[] [வினவு சிறுகதைகள்] வினவு சிறுகதைகள் http://www.vinavu.com/ மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை [Creative Commons License] This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - வினவு சிறுகதைகள் - அறிமுகம் - 1. அப்ரசைல் - 2. கொழுப்பு - 3. விஷக்காலிகள் - 4. நான் விபச்சாரியா இல்லேங்கிறதுதான் அவன் கவலை ! - 5. ஏம்மா ஒரு எலுமிச்ச சாதம் என்ன விலைம்மா ? - 6. எங்க ஊரு காதலுக்கு சாந்தியக்காதான் தலப்புதாரி - 7. தாய்ப்பால் சோசலிசம் - 8. பணிவின் பாடு - 9. ராமன் இரட்டைக் கொலை வழக்கு – நாடகம் - 10. எங்க ஊரு சாயப்பு வாணக்காரய்யா - 11. வள்ளியின் கதை - 12. ஜில்லெட்டின் விலை - 13. சோவியத் சிறுகதை: வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு ! - 14. சத்யசாய் அபார்ட்மென்ட்ஸ் ! - 15. காதல் ! - 16. வர்க்கம் ! - 17. கான்ஸ்டபிள் அய்யம் பெருமாள் கதை ! - 18. கருப்பாயி ! - 19. சுஜாதாவின் ‘மத்யமர்’ : நடுத்தர வர்க்கத்தின் போலி அறம்! - 20. “நார்மல்” - 21. கம்பீரம் – ஒரு உண்மைக் கதை ! - 22. உண்மைச் சம்பவம் : மண்ணுள்ளிப் பாம்பிடம் மயக்கம் ! - 23. கல்லறைக் கருநாகங்கள்! – உண்மைச் சம்பவம்! - 24. கருணையா, கொலையா? வரமா, சாபமா? – உண்மைச் சம்பவம்! - 25. பிச்சை புகினும் கற்கை நன்றே… - 26. திருட்டு ‘தம்’மினால் பிரபலமான கடவுள்! - 27. குடி’காத்த மாரியம்மன்! - 28. ” நடனத்திற்குப் பின் ” – டால்ஸ்டாயின் புகழ்பெற்ற சிறுகதை! - 29. அபின் - 30. சிரிக்க முடியாத வாழ்க்கை! - 31. டேய், யாராவது பக்கத்துல உட்காருங்கடா! - 32. பிராமீன் - 33. தேர்தல் - 34. ஒரு பொம்மையும் சில மனிதர்களும்! - 35. எழுத்தரின் மரணம்! – ஆன்டன் செகாவ் - 36. வேசி… அறம்… அனுபவம்..! - 37. காங்கோ சிறுகதை: கடன் - 38. ‘பால்’ திரிந்த வேளை! - 39. ஒரு மல்டிலெவல் மார்க்கெட்டிங்கின் மனக்கோணங்கள்! - 40. எது பிரெய்ன்வாஷ் – குட்டிக் கதை! - 41. குசேலன் உள்குத்து…. சும்மா அதிருதில்ல ! - 42. நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்! - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி 1 வினவு சிறுகதைகள்   [Cover Image] வினவு சிறுகதைகள் வலைத்தள முகவரி – http://www.vinavu.com/   அட்டைப் பட வடிவமைப்பு – மனோஜ் குமார் –  socrates1857@gmail.com மின்னூலாக்கம் – ஜெயேந்திரன்  – vsr.jayendran@gmail.com உரிமை – Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License 2 அறிமுகம்   வினவு என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற புரட்சிகரப் பண்பாட்டு அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப்  பகிர்ந்து கொள்வதே வினவின் நோக்கம். இந்து பத்திரிகைக்கு லெட்டர் டு எடிட்டர் எழுதுபவருக்கும் வலைப்பூவின் பதிவருக்கும் என்ன வேறுபாடு? முன்னவரின் கொள்கை வேகமும், நோக்கமும் பின்னவருக்கு உண்டா? இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பல குளியலறைப் பாடகர்களை வலைப்பூ, மேடைக் கலைஞர்களாக மாற்றியிருப்பது உண்மையே. எனினும் இந்த வலைப்பூ மோகம் இளம்பருவக் கோளாறாக, சம்சார சாகரத்தில் மூழ்குமுன் இளமைக்கு வாய்க்கப்பெற்ற ஒரு உல்லாசப் படகுச் சவாரியாக ஆகிவிடக்கூடாது என்பதே எம் விருப்பம். வயிற்றுப் பாட்டுக்காக எங்கோ ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு விரட்டப்பட்ட மதுரைக்காரரும், கனடாவில் கோப்பை கழுவும் ஒரு ஈழத்தமிழரும், சென்னையின் ஒரு ஐ.டி தொழிலாளியும் ஒரே நேரத்தில் வினவின் பதிவுகளைப் படிக்கிறார்கள். மொழி எனும் வரம்பைக் கடந்துவிட்டால் ஒரு கருப்பினத் தொழிலாளியும், வெள்ளையினத் தொழிலாளியும் கூட நம் கலந்துரையாடலில் பங்கேற்க முடியும். “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றார் கார்ல் மார்க்ஸ். உலகத் தொழிலாளி வர்க்கத்தைச் சூறையாடும் உலக முதலாளித்துவத்தையும், அதன் பங்குச் சந்தை சூதாடிகளையும், உலகப் பணக்கார வர்க்கத்தின் உல்லாச வக்கிரங்களையும் ஒரு சொடுக்கில் பரப்புகிறது இணையம். வங்கி முதலாளிகளின் நிதிமோசடியால் வீடிழந்த அமெரிக்கனின் உணர்வையும், வேலையிழந்த சென்னை ஐ.டி தொழிலாளியின் உணர்வையும் ஒரு வலைப்பூவால் இணைக்க முடியாதா? தேசத்தால், நிறத்தால், இனத்தால் வேறுபட்ட உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையை, போராட்டத்தை, எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, அவை குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் பொதுவானதோர் கனவை, இலட்சியத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியாதா? முடியும் என்றே நம்புகிறோம். இது கொஞ்சம் பேராசைதான். இணையம் எனும் இந்த மெய்நிகர் உலகில் (virtual world) ஒரு பதிவர், தன் மெய்யுடலை மறைத்துக் கொண்டு கருத்துகளை மட்டும் உலவச்செய்யலாம் என்ற சாத்தியம், இணையத்தை ஒரு மெய்நிகர் திண்ணையாக்கியிருப்பதையும் காண்கிறோம். எள்ளல், அங்கதம், சம்பிரதாயமின்மை, கலகம் என்ற வண்ணங்களை இழந்து வலைப்பூக்கள் சீருடை அணிவகுப்பு நடத்தத் தேவையில்லை. அதே நேரத்தில் திண்ணைகளுக்கு வண்ணம் தீட்டுவதால் பயனும் இல்லை. அரட்டையாளர்கள் கேள்வி கேட்பதில்லை. பதிலும் அளிப்பதில்லை. அறிவியலின் உன்னதத்தை ‘சொடுக்குப் போட்டு’ அழைக்கும் பல பதிவர்களின் கைகள் அரசையும் மதத்தையும் கைகூப்பித் தொழுகின்றன. சாதியின் விரல் பிடித்து நடக்கின்றன. சமூக அநீதிகள் கண்டு நடுக்கம் கொள்கின்றன அல்லது எனக்கென்ன என்று தோளைக் குலுக்குகின்றன. அரட்டைக்கும் செயலின்மைக்கு இணையம் வழங்கியிருக்கும் இந்த வாய்ப்பை உதறுங்கள் என்று கோருவதற்காகத்தான் எமது வலைப்பூவுக்கு வினவு, வினை செய் என்று பெயரிட்டிருக்கிறோம். மெய்யுலகத்தின் அநீதிகளிலிருந்து மக்களை விடுவிக்கும் பணியை மெய்நிகர் உலகமும் ஆற்ற வேண்டும் என்பதே எம் அவா. மாற்றுக் கருத்து கொண்டோர் உரையாட வருக. ஒத்த கருத்துள்ளோர் வினையாற்ற வருக. நாம் மெய் நிகர் மனிதர்களல்ல, மெய் மனிதர்கள்.     [pressbooks.com] 1 அப்ரசைல் எந்த நேரமும் பித்துப் பிடிச்சா மாதிரி வெறிச்சிப் பார்த்துகிட்டே இருக்காருண்ணே. என்னா ஏதுன்னு கேட்டா எரிஞ்சி எரிஞ்சி விழுறாரு. ஏண்ணே, இந்தக் கம்பேனிக்காரவுக வேலை பாக்குறவங்கள பித்து பிடிக்க வைக்கிறாங்க?” “கைய்ஸ்.. அயம் வெரி ப்ரௌட் டு ஹேண்ட் ஓவர் மை ரெஸ்பான்சிபிலிட்டீஸ் டு அவர் ஒன் அண்ட் ஒன்லி அனந்தா.. ஆல் நோ ஹி டிசர்வ்ஸ் திஸ் பொசிஷன். லெட்ஸ் கிவ் ஹிம் எ பிக் ஹேண்ட்” ( நண்பர்களே, என்னுடைய பொறுப்பை நமது அனந்தாவுக்கு கொடுப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். அவருக்கு உங்களுடைய பாராட்டை கை தட்டி தெரிவியுங்கள்). [it-stress-4]வாய் நிறைய சிரிப்பும் மனம் நிறைய வெறுப்புமாய் சித்தார்த் தனது சிற்றுரையை முடித்து வைக்க அறுபது பேர் கூடியிருந்த அலுவலக ஆலோசனை அறையில் (conference room) கைத்தட்டல் நிற்க மூன்று நிமிடங்கள் பிடித்தது. வெட்டப்பட்ட கேக்கின் மேல் பகுதியிலிருந்து வழித்தெடுக்கப்பட்ட க்ரீமை அனந்துவின் முகத்தில் அபிஷேகம் செய்து வைத்தார் சித்தார்த். மற்றவர்கள் அந்த சடங்கை தொடர்ந்தனர், அதில் சில எதிர்கால அனந்துக்களும் இருந்தனர். தேனீர் விருந்து முடிய இரவு பத்தாகி விட்டது. அனந்துவின் டிசையர் காரில் முதன் முதலாக பயணிக்கிறேன். ”நீ நினைச்சது நடந்தாச்சி. அப்புறம் ஏண்டா முகத்தை உர்ருன்னே வச்சிட்டு இருக்கே?” ”மச்சி! வள்ளியோட நிலைமை கொஞ்சம் மோசமா இருக்கு. இப்பல்லாம் சுத்தமா பேசவே மாட்றா. வீட்டுக்குப் போகணும்னு நினைச்சாலே என்னவோ மாதிரி இருக்கு. பேசாம ஆபீஸ்லயே இருந்துடலாம்னு தோணுது. நீ எதுனா சொல்லேன். வேணும்னா நீயும் உன் வொய்பும் வந்து அவட்ட ஒரு தரம் பேசிப் பார்க்கறீங்களா?” நான் பேசவில்லை. இது பற்றி நானே கேட்டாலும் நீ பேசக் கூடாது என்பது அவனது உத்தரவு. ஆறு மாதங்களுக்கு முன்பு…………….. “ஆறு வருசமா என்னோட ரேட்டிங் (மதிப்பு) அவுட்ஸ்டேண்டிங்ல போயிருக்கு மச்சி. இத்தனை வருசமா என்னோட அப்ரெய்சல் பர்சண்டேஜ் (பணித்திறன் விகிதம்) உங்க எல்லாரையும் விட அதிகம். இதெல்லாம் சும்மா வரல்லே. ராத்ரி பகல்னு பார்க்காமே நான் கஷ்டப்பட்டிருக்கேன். இப்ப நீ என்னா சொல்றே… எல்லாத்தையும் தூக்கிக் கடாசிட்டு பொண்டாட்டிய சுத்தி பாத்துட்டு வீட்ல இருக்கச் சொல்றியா?” “அனந்தா உனக்கு நல்ல ரேட்டிங் குடுத்திருக்கானுகன்றது சரி தான். அதே மாதிரி உனக்குத் தான் அப்ரைசல் பர்சண்டேஜும் அதிகம். ஆனா எவ்ளோ அதிகம்? எல்லோருக்கும் 10 குடுத்தா உனக்கு 10.5 தர்றான். மத்தவங்களுக்கு 12 குடுத்தா உனக்கு 12.5. இந்த அரை பர்சண்டேஜுக்காக நீ வாழ்க்கைல நிறைய மிஸ் பண்றேன்னு புரியலையா?” ”மத்தவனுக்குத் தான் பொறாமைன்னா உனக்குமாடா? காசுன்னு பாத்தா கம்மி தான். பட் (ஆனால்), டாப் மேனேஜ்மெண்ட் (மேல்மட்ட நிர்வாகம்) வரைக்கும் நான் விசிபிளா (பார்வையில்) இருக்கேண்டா. நம்ம டிவிஷன்ல (பிரிவில்) எதுன்னாலும் வி.பி (துணைத் தலைவர்) என்னைத் தான் கூப்டு பேசறாப்ல. பிராஜக்ட் மேனேஜரை (திட்ட மேலாளர்) கூட அவர் நம்பரதில்லை. அடுத்த வருசம் சித்தார்த் சாரை நீல்சன் பிராஜக்டுக்கு (திட்டத்துக்கு) மாத்திடுவானுக. அப்ப இந்த டிவிஷனுக்கு நான் தான் பி.எம். உனக்கும் சேர்த்துத் தான். புரியுதா?” “புரியுது. ஆனா அதுக்காக நீ எவ்ளோ இழந்திருக்கே தெரியுதாடா?” [sad woman] நீண்ட மௌனத்தையும் அதன் கூடவே நிறைய புகையையும் வெளியேற்றினான். “நீ சொல்றது புரியுது.” ”சரி என்னா செய்யப் போறே?” “தூக்கித் தெருவில வீசிடலாம்னு தான் ஒரு சமயம் தோணுது. ஆனா… த்தா பாக்க பாவமாவும் இருக்கு. என்னையே நம்பி வந்தவ. சனியன்… ஒரு சமயம் ஏன் தான் கல்யாணம் செய்தோம்னு இருக்கு. ஒரு சமயம் பயமாவும் இருக்கு. இப்டியே இருந்து எதையாவது இழுத்து வச்சிட்டான்னா என்ன செய்ய முடியும்? என்ன தாண்டா செய்யச் சொல்றே? எதுனா சைக்யாட்ரிஸ்டு (உளவியல் மருத்துவர்) கிட்டே காட்டலாமா?” “சைக்யாட்ரிஸ்டு கிட்டே காட்டலாம். ஆனா அவளை மட்டும் இல்லே, உன்னையும் தான். மனசாட்சியை தொட்டு சொல்லு அனந்தா… நீ காரணமில்லே?” நீண்ட மௌனத்திற்குப் பின் வாய் திறந்தவன், “மச்சி சொல்றேன்னு தப்பா நினைக்காதே. இனிமே இந்த மேட்டர் (பிரச்சினை) பத்தி என்ட்டே நீ எதுவும் பேசக்கூடாது. நானா கேட்டாலும் எதுவும் சொல்லக் கூடாது. சொன்னியன்னா நம்ம ப்ரென்ஷிப் (நட்பு) அத்தோட கட்டாயிடும். ஓக்கே?” அன்றிலிருந்து அனந்துவுக்கு அலுவலகமே வீடானது. உழைப்பு மட்டுமே உயர்வைக் கொடுத்து விடாத கார்ப்பரேட் சூழலில் உள்ளரசியல் ஒன்றே அவனுக்குக் கைகொடுத்தது; அனந்து அதில் நிபுணன். சித்தார்த்துக்கு யாரையெல்லாம் பிடிக்காது என்பதையும் யாருக்கெல்லாம் சித்தார்த்தை பிடிக்காது என்பதையும் நுண்ணுணர்வோடு மோப்பம் பிடித்து காய் நகர்த்தினான். மூன்று மாத இறுதியில் அவன் எதிர்பார்த்த அப்ரெய்சல் (பணித்திறன்) முடிவுகள் அவன் எதிர்பார்த்த வண்ணமே வந்தது. கழுத்தறுப்புப் போட்டியில் வெற்றி. ஆனால், வள்ளியம்மை வேறு திசையில் பயணித்திருந்தாள். ஊரில் இருந்த காலத்திலிருந்தே எனக்கு வள்ளியம்மையைத் தெரியும். குணத்தில் அனந்தாவுக்கு நேர் எதிர். டிபிக்கல் காரைக்குடி “அட இந்த நெய் முறுக்கு சூப்பரா இருக்கே” – ஆறே ஆறு வார்த்தைகள் போதும். ”அண்ணா… தோ இந்த பாத்திரம் புல்லா நிரப்பிருக்கேன். அண்ணிக்கும் கொண்டு போய் கொடுங்களேன்”. தின்ன வைத்து திணறடித்தல் இருந்தாலும் மற்றவருக்காக முசிந்து வேலை செய்யவும் ஒரு கருணை அவளிடம் எப்போது இருந்தது. காரைக்குடியில் வள்ளியம்மையின் குடும்பம் பெரியது. நாங்கள் ஒரே ஊர்தான். அனந்துவும் எங்கள் ஊர் தான்; பக்கத்துத் தெரு. அண்ணன், அக்காள், தங்கை, தம்பி அப்புச்சி, அம்மச்சி, தாத்தாக்கள், சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், மாமா மாமிகள், மச்சான்கள்… தமிழில் உறவு முறையைச் சொல்ல என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையிலும் குறைந்தது இரண்டு பேர்கள் வரை இருப்பார்கள். வள்ளியம்மை ஊரில் இருந்த ஒரு பள்ளியில் கணக்கு டீச்சராக சில வருடங்கள் வேலை பார்த்தாள். மிக தூரத்தில் பார்த்தால் எனக்கு சகோதரி. [it-office]“அண்ணே இந்த பெங்களூர்ல எப்போயும் எழவு வுழுந்தா மாதிரியே எல்லாரும் இருக்காங்களே ஏண்ணே?” “அண்ணே நீங்க அடுத்த முறை வரும் போது அண்ணிய கூட்டி வாங்களேன். இந்த நாலு வருசத்தில நாலு சொவத்தை தாண்டி யாரையுமே தெரியாம போச்சின்னே. அவுக அஞ்சாவது சொவருண்னே” “அது என்னா அப்பிரெய்சல்? எந்த நேரமும் இவுக அதே சிந்தனையாத்தேன் இருக்காக. சாப்பிடும் போது கூடவா உர்ர்ருன்னே இருப்பாக?” ”சதா நேரமும் கம்பேனி நெனப்பாவே இருக்காகளே.. ஒங்க மொதலாளி அவுக லாபத்திலேர்ந்து இவுகளுக்கு தனியா எதுனா தர்றேன்னு சொல்லிருக்காகளா?” “எந்த நேரமும் பித்துப் பிடிச்சா மாதிரி வெறிச்சிப் பார்த்துகிட்டே இருக்காருண்ணே. என்னா ஏதுன்னு கேட்டா எரிஞ்சி எரிஞ்சி விழுறாரு. ஏண்ணே, இந்தக் கம்பேனிக்காரவுக வேலை பாக்குறவங்கள பித்து பிடிக்க வைக்கிறாங்க?” வள்ளியம்மையின் கேள்விகள் மிக எளிமையானவை தான்; எனது குழப்பமெல்லாம் ‘கார்ப்பரேட் முதலாளித்துவத்தை வள்ளிக்கு எங்கேயிருந்து சொல்லிப் புரியவைப்பது?” என் மனைவியும் வள்ளியம்மையும் ஊரில் இருந்தே தோழிகள் தான். அனந்தா என்னிடம் புலம்புவதும் வள்ளி என் மனைவியிடம் புலம்புவதுமாக மாதங்கள் ஓடின. “சம்திங் ராங் (ஏதோ தவறு) மச்சி. எப்ப பாரு எதையோ இழந்தவ மாதிரியே இருக்கா. நான் என்ன குறை வச்சிருக்கேன்? தோ.. பழைய ஜென்னை (மாருதி கார்) கடாசிட்டு டிசையர் இறக்கி ஒரு வருசம் கூட ஆவலை. ஜ்வெல்ஸ் (நகைகள்) வாங்கிக் குடுத்திருக்கேன்… பட் அவ கிட்ட என்னவோ பிரச்சினை இருக்குடா” [it-depression]“அன்னிக்கெல்லாம் நைட்டு ஒரு ரெண்டு மணி இருக்கும். திடீர்னு தூக்கத்திலேர்ந்து முழிச்சி பார்க்கறேன். தலைய விரிச்சிப் போட்டுட்டு பேய் மாதிரி வெறிக்க வெறிக்க ஒக்காந்துனு இருக்கா. பேஜாராயிடிச்சி மச்சி” “யார்ட்டயுமே பேச மாட்றாடா. நம்ம ஆபீஸ் கெட்டுகெதர்க்கு (அலுவலக விழா) அழைச்சிட்டு வந்தேன்ல. நீ கூட பாத்தியே… பட்டிக்காடு மாதிரி ’பே’ன்னு முழிச்சிட்டே இருக்கா” என் மனைவி வள்ளியை வீட்டில் சந்தித்து விட்டு வந்தாள். “வள்ளி ரொம்ப லோன்லியா பீல் (தனிமை சிந்தனை) பண்றா மாதிரி இருக்கு. எனக்கென்னவோ இது டிப்ரஷன்ல (மன அழுத்தம்) மாதிரி தெரியுது. உங்க பிரெண்டு கிட்டே சொல்லுங்க. இப்டியே விட்டா சீரியஸா எதுனா பிரச்சினை ஆயிடுமோன்னு நினைக்கிறேன்” “அவ சின்ன வயசுல விளையாடின பொம்மை ஒன்னு வச்சிருக்கா. அது ஏதோ உயிரோட இருக்கிற ஆள் மாதிரி நினைச்சு பேசறா சிரிக்கிறா. எனக்கே என்னவோ போல ஆயிடிச்சிங்க. சீக்கிரம் உங்க பிரெண்டு கிட்டே சொல்லுங்க” ஆனால், அதற்குள் அலுவலகத்தில் சாதிக்கும் வேலையில் அனந்து மும்முரமாகி புராஜக்ட் மேனேஜராகவும் (திட்ட மேலாளர்) ஆகியிருந்தான். பதவி உயர்வு கிடைத்து சில மாதங்களுக்குப் பிறகு… ”தப்புப் பண்ணிட்டமோன்னு நினைக்கிறேன் மச்சி. ஒருத்தன் காலை வாரிவுட்டு மேல வர்றது ஈசியா இருந்திச்சிடா.. இங்கே மிடில் லெவல்லே (நடுத்தர நிலை) என்னை மாதிரி ஏகப்பட்ட பேரு இருக்கான். எல்லா நேரமும் கவனமா இருக்க வேண்டியிருக்கு” “த்தா.. என்னால ரெவின்யூ (நிறுவனத்தின் வரவு) ஏறும் போது கூப்டு பல்லைக் காட்டினானுக. இப்ப ரெவின்யூ குறையும் போது கூப்டு சாவடிக்கிறானுக. இத்தனைக்கும் மார்ஜின்ல (இலக்கில் சற்று குறைவு) லேசா டவுன் ஆகியிருக்கு, அவ்ளோ தான். வீட்ல வேற வள்ளியோட நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சி. பயம்மா இருக்கு மச்சி” “வீட்ல பேசி ஒரு மாசமாச்சிடா. இந்த க்வார்ட்டர் டார்கெட்டுக்கு (காலாண்டு இலக்கு) இன்னும் 2 க்ரோர் பில் (2 கோடி) ஆகணும். ரெண்டே வாரம் தான் இருக்கு. பாஸ் கூப்டு லெப்ட் அண்ட் ரைட் சொருவிட்டாரு. எனக்கு வேற கொஞ்ச நாளாவே பட படன்னு அடிச்சிது. தெனமும் காலைல லேசா தடுமாறினுச்சி. போய் செக் பண்ணேன். ஆன்க்சைட்டின்னு (படபடப்பு) சொல்லி மாத்திரை குடுத்திருக்கானுக” நாள் ஒன்றுக்கு பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் மேல் நாற்காலியில் அமர்ந்து, தாகத்திற்கும் அவசரப் பசிக்கும் கோக்கை உள்ளே இறக்கி, மதியம் பற்றியெறிந்த வயிற்றுக்குப் பீஸாவும் பர்கரும் வார்த்து கம்பெனி நிர்ணயித்த காலாண்டு இலக்குகளை நிறைவேற்றத் தடுமாறிக் கொண்டிருந்த இடைவெளியில் 34 இன்சுகளாக இருந்த அனந்துவின் இடுப்பு 40 இன்சுகளானது. நின்றாலே மூச்சு வாங்கியது. ”மச்சான்.. இந்த எர்வாமேட்டின்  (தலையில் முடி வளர ‘அமேசான் காடுகளிலிருந்து கிடைக்கும் மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படும்’ தைலம்) சுத்த பிராடுடா. ங்கொய்யாலெ ஏழெட்டு லிட்டர் வாங்கி தலைய முக்கியே எடுத்திருப்பேன்; ஆனா இந்த ப்ளே க்ரௌண்டு (வழுக்கைத் தலை) மட்டும் விரிஞ்சி கிட்டே போவுது” இடையில் வள்ளியின் நிலைமை மோசமாகி அனேகமாக பேச்சையே நிறுத்தியிருந்தாள். முன்பொரு காலத்தில் பட்டாம் பூச்சியாக இருந்த அவளது இன்றைய கூட்டுப்புழு வாழ்க்கையைக் காண எனக்கு மனம் ஒப்பவில்லை. நான் அவளை இனிமேல் பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்தேன். அனந்து ஒரு முறை பேசும் போது வீட்டை ’பேய் குகை’ என்றான்; அலுவலகத்தை ’பிசாசுக் குழி’ என்றான். பிந்தையது அவனது விருப்பத் தேர்வாக இருந்த காரணத்தால் முந்தையதை அவனே உருவாக்கியிருந்தான். ஆரம்பத்தில் கவர்ச்சியாகத் தோன்றிய பிசாசுக் குழி அவனை மொத்தமாக உள்ளிழுத்து மூழ்கடித்தது. [it-stress]அனந்துவின் உழைப்பை மட்டுமின்றி, அவனது சொந்த வாழ்க்கை, நிம்மதி, ஆரோக்கியம் என்று சகலத்தையும் தின்று இலக்குகளை அடைந்த நிறுவனம் மூன்றாம் ஆண்டின் இறுதியில் ’இனி பிழிவதற்கு ஏதுமற்ற சக்கை இவன்’ என்று முடிவு கட்டியது. நான்காம் ஆண்டின் துவக்கத்தில் அனந்து ஒரு உப்புமா பிரிவுக்குத் தூக்கியெறியப்பட்டான். அந்தப் பிரிவுக்குச் செல்பவர்களின் நிறுவன வாழ்க்கை அடுத்த நான்கைந்து வருடங்களில் முடிந்து விடும் என்பது எழுதப்படாத விதி. நிறுவனம் என்கிற அந்த இயந்திரத்திலிருந்து ’கழிவுகளை’ வெளியேற்றும் குழாயாக அந்தப் பிரிவு செயல்பட்டு வந்தது. “மச்சி, திரும்ப ரெஸ்யூமை (சுய விவரங்கள்) ரெடி பண்ணனும்னு நினைக்கிறேன். ஐ.டி.ஐ.எல் சர்டிபிகேஷனுக்கு இப்பயும் வேல்யு இருக்கில்லே?” நான் பதில் சொல்லவில்லை. எனது பதிலை எதிர்பார்த்து நீண்ட இடைவெளி விட்டவன், பதில் வராததைக் கண்டு மெல்ல பேச்சைத் துவங்கினான். ”எங்கேயோ தப்பு பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். எங்கேன்னு தான் புரியலை” நான் பதில் சொல்லவில்லை. அறிவினாக்களுக்கு பதில் அளிப்பதில்லை என்று எப்போதோ தீர்மானித்திருந்தேன். -சுகுமாரன் 2 கொழுப்பு ”சீக்கிரம் எழு புள்ள, அப்படியே அந்த சூரி கத்திய தேடி எடுத்துக்குடு!” [கொழுப்பு]பயந்துபோய் சடாரென எழுந்து உட்கார்ந்து கொண்டு, சற்று நேரம் குழம்பினாள் குள்ளச்சி. ஏதும் பேச முடியாமல் இருமல் முந்திக் கொண்டது. ”ராமசாமிக் கவுண்டரு மாடு சொக்கிருச்சாம், பாவம் சோளப் பயிர தின்னுட்டுக்கீது. வந்து எழுப்பி டீ வாங்கி குடுத்துட்டு சொல்லிட்டுப் போராரு. மாட்ட சீக்கிரம் எடுத்துரணுமாம்.” ”அடப்பாவத்த, யான மாதிரி அந்த மாட்ட வச்சிருந்தாரு. நேத்து கூட வாசலுக்கு சாணி எடுக்க போனப்போ பாத்தனே! பாவம் பெத்த புள்ள மாதிரில்ல வளத்தாரு கவுண்டரு” சொல்லி முடித்து குள்ளச்சி மூச்சு வாங்குவதற்குள், மாசிலான் குறுக்கிட்டான். ”அதுக்கு என்ன செய்யச் சொல்றே? அது தலையெழுத்து நாம தின்னணுன்னு கீது, போ, போ, முதல்ல கத்தி எடுத்துக் குடு!” மாடு உரிப்பதிலும், ஓர வஞ்சனை இல்லாமல் பங்கு போடுவதிலும் மாசிலானை விட்டா ஆள் கிடையாது. விடிந்து ஏழு மணிக்கெல்லாம் புளியந்தோப்பில் கும்பல் கூடிவிட்டது. வேடிக்கை பார்ப்பவர்களும், தனக்கும் பாத்தியம் உண்டு என உத்திரவாதப்படுத்த வந்தவர்களுமாக தெருவே கூடியிருந்தது. மாட்டினுடைய வாயில் பச்சை நிறத்தில் நுரைதள்ள, வயிறு தண்ணீர் நிரம்பிய பாரி போல ஊதிப் போய், மறுபக்கம் கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்த மாசிலானை முழுதும் மறைத்திருந்த்து. கால்களெல்லாம் விரைத்துப் போய் பெருத்து அம்மணமாகக் கிடந்தது. கண்கள் சாம்பல் பூத்து ஒரே திசையை நோக்கிக் குத்திட்டுக் கிடந்தன. வாய் மட்டும் மெல்லிய சிரிப்புடன் இருந்தது. வாயில் கிரசரில் சிக்கிய கரும்புச் சக்கை போல் சோளப்பயிர் வெளிப்பக்கம் தள்ளிக் கொண்டிருந்தது. முன்னும் பின்னும், மூக்கிலும் வாயிலும் ஈக்கள் ஒரு பட்டாளமே மொய்த்துக் கொண்டிருந்தன. காதும், வாலும் செயலிழந்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட காக்கைகள் மூக்கையும், காதையும் நோண்டித் தின்று கொண்டிருந்தன, இதைத் துரத்த மாசிலானுக்கும் நேரமில்லை, மற்றவர்களுக்கும் அக்கறையில்லை. நுகத்தடிகள் போலக் கிடந்த விரைத்த பின்னங்கால்களில் சிறுவர்கள் ஏத்தம் விளையாட்டு விளையாடினார்கள். “ஏய்….. யார்ரா அவன்? போயி..(ங்)கொப்பன ஒரு நல்ல ஏத்தமா வாங்கிக் குடுக்கச் சொல்லி ஆடுறா. அதுக்கு மாட்டுக்காலுதான் கெடச்சிச்சா?” அதற்குள் மற்றொருவன் வாலின் நுனியில் உள்ள முடிகளைப் புடுங்கிக் கொண்டிருந்தான். “டேய், டேய், டேய்! ஏன்டா பாவம் அப்படிப் புடுங்குற. ஓணான் புடிக்கனுன்னா உங்க அக்கா தலையில இதவிட நீளமா இருக்கும், போய்புடுங்குடா! ஆளப்பார்ரா…. ஆள!” “ஏம்பா மாசிலான் என்னைக்கப்பா நீ அறுத்து பங்கு போட்டு குடுக்கறது. நேத்து செத்ததுப்பா, சீக்கிரம் பாரப்பா. இதுக்குன்னே பல பேரு சம்பாதனைய உட்டுட்டுக்கூட காத்துக் கெடக்குறாங்க.” “பெரிசு! கொஞ்சம் பொறுமையா இரு. விடிய நாலு மணிலிருந்து ஆளப்புடிச்சி, மரத்தத் தேடி,கயித்தத் தேடி தூக்கினு வந்து போட்டினுகீது, நோகாம இன்னேரத்துக்கு வந்து பெரிய சேட்டு மாதிரி பங்கு கேக்கற, போயி ஒரு ஓரமா ஒக்காரு, பங்கு போட்டுட்டு கூப்புடறேன். ஒக்கார முடிலென்னா படுத்து தூங்கு, பங்கு போட்டுட்டு எழுப்புறே(ங்)” பெரியவருக்கு வாய்திறந்ததே தப்பா போச்சுடா என்றாகி விட்டது. இளம் வெயில் சுர்ரென்று சுட்டது. கத்தியைத் தீட்டி முடிப்பதற்குள் மாசிலானுக்கு வியர்த்து விட்டது. சட்டையைக் கழட்டி பக்கத்திலிருந்த கொப்பில் மாட்டிவிட்டு, பீடியை வேகமாகப் பற்ற வைத்தான். வேட்டியைப் பின்பக்கமாக வாங்கி இறுக்கமாகச் செருகிக் கொண்டான். நாலு மைனர்களைக் கூப்பிட்டு, மாட்டை மல்லாக்காகப் பெறட்டி, நாலு கால்களையும் எதிரெதிர் திசையில் இழுத்துப் பிடிக்கச் செய்தான் மாசிலான். என்னவோ செய்யப் போகிறார்கள் என்று சிறுவர்கள் மிரட்சியுடன் விழிகளை அகல விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். முன்னங்கால்களுக்கிடையில் இருந்த பந்து போன்ற பகுதியில் பதமாகத் தீட்டிய கத்தியை வைத்து அழுத்தி லாகவமாக ஒரு கீறல். பாதிப் பழுத்த மாதுளம்பழம் போலப் பிளந்து சிரித்தது அந்த இடம். “சும்மா சொல்லக் கூடாதுப்பா, கவுண்டரு இந்த மாட்டுக்கு நல்ல தீனி போட்டாருப்பா. அதனாலதான் இவ்வளவு பசையா இருக்கு”, பெருமிதத்தோடு புன்சிரிப்புடன் நிமிர்ந்து, நின்றிருந்த கூட்டத்தை ஒரு நோட்டம் விட்டான் மாசிலான். இந்த நல்ல கொழுப்புக் கறி கிடைக்க காரணமே நான்தான் என்பது அவன் பார்வையிலேயே தெரிந்தது. “நல்ல சைன் தோலுப்பா. பாத்துக்கீறு, ஓட்ட உழுந்துரப் போகுது. நாலு தப்பட்டைக் கட்டலாம்”. பெரியவர் எச்சரிக்கைப்படுத்தினார். “என்னது… நாலு தப்பட்டையா? இந்த தடவ தோலு நமக்கு இல்லபா. கவுண்டரு தோல மட்டும் வித்து அவருகிட்டசேக்கச் சொல்லிட்டாரு” “ஏய்…என்னடா தமாஷ் பண்றியா? என்ன விளையாட்டா பண்ற”, ஊர் ஏஜமான் அதட்டினார். “நிஜமாதாம்பா சொல்றேங். தோல தர்றதா சத்தியம் பண்ண பிறகுதான் மாட்டையே தொட வுட்டாரு. கவுண்டரு, தெரியுமா?” “நீ எப்படிடா இதுக்கு ஒத்துக்கின. இது உனக்கு மொறைய மீர்றதா தெரிலியா? அப்படின்னா நாளைக்கு கவுண்டமாரு சாவுக்கு எந்த வாத்தியத்தை அடிப்ப. எல்லாரும் இப்படியே தோல வாங்கிக்கினா தொழில் எப்பிடிடா செய்யறது.” “உனக்கும், எனக்கும் தெரியுது, இது அந்த கவுண்டருக்கு தெரியலியே! என்ன பண்றது, ஏதோ தோலாவது வித்துக் குடுத்தா புண்ணாக்கு செலவாவது மீறுமேன்னுதான்…” இழுத்தான் மாசிலான். மாசிலானின் சப்பகட்டு எஜமானுக்கு நியாயமாகப்படவில்லை. “என்னமோ பண்ணுங்கடா. எனக்கென்னவோ பழையமொறைய மாத்தறது கொஞ்சமும் புடிக்கல.”எஜமான் புலம்பினார். “என்னை என்ன பண்ணச் சொல்றீங்க.சொத்து கவுண்டருது. வாய் கூசாம தோல கேட்டுட்டாரு வேற வழி எனக்குத் தெரில” மீண்டும் மாசிலான் அதே பல்லவியை முனகினான். “டேய்! என்னடா பெரிய புடுங்கி மாதிரி பேசற. இன்னிக்கி தோல கேக்குறாரு, நாளைக்கு…நல்ல சைஸ் கறியா பாத்து யாருக்கும் தெரியாம எடுத்து வைய்யின்னுவாரு. அப்புறமா வீட்டுல கொஞ்சம் பிரச்….சனை, நீயே கறிய பெற..ட்…டி ஹி…ஹி…ஹின்னுவாரு. என்ன செய்யப் போறே? இதா பாரு…இப்படியே போனா நாம நாமளா இருக்க முடியாது.” எங்கேயோ தப்பு நடந்து விட்டதாகப்பட்டது மாசிலானுக்கு. இருந்தாலும் வாக்குறுதியைக் காப்பற்றணும்னு கருதினான் மாசிலான். “அதெல்லா(ங்) சரிதா(ங்)…. பேசாம நமக்குச் சொல்லாம கவுண்டரே மாட்ட பொதச்சிட்டிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?” இப்படி ஒரு குண்டைப் போட்டு விட்டு, கழுத்தில் கத்தியை வைத்தான் மாசிலான். அப்போது முதுகுவரை தோல் கழட்டப்பபட்டிருந்தது. “ஆமாண்டா! ரொம்ப புத்திசாலின்னு நெனப்போ, பதினாறு ஊரு கிராமத்த கூட்டி கவுண்டர கைகட்ட வச்சிருவே(ங்). நாக்க அடக்கிப் பேசு. இதுக்கு மேல பேசினா மரியாதை கெட்டுரும். சாதி கெட்டவன்தான்டா இப்பிடிப் பேசுவான்” எஜமானுக்குச் சூடேறிவிட்டது. “ஏன்டா! பொழப்பத்தவங்களே… ஆகிற காரியத்த பேசு! ஏன்டா இப்படிக் கத்துறீங்க, கவுண்டரு பொதச்சிருவாரோ? இது நடக்குற காரியமா! போங்கடா” அவரு ஒரு பக்கமும், அவரு பொண்டாட்டி புள்ளைங்க ஒரு பக்கமும் புடிச்சி, மாட்ட தூக்கிக் கொண்டு போய் ஊருக்கு வெளியே பொதச்சிருவாரா? இது நடக்குற காரியமா! போங்கடா” இன்னொரு பெருசு அறைந்து கூறியது. “ஏம்பா மாசிலா(ங்)… அந்த அரியாகொளத்தாரு பங்கு போட்டாச்சா?” “ஆமான்டா! மொதல்ல உங்களுக்குத்தான்டா அவசரம். அந்தப் பக்கமா ஒக்காரு. கூப்பிடுறேன்” வருபவர்களெல்லாம் மாசிலானை வேலை செய்ய விடாமல் தொல்லை கொடுத்தனர். அரியா குளத்தார் எனபவர்கள் குடியேறியவர்கள். உள்ளூரில் பெண்ணெடுத்து சம்பந்தி ஆனவர்கள். இவர்கள் மாடு தூக்க, மேளம் வாசிக்க வரமாட்டார்கள். பங்காளிமார்கள் சேர்க்கவும் மாட்டார்கள். “ஏம்மா! சீக்கிரம் கொஞ்சம் பங்கு போட்டு குடுப்பா, ஊரிலிருந்து எங்க மகளும்,மருமவனும் வந்திருக்காங்க. பத்து மணி ரயிலுக்குப் போணுமாம். ஏதோ அதுக்குள்ள இந்த கறியாவது வெச்சி போட்டு அனுப்பலாம்” பரிதாபத்தோடு கேட்டான் முனுசாமி. “ஏன்டா ஏதாவது உனக்கு அறிவு கீதா! இதையா மருமவனக்கு போடப் போற. ஒரு கோழி கீழி அடிச்சி போடுவியா…” “நீ இருக்கப்பவம்பா! கோழியும் அடிப்ப, யானையைக்கூட அடிச்சிப்போடுவ. நாங் கூலிக்காரன், இப்படி ஏதாவது மாடு, கீடு செத்தாத்தான் கதி” “ஏம்பா இவன மொதல்ல அனுப்புப்பா. பாவம் பொலம்பி தொலையுறான்” பரிதாபப்பட்டார் தர்மலிங்கம். கொஞ்ச நேரத்தில் மாடு, உரிச்ச கோழி மாதிரி ஆனது. பத்துமடத் தோலை விரித்து மல்லாந்து கிடந்த்து. ஊதிப்பெருத்த, உப்பிக் கிடந்த வயிற்றில் தீட்டிய கத்திமுனை லேசாகப்பட்டதுதான் தாமதம், விஷக்காற்று கலந்து துர்நாற்றத்தோடு குப்பென்று காற்று பீறிட்டு வெளியேறி மாசிலான் மூக்கை துளைத்துச் சென்றது. “நேத்து சாயந்திரம் செத்தது, நாத்தம் வராம என்ன செய்யும்?” மாசிலான் நாற்றத்தைச் சமாளித்துக் கொண்டு சமாதானம் செய்தான். நாற்றம் அந்த தோப்பையே சூழ்ந்தது. சுற்றியிருந்தவர்கள் மூக்கைப் பிடித்தும் பிடிக்காமலும் முகம் சுளித்தனர். சாணி கரைத்து வாசலில் தெளித்தது போல விரிந்து கிடந்த தோலின் மீது ரத்தமும், ஈழையும் பிறவும் திட்டுத்திட்டாக உறைந்து கிடந்தன. அதன் மீது பிறந்த மேனியுடன் சிறுவர்கள் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். மாசிலான் விரட்டியதில் ஒரு சிறுவன் சறுக்கி தோலின் மீதே விழுந்து குய்யோ…வென்று கத்தினான். அவனோட அம்மா ஓடிவந்து தன் மகனைத் தூக்கிக்கொண்டாள். “சும்மா இரு மாசிலா(ங்) பிள்ள ஏதோ ஆசையா சறுக்கி வெளையாடுறான்… மெரட்டுறியே! பிள்ள பயந்த போச்சி! யாரு டீ, செல்லம்…மாசிலானா? அவன அடிச்சரலாம் வா….”அரவணைத்து கன்னத்தில் வழிந்த மாடு ரத்தத்தோடு முத்தமிட்டாள். இன்னும் சில சிறுவர்கள் தோலின் மேல் உறைந்து கிடந்த ரத்தத்தில் உள்ளங்கைகளை நனைத்து, ஒருவர் முதுகில் ஒருவர் அப்பி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அன்றையப் பொழுதில் செத்தமாடு தெருவையே திருவிழாக் கோலமாக்கிவிட்டது. “சாயந்திரம் நேரத்துல வந்துருவேங்….பங்கு போட்டதும் கறிய வாங்கிவை. வரும்போது மெளகா செலவு வாங்கி மூடி வச்சிராதே! அடுப்புல கொஞ்சம் சூடு பண்ணிவைய்யி. இல்லன்னா கெட்டுடும்”, என்று மனைவியிடம் எச்சரித்து விட்டு வேலைக்கு போனான் ஒரு தெருவாசி. “ஏம்பா மாசிலான் பிச்சையில ஏதாவது கீதா பாரூப்பா, உட்ராதே!” ஊர் எஜமான் நினைவுபடுத்தினார். மாசிலான் திடீரென நினைவுக்கு வந்தவனாக நுரையீரல், இதயம் இவைகளை லாவகமாக விரல்களால் விலக்கிவிட்டு, கணையத்தைத் தேடிப் பிடித்து திரும்பத் திரும்ப பித்தநீர்ப்பையை அழுத்ததிப் பார்த்தான், ஆனால் ஒன்றும் தென்படவில்லை என்பதை உதட்டைப் பிதுக்கிக் காட்டினான். நூறு மாடுகளில் ஒன்று இரண்டில்தான் கோ ரோஜனம் கிடைக்கும். நாட்டு மருத்துவர்களிடம் இதற்கு நல்ல மவுசு. 5 கிராம் கிடைத்து விட்டாலே 500 வரை விலை போகுஉம். அன்றைக்கு மாசிலான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். கொம்புகள் தூக்கி எறியப்பட்டவுடன், பங்குகள் போடப்படன. அவரவர் பங்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு நடையைக் கட்டினர். முகத்தில் கோபக் கனலோடு ஒருவர், ஒரு சிறுமியின் கைகளைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு மாடு அறுத்த இடத்திற்கு வந்தார். சிறுமியின் கையில் ஒடுங்கிப் போன அலுமினியச்சட்டி அதில் ஒரு பங்கு கறி. “ஏய்! எவன்டா இந்த பங்க எம்புள்ள கிட்ட போட்டனுப்பனவன். வெறும் எலும்பும் கொடலும் தான் எனக்கா? அவ்வளவு கேவலமா எம்புள்ள! போங்கடா… உங்க கறியும் நீங்களும்….” என்று கறியைத் தூக்கி குப்பையில் வீசி எறிந்தார். ரொம்ப நாளைக்கப்புறம் கிடச்ச கறியிலேயும் அப்பன் மண்ணைப் போட்டுட்டானே என்று, குப்பையிலிருந்த கறியையும், அப்பனையும் மாறி மாறிப் பார்த்து அழுதது அந்தப் பிள்ளை. கடைசிப் பங்கை எடுத்த பையன், “ஏம்பா ஏம்பங்குல கொஞ்சம் கொழுப்பு போடுப்பா” என்று கேட்டான். “இருந்ததே அவ்வளவுதாம்பா! வேணுன்னா ஏம் பங்கைப் பாரு” என்று எடுத்துக் காட்டினான், மாசிலான். கூடத்திலிருந்து ஒரு குரல் வந்தது. “மாட்டுக்காரன் மாட்டுக்கு அழுவுறான்! பறையன் கொழுப்புக்கு அழுவுறான்!” – இதைக் கேட்டதும் மாசிலான் கூனி்குறுகிப் போனான். தலை குனிந்தான் தனக்குரிய பங்கை வேண்டா வெறுப்பாக எடுத்துக் கொண்டு போர்க் களத்தை விட்டு வெளியேறினான். பொழுது சாய்ந்து விட்டது. பறவைகளும் ஆடு, மாடுகளும் தங்கள் இருப்பிடத்தைத் தேடிக் கொண்டிருந்தன. வேலைக்குப் போன குள்ளச்சி இன்னும் வீடு திரும்பவில்லை. “பொழுது இருட்டிடுச்சி இன்னும் கழனியிலே என்னத்த புடுங்குறா….” மனசுக்குள் குள்ளச்சியைத் திட்டிக்கொண்டான் மாசிலான். ஆறு மாதத்திற்கு முன் குள்ளச்சிக்கு வாரம் இரண்டு முறை மாட்டு ஈரல் தரச் சொல்லியிருந்தார் டாக்டர். காசநோய் அப்பதான் குணமாகும். அவளுக்காக இரண்டு துண்டு ஈரலை மாசிலான் மறைத்து வைத்திருந்தான். தனது தொழில் தருமத்துக்கு இழுக்கு வந்ததை உணர்ந்து உள்ளுக்குள் நொந்து கொண்டேதான் அதைச் செய்தான். நினைவுகளில் மூழ்கியிருந்த மாசிலானைத் தீடீரென எழுப்பியது ஒரு குரல். “தாத்தா பாட்டி செக்கிருச்சாம்! ஏதோ விஷக் கெழங்க பாட்டி பச்சையா தின்னுட்டு சொக்கி மயங்கி விழுந்திருச்சாம்” முனியம்மாள் பதடத்துடன் சொன்னதும், பதறிப் போய் ஓடினான் மாசிலான். குள்ளச்சியைச் சற்றி சிறு கும்பல். நாடியைப்பிடித்துப் பார்த்த நாட்டு வைத்தியர் மாசிலானத் தனியாகக் கூப்பிட்டு ஏதோ கிசுகிசுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தார். வாய் பிளந்து, வயிறு ஒட்டி, கண்கள் சாம்பல் பூத்து திறந்து வெறுமையாகக் கிடந்தன. குள்ளச்சியைக் கட்டிலில் போட்டு நான்கு பேர் வீடு சேர்த்தனர். தெருவில் கறிவேப்பிலை மணத்துடன் உப்புக்கறி வாசம் மூக்கைத் துளைத்தது. வீசப்படும் எலும்புக்காக தெரு நாய்கள் எல்லைச் சண்டையில் ஈடுபட்டிருந்தன. தலையில், எண்ணெயறியாத பிள்ளைகளின் வாய், முகமெல்லாம் கொழுப்புப் பசை வடிந்திருந்த்து. குள்ளச்சிக்காக மறைத்து வைத்திருந்த ஈரலை மாசிலான் வெளியே எறிந்தான். எறிந்த மாத்திரத்தில் கவ்விய நாய்கள் சண்டையிட ஆரம்பித்தன. மாசிலான் மனதை சோகம் கவ்விக் கொண்டது. குள்ளச்சியைக் கட்டிக் கொண்டதிலிருந்து எத்தனையோ காட்சிகள், சம்பவங்கள் அவன் மனத்தில் ஓடின. அப்படியே சரிந்து போய் மரத்தடியில் குந்தினான். ஒப்பந்தப்படி தோல் பணத்தை வாங்க கவுண்டர் அனுப்பிய ஆள் தொலைவில் வேகமாக வந்து கொண்டிருந்தான்.   – சா. செல்வராசு ________________ புதிய கலாச்சாரம், மார்ச்-2000 ___________________________ 3 விஷக்காலிகள் “ஏய்… சின்னண்ணா நம்மூர் கயினி வெளியில எலி புடிக்க வருவாரே, பாவம் அவுரு, செத்துட்டார் தெரியுமா?…” “யாரு வில்லியா…?…!” ஆச்சரியமாய் ஆரம்பித்த ஆதிகேசவன் சற்றுயோசித்து “வில்லி போய் பாம்பு கடிச்சி செத்துட்டாரா?” நிறுத்தி நம்பிக்கையில்லாமல் கேட்டான். “இன்னா கிண்டல் பண்றயா நாயே…” என்று கேலி, கோபம், ஆதங்கம், வேதனை அனைத்தும் கலந்த குரலில் மறுபடி மெதுவாகக் கேட்டான். “அய்ய… மூஞ்சப்பாரு, எது எதுல கிண்டல் பன்னுவாங்கன்னு வெவஸ்தையே இல்ல உனக்கு” உதடுகள் துடிக்க புருவங்களை நெருக்கிக் கொண்டு சற்று கோபமாகவே ஷானு சொன்னாள். “இல்லம்மா, எப்பேர்க் கொத்த பாம்புக் கடிக்கும் வெறும் பச்செல மருந்த குடுத்து, வைத்தியம் பாத்து செரியாக்குற வில்லி போய் பாம்பு கடிச்ச செத்துட்டார்னா நம்பவா முடியுது… ” சிறிதே நம்பிக்கை வந்தவன் நினைவுகள் பின்னுக்கு ஓடின. “உனக்கு தெரியுமா ஷானு… ம்… நீயெல்லாம் அப்ப பொறக்கவே இல்ல நானே அஞ்சாவுதுதான் படிக்கர(ன்).” “ஒரு நாள் ராத்திரி நல்ல அம்மாச கருக்கல் பன்னெண்டு மணியிருக்கும்; திடீர்னு கோழிகத்தற சத்தம் கேட்டு இன்னாடா இன்நேரத்துல கத்துத, காட்டு பூனை கீட்டுபூன வந்து புடிக்குதா, பொத்த கூடையால இல்ல கோழிகவுத்தம்னு துடிச்சிபுடிச்சு எழுந்து ஓடி கூடைய தொட்டுகீறாரு நைனா. “சுருக்குனு குத்திகீது. ஒடனே இருட்ல இன்னாடா குத்துதன்னு, பக்கத்துல தடவினா அடுப்புக்கு தறிச்சி வக்கும் வேலிக்காத்தான் முள்ளைகூட காணல. சந்தேகம் வந்து ‘ஜ்ஜேய் பொண்ண கருக்காமலையா சீக்கரம் வெளக்க கொளுத்தியா, இன்னமோ சுருக் சுருக்குனு குத்துனமாரி இருந்திச்சி, ….ன்னதும் வாரிசுருட்டிக்கினு சித்தி ஓடி காலெளக்க (காடா விளக்கு) கொளுத்தியாந்து பாத்தா, நல்லபாம்பு கோழிகாலபோட்டு வலுவா பின்னிக்கினு தலைய கூடை பொத்தல் வழியா வெளிய வுட்டு நட்டுகினு பாத்துங்கீது. “இன்னா பண்ணுவ, சித்தி பாவம் ‘கூவோ மொறையோன்னு’ கத்தி கூச்சல் போட்டதுல நம்ம சந்து ஜெனம் பூரா கூடிப்போச்சி. மாரிமுத்து அவுங்க அப்பன் ஓடியாந்து, இடுப்புல கட்டியிருந்த அண்ணாகவுர அறத்து கடிவாய்க்கு மேல நல்லா விகிஞ்ஜி கட்டு போட்டாரு. “நடந்தா வெசம் விறுவிறுன்னு ஏறி தலமாடு கொண்டுடும்னு, கட்டல்ல படுக்கவச்சி ரெண்டுபேரா தலமேலையே தூக்கிக்கினு ஓடனாங்க. நாங்கூடத்தான்… “மணி ஒன்னு ஒன்ற இருக்கும், கொரல் குடுத்தத்தான் தாமசம், அந்த வில்லி அறக்க பறக்க எழுந்து வெளிய ஓடியாந்து, இன்னா ஏதுன்னு விஷயத்த கேட்டு. ‘நீங்க யாருனா கடிவாய கடிச்சி வெசத்த உறிஞ்சி எடுத்தீங்களா சாமி…’ன்னதும், இவுங்க எல்லாரும் ‘இல்லை..ய்ய்யா கட்டுத்தான் போட்டோம்’னாங்க. அப்பல்லாம் நைனாவுக்கு ஒடம்பெல்லாம் தண்ணியா உட்டு தன்னமீறி போச்சி. கீரத்தண்டுமேரி வெலவெலன்னு உழுந்துட்டாரு. “இந்த விசயத்த எல்லாம் கேட்டுக்குனே, சிடுக்கா நாழியில பச்செல மூலிகைய எடுத்தாந்து ‘நாலு கடி’ மருந்த உள்ளுக்கு குடுத்தாரு. நல்ல வேள வாந்தி வரல, வாந்தி மட்டும் வந்திருந்திச்சு ஆள கண்டுபுடிக்கறது அறிகண்ணாயமாயிட்டும் இருக்கும். “அன்னக்கி ராத்திரி வில்லிவூட்டு புள்ளகுட்டியெல்லாம் முழிச்சிக்கிச்சி. சும்மா சொல்லக்கூடாது. பொழுந்து விடியரவெரிக்கும் ஒருத்தரும் கண்ணாட கண்ணு மூடல, அந்தாளு சம்சாரம் பாவம் அந்நேரத்துல சூடா சுக்காப்பி போட்டு போனஜெனம் பூராத்துக்கும் குடுத்தாங்க. “நாங்கூட குடிச்சேன், நல்லா நெனப்பு கீது ஷானு” என்றவன் சொல்லும்போது இப்போதுதான் அந்த காப்பியை குடித்ததுபோல் ரசித்து எச்சிலை கூட்டிக் கூட்டி விழுங்கினான். “அத்தோடவா வுட்டாங்க, பாம்பு கடிபட்டவங்க இருவத்தினாலு மணி நேரம் தூங்கக்கூடாதுல்லா, அதால வில்லிவூட்டு பசங்க அவுங்க கொலதெய்வத்த வேண்டி கூத்தாடுறதும், வில்லிங்க வீரத்த கதையா சொல்லும் ‘வில்லி வில்லி நாங்கத்தான் வேட்டக்காரு நாங்கத்தான்…’ பாட்ட பாடறதும், ஒரே அமுக்களம். “பளபளன்னு பொழுது வெடிஞ்சதும் சூரியன கும்புட்டு ஒரு வேள மருந்த கைல குடுத்து, ‘இனிமே கல்லால அடிச்சாலும் சாவு கெடையாது பயப்படாத கூட்டிம்போங்கம்மா” என்று சொன்னவர், “சொல்ல மறந்துட்டேன் மூணு நாளுக்கு உப்பில்லாத கஞ்சிதான் குடிக்கணும். நெனப்பு இருக்கட்டும் நாட்டு மருந்து பத்தியம் இல்லான்னா உசுருக்கு ஆபத்தாயிடும்”ன்னு தடித்த குரல்ல சொன்னார். சொன்னது சொல்லாங்காட்டியும், சித்தி அவர் கால்ல உழுந்து நீ நல்லா இருக்கணும் எப்பா, எனுக்கு மடிப்பிச்ச குடுத்த மவராசான்னு சொல்லிக்கினே எழுந்து, முந்தானியில முடிஞ்சி வச்சிருந்த பத்து ரூவாவ அவுத்து குடுத்தா. வில்லி நெருப்ப தொட்டது போல “எம்மா இன்னா காரியம் பன்ன எங்க கொலதேவத டேண்டமாரிய பத்தி உனுக்கு தெரியாதா, இந்த பூலோக மக்க(ள்) உசுரகாக்கற இந்த மருந்துக்கு கூலியா பச்சதண்ணிகூட வாங்கமாட்டாம்னு சத்தியவாக்கு பண்ணிட்டு தான், ஆத்தா நல்ல பச்சலமூலிகய வச்சி படைச்சிட்டு மருந்தையே அம்மியில வச்சி அரைப்போம். அவ வாக்க மீறுனா எங்க குடும்பத்த வரக்கா சொறக்காவா ஆக்கிடுவான்னு சொல்லி வானத்தைப் பாத்து கும்பிட்டார். ‘உடனே என்ன மன்னிச்சிடு யாம் பத்தினி மாரியம்மா புத்திகெட்டன் பீயத்துன்னன்’னு இன்னாவோ ஆணைக்கி கட்டுப்பட்டாமாரி ரெண்டு கைகளாலும் கன்னத்தில் மாறிமாறி புத்தி போட்டுக்குனு அழுதுடிச்சி சித்தி. வூட்டுக்குப் போவ காலெடுத்து வச்சது திரும்பி, ‘ஐயா மறந்தே பூட்டன் இவர கூட்டியார அவுசரத்துல பாம்பு எந்த பக்கம் போச்சின்னு அடிக்காம உட்டுட்டு ஓடியாந்துட்டம். இன்னிக்கி வூட்டான்ட வந்து அந்த கருமத்த புடிச்சாந்துடு சாமி, புள்ளகுட்டிவ நடமாடர எடம்’ன்னுட்டு வூட்டுக்கு கெளம்பினாங்க. “கோழிய கடிச்சிபோட்டு சாக்கடை உள்ளே கொட்டிவச்சிருந்த பனங்கொட்டைங்க சந்துல போய் கமுக்கமா படுத்துக்குனு இருக்குது. இது தெரியாம மருந்து குடுத்து கூட்டியாந்த மனுசன வாசல்லயே ஒக்கார வச்சிட்டாங்க, பாம்பு எங்க வூட்டு உள்ளே போய்டுச்சோன்ற பயத்துல. “சிவாவும், பாலண்ணனும் வாசல் எதுருல ஊடு கட்ட பதுவுபோட்டு வைச்சிருந்த பனஓலை, வெருவு எல்லாத்தையும் கலைச்சி போட்டுட்டு தேடினாங்க. “ஆனா வில்லி வந்த ஒடன சொல்லிவச்சமேரி எறும்பு மொச்சிங்கெடந்த கோழிய பாத்துட்டு, நேரா அந்த பாம்பு போன வழிய கண்டு போய், கோமணத்த நல்லா இருக்கிவுட்டுக்கினு இடுப்புல கட்டிவச்சிருந்த மருந்த எடுத்து வாய்ல அடக்கிக்கினு பனங்கொட்டைங்க சந்துல கையவுட்டு லபுக்குனு புடிச்சி அசால்ட்டா இழுத்தார், மொழங்கால் கனத்துக்கு நெளியுது. வில்லிங்களுக்கு பாம்பு போற காலடி கரக்ட்டா தெரியும், அதான் பாம்பு எங்க போனாலும் புடிச்சிடறாங்க. “அப்பவே வாய நெகிட்டி வெஷப்பல்ல புடிங்கிட்டு வாசல்ல உட்டாரு; மொறம் அகலத்துக்கு படம் எடுத்துக்கினு, பந்து எகுருறமாதிரி மனசன் மேல சீறிக்கினு பாயுது. நானு, மோகனு, கோய்ந்து எல்லாம், பெரியவங்களும் எங்ககூட சுத்தி நின்னுக்கினு வேடிக்க பாத்தோம். கொஞ்ச நேரம் வெள்ளாட்டு காட்டிட்டு பேனாகெத்தியால தலையாண்ட ஒரு கீறு கீறி புடிச்சி இஸ்தாரு. அப்பிடியே சொக்காய கழட்டுன மாதிரி தோலு உரிச்சிக்கினு வந்திச்சி. “தோல உரிச்சிட்டதும் உக்கரம் ஜாஸ்தி ஆய்டிச்சி, வில்லிய எகிறி எகிறி அடிக்கிது. அத புடிச்சி சின்ன பசங்க மேல போடறமாதிரி காட்னதும் நான் ஓடியாந்து எங்க வூட்டு உள்ளே பூந்துக்கின(ன்). “வூட்ட சுத்தி உப்பு மந்திரிச்சி கொட்டினார். உப்பு மந்திரிச்சி போட்டார்னா அத்தாண்டி பாம்பு உள்ளே வராது. வில்லி நாகராஜன் கிட்ட சத்தியம் வாங்கிடுவார். அத மீறி உள்ளே வந்த எந்த பாம்பா இருந்தாலும் செத்துடும். “சித்திய கூப்புட்டு ‘கோழிகள இங்க கவுக்கவேணாம். கோழிபீநாத்தத்துக்குத்தான் நல்லபாம்பு வரும். அதால இனிமே அந்த பூர்சமரத்து ஒட்டி தனியா கவுருங்கன்’னுட்டு, பாம்பு தோல கழுத்துல போட்டுக்குனு, உரிச்சிட்ட பாம்ப கைல சுத்தி புடிச்சிக்கினு, வில்லி தெருவுல நடந்து போவும்போது ஊர் ஜெனமே வாய்மேல வெரல வச்சிக்கினு பாத்திச்சி. சூராதி சூரனை பார்க்கறமேரி. *** முடிந்த அளவு ஞாபகம் வந்த விசயங்களைக் கூறியதற்கே ஆதிகேசவனைச் சுற்றி சின்னபிள்ளைகள் கூட்டம் கூடிவிட்டது அதை பெருமையுடன் பார்த்து ஒரு மெல்லிய சோகம் கலந்த புன்னகையை வெளியிட்டான் ஆதி. “ஆமாம்… யாரு டேண்ட டேண்ட டேண்ட மாரியம்மாளே…” பாட்டுப் பாடி பொம்பள வேஷம் கட்டிக்கினு ஆடுவரே அவரையா சொல்ற.” என்ற ஆதியின் மனதுக்குள் வில்லியர் மாரியாத்தா கும்பிடுவதற்காக ஆளாளுக்கு வேஷம் கட்டிக்கொண்டு வருவதும்; ஒத்தை மேளத்தை (பறை) தோளில் மாட்டிக்கொண்டு வீடு வீடாய் சென்று ஆடும் ஆட்டங்களும், வித விதமான ராகங்களில் ஏற்ற இறக்கங்களுடன் பாடும் பாடல்களும் அலை அலையாய் வந்து சென்றன. “இல்லை சின்னண்ணா மோளம் அடிச்சிக்கினே ஆடுவாரே அசப்புல நம்ம ஏமாறச்சக்கண்ணு பெரிப்பா மாதிரி…” ஷானு வார்த்தையை இழுத்து முடிப்பதற்குள் கெவுளியைப்போல் உச்சுக்கொட்டினான் ஆதி. “அய்யய்யோ… ரெண்டு பேருமே மருந்து குடுப்பாங்க. நான் முன்ன சொல்லல நைனாவுக்கு மருந்து குடுத்தார்னு அவரும்மா, ச்… எத்தினி பேருக்கு பாம்பு வெஷத்துலர்ந்து காப்பாத்தி உசுர் குடுத்த மனுசன் கடைசில பாம்பே அவுருக்கு எமனாய்ட்டு கீதே.” நுரையீரலுக்குள் உருவான வெப்பக்காற்றை ஸ்…. ஸ்சூ என ஊதி வெளியேற்றிவிட்டு மறுபடி நினைவில் நீந்திப் பேச ஆரம்பித்தான் ஆதி. “நல்லா நெட்ட பனையாட்டம் இன்னா தேககட்டு. மல்லாட்ட கொல்லையில எலிபுடிக்க வந்தார்னா ஊதலான் வச்சி பொகை ஊதி எத்தினி எலிபுடிச்சாலும், நாங்க சின்ன பசங்கள்ளாம் சுட்டுத்தின எலிவேணுன்னு கேட்டா புடிச்சத பூராத்தையும் எங்களாண்ட குடுத்துட்டு மொளச்சி போன நெல்லையும், மல்லாட்டையையும் தான் அள்ளிக்கினு போவார். “களத்துமேட்டில் நெல்லோ, மொளகாயோ எது காஞ்சிங்கெடந்தாலும் யாரும் காவலுக்கு இல்லாட்டா கூட கையவச்சி தொடமாட்டார் நம்பளா மனசு வந்து குடுத்தா உண்டு. “ச்சே எப்பேர்பட்ட மனுசனுக்கெல்லாம் எப்பிடியெல்லாம் சாவுவந்து தொலைக்குது… அது செரி ஷானு. எங்க… எப்பிடி செத்தாரு. மருந்து கைல வச்சில்லய்யா… ஆதியை மறித்து ஷானு வில்லிக்கு நேர்ந்ததைச் சொல்ல ஆரம்பித்தான். “நம்ம உண்டை பெரியப்பா வூட்டு கயினில்ல மடுவா இருக்கு. அங்க… அந்த கயினில நண்டு வள நோண்டும் போது நோண்ட நோண்ட ஆழமா போய்க்கீது “எம்மா பெரிய ஆழன்டா எப்பான்தான் கையவுட்டு பாத்துக்கீறாரு. வலைல இருந்த பாம்பு வெடுக்குனு கைய கடிச்சிகீது. அப்ப இவுரு “கைய்யாடி கடிக்கிர உன்ன உப்பு மொளகா தடவி சுட்டு கடவாய்ல வச்சி கடிக்காம வுடரதில்லன்னு” புடிச்சி இஸ்துகீறாரு. நல்லா வெட பாம்பு ஒரு ஆள் நீட்டுக்கு கைல நாய் கோத்துபுடுங்கறமாறி புடுங்கிக்கினு தொங்குதாம்.” “…ம்… டக்குனு மடியில கட்டியிருந்த பச்செல மருந்த வாயில போட்டு அடக்கி சிரிச்சிக்கினே என்னையாடி கடிக்கர உன்னை எலியின்னுல்ல நெனச்சேன் இன்னா பண்றன் பார்னு பல்ல ஒடச்சிட்டு தோலை உரிச்சி வேஷ்டியில் வைச்சி மூட்டை கட்டிக்கினு பாம்ப அடிச்சி கெணத்து மேட்டில் பள்ளந்தோண்டி பொதச்சிட்டு பஸ் ஸ்டேண்டு போவாங்காட்டியும் தலை சுத்த ஆரம்பிச்சிட்டு இருக்குது. “அய்யய்யோ அப்பறம்…”- ஆதி பதறினான். “பயந்துபோய் ராஜி டாக்கடர் வூட்டுக்கு ஓடி இந்தமாரி இந்தமாரின்னு வெவரத்த அழமாட்டாத கொரையா சொல்லிகீறாரு. அதுக்கு அந்த டாக்கடர் முன்னூத்தி அம்பது ரூவா ஆவும்ன்னானாம். “ஆனா ஆயிட்டு போவுது வுசுருக்கு மிஞ்சியின்னா மசுரு சொல்லும்மா” என்று திண்ணையிலிருந்த ஆதி மேடை நுனிக்கே வந்துவிட்டான். “பாம்பு தோல், சேறும் மண்ணுமா கெடந்த மொளவிட்ட நெல்லு, மல்லாட்ட எல்லாத்தையும் சேத்து, கிழிஞ்சி போன அழுக்கு வேஷ்ட்டியால கட்டின மூட்டைய செவுத்து ஓரமா வச்சிட்டு, காச வூட்டுக்கு தான் போய் எடுத்தார்னும்னு வில்லி முடிக்காங்காட்டியும். “போய்யா… போய்… மொதல்ல காச எடுத்துட்டு வான்”னு சொன்னானாம் ராஜி. “அடக் கொடும்… பாவி…” கண்களை மூடி மூடித் திறந்து கொண்டு ஆதி சொன்னதும், ஷானுவும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் பேசினாள். “பாவம் அந்த வில்லி. ராஜி டாக்கட்டர் கால்ல நெடுஞ்சாண்கட்டையா விலுந்து ரெண்டு காலையும் கெட்டியமா புடிச்சிக்கினு, ‘அய்யா என் உசுர காப்பாத்துங்க நான் இப்பிடியே காட்லர்ந்து தான் வர்ரேன். சின்னதும் சீத்தானுமா ஆறும் பொட்டபுள்ளங்க சாமி, என்னை வுட்டா அவுகளுக்கு நாதி கெடையாது. மருந்த தாங்க நான் வூட்டுக்கு போய் பணத்த கொண்டாந்து தந்துடரேன். உங்க புள்ள குட்டிவளுக்கு கோடி… கோடி… புண்ணியம் வந்து சேரும்’ன்னு. இன்னான்னாவோ சொல்லி அழுது பொலம்பி கெஞ்சியிருக்கறார். ‘வாத்தியார் கூலியும் வைத்தியர் கூலியும் குடுக்காதவங்களுக்கு எமதண்டியில இன்னா தெண்டனன்னு எனுக்கு தெரியும் சாமின்னு கூட சொல்லி கலங்கியிருக்கார். “அந்த கலுவாநெஞ்சுக்காரன் யோவ் இன்னாய்யா உட்டா தத்துவமு எல்லாம் பேசிட்டு இருக்கர காசு இருந்தா குடு இல்லன்னா எடத்தகாலி பண்ணுன்னு கராரா சொல்லி… கழுத்த புடிச்சி வெளிய தள்ளி கதுவசாத்திட்டானாம். “கண்டிப்பா நீ ஒன்னாபாரு ராஜி செத்தான்னா அவனுக்கு அட்டகுழி, அரணகுழி, பாம்பு குழி, பல்லி குழிதான்….” எச்சிலை கூட்டி கூட்டி முழுங்கி அழுத்தி அழுத்தி கூறும்போது ஷானுவின் கண்கள் கலங்கியிருந்தன. “யார் காந்தி டாக்டரா, வைஜெயந்திமாலாவா நல்லா யோசிச்சி சொல்லு, ராஜி டாக்டர் அப்படி செஞ்சிருக்கமாட்டாரே.” இவ்வளவையும் கேட்டபின்பு ஆதி இப்படி கேட்டது ஷானுவுக்கு அளவில்லா கோபத்தை உண்டாக்கியது. “நான், ராஜி… ராஜின்னு.. படிச்சி படிச்சி சொல்ரன் வெடிய வெடிய ராமாயணம் கேட கதயா இன்னா பேசர நீ” என்று நிறுத்தினாள் ஷானு. ச்சே. ஒரு டாக்டர், தாசிகூட செய்யக்கூசுற காரியமல்லவா, இவன்லாம் நினைக்க நினைக்க உலைகொதிப்பது போல் கொங்கியது கோபம். இதுநாள் வரை மருத்துவர்கள் மீது ஆதி வைத்திருந்த அதீதமரியாதைகள் என்ன ஆனதென்று அவனுக்கே தெரியவில்லை. “அந்த பொறுக்கி ராஸ்கோலை சும்மாவா வுட்டாங்க ஜனங்க.” “தெற்கசேரி ஜெனங்க மட்டும்….” ஷானு வாயெடுப்பதற்குள் இன்னொரு குரல் எழுந்தது. “ஆமாம் போய் கீய்… ச்சிட்டாரு பணம் இல்லாம எவன்தான் மருந்து குடுப்பான்” கட்டையாக சம்பத்தின் குரல். இவன் எப்ப வந்தான் இங்க என்பது போல ஆதி திரும்பிப் பார்த்தான். “டே… செம்போத்து உசுர்டா காலகாலப்புடிச்சி செஞ்சிக்கீறான். நெனச்சாலே நெஞ்சி அபுக்குன்னுதுடா.” “ஆமாம் பெர்… ரீ… ய உசுரு அவன் எம்மாம் செலவு பண்ணி படிச்சி பட்டம் வாங்கியிருப்பான்.” “…யான்டா டேய்… டாக்டருக்கு படிக்கறது ஊர் ஜெனங்களுக்கு உயிர்பிச்ச குடுக்கடா, ஏழை பாழை தாலியறுத்து எள்ளுந்தர்ப்பனை பண்ரதுக்கா இல்ல.” “போடா டேய் அவன சாவடிச்சது இன்னாவோ டாக்கடர்ன்ர மாதிரி பேசற ஃபஸ்ட் எயுடு கூட பண்ணிக்க தெரியாதது அந்த வி…ல்…லியோட தப்பு” ‘வில்லி’ என்ற பெயரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமாக உச்சரித்தான் சம்பத் தொடர்ந்து. “கண்ட கண்ட மருந்தல்லாம் வேற தின்றது திருந்தாத ஜென்மங்க, அது சரி மருந்துன்னா டாக்டருக்கு மட்டும் சும்மாவா கெடக்கிது, நீயெல்லாம் இருந்தா வில்லிய திரும்பி கூட பாத்திருக்க மாட்ட ஏதோ அவரா இருக்கவோ நின்னு பதிலாவது சொன்னாரு” நிறுத்தி அக்கம்பக்கம் பார்த்துவிட்டு, “நாய்ங்க ஒரு டாக்டர்னுகூட பாக்காம வூட்டு ஜன்னல் கண்ணாடியெல்லாம் ஒடச்சியிருக்குதுங்க. இன்னாதான் இருந்தாலும் சேரி புத்திய காட்டிருச்சிங்க பார்” நிறுத்தியதுதான் தாமதம். “அந்த நாதாகு படிச்ச புத்திய கான்னதுக்கப்புறம் இவுங்க சேரி புத்திய காட்டினதுல இன்னாடா தப்பு. அவன போஸ்ட் கம்பத்துல கட்டி செருப்பெடுத்து சிங்காரிச்சியிருக்கணும்டா ஏற… எறங்க… அத செய்யாம வுட்டதுதான் ஜெனங்க தப்பு” என்று வரவோட்டில் போட்ட நெல்மணிகளைப்போல் பொறிந்து தள்ளிவிட்டு “இதுக்கு மேல அந்தப் பரதேசி நாய்க்கு பரிஞ்சி பேசன…” பட்டென்று நிறுத்தி சரசரவென்று வீடுபோய்ச் சேர்ந்தான் ஆதிகேசவன். இரவு நீண்ட நேரம் ஆதிக்கு தூக்கமே வரவில்லை. சிறுவயதில் இவன் கற்பனை செய்திருந்த டாக்டர்கள் நினைவுத்திரையில் கழுத்திலும் காதிலும் மாட்டிக்கொண்டு பெரிய பெரிய கட்டிடங்களின் வரண்டாக்களில் இங்கும் அங்கும் ஓடினார்கள். “டாக்டருக்கு படிக்கரதுதாண்டா ஒலகத்திலயே புண்ணியமான படிப்பு” “டாக்டருங்க தெய்வத்துக்குச் சமானம்” “கட்ன பொண்டாட்டிங்கூட படுத்திருந்தாகூட நோவாளி வந்தா எழுந்து வந்து பாக்கணும்னு படிக்கப் போவும் போதே சத்தியவாக்கு வாங்கிக்குவாங்களாம்” அம்மாவும், அன்னக்கிளி அத்தையும் சிறியவனாய் இருந்தபோது பேசிக்கொண்ட வார்த்தைகள் பாழுங்கிணற்றில் போட்ட கல்லின் ஒலியாய் விட்டுவிட்டு ஒலித்தன. எப்போது தூக்கம் வந்தது என்றே தெரியவில்லை படுபயங்கரமான கனவுகள், ஆதிகேசவன் கழனிக்கு குளிக்க செல்கிறான். அதுவரை மீன்கள் மட்டுமே நீந்திக் கொண்டிருந்த தண்ணீரில் இவன் இறங்கியவுடன் கிணறு முழுக்க தண்ணீர் பாம்புகள் நீந்துகின்றன. திடீரென்று எல்லாவற்றுக்கும் பெரிய பாம்பு ஒன்று சிரித்துக் கொண்டே இவனைத் துரத்துகிறது. பயந்துபோய் வேகமாய் நீந்தி படியேற முயல்கிறான் கால்கள் தன்னாலேயே பின்னுக்கு இழுக்கின்றனவே தவிர முன்னால் செல்வது கடினமாக இருக்கிறது. ஆனால் பாம்பு மட்டும் சர்… சர் என்று ராக்கெட் வேகத்தில் பாய்கிறது. படியேறி எப்படியோ மேலே வந்து மூச்சு விடும்போது பாம்புக்கு இரண்டு பக்கமும் ரெக்கை முளைத்து பறந்து தரைக்கு வந்து உடனே நல்ல பாம்பாக மாறித் துரத்துகிறது. எப்படியும் தப்பிவிடலாம் என்று ஓடும்போது காலில் எட்டி குத்திவிட்டு மீண்டும் சீறுகிறது பாம்பு. சரி ஏதாவது வைத்தியம் பார்க்கலாம் என்று நினைப்பதற்குள் விஷம் ஏறிவிழுந்து தான் செத்துவிட்டது போல் ஆன உடன், பட்டென்று கனவில் தொடர்பு அறுந்து ஆதிகேசவன் கண் எதிரிலேயே வில்லி வாயில் நொப்பும் நுரையும் தள்ளி சுருண்டு விழுந்து சாகிறான் ராஜி டாக்டர் அலட்சியமாய் திரும்பிச் சென்று கதவடைக்கப் போகிறான் உடனே அலறி துடித்து “டாக்டர் அந்த வில்லிய பாம்பு கடிச்சிடிச்சி காப்பாத்துங்க காசு நான் தரேன் காப்பாத்துங்க” என்று தூக்கக் கலக்கத்திலேயே எழுந்து உட்கார்ந்து கொண்டு கத்தியவுடன் பக்கத்து திண்ணையில் படுத்திருந்த அவன் அம்மா அன்னம்மா “இன்னாடா பையா எங்க… இன்னா பாம்பு” என்று கூறிக்கொண்டே தட்டுத்தடுமாறி ஓடிவந்து, இவன் கையை காலை பிடித்து உருவிவிட்டுக் கொண்டே பதறினாள். “இன்னா எப்பா பயந்துகியந்து பூட்டாயா” என்று அம்மா கேட்பதைக் கூட உணர முடியாமல் ஆதிகேசவன் “அடப்பாவி… சாவுடிச்சிட்டயே…. ராஜி… வில்லி… டாக்டர்…. என முணகிக் கொண்டே இருந்தான். - நிதி. கோமேதகம் ______________________ புதிய கலாச்சாரம் 1999 ______________________ 4 நான் விபச்சாரியா இல்லேங்கிறதுதான் அவன் கவலை ! நான் திருச்சிக்கி பக்கத்துல ஒரு கிராமமுங்க. நிலமில்லா ஒரு கிராமத்து ஏழை குடும்பத்துல குடிகார அப்பனுக்கு மகளாப் பொறந்தவ. ஊரு நெலமைக்கி தவுந்தபடி சீருவருச சீதனம் குடுத்து கல்யாணம் பண்ண முடியாததால வெள்ளேந்தியான வயசு மூத்த ஆம்பளைக்கி வாக்கப்பட்டேன். ஏழ்மை நெலமையில இருந்த எங்க குடும்பத்துல அடுத்தடுத்து நடந்த துயர சம்பவங்களும் அது தந்த மன சங்கடமும் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் சொந்த பந்தங்க பாக்குற நேரமெல்லாம் ஆறுதலா பேசுறதா நெனச்சு நடந்த தொயரத்த நெதமும் கண்ணு முன்னால கொண்டு வருவாங்க. அடுத்தவங்க பரிதாபமும் பச்சாதாபமும் எனக்கு ஆறுதலா இல்லேங்கிறது மட்டும் நெசம். அதுல மன சமாதானம் அடையுற மாறி வாழ்க்கை அமையலேன்னா யாரு என்ன செய்யறது சொல்லுங்க! [Broken] எங்கன இருந்தாலும் வயித்து பொழப்புக்கு நம்ம கைய ஊனிதான் கரணம் போடனும். கஷ்டத்துல இருந்து கை தூக்கிவிட நமக்கு நாதியுமில்ல. வறுமையும் தொயரமும் போட்டிப் போட்டு தொரத்தும் போது, பொழைக்க வழியில்லாத இந்த குண்டு சட்டி ஊருக்குள்ள குதுர ஓட்றதவிட பட்டணம் போகலான்னு புருசனும் பொஞ்சாதியுமா கைக்கொழந்தைய தூக்கிக்கிட்டு சென்னைக்கி வந்தோமுங்க. கோடியில பணம் பொழங்கும் ஒரு பண பெருச்சாளிகிட்ட புருசனும் பொஞ்சாதியுமா வீட்டோட தங்கி வீட்டு வேல பாக்க ஆரம்பிச்சோம். ஓனரு என்ன தொழில் பாக்குறான்னு இப்பவும் எனக்கு வெளங்காது. என்னமோ வெளிநாட்டு பொருளுகள கப்பல்ல எறக்குமதி செஞ்சு யாவாரம் பாக்குறாருன்னு சொல்வாங்க. யாவரத்துல எம்புட்டு பணம் அள்றாருன்னு அவங்க வீட்டு கண்ணாலம், காச்சி, விசேசங்கள பாத்தா உங்களுக்கே தெரியும். அவங்க வீட்டுல வளர்ற மூணு நாயிங்களுக்கு சிக்கன், முட்டை, என்னமோ பிஸ்கெட்டு, பாலுன்னு சாப்பாடு போடும் செலவே நெதமும் 1000 ரூவாயத் தாண்டும். அன்னாடம் பூசை புனஸ்காரம்ன்னு 2000-ரூபா வரைக்கும் செலவு செய்வாரு அந்த முதலாளி. ஆந்திராவுலேருந்து லாரில வெங்கடாசலசாமி செலைய கொண்டு வந்து வீட்லேயே அஞ்சு நாளைக்கி திருவுழா நடத்துவாரு. அஞ்சு நாளைக்கும் ஊரு பூரா மூணு வேளை விருந்து வைச்சு, திருப்பதி லட்டு தாம்பூலப் பை (பை மட்டும் 100 ரூபா) கொடுத்து எல்லாம் பாத்தா செலவு பல லட்சத்தை தாண்டுங்க. இப்பேற்பட்ட பாரி வள்ளல் முதலாளி, எங்க ரெண்டு பேருக்கும் சேத்து தந்த மாச சம்பளம் 5,500 ரூவாதானுங்க. எங்களுக்குன்னு மாடியில சின்னதா ஒரு அறை, கேஸ் அடுப்பு, சம்பளம் போக சமையல்கட்டு சாமானுங்கன்னு பாத்ததுமே, முதலாளி இவ்ளோ தங்கமானவரான்னு தோணிச்சு. ஆரம்பத்துல கிராமத்து வாழ்க்கைக்கு சென்னை வாழ்க்கை தேவலான்னு நெனச்சேன். வூட்டுக்குள்ள தங்க வைச்சு செக்கு மாடாட்டம் நிக்காம சுத்த வெக்கிறதுன்னா என்னண்ணு அப்ப தெரியல. பொதுவா இழுத்துப் போட்டு வேலை செய்யும் குணம் எனக்கு. ஆரம்பத்துல நமக்கு கெடச்சது அற்புத வாழ்க்கன்னு நெனச்சு அத தக்க வச்சுக்க சொன்ன வேலையையும் தாண்டி சொல்லாத வேலையையும் சேத்து செஞ்சோம். வூட்டுல கஷ்டம்னு சந்தைக்கி வந்த நல்ல உழவு மாட சல்லிசா வாங்கிபுட்டதா முதலாளியும் அவரோட வூட்டம்மாவும் நெனச்சுருப்பாங்கண்ணு இப்ப தோணுது. எனக்கு வீட்டு வேல. வீடு தொடைக்கணும், பாத்திரம் கழுவணும், கையால துணி தொவைக்கணும், வீட்டுல உள்ள மத்த பத்து வேலக்காரங்களுக்கு மூணு நேரம் சமைச்சு போடணுன்னு தான் வேலைக்கி பேசிவிட்டவரு சொன்னாரு. வேலைக்கி சேந்த கொஞ்ச நாள்ல தெரு பெருக்கறதுலேர்ந்து, டாய்லட் கழுவுற வரைக்கும் செய்யச் சொன்னாங்க. ஒவ்வொருத்தரு ரூமுலயும் ஒரு டாய்லெட்டு, ஆபீஸ் ரூமையும் சேத்து வீட்டுக்குள்ள மட்டும் ஆறு டாய்லெட். வெளியில வேலக்காரங்க போறதுக்கு நாலு டாய்லெட். அத்தனையும் கழுவணும். முதலாளி வூட்டம்மாவுக்கு காய்கறி நறுக்குறது, பாத்திரம் கழுவுறது, சமையலுக்கு உதவறது, காத்தால நாலு மணிக்கு எந்திரிச்சி நாளுக்கு தக்க ரெண்டு கிலோ, நாலு கிலோ பூவ நின்னுக்கிட்டே கட்டுறதுன்னு சொல்லி மாளாத வேலைங்க. எங்க வீட்டுக்காரருக்கு வாட்சுமேன் வேல. தோட்ட வேலையிலேருந்து நாயி பேண்டதை கழுவி, வாக்கிங் கூட்டிட்டு போய், குட்டிப் போட வைக்கிற வரைக்கும் எல்லா வேலையும் செய்யணும். இது போக எங்ககூரு கரம்பக் காடு மாறி விரிஞ்சு கெடக்குற அந்த மாளிகை வீட பெருக்கி, துடைச்சு கண்ணாடி மாறி வெக்கணும். இவங்கிட்ட வேலைக்கி சேந்து அஞ்சு வருசம் ஆச்சு. ஒரு வயசு கூட ஆகாத கைக்கொழந்தைய தூக்கிட்டு வேலைக்கி வந்தேன். பிள்ளைய மூணாவது மாடில ரூம்ல பூட்டிட்டு கீழ வீட்டு வேல செய்வேன். எங்க வீட்டுக்காரரு போயி அப்பப்ப பாத்துக்குவாரு. ஆனாலும் புள்ள நெனப்புல எனக்கு மாருல பாலு கட்டிக்கிட்டு ஊத்தும். நான் போயி பாக்கும் போது ஏம்புள்ள ஏங்கி அழுதுட்டு கைய சப்பிகிட்டு படுத்து தூங்கிருக்கும். அன்னாடம் இப்புடி எம்புள்ளய பாக்கும் போது செத்தரலாமுன்னு தோணும். முதலாளி பணத்திமுருல ஒரு ஆளு உக்காந்து போகவே 7 காரு வச்சுருக்காரு. எங்கூட்டுக்காரு  நெதமும் அத பளபளன்னு தொடைக்கணும். காருங்கள பாக்கையில எம்புள்ள ஆசையா தொட்டு வெளையாடும். ஒடனே பங்களாவே கலகலத்துப் போற மாறி அழுக்கா போயிருச்சின்னு அந்த கத்து கத்துவாரு ‘நல்ல மனசு’ முதலாளி. இல்லாத கஷ்டத்துக்கு இடுப்பொடிய வேல பாத்தாலும், தோட்டத்துல தண்ணி விட்டியா, நாயெ குளிக்க வச்சியா, சோறு போட்டியா, பேல வச்சியான்னு எங்க வீட்டுக்காரர, நாயவிட கேவலமா நடத்துவாரு. இதெல்லாம் பரவாயில்ல. “நாயி எதுக்கு இத்தன நாள செனை புடிக்கல. அதுக்குள்ள நீ படுக்க போயிட்டியா”ன்னு அசிங்கப் படுத்துவாரு. கேக்கையில எனக்கு ரத்தம் கொதிச்சாலும் அப்பாவியான என் வீட்டுக்காரரு நெலமெ ரொம்ப மோசமுங்க. இந்த மாதிரி பாவிங்ககிட்ட வேலை பாக்கறதுக்கு ஊரோட போயிரலாமான்னு நெனப்பேன். ஆனா, ஊருல உள்ள கடன அடைக்க இந்த முதலாளிகிட்ட ஒன்ர லட்ச ரூவா கடன வாங்குனேன். சம்பளத்துல மாசாமாசம் புடிச்சுகிட்டதுல அம்பதாயிரம் முடிஞ்சு போச்சு. திடீர்னு எங்க அப்பா செத்துப் போய்ட்டாரு. அதுக்காக ஒரு இருவதாயிரம் கடன் கேட்டேன். காசு குடுக்குறது அவருக்கு பெரிசில்ல. ஆனா, துக்கத்துக்கு போனா கருமாதி முடிஞ்சுதானே வருவேன்னு சண்ட போட ஆரம்பிச்சுட்டாரு. எத்தனையோ தடவ அசிங்கப் பட்டப்பெல்லாம் பொறுத்துகிட்டுதான் போனோம். ஆனா பெத்த அப்பனோட சாவுக்கு கூடவா கணக்கு பாப்பாங்கன்னு கோவத்துல நானும் ரெண்டு வார்த்த கூட பேசினேன். ஒடனே வாங்குன கடங்காச வச்சுட்டு அந்தண்ட போன்னுட்டாரு. எங்கேருந்து ஒடனே பணம் தர முடியும். “இவ்வள பணம் எங்கிட்ட இருந்தா எதுக்கு ஒங்ககிட்ட வேல பாக்குறேன். என்ன வெளிய விடுங்க. நான் எங்கயாவது வேல பாத்து ஒரு வருசத்துல ஒங்க கடன அடைக்கிறேன்னு” சொன்னதுக்கு “என் வீட்டு எச்சி சோத்த தின்னுட்டு என்னையே எதுத்து பேசுரியாடி தேவுடியா”ன்னு கேட்டாங்க அந்த பொறம்போக்கு. இந்தாளு இப்படி திடீரென்னு சண்டை போடறதுக்கு நாலு நாளைக்கு முன்னாடி நடந்த சம்பவம்தான் காரணுமுன்னு தோணுது. ஆமாங்க. நான் தேவுடியாளா இல்லங்கறதுதான் அவனோட கவலை. பேரம் பேத்தி எடுத்தாலும் முதலாளிங்கற ஆணவத்துல பொறுக்கி புத்திய காட்டி அப்பப்ப பல்லிளிச்சிகிட்டுதான் அந்தாளு பேசுவான். அன்னைக்கு சமையகட்டுல பாத்திரம் வெளக்கும் போது பின்னாடியே பூனை மாறி வந்து என் தோள்பட்டை மேல கைய வெச்சான். நிலை குலைஞ்சு போன நானு, “என்ன சார் இந்த மாதிரி பண்றீங்க, மேடத்துக்கிட்ட சொல்லுவேன்னு” கையை தட்டி விட்டேன். “உனக்கு பிழைக்க தெரியல, புரிஞ்சு நடந்துக்க மாட்டேங்குற”ன்னு பேரம் பேசுனான் அந்த படுபாவி. ஆத்திரத்துல வாயில வந்தத நான் பேச கடைசியில, “இத வெளிய சொன்னா, கடனை அடைக்கிறதுக்கு நீதான் கூப்ட்டேன்னு கதைய மாத்துவேன்”னான் அந்த கடங்காரன். வறுமையின்னு வேலைக்கி வர்றவங்க பணத்த பாத்தா, பல்ல இளிச்சுகிட்டு வருவாங்கன்னு சாதாரணமா நெனச்சுருக்கான் அந்த கம்முனாட்டி. பெறகு நம்ம விதி இதுதான்னு நான் மனசொடிஞ்சு போய் வேலைய பாக்க போயிட்டேன். இந்த சண்டைக்கு பெறகுதான் அவன் ஒரு தினுசா என்ன கருவற மாதிரியே காத்திருந்தான்னு இப்ப தோணுது. [ரேப்] “தேவுடியாள இருந்தேன்னா உன் வீட்டு கக்கூசு வரைக்கும் கழுவிட்டு இருந்துருக்க மாட்டேய்யா. இருந்த எடத்துல சம்பாரிச்சுட்டு போயிருப்பேன். மானத்தோட ஒடம்ப ஓடா தேச்சு ஒழச்சதுக்கு நீ தர்ற பரிசாய்யா இது. நீ காசு தரவேண்டாம். இனிமே வேல பாக்கவும் முடியாது. எதுவா இருந்தாலும் சாவுக்கு போயிட்டு வந்த பொறவு பேசிக்கலாமு”ன்னு சொல்லிட்டு ஊரப் பாக்க கிளம்பிட்டோம். சாவுக்கு போயி மூணா நாளு போலீசுலேருந்து போனு வருது, நீங்க ஒடனே ஸ்டேசனுக்கு வாங்கன்னு. ஸ்டேசனுக்கு போயி பாத்தா, “பணத்த வாங்கிட்டு சொல்லாம கொள்ளாம ஓடி வந்துட்டிங்கன்னு எங்களுக்கு கம்ப்ளேண்டு வந்துருக்கு, என்ன சொல்றீங்க” அப்புடிங்குறாரு போலீசு. எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. இடிஞ்சு போயிட்டேன். நெஞ்சுக்குள்ள சுருக்குன்னுச்சு. “ஊருக்குள்ள தெரிஞ்சா  திருடிட்டு ஓடியாந்துட்டேன்னு சொல்லுவாங்களே. அசிங்கப்பட்டு சாவணுமா? ஏழை சொல்லு அம்பலம் ஏறுமா”ன்னு? பொணந்தின்னி கழுகுன்னா அது இவனுக்குதான் சரியாருக்கும். எழவு விழுந்த வீட்ல ஒப்பாரி ஓயறதுக்குள்ள அவனோட திமிர காமிச்சுட்டான். ஸ்டேசனுக்கு போயி நடந்தத சொல்லிட்டு. குடுத்த பணத்துக்கு ஈடா வெத்துப் பத்தரத்துல கையெழுத்து போட்டு குடுத்துருக்கோம். அந்த கழிசடை முதலாளி எங்க வூட்டுக்காரரு பள்ளிக்கூட டீசி, பாஸ்போட், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை எல்லாத்தையும் வாங்கி வச்சுகிட்டுதான் பணமே தந்தான். இவ்வளவு நடந்தப்புறம் இனி அவங்கிட்ட வேல செய்ய முடியாதுன்னு அஞ்சு மாசத்துக்குள்ள வாங்குன பணத்த தந்துர்ரேன்னு போலிசுகிட்ட எழுதி குடுத்துட்டு வந்துட்டேன். “நீயும் ஒம் புருசனும் இவ்வளவு நாளா ராப்பகலா அவனுக்கு வேல பாத்ததுக்கு அவந்தான் காசு தரனும். நீ வாங்குன பணத்த தர்ரேன்னு ஒத்துகிட்டது தப்பு. அவமேல கேசு போட்டா பணம் கெடைக்கும்”னு எங்கூருல பல பேரு சொன்னாங்க. இதுல அவனோட பொறுக்கிதனத்தை யாருகிட்டயும் சொல்லலை. கிராமத்து பொண்ணு ஒருத்தி இதையெல்லாம் எதுத்து நிக்காம மென்னு முழுங்குறது ஏன்னு எப்புடி உங்களுக்கு புரிய வெக்கிறதுன்னே தெரியல. அவனுக்கு இருக்குற செல்வாக்குக்கு எதுவேணுன்னாலும் செய்வான். பணத்த, நகைய திருடிட்டேன்னு கேசு குடுப்பேன்னு என்னைய ஒரு தடவ மெறட்டுனான். ஒத்தாளா நின்னு அவங்கிட்ட மல்லுக்கு நிக்க முடியாது. அதுவும் போக, வாங்குன பணத்த இல்லன்னு சொன்னா அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கு, சொல்லுங்க பாப்போம். மானத்த எழந்துட்டு அவங்கிட்ட வேல பாக்க முடியாது. குடுத்த வாக்க காப்பாத்த தலைய அடகு வச்சாவது அவன் பணத்த தூக்கி எரியணும். என்ன செய்ய! திரும்பவும் ஊருல உள்ள மிராசுதாருகிட்ட அஞ்சு காசு வட்டிக்கி வாங்க வேண்டியதுதான். ஊருக்கும் சென்னைக்குமா பல வாட்டி அர்த்த ராத்திரியிலயெல்லாம் தனியா போயிருக்கேன். இளவட்ட பொண்ணுதான்னு எந்த ஊரு ஜனமும் இப்படி என்னை கேவலப்படுத்தல. ஒரு பணக்கார கெழட்டு நாயி என்ன பாடுபடித்திச்சுன்னு இப்ப யோசிச்சு பாத்தா மனசு கெடந்து தவிக்கிது. என்ன மாறி ஊருகாட்டு பொண்ணுங்க வறுமையில சாகாம வாழணும்ணா நிறைய போராடணும் போல! –    சரசம்மா. (உண்மைச் சம்பவம். ஊர், பெயர், அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.) 5 ஏம்மா ஒரு எலுமிச்ச சாதம் என்ன விலைம்மா ? சூரியன் உதிக்கும் அதிகாலை பொழுதும், அந்தி மயங்கும் மாலை பொழுதும் பரபரப்பாக இருக்கும் மாநகராட்சி பூங்காக்களை அறியாத சென்னை மக்கள் யாரும் கிடையாது. நாம் போகும் அதிகாலை நேரத்திலும் கூட பூங்காக்கள் துப்புறவு செய்யப்பட்டு, சுத்தமாக இருப்பதை பார்த்திருக்கிறோம். செடிகளை பார்த்து ரசிக்கும் விதத்தில் வடிவமாக வெட்டிவிட்டு கோடையிலும் பசுமை மாறாமல் மனதை ஈர்க்கும் அழகை சேர்க்கும் இந்த உழைப்புக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? அந்தந்த பூங்காக்களின் ஒரு மூலையில் இருக்கும் புறா கூண்டு போல் உள்ள ஒரு கொட்டடியில் இருந்து கொண்டு வாழ்க்கையை ஓட்டும் இந்த ஜீவன்கள்தான் பூங்காக்களை பராமரிக்கிறார்கள். நாம் ரசிக்கும் பூக்களுக்கும், செடிகளுக்கும் உயிர் கொடுக்கும் அவங்களோட வாழ்க்கை எப்படி இருக்கும்? பூங்காவின் ஓரத்தில் ஒரு ஆள் படுக்கும் அளவு கொண்ட ஒரு அறையும் அதில் மண்வெட்டி, செடி வெட்டும் கத்தரிக் கோல், தண்ணீர் விடும் குழாய், குப்பை அள்ளும் கூடை, தொடப்பம் என்று தளவாட சாமன்களுடன் அந்த சமையலுக்கு இரண்டொரு பாத்திரம், ஒரு கொடியில் துணிமணிகள், ஒரு பாய் தலயணையும் கூட இருந்தது. இதுதான் பூங்காவை பராமரிக்கும் பணியாளர் வாழும் இடம். இவர்களின் சமையலோ மரத்தில் ஒரு கோணியை பந்தல் போல் கட்டி அதுக்கு கீழே கல்லு வச்சு அடுப்புக் கட்டி சமைச்சுக்கணும். மாநகராட்சி பூங்காவில் வேலை செய்யும் அனைவருக்கும் இது பொருந்தும். இந்த இடத்தை பார்த்தால் ஒரு குடும்பம் வாழும் சூழ்நிலையில் இல்லாமல் பூங்காவை பராமரிக்க உதவும் மராமத்து சாமானை அடைத்து வைக்கும் இடத்தில் இந்த உயிர்களையும் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது. அப்படி ஒரு பூங்காவை பராமரிக்கும் 70 வயது மதிக்கத்தக்க அம்மா ஒருவரை சந்தித்தேன். அவருக்கு ஒரு கண்ணுல பூ விழுந்து ஒரு பக்க கண் பார்வை தெரியாது. எலும்பும் தோலுமா பார்க்கவே பரிதாபமாக இருந்தார். ஒரு ஏக்கருக்கு குறைவில்லாமல் இருக்கும் அந்த பூங்காவை தனி ஒரு ஆளாக இருந்து கவனித்துக் கொள்கிறார். செடிகளின் ஓரத்தில் கூட ஒரு தூசியை தேடி எடுக்க முடியாத அளவு சுத்தமாக வைத்திருந்தார். இவரை பல தடவை பார்த்திருக்கிறேன். சொந்த நிலத்தில் பாடுபடும் அக்கறையோடு எந்நேரமும் ஏதாவது ஒரு மூலையில் எதாவது ஒரு வேலை செய்து கொண்டே தான் இருப்பார். அவரிடம் பேசும் போது குப்பையை அள்ளிக் கொண்டேதான் பேசினார். “எனக்கு ரெண்டு பிள்ளைங்க. ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆச்சு. அவங்க பொண்டாட்டி புள்ளைய கவனிக்கவே ஓடா தேய்றானுவொ, நாம எதுக்கு ஒருத்தருக்கு பாரமா இருக்கனுன்னு இந்த வேலைய பாக்குறேன். அஞ்சு வருசமா இந்த வேலை பாக்குறேன். முதல்ல பீச்சுல வேல பாத்தேன். பொறவு தி.நகர்ல வேல பாத்தேன். இப்ப இங்க வடபழனிக்கி வந்து மூணு வருசமா ஒரே எடத்துல வேல பாக்குறேன். மொதலாளி எந்த பூங்காவுக்கு மாத்தி விட்றாரோ அங்க வேல பாக்கணும்”. [பெண் தொழிலாளி. 1]“காலையில அஞ்சு மணிக்கு எந்திரிச்சு மொதல்ல நட பாதைய பெருக்குவேன். பெரியவங்க வெளையாட்டு தெடல பெருக்கி தண்ணி தெளிப்பேன். பிள்ளைங்க வெளையாட்டு எடத்த பெருக்குவேன். இதுக்கே மணி பத்தாயிரும். பொறவு புல்லுல உள்ள குப்பைங்கள பொறுக்கிட்டு தண்ணி விட ஆரம்பிச்சேன்னா மணி 3 ஆயிரும். அப்பால ரெண்டு மொடக்கு கஞ்சி தண்ணிய குடிச்சுட்டு சாயந்தரம் சனமெல்லாம் வர்றதுக்கு முன்னாடி திரும்ப நடபாதைய ஒரு மொற பெருக்கிட்டு மிச்சமீதி இருக்குற செடிக்கி தண்ணி விடனும். 8 மணிக்கி பூங்காவ பூட்டிட்டு அதுக்கு பொறவு நான் குளிச்சு துணி தொவச்சு சாப்புட்டுட்டு படுக்க மணி ஒம்பது பத்தாயிரும்.” இதற்கிடையில் பூங்கா வாசலில் ஒருவர் அந்த அம்மாவை அதிகார தோரணையில் கூப்பிட்டார். அந்த அம்மா அருகில் போனதும் “என்ன ஆடி அசஞ்சு தேரு மாறி வர்ரே”ன்னு  திட்டின அவரு மறுவார்த்தை பேசரதுக்குள்ள, “என்னாய்யா பேச்சு பேசுரறீங்க, மூணு நாளா மிசினு வெட்டுன குப்பையெல்லாம் குனிஞ்ச தல நிமுறாம பெருக்கி அள்ளிக் கொட்டிட்டு கெடக்குறேன். நிமுறவும் முடியல. காலு மரத்துப் போயி நடக்கவும் முடியல. உயிர் போறா மாறி இருக்கு. என் வலி எனக்குதான் தெரியும். படி அளக்குற மொதலாளி நீங்க, கூப்புட்டா ஓடி வரனுன்னு நெனைக்கிறீரு குத்தமில்ல. அதுக்காக? கண்ண மூடி கண்ணு தொறக்கறதுக்குள வந்து நிக்க நானென்ன காத்தா, கரண்டா? நானொன்னும் படுத்து கெடந்துட்டு வரல. இடுப்பொடிய வேல செஞ்சுட்டு வர்ரேன்”னு தன்மானத்தோடு பேசியது மகிழ்ச்சியா இருந்தது. தன் வேலையை காப்பாத்திக்கவும், சம்பள உயர்வுக்காகவும், பதவி உயர்வுக்காகவும் தன்மானத்தை விட்டுக் கொடுத்து வாழும் ‘பெரியவங்க’ளுக்கு இந்த அம்மாவோட தன்மான உணர்ச்சி புரியுமா தெரியல. “இவ்வளவு வேலைகளுக்கு நடுவுல எப்ப சமைப்பிங்க சாப்புடுவிங்க?” என்று அந்த அம்மாவிடம் கேட்கும்போது மனதை வதைக்கும் படி பதில் சொன்னார். “என்னத்த பெரிய சமையலு! மத்தியானம் ஒரு நேரம் கொஞ்சம் அரிசி போட்டு வடிப்பேன். அதயே மறுநாளு காலையில வரைக்கும் தின்னுக்குவேன். இப்ப காலையில தின்னுக்கலான்னு கொஞ்சம் கஞ்சித் தண்ணி வச்சிருந்தேன். இன்னைக்கி பாரு ரோடு கூட்ற அம்மா வந்து நீராகாரம் (சோத்துத் தண்ணி) இருந்தா கொஞ்சம் உப்புப் போட்டு குடும்மான்னுச்சு. பாவம் நாலு மணிக்கி எந்திருச்சு ரோடு கூட்ட வந்துருப்பா, விக்கிற வெலவாசில ஒரு டீ கூட குடிச்சுருக்க மாட்டாளேன்னு இருந்த ரெண்டு கரண்டி சோத்துல ஒரு கரண்டி அள்ளிப் போட்டு தண்ணிய ஊத்தி குடுத்தேன். பசி மயக்கத்துல கண்ண மூடிக்கிட்டு மடக்கு மடக்குன்னு குடிச்சா. நம்ப மென்னுதின்னு துப்புன குப்பையதானே எடுக்குறான்னு ஜனங்க யாரும் எரக்கப்பட்டு ரெண்டு கஞ்சி குடுக்காதுங்க. கல்நெஞ்சம் படச்சதுங்க.” “இங்கன பெரும்பாலும் அய்யருமாருங்க வீடுங்கதான் அதிகம். நானும் இங்கன மூணு வருசத்துக்கு மேல வேல பாக்குறேன். யாரும் ஒரு நாள் ஒரு வாயி சோறு போட்டது கெடையாது. அம்மாச, கிருத்திகன்னா எதுத்த வீட்டு மாமி காக்கைக்கு வைக்கிற அளவுக்கு இத்தினியோண்டு சோறு குடுக்கும். அது என் வயித்து மூலைக்கு கூட பத்தாது. ரெண்டு தடவ வெக்கங்கெட்டு போயி வாங்கிட்ட, பொறவு கூப்புட்டா சாப்புட்டேன்னு சொல்லி புடுவே. பூங்காவுக்கு நித்தமும் வர்ரதுங்க கூட எதையாவது திண்ணுட்டு திங்க முடியாம அப்புடியே பாக்கெட்டோட போட்டுட்டு போவுமே தவிர இந்தான்னு கொடுக்காதுவ, ஈவு எறக்கமெத்த சனம் என்னத்த செய்ய.” இப்படி பேசிக்கொண்டிருந்த அம்மா தயக்கத்தோட மெதுவாக கேட்டார், “எலும்பிச்ச சாதம் கடையில என்ன வெல இருக்கும்மா”. “20 ரூவா இருக்கும்மா. எதுக்கு கேக்குறீங்க.” “மிசினு வந்து வெட்டுன புல்ல ரெண்டு நாளா பெருக்கி அள்ளிக் கொட்றேன் இன்னும் பாதி வேல கூட முடியல. ரெண்டு நாளா தண்ணி கஞ்சி குடிச்சு நாக்கு செத்துக் கெடக்கு. இன்னைக்காவது கொழம்பு வப்போன்னு நெனச்சேன் முடியல. அதான் ஒரு பொட்டலம் எலும்பிச்ச சாதம் வாங்கி சாப்புடலான்னு கேட்டேன். நீ இந்த வெல சொல்ற ஒரு வேளக்கி 20 ரூவாய்க்கி சாப்புட்டா நமக்கு கட்டுப் படியாகாது. அரைக் கிலோ இட்லி மாவு வாங்கவே ஒரு வாரம் யோசிச்சேன். 20 ரூவா இருந்தா ரெண்டு நாள் பொழப்ப ஓட்டிருவேன்.” என்றார். சம்பளம் பத்தி கூறும் போது “வாங்குற 3600 சம்பளத்த வச்சுகிட்டு கண்டதுக்கும் ஆசப்பட முடியுமா? சாப்பாட்டு சாமான், குளிக்க, தொவைக்க, பாத்தரம் கழுவ சோப்பு, தலைக்கி எண்ண, மாத்தர மருந்துன்னு எத்தன செலவு இருக்கு. கையில கெடச்சதெல்லாம் செலவு பண்ணிட்டு பின்னாடி வேல இல்லாம, கை கால் விழுந்துருச்சுன்னே வையி; வெறும் கையோட போய் நின்னா பிள்ளைங்களுக்குதானே கஷ்டம். அவங்களுக்கு ஒரு தொந்தரவு தராம நம்ம பாதைய நாமளே பாத்துக்கனும்”, என்றார். ஒரு எலுமிச்ச சாதத்துக்கும், ஆழாக்கு இட்லி மாவுக்கும் அந்தம்மா தயங்குற ஊருலதான் பிசா, பர்கரு, தலப்பாகட்டு எல்லாம் பெருக்கெடுத்து ஓடுது. பெட்டிக் கடையிலயே அமெரிக்க சிப்சு வகைங்களெல்லாம் சரம் சரமா தொங்குது. செட்டிநாடு, மதுரை, திண்டுக்கல்லு, தஞ்சாவூருன்னு எல்லா ஊரு சுவையும் ஓட்டல் ஓட்டலா கிடைக்கிது. ஒத்த ரூபாய பாத்து செலவு பண்ற இந்த அம்மாவுக்கும், காந்தி நோட்ட வீசி ஜீரணம் ஆகாம வாந்தி எடுக்குற கூட்டத்துக்கும்தான் எவ்வளவு வேறுபாடு? [சென்னை பூங்கா 1] சென்னையில மட்டும் 260 மாநகராட்சி பூங்காக்கள் உள்ளது. இந்த பூங்காக்களை பராமரிக்க மூன்று வட்டாரங்களாக பிரித்து மூன்று தனி தனி முதலாளிகளுக்கு 12.61 கோடி டெண்டர் விடப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கீழ் பராமரிக்கப்படும் இந்த பூங்காக்களில் விதவைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பொற்றோர்கள், சின்ன பிள்ளைகளுடன் நிற்கதியாய் ஆதரவற்றவர்களாய் இருப்பவர்கள் என்று எதிர்த்து கேள்வி கேட்க முடியாத படி வாழ்க்கையில் தூக்கி எறியப்பட்டவர்களே இந்த வேலையில் இருக்கிறார்கள். அவங்க கடந்த கால கிராமத்து வாழ்க்கையில மட்டுமில்ல, இப்போதைய பட்டணத்து வாழ்க்கையிலயும் கொத்தடிமைங்கதான். முன்பு பூங்காக்களை பராமரிக்க மாநகராட்சி ஊழியர்கள் இருந்தார்கள். அவர்கள் சரிவர பராமரிக்க வில்லை என்று கூறி, அவர்கள் வாழ்க்கையில் மண்ணள்ளி போட்டு விட்டு, மற்ற எல்லா துறைகளையும் தனியாருக்கு தாரை வார்த்த மாறி பூங்கா பராமரிப்பு வேலையையும் தனியாருக்கு கொடுத்துள்ளது அரசு. தின்னுட்டு உடம்பு பெருத்துப் போச்சுன்னு பூங்காக்களுக்கு நடக்க வார ஆபிசருங்களுக்காக பராமரிக்கப்படும் பூங்காக்களுக்கு இருக்கும் மரியாதை கூட இந்த தொழிலாளிங்களுக்கு இல்லை. பனித்துளியில இருக்குதுடா உலகம்ணு கவிதை எழுதர எழுத்தாளருங்களெல்லாம் சென்னை பூங்காக்கள்ள குந்திக்கிணு ‘உலக’ இலக்கியமெல்லாம் படைச்சிருக்கோம்ணு அவங்களே சொல்லக்கிறாங்க. ஆனால உலக இலக்கியத்த எழுதுனவங்க எல்லாரும் செடி கொடிக்கு கண்ணீர் விட்ட மாதிரி அதுக்கு தண்ணி ஊத்துனவங்களுக்கு விடல. ஏன் பாக்க கூட இல்ல. இந்த பூங்காக்கள் இன்று பெரும்பாலும் தேகப் பயிற்ச்சி, நடை பயிற்சி, தியானம், யோகா என்று நடுத்தர வர்க்கத்தின் உடல் குறித்த கவலை தீர்க்கும் இடமா மாறி வருதுது. ஓட்டல்ல தீனி, பார்க்குல நடைன்னு இந்த முரண்பாடு என்னைக்குமே முடியாது. நகர்ப்புறங்களில் வாழும் மக்கள், நெருக்கமான வீடுகளுக்கு மத்தியில் இறுக்கமான சூழ்நிலையில் இருப்பதால், ஒரு காற்றோட்டமான, மரம் செடிகளுடன், இயற்கையோடு இளைப்பாற, பேசி மகிழ என்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது பூங்கா. ஆனால் அதை பராமரிக்கும் ஊழியர்களுக்கு, இவ்வளவு அழகான இயற்கைக்கு மத்தியில் கக்கூசு போன்ற கொட்டடியில் ஒரு எலுமிச்சை சாதத்திற்கு கூட வழியில்லாத கொத்தடிமை வாழ்க்கை தான் கிடைத்துள்ளது. மனுசனை மறந்துட்டு இயற்கையை ரசிக்கிறவங்களுக்கும், ரோம் எரியும் போது பிடில் வாசித்த நீரோவுக்கும் வேறுபாடு இல்லேங்கறேன். என்ன சொல்றீங்க? –    சரசம்மா 6 எங்க ஊரு காதலுக்கு சாந்தியக்காதான் தலப்புதாரி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அரையாண்டு தேர்வுல, மூணு பாடத்துல முதல் மார்க்குன்னு வாத்தியார் சொன்னதும் கூடவே “அடுத்தவருசம்  பொதுத் தேர்வுலயும் பள்ளியிலேயே முதல் மார்க் எடுப்பே”ன்னு பாராட்டுனதும் எனக்கு சந்தோசத்துல தலகால் புரியல. [கிராமத்துப் பெண்] “சனி ஞாயிறுதானே இன்னைக்கி மட்டும் மாட்ட ஓட்டிப் போய் மேச்சுகிட்டு வா, நான் வயலுக்கு மருந்து வாங்க டவுனு வரைக்கும் போய்ட்டு வாரேன்னு” அப்பா சொன்னாலும், “ரேசனுக்கு போ, அப்பாவுக்கு கொல்லையில சோறு கொண்டுட்டு போ, அம்மாச்சி வீட்டுக்கு இதக் கொண்டக் குடு, அதக் கொண்டக் குடு”ன்னு அம்மா சொன்னாலும் எதயும் காதுல வாங்கக் கூடாது. கவனம் பூராவும் பத்தாவதுல முதல் மார்க் வாங்கறதுலதான் இருக்கணும்னு, வீடு வர்ர வரைக்கும் படிப்ப பத்துன சிந்தனையோடயே வந்து சேந்தேன். கிராமத்துல பொண்ணா பொறந்தவுளுக்கு படிப்பும், அது தர்ற சந்தோஷமும் எப்படி இருக்கும்ணு சொல்லி புரிய வைக்கிறது கஷ்டம். அடிமைங்களுக்கு விடுதலை இல்லேன்னாலும், அது என்னண்ணு புரிஞ்சா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க, அது மாதிரிதான் நானும். வெளஞ்ச வெள்ளாம வீடு வராம வட்டிக்காரனுக்கு படியளந்ததுப் போல, இடிஞ்சுப் போயி உக்காந்திருந்த அம்மாவ பாத்தா வழக்கத்த விட அப்பா சண்ட பெரிசா போட்ருப்பாரு போலத் தெரிஞ்சது. பள்ளிக்கூடத்துல வாத்தியார் பாராட்டுனத சொல்லி நெலமையா சீராக்கிரலாம்னு “அப்பா நான் எத்தனாவது மார்க்குன்னு பாரு”ன்னு பேப்பர எடுத்து ஆசையா கொடுத்தேன். கையில பேப்பர வாங்குன வேகத்துல சுக்கு நூறா கிழிச்சிட்டு “நாளையிலேர்ந்து பள்ளிக்கூடம் போக்கூடாது, படிப்பும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் வீட்டுல உள்ள வேலையப் பாரு”ன்னு சொல்லிட்டு பட்டுன்னு எழுந்து போய்ட்டே இருந்தாரு. வாத்தியாரு பாராட்டு, முதல் மார்க்கு, பொதுத் தேர்வுன்னு மனசுல புதுவெள்ளமா வந்த படிப்ப பத்துன உற்சாகம், திடீர்னு வடிஞ்சு வறண்டுப் போய் நின்னுட்டேன். அம்மா காரணம் சொல்ல ஆரம்பித்தாள். “படிப்பு படிப்புன்னு மினிக்கிக்கிட்டு போனாளே வட கொண்டார் வீட்டு சாந்தி, சொல்லவே நாக்கூசுது – தேவூரு சின்னசாதி பயலோட ஓடிட்டாளாம். நம்ம குடும்பத்துல நடந்தா நாண்டுகிட்டுதான் சாவனும். அப்பா சொல்றத கேட்டு அடக்கமா நடந்துக்க”ன்னு அன்னைக்கே படிப்ப கழுவி கவுத்துட்டாங்க. பசியோட இருக்குறவனுக்கு அன்னத்த காட்டி அடிச்சு விறட்டுனா எப்படி இருக்கும்ங்கிறதை அன்னைக்கு புரிஞ்சுக்கிட்டேன். இது நடந்து 21 வருசமாச்சு ஒரு தடவக்கூட சாந்தியக்காவ பாத்தது கெடையாது. காலப்போக்குல குடும்பம் கொழந்தன்னு என்னோட வாழ்க்கை நகரத்துக்கு மாறிப் போச்சு. ஊருக்குப் போகும் போது சாந்தியக்கா எப்படிருக்கான்னு அவங்க கிராமத்த சேந்தவங்கக்கிட்ட விசாரிப்பேன். ஒருத்தரும் சரியா சொல்ல மாட்டாங்க. ஆனா அவள நெனைக்காத நாளே கெடையாது. வாழ்க்கை பிரச்சனைங்களோட வாழுற பொண்ணுங்களுக்கு, வேலைக்கு போற, படிச்ச பொண்ணுங்களப் பாத்தா ஒரு ஏக்கம் வரும். அவங்களுக்கு வேற பிரச்சினைங்க இருக்கிறது தெரிஞ்சாலும், நாம எதையோ இழந்துட்டமோண்ணு வலிக்கும். அப்படி படிப்பு போச்சேங்கற வருத்தம் வரும் போது கூடவே சாந்தியக்கா நெனப்பும் வரும். பின்னாடி வெவரம் வந்த பிறவுதான் நம்ம படிப்பு போனாலும், அக்கா செஞ்சது நம்ம சுத்துப்பட்டு ஊருகள்ல எந்த பொண்ணும் நினைச்சுப் பாக்காததுன்னு தெரிஞ்சது. மகளிர் தினத்துக்கு நானும் ஒரு பெண்ணப் பத்தின பதிவு எழுதனுன்னு நெனச்சப்ப சாந்தியக்கா ஞாபகம் தான் வந்தது. எப்படியாவது அவளோட நம்பர் வாங்கி பேசி அத மகளிர் தின கட்டுரையா எழுதனுங்கற முடிவோட ஒரு மாசமா பலருட்ட துப்பு கேட்டு நம்பரை வாங்கி சாந்தியக்காட்ட பேசினேன். இத்தன வருசம் கழிச்சு பேசுரோமே என்ன நெனப்பாளோங்கற தயக்கத்தோட “சாந்தியக்கா, நான்தான் பேசுரேன், ஞாபகம் இருக்காக்கா”ன்னு  ஆரம்பிச்சேன். பல வருஷத்துக்கு முந்தி பாத்த அதே சாந்தியக்காவோட அன்பான பேச்சு மாறவே இல்ல. “என்னடா அப்புடி கேட்டுபுட்ட நம்ம புள்ளடா நீ, எத்தன வருசமாச்சு சின்னப்புள்ளையில பாத்தது. நல்லாருக்கியா, அம்மா அப்பாவெல்லாம் நல்லாருக்காங்களா! தம்பி தங்கச்சியெல்லாம் என்ன செய்றாங்க ஒனக்கு கல்யாணம் ஆயி ரொம்ப வருசமா பிள்ள இல்லன்னு கேள்விப் பட்டேன் கொழந்த இருக்காடா, ஊருக்கெல்லாம் வருவியா, இத்தன வருசம் கடந்து நீ பேசற சந்தோசத்துல என்ன கேக்குறது ஏது கேக்குறதுன்னே தெரியல போ…” சாந்தியக்கா மூச்சுவிடாம கேட்டக் கேள்வியில தொண்டக் கதிர் நெல்லு வெளியே தள்ளுற மாதிரி பாசமும் ஏக்கமும் மடை தொறந்து கொட்டுச்சு. ரொம்ப நாளைக்கு பெறவு பேசுறதால அக்காவ நீ வான்னு பேசவா, இல்லை நீங்க வாங்கன்னு பேசறதான்னு பேச்சுல தடுமாற்றம் இருந்திச்சு. ஆனா அக்காவோட நெருக்கமான பேச்சு பழைய நீ வாவையே கொஞ்ச நேரத்துல கொண்டு வந்துருச்சு. “நான் சந்தோசமா இருக்கேங்கா, உன்னோட பிள்ளைங்கள்ளாம் என்ன பண்ணுறாங்க வீட்டுக்காரரு பள்ளிக்கூடத்துல வேலப் பாத்தாரு, பெரியாரு கட்சியில இருந்தாரு, இப்ப என்ன செய்றாரு, எப்புடி இருக்காரு?” “பொண்ணு வெளியூருல காலேஜு படிக்கிறா, பய ஊருக்குல்லேயே பதினொன்னாவது படிக்கிறான். அவருக்கு பள்ளிக்கூடம், டியூஷன்னு வேலையே சரியாப் போவுது. முன்னமாரி கட்சியில இல்ல, ஆனா மாநாடு பொதுக்கூட்டம்னா போவாரு. குடும்பம், பிள்ளைங்க படிப்புன்னு வேலதான் கழுத்து வரைக்கும் இருக்கு, அப்பறம் எங்க கட்சி வேல செய்றது”. “அந்த ஊருல உள்ளவங்க உன்ன எப்படி பாப்பாங்க, எப்படிக்கா நடத்துவாங்க?” “தங்க தட்டுல வச்சு தாங்குவாங்கடி. ஒரு வேல சொன்னா ஓடி வந்து கேப்பாங்க. அதெல்லாம் மரியாதையா நடத்துவாங்க. எந்த கொறையும் இல்லடா. ஆனாலும் மத்தமத்த பிள்ளைங்கள்ளாம் தாத்தா, பாட்டி, பெரியம்மா, சின்னம்மான்னு சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம் போகயில நம்ம பிள்ள மட்டும் அனாதையப் போல வீட்லேயே அடஞ்சு கெடக்குதுங்களேன்னு நெனைக்கிம் போது கவலையா இருக்கும்டா. ஆனா பிள்ளைங்க அதையெல்லாம் புரிஞ்சுகிட்டு எனக்கு தைரியம் சொல்லும்” “உன்னோட அம்மா உயிரோட இருந்தப்ப ஒரு தடவ கூட வந்து உன்னய பாக்கலையாக்கா” “ஏதாவது செஞ்சுறுவாங்களோன்னு பயந்துகிட்டுதான் கல்யாணம் ஆயி, நாலு மாசம் வர இருக்குற எடம் தெரியாம இருந்தோம். வேற யாராச்சும் இருந்துருந்தா வெட்டிருப்பாய்ங்க. அவரு கட்சி அரசியல்னு இருக்காரு, அவர சுத்தி இவ்வளவு கூட்டம் இருக்கு, நெருங்க முடியாதுன்னு ஒதுங்கி இருக்காய்ங்கன்னு தெரிஞ்சப் பெறகுதான் இந்த ஊருக்குள்ள வந்தோம்.” இதப் பேசுறப்போ சாந்தியக்கா பழைய காலத்துக்கு போய்ட்ட மாறி தெரிஞ்சிது. “பாப்பா வயித்துல மூனு மாசமா இருந்துச்சு. எங்க அம்மா வந்து கருவ கலைச்சுரலாம், வீட்டுல கோச்சுகிட்டு போனதா ஊருல சொல்லிறலாம், மாமா கட்டிக்கிறேங்குறான் வந்துருன்னு பத்து தடவைக்கி மேல வந்து கூப்புட்டாங்க. அந்த பேச்ச பேசிகிட்டு இந்த வாசப்படி மிதிக்காதேன்னு திட்டி அனுப்பிச்சேன். அப்புறம் பிள்ளைங்கள்ளாம் பொறந்த பிறகு உங்களையெல்லாம் பாக்கணும் போல இருக்கு, ஆனா ஊருல அசிங்கமா பேசுவாங்களோன்னு பயந்துகிட்டே ஏழட்டுத்தடவ ராத்திரில வந்துட்டு பாத்துட்டு போனாங்க. அப்பறொம் வர்றதே கெடையாது.” “ஒங்க அம்மா அப்பா சாவுக்குக்கூட நீ வரலையாமே ஏங்கா?” “இத்தன வருசத்துல ஒரு தடவக் கூட நம்ம ஊருக்கு நான் வந்தது கெடையாது. அதுக்கு காரணம் பயம் கெடையாது. எதுக்கு நம்பளால ஒரு பிரச்சனன்னுதான். அப்பா செத்தது நாலு நாளைக்கப்பறந்தான் தெரியும், அம்மா செத்தது ரெண்டு மாசம் கழிச்சுதான் தெரியும். செத்தது தெரிஞ்சு வந்துறப் போறேன்னு அவசர அவசரமா அடக்கம் பன்னியிருக்கானுவொ. எங்க சித்தப்பங்காறன் வீட்டுலதான், சொத்து மொத்தத்தையும் அடைச்சு பட சாத்திக்கிற (படல்-முள்வேலி) எண்ணத்துல எங்க குடும்பத்த சின்னாபின்னமாக்கி சீறழிச்சுப்புட்டானுவொ.” “பங்காளிப் பயல்ல பாதிப் பய பானைய தொடாம பருப்பள்ளுற பயலுக, போறெடம் வாரெடத்துல ஏம்புருசன்கிட்ட பேசுவானுவொ. ஆனா சாவ சொல்ல ஒருத்தனுக்கும் மனசில்ல. பணம் பதவின்னு இருக்கோமே எக்குத்தப்பா எங்கெனயாவது மாட்டிகிட்டா கட்சிக்காரன், வாவுவழி தெரிஞ்சு காப்பாத்துவான்னு கணக்குப்பண்ணி பாத்த எடத்துல பேசிவய்க்கிறாய்ங்க வேறோன்னுமில்ல.” “உங்க தங்கச்சிய கட்டிக் குடுத்து வயுத்துல புள்ள இருக்கும் போதே ஒரு வருசத்துலேயே வீட்டுக்காரு எறந்துட்டாரு பாவம். ஊருல நீதான் காரணம்னு சொல்லுவாங்க, இப்ப அவ எப்புடி இருக்கான்னு தெரியுமா, நீ பாத்தியாக்கா?” “எல்லாம் எங்க சித்தப்பந்தான் பண்ணுனது. நானு வீட்ட விட்டு ஓடிட்டா நல்ல மாப்புளையே கெடைக்காதா என்ன? சட்டிய பானையாக்குறதுதான் அவன் எண்ணம். ரெண்டு வேலி நெலத்த நாலு வேலியா ஒண்ணு சேத்துக்கிட்டான். சொத்த அமுக்கிகிட்டு செய்யறத செய்யலாம்ன்னு அவசர அவசரமா ஒரு சீக்காளி மாப்பிளைக்கி கட்டி குடுத்து என் தங்கச்சி வாழ்க்கைய கெடுத்துட்டானுவொ. இன்னைக்கி பெத்த பிள்ள எங்கருக்குன்னு சொல்லத் தெரியாம கூட பைத்தியமா அலையிறா. ஊருலேருந்து கந்த துணிய போட்டுகிட்டு வாரா, பாக்க சகிக்கல. இதுக்கெல்லாம் காரணம் அவைங்கெதான். எங்க வதையெல்லாம் அவங்கெளும் அணுபவிச்சு சாவுவாய்ங்கெ” “சொத்துக்காக சாதிய காரணம் காட்டி உங்கள ஒதுக்கி வச்சுருக்காணுவொ, சுயநலத்துக்காக மறைமுகமா ஒறவு வச்சுக்குறானுவொ, தங்கச்சிக்கு 16 வயசுல உருப்படாத கல்யாணத்த பண்ணி வச்சு ஒரு வாழ்க்கைய அழிச்சிருக்கானுவொ, எல்லாம் புரிஞ்சுருந்தும் எதுக்கு ஒதுங்கி வாழ்ற, நீ எதுத்து கேக்க வேண்டியதுதானே?” “என்னோட கையெழுத்து இல்லாம சொத்து வாங்கிருக்கானுவொ. இன்னைக்கி நெனச்சாலும் கேஸு போட்டு சொத்தெடுக்கலாம். ஆனா சொத்துக்காதான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டாருன்னு அவரையும் ஊரு நெனைக்கும். சொத்துக்காக எங்க குடும்பத்தையே அட்ரஸ் இல்லாம பண்ணிட்டாய்ங்க. அடுத்தவங்க குடிய கெடுத்து அவன் மட்டும் வாழவா போறான்?” “அதுவும் தவிர நானு ஒழிஞ்சல்லாம் வாழளடா. நம்ப ஊர்லேர்ந்து பழகுனவங்க, படிச்சவங்கன்னு நெறையப் பேரு கல்யாணப் பத்திரிக்கை குடுப்பாங்க. அவரு மட்டும் போவாரு. படிப்பு பதவின்னு அவர மரியாதையா நடத்துவாங்க. அது ஒரு மாதிரி போயிரும். நான் போனா ஒருத்தரில்ல ஒருத்தரு சுருக்குன்னு ஒரு வார்த்த சொல்லிட்டா என்ன செய்றது? பின்னாடி புள்ளைங்க மனசொடிஞ்சு போயிரும். அத தாங்கிக்க முடியாது. அதுங்களுக்கு ஒரு பாதிப்பு வரக்கூடாதுன்னு தான் எம்.பி.சி.-ன்னு போடாம பி.சி.-ன்னு பதிவு பண்ணி சர்ட்டிபிகெட் வாங்கிருக்கேன். பிள்ளைங்கதானடா முக்கியம்.” “சாதிய மீறி, தாலிய மறுத்து தைரியமா கல்யாணம் பண்ணீங்க. எதுக்கு சாதிய அடையாளப் படுத்தி சான்றிதழ் வாங்குனிங்க? இதுக்கு ஒங்க வீட்டுக்காரரு ஒன்னும் சொல்லலையா?” “அவரு என்னத்த சொல்றது. சாதி போடாம சர்ட்டிபிகேட் வாங்க முடியாது, அப்படி வாங்குனா செல்லாதுன்னு சொல்லிகிட்டாங்க, வெவரம் தெரியலையடா!” என்று எதார்த்தமான மனநிலையோடு பேசினாள். “சரிக்கா, நீ போனப்புறம்தான் என் செட்டு பொண்ணுங்க படிப்பை நிறுத்திட்டாங்களே, அது தெரியுமாக்கா?” “ஆமாண்டி, நான் போவலேன்னாலும் உன்ன என்ன கலெக்டருக்கா படிக்க வைக்க போறாய்ங்கெ? சமைஞ்சு வீட்டுல உக்காந்த எந்த பொண்ணுடி பள்ளிக் கூடம் போகுது? எல்லாம் நம்ம காலத்தோட ஒழியட்டும், உன் பொண்ணையும், என் பொண்ணையும் தலைய அடகு வைச்சாவது படிக்க வைப்போம்” “நீங்க வீட்டவிட்டு போனதை பற்றி ஊரில் பலமாதிரி பேசுனாங்க. அன்னைக்கி இரவு என்னதாக்கா நடந்தது எப்புடி போனிங்க? “ஏய்… யப்பா, எப்ப நடந்தத இப்ப கேக்குற. வந்த வழித்தடமே புல்லு மண்டி போச்சுப் போ… வேறெதாச்சும் பேசுவோம்டா.” என்றாள், இனிமே பேசி என்னாகப் போகுது என்ற ஆயசத்துடன். “எம் பொண்ணுகிட்ட உங்க கதைய முழுமையா சொல்லி தைரியமா வளக்கணும்க்கா, சொல்லுங்க” “ஒம் பொண்ணக் கூட்டிக்கிட்டு எங்க ஊருக்கு வா, நான்தாண்டி அந்த பெரியம்மா, இதுதாண்டி என்னோட கதையின்னு நேர்லேயே சொல்றேன்” என்று வெக்கப்பட்டு சிரித்தாள். _______________________ இதுவரை சாந்தியக்காவிடம் பேசியதுல சொந்தபந்தம்னு இல்லாம போச்சேன்னு வருந்தப்பட்டாளே தவிர ஒரு இடத்துல கூட மனம் தளர்ந்து போய் புலம்பல. பாத்துப் பழகுற தூரத்துல ‘சின்ன’ சாதியைச் சேர்ந்த ஒருவர கல்யாணம் பண்ணிகிட்டு, சொந்த பந்தங்கள பாக்க முடியாம பழகமுடியாம, அம்மா அப்பாவ இழந்து, சொத்த பறிகொடுத்து, கண்ணுக்கு நேரா தங்கச்சி வாழ்க்க நாசமா போயி எத்தன நெருக்கடி! சரி, ஊரை விட்டு போய் சாதி மாறி கல்யாணம் பண்ணி ரெண்டு புள்ளைங்ளோட சாந்தியாக்கா இருந்தாலும் அவளோட சாதிய மட்டும் இன்னும் விட முடியல. படிப்பு, வேலைக்கு மட்டுமில்லாம ஊருல ஒரு கவுரவத்தோட வாழணும்னாலே, சாதி கட்டாயம் வேணும்னு எல்லாரும் பேசுனா சாந்தியக்கா தனியா நின்னு என்ன செய்ய முடியும்? ஆனா சாதிப் பேரு எதுன்னு முடிவு பண்ற நேரம் வந்த போது அக்கா தன்னோட ‘பெரிய’ சாதியத்தான் தேர்ந்தெடுத்தாள். இதுலயும் அவளோட பெரியார் கட்சி வீட்டுக்காரருக்கும் பெரிய குறையில்லைங்கிறது அநியாயம். இதுக்கு அவர மட்டும் கொறை சொல்லி பிரயோஜனமில்ல. காலேஜ் நடத்துறதலயும், சீட்டு கம்பனி நிர்வகிக்கிறதலயும் மேதைங்களாயிட்ட பிறகு சாதி மறுப்பு கல்யாணம்,போராட்டமெல்லாம் அவரோட கட்சிகிட்ட எதிர்பார்க்கிறது தப்புதான். ஆனாலும் இவங்க என்ன முடிவு எடுத்தாலும் ஊர் உலகம் இவங்கள சாதி மாறி கல்யாணம் பண்ணுனாங்கன்னு எளக்காரமத்தான் பாக்குது. அதுதான் இன்னைக்கும் கூட அக்கா தன்னோட சொந்த ஊருக்கு போக்குவரத்து இல்லாம இருக்கா. என்ன இருந்தாலும் ஒரு கிராமத்துல இது மாதிரி ஊர வீட்டு போய் சாதி மாறி கல்யாணம் பண்ணி வாழ்றது சாதாரண விசயம் இல்ல. எங்க ஊருல வயசுக்கு வந்த பொண்ணுங்களுக்கு படிப்புங்கறது அரிதா இருந்த காலம்தான் அது. வயசுக்கு வந்த பொண்ணு அடுத்த வீடு போகக் கூடாது. மாமா, மச்சான்னு மொறக்கார ஆம்பள வந்தா எதுக்க வந்து நின்னு பேசக் கூடாது, மறைஞ்சுதாங் இருக்கணும். வயசாளியோ சீக்காளியோ வீட்ல பாத்தவன கண்ண மூடிகிட்டு கட்டிக்கணும். காதல் கீதல்னு வந்து நின்னு, சாதி சனத்துக்கு மத்தில மானத்த வாங்கிருவாங்கன்னு பொண்ணுங்கள வளக்குற மொறையே இறுக்கமா இருக்கும். இப்படி கட்டுப்பெட்டியான ஒரு ஊருக்குள்ள இருந்து ‘கீழ்’ சாதிய சேந்த ஒருத்தரோட, வீட்ட விட்டு ஓடிப்போயி காதல் கல்யாணம் பண்ணி கடைசி வரைக்கும் வாழ்ந்து காண்பிச்ச சாந்தியக்கா துணிச்சல்காரிதான். எங்கூர் பக்கத்துல சாதி பிரச்சனைக்கு அருவா தூக்கமாட்டாங்க, கலவரம் நடக்காது. ஆனா ஒரு பொண்ணு, காதல் கல்யாணமுன்னு சாதி மாறி போச்சுன்னா எப்படியாவது திரும்ப கூட்டிட்டு வர முயற்சி செய்வாங்க. அப்படி கூட்டிட்டு வந்தா அந்த பொண்ணுக்கு வெளிய தெரியாம மருந்த குடுத்து கொன்னுபுட்டு கமுக்கமா கவுரவத்த காப்பாத்திடுவானுங்க. இல்லன்னா ஊருல ஒருத்தனும் மதிக்காம, சின்னாபின்னப்பட்டு சாந்தியக்கா குடும்பம் போல சீரழிஞ்சு போணும், இதுதான் நீதி. அப்பேற்பட்ட ஊருல அந்த நீதிய முத முதல்ல தூக்கி எரிஞ்சவ சாந்தியக்கா தான். நாம் வீட்ட விட்டு போனா என்ன நடக்கும்னு தெரிஞ்சுருந்தும் எதுக்கும் கலங்காத தைரியம் அவளுக்கு. அந்த வகையில காதலுக்காக சாதிக் கட்டுப்பாட்ட மீறுன சாந்தியக்காதான் எங்களுக்கு தலப்புதாரி (முதல் ஆள்). -    சரசம்மா ( உண்மைச் சம்பவம் – பெயர்கள் கற்பனை ) 7 தாய்ப்பால் சோசலிசம் “மக்க முகம் பாத்தா மனசு பாரம் கொறையும், கொழந்த முகம் பார்த்தால் கோடி சஞ்சலம் தீரும்”ன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லும். அப்படி மக்களையும் குழந்தைகளையும் ஒரு சேர அதிக நேரம் பாக்குற ஒரு பாக்கியம் எனக்கு கெடச்சது. ஒரு குழந்தைய பாத்தாலே சந்தோசத்துல முகமெல்லாம் பல்லாயிரும் எனக்கு, மூணு, நாலு வராந்தா முழுவதுமா குழந்தைங்க குட்டி குட்டி கை, கால ஆட்டிகிட்டு பார்ப்பவர்கள் மனதை கொள்ளையடிக்கும் விதமா இருந்தத பாத்ததும் ஒரு வட்டி கருப்பட்டிய ஒன்னா சாப்புட்ட சந்தோசம். இந்த அற்புதத்துக்கு நடுவுல நானும் ஒரு வார காலம் அதிக நேரம் இருக்க முடிந்ததை நெனச்சு மனசெல்லாம் பரவசம் எனக்கு. [தாய்ப்பால்]சமீபத்துல என்னோட சொந்தக்கார பொண்ணு பானுவுக்கு பிரசவ வலி வந்து அரசு மருத்துவ மனையில் சேர்ந்திருந்தோம். நீண்ட பிரசவ வலி போராட்டத்துக்கு பிறகு சுகப்பிரசவமா குழந்தை பிறந்துச்சு. குழந்தைக்கு சில பிரச்சனை இருக்குன்னு பிறந்தது முதல் ஆறு நாட்களுக்கு மேல அவசர பிரிவில் வச்சுருந்தாங்க. நான் ரெண்டு நாள் அவள் கூட உதவி ஒத்தாசைக்கு தங்கியிருந்தேன். அங்கு பிரசவம் ஆயிருந்தவங்க பெரும்பாலும் சாதாரண எளிய மக்கள்தான். அவங்க வாழ்க்கையில் இருக்கும் வறுமையும் உழைப்பின் சோர்வும் அவர்கள் முகத்தில் தெரிந்தாலும் ரோஜாப் பூவாய் கட்டிலில் கிடக்கும் குழந்தையை பார்த்து முகமெல்லாம் பரவசமாக பேசி சிரிந்து கொஞ்சி மகிழந்தார்கள். ஒரு சில பேரோட குழந்தைக்கி பிரச்சனைன்னு அவசர பிரிவில் வச்சிருந்ததால தாய் மட்டும் தனியாக பக்கத்து கட்டிலில் உள்ள குழந்தையை ஏக்கத்தோடு பார்ப்பதும், தன் குழந்தைக்காக கண்ணீரோடு காத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்படி காத்துக் கொண்டிருந்தவர்களில் என் சொந்தக்கார பொண்ணு பானுவும் ஒருத்தி. பக்கத்து கட்டிலில் உள்ள குழந்தையை உத்து உத்து பாத்துகிட்டு இருந்த என்னை நர்சு கூப்பிட்டாங்க “நீங்கதானே மூணாவது கட்டில்ல இருக்கவங்களுக்கு உதவிக்கி வந்துருக்கவங்க. ஐ.