அப்பா அங்க பாருப்பா, கட்டம் கட்டமா பச்சையா இருக்குதே, அதெல்லாம் என்ன செடிப்பா” “அதெல்லாம் வயல், அதுலதான் சாப்பிடுற அரிசி விளையும். அதை செடின்னு சொல்லக்கூடாது. நெல்லு விளையிற கதிர்னு சொல்லணும்” “தாத்தா ஊர்ல நெல் இருக்குதாப்பா?” “தாத்தாக்கு சொந்தமா வயலே இருக்குப்பா, ஊர்கிட்டே போனா ரயில் போற வழியிலேயே இருக்கு, ஒனக்கு காட்டுறேன்பா” அப்பாவும், மகனும் பேசிக்கொண்டி ருப்பதை மௌனமாக சிரித்தபடி ரசிக்கும் மனைவி. பொழுது விடிய இன்னும் கொஞ்சம் நேரமிருக்கிறது. சூரியன் உதிக்கவில்லை. சேவல்கள் கூவும் சத்தம் கேட்கிறது. காலை நேரத்துக் குருவிகள் கத்துகிறது. தொழுவத்தில் மாடு மூத்திரம் பெய்யும் சத்தம் கேட்கிறது. திண்ணையில் படுத்திருக்கும் ராசாமணி எழுந்து சோம்பல் முறித்து படுத்திருந்து பாயை ஓரத்தில் சுருட்எ மூலையில் சாத்தினான். துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு “ஏ புள்ள, நா வயக்காட்டுக்கு போறேன். நீ பயல பள்ளிகூடத்துக்கு கிளப்பி உட்டுட்டு, கஞ்சி எடுத்துட்டு வா, ஐயா வர்றதுக்குள்ள வந்துரு”. என்று கூறிக்கொண்டே மாடத்திலிருந்து சாம்பலை அள்ளி பல்லை தேய்த்து வாய் கொப்பளித்து விட்டு, வேட்டியில் சுருட்டி வைத்திருந்த பீடிக்கட்டில் ஒன்றை உருவி பத்த வைத்துக் கொண்டான். மண்வெட்டியை தோளில் போட்டுக்கொண்டு நடக்கிறான். ராசாமணியின் மனைவி எழுந்து அவன் கூறியதை கேட்டுக்கொண்டே தொழுவத்தை சுத்தம் செய்து குப்பை , சாணிகளை அள்ளி கூடையில் வைத்து மகனை கூப்பிடுகிறாள். “ஏலே சேகரு எந்திருச்சிட்டியா, இதைக் கொண்டு அந்த எருக்குழில கொட்டுல.” " என்னம்மா, காலைலயே கூடையை ரெடி பண்ணிட்டே", என்றவாறு கூடையை கொண்டு கொட்டி விட்டு அம்மாவிடம் நீச்சத்தண்ணியை வாங்கி ஒரு போணி குடிக்கிறான். “ஒரு பல்லு கில்லு விளக்காம நாத்த வாயோட குடிக்கிறயா, சீக்கிரம் கிளம்பு, ஒங்கப்பன் வெரசா வரச் சொல்லுச்சி” என்றவள். சேகரை பள்ளிக்கூடத்துக்கு தயார் பண்ணினால். “ஒன் புத்தகப்பையை எடுத்துக்க”, என்று கூறிவிட்டு அலுமினிய தூக்குச்சட்டியில் இருந்த தண்ணிச்சோற்றை எடுத்து வைத்துக்கொண்டு, நாலு வெங்காயம், பச்சை மிளகாயையும் எடுத்துக்கொண்டு, ஒரு கையில சோத்துச்சட்டி, மறுகையில் சேகரையும் பிடித்தபடி வயக்காட்டை நோக்கி நடக்கிறாள். வீட்டிலிருந்து கம்மா கரையில் நடந்து, பரந்த பச்சை வயல்களை கடந்து, குளக்கரை ஓரத்திலிருக்கும் வயலுக்கு செல்ல வேண்டும். குளக்கரை வழியாக நடந்து போய் ஆற்றைக் கடந்து அக்கரைக்கு போனால் பள்ளிக்கு போகும் வழியில் கொண்டு போய் சேர்த்து விடும். சேகரை குளக்கரையில் ஏற்றி விட்டு “பத்திரமா போப்பா”, என்று கூறிவிட்டு களை எடுத்துக் கொண்டிருந்த நான்கு பேரோடு ஐந்தாவதாக சேர்ந்து கொண்டாள். “அப்பா” “என்னப்பா…………”, நிமிர்ந்து பார்த்த ராசாமணி நீட்டி முழங்கினான். அப்பாவைப் பார்த்து சேகர் சிரிக்க, “அவன் கூலிய வாங்காம போக மாட்டானே, நெதம் முட்டாயா தின்னு வவுறு கெட்டுப் போயிறாமே”. “இந்தா புள்ளைய வையாத, இந்தா ராசா”, தலையில் கட்டியிருந்த சீசன் துண்டில் வைத்த தீப்பெட்டியில் இருந்து ஐந்து பைசாவை எடுத்து நீட்ட அதை வாங்கி டவுசர் பையில்போட்டுக்கொண்டு கிளம்ப, காலை வெயிலில் வேர்த்து உடம்பெல்லாம் ஈரமான வியர்வையுடன் மகனின் கன்னத்தில் முத்தமிட அந்த ஈரத்தை சுகமாக வாங்கிக் கொண்ட சேகர் கிளம்பினான். “மவன பார்த்துட்டே இருந்தா இந்த மனுசனுக்கு ஒலகமே மறந்துடும். இந்தா அவன் போவான். நீ வந்து வேலையை கவனிய்யா, ஆறு ஆளு வேணுமின்னதுக்கு நாலு பேர் போதும், நம்ம சேர்த்து ஆறு பேருன்னு பெரிய இவராட்டம் ஐயாகிட்ட சொல்லிபுட்டு, இப்ப இப்பிடி இருந்தா பொழுது அடைஞ்சிரும்”, என்ற மனைவியின் அதட்டலில் ராசாமணி வயலில் இறங்கி வேலையை தொடர்கிறான். "ஊருக்கு மகன் வந்ததிலிருந்து ராசாமணிக்கு றெக்க முளைக்காத குறைதான். கூடையில் அடைச்சி வளர்த்த நாட்டுக்கோழி, சாய்புகடை மட்டன், சாம்பார், கறி, இட்லி, சோறு தடபுடல்தான். மாலையில் பேரனை கையில் பிடித்துக்கொண்டு காலாற நடக்க ஆரம்பித்தார் ராசாமணி. நேராக ஐயப்பன் டீக்கடையில் பால், முறுக்கு, சாப்பிட்டனர் தாத்தாவும் பேரனும். “தாத்தா, தாத்தா அங்க பாருங்க கையில குழந்தை, கத்தியோட சாமி சிலை.” “அதுதான் பேராண்டி எசக்கியம்மா, ஊரு காத்த அம்மா, நம்ம குலதெய்வம்பா” “தாத்தா, தாத்தா சாக்கடை பாரு எவ்வளவு பெரிசா இருக்கு. பாலமெல்லாம் இருக்கு” "அடேய் அது வாய்க்கால், ஆனா இப்ப சாக்கடையா மாறிப்போச்சி. ஒங்கப்பனுக்கு நீச்சல் கத்துக்கொடுத்த்து இந்த வாய்க்கால்லதான்டா, பாத்தியா எப்பிடி மாறிப்போச்சி? "மாறிப்போச்சா, நாறிப்போச்சின்னு சொல்லு தாத்தா. ஆமா, நெல்லு வெளையிற வயலெல்லாம் நீங்க வச்சிருக்கீங்களாமே. அது எங்கே? “ஆமாப்பா, அந்தா அந்த ரயிலடிக்கு பக்கத்துல மூணாவதா ஒரு கருப்பு கல் நட்டுருக்கு பாரு அதுதான். ஆனா இப்ப தாத்தாக்கு சொந்தமில்லாம போக போவுது கண்ணா” “தாத்தா என்ன தாத்தா இது, வீடெல்லாம் இருக்கிறதுக்கு நடுவுல வயல் முளைச்சிருக்கு” “அட பேரப்புள்ள வயலெல்லாம் இருந்த இடத்திலதான் இப்ப வீடா மொளைச்சிருக்கு. வயல்னு இருந்த்து பூராவும் மனையாவும், வீடாவும் மாறிடுச்சி”. “தாத்தா நிலமெல்லாம் வீடா மாறிப்போச்சே, அப்ப நமக்கு சாப்பாடு எங்கே தாத்தா வெளையும்? இப்ப இருக்கிற அந்த கொஞ்ச வயல்லயும் வீடு கட்டியாச்சின்னா ஒங்க ஊருல யாருக்கும் சோறு கெடைக்காதுதானே”, என்று கை கொட்டி சிரித்த பேரனின் கேள்விக்கு பதில் தெரியாமல் வாயடைத்துப் போனான் அந்த கிழவன். தன் மனசாட்சியே எழுப்பிய அதே கேள்வியை பேரன் கேட்டதில் பதில் சொல்லத் தெரியவில்லை. தாத்தாவும் பேரனும் நடந்து, நடந்து வரப்பு வழியாக அவர்களின் வயலை அடைகின்றனர். புல் தரிசாக காய்ந்திருந்த அந்த வயலை நெருங்கியதும் ராசாமணியின் கண்கள் கலங்கியது. வயல் ஓரமாக பழுதான மாட்டு வண்டி சில வருடங்களாக நிறுத்தியதின் அடையாளமாக துருப்பிடித்த ஆணி, நைந்து போன கயிறுகள், சேதமான மரக்கட்டைகள், சக்கரம் மண்ணுக்குள் சிறதளவு புதைந்த வண்ணம், தன்னை யாரும் சீந்தக்கூட ஆளில்லை என்று “ஆ” வென்று கிடந்த ஏக்கம். “நாளைக்கு காலைல ரிஜிஸ்தர் ஆபீஸில் பத்திரத்தில் கையெழுத்து போடும்வரை, இது என் பூமி, என் மண்ணு, என் தாயி, அதுக்கப்புறமா”, அவரின் கண்கள் கலங்கியது. “ஏன் தாத்தா அழுவுறே?” "இல்லப்பா, எல்லாருக்கும் சோறு குடுக்கிற பூமிய அழிச்சி வீடா மாத்துறாக, குளத்த தூத்து கட்டிடமா கட்டுறாக, இப்பிடி வெளையிற பூமியெல்லாம் வீடா போச்சின்னா, என் மக்களுக்கு சாப்பாடு எப்படி வெளையும்ன்ற யோசனை இல்லையே, நான் ஒரு காலத்திலே இந்த நெலத்துக்கு கூலிக்காரனா இருந்தேன். அப்புறம் சொந்தக்காரனாவே ஆனேன். சமசாரி வாழ்க்கையை சந்தோசமா ரசிச்சி, ரசிச்சி வாழ்ந்தேன். ஆனா இப்ப கொஞ்ச நாளா சம்சாரி வாழ்க்கையோட கொடுமையை தாங்க முடியாம தவிக்கேன். என் தாயி, நாளைக்கு பத்திரம் முடிஞ்சிட்டா, அப்புறம் நீ எனக்கு சொந்தமில்லையா? நாம ரெண்டு பேரும் வேற வேறயா? நான் கலப்பையை போடும்போது நகக்கீறலா நினைச்சி தாங்கிகிட்ட. இப்ப ஒன்னை வாங்குறவங்க கட்டடம் கட்டணும்னு பெரிய பெரிய மிசினெல்லாம் வச்சி ஓட்டை போடுவாங்க. பெரிய பெரிய கம்பியெல்லாம் வச்சி ஒன்னை ரணகளப்படுத்துவாங்களே, அதை எப்பிடிம்மா நீ தாங்கவே?, என்று மனது நிறைய சொல்லொணாச் சோகத்துடன் அந்த கிழவன் பழைய மாட்டுவண்டியின் நுகத்தடியில் தலையை சாய்த்தபடி… பட்டு வேட்டியும்… பழைய கைலியும்…! -ஆகஸ்ட் 11, 2019 கார்த்திகேயன் - கீதா திருமணம் இனிதே நடந்தது. ஊரின் முக்கியப் பிரமுகராகக் கருதப்படும், கல்லூரி முன்னாள் முதல்வர் முருகு சுந்தரம், திருமணத்தை நடத்தி வைத்தார். ஒருவருக்கும் புரியாத மொழியில் ஓதும் அய்யர் மந்திரம் கல்யாணத்தில் இல்லை… புகை மண்டுவதால் மணமகள் கண்களில் கண்ணீர் வருகிறதா…? இல்லை மாப்பிள்ளை பிடிக்காமல் மணப்பெண் அழுகிறாளா..? என்று தெரியாமல் தவிக்க வைக்கும், ஓமம் வளர்ப்பு இல்லை. தெரியாத அருந்ததியை பார்த்து தெரிகிறதெனச் சொல்லவில்லை. இப்படி ஏகப்பட்ட ‘இல்லைகள்..’ வாழ்த்தரங்கம் தொடங்கிற்று. மணமக்களை வாழ்த்திப் பேசிய பேச்சுக்களைத்தான் செவிகளில் வாங்கிக் கொள்ள யாரும் தயாராக இல்லை. வாழ்க்கைப் புத்தகத்தில் இல்லற அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கி இருக்கிறீர்கள்…. இது நாள் வரை புதுக்கவிதைகள் எழுதிய நீங்கள் இனிமேல் இலக்கணக் கட்டுபாடுகள் உள்ள மரபுக் கவிதைள் படைக்கப் போகீர்கள்…. எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் ஆளும் கட்சியாக ஆகி விட்டீர்கள்…. மலரும் மணமும் போல… வள்ளுவரும் வாசுகியும் போல… நகமும் சதையுமாக…. இப்படியாக வாழ்த்தரங்கப் பேச்சாளர்கள் உவமைகளை அடுக்கிய போது ஒருவரும் ரசிக்கக் காணோம்…. திருமணத்திற்கு வந்திருந்தோர் நெருக்கியடிததுக் கொண்டு மேடை ஏறினார்கள். மணமக்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். மொய்க் கவர்களைக் கொடுத்தார்கள். அதன் பிறகு நேரே டைனிங் ஹாலை நோக்கி விரைந்தனர். “இன்னும் ரெண்டு விசேங்க இருக்கு.. அங்க போய் மொய்யச் செஞ்சிட்டு சாப்பிடலாம்.. நேரம் பதினொன்னுதானே ஆகிது…” சிலர் மண்டபத்தை விட்டு வெளியேற விரும்பினர். இதனைக் கவனித்த பெண்ணின் தந்தை சிவகுரு, “வந்தவுங்க சாப்பிடாமப் போகப் போறாங்க… அது நமக்கு கௌரவம் இல்ல… யாரையும் போக விடாம சாப்பிடக் கூப்பிட்டுப் போங்க…” தனது ஆப்த நண்பர் அனந்தனிடம் பொறுப்பை ஒப்படைத்தார். “வாங்க… வாங்க.. சாப்பிட்டுப் போங்க… நீங்க சாப்பிடமாப் போனா எங்களுக்கு மனத்திருப்தி இருக்காது” கையைப் பிடித்துக் கெஞ்சாத குறையாக ஒவ்வொருவரையும் வற்புறுத்தி டைனிங் ஹாலுக்கு அழைத்துப் போனார் அனந்தன். சப்ளையர்களை விரட்டி இலை போட வைத்தார். அனந்தனே குடிநீர் பாட்டில்களை ஒவ்வொரு இலைக்கு முன் வைத்தார். “காய்கறி கூட்டு இங்க வா…” “அப்பளம் மறக்காம வை…” “சாதம் கொண்டா…” “சாம்பார் ஊத்து..” “ரசம் போடு..” “பாயசம் இங்க வா…” எல்லோரையும் விரட்டி பரபரப்பாக இயங்கினார் அனந்தன். சப்ளை செய்யும் பணி தொய்வில்லாமல் தொடர்ந்தது. வேற யாரும் சாப்பிடாமல் வெளியேறி விடக் கூடாது என்று வாசல் பக்கம் போய்த் தடுக்க வேகமாக கிளம்பினார். அப்போது சாம்பார் வாளியுடன் வந்த பெண் சப்ளையர், அனந்தன் மீது மோதி விட்டாள். கணிசமான அளவு சாம்பார் அனந்தன் பட்டு வேட்டி, சட்டையில் பட்டுவிட்டது. அந்தப் பெண் பதறிப் போனாள். “அய்யா தெரியாமப் பட்டிருச்சிங்கய்யா.. மன்னிச்கிடுங்கய்யா…” “பரவாயில்லம்மா… கொஞ்சம் பாத்து வந்திருக்கலாம்… நீ என்ன வேணுமுன்னா பண்ணியிருக்கப் போற… போய் வேலையப் பாரு..” அறையில் போய் உடை மாற்றிவிட்டு மீண்டும் வந்து சுறுசுறுப்பாக இயங்கினார். பந்தியில் ஈடுபாட்டுடன் அவர் செயல்பட்டதைப் பார்த்தவர்கள் வியந்து பாராட்டினார்கள். வந்தவர்களை ஒருவர் விடாது உட்கார வைத்து சாப்பாடு போட்டு நண்பரின் குடும்ப கவுரவத்தை உயர்த்திக் காட்டினார் அனந்தன். மதியச் சாப்பாட்டுக் கடை ஓய்ந்தது. இங்கும்… அங்கும் அலைந்து திரிந்த அனந்தனுக்கு களைப்பாக இருந்தது. வயது அறுபதைத் தாண்டிவிட்டது அல்லவா..? வயதிற்குரிய அலுப்பு இருக்குமல்லவா..? அதே நேரத்தில் உற்ற நண்பருக்காக இது கூடச் செய்யாமல் இருக்க இயலுமா..? மூன்று மணி வாக்கில் சிவகுருவிடம் வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு மனைவியுடன் கிளம்பினார் அனந்தன். வீட்டில் போய் படுக்கையில் விழுந்தவர்தான்… அடுத்த வினாடி அயர்ந்து தூங்கி விட்டார். அவ்வளவு அலுப்பு அவரை ஆக்கிரமித்து இருந்தது. “ஏங்க ராத்திரி மணி எட்டாச்சுங்க… எந்திரிங்க… அப்பறம் நடுச்சாமத்தில முழிப்பு வந்து… அதுக்கப்பறம் தூக்கம் வராம கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டு ஒட்கார்ந்து இருக்கணும்…” மீனாட்சி எழுப்பிய பிறகுதான் எழுந்தார் அனந்தன். “சரியான அசதி…” “சரி நைட்டுக்கு என்ன சாப்பிடுறீங்க…” “ஒரு மூணு இட்லி… இல்ல ரெண்டு தோச மட்டும் கொடு போதும்..” “சரி சட்னி அரச்சிட்டு தோசைய ஊத்துறேன்…” நண்பர் சிவகுருவை அலைபேசியில் அழைத்தார் அனந்தன். “மண்டபத்தைக் காலி பண்ணிட்டு வீட்டுக்கு வந்திட்டோம்.. நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு, காலையில இந்தப் பக்கம் வந்தால் போதும்..” என்கிற திருப்தியான தகவலே நண்பரிடமிருந்து வந்தது. தூங்கியதால் சோர்வைக் காட்டிய முகத்தை அலம்பி விட்டு வரவேற்பரையில் தரையில் அமர்ந்தார் அனந்தன். தொலைக்காட்சிக்கு உயிர் கொடுத்தார். எண்பதுகளில் வெளியான எதோ ஒரு படம் தொலைக்காட்சியில் ஓடிற்று. இரண்டு தோசைகள் வைத்த தட்டு, சட்னிக் கிளாஸ், குடிதண்ணீர் டம்ளர் முதலியனவற்றை ஒரே நேரத்தில் சிரமப்பட்டு கொண்டு வந்தாள் மீனாட்சி. வந்தவள், தொலைக்காட்சியில் கவனம் செலுத்தியபடி தரையில் அவைகளை வைக்கிற போது சட்னியும் தண்ணீரும் அனந்தன் கட்டியிருந்த கைலியில் பட்டு விட்டது. அவ்வளவுதான்… அனந்தன் விஸ்பரூபம் எடுத்து விட்டார். “பாத்து வரக் கூடாதா…? எல்லாம் அசால்ட்டுத்தான்… கொஞ்சம் கூட பயம்ங்கிறது கெடையாது… தோசையும் சட்னியும் வச்ச பிறகு டி.வி.யப் பாக்க வேண்டியதுதானே… அதுக்குள்ள என்ன அவசரம்..? அங்க என்ன அவுத்துப் போட்டா ஆடுராங்க…” என்கிற தினுசில் மீனாட்சியை திட்டித் தீர்த்து விட்டார் அனந்தன். மதியானம் பட்டு வேட்டியில் சாம்பாரை சிந்தியவள், பதறிப் போய் மன்னிப்புக் கேட்டபோது…. பரவாயில்லம்மா.. நீ என்ன வேணுமுன்னா ஊத்தி இருக்கப் போறே… எதோ தெரியாமப்பட்டிருச்சு… யாரோ ஒரு தெரியாத பொம்பளைய மன்னித்தது அனந்தனின் ஞாபகத்திற்கு அப்போது ஏனோ வரவில்லை. “பட்டு வேட்டியில எவளோ சாம்பாரக் கொட்டுன போது வராத கோபம் பழைய கைலியில கட்டுன பெண்டாட்டி தெரியாம சட்னிய சிந்தினதுக்கு இப்பிடி வருது…” என்று மீனாட்சியும் பதிலுக்குப் பேசவில்லை. சுமைதாங்கிக்கல் -செப்டம்பர் 15, 2019 […] மருமகள் மஞ்சுளாவின் வளைகாப்பு வைபவம் நெருங்கி விட்டது. நாள் நிர்ணயிக்கும் போது முப்பது தினங்கள் இருந்த கால அளவு சிறிது சிறிதாகத் தேய்ந்து அடுத்த ஞாயிற்றுக் கிழமை விசேசம் என்று அருகில் வந்து நிற்கிறது. கால நேர ஓட்டங்களுக்கு என்ன தடையா..? இடையூரா…? அது பாட்டுக்கு அது றெக்கை கட்டிக் கொண்டு பறக்கின்றன. “அப்பா… வளகாப்புக்கு வரச்சொல்லி சொந்தங்கள் ஃபிரண்ஸ்க எல்லாத்துக்கும் சொல்லிட்டிங்களா…?” “ம்.. செல்போன்லயே சொல்லிட்டேன் மனோ…” “சொந்தக்காரங்கள்ட்ட இருந்து நெறைய கமாண்ட்ஸ் வந்திருக்குமே… அதுல நக்கல் நையாண்டி கிண்டல கேலி எல்லாம் வெளிப்பட்டிருக்குமே…” “ஆமா.. ஆமா… புத்திசாலித்தனமா பேசுறதா நெனச்சுக்கிகட்டு வழக்கம் போல நம்மள காலவாரி விடுறதிலேயே கவனமா இருந்தாங்க…” “நீங்க எதுக்கு இன்னமும் இத ‘அலவ்’ பண்ணுறிங்க… பட்டுப்பட்டுண்ணு சூடாப் பதில் சொல்லணும்ப்பா… நீங்க எல்லாத்தயும் சுலபமா எடுத்துக்கிடுறதால அவுங்க ஒங்க மேல ஏறி மேய்றாங்க…. நீங்க பழகிற நண்பர்களப் பாருங்க.. ஒங்கள்ட்ட எவ்வளவு அன்னியோன்யமா இருக்காங்க… இந்த சொந்தக்காரங்க மட்டும் ஏம்ப்பா நம்ம மேல குறை கண்டு பிடிக்கிறதிலே குறியா இருக்காங்க…?” “சின்னப் பிள்ளையில இருந்தே தட்டிக் கொடுத்து வளக்கப்பட்டவனா இல்ல… மட்டந்தட்டியே வளக்கப்பட்டவன்… காலம் காலமா சகிச்சிட்டுப் போயாச்சு.. இனிமே எங்க பதிலடி கொடுக்க…? அப்படியே கொடுத்தாலும் அமைதியா இருந்த ஆளு வசதி வந்ததும் மாறிட்டாருன்னு பேசுவாங்க…” “ஒங்களத் தாழ்த்தி பேசுற ஆட்க்க… ஒங்களவிட எந்த விதத்தில ஒசந்தவங்க… நாலாந்தர நாளேடுகள அதுவும் டீக்கடையில போயி படிக்கிற பிரகஸ்பதிங்க… நீங்க இன்னக்கி வரைக்கும் வாசிச்ச புத்தகங்களுக்கு கணக்கு வழக்கே கெடையாது… கல்யாணப் பத்திரிகையில மட்டும் அவங்க அவுங்க பேர அச்சுல பாத்தவுங்க…. கதை, கட்டுரை, கவிதைன்னு எழுதி வார வாரம் ஒங்க பேரு எல்லாப் பத்திரிகையிலும் வந்திட்டு இருக்கு… அப்பிடி இருக்கும் போது.. அவுங்க வீசுற வார்த்தைகளத் தாங்கிக்கிடுற சுமைதாங்கிக் கல்லா எதுக்கு இருக்கிங்க… அவுங்க வீசுற வார்த்தைப் பந்துகள ஓங்கி அடிச்சு அவுங்க பக்கமே திருப்பி விடுங்க… வாய்க்கு வந்தத பேசுறவுங்க வாய் மூடி மவுனமாகிடுவாங்க…” மகன் மனோகரன், நிஜமான நிலவரங்களை ஒளிவு மறைவின்றி ஓங்கிப் பேசியதை ஏற்றுக் கொண்டார் கந்தசாமி. மனோகரன் சொன்னதில் அவரது மனதைத் தைத்தது “வீசுற வார்த்தைகள தாங்கிக்கிடுற சுமைதாங்கிக் கல்லா எதுக்கு இருக்கிங்க..?” என்பதாகும். ஆம். ‘சுமை தாங்கிக் கல்லாப் போயிட்டோம்’ என்று பல சந்தர்ப்பங்களில் கந்தசாமியே வருந்தி முணுமுணுக்கக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. கந்தசாமிக்கு தற்பொழுது அறுபது வயதாகிறது. கந்தசாமி பதினைந்து வயதுப் பையனாக இருக்கும் போது தந்தையை இழந்துவிட்டான். ஆதனால் தாய் மாமா வீட்டில் தஞ்சம் அடைந்தான். என்னதான் தாயின் தம்பியாக இருந்தாலும், உறவுக்குள் ஒருவித இடைவெளிகள் உருவாகவே செய்தன. பெற்ற தந்தையிடம் பெறக் கூடிய பிரியமோ, சலுகையோ கிடைக்கத்தான் இல்லை. அது மட்டுமல்ல… என்னதான் சொன்னதைச் சொன்னபடி செய்தாலும் கந்தசாமி மீது குறைகள் கண்டு வசவுகளை வாரி வீசுதல் என்பது அன்றாட நிகழ்வாகிப் போயிற்று. மாமா மட்டுமல்ல… மாமாவின் நண்பர்கள், மாமா வீட்டுக்கு அடிக்கடி வந்து போகிற சொந்தக்காரர்கள் முதலியோரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானான். அவனிடம் வேலை வாங்கி விட்டு அவனுக்கு ‘உதவாக்கரை’ பட்டம் சூட்டிவிட்டு போவது சர்வ சாதராணமாய் நிகழ்ந்தது. ஆரம்பக் கட்டத்தில் மனதிற்குள் கொதித்த கந்தசாமி காலப் போக்கில் வேறு வழியின்றி சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொண்டான். அப்போதுதான் பிறரின் கோபதாபங்களுக்கு வடிகாலாய், அவர்கள் கோபச் சுமையைத் தாங்கும் சுமைதாங்கிக் கல்லாய் நம்மை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ணிக் கொண்டான். அன்று ஆரம்பித்த சகிப்புத் தன்மை இன்றும் கந்தசாமியின் அறுபது வயதிலும் தொடர்கிறது. கந்தசாமி வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்கள், ஏற்றங்கள் நிகழ்ந்த போதிலும் சொந்தங்கள் இவர் மீது படர விடும் ஏளனப் பார்வைகள் மட்டும் மறைந்தபாடில்லை. உறவுகள் என்ன காரணத்தினாலோ கந்தசாமியை உதாசீனப் படுத்தும் போக்கினை விடவில்லை. மனோகரன் தெரிவித்த சுமைதாங்கிக் கல் என்கிற வார்த்தை நிஜமான சுமைதாங்கிக் கல் பற்றிய