[] [வா.மு.கோமுவின் பத்துக் கதைகள்] வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் வா.மு.கோமு மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை உரிமை Creative Commons Attribution-Non Commercial-No De Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப் படுகிறது. இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது. rives 3.0 Un ported License This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் - 1. இரு மனம் விலகுது - 2. இருக்கிறார்கள் மனிதர்கள் - 3. அவிங்க ரொம்ப நல்லவீய்ங்க! - 4. முகச்சவரம் செய்யலியோ! - 5. மல்லிகா என்றொரு ஆவி - 6. திருமண அழைப்பிதழ் - 7. டெங்கு - 8. ஒரு முறை தான் பூக்கும் - 9. அறை -1,2,3 - 10. ஈமு ருசி - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் கதைகள் என்கிற வடிவம் ஆரம்ப காலம் தொட்டு வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன . ஆரம்பத்தில் சிறுகதை எழுத வருபவனுக்கு சுஜாதாவின் கதைகளே அவனுக்கு கற்றுக்கொடுக்கும் விசயங்களை இன்று வரை செய்து வருகின்றன . கதைகள் எம்மாதிரியான வடிவங்களில் சொல்லப்பட வேண்டுமென்ற வரைமுறைகளை நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் . இங்கிருக்கும் ஏழு கதைகளும் இப்படி இங்கே நடந்தனவற்றைத் தான் நான் கூறுகிறேன் என்ற வகையில் உண்மைக்கு மிக நெருக்கமாக சொல்லியிருக்கிறேன் . ஆனாலும் இவைகளில் உண்மை என்பதே துளி அளவிலும் இல்லை என்பதே இந்தக் கதைகளின் வெற்றி ! அன்புடன் என்றும் வா . மு . கோமு .   மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் : த.சீனிவாசன் மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். [pressbooks.com] 1 இரு மனம் விலகுது பேருந்து நிறுத்தத்தில் லிசி பதட்டமாய் நின்றிருந்தாள் . சீக்கிரம் பேருந்து வந்து விட்டால் தே வலை தான் . ஆனால் , அது உடனே வருவதற்கான அறிகுறி எதுவும் தட்டுப்படவில்லை . லிசியின் பயமெல்லாம் கண்ணன் மீது தான் . எப்போதும் இவளுக்கும் முன்பாகவே வந்திருந்து காத்திருப்பவனை இன்று இன்னும் காணோம் . நிம்மதியாயிருந்தது . ஒரு மாதத்திற்கும் முன்பெல்லாம் கண்ணனால் ஒரு சின்னத் தொ ந்தரவும் இல்லை லிசிக்கு . வெறும் பார்வை மட்டுமே வீசிக் கொண்டிருப்பான் . அந்தப் பார்வையிலும் தவறான நோக்கம் எதுவும் இருக்காது . பின் அவனாக இவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து எஃபெம் ரேடியோவில் கடலை போடுவது போல லொட லொடக்க ஆரம்பித்து விட்டான் . தான் பேசுவது எதிராளிக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலையே படமாட்டான் . “ என் பெயர் கண்ணன் ” என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் இவள் பெயரை இது நாள் வரை கேட்கவே இல்லை . “ இன்றைக்கு நீங்கள் கட்டியிருக்கும் சேலை அழகு ” என்பான் . பாத்திரக்காரனுக்கு போட்டு விடலாம் போன்றிருக்கும் இவளுக்கு . “ சு டிதார் உங்களுக்கு எடுப்பாய் இல்லையே ” என்பான் . இவன் யார் இ தெல்லாம் சொல்வதற்கு ? “பிடிக்கலை” என்று இவள் சொன்னாலும் ஏற்றுக்கொள்பவனாய் கண்ணன் இல்லை. “என்னை மாதிரி பையனை பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்” என்று திரைப்படத்தில் தனுஷ் பேசுவது போல பேசினான். ’ஒருவேளை அது உண்மை தானோ?’ என்றுகூட இவளுக்கு சந்தேகமாயிருந்தது. இந்தப் பேருந்திற்கு இன்று என்னவாயிற்று ? கர்த்தரே ! எஃப் எம் ரேடியோ வருவதற்குள் பேருந்தை அனுப்பி விடுங்களேன் . கர்த்தர் இவள் வேண்டுகோளுக்கு செவிமடுக்கவில்லை . அவருக்கு ஆடுகளை மேய்க்கும் வேலை இருக்கிறதல்லவா ! கண்ணன் புன்னகை முகத்துடன் இவள் அருகில் வந்து நின்றான் . லிசி முகத்தை திருப்பிக் கொண்டாள் வேறு புறமாக . “ஹலோ… குட்மார்னிங்! அட ஏங்க தலையில கையை வைக்கறீங்க? குட்மார்னிங் சொன்னா திருப்பிச் சொல்லணும். அது தான் முறையும் வழக்கமும் கூட. நீங்க என்னடான்னா… சரி விடுங்க, என்னைக் காணோமுன்னு தேடிட்டு இருந்தீங்க போல. சாரிங்க, வற்ற வழியில என்னோட சின்ன வயசு கிளாஸ்மேட் மீனா பிடிச்சுட்டா. கல்யாணம் ஆகி கையில பாப்பாவோட இருக்கா. எனக்குத்தான் கொடுப்பினை இல்லை. என்னோட ஆள்காட்டி விரலால உங்க பர்மிஷனோட உங்களை டச் பண்ணட்டுமா? ஷாக் அடிக்குதான்னு செக் பண்ணணும். தினமும் என்னை திட்டவாவது செய்வீங்க… இன்னிக்கு என்ன மெளன விரதமா?” என்றான். “என்னோட வீடு, சர்ச் வாசல், போதாதுக்கு கம்பெனி வாசல் வரைக்கும் லோலோன்னு என் பின்னாடி வர்றீங்களே ஏன் இப்படி டார்ச்சர் குடுக்கறீங்க? வேலை வெட்டி ஏதாவது இருந்தா பாருங்க. என் பின்னாடி வர்றது வேஸ்ட்” பேருந்தைக் காணோமே என்று பார்த்தபடி பேசினாள் லிசி. “ஒரு சுமாரான வாலிபன் ஒரு சுமாரான தேவதையை எதுக்குங்க சுத்துவான்? விரல் சப்புற குழந்தை மாதிரி நீங்க பேசக்கூடாது” “எனக்குத் தெரியும். ஆனா எனக்கு அதெல்லாம் பிடிக்காத விஷயம். சாமி சாமியா இருப்பீங்க.. என்னை விட்டுடுங்க!” “சரி விடுங்க உங்களுக்குப் பிடிக்கலைன்னே வச்சுக்கலாம். உங்களை தனிமையில நான் சந்திக்கணும். உட்கார்ந்து பேசணும். இப்படி பஸ் ஸ்டாப்புல பேசுறது எனக்கும் சங்கடம் தான்” “என்கிட்டே தனிமையில பேசுறதுக்கு என்ன இருக்கு?” “கரண்ட் பிரச்சனை தீர என்ன வழி? அணுமின் நிலையம் தேவையா? பெங்குவின் ஏன் வருஷத்துல ஒருமுறை மட்டும் துணையைத் தேடுது? இப்படி டிஸ்கஸ் பண்ணலாமுன்னு தான்” “என்ன நிஜமாவே விளையாடறீங்களா? அதுக்கு நானா கிடைச்சேன்?” “உங்களுக்கே தெரியும் உலகத்துல எங்கே தேடினாலும் என்னை மாதிரி காதலனை நீங்க கண்டே பிடிக்க முடியாதுன்னு. அது சம்பந்தமாவே பேசுவோமே!” “இது உங்களுக்கே ஓவரா தெரியலையா? நான் எங்கேயும் வரமாட்டேன். டைம் வேஸ்ட்” “தங்கள் சித்தம் என் பாக்கியம். சரி விடுங்க.. நாம ஓடிடுவோமா?” “நீங்க ஓவரா பேசிட்டு இருக்கீங்க.. ஒரு பொண்ணு கிட்ட பேசுற லிமிட் கூடத் தெரியாதா உங்களுக்கு!” “நம்ம விநாயகர் கோயில்முன்னால வச்சு உங்க கழுத்துல தாலி கட்டிடறேன். அப்புறம் தனிக்குடித்தனம் போயிடலாம் நீங்க விருப்பப்பட்டா. வீட்டுக்கு நீங்க தான் எஜமானியம்மா. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுங்க” “எதுக்கு?” “ரன்னிங் போகத்தான். சிரிக்கவே மாட்டிங்களா? கிலோ என்ன விலைன்னு கேட்பீங்க போல. நம்ம பேருந்து வந்தாச்சு. நான் இன்னிக்கு வரலை. சொல்லிக்காம போறீங்களே!” “அப்படித்தான் செய்வேன்” வந்து நின்ற பேருந்தில் ஏறி, ஒரு பார்வை பாராமல் செல்லும் லிசியை வேதனையோடு பார்த்தபடி நின்றான் கண்ணன். அடுத்த நாள் . பேருந்து நிறுத்தத்தில் லிசி வருவதற்கும் முன்னதாகவே வந்து நின்று காத்திருந்தான் கண்ணன் . லிசி பலத்த யோசனையோடு தான் அன்று வந்தால் . தினமும் தொல்லை தரும் கண்ணனோடு நட்பாய் பழகினால் தான் என்ன ? யார் இவன் ? என்ன வேலையில் இருக்கிறான் ? குடும்பம் எப்படி ? நிஜமாகவே என்னை விரும்புகிறானா ? இல்லை பொழுது போக்கிற்காகவா ? கெட்டவன் போலவும் அப்படியொன்றும் தெரியவில்லையே ! இப்படி யோசனைகளோடு நிறுத்தம் வந்தாள் . “நல்ல நாள், நல்ல நேரம் எல்லாம் பார்த்துட்டேங்க. ஞாயிற்றுக்கிழமை காலை எட்டிலிருந்து ஒன்பது மணி வரைக்கும் நல்ல நேரம். இந்த டிவியில எல்லாம் காலையில ராசிபலன் சொல்வாரே… அவர் கிட்டவே கேட்டுட்டேன்” “எதுக்கு?” “தாலி கட்டிக்கத்தான்… ஹா! கோபமா? சரி உங்க விருப்பப்படி மோதிரம் மாத்திக்கலாங்க லிசி” “என் பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்?” “உங்க டேட் ஆஃப் பர்த்தே தெரியுங்க சொல்லவா?” “இன்னும் என்னென்ன விஷயம் என்னைப்பத்தி துப்பறிஞ்சு கண்டு பிடிச்சிருக்கீங்க?” “பூப்போல மனசுஇருக்கிறபெண் லிசி. அப்புறம்.. அட உதட்டை சுழிக்காதீங்க லிசி. ஆனா அதுகூட உங்களுக்கு அழகாத்தான் இருக்கு. உயர்வு நவிற்சி அணியில பேசினால் தான் பெண்பிள்ளைகளுக்கு பிடிக்குமே!” “எத்தனை அனுபவமோ!” என்று லிசி சொன்னதும் கண்ணனின் முகம் இருண்டு போனது. எதுவும் பேசாமல் முகத்தை தொங்க வைத்துக் கொண்டான். மேற்கொண்டு அவன் எதுவும் பேசவில்லை. பேருந்து ஏறுகையில் வழக்கமாக லிசி ஏறும் முன்புற படிக்கட்டுகளில் ஏறாமல் பின்புற படிக்கட்டில் ஏறிக் கொண்டான் . பேருந்தினுள் இருபது டிக்கெட்டுகள் நின்றபடி பிரயாணம் செய்து வந்திருந்தன . எப்போது ம் போல டிரைவர் இரு க் கைக்கு அருகில் சென்று நிற்பவள் , ஊனமுற்றோருக்கான இருக்கை அருகில் நின்று பின்புறம் கண்ணனைத் தேடினாள் . நெரிசலில் ஒதுங்கச் சொல்லி வழக்கம்போல அவன் முன்புறமாக வரவும் இல்லை . படிக்கட்டின் அருகேயே இவளைப் பார்த்தவாறு தான் நின்றிருந்தான் என்றாலும் முகம் வாட்டத்துடன் இருப்பதை இங்கிருந்தே லிசி உணர்ந்தாள் . இப்படி தொட்டால் சிணுங்கியாய் இருப்பான் என்று லிசி எதிர்பார்க்கவில்லை அவனை . ‘ இவள் அருகில் நின்றிருக்கும் வேறு பெண்களைப் பார்க்கிறானா ?’ என்று ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள் . இதற்கும் முன்பு கூட அப்படி அவனை இவள் கவனித்திருக்கிறாள் தான் . ‘ ஆஹா அழகு’ என்றுகூட அவன் மற்ற பெண்களைப் பார்ப்பதில்லை . நடத்துனரிடம் ஸ்டாப்பிங் சொல்லி டிக்கெட் வாங்கிக் கொண்டாள் . அடுத்த இரண்டு நிறுத்தங்களில் கணிசமாய் ஜனங்கள் ஏறவே பேருந்து நிரம்பி வழிந்தது . நடத்துனர் இப்போது பின்னால் கண்ணன் அருகில் தான் கம்பியில் சாய்ந்தபடி நின்று டிக்கெட் கிழித்துக் கொடுத்தபடி இருந்தார் . ஏறியதிலிருந்து லிசி அவனைக் கவனித்தபடி தான் இருந்தாள் . கண்ணன் டிக்கெட் எடுக்கவேயில்லை . நடத்துனரை அவன் கண்டு கொண்டதாகவும் காட்டிக் கொள்ளவில்லை . மூன்று ரூபாய் டிக்கெட் எடுப்பதில் கூட திருட்டுத்தனமா ? ‘முகத்தை தொங்க வைத்துக் கொண்டானே என்று வருத்தப்பட்டேனே! சே.. பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும் என்றானே! நட்போடு பழகலாம் என்று நினைத்தேனே. கர்த்தரே! என்னைக் காத்தீர்கள்!’ இறங்கும் நிறுத்தம் வந்த்தும் லிசி இறங்கி தன் கம்பெனி நோக்கி நடையிட்டாள் . ‘ கண்ணன் இறங்கினானா .. இல்லை , பேருந்திலேயே செல்கிறானா ?’ என்று கூட அவனைக் கவனிக்கவில்லை இவள் . இனி அவனைக் கவனித்து என்னவாகப் போகிறது ? மூன்று ரூபாய் டிக்கெட் எடுப்பதில் ஏமாற்றத் துணிந்தவன் இன்னும் என்னவென்ன ஏமாற்றுகள் செய்வான் . நிறுத்தத்தில் இறங்கிய கண்ணன் , என்ன வருத்தமிருந்தாலும் பின்னால் வருகிறானா என்று எப்போதும் பார்த்து முறைத்தபடியாவது செல்பவள் ஏனோ இன்று திரும்பிப் பாராமல் செல்கிறாளே என்ற தவிப்பில் அங்கேயே நின்று விட்டான் . இந்தப் பெண் பின்னால் பித்துப் பிடித்து அலைவது அவளே சொன்னது போல் டைம் வேஸ்ட் தானோ ! காலம் போகும் வேகத்தில் காதலுக்காக இப்படித் தவித்து நிறுத்தத்தில் நிற்பது இவனுக்கே வெட்கமாயிருந்தது . பார்க்கும் முகங்களெல்லாம் பணத்தேடலில் அலையும் முகங்களாகவே தான் இருந்தன . உண்மைக்காதலோ , பொய்க்காதலோ இதையெல்லாம் மெனக்கெட்டு செய்து கொண்டு தவிப்பாய் இரவுகளைக் கழிக்க பெண்களும் கால ஓட்டத்தில் தயாரில்லை போலத்தான் உள்ளது . காதல் என்ற பைத்தியக்குழியில் இனி காலம் முழுவதும் விழவே கூடாது என்ற முடிவில் திரும்பி நடந்தான் கண்ணன் . முற்றும் போட வேண்டிய இடத்தில் படைப்பாளியாகிய நான் லிசியைப் பார்த்து , ‘ மேடம் ! கண்ணன் உங்களுக்காகவே பேருந்தில் மாத பாஸ் கார்டு வாங்கித்தான் பயணிக்கிறான்’ என்று சொல்லலாம் . இதற்காக நான் ஈரோட்டிலிருந்து மதுரை வரை பயணிக்க வேண்டும் . அப்படிச் சொன்னால் , லிசி மன்னிப்பு கேட்கவும் நட்போடு பழகவும் கண்ணனைத் தேடுவாள் . கண்ணனோ அடுத்த நாளே வேலை நிமித்தமாக சென்னை சென்று விட்டான் . எந்த மூலையில் சென்னையில் அவன் இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது . - குங்குமம் , 28.1.13   2 இருக்கிறார்கள் மனிதர்கள் இருக்கிறார்கள் மனிதர்கள் இப்படி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொள்வோம் என்று ரூத் நினைத்துக்கூட பார்க்கவில்லை . இப்படியான சூழாலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கூடத் தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு ஆதரவற்று நின்றிருந்தாள் . எனக்கு கையும் ஓடலை , காலும் ஓடலை என்று கோவையில் இருக்கும் இவள் அக்கா தான் அடிக்கடி சொல்வாள் . இப்போது தான் ரூத்திற்கு அந்த வார்த்தையின் முழு அர்த்தமும் தெரிந்தது . ரூத்தின் பதட்டத்திற்கு காரணம் பிட்டர் ஐயா இறந்து விட்டது தான் . கடந்த நான்கு மாதமாக அவருக்கு வேளாவேளைக்கு மாத்திரைகளையும் , டானிக்குகளையும் கொடுத்து கவனித்துக் கொள்ளும் பணிப்பெண்ணாய்த் தான் டெய்ஸியம்மா இவளை நியமித்திருந்தாள் . டெய்ஸியம்மா வேறு யாருமில்லை . பீட்டரின் மனைவி தான் . இருவருக்கும் வயது வித்தியாசம் என்று பார்த்தால் பதினைந்து வருடங்களாவது இருக்கும் . டெய்ஸியம்மாவின் தலைமுடிக்கற்றைகளில் ஒன்றிரண்டு இப்போது தான் நரைக்கத் துவங்கியிருந்தன . இந்த ஈரோடு நகரில் அரசாங்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டு இருக்கும் டெய் ஸியம்மாவுக்கு வயது நாற்பத்தியெட்டு ஆகிறது . ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பீட்டர் ஐயாவை இவள் மணந்து கொண்டபோது வயது இருபத்தி நான்காம் . இத்தனை வருட தாம்பத்ய வாழ்வில் தன் வயிற்றில் ஒரு புழு பூச்சி கூட உதிக்கவில்லையே என்ற ஏக்கம் டெய்ஸியம்மாவின் மனதில் இருப்பதை வந்த கொஞ்ச நாளில் ரூத் உணர்ந்து கொண்டாள் . பீட்டர் ஐயா ஒரு இதய நோயாளி . பணம் உள்ளவர்களுக்கு கடவுள் ஏதோ வகையில் நோயையும் கொடுத்து அவர்களை அவஸ்தைக்கு உள்ளாக்கி விடுகிறார் என்றே ரூத் நினைத்திருந்தாள் . ஆனாலும் இது டெய்ஸியம்மாவின் குடும்பத்திற்கு அதிகம் தான் என்றும் நினைத்தாள் . ஏற்கனவே குழந்தை பாக்கியத்தை கடவுள் பறித்துக்கொண்டாரே ! பின் எதற்காக இந்த வியாதியும் ? நோயாளிக் கணவரை கவனித்துக் கொள்ள பெண் தேவை என்ற பேப்பர் விளம்பர வரிகளைக் கவனித்துத் தான் ரூத் தன் அக்காவிடம் அதை காட்டினாள் . அது மளிகைக் கடையில் கடலை மாவு வாங்கி வருகையில் அதைக் கட்டிக்கொடுத்த காகிதம் . எந்த மாதத்தின் , எந்த வருடத்தின் துண்டுப்பேப்பர் என்று கூட இவளுக்கு தெரியாது . இருந்தும் அக்கா வீட்டில் தனக்கிருக்கும் பிரச்சனைகளை மனதில் உணர்ந்தவளாய் விளம்பர வாசகங்களின் கீழ் இருந்த எண்களுக்கு தொடர்பு கொண்டாள் . ரூத் தான் பனிரெண்டாவது வரை படித்த விசயத்தையும் , மேற்கொண்டு படிக்க இயலாத வறுமையையும் , அப்பா , அம்மா தன்னை விட்டுப்போன துக்கமான செய்தியையும் அக்காவின் கணவர் தன்னை இரண்டாவது மனைவியாக அடைய வலை விரித்திருப்பதையும் எதிமுனையில் கேட்டுக் கொண்டிருந்த டெய்ஸியம்மாவிடம் விவரித்தாள் . எல்லா தகவல்களையும் கேட்டுக் கொண்ட டெய்ஸியம்மா பெருமூச்சு விட்டாள் . அந்த விளம்பரத்தை பேப்பரில் கொடுத்து ஒரு மாத காலம் ஆகி விட்டதாகவும் , ஒன்றிரண்டு பெண்கள் இரண்டாயிரம் என்ற சம்பளத் தொகை போதாது என்றதாகவும் , வீட்டிலேயே தங்கிக் கொள்ளும் யோசனையை அவர்கள் நிராகரித்து விட்டதாகவும் கூறியவள் இதற்கெல்லாம் சம்மதமா ? என்று கேட்கவும் ரூத் உடனே சம்மதித்தாள் . மேலும் டெய்ஸியம்மாவின் குரல் இறந்து போன தன் அம்மாவின் குரலை ஒத்திருப்பதையும் உணர்ந்தாள் . அக்கா தன் ஒரே தங்கையை இப்படி அனுப்புவதற்காக அழுதாள் . மாறாக வேறுவழி ஏதுமில்லாத நிலையை எண்ணியும் அக்கா அழுதால் . அழுவதைத் தவிர அவளுக்கு வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை . டெய்ஸிஅயம்மா ரூத்தை தன் குடும்பத்தில் ஒருத்தியாகவே பாவித்தாள் . அவர்களுக்கு குழந்தை என்று பிறந்து அதுவும் பெண்ணாக இருந்திருந்தால் தன் வயது தான் இருக்கவேண்டும் என்று ரூத் நினைத்துக் கொண்டாள் . போதாதற்கு பீட்டர் ஐயா எந்த நேரமும் கட்டிலில் இருந்தாலும் இவளை , ‘ வா மகளே ’ என்றே தான் குரல் நடுங்க கூப்பிடுவார் . மாத்திரைகள் மீது அவர் தீராத வெறுப்பு கொண்டிருந்தார் . சிறு குழந்தைகள் அடம்பிடிப்பது போன்றே முகத்தை திருப்பிக் கொண்டார் . வயதானவர்கள் குழந்தைகள் தான் என்று எங்கோ படித்த நினைவு இவளுக்கு வந்தது . வந்த சில நாட்களில் தன்னை அந்த குடும்பத்தில் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்டாள் ரூத் . டெய்ஸியம்மா தினமும் பள்ளிக்கு கிளம்பும் சமயம் வீட்டை உள்புறமாக தாழிட்டுக் கொள் , ஏதாவது அவசரம் என்றால் செல்போனிற்கு கூப்பிடு , வீதியில் காய்கறிக்காரன் சென்றால் குரல் கேட்கும் , போனமுறை முற்றிப்போன கத்தரி , வெண்டையை பொறுக்கி எடுத்துவிட்டாய் ! என்று ஏதாவது விசயத்தை இவளிடம் சொல்லிச் சென்றாள் . ஏனோ தனக்கு சம்பளம் தரும் எஜமானியம்மாவின் குரல் போல டெய்ஸியம்மா சொல்லும் பேச்சுகளை இவள் எடுத்துக் கொள்ளவில்லை . அம்மாவே சொல்லிச் செல்வதாய் உணர்வாள் . ஆனால் இதுவெல்லாம் எத்தனை நாளைக்கு ? என்ற கேள்வி அவளுக்குள் இருந்து கொண்டு மிரட்டிக் கொண்டேயிருந்தது . முதல் மாத சம்பளப்பணம் உனக்கு ! என்று டெய்ஸியம்மா இவளிடம் கவரை நீட்டிய போது அதை கைநீட்டி வாங்கிக் கொள்ள கூச்சப்பட்டாள் ரூத் . ’ உங்ககிட்டயே இருக்கட்டும்மா ! எனக்கு இப்போ எந்த செலவும் இல்லை . பின்னாடி வாங்கிக்கறேன் எனக்கு தேவை என்கிற போது ’ என்று சொல்லிவிட்டு அங்கே நிற்கப்பிடிக்காமல் சமையல் அறையில் வேலை இருப்பது போல் நுழைந்து கொண்டாள் . டெய்ஸியம்மா ரூத்தை வற்புறுத்தி ’ வாங்கிக்க ரூத் ’ என்று சொல்லவில்லை . பின்வந்த மாதங்களில் ரூத்திற்கு சம்பளம் தரவேண்டுமென்ற எண்ணமே இல்லாத ஒரு பெண்மணியாகவும் டெய்ஸியம்மா மாறிப்போனாள் . பீட்டர் ஐய்யா நல்ல உறக்கத்தில் இருகிறார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்த ரூத் வீட்டில் கீழ் ஹாலில் ரமணிசந்திரன் நாவல் ஒன்றில் ஆழ்ந்திருந்தால் . அந்த நாவலில் இவளைப்போன்றே ஒரு பெண் ஒரு நோயாளியை கவனிக்கும் பொறுப்பில் இருந்தாள் . ஐந்துமணியைப் போல எப்போதும் அவர் விழித்துக் கொண்டிருப்பார் என்றே மாடிப்படிகள் ஏறிச் சென்றாள் . அவர் அரையில் நுழைந்தவள் எதேச்சையாகத்தான் அவர் உதட்டினோரம் ரத்தம் கசிந்து கொண்டிருப்பதை கவனித்தாள் . பதை பதைத்து கட்டிலின் அருகே ஓடிச் சென்று , ‘ ஐயா ! ஐயா !’ என்று கூப்பிட்டுப் பார்த்து ஏமார்ந்தாள் . சவத்தின் களை அந்த முகத்தில் ஒட்டியிருந்தது . நாசித்துவாரம் அருகே விரல் வைத்துப் பார்த்தால் . அவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது . மகளே ! என்றழைக்கும் பீட்டர் ஐயா அல்ல அவர் . பிணம் ! சுவாசிப்பதை நிறுத்திக் கொண்ட உடல் . பயந்து போய் அறையை விட்டு வெளியேறியவள் படிகளில் நிதானமின்றி கீழிறங்கி ஹாலில் ஷோபாவில் வந்தமர்ந்தால் . அவள் இதயம் தாறுமாறாக துடித்தது . ரூத் வந்த நாளில் இருந்து சொந்தம் என்று சொல்லிக் கொண்டு யாரும் டெய்ஸியம்மாவின் வீட்டுக்கு வரவில்லை . மேலும் தனக்கு இன்ன இன்ன ஊரில் இப்படி இப்படி சொந்தம் இருக்கிறது என்றும் கூட டெய்சியம்மா சொல்லி இவள் கேட்டிருக்கவில்லை . இருந்தும் ஹாலில் போன் அருகே இருந்த நீலவர்ண டைரியில் இருந்த பத்து , இருபது எண்களுக்கும் ரிங் அடித்து இந்த மாதிரி இந்த மாதிரி என்று சரியாய் வார்த்தை வெளிவராமல் தயங்கித் தயங்கி தகவலைச் சொன்னாள் . அவர்கள் எல்லோருமே யாரம்மா நீ ? என்றே கேட்டார்கள் . இவளுக்கு பதில் சொல்ல சிரமமாய் இருக்கவே நர்ஸ் என்றாள் . அவர்களோ பீட்டர் பாடி எங்கிருக்கு ? ஹாஸ்பிடல்லயா ? வீட்டுலயா ? என்று கேட்டுத் துழைத்தார்கள் . இடையில் ஒரு எண்ணில் பேசியவர் ஆசிரியை போல் உள் ள து . ’ போச்சா ! சென்னை போக வேண்டாமடி வீட்டில் இப்படி இருக்கும் போது என்றேன் . அவள் கேட்கவேயில்லை . டெய்ஸிக்கு தகவல் சொன்னியாம்மா ?’ என்றார் . ‘ அவங்க செல்போன் லைனே கிடைக்க மாட்டிங்குது ’ என்றாள் ரூத் . ‘ எப்படி கிடைக்கும் ? ட்ரெய்ன்ல போறப்ப அவ்ளோ சீக்கிரம் கிடைக்காதே ! எதுக்கும் நானும் ட்ரை பண் ணு றேன் ’ என்றவருக்கு தேங்ஸ் சொன்னாள் ரூத் . இவள் போனை வைத்ததும் அது நீளமாய் அலறியது . எடுத்து ஹலோ ! என்றாள் ரூத் . ”நான் டெய்ஸி பேசுறேம்மா ரூத்.. சென்னையில இப்போத்தான் இறங்கினேன்” என்று அவர் பேசத்துவங்கியதுமே இவள் அழத் துவங்கினாள். டெய்ஸியம்மா இவள் அழுகையிலேயே உணர்ந்து கொண்டாள். ‘கூட வேலை செய்யுற டீச்சர் பொண்னோட கல்யாணமுன்னு கிளம்பினேன் பாரு. வேண்டாம் வேண்டாமுன்னு சொன்னாங்க. கேக்காம மடச்சி நான்’ என்று டெய்ஸி தன்னையே நொந்து கொண்டுஅழத் துவங்கினாள் போனில். கடைசியாக, ‘சரி சரி நான் திரும்பிடறேன்’ என்றவர் போனை கட் செய்து கொள்ளவும் இவள் ரிசீவரை வைத்துவிட்டு கண்னீரைத் துடைத்துக் கொண்டாள். ஆண்கள் , பெண்கள் என சிறு கூட்டம் வீட்டினுள் நுழைந்ததும் இவளுக்கு சற் று தெம்பு வந்தது . அவர்களை மாடிக்கு அழைத்துச் சென்றாள் . அவர்கல் பீட்டர் ஐயாவைச் சுற் றி லும் மெளனமாய் நின்று கொண்டார்கள் . வந்தவர்களுக்கு காபி தயாரிக்கலாமா ? குடிப்பார்களா ? என்ற சந்தேகத்தில் கைபிசைந்து நின்றாள் . எல்லோருமே கருங்கல்பாளையம் உள்ளூர் தான் போலுள்ளது . அவர்கள் எல்லோரையும் இப்போது தான் முதலாய் பார்க்கிறாள் . அவர்க ளு க்கும் இவள் யார் ? என்ற விபரம் தெரியாமல் இவளிடம் துக்கம் விசாரிக்க தயங்கினார்கள் . டீச்சரைக் கேட்டார்கள் . இவள் விசயத்தை சொன்னதும் , ’ எப்படியும் இனி காலையில் தான் வந்து சேருவாங்க ! காத்தால வந்து பார்த்துக்கலாம் ’ என்று அவர்களாகவே பேசிக் கொண்டு படியிறங்கினார்கள் . அவர்கள் அனைவரும் சென்ற பிறகு மேலும் இரண்டு மூன்று பேர் வந்தார்கள் . இழவு விழுந்த வீடு மாதிரியே தெரியலையே , ஏப்பா வந்த போனு நெசமாப்பா ? என்று பேசிக் கொண்டே வந்தார்கள் . அவர்களையும் மேலே கூட்டிப்போய் பீட்டர் ஐயாவின் சடலத்தை காட்டினாள் . ஒருவர் மட்டும் நிலமையை புரிந்து கொண்டு ஐஸ்பெட்டிக்காரனுக்கு தகவல் கொடுத்தார் . பதினைந்து நிமிடத்திற்குள் மினி ஆட்டோவில் கண்னாடிப் பெட்டி வந்து சேர்ந்தது . அவர்கள் ஐயாவை பெட்டியினுள் படுக்கவைத்து விட்டு காலையில் வருவதாக சொல்லி போய் விட்டார்கள் . நேரமும் இரவு எட்டு மணி ஆகிவிட்டது . ஐஸ் பெட்டிக்கு ஏற்பாடு செய்த நபரும் , ‘ நான் போறேன்மா ’ என்றபோது இவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை . எனக்கு பயமாயிருக்கு இருங்க இங்கேயே ! என்று எப்படி அவரிடம் சொல்வாள் ? அவரும் சென்ற பிறகு ரூத் என்றுமில்லாத நிரந்தரத் தனிமையை உணர்ந்தாள் . மேலே பெட்டியில் இருக்கும் பிணத்தின் நினைப்பை மறக்க முடியவில்லை . ரூத் சின்னவயதிலிருந்தே பிணம் என்றால் பேய் என்று பயப்படுவாள் . பிணம் வீதியில் சென்றால் கூட அந்த வீதியில் நடக்க மாட்டாள் . விதவிதமான கற்பனைகள் அவள் மனதில் தோன்ற ஆரம்பித்தன . ஐயாவின் உயிர் இந்த வீட்டில் சுற் றி க் கொண்டிருக்குமோ என்று அச்சம் கொண்டாள் . வெளியே இவர்களின் வளர்ப்பு நாய் திடீரென குரைக்கத் துவங்கியது . ’ டாமி சும்மாயிரு ’ என்றாலும் அது இடைவிடாமல் குரைத்தது . வீட்டுக்கு பலர் வந்து போனதை அது புதிதாய் கண்டதால் அப்படி குரைத்தது . சமயத்தில் மின்சாரம் வேறு போய் விட்டது . கருங்கல்பாளையமே இருட்டில் மூழ்கி அமைதியானது . ஹாலில் டெலிபோன் அலறல் துவங்கியது . இரவு என்பதால் அதன் ஒலி கணீரென கேட்டது . ரூத் பயத்துட ன் இருட்டு ஹாலில் டெலிபோன் நோக்கிச் சென்று அதை காதில் எடுத்து வைத்தாள் . டெய்ஸியம்மா தான் . மாடியறையில் ஐயாவின் டேபிள் மீது சிவப்பு வர்ண டைரி இருப்பதாகவும் அதில் முதல் பக்கத்தில் பச்சை வர்னத்தில் மூன்று போன் எண்கள் இருக்குமெனவும் அவர்களுக்கு உடனே தகவல் சொல்லிவிடு என்றும் சொல்ல இவள் தன் நிலையை சொல்ல ஆரம்பித்த போது கட்டாகி விட்டது . ரூத் மெழுகுவர்த்தி மூன்றை பற்ற வைத்து அறையில் ஒளி ஏற்றினாள் . மனதை திடமாக்கிக் கொண்டு கையில் பிடித்திருந்த மெழுகுவர்த்தியுடன் மாடிப்படிகள் ஏறினாள் ரூத் . டெய்ஸியம்மா சிவப்பு நிற டைரியை அந்த அறையிலா வைத்திருக்க வேண்டும் ? தன் பி ன் கழுத்துக்கு அருகே யாரோ பெரிதாய் மூச்சு விடுவதைப் போன்று உணர்ந்து திடுக்கிட்டு நின்றாள் . பிணம் இருக்கும் பக்கம் பார்க்கவே கூடாது , பார்க்கவே கூடாது என்று தனக்குள் சொல்லிக் கொண்டே ஐயாவின் அறையில் நுழைந்தவள் பார்வை பிணத்தை நோக்கித் தான் சென்றது . வீல் என்று அலறியவள் மெழுகுவர்த்தியை இறுக்கமாய் பிடித்துக் கொண்டே கண்ணிமைக்கும் நேரத்தில் படியிறங்கி தட தடவென வந்தவள் ஹாலையும் தாண்டி வெளி வாயிலுக்கு வந்தாள் . இது தனக்கு தேவையா ? என்ற பச்சாதாபத்தில் வீறிட்டு அழத் துவங்கினாள் . நாய் இன்னமும் இருட்டை நோக்கி குரைத்தபடி தான் இருந்தது . சமயத்தில் மின்சாரம் வந்ததும் தெருவிளக்குகள் பளீரிட்டன . வாசல்படியில் குனிந்த வாக்கில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவள் முன்பாக ஜான்சன் வந்து நின்று , ‘ ஏங்க !” என்றான் . ஜான்சன் எதிர் வீடு தான் . அவனும் அவன் அம்மாவும் மட்டுமே இருப்பது இவளுக்குத் தெரியும் . டெய்ஸியம்மா இவனைப்பற்ரி நல்லவிதமாய் சொல்லியிருக்கவில்லை . மனைவியைக் கொன்று தூக்கில் தொங்க விட்டவன் என்று தான் சொல்லியிருந்தார் . இப்போது தன் எதிரே நிற்கும் அவன் முகம் பார்த்தால் முகப்பு விளக்கில் ரூத் . இப்போதைக்கு இவனாவது கிடைத்தானே என்று முகத்தை துடைத்துக் கொண்டாள் . ‘ நீங்களா இப்ப பயந்து கத்துனீங்க ?’ என்றவனிடம் விசயம் பூராவும் சொன்னாள் . கடைசியாக மாடியில் இப்போ வேற பிணம் கிடக்கு ! என்றாள் . “உங்களுக்கு பயம்.. வேற பிணம் எங்க இருந்துங்க வந்துச்சு? அவரோட உடல் கறுத்துப் போயிருக்கும். சரி வாங்க நான் அந்த டைரியை எடுத்துத் தர்றேன்” என்றவனை வீட்டினுள் கூட்டிப் போனாள் ரூத். மாடியேறிச் சென்று பீட்டர் ஐயாவின் அறைக்கு வெளியே நின்று கொண்டாள். ஜான்சன் அறைக்குள் சென்று டேபிளின் மீதிருந்த டைரியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான். ‘எதிர்வீட்டுல பத்து வருசமா இருக்கேன். இன்னிக்கித் தான் இந்த வீட்டுக்குள்ள வர்றேன். எந்த நேரமும் இந்த வீடு பேய் வீடு கணக்கா சாத்தியே கிடக்கும். அந்த டீச்சர் யார் கிட்டவும் பேச்சே வெச்சுக்க மாட்டாங்க’ என்று பேசிக்கொண்டே ஹாலுக்கு இருவரும் வந்தார்கள். டைரியில் இருந்த எண்களுக்கு ஜான்சனே தகவலைச் சொன்னான். இப்போது இவனை முழுதாக நம்பலாமா ? என்ற பயமும் இவளுக்கு . பெரிய வீடு , தனியாக வேறு நானொருத்தி , இரவு மணி வேறு ஒன்பதை தாண்டிவிட்டது . இவன் கொலைகாரன் என்று வேறு அம்மா சொன்னதே ! வாழ்நாளில் ஒரே நாளில் இத்தனை பயங்களுடன் ஒரு நாளைக்கூட கழித்ததே இல்லை என ரூத் நினைத்தாள் . ”சாப்பிட்டு இருக்க மாட்டீங்க நீங்க, வாங்க எங்க வீட்டுக்கு. அம்மா இருக்கு. கூட்டாஞ்சோறு தான் இன்னிக்கி எங்க வீட்டுல” என்றவனிடம் ’பசிக்கலை’ என்றாள். ‘பிணம் இருந்தா உங்களை அது என்ன பண்ணுது? அதுக்காக பசியோட இருக்கணுமா?’ என்றான் ஜான்சன். ‘பயந்து பயந்தே எனக்கு வயிறு நிரம்பிடுச்சுங்க’ என்றாள் ரூத். அவன் சிரித்தான். இவனா மனைவியை கொன்றிருப்பான் ? ‘ எங்கம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடறேனுங்க . போனவனை காணோமுன்னு இருப்பாங்க . மறுபடியும் பயந்து கத்திடாதீங்க’ சிரித்தபடி சொல்லிவிட்டு சென்றவன் திரும்பி வருகையில் கையில் ஹார்லிக்ஸ் டம்ளரோடு வந்தான் . இவள் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் . கடைசிக்கு இவனாவது என் பயத்தை உணர்ந்து துணைக்கு வந்தானே ! என்றிருந்தது . ஜான்சன் ஒரு ஷோபாவிலும் , ரூத் ஒரு ஷோபாவிலும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்தபடி அமர்ந்து கொண்டார்கள் . டிவி பார்ப்போமா ? என்றவனிடம் ’பிணம் இருக்குற வீட்டுல தப்புங்க’ என்று சொன்னதும் ’சரி’ என்ரு சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டான் ஷோபாவில் . இவள் தன் வாழ்க்கைச் சுருக்கத்தை அவனிடம் சொல்லி முடித்தாள் . அவனைப் பற்றியும் விசாரித்தாள் . தனியார் பேருந்தில் டிரைவர் என்றும் , பிடிவாதக்காரியை மணந்து கொண்டு வாழ்க்கையில் பட்ட வேதனைகளை மறக்கவும் , மறுக்கவும் முடியாமல் சொன்னான் . அல்ப விசயத்துக்காக தூக்குப் போட்டுக் கொண்டவளை இன்னமும் மன்னிக்க தயாரில்லை என்றான் . அப்படியே தூங்கியும் போனான் . மனதில் வஞ்சகமும் கவலைகளும் இல்லாதவர்கள் தான் படுத்தவுடன் தூங்குவார்களாம் . இதை ரூத் எண்ணிக் கொண்டாள் . இவனும் இங்கில்லை என்றால் விடிவதற்குள் பயத்தில் தானும் செத்திருப்போம் என்று யோசித்துக் கிடந்தவள் கண்ணயர்ந்தாள் . டெலிபோன் சப்தம் கேட்டு திடுக்கென விழித்தவள் எழுந்து போய் ரிசீவரை எடுத்து காதுக்கு வைத்தால் . ’ ஈரோடு வந்து இறங்கிட்டேன்மா . கால்மணி நேரத்துல ஆட்டோ பிடிச்சு வந்துடறேன்’ என்று டெய்ஸியம்மா தான் பேசியது . மணியைப் பார்த்தால் . அது விடிகாலை நான்கை காட்டியது . ஜான்சனும் டெலிபோன் சப்தத்தால் எழுந்து கொண்டான் . முகத்தை உள்ளங்கையால் துடைத்துக் கொண்டே எழுந்தவன் , ‘ அந்தம்மாவுக்கு என்னை பார்த்தால் பிடிக்காதுங்க . அவங்க வர்றப்ப நான் இங்க இருக்கலை நான் கிளம்புறேன்’ என்று சொல்லி வெளி வாயில் நோக்கி சென்றவன் பின்னால் சென்றவள் ‘தேங்ஸ்’ சொன்னாள் . டெய்ஸியம்மா வீடு வந்து சேர்ந்த பிறகுதான் ரூத் நிம்மதியானாள் . விடிகாலையில் சொந்தம் பந்தம் என்று கணிசமான கூட்டம் வீட்டில் சேர்ந்து விட்டது . காரியங்கள் துரிதமாய் நடைபெறத் துவங்கின . இந்த விட்டில் , தான் யார் ? என்று தெரியாமல் ஒதுக்கமாய் நின்றிருந்தாள் ரூத் . அன்று பத்துமணி அளவில் கல்லறைத் தோட்டத்தை சேர்ந்த அமரர் ஊர்தியில் பீட்டர் ஐயாவின் உடல் ஏற்றப்பட்டு ஊர்தி கிளம்பிப் போயிற்று . ரூத்திற்கு நடந்து கொண்டிருந்த விஷயங்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாய் இருந்தன . மதியம் ஒருமணி என்கிறபோது லாரி ஒன்றினுள் வீட்டினுள் இருந்த சாமான்கள் ஏற்றப்பட்டு அது கிளம்பிப் போயிற்று . மீண்டும் ஜாமான்கள் மீதம் இருந்ததால் டெய்ஸியம்மாவின் தங்கையின் கணவர் இன்னுமொரு மினி லாரியை வரவழைத்தார் . அவர்களின் குடும்பம் சென்னிமலையில் இருக்கிறதாம் . டெய்ஸியம்மா தங்கையோடு தங்கிக் கொள்வதாய் ஏற்பாடாம் . அவர் சம்மதித்த்தும் காரியங்கள் மின்னல் வேகத்தில் நடந்தன . இந்த வீட்டை டெய்ஸியம்மாவின் சொந்த வீடு என்று தான் இவள் இதுநாள் வரை நினைத்திருந்தாள் . ஆனால் வாடகை வீடாம் . மாதம் மூன்றாயிரமாம் . ஐய்யோடா என்று நினைத்தாள் ரூத் . இறுதியாக மாருதி வேன் ஒன்று வந்து வீட்டின் முன் நின்றதும் டெய்ஸியம்மாவை அவரது தங்கை வீட்டினுள்ளிருந்து கூட்டி வந்தார் . இவள் சோக முகமாய் அவர் முன் போய் நின்றாள் . ரூத் டெய்ஸியம்மாவிடம் தனக்கான பணத்தை கேட்டாள் . அதை அந்த சமயத்தில் கேட்க சங்கடம் தான் என்றாலும் கையில் எதுவுமில்லை என்பதால் அப்படி கேட்டாள் . “நீ தாண்டி ஐயாவை கொன்னுட்டே! கடைசி நேரத்துல என்ன துடி துடிச்சாரோ? உன்னால தாண்டி அவரு செத்தாரு” என்ரு கத்திப் பேச ஆரம்பித்த டெய்ஸியம்மா முன் உதடு பிதுங்கி அழத்துவங்கினாள் ரூத். வேனில் டெய்ஸியம்மா ஏறியதும் அழுது கொண்டிருந்த இவளை கூப்பிட்டார். ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை வேனில் இருந்தபடி கைநீட்டி இவளுக்கு கொடுத்தாள் டெய்ஸியம்மா. அதை இவள் வாங்கிக் கொண்டதும் வேன் கிளம்பிப் போயிற்று. ரூத் காலியாயிருந்த வீட்டினுள் சென்று தன் துணிமணிகளை சூட்கேசில் திணித்துக் கொண்டு வெளிவந்தாள் . எதிர் வீட்டு வாசலில் இருந்து ஜான்சன் இவளைப் பார்த்தபடி வந்தான் . அவனைப் பார்த்த்தும் இவள் ‘ஓ’ வென அழத்துவங்கினாள் . ‘ அழாதீங்க ! இன்னும் நீங்க என்ன சின்னப் பிள்ளையா ?’ என்றவன் தோளில் சாய்ந்து கதறினாள் . “என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறீங்களா?” அழுகையினூடே அவனைக் கேட்டாள் ரூத். 000   3 அவிங்க ரொம்ப நல்லவீய்ங்க! “ஏப்பா அறிவு கெட்டவனா இருக்கியே, அந்தப்பிள்ளையப் போட்டு தெனமும் குப்பு குப்புன்னு சாத்துறதையே பொழப்பா வச்சிட்டு இருக்கியே, படாத எடத்துலபட்டு பொசுக்குனு உசுரு போயிட்டா அப்புறம் வான்னா வருமா உசுரு? நாலு பேரு வரப்போக இருக்கிற எடத்துல தெனமும் உன்னோட ரோதனையா இருக்குதே?” என்று சப்தம் போட்ட ராமசாமிக் கவுண்டர் முருகணை கடைக்குள் இருந்து சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து வந்து கடை வாசலில் நிறுத்தினார். “நல்லா நாலு வார்த்தை நாக்கைப் புடுங்கிக்கற மாதிரி கேளுங்கய்யா என்னோட ஊட்டுக்காரனை. பொழைக்க வந்த எடத்துல பொழைப்ப பாக்காம குடி என்ன வேண்டிக் கெடக்குதுங்கய்யா?” என்ற கண்ணம்மா மூக்கை உறிஞ்சிக் கொண்டே டேபிளில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு தேங்காய் சட்னி ஊற்றினாள். இவள் இப்படி சொன்னதும் மிதப்பு கூடிவிட்டது கவுண்டருக்கு. “நாளையும் பின்னியும் உன்னோட ரவுசு கேட்டுதுன்னு வச்சுக்கோ எனக்கு சுத்தப்படாது. கடையைத் தூக்கிட்டு ஓடீருங்க ரெண்டு பேரும். ஏதோ வழி இல்லாம வாய்ப்பாடி வந்துட்டீங்களே பொழைச்சிக்கட்டுமுன்னு ரோட்டோரத்துல சாலையை போட்டுக்கங்கன்னு சொன்னதுக்கு கொலைக் கேசுக்கு நாங்க போலீஸ் ஸ்டேசன் நடக்கோணுமாட்ட இருக்குதா! நாளையில இருந்து உம் பொண்டாட்டி கிட்ட சண்டைக் கட்டமாட்டேன்னு சொல்றா! குடி என்னடா குடி உனக்கு? நாலு காசு சம்பாதிக்க வந்தியா இல்ல குடிச்சு அழிக்க வந்தியா? யாருடா குடிக்காம இருக்காங்க? பதனமா பொழைக்கிற வழியப்பாரு. இத்தனை சொல்றேன் எருமை மாடு மேல மழை பேஞ்சாப்ல நிக்கறியேடா! சரீங்க கவுண்டரேன்னு ஒரு வார்த்தை சொல்றானா பாரு” “என்னை மன்னிச்சுடுங்க” என்று கவுண்டரின் காலில் நீட்டி விழுந்தவன் பிறகு கடை மூடும் வரை எழுந்திருக்கவேயில்லை. “நாயி வாலை நிமுத்த முடியுமுங்களா மாப்ளே! நீங்க சொன்னதை இந்தக்காதுல வாங்கி அந்தக் காதுல விட்டிருப்பான். போதையில இருக்கிறவனுக்கு புத்தி சொன்னா மண்டையில ஏறுமுங்களா? வந்து நாலு புட்டுமாத் தின்னு போட்டு ஊரு போற வழியப் பார்ப்பீங்களா” என்று கடையினுள் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் கூப்பிட ராமசாமிக் கவுண்டர் கடைமுன் இருந்த குடத்தில் தண்ணீர் மோந்து ஓரமாய் கைகழுவிவிட்டு கடைக்குள் வந்தமர்ந்தார். கண்ணம்மா அவருக்கு இலை போட்டு தண்ணீர் தெளித்தாள். கண்ணம்மாவும் அவள் புருசன் முருகனும் என் கிராமத்தினுள் நுழைந்து ஒரு வருடம் போல ஆகிவிட்டது . இன்ன சாதி என்றும் வடக்கே சத்தியமங்கலம் பக்கமிருந்து வருவதாகவும் உள்ளூஉர் பெரிய மனிதர் காலில் விழுந்து கெஞ்சி ரோட்டோரமாக சாலை போட்டு இட்லி வியாபாரம் துவங்கி விட்டார்கள் . எழுபது வீடுகள் இருக்கும் கிராமத்தில் இட்லிக்கடை போட்டு சன்பாதிப்பது நிசமா ? என்று கேட்டவர்கள் எல்லோரும் இப்போது கண்ணம்மா கடையின் நிரந்தர வாடிக்கையாளர்கள் . இட்லி சும்மா புசு புசுன்னு நமீதா மாதிரி இருக்குதுப்பா . இது குஷ்பு இட்லிக்கும் சேர்த்தி இல்லை . நமீதா இட்லியே தான் என்று பேசினார்கள் . அவர்கள் வேடிக்கைக்காக சொன்னாலும் இட்லி மீது ஆசையே இல்லாத எனக்கும் அது சுவையாகவே இருந்தது . நைட்டுல சட்னிக்கும் குழம்புக்கும் காரம் கொஞ்சம் தூக்கலா போட்டுருவாளாட்ட இருக்கு மாப்ளே . அடிச்ச போதை கிர்ர்ருன்னு ஒரு தூக்கு தூக்குது என்பார்கள் . பக்கத்து சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்தெல்லாம் சாப்பிட வரப்போக இருந்தவர்கள் தங்கள் வீட்டுக்கு கொண்டு செல்ல பொட்டணமும் கட்டிக் கொண்டார்கள் . நமீதா இட்லியின் புகழ் சுற்றுப்புறமெங்கும் பரவிற்று . குஷ்பு இட்லி பற்றி தகவல் குஷ்புவுக்குத் தெரியும் . நமீதாவுக்கு தன் பெயரில் இட்லி இருப்பது தெரியாது . குஷ்புவிற்கு கோவில் இருக்கிறது . அது எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியாது . கண்ணம்மா இட்லிக்கு என்னத்தப் போட்டு ஊறவைக்கிறாள் ? ஒருநாள் அவள் மாவாட்டுறப்ப என்ன பொருள் போடறாள்னு நைசா கேட்டுத் தெரிஞ்சிக்கோணூம் . நாம சுட்டா கல்லாட்டவும் , ரப்பர் பந்தாட்டவும் கெடக்குதுகளே ! தக்காளி கடைஞ்சு கொழம்பு வச்சா கொழம்பாட்டவா இருக்குது ? நாயிச் சட்டியில ஊத்துன கொழம்பை நாயே மோந்து பாத்துட்டு ஓடீடுது , என்ரே உள்ளூர் பெண்கள் பேசிக் கொண்டார்கள் . எது எப்படியோ கண்ணம்மா கடை இட்லி என்றால் ஒரு பேர் இருந்தது . இங்கே கிராமத்தில் பிழைப்பதற்கு நகர்ப்புறத்தில் போய் அவள் பிழைக்கலாம் . ஏனென்றால் நகர்ப்புறத்தில் இட்லிகள் இட்லிகளாய் இருப்பதில்லை . இட்லியாக அவைகள் இருந்தால் சட்னி சுவைப்பதில்லை . உள்ளூரில் இருந்து நகர்ப்புறம் செல்வதென்றால் நான்கு திசைகளிலும் ஏழு கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும் . இரண்டே பேருந்துகள் இருந்தன . அதுவும் நேரத்திற்குத் தான் . எழுத்தாளன் என்பதால் என்னை தேடிவரும் நண்பர்களை அழைத்துவர நான் ஏழு கிலோ மீட்டர் டூவீலரில் பயணிக்க வேண்டும் . எதுக்கு அவ்ளோ தூரத்திலிருந்து சிரமப்பட்டு வரவேண்டும் ? என்றே கேட்பேன் . ஏகப்பட்ட எழுத்தாளர்களை சந்தித்துள்ளதாகவும் உங்களை நேரில் சந்திக்க ஒன்னரை வருடமாக திட்டமிருப்பதாகவும் இப்போது தான் சாத்தியப் பட்டதாகவும் கூறுவார்கள் . வந்தவர்களுக்கு பால் இல்லாத காபியும் , நான் என்ன சாப்பிடுகிறேனோ அதுவும் தான் . அசிஸ்டெண்ட் இயக்குனர்கள் என்று சிலர் வந்தார்கள் . என் நேரத்தைக் கொன்று போனார்கள் . அவர்களின் கடையை நான் முழுக்க கேட்டு கருத்து சொல்ல வேண்டும் . நொந்து நூலாகி திரும்பவும் அவர்களை பேருந்துக்கு கொண்டு போய் விட வேண்டும் . அவர்கள் பை ! சொல்லி போய் விடுவார்கள் . நேராக வெறிஒயாய் டாஸ்மார்க் ஓட வேண்டும் நான் . இப்போது சற்று விழித்துக் கொண்டேன் . அசிஸ்டெண்ட் என்ற வார்த்தை காதில் விழுந்ததும் வெளியூரில் இருப்பதாக கூறிவிடுகிறேன் . இந்த இடத்துல கட் பண்ணி ஒரு சாங்கை வைக்கிறோம் சார் ! கண்ணம்மாவுக்கு வருவோம் . அவளிடம் திருமணத்திற்கு இட்லிகள் வேண்டுமென ஆர்டர் கொண்டு வருவார்கள் . அத்தனை சாமான் செட்டுகள் இல்லீங்கொ ! என்று சொல்லி அதை தட்டிக் கழித்து விடுவாள் . முருகன் மூன்று நான்கு மாதங்கள் கடை ஆரம்பித்த புதிதில் மனைவியுடன் கூட மாட வேலை செய்து உதவிகரமாய்த் தான் இருந்தான் . இப்போதும் உதவுகிறான் தான் என்றாலும் தினமும் மாலையில் சி -14 ஊத்துக்குளி பேருந்து ஏறி விடுவான் . போதை ஏற்றிக் கொண்டு திரும்பவும் ஏழே முக்கால் என்று திரும்பிம் அதே பேருந்தில் வந்து இறங்கி விடுவான் . இறங்கியதும் நடையில் தள்ளாட்டம் கூடி விடும் . இந்தக்குடி எதுக்குடா ? என்று உள்ளூர் ஆட்கள் கேட்பார்கள் . ஆமாங்க குடி ஆவாதுங்க ! குடி நம்மை அழிச்சிப் போடுமுங்க , என்பவன் அடிப்பாக்கெட்டில் இருந்து பாட்டிலை எடுத்து கோட்டரின் மூடி திருகி இரண்டு மடக்கு குடித்துவிட்டு செறுகிக் கொள்வான் . “ஆமாங்க, குடி வந்து நமக்கு ஆவாதுங்க! இன்னியோட தலை முழுவிடறனுங்க” என்பான் மீண்டும். புத்தி சொல்ல வந்தவர்கள் தலையில் அடித்துக் கொண்டு போவார்கள். மறுநாள் கேட்டாலும் அதே பதில் தான். நாளையில இருந்து மோந்து பாத்தன்னா ஏன்னு கேளுங்க! இட்லிக்கடை வந்ததும் கண்ணம்மாவுக்கு பூஜை தான் . ஆளுககிட்டச் சொல்லி என் குடியை நிறுத்தப் பாக்கியாடி ? என்று குத்துவான் . கண்ணம்மா ஷகிலாவின் உடம்பு வாகோடு