சி.யூ-வ்ல இருக்க உங்க குழந்தை பாலுக்கு அழுவுதாம். இந்தாங்க டப்பா இதுல தாய்ப் பால் வாங்கிட்டு குழந்தைகள் வாடுல உள்ள நர்சுகிட்ட கொடுத்துட்டு வாங்க. போங்க” என்றார். பெத்தவகிட்ட பிள்ள மொதல்ல பால் குடிக்காம பால் எப்புடி வரும், கை வச்சு எடுக்கதான் முடியுமா வலி உயிர் போகுமேன்னு யோசிச்சுகிட்டே விசயத்த பானுகிட்ட சொன்னேன் “புள்ள அழுவும்போது வலியாவது ஒண்ணாவது எப்புடியாவது எடுத்து தர்ரேன்னு” சொல்லி புள்ள பாசத்துல முயற்சி பண்ணினா முடியல. நர்சம்மாவோ “யார்கிட்டையாவது வாங்கிட்டு வந்தாவது குடுங்க. கொழந்த பசில துடிக்கிறான்”னு அவசரப்படுத்துனாங்க. “பசிக்குது, கொஞ்சம் சோறு போடுங்க”ன்னு கூட தயங்காம கேட்றலாம். “தாய்ப் பால் எரவல் குடுங்கன்னு யார்கிட்ட போய் கேக்க முடியும், என்ன சொல்வாங்களோ”ன்னு தயக்கத்தோடவே பக்கத்துல உள்ள அம்மாகிட்ட “எங்க கொழந்தய, பிரச்சனைன்னு ஐ.சி.யூ.-ல வச்சுருக்காங்க. பாலுக்கு அழுவுது. எங்க பொண்ணுக்கு பாலு வரமாட்டேங்குது அதா…”ன்னு மெதுவா இழுத்தேன். “ஏங்கொழந்தைக்கே பாலு பத்தலைங்க, கத்திகிட்டே இருக்கு. வேற யார்கிட்டையாவது போய்க் கேளுங்க” என்றார். அந்த பொண்ணு பாலு இல்லன்னு சொன்னதும் பானு மொகம் சுருங்கிப் போச்சு. அவ சங்கடப் படுவாளோன்னு மீண்டும் அதே அறையில கேட்காம அடுத்த அறைக்குப் போனேன். கையில டப்பாவோடு ஒவ்வொரு கட்டிலாய் தயங்கி தயங்கி நின்றதை பார்த்த ஒரு அம்மா “இங்க வாம்மா” என்று கூப்பிட்டார். “என்ன பாலு வேணுமா? என் பேரப்பிள்ளையும் பத்து நாளா ஐ.சி.யூ.ல தாம்மா வச்சுருக்கோம். என்ன ஏதுன்னு சொல்ல மாட்டேங்கறாங்க. மண்ணுல போட்ட கல்லுக்கணக்கா குந்திகிட்டு இருக்கோம். மாசம் முடியறதுக்குள்ள கொறப் பெறசவமா போச்சு. ஆப்ரேசன் பண்ணிதான் கொழந்தைய எடுத்தாங்க. நாங்களும் பால எடுத்துதான் குடுக்குறோம். பச்ச பிள்ள கத்துதுன்னு பாலு வாங்க வந்த ஒன்னோட அவசரம் புரியாம பேசிகிட்டே இருக்கேம்பாரு. இங்க கொண்டா டப்பாவ, என் பொண்ணுகிட்ட வாங்கி தர்ரேன்”னு சொல்லி ஒரு ஸ்பூன் அளவு பால கொடுத்து “இதாம்மா வந்துச்சு, தொண்ட காயாம ஊத்துங்க. அடுத்த தடவ வா இன்னம் கொஞ்சம் கூட வருதான்னு பாப்போம். இல்லாட்டி எதுத்த கட்டில்ல உள்ள பொண்ணு குடுக்கும், வந்து வாங்கிக்க” என்றார். ஒரு மணிநேரம் கழித்து மறுமுறையும் தயங்கியபடி வந்தேன். ஆனா அந்த அம்மாவோ பலமுறை பழகியது போல் சிரிந்த முகத்துடன் என் கையில இருந்த டப்பாவ வாங்கி அந்தம்மா பொண்ணு மட்டும் இல்லாது, பக்கத்துல உள்ள இன்னும் மூணுபேருகிட்ட பால வாங்கி ஒண்ணுசேத்து அரைமணி நேரம் போராட்டத்துக்கு பிறகு 20 மில்லி பாலு இருக்கும் குடுத்தாங்க. ஆப்ரேசன் செய்த ஒடம்போட அந்த வலிய தாங்கிக்கிட்டு அவங்க பால எடுத்து கொடுத்தத பாத்த அந்த நிமிசம் இவங்களை விட உலகத்துல உயர்ந்த மனிதர்கள் யாரும் இல்லன்னு தான் தோணுச்சு. கைய அறுத்துகிட்டாலும் சுண்ணாம்பு தராத இந்த காலத்துல இல்லாத பட்டவங்களா இருந்தாலும் இருக்குறதை பகுந்து கொடுக்கும் குணம் மட்டும் மாறல என்பதை நடைமுறையில் உணர்ந்தேன். ஏதேதோ யோசனையோடு வந்த என்னை மெல்லிய குரலோடும் சைகையோடும் அழைத்தாள் கமலா என்ற பெண். “உங்க குழந்தைக்கி பால் கெடைக்கலையா. எனக்கு பால் அதிகமா இருக்கு. ஆனா பிள்ள வாய வச்சு குடிக்க முடியாம மார்பு அமைஞ்சிருக்கு. எம்பிள்ளைக்கும் எடுத்துதான் குடுக்குறேன். அதிகமா வீணாதான் போகுது. நான் வேணுன்னா ஒங்க பிள்ளைக்கி பால் எடுத்து தர்ரேன்” சொல்லிகிட்டே தானாகவே கட்டிலை சரிசெய்யவும் பாத்திரத்தை ஒதுங்க வைப்பதுமாக வேலையும் செய்தாள். [தாய்ப்பால்]ஒவ்வொரு முறையும் இப்படி தாய் பால் இரவல் வாங்குவதை பார்த்த பானு மனசு கலங்கி “நான் கனவுலயும் நெனச்சு பாக்கல, என் பிள்ளைக்கு யார் யார் பாலையோ வாங்கி கொடுப்பேன்னு. எனக்கு பாலு கட்டிக்கிட்டு நெஞ்செல்லாம் வலிக்குது. ஆனா ஏம்பிள்ளைக்கி இந்த நெலமையா” என்று அழுதாள். “இது ஒம்பிள்ளைக்கி கெடச்ச வரம்னு சொல்லணும், எத்தன கொழந்தைக்கு கொடுப்புன இருக்கு இதுபோல பால் குடிக்க. ஒரு தாயோட சீம்பால் குடிச்சாவே ஆரோக்கியம், ஆனா இதுவரைக்குமே பத்து பதினஞ்சு பேரேட பால குடிச்சுருப்பா ஒம்மக. எப்பிடி பலசாலியா வரப்போரான்னு பாரு. பெத்த பிள்ளைக்கி பால் குடுத்தாலே அழகு கெட்டுடும்னு பால் குடுக்க மாட்டாங்க பல பேரு, பிள்ளைய விட அழகுதான் முக்கியம்ங்கறத தாண்டி ‘தான்’ங்கற சுயநலமான எண்ணம் தான் அவங்கட்ட இருக்கும். அனா இவங்கல்லாம் பாரு, அன்னன்னைக்கி ஒழச்சு சாப்புட்ற சனங்க. கறி, மீனு பழமுன்னு திண்ண வசதியில்லாம ஒடம்புல சத்தே இல்லாம அவங்களுக்கு பாலு வடியல, ரெத்தத்த புழிஞ்சு தர்றாங்க. தன்னலம் பாக்காத நல்ல கொணம் இவங்க்கிட்ட இருக்கு. இப்பேர்ப்பட்ட மனுசங்களோட பால ஒம்புள்ளக் குடிக்கிறதுக்கு நீதான் புண்ணியம் பண்ணியிருக்கணும்” என்றேன். “எங்கம்மா பொறந்த அன்னைக்கே அவங்க அம்மா எறந்துட்டாங்களாம். துக்கத்துக்கு வந்த புள்ளைக்காரங்க எல்லாரும் கொழந்தைய தூக்கி பால் கொடுத்தாங்களாம். பின்நாள்ளையும் சாதி மதமுன்னு பாக்காம யாரெல்லாம் பிள்ளைக் காரங்களோ அவங்கள்ளாம் எங்கம்மா வீட்டை கடந்து போகயில பிள்ளைய தூக்கி பால் கொடுக்காம போக மாட்டாங்களாம். ரெண்டு வயசு வரைக்கும் குடிச்சிருக்கு எங்கம்மா. இந்த மாதிரி ஒணுமண்ணா பழகற எதார்த்தம் கிராமத்து சனங்க மனசுல இருக்கும். இது நடந்து 55 அஞ்சு வருசமாச்சு ஆனா நகரத்துல இன்னைக்கும் ஏழ்மையிலயும் தாய்மை மனசு மாறாம நடந்துக்குற இந்த மனுசங்கள பாக்கும் போது சந்தோசமா இருக்கு…” என எங்கம்மா கதையையும் பானுவிடம் சொன்னேன். “இந்தாம்மா கொழந்த பெத்த பொண்ண கொஞ்சம் ஓய்வு எடுக்க விடும்மா. அந்தம்மா கிட்ட என்ன நொய் நொய்ன்னு கத பேசிகிட்டே இருக்கீங்க. டாக்டர் ரவுண்ட்ஸ் வராங்க வெளியில போங்க” என்று நர்சு சத்தம் போட்டதும் டீ குடிச்சுட்டு வரலாம்னு நகர்ந்தேன். தேய்ந்து இத்துப் போயி பெரும்பாலும் நோய் வாய்ப் பட்டிருந்த அனேக செருப்பு கூட்டத்தில், பரவாயில்லை என்ற கண்டிசனுடன் இருந்த என் செருப்பை காணவில்லை. பிரசவ வார்டில் நாப்கீன், பேம்பர்ஸ் போல செருப்பும் திருட்டு போய் விட்டது என்ற முடிவுடன் வெறுங்காலுடன் நடந்தேன். அரசு மருத்துவமனையில ஒரு இத்துப் போன செருப்புக்கு கூட திருடுற மதிப்பு இருக்குன்னா பாத்துக்கங்களேன். டீக் கடையில் நின்ற கமலாவின் கணவன் “என்ன உங்க செருப்பும் காணலையா, வெறும் காலோட வர்றீங்க, காலையில எதுத்த பெட்டுக்காரம்மா செருப்ப காணல, பேம்பர்ஸ காணலன்னு ஒரே கத்துக் கத்திச்சு. இங்க வந்தா இதெல்லாம் சகசம்ங்க” என்றவர் மேலும் கோபத்தோடு தொடர்ந்தார். “நாப்கீன், பேம்பர்ஸ், குழந்தைக்கு சட்டை, சொட்டர், கொசுவலையின்னு எல்லா பொருளுமே வார்டு உள்ளேயே விக்கிது. தனியார் ஆஸ்பத்திரி போலவே எதுக்கும் வெளிய போக வேண்டாம். எல்லா வசதியும் கெவுருமெண்டு ஆஸ்பத்திரியிலேயும் இருக்குது. காசுதான் இல்ல. ஆனா இந்த பொருள் கூட வாங்க வசதி இல்லாம இங்க கொண்டு வந்து சேக்க வேண்டிய நெலம நமக்கு. ஆனா பெத்தவளுக்கும் பிள்ளைக்கும் நாப்கீன் கூட கொடுக்க முடியாத நெலம அரசாங்கத்துக்கு. இவங்கள சொல்லி குத்தமில்லங்க. ஓட்டுப் போட்ட நம்மள சொல்லணும்.” அவர் பேச்சில் நியாயமான கோபம் தெரித்தது. வெளிய வந்து ஒரு மணி நேரமாச்சே. இன்னேரம் குழந்தைக்கி பால் வேணுன்னு நர்சு கேட்ருப்பாங்களே, பானு என்ன செஞ்சாளோ என்ற பதட்டத்தோடு கிளம்பினேன். “வார்டுக்கா போறீங்க. இந்த காப்பிய கமலாகிட்ட கொடுத்துடுங்க. ஆம்பிளைகள இந்த நேரம் உள்ள விடமாட்டாங்க” என்ற கமலாவின் கணவர் கையில் இருந்த பாட்டிலை வாங்கிக் கொண்டு உள்ள வந்த எனக்கு இன்ப அதிர்ச்சி. கமலா குழந்தையை மார்போடு அணைத்து சந்தோசமாக தாய்மையை அனுபவித்து பால் கொடுத்துக் கொண்டிருந்தாள் பானு. அவ குழந்தை பால் குடிக்க வழியில்லாம ஐசியுவுல இருக்கு. கமலாவுக்கு புள்ள பக்கத்துல இருந்தும் பால் கொடுக்குற மாதிரி மார்பு அமையல. பானுவுக்கு ஏதாவது குழந்தைங்க குடிச்சாதான் பால் ஊரும். எல்லாத்தையும் சேத்து நினைச்சு பாத்தேன். ஏழைங்கிட்டதான் சோசலிசம் இயல்பா இருக்குங்கிறதுக்கு இத விட என்ன வேணும்? அமெரிக்காவுல குழந்தை பெற்ற தாய் ஒருத்தி உலகத்திலேயே அதிகமா தாய்ப் பால தானமாக தந்தவர்ன்னு கின்னஸ் புத்தகத்துல இடம் புடிச்சுருக்காராம். ஏழ்மை நிலையில், உடலில் வலிமையற்ற போதும் குழந்தைக்கு தாய்ப் பாலை தானமாக தரும் பொது நல மனம் படைத்த இவர்கள் முன் கின்னஸ் சாதனை பெரிதாக தெரியவில்லை. - சரசம்மா (உண்மைச் சம்பவம்) 8 பணிவின் பாடு “மாடா, சீனு சார் வரலியாடே” மெய்கண்ட மூர்த்தியின் குரல் திணறலாக வெளிப்பட்டது. அப்படியொரு நிலையில் இப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் மெய்கண்டன் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தான். ஆடைகள் களையப்பட்டு மேலிருந்து கீழ் வரை ஒன்று போலத் தைக்கப்பட்டிருந்த தொள தொளப்பான அங்கி ஒன்றை அணிவித்திருந்தனர். கொஞ்சம் பருத்த உடல் அந்த அங்கியினுள் அடங்கி பெரும் துணி மூட்டை போலக் கிடந்தான். கண்ணில் நீர் வழிந்து கொண்டிருந்தது. அது விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைகளுக்குப் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை. மெய்கண்டன் மிக மோசமான விபத்தில் சிக்கியிருந்தான். மதியம் மூன்று மணிக்கு விபத்து நடந்திருக்கிறது. மூன்றரை மணிக்கு சுடலைமுத்து ஓடிச் சென்று மெய்கண்டனை மருத்துவமனைக்குத் தூக்கி வந்திருக்கிறான். ஐந்தரை மணி நேரங்களாக இந்த அங்கியை அணிவித்ததைத் தவிர வேறு மருத்துவம் ஏதும் நடந்திருக்கவில்லை. நானும் சுடலையும் அந்த மருத்துவமனையின் எல்லாக் கதவுகளையும் தட்டித் தீர்த்து விட்டோம். கடைசியாக அப்போது தான் வந்திருந்த தலைமை மருத்துவரின் காலையாவது பிடித்து கெஞ்சிப் பார்த்து விடலாம் என்று கிளம்பிய போது தான் மெய்கண்டன் மேற்படிக் கேள்வியைக் கேட்டான். ”மெய்கண்டா, முதல்ல வைத்தியம் பாத்துக்கிடுவோம்டே. எவம் வந்தான் வரலைன்னு பொறவு கணக்கெடுப்போம்” முடிந்த வரை ஆத்திரம் தலை காட்டாமல் பதில் சொல்லி விட்டுத் திரும்பிப் பார்க்காமல் மருத்துவரின் அறைக்கு நானும் சுடலையும் விரைந்தோம். ”சார், இது மெடிக்கல் இன்சுரன்ஸ் கேசுங்க. டி.டி.கே காரன் இன்னும் எக்ஸ்பெண்டிச்சர் அப்ரூவல் கொடுக்கல்லே. நாங்க என்னா செய்ய முடியும் சொல்லுங்க? நீங்க எங்க கிட்ட கோபப்படறதிலே அர்த்தமே இல்ல சார்” நாற்பத்தைந்து வயது வெள்ளைப் பூசணிக்காய் ஸ்டெத்தஸ் கோப்பை நிரடிக் கொண்டே சாவகாசமாய் பதில் சொன்னது. மருத்துவமனையின் மற்ற துணைக் கிரகங்கள் இந்த காரணத்தை இதுவரை சொல்லாமலே காலம் கடத்தியிருக்கிறார்கள். காப்பீட்டு நிறுவனத்தின் ஒப்புதலுக்கு காத்திருக்கத் தேவையில்லையென்றும், மருத்துவ செலவுகளுக்கு கையிலிருந்தே பணம் கட்டி விடுவோமென்றும் சொல்லி அவர்களை ஏற்கச் செய்வதற்கு ஒரு மணி நேரம் கோபம், கெஞ்சல், இறைஞ்சல், வேண்டல் என்று நவரசங்களையும் பிரயோகிக்க வேண்டியிருந்தது. இறுதியாக ஒப்புக் கொண்டனர். முன்பணத்தையும் கறாராக பெற்றுக் கொண்டனர். எக்ஸ்ரே அறைக்குள் எடுத்துச் செல்லும் முன் மெய்கண்டன் மீண்டும் ஒரு முறை அதே கேள்வியைக் கேட்டான். “மாடா, சீனு சார் வரலியாடே” நாங்கள் பதில் சொல்லவில்லை. ஒரு மணி நேரம் கழித்து ஸ்கேன் முடிவுகள் வந்தது. மெய்கண்ட மூர்த்தியின் உடலில் மொத்தம் மூன்று எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தன. கெண்டைக்கால் எலும்பில் முழங்காலின் வெளி எலும்பு பொருந்தும் இடம் நொறுங்கியிருந்தது. முழங்காலின் முன்னெலும்பு நடு மையத்தில் உடைந்திருந்தது. இவை இரண்டும் போக கை மணிக்கட்டில் ஒரு மயிரளவு கீறல் ஏற்பட்டிருந்தது. கையிலும் முழங்காலிலும் மாவுக் காட்டுப் போடப் போவதாகவும், கெண்டைக்காலில் உலோகத் தகடு பொருத்த வேண்டுமென்றும் மருத்துவர் விளக்கினார். அறுவை சிகிச்சை அறைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மீண்டும் ஒரு முறை அதே கேள்வியைக் கேட்டான். “மாடா, சீனு சார் வரலியாடே” அறைக்குள் மெய்கண்டன் எடுத்துச் செல்லப்படும் வரை அடக்கிக் கொண்டிருந்த சுடலை வெடித்து விட்டான், ”சவத்த அந்தால கெடந்து அழுந்தட்டும்னு போட்டுட்டு போயிருவமாடே? நம்மளை கோட்டிப்பயலுவன்னி நினைச்சிகிட்டு இருக்கானோ. நாம இங்க கூட கெடந்து லோல் பட்டுகிட்டு இருக்கோம், இவன் என்னடான்னா வராத ஆள விசாரிக்கான்” ’சீனு சார்’ என்று மெய்கண்டனால் பயபக்தியோடு அழைக்கப்பட்டவர் எங்கள் நிறுவனத்தின் கிளை மேலாளர். சுடலையும் மெய்கண்டனும் எனது பால்ய கால நண்பர்கள். இத்தனை வருடங்களாக ஒன்றாகப் பழகியும் மெய்கண்டனின் குணத்தை சுடலையால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மெய்கண்டன் கட்டுப் போட்டு வரும் வரை பழைய கதைகள் சிலவற்றைச் சொல்கிறேன், உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா பாருங்கள். [விசுவாசம்]அப்போது நாங்கள் திசையன்விளை செயின்ட் சேவியர்சில் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு நெல்லை அரசு பாலிடெக்னிக்கில் மின்னணுவியல் பிரிவில் சேர்ந்தோம். நான் கண்டித்தான் குளத்திலிருந்த பாட்டி வீட்டிலும், மெய்கண்டன் பேட்டையில் இருந்த அவன் அத்தை வீட்டிலும் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தோம். மெய்கண்ட மூர்த்தி நல்லவன் என்பதால் நண்பர்கள் குறைவு. அவனும் அனாவசியமாக யாரோடும் பேச்சு வழக்கு வைத்துக் கொள்ள மாட்டான். என்னோடு மட்டுமே அவனுக்குப் பழக்கம் இருந்தது. அதுவும் படிப்பு சம்பந்தமாகவும், படித்த பின் பார்க்கப் போகும் வேலை சம்பந்தமாகவுமே இருக்கும். பள்ளியைப் போன்றே கல்லூரியிலும் அவன் வாத்தியார்களுக்குப் பிடித்த மாணவனாய் இருந்தான். அப்போது வரதராஜ பெருமாள் என்று ஒரு விரிவுரையாளர் இருந்தார். அவருக்கு மட்டுமே விளங்கும் வகையில் ஆங்கிலம் பேசக் கூடியவர். வகுப்பின் பெரும்பான்மை மாணவர்கள் தமிழ் வழியில் படித்து வந்தவர்கள். அவர் பேசும் ஆங்கிலம் வெள்ளைக்காரனுக்கே புரியாத போது எங்களுக்கு மட்டும் எப்படிப் புரியும் சொல்லுங்கள்? அதனால் தான் அவரை மாற்ற வேண்டும் என்று கோரி நாங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட முடிவு செய்தோம். மொத்தம் நாற்பது பேரில் 25 மாணவர்கள் 15 மாணவிகள். மாணவர்களை ஒருங்கிணைக்கும் வேலையை நானும், மாணவிகளிடம் பேசி சம்மதிக்க வைக்கும் வேலையை சுடலை முத்துவும் எடுத்துக் கொண்டோம். மெக்கானிக்கலும் சிவிலும் எங்களுக்கு ஆதரவாக வந்து நின்றனர். நாற்பதில் முப்பத்தொன்பது பேர் வகுப்புகளுக்குச் செல்லவில்லை. நீங்கள் நினைத்தது சரி தான்; மெய்கண்ட மூர்த்தி மட்டும் தவறாமல் வகுப்புகளுக்குச் சென்றான். போராட்டத்தின் மூன்றாம் நாள் கல்லூரி முதல்வர் மாணவர்களிடையே பேச முன்வந்தார். “படிக்கிற காலத்திலேயே ஆர்பாட்டம், போராட்டம்னு நீங்க எல்லாம் எங்க உருப்படப் போறீங்க? வரது சார் பேசறது புரியலைன்னு இதுவரைக்கும் யாரும் சொன்னதில்லே. வெட்டியா கிளாஸை கட் அடிச்சிட்டு ஊர் சுத்த உங்களுக்கு இந்த காரணம் தான் கிடைச்சதா?” “சார்.. அவெம் வாக்குள்ளே என்னத்தையோ போட்டு மென்னுகிட்டே பேசுதான் சார்” “சார், வரது ஐய்யரு பான்பராக் திங்காரு சார்” “குடிச்சிட்டு வாரான் சார்” “மூப்பனாரு கெணங்கா பேசுதாம் சார்” அமைதியாய் இருந்த கூட்டத்தில் இருந்து மர்மக் குரல்கள் திடீரெனக் கிளம்பின. “எவம்லே அது..  சண்டியரு. வாலே முன்னாடி. நான் ரவுடிக்கு ரவுடி தெரியுமாலே” வேறு வழியின்றி முதல்வரும் எங்கள் தரத்துக்கு இறங்கி விட்டார். “யேலேய்.. வெளியே வாடே சொட்ட தலையா” இன்னொரு முனையிலிருந்து இன்னொரு மர்மக் குரல். முதல்வர் பதிலுக்கு ஏதோ கத்த, மாணவர்களிடையே இருந்து கூச்சல் கிளம்பியது. ‘சொட்ட மண்ட பிரின்ஸி டவுன் டவுன்’ ‘பனை மரத்துல வவ்வாலா எலக்ஸுக்கே* சவ்வாலா’ – பேச்சுவார்த்தைக் கூட்டத்தின் வெப்பம் கட்டுப்படுத்தவியலாத படிக்கு அதிகரித்துக் கொண்டே சென்றது. (*எலக்ஸ் – எலக்ட்ரானிஸ்/ மின்னணுவியல் துறை) துறைத் தலைவர் குறுக்கிட்டார். அவர் கொஞ்சம் குயுக்தியானவர். “யேய் சைலன்ட்டா இருங்கப்பா.. வரது சார் கிளாஸ் எடுக்கது புரியலையா, நீங்க படிக்க லாயக்கில்லாத சல்லிப் பயலுவலான்னி இப்ப தெரியும் பாருங்க. தம்பி மெய்கண்ட மூர்த்தி, நீ இவங்களோட சேராம வகுப்பு வந்திட்டு இருக்கியே, உனக்கு வரது சார் பேசறது புரியுதா?” மெய்கண்டன் வாத்தியார்களுக்குப் பின்னிருந்து உதயமானான். “யெஸ் சார்…” “வரது சாரை கண்டிப்பா மாத்தணுமோடே?” “நோ சார்…” அவ்வளவு பவ்யமான குரல். மெய்கண்டனைத் தொடர்ந்து மாணவர் கூட்டத்திலிருந்த கோகிலா மருண்டபடியே சுடலையைப் பார்த்துக் கொண்டு எழுந்தாள் “சார் எனக்கும் புரியுது சார்…”. கோகிலாவைத் தொடர்ந்து சண்முகப்பிரியா; சண்முகப்பிரியாவைத் தொடர்ந்து வசந்தி. துறைத்தலைவரின் முகத்தில் ஒரு வில்லங்கப் புன்னகை வந்து அமர்ந்தது. “யாருக்கெல்லாம் வரது சார் க்ளாஸ் புரியுதோ அவங்க எல்லாம் வகுப்புக்குப் போகலாம். ஸ்ட்ரைக் நடத்தினதுக்காக நடவடிக்கை எடுக்க மாட்டோம்”  நாங்கள் நண்பர்கள் பதினைந்து பேர் மட்டும் தனியே நின்றோம். “தெரியும்லெ உங்க பவுசு.. உங்களுக்குள்ளேயே ஒத்துமை இல்லே. சுத்த தயிர் வடை பயலுவோ” மெக்கானிக்கலும் சிவிலும் கலைந்து சென்றனர். அன்று மாலை இரண்டு வார இடை நீக்க உத்தரவோடு நாயர் டீ கடை மறைவில் விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தோம். ‘சவத்த மென்னியத் திருவி கொன்னு போடலாம்டே அந்த துரோகிய’ – சுடலைமுத்து நிலையாய் நின்றான். மெய்கண்டனை வெளுத்து விடுவது என்பதில் எல்லோருக்கும் ஒத்த கருத்து இருந்தது. சில பில்டர் கோல்டுகள் புகையான பின் அமைதியாயினர். “ஏம்ல கால வாரி விட்ட?” பிரச்சினை ஓய்ந்து ஒருவாரம் கழித்து மெய்கண்டனிடம் கேட்டேன். ”ரிக்கார்டு நோட் மார்க்லயும் இண்டர்னல் மார்க்லயும் கை வச்சிட்டா பொறவு வேலைக்குப் போவ முடியாதுல்லா?” அவனும் தமிழ்வழியில் படித்தவன் தான். அவனுக்கும் புரியவில்லை தான். என்றாலும், வகுப்பில் விரிவுரையாளர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை அப்படியே தமிழில் எழுதி வைத்து மனப்பாடம் செய்வதாக சொன்னான். அந்த நோட்டுகளையும் காட்டினான். ‘டையோடு வில் அல்லோவ் எலக்ட்ரிக் கரன்ட் டு பாஸ் இன் ஒன் டைரக்சன். டையோடு வில் ப்லாக் எலக்ட்ரிக் கரன்ட் டு பாஸ் இன் ஆப்போசிட் டைரக்சன்…’ – இந்த பாணியில் அந்த நோட்டு முழுக்க தமிங்கிலத்தில் குறிப்புகள்! மெய்கண்ட மூர்த்தி அவன் தந்தையால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டவன். மெய்கண்டனின் அப்பா திருநீலகண்டர் போஸ்ட்மேனாக இருந்தார். மூன்று வயதில் நாங்கள் துள்ளுப் புட்டான்களைப் பிடித்து ஆராய்ச்சிக்கு உட்படுத்திக் கொண்டிருந்த போது மெய்கண்டன் தன் அப்பாவோடு சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தான். நாங்கள் தெருவில் பிள்ளைகளோடு ‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்’ என்று சொல்லிக் கொண்டிருந்த போது மெய்கண்டன் நெற்றி நிறைய நீறு பூசி “பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே” என்று சுந்தரமூர்த்தி நாயனாரோடு உறவாடிக் கொண்டிருப்பான் திருநீலகண்டர் தன் பிள்ளைகளை நல்ல விசுவாசம் மிக்கவர்களாகவும் கீழ்படிதல் குணம் கொண்டவர்களாகவும் வளர்த்தார்; என்றாலும் அவர்களுக்கு வெளியிலிருந்து திணிக்கப்பட்ட குணங்களை வரித்துக் கொண்டதற்கு தம்மளவிலேயே காரியவாத நோக்கங்கள் இருந்தன. ’நல்லவனாக’ இருந்ததன் பலனாக மெய்கண்டனின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் தொண்ணூறுகளில் இருக்கும்; நாங்களோ நாற்பது மதிப்பெண்கள் எடுக்கவே திணறினோம். படிப்பு முடித்ததும் வளாகத் தேர்வில் எங்கள் மூவருக்கும் ஒரே நிறுவனத்தில் வேலை கிடைத்தது. [விசுவாசம்] சென்னையில் இயங்கி வந்த மேசைக் கணினிகள் தயாரித்து விற்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் வேலை. அந்தப் பிரிவில் எங்களையும் சேர்த்து மொத்தம் பத்து பேர். தினசரி வாடிக்கையாளர்களிடம் இருந்து கணினியில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் குறித்த புகார்கள் தொலைபேசி வழியே வரும். நாங்கள் நேரில் சென்று திருத்திக் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடமிருந்து எந்த நேரத்திலும் அழைப்பு வரக்கூடும். கணினியில் ஏற்பட்டுள்ள கோளாறின் தன்மையைப் பொறுத்து சில நாட்கள் இரவில் கூட பணிபுரிய நேரிடும். அலுவலகத்தைக் கோயிலாகவும், மேலாளரை பூசாரியாகவும், முதலாளியைத் தெய்வமாகவும் பாவித்தான் மெய்கண்டன். மற்றவர்கள் ஒரு நாளைக்கு ஆறு வாடிக்கையாளர்களைச் சந்தித்தார்கள் என்றால் மெய்கண்டன் பத்து பேரைச் சந்தித்தான். ஒரு வாடிக்கையாளரைச் நேரில் சந்திக்க சென்னை நகரத்தின் அடர்த்தியான போக்குவரத்து நெரிசலில் பத்து கிலோ மீட்டர்களாவது பைக்கில் பயணிக்க வேண்டியிருக்கும். மெய்கண்டன் சராசரியாக ஒவ்வொரு நாளும் நூற்றி இருபது கிலோமீட்டர்கள் சென்னை நகரத்துக்குள் அலைந்தான். இரவு வேலை செய்தால் தொடர்ந்து வரும் பகலில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் வார இறுதியில் வேலை பார்த்தால் அதற்கு ஈடாக வார நாளில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளவும் சலுகைகள் இருந்தன. வேலை தொடர்பான இரவு நேர பயணங்களுக்கும், நகரத்துக்கு வெளியே நூறு கிலோமீட்டர்களுக்கு மேல் பயணிக்க வேண்டும் என்றாலும் கம்பெனி செலவில் வாடகை கார் அமர்த்திக் கொள்ளலாம் என்று விதிகள் இருந்தன. இவையெதையும் அவன் பயன்படுத்திக் கொள்ள மாட்டான். முதலாளியின் மனம் கோணாமல் நடப்பது என்று மெய்கண்டன் விரதம் பூண்டிருந்தான். அவன் விசுவாசத்தின் பாரத்தை நாங்கள் சுமந்தோம். சலுகைகள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்ட போது மெய்கண்டனை முன்னுதாரணமாகக் காட்டினர். இன்று சிரீபெரும்புதூருக்கு பைக்கிலேயே வாடிக்கையாளரைச் சந்திக்க சென்று கொண்டிருந்த வழியில் தான் விபத்தில் சிக்கிக் கொண்டான். “மாடா, சீனு சார் வரலியாடே” – மெய்கண்டனின் குரல் எனது நினைவுகளைக் கலைத்து நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது. அன்று சீனு சார் வரவேயில்லை. அன்று மட்டுமல்ல, தொடர்ந்த நாட்களிலும் அவர் நேரில் வந்து விசாரிக்கவேயில்லை. மெய்கண்டன் மிகவும் வருத்தப்பட்டான். ஒரு வாரம் கழித்து தொலைபேசிய சீனு சார், மீண்டும் எப்போது வேலைக்குத் திரும்புவாய் என்று கேட்டு விட்டு வேறு விசாரணைகள் இன்றி கத்தரித்து விட்டாராம். மெய்கண்டன் சீக்கிரமே வேலைக்குத் திரும்பி விட்டான். ஒன்றரை மாதங்களாவது படுக்கையில் ஓய்வாக இருக்க வேண்டுமென்றும், தொடர்ந்து ஒரு மாதங்கள் வீட்டுக்குள்ளேயே நடந்து பழக வேண்டுமென்றும் அப்புறம் தான் வழக்கமான வேலைகளில் ஈடுபட வேண்டுமென்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். எனினும், இரண்டே மாதத்தில் வேலைக்குத் திரும்பி விட்டான். ”மெடிக்கல் லீவுல இருந்து கம்பேனி காச திங்க மனசு ஒப்பல்லெ மக்கா”  ‘சீனு சாரின்’ காதில் விழும்படிக்கு எங்களிடம் சொல்லிக் கொண்டான். மெய்கண்டனுக்கு இயல்பிலேயே பருத்த உடல். அதிலும் இரண்டு மாதங்கள் நடமாட்டம் இன்றி போஷாக்கான உணவுகளைத் தின்றதில் இன்னும் கொஞ்சம் பருத்திருந்தான். திடீரென்று கூடிய எடையை உடைந்த கால்களால் சுமந்து நடக்க மிகவும் சிரமப்பட்டான். ”மெய்கண்டா, நீ நேர்ல போயி சர்வீஸ் செய்யாண்டாம்லே, ஆபீஸ்ல இருந்து கிட்டு போன்ல பேசி சரி செய்யக் கூடிய வேலைய மட்டும் பார்த்துகிடு. மற்றத நாங்க பார்த்துகிடுதோம்” சுடலை கொஞ்சம் முன்கோபக்காரன்  என்றாலும் மற்றவர்களுக்காக கவலைப்படுபவன். மெய்கண்டனின் மேலான உண்மையான பரிவில் தான் இதைச் சொன்னான். எங்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சீனு சார் உள்ளே நுழைந்தார் “வாட் மெய், ஆர் யூ கோயிங் டு சிட் சிம்ப்ளி இன் ஆபீஸ்? உன்னாலே வேலை பார்க்காம இருக்க முடியாதேப்பா” ”நோ சார். கால் வலி அவ்வளவா இல்ல சார். நான் பீல்டுக்கு போய் வேலை பார்க்க முடியும் சார்” மெய்கண்டன் ஒரு பாராட்டுதலை எதிர்பார்த்தான். “அப்ப, நீ என்ன செய்யிறே எண்ணூர் அசோக் லேலண்ட்ல ஒரு ப்ராப்ளம் ரிப்போர்ட் பண்ணிருக்காங்க போய் என்னான்னு பார்த்துட்டு வந்துடு” என்ற சீனு சார், சுடலையைப் பார்த்து “உங்க வேலையை மட்டும் பாருங்க” என்று சொல்லி விட்டு நறுக்கென்று திரும்பிக் கொண்டார். சுடலை ஆத்திரத்தோடு என்னைப் பார்க்கத் திரும்பினான். ஒரே தெருக்காரன் என்பதால் எல்லா நேரமும் நானே அணை போட வேண்டியிருப்பது ஒரு கொடுமை, “சரி சுடலை, அவனைப் பத்தித் தான் தெரியும்லா. நீ சும்மா ஆவுதாலி சொல்லிட்டு கிடக்காம விடு” முகம் பார்க்காமல் கிசுகிசுத்து விட்டு அகன்றேன். சரியாக ஒரே மாதம். மெய்கண்டனின் காலில் லேசாக வலி கூட ஆரம்பித்தது. நன்றாக நடந்தவன் கொஞ்சம் தாங்கித் தாங்கி நடக்க ஆரம்பித்தான். படிக்கட்டுகளில் நின்று நின்று ஏறினான். நாளாக நாளாக அவனது கெண்டைக் கால் உடைந்த இடத்தில் ஒரு வீக்கம் தோன்ற ஆரம்பித்தது. என்றாலும் அனைத்தையும் சமாளித்துக் கொண்டு பழையபடி ஓடியாடி வேலைபார்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயம் ஆவடி டாங்கி தொழிற்சாலைக்கு இருநூறு கணினிகள் சப்ளை செய்திருந்தோம். அவைகளை கூரியர் நிறுவனத்திற்கு வழக்கமாக கொடுக்கும் தொகையை எங்கள் நிறுவனம் இந்த முறை குறைத்துக் கொடுத்ததால் அவர்கள் கடுப்பில் தொழிற்சாலையின் முன்பாக கணினிகளை இறக்கி வைத்து விட்டுச் சென்று விட்டனர். இருநூறு கணினிகளுக்கு நானூறு பெட்டிகள். சில பாரம் சுமக்கும் தொழிலாளிகளோடு நாங்கள் இருவர் நேரடியாகச் சென்று எல்லா பெட்டிகளையும் உள்ளே எடுத்துச் செல்லக் கிளம்பினோம். மெய்கண்டனும் எங்களோடு ஒட்டிக் கொண்டான். ”இன்னும் தாங்கித் தாங்கி தானே நடந்திட்டிருக்கா, நீ வராண்டாம் நாங்களே பாத்துக்கிடுதோம்” சுடலைக்கு மீண்டும் அவன் மேல் பரிவு பிறந்திருந்தது. “இல்ல நானும் வாரேன், ஒரு லோடு மேனை நிப்பாடிக்கிடுவோம். ஓராளு கூலி மிச்சம் தானே” வழக்கம் போல சீனு சாரின் காதில் படும் படிக்கு எங்களிடம் சொன்னான். ”யேல கோட்டிப் பயலே, முன்னயே ஆளு சொல்லியாச்சிடே. இப்பம் கூப்பிட்டு ஓராளை மட்டும் நிப்பாட்ட முடியுமா. கம்பேனி காசு தானேலெ உன் கைக்காசா போவுது. நீ சும்மா கெட, நாங்க பாத்துகிடுவோம்” சுடலையின் பதிலுக்கு உள்ளிருந்து சீனு சாரின் குரல் வந்தது. “ஹலோ, இந்த ஆர்டர்ல ஏற்கனவே நமக்கு மார்ஜின் கம்மி. இதுல லோட் மேனுக்கு வேற தனியா அழணுமா. பேசாம லோடு மேன்களை மொத்தமா வேணாம்னு சொல்லிடுங்க. நம்ம என்ஜினியர்ஸ் எல்லாரும் போய் கன்சைன்மெண்டை உள்ளே சேர்த்துட்டு வாங்க. மெய்கண்டனைத் தவிர வேற யாருக்கும் காஸ்ட் எபக்டிவா யோசிக்கவே தெரியாதா?” சுடலை கொலை வெறியாகி விட்டான். அவன் மட்டுமல்ல, மற்ற பொறியாளர்களும் தான். அன்று மதியம் வரை குறைவான நொண்டல்களோடு பெட்டிகளை சுமந்து கொண்டிருந்த மெய்கண்டன், உணவு வேளைக்கு சற்று முன்பாக திடீரென்று சரிந்து விழுந்தான். நானும் சுடலையும் ஓடிச் சென்று பார்த்தோம்; அவனது உடைந்த கெண்டைக் கால் எழும்பு ஒரு டென்னிஸ் பந்து அளவுக்கு வீங்கியிருந்தது. பக்கத்திலேயே ஒரு வாடகைக் காரை அமர்த்தி மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றோம்; அதே மருத்துவமனை தான். [கார்ப்பரேட் லாபம்] “உங்களை மூணு மாசம் வரைக்கும் ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருந்தேனே. யார் வேலைக்குப் போகச் சொன்னது? படிச்சிருக்கீங்களே கொஞ்சமாவது அறிவு இருக்கா? இப்ப பாருங்க, உள்ளே வச்ச ப்ளேட் வளைஞ்சி நகர்ந்திருக்கு. இப்ப உடனே ஆப்பரேட் பண்ணியாகனும். இல்லேன்னா பர்மனெண்டா காலை எடுக்க வேண்டியிருக்கும். ஒரு நாலஞ்சி மாசத்துக்கு வேலை கீலைக்கு எதையும் யோசிக்க கூடாது” தலைமை மருத்துவர் கொஞ்சம் கோபமாகவே பேசினார். தொடர்ந்து, “லாஸ்ட் டைம் மெடிக்கல் இன்சுரன்ஸ் க்ளெய்ம் பண்ணி வாங்கிட்டீங்க இல்ல. உங்க லிமிட் எவ்ளோ வச்சிருக்கீங்க” என்று ஒரு கொக்கியும் போட்டு வைத்துக் கொண்டார். “சார் நான் இப்பவே அட்மிட் ஆகிக்கறேன்” என்று மருத்துவரிடம் சொன்ன மெய்கண்டன், திரும்பி எங்களிடம் “சீனு சாருக்கு விஷயத்தை சொல்லிடறீங்களா” என்றான். சுடலை மறுத்து விடவே, நான் தான் கூப்பிட்டுச் சொன்னேன், “ஓ, அப்படியா” என்பதோடு முடித்துக் கொண்டார். அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரம் கழித்து மெய்கண்டனின் அறைக்கு ஆரஞ்சுப் பழங்களோடு சீனு வந்தார். “மெய், நீங்க ரெக்கவர் ஆக இன்னும் மூணு மாசம் ஆகுமாமே. அதுக்கு அப்புறமும் உங்களால பழையபடி பீல்டுல வேலை செய்ய முடியாதாமே?” கொஞ்சம் தயக்கமாகவே ஆரம்பித்தார். “யெஸ் சார்” “நீங்க ஏற்கனவே ரெண்டு மாசம் மெடிக்கல் லீவ் எடுத்திருந்தீங்க. இப்ப திரும்ப மூணு மாசம்….”  ஏதோ சொல்ல வந்து இழுத்தார், பின் தொடர்ந்தார். “மூணு மாசத்துக்கு அப்புறமும் உங்களால பீல்ட் ஒர்க் பார்க்க முடியாது.. உங்களுக்கே தெரியும் நம்ம கம்பெனி இப்ப முன்ன மாதிரி லாபகரமா நடக்கலை. நிறைய காம்பெடிஷன். உங்களுக்கு ஆபீஸ்லயும் எந்த மாதிரி வேலை குடுக்க முடியும்னு தெரியலை…” “இல்ல, சார். நான் பீல்டுக்கே திரும்பவும்….” மெய்கண்டன் வரப்போவதை உணர்ந்து விட்டான். அவசரமாக குறுக்கிட முயற்சித்தான் – தொண்டை அடைத்துக் கொண்டது. ”நோ நோ.. நாங்க அந்தளவுக்கு கொடுமையானவங்க இல்லப்பா. எம்.டி கிட்டே இது பத்தி ஏற்கனவே பேசிட்டு தான் வர்றேன். உன்னை திரும்பவும் பீல்டுக்கு அனுப்பி இன்னும் சீரியஸா எதுனா பிரச்சினை வந்துட்டா கம்பனிக்கு தானே கெட்ட பேரு?” “இல்ல சார்…” மெய்கண்டன் மீண்டும் குறுக்கிட முயற்சித்தான், சீனு அதைக் கத்தரித்தார். “இல்ல, அப்படி வந்துடும்னு சொல்லலை, பட் வந்துட்டா சிக்கல் தானே. பெஸ்ட் என்னான்னா, நீங்களே ரெசிக்னேஷன் குடுத்துடுங்க. மூணு மாதம் பேசிக் சாலரியை தந்துடறோம். நீங்க வேறு கம்பெனில கொஞ்சம் ஒக்காந்து வேலை பார்க்கிறா மாதிரி  தேடிக்கங்களேன். புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்” “…..” மெய்கண்டனிடம் மேற்கொண்டு பேச பதில் ஏதும் இல்லை. “சரி நான் வர்றேன்” ஆரஞ்சுப் பழங்களை வைத்து விட்டு சீனு கிளம்பினார் மெய்கண்டன் மிகுந்த தயக்கத்தோடு சுடலையின் பக்கமாகத் திரும்பினான், ஆரஞ்சுப் பழங்களைப் பார்த்துக் கொண்டே “எவ்வளவோ சின்சியரா இருந்ததுக்கு கடேசில இவ்வளவு தானாடே?” குரல் அடைத்துக் கொண்டு வந்தது. “அவ்வளவு தாண்டே” சுடலை உணர்ச்சிகள் எதையும் காட்டாமல் பதில் சொல்லி விட்டு அகன்றான். - மாடசாமி 9 ராமன் இரட்டைக் கொலை வழக்கு – நாடகம் ஓரங்க நாடகம் : ராமன் இரட்டைக் கொலை வழக்கு [ராமன்] இராமாயணத்தின் கதாநாயகனான இராமனின் பல்வேறு கிரிமினல் குற்றங்களில் இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த ஓரங்க நாடகம் எழுதப்பட்டுள்ளது. பெரிய புராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் வரலாற்றையே ஒரு கிரிமினல் வழக்கு விசாரணையாக, விரிவாகவும் ஆழமாகவும், புராணப் புளுகுகளையும் தோலுரிக்கும் விதத்தில் எழுதினார் மலேசியப் பெரியார். ஆனால், இந்த் ஓரங்க நாடகம் மக்கள் மத்தியில் வீதிகளில் நடத்துவதற்காகச் சுருக்கமாக எழுதப்பட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்க்கு முன்னதாக அன்றைய காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எழுதப்பட்ட நூலை இன்றைய கிரிமினல் சட்டப் பார்வையில் விமர்சிப்பது எப்படி சரியாகும் என ‘ஆத்திக அன்பர்கள்’ பொருமலாம். அப்படிப்பட்ட பழைய குப்பையையே இன்றைய சமுதாயத்தின் ஒழுக்கத்துக்கு வழிகாட்டி என்றும், அதன் நாயகர்களை புனிதர்கள் என்றும், அந்த ராமனே “தேசிய நாயகன்” என்றும் பார்ப்பன, ‘மேல்’சாதிக் கூட்டம் சித்தரிக்கும் போது அந்த ராமனை ” தேசிய வில்லன்” என்று நாங்கள் நிரூபிப்பதில் என்ன தவறு? அதுவும் கற்பனையாக அல்ல; பார்ப்பனர்களால் போற்றிப் புகழப்படும் வால்மீகி ராமாயணத்தின் அடிப்படையில் ! ____________________________ பாத்திரங்கள் : – நீதிபதி, பெஞ்ச் கிளார்க், அரசு தரப்பு வழக்குரைஞர், ராமனின் வழக்குரைஞர், டவாலி, ராமன், வசிட்டன், நாச்சி முத்து (சலவைத் தொழிலாளி), மின்னல் கொடி (சீதையின் சேடிப் பெண்) (நீதிபதி தனது இருக்கையில் வந்து அமர்கிறார். பெஞ்சு கிளார்க் வழக்கு விவரங்களைப் படிக்கிறார்) டவாலி : கோதண்டராமன் என்கிற ராஜாராமன் என்கிற சீதாராமன் என்கிற அயோத்தி ராமன் என்கிற ராமன்…. ராமன்….ராமன்! (ராமன் உள்ளே நுழைந்து கூண்டில் ஏறி நிற்கிறான்) பெஞ்சு கிளார்க் : உன் பேர் என்னப்பா? ராமன் : என் திருப்பெயர் ராமன். பெ.கி : அப்ப பாக்கி பேரெல்லாம்? ராமன் : எல்லாம் நானே பெ.கி : என்னய்யா ஆரம்பத்திலேயே குழப்பமா இருக்குது. உனக்கு மொத்தம் எவ்வளவு பேரு? ராமன் : ஆயிரம் நாமங்கள். பெ.கி :  (தலையிலடித்துக் கொள்கிறார்) சரி, ராமன்கிறது யாரு… நீதானே? ராமன் : ஆம் பெ.கி : சரி ஆள விடு. அரசு வக்கீல் : யுவர் ஆனர், குற்றம் சாட்டப்பட்ட ராமன் வில் அம்பு போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் கோர்ட்டில் வந்து நிற்கிறார். ஏற்கனவே இவர் மீது இரட்டைக் கொலை வழக்கு இருக்கிறது. இவரை ஆயுதங்களுடன் கோர்ட்டுக்குள் அனுமதிப்பது சட்டத்திற்குப் புறம்பானது. ராமனின் வக்கீல் : அப்ஜெக் ஷன் யுவர் ஆனர். இது என் கட்சிக்காரரின் உரிமையை பறிப்பதாகும். மேலும் இது எங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது. அ.வ : கனம் நீதிபதி அவர்களே , இந்த ஆள் ஏற்கனவே இந்த ஆயுதங்களைக் கொண்டு இரண்டு கொலை செஞ்சிட்டான். ஊரெல்லாம் அலம்பல் பண்ணிக்கிட்டு திரியுறான். கோர்ட் இதை அனுமதித்தால் நமக்கே ஆபத்து. நீதிபதி : அப்ஜெக்சன் ஓவர்ரூல்ட் (டவாலியிடம் கண்ணைக் காட்டுகிறார்- டவாலி அம்பு வில்லை பிடுங்கப் போகிறார்- ராமன் திமிறுகிறான், நீதிபதி மீது அம்பெய்ய முயலுகிறான். டவாலி பாய்ந்து சென்று வில்லைப் பிடுங்கி அம்பையும் உருவுகிறார். வில்லை இழந்த ராமன் கூண்டில் துவண்டு சாய்கிறான்) ரா.வ : யுவர் ஆனர் அந்த வில்லை மட்டுமாவது என் கட்சிக்காரருக்குக் கொடுக்க வேண்டுகிறேன். இல்லையென்றால் அவரால் நிற்கக்கூட முடியாது. (வில்லை மட்டும் கொடுக்க நீதிபதி உத்தரவிடுகிறார். வில் கிடைத்தவுடனே ராமன் மீண்டும் ‘கம்பீரமாக’ நிமிர்ந்து நிற்கிறான். அ.வ : உன் பெயர் என்ன? ராமன் : ராமன் அ.வ : அப்பா பேரு? ரா : தசரத சக்கரவர்த்தி அ.வ : அம்மா பேரு? ரா : கோசலை அ.வ : அப்படீன்னா நீங்கதான் தசரதனுக்கும் கோசலைக்கும் பிறந்த ராமன்கிறவரா? ரா : அப்படி சொல்ல முடியாது, என் தாயார் கோசலை… அ.வ : என்னய்யா ஆரம்பத்திலேயே குழப்புற? ரா : அதாவது… எனது தந்தை தசரத சக்கரவர்த்திக்கு 60,000 மனைவிமார்கள்; இருந்தும் அவருக்கு நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லை; ஆகையால் புத்திர காமோஷ்டி யாகம் என்று ஒரு யாகத்தை நடத்தினார். யாகம் முடிந்தவுடன் என்னுடைய தாயின் அந்தப்புரத்திற்கு ஒரு குதிரையை… (வசிஷ்டர் “அபிஷ்டு… அபிஷ்டு…” என தலையில் அடித்துக் கொள்கிறார்.) ரா.வ : அப்ஜெக் ஷன் யுவர் ஆனர் (வெறி வந்ததைப் போல கத்துகிறார்) சம்மந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு எனது கட்சிக்காரரை அரசு வக்கீல் குழப்புகிறார். இது எங்கள் மத உணர்வை புண்படுத்துகிறது. நீதிபதி  : ஆர்டர்…ஆர்டர்.. அடுதத கேள்விக்குப் போங்க அ.வ : சரி நேரா விசயத்துக்கு வரேன். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் ஏதாவது மனஸ்தாபம், சண்டைகள் உண்டா? ரா : (வில்லன் சிரிப்பு சிரிக்கிறார்) என்ன ஒரு கேள்வி கேட்டு விட்டீர்கள். எங்கள் திருமணம் காதல் திருமணமய்யா. உங்கள் கம்பனைக் கேட்டுப் பாருங்களேன்.  “அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்”. அ.வ : அதெல்லாம் தெரியும்யா..சம்பவத்தன்று என்ன நடந்தது அதச்சொல்லு. ரா : சம்பவ தினத்தன்று அதிகாலையில்…நான் அம்சதூளிகா மஞ்சத்திலே சயனித்திருந்த போது… அ.வ : யோவ்….. விஷயத்துக்கு வாய்யா! ரா : நான் அரசவையில் அமர்ந்திருந்து நடன மங்கையரின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப்புரத்தில் திடீரென்று ஒரு சத்தம். நான் ஓடினேன் அந்தப்புரத்திற்கு அங்கே…… அங்கே… அங்கே.. அ.வ : அங்கே என்னய்யா ரா: அங்கே பூமி பிளந்திருந்தது. எனது சீதா தேவி பூமித்தாயின் கருப்பைக்கே சென்று கொண்டிருந்தாள். அ.வ : அப்போ அந்தபுரத்தில் வேறு யார் இருந்தாங்க? ரா : யாருமே இல்லை அ.வ : அப்படின்னா… சம்பவத்தை கண்ணால் பார்த்த வேற சாட்சிகளே இல்லையா? ரா : ஆம் அ.வ : சத்தம் கேட்டு அந்தப்புரத்துக்கு போனீங்க உங்கள் மனைவி பூமிக்குள் தான் போனாங்கன்னு எப்படி நிச்சயமா சொல்றீங்க? ரா : நான் தான் அவள் பூமிக்குள் போய்க் கொண்டிருப்பதை என் கண்ணால் பார்த்தேனே.. அ.வ : என்ன சார்…. லவ் பண்ணி கல்யாணம் பண்ணினதா சொன்னீங்க. நீங்க காப்பாத்த முயற்சிக்கலையா? ரா : அவள் விதி முடிந்து விட்டது. நாம் என்ன செய்ய முடியும்? அ.வ : சரி நீங்க போகலாம். நான் கூப்பிடும் போது வரணும். ரா: எமது அஸ்திரங்களை கொடுத்தீர்களானால்…. டவாலி : என்னாது…. அஸ்திரமா? போய்யா அதெல்லாம் கேஸ் முடிஞ்ச பின்னாலதான்.   2   டவாலி : மின்னல் கொடி…மின்னல் கொடி…. மின்னல் கொடி (மின்னல்கொடி கூண்டில் ஏறி நிற்கிறாள்) அ.வ : உன் பேரென்னம்மா? மி.கொ : மின்னல்கொடிங்கய்யா அ.வ : சீதையை உனக்கு எத்தனை நாளா பழக்கம்? மி.கொ : ரொம்ப சின்ன புள்ளயிலிருந்தே பழக்கங்கய்யா அ.வ : அப்படின்னா நீ அயோத்திக்கு எப்படிம்மா வந்தே? மி.கொ : இந்த ஆளுக்கு கட்டி கொடுத்தப்ப, சீரு செனத்தியோட என்னையும் சேத்து அனுப்பிட்டாங்கையா. அ.வ : அப்படின்னா நீ சீதைக்கு ரொம்ப நெருக்கம்னு சொல்லு. மி.கொ : ஆமாங்கய்யா, எந்த விசயத்தையும் அம்மா எங்கிட்ட மறைச்சதே இல்ல. அ.வ : சம்பவ தினத்தன்னைக்கு என்ன நடந்துச்சு? மி.கொ : அது ஏங்க, இந்த ஆளு அந்த அம்மாவ என்னைக்கி ராவணங்கிட்டயிருந்து கூட்டிட்டு வந்தானோ அன்னையிலிருந்து ஒரே ராவடி தாங்கய்யா. அ.வ : என்ன தகராறு? மி.கொ : வேறென்ன? சந்தேகந்தான். ஆசையோட வாழ வந்த பொண்ண வீட்டுல வச்சி பாக்கலய்யா இவன், நெருப்புல இறக்கி பாத்தான்யா. அ.வ : நெருப்புலயா…. என்னாச்சி? மி.கொ : என்னா ஆச்சி….வெந்து போச்சி. அ.வ : நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். நீ சொல்லும்மா. மி.கொ : அன்னையிலிருந்து அந்தம்மாவக் கண்டாலே இவனுக்கு ஆவல, தென…ம் சண்டை. அ.வ : சம்பவ தினத்தன்னைக்கு என்ன நடந்துச்சி? அதச் சொல்லு. மி.கொ : அட… வழக்கமான வம்புதாங்க. அன்னக்கு மத்தியானம் இந்த ஆளு சோறு திங்க வந்தாரு. எவனோ வழி மேல போறவன் அம்மாவ பத்தி தப்பு தண்டாவா ஏதோ பேசிட்டு போனானாம். இந்த ஆளுக்கு ரோசம் பொத்துகிட்டு வந்துடுச்சாம். ஒரே சண்டை. அ.வ : என்ன சண்டை? மி.கொ : இந்த ஆளு பேசினதெல்லாம் நாலு சனம் இருக்கிற சபையில் சொல்ல முடியுங்களா? அ.வ : சரி அந்த அம்மா என்ன சொல்லிச்சு? அதையாவது சொல்லு மி.கொ : நான் அங்க நிக்கலீங்க. ஆனா கேட்டிச்சி நாக்கு புடுங்கிக்கிற மாதிரி கேட்டிச்சு. அ.வ : அப்புறம் மி.கொ : அவ்வளவு தாங்க. அப்பத்தான் அந்தம்மாவை கடைசியா நான் பாத்தது. அ.வ : ஏதாவது வெடிச்சத்தம் மாதிரி கேட்டிச்சா? மி.கொ : வெடிச்சத்தமும் கேக்கலை. இடிச்சத்தமும் கேக்கல. இந்தாளு அந்தம்மாவைப் போட்டு அடிச்ச சத்தம்தான் கேட்டிச்சு. அ.வ : சரி நீ போம்மா. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.   3   டவாலி : நாச்சிமுத்து…நாச்சிமுத்து..நாச்சிமுத்து (நாச்சிமுத்து கூண்டில் ஏறி நிற்கிறார்) அ.வ : உம் பேரென்னப்பா? நா.மு : நாச்சிமுத்து அ.வ : உங்கப்பா பேரு? நா.மு : வீரையன் அ.வ : சொந்த ஊரு? நா.மு : நம்ம பரம்பரையா அயோத்திதாங்க. அ.வ : தொழில்? நா.மு: சலவை தொழிலாளிங்க. பரம்பரையா அரண்மனை சேவகம் செய்யுறமுங்க. அ.வ : சரி கேக்குற கேள்விக்கு கரெக்டா பதில் சொல்லணும். நா.மு: சரிங்கய்யா அ.வ : ஆத்தங்கரையில் வச்சி ராணியம்மாவைப் பத்தி நீ ஏதோ தாறுமாறா பேசுனியாமே? நா.மு : அய்யய்யே… அப்படியெல்லாம் எதுவும் பேசலீங்க. அ.வ : அப்படின்னா…. வேற என்ன பேசின? நா.மு: நான் சொன்னது இதுதாங்க. நீ போயி சண்ட கிண்ட போட்டு அந்தம்மாவ கூட்டியாந்த. கூட்டியாந்தவன் ஒழுங்கு மரியாதையா வச்சி வாழ வேண்டியதுதானே.. அத வுட்டுட்டு நெருப்புல எறக்குனா அது என்னா நியாயம் -அப்படி சந்தேகப்பட்டவன் அவன்கிட்டயே வுட்டுட்டு வந்திருக்க வேண்டியதுதானே. இதத்தான்யா நான் சொன்னேன். கதையையே மாத்திட்டானுங்கய்யா அ.வ : நீ பேசும் போது அங்க யாராவது இருந்தாங்களா? நா.மு: சாமி சத்தியமா என் பொண்டாட்டியத் தவிர வேற யாரும் கெடயாதுங்க. அரண்மனை விசயத்தை நாலு பேர வச்சிகிட்டுப் பேசமுடியுங்களா?   4   டவாலி: வசிட்டர்…. வசிட்டர்….வசிட்டர் (வசிட்டர் கூண்டுக்கு வந்து நிற்கிறார். டவாலி வசிட்டரைத் தொடுவது போல் அருகில் போக வசிட்டர் தொடாதே…தொடாதே என்று தள்ளுகிறார்) அ.வ : உங்க பேரு என்ன பெரியவரே? வசிஷ்: வசிஷ்டர் அ.வ: ஊரு வசி: யாதும் ஊரே…யாவரும் கேளீர் அ.வ : கிழிஞ்சுது போ. சரி உங்க அப்பாரு பேரு? வசி: ஈரேழு பதினாலு லோகங்களையும் எட்டு திசைகளையும், சூரிய சந்திரர்களையும் எவன் படைத்தானோ அவனே என் அப்பன். அ.வ : யோவ், இது கோர்ட்டா என்ன? கேக்குறதுக்கு ஒழுங்கு மரியாதையா பதில் சொல்லனும். சரி.. உன் தொழில் என்ன? வசி : ராஜகுரு அ.வ : எந்த ராஜாவுக்கு குரு? வசி: சூரிய வம்சத்தின் ஏழேழு பரம்பரைக்கும் நான தான் குரு! அ.வ : ஏழு பரம்பரைக்கும் நீதான் குருவா…சரி உன் வயதென்ன? வசி: கடலின் ஆழமென்ன? (ராமன் தரப்பு வக்கீல் ஹா…. ஹா.. என சிரிக்கிறார்.) நீதிபதி: (முறைத்துப் பார்த்துவிட்டு) யோவ் பெரியவரே.. கேக்குற கேள்விக்கு நேரடியா பதில் சொல்லு. அ.வ : ராமனை உமக்கு தெரியுமா? வசி: தெரியுமாவா? இதோ இந்தத் தோளில் தூக்கி வளர்த்தவனய்யா நான். அ.வ : சம்பூகனை தெரியுமா? வசி: கேள்விப்பட்டிருக்கிறேன். அ.வ : உங்களுக்கு சம்பூகனுக்கும் ஏதாச்சும் முன் விரோதம் உண்டா? வசி : முன்விரோதமாவது பின்விரோதமாவது, அவன் ஒரு தேச விரோதி. அ.வ : தேச விரோதியா? என்னய்யா பண்ணினான்? வசி: அவன் ஒரு சூத்திரன். பிராமணர்களுக்கு போட்டியாக தவம் செய்ய முயற்சி செய்த சூத்திரன். அ.வ : அது உங்களுக்கு எப்படி தெரியும்? வசி: அயோத்தி நகர் பிராமணர்கள் என்னிடம் முறையிட்டார்கள். அதை விசாரித்து உரிய தண்டனை கொடுக்கும்படி நான்தான் ராமனுக்கு உத்தரவிட்டேன். அ.வ : அப்போ நீங்கதான் கொலை செய்யத் தூண்டினீங்க அப்படித்தானே? வசி : கொலையா? தருமத்தின்படி எதை செய்ய வேண்டுமோ அதை நான் செய்தேன். சூத்திரன் என்பவன் அடிமை வேலை செய்யப் பிறந்தவன். பிராமணனுக்கும், சத்திரியனுக்கும், வைசியனுக்கும் தொண்டு செய்வதுதான் அவன் குலத்தின் கடமை. அதை அவன் மீறினான் அ.வ : என்னய்யா செஞ்சான்? அதச் சொல்லு வசி: பிராமணர்களுக்கு போட்டியாக தவம் செய்தான். இது சட்ட விரோதம். சூத்திரன் வேதத்தை காதால் கேட்டாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று நம் சனாதன தர்மம் சொல்கிறது. ஏன்?..சூத்திரன் சுடுகாட்டுக்குச் சமம் என்று ஆதிசங்கரரே சொல்லியிருக்கிறாரே அ.வ : நீதான் கொலை செய்யத் தூண்டினதா மறுபடியும் ஒத்துக்கிற. வசி : இது கொலையென்றால் இதுபோல ஆயிரக்கணக்கில் நாங்கள் செய்திருக்கிறோம். இதையெல்லாம் நீங்கள் விசாரித்து தீர்ப்பு சொல்லிவிட முடியுமா? – ஏகலைவன் கேஸை விசாரித்தீர்களா? – நந்தனார் கதையென்ன – எங்களுக்கு தெரியாததா? – அவ்வளவு தூரம் ஏன்? உங்கள் வெண்மணியில் நீங்கள் செய்தது என்ன? மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பாதீர்கள். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் ராமன் செய்தான். அ.வ : அப்போ… ராமன் தான் இந்த கொலையை செஞ்சானு சொல்றீங்க வசி : கொலை…கொலை…கொலை. இந்த கெட்டவார்த்தையைக் கேட்டு என் காதுகள புண்ணாகி விட்டன. சனாதன தர்மப்படி என்ன செய்ய வேண்டுமோ ஹிந்து தர்மப்படி என்ன் செய்ய வேண்டுமோ அதைத்தான் அவன் செய்தான் அ.வ : நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர் – சரி நீங்க போகலாம்.   5   டவாலி : ராமன்…ராமன்….ராமன் (ராமன் கூண்டில் வந்து நிற்கிறான்) அ.வ : கனம் நீதிபதி அவர்களே! இந்த ரெட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சீதாராமன், கோதண்டராமன், ராஜாராமன், அயோத்திராமன் என்ற பல்வேறு பெயர்களில் உலவி வருகின்ற ராமன் என்கிற இந்த நபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ததின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவன் தன் மனைவி சீதையை ஏமாற்றி தீ வைத்து கொளுத்தியிருக்கிறான். அவள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறாள். அதன்பின் அவளைக் கொலை செய்து புதைத்து இருக்கிறான். தடயங்களை அழிக்க முயற்சியெடுத்து இருக்கிறான். சாட்சிகளை மிரட்டியிருக்கிறான். ஒரு பாவமும் அறியாத சம்பூகன் என்ற தொழிலாளியை எவ்வித நியாயமான முகாந்திரமில்லாமல் திடீரென்று தாக்கி கொலை செய்திருக்கிறான். இந்தக் கொலைக்கு ‘ராஜகுரு’ என்று சொல்லப்படுகிற வசிஷ்டர் உடந்தையாகவும் தூண்டி விடுபவராகவும் இருந்துள்ளார். ஏற்கனவே, இந்தியாவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு புனைப்பெயர்களில் தசாவதாரம் என்கிற பெயரில் போர்ஜரி, ஆள்மாறாட்டம், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, சதி, கற்பழிப்பு போன்ற கொடிய கிரிமினல் குற்றங்களுக்காக இவன் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக விசாரணை நடத்தப்படாமல் உள்ளது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டும் இத்தகைய கிரிமினல் பேர்வழி இனிமேலும் வெளியில் நடமாடுவது சமுதாயத்திற்கே ஆபத்து என்கிற உண்மையை கணக்கில் கொண்டும், இவனுக்கு உரிய தண்டனை அளிக்கக் கோருகிறேன். குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர் இந்த நீதிமன்றத்தின் கருணைக்கும், இரக்கத்திற்கும் எள்ளளவும் தகுதியில்லாதவன் என்பதால் இவனுக்கு மிக அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீதிபதி: என்னப்பா… இது சம்பந்தமா நீ ஏதாவது சொல்ல விரும்புறியா? ரா: ஹா….ஹா…..ஹா…(சிரிக்கிறான்) அ.வ : யோவ் என்னய்யா சிரிக்கிற. அய்யா கேட்கிறாரு ஒழுங்கா பதில் சொல்லு ரா: யதா யதாஹி தர்மஸ்ய நீதிபதி : என்னப்பா நான் இவவளவு சீரியசா கேட்டுக்கிட்டிருக்கேன். நீ என்னமோ உளர்றே, புரியுற மாதிரி சொல்லுய்யா ரா: புரிந்தது…புரியாதது…தெரிந்தது..தெரியாதது எல்லாம எமக்குத்தான் . ராம் ராஜ்யத்தில் ராமன் மீதே விசாரணையா? என் வீர பராக்கிரமங்களைப் பற்றி வால்மீகியிடம் கேட்டுப்பார்! என் ஒழுக்கத்தைப்பற்றி கம்பனிடம் கேட்டுப்பார்! என் காதல் லீலைகளைப்பற்றி துளசிதாசனிடம் கேட்டுப்பார்! அ.வ : யோவ் நீ என்னய்யா சொல்ற… அத சொல்லு ரா: மானிடப் பதரே! சூத்திர நாயே….! அற்பனே! யாரைப் பார்த்து நீ என்கிறாய். எங்கே என் கோதண்டம்…வாலியின் உயிர் பறித்த என் அஸ்திரங்கள் எங்கே? ராவணனின் சிரம் சாய்த்த எனது அம்புகள எங்கே…எங்கே… நீதிபதி: ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்டு (ராமன் இழுத்து செல்லப்படுகிறான்)   6   தொலைக்காட்சி அறிவிப்பு ஒரு முக்கிய அறிவிப்பு :- இரட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமன் என்கிற வாலிபர், நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் காவலிலிருந்து தப்பி விட்டார். அடையாளங்கள் வயது : தெரியவில்லை. ஆனால் இளமையான தோற்றம் நிறம் : பச்சை போலீசாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வரும் இந்த நபர் கையில் வில், அம்பு போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் நடமாடிக் கொண்டிருக்கிறார். தற்போது தலைமறைவாக இருக்கும் இந்த நபர் தனக்கு ஆதரவாக தனது கூட்டாளிகளைத் தூண்டி விட்டு நாட்டில் கலவரத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாகவும் கடைசியாக வந்த தகவல்கள் கூறுகின்றன. இந்த நபரை எங்கேனும் காண நேர்ந்தால் உடனே நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :- செயலர்,மக்கள் கலை இலக்கிய கழகம், தமிழ்நாடு. - மருதையன் ______________________________________________ புதிய கலாச்சாரம் – டிசம்பர் 1992 ______________________________________________ 10 எங்க ஊரு சாயப்பு வாணக்காரய்யா எங்க ஊர்ல வாணக்காரய்யா, வாணக்காரய்யான்னு ஒரு இஸ்லாமியர் இருந்தாரு. புதுக்கோட்டையில் இருந்து பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்தாரு. அவரைப் பத்தி எழுதணும்னு ஊருல விசாரிச்சேன், ஒருத்தருக்கும் அவரோட பேரு தெரியல. எல்லோரும் சொன்னது அவரு பேரு வாணக்காரருன்னுதான். இல்லேன்னா சாயப்பு (சாய்பு) வாணக்காரர். அதுவும் எங்க ஊருல அவரு மட்டும்தான் வெடி செஞ்சதாலயோ என்னமோ அவரோட பெயரை தெரிஞ்சிக்கணும்மனு யாருக்கும் தோணலையோ? [வாணக்காரையா] இந்து மத சம்பிரதாய சடங்குகளும், சாதிய பாகுபாடும் வலுவா இருக்கும் எங்க ஊருல, இந்து மதத்தை தவிர வேத்து மததுக்காரவங்கன்னு யாரும் கெடையாது. இவர்தான் பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்த முதல் முஸ்லீம் குடும்பம். சுத்துப்பட்டுல உள்ள எல்லா ஊருக்கும் தீபாவளி, கோயில் திருவிழா, கல்யாணம், சாவுன்னு எல்லாத்துக்கும் வாணவெடி செய்றதுதான் இவரு தொழிலு. பாதுகாப்பா வெடி செய்றதால கிராமம் மட்டும் இல்லாம டவுனுலேர்ந்து கூட வந்து வாங்கிட்டு போவாங்க. வாணக்கார அய்யா, குடும்பத்தோட எங்க ஊருக்கு வந்த போது “புள்ளக்குட்டியோட வந்துருக்காரு இவருக்கு ஏதாவது உதவி செய்யணு”ன்னு நெனச்சு ஊர் காரங்க ஒரு முடிவு செஞ்சு இருந்துட்டு போகட்டும் என்ற முடிவுக்கு வந்தாங்க. “ஐயனார்  கோயில் எடந்தான் இருக்கு. உங்களுக்கு இஷ்டன்னா அதுல கொட்டகை போட்டுகிட்டு இருங்க”ன்னு சொன்னாங்க. “சாமில என்னங்க இருக்கு, எல்லாத்துக்கும் மனசுதான் ஒத்துப் போகணும். புள்ளகுட்டியோட வந்த என்னை, முடியாதுன்னு சொல்லாம தங்க வச்சுக்கிறிங்க. ஐயனார நான் கும்பிட்டா ஒண்ணும் தப்பில்ல”ன்னு சொன்னாரு வாணக்காரரு. ஐயனாரு எடத்த அல்லா காட்டுன வழியா நெனச்சு தொழில ஆரம்பிச்சு அமோகமா இருந்தாரு வாணக்கார அய்யா. ஊருகள்ள வாணக்காரய்யா வாணவெடிக்கு தனி மவுசு இருதுச்சு. ஒத்த வெடி, ஓல வெடி, அணுகுண்டு, பொதபொத வாணம் (புஸ் வாணம்), சங்கு சக்கரம், பென்சில் மத்தாப்பு, திருவிழா வெடி இவ்வளவுதான் அவர் செய்த வெடிகளோட வெரைட்டி. ஆனால் ஒவ்வொண்ணும் அவ்வளவு பாதுகாப்பா பாத்துப் பாத்து செய்வாரு. பிள்ளைகளோட பாதுகாப்பு கருதி வெடிகளோட மேல் அமைப்பு எல்லாம் களி மண்ணால செய்திருப்பாரு. சீக்கிரத்துல வெடி நமத்தும் போகாது. எந்த ஒரு வெடியும் வெடிக்கறதுக்கு ரெண்டு நிமிஷம் வரைக்கும் வெறும் மத்தாப்பு போல தான் வரும், பிறகு லேட்டாதான் வெடிக்கும். வெடிக்காத பென்சில் மத்தாப்புலக் கூட பாதி வரைக்கும் தவுடுதான் இருக்கும். அல்லா புண்ணியத்துலயோ அய்யனாரு புண்ணியத்துலயோ வாணக்காரையா சாவுற வரைக்கும் அவர் செய்த வெடியால எந்த விபத்தும் நடக்கல. [Ayyanar temple] எங்க ஊரைச் சுத்தி இருக்குற இருபது கிராமத்துக்கு மேலேருந்து இவர்கிட்ட வெடி வாங்க வருவாங்க. ஊருக்கூரு திருவிழா வெடிங்கறது சீசனுக்கு தான் நடக்கும், ஆனா சாவுக்கு வெடி கட்றது தினமும் நடக்கும். அதனால வேலை இருந்துகிட்டேதான் இருக்கும். 40 வருசத்துக்கு மேல எங்க ஊருல தொழில் பாத்தாரு. ஆனா சொத்துன்னு எதுவும் சேத்து வைக்கல. ஒரு வீடு கூட சொந்தமா இல்ல. வேலையாளுக்கு நல்ல சம்பளம் கொடுப்பாரு. பசின்னு வர்றவங்களுக்கு சாப்பாடு போடுவாரு. ஊரு விசேசத்துக்கு நல்லா செய்வாரு. ரொம்ப நல்ல மனிதர். எங்க ஊருல சேவை சாதி, தாழ்த்தப்பட்ட சாதி குடும்பத்திலிருந்து தொழில் செய்றவங்களுக்கு வேலைக்கி கூலி கொடுக்க மாட்டாங்க. வருசம் பூரா செய்ற வேலைக்கி அறுவடை முடிஞ்சதும் நெல்லு தான் கூலியா வாங்கிக்கணும். அதே போலதான் வாணக்கார அய்யாவும் தீபாவளிக்கு வாணவெடிய கொடுத்துட்டு அறுவடை முடிஞ்சதும் நெல்லு வாங்கிக்கணும்னு முறை வச்சாங்க. தீபாவளிக்கு வெடி குடுத்துட்டு யாருக்கு எத்தனை மரக்கா நெல்லுக்கு வெடி குடுத்தோங்கற கணக்க நோட்டுல எழுதி வச்சுக்குவாரு. அறுவடை முடிஞ்சதும் ஒவ்வொரு வீடா போய் நெல்லு வாங்கிக்குவாரு. சாதாரண மக்கள் மரக்கால் கணக்குக்கும், பணக்கார விவசாயிகள் மூட்டை கணக்குக்கும் வெடி வாங்குவாங்க. வெளியூரு சனங்களுக்கு வெடி விக்கும் போது காசு வாங்கிக்குவாரு. கருவேப்பிலை, கொத்தமல்லி மாதிரி கொசுறா ஓல வெடியும், பென்சில் மத்தாப்பும் கொடுப்பாரு. தீபாவளி சமயத்துல வெடி விக்கிற எடத்துல பிள்ளைங்க போய் நின்னா, மிட்டாய் மாதிரி வெடிக்காத மத்தாப்பு வெடிய கையில கொடுத்தனுப்புவாரு. வியாபாரி போல இல்லாம ஊர் மக்களோட தாயா பிள்ளையா பழகுனாரு. வெடி செய்யறதுக்கும், வெடி மருந்துகள பாதுகாக்கறதுக்கும் ஊருக்கு ஒதுக்கு பக்கமா இருக்குற தென்னந்தோப்புல ஒருத்தர் இடம் கொடுத்தாரு. செஞ்ச வெடிய தீபாவளி சமயத்துல விக்கிறதுக்கு ஊருக்குள்ள சும்மாக் கெடந்து வீட்ட ஒருத்தங்க தந்தாங்க. நாலு தாழ்த்தப்பட்ட சாதி ஆட்கள் இவர்கிட்ட வேல செஞ்சாங்க. தென்னந்தோப்புல அழகான ஒரு குடிசை போட்டு, உக்காந்து வெடி கட்ட திண்ணை போட்டு, பேட்ரி ரேடியோவ்ல பழைய எம்.ஜி.ஆர். பாட்டுப் போட்டு வேலை செய்ற அழகே தனி. இத பாக்குறதுக்குன்னே தினமும் மாடு மேய்க்க அங்கதான் போவோம். வாணக்கார அய்யா சாதி மதம் பாக்காம எல்லா சாதியினரிடமும் சகோதர குணத்தோட பழகுவாரு. எங்க ஊரையும், இந்து ஆதிக்க சாதி பண்டிகையையும் மதிச்சு நடந்துக்குவாரு. மதம் வேறயா இருந்தாலும், “என்னையும் சேத்துத் தானே உங்க சாமி பாத்துக்குது அதுக்கு எதுன்னா நான் செய்யணு”முன்னு முன்வருவாரு. இந்த ஊருல வியாபாரம் பாத்து பொழக்கிறதாலயும், ஐயனாரு சாமி எடத்துல குடி இருக்குறதாலயும் தானும் ஏதாவது செய்யணும்னு வருசா வருசம் ஐயனாரு திருவிழா, முருகனுக்கு மாசி மகம், பங்குனி உத்திரமுன்னு எல்லா திருவிழாவுக்கும் காசு வாங்காம வாணவெடி கட்டித் தருவாரு. சித்திரை திருநாளுக்கு முதல் நாள் இரவுலேர்ந்து மறுநாள் காலை வரைக்கும் விடிய விடிய கண்ணு முழிச்சு எந்த மனத்தடையும் இல்லாம சந்தோசமா சாமி புறப்பாட்டுல கூடவே வருவாரு. நன்றிக் கடனா ஐயனாருக்கு மட்டும் ஒரு படி கூடுதலா வெடி தருவாரு, காட்டுக்குள்ள புறப்புற்ற ஐயனாரு ஊருக்குள்ள வந்து சேர்ற வரைக்கும் விடிய விடிய வெடி சத்தத்துல ஊரே கிடுகிடுத்து போகும். பாக்க கண்கொள்ளா காட்சியா இருக்கும். வாணக்கார அய்யாவுக்கு மூனு பொண்ணுங்க. ஆம்பள பிள்ளை கிடையாது. அந்த பொண்ணுங்க வீட்ட விட்டு வெளிய வரவே மாட்டாங்க. முஸ்லீம் மத கட்டுப்பாட்டோட போட்ட முக்காடு எடுக்காம இருப்பாங்க. இந்த வெடித் தொழில் செஞ்சுதான் மூணு பொண்ணுவளையும் கட்டிக் குடுத்தாரு. வீட்லயே பந்தல் போட்டு ஊரு மணக்க பிரியாணி போட்டு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சாரு. கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி அந்த கல்யாணமே எங்களுக்கு வேடிக்கையா இருந்துச்சு. எங்க ஊருல ஒரு சில படித்த, நகரத்தோட பழக்க வழக்கம் வச்சுருந்த சில பெரிய மனிதர்களை தவிர, பெரும்பாலான சாதாரண மக்கள் இந்து மதத்து திருமணத்த தவிர வேறு மத திருமணத்த பாத்திருக்க வாய்ப்பில்லைதான். மொகத்துல பூப்போட்டு மூடி மறைச்சு முகமே தெரியாம நடந்த கல்யாணத்த பாக்குறதுக்கு எங்க ஊருக்கே வியப்பா இருந்துச்சு. வாணக்காரையா தனிப்பட்ட நல்ல குணம்னா பசின்னு வர்ரவங்களுக்கு சாப்பாடு போட்றது தான். எந்த நேரமும் அடுப்பு எரிஞ்சுகிட்டேதான் இருக்கும். ஊர்க்காரவங்க யாரு அவரு வீட்டுக்கு போனாலும் சாப்புடாம விடமாட்டாங்க. பூக்காரம்மா, கூடை, மொறம் விக்கிறவங்க, வளையல் மணி விக்கிறவருன்னு பல சுமைதூக்கும் வியாபாரிங்கக் கூட சாப்பாட்டு நேரத்துக்கு சாயப்பூட்டுக்குப் போனா ரெண்டு சோறு திங்கலாம்னு போவாங்க. பாவப்பட்ட மக்க, மனுசங்க மனசறிஞ்சு சோறு போடும் பண்பு அந்த குடும்பத்துல எல்லாருக்குமே இருந்துச்சு. இப்படி எங்கிருந்தோ வந்து ஊர் மனசுல இடம் பிடிச்சு ஊர் நல்லது கொட்டதுல கலந்துகிட்டு, இந்து முஸ்லீம் வேறுபாடு இல்லாம பழகி வாழ்ந்த வாணக்காரைய்யா 75 வயசுக்கு மேல இறந்துட்டாரு. வாழ இடம் குடுத்த ஊர் சனங்க புதைக்க எடம் கொடுக்கறதுல தயக்கம் காட்டுனாங்க. சாதிக்கு ஒரு சுடுகாடு இருக்குற எங்க ஊருல இவர் மதத்துக்குன்னு ஒரு சுடுகாடு இல்ல. அதால இவர எங்க பொதைக்கறது என்ற புது பிரச்சனை உருவாச்சு. “நம்மோட தாயா பிள்ளையா பழகினாலும் எரிக்கிற எடத்துல பொதைக்க எப்புடி எடம் கொடுக்க முடியும். நாம பிரேதத்த கொண்டு போகும் போது கொம்பு ஊதி, தார தம்பட்ட அடிச்சு, சங்கு ஊதி கடைசி காரியம் பண்ணுவோம். அவங்க வேற மாதிரி செய்வாங்க இதெல்லாம் சரிபட்டு வராது. என்ன செய்யலாம்?” எடுத்துட்டு போங்கன்னு சொல்லவும் முடியல, ஊர்ல புது பழக்கத்த ஏற்படுத்தவும் முடியல ரெண்டுங் கெட்டான் மனசோட பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வராம பாதி பொழுதுக்கு மேல இழுத்துகிட்டே போச்சு. [fireworks]துக்கத்துக்கு வந்த வாணக்காரையா சொந்தக்காரங்க இந்த குழப்பத்த எதிர்பார்க்கல இங்கேயே அடக்கம் செய்யணுன்னு சொல்லவும் முடியல. நடந்த கொழப்பத்த பாத்துட்டு ஊருக்கு எடுத்துட்டு போய் அடக்கம் பண்றதா சொன்னாங்க. ஆனா ஊர்க் காரங்களுக்கு தூக்கிட்டு போவச் சொல்றதுல விருப்பமில்ல. வாணக்காரையா பழகின விதமும் ஊரு நல்லது கெட்டதுல பங்கெடுத்துகிட்ட முறையும் அவரை விட்டுக் கொடுக்க மனசில்லாம செஞ்சுருச்சு. இந்த ஊரை நம்பி வந்துட்டாரு இவ்வளவு காலமா நம்மோட ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகினாரு அதுவும் இல்லாம பாதில தூக்கிட்டு போனாங்கன்னா ஊருக்கு ஒரு இழுக்கா போயிரும்னு ஊர்க்காரங்க முடிவு வந்தாங்க. “வாணக்காரையா சாதி மதம் பாக்காம எல்லார் கிட்டையும் நல்லா பழகினவரு. அவரும் இந்த ஊர்க்காரனாட்டம் கோயிலுக்கு வரி குடுத்து நல்லது கெட்டதுல கலந்துகிட்டாரு. அது மட்டும் இல்லாம அவரோட நல்ல நடத்தைக்கும், நல்ல மனசுக்கும் மதிப்பு குடுத்து நடந்துக்கணும். அவங்க ஒரு குடும்பம் இருக்குங்கறத மனசுல வச்சுகிட்டு இது வரைக்கும் நம்ம கிராமத்துல இந்து மதம் மட்டும் தான் இருந்துச்சு. இப்ப இஸ்லாம் மதமும் இருக்குன்னு ஒத்துக்கணும். அவங்க நம்ம ஊர்க் காரங்கதான்” என்று முடிவெடுத்தாங்க. எந்த சாதிக்காரங்க சுடுகாட்டுலயும் இல்லாம ஆத்துக் கரையோரமா அவங்களுக்குன்னு ஒரு தனி எடம் கொடுத்து அதுல பொதச்சுக்க சொன்னாங்க. வாணக்காரையா இறந்ததும் அவர் மனைவி மட்டும் தனியா இருந்தாங்க. பொண்ணுங்க தன்னோட வந்து இருக்கும் படி கூப்பிட்டும் போக மறுத்துட்டாங்க. இது தன்னோட ஊரு இங்க இருக்குறவங்கதான் தனக்கு சொந்தக்காரங்க என்ற நெனப்போடு இருந்தாங்க. வெடி செய்றது கிடையாதுன்னாலும் பொண்ணுங்க குடுக்குற பணத்த வச்சுகிட்டு ஊர்க் காரங்க சில பேரு குடுக்குற நெல்ல வச்சுகிட்டு வாழ்ந்தாங்க. சும்மா இருக்க முடியாம ஊதுவத்தி செய்வாங்க. பத்து வருசத்துக்கு பிறகு நடக்க முடியாம படுத்த படுக்கையா போய்ட்டாங்க. பொண்ணுங்களுக்கு வந்து வந்து பாக்க முடியல. அதனால ஊர்க்காரங்க கிட்ட சொல்லிட்டு அந்தம்மாவ பொண்ணுங்களே கொண்டு போய்டாங்க. அதுக்குப் பிறகு வாணக்காரையா குடும்பத்தை பத்தி எந்த சேதியும் தெரியல. இன்னைக்கும் எங்கூர்ல தீபாவளி பண்டிகையெல்லாம் பெரிய விசயமா கொண்டாடறது கிடையாது. வாணக்காரையா இல்லைங்கிறதுனாலயோ என்னமோ இப்பல்லாம் ஊருல பட்டாசு சத்தம் அதிகமாக கேக்கிறது இல்ல. பட்டணுத்துல நான் பாத்த சிவகாசி பட்டாசெல்லாம் வாணக்கார அய்யா வெடி வகைங்களோடு ஒப்பிட்டால் ஒண்ணுமே இல்லை. ஏன்னா அந்த ஐயாவோட வெடியில சத்தம் மட்டுமில்ல, தன்னலம் கருதாக ஒரு அன்பு இருந்துச்சுன்னு இப்ப புரியுது. -சரசம்மா (இது கற்பனைக் கதையல்ல, உண்மைச் சம்பவம்) 11 வள்ளியின் கதை அழகிய முகமும், அருமையான குணமும் கொண்ட பொற்கொடி தீயில் கருகிப் போய் அழுகிப் போன பிணமாகக் கிடந்தாள். அவள் முகம் மட்டும் எப்போதும் போலவே அன்று பூத்தப் பூவாக சிரித்த வண்ணமாய் இருந்தது. மூன்று வயது மகனை விட்டு விட்டு தீக்குளித்து விட்டாள் பொற்கொடி. துக்கத்துக்கு வருபவர்களெல்லாம் பரிதாபப்பட்டு வாங்கிக் கொடுக்கும் பிஸ்கெட் பாக்கெட்டை தின்றவாறு எதுவும் புரியாத நிலையில் இருந்தான் அந்தக் குழந்தை. நிலை தடுமாறும் அளவுக்குக் குடித்துவிட்டு துக்கம் தாங்காதவராக கிடந்தார் அவள் கணவன். மரத்தடியில் சுருண்டு கிடந்தார் அப்பா. சொல்லி அழ ஜீவனற்று குரல் மட்டும் தொண்டைக்கும் நெஞ்சுக்குமாக இழுக்கும் நிலையில் அம்மா. பொற்கொடியின் குடும்பத்தில், வாழ்க்கையில் நடந்து முடிந்ததையும், இனி நடக்கப் போவதையும் சொல்லி, குலை நடுங்கும் நெடுங்குரலில் அழுது கொண்டிருந்தாள் வள்ளி. [சகோதரிகள்] பொற்கொடியின் தங்கைதான் வள்ளி. அவள் அக்கா பொற்கொடிக்கே மூத்தவளான நான் அவள் அக்காவுக்குத் தான் கூட்டாளி. ஒரே ஊர், அக்காவின் கூட்டாளி என்றுதான் அவளுக்கும், எனக்குமான பழக்கம். பொற்கொடி இறந்த பிறகு என்னிடம் மிகவும் நெருக்கமாக பழகினாள் வள்ளி. அவள் அக்காவோடே என்னை அதிகம் நேரம் பார்த்ததால், பொற்கொடியின் ஞாபகம் மிகவும் வேதனை தரும் நேரத்துல என்னை பார்த்தால் அக்காவைப் பார்த்தது போல் இருக்கும் என்பாள். அவளுக்குத் திருமணமாகி குழந்தை பிறந்த போது என்னைத்தான் பேர் வைக்கச் சொன்னாள். அந்தப் பேரை அவள் அக்கா வைத்ததாக நினைத்து சந்தோசப் பட்டுக்குவா. என்னிடம் மனம் விட்டுப் பேசுவாள். என்னிடம் பேசும் போது அவள் அக்காவிடம் பேசுவது போல் ஒரு மன நிறைவைத் தருது என்பாள் வள்ளி. நாளடைவில் அனபு வளர்ந்ததனால், தோழி பொற்கொடியை விட ஒருபடி மேலே போய் தோழியின் தங்கை என் தங்கையானாள். இந்த வள்ளியின் வலி மிகுந்த வாழ்க்கையை வேதனையோடு உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். வள்ளியை கடந்து செல்லும் யாருக்கும் ஒரு நிமிடமாவது திரும்பிப் பார்க்கத் தூண்டும் அளவுக்கு நல்ல அழகு. மகன் வைத்திருக்கும் எந்த அம்மாவும் வள்ளியை பார்த்தால் நமக்கு வரப்போற மருமக இந்த பொண்ணப் போல இருக்கணும் என்று நினைக்கும் அளவுக்கு லட்சணம். அனைவரும் வள்ளியைப் போலத்தான் வேணும் என்று நினைப்பார்களே தவிர வள்ளிதான் வேணும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் பொண்ணோடு பொருளையும் எதிர்ப் பார்ப்பவர்கள். வள்ளியோ ஏழ்மைப்பட்டக் குடும்பத்து பெண். பொற்கொடி, வள்ளி, அம்மா, அப்பா இவர்கள் நால்வர் அடங்கியதுதான் குடும்பம். வள்ளிக்கும், பொற்கொடிக்கும் ஆறு வயசு வித்தியாசம். வள்ளியின் அம்மாவுக்கு இவர்கள் மூன்று பேரைத் தவிர ஒரு உலகம் கிடையாது. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிய பிறகும் கூட குழந்தையா நெனச்சு கிட்டு தலை சீவறதுலேர்ந்து, சாப்புடறது, நிக்கிறது, நடக்குறது, தூங்கறதுன்னு அனைத்தையும் ரசிப்பாங்க. பஸ்ல ஏர்ற வரைக்கும் பொண்ணுங்களுக்கு ஊட்டி கிட்டே வருவாங்க. பொண்ணுங்கள பார்த்து பார்த்து வளர்த்தாங்க. வள்ளியின் அப்பா பொறுப்பில்லாத குடும்பஸ்தர். ஆனால் பொறுப்பான குடிகாரர். அவர் சம்பாத்தியம் குடிக்க மட்டும்தான் போதுமானதா இருக்கும். போதாக் குறைக்கு இருந்த ஒரு ஏக்கர் நிலத்த்தையும் வித்துட்டார். ஒரு பால் மாடும், வள்ளியின் அம்மா கூலி வேலையும் தான் அன்றாட குடும்ப செலவை தீர்த்தது. இருந்த அரை ஏக்கர் நிலத்தை வித்து பொற்கொடிக்கு 17 வயசுலயே சொந்தக்கார மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்து வைத்தனர். அப்பா மொடாக் குடிகாரன்னா, புருசன் படாக் குடிகாரனா இருந்தான். ஒரு ஆம்புள புள்ளையும் பொறந்துச்சு. காதுல மூக்குல இருக்குற நகைகள வாங்கி வித்து குடிச்சது போக வீட்டுல உள்ள பாத்திரத்த வித்து குடிக்கிற அளவுக்கு நெலைம போய்ட்டே இருந்துச்சு. எந்த வகையிலயும் திருத்த முடியல. தன் வீட்டுத் தேவைகளுக்காக வேலைக்கு போக ஆரம்பித்த வள்ளி, அக்கா குடும்பத்துக்கும் சேர்த்து உழைக்க வேண்டியிருந்தது. வாரத்துக்கு ஒருமுறை வள்ளியைப் பார்த்து தனக்கும், குழந்தைக்கும் தேவையான அனைத்தையும் கேட்டு வாங்கி வருவாள் பொற்கொடி. தன் பங்குக்கு வள்ளி வேலை பார்க்கும் கடைக்குச் சென்று குடிக்க காசு கேட்பதும், இல்லை என்றால் அசிங்கமாக திட்டுவதும், கூட வேலை பார்ப்பவர்கள் கேலியாக பேசுவதுமாக வள்ளிக்கு அவமானத்தை ஏற்படுத்தினான் அக்கா கணவன். ஒரு நாள் பிள்ளைக்குத் தேவையானதை வாங்கக் கொடுத்தக் காசில் குடித்து விட்டு வந்தானென்று ஆத்திரம் அடைந்தப் பொற்கொடி, அவனை உதறி [கிராமத்துப் பெண்]விட்டு தன் வாழ்க்கையைப் பார்த்துக்க நினைக்காமல், மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டாள். 28 நாள் ராப்பகலாக வள்ளிதான் பொற்கொடியைக் கவனித்தாள். அவர் அம்மா ஒரு பரதேசி போல ஒரு மூலையில் சுருண்டு கிடந்தார். ஆறுதல் சொல்லக் கூட ஒரு நல்ல மனிதரில்லை. “சாக வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்யவில்லை. பயமுறுத்தி வைக்கத்தான் செய்தேன். இப்ப என் பிள்ளைகளை விட்டுட்டு போயிடுவேனோ என்று பயமா இருக்கு” என்று வள்ளியையும் உள்ளடக்கி நிலை தடுமாறிய மனநிலையில் பொற்கொடி கூறியதும், வள்ளி செய்வதறியாது நின்றதும் இன்றளவும் என் மனதை வதைக்கும் ஒரு நிஜம். பொற்கொடி சாவதற்கு முன் வள்ளிக்கு திருமணம் நிச்சயம் செய்து ஒரு மாதம் முடிந்திருந்தது. வரும் மாதத்தில் திருமணம் முடிவு செய்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில் துக்கத்துக்கு வந்த அனைவர் மனதிலும் ஓடிய எண்ணமும், பேசிய வார்த்தையும், “இரண்டாம் தாரமாக வள்ளியையே கட்டி வச்சுட்டா நல்லா இருக்கும். பிள்ளைக்கு அம்மா வேணும், வேற யாரையாவது கல்யாணம் பண்ணினா பிள்ளையை சரியா பாத்துக்க மாட்டாங்க” என்று நியாயம் பேசினார்கள். நடந்த தவறைப் பற்றிய கோபமே இல்லாமல் மீண்டும் ஒரு தவறு செய்வதை சரி என்று பேசினார்கள். மனைவி செத்து ஒரு வாரத்துக்குள், “பிள்ளைக்காகவாவது என்னை கல்யாணம் பண்ணிக்க” என்றான் குடிகாரன். காறி மூஞ்சிலேயே துப்பினாள் வள்ளி. “உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை எப்டிப்பட்டவரோ, பாக்கவும் அவ்வளவா பொருத்தமா இருக்க மாட்டாரு, அதுக்கு அக்கா புருசணையே கல்யாணம் பண்ணிகிட்டா ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கலாம்” என்றார்கள் சொந்தக்காரர்கள். “தெரிந்தே குழிக்குள்ள விழறதுக்கு தெரியாம விழறது மேல்” என்று பிடிவாதமாகக் கூறி விட்டாள் வள்ளி. வள்ளிக்கு பார்த்த மாப்பிள்ளை அவளை விட 20 வயசு அதிகம். வயசுலயும், தோற்றத்திலயும் பொருந்தாத உருவம். இவளின் ஏழ்மை நிலைக்கு இந்த அளவுக்குத்தான் மாப்பிள்ளை கிடைக்கும் சமூகத்தில். குடிக்காதவரா, மூணு வேலையும் சாப்பாடு போடுபவரா இருந்தா போதும் என்ற அடிப்படையிலும் சரியென்று நினைக்க வைத்தது சூழ்நிலை. அக்கா கணவனுக்கு கட்டி வைத்து விடுவார்கள் என்ற பயத்திலே மாப்பிள்ளை வீட்டார் பத்தே நாட்களில் திருமணத்தை முடித்தார்கள். வள்ளி கணவன் வீட்டில் இருந்தாள். அக்கா குழந்தை, அம்மாவிடம் இருந்தது. திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து ஒரு வாரமாக பையனைப் பார்க்க அந்த ஆள் வரவே இல்லையே என்று தேட ஆரம்பித்த போதுதான் தெரிய வந்தது இறந்து விட்டார் என்று. பஸ்ஸில் போய்க் கொண்டிருந்த போது குடிபோதையில் வம்பு செய்ததனால், பாதி வழியில் இறக்கி விடவும், குடிபோதையில் ஆத்துக் கரையில் அமைந்த ரோட்டில் ஆத்தில் தவறி விழுந்து ஒரு வாரத்துக்குப் பிறகு ஆத்து மதகில் சிக்கிக் கொண்ட பிணத்தைக் கண்டு பிடித்தார்கள். [உழைக்கும் பெண்]அப்பா வழியில் அந்தப் பையனை வளர்க்க யாரும் முன்வரவில்லை. வள்ளி அம்மாதான் வளர்த்தார். அக்கா பையனைத் தன்னோடு வைத்துக் கொள்ள கணவனின் கூட்டுக் குடும்பச் சூழ்நிலையில் முடியவில்லை. அக்கா பையனை நினைத்து வேதனைப்பட்டாள், வள்ளி. தேவையானதை வாங்கிக் கொடுத்து வேதனையை குறைத்துக் கொள்ள நினைத்தாலும் வருமானம் போதாதக் குறையால் செய்வதறியாது தாய் வீட்டுக்கும், கணவன் வீட்டுக்குமாக அலைந்தாள் வள்ளி. இரண்டு வருடம் கழித்து அவளுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தனக்கு ஆண் குழந்தை வேண்டாம், அக்கா பையன் போதும் என்ற முடிவுடன் இருந்தாள் வள்ளி. குழந்தை பிறந்து ஒரு வருசம் கழிச்சுப் பிழைப்பு தேடி கணவன் மனைவி இருவரும் குழந்தையுடன் சென்னைக்கு வந்தனர். ஒரு பணக்கார குடும்பத்துக்கு வீட்டோடு தங்கி இருவருமே வேலை செய்துவந்தார்கள். சென்னைக்கு பொழைப்புத் தேடி வந்து நாலு வருசமாச்சு. இதற்கிடையில் வள்ளியின் அம்மா, பொண்ணு செத்தக் கவலையில தன் நிலை மறந்து மனநோயாளியா ஆயிட்டாங்க. கண்டதையும் பேசிக்கிட்டு, துணியொரு கோலமா அலைய ஆரம்பிச்சுட்டாங்க. அம்மாவ பாத்துக்குறதே அப்பாவுக்கு பெரிய வேல அக்கா பையனையும் எப்படி சமாளிப்பாரு, தன்னோட வச்சுக்கலாம்னா மொதலாளி ஒத்துக்க மாட்டாரு, மனச கல்லாக்கிட்டு தாய் தகப்பன் இல்லாத அனாதையின்னு சொல்லி ஒரு ஆசிரமப் பள்ளியில சேத்து விட்டுட்டா. அப்பப்ப போய் பாத்துக்குவா, தேவையானத வாங்கிக் கொடுப்பா. ஒரு வருசம் கடந்து ஒரு நாள் அம்மாவும் இறந்துட்டாங்க. அம்மா இறந்த பிறகு, அக்கா பையன் திருச்சி ஆஸ்டலிலும், இவள் சென்னையிலுமாக இரண்டு வருசம் வாழ்க்கை ஓடி விட்டது. சமீபத்தில் ஒரு நாள் அவளை பார்க்கப் போயிருந்தேன். இவ்வளவு வலி மிகுந்த வாழ்க்கைக்கிடையிலும் சிரித்த முகத்துடனும் உற்சாகத்துடனும் என்னிடம் பேசினாள் “இந்த வீட்லதான் வேல பாக்குறியா? இவ்ளோ பெரிய வீடா இருக்கு, நீ தங்குற எடமோ மாடியில இருக்கு. எப்புடி ஒவ்வொரு வேலைக்கும் ரெண்டு மாடி ஏறி ஏறி எறங்குவ. என்னன்ன வேலையெல்லாம் பார்ப்பே’’ என்றேன். வள்ளி வேலையை ஒரு பட்டியலாவே சொன்னா. சமையலுக்குக் காய் நறுக்கிக் கொடுப்பது, பாத்திரம் கழுவுவது, வீடு துடைப்பது, எல்லா படுக்கை விரிப்பையும் சரி செய்வது, கையால துணி துவைப்பது, வீடு கூட்டி பெருக்குவது, பூஜைக்காக 5 மணி நேரத்துக்கு மேல பூ கட்டுவது, விடியக் காலை எழுந்து எல்லா வாசலுக்கும் கோலம் போடுவது என்று நீண்டு கொண்டே போனது. வள்ளியின் கணவரின் வேலை ஆபீஸ், கார், கார் பார்க்கிங், வீட்டு வளாகம், தோட்டக் கொல்லை, விலை உயர்ந்த நாய்கள், இதெல்லாம் சுத்தம் செய்வது, பராமரிப்பது. இது போக, வீட்டோடு சேர்ந்தாப் போல இருக்கும் அலுவலக ஊழியர்கள், கார் ஓட்டுனர்கள், என்று பத்து பேருக்கு சமைத்துப் போடுவது. இருவரும் சேர்ந்து பொதிமாடு போல மாங்கு மாங்குன்னு உழைச்சாலும், எங்க முதலாளி கொடுக்கும் சம்பளமோ இருவருக்கும் சேர்ந்து வெறும் ரூ 6,000 மட்டும்தான். “மனசுல இவ்வளவு வலியையும், கவலையையும் வச்சுகிட்டு எப்படீடி ஒன்னால இப்படி பேசி சிரித்த முகத்துடன் இருக்க முடியுது?” என்றேன். “அப்புடி பாத்தா நாட்டுல முக்காவாசிப் பேருக்கும் மேல சிரிக்கவே முடியாது. எங்க அக்கா சொல்லுவா. ‘இவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்றதுக்கு செத்தர்லாம்னு தோணும். ஆனா என் ப்ரண்டு பட்ற வேதனைய பாத்தா நாம மேலுன்னு மனச தேத்திக்குவேன்னுவா’. சாவறப்ப படுக்கையில கூட இதையேதான் சொன்னா. எனக்கு வாழ்க்கை மேல ஒரு சலிப்புத் தோணுனப்ப, அக்கா சொல்லிட்டு இருந்தாளேன்னு, அக்கா ஃப்ரண்டு வீட்டுக்கு கிளம்பி போனேன். ஒரு பகலும் இரவும் சேந்தாப் போல இருந்தேன். அறுபது வயதில் வாழவேண்டிய வாழ்க்கையை இருவத்தி அஞ்சு வயசுல வாழ்ந்துட்டு இருந்தா அந்த அக்கா. அக்கா சொன்னது உண்மைதாங்கறத புரிஞ்சுகிட்டேன். எல்லாருமே நம்மள போலத்தான் கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம அரைகுறை அவல வாழ்க்கைதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஏழையா பொறந்துட்டா ஊர் ஒலகத்துல இந்த நிலைதான் விதிக்கப்பட்டதா இருக்கு. என்ன செய்யறது. மத்தவங்க படற கஷ்டத்துக்கு நாம எவ்வளவோ மேலுன்னு நெனச்சுகிட்டு ஒருத்தர ஒருத்தர் பாத்து மனச தேத்திக்கிட்டு வாழ வேண்டியதுதான். இப்படித்தான் பல பேரோட பொழப்பு இருக்கு. இந்த மாதிரி கஷ்டமெல்லாம் நம்மள போல சாதாரண மக்களுக்கு இருக்குங்கறதும், அதோடு போராடிதான் வாழ்றாங்கங்கறது தான் உண்மை. கைக்கொழந்தைய வச்சிருந்ததால ஒரு வீட்டோட தங்கி வேலை பாக்க வேண்டியதாப் போச்சு. அக்கா பையனையும் கூட வச்சுப் பாத்துக்க முடியாம இருந்துச்சு. இப்ப எம்பொண்ணுக்கு 5 வயசாச்சு கொஞ்சம் புரிஞ்சுக்குவா. அக்கா பையனையும் அழைச்சுட்டு வந்துட்டா ஒண்ணுக்கொண்ணு தொணையா இருக்கும். எங்க போனாலும் நம்ம கைய ஊணித்தான் கர்ணம் போடணும்ங்கறதுதான் நெலைமென்னு முடிவாகிப் போச்சு. இனிமே ஒருத்தருக்கு அடிமையா வேலை செய்றத விட்டு ஒரு ரோட்டோர கடை வச்சுகிட்டு அக்கா பையனையும் அழைச்சுகிட்டு வந்தரலாம்ன் இருக்கேன்” என்றாள். உன்கிட்ட பேசிக்கிட்டே போன் பண்ண மறந்துட்டேன்னு சொல்லிக் கொண்டு அக்கா பையனிடம் பேசுவதற்காக ஆசிரியருக்குப் போன் போட்டு அவனிடம் பேசினாள். *** நல்லா இருக்கியாடா முத்து? நல்லாருக்கேன் சித்தி. ஏண்டா சரியா சாப்புட மாட்டேங்கிறியா? புடிக்கல சித்தி. என்னடா பண்ணுது? ஒண்ணும் பண்ணல சித்தி. ஏண்டா வயிறு பசிக்கலயா? சாப்புட புடிக்கல சித்தி. கறி, மீனு ஏதும் வேணுமா? அதெல்லாம் வேண்டாம் சித்தி. வேறதாச்சும் வேணுமா? (அழுது கொண்டே), நீ வந்துரு சித்தி. என்னை கூட்டிட்டுப் போ சித்தி. *** அவள் போனில் மேலும் பேசிக் கொண்டே இருந்தாள். நான், அதற்கு மேல் பொறுக்க முடியாதவளாய் அழுது கொண்டிருந்தேன். - வேணி (உண்மைச் சம்பவம் – பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.) வடிவமைப்பிற்காக எடுக்கப்பட்ட ஓவியங்கள் : நன்றி A L Raja 12 ஜில்லெட்டின் விலை “சார்! சார்!“ லேசாக கதவைத் தட்ட, அது தானாகத் திறந்து கொண்டது. இருவரையும் பார்த்தவன் ஆர்வத்துடன் ”வாங்கம்மா உள்ள வாங்க!” என்று முகமெல்லாம் பல்லானான். அறுபது வயது மதிக்கத்தக்க அந்த நபர் வீட்டில் துண்டை கட்டிக்கொண்டு நிற்க, பேசாமல் திரும்பி விடலாம் என நினைத்த ராதாவை, “வாம்மா! ஏன் போற? என்ன வேணும்” என்று நகர விடாமல் வார்த்தையால் வளைத்தார். “சேல்ஸ் சார்! ஜில்லட் ரேசர், த்ரீ பிளேடு சார், ஸ்மூத் சேவிங். இத கடையில வாங்கினா ஒன் தர்ட்டி பைவ். எங்ககிட்ட வாங்குனா நூறு ரூபா சார்!” கடகடவென மஞ்சுளா ஒப்பிக்க, ராதாவுக்கு நகர்ந்தால் போதுமென்றிருந்தது. ”ஓ! ரெண்டு பேரும் சேல்ஸ் பண்றிங்களா! முன்ன ஆபீஸ் போனப்ப டெய்லி செய்வேன். இப்ப வீட்ல இருக்கறப்ப எங்க! வாரம் ஒரு தரந்தான்” என்று கன்னத்தை தடவிக் காட்டியபடி சிரிப்பு நுரை தள்ளியது. வீட்டிற்குள் எதையோ தேடிய ராதாவின் கண் அசைவுகளை புரிந்து கொண்டவர், ”வீட்ல ஊருக்குப் போயிருக்காமா! எங்க வயசானா கவனிக்குறாங்க!” என்று வழிய ஆரம்பிக்க, ராதா ”என்னங்க சார். வேணுங்களா?” என்று அவசர தொனியில் கேட்டாள்.[08-shortstory-1] ”என்ன இந்தப் பொண்ணு ரொம்ப பறக்குது. சேல்ஸ்னா அப்படித்தான் சுறுசுறுப்பா இருக்கணும். எங்க காட்டும்மா…” என்று தருவதற்குள் ரேசரைப் பிடிப்பது போல கொஞ்சம் கையைப் பிடித்தான். சுதாரித்துக் கொண்ட ராதா பொருளை விட, அவனும் பிடிக்காததால் கீழே விழுந்தது. குனிந்து எடுத்த மஞ்சுளாவை அவன் அளந்து பார்க்க, ராதாவுக்கு எரிச்சல் கூடியது. ”ஏம்மா! ரெண்டு பேருக்கும் ஒரு நாளைக்கு எவ்வளவு கமிசன் கிடைக்கும்?” எனக் கேட்டான். ”அது விக்கிறத பொறுத்து சார்! வேணுங்களா ஒண்ணு வாங்கிக்க சார்! உங்களுக்கு ரெண்டு மாசம் தாண்டி வரும்…” ”அட! கரெக்டா சொல்றியே! கெட்டிக்காரப் பொண்ணா இருக்கியே… உக்காரும்மா… ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆயிருச்சா?…” வாங்கும் பொருளை விட விற்கும் பெண்களைப் பற்றியே அவரது விசாரணை நீண்டது. ”சார்! ஒண்ணு எடுத்துக்கிறீங்களா?…” ராதா திரும்பத் திரும்பத் கேட்க, “அதான் சொன்னேனம்மா! இன்னம டெய்லி சேவ் பண்ணி என்ன யாரு பாக்கப் போறா… மொதல்ல நீ பாப்பியா?… ஹா ஹா…” அவனது விகாரமான பேச்சுக்கு பதிலுக்கு அவர்கள் சிரிப்பார்கள் என்று எதிர்பார்த்தவன் போல இளிக்க, ”சரி சார்! தாங்க்ஸ்!” என்று மஞ்சுளா ரேசரைப் பக்குவமாக எடுத்துக்கொண்டு நகர, ”வாடி! வாடி! நீ வேற…” என்று பல்லைக் கடித்தபடி ராதா வேகமாக மஞ்சுளாவை நெட்டித் தள்ளினாள். ”ஏய் ராதா! என்ன இதுக்கே டென்சனாயிட்டே! புதுசுல்ல அதான் குமுறுறே. பாத்தாலே தெரியல.. அது வாங்குற மூஞ்சா ஏங்குற மூஞ்சான்னு. கிழம் ஜொள்ளு தாங்கல. அவன் மூஞ்சும் இளிப்பும்! ஏன் தான் இப்படி அலையுறானுவளோ! ஏண்டி இதுக்கே இவளோ டென்சனாவுறியே! போன வாரம் தண்டையார் பேட்ட பக்கம் ஒரு கெழம் பிளேடு போட்டான் பாரு. நீயா இருந்தா அடிச்சே இருப்ப! சேல்ஸ் என்றால் இதெல்லாம் சகிச்சுத்தான் ஆகணும். டெக்னிக்கா மூவ் பண்ணி எஸ்கேப் ஆகணும்!” ”என்னதான் சேல்ஸ் என்றாலும், நம்மள கேவலமாக நெனச்சா சார்ப்பா கொடுத்துட்டு வரணும். இடுப்புல துண்ட கட்டிக்கிட்டு இளிச்சு இளிச்சு பேசுறான்… அவன பாத்தோன்னயே புரிஞ்சுகிட்டேன். நீதான் வாங்குவான்னு நெனச்சு மாட்டிவுடுற…” என்றாள் ராதா. ”அதுல்லடி! திடீர்னு திரும்புனா இன்சல்ட் பண்றோம்னு எத வேணாலும் பழிய போட்டு கத்துவானுங்க. இதெல்லாம் சும்மா. போன வாரம் ஒரு கெழத்திட்ட மாட்டுனேன் பாரு! ரேசர பாக்குறேன்னு என் கைய புடிச்சவன், “தோ பாரும்மா! உன் ரேகல தன பாக்கியம் உண்டு. இன்னும் மூணு வருசத்துல, இதோ சுக்ர மேடு லாப ஸ்தானத்துல இருக்கறதால பணமா கொட்டும்..” அது இதுன்னு கைய தொட்டுகிட்டே திடீர்னு நல்லா பாத்து சொல்றேன்னு மடில வைக்க பாத்தான்! வெடுக்குன்னு உதறுனேன். “ஏம்மா தப்பா எடுத்துக்குற? நான் உன் அப்பா மாதிரி” ன்னு பேசிவிட்டு, வேற வழியில்லாம ஒரு ஜில்லட்டு வாங்கிட்டான். இப்படியெல்லாம் இருக்கானுங்க!” மஞ்சுளா வியப்பு, ஆத்திரம்,சிரிப்பு என பல உணர்ச்சிகளுடன் விவரித்துக் கொண்டே நடந்தாள். ”நானா இருந்தா செருப்பக் கழட்டி அடிப்பேன்…” பிரச்சினையை தானே சந்தித்தது போல ராதா ஆத்திரப்பட்டாள். ”ஏண்டி! எத்தன பேர அடிப்பே! செருப்பே பத்தாது. நீ வேற.. எப்படி சாமர்த்தியமா நகர்றது, அடுத்த டோரை பாக்கறதுங்கறது தான் நம்ம டேலண்டே. தெருவையே வெறுத்தா எங்க போயி விக்கிறது! சொல்லு!” ”சரி, நீ அந்த பக்கம் போ! நான் லெஃப்ட பாத்துக்குறேன்.” மஞ்சுளா எதிர் திசையில் போக, ராதா அடுத்த வீட்டுக் கதைவைத் தட்ட ஆரம்பித்தாள். ”சார்! ஜில்லட் சார்!“ என்றாள். ”ஆங்! டி.வி.ல பாக்கறதோட சரி. நம்ம மூஞ்சிக்கு இதெல்லாம் ஒத்து வராது”. ”ஏன் சார்! இதோட சேவிங் க்ரிம் ஃப்ரீ சார்! இத கடைல வாங்குனா ஒன் தர்ட்டி ஃபைவ் வரும். ரேசரோட சேர்த்தே எங்ககிட்ட நூறு ரூபா தான் சார்.” ”எவ்வளோ ஈசியா சொல்றமா! நூறு ரூபாதான்னு. ஒரு குவார்ட்டருக்கு காசில்லாம நாங்களே கும்பலா திரியறோம். இதுல நூறு ரூபாய்க்கு ப்ளேடா…!” ஆரம்பிக்கும் போது ஒருவனாய் இருந்தவனைச் சுற்றி இன்னும் இரண்டு வாலிபர்களும் சேர்ந்து கொண்டனர். “ஏய் மச்சி! நீதான் உன் ஆள பாக்க கெத்தா போகணும்னியே! ஜில்லட்ட வாங்கிக்கடா! ஸ்மூத் ஷேவாம். டி.வி.ல வர்ற மாதிரி உன் ஆளு வந்தோன்னய கன்னத்துல ஒட்டிக்கும்… ஹே ஹே…” அவர்கள் கலாய்க்க, வேறு வழியில்லாமல் மெலிதாக புன்னகைத்தபடி“சார்! நீங்க..” என்று ஒவ்வொருவராகக் கேட்டபடி நிதானமாக பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடுத்த இடத்துக்கு நகர்ந்தாள். ”சார்! சார்!” கதவு திறக்காததால் அழைப்பு மணியை அழுத்தினாள். “யாரும்மா அது! அறிவில்ல. கேட்லயே சேல்ஸ் அனுமதி இல்லேன்னு போர்டு போட்டிருக்கோம்ல. நீ பாட்டும் வந்து அழுத்துற! நைட் ஷிப்ட் பாத்துட்டு வந்து தூங்குனா அறிவே இல்லாம வந்து காலிங் பெல்ல இந்த அழுத்து அழுத்துற. கதவு சாத்தியிருந்தா போக மாட்டியா? ஆளப் பாரு! போம்மா?…” தடித்த வார்த்தைகளுடன் கதவும் அதிர்ந்து, மர உதடுகளால் திட்டுவது போல சத்தமிட்டு மூடிக்கொண்டது. ஒரு கணம் ஆடிப்போனவள் அடுத்த அபார்ட்மெண்ட் கதவை யோசித்தபடி தாளை திறந்து மெதுவாக அடியெடுத்தாள். முதல் வீட்டிலிருந்து ஒரு பெண்மணி எட்டிப்பார்க்க சற்று ஆறுதலுடன் நெருங்கினாள். அதற்குள் முந்திக்கொண்ட பெண்மணி, ”ஏம்மா! ஒரு நாளைக்கு ஆயிரம் பேரு சேல்சு சேல்சுன்னு கதவ திறந்து விட்டுட்டு வந்துர்றீங்க. நீங்க பாட்டும் கதவ திறந்து போட்டுட்டு போயிடுறீங்க! மல்லி, மொளகா வத்தல் காயப் போட முடியுதா! நாயிலேந்து பூனை வரைக்கும் வந்து நாசம் பண்ணுது. நீங்க வேற! துணிமணி வேற காணாம போவுது. யார்னு கேக்கறது? போங்கம்மா தொல்ல கொடுக்காம…” ”இல்லம்மா! நாங்க கரெக்டா மூடிட்டுதான் போவோம். வீட்ல ஆளு இருக்காங்களா? ஜில்லட்டும்மா…” ”ஏம்மா! உனக்கு தமிழ் தெரியாது! போங்குறேன். ஜில்லட்டு கில்லட்டுன்னு… ஒண்ணும் வேணாம். நகரும்மா! இதே வேல. அத விக்கிறேன் இத விக்கிறேன்னு ஆளில்லாத நேரத்துல நோட்டம் பாக்குறது! போம்மா!” கழுத்தில் தெரிந்த தடிமனான தங்கச் சரடு, பாசக்கயிறு போல நெளிய ”சே! இந்தப் பொம்பள நம்ம தரப்ப பேசவே விடலியே… அடிக்காத கொறையா.. அதுவும் திருடன விரட்டுற அளவுக்கு பட்டம் கட்டி துரத்துறாளே! பதிலுக்கு கேட்டு விடுவோமா?” என்று வாய் வரைக்கும் வார்த்தைகள் வெளிவரத் துடிக்க, ’மத்தவங்க சூழ்நிலைமையை மதிச்சு பேசத் தெரியாத இதெல்லாம் ஒரு ஜென்மமா? நம்ம தலையெழுத்து! தயாரிச்சவன் டி.வி.ல வந்தா, காட்டுனா முழிச்சுக்கிட்டு பாப்பாங்க. நம்மள பாத்தா எளப்பமா தெரியுது!” என பலவாறு சிந்தித்துக் கொண்டே நடந்தாள். “ஒரு கம்பெனியோட மிகப்பெரிய அசட் பொருள் இல்ல. கீழ இருக்குற ஒர்க்கர்ஸ் தான்.. நீங்கதான் கேர்ள்ஸ்! இன்னைக்கு பி.பி.ஏ, எம்.பி.ஏ படிச்சவங்களுக்கு கூட நல்ல ஸ்கோப் இல்ல. பதினாலு அவர் வேல பாத்து பத்தாயிரம், பதினைந்தாயிரம் கெடச்சா பெரிசு. ஆனா சேல்ஸ் கேர்ள் நீங்க நெனச்சா மன்த்லி ட்வெண்டி ஃபைவ் தவுசண்ட் வரைக்கும் ஏர்ன் பண்ணலாம். ஏன்னா நார்மல் மிடில் கிளாஸ் மாதிரி நீங்க.. வேல கையில இல்ல, வேலை உங்க கைல! நீங்க நெனச்சா இன்னும் சேல்சயே இம்ப்ரூவ் பண்ண முடியும்! இன்னைய மார்க்கெட்டிங் உலகத்துல ஒரு பொருள் மனுசனுக்கு தேவையா, இல்லையாங்குறது இல்ல விசயம்.. அத எப்படி கொடுக்கறதுங்குறது தான் விசயமே! சேல்ச ஒரு எண்டர்டெயின்மெண்டா ஆக்குறதுல அவன வாங்க வச்சிட முடியும்! உதாரணத்துக்கு கடையில போனா நோ டயலாக்ஸ். ஆனா நீங்க டோர் கேன்வாஸ்ல அவங்களுக்கு பிடிச்ச மாதிரி பேசி, அவங்களுக்கு பிடிச்ச மாதிரி பேச வுட்டு, பொருளோட ஒரு எக்ஸ்பீரியன்சையும் சேத்து தர்றீங்க! அதுனால பொருள் தேவைங்கிறத விட அவங்க தனிமையை நீங்க மார்க்கெட் பண்ண முடியும்! புரியுதா!” விற்பனை மேலாளர் முருகேஷ் பல உத்திகளை அடுக்கிக் காட்டினார். ”என்ன ராதா! டல்லா இருக்கீங்க? உங்க ஃபெர்பார்மென்ஸ் கொஞ்சம் ஃபுவரா இருக்கு. நீங்க நெனச்சா சூப்பரா பண்ணலாம். இந்த பீல்டுல தயக்கமே கூடாது!” “இல்ல சார். ஹார்டு ஓர்க் தான் பண்றேன். மார்க்கெட் கொஞ்சம் டல்லா இருக்கு சார்!“ “நோ! நோ! ஹார்டு ஒர்க் கூட பாயிண்ட் இல்ல. நம்ம டார்கெட் தான் பாயிண்ட். அத ஈசியா பண்ண மார்க்கெட் ட்ரிக்சை கையாண்டா சோ சிம்பிள். நம்ப டல் தான் மார்க்கெட் டல். கன்ஸ்யூமர இம்ப்ரஸ் பண்ண நாம தர்ற ட்ரஸ் கோடும், மெட்டீரியலும் மட்டும் போதாது. செல்ஃபா நீங்க இம்ப்ரூவ் பண்ணனும். நீங்க நல்லா ஃபேரா இருக்கீங்க. கொஞ்சம் ஸ்மைல் ஃபேசா, நளினமா கன்ஸ்யூமர் டச் இருந்தா இன்னும் சேல்ஸ் இம்ப்ரூவ் ஆகும்.” ”ரெண்டாவது நீங்க தெருவுல டோர் டோரா கேன்வாஸ் பண்றத விட, முக்கியமா பேச்சிலர் மேன்சன்ஸ், லாட்ஜஸ் கவர் பண்ணனும். ரெகுலர் ஒர்க் முடிச்சு டல்லா வந்து படுத்திருப்பாங்க. சிரமம் பாக்காம காலைல போய் ப்ரஷ்ஷா அப்பியர் ஆனீங்கன்னு வச்சிக்குங்க… உங்களுக்கு ரிசப்ஷன் நல்லா இருக்கும். கவர்மெண்ட் ஒர்க்கர்ஸ் மாதிரி ஃபீல் பண்ணாம, ஈவ்னிங் ஏழு மணிக்கு மேல மேன்சன்ஸ், லாட்ஜஸ் அட்டண்ட் பண்ணீங்கன்னா சேல்ஸ்ல நல்ல ரிசல்ட் இருக்கும்! என்ன நினைக்கிறீங்க ராதா?” “ஒ.கே. தான் சார். ஆனா மேன்சன், லாட்ஜஸ்ல ரொம்ப ப்ராப்ளம் உண்டு சார். ஒரு மாதிரி அப்ரோச் பண்றாங்க! அதான் ஒரளவு அவாய்ட் பண்றது சார்!” “இட் இஸ் நாட் லேடீஸ் ப்ராப்ளம், யுவர் கல்ச்சுரல் ப்ராப்ளம். இது கார்ப்பரேட் வேல்டும்மா! லேடீஸ் தனியா உலகம் முழுக்க வேலைக்கு போறாங்க. ப்ராப்ளம்னு நெனக்காம புராஜெக்டுனு நினைச்சுப் பாரு, நோ ப்ராப்ளம்! சிரிக்கிறது, பேசுறது, ஸ்மால் டச் இதெல்லாம் பஸ்ல போற லேடிசே அனுபவிக்கிறதுதாம்மா? இட்ஸ் நத்திங் மேட்டர். புரிஞ்சுக்குங்க! வேணும்னா உங்களுக்கு இன்னொரு ட்ரெயினிங் கிளாஸ் எடுக்க சொல்றேன்… ஒ.கே.ம்மா? பெஸ்ட் ஆஃப் லக்!” முருகேசின் வார்த்தைகளின் அர்த்தங்கள் அவள் மனத்திரையில் புழுக்களாய் நெளிந்தாலும், குடும்பச் சூழல், வயதான தாய், தகப்பனின் வருமானமற்ற நிலையெல்லாம் சேர்ந்து மலைப் பாம்பாய் வளைக்க மனதை சமாதனப்படுத்திக் கொண்டாள். ”என்ன ராதா! வழக்கம் போல குழப்பமா? இப்படியே கொழம்பி கொழம்பி தான் எனக்கும் ஏழு வருசம் ஒடிப்போச்சு புள்ள! படிப்புன்னு, வீடுன்னு த்ரி இன் ஒன்னும் ஜில்லட்ல பழகிப் போச்சு… ரொம்ப திங்க் பண்ணாதே! அப்புறம் வாழவே புடிக்காது! “அதுக்காக இப்படிதான் வாழணும்னு ஆசப் படவே கூடாதா? இந்த லட்சணத்துல வீட்ல மாப்பிள்ள வேற பாத்திருக்காங்க. இந்த வாரம் பொண்ணு பாக்க வர்றாங்களாம்” சலிப்போடு வார்த்தைகளை உதிர்த்தாள் ராதா. ”அட நல்ல விசயந்தான.. எதுக்கு அலுத்துக்குற! அது சரி, நம்மள மாதிரி ஆளுக்கு கேன்வாசுக்கு எக்ஸ்ட்ரா டோர் மாதிரிதான் மேரேஜூம். மொதல்ல சுவாரசியமா இருக்கும், முடிவு ப்ளேடா இருக்கும். ஹா…ஹா…” மனம் விட்டு சிரித்தாள் மஞ்சுளா. ”ஏண்டி! எல்லாமே உனக்கு விளையாட்டு தானா? நானே வீட்டு விருப்பத்துக்காக எல்லாத்தையும் செய்ய வேண்டியிருக்குதேன்னு கவலைல இருக்கேன்.” ”ஏண்டி! நெகட்டிவா நெனச்சுகிட்டு.. ஆம்பளல ஒருத்தன் கூடவா நல்லவன் இல்ல! ஒரு வேளை நல்லவனா இருந்து, உனக்கு ரெஸ்ட் கொடுத்து தாங்குறவனா கெடச்சா லக்கு தான! அப்படி யோசிச்சு பாரு!” ”எப்புடி யோசிச்சாலும் சேல்ஸ் கேர்ள் டார்கெட் முதலாளிக்குத்தான் லாபம். லைஃப் மட்டுமாவது நம்ப விருப்பத்துக்கு நடக்குதா பார்ப்போம். சரி இன்னிக்கு உனக்கு எந்த ஏரியா?” “நான் திருவல்லிக்கேணி மேன்சன்ஸ் போறேன்…” ”பாத்துடி! பயப்படாதே. பெரிசுங்களுக்கு பசங்க எவ்வளவோ மேல்!” இருவரும் அனுபவங்களை நினைத்து சிரித்துக் கொண்டே நகர்ந்தனர்.                                     [08-shortstory-2] “தம்பி, பொண்ண நல்லா பாத்துக்க! அப்புறம் வந்து சரியா கவனிக்கலேன்னு கேட்டா ரெண்டாவது டைம் லாம் வர முடியாது. ஆமா…!” அமைதியான சூழலை கொஞ்சம் நகைச்சுவையாக்குவது போல பெரியவர் பையனை சீண்டினார். தினந்தோறும் பல பார்வைகளை எதிர்கொண்டு பழகிய ராதாவுக்கு அவனது பார்வையில் தெரிந்த புதிய எதிர்பார்ப்பை தானும் எதிர்கொண்டு பார்த்தாள். சம்பிரதாயமான எல்லா பரிமாறல்களும் முடிந்தவுடன் பையன் சார்பாக திரும்பவும் பெரியவரே முன்வந்து பேசினார். “இதுல சுற்றி வளைச்சு பேசுறதுக்கு ஒண்ணுமில்ல. எல்லாம் ஏற்கெனவே பெரியவங்க பேசியதுதான். ஒரு சம்பிரதாயத்துக்காக பையனும், பொண்ணும் பாத்தாச்சு. பையன்  புடிச்சிடுச்சின்னுட்டான். அது தெரிஞ்ச கத தான்… அப்புறம் உன் ஃபோன் நம்பர் தாம்மா! அவன் பிறகு உன்னோட பேசணுமாம். நேர்லயே பேசுடான்னா, இந்தக் காலத்துல போயி இவன் தயங்குறான்!” என்ற பெரியவரிடம் தனது செல்பேசி எண்ணை ராதா சொல்லவும் அவன் தனது செல்பேசியில் அதனைப் பதிந்து கொண்டான். விடைபெறும் போது மீண்டுமொரு முறை அவனை நம்பிக்கையாய் பார்த்துக் கொண்டாள். ”ராதா! நம்ம சக்திக்கு இந்த வரன் கெடச்சதே பெரிசு. பொண்ண புடிச்சிருக்கிறதால நீங்க போடுற பவுண தாண்டி வேற எதுவும் வேணாம்னுட்டான். பையன் வீட்லயும் நம்மள மாதிரிதான். பெரிய வசதி எல்லாம் இல்லை. இப்ப தான் வேலைக்கு போயி முன்னேறி வர்றவன். ஒரே தங்கச்சிதான். அதுனால உன்ன தோதா வச்சுக்குவான். என்னடா அப்பா பெரிய இடமா பாக்கலியேன்னு எதுவும் நெனைக்காதே! நம்ம சக்திக்கு அவ்வளவுதான்.” என்றார் அப்பா. பையனை அனுப்பிவிட்டு வந்த பெரியவர், ”அட நீங்க வேற! பையனுக்கு என்ன கொற! அவனும் பாலிடெக்னிக் வரைக்கும் படிச்சிருக்கிறான். எக்ஸ்பீரியன்ஸ் ஆயி வேற கம்பெனி போனா சம்பளம் கூடும். அவனும் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கான். என்ன.. நீங்க சொன்ன மாதிரி அந்த பவுண மட்டும்  கொறை வைக்காம, பாப்பா ஆபீசுல லோனு வாங்கியாவது போட்டுடுங்க! யார் தான் கைல வச்சிகிட்டு செய்யுறா? கடன பாத்தா வரன பாக்க முடியாது. உங்களுக்கும் வயசாயிட்டே போவுது! ரெண்டாவது, நல்ல பையனா கெடைக்கிறது கஷ்டம். என்ன பாப்பா! நான் சொல்றது!” எதிர்பார்ப்புடன் கேட்க, “ம், ஒன்னும் கொற இல்ல மாமா! பாத்துக்கலாம்” என்று சுருக்கமாக விடையளித்தாள் ராதா. ”அதான் படிச்ச பொண்ணுங்கறது. விசயத்த ஷார்ப்பா புரிஞ்சுகிச்சு! அது அது குடும்பத்த அது அது எடுத்துக்கும். நீங்க பழச பேசிகிட்டே இருக்காம ஆக வேண்டியத பாருங்க. அப்புறம்.. வாறேன் பாப்பா!” செல்பேசி எண் வாங்கியதிலிருந்து அவனிடம் மனம் விட்டு சில விசயங்களைப் பேச ராதா துடித்துக் கொண்டிருந்தாள். தானாக அவன் அழைத்துப் பேசும் தருணத்தை ஆவலுடன்  எதிர்பார்த்து ஒரு வகையில் மனம் ஏங்கியது. முக்கியமாக தனக்கென கணவனாக வரப்போகும் அவனது வார்த்தைகள் காதலாய் பொழியும் போது, உரிமையுடன் அவனிடம் சொல்லி ஒரு வருடத்திற்காவது இந்த வேலைச்சூழலை விட்டு விட்டு, நிதானமாக தினமும் பல விசயங்களை அனுபவித்து, வீட்டில் ஓய்வெடுத்து சில நாட்களாவது வாழ வேண்டும் என அவள் மனம் ஏங்கியது. தோள் சுமையை மாட்டிக் கொண்டு “சார் ஜில்லட் த்ரி பிளேடு, ஸ்மூத் சேவ்” இந்த வசனத்தை சில நாட்களாவது உச்சரிக்காமல், உச்சி வெயிலில் தெருத் தெருவாய் சுத்தாமல், கொஞ்ச நாளாவது ஓய்வெடுத்து, பரபரப்பின்றி வாழப் பழகி, பின்பு வேலைக்கு செல்ல வேண்டும். அதுவும் வேறு வேலைக்குப் போக இடையில் ஏதாவது பயிற்சி கூட எடுத்துக் கொள்ளலாம்… என்ற தனது நீண்ட நாள் விருப்பத்தை தனக்குரியவரிடம் மனது விட்டு பேசிவிட வேண்டும், தனது உணர்ச்சிகளுக்கு இவனாவது செவி சாய்ப்பான், ஏனெனில் எனக்குரியவன்.. என்று பலவாறு எண்ணியபடியே அவள் சிறிது கண்ணயற செல்பேசி சிணுங்கியது. அவனே அவனேதான். வேறு யார் இந்நேரம் அழைப்பது.. சற்று ரகசியம் காப்பது போல் தள்ளிப்போய் செல்பேசியை எடுத்தாள். “ஹலோ! நான் தான். டிஸ்டர்ப் இல்லயே! தூங்கிட்டீங்களா?” ”இல்ல! ஃபோனை எதிர்பார்த்தேன்” ”அப்படியா! நான் லக்கி. என்ன புடிச்சிருக்கா?” ”ம்.. ரொம்ப… வெளில பாக்க வந்திருக்கலாம்ல?” ”சாரி! நீங்க எப்புடியோன்னு நான் யோசித்து.. அப்புறம் பர்சனலா ஒரு விசயம். அத பேசத்தான் கூப்பிட்டேன்…” ”சொல்லுங்க! பர்சனலா பேசத்தான் நானும் ஆசப்பட்டேன்.” ”ரெண்டு பேரும் ஒரே மாதிரியே யோசிச்சிருக்கோம். எனக்கு  உங்கள ரொம்ப புடிச்சிருக்கு! ப்ராங்கா பேசுறீங்க… நேர்ல பேச டயம் இல்லாததால போன்லயே பேசுறேன்… கேக்குறீங்களா?” ”என்னா தயங்குறீங்க. பேசுங்க! கேக்குறேன்.” “தப்பா எடுத்துக்காதிங்க! என்னடா இப்படி கேக்குறேன்னு..” இழுத்தான். ”வேறு ஏதுமோ?” என ஒரு கணம் துணுக்குற்று யோசித்தவள், ”சரி! எதுவா இருந்தாலும் சொல்லுங்க!” “இல்ல.. எனக்காக உங்ககிட்ட நான் கேக்குறது, நம்ம மேரேஜ் முடிஞ்சப்புறம் ஒரு வருசமாவது கட்டாயம் நீங்க இப்ப பாக்குற வேலைக்கே போங்க! நிறுத்திடாதீங்க. ஏன்னா? அத நான் சொல்ல மறந்திட்டேன். சில பேரு மேரேஜ் ஆனவுடன் வேலைய விட்டுடு வாங்க, பிறகு பாக்கலாம்னு சாதாரண வேலதானேனு விட வேணாம். ஏன்னா.. எனக்கு சில கமிட்மெண்ட்ஸ் இருக்கு. வண்டிக்கு, தங்கச்சி படிப்புக்குன்னு நிறைய லோன் போட்டுருக்கேன்.” ”நாம ரெண்டு பேரும் வேலைக்குப் போனாதான் லைஃப் ஸ்மூத்தா போகும். இன்னைக்கு சிக்சுவேசன்ல இருக்குறத விட்டுட்டு பிறகு செட் ஆவறது ரொம்ப கஷ்டம். ஸ்டாட்டிங்கே நம்ப லைஃப் கஷ்டமாயிடும். இதெல்லாம் உங்க மாமாகிட்டே ஏற்கெனவே சொன்னேன். அவுரு சொன்னாரான்னு தெரியாது! அதான் ஃபிராங்கா மனம் விட்டு பேசுறேன். தப்பா எடுத்துக்காதீங்க! மனசுல பட்டத பேசுறேன். என்னங்க!” என்னென்னவோ பேச நினைத்த ராதா குரல் கம்மிக்கொண்டே போக “ஊம்… சரிங்க…! ஒண்ணுமில்ல. சும்மாதான்! ஆமாம். நேர்ல பாக்கலாம்…” வார்த்தைகள் தொடர்பற்று தன் குரல்தானா என்று தானே சந்தேகப்படும் அளவுக்கு அவளது உள்ளுணர்வு அவளிடமிருந்து அந்நியப்பட்டிருந்தது. செல்பேசியை வைத்துவிட்டு, முகம் திருப்பிய போது ஜில்லட் ரேசர் பாக்கெட் கண்ணுக்கு நேரே மின்னியது. அதையே உற்றுப் பார்க்க பார்க்க, மென்மையாக செதுக்கும் ஜில்லட்டில் அவள் முகத்தை தவிர அனைவர் முகமும் தெரிந்தது!                                                                                                      -துரை.சண்முகம் __________________________________________ புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013 __________________________________________ 13 சோவியத் சிறுகதை: வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு ! வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு [பரீஸ் கர்பாதவ்] வெள்ளரி நிலத்தில் சங்கடம் நேர்ந்து விட்டது. வெள்ளரி நிலம் என்பது ஆர்க்டிக் (வடதுருவக்) கடலில் எங்கோ தொலைவில் தன்னந்தனியாக இருக்கும் ஒரு தீவு. உலக வரைபடத்தில் இந்தப் பெயரைத் தேடுவது வீண் முயற்சியாகும். வரைபடத்தில் இந்தச் சிறு புள்ளிக்கு உள்ள பெயர் இன்னொலியும் கவிநயமும் கொண்டது. ஆனால் துருவப் பரப்பிலுள்ள வானொலி இயக்குநர்கள் இதை வெள்ளரி நிலம் என்றே பிடிவாதமாக அழைத்துவருகிறார்கள். அவர்கள் கருத்தை மாற்றுவது முடியாத காரியம்! இந்த வானொலி இயக்குநர்களே இப்படித்தான். ஒரே கிண்டல் பேர்வழிகள். சிறிய அறைகளுக்குள் அடைபட்டிருப்பதால் அவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டிருக்கலாம்! ஆயினும் இந்த விந்தைப் பெயருக்கும் ஒரு வரலாறு உண்டு. தீவு சமீபத்தில் தான், மிக அண்மையில் தான், கண்டுபிடிக்கப்பட்டது. தேடுதல் குழுத் தலைவன் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தின் வரைபடத்தை விரைவாகத் தயாரித்து (பனி உடைக்கும் கப்பலைச் சுற்றிலும் விடாது படிந்த பனிக்கட்டி அவனை அவசரப்படுத்தியது), அக்கணமே இப்படி அறிக்கை அனுப்பினான்: “புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தீவு வெள்ளரிக்காய் வடிவாக இருக்கிறது”. அந்தப் பகுதிகளில் எந்த விஷயம் ஆனாலும் வானொலி இயக்குநர்கள் வாயிலாகத் தான் சொல்ல வேண்டும். ஆகவே அவர்கள் ஆர்க்டிக் தீவுக் கூட்டத்தின் இந்தப் புது பகுதிக்கு வெள்ளரி நிலம் என்று பெயர் வைத்தார்கள். மிகவும் தொலை வடக்கில் இருந்த இத்தீவு விரைவிலேயே அதிக முக்கியத்துவம் பெற்றது. பனிக் கட்டி மூடிய ஆர்க்டிக் பெருங்கடலின் பல இரகசியங்களை இனித் துருவி ஆராயத் தங்களால் முடியும் என்று மனநிறைவுடன் ஆய்வாளர்கள் கைகளைத் தேய்த்துக்கொண்டார்கள். தங்கள் ஆய்வுக்கு இன்னொரு நிலையம் கிடைத்த மகிழ்ச்சியில் பருவ நிலை முன்னறிவிப்பாளர்களும் இது குறித்துப் பெருமூச்சு விட்டார்கள். இளம் துருவ ஆராய்ச்சியாளர்கள் காதலியைப் பற்றிக் கனவு காண்பது போல வெள்ளரி நிலத்தையும் அதன் ஒப்பற்ற கவர்ச்சிகளையும் பற்றிக் கனவு கண்டார்கள். அங்கே சென்று அதை வெற்றி கொள்ள எத்தகு துணிகரச் செயல்களையும் புரியத் தயாராக இருந்தார்கள். “டிக்ஸன், திக்ஸீ, செல்யூஸ்க்கின் இவை பற்றி என்ன சொல்ல! அவை முழுதும் ஆராயப் பட்டு விட்டன. அங்கே போவதும் ஒன்றுதான், வீட்டில் இருப்பதும் ஒன்றுதான்” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு, “இதுவோ… இது வேடிக்கையில்லை… எழுபத்து எட்டாவது அட்சமாக்கும்…” எனக் கிளர்ச்சி பொங்கக் கிசுகிசுப்பார்கள். இவ்வாறாக, வெள்ளரி வடிவில் அமைந்த அத்தீவில் மக்கள் குடியேறினார்கள். கன்னி வெண்பனி மீது, கிண்ணங்கள் போன்று வளைவான கரடிகளின் பெரிய அடித் தடங்களுக்கு அருகே மாந்தர்களின் மனவுறுதியைக் காட்டும் கூர்ந்த காலடிச் சுவடுகள் தென்பட்டன. கட்டடங்கள் எழுந்தன. பனித் திடல்களில் வாழ்வு தளிர்த்தது. மக்களின் பழக்க வழக்கங்களும், களியும், கவலையும். கிளர்ச்சியும் ஏற்கெனவே நிலை பெற்று விட்டன. பள பளக்கும் செப்புக் காப்பிப் பானையில் காப்பி கொதிக்கும்; இரவு நேரத்தில் சதுரங்க ஆட்டம் மும்முரமாய் நடந்தது… ஆனாலும் சங்கடமும் வந்து சேர்ந்தது. பார்க்கப்போனால் உண்மையில் அது இன்பந்தான். ஆம், அது இன்பந்தான்!… ஆனால் விளைவு என்ன ஆகும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. விஷயம் இதுதான். ஒரு பெண் பயங்கரமாக, காட்டுக்கத்தாகக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். அவளருகே நின்ற வெளிறிய கொழுத்த ஆடவனது கரங்கள் செய்வகையறியாது நடுங்கிக் கொண்டிருந்தன. நெற்றியில் முத்துமுத்தாய் வியர்வைத் துளிகள் உருண்டோடின. சோவியத் ஆர்க்டிக் பிரதேசங்களில் தொலை தூரத் தீவுகளில் வசிப்பவர்கள், தன்னந்தனியாக, அண்டை அயலாரைப் பற்றிய தகவல் எதுவுமின்றி வாழ்கிறார்கள் என்று நினைப்பது தவறு. மிக அண்மையில் உள்ள அயலார்களுக்கிடையே, அக்கம் பக்கத்துத் தீவுகளுக்கிடையே இருக்கும் தொலைவு ஆயிரம் கிலோமீட்டர்கள், அதுவும் எத்தகைய பிரதேசத்தில் என்பது உண்மையே! ஆயினும் வானொலி இயக்குநர்கள் இருக்கிறார்களே! தொலையிலுள்ள வெள்ளரி நிலத்தில் ஒரு பெண் பிரசவ வேதனையால் துடித்ததை ஆர்க்டிக் முழுவதிலும் பரப்பி விட்டார்கள். ஆர்க்டிக் வாசிகள் அனைவரும், நார்த்விக் சுரங்கக்காரர்கள், செல்யூஸ்க்கின் விஞ்ஞானிகள், டிக்ஸன் வானொலி இயக்குநர்கள், திக்ஸீ துறைமுகக் கொத்தர்கள், பேலிய் தீவில் வாழ்பவர்கள் ஆகிய, கடுகடுப்பும் அச்சமின்மையும் கொண்ட இம்மனிதர்கள் எல்லாரும், தாங்களே கர்ப்பிணியின் படுக்கைக்கு அருகே, இருமுவதற்குக் கூட அஞ்சியவர்களாய், குழந்தையின் பிறப்பை எதிர்நோக்கி, அதன் முதலாவது அதிகாரக் கத்தலைக் கேட்டு, தந்தையர் போன்று முறுவலிக்கக் காத்திருப்பவர்கள் போன்று, இந்தப் பிரசவத்தின் முடிவை மூச்சுக்கூட விடாமல் எதிர்பார்த்திருந்தார்கள். “என்ன சேதி? என்ன ஆயிற்று?” என்று காலையிலும் நண்பகலிலும் மாலையிலும் ஒருவரையொருவர் விசாரித்த வண்ணமாயிருந்தார்கள். கர்ப்பிணியோ கூச்சலிட்டவாறு இருந்தாள். அவளது கூக்குரல்கள் ஆர்க்டிக் பிரதேசம் முழுவதிலும் சென்று ஒலிப்பது போலத் தோன்றியது. அவளுடைய கணவன், இத்தகைய சந்தர்ப்பத்தில் எல்லா ஆண்களும் நடந்து கொள்வது போலவே, செய்வது அறியாது அவளருகே நின்று கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தான். மருத்துவரோ, ஒன்றும் செய்ய முடியாமல் பதற்றத்துடன் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தார். அவர் பேறு காலம் பார்க்கும் மருத்துவர் அல்ல. அத்துடன் குழந்தையும் கருப்பையில் குறுக்காகக் கிடந்தது – இது அசாதாரண பிரசவம். அன்றைய தினம் உளத் தவிப்பு நிறைந்த செய்தி ஒன்று வெள்ளரி நிலத்திலிருந்து வானொலி மூலம் ஒலி பரப்பட்டது. “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்! ஏதாவது செய்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சினான் அவளுடைய கணவன். என்ன செய்வது? செய்தியைப் பெற்றுப் பதிவு செய்த வானொலி இயக்குநர் வேதனையுடன் முகத்தைச் சுளித்து, ரிசீவரைக் கழற்றி வைத்துவிட்டு, நிலையைத் தலைவனிடம் சொன்னான்: “என்ன செய்யலாம்? பாவம் நிறைமாத கர்ப்பிணி… குழந்தை வேறு ஆபத்தில் இருக்கிறது…” நிலையத் தலைவனும் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளனும் அவளுக்கு எப்படி உதவலாம் என்பது பற்றி ஆலோசித்தார்கள்… மருத்துவரை விமானத்தில் ஏற்றி அனுப்பவும் வகையில்லை. நிலையத்தில் ஒரு விமானம் கூடக் கிடையாது. அத்துடன் குளிர்காலம் வேறு. வடதுருவ இரவு. பறக்கத்தான் முடியுமா? கட்சிச் செயலாளன் புருவத்தைச் சுளித்துக் கொண்டு மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றான். [arctic-2]மருத்துவரின் பெயர் ஸெர்கேய் மாத்வேயிச். அவரைப் பற்றி என்ன சொல்வது? சாதாரணமான மருத்துவர். எதிலும் வியப்போ, மனத்தாங்கலோ, அச்சமோ அடையாத வகை ஆட்களில் ஒருவர். அவரது தோற்றமும் மிகச் சாதாரணமானது: அளவான வயிறு; அறுவை மருத்துவருக்கு இயல்பான பெரிய சிவப்புக் கரங்கள்; நல்லியல்பு தொனிக்கும் கட்டைக் குரல்; வழுக்கைத் தலையை மறைத்து வாரி விடப்பட்ட அருகிய முடி; கொம்புப் பிரேம் போட்ட கறுப்பு மூக்குக் கண்ணாடி; உடை, கைகள் எல்லாவற்றிலும் கார்பாலிக் அமிலம், மருந்துகள், மருத்துவ மனை வாடை – ஆக ஒரே வார்த்தையில் சொன்னால், மருத்துவருக்கு உரிய தோற்றம், எனவே, தங்க ஜரிகையில் நங்கூரச் சின்னம் பொறித்த கடற்படை உடுப்பு அணிந்து அவர் பொது அறையில் காணப்பட்டால், “இவர் ஏன் வெள்ளை மருத்துவ உடுப்பு அணியவில்லை?” என்று பார்ப்பவர்கள் நினைப்பதுண்டு. அவரிடம் இருந்த ஒரே அசாதாரண இயல்பு என்னவென்றால் அவர் ஆர்க்டிக் பிரதேச மருத்துவரான போதிலும் மிகச் சாதாரணமாக இருந்தார் என்பதே. இருப்பினும் ஆர்க்டிக் மருத்துவர், ஒரு வகையில் கவிதைப் பாங்கு கொண்டவர் ஆயிற்றே. வரைபடத்தைச் சற்றே உற்றுப் பார்த்தால், வடதுருவ ஆராய்ச்சிப் பயணிகளின் நினைவுச் சின்னங்களாக வரைபடத்தில் விளங்கும் பெயர்களில் மருத்துவர்களின் பெயர்களையும் காணமுடியும்: டாக்டர் ஸ்தாரகாதொம்ஸ்க்கிய் தீவு, டாக்கர் இஸாச்சென்கோ முனை என்பன போல. டிக்ஸன் தீவில், அடக்கம் வாய்ந்த வட துருவ வீரரான உதவி மருத்துவர் விளாதீமிரவின் கல்லறையைச் சுற்றிக் காட்டுவார்கள்; அதற்கு வணக்கம் செலுத்துவோம். வ்ராங்கெல் தீவை அடைந்ததும், ஆர்க்டிக் பிரதேசத்தில் மக்களுக்குத் தீச்செயல் புரிந்து வந்தவனான ஒருவனுடன் போராடி உயிர்துறந்த வீர மருத்துவர் வுல்ப்ஸனின் சமாதியை பயணிகளே எல்லாவற்றுக்கும் முன்பு தேடிக்கண்டு அஞ்சலி செலுத்துவார்கள். ஆனால் ஸெர்கேய் மாத்வேயிச்சிடமோ இத்தகைய கவிதைப் பாங்கு மருந்துக்குக் கூடக் கிடையாது. அவர் சர்வ சாதாரணமான, விவகாரப் போக்குள்ள மருத்துவர். பனிப்பாளங்கள், புயல்கள், ஆடிக் குலுங்கும் கப்பல் மேல் தளம், டப்பா உணவு, கடலின் உவர் நாற்றம் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் துணிச்சலான கப்பல் மருத்துவர்கள் போல் கூட இல்லை அவர். ஒருவேளை அவர் மருத்துவ ஆராய்ச்சியாளரோ, விஞ்ஞானியோ? அண்மைக் காலத்தில் மருத்துவ விஞ்ஞானிகள் வடதுருவப் பிரதேசங்களுக்கு விருப்பத்துடன் செல்லுகிறார்கள். உயிரியல், ஓரளவு விலங்கியல், தாவர இயல் ஆகியவற்றில் எதிலாவது ஈடுபாடு உள்ளவர்கள். இவர்களில் சிலர் இறால்களையும், விசித்திர நிலநீர் உயிர்களையும், பல்லிகளையும் சேகரித்து, ஸ்பிரிட் குப்பிகளில் இட்டு வைத்திருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்; வேர் முதல் முடி வரை உள்ளங்கை அளவான குட்டை வில்லோ மரங்களை உலர்த்தி ஆல்பத்தில் பொருத்தி வைத்துக் கொள்வார்கள் வேறு சிலர்; இன்னும் சிலரோ, வட துருவச் சூழ்நிலையில் நோய்கள் பற்றியும், மக்களின் நடத்தை, உளப்போக்கு பற்றியும், நோய் தொற்றுவதற்குரிய வாய்ப்புக்கள் பற்றியும், துருவ இரவு, துருவப் பகல் ஆகியவை மனிதன் மீது விளைக்கும் தாக்கம் பற்றியும் ஆராய்ச்சி செய்வார்கள்… ஸெர்கேய் மாத்வேயிச், இறால்களை ஸ்பிரிட்டில் இடவுமில்லை, பாசிக் காளான்களை உலர்த்தவும் இல்லை. தமது நாட்குறிப்பில் “மருத்துவத் தொழில் சம்பந்தமான அக்கறைக்குரிய சிறு குறிப்புக்களை”க் கூட எழுதி வைத்துக்கொள்ளவில்லை. ஒரு தரம் ஏதோ செய்ய முயன்றார், ஆனால்… நேரமின்மையால் விட்டுவிட்டார்: நோயாளிகள், கவலைகள், மருத்துவமனை. அவர் ஆர்க்டிக்கில் ஆண்டுகளைக் கழிப்பதனால் விஞ்ஞானம் புதிய கண்டுபிடிப்புகளால் அதிக வளம் அடையாது என்பது எல்லாருக்கும் தெளிவாகப் புலப்பட்டது. [Communism]காந்த இயல் அறிஞனான மோதரவ் என்ற இளைஞன் கப்பலிலேயே ஸெர்கேய் மாத்வேயிச்சைச் சந்தித்தான். அறிவியலின் பொருட்டே அத்துறையில் ஊக்கம் காட்டுபவர்களும், வட துருவ நிலையங்களில் அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு மிகுதியும் ஏற்ற வாய்ப்பு உண்டு என்று கருதுபவர்களும் ஆகியவர்களில் மோதரவும் ஒருவன். குதூகலப் புன்னகையுடன் மருத்துவரிடம் சொன்னான்: “உங்கள் நோக்கு எனக்குப் புரிகிறது. வடதுருவத்தில் வேலை செய்கிற எங்கள் அனைவரையும் பற்றிய உங்கள் கருத்தும் எனக்குப் புரிகிறது. உங்கள் கண்களுக்கு நாங்கள் எல்லாரும் சோதனை விலங்குகள் தாம். எங்களை ஆராயப் போகிறீர்கள், அப்படித்தானே? அவசர வேலைக்கு முன்பும் பின்பும் எங்கள் நாடித் துடிப்பைக் கணக்கெடுப்பீர்கள், துருவ இரவின் போதும் பகலின் போதும் எங்கள் இருதயங்கள் எப்படி அடித்துக்கொளுகின்றன என்று கேட்பீர்கள். பின்னர் அறிவியல் ஆராய்ச்சி நூல் எழுதி வெளியிடுவீர்கள், இல்லையா? சரிதானே விலங்காகப் பயன்படத் தயாராக இருக்கிறேன்!” ஸெர்கேய் மாத்வேயிச் அவனை மிரண்டு நோக்கினார், குழம்பினார், பின்பு இது மாதிரி ஏதாவது செய்வதற்குத் தான் திட்டமிட்டிருப்பதாகக் குழற்றினார். ஆனால் அவர் அப்போது தவித்த தவிப்பைக் கண்ட மோதரவு, ‘சோதனை விலங்கு’கள் பற்றியோ அறிவியல் ஆய்வு பற்றியோ அவரிடம் மறுபடி பேசவே இல்லை. நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வது, கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் பார்ப்பது, பல் பிடுங்குவது, மூலத்திற்கு அறுவை செய்வது ஆகியன மட்டுமே அவர் இங்கு வந்ததன் ஒரே நோக்கம் என்று தெரிந்தது. இவற்றிற்காக அவருக்கு மருத்துவமனை தேவைப் பட்டது. மருத்துவமனை இல்லாத மருத்துவன் “கப்பல் இல்லாத கொலம்பஸ்” மாதிரி என்று அவர் சொல்வதுண்டு. அதுவும் ஏனோ தானோவென்று பெயரளவிற்கு அது இருந்தால் அவருக்குப் போதவில்லை. ஆர்க்டிக்கோ ஆர்க்டிக் இல்லையோ, நோயாளிகுத் தக்க முறையில் சிகிச்சை அவசியம் என்று கருதினார். அதனால் தான் கப்பல் கரை சேர்ந்து சாமான்கள் இறக்கப்பட்டதோ இல்லையோ மருத்துவப் பெட்டிகளை அவரே தனது முதுகில் சுமந்து சென்றார். யாராவது உதவிக்கு வந்தால், “கவனமாக, பார்த்து! உடைத்து விடாதீர்கள்” என்று கோபத்துடன் இரைந்தார். தானே ரம்பத்தையும் இழைப்புளியையும் கொண்டு சட்டங்கள் தயாரித்தார், தச்சர்களின் வேலையை ஓடியாடி மேல் பார்த்தார், சுவர்களுக்கு வெள்ளை எண்ணெய்ச் சாயத்தை இவரே அடித்தார். தரையில் தார்ப்பாயைத் தம் கைப்பட விரித்தார். ஆட்கள் குறைவு, வேலை நெரிந்தது. வானொலிச் செயதி நிலையம் கட்டப்பட்டது, துறைமுகத்தில் நிலக்கரிக் கிட்டங்கி நிறுவுவதற்காகத் தரை வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து நான்காம் ஆண்டு – ஆர்க்டக்கிற்கு வரலாற்று முக்கியத்துவம் ஆய்ந்த ஆண்டு. பனிக்கடலின் வெறிச்சோடிய கருங்கற்கரைகள் மீது கட்டடங்களும் துறைமுகங்களும் தொழிற் கூடங்களும் சுரங்கங்களும் அப்போதுதான் மந்திரத்தால் உண்டாக்கப்பட்டன போன்று தோன்றலாயின. மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டது. சிறியது, ஐந்தே படுக்கைகள் கொண்டது, எனினும் முற்றிலும் போதுமானது. ஸெர்கேய் மாத்வேயிச் எந்த மாதிரி மருத்துவ மனைகளில் தலை நரைத்து வழுக்கை விழுந்து, அயோடின் மணமும் கார்பாலிக் அமில வாடையும் நிரந்தரமாக வீசும் அளவிற்கு வேலை செய்திருந்தாரோ, அந்த மாதிரியான மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் எல்லாம் இதில் இருந்தன. வார்னிஷ் பூசப் பெற்ற வெண் சுவர்கள் அம்மாதிரியே பளிச்சிட்டன, கண்ணாடி அலமாரிகளில் இருந்த நிக்கல் கருவிகள் மீதும் ஜாடிகள் மீதும் சூரிய ஒளி பட்டு மின்னியது. ஒரே துப்புரவு. ஒரே நிசப்தம். கார்பாலிக் அமிலத்தின் வாடை. நோயாளிகள் வந்தார்கள், பெரும்பாலும் பெண்களே. தொலையிலுள்ள கூட்டுறவுத் தொழிற் பண்ணைகளிலிருந்து, நாய் இழுத்த ஸ்லெட்ஜுகளில் ஏறி நூற்றுக் கணக்கான கிலோமீடர் தூரத்தைக் கடந்து, பேறு காலத்திற்கு ஒரிரு மாங்களுக்கு முன்பாகவே வந்தார்கள். பாத வெடிப்பு, மூலம், குளிரில் மரத்த விரல்கள், எலும்பு முறிவு, பல்வலி ஆகியனவற்றிற்கு மருந்துவம் செய்து கொள்ள ஆண்களும் வந்தனர். ஸெர்கேய் மாத்வேயிச் பல் மருத்துவமும் பார்த்தார், பல் துளைகளை அடைத்தார். ஊரில் பற்களைச் செவ்வைப்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாது போனவர்கள், ஸெர்கேய் மாத்வேயிச்சிடம் பற்களைச் சரி செய்து கொண்டார்கள். ஆனால் அவர் அடிகடி சொல்வது இதுதான்: “அடடா! இவ்வளவு மோசமாக இருக்கும் இந்தச் சொத்தைப் பல் உனக்கு எதற்காக? ஊம்? பிடுங்கிவிடுகிறேன், சரியா?” பல் பிடுங்குவதற்கு முன்பு நோயாளிக்குத் துணிவு வருவதற்காக முப்பது மில்லி சாராயம் குடிக்கக் கொடுப்பார். இது அவருடைய வழக்கம். ஆனால் ஆட்கள் தன்னை ஏமாற்றுவதைப் பின்னர் அவர் கண்டுகொண்டார். சாராயத்தைக் குடித்துவிட்டு, பல் பிடுங்கிக்கொள்ள மறுத்து விடுவார்கள். “அதாவது, டாக்டர், பல் வலி இப்போது குறைந்துவிட்டது. அடுத்த தடவை பார்த்துக்கொள்ளலாம்” என்பார்கள். அது முதல் அவர் பல் பிடுங்கிய பிறகு சாராயம் கொடுப்பதை வழக்கப்படுத்திக் கொண்டார். தொழிலிலும் மனப் போக்கிலும் அறுவை மருத்துவர் ஆகையினால் அவர் மருந்து கொடுப்பதைவிட அறுவை செய்வதையே எப்போதும் அதிகம் கையாண்டு வந்தார். அவருடை நண்பர்கள் வேடிக்கையாகச் சொன்னது போல, யாரையாவது “அறுக்க” வாய்ப்பு கிடைத்தால் அவரது மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. “இதோ பார், கொஞ்சம் போல நறுக்குவோம், எல்லாம் சரியாகிவிடும். ஆ, அவ்வளவுதான்! நறுக்கிவிட்டோம். இதோடு தொலைந்தது உன் நோய்” என்பார். உள் நோய்களை அவர் சந்தேகக் கண்ணோடு நோக்கினார். “இந்தா, உள்ளுக்கு மருந்து சாப்பிடுவது என்பது வெட்டிப் பணக்காரர்கள் செய்யும் வேலை. உங்களுக்கு இந்த நோய்கள் எல்லாம் எதற்காக வரவேண்டும், வெறுங்குப்பை!” என்று ஆரம்பித்து, “இவற்றை இயற்கையின் போக்கில் விடுங்கள்… இயற்கை இருக்கிறதே, எல்லாவற்றையும் விட விவேகம் நிறைந்தது. பீடைகள் தாமே போய் விடும்… இங்கேயோ பருவநிலை அற்புதம்… உடல் நலத்துக்கு ஏற்ற பருவநிலை, இல்லையா?” என்று நோயாளிக்கு ஆறுதல் கூறுவார். நண்பர்களுக்கு இது நிலையான வேடிக்கை ஆகிவிட்டது. சாப்பாட்டு வேளையில் ஒருவன் டாக்டரே விளித்து, “இதோ பாருங்கள், டாக்டர், இன்று எனக்கு ஏனோ ஒரே தலைவலி. தானே சரியாகிவிடும்? ஊம்? என்று கேட்பான். “சரியாகிவிடும், சரியாகிவிடும்” என்று நிச்சயத்துடன் சொல்லுவார். இத்தகைய மிகச் சாதாரண மருத்துவராகிய ஸெர்கேய் மாத்வேயிச்சிடம் புரியாத விஷயம் ஒன்று உண்டு என்றால், அது அவர் ஆர்க்டிக்கிற்கு எதற்காக வந்தார் என்பது மட்டுமே. அவரைப் பொருத்தவரை, ஆர்க்டிக்கை அவர் பார்க்கவே இல்லை. மருத்துவமனை, பொது அறை, ஆர்க்டிக்குக்கு வந்திருப்பவர்களின் வீடுகள் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றி வந்தார்… ஒரு முறை வேட்டைக்குப் போகத் திட்டமிட்டார், ஆனால் அது செயல்படவில்லை. தொலைவிலுள்ள வேட்டைக்காரர் கூட்டுறவுப் பண்ணைகளுக்குப் போய்வர நினைத்தார், ஆனால் மருத்துவமனைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள யாரும் இல்லை- எத்தனையோ மாதர் பிரசவத்துக்குக் காத்திருந்தார்கள் (வியப்பளிக்கும் விஷயம் என்னவென்றால் ஆர்க்டிக்கில் நிறையப் பெண்கள் குழந்தைகள் பெற ஆரம்பித்திருந்தார்கள் என்பது) ஆகவே தொலை தூரப் பண்ணைகளுக்கு உதவி மருத்துவன்தான் போய் வந்தான். ஒரே ஒரு தடவை மட்டுமே, இலையுதிர் காலத்தில், வெண் திமிங்கிலங்கள் கிளம்பும் தருவாயில், மருத்துவர் இளைஞர்களுடன் வேட்டைக்குச் சென்றார். ஆனால் அவர் செய்ததெல்லாம், அனைவருக்கும் இடைஞ்சலாயிருந்ததும், சொட்டச் சொட்ட நனைந்ததும், வலையைத் தவறவிடப் பார்த்ததும் தான். நீரில் நனைந்து ஊறிய போதிலும் மிகுந்த திருப்தியுடன் கரை திரும்பினார். திமிங்கிலத்தைத் தம் கத்தியால் அறுத்தார். (“திமிங்கிலத்திற்கு மூலநோய் இருக்கிறதா என்று பார்க்கிறார்” என்று வாலிபர்கள் சிரித்தார்கள்.) பழகிய கைத்தேர்ச்சியுடன் திமிங்கிலத்தின் உள்ளுறுப்புக்களை அறுத்து, அதன் நுரையீரலையும் வயிற்றையும் எல்லாருக்கும் காட்டினார். “இவை அனைத்தும் மனித உறுப்புக்களைப் போலவே இருக்கின்றன, பார்த்தீர்களா!” என்றார். ஒரு நாள் மாலை காப்பி அருந்திய பின், பொது அறையில் கதகதப்பும் வசதியும் வாய்ந்த நிலையில் காந்த இயல் ஆராய்ச்சியாளன் மோதரவ் மருத்துவரின் அருகே அமர்ந்து, “ஒன்று கேட்கிறேன், தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நீங்கள் எதற்காக ஆர்க்டிக்குக்கு வந்தீர்கள், சொல்லுங்கள்” என்றான். ஸெர்கேய் மாத்வேயிச் கூச்சத்துடன் கைகளை விரித்தார். “இதை எப்படி விவரிப்பது” என்று முணுமுணுத்தார். “எங்கும் ஆர்க்டிக்கைப் பற்றியே பேச்சாய் இருந்தது, நாமும் போவோமே என்று நினைத்தேன். நான் கிழவனாகிவிடவில்லை. என்ன சொல்லுகிறீர்கள்? நான் ஒன்றும் கிழவன் இல்லை, சரியா?” என்று இளவட்டம் போன்று மீசையை முறுக்கினார். “அப்புறம் எங்கள் மருத்துவமனைக்குப் புதிய மருத்துவர் ஒருவர் வந்து சேர்ந்தார். அப்போதுதான் வடக்கேயிருந்து திரும்பியவர். அளவிட முடியாத உற்சாகம் அவருக்கு. ஆர்வமிக்க நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற விரிவான களம் அது என்றார். ஆகவே அங்கே வேலை செய்ய என் பெயரைக் கொடுக்கக் கூடாது என்று எண்ணினேன். நான் போர்முனைக்கும் போனவன் தான்… எல்லாவற்றையும் அநுபவித்து விட்டேன்… தவிர…” இவ்வாறு கூறியபடியே, நேர்மை ததும்பும் நீல விழிகளை மற்றவன் பக்கம் திருப்பி, எளிமையுடன் தொடர்ந்தார்: “இத்துடன் பணமும் கைநிறையக் கொடுக்கிறார்கள். இரண்டு ஆண்டை இங்கே கடத்திவிட்டால் கணிசமான தொகை சேர்ந்து விடும், இல்லையா! மாஸ்கோவுக்குப் பக்கத்தில் ஒரு சின்ன வீடு வாங்குவதாக எண்ணம். அதாவது, சிறு தோட்டம், பூப்பாத்திகள், எல்லாவற்றுடனும். நாஸ்டர்ஷியம் மலர்கள் என்றால் எனக்கு உயிர். சன்னலுக்குக் கீழே ஆர்க்கிடு செடி வளர்க்கவும் எனக்கு ஆசை.” இந்த உரையாடலுக்குப் பிறகோ, மருத்துவர் முன்னிலும் சலிப்பூட்டும் வறண்ட பேர்வழி என்று எல்லாரும் நினைக்கத் தொடங்கினார்கள். பெரிய சிவப்புக் கரங்களும், மேலங்கிக்குள்ளே தொப்பையும், கார்பாலிக் அமிலம், அயோடின் இவற்றின் நெடியுமாக இலகிய இந்த மனிதர் என்னதான் சுவையோ கவர்ச்சியோ அற்றவராயினும், வெள்ளரி நிலத்து மாதுக்கு வடதுருவ நிலையம் முழுவதிலும் கஷ்டப் பிரசவத்தில் உதவக் கூடிய ஒரே ஆள் அவர் தான். அவர் இதில் எப்படி உதவ முடியும் என்பதுதான் ஒருவருக்கும் விளங்கவில்லை. கட்சிச் செயலாளன் மருத்துவமனைக்கு வந்த மருத்துவருடன் அவரது அறையில் உரையாடினான். “எபடியாவது உதவி செய்ய வேண்டும்” களைத்த விழிகளால் டாக்டரை நோக்கியவாறே சொன்னான். மருத்துவர் வியப்படைந்து, “பொறுங்கள், பொறுங்கள், ஐயா! உதவ வேண்டும் என்கிறீர்கள். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நோயாளியை இங்கே அழைத்து வாருங்கள். தாராளமாக. எங்கேயோ, ஊம்… வான வெளியில் நிகழும் பிரசவத்தில் நான் எப்படி மருத்துவம் பார்க்க முடியும்?” என்றார். “இருந்தாலும் நாம் உதவத்தான் வேண்டும்” என மீண்டும் வற்புறுத்தினான் கட்சிச் செயலாளன். “ஆக, அற்புதந்தான் போங்கள்!” என்று டாக்டர் கைகளை உயரே ஆட்டியவாறு கெக்கலித்தார். “ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள கைகள் எனககுக் கொடுங்கள்- கர்ப்பிணிவரை எட்டும்படி. அதோடு தொலைநோக்கி விழிகளும் தாருங்கள்- ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளதைப் பார்க்க வசதியாக. அப்போது நான் சேவைக்குத் தயாராயிருக்கிறேன், ஆயத்தமாயிருக்கிறேன்.” “ரொம்ப சரி. அம்மாதிரிக் கரங்களும் கண்களும்கூடத் தங்களுக்கு அளிக்கிறோம், டாக்டர். அப்போது…” “நீங்கள் சொல்வது விளங்கவில்லையே… எம்மாதிரிக்கைகள்? எவ்விதக் கண்கள்?” வானொலி. கர்ப்பிணியின் நிலைமையையும், மருத்துவர்கள் சொல்வது போலக் கருப்பையில் குழந்தையின் கிடக்கையையும் பற்றி அங்கிருந்து தகவல் தெரிவிப்பார்கள். என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் இங்கிருந்து சொல்லி நடத்தி வையுங்கள்.” ஸெர்கேய் மாத்வேயிச் எழுந்தார், மேலங்கியை அணிந்து கொண்டார், உறுதியான தோரணையில் வாயிலை நோக்கி அடி எடுத்து வைத்தார். “கர்ப்பிணியைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்” என்றார் திடீரென நின்று, “ஆனால், இதற்கு மேலங்கி எதற்காக? கிடக்கிறது, எல்லாம் ஒன்றுதான். உலகத்தில் எத்தனையோ விந்தைகள் நிகழ்கின்றன. இம்மாதிரி… ம்ம்… அஞ்சல் மூலம் பிரசவம் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் முதல் தடவையாகக் கிடைத்திருக்கிறது… அதாவது வானொலி மூலம் பிரசவ மருத்துவம். என் சக மருத்துவர்கள் இதைக் கேட்டு எவ்வளவு வியப்பு அடைவார்கள் என்பதைக் கற்பனை செய்துகொள்கிறேன்… போகட்டும், எல்லாம் ஒன்றுதான். வாருங்கள், போகலாம்” என்றார். வெள்ளரி நிலத்துடன் வானொலித் தொடர்பு கிடைத்தது. “வெள்ளரி நிலத்துடன் வானொலித் தொடர்பு வெகு நேரம் நீடிக்கவிருப்பதால், பிரசவம் ஆகும் வரை மற்ற எல்லா நிலையத் தொடர்புகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன” என வானொலி இயக்குநர் அறிவித்தான். “நல்லது, ஆரம்பிக்கலாம்” என்று மேலங்கி பைக்குள் கைகளை நுழைத்துக்கொண்டு கூறத் தொடங்கியவர், மேலே என்ன சொல்வதென்று தயங்கினார். “இன்றைக்கு உடம்பு எப்படியிருக்கிறது உங்களுக்கு?” என்று வழக்கம் காரணமாகக் கேட்க வாயெடுத்தவர், தனக்கு எதிரே நோயாளி இல்லை என்பதை நினைவுகூர்ந்து அடக்கிக் கொண்டார். எதிரே இருந்தது வெறுமை. ஆகாயம். ஒரு விதத்தில்… வானவெளி. அவரது அவரது சங்கடமான சூழ்நிலை தெளிவாகப் புலப்பட்டது. தான் வேலை செய்து பழகிய சூழ்நிலை, தனக்கு இன்றியமையாத நிதானத்தை ஏற்படுத்த இல்லாததை உணர்ந்தார். கர்ப்பிணியைக் காண்பது, அவளது முனகல்களையும் முறையீடுகளையும் கேட்பது, அவளுடைய வலியைப்பற்றி அனுதாபம் தெரிவிப்பது, பேசினில் இரத்தத்தைப் பார்ப்பது, கருவை, அந்தச் சின்னஞ்சிறு, வழவழப்பான, நிர்க்கதியான பிஞ்சு மேனியைத் தம் கைகளால் தொட்டு உணர்வது அவருக்கு அவசியமாயிருந்தது. இப்போதோ, இவற்றில் எதுவுமே இல்லை. குண்டுமாரி பொழிகையில் கலங்காத படைவீரன், மறை குழியின் பயங்கர மௌனத்தில் நடுநடுங்குவது போலவும், எந்திர இரைச்சலில் அமைதியாகத் தூங்கும் அரைவை மில்காரன், சந்தடி அடங்கியதுமே திடுக்கிட்டு விழித்துக் கொள்வது போலவும் தமது நிலைமை இருப்பதை உணர்ந்தார். [labour]இங்கே, வானொலி நிலையத்தில், அவரது நிலை கரையில் எறியப்பட்ட வெண் திமிங்கிலம் போல இருந்தது. கிறீச்சிட்டது. வேறு சந்தடியே இல்லை. நோயாளி கிடையாது, முனகல்கள் கிடையாது, வேதனை கிடையாது. வேதனை கிடையாதா? ஆனால் அவள் எங்கேயோ வானவெளியில் வேதனையை உணர்ந்து, உதவியை எதிர்நோக்கியிருந்தாள். மருத்துவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய நாற் புறமும் மற்ற எல்லாரும் ஆவலாகக் காத்திருந்தார்கள். வானொலி இயக்குநரின் பக்கம் குனிந்தார். “பாரு, குழந்தை எந்த வாகில் கிடக்கிறது என்று மருத்துவரிடம் கேளேன்” என்றார். தமது சொற்கள் சிதறும் பட்டாணிக் கடலைகள் போலப் புள்ளிகளும் கோடுகளுமாகத் தெறித்து வானில் மிதந்து செல்வதை ஆவலுடன் நோக்கினார். சில நிமிடங்களில் பதில் வந்தது. அதைப் படித்துவிட்டு நெற்றியைச் சுருக்கிக்கொண்டார். இவ்வாறு தொடங்கியது இந்த அசாதாரணமான “அஞ்சல் மருத்துவம்.” “ஹும். குழந்தை குறுக்காகக் கிடக்கிறதாக்கும். ஊம். கஷ்டமான பிரசவம்தான், ஆமாம்” என்று தமது எண்ணங்களை வாய்விட்டுச் சொல்லி விட்டு வானொலி இயக்குநரைப் பார்த்து, “இந்தா, என் துணை மருத்துவரிடம் கேள், பிராக்ஸ்டன்-ஹிக்ஸ் முறைப்படி குழந்தையைத் திருப்புவது அவருக்குத் தெரியுமா, அல்லது குறைந்த பட்சம் அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாரா என்று” எனக் கூறினார். “ஆனால் அவருக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது? இளைஞர், போதாக்குறைக்கு மருத்துவச் சிகிச்சையாளர் வேறு” என்று நினைத்துக்கொண்டார். எல்லா அறுவை மருத்துவர்களையும் போலவே மருத்துவச் சிகிச்சையாளர்களிடம் அவருக்கு அவநம்பிக்கை. ஸெர்கேய் மாத்வேயிச் எதிர்பார்த்ததே போன்ற பதில் வந்தது: “கேள்விப்பட்டிருக்கிறேன், இருந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று தயங்காமல் எனக்குச் சொல்லுங்கள்.” “ஸ்பிரிட்டாலும் அயோடினாலும் கைகளைக் கழுவிக்கொள்ளுங்கள். விரல்களில் எல்லாம் அயோடின் பூசிக் கொள்ளுங்கள். கைகளைப் பத்து நிமிடம் தொடர்ந்தாற் போலக் கழுவிக்கொண்டிருங்கள்” என்றார் டாக்டர். ஏதோ புண்ணியமான தொண்டில் துணை செய்வது போன்ற பாவனையுடன் வானொலி இயக்குநர் அவரது சொற்களை எல்லாம், முனகல்கள் உள்பட, அஞ்சல் செய்தான். கைகளை முறைப்படி கழுவிக் கொண்டாகிவிட்டது என்று வெள்ளரி நில மருத்துவர் பணிவுடன் அறிக்கை செய்தார். “சரி” என்று திருப்தியுடன் தலை அசைத்தார் ஸெர்கேய் மாத்வேயிச். “இப்போது, கர்ப்பிணிக்கு நோயணு நீக்கம் செய்வது எப்படி என்று சொல்கிறேன்.” இவ்வாறு கூறி, விவரமான குறிப்புக்களைக் காகிதத்தில் எழுதி வானொலி இயக்குநரிடம் கொடுத்தார். தமது மூளைக்குள் ஒரு நிமிடத்துக்கு முன்வரை மறைந்திருந்த எண்ணங்கள் ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் மாய வித்தை போல அனுப்பப்படுவதை ஆவலும் வியப்பும் ததும்ப மீண்டும் கவனித்தார் ஸெர்கேய் மாத்வேயிச். வானொலி இயக்குநர் மீது அவர் உள்ளத்தில் முதன் முதலாக மரியாதை பிறந்தது. சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தால் கிளர்ச்சியுற்ற இயக்குநர் தன் முயற்சி காரணமாக இறுக்கமடைந்து முகமெல்லாம் சிவந்து போனான். தவறு நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தால் அவன் ஒவ்வோர் எழுத்தையும் அழுத்தி அடித்தான். பதிலைக் குறித்துக் கொள்ளும் போதும் இயல்புக்கு ஏற்பக் கிறுக்கித் தள்ளாமல், சிந்தனையுடன் நிறுத்தி எழுதினான். “மெல்லச் சொல்லு. ஓர் எழுத்து தப்பானாலும் குழந்தையும் தாயும் ஆபத்துக்கு உள்ளாகிவிடுவார்கள்” என்று வெள்ளரி நிலத்து வானொலி இயக்குநரை எச்சரித்தான். “ஆயிற்றா? இப்போது உள் சோதனை தொடங்குங்கள். இடது கையை நுழையுங்கள்…” என்று சொல்லிக் கொண்டு போனார் டாக்டர். உறுதியான இறுதிக் கணம் நெருங்கிவிட்டது. “கருப்பையின் வாய் போதிய அளவு திறந்திருக்கவில்லை என்றால்…” மருத்துவர் கவலையுடன் சிந்தித்தார். “நான் மட்டும் அருகே இருக்க முடிந்தால்! கண்ணால் பாராத ஒன்றுக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது அல்லவா?” பதிலுக்காகக் காத்திருக்கையில் அவர் ஒருபோதுமில்லாதவாறு பதற்றமடைந்தார். நிதானத்துக்கு வர சன்னல் அருகே சென்று தெருவில் பார்வையைச் செலுத்தினார். தெருவா? அங்கே ஏது தெரு? சன்னலுக்குக் கீழே வெண்பனி குவிந்திருந்தது. அதற்கு அப்பால் களஞ்சியம், விரிகுடா. இன்னும் தொலைவில் கண்ணுக்கு எட்டிய வரையில் ஒரே வெண்பனி மயம். கிட்டங்கிகளின் முகடுகள் மேலும், விரிகுடா மீதும், தூந்திர வெளியிலும் எங்கும் வெண்பனி. பசுமை படிந்த வெண்பனியும் நிலவும். “நெடுந் தொலைவு வந்திருக்கிறாய், அல்லவா, ஸெர்கேய் மாத்வேயிச்?” எனத் திடீரென்று எண்ணும் போதே வியப்பில் மூழ்கினார். தாம் இவ்வளவு தூரம் வந்திருப்பது பற்றிய நினைவு அவரை மலைக்க வைத்தது. ஏதோ இந்த எண்ணம் முதன் முதல் இப்போதுதான் உதித்தது போலவும், தாம் இங்கே கழித்திருப்பது இரண்டு ஆண்டுகள் அல்ல, முதல் நாள்தான் போலவும் பிரமித்தார். “ஸெர்கேய் மாத்வேயிச்!” என்று யாரோ தணிந்த குரலில் அழைத்தார்கள். சடக்கெனத் திரும்பியவர் இரண்டு மாதரைக் கண்டார். ஒருத்தி வானொலி இயக்குநரின் மனைவி, மற்றவள் புவிப்பௌதிகயியலரின் வீட்டுக்காரி. “டாக்டர் ஐயா, என்ன சேதி?” என்று, அவர்களில் அதிகத் துணிச்சல் உள்ளவளான வானொலி இயக்குநரின் மனைவி பதற்றத்துடன் கேட்டாள். [soviet-people]மருத்துவருக்கு கோபம் வந்துவிட்டது. “என்ன சேதியாவது கீதியாவது? உங்கள் வீட்டுக்காரரிடம் கேளுங்கள். அதோ வானொலிப் பெட்டியருகே ஏதோ மாயம் பண்ணிக் கொண்டிருக்கிறார். என்னைவிட அதிகமாக அவருக்குத்தான் தெரியம். நானோ எதையும் கண்ணால் பார்க்கவே இல்லை… எதையுமே பார்க்கவில்லை… வெண்பனியைத் தவிர” என்றார். “நாங்கள் என்ன சொல்ல வந்தோம் என்றால்…” என்று சங்கோசத்துடன் இழுத்தாள் புவிப்பௌதிகயியலரின் மனைவி. “விஷயம் என்னவென்றால் எனக்கு ஒரு தோழி இருந்தாள். அவளும் இதே மாதிரித்தான் குழந்தை பெற்றாள், நிலைமையும் இது போலத்தான் இருந்தது. அந்தப் பிரசவத்தின் விவரம் எல்லாம் எனக்குத் தெரியும்… சொல்லட்டுமா? ஒருவேளை உங்ளுக்கு உதவியாயிருக்கும்!” மருத்துவர் முகத்தைச் சுளித்தார். “ஏனம்மா, உங்களுக்கு என்ன வந்தது? பிரசவிப்பவள் உங்கள் தோழி அல்லவே! நீங்கள் எதற்காக இப்படி? என்றார். “அதற்காக இப்படியா? ஏன் இந்த மாதிரிப் பேசுகிறீர்கள்?” என்று அப்பெண் வியப்புடன் சொன்னாள். “இதற்குள் வானொலி இயக்குநர் வெள்ளரி நிலத்திலிருந்து வந்த பதிலைக் குறித்துக் கொண்டு வந்து கொடுத்தான். செய்தி நல்லதா, கெட்டதா என்பது அவனுக்குத் தெரியாது. மருத்துவச் சொற்கள் அவனுக்கு விளங்கவில்லை. எனினும் பதில் கெட்டது எனப் புரிந்து கொண்டவன் போல அதற்குள்ளாகவே சஞ்சலப்படலானான். மருத்துவர் படித்துப் பார்த்துவிட்டு முறுவலித்தார். “ஓகோ, அப்படியா? கருப்பை வாய் இரண்டரை விரற்கிடை திறந்திருக்கிறதா, பரவாயில்லை, அதற்கென்ன? பிராக்ஸ்டன்-ஹிக்ஸ் முறைப்படி குழந்தையைத் திருப்பிவிடுவோம்” என்றார். வானொலிப் பெட்டிக்கு அருகே வந்தார். யாரோ ஒருவன் அவர் உட்கார்வதற்காக நாற்காலியை நகர்த்தினான். உறுதியான கணம் வந்துவிட்டது என்று எல்லாரும் எப்படியோ உடன் அறிந்து கொண்டார்கள். இயக்குநரின் முகம் வெளிறியது. நிறைய ஆட்கள் குழுமியிருந்த போதிலும் அறையில் ஒரே நிசப்தம், ஆச்சரியமூட்டும் மௌனம் நிலவியது. ஆயினும் கட்சிச் செயலாளன் “உஷ்” என்று சீறினான். நம்பிக்கையும் அச்சமும் கவலையும் கொண்ட விழிகளுடன் அனைவரும் மருத்துவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் மனத்தில் இந்த எண்ணம் பளிச்சிட்டது: “எங்கிருந்து எனக்கு இவ்வளவு துணிவு, இவ்வளவு அதிகாரம் வந்தது? இங்கே நான் பேசுவேன், அங்கே அவர் என் சொற்படி எல்லாவற்றையும் செய்வார். எல்லாம் நலமே நிறைவுறக் கூடும் ஒருவேளை. இதைச் செய்விப்பவன் நான்… நான்!…” “வலக்கை விரல்கள் இரண்டை நுழைத்து, குழந்தையின் பாதத்தைப் பற்ற முயலுங்கள்” என உரக்கக் கூறினார். வானொலிப் பெட்டியன் ஒலிக் கருவி கிறீச்சிட்டது, புள்ளிகளும் கோடுகளும் சிதறின, மருத்துவரது மூளையிலோ வேறு எண்ணங்களே இல்லை. பிரசவிப்பவளை அவர் தமது கண்ணெதிரே கண்டார். இதோ, அவர்தாம் விரல்களை நுழைக்கிறார். பிரசவிப்பவள் ஓலமிடுவதைக் கேட்கிறார். குழந்தையின் காலை, செயலற்ற காலைத் தொட்டு உணர்கிறார்… “உன்னிப்பாய்க் கவனியுங்கள்!” என்று மருத்துவர் கத்தியதைப் பணிவுடன் அஞ்சல் செய்தான் வானொலி இயக்குநர். “கையைக் கால் என்று தவறாக நினைத்து விடாதீர்கள். குதிகாலை நெருடிக் கண்டுகொள்ளுங்கள். குதிகாலை, தெரிந்ததா? நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் குழந்தையின் கையைப் பற்றி இழுத்து விடப் போகிறீர்கள்… அம்மாதிரி நடப்பது உண்டு…” தொடர்ந்தார் மருத்துவர். வெள்ளரி நிலத்திலும் மக்கள் வானொலி இயக்குநரைச் சுற்றிக் கவலையுடன் குழுமியிருந்தார்கள். பிரசவிப்பவளின் கணவன், உடல் வியர்த்து வடிய, அலங்கோலமான ஆடைகளுடன் வானொலிப் பெட்டிக்கும் மனைவியின் படுக்கைக்கும் இடையே போய்வந்தபடி இருந்தான். வானொலி மூலம் வந்த உத்தரவுகளை மருத்துவரிடம் கொடுப்பது அவருடைய பதிலை வாங்கிக்கொண்டு, ஏதேனும் சொல்ல விட்டு விடவோ, தவறு செய்து விடவோ கூடாது என்பதற்காக அதை வாய்க்குள்ளாகப் படித்தவாறு வானொலிப் பெட்டியருகே திரும்பி ஓடுவதுமாக இருந்தான். மருத்துவர் பதற்றமடைந்திருந்தார் எனினும் ஸெர்கேய் மாத்வேயிச்சின் ஆதரவு அவருக்குத் தெம்பு அளித்தது. பிரசவிப்பவளின் கண்ணீரும் வேதனையும் பொங்கும் விழிகள் தம்மையே உற்று நோக்குவதை அவர் கண்டார். வேலை செய்தவாறே அவர் முணுமுணுத்தார்: “ஒன்றுமில்லை, கவலைப்படாதீர்கள். ஸெர்கேய் மாத்வேயிச்சும் நானும் உங்களுக்கு ஒத்தாசை செய்கிறோம்… கவலைப்படாதீர்கள்… இதோ குதிகால்… பட்டுப் போல…” “காலைப் பற்றிக் கொண்டு விட்டேன்” என்ற செய்தியைப் படித்தார் ஸெர்கேய் மாத்வேயிச். “ஆகா! காலைப் பற்றிக்கொண்டு விட்டான். அருமை” என்று உரக்கக் கூறினார். மகிழ்ச்சி நிறைந்த, அடங்கிய முணுமுணுப்பு அறையில் தவழ்ந்தது: “காலைப் பிடித்துவிட்டார். காலைப் பிடித்துவிட்டார்” என்று எல்லாரும் அசைந்தார்கள், முறுவலித்தார்கள், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக் கூறத் தயாராகிவிட்டார்கள். ஆனால் ஸெர்கேய் மாத்வேயிச்சின் முகம் மறுபடியும் உர்ரென்று ஆகிவிடவே அனைவரும் மௌனமானார்கள். “நல்லது, இப்போது பாதத்தைப் பற்றியபடியே குழந்தையைத் திருப்புங்கள். மற்றக் கையால்…” என்று மருத்துவர் உத்தரவிடத் தொடங்கினார். தொலைவு பற்றிய நினைவே அவருக்கு இல்லை. பிரசவிப்பவளின் படுக்கையருகே நின்றவாறு உதவி மருத்துவருக்குச் சுருக்கமாக உத்தரவிடுவது போல அவருக்குத் தோன்றியது. “அவன் கெட்டிக்காரன், கெட்டிக்காரன்! மருத்துவச் சிகிச்சையாளன்தான் என்றாலும் பிரமாதமானவன். அருமை!” என்று உதவி மருத்துவரைப் பற்றி நினைத்துக் கொண்டார். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை அவர் உள்ளத்தில் வரவர அதிகரித்தது. முழு வெற்றி கிடைக்கும் என்ற உறுதி முன்னமேயே தமக்கு இருந்தது என இப்போது அவருக்குப் பட்டது. அதாவது வேலையில் நிதானம் அவருக்கு முடிவில் வந்து விட்டது. மறுபடியும் வழக்கமான சூழ்நிலையில் இருந்தார். யுகம் போலத் தோன்றிய கணங்கள் கழிந்தன. ஸெர்கேய் மாத்வேயிச் முதல் செய்தியை அனுப்பி ஒரு மணி ஆகிவிட்டது. “எல்லாவற்றையும் யோசித்துத் திட்டம் செய்து விட்டேனா? எதிர்பாராதது ஏதேனும் இப்போது நிகழக்கூடுமோ? இந்த ஆள் ஈடு கொடுப்பானா? ஏன்தான் நான் அங்கே இருக்க முடியாமல் போயிற்று? அவனை ஏதாவது கேட்க மறந்துவிட்டேனோ?” ஒலி பெருக்கியிலிருந்து இக்கேள்விகளுக்குப் பதிலை நேராகக் கேட்க முடியும் போல அதையே நோக்கினார். அவருக்குக் கேட்டவையோ, புள்ளிகள், கோடுகள், புள்ளிகள், கோடுகள்… அவ்வளவுதாம். அவையோ விளங்காப் புதிர்கள். இயக்குநரின் தோளுக்கு மேலாகக் குனிந்து, அவன் எழுதும் போதே படித்தார்: “பத்திரமாகத் திருப்பி விட்டேன்”. “பத்திரமாக! “என்று அடக்கமாட்டாமல் கூவினார் இயக்குநர். “பத்திரமாக, பத்திரமாக!” என்று உயிர்ப்புற்று நிமிர்ந்தனர் அறையிலிருந்தவர்கள் எல்லாரும். “டாக்டர்! ஸெர்கேய் மாத்வேயிச்! அன்பார்ந்த டாக்டர்!” “குழந்தையின் இதயத் துடிப்பைக் கவனியுங்கள்!” என்று சீறினார் மருத்துவர். வானொலி மூலம் வந்த பதிலைக் கேட்டுக் கிளர்ச்சியுற்றதற்காக, முதலாண்டு மாணவன் போல, முதல் அறுவையின் போது துணை மருத்துவன் போல நடந்து கொண்டதற்காக அவருக்குத் தன் மீதே கோபமுண்டாயிற்று. “வெட்கம், வெட்கம், டாக்டர்! அவமானம்!” “குழந்தையின் இதயத் துடிப்பைக் கவனியுங்கள்!” என்று இன்னொரு முறை கத்தினார். இயக்குநர் அச்சொற்களை அவசரத்துடன் அஞ்சல் செய்தான். [baby]“பிரசவம் இன்னும் நடந்தாகவில்லை. ஆமாம், அதற்குள் நடந்து விடாது” என்று பொதுவாக அறையிலிருந்தவர்களை நோக்கிக் கடிந்துகொள்ளும் தோரணையில் கூறினார் மருத்துவர். மீண்டும் அறையில் மௌனம் குடிகொண்டது. “அதற்குள் நடந்து விடாது” என்று மறுமுறை தணிந்த குரலில் முணுமுணுத்துவிட்டு, ஒலி பெருக்கியை உறுத்துப் பார்க்கலானார். திடீரென அவர் உள்ளத்தில் ஓர் ஆசை, அடக்கமுடியாத ஆசை எழுந்தது. குழந்தை உயிரோடு பிறக்க வேண்டும் என்ற ஆசை. உயிரோடு, அதுவும் ஆணாகப் பிறக்க வேண்டும். சுருட்டை மயிருடன்… தானே குழந்தையின் தகப்பன் போன்று அதை விழைத்தார். தாய்க்கு இனி ஆபத்து இல்லை. ஆனால் குழந்தை, குழந்தை… “இதயத் துடிப்பு துலக்கமாக, தெளிவாகக் கேட்கிறது” என்ற பதிலைப் பிடித்தார் இயக்குநர். ஆனால் மருத்துவர் கேட்டது இயக்குநரின் சொற்களை அல்ல, இன்னும் தாயின் கருப்பையிலிருந்த குழந்தையின் இதயத் துடிப்பையே. இன்னும் உலகில் உதிக்காத மானிடனின் இதயத் துடிப்பு அது. ஆனால் அவன் இதோ பிறந்து விடுவான், வெற்றி முழக்கம் செய்து தனது உரிமைகளை வலியுறுத்துவான். அவன் இதயம் எப்படிப் பட்டதாயிருக்கும்? தான் உயிருடன் பிறந்ததன் பொருட்டு தாய்நாட்டிற்கு – வானொலி இயக்குநர்கள் அனைவருக்கும், இதோ சுங்கான் புகைத்துக் கொண்டிருக்கும் கட்சிச் செயலாளனுக்கும், மருத்துவச் சிகிச்சையாளனுக்கும் (அவன் பாராட்டுக்குரியவன், கெட்டிக்காரன்!), ஸெர்கேய் மாத்வேயிச்சுக்கும் கடமைப்பட்டுள்ள இந்த மனிதனின் இதயம் எத்தகையதாயிருக்கும்? அவர் வாய்விட்டுச் சிரித்தார். அதற்கு முன் ஒருபோதும் சிரிக்காத விதத்தில் நகைத்தார். அவரது நகைப்பில் வெற்றியோ, கர்வமோ, திருப்தியோ இல்லை. அவருக்கே இன்னும் விளங்காத ஏதோ ஒன்றுதான் அதில் இருந்தது. கர்ப்பிணிக்கு வலியெடுக்கத் தொடங்கியது. வெள்ளரி நிலத்திலிருந்து செய்திக்கு மேல் செய்தியாக மளமளவென்று வரத் தொடங்கின. பிரசவிப்பவளின் நிலைமை பற்றியும் வலிகளுக்கு நடுவிலுள்ள இடைநேரம் பற்றியும் அங்குள்ள மருத்துவர் சுருக்கமான அறிக்கைகள் விடுத்துக்கொண்டிருந்தார். அவளது கணவனோ, “பயங்கர வேதனைப்படுகிறாள்… மகா கோரமாகக் கூச்சலிடுகிறாள்… என்ன செய்வது? என்ன செய்வது, டாக்டர்? ஐயோ, என்ன வேதனைப்படுகிறாள், பாவம்! ஏதாவது செய்யுங்கள். இந்தக் கதறலை என்னால் பொறுக்க முடியவில்லை!” என்று தானாகவே சேர்த்துக் கூறினான். பிரசவிப்பவளின் கோரக் கூச்சல் இங்கே, ஒலிபெருக்கி மூலம் கேட்பது போலப் பிரமை உண்டாயிற்று. கட்சிச் செயலாளன் சுங்கானை வலிவாகக் கடிப்பதையும் அவன் முகம் சாம்பலாக வெளுத்துவிட்டதையும் ஸெர்கேய் மாத்வேயிச் கண்டார். “நீங்கள் என்ன இப்படி? ஏன், ஐயா, உங்களுக்கு என்ன? உங்கள் மனைவி பிரசவிக்கவில்லையே, ஊம்?” என்றார். கட்சிச் செயலாளன் சோர்வுடன் முறுவலித்து, “உண்மைதான், அவள் என் மனைவி இல்லை. ஆனால் தாயும் சேயும், எப்படி உங்களுக்குச் சொல்வது, நம்மவர்கள் அல்லவர்?” என விடையளித்தான். தனது முட்டாள்தனமான கேள்விக்கும் கட்சிச் செயலாளனின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளத் தவறியதோடு அவன் மனத்தைப் புண்படுத்தி விட்டதற்கும் ஸெர்கேய் மாத்வேயிச் வெட்கமுற்றுத் தம்மையே நொந்து கொண்டார். ஆனால் இதைப் பற்றிச் சிந்திக்கவே இப்போது நேரமில்லை. “குழந்தையின் இதயத் துடிப்பைக் கவனியுங்கள்!” …மூன்று மணி நேரம் கழிந்துவிட்டது. வானொலிப் பெட்டியின் அருகே அவர் உட்கார்ந்தது மூன்று மணிக்கு முன்பு. இப்போது ஒருபோதுமில்லாத களைப்பும், உரலில் இடிக்கப்பட்டது போன்ற தளர்வும் அவரைக் கவ்விக் கொண்டது. சீக்கிரத்தில், சீக்கிரத்தில் முடியுமா இதெல்லாம், வானொலி மூலம் நடக்கும் இந்த அசாதாரணப் பிரசவம்? “பையன்! பையன்! ஆமாம். இதோ! பையன்!” என்று வானொலி இயக்குநர் மகிழ்ச்சியுடன் கூவியது திடீரென அவர் காதில் பட்டது. ஆப்பரேட்டர் வானொலிச் செய்தியை ஸெர்கேய் மாத்வேயிச்சிடம் நீட்ட அவர் அதை உரக்கப் படித்தார்: “டாக்டர், தோழர்களே, நண்பர்களே! எனக்கு ஆண் மகவு பிறந்திருக்கிறது, மகன், பையன். நன்றி, நீங்கள் செய்த எல்லாவற்றுக்காகவும் உங்களுக்கு நன்றி. ஸெர்கேய் மாத்வேயிச், நன்றி. நீங்கள் அருமையான மனிதர். உங்களுக்கு நன்றி!” எல்லாரும் மருத்துவரின் கையைப் பற்றிக் குலுக்க விரும்பினார்கள். உளமார்ந்த, நட்பு ததும்பும், உணர்ச்சி பொங்கும் கைகுலுக்கல்கள். எல்லாரும் அவரை வாழ்த்தினார்கள், புகழ்ந்தார்கள், அவருக்கு நன்றி கூறினார்கள். கட்சிச் செயலாளன் நீண்ட நேரம் அவர் கையை ஆர்வத்துடன் குலுக்கி, “ஆகா, ஸெர்கேய் மாத்வேயிச்! நீங்கள் உண்மையான போல்ஷெவிக்கைப் போலச் செயல்பட்டீர்கள்!” என மீண்டும் மீண்டும் கூறினான். மருத்துவரோ, மலைப்புடன் திடீரென ஒரேயடியாகச் செயலிழந்து உட்கார்ந்திருந்தார். எல்லாரையும் ஒன்றும் புரியாமல் நோக்கினார். செய்தியைப் படித்தார், ஆனால் விளங்கிக் கொள்ளவில்லை. ஆட்கள் வாழ்த்துவதைக் கேட்டாரே தவிர அவர்கள் சொல்லுவது அவருக்குப் பிடிபட வில்லை. அவர் மூளை குழம்பியது. அறுவை மருத்துவர் தனது நிதானத்தை இழந்துவிட்டார். தமது வாழ்வு முழுவதும், தாமும், தமது தொழிலும், மாணவராயிருக்கையில் தாம் கண்ட கனவுகளும், தாம் செய்தவை, செய்பவை, செய்யக் கூடியவை அனைத்துமே திடீரென அவருக்குப் புதிய, எதிர்பாராத ஒளியில் தென்பட்டன. அமைதி நிறைந்த முதுமைப் பருவத்தைப் பற்றி, சிறு வீடு, நாஸ்டர்ஷியம் பூப்பாத்திகள், சன்னலுக்குக் கீழே ஆர்க்கிட் செடிகள், இவை பற்றி நேற்றுக் கனவு கண்டது அவர் தானா? - பரீஸ் கர்பாதவ் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட ருஷ்ய அமர இலக்கிய வரிசை – சோவியத் சிறுகதைகள் – 4 என்று நூலிலிருந்து 14 சத்யசாய் அபார்ட்மென்ட்ஸ் ! “என்ன சித்ரா? பக்கத்து போர்சன்ல புதுசா குடித்தனம் வந்தவாகிட்ட ரொம்ப நேரம் பேசிண்டிருந்தே! ஏதாச்சும் பிராப்ளமா?” “இல்ல, இல்ல, தண்ணி இல்லையாம், மோட்டரு போடச் சொன்னாங்க, மெயின்ட்டனன்ஸ் எல்லாம் எவ்வளவு என்னான்னு விசாரிச்சாங்க, நானும் அவங்கள விசாரிச்சுட்டிருந்தேன்.” “பசங்கள ஸ்கூலுக்கு அனுப்சாச்சு, போரடிக்குதா?” கேட்டுக்கொண்டே மாலதி வீட்டுக்குள் செட்டியார் வீட்டம்மா நுழைந்தார். “காத்தால வேலல்லாம் முடிஞ்சிருத்தா, நீங்க மத்யானம் சமையலுக்கே போயிருப்பேள், நான்தான் தேமேன்னு கதபேசிண்டிருக்கேன்” என்று செட்டியார் வீட்டம்மாவை ஒரு சிரிப்போடு உள்ளே இழுத்துக்கொண்டு… மாலதி திரும்பவும் விசயத்துக்கு வந்தாள். “சித்ரா! முன்னாடி எங்க குடி இருந்தாளாம்?” “வியாசர்பாடியாம்!” “என்னடி இது விவகாரமான ஏரியாவா இருக்கு!” கேட்ட மாத்திரத்தில் மாலதி கேலியாகவும், எச்சரிக்கையாகவும் முகக்குறிப்புக் காட்டினாள். வயசு அம்பத்தி நாலு ஆனாலும் செட்டியார் வீட்டம்மாவுக்கு காது கணீரென்று ஒலித்தது போல பாய்ந்து கொண்டு பேசினார், “எங்க வீட்ல சொல்வாரு, அந்தப் பக்கமெல்லாம் அடிதடி, வெட்டுக்குத்துன்னு ஏரியாவே கல்ச்சர் ஒரு மாதிரின்னு,” என்று பேசிக்கொண்டே வந்தவர், சற்று குரலைத் தாழ்த்தி வியாசர்பாடின்னா பெரும்பாலும் ‘அவங்காளா கூட இருக்கலாம்’! “என்ன ‘இங்கு’ வக்கீறீங்க, தெளிவாகத்தான் சொல்லுங்களேன். இங்க யாரு இருக்கா?” சித்ரா வற்பறுத்த, “இவ ஒருத்தி, எல்லாத்தையும் புளி போட்டு விளக்கணும், பெரும்பாலும் அங்கெல்லாம் எஸ்.சி. தான் இருப்பாங்க,” இன்னுங்கூட சித்ரா முழு மனதாக நிறைவு காட்டாதவள் போல பார்க்க, கிசுகிசுத்தவாறு “அதான்! போதுமா?!” “ஓ! புரியுது, புரியுது, இந்த காலத்துல பாலாஜி அம்மா, யார்? என்னன்னு? கேக்க முடியாது, அபார்ட்மெண்டல ஹவுஸ் ஓனர் விருப்பம், அவங்க அவங்க வாடகை பாத்து விடுறாங்க, பாரத விலாஸ் மாதிரி அபார்ட்மென்ட் ஆகிடுச்சி.” “ஏய், பாரதவிலாஸ்ல மல்டி ஸ்டேட் தாண்டி, மல்ட்டி கேஸ்ட் இல்ல; நமகென்ன, நாம பாத்து நடந்துண்டா, நரகத்துலயும் பொழைக்கலாம்பா, அதுபோல கரெக்ட்டா வச்சுண்டா, பிரச்சனை இல்ல! ‘பாக்கலாம், உடனே தெரியாது இல்லைய, போகப் போக யார்னு தெரிஞ்சிடப்போவுது!” “ஆமாம், சித்ரா, நீதான் பக்கத்து வீடு. பழக்க வழக்கத்த பாத்தா தெரிஞ்சுடப்போவுது, நான் மேல இருக்கறதால சரியா பாக்க முடியல, ரெண்டு புள்ள போல இருக்கு, கருப்பாதான் தெரியுதுங்க!” செட்டியார் வீட்டம்மா குத்து மதிப்பாய் பேச மாலதி வெடுக்கென சிரித்துவிட்டாள். “ஏண்டி! என்னப் பாத்து சிரிக்கிறே. நானும் கருப்பா இருக்கேன்னா! இது வேற கருப்புடி, அவுங்க கருப்பே தனி!” ஆமாம் என்பதுபோல சித்ராவும் தலையாட்டிக் கொண்டே, “விடுங்க எல்லாருமே கருப்பாத்தான் இருக்காங்க, அத வச்சி சொல்லிட முடியாது, பிராமின்லயே பிளாக்கும் உண்டு, கூட்டுறவர்கள்ல ஒயிட்டும் உண்டு, பேச்ச பாத்தா டவுட்டாதான் இருக்கு!” “சித்ராவுக்கு சொல்ல வேண்டியதில்ல, இன்னும் ஒரு வாரத்துல குலம், கோத்திரம், ஜாதகத்தையே புட்டு வச்சிடுவா. பாவம்! மனுஷாள வெறுக்கக் கூடாது, இருந்தாலும் அவா பழக்க வழக்கம் நமக்கு ஒத்துவர்றதுல்ல, இப்ப நாங்க கூடத்தான் நான் பிராமின், இருந்தாலும் நம்ப அபார்ட்மெண்ட்ல யாரும் பேதம் பாக்கல வித்தியாசம் இல்லாம பழகிக்கிறோம், அவங்களும் எடத்துக்கு ஏத்த மாதிரி இருந்தா பரவாயில்ல.” “ஏன் நாம கெடந்து மண்டைய பிச்சிகிட்டு, சித்ரா விடாம பேச்சுக்கொடு, பேசவுட்டாத்தான் விசயம் வெளியே வரும், நீ பேசி பாரு!” செட்டியார் வீட்டம்மா முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு கீதோபதேசம் செய்தார். “அய்யோ, மணி பதினொண்னு ஆகப் போறது, குளிச்சிட்டு வேலையப் பாக்கனணும், வீட்ல ‘டான்னு’ கிளம்பிடுவார்!” மாலதி குறிப்பு காட்ட கலைந்தனர். திப்பிலி ரசத்தை உறிஞ்சி ஒரு கனை கனைத்தபடி தெம்புவந்தவன் போல சாய்ராம் மெல்ல மாலதியை விசாரிக்க ஆரம்பித்தான், “என்ன? புதுசா வந்தவாள பத்தி மேட்டர் ஓடுது போல இருக்கு”! “ஆமாம்! இதுக்கு முன்னாடி வியாசர்பாடில இருந்தாளாம், சித்ரா சொல்லிண்டிருந்தா” “சரி, என்ன பொருள்லாம் வந்துச்சு, பாத்தியா?” “கட்டில், பீரோ… எல்லாம் வந்துச்சு!” “கட்டில், பீரோ, கல்யாணம் ஆனா எல்லாந்தான் வச்சிருப்பா, இது ஒரு பாய்ண்ட்டா? காஸ்ட்லியா வேற என்ன வந்துச்சுன்னா, அதுக்கு பதிலக் காணோம்! “நைட்ல வந்ததால, சரியா கவனிக்கல, ஆளுங்கள பாத்தா ‘அவாள்தான்னு’ தெரியறது!” “ஏய்! எவாளாவோ இருக்கட்டும் ஒரு வாஷிங்மெசின், பிரிட்ஜ், எல்.சி.டி. மாதிரி காஸ்ட்லி பொருளா இருந்தா, ஆளு என்ன பேக்ரவுண்டு, ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியும். மாசம் ஏழாயிரம் வாடகை தர ரெடியா வர்றான்னா ஒண்ணும் ஏப்ப சாப்பையா இருக்க மாட்டா! நீ முந்திண்டு வாய வுட்டு, மொக பொல்லாப்பு பண்ணின்டுறாதே! இப்பல்லாம் எல்லார் தயவும் தேவப்படறது, செட்டியார் வீட்லயும் பக்கத்துல பிள்ள விட்லேயும் சூத்ராளே நம்மகிட்ட விழுந்து விழுந்து தானா வந்து ஹெல்ப் பண்றாள்னா அவா லெவல் அவாளுக்கே தெரியும்! அது போலத்தான் வந்தவாளும், பக்கத்துல அவா வேற மாதிரி பேசினாலும், நீ பேச்சுல எரிச்சல காட்டிடாதே, ஆமாம்” “தெரியும், தெரியும், பக்கத்துல இவா மட்டும் என்ன? நமக்கு எல்லாம் ஒண்ணுதான். டீட்டெய்லுக்காக விலாவாவாரியா பேசிண்டிருந்தேன், யார் யார் கிட்ட எவ்ளோ வச்சுக்கணுமோ அவ்ளோதான் வச்சுக்கணும்னு தெரியாதா? நீங்க பசங்கள மட்டும் கொஞ்சம் ஓவரா பழகிடாம இருக்க சொல்லி வையுங்கோ! என்ன?” தலையாட்டிக் கொண்டே சாய்ராம் பைக்கை ஸ்டார்ட் செய்ய அது புகையை கக்கியது. “ராகுலம்மா கொஞ்சம் வாங்களேன்!” சித்ரா கூப்பிட மாலதி சித்ரா வீட்டுக்குள் விரைந்தாள். [பிராமணாள் காபி பார் - பெங்களூருவில் !] மெதுவான குரலில் ஆரம்பித்தாள் சித்ரா, “பக்கத்தில, ஐ.சி.எப்.ல வேல செய்யிறாராம். அதான் பக்கமா இருக்குன்னு இங்க குடி வந்திருக்காங்க. சொந்த ஊர் செய்யாறாம். ரெண்டும் பசங்க, ஒருத்தன் செவன்த், ஒருத்தன் சிக்ஸ்த் எஸ்.பி. ஓ.ஏ வாம்! சி.பி. எஸ்.சி. சிலபஸ்லதான் படிக்கிறாங்க… அவங்களும் டிகிரியாம், ஹஸ்பெண்ட் சென்ட்ரல் கவர்மெண்ட்னால, பசங்கள பாத்துக்க வேலைக்கு போகலயாம்.” ஒப்பித்தாள். “இந்த காலத்துல டிகிரின்னா சர்ட்டிபிகேட்டயா வாங்கியா பாக்கப் போறோம்! சொல்றத கேட்டுக்க வேண்டியதுதான், எல்லாம் சரி, என்ன ஆளுங்கண்ணு தெரிஞ்சிச்சா! அத வுட்டுட்டியே!” “அதுதான் புரிய மாட்டேங்குது! நான் வெஜ்தான்னு தெரியுறது, அவரப்பாத்தா செம கருப்பு, அவளும் மாநிறம்தான். நீங்க வெளில வர்றப்ப, துணி காயப்போடுற மாதிரி பாருங்களேன், பேச்செல்லாம் ‘அந்த’ மாதிரி தான் இருக்கு, ஒரு வேள ரொம்பநாளா மெட்ராஸ்ல இருக்கிறதால சிலபேர் அப்பிடி பேசலாம், யாரு கண்டா? எப்படியும் தெரியத்தான் போவுது!” “ஏய்! பசங்க உசாரு! நேத்திக்கே அந்த சின்ன பையன்கிட்ட என்னடா சாப்பிட்டேன்னேன்! வாயத் திறக்கணுமே! பதிலே சொல்லாம ஓடிட்டான்!” “பாவம்! பழக்கம் இல்லேல்ல, புதுசு. அதான் பேச மாட்டேங்கிறான் போல. ஆனா நேரத்துக்கு குக்கர் சத்தம் கேக்குது, பருப்பு வாசன வருது, இது வரைக்கும் நான் வெஜ் வாசன வரல, இனிமே தான் தெரியும், இப்பதான் வந்துருக்காங்க!” “ஏன்? நான் பிராமின் எல்லாருந்தான் சாப்பிடறேள், அவா வீடு, அவா பாடு! நாம கேக்க முடியாது! எங்க ராகுலுக்கே அத்லட்டிக் பிராக்டிஸ் பண்ணனும்னா முட்டை சாப்பிடனும்னு டாக்டர் சொல்லிட்டா, அவா அப்பா பாயில் பண்ணி தர்றார். உனக்குதான் தெரியுமே, சாப்பிடறத பத்தி இல்ல, இருந்தாலும் ரொம்பவும் அதர் கேஸ்ட்டுன்னா ஆச்சாரமா இருந்துட்டதால ஒத்துக்க மாட்டேங்கறது ‘அவா’ பழக்க வழக்கம் நமக்கு ஒத்து வராது!” “நானே, என் பையன ரொம்ப வச்சுக்காதன்னு சொல்லி வச்சிருக்கேன், ஏன்னா புள்ளங்க எதார்த்தமா பழகிட்டா, அப்புறம் வேணாம்னா கேக்காதுங்க, எங்க வீட்ல கூட நீயா போயி பேசாத, தானா கேட்டா பதில் சொல்றதோட வச்சுக்க, அந்தாள பாத்த மொகமே சரியில்லேன்னு சொன்னாரு!” “ஏய் நாம பாட்டும் பேசிண்டிருக்கோம், பக்கத்துல காதுல விழாதே! அது வேற!” மாலதி திடீரென சுதாரிக்க “பக்கத்துல படிக்கட்டு தாண்டிதான சுவரு! கேக்காது, மேலும், புதுசா இருக்கறதால அவுங்க வெளியிலயே வர்றதில்ல, சரி, ரேசன் போனா சொல்லுங்க, நானும் வாரேன்!” “ரேசன்னோன்னேதான் ஞாபகம் வருது, உனக்குதான் பழக்கம் இருக்கில்ல, புதுசா வந்தவங்களுக்கு அரிசி வேணாம்னா கேளு! நாம வாங்கிக்கலாம், இட்லிக்கு ஆகும்!” “நீங்க வேற! அவங்க வெள்ள கார்டாம், கேட்டுப் பாத்துட்டேன்…” “அட! வெள்ள கார்டா, அப்ப பெரிய இடந்தான். ஹ.. ஹிம்” என்று முனுகியவள் திடீரென ஞாபகம் வந்தவள் போல “அந்த லேடி பேரு என்ன? “அபிராமி” சடாரென சித்ரா பதில் சொல்ல, “பேர வச்சி ஒண்னும் யோசிக்க முடியலயே! ஊம்…” மாலதி குழப்பத்தோடு நகர, கருப்பும், வெள்ளையுமாக பூனை கட்டை சுவரில் நடந்து வந்தது, அச்சத்தோடு மாலதியை பார்த்து முறைக்க, “தே… ச்சூ.. இது வேற கெடந்து குறுக்கும் நெருக்கும் அலையறது” என்று விரட்டிக் கொண்டே போனாள். அபிராமி கதவைப் பூட்டி விட்டு வெளிக்கிளம்பவும், மாலதி வாசலில் நிற்கவும் எதேச்சையாய் அமைந்தது. மாலதியைப் பார்த்ததும் அபிராமி விருப்பத்துடன் புன்னைகைத்தாள். பதிலுக்கு, “என்ன வீடு செட்டில் ஆயிடுத்தா?” என்று மாலதி கேட்க, மேலிருந்து செட்டியார் வீட்டம்மாவும் இறங்கி வந்து சேர்ந்து கொண்டார். “ஊம்… எல்லாம் முடிஞ்சிடுச்சு!” என்று முகம் பார்த்து பதில் சொன்ன அபிராமியின் கழுத்தையே கவனித்த மாலதி “செயின் புது டிசைனா இருக்கு, நியு கலெக்சனா? “என்று விசாரிக்க “தாலி செயின்” என்று அபிராமி பிடித்து தெரியும்படி தூக்கிக் காட்டினாள். “இதென்ன புலிப்பல்லா, புள்ளையார் தாலியா?” “எங்க வீட்டு தெய்வம் டிசைனு!” அதற்கு மேல் கேட்கத் தயங்கினாள் மாலதி. “நேற்று பெருமாள் கோயில் வாசல்ல பாத்தேன், பெருமாள்தான் கும்பிடுவியா?” செட்டியார் வீட்டம்மா கொக்கி போட்டார். “இல்லைங்க, வேம்புலி அம்மன் கோயிலுக்கு போயிட்டு அப்புடியே வர்ற வழியில பெருமாள் கோயிலுக்கும் போயிட்டு வந்தேன்!” செட்டியார் வூட்டம்மா விடுவதாயில்லை, “எங்க பால் காய்ச்சிரப்ப கூட அம்மா, அப்பாவ காணோம்!” “அவங்களால ஊர்லேர்ந்து தனியா வர முடியாது! பிறகு பசங்க லீவுக்கு வருவாங்க!” “வரட்டுங்களா? வீட்ல இன்னைக்கு நைட் சிப்டு, நான் பசங்களோட ரயில்வே குவார்ட்டர்ஸ்ல இருக்குற தெரிஞ்சவங்க வீட்டுக்கு ஒரு வேலையா போறேன்… நைட்டு வந்துருவேன்… வாரேங்க…” அபிராமி பொறுப்போடு பேசி விட்டு நகர்ந்தாள். வாசல் கேட்டை தாண்டிவிட்டாளா, என உறுதிபடுத்திக் கொண்ட செட்டியார் வீட்டம்மா, “கேட்டியே, ஒழுங்கா கேட்டியா? எங்க வீட்டு தெய்வம் தாலின்னு சொன்னப்ப என்னா சாமின்னு கேட்டிருந்தா என்ன வகையறான்னு புரிஞ்சிருக்கும்! கேக்காம விட்டுட்டியே!” “அதையே சுத்தி சுத்தி கேட்டா தப்பா எடுத்துகிட்டா? அதான் நினப்பு வந்தும் வேண்டான்னு விட்டுட்டேன்…” இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே, புதிதாக குடித்தனம் வந்தவர்கள் போர்சனுக்கு எதிரே உள்ள காம்பவுண்டு சுவரை ஒட்டி ஆராய்ச்சி செய்தபடி நின்றிருந்த சித்ரா, மாலதியை ஜாடை காட்டி அழைக்க இருவரும் ஆர்வத்துடன் நெருங்கினார்கள். “வாங்க, தோ! பாருங்க புதுசு, புதுசா அபார்ட்மென்ட்ல என்னென்னவோ நடக்குது, பாருங்க புதையல!” சித்ரா கேலியாக இடத்தைக் காட்ட, மாலதிக்கு விழி அகன்றது. “அய்யய்யோ! என்னடி இது, பாட்டில், பாட்டிலா கிடக்குது, லேபிள் மினு மினுக்க என்ன தைரியமா போட்ருக்கா! யாரா இருக்கும்?” “கேள்வி கேக்குறபாரு! இந்த வீட்டுக்கு நேரா கெடக்கு யாரா இருக்கும்னு கேக்குற! குடிக்கிறவங்களுக்கு என்ன பயம் வேண்டி கெடக்கு! போனாளே! அவ வீட்டுக்காரராகத்தான் இருக்கும், புதுசா குடிவந்தா பழக்கத்த விட முடியுமா? இஷ்டத்துக்கு குடிச்சிட்டு இஷ்டத்துக்கு போட்டிருக்காங்க… “செட்டியார் வீட்டம்மா ஆதாரங்களை அடுக்க ஆரம்பித்தார். “வேற யாராவது போட்டிருப்பாங்களா! இங்க உள்ளவரே இப்படி போடுவாரா என்ன? அசிங்கம்னு நெனக்க மாட்டாரா?” சித்ரா சந்தேகப்பட, மாலதி ஆரம்பித்தாள், “அந்தாள கண்ணப் பாத்தாலே தெரியுது, செவ செவன்னு செவந்து கிடக்கறது, கண்ணு, மூஞ்செல்லாம் வீங்கி வடியறது, தெனம் குடி இருக்கும் போல இருக்கு! சந்தேகம் என்னடி! அந்தாளு மூஞ்சியும் கருகருனு மொகமும், முழிக்கறத பாத்தாலே தெரியலையா, மொடா குடிகாரன்னு, ரயில்வே வேற! வண்டி பிராட்கேஜ்ல ஓடுது! நேரம், காலம் கெடையாது, தினம்தான் ராத்திரி கேட்டு திறக்குற சத்தம் கேக்குதே! பாத்துகிட்டுதான இருக்கேன்! ராத்திரி குடிச்சிட்டு சத்தம் போடாம போட்டுடுவார் போல…” செட்டியார் வீட்டம்மா விவர மழை பொழிந்தார். “சைலண்ட்டா அவுரு போறது வர்றதப் பாத்தா சொல்லவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல, அவங்க அவங்க விருப்பம், டஸ்ட் பின்ல போட்டா தெரியப் போறதில்ல, பசங்க இருக்குற இடம், யாரு சொல்றது? ஒரு நாள் கவனிச்சிட்டு சொல்லிட வேண்டியது தான்!” சித்ரா புலம்பிக்கொண்டாள் “கலகலன்னு பேசிடறவாள நம்பிடலாம், சைலண்ட்தான் டேஞ்சரே! அவா கல்ச்சர மாத்த முடியாது! கைல காசும் வந்துடுச்சு! அவா இஷ்டத்தக்கு எல்லாம் செய்வா! யாரு கேக்கறது? சொன்னா நமக்கு பொல்லாப்பு” “அதுக்காக அபார்மென்ட்ல படிக்குற பசங்கல பாத்து கெடட்டுங்கிறியா? அவங்களுக்கு நாகரிகம் கெடையாது. நாம பொது இடத்துல எப்படி இருக்கனும்னு சொல்லித்தான் ஆகணும், இன்னொரு முறை பாத்தா நானே அந்த பொண்ணுக்கிட்ட சொல்றேன். நாம ஏன் பயப்படனும், இத இப்படியே விட்டா, நாளைக்கு வேற விசயத்துக்கு துணிச்சல் குடுத்துடும்” – செட்டியார் வீட்டம்மா இருவருக்கும் தெம்பு கொடுத்தார். வாடகை வருதுன்னு கண்டதுங்களையும் வுட்டா இப்படித்தான்… மூவரும் முனகிக் கொண்டே நகர்ந்தனர். பேசிவிட்டு பெண்கள் வீட்டுற்குள் நுழைந்தவுடன், மெல்ல வெளியே வந்த சித்ராவின் கணவன் ஒரு நேரம் பார்த்து தலையைக் காட்டிய சாய்ராமை கண்ணால் குறிப்பு காட்டி அழைக்க, “அப்புறம் ரகு அந்த பிளம்பர வரச்சொன்னியே என்னாச்சு?” என்று பேசிக் கொண்டே முதுகில் நெளிந்த பூனூலை மேலும், கீழும் ஆட்டியபடி அபார்ட்மெண்ட்டின் பின் பக்கம் நகர்ந்தான். “சாயி, நல்ல வேல பண்ண நீ! பாட்டில இங்கயா போடுவ, மாடிலேந்து விட்டெறிந்தா கூட உடைஞ்சிருக்கும், முழு பாட்டிலையும் எல்லோரும் பாக்குற மாதிரி ஏன் இங்க போட்ட?..” “அட! நான் மேலேந்துதான் போட்டேன், செத்தை கிடந்ததால உடையாம மாட்டிக்கிச்சு… நல்ல நேரம் புதுசா குடிவந்தவன் வேற ஆளா போனதால, அவன் தலயில விடிஞ்சிருச்சு, இல்ல நம்ம மேல சந்தேகம் வந்திருக்கும்! தப்பிச்சோம் போ! வீட்ல பேசினாலும்… அவங்க பாணியிலயே போ… அது சரி! போட்டது தான் போட்ட, எதுக்கு புதுசா குடிவந்தவன் வாசல்ல போட்ட?” ரகு வியப்பாய் கேட்க, “பின்ன, நம்ப வீட்டுக்கு நேரா போடச் சொல்றியா! ஃபுல் அடிச்சும் நம்ப புத்தி மாறல பாத்தியா! அதான் விவரம்ங்கறது” “சரி, சரி இதையே பேசாதே. வேற ஏதாவது பேசு…. “குரலை தாழ்த்தி சாய்ராம் வழிகாட்டினான். “பெரிய ஆளுப்பா, நீ!..”. ரகுவும், சாய்ராமும் வெடித்துச் சிரிக்க நாக்கை நீட்டிக் கொண்டு காம்பவுன்ட் சுவரில் ஏறிய அரணை, பேச்சையும், சிரிப்பையும் பார்த்து பயந்து நடுங்கியது போல வெடுக்கென ஓடியது. - துரை சண்முகம் ________________________________________________________________________________ புதிய கலாச்சாரம் – மே 2013 ________________________________________ 15 காதல் ! “அதோ அந்த மூலையில் மேசை அருகே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே, அந்தத் தம்பதிகளை ஒரு முறை பாருங்கள். நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே வசதிப்படாது, ஆனால் அப்புறம் என் வீட்டில் அவர்களைப் பற்றிச் சுவையான கதை உங்களுக்குச் சொல்கிறேன்.” [பரீஸ் பொலிவோய்] எங்கள் நிர்மாண வட்டாரத்தின் கட்சி ஸ்தாபனத் தலைவர் இவான் ஃபியோதரவிச் குஸ்மிச்சோவ் ஆட்களை மோப்பங் காண்பதில் ஆச்சரியகரமான திறமை வாய்ந்தவர். ஒவ்வொருவரிடத்திலும், அவர் எவ்வளவு தான் சாதாரணமானவராகத் தோன்றினாலும், ஏதாவது ருசிகரமான விஷயத்தைக் கண்டறிவது அவருக்கு முடியும். அவருடைய இந்தத் திறமையை நான் அறிந்திருந்தபடியால் அவர் காட்டிய ஆணையும் பெண்ணையும் மெதுவாக நோட்டமிட்டேன். அவன் ஒற்றை நாடி தேகத்தினன். அடர்ந்து, சுருண்டு நரையோடிய கரிய கேசம். கூரிய பக்கத் தோற்றம். எடுப்பான, ஓரளவு பருமனான மோவாய். துருத்திய கன்ன எலும்புகள். இதழ்க் கோடிகளில் ஆழ்ந்த ரேகைகள். ஏதோ காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டிருப்பது போலக் கத்தியையும் முள்ளையும் லாகவமாகச் செலுத்தி அவன் மௌனமாக உணவருந்திக் கொண்டிருந்தான். அவள் பொன் நிறத்தினள். வாட்டசாட்டமான, ஆனால் பொருத்தமுள்ள அங்க அமைப்பு வாய்ந்த மேனி. பரந்த முகம். இணைந்த கரும் புருவங்கள் அதற்குக் கடுமையும் ஊக்கமும் நிறைந்த தோற்றத்தை அளித்தன. அவள் அணிந்திருந்த நீண்ட அங்கியைத் தவிர அவளது தோற்றத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவுமில்லை. ஆனால் அவள் நடந்துகொண்ட மாதிரியில், அதிலும் தன் கூட்டாளிக்கு அவள் கடுகு மசியலையும், முள்ளங்கியையும், மிளகுப்பொடியையும் பார்த்துப் பார்த்து எடுத்துக் கொடுத்த விதத்தில், பேணும் தன்மை, தாய்மை மிளிர்த்தது. நிர்மாணத் தொழிலாளிகள் நிறைந்திருந்த இந்த உணவு விடுதியில் இப்பெண் தானே சொந்தக்காரி போல நடந்துகொண்டாள். இங்குள்ளவர்கள் எல்லாரும் இந்தப் பெண்ணுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள் என்பதும், அவள் இதற்குப் பழக்கப்பட்டவள் என்பதும் தெளிவாகத் தெரிந்தன. அன்று மாலை குஸ்மிச்சோவும் நானும் கட்சிச் செயலகம் அறையில் சந்தித்தோம். நிர்மாண என்ஜினியர் செயலகம் போலக் காணப்பட்ட அந்த அறை பெரியதன்று. மேசை மீதும், புத்தக அலமாரிகளிலும், சன்னல் குறடு மேலும், இரும்புப் பெட்டியின் உச்சியிலும், எங்கும் சிமெண்டு ஜாடிகளும், மண்ணின் மாதிரிகளும், பலவகைக் கருவிகளின் மாடல்களும் நிறைந்திருந்தன. செயற்கைத் தோல் சோபாவில் என்னை அமர்த்திவிட்டு, குஸ்மிச்சோவ் தானும் சிறுவர்களைப் போல் கால்களை மடக்கிக்கொண்டு என் அருகே அமர்ந்து என் பக்கமாக முகம் முழுவதையும் திருப்பினார். அதில் புன்னகை தவழ்ந்தது. குறும்புத்தனமான அந்தப் புன்னகை, அவரது உதட்டோரங்கிளிலும் கண்களிலும் மட்டுமல்ல, அவரது இளமை குன்றிய முகத்தின் ஒவ்வொரு ரேகையிலும் பளிச்சிட்டது. ஏற்கெனவே வாக்களித்திருந்தபடி அவர் கதையைத் தொடங்கினார்: “கவர்ச்சிகரமான தம்பதிகள், அல்லவா? ரொம்ப சரி. இப்போது கதையைக் கேட்கத் தயாராகுங்கள். இது அசாதாரணமான கதை என்பதை எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுகிறேன். அந்த மனிதனைப் பற்றி நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நமது உழைப்பு வீரர்களைப் பற்றிப் பேசுகையில் இவன் பெயரையும் நான் குறிப்பிட்டேன். அவன் தான் யெகோர் உஸ்த்தீனோவ், கொத்தர் குழுத் தலைவன். அவளைப் பற்றியும் நீங்கள் அவசியம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவள் தான் ல்யூபோவ் சாபான். எங்களது முதிய கொத்து மேஸ்திரி ஒருவன் குறிப்பிட்டது போல, அவள் “பெருங்குரல் பெண்மணி”. அவளும் ஒரு கொத்தர் குழுவின் தலைவி. அந்தந்த மாதம் எல்லாரிலும் நன்றாக வேலை செய்யும் குழுவிடம் கொடுத்து வைக்கப்படும் வெற்றிக் கொடியை அவளது குழு சென்ற மாதந்தான் யெகோரின் குழுவிடமிருந்து பறித்துக் கொண்டது. இருவரும் கம்யூனிஸ்டுகள்.” கதைஞர் திருப்தியுடன் உள்ளங்கைகளை ஒன்றோடொன்று தேய்த்துக்கொண்டார். [love]“ஆகா, உங்களுக்குக் கதையில் சுவை பிறந்துவிட்டது அல்லவா? நான்தான் சொன்னேனே, எங்களிடமுள்ள சிலரைப் பற்றிப் பேசப் பேச, கேட்கக் கேட்கத் தெவிட்டாது என்று…. நல்லது, இப்போது இவ்விருவர் கதைக்குத் திரும்புவோம். யெகோர் உஸ்த்தீனோவ் முதலாவது கொத்தர் கூட்டத்துடன் இங்கே வந்தான்; நேரே தினீப்பரிலிருந்து. தினீப்பர் நீர் மின்நிலையம் கட்டுவதில் உழைத்தான், புகழ் அடைந்தான், விருது பெற்றான், தினீப்பர் வேலை முற்றுப் பெற்றதும் நேரே எங்களிடம் வந்துவிட்டான். கொத்து வேலை தொடங்கி வைக்கும் கௌரவத்தை நாங்கள் அவனுக்கு அளித்தோம். அணையின் வானக்கிடங்கில் முதல் கனமீட்டர் காங்கிரீட் போட்டவன் அவன்தான். ஒரு சஞ்சிகையின் முகப்புப் பக்கத்தில் உஸ்த்தீனோவின் புகைப்படம் வெளியாயிற்று. இந்தப் படத்திலிருந்து தான் எல்லாம் ஆரம்பித்தது என்று சொல்லலாம். அதுதான் இந்தக் கதை முழுவதற்கும் வித்து. “மேற்படி சஞ்சிகை வெளியான இரண்டொரு வாரத்திற்கெல்லாம் இங்கே, கட்சிச் செயலகத்தில் என்னைப் பார்க்க வந்தாள் ஒரு பெண். அவளை எனக்கு முன்பின் தெரியாது. பெயர் ல்யூபோவ் சாபான், கட்சி உறுப்பினர், இங்குள்ள மருத்துவ நிலையத்தில் தாதியாக வேலை செய்ய அனுப்பப்பட்டிருக்கிறாள் என்று பரிந்துரைக் கடிதத்தில் கண்டிருந்தது. “அவளோடு பேச்சுக் கொடுத்தேன். அவள் நல்ல கம்யூனிஸ்டு என்று எல்லா வகையிலும் விளங்கியது. பள்ளிப் படிப்பையும் மருத்துவப் பயிற்சியையும் முடித்த பின்பு போரில் தொண்டு புரிந்தாளாம். காயமடைந்தாளாம், கௌரவ விருது பெற்றாளாம். போர்முனையில்தான் கட்சியில் சேர்ந்தாளாம். போருக்குப் பின்பு இராணுவச் சேவையிலிருந்து விடுபட்டுத் தன் சொந்த இடமான உக்ரையினுக்குத் திரும்பினாளாம். ஒரே வார்த்தையில், உண்மையிலேயே ரொம்ப நல்ல பெண், திறமைசாலி என்று எனக்குப் பட்டது. அவளோடு பேசிக் கொண்டிருக்கும் போதே, சிசு பராமரிப்பு நிலையம் பற்றி நிர்மாண வட்டாரத் தலைவருடன் உரையாடியது என் நினைவுக்கு வந்தது. அப்போது எங்கள் சிசு பராமரிப்பு நிலையத்தில் வேலைகள் ஒழுங்காக நடைபெறவில்லை. அதைச் சரிவர மேற்பார்க்கத் தகுந்த ஆள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. “சிசு பராமரிப்பு நிலையத்தில் வேலை பார்க்கச் சம்மதந்தானா என்று ல்யூபோவ் சாபானைக் கேட்டேன். ‘இதென்ன கேள்வி? தேவையாயிருந்தால் குழந்தைகள் இல்லத்தில் வேலை பார்க்கிறேன். நான் இங்கே இளைப்பாறுவதற்காக வரவில்லையே. எங்கே வேண்டுமோ வேலை கொடுங்கள். என் உடம்பில் வலுவென்னவோ வேண்டியது இருக்கிறது. திறமையும் அவ்வளவு இருந்தால் நன்றாயிருக்கும்’ என்றால் அவள். அவளுடைய பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விடை பெற்றுக் கொண்டு கதவுப் பக்கம் போனவள் சடக்கென்று திரும்பி, ‘உஸ்த்தீனோவ் என்பவர் இங்கே வேலை செய்கிறாரா என்று சொல்ல முடியுமா? முழுப்பெயர் யெகோர் உஸ்த்தீனோவ். அவருடைய புகைப்படம் கூடச் சமீபத்தில் சஞ்சிகையில் வெளியாயிற்றே’ என்று கேட்டாள். “உஸ்த்தீனோவ் இங்கே தான் வேலை செய்கிறார். கட்சியின் எங்கள் கிளைச் செயலகத்தில் அவர் பெயர் பதிவாகியிருக்கிறது” என்று பதில் சொன்னேன். “இதைக் கேட்டதும் அவள் புருவங்களைச் சற்றே உயர்த்தி (அவளுடைய இந்த வழக்கத்தை இன்று நீங்கள் கவனித்திருக்கலாம்) மிகமிகத் தணிந்த குரலில் (இம்மாதிரி ஆட்கள் தணிந்த குரலில் பேசினால் விந்தையாயிருக்கிறது), ‘ஆமாம், இந்த உஸ்த்தீனோவ் மணமானவரா என்ன?’ என்று கேட்டாள். அவளுடைய கேள்வி என்னைத் திகைக்க வைத்து விட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ‘அவர் உங்களுக்கு என்ன வேண்டும்? சொந்தக்காரரா?’ என்று வினவினேன். ‘இல்லை. ரொம்பக் காலத்துக்கு முந்திப் பழக்கமுண்டு. இப்போது அவர் என்னை மறந்துகூடப் போயிருக்கலாம்.’ இப்படிச் சொன்னதும் அவள் முகமெல்லாம் ஜிவு ஜிவென்று சிவப்பேறி, மூக்கந்தண்டில் வியர்வை அரும்பியது. “எனக்கு நினைவிருக்கிறபடி உஸ்த்தீனோவ் விதுரன் என்றும், வேண்டுமானால் ஒரே நொடியில் நிச்சயமான தகவலை விசாரித்துச் சொல்ல முடியும் என்றும் கூறினேன். ஆனால் அவள் அதைக் கேட்கக் காத்திராமல் எறிந்த பந்து போல விருட்டென்று அறைக்கு வெளியே போய்விட்டாள். இதென்னடா இப்படி? ஒருவேளை இவள் அவனுடைய முன்னாள் மனைவியாயிருப்பாளோ என்று நினைத்தவனாய் உஸ்த்தீனோவ் பூர்த்தி செய்திருந்த பத்திரத்தை எடுத்துப் பார்த்தேன். இல்லை, அவன் விதுரன், அவனுக்கு மூன்று குழந்தைகள் என்று அதில் தெளிவாகக் குறித்திருந்தது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது உஸ்த்தீனோவிடமே சாபானைப் பற்றிக் கேட்டுவிடுவது என்று தீர்மானித்தேன். அச்சமயம் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை. “நல்லது. ல்யூபோவ் சாபான் தன்னுடைய வேலைத் திறமையை உடனே காட்டிவிட்டாள். சிசு பராமரிப்பு நிலையத்தில் காரியங்கள் எல்லாம் மளமளவென்று சீர்பட்டன. ஒரு மாதத்துக்குக் கொஞ்சம் அதிகமாகியிருக்கும், அவ்வளவுதான், அதற்குள் – நான் பெருமை அடித்துக்கொள்ளவில்லை – எங்கள் சிசு பராமரிப்பு நிலையம் இந்த மாவட்டம் முழுவதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கலாயிற்று. “ஒன்று மட்டும் உங்களிடம் ஒப்புக்கொள்ள வேண்டும். சாபான் வேலை தொடங்கிய முதல் இரண்டொரு வாரங்கள் எங்களில் ஒவ்வொருவருக்கும் அவளிடமிருந்து பிழைப்பது பெரும்பாடாகி விட்டது. அவள் ஒழுங்குபடுத்த ஆரம்பித்த பின் அவளுடைய அவசரக் கோரிக்கைகளுக்கு இணங்கி, குழந்தைகளின் தேவைகளைக் கவனிப்பதற்காக ஒரு குழு நியமித்தனர்; விநியோக நிர்வாகிகளோ, ஒரேயடியாகக் கிலி பிடித்துப் போனார்கள்; அவள் குரல் காதில் விழ வேண்டியதுதான், எடுப்பார்கள் ஓட்டம். ஆனால் வெகு தூரமல்ல. அவளிடமிருந்து தப்புவதெங்கே? மறுகணமே அவள் கோழிக் குஞ்சின் மேல் கழுகு பாய்வது போலப் பாய்ந்து பற்றிக் கொள்வாள். தனக்கு வேண்டியதை எல்லாம் கக்க வைத்த பிறகுதான் அவர்களை விடுவாள். “ஒரு தடவை எங்களைப் பார்வையிட அமைச்சர் வந்தார். நிர்மாண வேலையாட்களின் தேவைகள் விஷயத்தில் அவர் ரொம்பக் கண்டிப்பானவர் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். முதலாவதாக வேலையைப் பார்வையிடுவார், பின்பு இருப்பிட வசதிகளைக் காட்டச் சொல்லுவார். அவரை மட்டும் ஏய்க்க முடியாது! இந்த முறையும் அப்படித்தான். ஒவ்வொரு குழாயிலிருந்தும் தண்ணீரைத் தாமே ருசி பார்த்தார். பின்பு உணவு விடுதியில் நேரே சமையலறைக்குப் போய் ஒவ்வொரு பாத்திரத்திலிருந்தும் ஒரு கரண்டி எடுத்து மாதிரி பார்த்தார். அப்புறம் இருப்பறைக்கு வருகை. அன்றோ இருப்பறையில் நல்ல ரேடியோ செட்களோ மோட்டார் சைக்கிள்களோ இல்லை. பின்பு கேட்பானேன்! எங்கள் விநியோக முகவர்களுக்குச் சரியான படிப்பினை கிடைத்தது. கடைசியில் அமைச்சசர் சிசு பராமரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டார். அங்கே போனதும் நாங்கள் எல்லாரும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டோம். எதைப் பார்த்தாலும் பளிச்சென்று துப்புரவாக மின்னியது. குழந்தைகள் தளதளவென்றிருந்தார்கள். அவர்களது ரோஜாக் கன்னங்கள் ஆப்பிள் பழங்களைப் போல உருண்டையாயிருந்தன. அமைச்சர் புன்முறுவலுடன் ல்யூபோவ் சாபான் பக்கம் திரும்பி, ‘நன்றி. இங்கே உங்கள் விடுதியில் எல்லாம் நன்றாயிருக்கின்றன’ என்றார். அதற்கு அவள் என்ன சொன்னாள் என்று நினைக்கிறீர்கள்? ‘தோழர் அமைச்சர் அவர்களே, நீங்கள் எங்களிடம் எதிர்பார்ப்பது மிகமிகக் குறைவு’ என்று வெட்டொன்று துண்டிரண்டாகப் பேச ஆரம்பித்தாளே பார்க்க வேண்டும்! ‘இதைப் போய் நன்றாயிருக்கிறது என்று சொல்கிறீர்களே. திட்டப்படி எங்கள் குழந்தைகளுக்கு இரட்டை மாடி வீடு கிடைத்திருக்க வேண்டும். அது எங்கே? இந்தத் தோட்டத்தை நாங்கள் சொந்த உழைப்பைக் கொண்டு போட்டோம். ஆனால் இதற்கு வேலி எங்கே? எங்கள் பெண்கள் இந்தக் கன்றுகளை எல்லாம் தங்கள் கையினால் நட்டது ஆடுகளுக்குச் சுவையான உண்டி அளிப்பதற்கு என்று நினைக்கிறீர்களா?’ இப்படி ஒன்றுக்குப் பின் ஒன்றாகப் பொழிந்து தள்ளிவிட்டாள். ‘இது ஒரு பெரிய நிர்மாண தலம். இங்கே உள்ள ஒவ்வொன்றும் எல்லாவற்றிலும் நல்லதாக, அழகானதாக இருக்க வேண்டும்…’ என்றாள். எங்களில் சிலர் அமைச்சரை அச்சத்துடன் ஓரக் கண்ணால் பார்த்தோம். ஒன்றுமில்லை, கேட்டுக் கொண்டிருந்தார், ஆனால் கண்களில் மட்டும் சிரிப்பு மின்னிட்டது. ‘நீங்கள் சொல்வது சரி, ரொம்ப சரி’ என்றார் அவர். அத்தோடு அவள் விட்டுவிட்டாள் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. ‘சொல்வது சரி என்பது எனக்கே தெரியும். நான் சொன்னவை எல்லாம் குழந்தைகளுக்குக் கிடைக்குமா இல்லையா? அதைச் சொல்லுங்கள் முன்னே’ என்று கேட்டாள். ‘கிடைக்கும், திட்டத்தில் குறிப்பிட்டிருப்பவை எல்லாம் கட்டாயமாகக் கிடைக்கும்’ என்று அமைச்சர் பதிலளித்தார். “அப்படிப்பட்டவள் இந்த ல்யூபோவ் சாபான். எங்கள் பெண்கள் எல்லாரும் அவளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். எங்களுக்கும் ஒரே மகிழ்ச்சி. குழந்தைகள் இல்லத்தை மேல் பார்ப்பதற்கு அவளை விடத் தகுந்தவள் தேடினாலும் கிடைத்திருக்க மாட்டாள் அல்லவா? “ஒரு நாள் மாலை நான் இந்தச் செயலகத்தில் தன்னந்தனியாக உட்கார்ந்து ஓர் அறிக்கை தயாரிப்பதற்காகப் படித்துக்கொண்டும் விவரங்கள் சேகரித்துக்கொண்டும் இருந்தேன். திடீரென்று கதவைத் தட்டிய சத்தம் கேட்டது. பார்த்தால், ல்யூபோவ் சாபான் வந்து நிற்கிறாள். ‘இவ்வளவு நேரங் கழித்து வந்ததற்கு மன்னிக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டு, என்னைத் தனிமையில் பார்க்க விரும்பியதாகக் கூறினாள். இப்போது நீங்களும் நானும் உட்கார்ந்திருக்கிறோமே, அதே சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். ” ‘இதே பாருங்கள், ஒரு விஷயம் முன்னதாகவே பேசித் தீர்த்துக்கொள்வோம். நான் சொல்லப் போவது எல்லாம் வெறும் வெட்டிப் பேச்சல்ல. எல்லாவற்றையும் முன்னதாகவே நன்றாக யோசித்து முடிவு செய்திருக்கிறேன்’ என்று பீடிகை போட்டாள். ” ‘புரிகிறது. விஷயமென்ன?’ என்றேன். ” ‘விஷயம் இதுதான்: சிசு பராமரிப்பு நிலையத்து வேலையிலிருந்து எனக்கு விடுதலை அளியுங்கள். அதோடு கொத்து வேலைப் பயிற்சிப் பள்ளியில் நான் சேருவதற்கு உதவி செய்யுங்கள். அங்கே பெண்களை விருப்பத்துடன் சேர்த்துக் கொள்வதில்லையாம். அதனால்தான் கேட்கிறேன்.’ “நான் அவள் மனத்தை மாற்ற முயன்றேன், ஆனால் அவள் மசியவில்லை. ” ‘என்ன நேர்ந்தது? யாராவது தவறாக நடந்து கொண்டார்களா? குழந்தைகளோடு பாடுபடுவது சலித்துப் போயிற்றா? இல்லை, ஒரு வேளை களைத்துப் போய்விட்டீர்களா? விடுமுறை வேண்டுமா? ஏதாவது ஓய்வு விடுதிக்குப் போக விரும்புகிறீர்களா?’ என்று கேட்டேன். “அவள் வேண்டாம் என்று தலையை அசைத்தாள். ” ‘என்னிடம் தவறாக நடந்து கொள்வதற்கு யார் இருக்கிறார்கள்? குழந்தைகளோ, எனக்கு உயிர். களைப்படைய என்னால் முடியவே முடியாது. அப்படியெல்லாம் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. நான் கொத்து வேலை கற்றுக்கொள்வதற்கு அநுமதி கொடுங்கள்’ என்றாள். அதோடு கூடவே, ‘குழந்தைகள் இல்லத்தில் வேலைகள் ஒழுங்காக நடந்து வருகின்றன. வேலையாட்கள் தேர்ச்சி பெற்று விட்டார்கள். மேல்பார்வைக்கும் ஓர் ஆளைக் குறிப்பிடுகிறேன். அவளை விடத் தகுந்தவர் கிடைப்பது அரிது’ என்று மிகவும் அறிவுப் பொருத்தமாக விளங்கினாள். தன் வேலைக்கு ஓர் என்ஜினியரின் மனைவி பெயரைச் சிபாரிசு செய்தாள். அந்தப் பெண் அற்புதமான அறிவுள்ளவள். “அப்புறம் நான் என்ன சொல்ல முடியும்? ‘அப்படியானால், சரி. பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு ஒருவர் இருக்கிறார், உங்களுக்கும் கொத்து வேலைப் பயிற்சி பெறுவதற்கு மனப்பூர்வமான ஆர்வம் இருக்கிறது. ஆகவே நிர்மாண வேலைத் தலைவரிடம் உங்களைப் பற்றிச் சிபாரிசு செய்கிறேன்’ என்று சொன்னேன். “அவள் எனக்கு நன்றி தெரிவித்தாளே தவிர வெளியே போகவில்லை. ” ‘இன்னும் ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டேன். “’ஆம் இருக்கிறது. உங்கள் யெகோர் உஸ்த்தீனோவ் இன்னும் பொது விடுதியிலே தனியாயிருக்கிறார். அவருடைய மூன்று குழந்தைகளும் காலூகாவில்அவருடைய கிழ அத்தையுடன் இருக்கறார்கள். இது சரியல்ல. நமது புதிய வீடுகள் ஒன்றில் அவருக்குத் தனி இருப்பிடம் அளிக்கப்பட வேண்டும். குழந்தைகளைப் பிரிந்திருப்பது தகப்பனுக்கு எளிதென்று நினைக்கிறீர்களா?’ ” ‘அவள் ஏன் ஒருபோதும் இதைப்பற்றி என்னிடம் சொல்லவில்லை?’ ” ‘அது அவரது சுபாவம். வேலைக்காக என்றால் தொண்டை கிழியக் கத்துவார். தனக்காக என்றால் குளிர்காலத்தில் பனிக்கட்டித் துண்டு கேட்பதற்குக் கூடக் குரல் எழும்பாது. இத்தகைய விஷயங்களை ஒருவர் கேட்கும் வரை காத்திராமல் நீங்களே முடிவு செய்திருக்க வேண்டும்.’ “மறு நாள் நான் யெகோருடன் பேசினேன். அவனுடைய சொந்த விஷயங்களைப் பற்றி ல்யூபோவ் கூறியதெல்லாம் சரி என்று அறிந்து எனக்கு வெட்கம் உண்டாயிற்று. ல்யூபோவைப் பற்றி உஸ்த்தீனோவிடம் விசாரிப்பதற்கு இப்போது தான் முதல் முறையாக எனக்குத் தருணம் வாய்த்தது. ஆகவே துருவித் துருவிக் கேட்டேன். சாதாரணமாகவே அவன் கமுக்கமான பேர்வழி. இப்போது ல்யூபோவ் பெயரைக் கேட்டதுமே வாயை இறுக்க மூடிக்கொண்டுவிட்டான். எங்கள் பேச்சின் பொழுது தரையையே குத்திட்டுப் பார்த்தவண்ணமாய் இருந்தான். அவனிடமிருந்து ஒவ்வொரு வார்த்தையையும் நான் நெம்பு கோல் போட்டு எடுக்க வேண்டியதாயிற்று. ” ‘இந்த ல்யூபோவ் சாபான் இருக்கிறாளே, நல்ல மாதிரி’ என்றேன். ” ‘மோசமில்லை’ என்றான். ” ‘ரொம்ப காலமாகப் பழக்கமுண்டோ?’ ” ‘எட்டு ஆண்டுகளாக.’ ” ‘ஒரே ஊர்க்காரர்களா?’ ” ‘இல்லை. சண்டை நாள்களில் இரண்டு பேரும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம்.” ” ‘உங்களுக்குள் காதல் – கீதல் ஏதாவது?’ “அவன் வறட்டுச் சிரிப்புச் சிரித்தான். ” ‘அப்போது என் மனைவி உயிரோடு இருந்தாள். தவிர மருத்துவமனையிலே காதல் எப்படி? நிறைய பேசிக்கொண்டோம் என்பது உண்மைதான், ஆனால் போர் வீரர்களின் முறையிலே, வாழ்க்கையைப் பற்றியும் மற்ற விஷயங்களைப் பற்றியும்.’ ” ‘நல்லது, இப்போது?’ ” ‘இப்போது ஒருவரையொருவர் பார்க்கும்போது ‘வணக்கம்’, ‘போய் வருகிறேன்’ என்று பொதுவாகச் சொல்லிக்கொள்கிறோம். கட்சிக் கூட்டங்களில் சந்திக்கிறோம். அவள் தான் இப்போது எப்படி ஆகிவிட்டாள் பாருங்களேன்! இந்த வட்டாரம் முழுவதற்கும் அவள் தான் எல்லாரிலும் முதல். இல்லையா?’ ” ‘அவளுக்குக் கொத்து வேலை கற்றுக்கொள்ள வேண்டுமாம். உன் கருத்து என்ன? அநுமதிக்கலாமா?’ [soviet-workers]“இந்தக் கேள்வி அவனைத் திடீரென்று தட்டி எழுப்பியது போலத் தென்பட்டது. ஆனால் கண நேரத்திற்குத் தான். மறு கணமே அவன் முன்போலவே பட்டும் படாததுமாக, ‘இது உங்கள் விவகாரம். அவள் கொத்து வேலையில் நல்ல தேர்ச்சி பெறுவாள் என்பது எனக்குத் தெரியும். எப்போதுமே அவள் எதில் முனைந்தாலும் அதை அடைந்தே நீருவாள். அவள் மாதிரியே அப்படி… ஆமாம், வேறு ஏதாவது என்னிடம் கேட்க வேண்டுமா உங்களுக்கு?’ என்றான். “யெகோர் உஸ்த்தீனோவ் சொன்னது சரியாயிற்று. அரை ஆண்டுக்குள்ளேயே ல்யூபோவ் சாபான் கொத்து வேலைக்காரி ஆகிவிட்டாள். அதுவும் எப்படிப்பட்ட வேலைக்காரி! கஞ்சி போட்டு இஸ்திரி செய்த கௌனும் வெள்ளை வெளேரென்ற தலைக்குட்டையுமாகவே அவளைப் பார்த்து எங்களுக்கெல்லாம் வழக்கமாகிவிட்டது. ஆகவே பயிற்சி முடிந்த பின் கித்தான் உடையும் முரட்டுக்கையுறைகளும் கனத்த ரப்பர் காலணிகளுமாக அவளை எதிரே கண்டபோது விசித்திரமாயிருந்தது. ஆனால் புதிய வேலையும் நொடிப்பொழுதில் அவளுடைய இயல்பான திறமைகள் ஆகியவற்றுடன் கூட, அவளுடைய அறிவு வேட்கை, தன் வேலையில் ஒவ்வொரு புது விஷயத்தையும் கற்றுக் கொண்டு தீர வேண்டும் என்ற உண்மையிலேயே அடக்க முடியாத ஆசை, அவளுடைய முன்னேற்றத்துக்கு உதவுகிறது என்று நான் நினைக்கிறேன். எங்கள் கட்சி உறுப்பினர்களின் அரசியல் பயிற்சி பற்றி ஒரு முறை அறிக்கை தயாரித்தபோது அவர்களுடைய நூலகப் பதிவுச் சீட்டுக்களைப் பார்வையிட்டேன். அடேயப்பா, அந்த ஓர் ஆண்டில் ல்யூபோவ் சாபான் படிக்காத புத்தகமே கிடையாது என்று தோன்றியது! அவ்வளவு புத்தகங்கள் அவள் சீட்டில்! “புதிய வேலையின் நெளிவு சுளிவுகளைத தெரிந்து கொண்டபின்பு ல்யூபோவ் சாபான் தயக்கமின்றி மளமளவென்று முன்னேறினாள். சில மாதங்களில் அவள் குழுத்தலைவி பதவிக்கு உயர்த்தப்பட்டாள். அது முதல்தான் யெகோர் உஸ்த்தீனோவுடன் அவளுடைய தகராறுகள் ஆரம்பமாயின. “நிர்மாணம் பற்றி விவாதிக்கும் பொருட்டு எப்போது கூட்டம் கூடினாலும் ல்யூபோவ் மேடை மீது ஏறி, ஒருவர் பாக்கியில்லாமல் சலித்து எடுத்து விடுவாள். அதிலும் யெகோர் உஸ்த்தீனோவை எல்லாரையும் விடக் கடுமையாக. அவளுடைய வார்த்தைகளை உதறித் தள்ளுவதோ, பதில் பேசாமல் அலட்சியமாக விட்டு விடுவதோ நடவாது. அவள் தான் வெற்றுச் சொல் பேசுவதே கிடையாதே. ஒவ்வொரு சொல்லும் காரியார்த்தமானது. யெகோரால் போனால் போகிறதென்று விடவே முடியாது. அதனால்தான் இரண்டு பேர்க்கும் மோதல்கள் ஏற்படும். அவன் நல்ல வேலையாளி, புது வழிகளைக் கண்டுபிடிப்பவன். தினீப்பர் நீர்மின் நிலையத்தில் பல ஆண்டுகள் வேலை செய்து அநுபவம் பெற்றவன். அவன்கீழ் வேலை செய்த குழுவினரும் எல்லா வகையிலும் அவனுக்கு ஏற்றவர்கள். அவனுடைய சொல்லுக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பார்கள், அது அவனுக்குப் பழக்கமாகி விட்டது. ல்யூபோவ் இப்படி எடுத்தெறிந்து பேசுவதைக் கேட்டு அவனுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வரும். ” ‘அநுபவம் என்னவோ உன்னிடம் ஏராளமாக இருக்கிறது, யெகோர் உஸ்த்தீனோவ், ஆனால் அதை மற்றவர்களுக்கு முழுதும் வழங்க உனக்கு மனம் வருவதில்லை. ஒரு சில தந்திரங்களை உள்ளுக்குள்ளே பதுக்கி வைத்துக் கொள்வதும் இந்த உபரி யுக்திகளால் சுளுவாக முதலிடத்தைத் தட்டிக்கொண்டு போவதும் உனக்கு வழக்கமாகிவிட்டன’ என்பாள். “அவன் அநுபவ அறிவைக் கொண்டு அவளைத் தாக்கப் பார்ப்பான். அவளோ, வீச்சான அறிவால் அவனை மடக்கி விடுவாள். பெரிய ஆள் அவள். சொந்த யோசனையின் பேரில் அவளாகவே சிமெண்ட் ஆராய்ச்சி நிலையத்துடனும் லெனின்கிராட் என்ஜினீயரிங் நிலையத்துடனும் கடிதப் போக்கு வரத்து தொடங்கினாள். புதுப்புது தகவல்கள் எல்லாம் அங்கிருந்து அவளுக்குக் கிடைக்கின்றன. “ஆரம்பத்தில் புது முறைகள் பற்றிய அறிவைமட்டும் கொண்டு அவள் யெகோரைத் தாக்கிவந்தாள். ஆனால் பின்போ, வேலையில் அதிக உற்பத்தித் திறனால் அவனைத் திக்கு முக்காடச் செய்துவிட்டாள். அதற்கு முன்பு யெகோருடன் ஒப்பிடுவதற்கு எவரும் இல்லை. அவனுக்கு ஈடு இணை ஒருவருமே கிடையாது. திட்டத்தில் குறித்த அளவுக்கு இரண்டு மடங்கு நிறைவேற்றிவிடுவார்கள். இதற்காக அவனை எல்லாரும் பாராட்டுவார்கள். இப்போது என்னவென்றால் ல்யூபோவும் அவள் குழுவினரும் அவனை நெருங்கிவந்து விட்டார்கள்; அவன் குதிகாலில் இடறத் தொடங்கிவிட்டார்கள். அவன் ஒரு துளி தளர்ந்தானோ, போச்சு, அவர்கள் கட்டாயமாக முந்திவிடுவார்கள். முந்தியும் விட்டார்கள். போங்களேன். இப்போது வெற்றிச் செங்கொடி ல்யூபோவ் சாபானின் குழு வசம் இருக்கிறது. “உஸ்த்தீனோவுக்கு இதெல்லாம் வேம்பாய்க் கசப்பதாகவும் ல்யூபோவின் பெயரைக் கேட்கவே அவனுக்கு வெறுப்பாயிருப்பதாகவும் கட்சி உறுப்பினர்களான கொத்தர்கள் என்னிடம் சொன்னார்கள். உஸ்த்தீனோவ் இப்போது முன்னிலும் அதிகமாக மௌனம் சாதிக்கலானான். கடப்பாரை கொண்டு கெல்லினால் கூட அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவழைக்க முடியவில்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! கடைசியில் நிலைமை எந்த அளவுக்குப் போய்விட்டதென்றால் அவள் அறைக்குள் நுழைவதும் உஸ்த்தீனோவ் அறையிலிருந்து வெளியேறுவதும் ஒன்றாய் நடக்கும். இந்தத் தகராறு சொந்த விவகாரத்தின் வரம்பை மீறிப் போகிறது என்று கண்டு நாங்கள் கட்சிக் குழுவைக் கூட்டி அவர்கள் இருவரையும் அழைத்தோம். ‘நீங்கள் இருவரும் கட்சி உறுப்பினர்கள். கட்சியைச் சேராதவர்களுக்கு எத்தகைய உதாரணம் நீங்கள் காட்டுகிறீர்கள்…’ என்று குத்திக்காட்டி அவர்களை வழிக்குக் கொண்டுவர முயன்றோம். அவர்கள் வாயே திறக்கவில்லை. ‘நமது இரண்டு தலை சிறந்த கொத்தர் குழுக்களின் தலைவர்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டாமா?’ என்று சொன்னோம். இருவருக்கும் முகம் சிவந்துவிட்டது. குரல் எழும்பவில்லை. நாங்கள் சொன்ன இடித்துரைகளை எல்லாம் தரையில் வைத்த கண் நிமிர்த்தாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கலே தவிர இருவரில் ஒருவராவது வாய்திறக்கவில்லை. ” ‘உங்கள் சண்டைக்குக் காரணம் என்ன என்று கட்சிக் குழுவுக்கு விளக்கும்படி கோருகிறோம்’ என்றோம். “இதைக் கேட்டதும் உஸ்த்தீனோவ் கடகடவென்று சிரித்து, ‘அவளே சொல்லட்டும். நம்மில் எல்லாருக்கும் கற்றுக்கொடுக்கிறாள் அல்லவா?’ என்று சொன்னான். “ல்யூபோவ் அவனை ஏறெடுத்துப் பார்க்காமலே, ‘இல்லை, அவரே விளக்கட்டும். அவரிடம் அபாரமான அநுபவம் இருக்கிறது. இந்த அநுபவக் களஞ்சியம், புதுமையானது எதையும் பார்க்க விடாதபடி அவர் கண்களை மறைக்கிறது’ என்றாள். “ஆக இருவருக்கும் இன்னொரு சொற் போர் தொடங்கிவிட்டது. அவர்களுடைய இந்தப் போக்கு காரணமாகக் கட்சிக் குழு அவர்களைக் கண்டிப்பது அவசியமாகிவிட்டது. “அவர்களை வழிக்குக் கொண்டு வருவதில் அன்றைக்கு எங்களால் ஒன்றும் முடியவில்லை என்று ஒப்புக்கொள்கிறேன். சம்பிரதாயப்படி பார்த்தால் எல்லாம் சரிவரத்தான் நடந்தேறியது. தங்கள் காரியத் தொடர்புகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதாக இருவரும் வாக்களித்தார்கள். இனிமேல் கம்யூனிஸ்டுக்கு உரிய முறையில் மற்றவர்களின் குறைகூறலைக் காது கொடுத்துக் கேட்டு அவற்றுக்கிணங்க நடப்பதாக உஸ்த்தீனோவ் உறுதி மொழிந்தான். அதெல்லாம் கச்சிதமாகத் தான் முடிந்தது. இருந்தாலும் எனக்கென்னவோ சாராம்சத்தில் ஒரு சிக்கலும் தீரவில்லை, அவர்களுடைய பிணக்குக்குக் காரணம் என்ன என்று தெளிவாகவில்லை, எனவே அது அகற்றப்படவில்லை என்று பட்டது. நான் ஏதோ சாக்குச் சொல்லி உஸ்த்தீனோவை நிறுத்திக்கொண்டேன். அவன் புதிய வீட்டுக்குக் குடியேறியது முதல் நாங்கள் இருவரும் அநேகமாக அண்டை வீட்டுக்காரர்கள் ஆகிவிட்டோம். ஆகையால், கட்சிச் செயலகத்திலிருந்து ஒன்றாகவே புறப்பட்டோம். இருவரும் தனியே வழி நடக்கையில் அவனை எப்படியாவது மனத்தைத் திறந்து பேச வைத்துவிடலாம் என்று எண்ணினேன். அது ஆகிற காரியமா? முள்ளம்பன்றி முட்களைத் துருத்திக்கொண்டு பந்து போல் சுருண்டு விடுமே, அப்படிக் கெட்டியாகச் சுருண்டுவிட்டான் அவன். பல்லைக் கடித்துக் கொண்டு ஒவ்வொரு வார்த்தையையும் துப்புவதுபோலப் பேசினான். ” ‘தெரியாமல் ஒருவர் மனத்தை ஒருவர் புண்படுத்தி விட்டீர்களோ ஒருவேளை?’ ” ‘இல்லை.’ ” ‘ஏதாவது பழைய தகராறோ?’ ” ‘எங்கிருந்து?’ ” ‘அப்படியானால் ஒருவேளை உங்களுக்குள் பொறாமையா என்ன, உங்களைச் சைத்தான் வாரிக் கொண்டு போக?’ “இதற்கு அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. பற்களை மட்டும் முன்னிலும் இறுக்கக் கடித்துக்கொண்டான். கன்னத்துத் தசைநார்களெல்லாம் விறைத்து நின்றன. ஒருவேளை இந்த ஆள் அந்தப் பெண் ல்யூபோவ் சாபான் மேல் கண் தலை தெரியாமல் காதல் கொண்டுவிட்டானோ என்று அப்போதுதான் என் மூளையில் உதித்தது. அந்த நிலைமையில் இப்படித் தோன்றியது விசித்திரந்தான் என்று நினைக்கிறீர்களல்லவா? அது சரியே, இருந்தாலும் வாழ்க்கையிலே எதுதான் நடப்பதில்லை?… “ஏதோ போகிற போக்கில் சொல்லது போல, ல்யூபோவ் சாபான் இங்கே முதல் தடவை வந்ததுமே அவனைப் பற்றி விசாரித்தது, அவனுக்குத் தனி வீடு கொடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தது, அவன் குழந்தைகளைப் பற்றிக் கவலை காட்டியது எல்லாவற்றையும் நான் அவனிடம் சொன்னேன். என் வார்த்தைகளையெல்லாம் அவன் மௌனமாக, ரொம்பக் கவனிக்காதது போலக் கேட்டுக்கொண்டிருந்தான். ஆனாலும் அவனுக்குள் விறைப்பும் வேதனை தரும் இறுக்கமும் உண்டாவது போல எனக்குப் பட்டது. திடுமென அவன் நின்றான். ” ‘என்னிடம் எதற்காக நீங்கள் பிரச்சாரம் செய்கிறீர்கள்? அவள் எப்பேர்ப்பட்டவள் என்பதைத் தான் மருத்துவமனையில் பார்த்த போது முதலே அறிவேனே. உலகமெல்லாம் தேடினாலும் அவளைப் போல இன்னொருத்தி கிடைப்பாளோ என்னவோ. அவள் மட்டும், ஓ…’ அவன் கோபத்தோடு கையை உதறிவிட்டு, ‘போய்வருகிறேன்’ என்று மரியாதைக்குக் கூடச் சொல்லாமல், எதிர்ப்பட்ட முதல் சந்துக்குள் திரும்பி விரைந்து நடந்துவிட்டான். “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, உஸ்த்தீனோவுடன் இந்தப் பேச்சு நடந்தது வியாழக் கிழமையன்று. அடுத்த திங்கள் கிழமை நிர்மாண தலத்தை நான் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது ஓர் ஆள் மூச்சுத் திணற என்னிடம் ஓடிவந்து, ‘அணையில் விபத்து! சிமெண்டு பிளாக்கு கொக்கியிலிருந்து நழுவி விட்டது, உஸ்த்தீனோவுக்குப் பலத்த காயம்’ என்று கத்தினான். “அணை அருகாமையில் தான் இருந்தது. எனவே நான் விபத்து நடந்த இடத்திற்கு ஒரே ஓட்டமாகப் போய்ச் சேர்ந்தேன். “யெகோர் உஸ்த்தீனோவ் கித்தான் விரிப்பில் படுத்திருந்தான். இரத்தம் எங்கும் தென்படவில்லை. மூச்சு இழைந்து கொண்டிருந்தது. கண்கள் மூடியிருந்தன. மெழுகு பொம்மை போல அசையாமல் கிடந்தான். அவன் அருகே மருத்துவரும் தாதியும் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் எப்போதும் நடப்பது போலவே, காயமடைந்தவனைச் சுற்றி ஒரு கும்பல் கூடியிருந்தது. இருந்தாலும் அங்கே நிலவிய மௌனத்தில் யெகோர் மிகக் கஷ்டத்துடன் கர் கர் என்று விட்ட மூச்சுக் கூடக் கேட்டது. “திடீரென்று ஒரு பெருங் கூச்சல், நெஞ்சைப் பிளக்கும் பெண் குரல் கேட்டு எங்கள் உடம்பெல்லாம் புல்லரித்தது. ஆடையும் தலையும் ஒரே அலங்கோலமாய், அழுது புலம்பிக் கொண்டு வந்த ஒரு பெண் எல்லாரையும் இடித்து விலக்கி, உஸ்த்தீனோவ் கிடந்த இடத்துக்குச் சென்று, வெட்டுண்ட மரம் போலத் தடாலென்று அவன் அருகே விழுந்தாள். ” ‘யெகோர், என் கண்ணே, என்ன நேர்ந்தது? என் கட்டிக் கரும்பே, கண்ணைத் திறந்து பாரேன்!’ என்று அழுதாள், பாருங்கள், நெஞ்சு வெடித்து விடும் போல அழுதாள். இதைக் கேட்டதும் உஸ்த்தீனோவ் கண்களைத் திறந்தான். அந்தப் பெண் பிள்ளையை ஒரே ஆச்சரியத்துடன் பார்த்தான். தன் மீது அவனுக்கு நம்பிக்கை உண்டாகவில்லை போல் இருந்தது. தான் காண்பது உண்மைதானா, இல்லை சுர வேகத்தில் தோன்றும் மயக்கமா என்று நிச்சயப்படுத்திக் கொள்பவன் போல வெறித்து நோக்கினான். திடீரென்று அவன் கண்கள் பளிச்சிட்டன. அந்தக் காட்சி என் மனத்தில் மிகமிகத் தெளிவாகப் பதிந்தது. படுகாயமடைந்து இப்போதுதான் உணர்வு பெற ஆரம்பித்திருந்த இந்த மனிதனின் கண்களில் ஒளி விட்டது. தூய்மையான இன்பம். வெளியானாகிய நான் அதைக் காண்பது முறையாகாது என்று எனக்குப் பட்டது. பின்பு அந்தப் பெண் அவனை மார்போடு தழுவிக்கொண்டு அவன் தலைமயிரை வருடியவாறே, ‘நீ பிழைத்திருக்கிறாய், உயிரோடிருக்கிறாய், என் அன்பே, என் செல்வமே, எத்தனை ஆண்டுகளாக உன்னை நெஞ்சிலே வைத்துப் பேணிவந்தேன்!’ என்று மெல்லிய குரலில் மொழிந்தாள். அவள் கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் அவன் முகத்தின் மேல் முத்து முத்தாகச் சிந்தியது. “தலைவிரிகோலமாய், சீர்குலைந்து, கண்ணீரும் கம்பலையுமாக விளங்கிய இந்தப் பெண் வேறு எவருமில்லை, ல்யூபோவ் சாபான் தான் என்பது அப்போதுதான் என் அறிவுக்கு எட்டியது. எனக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது. ஆம், அது அவளேதான். எனக்கோ நம்புவதே கஷ்டமாயிருந்தது. நம்மை அறியாமலே பிறருடைய இரகசியத்தில் குறுக்கிட்டுவிட்டோமே என்ற எண்ணத்தால் எனக்கு ஓரே கூச்சமாய்ப் போய் விட்டது. அங்கிருந்த மற்றவர்களும் இதே உணர்ச்சியினால் மறு புறம் திரும்பிக் கொண்டு மெதுவாக நழுவத் தொடங்கினார்கள். மருத்துவர் தமது கருவிகளைத் தோல் பைக்குள் வைப்பதில் முனைந்திருந்தார். நிலைமை என்ன என்று அவரைக் கேட்டேன். ” ‘மோசமில்லை. எலும்புகள் எல்லாம் உருப்படியாக இருக்கின்றன. இவ்வளவு லேசாகத் தப்பியது அவன் அதிர்ஷ்டம் தான்’ என்று சொல்லிவிட்டு ல்யூபோவ் சாபான் பக்கம் திரும்பி, ‘இந்தா அம்மா, அவனை அலட்டாதே. அவனுக்கு இப்போது அமைதி வேண்டும். தழுவுவதெல்லாம் அப்புறம் வீட்டிலே செயது கொள்ளலாம்’ என்றார். ” ‘வீட்டிலே’ என்ற சொல் கேட்டதுமே ல்யூபோவ் சாபான் சட்டென்று நிமிர்ந்து, எழுந்து நின்று, கலைந்த தலைமயிரை முற்றாகக் கட்டிக்கொண்டாள். அவள் முகத்தில் எப்போதும் போன்ற கடுகடுப்பு வந்துவிட்டது. சற்று முன்பு சாதாரணப் பெண் பிள்ளை போலக் கண்ணீர் விட்டுக் கதறி அழுதவள் இவளல்ல என்னும்படியாயிருந்தது அந்த உருமாற்றம். யெகோர் முனகினான். ல்யூபோவ் சட்டென்று அவனைப் பார்த்தாள். அவள் கண்களின் மீண்டும் மென்மை வந்துவிட்டது. பெண்மைப் புன்முறுவல் இந்த உதடுகளிலிருந்து இனி நீங்காது, கருநாவல் கனிகள் போன்ற இந்தக் கண்களில் ஒளிரும் காதல் சுடர் இனி என்றும் மங்காது என்று நான் அறிந்து கொண்டேன். “ல்யூபோவ் சாபானும் உஸ்த்தீனோவும் தங்கள் உள்ளங்களின் உறவைப் புரிந்துகொள்வதற்கு இந்த விபத்துத்தான் உதவியது. “இந்த விபத்து நடக்காவிட்டால் என்ன நேர்ந்திருக்குமோ, யார் கண்டது? அவர்களுடைய ஆழ்ந்த செருக்கும், எங்களுடைய குறுகிய பார்வையும் சேர்ந்து அவர்களை ஒருவரையொருவர் நெருங்கவொட்டாமல் தனிமைப்படுத்தியிருக்கும். ஒரு வார்த்தைகூடச் சொல்லிக் கொள்ளாமல் இருவரும் பிரிந்து போயிருப்பார்கள். “இப்போது உள்ளத்தைச் சொல்லுங்கள், கதை எப்படி, சுவையானதா இல்லையா? சந்தேகமில்லாமல் சுவையானது. கட்சி வேலையில் ஈடுபட்டிருக்கும் என் போன்றவர்களுக்கு இதனால் ஒரு படிப்பினையும் கிடைக்கிறது. மக்களை ஆழ்ந்து அறிந்துகொள்ள வேண்டும், உரிய தருணத்தில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் அந்தப் படிப்பினை. “மேலே சொல்வதற்கு என்ன இருக்கிறது? இரண்டு பேரும் மணம் செய்து கொண்டார்கள். அவன் குழந்தைகளுக்கு அவள் ஆதர்சத் தாயாக விளங்குகிறாள். நிர்மாண சம்பந்தமான கூட்டங்களில் தொண்டை கிழிய விவாதிப்பது மட்டும் இன்னும் நடந்துவருகிறது. ஆனால் ஒன்று. யெகோர் இப்போது தன் தவறுகளை ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறான். திருமணம் பதிவான போது அவள் அவனுடைய குலப் பெயரைத் தனதாக்கிக் கொண்டாள். இந்த ஆறுமாதமாக அவளுடைய பாஸ்போர்ட்டில் ல்யூபோவ் உஸ்த்தீனோவா என்ற பெயரே காணப்படுகிறது. ஆனால் நாங்கள் எல்லாரும் – அவள் கணவன் உள்பட – ல்யூபோவ் சாபான் என்றே அவளை அழைக்கிறோம். “இவ்வளவு தான் கதை. ஆர்வமூட்டுவது என்று தோன்றினால் நீங்கள் பிரசுரித்துக்கொள்ளலாம்.” - பரீஸ் பொலிவோய் (ரஷ்ய அமர இலக்கிய வரிசை – சோவியத் இலக்கிய வரிசை என்ற நூலிலிருந்து) 16 வர்க்கம் ! ஏதோ ஒரு பிரபலமான வெளிநாட்டு கம்பெனிக்கு உடல்தானம் செய்தவன் போலிருந்தது அவனது தோற்றம். சட்டைப் பை, காலர், டீ சர்ட்டின் முன் பக்கம், பின் பக்கம் ஏன் மூச்சுக்காற்றைக் கூட கம்பெனி விளம்பரத்துக்கு இழுத்து விட்டவன் போல, ஒரு தினுசாக சுற்றுப்புறத்தை அருவெறுத்தவன் போல முகத்தைச் சுழித்துக்கொண்டு மூச்சு விட்டான்.வேறு வழியில்லாமல் இந்தப் பேருந்தில் ஏறியவன் போல. பேருந்துக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து கொண்டிருந்தார்கள் மக்கள். வெயிலுக்குத் தொப்பி, காலுக்கு கவர்ச்சியான ஷீ, நெஞ்சுப் பகுதியில் உள்ள டீ சர்ட் பட்டனில் ஸ்டைலாக தூளியாடிய கூலிங் கிளாஸ் என அனைத்து அம்சத்திலும் அவன், அந்த சிறு நகரப் பயணிகளிடம் வேறுபட்டுத் தெரிந்தான். மற்றவர்களைப் போலல்லாமல் நடை, உடை, உடல் மொழியில் மாறுபட்டு இருப்பதனாலேயே ஒரு விதத் தனித்துவமான பெருமிதமும் அவன் பார்வையில் மிதந்தது. அடித்துப் பிடித்து ஏறிய பயணிகளை நாகரிகமற்றவர்கள் போல் வெறித்துப் பார்த்து விட்டு, தனக்கான தனியிடத்தை இந்த உலகம் விட்டு வைத்திருக்கிறதா என்பது போல பேருந்துக்குள் நோட்டமிட்டான். பள்ளிப் பிள்ளைகள் அவனது தோற்றத்தையும், அவனது விலையுயர்ந்த தோள் பையையும் உற்றுப் பார்க்க, அவனது தசைக்கோளங்களில் பெருமிதம் ஏறியது. பேருந்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி, ஒன்றில் மட்டும் ஜன்னலோரம் ஒரு முதியவரும், பக்கத்தில் நரைத்த தலை, கலைந்த தாடியுடன் பழுப்பு வேட்டியை மடித்துக் கட்டிய வண்ணம், வாயைக் குதப்பிக் கொண்டு வெற்றிலை மணத்துடன் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் பக்கத்தில் மட்டும் ஒரு இடம் காலியாக இருந்தது. இதையும் விட்டால் தனது பெருமிதத்தின் சுமையை ஒன்றரை மணி நேரம் தாங்கிக்கொண்டு நிற்க முடியாது என்பதால், இருக்கிற இடத்தில் பக்கத்தில் உள்ள பெரியவருடன் ரொம்பவும் ஒட்டிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் மடியில் பையை வைத்துக் கொண்டு பக்குவமாக அமர்ந்து கொண்டான். “சே! வேட்டிய அவிழ்த்து விட்டுட்டாவது உக்காரலாம். அழுக்கு பிடிச்ச காலோட அப்படியே உட்காந்திருக்காரு” என்று மனதில் எண்ணங்கள் ஓட அவரை ஒரு ஸ்கேன் பார்வை பார்த்துவிட்டு உடலைக் குறுக்கிக் கொண்டான். [07-class-elder]“தம்பி நல்லா உக்காருங்க! ” வாய் வழிய வாஞ்சையுடன் அவர் கொஞ்சம் தள்ளி இடம் கொடுத்தாலும், இந்த வெத்தல பாக்கு எச்சி தெறிக்குறதுக்கு பேசாமலே இருந்திருக்கலாம்! என்ற முகச்சுழிப்புடன் “ஓ.கே! ஓ.கே! ” என்று வெடுக்கென தலையாட்டிக் கொண்டான். பெரியவர் திரும்பவும் பேசுவதற்கான முகக்குறிப்பைப் பார்த்து விட்டவன், வேண்டுமென்றே வேறு பக்கம் முகத்தைத் திருப்பி நோட்டமிட்டான். திடீரென ஒரு சுவிங்கத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சூழலை மென்று விழுங்குவது போல பற்களை அழுந்த அசைத்து சுவிங்கத்தைப் புரட்டி எடுத்தான். அவன் சுவிங்கத்தை எடுத்ததும், அதன் மேல் லாவகத்தையும் பக்கத்திலிருந்த பெரியவர் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். வெற்றிலை மெல்லும் பெரியவரின் வாயை யாரும் விசேசமாக வேடிக்கை பார்க்காமல், இடது பக்கத்தில் நின்றிருந்தவர் சுவிங்கம் மெல்லும் தன் வாயைப் பார்த்தது, உலகமே தன்னை உற்றுப் பார்ப்பது போல அவனுக்கு ‘கெத்து’ கொடுத்தது. மேலும் வெற்றிலைக்காக அசையும் வாயை விட சுவிங்கத்துக்காக அசையும் தனது வாய் நாகரிகத்தின் நுழைவாயில் என்பது போல கர்வம் பிறந்தது போலவும், சுவிங்கத்தை மென்றுகொண்டே சுற்றிலும் இருப்பவர்களை ஒரு மேல் பார்வை பார்த்துக்கொண்டான். பையின் சைடு ஜிப்பைத் திறந்து திடீரென கை அகலப் பொருளை எடுக்க, ஏதோ மந்திரவாதி திடீரென பைக்குள்ளிருந்து மண்டை ஓட்டை எடுத்தது மாதிரி திடுக்கிட்டும், ஆர்வத்துடனும் பக்கத்திலிருந்த பெரியவர் முதல் நின்றிருந்தவர்கள் வரை அதையே நோட்டமிட்டனர். கை அகல செல்போனின் டச் ஸ்கிரீனில் அவனது நுனிவிரல் விந்தை புரிய, “ஏய்! இங்க பார்ரா. என்னமோ வெத்தலைக்கு சுண்ணாம்பு தடவற மாதிரி இப்படி இப்படிங்குறாரு, என்னமா நிறம் மாறுது…” இவ்வளவு மாடர்னான செல் போனை ஒரு வெற்றிலையோடு உவமானம் சொல்ல, பக்கத்தில் வாய்திறந்தவரை ஒரு ‘மாதிரியாக’ பார்த்து விட்டு மேற்கொண்டு டச் ஸ்கிரீனை அலை அலையாக எழுப்பிக் கொண்டிருந்தான். “யா! ஆம் சங்கர். ஸாரி பார் த டிலே. நெக்ஸ் வீக், ஐ வில் அரேன்ஞ்ச். ஸ்யூர், யா யா! பை! தாங்க் யூ!” இந்த முறை டச் ஸ்கிரீனுக்கு பதில் பக்கத்தில் உள்ளவர்கள் அவனது ‘டச்’ உதடுகளை வேடிக்கைப் பார்த்தனர். பெரிய எடத்துப் புள்ள போல இருக்கு! என்றுபொல பொலவென்றுஆங்கிலம் உதிர்த்த அவனது வேகத்தைப் பார்த்து, “தம்பி! காரக்குடிங்களா? இல்ல வெளி நாட்லேந்து வாறிங்களா?” கேட்டது பெருமையாக இருந்தாலும், கேட்டவரின் தோற்றம் திருப்தியளிக்காதது போல, “நோ! ஜஸ்ட் எ விசிட்!” என்று இயல்பு போல பேசியவன், பிறகு உங்களுக்கு புரியாதில்ல என்பது போல பாவனை செய்தவன், “சும்மா, வேற வேலையா!” என்று நறுக்கென முடித்துக்கொண்டான். பேச்சும் புரியல, ஜாடையும் புரியல என்பது போல அவன் பார்க்காத போது அவனை சைடாக பார்த்துக் கொண்ட பெரியவர், நமக்கேன் வம்பு என்பது போல பேச முற்படாமல் வேறு பக்கம் பார்க்கலானார். [07-class]“எம்மாம் நெணல் கெடக்கும், ரோட்ல ஒரு மரம் தெரியுதா பாரு! வெக்க காத்து மூஞ்ச உரிக்குது!” பெரியவர் ஊரைப் பார்த்து பேச, “ஆமா ரோட்டோர வய வரப்பல்லாம், பிளாட்ட போட்டு புட்டானுவ, இருக்கற மரத்தயும் ரோட்ட அகலப்படுத்துறேன்னு வெட்டி சாய்ச்சிபுட்டானுவ. என்னா புல்லு, பூண்டு கெடக்கு? மொதல்ல வீடு மொழுவ மாடு சாணி போடுதா, சொல்லு? காலம் கெட்டுப்போயி, எல்லாம் ‘ஸ்பீடா’ போறானுவளாம், ஸ்பீடா! ” ஜன்னலோரப் பெரியவர் பதிலுக்கு விண்டு வைக்க, பெரிசு எதையோ குத்திக்காட்டுவது போல் உள்ளது என்று அவன் அதுவரை ஏறிடாத அவரை எட்டி ஒரு பார்வை பார்த்துக்கொண்டான். சிறிது நேரத்தில் அவனை வேடிக்கைப் பார்த்தவர்கள், ஆளாளுக்கு தனக்குள் செட்டு சேர்ந்து கொண்டது போல, தங்களுக்குள் பேசிக்கொண்டே வந்தார்கள். சாதாரண கிராமத்து மனிதர்களிடம் சகஜமாகப் பழகுவதற்கு அவனுக்கு மனதளவில் விருப்பம் இல்லாவிடினும், சிறிது நேரத்திற்கு அவனை யாருமே சட்டை செய்யாதது, தனிமைப்பட்டது போல் இருந்தது. அவனே உற்றுப் பார்த்தாலும், பக்கத்திலிருந்தவர்கள் அவர்கள் பாட்டுக்கு தமக்குள் பேசிக்கொண்டே, ஊர், வயல், தண்ணீர், விவசாயம், மழை என்று தேவையான விசயங்களை அலசி விவாதித்து வர, அதற்குள் கலந்து பேசவும், விவரம் தெரியாமல் அந்நியப்பட்டது போல இருந்தது அவனது மனநிலை. “தோ… தோ… இத பாரு! ஊரு வந்திருச்சி… அழாத… இந்தா மம்மு! சாப்புடு! தோ… பாப்பா பாரு… தோ…” என்னென்னவோ சொல்லி சமாதானப்படுத்தினாலும் அந்தக் குழந்தை பெரிய குரலெடுத்து அழ ஆரம்பித்தது. ”தோடு பாரும்மா… அய்… பஸ்சு… ட்ரூ… வேகமாக போவுது பாரு! தோ… பழம்! சாப்பிடுறீ… தங்கம்! ” எதைக் கொடுத்தாலும் தூக்கிக் கடாசுவது போல கையை வீசி, காலை உதைத்து ஆ..ங்.. ஆங்… என்று ஊரைக்கூட்டியது குழந்தை. முன்னிருக்கையில் குழந்தை வீறிட்டு அழ, இந்தச் சந்தர்பத்தில் தானும் சக பயணிகளிடம் கலந்துகொள்வது போல, தானும் முயற்சியெடுத்தான் அவன், “ஹாய்… அழக் கூடாது… ந்தா செல் போன்… டச் ஸ்கிரீன் படம் பாரு…” அவன் மீண்டும் முயற்சித்து “இங்கவா!” எனக் கையை வேறு நீட்ட, அது முன்பைவிட இன்னும் பயந்து அலறியது போல கத்த, திடீரென பக்கத்திலிருந்த பெறியவர், “ஏன் ஆயி! எங்க செல்லம்ல, தங்க சம்பால்ல ரோ… ரோ… ரோ… அழக் கூடாது, ஏம்மா பிள்ளய இப்படி காத்தோரம் கொடு” என்றுவெற்றிலை பாக்கு மணக்க! எழுந்து இரு கரம் நீட்ட… அதுவரை குமுறி அழுத குழந்தை வெடுக்கென பெரியவர் கைக்கு அழுதுகொண்டே தாவியது, நரைத்த தாடியில் முகம் சேர்க்க, “அய்யய்யோ தங்கம்… அழுது முகமெல்லாம் வேர்த்திடுச்சே…” என்று அழுக்குத் துண்டில் குழந்தையைத் துடைக்க, அது செருமிக் கொண்டே, அவர் முகத்தை உற்றுப்பார்த்து சந்தேகத்துக்கிடமின்றி சேர்ந்து கொண்டது. பெரியவர் தாடியை விரல்களால் நீவிக்கொண்டே, அவனது மனம் வீசும், மழ மழவென்ற சேவிங் செய்த முகத்தையும், கைகளில் உள்ள காஸ்ட்லி பொருட்களையும் ஒருவித ஆராய்ச்சியுடன் குழந்தை உற்று நோக்கியது. பளிச்சென, பந்தாவான லைஃப் ஸ்டைல் உள்ள தன்னிடம் வராத குழந்தை, அந்த அழுக்கான பெரியவரிடம் தாவியதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானவன் போல் அவனும் குழந்தையையே உற்று நோக்கி யோசிக்க ஆரம்பித்தான். -சுடர்விழி ________________________________________________________________________________ புதிய கலாச்சாரம் – மே 2013 ________________________________________________________________________________ 17 கான்ஸ்டபிள் அய்யம் பெருமாள் கதை ! இந்தக் காற்று எங்கேயிருந்து உற்பத்தியாகி வருகிறது என்று தெரியவில்லை. எப்போதும் வீசிக் கொண்டேயிருப்பதன் நோக்கம் என்னவென்றும் தெரியவில்லை. எங்கிருந்தோ எப்படியோ எதற்காகவோ வருகிறது. மரங்களைப் பிடித்து உலுக்குகிறது, தலை மயிரைச் சிலுப்புகிறது. இந்த மரங்களைப் பாருங்கள்; நானும் இந்தப் பூங்காவை எனது சின்ன வயதில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், இவையும் சும்மாவே இருப்பதில்லை. இவற்றுக்கு அலுப்பே ஏற்படாதோ? இந்த மரங்களைச் சுற்றி ஓடியாடும் இந்தச் சிறுவர்களும் தான். இவர்களுக்கெல்லாம் அலுப்பே வராதா? [10-police-1]தம்பி, நீங்கள் கொஞ்சம் வசதியாக சாய்ந்து உட்காருங்கள். என்னுடைய கதை பெரிது. என்ன சொன்னேன்?ஆங்… சிறுவர்கள். பாருங்களேன், ஓவென்று கத்திக் கொண்டு இலக்கின்றி ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். எதற்கு ஓடுகிறார்களோ தெரியவில்லை. இவர்கள் மரங்களைக் கவனிக்கும் அளவுக்கும் கூட இங்கேயே அமர்ந்திருக்கும் என்னைக் கவனிப்பதில்லை. மரியாதை தெரியாதவர்கள். சரி, அவர்களை விடுங்கள்; நான் என்னைப் பற்றிச் சொல்கிறேன், கேளுங்கள். நான் அய்யம்பெருமாள். முன்பொரு காலத்தில் இந்தப் பெயரை உச்சரிக்க வாயே வராது ஊர்க்காரப் பயல்களுக்கு. எனக்கு இரண்டு பெண்டாட்டிகளும், பதிமூணு பிள்ளைகளும் உண்டு. அதில் எட்டு பையன்கள், அஞ்சு பெட்டைகள். என்ன முகத்தைச் சுளிக்கிறீர்கள்?எங்கப்பாருக்கு மூணு பெண்டாட்டிகளும், ரெண்டு கூத்தியாள்களும் உண்டு, தெரியுமா? நான் ரெண்டாம் தாரத்தின் நான்காவது மகன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பதினேழு வயது வித்தியாசம். அப்பாவிடம் அம்மப்பா காசு வாங்கியிருந்தார். திருப்ப முடியவில்லை; மகளைக் கொடுத்து விட்டார். அப்பா கடைசியாக சேர்த்துக்கொண்ட கூத்தியாளுக்கும் அப்பாவுக்கும் இருபத்தியெட்டு வயசு வித்தியாசம். அது போகட்டும். நான் என்னுடைய பத்தொன்பதாவது வயதில் பட்டாளத்தில் சேர வேண்டுமென்று ஆசைப்பட்டேன். வேலையும் கிடைத்தது. பங்காளி தான் சொன்னான், அங்கே மீசை மட்டும் தான் முறுக்காக வைத்துக்கொள்ள முடியுமாம். மற்றபடி அதிகாரிகளுக்கு குனிந்து கொடுத்தால் தான் பிழைப்பு ஓடுமாம். இந்த அய்யம்பெருமாளை யார் என்று நினைக்கிறீர்கள்? என் பூட்டனுக்குப் பூட்டன் ராஜா. என் ரத்தம் ஆண்ட ரத்தம். முடியாது என்று சொல்லி வந்து விட்டேன். நிறுத்துங்கள், நீங்கள் அப்படிச் சிரிக்கக் கூடாது. அதன் பின் என்னுடைய இருபதாவது வயதில் போலீசில் சேர்ந்தேன். அன்றைக்கெல்லாம் கான்ஸ்டபிள் அய்யம்பெருமாள் என்றால் நடுங்குவார்கள். இப்போதைய தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள். தீட்டிய பீச்சுவாவை விட எனது பூட்சுகளின் பளபளப்பு கண்ணைப் பறிக்கும். அதைப் போட்டுக் கொண்டு நடக்கும் போது வரும் டக் டக் சத்தம் இருக்கிறதே… மலம் கட்டிக் கொண்டவனுக்குக் கூட அந்த சத்தத்தைக் கேட்டால் பேதி புடுங்கும். ராயக்கோட்டை ஸ்டேசனில் தான் எனக்கு போஸ்டிங் கிடைத்தது. அது போக்கிரிப் பயல்களுக்கு பேர் போன ஏரியா. அப்போது சீனிவாச அய்யங்கார் தான் அங்கே இன்ஸ்பெக்டராக இருந்தார். கெட்டிக்கார மனுஷன். எவனையும் கை நீட்டி அடித்து தீட்டுப்பட்டுக் கொள்ள மாட்டார். அந்த ஸ்டேசனில் இந்த அய்யம்பெருமாள் தான் எல்லாம். [10-police-2]இருவத்திரெண்டு வருசம் அந்த ஸ்டேசன்ல தான் சர்வீசு. தப்பு செய்யாதவனைக் கூட ஒத்துக்கிட்டு கைநாட்டுப் போட வைக்கிறதுல நான் கில்லாடின்னு அய்யாவே சொல்லுவாரு. லாடம் கட்றதுன்னா என்னான்னு தெரியுமா தம்பி? துணிமணியெல்லாம் உரிஞ்சிட்டு மர டேபிள் மேலே குப்புறப் படுக்க வைக்கணும். சரியா முட்டாங்காலுக்குப் பின்னேயும் பொடனிலயும் லத்திக் கம்ப வச்சி அழுத்திப் பிடிச்சிக்கிடணும். லாடம் கட்றதுக்குன்னே தனி லத்தி வச்சிருந்தேன். தெனமும் காலைல விளக்கெண்ண போட்டு வெயில்ல வச்சிடுவேன். வெயில் சாய அது நல்லா முறுக்கேறி இருக்கும். சாதா லத்திக் கம்பை விட இது கொஞ்சம் மொத்தமாவும், நீளமாவும் இருக்கும். சாயங்காலம் ஆறு மணி தான் சரியான டைம். அஞ்சு நிமிசம் அடி; அஞ்சு நிமிசம் கேப்பு. நமக்கும் ரெஸ்டு வேணுமில்லையா? ரத்தம் வராது.பெருசா வீக்கம் தெரியாது. கோர்ட்டுல சொன்னாலும் எடுபடாது. ஆனா, உள்ளங்கால்ல இருக்கிற நரம்பு மொத்தமும் அப்டியே சிதைஞ்சி போயிரும். அப்பால அவனால வாழ்நாள் முழுக்க நேரா நிற்கவே முடியாது.சப்பாணி தான். இன்னிக்கும் ராயக்கோட்டைக்குப் போனீங்கன்னா வயசான கேசுங்க எதுனாச்சியும் குட்டிச் சுவத்தாண்ட தடுமாறிட்டே போவும். அது கிட்டே போயி அய்யம் பெருமாளுன்னு சொல்லிப் பாருங்க தம்பி. லாடத்துக்கு ஒத்து வராத கேசுங்களுக்கு வேற வைத்தியம் வச்சிருந்தேன். அது குப்புறப் போட்டு லத்தியால புட்டத்தில அடிக்கிறது. உள்ளே தசையெல்லாம் கூழாகிடும். ஒக்கார முடியாது, மல்லாந்து படுக்கவும் முடியாது, நிண்டு கிட்டே தான் எல்லாம். சாவுற வரைக்கும் நிண்டு கிட்டே தான் பீ பேளணும். என்னோட இருவத்திரெண்டு வருச சர்வீசுல நான் கேட்டதுக்கு இல்லைன்னு எந்த அக்கீஸ்டும் சொன்னதில்லே.எவனைப் புடிச்சாந்தமோ அவந்தான் குத்தவாளி. நிஜத்துல தப்பு செஞ்சவன் மாட்டலைன்னா கூடப் பராவாயில்ல. மாட்டியவன் கதியைப் பாத்தாலே உறக்கத்துல கழியணும். அடுத்த முறை தப்புத் தண்டா செய்யும்போது அய்யம்பெருமாளோட மூஞ்சி கண்ணு முன்னாடி வரணும்.வரும். [10-police-3]நீங்க படிச்சவரு தானே? ஏன் தப்பு நடக்குதுன்னு சொல்லுங்க பார்க்கலாம். பயம் இல்லாம போனது தான் தப்பு நடக்கக் காரணம்.போலீசோட வேலை தப்பைத் தடுக்கறதில்லை தம்பி. பயத்தை உண்டாக்கறது. பயம் வந்தாலே ஒழுக்கமும் வந்துடும்.பயம் வர வைக்கணும்னா எவனை வேணும்னாலும் அடிக்கலாம். அடிச்சே கொல்லலாம். நல்லவனோ கெட்டவனோ, போலீசுனா எவனா இருந்தாலும் நடுங்கணும். இதை நான் அப்பவும் நம்பினேன், இப்பவும் நம்பறேன், இனியும் நம்புவேன். இதுக்காகவே என்னோட போலீசு வேலையே போனிச்சி. வேலையில்லாதப்பவும் நான் போலீசாவே இருந்தேன். அந்த முறுக்கு தான் என்னை இங்கே கொண்டாந்து அநாதையா போட்டிருக்கு. இருந்தாலும் சொல்றேன், நாங்கெல்லாம் அடிக்கறதுக்காவே பிறப்பெடுத்தவங்க. போலீசு திமிரு எவனுக்கு ரத்தத்துல ஓடுதோ அவந்தான் போலீசாக முடியும். வேலை போச்சின்னு சொன்னேன்ல? இருங்க! அந்தக் கதைய சொல்றேன். ராயக்கோட்டைல அப்ப கொஞ்ச நாளா தொடர்ந்து களவு போயிட்டிருந்தது. இது புது ஆளுங்க, எவன்னு தெரியலை; ஸ்டேசனுக்கு ஒழுங்கா மாமூல் தந்திட்டு களவாங்கற பழக்கமான ஆளுங்க கிடையாது. தெரிஞ்ச பயன்னா அரெஸ்டு கணக்கு காட்டலாம், அடிச்சதுல கொஞ்சத்த மீட்டுக் கொடுக்கலாம். எவன்னு தெரியாம யாரைப் பிடிக்க முடியும்?அதான் தொடர்ந்து ராத்திரி ரவுண்ட்ஸ் போக ஆரம்பிச்சோம். ஒரு மாசம், பகல்லயும் டூட்டி பாத்துட்டு ராத்திரியும் ஊரைச் சுத்தி வந்திட்டு, சுத்தமா கண்ணுல தூக்கமில்லே. உடம்பே சூடேறிப் போனிச்சி. அது கூட பரவால்ல! மேலதிரிகாரிங்க கூப்பிட்டு கெட்ட வார்த்தைலயே திட்றான். பிடிச்சே ஆவனும், எவனையாச்சும் பிடிச்சி நிப்பாட்டியாகணும். எவனாச்சியும் ஆப்புடுவானான்னு கண்ணுல வெறியோட அலைஞ்சி திரிஞ்சோம். ஒருத்தனும் சிக்கலை. ஒரு மாசம் இப்படியே போச்சி. அப்ப ராயக்கோட்டைல வாரா வாரம் மாட்டுச்சந்தை நடக்கும். அந்த மைதானத்துக்குப் பக்கம் தான் எனக்கு டூட்டி.ஒ ரு நாள் ராத்திரி மாட்டுச் சந்தை மைதானத்துக் கொட்டகை பக்கத்துல ஒரு உருவம் சுருண்டு படுத்திருந்தது. எழுப்பி யாருன்னு கேட்டேன், பேந்தப் பேந்த முழிச்சான்.ஸ்டேசனுக்கு கொண்டாந்துட்டேன். ரெண்டு ரவுண்டு அடிய போட்டப்புறம் சூரமங்கலத்தான்னு சொன்னான். மாடு புடிக்க வந்தானாம், கெடைக்கலையாம். வெள்ளனைக்குத் தான் ஊருக்கு வண்டியாம், அதான் அங்கனயே படுத்திருந்தானாம். [10-police-4]சரிடா! களவானிப் பயல்ல ஒருத்தன்னு ஒத்துக்கோ, கோர்ட்டுல மூணு மாசமோ ஆறு மாசமோ போடுவாங்க. பொறவு வந்து பாத்துக்கலாம்னு படிச்சிப் படிச்சி சொல்லிப் பாத்தேன், கேட்கலை. நீங்களே சொல்லுங்க தம்பி, ஒரு மாசம் தேடியும் ஒருத்தனும் ஆப்புடலைன்னா எவ்வளவு கேவலம். எவனாச்சியும் போலீசுக்கு பயப்படுவானா? இவன உள்ளே போட்டா ஒரிஜினல் களவாணி தைரியமா வெளியே தலைகாட்டுவானில்லே, பிடிக்கலாமில்லே? பக்குவமா சொல்லிப் பார்த்தோம், கேட்கலை. சோறு வாங்கிக் குடுத்து கெஞ்சிப் பார்த்தேன், கேட்கலை. அந்த ஆத்திரத்துல தான் லேசா பொடனில ஒரு தட்டு தட்டுனேன்.சுருண்டு விழுந்தவன் எந்திரிக்கவே இல்ல. அவன் விதி அவ்வளவு தான்னு எழுதியிருக்கும் போல. நான் என்னா செய்ய முடியும்? போய்ச் சேர்ந்துட்டான். அப்புறம் அது பிரச்சினையாச்சி. தற்கொலைன்னு சொல்லிப் பார்த்தோம். ஜட்ஜைய்யா ஏத்துக்கிடலை.வேலை போச்சி, சம்பளமும் போச்சி.ஊருக்கு வந்திட்டேன். ஆனாலும் கூட வேலை பார்த்த எவனும் என்னை மறக்கல. வேலை போயி இத்தினி வருசமாகியும் மறக்காம மாசா மாசம் வசூலாகிற மாமூல்ல இருந்து ஒரு பங்கைக் கொண்டாந்து கொடுத்துட்டுப் போறாங்க. அன்னிக்கு ஒரு வார்த்தை நான் சொல்லியிருந்தா டிபார்ட்மெண்டு மானம் போயிருக்கும். ஆனா நான் சொல்லல; அந்த நன்றிய அவங்களும் மறக்கல. அப்பாரு சம்பாதிச்ச சொத்து, மாசா மாசம் மாமூலு, எனக்கென்ன கவலை? எவன்கிட்டேயும் சாப்பாட்டுக்கு போயி நிக்க வேண்டிய நிலைல நான் இல்லை. போலீசா இருந்து ஊரையே ஆட்டி வச்சவன், கெவருமெண்டு சம்பளம் வாங்கினவன், நான் எதுக்கு இன்னொருத்தன் கிட்டே கைநீட்டி நிக்கணும்? அதான் வேற வேலைக்குப் போகல. அப்புறம் ஏன் இப்படி பிச்சைக்காரக் கோலத்துல மரத்தடில கிடக்கிறேன்னு தானே கேட்க வர்றீங்க? சொல்றேன். எனக்கு ரெண்டு பொண்டாட்டியும் பதிமூணு பிள்ளைகளும் இருக்காங்கன்னு சொன்னேனில்ல? நான் ஊர்க்கு வந்த பின்னே ஒவ்வொருத்தருக்கா கலியாணம் நடந்தது. எந்தக் கலியாணத்துக்கும் நான் ஏற்பாடு செய்யலை, கலியாண வேலைகளும் செய்யலை. நான் போலீஸ்காரன், எவங்கிட்டயும் தேவைன்னு போயி நிக்க முடியுமா? என் முன்னே நடுங்கிட்டு நின்ன இந்த ஊர்க்காரப் பயலுவ முன்னாடி நான் போய் நிக்கவா? முடியாதுன்னு சொல்லிட்டேன். எல்லாம் என் பெஞ்சாதிங்க தான் பாத்துக்கிட்டாங்க. கல்யாண நாளுக்கு பட்டை சந்தனமெல்லாம் பூசிக்கிட்டு மண்டப வாசல்லே சேர் போட்டு உக்காந்து கிட்டா போதாதா? இப்படியே ஒரு பத்துப் பதினஞ்சி வருசம் போச்சி. [10-police-5]இந்தப் பதினைஞ்சு வருசத்திலே ரெண்டு பெஞ்சாதிகளும் பூவும் பொட்டுமா போய்ச் சேந்துட்டாளுங்க. நமக்கும் வயசாகி நரம்பு தளர்ந்து ரத்தம் சுண்டிப்போக ஆரம்பிச்சது. அப்பத் தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது. என்னதான் முறுக்கு இருந்தாலும், கெவுருதி இருந்தாலும் வயசான காலத்துல நம்ம பாத்துக்கிட ஆளு வேணுமில்லே?கிடைல கெடந்துட்டா யாரு வந்து பீ மூத்திரம் வாரிப் போடுவா? அதான் ரெண்டாம் சம்சாரத்தோட கடேசி மவளை கூடமாட ஒத்தாசையா வச்சிக்கிடலாம்னு முடிவு பண்ணேன். அவளுக்கு தகைஞ்சு வந்த எந்த வரனும் அமைஞ்சிடாம பாத்துக்கிட்டேன். நான் தானே பெத்தேன், என்னை கவனிச்சிக்கிடறது தானே அவளுக்கு முக்கியம், இதுல எந்தத் தப்பும் இல்லைன்னு எனக்குத் தெரியும். ஆனா என் மவனுவளுக்குப் புரியலை. இப்படித்தான் ஆறு மாசம் முன்னே அவளப் பார்த்திட்டுப் போன பையன் வீட்டுக்கு ஒரு மொட்டைக் கடுதாசி போட்டேன். இதே மாதிரி தான் அதுக்கு முன்னே நாலைஞ்சி வரனை நிப்பாட்டி இருக்கேன். ஆனா, இந்தப் பையன் வீட்டுக்காரவுங்க கடுதாசியோட வீட்டுக்கு வந்துட்டாங்க. மூத்த மவனுக்கு அதில இருக்கறது என்னோட கையெழுத்து தான்னு தெரிஞ்சி போச்சி. நான் பார்க்க வளந்த பய, அன்னிய வரைக்கும் என் முன்னே நேரா நிக்க பயந்த பய. ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசத் தெரியாதவனுக்கு எங்கேருந்து தான் அப்படி ஒரு கோவம் வந்திச்சின்னு தெரியலை. துருப்பிடிச்ச பழைய பம்பு ஸ்டவ்வ எடுத்தி அடிச்சிட்டான். நான் எத்தனையோ பேர அடிச்சிருக்கேன். எத்தனையோ பேர் என்கிட்டே கதறியிருக்காங்க. ஆனா வலின்னா என்னான்னு அன்னிக்குத் தான் தெரிஞ்சது. தோள் பட்டை நொறுங்கிடிச்சி; கால்ல கூட எலும்பு முறிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். வேற எங்கேயெல்லாம் அடி விழுந்திச்சின்னு எனக்கு சொல்லத் தெரியல. எல்லா இடத்திலேயும் வலிக்கிற மாதிரியும் இருக்கு, வலிக்காத மாதிரியும் இருக்கு. எழுந்து நிக்க முடியலை, நகர முடியலை, உடம்பை அசைக்கக் கூட முடியல. ஒரு மாசம் அப்படியே புழக்கடைலயே கிடந்தேன்.திங்கிறது, பேள்றது, மோள்றது எல்லாம் அங்கேயே தான். தரையோட தரையா கெடந்ததுல முதுகுல புண் விழுந்து புழு பூத்திருச்சி. அதுக்கு மேல என்னை வீட்ல வச்சிக்க முடியாதுன்னு இங்கே இழுத்துட்டு வந்து போட்டுட்டாங்க. அதிலேர்ந்து இப்ப அஞ்சி மாசமா இதோ இந்த மரத்தோட மேடை தான் நம்ம ஜாகை. [10-police-6]இன்னும் ஒரு வாரமோ பத்து நாளோ தெரியல. இந்தக் கட்டை சாய்ஞ்சா காரியம் பண்ண ஆளில்லே, பஞ்சாயத்துக்காரன் தான் வந்து அள்ளிட்டுப் போவணும். ஆனா இந்த நிலைமைக்காக நான் வருத்தப்படலை.கூனிக் குறுகிப்போக மாட்டேன். என் மீசைய பாத்தீங்கள்ல? அதான் நான். இந்த அய்யம் பெருமாள் மண்ணு பாக்க தலை வணங்க மாட்டான். இந்த தெருவே அதிர நடந்து போயிருக்கேன். என்னோட பூட்சு சத்தம் கேட்டு நடுங்கின பயலெல்லாம் இப்ப எச்சில் இலை மாதிரி அசிங்கமா பாக்கறான். அதான் அழுவையா வருது. ஏதோ உங்கள்ட்ட சொல்லணும்னு தோணிச்சு, சொல்லிட்டேன். நான் செய்ததுல ஏதும் குத்தம் சொல்றா மாதிரி இருக்கா தம்பி? அந்த மனிதர் சொல்லி முடித்து விட்டு என் முகத்தையே பார்த்தார். பின் மிக நீளமாக ஆயாசமான ஒரு பெருமூச்சை விட்டார். ஒரு இயலாத கோணத்தில் நூற்றாண்டுகளைக் கடந்த அந்த மரத்தினடியில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்டு மேடையில் கிடந்தார். கடந்த சில மாதங்களாகவே இதே இடத்தில் இதே கோணத்தில் இப்படியே தான் கிடக்கிறார். அந்தப் பூங்காவில் காலை நேர நடைப்பயிற்சிக்கு வரும் எவரும் அந்த இடத்தைக் கடக்கும்போது ஒரு கெட்ட வீச்சத்தை உணர்வார்கள். அது அவரிடமிருந்து தான் வந்து கொண்டிருந்தது. பேச்சில் அவரிடம் தொனித்த அந்தத் திமிரை அவரது தோற்றத்தில் காண முடியாது. கெச்சலாய், கசக்கிப் போட்ட கந்தல் துணி போல் கிடந்தது அவருக்கே கட்டுப்படாத அவரது உடல்.கடந்து செல்லும் எல்லோருடைய முகத்தையும் ஏதோ சொல்ல வருவது போல் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டேயிருப்பார். தொய்ந்து போயிருந்த அவரது உடலில் இருந்து வெள்ளை நிற புழுக்கள் நெளிந்து வெளியேறியவாறே இருந்தன. அந்த உடலுக்குள் இன்னும் இயங்கிக் கொண்டிருந்த அசிங்கம் பிடித்த மனதின் அழுக்குப் படிந்த எண்ணங்களின் நாற்றம் தாங்காமல் அவை தப்பியோட முயற்சிப்பதைப் போலவே இருந்தது. உடலை விட்டு வெளியேறும் புழுக்களெல்லாம் வெப்பம் தாளாமல் மரத்தின் வேர் அருகே சென்றடைந்ததும் தானாகச் செத்து வீழ்ந்து கொண்டிருந்தன. செத்த புழுக்கள் உரமாவதாலோ என்னவோ மரம் உற்சாகமாய் அசைவது போல் தோன்றியது. நடைப்பயிற்சிக்குப் பின் நான் அமர்ந்து ஓய்வெடுக்கும் வழக்கமான மேடை எதிர்புறத்தில் தான் இருக்கிறது; இன்றைக்கு ஏதோவொரு உந்துதலில் தான் இங்கே அமர்ந்தேன். கேட்க வேண்டிய தேவையேதும் இன்றி அவர் முகத்தைப் பார்த்ததும் தானாகவே சொல்லத் துவங்கி விட்டார். தன் வாழ்க்கையின் நியாயங்கள் என்று அவரே கருதியவற்றை லட்சக்கணக்கான முறை தனக்குள்ளேயே திரும்பத் திரும்ப சொல்லி ஒத்திகை பார்த்திருக்க வேண்டும். என்னிடம் இந்தக் கதைகளையெல்லாம் சொன்னது எனது ஒப்புதலை எதிர்பார்த்தல்ல, அது ஒரு அனிச்சை செயலாகத் இருக்கக் கூடும். அல்லது, என்னிடம் இருந்து வந்திருக்கக் கூடிய ஒரு சிறிய தலையசைப்பையாவது அவர் எதிர்பார்த்திருக்கலாம். அது அவருக்கு இந்தக் கட்டத்தில் ஓரு தேறுதலை வழங்கியிருக்கலாம். அப்படியொரு தேறுதல் கிடைக்காத ஏமாற்றம் அவரது முகத்தில் தொனித்தது. பேசி முடிந்த பின் நீண்ட நேரம் எனது முகத்தை இமை தட்டாமல் உறுத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். எதிர்பார்த்தது அதற்கு மேல் கிடைக்காது என்பது உறுதியான பின் வேறெங்கோ வெறித்துப் பார்க்கத் துவங்கினார். காலை மணி ஏழு. தினசரி அலுவல்களின் நீண்ட வரிசை மூளையில் ஒரு சிறு அணிவகுப்பு நடத்தத் துவங்கவே, அவரிடம் ஒன்றும் சொல்லாமல் எழுந்தேன். பூங்காவை விட்டு வெளியேறினேன். “”ஏய் கிழவி, ரோட்டுல கடை போடக் கூடாதுன்னு ஒனக்கு எத்தினி வாட்டி சொல்றது” பூங்காவின் வெளியே சாலையோற பூக்காரக் கிழவியிடம் வீரம் காட்டிக் கொண்டிருந்தார் யாரோ ஒரு அய்யம்பெருமாள். எண்ணெ ய் காணாத நரைத்த தலையை சங்கடமாய்ச் சொறிந்து கொண்டே கருத்துச் சுருங்கிய முகத்தில் எந்தச் சலனமும் காட்டாமல் ஒரு இருபது ரூபாய்த் தாளை மடக்கி நீட்டினாள் அந்தக் கிழவி. பூங்காவிலிருந்த நூற்றாண்டுகளைக் கடந்த அந்த மரம் காற்றில் மெல்லச் சடசடத்துத் தலையசைக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு அது காத்திருக்கும், நம்பிக்கையோடு. -மாடசாமி. ________________________________________________________________________________ புதிய கலாச்சாரம் – மே 2013 ________________________________________________________________________________ 18 கருப்பாயி ! நான் கண்ட பெண்களில் மிகவும் அழகானவள் இந்த ஆயி. பார்த்த உடன் பிடித்துப் போகுமளவு இலட்சணமாக இருப்பாள். [பெண்] உழைத்துப் பிழைக்கும் ஒரு சிறு விவசாயி குடும்பத்தில் பிறந்தவள் இந்த ஆயி. (எங்க ஊரில் பெண் பிள்ளையை ஆயி என்று செல்லமாக அழைப்பார்கள்). ஆயியை சின்ன வயதிலிருந்தே எனக்கு தெரியும். மிகவும் கொழு கொழு குழந்தையாக, துறு துறுவென்று இருப்பாள். கருப்பா இருந்தாலும் களையாக இருக்கிறாள் என்று கிராமத்தில் ஆயியை தூக்கி கொஞ்சாதவர்கள் கிடையாது. ஆயியை கடந்து செல்லும் யாருக்கும், ஒரு நிமிசமாவது எடுத்து அணைக்கத் தூண்டும் வசீகரம் அவளிடம் இருக்கும். அவள் பழகுவதற்கு மிகவும் எளிமையானவள். ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு தட்டாமல் செய்வாள். அக்கம் பக்கத்து குழந்தைகளை பெற்றோர் இல்லாத நேரத்தில் மணிக்கணக்கில் பார்த்துக் கொள்வாள். தெருவோரத்தில் இருக்கும் வயதான பாட்டிக்கு குளிக்க கொள்ள தண்ணி எடுத்து கொடுப்பாள். தன் கூட பழகும் தோழிகளுக்கு கஷ்டம் என்றால் தான் வைத்திருக்கும் நகையை அம்மாவுக்குத் தெரியாமல் அடகு வைக்க கொடுப்பாள். தெருவில் நடமாடும் குழந்தைகளோ, பெரியவர்களோ பசியோடு இருக்கிறார்கள் என்று தெரிந்தால் சாப்பாடு போடாமல் விடமாட்டாள். ஒரு கிராமத்துப் பெண் என்ற முறையில் இந்த பண்புகளை எல்லாம் அங்கே பல பெண்களிடம் பார்க்கலாம் என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லுமளவு ஆயியிடம் இந்த நேசம் அழகாக குடி கொண்டிருந்தது. இருந்தாலும் இவையெல்லாம் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். தான் கருப்பாக இருக்கிறோம் என்ற உண்மை அவ்வப்போது அவளை கொஞ்சம் கலங்கடிக்கும். இல்லை அவளது ஆழ்மனதில் அது மாறாத வடுவாக இருக்கிறது என்றும் சொல்லலாம். அதுவும் மிகவும் சிறிய வயதிலேயே இந்தக் கவலை அவளிடம் இருந்தது. இனி அவளது கதையை பேச்சு மொழியிலேயே சொல்கிறேன். அதுதான் எனக்கு இயல்பாக வரும். அவள் வீட்டருகில் மனிதர்கள் குளிக்காத, ஆட்டு, மாட்டுக்கு பயன்படுத்துற ஒரு குளம் இருந்துச்சு. அஞ்சு வயசுல எந்த நேரம் பார்த்தாலும் அந்த கொளத்துல தான் குளிச்சுகிட்டே இருப்பா. பார்க்கறவங்க எல்லாரும் அழச்சுட்டு வந்து வீட்டில விட்டு திட்டுவாங்க. தவறி விழுந்தா என்னாவது, பாத்துக்கங்க என்பார்கள். அவங்க விட்டுட்டு போன மறு நிமிசமே சோப்பையும், லோட்டாவையும் (சொம்பு) தூக்கிட்டு ஓடிருவா. “ஒரு நாளைக்கு எத்தன தடவடி குளிப்ப” என்றதற்க்கு, “நான் செவப்பாகர வர குளிப்பேன்” என்று அஞ்சு வயசுல அவள் சொன்னது இன்னும் என் காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு. இப்போது அவ வளந்து பெரியவளாயி கல்யாணமும் முடிஞ்சிருச்சு. இப்பயும் அப்படிதான் தன் கருப்பு கலருக்காக உள்ளுக்குள் வேதனையை வைச்சுக்கிட்டு வெளியில வேடிக்கையா பேசுவா. திருமணத்துக்கு பிறகு ஊருக்கு வந்தவ என்னை பார்க்க வந்திருந்தாள். மத்தியான நேரம் இருக்கும். “என்ன செய்றக்கா” என்றபடி வந்தா. “வா, வா,” என்றபடியே, “பாப்பாவ குளிப்பாட்ட கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, பாசிப்பயறு, கடலப் பருப்பு, எல்லாத்தையும் சேத்து அரைச்சத சலிச்சுட்டு இருக்கேன்” என்றேன். “ஏன் ஒரு மாதிரியா இருக்க முகமெல்லாம் கருத்து போய் இருக்கு” என்றேன். “நீ வேற என் வேதனைய அதிகமாக்காத” என்றாள். “ஏன் என்ன ஆச்சு” என்றேன். “எங்கம்மா இப்படியெல்லாம் அரச்சு குளிப்பாட்டியிருந்தா நான் நல்ல கலரா வந்துருப்பேன்லே”அப்டின்னா. “உனக்கு எப்பவும் விளயாட்டுதான். யாரு எப்படி கிண்டலடிச்சாலும் சிரிச்சுகிட்டே போற. எந்த நேரமும் உன் கலர பத்தி நீயே பேசி தானாகவே கிண்டலடிக்கிற. மத்தவங்க உண்னை கிண்டல் செஞ்சாலும அத இருக்கிறத்தான சொல்றாங்கன்னு சகஜமாக எடுத்துட்டு போற, ஆனா உள்ளுக்குள்ள கவலையும் படற. நல்ல பொண்ணுடி நீ” என்றேன். [முகம்] “யார் சொன்னா நான் கவலைப்படலேன்னு. அதெல்லாம் மறக்கற மாதிரியா சொல்றாங்க, நான் என்ன நினைப்பேன், எப்படி வலிக்கும் என்பதெல்லாம் அவங்களுக்கு முக்கியமில்லை. நா சின்னப் புள்ளையா இருந்தப்ப கிண்டல் செய்யறதா நெனைச்சு சொன்னாங்க. நீ இந்த அளவு கருப்பா இருந்தா எவன்டி ஒன்ன கட்டிக்குவான்னு, இன்னைக்கு வரையும் சொல்லிட்டுதான் இருக்காங்க. கிண்டல் பண்றதா நெனச்சு மனசுல ஆணி தச்சா மாதிரி சொல்றாங்க. என்னோட கலர நெனச்சு வருத்தபடாத நாளே கெடையாது. கருப்பா இருப்பவங்க வாழவே தகுதி இல்லங்கர அளவுக்கு மனுசங்க படுத்தி வக்கிறாங்க. கருப்பா இருக்குறேன்னு கவலப்படாத, அப்படின்னு ஆறுதல் சொல்றது போல என் கலர ஞாபகப்படுத்தி கிட்டேதான் இருப்பாங்க. கருப்பா இருந்தாலும் களையா இருக்கா, கருப்பா இருந்தாலும் காலேஜ்ஜெல்லாம் படிச்சுல்ல இருக்கா, நீ கருப்பா இருந்தாலும் உன் வீட்டுக்காரரு நல்ல சிகப்பா இருக்காரு, பிள்ள ஒன்னப் போல கருப்பா பெத்துக்காம உன் வீட்டுக்காரர் போல செகப்பா பெத்துக்க. இப்படி யார் எது சொன்னாலும் என் கலரோட சேத்துதான் சொல்றாங்க. என் வாழ்நாள் பூராவும் கலரப்பத்தி கவலப்பட வைச்சுகிட்டேதா இருப்பாங்க” என்றாள். “தெனதெனம் இத சந்திச்சுகிட்டுதானே இருக்கேன். நாந்தா உங்கிட்ட சொல்லியிருக்கேனே யாரெல்லாம் எப்படியெல்லாம் சொன்னாங்கன்னு” என்றாள்.   ஆமா, ஆயி அப்பப்ப என்கிட்ட சொல்லியவற்றில் சிலதைத்தான் உங்ககிட்ட சொல்றேன். இனி வருவது ஆயி நேரடியாக பேசியவை: “பள்ளியில் என் பேருல ஒரு பொண்ணு இருந்துச்சு. அந்த பொண்ணு செவப்பா இருக்கும். கூட படிக்குற பிள்ளைங்க, என் பேரோட சேத்து கருப்பையும், அவ பேரோட சேத்து சிவப்பையும் சொல்லுவாங்க, வாத்தியாரு மொதக் கொண்டு என்ன கருப்பாயின்னுதான் கூப்பிடுவாறு. ஏன்னு கேட்டா ” நீ நம்ம சாதிடி, எனக்கில்லாத உரிமையான்னு” சொல்லுவாறு. “ஒருத்தர் கேட்டாரு நீ யாரோட பொண்ணு, உங்க அப்பா பேரு என்னா. நானும் சொன்னேன். அப்படியா நம்பவே முடியல, பறத்தெருல கொண்டு விட்டா நீ எங்க பிள்ளன்னு சத்தியம் செஞ்சுதான் அழச்சுட்டு வரணும் அப்டின்னாரு”. (கருப்புங்கரது கலரைத் தாண்டி தாழ்த்தப்பட்ட சாதியாவும் பாக்கப்படுது.) ”நானும் என் கூட்டாளியும் கல்லூரிக்கு போயிட்டு இருந்தோம். என் கூட்டாளி நல்ல சிகப்பா இருப்பா. நாலு பசங்க ஒக்காந்து அரட்டையடிச்சுட்டு இருந்தாங்க. நாங்க அவங்களை கடந்து போய்ட்டோம். உஸ்…. உஸ்…-இன்னு சத்தம் கொடுத்தானுங்க திரும்பி பாத்தேன். சைகையிலேயே உன்ன இல்லா அந்த பெண்ண கூப்பிடுன்னான். எனக்கு அவனுங்க அப்படி பெண்கள அசிங்க படுத்துறானுங்களேங்கர கோபம் வராம, கருப்புங்கரதால நம்மள வேண்டான்னுட்டு அவள கூப்பிட சொல்றானேன்னு கோபமும் சிரிப்பும் வந்தது”. “பள்ளிக்கு, கல்லூரிக்கு போகும் போது எங்க மாமா வீட்ட கடந்துதான் போவேன். என்ன பாத்து, மாமா அவங்க பிள்ளைககிட்ட பூச்சாண்டி வருது பாரு என்பாரு. என்ன எங்க பாத்தாலும் மாமா பசங்க பூச்சாண்டின்னுதான் கூப்பிடுங்க. என் பேர் அவங்களுக்குத் தெரியாது. என் கல்யாணத்துக்கு வந்தப்ப கூட பூச்சாண்டி கல்யாணத்துக்கு நானும் வருவேன்னு அடம் பிடிச்சு வந்ததா சொல்லி எங்கிட்ட சந்தோச பட்டுக்குறாங்க.” “ஒரு உறவினர் அவங்ளோட நாலு வயசு பையனையும் கூட்டிட்டு வீட்டுக்கு வந்திருந்தாங்க. முதலில் ஒதுங்கியே இருந்த அந்த பையன் பிறகு என் கூட விளையாடினான். வீட்டுக்கு போகும் போது அந்த அக்காவுக்கு முத்தம் கொடுத்துட்டு வா போவோம் என்றார்கள். நான் அந்த அக்காவுக்கு முத்தம் கொடுக்க மாட்டேன் அந்த அக்கா கருப்பா அசிங்கமா இருக்காங்க என்றான். மற்றவர்கள் கொல்லுன்னு சிரிச்சாங்க. நானும் சிரிச்சேன். ஆன என் கண்ணுல கண்ணீர் வந்ததை யாரும் பாக்கல.” “ஒரு நாள் சுடிதார் எடுத்துட்டு வந்தேன். எங்க அம்மா சொல்லுது இது என்ன ஓங்கலருலேயே எடுத்துருக்க வேற கலரே கெடைக்கலயா” [முகம்] “வீட்டுல எல்லாரும் சாப்பிட்டுகிட்டு இருந்தோம். என் கல்யாண பேச்சு பத்தி பேசுணாங்க. ரெண்டு மூணு எடத்துல கேக்குறாங்க, நமக்கு சரிப்பட்டு வர்ற மாதிரியான எடத்துல குடுப்போம் அப்படின்னாங்க அம்மா. சாப்பிட்டுட்டு இருந்த அண்ணனுக்கு என்ன தோணுச்சோ. செவப்பா வர்றதுக்குன்னே என்னென்னமோ விக்கிறாய்ங்களே எதையாவது வாங்கி தடவி செவப்பா மாறு என்றான். சொன்னதோடு மட்டும் இல்லாம ஊட்டியிலேருந்து ஏதோ எண்ணையை வரவழச்சும் கொடுத்தான்.” “நான் ஒருத்தர காதலிக்கிறேன்னு வீட்டுல சொன்னே. முதலில் மற்றவர்களை போலத்தான் ஒத்துக்கல. பிறகு அந்த பையன பாக்கணும்ன்னு சொன்னாங்க. பாத்துட்டு வந்து என் அக்கா சொன்னா அந்த பையன் செவப்பா அழகா இருக்கான். நீ கருப்பா அசிங்கமா இருக்க, இதல்லாம் நடக்காது. எங்களுக்கு நம்பிக்கை இல்ல. அவங்க வீட்டுலயும் ஒத்துக்க மாட்டாங்க. அவ்வளவு செவப்பா இருக்குற பையனுக்கு எப்படி ஒன்ன கட்டுவாங்க.” “மாப்பிள்ள வீட்டுலேருந்து பொண்ணு பாக்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. வீடு கலகலப்பா இருந்துச்சு. என் தோழி ஒருத்தி வந்திருந்தா. என்னை கேலி செய்தா. தனுஷின் படிக்காதவன் படத்துல வர்ர ஆர்த்தியை பெண் பார்க்கும் சீனை வைத்து என்ன ஆர்த்தி கேரக்டரில் பொருத்தி நையாண்டி செய்தாள். (நான் சிரிச்சு சிரிச்சு பேசிட்டே இருப்பனா, அம்மாவும், அப்பாவும் ரசிச்சு ரசிச்சு கேட்டுட்டே இருப்பாங்க) இதை சொல்லிட்டு அவ விழுந்து விழுந்து சிரிச்சா. நானும் சிரிச்சுக்கிட்டே யோசிச்சேன். இந்த காமெடியில கருப்புங்குறது அசிங்கம்ணு எவ்வளவு கேவலமா சொல்லி இருக்காணுங்க.” “கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு வந்திருந்த சொந்தக்காரங்க எல்லாருமே, மாப்பிள்ள இவ்வளவு அழகா கலரா இருக்காரே பொண்ணு இப்படி கருப்பா இருக்கே எப்படி இந்த கல்யாணம் நடக்குது. வரதட்சண எதுவும் நெறைய செஞ்சாங்களா. இல்ல மாப்பிளய கட்டாய படுத்துனாய்ங்களான்னு பொலம்பி தீத்துட்டாங்க. மேல காலேஜ் தோழி பற்றி சொல்லியிருந்தேனே அவளும் கல்யாணத்துக்கு வந்திருந்தா. போட்டோ எடுத்திருந்தோம். அதை பார்த்த பக்கத்து வீட்டு அக்கா என் மொகத்த மறச்சு என் தோழியையும் அவரையும் பார்த்து நல்ல சோடி செவப்பா அழகா இருக்காங்க என்றாள்.” “மறுவீட்டுக்கு வந்திருந்தோம். என் அப்பா வயல் வேலை முடிச்சுட்டு வந்தார். வந்தவர் பின்பக்கமாக வந்தார். என்னப்பா இப்படி வர்றீங்கன்னு கேட்டேன். ரொம்ப கருப்பா தெரியிரேன், அதனால குளிச்சுட்டு வாறேன் என்றார். என்னடா நம் வியாதி அப்பாவுக்கும் தொத்திகிச்சான்னு விழுந்து விழுந்து சிரிச்சேன்.” “கல்யாணத்துக்கு மேக்கப் போட ஆள் வேண்டாம் அசிங்கமா தெரியும் என்றார்கள். நான் கேட்கவே இல்ல. எப்படியாவது கொஞ்சமாச்சும் கலரா தெரிய மாட்டோமா அப்டின்னு ஒரு ஆசையில 7000 ரூபாய் கொடுத்து பியூட்டி பார்லர்லேர்ந்து ஆள் வரவச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டேன். அதப் பாத்து அனைவரும் சொன்னது கரகாட்டகாரி மாதிரி இருந்துச்சுன்னுதான். கரகம் ஆடுற பெண்களும் நம்மள மாதிரி கருப்பா இருந்து மேக்கப் போடுறவங்களோன்னு நினைச்சேன். எண்ண வழிய, வழிய, முன்ன இருந்தத விட ரொம்ப கருப்பா இருந்துச்சு என்றார்கள். நாம கருப்பா பயங்கரமா இருக்கோன்னு நெனச்சேன், ஆனா மேக்கப் போட்டதுக்கு பிறகு பயங்கரமா கருப்பா இருப்போம் போல, சரி விடுங்க.” “ஒரு நாள் நானும் என் கணவரும் வெளிய போயிட்டு வந்தோம். என் மாமியார் என் கணவனுக்கு மட்டும் திருஷ்டி சுத்தி போட்டாங்க. ஏன் அவருக்கு மட்டும் சுத்துறீங்க எனக்கு கெடயாதான்னேன். கருப்பா இருக்குறவங்களுக்கு திருஷ்டி விழாதுன்னாங்க. இன்னொரு நாள் சொன்னாங்க போற எடத்துலயெல்லாம் கேக்கறாங்க, கருப்பா இருக்குற அந்த பொண்ண எப்படி ஒம்மவனுக்கு கட்டுனேன்னு. நீங்க என்னா சொன்னிங்க என்றேன். அவன் தலையெழுத்து அப்டின்னு சொன்னே வேற என்ன சொல்ல என்று என் மாமியார் கூறியதும் என் உடல் கூசியது”. “தோழர் ஒருத்தர சந்திச்சேன். அவர் சொன்னார் ஆயி நீங்க கருப்பா இருப்பதை அசிங்கமா நெனைக்கிறிங்க. அதுதான் நம்மோட திராவிட நிறம். செவப்புங்கறது எல்லாம் பின்னாடி கலந்து உருவானது. கருப்புதான் நம்ம ஒரிஜினல் கலரு, அதுதான் ஆரோக்கியம். எந்த வெய்யில்லயும் ஒண்ணும் செய்யாது. அதுவும் இல்லாம நீங்க ஒரு விவசாயி பொண்ணு, நீங்க இப்படிதான் இருப்பீங்க, அதுதான் பெருமையுங் கூட. திருமணத்துக்காக பியூட்டி பார்லர் போய் முகத்த பேசியல் பண்ணப் போறதா சொல்றீங்க அதெல்லாம் தேவையில்ல. கருப்புதான் உங்களுக்கு அழகு. ஒரு மனிதனுக்கு புற அழகு முக்கியமில்லை. அக அழகுதான் முக்கியம். அது உங்களுக்கு நிறைய இருக்கு. அழகுங்கிறது வயது ஆக ஆக அழிந்து போகும். நாம் செய்யும் நல்ல செயல் தான் நிலைத்து நிக்கும். நீங்க இப்படி கருப்பா இருப்பதுதான் உங்கள் அழகு என்று சொன்னவர் சொல்லிய சில மணி நேரத்துக்கெல்லாம் அவர் குழந்தையை பார்த்து மனைவியிடம் சொல்கிறார். வரவர பாப்பா ஆயி கலருக்கு வந்துரும் போலருக்கே என்றார். என்னதான் பேசினாலும் உங்களுக்குள்ளும் கலரப்பத்தின நெனப்பு இருப்பது தான் உண்மை. தனக்கு தனக்குன்னு வந்தா நெஞ்சு படக்கு படக்குன்னு அடிச்சுக்குன்னு சொல்வாங்க அது இதுதான் போலருக்குன்னு அவருகிட்ட சொன்னேன். அவரு சும்மா விளையாட்டுக்குன்னு மழுப்புனாரு.” ஆயி சொன்ன கதைகளில் ஒரு சிலவற்றைத்தான் மேலே கூறினேன். சொல்லாத கதைகள் அதிகம் என்றாலும் கருப்பு பிரச்சினைகளை புரிந்து கொள்ள மேற்கண்ட கதைகளே போதுமானதுன்னு நினைக்கிறேன். ஆயி அப்பப்ப சொல்லி வருத்தப்பட்ட நினைவிலிருந்து வெளியே வந்த நான், “கவலைப்படாதே அவர்களெல்லாம் அறிவு கெட்டவர்கள், மற்றவர் மனம் புண்படாமல் பேச தெரியாதவர்கள். ஒங்கிட்ட இருக்குற நல்ல கொணந்தான் முக்கியம். மத்தவங்களுக்கு நீ செய்ற உதவிதான் ஒசந்தது. நீ நெனக்கிற மாதிரி கலருக்கு மதிப்பு கெடையாது. இதையெல்லாம் மனசுல போட்டு கொழப்பிக்காம வேலைய பாரு. கலரா நமக்கு சோறு போட போவுது” என்றேன். “நீ நெனைக்கிறா மாதிரி என்னோட கலர கிண்டல் பண்றவங்க மட்டும் காரணம் இல்ல. ஒன்னப்போல என்ன கிண்டல் பண்ணாதவங்களும், நான் வருத்தப்பட்றதுக்கு ஒரு காரணம். கலரு ஒரு மேட்டறே இல்லன்னு சொல்ற நீயே ஒம்பிள்ளைக்கு அமெரிக்க பௌடரு, அமெரிக்க சோப்பு  (ஜான்சன் அண்ட் ஜான்சன்), உள்ளூரு கஸ்தூரி மஞ்சள், பூலாங்கெழங்கு, பச்சபயிரு…-ன்னு போயிட்டே இருக்கியே நீ கலர பாக்கலயா? இல்ல இந்த சமூகம்தான் கலரை பாக்காம இருக்கா?” என்றாள் ஆயி. என்னிடம் பதில் இல்லை.  – வேணி. 19 சுஜாதாவின் ‘மத்யமர்’ : நடுத்தர வர்க்கத்தின் போலி அறம்! ‘கல்கி’யில் சுஜாதா: மத்யமரைப் பற்றி ஒரு மத்யமர் “இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. அவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள்; பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகரியங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள். பக்தி, காதல், பரிவு, பாசம், தியாகம், நேர்மை போன்ற குணங்களைத் தேவைக்கும் அவசரத்துக்கும் ஏற்பச் சற்று மாற்றிக்கொள்பவர்கள். சமூகம் வாசல் கதவைத் தட்டுவதைக் கேட்காதவர்கள்… இந்த மவுனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு. மத்யமர் (நடுத்தரவர்க்கம்)” என்ற பீடிகையுடன் ‘கல்கி’ இதழில் ஏப்ரல் மாதம் முதல், வாரம் ஒரு சிறுகதை எழுதுகிறார் சுஜாதா. இதுவரை 8 சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு கதையின் மீதும் வாசகர் கடிதங்களைப் பிரசுரித்து அதற்குப் பரிசும் கொடுக்கிறது கல்கி. தோற்றத்தில் நடுத்தர வர்க்கத்தை எள்ளி நகையாடுவதைப் போல அமைந்திருக்கும் இந்தக் கதைகளை பெரும்பாலான வாசகர்கள் பாராட்டுகிறார்கள். தன்னுடைய வர்க்கம் கேலிக்குள்ளாக்கப்டுவதைக் கண்டு சீறாவிட்டாலும் சீராட்டுகிறார்களே இந்த வாசகர்கள். இது விநோதமாகவல்லவா இருக்கிறது! –என்பது ஒரு கேள்வி. தன்னுடைய எழுத்தைத் தின்று தனக்குச் சோறு போடும் தன்னுடைய வர்க்கத்தையே சுஜாதா கேலி செய்கிறாரே, இதுஎப்படி. ஏன்? பார்ப்பன, மேல்சாதி நடுத்தர வர்க்கத்தைமட்டுமே நம்பி நடத்தப்படும் கல்கி இதழ் இத்தகைய கதைகளை ஏன் பிரசுரிக்கிறது? இப்படிப் பல கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதற்கு சுஜாதாவின் கதைகளுக்குள் நாம் செல்ல வேண்டும். வாசகர்கள் அனைவருமே இவற்றைப் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அக்கதைகளின் சுருக்கத்தை முதலில் பார்ப்போம். ஒரு கல்யாண ஏற்பாடு அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஐயங்கார் பையனுக்கு அவனுடைய பெற்றோர் சென்னையில் பெண் பார்த்துப் பேசி முடிப்பதுதான் கதை. ‘மணமகள் தேவை’ விளம்பரத்தின் மூலம் அதே சாதியில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து அந்தப் பெண்ணின் வீட்டுக்குப் பெண் பார்க்கப் போகின்றனர் பையனின் பெற்றோர். பரஸ்பர பேச்சுவார்த்தைகளில் போலித்தனம் பொங்கி வழிகிறது. வரதட்சிணையும் இன்ன பிறவும் மிகவும் நாசூக்காகப் பேசி முடிக்கப்படுகின்றன. பெண் பார்க்கும் படலத்திற்கு புடவை கட்டிவந்த பெண் பையனின் பெற்றோர் கிளம்பும் போது சட்டை பாண்ட் போட்டிருக்கிறாள். வீட்டிற்கு வந்தபின் பையனின் அம்மா தன் கணவனிடம் “சுரேஷூக்கு கச்சிதமா பொருந்தும். அமெரிக்கால ஃபேஷனா இருக்கறதுக்கு தோதுப்படும்.” “அதை அவர்கிட்ட சொல்ல வேண்டாமா?” கணவன் “எதை” “அமெரிக்காவிலே உன் பையன் நீக்ரோ பெண்ணைக் கல்யாணம் பண்ணிண்டு டைவோர்ஸ் வாங்கினதை!” “நீங்க பேசாம இருங்கோ. அது முடிஞ்சு போன கதை!” பெண்ணின் தந்தை தன் மனைவியிடம். “அதைஅவாகிட்ட சொல்ல வேண்டாமா?” எதை?” “டெல்லியில ஒரு மாசம் உம்பொண்ணு அந்த பஞ்சாபிப் பையனோட…” “நீங்க பேசாம இருங்கோ. அது முடிஞ்சு போன கதை….” புது மோதிரம் நவ நாகரீகத்தின் வாசனைகளுடன் வளர்க்கப்பட்டு அடுப்படி வாசனைக்கு வாழ்க்கைப்பட்ட நடுத்தர வர்க்கப் பார்ப்பனப் பெண் பத்மா தன் மகளை சினிமா நடிகையாக்க முயற்சிப்பது கதை. கணவனும் மனைவியும் மகளுடன் சினிமா இயக்குனரை அவரது நட்சத்திர ஓட்டல் அறையில் சந்திக்கிறார்கள். மகளுக்கு இணையாகத் தாயும் இளமையாக இருப்பதை பேச்சுவாக்கில் கொஞ்சம் அழுத்தமாகவே குறிப்பிடுகிறார் இயக்குனர். மகளை எப்படியாவது நடிகையாக்கிப் பார்க்க அவளுக்குள்ள வெறியை மனதில் குறித்துக்கொள்கிறார். அடுத்த முறை தன்னை சந்திக்க வரும் பத்மாவிடம் “உங்க விருப்பமில்லாம நான் எதுவும் செய்ய விரும்பலை. உங்களுக்கு இஷ்டம்னா கதவை உள்பக்கம் சாத்திக்கலாம். இல்லை. கதவு திறந்தே இருக்கு” என்று ‘கவுரவமாக’ தன் விருப்பத்தை வெளியிடுகின்றார் இயக்குனர். மகளை எப்படியும் நடிகையாக்கி விடுவது என்று முடிவு செய்கிறாள் பத்மா. தர்ட்டி ஃபார்ட்டி நஞ்சுண்டராவ் ஒரு பெங்களூர்வாசி. பெங்களூர் நகர வளர்ச்சிக் குழுமத்திலிருந்து மனை ஒதுக்கித் தருவதாக அழைப்பு வருகிறது. வரிசைப்படி மனை கிடைக்க பல வருடம் ஆகுமென்றும வேறு ஒரு பார்ட்டியிடமிருந்து குறைந்த விலையில் மனை ஒன்று வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டுகிறான் வளர்ச்சி குழும குமாஸ்தா சிவண்ணா. மனையையும் காட்டுகிறான். பிராவிடண்டு ஃபண்டு லோன் வாங்கி, மனைவியின் நகையை அடகுவைத்து, பெண் கல்யாணத்துக்கு சேமித்த தொகையையும் சேர்த்து அறுபதாயிரம் ரூபாயை சிவண்ணாவிடம் கொடுத்து பத்திரத்தை வாங்கிக் கொண்டு மனைக்குப் போனால் அங்கே வேறொருவர் வேலி கட்டிக் கொண்டு இருக்கிறார. பார்த்த மனைக்குப் பக்கத்து மனைதான் வாங்கிய மனை. வாங்கிய மனையின் மையத்தில் ஒரு குன்று. பணம் திரும்ப வராது. கோர்ட்டுக்குப் போனாலும் ஜெயிக்காது. “நஞ்சுண்டராவின் சுவாச மூக்கு துடித்து பெரிதாக மூச்சு விடத் தொடங்கினார். முகம் சிவந்து கைநடுங்க அந்த சிவன்ணாவை…. சிவண்ணாவை அப்படியே ஒரு கடப்பாரையை எடுத்து அவன் மண்டையைப் பிளந்துரணும்” மறுநாள் அலுவலகத்திலிருந்து திரும்பிய உடனே கடப்பாரையுடன் வெளியே கிளம்புகிறார் நஞ்சுண்டராவ். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் கவலைப்பட்டு நடுங்கி அவரது மனைவியும் நண்பர்களும் அவரைத் தேடிக் கிளம்பும் நேரத்தில் கையில் கடப்பாரை, கிழிந்த சட்டையுடன் எதிர்ப்படுகிறார். “அய்யோ, ஏன் இப்படி மிரள மிரளப் பார்க்கிறீங்க? என்ன பண்ணீங்க?” மனைவி. “அந்தப் பாறைய கடப்பாறையால் தட்டிப் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமா ஒடச்சுரலாம். நாளையிலேர்ந்து நீயும் வா கோதாவரி ஒத்தாசைக்கு. ரெண்டு பேருமா சேர்ந்துண்டு உடைச்சுரலாம்” அறிவுரை லஞ்சம் கதவைத் தட்டுகிறது பஞ்சம் ‘கதவைத் திற’ என்று கிசுகிசுக்கிறது. நெஞ்சம் தடுமாறுகிறது. தயக்கத்துடன் கதவைத் திறக்கிறது கதை. ஒரு பைசா லஞ்சம் வாங்காமல், ஆபீஸ் ஜீப்பை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தாமல், கஷ்டப்பட்டும் நேர்மையாக வாழ்ந்த தந்தையின் மகன் என்ற முறையில் தீயாய் இருக்கிறான் ராமலிங்கம். அவன் மனைவி ராமலிங்கத்தையும் லஞ்சம் வாங்கச் சொல்கிறாள். ராமலிங்கத்திற்கு மனப்போராட்டம், அப்பாவை சந்திக்கச் செல்கிறான். “ஒரு ஆளு பில்லு பாஸ் பண்ணினா எழுபதாயிம் தர்றதாச் சொல்றான்… நான் கடன்லே இருக்கேன். மீனாட்சி வாங்கு வாங்குன்னு போட்டு உலுக்கறா… ஆனா லஞ்சம் வாங்க இஷ்டமில்லை. உங்களப் பத்தி நெனப்பு வர்றது. எப்படிப்பா சமாளிச்சீங்ங்க?… எப்படி உங்களுக்கு அத்தனை மனபலம் இருந்திச்சு? அந்த ரகசியத்தைச் சொல்லுங்கப்பா.” அப்பா சற்றுநேரம் மௌனமாக இருந்தார். “சொல்றேன் கிட்ட வா” என்றார். மெல்லக் குரலை தாழ்த்தி “லஞ்சம் வருதுன்னா வாங்கிடு” என்றார். “என்னப்பா சொல்றீங்க?” என்றான் ராமலிங்கம் அதிர்ச்சியடைந்து. “ஆமாடா… நான் வாழ்நாள் முழுதும் லஞ்சம் வாங்காம என்னத்தைக் கண்டேன். பரம்பரை வீட்டை வித்துட்டு புதுசா வீடு கட்டி முடிக்காம ஒழுகுது. உங்கம்மாவுக்கு வைத்தியம் பார்க்க முடியலை. இத்தனை பேர் இருக்கீங்க. மகனுக, மகளுக, யாரும் என்னைத் தீண்டறதில்லை. நீயே கடைசியா பாரு! மூணு வருஷம்! எங்கிட்ட மட்டும் லஞ்சம் வாங்கிப் பணம் காசு இருந்தா இப்படி உதாசீனம் பண்ணுவீங்களா? சொல்லுப்பா. அந்தக் கதி உனக்கு வராமலிருக்க வாங்குப்பா. தாராளமா வாங்கு . உன் பொண்டாட்டி சொல்றதுதான் சரி. வாங்கு.” ஜாதி இரண்டொழிய: பொதுத்துறை நிறுவனம் ஒன்றின் அதிகாரி நரசிம்மன் ‘தகுதியுள்ள’ உயர் சாதிக்காரர்களுக்கு வேலை தரமுடியாமலும், ‘தகுதியற்ற’ தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேலை தரவேண்டிய சூழ்நிலையையும் எண்ணிப் பொருமுவதுதான் கதை. அந்த நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தவர்களில் ரமேஷ் எல்லாவற்றிலும் உயர் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் பல நேர்முகத் தேர்வுகளைச் சந்தித்திருந்தும் வேலை கிடைக்காத, ஒரு மகன்; நான்கு சகோதரிகளுக்குத் திருமணம் செய்து தரவேண்டிய பொறுப்பில் உள்ளவன். இருந்தும் தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து ஒன்றை அவனுக்கு ஒதுக்கி வேலைதர அரசு விதியும், தேர்வுக்குழுவில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி அதிகாரியும் தடையாய் இருக்கிறார்கள். அடுத்து வந்த ஷீலாவிடம் பெயருக்கு சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. நாகரிக மிதப்பும், பணிவின்மையும், தகுதியின்மையும் காரணமாக அவளுக்கு வேலை தரவேண்டாமென்று நினைக்கிறார் நரசிம்மன். அவள் போனதும் “வாட் டு யு ஸே மிஸ்டர் சித்தார்த்தன். இவளுக்கு வேலை கொடுக்க வேண்டுமா?” என்றார் நரசிம்மன் . “ஏன் அதில் என்ன சந்தேகம்?” “இந்தப் பெண் பாக்வார்டு கிளாஸா? தந்தை சென்ட்ரல் கவர்ன்மென்ட் லாபில் டைரக்டர். ஸ்விட்ஸர்லாந்து எல்லாம் சுற்றிவிட்டு வந்திருக்கிறாள்.” சித்தார்த்தன் “அந்தப் பெண்ணின் காஸ்ட் சர்டிபிகேட்டைப் பாருங்கள்” என்றார். ஷீலாவின் பெயருக்கெதிரில் ஸூட்டபிள் என்று எழுதிக் கையெழுத்திட்டார் நரசிம்மன். அவர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து காரில் கிளம்பும்போது ரமேஷ் முனிசிபல் குழாயில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான். ஷீலா தன் தந்தையின் அலுவலகக் காரில் கிளம்பிச் சென்று கொண்டிருந்தாள். சாட்சி: மளிகைக் கடைக்கும், கோயிலுக்கும் போவதைத் தவிர வேறு எந்தவிதத்திலும் சமூகத் தொடர்பு இல்லாத சரளா என்ற இளம் மனைவி ஒருநாள் மளிகைக்கடைக்கு கடுகு வாங்கப் போனபோது கண்ணெதிரே இரண்டு ரவுடிகள் பெட்டிக் கடைக்காரரைக் கொல்வதைப் பார்த்து விடுகிறாள். பீதியடைந்து வீட்டுக்கு ஓடுகிறாள். மாமியார், மாமனார், கணவன், மைத்துனன் அனைவரும் கூடி யோசனை செய்கிறார்கள்.  போலீசு வரும்போது என்ன பதில் சொல்வது என்பதே பிரச்சினை. “ஒன்றுமே தெரியாது என்று சொன்னால் போலீசு விரோதம்; சாட்சி சொன்னால் ரவுடி விரோதம்; பேசாமல் வீட்டைக் காலி செய்துவிடலாம்” –என்று பல யோசனைகள். கடைசியில், மளிகைக் கடைக்குப் போனேன். ஆனால் கொலையைப் பார்க்கவில்லையெனச் சொல்வது என்று முடிவாயிற்று. சப்-இன்ஸ்பெக்டர் வருகிறார். கேட்கிறார். எல்லா திட்டங்களும் தவிடுபொடியாக சரளா தான் பார்த்ததைப் பார்த்தபடியே விளக்குகிறாள். நீலப்புடவை, ரோஜாப்பூ: மோகனரங்கம்-பத்மாவின் 18 வருட மணவாழ்க்கையில் சிறிது சிறிதாக இடைவெளி விழுந்து கடைசியில் அவர்கள் அன்றாடம் பேசிக் கொள்வதே எண்ணி சில வார்த்தைகள்தான் என்று ஆகிவிட்டது. சண்டையோ, விரோதமோ இல்லை. மெதுவாக அதிகரித்துவிட்ட இடைவெளி. இப்படிப்பட்டவர்களின் மன இறுக்கத்தைத் தளர்த்த பேனா நண்பர்களை அறிமும் செய்யும் ஒரு அமைப்பை மோகனரங்கத்துக்கு சிபாரிசு செய்கிறான் சுதர்சன். பேனா நண்பராகக் கிடைத்த ஒரு பெண்ணும் மோகனரங்கமும் தங்கள் பிரச்சினைகளை, விருப்பு வெறுப்புகளை கடிதம் மூலம் பரிமாறிக் கொள்கிறார்கள். பேனா நண்பர்கள் சந்திக்கக் கூடாது என்ற விதியை மீறி சந்திக்க முடிவு செய்கிறார்கள். இவன் நீலச்சட்டையிலும் அவள் நீலப்புடவையிலும் கையில் ரோஜாவுடன் பூங்காவில் சந்திக்க ஏற்பாடு. குறிப்பிட்ட நேரத்தில் அவள் பூங்காவின் ஒரு வாயிலிலும் அவன் மறுவாயிலிலும் காத்திருந்து சந்திக்கும் வாய்ப்பை இழக்கிறார்கள். நேர்ந்துவிட்ட தவறினால் சோர்ந்து போய் வீடு திரும்பும் மோகனரங்கம் தற்செயலாய் மனைவியின் அறையைப் பார்க்கிறான். அங்கே அவளது கட்டிலின் மேல் நீலப்புடவையும் ஒரு ரோஜாவும். மற்றொருத்தி: தன் கணவன் சின்னவீடு வைத்திருப்பதாக தம்பி சுப்புராஜூ சொன்னபோது சாரதாவுக்கு அதிர்ச்சிக்குப் பதில் வருத்தமே மேலிட்டது. ஆனால் என்ன செய்வது என்ற கேள்விதான் அவளை அலைக்கழித்தது. “தனியாக வாழ முடியுமா என்னால்?” –தன் மாமனார் மாமியாரிடம் சென்று முறையிட முடிவு செய்தாள். மாமனார் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையில். மாமியாரிடம் சுமையை இறக்கினாள். “எனக்கு ஒரு வழி சொல்லுங்க” என்று கேட்டாள். மாமியாரோ எல்லா ஆண்களும் ஆடி அடங்கிச் சாயும்போதுதான் மனைவிக்கு விசுவாசமாக இருப்பார்களென்றும் தன்னுடைய அனுபவமும் அதுதான் என்றும் புத்திமதி சொல்லி அனுப்புகிறாள். **** [மத்யமர்] கல்கியால் ‘வாசகர்கள்’ என்றும், சுஜாதாவால் ‘விசிறிகள்’ என்றும் இந்துஸ்தான் லீவர், கிளாக்ஸோ, போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் ‘மார்க்கெட்’ என்றும் அழைக்கப்படும் இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் பீற்றிக் கொள்ளும் ஒழுக்க நெறிமுறைகள் நாளாக ஆகத் தேய்ந்து கட்டெறும்பாகி வருகின்றன. மத்யமரும் மத்தியம வர்க்கத்தின் பிரதிநிதியுமான சுஜாதா இதைத்தான் சித்தரிக்கிறார். ஆளும் வர்க்கத்தின் ஆலோசகராகவும், அதிகாரியாகவும் செல்லப்பிள்ளையாகவும் இருந்து ஆள்பவருக்கும் ஆளப்படுபவருக்கும் சேர்த்து, மிகுந்த தேர்ச்சி நயத்துடன் நடுத்தர வர்க்கம் தயாரித்துக் கொடுத்த நல்லொழுக்க நெறிப்பட்டியலை ‘காலத்திற்கொவ்வாதது’ என ஆளும் வர்க்கம் புறங்கையால் தள்ளுகிறது. ‘நான் கை நீட்டும் திசையில் தான் சொர்க்கம் இருக்கிறது; நான் நடப்பது தான் அதற்குண்டான பாதை; நான் அதற்குக் கையாளும் தகிடுதத்தங்கள்தான் காலத்திற்கேற்ற தருமம்” என்று மிட்டாதாரைப் போல ஆளும் வர்க்கம் முன்னே நடக்ககிறது. அடைப்பக்காரனைப் போல நடுத்தர வர்க்கம் பின்னால் ஓடுகிறது. கண்மண் தெரியாத இந்த ஓட்டத்தில் நீதி, அநீதி, நியாயம், அநியாயம், ஒழுக்கம், கற்பு, நேர்மை, நன்றி, வீரம், தியாகம், பாசம், காதல் என்று ஆயிரம் கற்கள் கொண்டு நடுத்தர வர்க்கம் கட்டிய நல்லொழுக்க நெறிமுறைக் கோட்டை இடிந்து தவிடு பொடியாகி புழுதியாய் பறக்கிறது. இப்படி ஓட விரும்பாத சிலர் நின்றுவிட்டார்கள். பலர் ஓட முடியாததால் அங்கலாய்க்கிறார்கள். ஓடுபவர்கள் ஓட்டத்தினூடே ‘ஆத்மசோதனை’ செய்கிறார்கள். இத்தகையதொரு ஆத்ம சோதனைதான் சுஜாதாவின் ‘மத்யமர்’. கல்யாண ஏற்பாடு கதையின் பெற்றொர்களின் போலிப் பகட்டு, நிற்குமிடத்தில் நிறைவு கொள்ளாத நடுத்தர வர்க்கத்தின் மேலேறத் துடிக்கும் நிரந்தரமான வெறியைக் காட்டுகிறது. அந்தஸ்து விஷயத்தில் இல்லாததை இருப்பதாகக் காட்டிக் கொள்பவர்கள் ஒழுக்கம் என்று வரும்போது, இருப்பதை இல்லாதது போலக் காட்டிக்கொள்வது தான் விநோதம்! தனது மகன் ஏற்கனவே ஒரு கருப்பின பெண்ணை மணந்து விவாகரத்து செய்ததை வெளிப்படையாகச் சொல்லவும், தனது பெண் ஒரு பஞ்சாபி இளைஞனுடன் தொடர்பு வைத்திருந்ததைச் சொல்லவும் பிள்ளையின் பெற்றோரையும் பெண்ணின் பெற்றோரையும் தடுத்தது எது? திருமணத்திற்கு முன் உறவு கூடாதென்ற தங்களது பழைய மதிப்பீட்டின் மீது உள்ள நம்பிக்கையா? இல்லை. நம்பிக்கை, நாணயமான நடவடிக்கையையல்லவா கோருகிறது! இந்த நம்பிக்கைத் துரோகத்தின் காரணம் பழைய மதிப்பீடுகளைப் பெருங்காயப் பாண்டமாக வைத்துக் கொள்ளும் போலித்தனம். சக மனிதனை ஏய்ப்பது குறித்து சிறிதும் குற்றவுணர்வு கொள்ளாத ஒரு முதலாளியின் வியாபார நீதி. புது மோதிரம் கதையின் தாய்க்கு தான் சோரம் போவது குறித்து கணவனை ஏமாற்றுகிறோம் என்ற உறுத்தல் சிறிதும் இல்லை. பகட்டான வாழ்க்கை எனும் கனவு மட்டுமே அவள் கண்ணுக்குத் தெரிகிறது. அந்தக் கனவை நனவாக்கிக்கொள்ள நனவுலகின் எந்த விதிமுறைகளையும் மீற அவள் தயார். கடந்த பத்தாண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் கட்டியிருக்கும் நுகர்ப்பொருள் ஜிகினா வேடத்தில் மயங்கி வரும் நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதிதான் பத்மா. நிர்வாக இயலின் தாரக மந்திரமான ‘காரியங்களை சாதிப்பது’ (To Get Things Done) அதற்கான வழி முறைகளுக்கு பூரணசுதந்திரம் வழங்குகிறது. லஞ்சம், மோசடி எந்த ஆயுதத்தையும் பிரயோகித்து காண்டிராக்டைப் பெறுபவன்தான் திறமையான நிர்வாகி. ஒழுக்கம், விதிமுறைகள் போன்ற அநாவசியமான வேகத்தடைகளை முதலாளிகள் விரும்புவதில்லை. மகளைக் கதாநாயகியாக்கிப் பார்க்கத் துடிக்கும் தாய்க்கு கற்பு, ஒழுக்கம் போன்றவை கூட வேகத்தடைகளாகிப் போனதில் வியப்பில்லை. தர்ட்டி பார்ட்டி நஞ்சுண்டராவ் நடுத்தர வர்க்கத்தின் இயலாமையின் பிரதிநிதி. ஏமாந்த பின் என்ன செய்வது? கோபத்தை மனைவி மீது அல்லது குழந்தைகள் மீது காட்டலாம். இரண்டையும் செய்ய விரும்பாத நாணயமிக்க கோழையான நஞ்சுண்டராவின் கடப்பாரை, பாறை மீதுதான் வேகத்தைக் காட்டுகிறது: ஆயிரக்கணக்கான சிவண்ணாக்கள் – நடுத்தர வர்க்கம் என்ற முறையில் நஞ்சுண்டராவின் உறவினர்கள் – அதிகார வர்க்க மலையாக இறுகியிருக்கிறார்களே அந்த மலையின் மீது, பாறையை வேண்டாம் பார்வையைத் திருப்பக் கூட நஞ்சுண்டராவால் முடியாது. ஏனென்றால் தனது காணிநிலம், தென்னை மரத்துக்கு அப்பால், தனது காம்பவுண்டு சுவருக்கு வெளியே உலகம் என்று சென்று இயங்கிக் கொண்டிருப்பதையே நடுத்தர வர்க்கம் அங்கீகரிப்பதில்லை. கண்டுகொள்வதுமில்லை. நஞ்சுண்டராவின் கடப்பாறை அவரது பிளாட்டுக்கு வெளியே நிச்சயம் போகாது. லஞ்சம் வாங்கு என்ற அறிவுரை சொல்லும் ராமலிங்கத்தின் தந்தை இன்றைய நரை விழுந்த நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. உலகம் கெட்டுப் போனது பற்றி அவர்கள் பிரலாபிப்பார்கள். உலகத்தை மேலும் கெடுப்பதா அல்லது தன் பங்குக்கு மட்டுமாவது கெடுக்காமலிருப்பதா என்று வாரிசுகள் கேள்வி கேட்கும் போது ஊரோடு ஒத்து கெடுக்கும்படி உபதேசம் செய்வார்கள். சமூக நோக்கம் அல்லது செயல்பாடு ஏதுமின்றி தன்னளவில் யோக்கியமாக நடந்து பொருளாதார ரீதியாகத் தோற்றும் போன தந்தை கடந்த காலத்தில் தான் தவறு செய்து விட்டதாக நினைக்கிறார். மிரட்டல் மூலம் சிறுவர்களிடம் நிலை நிறுத்தப்படும் ஒழுக்கம் அவர்கள் இளைஞர்களானவுடனே, பெரும்பாலும் சிதறிவிடுவதைப் போல லஞ்சம் வாங்காமல் இருந்ததற்கு அவர் எதிர் பார்த்த ‘வெகுமதி’ கிடைக்காததால் மகனை வாங்கச் சொல்லி அறிவுரை சொல்கிறார் தந்தை. [சுஜாதா]மற்ற கதைகளில் பாத்திரங்களிலிருந்து விலகி நின்று சித்தரிப்பதைப் போலத் தோற்றம் தரும் சுஜாதா ‘சாதி, இரண்டொழிய’-வில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தேர்வுக் குழுத்தலைவர் நரசிம்மனாகவே மாறுகிறார். கதையினுள்ளே நரசிம்மனுக்கும் சித்தார்த்தனுக்கும் நடக்கும் விவாதத்தில், பாப் வெட்டிக் கொண்டு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணைப் பற்றிய சித்தரிப்பில் இட ஒதுக்கீட்டின் வாயிலாக வேலைவாய்ப்பு பெற்ற ‘தாழ்ந்த’ சாதியினர்மீது பார்ப்பன நடுத்தர வர்க்கம் கொண்டுள்ள கோபமும், அருவெறுப்பும் விகாரமாகத் தலை நீட்டுகின்றன. பார்ப்பனப் பையன் ரமேஷ் முனிசிபல் குழாயில் தண்ணீர் குடிப்பதும், ஷீலா சுவிட்சர்லாந்திலிருந்து நேரடியாக இண்டர்வியூவுக்கு வந்து இறங்குவதும் வக்கிரச் சித்தரிப்பின் எல்லைகள். அறிவுத் திறன் பற்றி அதிகம் அலட்டிக் கொண்டு ‘என்னய்யா தேசம் இது?’ என்று அலுத்துக் கொள்ளும் பார்ப்பன நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி நரசிம்மன். சொகுசு வாழ்க்கை தேடி அமெரிக்கா போனது என்ன தேசப்பற்று? தங்களது ஒழுக்க சீலத்திற்கு தங்களது அறிவுத்திறனையே உத்திரவாதமாகக் காட்டுவது நடுத்தர வர்க்கத்தின் பழக்கம். அறிவுத்திறனும் ஒழுக்கசீலமும் ஒன்றோடொன்று கைகோர்த்து செல்வது அபூர்வம் என்பதற்கு நரசிம்மன் ஒரு உதாரணம். கண்ணால் பார்த்த கொலைக்கு சாட்சி சொல்வதற்குக் கூட அஞ்சும், மறுக்கும் நடுத்தர வர்க்கம் சமூகத்திலிருந்து விலகி நிற்கும் அதன் தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. கொலை நடந்து விட்டதே என்று பதறுவதை விட அதை நாம் பார்க்க நேர்ந்ததே என்று பதறுவதும், அந்த வட்டாரத்திலிருந்தே, வீட்டை காலி செய்வதன் மூலம் சமூகத்தின் எல்லாவிதக் குறுக்கீடுகளிலிருந்தும் விடுதலை பெற்றுவிடலாம் என்று கனவு காண்பதும், சட்டம் அறிந்த அதன் அசட்டு வீரம் காக்கிச் சட்டையைப் பார்த்தவுடன் கரைவதும் மத்தியமரின் கோழைத்தனத்திற்கு மட்டுமல்ல சமூக விரோதப் போக்கிற்கும் சாட்சியங்கள். நீலப் புடவை ரோஜாப்பூவில் கணவன் மனைவியிடையே தோன்றி வளர்ந்துவிட்ட இடைவெளியை நிரப்ப அவர்களில் ஒருவர் முயலவில்லை என்பது மட்டுமல்ல, மூன்றாமவரின் உதவியுடன் அதைத் தீர்த்துக்கொள்ளவும் அவர்களது ‘கவுரவம்’ இடம் தர மறுக்கிறது. ஆனால், பிரச்சனையிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளைக் கண்டுபிடிக்கவும் ஒருவருக்கொருவர் ‘காகித துரோகம்’ செய்து கொள்ளவும் கவுரவம் தடையாயில்லை. பெண்ணடிமைத்தனம், மாறிவரும் சமூகச் சூழலில் பெண்ணின் உரிமைகளை அங்கீகரிக்கத் தயங்கும் ஆணாதிக்கம், பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க மறுக்கும் கோழைத்தனம் ஆகியவை படித்த நகர்ப்புற ‘மத்யமரின்’ குணநலன்கள். கூட்டுக் குடும்பங்களில் குரலை உயர்த்தி குடும்ப முரண்பாடுகளை ‘தீர்க்கும் பாட்டனின் வேலையை இப்போது தொலைக்காட்சிப் பெட்டிகள் செய்து வருகின்றன. தீர்க்கப்படாத முரண்பாடுகளின் விளைவாய் உறவுகள் அழுகி வருகின்றன. மற்றொருத்தி தன் கணவனின் வாழ்வில் குறுக்கிட்டு விட்டதை ஒரு வேலைக்காரனுக்கேயுரிய விரக்தியுடனும் ஆத்திரத்துடனும் விழுங்கிக் கொள்கிறாள் மனைவி. எதுவாயிருந்தாலும் நான்கு சுவர்களுக்குள் அடங்கிய குடும்பத்தின் புனிதம் பற்றிய மாயை, கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் போது நடுத்தர வர்க்கம் முதுகில் சுமந்து வந்த பெண்ணடிமைத்தனம் பற்றிய கோட்பாடுகள் அனைத்துமாகச் சேர்ந்து மனைவியைக் கட்டிப் போடுகின்றன. மாமியாரின் உபதேசம் முடிச்சை மேலும் இறுக்குகிறது. அந்த ‘இன்னொருத்தி’யும் நடுத்தர வர்க்கம் என்பதுதான் எழுதப்படாத உண்மை. *** “விசயம் தெரியாதவன் முட்டாள்: தெரிந்தும் மவுனமாக இருப்பவன் கிரிமினல்” என்றார் பெர்டோல்டு பிரெக்ட், என்ற ஜெர்மன் நாடகாசிரியர். நாஜிகள் தோற்கடிக்கப்பட்ட பின் நடைபெற்ற நூரன்பர்க் விசாரணையில் ஹிட்லர் அரசில் ஊழியர்களாகவும் அதிகாரிகளாகவும் இருந்து லட்சக்கணக்கான யூதர்களையும், ஜனநாயகவாதிகளையும் படுகொலை செய்தவர்கள் விசாரிக்கப்பட்டபோது “நாங்கள் அரசு உத்தரவை நிறைவேற்றினோமே தவிர இந்தக் கொலைகளில் எங்களுக்கு நேரடிப் பங்கு இல்லை; நாங்கள் நாஜிகளும் இல்லை” என்று வாதிட்டார்கள். தங்கள் தோலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அன்ற அவர்கள் சாதித்த மவுனம் மன்னிக்கப்படவில்லை. இந்த நடுத்தர வர்க்கத்தைத்தான் ‘மவுனப் பெரும்பான்மை’ என்று குறிப்பிடுகிறார் சுஜாதா. உண்மையில் மவுனப் பெரும்பான்மையினர் இந்த நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள்; அவர்களுடைய மவுனம் அறியாமையின் விளைவு; நடுத்தர வர்க்கத்தின் மவுனமோ காரியக்காரனின் மவுனம். ஆனால் எழுத்தாளர்கள் பலரும், பத்திரிக்கைகளும் மக்கள் என்று குறிப்பிடும் போதெல்லாம் நடுத்தர வர்க்கத்தைத்தான் அர்த்தப்படுத்துகிறார்கள். ஏனெனில் இந்த மந்தைதான் விருப்பு வெறுப்புகள் இன்ப துன்பங்களை அணுகி ஆய்ந்து எழுதுவதின் மூலம் இவர்களைச் சொறிந்து விடுவதுடன் தமக்குத் தாமே சொறிந்துவிட்டுக் கொள்கிறார்கள் இந்த மத்தியமர்கள். நடுத்தர வர்க்கத்தின்அருமை பெருமைகளைப்பற்றி இவர்கள் அள்ளிவிடும் சரக்குகளுக்கு அளவே இல்லை. ‘படித்தவர்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை; அது ஒரு சாக்கடை என்பதால் இறங்கத் தயங்குகிறார்கள்’ என்பது திண்ணை தூங்கிகளின் பத்திரிக்கையான துக்ளக்கின் கருத்து. இதில் அங்கலாய்க்க எதுவும் இல்லை. ஓட்டுச் சீட்டு அரசியலின் ஒப்பீட்டளவிலான நிச்சயமின்மையைக் கூட நடுத்தர வர்க்கத்தால் சீரணிக்க முடிவதில்லை. அது எதிர்பார்க்கின்ற உத்திரவாதங்கள் அங்கே கிடைப்பதில்லை என்பதுதான் பிரச்சினை. ஒரு வேளை அரசியல் சூதாட்டக் களத்தில் இவர்கள் இறங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள், சுஜாதாவின் 8 கதைகளையும் மனதில் ஒருமுறை ஓடவிட்டுப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் – இவர்களுடைய வரவு அரசியல் ஒழுக்கத்தை முன்னேற்றிவிடுமா என்று. நடுத்தர வர்க்கம் நிரந்தரமாக ஏணிப்படிகளில் முண்டியடித்துக் கொண்டிருந்தாலும், தரை சமீபத்தில் இருந்தாலும் அதன் சிந்தனை, ஏணியின் உச்சிப்படியில் தான் இருக்கும். மேலே ஏறும் மோதலில் தள்ளிவிடப்படுவர்களையும் தடுமாறி விழுபவர்களையும் பற்றி அவர்கள் என்றுமே கவலைப்பட்டதில்லை. இந்தக் கசப்பான உண்மையின் காரணமாகத்தான் தங்களால் ஏற்றிப் போற்றிக் கூறப்பட்ட ஒழுக்க நெறிகளை சிறிதும் கூச்சமின்றி அவர்கள் உதறுகிறார்கள். சக மனிதனை மனிதனாகக் கருதாமல் பயன்படுத்திவிட்டுத் தூர எறியக்கூடிய பொருளாக நினைக்கிறார்கள். தங்களது இந்தச் சரிவிற்கு நியாயமும் கற்பிக்கிறார்கள். மத்தியமரின் பலவீனங்களை எழுதப் புகுந்த சுஜாதாவின் ‘நேர்மையை’ப் பாராட்ட முடியுமா? இயலாது. பார்ப்பனியக் கலாச்சாரத்தின் சில கூறுகளை கேலி செய்யும் எஸ்.வி.சேகரைப் போல, தன்னைத்தானே கேலி செய்து கொள்ளும் ‘சோ’ வைப்போலத்தான் சுஜாதா தன்னுடைய வர்க்கத்தைக் ‘கேலி’ செய்கிறார். இந்தக் கேலி வாசகர்களைக் கூனிக் குறுகச் செய்ய வேண்டும். தங்களது பண்பாட்டின் இழிவுகுறித்து வெட்கித் தலைகுனியச் செய்யவேண்டும். ஆனால் சுஜாதாவே நடுத்தர வர்க்கத்தின் பண்பாட்டு சீரழிவுக்காக வெட்கப்படவில்லை; சீரழிவைப் பிரதிபலிக்கிறார் அவ்வளவுதான். ஆனால் வாசகர்களோ சுஜாதாவைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். சறுக்கி விழும் ஒவ்வொரு பாத்திரமும் அவ்வாறு விழ நேர்ந்ததற்கான காரணங்களை தத்தம் போக்கில் வியாக்கியானம் செய்கிறார்கள். மற்றப்படி வாழ்க்கை சீராக, அமைதியாகச் செல்வது குறித்து மகிழ்ந்து கொள்கிறார்கள். பரிவும், அக்கறையும், நல்லெண்ணமும் மருந்துக்குக் கூட இல்லாமல் ஆனால் இருப்பதைப் போன்ற ஒரு முகத்தை, அணிந்துகொண்டு பக்கத்து வீட்டுக்காரரை நலம் விசாரிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் போல – சுஜாதா எழுதுகிறார்; கல்கி பிரசுரிக்கிறது. வாசகர் படிக்கிறார். பிறகு ‘சாட்சி’ எழுதிய சுஜாதா ஒரு அவசர நிலைவரும் போது சீரங்கத்து அம்மா மண்டபம் படித்துறை பற்றி எழுதிக் கொண்டிருப்பார் அல்லது அவசரநிலை வராதபோதோ கலைஞர் பிறந்த நாள் விழாவில் வாழ்த்துறை வழங்கிக் கொண்டிருப்பார். ‘கல்யாண ஏற்பாடு’ பிரசுரித்த கல்கி பிட்ஸ்பர்க் பார்ப்பனர்களின் பக்தி சிரத்தை பற்றி சிறப்புக் கட்டுரை வெளியிடும். வாசகர் கல்கியை எடைக்குப் போட்டுவிடுவார்; அல்லது சுஜாதா கதையை மட்டும் கிழித்து பைண்டிங் செய்து அலமாரியில் பத்திரப்படுத்துவதுடன் சுஜாதாவின் ‘மத்தியமராக’வே நீடிப்பார். - பஷீர் _____________________________________________ புதிய கலாச்சாரம், அக்டோபர் 1990 _____________________________________________ 20 “நார்மல்” வேப்பிலையை ஒரு மாதிரி குலுக்கி, குலுக்கி தலையிலிருந்து கால் கட்டை விரல் வரை தடவிய சாமியார், திடீரென குரலெடுத்து “எங்கடா? எங்க?“என்று கத்தியபடி, வேப்பிலைக் கொத்தால் கதிரேசன் தலையில் ஓங்கி, ஓங்கி அடிக்க, பக்கத்திலிருந்த அமிர்தவள்ளிக்கு கணவனைப் பார்க்க பார்க்க பாவமாய் இருந்தது.[normal-story] “தே! சாமி கேக்குறார்ல சொல்லேன். இந்த அடி வாங்கிட்டு நீ பேசாம முழிக்கறத பாக்கவா நான் உசுரோட இருக்கணும்!” அடங்க மாட்டாத கண்ணீரை முந்தானை தலைப்பால் துடைத்துக் கொண்டாள். “ஊம்! குறுக்க நீ பேசாத, எங்கடா? எங்கேந்து வர்ற?” இமைக்காமல் சாமியாரையே வெறித்துப் பார்த்து, பற்களை நறநறவென கடித்த கதிரேசன் “வயக்காடுறா, வயக்காடு… வரப்புல மிதிச்சு வாய்க்கால்ல நனச்சு… ஏய்! வயக்காடுறா!” தோளைக் குலுக்கி, தொடையைத் தட்டிக்கொண்டே வேகமாகக் கத்தியபடியே “ஊம்… ஊம்” என்று உறுமினார். “எந்த இடம் சொல்லி விடு! வந்த இடம் போயி விடு! வெந்தகறி வச்சிடுறேன்! விழுங்கி விட்டு ஓடி விடு! சந்தன பத்தி ஒரு கட்டு சாராயம் ஒரு லிட்ரு… டூன்… டூன் டூன் டூம்…” உடுக்கை நாலு தட்டு தட்டி விட்டு, “ஏய்!… ஓடுறியா? ஓடுறியா?” துள்ளிக்கொண்டு கதிரேசனை வேப்பிலையால் சாத்தினார் சாமியார். வேப்பந்தழை பிய்ந்து உதிர்வதையே கடுகடுப்பாகப் பார்த்த கதிரேசன் “டேய்! ஏன்டா! நாத்த புடுங்குன… நாயே! ஏன்டா நாத்த புடுங்குன…?” என்று கத்திக்கொண்டே சாமியாரின் கையிலுள்ள வேப்பிலைக் கொத்தை பிடுங்கப் பாய்ந்தார்… அமிர்தவள்ளியால் அடக்கிப் பிடிக்க முடியவில்லை. சாமியாரின் மைக்கூடிலுள்ள சின்ன சூலத்தையும் எடுத்தபடியே “ஏன்டா! கதிரருவாள கால்லயா போட்டு மிதிக்குற!… வக்காளி… வச்சுட்டு தேட மாட்டேன்டா . டேய்…டேய்!” என்று சாமியார் மேல் பாய… ஒரு வழியாக துணை ஆட்கள் மூன்று பேர் மடக்கிப் பிடித்து அடிக்க… கை நிறைய சாம்பலை பளிச்சென கதிரேசன் முகத்தில் அடித்து கண்ணை மறைத்தார் சாமியார். “டேய்! அவன தள்ளிட்டு போயி, பிடிங்கடா…” என்றவர், “தோ பாரும்மா! உச்சு உருமத்துல வரப்பு முனி அடிச்சிருக்கு… உடனே எறங்காது. வர்ற அம்மாவாச அன்னிக்கி சாமத்துல வச்சு ஆணி அடிச்சாதான் கட்டுப்படும். சேவல், எலுமிச்சம்பழம்…சாராயம்… சகலமும் வச்சு பூசயும், காவும் தரணும். மேல வேலைகளும் இருக்கு. ஆயிரம் ஆவும்…” “பணம் ஒரு பக்கம் ஆவட்டும் சாமி. ஆறு மாசமா குணம்கெட்ட தனமா பேசறாரு.. சாமத்துல எழுந்திரிச்சு ஓடுறாரு… உங்களத்தான் ஊர் சனமே நம்புது. அதான் வந்தே.. பாத்து வுடுங்க.. பணம் ஏற்பாடு பண்ணிட்டு வாரேன்…” “தா! அது வரைக்கும் இந்த தாயத்த அவன் தூங்குறப்ப கட்டி வுட்ரு… ரா சேட்ட அதிகமாக இருக்கும். பயப்படாத… ரொம்ப படுத்துனா… இந்த துன்னுற மூஞ்சில அடி! மந்திரிச்ச துன்னூறு.. பாத்து வேற யாரும் கை படாம பாத்துக்க! தொடர்ச்சியாகப் பேசியவர் சற்று தடித்த குரலில், “கைல வாங்க மாட்டேன். தோ உண்டியல்ல நோட்ட போடு!” என்று உண்டியலைக் காண்பித்தார். ஆடி அடங்கியவர் போல லேசாகத் துவண்டிருந்த கதிரேசனை “தே! வா…” என்று தலையில் குப்பையாய் கிடந்த வேப்பிலையை தட்டிவிட்டு, கலைந்த முடியைக் கையால் கோதி விட்டு “மகமாயி… கண்ணு தெறக்க மாட்டியா..” என்று கன்னத்தில் போட்டபடி, கணவனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு நகர்ந்தாள். 000 “இப்பெல்லாம் ஒரு ஏக்கர் நெலம் வச்சிருந்தா கூட மிராசுன்னு பத்திரிகைல போட்டுக்கிறானுவ. அப்புடி இல்லடா, இவன் உள்ளபடியே மிராசு. சோழபுரத்துலேந்து, திருப்பனந்தா வரைக்கும் பேர்பாதி நிலம் வச்சிருக்கான். புள்ளங்கல்லாம் பெரிய படிப்பு படிச்சு, பெரிய எடத்துல இருக்கானுவ. இந்த மனுசன் ஊர் கவுரவத்த விடாம இங்க கெடக்குறாரு!” மணியும், பாண்டியனும் மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டி, கைப்பக்கம் கத்தி முனை மாதிரி கஞ்சி விறைப்போடு அயர்ன் பண்ணிய வெள்ளை சட்டையோடு, பேசிக்கொண்டே கல்யாண வீட்டுப் பக்கம் நெருங்கினர். “வௌங்குன மாதிரி தான்! குடிக்கறது எலி மூத்திரம், கடிக்கறதுக்கு பச்சடி கேட்டானாம்… போங்கடா வௌங்குன மாதிரிதான்!”கதிரேசன் தன்பாட்டுக்கு பேசுவது போல, போய் வரும் வெள்ளை சட்டைக்காரர்களைப் பார்த்து பேச ஆரம்பித்தார். “வயசுல பெரியவரா இருக்காறேன்னு பாக்குறேன். இல்லேன்னா ஒரு எத்து, எத்துனேன்னு வச்சுக்க.. தட்டுகெட்டு போயிடும்.” “விடுறா! அந்தாளு மெண்டல்டா! மெட்ராஸ்ல இருக்கான்ல சுப்பிரமணி, அவன் அப்பாரு. வாழ்ந்து கெட்ட ஆளு! முன்ன பரவாயில்ல. இப்ப ரொம்ப மெண்டலாயிட்டாரு போல. போற வர்றவங்ககிட்ட வம்பு பண்ண ஆரம்பிச்சுட்டாரு!” கண்டு கொள்ளாமல் இருவரும் ஒதுங்கிக் கொண்டனர். “அண்ட வெட்டவே, ஊர்ல வேல கிடையாதாம். கண்ட பயலுக்கும் கேக்குதாம் வெள்ள வேட்டியும், சிலுக்கு ஜிப்பாவும்… ஒரு பய உருப்படப் போறதில்ல. ஊரு சரியில்ல. போயி சோறதான் திம்பானுகளா… இல்ல வேற எதனாச்சுமா? ஹே… ஹே…” போகிறவர்களைப் பார்த்து பேசப் பேச, சிலருக்கு கோபம் வந்து “இவன் மெண்டலா?! இல்ல திமிரா பேசிகிட்டு திரியறானா…? போய்யா அந்தப் பக்கம்.. உத வாங்குவ. ஆமாம்..” என்று துரத்தி விட்டனர். அந்த நேரத்துக்கு வாயை மூடிய கதிரேசன், மெல்ல நெருங்கி கல்யாண மண்டப வாசல் வாழை மரம் பக்கம் வந்து நின்று கொண்டு, அணைந்து அணைந்து எரியும் சீரியல் பல்பை பார்த்து அடிக்கொருதரம் “ஹேய்.. ஹேய்” என்று சிரித்துக் கொண்டார். “அட பார்றா! வாழ மரத்துல லைட்டு எரியுது! வாழத்தண்டு லைட்டும் எரியுது… அட ஜிங்கானாம்! எல்லாம் ரைட்டு! எதுக்கு எழவெடுத்த பயலுவ! பாட்ட போட்டு கூட்டம் சேக்குறானுவ! ” “யோவ்! போய்யா… மெண்டல் பய… போய்யா.. அந்தப் பக்கம்..” தோளில் கிடந்த துண்டை உதறிக்காட்டி துரத்தினார்கள் வாசல் பக்கம். கொஞ்சம் அடியைப் பின்னுக்கு இழுத்தாலும் கதிரேசன் வாயை மூடவில்லை, “ஊரக் கூட்டுங்க. இலையப் போடுங்க… போங்கடா.. கடைசில ரெண்டாவது நாள்ல தாலிய அறுத்துட்டு வந்து நிக்கப் போவுது! இதுக்கு இந்தக் கூத்து! பட்டுப் போன மரத்துல பவளமல்லி பூக்குமா? காஞ்ச வாய்க்கால்ல கப்பல் வுடுறானுவளாம்! அவன் மட்டும் என்ன! கார்ல போயி முட்டிக்க போறான்… ஹே… ஹே..” “நாயே! நாயே! கல்யாண வீட்டுல வந்து அபசகுனமா பேசுறான் பாரு! போடுறா ரெண்டு!” இரண்டு பேர் ஓடி வந்து முதுகில் தட்டுத் தட்டி விரட்ட “ஹே..ஹே.. “ என்று சிரித்தபடியே மரக்கட்டையென விறைத்து நின்ற கதிரேசனை அமிர்தவள்ளி ஓடி வந்து, பிடித்து இழுத்தாள். “கோவிச்சுக்காதீங்க! கொஞ்சம் கொணம் சரியில்லாதவரு. இழுத்துட்டு போயிடுறேங்க! அடிக்காதீங்க! கொஞ்ச நேரம் ரேசனுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள என்னா அமளி துமளி பண்ணிட்ட?! இப்படி ஊர்ல அடி வாங்கவா உன்ன நான் பாக்கணும்!” அழுது புலம்பியபடியே இழுத்துக்கொண்டு நடந்தாள். “ஏன் அமிர்தவள்ளி, ரொம்ப முத்திடுச்சு! இது மந்திரத்தால சரி வராது. மெட்ராஸ்லதான் உன் புள்ள இருக்கான்ல. பேசாம அங்க அழைச்சிட்டு போயிடு! பெரிய பெரிய பைத்தியக்கார ஆசுபத்திரியெல்லாம் அங்க இருக்கும். இப்பவே காட்டுனா சரியாயிடும்! இப்புடியே இருந்தின்னா ஊரு சனமே சண்டை வளத்திடும்! கேளு அமிர்தவள்ளி! ஒரு நட உன் புள்ள வீட்டுக்கு போயி காமி! ரோசத்த பாக்காத! அங்க போனாதான் கொணமாகும்! கேளு!” சின்னப்பொண்ணு பலவாறாக வலியுறுத்தியது, இரவு முழுக்க தலையில் எதிரொலிக்க.. பணம் ஏற்பாடு செய்து கொண்டு சென்னைக்கு காலை ரயிலை பிடித்தாள் அமிர்தவள்ளி. பல நேரங்களில் கதிரேசனின் பேச்சு எரிச்சலாக இருந்தாலும், வழிநெடுக ஜன்னல் வழியே தென்படும் வயல், வரப்புகளை வெறித்தபடியே ஏதும் பேசாமலே வந்த கணவனின் மௌனமும் அவளுக்கு பெரிய வேதனையாகப் பட்டது. 000 உடல் நலம் தொடர்பான சோதனை, கேள்விகளை முடித்துக்கொண்டு பக்கத்தில் உட்கார வைத்துப் பேச ஆரம்பித்தார் மருத்துவர். “அய்யா என்ன வேல பாத்தாரு? எப்பயிலேந்து இப்புடி இருக்கு? கொஞ்சம் டீடெய்லா சொல்ல முடியுமா?” “நெல்லறுத்து, கட்டுக்கட்டி, பையன படிக்க வச்சி, கல்யாணமெல்லாம் பண்ணி வச்சு நல்லா குடும்பம் பண்ண மனுசன் சார்! எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் ரோட்டு மேல இருந்துச்சு..” அமிர்தவள்ளி வரிசையாகச் சொல்ல வர, வேகமாக இடைமறித்த சுப்பிரமணி “இரும்மா! நான் சொல்றேன்” என்று முந்திக் கொண்டான். “நல்ல ஆரோக்கியமா இருந்தவர்தான். வேலைக்கு போக வேணாம்னாலும் கேக்காம, ஆறுமாசமா வேலைக்குப் போக ஆரம்பிச்சாரு! அதுக்கப்புறம் ஏதோ ஷாக் ஆனவரு மாதிரி ஒரு நாள் பேசாமல் இருந்துருக்காரு. கிராமத்துல ஒழுங்கா டாக்டரை பாக்காம, பேயோட்டு அது இதுன்னு முத்த வுட்டுட்டாங்க சார்!” என்று சுருக்கமாக முடித்தான். “அய்யா யாரு இது? தெரியுதா?” என்று மகனைக் காண்பித்து கதிரேசனிடம் கேட்டார் டாக்டர். உதட்டைப் பிதுக்கி, பின் மெல்ல நாக்கை நீட்டியவர் “ஊம்” என்று சுற்றும் முற்றும் பார்த்து அமைதியானார். “அய்யா! இவுரு உங்க பையன் தெரியுதா?” என்று திரும்பவும் கேட்டார், “ஊம்.. தெண்டம், தெண்டம். யாரு கண்டா, எந்த புத்துல எந்த பாம்பு?” என்று டாக்டரிடம் கையை விரித்து காண்பித்தவர், பலமாக சிரித்துக் கொண்டார். “இப்புடிதான் சார்! சம்பந்தா சம்பந்தமில்லாம பேசுறாரு. நானாவது மகன் பொறுத்துக்கலாம்.. என் வீட்ல கண்டபடி பேசுறாரு! பக்கத்துலயும் பிரச்சனை ஆயிடும் போல இருக்கு!” சுப்பிரமணி பயந்து போய் பேசினான். “நோ சார்! சம்பந்தப்படுத்திதான் பேசுறார்! இது ஒரு வகை மனச்சிதைவு நோய். தொடர்ச்சியான ட்ரீட்மெண்ட் எடுத்தா சரிப்படுத்தலாம். இப்போதைக்கு நைட்ல அவர கண்ட்ரோல் பண்ண, தூங்க வைக்க இன்ஜக்சன் எடுத்துக்கலாம். பிறகு மாத்திரை போதும். பயப்படாதீங்க..” என்றவர், “கொஞ்சம் டீடெய்ல் ஹிஸ்ட்ரி தெரிஞ்சிக்கிட்டாதான் நல்லது. நீங்க சொல்லுங்கம்மா! ஏன் இப்படி பேச ஆரம்பிச்சாருன்னு கவனிச்ச வரைக்கும் சொல்லுங்கம்மா!” “அதான் சார்! எங்களுக்கு கோவிலாச்சேரி ஊரு, சோழபுரம் பக்கம். ரோட்டு மேலேயே நாலு ஏக்கர் நிலம் இருந்துச்சுங்க. நாளடைவிலே தண்ணி இல்லே, மழை இல்ல. புள்ளைகிட்ட போரு போடச் சொன்னாரு. அவனும் இனி வயசாகுது, விவசாயம் வேணாம், கண்டு முதலும் இல்ல, இலாபமும் இல்லன்னு, மாடு கண்ணெல்லாம் வித்துட சொல்லிட்டான். காசு அனுப்புறேன்னு சொன்னான். நம்ப கட்ட இருக்குற வரைக்கும் உழைக்கணும்னு பக்கத்து போர்லேந்து மொற வச்ச தண்ணியில முடிஞ்ச வரைக்கும் கடன வாங்கி பயிர் பண்ணிப் பாத்தாருங்க. ரெண்டு வருசமா அதுலயும் நட்டமாயிடுச்சுங்க. புள்ளயும் கடனு எதுக்குன்னு, ஒரு வருசத்துக்கு முன்னாடி ரோட்டோரம் நல்ல வெல வருதுன்னு புடிச்சு வித்துட்டானுங்க. அதுலேர்ந்து புள்ளையோட பேசாம, கொஞ்சம் வருத்தமா இருந்தாரு. புள்ள காசு அனுப்புனா திருப்பி அனுப்பிடுவாரு. திரும்ப வித்த வயல்லயே வாங்குனவங்க ஒரு ஸ்கூலு கட்டுனாங்க. அதுல வாட்சுமேனா வேலைக்கு போனாருங்க.. நல்லாதான் ஒரு மாசம் போயிட்டு வந்தாரு.. திடீர்னு ஒரு நாள் அங்க வெறி கொண்ட மாதிரி கத்திக்கிட்டு, அங்கயும் இங்கயும் ஓடுனாறாம். சனங்களால புடிக்கவே முடியலயாம். பிறகு சேதி வந்து, தெரு சனத்தோட போயி ஒரு மாதிரி கூட்டியாந்தேன். அப்பப்ப நல்லா இருப்பாரு.. திடீர்னு பேச ஆரம்பிச்சிருவாரு. யாரப் பாத்தாலும் திட்டித் தீக்கறதுதான் பெரிய பிரச்சனையாயிருக்கு. அங்க ஊர்ல அப்பப்ப ஒரு டாக்டரு மரத்துப் போற ஊசி போட்டாரு. அது போட்டா கொஞ்சம் பேசாம உக்காருவாரு. லேசா கண்ணு செருகுன மாதிரி இருக்கும். இப்ப ஊசியும் போடாம, அதிகமா பேச ஆரம்பிச்சுட்டாரு. நீங்க தான் சார் எங்களுக்கு வழிய காட்டணும். அங்கயாவது கிராமம், இங்க குடிக்குள்ள குடி. இவர வச்சிகிட்டு இருக்க முடியல.. மரத்துப் போற ஊசியாவது போட்டு வுடுங்க.” “பயப்படாதீங்கம்மா.. மரத்துப் போற ஊசியா இருக்காது. வேற ஏதாவது போட்டுருப்பாங்க. இது பொறுமையாதாம்மா சரியாகும். பக்கத்துல இருந்து, நாம ஒத்துழைப்பா இருந்தோம்னா சீக்கிரம் குணப்படுத்தலாம்.” “சார்! இன் பேஷண்ட்டா சேத்தாலும் பரவாயில்ல. இங்க குடியிருக்குற எடத்துல மெயின்டெய்ன் பண்றது கஷ்டமாக இருக்கு..” சுப்பிரமணி டாக்டரை பதமாக நச்சரித்தான். “புரிஞ்சுக்கோங்க சார்! இன் பேஷண்ட் அளவுக்கு இவருக்கு எதுவும் ஆகல. ட்ரீட்மெண்ட் இல்லாம இருந்ததாலயே ப்ராப்ளம் கூடியிருக்கு. ஏன் சார் டி.வி.ல ஏதேதோ டயலாக் எல்லாம் வருது. பிடிக்குதோ பிடிக்கலயோ எல்லோரும் கேட்டு அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறாங்க. அதே போல இவரு மனசுல பட்டத பேசுறாரு.. நாம அட்ஜஸ்ட் பண்ணிட்டு போவமே. ஒரு மாசம் மருந்து தர்றேன். மன்த்லி ஒரு தடவ அழைச்சிட்டு வந்து காமிங்க. இப்ப ரெண்டு நாள் மருந்து எடுத்துகிட்டு வந்து காட்டிட்டு போங்க. என்ன?” என்றார் மருத்துவர். “சரி சார்! வணக்கங்க. அமிர்தவள்ளியும் சுப்பிரமணியனும் மருத்துவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட, அவர்களை உற்றுப்பார்த்த கதிரேசனும் மருத்துவரைப் பார்த்து கும்பிட்டார். வீட்டுக்கு வந்ததிலிருந்து, சுவரோரம் போய் பேசாமல் மூலையைப் பார்த்தபடி உட்கார்ந்து கொண்டார் கதிரேசன். “அத்தை! எனக்கு மாமா முன்னாடி வர தயக்கமா இருக்கு. எதித்தாப்ல வந்தாலே திட்றாரு.. அதான் உக்காந்து பேச மாட்டேங்குறேன். தப்பா எடுத்துக்காதீங்க!” என்று காப்பியைத் தந்துவிட்டு அடுப்படிப் பக்க வேலைகளில் மூழ்கினாள் மருமகள். அங்கிருந்தபடியே “கவலைப்படாதீங்க! தொடர்ந்து பாத்தோம்னா சரியாயிடும். நல்ல டாக்டர் அவரு” என்று ஆறுதல் கூறினாள். “வந்தவளுக்கு உள்ள அக்கறை வளத்தவனுக்கு இல்லியே! அவுரு பரவாயில்ல போல இருக்கு. தாம் பாட்டுக்கும் பேசிக்கிறாரு. இவனும் அப்பனப் போல கிறுக்குப் புடிச்சவன் மாதிரி சதா உன் மேல எரிஞ்சு எரிஞ்சு விழறானே. நீயாவது பொறுத்துப் போம்மா… என்னத்தப் பண்றது?” எதற்காக மகன் எரிந்து விழுகிறான் என்ற சூட்சுமம் தெரிந்தும் மருமகளிடம் நாகரிகமாக உரையாடிக் கொண்டாள். மேற்கொண்டு “அது சரி! அவன் கவுரவமா மெட்ராஸ்ல இருக்குற இருப்புக்கு, இவுரு அக்கம்பக்கத்துல பேசி ஏதாவது வம்பிழுத்தா அவனுந்தான் என்ன பண்ணுவான் பாவம்! அப்பா பைத்தியக்காரன்னு அக்கம்பக்கத்துல தெரிஞ்சா அவன் கௌரவம் என்னாவறது… இந்தக் காலத்துல நல்லாருக்குற வரைக்குந்தான் எல்லாம். நீ கோவிச்சுக்காதம்மா! விடுவிடுன்னு சமையலப் பாரும்மா! புள்ளைங்களுக்கு லேட்டாயிடும்” அப்படியே அமிர்தவள்ளி கணவனின் முகத்தைப் பார்த்தாள். “மூட்ட நெல்ல தலைல தூக்கி வரப்புல ஒடியாரும் உனக்கா இந்த கதி.. மகமாயி என்ன பாவம் பண்ணமோ?!” என்று தனக்குள் முனகிக் கொண்டாள். தாடையை வேகவேகமாக சொறிந்து கொண்டபடி, “தே! மாட்டப் புடிச்சு கட்டு. மசமசன்னு உக்காந்திருக்கியே! அமிர்தம் உன்னதான்.. கன்னுக்குட்டி வேற கத்துது. அதுக்கு தண்ணி வெக்க காணோம். தே! எழுந்திரி..” சற்று கண்ணயர்ந்த அமிர்தவள்ளியைக் கதிரேசன் விடாமல் தட்டி எழுப்பினார். பழகிப்போனவள் போல பதட்டமில்லாமல் மெல்லத் தலையைத் தூக்கி, “என்ன இப்ப!… செத்த படுத்துத் தூங்கே..!” என்றாள். “தே! எரும! எரும மாடு கத்துது. பேசாம படுத்துக் கெடக்கியே. போயி கொல்லப் பக்கம் பாரு. மாட்டுக்கெல்லாம் தண்ணி வச்சாச்சு. அதுங்க தூங்குது. நீயும் பேசாம படு!” பதில் சொல்லி அடக்கினாள் அமிர்தவள்ளி. “தே! ஒரே சத்தமா கேக்குது. இரு பாக்குறேன்” என்று எழுந்தவரை மிரட்டி உட்கார வைத்தாள். சிறிது நேரம் தான் ஆகியிருக்கும். வெடுக்கென தெருப்பக்கம் ஓடியவர், “பாவிகளா! அடப் பாவிகளா! வயலப் போட்டு இப்படி புல்டோசர வுட்டு அடிச்சா என்னத்துக்கு ஆகும். என்ன மயித்துக்குடா தண்ணி வக்காம மாட்ட கத்த வுடறீங்க..? கதுரு மேலயா நடக்குறீங்க.. நவுருங்கடா எருமைங்களா…!” வேகமாக கத்தியபடியே ஓடிய கதிரேசன், பக்கத்து இடத்தில் வேலை நடக்கும் கூட்டத்தில் புகுந்து ஆட்களைத் தள்ள ஆரம்பித்தார். “யேய்! யார்ரா இது?! பைத்திக்காரா.. ச்சே.. போ! அந்தப் பக்கம் போ!” எல்லோரும் சேர்ந்து அவரை விரட்டினர். “விடுங்க சார். கோவிச்சுக்காதீங்க! என் வீட்டுக்காரர்தான். கொஞ்சம் புத்தி சரியா இல்லாதவருங்க. மன்னிச்சிடுங்க!” என்று கையெடுத்துக் கும்பிட்ட அமிர்தவள்ளி, “தே! வா இங்கே! உன்ன வேற இழுக்க முடியுதா என்னால. வா இப்பிடி!” “இல்ல! அவன் ஆட்ட ஓட்டிட்டுப் போயிட்டான்… தோ பாரு! கருப்பு ஆடு!” “அது நம்ம ஆடு இல்ல. அவங்களது. நம்ம ஆடு வீட்டுல கட்டிக் கெடக்கு. வா!” பதமாக பேசிக் கொண்டே, ஒரு வழியாக அவரை வீட்டுக்குள்ளே தள்ளினாள் அமிர்தவள்ளி. “ஏ அப்பா! இன்னமும் இங்க இருந்தா ஊரு சிரிப்பா சிரிச்சுரும். அவனே கழுத்தப் புடிச்சு தள்ளறதுக்குள்ள ஊருக்குப் போயிடறதுதான் மரியாதை” என்று மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தாள். மகனிடம் பேச அவனும் “சரிதாம்மா! நமக்குத் தெரியும் அவுரு குணம். இங்க அக்கம்பக்கத்துல டிஸ்டர்ப் பண்ணா வீட்ட காலி பண்ண வச்சிடுவாங்க. வேற பெரிய வீடா பாத்துக்கிட்டு கூட்டிக்கலாம்னுதான் நானும் ஐடியா பண்றேன். அது வரைக்கும் ஊர்ல இருந்து வந்து போய் பாத்துக்கிறதுதாம்மா எனக்கும் நல்லதுன்னு படுது. இல்ல, உன்னால இங்கயே இவர சமாளிக்க முடியும்னா சொல்லு. என்னப் பத்தி தப்பா நெனக்காதே!” அவனது பேச்சுக்கு எதுவும் பதில் பேசவில்லை அமிர்த வள்ளி. பிறந்த போது அவனுக்கு சரியாக பேச்சு வராத போது, கோவிலாச்சேரி மாரியம்மனுக்கு வேண்டிக் கொண்டு உப்பு மிளகு போட்டதும், கூழாங்கற்களை வாயில் போட்டு மெள்ளச் சொல்லி, அவனை மெல்ல பேச வைத்ததும் இதற்குத்தானா என்பது போல் அவனை ஆழ்ந்து உற்றுப்பார்த்துக் கொண்டாள். மருத்துவரிடம் காண்பித்து விட்டு, அப்படியே இரவு ரயிலுக்கு புறப்படும் எண்ணத்துடன் மருமகளிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். “மாமா! பாத்துப் போங்க. உங்களுக்கு ஒண்ணும் இல்ல. எல்லா சரியாப் போயிடும்” என்று நெருங்கி வந்து நிதானமாகச் சொன்ன மருமகளிடம் கதிரேசன், “புள்ளைங்கள பாத்துக்க! டி.வி. பொட்டிப் பக்கம் உடாத! விழுந்து செத்துப் போயிடும்! ஆமா ஜாக்கிரத!” என்று முழியைப் பெரிதாக்கி, கைகளை ஆட்டி ஆட்டிப் பேசினார். மங்கலாக அர்த்தம் விளங்குவது போல மருமகள் யோசித்து விழித்தாள். “அம்மா! நீயும் பைத்தியம் தாத்தா மாதிரியே முழிக்கிற!” என்று பிள்ளைகள் சிரித்துக் குதிக்க, “ஏ! அப்படி சொல்லக் கூடாது” என்று அதட்டினாள். “வர்றேம்மா.. புள்ளங்கள பாத்துக்க!” விழியோரங்கள் சிறிது கசிய, அமிர்தவள்ளி பிள்ளைகளின் முகத்தை விரல்களால் வட்டமிட்டு திருஷ்டி முறித்தாள். மருத்துவரைப் பார்த்தது தான் தாமதம், கொஞ்சம் தழுதழுத்த குரலில் “முன்னக்கி கொஞ்சம் தூங்குனாருங்க. ஆனா பழைய மாதிரியே அக்கம்பக்கத்துல பேசி பிரச்சன பண்ணிட்டாரு சார்! ஒரு மரத்துப் போற ஊசி வேணும்னா போட்டு வுடுங்க. ஊரு வரைக்கும் தாங்கட்டும். பேயோட்டறதுலந்து எல்லா வைத்தியமும் மாத்திப் பாத்தாச்சு. இன்னும் எதனால இவருக்கு வியாதிய தீக்க முடியும்னு தெரியல. பழய மனுசனா எப்ப மாறுவாரோ? அந்த மகமாயியா பாத்து உங்க கிட்ட அனுப்பி வச்சிருக்கா…! நல்ல மாதிரி ஆக்கி உட்டுருங்க சார்..” “பயப்படாதீங்கம்மா! ஊசி இப்ப வேணாம். சீட்ல எழுதித் தர்றேன். நாலு நாள் தள்ளி போடுங்க. முன்னக்கி இப்ப அய்யா முகம் தெளிவா இருக்கு! நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நாள் ஆகும்… சரி பண்ணனும்னா தொடர்ச்சியா வந்து பாக்கணும். வேற மருந்து எழுதித் தர்றேன். இத சாப்பிடக் குடுங்க!” என்று கதிரேசனைப் பார்த்தபடியே பேசினார் மருத்துவர். மருத்துவர் சொன்ன பிறகும், நீண்ட நேரம் நாக்கை நீட்டியபடி ஜாடை காண்பித்த கதிரேசன் “மருந்த மாத்துறீங்களா! மாத்துங்க..