நினைவுகளில் கந்தசாமியை மூழ்கச்செய்தது. “நான்கு செண்டி மீட்டர் கனம்; ஐம்பது செண்டி மீட்டா அகலம்; நூற்றைம்பது மீட்டர் உயரம்; உள்ள இரண்டு கருங்கற்கள் நிறுத்தப்பட்டு, அதே அளவுள்ள கருங்கல் ஒன்று அவற்றின் மீது படுக்கை வாக்கில் வைக்கப்படும்.” இதற்குத்தான் சுமை தாங்கிக் கல் என்ற பெயர். ரோட்டோரங்களில் இந்தச் சுமைதாங்கிக் கல் வைத்திருப்பார்கள். அதாவது கிராமங்களில் வயிற்றில் பிள்ளையுடன் மரணிக்கும் பெண்மணிகளுக்கு எழுப்பப்படும் நினைவுச் சின்னங்களே இந்த சுமைதாங்கிக்கல் ஆகும். அந்தக் காலங்களில் இந்தளவிற்கு போக்குவரத்து வாகன வசதிகள் கிடையாது. கிராமங்களில் இருந்து நகரச் சந்தைக்கு வந்து கூடை நிறைய சாமான்கள் வாங்கிக் கொண்டு நடந்தே போவார்கள். இந்த சுமைதாங்கிக் கல்லைக் கண்டவுடன் அதில் கூடையை இறக்கி வைத்து கொஞ்ச நேரம் தம்மை ஆசுவாசப்படுத்தவிட்டு நடையைத் தொடர்வார்கள். பதின்பருவ வருடங்களில் கிராமத்தில் இருந்து நகரத்தில் போய் படித்த கந்தசாமி இந்தச் செய்கைகளைப் பார்த்திருக்கிறான். பிற்காலங்களில் சொந்தங்கள் இவன் மீது குறைகளைக் கொட்டும்போது சுமைதாங்கிக் கல் அவனது நினைவுகளில் நிழலாடத் தவறவில்லை. தலைச்சுமையை இறக்கிட ஜனங்கள் சுமைதாங்கிக் கல்லை உபயோகப்படுத்தியது போல்.. அவ்வப்போது கோபச் சுமைகளை நம்மீது இறக்கியது உறவுக் கூட்டம் என்கிற தினுசில் சுமைதாங்கிக் கல்லோடு தன்னை ஒப்பிட்டுக் கொண்டான் கந்தசாமி. இன்று கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வருவோர் யாரும் நடந்து வருவதில்லை. டவுன் பஸ், மினி பஸ், மினி வேன், சேர் ஆட்டோ இத்தியாதிகள் போகாத ஊர்கள் ஏதுமில்லை. அதனால் சுமைதாங்கிக் கல்லை யாரும் பயன்படுத்துவதைப் பார்க்க இயலவில்லை. கர்ப்பிணி மரணம், பிரசவத்தில் உயிரிழப்பு முதலியன இப்போதெல்லாம் மிக மிக சொற்பமாக எப்போதாவது மட்டுமே நிகழ்கின்றன. அதனால் எங்கேயும் சுமைதாங்கிக் கல் நிறுவுவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் மட்டும் சுமைதாங்கிக் கல்லாய் இன்னமும் ஏன் திகழ வேண்டும்..? என்கிற வினாவை மனோகரனின் உரையாடல் கந்தசாமியின் உள்ளத்தில் விதைத்தது. அன்று மஞ்சுளாவின் வளைகாப்பு நிகழ்ச்சி. விசேச வாசம் வீட்டை ஆக்கிரமிக்கத் தவறவில்லை. கலகலப்பிற்குப் பஞ்சமின்றி வீடு காட்சி அளித்தது. வீடு முழுவதும் சொந்த பந்தங்கள் நிறைந்திருந்தார்கள். அவர்களின் வாய்கள் வழக்கம் போல் அதிக பிரசங்கித்தனமான கமாண்ட்ஸ்களை உதிர்த்துக் கொண்டிருந்தன. “கேக்காம கொள்ளாம வளைகாப்புத் தேதிய நீங்களா முடிவு பண்ணிட்டிங்க..?” “ஒவ்வொருத்தர் கிட்டயும் கேட்டுக்கிட்டு இருக்க முடியுமா…? வரவுக வரட்டும்னு இன்னக்கித் தேதியில வளகாப்ப வச்சட்டோம்…” “மண்டபம் பிடிச்சு வச்சிருந்தா நல்லா இருந்திருக்குமே…?” “மண்டப வாடகை பத்தாயிரம் போல வருமே… நீங்க கொடுப்பிங்களா..?” “நாளைக்கி என்னோட ஒண்ணுவிட்ட அக்கா மக சடங்கு… அவசர அவசரமாப் போகணும்.. ஒங்க வீட்டு விசேசத்த கொஞ்சம் முன்னப்பின்ன வச்சிருந்திருக்கலாம்..” “ஒங்க ஒண்ணுவிட்ட அக்கா மக சடங்க என்னயக் கேட்டா முடிவு பண்ணினாங்க.?” “கால டிபன்ல பொங்கல்ல கொஞ்சம் உப்புக் கம்மி… டிபன் யார் ஏற்பாடு பண்ணினது…?” “விசேச வீட்டு சாப்பாடோ டிபனோ கொஞ்சம் முன்னப் பின்னதான் இருக்கும்.. நாமதான் அட்ஜஸ் பண்ணிக்கிடணும். ஏற்பாடு பண்ணினவரத் தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க…? உப்புக் கம்மியா இருப்பது ஒடம்புக்கு நல்லதுதானே…?” கேள்வி மேல் கேள்விகள் கேட்டு கந்தசாமியைத் திணறடிக்க உறவினர்கள் முயன்றார்கள்… ஒவ்வொரு கேள்விக்கும் தனது தடாலடி பதிலால் அவர்களைத் திக்கு முக்காடச் செய்துவிட்டார் கந்தசாமி. வாய்ப்புக்கள் கிடைக்கும் போதெல்லாம் கந்தசாமியிடம் வார்த்தை விளையாட்டு நடத்தியவர்கள் அவரின் ஒரு முறை சீண்டலை சமாளிக்க முடியாமல் கலகலத்துப் போனார்கள். “கந்தசாமி மாறிட்டாரில்ல.?” “கேள்வி கேட்டா எகத்தாளமாப் பதில் சொல்றாரு.. இனி அவர்ட்ட பேச்சக் கொறச்சுக்கிட வேண்டியதுதான்…” “எல்லாம் வந்த வசதிகள்தான் இப்பிடி பேச வைக்கிது…” உறவுக் கூட்டம் ஒண்ணாய் சேர்ந்து ஆங்காங்கே ஆவலாதி பேசியது கந்தசாமி காதுகளுக்கும் எட்டவே செய்தன. அதே நேரத்தில்…. "வெளுத்து வாங்கிட்டிங்கப்பா… ‘கீப் இட் அப்’ என்று மனோகரன் உற்ற தோழனைப் போன்று கைகுலுக்கிப் பாராட்டினது கந்தசாமியை மெய் சிலிர்க்க வைத்தது. விஷம் முறித்த விபத்து - ஆர்.செம்மலர் -செப்டம்பர் 29, 2019 […] அருணாவும் ரோஸியும் பேசிக் கொண்டிருந்த னர். திடீரென வந்த நெஞ்சு வலி அருணாவை மயக்கத்தில் ஆழ்த்தியது.அதைக் கண்டு ஒரு கணம் திகைத்த ரோஸி வேகமாய் உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்தாள். அதன் பிறகும் அவளிடம் அசைவில்லாததால் பதட்டமானாள். ‘தம்பி தம்பி’ என மகன் கிறிஸ்டோபரை சத்தமிட்டு அழைத்தாள். பாத்ரூமிலிருந்து ஓடி வந்தவன் உடனடி யாய் ஒரு ஆட்டோ மூலம் அருகில் இருந்த மருத்துவ மனைக்கு அழைத்து சென்றான். போகும் போதே அருணா வின் கணவர் உதயனுக்கு போன் செய்தான். அவர் வெளி யூர் போயிருப்பதை அறிந்ததும் மருத்துவமனையில் அவளை சேர்த்து விட்டு அவள் மகன் ரவிக்கு தகவல் தந்தான். அம்மா அட்மிட் எனும் செய்தி தந்த பதட்டத்துடன் வண்டியை வேகமாய் ஓட்டிய ரவி விபத்தில் சிக்கினான். மண்டையில் பலத்த அடிபட! நிறைய ரத்த சேதமானது! அந்த இடத்தில் இருந்த டிராபிக் போலீஸ் அவன் செல்லில் கடைசியாய் அழைத்திருந்த என்ணிற்கு தகவல் தர அது பலரிடமும் சுற்றி அலைந்து கிறிஸ்டோபரிடம் வந்து சேர்ந்தது. அம்மாவிடம் சொல்லி விட்டு உடனே அரசு மருத்துவ மனைக்கு சென்று உடனடி வேலைகளை கவனித்தான். பிறகு விபரம் எதுவும் கூறாமல் ரவியின் தந்தையை வரச் சொல்லி தகவல் தர. அங்கு வந்த உதயன் ரவிக்கு விபத்து எனத் தெரிந்து ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தவ ராய் சுவரில் சாய்ந்தார். கிறிஸ்டோபர் ஓடிப் போய் தண்ணீரும் காப்பியும் வாங்கி வந்து ஆசுவாசப்படுத்தி யதில் சற்று நிதானமானார். எமர்ஜென்சி பிரிவின் மருத்துவர் வெளியே வந்து ரவியின் தந்தையிடம் அவன் நிலைமையைக் கூறி ஆபரேசனுக்கு கையெழுத்து பெற்றார். அத்துடன் ரத்தம் நிறைய வெளியேறி உள்ளது. எனவே உடனடியாக ரத்தம் தேவைப்படும் என்றார். அவனுடையது மிகவும் அரிதான ஓ நெகடிவ் ரத்தம்! தன் ரத்தம் அவனுக்கு பொருந்தாது, மனைவியும் ஆஸ்பத்திரியில் என்ன செய்வது எனக் கூறி கைபி சைந்து நின்றவரிடம் மருத்துவர், “இங்கும் அது ஸ்டாக் இல்லை. கீழே பிளட் பேங்க் செல்லுங்கள். அவர்களிடம் சில போன் நம்பர்கள் உள்ளன. அதைப் பெற்று முயற்சி செய்யுங்கள். இப்போது செய்துள்ள சிகிச்சை இன்னும் பத்து மணி நேரம் வரை தாங்கும்” என்றார். அவருடைய முதல் அழைப்பிலேயே இரண்டு பேரை உடன் அழைத்துக் கொண்டு அங்கு வந்தவன் எதிர்வீட்டு அசோக். அவனை அங்கு எதிர்பார்க்காத உதயன் “இங்கே எங்கு வந்தாய்” என்பது போல் புருவம் உயர்த்தினார். “உங்க போன் வந்ததும் எங்க இரத்த தான கழகத்தி லிருந்து எங்களை அனுப்பி வெச்சாங்க அதான் வந்தேன்” என்று நெருக்கம் காட்டும் புன்சிரிப்பை முகத்தில் தவழவிட்ட படி முதலில் வந்த வேலையை கவனிக்க சென்றான். பிறகு சஞ்சலம் நிறைந்த மனதுடன் இருந்த உதய னின் அருகில் அமைதியாய் வந்து நின்று அவர் கைகளை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டான். கண்ணில் நீர் தளும்ப நின்றவரை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் வகையில் கேண்டீனுக்கு அழைத்து சென்றான். சற்று மனம் அமைதிப்பட்டதும் “நீ எப்பவும் அமைதியா இருப்பியே இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யறியா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். “ஆமாங்க அங்கிள்.. அக்கம்பக்கத்துல பார்க்கிற சின்னச்சின்ன பிரச்சனைகளை சரி செய்யறது. அவங்க ஒத்துமை கெடாம பார்த்துக்கறதுன்னு நிறைய செய்யறோம். அதுக்கு முதல்ல மனுசங்க உயிரைக் காப்பாத்தறது தான் ரொம்ப முக்கியம்னு இதுக்கு முன்னுரிமை குடுத்து செய்யறோம்”என்றவனிடம்" ரொம்ப சந்தோஷம்ப்பா" என்று அந்த சோகத்திலும் மகிழ்ச்சியை தெரிவித்தார் உதயன். “சரி அப்புறம் பேசலாம் அங்கிள்” என்றபடி மருத்து வரைப் பார்க்க நகர்ந்தான் அசோக். அந்த தனியார் ஆஸ்பத்திரி முதலுதவி செய்தததில் மயக்கம் தெளிந்த அருணா இன்னும் தன் மகனோ அவரோ வரவில்லையே என்று ரோஸியிடம் ஆதங்கத்து டன் கிணற்றுக்குள்ளிருந்து வருவது போன்ற குரலில் கேட்டாள். கிரிஸ்டோபர் கூறியபடி ரவிக்கு நடந்த விபத்து தெரிந்தும் அருணாவிடம் அதைக் கூறாமல், “என்ன வேலையோ என்னமோ முடிச்சிட்டு வரட்டும், நான் தான் உன்கூடவே இருக்கனே” என்று சமாதானம் கூறி அவளை ஆறுதல் படுத்தினாள் ரோஸி. நீண்ட நேரம் கழித்து கனத்த மனதுடன் வந்த உதயன், “தன்னைக் காண வந்த மகனுக்கு ஏற்பட்ட விபத்தை யும் அதுவரை நடந்த மற்ற விபரங்களையும்” கூறியதும் உடனே மகனைப் பார்க்க வேண்டும் என்று கதற ஆரம்பித்தாள் அருணா. அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரத்த அழுத்தம் மிக அதிகமாய் இருப்பதால் ஒரு வாரம் மருத்துவ கண்காணிப்பில் படுத்திருக்க வேண்டும் எனக் கூறவும் உதயன் அவர்களிடம் விபரங்களைக் கூறி அங்கிருந்து அவளை டிஸ்சார்ஜ் செய்யவும், அரசு மருத்துவமனையில் அனுமதிப்பதற்குமான ஏற்பாடுகளைச் செய்தார். தீவிர கவனிப்பில் இருந்து நலமாகிய ரவி வார்டுக்கு வந்து மூன்று நாளாகிறது. அவன் விரைவில் நலம் பெற்று வருவதாக மருத்துவர் சொன்னது தெம்பு தர கணவரின் வருகையை எதிர்பார்த்து படுத்திருந்தாள். பாரா முகத்துடன் நடக்கும் ரவிக்கு ஒரு பக்கம் கிறிஸ்டோபரும் மறுபக்கம் அசோக்கும் அவன் நண்பர்களும் செய்த உதவிகள் பற்றி கணவர் கூறிய விசயங்கள் நினைவில் நிற்க கடந்த காலத்தின் பல்வேறு சிந்தனைகள் அவளுக்குள் அலைமோதின. வாடகை கட்டுப்படி ஆகாம பல வீடு மாத்தினா லும் எல்லா வகையிலும் இப்ப இருக்கற வீடு பொருந்தி யிருக்க பத்து வருசமா இங்கயே வாழ்க்கை நகர்ந்து ருச்சு. இந்த வீடு கிடைச்சதும் ஒரு கதை. ஏன்னா இந்த வீதியே வித்தியாசமானது. இங்க ஏசுவைக் கும்பிடறவங்களும் பக்கத்துல இருக்கற சோனியம்மன் கோவிலுக்கு போறவங்களும் சரிசமமா இருந்தாங்க. வீட்டு ஓனர்கள் சிலபேர் மட்டும் யாரு எவர்னு விசாரிக்காம வாடகை கரெக்டா கிடைக்கு மானு தெரிஞ்சு குடி வெச்சாங்க. நிறைய பேர் வரவங்க எந்த சாமியைக் கும்பிடறவங்கனு விசாரிச்சு அவங்கவங்க வீடுகளுக்கு பொருத்தமா குடி வெச்சாங்க. அப்பதான் பிரச்சனையில்லாத குடித்தனக்காரங்களா அவங்க இருப்பாங்கனு நினைச்சது தான் காரணம்னு பிறகு தெரிஞ்சுது. நாங்க இந்த வீதில வீடு தேடி வரப்ப ஆல்பர்ட் வீடுதான் காலியா இருந்துச்ச. வாசல்ல கால் வெச்சதும் வாங்கனு தலையசைச்சார். என்னை உன்னிப்பாக கவனித்த அவர் முகம் யோசனையில் சுருங்கிச்சு. வீடு வேணும்னு சொன்னதும் “யார் இந்த வீட்டை காட்டினாங்க? நாங்க இந்துக்களுக்கு வீடு தரதில்லையேனாரு”. எங்களுக்கும் அவருக்கும் அறிமுகமான ஏசையா பேரை சொன்னதும் உடனே வீடு தர சம்மதிச்சார். எங்க வீடு மாடி மேல… அங்க இன்னொரு வீடும் இருந்துச்சி. அதுல ரோஸி குடும்பம் குடியிருந்தாங்க. வந்த புதுசுல வீட்ல சாமி பாட்டு சத்தமா வைக்கக் கூடாது. உவர்ல வாசப்படில மஞ்சள் குங்குமம் வைக்கக் கூடாதுன்னாங்க. இந்த வேலைகள் இந்த வீட்லயிருந்து பேய் பிசாசுகளை அவங்க வீட்டுக்கு கடத்திரும்னு பயப்பட்டாங்க. அது சர்ச்ல சொல்லித் தந்து ஆழமா வந்த பயம்னு பிறகுதான் தெரிஞ்சுது. போகப்போக அதுவும் போய் இயல்பா இருக்க ஆரம்பிச்சாங்க. அங்க போயி ஒரு வாரம் கூட ஆகலை. எதிர் வீட்டு மாடில குடியிருந்த அம்மா என்னைப் பார்த்து சிரிக்க நானும் சிரிச்சேன். உடனே அவங்க “பொங்கலா கிறிஸ்துமஸா”நு ஜாடைல கேட்டாங்க. பொங்கல்னு உதட்டசைவை புரிஞ்சுக்கற மாதிரி பதில் சொன்னேன். உடனே அவங்க முகம் பிரகாசமாயிடுச்சு. ஆனால் ஏனோ அது எனக்கு உறுத்தலா இருந்துச்சி. சின்னதுல இருந்தே ஏதோ ஒரு நம்பிக்கைல சாமி கும்பிடுவேன். ஆனால் யார் எந்த சாமி கும்பிடுவாங்கனு கேட்டதும் இல்லை. அதை வெச்சு யார் கூடயும் பழகினதோ பகைச்சதோ இல்லை. மனசுக்கு பிடிச்ச எல்லார் கூடயும் பழகுவேன். அவங்க ஜாடைப் பேச்சுகள் வில்லங்கம் கொண்டு வரும்னு தோண முடிஞ்ச அளவு என் பதில்களை எல்லார்க்கும் கேட்கற மாதிரி சத்தமா சொல்ல ஆரம்பிச்சேன். அவங்களும் ஜாடைப் பேச்சை விட்டு இயல்பா பழக ஆரம்பிச்சாங்க. வீட்டு ஓனர் ஆல்பர்ட்டும் என் போக்கை புரிஞ்சு எங்க குடும்பத்தோட நல்ல பாசமா பழக ஆரம்பிச்சார். ரோஸியும் நல்லா ஒட்டிகிட்டாங்க. அவங்க பையன் பால்ராஜ், ரவி, கிறிஸ்டோபர் எதிர்வீட்டு அசோக் நு எல்லாரும் நட்பாகி விளையாட ஆரம்பிச்சாங்க. மூணு வருசம் முன்ன ரவியோட போக்குல சில மாற்றம் தெரிய ஆரம்பிச்சது. கையில புதுசா கயிறு கட்ட ஆரம்பிச்சான். விநாயகர் சதுர்த்தியின் போது தெரு முனைல சிலை வைக்கிறதுல அதுக்கு வசூல் செய்யறதுல ஊர்வலம் போகிறதுலனு எல்லா வேலைகலையும் முன்னால நின்னு செய்ய ஆரம்பிச்சான். அடுத்த தெருல இருக்கற பாய்மார்களை வெளிநாட்டுக்காரங்கனு சரமாரியா திட்ட ஆரம்பிச்சான். என்னால அவனை புரிஞ்சுக்க முடியலை. நாங்க யார் கிட்டயும் வேறுபாடு பார்த்ததில்லை. எல்லாக் கோயி லுக்கும் போவோம். இவனுக்கு உடம்பு சரியில்லைனா கோரிக்கு போயி கயிரும் கட்டியிருக்கோம். டூர் போனா வேளாங்கன்னியையும் விட்டு வெச்சதில்லை. இவனால மட்டும் எப்பிடி மத்த சாமி கும்பிடற வங்களை திட்ட முடியுது. இவன் தானா அதுன்னு நம்பக்கூட முடியலை. அவனுக்கு பேசி புரிய வைக்கலாம்னு பார்த்தால் அதுக்கு பிடியே குடுக்காத மாதிரி நடந்துப்பான். ஆளான பையனை என்ன செய்யன்னும் புரியலை. எப்பிடியோ போகட்டும்னு விட்டுட்டோம்.. ஆனால் ரவியை விநாயகர் ஊர்வலத்துல பார்த்த நாள் முதலா ரோஸி குடும்பம் அச்சத்துல ஒடுங்கிப் போனது நல்லாத் தெரிஞ்சுது. ரவியும் அவங்க கூட முன்ன மாதிரி பழகாம பட்டும் படாமலும் நடக்க ஆரம்பிச்சான். வீட்டு ஓனர்க்கு இவன் போக்கு தெரிஞ்சும் எங்களுக்காக அமைதியா இருந்துட்டார். பிள்ளையாரை குட்டியா அமைதியா பார்த்து பழகிட்டு பெரிய உருவமா, சிங்கம் மேல உட்கார்ந்து, துப்பாக்கியை வெச்சுகிட்டுனு விதவிதமா இவங்க வாங்கி வைக்கிற விநாயகரும், அதெல்லாம் ஊர்வலமா வரதும், அப்ப இவங்க போடற கோஷங்களும் எனக்கே பயமா இருக்கறப்ப மத்தவங்களை சொல்ல என்ன இருக்கு? நாங்க ரவி கூட இணைஞ்சு நிக்கலைனு அவ னுக்கு கோவம்தான். ஆனாலும் எங்களால முடியலை. கிரிஸ்டோபரை புரிஞ்சுக்க முடிஞ்சுது. ஆனால் ஒரு வயித்துப் புள்ளை மாதிரி பழகின அசோக் என்ன கார ணம்னே தெரியாம விலகிட்டான். எனக்கு ஒரே சங்கடம். ரவி யும் தானா எதுவும் சொல்லலை. அசோக்கும் எதுவும் சொல்லலை. ஆனால் அசோக் எங்களை எங்க பார்த்தாலும் அன்பா சிரிக்கறதும் நலம் விசாரிக்கறதும் தப்பாது. ஏதாவது பிரச்சனைனா நேரா வராட்டியும் யாரையாவது அனுப்பி அதை சரி செய்யறதுலயும் குறைவில்லை. அவனையும் என்னால புரிஞ்சுக்க முடியலை. இதுவரை யார் கூடயும் பகைன்னே இல்லாம வாழ்ந்த எனக்கு இந்த மாற்றங்கள் எல்லாம் ஜீரணிக்கவே முடியலை. இப்பிடியே இருக்கவும் பிடிக்கலை. அவரை வற்புறுத்தி வேற இடத்துல வீடு பார்க்கவும் சொல்லிட்டேன். அதுக்குள்ள எல்லாம் பழையபடி மாறிடாதானு மனசுல ஒரு ஆசை மட்டும் விடாம பிடிச்சிட்டிருக்கு. நடக்குமா தெரியலை! யோசிக்க ஆரம்பிச்ச அருணா கனவா நினை வான்னே தெரியாத குழப்பத்துல ஆழ்ந்த தூக்கத்துக்கு போய்ட்டாள். அடுத்த நாள் காலைல டாக்டர் எங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாங்க. அவரைக் காணமேனு நினைச்ச அருணா முன்னால ரவியும் கிறிஸ்டோபரும் கூட அசோக்கும் சிரிச்சபடி வந்து நின்னாங்க. பக்கத்துல அவளுக்கு அறிமுகம் இல்லாத ஒரு முஸ்லீம் பையனும் நின்னுட்டிருந்தான். இவ எதுவும் கேட்கறதுக்கு முன்னாடி ரவி “என்ன எங்களை ஒண்ணாப் பார்த்து அதிர்ச்சியாய்ட்டி யாம்மா…”நு கேட்டான். பதில் சொல்லும் முன்னே திரும்பவும் அவன் பேச ஆரம்பிச்சான். “நான் முதல் வருசம் விநாயகர் சிலை வைக்கப் போனப்ப அசோக் எங்கிட்ட வேண்டாம்டா.. அங்க போனயின்னா சாமி பேரைச் சொல்லி மனசை விசமாக்குவாங்க. ஒண்ணா இருக்கற எல்லாரும் பகை யாவோம். யாரையும் வேறுபாடு பார்க்காம ஒண்ணுக் கொன்னு கை குடுத்து பழகின நாம அப்பிடி மாறிப் போனா நல்லாயிருக்காது. எந்த வித்தியாசமும் பார்க்காம உதவி குடுத்து வாங்கறதுலதான் மகிழ்ச்சியே இருக்கு. அதுல கிடைக்கிற நல்ல பலன் வேற எதுலயும் கிடைக்காதுன்னு சொன்னான். இவனென்ன புத்தி சொல்லி நாம கேட்கறதுன்னு அவங்கூட பழகறதையே நிறுத்திட்டேன். கொஞ்சம் கொஞ்சமா அவனை வெறுக்கவும் ஆரம்பிச்சேன்” என்று நிறுத்தினான். சத்தமிலாமல் அவன் அருகில் வந்து நின்ற உதயன் “ரவியை மட்டுமில்ல உன்னைக் கொண்டு வந்து இங்க சேர்த்ததும் கிறிஸ்டோபர் தான். அவன் தைரியம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. அதை தூக்கி சாப்பிடற மாதிரி ரவிக்கு ரத்தம் குடுக்கணும்னு சொல்லி டாக்டர் குடுத்த நம்பருக்கு போன் செஞ்சதும் அசோக் பறந்தடிச்சு வந்தான். தன் ரத்தம் சேராதுனு தெரிஞ்சுதும் ரவி மனசு சங்க டப்படக் கூடாதேனு தயங்கி தயங்கி இந்த அலாவுதீன் தம்பியைக் கூட்டிட்டு வந்தான். நான் தான் அதெல்லாம் யோசிக்க வேணாம். அவன் உசுருக்கு முன்ன மத்த தெல்லாம் தூசுன்னு சொல்லி ரத்தம் தர சொன்னேன். அவரும் இவன் நம்மாளுகளை திட்டினவன் ஆச்சேனு நினைக்காம ரத்தம் குடுத்தாரு. இதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும்”னார். நற்செயல் செய்து கம்பீரமாக நின்ற இருவரும் கூச்சத்தில் நெளிந்தனர். சுதாரித்த அசோக் உடனே, “வீட்டுக்கு போகிற எண்ணம் இல்லையா” என விளையாட்டாக கேட்டு பேச்சை மாற்றினான். அப்போது அங்கு வந்த உதவி டாக்டர் “சீனியர் உங்களை கேட்டார் அசோக். காலைல போன்ல பேசிக்குங்க என்று விட்டு உங்க மாதிரி ஆளுங்க செய்யற உதவி தான் எங்க சேவையை சிறப்பாக்குது” என்று இயல்பாய் பாராட்டியபடி அடுத்த பெட்டிற்கு நகர்ந்தார். மெதுவாய் ரவி அசோக்கின் அருகில் நகர்ந்து அவன் கையை இறுகப் பற்றினான். அது அவன் அடையாளம் மாறிவிட்டதை அறிவிக்க மென்முறுவலுடன் அசோக் அவனை கைத்தாங்கலாய் வாசலுக்கு அழைத்துச் சென்றான். அதைக் கண்டு பூவாய் மலர்ந்த அனைவரையும் தன்னில் ஏற்றிக் கொண்ட வாகனமும் ஒற்றுமையை பறைசாற்றியபடி மகிழ்வாய்ப் பறந்தது. மிய்யாவ் - மொசைக்குமார் -அக்டோபர் 6, 2019 […] கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வீடு பூனைகளின் புகலிடமாகவும் இருக்கிறதென்பது யாவரும் அறிந்ததே… ஹாலிவுட் திரைகளில் தோன்றும் பொசு பொசுவென்ற ரோமங்களும், கொளுத்த உருவமும், பாவணைகளுடன் மனித மொழி பேசிக்கொண்டே பல வண்ணங்களில் வலம் வரும் அயல் நாட்டுப் பூனைகள் போல் ஒரு போதும் அங்கு இருந்ததாக தெரியவில்லை. சந்தனம், கருப்பு, பிஸ்கட் கலர் என ஒன்றிரண்டு தோன்றி மறைந்தாலும் ஏனையவையெல்லாம் புலிக்குட்டிகளை கருப்பு வெள்ளையில் நகல் எடுத்தாற்போல் சாம்பல் நிறத்தில் வரிகளுடனும், பருத்தும், ஒடுங்கியும் அல்லாமல் நடுத்தரமாகவும் அழகாகவும் இருந்தன. இந்தியப் பூனைகளின் அடையாளமோ என்னவோ…! ஒரு காலத்தில் ‘பூனைக்காரம்மாள் வீடு’ என்றால் தவழும் குழந்தையிலிருந்து தபால்காரர் வரை கை நீட்டிக் காண்பிப்பார்கள். கண்ணம் பிதுங்கிய உருண்டையான முகமும், பருமனான உடல் வாகும், வெண் சிவப்புமான நிறமும், நூல் சீலையும், இடுப்பில் சுருக்கப் பையுமாய் வாசலில் நிற்கும் அந்தம்மாவின் காலைச் சுற்றி எப்போதும் இரண்டு மூன்று பூனைகள் திரியும். “ச்.