இருப்பதால் கொஞ்சம் ஜமாளித்துக் கொண்டாலும் லொய்யோ லொய்யோ என்று கத்துவாள் . “அக்கா நானு நேத்து எட்டு மணிக்காட்ட கண்ணம்மா கடைக்கி போனேனா.. அவ ஊட்டுக்காரன் கும்மு கும்முன்னு நாலு குத்து வெச்சாம் பாருக்கா, எனக்கே மூச்சு அடைச்சிப்போச்சு. எப்படித்தான் அத்தனை ஈட்டை தின்னுட்டு அவங்கூட அவொ இருக்காளோ போக்கா! நானா இருந்தன்னா முண்டுக்கட்டையில நாலு போட்டு போடா நீயாச்சு உன் குடியாச்சுன்னு முடுக்கி உட்டுடுவேன்” என்று பேசி கண்ணம்மாவின் நிலைமைக்காக உள்ளூர் பெண்கள் பரிதாபப்பட்டார்கள். “தொட்டுத் தாலி கட்டின புருசன் ரெண்டு ஈடு போட்டா வாங்கித்தான ஆவணும் கண்ணு. அவுரு நல்ல மனுசன் தான். போதைஒயில தான் அவுரு பித்தி இசி திங்கப் போயிடுது. காத்தால பாத்துக்க, கிளியே, மணியே, தங்கமேன்னு கொஞ்சுவாப்ல!” என்றே கண்ணம்மா சொல்வாள். அன்றொரு நாள் உள்ளூர் பேருந்துக்கு காலையில் நல்ல கூட்டம் நின்று காத்திருந்தது . திருமண விசேசத்திற்காக அவர்கள் பெருந்துறை செல்ல வேண்டி இருந்ததால் நேரமாகியும் வராத பேருந்தை சபித்துக் கொண்டு நின்றிருந்தார்கள் . கண்ணம்மாவின் இட்லிக்கடை ஊரின் கிழக்கு கடைசியில் இருந்தது . அங்கிருந்து தான் அவல் தலைமுடி அவிழ்ந்து குய்யோ முய்யோ என்று ஓலமிட்டபடி பஸ் நிறுத்தம் நோக்கி ஓடி வந்தாள் . இன்னிக்கி முருகன் காத்தாலயே பூசை போட்டுட்டான் போல இருக்குது பாவம் ! என்று நிறுத்தத்தில் பெண்கள் பேசிக் கொண்டார்கள் . கூட்டத்தினரை நோக்கி அலங்கோலமாய் ஓடி வந்தவள் ப்ந்ந்ருந்து நிறுத்தத்தில் கேட்பாரற்றுக்கிடந்த் நிழற்குடை கட்டிடத்தின் இரண்டு படிகளிலும் கால் வைத்து ஏறியவள் உள்ளே கண்மூடி அமர்ந்திருந்த தாடி வைத்த சாமியார் காலடியில் நெருஞ்சாண் கிடையாக விழுந்தாள் . இதென்ன அதிசயம் ? இந்த கிறுக்குப் பிச்சைக்காரன் காலில் வந்து இவள் விழுகிறாளே ! என்று நினைத்த சில பெண்கள் ஆர்வமாய் நிழல்குடை ஓரம் ஒதுக்கமாய் நின்று ஆவலாய் பார்த்தார்கள் . “சாமி என் புருசன் எப்பப் பார்த்தாலும் நொட்டுக் கையை வச்சுக்கிட்டு என்னை நொங்கெடுக்கிறான் சாமி. இன்னிக்கி காத்தாலயே என்னை அடிச்சதோட விடாம ரெண்டு தண்ணிக் குடத்தை எடுத்து வாசல்ல வீசி ஒடச்சிப் போட்டான் சாமி!” என்று கண்ணம்மா அழுது புலம்பினாள் சாமியாரிடம். தாடியை நீவிக் கொண்டேஇருந்த சாமி கண்ணை விழித்து கூட்டத்தினரையும் தன் முன் கிடக்கும் பெண்ணையும் பார்த்தார். மடியில் கையை விட்டவர் திருநீறு பொட்டணம் ஒன்றை எடுத்து விரித்து விஒரல்களில் எடுத்து “ப்பூ” என்று கண்ணம்மாவின் மீது ஊதினார். கண்ணம்மா எழுந்து அவர்முன் கும்பிட்டபடி நின்றாள். “நீ வடக்க இருந்து வந்தவள் தானே? உன் ஊர் சத்தியமங்கலம் தானே?” “ஆமாஞ்சாமி” “உன் அப்பன் ஆயா இப்ப உசுரோட இல்ல. உன் புருசன் வெளி மாநிலத்துக்காரன் சரி தான?” “ஆமாம் சாமி, என் புருசன் ஊர் கேரளா” “அப்படின்னா சேவல் ஒன்னை புடிச்சுட்டு பூசை சாமான் வாங்கீட்டு நீ அங்கியே இரு. பூஜைக்கு நான் கடைக்கு வர்றேன். பூஜை முடிஞ்சதும் சேவலோட ஒரு காலை நான் ஒடச்சிக்குவேன். நீ ஒரு கால் இல்லாத சேவலோட கடையை மூனு சுத்து சுத்தி வந்து கழுத்தை அறுத்து கொன்னு கொழம்பு வச்சு சாப்பிடு. புருசனுக்கு ஒத்தைக்காலையும், தலையையும் தின்னக்குடு. இப்பப் போ!” என்ற சாமி தின்நீரை இன்னொருமுறை ப்பூ என்ரு ஊதினார் அவளை நோக்கி. கண்ணம்மா முடியை அள்ளி முடிந்து சுருட்டி கொண்டை போட்டுக் கொண்டு கிழக்கே நடந்தாள். சமயத்தில் பேருந்தும் வந்து நிறுத்தத்தில் நிற்கவும் சனம் ஏறிக் கொண்டது . நிறுத்தத்தில் இப்போது சாமியார் ஒருவர் தான் . அவர் முகம் புன்னகைத்தபடி இருந்தது . “ கிறுக்கன்னு நெனச்சிட்டுஇ இருந்தனக்கோவ் ! சாமியாராட்ட இருக்குது” பேருந்தில் உள்ளூர் பெண்கள் பேசிக் கொண்டனர் . இட்லிக் கடைக்கு கிழபக்கத்தில் சாமியார் பூஜையை வேப்பை மர நிழலில் ஆரம்பித்து விட்டார் . கணிசமான கூட்டமும் கூடி நின்றிருந்தது . “ எண்ட மலையாள பகவதி யம்மே !” என்று குரல் கொடுத்த சாமியார் சாம்பிராணி புகை மூட்டத்தில் மிதந்தார் . சொன்னது போலவே கடைசியாய் சேவலின் ஒரு காலை ஒடித்து பச்சையாய் சாமியார் எல்லோர் முன்பும் தின்றான் . சேவல் உயிரே போனது போல் கத்தியது . என்னைப் பாக்காம அப்படியே மூனு சுத்து சுத்து ! என்றார் . கண்ணம்மா கையில் எலுமிச்சை கனி ஒன்றை திணித்தார் . பின் எப்போதும் போல் பீடி பிடித்துக் கொண்டு தன் இருப்பிடமான நிழல்குடைக்கே சாமியார் திரும்பி விட்டார் . ஆச்சரியம் நடந்து தான் விட்டது . ஊரெங்கும் ஒரு வாரமாய் இதே பேச்சு தான் . கண்ணம்மாவின் புருசன் முருகன் பெட்டிக்குள் பாம்பாய் அடங்கி விட்டான் . குடியை விட்டொழித்து விட்டான் . நாள் முழுவதும் கண்ணம்மாவோடு கடையில் கூடவே இருந்தான் . “ இலை போட்டுட்டேன் செல்லம் , இட்லியை எடுத்துட்டு வா செல்லம் !”: என்று கொஞ்சல் போட்டான் . அதை காது கொடுஇத்துக் கேட்டவர்கள் காதில் புகை வந்தது . சிலர் வெட்கத்தைக் கேட்டால் எட்டணா தருவேன் என்றார்கள் . கிழக்கு வீதியில் ஒரு வாரமாய் கண்ணம்மாவின் ஓலக் குரல் கேட்பதில்லை . “ ஏண்டா முருகா பஸ் ஏறிப்போய் குடிச்சுட்டு வருவே , நெசமாலுமே உட்டுட்டியா ?” என்றார்கள் . குடியின்னா என்னங்க எசமான் ? என்றான் அவன் . உள்ளூர் பெண்கள் சாமியாரின் சாமார்த்தியத்தைப் பற்றி மட்டுமே பேசினார்கள் . “ என்னோட ஊட்டுக்காரரு குடிய நிறுத்தவே மாட்டீங்கறாப்ல அக்கா , சேவல் ஒன்னு புடிச்சுட்டு சாமியார் கிட்ட போலாம்னு இருக்கேன்” என்றாள் ஒருத்தி . “ அடியே , ஆள் ஆளுக்கு சேவலை தூக்கீட்டு சாமியார்கிட்ட போய் நின்னம்னா ஊர்ல மத்த ஆம்பளைங்க சாமியாரை அடிச்சு ஊரைஉட்டு தொறத்திடுவாங்க . சத்தம் இல்லாம சாமத்துல காதும் காதும் வச்சா மாதிரி பண்ணைக்கணும்டி . இட்லிக்கடைக்காரன் மந்திரிச்சு உட்ட மாதிரி பொண்டாட்டி பின்னால சுத்துறதை பார்த்துட்டு என்னோட புருசன் என்னை அடியே புடியேன்னு பேசறதைக்கூட உட்டுட்டாரு” என்றாள் ஒருத்தி . கிராமத்துப் பெண்கள் கிராமத்து பெண்களாகவே தான் இருக்கிறார்கள் . அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் கிராமத்து பிள்ளைகளாகவே வளருகிறார்கள் . இப்படிப் பேசப்பட்ட பேச்சுகள் ஒருநாள் எங்கு வந்து முடிந்தது தெரியுமா ? ஊரில் திருவிழாவாகவே அது வந்து முடிந்தது . ஊர் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது . கோவில் மைதானத்தில் வாடகப் பந்தல் போடப்பட்டிருந்தது . யாகம் வளர்ப்பதற்கு என்று கோவிலை ஒட்டி மேடை ஒன்று போடப்பட்டிருந்தது . உள்ளூர் மைக்செட் மகாலிங்கம் தன்னிடம் இருந்த ஏழு கொடை ரேடியோக்களை பந்தலின் மேல் கட்டி விட்டிருந்தான் இலவசமாக ! எப்போதுமே எம் . ஜி . ஆர் பாடல்களை மட்டுமே ஒலிபரப்பும் அவன் இன்று , “ கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் கடலா ? கடல் அலையா ?” என்று பக்திப் பாடல்களையே ஒலி பரப்பினான் . ஓரம்பாரத்தில் பொம்மைக் கடைகள் குவிந்து விட்டன . ஐஸ் வண்டிக்காரர்கள் பேம் பேம் என்று பொவ்வாத் அடித்துக் கொண்டே சுற்றினார்கள் ஊரை . பலூன் வியாபாரம் சூடு பிடித்திருந்தது . எல்லாக் குழந்தைகளின் கயிலும் பலூன்கள் இருந்தன . பக்கத்து கிராமங்களின் மக்களும் , வெளியூர் ஆட்களும் ஊரில் வெள்ளையும் சொள்ளையுமாய் திரிந்தார்கள் . ஆளாளிற்கு குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ஆய்ரம் ரூபாயல்லவா சாமியார் கையில் தங்கள் குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டுமென கொடுத்திருந்தார்கள் ! எழுபத்தி ஐந்தாயிரம் மொத்தவசூல் என்று பேசிக் கொண்டார்கள் . சாமியார் யாகம் வளர்க்க குறித்துக் கொடுத்த தேதி இன்றுதான் . ஆடம்பரம் வேண்டாம் என்று சாமியார் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டார் . ஆனாலும் மக்கள் அவர் வார்த்தையை கேட்கவா செய்தார்கள் ? சரி இது எப்படி நடந்தது ? வழக்கம் போல தாடிச்சாமியார் பேருந்து நிறுத்த குடையின்கீழ் பீடி பிடித்தபடி சும்மா அமர்ந்திருந்தாலும் உள்ளூர்வாசிகள் அவரை சும்மா இருக்க விட்டார்களா ? எனக்கு அப்படி சாமி ! இப்படி சாமி ! என்று ஆளாளுக்குப் போய் அவர் முன் நின்றால் ? தனித் தனியாக அவர் எத்தனை பெருக்கு பூஜை செய்வார் ? இன்னும் முப்பது நாளில் ஆறு சாவுகள் ஊருக்குள் நடக்கப் போகிறது . இந்த ஊர் பெண்களுக்கு திருமண யோகம் கூடி வராததற்கு காரணம் இருக்கிறது ! என்று சாமியார் அவர்களிடம் அடுக்கிச் சொல்ல எல்லோரும் மிரண்டார்கள் . என்ன செய்யலாம் சாமி ? என்றார்கள் . எல்லா பிரச்சனைகளுக்கும் நாள் ஒன்றைக் குறித்து அன்றே அவைகளை ஒட்டு மொத்தமாக தீர்த்து விடுவதாக கூறி விட்டார் . வீட்டுக்கு தலா ஆயிரம் என்று நிர்ணயம் செய்தார் . விசயம் பக்கத்து கிராமங்களுக்கும் பரவி அவர்களும் ஓடி வந்து சாமியாரின் கையில் பணத்தை திணித்துப் போனார்கள் . பூஜை நேரம் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தது . தாடிச்சாமியார் முக்கியமான பொருள் வாங்க உள்ளூர் பெரிசுகளிடம் சொல்லி விட்டு ஈரோடு நேற்று மாலை கிளம்பிப் போனவர்தான் . ஒரு வார காலம் சிக்கன் , முட்டை என்று தொடாமல் ஊரே பத்தியச் சாப்பாட்டில் இந்த யாகத்திற்காக நாக்கு செத்துப்போய் பக்தியை முடித்துக் கொள்ளும் பரவசத்தில் இருந்தார்கள் . இதில் குடிகாரர்கள் வேறு ஒரு வாரம் ஊர் நன்மைக்காக குடியை விட்டிருந்தார்கள் . பத்தியம் அவர்களுக்கும் தான் . எல்லாமே சாமியாரின் கட்டளைப்படி தான் . நேரம் ஆக ஆக ஆள் ஆளுக்கு சாமியார் மாயமானது பற்றி பேசத் துவங்கினார்கள் . டவுனில் இருந்து பத்தரை சி -14 பேருந்தில் வந்து இறங்கிய முருகேசன் தான் உள்ளூர் பெருசுகளை தனியே கூட்டிப் போய் விசயத்தை சொன்னான் . சாமியாரை ஈரோடு ரயில்வே ஸ்டேசனில் பார்த்தபோது அவனுக்கு அடையாளமே தெரியவில்லையாம் . கேரளா எக்ஸ்பிரஸ் பெட்டியில் கண்ணம்மா மடியில் ஜீன்ஸ் பேண்ட் பனியன் போட்டபடி தாடியில்லாமல் சாமியார் படுத்திருந்தானாம் . பிஸ்கட் பாக்கெட் , தண்ணீர் கேன் வாங்கிக் கொண்டு முருகன் ஓடிப்போய் பெட்டியில் ஏறவும் எக்ஸ்பிரஸ் கிளம்பி விட்டதாம் . கேட்டுக் கொண்டிருந்த பெரிசுகள் முகத்தின் முன் ஈ ஆடவில்லை . சாமியார்கள் எப்போதும் புதுசு புதுசாகத்தான் சிந்திக்கிறார்கள் . மக்கள் அவர்களை மலைபோல் நம்பி ஏமார்ந்து விடுவது நடந்து கொண்டே தான் இருக்கிறது . முதலில் சாமியார் புகழைப் பரப்ப ஊர் ஊராய் யாரோ போய்க் கொண்டிருக்கிறார்கள் . ஈரோடு முத்தூர் அருகே ஒரு பெண்மணி இப்படி சாமியார் சொன்னதை செய்ததால் கார் , பங்களா , என்று வசதியாய் இருப்பதாக சொல்லிச் சென்றாள் . சாமியார் யாரடா என்றால் முருகன் போல சிறுவனாம் . ஒரு மாதம் கழித்து அந்தச் சிறுவன் காவி உடையுடன் தெருவில் கண்ட ஊரார் இவன் தானோ அந்த கார்ப் பெண்மணி சொன்னவன் ? என்று அவனிடம் பணத்தை இறைத்து ஏமார்ந்தார்கள் . நான்கு ஆள் உயரமுள்ள ஏணீயை நிலத்தில் பதித்து அதன் உச்சியில் அமர்ந்து ஊரார் முன் ஒரு சாமியார் தவத்தில் அமர்ந்தாராம் . அவரது சிஷ்யப்பிள்ளைகள் மண் மூட்டையிலிருந்து குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு ஒரு குத்து மண் அள்ளி கொடுத்து மூன்று நாள் தண்ணீரில் கலந்து குடிக்குமாறு சொல்லி வசூல் வேட்டை நடத்திவிட்டு போய் விட்டார்கள் . இப்படி சாமியார்களும் காலத்திற்கு ஏற்ப தங்கள் பராக்கிரம செயல்களை டிசைன் டிசைனாக மாற்றிக் கொண்டே ஊர் ஊராக சுற்றுகிறார்கள் . ஏமார்ந்தவர்கள் இருக்கும் வரை ஏஆற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் ! - சிலம்போசை ஆகஸ்டு 2012   4 முகச்சவரம் செய்யலியோ! நீங்கள் சலூன் கடை தேடிச்சென்று முகச்சவரம் செய்து கொள்பவரா ? இல்லை வீட்டிலேயே நீங்களாக கண்ணாடி பார்த்து சவரம் செய்து கொள்பவரா ? தலை முடியை நீங்களாகவே குறைத்துக் கொள்பவரா ? என்னடா இத்தனை கேள்விகள் ? என்று பார்க்க வேண்டாம் . இப்போதெல்லாம் முகச்சவரம் , கட்டிங் என்று கடைக்குச் சென்றால் அவர்களின் சங்கம் நிர்ணயித்த விலைப்பட்டியலை பார்வைக்கு ஒட்டி வைத்திருக்கிறார்கள் . அதைப் பார்த்துவிட்டு சிலர் , “ அடுத்த மாசம் பார்த்துக்கலாம்” என்று தாடியோடே வீடு திரும்பி விடுகிறார்கள் . என் கிராமத்தில் இப்போது இரண்டு நாவிதர்கள் இருக்கிறார்கள் . அண்ணனும் தம்பியும் . இருவருக்குமே வயது 60 க்கும் மேலாகிவிட்டது . அண்ணன் பெரிய அப்புக்குட்டி தம்பி சின்ன அப்புக்குட்டி . இவர்களின் தந்தையார் கருமன் இறந்து இருபது வருடங்களுக்கும் மேலாகி விட்டது . கருமன் தன் கடைசி காலம் வரை சைக்கிளில் ஊரூராக சென்று வீடு வீடாக சவரம் செய்தார் . அவர் இறக்கையில் 90 வயதிற்கும் மேல் இருக்கும் . இப்போது 75 வயதான பெரிய அப்புக்குட்டி டிவிஎஸ்சில் கண்ணுக்கு கண்ணாடி போட்டுக் கொண்டு டுர்ர்ர் என்று சென்று கொண்டிருக்கிறார் . இவர் வாரிசுக்கு கத்தி பிடிக்க வராது . இவர்களோடு ஊர் அடப்பப்பையுடன் சுற்றும் நாவிதர்களை இனி காண வாய்ப்பு இருக்காது . கோவில் விசேசம் என்றால் வீடு வீடுக்கு அரிசி , பருப்பு , வருடாந்திர தொகை வாங்குவது இவர்கள் வழக்கம் . இன்னும் கொஞ்சம் நாளில் இந்த வழக்கம் கிராமங்களில் மாறிவிடும் . உள்ளூர் குடும்பம் ஒன்று அப்புக்குட்டிகளிடம் சவரம் செய்தாலோ செய்யா விட்டாலோ வருடக்கூலி தந்துவிட வேண்டும் . யார் இப்படியான அமைப்பை எத்தனை காலம் முன்பு உருவாக்கி வைத்தார்களோ தெரியவில்லை . ( துவைப்பவர் , பூசாரி ) இவர்களிடம் முடியை குறைத்துக் கொள்ளத்தான் முடியும் . அட்டாக் கட்டிங் என்றோ , பங்க் என்றோ , ஸ்டெப் என்றோ பேச முடியாது . முன்னாடி சீவுறதுக்கு கொஞ்சம் துளி உட்டு பின்னாடி கொறைச்சுடு ! ஓரம் வெட்டி விடு என்றுதான் சொல்ல முடியும் . சவரம் செய்யாதிருப்பது நல்லது . கண்ணாடி போட்ட பெரிய அப்புக்குட்டி நிதானமாகத்தான் இழுப்பான் . காயங்கள் இருப்பது சகஜம் . வெட்டுக்காயம் சிலசமயம் பெரிதாக பாலமாககூட விழுந்து விடும் . ஊர்நாயம் பேசிக்கொண்டே இழுப்பது அவர் வழக்கம் . வாயில் வெத்தலை பாக்கு இருக்கும் . பேசப்பேச எச்சில் நம் முகத்தில் தெறிக்கும் . நன்றாக இருக்கிறதோ இல்லையோ , “ இந்தக்கட்டாப்பு அருமையா இருக்குதுங்க ! பேஷாப் போச்சு” என்றுதான் சொல்வார் . காத்தால மொதல் கட்டிங்கு ! என்று பதினொருமணி வரை சொல்லி பத்து பத்து ரூபாய் வசூல் செய்து விடுவார் . சில்லறை இல்லை என்றால் , “ க் க க கடைக்கி போ .. ப் போயி அவங்கிட்ட ச் ச் சில்லறை குடுத்து வா வ் வாங்கறீங்க ? நா இளிச்சவாயனா போயிட்டனா ?” என்பார் . அவருக்கு திக்கு வாய் ! எட்டு வயது வரை தலைமுடி பற்றி கவலை கொள்ளாத என் சன் இப்போது பதினொரு வயதில் , சீப்பு போட்டு சீவறதுக்கு முடி உடாமாட்டீங்கிறே அப்புகுட்டி . பள்ளிக்கூடத்துக்கு தலைசீவிட்டு போறாப்பிடி வெட்டி உடு ! மொட்டை அடிச்சு உட்டுடாதே ! என்கிறான் . எனக்கு வந்த அதே பிரச்சனை தான் . நான் சிறுவனாய் இருக்கையில் கட்டிங் என்றால் ஓடும் என்னை துரத்தி வந்து பிடித்துத் தான் தூக்கி வந்து அமரவைப்பார் என் தந்தையார் . தலையில் சீப்பு வைத்து சீவ வேண்டும் என்றால் இரண்டு மாதம் ஆகும் .. வாழ்வில் முடி வெட்டுவதற்காகவெல்லாம் தந்தையாரிடம் அடிபட்டவன் நானாகத்தான் இருப்பேன் . இன்னும் சிலரை சந்தித்திருக்கிறேன் . அவர்களாகவே கத்தரியில் முடியை குறைத்துக் கொள்பவர்களை . அப்படி சந்தித்த முதல் நண்பன் தஞ்சையில் இருந்து 20 வருடம் முன்பாக என்னை சந்திக்க வந்த நட்சத்திரன் . சுயமாக சவரம் செய்பவர்கள் நூற்றுக்கு அறுபது சதவீதம் பேர் இருக்கிறார்கள் . அந்தக்கூட்டத்தில் நானும் ஒருவன் . என் சென்னிமலை நண்பன் ரகுநாதன் புத்தக வாசிப்பாளன் . பாலகுமாரன் , பி . கே . பி என்று வாசிப்பவன் . தெரியாத் தனமாக சாந்தாமணியை ஈரோடு புத்தக கண்காட்சியில் வாங்கி வந்து படித்து விட்டான் . சென்னிமலை தேவகிரி , அன்னமார் , பேருந்து நிலையம் என்றெல்லாம் வரவும் மனுசன் குஜாலாகிவிட்டான் . இத்தனைக்கும் தறிக்குடோனில் தறி ஓட்டி தன் மனைவி , குழந்தைகளைக் காப்பவன் . கமர்சியல் எழுத வருகிறேன் என்று சில காலமாய் நான் கூவிக்கொண்டே இருக்கிறேன் . அதற்கு இலக்கிய வாசிப்பு ஆகாது தான் . சுந்தரராமசாமியையும் , நாகராசனையும் படித்து விட்டு எப்படி கமர்சியல் எழுதுவது ? சுஜாதாவை ஆரம்ப காலங்களில் படித்ததோடு சரி . மீண்டும் பாலகுமாரனும் , சுஜாதாவும் வாசிக்க தேவைப்பட்டார்கள் . புத்தகக் கண்காட்சியில் நுழைந்து உயிர்மை ஸ்டாலில் சுஜாதாவை அள்ளிக் கொண்டு நான் கிளம்புறேங்க வேணுங்கறதை எடுத்துட்டேங்க ! என்று மனுஷ்யபுத்திரனிடம் மற்ற எழுத்தாளர் சொல்வது போல் சொல்லிக் கொண்டு கிளம்பும் பழக்கமும் என்னிடம் இல்லை . இருபது நாளில் பண்டமாற்று முறையில் அவனுக்கு எஸ் . ராமகிருஷ்ணன் , ஜெயமோகன் என்று கொடுத்து சுஜாதாவை புறட்டினேன் . சுஜாதாவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஸ்டைல் மட்டுமே ! எந்தக்கதையை எப்படி சொன்னால் சிறப்பாக வரும் என்பதை மட்டும் கற்றுக் கொள்ள 20 நாட்கள் போதுமானதாக இருந்தது . இது ஐந்தாம் வகுப்பு பாடம் தான் . எஸ் . ராமகிருஷ்ணனை வாசிக்க முடியவில்லை என்று கொண்டு வந்து நீட்டினான் ரகுநாதன் . எனக்கும் அதுதான் பிரச்சனை என்றேன் . மேலப்பாளையம் டாஸ்மார்க் பாரிலிருந்து வெளிவந்து வண்டியை எடுக்கலாம் என்று நின்ற சமயத்தில் தன்பைக்கில் அருகில் வந்து நிறுத்தி வணக்கம் வைத்தான் ரகுநாதன் . தாடி இல்லாமல் கன்னத்தில் வெட்டுக்காயத்துடன் இருந்தவனிடம் , என்ன ஆளே அடையாளம் தெரியலையே ! தாடியோட இருப்பே எப்பயும் ! என்றேன் . அது ஒரு கதைங்க ! என்று ஆரம்பித்தான் . மேலப்பாளையம் முருகன் சலூன்கடை முன்பாக நின்றிருந்த ரகுநாதன் சிகரெட்டின் கடைசி இழுப்பை இழுத்து புகை ஊதியபடி டிச்சில் வீசி விட்டு கடையினுள் நுழைந்தான் . எப்போதுமே ரகுநாதன் கட்டிங் , சேவிங் என்றால் முருகனிடம் செல்வது தான் வழக்கம் . கடையினுள் முருகன் ஒரு பெரியவருக்கு தாடையில் நுரைபொங்க பிரஸ் போட்டபடி இருந்தான் . ஞாயிறு என்றால் எப்போதும் கடையில் கூட்டமாய்த்தான் இருக்கும் என்று நினைத்தபடி தான் இவன் வந்தான் . கடையில் அந்த இருவரைத் தவிர யாருமில்லை என்றபோது திருப்தியாய் இருந்தது . இன்று நல்ல நேரம் தான் என்று ரகுநாதன் நினைத்தான் . “வாங்க, ஏது ரொம்ப நாளா நம்ம கடைப்பக்கம் உங்களை ஆளவே காணமுன்னு இன்னிக்கி மத்தியானம் கூட நினைச்சேன். பொழுதுக்குள்ள கடை தேடி வந்துட்டீங்க. தாடி வேற புல்லா உட்டுட்டீங்க? பெஞ்சுல உட்கார்ந்து சித்த நேரம் பேப்பரை பொறட்டுங்க. இந்த ஒரு சேவிங்கை முடிச்சுடறேன்” என்றவன் சவரக்கத்தியில் ப்ளைடு மாற்றி பெரியவருக்கு இழுக்க ஆரம்பித்தான். நுரையோடு சேர்த்து இழுத்ததை தன் இடதுகையில் மணிக்கட்டுக்கும் கீழே அப்பிக் கொண்டான். ”வீட்டுல சம்சாரம் தொல்லை பெரும் தொல்லை முருகா! சென்னிமலை படிக்கட்டுல சாமியாராப்போயி காவி வேட்டி கட்டீட்டு உட்கார்ந்துக்கற நெனப்பான்னு கேட்டுப்போட்டா! பையனும் வேற எடுத்துடுப்பா தாடிய நல்லாவே இல்லீங்கறான். தறிக்குடோனுக்கு போனா காதல் தோல்வியாங்கறானுக! மனுசன் தாடி கூட நிம்மதியா உட முடியல! போச்சாது போன்னு ஒரே முடுவா வந்துட்டேன்” என்றான் முருகனிடம். “பையன் இந்த வருசம் எத்தனாவது போறானுங்க? கொமரப்பாவுக்கு போறானா? இல்ல வேன் ஏறி ஸ்டார் மெட்ரிகுலேசன் போறானா? கூட்டீட்டு வந்திருந்தீங்கன்னா அவனுக்கும் ஒரு வெட்டு வெட்டீட்டு போயிருக்கலாம் நீங்க!” “ஸ்டாருக்கு அனுப்புற அளவுக்கு நம்மகிட்ட வேணுமல்ல முருகா மடியில! கொமரப்பாவுல தான் நாலாம் வகுப்பு போறான்.. மேலப்பாளையத்துல சேர்த்தியிருந்தா அம்மாவே புத்தகம், துணிமணி, செருப்பு எல்லாம் குடுத்திருக்கும்.” “எம்பட