மாத்துங்க.. மருந்து கொடுத்தா தாளடிதான்” “ஏய், பொன்னி மேல பன்னி மேயுது. எவங் கேக்குறான்… இல்ல எவங் கேக்குறாங்கறேன்?” என ஆரம்பிக்கவே “போற வரைக்கும் இன்னும் என்னன்ன கூத்துக் கட்டி அடிக்கப்போறாரோ..?! “ அமிர்தவள்ளி தலையைப் பிடித்துக் கொண்டாள். “அம்மா.. நீங்க கவலைப்படாதீங்க! அய்யா.. இங்க பாருங்க, ஒடம்பு நல்லாயிடும். வேலைக்குப் போகலாம்.. நல்லா சாப்பிட்டு, மருந்து சாப்பிடணும். என்ன!” சொன்ன மருத்துவரின் கையைக் கெட்டியாகப் பிடித்த கதிரேசன் “மருந்து சாப்பிட்டா உடம்பு நல்லாகுமா? ஹா..ஹா.. என் பிரச்சினைய நீ முடிச்சு வுடு! நான் உன்னப் படிக்க வக்கிறேன்.. பாத்துக்குறேன். நீயாவது செத்துப் போவாம பாத்துக்க ஆமா” அடுக்கடுக்காக பேசித் தள்ளினார். கவலையாகப் பார்த்த அமிர்தவள்ளியிடமும், மகனிடமும் “கவலைப்படாதீங்க சார்! மெல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். அடுத்த செக்அப் அழைச்சிட்டு வந்திருங்க!” என்று நம்பிக்கையூட்டி அனுப்பினார் மருத்துவர். இரயில்வே ஸ்டேசன் வந்து ஒரு வழியாக இடம் பிடித்து, இருவரையும் உட்கார வைத்து விட்டு வெளியே சன்னலோரம் வந்து நின்று கொண்டான் சுப்பிரமணி. உள்ளே இரயிலில் அமர்ந்திருப்பவர்களை துருவித் துருவிப் பார்த்தபடி புன்னகைத்துக் கொண்டார் கதிரேசன். பக்கத்தில் ஒருவர் செல்போன் பேசிக் கொண்டிருக்க, மெல்லிய குரலில் அவரைப் பார்த்தபடி, “பேசு..பேசு! நீ பண்ண வேலைக்கு பேசிதான் தீக்கணும். ஆறு வேலி நிலமும், ஐவேசு பண்டார வடையுமாவா இருக்க! இருக்குறத வுட்டுப் புட்ட. இப்ப பேசிதான ஆகணும். ஹி..ஹி..ஹி..” தொடையைத் தட்டிச் சிரித்துக் கொண்டார். “பாத்தும்மா! பக்கத்துல ஏதாவது பிரச்சினை பண்ணப் போறாரு! ஏதாவது அவசரம்னா அக்கம்பக்கத்துல உள்ளவங்கள வுட்டு ஃபோன் பண்ணு. ஊர்ல வேலுப்பய கிட்ட சொல்லிருக்கேன். வந்து பாத்துப்பான். மறக்காம ஊசிய வாங்கிப் போட்ரு. அடுத்த மாசம் டாக்டர பாக்கலாம்” என்று சுப்பிரமணி பேசிக்கொண்டே போக, கதிரேசன் திடீரென அவனிடம் சத்தமாக “பாக்குறாணுவளாம்.. பாக்குறாணுவளாம். பேசாம நீயும் ஒரு ஊசி போட்டுக்க! உம் பொண்டாட்டிக்கும் ஒரு ஊசி போட்டுக்க! இதோ இவங்களுக்கெல்லாம் ஒரு ஊசியப் போடு! யாரு வேணான்னா… ஊசியப் போட்டுக்கிட்டு பேசாம கெடங்கடா! உனக்கெதுக்கு ஊசி? நீ போடாமயே கெடப்ப.. ஹா…ஹா…ஹா! ” என்று சப்தமாக சிரித்தவரை நெளிவு சுளிவாகப் பேசி அடக்கினாள் அமிர்தவள்ளி. சுற்றிலும் உள்ளவர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்க, “கொஞ்சம் நார்மலா இல்லாதவர் சார்! அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க!” என்று சுப்பிரமணி விளக்கினான். புரிந்து கொண்டவர்கள் போல அவர்கள் கதிரேசனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தனர். கதிரேசனும் பதிலுக்கு அவர்களை ஏற இறங்க பார்த்துக் கொண்டிருந்தார். - துரை. சண்முகம் ____________________________________________________________________________________________ புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013 ____________________________________________________________________________________________ 21 கம்பீரம் – ஒரு உண்மைக் கதை ! [கம்பீரம்] “மை நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது. நாங்கள் மொத்தம் பதினைந்து பேர். நான் உட்பட மற்றவர்களும் அப்போதுதான் பட்டயப் படிப்பை முடித்திருந்தோம். சிலருக்கு இன்னும் மீசை கூட அரும்பியிருக்கவில்லை. எனக்கு இடதுபுறமாக நின்று கொண்டிருந்த சபாபதி என்பவனின் வாய் லேசாக முணுமுணுத்தது. “குமார்…” நடுங்கும் காற்றுக் குரலில் இரகசியமாய் அழைத்தான். “ஷ்ஷ்ஷ்… சும்மா இருங்க. எனக்கும் கெதக்குன்னுதான் இருக்கு”. ஆம். எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் அச்சமாகத்தானிருந்தது. எங்கள் கிசுகிசுப்புகள் கங்காதரைக் கலைத்தன. சட்டென்று விரைப்பாய்த் திரும்பினார். ஒரு மயான அமைதி அந்த அறையைச் சட்டென போர்த்திக் கொண்டது. அது ஒரு பயிற்சி வகுப்பறை. பெங்களூருவில் இருந்த பன்னாட்டு கணினி நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது. நாங்கள் படிப்பை முடித்து விட்டு கேம்பஸ் தேர்வில் தேர்வாகி பயிற்சிக்காக வந்திருந்தோம். அன்றுதான் பயிற்சியின் முதல் நாள். அது RISC சர்வர் வகைக் கணினிகளைத் தயாரிக்கும் நிறுவனம். சர்வர் எனப்படுவது பல நூறு கணினிகள் சேர்ந்தால் கிடைக்கும் ஆற்றலை ஒரே பெரிய கணினிக்குள் அடக்கியதைப் போன்றது. இவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் சிக்கலானவை என்றும், புரிந்துகொள்வது சிரமம் என்றும் எங்களுக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தது. பயிற்சியாளர் வரும் முன் அதைப் பற்றி எங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த போதுதான் திடீரென அந்த அறைக்குள் இராணுவம் ஊடுருவியிருந்தது. கங்காதர் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அட்டேன்ஷனில் நான் நின்று கொண்டிருந்த இடம் நோக்கி நகரத் துவங்கினார். எனது தொடைகள் எடை குறைந்து போல லேசானது. முழங்காலுக்குக் கீழே பஞ்சு போல் உணர்ந்தேன். தொண்டைக்குள் கசந்தது. இதயத்துடிப்பு எகிறியது. ‘என்னாங்கடா இது! பேசினதெல்லாம் ஒரு குத்தமாடா’ மனதிற்குள் தாறுமாறான சிந்தனைகள் துள்ளிக் குதித்தன. மொத்தம் மூன்று வரிசைகளாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நடுவில் இருந்த வரிசையில் இரண்டாவதாக இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். மிகச்சரியாக என்னை நோக்கி வந்த கங்காதர், கருவிழிகளை மட்டும் திருப்பிப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றார். எனக்கு நேர் பின்னே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். வடிவேலுவைப் போல் உணர்ந்தேன். சற்று நேரத்திலேயே பயிற்சியாளர் ராகேஷ் வந்தார். முதலில் அறிமுகப் படலம். இராணுவத்தையும் சேர்த்து மொத்தம் பதினேழு பேர். இராணுவம் தன்னை முழுமையாக அறிமுகம் செய்து முடித்த போதுதான் எங்களுக்கு விசயமே புரிந்தது. இவர்கள் இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று. கங்காதர் சவுத்ரி என்று அறிமுகம் செய்து கொண்டவர், இராணுவத்தின் ஏதோவொரு படைப்பிரிவில் கீழ்நிலையில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று, இப்போது காப்டனாகி இருக்கிறார். நாற்பதுகளின் இறுதியில் அல்லது ஐம்பதுகளின் துவக்கத்தில் இருந்தார். அந்த நிறுவனம் இராணுவத்துக்கு கணினிகளை விற்கும்போது அதோடு சேர்த்து அதை எப்படி இயக்குவது எப்படிக் கையாள்வது என்பதைப் பற்றிய பயிற்சிக்கும் இரண்டு சீட்டுகளை இலவசமாய் கொடுத்து விடும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவின் சார்பாக கங்காதரும் அவரது உதவியாளர் நிதின் ஷர்மா என்பவரும் தேர்வாகியிருந்தனர். இதற்காகவே டெஹ்ராடூனில் இருந்து பெங்களூரு வந்துள்ளனர். அந்தப் பயிற்சி பத்து நாட்களுக்கு நடந்தது. அந்த நாட்களில் நாங்கள் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டதோடு, இராணுத்தினர் பற்றியும் கொஞ்சம் போல் அறிந்து கொண்டோம் – உபயம் கங்காதர். அவர் எங்களிடம் இராணுவம் என்பதைப் பற்றிய உயர்வான பிம்பம் ஒன்றை உருவாக்க நிறைய மெனக்கெட்டார். ஓசிச் சோறின் விளைவாகவோ, ஓசிச் ‘சரக்கின்’ காரணமாகவோ அவர் பருத்த வயிற்றைப் பெற்றிருந்தார். ஆனால், தானொரு மிடுக்கான அல்லது விரைப்பான பேர்வழி என்பதை உலகுக்கு உணர்த்த கஷ்டப்பட்டு அடிவயிறை எக்கிப் பிடித்துக் கொள்வார். இதன் விளைவாய் இடுப்பு கொஞ்சம் போல் முன்னே இழுத்துப் பிடித்தது போல் நிற்கும். இந்தக் கஷ்டத்தோடு மார்புக்கூட்டை தூக்கலாக வைத்துக்கொள்ள வேண்டும். இத்தனை சித்திரவதைகளுக்கிடையே சிரமமின்றி சுவாசிப்பதைப் போல் நடிக்கவும் வேண்டும். கங்காதர் திறமைசாலிதான்… என்றாலும் மூன்றாவது நாளே கவனக்குறைவான ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அவர் ஒரு பெரும் தொந்தியர் என்பதை சபாபதி கண்டுபிடித்து, எல்லோருக்கும் ரகசியமாய்ச் சொல்லி விட்டான். அவர் சாதாரணமாக நடக்கும்போது கூட கால் மூட்டு மடங்காமல் அட்டேன்ஷனில்தான் நடந்தார். அதேபோல் பயிற்சி நடந்த நாட்களில் அவர் எப்போதும் அறையின் குறுக்குவாக்கில் நடந்ததே இல்லை; நுழைவாயிலில் இருந்து நூல் பிடித்தது போல் நேராக பத்து தப்படிகள், அப்புறம் மின்னல் போல ஒரு ‘ரைட்டர்ன்’; மீண்டும் நூல் பிடித்தாற் போல் பத்து தப்படிகள் நடை; ஒரு ‘அபவுட்டர்ன்’; அப்புறம் இரண்டு தப்படிகள் பக்கவாட்டில் நகர்ந்து நாற்காலியில் அமர்வார். உட்கார்ந்த பின் அவரது முதுகில் மட்டக்கோலை வைத்துப் பார்த்தால் முதுகெலும்பு நறுக்கென்று கச்சிதமாக நேர்கோட்டில் இருக்கும். பக்கவாட்டில் எதையாவது அல்லது யாரையாவது பார்க்க வேண்டுமென்றால் கூட ஸ்கேல் வைத்து அளந்தது போலத்தான் தலையைத் திருப்புவார். கங்காதர் நிறைய சந்தேகப்படுவார். யாரையும், எதையும் நம்ப மாட்டார். ‘இன்றைக்கு செவ்வாய்க் கிழமை’ என்று அவரிடம் யாராவது சொல்லி விட்டால் கூட அவராக ஒரு முறைக்கு இரண்டு முறை நாள்காட்டியைப் பார்த்து, சரிபார்த்து விட்டுதான் ‘அப்படியா! சரிதான்’ என்று ஒத்துக்கொள்வார். அவ்வளவு முன்னெச்சரிக்கை. ராணுவம் என்றால் சந்தேகப்பட வேண்டும்; நாட்டையே காப்பாற்றுவது என்றால் சும்மாவா என்பதுதான் அதிலிருந்த செய்தி. இராணுவம் பற்றி எங்களுக்கு உருவான சித்திரம் எந்த வகையானது என்று அன்றைய நிலையில் எங்களால் சரியாக கணிக்க முடியவில்லை. ஒரு வேளை அது கேலிச்சித்திரமாக இருக்குமோ என்று கங்காதரே எங்களை சந்தேகப்பட வைத்தார். அதற்கு அவரது உடல் மொழி மட்டும் காரணமல்ல. தொழில்நுட்பத்தில் அவருக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதைத் தீர்த்துக்கொள்ள அவர் கேட்கும் கேள்விகளும் விநோதமானவை. உதாரணமாக, “மிஸ்டர் ட்ரைனர், உங்களது இந்த கணினியை நேர்மட்டமாகத்தான் நிறுவ வேண்டுமா? கிடைமட்டமாக நிறுவினால் வேலை செய்யாதா?” அல்லது, “மிஸ்டர் ராகேஷ், இந்தக் கணினி வேலை செய்து கொண்டிருக்கும் போது அதன் எலக்ட்ரிகல் வொயரை வெடுக்கென்று பிடித்து இழுத்தால் என்னவாகும்?” ‘கேள்விகள்’ இந்த ரகத்தில் படுபயங்கரமான மொக்கைகளாகத்தான் இருக்கும். அவர் ஒவ்வொரு முறை கேள்விகளைக் கேட்கும்போதும் கையிலிருக்கும் கோப்பு ஒன்றிலிருந்து எதையோ சரிபார்த்துக் கொள்வார். அந்தக் கோப்பை அவர் பயிற்சி நடந்த பத்து நாட்களும் இராணுவ ரகசியம் போல் பாதுகாத்து வந்தார். பயிற்சி இடைவேளைகளில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போதோ அல்லது யாரோடாவது கைகுலுக்க வேண்டுமென்றாலோ கூட அந்தக் கோப்பை பத்திரமாக கக்கத்தில் அதக்கிக் கொள்வார். யாரும் அதைப் பிரித்துப் பார்த்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இராணுவமும் ரகசியமும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்று நாங்கள் நம்பினோம். கங்காதரின் மேலதிகாரிகள் தினசரி ஐந்து கேள்விகளாவது கேட்க வேண்டுமென்று இலக்கு நிர்ணயித்து அனுப்பியிருப்பார்களோ என்று சபாபதி சந்தேகப்பட்டான். பயிற்சி நடந்த பத்து நாட்களிலும் இதே பாணியில் கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டேயிருந்தார். பயிற்சிக்கு வந்த மற்றவர்களோடு சேர்ந்து நாங்கள் உதடு பிரியாமல் சிரித்துக் கொள்வோம். ஆனால், பயிற்சியாளர் ராகேஷ் சிரிக்கவில்லை. கங்காதரின் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பொறுமையாகப் பதிலளிப்பார். எதாவது எடக்கு மடக்காகப் பதில் சொல்லி, அதனால் கங்காதர் ஆத்திரமடைந்து, அதனால் அவரது மேலதிகாரிகள் அதிருப்தியடைந்து, அதனால் அடுத்தமுறை ஆர்டர் கிடைக்காமல் போனால்? அந்த நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் இராணுவம் ஒரு பொன் முட்டையிடும் வாத்து. இதைக் கொன்று விட்டால் இன்னொரு வாத்துக்கு எங்கே போவார்கள்? எனவே ராகேஷுக்கு தெளிவான உத்திரவுகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி, எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட மூன்று இஞ்சுகள் அதிக உயரம் கொண்ட கங்காதரின் ஈகோவை எந்த சேதாரமும் இல்லாமல் பவுனைப் போல் பாதுகாத்து, பத்திரமாய் முகாமுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் ராகேஷ் தெளிவாக இருந்தார். கங்காதர் ஒவ்வொரு முறை கேள்வி கேட்கும் போதும் விரைப்பாக எழுந்து நிற்பார். கங்காதர் எழுந்து நிற்கும் போதெல்லாம் நிதின்ஷர்மாவும் எழுந்து கொள்வார்; அவர் உட்காரும் வரை உட்கார மாட்டார். அதிகாரியல்லவா? அவர் நிற்க, இவர் அமர…. அதெல்லாம் நிதினின் கற்பனையிலேயே இல்லை. கங்காதர் தினசரி இரண்டு முறை நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்வார். காலை மற்றும் மதிய உணவு இடைவேளைகளின் போது கங்காதரால் சொல்லப்படும் ‘ஜோக்குகள்’ அவரது கேள்விகளை விடப் படுபயங்கர மொக்கைகளாக இருக்கும். அந்த ஜோக்குகள் அவருக்கு அவரது மேலதிகாரிகளால் சொல்லப்பட்டவை. அவர்களுக்கு அவர்களது மேலதிகாரி, அவர்களுக்கு அவர்களது மேலதிகாரி என்று இது பின்னோக்கி நீண்டுகொண்டே போய் ராபர்ட் க்ளைவின் காலத்தைத் தொடும் அளவுக்கு அரதப்பழசான ஜோக்குகள். இதைக் கேட்டு எல்லோரும் சிரிக்க வேண்டுமென்பதுதான் கங்காதரின் எதிர்பார்ப்பு. இந்த இராணுவ சர்வாதிகாரத்துக்கு ராகேஷையும், நிதினையும் தவிர மற்றவர்கள் யாரும் உட்படவில்லை. சிரிப்பதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டுமென்று கங்காதர் எதிர்பார்த்தார். சுமாரான நகைச்சுவை என்றால் மூன்று முறை “ஹஹ்ஹஹ்ஹா” சொல்ல வேண்டும்; சுமாருக்கு மேல் என்றால் நான்கு முறை சொல்ல வேண்டும். இப்படிச் ‘சிரிப்பதை’ நிதின் அளவுக்கு ராகேஷால் நேர்த்தியாகச் செய்ய முடியவில்லை. என்னயிருந்தாலும் இராணுவப் பயிற்சியல்லவா? பயிற்சிக்கு வந்த மற்றவர்கள் கங்காதரின் இந்த எதிர்பார்ப்பைக் கூட மிகுந்த சிரமத்துக்கிடையே சகித்துக் கொண்டார்கள். அவருக்கிருந்த இன்னொரு எதிர்பார்ப்பைத்தான் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதாவது, அவர் தன்னை அனைத்தும் அறிந்த மேதாவி என்று கருதிக் கொண்டார். வானத்தின் கீழ் பூமிக்கு மேல் இருந்த சகலத்தைப் பற்றியும் அவருக்கென்றே பிரத்யேகமாக ஏதாவதொரு ‘கருத்து’ இருக்கும். சில சமயம் வானத்தைக் கடந்தும் பூமியின் ஆழத்திலும் இருப்பனவற்றைப் பற்றிக் கூட ‘கருத்து’ சொல்வார். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார். நிதின் அவரது கீழ்நிலை அதிகாரி என்பதால் வேறு வழியில்லை; ராகேஷ் அனுபவசாலி என்பதால் சமாளித்துக் கொண்டார். ஆனால் நாங்களோ அப்போதுதான் கல்லூரியிலிருந்து வந்திருந்த மாணவர்கள். முழுப் பொய்யையும், முழு உண்மையையும் எதிர்கொள்வது எளிது. பாதி உண்மை – பாதி பொய் என்றால் கொஞ்சம் சிரமம். ஆனால் முழுப் பொய்யை உண்மை என்று ஏற்றுக்கொள்வது போல் நடிக்க வேண்டுமென்றால்? நாங்கள் சொல்லவொண்ணா கொடுமைகளுக்குள்ளானோம். ஒரு வழியாக அந்த பத்து நாட்களும் ஒரு முடிவுக்கு வந்தது. பத்தாவது நாளில்தான் “யானைக்கும் அடி சறுக்கும்” என்பதை நாங்கள் நேரடியாகப் புரிந்து கொண்டோம். அதாவது, கங்காதரை பயிற்சிக்காக தேர்வு செய்து அனுப்பிய அவரது மேலதிகாரிகள், அவரிடம் தினமும் பயிற்சியில் கலந்துகொண்ட மற்றவர்களோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். பயிற்சிக்காக என்று வந்துவிட்டு ஒழுங்காக அதில் கலந்து கொள்ளாமல் மட்டம் போட்டு விட்டு, ஊர் சுற்றி விடுவார்களோ என்று அவர்கள் சந்தேகம் கொண்டிருக்க வேண்டும். இந்த ராணுவத்தினர் யாரையும் நம்புவதேயில்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். கங்காதர் இந்த புகைப்பட சமாச்சாரத்தை ஒன்பது நாட்களாக மறந்து விட்டார் என்பது பத்தாம் நாளில் மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதை எப்படிச் சமாளிப்பது என்று மூளையைப் போட்டு கசக்கி, கடைசியில் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார். அதாவது, கங்காதரும், நிதினும் இராணுவச் சீருடை அணிந்தபடி எங்களோடு பத்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் நாங்களெல்லாம் வரிசை மாறி நிற்க வேண்டும். அதோடு எங்கள் தோற்றத்திலும் எதாவது ஒரு மாற்றம் செய்துகொள்ள வேண்டும். சட்டையை இன் செய்திருந்தால் எடுத்து விட வேண்டும். தங்களுக்குள் சட்டைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தலைமுடியை மாற்றி வகிடெடுத்து சீவிக்கொள்ள வேண்டும். இப்படி சில ‘மரு’ வேஷங்கள் போட்டு சமாளிக்க வேண்டும். வேறு வழியின்றி இந்திய இராணுவத்துக்காக இந்தத் தியாகத்தையும் செய்தோம். இந்த புகைப்படக் கூத்தோடு பயிற்சி ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் ராணுவம் பற்றி என்னில் உருவாகி வந்த மனச்சித்திரம் அப்போதைக்கு முழுமை அடைந்திருக்கவில்லை; ஏதோவொன்று குறைவது போலவே இருந்தது. பயிற்சிக்குப் பின் அந்தக் குழுவிலிருந்தவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போஸ்டிங் போடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்கள். நான் தில்லிக்குச் சென்றேன். தில்லியின் தால் ரொட்டிக்கும், ஆலு பரோட்டாவுக்கும், அனல் காற்றுக்கும், கடுங்குளிருக்கும் பழக்கப்படத் துவங்கியிருந்த நான்காம் வருடத்தின் முதல் மாதத்தில் எனக்கு எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு மின்மடல் வந்தது. எங்கள் நிறுவனம் தயாரித்து சந்தைக்கு அனுப்பியிருந்த குறிப்பிட்ட மாடல் கணினியில் சில பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதனால் உலகெங்கும் அந்த மாடல் கணினி எங்கெல்லாம் பயன்பாட்டில் இருக்கிறதோ அங்கெல்லாம் அதனைச் சரிசெய்ய அதன் மென்பொருளில் சில திருத்தங்கள் (bug fix) சேர்க்க வேண்டும் என்றும் அந்த மடலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மடலின் பின்னிணைப்பாக நாங்கள் திருத்தங்கள் சேர்க்க வேண்டிய கணினிகளின் பட்டியலும், அது நிறுவப்பட்டிருக்கும் முகவரியும், தொடர்புகொள்ள வேண்டிய வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டிருந்தது. அகர வரிசைப்படியிருந்த பட்டியலில் முதலாவதாக “ஆர்மி ரிசர்ச் சென்டர் – டெஹ்ராடூன்” என்று குறிப்பிடப்பட்டு, அதற்கு நேராக தொடர்புகொள்ள வேண்டி கங்காதரின் பெயரும், அவரது தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்து கங்காதரைப் பிடித்தேன். “ஹலோ! கப்தான் கங்காதர் சௌத்ரி” மறுமுனையில் அதே விரைப்போடு மிரட்டல் கேட்டது. என்னை நினைவூட்டி அறிமுகம் செய்துகொண்ட பின், கணினியில் கண்டறியப்பட்டுள்ள குறைபாட்டை விளக்கி அந்த வார இறுதியில் டெஹ்ராடூன் வருவதாகத் தெரிவித்து, அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டேன். திட்டமிட்டபடி அந்த வார இறுதியில் கங்காதர் சொன்ன நேரத்துக்கு சரியாக அங்கே இருந்தேன். நேரம் தவறாமையில் கங்காதர் கறார் பேர்வழி. பயிற்சியின் போது ஒரு நாள் கூட அவர் தாமதமாக வந்ததே இல்லை. நிதின் ஷர்மா இன்னமும் உதவியாளராகத்தான் இருந்தார். அவர்தான் எங்களை வரவேற்று அழைத்துச் சென்றார். “சார்! கணினியை எங்கே நிறுவி இருக்கிறீர்கள்?” வேலையைத் தவிர வேறு அநாவசியமான கேள்விகளை இராணுவம் விரும்புவதில்லை. “முதல் தளத்தில்” கேட்ட கேள்விக்கு ஒரு வரி பதிலைத்தான் இராணுவம் அளிக்கும். முதல் தளத்தின் சந்து பொந்துகளைத் தாண்டி ஒரு கண்ணாடி அறையின் முன் அமர்த்தப்பட்டோம். உள்ளே பெரிய பெரிய சர்வர்கள் நிறுவப்பட்டிருந்தன. அங்கே இருந்த சர்வர்கள் ஒவ்வொன்றும் நம் வீடுகளில் பயன்படுத்தும் இரும்பு பீரோக்களின் உயரத்தில் இருந்தன. “கொஞ்சம் பொறுங்கள்! காப்டன் சார் பத்து நிமிடத்தில் வந்து விடுவார்” குளிரூட்டப்பட்ட அறையில் கங்காதரின் வருகைக்காக காத்திருந்தேன். சரியாக ஒன்பது நிமிடம் ஐம்பத்தொன்பதாவது நொடியில் பழக்கப்பட்ட அந்தக் குரல் கேட்டது, “ஹல்லோ யெங்மென்! எப்படிஇருக்கிறீர்கள்?” ஆரவாரமாக அந்த அறைக்குள் நுழைந்த கங்காதர், எனது கையை வலுவாகப் பற்றிச் சுளுக்கினார்.தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரம் கணினியில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பற்றி விரிவாக விளக்கம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். “ஓக்கே! இதோ இந்த அறையில்தான் நீங்கள் சப்ளை செய்த கணினி இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள். உங்களோடு நிதின் இருப்பார்” ஒரு வழியாக ஏழு மலை ஏழு கடல் தாண்டி அரக்கனின் அரக்கு மாளிகையில் சிறைவைக்கப்பட்ட லைலாவைக் காணும் சிந்துபாத்தைப் போல் அந்த அறைக்குள் பாய்ந்தேன். நுழைந்ததும் ஒரு கணம் அப்படியே உறைந்தேன். அங்கே அந்தக் கணினி மாலைகளெல்லாம் அணிந்து சந்தனம் குங்குமம் அப்பிக் கொண்டு அய்யனார் கோவில் பூசாரியைப் போல் கம்பீரமாய் நின்றது. அந்த மாலைகள் காய்ந்திருந்தன. ஆனால் அதிர்ச்சிக்கு அது காரணமில்லை. “இதெல்லாம் நாங்க ஆயுதபூசை கொண்டாடும்போது போட்டது” நிதின் கேட்காமலேயே பதில் சொன்னார். “அது பரவாயில்லை.. ஆனால், கணினி இயக்கப்படாமல் ஒட்டடை படிந்துபோய்க் கிடக்கிறதே?” அதிர்ச்சிக்கு இதுதான் காரணம். “அதுவா… இந்தக் கணினியால் எங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்பதால் வாங்கிய நாளிலிருந்து இயக்காமலே வைத்திருக்கிறோம். நீங்கள் அதை இயக்கி வேலையை முடித்தபின் பழையபடி அணைத்து வைத்து விடுங்கள். வேண்டுமானால் ஆட்களை அனுப்பி இதில் படிந்திருக்கும் ஒட்டடைகளை சுத்தம் செய்யச் சொல்லவா?” நிதின் பதறாமல் கேட்டார். “அதுக்கில்லை சார்! இது இயங்காமல் நின்றால் நிறைய உற்பத்தி இழப்பு ஏற்படுமே?”ஆச்சர்யம் தாளாமல் கேட்டேன். “உற்பத்தியா? அதான் சொன்னேனே! வாங்கினதுலேர்ந்து பயன்படுத்தவே இல்லையென்று?” புன்முறுவல் மாறாமல் பேசினார். “ரெண்டு கோடிக்கும் மேல கொடுத்து வாங்கியதை இப்படியா வீணா போட்டு வைப்பீங்க? இந்த மாதிரி கணினிகளை வாங்குகிறவர்கள் இதிலேர்ந்து முடிந்தவரை வேலை வாங்குவாங்க சார்! யாரும் இப்படி சும்மா நிப்பாட்டி வைக்க மாட்டாங்களே!?” “குமார்.. நீங்க டிபென்ஸ் செக்டாரை இப்பத்தான் பாக்கறீங்கன்னு நினைக்கிறேன்! சரியா?” “ஆமா… ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” நிதின் சிரித்துக் கொண்டார். பின் தொடர்ந்தார், “குமார்! இங்க இருக்கிற மற்ற பெரிய சர்வர்கள் எல்லாமும் சாதாரண முப்பதாயிரம் ரூபா கணினிகள் செய்யும் அதே வேலைகளைத்தான் செய்யுது.. நீங்க சப்ளை செய்ததைத்தான் என்ன செய்ய வைக்கிறதுன்னு தெரியாம போட்டு வச்சிருக்கோம். கவர்மெண்ட் செக்டார்ல இதெல்லாம் சாதாரணம்… வருஷா வருஷம் எங்களோட கணினி பிரிவுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு செய்வாங்க. அதை எதுக்காச்சும் நாங்க பயன்படுத்தியாகணும். ஒரு வருஷம் முழுமையா பயன்படுத்தலைன்னா அடுத்த வருஷம் ஒதுக்கீட்டை குறைச்சிடுவாங்க. அதனால நாங்க வாங்கற கருவிகள் எல்லாத்தையும் அந்த வகையிலேயே காஸ்ட்லியா என்ன இருக்கோ அதைத்தான் வாங்குவோம். நீங்க புதுசில்லே! அதான் திகைச்சுப் போயிட்டீங்க. சரி! வந்த வேலையைப் பாருங்க!” ஒரு வழியாக அதிர்ச்சியை ஜீரணித்துக் கொண்டு, அந்தக் கணினியை இயக்கி அதில் சேர்க்க வேண்டிய மென்பொருள் நிரலை சேர்த்துவிட்டு, மீண்டும் பழையபடி அணைத்து வைத்தேன். அந்தக் கணினி அறைக்குள் இரும்பு பீரோக்கள் போல் நிமிர்ந்து நின்ற மற்ற எல்லா கணினிகளுமே பிச்சையெடுக்கும் கோவில் யானைகளைப் போல் பரிதாபமாய் நின்றன. எத்தனை பொருட்செலவு? அத்தனையும் வீண் விரயம். மாதாமாதம் சம்பளத்திலிருந்து கேட்காமலேயே பிடித்தம் செய்துகொள்ளப்படும் வருமான வரிப்பணம் இப்படி பெருமாள் கோவில் பிச்சைக்கார யானைகளைப் பராமரிக்க வீணடிக்கப்படுவதைக் கண்டு, நீண்ட பெருமூச்சு எழுந்தது. அதற்குள் நிதின் கையில் ஒரு கோப்போடு வந்தார். அதே பழைய கோப்பு. இராணுவ ரகசியமாய் கங்காதர் போற்றிய கோப்பு. “குமார்! இப்ப என்ன செய்தீங்களோ அதை அப்படியே ரிப்போர்ட்டா எழுதி இந்தக் கோப்பில் சேர்த்துடுங்க. ஆடிட் வர்ற மேலதிகாரிங்க இதையெல்லாம் கறாரா சரி பார்ப்பாங்க. நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன்” கையில் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். ஆர்வத்தோடு திறந்து பார்த்தேன். உள்ளே, அந்தக் கணினி வாங்குவதற்காக வெளியிட்ட டெண்டர் பற்றிய அறிவிப்பிலிருந்து, கங்காதர் மற்றும் நிதினின் பெங்களூரு வருகைக்கான அனுமதிக் கடிதம், ரயில் டிக்கெட்டுகளின் நகல்கள், தங்கிய ஹோட்டலில் கொடுத்த பில்கள் வரை தேதி வாரியாக அடுக்கப்பட்டிருந்தது. இறுதியில் அந்த பத்து புகைப்படங்கள்.. சுத்தமாக வாயடைத்துப் போனேன். இதற்காகவா அத்தனை ஆர்பாட்டங்கள்? பயிற்சிக் காலத்தில் இராணுவம் பற்றி உருவாகத் துவங்கியிருந்த முற்றுப்பெறாத சித்திரம் இப்போதுதான் முழுமையடைந்தது. அதை உற்றுப்பார்த்ததில், நன்கு உருண்டு திரண்டு கொழுத்துப் போன பங்களா நாய் ஒன்று அந்த சித்திரத்தினுளிருந்து முறைத்துப் பார்த்தது. ஆம்! இது ஒரு பிரமாண்டமான பங்களா நாய். பங்களா நாய்கள் தங்கள் எஜமானர்கள் கொடுக்கும் செல்லத்தின் விளைவாய் அதீதமாய்க் கொழுத்துப் போய்விடும். தெரு நாய்களைப் போன்றோ, வேட்டை நாய்களைப் போன்றோ ஓட முடியாது. தன் கொழுத்த உடலை அசைக்க முடியாமல் அப்படியே கிடையாய்க் கிடக்கும். அவ்வப்போது போகிற வருகிறவர்களைப் பார்த்துக் குரைத்தோ அருகில் அகப்பட்டவர்களைக் கடித்தோ தன் எஜமானனைக் குஷிப்படுத்தும். இது வெறும் அலங்காரம்தான். பயனற்றது – ஆனால் ஆபத்தான ஒட்டுண்ணி. மொத்த சமூகத்தின் இரத்தத்தையும், வியர்வையையும் உறிஞ்சிக் கொழுத்துக் கிடக்கிறது. இவற்றின் எஜமானர்கள் கற்பனை செய்து கொள்வதைப் போல் இவை காவலுக்கும் கூடப் பயன்படாது. என்றைக்காவது தெரு நாய்களோடு சண்டை வந்தால் பரிதாபமாய் செத்துப் போகும். ராணுவம் என்பது ஒரு பங்களா நாயைப் போல் இந்தியாவின் மேல் அழுத்திக் கொண்டிருப்பதே என்பதுதான் அந்த சித்திரம் சொல்லும் செய்தி என்பது அன்றைக்கு எங்களுக்குப் புரிந்தது. -மாடசாமி ______________________________________________________________________________________________________ புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013 ______________________________________________________________________________________________________ 22 உண்மைச் சம்பவம் : மண்ணுள்ளிப் பாம்பிடம் மயக்கம் ! [மண்ணுள்ளி-பாம்பு] கெணேசு என்கிற கணேச மூர்த்திக்கு சில லட்சியங்கள் இருந்தன. சம்பாதிக்க வேண்டும். நிறைய்ய சம்பாதிக்க  வேண்டும். கைக்கொள்ளாத ரூபாய் நோட்டுக் கட்டுகளின் மேல் விழுந்து புரள  வேண்டும். ஒரு பெரிய வீடு கட்ட வேண்டும்; அதில் ஐம்பதடிக்கு நூறடி அளவில் ஒரு நீச்சல் குளம் அமைக்க வேண்டும். பொள்ளாச்சியில் குறைந்தது நூறு ஏக்கராவுக்கு தென்னந்தோப்பு ஒன்றை அமைக்க வேண்டும். அங்கே ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டுத் தூங்க வேண்டும். கயிற்றுக் கட்டிலில் தூங்கினால் நன்றாகத் தூக்கம் வருமோ என்னவோ – கணேசன் நம்பினான். தூக்கம் வரும். அப்புறம், வாரம் ஒரு முறையாவது கோயமுத்தூர் ரெஸிடென்சியில் தண்ணியடித்து,  மட்டையாகி விட வேண்டும். ஆனால் இதையெல்லாம் தன்னுடைய மாத சம்பளமான மூவாயிரத்தில் செய்ய முடியாது என்கிற உண்மை தான் கெணேசனை செல்லாக அரித்துக் கொண்டிருந்தது. மூவாயிரத்துக்கு ரெஸிடென்சிக்காரன் வாசல் வரை கூட விட மாட்டான் என்பதை கணேசன் அறிந்திருந்தான். இந்தக் கதை நடந்த காலம் 2005. அப்போது கணேசன் கோவை நூறடி ரோட்டிலிருந்த கவிதா எலக்ட்ரானிக்ஸ் என்கிற மின்சாதனப் பொருட்கள் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தான். கணேசன் வேலையில் கெட்டிக்காரன். எந்த ரேடியோ செட்டாக இருந்தாலும் அதிகபட்சம் 30 நிமிடங்களுக்குள் பிரித்து மாட்டி விடுவான். நேஷனல் பானாசோனிக் என்றழைக்கப்படும் முகலாயர் காலத்து ரேடியோ செட்டைப் பழுது பார்க்கும் நிபுணத்துவம் அநேகமாக  கோவையிலேயே அவனுக்குத் தான் இருந்திருக்கும்.  கணேசன் அவ்வளவு கெட்டவன் இல்லை தான்; ஆனாலும் சமீப காலமாக அவன் சொந்த ஊரான வேட்டைக்காரன் புதூரைச்  சேர்ந்த பள்ளித் தோழன் ரெங்கு என்கிற ரெங்கசாமியைப் பற்றி கேள்விப்படும் கதைகள் அவனை நிறையவே மாற்றியிருந்தது. ரெங்குவின் கதைகளில் இருந்து தான் முதல் பத்தியில் விவரிக்கப்பட்டிருக்கும் கணேசனின் லட்சியங்களெல்லாம் முளைவிட்டன. ரெங்குவின் அப்பாவுக்கும் கணேசனின் அப்பாவைப்  போலவே விவசாயம். ஒன்றரை ஏக்கர் துக்கடா நிலம். அதில் கொம்பு வண்டுகள் மொட்டையடித்த ஐம்பது தென்னைகள் பரிதாபமாக நிற்கும். கால்வாய்ப் பாசனம். தக்காளி போடுவார்கள் – விலையத்துப் போகும். வாழை  போடுவார்கள் – பேய் மழை வந்து சாய்த்து விடும். நெல்லைப்  போட்டால் – மழை வராது; கால்வாய் வறண்டு போகும்.  கரும்பு விளைந்த நேரமாகப் பார்த்து யானைகள் புகுந்து துவம்சம் செய்து விடும். நல்ல விளைச்சல் தரும் என்று சொல்லப்பட்ட வெளிநாட்டு விதைகள் வெள்ளாமைக்கே வந்து சேராது. கஷ்ட ஜீவனம். ஆனால் ரெங்கு தலையெடுத்தான். ரெங்குவும் கணேசனைப் போலவே ஐ.டி.ஐ படித்தவன் தான். ஆனால் என்ன வேலை பார்த்தான் – அல்லது பார்க்கிறான்; என்ன தொழில் செய்தான்  – அல்லது செய்கிறான் என்பதெல்லாம் ஊராருக்குத் தெரியாது. தெரிந்ததெல்லாம் திடீர் திடீரென்று ரெங்குவால் வாங்கப்படும் பட்டா நிலங்களும், தோப்புத் துரவுகளும், பளிச்சென்று எழுந்து நிற்கும் வீடுகளும் தான். மணியக்காரத் தெருவில் இருந்த ரெங்குவின் ஓட்டு வீடு பங்களாவாய் உருமாறியது. உள்ளே பெரிய நீச்சல் குளம் இருப்பதாகவும், தரைமட்டத்துக்குக் கீழே பாதாளத்தில் அறைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். பொள்ளாச்சி பத்திராபீசில் ரெங்குவுக்கு நிரந்தரமாக நாற்காலியே போட்டு விட்டார்கள் என்று கூட சொன்னார்கள். ரெங்குவின் அசுர வளர்ச்சியால் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டதோ இல்லையோ கணேசன் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தான். “யேண்டா கெணேசா.. அந்த ரெங்கானும் ஒன்ர கூட படிச்சவந்தான.. பாரு எத்தினி காரியமா சம்பாரிக்கிறான்னு.. நீயெல்லாம் அவன்ர  மூத்தரத்த வாங்கியாச்சும் குடுச்சுப் பாரு. நெப்பு வருதான்னு பாக்கலாம்” சரியாக இரவு சாப்பாட்டுத் தட்டின் முன் உட்காரும் போது தான் கணேசனின் அம்மா லெட்சுமி திரியைப் பத்த வைப்பாள். “அவனெ யேண்டி அல்லைல குத்தீட்டிருக்கே.. அறிவும் ஊக்கமும் பொறப்புலயே வந்தாத்தான் ஆச்சு. நீ தின்னுடா கண்ணு” அப்பா தன்னை ஆதரிக்கிறாரா,  அவரும் சேர்ந்து வெந்த புண்ணில் மிளகாய்த் தேய்க்கிறாரா என்பதைக் கணேசனால் கடைசி வரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அப்பனும் ஆத்தாளும்தான் இப்படியென்றால் வெளியே கேட்கவே வேண்டாம். “கெணேசு.. ரெங்கானப் பாத்தியா? பொள்ளாச்சில ஏதோ மில்லுக்கு வெல பேசீட்டிக்குறானாமா?” “கெணேசு.. ரெங்கானப் பாத்தியா? புதுசா காரு வாங்கீக்கறானாமா?” “கெணேசு.. ரெங்கானப் பாத்தியா?  கழுத்துல கயிறு கெணக்கா தங்கச் செயினு போட்ருக்கானாமா?” “கெணேசு.. இந்த ரெங்கானிருக்கானே……” “கெணேசு.. நம்ம ரெங்கான்….” “கெணேசு….” இப்படியெல்லாம் அவர்களுக்குள்ளும் பேசிக் கொள்வார்களா,  இல்லை நம்மைப் பார்த்தால் மட்டும் தான் ஆரம்பிக்கிறார்களா  என்று புரியாமல் கணேசன் குழம்பினான். ஒரு சுபயோக சுபதினத்தில் கணேசனின் பொறுமை எல்லை கடந்தது. “வக்காளி ஆனதாகட்டும், போனது போகட்டும். நாமலும் ரெங்காண விட ஒரு பத்துக் காசாவது அதிகமா சம்பாரிச்சிக் காட்டீரோணும்டா” –  முடிவெடுத்து விட்டான். இதுதான்  ஒரு ‘லட்சியவாதி’ உருவானதன் வரலாறு. முடிவு என்னவோ எடுத்து விட்டான் – ஆனால் எப்படிச் செயல்படுத்துவது? எப்படி பணக்காரன் ஆவது? என்ன தொழில் செய்வது? எப்படி வேகமாக வளர்வது? சரியாக இந்த இடத்தில் தான் கணேசன் பல சவால்களைச் சந்தித்தான். அம்பானியில் இருந்து பில்கேட்ஸ் வரை பணக்காரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களையெல்லாம் கோவை டவுண் ஹாலில் இருக்கும் விஜயா பதிப்பகத்தில் காசு கொடுத்து வாங்கிப் படித்துப் பார்த்தான். புரியவில்லை என்பது உடனடி விளைவு.  குழப்பமடைந்தான் என்பது தான் நீண்ட கால விளைவு. கடைசியில் வேறு வழியின்றி கணேசன் எடுத்த முடிவு தான் அவன் வாழ்க்கையின் மாபெரும் திருப்புமுனை.  நேரடியாக ரெங்கானிடமே கேட்டு விட வேண்டும் என்பது தான் அந்த முடிவு. என்ன இருந்தாலும் உடன் படித்த நண்பனல்லவா, உதவாமலா போய் விடுவான்? 2005ஆம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு தான் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க  சந்திப்பு நடந்தது. விஷயத்தைச் சொன்னதும் ரெங்கான் கட கடவென சிரித்தான். “நீயெல்லாம் அதுக்கு சரிப்பட மாட்டே” கழுத்துச் செயினை உருவி விட்டுக் கொண்டான். “அதெல்லாம் பெரிய ரிஸ்குடா” கைச்செயினை தடவிக் கொண்டான். கணேசன் கேட்பதாக இல்லை. கடைசியில் “போலீசு  கேசுன்னு அலைய வேண்டியிருக்கும்” என்று கூட மிரட்டிப் பார்த்தான். கணேசன் அப்போதும் உறுதியாக நிற்கவே, ஒரு மாற்று வழியைக் கூட முன்வைத்தான். “ஏண்டா சொல்லச் சொல்ல  கேக்க மாட்டேங்குறே?  பேசாம நானே மொதல்  போட்டு பொள்ளாச்சீல ஒரு டீ.வி ரிப்பேருக்  கடை வச்சித் தாரேன். நீயே நடத்திக்க. பிப்டி பிப்டி பார்ட்னர்சிப். இது ஓக்கேவா?” “டே.. டீ.வி,  ரேடியோ ரிப்பேருக்கெல்லாம் இப்ப பவுசில்லீடா. இப்பல்லாம் அவனவன் கம்ப்யூட்டருங்கறான். பிளாப்பி டிஸ்க்குங்கறான்.. ஒன்னும் புரியல. ஓட்ட டீ.வி.ய நோண்டி அம்பதும் நூறும் சம்பாரிச்சி என்னிக்கு ஆளாகறது? அதெல்லாம் வேலைக்காகாது. நீ செய்யற பிசினசுல என்னையும் சேத்துக்கடா… இல்லீன்னா என்ன செய்யலாம்னு ஒரு ரூட்டு குடு. என்ன பிரச்சினைன்னாலும் சரி பாத்துக்கறேன்” கணேசன் விடாப்பிடியாக நின்றான். கணேசனின் இறைஞ்சல்கள் ‘இவன் தோதுப்படுவான்’ என்கிற நம்பிக்கையை ரெங்கசாமியிடம் ஏற்படுத்தியது “சொன்னாக்  கேக்க மாட்டே.. சரி ஒரு ஐடியா இருக்கு. யார்ட்டயும் மூச்சு விடக் கூடாது. என்ன?” “கழுத்தறுத்தாலும் வெளிய சொல்ல மாட்டேன். சொல்லு” “ம்ம்ம்.. நல்லா கெவனமா கேட்டுக்க. நான் வேற வேற பிசினசு பண்ணிட்டுருக்கேன். ஆனா அதெல்லாம் ரொம்ப ரிஸ்க்கு. இப்ப ஒரு புது பிசினஸ்ல எறங்கறேன். எனக்கு இதுக்கு ஆள் வேணும். இதுல அத்தினி ரிஸ்க்கு இல்ல. ஆனா கெவருமண்டுக்குத் தெரிஞ்சா சட்னி தான்…” “டேய் என்னடா சொல்றே.. எதுனாச்சும் கள்ளக் கடத்தலாடா?” முடிந்தவரை பீதியை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  சிரித்துக்  கொண்டே கேட்பதைப்  போல் கேட்டான். “இல்லீடா.. காதக் கொண்டா இங்க. அதாவது, இந்த மண்ணுளிப் பாம்பு தெரியுமா? அதான் நம்மூர்ல ரெட்டத்தலை மணியன்னு சொல்லுவாங்களே.. அதோட ஒடம்புக்குள்ளே  ஏதோ  ரேடியம் மாதிரி பச்சக் கலருல இருக்குதாமா. அதுலேர்ந்து நம்ம சிட்டுக்குருவி லேகியமாட்டா  ஏதோ மருந்து செய்யறாங்க. அதுக்கு சீனாவுல நல்ல டிமாண்டாமா. இங்கேர்ந்து கப்பல்ல சீனாவுக்கு அனுப்பறாங்க. பாலக்காட்டுல எனக்குத் தெரிஞ்ச ஒரு சேட்டன் தான் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் ஏஜெண்டு எடுத்துருக்காரு. அவரு கிட்டேருந்து நானும் ஏஜெண்ட் எடுத்துருக்கேன். தெக்க மதுரைக்கு அந்தால இருக்கற ஊருகள்ள கெடைக்கும்னு அவரு சொல்றாப்ல. அஞ்சி கிலோ அயிட்டத்துக்கு அம்பது ‘எல்’ நிக்கும். ஆளுக்குப் பாதியா பங்கிக்கலாம். என்ன?” சொல்லி முடித்து விட்டு, கணேசனின் முகத்தைக் கூர்மையாகக் கவனித்தான். கணேசன் திகைத்துப் போயிருந்தான். மண்ணுளிப் பாம்பை சின்ன வயதில் பார்த்திருக்கிறான். அதுக்குள் இப்படி ஒரு புதையலா?  திகைப்பெல்லாம் ஒரு சில நொடிகள் தான். உடனே தலையசைத்தான். “தலையாட்றதெல்லாம் இருக்கட்டும். நீ என்ன செய்யறேன்னு யாருக்கும் தெரியக் கூடாது. சரியா? அப்புறம் திருநெல்வேலில என்ர பிரெண்டு ஒருத்தான் இருக்கறான். அவனையும் தேடச் சொல்லிருக்கேன். ஆனா அவனுக்கு பங்கெல்லாம் கெடையாது. கமிஷன் தான். பத்து பர்சன்டேஜு. அவனோட நெம்பர் தர்றேன். சீக்கிரமா வேலைய ஆரம்ப்பிச்சிடு. முக்கியமா யாருக்கும் தெரியக் கூடாது. உங்க அப்பனாத்தாளுக்குமே சொல்லீறாத! சரியா?” கணேசனின் வாழ்க்கை அன்றோடு மாறியது. முதல் காரியமாக வேலையை விட்டான். தனது லட்சியத்துக்கு அது ஒரு இடைஞ்சல் என்று கருதினான். நிறைய ஊர் சுற்ற வேண்டும். அதுவும் ரகசியமாகச் சுற்ற வேண்டும். ‘பொருள்’ கிடைத்து விட்டால் அதைப் பஸ்ஸில் கொண்டு வருவது ரிஸ்க் என்று கணக்கிட்டான் – அதற்காகவே ஒரு டீசல் புல்லட்டை கிணத்துக்கடவு மணி மெக்கானிக்கிடமிருந்து இருபத்தையாயிரம் கொடுத்து வாங்கினான். அந்த புல்லட்டை பொள்ளாச்சியில் உதைத்து ஸ்டார்ட் செய்தால் கோவையே நிலநடுக்கம் வந்தது போல் அதிரும். அதில் டீசலை நிரப்பிக் கொண்டு ஊர் ஊராய் அலையத் துவங்கினான். இரண்டு வருட தேடல் அது. சோறு மறந்து, தண்ணீர் மறந்து, தூக்கம் மறந்து, குடும்பம் மறந்து, நண்பர்களை மறந்து, ஊரை மறந்து ஒரு மோன நிலையில் தமிழகத்தின் தென்பகுதியைச் சுற்றி வந்தான். காசு தீரும் போது ஏதோ ஊரில் நிற்பான்; அங்கே கிடைத்த வேலையைச் செய்வான். டீசல் டாங்கை நிரப்பும் அளவுக்கும், ஓரிரு வேளை சோற்றுக்கும் காசு தேற்றியதும் திரும்பவும் தேடலைத் துவங்குவான். கணேசனுக்கு நல்ல களையான முகம் இருந்தது.  விளைந்த தக்காளி போல் பளபளவென்று இருப்பான் – இந்த இரண்டே வருடத்தில் வதங்கி வற்றிய கத்தரிக்காய் போலானான். மொழுக்கென்று வெளித்தள்ளி நிற்கும் கண்கள் பள்ளத்துக்குள் விழுந்தது போலானது. இரண்டு வருடத்தில் இருபது வயது கூடியவனைப் போலானான். தொடர்ச்சியாக அதிரும் புல்லட் மோட்டார் சைக்கிளில் சுற்றியதன் விளைவாக ஆசனவாயில் மூலம் வைத்திருந்தது. ஒவ்வொரு நாள் விடியலும் ஒரு நரகம். மலமே சிவப்பாய்க் கழியும். கணேசன் அத்தனை பாடுகளையும் தாங்கிக் கொண்டான். பணம்… பணம்… பணம்… அதற்காக நரகக் குழியின் ஆழத்துக்கும் கூடச் செல்லத் தயாராயிருந்தான். வாரம் ஒருமுறை ரெங்கானிடமிருந்து அழைப்பு வரும். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் மண்ணுளி ஏஜெண்டுகள் கட்டுக்கட்டான பணத்தோடு போலீசில் பிடிபட்ட தகவல்களைச் சொல்வான். எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுருத்துவான். அந்தந்த வாரத்திற்கான ‘சந்தை’ விலை நிலவரத்தைத் தவறாமல் தெரிவிப்பான். கடுமையாகக் கிராக்கி கூடுவதைச் சொல்வான். அவன் பேசி முடித்ததும் மொத்த சீனர்களும் ஆண்மையற்றுப் போய் விட்டார்களோ என்று கணேசன் நினைத்துக் கொள்வான். இதை அடுத்த முறை ரங்கானிடமே கேட்டு விடலாம் என்று நினைப்பான் – அந்த ‘அடுத்த முறை’ வரவேயில்லை. நிரந்தரமாய்ச் சிவந்த கண்களையும், முன் மண்டை வழுக்கையையும் கணேசன் சம்பாதிக்கத் துவங்கிய மூன்றாம் வருடத்தின் துவக்கத்தில், காசு தீர்ந்து போன  நாளொன்றில் சிவகாசியில் இருந்தான். கைச்செலவுக்கும், பயணச் செலவுக்கும் ஏதாவது தேற்றுவதற்கு, பட்டாசுப் பெட்டிகள்  லோடு அடிக்கும் கலாஸி வேலையில் சேர்ந்திருந்த இரண்டாவது நாளில் தான் தம்புராசுவின் தொலைபேசி அழைப்பு வந்தது. “அண்ணாச்சி எங்க இருக்கிய? சீக்கிரமா வாரும் வோய்.. இங்கன பொருள் அம்புட்டுகிடுச்சி” தம்புராசு தென் மாவட்டங்களுக்கான சப்-ஏஜெண்ட். திருநெல்வேலியை அடுத்த வள்ளியூரைச் சேர்ந்தவன். கணேசனின் காலுக்குக் கீழே பூமி நழுவியது. பணக்கட்டுகளின் மேல் விழுந்து புரள்வதைப் போன்றதொரு காட்சி கண்களுக்குள் ஒரு மின்னல் கீற்றைப் போல் தோன்றி மறைந்தது. அதற்கு மேல் அவன் தாமதிக்கவில்லை. அடுத்த நாளே வள்ளியூரில் இருந்தான். அதற்கடுத்த நாளே ‘பொருளோடு’ இரவோடு இரவாக பயணித்துப் பொள்ளாச்சியை அடைந்தான். பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் ரங்கசாமி புதிதாய் வாங்கியிருந்த தென்னந்தோப்பு ஒன்றில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்த் தங்கினான். ஐந்தடிக்கு ஐந்தடி ஒரு குழிவெட்டி அதில் சகதியை நிரப்பி உள்ளே மண்ணுளியை விட்டான். அப்படித்தான் அதைப் பாதுகாக்க வேண்டுமென ரங்கசாமி தொலைபேசியில் வழிகாட்டியிருந்தான். அடுத்து ரங்கானின் வருகைக்குக் காத்திருந்தான் – காத்திருந்த நேரத்தில் கனவுகளில் மிதந்தான். ரங்கசாமி மூன்று நாட்கள் கழித்து வந்தான். வந்தவன் கணேசனின் கற்பனைகளில் வண்ண வண்ணமாய்ப் பறந்து கொண்டிருந்த பலூன்களில் கூர்மையான ஊசியால் ஒரே குத்தாக குத்தி விட்டான். “கெணேசா.. அஞ்சு கிலோவுக்கு மேல எடையிருந்தாத்தான் அந்த மருந்து உள்ள உருவாயிருக்கும்னு சொன்னனேடா.. இது மூணு கிலோவு தான் இருக்கு. இது ஆகாதுடா” அமிலத்தைக் காதில் கொட்டியது போல் இருந்தது. மீண்டுமொரு முறை காலுக்குக் கீழே பூமி நழுவியது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இப்படி நழுவுகிறது. கணேசனுக்குக் கண்ணில் நீர் கோர்த்தது. பூச்சியைப் போலும், புழுவைப் போலும் உணர்ந்தான். அவனது நிலை ரெங்கனிடம் பரிதாபத்தை வரவழைத்தது. “சரி சரி உடு.. இதுக்கேன் அழற. ஆறு மாசம் பொறுத்தா எப்படியும் இது வளந்துடும். பொறகால வித்துப் போடலாம். இது சீக்கிறம் வளர என்ன செய்யோணும்னு சேட்டங்கிட்ட கேட்டுச் சொல்றேன். அதுவரைக்கும் நீ இங்கெயே தங்கிக்க. பண்ணையத்துக்கு இருக்கற ஆளுங்களை அனுப்பிடலாம். காவலுக்கு ஒரு கோம்பை நாய் இருக்கு. மத்தபடி வேற யாருக்கும் விசயம் தெரியக் கூடாது. காதும் காதும் வச்ச மாதிரி இருக்கோணும். என்ன?” கணேசன் தளர்வாய்த் தலையசைத்தான். மேலும் நான்கு நாட்கள் கழித்து சேட்டனின் ‘யோசனைகள்’ தொலைபேசி வழி வந்து சேர்ந்தது அது மண்ணுளிப் பாம்பின் வளர்ச்சிக்கான ஒரு விநோதமான உணவுத் திட்டம். காலையில் சூரியன் உதிக்கும் முன் நேந்திரம் பழத்தை நெய்யில் வறுத்துப் போட வேண்டும். சூரியன் உச்சிக்கு வந்ததும் சீம்பாலை நன்றாகக் கட்டியாய்க் காய்ச்சித் தூவ வேண்டும். இரவு சூரியன் மறைவதற்கு முன் நாட்டுக் கோழி முட்டைகளை முழுதாகப் போட வேண்டும். முக்கியமான நிபந்தனை – உணவைப் போட்ட பின் அந்த இடத்திலிருந்து அகன்று விட வேண்டும். நம் கண்ணெதிரே மண்ணுளி எதையும் சாப்பிடாதாம். இந்த வினோதமான ‘உணவுத்’ திட்டத்தின் விளைவாய் ஆறு மாதத்தில் மண்ணுளிப் பாம்பு கால் கிலோவும், அதற்குக் காவலாக இருந்த கோம்பை நாய் எட்டு கிலோவும் கூடிய நிலையில், கணேசன் பத்து கிலோ குறைந்திருந்தான். அவன் தோல்வியெனும் பாதாளத்தின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருந்த போது தினத்தந்தியில் வந்த ஒரு செய்தி மொத்தமாகக் குப்புறத் தள்ளியது. ‘ரெங்கன் மோசடிப் புகார்களின் அடிப்படையில் கைது’  என்பதுதான் செய்தி. மண்ணுளிப் பாம்பு என்பதே ஒரு மோசடி என்பதை விவரித்த அந்தச் செய்தியை வாசிக்க முடியாத அளவுக்கு கண்ணீர் கட்டிக் கொண்டது. ஆட்டம் முடிந்தது. இரண்டு நாட்கள் கணேசன் பித்துப் பிடித்தது போல் வெறித்துக் கொண்டே அமர்ந்திருந்தான். மூடாத விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. ரெங்கனோடு கணேசன் கூட்டுச் சேர்ந்திருந்தான் என்பதை அவன் குடும்பத்தார் அரசல் புரசலாகக்  கேள்விப்பட்டிருந்தனர். பயந்து போய் ஊரெல்லாம் தேடி கடைசியில் தோப்பு வீட்டில் விட்டத்தை வெறித்தவாறே அமர்ந்திருந்த நிலையில் கண்டுபிடித்தனர். அவன் தம்பி தான் அவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான். தோப்பு வீட்டிலிருந்து தளர்வாய் நடந்து செல்லும் போது கணேசன் கடைசியாய் ஒரு முறை அந்த மண்ணுளிக் குழியைத் திரும்பிப் பார்த்தான். பரிதாபமான அந்த ஜீவன் சகதியிலிருந்து வெளியேற முயன்று கொண்டிருந்தது. குழியின் பக்கத்திலேயே அமர்ந்திருந்த கோம்பை நாய் ஏக்கத்தோடு கணேசனைப் பார்த்து வாலாட்டியது. 000 இந்தக் கதையை நாலு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னவன் கணேசனின் உடன் பிறந்த தம்பி ஆனந்தன் – என் நண்பன். கதையை எழுதி முடித்த பின்னரும், முடியாதது போலவும் ஏதோ குறைவதைப் போலவும் இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து ஆனந்தனை செல்பேசியில் அழைத்தேன். “ஆனந்தா.. அந்த மண்ணுளிப் பாம்பு மேட்டரு சொன்னியே! அதுக்கப்புறம் உன் அண்ணன் என்னவானார்?” “அதையேண்டா கேக்கற.. இப்ப பழையபடி புல்லட்ட தூக்கிட்டுக் கௌம்பிட்டாண்டா” “ஐயையோ.. திரும்பவும் முதல்லேர்ந்தா?” “இல்ல இது வேற  மேட்டரு. அதாவது தன்னோட வாழ்க்கைல யாரையுமே கடிக்காத ராஜ நாகத்தோட விஷம் கெட்டிப்பட்டு இறுகி ஒரு மாணிக்கமா மாறுமாம். அது தான் நாக மாணிக்கமாம். வயசான பின்னாடி அந்த பாம்புக்குப் பார்வை குறையும் போது இரவு நேரத்துல அந்த மாணிக்கத்தை வெளியே துப்பி வச்சிட்டு அந்த வெளிச்சத்துல தான் நடமாடுமாம். இதை அந்தப் பாம்புக்குத் தெரியாம எடுத்து வித்தா லெச்ச லெச்சமா கிடைக்கும்னு எவனோ சொன்னான்னு தேடி அலைஞ்சிட்டிருக்காண்டா” நான் செல்பேசியை வைத்து விட்டேன். கதை முடிந்துவிட்டதா, இல்லையா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். _____________________________________________ - புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012 ______________________________________________ 23 கல்லறைக் கருநாகங்கள்! – உண்மைச் சம்பவம்! [பாட்டி-ஓவியர்-மருது] ஊர் நினைவு வந்தாலே பிச்சைக்காரப் பாட்டியின் நினைவும் சேர்ந்தே வந்து விடுகிறது. இதோ, ஒரு ஆண்டுக்குப் பின் ஊருக்கு வருகிறேன். திருநெல்வேலியில் இருந்து திசையன்விளை வந்து, அங்கிருந்து மகிமையின் நகரம் நோக்கி ட்ரக்கர் வண்டில் வந்து கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை பிச்சைக்காரப் பாட்டியின் நினைவு தான். கடைசியாக சென்ற கிருஸ்துமசுக்குப் பார்த்தது தான். அவரை ஏன் எல்லோரும் பிச்சைக்கார பாட்டியென அழைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் பிச்சையெடுப்பவரல்ல. ஆனாலும் அப்படித் தான் எல்லோரும் கூப்பிடுகிறார்கள்.  அவரது வயது என்னவென்பதும் யாருக்கும் தெரியாது. அவருக்கு 120 வயது என்று ஓரு முறை அகஸ்டின் சொன்னது நினைவிருக்கிறது. அவன் ஒரு பொய் சொல்லி என்பதால் நான் அதை நம்பவில்லை.  ஒரு முறை இந்தக் கேள்வியை பாட்டியிடமே கேட்டு விட்டேன். சுமார் இருநூற்று எழுபத்தி நான்கு சுருக்கங்கள் கொண்ட முகத்தில் எந்த உணர்ச்சியும் இன்றி கொஞ்சம் நேரம் முறைத்துப் பார்த்தாரேயன்றி பதில் மட்டும் சொல்லவில்லை. அதே போலத்தான் அவரது பெயரும் யாருக்கும் தெரியாத ரகசியமாகவே இருந்தது – யாரும் பெயரைத் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். அந்த ரகசியத்தை அம்பலமாக்கியது நான் தான்.  கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது முதியோர் உதவித் தொகைக்காக அரசாங்கத்துக்கு அவர் அனுப்பிய பாரம் ஒன்றை நான் நிரப்பிக் கொடுத்தேன். அப்போது தான் அவரது பெயர் ரோஸ்லின் என்பது தெரிய வந்தது. ஆனாலும் ரோஸ்லின் என்பது அவருக்கு ஒட்டவில்லை. எல்லோரும் பிச்சைக்காரப் பாட்டி என்றே அழைத்தார்கள். அதில் அவருக்கும் பெரிதாக மனக்குறை எதுவும் இருக்கவில்லை. ‘அவர் எங்கேயிருந்து வந்தார்? உறவினர்கள் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?’ என்பதெல்லாம் கூட யாருக்கும் தெரியாத ரகசியங்கள் தான். வாத்தியார் தாத்தா நாற்பது ஆண்டுகளாகவே பிச்சைக்காரப் பாட்டியை இந்தப் பகுதியில் பார்த்துக் கொண்டிருப்பதாக ஒருமுறை சொன்னார். பிச்சைக்காரப் பாட்டி எங்கள் தெருவில் இருக்கும் எல்லோரது வீட்டுக்குள்ளும் அநாயசமாகச் சென்று வருவார். கீரை ஆய்ந்து கொடுப்பார்; காய்கறி வெட்டிக் கொடுப்பார்; துணி மடித்துக் கொடுப்பார். சில சமயம் பாத்திரம் விளக்கித் தருவார். சின்னக் குழந்தைகள் இருந்தால் பாட்டுப் பாடி தூங்க வைப்பார். என்னைக் கூட அவர் தான் சின்ன வயதில் தாலாட்டினாராம். யார் வீடாக இருந்தாலும் சமயலறை வரை உரிமையோடு சென்று, இருக்கும் சாப்பாட்டை அவரே போட்டு சாப்பிட்டுக் கொள்வார்; யாரிடமும் அனுமதியெல்லாம் கேட்க மாட்டார். தள்ளாடித் தள்ளாடி தான் அவரால் நடக்க முடியும். கொஞ்சம் கூன் விழுந்த முதுகு. கைநீட்டிக் காசு கேட்டால் பாவம் கொடுக்கலாமே என்று எண்ண வைக்கும் முதிய தோற்றம். ஆனாலும் அவர் யாரிடமும் கைநீட்டியதில்லை. ஏதாவது வேலை செய்து கொடுத்து விட்டு, கொஞ்ச நேரம் தயங்கி நிற்பார். எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார் – கொடுக்கா விட்டாலும் குறைபட்டுக்கொள்ள மாட்டார். அவர் சுருக்குப்பை எப்போதும் புடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். கோனார் தெருவின் கடைசியில் இருக்கும் ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்திருந்தார். நானூறு ரூபாய் வாடகை. பக்கத்து வீட்டிலிருந்து ஒயர் இழுத்து ஒரு குண்டு பல்பு போட்டிருப்பார். பிச்சைக்காரப் பாட்டியின் லட்சியம் ஒன்றே ஒன்று தான். ‘சாக வேண்டும்; சீக்கிரமாகச் செத்து விட வேண்டும். தனது சாவுக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் வர வேண்டும்; எல்லோரும் அழ வேண்டும். தனது சாவு கவுரவமாய் இருக்க வேண்டும்’ என்பதே அவரது கனவு. வாழ்க்கையின் அர்த்தமே நல்ல சாவில் தான் உள்ளது என்று அவர் சொல்லிக் கொள்வார். இதற்காக அவர் நிறைய பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். மழைக்காலங்களில் அவரது குடிசையினுள் நீர் புகுந்து விடும். அப்போதெல்லாம் எங்கள் வீட்டு வெராந்தையில் படுத்துக் கொள்வார். உறங்கப் போகும் முன் அவர் அழுது அழுது ஜெபம் செய்வதைக் கேட்டிருக்கிறேன். “கர்த்தாவே எங்கள் ஏசப்பா ! லாசருவை உயிர்ப்பித்த ஏசைய்யா! ஆவியில் ஏழைக்கே பரலோக ராஜ்ஜியம் என்று சொன்ன கர்த்தாவே! உம் பிள்ளைகளை ஆசீர்வதியுமப்பா..” என்று துவங்கும் ஜெபத்தில் தொடர்ந்து அவருக்குத் தெரிந்த ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி ஆசீர்வதிக்க வேண்டிக் கொள்வார். இறுதியில் தனக்காகக் கேட்க வரும் போது  “ஐயா! ராஜாதி ராஜாவே! நியாயாதிபதியே ! இந்த சரீரத்தினின்றும் எனது ஆவிக்கு ஒரு விடுதலை தாருமப்பா!” என்று கேட்டு முடிப்பார். அதற்கு நான்கு மணி நேரமாவது முழங்காலிட்டே அமர்ந்திருப்பார். இது என்ன கிறுக்குத்தனம் என்று யோசித்திருக்கிறேன். கிழண்டு விட்டால் சாக்காட்டுக்குக் காத்திருப்பார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போதுதான் நேரில் பார்க்கிறேன். அதிலும் நாலு மணி நேரமா ஜெபிப்பார்கள்? பாட்டிக்கு இது மட்டுமல்ல, இன்னொரு கிறுக்கும் இருந்தது. அது தான் சர்ச். அவரைத் தெருவில் காண முடியவில்லையென்றால் பார்க்க வேண்டிய ஒரே இடம் சர்ச் ஆகத்தான் இருக்கும். தினமும் காலையில் சர்ச் திறந்ததும் முதல் ஆளாக அங்கே செல்பவர் அவர் தான். ஞாயிறென்றால் காலை ஏழு மணி முதல் சர்வீசில் தொடங்கி 10 மணிக்கு முடியும் இரண்டாம் சர்வீசிலும் கலந்து கொண்டு தான் வருவார். ஐயர் “சமாதானத்தோடே போய் வாருங்கள்” என்று சொன்ன பிறகும் ஒரு இரண்டு நிமிடங்கள் முழங்காலிட்டு ஜெபித்து விட்டு தான் வெளியேறுவார். ஐ.எம்.எஸ் தினமோ, அறுப்பின் காலப் பண்டிகையோ, அசணப் பண்டிகையோ எதுவானாலும் ஏற்பாடுகள் தொடங்கி அனைத்திலும் முன்னால் நிற்பது பிச்சைக்காரப் பாட்டி தான். தள்ளாத உடலைத் தூக்கிக் கொண்டு சர்ச் வளாகத்தைத் முழுவதும் பெருக்குவார்; ஓரங்களில் இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்; எதையாவது வேலையை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருப்பார். போன கிருஸ்துமஸ் விடுமுறையில் தான் அவரைக் கடைசியாகப் பார்த்தேன். ஊருக்குக் கிளம்பும் போது பிச்சைக்காரப் பாட்டி தான் துணி மடித்துக் கொடுத்து, பெட்டி அடுக்க உதவி செய்தார். மனதில் ஏதோ சஞ்சலம் இருந்திருக்க வேண்டும்; முகத்தில் வழக்கமான உற்சாகம் இல்லை. “ஏம் பாட்டி! என்ன யோசிக்கிய?” “யெய்யா! மெட்ராசுல நீ இருக்க எடத்துக்கு தந்தி வருமா?” “தந்தியெல்லாம் அந்தக் காலம் பாட்டி. அதான் இப்ப செல்போன் இருக்கில்லா?” “ஆமா என்ன… நான் செத்துப் போனா ஊருக்கு வருவியாய்யா?” “அதான் நல்லா கல்லு கெணக்கா இருக்கியளே.. எங்க சாவு வரப்÷ பாவுது..” சிரித்துக் கொண்டே சொன்னேன். “திரேகத்துக்கு அழிவு இருக்கேய்யா. நான் செத்துப் போனா, நீயெல்லாம் வந்து அழுவியாய்யா? ஏதுமில்லாதவன்னி வராமப் போயிராதய்யா..” “என்ன பாட்டி! அப்படியெல்லாம் வராமப் போவோமா? கண்டிப்பா எல்லாரும் வருவோம்.. சரி, இப்ப ஏன் சாவு மேல் திடீர்னு ஆச உண்டாயிரிச்சி? “கல்ற தோட்டத்துக்கு ரூவா சேர்த்தாச்சிய்யா… இந்த வருசமே செத்துட்டா நல்லதுன்னு பாக்கேன்” “கல்ற கட்ட துட்டு சேக்கியளா? எவ்வளவு சேத்திருக்கிய?” பதிலேதும் சொல்லாமல் துணி மடிப்பதில் ஆர்வம் காட்டத் துவங்கி விட்டார். அதற்கு மேல் ஒரு வார்த்தையைக் கூட வாங்கி விட முடியாது என்று எனக்குத் தெரியும். சென்னை வந்த பின் ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் விசாரித்தேன். தன்னை தனியான ஒரு கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது பாட்டியின் ஆசையாம். இதற்காகவே, இங்கும் அங்கும் கிடைக்கும் சொற்ப காசுகளையெல்லாம் மூன்று பெரிய பானைக்குள் போட்டு சேமித்து வந்திருக்கிறாள். நான் ஊருக்குக் கிளம்பியதற்கு முந்தைய நாள் அதையெல்லாம் எண்ணித் தரும்படி டேனியலிடம் கேட்டிருக்கிறாள். மொத்தம் அறுபதாயிரம் வந்ததாம். அவ்வளவும் இருபத்தைந்து ஆண்டுகளாய் சேர்த்த காசாம். கல்லறை கட்டவும் மற்ற செலவுகளுக்கும் நாற்பத்தைந்தாயிரம் ஆகுமென்று டேனியல் சொன்னானாம். மீதமிருக்கும் காசில் நாலாயிரத்துக்கு வெடி வாங்கிப் போடும்படி கேட்டுக்கொண்ட பிச்சைக்காரப் பாட்டி, மிஞ்சியதை சர்சுக்கு அளித்து விடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். டேனியல் பெரிய அத்தையின் மகன்; பாட்டியின் சாவு நிகழ்ச்சிக்கு இன்சார்ஜாக பொறுப்பேற்றிருக்கிறான். அதன் பின் வேலை, அலைச்சல் என்று மூழ்கியதில் அநேகமாய் பாட்டியை மறந்தே விட்டிருந்தேன். “த்த்தட்ட்டார்..” ட்ரெக்கர் ஒரு பெரும் குழியில் இறங்கியேறியது “சவத்த.. ரோடா போட்றுக்கானுவ? களவானிப் பயலுவ” டிரைவர் சலித்துக் கொண்டார் – நினைவுகள் வெட்டிக் கொண்டு நிகழ்காலத்துக்குத் திரும்பியது. ட்ரக்கர் ஊரை நெருங்கி விட்டிருந்தது. தூரத்திலேயே சர்ச்சின் ஸ்பீக்கரில் இருந்து வழியும் பாடல் வரவேற்றது. “தாசரே ! இத்தரணியை அன்பாய் ஏசுவுக்குச் சொந்தமாக்குவோம்… வருத்தப்பட்டு பாரம்  சுமப்போரை வருந்தி அன்பாய் அரவணைப்போம்…” நாளை கிருஸ்துமஸ் என்பதன் அடையாளம் ஏதும் காணப்படவில்லை. வழக்கமாக உற்சாகமாக அலைந்து திரியும் வாலிபர் ஐக்கியத்தைச் சேர்ந்த பையன்களைக் கூட பார்க்க முடியவில்லை. ஐந்து நிமிட நடையில் வீடு வந்தது. வெராந்தையில் ஒரு பாயை விரித்து அதில் தின்பண்டங்களைக் கொட்டி உறவினர்கள் வீடுகளுக்கு பரிமாரிக் கொள்ள சின்னச் சின்ன சம்படங்களில் பிரித்துப் போட்டுக் கொண்டிருந்தனர். அம்மா, பெரியம்மா, அத்தை, மயினி இவர்களோடு ஒரு ஓரமாய் பிச்சைக்காரப் பாட்டியும் குறுகி உட்கார்ந்திருந்தார். இன்னும் சாகவில்லை. ஆனால் அதை எப்படி அவரிடமே கேட்பது என்று தான் தெரியவில்லை. என்னை ஏறெடுத்துப் பார்த்தவர் அளவான பொக்கைவாய்ப் புன்னகையோடு தலைகவிழ்த்துக் கொண்டு பண்டங்களைப் பிரித்துப் போடுவதில் ஆழ்ந்து விட்டார். காலை உணவை முடித்துக் கொண்டு, பயணக் களைப்பு தீர ஒரு நீண்ட தூக்கம் போட்டு விட்டு மாலை நான்கு மணிக்குத் தான் எழுந்தேன். இப்போது சுட்ட பனங்கிழங்குகளைப் பிரித்துக் கொண்டிருந்தனர். ஊர்க்கதை, உலகக் கதையெல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. பாட்டியும் இருந்தார். எப்படிக் கேட்கலாம் என்று யோசித்துப் பார்த்தேன். வார்த்தைகள் ஏதும் சிக்கவில்லை. இரவு சாப்பிடும் போது அம்மாவிடம் கேட்டேன், “யெம்மா! பிச்சைக்காரப் பாட்டி போன வருசமே சாகப் பேறேன்னு சொல்லிக்கிட்டு அலைஞ்சிதே! இன்னும் நல்லா பெலனா இல்லா இருக்கு!?” “ஏல! அறிவிருக்கால? ஆள் ஏன் சாவலைன்னா கேப்பா?” “இல்ல… நா மெட்ராசுக்கு போவச்சுல்ல செத்துப் போயிருவேனாங்கும், தந்தி வருமாங்கும்னு சொல்லிப் பொலம்பிகிட்டு கெடந்தாவளே ! அதான் கேக்கேன்” “அது இவா கைலயா இருக்கு? ஆண்டவருக்குத் தான் யாருக்கு என்ன எழுதிருக்குன்னு தெரியும்.. நீ இதெல்லாம் போய் அவா கிட்ட கேட்டுக்கிட்டு கெடக்காத! என்ன? ஒரு வருசம் கழிச்சி ஊருக்கு வந்திருக்கா! வந்து நாலு சொக்காரங்க வீட்டுக்குப் போவோம்னு ஒரு எண்ணம் இருக்கா?! யாரு செத்தா, யாரு சாவலைன்னு விசாரிச்சிகிட்டு கெடக்கான், கோட்டிக்காரப் பய” எனக்குப் பதில் சொல்லத் தொடங்கி விட்டு, பன்மையாகப் பேசிக் கொண்டே, திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டார். அதற்கு மேல் விபரங்கள் ஏதும் பெயராது என்று எனக்குத் தெரியும். ஆனால், அவர் எதையோ மறைக்கப் பார்ப்பது மட்டும் புரிந்தது. சாப்பிட்டு விட்டு, திருட்டு தம் அடிக்க நண்பர்கள் எல்லோரும் கண்மாய்க்கரை டி.டீ.டி.ஏ பள்ளிக்கூடத்தின் பின்புறமாக ஒதுங்கினோம். டேனியலும், அகஸ்டினும் கூட வந்திருந்தனர். டேனியலிடம் கேட்டேன், “என்னடே ஆச்சி? பாட்டி மூஞ்சில ஒரு சுருத்தே இல்லாம இருக்காவளே? இன்னும் சாக்காடு வரல்லேன்னு ஓவர் கவலையோ?”. டேனியல் எனக்குப் பதில் சொல்லாமல் சர்ச் உபதேசியாரின் மகன் கேப்ரியேலை நோக்கித் திரும்பினான், “ஏல! ஒனக்குத் தான முழு வெவரமும் தெரியும். நீயே சொல்லுல” என்றான். கேப்ரியேல் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தான். பின் மெல்ல வாய் திறந்து சொல்ல ஆரம்பித்தான். பிச்சைக்காரப் பாட்டி தனக்குக் கிடைத்த ஐந்து, பத்து ரூபாய்களையும், முதியோர் பென்சனையும் அப்படியே ரூபாய்த் தாள்களாக மூன்று பெரிய பானைகளில் போட்டு வைத்திருந்திருக்கிறாள். டேனியல் கடந்த ஆண்டு அதையெல்லாம் எண்ணித் தரும்போதே அதில் சில ரூபாய்த் தாள்கள் செல்லரிக்கத் துவங்கியதைப் பார்த்துச் சொல்லியிருக்கிறான். இந்தப் பணத்தையெல்லாம் யாரிடம் நம்பிக்கையாகக் கொடுத்து வைப்பது, எப்படிப் பாதுகாப்பது என்று பாட்டி குழம்பியிருக்கிறாள். எங்கள் அம்மாவிடமும், பெரியம்மாவிடமும் கேட்டுப் பார்த்திருக்கிறாள். அவர்களோ நாளை இதில் கொஞ்சத்தையாவது இவர்கள் வாயில் போட்டு விட்டார்களென்று யாராவது சொல்லி விட்டால் என்னவாவது என்று நினைத்துக் கொண்டு, வாங்க மறுத்திருக்கிறார்கள். இந்த நிலையில், சென்ற மே மாத வாக்கில் கோயில் குட்டியாரின்  மகனுக்கு இஞ்சினியரிங் சீட் கிடைத்துள்ளது. அதற்காக ஒரு பெரிய தொகையை கல்லூரியில் கட்ட வேண்டியிருந்திருக்கின்றது. அவருக்கு ஒரு ஐம்பதாயிரம் தேவைப்பட்டிருக்கிறது. சர்ச்சுக்கு வரும் யார் மூலமோ பிச்சைக்காரப் பாட்டியிடம் பணம் இருப்பதைக் கேள்விப்பட்ட கோயில் குட்டியார், தானக்கு உடனடியாகப் பணம் தேவையிருப்பதாகவும், அந்தப் பணத்தை இப்போது கொடுத்தால் பின்னால் பாட்டிக்கு ஏதாவது ஆகி விட்டால் மொத்தச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் பாட்டியிடம் கூறியிருக்கிறார். பாட்டியும், கோயில் வேலை செய்யும் இவர் ஏமாற்ற வாய்ப்பில்லை என்று எண்ணி அவரிடம் மூன்று பானைகளையும் கொடுத்து வைத்திருக்கிறார். இடையில்  சில மாதங்களுக்கு முன்பு பாட்டிக்குக் கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரம் கோயில் குட்டியாரிடம் போய் இந்த முறை நிச்சயம் தான் செத்துப் போவேனென்றும், எந்தக் குறைவுமில்லாமல் சடங்குகளைச் செய்து விடும்படியும் பாட்டி கேட்டிருக்கிறார். அதற்குக் கோயில் குட்டியார், தான் காசு வாங்கவேயில்லை என்று மறுத்ததோடு, வெளியே சொன்னால் கிறுக்குப் பிடித்திருப்பதாகச் சொல்லி பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார். தனக்கு நடந்த அநியாயத்தைப் பாட்டி போதகரிடமும், சர்ச் கமிட்டி மெம்பர்களிடமும் முறையிட்டிருக்கிறாள். அவர்களோ, கோயில் குட்டியாருக்கு ஏற்கெனவே சம்பளம் குறைவு என்றும், இருந்தாலும் அத்தனை கஷ்டத்தோடும் தேவ காரியத்தில் ஈடுபட்டிருப்பவர் மேல் அபாண்டமாகக் குற்றம் சொல்லக் கூடாது என்றும், அப்படிப்பட்ட காரியத்தை அவர் செய்யக் கூடியவரல்ல என்றும் பஞ்சாயத்து பேசியிருக்கிறார்கள். தான் அத்தனை நேசித்த கோயிலைச் சேர்ந்தவர்களே ஏமாற்றி விட்டார்களே என்ற விரக்தியில் அவர் இப்போதெல்லாம் கோயிலுக்குப் போவதில்லையாம். வெளியே யாரிடமும் சொல்வதும் இல்லையாம். அரசல் புரசலாக விஷயம் தெரிந்து விசாரிப்பவர்களிடமும் ஒன்றும் சொல்ல மறுக்கிறாராம். “ஏல! இவ்வளவு நடந்திருக்கே? நீங்க யூத் கமிட்டி பயலுவல விட்டு ஐயர்ட்ட கேக்க வேண்டியது தானல?” கேப்ரியேலிடம் கேட்டேன். “அதெல்லாம் கேட்டோம். ஆதாரம் இருந்தா பேசலாம்னு ஐயர் சொல்லிட்டார் டே! அவரு எழுதுத கள்ளக் கணக்குக்கெல்லாம் கோயில் குட்டியாரும், கமிட்டி மெம்பரும் சாட்சியா இருக்கானுவ. பதிலுக்கு இந்தப் பயலுவ என்னத்தக் களவாண்டாலும் அவரு கண்டுக்கிட மாட்டாரு. இது ஒரு விஷயம் தான். காணிக்கை காசுலயே கைய வைக்கானுவ. பிஷப்புக்கே எழுதிப் போட்டாச்சு. அவரு “போதகனைப் பாராதீர் போதகத்தைப் பாரும்”னு பதில் சொல்லுதாரு. அவரு பங்குத்தந்தை எலக்சன்ல ஜெயிக்க இவங்க ஆதரவு வேணும்லா! அதாம் கண்டுக்கிட மாட்டேங்காரு” நீண்ட நேரம் பேசினோம். சர்ச் கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்த விதம் பற்றி நிறைய சொன்னார்கள். அழகிரியின் திருமங்கலம் தேர்தல் ஃபார்முலாவை மிஞ்சும் வகையில் அது நடத்தப்பட்டுள்ளது. கள்ள ஓட்டு, ஓட்டுக்கு நோட்டு, பூத் கேப்ச்சரிங் என்று ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடந்திருக்கிறது. வாய்ப்பிருந்தால் வேறு சமயத்தில் அது பற்றிக் கூட எழுதலாம். பாட்டியின் காசை கோயில் குட்டியார் களவாண்ட விவகாரமும், அதைப் பாதிரியாரும் பிற கமிட்டி மெம்பர்களும் பாராமுகமாய் இருந்து மறைமுகமாக ஆதரித்துள்ள விவகாரமும் கேப்ரியேல் மூலம் சர்ச்சின் வாலிபர் கமிட்டி முழுக்கப் பரவியுள்ளது. ஏற்கெனவே பல்வேறு முறைகேடுகளால் அதிருப்தியுற்றிருந்த இளைஞர்களை இந்த விவகாரம் ஆத்திரத்தின் உச்சிக்கே கொண்டு போயிருக்கிறது. அவர்கள் இந்த முறை ஒட்டுமொத்தமாக பண்டிகை ஏற்பாடுகளைப் புறக்கணித்து விட்டிருக்கிறார்கள். இது போன்ற முறைகேடுகளைக் கண்டு மனம் வெறுத்துப் போன இளைஞர்கள் இப்போதெல்லாம் அதிகம் சர்ச்சுக்குப் போவதில்லையாம். அதனால் தான் இந்த ஆண்டு கிருஸ்துமசுக்கு முந்தைய இரவு வாலிபர் ஐக்கியக் குழுவினர் நடத்தும் கேரல் ரவுண்டு கூட நடக்கவில்லை என்று கேப்ரியேல் சொன்னான். “யாரும் வரல்லேன்னா என்ன! நீயாவது வாடே! உபதேசியார் மகனே வரலேன்னா எல்லோரும் ஒரு மாதிரியா பேசுவாங்க” என்று கேப்ரியேலின் அப்பா கூப்பிட்டிருக்கிறார். “அதான் வேதத்துல துன்மார்க்கர் இருக்கும் இடத்தில் இருக்காதேன்னு சொல்லிருக்கில்லா… இந்த உலகத்துலயே சர்ச்சை விட துன்மார்க்கர் அதிகமா இருக்க வேற இடம் ஏதாவது இருக்கா சொல்லுங்க” என்று கேப்ரியேல் முகத்திலடித்தாற் போல் கேட்டு விட்டானாம். உபதேசியாரிடம் அதற்குப் பதிலே இல்லையாம். பேச்சினூடாகவே விடிந்திருந்தது. நான் வீட்டுக்குக் கிளம்பினேன். ஸ்பீக்கரில் பாதிரியின் போதகத்தைக் கேட்க முடிந்தது. தெரு முனையில் திரும்பும் போது அம்மா கையில் பைபிளோடு கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். பையன்கள் மூலமாக விசயத்தை நான் அறிந்திருப்பேன் என்று அவருக்குத் தெரியும்.  நான் முழு நாத்திகனாகி பல ஆண்டுகளாகி விட்டது; எனக்கு நம்பிக்கையில்லையென்று தெரிந்திருந்தும் கோயிலுக்கு வரச் சொல்லி ஒரு சம்பிரதாயத்துக்காவது கூப்பிடுபவர் இந்த முறை கூப்பிடவில்லை. தலையைத் தாழ்த்திக் கொண்டே கடந்து போய் விட்டார். வெராந்தையில் பாட்டி படுத்துக் கிடந்தார். விழித்துக் கிடந்தார்; ஆனால் எழுந்து கொள்ளவில்லை. வழக்கமாக எல்லோருக்கும் முன்பாகக் கோயிலுக்கு ஓடுபவர் அன்று எந்த ஆர்வமுமின்றி விட்டத்தை வெறித்துக் கொண்டே கிடந்தார். “பாட்டி…” “…….” “காசு போச்சின்னு கவலப் படாதீய. நாங்கெல்லாம் இருக்கோம். அப்படியேதாச்சும் ஒன்னு ஆச்சின்னா நல்ல முறையா அடக்கம் செய்வோம்” “……” வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. உள்ளே செல்லத் திரும்பினேன். பின்னால் விசும்பல் சப்தம் கேட்டது. சர்ச் ஸ்பீக்கரில் போதகம் தொடர்ந்து கொண்டிருந்தது. “உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும்  சொல்லுங்கள். இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் – என்று மத்தேயு 5:37 ல் தேவனாகிய ஏசு கிருஸ்து சொல்கிறார்……….” தூத்தேறி..! ________________________ குறிப்புகள்: 1)            கோயில் குட்டியார் என்பவர் சர்ச்சில் ஒரு உதவிப் பணியாளர் போன்றவர். அவருக்கென்று சம்பளம் உண்டு. அவரது குடும்பச் செலவுகள் அனைத்தும் சர்ச் பணத்தில் நடக்கும். 2)            வாலிபர் ஐக்கியம் / யூத் கமிட்டி என்பது ஒரு சர்ச்சில் இருக்கும் திருமணமாகாத இளைஞர்களைக் கொண்ட குழு. சர்ச்சின் பெரும்பாலான நிகழ்ச்சிகளை இவர்கள் தான் முன்னின்று நடத்துவார்கள். 3)            சர்ச் கமிட்டி என்பது தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களைக் கொண்டது. 4)            ட்ரக்கர் / டக்கர் – என்பது பெரிய சைஸ் ஜீப். தென் மாவட்டங்களில் சிறிய கிராமங்களை இணைக்கும் பொதுப் போக்குவரத்து. _________________________________________________ புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012 _______________________________________________________ 24 கருணையா, கொலையா? வரமா, சாபமா? – உண்மைச் சம்பவம்! [ஓவியர்-மருது] “சுதா வந்துட்டாளாம்! சுதா வந்துட்டாளாம்!“ என்று ஒருவருக்கொருவர் பரபரப்பாய் பேசிக் கொண்டும், செய்தியைப் பரிமாறிக் கொண்டும் ஊரை வலம் வந்தார்கள். ‘எப்படித்தான் மனம் வந்து செய்துருப்பாளோ?!  நிலமை இப்படி இருக்கும் போது அவள் என்ன தான் செய்வாள்? அதெல்லாம் டாக்டர்ட்ட காம்பிச்சு சரி செஞ்சுடலாமாம். மனசு பேதலித்துத்தான் இப்படி செய்திருப்பான்னு நினைக்கிறேன்‘ இவையெல்லாம் அவளைப் பார்த்தவர்கள் பகிர்ந்தவை. அவர்களைப் பார்த்தபடி வீட்டின் முன் நின்று கொண்டிருந்த என்னை அந்த வார்த்தைகள் குடைய ஆரம்பித்தன. இது வெறும் புறணி பேசும் மக்களுடைய கதைகள் என்றால் அதை நான் சட்டை செய்திருக்க மாட்டேன். இது அடிவயிற்றைப் பிசையும் ஒரு மனவலி. நானும் சுதாவை பார்க்கும் எண்ணத்துடன் வேலைகளைச் சீக்கிரம் செய்து முடிக்க வேண்டுமென ஓடிக் கொண்டிருந்தேன். வேலையின் ஊடே இடையிடையே அவளின் கம்பீரமான நடையும், வைரம் போன்ற கருமையான அழகும், பெண்களுக்கென கிராமங்கள் விதித்திருக்கும் கட்டுப்பெட்டித் தனத்தை மீறாத அவளது அப்பாவித்தனமும் என் நினைவில் நிழலாடியது. கிராமத்து மொழியில் சொன்னால் ‘அவள் நல்ல உழைப்பாளி, பார மாடு மாதிரி எல்லா வேலையும் செய்வாள்‘. அவள் இடத்தில் நான் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பேனோ என்றெல்லாம் எண்ணத்திலே களைப்பூட்டும்படி நீந்தியதால் வேலையை சரியாகச் செய்ய முடியவில்லை. அவளைப் பார்த்தால் தான் மனசு ஆறுமென்று தோன்றவே, பக்கத்தில் உள்ள உறவுக்காரப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு சுதாவைப் பார்க்க விரைந்தேன். சுதாவைப் பார்த்த நொடியில் விக்கித்து நின்று விட்டேன். நான் பார்த்த சுதாவா அவள்? கல் தூண் போன்ற அந்த கம்பீரம் எங்கே? தலைவிரி கோலமாக, கழுத்து முழுதும் காயமாக, நான் பார்த்த உடம்பில் பாதியாக, நிலைகுத்திய கண்களுடன் செத்தும் சுடுகாடு தெரியாதவள் போல காட்சியளித்தாள். பேய் அறைஞ்சா மாதிரி என்று சொல்வார்களே அது போல் ’யார் வருகிறார்கள், யார் போகிறார்கள்?’ என்று உணராமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல் கிணற்றில் போட்ட கல் போல குந்தியிருந்தாள். அவள் அம்மாதான் என்னைப் பார்த்த மாத்திரத்தில் கதறி அழுதார். “பாத்தியாளாயி என் மவளை! நாங்க இனிமே என்ன செய்யுவோம்? எப்படியெல்லாம் இருந்தா! உங்கள்ட்டெல்லாம் நல்ல பேரு எடுத்தாளே… இப்படியொரு அவப்பெயர எடுத்துட்டு வந்து உக்காந்திருக்காளே… இந்த ஊரு என்னா சொல்லும்? இனி யாரு எங்கள மதிப்பா? நான் இந்த ரெண்டு பொம்பளப் பிள்ளைவள வளக்க படாத கஷ்டமா? விதி விட்ட வழின்னு இல்லாம இந்தப் பாவி மவ இப்புடி செஞ்சு வச்சுருக்காளே? நான் இனி என்ன செய்வேன்? கூலி வேலைக்குப் போய் இந்தக் குடும்பம் பண்ணுனனே! இனி இவள பாதுகாத்துட்டு உக்காந்திருக்க முடியுமா? ஆம்பள துணையில்லாம 18 வயசுலேருந்து பொம்னாட்டியிலும் கம்னாட்டியா இருந்து கஷ்டப்படுறனே..இனிமே இந்த ஊர் எம்மவள கொலைகாரின்னு சொல்லுமே! எப்புடி உசுர வச்சுகிட்டு இருக்குறது? இந்தக் கடவுளு நம்மள கொண்டுட்டு போகாதா…..” சுதா கொலை செய்தாள் என்பதை நினைத்துப் பார்க்கவே மனது நம்பவில்லை. ஆனால் உண்மை அதுதான். இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை, கோழி கூப்பிடும் நேரம். ஐந்தரை மணியிருக்கும். நான் எழுந்திருக்கவே இல்லை. அந்த நேரத்தில் மனிதர்களின் சலசலப்பு சத்தம் என்னைத் தட்டி எழுப்பியது. ஊரில் என்ன நடந்திருக்கும்? திருட்டு எதுவும் நடந்து விட்டதா? இல்லை யாரும் தற்கொலை எதுவும் செய்து கொண்டார்களா? ஒன்றும் யூகிக்க முடியாமல் ஒருவரிடம் விசாரித்தேன். சேதியைக் கேட்டு அப்படியே தலை சுற்றிப் போய் விட்டது. ‘சுதா தன் இரு குழந்தைகளையும் கழுத்தை நெறித்து சாவடித்து விட்டாளாம்‘. ♥ ♥ சுதாவுக்கு அப்பா, அண்ணன் என்று யாரும் ஆண் துணை கிடையாது. அம்மா, சுதாவோட நாலு வயசு மூத்த அக்கா என்று மூன்று பேரும் பெண்கள்தான். சொந்தமா ஒரு குடிசை, ரெண்டு முந்திரி மரம் கொண்ட ஐம்பது குழி குட்டியூண்டு நிலம் – இதுதான் அவங்களோட சொத்து. களை பறிக்க, கடலை பிடுங்க, கடலைக் கொடி ஆய, உளுந்து-பாசிப் பயிறு-எள்ளுச் செடி பிடுங்கன்னு பொம்பளைங்க செய்யுற எல்லா கூலி வேலையும் செய்ஞ்சுதான் பொழப்பை ஓட்டுனாங்க. இதுக்கெல்லாம் இப்பவும் கூலி 25 ரூபாதான். இந்த கஷ்டத்திலயும் சுதா பத்தாவது வரை படித்தாள். பிறகு பக்கத்து நகரத்தில் உள்ள சீவல் கம்பெனி வேலைக்கு ஒரு நாலு வருசமா போனாள். அந்த வருமானத்தில்தான் தனது திருமணத்துக்குத் தேவையான நகை, நட்டுக்களை வாங்கிச் சேர்த்தாள். உறவினர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தார்கள். ஒரு வழியா 2003-ஆம் வருசத்துல சுதாவுக்கு கல்யாணம் நடந்தது. அவ பிறந்து வளர்ந்ததும் ஒரு கிராமம்னா, வாக்கப்பட்டதும் ஒரு கிராமம்தான். அவ பிறந்த ஊருதான் நான் வாக்கப்பட்ட ஊரும். சுதாவின் கணவன் அவனோட கிராமத்துக்கு பக்கத்துல இருந்த ஒரு சிற்றூர் சினிமா தியேட்டரில் டிக்கட் கொடுக்கும் வேலை செய்து வந்தான். மாலை, இரவு நேரம் மட்டும் சினிமா ஓடும் டூரிங் தியேட்டர் அது. சுதாவுக்கும் அவனுக்கும் 15 வயது வித்தியாசம். அந்த வட்டாரத்துல சுதா மாதிரி ஏழைங்கள ரெண்டாம் தாரமாவோ, இல்லை இது மாதிரி கல்யாணம் ஆகாம அதிக வயசுல இருக்கிற ஆம்பளைங்களுக்கு கட்டிக் கொடுப்பதோ தான் வழக்கம். எப்படியாவது கல்யாணம் நடக்கணும்கிறதைத் தாண்டி விருப்பப்பட்டெல்லாம் நடக்கவே நடக்காது. எது எப்படியோ, சுதாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மூன்று வருட இடைவெளியில் பிறந்தன. முதல் குழந்தைக்கு மூன்று வயதாகி, இரண்டாவது குழந்தை மாசமான சமயத்தில் அவள் கணவனின் உடல் நிலை சரியில்லாமல் போகவே மருத்துவரிடம் காண்பித்தார்கள். குச்சி போல நடக்கத் தெம்பில்லாமல் இருந்தவனுக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் பல்வேறு சோதனை எடுத்துப் பார்த்தார்கள். அப்போதுதான் அவன் எமன் மாதிரி சுதாவின் வாழ்வில் வந்தவனென்று தெரிந்தது. ஆம் அவனுக்கு எய்ட்ஸ் உள்ளதைக் கண்டுபிடித்தார்கள். பிறகு கர்ப்பமுற்ற சுதாவையும் பரிசோதித்தார்கள். அவளுக்கு மட்டுமல்ல, அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எய்ட்ஸ் நோய் உள்ளது என்று மருத்துவர்கள் கூறினார்கள். பிறகு முதல் குழந்தையையும் அழைத்து சோதனை செய்து, அதற்கும் எய்ட்ஸ் நோய் உள்ளது என்று கூறி விட்டனர். மொத்தக் குடியிலும் இடி விழுந்தது போல சுதாவைத் தாக்கியது எய்ட்ஸ். என்ன செய்வாள் அந்த அபலை? இரண்டாவது குழந்தை பிறந்து ஒரு மாத காலத்துக்குள் கணவன் எய்ட்ஸ் நோய் முத்திய நிலையில் இறந்து விட்டான். பெண் எந்த நிலையில் இருந்தாலும், சுயநினைவே இல்லாவிட்டாலும், அவளுக்குச் செய்யும் விதவைச் சடங்கைச் செய்யாதிருக்காது இந்தச் சமூகம். பொட்டழித்து, பூப் பிடுங்கி, பின்னலைக் களைந்து தலைவிரி கோலமாய், தலையில தண்ணீர் ஊத்தி, வெள்ளைத் துணி போட்டு மூடி, ஏனைய விதவைப் பெண்கள் பிடித்துக் கொள்ள, நாவிதர் தாலியை அறுத்து பால் இருக்கும் கிண்ணத்தில் போட, யாரையும் பார்க்க விடாமல் துணி போட்டு மூடி, பாடைக்கும் கீழே குனிந்தபடி, வீடிருக்கும் வீதி வரை நடக்க வைத்து….. இறுதியில் வீட்டின் மூலையில் அவள் முப்பது நாட்கள் முக்காடு போட்டபடி, ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். இப்படியாக சுதாவை ஒரு மூலையில் சாத்தி வைத்தது சமூகம். கணவன் இறந்து முப்பதாவது நாள் இறுதியாக ஒரு காரியம் செய்வார்கள். அந்த நிகழ்வு முடிந்ததும் எல்லா உறவுகளும் பொறுப்பு முடிந்தாகக் கலைந்து சென்று விடுவார்கள். அந்த முப்பதாவது நாள், அதிகாலை நான்கு மணியளவில் திண்ணையில் படுத்திருந்த சுதா, நாலு வயசு முதல் குழந்தையை தன் பாவடை நாடாவாலும், இரண்டு மாதம் கூட முடியாத அடுத்த குழந்தையை தன் கை விரல்களாலும் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு, கடைசியாகப் புடவையால் தானும் தூக்குப் போட்டு விட்டாள். உயிர் போகும் நிலையில் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த உறவுக்கார சனங்க வெளியில் வந்து பார்த்து, சுதாவைக் காப்பாற்றி உடனே கார் வைத்து நகரத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அப்போது யாரும் குழந்தைகளை நினைக்கவில்லை. அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பதாகத்தான் எல்லாரும் கருதினார்கள். சுதாவை காரில் அனுப்பிய கையோடு குழந்தைகளுக்கு கடையில் டீ வாங்கிக் கொண்டு வீடு வந்து எழுப்பிய போதுதான் குழந்தைகள் இறந்திருப்பதைக் கண்டுபிடித்தார்கள். சுதா பிறந்த ஊரான எங்க ஊருக்கும் சேதி சொல்லப்பட்டது. அந்த செய்தி கேட்டுத்தான் மக்கள் கும்பல் கும்பலாக நிறுத்தாமல் பேசியபடியே இருந்தனர். பிறகு கிராமத்தின் முக்கியஸ்தர்கள் கூடி, சுதா வாக்கப்பட்ட ஊருக்கு போய் என்ன ஏது என்று பார்ப்போமெனப் புறப்பட்டனர். சொல்லப்பட்டவை, அதாவது சுதா குழந்தைகளைக் கொன்றது உண்மைதான். அவளது கணவர் வீட்டுக்காரர்கள் சுதாவை மருத்துவமனையில் இருந்து தங்களது ஊருக்கு வரக் கூடாது,  அப்படியே பிறந்த ஊருக்கு அழைத்துச் சென்று விடுங்கள், இல்லையின்னா போலீசுக்குப் போவோம் என்றனர். சுதாவின் ஏழைத் தாய் என்ன செய்வாள்? தற்போதைக்கு சுதாவை ஒரு வீட்டில் உட்கார வைத்து விட்டு, குழந்தைகளை அடக்கம் செய்த பின் தாயும், ஏனைய பிறந்த ஊர்க்காரர்களும் சுதாவை அழைத்துச் சென்று விடுகிறோம் என்றார்கள். அந்த ஊர்க்காரர்களும் அதுதான் நல்லது, போலீசுக்குப் போய் என்ன பிரயோசனம்? யாருக்கு என்ன நன்மை?! என்று கூறி சுதாவை பிறந்த ஊருக்கு வழியனுப்பி வைத்தனர். அதன் பிறகுதான் எங்க கிராமத்து பதட்டம், பரபரப்பில் நானும் சுதாவின் வீடு வந்து அவளைப் பார்க்கிறேன். அவளது தாய் அழுது அரற்றிய போதும் என்னால் ஒன்றும் ஆறுதலாகச் சொல்ல முடியவில்லை. அப்படி ஆறுதல் சொல்லுமளவு அந்த சம்பவம் லேசானதில்லை; நானும் வலிமையானவளில்லை. ♥ ♥ இப்படியே சில மாதங்கள் சென்றன. சுதாவின் கழுத்துப் புண் ஆறியது. எய்ட்ஸ் பயம் குறித்து அறிந்திருந்த கிராமத்தினர் சுதாவோடு தொட்டுப் பழகி உறவாடாத படிக்கு ஒரு இடைவெளியைக் கவனமாக வைத்தே அணுகினர். சுதாவோ அதையெல்லாம் ஒரு குறை என்று எடுத்துக் கொள்ளாதபடிக்கு சோகத்திலும், வேதனையிலும் வெகு தொலைவு போயிருந்தாள். திருமணத்திற்கு முன் சீவல் கம்பெனி வேலைக்குச் சென்ற இடத்தில் உள்ள பெண்கள் சிலர் வந்து பார்த்துச் சென்றனர். “சுதாவை இப்படி வீட்டிலேயே அடைத்து வைத்தால் அவளது மனது இன்னும் பாதிக்கப்படும். ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்கிறோம். அனுப்புங்கள்” என்றனர் அந்தப் பெண்கள். “ஊரே கண்டு பயப்படும் எய்ட்ஸ் நோயுள்ள பெண்ணை எப்படி வேலைக்கு அனுப்புவது, யார் ஏற்பார்கள் ?” என்றாள் சுதாவின் அம்மா. “காசுக்காக இல்லை என்றாலும் மன நிம்மதிக்காக சில வேலைகள் இருக்கின்றன. விசாரித்துவிட்டுச் சொல்லுகிறோம்” என்று அந்தப் பெண்கள் கூறினார்கள். அவர்கள் மூலமாக நகரத்தில் உள்ள மருந்துவமனையில் எய்ட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவச் சேவைக்கு அழைத்துச் சென்றனர். சுதாவுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. மரணத்தை நிச்சயமாகத் தேதியிட்டு அறிவிக்கும் எய்ட்ஸ் நோயை எதிர்கொண்டு வாழ்வது குறித்து அவளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. சுதாவும் ஓரளவு முன்னேறியிருந்தாள். யாரையும் நிலைகுத்திய விழிகளால் துளைக்கும் அவளது முகத்தில் கொஞ்சம் சாந்தம் குடியேறியது போல இருந்தது. பிறகு அங்கேயே ஒரு வேலையும் போட்டுக் கொடுத்தார்கள். அவளைப் போல் எய்ட்ஸ் நோய் உள்ளவர்களை, அவர்கள் வசிக்கும் ஊர்களுக்கே சென்று, நம்பிக்கைத் தரும் வண்ணம் பேசி பழக்கப்படுத்த வேண்டும். அந்த நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளும் கொடுத்து வர வேண்டும். மற்றவர் துயர் துடைக்கும் இந்த வேலையினூடாக சுதா தன்னுடைய சோகத்தை சற்று மறந்திருந்தாள். அந்த வேலையை உற்சாகமாகவே செய்து வந்தாள். சுதா வேலைக்குச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் என்னிடம் நட்பாகப் பழகுவாள். நான் அவள் மேல் இரக்கப்பட்டு, பரிதாபமாகப் பார்ப்பேன். சுதா பஸ்ஸை விட்டு இறங்கிச் செல்லும் வழியில் என் வீடு இருந்தது. அவள் வீடு சற்றுத் தூரத்தில் இருந்தது. என் வீட்டில் சற்று இளைப்பாறி விட்டு, பேசிக் கொண்டிருப்பாள். அப்பொழுது சுதா வேதனையுடன் சொன்ன கதைகள் பல. ‘நான் மட்டும் இல்லக்கா. என்னப் போல நிறைய பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க. நான் ஒரு ஊருக்குப் போனேன். அங்க ஒரு பொண்ணு சொன்னிச்சு, “அவன் எங்கெல்லாம் அரிப்பெடுத்துப் போனானோ? மொத்தப் பாவத்தையும் எம் மேல இறக்கிட்டு போயிட்டான். இன்னைக்கு நடுத்தெருவுல நிக்கறேன்.” இதுனாலும் தேவலாம். இன்னொரு ஊருல நடந்ததக் கேளுக்கா. கல்யாணம் ஆன கொஞ்ச நாளுல பொண்டாட்டி கிட்ட ஒருத்தன் எய்ட்ஸ் இருக்குன்னு சொல்லியிருக்கான். பெறவு அந்த பொண்ணு தற்கொலை செஞ்சு செத்துப் போச்சு. திரும்பவும் பொம்பள சுகம் தேடி அந்த கம்னாட்டி இன்னொரு பொண்ணையும் கண்ணாலம் பண்ணியிருக்கான். பெறவு அவனும் நோய் முத்தி செத்துட்டான். இந்தக் கதையை அவனோட ரெண்டாவது சம்சாரமாயிருக்கிற பொண்ணு சொல்லிச்சு. நல்ல வேளை! அந்தப் பொண்ணு செஞ்ச புண்ணியம்.. அதுக்கு எய்ட்ஸ் இல்ல.‘ இதையெல்லாம் சுதா அழுதபடிதான் சொல்லுவாள். அழும்போது, “எப்படியெல்லாம் ஏமாத்துறானுங்க! பாவிப் பயலுவ… பொம்பளையா பெறந்தா பாவப்பட்ட ஜென்மாமா ஆயிறோம். எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு போக வேண்டியதா இருக்கு. இவனையெல்லாம் கொன்னு மரத்துல தொங்க விடணும். புதைக்க கூடாது, காக்கா, கழுகுதான் தின்னுட்டுப் போகணும்…” என்று அவள் சொல்லும்போது பாவப்பட்ட பெண்ணினத்தின் குமுறல் இறுதியில் சாபமாகவும் வரும். இப்படி அவள் சொல்லும் ஒவ்வொரு கதையையும் கேட்கும் போது அன்றைய பொழுது பேயறைந்தாற் போல் இருக்கும். ஒரு நாள் என் அம்மா என்னைப் பார்க்க ஊரிலிருந்து வந்திருந்தார்.  வேலைக்குச் சென்று திரும்பிய சுதா அன்று மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். “ஏன்? உடம்பு சரியில்லையா?” என்று விசாரித்தேன். அம்மா தண்ணி கொண்டு வந்து கொடுத்தார். அவள் சிரித்துக் கொண்டே “வேண்டாம்மா! நான் தண்ணி வைச்சிருக்கேன்” என்றாள். என் அம்மா இருமியதைப் பார்த்து அவள் வைத்திருந்த இருமல் மருந்தை தயக்கத்துடன் கொடுத்தாள். ஒரு எய்ட்ஸ் நோயாளி தரும் மருந்தை சாதாரண மக்கள் வாங்க யோசிப்பார்களில்லையா? அப்படியெல்லாம்  நினைக்கவில்லை என்பதாக வாங்கிக் கொண்டார் என் அம்மா. எங்கள் கிராமத்து நர்சின் உதவி ஆயாவாக வேலை பார்த்திருப்பதால் என் அம்மாவுக்கு அப்படி ஒரு தயக்கம் இல்லை. “என்ன சுதா! மறுபடியும் உடம்பு சரியில்லையா?” என்று கேட்டார் என் அம்மா. “நான் நல்லாத்தான் இருக்கேம்மா! ஊருல சனங்க பேசற பேச்சுதான் நம்மை சாகடிச்சுரும் போல இருக்கு” என்றாள். “ஏன்? யாரு என்ன சொன்னாங்க?” என்றேன். “வீட்ல சும்மா இருக்கும்போது மனசு எதையாச்சும் நினைச்சுக்கிட்டே இருக்குதேன்னு பக்கத்துல நம்ம மாமா வீடுதானேன்னு  டி.வி. பார்க்கப் போனேன். அந்த வீட்டு அத்தை சொன்னாங்க, ’சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காத! இது புள்ள குட்டிங்க புளங்குற இடம். உன் நோய் எல்லாத்துக்கும் வந்திருச்சுன்னா என்னா பண்றது?’ பெரியப்பா வீட்டுக்குப் போனா டி.வி.யை இழுத்து வாசல்படிக்கு நேரா வைச்சு திண்ணையில ஒரு ஓரமா ஒக்காத்து பார்த்துட்டு போங்கிறாங்க. டி.வி. பார்த்துட்டுப் போன பிறகு நான் உக்காந்த இடத்தை தண்ணி விட்டுக் கழுவி விடுறாங்க. எனக்கு கோபம் வரல, அவங்க அறியாமையை நினைச்சு சிரிச்சுக்கிட்டேன். இது கூட பரவாயில்லம்மா. சில பேரு நான் திமிரெடுத்துப் போய் பிள்ளைகளை கொன்னுட்டு, மினிக்கிக்கிட்டுத் திரியறதா சொல்றாங்க.” “புருசன் இல்ல. பிள்ளைவ என்னத்துக்கு எடைஞ்சலான்னு கொன்னுபுட்டு ஊரு மேயுறான்னு சொல்றாங்க. அதைத்தான் என்னால தாங்க முடியலக்கா!” என்று கதறி அழுதாள். அவளது ஒழுக்கத்தையும், முக்கியமாக தாய்மையைக் குத்திப் பேசுவதையும் சுதாவால் எப்போதும் தாங்கிக்கொள்ள முடிந்ததில்லை. “காய்ச்சலும், தலை வலியும் வந்தவங்களுக்குத்தான் கஷ்டம் புரியும்” என்றேன். சுதாவோ தன் மனக்குமுறலை அடக்கமாட்டாமல் அழுது தீர்த்தாள். “ஜனங்க என்ன வேணா சொல்லட்டும். திமிரெடுத்துப் போயி வச்சுக்க முடியாம குழந்தைகளை கொன்னுபுட்டு திரியுறாங்கறாங்க. அதைதான் பொறுத்துக்க முடியல. நான் என்ன பரம்பரையாவா கொலை செஞ்சுட்டு திரிஞ்சேன்? என் நேர காலம். எங்க அம்மா ரெண்டு பொம்பளப் புள்ளைவள வெச்சுகிட்டு கஷ்டப்பட்டுச்சு. நான் இந்த நோய்வளோட இந்தப் புள்ளைவளை வச்சுகிட்டு என்னத்த செய்ய? அதுங்க இருக்கிறத விட சாவுறதுதான் மேலு. பிளான் பண்ணியா கொல செஞ்சேன்? ஆறு மாசத்துல எத்தனை பிரச்சினை? எதை நினைக்கிறது, எதை விடுறதுன்னே தெரியல. கல்யாணம் ஆகாம முத்திப்போய் எங்கயோ கிடந்தவன எந் தலையில கட்டி வெச்சாங்க. சினிமா கொட்டகையில டிக்கெட் கொடுத்துட்டு அங்கயே எத்தனை பேருகிட்ட படுத்து எந்திரிச்சானோ! எம் பாவத்துல விழுந்துட்டான். பொண்ணா பொறந்து என்ன சந்தோஷத்த அனுபவிச்சோம். பொம்பளையா பொறக்குறதே பாவம்க்கா.” “நான் தூக்கு போட்ட அன்னைக்கே போயிருந்தா என் கதயும் முடிஞ்சிருக்கும். பெத்த பிள்ளைக்குத்தான் அம்மாவா இருக்க முடியல; பெத்தவளுக்காவது பிள்ளையா இருப்போம்னு இருக்கேன்” என்று தேம்பி தேம்பி அழுதாள் சுதா. ♥ ♥ இப்படியாக ஒரு வருட காலம் சென்றது. ஊர் அவளை நடைப்பிணமாகக் கூட வாழ விடவில்லை. “சுதாவை பாருங்க முடி கட் பண்ணி, ஸ்டைலா செருப்பு போட்டுக்கிட்டு, பொட்டு வச்சுக்கிட்டு போறத. அவளை யாராச்சும் ஒரு தாலியறுத்தவன்னு சொல்லுவாங்களா? ஊருக்குள்ளே இப்படி திரியறவ டவுணுக்குள்ள போயி என்னென்ன பண்ணுவாளோ”ன்னு ஒருத்தி எங்கிட்டயே பேசினாள். அவளிடம் சண்டை போட்டேன். “ஆட்டுக்கு வால அளவெடுத்துதான் வச்சுருக்கான் ஆண்டவன்” என்று சுதாவின் அவலத்தை விதியாக்கி சாபம் விட்டாள் அந்தப் பெண். இது போன்று என்னென்ன வார்த்தைகள் சுதாவைக் குதறியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். எய்ட்ஸ் ஒருபுறம் அவளை அரித்தது என்றால், சமூகம் இன்னொரு புறம் அவளை உயிருடன் வதைத்தது. அவளது குழந்தைகள் இறந்து கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகி விட்டன. அந்த நாளும் வந்தது. பகல் நேரம். சுதாவின் அம்மா வயல் வேலைக்குச் சென்றிருந்தார். மதியம் 12 மணி இருக்கும். கோடை காலம் என்பதால் ஊரே அடங்கியிருந்தது. வேலை முடிந்து வந்த சுதாவின் தாய் மகளைக் காணவில்லையே என்று அருகாமை வீடுகளில் தேடினார். பிறகு தெரு ஜனங்களும் தேடினார்கள். இறுதியில் வீட்டின் கொல்லைப்புறத்தில் சுமார் ஒரு ஃபர்லாங் தூரத்தில் உள்ள மரங்கள் அடங்கிய தோட்டமொன்றில் சுதா தனது 28 வருச வாழ்க்கையை முடித்துக்கொண்டு, தூக்கில் பிணமாகத் தொங்கியதை மக்கள் கண்டுபிடித்தார்கள். எங்கள் கிராமத்தில் தூக்குப்போட்டு இறப்பவர்களை வீட்டுக்குக் கொண்டு வர மாட்டார்கள். ரொம்ப நேரமும் வைத்திருக்க மாட்டார்கள். பேய் பயம்தான் முக்கியமான காரணம். அதன்படி சுதாவும் அப்படியே சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, எரிக்கப்பட்டாள். ( உண்மைச் சம்பவம். ஊர்ப்பெயர் தவிர்க்கப்பட்டு, அந்தப் பெண்ணின் பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது.) _________________________________________________ புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012 _______________________________________________________ 25 பிச்சை புகினும் கற்கை நன்றே… பிச்சைக்காரர்கள் என்றால் நம்மிடம் இறைஞ்சி ஏதாவது ஒன்றைப் பெறுபவர்கள் என்று மட்டும் நினைத்துவிட முடியாது. வேறு ஏதாவது ஒரு பொருளில் அவர்கள் நமக்கு பிச்சையிடுபவர்களாகவும் இருப்பதுண்டு. அப்படி ஒரு நபரை தற்செயலாக ஒரு உறவினர் வீட்டு வாசலில் சந்திக்க நேர்ந்தது. இதோ நீங்களும்தான் அவரைச் சந்தியுங்களேன்… “ஏங்க வீட்ல யாரு! கொஞ்சம் நேரத்தோட வாங்க! நாலு எடம் போவணும்!” கறாரான பேச்சையும் இயல்பான உடையமைப்பையும் பார்த்து “சித்தப்பா யார்னு பாருங்க! ஏதாவது ஈ.பி. ரீடிங் எடுக்குறவரா” என்று அழைக்க, அவசரமாக வாசலை எட்டிப்பார்த்த சித்தப்பாவோ “இவனா, ஏடா கூடம் புடிச்சவனாச்சே! தம்பி பிச்சைக்காரம்ப்பா!” என்று அவரைப் பார்த்து எச்சரிக்கையானார். “பிச்சைக்காரர்ங்குறீங்க.. பாத்தா தெரியல!” “நீ வேற பேச்சு கொடுத்தோம், வளவளன்னு பேசுவாம் பாரு! நீ ஈடு கொடுக்க முடியாது. பத்து அஞ்சோ கொடுத்து ஆள அனுப்பலேன்னா, நம்பள பேசியே பிச்சிருவான்…” என்று சித்தப்பா சொல்ல, அட இப்படியும் ஒரு ஆளா? என பேச்சு கொடுக்க ஆர்வம் வந்து “சித்தப்பா ஏதாவது பேசுங்க பார்ப்போம்” என்று வற்புறுத்தினேன். “சொன்னா கேக்க மாட்ட! அவன் டைப்பு உனக்குத் தெரியாது. நல்லா வாழ்ந்தவன்;  இப்ப மெண்டலாட்டம் ஆயிட்டதால வக தொகை இல்லாம பேசுவான்… வேணாம்” என்று பலவாறு மறுத்தவர் எனது விருப்பத்திற்கிணங்க பேச்சுக் கொடுத்தார். “என்ன மணி! நகராம பாத்துக்கிட்டே நிக்குற! எவ்ளோ பிச்சை போட்டாலும் நீயும் அப்படியேதான் இருக்க… ஆளு மாறக் காணோமே” “நீ மட்டும் என்னாவாம்? டீ ஆறு ரூபா விக்குற காலத்துல நீயும் அதே அஞ்சு ரூபாதான் போடுற… நான் அன்னைக்கு பாத்த மாதிரிதான் நீயும் அப்படியே இருக்க… ஒண்ணும் முன்னேறக் காணோம்! விவசாயம் பாத்து நீயே மாற முடியல… நான் மாற முடியுமா?” இதுக்குதான் வேணாண்ணது! என்பது மாதிரி இடையே சித்தப்பா என்னை ஒரு பார்வை பார்த்தார். “அதுக்கில்லடா! ஊரு முழுக்க காசு வாங்குறியே! அப்படி என்னதாண்டா உனக்கு செலவு” “ஒரு ரூபா, ரெண்டு ரூபா போட்டுட்டு ஒட்டு மொத்த வரவு செலவு கேளுங்க! அவளுக்கு ஓட்ட போட்டுட்டு எதையும் கேக்காத.. வூட்டுக்குள்ளயே இருந்துட்டு உலகம் தெரியாம இருக்கண்ணே நீ! கேக்குறியே ஒத்த ஆளுக்கு என்ன செலவுன்னு! ஒரு டீ என்னா வெல? ரெண்டு இட்லி என்னா வெல? உன்னாட்டம் ஒரு எடத்துலயா இருக்கேன்? பத்து எடம் சுத்துறேன். ஒடம்புல தெம்பு வேணாம்; சாங்காலம் டிபன் சாப்பிட வேணாம்; ராச்சோறு வேணாம்… என்னமோ உலகந் தெரியாம கெடந்து பேசுற! சிகரெட்டுக்கு மட்டும் தெனம் இருபது ரூபா ஆவுது; குவார்ட்டரு அறுபது ஆவுது… மனுசன் வாழ வேணாம்!” வீம்புக்கு பேசுகிறாரா? இல்லை விவரமாகத்தான் பேசுகிறாரா?… என ஒரு கணம் மலைத்தும், திளைத்தும் போன நான் பேச்சு நீளவே நெருக்கமாக வந்து கேட்க ஆரம்பித்தேன். என்னையும் ஒரு முறை உற்றுப்பார்த்து விட்டு… “தம்பி நீதான் ஒரு பத்து ரூவா கொடேன்! பாத்தா படிச்ச புள்ளையாட்டம் தெரியுது! இந்த வூர்க்காரன்கிட்ட பேசிப் புரிய வச்சி பிச்ச எடுக்குறதுக்குள்ள வயிறு காஞ்சு போவுது!” கையை நீட்ட ஆரம்பிக்க, சித்தப்பா இடைமறித்தார். “திமிருதாண்டா உனக்கு! எடுக்குறது பிச்சை; இதுல தண்ணி, சிகரெட்டு இல்லாம இருக்க மாட்டியாக்கும்!” “அதான பாத்தேன்! எப்பவாவது பத்து ரூவா போட்டுட்டு புத்தி சொல்ல ஆரம்பிச்சிடுவீங்களே! நீ போடுற காசுக்கு இப்புடிதான் செலவு பண்ணனும்னு கண்டிசன் வேறயா? ஏன் கோவிந்தராசு.. நீ இந்த டிவி.ல படம் கிடம் பாக்க மாட்டியா? ஆயி பேச்ச அப்பன் கேக்க மாட்டேங்குறான், அப்பன் பேச்ச மவன் கேக்க மாட்டேங்குறான், பஞ்சாயத்து போர்டு டி.வி.ல போய் பாரு! உலகம் அப்படி போய்ட்டு இருக்கு…! நீ போடுற காசுக்கு நான் உன் பேச்ச கேக்கணுமாக்கும்! தண்ணியும், சிகரெட்டும் இல்லேன்னா எவன் இந்த ரோட்ல கெடக்க முடியும்! ஊராவா வச்சிருக்கீங்க? பன்னி கூட படுக்குமா இந்த ஊர்ல… வாயப் புடுங்காத பேசாம ரூபாயக் கொடு! “என்னமோ கொடுத்து வச்ச மாதிரி கேக்குற? “சொன்னா புரிஞ்சுக்கண்ணே! உன்ன மதிச்சு யாராவது சொந்தக்காரன் வந்து கேட்பானா? என்ன மாதிரி பழகுன ஆளு வந்தாதான் உண்டு! எனக்குந் தராம… அப்படி என்னதாண்ணே குடும்பம் நடத்துற?… “என்னமோ சொன்னியே வாய பாத்தியா?