சீ போங்க கழுதைகளா அங்கிட்டு” என கனப்பொழுது விரட்டினாலும், நினைக்கும் பொழுதுகளெல்லாம் பாலும், சோறும், கடை விற்பனைக்கென்று வாங்கி வைத்திருக்கும் நொருக்குத் தீணிகளையும் வஞ்சனையில்லாமல் அவைகளுக்குப் பரிமாறுவார். “இவளுக்கு கிறுக்கு ஏதும் புடிச்சிக்கிருச்சா… ஆசைக்கி ஒன்னு ரெண்ட வளக்க வேண்டியதுதே, கஞ்சி கிஞ்சிய ஊத்த வேண்டியதுதே… அதுக்கின்னு ஒரேடியா பாலும் தேனும்; கொட்டிக்கிட்டே இருக்கனும்னா எங்க போறது?” ஏதாவதொரு புத்தகத்தில் முகம் புதைத்தபடியே அங்கலாய்ப்பார் அம்மாவின் துணைவர். மூத்த மகளின் திருமணத்திற்க்குப் பிறகு வீட்டின் முன் புறத்தை பெட்டிக்கடையாக மாற்றியமைத்த பின்புதான் பூனைகளின் சேவை தேவையெனப்பட்டது. எதிர்த்தாப்பில் நியாய விலைக் கடைகளுக்கான குடவுன் இருந்ததால் கொழுத்த எலிகளின் பொந்துகளும் சுற்றிலும் நிறையவே இருந்தன. எத்தனை நாட்களுக்குத்தான் இடுக்கியும் கூண்டிலும் கை கொடுக்கும்! அதன் நிரந்தர எதிராளி கைவசமிருந்தால் தேவலையல்லவா.. ஆரம்ப காலப் பூனைகள் சற்று போராட்டத்திற்குப் பிறகே இடத்தையும், வீட்டார்களின் இதயத்தையும் தக்க வைத்துக் கொண்டன. ஆனாலும் அவருக்கு அதில் உடன்பாடு இருந்ததில்லை. “வில்லன அடிச்சு துரத்திப்புட்டு, நாளடைவுல கதாநாயகிகிட்ட கதாநாயகனும் அதேச் சோழிய செய்யுற கதையாவுல்ல இருக்கு நீ பூனை வளர்க்குறது… இப்புடி நாளொன்னையும் போடுறதுக்கு அத எலிகளே திண்ணுட்டுப் போய்த் தொலையுதுக.. நம்ம வம்ச வழியில எவெம் பூனைய வளத்தயான்னு நீ அதுகல தூக்கி கொஞ்சிக்கிட்டு திரியுற?” அவ்வப்போது கடிந்து கொள்வார். ஆனாலும் அவைகளுடனேயே அவரும் நீண்ட வருடங்களைக் கடத்திவிட்டார். உஜாலா வெண்மையில் கதர் வேட்டியும் சட்டையுமாய் தோன்றும் அவர் தோப்பு, தோப்பு விட்டால் நவதானிய கமிசன் வியாபாரம், அதையும் தாண்டி அந்தம்மாவிற்குத் துணையாக பெட்டிக் கடை என்று அதிலும் லயித்திருப்பார். அப்போதும் சும்மா கிடையாது!; எந்த நேரமும் பேப்பரும், புஸ்தகமுமாகவே கிடப்பார். போதாக் குறைக்கு மார்க்சின் கோதா வேலைத்திட்டத்தைப் பற்றிய விமர்சன உரையும், சிவகாமியின் சபதமும், டால்ஸ்டாயின் அன்னா கரீனாவும், பாரதியின் கவிதைகளும், இன்னபிற கதைப்புத்தகங்களும், நாவல்களும் அவரின் ட்ரங்குப் பெட்டியினுள்ளே நூலகமாய்க் கிடக்கும். சக மனிதர் எவரொருவர் கிடைத்தாலும் போதும் அரசியலும், நாட்டு நடப்பும், சினிமா விமர்ச்சனமும் என்று பொழுது சாயும் வரை அதிலும் உணர்ச்சிவசமும் சுவாரஸ்யமும் பட்டுக் கொண்டிருப்பார். இத்தனைக்கும் வெள்ளைக்காரன் காலத்தில் வெறும் இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவராம். வெண்ணிற ஆடையில் மை விழுந்தாற்போல் அவர் மனசெல்லாம் பூனைகள் குறித்தே எரிச்சலடையும். எனினும் ஒருபோதும் அவைகளை அடித்துத் துரத்தியோ, வீட்டில் மல்லுக்கட்டியதோ இல்லை. பூனைகள் பலுகிப் பெருகும் தருணங்களில் வெளியிலிருந்து பலர் வந்து குட்டிகளை வாங்கிச் செல்வர். “புள்ளைய பத்தெரமா பாத்துக்கங்கய்யா…” பூனைக்காரம்மாள் சொல்லியனுப்பும். கடைசியாக இறுதி நாட்களில் ஒன்றிரண்டு பூனைகள் மட்டுமே அங்கிருந்தன. எதிர்பாராத உடல் நலக் குறைவு, நீடிய படுக்கை, மருந்து மாத்திரை எல்லாம் கடந்து நீடிய துயில் என்று அந்தம்மா உலகை கடந்த நாளும் அரங்கேறியது. அழுது வடிந்த சோக வீட்டின் வாயிலில் வேயப்பட்ட ஒற்றைக் கிடுகுப் பந்தல் பிரிக்கப்பட்டு மீண்டும் சூரியன் ஒளிவீசத் துவங்கியது. பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் விடுத்த வேண்டுகோலுக்கிணங்க தற்போது தாத்தாவாய் தோற்றமளிக்கும் அந்த ஐய்யா பெட்டிக்கடை முதல் அணைத்துப் பணிகளுக்கும் விடை சொல்லிவிட்டு ஓய்வும் முழுநேர வாசகருமாகிவிட்டார். பூனைகள் மீதான கவனத்தை மாடியி லிருக்கும் மகன் குடும்பம் தானாக ஏற்றுக் கொண்ட போதிலும் அவைகளை எந்நேரமும் கண்காணிப்பது இயலாமல் போயிற்று. தட்டில் கலந்து வைக்கப்பட்ட பால் சோறெல்லாம் முழு நிலவு போல் தீராமல் புளித்துக் கிடந்தன. கூடு களைந்த குருவியைப் போல் பூனைகள் அங்குமிங்கும் ஓடித் திரிந்தன. புதுப்பழக்கமாய் இரவுகளில் ஜன்னலைத் தாண்டி தெருவில் இறங்குவதும் கும்மிருட்டில் துரத்தும் நாய்களுடன் மல்லுக்கட்டி மரண ஓசை எழுப்புவதுமாய்க் கத்தின. இருந்த மூன்றில் ஒன்று ரத்தம் உறைய வாசலில் குதறப்பட்டுக் கிடந்தது. மற்றொன்று இப்போ பிறகோ என வீட்டின் மூலையிலேயே ஒடுங்கிக் படுத்திருந்தது. போதாக்குறைக்கு முரட்டு அன்னியப் பூனையொன்றும் அவ்வப்போது வீட்டினுள் நுழைந்து அதிகாரம் பண்ணிக் கொண்டிருந்தது. ஒரு நாள் வெறுமனே புத்தகமொன்றை கையில் விரித்து ஏந்தியபடி நெடுநேரம் வீதியை நிலை குத்திய கண்ளோடு பார்த்துக் கொண்டிருந்தவர்; அந்நேரம் வந்த மகன் ஆச்சரியம் கொள்ளத்தக்கதாய்… “ஏப்பா அந்தம்மா இல்லைங்குறதுனால கண்ட நாயெல்லாம் பூனைகள கடிச்சு குதறுதப்பா.. எந்தக் காட்டுப் பூனையோ வந்து அதிகாரமும் பண்ணுதப்பா.. ம்;.. நல்லாவாயிருக்கு? அதக் கொஞ்சம் பாக்குனுமப்பா.. வீடு வெறுச்சோடிப் போயிரக் கூடாது அவ யாவகாத்தமா அதுகளுந் தொடந்து இருக்கனும்.. ஜன்னல்ல இருக்க ஓட்ட ஒடசல அடச்சு விடுங்க.. வேளா வேளைக்கி நாங் கஞ்சிய ஊத்திப் பாத்துக்கறேன்.” எனச் சொன்னார். சுவரில் கண்ணாடிச் சட்டத்தினுள்ளே நாற்காலியில் படமாய் உட்கார்ந்திருந்த அந்தம்மா முகத்தில் புண்சிரிப்பு தென்பட்டது. அதன் பிறகு மீந்திருந்தது ஒரேயொரு குட்டிதான். முதுகின் நடுப்பகுதியிலும் கண்களுக்கு மேலேயும் கவசமாய் வட்ட வடிவில் கரும்பட்டைகள் தோன்ற முழுவதும் வெண்மையாகவும் அழகாகவும் இருந்தது. இம்முறை ஐயா அதற்கு புதிய உணவுப் பாத்திரத்தை வழங்கி பாலும் சோறும் தேவைக்கு அதிகமாகவே வைத்தார். ஊடே ஊடே முருக்கு அப்பளம் போன்ற நொருக்கித் தீணிகளையும் போட்டார். அருகாமையில் தூக்கி வைத்துக் கொண்டு வாசிப்பின் இடையே தழுவிக் கொடுக்கவும் செய்தார். இது அவருக்கு புதுப் பழக்கமாய் இருந்தது. வாயில்லா ஜீவனுடனான நட்புறவில் ஓர் ஆனந்தமும் மன அமைதியும் தென்பட்டது. குழந்தை போல அதுவும் கீழ்படிகிறது. கட்டிலில் காலை தொங்கப் போட்டு புத்தகமும் கையுமாக அமர்ந்திருக்கும் அவரின் இடது பக்கத்திலே அந்த பூனைக்குட்டியும் அவ்வப்போது வந்தமர்ந்து கொள்ளும். அதன் ‘அப்பளம்’ கொரிக்கும் ஓசையும் ‘மிய்யாவ்’ என்ற சப்தமும் அவரின் உணர்வலைகளைத் தட்டியெழுப்பியது. கடந்த காலங்களில் அவைகளின் மிது நித்தமும் கோபப்பட்டது, எரிந்து விழுந்தது எல்லாம் நினைவுகளில் மலர்ந்து சிரிப்பூட்டியது. பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்திய துணைவியாரின் குணம் இப்போது பிடித்துப் போனது. கண்ணாடிச் சட்டத்தைப் பார்த்து புண்ணகைப்பார். பழங்கால எகிப்தில் மரித்த பூனைகளை மம்மிக்களாக மாற்றிய வரலாற்றை படித்துக் கொண்டே திரும்பி “பின்னும் பெறகு ஒனக்கும் அது மாதிரி பாடம்பண்ணுவமா…” எனக் கேட்கிறார். அந்தநேரம் பார்த்து கூட்டுறவுக் குடவுன் புதரிலே தென்பட்ட எலியொன்றைப் பிடிக்க அது தாவி ஓடுகிறது. “வா ஒன்னய வச்சுக்கிறேன்..” என்கிறார் செல்லமாக. அதன் வளர்ச்சி போலவே இருவருடனான நட்பும் பருமன் கண்டது. இப்படி இருக்கையிலேதான் ஒரு நாள் காலைப்பொழுதிலிருந்தே பூனையைக் காணவில்லை. முதலில் எதார்த்தமாக விட்டவர் காலை மதியமாகி, மதியம் மாலையாகிவிடுகையில் மனதுக்கு ஒரு மாதிரியாகப் பட்டது. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் எட்டிப் பார்க்கிறார்! தட்டுப்படவில்லை. முதல் நாள் இரவு தட்டில் வைக்கப்பட்ட உணவு அப்படியே இருக்கிறது. எங்கு போயிருக்கும்? கூடப் போனால் அரைமணி நேரத்திற்கொருமுறை வந்து எட்டிப்பார்க்குமே! இரவு நெடுநேரமாய் தூக்கம்தொலைத்து அதன் வருகைக்காக காத்திருக்கிறார். ‘கார்த்திகை மாதமானதால் தெருவில் நாய்கள் அவ்வப்போது பட்டாளமாய் அவசர அணிவகுப்பு நடத்தி சலசலக்கின்றனவே… ஒரு வேளை அவைகளிடம் சிக்கி சின்னாபின்னமாகியிருக்குமோ.! ச்.சீ இருக்காது… வேறு பூனை எதனிடமும் காதல் வயப்பட்டுப் பின் சென்றிருக்குமோ.. எவரேனும் பிடித்துச் சென்றிருப்பார்களோ?’ குழப்பத்தினூடே அரைத்தூக்கத்தில் பொழுதை கழிக்கிறார். விடிகிறது. வீட்டாரிடம் கேட்கிறார். “தேடிப்பாப்போம்” “வரும், எங்க போகப் போகுது” சாதாரணமாய்ச் சொல்லிவிட்டுப் போகிறார்கள். ஆனால் வந்தபாடில்லை. இரண்டு மூன்று நாள் ஆகிறது. உள்ளம் பட படக்கிறது. இதழ்களின் வாசிப்பினூடே பூனையே பிம்பமாய் வந்தாடுகிறது. தெருவில் தட்டுப்படுவோரிடமெல்லாம் சொல்லி வைக்கிறார். பலன் கிடைத்தாய் போலில்லை. மீண்டும் வீடு வெறுச்சோடுகிறது. அதன் ‘மிய்யாவ்’ சப்தமின்றி தவிக்கிறது. “இருந்தா இந்நேரம் வந்துருக்கும்ல.. எங்கயாவது அடி கிடி பட்டு செத்துப் போயிருக்கும்” சக மனிதர்கள் சொன்னது நம்பப்படுவதற்கு ஏதுவாயிருந்தாலும், பொம்மைக்கு ஏங்கும் சிறுவனைப் போல் பூனைக்கு ஏங்கி “இல்ல அப்பிடியெல்லா இருக்காது. வரும்” எனச் சொல்லி அமைதி காக்கிறார். நினைவின் மூலையில் நம்பிக்கைப் பொறி தட்டிக்கொண்டேயிருக்கிறது. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருக்கும்போது திடூமென பேரிரைச்சல் காதுகளில் அரைந்து கவனத்தை ஈர்க்கிறது. ஏரிட்டுப் பார்க்கிறார். கண்ணுக்கெட்டிய தூரத்தில் நீண்டு ஓடும் பிரதான சாலையில் பச்சை வர்ணக் கொடிகளுடன் வயது வித்தியாசமின்றி ஆண்களும் பெண்களுமாய் கோஷங்கள் முழங்க காவலர்கள் துணையுடன் பெருங் கூட்டமாய் கடந்து கொண்டிருந்தனர். அவ்வழியே வந்த பாதசாரி ஒருவரை அழைத்து விபரம் கேட்கிறார். “அது வேற ஒன்னுமில்லங்கய்யா.. மேற்கால தோட்டந் தொரவுக இருக்கு பாருங்க.. அதுக்கு ஊட கவர்மென்ட்டு ஏதோ பைப்பாஸ் ரோடு போடப் போகுதாம்.. கண்ணு கணக்கில்லாத மரஞ்செடி கொடிகள யெல்லாம் வெட்டிச்சாய்க்கப் போறாங்களாம்.. அதா அததுக்கு உரிமையானவங்க ஒன்னு சேந்து கலெக்டர் ஆபீஸ் வாசல்ல போராட ஊர்வலமாப் போறாங்க” “அப்புடியா சங்கதி.. ‘மரம் வளப்போம் மழை பெருவோம்னு’ சொல்ற அரசாங்கமே மரங்கள அழிப்போம் ரோடு போடுவோம்னு சொல்றது நல்லாவாயிருக்கு! எல்லாமே அத்தியாவிசயத் தேவதே, ஆனா அது அது குடிமக்களுக்கோ விவசாய நெலத்துக்கோ பாதிப்பில்லாமல்ல செய்யனும்.. ஊருக்குள்ள நல்லாயிருந்த பஸ்டாண்ட அஞ்சாறு கிலோ மீட்டருக்கு அப்பாள கொண்டு போயி போட்டுர்ற… அவெ அவெ அதுக்கே ஒரு ஊருக்கு போறமாதிரியில்ல போயி பஸ்ஸேறுரான், ஒத்த செத்தையில அர்த்த ராத்திரியில பொண்ணு பிள்ளைக போயி வாரது செரமமா இருக்கு அது ஒன்னு, அகல ரயில் பாதை போடுரேன்னு சொல்லி இருந்த தண்டவாளத்தயெல்லாம் உருவிப்போட்டு ஏழெட்டு வருசம் ஆகப் போகுது… இன்னோ வந்த பாடில்ல.. இதுல புதுசா பைப்பாஸ்ன்னு கொண்டு வந்து இருக்கற மரஞ் செடி கொடியெல்லாம் அழிச்சுப் போட்டா என்ன பண்ணுறது? ஒவ்வொருத்தரும் உசிரக் குடுத்து மா, பலா, தென்னைன்னு வருசக்கணக்கா வளத்து வச்சிருக்காகளே… அதயெல்லாம் வேறோட புடுங்கனும்னா எப்புடிப்பா விடுவாக..” “ஆமங்கய்யா.. எல்லாரும் அதத்தாஞ் சொல்றாங்க” “அமேசான் காடுதே ஒலகத்துல பெருசுன்டு அம்புட்டுப் பேருக்குந் தெரியும்.. ஆயிரத்து தொளாயிரத்து எம்பதுகள்ல ரப்பர் தோட்டத்தக்காக அந்த காடுகளயும் அழிச்சதும், அதுக்காக அந்த பிரேசில் நாட்டுக்குள்ளயே நடந்த போராட்டமும் எம்புட்டு பேருக்கு தெரியும்?” “என்னங்கய்யா சொல்றீங்க” “ஆமா.. அப்புடி இருக்கையிலதே, ‘சிகோ மெண்டிஸ்’-னு ஒருத்தரு அப்ப அங்க அடிமைத் தொழிலா இருந்த ரப்பர் எடுக்கறத ஒழிக்கனும்னும், காட்ட அழிச்சு ரப்பர் தோட்டம் போடுறவகளுக்கு ஒத்துழைப்பு குடுக்கக்கூடாதுண்டும் அதே ரப்பர் எடுக்குற தொழிலாளர்கள பூராம் ஒன்னு திரட்டி சங்கம் மூலமா போராட்டத்த முன்னுக்கு வச்சாரு… அது நிமித்தமா சொந்த ஊர்லயே லீவுக்கு போன போது அவரு சுட்டுக் கொள்ளப்பட்டதெல்லாம் வேற கதை… ஆனாலும் காடுகளுக்காக மரங்களுக்காக உலகம் முழுக்க அப்பப்ப மனுச மக்க எழும்பி வைராக்கியமா நிக்கத்தாஞ் செய்யிறாக. அந்த வகையில இப்ப இங்க நடக்கிற போராட்டமும் சரித்தானப்பா, நம்ம பொருளு நம்மலுக்குத்தாங்குறதுல உறுதியா நிக்கனும், யாரு என்ன சொன்னாலும் நம்பிக்கைய மாத்திரங் கைவிடக்கூடாது. புறவழிச் சாலையோ, வேற என்னமோ அதை இன்னுங் கட்ட கடைசியில பொட்டல் நிலங்களா இருக்கற எடத்த பாத்து போட வேண்டியதுதான..” உணர்ர்ச்சிவசப்பட்டவராய்ச் சொல்லுகிறார். தொடர்ந்து இரண்டு நாட்களும் கோஷங்கள் பேரணியாய் கலெக்டர் அலுவலகம் நோக்கிப் பயணிக்க, இவருக்கு பூனையுடன் மேற்கே மலையடிவாரத்து மரங்களும் சேர்ந்து மனதை பிசைந்து கொண்டிருந்தன. அதற்கடுத்தநாள் சாலையில் வாகனங்கள் விரைந்தோடும் இரைச்சலைத்தவிர வேறொன்றும் கேட்கவில்லை.. வழக்கத்திற்கு மாறான அமைதி. கோஷமுமில்லை பேரணியும் இல்லை! என்னவாகியிருக்கும்? விளை நிலத்திற்காக மரம் செடி கொடிகளுக்காக குரல் கொடுத்தவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா! விரித்த புத்தகமொன்றில் அச்சிந்தையிலேயே ஆழ்ந்திருந்த போது… திடுமென உடல் சிலிர்க்க, நெஞ்சுக்கூடு படபடக்க, உரோமங்கள் கூச்செரிய படக்கென பக்கவாட்டில் இவர் திரும்பிப் பார்க்கும்படி மெல்லிய சப்தமொன்று கேட்கிறது “மிய்யாவ்” தப்பித்த மேற்கின் மலையடிவாரத்து மரங்களின் ஒட்டுமொத்த குரலாகவும் அது அவருக்குப்பட்டது. நான் பெயிலானதற்கு பொருளாதார வீழ்ச்சிதான் காரணம்! -அக்டோபர் 27, 2019 […] ஆசிரியர் பரந்தாமனுக்கு கவலையாய் இருந்தது. சென்ற வருடமெல்லாம் நன்றாக படித்து எல்லா பாடங்களிலும் 90 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய செழியன் இந்த வருடம் ஆரம்பத்திலிருந்தே மதிப்பெண்கள் குறைவாக வாங்குவது அவருக்கு கவலையை ஏற்படுத்தியது. நுணுக்கமான பையன். நடுத்தர வர்க்கம். அவனை படிக்கவிடாமல் ஏதோ ஒன்று தடுக்கிறது. அதை கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்தார். மாணவர்கள் எழுந்து நின்று வணக்கம் சொல்லி முடித்ததும் செழியனை கூப்பிட்டார். அவன் எழுந்து நின்றான். ‘’என்ன செழியன் போன வருஷம் இருந்த மாதிரி இல்ல நீ. கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதையா உன்னோட மதிப்பெண் குறைஞ்சு காலாண்டு தேர்வுல பெயிலாயி இருக்கே. என்ன காரணம்?’’ ‘’சார் நான் மதிப்பெண் குறைவா வாங்கினதுக்கு பொருளாதார வீழ்ச்சிதான் காரணம் சார்.’’ என்றான் அவன். அவன் பதிலைக்கேட்டு ஆசிரியர் பரந்தாமனுக்கு சிரிப்புடன் கலந்த கோபம் வந்தது. ‘’டேய், நீ மதிப்பெண் குறைவா வாங்கினதுக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் என்னடா சம்பந்தம்?’’ என்று கேட்டார். ‘’இந்த வருஷம் எனக்கு பள்ளிக்கூட கட்டணம் கட்டவே எங்கப்பா கடன் வாங்க வேண்டியதாயிடுச்சி சார்.’’ ‘’ஏன் உங்கப்பா உன் படிப்பு செலவுக்கு முன்கூட்டியே திட்டமிடலியா?’’ ‘’திட்டமிட்டார் சார். ஆனா அவர் வேலைபாக்கற கம்பெனியில திடீர்னு சம்பளத்தை குறைச்சுட்டாங்க. முடிஞ்சா வேலை பாருங்க, இல்லேன்னா கிளம்புங்கன்னு சொல்லிட்டாங்க. அதனால வேற வழியில்லாம கடன் வாங்கினாரு.’’ ’’சரி, கடன் வாங்கறது பீஸ் கட்டறது எல்லாம் உங்கப்பா வேலை. அவர் கஷ்டப்பட்டு கடன்வாங்கி உன்னை படிக்க வைக்கறதைப் பாத்து நீ வெறியோடல்லவா படிக்கணும்?’’ ‘’ஆமாம் சார். அதுக்காகத்தான் வீட்டுக்கு பக்கத்துலயே கணக்குக்கும், அறிவியலுக்கும் டியூஷன் போய்க்கிட்டிருந்தேன். ஆனா ரெண்டு மூணு மாசமா, புரடக்ஷன் இல்லன்னு ஐந்து நாள் பத்துநாள்னு பேக்டரியை மூடிட்டதனால அப்பாவோட சம்பளம் அதலபாதாளத்துக்கு போயிட்டுது சார். அதனால நானே டியூஷன் போகாம நின்னுட்டேன்.’’ ‘’டியூஷன் போனாத்தான் நல்லா மதிப்பெண் வாங்கமுடியும்னு யார் சொன்னா உனக்கு? உன்னுடைய சந்தேகங்களை நீ நம்ப பள்ளிக்கூட ஆசிரியர்களிடமே கேட்டு நிவர்த்தி பண்ணிக்கலாமே?’’ ‘’உண்மைதான் சார். ஆனா அதுக்குள்ள ரெண்டாவது டெர்ம் பீஸ் கட்டறதுக்கு நம்ம ஸ்கூல்ல லெட்டர் குடுத்துட்டாங்க சார்.’’ ‘’அதனால…?’’ ‘’அதனால எங்கப்பாவுக்கு என்ன செய்யறதுன்னு தெரியல சார். அப்பா கஷ்டப்படறதை பாத்துட்டு எங்கம்மா அவங்க அம்மா அப்பா, இல்ல அவங்க அண்ணன் தம்பி யாருகிட்டயாவது கடன் வாங்கிட்டு வர்றேன்னு ஊருக்கு கிளம்பி போயிட்டாங்க.’’ ‘’அப்புறம் என்ன, ஓட்டல்ல வாங்கி சாப்பிட்டுட்டு ஒழுங்கா படிக்க வேண்டியதுதானே?’’ ‘’ஓட்டல்ல டீக்கு கூட ஜிஎஸ்டி போடறான் சார். எதுக்கு இந்த வம்புன்னு தினமும் சோறு பொங்கி தண்ணியோ, தயிரோ இருக்கறதை ஊத்தி திண்ணோம் சார், ஒரு வாரமா நானும் எங்கப்பாவும்.’’ ‘’சரி ஊருக்கு போன உங்கம்மா சட்டுபுட்டுன்னு கடன் வாங்கிக்கிட்டு வராம அங்கேயே ஏன் ஒரு வாரமா டேரா போட்டுட்டாங்க?’’ ’’சார். ஊர்ல இதைவிட மோசமாம் சார். எங்க தாத்தாவும் பாட்டியும் கைவினை பொருட்கள் செய்வாங்க. ஜிஎஸ்டி வரி விதிப்பால் அவங்களால தொழில் செய்ய முடியலயாம். அப்படி செஞ்சாலும் வரியெல்லாம் போய், வர்ற காசு வாய்க்கும் வயித்துக்குமே எட்டமாட்டேங்குதாம்.’’ ‘’செழியன், உன்னோட பள்ளிக்கூட பீஸை அம்மா அப்பா எப்படியாச்சும் கட்டிடுவாங்க. நீ பழையபடி படிப்புல கவனத்தை செலுத்து. அப்பாவுக்கு சம்பளம் குறைஞ்சுடுச்சு, அடிக்கடி பேக்டரிக்கு லீவு விட்டுடறாங்க, கிராமத்துல சிறுதொழில்கள் நசிஞ்சு போய்க்கிட்டிருக்கின்ற கவலை எல்லாம் உனக்கு இப்ப வேணாம். என்ன.’’ ‘’என் கவலை அது இல்ல சார். நான் படிச்சு மட்டும் என்ன பண்ணப்போறேன்னு தெரியல. இப்பவே தமிழ்நாட்டுல வேலையில்லா பட்டதாரிகள் நாலரை லட்சம் பேர் இருக்கறதா புள்ளிவிவரம் சொல்லுது. எனக்கு முன்னாடி படிச்ச இவங்களுக்கே வேலை கிடைக்கலேன்னா எனக்கு மட்டும் எப்படிசார் கிடைக்கும்?’’ ‘’அப்படியெல்லாம் விரக்தியாயிடக்கூடாது செழியன். இந்த நிலை இப்படியே இருக்காது. கண்டிப்பா மாறும். வீழ்தலும் எழுதலும், விடிதலும் மறைதலும் மாறி மாறி நடந்துகிட்டேயிருக்கும்கிறது இயற்கையின் நியதி. இப்போ படிச்சு வச்சா என்றைக்கிருந்தாலும் வேலை கிடைக்கும்.’’ ‘’இப்ப ஒத்துக்கறீங்களா சார் நான் பெயிலானதுக்கு, பொருளாதார வீழ்ச்சிதான் காரணம்னு.’’ ‘’ஆமாண்டா, நீ சொல்றதையெல்லாம் வெச்சுப் பார்த்தால் ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும் போலருக்கு.’’ ‘’அப்படின்னா எனக்கு ஒரு உதவி பண்ணுங்க சார்.’’ ‘’சொல்லு.’’ ‘’பொருளாதார வீழ்ச்சி காரணமாக தொழிற்சாலைகளுக்கு நம்ம நிதியமைச்சர் வரிகளை குறைத்து வரிச்சலுகை கொடுத்தாங்க இல்ல. அதுபோல பெயிலாயிட்ட என்னைப்போன்ற பசங்களுக்கு மதிப்பெண்ணுல சலுகை கொடுத்து போனஸ் மதிப்பெண் போட்டு பாஸ் பண்ணிவிடுங்க சார்.’’ என்றான் செழியன். அதைக் கேட்டு டென்ஷனான ஆசிரியர் பரந்தாமன், ‘’கண்ணா, நான் கவர்ன்மென்டும் இல்ல, நீ கார்ப்பரேட்டும் இல்ல. வரிச்சலுகை போல மதிப்பெண்ணுல சலுகை கொடுக்க.’’ ‘’சார் யதார்த்தத்தை புரிஞ்சுகிட்ட பின்னாலும் விவசாயிகளை கைவிட்டுட்ட அரசாங்கம் மாதிரி நடந்துக்காதீங்க சார்.’’ என்றவன் ‘’இந்த சலுகை செய்யுங்க சார். சர்தார் பட்டேல் மாதிரி எங்க மனசுக்குள்ள உங்களுக்கு சிலை வைக்கிறோம்.’’ என்றான். ‘’தம்பி. போதும். தயவு செஞ்சு உட்காரு. என் வேலைக்கு உலை வெச்சுடாதே. நாளையிலருந்து நியூஸ்பேப்பரை படிக்கறதையும் நியூஸ் சேனலை பாக்கறதையும் விட்டுட்டு பாடப்புத்தகத்தைப் படி. அப்பதான் உருப்படுவே’’ என்று சொல்லிவிட்டு புது பாடத்தை நடத்த ஆரம்பித்தார். வேண்டுகை… - ஜனநேசன் -நவம்பர் 17, 2019 […] அந்த பேருந்து இராமேஸ்வரத்தி லிருந்து திருச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. இவர் காரைக்குடியில் ஏறினார். பின்வரிசைக்கு முந்தின மூன்று சீட்டில் மூன்றாவது இடம் இவருக்கு கிடைத்தது. ஜன்னல் இருக்கை கிடைத்திருந்தால் சாலையை வேடிக்கைப் பார்த்தபடி பயணிக்கலாம். இந்த இருக்கையிலிருந்து பேருந்துக்குள் நடப்பதைத்தான் பார்க்க முடியும். அது மாலை வேளை. வேலைக்குப் போய் திரும்பியவர்களின் அலுத்து சோர்ந்த முகங்கள்; பள்ளி, கல்லூரிக்குச் சென்று வாடிய செடிகளைப் போன்ற இளம் பெண்கள் என உட்கார இடமில்லாமல் பலர் நின்றிருந்தனர். இச்சூழல் நெருக்கமும் கிறக்கமும் கவியும் அந்தி இருட்டுக்கு ஒத்திசைத்தது. இதை உணர்ந்தோ என்னவோ ஓட்டுநர் உள்விளக்குகளை ஒளிரவிட்டார். வாடலுக்கு ஒளி கூட்டியது போலிருந்தது. பேருந்து ஒவ்வொரு நிறுத்தத்தையும் கடக்க கடக்க நின்றிருந்தோர் பலர் இறங்கவும் சிலர் ஏறவுமாக இருந்தனர். மனிதத்திரைகளாக மறைத்து நின்றிருந்தவர்கள் அகன்றுவிட்டனர். இப்போது பேருந்தில் உட்கார்ந்திருந்தோர் அனைவரும் தெரிந்தனர். இவருக்கு முன்னால் இடப்பக்க இருவர் இருக்கையில் ஓர் இளம் ஜோடி அமர்ந்திருந்தது. இருபது வயதுக்கு மேல் மதிக்கத்தக்க இளம்பெண் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞரின் மடியில் படுத்திருந்தாள். அவளது காதருகே அவன் எதோ கிசுகிசுத்தான். அவள் திடீரென்று எழுந்து அவனது முகவாய் கட்டையின் இளந்தாடியை தடவினாள். அவளது பார்வையில் பயமும் ஏக்கமும் கலந்திருந்தது. எதோ கிசுகிசுத்தாள். அவன் அவளை நெஞ்சோடு அணைத்து என்னவோ மெல்ல பேசினான். அவனது கண்ணில் நீர் துளிர்த்தது. அவளது கன்னத்திலும் நீர்த்தாரை நத்தையின் தடம் போல் மினுமினுத்தது. இவரது இருக்கைக்கு முந்திய இருக்கையில் இருந்த நடுத்தர வயது பெண் முணு முணுத்தாள் ‘’சீ, கண்ட்ராவி படுக்கையில் நடக்க வேண்டியதெல்லாம் பஸ்ஸில் நடக்குது. பொது இடமுன்னு இந்தக் கழுதைகளுக்கு கூச்ச நாச்சமில்லை. எவரும் கேள்வி கேப்பாரு இல்லை!" “சின்னஞ்சிறுசுக இருந்துட்டுப் போகட்டும்! அவுங்களுக்கு வீட்டில் என்னென்ன பிரச்சனையோ, இங்கன பஸ்ஸில் வந்து ஒதுங்கிருக்குக.” என்றாள் இன்னொரு நடத்தர வயது பெண்! ஒரு பெரியவர்: “அப்பன் ஆத்தா என்ன பாடுபட்டு இவுகளை படிக்க அனுப்புனா இதுகளுக்கு போற இடமெல்லாம் படுக்கை கேட்குது. தூத்தெறி. கண்டக்டரே, இதை கண்டிக்கிறதில்லையா”என்று புலம்பினார். நடத்துனர் வண்டியில் இருக்கும் பயணிகளை எண்ணி தனது கணிப்பானோடு ஒத்துப்பார்த்துக் கொண்டிருந்தார். கடைசி வரிசை இளைஞர் ஒருவர்,’’பெரிசு.இந்த பஸ்ஸில் டிவி இல்லை. அதனால இலவசக் காட்சி நடந்துகிட்டு ‌இருக்கு.இஸ்டமுன்னா பாரும். இல்லாட்டி கண்ணை மூடிக்குரும்“என்று கிண்டலடித்தார். இன்னொரு வயசாளி, ’’ஏய்யா பஸ்குள்ளாற பாம்புக புனையல் போட்டது மாதிரி இழைஞ்சுகிட்டு இருக்குக. அவுகளை இறக்கி விடுமய்யா!” என்று கத்தினார். அந்த ஜோடி தம்மைச் சுற்றி நடப்பது எதையும் கண்டு கொள்ளாமல் உணர்ச்சியில் உருகியும் அணைப்பில் இறுகியும், சோகப் பெருமூச்சில் முகங்கருகியும் இருந்தனர். அவர்களின் முகத்தில் பசியின் களைப்பு இருந்தது. கையிலிருந்த பிஸ்கட்டுகளை ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டனர் செல்லை மினுக்கி நேரத்தை உணர்ந்து ஒருவருக்கொருவர் பார்வையால் பல விஷயங்களை பரிமாறிக் கொள்வது போல் தென்பட்டனர். நடத்துநர், அந்தப் பெரியவரிடம் வந்து ’’பெரியவரே, இதுமாதிரி நித்தம் பத்து பன்னெண்டு ஜோடிகளைப் பார்க்கிறோம். இதைக் கண்டுகிட்டா நா எப்படி‌ டிக்கட் போடறது? அதுவுமில்லாமல் நா எதுவோ சொல்லப் போயி, அவமானப் படுத்திட்டேன்னு பழி போட்டுட்டு அதுக எதாவது செஞ்சுகிச்சுதுன்னா என் பொழப்பு என்ன ஆகிறது? எங்குடும்ப பொழைப்புக்கு என்ன வழி? பஸ்ஸில் நடக்கிறதை வேடிக்கை பார்க்க இஷ்டமில் லைன்னா கண்ணை மூடிகிட்டு வாங்க!“என்று பொரிந்தார். பேருந்து புதுக்கோட்டையில் ஆள் இறக்கம் ஏற்றம் பார்த்து நகர்ந்தது. நடத்துநர் டிக்கட் போடுவதில் மும்முரமாயிருந்தார்.அந்த இளஞ்ஜோடி உட்கார்ந்திருந்த இருக்கைக்கு முன் இருக்கை காலியானது.அந்த இடத்தில் புதுக்கோட்டையில் ஏறிய முப்பது வயது வாலிபன் ஒருவன் வந்தமர்ந்தான். அவன் பின்னால் சாய்ந்து தூங்குவது போலிருந்தான். அவனது காதுகள் மட்டும் விடைத்து அந்த இளசுகள் கிசுகிசுப்பதை கவனித்தன. அவர் சிறிது நேரத்தில் உலுக்கி விழுந்தது போல் விழித்து அந்த இளசுகளை நோக்கி”நீங்க ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடி வருகிறீர்களா" என்று கேட்டான். இளைஞன் திகைத்து தயங்கியபடி அந்த வாலிபனை உற்று பார்த்தான். இளைஞனது இமைகள் அச்சத்தில் துடித்தன. அவனது மடியில் படுத்திருந்த பெண் திடுக்கிட்டு எழுந்து திகிலோடு அவனது கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். பஸ்ஸிலிருந்தவர்கள் எதோ நடக்கப்போகிறது என்று அதிர்ச்சியோடு பார்த்தார்கள். வாலிபன் சற்று குரலை மென்மையாக்கி ‘’பயப்படா தீங்க. நானும் உங்களைப் போல ஊரைவிட்டு ஓடிவந்து அவஸ்தை பட்டவன்தான். உங்களுக்கு உதவி செய்யவே கேட்கிறேன். நீங்க எந்த ஊரு. எத்தனை மணிக்கு புறப்பட்டவங்க.இரண்டு பேரும் வெவ்வேறு சாதியா? என்றெல்லாம் கேட்டான். இளைஞன் அந்த‌ வாலிபனுக்கு மட்டுமே கேட்கும் ஒலியில் ’கண்ணை மூடித்திறந்தா சுற்றிலும் சொந்தக்காரங்க வீச்சரிவாள்களோடு நிக்கிறமாதிரி தெரியுது’ன்னு பயப்படறா என்று தொடங்கி இரண்டு வாக்கியத்தில் பூர்வகதையை சொன்னான். “கவலைப் படாதீங்க. துணிஞ்சு கிளம்பிட்டீங்க. இனி பயப்பட்டா காரியம் ஆகாது. நீங்க புறப்பட்ட நேரத்தை பார்த்தா அவுங்க உங்களுக்கு முன்னே பைபாஸில் வந்து திருச்சி பஸ் ஸ்டாண்டைச் சுற்றி நாலாப்பக்கமும் தேடிக்கிட்டு இருப்பாங்க! நீங்க திருச்சி போலீஸில் சரண்டாராகும் திட்டத்தைக் கைவிடுங்க! அதுவே எனக்கானது மாதிரி உங்களுக்கும் பாதகமா முடியலாம். நீங்க ரெண்டு பேரும் உயிர் பிழைக்கணு முன்னா திருச்சி பஸ் ஸ்டாண்டுக்கு போகாமலே இந்த அவுட்டர்ல வர்ற சென்னை பஸ்ஸை பிடிச்சு தப்பிச்சிடுங்க.சென்னை போலீஸ் கமிஷனர் கிட்ட சரண்டராகிருங்க. நீங்க ரெண்டு பேரும் அடல்ட்ங்கிற தால போலீஸ் உங்களைக் காப்பாத்த வாய்ப்பிருக்கு!” அந்த வாலிபன் சொல்லச் சொல்ல அவர்கள் உதட்டை நாவால் ஈரப்படுத்திக்கொண்டே மலங்க மலங்க விழித்தார்கள். இவருக்கு முன் சீட்டில் முனங்கிய வயதான பெண்கள் பரிதாபம் தொனிக்க ’உச்’ கொட்டினார்கள். அவள் அவனது முகவாய் கட்டையைப் பிடித்து கெஞ்சியதும், அவன் அவளை அணைத்துக் கொண்டதும் உயிர் பயத்தினாலதானா என்று அங்கலாய்த்தார்கள். வாலிபன் கேட்டான், ‘’சென்னைக்குப் போக பணமிருக்கா?’’ இளைஞன் தனது பாக்கட்டைத் தடவினான். வாலிபன் தனது பர்ஸிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய்களை தந்தான். இவர் ஐநூறு ரூபாய் தந்தார். அந்த இரு வயதான பெண்கள் ஆளுக்கு ‌நூறூ ருபாய் கொடுத்தனர். பின் சீட்டில் இருந்து கேலி பேசிய பெரியவர்கள் ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தனர். அந்த வாலிபன் நடத்துநர் மூலமாக ஓட்டுநரிடம் சொல்லி திருச்சியிலிருந்து புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லும் விரைவு பேருந்தை நிறுத்தச் செய்து வாழ்த்து கூறி இளம்ஜோடிகளை ஏற்றி விட்டனர். தொலைக்காட்சியில் அடிக்கடி பார்க்கும் காதலர்கள் கொல்லப்படுவது போல் இந்த ஜோடி கொல்லப்படக் கூடாது. இவர்களுக்கு எந்தக் கெடுதலும் வரக்கூடாது என்று பெண்கள் வேண்டிக் கொண்டனர்.நிலவை மறைத்தும் விலகியும் நகரும் மேகங்கள்‌ போல பயணிகள் மனதில் இந்த இளம்ஜோடியைக் குறித்த சிந்தனை அச்சமும் ஆறுதலுமாய்த் தோன்றியது. இந்த பேருந்து பதற்றமில்லாமல் திருச்சிக்குள் சென்றது. கல் நின்றான் - அ.உமர் பாரூக் -டிசம்பர் 8, 2019 மாடுகளை பத்திக் கொண்டு போய்க் கொண்டிருந்த அந்து வன் ஒரு நிமிடம் அந்தக் கல் முன்னால் நின்றான். முக்கால் ஆள் உயரமும், மூன்று ஆள் பருமனுமாக மண்பாதையின் வளைவில் நிமிர்ந்து நின்றிருந்தது கல். மாடுகளுக்கு முன்புறமாக வழியை ஒழுங்கு படுத்திய படி போய்க் கொண்டிருந்த கோதை அங்கிருந்த படியே திரும்பிப் பார்த்தாள். இடுப்புக் கச்சில் செருகி வைத்திருந்த சிறு குச்சியை எடுத்து, கல்லின் பின்புறம் இருந்த காட்டுச் செடிகளை விலக்கிய படி பார்த்தான். நின்று கொண்டிருந்த கல்லில் எழுதப்பட்டி ருந்த தமிழி எழுத்துகளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அந்துவன். மாடுகளை அப்ப டியே நிறுத்தி விட்டு, கல்லின் பக்கம் அவளும் வந்தாள். கருத்த முகத்தின் மீது வந்து விழுத்த மயிர்க்கற்றையை ஒதுக்கிய படியே, அந்துவனை உற்றுப் பார்த்தாள் கோதை. “என்ன பார்க்கிறாய் அந்துவா..?” அடர்ந்த மரங்களுக்கு நடுவில் இன்னொரு சிறு மரமாய் நின்றிருந்தது அந்தக் கல். கல்லினை தடவிய படியே “இந்தக் கல்லை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததில்லையே.’’ என்றான் அந்துவன்.”சென்ற வாரம் நீ கல்பேடு போயிருக்கும் போது வைத்தோம். ஆதன் கல்" என்றாள் கோதை. காட்டுயிர்களின் இரைச்சல் சத்தத்திற்கும், சற்று தூரத்தில் இரு கரையும் தொட்டு ஓடிக்கொண்டி ருந்த ஆற்றின் பேரிரைச்சலுக்கும் இடையில் அவர்களின் உரை யாடலை ஊடுருவிச் சென்றது காற்று. “நீ எழுத்து கற்றவள்தானே? என்ன எழுதியிருக்கிறது சொல் பார்ப்போம்” கோதையைப் பார்த்த படி கேட்டான் அந்துவன். “இது என்ன சிரமம்..? மண்ணூத்து நீர்கோள் ஆதன் கல்…’’ கோடு கோடாய் இருந்த எழுத்துகளில் விரலை ஓட்டியபடி மெதுவாக வாசித்தாள் கோதை. ‘’ஓய்வாக இருக்கும் போது எனக்கும் சொல்லிக் கொடு கோதை..’’ என்றான் அந்துவன் எழுத்துகளை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே.”ஆதன் எப்படிச் செத்தான்?’’ "குடியில் எல்லாருக்கும் தெரியுமே.. ஆதன் செத்தது..??] “எனக்கும் தெரியும் கோதை… கல்பேட்டில் சொன்னார்கள்… ஆற்றுத் தண்ணீர் திருப்பும் போது வந்த சண்டையில் வியாகன் உடன் இருந்தாரே..? அப்புறம் எப்படி ஆதன் செத்தான்..?” புருவம் உயர்த்தியவாறு கோதை யைப் பார்த்தான் அந்துவன். தலையில் கட்டி யிருந்த துண்டை அவிழ்த்து தோளில் போட்டுக் கொண்டே அவள் குரலுக்காகக் காத்திருந்தான். கல்லைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டே, கீழே அப்படியே அமர்ந்தாள் கோதை. ‘’மண்ணூத்திற்கு தண்ணீரை திருப்பி விடப் போன போது வந்த வழக்கமான சண்டை தான். இந்த முறை வடகரை ஊர்க்காரர்கள் தண்ணீரைத் திருப்பக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள்." கோபமும், ஆற்றாமையுமான முக பாவங்கள் கோதையின் முகத்தில் வெளிப் பட்டன.’’நிலத்துக்கு காலமுறைப்படி திருப்பு வது வழக்கம் தானே என்று வியாகன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அருகில் இருந்தவனை அடித்து விட்டார்களாம். சண்டை முற்றிவிட்டது. ஆளுக்கு ஒரு பக்கம் தண்ணீர் மடையை மாற்ற முயலும் போது, ஆதனை தடி கொண்டு தாக்கி விட்டார்கள். இரும்பு கோர்த்த தடி தலையில் பட்டதால் ஆதன் விழுந்து விட்டான். எல்லாம் முடிந்ததும்தான் ஆதன் செத்துப் போயிருப்பது தெரிந்தது." ’’அதற்குப் பின்புதான் குடிக்கா ரர்கள் போய் வடகரைக்காரர்கள் மாடுகளைக் கொண்டு வந்து விட்டார்கள்… இன்னும் அங்கிருந்து மீட்க வரவில்லை. ஆதன் செத்த மறுநாள்தான் கல் வைத்தோம்" “இந்தக் கல்லை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்? நம் பகுதி யில் இது போல பார்த்த தில்லையே…” அந்துவன் கல்லின் அருகில் நின்றபடியே கருமையும் இல்லாத, வெண்மையும் இல்லாத பொது நிறமாக இருந்த மேற்பரப்பைத் தடவிப் பார்த்தான். “நம் பகுதி கற்களில் அழுந்த எழுத முடிவதில்லை என்பதால் அமணச் சாமி மலையில் இருந்து இந்தக் கல்லைத் தூக்கி வந்தோம்.” திடமாகவும், உயர்ந்தும் நின்ற பாறையின் அருகிலிருந்து கோதையும், அந்துவனும் பேசிய படியே நகர்ந்தார்கள். அவர்களோடு மாடுகளும் மெதுவாக நகர்ந்தன. காற்றின் ஓசையில் அவர்களின் குரல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்தது. அந்தக் கல் இப்போது படுக்கை வசமாக வைக்கப்பட்டிருந்தது. பல நூறு ஆண்டுகளின் காற்றும், மழையும் மேற்பரப்பில் நிற மாற்றத்தை உருவாக்கியிருந்தன. மண்ணில் புதைந்து போயிருந்த அந்தக் கல்லினை கல்மேட்டில் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன். அந்த சிற்பக்கூடம் முழுவதும் சிறிதும், பெரிதுமாக கற்கள் பரவலாகக் கிடந்தன. கூடத்தின் உட்பகுதியிலிருந்து, கற்களை உளி கொண்டு கொத்தும் சத்தம் கேட்டபடி இருந்தது. ஆழத்தை மறைத்தபடி பரப்பெங்கும் நீர் மூடியிருந்தது நதி. மழைக் காலத்தில் மண்ணின் நிறத்தோடு புதுப்புனலோடு வேகமாய் ஓடும் நதி, மார்கழியில் முதிர்ந்த மனிதனின் நிதானத் தோடு நகர்ந்து சென்று கொண்டிருந்தது. “சீக்கிரம் ஆகட்டும்.. தளபதி வருவதற்குள் தயாராக வேண்டும்” கல்லின் மேற்புரத்தை உளி யால் செதுக்கி, சமமாக ஆக்கிக் கொண்டிருந்த மாணவனிடம் கல்கொத்தர் சத்தமாகச் சொன்னார். கூடத்தின் உட்புறம் சிதறி விழுந்திருந்த கற்து கள்களை பெருக்கி, ஓரத்தில் தள்ளிக் கொண்டி ருந்தார் கொத்தரின் மனைவி. அவ்வப்போது வாயிலில் நிற்கும் கணவரை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டே, மூக்கிற்கு வந்த தூசியை சேலைத் தலைப்பை வீசி விரட்டினார். வட்டம் வட்டமான தமிழ் எழுத்துகள் கல்லின் மேல் புதிதாகச் செதுக்கப்பட்டிருந்தன. எழுத்து களைச் சுற்றியிருந்த கருமையை மாணவன் சரி செய்து கொண்டிருந்தான். கல்லில் இருந்த கறுப்பு நிறம் குறையக் குறைய ஆழமாகச் செதுக்கப்பட்ட எழுத்துகள் இன்னும் நன்றாகத் தெரிந்தன. “கல்லை சுத்தம் செய்வது முதல்பாடம். இதில் தேர்ந்தால்தான் உன் சகோதரன் மாதிரி எழுத்து களை வடிக்க முடியும். ஒரே விதமான ஆழத்தில், ஒரே அளவில்… அருமையாக செதுக்கி இருக்கி றான் பார்… இன்னும் ஒன்றிரண்டு கல்வெட்டு களை இதே போல வடித்து விட்டான் என்றால் அவனை அமணமலைக்கு திருஉருவம் செதுக்கவே அனுப்பலாம்.. பிடித்துச் செய்தால் படித்து விடலாம்..’’ குதிரையின் காலடி ஓசை கேட்டு பதட்ட மாய் திரும்பிப் பார்த்த கொத்தர், குதிரையில் இருந்தவனைப் பார்த்ததும் புன்னகைத்தார்.”நல்லவேளை.. இன்னும் தளபதி வரவில்லை..’’ குதிரையில் வந்த காவல் படை வீரன் கூடத் தின் முன்புறமாக இறங்கினான். “கொத்தரே.. நலம் தானா..? பணிகள் எப்படி நடக்கின்றன..?” என்று கேட்ட படியே கல்லின் அருகில் வந்தான். ‘’பணிகளுக்கு ஒன்றும் குறையில்லை சகோதரா… உங்கள் மன்னர் போரிட்டு வெற்றி பெற, வெற்றி பெற புதிய பணிகள் வந்த வண்ணம் உள்ளன.’’ செதுக்கப்பட்டிருந்த எழுத்துகளைப் பார்த்தபடியே கொத்தரைப் பார்த்துக் கேட்டான் வீரன் “இது என்ன கல்வெட்டு..?” “இது கல்லக நாட்டு அரசனை ஆற்றுப் போரில் வெற்றி பெற்றதை பறைசாற்றும் கல்வெட்டு..’’ ’’தோற்று விடுவோம் என்று தெரிந்தும் எப்படித்தான் கல்லக நாட்டு மன்னர் போரிட முனைந்தாரோ..?” “இது காலம் காலமாக நடக்கும் யுத்தம்… மண்மேடு ஆற்றின் உரிமைப் போர்.. மற்ற போர்க ளின் வெற்றிகளைப் பற்றி மக்கள் என்ன நினைத்தார்களோ தெரியாது. ஆனால், ஆற்று நீர் உரிமைக்கான இந்தப் போரின் வெற்றிச் செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியையே கொடுத் தது.” தோளில் இருந்த துண்டினை எடுத்து, முகத்தினை துடைத்தவாறு சொன்னார் கல்கொத்தர், “ஆமாம் கொத்தரே அது உண்மைதான்.. நீர் உரிமையை விட்டுக் கொடுப்பதும், நாட்டை விற்று விடுவதும் ஒன்றுதான். நீரில்லாத வெற்று நிலத்தை வைத்து நாம் என்ன செய்வது?” “ஆமாம்… ஆமாம்.. காடு மேடாவதும், மேடு நாடாவதும், தலைவன் கோனாவதும் நீரினால் தானே..? எந்தக் காலத்திலும் யாரும் அதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்” ஆற்று நீருக்கான உரிமைப் போரில் வெற்றி பெற்ற மன்னனின் பட்டங்களையும், செய்தியையும் வட்டெழுத்தில் வாங்கிக் கொண்டு கல் நின்றது. அந்தக் கல் இப்போது சரிந்திருந்தது. அதன் தலைப்பகுதி மட்டும் மண்ணில் இருந்து வெளியில் நீட்டிக் கொண்டிருந்தது. கல்லின் மேல்பகுதியின் அமர்ந்து கால்கள் இரண்டையும் தரையில் ஊன்றியிருந்தான் ரமேஷ். தலை வாரப்படாமால் பரட்டையாக இருந்தது. ஒரு கையில் பிரஷை வைத்து பல் துலக்கிக் கொண்டிருந்தான். இன்னொரு கை தரையில் கிடைத்த சிறு கற்களை எடுத்து, தூர எறிந்தவாறு இருந்தது. பல் துலக்கிக் கொண்டே தூரத்தில் தெரியும் நான்கு வழிச் சாலையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்று சனிக்கிழமை என்பதால் பள்ளிக்குச் செல்லும் வேலை இல்லை. இன்னும் சற்று நேரத்தில் நண்பர்கள் வந்து விடுவார்கள். எல்லாரும் சேர்ந்து ஆற்றுக்குப் போவதாய்த் திட்டம். முன்பு போல பள்ளி நாட்களில் இப்போது ஆற்றுக்குப் போக முடிவதில்லை என்ற வருத்தம் ரமேஷுக்கும், அவன் நண்பர்களுக்கும் உண்டு. விடுமுறை நாட்களில் போகலாம் என்றால் பெரும்பாலான நேரங்களில் ஆற்றில் தண்ணீர் இருப்பதில்லை. பெரும் புதைகுழிகளாய் மணற் பள்ளங்களால் நிரம்பிய ஆற்றைத்தான் பார்க்க முடியும். அகண்ட நதியின் ஒரு ஓரத்தில் சிற்றோடையாய் போகும் தண்ணீர் நீந்திக்குளிப்பதற்கு உதவுவதில்லை. முன்பு போல இப்போதெல்லாம் ஊரில் இருந்து யாரும் ஆற்றுக்கு குளிக்கப் போவதில்லை. அங்கு போவதே துணி துவைப்பதற்கும், ஈமக் காரி யங்களுக்கும் மட்டும்தான் என்று ஆகிப்போ னது. ரமேஷ் பள்ளியில் சேர்ந்த புதிதில் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடிய போது சிறுவர்க ளும், சிறுமிகளும் கரைத் தண்ணீரில் குதி யாட்டம் போடுவார்கள். வயதுக்கு வந்த பெண்கள் குளிக்கவும், தோழிகளோடு விளை யாடவும் வருவார்கள். இப்போது ஆற்றங்கரை யில் எப்போதாவது துணி துவைக்கும் பெண்களைத் தவிர மற்ற பெண்களையோ, சிறுமிகளையோ பார்க்க முடிவதில்லை. மணி எட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒருத்தனையும் காணவில்லை என்று முனகிக் கொண்டே ஆர்வமில்லாமல் பல் துலக்குவதைத் தொடர்ந்து கொண்டிருந்தான். புழுதியை வாரி இறைத்தபடி தார் சாலையில் இருந்து மண் சாலைக்கு ஒரு லாரி திரும்பியது. ரமேஷ் கூர்ந்து பார்த்தான். லாரி தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாக ரமேஷுக்கு தோன்றியது. அருகில் வர வர லாரியின் ஓட்டம் குறைந்து, ரமேஷின் அருகில் நின்று விட்டது. கல்லில் அமர்ந்தபடியே வளைந்து செல்லும் பாதையில் குழப்பத்தோடு நிற்கும் லாரியை பார்த்துக் கொண்டேயிருந்தான் ரமேஷ். லாரி டிரைவர் கதவை லேசாகத் திறந்த படியே எட்டிப் பார்த்தார். “என்னண்ணே.. மணல் அள்ள வந்துருக்கீங் களா..? அதுக்கு அந்தப் பக்கம்ல போணும்” ரமேஷ் சத்தமாகக் கேட்டான். “இல்ல தம்பி… இந்தப் பக்கம் கூல்டிரிங்ஸ் கம்பெனிக்கு வந்தேன்.. எங்கிட்டுப் போக ணும்..?” டிரைவரின் கனத்த குரலுக்கு கல்லில் இருந்து இறங்கி வலது பக்கம் கைகாட்டினான் ரமேஷ். "கோலா கம்பெனியா..? இங்கிட்டுப் போற ரோடுல போனா.. மண்மங்கலம்ணு போட்டி ருப்பாங்கெ.. கொஞ்ச தூரந்தேன்..’’ மீதமிருந்த ஆற்று நீரை உறிஞ்சி, வண்ண மேற்றி பாட்டில்களில் அடைத்து கொண்டிருந்த குளிர்பான நிறுவனத்தை நோக்கிப் பாய்ந்தது லாரி. லாரி கிளப்பிய புழுதி கல்லில் பொறிக்கப் பட்டிருந்த ஈராயிரமாண்டு எழுத்துகளின் மீது இன்னும் அடர்த்தியாய் அப்பிக் கொண்டது. கறை நீக்கும் நீருக்காக காலம் கடந்து நின்று கொண்டிருக்கிறது கல். பழுது - ஜனநேசன் -டிசம்பர் 22, 2019 அந்த பெருநகரத்தின் பிரபல தனியார் சிறப்பு பன்நோய் மருத்துவமனை; சிறப்பு சிகிச்சை தனிஅறை எண் எட்டில் சிவஞானம் சுப்பிரமணியம் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அந்த அறைக்கு சிகிச்சை அளிக்கச் செல்லும் இரண்டாம் நிலை மருத்துவர்கள் சற்று தயங்கி தமது மனநிலையை சமன்செய்து கொண்டு தான் உள் நுழைவார்கள். நோயாளி சிவஞானம் சுப்பிரமணியம் கேட்கும் கேள்விகளுக்கு கவனமாக பதில் சொல்ல வேண்டும். சிறு வார்த்தை நா நழுவி சொன்னாலும் அதை வைத்து சுப்பிரமணியம் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்லுவதற்குள் பத்து பிற ‌உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து விடலாம்.இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கச் செல்லும் இரண்டாம் நிலை மருத்துவர்கள் அவரிடம் கவனமாக மிகப் பதனமாகப் பேசுவார்கள். இப்படித்தான் நேற்று இரவு சுப்பிரமணியத்தை சோதித்த சிறுநீரக சிறப்பு இரண்டாம் நிலை மருத்துவர் மகேஷ்குமார் “அய்யா கடைசிபட்ச மருந்து கொடுத்தும் உங்கள் ‌நோய் கட்டுப்படவில்லை. இனி ‌டயலிஸ் பண்ணினாலும் உங்கள் மாற்று சிறுநீரகம் ஏற்றுக் கொள்ளுமா என்று சோதித்துப் பார்த்து தான் மேற்கொண்டு சிகிச்சை செய்ய வேண்டும். இருந்தாலும் இந்த மாத்திரைகளை சாப்பிடுங்கள். கொஞ்சம் ரிலீஃப் இருக்கும்” சுப்பிரமணியம் உலர்ந்த உதட்டை நாக்கால் ஈரப்படுத்தியபடி கேலிசிரிப்பை படரவிட்டு, “கடைசி பட்ச மருந்து என்றால் எனக்கு கடைசி பட்ச மருந்தா? இல்லை இந்த‌ சிகிச்சைக்கு கடைசி பட்ச மருந்தா? மருத்துவ அறிவு அவ்வளவு சுருங்கிருச்சா?’’ மருத்துவர் ‌ வெலவெலத்துப் போனார். கர்சீப்பால் வியர்வையை ஒத்திக் கொண்டு,”அய்யா, உங்களுக்கு கடைசி மருந்தென்று சொல்ல வில்லை. நீங்கள் நல்லாவே இருப்பீங்க! உங்க நோய்நிலைக்கு‌ உச்சபட்ச மருந்து கொடுத்தாகிவிட்டது. இனி உங்கள் மாற்று சிறுநீரகம் ஏற்கத்தக்க மருத்துவமுறையை நாட வேண்டும்! தலைமை மருத்துவர் ஒரு கான்ப்ரன்ஸ்க்காக லண்டன் போயிருக்கிறார்.அவர்‌ வந்ததும் கலந்து பேசிதான் அடுத்த கட்ட சிகிச்சை பற்றி சொல்ல‌முடியும். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க, ப்ளீஸ்" சொல்லி வெளியேறி ‌தப்பினார். சுப்பிரமணியம் வெறும் பள்ளி இறுதி வகுப்பு படித்து போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.தேவையான அளவு தண்ணீர் குடிக்காமலும், சிறுநீர் கழிக்க வேண்டிய சமயத்தில் கழிக்காமலும் அடக்கி வைத்து தொலைதூர வண்டி ஓட்டியவர். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவரது அக்கா தானமாக அளித்த இடப்பக்க சிறுநீரக பலத்தில் உயிர்நீட்டிப்பில் உள்ளார். அவர் தொழிற் சங்க‌ பொறுப்பில் இருந்தவர் என்பதால் எதையும் ஏன் எதற்கு என்று கேட்டு திருப்தி ஏற்பட்டால் தான் ஏற்பார்.அவருக்கு எந்த மருந்து கொடுத்தாலும் அந்த மருந்தின் கூட்டுப்பொருள்கள் என்னென்ன, அதை சாப்பிட்டா, பக்க விளைவை எதிர்கொள்ள வேறு என்னென்ன மருந்துகள் சாப்பிடவேண்டும்? அவற்றின் கூட்டுப்‌பொருள்கள் என்ன?. இப்படி எல்லாம் கேட்டு தெளிந்த பின் தான் மருத்துவரை விடுவிப்பார். இதெல்லாம் நோயாளி கேட்கவும்‌, மருத்துவர்‌ விளக்கவும் கடமைப் பட்டவர்கள் என்று மருத்துவ அறம் வலியுறுத்தினாலும், யாருக்கு நேரமிருக்கிறது என்று செயற்கை அவசர இறக்கையைக் கட்டிக் கொண்டு பரபரவென்று பறக்கிறார்கள். கடந்த முறை சுப்பிரமணியத்தை இரண்டாவது மருத்துவமனையில் சேர்க்கும் போது எட்டாம் எண் அறை தான் இருக்கிறது. வேறு அறை நாளைதான் காலியாகும். அதுவரை ஐசி யூனிட் டிலிலே இருக்கிறீர்களா என்று நிர்வாகத் தரப்பில் கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் நினைப்பு அவர் ஐசியூனிட்டில் இருந்தால் அவரது பேச்சு தொல்லை இருக்காது. தீவிரக் கண்காணிப்புக்கு கூடுதல் வாடகையும் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது. ஆனால் சுப்பிரமணியமோ உங்கள் வைத்தியம் நல்லா இருக்கும்போது வைத்தியம் செய்ய வந்த இடத்தில் எட்டாம் நம்பர் என்ன, ஒன்பதாம் நம்பர் என்ன? நான் எட்டாம் நம்பருக்கே போகிறேன் என்று மருத்துவ நிர்வாகத்தினரின் புருவத்தை நெளிய வைத்தார். மருத்துவர் போனபின் மனைவி அழத் தொடங்கினார். “என்னங்க இந்த டாக்டரும் இப்படி சொல்றாரு. காலையில் வந்து பார்த்த ஹார்ட் டாக்டர், இதயத்துக்கு போகும் இரத்தக்குழாயிலுள்ள அடைப்புகளை நீக்கினதுக்கு அப்புறம் தான் சிறுநீரகத்துக்கு வைத்தியம் பன்றது நல்லது. இல்லாட்டி, எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்னு சொன்னாரு. அதுக்குப் பின்னால மதியம் வந்த யூராலஜி டாக்டர், மூத்திரக்குழாயில் வீக்க அடைப்பை சரி செய்தால்தான் எந்த வைத்தியமும் பண்ணுறதுக்கு உடம்பு ஒத்துழைப்பு கொடுக்கும். இல்லாட்டி சிக்கல்தான்னு சொல்லி கை நிறைய மாத்திரைகள் முழுங்கச் சொல்லி எழுதிக் கொடுத்திட்டுப் போறாரு. சாயந்திரம் வந்த அல்சர் டாக்டர், முன்னால மூணு டாக்டருமாரு எழுதிக் கொடுத்த மாத்திரைக ஒன்னுக்கு ஒன்னு எதிரானது. பக்கவிளைவு வந்து அல்சர் அதிகமாகும்னு இந்திந்த மாத்திரைகள் சாப்பிடாதீங்க! குடல்புண்ணு தன்மையை தெரிஞ்சிக்க கட்டாயம் எண்டோஸ் ஸ்கோப் குழாய் மூலம் டெஸ்ட் பண்ணினா நல்லதுங்கிறாங்கறாரு! இப்படி டாக்டருக்கு டாக்டர் தாம் பார்க்கிற‌ வைத்தியத்தையே முதல்ல பார்க்கணும்னு சொன்னா, உயிரைக் காப்பாத்த எந்த‌ வைத்தியத்தை முதல்ல செய்யிறது? விதண்டாவாதம் புடிச்ச மனுஷன் நீங்க, வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டாம, என் உடம்பைத் தானமாத் தாரேன்னு சொல்லிட்டீங்க. பாவி பரப்பானுங்க உயிரோட அறுக்கப் பாக்கிறானு ங்களே’’ என்று சொல்லி புலம்பினார். சுப்பிரமணியம் வறண்ட உதடைத் திறந்து சிரிக்க முயன்றார். பற்கள்தான் தெரிந்தன. சத்தம் வரவில்லை. மெல்லத் தெம்பை வரவழைத்துக் கொண்டு மெல்லிய குரலில் பேசினார். ’’நான் என்னத்தே தப்பா சொல்லிட்டேன். மண்ணு‌ திங்கிறதை பிள்ளைக படிக்க உதவட்டும்! பல்லாயிரம் பேருக்கு வைத்தியம் செய்ய உபயமாகட்டுமுன்னு தான் சொன்னேன்” “இங்க பாத்தீங்களா, இன்னும் உங்க கம்யூனிஸ்ட் திண்ணக்கம் போகலை! நானே, எப்படியாவது உங்களை காப்பாத்தீருவோம். உங்க கண்ணெதுக்க கடைசிப் பிள்ளையை கரை சேத்துருவோம்முன்னு ஊணு உறக்கமில்லாம தவியாத் தவிச்சுகிட்டிருக்கேன். கொஞ்சம் கூட நெஞ்சில ஈரமில்லாம உசிரை விடறேன். உடலைத் தானம் தாரேன்னு சொல்றீங்களே? மனுஷனுக்கு திண்ணக்கத்தைப் பாரு!” “சரிம்மா, தப்பு தான்.! இப்போ என்ன செய்யணுங்கிறே” “நான் என்ன உங்களைப் போல் படிச்சவளா? பட்டு பட்டுன்னு சொல்ல! இந்த நாலு டாக்டர்மாரும் நாலுவிதமா சொல்றாங்களே. இவங்ககிட்டிருந்து உயிரோட தப்பி குணமாகி வீடு போற வழியை உங்க சங்கத்துக்காரங்க மூலமா கேட்டு சொல்லுங்க!” அவர் மீண்டும் வறட்டுச் ‌சிரிப்பினை உதிர்த்தார். உலர்ந்து பாளமாக விரிந்த உதடு கொண்டு சிரிக்கவும் பேசவும் சிரமமாக இருந்தது. மெல்ல கீழுதடும் மேலுதடும் ஒட்டாமல் பேசினார். “எங்க மோட்டார் மெக்கானிக்குகள்ள பஞ்சர் பார்த்து டயர் பொருத்தறதுக்கு, சக்கரம் பொருத்தறதுக்கு, ப்ரேக்கு, கீரு சரிபார்க்கிறதுக்கு, என்ஜின், ரேடியேட்டர் பழுது பார்க்கிறதுக்குன்னு தனித்தனி மெக்கானிக்குகள் இருப்பாங்க. இதுபோல தான் ஒவ்வொரு உறுப்புகளை பழுது பார்க்கத் தனித்தனி ஸ்பெசலிஸ்ட் டாக்டருக இப்போ வந்திட்டாங்க! ஆனா எங்க மெக்கானிக்குகள் தனித்தனியே கழட்டி மாட்டினாலும் மீண்டும் வண்டியை ஓடவைக்க ஒரு ஒருங்கிணைப்பு இருக்கும்! இந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டருகள் கிட்ட ஒருங்கிணைப்பு இல்லை! அவங்கவங்க சம்மந்தப்பட்ட உறுப்புக்களைப் பத்தி தனித் தனியாக யோசிக்கிறாங்க. மருந்துகள் முரண்படுதான்னு யோசிக்கிறதில்லை! அது நோயாளி உயிருக்கு ஆபத்தாயிருமுன்னு நினைக்கிறது இல்லை! எல்லா உறுப்புகளை இணைத்து பார்க்கும் கூட்டுப் பொறுப்பு உள்ள சிந்தனை குறைஞ்சு போச்சு. நான் பெரியவனா, நீ பெரியவனாங்கிற தொழிலகங்காரம் தான் ‌பிரச்சனை! இதனால் இவுங்க நோயாளிகளை உயிரோட்டமுள்ள மனுஷங்கிற எண்ணத்தை விட கேசுங்கிற எண்ணம் தான் தூக்கலா இருக்கு!’’ என்று சொல்லி உதடு உரசாமல் சிரித்தார்.”ஏங்க, இங்கேயிருந்து நல்லபடியா வெளியேற வழி கேட்டா, வியாக்கியானம் பேசிக்கிட்டு இருக்கீங்க? உங்க உடம்பு அவஸ்தையும் சேர்த்து மனசுக்குள்ள சுமந்து நான் படுறபாடு உங்களுக்குத் ‌ உறுத்தலையா?" “தாயி, நீ, என்னைப் பெத்த அம்மாவை விட பல மடங்கு என்னை மனசாலும் உடம்பாலும் தூக்கிச் சுமக்கிற! பெத்தபிள்ளையை மாதிரி பண்டுதம் பார்க்கிற! இதை எல்லாம் மறக்க முடியுமா. அடுத்த பிறவின்னு ஒண்ணுருந்தா, நீ என் ‌வகுத்தில மகனா பிறக்கணும்!’’ என்றவர் தொண்டை அடைத்தது; கண்ணீரை பெருக்கினார். இதைப் பார்த்ததும் மனைவியும் விம்மி விசும்பி கண்ணீர் பொங்கினார். அவரை அணைத்து கண்ணீரைத் துடைத்து விட்டார். சற்று அமைதி காத்து மெல்ல கரகரத்த குரலில் பேசினார்.”நம்ம இளங்கோ டாக்டரை வரச் சொல்லி இருக்கிறேன். அவர் வந்ததும் டிஸ் சார்ஜ் ஆகிருவோம். யூரின்ல கிரியாட்டினைக் குறைக்க அவரு சில நல்ல கை பக்குவ மருந்து சொல்லி இருக்கிறார். அந்த மருந்தை சாப்பிடுவோம். லண்டனிலிருந்து பெரிய டாக்டர் வந்ததும் கலந்து பேசி இங்க டிரீட்மென்டை பார்த்துக்கலாம்!" மனைவி அந்த பிரிவின் பொறுப்பு மருத்துவரிடம் டிஸ் சார்ஜ் பண்ணச் சொல்லி வேண்டினார். ‘’இது மல்டி ஆர்கன் கேஸ். இப்ப அவரு உடம்பு இருக்கிற நிலையில டிஸ்சார்ஜ் பண்ணுறது ரிஸ்க். அந்த ரிஸ்கை இந்த மருத்துவமனை ஏத்துக்காது.’’ என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டார். மனைவி, கணவன் சுப்பிரமணியத்திடம் வந்து புலம்பி விம்மினார். “சரிம்மா. அழாதே. அவர்கிட்ட நான் முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லி ஒரு நிமிஷம் வந்துட்டுப் போகச் சொல்லு’’ அடுத்த அரைமணி கழித்து அந்தப் பிரிவு பொறுப்பு மருத்துவர் வந்தார்.சுப்பிரமணி படுக்கையில் இருந்தவாறே உட்கார முயன்றார். ’’பரவாயில்லை. உடலை அலட்டிக்கொள்ள வேண்டாம்.அப்படியே படுத்தபடியே சொல்லுங்க” என்றார் மருத்துவர். “ரொம்பத் தேங்ஸ். எல்லா டாக்டர்மாரும் என்னை நல்லாவே பார்த்துக்கிறீங்க. எனக்கு கொஞ்சம் பண நெருக்கடி. நான் ஊருக்குப் போனாத்தான் பணம் புரட்டிகிட்டு வந்து ட்ரீட்மெண்ட் டை கன்டினியு பண்ண முடியும்! பேஷண்டோட ரிஸ்க்கில டிஸ்சார்ஜ் பண்ணுங்கன்னு எழுதித் தர்றேன். ப்ளீஸ் டிஸ்சார்ஜ் பண்ணுங்க டாக்டர்” சுப்பிரமணியம் தொண்டை கரகரக்கச் சொன்னார். ரயில் வந்துரும் - மொசைக் குமார் -டிசம்பர் 29, 2019 “அப்பா பரிச்ச லீவுல ரயில் பாக்குறதுக்கு மதுரைக்கு கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்க… எப்போ போகலாம்?” திரும்பவும் கேட்டான் என் மகன். “போவம்ப்பா… கண்டிப்பா ஒரு நாள் கூப்பிட்டுப் போறேன். ம்…” விடுமுறை விட்டதும் போதும், பாவம்! நினைக்கும் போதெல்லாம் நச்சரித்துக் கொண்டிருக்கிறான். அடிமைப்பெண் படத்தில் எம்ஜி்ஆா் அவா்கள் குறிப்பிட்ட பருவம்வரை யாதுமறியாமல் கூனிக்குறுகி கூண்டினுள் அடைபட்டிருந்ததுபோல ஏழெட்டு வயதிலிருக்கும் எங்கள் ஊா் மழழைகளுக்கு ரயிலென்பது மாய பிம்பமாயிருக்கிறது போலும். நன்றாக ஞாபகமிருக்கிறது! எட்டு வருடங்களுக்கு முன்பு ஆண்டிபட்டியில் வேலை முடிந்து மாலையில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, எங்கள் ஊரின் முகப்பிலிருக்கும் ரயில்வேகேட் அடைக்கப் பட்டிருந்தது. சாலையின் எதிரெதிர் புறங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்க, கொஞ்சம் குறைய ஏராளமானோர் இறங்கி சாலையோரங்களில் நின்று கொண்டு வரப்போகும் அந்த ரயிலை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்களும்தான்! மனசுக்குள்ளே மகிழ்ச்சிப் பிரவாகம் மட்டுமின்றி ஏராளமான உணர்ச்சி அலைகளும் அந்நேரம் அடித்துக் கொண்டிருந்தது. காரணம் அதுதான் பிரியா விடைபெறப்போகும் கடைசி ரயில்! ஏனைய இடங்களிலெல்லாம் அகலப்பாதையில் ரயில்கள் ஓட எங்கள் ஊருக்கு மட்டும் அப்போதுவரை மீட்டர்கேஜ்-ல் ரயில் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நாளொன்றுக்கு இருமுறை மதுரையிலிருந்து போடிவரை வந்துபோகும் ரயிலில் அவ்வளவாக பயணிகள் ஏறமாட்டார்கள். காலையிலும், மாலையிலும் அலுவலக நிமித்தமாக வந்து போவோருக்கும், ஏலக்காய் மற்றும் உயர்தரமான வாசனைத் திரவியங்கள், தானியங்கள், காய்கறிகள் கொண்டுபோவதற்கும் விரும்பும் பயனாளிகளுக்கும் என செல்லமாக ஓடிக்கொண்டிருந்தது. சிறு வயதிலே மதுரையிலிருக்கும் பாட்டி வீட்டிற்கு போக ஓரிரு முறை அப்பா என்னை அந்த ரயிலில் அழைத்துப் போயிருக்கிறார். அப்போது அதில் நீராவி என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. அந்நாட்களிலெல்லாம் ரயில் பார்ப்பதென்றாலே தனி குஷிதான். உறவினர் வீட்டுக்குச் செல்வது போல், சினிமாக் கொட்டகைக்குச் செல்வதுபோல், திருவிழாவிற்குச் செல்வதுபோல் இதயம் படபடக்க மனசுக்குள்ளே மகிழ்ச்சிப் பிரவாகம் துள்ளிக் குதிக்கும். நான் முதலாம் வகுப்பில் சேர்ந்து சில மாதங்கள் கழித்து பள்ளியில் இன்பச் சுற்றுலா துவங்கியபோது ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்றார்போல திருச்சி, மதுரை, குற்றாலம், வைகை அணை என்று மாணவ மாணவிகளை அழைத்துச் சென்றனர். நாங்கள் முதல் வகுப்பு என்பதால் வெறும் பத்துப் பைசா கட்டணத்தில் ஊருக்குள்ளேயே இருக்கும் ரயில் நிலையற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். வெள்ளரிப் பிஞ்சுகள், கடலை மிட்டாய், பிஸ்கட், சர்பத் என அவ்வப்போது கொடுத்ததுமல்லாமல் எங்களை சக சிறுவர் சிறுமியர்களோடு சகஜமாய் பேச விட்டும், திருக்குறள், பாரதியார் பாடல்கள் பாடியதுமன்றி, பல நன்னெறிக் கதைகளையும், ரயில் நிலையம் பற்றியும், ரயில் இயங்குவதையும் அது சம்பந்தமான சுவாரஸ்யமான விபரங்களையும் மழலைகள் வியக்கும் வண்ணம் சொல்லிக் கொடுத்தார்கள். மேலும் தெரிந்த விளையாட்டுக்களையும் அவரவருக்குத் தெரிந்த கதைகளையும் எழுந்து நின்று சொல்லச் சொல்லி கைதட்டினார்கள். ஊரின் ஒதுக்குப்புறமாக ரயில் நிலையம் அமைந்திருந்ததால் சுற்றிலும் பச்சைப் பசேரென வயல்வெளிகளும், வாய்க்கால் வரப்புகளும், நீரோடைகளும் தென்பட காகம், மைனா, குருவிகளின் சத்தமும் ரம்மியமுமாய் இருந்தது. ஓட்டுக்கூரை போர்த்திய இரு கல் கட்டிடங்கள், டிக்கட் கொடுக்கும் வாயில், உயர்ந்து நிற்கும் கைகாட்டி, சிமெண்டினால் ஆன நீளமான சாய்வு நாற்காலிகள், பயணியர் நிழற்குடை, பிளாட்பாரம், குடைசூழ நிழல் பாவிய மரங்கள், ஒன்றுக்கு இரண்டு மூன்றான தண்டவாளங்கள், ஓடாமல் நிற்கும் கழட்டி விடப்பட்ட கூட்ஸ் பெட்டிகள், தூரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு மாடுகள் என ஒரே பரவசமாயிருந்தாலும் ரயில் எப்போது வரும் என்கிற ஏக்கம் வாட்டிக் கொண்டிருந்தது. ரயில் வருவதற்கு சற்று முன் வரை எங்களோடு உரையாடிய ஆசிரியர் ‘ஞானவள்ளி’ கடைசியாக எங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். “நீங்க எல்லாரும் படிச்சு என்னவா ஆகப் பேறீங்க.. எங்கே ஒவ்வொருத்தரா எழுந்திரிச்சு சொல்லுங்க பார்ப்போம்..” என கேட்க, ‘டாக்டர், இன்ஜினியர், போலீஸ்’ என்று ஒவ்வொருவராகச் சொன்னார்கள். அவ்வரிசையில் என் முறை வந்தபோது எழுந்து நின்று இறங்கிய டவுசரை வலது கையால் ஏற்றிப் பிடித்து நெளிந்தபடி வெட்கத்தோடு தண்டவாளத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். “ம்.. சொல்லுய்யா..” அப்பா என்னை ரயிலில் மதுரைக்கு அழைத்துச் செல்லும்போது இடையில் தோன்றிய டிக்கட் பரிசோதகர் நினைவில் வந்தார். பயணிகள் பவ்யத்துடன் தங்கள் சீட்டுகளைக் காண்பிப்பதும் அவர் கையொப்பம் இடுவதும், சிலர் அவருக்கு சல்யூட் அடிப்பதும் என் மனக் கண்களில் ஓடியது. தானும் அதுபோல் ஓர் அதிகாரியாக ஆக வேண்டும் என சொல்ல வாயெடுக்கும் போதே தூரத்தில் ரயில் கூவும் சத்தம் கேட்டது. எங்களிடையே ஒரே கூச்சல்.. உட்கார்ந்திருக்கும் இடத்தைவிட்டு யாரும் எழுந்து ஓடாதபடி ஆசிரியர் பார்த்துக் கொண்டார். சில வினாடிகளிலேயே நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரயில் ‘கூச்..