பொடுசுக ரெண்டும் மேலப்பாளையம் தானுங்க போவுதுக. பொட்டாட்ட போயிட்டு பொட்டாட்ட வருதுக” ரகுநாதன் எதிர்க்கே பெரிய கண்ணாடியின் மேலே தொங்கவிடப்பட்டிருந்த சுவாமி படங்களை பார்த்தான் . வடக்கு சுவற்றில் பெரிய சைசில் நமீதா , தமன்னா , அசின் கவர்ச்சி காட்டி நிற்கும் படங்களை பார்த்தான் . இப்போது தான் சமீபமாக மாற்றி இருக்கிறான் போல . முன்பு ரஜினி , கமல் , என்று சுவற்றில் இருந்தார்கள் . “காலேஜ் பசங்க நம்ம கடைக்கி வர ஆரம்பிச்சுட்டாங்க. ரஜினி, கமல்னு வயசானதுக எல்லாம் எதுக்குன்னு வேற கேட்டுட்டே இருந்தாங்க. போனவாரம் வெள்ளிக்கிழமெ சந்தையில போயி வாங்கியாந்து மாட்டிட்டனுங்க. ஜம்முன்னு எடுப்பா இருக்குது பாருங்க” கடையில் இருந்த வாட்ச்சை பார்த்தான் நகுநாதன். அது 4 மணி என்று காட்டியது. நாற்காலியில் இருந்த பெரியவருக்கு சேவிங் முடிந்ததும் கண்ணாடியில் தன் முகத்தை உற்றுப்பார்த்தார். வலதுபக்க மீசையை ஒதுக்கி விடச் சொன்னார். முருகன் அதை ஒழுங்கு செய்து விட்டு, சூப்பர்! என்றான். பாக்கெட்டிலிருந்து இருபது ரூபாயை அவர் எடுத்து முருகனிடம் கொடுத்தார். நாற்காலியிலிருந்து இறங்கி சட்டையை உதறிப் போட்டுக் கொண்டார். அந்தசமயத்தில் சிறுவன் ஒருவனைக் கூட்டிக் கொண்டு பெரியவர் ஒருவர் கடையினுள் நுழைந்ததும் , “ என்ன முருகா ?” என்று வந்ததும் சேரில் ஏறி அமர்ந்து கொண்டார் . “ வெயில் பாரு நாலு மணிக்கு என்ன போடு போடுதுன்னு ! அந்த காத்தாடிய சித்த போடு” என்றார் . “போட்டுத்தானுங்க உட்டிருக்கேன், கரண்டு வந்தா தானா சுத்தும்! இதென்னுங்க இவருக்கு நாலே இழுப்பு!” என்று முருகன் ரகுநாதனிடம் சொல்லி விட்டு பிளைடு மாற்றினான் கத்தியில். பையன் நாற்காலியை பிடித்துக்கொண்டு சுற்றிலும் நோட்டம் விட்டான். “தம்பி, யாரைக் கட்டிக்கிறீன்னு சொல்லு! தமன்னாவையா? நமீதாவையா?” என்றான் முருகன். பையன் வெட்கமாய் சிரித்து நெளிந்தான். “வெக்கத்தை பாருங்க உங்க பொடியானுக்கு! வாயில வெரலை வெக்கக் கூடாது எடு சாமி கைவிரலை!” என்றான். படக்கென நொடியில் எடுத்துக் கொண்டான் பையன். மணி 5 ஆகியிருந்தது பெரியவருக்கு சேவிங் முடியும் போது. “பையனுக்கு பொடணீல மெசின் போட்டு வெட்டி உடு முருகா! பத்தே நாள்ல காட்டுப்புல்லு கணக்கா குமிஞ்சிடுது வாடா சாமி” என்று பையனைத் தூக்கி சேரில் அமரவைத்து விட்டார். “இதென்னுங்க நாலே ஓட்டு மெசின்ல ஓட்டி முடிச்சுடறேன்” என்று முருகன் இவனிடம் சொல்லி விட்டு மெஷினை எடுத்துக் கொண்டான். பையன் கத்தலை ஆரம்பித்து விட்டான் பின்னங்கழுத்தில் மெஷின் உட்கார்ந்தவுடன். “உன்ற சோட்டு பசங்க எங்கடைக்கி வந்தா பொட்டாட்ட உக்காந்து கட்டிங் வெட்டீட்டு போவாங்க தெரியுமா! நீ என்னமோ அழுவுறியா? ஆட்டாத சாமி, காதை மெசினு வெட்டிப்போடும். அப்புறம் காக்காயிக்கி தான் உன் காதை தூக்கி வீசோணும்” என்றதும் அழ அழ பையன் சிரித்தான். பொடியனின் பின்மண்டையில் உச்சிவரை மெஷினை மேலே ஏற்றினான். ரகுநாதன் சாலையை வேடிக்கை பார்த்தான். பையனுக்கு கட்டிங் முடியும் போது மணி 6 க்கும் அருகில் வந்து விட்டது. பெரியவர் முருகனுக்கு பணம் கொடுத்து விட்டு பையனோடு கிளம்பினார். இவன் எழுந்தான். இனி யாரேனும் வந்து அமர்ந்து விடுவார்களோ என்று பயந்தான். முருகன் பீடி ஒன்றை பற்றிக் கொண்டு “டீ ஒன்னு போட்டுட்டு வந்துடறேனுங்க” என்று சாலையைக் கடந்து அவசரமாய் போனான் எதிரே இருந்த டீக்கடை நோக்கி. திரும்பி வந்த முருகன் கடை விளக்கைப் போட்டு சுவாமி படங்களுக்கு ஊதுபத்தி பற்ற வைத்து காட்டினான் . பின் அதை விநாயகர் போட்டோ சந்தில் குத்தினான் . பாக்கெட்டில் கைவிட்டு பணத்தை எடுத்து எண்ணாமல் கல்லாவில் போட்டு சாத்தி பூட்டி விட்டு சாவியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் . “ இதை ஒரு இழுப்பு இழுத்து வுடு முருகா ! நேத்தே முடியாது கூட்டமிருக்குன்னு சொல்லீட்டே !” என்று இவன் வயது மதிக்கத் தக்க ஒருவன் வந்து சேரில் அமர்ந்தான் . “இவுரு நாலு மணியில இருந்து உக்காந்திருக்காருங்க! அவருக்கு பண்டி உட்டுட்டு பண்ணி உடறேன்” என்றான் வந்தவனிடம் முருகன். அவனோ ரகுநாதனைப் பார்த்து, “நான் செந்தாம்பாளையம் வரைக்கும் இனி பண்டீட்டு சைக்கிள்ல போவணுமுங்க! படக்குன்னு பண்ணீட்டு கிளம்பிடறனுங்க!” என்றான். முருகன் ப்ளைடு மாற்றினான். இவன் தலையாட்டி விட்டான். ரகுநாதனுக்கு சேவிங் செட் வாங்கிக் கொண்டு வீடு போகும் எண்ணம் வந்து விட்டது. அது ஒரு கம்பசூத்திரமல்ல தான். செந்தாம்பாளையத்தானுக்கு ப்ரஸ் போட்டான் முருகன். இவன் எழுந்தான். “இருந்ததே இருந்தீங்க சித்தே இருங்க, பண்டீட்டே போயிடலாம்” என்றான் முருகன். “நானும் போயி எதுத்தாப்புல கடையில டீ ஒன்னு போட்டுட்டு வந்துடறேன்” என்று கடையை விட்டு வெளிவந்தான். சாலைக்கு வந்தவன் மெடிக்கல் கடை ஒன்றில் புது செட் வாங்கிக் கொண்டு வீடு போகையில் தோன்றியது. தனக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதா? இல்லை எல்லோருக்குமா?. கன்னத்தில் வெட்டுக் காயத்திற்கு கதை சொன்னவனிடம் அடுத்தமுறை வெட்டில்லாமல் சவரம் செய்ய வாழ்த்தை சொல்லிவிட்டு வந்தேன்.   5 மல்லிகா என்றொரு ஆவி சமீபத்தில் என் நண்பர் சத்தியமங்கலத்திலிருந்து அலைபேசியில் அழைத்தார் . வீட்டுல தான இருக்கீங்க ? என்றார் . அடியேன் எப்போதும் வீட்டில் தானே இருக்கிறேன் . அவர் இரண்டு உருண்டை வடிவிலான அழகான வொய்ன் பாட்டில்களை கொண்டு வந்திருந்தார் மாலையில் . இந்த மாதிரியான அழகான பாட்டில்களை அவர்கள் வீட்டில் கடலை , தேங்காய் எண்ணெய் ஊற்றி வைக்க பயன்படுத்துகிறார்களாம் . கர்னாடக எல்லைக்கடையில் வாங்கியதென்றும் அங்கு தமிழில் போய் கேட்டால் ஒரு ஃபுல் 150 ரூபாயாம் . கன்னடத்தில் ஸ்பீச் கொடுத்துக் கேட்டால் 100 தானாம் . இதனால தா அவனுகளை மிதிக்கலாம்னே தோணுது ! என்றார் . இங்கே தமிழ்நாட்டில் வொய்ன் கோட்டர் பாட்டிலே 100 ரூபாய் வருகிறது . எனக்கு இவனுகளை மிதிக்கலாம் என்றிருக்கிறது ! “மேற்கொண்டு இந்தக் காரியத்தை செய்யாதீர் நண்பரே! நம் அரசாங்கம் நமக்காக மதுபானக் கடைகள் திறந்து வைத்திருக்கிறது தினமும் பத்து மணிநேரம் நம்மை நம்பி. பத்து ரூபாய் முன்ன பின்ன இருந்தாலும் நம்ம சரக்கே நமக்கு போதுமானது.” என்றேன். சரிதான், என்றார். கேரளாவில் பியர் பாட்டிலின் விலை 50 ரூபாய். இந்தியாவில் நல்ல குடிகாரர்களை பெற்றிருக்கும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. குடி தான் தங்களை வழி நடத்துகிறது என்று நம்பி டாஸ்மார்க் படியேறுகிறார்கள். முன்பு அடிக்கடி கண்ணில் தட்டுப்பட்டுக் கொண்டிருந்த பல பறவையினங்களை இப்போது பார்க்கவே முடிவதில்லை என்று என் ஊருக்கு வந்திருந்த நண்பர் அரை போதையில் வருத்தப்பட்டார் . நேரமோ மாலை ஆறு மணியை தாண்டியிருந்தது . ஏன் திடீரென பறவைகள் ஞாபகம் வந்தது இவருக்கு ? என்று குழம்பிய நான் பக்கத்தில் சற்று தள்ளி இருந்த கருவேல மரத்திலிருந்து கீச் கீச் ஒலிகள் வந்ததால் கண்களை உயர்த்திப் பார்த்தேன் . சிட்டுக்குருவிகள் நான்கு மரக்கிளையில் அமர்வதும் பறப்பதுமாக அமளி பண்ணிக் கொண்டிருந்தது . “ உங்க செல்போன்ல பறவைகள் ஒலியை ரிங்டோனா வச்சிருக்கீங்க தலைவரே ஐ லைக் இட்” என்றார் . சிகரெட் புகையை வானத்திற்கே அனுப்பி விடுவது போல முகம் உயர்த்தி ஊதியவர் , நானும் ரிங் டோனா வச்சுக்கறேன் ப்ளூ டூத் ஆன் பண்ணிக்கட்டுமா ? எனக்கு அனுப்பி விடுங்க ! என்றார் . அவருக்கு மரம் நோக்கி கை காட்டினேன் . நகர்ப்புறத்திலிருந்து பயணப்பட்டு வந்திருந்த நண்பர் கருவேல மரத்தை உற்றுப்பார்த்தார் . நான்கு சிட்டுகளும் பர்ர்ர் பர்ர்ர் என பறப்பதும் கிளைகளில் கீச் கீச்சென அமர்வதுமாக இருப்பதை பார்த்தவர் “இது சிட்டுக்குருவிங்களா ? புத்தகத்துலயும் , சேனல்கள்ளயும் பாத்திருக்கேன் . இந்தக் குருவிகளை தான் கொன்னு லேகியம் தயாரிச்சு சாப்பிட்டு டெம்பர் பண்ணிக்கறாங்க . உங்க ஊர்ல செல்போன் டவர்கள் இத்தனை நிற்குதுங்களே இதுகள் எப்படி பிழைச்சு கிடக்குதுகள் ? என்றார் நண்பர் . “எப்படின்னா? நானே சிட்டுக்குருவிகள் எங்க வாய்ப்பாடில கிடையாதுன்னு மூனு வருசமா நினைச்சுட்டு இருந்தனுங்க. இப்போ அதை உத்து உத்து பாத்துக்கறேன். அதுகள் ஏதோ சொல்லுதுக நம்ம கிட்ட! இடத்தை காலி பண்ணிட்டு போங்கடா, நாங்க தூங்கணுமுன்னு!” “நாம நடந்து போயிட்டே இருக்கம்னு வச்சுக்கங்க, பின்னாடி திடீருன்னு ஒரு லாரியோ, பஸ்சோ பேஏம்னு ஹாரன் குடுத்தா திடுக்குன்னு பயத்துல தடுமாறி நிக்கிறோம். நம்ம இதயத்துல திடுக்கு திடுக்குன்னு அடிச்சுக்குது! நம்ம இதயமே அப்படி துடிச்சுதுன்னா சிட்டுக்குருவி சைஸ் பாருங்க. ஒரு லாரி சத்தத்துக்கு சிட்டுக்குருவி என்னத்துக்கு ஆகும்? செல்போன் டவருகளால தான் ஒரு இனம் காலியாகுதுன்னு நம்ப முடியாதுங்க. சரி கழுகு, பெறாந்து உங்க ஊர்ல கண்ணுக்கு பாக்க முடியுதுங்ளா? கோழிக்குஞ்சு தூக்க வருமே?” “கழுகு எப்பாச்சிம் வருசத்துல ரெண்டு வாட்டி பாத்துடறேன். இப்ப இல்ல. நானே சேனல்ல தான் பாக்குறேன். கூட்டமா உக்காந்து செத்த ஒடம்பை திங்குறதை. பெருமாள்னு ஒன்னு கழுத்துல வெள்ளையாவும் ஒடம்பு செவப்பாவும் இருக்கும். அதை சுத்தமாவே காணம். பேய்கள் வேணா வெள்ளையா சினிமா படத்துல காட்டுற மாதிரி அப்பப்ப வருதுக இப்ப” என்றதும் நண்பர் பாட்டிலில் இன்னம் சரக்கு இருப்பதை திரு திருவென பார்த்தார். பேய்கள் பற்றியான பேச்சுக்கு அவர் வரவில்லை. பி.டி. சாமி என்றொரு எழுத்தாளர் முன்பு பேய்கள் பற்றியான கதைகள் எழுதி பீதியுறச் செய்து கொண்டிருந்தார். அவரது புத்தகங்களை பிடிஎப் வடிவில் கூட எந்த வோர்டு ப்ரஸ்காரர்களும் வைத்திருக்கவில்லை இப்போது. அவரை தமிழ்நாடு மறந்து விட்டது. எங்கள் ஊரைவிட்டு நான்கு கிலோ மீட்டர் கிழக்கில் பனியம்பள்ளி என்கிற கிராமம் உள்ளது . அங்கு சமீபத்தில் நடந்த பேய்க்கதை சுவாரஸ்யமானது . தவிர பேய்கள் என்றுமே சுவாரஸ்யம் மிக்கவை தான் . நகரை விட்டு இப்படி ஒதுக்குப்புறமாக கிராமம் நோக்கி அமைதியான சூழலுக்கு வருவது எழுத்தாளர் ஏகாம்பரத்திற்கு புதிதான விசயமல்ல . ஏகாம்பரத்தின் மனைவி பள்ளி ஆசிரியை என்பதால் எந்த ஊருக்கு மாற்றல் வந்தாலும் சாமான் செட்டுகளை தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவார்கள் . அப்படித்தான் பனியம்பள்ளி வந்து சேர்ந்தார்கள் இருவரும் . ஆசிரியையின் வயிற்றில் பிள்ளைப்பூச்சி என்று பதினைந்து வருட தாம்பத்தியத்தில் எதுவும் உதிக்கவில்லை . ஊருக்குள் வாடகைக்கு என்று இவர்களுக்கு ஒரு வீடும் காலியாய் இல்லை . விசாரித்து பார்த்ததில் சற்று கிழக்கே ஒரு வீடு காலியாய் இருப்பதை ஊரார் சொல்லவும் அந்த வீட்டின் உரிமையாளரை தேடி சென்னிமலை வந்தார் ஏகாம்பரம் . குறுநகரில் ஆடம்பரமான விட்டில் தங்கியிருந்த அவரிடம் சென்று பேசுகையில் வீட்டு வாடகை என்று அவர் ஐநூறு ரூபாய் மட்டுமே கேட்டார் . ஏகாம்பரத்திற்கோ அதிர்ச்சியாக இருந்தது . வீட்டை இவர் வெளியில் நின்று பார்க்கையில் எப்படியும் இரண்டாயிரம் கேட்பார் என்று நினைத்திருந்தார் . இருந்தும் சந்தேகமாய் இன்னொரு முறை கேட்டார் . இவருக்கு காது மந்தமோ என்று நினைத்த அவர் 500 என்று சப்தமாக சொன்னார் . அட்வான்ஸ் தொகை என்று 1000 மட்டுமே வாங்கிக் கொண்டார் . அந்த புதுவீட்டில் வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்குமோ என்று ஏகாம்பரம் அட்வான்ஸ் தொகை கொடுத்த பிறகு கவலைப்பட்டார் . இவரது முகத்தைப் பார்த்து யூகித்துக் கொண்ட வீட்டுக்காரர் இவரின் கவலையை போக்கும் விதமாய் பேசி அனுப்பி வைத்தார் . “பயப்படாதிங்க.. வாஸ்துபடி பக்காவா கட்டினது தான் அந்த வீடு. என் முதல் பையனுக்காக கட்டின வீடு. அவன் ஜோசியத்தை நம்புறவன். ஒவ்வொரு செங்கல்லா பார்த்துப் பார்த்து கூடவே நின்னு தான் முடிச்சான். ரெண்டு வருசம் ஆச்சு. கட்டின ராசியோ என்னமோ வேலை கிடைச்சு வெளிநாடு போயிட்டான். பத்து நாள் தான் அந்த வீட்டுல தங்கினான். உள்ளூர்ல கோவில் திருவிழான்னா நாங்க போய் நாலு நாள் தங்குவோம். சிப்காட்டுல வேலை செய்யுற பசங்க வந்து கேட்டாங்க. தர முடியாதுன்னு சொல்லிட்டேன். உங்களை மாதிரி குடும்பம் ஒன்னு மூனு மாசம் அந்த வீட்டுல தங்கி இருந்துச்சு. இப்ப நீங்க வந்திருக்கீங்க. தண்ணி வசதிக்கு கிணறு ஒன்னு இருக்குது. என்ன சிரமம்னா பஸ் ஏற அரை கிலோமீட்டர் நடந்து வரணும். வாகனம் இருந்தா பிரச்சனை இல்ல. பக்கத்துல தள்ளித்தள்ளி வீடுக நாலு இருக்குது. நீங்கவேற எழுத்தாளர்னு சொல்றீங்க. உங்களுக்கு அமைதியான சூழல் தான வேணும் எழுத!” ஏகாம்பரத்தின் மனைவிக்கு வீடு ரொம்பவும் பிடித்து விட்டது . தனி சமையல் அறை , தனி பெட் ரூம் , தனி பூஜை அறை , ஹால் என்று வீடு விஸ்தாரமாக இருந்ததால் அரண்மனைக்குள் இருப்பது போல் சந்தோசத்தில் இருந்தாள் . வீட்டின் பின்புறமிருக்கும் கிணற்றில் உள்ள நீரின் சுவை தேனாக இருந்தது . நேராக ஒரு லிட்டர் கேன்களை புதிதாக கொண்டு வந்து நீரை நிரப்பி கடைகளுக்கு சப்ளை செய்து விடலாம் . அது சேந்து கிணறு . பக்கெட்டையோ , குடத்தையோ கயிற்றில் கட்டி இரும்பு உருளையில் கயிற்றை மாட்டி கரகரவென கிணற்றினுள் இறக்க வேண்டியது தான் . டீச்சரம்மாவுக்கு அது இன்னும் பழக்கமாகவில்லை . பழக்கமானாலும் நீர் நிரம்பிய குடம் மேலே இழுக்கப்பட்டதும் கை நீட்டி அதைப்பிடித்து எடுக்க பயப்பட்டாள் . கிணற்றினுள் இறங்க புதிய ஏணியும் கிணற்றோரமாக நேர் கீழே இறங்கியது . மோட்டார் வைத்துக்கொள்ள பெட்டும் கட்டப்பட்டிருந்தது . ஏகாம்பரம் காலை நேரத்தில் குடங்களோடு வீட்டின் பின்புறம் சென்று தண்ணீர் நிரப்பிக் கொண்டு வீட்டினுள் கொண்டு வந்து விடுவார் . அது அவருக்கு தினசரி வேலையாகிவிட்டது . அந்த நேரத்தில் சமையல் அறையில் டீச்சரம்மா பிசியாக இருப்பார் . இப்படி தண்ணீர் இழுப்பதும் , அதை தூக்கியபடி நடப்பதும் தேவைதான் உடல்நலனுக்கு என்று ஏகாம்பரம் நினைத்துக் கொள்வார் . டீச்சரம்மா காலையில் எட்டரைபோல தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சென்றால் மாலையில் ஐந்து மணி போலத்தான் வீடு திரும்புவாள் . ஏகாம்பரத்துக்கு வயது நாற்பத்தி ஒன்றாகி விட்டது . இன்னமும் தலையில் ஒரு நரைமுடி கூட விழவில்லை . டீச்சரம்மா கமலாவுக்கு இவரைவிட ஐந்து வயது குறைவு . இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் . கமலா இப்போது இருப்பது போல் குண்டாக இல்லாமல் ஒல்லிப்பிச்சானாக டீச்சர் ட்ரெய்னிங் வகுப்புக்கு சென்று வந்து கொண்டிருந்தாள் திருச்சியில் . இவள் வீட்டு மாடியில் தான் ஏகாம்பரம் வாடகைக்கு தங்கி இருந்தார் . இவர் எழுதும் படைப்புகளுக்கு முதல் ரசிகையாக கமலா இருந்தாள் . வாய்ப்புகள் அதிகம் இருக்கவே ரசிகை காதலியாக மாறி மனைவியாகிப்விட்டாள் . இரு வீட்டார் சம்மதத்தோடு தான் திருமணம் இவர்களுக்கு நடந்தது . ஆரம்பத்தில் தன் வயிற்றில் கரு உதிக்காத வருத்தத்தில் எந்த நேரமும் அழுத முகமாய் கோவில் , குளமென்று சுற்றினாள் கமலா . சாமியார் கொடுத்த மண்ணை மூன்று நாள் தின்று பார்த்தாள் . எல்லாச் சாமியார்களையும் நம்பி காசைத் தொலைத்தாள் . ஒரு சாமியாரிடம் கற்பைத் தொலைக்கத் திரிந்த போது உசாராகி விட்டாள் . தனக்கு அவ்வளவுதான் கொடுப்பினை என்பதை உணர்ந்து அமைதியாகிப்போனாள் . முன்பெல்லாம் வார இதழ்களிலும் , மாத இதழ்களிலும் தொடர்ந்து எழுதிக் குவித்த ஏகாம்பரம் நாளாக நாளாக குறைத்துக் கொண்டார் . வாசகர்களுக்காக எழுதிக் குவித்துக் கொண்டிருந்தவர் தன் திருப்திக்காக மட்டுமே எழுத ஆரம்பித்து வருடம் இரண்டாகி விட்டது . புது வீடு வந்து ஒருவார காலம் ஓடிப்போய் விட்டது . இன்னமும் பேனா நீக்காமல் இருந்தால் சரிப்படாது என்ற எண்ணத்தில் பத்துமணியைப்போல தன் அறையில் எழுதும் மேஜைமுன் அமர்ந்தார் . இந்த ஒருவாரத்தில் தள்ளித் தள்ளி இருந்த குடும்பங்களில் இருந்து சிலர் வந்து தங்களை இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சென்றார்கள் . என்ன வருத்தம் இவருக்கு என்றால் அவர்கள் யாரும் பத்திரிக்கை படிப்பவர்களாக இல்லை . ஆட்டு வியாபாரிகளாகவோ , நெசவாளர்களாகவோ இருந்தார்கள் . ஏகாம்பரத்திடம் தீபாவளி மலருக்கு மூன்று பத்திரிக்கைகள் கட்டுரையும் , கதையையும் கேட்டிருந்தன . ஏகாம்பரம் பேனாவை நீக்கிவிட்டால் போதும் . என்ன எழுதுவது என்பதில் எப்போதும் தடுமாறவே மாட்டார் . எது தோணுகிறதோ அதை எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார் . கொடுத்து வைத்தவர் என்று தான் எண்ணினேன் . அவருக்கு என் புத்தகங்களில் சிலவற்றை கொண்டு போய் கொடுத்தேன் . அவருடையவை சிலவற்றை கொடுத்தார் எனக்கு . அவர் மனைவிதான் என் 57 சினேகிதிகள் நாவலை படித்து விட்டு விமர்சித்தார் . என் ஊட்டுக்காரர் எத்தனை புத்தகம் எழுதி இருந்தாலும் இந்த ஒரு நாவலுக்கு முன்னால அவரோட எந்த படைப்பும் நிக்காது ! டீச்சரம்மா லேப்டாப்பில் விளையாடினார் . முகநூலில் பலரின் படங்களை ஷேர் செய்து மகிழ்ந்தார் . ஏகாம்பரம் லேப்டாப் பக்கமே வரவில்லை . அதை பூச்சாண்டி என்றார் . அவர் புத்தகத்தை படித்தேனா என்கிறீர்களா ? நேரம் தான் இல்லை . லெட்டர்பேடில் எழுத அமர்ந்தார் ஏகாம்பரம் . அந்த நேரத்தில் அவரது அறைக்குள் எதுவோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தார் . திறந்திருந்த அவரின் அறை ஜன்னல்கள் படீர் படீரென அடித்தன . சாத்தியிருந்த அறைக்கதவு மட்ட மல்லாக்க திறந்தது . மல்லிகைபூ வாசம் அறையெங்கும் வீசத் துவங்கியது . சந்திரமுகி சமாச்சாரம் நடப்பதாய் மிரண்டவர் எழுந்து ஜன்னலுக்குச் சென்று கொக்கிகளை மாட்டினார் . வெளியே காற்று வீசுவதற்கான அறிகுறி துளி அளவேனும் இல்லை . காற்றே இல்லாமல் ஜன்னல்கள் அடித்துக் கொள்ளுமா ? அவர் திகில் கதைகளோ , மூட நம்பிக்கை கதைகளோ இதுவரை பத்திரிக்கையில் எழுதியதில்லை . அவர் எழுதுவது எல்லாமே பெண்களுக்காக . அவருக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தவை எல்லாம் குடும்பக் கதைகளே . பேய் வேலைதான் என்று நினைத்தவர் மடையா ! என்று தன்னை திட்டிக் கொண்டார் . அவரது கழுத்துக்கு அருகில் யாரோ உஷ்ணமாய் மூச்சுவிடுவது போலிருக்கவே திரும்பினார் , பெண் உருவம் ஒன்று அசைந்து நிற்பது போல் ஒருகணம் தோன்றியது . அது அடுத்த நிமிடம் இவரது நாற்காலியில் அமர்ந்து உற்றுப்பார்ப்பது போலவும் தோன்றவே , இவருக்கு உடம்பெல்லாம் வியர்த்துப் போய் விட்டது . இப்போது அவருக்கு சந்தேகம் எழவில்லை . ஆவிதான் அது . வீட்டுக்காரருக்கு முன்பே விசயம் தெரிந்திருக்கிறது . ஊராருக்கும் தெரிந்திருக்கிறது . ஆனால் யாரும் வாய் திறக்கவில்லை . வாஸ்து பார்த்து வீடு கட்டியது பேயிற்குத்தான் போல . அறையை விட்டு வெளியேற் ஹாலுக்கு வந்து ஷோபாவில் அமர்ந்தார் . இந்த வீட்டில் இனி ஒரு எழுத்து எழுத முடியாது . கமலாவுக்கு கூப்பிட்டு விசயத்தை சொல்லி விடலாமா என்று யோசித்தார் . வீட்டின் அழகைப்பார்த்து அட்வான்ஸ் நீட்டியது தவறாக போய் விட்டது . இவருக்கு அருகாமையில் அந்த புகை உருவம் அமர்ந்து உற்றுப் பார்ப்பதை உணர்ந்தார் . “எழுத்தாளர் சார், என்ன நீங்களும் மத்தவங்களைப் போல என்னைப் பார்த்து பயந்துட்டீங்களா? நான் என்ன உங்களை மிரட்டலாம்னோ, கடிச்சுத் திங்கலாம்னோவா வந்தேன்? நான் அப்படி நினைச்சால் கூட உங்களை ஒன்னும் பண்ண முடியாது. வேணும்னா அந்த துணிமணிகளை கீழ விழ வைக்கலாம். ஜன்னலை ஆட்டலாம். இப்படி பண்ணி உங்களை பயமுறுத்த எனக்கு ஆசை இல்ல சார்” ஏகாம்பரத்திற்கு இருபது வயதுப் பெண்ணின் குரலாக அது கேட்டது. “என் குரல் கேக்குதா சார் உங்களுக்கு?” என்று காதுக்கருகில் கேட்கவே, “ம்” என்றார். “அப்பாடா! உங்களுக்காச்சும் என் குரல் கேக்குதே