… இவன பாத்தா நீ பிச்சக்காரன்னு சொல்லுவியா… இப்புடிதான் ஊர் பூரா பேசி சமயத்துல அடி வாங்கிட்டும் போவான்” என்னிடம் சித்தப்பா விவரிக்க, அவர் மேலே வானத்தை பார்த்து ஏதோ முனகிக் கொண்டு, வானத்தைக் கண்டிப்பது போல சைகையும் காட்டினார். “பாதிதான் மெண்டல். பாதி டூப்பு” என்று சித்தப்பா என்னிடம் விளக்க, அவரது தடாலடி உண்மைப் பேச்சு என்னை ஈர்த்தது. “ஏங்க உங்களுக்கு வீட்டுக்காரம்மா இல்லியா? ஏன் இப்படி தனியா கெடந்து சுத்துறிங்க… வீட்ல இருக்கலாம்ல!” “அதான் தம்பி! ஏண்டி வீட்ல கெடந்து கஷ்டப்படணும், வாடி பிச்சை எடுக்கலாம்னு கூப்பிட போயிதான் சண்டை வந்து என்ன துரத்திட்டா…!” “அவங்க நெனக்கிறதுதான சரி! உழைச்சி வாழறத விட்டுட்டு, இப்படி பிச்சையெடுக்கலாமா?” “என்னமோ உழைச்சி வாழறவன இந்த ஊர்ல எவனோ கவுரமா மதிக்குற மாதிரி, என்னா பேசுறீங்க நீங்க?!.. உழைச்ச நாம வாழ முடியாது தம்பி; நம்ம மொதலாளிதான் வாழுவான். என் கையப் பாரு! மோட்டாருக்கு காயில் கட்டி கட்டி கையே காப்புக் காச்சிருக்கு பாரு… நான் பொழுதுக்கும் காயில் கட்டி கட்டி என் மொதலாளி ஒரு கடைய நாலு கடையாக்கிட்டான். பொழுதுக்கும் நான் புரோட்டா பிசைய, மொதலாளி வீட்ட கட்டிட்டான்… உழைக்குறதால பத்து பைசாவுக்கு பிரயோசனமில்ல. நீயும் படிச்சு வேலைக்குப் போயி, எவனோ வாழ கஷ்டப்படாத! என்னப் போல பிச்சையெடுத்துப் பாரு! ப்ரியா இருக்கலாம்… நோட் திஸ் பாயிண்ட்” “என்னா சித்தப்பா! இங்கிலீசெலாம் பேசுறாரு!?” “அந்தக் காலத்துல நல்லா படிச்சவம்பா! குடும்பம் கவனிக்க முடியாம மெண்டலாய்ட்டான்.” அவர் பேச்சில் சில ஏற்கவியலாத கருத்துக்கள் இருந்தாலும் நிச்சயம் அவர் மெண்டல் இல்லை என்று மட்டும் புரிந்தது. “என்ன தம்பி! பின்னாடி கவலப்படாத… பேசாம எவனுக்கும் சிக்கிடாம பிச்சை எடுத்துப் பொழச்சுக்கோ!” தானே சிரித்தும் கொண்டார். “ஏய்! சீ, வீட்டுக்கு வந்த புள்ளய பிச்சை எடுன்னு! போடா! இதான் உங்கிட்ட ரொம்ப வச்சிக்கப்புடாது!” “யாரு சம்பந்தம் போடச் சொன்னா? ஏதாவது கேக்குறீங்க.. அப்புறம் சொல்லிட்டன்னா பாயுறீங்க… பத்து ரூவா கொடுத்தா நான் பாட்டும் போகப் போறேன்… அண்ணே! குடுண்ணே! தம்பி வேற பாக்குது!” “எல்லாம் வெலாவாரியா பேசுறீல்ல? பிச்சை எடுக்குறது தப்புன்னு உனக்கு புரியலியா? என்னடா! வீடு வாசல விட்டுட்டு, புள்ள குட்டிய விட்டுட்டு இப்படிச் செய்யறது தப்புன்னு நீ ஒத்துக்குறியா?” “பாத்திங்களா தம்பி! இதான் இந்த ஊர்க்காரன் கிட்ட.. ஒரு பத்து ரூபா கொடுத்தா நாம அவங்கள ஒத்துக்கணும்பாங்க..!” “சரி! வீட்ல புள்ளங்களும் வளர்ந்தவங்களா இருக்காங்க; வீட்லயும் மனைவி இருக்காங்க! போய் பேசாம வீட்டோட சேர்ந்துதான் இருங்களேன்.” “நீங்களுமா தம்பி! சரி, பத்து ரூபா கொடுப்பீங்கன்னா சும்மா கொடுப்பீங்களா? பத்து கேள்வி கேக்கத்தான் செய்வீங்க. உங்களுக்கும் நான் ஆரம்பத்துலேர்ந்து ஹிஸ்டிரிய சொல்லி ஆவணும்.. பிச்சை எடுக்கறத விட கஷ்டம்… பிச்சைக்காரன் கிட்ட கேக்குற கேள்விக்கு அவன் பதில் சொல்றது…” ஏதேதோ பேசி “சரி! இப்ப நீங்க எவ்ளோ தரப் போறீங்க? இவ்ளோ கேள்வி கேக்குறீங்க!”  என்று அவர் சிரித்தபடி கேட்க, எனக்கும் சிரிப்பு வந்து விட்டது. உடனே சித்தப்பா குறுக்கிட்டார். “போ! போ! சும்மா திமிருப்பேச்சு பேசிக்கிட்டு.. பிச்சைக்காரன் மாதிரியா பேசுற நீ!” சித்தப்பா கோபப்பட்டார். “பாருங்க தம்பி! இவுங்களாம் ஏதோ கவுரமா குடும்பம் நடத்துற மாதிரி!… ரேசன்ல எலவச அரிசி, டி.வி, பேனு, அடுப்புன்னு… உங்களுக்கு ரேசன் கார்டு இருக்கு, என்கிட்ட இல்ல… அதான் வித்தியாசம். எனக்கொரு ரேசன் கார்டு இருந்தா நான் ஏன் உன்ன தேடி வரப் போறேன்! உன்ன மாதிரி பேசாம வீட்ல கெடக்க மாட்டேன்.” வெடுக்கெனப் பேசியபடி கையை நீட்ட, ஒரு பத்து ரூபாயை எடுத்துக் கொடுக்க, “நல்லா இரு தம்பி! இந்த ஊரோட சேர்ந்து நீயும் கெட்டுறாத!” என்று சிரித்தபடியே நகர்ந்தார். “அட ஏம்பா! நீ வேற… அவனே திமிரு புடிச்சவன். இப்புடி பேசித்தான் நேத்து கூட கடத் தெருவுல அடி வாங்கினான். கொடுத்தா திரும்பத் திரும்ப வருவான். ஏன் பணம் கொடுத்தே?!” சித்தப்பா வருத்தப்பட்டார். எனக்கோ கையில் பத்து பத்து ரூபாய் கொடுத்து இவரை எல்லோரது வீட்டுவாசலுக்கும் அனுப்பலாம் போல இருந்தது! ♦ ♦ பிச்சைக்காரர்களை இரங்கத்தக்கவர்களாக மட்டும் பார்த்துப் பழகியவரா நீங்கள்?  சில வேளைகளில் பிச்சைக்காரர்களிடம் வெளிப்படும் சமூக அக்கறை… அது இல்லாத பலரை இரங்கத்தக்கவர்களாக ஆக்கி விடுகிறது! அப்படி ஒரு அனுபவம்…. புதுக்கோட்டை பேருந்து நிலையம்… சிவப்புச் சட்டையுடன், பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு. எனும் அடையாள அட்டைகளுடன் சில தோழர்கள் கையில் ‘போபால்.. நீதி வேண்டுமா? புரட்சிதான் பாதை’ எனும் சிறு நூலுடன்… “கொலைகார ‘டௌ’ வே வெளியேறு!” எனும் முழக்கத்துடன் ஒவ்வொரு பேருந்திலும் ஏறி “அன்பார்ந்த உழைக்கும் மக்களே! போபால் நச்சுவாயுப்  படுகொலையில் நமது அருமை இந்திய உழைக்கும் மக்கள் 23000 பேரை படுகொலை செய்துவிட்டு, அமெரிக்க யூனியன் கார்பைடு முதலாளி ஆண்டர்சன் இந்திய அரசின் ஆதரவுடன் பத்திரமாகத் தப்பித்துச் சென்று விட்டான். தலைமுறையே மரபணு சிதைந்து… தனிப்பட்ட முதலாளியின் இலாபவெறிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் விழிபிதுங்கி, முகம் சிதைந்து நீதிக்காக வீதியில் போராடுகிறார்கள். நீதி வேண்டாமா? இந்த  அரசும், சட்டமும்,  பாராளுமன்றமும் முதலாளிகளுக்குத்தான் ஆதரவானது என்பதைப் போபால் படுகொலை நிரூபித்துள்ளது… பிறந்த குழந்தைகள், கருவிலேயே பிறக்காத குழந்தைகள் சிதைந்த கொடூரங்கள்…” எனத் தோழர்கள் மக்களிடம் பேசியபடி முற்றுகைப் போராட்டத்திற்கான பிரச்சாரம் மற்றும் நிதிவசூல் செய்து கொண்டிருக்க, ஒவ்வொரு பேருந்திலும் தோழர்கள் பேச ஆரம்பிக்கும்போது இடையே வந்து ஒரு பிச்சைக்கார சிறுமியின் தட்டேந்திய குரலும் குறுக்கிடும். தோழர்கள் எந்தப் பேருந்தில் ஏறினாலும் அந்தச் சிறுமியின் பிச்சைக்கான குரலும் பிரச்சாரத்தின் இடையே குறுக்கிட்டு பின்தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. சிறுமியாக இருந்தபடியால் பிரச்சாரம் செய்த தோழர்கள் அவளை விரட்டாமலும், இடையூறு கண்டு ஆத்திரம் கொள்ளாமலும், ஆனால் சற்று சலிப்படைந்து சிறுமிக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தவித்தனர். அடுத்தடுத்த பேருந்துகளிலும் சிறுமியின் குறுக்கீடு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. திடீரென ஒரு பேருந்தில் தோழர்கள் வழக்கம் போல பேசிக்கொண்டே போக அந்தச் சிறுமியும், குரலும், குறுக்கீடும் இல்லாமல் அமைதி நிலவக்கண்டு தோழர்களுக்கு ஆச்சரியம்… ஏன் என்ன ஆனது? என்று சுற்றுமுற்றும் பார்த்தனர். பேருந்தின் கடைசிப் பகுதியில் அந்தச் சிறுமி தோழர்களின் போபால் பற்றிய கொடூர விவரணையை உருக்கமாகக் கேட்டபடி, வழக்கத்திற்கு மாறாக அமைதியாக நின்றிருந்தாள். தோழர்கள் பேருந்தை விட்டு இறங்கும்போது திடீரென கல்லாய்ச் சமைந்தவள் உயிர்பெற்றது போல அந்தச் சிறுமி அவசர அவசரமாக “அண்ணே! அண்ணே! இதையும் வாங்கிக்குங்கண்ணே!” என்று தான் பிச்சை பெற்ற தட்டில் உள்ள சில்லறைகளைத் தனது கையாலே பெருவிருப்பத்துடன் வாரி தோழர்களின் உண்டியலில் திணித்தாள். தோழர்களோ ஒரு கணம் செய்வதறியாது திகைத்தனர். இது நாள் வரைகாணாத உணர்ச்சிக்கு ஆட்பட்டவர் போல ஒரு கணம் ஆளாகிப் பின் “வேணாம் பாப்பா! நீயே வச்சுக்கோ!” “ஏண்ணே? என்ன மாதிரி எத்தன புள்ளைங்க செத்ததுக்கு நீங்க பேசறீங்க. என்ன மாதிரிதான அவங்களும்.. இந்தாங்கண்ணே வச்சுக்குங்க…” வலியுறுத்தி சிறுமி நிதியளித்தாள். யாருமற்ற அநாதையாக்கப்பட்டு, பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு ஆதரவற்ற ஒரு சிறுமி… வர்க்க உணர்வோடு ஒரு அமைப்பின் மீது வைக்கும் நம்பிக்கையும், விருப்பமும், தன் வர்க்கத்தை உணர்ந்து கொள்ளும் அந்தத் தருணமும் மனித குலத்தின் ஆழமான அர்த்தமான உணர்ச்சிகளில் ஒன்று. நிலை மறந்து மரத்துக் கிடக்கும் இந்த சமூகத்திற்கு அந்தச் சிறுமி போட்ட உணர்ச்சியின் பிச்சை அது! _________________________________________________ புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012 _______________________________________________________ 26 திருட்டு ‘தம்’மினால் பிரபலமான கடவுள்! [சுடலை]   எசக்கிவிளை சுடலை மாடனைத் தெரிந்தவர்களாயிருந்தால் ஒரு கணம் லேசாக விக்கித்துப் போவார்கள். உண்மையில் சுடலைமாடன் மட்டுமில்லையென்றால் எசக்கிவிளை என்கிற பெயரே வெளியே தெரியாமல் போயிருக்கும். இன்றைக்கும் மதுரையிலிருந்தும், சென்னையிலிருந்தும் யார் யாரோ விசாரித்துக் கொண்டு எசக்கிவிளைக்கு வருகிறார்களென்றால் அதற்கு சொடலைமாடன் மட்டும் தான் காரணம். முன்பெல்லாம் ஊருக்கு ஒழுங்கான சாலை கூட இருக்காது. நீங்கள் திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் வந்து அங்கே 2ம் நெம்பர் பஸ்ஸைப் பிடித்து துலுக்கப்பட்டியில் இறங்க வேண்டும். பின், கண்ணநல்லூர் பாதையில் நாலு கிலோ மீட்டர் நடந்து வந்து, சொரிமுத்தான் கோயிலருகே நம்பியாற்றைக் கடக்க வேண்டும். மழைக்காலமென்றால் பெரும்பாடு தான். அப்புறம் ஒரு மணி நேரம் நடைக்குப் பின் தான் ஊரே தென்படும். இப்போது சொடலையின் புண்ணியத்தில் நம்பியாற்றின் குறுக்கே ஒரு பாலம் தோன்றியிருக்கிறது. வள்ளியூரிலிருந்து நேரே பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை டக்கர் வண்டிகள் வந்து போகிறது. இந்த மாற்றங்களும் சுடலைமாடனின் புகழ் பரவியதும் கடந்த பத்தாண்டுகளில் நடந்தேறியவை. இதற்குப் பின் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது நண்பர்களே. இத்தனை வருடங்களாக வெளியே யாரிடமும் சொல்லாத அந்தக் கதையை இப்போது சொல்கிறேன். அது ஒரு வினோதமான சம்பவத்திலிருந்து துவங்கியது. *** அந்த சம்பவம் நடந்து சுமார் பன்னிரெண்டு வருடங்கள் இருக்கும். எசக்கிவிளை சுடலைமாடன் ஒரு துடியான சாமி என்பதை ஊரார்கள் அறிவார்கள் தான்.. ஆனாலும் அன்றைக்கு அவருக்கு அத்தனை மவுசு இல்லை.  ஊரில் இருந்த 300 குடும்பங்களில் மூன்றில் ஒருபங்கு கிறித்தவர்கள், அடுத்த ஒருபங்கு அய்யா வழியினர் மீதம் ஒருபங்கு இந்துக்காரர்கள். ஒரு கிறித்தவ தேவாலயமும், பெருமாள் கோயிலும் அய்யாவழிக் கோயிலும் ஊரினுள் இருந்தது. சுடலைமாடன் அங்கேயிருந்த எல்லா குடும்பங்களுக்கும் குலசாமி – கிறித்துவர்கள் கூட கொடை கொடுப்பார்கள். ஆனாலும் அவர் ஊருக்கு வெளியே தள்ளி வைக்கப்பட்டிருந்தார். என் நண்பன் பூசப்பன் என்கிற பேச்சிமுத்தானின் குடும்பம் தான் சுடலை கோயிலுக்கு பரம்பரை பரம்பரையாக பூசாரியாக இருந்து வந்தனர். பூசணிக்கு கையும் காலும் முளைத்தது போன்ற ஒரு தோற்றத்தின் காரணமாக பேச்சிமுத்தானுக்கு பூசணியப்பன் என்கிற பெயர் விளங்கியது – பின் பேச்சு வழக்கில் திரிந்து பூசப்பன் – பூசன் என்பதாக மாறியது. அது கிடக்கட்டும், பூசப்பன் ஒரு சுவாரசியமான பேர்வழி. எங்கள் செட்டு தான். எங்கள் பையன்களிலேயே அவன் கொஞ்சம் வெளிர் நிறம். உருண்டு திரண்ட உடல் வாகு. அவனிடம் ஒரு நல்ல பழக்கமும் இரண்டு கெட்ட பழக்கங்களும் இருந்தன. நல்ல பழக்கம் என்பது தினசரி காலையிலேயே திருநீரை தண்ணீரில் குழப்பி பட்டையடித்துக் கொள்வான் – அது சாயந்திரம் வரை அழியாமல் ஒரு தெய்வகடாட்சமான முகத்தை அவனுக்குத் தரும். மற்றபடி, மாதம் ஒருமுறை குளியல் வாரம், ஒருமுறை பல்துலக்குவது என்பதில் அவன் வைராக்கியமாக இருந்தான். கொடை சமயத்தில் மாடன் இறங்கி குறி சொல்வான் – நண்பர்கள் என்பதால் கூட்டத்தோடு எங்களைத் தான் அருகில் அழைப்பான். அந்தக் கொடுமை தாளாமல் ஒரு முறை கேட்டே விட்டேன், “பல்லு வெளக்கினா தேய்ஞ்சாலே போவும்?” “போங்கடே, ஊர் பெருமாளு கோயில் ஐயரே குளிக்க மாண்டேங்கான்.. அவம் மணிய வேகமா அடிக்கச்சுல லேசா வாடை வரும் பாத்திருக்கியாலெ… அந்த நேரமா பாத்து தாம்லே வெடிய போடுதாம்.. பேரு தாம்லே பெருசா ஐய்யர்ர்ரூ… வள்ளியூர் மாணிக்க அண்ணாச்சி ஓட்டல்ல நல்லா கிடா கறிய தின்னுபிட்டு இங்க பெருசா ஆட்டிக்கிட்டு வாராம்லே” “சவத்த அவன் கெடக்காம்லே.. நீ பல்லு வெளக்கி குளிச்சி எடுத்து இருக்க வேண்டியது தான? நீயும் பூசாரி தானடே? “அது…  எனக்கு குளிச்சா தண்ணி சேர மாண்டேங்கி பாத்துக்க..  திரேகத்தில ஒரே சொரிச்சலா எடுக்கு. வாய்ல ஈரெல்லாம் ஒரே புண்ணா கெடக்கு.. அதாம் பல்லு வெளக்க முடியல்ல… விடுலா.. அந்தாம் பெரிய யானையே பல்லு வெளக்க மாண்டேங்கி நமக்கு என்னலே?” “நாத்தம் தாங்காம மாடன் செவுட்டுல ஒரே போடா போடப் போறாரு பாத்துக்க..” பத்தாம் வகுப்பு வரை எங்களோடு தான் படித்தான். அதன் பிறகு இரண்டு வருடங்களாக அப்பாவிடம் பயிற்சி எடுத்து  வந்தான். அப்போது நான் பாளையம்கோட்டையில்  தங்கியிருந்து டிப்ளமோ படித்து வந்தேன். வார இறுதியில் கூட ஊருக்கு வரக்கூடாது என்று ஐயா சொல்லியிருந்தார். ஊரில் எனது கூட்டாளிகள் அப்படி. செமஸ்டர் லீவுக்கு மட்டும் தான் வருவேன். வந்தாலும் ஐயாவுக்குத் தெரியாமல் தான் வெளியே போக முடியும். அப்போதே திருட்டுத் தனமாக புகைக்கும் வழக்கம் உண்டாகியிருந்தது. நான், ஜெபராஜி, வில்சன், சந்திரன், பூசப்பன், கிராம்ஸ் மகன் மருதமுத்து என்று ஜமா சேர்வோம். ஜெபராஜின் வீட்டில் பீடி சுத்திக் கொண்டிருந்தார்கள். அதில் கழித்துப் போடப்படும் பீடிகளை அவன் களவாண்டு வருவான். சொக்கலால், யோகி, மல்லிசேரி பீடிகள் என்றால்  புகையிலையும் சுற்று இலையும் தரமானதாக இருக்கும் இருக்கும். ஜமா களைகட்டும். ஜமா கூடும் நேரம் பின் மாலைப் பொழுது – இடம் சுடலை மாடன் கோயில். அப்படி ஒரு முறை செட்டு கூடிய போது பூசப்பனை சேர்த்துக் கொள்ளவில்லை. நானோ நாலைந்து மாதம் கழித்து வருவதால் என்ன நடந்ததென்று புரியவில்லை. ஜெபாவிடம் தான் கேட்டேன், “எங்கடே பூசனைக் காணல?” “அவனெ வெட்டி விட்டாச்சிடே” ஜெபா சிரித்துக் கொண்டே சொன்னான். “என்னாச்சி?” “அவம் சரியாவுல காரியக்காரம்லெ. போனதிருப்பு இங்க பீடிய வாங்கி இழுத்துட்டு கெடந்தாம்லா? நீ ஊருக்குப் போன அடுத்த நாளு தொரை வாத்தியார் கிட்ட போயி பயலுவ கோயில் மேடைல பீடி இழுக்கானுவ, தண்ணியடிக்கானுவன்னி ஆவ்தாளி சொல்லி இருக்கான்டே.. வாத்தியாரு எங்கைய்யா கிட்ட சொல்லிக் கொடுத்து வீட்ல எனக்கு ஒரே ஏச்சு. பூசன் சரியாவுல கோள் சொல்லிடே… அதான் கூப்பிடலை” ஓரளவு வெளிச்சம் விழும் வரை காத்திருந்து பின் ஆரம்பித்தோம். சுடலைமாடன் கோயில் என்பது ஒரு சின்னஞ் சிறிய கட்டிடம். ஆறடி ஆளாக இருந்தால் உள்ளேயே நுழைய முடியாது. சுமார் ஐந்தடி உயரம் இருக்கலாம். நாலடி அகலம் – நாலடி நீளம். நான்கு பேர் சேர்ந்தால் கோயிலைக் கட்டிப் பிடித்தே விடலாம். கோயில் தான் சிறியது. ஆனால், அதன் முன்புறம் சுடலைமாடன் சிலைக்கு இடது பக்கமாக பெரிய சிமென்டு குதிரைச் சிற்பங்கள் இரண்டு இருக்கும். அந்தக் குதிரைகள் ஒரு பிரம்மாண்டமான மேடையின் மேல் முன்னங்காலை உயர்த்தி பாய்வது போன்ற தோரணையில் நின்று கொண்டிருக்கும். சுமார் இருபதடி உயரம் கொண்ட சிலைகள். திறந்த வாயில் வரிசையான பற்கள் பளிச்சென்று தெரிவதற்காக அதில் கண்ணாடிகள் பதித்திருப்பார்கள். இரவு நேரம் நீங்கள் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் போது எங்கேயிருந்தாவது அந்தக் குதிரையின் முகத்தில் விழும் வெளிச்சத்தில் அந்தக் கண்ணாடிச் சில்லுகள் மின்னலடிக்கும். பார்க்கும் எவருக்கும் அடிவயிற்றில் ஏதோவொன்று புரண்டு படுக்கும். ஒரு குதிரையின் மேலே ஓங்கிய கத்தியோடு சுடலை… அந்த மேடையின் பின்புறமாக ஒரு பெரிய ஆலமரம்  – அதன் வயது நானூறு வருடங்கள் என்று சொல்லக் கேள்வி. காற்றடிக்கும் போது அதன் இலைகள் சலசலத்துக் கொள்ளும் – அது சிலசமயம், சலங்கைகள் குலுங்கும் ஒரு சப்தத்தை உண்டாக்கும். அதைத் தவிர்த்தால், ஆள் நடமாட்டமற்ற அமானுஷ்யமான ஒரு அமைதி அங்கே நிலவியது. மாலை மங்கியபின் யாருமே அந்தப் பக்கமாக வரத் துணிய மாட்டார்கள். நாங்கள் கூட்டாக புகை விட ஆரம்பித்த சற்று நேரத்திலேயே வானம் கொஞ்சம் கொஞ்சமாக இருளத் துவங்கியது. அப்போது, தூரத்தில் இரண்டு வெளிச்சப் பொட்டுகள் உருவாகி நெருங்கி வருவதைக் கவனித்தோம். “யார் அது? இந்த நேரத்தில இங்கெ ஏன் வாரான்?” வில்சனுக்கு லேசாக நடுக்கம் கொடுத்தது. எங்களில் அவன் கொஞ்சம் இளையவன் – பதினைந்து வயது தான். அவனது அப்பா வேதக்கோயிலில் ஊழியக்காரராய் இருந்தார். மகனுக்கு புகைப்பழக்கம் இருப்பது தெரிந்தால் வெளுத்து விடுவார். “யே.. சும்மா இருடே. மக்கா.. எல்லாரும் குதிரைக்குப் பின்னாடி மறைஞ்சி நில்லுங்கடே. நான் இங்கன நின்னு யார்னு பாக்கேன்” அவசரமாக பீடியைக் கீழே போட்டு அனைத்து விட்டு குதிரை முன்னங்காலின் கீழே அமைதியாக உட்கார்ந்தேன். அந்த வெளிச்சப் பொட்டுகள் நெருங்கி வரக் காத்திருந்தேன். அது ஒரு புத்தம் புதிய மாருதி கார். நேரே கோயிலின் முன்னே சாலையின் எதிர்பக்கமாக நின்றது. “இங்க பாருங்கடே புதூ ப்ளசர் காரு… “ குதிரையின் பின்னிருந்து சந்திரன் கிசுகிசுக்கத் துவங்கியதை “ஷ்ஷ்ஷூ..” என்கிற எச்சரிக்கையால் அடக்கினேன். காரின் முன்னிருக்கையைத் திறந்து கொண்டு கீழே இறங்கியவரைப் பார்த்தேன். அது வள்ளியூர் அரசுப் பள்ளியின் ஹெச்.எம். அவரை எனக்குத் தெரியும். இங்கே எசக்கிவிளையில் தான் பெண்ணெடுத்திருந்தார். புதிதாகக் கார் வாங்கியிருப்பார் போலும், முதல் பூசை போட வந்திருக்கிறார்.  காரிலிருந்து இறங்கியவர் ஒரு கணம் குதிரை இருக்கும் பக்கமாக பார்வையை ஓட்டினார். சுடலை கோயிலின் மேலே ஒரு 40 வாட்ஸ் குண்டு பல்பு எரிந்து கொண்டிருந்தது – வெளிச்சத்தைக் குவிப்பதற்காக அதன் மேலே ஒரு தகரக் கூம்பு இருக்கும். அந்தக் கூம்பின் திசை சாலையை நோக்கி இருந்ததால்,  நாங்கள் இருந்த திசையில் குறைவான வெளிச்சமே விழுந்தது. அதனால், என்னை அவரால் ஒரு நிழலுருவமாகத் தான் பார்க்க முடிந்தது. “யார் அது…” குரல் கொடுத்து விட்டு தாமதித்துப் பார்த்தார். எனக்கு லேசாக பயம். கிட்டே அழைத்துப் பேசினால் பீடி நாத்தம் காட்டிக் கொடுத்து விடும். எனவே, அமைதியாக அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தேன். சில நொடிகள் இங்கே பார்வையை ஓட்டியவர், காரைச் சுற்றிக் கொண்டு பின்னங்கதவைத் திறக்கச் சென்றார். அது தான் சமயமென்று சப்தமின்றி நான் குதிரையின் பின்னங் கால்களுக்குக் கீழே ஒண்டிக்கிடந்த நண்பர்களோடு போய்ச் சேர்ந்து கொண்டேன். இதற்குள் காரின் பின் கதவைத் திறந்தவர், தலையை உயர்த்தி குதிரையைப் பார்த்தார். பார்த்தவர் ஒரு கணம் துணுக்குற்றார். அவருக்குத் தெரிந்த ‘நிழலுருவத்தைக்’ காணவில்லை. “யேட்டி.. நீ சித்த உள்ளயே இரு..” மனைவியிடம் வெளியே இறங்க வேண்டாமென்று சொல்லி விட்டு குதிரையிருக்கும் திசையையே வெறித்துப் கொண்டு நின்றார். அருகே நடந்து வரலாமென்று நினைத்திருப்பார். அந்த நேரம் பார்த்து லேசாக காற்று வீசியது. ஆலமரத்தின் இலைகள் மோதிக் கொண்டதில் சலங்கைச் சத்தம் உண்டானது. ஹெச்.எம்மின் உடலில் உண்டான நடுக்கத்தை இங்கிருந்தே காண முடிந்தது. அதற்குள் பையன்களுக்கும் லேசாக விவரம் புரிந்தது. கிராம்ஸ் மகன் மருதமுத்து கழுதைப் புலியைப் போன்ற ஒரு எக்காளச் சத்தத்தை எழுப்பினான். ஹெச்.எம் சர்வநிச்சயமாக பயந்து விட்டார். மனைவியையும் பிள்ளைகளையும் காருக்குள்ளேயே இருக்கச் செய்தவர் நான்கு எலுமிச்சம் பழங்களை எடுத்து நான்கு சக்கரங்களின் கீழும் வைத்தார். கோயிலின் அருகிலேயே வராமல் சாலையின் எதிர்பக்கத்திலிருந்தே கையெடுத்துக் கும்பிட்டார். காரில் ஏறியவர் தலைதெறிக்கும் வேகத்தில் ஓட்டிச் சென்று மறைந்து விட்டார். நள்ளிரவு வரை பல்வேறு கதைகளைப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த நாங்கள் வீட்டுக்குச் செல்லும் போது மணி ஒன்றாகி விட்டது. அடுத்த நாள் நான் ஊரிலிருந்து கிளம்பி பாளையங்கோட்டைக்குச் சென்று விட்டேன். அது நான்காம் செமஸ்டரின் லீவு சமயம். அதன் பின் ஐந்தாம் செமஸ்டர் லீவில் நான் ஊருக்கு வரவில்லை – அடுத்தது கடைசி செமஸ்டர் என்பதால் ப்ராஜக்ட் வேலைகளை முடிப்பதற்காக ஹாஸ்டலிலேயே தங்கிக் கொண்டேன். இறுதி செமஸ்டர் லீவு துவங்கும் முன்பே கேம்பஸில் வேலை கிடைத்தும் விட்டதால் அப்படியே அங்கிருந்து தில்லிக்குச் சென்று விட்டேன். இடையில் வருடத்திற்கு ஓரிரு நாட்கள் மட்டுமே ஊருக்குச் சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. கூட்டாளிகள் அத்தனை பேரும் திசைக்கொருவராய் விசிறியடிக்கப்பட்டு விட்டனர். ஜெபராஜி பம்பாய் சென்று விட்டான்; சந்திரன் சென்னை; கிராம்ஸ் வேலையெல்லாம் சரிப்பட்டு வராது என்பதால் மருதமுத்துவின் அப்பா அவனுக்கு திருநெல்வேலி பஜாரில் ஒரு கடை வைத்துக் கொடுத்துள்ளார்.  அவன் பக்கத்தில் கண்டித்தான்குளத்தில் பெண்ணெடுதிருப்பதால் இங்கே அதிகம் வருவதில்லை என்றார்கள். ஆனால், ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் ஒரு முன்னேற்றத்தைக் காண முடிந்தது. ஐந்து வருடத்திற்கு முன் நம்பியாற்றின் குறுக்கே ஒரு கல்பாலம் கட்டி முடித்தனர். அங்கேயிருந்து ஊர் வரைக்கும் சிமெண்டு சாலை அமைத்தனர். நான்கு வருடத்திற்கு முன் முதன் முறையாக ஊருக்கு பஸ் வந்தது. கடந்த இரண்டு வருடங்களாக  ஒவ்வொரு வீட்டின் மேலும் சன் டைரக்ட் டிஷ் ஆண்டெனா முளைத்து வருகிறது. இன்னும் செல்போன் டவர் வரவில்லை. கண்ணூரில் ஒன்றும் துலுக்கப்பட்டியில் ஒன்றுமாக சுற்று வட்டாரத்தில் இரண்டு டவர்கள் இருக்கிறது. கொஞ்சம் உயரமான இடத்தில் நின்றால் சிக்னல் கிடைக்கிறது. முக்கியமானது – எசக்கிவிளை சுடலைமாடன் பெரும் புள்ளியாகியிருந்தார். சுடலைமாடனின் சக்தி சகல திசைகளிலும் பரவியுள்ளது. ஒரு கோயில் கொடையென்றால் சுமாராக பத்தாயிரம் பேர் வரை கூடுவதாக அப்பா சொன்னார். ஆனால், எப்படி இந்த திடீர் பிரபலம் என்பது தான் எனக்கு விளங்கவில்லை – சமீபத்தில் சந்திரன் கல்யாணத்திற்கு ஊருக்குப் போகும் வரை. சந்திரன் கலியாணத்திற்கு எங்கள் பழைய செட் எல்லோரும் ஒன்று சேர்ந்தோம். அதே பழைய சேட்டைகளை ஓரிரு நாட்களுக்கு அரங்கேற்றிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்தோம். காலை கிராம்ஸின் கினற்றில் குளியல், அப்புறம் ஜெபராஜின் வயலில் நின்ற பனைமரத்திலிருந்து பனம்பழங்களைப் பறித்துத் தின்றோம், மதியம் வள்ளியூரில் சினிமா, அப்புறம் மாலை வரை ஊரெல்லாம் சுற்றி வந்து விட்டு இரவு சுடலைமாடன் கோயிலில் திருட்டு தம் என்று முடிவு செய்தோம். கோயிலை பிரம்மாண்டமாக எடுத்துக் கட்டியிருந்தனர். மூன்றாவதாக ஒரு குதிரையை நிர்மாணித்திருந்தனர். மேடை இன்னும் விசாலமாயிருந்தது. முகப்பில் “ஸ்ரீ ஸுடலை மாடஸ்வாமி” என்று ஒரு போர்டு வைக்கப்பட்டிருந்தது. கோயிலின் முன்னே இருந்த சிமென்டு சிற்பத்தில் சுடலைமாடனின் முகத்தில் வழக்கமாக இருக்கும் ஆக்ரோஷம் மிஸ்ஸிங். நாங்கள் எங்கள் வழக்கமான மேடையில் அமர்ந்தோம் இப்போது ஜெபராஜி பில்டர் கோல்டுக்கு முன்னேறியிருந்தான். ஆளுக்கொன்றைப் பற்றவைத்தோம். “யே…யப்பா, இந்தக் கோயிலுக்கு வந்த வாழ்வப் பாத்தியளாடே” என்னால் ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. “யேல மக்கா.. சொடல மாடன் இப்ப பெரும்புள்ளியானதுக்கு நீயும் ஒரு காரணம் தெரியுமாடே?” ஜெபராஜி சிரித்துக் கொண்டே சொன்னான். “என்னலெ சொல்றிய?” “ம்ம்ம்…. உனக்கு தெரியாதுல்லா… கடேசி திருப்பு நாமெல்லாம் ஒரே செட்டா சேர்ந்து இங்கன பீடி அடிச்சது ஞாபகம் இருக்கா?” “ஆம்மா… அதுக்கு என்ன?” “அப்ப வள்ளியூர் ஹெச்.எம் புது ப்ளசர்ல வந்தார்லா..?” “ம்.. சொல்லு” “அப்ப உன்னிய இருட்டுல பாத்துட்டு ஏதோ உருவம்னு பயந்தாரே… அதுல இருந்து தான் சொடல மாடனுக்கு வாழ்வே ஆரம்பிச்சது” எனக்கு விஷயம் சரியாகப் புரியவில்லை.  “… வெட்டி வெட்டிச் சொல்லாதடே.. ஒரே நேரா கதை என்னான்னி சொல்லி முடியேன்” ஜெபராஜி சொல்ல ஆரம்பித்தான். அன்றைக்கு இரவு என்னைப் பார்த்து பயந்து விட்ட ஹெச்.எம், அடுத்த நாள் திரும்ப கோயிலுக்கு வந்துள்ளார். பூசனைப் பார்த்து இரவு வேளைகளில் இந்தப் பகுதியில் சுடலையின் நடமாட்டம் இருப்பதாகவும், ஆட்களை உருத்து உருத்துப் பார்ப்பதாகவும் சொல்லி இருக்கிறார். கோயிலை ஏனோதானோவென்று அலட்சியம் செய்யாமல் சுத்த பத்தமாக பராமரிக்க வேண்டுமென்று பூசனிடம் எச்சரித்துள்ளார். அதையே கிராம்ஸிடமும் சொல்லியிருக்கிறார். இந்தக் கதை கொஞ்சம் கொஞ்சமாக கிராமம் முழுக்கப் பரவியுள்ளது. ஒவ்வொருவனும் அடுத்தவனிடம் கதையைச் சொல்லும் போது கொஞ்சம் சொந்த சரக்கையும் சேர்த்துப் பரப்பியுள்ளனர். இப்போது, சுடலை மகாப் பெரிய உருவம் கொண்டவர், சுடலையின் நிறம் கருப்பு, கையிரண்டும் இரண்டு பனை மரம், காலிரண்டும் இரண்டு தென்னை மரம், ஓங்கிய கையில் மிகப் பெரிய கருக்குப் பட்டையம் வைத்திருப்பார், சுடலையிடம் பொய் சொன்னால் இரவு நேரே வீட்டுக்கே வந்து ரத்த பலி வாங்கி விடுவார், ராத்திரி மலையாள குட்டிச்சாத்தான் சுடுகாட்டில் பிணத்தைத் திருடித் தின்னாமல் சுடலை தான் காத்து நிற்கிறார், இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் சுடலை குதிரை மேலேறி கிராமத்தை வலம் வருகிறார், அப்போது எதிர்பட்டவர்கள் ரத்தம் கக்கிச் சாகிறார்கள், சுடலைக்கு நேர்ந்து கொண்டு காசு முடிந்து வைத்தால் நினைத்தது நடக்கும், தீராத வியாதிகள் தீர்ந்து விடும் – இப்படியாக ரகம் ரகமான கதைகள் பேசப்பட்டு பரவியிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கதைகள் அக்கம் பக்கத்தைத் தாண்டிப் போனதால் சுடலை இந்த வட்டாரத்திலேயே இப்போது பெரும் வி.ஐ.பி அந்தஸ்தை பெற்றிருக்கிறார். மக்கள் அள்ளித்தந்த காசில் கோயிலும் சுடலையும் இவர்களோடு சேர்ந்து பூசனும் நன்றாக வளர்ந்திருக்கிறார்கள்.  பூசன் சில மாதங்களுக்கு முன்பு தான் ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் பைக் ஒன்றை வாங்கினானாம். ஓட்டத்  தெரியாமல் ஒரு வாரம் முழுக்க உருட்டிக் கொண்டே அலைந்திருக்கிறான்.  இரவு நெடுநேரம் கதை பேசி விட்டு சுடலை கிராம உலா தொடங்கும் சமயத்தில் வீட்டுக்குக் கிளம்பினோம். விடிந்தால் சந்திரன் கலியாணம். சந்திரன் கலியாணம் முடிந்த அடுத்த நாள் நான் ஊருக்குக் கிளம்பினேன். பஸ் ஏற்றி வழியனுப்ப ஜெபராஜியும் உடன் வந்திருந்தான். சுப்பையா அண்ணாச்சி கடையில் டீ குடித்துக் கொண்டு நின்றோம். திடீரென்று ஜெபராஜின் முகத்தில் ஓரு பிரகாசம், “அந்நா பாருடே.. திடீர் சாமியாரு வாராரு”  ஜெபராஜின் விரல் நீண்ட திசைக்குத் திரும்பினேன். தொலைவில் ஒரு மனிதர் பைக்கில் வந்து கொண்டிருந்தார். பெண்களுக்கு இருப்பதைப் போல் தலை நிறைய முடி, முகத்தில் அடர்த்தியான தாடி – அது மார்பு வரை வளர்ந்திருந்தது. “ஆள் யார்னு தெரியுதாடே” ஜெபராஜி கேட்டான். “தெரியலையே மக்கா… யார் இவன், ஊருக்குப் புதுசா?” “இதாம்ல நம்ம பூசன்.. எப்படி ஆளே மாறிட்டான் பாத்தியா?” அதற்குள் அந்த வண்டி எங்களுக்கு சமீபமாய் வந்திருந்தது. “யேல.. பூசா… இங்க வாலெ” நான் கைதட்டி சப்தமாய்க் கூப்பிட்டேன். எங்களைக் கடந்த வண்டி ஒரு கணம் தயங்கி ஒரு யு-டர்ன் அடித்து கிட்டே வந்தது. பூசனின் உடல்வாகு  அப்படியே தானிருந்தது. ஆனால் அதில் ஒரு தேஜஸ் சேர்ந்திருந்தது. கழுத்தில் இரண்டு ருத்திராட்ச மாலையும் ஒரு ஸ்படிக மாலையும் தொங்கியது. மேலே சட்டையணியாத உடலில் குறுக்கு வாக்காக ஒரு காவித் துண்டை கட்டியிருந்தான்.  தாடிக்குளிருந்து சொற்பமாக எட்டிப் பார்த்த பூசனின் முகத்தில் ஒரு சங்கடம் பரவியிருந்தது. கிட்டே வந்தவன் கிசுகிசுத்த குரலில், “நான் இப்பம் பூசாரி சாமியாடின்னி ஆளாயாச்சிவே.. ஆட்கள் முன்னாடி ‘ஏல வாலெ போலென்னி’ கூப்பிடாதவே.. சரி நான் வாரன் பெறவு பாப்பம்” விருட்டென்று கிளம்பினான். “ஆள் எப்படி மாறிட்டான் பாத்தியாடே” ஜெபராஜி முணுமுணுத்தான். ஆம் நிறைய மாறித்தான் போயிருக்கிறான். ஒன்றே ஒன்றைத் தவிற – இப்பவும் பயல் பல்லு விளக்குவதில்லை. _______________________________________________________ மாடசாமி. (உண்மைச் சம்பவம். ஊர், பெயர் மட்டும் மாற்றப்பட்டிருக்கிறது.) _______________________________________________________ 27 குடி’காத்த மாரியம்மன்! “என்ன? வய வேல எதனாச்சும் நடக்குதா! ஆளையே பார்க்க முடியல.” அதெல்லாம் ஒண்ணுமில்ல. வரப்ப மிதிச்சு மாசம் ஆவுது! நம்ப பயதான் பயணம் போவணும்னு பிடிவாதமா இருக்கான். அந்த வேலயாதான் ஏஜெண்ட பாக்க வடமட்டம் வரைக்கும் போயிருந்தேன். இப்பதான் நம்ப தவக்கள மவன் ட்ரஸ்டி தேடுனார்னு சொன்னான். ஏண்ணே! எதனாச்சும் பஞ்சாயத்தா? “ இருவரும் வீட்டுத் திண்ணையில் அமர, ட்ரஸ்டி பித்தளை வெற்றிலைப் பெட்டியைப் பிரித்து வைத்தார். நாலைந்து வெற்றிலைக் காம்புகளைக் கிள்ளி எறிந்து விட்டு வாயில் அதக்கி லாவகமாகச் சுண்ணாம்பைக் கீழ்ப்பல் நுனியில் ஒரு விரலால் அப்பிய ராசு,  “சொல்லுங்கண்ணே! சமாச்சாரம் என்ன?” நம்ப பூசாரி ஜோதி பயதான் ரொம்ப கொடச்சல் கொடுத்துக்கிட்டு கெடக்கான். கொஞ்ச நாளாவே அவன் போக்கு சரியில்ல. கோயில கோயிலாவா வச்சிருக்கான். சுத்துப்பட்டு பத்து பதினைஞ்சு கிராமமும் அன்னியூர் மாரியம்மன் கோயில்னா அவ்ளோ ஒசத்தியா கன்னத்துல போட்டுக்கும்! இவன் என்னடான்னா மூணு வேல கற்பூர வாசன கூட காட்ட மாட்டேங்குறான்.. நானும் பாத்துட்டுதாண்ணே இருக்கேன். அங்கயே ஆட்ட கட்டிப் போட்டுக்குறான்; கோழிய வளக்குறான். பின்னாடி தென்னமரம் இந்த வாட்டி நல்ல காய்ப்பு; ஒரு தேங்காய நம்ம கண்ணுல காட்டலயே!.. அதற்கு மேல் வார்த்தைகளை அடுக்க வாய் கொள்ளாதவராய், எழுந்து போய் வெற்றிலை பாக்கு எச்சிலைத் துப்பி வந்தார். அன்னைக்கு நான் கோயில ஒரு நோட்டம் விடலாம்னு போறேன். ஒரு ட்ரஸ்டியாச்சேன்னு மட்டு மரியாதை இல்ல ! கண்ட பயலயும் கோயில் திண்ணைல சேத்துகிட்டு கத பேசிட்டு இருக்கான்.. வாசல்லயே இப்ப சைக்கிளுக்கு பஞ்சர் வேற போடுறானாம்.. சரி இவங்க தாத்தா காலத்துலேர்ந்து கோயில் பூசாரிங்களாச்சேன்னு  விட்டா … இவன் சரி வர மாட்டான் போலருக்கே! மொதல்ல அந்த உண்டியல தொடச்சி வச்சிருக்கானா பாருங்க ! அது மேலயே கையத் தொடச்சி எண்ணப் பிசுக்கா ஆக்கி வச்சுருக்கான்.. ராசுவின்  கை இயல்பாக வெற்றிலைப் பக்கம் போய், எடுத்த வெற்றிலையைக் குப்புறப் போட்டு வேட்டியில் துடைத்தார். ”எடுத்துக்குங்க” என்று வெற்றிலை டப்பாவை அவர் அருகே தள்ளிய ட்ரஸ்டி முக்கியமான விசயத்துக்கு வந்தவர் போல கொஞ்சம் நெருங்கி வந்து, “மத்ததெல்லாம் கூட வுடுங்க! சமீபமா கோயிலுக்கு பின்னாடியே சரக்கு ஓட்டுறான்னு கேள்வி பட்டதுலேர்ந்துதான் மனசு தாங்க முடியலே! திருவிழா டயத்துலேயே பசங்கள வச்சு ஆத்தங்கரைப் பக்கம் சாராயம் ஓட்டுனாண்ணு கேள்விப்பட்டேன். சரி, சரியான முகாந்திரம் இல்லாம கேக்கக் கூடாதுன்னு இருந்தேன்; இப்ப என்னடான்னா கோயில்லேயே செய்யுறான்னா! இனிமே விடக் கூடாதுங்க! கேள்விப்பட்டுதுலேர்ந்து மனசே சரியல்ல ! எப்புடி இருந்த கோயிலு!” முகம் வாடிப்போன ட்ரஸ்டி வெற்றிலையுடன் மீதி உணர்ச்சிகளையும் மெண்டு விழுங்கினார். அய்யய்யோ! ரோம்ப அநியாயமாச்சே!.. ராசுவும் திடுக்கிட்டார். அதான்,  நம்ப நாட்டாமக்காரர வச்சுகிட்டு, அவன கோயில வுட்டுத் தூக்கிடலாம்னு பாக்குறேன். இதுக்கு மேல விட்டு வச்சா மாரியம்மன் கோயில சாராயக் கடையாவே மாத்திருவான்.. இது சம்பந்தமா உங்கிகிட்டேயும் ரோசன கேக்கலாம்னுதான் கூப்பிட்டேன். அதெல்லாம் சரிதாண்ணே ! பிரச்சினை இந்த அளவுக்கு போறதால இன்னம அவன வுட்டுட்டு தேட முடியாது! இருந்தாலும் முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி, அவன் கிட்டயும் ஜாடையா நான் நாலு வார்த்த பேசிப் பாக்குறேன். இல்லேனா அவன் வகையறா நாலு பேரு எங்ககிட்ட சொன்னீங்களானு வருவானுங்க! கவலய வுடுங்கண்ணே ! நானே வார்த்தய கொடுத்து உள்ள சேதிய வாங்கிடறேன்..  அப்புறம் தூக்கிடுவோம்.. குடியிருக்க எடத்தக் கொடுத்தா.. மாரியம்மனயே யாருன்னா? நாம விட்டுற முடியுமா? நாளைக்கு சேதி சொல்றண்ணே.. நீங்க கவலப்படாம ஆகுற ஜோலியப் பாருங்க… ட்ரஸ்டியை ஆறுதல் படுத்திவிட்டு தெருப்பக்கம் ராசு கிளம்பினார். [மாரியம்மன்-கோயில்] என்னாடி ஆச்சி இது! வர வர ஊர்ல ஒதுங்க நிணலே இல்லாமப் போயிரும் போலருக்கு ! மாரியம்மங் கோயிலு மரத்தடி நிணலு எம்மாந் தண்டி இருட்டா இருக்குந் தெரியுமா! என்னமோ வௌக்குமாரு நிணலு மாறி இருக்கு! ஊர்ல அநியாயம் பெருத்துப் போச்சு.. ஆயி! ஆயிரங் கண்ணுடையா… நீதான் புள்ளகள காப்பாத்தணும் ; ஊர காப்பாத்தணும்.. பஸ்ஸுக்கு காத்திருக்க கோயில் பக்கம் ஒதுங்கிய சின்னப்பொண்ணு மாரியம்மனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள். பேருந்துக்கு நிற்கும் ஒரு சிலரைத் தவிர கோவில் பக்கம் யாருமில்லை. கோவில் திண்ணையும் வெறிச்சோடிக் கிடந்தது. இதுதான் தருணம் என்று ராசு மெல்லக் கணைத்துக் கொண்டே கோவிலுக்குள் நுழைந்தார். என்ன ஜோதி… ஜோதி.. இருக்கியா… தோ.. இங்கதா மாமா இருக்கேன்… இப்புடி வாங்க… கோயிலுக்கு இடப்பக்கம் உள்ள கொட்டகைதான் பூசாரி ஜோதியின் வீடு. உள்ளே விளக்குத் திரியைப் பிரித்துக் கொண்டே ராசுவை அழைத்தான். வாங்க மாமா! என்ன காத்து இந்தப் பக்கம் அடிக்குது. பையன் பயணம் போகப் போறான்னு கேள்விப்பட்டேன்! ஏதும் அபிசேகம் கொடுக்கணுமா? இல்ல ஜோதி! இதுவும் கோயில் சமாச்சாரந்தான்… என்ன சின்னப் புள்ளைலேர்ந்து உன்ன தூக்கி வளத்தவன்  நான்… ஒரு நல்லத கெட்டத நாமதான சொல்லித் தரணும். அந்தக் காலத்துல மதகு தெறக்குறதுலேர்ந்து கதவு வைக்கிற வரைக்கும் உங்க அப்பாரு கோவிந்தன் கிட்ட திருநீறும் குங்குமமும், உத்திரவும் வாங்கிட்டுதான் வேல நடக்கும். அவ்ளோ பேமசு… என்ன மாமா! சுத்தி வளைக்காம சொல்லுங்க… ட்ரஸ்டி எதனாச்சும் அவுத்து விட்டாரா? எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாறிய ராசுவுக்கு விசயத்தை தாழ்ப்பாளைத் திறந்து விட்டது மாதிரி தெம்பு வந்து பேச ஆரம்பித்தார், “ஒண்ணுமில்ல கோயில கொஞ்சம் சுத்த பத்தமா வச்சிக்கிலேன்னு பேச்சு வருது.. ” வாசல பாருங்க எதனாச்சும் இல தழ கெடக்குதா? முன்னயாவது கோழி வளர்த்தேன். எவன் கண்ண வச்சானோ! எல்லாம் கீரிப்புள்ளகிட்ட போயிருச்சு… இப்ப கோழிப்பீ கூட்டித் தள்ளவும் வழியில்ல… ராசுவின் கண்ணைப் பார்க்க, ஒரு சுழட்டு சுழட்டி அவர் வேறு பக்கம் பார்த்தார். அதில்லடா ஜோதி.. இந்த சாமி துணியெல்லாம் கொஞ்சம் தொவச்சி கிவச்சி சாத்தக் கூடாதா.. எப்பப் பாரு அழுக்கா இருக்கு… சரியா குளிப்பாட்றதும் இல்லேன்னு குறையா இருக்குடா… நல்ல கதையச் சொன்ன! என் மேலு வேட்டியப் பாரு மாமா? இது மர அழுக்கா கெடந்தாலும், என்  கைக்காசப் போட்டு மூணு பொன்வண்டு சோப்பு வாங்குறேன்… மாரியம்மன் துணிக்கு.. காட்டேரி சிலைக்கு போன திருவிழாவுல கட்டுன துணி பழுப்பேறி பீஸ் பீஸா போயிருச்சு… மானம் போவுதேன்னு… புள்ளைக்கு பொஸ்தகம் வாங்க காசு தராம வாங்கிக் கட்டிருக்கேன்… இவ்ளோ பேசுறானுவளே… ஏதுடா! ஆத்துலயும் தண்ணி ஓடலியே தண்ணிக்கு எங்க போவான்னு இந்த அடிபம்புக்கு ஒரு வாசரை மாத்திக் கொடுத்தானுவளா? காலு கழுவவே தண்ணி இல்ல.. மேலுக்கு ஊத்த எத்தன குடம் நான் இரவல் வாங்குறது.. திருவிழாவுக்கு  திருவிழா கோயில ஜோடிச்சா மட்டும் பத்தாது மாமா… பேச்சில் வேகம் கூடிக் கொண்டே போய்… ராசு இடைமறிப்பதைக் கேட்காமல் ”இங்க வாங்க.. பாருங்க” என்று கோயில் பக்கம் இழுத்து வந்தான். “பாருங்க கற்பூரத்தட்ட காஞ்சி இத்துப் போய் கெடக்கு… சூலத்த பாருங்க துருப்புடிச்சு இத்துப் போயிடக்கூடாதேன்னு கைக்காசப் போட்டு எண்ண வாங்கித் தடவி வச்சிருக்கேன்… பேச்சியாயிக்கு காசப்போட்டு குங்குமத்த கொட்டி வச்சிருக்கேன்… ” ஜோதி பேசிக் கொண்டே காட்ட, பேச்சியாயி சிலை சாட்சி சொல்வதைப் போல நாக்கை நீட்டிக் கொண்டு கிடந்தது. சரிடா, இதெல்லாம் தேவைன்னு நீ நாட்டாம, ட்ரஸ்டிகிட்ட சொல்லலாம். இல்ல என்கிட்டயாவது சொல்லலாம்ல! உண்டிக்  காசு உடைக்கிறப்பவே இதக் கேளு! ஊக்கும் கோயில் செலவுக்குன்னு பெரிசா ஒதுக்கிடப் போறீங்க… அட நீ வேற மாமா! எவன் மாரியம்மன் உண்டியல்ல போடுறான்… அவனவன் அய்யாவடி , திருநாகேஸ்வரம்னு தேடிப்போயி போட்டுக்கிட்டு வாரனுவ. உள்ளூர் காரன எவன் மதிக்குறான்! வரப்பு காஞ்சா வய நண்டும் மதிக்காதாம் அத மாதிரி, எவன் இங்க அர்ச்சனைக்கு வாரான்… இவ்ளோ பேசுறியே… நம்ப ட்ரஸ்டி வீட்ல கும்பகோணம் அய்யர வச்சிதானே பூஜை பண்றாரு. புள்ள படிச்சு வெளிநாடு போறப்ப சுவாமி மலைல போய் தங்கத்தேரு இழுக்குறாரு… ஏன் இந்த மாரியம்மனுக்கு தங்கத்துல ஒரு பொட்டு வாங்கி வச்சா என்னா கேடு! கற்பூரம் காட்டவே ஆளில்ல… எவன் தட்ல காசு போடப் போறான்…? ஏதோ எங்க அப்பா சொன்னதுக்காக.. நானும் இந்த ஊர நம்பி நாலு எழுத்து படிக்காம… கோயில்ல அடுகடையா கெடந்தது தப்பாப் போச்சு… ஜோதி போட்ட போடில் ராசு திக்கு முக்காடிப் போய், இவன மடக்க வந்தா இவன் நம்மளப் புடி போடுறானே என்று மலைத்து ஒரு வழியாகத் திரும்பவும் புகாருக்கு வந்தார், “சரி! எல்லாம் சரி பண்ணலாம். அதுக்காக நீ கோயில்லயே ஆடு வளர்க்கறதும், பஞ்சர் கடை போடறதும் நல்லா இல்லையே! அதுவும் காலனி பசங்களக் கோயில்ல சேத்துகிட்டு சதா திண்ணைல ஏத்திக்கிறதும் ஊரு பழக்கத்துக்கு ஒத்து வருமா? உங்க வகையறாவ மதிச்சு உன்னதானப்பா எங்க கோயில் பூசாரியா ஏத்துகிட்டு இருக்கோம். நீ கோயில் வேலைய வுட்டுட்டு மத்ததெல்லாம் பாத்தா, பாக்குறவங்க தப்பாதானே பேசுவாங்க! எனக்குன்னு வேணாம், உனக்குன்னும் வேணாம். நீயே நியாயத்தப் பேசு! சரி மாமா… உன் பேச்சுக்கே வர்றேன்! ஏதுடா, திருவிழா முடிஞ்சு ஆறு மாசமாவுதே! அவனுக்கும் புள்ள குட்டி, வாயி வயிறு இருக்கே! எப்புடி பொழப்பான்னு யாராவது கவலைப்பட்டீங்களா? அப்பா காலத்துல ஆளுக்கு மூணு மரக்கா, நாலு மரக்கா ஊர்ல அளந்தீங்க… இப்ப அதுவும் ஒழுங்கா இல்ல. மாசம் வெறும் ஆயிரம் ரூவா கொடுத்தா போதுமா? கேட்டா விவசாயம் முன்ன மாரி இல்லேம்பீங்க… மாரியம்மன மட்டும் முன்ன மாறி ஜோடிக்கணும்னா நான் எங்க போறது?! பொங்குற ரேசன் அரிசில  காட்டேரியிலந்து பேச்சியாயி வரைக்கும் படையல் போட்டு தெனம் காக்காவுக்கும் வைக்கிறேன்… அந்தக் காக்காவே திங்காத சோற… நாங்க தின்னுட்டு கதியேன்னு கெடக்கோம்.. பாக்குற நேரமெல்லாம் ஆள கோயில்ல காணோம்னா! ஆட்ட அவிழ்த்து விட்டு மேய்க்க ஊர்ல எங்க மேச்சல் இருக்கு? போய் இல தழய ஒடிச்சிகிட்டு வர வேணாம்… எங்க அப்பா, தாத்தான்னு கோயில வளர்த்து விட்டு எங்களுக்கு எண்ணத்த கொடுத்திட்டீங்க… நிலம் ஒப்புக் கொள்ளக் கூட இப்ப முடியல… இந்த ஆட்ட வளர்த்து வுட்டாவாவது என் புள்ள குட்டிக படிக்கிறதுக்கு வெல ஆவும்.. அதுவும் ஊரு கண்ண உறுத்துதா? பேச வந்த ராசுவை மடக்கி “கேளு மாமா? காலனிக்காரன்தான் இன்னும் பய பத்தியா என்ன மாரி மாரியம்மன கட்டிகிட்டு அழுவுறான்… அவனயும் வுட்டா என் பொழப்புக்கு யாரு? மேலத் தெருகாரனா வர்றான்… அவனவனும் பட்டீஸ்வரம், பிரத்தியுங்கான்னு புதுசு புதுசா பாப்பாரக் கோயில தேடிப் போறானுங்க.. நீங்களுந்தான் வாங்களேன். யாரு வேணாங்குறா? அட இருங்க மாமா! மொத்தத்தையும் கேட்டுட்டு நீங்களே நியாயத்தக் கேளுங்க! தட்டுக் காசும் இல்ல, கலம் நெல்லும் அளக்க மாட்டீங்க! தேங்கா மூடிக்கும் வழியில்ல, உண்டியலும் ரொம்பாதுன்னா… எப்படிதான் நான் கஞ்சி குடிக்கிறது… மாரியம்மனுக்கு துணி கட்டுறது.. மத்த வேல செஞ்சாதான்… மாரியம்மனுக்கே ஒரு முழம் பூவு. ஆமா! என்னமோ நான்தான் பூசாரி வேலய வுட்டுட்டு வேற வேல பாக்குற மாதிரி ஜோடிக்குறானுவல,  கேக்குறேன். ட்ரஸ்டி கோயில் ட்ரஸ்டி வேல மட்டுந்தான் பாக்குறாரா? பைனான்சு நடத்தல, வட்டிக்கு விடல, வாங்குன சொத்து பத்தாதுன்னு கும்பகோணத்து செட்டியாரோட சேர்ந்துகிட்டு ரியல் எஸ்டேட் பண்ண தெரியுது, என் குடிசைக்கு வைக்கோலு வுடறதுக்கு மட்டும் கணக்குப் பாக்குறாரு! நம்ப நாட்டாம, கோயிலு சுவத்தையே பாத்துகிட்டு கெடக்குறாரா… நூறுநாள் வேலைல பொய்க் கணக்கு எழுதல, பஞ்சாயத்து மோட்டாரை கழட்டி பங்கு போடல! ஏன் ஒண்ணும் இல்லாத ஆளா? இந்தக் கோயில் பம்புக்கு ஒரு வாசரை போட்டா என்ன? அவுரும், கணக்குப் புள்ளயும் சேர்ந்துகிட்டு புதூர்ல பிராய்லர் கோழி வளர்க்கலாம். நான் ஒத்த ஆடு வளக்கறது தப்பாப் போச்சா? கேக்குறேன்… ஏதோ அவனவனும் அவனவன் வேலயப் பாக்குற மாரியும்… நான்தான் இடம் மாறிப் போயிட்ட மாரியும் பேசுறாங்களே… எனக்கும் எல்லாச் சேதியும் தெரியும் மாமா… அப்பா சொல்லிட்டுதான் செத்தாரு… மாரியம்மன் தோடு, காட்டேரிக்கு தண்ணி ஊத்துன பித்தாள சொம்பு, பேச்சியாயி கரண்டி எல்லாம்… யார் யார்கிட்ட எப்புடி எப்புடி மாறிப் போச்சுன்னு எனக்குத் தெரியும். வாயத் தொறக்கக் கூடாதுன்னு நான் வலியோட கோயிலக் காத்துகிட்டு கெடந்தா..  என்னய வங்கம் வச்சா நான் சும்மா விட மாட்டேன் ஆமா? டேய்… டேய்.. ஏன்டா இப்ப கோபப்படுற… நான் கேக்க வந்ததே வேற… தோ பாரு மத்ததெல்லாம் வுடு! நான் பாத்துக்குறேன்… சொல்றேன்னு கோபப்படாதே! கோயில்லயே சாராயம் விக்கிறேன்னு பேச்சு வருது! அந்தப் பேச்சுக்கு எடமில்லாம பாத்துக்க! அததான் நான் சொல்ல வந்தது… நீ வச்சிக்க மாட்ட ! இருந்தாலும்… அப்படி ஒரு பேச்சு அடிபடுது… வராம பாத்துக்க… மிகுந்த எச்சரிக்கையுடனும், கறாராகவும் ராசு ஒரு வழியாகப் பேசி முடிக்க… “எந்த நாய்.. சொன்னிச்சு..?! சும்மா ஒதுங்கிப் போனா இன்னும் கதயக் கட்டுவானுங்க… என் புள்ளைங்க மேல சத்தியமா இதெல்லாம் சொல்றவன் வாய் இழுத்து சாவான்… இவனுக கிழிக்குற கிழிக்கு… இந்தக் கோயில்ல கெடந்து சாகறத விட… சாராயம் விக்கிறதுக்கே போவலாம்.. தப்பில்ல… ஆனா இதெல்லாம் நான் கோயில்ல செய்யுறேங்குறது எவ்ளோ பெரிய பொய்யி… சாமி  சத்தியமா வுட்டேன்.. வுட்டேன்… அந்த மகமாயிதான் இந்த அநியாயத்தக் கேக்கணும்..”  பேசிக் கொண்டே ஜோதி மண்ணை வாரி இறைக்க… “டேய்…! டேய்..! நீ வேற! சனம் வேடிக்கைப் பாக்குது…! இல்லேன்னுட்டு போவியா? இதெல்லாம்..! நல்ல ஆளுடா நீ…! போய் ஆக வேண்டியதப் பாரு…”  என்று ராசு ஆளை விட்டால் போதுமென்று நடையைக் காட்டினார். “என்னங்க? ”  பதட்டத்துடன் ஜோதியின் மனைவி ஓடி வர, சுத்துப்பட்ட பேயி, பிசாசையை ஒரு கை விபூதில தொரத்துனவரு எங்க அப்பன்! இவுனுங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்படலாமா?! கண்ணுக்கு தெரியுற மாதிரி ஒரு கழிப்பு கழிச்சிப் போட்டாதான் பின்பக்கம் வர மாட்டானுங்க… கூட்டுங்க பஞ்சாயத்த பாத்துடலாம். நீ போடி..! அவனவனும் ஆயிரம் விதத்துல காசு சேப்பானுங்களாம். பூசாரி மட்டும் பொகைச்சல்லயே கெடக்கணுமாம்… முனகிக் கொண்டே குடிசைக்குள் போனான் ஜோதி.. _______________________________________ நடந்ததை எல்லாம் அச்சு மாறாமல் ராசு சொல்லி முடிக்க, ட்ரஸ்டிக்கு கோபம் தலைக்கேறியது. அப்படியா பேசுனான் என்று ஆத்திரமாகிப் போனான், “ஆமாண்ணே! அவன் தான் செய்யுறத குத்தம்னே ஒத்துக்குல. என்னமா எகிறி எகிறிப் பேசுறான் தெரியுங்களா! மண்ணை வாரித் தூத்துனதுல எனக்கே பகீர்னு போயிடுச்சு. பேசாம கூட்டத்தப் போட்டு கோயில வுட்டுத் தூக்கிட வேண்டியதுதான்.” ராசு படபடப்போடு மேல்த் துண்டை எடுத்து தாடையில் விசிறிக் கொண்டார். ட்ரஸ்டியின் கோபம் கொழுந்து வெற்றிலையைக் குதறி எடுத்தது. பதட்டப்படாமல் நாட்டாமை நிதானமாக வாயைத் திறந்தார். ”சரிதாண்ணே! திமிராத்தான் இருக்கான், நல்லாத் தெரியுது.. இப்போதைக்கு இவன விட்டா இந்தக் கூலிக்கு பூசாரி வேல பாக்க வேற ஆளு கிடையாது.. ஊர்க்காரப் பயலும் எவன் ஒழுங்கா நெல் அளக்குறான்.. கோயிலுக்கு வெள்ளாமையும் கெடையாது. டொனேசன் வாங்க ஊர்ல எவன் இருக்கான்.. வசதி படைச்சவன் எல்லாம் டவுண் பக்கம் போயிட்டான்.. அவசரப்பட்டு இவனயும் தொரத்தி வுட்டுட்டோம்னு வெச்சுக்குங்க… அப்புறம் ஊர்க்கட்டுப்பாட்டுக்கு பூசாரிக்கு எங்க போறது? கோயில வுட்டுத் தூக்குனா என்னா பண்ணுவாங்கிறீங்க? பத்தடி தள்ளிப்போய் மதகுல உக்காந்து விப்பான்… அதுக்குப் பேசாம கண்டிக்குற ஆள வுட்டு, லைட்டா கண்டிச்சு வுட்டுருவோம். மெல்ல சாராயம் விக்காத அளவுக்கு நேரு சீரு பண்ணிகிட்டா போதும். ரொம்ப இறுக்கிப் புடிச்சோம்னு வச்சுக்குங்க… அப்பறம் நமக்குதான் பிரச்சன.. இதான் எனக்குத் தெரிஞ்ச யோசன… பிறகு நீங்கதான் சொல்லணும். ” நாட்டாமையின் வார்த்தைகளின் தீவிரம் தெரிந்தவுடன்… ராசுவும், டிரஸ்டியும் கோபத்திலிருந்து விவரத்திற்கு இறங்கி வந்தார்கள். “நல்ல வேலண்ணே! கோவத்துல நாங்க கூட வேற மாதிரி நெனச்சோம். மத்ததப் பத்தி ரோசன வல்ல! சரிதாண்ணே நீங்க சொன்னபடி லைட்டா கண்டிச்சுட்டு வுட்டுருவோம்” மெலிதாகச் சிரித்துக் கொண்டே கலைந்தனர். “மகமாயி… மகமாயி… நீதான் காப்பத்தணும்..”  ட்ரஸ்டியின் குரலில் நெளிவு சுளிவு தெரிந்தது. -துரை சண்முகம். ___________________________________________ - புதிய கலாச்சாரம், மே – 2012 _________________________________________________ 28 ” நடனத்திற்குப் பின் ” – டால்ஸ்டாயின் புகழ்பெற்ற சிறுகதை! முன்னுரை: எதனால் காதல் வயப்படுகிறோம் என்பதற்கு ஆழமான காரணங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எதனால் காதலை துறக்கிறோம் என்பதற்கு ஆழமான காரணங்கள் இருந்தாக வேண்டும். புறத் தோற்றம் காதலிப்பதற்கும், அகக் கட்டமைப்பு காதலின் பிரிவுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை இங்கு ஒரு தேர்ந்த திரைப்பட இயக்குநர் போல டால்ஸ்டாய் படம் பிடித்துக் காட்டுகிறார். மனிதர்களின் வாழ்வில் தற்செயலாக நடக்கும் சம்பவங்களே அவர்களது வாழ்வில் தீர்மானகரமான பாத்திரத்தை ஏற்படுத்துவதாக இக்கதையில் வரும் கதை சொல்லி கூறுகிறான். இதையே எழுத்தாளர் ஜெயமோகனும் பலமுறை சலிப்பூட்டும் விதத்தில் சுற்றி வரும் சொல்லாடல்கள் மூலம் கூறியிருக்கிறார். ஆனால் வாழ்வில் வரும் தற்செயலான சம்பவங்கள் நம் அகத்தில் சுற்றுப்புறச்சூழலினால் அல்லது அவரவருக்கு கிடைத்திருக்கும் சமூக சூழலின் மதிப்பீடுகளின்படிதான் பாதிப்பு ஏற்படுத்துமே அன்றி அவை முற்றிலும் தற்செயலானதல்ல. அதாவது அதன் நிகழ்வு மற்றுமே தற்செயலாக இருக்குமே அன்றி அதன் விளைவு நீடித்து வரும் சமூக மதிப்பீடுகளோடு தொடர்பு உடையவை. ஒரு மனிதனின் வாழ்வில் அவனது வர்க்கம், சமூக சூழ்நிலை என்னென்ன விதத்தில் பாத்திரம் ஆற்றுகிறது, காதல், காதலின் சர்வலோக அன்பு மயத்தின் காரணம், என்று இந்தக் கதை முக்கியமான சில விசயங்களை அலசுகிறது. கதையின் ஆரம்பத்தில் கதை சொல்லி எதன் பொருட்டு இந்தக் கதையை சொல்ல வந்தானோ அதை மறுத்தே கதையின் முடிவு இருக்கிறது. இதை உங்களால் கண்டு பிடிக்க முடியுமென்றால் நீங்கள் மார்க்சியத்தின் முதல் பாடத்தை கற்றுக் கொண்டவராகிறீர்கள் என்பதோடு ஜெயமோகன் போன்ற இலக்கியவாதிகளையும் புரிந்து கொள்ளும் சக்தியை வரித்துக் கொண்டவராவீர்கள். முயன்று பாருங்களேன்! - வினவு _______________________________________ “அப்படியானால் நீங்கள் சொல்லுகிறீர்கள், நல்லது எது, கெட்டது எது என்று தானாகவே புரிந்துகொள்ள மனிதனால் முடியாது, எல்லாம் சுற்றுச் சார்பைப் பற்றிய விஷயம், மனிதன் சுற்றுச் சார்புக்கே வசப்பட்டவன் என்று. ஆனால் நானோ, எல்லாம் தற்செயலைச் சார்ந்த விஷயம் என்று கருதுகிறேன். என்னைப் பற்றியே சொல்கிறேன், கேளுங்கள்….” தனி மனிதனைச் செவ்வைப்படுத்துவதற்கு மக்கள் வாழ்ந்துவரும் நிலைமைகளை மாற்றுவது இன்றியமையாதது என்பது பற்றி எங்களுக்குள் நடந்த உரையாடலின் முடிவில், எல்லோராலும் மதிக்கப்படும் இவான் வஸீல்யெவிச் இவ்வாறு கூறினார்.  நல்லது எது, கெட்டது எது என்று தானாகவே புரிந்துகொள்ளது இயலாது என உண்மையில் யாருமே சொல்லவில்லைதான், ஆயினும் உரையாடலினால் தூண்டிவிடப்படும் தமது சொந்த எண்ணங்களுக்கு விடையளிப்பதும், இந்த எண்ணங்களின் தொடர்பாகத் தன் வாழ்க்கை நிகழ்ச்சி எதையாவது விவரிப்பதும் இவான் வஸீல்யெவிச்சின் வழக்கம். அடிக்கடி தம் கதையில் ஒரேயடியாக ஈடுபட்டுப்போய், அதைச் சொல்ல வந்த காரணம் என்ன என்பதையே மறந்து விடுவார், அதிலும் விசேஷமாக அவர் உளமாரவும் உண்மையுடனும் பேசியபடியால். இப்போதும் அவர் அவ்வாறே செய்தார். ”என்னைப் பற்றியே சொல்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் இன்னொரு வகையில் இன்றி, இந்த வகையில் உருவாகியிருப்பது சுற்றுச்சார்பினால் அல்ல, முற்றிலும் வேறொன்றினால் தான்” என்றார். ”எதனால்?” என்று கேட்டோம். ”அது நீண்ட கதை. உங்களுக்குப் புரிய வேண்டுமானால் நிறையச் சொல்ல நேரும்.” ”சொல்லுங்களேன்.” இவான் வஸீல்யெவிச் சற்று யோசித்துவிட்டுத் தலையை ஆட்டினார். ”ஆம், ஒரே இரவில், அல்லது அதிகாலையில் நடந்த நிகழ்ச்சியால் என் வாழ்க்கை முழுவதுமே மாறிவிட்டது” என்றார். ”ஏன்? என்ன நடந்தது?” ”நடந்தது என்ன வென்றால், அப்போது நான் ஆழ்ந்த காதல் கொண்டிருந்தேன். முன்பும் பல தடவை நான் காதலித்தது உண்டுதான், இருந்தாலும் இம்முறை ஒரு போதுமில்லாத அளவு ஆழ்ந்த காதல் கொண்டு விட்டேன். என்றைக்கோ நடந்துபோன சேதி. அவளுடைய பெண்களுக்கு எப்போதோ கலியாணாமாகிவிட்டது. அவள் பெயர் ப…. ஆம், வாரெனிகா ப….” (இங்கே இவான் வஸீல்யெவிச் அவளுடைய குலப்பெயரைக் கூறினார்.) ”ஐம்பது வயதிலே கூட அவள் குறிப்பிடத்தக்க அழகியாகத் திகழ்ந்தாள். இளமையில், பதினெட்டாண்டுப் பருவத்திலோ, உயரமும், ஒடிசலும், ஒயிலும், பெருமிதமும் – ஆம், பெருமிதமும் – இலங்க, மோகனாங்கியாக விளங்கினாள். தலையைச் சற்றே பின்னுக்குச் சாய்த்தவாறு, எப்போதும் உடம்பை நேராகவே வைத்திருப்பாள் – குனியவே இயலாதவள் போல; ஒரே ஒடிசலாக, எலும்புந் தோலுமாகப் போல, இருந்த போதிலும், இந்த வழக்கமும், எழிலும் உயரமும் சேர்ந்து அவளுக்கு ராஜகம்பீரமான தோற்றப் பொலிவை அளித்தன. கனிவும் எப்போதும் மகிழ்ச்சிப் பெருக்கும் கொண்ட மென்முறுவல், கவர்ச்சியும் ஒளியும் சுடரும் விழிகள், இனிமையும் இளமையும் மிளிரும் தன்மை, இவையெல்லாம் இல்லாவிட்டால, இந்த ராஜகம்பீரம் அவளை அணுகவொட்டாதபடி பிறரை வெருட்டியிருக்கும்.” ”அடேயப்பா, எப்படிப் பிரமாதமாக வருணிக்கிறார் இவான் வஸீல்யெவிச்!” ”அட நான் என்னதான் பிரமாதமாக வருணித்தாலும், அவள் உண்மையில் இருந்தபடியே நீங்கள் புரிந்து கொள்ளும்படி வருணிப்பது இயலாது. ஆனால் முக்கிய விஷயம் அதுவல்ல. நான் சொல்ல வந்த நிகழ்ச்சிகள் ஆயிரத்து எண்ணூற்று நாற்பது – ஐம்பது ஆண்டுகளில் நடந்தன. அப்போது நான் பிராந்தியப் பல்கலைக் கழகம் ஒன்றில் மாணவனாயிருந்தேன். நல்லதோ கெட்டதோ, அறியேன், ஆனால் அந்தக் காலத்தில் எங்கள் பல்கலைக் கழகத்தில் எத்தகைய தத்துவ ஆராய்ச்சி வட்டங்களோ, எவ்விதமான சித்தாந்தப் பேச்சுக்களோ கிடையா; நாங்கள் வெறுமே இளைஞர்களாயிருந்தோம்; இளைஞரின் இயல்புக்கேற்ப, படிப்பதும் உல்லாசமாயிருப்பதுமாக வாழ்ந்தோம். நான் மிகுந்த களிப்பும் உற்சாகப் பெருக்கும் கொண்ட இளைஞன், அதோடு பணக்காரன். என்னிடம் துடியான குதிரையிருந்தது. சீமான்கள் வீட்டுப் பெண்களை அழைத்துக்கொண்டு ஸ்லேட்ஜில் சவாரி செய்வேன் (ஸ்கேட் செய்வது அப்போது மோஸ்தருக்கு வரவில்லை); நண்பர்களோடு குடியும் கேளிக்கையுமாகக் களிப்பேன் (அந்தக் காலத்திலே நாங்கள் ஷாம்பெயின் தவிர வேறு ஒன்றும் பருகுவதில்லை; பணமில்லாவிட்டால் ஒன்றுமே குடிக்க மாட்டோம், ஆனால் இப்போது போல வோத்கா குடித்ததே கிடையாது). எல்லாவற்றையும் விட எனக்கு உவப்பானவை விருந்துகளும் நடனங்களுமே. நான் நன்றாக நடனம் செய்வேன், தோற்றத்திலும் அப்படி விகாரமானவன் அல்ல.” ”ஓகோகோ, ரொம்பத்தானே சங்கோசம் பாராட்ட வேண்டாம்” என்றாள் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு பெண். ”உங்களுடைய ‘டாகரோடைப்’ போட்டோவைத்தான் நாங்களெல்லோரும் பார்த்திருக்கிறோமே. விகாரமானவர் அல்ல என்று சொன்னால் போதாது. நீங்கள் அழகராயிருந்தீர்கள், ஆமாம்” எனக் கூறினாள். ”அழகனென்றால் அழகன் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் முக்கியமான விஷயம் அதுவல்ல. நான் மிக ஆழ்ந்த காதல் கொண்டிருந்த அந்தச் சமயத்தில், ‘ஷ்ரோவ்டைட்’ விழாவின் கடைசி நாளன்று குபெர்னியத் தலைமைப் பிரபு அளித்த நடன விருந்தில் கலந்து கொண்டேன். அந்த மனிதர் நல்லியல்புள்ள முதியவர், செல்வந்தர், விருந்துபசாரம் செய்வதில் விருப்பமுள்ளவர். அவரைப் போலவே இனிய சுபாவமுள்ள அவர் மனைவி, செம்பழுப்பு மகமல்கவுனும் வைர முடியணியும் இலங்க அவரருகே நின்று விருந்தினரை வரவேற்றாள். கொழுத்து வெளிறிய அவளது மூப்புற்ற கழுத்தும் தோள்களும் – பேரரசி எலிஸவெத்தா பெத்ரோவ்னாவின் படங்களில் காண்பது போல – திறந்திருந்தன. நடன விருந்து பிரமாதம்: ஹால் நேர்த்தியாயிருந்தது; இசைப் பிரியரான ஒரு நிலப்பிரபுவின் பண்ணையடிமைகளாயிருந்த, அக்காலத்தில் புகழ் பெற்ற வாத்தியக்காரர்கள் வந்திருந்தார்கள்; உணவு வகைகள் ஏராளம்; ஷாம்பைன் கடலாகப் பொங்கிப் பெருகியது. நான் ஷாம்பெயினில் மோகங்கொண்டவனாயினும், மதுவின்றியே காதல் போதை ஏறியிருந்த படியால், குடிக்கவில்லை. ஆனால் கால்கள் தளர்ந்து தொய்யும்வரை நடனமாட மட்டும் செய்தேன். குவாட்ரில், வால்ட்ஸ்,போல்க்கா என்று எல்லா வகை நடனங்களும் ஆடினேன், அவற்றிலும் முடிந்தவரையில் வாரெனிகாவுடனேயே ஆடினேன் என்று சொல்லத் தேவையேயில்லை. அவள் வெள்ளை உடையும், ரோஜா நிற இடைக்கச்சும், ஆட்டுக்குட்டித் தோலால் செய்த வெள்ளைக் கையுறைகளும் (இவை அவளது மெல்லிய, கூர்ந்த முழங்கை வரை எட்டியும் எட்டாமலுமிருந்தன), வெண்பட்டு ஸ்லிப்பர்களும் அணிந்திருந்தாள். மஸூர்க்கா நடனத்தில்தான் அனீஸிமவ் என்ற பாழாய்ப் போகின்ற எஞ்சினீயர் ஒருவன் அவளை என்னிடமிருந்து பறித்துக்கொண்டான் – அதன்பின் இன்றளவும் அவனை என்னால் மன்னிக்க முடியவில்லை. அவள் ஆட்ட மண்டபத்தில் அடிவைத்ததுமே அவன் அவளை நடன ஜோடியாக இருக்கும்படி வேண்டிக் கொண்டுவிட்டான்; நானோ, கையுறைகளை எடுத்து வருவதற்காக நாவிதன் கடைக்குப் போனவன், காலந்தாழ்த்துவிட்டேன். ஆக மஸூர்க்கா நடனம் அவளுடன் ஆடமால், முன்பு நான் ஓரளவு மோகங் கொண்டிருந்த ஜெர்மானியப் பெண் ஒருத்தியுடன் ஆடினேன். ஆனால் அன்று மாலை அந்தப் பெண்ணிடம் மிக அசட்டையாயிருந்திருப்பேன் என நினைக்கிறேன். நான் அவளோடு பேசவோ, அவளைப் பார்க்கவோ இல்லை. நான் கண்ணாரப் பருகியதெல்லாம், வெள்ளை உடையும் ரோஜா நிற இடைக்கச்சும் அணிந்து, உயரமும் ஒடிசலுமாக இலகிய நங்கையின் வடிவம், ஒளிர்வும் செம்மையும் படர்ந்து, கன்னங்களில் சுழியிட்டிருந்த அவளது வதனம், கனிவும் இனிமையும் பளிச்சிட்ட அவளது கண்கள் இவற்றை மட்டுமே. நான் ஒருவனேயல்ல, எல்லோருமே அவளைக் கண்டு வியந்தார்கள். ஆண்களும், பெண்களுங் கூட, அவள் அவர்களை மங்க அடித்துவிட்டபோதிலும், பார்த்து மகிழ்ந்தர்கள். அவளை வியக்காமலிருக்க முடியவில்லை ஒருவராலும். ”சட்டப்படி சொல்வதானால் மஸூர்க்கா நடனத்தில் நான் அவளுடைய இணை அல்லதான், ஆயனும் உண்மையில் அநேகமாக நேரம் முழுவதும் நான் அவளுடனேயே ஆடினேன். அவள் கொஞ்சங்கூடத் தயக்கமில்லாமல் ஹாலின் ஒரு கோடியிலிருந்து நேரே என் அருகே ஆடி வருவாள்; நான் அழைப்புக்காகக் காத்திராமல் பாய்ந்து அவளிடம் செல்வேன்; தனது விருப்பத்தை நான் உய்த்துணர்ந்து கொண்டதற்காக அவள் புன்னகையால் எனக்கு நன்றி தெரிவிப்பாள். நடனம் ஆடியவாறே நாங்கள் அவளருகே இட்டுச் செல்லப்பட்டு, அவள் எனது தன்மையை ஊகித்துக் கொள்ளத் தவறி, மற்றோருவன் பக்கம் கரத்தை நீட்டி விடும் போது, மெல்லிய தோள்களைக் குலுக்கி, என்னைத் திரும்பிப் பார்த்து, வருத்தமும் தேறுதலும் தோன்ற முறுவலிப்பாள். மஸூர்க்கா ஆட்டப் பாங்கு சுழன்றாடும் வால்ட்ஸ் நடனமாக மாற்றப்பட்டதும், நான் நெடுநேரம் அவளுடன் வால்ட்ஸ் ஆடுவேன், அவளோ மூச்சு இரைக்க இள நகை அரும்பி, “Encore”(“Encore” என்ற பிரெஞ்சுச் சொல் ‘இன்னும்’ என்பது அதன் பொருள்) என மொழிவாள். அவ்வளவுதான், உடல் கனத்தையே உணராதவனாக நான் மேலும் மேலும் சுழன்றாடிக்கொண்டே போவேன்.” ”உணராமலாவது ஒன்றாவது, நன்றாய்ச் சொன்னீர்களே. அவளை இடையுற அணைத்துக் கொண்டு நடனமாடிய போது, சொந்த உடலை மட்டுமல்ல, அவளுடைய மேனியையுங்கூடத் தான் நன்கு உணர்ந்திருப்பீர்கள்” என்றான் ஒரு விருந்தாளி. இவான் வஸீல்யெவிச் சட்டென முகம் சிவப்பேற, சீற்றம் பொங்க அநேகமாகக் கத்தினார்: ”ஆமாம், இதுதான் உங்கள், இந்தக் காலத்து வாலிபர்களின், நோக்கு. உடம்பைத் தவிர வேறு எதுவுமே உங்கள் கண்களுக்குப் படுவதில்லை. எங்கள் காலத்திலே இப்படிக் கிடையாது. நான் எவ்வளவுக் கெவ்வளவு ஆழ்ந்த காதல் கொண்டிருந்தேனோ, காதலி எனக்கு அவ்வளவுக் கவ்வளவு உடலற்றவளாகத் தோன்றினாள். இந்தக் காலத்திலே நீங்கள் என்னடா வென்றால், கால்களையும் கணுக்கால்களையும், இன்னும் எதெதை யெல்லாமோ பார்வையிடுகிறீர்கள், காதலித்த பெண்ணை ஆடையற்றவளாக்குறீர்கள்; என்க்கோ, Alphonse Karr* – (*அல்பான்ஸ் கார் என்ற பிரெஞ்சு எழுத்தாளர்.) அருமையான எழுத்தாளர் அவர் – சொன்னது போல, என் காதலின் இலக்கு மீது எப்போதும் வெண்கல உடை திகழ்ந்தது. ஆடையைக் களைவதற்குப் பதிலாக நாங்கள் நிர்வாணத்தை மூடி மறைக்கவே முயன்றோம் – நோவாவின் நற்புதல்வன் செய்தது போன்று. ஊம், இதெல்லாம் உங்களுக்குப் புரியாது…” ”அட அவன் கிடக்கிறான், விடுங்கள். அப்புறம் என்ன நடந்தது?” என்று எங்களில் ஒருவன் கேட்டான். ”ஆயிற்றா. இப்படியாக நான் பெரும்பாலும் அவளுடனேயே நடனமாடினேன், நேரம் கழிவதையே உணராமல். வாத்தியக்காரர்கள் ஒரேயடியாக களைத்துப் போய் – நடன நிகழ்ச்சி முடிவில் இப்படி ஏற்படுவது சகஜந்தானே – மஸூர்க்கா ஆட்ட இசையையே விடாமல் இசைத்துக் கொண்டிருந்தார்கள்; அம்மாமாரும் அப்பாமாரும் இரவு போஜனத்தை எதிர்பார்த்துச் சீட்டாட்ட மேஜைகளை விட்டு அகலத் தொடங்கினார்கள்; எடுப்பாட்கள் எதெதையோ கொண்டு வருவதும் வைப்பதுமாக ஓடிச் சாடிக் கொண்டிருந்தார்கள். இரவு மணி மூன்றாவதற்கிருந்தது. இறுதிக் கணங்களைப் பயன்படுத்துவது அவசியமாயிற்று. நான் இன்னோரு முறை அவளை ஆட்டத்திற்கு அழைத்தேன். நாங்கள் நூறாவது தடவையாக ஹாலின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு ஆடிச் சென்றோம். ” ‘இரவு உண்டிக்குப் பின்பு குவாட்ரில் ஆட்டத்தில் நான்தானே உங்கள் ஜோடி?’ என், அவளை இருக்கைக்குக் கொண்டு அமர்த்துகையில் கேட்டேன். ” ‘கட்டாயமாக, என்னை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்விடாவிட்டால்’ என்றாள் அவள், புன்முறுவலுடன். ” ‘அதற்கு விடமாட்டேன்’ என நான் சொன்னேன். ” ‘என் விசிறியைக் கொடுங்களேன், சற்றே’ என்றாள். ”சாதாரண வெண்ணிறகு விசிறியை அவள் பக்கம் நீட்டியவாறே, ‘திருப்பிக் கொடுப்பதற்கு வருத்தமாயிருக்கிறது’ என்றேன். ” ‘அப்படியானால் இந்தாருங்கள், நீங்கள் வருந்தாதிருப்பதற்காக.’ இவ்வாறு கூறி, விசிறியிலிருந்து ஓர் இறகைப் பிய்த்து எனக்குத் தந்தாள். ”இறகை வாங்கிக்கொண்ட எனக்கு, பேருவகையையும் நன்றியையும் பார்வையினால் மட்டுமே வெளியிட முடிந்தது. நான் மகிழ்வும் மனநிறைவும் மட்டும் கொண்டிருக்கவில்லை, இன்பமுற்றிருந்தேன், பேரானந்தத்தில் திளைத்தேன், நல்லுணர்ச்சி வயப்பட்டிருந்தேன். நான் நானாகவே இல்லை, நிலவுலகைச் சேராத, தீமையே அறியாத, நன்மை மட்டுமே புரியத் திறன் கொண்ட, வேறு ஏதோ ஜீவனாகிவிட்டேன். இறகைக் கையுறைக்குள் மறைத்துக் கொண்டு, அவளை விட்டு அகல மாட்டாதவனாய் அங்கேயே நின்றேன். ”வெள்ளித் தோள் சின்னங்கள் இலங்க, வீட்டு எஜமானியுடனும் வேறு சில பெண்டிருடனும் கதவருகே நின்று கொண்டிருந்த உயரமும் கம்பீரத் தோற்றமும் வாய்ந்த கர்னல் ஒருவரை வாரெனிகா சுட்டிக் காட்டி, ‘அதோ பாருங்கள், அப்பாவை நடனமாடச் சொல்லுகிறார்கள்’ என்றாள். ” ‘வாரெனிகா, இப்படி வாருங்கள் சற்றே’ என்று கூவியழைத்தாள் வைர முடியணியும் பேரரசி எலிஸவெத்தா போன்ற தோள்களுமாக இலகிய வீட்டெஜமானி. ”வாரெனிகா கதவுப பக்கம் போனாள், நான் அவள் பின் சென்றேன். ” ‘உங்கள் தந்தையாரை உங்களுடன் நடனமாடச் சொல்லுங்களேன் சற்றே, Ma chere*’ (”ma chere” என்ற பிரெஞ்சுச் சொல். ‘என் அன்பே’ என்று பொருள் படுவது.) என வாரெனிகாவிடம் கூறிவிட்டு, ‘ஊம், ப்யோத்ர்வ்ளாதிஸ்லாவிச், தயவு செய்து ஆடுங்கள்!’ என்று கர்னலிடம் சொன்னாள் வீட்டெஜெமானி. ”வாரெனிகாவின் தகப்பனார் மிகுந்த அழகர்.  மிடுக்கான  தோற்றமும், உயரமும், நிகுநிகுப்பும் கொண்ட முதியவர். செக்கச்சிவந்த முகம், முதலாவது நிக்கொலாய் போல முறுக்கிவிடப்பட்ட நரை மீசை, மீசையைத் தொட்டுக் கொண்டிருந்த கிருதா, பொருத்துக்கு மேல் முன்பக்கமாக வாரிவிடப்பட்ட கேசம். புதல்வியனது போலவே கனிவும் மகிழ்வும் ததும்பும் இளநகை அவர் கண்களிலும் உதடுகள் மீதும் ஒளிர்ந்தது. இராணுவ தோரணையில் முன்துருத்திய, அதிக ஆடம்பரமின்றிப் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்ட அகன்ற மார்பும், வரிய தோள்களும், நீண்ட, வடிவான கார்களுமாக அவர் மிக நல்ல உடற்கட்டு வாய்ந்திருந்தார். பழவ்கால மாதிரியான, நிக்கொலாய் பாணியைச் சேர்ந்த இராணுவ அதிகாரி அவர். ”நாங்கள் கதவருகே வந்த சமயம் கர்னல் நடனமாடுவதையே தாம் மறந்து விட்டதாகக் கூறி ஆட மறுத்தார். ஆயினும் முறுவலித்து, கையை இடப்புறம் கொண்டுபோய், உடைவாளை உறையிலிருந்து உருவி, தொண்டு செய்யத் தயாராகக் காத்திருந்த ஓர் இளைஞனிடம் அதைக் கொடுத்துவிட்டு, வலக்கையில் ‘ஸ்வீட்’ கையுறையை மாட்டிக்கொண்டு, ‘எல்லாம் சட்டப் பிரகாரம் இருக்கவேண்டும்’ என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு, புதல்வியின் கையைப் பற்றியவாறு கால்வாசி திரும்பி, தாளவாய்ப்பை எதிர்பார்த்து நின்றார். ”மஸூர்க்கா நடன இசை தொடங்கியதுமே அவர் ஒரு காலை விரைவுடன் தரையில் டக்கென வைத்து, மற்றொரு காலை வீசியாட்டி முன் சென்றார். பின்பு அவரது உயரமான கனத்த உருவம் இக்கணம் மெதுவாகவும் ஒயிலுடனும், மறுகணம் ஓசையுடனும் விரைவுடனும் பாதங்களைத் தரைமீதும் ஒன்றோடொன்றும் அடித்தவாறு ஹாலைச் சுற்றிவந்தது. வாரெனிகாவின் எழில் வடிவம், கவனிக்க முடியாதபடி, தக்க தருணத்தில் அடிகளை அகற்றியும் குறுக்கியும் வைத்தவாறு, தனது சின்னஞ்சிறு பட்டுப்பாதங்கள் அவரது பாதங்களுடன் இணையும் வகையில் அவரருகே ஒய்யாரமாக நீந்திச் சென்றது. இந்த ஜோடியின் ஒவ்வோர் அசைவையும் ஹாலில் இருந்தவர்கள் யாவரும் உற்று நோக்கிக் கொண்டிருந்த்தார்கள். நானோ, வியப்பும் பாராட்டும் மட்டுமின்றி, பேரின்பமும் கனிவும் பெருக்கிட அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். கர்னலின் பூட்சுகளைக் கண்டு எனக்கு விசேஷ உளநெகிழ்ச்சி உண்டாயிற்று. அவை கன்றுக்குட்டித் தோலால் செய்த நல்ல ஜோடுகள்தாம், மோஸ்தர்படி நுனிப்புறம் கூராயில்லாமல் சப்பையானவை. பட்டாளச் செம்மான்தான் அவற்றைத் தைத்துக் கொடுத்திருக்க வேண்டும் என்பது தெளிவாய்ப புலப்பட்டது. ‘பெண்ணுக்கு நல்லுடை அணிவித்து அவளை நாலு இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இவர் மோஸ்தர்படி அமைந்த ஜோடுகளை வாங்காமல் சாதாரண பூட்சுகளைப் போட்டுக்கொள்கிறார்’ என எண்ணினேன். அந்தச் சப்பை நுனி பூட்சுகள் என் நெஞ்சை ஒரேயடியாக உருக்கி விட்டன. ஒரு காலத்தில் அவர் நேர்த்தியாக நடனமாடியிருக்க வேண்டும் என்பது துலக்கமாகத் தெரிந்தது. இப்போதோ, உடல் கனத்துப் போய்விட்டது, அவர் ஆடமுயன்ற  விரைவும் அழகும் வாய்ந்த ஜதிவரிசைகளுக்கெல்லாம் ஏற்றவாறு கால்களில் போதிய லாகவம் இல்லை. இருந்த போதிலும் ஒயிலாக இரண்டு சுற்று வந்தார். பின்பு அவர் கால்களைத் துடியாக அகற்றி, மறுபடி டக்கென ஒன்று சேர்த்து, ஒரு முழங்காலை – சற்று கனமாகவேதான் என்றாலும் – தரையில் ஊன்றி அமர, அவள் அவர் முழங்காலுக்கடியில் சிக்கிக்கொண்ட ஆடை நுனியைப் புன்முறுவலுடன் விடுவித்துக் கொண்டு ஒயிலாக அவரைச் சுற்றி வரவே, எல்லோரும் பலத்த கரகோஷம் செய்தார்கள். ஓரளவு சிரமத்துடன் அவர் கால்களை நிமிர்த்தி எழுந்து, மென்மையும் கனிவும் ததும்பப் புதல்வியின் காதுகளைப் பற்றி அவளுடைய நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, நான்தான் அவளது நடன ஜோடி போலும் என்று எண்ணி அவளை என் அருகே அழைத்து வந்தார். அவளது இணை நான் அல்ல என விளக்கினேன். ”அவரோ, பரிவுடன் முறுவலித்து, வாளை உறையில் செருகியவாறே, ‘அதற்கென்ன, பரவாயில்லை. இப்போது நீங்கள் அவளுடன் சேர்ந்துகொள்ளுங்கள்’ என்றார். ”புட்டியிலிருந்து வெளிப்படும் முதல் துளியைத் தொடர்ந்து பெரிய பெருக்கு குபுகுபு வென்று கொட்டுவது போல, வாரெனிகா மீது எனக்கு உண்டான காதல் என் உள்ளத்தில் மறைந்திருந்த அன்பு செய்யும் திறனையெல்லாம் கட்டவிழ்த்து விட்டது. அந்தக் கணத்திலே நான் உலகம் முழுவதையும் காதலால் தழுவிக் கொண்டேன். வைர முடியணி பூண்ட வீட்டெஜமானி, அவள் கணவன், அவளது விருந்தாளிகள், அவளுடைய பணியாட்கள், எல்லோர் மீதும், என் மேல் காட்டமாயிருந்த எஞ்சினீயர் அனீஸிமவினிடம் கூட, அன்பு கொண்டேன். சாதாரண பூட்சுகள் அணிந்து, அவளைப் போலவே கனிந்த புன்னகையுடன் இலகிய அவளது தந்தையின் பாலோ, அப்போது எனக்குள் மகிழ்பொங்கும் மெல்லுணர்வு ஊற்றெடுத்தது. ”மஸூர்க்கா நடனம் முடிந்தது. வீட்டுக்காரர்கள் விருந்தினர்களை இரவு உண்டி உண்பதற்கு அழைத்தார்கள். கர்னல், தாம் மறுநாள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டி யிருப்பதாகக்கூறி, வீட்டுக்காரர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். எங்கே அவர் வாரெனிகாவையும் அழைத்துக்கொண்டு போய்விடுவாரோ என்று அஞ்சினேன். ஆனால் அவள் தன் தாயுடன் தங்கிவிட்டாள். ”உண்ட பின்பு, அவளுடன் ஏற்கனவே பேசிவைத்துக் கொண்டபடி குவாட்ரில் நடனம் ஆடினேன். எல்லையற்ற இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்தேனாயினும், எனது இன்பம் நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே போயிற்று. காதலைப் பற்றி நாங்கள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவள் என்னைக் காதலிக்கிறாளா என்று நான் அவளையோ என்னையேதானோ கேட்கவில்லை. நான் அவளைக் காதலிக்கிறேன் என்பதே எனக்குப் போதுமானதாயிருந்தது. ஏதாவது எனது இன்பத்தைக் குலைத்து விடக்கூடாதே என்று மட்டுமே அஞ்சினேன். ”வீட்டுக்கு வந்து, மேல்கோட்டைக் களைந்து விட்டு, உறங்கலாம் என்று எண்ணியவன், அது முற்றிலும் இயலாத காரியம் என்பதைக் கண்டேன். அவளது விசிறியிலிருந்து எடுக்கப்பட்ட இறகும், அவள் தாயாரையும் அவளையும் நான் கைலாகு கொடுத்து வண்டியில் அமர்த்தி பின், விடை பெற்றுக்கொள்ளும் போது அவள் அளித்த கையுறையும் என்கையில் இருந்தன. அவற்றை நோக்கினேன். அப்போது விழிகளை மூடாமலே அவளை என் எதிரே கண்டேன்: நடனங்களுக்கிடையே இரண்டு ஆடவரில் ஒருவனைத் தேர்ந்தெடுக்கையில், எனது தன்மையை ஊகித்துக்கொண்டு, ‘கர்வமோ? ஊம்?’ என்று இனிய குரலில் மொழிந்தவாறே மகிழ்வுடன் என் புறம் கையை நீட்டிய சமயத்திலிருந்த அவளது தோற்றம் ஒரு கணம் தென்படும்; மறுகணம், இரவுச் சாப்பாட்டின் போது ஷாம்பெயின் பருகியபடியே கிளாசும் கையுமாகக் கனிந்த பார்வையுடன் அவள் என்னை நோக்கிய காட்சி தோன்றும். எல்லாவற்றையும் விட எனக்குக் கவர்ச்சி அளித்தது, தனது தந்தையுடன் ஒயிலாக இணைந்தாடியவாறு நடனம் புரிந்து கொண்டே, அவர் மீதும் தன் மீதும் கர்வமும் உவகையும் பெருக்கெடுக்க, வியந்து நோக்கும் பார்வையாளர்களை அவள் கடைக்கணித்த ஒய்யாரந்தான். என்னையுமறியாமலே அவர்கள் இருவரும் என் உள்ளத்தில் கனிவும் பரிவும் வாய்ந்த உணர்ச்சியில் ஒன்றாகிவிட்டார்கள். ”எனது காலஞ்சென்ற சகோதரனும் நானும் அப்போது தனியாக வாழ்ந்து வந்தோம். சகோதரனுக்கு ஜனங்களுடன் பழகுவதில் விருப்பம் கிடையாது. நடனத்துக்கோ அவன் போவதே இல்லை. இப்போது தான் அவன் ‘காண்டிடேட்டு’ பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தான், மிகமிக ஒழுங்கான வாழ்க்கை நடத்தி வந்தான். அவன் உறங்கிக் கொண்டிருந்தான். தலையணையில் புதைந்து, போர்வையால் பாதி மூடப்பட்டிருந்த அவனது தலையைப் பார்த்ததும் எனக்கு அன்பு கனிந்த வருத்தம் உண்டாயிற்று – நான் அனுபவிக்கும் இன்பத்தை அவன் அறியவுமில்லை, பகிர்ந்து கொள்ளவுமில்லையே என்ற வருத்தம். எங்களது பண்ணையடிமைப் பணியாள் பித்ரூஷ்க்கா மெழுகுவத்தி விளக்கும் கையுமாக என்னிடம் வந்து உடைமாற்றிக் கொள்வதில் எனக்கு உதவ விரும்பினான். ஆனால் நான் அவனைப் போகச் சொல்லி விட்டேன். அவனது தூங்கிவழிந்த முகமும் கலைந்த முடியும் என் உள்ளத்தை உருக்கி விட்டன. ஓசைப்படாமலிருப்பதற்காக நுனிக்காலால் நடந்து என் அறைக்குப் போய்ப் படுக்கைமீது உட்கார்ந்தேன். ஊஹும், மகிழ்ச்சிப் பெருக்கில் எனக்குத் தூக்கம் வருவதாயில்லை. கதகதப் பூட்டப்பட்ட அறைக்குள் எனக்கு ஒரே வெப்பமாயிருந்தது. உடுப்பைக் கழற்றாமலே சத்தமின்றி ஹாலுக்குச் சென்று, மேல் கோட்டைப் போட்டுக்கொண்டு வாயிற்கதவைத் திறந்து, தெருவுக்குப் போய் விட்டேன். ”நடனம் முடிந்து நான் வெளிவந்த போது அநேகமாக ஐந்து மணி. அதன் பின் வீடு திரும்பி, வீட்டிலே உட்கார்ந்திருந்ததில் இன்னும் இரண்டு மணி நேரம் கழிந்திருந்தது. ஆகவே, நான் தெருவுக்கு வந்தபோது வெளிச்ச மாகிவிட்டது. ‘ஷ்ரோவ்டைட்’ விழாக்காலத்துக் கேற்ற பருவ நிலை: மூடுபனி அடர்ந்திருந்தது; தெருக்களில் ஈர வெண்பனி உருகிக் கொண்டிருந்தது; எல்லக் கூரைகளிலிருந்தும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அந்த நாட்களிலே வாரெனிகாவின் குடும்பத்தார் நகர எல்லைக்கு வெளியே, பெரிய வயலின் ஓரத்திலிருந்த வீட்டில் வசித்து வந்தார்கள். வயலின் ஒரு கோடியில் உலாவு திடலும் மறு கோடியில் பெண்கள் பள்ளியும் இருந்தன. வெறிச்சோடிக் கிடந்த எங்கள் சந்தைக் கடந்து நான் பெரிய தெருவுக்கு வந்தேன். அங்கே கால்நடையாகச் செல்பவர்களும், ஸ்லேட்ஜ்களில் விறகேற்றிக் கொண்டு வரும் வண்டிக்காரர்களும் எதிர்ப்பட்டார்கள். ஸ்லேட்ஜ்களின் அடிச் சட்டங்கள் நடைபாதைவரை வெண்பனியைச் செதுக்கிக் கொண்டு போயின. என் கண்களுக்கு எல்லாமே – வார்னிஷ் அடித்த நுகங்களுக்கு அடியில் ஈரத் தலைகளை லயத்துடன் அசைத்தாட்டிச் சென்ற குதிரைகள், மரவுரிப் பாய்களைத் தோள்கள் மேல் போர்த்து, பிரம்மாண்டமான பூட்சுகள் அணிந்து, ஸ்லேட்ஜ்களுக்கு அருகாக நளுக்குப் பனிச் சேற்றில் சளப்சளப்பென்று நடந்து சென்ற வண்டிக்காரர்கள், தெருவின் இரு மருங்கிலும் மூடுபனியில் மிக உயரமாகத் தென்பட்ட வீடுகள் –எல்லாமே வெகு இனியவையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் இருந்தன. ”அவர்கள் வீடு இருந்த வயலை அடைந்ததும், உலாவு திடல்பக்கத்துக் கோடியில் பெரியதும் கரியதுமாக எதையோ கண்டேன், குழலும் டமாரமும் ஒலிக்கக் கேட்டேன். எனது இதயம் இவ்வளவு நேரமும் இசைத்துக் கொண்டுதான் இருந்தது; அவ்வப்போது மஸூர்க்கா நடன இசை என் காதுகளில் ஒலிக்கும். ஆனால் இது ஏதோ வேறு, கொடிய, கெட்ட இசை. ” ‘என்ன அது?’ என்று எண்ணிய நான் வயல் நடுவே சென்றிருந்த சறுக்கு வண்டித் தடத்தோடு நடந்து, ஒலிகள் வந்த திக்கை நோக்கிப் போனேன். ஒரு நூறடி நடந்ததும் பனி மூட்டத்திற்கிடையே எத்தனையோ மனிதர்களின் கரிய வடிவங்கள் எனக்குத் தென்பட்டன. படைவீரர்களாயிருக்க வேண்டும். ‘ஆமாம், கவாத்து பழகுகிறார்கள்’ என்று நினைத்து, எண்ணெய்க் கறை படிந்த ஏப்ரனும் கோட்டுமாக ஏதோ மூட்டையைச் சுமந்து சென்று கொண்டிருந்த கருமான் ஒருவனுடன் மேலே நடந்து அவர்களை அணுகினேன். கறுப்புக் கோட்டுகள் அணிந்த படைவீரர்கள், துப்பாக்கிகளைக் கால்களுக்கருகே நாட்டியவாறு இரண்டு வரிசைகளில் எதிரும் புதிருமாக அசையாமல் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னே நின்ற குழலூதுபவனும் டமாரம் அடிக்கும் பையனும் வேதனை தரும் கர்ண கடூரமான மெட்டை மறுபடி மறுபடி ஒலித்துக் கொண்டிருந்தார்கள். ” ‘என்ன செய்கிறார்கள் இவர்கள்?’ என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த கருமனை வினவினேன். ”இரட்டை வரிசையின் மறு கோடியை உறுத்து நோக்கியபடியே, ‘தப்பியோடப் பார்த்த தாத்தார் ஒருவனை இழுத்து வருகிறார்கள்’ என்று முறைப்புடன் பதிலளித்தான் கருமான். ”நானும் அதே திக்கில் பார்வையைச் செலுத்தியவன், இரு வரிசைகளுக்கும் நடுவே, பயங்கரமான ஏதோ ஒன்று என் பக்கமாக வந்து கொண்டிருக்கக் கண்டேன். என்னை நெருங்கிக் கொண்டிருந்தவன் இருமருகிலும் இரண்டு சிப்பாய்கள் பிடித்துக் கொண்டிருந்த துப்பாக்கியுடன் சேர்த்துக் கட்டப்பட்டு, இடுப்புக்கு மேல் வெற்றுடம்பாயிருந்த ஒரு மனிதன். இராணுவ மேல்கோட்டும் தொப்பியும் அணிந்த உயரமான அதிகாரி அவனருகே வந்து கொண்டிருந்தான். அதிகாரியின் உருவம் எனக்கு அறிமுகமானதாகப் பட்டது. கைதி, இரு புறமிருந்தும் மாறி மாறிப் பொழிந்த அடிகளைப் பட்டுக் கொண்டு, உடம்பெல்லாம் துடிதுடித்து நெளிய, உருகும் வெண் பனியில் பாதங்கள் சளப்பிட, ஒரு கணம் பின்னே சாய்வதும் மறுகணம் முன்னே குனிவதுமாக என் பக்கம் நெருங்கினான். துப்பாக்கியைப் பிடித்திருந்த சிப்பாய்கள் அவன் பின்னே சாயும் போது இழுத்து முன்னுக்குத் தள்ளுவதும் முன் சரியும் போது அவன் விழுந்து விடாதபடிச் சுண்டி இழுப்பதுமாயிருந்தார்கள். உயரமான அதிகாரி பின் தங்கிவிடாமல் உறுதியாக எட்டு வைத்து அவனைத் தொடர்ந்து வந்தான். செக்கச் சிவந்த முகமும், நரை மீசையும் கிருதாவுமாக விளங்கிய அந்த அதிகாரி வாரெனிகாவின் தந்தையே தான். ”ஒவ்வோர் அடி விழும்போதும் கைதி வேதனையால் சுளித்த முகத்தை அடி வந்த பக்கமாக வியப்புற்றவன் போலத் திருப்பி, வெண் பல்வரிசைகள் தெரியக் காட்டி, ஏதோ ஒரே மாதிரியான வார்த்தைகளைத் திருப்பித்திருப்பிச் சொன்னான். அவன் எனக்கு மிக அருகே நெருங்கிய பின்புதான் அந்தச் சொற்கள் என் செவிக்கு எட்டின. அவன் பேசவில்லை, ‘அண்ணன்மாரே, கொஞ்சம் இரக்கங் காட்டுங்கள். அண்ணன்மாரே, கொஞ்சம் இரக்கங் காட்டுங்கள்’ என்று தேம்பினான். ஆனால் அண்ணன்மார் இரக்கங் காட்ட வில்லை. அவர்கள் எனக்கு நேர் எதிராக வந்ததும், ஒரு சிப்பாய் தீர்மானத்துடன் முன்னே அடியெடுத்து வைத்து, பிரம்பை ஓங்கி ‘உஷ்’ ஷென்று  இரையும் படி முழுவலிமையுடன் தாத்தாரின் முதுகில் சொடேரென விளாறியதைக் கண்டேன். தாத்தார் முகங் குப்புறச் சரிந்தான், ஆனால் துப்பாக்கியைப் பிடித்திருந்த சிப்பாய்கள் அவனைச் சுண்டி இழுத்து நேராக்கி விட்டார்கள். பின்பு மறு பக்கத்திலிருந்து அதே போன்ற அடி, பிறகு இப்புறமிருந்து, பின் அப்புறமிருந்து… கர்னல் ஒரு கணம் தனது பாதங்களைப் பார்ப்பதும், மறு கணம் கைதியை நோக்குவதும், ஆழ்ந்து மூச்சு இழுத்து விடுவதும், கன்னங்களைக் காற்றால் உப்பிக் கொண்டு, குவிந்த உதடுகள் வழியே மெதுவாகக் காற்றை ஊதுவதுமாக, தாத்தாரின் அருகே நடந்து வந்தான். அவர்கள் நான் நின்ற இடத்தைக் கடந்து செல்கையில், படைவீரர் வரிசையின் இடை வழியே கைதியின் முதுகு சட்டேன என் பார்வையில் பட்டு மறைந்தது. கம்பி கம்பியாகத் தழும்பிட்டு, சொதசொதத்து, செக்கச் செவெலென்று, இனங்கண்டு கொள்ள முடியாததாயிருந்த அந்தப் பயங்கரம், மனித உடலின் அங்கம் என்று நம்பவே எனக்கு இயலவில்லை. ” ‘ஐயோ ஆண்டவனே!’ என முணுமுணுத்தான் என் பக்கத்தில் நின்ற கருமான். ”அவர்கள் மேலே நடந்தார்கள். இடறிவிழுந்து தள்ளாடித் தவித்துத் துடித்துக் கொண்டிருந்த மனிதன் மீது இரு புறமிருந்தும் அடிகள் முன்போலவே விழுந்த வண்ணமாயிருந்தன, முன்போலவே டமாரம் ஒலித்தது, குழல் இசைத்தது, கர்னலின் வாட்டசாட்டமான, மிடுக்கான உருவம், கைதியின் அருகே முன் போலவே உறுதியாக அடிவைத்து  நடந்தது. திடீரெனக் கர்னல் நின்று, ஒரு சிப்பாயை விரைந்து நெருங்கினான். ” ‘குறி தவறுகிறதோ? இதோ காட்டுகிறேன் உனக்கு! ஊம்? இனிமேல் தவறுவாயா? தவறுவாயா குறி? ஊம்?’ என்று அவன் இரைந்ததைக் கேட்டேன். ”அந்தப் பக்கம் நோக்கியவன், ‘ஸ்வீட்’ கையுறையணிந்த கர்னலின் வலிய கரம் சிறுகூடான, நோஞ்சல் சிப்பாயின் முகத்தைப் புடைக்கக் கண்டேன் – அந்த மனிதன் தாத்தாரின் வழன்று சிவந்த முதுகில் போதிய உரத்துடன் பிரம்பால் அடிக்கவில்லை என்பதற்காக. ” ‘புதுப் பிரம்புகள் வரட்டும்!’ என்று கூவினான் கர்னல். இப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பியவன் என்னைப் பார்த்துவிட்டான். என்னை அடையாளந் தெரிந்துகொள்ளாதது போலப பாவனை செய்து, குரூரமும் சினமும் பீரிட முகத்தைச் சுளித்து, சட்டெனத் திரும்பிவிட்டான். எனக்கு ஒரேயடியாக ஏற்பட்ட வெட்கத்தில், ஏதோ அவமானகரமான இழிசெயல் புரிந்து விட்டவன் போன்று, எங்கே பார்ப்பது என்று தெரியாமல், தலை கவிழ்ந்து விரைவாக வீட்டைப் பார்க்க நடந்தேன். டமாரத்தின் அதிரலும், குழலின் கீச்சொல்லியும், ‘அண்ணன்மாரே, கொஞ்சம் இரக்கங் காட்டுங்கள்’ என்ற சொற்களும், கர்னலின் தன்னம்பிக்கை நிறைந்த கோபக் குரல், ‘இனிமேல் தவறுவாயா? தவறுவாயா குறி? ஊம்?’ என்று இரைவதும் ஒன்று மாற்றி ஒன்றாக வழி நெடுகிலும் என் காதில் கேட்டுக் கொண்டிருந்தன. இவற்றால் எனது நெஞ்சில் உடல் வலி போன்ற, குமட்டலுண்டாக்கும் வேதனை ஏற்படவே, நான் பலதடவை நின்று நின்று போக வேண்டியதாயிற்று. நான் கண்ட காட்சி என்னுள் நிறைத்திருந்த ஆபாசமெல்லாம் இதோ, இதோ வாந்தியாக வெளிவந்துவிடப் போகிறது எனப் பட்டது. எப்படி வீடு சேர்ந்தேனோ, கட்டிலில் படுத்தேனோ, அறியேன். ஆனால் தூக்கம் வர ஆரம்பித்ததுமே எல்லா நிகழ்ச்சிகளும் மீண்டும் தோற்றமளித்தன, செவியில் ஒலித்தன. நான் துள்ளியெழுந்தேன். ” ‘எனக்குத் தெரியாதது எதுவோ அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பது தெளிவு’ எனக் கர்னலைப் பற்றி எண்ணமிட்டேன். ‘அவருக்குத் தெரிந்திருப்பது எனக்குத் தெரிந்திருந்தால் நான் கண்டதைப் புரிந்து கொண்டிருப்பேன், அது எனக்குத் துன்பமளித்திருக்காது’ என்று நினைத்தேன். ஆனால் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும், கர்னல் அறிந்திருப்பது என்ன என்பதை என்னால விளங்கிக் கொள்ள முடியவில்லை. மாலையில் தான் எனக்கு உறக்கம் பிடித்தது – அதுவும் ஒரு நண்பன் வீட்டுக்குப் போய் முழு போதையேறும் வரை குடித்த பின்பே. ”நான் கண்டது ஏதோ கெட்ட விஷயம் என்று நான் அப்போது முடிவு செய்ததாக நினைக்கிறீர்களோ? கிடையவே கிடையாது. ‘இதெல்லாம் இவ்வளவு நிச்சயத்துடன் செய்யப்பட்டு, அவசியமான தென்று எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்றால், எனக்குத் தெரியாத ஏதோ ஒன்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று ஆகிறது’ – இவ்வாறு எண்ணி, அது என்ன விஷயம் என அறிந்து கொள்ள முயன்றும் என்னால் இதை அப்போதும் சரி, அப்புறமும் சரி, தெரிந்து கொள்ளவே முடியவில்லை. அதற்கு முன் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரியத் தீர்மானித்திருந்தேன். ஆனால், இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் இராணுவத்தில் சேர என்னால் முடியவில்லை. இராணுவத்தில் பணி புரியாதது மட்டுமல்ல, எங்குமே பணி புரியவில்லை. விளைவாக, நீங்கள் காண்பது போலவே, ஒன்றுக்கும் உதவாதவனாகிவிட்டேன்.” []”ஓகோகோ, நீங்கள் எப்படி ஒன்றுக்கும் உதவாதவராகி விட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். நீங்கள் மட்டும் இல்லாவிட்டால் எத்தனையோ பெயர் ஒன்றுக்கும் உதவாதவர்கள் ஆகியிருப்பார்கள் என்று சொல்லுங்கள். அதுதான் உண்மை” என்றான் எங்களில் ஒருவன். ”இதுதான் அடிமுட்டாள் பேச்சு” என்று உண்மையான சள்ளையுடன் சொன்னார் இவான் வஸீல்யெவிச். ”கிடக்கட்டும். காதல் என்ன ஆயிற்று?” என்று கேட்டோம். ”காதலா? அந்த நாள் முதல் காதல் கொஞ்சங் கொஞ்சமாகத் தேய்ந்து போய்விட்டது. வழக்கமாகச் செய்வது போல அவள் முகமெல்லாம் புன்னகை ஒளிர, சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் போது, வயலில் கண்ட கர்னலின் தோற்றம் அக்கணமே எனக்கு நினைவுக்கு வந்துவிடும். அவ்வளவுதான், அசட்டுப் பிசட்டென்று சங்கடமாயிருக்கும் எனக்கு. வர வர, அவளைப் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். காதல் மங்கி மாய்ந்து போயிற்று. அதுதான் சொல்கிறேன், இந்த மாதிரிச் சம்பவங்கள் நிகழ்கின்றன, இவற்றினாலேயே மனிதனின் வாழ்க்கை மாறி விடுகிறது, நடத்தப்படுகிறது என்று. நீங்கள் என்னடா வென்றால் சுற்றுச் சார்பு என்கிறீர்கள்.” இவ்வாறு கூறி முடித்தார் இவான் வஸீல்யெவிச். ______________________________________________________________________________ - லியோ டால்ஸ்டாய் ( லேவ் தல்ஸ்தோய்) உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர். போரும் சமாதானமும், அன்னா  கரேனினா, மறு உயிரிப்பு முதலிய நாவல்கள் புகழ் பெற்றவை. “நடனத்திற்கு பின்” என்ற கதை (1903) அவரது இறுதி காலப் படைப்புக்களில் ஒன்று _______________________________________________________________________________ 29 அபின் ஏனங்குடிக்குப் புதிதாக மருத்துவனாக வந்தபோது வீட்டின் மொட்டை மாடியிலிருந்து சாலையை வேடிக்கை பார்ப்பது எனக்கு வழக்கம். மாட்டின் வாலை முறுக்கிவிட்டு அதன் பின்னே நடப்பவர்கள்; வெள்ளை வெளேரென்ற ஆட்டுக் குட்டியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடப்பவர்கள்; தெருவில் யாரையாவது பார்த்து விட்டால் தலையைக் குனிந்து செல்லம் இளம் பெண்கள்; என்னைப் பார்த்தால் நிறுத்தி வணக்கம் செலுத்திவிட்டுப் போகும் பால்காரர்கள்; புது டாக்டர் எப்படி இருக்கிறார் என ஆவலுடன் என் வீட்டை நோட்டமிடுபவர்கள்…. அப்போதுதான் முதல் முறையாக அப்பாசைக் கவனித்தேன். காற்றில் மிதப்பது போல மெதுவாக மண்ணெண்ணெய் வண்டியை மிதித்துக் கொண்டு செல்வார். அவரது வலது காலை அழுக்கான சேலைத் துணியால் சுற்றியிருந்தார். அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் நான் இருந்த போது அதே கட்டுடன் அப்பாஸ் ஒரு நாள் என்னைச் சந்தித்தார். ”கால்ல என்னங்க?” என்றேன். ”கால்ல புண்ணுங்க சார்” என்றவாறே தரையில் உட்கார்ந்து மெல்ல தனது துணிக்கட்டை அவிழ்க்க ஆரம்பித்தார். இரண்டங்குல அளவிற்குப் பெரிய புண் நடு உள்ளங்காலில் இருந்தது. ஆழமான அந்தப் புண்ணின் உள்பகுதி கறுத்து இருந்தது. டார்ச் விளக்குடன் நான் குனிந்தபோது புண்ணிலிருந்து ஒரு வித நாற்றம் பரவியதை உணர முடிந்தது. இத்தனைப் பெரிய புண்ணுடன் எப்படி இவர் மண்ணெண்ணெய் வண்டியை மிதிக்கிறார் என வருத்தமாக இருந்தது. ”புண்ல வலி இல்லீங்களா?” என்றேன். ”அதெல்லாம் ஒண்ணுமில்லேங்க” என்றவாறு தனது இருகைகளாலும் புண்ணை அழுத்தி எனக்குக் காட்டினார். ”அப்பாஸ் அண்ணனுக்கு நாலஞ்சு வருஷமா சக்கரை வியாதி இருக்கு சார். அதான் புண்ணு ஆற மாட்டேங்குது. நாங்களும் என்னன்னவோ மருந்து கொடுத்துப் பார்த்துட்டோம்” என்றார் மருத்துவனை ஊழியர் ராதாகிருஷ்ணன். அப்பாஸ் அண்ணன் என்று அவர் அப்பாசை மரியாதையாக விளித்தது எனக்கு வியப்பாக இருந்தது. வியப்பிற்கு விளக்கம் உடனே கிடைத்தது. ”சார் உங்களுக்கு ஏதுனா மண்ணெண்ணை வேணுமின்னா அண்ணங்கிட்ட சொல்லுங்க, வீட்ல வந்து கொடுக்கச் சொல்லறேன்” என்றார். அதற்குள் அப்பாஸ் ”இந்தப் புண் ஆறுமா சார்?” என்றார்; அவரது பார்வையில் நம்பிக்கையின்மை தென்பட்டது. ”ஆற வைக்கலாங்க. ஆனா தினம் நீங்க இன்சுலின் ஊசி போட்டுக்கணும்; அப்புறம் நீங்க மண்ணெண்ணெய் வண்டி மிதிக்கக் கூடாது. உங்க தொழிலை கொஞ்சம் மாத்திக்கணும். அப்போதுதான் சீக்கிரம் ஆறும்,” என்றேன். ”ஊசி இங்கேயே போட்டுக்கலாமா?” ”இல்லீங்க இதமாதிரி கிராமப்புறத்து ஆஸ்பத்திரிக்கெல்லாம் இன்சுலின் தரமாட்டாங்க. நீங்கதான் வாங்கிட்டு வரணும்” என்றேன். தலையாட்டிய அப்பாஸ் அண்ணனை ஊழியர் அன்புடன் இழுத்துச் சென்றார். அன்று அப்பாசிடம் வாங்கும் மண்ணெண்ணெய்க்கு அவர் காசு கொடுப்பாரா என்பது சந்தேகம்தான்…. ______________________________ எனினும் சில நாட்கள் தொடர்ந்து கட்டு கட்டி வந்ததில் புண் ஆறுவதைப் பார்க்க அப்பாசிற்கு என் மேல் நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும். எப்படியோ ஒரு நாள் இன்சுலின் ஊசியுடன் வந்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எப்படியாயினும் ஒரு ஏழைத் தொழிலாளியின் நோய் குணமானால் சரி என்பது போல் ”இன்சுலின் நீங்களே வாங்கிட்டீங்களா பரவாயில்லை. ஆனா ஊசி 40 ரூபாய்க்கு மேல் இருக்குமே.” ”ஆமாங்க ஆனா புண்ணு இப்போ ஆறி வருதுங்க. நீங்க சொன்ன மாதிரி ஊசி போட்டுக்கிட்டா சீக்கிரமே நல்லாயிடுமில்ல.” அப்பாஸ் ஊசி போட்டுக் கொண்டு கட்டும் அறைக்கு நகர்ந்ததும் ராதாகிருஷ்ணன் என் அருகில் வந்து கிசுகிசுப்பாக ”சார் வடக்குத் தெரு போயிருக்கீங்கல்ல. மூக்கா வீடுன்னு சொல்வாங்கள்ள,” என்றார். நான் புரியாது விழித்தேன். ”சார் அந்த தெருவுல வீட்டு முன் பக்கம், காம்பௌண்டு சுவரு எல்லாத்திலேயும் கறுப்பு கலர்ல டைல்ஸ் பதிச்சிருப்பாங்கல்ல சார்.” ”ரெண்டு பேருக்கும் ஒரே அம்மா. ரெண்டு அப்பா சார்” என்றார். இதைக் கேள்விப்பட்டதும் எனக்கு கஷ்டமாக இருந்தது. ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். ஒருவர் தனது வீட்டின் சுற்றுச் சுவர்களைக் கூட ராஜஸ்தானத்து டைல்ஸ்களால் அழகுபடுத்துகிறார். இன்னொருவர் ஆறாத புண்ணுடன் கூட வண்டியோட்டிப் பிழைக்கிறார். ஏன் இப்படி? எல்லோரும் ஒரே தட்டில் உணவு உண்ணும் சகோதரத்துவம் எங்கே போனது? நான் சந்தேகத்தை எழுப்பிய உடன் ராதா ”அதெல்லாம் சும்மா சார்! சும்மானாச்சுக்கும் கல்யாணம்னா எல்லாம் அப்படி செய்வாங்க. அவ்வளவுதான்; ஏனங்குடியில் எவ்வளவு முசுலீம்கள் ஏழைகளா இருக்காங்க. எல்லாம் சொல்லுவாங்க சார். ஆனா நம்பள மாதிரிதான்” என்று என்னையும் தன்னோடு சேர்த்துக் கொண்டார். _________________________________ ஓரிரு மாதங்கள் கழித்து அப்பாஸ் தன் மனைவியோடு மருத்துவமனைக்கு வந்திருந்தர். ”ரொம்ப நன்றிங்க சார். புண்ணு இப்போ நல்லா ஆறிடுச்சு சார்,” அப்பாஸின் கண்களில் ஈரம். ”நீங்க எந்தம்பி மாதிரி, ஆறு மாசமாக இந்த புண்ணை வச்சிகிட்டு வண்டி ஓட்றதுக்கு சிரமப்பட்டார். நீங்க நல்லா இருக்கணும்” என்றார் அப்பாசின் மனைவி. தொடர்ந்து அப்பாசின் மனைவி ”இன்சுலின் ஊசி போதுமா? இல்ல இன்னும் போடணுங்களா?” என்றார். அவருக்கு மாத்திரையில ரத்தத்தில் சர்க்கரை குறையறது இல்ல,அதனால ஊசிய தொடர்ந்து போடுறதுதான் நல்லது” என்றேன். ”ரொம்ப கஷ்டமாக இருக்கது தம்பி; ஊசி ரொம்ப வெலையாவுது; நீங்கதான் எப்படியாவது அரசாங்கத்துல சொல்லி ஊசி வாங்கி போட்டுவுடுங்க” என்றவாறு கையெடுத்துக் கும்பிட்டார். நான் அரசாங்கத்தின் பிரதிநிதி அல்ல; கையாலாகாத ஒரு அரசாங்க ஊழியன் என அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? __________________________________ அன்று இரவு ஜான் முகமதுவைப் பார்க்க அவரது வீட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. ஜான் முகமது என்னைப் பொறுத்தவரையில் ஒரு அற்புதமான மனிதர். சற்றும் களங்கமில்லாத சிரிப்பு அவர் தாடிக்குப் பின்னிருந்து வந்து கொண்டேயிருக்கும். என்னை மதிப்பவர். என்மேல் பிரியம் உள்ளவர். ஐந்து வேளை தொழுகை செய்யும் அவர் நாத்திகனான என்னுடன் கை கோர்த்துக் கொள்வார். என் தந்தையின் வயதையொத்த ஒருவருடன் சமமாக கைகோர்த்துப் பேசுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அவர் வீட்டின் எதிரிலிருக்கும் சந்தில் அப்பாஸ் திரும்புவதை தற்செயலாக கவனித்தேன். ”என்ன மண்ணெண்ணெய்க்கார அப்பாஸ் இங்க போறாரு” என்றேன் அவரிடம். ”உங்களுக்குத் தெரியாதா, அப்பாஸ் வீடு அங்கதான் இருக்கு” என்றார் ஜான் முகமது. அந்த இருளில் சந்திற்கு அப்பால் இருந்த அப்பாசின் வீடு எனக்குப் புலப்படவில்லை. ”அப்பாசின் அண்ணன் வீடு வடக்குத் தெருவில இருக்குன்னாங்களே?” என்றேன். ”ஆமா பாகப் பிரிவினையிலே அவங்க கொஞ்சம் மோசடி செஞ்சுட்டாங்க.” ”நீங்க இருந்துமா இப்பிடி செஞ்சுட்டாங்க” என்றேனே. ”இல்ல, நான் ஏனங்குடி ஜமாத்துல்ல. அது கரைப்பாக்கம் ஆதலையூர் ஜமாத்” என்றார் ஜான் முகமது. ”எல்லோரும் சகோதரர்ன்னு சொல்றீங்க ஆனா ஜமாத்துக்கு ஜமாத் இப்படி வேறுபாடா?” புன்னகையுடன் “என்ன செய்யிறது, காலம் மாறிப் போச்சு. தப்புப் பண்றவங்க எல்லா இடத்துலயும் இருக்காங்க. நாங்கூட அவன் அண்ணன்கிட்ட சொல்லிப் பார்த்தேன். கேக்கலை, சரி நம்ம வீட்டுக்கு எதிரில இருக்கிற சந்துல அந்த பழைய வீடு சும்மா கெடந்துச்சு. அதான் இங்க கொண்டு வச்சுருக்கேன்” என்றார். அவரின் பணிவு என்னை நெகிழ வைத்தது. ”அப்பாசுக்கு தினம் இன்சுலின் போடணும், பாவம் ஊசி வாங்க காசு இல்ல போலிருக்கு. நீங்க உங்க ஜமாத்துல சொல்லி கொஞ்சம் ஊசி வாங்கி கொடுக்க முடியுமா?” என்றேன். ”ஜமாத் என்னங்க, ஜமாத் இதுக்கு, நானே வாங்கி தர்றேன்” என்றார். சொன்னபடியே ஊசியும் வாங்கிக் கொடுத்தனுப்பினார். பலமுறை ஏழை முஸ்லீம் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி தேவைப்படும்போதெல்லாம் அவரை நாடியிருக்கிறேன். மனம் கோணாமல் அவரும் உதவியிருக்கிறார். ஆனால் எத்தனைக் காலம்தான் அடுத்தவர் தயவில் வாழ முடியும்? அப்பாஸ் ஊசி போட வருவது மெல்ல மெல்ல நின்று போயிற்று. அதிகமான வேலைப் பளுவின் காரணமாகவும், மனிதர்களை அறைக்குள் மட்டுமே சந்திக்கும் வாழ்க்கை முறையின் காரணமாகவும் நானும் அப்பாசை மறந்து போனேன். ____________________________________ ஓரிரு வருடங்கள் கழிந்திருக்கலாம். ஒரு நாள் மருத்தவமனையின் வெளி நோயாளிகள் பிரிவில் இருந்தபோது வாசலில் திடீரென ஒரே கூட்டம். கூச்சல். மருத்துவமனை ஊழியர்கள் கட, கடவென வாசல் பக்கம் ஓடினார்கள். கூட்டத்தை விலக்கியவாறு ஒரு சிலர் ‘வழியவிடுங்க’ என்றவாறு ஒரு பெண்ணை இரத்தம் ஒழுக தூக்கி வந்தனர். நிறம் மங்கிய அப்பெண்ணின் துப்பட்டா முழுவதும் ரத்தம் நிறைந்திருந்தது. அருகில் வந்ததும் தெரிந்தது அந்தப் பெண் அப்பாசின் மனைவி என்று. மருத்துவமனை வராண்டாவில் படுக்கச் செய்து ”என்னவாயிற்று” எனக் கேட்டேன். ”நம்ம ரெண்டாம் நம்பர் பஸ்ல அடிபட்டுட்டாங்க சார்” என்றார் ஒருவர். புடவையை சற்று விலக்கி கால்களைப் பார்த்தேன். வலது கால் முழுக்க சிதைந்து போயிருந்தது. கூட்டத்திலிருந்து பலர் ‘உச்’ கொட்டினார்கள். ஏதும் செய்ய இயலாத நிலையில் அவரை உடனடியாக நாகப்பட்டினம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு நாற்காலியில் வந்து அமர்ந்தேன். மருத்துவமனை வளாகத்தில் இருந்து கூட்டம் கலைந்து கூச்சல் ஓய்ந்து அமைதி நிலவியது. ”எப்படி ஆச்சுங்க ஆக்சிடெண்ட்?” என்றேன் ராதாவிடம். அதற்குள் கடைத்தெருவிற்குப் போய் நிறைய தகவல்கள் சேகரித்து வந்திருந்தார். ”அப்பாசுக்கு ரொம்ப முடியாம போய் நாகப்பட்டணம் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில சேத்துட்டாங்களாம். இது அவருக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டு போயிருக்கு. ஏறுறதுக்குள்ளே பஸ்ஸை எடுத்துட்டானாம் அந்த டிரைவர். ரொம்ப மோசம் சார். எப்பவுமே ஓவர் ஸ்பீடு. பஸ்ஸ எடுத்த வேகத்துக்கு இந்தம்மா கீழே விழுந்து கால் பின் சக்கரத்துல மாட்டிக்கிச்சு.” நேரில் பார்த்தவர் போல் இதைச் சொன்னார். ”அப்பாசுக்கு என்னவாம்” என்றேன் மெதுவாக. ”ரொம்ப மோசமா இருக்காராம் சார். அன்னிக்கு ஒரு நாள் நானே பார்த்தேன். மூஞ்சி, கை, காலெல்லாம் வீங்கி கிடந்தது. பிழைக்க மாட்டார் சார். கஷ்டம்! ஆனா பாவம் சார் ரெண்டும் சின்ன சின்ன பிள்ளைங்க. அதுங்களை காப்பாத்த வேண்டியது இந்த அம்மாதான் அதுக்குள்ள இவங்களுக்கு இப்படி ஆயிருச்சே” என்றார். சமூகத்தின் அவலம் ஒரு சிலருக்கு வெறும் செய்தியாகவே உள்ளது. இந்தச் சமூகத்தின் மீது மக்களை கோபம் கொள்ளாமலிருக்கச் செய்வது எது என யோசிக்கச் சொன்னது. யோசிக்க யோசிக்க தலைவலி அதிகமாக மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்றேன். என் மனைவி எனது முகவாட்டத்தைப் பார்த்தும் முகம் மாறினாள். மருத்துவமனையில் நடைபெறும் சோகங்களை அங்கேயே மறந்துவிட வேண்டும் என்பது அவளது கட்சி. வாழ்க்கையில் வசதியான வீட்டில் பிறந்து செல்லப் பெண்ணாக வளர்ந்து வாழ்பவளுக்கு வாழ்வின் துன்பங்களும் துயரங்களும் தெரிந்திருக்க நியாயமில்லையோ? வருத்தத்திலேயே படுத்து உறங்கிப் போனேன். ________________________________ பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் உட்கார்ந்து ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஐப்பசி மாதமாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் தமிழ் மாதங்கள் எங்கே தெரிகிறது. ஆனால் வெளியே மழை மட்டும் ஐப்பசி மாதத்தை நினைவில் வைத்துக்கொண்டு கொட்டு, கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. மழையைப் பார்த்தபோது எனக்கும், நோயாளிகளுக்கும் இடையில் திரை விரித்தது போல இருந்தது. எனக்கு இது போன்றவையே ஓய்வு நாட்கள். அப்போது அந்த மழையிலும் குடை பிடித்துக் கொண்டு ஒருவர் வருவது தெரிந்தது. ஜான் முகமதுவின் வீட்டு வாசலில் அடிக்கடி பார்த்த முகமாக தெரிந்தது. ”என்ன விஷயம்?” என்றேன். அவசரமாக வரச்சொல்லி ஜான்முகமதுதான் சொல்லி அனுப்பியிருந்தார். வாசலில் ஆட்டுக் குட்டிகளுடன் உட்கார்ந்து மழையை ரசித்துக் கொண்டிருந்தார் ஜான் முகமது. என்னைக் கண்டதும் பரபரப்பானார். ”என்னது நடந்தே வந்துட்டீங்க. செல்லியிருந்தா நான் ஆட்டோ அனுப்பியிருப்பேன்ல” என்று அன்புடன் கடிந்து கொண்டார். காப்பி கொடுத்தவாறே ”நம்ம அப்பாசிற்கு ரொம்ப சீரியசா இருக்கு. நீங்க கொஞ்சம் வந்து பாக்க முடியுமா? அதுக்குத்தான் கூப்பிட்டு அனுப்பிச்சேன்” என்றார். ”ஏன்? என்னவாச்சு? அவரோட பெண்டாட்டி கூட பஸ்ஸில அடிபட்டாங்களே? அவங்க எப்படி இருக்காங்க?” ”அப்பாசுக்கு உடம்பு முடியாம இருந்து நாகப்பட்டினம் ஆஸ்பத்திரில சேத்து இருந்துச்சு. இடையே இந்த அம்மா வேற பஸ்ஸில அடிப்பட்டு அங்கேயே சேர்த்துருந்தாங்க. பாக்கிறதுக்கு ஆளில்ல, பணமும் இல்ல. அதனால ரெண்டு பேரையும் இங்கு கொண்டு வந்துட்டாங்க. பிள்ளைங்க ரெண்டு பேரும் சின்ன பசங்க அதுலயும் பெரிய பொண்ணு வயசுக்கு வந்துருச்சி.  