குச்.குச் கூச்’ என கூவியபடி மேல்நோக்கி புகையை உமிழ்ந்துகொண்டு ‘டடக்..டடக் டடக்..டடக் டடக்..டடக்’கென வேகத்தைக் குறைத்து உருண்டு வந்து கரீச்சென தண்டவாளத்தில் நீண்டு நின்றது. ஒரே ஆரவாரம்.. கரகோஷங்கள்.. துள்ளிக்குதித்தல்.. பரவசம் கொண்டாட்டம் என அந்த இடமே குதூகலமாயிருந்தது. சுற்றுலாப் பயணம் அடைந்த மனநிறைவு. சற்று நேரத்தில் நாங்கள் டாட்டா காட்ட அமைதி களைந்து ’கூச்..குச்.குச்’- சென மீண்டும் அடுத்த ஊர் நோக்கி ஓடத்துவங்கியது ரயில். நாங்கள் பள்ளிக்குக் கிளம்பினோம். அந்த நினைவுகள் என்றும் இனிமையானவை! அதன்பிறகு ரயிலில் பல பெட்டிகளும், என்ஜின்களும் மாற்றம் கண்டிருக்கின்றன. வந்துபோகும் நேரங்களும் மாறியிருக்கிறது. சில காலம் போக்குவரத்து இல்லாமலும் பின் மீண்டும் புதுப்பொழிவுடன் ஓடுவதும் என்று மனித வாழ்க்கையைப்போலவே அதுவும் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறது. கடைசியாக அகல ரயில் பாதை போடும் நிமித்தமாக கடந்த ஏழு ஆண்டுகளுக்குமுன் வண்ணக் காகிதங்களுடனும், மாலைகள், மலர்ச்சரங்களின் தோரணங்களுடனும், ஏராளமான பயணிகள் மற்றும் ஆசையாய்த் தொற்றிக்கொண்ட இளைஞர் பட்டாளங்களின் ஆர்ப்பரிப்பிலும் வழிநெடுகிலும் கூவிக்கொண்டு எங்கள் நெஞ்சையும், கண்ணீரையும் அள்ளிக்கொண்டு பிரியா விடைபெற்றுப் போனது அந்த கடைசி ரயில்! பஸ் பார்த்திருக்கிறான், லாரி பார்த்திருக்கிறான் சைக்கிள், பைக், ஆட்டோ, கார் ஏன் வானூர்திகளையும்கூட அண்ணாந்து பார்த்திருக்கிறான். ஆனால் இந்த ரயிலைத்தான்…! மதுரைக்கு செல்லும் சில தருணங்களில் மெஜிரா கோட்ஸ் பாலம் வழியாய் நகரப் பேருந்தில் பயணிக்கையில் கீழே தண்டவாளங்களில் நிற்கும் ஓடாத பெட்டிகளை பரபரப்புடன் ஓரிரு நொடிகள் பார்த்திருக்கிறான். மேலும் ஆன்ராய்டு வழியிலும்,தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கிறான் என் மகன். ஆனால் கண் குளிரத்தான்… ம்.கும்! அவனின் ஆர்வமறிந்து “ஃபிரியா இருக்கப்ப ஒருநாள் மதுரை ரயில்வே ஸ்டேசனுக்கே உங்கள கூட்டிட்டுப்போயி பிளாட் பாரம் டிக்கட் எடுத்து ரயிலெல்லாம் காமிக்கிறேம்ப்பா… ஒரு வேளை அதுக்குள்ள நம்ம ஊருக்கு ரயில் வந்தாலும் வந்துரும்.” எனவும் சொல்லியிருந்தேன். அந்த வேளை இன்னமும் வரவில்லை! தண்டவாளங்கள் எடுத்தே ஏழெட்டு வருடமாயிற்று… “இப்ப வருமோஓ… எப்ப வருமோஓ… ஆச பொறந்தாஆஆ அப்ப வருமோ…” சூப்பா்ஸ்டாரின் படப் பாடலுக்கிணங்க அந்த ரயிலுக்கே ஆச பொறந்தா அப்ப வருமோ என்னமோ! ஒரு கட்டத்தில் இந்த ஊருக்கு "இனி ரயிலே இல்லை’’ என்ற அறிவிப்பெல்லாம் அரசல் புரசலாக வந்தபோது கொதித்தவர்களில் நானும் ஒருவன். அதற்காக முன்நின்ற அமைப்புகளும் தனிநபர்களும் ஏராளம். ‘சப்பாணியை எதிர் பார்த்து தண்டவாளத்தையே நோக்கிய மயிலும் நாளடைவில் சப்பாணி வராவிட்டாலும் பரவாயில்லை, ரயில் மட்டும் வந்தால்கூட போதுமென்று நின்று நின்று பார்த்து மறைந்தும் போனாள்.’ நம்பிக்கைக்கு உரமிடும் பொருட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அன்று எடுக்கப்பட்ட தண்டவாளங்கள் தற்போது அகல ரயில் பாதைகளாக பாதிவரை மாற்றம் கண்டிருக்கிறது. முல்லை ஆற்றின் குறுக்கே அதற்கான பாலமும் பிரமாண்டமாய் கட்டப்பட்டிருக்கிறது. சினிமாப் படங்களில் வரும் பாழடைந்த பங்களாபோல் கைவிடப்பட்ட சிதிலமடைந்த இந்த ரயில் நிலையமும் தற்போது கிரானைட், மார்பிள் கற்கள் சூழ புதுப்பிக்கப்படுகிறது. அதில் மராமத்து பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் வரப்போகிறது ரயில்! “அப்பா எப்பப்பா கூட்டிட்டுப் போவீங்க…?” மீண்டும் கேட்டான் மகன். ஏங்கிய முகத்தோடு. “செல்லம் டைம் கிடைக்கும் போது கண்டிப்பா கூட்டிட்டுப் போறேம்பா… இன்னுங் கொஞ்ச நாள் பொறுத்தீங்கன்னு வச்சுக்கங்க… நம்ம ஊருக்கே ரயில் வந்துரும்… அழகா பாக்கலாம்… ஆக்கப் பொறுத்த மனம் ஆறப் பொறுக்க வேணாமா…” “அடப் போங்கப்பா நீங்க வேற… இன்னும் எத்தன வருஷந்தே ஆக்குவாங்க, எத்தன வருஷம்தே ஆறப் பொறுக்கனும்… அப்புறம் நாங்க எங்கிட்டு பாக்குறது… நீ வாடா நம்ம போயி கேரம் விளையாடுவோம்…” அருகில் நின்றிருந்த அவனது ‘அக்கா’ இப்படியாய்ச் சொல்லி அவனை கூட்டிக் கொண்டு குப்பை - ஆர்.செம்மலர் -ஜனவரி 5, 2020 […] ‘’செண்பகம் செண்பகம்……." இட்லிப் பானை இறக்குவதில் மும்முரமாய் இருந்த செண்பகம் ’யாரு?’ எனக் கேட்டபடியே வெளியே வந்தாள். வாசலில் வீராயி நின்றிருந்தாள். கம்பெனிகளும் வீடுகளும் நிறைந்த அந்த நான்கு தெருவிலும் கம்பெனி கூட்டவும் வீட்டு வேலைகள் செய்யவும் செண்பகமும் வீராயியும் சேர்ந்தே சென்று அங்கங்கு பிரிந்து வேலை செய்து விட்டு திரும்பி வரும்போது இணைந்து வருவார்கள். இவர்களுக்குள் சண்டையே வராதா என்று பார்ப்பவர் யோசிக்கும் படி எப்போதும் கேலியும் கிண்டலுமாய் பேசியபடியே வளைய வருவார்கள். சின்னச்சின்ன சண்டைகள் வந்தாலும் வந்த மாயத்தில் காணாமல் போகும். போன சனிக்கிழமை கம்பெனி கூட்டி வளிச்சு சின்ன மூட்டையா கட்டின குப்பையை ரெண்டு பேரும் தனித்தனியா குப்பைத் தொட்டில கொட்டினாங்க. தொட்டி நிறைஞ்சிருந்ததால உள்ள விழுகாம தவறி கீழ விழுந்துச்சி. அதைக் கூட ரெண்டு பேரும் கவனமா எடுத்து உள்ள போட்டாங்க.. திங்கள்கிழமை பார்த்தா தொட்டிக்கு கீழ நிறைய குப்பைக சிதறிக் கிடந்துச்சு. லேசா பேஞ்ச மழை கெட்ட வாடையைக் கிளப்பி விட அந்த வழியா போன சனங்க மூக்கைப் பொத்திகிட்டு போனாங்க. அன்னைக்கு கூட்டி வளிச்ச குப்பைகளை தொட்டில கொட்ட கொண்டு போன செண்பகத்துகிட்ட ‘’குப்பையை பொறுப்பா கொட்ட மாட்டீங்களா’‘னு கோடி வீட்டு கோமளம் அதிகாரமாய்க் கேட்க’‘குப்பையை தொட்டிக்குள்ள தான கொட்டினேன். நீங்களே பார்த்திங்கள்ல’’ என்று செண்பகம் அடக்கமான குரலில் பதில் சொன்னாள். ‘’இப்ப போட்ட ஆனா எப்பவும் இப்பிடிதான் போடறியா? உங்கூட வர பொம்பளையும் அப்பிடித்தான் போடறாளா?’’ என்று கேட்டாள். பதில் சொல்ல வாய் திறந்த செண்பகத்தை எதையும் பேச விடாமல் அவளே தொடர்ந்து பேச. கூந்தலுள்ள மகராசியை எதிர்த்து வாயாட முடியாமல் செண்பகம் அமைதியாகத் திரும்பினாள்.. அடுத்த நாள் செண்பகம் “நீ ஒழுங்கா குப்பை கொட்ட மாட்டயாம் உன்னை வார்த்தை பேசின கோமளாம்மா என்னையும் சேர்த்து பேசுது’’ என்று ஆரம்பித்தாள். எவடி அவ கோமளா என்னைப் பத்தி பேச… நீதான் அவசரம்னு அப்பப்ப தூக்கி வீசிட்டு ஓடற.. அது அவ கண்ணுக்கு தெரியலையாமா..” என்று ஆத்திரமாய் திருப்பிக் கேட்டாள் வீராயி. இரண்டு குழந்தைகளுடன் அல்லாடும் செண்பகம் சில சமயம் குப்பை எங்கு விழுந்தது என சரியாய் கவனிக்காமல் தூக்கி வீசுவது உண்மைதான். அதை ஒத்துக் கொள்ள மனமின்றி யோசிக்காமல் வாய்க்கு வந்தபடி வார்த்தையாடினாள். ‘’நீதான் ஒண்டிக்கட்டைனா எல்லாரும் அப்பிடியா’’ என்று கேட்ட கேள்வி வீராயி மனதின் பலவீனமான பகுதியில் குத்த ஆங்காரமாய் வார்த்தையாடி செண்பகத்தின் வாயடைத்தாள். விளைவு… பத்து நாளா ரெண்டு பேர்க்குள்ள பேச்சுவார்த்தை இல்லை. விடிந்ததும் வீராயி தன் வீட்டு வாசலில் வந்து நின்று தன்னை அழைத்ததில் செண்பகத்திற்கு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் ஒன்றாய் வந்தன. ———————— பொழுது சாஞ்சா குப்பை வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. நேரம் காலம் பார்க்காம எறிஞ்சா மூதேவியுடன் ஸ்ரீதேவியும் வீட்டை விட்டு போயிடுவானு பாட்டி சொன்ன பாடத்தை என்னைக்கும் மறக்காத தேவிகா அவசரமா குப்பையை ஒரு கவர்ல நிறைச்சுட்டு வேகமா நடந்து போய் தொட்டில எறிஞ்சா. அது நிறைஞ்சிருந்த குப்பை மலைல உக்காராம வெளியே உருண்டு விழுந்துச்சு. பக்கத்துல போய் அதை எடுத்து நிதானமாய் தொட்டியில் இருந்த குப்பை மூட்டைகளின் மேல வெச்சா.. கடைசி நேரத்தில் ரேசன் கடைக்கு வந்து சாமான் வாங்க முடியாமல் திரும்பிய மல்லிகா ‘வேலைக்கு லீவு போட்டு வார அன்னிக்கு எதுவும் போட மாட்டேங்குறாங்க. இப்பிடி வேலைக்கு போய்ட்டு வந்தா கடை சாத்தறாங்க. ஹூம்.. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்கிற மாதிரி நம்ம பொழைப்பு ஆயிறுச்சு’ என்று புலம்பியபடி நடந்தாள்.. அன்றைய வேலையை முடித்த வீராயி அவர்கள் இருவருக்கும் நாலடி பின்னால் நடந்து வந்தாள். அந்திப்பொழுது சூரியனின் நிறத்தை ரசித்தவாறே மெதுவாக நடந்த தேவிகா மல்லிகாவைக் கண்டதும் பேச்சுத் துணைக்காக கொஞ்சம் வேகமாய் நடந்து அவள் தோளைத் தொட்டு ‘’எங்க இப்பிடி பொடிநடையா கிளம்பிட்ட மல்லிகா’’ என்று கேட்டாள். எதிர்பாரா தோள் தொடுகையில் திடுக்கிட்டாலும் உடனே சமாளித்த மல்லிகா “ரேசன் கடைக்கு வந்தன் நேரமாயிடுச்சு காலைல வான்னுட்டாங்க அதான்..” என்று பதில் சொன்னவள் ‘’நீங்க…’’ என்று இழுத்தாள். ‘’நானா…. குப்பை கொட்டலாம்னு வந்தன். குப்பைத் தொட்டி நெறைஞ்சு போச்சு. எப்பதான் அள்ளுவாங்களோ’’ என்றாள். ஆமாக்கா நானுங்கூட நேத்து சாய்ந்தரம் குப்பை கொட்டினேன். குப்பை வண்டி வந்து ஒரு மாசமாச்சு. குப்பை நிறைஞ்சு கிடக்கு. நாத்தம் வேற பக்கத்துல போனா மூச்சு முட்டுது. எப்ப வந்து அள்ளிட்டு போவானுங்களோ.. இன்னொரு தொட்டியாச்சும் வைக்கலாம்.. அதுவும் வைக்காம நாறடிக்கிறாங்க… நம்ம கவுன்சிலர் ராசா இருந்த வரை. இதெல்லாம் அவர் பார்த்துகிட்டார். இப்ப அவருக்கு பவர் இல்லையாம் யார்கிட்ட சொல்லி என்ன செய்ய…" என்று கையறு நிலையை உணர்த்தும் அலுத்த குரலில் சொன்னாள் மல்லிகா. ‘’நீயும் நானும் மட்டுமா ஊரே இப்ப இதைதான் யோசிச்சுட்டிருக்கு" என்ற தேவிகா வீடு நெருங்க’‘வாரேன்’’ என்றபடி நடந்தாள். தேவிகா வீட்டின் வாசல் பார்த்து பத்துக்கு எட்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கும் வீராயியும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டே வந்து தன் வீட்டிற்குள் நுழைந்தாள். வீட்டிற்கு வந்த தேவிகா கைகால் கழுவி சாமி விளக்கேற்றி கும்பிட்டு விட்டு வாசலுக்கு வந்தாள். இரவு டிபன் வேலை துவங்க நேரம் இருப்பதால் வீட்டு முன் இருக்கும் இருபதடி சாலையில் போகும் வரும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி நின்றவளை எதிரே இருந்த வேப்ப மரத்தில் ஓடி விளையாடிய அணில்களின் கீச் சத்தம் இழுக்க அதை ரசித்தபடி நின்றாள். மினி வண்டியில் இருந்து இறங்கி நடந்து வந்த சாந்தி ‘’குடிக்க தண்ணி குடுக்கா’’ என்று தேவிகாவிடம் கேட்டபடி அந்த வாசலில் அமர்ந்தாள். கவனம் கலைந்த தேவிகா தண்ணீர் கொண்டு வந்து தர அதைக் குடித்ததும் களைப்பு தீர முகம் துடைத்த சாந்தி ‘வேலை முடிஞ்சதாக்கா’ என்றாள். ’’ம்ம் முடிஞ்ச மாதிரிதான் நைட் டிபன் வேலைக்கு இன்னும் நேரம் கிடக்குதே" என்றபடி தானும் அமர்ந்தாள். வீட்டுக்கு சென்று பையையும் கார்டையும் வைத்து விட்டு ஒரு வாய் காப்பியும் போட்டுக் குடித்த மல்லிகாவும் அவர்களுடன் வந்தமர்ந்தாள். ‘’நேத்து என் கொழுந்தன் பொண்ணுக்கு வலி வந்து நம்ம தங்கசாமி ஆஸ்பத்திரில சேர்த்தினாங்க. நல்லபடியா பேரனை பெத்தெடுத்துட்டா. அதைப் பாக்க போனேன். குழந்தை அவன் அப்பனையே உரிச்சு வெச்சிருக்கு’’ என்றாள் சாந்தி ‘’பரவாயில்லை செலவில்லாம பிரசவம்’’ என்றாள் மல்லிகா. ‘’நானும் அப்பிடிதான் நினைச்சேன். டாக்டருக்கு ஆயிர ரூபாய், என்ன குழந்தைன்னு சொல்ல நர்சம்மாக்கு ஆயிரம் ரூபாய் வாங்கினாங்களாம். ஆயாம்மா தோலாந்துருத்தினு இன்னும் நிறைய கேக்கறாங்கனு கதையா சொல்றாங்க’’ என்றாள் சாந்தி. என்ன தங்கசாமி ஆஸ்பத்திரியிலயா? அது நகராட்சி ஆஸ்பத்திரியாச்சே… அங்க முன்னாடியே ஒரு தரம் இப்பிடி பணம் வாங்கினாங்கனு சனங்க நம்ம கவுன்சிலர் ராசா கிட்டதான் போனாங்க. அவர் கேட்டப்ப யார்கிட்டயும் பணம் வாங்கலன்னு சாதிச்சாங்க. பொறவு அவர் சொல்லி சுத்துபத்துல இருக்கற சனம் சேர்ந்து போய் நியாயம் கேட்டு அது எல்லாருக்கும் தெரியற மாதிரி பொதுவா ஒரு தட்டி எழுதி கட்டினாங்க. பொறவு அவங்க தப்பை ஒத்துகிட்டு அங்க யாருக்கெல்லாம் குழந்தை பொறந்துச்சோ அவங்களுக்கெல்லாம் வாங்கின பணத்தை திருப்பிக் குடுத்தாங்களே’’ என்றாள் தேவிகா ‘’ஆமாக்கா எனக்கு கூட நினைப்பிருக்கு என்ற சாந்தி அது மட்டுமா?? இங்க குடி வந்த புதுசுல கவுன்சிலர் யாரு எவருன்னு தெரியாது. அப்ப தண்ணி கனெக்சன் குடுக்கறதுக்கு அதிகாரிக காசு கேட்டாங்க. நாங்களும் குடுத்தோம். என்னை மாதிரியே பலரும் குடுத்தாங்க. எல்லார் வீட்டுக்கும் கனெக்சனும் வந்துச்சி. சரியா ரெண்டு வருசம் எந்தப் பிரச்சனையும் இல்லை. நாங்களும் சந்தோசமா தண்ணி பிடிச்சோம். எங்களுக்கு தந்த கனெக்சன் எதுவுமே ஆபிஸ் ரெகார்டுல பதிவாகுல. அதனால இந்தக் கனெக்சன் எல்லாம் பிடுங்க தீர்மானம் ஆயிருக்குனு கவுன்சிலர் ராசா மூலம் தான் தெரிஞ்சது. பிறகு எங்களை ஆபிசுக்கு கூட்டிட்டு போயி திருப்பியும் பணம் கட்டி முறையா ரசீது வாங்கி தந்து, தண்ணி கனெக்சன் கட்டாகாம இருக்கவும் அந்த அதிகாரியை மாத்தவும் அவர்தான் உதவி செஞ்சார்’’ என்றாள். ஆமா அதெல்லாம் எப்ப நடந்த விசயம். இப்பதான் கவுன்சிலரும் இல்லை.. குப்பைத் தொட்டி எலக்சனும் இல்லை.. வீட்டு வரி வேற எச்சு பண்றாங்களாம். யாரைக் கேட்க.. என்ன செய்ய… வரி குறைக்கணும்னா அவங்களை தனியா கவனிக்கணும்னு சொல்றாங்க…என்றாள் மல்லிகா. எங்கம்மா வூடு இருக்கறது வரபட்டிக்காடுன்னு உனக்கே தெரியுமில்லை மல்லிகா.. அங்க கூட எலக்சன் நடக்குதாம்.. நாம இருக்கறது பட்டணம்னு பேரு… இப்பிடி நாறிகிட்டு கிடக்கு… இங்க வரி கட்டற நமக்கு இன்னும் எலக்சன்கிற பேரு கூட காதுல விழுகல’’ என்றாள் தேவிகா எல்லாவற்றையும் அமைதியாக கேட்டபடி உடன் அமர்ந்திருந்த ராஜலட்சுமி "என்னமோ போ இதெல்லாம் நாம பேசித் தீரப்போற விசயமா.. ஒலவம் எப்பிடி போகுதோ நாமளும் அப்படி போக வேண்டியது தான்.. இப்ப நாம அடுப்படி வேலையைப் பார்க்கலைன்னா நம்ம பொழப்பைப் பார்க்க ஊர் கூடிரும்’’ என்றபடி எழுந்தாள். ‘’சரிதான்’’ என மற்றவர்களும் எழுந்தனர். வேலை முடிந்து வந்த வீராயி அலுப்பில் படுத்து விட்டாள். அன்று அதிகமாய் வாகனப் போக்குவரத்து இல்லாததும் இவர்களின் பேச்சு சத்தம் கூட ஓரளவு பெரிதாகவே இருந்ததும் இவள் அவைகளைக் கேட்க உதவியது. ராசாவின் பெயர் அடிபட்டதும் அன்றைய ஆஸ்பத்திரி பிரச்சனையை பொதுப் பிரச்சனை என்று கூறி அவர் தன்னையும் அழைத்ததும், தானும் அவர்களுடன் சென்று அவர்கள் சொன்னதை திருப்பிச் சொன்னதும் நினைவில் வந்தது. இப்போ குப்பைத் தொட்டி பிரச்சனையும் எல்லாருக்கும் உள்ள பிரச்சனையா தான் தெரியுது. இதை ரோசிக்காம எந்த முண்டையோ நம்மள பேசினதுக்கு நாம செண்பகத்து கூட சண்டை போட்டிருக்கம். ரெண்டு குழந்தையோட அல்லாடற அவ கஷ்டத்தை நாம கூட புரிஞ்சுக்கலைனா… என்ன இருந்தாலும் வயசுல அனுபவத்துல மூத்தவ நானு! நாந்தான இதை ரோசனை செஞ்சிருக்கணும். ராசாவைப் போய்ப் பார்த்தால் இதுக்கொரு விடிவுகாலம் பொறக்கும் என்று நினைத்தபடியே தூங்கி விட்டாள். விடிந்ததும் காப்பி வைத்துக் குடித்தவள் மனதில் எல்லாரும் ஒண்ணா இருந்தாதான் எதையும் சாதிக்க முடியும்னு அவர் சொன்னாரே. இப்ப செண்பகத்து கூட நாம பேசாம இருக்கறது தெரிஞ்சா அவர் எப்பிடி நம்ம சொல்றதை கேப்பார் நு தோன்ற முதல் வேலையாக செண்பகத்தின் வீடு தேடிச் சென்றாள். நான் என்று நினைத்த போது அலைக்கழிந்த மனம் நாம் என்று நினைத்ததும் அமைதியானது. வீராயியின் முகத்தில் இருந்த புன்சிரிப்பு செண்பகத்தை சண்டையை மறக்கச் செய்து அவள் முகத்திலும் தொற்றிக் கொண்டது. சற்று இருள் படிந்திருந்த அந்தக் காலை நேரம் கதிரவன் வரவால் ஒளி பெற்று மனதை குளுமையாக்கியது. பிரிந்தவர் கூடும் மகிழ்வு நட்பிலும் உண்டு என்பதை உணர்த்துவது போல் அந்த வெளிச்சத்தில் செண்பகமும் வீராயியும் மகிழ்வுடன் வேலைக்கு கிளம்பி மாலையில் ராசாவை சந்தித்து பேசும் முடிவுடன் நடை போட்டனர். அந்தப்புரத்தில் ஒரு மகாராணி -பிப்ரவரி 2, 2020 […] ஓடுவதற்கான வலு முற்றிலும் அற்றுப்போனது! இளைப்பு கலந்த ஆழ் பெருமூச்சோடு வாய்வழியே எச்சில் திரவமும் ஆறாய் வடிகிறது. உடம்பெல்லாம் ஊரும் வியர்வைச் சுரப்பிகளைப் போல மனம் முழுக்க பெருக்கெடுத்த திகிலோடு அந்த இருளைக் கிழித்தபடி நிலவொளியின் உதவியோடு முடிந்த மட்டும் விரைந்து கொண்டிருக்கிறேன். பின்னிட்டுப் பார்க்கையில் தீப்பந்தங்கள் குழு சேர எனை விரட்டி வந்து கொண்டிருக்கின்றன. ‘பிடி..பிடி’ என்கிற மனித சத்தங்களோடு குதிரைகளின் குளம்பொலிகளும், கேடயங்களின் உரசல்களும் காதுகளில் மின்னலாய் புலப்பட தூரத்திலிருந்து சடிதியாய் பாய்ந்து வந்த ஈட்டிகளில் இரண்டு என்னையும் தாண்டிப்போய் நிலத்தில் சக்..சக்-கென குத்தியாடியது. அது நிமித்தம் தடுமாறிய நான் எனக்கெனவே விரித்தார் போலிருந்த மொட்டைக் கிணற்றின் மேல் அடியெடுத்து வைக்க ‘ஆ….