ஒரு பேச்சுத் துனைக்கு கூட ஆள் இல்லாமத்தான் சார் இருந்தேன் இங்க” “இருந்தேன்னு சொல்றியே இந்த வீட்டுலயா?” பயம் விட்டுப் போகாமல் தான் கேட்டார். “நான் அந்த கெணத்துல தான் சார் இருக்கேன். உங்ககிட்ட பேசிப் பழகலாம்னு நீங்க வந்த நாள்ல இருந்தே யோசனை. ஒரு வருசத்துக்கும் முன்ன ஒரு குடும்பம் இந்த வீட்டுல வந்து இருந்துச்சுங்க சார். நல்ல குடும்பம். ரெண்டு சின்னப் பிள்ளைக! லட்டு லட்டா அழகா இருப்பாங்க. அந்தப்பிள்ளைக என்கூட நல்லா பழகிடுச்சுக. ஆனாப்பாருங்க அந்த கொழந்தைகளோட அம்மா தான் இந்த வீட்டுல பொம்மைக தனியா பறக்குதுக! குழந்தைகள் தனியா சுவத்தை பார்த்து சிரிக்குதுக! இது பேய் வீடுன்னு காலி பண்ணீட்டு போயிட்டாங்க! அதே மாதிரி நீங்களும் போயிடாதீங்க சார். நான் உங்களை மிரட்ட வரலை. சும்மா பத்து நிமிசம் பேசிட்டு போயிடறேன். அப்புறம் நீங்க எழுதுங்க. என்னோட சோகக் கதையைக்கூட சொல்றேன் அதை எழுதுங்க” உன்னைத் தொட்டுப் பார்க்கட்டுமா நான்” “ஐயோ! அப்படி ஆசைப்பட்டு என்னை தொட்டுடாதீங்க சார்” “சரி சரி என் மனைவி பயந்த சுபாவம். அவள் இருக்கப்ப வந்து ஜன்னலை ஆட்டிடாதே” “உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சுங்க சார். உங்க மனைவியை நான் மிரட்ட மாட்டேன். நான் போகட்டுமா சார் கெணத்துக்கு? நீங்க எழுதுங்க” “உன் குரல் இனிமையா இன்னம் சித்த நேரம் கேட்டுட்டே இருக்கலாம்னு இருக்குது” “என் குரல் நெஜமா நல்லா இருக்கா சார்?” “ஆமாம், உன் பேர் என்ன? உன்னை நான் பேயேன்னா கூப்பிட?” “என் பேரு டைட்டில்ல வச்சிருக்கீங்கள்ல மல்லிகான்னு. அது தான், நான் போறேன் சார்” “போறேன் போறேன்னு சொல்லித் தான் போயிச் சேர்ந்துட்டியே! மறுக்கா எப்ப வருவே?” “நாளைக்கு வர்றேன் சார்” ஷோபாவில் புகை உருவம் அசைவது இவர் கண்களுக்கு தெரிந்தது. அதிக உயரம் என்றில்லாமல் சற்று குள்ளமாகத்தான் அது இருந்ததாக பட்டது. ஏகாம்பரம் தன்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டார். அவள் குரல் அவருக்கு பிடித்திருந்தது. தன் மனைவியிடம் அவர் இதுபற்றி சொல்லவில்லை. பின் தினமும் இவரிடம் மல்லிகா வந்து பேசிச் சென்று கொண்டிருந்தது. ஏகாம்பரம் எந்த நேரமும் மல்லிகா தன் அருகிலேயே இருக்க வேண்டும் என்று ஏங்கும் நிலைமைக்கு வந்து விட்டார் . மல்லிகா மல்லிகா என்று காதலாய் உருகத் துவங்கினார் . தன் காதலை மல்லிகாவிடம் ஒரு நாள் சொல்லியே விட்டார் . தனக்கும் பேசாவிட்டால பைத்தியம் பிடித்த மாதிரி கிணற்றினுள் இருப்பதாக கூறியவள் வரும் பெளர்ணமி அன்று இரவில் பனிரெண்டு மணிக்குச் சரியாய் கிணற்றில் குதியுங்கள் .. உங்கள் ஆசைப்படி என்னை தொடலாம் , கட்டிக்கொள்ளலாம் , விருப்பம் போல நடந்தும் கொள்ளலாம் என்றாள் . ஏகாம்பரம் காத்திருந்த பெளர்ணமி நாளும் வந்தது . தன் கணவனின் நடவடிக்கைகள் சிலது வேடிக்கையாக இருந்தது டீச்சரம்மாவுக்கு . கணவரின் முகத்தில் தான் காதலித்த காலத்தில் கண்ட ஒளியை மீண்டும் வசீகரமாய் காண்பதாய் நினைத்தாள் . தவிர பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளிக் குதித்து விளையாடுவானாம் என்ற பழமொழியை இவரிடமே சொல்லி சிரித்துக் கொண்டாள் . பெளர்ணமி இரவில் தன் காதலி மல்லிகாவோடு இணையப்போகும் சந்தோச தருணத்தை எதிநோக்கி தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த ஏகாம்பரத்தை பதினொரு மணியைப்போல கட்டிக் கொண்டு கமலா அசதியாய் தூங்கவும் தன்னையுமறியாமல் பனிரெண்டு மணிக்கு தூங்கிப் போனார் ஏகாம்பரம் . ஆவிக்கும் கோபதாபங்கள் உண்டு போலத்தான் இருக்கிறது . மல்லிகா மூன்று நாட்கள் பகலில் இவரிடம் அரட்டை கச்சேரிக்கு வரவில்லை . இவரும் சும்மாயிராமல் ஓடிப்போய் கிணற்றை எட்டிப்பார்த்து மல்லிகா என்று மணிக்கொருமுறை கத்திக் கொண்டிருந்தார் . மல்லிகா என்ற அது இவரின் கத்தலை அலட்சியம் செய்து விட்டது . பெண்ணானவள் பேயாக இருந்தாலும் புரிந்து கொள்ள முடியாதவள் தான் . மேலும் இரண்டு நாட்கள் கழித்து இவர் அறைக்குள் வந்தமர்ந்த மல்லிகா அழத்துவங்கியது . ஏகாம்பரம் பலமுறை மன்னிப்பு கேட்டுக் கொண்டார் . அடுத்து வரும் பெளர்ணமி அன்று கிணற்றில் குதித்து உன்னை முத்தமிடுவேன் கண்ணே ! அழாதே என்று சபதம் செய்தார் . சபதம் செய்த பின் தான் மல்லிகா அழுகையை நிறுத்தியது . இவர்கள் வீட்டுக்கும் கிழக்கே இருந்த வீட்டிலிருந்து இளம் விதவைப் பெண் ஒன்று இரண்டு நாட்களாய் டீச்சரம்மாவோடு தனி அறையில் இரவு நேரத்தில் வந்து படுத்து கொண்டிருந்தாள் . அந்தப் பெண்ணிற்கு வயது இருபது தான் ஆகியிருந்தது . சொந்த மாமனுக்கு ஆறு மாதம் முன்பாக கட்டி வைத்திருந்தார்கள் . அதாவது இவர்கள் வருவதற்கு முன்பாக நடந்த வைபோகம் . இரண்டு வாரம் முன்பாக அவள் கணவன் டூவீலரில் செல்கையில் லாரியில் அடிபட்டு மருத்துவமனையில் இரண்டு நாள் உயிருக்காக போராடி போய்ச்சேர்ந்து விட்டான் . இந்தப்பெண்ணுக்கு ஆதிகாலத்து முறைப்படி வெள்ளை உடையை உடுத்தி விட்டார்கள் . இரண்டு முறை அரளிக் கொட்டையை அரைத்து குடித்து சாக இந்தப்பெண் முயற்சிக்கிறது என்று மாமியார் இவளை பெற்றவர்களிடமே கூட்டி வந்து விட்டுப் போய் விட்டாள் . எந்த நேரமும் பெண்பிள்ளைக்கு காவலா இருக்க முடியும் ? வேறு பொழப்பு இருக்கிறதல்லவா மற்றவர்களுக்கு ! இவளுக்கு மண்டையில ஏறுறமாதிரி புத்தி சொல்லிக் குடுங்க டீச்சரம்மா ! என்று இந்த பெண் வீட்டார் விதவைப் பெண்ணை கமலாவிடம் இரவு நேரத்தில் ஒப்படைத்து விட்டுப் போவார்கள் . கமலாவும் அந்தப் பெண்ணுக்கு புத்திமதிகளை சொல்லி தன்னுடன் கூடவே படுக்க வைத்துக் கொள்வாள் . அந்தப்பெண்ணுக்கு இந்த சின்ன வயதில் இவ்வளவு பெரிய தண்டனையா ? என்று ஏகாம்பரம் கவலைப்பட்டார் . தன் கதைகளில் இத்தனை காலம் இளம் விதவை என்று எழுதுகையில் அவர் மனதில் பெரிய சோகம் வந்து அப்பிக் கொண்டதில்லை . வாசகர்கள் தான் அடப்பாவமே ! என்று உச்சு கொட்டுவார்கள் என்று மட்டுமே அவருக்கு தெரியும் . கண்ணுக்கு எதிரே சின்னப்பெண் இப்படியிருக்க அதிர்வாகவே இருந்தது . அவள் பெற்றோரிடம் பேசி துணியையாவது மாற்றிவிட வேண்டுமென நினைத்தார் . அடிக்கடி அந்தப் பெண்ணிடம் , “ நாங்க இருக்கோம் தைரியமா இரும்மா !” என்றார் . இவரது புத்தக அடுக்கிலிருந்து தேடியெடுத்து நல்ல புத்தகங்களை அவளிடம் பகல் நேரத்தில் வாசிக்க கொடுத்தார் . எதுவும் யோசிச்சுட்டே இருந்தாலும் திரும்ப வரப்போறதில்ல ! என்பார் . அந்தப்பெண் தலையை ஆட்டிக் கொண்டு இவரிடம் புத்தகம் வாங்கிப் போகும் . மல்லிகாவுக்கு அந்தப் பெண்ணின் சோகக் கதையை இவர் சொன்னார் . “அதெல்லாம் விதி. அந்தப் பெண்ணும் என்னைப்போலவே பாவம். எனக்கு நடந்த மாதிரியே அந்தப் பெண்ணுக்கும் நடந்திருக்கு. எனக்கு நீங்க கிடைச்சீங்க என் மேல அன்பா, பாசமா இருக்க. அதே மாதிரி அந்தப் பெண்ணுக்கும் ஒரு நல்லவரு கிடைப்பாரு. நாளைக்கு பெளர்ணமி தெரியுமில்ல. அந்தப்பொண்ணுக்கு பரிதாப்படறதை விட்டுட்டு என் மேலயும் கொஞ்சம் பரிதாபப்படுங்க. என் விசயத்தை மறந்துடாதீங்க” என்றது மல்லிகா. ஏகாம்பரம் தேதிக் காலண்டரை நோக்கி ஓடினார். ஆமாம், நாளைக்கு பெளர்ணமி. ஆவிக்கு எப்படி தெரிகிறது இதெல்லாம்! கிணற்றினுள் காலேஜ் பீடிக்காரன் காலெண்டர் மாட்டியிருக்கிறதோ! எதிர் நோக்கிய இரவு வந்து விட்டது . ஏகாம்பரம் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடையிட்டார் . இரவு எட்டரை மணிபோலவே டீச்சரம்மாவும் இவரும் சாப்பிட்டு விட்டனர் . அந்தப்பெண் எட்டுமணி போலவே வந்து டீச்சரின் படுக்கையறையில் போய் படுத்துக் கொண்டு ரமணிசந்திரன் நாவல் படித்துக் கொண்டிருந்தது . கமலா இவருக்கு குட் நைட் சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்றாள் . இவரை கட்டியணைத்து சென்ற முறை போல் தூங்கச் செய்ய யாருமில்லை . மல்லிகாவே இவரை வந்து தட்டி எழுப்பலாம் . ஆனால் இரவில் பேய்க்கே பேய் பயம் இருக்கும் போல இருக்கிறது . அவள் இரவில் வெளிவருவதேயில்லை . நடையாய் நடந்து கால் சோர்ந்து போய் விட்டது ஏகாம்பரத்துக்கு . இரண்டு மணி நேரத்தில் படுக்கையில் கால் வலியில் போய் சாய்ந்தார் . “தொம்மீர்” என்றொரு சப்தம் காதுகளில் தெளிவாக விழவும் கண் அயர்ந்திருந்தவர் திடுக்கிட்டு விழித்து அடடா! என்று மணி பார்த்தார். சரியாய் பனிரெண்டு! அவசரமாய் ஓட்ட நடையில் வந்தவர் பின் கதவை நீக்கி ஓட்டமாய் ஓடி கிணற்றுத் திண்டில் ஏறிக் குதித்தார். கிணற்றில் குதித்தால் கட்டிக் கொள்ளலாம் என்று சொன்னாளே மல்லிகா! நிஜம் தான்! ஆழத்தில் இருந்து மல்லிகாவை கட்டிக் கொண்டு மேலே வந்தவர் மோட்டார் பொறுத்த இருந்த திண்டின்மீது மல்லிகாவைத் தள்ளி தானும் ஏறிக் கொண்டதும் அணைத்து இறுக்கிக் கொண்டு “நீ தேவதை மல்லிகா” என்றார். கிணற்றின் உச்சியில் “பாவி .. சண்டாளி இப்படி பண்ணிட்டியேடி !” என்ற கூக்குரலும் அதைத் தொடர்ந்து இரண்டு டார்ச் லைட் ஒளியும் இவர்கள் மீது விழுந்தது . இரண்டு பேர் கிணற்றில் குதித்தார்கள் . திடீரென விழித்த டீச்சரம்மா பக்கத்தில் படுத்திருந்தவளைக் காணாமல் எழுந்து வெளிவர வீட்டின் பின் கதவு திறந்திருப்பதை பார்க்கையில் “தொமீர்” என்ற சப்தம் கிணற்றுப் பக்கத்திலிருந்து கேட்கவும் முன் வாசல் ஓடிவந்து சப்தம் போட்டிருக்கிறார் . அதைக் கேட்டுத்தான் கிழக்கு வீட்டிலிருந்து முதலில் ஓடி வந்தார்கள் . அடுத்து இன்னொரு “தொம்மீர்” சப்தத்தையும் கேட்டார் டீச்சரம்மாள் . கடைசியாக ஏகாம்பரத்தை எல்லோரும் பாராட்டினார்கள் . “ உடனே குதிச்சு தைரியமா நம்ம பொண்ணை காப்பாத்திட்டாரு . இவரு மட்டும் இல்லீன்னா நம்ம பொண்ணு அவ்ளோ தான் .” அசடு வழிய சம்பவத்தை ஏகாம்பரம் என்னிடம் விவரித்த போது , “ சும்மா தமாஸ் பண்ணாதீங்க” என்றேன் . “தமாஸ் இல்லங்க பாருங்க கிணறு இருந்த இடத்தை ஓனரு மூடிட்டாரு. போர் மிஷின் ஓட்டி பைப் போட்டாச்சு பாருங்க” என்று காட்டினார் ஏகாம்பரம். எனக்கு கிணத்தைக் காணோம் என்ற வடிவேலு தமாஸ் ஞாபகம் தான் வந்தது. கதையாகவே ஏகாம்பரம் வாழ்கிறார் என்று புரிந்தது. இவருக்கும் முன்னால் என் எழுத்து தூசுக்கு சமானம். இன்னொரு குண்டும் வீசினார். மல்லிகா கிணற்றை மூடிய நாளில் இருந்து வருவதில்லையாம். விசாரிக்கையில் கிழக்கு வீட்டுக்காரருக்கு பெண்பிள்ளையே இல்லை இரண்டு பையன்கள் தான் என்றார்கள் . கடைசியாக டீச்சரம்மாவிடம் , ஏன் இப்படி ? என்று கேட்டேன் . அவரு அப்பப்ப அப்படித்தான் , எழுதுற கேரக்டராவே மாறிப் போயிடுவாரு . என்னைக்கூட தங்கச்சி தங்கச்சின்னு ஒரு நாள் கொஞ்சுவாரு . அடுத்த நாள் அம்மான்னு கூப்பிடுவாரு , என்றார் . இப்போது அவர்கள் மாற்றல் வாங்கிக் கொண்டு வேறு ஊர் போய் விட்டார்கள் . எழுத்தாளர் ஏகாம்பரம் மறக்க முடியாதவர் தான் . - சிலம்போசை - அக் -2012   6 திருமண அழைப்பிதழ் விஜயமங்கலம் விஷ்ணு அச்சகத்தின் உரிமையாளர் ரவி என் ஊர் தான் . ஒரு பீடி சிகரெட் பழக்கமோ , குடிப்பழக்கமோ எதுவும் இல்லாத ஒரே உள்ளூர் ஆள் . இன்னமும் இரண்டு ஆட்கள் இருக்கிறார்கள் . அவர்களுக்கும் எந்த கெட்ட பழக்கமும் இல்லை . ஆனால் அடுத்தவர் மனைவியிடம் தொடர்பில் இருந்து பணத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள் . அடுத்தவர் மனைவியிடம் செல்வது கெட்ட பழக்கமா ? என்பதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது . ரவி என்னை விட இரண்டு வயது மூத்தவர் . அவரிடம் அச்சகப் பணியாளனாக நான் முன்பொரு காலத்தில் பணி செய்து கூலி வாங்கியிருக்கிறேன் . சென்னிமலை பள்ளியில் அவர் பத்தாவது படிக்கையில் நான் எட்டாவதில் இருந்தேன் . சனிக்கிழமை என்றால் சைக்கிளில் பதிமூன்று கிலோமீட்டர்கள் செல்வோம் . அன்று மதியம் பள்ளி விடுமுறை என்பதால் மதிய வெய்யிலில் மாங்கு மாங்கென சைக்கிளை மிதித்துக் கொண்டு வீடு வந்து விடுவோம் மேலும் சில நண்பர்களுடன் . ஒரு சனிக்கிழமை நானும் நேசனல் என்ற நண்பரும் பள்ளி செல்லாமல் சினிமாவுக்கு சென்று விட்டோம் . மதியம் இன்னொரு சினிமா . அந்த வயதில் கட்டடித்து சினிமாவுக்கு செல்வது ஒரு திரில் தான் . மாலையில் வீடு வருகையில் இருட்டி விட்டது . தந்தையார் தடியை எடுத்து விட்டார் என்றால் கவனமாகவே என்னை கையாள மாட்டார் . அது அன்றும் நடந்தேறிவிட்டது . சினிமாவுக்கு சென்ற விசத்தை யார் போட்டுக் கொடுத்தது ? என் தந்தையார் ரகசியங்களை பாதுகாத்து அறியாதவர் . ரவி சொன்னாண்டா ! அவ்வளவு தான் ஊருக்குள் நேராக ஓடி வந்தேன் . ரவியின் வீட்டின் முன் நின்று நல்லவிதமான கெட்ட வார்த்தைகள் உச்சரித்த பின் வெளிவந்த ரவி . உங்கொப்பன் தான் எங்க ரவி அவன்னு கேட்டாப்ல . நான் சினிமாக்கு போயிட்டான்னு சொன்னேன் . நீ ஈடு திம்பீன்னு எனக்கென்ன தெரியும் ? என்றார் . நல்ல பழக்கவழக்கங்களோடும் , ஒழுக்க சிந்தனைகளையும் ஒருங்கே பெற்ற ரவி இன்று வரை அதை கடைபிடித்தும் வருகிறார் . தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று நூற்றுக்கு பத்துப்பேர் வாழ்வதால் தான் ஊரில் மழை பொய்த்துக் கொண்டே இருக்கிறது இன்னும் . நல்லவேளை எனக்கு அப்படி பொறுப்பு மிக்க சிந்தனைகள் வழங்கவில்லை யாரும் . அப்படி முயற்சி செய்த டாடியும் தோற்றுப்போய் விட்டார் . நான் கடைசியாக எழுத்துக்கு வந்து விட்டேன் . மனது தறிகெட்டு ஓடும் சமயமெல்லாம் எழுத அமர்ந்து விடுகிறேன் . தான் பிழைப்புத்தனம் செய்யும் ஊரிலேயே நிலம் வாங்கி வீடு கட்டி சிறந்த குடும்பஸ்தனாக ரவி ஆகி விட்டார் . நான் அப்படியே இருக்கிறேன் . அவர் பார்வையில் எப்படி இவனால் துளிகூட மாற்றமில்லாமல் அப்படியே இருக்க முடிகிறது என்ற கேள்வி இருக்க வாய்ப்பிருக்கிறது . அவரவர்களுக்கான வாழ்க்கையை அவரவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் . தற்கொலை செய்து கொள்கிறவர்கள் கூட வாழ்ந்து பார்த்துவிட்டுத் தான் அதைச் செய்து கொள்கிறார்கள் . இப்போது சொல்லப்போகும் விசயம் 89- ல் கோவை நரசிம்மநாய்க்கன்பாளைய அச்சகத்தில் நடந்தது . அதே மீண்டும் தன் அச்சகத்திலும் நடந்ததாக சமீபத்தில் ரவி சொன்னார் . விஜயமங்கலம் விஷ்ணு அச்சகத்தில் சின்னச்சாமி நுழைந்தபோது மணி காலை ஒன்பதரை இருக்கும் . தனது மிதியடிகளை அச்சகத்தின் வாசல்படியில் விட்டு விட்டு பின்மண்டையை சொறிந்தபடி புன்னகையோடு நுழைந்தான் . சின்னச்சாமிக்கு கல்யாணம் நிச்சயமான நாளில் இருந்தே யாரைப் பார்த்தாலும் புன்சிரிப்போடு தான் முகத்தை வைத்துக் கொள்கிறான் . “ என்னடா சின்னா புன்னகை ?” என்று தெரிந்தவர்கள் யாராவது கேட்டுவிட்டால் அவ்வளவு தான் . அப்படி பாடுபட்டேனுங்க , இப்படி ஓயாமப் பாடுபடறேனுங்க .. என்னத்தக் கண்டேனுங்க ? என்று நீட்டிக் கொண்டே வந்து கடைசியில் தான் கல்யாணங் கட்டிக்கலாமுன்னு இருக்கேனுங்க , என்பான் . கேட்ட மனிதரோ , “ அட பெப்பலத்தானே இதை மொதல்லயே சொல்றதுக்கென்ன ?” என்று சொல்லிச் செல்வார் . சின்னச்சாமி அச்சகத்தினுள் பைண்டிங் செக்சனில் நின்றிருந்த மூவரையும் அடையாளம் தெரியாமல் பார்த்தான் . அச்சக உரிமையாளர் ரவி அப்போது தான் வந்து ஊதுபத்தி பற்ற வைத்து சாமி படங்களுக்கு காட்டிக் கொண்டிருந்தார் . இவனை பார்த்தவர் , “ என்றாது காத்தால இந்தப்பக்கமா வந்திருக்கே ?” என்று கேட்டபடி தொழிலாளர்களிடம் அன்றைய வேலை நிலைமைகளை பற்றி பேசிவிட்டு வந்தமர்ந்தார் தன் இருக்கையில் . “பாரதி ஸ்கூல் வவுச்சர் பேடு முப்பது டெலிவரி குடுத்தாச்சா? கோழிப்பண்ணை பில் புக் பைண்டிங் ஆயிடுச்சா? பைப் கம்பெனி பில் புக் பர்ப்பரைட்டிங் போட்டாச்சா?” என்று அமர்ந்து கேட்டபடி இருக்க, “ஆச்சுங்க” என்றொரு குரல் மட்டும் உள்ளிருந்து கேட்டது. “இப்படி சேர்ல உக்காரு சின்னு. என்ன விசயமா வந்தே?” என்றார். “எனக்கு கலியாணம் வருதுங்கொ” “பார்றா அதிசயத்தை! அடே கேட்டீங்களா? உனக்கு எந்த இ.வா டா பொண்ணு குடுத்தது?” “எம்பட மாமன் பிள்ள தானுங்க, ஈரோட்டுல கருங்கல் பாளையத்துல சாயப்பட்டறை வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருக்காளுங்க” “அது சரி சாயப்பட்டறை வேல தெரிஞ்ச பொண்ணை இங்க கட்டீட்டு வந்து என்னடா பண்றது? நம்மூர்ல ஏதுடா பட்டறை? வந்தா இனி தறிப்பட்டறைக்குத் தான் நூலுப் போட தாட்டி உடோணும். பேசாம உங்கொம்மாவையும் கூட்டிட்டு ஈரோடு பொண்டாட்டி ஊருக்கே போயிடு. சரி எப்போ கல்யாணம்?” “கல்யாணத்துக்கு இன்னம் பத்தே பத்து நாளு தானுங்க இருக்குது. இதென்னங்க இவத்திக்கி ஈஸ்வரங் கோயில்ல தான் கல்யாணம். இப்பத்தான் ஐயரை பார்த்து பேசிட்டு வர்றனுங்க. அப்பிடியே கையோட பத்திரிக்கை அடிக்கவும் சொல்லிடலாமுன்னு தான் நம்மளை பாக்க வந்தனுங்க” “பத்திரிக்கை அடிச்சுக் குடுக்குறதுக்கு தாண்டா நான் உக்கோந்துட்டு இருக்கேன். அடிச்சுட்டா போவுது. எத்தனை அடிக்கோணும்? சமாச்சாரம் எப்படி?” “ஏனுங்கோ, எனக்குத் தெரிஞ்சு பதனஞ்சு வருசமா இந்தப்பக்கத்துல எல்லாரு கல்யாணத்துக்கும் போயி மொய்ப்பணம் வச்சிருக்கனுங்க. எப்படியும் முன்னூறு பத்திரிக்கையாச்சும் அடிக்கோணுமுங்க. பொண்ணு ஊட்டுக்கு பத்திரிக்கை வேண்டாமுன்னு எம்பட மாமன் சொல்லிப் போடுச்சுங்க. அவங்க வெத்தலபாக்கு வச்சு சொல்லிக்கறாங்களாம். நாம அப்படி பண்ணா நல்லாவா இருக்கும். என்ன நாஞ் சொல்றதுங்க? அதான் ஒரே முடுவா வந்துட்டனுங்க” “சரி கல்யாணம் பத்து நாள்ங்கறே அடுத்தவாரம் விசாழன் வருது. முகூர்த்த நேரமெல்லாம் பஞ்சாங்கத்துல பாத்து போட்டுக்கறேன். உன்னோட அம்மா பேரு, சம்சாரம், அவ அப்பா அம்மா பேரு மட்டும் சொல்லு” “எல்லாருக்கும் அடிக்கிற மாதிரி எனக்கு வேண்டாமுங்க. நாஞ் சொல்றதை அப்படியே எழுதி நோட்டீஸ் அடிக்கிற மாதிரி மஞ்சக்காயிதத்துல அச்சு போட்டுக் குடுத்தீங்கன்னா போதும். அப்பிடியே ஊடூடா போயி குடுத்துடுவேன்.” “அட கேனையா! பத்திரிக்கையின்னா முன்னால அம்மன் படம், விநாயகர் படம்னு போட்ட கார்டுல தான் அடிச்சுக் கொண்டி கொடுக்கோணும். நோட்டீஸ் அடிக்கக் கூடாது. நீ என்ன கும்பாபிஷேகமா பண்றே? அதைக்கொண்டி நாலு பேர்த்துகிட்ட நீட்டினா சிரிப்பாங்கடா. அறிவு கெட்டவன்ங்கறது செரியாத்தான் இருக்குது. கவர்ல போட்டு ஜம்முன்னு கொண்டி குடு. எத்தனை ஆயிடப்போவுது? உனக்கு வேணா எம்மபட கூலி வேண்டாம். பேப்பர் செலவு, இங்க் செலவு, கரண்டு செலவு மட்டும் வாங்கிக்கறேன்” “நாஞ் சொல்றதும் பத்திரிக்கை தானுங்க. அதே வழுவழு காகிதத்துல அடிச்சி கவர்ல போட்டுக் குடுங்க. இன்னதுன்னு நாஞ் சொல்றதை மொதல்ல எழுதிக்குங்க. அதை அப்பிடியே அடிச்சுக் குடுங்க” “சரி சொல்லு” என்ற ரவி பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டார். மேலே பிள்ளையார் சுழி போட்டார். “உனக்கு குல தெய்வம் எதுடா?” “அண்ணமார் சாமிங்கோ” “சேரி அண்ணமார் சாமி துணை. இனிச் சொல்லு” ”எல்லாருக்கும் வணக்கமுங்க! நான் தான் சின்னச்சாமியின்னு பத்திரிக்கை குடுக்குறப்பவே உங்களுக்கு தெரிஞ்சிருக்கு,முங்களே! பாத்தீங்கனாக்க அங்க இங்கன்னு கெடைக்கிற வேலை எல்லாம் செஸ்சு போட்டு தினக்கூலி, வாரக்கூலின்னு வாங்கீட்டு, அப்படி வேலை இல்லீன்னா சினிமா கினிமா பார்த்துட்டு இருந்தே வயசு பாருங்க முப்பது ஆயிப்போச்சுங்க பொசுக்குன்னு” “ஏண்டா உனக்கு முப்பதா? முக்கா கிழவன் ஆனமாதிரி இருந்துட்டு ஏமாத்துறியாடா?” “இடையில பேச்சு குடுக்காதீங்க, அப்புறம் கோர்வை விட்டுப்போயிடும். கடைசில பேசிக்கலாம்.” “சரி சரி வெசையா சொல்லாதடா நெதானமா சொல்லு. எனக்கென்ன ஏழு கையா இருக்குது?” “ஊட்டுல நானும் எங்காயாளும் தானுங்க. அவளுக்கு வேற இந்த ஆஸ்துமான்னு நோவுங்க. அடுப்புப் பொகையெல்லாம் ஆவாதுன்னு கவருமெண்டு ஆஸ்பத்திரியில சொல்லிப் போட்டாங்க. இதென்றா வம்பாப் போச்சுன்னு ரோசனைங்க! நமக்கு சமையல்கட்டுல