அதுதான் ஆத்தாவுக்கும் அப்பனுக்கும் கஞ்சிவைச்சு கொடுக்குது; இடையில ஒரு வாரமா பெய்யிற மழையில அவங்க குடியிருக்கிற வீடு பாதி இடிஞ்சி விழுந்துடுச்சி; ரொம்ப பாவமா இருக்கு சார்.” அப்பாசின் வாழ்க்கையில் நடை பெற்ற சம்பவங்களைக் கோர்வையாக நினைவுபடுத்திப் பார்க்கும் போது எனக்கு வாழ்க்கை மீதே வெறுப்பு உண்டாயிற்று. மெல்ல எழுந்து ஒரே குடையின் கீழ் இருவரும் அப்பாசின் வீட்டை நோக்கி நடக்கலானோம். இப்போதுதான் அப்பாசின் வீட்டை முதன் முதலாகப் பார்க்கிறேன். வீட்டினுள் நுழைந்து பார்ப்பதற்கு கதவுகளும், ஜன்னல்களும், தேவைற்றது என்பது போல முன் சுவர் இடிந்து பார்வைக்கு வழிவிட்டிருந்தது. கிழிந்து கையால் தைக்கப்பட்டிருந்த ஒரு சாக்கின் உதவியால் வீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த மறைவுக்குப் பின்னாலிருந்து அப்பாசின் வயதுக்கு வந்த பெண்ணின் முகம் எட்டிப் பார்த்தது. எந்த பிரக்ஞையும் இல்லாமல் குப்பை போன்று அப்பாஸ் படுத்திருந்தார்; படுக்க வைக்கப்பட்டிருந்தார். முகம் வெள்ளை வெளேரேன வெளிறிவிட்டிருந்தது. கை, கால்கள் முகம் முழுவதும் அளவுக்கு அதிகமாக வீங்கியிருந்தது. அப்பாசின் அருகில் அமர்ந்து ”அப்பாஸ்! அப்பாஸ்!” என தட்டி எழுப்ப முயற்சி செய்தேன். மிகவும் பிரயத்தப்பட்டு கண்களைத் திறக்க முயற்சி செய்தார். கண்களின் இமைகள் மிகவும் வீங்கியிருந்தன. அப்பாஸ் கண்களைத் திறக்கச் சிரம்ப்பட்டார். கடைசியில் பிறை போன்று மெல்லிய கீற்றாக கண்களைத் திறந்தவர் என்னை அடையாளம் கண்டு கொண்டது போலத் தோன்றிற்று. நான் நாடித்துடிப்பைப் பார்க்க கை வைத்தேன். நாடியினைத் தொட்டு அறிய முடியாத அளவிற்கு கை வீங்கி இருந்தது. நான் மெல்ல எழுந்தேன். ”டயபடிக் நெப்ரோபசி வந்து ரீனல் பெய்லியர் ஆயிடுச்ச. சிறுநீரகம் முழுவதும் வலுவிழந்து பழுதடைந்துவிட்டது. என்னைவிட மரணம் அவருக்கு நெருக்கமாக உள்ளது. இனி ஏதும் செய்வதற்கில்லை” ஜான்முகமதுவிடம் தனியே தெரிவித்தேன். ”சரி போகலாம் வாங்க” என்றார் அவர். அப்பாசிடம் சொல்லிக் கொள்வதற்காக அவரை மீண்டும் எழுப்பினேன். இந்த முறை சற்று உடனேயே கண்களைத் திறந்தார். ”அப்பாஸ் நான் போயிட்டு வர்றேன்; கவலைப்படாதீங்க நல்லாயிடும்” என்று பொய் சொல்லி வைத்தேன். சட்டென்று அப்பாஸ் முகத்தில் ஒரு புன்சிரிப்பு பரவியது. ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லக் கூடியது அந்தச் சிரிப்பு. மெல்ல வாயைத் திறந்து அரபியிலோ, உருதிலோ ஏதோ கூறினார். வார்த்தைகள் தெளிவாக வந்து விழுந்தன. அதுதான் அப்பாஸ் உச்சரித்த கடைசி வார்த்தைகளாக இருக்கும். எனக்கு அப்பாஸ் என்ன சொன்னார் என அறிய ஆவலாக இருந்தது. ஜான் முகமதுவின் வீட்டிற்குத் திரும்பியதுமே அப்பாஸ் கூறியது என்ன என அவரிடம் கேட்டேன். ”இன்னா லில்லாஹி லஇன்னா இலைஹி ராஜிஹன்; தவக்கல்லத்து அலல்லாஹ்; அல்ஹம்மது இபில்லாஹ்!” என்றார். அப்படியென்றால்?” ”நாம் அல்லாவுக்கே உரியவர்கள். அவனிடமே திரும்பிச் செல்ல இருக்கிறோம். இப்போதும் அந்த அல்லாவின் மீது நம்பிக்கை கொண்டேன். எல்லாப் புகழும் அல்லாவுக்கே” என்பதாகக் கூறினார். எனக்கு அவரிடம் விடைபெற மனமில்லை. மெல்ல எழுந்து தெருவில் நடக்கலானேன. அவருக்கும் என் மனதின் கேள்விகள் புரிந்திருக்க வேண்டும். மௌனமாக ஆட்டுக் குட்டிகளுடன் அமர்ந்து விட்டார். எனக்குள் மீண்டும் மீண்டும் அதே கேள்விகள். இத்தனைக் கஷ்டத்திலும் அப்பாசுக்கு ஏன் கோபம் வரவில்லை? வசதியான மகனுடன் சேர்ந்து கொண்டு பெற்ற தாய் மறந்த போதும், வளமற்ற சகோதரன் வண்டியிழுத்துப் பிழைத்தபோதும் வருத்தமுறாத சகோதரனை நினைத்த போதும், வாழ வழியற்று விரட்டும் சமூகத்தினை நினைத்த போதும், இறுதி நேரத்தில்கூட ஆறுதல்தராத உறவுகளை நினைத்த போதும், அடிமேல் அடிஅடித்த விதியின் மீதும், அல்லாவின் மீதும், அவர் கூறிய சகோதரத்துவத்தின் மீதும், அதைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் தன் மதத்தின் மீதும் ஏன் கோபம் வரவில்லை. எப்படி அவருக்கு இந்த நிலையிலும் அல்லாவுக்கு நன்றி சொல்ல முடிந்தது? யோசித்தவாறு ஏனங்குடியின் நடுத்தெருப் பள்ளி வாசலைக் கடந்த போது அந்த மழையிலும் பகல் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இது நஞ்சல்லவா? இந்த நஞ்சு அபின் அல்லவா? இது கிறங்க வைக்கும், மயங்க வைக்கும், ஏங்க வைக்கும் நஞ்சல்லவா? இதைச் சொன்ன கம்யூனிசத் தத்துவத்தையா தோற்றுப் போனதாகக் கூறுகிறார்கள்? உண்மை எப்படித் தோற்கும்? மழையின் இரைச்சல் கூடியது. பாங்கோசை அதில் நனைந்து அடங்கியது. ____________________________________________________ –   மருத்துவர். சிவசுப்பிரமணியஜெயசேகர், புதியகலாச்சாரம், டிசம்பர்1999. _____________________________________________________ 30 சிரிக்க முடியாத வாழ்க்கை! [சிரிப்பு] இன்றைக்காவது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வேலைக்குக் கிளம்ப வேண்டும் என்ற உமாவின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. கணவனின் பார்வையில் நொடிக்கு நொடி கடுகடுப்பு ஏறிக்கொண்டிருந்தது. எதுவும் வாய் கொடுக்காமல் இருப்பதே நல்லது என்று முகத்தைப் பார்க்காமல் அவள் டிபன்பாக்சை மூடிக்கொண்டிருந்தாள். “”ஏய்! கூப்டா திரும்ப மாட்டியா? நீதான் பெருசா வேல செஞ்சு கிழிக்கிற மாதிரி, நீ பாட்டுக்கு இருக்க? ” ஏதும் சண்டை வளர்ப்பதென்றால் இப்படி ஒரு முகாந்திரத்தில் அவன் ஆரம்பிக்கும் வழக்கத்தை அவள் அறிந்திருப்பதினால் சுருக்கமாக “”சொல்லுங்க, கவனிக்கல”  என்று அவன் கூப்பிடாவிட்டாலும் தன்மேல் பழியைப் போட்டுக் கொண்டு காது கொடுத்தாள். அவன் தொணத்திக் கொண்டே வந்தான்,   ”எப்படிக் கவனிப்ப? பெரிய கலெக்டர் உத்தியோகம் பார்க்கறேல்ல! தோ பார், வேலைக்குப் போனமா வந்தமானு இருக்கணும்! தேவையில்லாத பேச்சுகள்லாம் அங்க இடம் இருக்கக் கூடாது, புரியுதா” ”இப்ப என்ன தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்கேன்?” ”ஏய்! சொன்னா சரின்னுட்டு போவாம எதுத்து எதுத்துப் பேசுற?” ”என்ன விவரம்னு கேட்டா அது ஒரு தப்பா?” ”ஏய்! ரொம்பத்தான் சம்பாதிக்கிற திமிர்ல பேசிக்கிட்டே போற! வீட்டுக்காரன் சொன்னா அடக்கமா பேசக் கத்துக்க.. பதிலுக்குப் பதில் எகிர்ற!” ”தோ பாரு, நீ என்னவோ மனசுல வெச்சுக்கிட்டு பேசுற…  எனக்கு இந்த மூடிமறைச்செல்லாம் பேசத் தெரியாது, நான்  ஒழுங்கா வேலைக்கு போயிட்டுதான் வாரேன், என்ன தப்பு நடந்து போச்சுண்ணு வெளிப்படையா சொல்லு?” பொங்கி வந்த கோபத்திலும் நிதானம் தவறாமல் அவள் வெளிப்படையாகப் பேசினாள்.  இந்தப் பேச்சுக்கே பொறுப்பாக பதில் சொல்வதற்குப் பதில் மீண்டும் தாண்டிக் குதித்தான் அவன். ”ஆமாண்டி நீ வேலைக்குப் போற எடத்துல கண்டவங்கிட்டயும் பேசுற… சிரிச்சு சிரிச்சு வழியுற… சும்மா நீ கத்திப் பேசி சமாளிக்க முடியாது.” ” அடச்சே! இவ்வளவு நாளா சந்தேகத்தோடதான் என்னோட குடும்பம் நடத்துனியா?… என்னையே சந்தேகப்படுறியே… சூப்பர் மார்க்கெட்ல சேல்ஸ் கேர்ளா வேல பாத்தா கண்டவங்கிட்டயும் பேசித்தான் ஆகணும். இது கூட உனக்குத் தெரியாதா? உன் மனசுல இவ்வளவு கெட்ட எண்ணத்த வெச்சுகிட்டுதான் எரிஞ்சு எரிஞ்சு விழறியா… வேண்டாம் இனிமே நா வேலைக்கே போகல, நீயே சம்பாதிச்சுக் கொடு! வெறும் வயித்தோட ஓடி ஓடிப்போய் சம்பாதிச்சுக் கொடுத்து, கடைசில நீயே என்னக் கேவலமா நெனைக்கறியே.” ”என்ன பிளாக்மெயில் பண்றியா? நீ எப்படி இருந்தாலும் நான் கேக்கக் கூடாதா? வேலைக்குப் போவாட்டி கெட.. அதுக்காக உன் இஷ்டத்துக்கு இருக்க முடியாது.. என்னமோ நீ சம்பாதிச்சுதான் குடும்பம் நெறயர மாதிரி என்னையே மெரட்டுறியா… என்ன இப்ப சந்தேகப்பட்டு அடிச்சா தொரத்திட்டாங்க… மொதல்ல வாய அடக்கு… புருஷன்னா நாலு வார்த்த கேக்கதான் செய்வான்.  சும்மா இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். ஆமா!” போகிற போக்கில் எந்தப் பொறுப்பும் இல்லாமல் தான் பேசிய வார்த்தைகளைப் பற்றி எந்த விவாதமும் இல்லாமல், முக்கியமாக சந்தேகத்துக்குக் காரணமான வேலைக்கு இனிப் போக வே-ண்டாம் என்று திடமாக எந்த முடிவையும் அறிவிக்காமல், தலைக்கேறிய தனது கோபத்தைத் தணித்துக் கொண்டவன் போல இயல்பாக அவன் நகர்ந்து போனான். ”சீ, இதுவும் ஒரு வாழ்க்கையா,, என்று தனக்குத்தானே வெறுத்துக் கொண்டவள் என்ன செய்வது என்று யோசித்து மறுகணம் பிள்ளைகள் படிப்பு, குடும்பத்தின் சூழ்நிலை அனைத்தும் மனதில் நிழலாட தன் விருப்பத்திற்கு எதிராக வழக்கம்போல வேலைக்குக் கிளம்ப வேண்டியதாயிற்று..  காலையில் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகள் திரும்பத் திரும்ப எதிரொலித்து மனதில் வலி மிகுந்தது.. அவ்வப்போது ஈரம் கசிந்த விழிகளை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு தனக்குரிய சேல்ஸ் செக்சனில் மரம் போல் நின்றாள்.. தொலைவிலிருந்து அவளை கவனித்த சூப்பர்வைசர் நெருங்கி வந்தான். ”என்ன உமா, காலையிலிருந்து நானும் பாக்கறேன், வர்ற கஸ்டமர சிரிச்ச மூஞ்சியோட அட்டண்ட் பண்ணாம நீ பாட்டுக்கும் ஏனோ தானோன்னு நிக்கற! வர்ற ஆளுங்ககிட்ட ஸ்மைலிங் ஃபேஸோட புரோடக்ட எடுத்துக் காட்டி கான்வாஸ் பண்ணதான உன்ன இங்க போட்டுருக்கோம் . நீ பாட்டும் உம்முன்னு ஓரமா நின்னா எதுக்கும்மா சம்பளம் குடுத்து உன்ன இங்க நிக்க வெச்சுருக்கு… நானும் உன்ன ரொம்ப நாளா கவனிச்சுக்கிட்டுதான் வர்றேன்… வர்றவங்கள பாத்து முதல்ல ஸ்மைல் பண்ணவே மாட்டங்கற.. தானா போயி இண்டரஸ்டா பேசவும் மாட்டங்கற.. இதல்லாம் தெரிஞ்சுதானம்மா வேலைக்கு வந்த! இஷ்டம் இல்லன்னா சொல்லிடும்மா, வேற ஆளா இல்ல… சும்மா கம்பெனிய கவுத்து உட்றாத…” ”இல்ல சார் சில கஸ்டமர் பேசினா டிஸ்டர்பா நினைக்கிறாங்க.. அதான்  ஒதுங்கி நின்னேன்..” ”ஏம்மா ஒதுங்கி நிக்கவா சம்பளம் தர்றோம்.. நீ மேல போயி விழ வேணாம்மா.. பக்கத்துல போயி பக்குவமா பேசு.. அவங்களா சொல்லட்டும், அப்புறம் தள்ளிக்க.. முதல்ல புரோடக்ட எடுத்து டீடெய்ல் சொல்லும்மா..” ”சார்! இன்னிக்கு இருக்கிறது வெஜிடபுள் செக்சன் சார்.. இதுல என்ன சார் கேன்வாஸ் பண்றது?” ”எங்கிட்ட இவ்வளவு பேசுறல்ல? வர்றவங்க கிட்ட வாழப்பூ பத்தி பேசு! தோ அந்த பாவக்காவ காட்டி சுகருக்கு நல்லதுன்னு சொல்லு… கேரட்ட எடுத்துக் காட்டி கண்ணுக்கு நல்லதுன்னு சொல்லேன். சொல்லவா மேட்டர் இல்ல.. வெண்டைக்கா தின்னா மூளைக்கு நல்லதுன்னு சொல்லி சரக்க காலி  பண்ணு.”  சூப்பர்வைசர் பேசப்பேச எரிச்சலையும் மீறி உமாவுக்கு மெல்லிய சிரிப்பு வந்தது. ”பாத்தியா! இப்ப சிரிக்கிற பாரு, இதே மாதிரிதான் .. சிரிச்சாதாம்மா சேல்ஸ் கேர்ளு.. இப்படி சிரிச்சுப் பேசி கலகலப்பா கஸ்டமர கவர் பண்ணுவியா! அத வுட்டுட்டு, எதயோ பறிகொடுத்த மாதிரியே நிக்குறியே.. இனிமேலாவது டிசிப்ளினா வேலய பாரும்மா.. இல்லன்னா வேலய வுட்டு தூக்க வேண்டியதுதான்.. வேற வழியே இல்ல..” சொல்லிவிட்டு வேகமாக சூப்பர்வைசர் அடுத்த செக்சனுக்கு நகர்ந்தான்.  அடுத்த கஸ்டமர் நெருங்கி வர,  சிரிப்பதற்கு சிரமப்பட்டு அவள் முயற்சியெடுத்தாள். ப்ரெஷ்ஷாக காய்கறிகளைக் காட்ட ஒளியூட்டும் விளக்கின் வெளிச்சம் அவள் முகத்திலும் பட்டது. __________________________________________ - புதிய கலாச்சாரம், மார்ச் – 2012 ________________________________________________ 31 டேய், யாராவது பக்கத்துல உட்காருங்கடா! நகரப் பேருந்து நிலையம். டவுன் பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் வெகுநேரம் சோர்வளித்தது. சுற்றியுள்ள காட்சிகளில் கண்கள் நேரம் மறந்தன. சிவந்து உப்பிய பஜ்ஜியை தினத்தந்தி பேப்பரில் ஒரு அப்பு அப்பி பிழிந்து எடுத்தவர், ஏதோ மவுத் ஆர்கன் வாசிப்பது போல அதை விதவிதமாக வாயில் வைத்து ஊதி ஊதிக் கடித்துத் தீர்த்தார். தின்று முடித்தவுடன் அந்தப் பெரியவர் கை நிறைந்து காணப்பட்ட எண்ணைய்ப் பசையை முழங்காலுக்குக் கீழே முழுவதும் தடவிக் கொண்டார். ஆயில் மசாஜ் போல கால் விரல்களின் இடுக்கு வரை எண்ணெய்க் கைகளை தேய்த்தார். பக்கத்தில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த எனது வியப்பைப் புரிந்து கொண்டவர் போல, ”தம்பி! என்ன பாக்குறீங்க, இந்த எண்ணைய இப்படி ஒரு தடவு தடவுனாத்தான் இந்த பஸ்ஸ்டாண்டு கொசுக் கடிக்கு நமக்கு பாதுகாப்பு! இந்த எண்ணெ வாசத்துக்கு கொசு நம்ம பக்கமே தல வெச்சுப் படுக்காது பாருங்க.. ஹி..ஹி..”  . அவர் சிரிப்பும், அனுபவ அறிவும் எனக்குப் புதுமையாகப் பட்டது. இன்னொரு பக்கம் தட்டு முறுக்கை தஞ்சாவூர் கோபுரம் போல அடுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரின் செய் நேர்த்தி என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. தேவைக்கு வெளியூர் போய் வரும் ஒரு பெரிய கிராமத்துக் குடும்பம் சில்வர் வாளி, ஒயர் பேக்குகளை நடுவில் வைத்து சுற்றிலும் பாதுகாப்பு அரணாக அமர்ந்திருந்தார்கள். ஓரிரு குட்டிப்பையன்கள் அவர்களைச் சுற்றி வருவதும், திடீரென அவர்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு சிரிப்பதுமாகப் பொழுதைக் கழித்தனர். பெண்டு பிள்ளைகளுக்குத் துணையாக நிற்கும் ஆண்களின் முகத்தில் பஸ் வந்தால் ஒரே ஓட்டமாக ஓடிப்போய் சீட்டப் பிடிக்கணும் என்ற முடிவு குறிப்பாகத் தெரிந்தது. ”நேரத்துக்குள்ள பஸ்ஸு வந்து தொலைச்சா இராச்சோற வீட்டுல போயி திங்கலாம்.” என்று அதிலொருவர் தனது பொருளாதார நிலைமைக்கேற்ப பேசிக் கொண்டிருந்தார். பிளாஸ்டிக் ஊதல் விற்கும் சிறுவன் வேண்டுமென்றே குழந்தைகளைப் பார்த்து ”பீப்பி..” என ஊத ”… டே போடா! நீ வேற புள்ளைங்கள கௌப்பி விட்றாத! ஆளுக்கு ஒண்ணு கேட்டுத் தொலைக்குங்க. போடா அந்தப் பக்கம்” என்று நகர்த்தி விட்டனர். பெரிய பொதிகள் முதுகுத் தண்டை வளைக்க, பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும் திடீரென பேருந்து நிலையமெங்கும் செடி, கொடிகளாய் முளைத்தனர். ”டே, ராசப்பா… டேய்..” வளைந்து குலுங்கிய டவுண் பஸ்ஸின் படியில் தொற்றிக் கொண்டு நுழைவாயிலிலேயே ஏறிக் கொண்டவன் செம்மண் புழுதியைக் கிழித்துக் கொண்டு கத்தினான். ”டேய் சீக்கிரம் வா.. சீட்டு போயிடும் ஆமா..” கத்திக் கொண்டே  படிக்கட்டிலிருந்து உள்ளே தலையைக் கொடுத்து முண்டினான். போக்கு காட்டி ஒரு வழியாக பஸ்ஸை நிறுத்திய டிரைவர் படிக்கட்டின் வழி இறங்க முடியாமல், டிரைவர் சீட்டின் வழியாகக் குதித்தார். ”இறங்க வுடுதுங்களா பாரு, சனியனுங்க.. பொம்பளய போட்டு இந்த இடி இடிக்கிறானுவ.. ” கண்ட கண்ட வார்த்தையில் திட்டியபடி பாட்டி ஒன்று கமறி உமிழ்ந்தபடியே இறங்கினார். ”ஆசயப் பாரு, உன்ன இடிக்கதான் ஏர்றாங்களாக்கும், சீக்கிரம் எறங்கு.” ”எறங்குறண்டா மவனுங்களா..” என்று காலம் புரியாமல் கத்திக் கொண்டே போனார் பாட்டி. பிதுங்கி நுழைந்து சீட்டைப் பிடித்த வேகத்தில் சிலர் சட்டைப் பட்டன்கள் காணாமல் தேட ஆரம்பித்தனர். பள்ளிப் பிள்ளைகளின் நிலைமையோ பரிதாபமாக இருந்தது. அவர்கள் படிக்கட்டில் காலை வைத்தால் போதும். மூட்டையோடு அப்படியே அலாக்காக அவர்களைத் தூக்கி உள்ளே நுழைத்தது கூட்டம். சீட்டுப் பிடித்த பின்பும் சண்டை சச்சரவும், சத்தமும் நீடித்தது. தாராளமாக நிற்கும் நிலையிலும் பேருந்தில் ஒரு இருக்கையில் மட்டும் ஒருவருக்குப் பக்கத்தில் யாரும் அமராமல் வந்த வேகத்தில் உட்கார்ந்திருப்பவரை நோட்டம் பார்த்தவாறு நகர்ந்து போயினர். தொலைவிலிருந்து அந்த ஆளைப் பார்த்தால் மிடுக்கான டீசர்ட், பேண்டுடன் தடித்த உருவமாய்த் தெரிந்தார். தோரணையைப் பார்த்தால் குடிகாரனாகவோ, அருவருப்பூட்டும் தோல் வியாதிக்காரராகவோ தெரியவில்லை. சற்று நெருங்க அவர் போட்டிருந்த செண்ட் வாசனை கமகமத்தது. இருப்பினும் வேகமாக சீட் இருப்பதாய் நினைத்து வரும் யாரும் அவர் பக்கத்தில்  அமராமல் இடம் பெயர்ந்தனர். பிச்சைக்காரர் போல தோரணை உள்ள ஒருவர் வேகமாக வந்து இருக்கையைப் பார்க்க ”உட்காருய்யா, யாருமில்ல” என்று வாட்டசாட்டம் சொல்லிப் பார்க்க… ”தோ முன்னாடி” என்று நழுவிச் சென்றார். நின்று கொண்டிருந்த பலரும் காலியான இருக்கையில் தன் பக்கத்தில் உட்காராத நிலைமை வாட்டசாட்டமானவரை தனிமைப்படுத்தியதுடன், ஒரு கேவலத்தையும் ஏற்படுத்தியது. சுற்றும் முற்றும் அவசரமாக நோட்டமிட்டவர் சாதாரணமாக அழைத்தாலும் யாரும் வராத  சூழ்நிலையில் ஒரு பள்ளிச் சிறுவனை வெடுக்கென பிடித்து இழுத்து, ”டேய், இங்க உட்கார்றா..”  என்று அதட்டல் குரலில் அமர வைத்தார். அவனோ இருப்புக் கொள்ளாதவன் போல இடப்பக்கமாக நெளித்து உட்கார்ந்து கொண்டு, தன்னை பார்க்காத நேரம் அந்த ஆசாமியை முழுவதும் உற்றுப் பார்த்து விட்டு வெடுக்கெனத் திரும்பிக் கொண்டான். திடுமென எழுந்தவனைத் திரும்பவும் அந்த ஆள்.. ”உட்கார்றா..” என்று விரட்ட… ”ஏங்க! எறங்கனுங்க!” என்று ஓடினான். ஒட்டுமொத்தமாக யாருக்கும் பிடிக்காமல் போன அந்த ஆள் யார்தான்  என்று அவரது முகத்தை உற்றுப் பார்த்தேன். மப்டி போலீஸ் என்பது தெளிவாகப் பட்டது. _____________________________________________ - புதிய கலாச்சாரம், மார்ச் – 2012 ___________________________________________________ 32 பிராமீன் “மாங்கா…. மாங்கா…” மீனாட்சி மாமி எட்டிப் பார்த்தவுடன், செல்லத்துரை குரலை மேலும் உயர்த்தினான். ”மாங்கா… மாங்கா… ருசியான மாங்கா” மங்களத்து மாமியும் பக்கத்து வீட்ட மாமிகளும் வாசலுக்கு வந்துவிட்டதைப் பார்த்த செல்லத் துரைக்கு முகத்தில் சிரிப்பு ததும்பியது. ”என்ன மாமி எல்லோரும் பாத்திரத்தோடு வந்துட்டிங்க. இன்னைக்குன்னு பாத்து சரக்கு வேற கம்மியா போட்டுட்டு வந்துட்டேன். ஆளுக்கு ரெண்டு கிலோ போடட்டா?” ”ஏண்டா கூறுகட்டி விக்கறத போயி கிலோ கணக்குல விக்கிற அளவுக்கு நோக்கு கிராக்கி முத்திடுச்சோ! கிட்டக்க வா மொதல்ல கூடய பாப்போம்” சைக்கிள் அருகில் வந்ததும், கூடையிலிருந்து வந்த நாற்றத்தை மூச்சில் இழுத்த  பார்வதி மாமி கூன் விழுந்த முதுகை நிமிர்த்தி அவனைச் சந்தேகத்துடன் பார்வையால் அளந்தாள். ”ஏண்டா வீணா போன மாங்காயா கொண்டாந்துருக்கியோ! இந்த நாத்தம் நார்றது” ”நல்ல மீனுன்னா இப்படித்தான் மாமி நாறும், வேணும்ணா பாருங்க,” கூடைக்கு மேல் மூடியிருந்த சாக்கைத் திறந்தான். ”திருட்டு முழி முழிச்ச்சிண்டு அவன் சிரிக்கறப்பவே நெனச்சேன். கிராதகம் பண்ணுவான்னு. மற்றவர்களும் வசவை ஆரம்பித்தனர். ”பாவி கம்மனாட்டி, கோகுலாஷ்டமியும் அதுவுமா, இப்படி பண்றியே மாங்காண்ணா நாங்க பாத்திரத்தோட வந்தோம். நோக்கே நன்னாருக்கா இப்படி பண்றது” அதுக்கு மேல் மீன் நாற்றத்தில் நிற்க விரும்பாமல் சரேலென்று திண்ணைக்கு ஓடி வாயை வளைத்தும் நெளித்தும் முணுமுணுத்த வண்ணமிருந்தனர். வெக்கு வெக்கென்று சிரித்துக் கொண்டிருந்த செல்லத்துரையைப் பார்த்து பொரிந்து தள்ளினாள் பார்வதி மாமி. ”அந்தக் கண்றாவிய, தண்ணிய கொட்டிண்டு இன்னும் ஏண்டா நிக்கற? மொதல்ல சைக்கிள நகர்த்து. போடா! போனா போறது உங்கப்பன் காலத்லேர்ந்து அக்கிரகாரத்த நம்பி பொழச்ச குடும்பமாச்சேன்னு உன்கிட்ட கறிகா வாங்கிண்டிருந்தோம. இந்த கண்றாவிய கொண்டாந்து வச்சிண்டு மாங்கான்னு எங்களவாள நக்கல் பண்ணியோ, இனிமே யாரும் ஒன்னிட்ட எதுவும் வாங்க மாட்டா, நீ போடா மொதல்ல.” ”சும்மா பயப்படாதீங்க மாமி, மெட்ராசுல போயி பாருங்க உங்க ஆளுங்க மாட்டுக்கறிய என்னா போடு போடுறாங்கண்ணு.” ”நீ காலங்காத்தால தண்ணி போட்டுட்டு வந்துட்டியா? போடா மொதல்ல” ”கோவிச்சுக்காத மாமி, வெறும் தயிறு சோற திங்கறதுனாலத்தான் கொற வயசுலேயே தலை ஆடுது. கூன் விழுது. எங்கள மாதிரி எலும்பையும், மீனையும் கடிச்சு பாருங்க. இடுப்பு என்னமா நிக்குதுன்னு. என்னா போடட்டா ஒரு கிலோ?” ”இல்ல இல்ல, இவன் நம்ப பேச்சுக்குப் படியமாட்டான். ஏய்! ராமமூர்த்தி இங்க வாயேன்….” ”தே! மாமி அந்தாள இழுத்து வுட்றாத. திருக்கைய உப்புல வச்சி தேக்கிற மாதிரி, வாயாலயே வச்சி தேச்சிடுவாரு தேச்சி” சிரித்துக் கொண்டே, கால் சட்டைக்கு மேலே கைலியை தூக்கிவிட்டவாறு சைக்கிளை ஒரு மிதி மிதித்து ”மாங்கா….. மாங்கா… மீனு… மீனு” என்று சிரித்தபடியே புறப்பட்டான். ”மாங்கா மாங்கான்னு சத்தம் வந்துதேன்னு வடாம் போட்ட கையோட அப்படியே வந்தேன். கட்டயிலே போறவன் மீன் கூடய வச்சிண்டு என்ன பேச்சு பேசறான் பார்த்தேளா!” மங்களத்து மாமியின் பொறுமலோடு பார்வதியும் ஒத்திசைத்தாள். ”எல்லாம் அழியறத்துக்கு காலம்டி, ஒரு காலத்துல இந்த அக்கிரகாரத்துல கால வைக்கவே நடுங்னவாள்லாம் இப்ப நம்பளவாள நக்கல் பண்ணிண்டு போறா.” ”கேக்க ஆள் இல்லியோன்னோ அதான், கண்டதும் நம்பள நக்கல் பண்றது. மொதல்ல இந்த போஸ்ட் ஆபீஸ் வந்தது. ஒரு சேரி ஆள் வந்தான். அடுத்து தெருவுல இந்த தாய் சேய் விடுதி வந்தது சூத்திரவாள் வந்தா. இப்ப இது அக்கிரகாரமாவா இருக்கு…. க்கூம்.” ”இந்த முத்துசாமி அய்யர் மெட்ராசோட போறேனிட்டு காசுக்காக சூத்திரன் கிட்ட வீட்ட வித்துட்டு போயிட்டார். நம்பளவாளே சரியில்லாதப்போ யார குத்தம் சொல்றது.” ”சரி போயி ஆத்துல வேலைய பாருங்கோ” பார்வதி மாமி வழிமொழிய கலைந்தனர். *** ”வாசு வாங்க என்ன ஹாயா உட்கார்ந்திட்டேள்” ராமமூர்த்தி அய்யர் வழக்கமான வெண்பொங்கல் சிரிப்பை பரிமாறினார். மாலை நேர சுலோகங்களை முடித்துக் கொண்டு திருநீறு, சந்தனம் மணக்க ராமமூர்த்தி அய்யர திண்ணையில் வந்து உட்கார்ந்தால், யாரும் பக்கத்தில் போகவே பயப்படுவார்கள். ஏதாவது கேள்வி கேட்டு பாகவதம் பாடி ”இது கூட தெரியாதா? என்னத்த எம். எஸ்சி. படிக்கிறேள்” என்று மடக்குவதும், ஏதாவது ஒரு ஆங்கில வார்த்தையைச் சொல்லி அர்த்தம் கேட்டு தெரியாமல் விழிப்பவர்களைப் பார்த்து ”என்ன கான்வென்ட் படிப்போ எழவோ? ஒரு மண்ணும் தெரிய மாட்டேங்கறது” என்று பலருக்கும் முன் அவமானப்படுத்தி ”இத்தனைக்கும் நான் அந்தக்கால பத்தாவது” என்று அவர் சிரிக்கும் சிரிப்புக்கு எதிர் நிற்க முடியாமல் பலரும் பயந்து ஒதுங்குவார்கள். என்னை மட்டும் அளவுக்கு அதிகமாக மரியாதை கொடுத்து அவர் அழைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இதுவரை அவரது பேச்சுக்கு ஒத்துப் போகாமல் எதிர்கேள்வி கேட்கும் என்னை முழுவதுமாகப் பணியவைக்க வாதத்தை ஆரம்பிப்பது அவரது வழக்கம். இவ்வளவு ஆர்வமாக வரவேற்க காரணம் என்னவாயிருக்கும்? காலையில் தெருவில் நடந்த சம்பவத்தை நினைவில் வைத்துக் கொண்டு ராமமூர்த்தி அய்யர் பக்கம் போனேனே. ”என்ன சார் ஏதும் முக்கியமான விசயமா?” ”என்ன இருந்தாலும் நானெல்லாம் ஓல்டு ஜெனரேஷன். உங்கள மாதிரி புதுமை, பகுத்தறிவெல்லாம் நேக்குத் தோண மாட்டேன்றதே!” சுற்றி வளைத்து எங்கு வருகிறார் என்பது புரிந்தது. மௌனமாகச் சிரித்துக் கொண்டேன். ”சொல்லுங்கோ வேற என்ன நியூஸ், ஏதாவது ராமசாமி நாயக்கர் புக் படிச்சிருப்பேயே பிராமின்ஸ குத்தம் சொன்னா உங்களுக்கு வெல்லம்…. ஹி…. ஹி….” ”என்ன சார் நீங்க வேற, காரணம் இல்லாம ஒருத்தர திட்டுனா ஏத்துக்க முடியுமா? தேவையானத தெரிஞ்சுக்க வேண்டியதுதான்.” ”ஜாடையா எங்களவாள திட்றத சரிதான்றேள். காலைல தெருவுல நடந்த்தை பாத்தேளா, யாரு தப்பு பண்றா, சொல்லுங்கோ.” ”ஓ! அந்த செல்லத்துரையா?” ”என்ன சாதாரணமா ஓ போடறேள். நீங்கதான் பகுத்தறிவு பாக்குற ஆள். அவன் செஞ்சது சரியா சொல்லுங்கோ! என்ன பேசிண்டே இருக்கேன், சிரிக்கிறேள்” உணர்ச்சிகரமானார் அய்யர். ”இது அக்கிரகாரம்னு தெரியும், இங்க இருக்கிறவா பிராமின்னு தெரியும். இங்க வந்து மீனு, மீனுன்னு கத்தறான், ஆளுக்கு ரெண்டு கிலோ வேணுமான்னு கேக்கறான்னா, எவ்ளோ இன்டீசென்ட் பிகேவியர். இங்க இருக்கிற நான்பிரமின்ஸ் பார்த்து சிரிச்சிட்டுதானே இருந்தாள், யாராவது அந்த படவாவ கண்டிச்சாளா? பிராமின், நான்பிராமின் பேதம் பாக்காம எவ்ளோ டீசென்டா இருந்துண்டு இருக்கோம். அடுத்தவாளுக்குப் புடிக்காததை செஞ்சி அதுல ஆனந்தம் அனுபவிக்கிறன்னா அவனோட புத்திய என்ன சொல்றது? இத எந்த பகுத்தறிவும் கேட்காதோ?” ஆவேசமும், ஆலோசனையுமாக பேச்சு நீண்டது. ”சொல்லுங்க வாசு, இது அசிங்கமில்லையா? எங்களவாதான் மேனியில பூணூல் போட்டாலே தப்புன்னு வாதம் பண்றேள்! அடுத்தவா வேணாம்னு ஒதுக்குறத அடுத்தவா மேல அத்துமீறி நடந்துக்குறதுக்கு யாரு தப்பு சொல்றது. இதுதான் டெமாக்ரசியா? சொல்லுங்கோ.” பேசிக் கொண்டே போனவர், தெருப்பக்கம் கவனித்தவாறு ” தோப்பனார் தேடறார் போல இருக்கு. போயிட்டு வாங்கோ, நீங்களும் நானும் எங்க போயிடப்பொறோம், ஆற அமர பேசலாம். கொஞ்சம் சாமர்த்தியமா யோசிக்கிற ஆளாச்சேன்னு உங்க காதுலயும் போட்டேன் அவ்வளவுதான்,” சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்தார். **** முதல் நாள் இராமமூர்த்தி அய்யரிடம் மேற்கொண்டு பேச நினைத்தைப் பேச இயலாது போயிற்று. காலையிலிருந்து தெருப்பக்கம் அவரைத் தேடிக் கொண்டிருந்தன எனது கண்கள். வீட்டிலிருந்து தென்படுவார் என எதிர்பார்த்தேன். இராமமூர்த்தி அய்யர் தெருவிலிருந்து வீட்டுப்பக்கம் வழக்கத்தைவிட வேகமாக நடந்து வந்தார். அவரது வட்டவடிவமான தொந்தியும், பூணூலும் புவியீர்ப்பு விசையோடு போராடுவது போல அசைந்து கொண்டிருந்தது. “என்ன சார் இவ்வளவு வேகமா வாரீங்க, ஏதும் அவசரமான வேலையா?” ”என்ன தெரியாதது போல கேக்கறேள்! கம்மாளத் தெருவுல புதுசா கட்டுன வினாயகர் கோவிலுக்கு இன்னிக்கு மகா சம்புரோட்சணமோன்னோ! அதான் பாராயணத்துக்கு காத்தாலயே போயிட்டேன். அபிஷேகத்துக்கு சந்தனம் வாங்கி ஆத்துலேயே மறந்து வச்சிட்டு போயிட்டேன், அதான் வேகு வேகுன்னு கொண்டு போயி கொடுதிட்டு வர்றேன். அப்பாடா… நாராயணா…. நமச்சிவாயா…” துண்டால் தொந்தியில் வழிந்த வியர்வையை ஒற்றியபடி திண்ணையில் உட்கார்ந்தார். ”அப்புறம் என்ன சேதி, ஊரே அங்க தெரண்டு நிக்கறது. நீங்க மட்டும் வரமாட்டேள்” ”ஓ! அதானா காலைலேர்ந்து நமகா, நமகான்னு சத்தம் கேட்டுச்சு” ”நீங்க காத்தால கேட்டது என்னோட வாய்ஸ்தான். வேதபாராயாணம் உங்களுக்கு நக்கலா படுதா” ”இல்ல சார் நேத்து நீங்க சொன்ன மாதிரியே நல்லா யோசிச்சு பார்த்தேன். செல்லத்துரை செஞ்சதையே இப்ப நீங்களும் செய்யறீங்களே, அதான், என்ன சொல்றதுன்னே தெரியலே” ”அந்த மீன்காரன் மாதிரி நானா? என்னது குண்டதூக்கி போடறேள்” பரபரத்தார் இராமமூர்த்தி. ”வாங்கப் புடிக்காதவங்க கிட்ட மீனு மீனுன்னு கத்தறது தப்புன்னா, சமஸ்கிருதம்னா என்னன்னு தெரியாதவங்ககிட்ட போயி மைக்கசெட்டு போட்டு நீங்க நமகா, நமகான்னு கத்தறது மட்டும் சரியா? நீங்களே யோசிச்சு பாருங்க. அந்தத் தெருவுல இருக்கறவங்களுக்கு தமிழைத் தவிர வேறெதுவும் தெரியாது. நீங்க கர்நாடக சங்கீதம் கச்சேரி வேற வெச்சீருக்கீங்க. இப்படி அவங்க விருப்பத்த மதிக்காம இதுதான் பாட்டு, இதுதான் வேதம்னு நீங்க திணிக்கறது மட்டும் எந்த வகையில சார் டெமாக்ரசி?” ”ஹி… ஹி…. யாரோ எழுதி வச்சத படிச்சுட்டு தப்பாப்  பேசறேள். உங்களுக்குப் புரிய வைக்க நம்மால ஆகாது. சரி. அந்த சாப்டர விடுங்கோ. கொஞ்சம் கட்டையை சாச்சிட்டு திரும்பவும் பாராயணம் பண்ண போகணும்.” ”அப்ப திரும்பவும் மீன்விக்க போறீங்கன்னு சொல்லுங்க.” ஆவேசமாகி வாதம் பொறி பறக்கப் போகிறதென்று எதிர்பார்த்தேன். ”ஆஹா…. ஹா… ஹா…. ஒங்களுக்கு அனுபவம் பத்தாது. அதான் தெரியாம பேசறேள். சாதாரண மேட்டர போயி ரொம்ப சீரியசா எடுத்துக்கறேளே. போயி நீங்களும் ரெஸ்டு எடுங்கோ. ஏன் சும்மா பேசிண்டு. திண்ணைல வேற காத்த காணோம். ரொம்ப புழுங்கறது….” போய்க் கொண்டே இருந்தார். இதற்கு முன், நழுவிச் செல்வதில் இப்படியொரு உயிரினத்தை இதற்குமுன் பார்த்திராத அதிர்ச்சியில் வாயடைத்து நின்றேன். ________________________________________  புதிய கலாச்சாரம், செப்டம்பர் 1999. _________________________________________ 33 தேர்தல் இது சீனப் புரட்சியின் அறுபத்தி மூன்றாம் ஆண்டு. புரட்சிக்குப் பின்னால் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற அரசமைப்பின் கீழ் நடைபெற்ற  தேர்தலை விளக்குகிறது இந்தக் கதை. ”கம்யூனிஸ்டு நாடு என்றால் தேர்தலே கிடையாது, கட்சியின் சர்வாதிகாரம்தான்” என்றும், நமது நாடுதான் ஜனநாயக நாடென்றும் முதலாளித்துவப் பத்திரிகைகள் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்கின்றன. இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதையை நாம் புதிதாக அம்பலப்படுத்தத் தேவையில்லை. கேடிகள், கிரிமினல்கள், திருடர்களைத் தவிர வேறு யாரும் வேட்பாளராக நிற்க முடியாது என்பதை மக்களே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். சீனத்திலோ, மக்களுக்குத் தொண்டாற்றி, மக்களின் மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெறாத யாரும் வேட்பாளராகக் கூடப் போட்டியிட முடியாது என்பதையும், வேட்பாளரின் குறைநிறைகள் மக்கள் மத்தியில் அலசி ஆராயப்படும் என்பதையும் இச்சிறுகதை தெளிவுபடுத்துகிறது. அனைத்துக்கும் மேலாக, பெண் விடுதலை, பெண்களின் குடும்ப, சமூக, அரசியல் அடிமைத்தனங்களை எதிர்த்த போராட்டம் உழைக்கும் மக்கள் மத்தியில் எப்படி நடத்தப்பட்டிருக்கிறது என்பதை அலங்காரங்கள் இன்றி மிகச் சாதாரணமாக விவரிக்கிறது இக்கதை. இந்தியாவைப் போலவே மிகவும் பின்தங்கியிருந்த சீனத்தில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் தேர்தலின் நின்ற ஒரு பெண் வேட்பாளரின் அனுபவம் இது. இங்கே பெண்களுக்கான ஒதுக்கீடு மூலம் பஞ்சாயத்துத் தலைவியான பெண்கள் ‘அவர்’ மூலம்தான் ஆட்சி நடத்தமுடிகிறது- என்ற வெட்கக்கேடும் இந்தக் கதையைப் படிக்கும் போது நினைவுக்கு வரத்தான் செய்கிறது. __________________________________________ [தேர்தல்]இதுவே சீனத்தின் முதல் தேர்தல், நாடு முழுக்க தேர்தல். யாரைத் தேர்ந்தெடுப்பது? – அதற்காகத்தான் இன்றைய கிராமக் கூட்டம். ஒவ்வொரு பிராந்தியத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதிகள் எவ்வளவு என்று தீர்மானித்திருந்தார்கள். அவர்களைப் பிராந்தியத்திலிருந்து தேர்ந்தெடுத்து மக்கள் பேராயத்துக்கு (மக்கள் காங்கிரஸ்) அனுப்ப வேண்டும். சியாங் பிராந்தியத்திலிருந்து மூன்று பேர். ஏற்கனவே மூன்று வேட்பாளர்கள் நிற்கவைக்க முடிவு செய்யப்பட்டுவிட்டது. முதல் நபர், குவின் ஷீ ஜூ- இவர் கிராமத்தின் கம்யூனிஸ்டு கட்சிச் செயலாளராக கடந்த ஆறு வருசமாக இருந்து வருகிறார்; இரண்டாமவர், வாங் ஷூன்டே – பழைய பாரம்பரிய மருத்துவர், வட்டாரத்திலேயே மாதிரி மருத்துவ ஊழியர் என்று பெயரடுத்தவர்; மூன்றாமவர், குவின் ஜியா குய் – இளைஞர். இருபதே வயது. பரஸ்பர உதவிக்குழுவின் தலைவர். ஆனால் பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு வேட்பாளரை நிற்க வைக்க முடிவு செய்திருக்கிறார்கள் – வேறு யாருமல்ல; குவின் ஜியா குய்யின் மனைவி, ஜாங்குயா ஃபெங். யின் சியாங் ஜென் எழுந்து நின்று பேசினாள். எல்லோரையும் வசீகரிக்கும் இனிய, தெளிவான குரல். ”எதற்காக நான்காவது வேட்பாளர்? பரஸ்பர உதவிக் குழுவின் தலைவரான குவின் ஜியாகுய் அவரது மனைவியின் உதவி இல்லாமல் இவ்வளவு சாதனைகளைச் செய்திருக்க முடியுமா? இரண்டு வருடத்துக்கு முன்னால் முதன் முதலில் அதனை அமைத்தபோது எங்களுக்கு விவசாய வேலை ரொம்பவும் புதிது. ஒவ்வொரு வீடாகச் சென்று இப்படிப்பட்ட குழு கிராமத்துக்கே அவசியம் என்று எங்கள் பெற்றோரிடமும், மாமி – மாமனிடமும் எடுத்துச் சொல்லி விளங்க வைத்தது யார்?” ”எல்லா கஷ்டமான வேலைகளையும் முதலில் எடுத்துச் செய்து முன்மாதிரியாக நின்று எங்கள் முதுகு வலியைக் கூட மறக்கச் செய்தது யார்? எவ்வளவு வேலை செய்தோம், அதற்கு எவ்வளவு கூலி என்று அளக்க முனைந்தபோது, சம உழைப்புக்குச் சம கூலி என்று வாதாடியது யார்? அது ஆணா, பெண்ணா என்று பிரித்துப் பார்க்கக் கூடாது என்று உறுப்பினர் கூட்டத்திலேயே பிரச்சனையை வைத்தது யார்? நண்பர்களே, அவள் செய்கிற வேலைகளிலேயே மூழ்கி விடுகிறாள்; யாரிடமும் பீற்றிக் கொள்வதில்லை. ஆனால் அவள் ஓர் ஊழியர் என்பது மட்டுமே கிராமத்தாருக்குத் தெரியும். அவள் என்ன வேலைகளைச் செய்தாள் என்று யாருக்குமே முழுமையாகத் தெரியாது.” லி குய்ஹூவா என்ற இளம்பெண் அடுத்ததாகப் பேசுவதற்கு அனுமதி கேட்டாள். ”ஒரு மாதத்துக்கு முன்னால் வட்டார மாதிரி தொழிலாளர் மாநாட்டுக்குப் பார்வையாளராகச் சென்றேன். அங்கே குவின் ஜியா குய்யின் அறிக்கையைக் கேட்டேன். அவர் பேசும்போது ”கள வேலைகளுக்குச் செல்வதற்காகப் பெண்களை அழைத்து ஏற்க வைத்தேன்,” என்றார். குழுவின் எல்லாச் சாதனைக்கும் தானே பொறுப்பு என்று பேசினார். சியாங்கில் ஒருமுறை மாநாட்டில் ஒருமுறை, ஆக இரண்டு முறையும்அவர் பேசியபேச்சு பச்சையான சுயதம்பட்டம். இங்கு திரும்பிவந்த பிறகு பெண்கள் கழகத் தலைவரோடு இது பற்றிப் பேசினேன். அவர் மூலம் கிராமத் தலைவர்கள் குவின் ஜியா குய்யிடம் இதுபற்றி விமரிசித்ததாகக் கேள்விப்பட்டடேன்.” லி தொடரந்தாள்: ”அப்போது, தான் தவறு செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டார். ஆனால் வட்டாரக் கூட்டத்தில் மறுபடி தன்னைப் பற்றி மட்டுமே விளம்பரம் செய்து கொண்டார். இன்றைக்கு இதுபற்றி இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும். குயாஃபெங் என்ன உதவிகள் செய்தாள், அவள் பங்கு என்ன என்பது பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.” ஜியா குய்யை ஒருமுறை பார்த்துவிட்டு பின்னலைப் பின்புறம் ஒதுக்கிக் கொண்டே அமர்ந்தாள் லி. சட்டென கூட்டம் அமைதியானது. எல்லோருடைய கண்களும் ஜியா குய்யை மொய்த்தன. அவன் இதோ இப்போதுகூட எழுந்திருந்து தன் மனைவிக்கும் பங்குண்டு என்று சொல்லிவிட்டுத் தன் குறையாடுகளை ஒப்புக் கொண்டால் கூடப்போதும் என்பது போல அவர்கள் பார்த்தனர். அப்படியிருந்தால் வெற்றி அவன் பக்கம்தான். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. பதவிகளை அனுபவித்து அனுபவித்துப் பழகிவிட்டான் ஜியா. கிராமத்தார் தன்னை ஆதரிப்பார்கள்; கை தட்டி ஆதரித்துத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள் என்று அவன் எண்ணியிருந்தான். தேர்தலுக்காகவே புதிதாக நீலமேல் கோட்டு கூட அணிந்து வந்திருந்தான். இப்போது அவனுக்கு உடம்பெல்லாம் கசகசத்தது; ஓரக்கண்ணால் மனைவியைப் பார்த்தான் – தனக்கு ஆதரவாக ஏதாவது சொல்ல மாட்டாளா? ”சகோதர சகோதர்களே! ஜியா குய்யை காரணமில்லாமல் பழி சொல்லாதீர்கள்….. நான் முன்னேறியிருக்கிறேன் என்றால் அதற்கு அவரது உதவியே முழுக்க முழுக்கக் காரணம்,” – இப்படி ஏதாவது பேசமாட்டாளா? ஆனால் அவளோ வாயே திறக்கவில்லை; தலையைத் தொங்கப் போட்டிருந்தாள்; தலைமுடி அவள் கண்களைத் திரையிட்டிருந்தது. இதுபோல ஒரு கூட்டத்தில் அவள் எப்போதும் எழுந்து நின்று பேசியது கூட இல்லை. ”சகோதர சகோதரிகளே!” குயின் ஜியா குய் வெறுமனே முனகினான். வாய் உலர்ந்தது. குரல் தழுதழுத்தது. ”லி குய் ஹூவா இப்போது சொன்னது உண்மையல்ல….” லி உடனே எழுந்து அதை மறுத்தாள். ”நீங்கள் ஒரு நல்ல பரஸ்பர உதவிக்குழு தலைவர் என்பதை முழுக்க ஒப்புக் கொள்கிறேன்; நமது கிராமத்தில் உற்பத்தியை முன்னே தள்ளியதில் உங்களுக்குப் பங்கு உண்டு, நான் மறுக்கவில்லை. உங்களை ஒரு வேட்பாளராகக் கூட அங்கீகரிக்கிறேன். ஆனால் இன்றைய கூட்டம் மிக முக்கியமானது. குயாவ் ஃபெங்கின் நல்ல அம்சங்களை நான் சொல்லியே தீரவேண்டும். அப்படி என்றால் உங்களது குறைகளைச் சொல்லாமல் இருக்க முடியாது. நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.” அமைதி சூழ்ந்திருந்தது. பின் வரிசையில் அமர்ந்திருந்த ஒருசில முதியவர்கள் மட்டும் ரகசியக் குரலில் பேசிக் கொண்டனர். ”இதப்போய் இந்தப் பொட்டச்சிங்க பெரிசாக்கறாங்களே. ஜியா குய்யுக்கு இதனால எவ்வளவு பெரிய அவமானம்? எத வேணுமானாலும் இவளுக சொல்லட்டும். அவங்க ரெண்டுபேரும் புருசன் – பெண்சாதி தானே? யாரைத் தேர்ந்தெடுத்தாலும் ரெண்டும் ஒன்னுதானே?” அன்றைய தேர்தலுக்கான கூட்டத் தலைவர் குயாவ் ஃபெங்கின், வேட்பு முன் மொழிதலை ஓட்டுக்கு விட்டார். எல்லோரும் அந்த வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதற்காகக் கை உயர்த்தி ஆமோதித்தனர். தன் மனைவி பற்றி கிராமத்தார் இவ்வளவு ஒசத்தியாகப்  பேசிக்கொள்கிறார்களே என்று குயின் ஜியா குய் யோசித்தான். அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது; பிறகு கோபமும் கசப்புமாக மாறியது. அவனது குழுவிலிருந்த பெண்கள் மீது வெறுப்பு வந்தது. ”நீங்கள் சற்று முன்னேறியது உண்மையே. ஆனால் நீங்கள் முன்னேறுவதற்கே என் தலைமையல்லவா காரணம்? என் மீதே விமர்சனம் வைக்கிறீர்கள்? உங்களுக்கு நாகரீகம் தெரியவில்லையே.” –அவன் மனத்தில் இப்படி எண்ணங்கள் ஓடின. உடனே அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறி விட நினைத்தான். கட்சிச் செயலர் பேசுவதைக் கேட்க்க கூட குவினுக்கு மனமில்லை. வாங் ஹூன்டேவைப் பேசச் சொல்லி கிராமத்தார் சிலர் கோரினார்கள். தலைவர் குவினைக் கூப்பிட்டார். எதுவும் அவன் காதுகளில் விழவில்லை. இரண்டாம் முறை அவர் அழைத்த போதுதான் கிறக்கத்திலிருந்து வெளியே வந்தான் குவின். மேடைநோக்கி நடந்தான். இப்போதுகூட ஒன்றும் கெட்டுவிடவில்லை. எனது மனைவி குய்யா ஃபெங்கைத் தேர்ந்தெடுங்கள் என்று ஒருசொல் கேட்டால்போதும், அவனைப் பற்றி எல்லோருமே ஒரு உயர்வான கருத்துக்கு வந்து விடுவார்கள். எப்படியாவது தன் கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே அவன் நினைத்தான் – முஸ்தீபுடன் அவன் பேச்சு ஆரம்பித்தது. ”சகோதர, சகோதரிகளே, என்னுடைய பரஸ்பர உதவிக்குழுதான் இந்தக் கிராமத்திலேயே முதலில் துவக்கப்பட்டதாகும்….” மறுபடி பழைய கதை. இரண்டு வருஷம் முன்னால், போன வருஷம், இப்போதைய நிலை என்று அவன் வரிசையாக நீட்டி வளைத்துப் பேசினான். ”அடேய், எதுக்குடா பழைய கதை” என்று கிராமத்தார் பொறுமை இழந்தார்கள். ”உன்னோட வேலைகள் பற்றி உன் போதனையை அவிழ்க்காதே, எங்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது” என்றார் மற்றொருவர். ஒரு வழியாக குவின் முடித்துக் கொண்டான். கைதட்டல் பலமாக மழைபோல் கொட்டியது. அது அவனுக்காக அல்ல. அடுத்து பேச அழைக்கப்பட்ட குய்யா ஃபெங்குக்காக. குவின், மனைவியைப் பார்த்தான். அவள் தலை சட்டென்று நிமிர்ந்தது; அவளது தோள்கள் உயர்ந்தன; அவளது கன்னங்கள் ஒளி சிந்தின; பெரிய கறுப்புக் கண்கள் சுடர்விட்டன; எல்லோரையும் விட சற்று உயரமாகக் கூட தெரிந்தாள். அவன் சற்றும் எதிர்பாராத விதமாக அவள் தெளிவாக நிதானமாகப் பேசினாள். ”சகோதர, சகோதரிகளே! நாம் செய்துள்ள வேலைகளைத் திரும்பிப் பார்க்கும் போது எனக்கே கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. முதலாவதாக, இந்த வருச அறுவடையின் போது குழு உறுப்பினர்களை ஒன்று திரட்டி சிறுவர் பள்ளி ஒன்றைத் துவங்கிவிட வேண்டும் என்று நான் எண்ணியிருந்தேன்; அப்படித் துவங்கியிருந்தால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அங்கே விட்டுவிட்டு கள வேலைகளுக்குப் போக வசதியாக இருந்திருக்கும். அது திட்டம். ஆனால் அந்த நேரம் எனக்கு உடம்பு சுகமில்லை. நான் அந்த வேலையை முடிக்கவில்லை. பிரச்சினைகள் வரும்போது அவற்றை எதிர்த்துப் போராடி காரியத்தை சாதிக்கும் மன உறுதி என்னிடம் போதிய அளவு இல்லை. இது என்னுடைய தவறு. அடுத்ததாக, பரஸ்பர உதவிக் குழுவை நிறுவி மூன்றாண்டுகள் ஆகியும் இன்னமும் இது ஓர் கூட்டுறவுச் சங்கமாக வளரவில்லை. அதற்குத் தகுந்த முயற்சியை நான் மேற்கொள்ளவில்லை… நான் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இல்லையென்றாலும் இந்த இருவி ஷயங்களுக்காக நான் உழைக்கப் போகிறேன்.” கூட்டம் அவளது நேர்மையைப் பாராட்டியது; கைதட்டி அங்கீகரித்து ஆரவாரம் செய்தது. லி குய் ஹுவா ஓடிப்போய் அவளை அணைத்துக் கொண்டாள். ”நடந்ததை எண்ணிப் புலம்பாமல் வரப்போகிற காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று குய்யா ஃபெங் பார்க்கிறாள். இப்படித்தானே வேட்பாளர் இருக்க வேண்டும்?” அவள் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னாள். திடீரென குய்யாவின் மாமியார் எழுந்து நின்றாள். ”இதென்னய்யா கொடுமை! நம்மூருக்கு மூணு பிரதிநிதிகள்தான் அனுப்ப முடியும். நீங்க நாலு பேரை வேட்பாளரா நிப்பாட்றீங்க. கட்சி செயலாளருக்கு எல்லாரும் ஓட்டு போட்டுப்புடுவாங்க; டாக்டரய்யாவுக்கு யாராவது ஓட்டுப் போடாம இருப்பாங்களா, அவருக்கும் போட்டுப்புடுவாங்க. கடைசில எம்மவனுக்கும் மருமவளுக்கும்தான் போட்டியா?” என்று வெளிப்படையாக அரற்றத் தொடங்கினாள். மாமியார்க்காரியின் பிரச்சினை என்ன என்று எல்லோருக்குமே தெளிவாகத் தெரிந்தது. மருமகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மகன் நிலைகுலைந்து போவான். ஏற்கெனவே கூட்டத் தலைவர் கூட்டம் முடிந்ததை அறிவித்துவிட்டார். மாலையில் தேர்தல் நடக்கும். மாமியாரின் பிரச்சினையைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இது தேர்தல். பாரபட்சம் காட்ட முடியாது. யார் நல்லவர் என்றாலும் அவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் ஆண் என்ன, பெண் என்ன? மகனா, மருமகளா என்பதற்கெல்லாம் வேலை? **** குவின் ஜியா குய் நேரே வீடு சென்றான். ஒரு வார்த்தையும் சொல்லாமல் படுக்கையில் பொத்தென்று விழுந்தான். அவனது தாய்க்குச் சமையலில் உதவி செய்தவாறு குய்யா ஃபெங் கலகலவென்று பேசிக் கொண்டிருந்தாள். குவினுக்கு அது பொறுக்கவில்லை. “ஏ இங்கே வா” அவன் கத்தினான். அவள் உள்ளே வந்தாள். அவள் கைகளில் மாவு, முகத்தில் சிரிப்பு. ”கூட்டத்தில் என்னவெல்லாம் பேசினே? பெரிய இவன்னு நெனப்போ?” ”ஏன், அப்படி என்ன தப்பாப் பேசினேன்?” குய்யா அதிர்ச்சி அடைந்தாள். ”எதற்காக அப்படிப் பேசினாய்? நம் குழு மூன்று வருசத்தில் கூட்டுறவுச் சங்கமா வளரல்லேன்னு பேசினியே. எதற்காக அப்படிச் சொன்னே?” ”சே, நீ எப்படிப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சி போச்சு” குய்யா பொங்கிவிட்டான். அவள் நேர்மையானவள், சூதுவாது தெரியாதவள். குவின் அப்படிக் கேட்டது அவளுடைய ஆத்திரத்தைத் தூண்டிவிட்டது. அப்படியே தொடுத்துத் தொடுத்து சண்டை வளர்ந்தது. இரண்டு பேரும் சாப்பிடவில்லை. மாமியார்க்காரியும் திணறினாள். மருமகள் மீது தப்புச் சொல்ல முடியாது; மகனைத் திட்டவும் முடியாது. கையைப் பிசைந்தாள்; பெருமூச்சு விட்டாள்; முனகினாள். கொதிக்கும் மனதை யாரிடமாவது கொட்டி ஆற்ற வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது. அதன் விளைவு என்ன ஆகும் என்று அவள் யோசிக்கவில்லை. வெளியே சென்றாள். பெண்கள் கழகத் தலைவர் முதலில் அகப்பட்டார். ”தலைவரே, முதல்லேயே தலைப்பாடா அடிச்சுகிட்டேன். ரெண்டு பேரையும் நிக்க வெக்காதீங்கன்னு, கல்யாணம் கட்டினதுலேருந்து இப்படி அவுங்க அடிச்சுகிட்டு நின்னதில்லே. அவங்க ரெண்டு பேரும் சாப்பிடக்கூட இல்லே….” அடுத்து லி குய் ஹீவா, அதற்கடுத்து மருமகளை வேட்பாளராக முன்மொழிந்த ‘யின்’ என்ற பெண்…. எல்லோரிடமும் வீட்டில் நடந்த சண்டையை வரிவிடாமல் கொட்டித்தீர்த்தாள். ‘யின்’ பக்கத்து வீடுதான். சண்டையின் உச்சத்தில் அவன் கத்தியதெல்லாம் அவளுக்கும் காதில் விழுந்தது. கேட்டு உள்ளுக்குள்ளே கொதித்துக் கொண்டிருந்தாள். செய்தி கேள்விப்பட்டு அநேகமாக கிராமத்தில் பெண்களும் ஆண்களுமாய்ப் பலர் கூடிவிட்டனர். ”இவ்வளவு மோசமானவனா குவின்?” எல்லோர் மனதிலும் அந்தக் கேள்வி எழுந்தது. ***** மாலை நேரம் வந்தது, தேர்தல் நடந்தது. முடிவு எல்லோருக்குமே அதிர்ச்சி தந்தது. குவினுக்கு மூன்றே ஓட்டுக்கள. மற்ற எல்லோரும் குய்யா ஃபெங்குக்கு ஓட்டுப் போட்டிருந்தார்கள். குவினால் தாங்க முடியவில்லை. கூட்டம் முடிவதற்கு முன்னே அவன் கிளம்பிவிட்டான். அவன் தாய் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினாள் – அழுது புலம்பிக் கொண்டே. பெண்கள் கழகத் தலைவரும், அடுத்த வீட்டுக்காரியும் வந்து பார்த்தபோது அவன் படுக்கையில் படுத்துத் தலையணையால் முகத்தை மூடியிருந்தான். அவர்கள் சமாதானமாய்ப் பேசிப் பார்த்தார்கள். அவன் பதில் பேசவில்லை, கிராமத்திலிருந்தே தன்னைத் தள்ளிவைத்து விட்டதைப் போல அவன் நினைத்துக் கொண்டான். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ஏதும் கேட்காததால் அவன் அம்மாவும் படுத்துவிட்டாள். நீண்ட நேரம் அவளது முணுமுணுப்பு மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது. குய்யா ஃபெங் எல்லோரையும் திருப்பியனுப்பினாள்; தானே பேசுவதென்று முடிவு செய்தாள். குவினின் முகத்தை மூடியிருந்த தலையணையை அகற்றினாள். அவன் கண்களில் நீர் திரண்டு வழிந்தது. அவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். ”ச்சீ… உன் மேல எனக்கொண்ணும் கோபம் இல்ல. ஆனா நீ கொஞ்சம் யோசிச்சுப் பாக்கணும்” நெஞ்சை நீவிவிடுவது போல இதமாகச் சொன்னாள். ”ம்… யோசிச்சுப் பாக்கறேன்” சொல்லும்போதே அவன் குரல் அடைத்தது; கண்களில் நீர் திரண்டது. **** மூலம்: சீனச் சிறுகதைத் தொகுப்பு ”ஐம்பதாம் ஆண்டுகளின் சீனக் கதைகள்” (1984) ________________________________________ புதிய கலாச்சாரம், அக்டோபர் 1999. _________________________________________  34 ஒரு பொம்மையும் சில மனிதர்களும்! எட்டு மணி நேரம் என் உடலைத் தனக்குள் வைத்து சவைத்துக் கசக்கித் துப்பியது அதி விரைவுப் பேருந்து. மணி மூன்று முப்பது. சேலத்தின் அதிகாலை ஒரு சொர்க்கம். உடன் படித்த நண்பன் ஒருவனின் திருமணத்தை முன்னிட்டு தான் இந்த பயணம். அப்படியே வீட்டில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து பழைய நட்புகளைப் பார்த்துச் செல்வதாக திட்டம். நீண்ட நேர பயணத்தில் முதுகுத் தண்டு விறைத்துப் போயிருந்தது. இடமும் வலமுமாக உடலைச் சுழற்றினேன். ‘கட்டட்ர்ர்ராராக்க்க்’ என்று சப்தமாக நெட்டி முறிந்தது. ஆழமாக மூச்சை இழுத்துப் பிடித்து ‘ஷ்ஷ்ஷா’ என்கிற ஒலியோடு வெளியேற்றினேன்.  சூடான தேனீர் ஒன்று பாலைவனமாய் வரண்டு கிடந்த தொண்டைக் குழியை ஈரமாக்கியது. அடுத்த அரைமணி நேர ஆட்டோ குலுக்கல் எங்கள் வீட்டு முன் என்னை நிறுத்தியது. சேலம் பெங்களூரு சாலையில் இருக்கும் குரங்குச்சாவடியின் சந்து பொந்துகளில் புகுந்து புறப்பட்ட ஆட்டோவின் அதிரல்களில் தூக்கம் கலைந்து எழுந்த தெருநாய்கள் என்னைக் கொலைவெறியோடு பார்த்துக் கொண்டே,  ‘உடனே குரைக்கலாமா; இல்லை கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு குரைக்கலாமா’ என்று குழம்பிக் கொண்டிருந்த இடைவெளியில் ஆட்டோகாரரை அனுப்பிவிட்டு முன்புற கேட்டைத் திறந்து நுழைந்தேன். குரைப்புச் சத்தம் இப்போது கேட்டது. வீட்டு முகப்பில் இருந்த போகென்வில்லா மாரங்களில் பல வண்ணச் சரவிளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. முற்றத்தின் சிமென்டு தரையெங்கும் சாக்பீஸ் கிறுக்கல்கள். சின்னச் சின்னதாக வாத்துப் படங்கள். யார் இந்த வேலையைப் பார்த்தது என்று யோசித்துக் கொண்டே அழைப்பு மணியை அழுத்தினேன். அம்மாவை எதிர்பார்த்தேன். கதவைத் திறந்தது அக்கா. ‘ஓ.. சரி தான். வாத்துகள் ஜெனியின் வேலையாய் இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டேன். ஜெனி அக்காவின் மகள். இது கோடை விடுமுறை சமயம் என்பது அப்போது தான் உறைத்தது. அக்கா குழந்தைகளோடு வந்திருக்கிறாள். “வாடா” நான்கு மணிக்கே எழுந்து பளிச்சென்று தெரிந்தாள். அவளிடம் ஒரு பரபரப்பு தென்பட்டது. “டீ வேணுமா” என்றாள். “இல்ல.. வேணாம். பஸ்டான்ட்ல குடிச்சேன்.ஆமா என்ன விசேஷம்? ஒரே சீரியல் லைட்டா மின்னுது?” “ஓஹ்.. அதுவா. இன்னிக்கு ஜெஸியோட பர்த்டே பார்ட்டி” “என்னாது… ஜெஸிக்கு பிறந்த நாளா? ஏய்.. இது உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல?”  என்றேன் சிரிப்பை அடக்கிக் கொண்டே. “டேய் அடக்கி வாசிடா. ஜெனி காதில விழுந்திடப் போகுது.. என்றவாறே உள்ளறையை ஒரு முறை எட்டிப் பார்த்துக் கொண்டாள்” “ஓ.. இவ்ளோ சீக்கிரத்திலேயே ஆள் எழும்பியாச்சா?” பயணப் பையைத் திறந்து இனிப்புப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு உள் அறைக்குள் நுழைந்தேன். உள்ளே ஜெனி ஏஞ்சல் போன்ற ஒரு உடையை அணிந்திருந்தாள். என் அம்மா முன் கைகளைக் குவித்து நின்றிருந்தாள். பாடல் ஒன்றைப் பாடி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாள். ” திருக்கரத்தால் தாங்கியென்னை திருச்சித்தம் போல் நடத்திடுவீர் குயவன் கையில் களி மண்ணாய் அனுதினமும் நீர் வணைந்திடுவீர்” ஜெனியின் கீச்சுக் குரலில் அந்த மொக்கைப் பாடல் கூட அழகாய்த் தான் ஒலித்தது. “ஹேய் ஜெனீய்..” “ஹை.. மாமா.  இப்போ தான் வர்றீங்களா? மாமா இன்னிக்கு ஜெஸியோட பர்த் டே. நீங்க கண்டிப்பா கலந்துக்கணும். ஜெஸிக்கு என்ன கிப்ட் வாங்கித் தரப் போறீங்க?” “மாமாவுக்கு இன்னிக்கு வெளியே நிறைய வேலையிருக்கே ஜெனி” அவள் எனது பதிலை எதிர்பார்க்கவில்லை. கேள்வியை வீசி விட்டு பாட்டுப் பயிற்சியில் தீவிரமானாள். ஜெஸியின் மேல் ஜெனி ஒரு மாதிரி பைத்தியம் போல் தான் இருந்தாள். அது எனக்கு முன்பே தெரியும். ஆனால், அது இப்படி பிறந்த நாள் கொண்டாடும் அளவுக்குப் போகும் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அக்காவுக்கும் அத்தானுக்கும் ஜெனி என்றால் செல்லம்.  மண்ணில் கால் படக்கூட விட மாட்டார்கள். வேறு பிள்ளைகளோடு தெருவில் விளையாடுவது அவளுக்குத் தடுக்கப்பட்டிருந்தது. விலை உயர்ந்த பொம்மைகளும் வீடியோ கேம்ஸ்களுமே அவளது உலகமானது. எந்த பொருளாக இருந்தாலும் அது வேண்டும் என்று மனதுக்குள் நினைத்தாலே போதும்; அதை வாங்கித் தந்து விடுவார் ஜெனியின் அப்பா. சில சமயம் நான் ஊருக்குப் போகும் சமயங்களில் அவளை வெளியே அழைத்துச் செல்வதுண்டு. அப்போதெல்லாம் தெருவில் விளையாடும் சின்னப் பிள்ளைகளை ஆசையோடும் ஏக்கத்தோடும் பார்ப்பாள். ஒரு சமயம், அப்படி அவள் பார்த்த போது வண்டியை நிறுத்தி அவளையும் விளையாடி விட்டு வாயேன் என்று கேட்டுப் பார்த்தேன். “நோ அங்கிள்.. டர்ட்டி பீப்புள்ஸோட விளையாடினது தெரிஞ்சா டாடி கோச்சுப்பாரு” என்று மறுத்து விட்டாள். எப்போதும் தொழில் வளர்ச்சியைத் துரத்திக் கொண்டு ஓடும் அப்பா, காலையில் வேலைக்குச் சென்றால் மாலை சோர்ந்து போய்த் திரும்பும் அம்மா, அசுவாரசியமாய் கொட்டாவி விடும் வயதான ஆயா இவர்கள் தான் ஜெனியின் உலகத்து மனிதர்கள். தெருப் பிள்ளைகளை அழுக்கு மனிதர்கள் என்று அவளுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. தெருவில் விளையாடினால் ‘ஜெர்ம்ஸ் அட்டாக் பண்ணும்’ என்று கிளிப்பிள்ளை போல் அவள் ஒப்பிக்க பழக்கப்படுத்தப்பட்டிருந்தாள். அவளின் பள்ளிக் கூடத்தி லேசான முணுமுணுப்போ, சப்தமோ இல்லாமல் மயான அமைதியை நிலைநாட்டியிருந்தார்கள். பள்ளிக் கூடத்துக்கு உள்ளே சென்றதும் குழந்தைகள் ஊமைகளாகி விடுவார்கள். ஸ்விட்சு போட்டால் பேசும் ரோபோட்களைப் போல் கேள்வி கேட்கும் போது மட்டும் “யெஸ் மிஸ்” “நோ மிஸ்” சொல்லப் பழக்கியிருந்தார்கள். ஜெனியின் தனிமையை ஜெஸியால் மட்டும் தான் தீர்க்க முடிந்தது. இவளது சிறு வயது துணி மணிகளை ஜெஸிக்கு அணிவித்து அழகு பார்ப்பாள். விலை உயர்ந்த சென்ட் பாட்டில்களை ஜெஸியின் மேல் பீய்ச்சி அடிப்பாள். ஜெஸியோடு பேசிக் கொண்டிருப்பாள்; கதை சொல்வாள்; பாடிக் காட்டுவாள்; சில சமயம் ஆடிக் கூட காட்டுவாள். உறங்கும் போது எப்போதும் கைகளுக்குள் ஜெஸி இருக்க வேண்டும். ரவி அத்தான் இதையெல்லாம் பார்த்து ரசிப்பார். “பாத்தீங்களா தம்பி… ஜெனிக்கு எத்தனை அறிவுன்னு” “பாத்தீங்களா அவளுக்கு எத்தனை அன்புன்னு” என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்வார். நான் சாப்பிட்டு விட்டு வெளியே கிளம்பினேன். அண்ணனின் பைக் சாவியைப் பார்த்தேன்; ஆணியில் தொங்கும் – இப்போது தொங்கவில்லை. “டேய் எபின், இங்கே வாடா. உங்கப்பாவோட வண்டி சாவி எங்கேடா?” எபின் அண்ணன் மகன். பத்தாவது படிக்கிறான். அண்ணனுக்கு ஆத்தூரில் வேலை என்பதால் பஸ்ஸில் தான் போகிறான். அவன் தெரு முக்கைத் தாண்டியதும் பெரியவன் எபினும், பொடியன் ரோவனும் அண்ணனின் பைக்கை கள்ளத்தனமாக ரவுண்டு அடிக்க எடுத்துச் சென்று விடுவார்கள். ஊர் சுற்றக் கிளம்பும் முன் மீட்டர் வயரை பிடுங்கி விட்டு திரும்பக் கொண்டு வந்து நிறுத்தும் போது இருந்தது இருந்தபடி மாட்டி வைத்து விடுவதில் பயல் கில்லாடி. “சித்தப்பா.. டிவி மேல பாருங்க”. திரும்பிப் பார்க்காமல் சொன்னவன் டேபிள் மேல் தலையைக்  கவிழ்த்தியிருந்தான். எதையோ தீவிரமாக நோண்டிக் கொண்டிருந்தான். “காலங்காத்தாலே என்னத்தடா நோண்டிகிட்டு இருக்கே” அருகில் சென்றேன். சில அட்டைகள்.. கலர் கலராக ஸ்கெட்சு பேணாக்கள், ஜிகினா தூள்கள், பசை என்று மேசை முழுக்க இரைந்து கிடந்தது. “இன்னிக்கு சாயந்திரம் ஜெஸியோட பர்த்டே பார்ட்டி இருக்கில்லே… அதான், இன்விடேஷன் கார்ட் தயாரிக்கறேன்” “டேய்.. நீயுமாடா…” “நான் மட்டுமில்ல சித்தப்பூ… இன்னிக்கு பர்த்டேக்கு ஜெபம் பண்ணப் போறது உன்னோட மம்மி. பர்த்டே மெஸேஜ் தரப்போறது என்னோட மம்மி. பர்த்டே ஸ்பெஷல் பாட்டு ஜெனி பாடப் போறா.. சாய்ந்திரம் அப்பா வரும் போது ஸ்பெஷல் பர்த்டே கேக் வாங்கிட்டு வருவாங்க.. ரோவன் தான் வீட்டை டெக்கரேட் பண்ணப் போறான்” ரோவன் எபினின் தம்பி. ஆறாம் வகுப்புப் படிக்கிறான். “வெளங்கிடும்டா… ஆமா நீங்கெல்லாம் சேர்ந்து ஜெஸிக்கு பிறந்தநாள் கொண்டாடப் போறீங்களே இந்த விஷயம் அதுக்கு முதல்ல தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே கூடத்தில் அம்மா நுழைந்து கொண்டிருந்தாள், “இந்த ஒருநாள் கூத்துக்கு எவ்ளோமா செலவுமா பண்ணப் போறீங்க..?”  என்றேன். “அது.. உங்கத்தான் காசு குடுதிருக்காறாம்.. எப்படியும் ஒரு மூவாயிரம் ஆயிடும்” என்றாள். “நீ தான் பிறந்தநாள் ஜெபமா?” “ஆமாம்” பெருமிதமாய்ச் சொன்னாள். “சரியாப்போச்சு.. நாட்ல அவனவன் சோறு கிடைக்காம அல்லாடிட்டு இருக்கான் இங்கே ஒரு கோமாளிக் கூத்துக்கு மூவாயிரம் செலவு, பாட்டு, கூத்து, கேக்கு, ஜெபம். அந்தக் கர்த்தர் மட்டும் ஒருவேளை உண்மையாவே இருந்து இதெல்லாம் பார்த்தாருன்னு வைச்சுக்க.. டென்சன்ல தாடிய பிச்சிக்கிட்டு அலைவாரு” “டேய்..  உன் தலைல சாத்தான் இறங்கியிருக்கான். ஆண்டவரைப் பத்தி தப்பா பேசாதே” “கர்த்தரே எங்கவீட்டு பாவிகளுக்கு மனமிரங்கும்.. போதுமாம்மா? சரி நான் வர்றேன்” என்றவாறே கிளம்பினேன். பைக்கை உதைக்கும் போது தங்கம்மாள் உள்ளே வந்தார்கள். இடுப்பில் ஒரு குட்டிப் பைய்யன் ஒருவன் ஒட்டிக் கொண்டிருந்தான். தங்கம்மாவுக்கு பக்கத்து வீடு. அவர் தான் எங்களையெல்லாம் சின்ன வயதிலிருந்து தோளில் போட்டு வளர்த்தவர்கள். கலியாணம் முடிந்து ஆறாண்டுகளிலேயே கணவனை இழந்தவர். சத்துணவுக் கூடத்தில் ஆயாவாக வேலை பார்த்தே இரண்டு பிள்ளைகளையும் தனியாளாக நின்று ஆளாக்கினார். அம்மாவுக்கு சின்ன வயதிலேயே குறைந்த ரத்த அழுத்தம் இருந்தது. நான்கு படி ஏறுவதற்குள் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குவாள். எங்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லோரையும் பார்த்துக் கொண்டதாகட்டும், அக்கா பிரசவத்துக்கு வந்த போது கவனித்துக் கொண்டதாகட்டும் தங்கம்மா இல்லாவிட்டால் அம்மாவால் சமாளித்திருக்க முடியாது. இப்போதும் வயதான காலத்தில், அப்பா இறந்த பிறகு அம்மாவுக்குத் தங்கம்மா தான் பேச்சுத்துணை. “தம்பி மெட்ராஸ்லேர்ந்து எப்போ வந்தீங்க” தங்கம்மாவின் முகமெல்லாம் சிரிப்பு. தங்கம்மாவின் இடுப்பிலிருந்த பொடியன் என்னை அந்நியமாய்ப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். “காலைல வந்தம்மா.. இது யாரு பேரனா?” “ஆமா தம்பி. ரெண்டாவது பேரன். மதியம் சாப்பிட வருவீங்களா?” “இல்லம்மா.. இன்னிக்கு கலியாணச் சாப்பாடு. சாயந்திரமா வருவேன்” அந்தப் பைய்யன் கையில் மரத்தால் செய்யப்பட்ட ஒரு தஞ்சாவூர் தலையாட்டிச் செட்டியார் பொம்மை இருந்தது. அதை வாய்க்குள் முழுவதுமாகத் திணித்து விட முயன்று கொண்டிருந்தான். “டேய்… பேரு என்ன சொல்லு…” ஒரு மைக்ரோ செக்கண்ட் திரும்பி என்னைப் பார்த்தவன் மீண்டும் வெடுக்கென்று திரும்பிக் கொண்டான். “ரவி” தங்கம்மா தான் சொன்னார். “டேய் ரவி… மாமாவுக்கு டாடா சொல்லு பாக்கலாம்..” ம்ம்ஹும் அவன் திரும்புவதாயில்லை.  “சரிம்மா அப்புறம் பார்க்கலாம்” சொல்லி விட்டுக் கிளம்பினேன். மாலை தெரு முக்கில் வண்டியைத் திருப்பும் போதே வீட்டு முன் ஒரு பரபரப்பு தென்பட்டது. அம்மா, வேகமாக வெளியே வந்தவள் அதே வேகத்துடன் உள்ளே நுழைந்தாள். தங்கம்மா வேறு எதையோ தேடும் பாவனையில் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு நின்றார். வீட்டு முகப்பில் வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்தினேன். ஜெனி கண்கள் வீங்கி அமர்ந்திருந்தாள். அவள் முன்னே பிறந்த நாள் கேக் பெட்டி பிரித்து வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே அண்ணன் உட்கார்ந்திருந்தான். முகத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு உறைந்து போயிருந்தது. தங்கம்மாவின் பேரன் என்ன ஏதென்று புரியாமல் மலங்க மலங்க பார்த்துக் கொண்டு ஜெனிக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் அக்கா கையைப் பிசைந்து கொண்டு நின்றாள். எபினையும் ரோவனையும் காணோம். அங்கே ஒரு சங்கடமான அமைதி நிலவியது. “என்னாச்சுக்கா..” “ஜெஸிய காணோம்டா” சொல்லும் போதே கண்கள் அங்கும் இங்கும் அலைந்தது. ” சரி அதுக்கேன் இத்தனை ஆர்பாட்டம்?” என்றேன்… கொலைவெறியுடன் எல்லோரின் பார்வையும் என்னை நோக்கித் திரும்பியது. தங்கம்மாள் தான் காப்பாற்ற முன்வந்தார்கள்.. “சரி விடுங்க… கடைல போய் வேற பொம்மை வாங்கிட்டாப் போச்சு..” பொம்மை என்கிற வார்த்தை ஜெனிக்குள் ஒரு பிரளயத்தையே உண்டாக்கி இருக்க வேண்டும். “ங்ஙே…”  என்று அழுகையை ஆரம்பித்து விட்டாள். “தங்கம்.. நீ கொஞ்சம் சும்மா இருக்கியா…” அம்மா சீறினாள். நான் இடையில் புகுந்தேன். “அம்மா.. நீ முதல்ல சும்மா இரு… இதெல்லாம் என்ன கோமாளித்தனம்? ஒரு பொம்மைக்கு இந்தளவுக்கு சீராட்டு தேவையா? வேற வாங்கிட்டா போச்சு. அதென்ன கிடைக்காத சரக்கா என்ன?” என்றேன். “டேய் நீயும் பொம்மைன்னு சொல்லாதடா…. பாப்பா அதை அவளோட தங்கச்சின்னே நினைச்சிட்டு இருக்கா. நேத்திலேர்ந்து எத்தன ஆசையா எல்லா வேலையும் பார்த்தா தெரியுமா? பாரு வாங்கிட்டு வந்த கேக்கு பாவமா கிடக்கு. வீடெல்லாம் எப்படி அலங்காரம் பண்ணிருக்கு பாரு.. இவ்ளோ ஆசை வச்சிருக்கால்லே? பாவம்டா..” “இப்படியே கொஞ்சிக் கொஞ்சி செல்லக் கிறுக்கு ஆக்கி வச்சிருக்கீங்க அந்தப் பிள்ளய. ஜெனி நீ அழதாம்மா.. நாம் வேற பொம்மை வாங்கிக்கலாம்” “ஹாங்… இல்ல.. எனக்கு ஜெஸி தான் வேணும். யாரே ஜெஸிய திருடிட்டாங்க.. வேணும்னே திருடிட்டுப் போய்ட்டாங்க..எனக்கு ஜெஸி தான் வேணும்..” இப்படியாக ஜெனியின் விசும்பல்களின் ஊடாக காணாமல் போனது திருடப்பட்டதானது. “யாரும்மா திருடினது” அக்கா ஜெனியின் புலம்பலை முக்கியமாக எடுத்துக் கொண்டு விசாரித்தாள். “ரவி தான் ஜெஸியோட கடசியா வெளையாண்டான்” ஜெனி எந்த முக்கியத்துவமும் இல்லாமல் சாதாரணமாக சொல்லப் போய் இப்போது எல்லோரின் பார்வையும் ரவியின் மேல் திரும்பியது. தங்கம்மா சங்கடத்தில் கையைப் பிசைந்து கொண்டார். எல்லாரும் தன்னையே உருத்துப் பார்த்துக் கொண்டிருப்பது ஏன் என்பது தெரியாமல் ரவி விழித்தான். அவனுக்கு அது வேடிக்கையாய் இருந்திருக்க வேண்டும். கடகடவென சிரிக்க ஆரம்பித்தான். கையிலிருந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை சுழற்றி விட்டான். அது விருக் விருக்கென்று சுழல ஆரம்பித்தது. இன்னும் சப்தமாகச் சிரித்தான். அம்மா மெல்ல அவனைக் கையிலெடுத்துக் கொண்டாள். “டேய் ரவிக் குட்டி.. பொம்மைய எங்கடா வச்சிருக்கே..” ரவி அம்மாவின் தலையிலிருந்து தனியே தொங்கிக் கொண்டிருந்த வெள்ளை முடிக் கற்றையை ஆர்வமாகப் பற்றிக் கொண்டான். “அவங்கிட்டே தான் வேற பொம்மை இருக்கே அக்கா” தங்கம்மாள் வாயெடுக்கவும்.. “அதில்ல தங்கம்.. தெரியாம எங்காவது எடுத்துப் போட்ருப்பானோ?” ரவியின் கையிலிருந்து முடியை விடுவித்துக் கொண்டாள் “இல்ல இவன் தான் எடுத்தான் எனக்குத் தெரியும்..” ஜெனியின் குரலில் இப்போது திட்டவட்டமான குற்றச்சாட்டு இருந்தது. தொடர்ந்து அழுததில் முகம் சிவந்து விட்டது. வார்த்தைகள் கேவல்களாக திக்கித் திக்கி வெளியானது. அக்கா பொறுமையிழந்தாள்.. “டேய்… பொம்மைய எங்கடா வச்சிருக்கே” அக்காவின் குரல் உயர்ந்தது. அம்மாவின் கையிலிருந்து ரவியை வாங்கிக் கொண்டாள். “ஙே.. ஞ்ஞூ..” குழரலாக ஏதோ சொன்னான். பேசக் கூடத் தெரியாதவனிடம் நோண்டி நோண்டிக் கேட்டுக் கொண்டிருந்தது கொஞ்சம் அதிகப்படியாய்த் தெரிந்தது. “அக்கா.. அவனுக்கென்னக்கா தெரியும் சின்னப்பையன். அவனை எதுக்கு மிரட்டிகிட்டிருக்கே?” “நீ சும்மா இருடா.. இப்பல்லாம் சின்ன வயசுலயே எல்லாத்துக்கு ரொம்ப வெவரம் வந்திடுதாக்கும். நம்ம வூட்டு கழுதைங்க தான் வெளுத்ததெல்லாம் பாலுன்னு தங்கிட்ட இருக்கற அத்தினி பொருளையும் எடுத்து தானம் பண்ணுதுங்க” அக்கா வேறெங்கோ பார்த்துக் கொண்டே சொன்னாள். தங்கம்மாவின் முகம் இருண்டது. “சரிம்மா.. ரவியே திருடிட்டான்னு வச்சிக்கோ.. நாங்க வேணும்னா காசு கொடுத்துடறோம். வேற வாங்கிக்கிடுங்க. குழந்தைய குடு முதல்ல” தங்கம்மா முகத்தில் உயிரே இல்லை. தானே எடுத்து வளர்த்த பிள்ளை தன் சொந்த பேரணுக்குத் திருட்டுப் பட்டம் கட்டியதை தங்கம்மாவால் தாங்க முடியவில்லை. கண்களில் இருந்து எந்த நேரமும் வழிந்து செல்ல கண்ணீர் காத்துக் கொண்டிருந்தது. அக்கா விடுவதாக இல்லை. “டேய், சொல்லுடா எங்கே வச்சிருக்கே?” “ஙீய்ய்ய்ய்…” ரவி வித்தியாசமாக ஒலியெழுப்பிக் கொண்டே அழ ஆரம்பித்தான். தங்கம்மாவின் கண்களில் இத்தனை நேரமாகக் காத்து நின்ற கண்ணீர் கீழே இறங்கியது. “அக்கா.. கொஞ்சமாவது மனசாட்சியோட நடந்துக்கோ. ஒன்னரை வயசுக் குழந்தைக்கு என்னக்கா தெரியும். எது யாரோட பொருள்னு கூடத் தெரியாது. வலிச்சா கூட சொல்லத் தெரியாது. அவன் கிட்ட போய் அரட்டிகிட்டு இருக்கியே.. போயும் போயும் ஒரு பொம்மைக்காகவா இந்த ஆர்பாட்டம்? முதல்ல அவனை இங்க குடு” ரவியை அக்காவிடம் இருந்து விடுவித்து தங்கம்மாவிடம் கொடுத்தேன். [சிறுகதை : ஒரு பொம்மையும் சில மனிதர்களும் !]“டேய் உனக்கு என்னடா தெரியும்? ஜெனி அதை பொம்மையாவே நினைக்கலை தெரியுமா? தன்னோட தங்கச்சின்னு மனசுல நினைச்சிக்கிட்டு இருக்கா? ஜெனி அழுதது மட்டும் உங்க அத்தானுக்குத் தெரிஞ்சா என்னாகும் தெரியுமில்ல? இப்ப ஜெனியை நீயா சமாதானப்படுத்த போறே? அவ அப்பாவை நீயா சமாளிக்கப் போறே? வீட்டுக்குள்ளே யாரையெல்லாம் விடறதுன்னு உங்களுக்குத் தெரியாதான்னு கேப்பாங்க. நீயே அவர்ட்ட பதில் சொல்லிக்க” அக்கா சாடைமாடையாக தங்கம்மாவைக் குறிப்பிட்டது சரியான இலக்கைத் தாக்கியது. தங்கம்மா ஏதும் பேசாமல் வெளியே போகத் திரும்பினார். உணர்ச்சிகளற்ற முகத்தில் என்ன சிந்தனை ஓடியது என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எங்களையெல்லாம் அம்மா பெற்றிருந்தாலும் வளர்ப்பைப் பொறுத்தவரை தங்கம்மா தான் அம்மாவின் ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொண்டது. ஜெனி சிசேரியன் செய்து தான் பிறந்தாள். அக்காவால் ஒரு மாதம் வரையில் அசையக்கூட முடியாமல் படுத்த படுக்கையாய் இருந்தாள். அந்த நேரத்தில் அவளுக்குப் பீ மூத்திரம் வரை வழித்து சேவை செய்தது தங்கம்மா தான். வேற்று வீட்டுப் பிள்ளைகளாக எங்களை அவர் எப்போதும் கருதியதில்லை. தனது மகளே இப்படிச் சொல்லி விட்டாளே என்று தங்கம்மா திகைத்துப் போயிருந்தார். அம்மா நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டே நின்றாள்; தள்ளாடித் தள்ளாடி நடந்து போய் கூடத்தின் ஒரு மூலையில் மாட்டப்பட்டிருந்த இயேசு படத்தின் முன் மண்டியிட்டாள். “யேசப்பா… எப்படியாவது ஜெஸிய எங்க கிட்ட குடுத்திரும் அப்பா… இசுரவேலின் தேவனே….” அவளது ஜெபம் தொடர்ந்தது. எனது பொறுமை மொத்தமாகக் கரைந்தது. “அடச்சீ… எழும்பி வா இங்க. மனுசங்களுக்கு இல்லாத மரியாதைய ஒரு உயிரில்லாத ஜடத்துக்கு தாரீயே? கேவலம் ஒரு பொம்மைக்குப் போய் ஜெபம் பண்றியே இத்தனை நாள் நம்ம குடும்பத்துல ஒருத்தரா இருந்த தங்கம்மாவை அக்கா இப்படி கேவலப்படுத்திட்டு இருக்கா அதைப் பத்தி ஒரு வார்த்தை கூட கேட்கணும்னு தெரியலையா?” இத்தனை நேரமாகப் பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அண்ணன் முதல் முறையாகக் குறுக்கிட்டான் “ஏம்மா.. இந்த கோமாளித்தனத்துக்கெல்லாம் ஒரு முடிவு வேணாமா? அது இன்னிக்குன்னு இருக்கட்டுமே? ஜெனியும் வளர்ந்த பிள்ளையாகிட்டாளே.. இனியும் இப்படி பொம்மைகளே உலகம்னு எத்தனை நாளுக்குத் தான் இருந்துடப் போறா? இத்தனை நாளா மனுஷங்களோட உலகம்னா என்னான்னு காட்டாமே வச்சிருந்தது தப்பு தானே? இனியும் அது அப்படியே இருக்கணுமா? பொம்மை அன்பையும் பொம்மைப் பாசத்தையும் தாண்டி அவளுக்கு உண்மையா மனுசங்களோட உணர்ச்சிகளைப் புரியவைக்க வேணாமா? அழுதா அழட்டும். கொஞ்சம் நேரம் அழுத பின்னே சரியாய்டுவா. இப்படி அவ கொஞ்சம் சிணுங்கின உடனே எல்லாரும் பதறியடிச்சு நிக்கறது தான் அவளுக்கு ரொம்ப தொக்கா போச்சு. கொஞ்ச நேரம் அப்படியே விடுங்க. தானே சரியாய்டும்” அண்ணன் சொல்லி முடிக்கவும், தங்கம்மாள் வெளியே செல்லத் திரும்பவும் எபின் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. எபினைப் பார்த்ததும் அங்கே ஒரு நிமிடம் எல்லோருக்கும் தூக்கி வாரிப் போட்டது. அதற்கு அவன் காரணமல்ல. அவன் கையிலிருந்த பொம்மை தான் காரணம். அது ஜெஸி. “எங்கேடா போயிருந்தே?” அண்ணன் தான் சமாளித்துக் கொண்டு கேட்டான். “அது வந்து.. ஜெஸியோட கம்மல் பழசாயிடிச்சின்னு ஜெனி நேத்திக்கே சொல்லிச்சா.. அதான் சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு அவளுக்குத் தெரியாம எடுத்துப் போய் வேற புது ஸ்டட் வாங்கிப் போட்டுக் கொண்டாறேன். ஆமா.. ஏன் எல்லாரும் இப்படி நிக்கறீங்க?” ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை. தங்கம்மாள் ஒரு முறை எல்லோரின் முகத்தையும் வெறித்துப் பார்த்தார். முப்பது வருட நட்பு மெல்ல நடந்து  வெளியேறியது. பொம்மை கிடைத்து விட்டது. ஒரு அற்புதமான மனுஷியை அன்றோடு இழந்து விட்டோம். தங்கம்மாவின் முகத்தில் ஓடிய உணர்ச்சிகள் ஒரு கருக்கறிவாளாய் இதயத்தை அறுத்தது. இந்த குடும்பத்திற்காக இத்தனை வருடங்களில் எத்தனையெத்தனை உதவிகள் செய்திருப்பார். அதெல்லாம் ஒரு கணத்தில் என் நினைவுகளில் கடந்து சென்றது. அக்கா, ஜெஸியைக் கையில் பிடித்திருந்தாள். ஜெனியின் முகத்தில் ஒரு சந்தோஷம் பரவியிருந்தது. அக்காவின் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. அண்ணன், நம்பிக்கையில்லாத ஒரு முக பாவனையைக் காட்டி விட்டு தன் அறைக்குத் திரும்பி நடந்தான். அம்மா மீண்டும் தள்ளாடித் தள்ளாடிச் சென்று இயேசு படத்தின் முன் மண்டியிட்டாள். நன்றி சொன்னாளா மன்னிப்புக் கேட்டாளா என்று தெரியவில்லை. ஆனால், அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து சென்றதை மட்டும் பார்க்க முடிந்தது. ________________________________________________ - கார்க்கி, புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011 ______________________________________________________   35 எழுத்தரின் மரணம்! – ஆன்டன் செகாவ்  ”எங்கெல்லாம் அற்பத்தனங்கள் இருக்கிறதோ அவற்றை ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தினார் ஆன்டன் செகாவ்” என்றார் மாக்சிம் கார்க்கி. தீடீரென வந்த ஒரு தும்மலுக்காக அல்லும் பகலும் புலம்பித் தீர்த்து, தன்னைத்தானே சித்திரவதை செய்து மாண்டு போன ஒரு அற்பவாதியைப் பற்றிய கதை இது. யோசித்துப் பார்த்தால் அது போன்ற தும்மல் பிரச்சினைகள் நம்மிடம் இல்லையா என்ன? அது என்ன தும்மல் பிரச்சினை? கதையைப் படியுங்கள்……….. _____________________________________________________________________________ அருமையான ஓர் இரவில் அருமையான எழுத்தர் இவான் திமீத்ரிவிச் செர்வியாக்கவ்* நாடகக் கூடத்தில் இரண்டாவது வரிசையில் அமர்ந்து, காட்சிக் கண்ணாடியின் துணை கொண்டு Les Cloches de Corneville நாடகம் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். கண்ணும் கருத்துமாய் நாடக மேடையைக் கவனித்த அவர், தம்மையொத்த ஒரு பாக்கியசாலி உலகில் யாரும் இருக்க முடியாதென நினைத்தார். அப்பொழுது திடுமென….”திடுமென ” _எதற்கெடுத்தாலும் உபயோகிக்கப்பட்டு சலிப்பூட்டும் தொடராகி விட்டது இது; ஆயினும் வாழ்க்கையானது எதிர்பாராத திடீர் நிகழ்ச்சிகள் நிறைந்ததாய் இருப்பதால் எழுத்தாளர்கள் இந்தத் தொடரை உபயோகிக்காமல் என்ன செய்வார்கள்? ஆகவே, அப்பொழுது திடுமென அவருடைய முகம் சுருங்கிக் கோணிற்று, விழிகள் உருண்டு விண்ணோக்கி உயர்ந்தன, மூச்சு தடைப்பட்டு நின்றது…. காட்சிக் கண்ணாடியிலிருந்து முகத்தைத் திருப்பி உடலை மடக்கி ஆசனத்தில் கவிழ்ந்தார். அதற்குள்_உ-ஊச்சு! அதாவது ஒரு தும்மல் தும்மினார். எவரும் எங்கு வேண்டுமானாலும் தும்மலாம், யாருக்கும் இந்த உரிமை உண்டு. விவசாயிகள், போலிஸ் இன்ஸ்பெக்டர்கள், ஏன் அரசு ஆலோசகர்களுங்  கூட தும்முகிறார்கள். எல்லோரும் தும்மவே செய்கிறார்கள் – யாரும் விதிவிலக்கில்லை. செர்வியாக்கவ் பதைத்துப் போகவில்லை, கைக்குட்டையை எடுத்து மூக்கைத் துடைத்துக் கொண்டார் . பிறகு தமது தும்மலால் யாருக்கும் தொந்தரவு எற்பட்டிருக்குமோ என்று, நற்குணச் சீலருக்கு ஏற்ற முறையில் சுற்றிலும் திரும்பிப் பார்த்தார். உடனே பதைபதைத்துப் போனார். ஏனெனில் அவருக்கு நேர் முன்னால் முதல் வரிசையில் உருவத்தில் சிறியவராய் உட்கார்ந்திருந்த ஒரு கிழவர் முணுமுணுத்தபடி வழுக்கைத் தலையையும் கழுத்தையும் கவனமாய்க் கையுறையால் துடைத்துக் கொள்வது அவர் கண்ணில் பட்டது. அந்தக் கிழவர் யாரென்று செர்வியாக்கவ் தெரிந்து கொண்டுவிட்டார் – அவர் போக்குவரத்து அமைச்சகத்தின் நிர்வாகியான ஜெனரல்** பிரிழாலவ். ”இவர் மீது அல்லவா தும்மிவிட்டேன்!” என்று செர்வியாக்கவ் தம்முள் கூறிக் கொண்டார். ”இவர் எனது அலுவலகத்தின் அதிபரல்ல, என்றாலும் அசம்பாவிதச் செயலாயிற்றே! மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று முடிவு செய்தார். மெல்ல இருமியபடி முன்னால் சாய்ந்து ஜெனரலின் காதுக்குள் சொன்னார். ”மேதகையீர், பொறுத்தருள வேண்டும், தும்மிவிட்டேன்…. மனமறிந்து செய்ததல்ல….” ”சரி பரவாயில்லை.” ”மன்னிக்க வேண்டும். நான்….. வேண்டுமென்று நினைத்துச் செய்த காரியமல்ல!” ”போதும் ஐயா! நான் நாடகம் பார்க்கணும், சும்மா இரும்!” செர்வியாக்கவ் சற்றுப் பதற்றத்துடன் அசட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு, நாடக மேடையில் கவனம் செலுத்த முயன்றார். நடிகர்களை உற்று நோக்கினார், ஆனால் முன்பு போல் இப்பொழுது அவர் தம்மையொத்த ஒரு பாக்கியசாலி உலகில் யாரும் இருக்க முடியாதென நினைக்கவில்லை. தவறிழைத்து விட்டோமே என்ற மன உறுத்தல் அவரை அரித்துத் தின்றது. இடைவேளையின் போது பிரிழாலவின் அருகே நடந்து சிறிது நேரம் தயங்கி நின்றபின் மனதை ஒருவாறு தைரியப்படுத்திக் கொண்டு, பாதி வார்த்தையை விழுங்கியவாறு கரகரக்கும் குரலில் சொன்னார்; ”மேதகையீர், தங்கள் மீது தும்மினேன்…. மன்னிக்க வேண்டும்… தவறாய் நினைக்கலாகாது… வேண்டுமென்று செய்ததல்ல….” ”என்ன இது…. அப்போதே மறந்துவிட்டேன், இன்னுமா அதைப் பற்றி பேசணும்?” என்று, பொறுமை இழந்து அடி உதடு துடிக்கக் கூறினார் ஜெனரல். “மறந்து விட்டதாய்ச் சொல்கிறார், ஆனால் அவர் கண்கள் ஒளிர்வதைப் பார்த்தால் நன்றாய் இல்லையே என்று எண்ணிய செர்வியாக்கவ் நம்பிக்கை இல்லாதவராய் ஓரக் கண்களால் ஜெனரலை நோட்டமிட்டார். என்னுடன் பேச அவருக்கு விருப்பமில்லை. விளக்கமாய் அவரிடம் சொல்ல வேண்டும் . தும்ம வேண்டுமென நினைத்துச் செய்ததல்ல…. இயற்கை விதி என்று விளக்க வேண்டும், இல்லையேல் அவர் மீது எச்சில் துப்ப வேண்டுமென்று நான் இதைச் செய்ததாய் நினைத்துக் கொள்வார். இப்பொழுது நினைக்காவிட்டாலும் பிற்பாடு அவர் நினைக்கக்கூடும்!….” வீட்டுக்குத் திரும்பியதும் செர்வியாக்கவ் தமது கண்ணியக் குறைவான நடத்தை குறித்துத் தம் மனைவியிடம் சொன்னார். ஆனால் மனைவி இதைப் பெரிதாய் நினைக்காமல் அலட்சியப்படுத்தியதாய் அவருக்குத் தோன்றிற்று. கணப் பொழுது கலங்கவே செய்தாள் என்றாலும், பிரிழாலவ் ”நமது” அதிபரல்ல என்பது தெரிந்ததும் அவள் தைரியமடைந்துவிட்டாள். ”எதற்கும் நீ போய் அவரிடம் மன்னிப்பு கேட்பது நல்லதெனநினைக்கிறேன்” என்றாள். ”இல்லையேல் நாலு பேருக்கு முன்னால் பாங்காய் நடந்து கொள்ளத் தெரியாத ஆளாய் உன்னை அவர் நினைத்துக்  கொள்வார்.” ”ஆம், அப்படித்தான் நினைத்துக் கொள்வார்! மன்னிப்பு கேட்பதற்கு எவ்வளவோ முயன்று பார்த்தேன், ஆனால் அவர் ஒரு விபரீத மனிதர், நல்லபடியாய் ஒரு வார்த்தை சொல்லவில்லை. தவிரவும் பேசுவதற்கு அவகாசம் கிடைக்கவில்லை.” மறு நாளன்று செர்வியாக்கவ் தமது பணித்துறைக்குரிய புதிய நெடுங் கோட்டு அணிந்து, முடியையும் வெட்டிக் கொண்டு, தமது நடத்தை குறித்து விளக்கம் அளிப்பதற்காக பிரிழாலவிடம் சென்றார். ஜெனரலின் வரவேற்பறையில் நிறைய விண்ணப்பதாரர்கள் கூடியிருந்தனர். ஜெனரலும் அங்கு வீற்றிருந்து விண்ணப்பங்களை வாங்கிப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். கூடியிருந்தோரில் சிலருடன் பேசி முடித்தபின் ஜெனரல் தமது பார்வையை உயர்த்திச் செர்வியாக்கவின் முகத்தில் பதிய வைத்தார். ”மேதகையீர். நேற்று இரவு உங்களுக்கு நினைவில் இருக்கும், அர்காதியா நாடக மன்றத்தில்….”என்று ஆரம்பித்து, ”நான் உம் – தும்மினேன், அதனால் உம் – தங்களுக்கு … மிக்க வருந்துகிறேன்….” என்று இழுத்தார். ”அடே, அபத்தம்! அபத்தம்!” என்றார் ஜெனரல். பிறகு அடுத்தவரைப் பார்த்து ”உங்களுக்கு நான் செய்யக் கூடியது என்ன?”என்று விசாரித்தார். செர்வியாக்கவுக்கு முகம் வெளிறி விட்டது. ”காது கொடுத்துக் கேட்க மாட்டேன்கிறாரே!” என்று தன்னுள் கூறிக் கொண்டார். ”அப்படியானால் கோபப்படுகிறார் என்றுதானே அர்த்தம்…. இதை இந்த நிலையில் விட்டுவிட்டு நான் போகக் கூடாது…. விளக்கமாய் அவரிடம் சொல்லியாக வேண்டும்……..” கடைசி விண்ணப்பதாரருடனும் பேசி முடித்த பின் ஜெனரல் தமது தனி அறைக்குப் போவதற்காகத் திரும்பியபோது செர்வியாக்கவ் அவர் பின்னால் ஓடி முணுமுணுக்கும் குரலில் சொன்னார்; ”மேதகையீர், மன்னிக்கணும்! என் தவறுக்காக உள்ளம் குமைகிறேன், இல்லையேல் எனக்கு இந்தத் துணிவு வந்திருக்காது, மேதகையீரைத் தொல்லை செய்ய நினைத்திருக்க மாட்டேன்…” ஜெனரல் வாய்விட்டு அழப்போகிறவர் மாதிரி தோன்றினார், விலகிப் போய்விடும்படி கையை வீசிக் காட்டினார். ”என்னைக் கேலி செய்யாதீர்!” என்று சொல்லி செர்வியாக்கவினுடைய முகத்தின் எதிரே கதவைத் தள்ளி மூடினார். ”கேலி செய்கிறேனா!” என்று தம்முள் முனகிக் கொண்டார் செர்வியாக்கவ். ”இதில் வேடிக்கை எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லையே எனக்கு ஜெனரலாய் இருக்கிறார், இது புரியவில்லையா, என்ன? சரி, இனி நான் இந்த அரிய மனிதரிடம் வந்து மன்னிப்பு கேட்டுத் தொந்தரவு செய்யப் போவதில்லை. நாசமாய்ப் போக! இவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி விடுகிறேன், இனி ஒரு போதும் இவரிடம் வர மாட்டேன்! மாட்டவே மாட்டேன்!” வீட்டுக்குத் திரும்பி நடந்த போது செர்வியாக்கவின் மனத்துள் ஓடிய சிந்தனைகள் இவை. ஆனால் அவர் இந்தக் கடிதத்தை எழுதி அனுப்பவில்லை. எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவரால் அதன் வாசகத்தைத் தீர்மானிக்க முடியவில்லை. ஆகவே, யாவற்றையும் சரிசெய்யும் பொருட்டு அடுத்த நாள் அவர் மீண்டும் ஜெனரலிடம் போக வேண்டியதாயிற்று. “மேதகையீர், நேற்று நான் தங்களிடம் வந்திருந்தேன்,” ஜெனரலுடைய வினவும் பார்வை தம்மீது திரும்பியதும் இவ்விதம் அவர் தமது விளக்கத்தை ஆரம்பித்தார். ”மேதகையீர் நினைத்த மாதிரி நான் தங்களைக் கேலி செய்வதற்காக வரவில்லை. எனது தும்மலால் தங்களுக்கு ஏற்பட்ட தொந்தரவுக்காக மன்னிப்பு கேட்பதற்காகவே வந்திருந்தேன்…. தங்களைக் கேலி செய்யலாமெனக் கனவிலும் நான் கருதக் கூடியவனல்ல. அம்மாதிரியான ஒரு துணிச்சல் எந்நாளும் வராது எனக்கு. பெரியவர்களைக் கேலி செய்யலாமென்ற எண்ணத்துக்கு நாங்கள் இடந்தருவோமாயின், பிறகு மரியாதையே  இல்லாமற் போய்விடும்…. மேலிடத்தில் இருப்போருக்குக் காட்ட வேண்டிய மரியாதை இல்லாதொழிந்துவிடும்….” ”போ வெளியே!” நிற்காதே, போ!” என்று செக்கச் சிவந்து போய் ஆத்திரம் தாங்காமல் ஆடியவாறு சீறினார் ஜெனரல். ”புரியலிங்க, என்ன சொல்லறீங்க?” குலைநடுங்கிப் போன செர்வியாக்கவ் மெல்லிய  குரலில் கேட்டார். ”போ வெளியே!” என்று காலால் தரையைத்  தட்டி மீண்டுமொரு தரம் ஜெனரல் சீறினார். செர்வியாக்கவுக்குத் தம்முள் ஏதோ இற்றுப் போனது மாதிரி இருந்தது. காதால் கேட்கவோ, கண்ணால் பார்க்கவோ சக்தியற்றவராய்ப் பின் பக்கமாய் நகர்ந்து கதவை அடைந்தார், பிறகு தெருவிலே இறங்கி மெல்ல நடந்தார். உணர்விழந்த நிலையில் தட்டுத் தடுமாறியபடி வீட்டுக்குத் திரும்பி, தமது பணித்துறை நெடுங்கோட்டுடன் அப்படியே சோபாவில் படுத்து மாண்டு போனார். _____________________________________________________ விளக்கக் குறிப்புக்கள்: *புழுவைக் குறிக்கும் செர்வியாக் என்னும் ருஷ்யச் சொல்லிலிருந்து புனையப்பட்டிருக்கும் பெயர். **ஜார் கால ருஷ்யாவில் சிவில் துறை அதிகாரிகளின் உயர் பிரிவுகளைச் சேர்ந்த தனி ஆலோசகர், அரசு உயர்நிலை ஆலோசகர், அரசு ஆலோசகர் ஆகிய பதவிகள் வகித்தோர் ஜெனரல் என்னும் பட்டத்துக்கு உரியோராய் இருந்தனர். – புதிய கலாச்சாரம், ஜனவரி – 1989 ____________________________________________ 36 வேசி… அறம்… அனுபவம்..! அப்போது நான் கோவையில் சர்வீஸ் என்ஜினியராகக் குப்பை கொட்டிக் கொண்டிருந்த காலம். சாயங்காலம் எல்லா கால்சும் முடித்து விட்டு, இரவு பத்து மணிக்குத்தான் வீட்டுக்கு கிளம்புவேன். அப்படியே பைக்க ஓட்டீட்டு காந்திபுரம் போய், ஒரு பாதாம் பால் அடிக்கிறது வழக்கமாகி விட்டது. அது ஒரு தகரப் பெட்டிக்கடை. வெளியில் நின்றுதான் பாதாம் பால் குடிக்க வேண்டும். முதல் நாளே அவளைக் கவனித்தேன். கடையை விடத் தள்ளி கொஞ்சம் உள்ளடங்கி இருக்கும் வெளிச்சம் குறைந்த பகுதியில் நின்றிருந்தாள். அந்த சூழ்நிலைக்கு கொஞ்சம்கூட பொருந்தாமல் தெரிந்தாள். நடுத்தர வயதிலும் பலமான மேக்கப். வழக்கு மொழியில் சொன்னால் செமகட்டை. நான் பார்ப்பது தெரிந்ததும் என்னைப் பார்த்து சிரித்தாள். எனது ஆறாவது அறிவுக்கு உடனடியாகப் புரிந்தது. “”டே ராசப்பா!….. எஸ்கேஏஏஏப்..” அவசரமாக பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு பைக்கை உதைத்தேன். அன்று இரவு என் கனவில் மேக்கப் சுந்தரி சிரித்து விட்டுச் சென்றாள். மறுநாள் மாலை ஆக ஆக ஒரு வேலையும் சரியாக ஓடவே இல்லை. ஒரே பரபரப்பாக இருந்தது. பாதாம் பால் வேறு நல்ல சுவையாக இருந்து தொலைத்தது. “”என்னடா! பத்து நாள் கக்கூஸூ போகாதவன் மாறி மூஞ்சிய வச்சுட்டு திரியுற?” நண்பன் வேறு நக்கலடித்தான். எனது குறுகுறுப்பு அதிகரித்தது. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் “”டே ராசப்பா! இது உனக்கு ஒரு சவால்டா. உன்னோட ஒழுக்கத்தோட பலம் இவ்வளவுதானா? இன்னிக்கு பால் சாப்பிட போற, ஆனா திரும்ப அதை பாக்க மாட்ட…ஓகே?” சரியாக 9.59க்கே பாதாம் பால் கடைக்கு ஆஜர். முதலில் எதிர்ப்புறமாகத் திரும்பி நின்று கொண்டே குடித்தேன். “சனி’தான் நம்ம மச்சானாச்சே! சாதாரணமாகத் திரும்புவது போல திரும்பினேன். அவள் எதிர்பார்த்திருந்தாள் … ! அதே கூப்பிடும் சிரிப்பு. என் உள்காயத்தை மறைத்துக்கொண்டே “”சே! இதுக்கு பிச்சை எடுக்கலாம்..” என்று சத்தமாகச் சொன்னேன். சட்டென்று அவள் முகம் சுருங்கியது, எனக்கு திருப்தியாக இருந்தது. கடைக்காரனுக்கு பணத்தைக் கடாசி விட்டு, பைக்கை கதறவிட்டு கிளம்பினேன். அவளை முறைத்துக் கொண்டே கடந்து சென்றேன். ஆயிற்று, இப்படியாக ஒரு வாரம் கடந்தது. ஒரு நாள் இரவு அதே பால்கடை. கொஞ்ச தூரத்தில் அதே அவள். இப்போதெல்லாம் அவள் என்னை பார்ப்பதில்லை. அதான் யோக்கியன் வேஷம் போட்டாச்சே! அந்த நேரத்தில் ஒரு சாராய பார்ட்டி என்னைக் கடந்து சென்றது. பாடிக்கொண்டே அவளைப் பார்த்ததும் நின்றது. ஒரு மாதிரியாக இளித்தபடியே “”யேய் வாடி” என்றது. “”முன்னூறு” உணர்ச்சியே இல்லாமல் காய்கறி விலை சொல்வது போல் சொன்னாள். எனக்கு சுவாரசியமானது. இவள்தான் நான் கண்ணால் பார்த்த முதல் விபச்சாரி. இதுவே நான் காதில் கேட்ட முதல் பேரம். இருக்காதா பின்னே? “”ஹா… தாரன்! வாடி மொதல்ல” “”இங்கியே குடு” “”ஓ! தர்லன்னா வரமாட்டியா? வாடின்னா..” சொன்னபடியே கையைப் பிடித்து இழுத்தது சாராயக்கடை. “”கட்டித்தீனி! உட்றா கையை” சீறினாள் அந்தப் பெண். சாராயம் சூடேறி விட்டான். ஒன்றும் பேசாமல் ஓங்கி ஒரு அறை விட்டான். சாலையில் யாரும் இல்லை. நானும், பாதாம்பால் கடைக்காரனும்தான் இருந்தோம். கடைக்காரன் முகத்தில் ஒரு மாற்றமும் காட்டாமல், “தம்ளர் கழுவுவதே வாழ்க்கை இலட்சியம்’ போல கழுவிக்கொண்டிருந்தான். இதற்குள் நாலைந்து அடி விழுந்து விட்டது. உதடு கிழிந்து ரத்தம் வேறு கொட்ட ஆரம்பித்தது. சேலை முந்தானையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்து விட்டான். எனக்கு பொறுக்க முடியவில்லை. சாராயம் வேறு சோதாவாகத் தெரிந்தானா, இவன்கிட்ட காட்டாம வேற எவன்கிட்ட காட்டுவதாம், என் வீரத்தை! விடுவிடுவென்று சென்றேன். “”டேய் மயிரு… கைய எடுறா. நான் முன்னாடியே காசு குடுத்துருக்கேன். நீ மூடிட்டு போயிரு. இல்ல மூஞ்சிய பேத்துருவேன்” எனக்கே எனது குரல் சத்தமாகக் கேட்டது. சாராயம் இதை எதிர்பார்க்கவில்லை. என்னை அண்ணாந்து பார்த்தான். நான் அவனை விட அரை அடி உயரம். சப்த நாடியையும் ஒடுக்கிக் கொண்டு தள்ளாடியபடியே நகர்ந்து விட்டான். நான் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தேன். மேக்கப் முழுவதும் கலைந்து உதட்டில் ரத்தம் வழிய கோரமாய் இருந்தாள். “”ரொம்ப தேங்க்ஸூ தம்பி” என்றாள். கண்ணில் நீர். அவள் “தம்பி’ என்று விளித்தவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சமாளித்துக்கொண்டே “”பரவாயில்லைங்க. பாருங்க இந்த மாறி வேலை செய்யறதுனாலதான இப்படியெல்லாம் நடக்குது?” அட்வைசுத் தண்ணியை அள்ளிவிட இதை விடவா நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். பின்னே நாமெல்லாம் எப்ப காந்தி தாத்தா ஆகறது? ஆனால் என் அட்வைசை அவள் லட்சியம் செய்யவில்லை. “”தேங்ஸூ தம்பி” என்று என்னிடம் சொன்னபடியே ரோட்டில் ஓடிய ஒரு ஆட்டோவை அழைத்தாள். என்னைத் திரும்பிப் பார்த்தபடியே சென்று ஏறிக்கொண்டாள். ஆட்டோ ஒரு நிமிடம் போகாமல் நின்றான். நானும் வருவேன் என்று எதிர்பார்த்தான் போல. அவள் போகச்சொன்ன பின்னரே ஆட்டோவைக் கிளப்பினான். அன்றிரவு என் காதுகளில் “தம்பி’ என்ற வார்த்தை ஓலித்துக் கொண்டே இருந்தது. தூக்கம் கோவிந்தா. அதிகாலை மூன்று மணிக்கு முடிவு செய்தேன் “”இன்றிலிருந்து பாதாம் பால் விஷப்பரிச்சை ஓவர்”. ஒரு மாதம் இப்படியே ஓடிவிட்டது. ஒருநாள் மாலை தற்செயலாக பழைய மேம்பாலம் அருகே வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது அவளைக் கவனித்தேன். மேம்பாலத்தின் கீழ் இருந்து வேக வேகமாக ஓடி வந்தாள். அதே அவள். கடைசியாகப் பார்த்த அதே கோலம். மேக்கப் கலைந்து கன்னம் வீங்கி அலங்கோலமாய் இருந்தவள், கையை வீசி வண்டியை நிறுத்தினாள். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினாள். கொஞ்சம் தொலைவில் பேண்ட்டை இடுப்புக்கு இழுத்தபடியே ஒரு காண்டாமிருகம் ஓடி வந்து கொண்டிருந்தது. அந்த உருவமே எனக்கு பயத்தை உண்டாக்கியது. ஆனாலும் மறைத்துக்கொண்டே வண்டியில் இருந்து இறங்கப் பார்த்தேன். அதான் ஒரு முறை ஒரு சோதாவிடம் ஹீரோ ஆகித் தொலைத்து விட்டிருந்தேன். இப்போது பின்வாங்கவா முடியும்? “”தம்பி வேண்டாம்பா! அது போலீஸூ, நீ வண்டிய எடு.” நல்லவேளை முதலிலேயே சொல்லி காப்பாற்றினாள். கியரை மாற்றி வண்டியைக் கிளப்பினேன். பின்னால் தொத்திக் கொண்டாள். நன்றாக இடைவெளி விட்டு உட்கார்ந்து கொண்டாள். அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது! “எங்கீங்க?’ “புதூரு’ வேறு பேச்சே இல்லை. புதூர் வந்ததும் நாலைந்து சந்து பொந்துகளில் திருப்பச் சொன்னாள். ஒரு குடிசையின் முன் இறங்கிக்கொண்டாள். வண்டிச் சத்தம் கேட்டு ஒரு ஓமக்குச்சி வெளியே வந்தான். “”சார் உள்ளாற வாங்க” குழைந்து கொண்டே கூப்பிட்டான். “”யோவ் நா அதுக்கு வரல. அந்தம்மாவப் பாரு மூஞ்சி கிழிஞ்சி வந்துருக்காங்க” அவன் அவளுடைய காயத்தை லட்சியம் செய்யவில்லை. “”என்னடி இன்னிக்கு கஸ்ட்டமரு இல்லியா?” “”போலீஸூ தொல்ல, வா அப்புறம் பேசிக்கலாம்” அவள் உள்ளே போக எத்தனித்தாள். அவன் இளித்தபடியே என்னிடம் வந்தான். சுர்ரென்று வந்தது எனக்கு. “”டேய்…” அதற்குள் அவள் குறுக்கிட்டாள். “”தம்பி என்னிய இங்க உடத்தான் வந்திச்சு. நீங்க போங்க தம்பி. நீ உள்ளார வாய்யா” புதூரிலிருந்து வீடு வரும் வரை ரத்தம் வழிந்த அவள் முகத்தை நினைத்துக் கொண்டே வந்தேன். “”என்ன வாழ்க்கை! கண்டவன்கிட்ட அடி வாங்கி, உதை வாங்கி, நூறோ எரநூறோ சம்பாதிக்க கண்டவனோட படுத்து, நோயோட வாழ்ந்து நோயோட செத்து, நோய பரப்பி, குடும்பமில்லாம சாக்காலத்துல கூட நிம்மதி இல்லாம செத்து, அப்படியும் சாகும்போது பக்கத்துல யாரும் இல்லாம தனியா செத்து..” இரவு இரண்டு மணிக்கு அம்மா கேட்டாள், “”இன்னிக்கு எவன்கிட்டடா அடி வாங்கிட்டு வந்த, தூங்காம பொரண்டுட்டு இருக்க?” என்னிடம் பதில் இல்லை. இரண்டு நாள் போயிருக்கும். காலையில் வழக்கம் போல கால்ஸ் போகாமல் கட் அடித்து விட்டு ரயில்வேசுக்கு எதிரே உள்ள பேக்கரியில் உட்கார்ந்து டீ அடித்துக் கொண்டிருந்தேன். “”தம்பி..” நிமிர்ந்தேன். தையல் போட்ட உதட்டுடன் அவள். சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் தெரிந்தவர்கள் இல்லை. “”நல்லாருக்கீங்களா?” என்ன ஒரு கேள்வி! “”..