ஆ…’-வென்ற அலறலோடு டமாரென உள்ளே விழுகிறேன். அடுத்த கணமே ஈட்டிகளும், அம்புகளும் சலார் சலாரென கிணற்றைக் குறி வைத்துப் பாய்கின்றன. சரீரத்தை ஆயுதங்கள் ஊடுருவியதில் குருதி ஊற்றெடுத்து நீரோடு கலக்கத் துவங்கியது. துரத்தி வந்த தீப்பந்தங்கள் மேலே வட்டமாய் சூழ்கின்றன. கண்களை இருள் கவ்விக் கொள்ள தத்தளிப்பதற்கான திராணியும் இன்றி மெல்ல மெல்ல மூழ்க ஆரம்பிக்கிறேன். “எந்திரிங்கப்பா… டைம் ஆச்சு… டீ வச்சிருக்கே. எந்திரிச்சு குடிங்க” செவிகளில் புலப்பட்ட இக்குரலினால் பரபரப்புடன் கண் விழித்தேன்… “அப்ப நா கெணத்துக்குள்ள விழுகலயா…!” அந்த நாளில் எனது முதல் வார்த்தை இப்படியாய் இருந்தது. “என்னப்பா காலங் காத்தால மூஞ்சியக்கூட கழுவாம எந்திரிச்சவொடனே உளறிக்கிட்டு… கனவு ஏதும் கண்டீங்களா…” சலனமில்லாமல் கேட்டுவிட்டு உள் அறைக்குள் நடந்தாள். ‘ஆம்’ என நானாக தலையாட்டிவிட்டு ஃபேஸனில் முகம் கழுவ எழுந்தேன். இதுவரை விதவிதமாக எவ்வளவோ சொப்பனங்களைக் கண்டிருக்கிறேன். விடிய விடிய அமெரிக்க தேசம் நோக்கி விமானத்தில் பறப்பது போல், சிட்டுக் குருவியின் கூட்டிற்குள் விருந்தாளியாய் நுழைவது போல், வன விலங்குகளும் நானும் உரையாடுவது போல், அரசவையில் கவி பாடுவது போல் மற்றும் பார்த்த, நண்பர்களிடம் உறவுகளிடம் பேசிப் பழகிய நிகழ்வுகளே கூட கனவுகளாய் வந்து இன்பம், துன்பம், சோர்வு, உற்சாகம் என பற்பல உணர்வுகளை என்னுள் அலைபாய விட்டுச் சென்றிருக்கின்றன. ஆனால் இது சற்று வித்யாசமானதாக இருக்கிறது. உயிர் பயத்தை காட்டிவிட்டதாகச் சொல்வார்களே அப்படியிருக்கிறது… ஏன் என்னைத் துரத்த வேண்டும்? ஏன் கிணற்றில் விழுந்து மாள வேண்டும்? இக் கேள்விக்கு என்னிடமே விடை இருக்கிறது! சிறு வயதிலே எங்கள் வீட்டிற்கு ஒரு ஜோசியக்காரர் வருவார். அப்பாவின் நண்பர். நன்கு வெளுத்த கரை வேட்டியும், கலர் சட்டையும் அணிந்திருப்பார். முன்புறம் வழுக்கையும் பின்புறம் கிப்பியாய் தொங்கிய தலை முடியும் வரைந்தார் போன்ற மீசையும் கொண்டிருப்பார். ஜோசியம் பார்த்தலென்பது அவருக்கு ‘பகுதி நேர வேலை’ மற்றபடி கடமைக்காகத் திறக்கப்படும் பெட்டிக் கடை ஒன்றும் வைத்திருந்தார். அடிக்கடி வீட்டிற்கு வருபவர் எனக்கும் உடன் பிறப்புக்களுக்கும் ஏற்கனவே அப்பா எழுதி வாங்கி ட்ரெங்குப் பெட்டிக்குள் வைத்திருக்கும் ஜாதக நோட்டுக்களை வாங்கி ஆராயும் முனைப்பில் கிடப்பார். குருகுலத்தில் கல்வி பயி லும் மாணாக்கர்களைப் போல அம்மாவும் அப்பா வும் பய பக்தியோடு முன்னே அமர்ந்து கொள்வர். முடிவில் டீ காபி உட்பட தட்டில் வைத்த வெற்றிலை சுருள் பாக்குகளுடன் தட்சணையை யும் வாங்கிக் கொண்டு கிளம்பி விடுவார். அப்படி ஒரு முறை வந்த போது மாற்று கருப்பொருளாக எனது முன் ஜென்மம் குறித்து சில சம்பவங்களை அவர் சொன்னதாக கேள்விப்பட்டேன். அந்நாட்களில் பக்கத்து வீடு எதிர்த்த வீடு, வருவோர் போவோர் என்று நிறைய பேரிடம் அம்மா அக்கதையை ஒப்பித்திருக்கிறது. “எக்கா இவெ போன ஜென்மத்துல அரமணையில காவக்காரனா இருந்திருக்கானாம். அங்க அந்தப்புரம்னு ஏதோ இருக்குமாம்ல… அதுக்குள்ள அரசனுக்கு எக்கச்சக்கமான பொண்டாட்டிகளாம்… அதுல ஒருத்தி இவன விரும்பியிருக்கா… இவனுங் காதல் பண்ணியிருக்கியான். எப்பிடியோ ரெண்டும் ஒரு நாள் தப்பிச்சுப்போன நேரம் அரசனுக்குத் தெரிஞ்சு வெரட்டிப்போயி அவளப் புடிச்சிட்டானாம்… இவெ தப்பிச்சு ஓடுறேன்னு போயி கெணத்துல விழுந்து உயிர விட்ருக்கியான்…” விபரமறியா வயதில் கேட்ட சம்பவத்தை வளரும் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்பவாறு நானே மனத்திரையில் காட்சிகளாய் தீட்டிக் கொள்வேன். கிணறுகள், திரையில் வரும் அரசவை, அரண்மனை, அந்தப்புரம், காவலாளிகளின் காட்சிகளையெல்லாம் காணும் போது நானும் கற்பனை வெள்ளத்தில் நீந்த ஆரம்பித்துவிடுவேன். மங்கிய பிம்பத்தில் அந்தப்புர அழகி ஒருத்தி என்னைத் தழுவுகிறாள்… “கண்ணே கண்மணியே… உறுதியாக உன்னை காப்பாற்றுவேன்… ஓர் நாள் இவ்விடம் விட்டு உன்னை அழைத்துக் செல்வேன்… நாம் இன்பமுற்று வாழலாம்” என அவள் கூந்தலை வருடிக் கொடுக்கிறேன். பின் யாரோ துரத்த ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில் இவை கனவுகளாகவும் பிரசுரமாக ஆரம்பித்தன. பின் நீண்ட வருடங்கள் காணாமலும் போயின. என்ன கருமாந்தரமோ தெரியவில்லை… திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனான இந்நாட்களில் நேற்றைய இரவில் அது நிமித்தமான சொப்பனம் ரொம்பவே என்னை கலங்கச் செய்துவிட்டது. ‘கனவுகள் வேறொரு உலகிலிருந்து வரு கின்றன என்று சொல்ல முடியாவிட்டாலும், அவை வேறொரு உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன" என உளவியலின் உளப்ப குப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவிய உளநோய் மருத்துவரான ’சிக்மண்ட் பிராய்ட்’ –ன் கூற்றுப் போலாகிவிட்டது என் நிலை! “அப்புடி என்னப்பா கனவு கண்டீங்க…?” பிள்ளைகளை பள்ளிப் பேருந்தில் அனுப்பிவிட்டு வந்தபின் மீண்டும் கேட்டாள். அமைதியாக இருந்தேன். “ஏங்கிட்ட சொல்லக்கூடாதா…” “அப்புடியெல்லா இல்ல… சொன்னா நீ ஏதும் சங்கடப் படுவியோன்னு…” “அடடடடாஆ… எதுக்குய்யா இந்த ஓவர் பில்டப்பு…. சொல்லுங்க சங்கட்டப்படுறதா வேணாமான்னு அப்புறம் யோசிக்கிறேன்… ம்..” பிறகென்ன! வீட்டின் ஓர் மூலையைக் குறி வைத்துப்பார்த்துக் கொண்டே எல்லாவற்றையும் சொன்னேன். “ப்..பூ… நல்ல கனவு நல்ல கதை…. அந்த ஜோசியக்காரருக்கு கலைமாமணி விருதுதே குடுக்கனும்… அது எப்பிடிய்யா ஒரு பிக்சர நம்புறமாதிரியே கிரியேட் பண்ணிடறாங்க… இதுல சங்கடப்படுறதுக்கு இல்ல சிரிப்புத்தே வருது… சரி… முன் ஜென்மம், பின் ஜென்மம்… அந்த சேப்டருக்கு நான் வரல… நிறைய்யா பேச வேண்டியிருக்கும். இப்ப உங்க கனவுக்கு வருவோம்…” “ம்’’”நீங்க அரண்மனைக்குள்ள ஒரு காவலர்… அந்தப்புரத்துல இருக்க எத்தனையோ பெண் கள்ல ஒருத்தி உங்கள விரும்புறா.. நீங்களும்தே… சரி. கனவுல நீங்க மேரேஞ் ஆனவரா?" “இல்ல” "அப்புறமென்ன… அந்த மகாராணியோட சேர்ந்து வாழலாமே… எதுக்கு உங்கள விரட்டனும்… நீங்க கிணத்துக்குள்ள விழுகனும்" “நீ என்ன லூசா… அரசனோட அந்தப்புர அழகி கள கூட்டிட்டு ஓடுனா சும்மா விடுவாங்களா?” “விடத்தா மாட்டாங்க… சமீபத்துல நெட்ல ஒரு கட்டுரை படிச்சேன்… நாடாண்ட மன்னர்களின் அந்தப்புர ரகசியங்கள்-ன்னு. அவெ அவெ ஒரு மனைவிய வச்சே ஒழுங்கா வாழாமக் கெடக்காங்கே.. ஆனா இந்த அரசர்கள் பாருங்க இஷ்டத்துக்கு பொண்டாட்டிகளக் கட்டிக்கிட்டு அந்தப்புரம்னு ஒரு இடத்துல அடச்சு வச்சு அவங்களோட வாழ்க்கைய வீணடிச்சுக்கிட்டு..” “ஏம்ப்பா அதுவும் ஒரு கௌரவம்தான… அரசனோட மனைவின்னு..” “நல்லா மண்ணாங்கட்டி கௌரவம்… ஒரு பெண் பிறந்து வளந்ததுக்கே அர்த்தமில்லாம ஆக்கிடறாங்களே… ம்.. அந்த கட்டுரையில நிறைய அரசர்கள் இடம் பெற்றிருந்தாங்க.. அதுல அந்தக் காலத்துல ராஜஸ்தான்ல இருக்க கிஷான்பூர ‘கிஷாந் சிங்’ அப்பிடிங்கிற மன்னர் ஒருத்தரு ஆட்சி செஞ்சாராம்.” “ம்” “அவரு நாப்பது பெண்கள கல்யாண முடிச்சு கூடவே வச்சிருந்தாராம். இதுல கொடுமை என்னன்னா.. அரண்மனைக்குப் பக்கத்திலயே குளிக்கிறதுக்கு குளம் ஒன்னு கட்டி அதுல மன்னர் குளிக்க வர்றப்ப அந்த நாப்பது பேரும் நிர்வாணமா அவர வரவேற்று கூடவே குளிக்கனுமாம்… அதுமட்டுமில்லாம வெளிச்சம் இல்லாத இடத்துல ராணிகளெல்லாரும் கையில விளக்கப் புடிச்சிக்கிட்டு டான்ஸ் ஆடனுமாம்… அதுல யாரோட விளக்கு கடைசி வரையில அணையாம இருக்கோ அவங்க மட்டுமே அந்த ராத்திரியில மன்னர்கூட இருக்க முடியுமாம்… எவ்வளவு கேவளமா இருக்கு பாருங்க… பெண்கள்னா அவ்வளவு கேவலமா போச்சா… இதே மாதிரி ராணி ஒருத்தி நிறைய்ய ஆண்கள மேரேஞ் பண்ணி விளக்க புடிச்சு ஆடவிட்டு கூட்டிட்டுப் போனா ஏத்துக்குவாங்களா?’’”கண்டிப்பா ஏத்துக்க மாட்டாங்க" “அப்பறம் இன்னொரு சம்பவம்… சாத்கபூர்ல இருக்க நினைவுச்சின்னங்கள் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?” "ம்.. எங்கயோ படிச்ச மாதிரி ஞாபகம் இருக்கு… பரவாயில்ல சொல்லு" “பதினேழாம் நூற்றாண்டுல இப்ப கர்நாடகாவுல இருக்க பிஜாப்பூர்லதே அந்த சம்பவம் நடந்துச்சாம்… அந்தக் காலத்துல சத்ரபதி சிவாஜின்னாலே எல்லாரும் நடுங்குவாங்களாம்… எப்பேர்பட்ட போர்னாலும் அவருதே ஜெயிப்பாராம்… அப்ப அப்சல்கான்-னு ஒரு அரசன் அவருகூட எதிர்த்து நிக்க துணிஞ்சிட்டானாம்… அந்தாளுக்கு அறுபது மனைவிகளாம். போருக்கு நாள் நெருங்க நெருங்க பதட்டமா ஆகிட்டானாம். அந்த அரச னுக்கு ஜோசியம் மேல அதிக நம்பிக்கையாம். அப்ப அந்த போர் குறிச்சு அவெ ஜோசியக்கார ருகிட்ட கேட்டப்ப தோல்விதா கிடக்கும்னு சொன்னாங்களாம். அத கேட்டு கலங்கிப் போன அரசன் ஒரு வேளை போர்ல நாம இறந்திட்டா மனைவிகள் பின் நாட்கள்ல யாரையும் திருமணம் செஞ்சுடுவாங்களோன்னு நினைச்சு அந்த அறுபது பேரையும் ஒரு இடத்துல ஒன்னா வரவச்சு கொடூரமா கொலை செஞ்சானாம்.. என்னா ஒரு வக்கிரப்புத்தி பாருங்க..” “ம்… ஞாபகம் வந்துருச்சு. நானும் நெட்ல படிச்சிருக்கேன். ச்.சீ அதெல்லா எவ்வளவு கொடும பாத்தியா …” "அவனாவது அறுவது பேரையும் ஒரேடியா கொன்னான்… ஆனா ஒவ்வொரு அரசர்களும் நூத்துக்கணக்குல மனைவிகள்ங்கிற பேருல பெண்கள அந்தப்புரத்துல வச்சு வாழ்நாள் முழுதும் கொன்றுக்காங்க.. ஏன் சாலமோன் மன்னனே ஆயிரம் மனைவிகள வச்சிருந்ததா படிச்சிருக்கமே… அந்த ஆயிரம் பேரும் அநுதினமும் எல்லா விதத்துலயும் சந்தோசமாவா இருந்துருப்பாங்க! அரசனோட மனைவிகள் அப்பிடிங்கிற ஒரு அந்தஸ்த மட்டும் வச்சுக்கிட்டு நாட்டுல இருக்கற மத்த பெண்களப் போல ஃபிரியா எங்கயும் போக முடியாம, வர முடியாம, விரும்புற உணவக்கூட சாப்பிட முடியாம, ஆக்கி போடுறத சாப்டுக்கிட்டு… எல்லாத்துக்கும்மேல பெண்ணா பிறந்து வளர்ந்து கல்யாணம் ஆனதுக்கே அர்த்தமில்லாம ஆகிடறாங்க… அரசனா இருக்கவங்க அனுதினமும் ஒவ்வொருத்திகூடயும் சந்தோஷமா இருப்பாங்களாம்… பாவம் இந்த அந்தப்புரத்து மகாராணிங்க ஒவ்வொரு ராத்திரியும் ஏங்கிப்போயி கெடக்கனுமாம்… அவங்களுக்கும் வாழ்க்கையில எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்… எல்லாருமே விரும்பி அங்க வந்திருப்பாங்கன்னு நெனைக்கிறீங்களா… எத்தன பேர அழகப்பாத்து அரசர்கள் தூக்கிட்டு வந்திருக்க மாட்டாங்க… பாவம்ய்யா அந்த பெண்கள்… அவங்கள அந்தப்புர அழகிகள்ன்னு சொல்றதவிட அந்தப்புர அடிமைகள்ன்னு சொல்லியிருக்கலாம். கண்டிப்பா அவங்கள்லாம் விடுதலையாகியிருக்க வேண்டியவங்கதான். மன்னர்கள் நாட்டுக்காக எதிரிகள்கிட்ட போராடு னாங்க… மக்களுக்கு நிறைய நல்லதும் பண்ணி யிருக்காங்க.. ஓ.கே. ஆனா அந்தப்புரம்ங்கிற சேப்டர்தான எனக்கு முரன்பாடு" “எப்பா தெரியாத்தனமா ஒரு கனவு கண்டுட்டேன். அதுக்கு இப்ப என்ன பன்னலாம்மங்குற…” “என்னப் பொருத்த வரைக்கும் கனவா இருக்கட்டும் கதையா இருக்கட்டும். ஒரு நியாயம் வேணும்… இந்த கனவுக்கு காரணமே ஒங்க நினைவுகள்தான! அடுத்து ட்ரீம் வந்தா நீங்க கெணத்துக்குள்ள விழுகக் கூடாது…” சிரித்துக்கொண்டே உள் அறைக்குள் நடந்தாள். விபரமறியா வயதில் கேட்ட சம்பவத்தை வளரும் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு நானே மனத்திரையில் தீட்டிய காட்சிகளை திருத்தியமைக்க சில மாதங்கள் ஆனது… கனவிலும்தான்! அடிமைக்கு எதற்கு ஆறாம் அறிவு? - பழனி சோ.முத்துமாணிக்கம் -பிப்ரவரி 9, 2020 மேற்குத் தொடர்ச்சி மலை ஓர் இரட்டைவடத் தங்கச் சங்கிலிபோல் நீண்டிருந்தது. மருதமலை முருகன் கோயில், முத்துக்கள் பதித்த பதக்கமாகக் காட்சி அளித்தது. அந்த மலையும் வனமும் ஏராளமான விலங்குகளுக்கும் சிறு உயிரினங்களுக்கும் புகலிடம் தந்து வாழவைத்துக் கொண்டிருந்தன. மனிதர்கள் புகுந்து தொல்லை கொடுக்காத பகுதி இது.எனவே அச்சமின்றி எல்லாப் பறவைகளும் பாடிக் கொண்டு எட்டுத் திசைகளிலும் பறந்து சென்று தன் இறகுகளால் வானத்தைக் கோதிவிடும். மலைவளம் காணப் பள்ளியிலிருந்து மாணவர்களுடன் சென்ற பிரியா அங்கு பறந்து கொண்டிருந்த கிளிகளைப் பார்த்தவுடன், வீட்டில் கிளி வளர்க்க வேண்டும் என ஆசைபட்டாள். கையோடு கொண்டு வந்திருந்த விதைப்பந்துகளை எல்லாப் பகுதிகளுக்கும் வீசி எறிந்தார்கள் மாணவர்கள். துணைக்கு வந்திருந்த மலைவாசிகளிடம் கேட்டுக் கிளிகளைப் பிடித்துத் தரச் சொன்னாள் பிரியா. ‘புடிச்சுத் தர்றோம் கண்ணு. முந்தீவிட இப்ப இந்த வனாந்திரத்துல பறவேங்க கூடுதலா இருக்குது. கவலய விடு’ என்றார் அந்த மலைவாசிப் பெரியவர். ‘ஆமா தாத்தா… போன வருசத்தைக் காட்டிலும் பறவைங்க, இப்ப அதிகமா இருக்கும் போல…’ பிரியா வியப்போடு கேட்டாள். பெரியவர், ’எப்பிடிச் சரியாச் சொல்லற கண்ணு. அது ஏன்னாக்கா…பக்கத்துல இருக்கற வெள்ளிமலை வனத்துல ஒரு சாமியார் வந்து கூடாரம் போட்டுக்கிட்டு ரவ்வுபகலா குத்தாட்டம்…. நம்ம மக்க கூட்டம் கூட்டமா வந்து ஒரே கூச்சல்தான். தண்ணிதேடி, தீனி தேடி மிருகங்கள் எல்லாம், என்னடா நம்ம வழியை மறிச்சுட்டானுகளேன்னுட்டு வேற வேற எடங்களுக்கு நகரத் தொடங்கிருச்சு.அங்கிருக்கற பறவைங்களும் மத்த வனங்களுக்கு வரத் தொடங்கிருச்சு. அதுங்க இருக்கற எடத்தை நாம புடிச்சுக்கிட்டோம்.இப்ப நாம இருக்கற எடத்துக்கு அதுங்க வருது. அதக் கொறை சொல்ல நமக்குத் தகுதியே இல்லை கண்ணு’ என்றார். அம்மா அப்பா எதிர்ப்புகளை மீறி வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒரு கூண்டில் கிளிகளைச் சிறை வைத்தாள் பிரியா. வா பிரியா.. போ பிரியா.. பள்ளிக்கூடம், அப்பா அம்மா.. இப்படிப் பேசத் தொடங்கின இரு கிளிகளும். எல்லாம் பிரியாவின் விடா முயற்சியால்தான். பள்ளிக்கூடத்தில் இருக்கும் நேரம் தவிர, மற்ற பொழுதுகளில் கிளிகளுடனேயே நேரம் போனது பிரியாவுக்கு. இளம்பிறைபோல் வளைந்திருக்கும் மூக்கு, வண்ணக்கலவையாய் விரிந்திருக்கும் சிறகு, மனிதர்களைப் போலவே பேசும் ஆற்றல் ஆகியவற்றைக் கண்டும் கேட்டும் வியந்து போவாள் பிரியா. அடிக்கடி கூண்டுக்குள் படபட என்று சிறகுகளை அடித்துக் கொண்டு கிளிகள் கூச்சலிடும். அவை மகிழ்ச்சியாக விளையாடுகின்றன என்று நினைத்துக் கொள்வாள். நாட்கள் நகர்ந்தன. இந்தக் கிளிகளைப் பார்க்கக் குருவிகளும் காக்கைகளும் புறாக்களும் வந்துபோய்க் கொண்டிருந்தன.தங்கள் குரலில் அப்பறவைகள் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தன. அதன் விளைவை உணர்வதற்கு ஒருநாள் வந்தது பிரியாவுக்கு. ‘ஏய் பிரியா.. வா இங்கே..’ கூண்டுக்குள் இருந்து கேட்ட ஒலியைக் கேட்டுத் திகைத்துப் போனவள், ‘என்னம்மா குரல் மெரட்டலா இருக்குது’ எனக் கேட்டாள். ‘ஓங் கிட்ட ஒன்னு கேக்கணும்.’ ‘கேளு’ ‘எதுக்கு எங்களக் கூண்டுக்குள்ள அடச்சுப் போட்டிருக்க’. ‘ஆசையா உங்கள வளக்கணும்னுதான்; வெளயாடவும்தான். உங்களுக்குப் புடிச்ச தானியங்கள், பழங்களக் குடுக்கிறேனா இல்லையா?’ ‘இதையே கொஞ்சம் மாத்தி ஓசிச்சுப் பாரு’ ‘மாத்தின்னா?’ ‘என்ன பிரியா எங்களவிட ஒங்களுக்கு அறிவு அதிகம்பாங்க. ஆறு அறிவாமே! புரியலயா? ஒன்னப் புடிச்சு அடச்சுவச்சி, பழங்க, காய்ங்க…. பின்னே உனக்குப் புடிச்ச எல்லாத்தையும் நாங்க கொண்டு வர்றோம்.அடஞ்சு கிடக்க ஒனக்குச் சம்மதமா?’ இத்தனை நாள் எதுவும் பேசாமல் கொடுத்ததைத் தின்று கொண்டிருந்த கிளிகள் இப்படிப் பேசுகின்றனவே; என்ன காரணம்? என்று தேர்வில் விடைதெரியாமல் விழிக்கும் மாணவன்போல் நின்றுவிட்டாள். எதையாவது சொல்லிச் சமாளிக்க எண்ணினாள். புறாக்களும் காக்கைகளும் அடிக்கடி வந்து இந்தக் கிளிகளுடன் பேசிக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது. ‘நீ முந்திமாதிரி இல்லை; உன்னை யாரோ பின்னால இருந்து தூண்டிவிடறாங்க. அதனாலதான் இப்பிடி எதுத்துப் பேசற.’ கிளிகளுக்குக் கோபம் வந்து விட்டது. ‘மனுசங்க மாதிரி மறச்சுப் பேசத் தெரியாது எங்களுக்கு. பின்னால இல்ல.. முன்னால வந்துதான் தூண்டிவிடறாங்க. எங்க பறக்கற உரிமையைப் பறிச்சது நீ. அடிமைப் புத்தி இருக்கறவங்கதான் அடங்கி நடப்பாங்க.’ ’விட்டு விடுதலையாகி நிற்பாய்.. இந்தச் சிட்டுக் குருவியைப் போல’ன்னு, உங்க பாரதியார் பாடுனதை நீங்கவேணா மறந்திருக்கலாம். எங்களுக்கு யார் தயவும் தேவை இல்ல. தெரிஞ்சுக்கோ. கிளி பொறிந்து தள்ளி விட்டது. பிரியா வியப்பின் உச்சிக்கே சென்று விட்டாள். பாரதியின் பாட்டு வரிகளைச் சொல்கிறதே. ‘அது சிட்டுக் குருவிக்குச் சொன்னது. உங்களுக்கு இல்லை’. ‘இல்லை பிரியா.. எல்லாப் பறவைகளுக்கும்.. அது மட்டுமில்ல. உங்கள மாதிரி மனுசங்களுக்கும் சேத்துத்தான் பாடிவச்சார். உங்க ஆறாவது அறிவைக் கொஞ்சமாச்சும் செலவு பண்ணுங்க. நீங்க பாரதியையும் நல்லாக் கவனிச்சுக்கல.. அவரு பாடினதையும் கவனிக்கல’. ‘சரி சரி.. உங்கள எங்கேருந்து கூட்டீட்டு வந்தேனோ அங்கேயே விட்டர்றன். உங்க வனம் மருதமலை வனமா? இல்ல..வள்ளிமலை வனமா? சொல்லுங்க’. ‘நாங்க வள்ளிமலை வனம்’. ‘அதுக்கு என்ன ஆதாரம் வச்சுருக்கீங்க?’ ‘ஆதாரமா?’ ‘ஆமா.. உங்க அம்மா அப்பா எங்கிருந்தாங்க? பாட்டன் பூட்டங்க எங்கிருந்தாங்க? அவங்களப் பெத்தவங்க எங்கிருந்தாங்க? அதச் சொல்லு.. போலாம்’.கிளிகளை பேச்சாலேயே அடக்கி விடலாம் என்று நினைத்தாள் பிரியா. ‘ஆகக.. காகா. ரொம்பத் தெறமையாப் பேசறதா நெனப்போ ஒனக்கு. ஓங் கேள்விக்குப் பதில் சொல்றோம். அப்பறம் நாங்க கேக்கற கேள்விக்குப் பதில் சொல்லு பாப்போம்.’ பேசத் தெரிந்த பறவைகளைக் கொண்டுவந்து வளர்த்தது தவறு என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் பிரியா. ‘எங்க அப்பா வள்ளிமலை.. அம்மா தொண்டாமுத்தூர் சோலை; பாட்டன் பாட்டி சிறுவாணி வனம். அவிங்க அம்மா அப்பா.. அவிங்க.. தெரியலயே. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? சரி இப்ப உன்னோட கதையைச் சொல்லு பாப்போம்’. பாடத்தில் இருந்து எந்தக் கேள்வி கேட்டாலும் பட் பட் என்று விடை சொல்லியிருப்பாள் பிரியா. அதத் தவிர வேறெதையும் படிக்க விடமாட்டேங்கறாங்களே என்று தனக்குள் புலம்பினாள். ‘ஏம் அம்மா அப்பா பழனியில இருக்கறாங்க. அவிக அம்மா அப்பா திண்டுக்கல். அவிகளோட அம்மா அப்பா..அப்பா.. அப்பா.. தெரியலயே.’ பிரியாவுக்கு வெட்கமாகப் போய்விட்டது. ‘ஆறாம் அறிவு இருக்கறவங்களே இப்பிடி நெனப்புக் கெட்டுப் போய் இருந்தா, கொறை அறிவு படச்ச எங்களுக்கு எப்பிடிப் பரம்பரையைப் பத்தித் தெரியும். எல்லா வனமும் எங்க வனம்தான்’. என்று கிளிகள் ஆவேசமாகக் கூறின. பள்ளிக்குப் போவதையும் மறந்து விட்டாள். குழப்பத்தில் இருந்து சிறுகச் சிறுக விடுபட முயன்றாள் பிரியா. ‘உங்களக் கூண்டுல அடச்சுவச்சா நீங்க பேசாம இருப்பீங்களா?’ என்ற கிளியின் குரல் வரவர மிகுதியாகிக் கொண்டே வந்தது. ’’இப்பிடி அடச்சு வச்சதுக்குப் பதிலா மனுசங்களும் அனுபவிக்கப் போறீங்க. எவனாவது கிறுக்கன் வந்து இந்த நாடே ஒங்களோடது இல்லைன்னு வெரட்டப் போறான். பாத்துக்கிட்டே இரு". கிளிகளின் பேச்சில் உண்மை இருப்பதுபோல் தெரிந்தது பிரியாவுக்கு. அந்தச் நினைவே அவளுடைய மனதைப் பிசையத் தொடங்கியது. பிரியாவின் கைகள் தாமாகக் கூண்டைத் திறந்து விட்டன. விடுதலையான கிளிகள் பிரியாவைச் சுற்றிச் சுற்றிப் பறந்தன. ‘பிரியா.. கோவிச்சுக்காதே.. எங்க உரிமைக்காகப் பேசினோம். ஆனால் உம்மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கோம் தெரியுமா? அதனால நாங்க வனாந்தரம் தேடிப் போனாலும், அன்னாடம் உன்னப் பாக்க வருவோம்.’ என்று கூறியபடி மேலெழுந்து பறக்கத் தொடங்கின. கலங்கிய கண்களுடன் வானை நோக்கிப் பிரியா கையை அசைத்துக் கொண்டே இருந்தாள். வானத்தில் நிறையப் பறவைகள் அம்புநுனி வடிவத்தில் பறந்து கொண்டு மேற்கு வான இளம்சிவப்பைப் பருகத் துடிக்கும் ஆவலுடன் போய்க் கொண்டிருந்தன. வருத்தங்கள் வயதில் இல்லை..! - செல்வகதிரவன் -பிப்ரவரி 16, 2020 “வாத்தியாரய்யா சுந்தரராமன் இறந்திட்டாராமே…” “நல்ல மனுசன் போயிட்டாரு… ம்.. எவ்வளவு நாள்தான் இருக்க முடியும்… வயது தொண்ணூறு ஆச்சில்ல…” “அந்தக்கால உடம்பு… கடேசி வரைக்கும் பிரஸர் சுகர அவரு அண்ட விடல…” “சாப்பாட்டுல கட்டுப்பாடு.. தெனசரி வாக்கிங்.. இதுதான் அவரோட ஆரோக்கியத்துக்கு மூல காரணம்…” “ஒரு வருசமா வெளிநடமாட்டத்தக் கொறச்சுக் கிட்டாரு… தள்ளாம வந்திருச்சு.. ரோட்டுல நடக்கும் போது எவனாவது வெடப் பயல்க இடிச்சுத் தள்ளி விட்டான்னா.. யார் அவஸ்தப்படுறது…” “ஆமா வண்டி ஓட்டுறவன்க நிதானமாவா போறான்க.. வேகமாப் பறக்கிறான்க…” “சுந்தரராமன் இறந்து விட்டார்” என்ற தகவல் நொடிப் பொழுதில் நகர் முழுவதும் பரவி விட்டது. சேர்மன் மாணிக்க வாசகம் நினைவு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து… பல ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சுந்தரராமன். தொண்ணூறு வயதைக் கடந்து தொண்ணூற்றி ஒரு வயதில் அடியெடுத்து வைத்தவர். இன்றைக்கு அறுபது வயது தாண்டிய மானாமதுரை வாசிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சுந்தரராமனிடம் படித்திருப்பார்கள். நகரிலுள்ள முக்கியப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், வணிகர்கள் முதலியோர் சுந்தரராமன் வீட்டுக்கு வந்து கூடி விட்டார்கள். வந்ததோடு மட்டுமின்றி ஆக வேண்டியவற்றை கவனிக்க ஆளாளுக்கு ஒவ்வொரு காரியத்தில் இறங்கி விட்டனர். அந்தளவிற்கு சுந்தரராமன் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். ஆசிரியராக, தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களில் மாணவர்களை தனது பிள்ளைகள் போல பாவித்தவர். கண்டிப்பானவராக காட்சி தந்தாலும், எந்த மாணவரையும் கை நீட்டி அடித்ததில்லை. பிரம்பை அவரது கைகள் கடைசி வரை தொட்டதில்லை. பார்க்கும் பார்வையில் கேட்கும் கேள்விகளில், படிப்பில் கவனம், நடவடிக்கைகளில் ஒழுக்கம் ஆகியன மாணவர் மனதுக்குள் பற்றிப் படர்ந்துவிடும். சுந்தரராமனுக்கு இரண்டு புதல்வர்கள். வேலை நிமித்தமாக குடும்பத்துடன் கோயமுத்தூரில் வசிக்கிறார்கள். வயதான காலத்தில் மானாமதுரையில் தனியாக வாழ்ந்து அவதிப்பட வேண்டாம்… எங்களுடன் வந்து விடுங்கள்… என்று பல முறை வற்புறுத்தியும் சுந்தரராமன் செவி சாய்க்க வில்லை. வாலிபப் பருவந்தொட்டு அன்பைப் பொழியும் மானாமதுரை ஜனங்களை விட்டு வெளியேற சுந்தரராமன் விரும்பவில்லை. அவரின் மனைவி அம்புஜமும் கணவர் எடுத்த நிலையை ஆமோதித்தாளே தவிர பிள்ளைகளுடன் போய் வசிக்கப் பிரியப்படவில்லை. வருடத்திற்கு இரண்டு முறை அவர்களை வரவழைத்துப் பேரச் செல்வங்களுடன் பொழுதைப் போக்குவதோடு சரி… இவர்கள் மானாமதுரையை விட்டு எங்கும் கிளம்புவதில்லை. வருகிற ஓய்வூதியத்தில் எளிமையாக வாழ்ந்து, முடிந்தவரை பிறருக்கு உதவி புரிந்து, முதுமைக் காலத்தை முழு நிம்மதியுடன் கடத்தினார்கள் சுந்தரராமன்-அம்புஜம் தம்பதியர். நன்கு நடமாடிக் கொண்டிருந்த வரைக்கும் சுந்தரராமன் நகரில் நிகழும் நிகழ்வுகளில் கலந்து வந்தார். கல்யாணம், காது குத்து, புகுமனை புகுவிழா போன்ற விசேடங்களுக்கு அழைப்போர் வீடுகளுக்குத் தவறாது போய் தகுந்த அன்பளிப்புக்களைத் தந்து, வாழ்த்துக்களை வழங்கினார். மானாமதுரையில் அவரைத் தெரிந்தவர்கள் அனைவரும் தங்கள் வீட்டுத் தாத்தாவாக ஆச்சியாகவே இந்தத் தம்பதியரைக் கருதினார்கள். மார்க்கெட் போய் காய்கறி வாங்க, கடைக்குப் போய் வீட்டுச் சாமான்கள் வாங்க, ரேசன் கடைப் பொருட்க்கள் வாங்க… என்று பழகியவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உதவிகளைச் செய்வதைக் கடமையாகவே கருதிச் செய்தார்கள். உடல்நலக் குறைவின் போது டாக்டரே வீட்டுக்கு வந்து வைத்தியம் பார்த்தார். கடந்த வருடம் வரை மாலை வேளைகளில் மானாமதுரையில் உள்ள கோயில்களுக்கு மனைவியுடன் போய் வந்தார். தள்ளாமை வந்த பிற்கு கோயிலுக்குப் போவதையும் குறைத்துக் கொண்டார். ஓத்தாசை செய்ய ஒதவிகள் புரிய காத்திருக்கும் ஜனங்கள்… கிராமம் நகரம் எதிலும் சேர்த்தி இல்லாத அமைதி தவழும் பூமி… இவற்றை விட்டு மகன்களோடு பெருநகரில் வாழ மனது இடந் தருமா…? கோயமுத்தூரில் இருந்து புதல்வர்கள், மருமக்கள், பேரன் பேத்திகள் வந்து விட்டார்கள். தகவல் கிடைத்த உறவுகளும் வந்து சேர்ந்தனர். உறவுகள் ஒவ்வொரு முகங்களிலும் சோக ரேகைகளைக் காணமுடியவில்லை. தொண்ணூறு வயது வரை வாழ்ந்தவர்… நோய் நொடிகளில் அழுந்தாமல் போய் விட்டார். இது ஒரு சந்தோசமான கல்யாணச் சாவு என்கிற தினுசிலேயே அவர்களின் மனோபாவங்கள் தென்பட்டன. பந்தல், துக்கம் கேட்க வந்தவர்களுக்கு தேனீர், மயானச் சடங்குகள் முதலியனவற்றிற்கு ஆகின்ற செலவுகளை நான்… நீ.. என்று முன்வந்து மானாமதுரை முக்யஸ்தர்கள் ஏற்றனார். பொதுப் பிரச்சனைகளுக்காக கடையடைக்க முணுமுணுக்கும் வணிகர்கள் இன்று யாரும் வற்புறுத்தாமலேயே கடைகளை அடைத்து ஆச்சரியப்படுத்தினார்கள். தாரை தப்பட்டை ஒலிக்க பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுந்தரராமனின் சடலம் ஏற்றப்பட்டு… இறுதிப் பயணம் கிளம்பியது. இதுவரை இந்த ஊரில் எவருக்கும் காணாத அளவிற்கு ஜனத்திரள் வந்து அஞ்சலி செலுத்த… சுந்தரராமனின் அடக்க நிகழ்வு நடந்தது.. காலை ஒன்பது மணி. தேவதாஸ், தனது பாரதி அச்சகத்தை திறந்து, அன்றாட வேலைகளைத் தொடங்க ஆயத்தமானார். ஊது பத்தியைக் கொளுத்தி கடவுள் படங்களுக்கு காட்டிய போது அலைபேசி அழைத்தது. ஊது பத்தியை அதற்குரிய ஸ்டாண்டில் செருகி விட்டு அலைபேசியைப் பார்த்த போது சுந்தரராமனின் நம்பரில் இருந்து அழைப்பு வந்திருந்தது. “ஹலோ” “வணக்கம்.. சுந்தரராமன் சாரோட மூத்த பையன் முத்துராமன் பேசுறேன்..” “வணக்கம் தம்பி.. என்ன விசயம் சொல்லுங்க…” “அப்பா போன வருத்தத்தில அம்மா சரியாச் சாப்பிட மாட்டேங்கிறாங்க.. அப்பாவ அடக்கம் பண்ணிட்டு வந்து… வற்புறுத்தி ரெண்டு இட்லி சாப்பிட வைச்சோம்…நேத்து ரெண்டாம் நாள் பாலூத்தின சடங்கு முடிஞ்சு வந்து… திரும்பத் திரும்ப கம்பல் பண்ணி ஆர்லிக்ஸ் மட்டுந்தான் குடிக்க வைச்க முடிஞ்சுது… இன்னக்கி காலையில இருந்து காபி கூடச் சாப்பிடல..ஒங்கள மாதிரி ஆட்கள் வந்து எடுத்துச் சொன்னா கேப்பாங்கன்னு நெனைக்கிறேன்.. கொஞ்சம் வரமுடியுங்களா…? சிரமத்துக்கு மன்னிக்கணும்…” “ஒரு செரமமும் இல்ல.. அவசியம் வர்றேன்…” அச்சக வேலையாட்கள் வந்தவுடன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினார் தேவதாஸ். இந்த தேவதாஸ் பதினோராம் வகுப்பு வரை படித்து விட்டு வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தார். உள்ளூரில் எதாவது தொழில் செய்யலாம் என்றெண்ணி… என்ன செய்யலாம் இந்த ஊருக்கு சாத்தியப்படும் தொழில் எது என்று குழம்பி… சுந்தரராமனிடம் போய் யோசனை கேட்டார். அவர் வழங்கிய ஆலோசனையின் பேரில் அச்சகம் ஆரம்பித்தார் தேவதாஸ். ‘பாரதி அச்சகம்’ என்று அச்சகத்திற்குப் பெயர் சூட்டி அச்சகத்தை சுந்தரராமன் திறந்து வைத்தார். அவரது கைராசி ஐந்து பணியாளர்களுடன் ஆரம்பித்த அச்சகம் இன்று பதினைந்து பேர்களுக்கு வேலை தருகிற வகையில் ஆல் போல் தளைத்து… அருகு போல் வேர் விட்டிருக்கிறது. அடிக்கடி சுந்தரராமனைச் சந்தித்து உரையாடி அவ்வப்போது அறிவுரை பெறுவார் தேவதாஸ். அவருக்குத் தேவைப்படும் உதவிகளை முகமலாச்சியுடன் செய்து சுந்தரராமன்-அம்புஜம் தம்பதியருக்கு செல்லப் பிள்ளையாகத் திகழ்ந்தார் தேவதாஸ். அதன் அடிப்படையிலேயே அம்மாவிற்கு ஆறுதல் கூறி அவரை சாப்பிட வைக்க தேவதாஸ் அழைக்கப்பட்டுள்ளார். “வாப்பா தாசு எல்லோரோடயும் சேந்து அய்யாவ கோலாகலமா அனுப்பி வச்சிட்டிங்க.. இவ்வளவு ஜனங்க துக்கத்துக்கு வந்து… ம்…போட்ட மாலைகளே… ஒரு லாரி இருக்கும் போல… இந்த மாதிரி எங்க சொந்தங்கள்ல யாருக்கும் இப்படி நடந்ததில்ல…” “ஆமாம்மா… தொண்ணூறு வயசு வரைக்கும் வாழ்ந்தது பெரிசில்லம்மா… நோய் நொடி அண்டாம வாழ்ந்தாரு பாருங்க அதுதான் ஆச்சரியம்… படுக்காம நடமாட்டம் இல்லாம ஒங்கள கொஞ்சம் கூட சங்கடப்படுத்தாம போய்ட்டாரு… அத நெனச்சு திருப்திப்படுங்க… தேவையில்லாம எதுக்கு கவலப்பட்டு சாப்பிடாமக் கொள்ளாம இருந்து… பெத்த பிள்ளைங்க மனசக் கஸ்டப்படுத்தறீங்க…” “இருபது வயசில அவருக்கு கழுத்த நீட்டி அவரோட அறுபத்தி அஞ்சு வருசம் வாழ்ந்திருக்கேன்… அறுபத்தி அஞ்சு வருச நெனப்புக்கள் ஒண்ணொன்னா வராம இருக்குமா..? என்னோட அக்கா ஒருத்திக்கு கல்யாணமான ரெண்டு வருசத்தில புருசன் போய்ட்டாரு.. அவளுக்கு ரெண்டு வருசத்து புருசனோட ஞாபகந்தான் வந்து போகும்… எனக்கு அப்பிடி இல்லையே.. அறுபத்தி நாலு கல்யாண நாட்கள கொண்டாடி இருக்கோமே…” “வியட்நாம் வீடுன்னு பழைய படம் ஒண்ணு… அதில சிவாஜியும் பத்மினியம் புருசன் பெண்சாதியா நடிச்சிருப்பாங்க… அது மாதிரி நாங்க வாழ்ந்திருக்கோம்… உன் கண்ணில் நீர் வடிஞ்சா… எந் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி.. இது ரெண்டு பேருக்கும் பொறுந்திர மாதிரி இருந்தோம்… அத நெனைக்க நெனைக்க.. வர்ற கண்ணீரக் கட்டுப்படுத்த முடியலையே தாசு… வாக்கப்பட்டவரு வயதாகி செத்ததால வருத்தம் இருக்காதுன்ன ரெம்பப் பேரு நெனைக்கலாம்.. அது தப்பு.. அத்தன வருச சம்பவங்களும் வரிச கட்டி… வந்து நின்னு ஆட்டிப் படைக்கிது.. இப்பிடியான சந்தர்ப்பத்தில சாப்பிட எப்படி மனசு வரும்…? கல்யாணச் சாவு வருத்தமில்லாத இறப்புன்னு சொல்றதெல்லாம் மத்தவுங்களுக்குத்தான்… கட்டுனவளுக்குப் பொறுந்தாது… நான் போயி அவரு இருந்தாலும் அதே நெலமதான்…” வயசாகி கணவனோ மனைவியோ இறந்தால் அவர்களுக்கு இப்படியொரு நுட்பமான துயர நிலை உண்டென்பதை அம்புஜதம்மாளின் சோக சொற்களால் அறிய முடிந்தது. ஆறுதல் சொல்லி அவரை அமைதிப்படுத்தி சாப்பிட வைக்க வந்த தேவதாசுக்கு என்ன கூறி சமாதானப்படுத்துவது என்று விளங்கவில்லை. சோகம் தாங்கி கண் கலங்க அமைதி காப்பதைத் தவிர வேறு அபிப்ராயம் தோன்றவில்லை. மருதாணி - சே. தண்டபாணி தென்றல் -மார்ச் 1, 2020 […] “நா ஒன்னு கேப்ப மாட்டேன்னு சொல்லக் கூடாது”. அழகான பானு பொறுமையாக என்னிடம் அதுவும் முதன்முறையாகக் கேட்ட கேள்வி. முக மாறுதல் ஏதுமின்றி இயல்பாகவே முகத்தை வைத்துக் கொண்டு ‘ம்ம் சொல்லு’ என்றேன். சரவணனும் பானுப்பிரியாவும் விடுதியில் தங்கி முதுகலை படித்துக் கொண்டிருக்கிறார்கள். சகவகுப்பு மாணவர்கள். முதல்நாள் வகுப்புக்கு வந்ததுமே பானுவென்று தெரியாத பானுதான் சரவணன் கண்ணுக்குத் தெரிந்தாள். அழகாக இருப்பவர்கள் இந்த ஜென்மத்தில் நம்முடன் பேசமாட்டார்கள் என்பது சரவணன் இளங்கலை படித்த கல்லூரியில் கண்டுகொண்ட விஷயம் அல்லது அனுபவப் பாடமாகும். அதனால் எப்போதும் போல கடைசி பெஞ்ச் வா வாவென அவனை அழைத்து உட்கார வைத்துக் கொண்டது. பானுப்பிரியா தன் அழகான கூந்தலை காதிற்கு வராமல் கோதி விட்டுக் கொண்டாள்.தலைக்கு குளித்திருந்ததால் அடிக்கடி முகத்திற்கு ரயில்வே கேட் போல வந்து நின்றால் ஒதுக்காமல் என்னதான் செய்வது. பக்கத்தில் உள்ளவர்களிடமெல்லாம் பேசிக் கொண்டே சிரித்தாள் அல்லது புன்னகைகளை மரமல்லி பூக்களைப் போல உதிர்த்துக் கொண்டேயிருந்தாள். சரவணன் முகம் திருப்பி நோட்டை எடுத்தான். முதல் நாளின் இறுதி மணி ஒலித்தது. எல்லோரும் கல்லெறியாமலேயே தேன்கூட்டிலிருந்து தேனீக்கள் குடிபோவதைப்போல வகுப்பிலுள்ள மேஜை, கரும்பலகையிடம் சொல்லாமல் கலையத் துவங்கினர். மாலை ஐந்து மணிக்கும் மேல் இருக்கும். நித்யா மேமின் ஆய்வகத்தில் சரவணன் உட்பட ஜாஸ்மினும் பானுவும் அமர்ந்திருந்தனர். சௌகார்த்திகா அப்போதுதான் மாடிக்கு டெஸ்ட்டியூப் சகிதம் சென்றிருந்தது, இங்கு ஒரு ஆள் குறைவதற்கான காரணமாகும். இரண்டாமாண்டு என்பதால் ஆய்வறிக்கைக்காக நால்வரும் ஒரே ஆய்வகத்தில் சேர்ந்திருக்கின்றனர். இவ்வாறு, அதுவும் இந்த ஆய்வகம் வர நித்யா மேமே முழுமுதற் காரணமாக இருக்கலாம். வெறும் நடை, உடை, சொற்களில் பகட்டாக இருக்கும் பேராசிரிய கும்பலுக்கு மத்தியில் நிதர்சன பேராசிரியையாக இருப்பவர் நித்யா மேம். பல அரட்டைகள் முடிவிற்கு வந்து, எல்லோரும் ஏதேனுமொரு ஞாபகங்கள் வராத தருணத்தில் அப்போது ஜாஸ்மினும் லேபிற்கு வெளியே ஹெக்சேன் இருக்கிறதாவென தேடப் போயிருந்த சமயம் சரவணன் ஆரம்பித்தான். “இங்க எனக்கு கெடச்ச மொதோ பிரண்டே நீதான்” என்பதை ஏற்கனவே பானுவிடம் சொல்லியிருந்தாலும் அதற்கான பின்சம்பவங்களை சரவணனின் மனம் சொல் சொல் என்றது. பானுவைப் பார்த்தான் அதே அழகான முகம். “நானெல்லா நீ எங்கிட்ட பேசுவன்னு நெனச்சு கூட பாக்கல.” இதை கொஞ்ச நேரம் கழித்து வந்த ஜேஸ்மின் கேட்டதும் அய்யோடா. என பொதுவாக கூறிக் கொண்டாள். அன்று வெள்ளிக் கிழமையாகவேறு இருந்தது. “நாளிக்கு ஊருக்கு போரேனே …!” எதோ ஸ்கூல் பையனைப் போலச் சொன்னதும் பானு முதலில் குறிப்பிட்டதைச் சொல்லி “அப்டீனா மருதாணி கொண்டுவா.. அப்டியே வெறுந் தலைய இல்ல அரச்சுதான். எங்க ஹாஸ்டல்ல அரைக்கறதுக்கு ஒன்னும் வசதியில்ல”. “ம்ம் சரி” என்று சரவணன் சொல்லி வைத்தான். வீட்டிற்கு வர வர மருதாணி நெனப்பாவே இருந்தது. பேசஞ்சர் ரயில் ஒரு பக்கம் கிராசிங் அலையில் ஆமையைத் தோற்கடித்துக் கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்ததும் பேக்கை வைக்காமலே சரவணன் மருதாணியைத்தான் சென்று பார்த்தான். “இன்னிக்கு நைட்டே பறிச்சு அரச்சு எடுத்து வெக்கனும்.” கேட்டது பானுவென்பதால் சற்று அதீத கவனம் சரவணனுக்கு இருந்ததில் வியப்பொன்றுமில்லை. சனிக்கிழமை சாயங்காலம் வருவேனா என்றது. அது வருவதற்குள் சரவணன் மருதாணி பற்றிய யோசனையில் சாய்ந்தான். ஆடுமேய்க்கச் சென்ற அம்மா இன்னமும் வரவில்லை. மருதாணிக்கு மருதாணியென்று பெயர் வைத்தவன் சுத்த முட்டாளாகத்தான் இருக்கவேண்டும். காட்டின்மேல் வீடிருக்கிறது. வீட்டிற்கு பக்கத்தில் மருதாணிச் செடியிருக்கிறது. அப்படியென்றால் காட்டைக் குறிக்கும் ஆதிப் பெயரான முல்லாணி என்றல்லவா வைத்திருக்க வேண்டும். எந்த வயலில் மருதாணி இருந்திருக்கிறது. ஒருகாலத்தில் காட்டு விலங்குகளாகத் திரிந்த ஆடு மாடுகளை தற்போது வீட்டு விலங்குகள் என்று குறிப்பிடுவதைப் போல மருதாணி விஷயத்திலும் நிகழ்ந்திருக்கலாம். சரவணன் தனக்குத் தானே உபாயங்களையும் கூறிக் கொண்டான். தூக்கம் கண்ணைத் திமிறிக் கொண்டு வந்தது. தூங்கிப்போனான். சரவணன் அன்று காலை விழிக்கும்போது காலை ஆறு மணியாகியிருந்தது. அன்று பார்த்து பல் குச்சி ஒடிக்கச் சென்ற வாத்தி என்கிற திருமலைவாசன் கையில் ஒரு பூவோடு வந்திருந்தார். எந்தப் பெண்ணும் கொடுத்திருக்க ஒரு துளிகூட வாய்ப்பில்லை. விதிவிலக்காக ஒருவேளை அவரின் தங்கச்சி கொடுத்திருக்கலாம். “சரவணன் இது என்ன பூவுன்னு சொல்லுங்க பார்ப்போம்?” மூக்கினருகில் வைத்துக் கொண்டே கேட்டார். சரவணன் முகர்ந்தான். எல்லா பூக்களின் மகரந்தங்களையும் ஒன்றுசேர வைத்து ஒரு மலர் செய்த மணமொன்று மெல்ல மெல்ல கமழ்ந்தது. அது தேன் கூட்டில் மேலுள்ள தேன் ராட்டைப் பிய்த்தால் அதற்கு கீழிருக்கும் மகரந்த அடையின் வாசம். மல்லி, முல்லை, செண்பகமென்றால் படக்கென்று சொல்லி விடாலாம்தான் . +2வில் தாவரவியல் படித்தது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது. அடையாளமற்ற வழியில் ஒரேவழி அதன் மணம்தான். இப்போதோ அதுவும் தெரியவில்லை. “தெரியலிங்களே வாத்தி”. பொய்க் கனியை பூசி மெழுகுவதைவிடவும், உண்மைக் காயை படக்கென்று கடிக்கக் கொடுத்துவிடுவது சாலச் சிறந்தது. "அட என்ன சரவணன் இதுங்கூடத் தெரியல நீலா எம்எஸ்ஸி படிச்சு. வழக்கமான நீண்ட அறுவைக்குப் பிறகு வாத்தியின் வாய் உதிர்த்தது. மருதாணி. மாலை ஆறு மணியாகியிருந்தது. வீட்டில் தூங்கிய சரவணன் விழித்ததும் இருள் மெல்ல மெல்ல மரம், செடி கொடி, நிலங்களை ஒளித்து வைக்கத் துவங்கியிருந்தது. திடுமென எழுந்த சரவணன் முறத்தை எடுத்தான். அதிலுள்ள சாணிப்பத்துகள் வெடித்துக் கிடந்தன. இப்பொழுதெல்லாம் பிளாஸ்டிக் முறங்கள் பக்கத்து வீடுகளுக்கு வந்திருந்தன. கிழக்கில் தென்னை மரத்திற்குப் பக்கத்தில் இருந்த இரண்டு மருதாணிச் செடிகளை நோக்கி நடந்தான். முன்பெல்லாம் அதாவது சரவணன் தக்கடா புக்கடாவென நடக்கும்போது வீடே படு கொண்டாட்டமாக இருக்கும். அதிலும் முக்கியமான நோம்பி நொடிகளில் யாரையுமே கையில் பிடிக்க முடியாது. பெருங்கடைகளை பின்னுக்குத் தள்ளும் அளவிற்குப் பலகாரங்கள் மற்றும் முதியோர் கூறும் புராண நாட்டுப் புறக் கதைகள் என எல்லோரும் கதைபேசி இரவுக்குத் துணையாக தன் தூக்கத்தை மறந்து கிடப்பார்கள். நோம்பிக்கு முந்தாநாளே மருதாணி அரைக்க ஆட்டாங்கல் தயாராகிவிடும். பக்கத்து வீட்டு சரசுமணி, சின்னப்பேபி, பெரிய பேபி ஆகிய இளவட்டங்களால் கொளவிகல் சதா வட்டமடித்துக் கொண்டேயிருக்கும். வெறும் மருதாணி தலை (இலையின் பேச்சு வழக்கு) மட்டும் அவர்களுக்குப் போதாதாம். எலுமிச்சை, பாக்கு என பக்கத்து வீட்டு சக இளஞிகள் சொன்னதைக் கலந்து சுற்றிக் கொண்டிருப்பர். அப்படினாதா செக்கச் செவேன்னு செவக்கும். சரசுமணியின் அண்மை ஆய்வு முடிவுகூட அவர்களின் கூற்றுக்கு ஒத்துப் போனதில் யாருக்கும் வியப்பேதுமில்லை. சரவணனுக்கு பேரதிர்ச்சி அல்லது வறட்டு இடி அங்கு காத்திருந்தது. எல்லா மருதாணித் தலைகளையும் ஆடு பதம் பார்த்திருந்தது. அதன் நுனியிளம் குச்சிகள் கூட விஞ்சியிருக்கவில்லை. ஆனாலும் சரவணன் அதனருகில் நடந்தான். எஞ்சியிருந்த கொத்துக் கொத்தான மருதாணி விதைகளை நசுக்கி அருகிலுள்ள மண்ணில் தூவி நிலத்தைக் கீறினான். டப்பாவில் இரண்டு முறை தண்ணீரை அள்ளித் தெளித்தான். நாளை அல்லது நாளைக்கு மறுநாள் மருதாணி விதைகள் முளைக்கும். பிறகு பானுவின் முதல் எழுத்தைப் போன்ற காகிதத்தில் அதே முதல் எழுத்தைக் கொண்டு ஒரு பதியம் தயார்செய்ய நினைத்தபடியே அவ்விடத்தைவிட்டு சரவணன் நகர்ந்தான். மருதாணிச் செடியைக் கடித்துக் குதறிய வெள்ளாடுகள் அம்மாவுடன் வீடு வரத் துவங்கியிருந்ததை சரவணன் கோபத்துடன் திரும்பிப் பார்த்தான். அதிஷ்டவசமாக அவற்றின் முகங்கள் பானுவின் முகத்தைப் போலவே இருந்தன. FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.