ஒரு வாப்பாடும் தெரியாதுங்களா.. சோத்துக்கு பின்ன சிங்கி அடிக்கறதான்னு ஒரே ரோசனை பார்த்துக்கங்களேன். ஒரே முடிவா மோட்டாரு ஏறி கருங்கல்பாளையம் போயி எம்பட மாமங்கிட்ட இப்பிடின்னு விசயத்தை சொல்லிப் போட்டனுங்க. அதுக்கேன் மாப்ள இடி தலையில உழுந்த மாதிரி சோவமா சொல்றீங்க ? எம்பட பெரிய புள்ள சிந்தாமணிய கட்டிக் கொண்டி வெச்சு மவராசனா பொழைங்கன்னு சொன்னவரு என் மாமியாகாரிகிட்ட என்னம்மிணி சொல்றேங்காட்டி , அதும் வாயெல்லாம் பல்லா இதாச்சிம் தெகைஞ்சுதேன்னு காபி குடுத்துச்சு . சரியின்னு போட்டு மாரியம்மன் கோயில்ல பூக் கேட்டோம் . மாரியாத்தா நெனச்ச மாதிரியே செவப்பு பூ குடுத்தங்காட்டி சந்தோசமாப் போச்சு . அததுக்குன்னு நேரங்காலம் வந்தா தன்னப்போல நடக்குது பாருங்க . மேக்கொண்டு சொந்தத்துல பெருசுங்க கூடி நிச்சயம் பண்டி விசயமங்கலம் ஈஸ்வரங்கோயில்ல வியாழக்கிழமெ காத்தால சிந்தாமணிக்கு தாலி கட்டி எம் பொஞ்சாதியா ஏத்துக்கறனுங்க . அந்த விழாவுக்கு உங்க எல்லோரையும் எம்பட ஒரம்பறை சனத்தையும் அன்போட கூப்புடறேன் . வந்திருந்து சீரும் சிறப்புமா கடன் வாங்கிப் பிழைக்காம நல்லபடியா வாழ்க்கை நடத்துங்கன்னு வாழ்த்துங்க ! அவ்வளவு தானுங்க” “நீ சொன்ன மாதிரி அடிச்சுத் தந்துடறேன். என்னோட பிரஸ் பேரை போடலைடா சாமி. எவன் அடிச்சான்னு உன்னை கேட்டா ஈரோட்டுல அடிச்சேன்னு சொல்லிடுடா. முன்னூறு ரூவா வரும். கையில எவ்ளோ வச்சிருக்கே?” “இரநூத்தம்பது ரூவா இருக்குது இதை புடிங்க! நான் போயிட்டு பொழுதோட வர்றனுங்க. இன்னிக்கி குடுத்துடுவீங்கள்ல!” “ஏண்டா இதென்ன மளிகை கடையா? கேட்டதும் பொட்டணம் கட்டித் தர்றதுக்கு? போயிட்டு நாளைக்கு பன்னண்டு மணிக்காட்ட வா. அடிச்சு வச்சிருக்கோம்” என்றவர் பணத்தை கல்லாவில் போட்டு பூட்டி விட்டு எழவும் இவனும் எழுந்து அச்சாபீசை விட்டு வெளியேறினான். சாலையில் சென்ற ஈஸ்வரங்கோவில் ஐயரைப் பார்த்து சல்யூட் ஒன்று போட்டு விட்டு நகர்ந்தான். அவர் சிரித்தபடி தலையை ஆட்டிக்கொண்டு சென்றார். சின்னச்சாமி தார்சாலையில் மூங்கில்பாளையம் நோக்கி நடந்தான். காலையில் முத்தானும் , ராசுவும் மூங்கில்பாளையம் ராமசாமி தோட்டத்தில் சாலை போடும் வேலை இருப்பதாகவும் நீயும் வர்றியா ? என்றும் கேட்டிருந்தார்கள் . இவனும் எப்படியும் வந்து விடுவதாக சொல்லியிருந்தான் . இன்னம் ஆளைக் காணோமே என்று இவனைத் திட்டிக் கொண்டு தான் வேலையை துவங்கியிருந்தார்கள் தோட்டத்தில் . போக வர இவனுக்கு இருந்த சைக்கிளை டியூப் மாற்றி ஓவராயல் செய்து தரும்படி நேற்றுத்தான் மேக்கூர் சைக்கிள் கடையில் விட்டிருந்தான் . பிறகு லொடக்லெஸ் சைக்கிளாகவே அது சம்சாரம் வந்த பிறகும் இருந்தால் நன்றாகவா இருக்கும் ? அது பின்னால் கேரியர் இல்லாத மொட்டை வண்டி . இனி சம்சாரம் வந்து விட்டால் முன்னால் அமரவைத்தா டபுள்ஸ் ஓட்டுவது ? பின்னால் கேரியர் ஒன்று புதிதாக மாட்டச் சொல்லி விட்டான் . மேலும் ஆட்களை சாலையில் ஒதுங்கச் செய்ய அழுத்துனால் பேப்பேப் என்று கத்தும்படியும் ஒன்று வைக்கச் சொல்லி விட்டான் . நிச்சயம் ஆன நாளிலிருந்து சிந்தாமணியோடு முதல் ஆட்டம் சினிமா பார்க்க பெருந்துறை போவது போல் இரண்டு கனாக்கண்டு விழித்தெழுந்து நடுச் சாமத்தில் சிரித்தான் . முன்பாக தாசம்பாளையம் வடிவேலுவோடு சிப்காட்டில் கட்டிட வேலைக்கு சென்ற போது கலவை போடவும் , காரைச்சட்டி தூக்கவும் வந்த புவனா தான் சின்னச்சாமி மீது ஒரு கண் வைத்திருந்தாள் . எப்ப சின்னு என்னை கட்டிக்கப் போறே ? உனக்காக நான் ஏங்கி ஏங்கி துரும்பா இளைச்சிப் போறேனே தெரியிலியா ? என்று சாடை பேசுவாள் . அவளுக்கு வாய் எந்த நேரமும் அசை போட்டுக் கொண்டே தான் இருக்கும் . வெத்தலை பாக்கு புகையிலை இல்லாமல் இருக்க மாட்டாள் புவனா . அதனால் அவள் பற்களெல்லாம் கறை தான் . அது தான் இவனுக்கு பிடிக்காது . சின்னச்சாமி காரைப்பூச்சில் நின்றிருந்தால் வேண்டுமென்றே இவனை இடித்து விட்டு குலுங்கிப் போவாள் . “ ராஸ்கோல்” என்று இவன் சப்தம் போடுவது புவனாவுக்கு புடிக்கும் . நடந்து கொண்டிருந்த நாடகத்தை வடிவேலு தாமதமாகத் தான் தெரிந்து கொண்டான் . தெரிந்தபின் புவனாவிடம் அவன் ஒன்றும் கேட்கவில்லை . ஆனால் சின்னச்சாமியிடம் பேசினான் . புவனாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதென்றும் , பொள்ளாச்சிக்கு கட்டிக் கொடுத்து மூன்று மாதத்தில் பிழைக்காமல் ஓடி வந்து ஊரில் இருக்கிறாள் என்றும் சொன்னான் . அன்றிலிருந்து புவனாவை பார்க்கையில் இவனுக்கு பாவம் மட்டுமே தோன்றியது . அப்போது புவனாவோடு டபுள்ஸ் சினிமாவுக்கு போவது போல் கனவொன்று வந்தது . பத்திரிக்கை ஒன்று அவளுக்குப் போய் கொடுக்க வேண்டும் . என்னை ஏமாத்திப் போட்டீல்ல ! என்று சொன்னாலும் சொல்வாள் . ராமசாமி தோட்டத்தில் முத்தானும் , ராசுவும் கையில் நீளமான மூங்கிலை தூக்கிக் கொண்டு போய் பறித்திருந்த குழியில் நட்டுக் கொண்டிருந்தார்கள் . இவனைக் கண்டதும் , “ எங்கே வராமப் போயிடுவியோன்னு பேசிட்டு இருந்தோம் . உனக்கு நூறு ஆயுசு , அந்தக் கடப்பாறையை எடுத்து குழிக்குள்ள கருங்கல்லு போட்டு நங்கு நங்குன்னு நாலு ஊனு ஊனு . டெம்பரா மூங்கில் நேரா நிக்கோணும் பாத்துக்க” என்றான் முத்தான் . சின்னச்சாமி சட்டையை கழற்றி முருங்கை மரத்தின் வாதில் போட்டு விட்டு கடப்பாறையை கையில் எடுத்துக் கொண்டான் . தோட்டத்தில் அவர்களுக்கு பொழுது இறங்கும் வரை வேலை இருந்தது . இன்னும் இரண்டு நாளைக்கு அங்கேயே வேலை இருக்கும் போலிருந்தது . தட்டுப்போர் போடும் வேலையும் இருப்பதாக ராமசாமி அவர்களிடம் சொன்னார் . இருட்டு கட்டிய சமயம் மேக்கூரில் தன் வீடு வந்தவன் உடம்பு அசதி போக சுடுதண்ணி வைத்துக் குளித்தான் . தனக்கும் ஆயாளுக்கும் தோசை வாங்கி வர கிளம்பினான் . ஆயாள் பத்து நாளாக அடுப்பு பற்ற வைப்பதில்லை என்பதால் இருவருக்குமே ஓட்டல் தீனி தான் . ஆயாள் மாத்திரை விழுங்காமல் குப்பையில் வீசி விடுமென்பதால் இவனே இரண்டு வேளையிலும் ஆயாள் சாப்பிட்டு முடித்த பின் மாத்திரையை விழுங்க வைத்து விடுவான் . அடுத்த நாள் வேலைக்காட்டிலிருந்து முத்தானுடைய சைக்கிளை வாங்கிக் கொண்டு அச்சகம் வந்தான் சின்னச்சாமி . அச்சகத்தில் ரவி இல்லை . வேலையாள் ஒருவன் தான் , இவன் பத்திரிக்கை கம்ப்யூட்டரில் அச்சுக்கோர்த்துக் கொண்டிருப்பதாயும் , அதைப்பார்த்து தப்பு ரைச் திருத்தி பாலிமர் சீட் எடுத்தால் சரி உனக்கு சாய்ந்திரம் பத்திரிக்கை ரெடி ! என்று கூறி தாட்டி அனுப்பினான் . இவனும் மாலையில் வேலைக்காட்டிலிருந்து வீடு செல்கையில் வாங்கிக் கொள்வதாய் கூறி விட்டு வேலைக்காட்டுக்கே வந்து விட்டான் . ”என்ன சின்னு, ராக்கெட் மாதிரி போனே? போன சுடிக்கு வந்துட்டே? பத்திரிக்கை பொட்டணத்தை காணமே!” என்று ராசு கேட்க, “பொழுதோட தான் ரெடி ஆவுமாம்” என்றான். சாயந்திரம் ஏழு மணியைப்போல இவன் பத்திரிக்கை வாங்கிப் போகும் கனவோடு அச்சகம் போனபோது அது மின்சாரம் இல்லாமல் இருளில் கிடந்தது . சார்ஜர் லைட் விளக்கொளியில் ரவி சேரில் அமர்ந்திருந்தார் . இவனைக் கண்டதும் , “ உன்னோட பத்திரிக்கையை அடிக்கவே முடியலடா சின்னா ! மத்தியானம் மூனு மணிக்கு போன கரண்ட்டு இன்னம் காணம் . இந்தப் பொழப்பே கரண்ட்டை நம்பித்தான் ஓடுது . இப்படி நிறுத்தீட்டாங்கன்னா சாத்தீட்டு போக வேண்டியது தான் . பாரு மஞ்சள் பேப்பரு உனக்காவத்தான் வெட்டி மத்தியானமே ரெடியா வெச்சிருக்கேன் . நைட்டு வேலை இன்னிக்கி செய்யுறோம் சின்னு , நாளைக்கு காலையில வாங்கிக்க . நைட்டு வாங்கீட்டு போயி மஞ்சள் தடவி எப்படியும் காத்தால தான குடுப்பே ? காத்தால கோயல்ல கொண்டி வச்சு பூசை ஒன்னை போட்டு எடுத்துட்டு போயிடு” என்று ரவி சொல்ல செரீங்க , என்று சொல்லி விட்டு வெளியேறினான் . கரண்டு இல்லாமப் போனதுக்கு அவுங்க தான் என்ன பண்டுவாங்க ! இரவு படுக்கையில் விழுந்ததும் கல்யாணத்துக்கு இன்னும் ஒன்பது நாள் தான் என்ற யோசனை ஓடியது . சிந்தாமணியை நினைத்துக் கொண்டான் . சிந்தாமணி தொட்டதற்கெல்லாம் தன்னிடம் சண்டைக்கட்டாத பிள்ளையாய் இருக்க வேணும் பிள்ளையாரப்பா ! என்று வேண்டிக் கொண்டான் . அவளை காலம் முழுதும் ஒத்தை அடி போடாமல் குடும்பம் நடத்த வேண்டும் முருகா என்று வேண்டினான் . இப்படி நிறைய வேண்டுதல்களை வைத்து விட்டு தூங்கிப் போனான் . காலையில் ஆயாள் இட்லி தின்று முடித்த தட்டை கழுவலாம் என்று எடுத்துப் போய் கழுவிக் கொண்டிருந்த சமயம் இவன் ஈரோட்டு மாமன் அறக்கப் பறக்க வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வந்தார் . “ வாங்க மாமா , அம்மா இப்பத்தான் சாப்டுச்சா , அதான் கழுவி வைக்கிலாம்னு” என்று இவன் சொன்னதை காதில் வாங்காமல் போய் திண்ணையில் அமர்ந்தார் . இப்படி ஆயிடிச்சு என்று விசயத்தை சொன்னார் . சின்னச்சாமிக்கு வாழ்க்கையில் முதலாக தலை சுற்றல் வரவே தலையைப் பிடித்துக் கொண்டு வாசலில் அமர்ந்தான் . “தகவலை உங்ககிட்ட சொல்லீட்டு போகலாம்னு தான் காத்தால நேரத்துல வந்தேனுங்க மாப்ள! ஆளுங்களை அனுப்பீருக்கேன். மத்தியானம் போல ஈரோடு வாங்க மாப்பிள்ளை! மேக்கொண்டு அங்க பேசிக்கலாம்” என்றவர் எழுந்து வந்த விசையில் கிளம்பிப் போனார். இவனும் எழுந்து வாசலில் காறித்துப்பி விட்டு செருப்பைத் தொட்டுக் கொண்டு கிளம்பினான். சின்னச்சாமி நேராக அச்சகத்திற்குத் தான் வந்தான் . ரவி இவனைப் பார்த்ததும் , “ இதென்ன உம்மட பத்திரிக்கை காஞ்சுட்டு இருக்குது பாரு . டேய் பொடியா .. தட்டி எடுத்து பண்டல் போட்டு கட்டு” என்றார் . “அதை கொண்டுட்டு போயி நானு யாருக்குங்க குடுக்கறது? பொண்ணுப்புள்ள நேத்து நைட்டே ஓடிப் போச்சுங்களாமா!” என்று சொல்லிவிட்டு இறங்கி சாலையில் நடந்தான். இப்போதும் நீங்கள் விஜயமங்கலம் பக்கமாக வந்தால் மூன்று டாஸ்மார்க் பார்களில் எந்தக் கடை வாசலிலும் சின்னச்சாமியை பார்க்கலாம் . நீங்களாவே சென்று “நீயா சின்னச்சாமி ?” என்று கேட்க வேண்டியதே இல்லை . அவனாகவே உங்களைக் கண்டால் வருவான் . ஒரு பத்து ரூபா இருந்தா குடுங்க சார் ! என்று கேட்டபடி . எப்போதோ போதையில் இரண்டு முறை கொடுத்துப் பழக்கிவிட்டு நான் இன்றும் தடுமாறிக் கொண்டிருக்கிறேன் அவன் கும்பிடுக்காக . எந்த இடத்தில் கண்டாலும் கும்பிடு போட்டு விட்டு சில்லரை இருக்குதுங்ளா ? என்பான் . சின்னச்சாமிக்கு திருமணம் நடக்கவேயில்லை . தாடிகூட நரைத்து விட்டது . இப்படி ஒவ்வொரு ஊரிலும் டாள்மார்க் கடைப்பக்கமாக சின்னச்சாமிகள் சுற்றிவந்து கொண்டுதான் இருக்கிறார்கள் . - எழுத்தோலை –மே 2012   7 டெங்கு ஒரு மாத காலமாகவே ஊருக்குள் எல்லாரும் பயந்தபடியேதான் இருந்தார்கள். பத்து கிலோமீட்டர் கிழக்கில் இருக்கும் சென்னிமலையில் இரண்டு பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் என்றும் பதினைந்தாயிரம் பக்கம் செலவு செய்து பிழைத்துக் கொண்டார்கள் என்றும் சேதிகள் ஊருக்குள் உலாவிக் கொண்டிருந்தன. டிவி செய்திகளில் நெல்லையில் நாற்பது பேருக்கும் மேலாக டெங்கு காய்ச்சலால் இறந்து போனதாக வந்த தகவல் எல்லாரையுமே பயமுறுத்திக் கொண்டேயிருந்தது. மூன்று வருடம் முன்பாக சிக்கன் குனியா என்று வந்தபோது சுள்ளிமேட்டூருக்குள் ஒரு ஆள் பாக்கியில்லாமல் துன்பப்பட்டார்கள். அதேபோல் தானோ என்று அவரவர் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளை கவிழ்த்துப் போட்டு பாசம் பிடித்ததை சுரண்டிச் சுத்தப்படுத்தி தண்ணீர் மாற்றி உபயோகித்தார்கள். கொசுக் கடித்தால் மஞ்சள் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து நாட்டு வைத்தியம் செய்து கொண்டார்கள். சந்தோஷமும் துக்கமும் சொல்லிக்கொண்டு தான் வருவதில்லையே! “”ஏண்டி ருக்குமணி… உன்னோட பையன் ஒருவாய் சாப்டுட்டு பள்ளிக்கூடம் போனானா? என்கிட்ட இருக்கிற பணத்தைக் குடுன்னு என் பையன் கேட்டான். எதுக்குடா? பள்ளிக்கூடத்திலதான் துணிமணியில இருந்து புத்தகம் நோட்டு வரைக்கும் அரசாங்கமே தருதேன்னேன். அவன் பிரண்டுக்கு காய்ச்சல் வந்துட்டுதாம். குடுன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்றான்” என்று சிந்தாமணி பக்கத்து வீட்டு ருக்குமணியிடம் குரல் கொடுத்தது. “”என்னோட பையனும் அப்பிடித்தான் பணம் கேட்டுட்டு சாப்பிடாம பையைத் தூக்கீட்டு போயிட்டான் அம்மிணி. காலனில நம்ம வேணி பிள்ளை சீதா அஞ்சாப்பு நம்ம பசங்களோட படிக்குதுல்ல அதும்கூட சாப்பிடாமத்தான் போயிடுச்சாம். காசு என்ன மரத்துலயா காய்க்குது? இதுகள் கேட்டதும் போய் ரெண்டு உலுக்கு உலுக்கி எடுத்துட்டு வந்து தர்றதுக்கு? அதான் பள்ளிக்கூடத்துல தினமும் கோழிமொட்டோட மத்தியானம் சோறு போடுவாங்களல்ல காத்தால ஒருவேளை சோறு திங்காட்டி என்ன உடு அம்மிணி” என்று குரல் கொடுத்தாள் ருக்குமணி. ராத்திரி நானும் எம்பட பையனும் அந்த அப்புக்குட்டியோட பையனை வீடு போய் பார்த்துட்டு தான வந்தோம். ஒடம்பெல்லாம் அந்த முருகேசனுக்கு பொரிப் பொரியா செவந்தாப்ல இருந்துச்சு. சின்னம்மை போட்டிருக்குதுன்னு தான எல்லாரும் சொன்னாங்க! தெய்வானை கூட அப்போத்தான் சின்னவெங்காயம், மஞ்சள், வேப்பங்கொழுந்து வச்சி அம்மியில அரைச்சுட்டு இருந்தாள். வேப்பந்தலை பொறிச்சுக் கொண்டாந்து வெறும் தரையில போட்டு பையனை அது மேல படுக்க வச்சிருந்தாள். அந்த அப்புக்குட்டி நான் வர்ற வரைக்கும் காணம். எங்க குடிச்சுப்போட்டு கெடக்கானோ! நாலு பேருக்கு கட்டிங் ஷேவிங் பண்டி காசு ஜோப்புல சேர்ந்தாப் போதும். நேரா குடிக்கப் போயிடறான். தெய்வானை கழுத்துல ஒரு பவுன் செயின் கெடந்துச்சு. அதையும் காணம் இப்ப. மஞ்சள் கயிறு ஒன்னுதான் கெடக்குது” “”ஊருக்குள் மாகாளியாத்தா கோவில் நோம்பி சாட்டி ரெண்டு வருசம் ஆச்சில்ல, அதான் முருகேசன் ஒடம்புல விளையாட வந்திருக்கா ஆத்தா!” என்றாள் ருக்குமணி. “”அட ருக்குமணி உனக்கு விசயமே தெரியாதாட்ட இருக்குதே! நம்ம  நர்ஸம்மா காலையில அப்புக்குட்டி ஊட்டுக்குப் போயி பார்த்துட்டு சத்தம் போட்டுதாமா தெய்வானையையும் அப்புக்குட்டியையும்” “”அட, அந்த நர்ஸம்மா எதுக்கு ஆத்தா பார்த்த வீட்டுல போயி சத்தம் போட்டுச்சு? ஊருக்குள்ளயே இருந்தாலும் ஒரு தகவலும் தெரியலையே! ஊசி போடச் சொல்லுச்சா அது? ஊசி எல்லாம் போடக் கூடாது ஆத்தா பார்த்த பையனுக்கு! ஆத்தா முத்துகளை அள்ளி வீசி விளையாடற நேரத்துல ஊசி ஒடம்புல ஏறுச்சின்னா கோபமாயிடும். தெரியாதா அந்த தெய்வானைக்கி?” “”நீயும் நானும் சொல்லி என்ன பண்றது? முருகேசன் ஒடம்புல முழுசா பத்துப் போட்டிருந்தாள்ல தெய்வானை. பத்து காய்ஞ்சு விழுந்த இடத்துல எல்லாம் நல்லா பார்த்துட்டு, இப்படி முட்டாள் தனமா பத்துவயசுப் பையனை வீட்டுல படுக்கப் போட்டுட்டீங்களே… சீட்டு எழுதித்தர்றேன். உடனே சென்னிமலை அரசாங்க மருத்துவமனைக்கு கூட்டுட்டுப் போங்கன்னு சொல்லிடுச்சாம். தெய்வானை மாட்டேன்னுதான் சொன்னாளாம். அங்க போனாத்தான் ரத்த டெஸ்ட்டு எடுத்து டெங்கு காய்ச்சலான்னு பார்ப்பாங்க. பையன் உயிர் பிழைப்பான்னு அப்புக்குட்டிகிட்ட சொன்னதும் அப்புறம் தான் நம்ம செல்வன் ஆட்டோவைப் பிடிச்சுட்டு காத்தாலயே சென்னிமலை போயிட்டாங்க… தெரியாதா உனக்கு?” என்றாள் சிந்தாமணி. “”எனக்குத் தெரியாது அம்மிணி முருகேசனுக்கு வந்த டெங்கோ, டொங்கோ இனி நம்ம பிள்ளைங்களுக்கும் வந்துட்டா காசுக்கு எங்க அம்மிணி போவுறது? நாமளே நூறு நாள் வேலைக்கு ரோட்டுல கல்லு பொறுக்கீட்டு இருக்கிறோம். அது ஒட்டுவாரொட்டி நோவோ என்னமோ!” என்று பதைபதைப்பாய் பேசினாள் ருக்குமணி. “”பையனை கையில ஏந்திட்டு ஆட்டோவுல அப்புக்குட்டி உட்கார்ந்தப்ப அந்த அழுவாச்சி அழுதானாமா! அத்தாச்சோட்டு ஆம்பிளை அழுது பார்த்ததே இல்லையக்கான்னு சரஸா சொல்றாள். சென்னிமலை ஒரு எட்டு போயி பார்த்துட்டு வரலாம்னா பயமா இருக்குது ருக்குமணி. ஆஸ்பத்திரி வாசல்படி மிதிச்சாலே எனக்கு காய்ச்சல் வந்த மாதிரி ஆயிடும்” என்றாள்சிந்தாமணி. ஊருக்குள் எல்லாப் பெண்களுமே இதே பேச்சாய்த்தான் இருந்தார்கள். அது சரி சொல்லி வச்சது மாதிரி எல்லா பொடுசுகளும் சோறுசாப்பிடாம பள்ளிக்கூடம் போயிருக்குது களே! பதினொரு மணியைப் போல கோவில் பூசாரி உள்ளூர் சின்னான்தான் அந்தத் தகவலை வந்து அவர்களுக்கு சொன்னான். “”நம்ம ஊர் பிள்ளைங்க எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு மேற்கே இருக்கிற புங்கை மரத்தடியில் உட்கார்ந்திருக்குதுக! மாரியம்மன் கோயில்ல முருகேசன் காய்ச்சல் குணமாயிடனும்னு என்னைய தனியா பூஜை பண்ணச் சொல்லிச்சுக, நானும் பூஜை பண்ணி திருநீறு குடுத்தேன். பணம் கேட்டாங்களாமா உங்ககிட்ட? அதான் ஸ்கூலுக்கும் போகாம, சோறும் உங்காம மரத்தடியில உட்கார்ந்திருக்காங்க. என்னோட வயசுக்கு இப்பிடின்னு கேள்விப்பட்டதே இல்லை சாமிகளா! இந்தக் காலத்து பிள்ளைங்க நெனச்சா நெனச்சமானிக்கி எல்லாம் பண்ணுதுக! டீச்சரம்மா வந்து பிள்ளைங்களைக் கூப்பிட்டதுக்கு எங்கம்மா எல்லாரும் வரட்டும்னு உட்கார்ந்துடுச்சுக.” என்று சொல்லிவிட்டு சின்னான் சென்றான். அப்புக்குட்டி பையன் முருகேசன் வறுமையில் வாடினாலும் நல்ல படிப்பாளி. கணக்குப் பாடமாக இருந்தாலும் சரி, ஆங்கிலப் பாடமாக இருந்தாலும் சரி, அது ஒன்னுமில்லை இப்படித்தான் என்ற புரியாத பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்பான். அவனிடம் இருக்கும் குட்டி சைக்கிளை வைத்துக் கொண்டு தன் ஊர் பிள்ளைகளுக்கு சைக்கிள் ஓட்டவும் கற்றுத் தந்திருந்தான். எல்லாருக்குமே அவனைப் பிடிக்கும். அதே போல் அவனுக்கும் எல்லாரையும் பிடிக்கும். “”ஏண்டா துரையரசு… நேத்து முருகேசன் சொன்ன மாதிரி செத்துட்டான்னா நம்ம கூட சேர்ந்து படிக்க வரமாட்டான் தானடா? குழிக்குள்ள போட்டு மூடிடுவாங்க தான? எங்கம்மா உங்கம்மா எல்லாம் காசு எடுத்துட்டு இப்போ வருவாங்க பாரு… நாம முருகேசன்கிட்ட கொண்டுபோய் குடுக்கலாம். டாக்டர் ஊசி போட்டு முருகேசன காப்பாத்திருவாங்க …பாவம்… அவன் பொழச்சு வந்துட்டா நல்லா இருக்குமல்ல” என்ற மீனாட்சிக்கு நேற்று மாலையில் விளையாட முடியாமல் சோர்ந்து போய் வேப்பமரத்தடியில் முருகேசன் சுருண்டு படுத்துக் கொண்ட காட்சி கண்முன் வந்தது. “”முருகேசா முருகேசா… ஏன்டா படுத்துட்டே? என்றாது உன் கை, கால்ல எல்லாம் சிவப்பு சிவப்பா பொரிப் பொரியா இருக்குது?” “”மீனாட்சி… என்னால எந்திரிக்கவே முடியாது. போல இருக்குது… டீக்கடையில முந்தா நேத்து முட்டாய் வாங்க போனப்ப கணேசண்ணன்தான் பேப்பர்ல போட்டு இருந்ததை படிச்சு மூர்த்தியண்ணன்கிட்ட சொல்லிட்டு இருந்துச்சு… இப்படி பொரிப்பொரியா வந்து காச்சல் அடிச்சா அது டெங்கு காச்சலாம் மீனாட்சி… எங்கப்பன் கிட்ட காசு இல்ல மீனாட்சி… நேத்து கூட எங்கம்மாட்ட குடிக்க காசு கேட்டுட்டு அடிச்சிட்டு இருந்துச்சு… நான் செத்துப் போயிட்டா… எல்லாரும் நல்லா படிச்சு வாத்தியார் வேலைக்கு போங்க… எங்க அம்மாவைப் பார்த்துக்குங்க. அதுக்கு என்ன விட்டா யாரும் இல்லை. நான் பெரிய ஆபிஸராகி கஞ்சி ஊத்துவேன்னு கனாகண்டிட்டு இருந்தது” என்றவன் அதற்கும் மேல் ஏதும் பேசமுடியாமல் அழுது கொண்டே சுருண்டு கிடந்தான். மீனாட்சி ஓட்டமாய் ஓடி அவன் அம்மாவிடம் சொன்னான். “”ஐயோ என் சாமி… இப்படி நாரா கிடக்குதே!” அழுதபடி ஓடிவந்த தெய்வானை மகனைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு உள்ளூர் நர்ஸம்மாவிடம் ஓடினாள். விளையாட்டில் இருந்த பொடியன்களும் பின்னாலேயே ஓடினார்கள். நர்ஸம்மா வீடு பூட்டிக்கிடந்தது. நர்ஸம்மா காசி பாளையம் மருத்துவமனைக்குப் போய்வந்து கொண்டிருந்தது. குப்பாயாள்தான் பையனைப் பார்த்துவிட்டு, “”அம்மை போட்டிருக்குமாட்ட இருக்குதாயா… போய் வேப்பிலையும், மஞ்சளையும் அரைச்சு இவன் உடம்புல பூசி உடு… நர்ஸம்மா இனி ஒன்பது