ம்ம் இருக்கேன் தம்பி. நீங்க இங்க பக்கத்துல தான் வேலை செய்யறீங்களா?” “”ஆமாங்க. அந்தாளு உங்க ஊட்டுக்காரருங்களா?” “”ம்” “”வேலைக்கெல்லாம் போறதில்லீங்களா?” “”கல்யாணத்துக்கு மின்னாடி போய்ட்டிருந்தாரு. இப்ப இல்ல.” “”உங்களுக்கு பசங்க புள்ளைங்க இருக்குதுங்களா?” “”ஒரு புள்ளயிருக்குது தம்பி.” சப்ளையரிடம் அவளுக்கும் சேர்த்து டீ சொன்னேன். அவளிடம் கேட்டேன், “”ஏங்க! அவுசாரி வேல செய்யறீங்களே! கூச்சமாவே இல்லீங்களா? இதுக்கு ஏதாச்சும் கூலி வேலைக்கு போலாமே?” “”எந்தூர்ல தம்பி கூலி வேலைக்கு அம்பது ரூவாக்கு மேல தர்றாங்க? அதுல சோறு காச்சறதா? இல்ல எம் பொண்ண படிக்க வக்கிறதா? அவளுக்கு அந்த அம்பது ரூவாக் காசுல கல்யாணங்காச்சி நடத்தறதா?” “”அதுக்கு, ஊரக்கெடுத்து சம்பாரிச்ச காசுல திங்கறது தெரிஞ்சா அவளுக்கு குளுகுளுன்னு இருக்குங்களா?” “”யாரு தம்பி ஊரக்கெடுக்கறது. அது ஏற்கனவே கெட்டுதாங் கெடக்குது. எங்கிட்ட வர்றவனெல்லாம் நாங் கெடுத்துதான் எங்கிட்ட வர்றானா? மின்னாடியே கெட்டதனாலதான் எங்கிட்ட வர்றான். யோக்கியனுக்கு அவுசாரிகிட்ட என்ன வேல? மொதல்ல ஒன்னு தெரிஞ்சுக்க, காலையில பட்டையோட ஊட்டவுட்டு கௌம்பி, நாளெல்லாம் காந்தி வேசம் போட்டுட்டு சாயந்திரமா எம்மேல கைய வைக்கறவனயா, நீ யோக்கியனுங்குற? ஊட்டுல பொண்டாட்டிய வச்சுட்டு எங்கிட்ட வர்றவன், நானில்லீன்னா பக்கத்தூட்டுப் பொம்பளைய கைய புடுச்சு இளுப்பான். பக்கத்தூட்டுக்காரிக பாதுகாப்பா இருக்காளுகன்னா அதுக்கு நாந்தான் காரணமாக்கும்.” “”அவனுகள உடுங்க. நீங்க பண்றது பாவத்தொழில் இல்லீங்களா?” “”எது தம்பி பாவம்?” “”பல பேரோட படுக்குறது பாவமில்லீங்களா?” “”நீங்க மனசுக்குள்ளாற பண்றதெல்லாம் நா வெளியில பண்றேன். வேறென்ன தம்பி வித்தியாசம்?” பலநாள்களுக்குப் பிறகு மீண்டும் செருப்படி. டீ வந்தது. டீயைக் குடித்துக்கொண்டே கேட்டேன். “”அப்படீன்னா அவுசாரித்தனம் புண்ணியம்னு எந்த சாமி, எந்த புக்குல சொல்லுச்சுங்க?” சிரித்துக் கொண்டே சொன்னாள், “”சாமி எந்தப் புக்கும் எளுதல தம்பி. எளுதுனதெல்லாம் எல்லா சவுரியமும் இருந்த உங்கள மாறி ஆளுங்கதான் தம்பி. பாவ புண்ணியத்த புக்குல எளுதுனவன எங்க சேரில பத்து நாளு இருந்து பாக்கச் சொல்லு. திரும்பி வந்து கொல பண்றது கூட தப்பில்லைன்னு இன்னொரு புக்கு எளுதுவான். அப்ப நீங்கெல்லாம் கொல பண்ணக் கௌம்பீருவீங்களா? உடுங்க தம்பி! அவிங்கவிங்க நாயம் அவிங்கவிங்களுக்கு. ஆனா ஒன்னு புரிஞ்சுக்கங்க. நீங்க பாக்காத கேக்காத வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கு. அதுல வாழற மனுசனுங்களும் உங்க ஒலகத்துலதான் இருக்காங்க. உங்களுக்கு தெரியாது புரியாதுங்கறதுக்காக அதெல்லாம் பொய்யின்னு ஆயிராது. ஒங்க நாயம், பாவம், புண்ணியம் இதெல்லாம்வுட வாழ்க்க பெரிசு தம்பி” “”நா.. வாரந் தம்பி” என்றபடியே டீக்காசை அவளே கொடுத்து விட்டு எதிர்ப்புறம் நின்ற பேருந்தை நோக்கி வேகமாக சென்றே விட்டாள். மதியம் வரை அசையாமல் பேக்கரியிலேயே உட்கார்ந்திருந்தேன். ஆங்கில ஹிந்து மிஷனரி பள்ளியில் படித்து, வாரந்தோறும் பஜனை சொல்லி, கோக்பெப்சி கலாச்சாரத்தில் வாழ்ந்து வந்த எனக்கு, வாழ்க்கை குறித்தும், பாவ புண்ணியம் பற்றியும் வேசி ஒருத்தி பாடம் நடத்திச் சென்றாள். உண்மைச்சூடு தந்த அதிர்ச்சியில் வெகுநேரம் உறைந்திருந்தேன். இப்போதெல்லாம் பாதாம் பால் சாப்பிடுவதில்லை. நீண்டநாள் கழித்து சாப்பிட வேண்டும் போல இருந்தது. பைக்கை காந்திபுரம் விட்டேன். அதே கடை. ஆர்வமாய் இருட்டுப் பகுதியைப் பார்த்தேன். அவள் இருந்தாள். பாசாங்கில்லாமல் சிரித்தேன். அவளும் சிரித்தாள். அது அழைப்பின் சிரிப்பல்ல. நட்பின் சிரிப்பு. இன்றைக்கு பால் கூடுதல் சுவையாக இருந்தது. காசைக் கொடுத்துவிட்டு வண்டியைக் கிளப்பினேன். கோவையின் மார்கழிக் குளிரில் உடல் நடுங்கியது. பனியடர்ந்த சாலையில் மெர்க்குரி வெளிச்சம் தெளிவைக் கொடுத்துக் கொண்டிருந்தது. தவறில்லாத ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டது போல மனம் நிறைவாக இருந்தது. அன்று கனவுகள் இல்லாமல் தூங்கினேன். ________________________________ · கார்க்கி _________________________________ 37 காங்கோ சிறுகதை: கடன் ”அந்தப் பொடிசு முகம் சுளித்தது “”அய்யே, நல்லால்லே கருப்பி.” “”ஏய் வாண்டு, இந்தச் சாத்துக்குடி எவ்வளவு இனிப்பு தெரியுமா?” ஒரு சுளையை எடுத்து நன்றாகச் சப்பிச் சாப்பிட்டுக் காட்டினாள் கார்மென். பொடிசு முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கார்மெனை கருப்பி என்று தான் கூப்பிடுவான் அந்தப் பொடிசு வில்லியம்ஸ். கார்மென், ஆப்பிரிக்கப் பழங்குடிப் பெண். வேலைக்காரி. அவள் எசமானனும், எசமானியும் பிரெஞ்சுப் பணக்காரர்கள். “”நல்ல கண்ணுல்லே… நான் கண்ண மூடித் தொறக்குறதுக்குள்ள லபக்குனு முழங்கிடுவியாம்…” கார்மென் மறுபடி கெஞ்சினாள். வில்லியம்ஸ் அக்குடும்பத்தின் ஒரே ஒரு செல்லப் பையன். அவனுக்குத் தனி அறை. கார்மென் இந்த அறையில்தான் அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள். அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். சுவர்க் கடியாரம் இரவின் 7 மணியை இசைத்தது. வீட்டுக் கூடத்தில் எசமானி, எசமான், அவர்கள் நண்பர்களின் பெருங்கூட்டம். கொஞ்ச நேரம் இரைச்சல், கொஞ்சநேரம் மயான அமைதி. சீட்டுக் கச்சேரி ஓடிக் கொண்டிருந்தது. கார்மென் கண்டிப்போடு சொன்னாள்: “”நீ சாப்பிடலேன்னா அம்மா கிட்டேதான் சொல்லப் போறேன்.” சொல்லேன் என்பது போல முகம் காட்டிச் சிணுங்கினான் வில்லியம்ஸ். வலுவந்தமாக வில்லியம்ஸின் வாயைத் திறந்து ஒரு சுளையை உள்ளே தள்ளினாள். எது நடக்கக் கூடாதோ, அது நடந்தது. “ஓ’ என்று ஒப்பாரி வைத்தான் வில்லியம்ஸ். வீட்டுக் கூடத்திலிருந்து எசமானி ஓடிவருவது தெளிவாகக் கேட்டது. “”ஏய் கார்மென், என்ன செஞ்ச எரும?” சீட்டாட்டம் தடைப்பட்ட கோபம் அவளுக்கு. “”அம்மா, சாப்பிட மாட்டேங்கிறாம்மா.” “”பாவம் பச்சக் குழந்தயப் பலவந்தம் செஞ்சியா அறிவு கெட்டவளே. வில்லியம்ஸ், ஒனக்கு திராட்ச பிடிக்குமில்லே, சாப்பிடுறியா? ஏய் கார்மென், குழந்தயத் தொந்தரவு செய்யாம திராட்சயக் குடு.” வில்லியம்ஸ் திராட்சையைச் சப்பிச் சப்பி உறிஞ்சிக் கடித்து வேகமாக விழுங்கினான். என்னைக்காவது ஒருநாள் ஒரு கொத்து திராட்சை சாப்பிட வேண்டும் என்று நினைத்தாள் கார்மென். மணி ஏழரைக்கு விரைந்தது. அடுத்தது, வில்லியம்ஸ{க்கு உடைமாற்ற வேண்டும்; அதற்கடுத்து, படுக்கை. கார்மெனின் அவசரம் வில்லியம்ஸ{க்குப் புரியாது, புரியவில்லை. வேகவேகமாக நடையை எட்டிப் போட்டாலும் மெகெலெகெல்லேவில் இருக்கிற அவள் வீட்டுக்குப் போவதற்கு குறைந்தது ஒரு மணிநேரத்துக்கு மேல் பிடிக்கும். கார்மென் பதறினாள். வில்லியம்ஸ் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான். “கருப்பி, ஒரே ஒரு பாட்டு கருப்பி’ அன்றைக்குப் பார்த்து ஒன்று, இரண்டு, மூன்று பாட்டுகளுக்குப் பிறகே வில்லியம்ஸ் கண் அசந்தான். முடுக்கிய ரேடியோப் பெட்டி போல கார்மென் பாடிக் கொண்டிருந்தாளே தவிர, அவள் நினைப்பு எங்கோ இருந்தது. வில்லியம்ஸ் கொழுகொழுவென்று வளர்ந்தான். இவள் மகன் டேவிட் பாவம் எத்தனையோ முறை சாவை எட்டிப் பார்த்துவிட்டுக் காத்திருக்கிறான். பெரிய ஆளுங்கபோல இப்போதே வில்லியம்ஸ் வேலைக்காரர்களிடம் வேலை வாங்குகிறான். அந்தச் சட்டை வேண்டாம், இந்த டவுசர்தான் வேணும், இந்த நீலத்தொப்பிதான் வேணும், பிஸ்கட் வேண்டாம் கேக்தான் வேணும். உடனே பார்க் போகணும் எல்லாம் கேட்பான். பாவம் டேவிட், வாயைத் திறந்து எதுவும் கேட்க மாட்டான். வெளிஆட்கள் வீட்டில் இருந்துவிட்டால் ரொம்பக் கூச்சப்படுவான். டேவிட்டையும் பாசம் கொட்டி வளர்க்க வேண்டும் என்றுதான் கார்மென் ஆசைப்பட்டாள். ஆனால் அது வெறும் ஆசைதான். உலகம் இருக்கிற இருப்பில் அது கனவுதான். கார்மென் டேவிட்டை எண்ணி வருந்தினாள். அன்று காலை வேலைக்குப் போகவேண்டுமா என்றுதான் கார்மென் யோசித்தாள். முந்தின நாள் ராத்திரிபூரா டேவிட் அழுதுகொண்டேயிருந்தான். அடிக்கடி வயிற்றைப் பிடித்துக் கொண்டான் “வலிம்மா வலிம்மா’ என்று முனகினான். வாந்தி. பேதி. மூன்று முறை வாந்தி எடுத்தான். முதல் முறை வாந்தி எடுத்ததும் “இப்ப பரவாயில்லம்மா’ என்று சொன்னான். ஆனால் வாந்தி அடங்க வில்லை. மூன்றாவது முறை அவனது சின்னஞ்சிறு வயிறு உள்ளுக்குள் இழுத்து ஓங்கரிக்க, பச்சையாக தண்ணியாக வாந்தி எடுத்தான். மூச்சு துரத்தி வாங்கியது, நெற்றியில் வியர்வை துளிர்த்தது. அவனைச் சமாதானப் படுத்துவதற்குப் பதிலாக கார்மென் இடிந்து போனாள். ஏற்கெனவே பறிகொடுத்த இரண்டு குழந்தைகள் நினைப்பு நெஞ்சுக்குள் திரண்டு இறுக்கியது. வளாகத்தின் இன்னொரு கோடியிலிருந்த அம்மாவைக் கூப்பிட்டு அனுப்பலாமா? அனுப்பலாம்தான். பீதியில் கார்மென் திகைத்தாள். ஏதோ ஒருவழியாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அம்மாவைக் கூப்பிட்டால் அவள் உடனே குடும்ப மாந்திரீகக் கிழவனிடம் டேவிட்டைத் தூக்கிக் கொண்டு போய்விடுவாள். கார்மெனுக்கு விருப்பமில்லை. எசமான் வீட்டில் செய்வதுபோல “இங்கிலீஷ் வைத்தியமே’ நல்லது என்று நினைத்தாள். முந்திய இரண்டு குழந்தைகளையுமே அந்த மாந்திரீகச் சூனியக் கிழவன்தான் விழுங்கிவிட்டான். சடங்குகள் அவள் செல்வங்களைக் காப்பாற்றவில்லை. ஒவ்வொரு சாவும் ஒரு மாதச் சம்பளம் அளவுக்கு கடனைக் கூட்டியதுதான் மிச்சம். எங்கேயாவது வழியில் பார்த்தால், “”நீ உன்னோட அம்மா சொன்ன பயல கல்யாணம் கட்டிகிடலே, அதான் குத்தம். உனக்குச் சொன்னாப் புரியாது. பட்டுத்தான் கத்துக்குவே.” என்பான் கிழவன். அவர்கள் சிபாரிசு செய்த பயல் கிட்டோங்கா. அரசாங்கத்தில் கார் டிரைவர் வேலை. அங்கே அவனுக்கு எசமான் அவனே. வேலைக்குப் போய் வீடு வந்தால் சொந்தமாக வாங்கிப் போட்டிருந்த ஒரு மளிகைக் கடை, ஒரு சாராயக் கடை இரண்டையும் ஓர் எட்டிப் பார்த்து வரவும் கவனிக்கவுமே நேரம் சரியாக இருக்கும். கார்மென் வேலைக்கெல்லாம் போக வேண்டாம் வீட்டோடு ராணி போல இருக்கலாம். அவர்கள் இப்படிச் சொன்னார்களே தவிர அதற்குப் பின்னால் சங்கதி வேறு மாதிரி. அவனுக்கு ஏற்கெனவே இரண்டு பெண்டாட்டிகள், ஒருத்தி மளிகைக் கடைக்கு, இன்னொருத்தி சாராயக் கடைக்கு. கார்மென் வந்தால் வீட்டோடு மூன்றாவது பெண்டாட்டியாக இருக்கலாம். இப்போது கார்மென் இருக்கிற கதியே வேறு. அவள் மலைபோல் நம்பிக் காதலித்தவன் டேவிட்டையும் சேர்த்து மூன்று கொடுத்துவிட்டு, மூன்றாம் சுமை கொடுத்த பிறகு ஏமாற்றி சென்று விட்டான். அந்த வட்டாரத்தை விட்டே ஓடிவிட்டான். திரும்பி வருவான் என்று கொஞ்ச நாள் நம்பிக்கையோடு காத்திருந்தாள். அப்புறம் வேறு திருமணத்தையே வெறுத்து டேவிட்டைக் காப்பாற்றினால் போதுமென்று எல்லா ஆசைகளையும் அடக்கிக் கொண்டுவிட்டாள் கார்மென். டேவிட் ஏதோ கூப்பிட்டான். அவள் மடியில் தலை வைத்துத் தூங்க வேண்டுமாம். “தனியா இருக்க பயமா இருக்கும்மா’ என்று கெஞ்சினான். விடியும்வரை தாங்குவானா, தெரியவில்லை அவளுக்கு. எசமானி போல இருந்தால், ஃபோனிலேயே டாக்டரைக் கூப்பிடலாம், அவசரம் என்றால் டாக்டரின் வீட்டுக்கே கூட கார் போட்டுக் கொண்டு ஓடலாம். ஏழைகள் என்ன செய்ய முடியும்? மருந்துக் கடைகளை இந்நேரம் அடைத்திருப்பார்கள். அரசு ஆஸ்பத்திரிக்குப் போகலாம், போனால், “நேரம் காலம் கெடயாதா உங்களுக்கெல்லாம்’ என்று அந்த ஆண் நர்ஸ் வள்ளென்று எரிந்து விழுவான். தனியார் வெள்ளைத்தோல் டாக்டர்கள் ராத்திரி நேரத்தில் ஏழைக் கருப்பர்களை பங்களா கேட்டுக்குள்ளேயே விடமாட்டார்கள். கார்மெனின் கற்பனை சட்டென்று நின்றது அந்த டாக்டர்களுக்குக் கொடுக்க காசு ஏது? மிரண்டு போனாள் கார்மென். டேவிட்டை இழுத்து அணைத்து எடுத்து மடியில் கிடத்திக் கொண்டாள். டேவிட்டைப் பார்ப்பதும், அவனோடு கொஞ்சி விளையாடிய நாட்களை நினைவில் வருடுவதும், தூக்கமும் விழிப்பும் கலந்த ஒரு பயணமாக அவள் எங்கெங்கோ போனாள். விடியற்காலை. திடுமென விழித்துப் பார்த்தாள் டேவிட், பாவம் குழுந்தை, சுருட்டிப் போட்ட துணிபோல வாடிக் கிடந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவளுக்கு வேறு வழி இல்லை அவனை அப்படியே விட்டுவிட்டு என்றும்போல காலையில் நேரமே எழுந்து வேலைக்கு ஓடவேண்டியதுதான். எசமானிக்கு டாணென்று காலை ஏழரைக்கு அவள் கூப்பிடும் குரலுக்கு கை அருகே கார்மென் வேண்டும். இரவு சரியாக உறங்காததால் கார்மெனுக்கு அசதி. ஆனால் படுக்கையிலேயே கிடக்க முடியாது. வேலைக்கும் போக விருப்பமில்லை. அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போய் டேவிட்டுக்கு என்ன பிரச்சினை என்று தெரிந்து கொண்டு விட்டால் நல்லதென்று அவள் மனசு துடித்தது. எப்போது டேவிட்டுக்கு உடம்பு சுகமில்லாமல் போனாலும் அவனைத் தனியே விட்டு விட்டுப் போக அவள் விரும்ப மாட்டாள். ஆனால் விரும்பியபடி நடந்ததே யில்லை. அப்போதெல்லாம் துடித்துத் துடித்துக் களைத்துப் போய்விடுவாள். ஒருமுறை அவனை பங்களாவுக்குத் தன்னோடு அழைத்துப் போக விரும்பினாள் கார்மென். “”என் மகன் வில்லியம்ஸைப் பாக்கறதுதான் உன் வேலை. உன் பையனப் பாக்குறதுக்கு நான் சம்பளம் போடலே” என்று எச்சரித்து மூஞ்சியைத் திருப்பிக் கொண்டாள் எசமானி. டேவிட்டை அப்படியே விட்டுவிட்டுப் போனாலும், அம்மாவோ, உறவுக்காரப் பெண்களோ வைத்தியம் பார்க்காமல் அப்படியே விட்டுவிட மாட்டார்கள் என்று கார்மெனுக்குத் தெரியும். பழங்குடிகளின் மனசில் குடும்பம் என்றால் எல்லோரும்தான், அது மிக மிகப் பெரியது. எது எப்படி நடந்தாலும் எந்த ஒரு குழந்தையையும் எப்போதும் தனியாக விட்டுவிட மாட்டார்கள். ஆனாலும் கார்மென் மனதில் கொஞ்சம் சந்தேகம்தான். தாய் வளர்ப்புபோல மற்றது இருக்காது, அதிலும் நாம் பெற்றெடுத்த குழந்தைகள் உடம்பு சுகமில்லாத போது அதிகம் நம்மைத் தேடும் என்பாள் கார்மென். இந்த மாசத்தில் மட்டும் இரண்டு முறை வேலைக்குப் போகவில்லை. ஒருமுறை, சேர்ந்தாற்போல இரண்டு நாள் ஜூரம் பாயில் கிடந்தவன் எழவே இல்லை. ரெண்டாவது முறை, ஒரு சாவுக்குப் போய் விட்டாள். எசமானி சீறுசீறென்று பாய்ந்து விட்டாள். அவளுக்கு என்ன சொல்லி எப்படி விளக்குவது? என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்துவிட்டாள். இந்த வெள்ளப் பன்னிகளுக்கு நெனப்பே நாங்க சோம்பேறிங்கறதும், அதனாலதான் வேலைக்கு வரமாட்டேங்குறோம்ங்கறதும்தான். டேவிட்டுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தும் இன்று கார்மென் வேலைக்குப் போனாள். உச்சி வெயில் நேரத்தில் அவள் தங்கை செய்தி கொண்டு வந்தாள். டேவிட்டுக்கு மருந்து வாங்கிக் கொடுத்துவிட்டார்கள், பயமில்லை. கார்மெனுக்குத் துணுக்கென்றது. இந்தப் பணத்துக்கு எப்படிச் சரிக்கட்டுவது? என்னவோ செய்யலாம், என்ன செய்தாகிலும் டேவிட் குணமாகிவிடணும். எஜமானியின் சீட்டாட்டம் இன்னமும் முடியவில்லை. அவள் எப்ப வருவது, எப்ப பணம் கேட்பது, எப்ப வீடு போய்ச் சேருவது? வில்லியம்ஸ் ஆழ்ந்து தூங்கி விட்டான். கார்மென் சமையலறைப் பக்கம் போய் கிழட்டுக் காவலாளி பெர்டினான்டிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவரிடம் மனசைக் கொட்டினால் பாரம் குறைந்து விடும். ஒருவழியாக எசமானி அங்கு வந்தாள். “”என்ன கார்மென், இன்னமுமா வீட்டுக்குக் கிளம்பலே?” பணம் வேண்டுமென்று எப்படிச் சொல்வது கார்மென் திக்கினாள், தடுமாறினாள். “”இல்லம்மா… வந்து… கொஞ்சம் பணம் வேணும்….” “”என்ன, மறுபடி கடனா? பத்து நாளைக்கு முன்னதானே வாங்கினே…” “”பையனுக்கு உடம்பு சுகமில்ல, மருந்து வாங்கணும்மா….” “”நல்லா இருக்குது உங்க கத… நா ஒன்னும் இங்க பொதுச்சேவ செய்யலே, புருசன் இல்லாம அவ அவ குழந்தையப் பெத்துக்குவீங்க, அத வச்சுக் காப்பாத்த மட்டும் முடியாது… ஏங்கிட்ட பணத்துக்கு ஓடி வந்துடுவீங்க…” “”அம்மா அது தொரைமார் பேசற பேச்சும்மா…” கார்மென் துணிந்து பதில் சொல்லிவிட்டாள். ஆனால் அதை வளர்க்க விரும்பவில்லை. இப்போதைக்கு காசு வேணுமே? “”அப்படிச் சொல்லு. உம் பையனுக்குச் சுகமில்லேங்கிறே. என்னைக்கு நீ எம்பேச்ச கேட்டிருக்கே? அவனுக்கு ஒழுங்கா சோத்தப் போடுன்னு எத்தன முறை தலைப்பாடா அடிச்சிக்கிட்டிருப்பேன்… முதல்ல அதச் செஞ்சியா?” “”இல்லம்மா… வந்து…” “”என்ன இல்லயும் நொள்ளயும். வெறுமனே கிழங்கு மாவக் காச்சி அவன் வயித்துல திணிப்பே… ஒங்களுக்கு வேற என்ன தெரியும்?” “”நீங்க வில்லியம்ஸ{க்கு விதவிதமா ஊட்டுறீங்களே, அப்படியா நாங்க செய்ய முடியும்?” இப்படி கார்மென் பதில் சொல்லவில்லை, மனதில் நினைத்துக் கொண்டாள். “”இப்ப எங்கிட்ட காசு இல்லே. உங்களப்போல ஆளுங்களுக்கு என்னைக்குத்தான் ஒறைக்கும்? பணம் மரத்துலயா காய்க்குது? கொஞ்சமாவது பணத்தச் சேத்து வெக்கணும்னு உங்களுக்கு எட்டாதா?” எசமானி கத்திக் கொண்டிருந்தாள். இவர்கள் வேகமாக பிரெஞ்சு மொழி பேசும் போதெல்லாம் கார்மெனுக்கு ஒன்றும் புரியாது. முழிப்பாள். வெறுமனே தலையைத் தலையை ஆட்டுவாள். இப்போதும் அப்படித்தான் செய்தாள். அதுவே எசமானியை இளக்கி விடுமோ? தெரியவில்லை. அவள் அறைக்குப் போய் கொஞ்சம் ஆஸ்பிரின் மாத்திரை கொண்டு வந்து கொடுத்தாள். அடுத்த நாள் கொஞ்சம் பணம் தருவதாக வாக்கு கொடுத்தாள். நாளைக்குக் கொடுத்து என்ன பயன்? நாளைக்குக் கொடுப்பாளென்பதும் என்ன நிச்சயம்? ஒருவழியாக கார்மென் வீட்டுக்குக் கிளம்பினாள். கருப்பர்கள் குடியிருக்கிற மெகெலெகெல்லேவுக்கு அவள் போக ஒரு மணிநேரம் போல ஆகிவிடும். வழியேற குழம்பிக் குழம்பிப் பல சிந்தனை. எங்கிருந்தோ டேவிட் கூப்பிடுவது போலிருந்தது. நடையை எட்டிப் போட்டாள். “”பாவம் டேவிட்! பெரியவனானால் என்னைக் காப்பாற்றுவான். பெரியவன் ஆனால் அவனுக்கு என்மீது பாசம் இருக்குமா? இப்படி விட்டுவிட்டுப் போய்விடுகிறாளே பாவி என்று இப்போது சபித்துக் கொண்டிருக்கிறானோ? எனக்கு இங்கிலீஷ் வைத்தியத்தில்தான் நம்பிக்கை இருக்கிறது. அப்படி ஒருவேளை அம்மா இன்னக்கி ராத்திரி மாந்திரீகனைப் பார்க்க நிர்ப்பந்தம் செஞ்சா, போகவேண்டியதுதான்” கார்மென் அலைபாய்ந்தாள். எசமானிக்கென்ன? சேமிப்பு, மருந்து என்று எதைவேண்டுமானாலும் சொல்லுவாள். அவள் கிடக்கிறாள். மாசம் 100 ரூபாய் சேக்கணும்னா நடக்கிற காரியமா? கைக் கடியாரம் வாங்கினதுக்காக இதே எசமானியம்மா மாசாமாசம் கெடுபிடியா பணம் பிடிக்கிறா. இது இல்லாம ஊருக்குள்ளே சீட்டுப் பணம் கட்டணும். மீத மிச்சம் என்ன இருக்கு? மாசம் பூரா நான் செலவு செய்யிற பணம் எசமானி அம்மாவுக்கு ஒருநாள் சாப்பாட்டுச் செலவுக்குக் காணாது. தெருக்களில் அனேக தெரு விளக்குகள் எரியவில்லை. இருட்டு வழிந்தோடியது. எதிரே வந்த கார்கள் முழு வெளிச்சமும் வாரி இறைத்துக் கண்களைக் குருடாக்கின. பின்னால் வந்த வாகனங்களோ மோதுவதுபோல அருகே தாண்டிப் போயின. யாரும் ஏற்றிக் கொள்ளவில்லை இத்தனைக்கும் கார்மெனைப் போல கருப்பர்கள்தான் டிரைவர்கள். இன்றைய உலகத்துல அவனவன் பாடு அவனுக்கு. நாளைக்கு எசமானி பணம் கொடுக்கணும் கொடுப்பாளா? கார்மென் மறுபடி மறுபடி யோசித்தாள். வீடு சமீபமாக வந்தபோது பெண்களின் ஒப்பாரி வேகமாக வந்து தாக்கியது. ஐயோ டேவிட். மருந்து, மாந்திரீகன் எட்டாத இடத்துக்கு டேவிட் போய்விட்டானா, ஐயோ. கார்மெனுக்கு கண்கள் இருண்டன. _______________________________________________________ ஹென்றி லோபேஸ் “”கோடை நாட்களின் இரண்டு இரவுகள்” ஆப்பிரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பு, 2003. என்.பி.டி. தேசியப் புத்தக நிறுவனம், புதுடெல்லி வெளியீடு. ஆங்கிலம் வழி தமிழில்: புதூர் இராசவேல் _______________________________________________________ 38 ‘பால்’ திரிந்த வேளை! [பெண்ணுரிமை] “சும்மாவா சொன்னாங்க ஆண அடிச்சு வளர்க்கணும்; பொண்ண புடிச்சு வளர்க்கணும்னு, ஒரு குடும்பம் நடத்துற பயலா இவன்? மணி ஆறாகுது.. இன்னும் தூங்கிட்டு கெடக்கான்…” மாமியார் மரகதம்மாள் குரல் ஊடுருவ திடுக்கிட்டு எழுந்தான் மூர்த்தி. அய்யய்யோ இவன வேற ஸ்கூலுக்கு கௌப்பணும்.. சாப்பாடு வேற கட்டணும்.. தலைவலின்னு நேத்து போட்ட மாத்திரை ஆளையே அசத்திடுச்சு… மனதில் பதட்டத்தின் ரேகைகள் கூட “டேய் எழுந்திரு,எழுந்திரு” மகன் ராகுலை எழுப்ப கண்களை திறக்காமலே எழுந்தவன், அந்த இடத்திலே ஒண்ணுக்கு போக டவுசரைத் தூக்க.. “டேய்.. டேய்.. மாடு கண்ணத் தொறயேன்.. ” என்று கத்தியபடி.. பாத்ரூமுக்குள் அவனைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்தினான். மனைவி முகத்தைப் பார்த்தே சரியில்லை என்று புரிந்து கொண்ட மூர்த்தி அவசர அவசரமாக கேஸ் அடுப்பைப் பற்றவைத்து பால் பாத்திரத்தை வைத்தான். ஆமாம்.. இவன் டீயப் போடுறதுக்குள்ள.. நான் ஆபீசுக்கே போய் சேர்ந்துடுவேன். வந்து வாச்சுது பாரு எனக்குன்னு.. ஒரு குடும்பப் பய காலைல எழுந்தமா, வேலையப் பாத்தமான்னு இருக்கணும்.. பொண்டாட்டில்ல வந்து எழுப்ப வேண்டியிருக்கு. தோ.. ரெடியாயிடுச்சு.. இடைப்பட்ட நேரத்தில் அரையும் குறையுமாக பல் துலக்கியபடி.. ராகுலைத் தேட,அவன் பாத்ரூமிலேயே நின்று கொண்டிருந்தான். எருமை மாடு.. ஒண்ணுக்கு போக சொன்னா அங்கேயே நின்னுக்கிட்டு கெடக்கிறியே.. வா இங்க.. நீங்க கொஞ்சம் அவன் முகத்த கழுவக் கூடாதா? மனைவி சுதாவைப் பார்த்து கேட்டபடி ராகுலை இழுத்து வைத்து அவன் தேம்பத் தேம்ப முகத்தை பாத்திரம் கழுவுவது போல சலிப்புடன் கழுவி எடுத்தான். நீ சீக்கிரம் எழுந்து வேலையப் பாக்காம.. கோவம் வேற வருதா.. வேலைக்கு லாயக்கில்ல. வாய்தான் நீளுது.. ஆயி, அப்பன் வளர்ப்பு அப்படி.. சுதா தலைவாரிக் கொண்டே பொரிந்து தள்ளினாள். மரகதம்மாளும் சேர்ந்து கொண்டாள்.. எல்லாம் உன் அவசரம். வேற பையன் பாக்கலாம்னா பாத்தவுடனேயே புடிச்சு போச்சுன்ன.. உங்க அப்பாவும் பாய்ஞ்சுகிட்டு முடிச்சாரு ! அந்த வைத்தீஸ்வரன் கோயில் சோசியன் அப்பவே சொன்னான்.. இது கேட்ட நட்சத்திரம்.. ஒத்து வராதுன்னு. அதான் கேட்டவங்கள அடிச்சது.. அவுரு போய் சேர்ந்துட்டாரு .. ! இப்ப குத்துது கொடையுதுன்னா.. எதிர்த்துப் பேசினால் வம்பு அதிகமாகும் என்பதைப் புரிந்து கொண்ட மூர்த்தி.. மாமியாரை ஒரு திராவகப்பார்வை மட்டும் பார்த்துவிட்டு திரும்புவதற்குள் அவன் மனசாட்சியைப் போலவே சோறும் பொங்கியது. அவசர அவசரமாக அடுப்பை சின்னது செய்துவிட்டு.. டீ ஆற்றி எடுத்து வந்தான்.. இந்தாங்க டீ.. மணி என்னாவுது.. உன் டீய குடிச்சிகிட்டு உட்கார்ந்தா அங்க வேலை போயிடும்.. மொதல்ல டிபனை கொடு.. கௌம்புறேன்… மனைவி அரக்க பறக்கடிக்க.. வேகமாக மதிய உணவைக் கட்டி டிபன் பாக்சு அடியை கைலி தலைப்பால் துடைத்துக் கொடுத்தான்… இட்லி ரெண்டாவது சாப்புட்டு போங்க.. கெஞ்சினான்.. திருப்திதான.. நீயே தின்னுட்டு நிம்மதியா தூங்கு.. மேற்கொண்டு பேச நேரம் அனுமதிக்காததால் வசவியபடியே கிளம்பிப் போனாள் சுதா. சே ஒருநாள் லேட்டா எழுந்திருச்சது எவ்வளவு தப்பா போச்சு.. என்று தன்னைத்தானே நொந்தபடி.. மகனுக்கு அவசர அவசரமாக இட்லியை வாயில் திணித்தபடி.. மாமி ராகுலை ஸ்கூல்ல விட்டு வர்றீங்களா.. நான் தண்ணி தூக்கியாந்துர்றேன்.. மூர்த்தியின் வேண்டுகோளைக் கேட்டு ஆத்திரமானாள் மரகதம்மாள். “என்னமோ நடக்குதாம் கதையில.. எலி ரவிக்கை கேட்டுதாம் சபையிலன்னு.. நானே மவ சாப்பிடாம போயிட்டாளேன்னு வேதனையில இருக்கேன். இந்த கால வெய்யில்ல நம்பாள முடியாதுப்பா.. இதுவும் வேற ரோட்ல எங்கிட்ட அடங்காது..” என்று வெடுக்கென மறுத்தாள். வேறு வழியில்லாமல் மகனை ஸ்கூலுக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் நினைப்போடு ஓடிவந்தவனை, என்ன மூர்த்தி நேத்து சொர்க்கம் பாத்தியா.. என்று எதிர்வீட்டு மணி ஆரம்பிக்க.. நீ வேற நம்ப பாடே நரகமா இருக்கு! ஒரு நாள் லேட்டா எழுந்திருச்சதுக்கு இன்னிக்கு நான் பட்டபாடு எனக்குதான் தெரியும். இந்தக் கெழம் வேற மவளை நிண்டி விடுது. என் மாமியார் பரவாயில்ல.. கூடமாட வேல பாக்குது. மவள் புரியாம பேசுனா கூட, அவன் பொழுதுக்கும் வேல செய்யுறான்.. தண்ணி கூட எழுந்திருச்சு குடிக்கக் கூடாதான்னு மவளையே கண்டிக்கும். என் வீட்ல இப்படி.. உனக்கு வாச்சது அப்படி.. என்னா பண்றது. ஆணா பொறந்தா எல்லாத்தையும் அனுபவிச்சுதான் ஆகணும்.. சரி வாரேன்.. மலையாய் குவிந்திருக்கும் துணியும், சமைத்த பாத்திரங்களும் கண்ணில் நிழலாட.. தண்ணீர் குடத்தின் எடை அதை விட குறைவானது போல வேகமாக வந்தான் மூர்த்தி.. களைப்பும்,வறட்சியும் ஒருசேர, காலையில் மனைவிக்கு போட்டு அவள் குடிக்காமல் வைத்துச் சென்ற தேநீர் கண்ணில் பட்டது. ஆறிப்போய் அந்நியமாக இருந்த தேநீரை ஆதரவாக ஊற்றிக் கொண்டான். துணிகளை அலசி எடுத்து நிமிரும்போது இடுப்பு தனியாகக் கழண்டு விழுவது போல் வலி பின்னியெடுத்தது. தஸ்,புஸ் என்று நாவில் குழறிய காற்றின் வழி ‘அம்மா’ என்று தனக்குத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டான். மதியம் சாப்பிடவே மணி இரண்டரை ஆனது. சற்று கண்ணயர்ந்த வேளையில் “கேஸ்.. சார் கேஸ்” என்று குரல் வர வெடுக்கென விழித்துக் கொண்ட மூர்த்தி “வர்றேன்” என்றாவாறு கூடத்தில் படுத்திருந்த மாமியாரை லாவகமாகக் கடந்து போனான். காஸ் சிலிண்டரை வாங்கி வைத்த கையோடு கடிகாரத்தைப் பார்த்தான்.. மணி மூணரை. இனி எங்கே படுப்பது.. போய் மகனை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வர வேண்டும். மூர்த்தி வேகமாகக் கிளம்பினான். “என்ன ராகுலப்பா, ரேசன்ல இந்த அம்பது ரூவா சாமான்லாம் வாங்கிட்டீங்களா?” பையனை அழைத்துப்போக வந்திருந்த ராஜன் விசாரிக்க, மூர்த்தி சலிப்போடு “எங்க வாங்கறது.. மொதல் வாரம் போனா ‘அப்புறம் வா’ங்குறான். கடைசி வாரம் போனா இல்லேங்குறான். நமக்கிருக்குற வேலைல சரியா போக முடியாது.. இன்னிக்கு கூட போகலாம்னா.. மிளகா, மல்லி வேற காய வச்சிருக்கேன். கொழம்புப் பொடியே இல்ல.. அத மொதல்ல அரைச்சிட்டு வரணும்.. இன்னொரு பையனிடம் பேசிக்கொண்டே விளையாடிக்கொண்டு வந்த ராகுலைக் கண்டதும் “டேய் இங்க வாடா..” அவசரமாய் கையைப் பிடித்து இழுத்தான். கண்கள் பையன் மேல் இருந்தாலும் மனம் அடுத்த வேலையில் மூழ்கியிருந்தது. மிளகாய்த்தூள் அரைத்து வருவதற்குள் காத்திருப்பும் புழுக்கமும் இன்னொருமுறை குளிக்கலாம் போலிருந்தது.. இந்தக் களைப்புக்கு யாராவது ஒரு காபியோடு வந்து கையில் கொடுத்தால் அப்படியே கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் போல உடல் ஏங்கியது.. “காபியா போட்டிருக்க.. மணி ஆறாகுதேன்னு கேட்டேன்..” மாமியார் குரல், நினைப்பில் தீ மூட்ட.. அடுப்படிக்கு நகர்ந்தான். ஏய் காப்பி குடிச்சிட்டு.. புக்க எடுத்து வச்சு படி.. நான் காயற துணிய எடுத்துட்டு வந்துடறேன்.. இந்தாங்க.. மாமியாருக்கு காபி டம்ளரை தந்துவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்தான் மூர்த்தி. மூர்த்தி ! ஏம்பா ராத்திரிக்கு என்ன செய்யப் போற!.. சாப்பாடா? டிபனா?.. இடுப்பொடிய வேலை பார்த்துவிட்டு சற்றுநேரம் வேலைகளை மறந்து தலைசீவிக் கொண்டிருந்தவனை மரகதம்மாளின் பேச்சு எரிச்சலூட்டியது. பீறிட்டுவந்த கோபத்தை அடக்கிக் கொண்டவன் நையாண்டி தோரணையில் ஏன்! என்ன வேணும் உங்களுக்கு? என்று நேர்படவே கேட்டான். எனக்கு ஒண்ணுமில்ல.. பொழுதுக்கும் சோறு, சோறுன்னு மூஞ்சில அடிச்சமாதிரி இருக்கும்பா உன் வீட்டுக்காரி.. காலைலயே வேற மொணவிகிட்டு போனா.. அவளுக்கு பூரின்னா புடிக்கும்.. பேசாம, பூரியே போட்டுறேன்.. அவளுக்கு புடிக்குமோ, உனக்கு புடிக்குமோ! என்று வாய்க்குள்ளேயே முணகிக் கொண்டவன்.. வெங்காயத்தையும் அரிவாள்மனையையும் எரிச்சலோடு கொண்டுவந்து வைத்தான். “மர கழண்டு போச்சு.. சே!” என்று மூர்த்தி சலித்துக்கூற.. வெடுக்கென ஆனந்தம் டி.வி. தொடரில் மூழ்கியிருந்த மாமியார் திரும்பினாள். சுதாரித்துக் கொண்ட மூர்த்தி “வாங்கி ஒரு மாசம் கூட ஆகல தேங்கா துருவி கழண்டுகிச்சு..!” என்றான் மாமியாரைப் பார்த்தவாறு.. தேங்காய் துருவியையும், மருமகன் கண்களையும் மாற்றி மாற்றி பார்த்தபடி மரகதம்மாள் சந்தேகப் பார்வையுடன் டி.வி. பக்கம் முகத்தைத் திருப்பியபடியே“வாங்கறப்பவே பாத்து வாங்கலேன்னா இப்படித்தான்” என்றாள் தன் பங்குக்கு. “பாக்குறப்ப எல்லாம் நல்லாத்தான் தெரியுது.. பழகப் பழகத்தானே தெரியுது.. சுத்த வேஸ்ட்டுன்னு..” மூர்த்தியும் விடுவதாயில்லை. மரகதம்மாளும் ஏதோ கூற வாயெடுக்க.. அலுவலகப் பையைக் கழட்டிய களைப்புடன்.. சுதா வீட்டிற்குள் நுழைந்தாள். மனைவி வந்ததும் அரிவாள்மனையைப் படுக்க வைத்தபடி ஒரு டம்ளர் தண்ணீரோடு பின் தொடர்ந்தான் மூர்த்தி.. என்ன வெங்காயம் வாட வருது.. அதே கையோட தண்ணி மொண்டியா.. கைய கழுவிட்டு வேற எடு.. அய்யோ!.. என்று தலையில் தட்டிக் கொண்டாள். அப்பாடா இந்த பஸ்ல வர்றதுக்குள்ள உடம்பே விண்டு போவுது.. என்று அவள் முடிப்பதற்குள் கூடத்தில் டி.வி.க்கு நேராக ஈஸி சேரை தயாராக வைத்தான் மூர்த்தி. டி.வி.யின் ஆனந்தத்தில் அவளும் பங்கெடுத்துக் கொண்டாள். பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு கண் எரிச்சல் தந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவள் “அறிவில்ல இப்பதான் அலுத்துப் போயி வந்து உட்கார்ந்துருக்கேன்.. பக்கத்துல உக்காந்து வெங்காயம் நறுக்குறியே.. கண் எரியுதுல்ல.. இதைக் கூட சொல்லணுமா.. எடு .. அந்தப் பக்கம்.. போ உள்ளாற.. சத்தமாகக் கத்தினாள். அதானா.. நான் கூட ரொம்ப நேரம் டி.வி. பாக்குறோமே, அதான் கண் எரியுதோன்னு பார்த்தேன்.. ஏம்பா அந்த வெங்காயத்த தண்ணியில போட்டு நறுக்கக் கூடாது.. மாமியாரும் சேர்ந்து கொண்டாள். டி.வி. பார்க்கும்போது குறுக்கே மிக்சி போட்டால் வேறு மனைவிக்கு கோபம் வரும் என்பது தெரிந்ததால்,துருவியவைகளை அரைக்காமல், முதலில் தயார்செய்து வைத்திருந்த பூரிமாவை வட்டவட்டமாக பூரிக்கட்டையால் தேய்க்கத் தொடங்கினான். கூடத்தில் உட்கார்ந்தாலாவது கொஞ்சம் காற்றோட்டம் வாய்த்திருக்கும்.. ஆறுக்கு மூணு அடுப்படியில் புழுங்கித் தொலைத்தது, முதுகுத்தண்டில் வலி ஊர்ந்தது. அவனைப் பார்த்து பரிதாபப்பட்ட மாதிரி பூரிமாவு அவன் இழுத்த இழுப்புக்கு கொஞ்சம் இணங்கி வந்தது. என்ன ரெடியா? மொதல்ல அவனுக்கு வையி.. மகனுக்கு கேட்கும் சாக்கில் அடுப்படி நிலவரத்தை ஆராய்ந்தாள் சுதா. தோ குருமா.. ரெடியாயிடுச்சு.. ராகுல் தட்டில் ஆவி பறந்தது. பூரியும், குருமாவும் அப்படியே எனக்கும் வச்சிடேன்?.. தோ எடுத்துட்டு வர்றேன்.. மனைவிக்கு கருகாமல் எடுக்க வேண்டுமே என்ற பயத்துடன் கொதிக்கும் எண்ணெயிடம் இரக்கம் வேண்டியவனைப் போல பார்த்தான் மூர்த்தி. இந்தாங்க.. சுதாவுக்கு பூரி வைத்த வேகத்தில் அடுப்படிக்கு ஓடினான். “தண்ணி உங்க அப்பன் வைப்பானா?தண்ணி வக்கிற பழக்கமே கிடையாது.. வளர்த்திருக்காங்க பாரு.. சுதா முன்பு பதட்டத்துடன் வந்து டம்ளரை வைத்தான். சுடச்சுட நாலு பூரியை அமைதியாக விழுங்கியவள், “ஊம் இது என்ன குருமாவா சரவண பவன்ல வெக்கறானே அது எப்படி இருக்கு? அவன் மட்டும் என்ன வானத்துலேர்ந்து வர்ற பொருளை வச்சா செய்யுறான்.. உனக்குந்தான் எல்லாப் பொருளும் வாங்கித் தர்றேன்.. ஒரு டேஸ்ட் இல்ல. நீ எல்லாம் டிபனுக்கு லாயக்கில்ல… வேஸ்டு… பேசாம சோறு பொங்க வேண்டியதுதான்.. அதுக்குத்தான் லாயக்கு.. எங்க சோறு இருக்கா? அதையாவது தின்னு தொலைக்கலாம்.. சுதாவின் கோபம் பூரி போடுகையில் கையில் தெறித்த எண்ணெயை விட மூர்த்தியின் மேல் தனலாக விழுந்தது. அய்ந்தாறு பூரி தின்ற பிறகு வழக்கம்போல அவள் இப்படி ஆரம்பிப்பாள் என்று தெரிந்து, ஏற்கெனவே அவன் கொஞ்சம் சோறு செய்திருந்தது நல்லதாகிப் போனது. ஏதோ வேண்டா வெறுப்பாகச் சாப்பிட்டதைப் போல முழுச் சோற்றையும் சாப்பிட்டாள் சுதா.. சாப்பிட்டு முடித்து அடுத்து வெற்றிலை பாக்கைப் போடுபவள் போல.. டி.வி.க்கு நேராகப் போய் ‘அரசி’ ராதிகாவின் வசனத்திற்கு ஏற்ற மாதிரி வாயை அசைத்துக் கொண்டு கிடந்தாள். ஒரு இடத்தில் ராதிகா தேசப்பற்றோடு வசனம் பேச தன்னையறியாமல் கொட்டாவி விட்டபடி படுக்கைக்குப் போனாள். மாமியாரும், மகனும் கூட படுத்துவிட்ட கூடத்தில் ‘அரசி ராதிகா’ தனியாகப் பேசிக் கொண்டிருந்தாள். டி.வி.யைக் கூட யாரும் அணைக்கவில்லை. அடுப்படியில் எந்த சுவாரசியமும் இல்லாமல் ஒரு பாத்திரம் விடாமல் துலக்கி வைத்தான் மூர்த்தி.. பொத்தென்று விழுந்து படுத்தால் தேவலாம் என்று நினைத்தான். மனைவிக்கு கால் அமுக்காவிடில் அதன் பாதிப்பு மறுநாள் பேச்சில் வரும் என்பதால்.. சுதாவின் கால்களைப் பக்குவமாகப் பிடித்துவிட்டான். இதமாக இருக்க.. அப்பா அப்படித்தான் இந்தக் காலையும் புடி.. என்று புரண்டு படுத்தாள் சுதா.. தூக்கத்தை விடுத்து அமுக்கிவிடச் சொல்வதிலேயே குறியாக இருந்தாள் .. ஏய்! அதே இடத்துலேயே அமுக்குறீயே.. ஒருநாள் சொன்னா தெரியாதா.. இந்தப் பாதத்தைப் புடியேன்.. தானா அறிவா யோசிக்க மாட்டியா!.. கண்களைப் பிசைந்த தூக்கத்தைக் கலைத்தபடி அவள் சொன்னபடியெல்லாம் கைகளை அழுந்தினான். அப்படித்தான்.. ரெண்டு நாளா அந்தப் பையன் டவுசர்ல பட்டன் இல்லாம.. ஊக்க மாட்டி வுடறியே ஒழிய.. சும்மா இருக்குற நேரத்துல அதை தச்சி வைக்கக் கூடாது.. இல்ல டெய்லர்கிட்ட தரக்கூடாது.. எல்லாம் உனக்கு சொல்லணும்.. என்ன மூளையோ.. சுதா பொரிந்து தள்ள.. அழுகை பீறிட்டது மூர்த்திக்கு.. காலைலேர்ந்து படுக்குற வரைக்கும் உடம்பு நோவுது.. ஒரு நேரம் ஓய்வில்ல.. ஆள் வைக்காமல் அவ்ளோ வேலை பாக்குறேன்.. உங்களுக்கு இரக்கமே இல்லையா.. சும்மா இருக்குறப்பன்னு சொல்றீங்களே.. எப்போ சும்மா இருக்குறேன் சொல்லுங்க.. மறுமொழி பேசியதுதான் தாமதம், சுதாவுக்கு சூடு ஏறியது. “ஓகோ! அப்ப நான்தான் சும்மா இருந்தனா.. இதுல எனக்கு இரக்கம் வேற இல்லாம வேல வாங்குறனா!.. திமிரு அதிகந்தான் ஆயிடுச்சு.. வாய்க்கொழுப்ப கொறச்சா சரியா போயிடும்.. விடு கால..” என்று கடுப்போடு ஓங்கி ஒரு உதை உதைத்தாள். அந்த உதை நெஞ்சில் நங்கென்று விழ.. நிலை குலைந்த மூர்த்தி ‘ஆ’ என்று அலறியே விட்டான். மூர்த்தியின் அலறலைக் கேட்டு பதட்டத்துடன் கணவன் அருகே வந்தாள் சுதா. கையில் கொண்டு வந்த பால் டம்ளரை தள்ளி வைத்துவிட்டு, கணவனின் தோளை உலுக்கியபடி என்னங்க.. என்னங்க.. என்று எழுப்பினாள். வெடுக்கென்று தூக்கத்தில் இருந்து விழித்த மூர்த்தி ஒருவாறு பிரமை பிடித்தவன் போல மனைவியை உற்றுப் பார்த்தான். கண்களைக் கசக்கியபடி மீண்டும் இமைகளை உதறி ஏதோ எல்லாம் தலைகீழாய் மாறிப்போனது போல அதிர்ச்சியடைந்தவன் சுற்றுமுற்றும் பார்த்தபடி மனைவியை வெறித்தான். “ஏங்க, என்னங்க ஆச்சு.. ஏன் அலறுனீங்க? தூக்கத்துல ஒரே சத்தமா கத்துனீங்க.. ஏதாவது கெட்ட கனவா.. என்றபடி ஆதரவாக அவன் கைகளைப் பிடிக்க, இவ்வளவு நேரம் நடந்ததெல்லாம் கனவுதான் என்ற புரிதல் மூர்த்திக்கு வந்தது. இருந்தாலும் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் அவன் கண்களில் பீதி உறைந்திருந்தது. சரி, சரி எதாவது பயந்தா கொணமா இருக்கும்.. நான் வேலைய முடிச்சுட்டு வர்றதுக்குள்ள தூங்கிட்டீங்க. இந்தாங்க இந்தப் பாலைக் குடிங்க.. என்று டம்ளரை எடுத்தவள், “அய்யய்ய, பால் திரிஞ்சிடுச்சு.. இருங்க வேற ஆத்தி எடுத்துட்டு வர்றேன்” என்று அவனிடம் ஆறுதலாகப் பேச அவனோ ஏதோ யோசித்தவன் போல “பரவாயில்ல.. கொடு..! கொடு” என்று அவள் முகத்தையே வெறித்தபடி டம்ளரை வாங்கப் போனான். அவனுடைய நடவடிக்கை விசித்திரமாகப்பட, லேசான சிரிப்புடன், “என்ன கனவு கண்டதுல ஆளே மாறிட்டீங்களா.. நல்லா கத்துனீங்க. இருங்க வேற கொண்டாறேன்’’, என்றபடி நகர்ந்தாள். மனைவி சென்றதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. அப்பாடா நல்லவேளை கனவு என்பது போல விழித்தான். · துரை. சண்முகம், ______________________________________ புதிய கலாச்சாரம் மே 2009 ______________________________________ 39 ஒரு மல்டிலெவல் மார்க்கெட்டிங்கின் மனக்கோணங்கள்! [mlm1]தன்னைத் தவிர முழு உலகமும் சுறுசுறுப்புடன் இயங்குவதாக காட்சியளிக்கும் மாநகரத்தின் ஞாயிற்றுக் கிழமையை செய்தித்தாள் போடும் சிறுவர்கள் தூக்கம் கலைந்த வேகத்துடன் எழுப்பிக் கொண்டிருந்தனர். படுக்கையில் இருந்த வெங்கட்ராமன் விழித்தபோது மணி சரியாக ஆறு. அலாரமில்லாமல் டாணென்று எழுந்து விடுவதாக சிலர் பீற்றிக் கொள்வதைப் போல அவர் பெருமையடிக்கமாட்டார் என்றாலும் அப்படித்தன் கச்சிதமாக எழுந்திருப்பார். சில நாட்களில் பேப்பர் பொத்தென்று விழும் சப்தமும் வெங்கட்ராமன் துயிலெழும் மூகூர்த்தமும் சொல்லி வைத்தாற் போல பொருந்தி வரும். இன்றும் பொருந்தித்தான் வந்தது. பல் துலக்கியவாறே ஓய்வுநாள் தரும் துவக்கக் களிப்புடன் தலைப்புச் செய்திகளை மேய ஆரம்பித்தார். வாரநாட்களில் சில மணித்துளிகளில் வாசிப்பை முடித்துவிடுபவர் விடுமுறை நாளில் மட்டும் சற்று அதிக நேரம் படிப்பார். காலை உணவு முடிந்ததும் இணைப்பில் உள்ள துணுக்குமூட்டையை கிரகிப்பதும், குறுக்கெழுத்துப் போட்டியை பக்கத்துவீட்டு ராமானுஜம் முடிப்பதற்குள் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு செய்து விடுவதும், தெரியாத ஒன்றிரண்டு கேள்விகளுக்காக வரும் ராமானுஜத்திடம் பரவசத்துடன் பதிலை விவரிப்பதும் …எப்படியோ நாற்பத்தைந்து வயதைக் கடந்து விட்டார் வெங்கட்ராமன். ஆனால் இன்றைக்கு மட்டும் ஏதோ இந்த நாள் ஒரு நல்ல நாள் என்பதுபோல ஒரு மனக்குறிப்பு குதூகலத்துடன், சிந்தனையில் அவர் அறியாமலேயே ஓடிக்கொண்டிருந்தது. வழக்கமான வீட்டுக் காட்சிகளையும், குடும்பத்தினரையும் ஒரு விசேசமான பாசத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார். பற்பசையின் காரம் ஏறியதால் தும்மியவர் தினசரியையும் ஒரு உலுக்கு உலுக்க அதிலிருந்து  ஆர்ட் பேப்பரில் ஒன்றுக்கு நான்கு சைசில் அழகாக அச்சிடப்பட்ட ஒரு விளம்பரப் பிரசுரம் கீழே விழுந்தது. விற்பனை, வாடகை, காப்பீடு, கடன் போன்றவற்றின் போக்கை அறிந்து வைத்திருக்க வேண்டியதை அவசியமாகக் கருதும் எல்லா நடுத்தரவயதுக்காரர்களைப் போல அவரும்  நாளிதழின் விளம்பரங்களையும், வரி விளம்பரங்களையும் இரவு நேரத்தில் இம்மியளவு விடாமல் படிப்பவர்தான் என்றாலும் விழுந்த துண்டுக் காகிதம் ஏதோ ஒரு நல்ல செய்தியை தூதேந்தி கொண்டுவந்திருப்பதாக ஒரு நம்பிக்கை. வழக்கத்துக்கு மாறாக கணவனது முகத்தில் ஒரு துளி மலர்ச்சி பூத்திருப்பதை, அது விடுமுறைக்கானதல்ல, வேறொன்றோடு தொடர்புடையதென அவதானித்த மாலதி குறுஞ்சிரிப்புடன் காபியைக் கொடுத்தாள். என்ன இருந்தாலும் நாளைக்கு இந்த முகம் எப்படியிருக்கும் என்பதையும் நினைத்துப் பார்த்ததால் வந்த சிரிப்பு அது. தனக்கு ஓய்வின்றி பணிவிடை செய்யும் அந்த ஜீவனுக்கு பார்வையிலேயே கணிசமான அளவில்  நேசத்தைத் தெரிவித்தவர் நாற்காலியில் அமர்ந்து பருகியவாறு அந்த விளம்பரத்தை படிக்க ஆரம்பித்தார். எப்போதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமையில் காப்பியை ருசித்தவாறே விருப்பமான விளம்பரங்களை படிப்பது அமையும். காப்பியின் மணமும் விளம்பரத்தின் நம்பிக்கையூட்டும் செய்தியும் ஒன்றிணையும் போது கிடைக்கும் அந்த சுகமே அலாதியானதுதான். அதுவும் அனுபவித்தவர்கள் மட்டுமே உணரக்கூடிய அற்புத சுகம். ” நீங்கள் ஒரு பெர்ஃபக்க்ஷனிஸ்ட்டா? அப்படியெனில் உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.” “வரவுக்கும் செலவுக்கும் வழிதெரியாமல்  புழுங்கிக்கொண்டிருக்கும் தோல்வியடைந்த மத்தியதர வர்கக்த்தினரின் கூட்டத்தில் செலவையும் சேமிப்பையும் புத்தாக்க உணர்ச்சியுடன், புதுமை தாகத்துடன், யாருமறியா விவேகத்துடன் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், ஆம் நண்பரே உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.” “ஒரு வருடத்தில் கார், இரண்டு வருடத்தில் வீடு, ஐந்து வருடத்தில் நீங்கள் ஒரு முதலாளி, பத்து வருடத்தில் பல இலட்சங்களுக்கு சொந்தமான மில்லியனர்….இவையெல்லாம் மற்றவர்களுக்கு வேண்டுமானால் கனவாக இருக்கலாம். உங்களைப் போன்ற இலட்சியவாதிகளுக்கு இவை நிறைவேறப் போகும் நனவு, அதற்குத் தேவையான ஆற்றலும், திறமையும், துடிப்பும், வேகமும், நிதானமும், துணிச்சலும் உங்களிடம் ஏராளமிருப்பது குறித்து எங்களுக்குத் தெரியும்,” காப்பியை மணத்துடன் பருகத் துவங்கிய வெங்கட்ராமனுக்கு திடீரென மூளை பிரகாசமாக எரிவது போல ஒரு உணர்வு. சிந்தனை ஒருமையடைந்து ஒரு தூயவெளிச்சத்தில் நினைத்தது பலித்ததால் வரும் பரவச உணர்வு. இப்பொது அவருக்கு காப்பி தேவைப்படவில்லை. மேலே படிக்க ஆரம்பித்தார். ” வெள்ளமெனப் பாயும் உங்கள் முனைப்புக்கு ஒரு அணைகட்டி, தேக்கி நிறுத்தி, புதிய வேகத்தில் திறந்து விட்டு பெரும் சக்தியை உருவாக்குவதுதான் எங்கள் வேலை. நாடெங்கும் உள்ள எங்கள் கிளைகள் மூலம் பல மில்லியனர்களை இப்படித்தான் உருவாக்கியிருக்கிறோம். இது விளம்பரத்திற்காகச் சொல்லப்படும் பீடிகையல்ல. அந்த சாதனையாளர்களில் சிலரை நாளைய சாதனையாளரான நீங்களும் இன்றே சந்திக்கலாம். எங்கள் மின்னல் வேக சங்கிலித் தொடர் திட்டத்தின் மகிமையை நேரடியாக உணர, பங்கேற்க, சாதிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம். இடம்: கமலா திருமண மண்டபம். நேரம்: காலை 10.30 மணி. ” ….அப்புறம் செல், லேண்ட்லைன், மெயில், ஃபேக்ஸ், கிளைகளின் முகவரிகள், இணைய தளம் அத்தனையும் நேர்த்தியாக இடம்பெற்றிருப்பதை கவனித்த வெங்கட்ராமனிடம் ஏதோ ஒருபெரிய நல்லது நடக்கப்போவது போல உள்ளுக்குள் பட்சி கூவிக்கொண்டிருந்தது. விளம்பரப் பிரசுரத்தை நேர்த்தியாக மடித்தவர் கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்தார். ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் காசளராக இருபதாயிரம் சம்பளத்தில் பதினைந்து ஆண்டுகளாக பணி, பள்ளியிறுதி ஆண்டில் படிக்கும் பையன், ஆறாவதில் படிக்கும் மகள், இன்னும் பத்தாண்டுகளில் இவர்களுக்கு ஆகப்போகுப் கல்விச் செலவு, திருமணச் செலவு, புறநகரில் வாங்கிப்போட்ட இடத்தில் வீடு கட்டவேண்டிய திட்டம், அவ்வளவாக வசதியில்லாத மனைவியின் வீட்டார், எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் சேமிக்க முடியாத அவதி, காப்பீடு, வாகனக்கடன், என்று மாதம் விழுங்கக் காத்திருக்கும் தவணைகள், ஏதோ வாங்கிவைத்த சில பங்குகளின் பெயருக்கு வரும் கழிவுத் தொகை….. இந்த எல்லையை எப்படித் தாண்டுவது? அதிகாலையில் ஆரம்பித்த உற்சாகம் சுருதி குறைவது போல இருந்தது. இல்லை, இந்தக் கூட்டத்திற்கு போய்த்தான் பார்ப்போமே…ஏதாவது நல்லது நடக்கலாமே… [mlm]மீண்டும் உற்சாகத்தை  வரவழைத்தவர்  குளித்து ரெடியானார். நிதானமாக சுவைத்து உண்ணக்கூடிய அடைத் தோசையை அந்தக் கூட்டத்தின் காட்சியை நினைத்தவாறு வேகமாக உள்ளே தள்ளினார். கணவன் ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை உணர்ந்து கொண்ட மாலதி அடுத்த அடையை வைத்து வற்புறுத்தவில்லை. பத்து மணி ஆனதும் பதட்டமடைந்தார். மண்டபம் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரம்தான் என்றாலும் நேரத்திற்கு இருக்கவேண்டுமே, இல்லையென்றால் நடக்கப்போகும் நல்லவற்றில் ஏதேனும் இழந்து விட்டால்? பீரோவில் இருந்த உடைகளில் சிறப்பானவற்றை எடுத்து அணிந்து கொண்டார். வழக்கமாக எதையாவது உடுத்திக் கொண்டு செல்பவரிடம் அந்த விளம்பரப் பிரசுரம் ஏற்படுத்தியிருந்த மாற்றத்தை அறிந்திராத மாலதி குழப்பமடைந்தாள். இப்போது எதுவும் சொல்லக்கூடாது எல்லாம் நல்லது நடந்த பிறகுதான் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற உறுதியுடன்,” ஒரு வேலையா வெளிய போறேன், மதியம் சாப்பாட்டுக்கு வந்துருவேன்”, காலணி போட்டுக்கொண்டிருந்தவரை ராமானுஜம் மறித்தார். சட்டென்று ஒரு சந்தேகம்…ராமானுஜமும் அந்த விளம்பரத்தைப் பார்த்திருப்பாரோ…என்ன இருந்தாலும் அவர் கூடப் போவதில் சம்மதமில்லை…இல்லையில்ல…கையில் இருக்கும் வாரமலரைப் பார்க்கும்போது சமாதானமடைந்தவர் பிறகு பேசலாமென்று நடையைக் கட்டினார். முதல் அபசகுனத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டவர் இன்றுதான் புதிதாய்ப் பிறந்தோமென்ற நம்பிக்கையுடன் உறுதியாக அடிகளை பதித்தவாறு நடந்தார். கண் தொலைவில் தெரிந்த மண்டபத்தில் பெரும் கூட்டம் காத்திருந்தது. அவர் அவசரமாக சென்றுவிட்டதால் அவரது வாரிசுகளை இங்கே அறிமுகம் செய்ய முடியவில்லை. கல்யாணம் போல கூட்டம் களை கட்டியிருந்தாலும் உணர்ச்சி மங்களத்தில் ஒரு தொழிற்திறம் தூக்கலாக இருந்தது. வரவேற்புக்காக நின்றிருந்த பட்டாடை உடுத்திய மங்கைகள் வந்தோரை உற்றார் உறவினராய் பாவித்து செயற்கையாக இல்லாமல் அன்யோன்யமாக அழைத்தார்கள். ஆனால் வந்தவர்களெல்லாம் உண்மையில் அப்படி பழகியவர்கள் இல்லையென்பதால் செயற்கையாக சிரித்துவிட்டு சற்று தயக்கத்துடன் நுழைந்தார்கள். நிச்சயமாக வெங்கட்ராமன் அப்படி இருமனதாக நுழையவில்லை. தீர்மானகரமான நம்பிக்கையுடன் நேர்த்தியாக சென்று அமர்ந்தார். வந்தவர்களில் பலரகம் இருந்தார்கள். தன்னைப் போல மாத சம்பளக்காரர்கள், சில வியாபாரிகள், ஏன் சில பெண்களும் கூட கூட்டத்தில் இருந்தார்கள். தனக்கு தெரிந்தவர் யாரும் இருக்கக்கூடாது என்ற பதட்டத்துடன் நோட்டமிட்டவர் தனது நோக்கத்தில் வெற்றிபெற்றதும் இருமடங்கு அமைதியுடன் மேடையை நோக்கினார். அரங்கைச் சுற்றிலும் விழியை இழுக்கும் பிளக்ஸ் பேனர்களில் மின்னல் வேக சங்கிலித் தொடர் திட்டத்தின் செயல் முறைகள், வென்றவர்களின் கதைகள், சாதனைகள், சில ஆண்டுகளிலேயே இலட்சாதிபதியானவர்களின் வாக்குமூலங்கள்…… சற்று முன்னால் வந்து எல்லாவற்றையும் நிதானமாக பார்த்திருக்காலாமோ …. சரி கூட்டம் முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம், பணவிவகாரத்தில் கிடைக்கும் எதனையும் அறிந்து ஆயத்தமாவதில் சுணக்கம் கூடாது … அவரது விழிப்பு நிலையை மேடையிலிருந்து வந்த ஒரு இனிய குரல் வழிமறித்தது. அந்தப் பெண்ணுக்கு  25 வயது இருக்கலாம். ஒரு நம்பிக்கையும், நிதானத்தையும் கலந்து வரும் ஆளுமைக்கேற்ற அழகு உடையுடன் தோற்றமளித்தவள் எல்லோரையும் சிரித்தவாறு வணங்கிவிட்டு பேச ஆரம்பித்தாள். ” உங்கள் எல்லோருக்கும் ஒரு பரிசை இப்பொதுதான் வழங்கியிருக்கிறேன். பதிலுக்கு நீங்கள் யாரும் எதுவும் தரவில்லையே” கூட்டம் என்னவென்று தெரியாமல் விழித்தது. ” என் புன்னகையை அளவில்லாமல் உங்களுக்கு வழங்கியிருக்கிறேன், பதிலுக்கு நீங்களும் தரலாமே”….இந்த அமர்க்களமான ஓப்பனிங்கில் மனதை இழந்த கூட்டம் வெகுநேரம் கைதட்டியது. மற்றவர்கள் போல உணர்ச்சிவசப்படாத வெங்கட்ராமன் கைதட்டாமல் அமைதியாக ஆனால் உற்சாகமாக இருந்தார். மேடையில் கோட்டு சூட்டு போட்ட ஒரு முன் வழுக்கைக்காரரை நிறுவனத்தின் எம்.டி என்று ஆரம்பித்து பலரையும் அறிமுகம் செய்தவள், மின்னலின் வரலாற்றை  அருவியாய் மனதில் பதியும் வண்ணம் தெரிவித்தாள். அடுத்து எம்.டி, மின்னலின் செயல்முறைகளை பாதி புரிந்தது போலவும், மீதி இனிமேல் புரியும் என்று நம்பும்படியும் விளக்கினார். பத்தாயிரம் வைப்புத் தொகையுடன் உறுப்பினராக சேரும் ஒருவர் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலமென மூவரை புதிய உறுப்பினராக சேர்க்கவேண்டும்; இதில் முறையே 20,30,40 சதவீதம் கழிவாகத் தரப்படும்; இந்த மூவரும் அடுத்த ஜோடிகளை சேர்த்தால் இந்தக் கழிவில் பாதி கிடைக்கும்; ஒருவர் ஆரம்பித்து வைத்த சங்கிலி 100 நபர்களை இணைத்தால் போனசாக ஒரு லட்சம் கிடைக்கும். ஆயிரமாகப்பெருகினால் பத்து இலட்சம். இப்படி ஒரு வருடத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? எண்களுக்கு ஏது முடிவு….கூட்டம் கணக்கில் மனதை பறிகொடுக்க வெங்கட்ராமன் மட்டும் தனக்கு தெரிந்தவர்களின் பட்டியலை நம்பிக்கையுடன் திட்டத்தில் போட்டு யோசிக்க ஆரம்பித்தார் … தொழிலின் கட்டமைப்பு நன்றாகத்தான் இருக்கிறது…எனினும் இவர்கள் எப்படி நம்புவது? [pyramid]நம்பிக்கையை ஊட்டிவிடும் வகையில் அந்த தொகுப்பாளினி விதவிதமான தோற்றத்தில் சிலரை அறிமுகம் செய்து வைத்தாள். அதில் கோட்டு சூட்டு போட்டவர், வேட்டி சட்டைக்காரர், நடுத்தரவயதில் ஒரு பெண்மணி என்று ஆளுக்கொரு விதத்தில், பெயருக்கொரு மதத்தில் கோவை, நெல்லை, மதுரை, தஞ்சை என எல்லா வகைத் தமிழிலிலும் தாங்கள் வெற்றி பெற்ற கதையை சுவாரசியம் கலந்த புள்ளிவிவரத்துடன் சொன்னார்கள். அதிலும் கோட்டு சூட்டு போட்டவர் உறுப்பினராகி இரண்டு வருடத்தில் 40 இலட்சம் சம்பாதித்திருப்பதாக கோவைத் தமிழில் சொன்னது எல்லோரையும் ஆச்சிரியப்படவைத்ததோடு நம்பிக்கையின் பிரஷரை நன்கு ஏற்றவும் தவறவில்லை. ஒரு மண்ணின் மொழியில் ஒருவர் ஏமாற்றும் விதத்தில் பேச முடியாதே? ஏமாற்ற வேண்டும் என்று வந்து  விட்டாலே மொழி செயற்கைத் தன்மை அடைந்து காட்டிக் கொடுத்து விடாதா என்று நாம் தான் கதையில் எழுதுகிறோமே அன்றி கூட்டம் அப்படி ஏதும் ஆராய்ச்சி செய்யவில்லை என்பதோடு அந்த தேவ சாட்சியங்களை ஆச்சரியத்துடன் பார்த்தது. வெங்கட்ராமனின் மனதில் இன்னமும் சந்தேகம் இருக்கிறதா, இல்லையா என்று ஊகித்தறிய முடியவில்லை.  சாட்சியங்கள் அரங்கேறிய சமயத்தில் சரவணபவனில் இருந்து வரவழைக்கப்பட்ட உளுந்த வடையும், டிகாஷன் காபியும் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. இது ஏதோ கடமைக்கு கொடுக்கப்பட்டதைப் போல இல்லாமல் அந்த வரவேற்பு அழகிகள் மனதார ஒருவர் விடாமல் கொடுத்து உபசரித்தார்கள். இந்த இனிய உபசரிப்புக்காகவே பலரும் மறுக்காமல் வாங்கிக் குடித்தார்கள். அதில் வெங்கட்ராமனும் உண்டு என்பதை ஈண்டு விளக்கத் தேவையில்லை. ஆனாலும் அப்போதும அவர் ஒரு நிதானத்துடனே யோசித்தவாறு இருந்ததால் மற்றவர்களைப்போல அவரை யாரும் ஏமாற்றி விட முடியாது என்பது போலவும் காட்சியளித்தார். அடுத்து, வந்திருந்த மக்கள் கேள்வி கேட்கலாம் என்று அறிவித்தார்கள். பலர் பலமாதிரி, யதார்த்தமாகவும், ஊகத்தின் அடிப்படையிலும் தினுசு தினுசாகக் கேட்டார்கள். இதற்கு எம்.டி சளைக்காமல் பல கோணங்களில் பதிலளித்தார். இறுதியாக “இன்னமும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையென்றால் வீட்டிற்கு சென்று நிதானமாக யோசித்து விட்டு முடிவெடுக்கலாம். உங்களுக்காக நாங்கள் எப்போதும் காத்திருப்போம், வாய்ப்புக்களை தவற விடாதீர்கள்” என்று அந்த வழுக்கை மனிதர் பேசியது மட்டும் வெங்கட்ராமனுக்கு பிடித்திருந்தது. வந்தவர்கள் உறுப்பினர் விண்ணப்பத்தை ரூ.1000 கொடுத்துவிட்டு வாங்கிச் செல்லுமாறும், பின்பு அவர்கள் சேரும்போது வைப்புத்தொகையில் இந்தக் கட்டணம் கழித்துக் கொள்ளப்படும் என்றும் அந்த புன்னகை அழகி சொல்லி முடிப்பதற்குள் விண்ணப்பங்களை வைத்திருந்த கரங்கள் இருக்கைகளைத் தேடி வந்தன. பலரும் ஆயிரம் ரூபாய்தானே என்று வாங்க ஆரம்பித்தார்கள். வெங்கட்ராமன் இன்னமும் முடிவு செய்யவில்லை, விண்ணப்பத்தை வாங்குவதா, இல்லையா என்று. டை கட்டிய சீருடை இளைஞர்கள் ஒவ்வொரு வரிசையாக சென்று வழங்குவதைப்போல திணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்த தோரணையைப் பார்த்தால் அவர்கள் யாரிடமும் கேட்கவில்லை, சற்றே நாசுக்கான அதிகாரத்துடன் பேப்பரை நீட்டினார்கள் என்றும் சொல்லலாம். அவர் முறை வரும்போது வெங்கட்ராமன் குழம்பியவாறு ஏதோ வேண்டாமென திடீரென்று எழுந்து விட்டார். அதுவும் அவர்கள் கொடுத்த காபி, வடையை அருந்தியிருக்கிறோமே என்ற தர்மசங்கடத்தால் வந்த குழப்பம். இதுவும் திட்டமிட்டு நடக்கவில்லை, ரொம்ப தற்செயலாக நடந்தது . எழுந்தவரிடன் ஒரு பெரிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டோமோ என்ற எண்ணம் ஓடாமல் இல்லை. இருந்தாலும் வேறு ஒரு சக்தியால் இயக்கப்படுபவர் போல வாசலை நோக்கி விரக்தியுடன் நடந்தார். இறுதியடியில் வெற்றி வாய்ப்பை தவறவிடுபவன் போலவும் அவரின் தோற்றம் இருந்தது. இதுவா, அதுவா என்று பிரித்தறியமுடியாத இருமை கலந்த ஓர்மையில் யந்திரமாய் இயங்கினார். இப்போது வாயிலில் அழகிகள் இல்லை, சபாரி அணிந்த மூன்று குண்டர்கள் வாட்டசாட்டமாய் கையில் லாக்கப் வளையம் போல விண்ணப்பங்களின் கத்தை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். ” என்ன சார், கூட்டம் இன்னம் முடியலையே, முடிச்சுட்டு போகலாமே”  அதட்டலாக கேட்டவன் அவர் கையில் ஒன்றைத் திணித்தான். வயிற்றில் பதட்டமும், பயமும் மேலெழும்ப …”இல்ல வேணாம்.. இருக்கட்டும் ‘என்றெல்லாம் முயன்றவர் வேறு யாராவது தன்னைப் போல வருவார்களா அவர்களை அணிசேர்த்து வெளியேறிவிடலாம் என்று திரும்பிப்பார்த்தவரை ஒரு சபாரி கனைத்தவாறு புருவத்தை சுளித்தான். மறுபேச்சு இல்லாமல் பர்ஸை எடுத்தவர் இரண்டு 500 ரூபாய்த் தாளைக் கொடுத்து விட்டு பிழைக்கத் தெரியாத ஒரு பிள்ளையப் போல தேங்கித் தேங்கித் நடக்க ஆரம்பித்தார். பலரும்தான் விண்ணப்பத்தை வாங்கியிருக்கிறார்கள்…ஏன் எதிர்மறையாக சிந்திக்க வேண்டும்….இருக்கையிலேயே தெளிவாக வாங்கியிருக்கலாமே… இல்லையில்லை…சிலர் வாங்காமலும் சென்றார்கள்…அதுதான் சரியானதா…திரும்பிச் சென்று பணத்தை திருப்பிக் கேட்கலாமா…ஆயிரம் ரூபாய்க்காக விதவிதமான வீட்டுச் செலவுகள் காத்திருக்குமே…மண்டபத்தில் நம்மைத் தவிர மற்றவர்கள் இன்னமும் நம்பிக்கையை அறிவிக்கும் வண்ணம் சப்தமாய் பேசிக் கொண்டிருக்கிறார்களே….ஒருவேளை சேர்ந்துதான் பார்ப்போமே…நம்பிக்கையில்லாதவன் பணத்தை எந்தக் காலத்திலும் சம்பாதித்ததே இல்லை… அந்த குறுகிய தருணத்தில் இருதரப்பு வாதங்களும் அவரை அமைதியடையச் செய்யவில்லை. எல்லாவற்றையும் விட ஆயிரம்ரூபாயை கொடுத்துவிட்டோம் என்ற உண்மை வழியை மறிக்கும் எமன் போல நினைவூட்டிக் கொண்டே இருந்தது. கடைசியில் இழந்ததுதான் மிச்சமென குற்ற உணர்வு மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. மண்டபத்தின் வெளியே வந்தவர் யாரும் தெரிந்தவர்கள் நம்மை  பார்த்துவிட்டார்களா என்று அலசத் தொடங்கினார். ஒருக்கால் தெரிந்தவர்களுடன் வந்திருந்தால் பேசிவிட்டு ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கலாமோ…விண்ணப்பத்தின் கட்டணத்தை 500 ரூபாயாக வைத்திருக்கலாம்..ஒரேயடியாக ஆயிரம் என்பதுதான் இவ்வளவு யோசிக்கவைக்கிறது…. அந்த ஞாயிற்றுக் கிழமையின் இனிய ஆரம்பம் மின்னல் போல சட்டென முடிவுக்கு வந்தது. இனித்த போது வேகமாகச் செல்லும் பொழுதுகள் வெறுக்கும் போது அணுஅணுவாய் நகர்ந்து சித்திரவதை செய்கிறது. இனி அவரது வாழ்வில் கமலா திருமண மண்டபத்தை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை, அதற்கு துணிவில்லை என்பதுபோல அவரது முகம் வாடிவிட்டது. காலையில் இருந்த தெளிவான மனநிலையின் மேல் இப்பொது வகைதொகையில்லாமல் கோபம் பீறிட்டு வந்தது. அது அநேகமாக மாலதியிடம் மட்டும் வெடித்து விட்டு அடங்கும் வல்லமை கொண்டது. எதையும் கோர்வையாக சிந்திக்கும் ஆற்றலை இந்த துயரமான தருணத்தில் இழந்தவர் ஏதோ ஒரு சுவரொட்டியில் ஒரு எண்ணைப் பார்த்ததும் கனவில் விழித்தவனைப் போல தலையை உலுக்கி விட்டு யோசிக்க ஆரம்பித்தார். வேறொன்றுமில்லை, இருபது வருடங்களாக எண்களோடு புழங்குவதையே வேலையாகக் கொண்டவர் ஆயிற்றே….கணக்குப் போட்டுப்பார்த்தார். 500 தலைகளை ஆயிரம் ரூபாயினால் பெருக்கினால் மொத்தம்  5,00,000 ரூபாய். மண்டபத்துக்கு 30,000, சரவணபவனுக்கு அதிகபட்சம் ரூ.20 வைத்தால் கூட 10,000, அப்புறம் அழகிகள், சபாரிகள், விளம்பரங்கள் எல்லாவற்றையும் கழித்துப் பார்த்தால் ஒரு இரண்டு அல்லது மூன்று இலட்சம் தேறுமே. அதில் அவரது ஆயிரமும் இருக்கிறது என்பதை நினைக்கும் போது தொண்டை துக்கத்தை அடக்க முடியாமல் கனக்க ஆரம்பித்தது. சரவணபவன் காப்பியின் சுவை அடிநாக்கில் மறக்க முடியாத கசப்பாய் கசியத் தொடங்கியது. கண் தொலைவில் இருந்தாலும் வீடு தெரியாமல் மங்கலாக வழிந்து நின்றது. 40 எது பிரெய்ன்வாஷ் – குட்டிக் கதை! வைரஸ் காய்ச்சலுக்காக மருத்துவரைப் பார்க்க போயிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே நின்று கையிலுள்ள பத்திரிக்கையைப் (புதிய ஜனநாயகம்) புரட்டிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையை நோட்டமிட்டபடி அருகில் வந்தார் அந்த மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதி. பார்த்தவர் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தார். “என்ன பாஸ்! இது ரொம்ப தீவிரமான கம்யூனிஸ்டு பத்திரிக்கையாச்சே! நக்சலைட்டெல்லாம் சரின்னு எழுதுவாங்களே! எலக்ஷனக் கூட பாய்காட் பண்ணனும்பாங்க!.. இத விரும்பி படிப்பீங்க போல?” “ஆமாம். உண்மையைத்தானே சொல்றாங்க! நீங்க படிப்பீங்களா?” “படிச்சிருக்கேன். ஆனா தொடர்ந்து படிக்க மாட்டேன். ரெகுலரா படிச்சோம்னு வச்சிக்குங்க .. அப்படியே நம்மள பிரெய்ன்வாஷ் பண்ணிடுவாங்க!” “அது என்னங்க.. துணி வாஷ் மாதிரி, பிரெய்ன்வாஷ். அழுக்கா இருந்தா சலவைக்குப் போட வேண்டியதுதானே!” “ஐ மீன்.. பிரெய்ன்வாஷ்னா.. எதையாவது ஒன்னச் சொல்லி அவங்க சொல்றதுதான் சரின்னு ஆக்கிடுவாங்க.. நம்மள அவங்க பக்கம் இழுத்துடுவாங்க .. புரியுதா!” “எங்கயும் போயிடாதீங்க, தொடர்ந்து நிகழ்ச்சியைப் பாருங்கன்னு டி.வி.யுலயும்.. ஏன் உங்க மருந்துக் கம்பெனி முதலாளி வரைக்கும் எதையாவது சொல்லி, பொருளை விக்கறதுக்காக அவங்க பக்கம் நம்மள இழுக்கும்போது.. இந்தச் சுரண்டல் சமுதாய அமைப்பு மாறணும்னு தொழிலாளிங்க கருத்துச் சொன்னா அது தப்பா?” “உடனே தொழிலாளி முதலாளின்னு பேச ஆரம்பிச்சுடுவீங்க.. மனுசன இயல்பா ஃபீல் பண்ணவுடணும் பாஸ்! சும்மா எப்ப பாத்தாலும் ‘அவன் ஒழிக! இவன் ஒழிக! புரட்சி’ன்னு பேசி பப்ளிக்கை டெர்ரர்ராக்கி .. லைப்ல ஒரு ஜாலியே இல்லாம .. வேஸ்டாயிடும் !” “உழைக்குற எல்லாரும் அவுங்க தேவைக்கு ஏத்த மாதிரி ‘இயல்பா’ பணத்தை எடுத்துக்க முதலாளி விடுவானா? தொன்னூறு சதவீதம் பேரை ஜாலியா இருக்க வுடாம, 12, 16 மணிநேரம் வேலை வாங்கி 10 சதவீதம் முதலாளிகள் மொத்த சமூகச்சொத்தையும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்களே! இது உங்களுக்கு இயல்புக்கு மீறுனதாப் படலையா?” “பாத்தீங்களா! மெல்ல மெல்லப் பேசி .. என்னையே பிரெய்ன்வாஷ் பண்ணிடுவீங்க .. இதான் கம்யூனிஸ்டு வேலையே!” “ஏன் நீங்க செய்யலையா? ஏற்கனவேதான் டாக்டர் மருந்து எழுதிக்கிட்டு இருக்காரே! அவரை இயல்பா இருக்கவுடறீங்களா? உங்க கம்பெனி மருந்துகளைக் காட்டி, அதப் பத்தியே பேசிப் பேசி டாக்டரை ஏன் பிரெய்ன்வாஷ் பண்றீங்க? நீங்க முதலாளிக்காகபிரெய்ன்வாஷ் பண்ணலாம்! தொழிலாளிக்காக மட்டும் யாரும் பேசக்கூடாது!? இல்ல!” “பாஸ்.. என்ன புரிஞ்சுக்காம பேசுறீங்க? இது அட்வான்ஸ்ட் மெடிசின்.. ஜனங்களுக்குத் தேவை.. சும்மா ஏனோ தானோ இல்லை.. பழைய மருந்துகளை விடப் புதுசு. வியாதியை அட்வான்ஸ்டா க்யூர் பண்ணுது! இது தேவை இல்லையா? என்ன சயின்சும் வேணாம்பீங்க போல..” “அறிவியல் வேண்டாம்னு சொல்லலை.. அதைப் பண்டமாக்கி விக்கிறீங்க நீங்க.. அதை சமூக மாற்றத்திற்கும் பயன்படுத்தலாம்ங்குறோம் நாங்க. இப்ப இருக்குற தனியுடமை, சுரண்டல், சாதி மத ஆதிக்க நோய்களுக்கு, அதை விரட்ட ‘அட்வான்ஸ்டா’ அரசியல் மட்டும் கூடாதா? அதச் சொன்னா பிரெய்ன்வாஷா!” “இதாங்க.. உங்கள மாதிரி ஆளுங்க.. அது அதுக்கு ஒரு பதில் சொல்வீங்க.. பாசிட்டிவ்வா திங்க் பண்ணுங்க.. ஏன் நெகட்டிவாவே யோசிக்கிறீங்க.. சும்மா குறையை மட்டுமே பாக்குறீங்க.. எவ்வளவு மாடர்னா லைஃப் வந்துருக்கு.. சயின்ஸ், மருந்து, டெக்னாலஜி.. நாடு எங்கேயோ போயிட்டு இருக்கு! நீங்க என்னடான்னா சும்மா இல்லாததை மட்டுமே சொல்லி .. நீங்களும் டென்சனாகி, ஜனங்களையும் டென்சனாக்கப் பாக்குறீங்க.. இன்னவொன்னு பாஸ்! இந்த கம்யூனிஸ்டு தாட் உள்ளவங்க.. நாங்க சொல்றதுதான் சரின்னு அடுத்தவங்க மேல ஏன் கருத்தைத் திணிக்கிறீங்க ..? இதுவே ஒரு வயலன்ஸ் இல்லையா?” “சில பேருக்கு நீங்க சொன்ன எல்லா வசதியும் ஏன் இல்லாமல் இருக்குன்னு யோசிக்கறதுக்குப் பதில், இல்லாததைப் பத்திப் பேசுறதே தப்புங்குறீங்களே! இது வயலன்ஸ் இல்லையா? உங்க கருத்துப்படி சயின்ஸ் முன்னேறிய இந்த நாட்டில் வறுமை காரணமாகப் பெத்த பிள்ளைகளைக் கிணற்றில் போட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கின்றாள் ஒரு தாய். நீங்க சொன்னபடி டெக்னாலஜி முன்னேறிய இந்த நாட்டில் இன்னும் மனித மலத்தைக் கையால் அள்ளும்படி வேலை வாங்கப்படறாங்க தாழ்த்தப்பட்ட தொழிலாளிங்க.. இப்படி ஒரு பகுதி உண்மை நிலவரத்தை மறச்சிட்டு நாடு பொதுவா முன்னேறி எங்கோ போயிட்டிருக்குன்னு நீங்க பேசறதுதான், அடுத்தவங்க மேல கருத்தைத் திணிக்கறது, அதுவும் தப்புத் தப்பா!” “பாத்தீங்களா! நான் சொன்ன மாதிரி இதுபோல பத்திரிக்கைகளைப் படிச்சுப் படிச்சு நீங்களும் அதுவாவே மாறிட்டீங்க! இதெல்லாம் சீரியஸா படிச்சா.. அவ்ளோதான்.. சும்மா சொசைட்டியுல இப்படியும் ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு விட்டுடணும் பாஸ்! தொடர்ந்து அதுலேயே நாலெட்ஜெ கொண்டு போனோம்னு வச்சுக்குங்க.. அப்புறம் எதைப் பாத்தாலும் எதிர்க்கச் சொல்லும்.. யாரைப் பார்த்தாலும் இதுதான் சரின்னு பேசச்சொல்லும்! சும்மா சித்தாந்தம் பேசிக்கிட்டு இருந்தா லைஃப்பே போரடிக்கும்.. ஜஸ்ட் ரீட் இட் அண்ட லீவ் இட்..!” “இப்ப நீங்க பேசறது ஒரு சித்தாந்தம் இல்லையா? உன்னை வரைக்கும் பாருங்குறதுதான் முதாலாளித்துவ சித்தாந்தம்.. என்னை சொன்னீங்க.. இப்ப நீங்க அதுவாவே மாறி என் மேல ஏன் உங்க சித்தாந்தத்தைத் திணிக்குறீங்க..? நீங்க திணிச்சா ஜஸ்ட் பேச்சு.. நாங்க பேசுனா திணிப்பு.. என்னங்க உங்க ஜனநாயகம்?” “ஹலோ நீங்க ஆயிரம் சொல்லுங்க.. உங்கள மாதிரி பேசிக்கிட்டு இருக்குறவங்க ஊருக்கு ஒரு பத்துப் பேரு இருப்பீங்களா? எங்கள மாதிரி உள்ளவங்கதான் மெஜாரிட்டி.. இதுதான் பாஸ் யதார்த்தம்.. சும்மா ஏதாவது கற்பனையாப் பேசாதீங்க.. “ “நாட்ல மெஜாரிட்டி நோயாளிங்க; எய்ட்ஸ் பிரபலமா இருக்கு. அதுக்காக அதை ஆதரிக்க முடியுமா? நேர்மையா, கருத்து சரியா தப்பான்னு பேசுங்க. அத வுட்டுட்டு மெஜாரிட்டி, மைனாரிட்டி எதுக்கு?” “கருத்துன்னு கேட்டா.. நீங்க ஏத்துக்க மாட்டீங்க.. பட் பல இடத்துக்கும் போறதால ஐ நோ த ட்ரூத் வெரிவெல்,! இந்த புரட்சி அது இதெல்லாம் எடுபடாது.. ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க.. நீங்க பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.” “பாத்தீங்களா! ஜம்ப் ஆகுறீங்களே .. ஜனங்க இருக்கட்டும். நீங்க ஏத்துக்குறீங்களா.. இல்லையா..? அதச் சொல்லுங்க முதல்ல?” “நோ.. நோ.. எனக்கு இந்த கம்யூனிசம்னாலே அலர்ஜி.. நீங்க சொல்றது சரியாவே இருந்தாலும் நான் ஏத்துக்க மாட்டேன். ஒருநாளும் கம்யூனிஸ்டா மாறவும் மாட்டேன்..” “ஏன் மாறுனா என்னாகும்?” “நான் ஏன் கம்யூனிஸ்டா மாறணும் .. எனக்குதான் எல்லா வசதியும் இருக்கே! ஐ ஆம் ஆல்ரெடி செட்டில்ட். ஸோ ஐ டோண்ட் வான்ட் டு டேக் எனி ரிஸ்க்!” “இப்பதாங்க உள்ளபடியே உங்கள சரியாக அறிமுகப்படுத்திட்டு உண்மையைப் பேசுறீங்க.. உங்க வர்க்கத்துக்கு கம்யூனிசம், புரட்சி தேவையில்லைங்குறதுக்காக.. அதை மத்தவங்களுக்கும் தேவை இல்லைன்னு பேச்சுவாக்குல பிரச்சாரம் பண்றீங்க பாருங்க.. இதுதான் பிரெய்ன்வாஷ்.. அடுத்தவங்க மேல கருத்தத் திணிக்கறது.. இப்ப புரியுதா!” “என்ன டென்சனாயிட்டீங்க போல. விட மாட்டேங்குறீங்க.. வரட்டா!.. பிசினஸ் பாஸ்! டார்கெட் பிசினஸ்.. லேட்டாகுது.. வரட்டா!” “புரியுது.. புரியுது.. டார்கெட்டோடுதான் இருக்கீங்க ..” “ஓ! ஐ அண்டர்ஸ்டேண்ட்.. பட் ஐ டோண்ட் கேர். ஹா.. ஹா.. ஹா..” வறட்டுச் சிரிப்புடன் நகர ஆரம்பித்தார்.. வைரஸை நுண்ணோக்கி மூலம்தான் பார்க்க முடியும் என்று அறிவியல் சொல்கின்றது. என் கண்ணிற்கு முன்னால் ஐந்து அடி, இரண்டு சென்டிமீட்டரில் ஒரு வைரஸ் அலட்டிக் கொள்ளாமல் நழுவிச் செல்வதைப் பார்த்து வியந்து நின்றேன். _______________________________ புதிய கலாச்சாரம், அக்’08 41 குசேலன் உள்குத்து…. சும்மா அதிருதில்ல ! கடைசியாகக் கிடைத்த தகவலின் படி சாலிக்கிராமம் (சென்னை வடபழனிக்கு அருகில் இருக்கும் சினிமாக்காரர்களின் புண்ணியத்தலம்) வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஸ் என்ற கந்து வட்டிக்காரர், வடபழனியின் மூத்திரச் சந்துகளிலெல்லாம் கட் அவுட்டுகளாக நின்று அள்ளிக் கொடுக்கும் வள்ளல் நடித்திருக்கும் நாயகன் திரைப்படம், ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். சைக்கிள் பாஸ் கலெக்சனிலும் கூட நாயகன் குசேலனை விஞ்சிவிட்டதாம். குத்துப்பாட்டுக்கு தொந்தியை ஆட்டி, குளோசப் காட்சிகளில் தொங்கி வழியும் முகச்சதைகளைக் காட்டி வெள்ளித் திரையில் அமர்க்களம் செய்யும் ரித்தீஸைக் காண வேலை மெனக்கெட்டு உடனே கிளம்பி விடாதீர்கள். அந்தி மயங்கும் நேரத்தில் தமிழ்ச் சேனல்களில் ஓடும் நாயகன் ட்ரைலரைப் பார்க்கும் போது அதில் என்ன நடக்கிறது என்பது புரியாவிட்டாலும் சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக ஒரு நட்சத்திரம் உருவாகி வருவது மட்டும் தெரிகிறது. தற்போது ரஜினி ரசிகர்களே மறுக்க முடியாத வகையில் வசூலில் காலி டப்பாவாகி, திரையரங்கை விட்டு வெளியேறும் குசேலனின் திரைப்படச் சுருளும் அதைத்தான் நிரூபிக்கிறது. []வையகம் முழுவதும் உள்ள தமிழ் நாக்குகளால் சூப்பர் ஸ்டாரென தன்னிலை மறந்து பக்தியுடன் உச்சாடனம் செய்யப்படும் ஒன்றின் படம் இப்படி ஊத்திக் கொண்டதற்குக் காரணமென்ன? ஈழத் தமிழரோ, மலேசியத் தமிழரோ, சிங்கப்பூர்த் தமிழரோ, அகதித் தமிழரோ, அகலாமலிருக்கும் தமிழ்நாட்டுத் தமிழரோ எல்லாத் தமிழர்களின் கண்களும் ஊடகங்கள் முதல் சின்னத்திரை, வெள்ளித்திரை வரை சகலமான அயிட்டங்களிலும் பார்த்த விழி பார்த்தபடி மாறாமல் உற்று நோக்கி ஒன்றுவது தமிழ் சினிமாவில் மட்டும்தான். செஞ்சோலை, மாஞ்சோலைப் படுகொலைகள் தெரியாது என்றாலும் ஆஸ்திரேலியப் பூஞ்சோலையில் பாடும் இளைய தளபதியின் மனைவி குழந்தைகள் பெயர்கள் மனப்பாடமாய்த் தெரியும்; காய்ந்து போயிருக்கும் காவிரியாறு எந்தெந்த மாவட்டங்களில் பாய்கிறது தெரியாவிட்டாலும் நமீதாவின் பூர்வாசிரமம் அட்சர சுத்தமாய்த் தெரியும்; இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு தெரியாவிட்டாலும் உலகநாயகனின் வரலாறு களத்தூர் கண்ணம்மாவிலிருந்து தசாவதாரம் வரை தப்பாமல் தெரியும்; பீகார் மாநிலம் எங்கிருக்கிறது என்று தெரியாவிட்டாலும் பில்லா திரைப்படம் ஷூட்டிங் ஸ்பாட் பளிச்சென்று தெரியும். இப்படி உலகத் தமிழர்களுக்கு கல்வியை, வரலாறை, பூகோளத்தைக் கற்றுத்தரும் தமிழ் சினிமாவிலிருந்துதான் அடுத்தடுத்து தமிழகத்தை ஆளப்போவதாய்ச் சொல்லித் திரிகிற கேப்டன்களும், நாட்டாமைகளும் சிலிர்த்தவாறு வருகிறார்கள். மொத்தத்தில் தமிழ் வாழ்வின் மேல்வாய் முதல் கீழ்வாய் வரை வாயுவாய் விரவியிருக்கும் சினிமாவில் ஒரு பிரச்சினை மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. திரைப்படங்களால் பாலூட்டி வளர்க்கப்படும் தமிழன் என்னதான் அடி முட்டாளாக இருந்தாலும் சமயத்தில் அவனுக்கே தெரியாமல் புத்திசாலித்தனமாய் ஏதாவது செய்து தொலைத்து விடுகிறான். இரசிகப் பெருமக்களின் புரிந்து கொள்ள முடியாத இந்த உளவியல்தான் திரையுலகின் படைப்பாளிகள், முதலாளிகள் அனைவரின் மண்டையையும் ஒற்றைத் தலைவலியாய் குடைகிறது. இதைத் தீர்க்கக்கூடிய டைகர் பாம் மட்டும் இருந்திருந்தால் குசேலன் குதிரையில் பணம்கட்டிய பெருமகன்களுக்கு ஜாக்பாட் அடித்திருக்கும். தமிழ் நாட்டில் கிருஷ்ண பரமாத்மா என்றொரு சூப்பர் ஸ்டார் இருந்தாராம். அவருக்கு முப்பது ஆண்டுகளுக்கு முந்தி குசேலன் என்றொரு தோழன் இருந்தானாம். அவன் இப்போது சலூன் கடை வைத்து பிழைக்கிறானாம். இருவரும் ஒரு நாள் சந்தித்தார்களாம். அதைப் பார்த்துப் பலரும் அழுதார்களாம். குசேலனைக் குபேரனாக்கிவிட்டு அடுத்தநாள் கிருஷ்ண பரமாத்மா இமயமலைக்கு போனாராம். தோழன் சலூனுக்கு ஒரு நாள் விடுமுறைவிட்டு என்னமோ யோசித்தானாம். குமுதத்தின் லைட்ஸ் ஆன் கிசுகிசுவுக்குக்கூட தகுதியில்லாத இந்தக்கதைக்குத் தமிழர்கள் 100 கோடி ரூபாய் பீஸ் கட்டவேண்டுமாம். அப்படியென்றால் இதைவிட மட்டமான சிவாஜிக்கு மட்டும் தமிழர்கள் புற்றீசல் போல பீஸ் கட்டினார்களே என்று நீங்கள் கேட்கலாம். தமிழன் ஏமாளிதான்! இருந்தாலும் சமயத்தில் கிரியேட்டிவாக ஏதாவது செய்யக்கூடாது என்று விதி இருக்கிறதா என்ன? அரசியலில் புரட்சித் தலைவியை ஏற்றுக் கொண்ட தமிழ் மக்கள் புரட்சித் தலைவரால் கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்த போது அல்வா கொடுத்து விட்டார்கள். இதையெல்லாம் ஏனென்று ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. கிருஷ்ண பரமாத்மா தும்மினாலும், தம் அடித்தாலும், இமயமலைக்குப் பம்மினாலும் அட்டைப்படக் கட்டுரைகளாக வெளியிடும் பத்திரிகைகள் பாபா படத்திற்குக் காகிதமே கண்ணீர் விடுமளவுக்கு அலப்பறைகள் செய்து ஊளையிட்டன. பரமாத்மா இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை படம் தந்தால் ஊடகங்கள் ஒரு மாமாங்க காலத்திற்குச் செய்தி வெளியிடும். கடைசியில் இந்த வெற்றுக் கூச்சலில் பாபா படம் கவிழ்ந்தது. பீடியை வலித்தவாறு பரமாத்மா புரூடா விட்ட ஆன்மீக அரட்டைகளை ரசிகர்களே சட்டை செய்யவில்லை, பேண்ட்டும் செய்யவில்லை. பாபா டாலர், செயின், டீ ஷர்ட் என முடிந்தமட்டும் சுருட்ட நினைத்த குண்டுக் கொழுப்பு லதா ரஜினிகாந்தின் பேராசை மண்ணைக் கவ்வியது. அப்போதும் பாபாவின் கிளைமாக்சை ஊடகங்கள் முடிக்கவில்லை. யானை விழுந்தால் எழாது, குதிரை விழுந்தால் மீண்டு எழும் என்ற பரமாத்மாவின் உளறல்களெல்லாம் தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன. உளுத்திருந்த இமேஜைத் தூக்கி நிறுத்த பரமாத்மா சந்திரமுகிக்குச் சென்ற கதைகள் அடுத்து வெளிக்கி வர ஆரம்பித்தன. பாபா படத்தை பரமாத்வே தயாரித்திருந்ததால் தன்னை வைத்துச் சூதாடிய வினியோகஸ்தர்களுக்குச் சுருட்டிய தொகையில் கொஞ்சம் கொடுத்தார். இது போக அவருக்கு எஞ்சிய தொகை பத்து கோடியைத் தாண்டும். இதுவும் முதல் பத்து நாட்களுக்கு ரசிகர்கள் வீட்டு நகைகளை அடகுவைத்து 500, 1000 என்று ப்ளாக் டிக்கெட்டில் அழுத பணம்தான். உண்மையான கட்டணத்தில் பாபா திரைப்படம் நூறு நாட்கள் ஓடியிருந்தாலும் பரமாத்வுக்கு இந்தப் பணம் கிடைத்திருக்காது. திரைப்படம் வெளியிடப்படும் முதல் வாரம், மாதத்தில் திரையரங்குகள் எவ்வளவு கட்டணம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அளித்திருந்த சலுகை பகிரங்கக் கொள்ளையை சட்டப்பூர்வமாக்கியது. கடந்த பத்து வருடங்களாக கிருஷ்ண பரமாத்மாவும் இன்ன பிற நட்சத்திரங்களும், முதலாளிகளும் இப்படித்தான் வழிப்பறி செய்து சொத்து சேர்த்து வருகின்றனர். []தற்போதைய பிரச்சினை என்னவென்றால் பாபா படத்திற்கு முதல் பத்து நாட்களுக்கு வந்த கூட்டம் கூட குசேலனுக்கு வரவில்லையாம். அப்படி வரும் என்று எதிர்பார்த்து குசேலனுக்கு கொட்டப்பட்ட பணம் 61 கோடி ரூபாய். இதில் ரஜினிக்கு 20 கோடி, இயக்குநர் வாசுவுக்கு 4 கோடி, படத்தைத் தயாரித்த கே.பாலச்சந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார், வைஷ்ணவி மூவிஸ் அஸ்வினிதத் மூவருக்கும் தலா 7 கோடி, மிச்சமெல்லாம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படத்தின் தயாரிப்புச் செலவாம். இதை 61 கோடிக்கு வாங்கிய பிரமீட் சாய்மீரா எனும் கார்ப்பரேட் நிறுவனம் பரமாத்மாவின் இமேஜை வைத்து கொள்ளை இலாபம் சுருட்டலாம் என்று சப்புக் கொட்டியது. பரமாத்மா தமிழ்க் குசேலனுக்கு மட்டும் அருள் பாலிக்காமல் தெலுங்குக் குசேலனுக்கும் பிச்சை போடும் விதமாக தெலுங்கிலும் தனியாக படமெடுத்தார்களாம். என்.டி.ராமாராவ் கிருஷ்ணனாகவும், இராமனாகவும் அவதரித்து பக்தியில் ஊறப்போட்ட மண்ணாயிற்றே! குசேலனின் இசை உரிமையை பிக் மீயுசிக் நிறுவனம் 2.45 கோடிக்கும், தொலைக்காட்சி உரிமையை 5 கோடிக்கு கலைஞர் டி.வியும் வாங்கியதாம். ஒரு படத்தில் பரமாத்மாவின் போஸ்டரைக் காண்பித்தாலே பிய்த்துக் கொண்டு ஒடும் காலத்தில் பரமாத்மாவின் இசை பஜனையும், தொலைக்காட்சி திவ்ய தரிசனமும் இந்த அளவுக்கு வியாபாரம் ஆனதில் ஆச்சரியமில்லை. எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த படியால் ஒரு சுபமூகூர்த்தத்தில் 600 பிரிண்டுகள் போடப்பட்டு அமெரிக்கா, மொரிஷியஸ், பாங்காக், மலேசியா, சிங்கப்பூர், கேரளா, கர்நாடகம் என்று உலகம் முழுவதும் கோபால் பற்பொடி போல குசேலன் வெளியிடப்பட்டது. இதுதான் படத்தை போட்ட உடன் காசை எடுக்கும் பாராசூட் வணிகமாம். பத்து நாட்களுக்குப் பிறகு படத்தைப் பற்றி எதிர்மறைக் கருத்து உருவாகி வசூல் பாதிக்கலாம் என்ற அபாயம் இதில் இல்லையாம். அதனால்தான் இத்தனை அதிக பிரிண்டுகள் போட்டு இரண்டு வாரத்தில் முதலை இலாபத்தோடு எடுத்து விடுவார்களாம். சரியாகச் சொன்னால் ரசிகன் விழித்துக் கொள்வதற்குள் அவனிடம் பிக்பாக்கெட் அடித்து விடவேண்டும். தமிழகத்தில் பாதி இடங்களில் பிரமீட் சாய்மீராவே ரீலீஸ் செய்து மீதியை விநியோகஸ்தர்கள் மூலமாகத் திரையிட்டது. மொத்தத்தில் 100 கோடியைக் காணிக்கையாகப் பிடுங்குவது திட்டம். பக்தர்களைச் சோதனைக்குள்ளாக்கிக் கடைத்தேற்றும் பரமாத்வுக்கே அப்போதுதான் சோதனைகள் வரலாயிற்று. ஒகேனக்கல் பிரச்சினையில் தப்புச் செய்பவர்களை அடிப்பேன், உதைப்பேன் என்று பரமாத்மா வீரவசனம் பேசியதை வைத்து கர்நாடகத்தில் குசேலன் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோமென எதிர்ப்புக் கிளம்பியது. பரமாத்மா எந்தவிதக் கூச்சநாச்சமின்றி மன்னிப்புக் கேட்பதாக அறிவித்தார். பரமாத்மாவின் பல்டியை கர்நாடகம் ஏற்றுக்கொண்டு வழி விட்டாலும், தமிழ் ரசிக பக்தர்களிடையே ஒரு நெருடல் ஏற்பட்டது. என்னடா நம்ம தலைவர் சுண்டுவிரலசைவில் நூறு பேரைப் புரட்டி எடுப்பாரே, இப்படி தீடீரென்று பணிந்து விட்டாரே, ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்த தமிழகத்தை நட்டாற்றில் விட்டுவிட்டாரே என்று பக்தர்களிடம் சற்று மனக்கிலேசம் பற்றியது. []இது ரிலீசுக்கு முந்தைய நாள் நிலவரம். பரமாத்மா ஒரு சூப்பர் ஸ்டாராக உருவெடுத்ததன் கூடவே அவரது இமேஜூம் உப்பியது என்பதை இந்த முக்கியமான தருணத்தில் நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். பரமாத்மாவினால் இமேஜ்! இமேஜினால் பரமாத்மா! இமேஜைப் பராமரிப்பது இரசிக பக்தர்களின் வேலை. திரையில் இமேஜாகவே விசுவரூபமெடுக்கும் பரமாத்மா நிஜவாழ்விலும் அதைப் பராமரிக்கவேண்டுமல்லவா! ஆனால் உண்மையில் முரண்படும் இந்த இரு துருவங்களை ஒத்திசைவாக கொண்டுசெல்வதற்கு அந்த நிஜ பரமாத்மாவே வந்தாலும் சாத்தியமில்லை. மாயைக்கும், உண்மைக்குமான சண்டையில் வியாபாரத்துக்கும், இமேஜுக்குமான மோதலில் பரமாத்மா தனது மகிமையைச் சற்ற சுருதி குறைத்துக்கொண்டார். வினை தொடங்கிவிட்டது. அடுத்த குசேலன் படம் முழுவதும் சுமார் 55 நிமிடக் காட்சிகளில் வரும் பரமாத்மாவின் பண்பு நலன்கள், பழகும் தன்மை, எளிமை, சுறுசுறுப்பு, வேகம், விவேகம், வாழ்க்கையைப் பற்றி அவர் என்ன நினைக்கறார், அவரைப் பற்றி வாழ்க்கை என்ன நினைக்கிறது, இமயமலையில் அவர் பெற்ற ஆன்மீகம் எல்லாம் புண்ணிய நதியாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இமேஜ் பில்டப்பில் ஒரு விசயம் மட்டும் பிழையாகிவிட்டது. அரசியலுக்கு தான் வருவதாக திரைப்படங்களில் பஞ்ச் டயலாக் பேசியதெல்லாம் தனது சொந்தக் கருத்தல்ல, இயக்குநர் எழுதிக் கொடுத்ததைத்தான் பேசினேன் என்று பரமாத்மா குசேலனில் வசனம் பேசியது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது அரசியல் இமேஜ் ஒரு மாயை என்கிறார் பரமாத்மா. பக்தர்களோ அது மாயை என்று தெரிந்தாலும் தங்களை அந்த மாயையில் வைக்குமாறு வற்புறுத்துகிறார்கள். இது பக்தர்களின் பிழையல்ல. ஏனெனில் அவர்கள் அந்த மாயையை நம்பித்தான் பரமாத்மாவுக்கு சூப்பர் ஸ்டார் பட்டமும் கூடவே வட்டிக்கு வாங்கிய காணிக்கையையும் கொடுத்து பூஜை செய்கிறார்கள். காணிக்கையை வாங்கி கல்லாவை நிரப்பிவிட்டு தான் ஒரு எளிய மனிதன் என்று புரூடா விட்டால் அதை நம்புவதற்கு பக்தர்கள் என்ன மாங்காய் மடையர்களா? இதை லேட்டாகத் தெரிந்து கொண்ட படக்குழுவினர் அந்த வசனத்தை வெட்டி விட்டு பரமாத்மாவின் காட்சிகளை அதிகப்படுத்தி படத்தை புத்துருவாக்கம் செய்தார்கள். அப்போதும் படம் பிக்கப் ஆகவில்லை. பக்தர்களின் பிச்சையால் ஒரு பில்லியனராக விசுவரூபமெடுத்திருக்கும் பரமாத்மா அன்றாட வாழ்வில் எளிமையாக இருக்கும் ஒரு ஆன்மீகவாதி என்று தன்னை வெளிப்படுத்துவதெல்லாம் ஊடகங்கள் முதல் பக்தர்கள் வரைக்கும் பிரபலமான ஒரு சங்கதி. அதையே திரைப்படமாக எடுத்தால்? ஊற்றிக் கொள்ளும் என்பதையே பாபா, குசேலனின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் போட்டுடைக்கிறது. படையப்பா, பாட்சா, அருணாச்சலம், அண்ணாமலை எல்லாம் ஒரு கணக்கில் பரமாத்மாவின் இமேஜுக்குப் பொருத்தமாக இருப்பதால் ஓடியது. பாபாவில் பரமாத்மாவின் ஆன்மீக உபன்னியாசங்களை பக்தர்கள் சீண்டவில்லை. என்ன கேட்டாலும் கிடைக்கும் வரம் பெற்ற பாபாவிடம் வினியோகஸ்தர்கள் தாங்கள் போட்ட காசையாவது திருப்பிக் கொடுங்கள் என்று வரம் கேட்டனர். குசேலினிலும் அதுவே ஆக்சன் ரீப்ளேவாக ஓடுகிறது. நிஜக்கதையில் குசேலனை குபேரனாக மாற்றுவார் பரமாத்மா. எங்களை குபேரனாக்காவிட்டாலும் பரவாயில்லை பிச்சைக்காரர்களாக மட்டும் மாற்றி விடாதீர்கள் என்று பரமாத்மாவுக்காக மூதலீடு செய்த பணத்தை கேட்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் குசேலனை வெளியிட்ட வினியோகஸ்தர்கள் திரைப்படப் பெட்டியை சென்னைக்கு அனுப்பிவிட்டு நட்டகணக்குடன் தயாரிப்பாளர்களை முற்றுகையிட்டிருக்கிறார்கள். இதில் பரமாத்மா தலையிட்டு பிச்சை போட்டாலும் பெற்றுக் கொள்வோம் என்கிறார் ராயலசீமா பிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சங்கத்தைச் சேர்ந்த சசிதர் பாபு. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வமோ பரமாத்மாவை நேரில் சந்தித்து தாங்கள் நிழல் குசேலனால் நிஜ குசேலனாக்கப்பட்டதை எடுத்துக் கூறி நிவாரணம் கேட்டிருக்கிறார். பரமாத்மாவும் உரியவர்களிடம் பேசி முதலீட்டில் 33 சதவீதத்தை திருப்பித் தர ஆவன செய்வதாகக் கூறினாராம். இதை பன்னீர் செல்வம் ஏற்றுக் கொள்ளாததோடு தாங்கள் 80 சதவீதம் நட்டமடைந்திருப்பதாகவும் அதில் 70 சதவீதமாவது திரும்பத் தரவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பரமாத்மாவை வைத்து பணத்தை டபுளிங் (இரண்டு மடங்கு கள்ளநோட்டை ஒரு மடங்கு நல்ல நோட்டாக மாற்றுவது) செய்து விடலாம் என்று மனப்பால் குடித்த பிரமீட் சாய்மீரா நிறுவனம் இது குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. திரைப்படத்தை பார்த்து விட்டுத்தான் வாங்கினார்கள் எனவே பணத்தை திருப்பித் தரும் பேச்சே இல்லை என்று கே.பாலச்சந்தர் கறாராக கூறிவிட்டாராம். இப்படி சகல தரப்பிலும் குசேலனுக்கான உள்குத்து ஆரம்பித்து விட்டது. ஒரு நூறு கோடி ரூபாயை பக்தர்கள் மட்டும் உண்டியலில் செலுத்தியிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. பரமாத்மா என்றொரு இமேஜை வைத்து கொள்ளை இலாபம் சம்பாதிக்கலாம் என்று பரமாத்மா, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பலரும் ஆணித்தரமாக நம்பி இறங்கினர். இதில் பரமாத்விற்கும், தயாரிப்பாளர்களுக்கும் உரியது கிடைத்து விட்டது. மற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள். மாட்டிக் கொண்டவர்களும் அப்பாவிகளல்ல. பரமாத்மா என்றொரு மூடநம்பிக்கையை வைத்து முட்டாள் ரசிகர்கள் ஆராதிக்கும் வரை கவலையில்லை என்று நம்பிக்கையுடன் தொழிலில் இருந்தவர்கள்தான். அந்த முட்டாள்கள் இப்போது படத்தைப் பார்ப்பதற்குத் தயாரில்லை. என்ன செய்யலாம்? பரமாத்மாவின் திருவிளையாடலை பக்திப் பரவசமின்றி பக்தர்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். பரமாத்மாவின் 20 கோடி சம்பளத்தை குறைக்க முடியுமா? அவரது சந்தை மதிப்பு அதிகம் என்பதால் இந்தக் கூலியைக் கொடுத்துதான் ஆக வேண்டும். பரமாத்மாவின் படத்தை சுப்பிரமணியபுரம் மாதிரி லோ பட்ஜட்டில் எடுக்க முடியுமா? அவரது இமேஜுக்காக படம் பார்க்க வரும் பக்தர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் ரிச்சாகத்தான் எடுக்க முடியும். அவரது படத்தை ஒரு நியாயமான விலைக்கு விற்க முடியமா? பந்தயத்தில் இந்தப் பரமாத்மா குதிரை ஓடி ஜெயித்து விட்டால் ஜாக்பாட் அடிக்குமென்பதால் அநியாய விலைக்குத்தான் விற்க முடியும். பரமாத்மாவின் படத்தை உரிய திரையரங்க கட்டணத்தில் பார்க்குமாறு செய்தால் இந்தப் பிரச்சினை தீருமா? அப்படி வருசம் முழுவதும் ஓட்டினாலும் கூட பணம் கைக்கு வராது என்பதால் பிளாக்கில் 500,1000 என்றுதான் விற்க முடியும். கிருஷ்ண பரமாத்மா என்ற இந்த சூப்பர் ஸ்டாரின் இமேஜும், வர்த்தகமும் இணைந்து நடத்தும் இந்த சூதாட்டம் இப்படித்தான் இயங்க முடியும். இந்த சூதாட்டத்தில் பக்தர்கள் நினைத்தால் ஜாக்பாட்டும் கொடுப்பார்கள், மொட்டையும் அடிப்பார்கள். இரண்டையும் எப்போது எப்படி செய்வார்கள் என்பது பரம்பொருளுக்கே பிடிபடாத மர்மம். ஆனாலும் ஒவ்வொரு சூதாட்டத்திலும் பரமாத்மாவுக்கு மட்டும் நட்டம் வராது. வெற்றி பெறும் ஒவ்வொரு சூதாட்டமும் மக்கள் தாலியறுத்த பணத்தில்தான் நடக்கிறது என்பதுடன் பரமாத்மாவின் புராணத்தை முடித்துக் கொள்வோம். 42 நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்! தனது நாவல்களின் வாயிலாக கலர் கலரான தத்துவ தரிசனங்களை வாசககர்களுக்குக் காட்டியிருக்கிறார் ஜெயமோகன். அந்த தரிசனங்கள் தோற்றுவித்த புல்லரிப்பிலிருந்து மீளாதவர்களும், பிரமிப்பில் உறைந்து அதன் பின் உருகி சகஜநிலை அடைய முடியாதவர்களும் பலர். ஒரே இரவில் சுந்தர ராமசாமியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடியவரும், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் டால்ஸ்டாயையும் தஸ்தாவ்ஸ்கியையும் தலைகீழாக ஒப்பிக்கக் கூடியவருமான ஜெயமோகனிடம் இலக்கிய விசாரம் நடத்தும் தகுதி நமக்கு இல்லை. யாரொருவருடனும் ஒரு விசயம் பற்றிக் கதைக்க வேண்டுமென்றால் கதைக்கப்படும் பொருள் குறித்து கடுகளவேனும் நமக்குப் பரிச்சயம் இருக்க வேண்டும். அந்த வகையில் நமக்குப் பரிச்சயமான நாவல் பற்றி ஜெயமோகன் எழுதியிருப்பதை தற்செயலாக அவரது இணையதளத்தில் கண்டோம். எனவே அது குறித்து எழுதும் துணிவு கொண்டோம். இனி, பூர்வபட்சம். அதாவது ஜெயமோகனின் கூற்று: விஷ்ணுபுரத்திலும், கபாலபுரத்திலும், ஸ்டாலின்கிராடிலும், சங்ககாலத்திலும் மனவெளி உலா வந்த ஜெயமோகன், அங்கிருந்து இறங்கி நாகர்கோவிலில் தன் மகனுடன் ஒரு மாலை நேர உலா செல்லுகையில் ஒரு பழக்கூடையில் நாவலைக் காண்கிறார். நாவல் என்று நினைத்தீரோ வாசகரே, அது நவ்வாப்பழம்! நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குத் தெரிந்த சுவை அதுதானே! ஆசையுடன் ஒரு பழத்தை வாயில் போட்டு சுவைக்கிறார். வியாபாரியிடம் விலை கேட்கிறார். கிலோ நூறு ரூபாய்! விலை தோற்றுவித்த அதிர்ச்சி நாகர்கோவில் தெருவிலிருந்து ஜெயமோகனை அவருக்குப் பரிச்சயமான மனவெளியை நோக்கித் தூக்கி எறிகிறது. நாவல் காடு, அங்கே காய்த்துத் தொங்கும் கனிகளைச் சும்மா பறித்து தின்ற நினைவுகள்.. பிறகு மீண்டும் நாகர்கோவில். ஒரு கிலோ நூறு ரூபாய் என்றால் நூறு கிராம் பத்து ரூபாய். எனில் ஒரு பழம் ஒரு ரூபாய். அந்த ஒரு பழத்தில் கொட்டையைக் கழித்துவிட்டால் எஞ்சியிருக்கும் சுளைக்கு இத்தனை விலையா? நாக்கில் நாவலின் சுவையும் மனதில் வலியுமாக வீடு திரும்புகிறார் ஜெயமோகன். இரண்டு நாட்கள் கழித்து “கூடை நாவல் பழத்தை நூற்று ஐம்பது ரூபாய் விலைக்கு ஒரு வியாபாரியிடம் விற்ற கதையை” ஒரு ஏழை விவசாயி ஜெயமோகனிடம் விவரி்க்கிறார். “ஒரு கூடை என்பது 20 கிலோ. அப்படியானால் ஒரு கிலோ ஏழு ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறதா?” உடனே ஜெயமோகனுக்கு மூளையில் பல்பு பற்றி எரிகிறது. மொத்த வியாபாரி முதல் தள்ளுவண்டி வியாபாரி ஈரான காய்கறி வியாபாரிகளெல்லாம் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகளுக்கு நியாயவிலை கிடைப்பதில்லையாம். இப்படி உள்ளூர் சந்தைகளை ஆதிக்கம் செய்யும் நபர்கள் ரவுடிகளாகவும் இருக்கிறார்களாம். இவர்களது கொள்ளைப்பணம் அரசியல் கட்சிகளுக்கும் போவதால் கட்சிக்காரர்கள் இவர்களை ஆதரிக்கிறார்களாம். இதற்கு ஜெயமோகன் சிபாரிசு செய்யும் விமோசனம் – ரிலையன்ஸ் பிரஷ். [] முகேஷ் அம்பானி எட்டு மடங்கு விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்கி நுகர்வோருக்கு மலிவான விலையில் விற்பனை செய்கிறாராம். ரிலையன்ஸ் பல இடங்களில் காய்கறி சிண்டிகேட்டை நடுங்க வைத்திருக்கிறதாம். அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, நக்சலைட்டு தோழர்களும் ரிலையன்சை எதிர்க்கிறார்களாம். இதனாலேயே மதுரையிலும், ஊட்டியிலும் கொள்முதல் நிலையங்களை ரிலையன்சு மூடிவிட்டதாம். இதையெல்லாம் ஜெயமோகனிடம் அவரது பத்திரிகை நண்பர்கள் தெரிவித்தார்களாம்.. ஒரு நவ்வாப்பழத்தை மையமாகக் கொண்டு விரிந்த இந்த உண்மைகள் ஜெயமோகனிடம் தவிர்க்க முடியாதபடி அதீத மனத்தாவலைத் தூண்டுகின்றன. இதோ, நாவல் மரத்தின் கீழே தத்துவஞானத்தின் ஒளி பரவத் தொடங்குகிறது. “முதலாளித்துவ வளர்ச்சிதான் விவசாயிகளின் துன்பங்களைத் தீர்க்கும். காரல் மார்க்சே முதலாளித்துவம் என்பது நிலப்பிரபுவத்தைவிட பல மடங்கு முற்போக்கானது என்று சொல்லியிருக்கிறார். தனியார் மயத்தை எதிர்ப்பது அசட்டுத்தனம். நான் வேலை பார்க்கும் தொலைபேசித் துறையிலேயே பத்துவருடங்களுக்கு முன்னர் தனியார் மயத்தை கடுமையாக எதிர்த்தோம். வேலை போய்விடும் என்று பயந்தோம். தற்போது என்ன நடந்திருக்கிறது? பல செல்பேசி கம்பெனிகள் வந்திருப்பதால் தொலைபேசிக் கட்டணம் பல மடங்கு குறைந்துவிட்டது. எனவே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டுமென்றால் ரிலையன்சு பிரஷ்ஷும், முதலாளித்துவ வளர்ச்சியும்தான் தீர்வு. இதை ஒரு பொருளாதார அறிஞராக இருந்து சொல்லவில்லை. ஒரு எளிய மனிதனின் பார்வையில் படும் விசயமாகக் கூறுகிறேன்” என்று பணிவுடன் தனது தரிசனத்தை விளக்குகிறார் ஜெயமோகன். மிகவும் எளிய வாசககர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்வதென்றால், “அம்பானியும் பிர்லாவும் நவ்வாப்பழம வியாபாரத்தில் இறங்காத வரையிலும் நாடு உருப்படாது” என்கிறார் ஜெயமோகன். இதென்ன, “ரயில் லேட்டாக வந்தால் எமர்ஜென்சி வரவேண்டும், பஸ் கண்டக்டர் பாக்கி சில்லறை கொடுக்காவிட்டால் தனியார்மயம் வரவேண்டும்” என்று பேசும் ஊசிப்போன நடுத்தரவர்க்க ஜென்டில்மேன்களின் உளறலைப் போல இருக்கின்றதே என்றோ, சோ ராமஸ்வாமியின் அபிப்ராயங்களைப் போலவே இருக்கின்றதே என்றோ வாசகர்கள் கருதிவிடக்கூடாது. இதெல்லாம் த்த்துவஞானிகளுக்கே உரிய பிரச்சினை. “பிரம்ம ஸத்யம் ஜகன் மித்யா” என்று உபதேசித்த ஆதிசங்கரனிடம் “அப்புறம் எதுக்கு தெனம் சோறு திங்கிறாய்?” என்று ஒரு பாமரன் கேட்டானாம். “இதென்னடா நியூஸென்ஸ. அதெல்லாம் வியவகாரிக சத்யம்” என்று புறங்கையால் அந்தப் பாமரனின் வாதத்தை ஒதுக்கித் தள்ளினாராம் அந்த த்த்துவஞானி. “திங்கிற சோத்துக்கும் நம்ம தத்துவஞானத்துக்கும் என்ன சம்மந்தம்?” என்ற கேள்வி எழ முடியாத அளவுக்கு சிந்தனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சங்கரனைப் போலவே, மாதாமாதம் கைநீட்டி காசு வாங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கும் தனது தனியார்மயத் தத்துவத்துக்கும் என்ன சம்மந்தம் என்பது பற்றி ஜெயமோகனுக்கும் தெரியவில்லை. தெரியவேண்டியதில்லையே! காலங்களைக் கடந்து மனவெளியில் சஞ்சரிக்கும் ஒரு மனிதனுக்கு, தண்டி தண்டியாக இலக்கிய உன்னதங்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இலக்கியவாதிக்கு, தினத்தந்தி பேப்பரில் எ்ன்ன வந்திருக்கிறது என்ற விவரமோ, தனக்குப் படியளக்கும் துறையில் என்ன நடக்கிறது என்ற விவரமோ எப்படித் தெரிந்திருக்க முடியும்? அதெல்லாம் நம்மைப் போன்ற சாதாரணர்களு்க்குத் தெரிந்த விவரங்கள். இலக்கியத் தரமோ சுவையோ அற்ற, வலதுசாரி இடதுசாரி சார்பும் அற்ற அந்த உண்மை விவரங்கள் வருமாறு: தனியார் வந்ததனால் செல்பேசிக் கட்டணம் குறைந்ததாம்! கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்த்தால் மழை பொத்துக் கொண்டு ஊத்தியதைப்போல! தேவையான தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல் இடம் இருந்தபோதும், செல்பேசித் துறையில் நுழையவிடாமல் பி.எஸ்.என்.எல் தடுக்கப்பட்டது. தனியார் மட்டுமே கொள்ளையடிக்க ஒதுக்கப்பட்ட அந்த காலகட்டத்தில், ரம்பா, மீனா, ரோஜா போன்ற பில் கட்டத் தேவையில்லாத ஏழை நடிகைகள் நிமிடத்துக்கு 10 ரூபாய் ரேட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இன்கமிங் காலுக்கும் பில் இருந்த்து. அது கொற்றவையின் காலமல்ல. காங்கிரசு, பாரதிய ஜனதா ஆட்சிக்காலம். அம்பானியின் அருமை நண்பரான பிரமோத் மகாஜன் அரசுத் தொலைபேசியை பாயின்ட் பிளான்கில் சுட்டுக் கொன்ற காலம் அது. பிறகு ஆத்தமாட்டாமல் வந்தது அரசு தொலைபேசி. அதன் காலை உடைப்பதற்கு டிராய் என்ற கட்டைப் பஞ்சாயத்து அமைப்பு தயாராக இருந்த்து. அரசுத் தொலைபேசியின் கட்டுமானங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதற்குப் பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தார்கள் முதலாளிகள். அரசுக்கு லைசன்ஸ் கட்டணம் தருகிறோம் என்று ஒப்புக்கொண்டு அதற்கும் நாமம் போட்டார்கள். கிராமத்துக்கு தொலைபேசி வசதி செய்து தருகிறோம் என்று கையெழுத்துப் போட்டுவிட்டு, “முடியாது” என்று கைவிரித்தார்கள். இதெல்லாம் போதாதென்று நவ்வாப்பழத்துக்கு எட்டு மடங்கு விலை கொடுக்கப்போகும் அம்பானி, பி.எஸ்.என்.எல் ஐ ஏமாற்றி அமெரிக்காவுக்கு திருட்டு கால் கொடுத்தார். 1500 கோடி சுருட்டினார். இ.பீ.கோ 124-ஏ, 120-B இன் கீழ் ஆயுள்தண்டனை தரத்தக்க அந்த குற்றத்தை மன்னித்தது காங்கிரசு அரசாங்கம். பாதி காசு வாங்கிக் கொண்டு அவுட் ஆப் கோர்ட் செட்டில்மென்ட் செய்து கொண்டார் தம்பி தயாநிதி மாறன்.  தன்னுடைய செல்பேசி ஏஜென்டுகளுக்கே அம்பானி சகோதரர்கள் அல்வா கொடுத்தது தனிக்கதை. சென்னை மாநகரில் கண்ணாடி இழைக் கேபிள் இழுக்க எங்கே வேண்டுமானாலும் தோண்டிக் கொள்ளுங்கள் என்று ஜெயமோகனின் அபிமான தனியார் முதலாளிகளுக்கு லைசன்ஸ் கொடுத்த்து திமுக மாநகராட்சி. இதில் 1300 கோடி இழப்பு என்று துக்ளக்(கே) எழுதியது. இதுவும் போதாதென்று  சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, அதிகாரிகள் அமைச்சர்கள் ஆதரவுடன் பி.எஸ்.என்.எல் கம்பிகளை ஆள் வைத்து அறுத்தார்கள் முதலாளிகள். அதை எதிர்த்து சென்னை தொலைபேசி ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். லாபகரமாக நடந்துகொண்டிருந்த விதேஷ் சஞ்சார் நிகாமின் (VSNL) பங்குகளை அதன் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்புக்கும் குறைவான விலையில் டாடாவுக்கு தாரை வார்த்தார் பிரமோத் மகாஜன். தன்னுடைய கட்டுப்பாட்டில் வந்தவுடனே, VSNL கல்லாவில் இருந்த ரொக்கத்தை வைத்து மூழ்கிக் கொண்டிருந்த டாடா டெலிகாமின் பங்குகளை அதிக விலைக்கு வாங்கி தனது கம்பெனியைத் தூக்கி நிறுத்தினார் டாடா. இப்போது அமர்சிங்கின் ஒப்பந்தப்படி அனில் அம்பானிக்காக ஸ்பெக்ட்ரம் எனப்படும் ரேடியோ அலைவரிசையை ஒதுக்குவதற்குத் தோதாக கட்டணத்தை மலிவாக மாற்றப்போகிறார்கள். இது செல்பேசி கதை. பெட்ரோல் கதை தனி. பாலியெஸ்டர் கதையை ஏற்கெனவே அருண்ஷோரியும் குருமூர்த்தியும் எழுதியிருக்கிறார்கள். ஹமிஷ் மெக்டொனால்டு என்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் எழுதிய பாலியெஸ்டர் பிரின்ஸ் என்ற அம்பானி பற்றிய நூலை இந்தியாவுக்குள்ளேயே வரவிடாமல் தடுத்துவிட்டார்களாம் அம்பானிகள். ரசியாவில் தடைசெய்யப்பட்ட, ஸ்டாலின் காலம் குறித்த நூல்களையெல்லாம் தோண்டிக் கண்டுபிடித்த ஜெயமோகனின் கண்ணில் இந்த நூல் படவில்லை போலும்! அம்பானியின் பிளாஸ்டிக் ஏகபோகத்தால் அழிந்த சிறு உற்பத்தியாளர்கள் சமீபத்தில் தமது வயிற்றெரிச்சலை தினமணியில் விளம்பரமாகவே வெளியிட்டிருந்தார்கள். ரிலையன்ஸ் பிரஷ்ஷால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள் நாடு முழுவதும் போராடுகிறார்கள். உண்மை விவரங்களை இத்துடன் முடித்துக் கொள்வோம். உண்மை என்ற சொல்லே விவாதத்துக்குரியதாயிற்றே! “தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான். உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை. பார்க்கின்ற பார்வையில்தான் இருக்கிறது விசயம். நிலப்பிரபுத்துவத்தை விட முதலாளித்துவம் முற்போக்கானது என்று மார்க்ஸே சொல்லியிருக்கிறார்” என்கிறார் ஜெயமோகன். வறுமையோ, பட்டினியோ, படுகொலையோ கூட யாரையும் மார்க்சிஸ்டாக மாற்றிவிடுவதில்லை. ஜெயமோகனுடன் பழகிய  சிபிஎம், சிபிஐ தலைவர்களாலேயே கூட அவரை மார்க்சியவாதியாக மாற்ற. முடியவில்லை. மனிதர்களால் சாதிக்க முடியாத இந்தக் காரியத்தை கேவலம் ஒரு நவ்வாப்பழம் சாதித்துவிட்டதே! இருப்பினும், நவ்வாப்பழத்தால் அறிவொளியூட்டப்பட்ட ஜெயமோகனின் மார்க்சிய அறிவு “சுட்டபழம் சுடாத பழம்” ரேஞ்சில் இருப்பதால் நாம் அதற்குள் இறங்கவில்லை. [] ஒரு இலக்கியவாதியின் இளகிய மனம், கேவலம் ஒரு நவ்வாப்பழத்துக்காக நாலு கோடி சிறுவணிகர்களை கொல்லத் துணிகிறதே! அதை நினைக்கும்போதுதான் நெஞ்சு நடுங்குகிறது. வீடு, நிலத்தை விற்று மஞ்சள் பையுடன் சென்னை வந்து, குடும்பத்தோடு மளிகைக் கடையிலேயே குடியிருக்கும் இலட்சக்கணக்கான அண்ணாச்சிகளோ, அவர்களின் சங்கத்தலைவர் வெள்ளையனோ ரவுடியல்ல. முதலாளிகளின் கொள்ளைக்காக பருத்தி கொள்முதல் விலை குறைக்கப் பட்டதால்தான் விதர்பாவின் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் வாழ்க்கையை கதையாக வழங்கிக் கொண்டிருக்கும் சாய்நாத்தும், அம்பானியின் கோதுமைக் கொள்முதலால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட பஞ்சாப் விவசாயிகளைப் பற்றி எழுதும் வந்தனா சிவாவும் நக்சலைட்டுகள் அல்ல. இவையெல்லாம் ஜெயமோகனுக்குத் தெரியாத உண்மைகளும் அல்ல. எனினும் ஒரு நவ்வாப்பழத்தின் விலை அவரது இதயத்தில் தோற்றுவித்த வலி, நவ்வாப்பழ பிரின்ஸ் என்றொரு நாவல் எழுதும் அளவுக்கு அவரை வெறி கொள்ளச் செய்திருக்கிறது. அவரது இதயத்தில் தோன்றிய வலி, விவசாயிக்குக் கிடைக்கும் விலையை அறிந்த்தால் வந்த்தல்ல என்பதை அவரது செல்போன் சிலாகிப்பைப் படித்தாலே உணர்ந்து கொள்ள முடியும். ஜெயமோகன் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் என்பதோ, மார்க்சியவாதி அல்ல என்பதோ நமது பிரச்சினை அல்ல. இப்பிரச்சினையின் நியாயத்தைப் புரிந்து கொள்வதற்கு ஒருவர் பொருளாதார அறிஞராக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எளியாரை வலியார் ஏறி மிதிக்கும் அநீதியைக் கொள்கைபூர்வமாக நியாயப்படுத்தும் ஒரு பாசிஸ்டைக் காட்டிலும் அதனை மனப்பூர்வமாக வழிமொழியும் இலக்கியவாதி ஆபத்தானவன். மனித மனத்தின் இருட்குகைக்குள் டார்ச் அடித்து, உண்மைக்கும் பொய்க்கும் அப்பாற்பட்ட ஒன்றை, அறிவுக்கும் அனுபவத்துக்கும் சிக்காத ஒன்றைத் தேடுவதாகப் பம்மாத்து செய்து, அந்தப் போலி மன அவஸ்தைக்குத் தனது வாசகர்களையும் ஆட்படுத்தும் வித்தை தெரிந்த ஒரு எழுத்தாளன், இதோ அம்மணமாக நிற்கிறான். இந்த எழுத்து மனம், கூடு விட்டுக் கூடு பாய்ந்து எந்தெந்தப் பாத்திரங்கள் வழியாக என்ன பேசியது, அவற்றில் உங்களைக் கவர்ந்தவை எவை என்பதை மீளாய்வு செய்வதும் மறுவாசிப்பு செய்து பார்ப்பதும் ஜெயமோகன் ரசிகர்களுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரசனை என்ற சொல்லைப் பயன்படுத்துவோர் யாரும் இதனைத் தட்டிக் கழிக்க முடியாது. “எனக்கு சோன் பப்டி பிடிக்கும், ஜெயமோகனும் பிடிக்கும்” என்று கூறும் ருசிகர்களைப் பற்றி பிரச்சினையில்லை. ஜெயமோகனுக்குக் கூடத்தான் நவ்வாப்பழம் பிடிக்கும். அது ஏன் என்று நாம் கேட்க முடியுமா என்ன? (இந்தக் கட்டுரையை உரிய மூளைகளில் உள்ளீடு செய்வது வாசகர்களின் விருப்பம்) ________________________________ 1 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/