மணிக்கி மேலதான் வரும்…” என்றதும் தெய்வானை மகனோடு வீடு சென்றாள். அடுத்த நாள்தான் பிள்ளைகள் அனைவரும் பேசி வைத்துக்கொண்டார்கள். அதன்படியே காலையில் பள்ளிக்கூடம் போகாமல், பட்டினியோடு மரத்தடியில் அமர்ந்து கொண்டார்கள். இப்போதுதான் இவர்கள் விசயம் ஊரெங்கிலும் பரவியது! நம்பிக்கையும் கெஞ்சலும் கலந்த கண்களுடன் அப்புக்குட்டி மேலங்காட்டுப்பாளையம் ராமசாமியண்ணன் முன்பு நின்றிருந்தான். கிராமத்தில் கொஞ்சம் காசுக்காரர் ராமசாமியண்ணன். அவர் எப்படியும் உதவுவார் என்றுதான் ஆஸ்பத்திரியில் மகனின் பக்கத்தில் தெய்வானையை நிப்பாட்டி விட்டு பஸ் ஏறி வந்திருந்தான். நர்ஸம்மா சொன்னது மாதிரி அவனுக்கு டெங்குதான். தவிர இவனைப் போல நான்கு பேர் டெங்கு காய்ச்சலில் அங்கு படுத்திருந்தார்கள். டாக்டரும் இவனிடம், “”பயப்படாதப்பா… உன் பையனுக்கு ஒன்னும் ஆகாது…” என்று அழும் இவன் தோளில் கை வைத்துச் சொன்னார். தெய்வானையின் கையில் இருந்த ஆயிரம் அவசரத் தேவைக்கென்று அவள் எப்போதும் பாதுகாத்து வைத்திருத்தது, ஆட்டோ வாடகை, ஆஸ்பத்திரியில் படுக்கை என்று காணாமல் போயிருந்தது! “”வாடா அப்புக்குட்டி… காத்தால நேரத்துல வர்றவன் பன்னண்டு மணிக்காட்ட வந்திருக்கே? பேரன் பள்ளிக்கூடம் போயிட்டான்… அவனுக்குத்தான் பொடணியில முடி வெட்டனும். நான் காத்தால கண்ணாடியைப் பார்த்துட்டே தாடியை இழுத்துட்டேன். இந்த மீசையை துளி கத்திரி போட்டு உடு…” “”சாமி நான் அடப்பப் பையை எடுத்துட்டு வரலீங்க… உங்களைப் பார்த்துட்டு போலாம்னு சென்னிமலை ஆஸ்பத்திரியில இருந்து ஓடிவாறனுங்க”. “”என்னடா சொல்றே?” “”பையனுக்கு ஒடம்புக்கு சுகமில்லீங்க சாமி” என்றவன் உதடு பிதுங்கி அழவும் விசயத்தை யூகித்துக் கொண்டார் ராமசாமியண்ணன். “”அதுக்கு என்கிட்ட காசு கேட்க வந்தியா? ஓட்டமே ஒன்னும் இல்லியேடா! திருப்பூர்ல சாயப்பட்டறை எல்லாத்தையும் சாத்திட்டாங்க… எம்பட பெரிய பையன் அதுதான போட்டிருந்தான்… இப்ப பேருக்கு சும்மா பெட்ரோலுக்கும் கேடா போயிட்டு வந்துட்டு இருக்கான்… மழை இல்லாம காடெல்லாம் சும்மா கெடக்குது. வேணும்னா பத்து நூறு தர்றேன் வாங்கிட்டுப் போ” “”சாமி கொஞ்சம் சேத்திக் குடுத்தீங்கன்னா ஆவுமுங்ளே… எப்பிடியும் நாலு நாளைக்கி ஆஸ்பத்திரியில தான் நாங்க ரெண்டு பேரும் பையன் பக்கத்துலயே இருக்கணும்ங்ளே! ஒரு நாலாயிரமாச்சிம் குடுங்க சாமி…” “”மடியில நோட்டு இருந்தா உன்னை டாஸ்மாக் கடையில எல்லக்காட்டுல தான் வந்து புடிக்க முடியும்… இப்பத் தெரியுதா? ஒரு அத்து அவசரம்னா கையில காசு இருக்கணும்னு… கண்ணு போன பிறகுதான் சூரியனைக் கும்பிடோணும்னு நினைப்பீங்கடா… சரி சரி இந்த வருசம் கூலிப்பணம் இன்னும் நான் உனக்கு தரலீல்ல… அந்த ஐநூறோட… என் பையன் வந்தா வாங்கி ஆயிரமாத் தர்றேன்… நாளை  மறுநாள் வாடா” என்றவர் தன் வீட்டினுள் செல்லவும் அப்புக்குட்டி தன் சைக்கிளை நோக்கி தள்ளாட்டமாய் நடந்தான். அவனும் தெய்வானையும் ஒரு வாய் கஞ்சி குடித்தே இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருந்தன. இனி யாரிடம் போய் பணம் கேட்பது? என்றே புரியாமல் அப்புக்குட்டி சைக்கிளில் பள்ளிக்கூடம் அருகே வருகையில் கூட்டமாய் மரத்தடியில் உள்ளுர் பெண்கள் நிற்பது கண்டு சைக்கிளை நிறுத்தினான். “”இதென்ன அப்புக்குட்டி இங்க சைக்கிள்ல சுத்தீட்டு இருக்கறானே… ஏண்டா பையனை ஆஸ்பத்திரியில விட்டுட்டு இங்க என்னடா வேலை?” சரஸக்காதான் அவனிடம் கேட்டது! “”அதான பாருங்கக்கா” என்று பெண்கள் ஒருமித்த குரலில் கேட்டார்கள். “”உன்னோட முருகேசன் உசுரு பிழைக்கோணும்னு எங்க பசங்க பிள்ளைங்க எல்லாரும் சோறு திங்காம எங்க கிட்ட காசு கேட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்காங்கடா… ஞாயித்துக்கெழமை சீட்டுக்குன்னு ஐநூறு ரூபாய் வச்சிருந்தேன். அதை இப்பத்தான் எம்பட பையன் ராசுக்குட்டி கையில குடுத்தேன் என்றது பொன்னமக்கா. அப்புக்குட்டி கூட்டத்தில் நுழைந்து எட்டிப் பார்த்தான். உள்ளுர் பிள்ளைகள் எல்லாம் தலைமை ஆசிரியரை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்கள். தலைமை ஆசிரியர் சண்முகம் கையில் இருந்த பணத்தாள்களை எண்ணி மூவாயிரத்தி முன்னூற்றி ஐம்பது ரூபாய் இருக்குது என்றார். “”இத்தனை பணம் அரசாங்க ஆஸ்பத்திரியில வேண்டியதே இல்லீங்கம்மா… தனியார் ஆஸ்பத்திரியில முருகேசனை சேர்த்தி இருந்தா இந்தப் பணம் கூட பத்தாது. டெங்கு காய்ச்சலுக்கு அரசாங்க மருத்துவமனையில மருந்துகள் ரெடியா இருக்குது. காய்ச்சல் பரவாம இருக்கத்தான் அரசாங்கம் இப்ப தீவிரமா நடவடிக்கை எடுத்துட்டு இருக்குது. அங்க இவ்வளவு செலவாச்சு, இங்க இவ்வளவு செலவாச்சுன்னு பேசுறதை காதுல கேட்டுட்டு பிள்ளைங்க முருகேசனை உசுரோட பார்க்க முடியாதோன்னு பயந்துட்டு உட்கார்ந்துட்டாங்க… இருந்தாலும் இதும் நல்ல விசயம் தான்… இவுரு தான அப்புக்குட்டி?” என்று தலைமை ஆசிரியர் சண்முகம் அப்புக்குட்டியைப் பார்த்துக் கேட்கவும், “”சாமி நான் தானுங்க” என்று அவர் காலில் விழுந்தான். “”இதென்ன பழக்கம்?” மிரண்டு போய் பின்வாங்கினார் சண்முகம். பெண்கள் “கொல்’லென்று சிரித்தார்கள். “”எப்பவுமே அப்படித்தான் பண்ணுவானுங்க சார்” என்றார்கள். “”எந்திரிப்பா மொதல்ல நீ… இந்தா இந்தப் பணத்தைப் பிடி… எப்படியும் நாலு அஞ்சு நாளைக்கு முருகேசன் ஆஸ்பத்திரிலதான் இருக்கணும். கம்பௌண்டர், நர்ஸ்களை அடிக்கடி கவனிச்சுட்டீன்னா உன் பையனை நல்ல விதமா பார்த்துப்பாங்க… உன் ஊர் பிள்ளைங்கதான் உன் முருகேசனுக்கா பட்டினி இருந்து அவங்க அம்மாக்கள் கிட்ட பணம் வாங்கி குடுத்திருக்காங்க”… “”சாமி, என் பையன் பிழைச்சா போதும் சாமி எனக்கு! இந்தப் பணத்தை என் தலையை அடமானம் வச்சாவது பொறவு திருப்பிக் குடுத்துடறணுங்க சாமி”. “”உன் தலையை எவன் அடமானம் வாங்குவான்? பேச்சைப்பாரு… நீ நிறைய குடிப்பியாமா? சொன்னாங்க இவங்க?” என்றார் சண்முகம். “”இந்த குத்தமறியாத பிஞ்சுக சாட்சியா சொல்றனுங்க சாமி… சத்தியமா இனி தொடமாட்டனுங்க!” என்று ஊர்ப் பிள்ளைகளைப் பார்த்து அழுதான் அப்புக்குட்டி. ஒரு மணி சென்னிமலை பேருந்தில் ஏறி தலைமை ஆசிரியர் சண்முகமும், உள்ளுர் பிள்ளைகளும் சென்னிமலை மருத்துவமனை வந்திருந்தார்கள் முருகேசன் கொசுவலைக்குள் படுத்திருந்தான். நண்பர்களைப் பார்த்ததும் களைப்பாய் புன்னகைத்தான். சின்னான் மாரியம்மன் கோவில் விபூதியை முருகேசன் நெற்றியில் பூசிவிட்டான். “”உனக்கு காய்ச்சல் சரியாகி வர்றதுக்கு ஒரு வாரமாயிடும்னு சார் சொன்னாருடா… நீ வந்ததும் ஒரு வாரம் என்ன என்ன பாடம் நடத்துனாங்கன்னு நான் உனக்கு சொல்லித் தர்றேன். சரியா?” என்றாள் சீதா அவனிடம். முருகேசன் பலவீனமாக தலையசைத்தான். டாக்டர் உள்ளே வரவும் மாணவர்கள் மௌனமாக வெளியே வந்தனர். ஜன்னல் வழியாக அவர் முகத்தை பார்த்தனர். “எப்படியாவது எங்க நண்பனை காப்பாத்திருங்க டாக்டர்’ என்ற இறைஞ்சுதல் எல்லார் கண்களிலும் தெரிந்தது. 000   8 ஒரு முறை தான் பூக்கும் பெருந்துறை பேருந்து நிறுத்தத்தில் வசந்தாமணிக்காக காத்திருந்தான் சுதாகரன் . இது இன்று நேற்றல்ல… மூன்று வருடங்களாக நடப்பது தான் . மூன்று வருடத்தில் இவனுக்காய் எந்த நாளும் வசந்தா மணி எந்த இடத்திலும் காத்திருந்ததே இல்லை . அவளுக்காக இப்படிக்காத்திருப்பது இந்த மூன்று வருடங்களில் ஒரு முறை கூட சுதாகரனுக்கு சலிப்பான விசயமாகத் தோன்றியதே இல்லை . வசந்தாமணி ஈங்கூர் பெண் ஹையர்செகண்டரி முடித்தவள் . வீட்டு நிலைமையை மனத்தில் கொண்டு பனியன் கம்பெனியில் சேர்ந்து கொண்டாள் . வீட்டில் அப்பாவும் , அக்காவும் தோட்ட வேலைகளை பார்த்துக்கொள்கிறார்கள் . தோட்டத்தில் இருபது ஆடுகள் பட்டியிலும் , எருமைகள் ஐந்தும் நின்று கொண்டிருக்கின்றன . அம்மா மேல் உலகத்துக்கு டிக்கெட் எடுத்து போய் வருடம் நான்கு போய்விட்டது . ஊதாரி அண்ணன் ஒருவன் ஸ்டீல் கம்பெனிக்கு வேலைக்கு போவதும் டாஸ்மாக்கில் குடியிருப்பதையுமே வழக்கமாய் கொண்டிருந்தான் . மனியன் எங்கேப்பா ? என்றால் கோயிலில் இருந்தானே என்பார்கள் . டாஸ்மாக் கடையை கோயில் என்கிறார்கள் . மணியனுக்கு தனக்கு மூத்தவள் ஒருத்தி திருமணத்துக்கு நிற்கிறாள் என்ற எண்ணம் துளி அளவேனும் இல்லாதவன் . மணியனின் அக்கா தேவிகாவுக்கு வயது இருபத்தாறு நடக்கிறது . ஈங்கூர் பள்ளியில் மேல் படிப்பான ஐந்தாவது பாஸ் செய்தவள் . வீட்டு வேலைகளிலும் , காட்டு வேலைகளிலும் கெட்டிக்காரி . வசந்தாமணிக்கு வீட்டில் வேலை செய்வதோ தோட்டத்தில் வேலை செய்வதோ அலர்ஜியான விஷயம் . எருமை சாணத்தை தேவிகா கூடையில் அள்ளி எடுத்து போய் குப்பையில் கொட்டுவதை முகம் சுளித்தபடி பார்ப்பாள் . அக்காவுக்கு சமையலில் கூட உதவ மாட்டாள் வசந்தாமணி . போதாதற்கு இவளின் துணிமணிகளைக்கூட தேவிகா தான் சர்ப் எக்ஸல் போட்டுத் துவைத்துக் காய வைப்பாள் . சம்பளமில்லாத வேலைக்காரியாக தேவிகா மாறிப்போயிருந்தாள் . வசந்தாமணியின் அப்பா பிள்ளைப்பூச்சி . தான் உண்டு தன் வேலை உண்டு என்றே இருப்பார் . அவரது வருத்தமெல்லாம் மணியன் இப்படி மொடாக்குடிகாரணாக போய்விட்டானே என்று தான் . ஈங்கூரில் ஊருக்குள் இருக்கும் வீட்டுக்கும் அவர் அதிகம் வருவதில்லை . தோட்டத்திலேயே மோட்டார் ரூமில் படுத்து கொள்வார் . தேவிகா வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு போவாள் . சுதாகரன் சிகரெட்டின் கடைசி இழுப்பை இழுத்து கீழே போட்டு செருப்பால் அதன் தீக்கங்கை அழுத்தி அணைத்தான் . புகைபிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது . சுதாகரன் கொங்கு கல்லூரியில் ஆபீஸ் பியூனாக இருக்கிறான் . இதோ இப்போது தான் வேலையில் சேர்ந்தது போல் இருக்கிறது . ஆனால் வருடங்கள் ஐந்து ஓடிவிட்டது . ஆசைத் தங்கையை சேலத்துல கட்டிக்கொடுத்து வருடம் இரண்டு போய் விட்டது . அவளைக் கட்டி கொடுத்து தாட்டி விட்ட நாளில் இருந்து வீட்டில் அப்பாவும் அம்மாவும் இவன் ஜாதகத்தைத் தூக்கி கொண்டு பெண் பார்த்துடலாம் . பெண் பார்த்துடலாம் என்று கீழல் விழுந்த டிவிடி தட்டு போல கத்திக்கொண்டே இருந்தார்கள் . அவர்களாகவே சோதிடரை தேடிப்போய் ஜாதகத்தை கொடுத்து ரிசல்ட் பார்த்தார்கள் . இந்த ஜாதகக்காரனுக்கு குரு பலன் வர இன்னும் ஒரு வருஷம் இருக்கே வயது என்ன இருபத்தி ஒன்பதா ? முப்பது பிறந்ததும் குரு பார்க்கிறான் . அப்புறம் நீங்க நினைச்சால கூட பையன் திருமணத்தை நிறுத்த முடியாது என்ற தகவலை சோதிடர் சொன்னதும் நிம்மதியாக வீடு வந்தவர்கள் ஒரு வருடம் இவன் திருமணம் பற்றி இவனிடம் வாயைத் திறக்கவில்லை . இதோ சுதாகரனிடம் குரு வந்து விட்டான் . வந்ததும் அவசரப்படாமல் முப்பது நாள் தங்க வைத்து சுதாகரனின் பெற்றோர் அதே டிவிடி தட்டை போட்டார்கள் . சுதாகரன் இந்த முறை பெற்றோரிடம் கோபிக்கவில்லை . ஒரு வாரத்தில் சொல்றேன்ப்பா என்று அப்பாவிடம் சொல்லிவிட்டான் . அதோ வசந்தாமணி காலையிலிருந்து கால் கடுக்க நின்று வேலை செய்த களைப்பில் துவண்டு போய் வந்து கொண்டிருந்தாள் . சுதாகரனை பார்த்ததும் வழக்கமாக வீசும் புன்னகையை வீசினாள் . அருகே வந்தவள் , ஐயா இன்னிக்கு கோபமோ முகம் ஏனோ உம்முன்னு இருக்கே என்றாள் . மூன்று வருட பழக்கத்தில் சரளமாக பேசும் குண்ம் மட்டுமே அவளிடம் மிஞ்சியிருந்தது . - ரொம்ப பசிக்குதுப்பா , அக்கா டிபன்ல நாலு இட்லி வச்சி அனுப்பி விட்டுட்டா கம்பெனில இன்னிக்கு அக்கட்ட இக்கட்ட துளி நகர முடியாத அளவுக்கு வேலை . சூப்பர்வைசர் வேற கழுகு மாதிரி பார்த்துட்டே இருந்தான் , அவள் பேசிக்கொண்டே யிருக்க சுதாகர் ஹோட்டலை நோக்கி நடந்தான் . பின்னால் வந்தவள் இன்று ஏனோ புதிதாய் ஒரு பேச்சு பேசாமல் நகர்கிறானே என்று யோசித்தபடி சுதாகரின் பின்னால் செல்லாமல் நின்று கொண்டாள் . ஹோட்டலின் அருகாமை சென்ற சுதாகர் திரும்பி பார்த்து வா என்று கையசைத்து கூப்பிட்டான் . மக்கள் கூட்டம் பேருந்தை பிடிக்க அலைமோதிக்கொண்டிருந்தது . மாலை நேரத்தில் எப்போதும் இப்படித்தான் . கோபித்து கொண்டு நிற்பவளை சமாதானப்படுத்த சுதாகரன் திரும்பவும் அவளிடம் வந்தான் . இவர்களின் நாடகத்தை கவனிப்பாரின்றி எல்லோரும் அவரவர் அவசரத்தில் இருந்தார்கள் . என்னம்மா சின்னப்பிள்ளையாட்டம் பிடிவாதம்… - பின்ன நான் என்ன கிழவியா ? பசிக்குதுன்னு சொன்னேன் . சரி வா போகலாம்னுஒரு வார்த்தை பேசாமல் முன்னாடி போனல் என்ன அர்த்தம் ? என் கிட்ட காசு இல்லாமல் தான் உங்ககிட்ட பசிக்குதுன்னு சொன்னேனா ? நீங்க உம்முன்னு முகத்தை வெச்சுட்டு முன்னாடி போனால் நான் பின்னாடி வரணுமா ? - சாரி வசந்தாமணி மேடம் . எனக்கும் கூட பசிக்குது . நீங்களும் பெரிய மனசு பண்ணி இந்த ஏழையோட அழைப்பை நிராகரிக்காம வாங்க என்றான் . - கொஞ்சம் நக்கல் தான் . இருந்தாலும் எனக்கு பசி , என்றவள் சுதாகரனுடன் இணைந்து ஹோட்டலுக்குள் வந்தாள் . இருவரும் பூரி இரண்டு செட் ஆர்டர் செய்து விட்டு டேபிளில் அமர்ந்தார்கள் . சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே வரும்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை . வெளியில் வுந்ததும் சுதாகரன் ஆரம்பித்து கொண்டான் . - நான் பலமுறை உன்கிட்ட கேட்டுட்டேன் வசந்தா . இனியும் என்னால பொறுத்திருக்க முடியாது . குருபலன் வேற பிறந்துடுச்சாம் . அப்பா அம்மா ஆரம்பிச்சுட்டாங்க… - என்னை என்ன பண்ணச் சொல்றீங்க ? உங்க கூட ஓடிவரச் சொல்றீங்களா ? அது முடியாது . என் அக்கா பாவம் சுதாகர் . அப்புறம் அவளுக்கு காலம் பூராவும் கல்யாணமே நடக்காம போயிடும் . இப்பவே அவளை நாங்க வீட்டுல வேலைக்காரி மாதிரி வச்சுட்டு இருக்கோம் . உங்க கூட இப்பவே நான் ஓடி வந்துடலாம் . ஓடிப்போன பெண் குடும்பத்துல பெண் எடுக்க யாரும் வரமாட்டார்கள் . அக்காவுக்கு வயசு இருபத்தி ஆறு பிறந்தாச்சு . அவள் சாதகத்துலயும் குருபலன் வந்தாச்சு . இருபத்தி ஆறுல நிச்சயம் மேரேஷ் முடிஞ்சிடும்னு சோதிடர் சொல்லிட்டாரு . அதும் இனி பார்க்கிற முதல் ஜாதகமே அக்காவுக்கு பொருத்தமா ஆயிடுமாம் . இத்தனை நாள் பொறுத்தவரு எனக்காக கொஞ்சம் நாள் ப்ளீஸ்ப்பா… என்றாள் . - இல்ல வசந்தா… உன்னை கட்டிக்க நான் எப்பவும் தயார் தான் . வீட்டுல அம்மாவுக்கு முன்னை போல முடியறதில்லை . அப்பாவுக்கும் சர்க்கரை பிரஷர்னு வியாதிகள் . எனக்கும் முப்பது ஆயிடிச்சு . எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு வசந்தா . நானும் மனுசன் தான் . எப்போ நான் இந்த விசயத்தை கேட்டாலும் அக்கா அக்கான்னு அக்கா பாட்டே பாடுறே . அப்பா வாய்விட்டே கேட்டுட்டாருமம்மா… இந்த வாரத்துல நல்ல பதிலா சொல்றேன்னு சொல்லிட்டேன் என்றான் . - நீங்க பேசறதை பார்த்தால் உங்க அப்பாவுக்காக ஒரே வாரத்தில் ஒரு பெண்ணோட போய் நிற்கணும்ங்ற மாதிரி இருக்கே . நீங்க கேட்குறப்பா எல்லாம் நான் ஒரே மாதிரி சொல்றேன்னா எனக்கு என் அக்கா பெருசுதான் . அவளோட திருமணத்தை கெடுத்துட்டு நான் நிம்மதியா இருக்கவோ , வாழவோ முடியாதுங்கறதுனாலதான் . ஒரே பதிலை நீங்க கேட்குறப்ப எல்லாம் சொல்றேன் . என்க்கு நீங்க வேணும் சுதாகர் . அது என் மனசுல ஆழமா இருக்கு… என்று வசந்தாமணி பேசத் தொடங்கி விட்ட சமயம் சுதாகரன் திருப்பூர் பேருந்து வர ஓடிப்போய் ஏறிக்கொண்டான் . வசந்தாமணிக்கு கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்து விட்டது . சென்னிமலை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டவளுக்கு சுதாகரன் ஓடிப்போய் பேருந்து ஏறிகொண்ட காட்சியே திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது . இனிமேல் தன்னிடம் பேசுவானோ ? மாட்டானோ என்று பயமாய் இருந்தது . அவுன் இல்லாத வாழ்வை நினைக்கையில் அது வெறுமையாய் கண்களுக்கு முன் தெரிந்தது . இரவு உணவு தொண்டைக்கும் கீழ் இழங்க மறுத்தது . நடு இரவு வரை உறக்கம் வராமல் பாயில் கிடந்தாள் . தூக்கம் வந்த போது வந்த கனவில் சுதாகரன் வெள்ளை வேட்டி சட்டையில் மாலையும் கழுத்துமாய் நின்றான் . அருகில் நின்றிருந்த மணப்பெண்ணின் முகத்தை இவள் எவ்வளவோ உற்று பார்த்தும் அடையாளம் தெரியவில்லை . அடுத்த நாள் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த வசந்தாமணிக்கு மதியம் போல தலைவலி ஆரம்பித்து விட்டது . மாலை நேரம் வரவர உடல் சூடாய் இருப்பதை உணர்ந்தாள் . கண்களில் எரிச்சல் கூடி போயிருந்தது . பேருந்து நிறுத்தத்தில் சுதாகரனை காணாமல் டைபாய்டு ஜுரம் வந்தவள் போல , தான் பேருந்து ஏறி வீடு வந்து சேர்ந்தாள் . வீட்டில் மாற்றம் தெரிந்தது . சித்தியும் , சித்தப்பனும் , அப்பாவும் , அண்ணனும் இருந்தார்கள் . அக்கா தீபாவளிக்கு புதிதாய் எடுத்திருந்த பிங்க் கலர் சேலை கட்டியிருந்தாள் . அவள் முகம் பிரகாசமாய் இருந்தது . அக்காவை பெண் பார்த்துவிட்டு போயிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாள் . இவர்களின் முகப்பூரிப்பை வைத்து பார்த்தால் பெண் பார்க்க வந்தவர்கள் சம்மதம் சொல்லி விட்டு சென்று விட்டதை யூகித்து விட்டாள் . சுதாகரனின் செல்போனுக்கு இந்த தகவலை உடனே சொல்லி விட வேண்டும் என்று மனது சந்தோஷ பாட்டு பாடியது . சமையல் கட்டு சென்று பஜ்ஜி கடித்துக்கொண்டே காபி குடித்தாள் . அக்காவை பார்த்து கண் சிமிட்டினாள் . அக்கா , போடி என்று செல்லமாக சிணுங்கினாள் . வெட்கப்பட்டால் அக்கா அழகு தான் என்று நினைத்தாள் வசந்தாமணி . - மாப்பிள்ளை எந்த ஊர் ? என்ன வேலையில இருக்காராம் ? என்றாள் . - மாப்பிள்ளை ஊர் விசயமங்கலமாம் . தங்கச்சியை சேலத்துல கட்டிகொடுத்து ரெண்டு வருஷம் ஆயிடிச்சாம் . - பேர் என்ன ? என்ன வேலையின்னு கேட்டால் ஊர் உலகம் சுத்தறியேக்கா . - பேர் சுதாகரனாம் . கொங்குகாலேஜில பியூனா இருக்காராம் . சம்பளம் மாசம் எட்டாயிரமாம் . சாதகத்துல எட்டு பொருத்தமும் கூடி வந்தது . சென்னிமலை ஈஸ்வரன் கோயில்ல சிம்பிளா கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க . என்று தேவிகா சொல்ல , காபி டம்ளரை தவற விட்டாள் வசந்தாமணி .   - மார்ச் 2013   9 அறை -1,2,3 அறை - 1 கடந்த ஒரு வாரமாகவே மகள் பூரணியின் அழுகையும் தொந்தரவும் தாங்காமல் தான் முத்துராசு வேறு வழியில்லாமல் அவளை சென்னிமலை கூட்டி வந்திருந்தான் . பூரணி பனியம்பள்ளி நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறாள் . முத்துராசுவின் ஒரே செல்லக்குட்டி வேறு . தினமும் முத்துராசு கட்டிட வேலைக்குத்தான் சென்றுவந்து கொண்டிருந்தான் . உடல் அசதிக்காக டாஸ்மார்க் சென்றுவருவது அவனது அன்றாட கடமைகளில் ஒன்றாகவும் ஆகிப்போய் நான்கைந்து வருடங்களுமாகி விட்டது . மனைவி ரம்யா உள்ளூர்ப் பெண்தான் . அதும் சொந்த மாமன் மகள் . அவள் தான் ஒருவாரமாக வீட்டில் இல்லை . அம்மா எங்கே ? என்று கேட்ட்கும் பூரணியிடம் , அம்மா ஊருக்கு போய்விட்டதாய் சொல்லி சமாளித்தான் முத்துராசு . ஆனால் பூரணிக்கு அம்மாவை பார்க்காமல் காய்ச்சலே வந்து விட்டது . விசாரித்த போது சென்னிமலையில் அவளும் , அவன் என்கிற முத்துவும் காமராஜ் நகரில் அறை எடுத்து தங்கியிருப்பதாக தகவல் தெரிந்து பூரணியை கூட்டி வந்திருந்தான் முத்துராசு . “அந்த 27ம் நம்பர் அறையில உங்கம்மா இருப்பா போயி பாரு” என்று சொல்லிவிட்டு முத்துராசு சாலையோரத்தில் நின்றிருந்த தந்திக்கம்பத்தினடியில் சாய்ந்து அமர்ந்தான். காலை ஒன்பது மணிக்கே வெய்யில் சுள்ளென அடித்தது. 27 ம் எண் அறைக்குள் நுழைந்த பூரணி மெத்தை மீது திடகாத்திரமாய் ஒருவன் பாட்டிலும் கையுமாய் சிவந்த விழிகளோடு அமர்ந்திருப்பதை பார்த்து மிரண்டாள் . “ உன் புள்ள தேடி வந்துட்டாடி ! பாக்காம சங்கடமா இருக்குன்னியே , இதா பாரு . ஏய் பிள்ள , உங்கொப்பன்கிட்ட இனி போவாதடி ! அவன் முட்டாப்பயல் . இங்கயே இருந்துக்க , உன்னை கான்வெண்ட்டுல சேர்த்தி படிக்க வைக்கிறேன்” என்றான் முத்து . “வாடி செல்லம், உங்கொப்பனும் வந்திருக்கானா? அவனை போகச் சொல்லிடு. இனிமேல் இதா இவருதான் உன் அப்பா. சரியா செல்லம்?” என்று சமையல்கட்டிலிருந்து ரம்யா வந்தாள். “சரிம்மா, நான் போயி பழைய அப்பாவை போவச் சொல்லிட்டு வந்துடறேன்” என்று அறையை விட்டு வெளிவந்த பூரணி தந்திகம்பத்தினருகில் வந்து, “போலாம்ப்பா” என்று முத்துராசுவை கூட்டிக் கொண்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள். ()()()() அறை -2 ஒரு மணி நேரம் முன்பாக செல்வதற்கு அனுமதி கேட்பதற்காக ரம்யா மேனேஜர் அறைக்குள் நுழைந்தாள் . செல்போனில் பார்ட்டியுடன் பேசிக்கொண்டிருந்த மேனேஜர் முத்து அதை கட் செய்து விட்டு , வா செல்லம் ! என்றார் . “வீட்டில் என் மாமியாருக்கு உடம்புக்கு சுகமில்லையாம் சார், என் வீட்டுக்காரர் என்னை கூட்டிப்போக வந்திருக்கார் சார். அதனால பர்மிசன்..” என்று இழுத்தாள். “நீ கிளம்பு செல்லம். எவ்ளோ நாளா நான் கேட்டுட்டு இருக்கேன் ஆனா நீ கண்டுக்கவே மாட்டிங்கறே! இந்த ஞாயிறு நாம ஊட்டி போய் பூகண்காட்சி பார்த்துட்டு ரூம் போட்டு தங்கி கொண்டாடிட்டு வர்றோம்..என்ன?” என்று கேட்ட முத்துவுக்கு புன்னகையை பரிசளித்துவிட்டு கிளம்பினாள். வேலை முடித்து காரில் வீடு வந்த முத்து தன் வீட்டின் முகப்பில் ஒரு தாயும் குழந்தையும் நிற்பதை பார்த்தபடி உள்ளே வரும்படி கூறிவிட்டு சென்று காரை செட்டில் போட்டுவிட்டு கையில் சூட்கேசோடு வந்தான் . அந்த அம்மாள் இவனுக்கு வணக்கம் வைத்துவிட்டு பேச ஆரம்பித்தது . “ஐயா, உங்க பொண்ணு பூரணி என் மகளோட ஜாமிண்டரி பாக்ஸை தூக்கிடுச்சுங்களாம். உங்க பொண்ணு இல்லைன்னே சொல்லுதுங்க. நீங்க கேளுங்க ஐயா” வீட்டில் சற்று முன்பு முடிந்து போன பஞ்சாயத்தை இவன் மீண்டும் துவங்கி , பூரணியின் புத்தக பேக்கை கொட்டிப் பார்க்கையில் அந்த ஜாமிண்டரி பாக்ஸ் கீழே விழுந்தது . கோபத்தில் குழந்தை என்றும் பாராமல் பூரணியின் கன்னத்திலும் , முதுகிலும் அறைந்து தள்ளி விட்டான் முத்து . அழுதபடி பூரணி சொன்னாள் . ‘ நீங்கதானப்பா சொல்வீங்க , எதிலும் ஒரு த்ரில்லிங் வேணுமுன்னு .. இப்ப என்னடான்னா அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட கூடாதுன்னு சொல்றீங்க ?”. இவன் கன்னத்தில் பூரணி அறைந்து விட்டது போலிருந்தது . ஊட்டி புரோகிராமை மனதில் அப்போதே கேன்சல் செய்தான் முத்து . ()()()()()   அறை -3 முத்துராசு இப்போதெல்லாம் என்னவோ போலாகி விட்டான் . எல்லாம் இந்த ஒருமாத காலமாகத்தான் . அவன் மனைவியிடமோ , குழந்தை பூரணியிடமோ அப்படி கல கலவென்று பேசினவனுக்கு என்னவாயிற்று ? இதைத்தான் அவன் மனைவி ரம்யா தன் சித்தி , சித்தப்பாவிடம் இப்போது புலம்பித் தள்ளிக் கொண்டிருந்தாள் . “ஆமாம் சித்தி, எல்.ஐ. சி ஏஜண்ட் வேலையை இவர் இனி விட்டுடப் போறாராம். எதுவுமே நிரந்தரமில்லைடி, இன்னிக்கி செத்தா நாளைக்கி பாலுன்னு தத்துவமா பேசுறார். மாமியார் செத்து ஒரு மாசம் ஆச்சு சித்தப்பா. அம்மா ரூம்ல, அம்மா கட்டல்ல, நான் தான் இருப்பேன்னு எப்பவும் அங்கயே வெறிச்சு பார்த்துட்டு உட்கார்ந்துக்குறார்” என்று வந்தவர்களிடம் புலம்பிணாள். “அந்த அறையில என்ன என்னம்மா இருக்கு?” என்றார் சித்தப்பா. “அங்க ஒன்னும் இல்ல சித்தப்பா. ஒரு குண்டு பல்பு. ஒரு சின்ன ஜன்னலு, கட்டிலு ஒன்னு, அவ்ளோதான்” “மாத்திடும்மா எல்லாத்தையும், டியூப்லைட் போடு, டிவியை கொண்டு போயி அந்த ரூம்ல வச்சிடு ஷோபா, ரெண்டு சேர்னு கொண்டு போயி போடு. எந்த அறை துக்கமா வீட்டுல தெரியுதோ அதை வெளிச்சமாக்கிடும்மா” சித்தப்பா இவ்வளவு தான் சொன்னார். ஒருவாரம் ஓடிவிட்டது . ஊட்டியில் மலர் கண்காட்சியில் இருந்தார்கள் இவர்கள் . முத்துராசு பூரணியை தலைமீது தூக்கி வைத்து பூக்களைப்பற்றி அவளுக்கு போதித்துக் கொண்டிருந்தான் . ரம்யாவின் அலைபேசி சிணுங்கியது . சித்தப்பாதான் . “என்னம்மா, எப்பிடி இருக்கான் உன் புருசன்?” “ரொம்ப தேங்க்ஸ் சித்தப்பா, அடுத்த நாளே அந்த அறைக்கு வெள்ளையடிச்சு டிவியை கொண்டு போயி வச்சுட்டேன்.. இப்ப நாங்க ஊட்டில இருக்கோம் சித்தப்பா. நாளைக்கு தான் வர்றோம்” என்றாள் ரம்யா. ()()()()()()   10 ஈமு ருசி மகளின்காதுகுத்துக்கு வந்துவிட வேண்டும் என்று பரமேஷிடம் பத்திரிகை நீட்டினான் மருதாசலம். “”உங்க சம்சாரம் வரலையா? நீங்க மட்டும் அழைப்பு வைக்க வந்திருக்கீங்க?” டி.வி.யில் வெஸ்ட் இண்டீசுக்கும் இங்கிலாந்துக்கும் நடக்கும் ஒருநாள் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த பரமேஷ் ஷோபாவிலிருந்து எழுந்து மருதாசலத்திடம் கேட்டபடி பத்திரிகையை வாங்கிக் கொண்டான். “”அடுத்த நாட்டுக்காரங்க கிரிக்கெட் ஆடினால்கூட பார்ப்பீங்களாட்ட இருக்கே? இருபது ஓவர் மேட்ச் வந்ததுல இருந்து நம்ம இந்தியா ஐம்பது ஓவர் கிரிக்கெட் விளையாடினால்கூட பார்க்கறதுக்கு போர் அடிக்குதுங்க. வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்போல இருக்குங்ளே!” என்றபடி அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான் மருதாசலம். “”வாயால சொல்லி ஒரம்பரை சனத்தை அழைச்சாப் போதும்தானுங்க. சம்சாரம்தான் பத்திரிகை அடிச்சே ஆகணும்னு புடிவாதம். நாம சொன்னா கேட்கிறாங்ளா என்னா… இப்பத்தான் தொட்டதுக்கு எல்லாம் பத்திரிகை அடிச்சுக்கறாங்களே… உட்டா டி.வி.யிலயே விளம்பரம் குடுக்கச் சொல்லிடுவாளோன்னு பயந்துட்டு முந்நூறு பத்திரிகை அடிச்சுட்டனுங்க!”. “”அடுத்த வாரம் புதன்கிழமைங்ளா? வந்துட்டாப் போவுது. வீட்டுல வேலைக்குப் போயிட்டாப்ல. காபி குடிக்கறீங்ளா?” “”போற பக்கமெல்லாம் டீயும், காபியும் குடுத்துடறாங்க. வயிறே செரியில்லாமப் போச்சுங்க. ஒண்ணும் வேண்டாம் உடுங்க”. “”ஒரம்பரை சனம் சேர்ந்தாலே கூட்டம் பிச்சுக்குமே உங்களுக்கு… கெடாய் ரெண்டு வெட்டறீங்ளா?”. “”கெடாய் வெட்டலீங்க பரமேஷ்… மாமனார் தான் ஊர்ல காட்ல ஈமு கோழிப்பண்ணை போட்டிருக்காங்களே… பேத்திக்கு ஈமு கோழியிலயே ஒண்ணை அறுத்துப் போடலாம்னு சொல்லிட்டாருங்க…” “”அட, நான் இன்னும் அந்த கோழிக்கறி தின்னதே இல்லீங்க. எங்க மாமன் சாப்பிட்டிருக்காப்ல.. எப்படின்னு ஒருவாட்டி கேட்டேன். நல்லாத்தான் இருக்குது மாப்ளேன்னாரு… அவுரு சரக்கு பார்ட்டி… சரக்கு மப்புல காரமா எதைத் தின்னாலும் சூப்பர் அப்படிம்பாரு. நீங்க சாப்பிட்டிருக்கீங்ளா மருதாசலம்?”. “”நானும் இன்னும் சாப்பிட்டது இல்லீங்க. காது குத்து அன்னைக்கு டேஸ்ட் பார்த்துட்டா போவுது… என் மாமனாரு கோழி பத்து இருபது வளர்த்துறாருன்னுதான் பேருங்க… அவரும் இன்னும் சாப்பிட்டு பார்த்ததில்லையாமா!”. “”நீங்க எப்படி இதுக்கு சரியின்னு சொன்னீங்க?” என்றான் பரமேஷ். “”பிள்ளைக்கு மூணு பவுன்ல கம்மல் போடறாப்ல… அது போக துணிமணி செலவு…”. “”சரி சரி புரிஞ்சுபோச்சு உடுங்க… விருந்து போடறவங்க வயிறு ரொம்ப ரசிச்சு சாப்பிட்டதாத்தான் சரித்திரமே இல்லையே! ஆனா கொழுப்பு இல்லாத கறின்னாங்க. ஆடு வளர்த்தவங்க எல்லாம் அதை உட்டுட்டு கம்பி வேலி போட்டு இந்த ஈமு கோழிதான் வளர்த்துறாங்க. ஒண்ணு தப்பிச்சாலும் புடிக்க முடியாதுங்கறாங்ளே நெசமா?”. “”ஓடுச்சுன்னா புடிக்கிறது சிரமம்தானுங்க. எதை வேணாலும் திங்குதுங்க. கண்ணுக்கு நேரா எது தட்டுப்பட்டாலும் கொத்தி முழுங்கிடும். கல்லை முழுங்கிடும். ஆனா பீச்சல்ல முழுங்குன கல்லு வெளிய வந்துடும்ங்க. வேலந்தாவளத்துல வளர்த்துறவரு மோதிரம் தவறி விழுந்து… அதை டப்புன்னு முழுங்கிடுச்சாமா… ஆனா பீச்சல்ல வந்துட்டுதாம். எடுத்து கழுவி நூல் சுத்தி போட்டுக்கிட்டாராம். மழை, வெய்யிலு, பனின்னு அந்தக் கோழிக்கு ஒரு பிரச்சினையும் இல்லைங்றதால அங்கங்கே பண்ணை போட்டுட்டாங்க. சரி விருந்துக்கு மறக்காம வீட்ல எல்லாரும் வந்துடுங்க” என்று மருதாசலம் எழுந்து விடைபெற்றுப் போனான். போகிற பக்கமெல்லாம் பிள்ளையின் காதுகுத்துக்கு மருதாசலம் ஈமு கோழி அறுக்கிறானாமா! என்றே பேசினார்கள். விசேச நாளான புதன்கிழமையும் வந்தது. ஈமு கோழியின் கறியை சுவைத்துப் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் அழைப்பு வைத்த வீட்டில் எல்லாம் ஒரு ஆள் பாக்கி இல்லாமல் காதுகுத்து விழாவை சிறப்பிக்க கருப்பராயன் கோவிலுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் ஈமுவை சுவைத்துப் பார்க்க கருப்பராயனுக்குத்தான் விருப்பம் இல்லை போலிருக்கிறது. பூசாரி பத்துமணிக்கு செய்த முதல் பூஜையிலேயே சாமி வந்து ஆடி வாக்கு சொன்னார். “”வேடிக்கை பண்றீங்களாடா! வேடிக்கை பண்றீங்களாடா! உங்க கொட்டத்தை ஒரே வருஷத்துல அடக்கிருவன்டா!”. மருதாசலத்தின் மாமனார் மிரண்டு போனார். ஒரு வருடத்தில் தன் கொட்டம் அடங்கிவிட்டால் செல்லாக்காசாகி விடுவோம் என்று பயந்து ஈமு கோழியோடு வந்த ஆட்டோவை பண்ணைக்கே திருப்பி அனுப்பிவிட்டார். பத்து மணியைப்போல நெருங்கிய சொந்தபந்தங்கள் மட்டுமே கோவிலில் இருந்தது. அடுத்த கட்ட நடவடிக்கையாக மருதாசலம் உள்ளூர் ஆட்டு வியாபாரிக்கு போன் போட்டான். அவசரமாக கருப்பராயனுக்கு வெட்ட இரண்டு ஆடுகள் வேண்டுமென்று! விருந்து எப்படியும் மதியத்திற்கும் மேல்தானே! அவசர ஆடுகள் என்பதால் ஆட்டுக்கு இருநூறு ரூபாய் கூடவே சேர்த்து வாங்கிப் போய்விட்டார் ஆட்டுக்காரர். தவிர டோர் டெலிவரி அல்லவா. பூசாரி கருப்பராயன் முன் ஆடுகளை நிறுத்தி பூசை செய்தார். திருநீறு போட்டார். தீர்த்தச் சொம்பை எடுத்து இரண்டு ஆடுகளையும் நனைத்தார். துலுக்கியதும் ஒரே போடாக வெட்டுப் போட, கோவில் கத்தியை ஓங்கிக்கொண்டு மருதாசலத்தின் அப்பா சிவந்த உருண்டைக் கண்களோடு நின்றிருந்தார். மணி பதினொன்றைத் தொட்டிருந்தது. ஆடுகள் இரண்டும் துலுக்கினால்தானே! சுற்றிலும் நிற்பவர்களைப் பார்த்து இரண்டும் மௌனமொழி பேசிக் கொண்டிருந்தன. “”ஏதாவது குத்தமிருந்தா மன்னிச்சுடு சாமி… பூசாரி… இன்னம் கொஞ்சம் தீர்த்தம் போடு… ஆட்டுக் கயிற்றை மாப்பிள்ளைகிட்ட குடுங்க. மாப்பிள்ளை பிடிச்சா உடனே துலுக்கிடும்” மருதாசலத்தின் மாமனார் குரல் கொடுத்தார். ஆள் மாற்றி ஆள் ஆடுகளின் கயிற்றைப் பிடித்துப் பார்த்தார்கள். “”நான்தான் கோழியை திருப்பி அனுப்பிச்சுட்டேனே சாமி” கருப்பராயன் முன் நின்று கையெடுத்துக் கும்பிட்டார் மாமனார். நேரம்தான் போய்க் கொண்டிருந்ததே ஒழிய ஆடுகள் துலுக்குவதற்கான அறிகுறி காட்டவேயில்லை. தூரத்து விருந்தாளிகள் எல்லாரும் ஒவ்வொரு குடும்பமாக வந்துகொண்டிருந்தார்கள். அவினாசி சித்தப்பாதான் வந்தவுடன் அந்த பெரிய தவறைக் கண்டுபிடித்தார். “”அட… என்னப்பாநீங்க… கருப்பராயனுக்குப் போய் கறுப்பு கிடாய் நிறுத்தி தீர்த்தம் போட்டா துலுக்குமா? ஒரு கொடம் தண்ணி ஊத்திப் பாருங்க. அப்பக்கூட துலுக்காது. ஒரு ஆடு சுத்தக் கறுப்பு. இன்னொன்றுக்கு வயித்திலயும், தலையிலயும் கறுப்பு. கருப்பராயன் ஏத்துக்கமாட்டாப்ல… பொழுதுக்கும் கத்திய ஓங்கிட்டேதான் நிற்கணும். அக்கட்டால இழுத்துட்டு வாங்கப்பா. ஏம்பா பூசாரி… காலகாலமா இருக்குறே. உனக்குகூட விஷயம் தெரியலையா!” கடைசியாக எல்லாரும் அட ஆமாம்! என்றார்கள். மீண்டும் ஆட்டு வியாபாரிக்கு போன் பறந்தது. அவரோ பன்னிரண்டு மணியைப்போல ஒரு ஆட்டுக்குட்டியோடு வந்தார். தோலை உரித்தால் எட்டு கிலோ தேறும்போல் இருந்தது. வெள்ளை நிற ஆட்டுக்குட்டியின் பலியை கருப்பராயன் முதல் தீர்த்தத்திலேயே ஏற்றுக்கொண்டார். மற்ற இரண்டையும் கோவிலுக்கு வெளியே வைத்து அறுத்து தோலை உரித்தார்கள். பாப்பா ரம்யா மாமா மடியில் அமர்ந்து மொட்டை போட்டுக்கொண்டாள். அவள் கையில் புதிதாய் மாமன் வாங்கிக் கொடுத்த 250 ரூபாய் டைனோசர் பொம்மை இருந்தது. பார்த்துட்டு தர்றேன் என்று கேட்ட ஒரம்பரை சனத்திற்கு “”முடியாது… எங்க மாமா வாங்கிக் குடுத்தது. கிசுக்கணும்” என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். காது குத்தும்போது விர்விர் என்று அழுகை பிடித்துக் கொண்டாள். குத்தி முடித்து கம்மல் போட்ட பிறகும் பத்து நிமிடம்போல அழுகை கோவில் முழுக்க எதிரொலித்தது. “”புது ட்ரஸ் பார்த்தியா… எப்படி மின்னுதுன்னு.” என்று மருதாசலம் ரம்யாவிற்கு காட்டியபோதுதான் அவள் அழுகை நின்றது. கோவில் பைப் அடியில் நிற்க வைத்து தெய்வானை தன் பிள்ளைக்கு குளித்து விட்டாள். பூசாரி புதுமொட்டைக்கு சந்தனம் பூசிவிட்டான். எல்லாரும் தங்கள் அலைபேசியில் ரம்யாவை போட்டோ பிடித்துக்கொண்டார்கள். “”இன்னாவரைக்கும் அழுதது யாரு சாமி?” மாமன் குனிந்து ரம்யாவிடம் கேட்டான். “”போடா குண்டா… உன்னால தான்டா!” என்று சொல்லி டைனோசர் பொம்மையை நெஞ்சில் கட்டிக்கொண்டு ஓடினாள். “”வெசையா ஓடாதே சாமி… பாவாடை தடுக்கிவிட்டு விழுந்தீன்னா மொட்டை மண்டையில காயம் ஆயிடும்” என்றான். விருந்துக்கு வருபவர்களின் கூட்டம் அங்கங்கே கோவிலுக்கு வெளியே வேப்ப மர அடியில் நின்று ஈமு கோழி இல்லாத விஷயம் பற்றியே பேசிக்கொண்டு நின்றது. சற்று மறைவான இடத்தில் மது வகைகளும் ஓடிக் கொண்டிருந்தன. “”சாமியே வேண்டாம்னு சொல்லிடுச்சு. நமக்கு வேணும்னா ஈரோடு போய் ஓட்டல்ல வாங்கித் தின்னுக்க வேண்டியதுதான்”. “”இல்லைப்பா… வெளிய இப்படி மரத்தடியில வெச்சு அறுத்து சொன்ன மாதிரியே மருதாசலம் ஈமுவே போட்டிருக்கலாம். சாமிக்கு படையல் வைக்கிறப்ப ஆட்டுக்கறி கொழம்போட, பட்டச் சாராயத்தை டம்ளர்ல வச்சு படைச்சிருக்கலாம். வடிவேலு ஏதோ படத்துல வடை போச்சேன்னு சொல்ற மாதிரி ஈமு போச்சேப்பா”. “”முக்கால் மணி நேரமா அவசரத்துக்கு வந்த கெடாகூட துலுக்கமாட்டேன்னு அடம்புடிச்சுநின்னுடுச்சாமா… இப்படித்தான் புளியம்பாளையத்துக்காரர் கெடா ஒன்னு மாரியாத்தா கோயில்ல ஒரு மணிநேரம் துலுக்கமாட்டேன்னு ரெண்டு வருஷத்திற்கும் முன்னால நின்னுச்சு. ஆட்டுக்காரர் போட்டார் பாருங்க ஒரு சத்தம்… “போயி இழுத்தாங்கடா நம்ம பட்டி ஆடுகள் அத்தனையும்… ஆத்தா ரொம்ப நேரமா பீத்திக்கிறா’ அப்படின்னு சவுண்டு போடவும் ஆடு துலுக்கவும் சரியா இருந்துச்சு. அட நடங்கப்பா… மணி இரண்டு ஆயிடுச்சு. இலை போட்டாச்சாமா… காது குத்தின பிள்ளை கையில நூறு ரூபாய் குடுத்துட்டுப் போயி சாப்பிடுவோம்” ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் கோவிலுக்குள் நுழைந்தார்கள். “”சொன்ன சொல் அழிஞ்சு போச்சே மாப்ளே… சொத்து அழிஞ்சாலும் சொல் அழியக்கூடாது மாப்ளே… ஈமு போடறேன்னு அழைச்சுட்டு பிசாத்து ஆட்டுக்கறி போட்டுட்டியே மாப்ளே” போதை ஏறிப் போன மாம்ஸ் ஒன்று புலம்பியது. ஐந்து பந்தி விட்டால் எல்லாருமே சாப்பிட்டு கைகழுவிவிடலாம் என்பது மாதிரி கோவிலில் சாப்பாட்டு மண்டபம் நீளவாக்கில் இருந்தது. பந்தியும் பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தது. “”எவ்ளோ நேரமா எம் புள்ள பசியில கெடக்குது! வீட்ல பன்னிரண்டு மணிக்கே இது தின்னுபோடுமக்கா” ஒரு வரிசை முழுவதும் மடியில் பிள்ளைகளை அமர்த்தி வைத்துக்கொண்டு பெண்கள் அமர்ந்திருந்தார்கள். இப்படியெல்லாம் தாமசம் ஆகிவிடும் என்பதை முன்பே யூகித்திருந்தானோ என்னவோ பரமேஷ். இரண்டாவது பந்தி ஓடிக் கொண்டிருந்தபோதுதான் தன் மனைவியோடும் பையனோடும் வந்திருந்தான். பரமேஷின் மனைவி பவானி பெரிய உருவத்துடன் நாய் உருவை தாவிப் பிடித்தபடி பத்திரமாய் டூவீலரில் இருந்து இறங்கினாள். “”என்னம்மிணி வேண்டுதலா? நாய் உருவோட வர்றே?” சாப்பிட்டு முடித்து வெற்றிலை அதக்கிக் கொண்டே வந்த பெரியவர் கேட்டார். “”ஆமாங்கய்யா… வீட்டுல எந்த நாய் வளர்த்தினாலும் நிலைக்க மாட்டேங்குது. ஒன்னா ரோட்டுல கார்ல அடிபட்டு செத்துப் போயிடுது. இல்லைன்னா வீடு தங்காம ஊருக்குள்ள ஓடிருது. அதான் கோயிலில வேண்டிட்டு உரு பொம்மை செஞ்சு நிறுத்திட்டம்னா… வளர்த்துற நாய் வீட்டைக் காவல் காத்துட்டு வாசல்படியிலேயே கெடக்கும்னு சொன்னாங்க. விசேசத்தை முடிச்சுட்டு போறபோது வச்சுட்டு போயிடலாம்னு எடுத்துட்டு வந்தேன்”. “”நாய் உரு நல்லா செஞ்சு கலர் அடிச்சிருக் கான்மா… எந்த ஊர்ல செய்யக்குடுத்தே?”””காங்கேயத்துல தானுங்க” என்று சொன்னவள் நாய் விஷயத்திலேயே நிஜ நாய் போலிருந்த உருவை காவிக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தாள். சாப்பிட்டு எழுந்தவர்கள் எல்லாம் கெடையில் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருந்த ரம்யா பாப்பாவை துரத்திப் பிடித்து அதன் கையில் ரூபாய் தாள்களை வைத்து கன்னத்தை கிள்ளி விட்டுச் சென்றார்கள். அவளின் வலது பக்க கன்னம் தடித்துச் சிவந்து போய்விட்டது. அம்மா தெய்வானை அடிக்கடி மகளிடம் ஓடி ரூபாய் நோட்டுகளை அவளிடம் இருந்து பிடுங்கி தன் பர்ஸில் செருகிக்கொண்டாள். யாராவது சாமி சாமி என்று வந்தால் கோவிலுக்குள் ஓடுவதும், ஒளிந்து கொள்வதுமாய் ஒரே விளையாட்டாய் இருந்தாள் ரம்யா. மூன்றரை மணி என்கிறபோது விருந்துக்கு வந்திருந்த கூட்டமெல்லாம் கிளம்பிப் போய் கோவிலினுள் ஆங்காங்கே மருதாசலத்தின் நெருங்கிய உறவுக்கூட்டம் மட்டும் களைப்பாய் நின்றிருந்தது. மருதாசலத்தின் மாமனார் கோவில் பூசாரிக்கும், சமையல்காரருக்கும் பணம் பட்டுவாடா செய்தார். சமையல்காரர் ஈமு கோழியை சிறப்பாக செய்பவராம். ஈரோட்டிலிருந்து அதற்காகவே ஸ்பெஷலாகவே வரவழைக்கப்பட்டவர். சம்பளமும் கூடுதல்தான். திட்டம் மாறிப் போனதால் சமையல்காரர் மாறவில்லை. அதற்காக அவரும் தன் சம்பளப் பணத்தில் நயாபைசாவையும் குறைத்துக் கொள்ளவும் இல்லை. செய்திருந்த உணவு வகைகள் எல்லாம் சொல்லி வைத்தது மாதிரி தீர்ந்து போயிருந்தன. வாடகை சமையல் பாத்திரங்களை ஏற்றிக் கொண்டு மினி ஆட்டோ போய்விட்டது. பரமேஷ் தன் மனைவி பவானியை இழுத்துக் கொண்டு பூசாரியிடம் சென்று நாய் விஷயத்தைச் சொன்னான். பூசாரி ஏற்கெனவே கோவில் சுவரோரமாய் நேர்ந்து வைத்த நாய் பொம்மைகள் வரிசையில் இவர்கள் கொண்டு வந்த நாய் உருவை வைத்து தனி பூஜை செய்தார். பாப்பா ரம்யாவும், பரமேஷின் பையன் ரவிச்சந்திரனும் நாய் உருவிடம் தடவிக் கொடுத்து பேசினார்கள். “உன் பேரு டாமிதான? இல்லையா கருப்பனா?’ பூசாரியிடம் விடைபெற்றுக் கொண்டு மருதாசலத்தின் குடும்பம் விடைபெறும்போதுதான் பரமேஷும் விடைபெற்றுக் கிளம்பினான். கோவில் காலியானதும் பூசாரி அன்றைய தட்டு வசூல் எவ்வளவு என்று எண்ணி திருநீறுடன் புரண்டெழுந்த ரூபாய் தாள்களை தன் டவுசர் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு கோவிலைப் பூட்டினார். இரவு நேரத்தில் பாப்பா ரம்யாவிடம் மருதாசலம், “”எங்க சாமி மாமன் வாங்கிக் குடுத்த டைனோசர் பொம்மை? அழகா இருந்துச்சே சாமி? கோயில்லயே உட்டடிச்சிட்டு வந்துட்டியா?” என்றான். “”இந்த பேக்கு கையிலேயேதான வச்சிட்டு சுத்தீட்டு இருந்துச்சு. யாரு கேட்டாலும் குடுக்கமாட்டேன்னு பிலுக்கீட்டு திரிஞ்சுதே… திருப்பூர்ல 250 ரூபாய் குடுத்து என் தம்பி வாங்கிட்டு வந்தான். ஒரேநாள்ல இந்த பேக்கு தொலைச்சுட்டு வந்துடுச்சு” மருதாசலத்தின் மனைவி புலம்பினாள். ரவிச்சந்திரனும் தானும் டாமியை தடவிக் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது நாய்களின் பொம்மை வரிசையில் தன் டைனோசர் பொம்மையையும் வைத்துவிட்டு வந்த விஷயத்தை ரம்யா அவர்களிடம் சொல்லவில்லை. விடிகாலையில் வாசல் கூட்ட சீமாற்றுடன் வெளிவந்த தெய்வானை வாசலில் பெரிய ஒடக்கான் ஒன்று நிற்பதைப் பார்த்தாள். உஸ் என்று விரட்டினால் தூரமாய் ஓடிப் போவதும், பின் வாசல்படிக்கு வருவதுமாய் அது விளையாடியது. யார் கைக்கும் சிக்காமல் பாப்பா கைக்கு மட்டும் சிக்கிய குட்டி டைனோசர் வாலை ஆட்டிக் கொண்டு கீக் கீக் என்று சப்தமெழுப்பி பாப்பாவின் கன்னத்தை நீண்ட நாக்கால் நக்கியது. “”உன் பேரு டாமி” என்றாள் ரம்யா பாப்பா. 000       1 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !