[] []       வாழ்க்கை வாழ்வதற்கே  சிறுகதைகள்   என். ஸ்ரீதரன்    அட்டைப்படம் : க சாந்திபிரியா-  gkpriya246@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain - CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.        பொருளடக்கம் என்னுரை 4  1. விண்ணோக்கும் வேர்கள் 5  2. யார் பொறுப்பு ? 10  3. மேகத்துக்கும் தாகமுண்டு 15  4. பாசக்கயிறு 19  5. நீயுமா மகனே ? 23  6. அன்பிற்கும் உண்டோ வித்தியாசம் ! ! 28  7. நினைச்சது ஒண்ணு ... 34  8. நாய்ப் பாசம் 37  9. நல்லாயிடுவீங்க... 40  10. தேடி வந்த பிரசாதம் 44  11. வாழ்க்கை வாழ்வதற்கே 47  12. கண்ணோட்டம் 50  13. எப்போ வருவாரோ ... ? 51  14. அக்கரைச் சீமையில் ... 55  15. இதுவும் கடந்து போகும் ! ! 61  16. தாயன்பு 66  17. அழகின் விபரீதம் ! ! 71  18. பொய் எல்லாம் மெய்யென்று... 75  19. விதியின் விளையாட்டு 78  20. அன்பின் சுடர் 79  21. அடுத்தது என்ன ? 84  22. மனித நேயம் 89                            என்னுரை   நான் தனியார் கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் நங்க நல்லூரில் வசித்து வருகிறேன். என் அகவை 64. “எதிர் வீடு” என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பை தொடர்ந்து ”வாழ்க்கை வாழ்வதற்கே” என்னும் இருபத்து இரண்டு சிறுகதைகள் அடங்கிய  இந்தச் சிறுகதைத் தொகுப்பை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சித்திரமும் கைபழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்பர். சிறுகதை எழுதுவதற்கும் கைபழக்கம் என்று சொன்னாலும்  பொருந்தும். சிறுகதை எழுதுவதற்கு நிறைய படித்தால் மட்டும் போதாது.   எழுத வேண்டும் என்னும்  எண்ணம் மனதில்   இருந்ததால்தான் எழுத முடியும். என்னை ’எழுது. எழுது’ என்று ஊக்கம் அளித்த எழுத்தாளர் திரு. தீபம் திருமலை, எழுத்தாளர் சங்கரி அப்பன் மற்றும் ஆகிய இருவருக்கும்  என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கதைகளைப் படித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லவும்.   என். ஸ்ரீதரன் Maje200@gmail.com  97907 91965                                       1. விண்ணோக்கும்  வேர்கள்    “உங்களுக்குச் சர்க்கரை இருக்கிறது. இருநூறைக் கடந்து விட்டீர்கள்.  நான் எழுதிக் கொடுக்கும் மருந்தை  சாப்பிடுங்க. முக்கியமா நீங்கள் தினந்தோறும் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது வாக்கிங் போக வேண்டும்”  என்று டாக்டர் சொன்னது எனக்கு அவ்வளவு முக்கியமாய் தெரியல. ஆனால், அது என் மனைவியின் மனசில் ஆழப் பதிந்து விட்டது. அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி,  “நடந்துட்டு வாங்க”  என்று அன்புடன் அனுப்பிவிடுவாள் மகராசி. தூக்கம் போச்சே” என்று நினைத்துக்கொண்டே நான் நடைப்பயிற்சி செய்வேன். என் வீட்டின் அருகில் ஒரு  பூங்கா உண்டு . அங்கு ஒரு பெரிய ஆலமரமும் வேறு சில   மரங்களும் செடிகளும்  மனதைக் கவரும்.   அங்கு ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு போவதுபோல்  கூட்டம்  இருப்பதில்லை. பூங்காவை யாரும் சுத்தம் செய்வதில்லை. பூங்கா காவல்காரன் எப்போது தண்ணீர் விடுகிறானோ? யாருக்குத் தெரியும் ? சுட்டெரிக்கும் வெப்பத்தால் தண்ணீர் இல்லாமல் மரம் செடிகள் தவித்தன.. காலை ஆறு மணிக்கு அங்குப் போகும் போது பத்து பேர் அல்லது அதிக பட்சம் பதினைந்து பேர்  இருப்பார்கள். நான் இருபது  சுற்றுகள் பூங்காவில் போடப்பட்ட நடைமேடையைச் சுற்றி  விட்டு அங்கிருக்கும்  ஆலமரத்தின் கீழ் இருக்கும்  சாய்மான  இருக்கையில் சிறிது நேரம்  அமர்ந்து விட்டு வீட்டுக்குத் திரும்புவேன். ஒரு வாரம் தொடர்ச்சியாக போனபோதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. எப்படி ஒரு மின்சார ரயிலில் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகம் போகிறவர்கள் எல்லாம் ஒரு பெட்டியில் பயணம் செய்கிறார்களோ அதுபோல் நான் போய்க்கொண்டிருக்கும் வேளையில்  குறிப்பிட்ட நபர்களைச் தினந்தோறும் பூங்காவில்  சந்தித்தேன். காலையில் பூங்காவில் நடைப்பயிற்சி செய்வது மிகவும் உற்சாகமாக இருக்கும். மரங்கள் மீதமர்ந்திருக்கும் குயில் இன்னிசையைச் செவியில் பாய்ச்சும்.  நீலவானிலிருந்து எட்டிப் பார்க்கும் கதிரவன்  தன் பொன்னொளியைப் மரத்தின் ஊடே பாய்ச்சும். வசந்த கால ஆரம்பம். பசுமையான இலைகளின் ரம்மியமான  அழகு  மனதைக் கொள்ளைக் கொள்ளும்.. பூங்காவில் அதிகாலையில் நடைப்பயிற்சி செய்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். நான் பூங்காவில் நுழையும் போதே உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பவர் ஓம் பிரகாஷ் . மார்வாடி..  அடகு கடை வைத்திருக்கிறார்.  உடற்பயிற்சி செய்து ஒல்லியாக உடம்பை வைத்திருப்பார். பூங்காவிற்கு அடுத்த வீடு அவருடையது. அதிகாலை ஐந்து மணிக்குச் சரியாக வந்துவிடுவார். பூங்காவில் ஒரு பெரிய  மேடை இருக்கும் . பத்து பேர் அமரலாம். ஐந்து  மணிக்கு முதலில் வரும் ஓம் பிரகாஷ் பூங்காவிலிருந்து   துடப்பத்தை எடுத்து  மேடையைப் பெருக்கிச் சுத்தம் செய்து விட்டு  யோகா செய்யும் ரப்பர் ஷீட்டை விரித்து உடற்பயிற்சி, யோகா செய்வார்.  அவர் மட்டும் அல்ல . அவருடைய மனைவியும்  தலையில் முக்காட்டுடன்  நடைப்பயிற்சி செய்வார். ஓம் பிரகாஷ் ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை பூங்காவில் இருந்தால் அவர் மனைவி ஐந்தரை மணியிலிருந்து ஆறரை மணி வரை கிட்டத்தட்ட ஐம்பது  சுற்றுகளாவது சுற்றுவார்.. அதனால்தானோ என்னமோ பத்து வயது குறைந்து மிகவும் இளமையாய் தென்படுகிறார். எனக்கு ஓம் பிரகாஷிடம் நன்கு பரிச்சியம் ஆனதும் தயங்கிக் கொண்டே கேட்டேன். ”உங்கள் வீட்டில் என்ன சமைப்பீர்கள். உங்கள் மனைவி காலையிலே நடைப்பயிற்சிக்கு வந்துவிடுவதால் கேட்கிறேன்” என்றேன். சிறிதுகூட தயங்காமல் ”எங்கள் வீட்டில் மூன்று வேளையும் ரொட்டி சப்ஜிதான்” என்றார். “ஆணோ, பெண்ணோ உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யாவிட்டால் பின்னால் வருந்த வேண்டி வரும்” என்றார். ”எல்லாப்  பெண்களாலும் அப்படி இருக்க  முடியாது. காலை டிபன் செய்யணும் . மதிய உணவு செய்யணும் என்பதால் யாருக்கும் நேரமில்லை” என்றேன். ஆறு மணிக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த   நான்கு பேர்கள் அந்த மேடையில் யோகா செய்துகொண்டிருப்பார்கள். அவர்களில் பாண்டே என்பவர் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார். அகர்வால் என்னும் பெயருடையவர்  எப்போதும் சோகமாய் முகத்தை வைத்திருப்பார்.  இன்னும் சிலர் அங்கு நடைப்பயிற்சி செய்துகொண்டிருப்பார்கள். ஆடி ஆடி நடந்து நடைப்பயிற்சி செய்யும்  ஒரு வயதான பெண்மணி. ஒரு  காதல் ஜோடி யாரைப் பற்றியும் கவலைப்படாமல் காதல் செய்துகொண்டிருக்கும்.  . மூன்று வயது சிறுவன் சறுக்கு மரத்தில் சறுக்கிக் கொண்டிருப்பான். காதில் ஹியரிங் போனை மாட்டிக் கொண்டு அலைபேசியில் பாட்டைக் கேட்டுக்கொண்டு ஒரு யுவதி நடந்து கொண்டிருப்பாள். ஒரு நைட்டி மாமி மார்பின்  மேல்  முண்டை  போட்டுக் கொண்டு கூட நடந்து வரும் பெண்மணியுடன் பேசிக்கொண்டே நடப்பார். . சிலர் இரண்டு நாள் வருவார்கள். இரண்டு வாரம் கழித்து மீண்டும் இரண்டு நாள் வருவார்கள். நானும் ஓம்பிரகாஷீம் ஒரு நாள் கூட விடாமல் வருவோம். தினந்தோறும் இரண்டு பெண்கள் அங்கு நடைப்பயிற்சி செய்ய வருவார்கள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததிலிருந்து  ஒருத்தியின்  பெயர் அர்ச்சனா என்றும் அவளை விடச் சிறிது வயதானவளாகத் தெரிந்த அவள் தோழியின் பெயர்  வந்தனா என்றும் தெரிந்தது. அர்ச்சனா தினம் தினம் விதவிதமான உடைகளில் வருவாள். ஒரு நாள் சேலையில், ஒரு நாள் சுடிதாரில், ஒரு நாள் டீ சர்ட் , டாப்ஸ் , ஜீன்ஸ்  என்று பல உடைகளில் அசத்துவாள். அதோடு அவள் போடும் உடைக்கு ஏற்ப அவள் காலில் ஷூ அணிவாள். ஒரு நாள் சிவப்பு, ஒரு நாள் நீலம்  எனப்  பல வண்ணங்களில் அவள் அணிந்திருக்கும் ஷூவைப் பார்த்தப்பிறகுதான், பல வண்ணங்களில் ஷீ வருகிறது என்று எனக்குத் தெரிந்தது. மல்லிகைப்பூவுக்கு விளம்பரம் தேவையில்லை என்பது போல பூங்காவிற்குத் தினந்தோறும் செல்பவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆண்களாய் இருந்தால் பார்வையிலே நண்பர்களாய் விடுவார்கள். பெண்களோ ஒரே நாளிலே மற்ற பெண்களுடன் அந்நியோன்யமாகி விடுவார்கள் ; நட்புடன்  பேசிக் கொள்வார்கள். முக்கியமான ஒரு நபரைப் பற்றிச்  சொல்ல மறந்து விட்டேன். அதுதான்  நம்ம ராம்குமார் பற்றி. அவன் இளைஞன். சற்று பருமனாக இருப்பான். சரியாக ஆறரை மணிக்குப் பூங்காவில் ஆஜராய் விடுவான். முகத்தில் தாடி வைத்திருப்பான். சாய்மான இருக்கையில் அமர்ந்து  அலைபேசியில் வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டிருப்பான்.. அவன் நடைப்பயிற்சி செய்து நான் பார்த்ததில்லை. முதல் ஒரு வாரம் அவன் நடைப்பயிற்சி செய்யத்தான் வருகிறான் என்றுதான் நினைத்திருந்தேன். எப்போதும் வாட்ச்அப்பைப் பார்த்துக் கொண்டிருக்கும்  அவனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு வேடிக்கையாக இருக்கும். அவன் எதற்குப் பூங்காவிற்கு வருகிறான் ? எப்போது நடைப்பயிற்சி செய்கிறான் ? என்று வியந்தேன். ஒருநாள்  நான் நடைப்பயிற்சி செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்திருந்தபோது ராம்குமார் என் அருகில் அமர்ந்தான். ஒரு நாள் வழக்கமாக வரும் அர்ச்சனாவும் அவள் தோழியும் வரவில்லை. ராம்குமாரின் கண்கள் அவர்களைத் தேடின. அவன் என் கிட்டே மெதுவாகக் கேட்டான். ”இன்று வழக்கமாக வரும் இரண்டு பெண்கள்  வரவில்லை போலிருக்கிறதே ?” ”இதுவரை வரவில்லை. எதாவது விஷயமா? ” என்றேன் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே. அவன் வெட்கத்துடன் புன்முறுவல் பூத்தான். தயங்கிக் கொண்டே. அவர்கள் இருவரில் சிவப்பா உயரமாய் இருப்பவள் பெயர் அர்ச்சனா . அவளை எனக்குத் தெரியும். முன்பு நானும் அவளும் ஒரு நிறுவனத்தில் ஒன்றாகப் பணியில் இருந்தோம். அவள் என்னைச் ’சோம்பேறி” என்று திட்டினாள். அதனால் எங்களுக்குள் சண்டை வந்து விட்டது . அவள் என்னுடன் பேசுவதில்லை. நான் அவளுடன் பேச முயலும்போதெல்லாம் என்னை நிராகரித்து விடுகிறாள். அதனால் நான் அவளுடன் பேசுவதே இல்லை.” “நடைப்பயிற்சி செய்தாகி விட்டதா ?” ”உண்மையைச் சொல்வதானால் நான் நடைப்பயிற்சி செய்ய பூங்காவுக்கு வரவில்லை. நான் இயற்கையை மிகவும் நேசிக்கிறேன். அதோடு எனக்கும் அர்ச்சனாவுக்கும்  இருக்கும் பூசல் மறைந்து நல்ல நட்பு தொடர வேண்டும் என்ற நப்பாசையால் பூங்காவிற்கு வருகிறேன்.  உடம்பு இளைக்க ஏன் நடைப்பயிற்சி அல்லது  உடற்பயிற்சி செய்து கஷ்டப்பட வேண்டும். கொழுப்பைக் கரைக்க  மாத்திரையைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கேன். டாக்டர் ஒரு மாத்திரை சாப்பிடச்சொன்னார். நான் மூன்று மாத்திரை சாப்பிடுகிறேன். கூடிய விரைவில் இளைத்து விடுவேன்” என்று புன்னகையோடு சொன்னான். ”அட பாவி ! உனக்கு வாழைப்பழத்தை உரித்துதான் தரவேண்டும் போலிருக்கே.” ”உரித்துத் தர வேண்டாம். அந்தச் சிரமத்தை உங்களுக்குத் தரமாட்டேன். . நான் வாழைப்பழத்தை அப்படியே தோலுடன் சாப்பிட்டு விடுவேன். தோலில் சத்து அதிகம் இருக்கிறது என்று படித்திருக்கிறேன்.” அர்ச்சனா உன்னைச் சோம்பேறி என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள். இப்படி இருந்தால் நீ உருப்பட மாட்டே. ஏதாவது செய் ! ”இதுவரை எல்லோரும் என்னைச் சோம்பேறி என்று சொல்லியிருக்கிறார்களே தவிர நான் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொன்னதில்லை. சிலர் யாரும் சொல்லாமலே செய்கிறார்கள். சிலர் யாரையாவது பார்த்துச் செய்கிறார்கள். . சிலர் யாரவது சொல்லிச் செய்கிறார்கள்.  இயற்கையைப் பார்த்தும் ஏன் எறும்புகளைப் பார்த்தும் நாம் சுறுசுறுப்பாய் இருக்க கற்றுக் கொள்ளலாம். “ ”அர்ச்சனா என்னை வெறுக்க வேண்டாமென்றால்  நான் என்ன செய்யணும் ?” ”அப்படிக் கேள். உன் சோம்பேறித்தனத்தை முதலில் விட வேண்டும். ஒரு கெட்டப் பழக்கத்தை ஒரே நாளில் விட முடியாது. நாளடைவில் விட்டு விடலாம்.  முதலில் நீ இந்தப் பூங்காவை இருபது  சுற்றுகளாவது காலையில் ஓடணும். அப்படிச் செய்தால் சோம்பேறித்தனம் உன்னைவிட்டு சீக்கிரத்தில் ஓடி விடும். ” ”ஓ..ட..ணு..மா ?” திகைப்புடன் கேட்டான். ”அர்ச்சனாவின் பார்வையில் நீ உயர வேண்டாமா?” ”சரி. நாளையிலிருந்து ஓடுகிறேன்.” ”நாளை என்று எதையும் தள்ளிப்போடாதே. இப்போதே ஆரம்பித்து விடு என்று சொன்னதும் அவன் ஓட ஆரம்பித்தான்.” சிலர் ஓடுவதுபோல் நடப்பார்கள். நடப்பதுபோல் ஓடிய அவனைப் பார்த்து எனக்குச் சிரிப்பு வந்தது. அர்ச்சனா முகம் சுழித்தாள். இப்போதெல்லாம் காலையில் நான் பூங்காவிற்குள் நுழையும்போது அவன் ஓடிக் கொண்டிருப்பான். அவன் முகத்திலிருந்த தாடி காணாமல் போய்விட்டது. அதற்குப் பதிலாக சுறுசுறுப்பு அவனிடம் ஏகமாய் தென்பட்டது.   ஞாயிற்றுக் கிழமை அன்று நான்கைந்து பெண்கள் பூங்காவிற்குள் தென்பட்டனர். அவர்கள் அங்கு மேடையில் யோகா செய்து கொண்டிருக்கும் நான்கு வட நாட்டவர்களின்  மனைவிமார்கள். அன்று யோகாவிற்கு விடுமுறை கொடுத்துவிட்டு நான்கு வடஇந்தியர்களும் தம் மனைவியுடன் பூங்காவிற்கு வெளியில் போய்  நடைப்பயிற்சி செய்வார்கள். ஓம் பிரகாஷ் மட்டும்  அவர்களுடன் போகமாட்டார். அன்றுதான் வெப்பத்தால் தவிக்கும் மரம், செடிகளுக்குத் தண்ணீர் விடுவார். அவருடைய மனைவி, மகள் சஞ்சனா மற்றும் நேகா, மாமனார் எல்லோரும் உதவுவார்கள்.  நானும் அவர்களுடன்  சேர்ந்து கொண்டேன். ராம்குமாரும் ஓடி முடித்து விட்டு என்னருகில் வந்து என்னைப் பார்த்தான்.  ஏதாவது செய் ! என்றேன். அவன் பங்கிற்குத் தண்ணீர் விடும் வேலையைச் செவ்வனே செய்தான். அர்ச்சனாவின் பார்வையில் முன்பு போல் அவ்வளவு கடுமை இல்லை. கனிவோடு அவனை நோக்கினாள். ஒரு நாள் ஓம் பிரகாஷ் சொன்னார். அசோகர் சாலையெங்கும் மரம் நட்டினார் என்று படித்தது எப்போதும்  நினைவு இருக்கிறது. குறைந்த பட்சம் ஒரு மரமாவது நம் எதிர்காலத்துக்காக நடுவோம். பூங்காவில் இன்னும் செடியை நடுவதற்கு  இடம் இருக்கிறது. நாளைச் செடியை நடலாம் என்றார். அது போலவே அடுத்தநாள் அந்தப் பூங்காவிற்கு வந்தவர்கள் அனைவரும்  ஒரு மரக் கன்றை நட்டனர். ராம்குமாரும் இன்னொருவரும் மரக்கன்றுகளுக்குச் தினம் தண்ணீர் விடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். விரும்பத்தகாத சில சம்பவங்கள் நாம் எதிர்பாராமல் நடந்து விடுகின்றன. அதைத் தடுப்பது நம் கையில் இல்லை என்று சிலசமயம் நாம் சும்மா இருந்து விடுகிறோம். ஆனால் போராடும் குணம் உள்ளவர்கள் அதை எதிர்த்துப் போராடுகிறார்கள். ”அந்தப் பூங்காவில் இருந்த ஐம்பது வருடமாய் இருக்கும்  ஆலமரத்தை அன்று வெட்ட ஆட்கள் வந்துவிட்டார்கள். பூங்காவில் நடக்க ஆலமரம் தடையாய் இருக்கிறதாம்” என்று ராம்குமார் என்னிடம் சொன்னான். எப்படியாவது அதைத் தடுத்து நிறுத்துங்க சார் “ என்றான். “ அரசாங்கம் முடிவு எடுத்ததை நான் எப்படித் தடுத்து நிறுத்த முடியும்.” ”நீங்க ஏதாவது யோசனை சொல்லுங்க சார் .” ” எனக்கு எதுவும் தோணலை . ஆலமரத்தை வெட்ட விடக்கூடாது. நீ ஏதாவது செய்  “ சோம்பேறி அவன் என்ன செய்யப்போகிறான் என்று நினைத்தேன். அவன் செய்த செயலால் சாதாரணமாகத் தோன்றிய  அவன் என்னைச் சாதாரணன் ஆக்கி விட்டான்.   ராம்குமார் யாருமே எதிர்பார்க்காத ஒரு செயலை செய்தான்.. ஆலமரத்தின் முன் ஒரு பாயை விரித்துப் போட்டு அமர்ந்தான்.  உண்ணாவிரதம் என்று ஒரு தாளில் எழுதி பக்கத்தில் வைத்தான். மரம் வெட்டுவதை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதம் என்று பிடிவாதமாய் இருந்தான். இரண்டு நாட்கள் போயின. அரசு அதிகாரிகள் வந்து விட்டனர். அவனிடம் பேசி உண்ணாவிரதத்தைக் கைவிட வற்புறுத்தினர். ” நம் நாட்டு  அரசியல்வாதிகள் எது எதற்கோ உண்ணாவிரதம் இருக்கும்போது ஒரு மரம் வெட்டக்கூடாது என்று நான் உண்ணாவிரதம் இருப்பதில் என்ன தவறு இருக்கிறது ? மரம் என்றால் மகிழ்ச்சி. மரம் மழையைத்தருகிறது ; நிழலைத் தருகிறது. மரத்தை வெட்ட நான் சம்மதிக்க மாட்டேன். என் உயிரைக் கொடுத்தாவது மரத்தின் உயிரைக் காப்பேன்.” என்றான். அர்ச்சனாவும் மரம் வெட்டுவதைக் கடுமையாய் எதிர்த்தாள். ”அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் ஒரு பூங்காவில் நூறு வயதான பழமையான மரத்தை வெட்ட விடாமல் தடுக்க புதுமையாகப் போராடும் மங்கையர் இருவர்  மணப்பெண்ணுக்கான ஆடை அணிந்து கேக் கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டார்கள் மரத்தைக் காக்க” என்று செய்தித்தாளில் படித்தேன். ”தேவைப்பட்டால் நானும் வந்தனாவும் அதுபோல் மரத்தைக் கல்யாணம் செய்வோம் ” என்றாள். மாநகராட்சி பிடிவாதமாக மரத்தை வெட்டியே தீருவோம் என்று முடிவு எடுத்தது. நாளை மரம் வெட்டப்படும் என்று அறிவித்தது. வெட்ட ஆட்களும் வந்தார்கள். அந்தப் பூங்காவில் நடைப்பயிற்சி செய்பவர் மற்றும் பொது மக்கள் மற்றும் இயற்கை  ஆர்வலர்கள் ராம்குமாரின் உண்ணாவிரதத்தை ஆதரித்தனர். மக்கள் நீருக்காக மட்டுமல்ல மரத்துக்காகவும் போராடுவார்கள் என்பது புலப்பட்டது. ஊடகத்திலிருந்து ஆட்கள் வந்தார்கள். பேட்டி கண்டார்கள். செய்தித்தாளிலும் ராம்குமாரின் படம் வந்தது.  எல்லோரும்  ஏகோபித்தமாய் எதிர்த்தனர். ராம்குமார் மரத்தைக் கட்டிப் பிடித்து மரத்தை வெட்ட வந்தவர்களுக்கு இடையூறு செய்தான். . வெட்ட வந்தவர்கள் தயங்கி நின்றனர். ராம்குமார் எதுவும் சாப்பிடவில்லை என்பதால் மிகவும் பலவீன நிலையிலிருந்தான். திடீரென்று மயங்கி விழுந்தான். பூங்காவில்  பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. டாக்டர் வந்து மயக்கம் தெளிவித்து ஊசி போட்டார்.  நிலைமை மோசமாகி கலவரம் ஆகி விடும்போல் இருந்ததால்  நகராட்சி மேயரின் அறிவுரைப்படி  மரம் வெட்டும் தீர்மானம்  கைவிடப்பட்டது. அர்ச்சனா பழரசத்தைக் கொண்டுவந்து கொடுக்க அதைப் பருகி ராம்குமார்  உண்ணாவிரதத்தைக் கைவிட்டான். அர்ச்சனா தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டி ராம்குமாரிடம் தன்  நட்பை வெளிப்படுத்தினாள்.   அவன் அமர்ந்திருந்த ஆலமரத்திலிருந்து  சில  வேர்கள்  விண்ணோக்கிப் பாய்ந்ததைக் கண்டு அதிசயித்தேன். அதுபோல்  சாதாரண மனிதனைவிடக் கீழாக ஒரு சோம்பேறியாக இருந்த ராம்குமார் ஊர் மெச்சும்  சாதனையைச் செய்துவிட்டான் என்று நினைக்கும்போது  மிகவும் பெருமையாய் இருந்தது.   இந்த மகிழ்ச்சியான செய்தியுடன் இன்னொரு தித்திப்பான விஷயத்தையும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய சர்க்கரையின் அளவு இப்போது குறைந்து விட்டது ! ! *********                                                   2.  யார் பொறுப்பு ?   மாலை ஏழு மணி ஆகிவிட்டது, இன்னும்  அலுவலகத்திலிருந்து  பைரவி வரவில்லையே என்று ரேவதி கவலைப்பட்டாள். தன் மகள் பைரவி  மீது அளவு கடந்த பிரியம் ரேவதிக்கு. பைரவி பொறியியல் படிப்பை முடித்து இரண்டு வருடமாக ஒரு தனியார்  நிறுவனத்தில் பணி செய்து வருகிறாள். ஆறு மணிக்கு அலுவலகம் முடிந்ததும் உடனே கிளம்பி வீட்டுக்கு வரும் வழக்கத்தைக் கொண்ட  அவள் அன்று தன்கூடப் பணிபுரியும் முருகேசனுடன் ஓட்டலில் பாசந்தியைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். பைரவி ஐயர் வீட்டுப் பெண். . முருகேசன் தலித் பையன். தற்செயலாக அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு முற்றி நெருங்கிய நட்பாக மாறிவிட்டது. பைரவி முருகேசனைக் காதலிப்பது அவள் வீட்டில் யாருக்கும் தெரியாது. அவளுக்கு வீட்டில் நல்ல பெயர். உயரமாய் சிவப்பாய் நல்ல உடல்வாகு, அழகுக்கு இலக்கணம் அவள்தான் சொல்லமுடியும்.    முகத்தில் புத்திசாலித்தனம் பொங்கி வழியும். அம்மா, பெண் என்பதைவிடத் தோழிகள் மாதிரிதான் பேசுவார்கள். முருகேசனைப் பெரிய அறிவாளி என்று சொல்லலாம். பட்டப் படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தவன். ஐ.ஏ.ஸ் பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறாள். அவனிடமிருந்த பண்பு , கண்ணியம் அவளை வெகுவாகக் கவர்ந்தது. அதுவும் அந்தச் சம்பவம் … அதை நினைத்தாலே அவளுக்குப் பயம் உண்டாயிற்று. ஒருமுறை அலுவலகம் முடிந்து வெளியே வரும்போது நேரமாகிவிட்டதால் அவள் குறுக்குப் பாதையைத் தேர்ந்தெடுத்து பேருந்து நிற்கும் இடத்தை அடைய வந்து கொண்டிருக்கும்போது இரு கயவர்கள் அவளிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றனர். அப்போது அங்கு வந்துகொண்டிருந்த முருகேசன் அவர்களிடம் போராடி அவளைக் காப்பாற்றினான். ஆண்களின் வீரம், அழகு, அறிவு, பண்பு இதில் ஏதாவது ஒன்றுதான் பெண்களைக் கவரும். அவன் பெண்மையைப் போற்றும்விதம் அவளை அவன்பால் ஈர்த்துவிட்டது.  தன்னை அறியாமலேயே அவனிடம் நாட்டம் கொண்டாள். அவன் இரண்டு நாட்கள் அலுவலகம்  வரவில்லையென்றால் இரண்டு வருடம் வராத மாதிரி மனம் அலைபாயும். அதைப் போல் அவள் ஒரு நாள் வரவில்லையென்றால் அவன் உற்சாகத்தை இழந்து சோகமாய் காணப்படுவான். பெண்களின் சாமர்த்தியம், அழகு, அறிவு இவற்றில்  முதலிடம் நிற்பது அழகு. பைரவியின் அழகு ஆண்களைச் சுண்டி இழுக்கும். அவன் மனத்தில் அவள் இடம் பிடித்து விட்டாள். அதற்குக் காரணம் அவள் அழகு மட்டுமல்ல. அவள் அறிவுதான் முக்கிய காரணம்.  அவனுடைய சாதியின் காரணத்தால் தன் விருப்பத்தை அவளிடம் அவன் சொல்லவில்லை. அதே காரணத்தால் அவள் விருப்பத்தை அவனிடம் அவள் சொல்லவில்லை. எவ்வளவு நாட்கள்தான் சொல்லாமல் ஆசையை  மனசிலேயே வைத்திருக்க முடியும். கண்கள் கண்களோடு பேசிக் காதலைத் தெரிவித்துவிட்டன. முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் அன்பைப் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.  ஓட்டலை விட்டு வெளியே வந்ததும்,”நேரம் ஆகிவிட்டது. அம்மா எனக்காகக்  காத்துக்கொண்டிருப்பாள். அதோ பேருந்து வந்து விட்டது  நான் போகிறேன்” என்று பேருந்தில் ஏறினாள். அவன் போக வேண்டிய பேருந்து வருவதற்காகக் காத்திருந்தான். வீட்டுக்குள் நுழைந்ததும், முகம் கழுவி அம்மாவின் அருகில் வந்தமர்ந்தாள். ”ஏண்டி இவ்வளவு லேட் ?” ”பஸ் கிடைச்சு வருவதற்கு லேட் ஆகிவிட்டதம்மா?” பைரவி சமயம் கிடைக்கும் போதெல்லாம் முருகேசனைப் பற்றிச் சொல்வாள். ”அவன் என்ன சாதிடி ? அவன் அப்பாவுக்கு என்ன வேலை?” ”எனக்குத் தெரியாதம்மா . அவங்க ஊர் விழுப்புரம் . அதுமட்டும்தான் எனக்குத் தெரியும்,” என்பாள் பைரவி. அவளுக்கு அவன் கடை சாதியைச் சேர்ந்தவன் என்று தெரியும். . அதைச் சொல்வதற்கு அவளுக்குத் தயக்கம். ஒருநாள் முருகேசனிடம் அவள் கேட்டாள். ”நமது காதலைப் பத்தி உங்க வீட்டிலே சொல்லிட்டீங்களா? அப்பா அம்மா சம்மதச்சிட்டாங்களா ?” ”நான் இதுவரை சொல்லவில்லை. நீ சொல்லிட்டியா ?” ”இதுவரை இல்ல” சிரித்தாள். ”ஒருவேளைச் சம்மதிக்கவில்லையென்றால் என்ன செய்யலாம்?   இருவரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா? நண்பர்கள் துணை செய்வார்கள்.” ”வீட்டிலே சம்மதிக்காவிட்டால் அதுதான் சரியான வழி என்று எனக்குத்  தோன்றுகிறது. வீட்டில் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்,என் தந்தை சாதி பார்ப்பார்.  ஒருக்கால் சாதி நம்ம கல்யாணத்துக்குத் தடையாய் இருக்கலாமென்று நினைக்கிறேன். “ என்றாள். பைரவி அன்று இரவு அம்மாவிடம்,”நான் முருகேசனைக் காதலிக்கிறேன்” என்று  கூறினாள். ”என்னடி வெடிகுண்டு போடறே. நீ சொல்றது உண்மையா?” ”ஆமாம். எங்க கல்யாணத்துக்கு உன் சம்மதம்  வேண்டும். அவர் தலித். அதனால் அப்பா விரும்ப மாட்டார்.  . நீதான் அப்பாவிடம் சொல்லணும்.” ரேவதி   அவள் கூறியதை விரும்பவில்லை. ”கலப்புத் திருமணம் வேண்டாமடி. சொந்த பந்தங்களுக்கு முன் வெட்கி தலை குனிய வேண்டி வரும். உனக்கு நல்ல மாப்பிள்ளையாய் பார்க்கிறேன். அவனை மறந்துவிடு.” ”அது மட்டும் என்னால் முடியாது” என்றாள் பைரவி நீ மனவுறுதி உடையவள். நீ போய் காதலிலே மாட்டிக் கொண்டுவிட்டாயே என்று எனக்கு வருத்தமாக இருக்கு கண்ணு. ” ”உனக்குக் காதல் பற்றிய புரிதல் பத்தாது. அதுக்கு அதிக  பக்குவம் வேண்டும் .”’  ”எனக்கா பக்குவம் வேண்டும் , என்னடி சொல்றே ? நான் உன்னைவிட இருபத்து ஐந்து வயசு மூத்தவ” ரேவதி சிரித்தாள்  ”அம்மா நீ இருபத்து ஐந்து  வயசு மூத்தவளா இருக்கலாம். காதலின் அருமை காதலிக்கிறவங்களுக்குத்தான் தெரியும். அது மட்டுமில்ல. நாங்களெல்லாம் புதுமைப்பெண்கள். எங்க உரிமையைப் பற்றி எனக்கு  நன்றாகத் தெரியும்.” மகளின் போர்க்குணம் பற்றி ரேவதிக்குத் தெரியும். பைரவி அம்மா எதாவது சரியாகச் செய்யவில்லையென்றால் திட்டுவாள்.  அம்மா மட்டும் பெண்ணின் மேல் மிகவும் பாசமாக இருப்பாள். அவள் அப்பா சந்தானமும்  அவளுடையக்  காதலை ஓப்புக் கொள்ளவில்லை., ”சண்டாளி, நாசமாப் போறவளே, துரோகி  .என் முகத்தில் முழிக்காதே என்று உணர்ச்சி வசப்பட்டு மகளைத் திட்டினார். முருகேசன் வீட்டிலும் பிரச்சனை வேறு மாதிரி. அவன் அத்தை பெண் தன் கழுத்தை அவனுக்கு நீட்டத் தயாராய் காத்திருக்கிறாள். அவளை நிராகரித்துவிட்டு வேறு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்று அவனுடைய பெற்றோர் திட்டவட்டமாகச் முடிவு செய்துவிட்டதால் அவனுடைய வீட்டிலும் எதிர்ப்பு  இருந்தது.   யார் எதிர்த்தாலும் திருமணம் செய்துகொண்டு விட வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர். காதல் சோலையில் குளிர்ச்சியை அனுபவிப்பவர்கள்  அதைவிட்டு வெளியே வரச்  சம்மதிப்பார்களா? அதற்கு அலுவலகத்தில் பணி புரியும்  நண்பர்கள் ரவி,  மாலா,  துணை நின்றனர். மாலாவின் பெற்றோர்  திருச்சியில் வசிப்பதால்  அங்குப் போய் விடலாம் .மாலாவின் தந்தை சமூக சேவகர் . அவர் உதவியோடு  சுயமரியாதை கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று தீர்மானித்தனர். பைரவி கடைசித் தடவையாய் அம்மாவிடம் கேட்டுப் பார்த்தாள். அம்மா அதற்கு உடன்படவில்லை.   அன்று காலை பைரவி சீக்கிரம் எழுந்து விட்டாள் . பரபரப்புடன்  ஒரு கடிதத்தை எழுதி மேசை மீது வைத்தாள். அப்போது மணி ஆறு . அப்பா முத்துசாமி  மொட்டை மாடிக்கு  யோகா செய்யப் போயிருந்தார். ஒரு மணி நேரம் கழித்துத்தான் கீழே இறங்கி வருவார். அம்மா சமையல் அறையில் மும்முரமாகச் சமையல் செய்துகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு இதுதான் வெளியே போகச் சரியான சமயமென்று தோன்றவே மனசுக்குள் அம்மாவிடம் போய் விட்டு வரேன் என்று சொல்லிவிட்டு ஓசைப்படாமல்  கட்டின புடைவையுடன் கிளம்பி விட்டாள். கையில் ஒரு ஹாண்ட் பேக். அதில் அவளுடைய வங்கி பாஸ் புக், செக் புக். ஏடிஎம் கார்ட் எல்லாம் முன்னேற்பாட்டுடன் எடுத்துக் கொண்டிருந்தாள். தெருக்கோடியில் முருகேசன் இன்னோவா காரில் நண்பர்களுடன் காத்திருந்தான். முருகேசன் மலர்ந்த முகத்துடன் புன்னகைத்தான். அவள் காரில் உட்கார்ந்ததும், அவளுடன் பணி புரியும்   மாலா., “பைரவி,  நீ நல்லபடியாக  வந்து விட்டாய் . இப்போதுதான் எனக்கு நிம்மதி” என்று சொல்லி அவளுடைய கையைக் குலுக்கினாள்.  கார் திருச்சியை நோக்கிச் சென்றது. ”   காலைச் சிற்றுண்டி சாப்பிடும் நேரம் ஆகியும் பைரவி வராததால் , பைரவி சாப்பிட வா என்றுரேவதி இரண்டு மூன்று முறை அழைத்துவிட்டு பதில் எதுவும் கிடைக்காததால் அவள் அறைக்குள் நுழைந்தவள் மேசை மீது ஒரு கடிதம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். உடனே அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தவளுக்குத் துக்கி வாரிப் போட்டது . ஐயோ நாம் மோசம் போயிட்டோமே” என்று தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டாள். மேலேயிருந்து கீழே இறங்கி வந்த சந்தானத்திடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்து, ”பைரவி வீட்டை விட்டு ஓடிபோயிட்டா . முருகேசனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம். சுயமரியாதை கல்யாணமாம்.. நம்ம தலையிலே இடி விழுந்துட்டது” என்று அரற்றினாள். கடிதத்தைப் படித்த சந்தானத்தின் முகம் இருண்டது. துரோகி என்று கத்தினார். நம்ம சாதி சனத்துக்கு முன்னால் தலை குனிய வைசுசுட்டா. அவளை ....  இப்பவே நான் போலீஸ் ஸ்டேஷன் போறேன் என்று கிளம்பினார்.  அவர் கையைப்பிடித்துத் தடுத்த ரேவதி, ”நம்ம மானம் போயிடும். முதலிலே அலைப்பேசியில் தொடர்பு கொள்ளுங்க . அவ எங்கே இருக்கான்னு பாருங்க”என்றாள்.   அவள் சொன்னது அவருக்குச் சரி என்று படவே அலைப்பேசியில் பைரவிக்குத் தொடர்பு கொண்டார். அங்குப் பக்கத்திலிருந்த அலைப்பேசி சிணுங்கியது. பைரவி அலைப்பேசியை எடுத்துக்கொண்டு போகவில்லை என்று தெரிந்தது . “நம்ம உறவினர், சுற்றத்தார்  முன்னே எப்படி தலை நிமிர்ந்து நிற்பேன். தெருவிலே தலை காட்ட முடியாம பண்ணிட்டாளே கடன்காரி. அவளை நான் எப்படியெல்லாம் வளர்த்தேன். என்னைச் சாக அடிச்சுடாளே சிறுக்கி” என்றுரேவதி புலம்பினாள். கூசிக் குறுகி நூறு தேள் கொட்டினால் எப்படி வலிக்குமோ அப்படிப்பட்ட வலியுடன் இருந்தாள். அவளால் பைரவியால் ஏற்படுத்தப்பட்ட  அவமானத்தைத் தாங்க முடியவில்லை. அவளும்  சந்தானமும்  ரொம்ப நேரம் விவாதித்தனர். அவ வீட்டை விட்டு ஓடி விட்டது நிச்சயம் என்று தெரிந்து விட்டது. ”நான் அவள் அலுவலகம் போய் விசாரித்துவிட்டு வரேன்” என்று முத்துசாமி  கிளம்பினார். ரேவதியால் மனவுளைச்சலைத் தாங்க முடியவில்லை. அவள் தலையைத் தூக்கி ஃபேனைப் பார்த்தாள். அவள் உள்ளத்தில் ஒரு எண்ணம் ஓடியது. ஒரு புடவையை எடுத்து வந்து நாற்காலியில் ஏறி  மேலேயிருந்த ஃபேனின் கொக்கியில் முடிச்சுப் போட்டாள்.  புடவையைத் தன் கழுத்தில் இறுக்கிச் சுற்றினாள். சாகப் போகும் சமயத்தில் மனசுக்குள்,  ”பைரவி கல்யாணம் செய்துகொண்டு நன்றாக வாழ வேண்டும்” என்று வாழ்த்தினாள். .பைரவி, பை...ர …வி ’ என்று சொல்லிக்கொண்டே கழுத்திலிருந்தப் புடவை இறுக்கியதால்  அவள் மூச்சுத் திணறினாள். இறுதி மூச்சு விட்டதும் அவள் ஆத்மா உடலிலிருந்த வெளியேறி வானத்தை நோக்கிச் சென்றது. அவள் மரணிக்கும்  சமயத்தில் காரில் போய்க் கொண்டிருந்த பைரவிக்கு அம்மா நினைவு வந்தது. மனசில் இனம் புரியாத சோகம் ஏற்பட்டு கண் கலங்கியது. ” அம்மா என்னைக் காணாமல் நீ எப்படித் துடித்திருப்பே. நான் கல்யாணம் பண்ணி முடித்ததும் உன்னை வந்து பார்க்கிறேன். உன் ஆசி எனக்கு வேண்டும்” என்று நினைத்தாள். முத்துசாமி திரும்பி வீட்டுக்குள் நுழையும்போது ரேவதி ஃபேனில் புடவையை மாட்டி தூக்குப் போட்டு இறந்திருப்பதைக் கண்டு மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எல்லாம் வந்து விட்டனர்.  போலீஸ் வந்து விசாரித்த பிறகு பிணத்தைப் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றது..   மூன்று  மணி சுமாருக்குக் கார் திருச்சியில் மாலாவின் வீட்டுக்குப்  போய் சேர்ந்தது .  எல்லாரும் சிற்றுண்டி, காபி சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தனர். . மாலா பழம் பூ வாங்குவதற்காகக் கடை வீதிக்குச் சென்றாள். மாலை செய்தித்தாளில் “ மகள் வீட்டை விட்டு ஓடிவிட்டதால்  தாய் தூக்குப் போட்டு தற்கொலை என்னும் தலைப்புச் செய்தியைப் படித்து அதிர்ந்த மாலா பேப்பரை வாங்கி முழுவதும் படித்து பைரவியின் அம்மாவின் சோக முடிவை அறிந்து வருந்தினாள். பைரவியிடம் சொல்லிவிடலாமென்று முதலில் நினைத்தாள். அப்படிச் செய்ய வேண்டாம் .. கல்யாணம் நின்று விடும். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தினால். தப்பில்லை என்று அவள் மனசு சமாதானம் சொன்னது. அன்றிரவு கல்யாண வீட்டில் மூன்று பேர் உறங்கவில்லை. முருகேசனும் பைரவியும் பொழுதுவிடிந்தால் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று கல்யாணத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தனர். பைரவியின் பக்கத்தில் படுத்திருந்த மாலாவுக்கும் உறக்கம் வரவில்லை. பைரவியின் மேலுள்ள பாசத்தால்  உண்மையை மறைத்தாவது அந்தக் கல்யாணம் நடந்துவிட வேண்டும் என அவள் விரும்பினாள்.    அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு ஹாலில் பத்து பேர் நாற்காலியில் அமர்ந்திருக்க மாப்பிள்ளையும் மணமகளும் அருகருகில் அமர்ந்திருக்க மாலாவின் அப்பா தாலியை எடுத்து முருகேசனின் கையில் கொடுத்தார். மாப்பிள்ளை தாலி கட்டப்போகும் சமயம் வீட்டுக்கு வெளியே இரண்டு டிரைவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். நேற்று சென்னையில் பெண் வீட்டை விட்டு ஒடிட்டாள்னு அம்மா ரேவதி  தற்கொலை செய்துகொண்டாள் என்று செய்தித்தாளில் வந்திருக்கே. இங்கே பெண்ணுக்குக் கல்யாணம் நடந்தது கொண்டிருக்கிறதே. மணப்பெண்ணுக்கு விஷயம் தெரியாதோ” காதலுக்குக் காது உண்டு என்பதுதான் நிஜம். அவர்கள் பேசியது  பைரவி, முருகேசன் காதில் விழுந்தது. ”கல்யாணத்தை நிறுத்துங்க” பைரவி எழுந்து விட்டாள். “ வெளியே வந்து டிரைவரின் கையிலிருந்த செய்தித்தாளை வாங்கிப் பரபரப்புடன் படித்தாள். ”அம்மா என்னை விட்டுவிட்டு போயிட்டியே”  தேம்பித்தேம்பி அழுதாள் . மாலாவுக்கு கல்யாணம் நின்று போய்விடுமோ என்று கவலைப்பட்டாள். “அம்மா போனது எனக்கும் வருத்தம்தான். இப்போ என்ன செய்யலாம்னு நீ நினைக்கிறே” என்றாள் மாலா . நேரே வீட்டுக்குப் போகணும் . அவள் விருப்பப்படியே செய்யலாம் என்று முருகேசனும் சொல்லவும் அவர்கள் வந்த காரிலியே  நண்பர்கள் சென்னக்குத் திரும்பினர். முருகேசனின் அத்தை பெண்ணும் மனசு மாறி பைரவியை முருகேசன் திருமணம் செய்து கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பச்சை கொடி காட்டிவிட்டாள். ரேவதியின் மரணம் அவள் மனத்தை மாற்றி இருக்கிறது.    வீட்டுக்குள் நுழைந்த பைரவியையும் அவளுடைய நண்பர்களைப் பார்த்து முத்துசாமி “வாங்க” என்று சொல்லுகிற பாவனையில் தலை அசைத்தார். அன்பு கனியும் கண்களுடன் பைரவியின் கைகளைப் பிடித்திருந்த  முருகேசனைப் பார்த்தார்.  அப்பா தன்னைப் பார்த்ததும் கத்துவார், திட்டுவார் என்று எதிர்பார்த்திருந்த பைரவிக்குத் திகைப்பைக் கொடுத்தார். .. கலங்கிய கண்களுடன்  ”என்னை மன்னித்து விடுங்கள் அப்பா” என்றவளைப் பார்த்து, ”அம்மா உன்கிட்டே சொல்லிக்காம  போயிட்டா” என்றார்.    ”அ..ம்..மா, அம்மா போய்விட்டாள்” பைரவி  தந்தையைக் கட்டிக் கொண்டு அழுதாள். என்னாலேதான் ……. ”என்று விசும்பினாள். ”அம்மா என்னைப் பற்றி ஏதாவது சொன்னாளா அப்பா ?” அவள் இறப்புக்கு நான் தான் காரணம் ? கண் கலங்கினாள். ”அழாதேம்மா. நீ காரணம் இல்லை. அவள் சாவுக்கு நான் தான் காரணம் . மனித மனம் விசித்திரமானது. அம்மாவுக்கு உன் மேல் கொள்ளைப் பிரியம். அவள் போனதிற்கு . நீ காரணமில்லை.  நீ முருகேசனைக் கல்யாணம் செய்துகொள்வதைக் கூட அவள் ஆட்சேபனை செய்யவில்லை. , ஊரார் முன்னால் தலைகுனிய வேண்டுமே என்ற எண்ணம் அவளை மிகவும் வாட்டியது. மானத்தை உயிராக  மதித்ததால் தன்னை மாய்த்துக் கொள்ள முடிவு எடுத்தாள். காலைப் பிரேத பரிசோதனையிலிருந்து உடல்  வந்து அவளின் இறுதிச் சடங்கு எல்லாம் சிறிது நேரம் முன்புதான் முடிந்தது.” என்றார்.  ”பைரவியின் அம்மாவின் மறைவுக்கு நான் தான் காரணம் . என்னை அவள் காதலித்ததால்தான் வீட்டை விட்டு என்னுடன் ஓடி வந்தாள் ” என்றான் முருகேசன். ”நீங்கள் அவள் மரணத்துக்குக் காரணமில்லை” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இரண்டு பேர்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள் . நாங்கள் கட்சிக்காரர்கள் . திருமணத்திற்குத் தடங்கல் இருந்தால் சொல்லுங்கள் நாங்கள் எப்படியாவது உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறோம் என்று முருகேசனிடம் ஒருவர் சொன்னார். ”எங்க விஷயத்தை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்,.அதற்குத் தயவு செய்து அரசியல் முத்திரை குத்திவிடாதீர்கள் “ என்று அவ்விருவரைப் பார்த்து முத்துசாமி கைகூப்பியதும் அவர்கள் அவ்விடத்தை விட்டு விலகினர்.   ”அம்மா அவசர முடிவு எடுத்துவிட்டதாக எனக்குத் தோன்றுகிறது. வீட்டைக் காலி செய்துவிட்டு வெளியூர் போய் வசித்திருக்கலாம்  அல்லவா?” என்றாள்.  “செய்திருக்கலாம். அதற்குள்  உணர்ச்சி வசப்பட்டு திடீரென்று முடிவு எடுத்து விட்டாள்.. நம்மை மீளா துக்கத்தில் ஆழ்த்திவிட்டு போய்விட்டாள். தன்  உயிரைக் கொடுத்து என் மனசை மாற்றி விட்டாள்  ”   “அவள் சமூகத்துக்குப் பயந்துதான் உயிரை நீத்தாள். அவளைப் போல் யாரும் சாகக்கூடாது. நீ உடனே கல்யாணம் பண்ணிக்கொண்டால் அம்மாவின் ஆத்மா உங்களை வாழ்த்தும். தள்ளிப் போடாமல்  உடனே கல்யாணம் செய்துகொள்ளுங்கள்.. இந்தா, அம்மாவின் தாலி. உன் கல்யாணத்துக்கு.... என்று பைரவியிடம் அலமாரியிலிருந்து  பொன் தாலியை எடுத்துக்  கொடுத்தார். அப்போது பிரபல தினசெய்தி பத்திரிகை நிருபர்கள் இரண்டு பேர் ஒரு ஆண்  ஒரு பெண்   வந்தார்கள். நாற்காலியில் அமர்ந்தனர். பெண் நிருபர் காதல் தம்பதியைப் போட்டோ எடுத்தார். ”உங்களை மாதிரி கலப்புத் திருமணத்துக்கு ஒப்புதல் கொடுக்கும்  தந்தை இருந்தால் தமிழ் நாட்டில் கெளரவக் கொலையே நடக்காது, நீங்கள் முன்னோடியாக இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு  மிக்க மகிழ்ச்சி” என்றார் ஆண் நிருபர். அவர் மனத்தில் ரேவதியின் சாவுக்குப் ஒட்டு மொத்த சமூகம்தான்  பொறுப்பு என்று தோன்றியது. நாளைக் காலை செய்தித்தாளில் ”யார் பொறுப்பு?” என்னும் தலைப்பில் செய்தியைப் பிரசுரம் செய்ய வேண்டும் என்று  நினைத்தார்.   **********************                                   3. மேகத்துக்கும் தாகமுண்டு   கிருத்திகா சைதாப்பேட்டையில்  பேருந்து 5A வுக்காக காத்திருந்தாள். அவள் கிழக்குத் தாம்பரம் செல்ல வேண்டும். தி நகரிலிருந்து அந்த  பேருந்து  வந்து விட்டது.   அப்போது பகல் இரண்டு மணி இருக்கும் என்பதால் பேருந்தில் அதிகக் கூட்டமில்லை. ஆனாலும் கிருத்திகாவுக்கு நிற்க இடமில்லை. அவள் பெண்கள் பக்கம் நின்றிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் ஒரு நடுத்தர வயது பெண்ணும் அவளுடைய ஆறு வயது பெண்ணும் அமர்ந்திருந்தனர். கிருத்திகாவை அந்தப் பெண் வினோதமாகப் பார்த்தாள். தன் அம்மாவிடம்” யாருமா இவங்க ?”என்றாள். அதற்கு அந்தப்  பெண்மணி, “அவ அலி. அதாவது ஆணுமல்ல . பெண்ணுமல்ல.” என்றாள்.  இதைக் கேட்டதும் கிருத்திகாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. எங்களுக்கு இயற்கையாய் பெண் உணர்வு ஏற்படுவதால் நாங்கள் திருமங்கையாக மாறுகிறோம். அழகாக ’திருமங்கை’ என்று சொல்வதை விட்டுவிட்டு  ’அலி’ என்று சொல்கிறாளே.  படித்த முட்டாள்  என்று எண்ணினாள். அதற்குள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதால் ஒரு பெண்மணி எழுந்துவிடவே ஒரு வயதான அம்மாள் கிருத்திகாவுக்குத் தன் பக்கத்தில்  உட்கார இடம் கொடுத்தாள். கிருத்திகா இறங்க வேண்டிய இடம் வந்தது. அவள் இறங்கி தன் இருப்பிடம் நோக்கி நடந்தாள். அவள் நினைவு பின்னோக்கிச் சென்றது.  வசதி மிகுந்த குடும்பத்தில் பிறந்தவள். பி.காம் பட்டப் படிப்பு படித்திருக்கிறாள். பள்ளிப் பருவத்திலேயே பெண் தன்மையை உணர்ந்த இவளுக்குக் கல்லூரி காலத்தில் பெண்மைக்குரிய மாற்றம் வந்தது. மிகவும் ஒல்லியாகப் பார்ப்பதற்கு  அழகானவள். மென்மையானவள் கூட.பேசினால் தான் குரல் ஆண் குரல் போலிருக்கும். அவள் பூர்வீகப் பெயர் பாலகிருஷ்ணன். அவள் திருநங்கையாக இருப்பதை வீட்டில் விரும்பாததால் வீட்டை விட்டு வெளியே துரத்தப் பட்டாள். அவள் கிழக்குத் தாம்பரத்தில் வசிக்கும்   திருநங்கை காஞ்சனாவை அம்மாவாக ஏற்றுக் கொண்டாள். காஞ்சனா தாம்பரத்தில் ஒரு பெரிய வீட்டில் பத்து திருநங்கைகளுடன் வசிக்கிறார். பத்தோடு பதினொன்றாக கிருத்திகா அவர்களுடன் சேர்ந்து விட்டாள். திருநங்கைகள் ரயிலில் போய் இரந்து கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தினர். அவளுடைய  அறையில் இருக்கும் லதா, விஜி மற்றும் கூட வசிக்கும்  மாலதி, அகிலா ... எல்லோரும் மின்சார வண்டியில் பணம் கேட்கச் சென்றிருப்பதால்  காஞ்சனா அம்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.  . அம்மா  வார்த்தையை எல்லாத் திருநங்கைகளும் மதித்தனர். அம்மா  வீட்டை விட்டு எங்கும்  வெளியே போக மாட்டாள். வீட்டை விட்டு ஓடி வரும் திருநங்கைகளுக்கு அடைக்கலம் அளித்து தேவையான  உதவிச் செய்பவள். வெளியே போகும் திருநங்கைகள் மாலை திரும்பி வரும்போது அம்மாவுக்குக் காணிக்கையாக அவர்கள் வருமானத்தில் ஐந்து விழுக்காடு கொடுத்துவிடுவார்கள். திருநங்கைகளுக்குள் ஏதாவது பிரச்சினை வந்தாலும் அல்லது  காவல் துறையிலிருந்து பிரச்னை  வந்தாலும், காஞ்சனா தீர்த்து வைப்பாள். ”என்னடி கிருத்திகா? இன்னிக்கு சீக்கிரமாய் வந்துட்டே.உடம்பு சரியில்லையா? ” என்றாள் காஞ்சனா. ”அதெல்லாம் ஒண்னுமில்லை. நான் வந்த  பஸ்ஸில் ஒருத்தி என்னைப் பார்த்து ’அலி’ன்னு சொன்னா.அது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது. இவங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலேதான் திருநங்கைகளுக்கு  மதிப்பு கிடைக்கிறதில்லே. சமூகத்திலே இந்த  நிலைமை மாறுவதற்கு  ஏதாவது பண்ணனும்.” ”அதுக்கு என்ன பண்ணலாம்ன்னு நீ நினைக்கிறே ?” ”எனக்குத் தெரியல . நீங்க தான் ஏதாவது சொல்லணும்.” ”அப்பாவிகளை மிரட்டி பணத்தைப் பறிக்கும் திருநங்கைகள்  சிலர் இருப்பதால்தானே நமக்கெல்லாம் கெட்ட பெயர். யாராவது ஒருவர் அல்லது இரண்டு பேர் அப்படிச் செய்யலாம். எல்லாரும் அப்படிச் செய்வதில்லை. ” ”இருந்தாலும் திருநங்கைகளை கேலியாக சிலர் பார்க்கிறார்கள். சிலர் பயத்துடன் பார்க்கிறார்கள். சிலர் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். நம்மை எல்லாரும் கண்ணியமாக பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். சாதாரண திருநங்கை போல் கடை வீதிக்குப் போய் பணம் கேட்பது, மின்சார ரயிலில் போய் பணம் யாசிப்பது போல் இல்லாமல் நான் சாதித்து பெயர் எடுக்க விரும்புகிறேன். அதனால்   நல்ல வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அரசுப் பணிக்கான   தேர்வுகளை எழுதியுள்ளேன். எப்படியாவது அரசு வேலை எனக்குக் கிடைத்துவிடுமென்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காஞ்சனாவுக்கு அவள் நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினாள். கனவுள்ளவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறுவார்கள். இவள் பெரியதாக  நினைக்கிறாள். இவள் கனவு சீக்கிரம் நிஜமாகும் என்று அவளுக்குத் தோன்றியது.” ”நீ நினைப்பது ஒரு நாள் நடக்கும். விட்டு விடாமல் உன் தேடலை தொடர் . உன்னை மாதிரி நான்கு திருநங்கைகள் இருந்தால் போதும் . நாம்  சீக்கிரம் முன்னேறி விடலாம்.” ”சீக்கிரத்தில் வானத்தைத் தொட்டு விடலாம்” என்று சொல்லிவிட்டு கிருத்திகா தன் அறைக்குள்   நுழைந்தாள். சிறுது நேரத்தில் லதா, விஜி இருவரும் வந்துவிட்டார்கள். லதா பட்டப்படிப்பு படித்திருக்கிறாள். விஜி பன்னிரண்டாவது வரை  படித்திருக்கிறாள். ”இன்று பண வரவு அதிகம் என்றாள் விஜி . எனக்கும் பரவாயில்ல” என்றாள் லதா. எதையோ சிந்தித்துக்கொண்டிருந்த கிருத்திகாவைப் பார்த்து, எந்த உலகத்தில் இருக்கிறாய் ? என்ன ஆச்சு உனக்கு ? என்று விஜி கேட்டாள். இன்று  பேருந்தில்  வரும்போது ஒருத்தி என்னைப் பார்த்து ’அலி’ என்று சொல்லி விட்டாள். அது எனக்கு மிகவும் கஷ்டத்தைக் கொடுக்கிறது. நாம் ஏன் அவல வாழ்க்கையை நடத்த வேண்டும். நம்மால் நல்ல வாழ்க்கை வாழ முடியும். நாம் எல்லாம் சுற்றி திரிந்து பணத்தை யாசித்து வாழ்க்கை நடத்துவதால் நமக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. அந்த நிலைமை மாறவேண்டுமானால் நாம் நல்ல வேலைக்கு முயற்சி செய்ய வேண்டும்.   நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும். நான் காவல் துறையில் சேர முடிவு எடுத்திருக்கிறேன்.   அதைக் கேட்டு லதா , விஜி இருவரும் சிரித்தார்கள். “ அடி போடி பைத்தியமே ! யாராவது ஏதாவது சொல்லி கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் மனசிலே வைச்சுக்காதே. . எதோ போனாயா, நாலு பேர் தலையைத் தொட்டு நாலு காசு வாங்கினாயா , அன்றைய பொழுது கழிந்ததா என்று இருக்காமல் காவல்துறையில் சேருகிறேன், திருநங்கைகளின் மதிப்பை உயர்த்துகிறேன்  என்று கனவு காணாதே . உனக்கு யார் வேலைக் கொடுக்க காத்துகிட்டு இருக்காங்க.” என்று கேலி பேசினார்கள். கிருத்திகா அதைப் பொருட்படுத்தவில்லை. ”திருநங்கைகளின் சமூக ஏற்புக்காக நான் குரல் கொடுக்கப் போகிறேன்” என்று கூறிய அவளைப் பார்த்து முதல்லே நாங்க கூப்பிட்டா  எங்களுக்குக் குரல் கொடு. மத்ததெல்லாம் அப்புறம்...” என்றாள் லதா.   அடுத்த நாள் முதல் காலை உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஓடுதல் முதலியவற்றைச் செய்ய ஆரம்பித்தாள். காலை ஐந்து மணிக்கு எழுந்து விடுவாள். அரை மணி நேரம் நடைப்பயிற்சி. பிறகு தான் தங்கியிருக்கும் அறையிலேயே உடற்பயிற்சி செய்வாள். தினமும் தேர்வுக்காக    படிக்க ஆரம்பித்தாள்.  அவளுடன் கூட இருக்கும் தோழிகள் சலியூட் அடித்து என்று கிண்டல் செய்வார்கள். நம் கூட இருக்கும் ஒருவர் நம்மிடம் இல்லாத நல்ல பழக்கங்களுடன் இருந்தாலோ அல்லது வாழ்க்கையில் முன்னேற முயன்றாலும் மனசில் எழும் பொறாமையைத் தவிர்க்க முடியாது. இது இயற்கை . அதுபோலவே லதாவுக்கும் விஜிக்கும் மனசில் பொறாமை கொழுந்து விட்டு எரிந்தது. ”நீ மட்டும் என்னடி படிக்கணும், வேலைக்குப் போகணுமுன்னு சொல்றே. எஙகளைப் போல நீயும் இரேன். தினந்தோறும் தாம்பரத்திலிருந்து ரயிலில் கடற்கரை வரை ஒருமுறை போயிட்டு வந்தால் ஐந்நுறு கிடைக்கும் . ஒரு நாளைக்கு ஐந்து முறை போயிட்டு வந்தால் கணிசமா கிடைக்கும். என் செலவு போக  மிச்ச படுத்தும் பணத்தை என் வங்கிக் கணக்கிலே நான் சேர்த்து வைத்திருக்கேன்.” என்றாள் லதா. ”காலையிலே சீக்கிரம் கிளம்பிவிட்டாயானால் நாலு மணிக்குள் வீட்டுக்கு வந்திடலாம். அப்புறம் வேறே வேலையைக் கவனிக்கலாம்” என்று கண் சிமிட்டினாள் விஜி. அவள் சாயந்திரம் தன் காதலுனுடன் ஊர் சுற்றுவாள். அவள் ஒரு திருநம்பியைக் காதலிக்கிறாள். அவனைக் கல்யாணம் செய்ய போவதாய் இருக்கிறாள். வாழ்க்கையைத் தொடங்குவதற்கு   இவளிடம் ஒரு இலட்சம் பணம் கேட்டிருக்கான். இவளும் சேர்க்க ஆரம்பித்து விட்டாள். இன்னும் நான்கு மாதத்தில் அவன் கேட்ட பணம் கிடைத்துவிடும். அப்புறம் டும், டும் தான். தமிழ்நாடு காவல்துறை பணியிடத்துக்கு நடத்தப் பட்ட தேர்வில் கிருத்திகா பங்கேற்று தேர்வானார். அவளுக்கு இன்ஸ்பெக்டர் பதவிக்கு உத்தரவு வந்துவிட்டது. உத்தரவு வந்த அன்று கிருத்திகா வீட்டில்தான் இருந்தாள். அவளுக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. ஒருமுறை தன்னைக் கிள்ளிப் பார்த்தாள்.  கனவில்லை  நிஜம்தான் என்றதும் அவளுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. காஞ்சனா அம்மாவிடம் அந்த ஆர்டரைக் காண்பித்தாள். “அம்மா எல்லாம் உங்களால்தான். நீங்கள் எனக்கு அடைக்கலமும் ஊக்கமும் கொடுக்கவில்லையென்றால் என்னால் தேர்வில் வெற்றி அடைந்திருக்க முடியாது. நான் என்றைக்கும் உங்களை மறக்க மாட்டேன் . திருநங்கைகள் நலனுக்காக நான் குரல் கொடுக்கிறேன்” ”நீ திட்டமிட்டுப் படித்தாய் . வெற்றி அடைந்தாய். லதாவும் விஜியும் வரட்டும் . உன்னை ஓயாமல் கேலி செய்து கொண்டிருந்தார்கள். நீ சாதித்ததைப் பார்த்து நீ ஆகாயக் கோட்டை கட்டவில்லை என்பதைப் புரிந்துகொண்டு அவர்களும் உன் வழியைப் பின்பற்றுவார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது கண்ணு என்று அவள் கன்னத்தில் லேசாகத் தட்டினாள்.   கிருத்திகாவுக்கு ஒரு நப்பாசை. அண்ணா நகரில் இருக்கும் தன் வீட்டுக்குப்போய் தன் அம்மாவைப் பார்த்துவிட்டு தான் காவல் துறையில் சேர இருப்பதைச் சொல்லி விட்டு வரலாம் என்று கிளம்பினாள். நான்கு வருடம் கழித்து அவள் தாய் வீடு போகிறாள். மனம் பரபரப்பாய் இருந்தது.  என்ன இருந்தாலும் அம்மா இல்லையா? தன்னை விட்டுக் கொடுக்க மாட்டாள் என்று எண்ணினாள். அவள் வீட்டை அடைந்து அழைப்பு மணியை  அழுத்தினாள். அவள் அப்பாதான் கதவைத் திறந்தார். இவளைப் பார்த்ததும், ”பால கிருஷ்ணா, ஏண்டா இங்கே வந்தே போடா வீட்டுக்குள்ளே நுழையாதே” என்று கத்தினார். அவள் அம்மாவும் ”போடா நாயே”, வீட்டுக்குள் நுழையாதே என்று துரத்தினாள். கிருத்திகா கலங்கிய கண்களுடன், ”எனக்குக் காவல்துறையில் இன்ஸ்பெக்டர் வேலைக் கிடைத்திருக்கிறது அம்மா”  என்றாள். அம்மாவுக்கு மனசில் பாசம் பொங்கியது. ஆனால், கணவனை மீறி எதையும் செய்ய முடியாத நிலை . கலங்கிய கண்களுடன்   தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கிருத்திகா அம்மா இன்னும் தன் மீது வெறுப்புடன் இருப்பதாக நினைத்தாள். ”போடா, இனிமே இந்தப் பக்கம் வராதே. உனக்கும் எங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னைக்கோ அறுந்து போச்சு” என்று சொன்ன அப்பா கோபத்துடன் கதவைச் சாத்தினார். கிருத்திகா வருத்தத்துடன் தன் இருப்பிடம் வந்தடைந்தாள். கிருத்திகா தேர்ச்சி பெற்று காவல்துறையில் சேர இருப்பதை  அறிந்த லதாவும் விஜியும் மிகவும் திகைப்பு அடைந்தார்கள். ”நாங்கள் நீ தேர்வு ஆக மாட்டாய் என்று நினைத்திருந்தோம். நீ வெற்றி பெற்றுவிட்டாய்.  எங்களில் நீ தனித்துவமாய் இருக்கிறாய். உன்னை மனமாரப்  பாராட்டுகிறோம்” என்றார்கள். கிருத்திகா வேலையில் சேர்ந்து ஒரு மாதம் ஆகி விட்டது. அவள் தாம்பரத்திலிருந்து வெளியே வந்து இப்போது  சைதாபேட்டையில்  தனியே வசித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு நாள் அவள் வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் ஒரு கடை வாசலில் பத்துபேர் கும்பலாய் நின்றிருந்ததைப் பார்த்து தன் இருசக்கர வண்டியை நிறுத்திவிட்டு அருகில் சென்றாள். அங்கு விஜியும் லதாவும் நின்றிருந்தார்கள். ” நீ நல்லா இருக்க மாட்டே” என்று கடைக்காரனைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். “ ஏண்டி கடைக்காரனைத் திட்டி கொண்டிருக்கீங்க” என்று கிருத்திகா கேட்டாள். அவள் அணிந்திருந்த உடையைப் பார்த்து முதலில் பயந்து நடுங்கிய  இருவரும் அவளது குரலைக் கேட்டு தெளிந்து ,”ஹை கிருத்திகா, எப்படி இருக்கே?” என்று நலம் விசாரித்தனர். கடைக்காரன் பணம் தராததால் அவனைத்  திட்டி கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து ”அப்படிச் செய்யாதே. ஏதாவது வேலையில் சேர்ந்து உருப்படுகிற வழியைப் பார். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்றாள் . ”அப்படியே செய்யறோம் அக்கா. எங்களுக்குச் சரியான வழிகாட்டுதல் இதுவரை இல்லை. உன்னை மாதிரி நாங்களும் வேலையில் சேர முயற்சி செய்கிறோம்” என்றாள் லதா.   இவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த  கடைக்காரனும் மனசு மாறி  புன்சிரிப்புடன் கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு பத்து ரூபாயை எடுத்து லதாவின் கையில் கொடுத்தான். அவர்களுடன் சில நிமிடங்கள்  பேசி விட்டு ”அப்புறம் உங்களைப் பார்க்கிறேன்” என்று கிருத்திகா கிளம்பி விட்டாள். அன்று மாலை கிருத்திகா வீடு வந்ததும் சீருடையை மாற்றிச் சேலையை அணிந்து கொண்டு  காஞ்சனா அம்மாவை பார்க்கப் புறப்பட்டாள். அவள் ஏறிய பேருந்து 5A . என்ன ஆச்சர்யம் !  முன்பு ஒரு நாள்  பார்த்த  பெண்மணியும் சிறுமியும் இன்றும் அதே இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஒரு வேளை அவர்கள் தி.நகரில் பேருந்து கிளம்பும்போதே அமர்ந்து வருகிறார்களோ என்னவோ? கிருத்திகாவைப் பார்த்ததும், ”ஆண்டிக்கு இடம் கொடு” என்று சிறுமியை மடி மேல் அமர்த்திக் கொண்டாள் அந்தப் பெண். கிருத்திகா உட்கார இடம் கிடைத்தது. ”தனக்கு இடம் கிடைத்தது போல் மற்ற திருநங்கைகளுக்கும் சமூகத்தில் நல்ல இடமும் மரியாதையும் கிடைக்க வேண்டும். அதற்காக இனி  பாடு பட வேண்டும்” என்று  எண்ணினாள்.   **********************                                         4. பாசக்கயிறு   “அவளைத்தான் கல்யாணம் கட்டிப்பேன்.” என்றான் குமார். தூக்கி வாரிப் போட்டது சங்கரிக்கு. ”குமார் என்னடா சொல்றே ?  நிஜமாதான் சொல்றியா என்னாலே நம்பவே முடியலே . ” ”அம்மா உண்மையைத்தான் சொல்றேன். அவளைத்தான் கல்யாணம் கட்டிப்பேன்.”  ”ஏண்டா தலையிலே கல்லைப் போடறே . அவ நாசமாப் போக . உன் மேல் வைச்சிருந்த நம்பிக்கையை குழித்  தோண்டி புதைச்சிட்டியே” என்று புலம்பினாள்.  ”என்ன ஆச்சு? சங்கரி” என்று கேட்ட வெங்கடாசலத்திடம், ”கப்பல் முழுகி போச்சு. தலையிலே இடி விழுந்துட்டுதுங்க. குமாரும் நம்மை மோசம் பண்ணிவிட்டான். நீங்களே அவனிடம் பேசிப் பாருங்க. அவன் அலைப்பேசியே கதியாய் இருக்கிறானே, இப்படி ஏதாவது நடக்குமென நினத்தேன். நான் நினைத்தது போல் நடந்து விட்டது” என்று கதறினாள். ”மகள்  கஸ்தூரி நமக்குக் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. அதற்குள் இன்னொன்னா?”என்று வெங்கடாசலம் திடுக்கிட்டான் .வெங்கடாசலம் தன் மகனிடம் கெஞ்சினான். கோபமாய் கத்தினான் .  குமாரின் மனத்தை அவனால் மாற்ற முடியவில்லை. வெங்கடாசலம் ஜோஸ்யரைப் பார்க்கப் புறப்பட்டான். அவர்  கரூரில் பஜார் வீதியில் உரக்கடை வைத்திருக்கிறார். காலையில் கடைவீதிக்குப் போனால் இரவு ஒன்பது மணிக்குத்தான் திரும்புவார். ஜோசியத்தில் அதிக நம்பிக்கை உடையவர். சங்கரி எதிர்மறை எண்ணங்கள் அதிகம் உள்ளவள். எதெற்கெடுத்தாலும் புலம்பும் குணமுடையவள். அவர்களுக்கு ஆசைக்கு ஒரு மகள் கஸ்தூரி . ஆஸ்திக்கு ஒரு மகன் குமார். மகள் எம்.பி.ஏ படித்திருக்கிறாள் என்ற பெருமையில் இருந்தார் வெங்கடாசலம். ஆனால் அவளோ காதல் நோயால் தாக்கப்பட்டாள். அதே தெருவைச் சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த ஒருவனை மனமாற காதலித்தாள். அவள் காதலைக்  காரணம் காட்டி உறவினரும், தெரிந்தவர்களும் அவளைப் பழித்தனர். தூற்றினர். அவள் காதல் குறைந்ததா? இல்லை. அது பரந்து  வளர்ந்து வானத்தைத் தொட்டு விட்டது.  மறுத்தால் அவள் வானத்துக்குள் போய் விடுவாள். ஆறு மாததிற்கு முன் விருப்பமில்லாவிட்டாலும் வேறு வழியில்லாமல்  வேண்டா வெறுப்பாக மகளுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தார்கள்.  தனக்குப் பிடித்தவனைத் திருமணம் செய்து கொண்டு இப்போது சமையலறையில் கரண்டியும் கையுமாக இல்லத்தரசியாக இருக்கிறாள். வெங்கடாசலத்துக்கு  ஜோசியத்தில் நம்ம்பிக்கை அதிகம். வாழ்க்கையில் சிறு இடையூறு  வந்தாலும்  ஜோசியர் வீட்டில் தவம் இருப்பார். அவர் சொல்லும் பரிகாரத்தைச்  செய்து பிரச்சனையைச் சமாளித்து விடலாம் என்பது அவர் எண்ணம். . ”வீணாக ஜோஸ்யம் என்று போய் குழம்பி விடுவதைவிடக் கடவுளிடம் வேண்டிக் கொள்ளலாமே அப்பா” என்பான் குமார் . அவர் கேட்டால்தானே. வீட்டுக்குள் நுழைந்த வெங்கடாசலத்திடம், “ ஏங்க ஜோசியர் என்ன சொன்னார் ? “ என்று கவலையுடன் கேட்டாள் சங்கரி. குமாரின்  ஜாதகத்தை இரண்டு ஜோசியரிடம்  காண்பித்தும் யாரும் அவர் நினைத்த மாதிரி சொல்லவில்லை.   ”நமக்கு நேரம் சரியில்லை என்று எல்லா ஜோசியரும் சொல்றாங்க . ” ”ஏதாவது பரிகாரம் செய்ய முடிந்தால் செய்துடலாமே.” ”பரிகாரம் சொல்லி இருக்கார். முக்கியமா அவனை ஜாக்கிரதையாய் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.” ”என் தம்பி பார்த்திபன்  கிட்டே பேசிப் பாருங்க. அவன் ஏதாவது செய்து தடுத்துடுவான். அவனை உடனே வரச் சொல்லுங்கள்.” அவர் மனதில் ஒரு திட்டம் உருவாகியது. உடனே பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தன் மைத்துனன் பார்த்திபனுக்கு அலைப்பேசியில் தொடர்பு கொண்டு  பேசினார். பார்த்திபனை உடனே காரை எடுத்துக்கொண்டு கிளம்பி வரச் சொன்னார். அப்போது கஸ்தூரி வீட்டுக்குள் வந்தாள். அவளைக் கண்டதும் சங்கரி, வா, நீ ஆரம்பிச்சு வைச்ச.  காதல் தொடர்கதையா தொடருது இந்த வீட்டில். உன்னைப்போல் உன் அண்ணனும் காதலிக்கிறான். அந்தப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்வேன் என்று அடம் பிடிக்கிறான். ”அண்ணன் தப்பா எதுவும் செய்யலையே.  காதலிப்பவருக்குத்தான் காதலின் அருமை தெரியும். காதல் இல்லையேல் சாதல் ” அப்படியா? அப்படியா ? எனக்குத் தெரியாததைப் போல சொல்ல வந்துட்டா. அவன் கிட்டே பேசு. அவனை மாற்ற முயற்சி செய் . கஸ்தூரி அண்ணன் இருந்த அறைக்குப் போய் அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவள் வெளியே வரும்போது அவள் முகத்தில் ஏமாற்றம்தான் தென்பட்டது . ஏண்டி அண்ணன் என்ன சொல்றான். ”சொல்றான் முயலுக்கு மூணு காலுன்னு. அவன் மாறவே மாட்டான் அம்மா. அவன் மட்டுமில்லை. காதலிக்கறவங்க யாரும் தன் காதலைப் பெற்றோருக்காகத் தியாகம் செய்வதில்லை. என்னாலே முடிஞ்சதை சொல்லிவிட்டேன். இனிமே அவன் பாடு. உங்க பாடு.” அதற்குள் அவளுடைய அலைப்பேசி சிணுங்கியது. அவள் போனை எடுத்தாள். அவள் கணவன் ஏதோ கேட்டிருக்கான். அவள், போங்க, எனக்கு வெட்காமாயிருக்கு என்றாள். ”என்னடி சொல்றார்? உன் கணவர் . ஏன் இப்படி வெட்கப்படறே ?.” ”அவர் உடனே என்னை வரச் சொல்றார். நான் இல்லாமல் அவரால் இருக்க முடியலையாம் . “. “அட உன் மேலே அவ்வளவு ஆசைன்னு சொல்லு . “. கஸ்தூரி மீண்டும் போய் குமாரிடம் பேசிவிட்டு அவள் தன் வீட்டுக்குப் போய் விட்டாள். குமார் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தது வெங்கடசலத்தின் காதில் விழுந்தது . ’உடனே வருகிறேன்’ என்று அவன் சொல்லியது அவன் காதலித்த ஊர்மிளவிடம்தான் இருக்கும். அவன் அவளைப் பார்க்கப் புறப்பட்டுப் போகப்போகிறான் என்று ஊகித்தார். அப்போது பார்த்திபனும் , ”மாமா அவசரமாய் கூப்பிட்டிங்களே, என்ன செய்தி?” என்று கேட்டுக்கொண்டே வந்தான். எல்லாம் குமார் சமாசாரம்தான். அவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் அந்தப் பெண்ணைத்தான் கட்டிப்பேன் என்று சொல்றான். ஜோசியரிடம் போய் கேட்டேன். அவர் இன்னும் ஒரு மாதம் தள்ளிடுத்துன்னா ஜென்மத்திலே குரு வந்து உட்கார்ந்து விடுவான். அப்புறம் நாம் பார்த்துச் சொல்ற பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்வான் என்று சொல்கிறார். நீ அவனை இரண்டு தட்டு தட்டி உன் வீட்டுக்கு அழைத்துசெல் . ஒரு  மாசம் வீட்டுக் காவலில் வைத்திரு . ஆடி மாசத்தைக் கடந்துவிட்டால் போதும் என்றார். ”பார்த்திபா, நீதான் அவனை வழிக்குக் கொண்டு வரவேண்டும். நாங்க சொன்னால் அவன் கேட்க மாட்டேன் என்கிறான்” என்றால் சங்கரி. பார்த்திபன் குத்து சண்டை வீரன் போலிருப்பான்.  அச்சத்தைத் தரும் உருவம். ”அவன் எங்கே இருக்கான் ? மாமா” ”இப்போது அவன் அறையில் இருந்துதான் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். போய் பார்.” பார்த்து விட்டு திரும்பி வந்தான் பார்த்திபன். ”அவன்  இல்லையே மாமா”  அப்போ அவன் வருங்கால மாமனார் வீட்டுக்குத்தான் போயிருக்க வேண்டும். அலைப்பேசியில் பேசும்போதே நினைத்தேன். வா ஊர்மிளா வீட்டுக்குப் போகலாம். எல்லோரும் பார்த்திபன் காரில் ஊர்மிளா வீட்டை அடைந்தனர். காரை விட்டு இறங்கி குமார் இப்போது இருக்கும் வீட்டுக்கு  எதிரே யாரும் பார்க்காத மாதிரி  நின்று அவ்வீட்டை உற்று நோக்கினர். குமார் வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான். அவன் தன்  வருங்கால மாமனாரிடம் கைகூப்பி எதோ சொல்ல அவர் கோபமாய் கத்திக் கொண்டிருந்தார்.  குமார் நீல வண்ண சட்டை அணிந்திருந்தான். அவன் வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் போய்க் கொண்டிருந்தான். அவனைப் பிடிச்சு  கார்லே போட்டுண்டு உன் வீட்டுக்குப் போய்விடு. ஒரு மாசம் எங்கேயும் வெளியே விடாதே. நான் நேரே என் வீட்டுக்குப்  போறேன். வெங்கடாசலம் மைத்துனரிடம் பொறுப்பை ஒப்படைத்த நிம்மதியுடன் நகர்ந்தார். குமார் அருகிலுள்ள ஓட்டலுக்குள் நுழைந்தான். இட்லிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தான். இட்லி, காபியைச் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க  வந்தான். அப்போது அவனுக்கு முன்பாக பணம் கொடுத்துவிட்டு வெளியே போனவன் நீல சட்டை போட்டுக்கொண்டு குமாரைப் போலவே இருந்தான். குமார் ஐநூறு ரூபாயைக் கொடுத்து மீதி  சில்லறை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். காரில் இருந்த பார்த்திபனுக்கு நீலசட்டைக்காரன் ஓட்டலிருந்து வெளியே வந்தது தெரிந்தது. காரை அவன் பக்கத்திலே போய் இடிக்கிற மாதிரி நிறுத்து என்று சொன்னான். நீலசட்டைக்காரனைப் பிடித்து காரில் தள்ளி கதவைச் சாத்தியதும் கார் விர்ரென்று கிளம்பியது. “என்னை எங்கே கொண்டு போறீங்க ? என்னைக் காப்பாத்துங்க” என்று நீல சட்டைக்காரன் அலறியதும் பார்த்திபனுக்கு செய்த தவறு உறைத்தது. குமார்னு நினைச்சு வேறே யாரையோ காரிலே ஏத்திட்டோம் என்பதைப் புரிந்து காரை நிறுத்தச் சொன்னார். ”சாரி தம்பி ஆள் மாறாட்டம் ஏற்பட்டு விட்டது” எனறு அந்த இளைஞனை இறக்கிவிட்டுத் திரும்பி ஓட்டலின் அருகில் வந்தார். குமார் அங்குக் காணவில்லை. அதற்குள் அவன் ஆட்டோவில் ஏறி வீட்டுக்குப் போய் விட்டிருக்க வேண்டுமென்று நினைத்து தன் தங்கை வீட்டை நோக்கிக் காரை விடச் சொன்னார். வெங்கடாசலம் வீட்டுக்குப் போகும்முன்பே குமார் வீட்டுக்குள் போய்விட்டிருந்தான். அவர் வீட்டுக்குள் நுழையும்போது சங்கரி அவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.  கோவிலுக்குப் போய்விட்டு வந்த கஸ்தூரியும் அங்கு  இருந்தாள். அவனைப் பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சியாய் இருந்தது மாமனுடன் காரில் போயிருக்க வேண்டியவன் இங்கே இருக்கிறானே என்று.  “ பாருங்க, குமார் மனசு மாறிட்டான். அவன் நாம்ப சொல்ற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சம்மதித்துவிட்டான். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்குதுங்க” என்றாள் சங்கரி. அவரால் நம்ப முடியவில்லை. ”என்னடி சொல்றே?நீ சொல்றது நிஜம்தானா ? குமார்  நீ மாமானார் வீட்டுக்குப் போனது எதுக்கு? ”அப்பா, நான் அவர் வீட்டுக்குப்  போனது என் காதலியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு வரதான் போனேன். வேண்டாம்னு போனிலே சொல்றது எனக்குச் சரியாய் படலே. ” ”என்னுடைய மானத்தைக் காப்பாத்துவதற்காகத்தானே நீ உன் காதலை விட்டுக் கொடுத்தாய். உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன் மகனே. ஒரு மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையை நீ செய்திருக்கிறாய்” என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். ”உங்களுக்காக நான் என் காதலை விட்டுக்கொடுக்கவில்லை அப்பா. என் தங்கைக்காக அவள் மேல் நான் வைத்திருக்கும் பாசத்திற்காகத்தான் அப்படிச் செய்தேன்.அவள் மேல் எனக்கு இருந்த பாசம் என் காதலைத் தியாகம் செய்ய வைத்தது. ” ”குமார் நீ என்னடா சொல்றே? அப்படின்னா நீ எனக்காக அதைச் செய்யவில்லையா? தங்கைக்காகத்தான் நீ உன் காதலியை வேண்டாமென்று ஒத்துக் கொண்டாயா ? பெத்த மனம் பித்து.பிள்ளை மனம் கல் என்பார்கள். எங்களால் முடியாததை  பாசமலர் தங்கை சாதித்து விட்டாள். அவள் கட்டிய பாசக் கயிறு உன்னைப் பலமாகப் பிணைத்து விட்டது. எப்படியோ நீ மனசு மாறிவிட்டாய். அதுதான் வேண்டும் எங்களுக்கு. இதுவரை ஜோசியத்தின் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தேன்.  ஜோசியர்களை பார்ப்பதில் நேரம்தான் வீண் என்று இப்போது தெரிந்து கொண்டேன். இனிமேல் ஜோசியர் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டேன்.”  “ அண்ணா அப்பா அம்மாவுக்கு கஷ்டம் கொடுத்து நாந்தான்  காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கொண்டேன். இப்போது நீயும் காதல் திருமணம் செய்து கொண்டால் அம்மாவாலே தாங்கமுடியாது அப்பாவால் தெருவில் நடக்க முடியாது.. மானம் போய்  உயிர்   வாழனுமான்னு உயிரை மாய்த்துக் கொண்டால் என்ன செய்வது?.   அதனாலே  காதல் திருமணத்தைச் செய்யாதே, கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் என்று என் தங்கை  என்னிடம் கதறினாள். அவளுக்கு என் மேல் பாசம் அதிகம்.  நான் சிறியவனாக இருந்த போது தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்  அப்பளத்தில் பாதியை  அன்புடன் தருவாள். . அவள் கெஞ்சிக் கேட்டதும் அவளுக்காக நான் ஒப்புக் கொண்டேன். அவளுடைய பாசம் என்னைக் கட்டிப் போட்டு விட்டது. நான் என் முடிவை மாற்றிக் கொண்டேன். என் காதலியிடம் முடிவைச் சொல்ல   அவள் வீட்டுக்குப்போய் அவள் அப்பாவிடம் காரணத்தைச் சொல்லிவிட்டு வந்தேன். அவர் நிலைமையைப் புரிந்து கொண்டார். அவளுக்கு ஏமாற்றம்தான் . என்ன செய்ய முடியும் ?  நான் வேறு கல்யாணம் செய்யச் சம்மதம் கொடுத்து விட்டாள். “உங்கிட்டே ஒண்ணு  கேட்கிறேன். உன் காதல் வலுவானது என்று நினைத்தேன். அவளோடு வெளியே சுற்றி விட்டு அவளைக் கைவிட்டு  திடீரென்று அவளுக்குத் தாங்க முடியாத அதிர்ச்சியைக் கொடுத்து விட்டாயே” என்றார் வெங்கடாசலம் . ”நாங்கள் இருவரும் அலைப்பேசியில் பேசியதோடு சரி . வெளியிலே எங்கும் போனதில்லை. நான் அவ வீட்டுக்குப் போய் படித்திருக்கேன். அவ நம்ம வீட்டுக்கு வந்திருக்கா. அதனாலே இதை அவ பெரிசா எடுத்துக்கல. அவள் நல்லவள் . ஒரு பெண்ணுக்காக ஒரு பெண் விட்டுக்கொடுத்து விட்டாள்.”. ”எனக்காக  என் அண்ணா எது வேண்டுமானாலும் செய்வான் ” என்றாள் சங்கரி. பார்த்திபனைக் காணோமே. இன்னும் வரவில்லையே. அவன் குமார் என்று நினைத்து  வேறு யாரையாவது கடத்திக்கொண்டு போய் விட்டானோ? என்று கவலையுடன் வாசலை நோக்கினார் வெங்கடசாலம். கஸ்தூரி, கண்களில் நீர் மல்க அண்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டு, ”எனக்காக உன் காதலை நீ விட்டுக் கொடுத்தாயே.. நீ செய்தது மிகப்பெரிய தியாகம் அண்ணா. என் உயிர் உள்ளவரை உன்னை நான் மறக்க மாட்டேன்.” என்றாள். கோவில் பிரசாதமான குங்குமத்தைப் பாசத்துடன் அவன் நெற்றியில் இட்டாள். அவள் பேசியதைக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்த பார்த்திபன், ” சபாஷ் ! கஸ்தூரி எங்களாலே  முடியாததை நீ சாதிச்சிட்டே ! மாப்ளே , காதல் என்ற பெயரில் பெற்றோர் சம்மதம் கொடுக்காவிட்டால் காதலர்கள் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்யறதோ இல்லை தற்கொலை செய்து வாழ்வை முடித்துக் கொள்வதோ இல்லாமல் நம்ம குமார் விஷயத்தில் எல்லாம் சுபமா  முடிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. “ என்று வெங்கடாசலத்தின் கையைக் குலுக்கிவிட்டு ”என் தங்கை கண்ணில் கண்ணீர் வந்தால் என்னால் பொறுக்க முடியாது” என்றான் பாசத்துடன். சங்கரியின்  கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவள் குதூகலத்துடன் பார்த்திபனைப் பார்த்து  ”ஆனந்தக் கண்ணீர் அண்ணா” என்றாள்.   அங்கெழுந்த ஆனந்த சிரிப்பலையில் எல்லாரும் மிதந்தார்கள்.                                                           5. நீயுமா மகனே ?   காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய மாத்திரைகளைச் சிவராமன் விழுங்கித் தண்ணீர் குடித்தார். அவர்  ஒரு நாளில் சாப்பிட வேண்டிய மாத்திரைகள் ஏராளம் . காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட தையிராய்ட் மாத்திரை, சாப்பிடுவதற்கு முன் சர்க்கரைக்கு ஒரு மாத்திரை, சாப்பிட்ட பிறகு  லிவருக்கு ஒன்று, இதயத்திற்கு, முட்டி வலி, இரத்த அழுத்தம், உடல் சக்திக்கு என்று ஒருநாளைக்குக் குறைந்த பட்சம் பதினைந்து  மாத்திரைகளைச் சிரமப்பட்டுச்  சாப்பிடுவார். அவர்  உடம்பில் இல்லாத நோய்களே இல்லை என்று சொல்லலாம். நடமாடும் பல்கலைக் கழகம் என்பதுபோல் அவர் நடமாடும் நோயகம்.  தங்கம்  பொறுமையாய் மருந்து பெட்டியிலிருந்து மாத்திரையை எடுத்துத் தருவாள். சிவராமனும் அவர் மனைவி தங்கமும்  மாம்பலத்தில் ஓர்  அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கிறார்கள் . சிவராமன் இரண்டு வருடம் முன்புதான்  தனியார் நிறுவனத்தில் செய்துகொண்டிருந்த  வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு ஊதியம் கிடையாது.    ஒரே பையன் சங்கர் மேடவாக்கத்தில் வசிக்கிறான். . கல்யாணம் ஆகி விட்டது . தனியார் கம்பெனியில் மேனேஜராக வேலை. காலை எட்டு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் இரவு எட்டு மணிக்குத் தான் வீட்டுக்குத் திரும்புவான். மனைவி கீதா மாதர் சங்கத்திலும் அனாதை ஆசிரமத்திலும் பொதுத்தொண்டில்  நேரத்தைச் செலவழிக்கிறாள். ”நான் வாழும் வாழ்க்கையை நேசிக்கிறேன். நான் நேசிக்கும் வாழ்க்கையை வாழ்கிறேன்” என்பாள். பிச்சைக்காரக் குழந்தைகளை எடுத்து வளர்க்கும்  அறக் கட்டளையில் அவள் ஒரு டிரஸ்டி . அது சம்பந்தமாக அவள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர எல்லா நாட்களிலும்    அந்த அறக்கட்டளையின் காப்பகமிருக்கும் ஆவடிக்கு 35 கிலோ மீட்டர் துரத்தை  அவளே காரை ஓட்டிக் கொண்டு  போய் வருவாள் .  ஒரே பையன் ராகுல் பிளஸ் டு படிக்கிறான். அவனே எல்லாவற்றையும் படித்துக் கொள்வான். என்னுடைய உதவி அவனுக்குத் தேவையில்லை. அவனுக்கு டியூசன் வைத்திருக்கிறேன். அது போதும் என்பாள். இந்த உலகத்தில் அவளுக்கு இணை யாருமில்லை என்று நினைப்பவள். . யாரையும் லட்சியம் செய்யாமல் எடுத்தெறிந்து பேசுவாள். . மாமனார் , மாமியாரிடம் ஒதுங்கியே இருப்பாள். எப்போவாவதுதான் அவர்களைப் போய்ப் பார்ப்பாள். வீட்டில் அவள் வைத்ததுதான் சட்டம். சங்கர் அவள்  சொல்வதை  எதிர்த்துப் பேச மாட்டான். பேசவும்  முடியாது. ஒருநாள் ” மூச்சு விட முடியல. ரொம்பக் கஷ்டமாயிருக்கு” என்று தங்கம் முனகினாள். சிவராமன் அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார். . ”இவங்க இன்னும் இரண்டு நாள் ஐ சி யு வில் இருக்கணும் . அப்போதுதான் எதுவும் சொல்ல முடியும்”என்று டாக்டர் சொன்னதும் “சரி டாக்டர் “என்றார் சிவராமன் , “சீக்கிரம் சரியாயிடுமா டாக்டர்?”என்று வினவினார். ”48 மணி நேரம் கழித்துத்தான் சொல்ல முடியும்” சொல்லிவிட்டு டாக்டர் ரவுண்ட்ஸ் போய் விட்டார்.   ஆ..ஆ... ஆ...தங்கம் வலியால் துடித்தாள்.  “ கீதா வரவில்லையா ?” என்றாள். ”அவள்  காப்பகத்திலோ அல்லது மாதர் சங்கத்திலோ இருப்பாள்” என்றான் சங்கர் ராகுலுக்கு வீட்டில் முழு சுதந்திரம் உண்டு. அவனை யாரும் படியென்று சொன்னதே கிடையாது. வீட்டில் அவன் அப்பா, அம்மா இருவரும் அவர்கள் வேலையில் ஈடுபட்டிருப்பதால் அவனுக்கு ஏதாவது பாடத்தில் சந்தேகம் வந்தால் கூட நண்பர்களிடமோ அல்லது டியூஷன் டீச்சரிடம் கேட்டுத் தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வான். இரவு கீதா டீ போட்டுக்கொண்டு ராகுலின் அறைக்குள் நுழைந்தாள். அவனிடம் டீயைக் கொடுத்து விட்டு இரவு ரொம்ப நேரம் படிக்காதே. காலையில் சீக்கிரம் எழுந்து படி என்று சொன்னாள். அவன் டீயைக் குடித்து முடித்ததும் அங்கிருந்து நகர்ந்தாள். அவள் மறைந்ததும் அவன் அலைப்பேசியை எடுத்து வைத்துக் கொண்டு அதில் மூழ்கினான். அவன் இப்போதெல்லாம் அலைப்பேசியில் வெகுநேரம் அமிழ்ந்து விடுகிறான். . அவன் படிக்கிறான் என்று அவன் பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,அவன் அலைப்பேசியில் விளையாடிக் கொண்டிருப்பான். அவனைப் அலைபேசியிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்று கீதாவுக்கு தோன்றவில்லை. இரவு சங்கர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கீதாவைப் பார்த்துக் கேட்டான். ”என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லையே. ஆஸ்பத்திரிக்கு நீ ஏன் போய் பார்க்கல. ” அதெல்லாம் என்னாலே முடியாது. எனக்குத்தான் எப்போதும்வேலையிருக்கே. மாதர் சங்கம் அல்லது காப்பகம்.. என்று இழுத்தாள்.  . சங்கர் அவளைக் கோபத்துடன் பார்த்தான். அடுத்த நாள் அவள்  வழக்கம் போல் காப்பகத்துக்குக்  கிளம்புவதைப் பார்த்த அவன் ”  நீ  செய்வது உனக்கே நல்லா இருக்கா, கீதா?” என்று கோபத்துடன் கத்தினான். ”நான் என்ன செய்துவிட்டேன்னு இப்படி கத்தறீங்க ”. ”நான் உனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கேன். உன்னை மதிக்கிறேன்.. ஆனால் நீ எங்க அம்மாவைக் கொஞ்சங்கூட பொருட்படுத்தாமல் எப்போதும் காப்பகமே கதியாக இருக்கிறாய். ஆஸ்பிட்டலில் நீ அம்மாவை  பார்க்க வரவில்ல. என் மனசுக்கு ரொம்பச் சங்கடமாயிருந்தது. இப்போ உடனே காப்பகம் கிளம்பி விட்டாய். உனக்கு மனச்சாட்சி என்பதே கொஞ்சங்கூட இல்லையா? ”. ”நான் மனித நேயத்தைப் பார்க்கிறேன். அநாதை குழந்தைகள் காப்பகத்துக்காக உழைக்கிறேன். ஊரார் பிள்ளையை வளர்த்தால் நம் பிள்ளை தானாய் வளரும் என்பது உங்களுக்குத் தெரியாதா? அம்மாவைப் பார்த்துக் கொள்ள அருமை புத்திரன் நீங்கள் இருக்கும்போது நான் எதற்கு?  பிச்சைக்கார குழந்தைகளுக்கு யார் இருக்காங்க.? என்னுடைய லட்சியம்  சேவை செய்வது. நான் பொதுத்தொண்டு செய்வதைத் தடுக்காதீங்க” . ”நாசமாப் போச்சு. ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன்  பிடில் வாசித்தது  போல், என் அம்மா இன்றைக்கோ நாளைக்கோனு ஆஸ்பத்திரியில் இருந்தபோது அவளைக் கவனிக்காமல் நீ பாட்டுக்கு அநாதை பிள்ளைகள், காப்பகம்னு ஊர் சுத்தினே . எல்லாம் நான் உனக்கு ரொம்ப இடம் கொடுத்ததாலே வந்த வினை”.. கீதா நெட்டுயிர்த்தாள். ”ஆஸ்பத்திரியில் நான் என்ன செய்வது? எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளத்தான் டாக்டர்கள் இருக்கிறார்களே.” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். சங்கர் அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.. ”இவ மட்டும்  திருந்தவே மாட்டா” என்று முணுமுணுத்தான்.  ஆஸ்பத்திரியிலிருந்த தங்கம் திடீரென்று நெஞ்சு வலிக்கிறது என்று வலிதாங்க முடியாமல் துடித்தாள். சிவராமன் அவள் தலையைத்  தன் மடியில் சாய்த்து வைத்துக்கொண்டார். ”நான் செத்துக் கொண்டி...ருக்..கி..றேன் என்று சொல்லும்போதே அவள் உயிர் பிரிந்தது. சிவராமன் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கியது. அம்மாவுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் யாவும் அடுத்த நாள்  நடந்து முடிந்தது . அம்மா போய் விட்டாள் சிவராமன் சங்கர் கூட வந்து தங்கினார். கீதா அவரைச் சரியாக கவனிக்கவில்லை. அவருக்குக் காலை ஆறு மணிக்கு எழுந்தவுடன் காபி குடித்து பழக்கம். கீதா ஏழு மணிக்குத்தான் காபி தருவாள்.. “சீக்கிரம் காபி கொடும்மா” என்று ஒரு நாள் தயங்கிக் கேட்டுவிட்டார்.  ”நான் கொடுக்கும்போதுதான் தருவேன். உங்களுக்கு அவசரமென்றால் ஓட்டலில் வாங்கிச் சாப்பிடுங்க” என்று கத்தினாள் கீதா. ”இந்தக் கிழம் சீக்கிரமாய் எழுந்து என் உயிரை வாங்கிறது” என்று முணுமுணுத்தாள். ”என் நாற்பது வருடத் தாம்பத்திய வாழ்க்கையில் ஒரு நாள் கூட நான் கிழிச்ச கோட்டை தங்கம் தாண்டினது இல்லே. நான் பல் துலக்கும்போது மேஜை மீது காபி தயாராய் இருக்கும். நான் அவளை எவ்வளவு கொடுமை படுத்தியிருக்கேன்னு இப்போதுதான் தெரிகிறது. அவ போனப்பிறகுதான் அவளுடைய அருமை தெரிகிறது. மகராசி   போயிட்டா” என்று மனசுக்குள் தன் மனைவியை நினைத்து வருந்தினார்.மனைவியின் இடத்தை யாராலும்  நிரப்ப முடியாதென்பதை சிவராமன் உணர்ந்து கொண்டார். கீதா அவரை மதிக்காததோடு இல்லாமல்  மிகவும் மோசமாக நடத்தத் தொடங்கினாள். அவர் பொறுத்துப் பார்த்தார். பின் சங்கரிடம் சொன்னார். நீயோ காலை வெளியில் போனால் இரவு தான் வருகிறாய். என்னாலே கீதாவுடன் அனுசரித்துப் போக முடியுமென்று தோன்றவில்லை.   நான்  இனிமே உன்னோடுதான் இருக்கணுமா?  நீ என்ன சொல்றே?” என்று சிவராமன் வெளிப்படையாக மகனிடம் கேட்டார். ” உங்கள் விருப்பம் போல் செய்யுங்க. அவதான் எப்பவும் வீட்டிலே இருக்கிறதேயில்லையே. எப்பவும் பொதுத் தொண்டு செய்றேன் என்று காப்பகமே கதியாய் இருக்கா. . ”கீதாவை  எதுவும் சொல்லாதே. வாழ்வதற்கு ஓர் உயர்ந்த நோக்கமும் அர்த்தமும் இருக்க வேண்டுமென்று அவ நினைப்பது சரிதான்.ஆனால்… சிவராமன் புன்முறுவல் பூத்தார். அவன் தயங்கிக்கொண்டே ” அவள் என் பேச்சைக் கேட்பதில்லை. நான் என்ன செய்யட்டும் ?” வெட்கத்துடன் தலைகுனிந்தான். ” எனக்கு உன்னை விட்டா வேறே போக்கிடம் ஏது? நீ என்னுடைய ஒரே பையன் இல்லையா? இடையிலே வந்த உறவாலே நீ மாறி விட்டாய்.  அவதான் வெளியிலிருந்து வந்தவ. நீ உன் கடமையைச் செய்ய தவறி விட்டாய் என்பது எனக்குப் பேரதிர்ச்சியாய் இருக்கிறது. நீ என்ன செய்ய முடியும்? உன் பெண்டாட்டிக்கு அளவுக்கு மீறின சுதந்திரம் கொடுத்து விட்டாய் .   நான்  என்ன செய்யட்டும் அப்பா ?” ”யாரும் யாரை நம்பியும் இருக்கக்கூடாது இந்தக் காலத்தில்” என்றார். நாய்க்கு இருக்கும் நன்றி கூட பெத்த பிள்ளைக்கு இல்லையே என்று நினைத்தார். சிவராமன் தன் நண்பர் ராமநாதனிடம் யோசனைக் கேட்கலாமென்று அவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். ராமநாதன் முதியோர் இல்லத்தில் வசிக்கிறார். ராகுல் படிக்காமல் அவனறையில் எப்போதும் அலைப்பேசியில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருப்பான். அதைப் பற்றி கீதாவிடம் சொன்னபோது,  ”மாமா, நீங்க இதில் தலையிடாதீங்க. அவனை வளர்க்க எங்களுக்குத்தெரியும். உங்க வேலையைப் பாருங்க” என்று கீதா முகத்தில் அடித்த மாதிரி சொன்னாள். சிவராமனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. மாமனாருக்குத் தரவேண்டிய மரியாதையைத் தரவில்லையென்றாலும் தூக்கி எறிந்து பேசாமல் இருக்கலாமே என்று நினைத்தார். சங்கரிடமும் அதே விஷயத்தைச் சொன்னபோது அவனும் அதைச் சாதாரணமாய் எடுத்துக் கொண்டான். கீதாவைப் போலவே “ நீங்க உங்க வேலையைப் பாருங்க அப்பா” என்றான். ”நீயுமா மகனே ...? என்றார்  மன வருத்தத்துடன்.   ராமநாதனிடமிருந்து கடிதம் வந்து விட்டது.  அவர் வசிக்கும் முதியோர் இல்லத்துக்கே வந்து விடச் சொல்லி எழுதியிருந்தார். இங்கு இல்லத்தில் உள்ளவர்கள் அன்பைப் பொழிகிறார்கள் என்றும் எழுதியிருந்தார். புதிதாகக் கட்டிக் கொண்டிருக்கும் அறைகள் இன்னும் ஒரு மாதத்தில் தயாராகிவிடும். ஒரு அறையை உங்களுக்காக ஏற்பாடு செய்து விட்டேன். இங்கு மருத்துவர் இருப்பதால் உடல்நிலையைப் பற்றி கவலைப்படவேண்டாம் “ என்று எழுதியிருந்தார். சிவராமன் அந்தக் கடிதத்தைப் பலமுறை படித்தார். அவர் முதியோர் இல்லம்  போக முடிவு செய்துவிட்டார். அதற்குமுன் சில ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்.  ”நான்  பெருங்களத்தூரில்  உள்ள முதியோர் இல்லத்துக்குப்  போயிடாலாம்னு தீர்மானித்து  இருக்கேன். அங்கே துணைக்கு என் நண்பன் ராமநாதன் இருக்கிறான். “. ”அ..ப்..பா என்றான் இங்கேயே எங்கள் கூடவே இருங்கள் . “ என்றான். நான் போகப்போகிற முதியோர் இல்லத்தில் டாகடர் வசதி உண்டு .உணவு  வேளா வேளைக்குக் கிடைக்கும். நூலகம் உண்டு . அது மாத்திரம் இல்ல. என்னை மாதிரி நிறையப் பேர் அங்கே வசிக்கிறார்கள். அதுதான் எங்களுக்குச் சவுகரியமான இடம்.  அடுத்த ஞாயிற்றுக் கிழமை அங்குப் போகலாம் என்று இருக்கேன். ஞாயிற்றுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கே. . காலை எட்டு மணிக்கு  கார் வந்து விடும் எங்களை அழைத்துப் போக . அதற்குள் எனக்குத் தேவையான சாமான்களையெல்லாம் நான் எடுத்து வைத்துக் கொள்கிறேன். புத்தகங்கள்தான் அதிகம் இருக்கிறது. அதை விட்டு விட்டுப் போக எனக்கு மனசு வரவில்லை. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போகிறேன். ” என்றார். அன்று இரவு சங்கர் விஷயத்தை  மனைவியிடம் தெரிவித்த போது அவள் அதைப்பொருட்படுத்தவில்லை. ”யார் யாருக்கு எங்குச் செளகரியமோ அங்குத் தங்குவதுதான் நல்லது” என்று விட்டேத்தியாய் சொன்னாள். அவர்களுக்குள் நீண்ட வாக்குவாதம் நடந்தது. அப்பா நம்முடன் சேர்ந்து வசிக்கணும். என்ற சங்கர் வார்த்தையை அவள் காப்பகம் போக வேண்டும். வீட்டைக் கவனிக்க நேரமில்லை என்னும் காரணம் காட்டி மறுத்தாள். சங்கர் பொறுமையாய் எவ்வளவு சொல்லியும்   கீதா மனம் எள்ளளவும் மாறவில்லை. சொன்னதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது. அன்று ஞாயிற்றுக் கிழமை. சிவராமன் முதியோர் இல்லம் செல்லும் நாள்.   சங்கர், ”அப்பா வீட்டை விட்டுப் போகிறாரே” என்று வருத்தப்பட்டான். கீதா எதுவும் பேசாமல் நின்றாள். ”  சிவராமன் புன்சிரிப்புடன், ”கீதா, இன்னும் நீ சிறிது பக்குவம் அடைய வேண்டும். மனிதக் குல சேவையே இறை சேவை என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் ஒருவர் சுய நலனாக, பொதுநலனாக இருப்பது  அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. வீட்டிலே இருக்கிற ஓட்டடையை  எடுக்காமல் கோவிலுக்குப் போய் கைங்கரியம் பண்ணினால் சரிப்பட்டு வருமா ? வீட்டிலே இருக்கவங்களை முதலில்  கவனிச்சுட்டு நீ பொதுத்தொண்டில் ஈடுபடுவதுதான் சரியாய் இருக்கும். உன் பிள்ளையை நல்லா கவனிச்சுக்கோ. கணவருக்கு மரியாதைக் கொடுத்து  நல்லா கவனித்துக்கொள். நான் முதியோர் இல்லத்துக்கே போகப் போகிறேன். என்னுடைய தீர்மானத்திலே எந்த மாற்றமும் இல்ல.” என்றார்.  அவர் வார்த்தைகள் அவள் மனதில் உறுத்தின. எதுவும் பேசாமல் தலையை அசைத்தாள். அப்போது  முதியோர் இல்லம் போக கார் வந்துவிட்டது. அதில் அவர் ஏற   கார் நகர்ந்தது. கார் முதியோர் இல்லத்தை அடைந்ததும் அவருக்காகக் காத்திருந்த ராமநாதனும் அவர் மனைவியும் அவர் தங்க வேண்டிய அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்தவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் அன்போடு, பண்போடு நடந்து கொண்டார்கள். அங்கு மனித நேயத்தை பார்க்க முடிந்தது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதைக் கண்கூடாக உணர முடிந்தது.  ஒய்வு பெறும்போது வந்த பணத்தில் பாதியை முதியோர் இல்லத்தில் கட்டி விட்டார். மீதமிருக்கும் பணத்தை வங்கியில் டிபாசிட் போட்டு வைத்தார். மாதந்திர செலவுக்கு வழி செய்யும்படி. ராகுலின் பரீட்சை முடிவு வந்துவிட்டது. அவன் பரீட்சையில் தேர்ச்சி பெறவில்லை. . கீதாவுக்கு பெரும் அதிர்ச்சி . அவன் ” நான் நன்றாகத் தானே எழுதினேன்” என்றான். ”ராகுல் அடிக்கடி வீடியோ கேமில் ஆழ்ந்து விடுவதால் பரீட்சை சரியாக எழுதவில்லை” என்னும் விஷயத்தை அறிந்ததும் சங்கர் அதிர்ந்தான். ”ராகுலைச் சரியாக கவனிக்கவில்லையென்று கத்தினான். என் அப்பாவை முதியோர் இல்லத்துக்கு அனுப்பினது எனக்கு மிகவும் கஷ்டமாயிருக்குது”, என்றான். ”தவறு என்னுடையதுதான் . நான் மாமாவை மதிக்கவில்லை. ராகுல் படிக்காமல் இருக்கிறான் என்று சொன்னபோது உங்க வேலையைப் பார்த்துட்டு போங்கன்னு சொல்லி அவர் மனசை நோகடிச்சேன். நான் செஞ்சத்துக்குப் பிராயச்சித்தமா நான் மாமாவை இங்கு அழைத்துக் கொண்டு வந்து அவரை நன்றாகக் கவனித்துக் கொள்வேன். அவர் ஏன் தனியாக அங்கே கஷ்டப்படணும்.  இனிமேல் காப்பகம் போக மாட்டேன். வீட்டிலே இருந்து குடும்பத்தைக் கவனித்துக் கொள்வேன்.  ராகுலுடன் தன் நேரத்தைச் செலவிடுவேன்”     கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று சொல்வதுபோல் இருந்தாலும் இப்பவாது திருந்தி விட்டாளே என்று அவள் மனமாற்றத்தால் சங்கர் மனம் மகிழ்ந்து “இப்பவே கிளம்பு” என்றான். இருவரும் உடனே முதியோர் இல்லம் கிளம்பினார்கள்.   முதியோர் இல்லம் சங்கர்  எதிர்பார்த்ததைவிட அருமையாக  இருந்தது.. அதன் மேனேஜரிடம் ”இங்கு வசிக்கும் சிவராமனைப் பார்க்க வேண்டும், நான் அவர் பையன்”என்றான். அவர்  அவனிடம், ”என்ன உலகம் ! என்ன அநியாயம் ! அன்பைக் காட்டாமல் புறக்கணிக்கப்பட்ட முதியோர்கள் சமூகத்தின் சாபக்கேடு. முன்பெல்லாம் முதியோருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்தார்கள். அந்தக் காலம் எல்லாம் மாறி விட்டது. இப்போதெல்லாம்…” என்றார் . சங்கர் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தான். அவர்களைச் சிவராமன் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். சிவராமன் அப்போது செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அப்பா நீ எதுக்கு இங்கே தனியா இருந்து கஷ்டப்படணும். கீதா நீ வீட்டில் வந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். என்னுடைய ஆசையும் அதுதான்.. நீ என் கூட இருந்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருக்கும். மாட்டேன் என்று மட்டும் சொல்லிடாதீங்க” என்று அவர் கையைப் பிடித்து கெஞ்சினான். மாமனாரை இரு கைகூப்பிக் கும்பிட்ட கீதா. ” நீங்கள் எங்கள் கூட வந்து இருங்களேன் நான் இப்போது வீட்டிலே அதிக நேரம் இருக்கிறேன். காப்பகம், மாதர் சங்கம் எல்லாம் போவதில்லை.” என்று பவ்வியமாகக் கூறினாள். ”இங்கிருக்கும் சூழல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னை பொறுத்தவரை எனக்கு வீட்டில் கிடைப்பதைவிட  அன்பும், நட்பும்  இங்கு அதிகமாகக் கிடைக்கிறது. உறவினர்களை விட நண்பர்களிடம் அதிக மனித நேயத்தைப் பார்க்க முடிகிறது. உங்களுடன்   இருப்பதைவிட நான் இங்கே என் மனைவியின் நினைவுகளுடன் தனியாக இருப்பதையே விரும்புகிறேன். உங்களுக்குச் சுமையாய் இருக்க நான் விரும்பவில்லை. மேலும் வாழ்க்கைத் துணையை இழந்து தவிக்கும் தனிமைப்படுத்தப் பட்ட என்னைப் போல் உள்ளவர்களுக்கு முதியோர் இல்லம்தான் ஒரே போக்கிடம்.  என்னைப் பற்றி நீங்கள்  கவலைப்பட வேண்டாம். எல்லாம் நன்மைக்கே . கீதா,  நீ ராகுலையும் சங்கரையும் நன்றாகக் கவனித்துக் கொள்.  அடிக்கடி    இங்கு வந்து என்னைப்  பார்த்துட்டுப் போங்க” என்றார் வைரக்யத்துடன். அவர் பேச்சில் தெரிந்த உறுதி அவர் அவ்விடத்தை விட்டு வெளியே வரமாட்டார் என்பதை பறைசாற்றியது. சங்கரும் கீதாவும் ஒருவரை ஒருவர் ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டார்கள்; அவர் நம்முடன் இருக்க நமக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று பேசிக்கொண்டு  வீடு திரும்பினார்கள்.    அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து  இன்புற்றார் எய்தும் சிறப்பு.                  (திருக்குறள்)                                                                                       ************************* .         6. அன்பிற்கும் உண்டோ வித்தியாசம் ! !   மனைவிக்குப் பிடித்திருப்பது கணவனுக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று நம் குழந்தைகளிடம்  காட்டும் அன்பில் வித்தியாசம்  இருக்கக் கூடாது. ஆனால் கணவர் குழந்தைகளிடம் காட்டும் அன்பில் பேதம் இருக்கிறதே” என்று சங்கரி  சிந்தித்துக் கொண்டே மருத்துவ மனையில் அவள்  கணவர் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள் .”நித்யா அப்பாவுக்கு இப்போ எப்படிமா இருக்கு?”   ”அப்படியேதான் இருக்குமா. இன்னும் கண்ணைத்திறக்கல”.    அப்போது, “சிற்றம்பலம், சிற்றம்பலம் ” என்று உரத்தக்குரலில் கூப்பிட்டுக் கொண்டே டாக்டர் அறைக்குள் நுழைந்தார்.. ”அவர் தூங்குகிறார் போலிருக்கு” என்றாள் சங்கரி. டாக்டர் சிற்றம்பலத்தின் மருத்துவ அறிக்கையைப் பார்த்துவிட்டு நகரும்போது,”இப்போது அவருக்கு எப்படியிருக்கு டாக்டர். எப்போ குணமாகும்” என்று கேட்டாள். . ”நாளைக்குத்  தான் சொல்ல முடியும்” என்ற டாக்டர் , ” மேரி அதே மருந்தைத் தொடர்ந்து  கொடு” என்று நர்ஸிடம் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார். ”அப்பாவுக்கு உடம்பு எப்போம்மா சரியாகும் ?” என்று வினவினாள் சங்கரியின்   பெரிய பெண் நித்யா. ”அப்பா எப்போ என் கிட்டே பேசுவார்?” என்று கேட்டாள் சின்னவள் மோனிகா. அவள் அப்பா செல்லம். இரண்டு பேருக்கும் இரண்டு வயசு வித்தியாசம் . பெரியவளுக்கு இருபது. சின்னவளுக்கு பதினெட்டு.    ”சீக்கிரம் சரியாயிடும் கண்ணு . நீங்க இரண்டு பேரும் கடவுளை வேண்டிக்கோங்க”. ”சங்கரி  அவருக்கு எப்படி இருக்கு. டாக்டர் என்ன சொல்றார்” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் மங்களம் சங்கரியின் அம்மா ”நாளைக்குத்தான் தெரியும்னு டாக்டர் சொன்னார் அம்மா”. ”அவருக்குச் சீக்கிரம் குணமாயிடுணம்டி. நான் திருப்பதி வெங்கடேச  பெருமாள் கிட்டே வேண்டிண்டு இருக்கேன்”. மருத்துவமனைக்கு வந்து பத்து நாட்கள் ஆகி விட்டது . எப்போது இங்கிருந்து விடுதலை ஆகிப் போவோம் என்று தெரியல. பணமும் இலட்சக் கணக்கிலே செலவாகிறது” என்றாள் சங்கரி. பதிலுக்குச் சங்கரியின் அம்மா தெரியல என்று சொல்வது போல் இரண்டு  கையை விரித்து ஒரு பெருமூச்சு விட்டாள். சிற்றம்பலம் கணித பட்டாதாரி. சின்ன வயசிலேயே பெற்றோரை இழந்தவர்.வறுமையில் வாடியவர். சித்தப்பாவின் வீட்டில் தங்கிப் படித்தார். அவருக்கு ஆளுமை பண்பு அதிகம். மோனிகா கண்ஸ்டரக்ஸ்ன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில் வீடு கட்டிக் கொடுக்கும்  நிறுவனத்தை நடத்தி  வருகிறார்.. குறைந்த பணத்தில் வீடு கட்டிக் கொடுப்பதால் சிற்றம்பலத்துக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர். இதுவரை ஆயிரம் வீடுகளுக்கு மேல் கட்டி இருக்கிறார். சிறந்த நிறுவனம் என்று விருது வாங்கி இருக்கிறார்.  தன் திறமையால் முன்னேறி வெற்றி அடைந்தவர்.வீட்டிலும் அவர் சொல்லும் வார்த்தையைச் சங்கரி  தட்டமாட்டாள். அவளைப் பொறுத்தவரை அவர் கணவர் சொல்வதுதான் வேத வாக்கு. சங்கரியின் அம்மா அவள் திருமணத்தின் போது சொன்ன அருமையான அறிவுரையை அவள் இன்றுவரை பின்பற்றுகிறாள். அது வேறொன்றுமில்லை. ”உங்க வீட்டுக்காரர் சொல்ற பேச்சைக் கேள். எதிர்த்துப் பேசாதே” என்னும் மந்திரம்தான். அதைக் கடைப்பிடிப்பதால் சங்கரியின் குடும்ப வாழ்க்கைப் படகு மிகவும் அமைதியாய் போய் கொண்டிருந்தது சிற்றம்பலம் சங்கரியிடம் அதிக பாசம் காண்பிப்பார். அவரது இரண்டாவது மகளான மோனிகா  பிறந்த போது அவர் வியாபாரம் சாதரணமாய்தான் இருந்தது.  மகளின்        பெயரில்  நிறுவனத்தை ஆரம்பித்த பிறகு அதிர்ஷ்ட தேவதை கண் திறந்தாள். வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து ஒஹோ என்று  எல்லாரும் வியக்கும்படி உச்சிக்கு வந்து விட்டார். ஊரே வியக்கும் கோடீஸ்வரன் ஆகி விட்டார்.  ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே திண்டாடிக் கொண்டிருந்த அவர் இப்போது சாப்பிடுவதற்கே நேரம் இல்லாத அளவுக்கு இயங்கிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல. தனக்கு உதவியவர்களுக்கு அவர் ஏதாவது ஒரு வழியில் உதவினார். அவர்களுக்குத் தன் நிறுவனத்தில் வேலைப் போட்டு கொடுத்தார். ஒரு திருநங்கைக்கு தன் நிறுவனத்தில் வேலைப் போட்டுக் கொடுத்தார்.  அவர் தன் சொந்த ஊரான கும்பகோணம் அருகில் இருக்கும் தராசுரத்திலிருந்து ஏழுமலை என்னும் பையனை  அழைத்து வந்து அவனுக்கு வேலை கற்றுக் கொடுத்து, இருக்கும் இடமும் கொடுத்து மகன்போல் வளர்த்து வருகிறார். தன்னுடைய எழுச்சிக்கு மோனிகா தன் காரணம் என்று அவளுடைய இரண்டாவது மகள் மேல் அவளுக்கு அதிக பிரியம் உண்டு.  ஆனால் அந்த அளவு பாசம்  மூத்த பெண் நித்யாவிடம் இல்லை. அதென்னமோ தெரியல. அவர் நித்யா மேல் எரிந்து விழுந்தார். எது செய்தாலும் குறை கண்டு பிடிப்பார். தன் வெறுப்பை அவளிடம் வெளிப்படையாய் காண்பித்தார். நித்யா தன்னை அப்பா உதாசீனப்படுத்துவதாக அம்மாவிடம் குறை பட்டுக்கொண்டாள். ”கொஞ்சம் பொறுத்துக்கோ நித்யா. அப்பாவுக்கு உன் மேல்  மனசுக்குள்ளே பாசம்  இருக்கு. அதை அவர் வெளியிலே காட்டல. இரத்த சம்பந்தம் இருக்கும்போது பாசப் பிணைப்பு இல்லாமல் போகுமா? நான் சமயம் பார்த்து அப்பாக்கிட்டே பேசிப் பார்க்கிறேன். உன்னிடம் அன்பு காட்டவில்லை என்பதற்காக அவரை நீ வெறுக்காதே கண்ணு” என்று மகளிடம் ஆதரவாகப் பேசினாள். .   இவர்  ஒரு பெண்ணின் மேல் அதிக பாசம் காட்டுகிறார் . இன்னொரு பெண்ணின் மேல் குறைந்த ...  ஒரு தாய் பாசம் காட்டுவது போல் ஒரு தந்தையால் காட்ட முடியாது. இந்த விஷயத்தில் ஆண்களைப் பெண்களுடன் ஒப்பிட முடியாது என்று சங்கரி எண்ணினாள். சங்கரிக்குத் தன் கணவர் செய்வது சரியில்லை என்னும் எண்ணம் இருந்தது. தக்க சமயம் பார்த்து அவரிடம் கேட்டபோது, ”எனக்கு இரண்டு பெண்களில் மோனிகாவைத்தான் மிகவும் பிடிக்கும். ஏன்னா, அவள் என்னை மாதிரி” என்றார். ”நித்யா என்னை மாதிரி. அவளை உங்களுக்குப் பிடிக்கலயா?” புன்சிரிப்புதான் பதில்   ஒரு நாள் மங்களம்  வந்திருந்தபோது, ”ஏன் சங்கரி ஒரு மாதிரியாய் இருக்கிறாய்? உனக்கு என்ன கவலை? மாப்பிள்ளை வியாபாரம் நல்லாதானே போய்க்கிட்டிருக்கு. உன் கண்ணின் கீழே கருவளையத்தைப் பார்க்க எனக்குக் கவலையாய் இருக்கு” என்றாள் ”அம்மா,அவர் நித்யா மேல் காரணமில்லாமல் எரிந்து விழுகிறார். எதுக்கெடுத்தாலும் குறை கண்டு பிடிக்கிறார். நித்யா மனசு ஒடிஞ்சு போயிருக்கா. அவரிடம் எப்படிப் பேசுவதென்று தெரியல. நான் கேட்டா, சிரிக்கிறார். எனக்கு அவளைப் பிடிக்கலன்னு சாதாரணமாய் சொல்றார்”. ”நீ சொல்றது நிஜமாடி? அப்பா காட்டற அன்பில வித்தியாசம் இருக்குமா? உன் அப்பா உன் மேலே எவ்வளவு அன்பு வைச்சிருந்தார். நீ குழந்தையாய் இருந்தபோது பள்ளிக்கூடம் போறத்துக்கு முன் உன்னைக் கட்டிப்பிடிச்சு  முத்தம் கொடுத்து அனுப்புவார். நீ கல்லூரி போகும்வரை ...   நான் தான் அவள் பெரிய பெண் ஆயிட்டா . இனிமே முத்தம் கொடுக்காதீங்க என்று சத்தம் போட்டேன். அவர் நிறுத்திட்டார். உன் மேல் கொள்ளை பாசம் உன் அப்பாவுக்கு. அவர் நம்மை விட்டுப் போய் மூன்று வருஷம் ஆகிவிட்டது” என்று தன் கணவரை நினைத்துக் கொண்டாள் மங்களம்.   எல்லாரும் என் அப்பா போல் ஆவார்களா?. குழந்தைகளிடம்  பாசம் காட்டுவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பாசம் காட்டுவதில் கெட்ட தாய் என்று யாருமில்ல. எல்லாத் தாய்களும் தன் குழந்தையிடம் பாசத்தைப் பொழிகிறார்கள். ஆனால் அப்பா பாசத்தில் ஆளுக்கு ஆள் மாறு படுகிறது. சில அப்பாக்கள் தன் மகளிடம் பாசத்தைப் பொழிகிறார்கள். சில அப்பாக்கள் சிறிதளவு அல்லது பாசம் காட்டாமலே இருக்கிறார்கள். இது அவர்கள் மனத்தைப் பொறுத்த விஷயம்”.  ”ஒரு நாய் குட்டிப் போட்டால் தன் குட்டியை யாரும் அண்ட விடாது.  ஒரு நாய்க்கே இவ்வளவு பாசம் இருக்கும்போது ஒரு மனுசனுக்குத் தன் குழந்தையிடம் எவ்வளவு பாசம் இருக்கணும்?” ”அவர்கிட்டே அந்தப்  பாசம் இல்லையே. என்ன செய்யறது?” ”இருந்தாலும் உன் வீட்டுக்காரரிடம் நீ பேசிப் பார். இப்போது இல்லாவிட்டாலும் நாளடைவில் அவர் மனம் மாறிவிடுவார் என்று நான் நம்புகிறேன்.”. ”நான் முயற்சி செய்கிறேன் அம்மா”. வாழ்க்கையில்  எப்போதும்   இன்பம் மட்டும் வரும் என்று சொல்லமுடியாது.இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை என்பதை நிரூபிப்பதைப் போல் இரண்டு மாதத்துக்கு முன் ஒரு நாள் சிற்றம்பலம்  படுக்கையிலிருந்து எழுந்தபோது  காலை எடுத்து வைக்க முடியவில்லை. மரணவலி போல் பயங்கர வேதனையை அனுபவித்தார். . பக்கத்திலுள்ள மருத்துவ மனையில் காண்பித்து எல்லாப் பரிசோதனையும் செய்தும் என்ன வியாதி என்று கண்டு பிடிக்க முடியலே. அதனால் பெரிய மருத்துவமனையான அப்போலோ மருத்துவ மனையில் சேர்ந்து இரண்டு மாதமாக வைத்தியம் செய்து கொண்டு வருகிறார். எல்லாச் சோதனைகளும் செய்த பிறகு சிறு நீரகத்தில் புரோட்டின் போவதுதான் அவரது செயலிழப்புக்குக் காரணம் என்று கண்டு பிடித்தார்கள். சாதாரணமாக இந்த வியாதி வெளிநாட்டில் தான் பிரசித்தம் . இந்தியாவில் யாருக்காவது அபூர்வமாய் வருமாம். என்ன நோய்?   என்று கண்டு பிடிப்பதற்கே ஆறு வாரம் ஆகிவிட்டது.  ஏராளமாய் பணம் செலவு ஆயிற்று . உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கரி   டாக்டரிடமும் இறைவனிடமும் எல்லாப் பொறுப்பையும் விட்டு விட்டாள். சிற்றம்பலத்துக்குக்  கிமோ கொடுக்கப் பட்டது. அவருக்குச் சின்ன வயசிலிருந்தே வீசிங் எனப்படும்  மூச்சுத் திணறல் எப்பாவது தலைகாட்டும். இப்போது கிமோ கொடுத்ததும் அவருக்கு மூச்சுத் திணறல் வர ஆரம்பித்தது.  கிமோ ஒத்துக்கொள்ளாததால் மருத்துவர்கள் அவருக்கு வேறு எந்த  விதமான  சிகிச்சை கொடுத்துக் காப்பாற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றைக் கொடுத்தால் மூச்சுத் திணறல். அதைக் கொடுக்காவிட்டால் அவரால் எதுவும் செய்ய முடியாமல் படுத்தப் படுக்கையாய் இருக்கிறார். உடல் பலவீனமாகிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. . இந்தப் பிரச்சனைக்குக் கடவுள்தான் வழிகாட்ட வேண்டும் என்று இறைவனிடம் சங்கரி வேண்டிக் கொண்டாள். டாக்டர் இன்று என்ன சொல்வாரோ என்னும் பதைபதைப்புடன் சங்கரி  இருந்தாள். அப்பாவை  உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த நித்யா தன் அம்மாவிடம்  , ”அப்பா பாவம்மா!! என்றாள். அவள் போனவருடம்தான் பி.காம், பட்டப் படிப்பை முடித்து சமீபத்தில் வங்கியில்  வேலையில் சேர்ந்திருக்கிறாள். அவள் அப்பா  ஆஸ்பிட்டலில் படுத்தப் படுக்கையாய் இருப்பதால். அவள் வேலையில் சேர்ந்தது அப்பாவுக்குத் தெரியாது. அவள் என்ன செய்தாலும் அவர் அவளைப் பாராட்ட மாட்டார்.ஒரு தடவை  நித்யா சங்கரியிடம்  கேட்பாள், “ஏம்மா அப்பா என்னிடம் கடுமையாய் நடந்துகிறார். நான் கஷ்டப்பட்டு படித்து எழுபது சதவீதம் வாங்கி பி.காம் தேர்ச்சி அடைந்தேன். அப்பா என்னைத் திட்டி தொன்னூறு  சதவீதம் ஏன் வாங்கல?” என்று திட்டுகிறார். ” நித்யா, நீ இன்னும் மேம் படவேண்டும் என்பதற்காக அப்பா அப்படிச் சொல்றார் நீ எதையும் தவறாக எடுத்துக் கொள்ளாதே” என்று அவளைச் சமாதானம் செய்தாலும், அவரிடம்  தனியாக இருக்கும்போது, நீங்கள் செய்வது நியாயமா? நித்யாவிடம் பாரபட்சமாய் இருக்கீங்களே” என்று கேட்டாள்.   அவர், ”என்னமோ தெரியல. அவளைப் பார்த்தாலே எனக்குப் பத்திண்டு வருது” என்று சிரித்து மழுப்பினார்.. ”அவளுக்கு உங்க மேலே ரொம்ப பாசம். அவ மனசு உடைஞ்சு போயிடுவா. அவளைத் திட்டாதிங்க” ”எல்லாம் எனக்குத்தெரியும் நீ எதுவும் எனக்குச் சொல்ல வேண்டாம்”. அவர் பலமுறை நித்யாவை ஏசியிருக்கிறார். ”உனக்கு இதுகூடத் தெரியாதா?” என்று சீறியிருக்கிறார். மோனிகா கூட அம்மாவிடம், ஏம்மா அப்பா இப்படி நித்யாவை நாய் போல் நடத்துறார். எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு என்று கலங்கிய கண்களுடன் கேட்டதெல்லாம்  சங்கரியின் மனம் அசை போட்டுக்கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த ஏழுமலை, சாருக்கு இப்போ எப்படி இருக்கு அம்மா என்று கேட்டுக் கொண்டே அவளருகில்வந்தான். ”சாப்பிட்டியா?” ஏழுமலை. ”இன்னும் இல்லை, அம்மா” ”நீ போய் ஓட்டலில் சாப்பிட்டு வந்துடு” என்று சங்கரி  அவனிடம் நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினாள். அப்போது சிற்றம்பலத்துக்கு  விழிப்பு வந்தது.ஆ ஆ ஆ அம்மா என்று வலியால் அரற்றினார். ”என்னங்க உடம்பை என்ன செய்யறது?”  என்று கேட்டுக் கொண்டே சங்கரி அவரருகில் சென்றாள். அவர் அவளைப் பார்த்துப் பார்த்து பேச முயன்று  மயக்கத்தில் ஆழ்ந்து விட்டார். அப்போது ”டாக்டர்” என்று கத்திக் கொண்டே  நர்ஸ் மேரி  வெளியே ஓடினாள். வேகமாக வந்த டாக்டர் சிற்றம்பலத்தின் நாடித்துடிப்பைப் பரிசோதித்து விட்டு, “ அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்” என்று நர்ஸிடம் சொல்லிவிட்டு அகன்று விட்டார். அவசர சிகிச்சை பிரிவு அறையிலிருந்து வெளியே வந்த டாக்டர் சங்கரியைப் பார்த்து,”என் அறைக்கு வாங்க, உங்களுடன் பேச வேண்டும்” என்றார். சங்கரி  அவருடன் சென்றாள். உங்கள் கணவருக்கு இந்த ஊசி போடவேண்டும். இந்த ஊசியை  வாங்கிக் கொடுங்கள்” என்று ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்து, “இதன் விலை ஒரு இலட்சம் . உடனே வாங்க வேண்டும்” என்றார்.. ”ஒரு இலட்சமா ! !” திகைப்புடன் கேட்டாள் சங்கரி. ”ஆமாம். ரொம்ப சக்தி வாய்ந்த மருந்து. நேரம் கடத்தாமல் துரிதமாக வாங்க முயற்சி செய்யுங்கள்”. ”இந்த ஊசி போட்டால் அவர் பிழைத்து விடுவாரா? டாக்டர் . ”பிழைக்கலாம். ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இந்த ஊசி போடாவிட்டால் அவர் பிழைக்க மாட்டார் என்பதை நிச்சயமாய் சொல்ல முடியும்.எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்.  அப்புறம் இறைவன் விட்ட வழி”. சங்கரி  விரைந்து மருந்து கடைக்குச் சென்று அந்த மருந்தை வாங்கிக் கொண்டு போய் டாக்டரிடம் கொடுத்து விட்டு அவசர சிகிட்சை பிரிவுக்கு வெளியே வந்தாள். அங்கு அமர்ந்திருந்த மோனிகாவும்  நித்யாவும் அவள் வருவதைக் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தார்கள்.   ”அப்பா எப்பவும் உன் கிட்டே பாரபட்சமாய்தான் நடந்துப்பார். அதனாலே அப்பா மேல் உனக்குக் கோபமா ? என்று கேட்ட மோனிகாவுக்கு , என்னிடம் அப்பா அன்பா நடந்துக்கலயேன்னு எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான் என்றாலும் போகப்போகப் என் மேல் அன்பைப் பொழிவார் என்று எதிர்பார்க்கிறேன்.. அவருக்கு உள்ளுக்குள்ளே என் மேல் பாசம் இருக்கும். ஏதோ ஒரு காரணத்தினால் என் மேல் எரிந்து விழுகிறார். என்ன காரணமென்று எனக்குத் தெரியல” என்று பதிலளித்தாள் நித்யா. அவர்கள் பேசுவதைக் கேட்ட சங்கரிக்குத் திக்கென்றது. “இரண்டு பேரும் என்னடி பண்ணறீங்க ?” என்றாள்.. ”பேசிக்கிட்டு இருக்கோம்மா” என்றாள் நித்யா . ”சரி இரண்டு பேரும் கீழே போய் ஏழுமலை இருந்தா அழைச்சிட்டு வாங்க” என்றதும் அவர்கள் நகர்ந்தார்கள். ”கூப்பிட்டிங்களா அம்மா” என்று கேட்டுக் கொண்டே வந்தான் ஏழுமலை. ”ஏழுமலை எனக்குத் தலைவலியாய் இருக்கு. நீ போய் காபி வாங்கி வந்து கொடு”.   ஏழுமலை உணவகம்  நோக்கிச் சென்றான்.   அப்போது நர்ஸ் ஓடி வந்து, ”அவர் ஏதோ  சொல்ல முயல்கிறார், ஓடி வாங்க” என்றாள். உடனே சங்கரி அவசர சிகிச்சை அறைக்கு விரைந்தாள். நித்யா அவளைப் பின் தொடர்ந்தாள். . சிற்றம்பலம் சங்கரியைப்  பார்த்து பேச முயற்சித்தார். உ... உ...உ.. என்று சொல்லிவிட்டு தலை சாய்ந்தார். ”உ என்கிறாரே, என்ன சொல்ல முயன்றிருப்பார்” என்று சங்கரி யோசித்தாள். பக்கத்தில் நின்றிருந்த நித்யா,”உன்னை விட்டுப் போக மாட்டேன்  என்று அப்பா சொல்ல நினைச்சிருப்பார்” என்றாள். ”ஆமாம் அப்படிதான் எனக்கும் தோன்றுகிறது” என்றாள் சங்கரி.. ஏழுமலை சங்கரியிடம்,”அம்மா உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். கொஞ்சம் வெளியே வாங்க” என்றான். அவள்  வெளியே வந்து ’என்ன விஷயம் ? ஏழுமலை”.என்றாள். ”அம்மா ஐயா உயில் பத்திரத்தை என்னிடம் கொடுத்துப் பத்திரத்தைப் பத்திரமாக  வைத்துக் கொள்ள சொன்னார்.  அவருக்கு ஏதாவது ஆகி விட்டால் அதை வழக்கறிஞரிடம்  கொடுத்து விடு” என்று சொல்லியிருக்கிறார். இதுதான் அந்த உயில் என்று என்னிடம் ஒரு பத்திரத்தைக் கொடுத்தான். ”ஓ, அதனால்தான் அவர் ”உ என்று சொன்னாரா? சங்கரியின் மண்டையில் உரைத்தது ”உ” என்றால் உயில் என்று எனக்குத் தோணாமல் போய் விட்டதே” என்று நினைத்தாள். ஏழுமலை அவர் உயில் எழுதினதைப் பற்றியோ, உன்னிடம் கொடுத்ததைப் பற்றியோ, நீ அதை என்கிட்டே கொடுத்தது பற்றியோ ஒருத்தரிடமும் மூச்சு விடாதே.. உயில் ஏதாவது எழுதினாரா  என்று யாராவது கேட்டால் எனக்குத் தெரியாது என்று சொல்லிவிடு . அப்படியே சொல்லிவிடுகிறேன் அம்மா. என்னைப் பெத்த அம்மா மாதிரி நீங்க என்னை நல்லா  கவனிச்சிருங்கீங்க. எத்தனையோ முறை எனக்குச் சோறு போட்டிருக்கீங்க. எனக்கு நன்றி விசுவாசம் உண்டு” என்றான் ஏழுமலை. அப்போது நித்யா வந்து அம்மா, ”டாக்டர் உன்னைக் கூப்பிடுகிறார்” என்று ஓடி வந்து சொன்னாள். அவள் உடனே உயிலை இடுப்பில் சொருகிக்கொண்டே அவசர சிகிச்சை அறைக்குள் ஓடினாள். டாக்டர் சிற்றம்பலத்தின்   கையைத் தூக்கிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி அவர் மேலே  போய் விட்டார் !!  என்றார். சங்கரியின்  கண்களில் கண்ணீர் பீரிட்டு வந்தது. ”அவர் என்ன சொல்ல நினைச்சாரோ அதைச் சொல்லாமலே போய்விட்டாரே” என்று அரற்றினாள். ”ஒரு இலட்சம்  கொடுத்து ஊசி வாங்கியும் பிரயோசனம் இல்லாமல் போயிடுத்தே என்று புலம்பினாள் மங்களம். ”உயிரே போய் விட்டது. பணம் போனால் பரவாயில்லை. நான் அவருக்குக் கொள்ளிப் போடுகிறேன் ” என்றான் ஏழுமலை கலங்கிய கண்களுடன்.    அவரது உடல்  வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. துக்கம் விசாரிக்க நண்பர்களும், உறவினர்களும்  நிறையப் பேர்கள் வந்தார்கள். . அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? அவருடைய நண்பர்கள் நாலைந்து பேர் அங்கமர்ந்து  திருவாசகம் ஓதிக் கொண்டிருந்தார்கள். ”பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து ...” என்று பாடும்போது  அதன் பொருள் சங்கரியின்  மனதுள்ளே ஊடுருவிச் சென்றது. ”குழந்தைக்குப் பசிக்கும் நேரத்தை அறிந்து பால் ஊட்டுகின்ற தாயின் அன்பைப் பற்றி மாணிக்கவாசகரே பாடி இருக்கிறார்” என்று அறிந்தாள்.    அவருடைய  மாமா பரமசிவம் சங்கரியிடம்  துக்கம் விசாரித்துவிட்டு, ”சிற்றம்பலம்  உயில் ஏதாவது எழுதி வைத்திருக்கிறாரா?” என்று மெல்லிய குரலில் வினவினார். அப்படி எதுவும் எழுதவில்லை மாமா. அதற்கு அவசியமும் இல்லை என்றாள். பக்கத்தில் இருந்த ஏழுமலையும், ”ஐயா, உயில் எதுவும் எழுதலிங்க. அவருக்குப் பிறகு சொத்துகள் அவருடைய குடும்பத்தினருக்குத்தானே போகும். அதுதானே சட்டம்” என்றான். பரமசிவம் பதில் எதுவும் சொல்லவில்லை. பரமசிவம் உயில் என்று சொன்னதால் சங்கரிக்கு ஏழுமலை கொஞ்ச நேரத்துக்குமுன் ஆஸ்பத்திரியில்  கொடுத்த காகிதத்தைத் தான்  இடுப்பில் சொருகிக் கொண்டது ஞாபகம் வந்தது. படிக்கலாம் என்றால் யாராவது ஒருவர் மாற்றி வந்து கொண்டே இருக்கிறார்கள். அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. குளியறைக்குள் சென்றாள். அவள் வீட்டில் குளியலறையும் டாய்லெட்டும் சேர்ந்து ஒன்றாகத்தான் இருக்கும். அவள் அங்கு உயிலைபிரித்து அவசர அவசரமாய் படித்தாள். சங்கரி  அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாலு கோடி பெறுமானமுள்ள அடையாரில் இருக்கும் வீட்டைச் சின்ன பெண் மோனிகா மேல் எழுதி வைத்திருந்தார். அதோடு இல்லாமல் பணத்திலும் அதிக அளவு மோனிகாவுக்குக் கொடுக்க வேண்டும் என்று படித்த அவள், ஐயோ சாமி, முதல் பெண் மேல் எப்போதும் கடிந்து கொள்வார். அது போதாது என்று சொத்து விஷயத்திலும் பாரபட்சமாய் இப்படிச் செய்துவிட்டாரே என்று நினைத்து அதிர்ந்தாள். “என்னைப் பொறுத்தவரை எனக்கு இரண்டு பெண்களும் இரண்டு கண்கள். அவர்களுக்குள் வித்தியாசம் பார்க்க மாட்டேன்.  இந்த உயில் இருந்ததால் பிரச்சனை வரும். இரண்டு பெண்களுக்கும் ஏற்றத் தாழ்வு வர நான் விட மாட்டேன்” என்று நினைத்த அவள் பத்திரத்தைச் சுக்கு நூறாய் கிழித்து டாய்லெட்டுக்குள்  போட்டு விட்டு தண்ணீரைக் கொட்டியதும் அது அடித்துச் சென்று விட்டது.  அப்பாடா ! தொல்லை விட்டது என்ற நிம்மதியுடன் அவள் குளியல் அறையை விட்டு வெளியே வந்தாள். “அம்மா எங்களைவிட்டு எங்கேமா போயிட்டீங்க . எங்களுக்குப் பயமாய் இருக்கு” என்று அவளருகில் வந்த  மோனிகாவும் நித்யாவும் அவளின் இரண்டு பக்கத்தில் ஒட்டிக் கொண்டனர். அவர்கள் இருவரையும்  அணைத்துக் கொண்டாள்.  மாலுமி இல்லாத கப்பலுக்குப் பொறுப்பேற்ற    மாலுமி போல்.””கவலைப்படாதீங்க, உங்களுக்கு நான் இருக்கேன், ஜெயிச்சடலாம்” என்றாள். துக்கம் விசாரிக்க வந்த   நாத்தனார் அவளைப் பார்த்து, ”சிற்றம்பலத்துக்குக் இரண்டு பெண்கள் மேலும் கொள்ளை பிரியம்” என்றாள். தன் கணவனை விட்டுக் கொடுக்காமல்”ஆமாம் எங்கள் எல்லாரிடமும் ரொம்ப  பாசமாய்தான் இருந்தார்” என்றாள் சங்கரி.   **********************     7. நினைச்சது ஒண்ணு ...   ”திருப்பதிக்குப் போய் ஏழுமலையானைத் தரிசனம் பண்ணனும்னா டிராவல்ஸ்லே புக் பண்ணுங்க . காலையிலே வீட்டு வாசலிலே காரில் ஏறி ராத்திரி வீட்டு வாசலிலே வந்து இறங்கலாம். செளகரியமாய் போயிட்டு வரலாம்” என்று நான் சொன்னதை என் கணவர் காது கொடுத்துக் கேட்கவேயில்லை. திருப்பதி வெங்கடாஜலபதியைப் எங்கள் குலதெய்வமானதால் வருடத்துக்கு ஒருமுறை திருப்பதிக்குப் போய் பாலாஜியைத் தரிசித்துவிட்டு வருவோம். ” செளம்யா, வியாழக்கிழமைதான் திருப்பதி போறோம்.. நேத்ர தரிசணம் செய்யலாம். இப்போ எல்லாம் நாம் நினைச்ச நாளிலே திருப்பதி போய்ட்டு வர முடியாது. பத்து நாள் கழிச்சுத்தான் ஆன் லைனில் புக் பண்ண முடியும் போல இருக்கு. ஒருவருக்கு ஆயிரத்து ஆறு நூறு ரூபாய் ஆகிறது. பணத்துக்காக பார்க்கல . இது ஒரு புது அனுபவமாக இருக்கட்டுமே என்று  தி நகரில் டிடிடி தேவஸ்தானம் அலுவலகம் போய் இரண்டு வாரம் கழித்து வர்ற வியாழக்கிழமைக்கு ஆன் லைனில் இரண்டு பேருக்கும் முந்நூறு ரூபாய் டிக்கட் வாங்கி வந்து விட்டேன். அப்படியே சதாப்தி ரயில் வண்டியில் காலை போவதற்கும் மாலை திரும்புவதற்கும் டிக்கட் புக் பண்ணியாகி விட்டது நாம் திருப்பதி  போயிட்டு வந்துடலாம்” என்று  எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.    திருமலையில் வெங்கடாஜலபதியைப் பார்க்கப் போகிறோம் என்னும் மனநிறைவு இருந்தாலும் அலைச்சல் அதிகம் ஆகுமே என்னும் கவலை இல்லாமல் இல்லை. எனக்கு அவர் மேல் அளவுக்கதிகமான  கோபம் ”ஏங்க நாம் காரிலே போயிட்டு வரலாமே, ஏங்க இப்படி பண்ணீங்க ?” எப்பவும்தான் காரிலே போறோம். மூணு மணி நேரம் உட்கார்ந்து போகணும். ஒரு மாறுதலுக்கு ....  ரயில் இருக்கிறது. கீழேயிருந்து மேலே போக பஸ் இருக்கிறது . திரும்பி வர ஆறு மணிக்கு  ரயில் இருக்கிறது. பகவானைச் சேவிச்சுட்டு திரும்பி வந்துடலாம். பெருமாள் அவனைச் சுலபமாய் தரிசனம் பண்ண வைப்பான். ஒண்ணு தெரியுமா? நாம் நினைக்கறப்படித்தான் நடக்கும்.  நீ கஷ்டப்படறேன்னு நினைச்சா நிஜமாகவே கஷ்டப் பட நேரிடும்“ என்றார். நான் சமாதானம் ஆக வில்லை. ”எனக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கிறீங்க” என்றேன். ”தர்ம தரிசனத்திலே வரிசையிலே நிற்பவர்களை நினைத்துப்பார். அவர்களை விட நாம் சீக்கிரம் தரிசனம் பண்ணமுடியும் இல்லையா? நம்மை விட கஷ்டப்படறவங்களைப் பார்த்து நாம் பரிதாபப்படவேண்டும் . நம்மை  நல்ல நிலைமையிலே வைத்திருக்கிற ஆண்டவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டுமென்பது  தெரியாதா உனக்கு” என்றார். நான் பதில் எதுவும் சொல்லாமல் மோனப்  புன்னகையை உதிர்த்தேன்.   ”வீட்டிலிருந்து காரில் போகாமல் ஏண்டி கஷ்டப்பட்டு ரயிலில் போறே. நான் வரமுடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே” என்றாள் என் பாசமுள்ள அக்கா.   என் தங்கை, “. உடம்பை பாத்துகோடி.. பார்க் ஸ்டேஷனில் இறங்கி பத்து நிமிடம் நடக்கணும். சப்வேயில் படிக்கட்டு இறங்கி ஏறனும்.. நீ ஏண்டி கஷ்டப்படணும். அத்திம்பேர்  உன்னை நிரம்ப  டார்சர் பண்றார்” என்றாள். அவள் குனிந்து கூடப் பெருக்க மாட்டாள். அதுக்கு வசதியா நீளமா ஒரு துடப்பம் வைச்சிருக்கா. உடம்பு மேல் அவ்வளவு பற்று. வீட்டைத் துடைப்பது, அலம்புவது எல்லாவற்றையும் செய்யும் கணவன் கிடைத்திருப்பது அவள் செய்த பாக்கியம். ”என்னைப் பூப்போல என் கணவர் வைச்சுண்டுருக்கார்” என்று சொல்லிக்கொள்வதில் அவளுக்கு அலாதிப் பெருமை.    நான் வீட்டில் இருக்கும் இல்லத்தரசி .. பிரதோஷம் அன்று மட்டும்  வீட்டுக்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குப் போய் வருவேன். அது என்னமோ தெரியவில்லை. நடப்பது என்றாலே எனக்கு வேப்பங்காய்தான்.. நாங்கள் இருப்பதோ குரோம்பேட்டை. காலை ஆறு இருபத்தி ஐந்துக்கு ரயில் புறப்படுகின்றது என்பதால்  காலை மூன்று மணிக்கே எழுந்து இட்லி தயார் செய்து கட்டிக்கொண்டு  ஐந்து மணிக்கே வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டோம். மின்சார ரயிலில் பார்க் ஸ்டேஷனை அடைந்து அங்கிருந்து நடந்து செண்ட்ரல் ஸ்டேஷனை அடைந்தோம். ஏழாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த சதாப்தியில்  நாங்கள் ரிசர்வ் செய்திருந்த கம்பார்ட்மெண்டில் ஏறி எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். திருப்பதியில் பெருமாளைச் சேவிக்க ஒரு மணி தர்சனத்துக்கு என் கணவர் புக் பண்ணியிருந்தார் . ரயில் பத்து மணி முன்னால் திருப்பதி போய் விடும் . மேலே போய் செளகரியமாய் தரிசனம் செய்து விடலாம் என்னும் நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. எங்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த மூவர்  வந்தவர்கள் மதுரையிலிருந்து வருகிறார்கள். அதில் ஒருவர், ”பெருமாளை எப்ப வேணுமானாலும் போய் தரிசிக்க முடியாது. அவர் விரும்பினால்தான் தரிசிக்க முடியும். சில சமயம் க்யூ வரிசையில் ஏழு மணி நேரம் கூட நிற்க வேண்டி வரும் “ என்றார். ”ரொம்ப சரி, ரொம்ப சரி” என்றார் என் கணவர் . திருத்தணியை அடைந்தபோது டிபன் சாப்பிட்டோம். பத்து மணிக்குப் பத்து நிமிடம் இருக்கும்போது ரயில் திருப்பதியை  அடைந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரிலியே பஸ் ஸ்டாண்டு . அதிக தூரம் நடக்க வேண்டியதில்லை. நுழையும்போதே, “வாங்க, வாங்க” என்று எங்களை பஸ்ஸில் ஏறச் சொன்னார் பஸ் டிரைவர். நிறையப் பேர் அதில் இருந்தனர். நாங்கள் ஏறியதும் பஸ் கிளம்பியது. ஒரு மணி நேரத்தில் மேல் திருப்பதி போய்ச் சேர்ந்து விட்டோம். இப்போது எங்களுடைய பிரச்சனை  தோளில் மாட்டிக் கொண்டிருக்கும்  பேகையும் மொபைல் போனையும் காலில் போட்டுக் கொண்டிருக்கும் செருப்பையும் எங்கு வைப்பது என்பதுதான். உடைமைகளை வைக்கும் அறை எங்கே இருக்குது என்று இரண்டு பேரை கேட்டதுக்கு அவர்கள் ”தரிசனம் செய்ய நுழையும் இடத்திலே இருக்குது” என்றனர். ”நல்லதா போச்சு” என்று தரிசன க்யூ ஆரம்பிக்கும்  இடத்துக்குச் சென்றோம். ஒரு மணி தரிசனத்துக்கு பன்னிரெண்டு மணிக்கு உள்ளே விடுவார்கள் என்று சொன்னதால் அங்கு பத்து நிமிடம் மரத்தின் அடியில் இருந்த மேடையில் அமர்ந்திருந்தோம். சரியாக பன்னிரெண்டு மணிக்கு ”ஒரு மணி” என்று போர்ட் போட்டு விட்டதால் ஒரு மணி தரிசனம் செய்ய காத்திருந்தவர்கள் எல்லாம் வரிசையாய் உள்ளே நுழைந்தோம். அங்கு ஓரிடத்தில் எங்களுடைய பேக், மொபைல் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு.  டோக்கன் கொடுத்து  தரிசனம் முடிந்தவுடன் கோவிலுக்குப் பக்கத்தில்  கலெக்‌ஷன் செண்டரில் போய் வாங்கிக் கொள்ள வேண்டுமென்றார்கள். பரவாயில்ல . நல்ல சிஸ்டம் . யாத்திரிகர்களுக்கு வசதியாய் இருக்கிறது என்று நினைத்தேன். வரிசையில் போக ஆரம்பித்தோம். அன்று வியாழக்கிழமை என்பதலோ அல்லது எங்கள் அதிர்ஷ்டமோ தெரியல - அவ்வளவு கூட்டம் இல்லை. என்ன ஆச்சர்யம் ! சரியாக ஒரு மணிக்குச் சன்னிதானத்தில் ஏழுமலையான் முன் நிற்கிறோம். கைகூப்பி அஞ்சலி செய்து நேத்திர தரிசனத்தை கண்டு களித்து மனநிறைவுடன் வெளியே வந்தோம். இதுவரை எத்தனையோ முறை திருப்பதி போயிருந்தாலும் இந்தத் தடவை மட்டும்  ஜருகண்டி தள்ளல்  இல்லாமல்   தரிசனம் செய்ய முடிஞ்சது. எல்லாம் அவன் செயல் !! வெளியிலிருக்கும் கவுண்டரில் லட்டு பிரசாதத்தை வாங்கிக் கொண்டோம். அடுத்தது எங்கள் பேகை கலக்‌ஷன் செண்டரிலிருந்து வாங்க வேண்டும். இங்குதான் பிரச்சனையே ஆரம்பமாச்சு. இரண்டு மூன்று பேரை கேட்டுப்பார்த்தோம். யாருக்கும் கலக்‌ஷன் செண்டர் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அப்படியே கேட்டுக் கொண்டே ரொம்ப தூரம் நடந்து விட்டோம். ”எல்லாம் உங்களாலே...” என்று வழியெல்லாம் என் கணவரைத் ஆத்திரத்துடன் திட்டிக்கொண்டே வந்தேன். அருகில் அருகில் என்று நினைத்துக்கொண்டே வெகு தொலைவு வந்துவிட்டோம். சும்மா சொல்லக் கூடாது. நிறைய இடங்களில் வழிகாட்டும் பலகையை வைத்திருந்தார்கள். இருந்தாலும் எனக்குச் சிரமமாய்தான் இருந்தது. என் கணவர் தினந்தோறும் நடைப்பயிற்சி செய்வதால் அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.    பேக் கலெக்‌ஷன் செண்டர்  ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருக்கிறது என்று ஒருவர் வழி காட்டினார்.  அங்குப் போய் மேலும்  சிறிது தூரம் நடந்து எப்படியோ ஒருவழியாய் கலெக்‌ஷன் செண்டரை அடைந்து விட்டோம். எங்கள் உடைமைகளை திரும்பப் பெற்று கொண்டு அங்கு இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன். அப்பாடா! என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன். ” என்னங்க, என்னாலே முடியலிங்க.  கோவில் கிட்டயே       கலெக்‌ஷன் செண்டர் இருக்கும்னு நினைச்சோம். நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு” என்றேன். என் கணவர் , “செளம்யா, நினைச்சது ஒண்ணு நடந்தது ரொம்ப தூரம்னு சொல்வதுதான் சரியாக இருக்கும்” என்றார். இருவரும் சிரித்தோம். , ”கால் வலிக்கிறதா? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் போய் சாப்பிடுவதற்குப் பழம் வாங்கி வருகிறேன்” என்று கனிவோடு  சொல்லிவிட்டு எதிரே இருக்கும் கடைக்குப் போய்  வாழைப் பழம் வாங்கி வந்தார். பஸ்ஸைப் பிடித்து கீழ் திருப்பதி வந்தோம்.  அலுமேலு மங்காபுரம் போய் பத்மாவதி தாயரை தரிசனம் செய்து விட்டு ரயில்வே ஸ்டேஷன் வரும்போது மாலை மணி ஐந்து.. இரண்டாவது பிளாட்பாரத்தில் சப்தகிரி வரும் என்று அறிவிப்பு வந்தது. அன்று ரயில் அரை மணி நேரம் கழித்து வந்தது. நாங்கள் டி1 கம்பார்ட்மெண்டில் எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். வண்டி சென்னைக்குக் கிளம்பியது. என் வலது பக்கத்தில்  ஒரு அம்மா உட்கார்ந்திருந்தாள் இடதுபுறம்  என் கணவர்.. எனக்கு எதிர்புறம் ஆரஞ்சு வண்ண சுடிதார் துப்பட்டா அணிந்த ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். அவளுக்குப் பக்கத்தில்  அவள் கணவர் உட்கார்ந்திருந்தார். நான்  எதிரில் அமர்ந்திருந்த ஆரஞ்சு சுடிதார் பெண்ணிடம் பேசிக் கொண்டு வந்தேன். ”அதிக கூட்டமில்லாமல் தரிசனம் கிடைத்தது”  என்றாள் அவள்” ”நல்ல தரிசனம்  கிடைத்தது என்னமோ  உண்மைதான்.. ஆனால் மொபைலையும் பேகையும் வாங்க கிட்டத்தட்ட. இரண்டு கிலோ மீட்டர் நடந்தேன். எல்லாம் இவராலே வந்தது. ஒழுங்கா காரிலே வந்திருக்கலாம். இப்படி ரயிலிலே வந்து என் காலை உடைச்சுட்டார் ” என்றேன். ”ஒருவரை மனிதனாக்குவது உதவிகளும் வசதிகளும் அல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே” என்றாள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல். புன்னகையால்  சமாளித்தேன். ”உங்களுக்கு நடந்து பழக்கம் இல்லையா?”   ”வீட்டுக்குள் நடப்பதோடு சரி . எல்லாம் வீட்டுக்கு அருகிலேயே கிடைக்கிறது. அதனால் நடப்பதற்கு வேலையே இல்லை. கடை கண்ணிக்கு அல்லது எங்குப் போவதானாலும் என் கணவர் இரண்டு சக்கர  வண்டியில் அழைத்துக்கொண்டு போய் விடுவதால் எனக்கு நடைப்பயிற்சி என்பதே இல்லை” என்றேன்.   ”நான் கீழே இருந்து நடந்தே மலைக்குப் போனேன்” என்றாள் அவள். ” அது என்னாலே முடியாது” என்று புன்சிரிப்போடு கூறினேன். தோசையை வாங்கிச் சாப்பிட்டு விட்டு பக்கத்தில் அமர்ந்திருக்கும் அம்மாளிடம் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியல. சிறிது கண் அயர்ந்தேன். அரக்கோணம் வந்து விட்டது. என் கணவருக்கு எதிரில் அமர்ந்திருந்தவர் அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்து  ”சரியான நேரத்துக்குச் சென்னை போயிடுவோமா?” என்று கேட்டார். ”நீங்க எங்கே போகணும்” என் கணவர் கேட்டார். ”திருச்சிக்குப் போகணும். பதினோரு மணி  ரயிலில் டிக்கட் ரிசர்வ் செய்து இருக்கிறது ” என்றார். ” இந்த வண்டி பத்தரை மணிக்கு செண்ட்ரல்  போய் சேர்ந்து விட்டால்  போதும். நீங்க திருச்சி ரயிலை பிடிச்சுடலாம்” என்றார் என் கணவர்.    ரயில்  சென்டிரல் ஸ்டேஷனை தொடும்போது  பத்தரை மணி. வண்டியை விட்டு கீழே இறங்கி நடக்கும்போது பார்த்தேன்.  எனக்கு முன்னால்  ஆரஞ்சு சுடிதார்காரி அவள் கணவரின் தோளைப் பற்றி  விந்தி விந்தி நடந்து கொண்டிருந்தாள். என் நெஞ்சில் பொறி தட்டியது. அப்படியானால் ---- .என் கண் பனித்தது. மொபைலில் ஓலா காருக்காக முயற்சி செய்து கொண்டிருந்த என் கணவரிடம்,“ஒலா வேண்டாங்க. நாம்ப நடந்தே எதிரே இருக்கும் பார்க் ஸ்டேஷன் போய் மின்சார வண்டியில் வீட்டுக்குப் போயிடலாம்” என்று சொன்னபோது என் கணவர்  என்னை வியப்புடனும் அதிர்ச்சியுடனும் பார்த்தார். 8. நாய்ப் பாசம்   திவ்யாவின் விழிகள் வெங்கட் அமரும் இருக்கையை நோக்கின. சாதரணமாக சரியாக ஒன்பது மணிக்கே வந்துவிடும் அவன் அன்று பத்து மணி ஆகியிருந்தும் வராத்தால்  அவளுக்கு தவிப்பாக இருந்தது. அலுவலகத்தில் எல்லோரும் வந்து விட்டார்கள். அவரவர் வேலையைச் செய்து கொண்டிருந்தனர். வீடுகளைக் கட்டி விற்கும் ஐஸ்வர்யா பில்டர்ஸ் என்ற அந்தத் தனியார் கம்பெனி  திருவான்மியூரில் எல்.பி  சாலையில் உள்ள எட்டடுக்கு மாடியில் மூன்றாவது மாடியில் இருக்கிறது. அந்தக் கட்டிடத்தில் மொத்தம் அறுபது வர்த்தக நிறுவனங்கள் உள்ளன . ஐஸ்வர்யா பில்டர்ஸ் கை நிறைய சம்பளம் கொடுக்கும் கம்பெனி. வெங்கட் அலுவலகத்திற்குள் நுழைந்தான். அவன் முகம் மிகவும் பரபரப்பாக இருந்தது. அவன் வந்து விட்டான் என்றதும் திவ்யாவின் மனசுக்குத் திருப்தியாக இருந்தது. அவள் அவனை விரும்பினாள். ஆனால் தன் மனதிலுள்ளதை  இன்னும் அவனிடம் தெரிவிக்கவில்லை. “ வெங்கட், ஏன் இன்று லேட் ? உன் இருசக்கர வாகனத்திக்கு ஏதாவது விபத்தா? “ அக்கறையுடன் வினவினாள். “ ஆமாம் . விபத்துதான். என்னுடைய வண்டிக்கு அல்ல. என் வீட்டு நாய் ஜிம்மிக்கு.” என்றான் வெங்கட் கண்களில் நீர் மல்க .. “ என்ன ஆச்சு ? விவரமாக சொல்லு.” “காலையில் அலுவலகம் கிளம்பும்போது ஜிம்மி என் பின்னால் துரத்தி வந்தது. அப்போது எதிர் பக்கமாக வந்த ஒரு கார் அதன் மீது ஏறி விட்டது . ஜிம்மியின் காலில் பலத்த காயம். வலி தாங்காமல்  அழுதது . நான் ஆட்டோவில் ஜிம்மியை மிருகங்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றேன். இரண்டாயிரம் ரூபாய் பணம் கட்டி அடிமிட் செய்தேன்.நாயின் நிலைமை மிகவும் சீரியஸ் . உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் அதற்கு ஒரு இலட்ச ரூபாய் செலவு ஆகும் . மதியம் மூன்று மணிக்குள் பணம் கட்ட வேண்டும் என்று டாக்டர் சொன்னார். எனக்குப் பணம் தேவைப்படுகிறது. எப்படி பணத்தைப் புரட்டுவது என்றுதான் தெரியவில்லை? ஒரு இலட்சம் ரூபாய் என்றாலே மலைப்பாக இருக்கிறது. அது என்ன கடன் வாங்குமளவிற்குச்  சின்ன தொகையா? யாரிடம் பணத்தைக் கேட்பது? “ அவனுக்கு நாய் என்றால் பிரியம் . இரவு வேலை முடிந்து வீட்டிற்குப் போனதும் ஜிம்மி அவன் கூட விளையாடும். அவன்தான் ஜிம்மிக்கு உணவு வைப்பான். திவ்யாவிற்கும் நாய் என்றால் பிரியம். ” வருத்தப்படாதே, வெங்கட். தேடினால் வழி கிடைக்கும். இப்போது  என்ன செய்யலாம் ? என்று யோசிப்போம்.” என்றாள் இதமாக ”அது இருக்கட்டும் ,மேனேஜர் என்னைக் கூப்பிட்டாரா? “ ”அவர் இன்றைக்கு வரவில்லை. அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான் “.   ”ஒரு இலட்ச ரூபாயை மூன்று மணி நேரத்துக்குள் எப்படி புரட்டுவது ? அதுவும் நாய்க்கு ஆப்ரேஷன் என்று சொன்னால் யார் பணம் தரப்போகிறார்கள்? ” ”நீ சொல்வது ரொம்ப சரி. தனியாக ஒருவரால் மூன்று மணி நேரத்துக்குள் ஒரு இலட்சத்தைப் புரட்டமுடியாது. ஆனால் பலர் உதவிச்செய்தால் திரட்டமுடியும். நம்பிக்கையை இழக்காதே. நான் சொல்றபடி செய். பணம் கிடைத்துவிடும். என்னிடம்   இரண்டாயிரம் ரூபாய் இருக்கிறது .அதைத் தருகிறேன்.. ”.என்றாள் ஆறுதலாக.   ” என்ன செய்ய வேண்டும் ?  ” . ”ஜிம்மியின் புகைப்படம் இருக்கிறாதா? ” ” என் மொபைலில் இருக்கிறது.” ”அதை எனக்கு உடனே அனுப்பு.  வாட்ஸ்அப்பில் எனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள் அனுப்புகிறேன்.  இன்னொன்று செய். ஜிம்மி சீரியஸ் , மருத்துவ செலவுக்குப் பணம் கொடுங்கள் என்று எழுதி எல்லோரும் பார்க்கும் இடத்தில் சுவரில் ஒட்டு.  ” . உடனே வெங்கட் கணனியில் ஒரு விண்ணப்பத்தைத் தயார் செய்தான். அதில் எழுதியிருந்ததை திவ்யா படித்தாள். உயிர் காக்க உதவுங்க - ” ஜிம்மி என்ற அழகான, புத்திசாலி நாய் காலில் அடிப்பட்டு ஆபத்தான நிலமையில் மருத்தவ மனையில் இருக்கிறது. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ஒரு இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அவ்வளவு பணம் என்னிடம் இல்லாததால் கருணை  உள்ளம் கொண்ட அன்பர்களை முடிந்த அளவு பண உதவி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய மொபைல் போன் நம்பர் 9444771442 க்கு தொடர்பு கொள்ளவும். மிக்க நன்றி – வெங்கட். ” இது போதும் “ என்று சொல்லிவிட்டு  அலுவலத்திலிருந்த ஓர் ஊழியரைக் கூப்பிட்டு “ இதை கீழே லிப்ட்க்கு பக்கத்திலிருக்கும் சுவரில் நன்றாக கண்ணில் படும் இடத்தில் ஒட்டி விட்டு வா “  என்று அந்த அறிவிப்பை அவரிடம் கொடுத்தனுப்பினாள். அலுவலகத்தில் உள்ள மற்ற நண்பர்கள் விசாரிக்கத் தொடங்கினர். சிலர் நூறு, ஐநூறு  என்று பணம் கொடுத்தனர். ஒருவர் மட்டும் ‘  நாயின்  உயிர் அவ்வளவு  மதிப்பு வாய்ந்ததா என்ன ? ஒரு நாய்க்குப் போய் இவ்வளவு மெனக்கெடனுமா ! அது  எப்படியாவது  போகிறது என்று விடுவதை விட்டு பணம் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா? என்றார். நம் உயிரைப் போல்தான் நாயின் உயிரும் . பகவான் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறார். ஒரு வாயில்லா ஜீவனைக் காப்பாத்துவது கடவுளுக்குத் தொண்டு செய்தது மாதிரி. உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள். இல்லாவிட்டால் குறை சொல்லாமல் இருங்கள் “ என்றான் வெங்கட் . அவர் பதில் எதுவும் கூறவில்லை. லிப்டின் அருகில் ஓட்டியிருந்த அறிவிப்பை படித்து அந்தக் கட்டிடத்தில் உள்ள  மற்ற அலுவலகங்களில் வேலை  செய்பவர்கள் சிறிது பணம் கொடுத்தார்கள். அது போல் வாட்ஸ்அப்பில் செய்தியைப் படித்த நாய் ஆர்வலர்கள் பலர்  பண உதவி செய்தார்கள். எப்படியோ மூன்று மணி நேரத்துக்குள் ஒரு இலட்சம் சேர்ந்துவிட்டது ! திவ்யா, வெங்கட் இருவரும் மருத்துவ மனைக்குப் பணத்துடன் சென்றார்கள். ஜிம்மியின்  அருகிலிருந்த . டாக்டர் அவர்களைப் பார்த்து , நாய் பிழைத்து விட்டது . அதற்கு அறுவை சிகிச்சை  தேவையில்லை என்று மருத்துவ நிபுணர் சொல்லி விட்டார் . உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம் . நல்ல வேளை.  நீங்களே வந்து விட்டீர்கள்” என்றார். ”ரொம்ப நன்றி டாக்டர் ” என்றான் வெங்கட் மன நிறைவுடன். நர்ஸ் கூப்பிடவே டாக்டர் அந்த இட்த்தைவிட்டு நகன்றார்.  ‘ பணத்தை என்ன செய்யலாம் ? “ திவ்யா கேட்டாள். ” நாம் ஜிம்மிக்காக சேர்த்தப் பணத்தை ப்ளு கிராஸ் அமைப்புக்குக் கொடுத்து விடலாம். எல்லா வாயில்லா ஜீவன்களுக்கும் உபயோகமாக  இருக்கும். உன் உதவிக்கு  மிக்க நன்றி. உன்னால்தான் எல்லாம் நன்றாக முடிந்தது. ” ”எப்போதும் என் உதவி வேண்டுமானால் என் கழுத்தில் மூன்று முடிச்சு போடுங்களேன் ”  என்றவள் வெட்கத்துடன் புன்சிரிப்பிட்டு தலை  குனிந்தாள். வெங்கட்டுக்கு இன்ப அதிர்ச்சி. .அளவு கடந்த மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தான்.  “ மத்தளம் கொட்ட சீக்கிரம் உன் கைத்தலம் பற்றுவேன் “ என்றான். நாணத்துடன் நின்றவளைக் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்ட அவனைப் பார்த்து  ஜிம்மி பாசத்துடன்   குரைத்தது.   ******** ******                                                       9. நல்லாயிடுவீங்க...   நிவேதிதா பன்னாட்டு கம்பெனி ஒன்றில் விற்பனைப் பிரிவில் மேனேஜராக பணி செய்கிறாள். வயது முப்பத்திரண்டு. பி.காம் , எம்.பி.ஏ . வசீகரிக்கும்  குரல். இசை ஞானம் உடையவள். தெய்வீக  விஷயங்களிலும் அவளுக்கு ஈடுபாடு அதிகம்.,  கவிதையின் நயமுள்ளவள் .  சராசரி பெண்ணாக இல்லாமல் சாதிக்க  வேண்டும் என்னும் லட்சியத்தையுடைய  அவளுக்கு இரண்டு குழந்தைகள் . ஐந்து  வயசில்  நரேன். இரண்டு வயசில் ஸ்வாதி.  கணவர் முகுந்தன்  ஒரு கம்பெனியில் பொறியாளராக வேலை  செய்கிறான். அவர்களுடைய குடும்பப் படகு, வாழ்க்கை என்னும் நதியில் அமைதியாய் போய்க் கொண்டிருந்தது. அவள் கருணை உள்ளம் கொண்டவள். இல்லாவிட்டால் வீட்டு வேலைகாரிக்கு மிக்ஸி வாங்கிக் கொடுக்க மனம் வருமா? ’ ஒரு நாள்  அவளின் மார்பில் உண்டான சிறு கட்டி  வலியைக் கொடுத்தது. . டாக்டரிடம் காண்பிக்கலாம் என்று சில காலம் தள்ளிப் போட்டாள். நாட்கள் ஆக ஆக அவளால் நெஞ்சு  வலியைத் தாங்க முடியவில்லை; மார்பில் இருந்த கட்டி கொஞ்சம் கொஞ்மாக வளர்ந்து கொண்டே வந்தது.  டாக்டரிடம் போய் காண்பிக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவள் பணி செய்யும் அலுவலகத்தில் ஆண்டு  விழா நடைபெற இருப்பதால் அது முடிந்ததும்  டாக்டரிடம் கண்டிப்பாக போகலாம் என்று தள்ளிப் போட்டாள். அவள் எப்போதும் அப்படித்தான். வேலை, வேலை , வேலை ................ என்றிருப்பாள். ”நரேன்  ஸ்கூல் போகணும் .  சீக்கிரம் வா.” . ”வாம்மா போகலாம்” என்று ஓடி வந்த நரேனை  தன் இரு சக்கர வாகனத்தில்  கொண்டு போய் அவனை ஸ்கூலில் விட்டு விட்டு வந்தாள். அவள் காத்திருந்த விற்பனை விழாவும் முடிந்தது. இன்று எப்படியும் டாக்டரிடம் போய் விட வேண்டும் . இதற்கு மேல் தாங்காது என்று டாக்டர் வேதவல்லியிடம்  போனாள். ”எவ்வளவு நாளா வலியிருக்கு? ” ”ஒரு வருஷமாய் இருக்கு டாக்டர். ” ”உடனே வந்திருக்க கூடாதா? ரொம்ப லேட் பண்ணிட்டிங்களே. . மார்பகத்தைத் தொட்டு  பரிசோதனை செய்த  செய்த டாக்டர் , நிவேதிதா, ”உங்க ஃபேமலியில் யாருக்காவது பிரஸ்ட் கேன்சர் வந்திருக்கா?” ”யாருக்குமில்ல டாக்டர்” . கட்டி வந்த உடனே ஏன் என் கிட்ட  வரலே ? நீங்க படிச்சவங்கதானே. ஆரம்பநிலையிலே வந்திருந்தா எந்த நோயானாலும் சீக்கிரம்  குணப்படுத்திவிடலாம்”    என்று  சிடுசிடுத்தார். வேதவல்லி  கைராசி டாக்டர். ஆனால் சிடுமூஞ்சி. மமோகிராம் ஸ்கேனுக்கு எழுதிக் கொடுத்தார். ”நாளை ரிப்போர்ட்டை என்கிட்ட    கொண்டு வந்து காண்பீங்க.அப்போதுதான் என்னால் உறுதியாய் சொல்ல முடியும்”. நிவேதிதா ஒரு நாள் லீவு போட்டுவிட்டு டாக்டர் சொன்னது போல் மமோகிராம் ஸ்கேன்  செய்து விட்டு ரிப்போர்டை  டாக்டரிடம் கொடுத்தாள். ரிப்போர்டை ஒரு முறை பார்த்தவர்,  ”அட கடவுளே,  உங்களுக்கு..................... உங்க கணவரை கூப்பிடுங்க  . அவர் கிட்டேயும் டிஸ்கஸ் பணண  வேண்டும். “. நிவேதிதாவுக்கு திக்கென்றது . ரிசப்ஷனில் உட்கார்ந்திருந்த முகுந்தனை அழைத்தாள். டாக்டர் அவர்களைப் பார்த்துச்  சொன்னார். “ செல்களில் ஏற்படக்கூடிய இயல்புக்கு அபரிமிதமான  வளர்ச்சியே புற்று நோய்.  உங்க மனைவிக்கு மார்பக புற்று நோய் வந்திருக்கு.. அதுவும் தேர்ட் ஸ்டேஜ். ரொம்ப சீரியஸ்” ”என்ன டாக்டர் சொல்றீங்க...................? . கேன்சரா? .நிஜம்மா டாக்டர் ”. முகுந்தன் அதிர்ச்சியடைந்தான்.    ”எ...ன....க்...கா? என....க்....கா ? நிஜமாவா .................. முப்பத்தி மூணு  வயசு தானே ஆறது  டாக்டர். அதுக்குள்ளேயா................ நாற்பது வயசுக்கு மேலேதானே ப்ரெஸ்ட் கேன்சர் வரும்னு கேள்விப் பட்டிருக்கேன்.  நல்லா பார்த்துச் சொல்லுங்க டாக்டர்.” என்றாள் நிவேதிதா. ”வியாதிக்கு வயசு தெரியுமா ? இருபத்தி ஏழு வயசு  பெண்ணிற்குக் கூட பிரஸ்ட் கேன்சர்  வந்திருக்கு . எல்லாம் நம் கையிலா இருக்கு... நீ உடனே டாக்டரைப் பார்க்காதது உன் தப்பு .” அவளுக்குத்  தலையில் இடி விழுந்த்து போல் இருந்தது. ”எனக்குப் போய் புற்று நோயா?” என்று அதிர்ந்தாள்  அவளால்  ஜீரணிக்கவே முடியவில்லை”. .”ட்ரீட்மெண்ட எடுத்தாண்டால் சரியாய் போய் விடுமா? டாக்டர் . எவ்வளவு பணம் செலவாகும்.?” ”எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை அவள் உடம்பு சீக்கிரம் குணமாகணும் . சரி ஆயிடுமா டாக்டர்.?................”  கவலையுடன் கேட்டான் முகுந்தன். ”கேனசர் வந்து விட்டால் நம் கையில் எதுவுமில்லை. கடவுள் விட்ட வழி. என்னால் முடிந்ததை  செய்யறேன். அதுதான் என்னாலே முடியும்.” ”டாக்டர் ஒரு ஐந்து வருஷத்துக்கு என உயிருக்கு உத்திரவாதம் கொடுக்க முடியுமா? என் இரண்டு குழந்தைகளுக்கு  ரொம்பச் சின்ன வயசு. அவர்களுக்கு விவரம் தெரியனுமுன்னா ஐந்து வருஷங்களாவது நான் உயிரோடு இருக்கணும்....................” டாக்டர் சிரித்தார். ”அது எப்படி முடியும்? என்னுடைய உயிருக்கு நீ ஐந்து வருஷம் உத்திரவாதம் கொடுக்க முடியுமா? யாரும் யாருடைய உயிருக்கும் உத்திரவாதம் கொடுக்க முடியாது. சில குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. சில குழந்தைகள் பிறந்தவுடன் ........................... எல்லாம் அவன் செயல். ” நிவேதிதாவுக்கு  ஆப்ரேசன் ஆகி இப்போது ஆஸ்பிட்டலில் இருக்கிறாள். இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போனாள். வேலை செய்யும் நிறுவனத்தில் நீண்ட விடுப்புக்கு எழுதிப் போட்டாள். அவள் செய்து கொண்ட கிமோ தெரபி , ரேடியோ தெரபி , அதனால் தலை மயிர் எல்லாம் கொட்டிப் போய் ஆளே உருமாறிப் போய்விட்டாள். அவளுக்கு ஏற்பட்ட மன அழுத்தம், வருத்தம் ... எல்லாம்  எழுத வேணுமானால் அது நெடுங்கதையாய் போய் விடும். சுருங்கக்கூறின்  அவள் உடைந்து போய் விட்டாள். எனக்கு ஏன் வந்தது ? என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் . அவ்ளுக்கு அதற்குச் சரியான பதில் கிடைக்க வில்லை. அவளைப் பார்த்த அவள் மாமியார் விமலா புலம்ப ஆரம்பித்து விட்டாள். ”அய்யோ எப்படி இருந்த நீ எப்படி ஆயிட்டே? உனக்குப் போய் இந்த நோய் வந்துடுத்தே . நீ என்ன பாவம் செஞ்சே? ”என்றாள் . பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அவள் காதுபட கேன்சர் ஒரு கொல்லும் வியாதி. கேன்சர் வந்து விட்டால் ஒரு வருஷமோ, இரண்டு வருஷமோ நாட்களை எண்ண வேண்டியதுதான் என்றார்கள். ”தன் குழந்தைகளைப் பார்க்கும்போது நிவேதிதாவுக்கு ரொம்பக் கஷ்டமாயிருந்தது. நான் போனதும் அவங்களை யார்...? கணவர் குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப் படணுமே”  என்று வருந்தினாள். நிவேதிதாவின் சித்தி நிர்மலா ஆஸ்திரேலியேயாவில் மெல்போர்ன் நகரில் தன் மகளுடன் வசிக்கிறாள்..விஷயத்தைக் கேள்விப்பட்ட அவள் அலைப்பேசியில்  நிவேதிதாவுக்கு ஆறுதல் கூறினாள். அவளிடமிருந்து ஆஸ்திரேலிய எழுத்தாளர் ப்ரெண்டா வாக்கர் எழுதிய ”ரீடிங் பை மூன்லைட்” என்னும் புத்தகமும் கடிதமும் வந்திருந்தது. கடிதத்தைப் படித்தாள்.   சித்தி அனுப்பிய அந்தப் புத்தகத்தை முழுவதும் வாசித்தாள். அந்தப் புத்தகம் எப்படி புத்தகத்தை ஒரு ஆயுதமாக வைத்து கேன்சரிலிருந்து அதன் ஆசிரியர் எப்படி மீண்டார் என்பதை விளக்கும் சுயசரிதை. அதன் ஆசிரியர் அதில் பல்வேறு புத்தகங்களைப் பற்றி குறிப்பிடுகிறார். அதைப் படித்ததால் அவளுக்கு ஒன்று தோன்றியது. எப்படி புத்தகங்களை ஊன்றுகோலாக வைத்து  கேன்சர் நோயிலிருந்து மீள்வது  சாத்தியமாகிறதோ அதைபோலவே   ஏதாவது ஒன்றை, ஒரு நம்பிக்கையை  வைத்து கேன்சரிலிருந்து மீள முடியும்  என்ற எண்ணம்  அவளுக்கு ஏற்பட்டது. இசை நோயை குணப்படுத்துவதைப் போல் ஏதோ ஒன்று ... என்று அவளுக்குத் தோன்றியது. அவள் வெகு  நேரம் சிந்தித்தாள். தேடியவருக்குத்தான் புதையல் கிடைக்கும். பலரிடம் கலந்தாலோசித்ததில்   அவள் தேடலுக்கு  விடை கிடைத்தது.    யோகாவைப் பயிற்சி  செய்தால் கேன்சர் குணமாகும் , உடலை ஃபிட்டாகவும் ஹார்மோன்கள் சரியாக சுரக்க வைக்கும் என்று புரிந்தது. ஒரு யோகா மாஸ்டரைப் போய்ப் பார்த்தாள். அன்று அவளுக்குத் தெரியாது அவள் மூலம் மற்றவர்கள் வாழ்க்கையில்  ஓளி ஏற்பட போகிறதென்று. தினந்தோறும் யோகாவைப் பயிற்சி செய்தாள். ”எனக்கு நல்லாயிடும் , எனக்கு நல்லாயிடும் ” என்னும் தாரக மந்திரத்தை அடிக்கடி மனசுக்குள் சொல்லுவாள். ஆறு மாதம் கழித்து மருத்துவ பரிசோதனை செய்ததில் அவளின் கேன்சர் நோயின் தாக்கம் குறைந்திருந்தது தெரிந்தது. இன்னும் ஆறு மாதத்திற்குப்பின்   அவளுக்கு வந்த நோய்  முற்றிலும் நீங்கி விட்டது,. ஆம், நிவேதிதா கேன்சரை ஜெயித்து விட்டாள். அவளுக்கு ரொம்ப  மகிழ்ச்சி. அவள் வேலை செய்த கம்பெனியின் ஜெனரல் மேனேஜர் அவளுக்கு  ஏரியா மேனேஜர் புரமோஷன் கொடுத்து கார், டிரைவர் போன்ற சலுகைகளக் கொடுத்து வேலையில் மீண்டும் சேர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். வேறு யாராவதாகயிருந்தால் வர்ற லட்சுமியை வேண்டாமென்று  என்று சொல்லாமல் உடனே வேலையில் சேர்ந்து கொள்வார்கள்.  நிவேதிதா  சராசரி பெண்ணில்லையே. அதனால் அவள் அப்படிச் செய்யவில்லை. தான் பட்ட கஷ்டம் மற்ற பெண்கள் படக்கூடாது  என்று நினைத்தாள். மேலும் கிமோ போகுமிடத்தில் பார்த்த  பெண்களின் துயரம் அவள் நெஞ்சில் பதிந்து விட்டது.   மற்றவர்களும் யோகாவைப் பின்  பற்றி  மார்பக கேன்சரிலிருந்து விடுதலை பெற  உதவி செய்ய வேண்டியது தன் கடமை என்று அவளுக்குத் தோன்றியது. எனக்கு ஏன் கேன்சர் வந்ததுன்னு அன்னிக்குக்  கேட்டேன், இன்னிக்கு அதுக்குப் பதில் எனக்குக் கிடைச்சிட்டது. மனிதத் தொண்டு செய்யத்தான் கேன்சர் எனக்கு வந்தது போலும். வாழ்க்கை என்பது விலைமதிப்பற்றது. என்னால் முடிந்தவரை மற்றவர்களின் துயர் நீக்க உதவ வேண்டும் “ என்று உறுதி செய்தாள். வேலைக்குப் போய்ப் பணம் சம்பாதிப்பதைவிட மனிதத் தொண்டு செய்யவே பிறவி எடுத்திருக்கிறோம்  என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல் செயலில் இறங்கினாள்.  ஒவ்வொரு மனிதனையும் குறிப்பிட்ட நோக்கத்தோடு ஆண்டவன் படைத்திருக்கிறான். ”எனக்கு வந்தது யாருக்கும் வரக்கூடாது” என்ற எண்ணத்தில் ஆஸ்பிட்டல் , பெண்கள் பள்ளிக்கூடம் போன்ற இடங்களுக்குப் போய் யோகாவின் மகிமையை எடுத்துச் சொன்னாள். பாசிடிவ் எண்ணம் , உடைந்து போக மாட்டோம் என்னும் நம்பிக்கை இதை யோகா மூலம் பெறமுடியும் என்றாள்.  ரேடியோ தெரபி நடக்கும் இடங்களுக்குச் சென்றாள். அங்கு வந்திருந்த நோயாளிகளின் சோகத்தை, எதிர் மறை சிந்தனையைப்  பார்த்து வருந்தினாள். நீ நல்லாயிடுவேன்னு நீ நம்பணும். ஆழ் மனதில் பதியணும்.  .உறுதியான நம்பிக்கை நமக்கு ஆயுதம் போன்றது அப்போதுதான் கேன்சரிலிருந்து வெளியே வர முடியும்” என்றாள். ”நான்  ஆறு முறை கிமோ செய்து கொண்டிருக்கிறேன். தேர்ட் ஸ்டேஜ் கேன்சரிலிருந்து குணமாகியிருக்கிறேன். நீங்களும் குணமாயிடுவீங்க. நானே அதற்கு உதாரணம்” என்பாள். நிவேதிதா வழிகாட்டலில்   கேன்சரிலிருந்து வெளிவந்தவர்கள் நல்ல எண்ணத்துடன்  மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு மார்பக புற்று நோயைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி ”நலம் ” என்னும் ஒரு  குழுவை ஆரம்பித்து மார்பக கேன்சருக்கு ஆலோசனை, மற்றும் வீட்டு மாடியில் தினமும் பெண்களுக்கு  யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது. . அவள் மாமியார் மட்டும் “ ஏன் இவள் ஊராருக்கு உழைக்கணும் . குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு வேலைக்குப் போலாமே? நான் சொன்னா யார் கேட்கிறா இந்த வீட்டிலே” என்று கசந்து சலித்துக் கொண்டாள். முகத்தைத் தூக்கி வைத்து கொள்வாள். அவளுக்கு மருமகளைப் பிடிக்காதென்று சொல்லமுடியாது. முகுந்தன் நிவேதிதாவிற்கு தோழப்பன் ஆகி விட்டான். வீட்டு வேலைகளில் பகிர்ந்து கொண்டான். அவளைப் பூ போல் தாங்கினான். மருமகள் பொதுத்தொண்டு செய்வதை அவள் மனசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அடிக்கடி முணுமுணுப்பதை மட்டும் அவள் நிறுத்தவேயில்லை. நிவேதிதா  அதைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. மாமியாரைக் கடிந்து கொள்ளாமல் பொறுமையாய் இருப்பாள். ஒருநாள் நிவேதிதா காலை நேரத்தில் பூஜை அறையில் அமர்ந்து, ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் ----. என்ற ராமலிங்க சுவாமி பாடலை வெகு இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தாள்.   அப்போது  நிவேதிதாவைத் தேடி ஒரு பெண்மணி வந்தாள் மாமியார், இப்போது பார்க்க முடியாது. அப்புறம் வாங்க என்று அனுப்பி விட்டாள். மருமகளிடம்  யாரோ வந்தார்கள் என்று  சொல்லவும் இல்லை.   ”நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் . கெட்டது நினைத்தால் கெட்டதே நடக்கும் என்னும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது.  விமலா மனதில் குப்பையுடன் சுயநலத்துடன் தன் மருமகள் செய்யும் பொதுத்தொண்டைக் குறைக் கூறிக்கொண்டிருந்தாள். அவளுக்கு   ஒரு நாள் மார்பில். சின்ன கட்டி தோன்றி வலி ஏற்பட்டதால் அவள் தனக்குப் புற்று நோய் வந்து விட்டதோ என்று  பயந்து விட்டாள். டாக்டரிடம் போய் காண்பித்து பரிசோதனை செய்ததில், “நல்லகாலம், உங்களுக்கு மார்பக  புற்றுநோய் ஆரம்பநிலையில் இருக்கிறது. சரிப்படுத்திவிடலாம் ” என்று டாக்டர் மருந்து எழுதிக் கொடுத்தார். விமலா மருமகளின் அருமையை உணர்ந்தாள். அவள் செய்யும் தொண்டு உத்தமமானது. இது தெரியாமல் அவளை குறை கூறி வந்தேன். மனப் பக்குவமில்லாமல் நல்லது செய்வதைத் தடுக்கப் பார்த்தேன்.  கெட்டதை நினைத்தேன். எனக்கே கெடுதல் வந்து விட்டது  என்று மிகவும் வருத்தப் போட்டாள்.  தனக்கு வந்தால்தான் தலைவலியும் கால்வாலியும் தெரியும் என்பார்கள். அவள் மனசு மாறி  மருமகளுக்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டுமென உறுதி பூண்டாள். ”என்னை மன்னித்து விடு நிவேதிதா. நான் தவறு செய்து விட்டேன். இதுவரை உன் அருமை தெரியாமல் தெரியாமல் இருந்து விட்டேன்” என்றாள். நிவேதிதா தன் மாமியாரின் கையைப் பிடித்துக்கொண்டு “தைரியம், தன்னம்பிக்கை இருந்தால் கேன்சரிலிருந்து வெளியே வந்து விடலாம். ’ நான்  நல்லாயிடுவேன்னு’ நீங்க நம்பணும். நல்லாயிடுவீங்க. கவலைப்படாதீங்க” என்று அன்பு ததும்ப கூறினாள்.  நம்பிக்கையை ஊட்டினாள்.   அந்த ஆறுதல் மொழியைக் கேட்ட மாமியார் மனநிறைவுடன் புன்னகைத்தாள்.   **********                   10. தேடி வந்த பிரசாதம்   மருத்துவ ரிப்போர்டுடன் டாக்டர் சீதாவுக்காக  காத்திருந்தேன். அரை மணி நேரத்திற்கு பிறகுதான் டாக்டரைப் பார்க்க முடிந்தது, அவர் என் ரிப்போர்டைப் பார்த்து விட்டு “ உங்களுக்குக் கருப்பையில் கட்டியிருக்கிறது. உடனே  அறுவை சிகிச்சை செய்து கருப்பையை எடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்து “ என்றார். என்ன டாக்டர் சொல்லறீங்க?.......................” உடனே ஆஸ்பிட்டலில் சேர்ந்து  விடுங்கள். அறுவை சிகிச்சை செய்து விடலாம்.உயிர் காப்பதற்கு அதை விட்டால் வேறு வழியில்லை” ”வீட்டில் என் கணவரை கலந்தாலோசித்துவிட்டு சொல்லுகிறேன்” என்று கூறி  வீட்டு அவர் அறையை விட்டு கவலையுடன் வெளியே வந்தேன். ”என்னங்க, டாக்டர் அறுவை சிகிச்சை செய்யனும்னு சொல்லிவிட்டரே. என்ன  செய்வது? என்று என் கணவரிடம் வருத்தத்துடன் கேட்டேன். ”எதுக்கும் இன்னொரு டாக்டர் கிட்டே இரண்டாவது ஒபினியன் கேட்டுட்டே செய்யலாம்.. நல்ல முடிவாகத்தான் சொல்லுவார் ” என்றார் என் கணவர். ” எண்டே குருவாயூரப்பா, அறுவை சிகிச்சை எதுவும் இருக்கக் கூடாது” என்று நான் என் இஷ்ட தெய்வமான குருவாயூரப்பனிடம் பிரார்த்தனை செய்து குருவாயூர் வந்து சேவிக்கிறேன்” என்று வேண்டிக்கொண்டேன்.. டாக்டர் மாலா என்னுடைய அத்தை பெண். அவள் மதுரையில் ஆஸ்பிட்டலில் பணி புரிகிறார். அவரிடம் ரிபோர்டை காண்பித்துக் கேட்டேன். “அறுவை சிகிச்சை  எதுவும் வேண்டியதில்லை நான் மாத்திரை எழுதிக் கொடுக்கிறேன். அதைச் சாப்பிடு. கொஞ்ச நாளில் கட்டிக் கரைந்து விடும்.” என்றார் மாலா. நான் நிம்மதியாய் பெருமூச்சு விட்டு , “ நன்றி ? டாக்டர் என்றேன்.. டாக்டர் என் முதுகை தட்டிக் கொடுத்தார். ” கவலைப்படாதே. ரொம்ப முற்றிய நிலைக்குப் போனால்தான் அறுவை சிகிச்சை  செய்ய வேண்டும்”  என்றார். சில டாக்டர்கள் சின்ன விஷயத்திற்குக் கூட நம்மை பயமுறுத்தி விடுவார்கள். சில டாக்டர்கள் நிலைமையை  மென்மையாக அதிர்ச்சி ஏற்படாத வகையில்  தெரிவிப்பார்கள் டாக்டர் மாலாவைப் போல்.     என் கணவரிடம் , ” குருவாயூருக்கு ரயிலில் டிக்கட் வாங்கி விடுங்கள். நாம் போய்விட்டு வரலாம்” என்றேன். அவரிடமிருந்து சம்மதம் வரவில்லை. ஒரு நாள் மாலை என் கணவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த போது எதிர்பாராத விதமாய் என் கையில் டிக்கட்டைக் கொடுத்து “ என் அலுவலகத்தில் வேலைச் செய்யும் சுவாமிநாதன் மகனுக்கு எர்ணாகுளத்தில் நாளைக்குக் கல்யாணம். அங்கு போய்விட்டு அப்படியே உன் விருப்பப்படி  குருவாயூர் போய்விட்டு வரலாம்.” என்றார். ” நிஜமாகவாகச் சொல்லுகிறீர்கள். .  அப்போ  நேர்த்திக் கடனை நிறைவேற்றி  விடலாம் “  என்றேன் புன்சிரிப்புடன்.   சுவாமிநாதன்  மகனின்  திருமணம் நடந்தது முடிந்தது. காரில் குருவாயூர் கிளம்பினோம். கார் டிரைவர் பேசிக் கொண்டே காரை ஓட்டினதால்  நேரம் போனதே தெரியவில்லை. குருவாயூர் போய்ச் சேர்ந்த போது சரியாக மணி நான்கு. நாங்கள் கோவிலருகில் போன போது அனுமார் வால் போல் பெரிய வரிசை போய்க்கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாம் என்று பேசிக்கொண்டே வரிசையில் நின்றோம். வரிசை மெல்ல மெல்ல நகர்ந்தது. எனக்குப் பின்னால் இருந்த ஒரு குழந்தை ரொம்ப நேரம் அழுதது . எவ்வளவு சமாதானம் செய்தும் அழுகையை நிறுத்தவில்லை. பசியால் அழுகிறதோ அல்லது வயிறு வலியால் அழுகிறதோ தெரியவில்லை.  அந்தக் குழந்தையின் அழுகையை நிறுத்த  குடும்பம் வரிசையை விட்டு வெளியே  போய் விட்டது. எனக்கு முன் ஒரு மலையாள பெண்மணி வெள்ளை நிறத்தில் புடவை கட்டி, நெற்றியில் சந்தன குங்குமப் பொட்டுடன் தேவதை போல் நின்றிருந்தாள். கையில் மொபைல் போன்  வைத்திருந்தாள். மொபைல் எடுத்துக்கொண்டு கோவிலுக்குள் போகக் கூடாது என்றேன்.. “ஓ” என்றாள். அந்த “ ஓ” விக்குத் தான் எத்தனை உணர்ச்சிச் சுழிப்புகள். ”ஞான் மறந்து போயி”  என்றாள் சிரித்துக்கொண்டே. உடனே  வரிசையை விட்டு விலகிச் சென்றாள். மொபலை வைத்து விட்டு உடனே திரும்பி வருவாள் என்று நினைத்தேன். ஆனால் நான் அங்கு இருக்கும்வரை வரவில்லை.   வரிசை மெல்ல மெல்ல நகர்ந்து இரும்பு கம்பிகளுடனுருந்த கூண்டுக்குள் நுழைந்தோம். அப்போது மணி ஐந்து. ஏராளமான கூட்டம். அப்போது ஏதோ ஒரு உற்சவம்  நடந்து கொண்டிருந்ததால் அங்கு   விழாக்கோலம் பூண்டு இருந்தது. இரண்டாவது வரிசையிலிருந்த ஒருவர், “ நான் மும்பாயிலிருந்து வந்திருக்கேன். காலையிலே வந்து வரிசையிலே நின்றேன். மத்தியானம் வர சொல்லிவிட்டார்கள். மூன்று மணியிலிருந்து வரிசையில் நிற்கிறேன். எப்போ உள்ளே போக முடியுமோன்னு தெரியல்ல. எனக்கு ராத்திரி எட்டு மணிக்கு ரயில். வேறு வழியில்லை. நான் ஊருக்குப் போகிறேன்” என்றவர் தலையை குனிந்து ” நாராயணா” என்று வாயால் சொல்லித் தலையால்  வணங்கி விட்டுப் புறப்பட்டார். என் கணவரின்  பக்கத்திலிருந்த வழுக்கை தலை ஆசாமி , ” இப்போது  காபி அல்லது டீ வந்தால் நன்றாக இருக்கும்.  குருவாயூரில் காபி நம்  ஊர் மாதிரி சுவையாய் இருக்காது................... ” உண்பதற்காக உயிர் வாழ்வதைப் போல்    பேசிக்கொண்டிருந்தது  என் காதில் விழுந்தது. அவர்கள் ரசனையை நினைத்து எனக்குச் சிரிப்பாய் வந்தது. ” குருவாயூர்  கோவிலில் நாராயணனைப் பற்றி நினைக்காமல், பேசாமல், பாடாமல் வேறெதைப்  பற்றியோ பேசிக்கொண்டிருக்கீங்களே “ என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை. அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.  எங்கள் வரிசை நகர ஆரம்பித்தது.  கோவிலுக்குள் நுழைந்தோம். கோவிலுக்குள் மங்கள வாத்தியத்தின்  ஒலி அதிர வைத்தது. கர்ப்ப கிரகத்தில் நுழையும்போது ஒரே தள்ளுமுள்ளு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருப்பது போல். எப்படியோ  தட்டுத் தடுமாறி , திணறி , உள்ளே நுழைந்தோம். அருமையான தரிசனம். சந்தன அலங்காரத்தில் குருவாயூரப்பன் அழகு மனசுக்கு பெரும் நிம்மதியை அளித்தது. . கண்ணை இமைக்காமல் அவரைத் தரிசனம் செய்தேன்.  எதுவுமே வேண்டிக்கொள்ளத் தோன்றவில்லை. என்னிடம் இருந்த ஐந்து பத்து ரூபாய்களை அங்கிருந்த தட்டில் போட்டேன். என் கணவரும் அவரிடமிருந்த சில்லறையைத் தட்டில் போட்டார். ஒரு நிமிடம் தான் . வெளியே வந்து விட்டோம். ”அப்பாடா ! குருவாயூரப்பனை நன்றாகத்  தரிசனம் செய்தோம். வேண்டுதலை நிறைவேற்றி விட்டோம் ” என்ற  மனத்திருப்தி ஏற்பட்டது. வரிசையில் போய்  பிரசாதம் வாங்க வேண்டும். . அர்ச்சகர் ஒருவர் ஒரு வாழை இலையில் கொஞ்சம் பூக்களையும் சந்தனத்தையும் வைத்துத் தொடாமல் நம் கையில் போடுவார். எல்லா மலையாளக் கோவில்களிலும்  பிரசாதம் அப்படிதான் வினியோகிக்கப்படுகிறது. எனக்கு முன் இருந்த ஒரு பெண்மணி  அர்ச்சகரிடம் பத்து ரூபாய் கொடுக்க அவர் பிரசாதத்தை அந்தப் பெண்மணியின் கையில் போட்டார். என்னிடம் சில்லறை பணம் எதுவுமில்லை. அதனால் வெறுங்கையுடன் நின்றேன். அர்ச்சகர் பிரசாதம் தரவில்லை. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. எனக்குப் பின்னால் நின்றவர் பத்து ரூபாயைக் கொடுத்துப் பிரசாதம் வாங்கினார். அடுத்து நின்றவர்களும் அப்படியே செய்தனர். பணம் கொடுத்தால்தான்----------என்பது  எனக்குப் புரிந்தது.  பர்ஸைத் திறந்து பார்த்தேன். நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகள்தான். என் கணவர் பாக்கெட்டைத் தடவிப் பார்த்து,  ”என்னிடமும் சில்லறையில்லை, வா போகலாம்.” என்றார். கோவிலுக்கு வந்து விட்டு பிரசாதம் வாங்காமல் போவது மனசுக்குச் சங்கடமாயிருக்கு. புனிதமான இந்த இடத்திலே அந்த அர்ச்சகர் ஏன் அப்படி அநியாயமா நடந்துகிறார்?............  என்றேன். பகவான் எல்லாரையும் பார்த்துப்பான். நல்ல தரிசனம் கிடைச்சிடுத்து இல்லையா ? அது போதும். “ விறு விறுவென்று நடந்தார் என் கணவர். நான் அவர் பின்னால்  ஓடினேன்.. அப்போது வெண் பட்டு  கட்டிய ஒரு நடுத்தர  வயது பெண்மணி அன்புத் ததும்பும் விழிகளுடன் முகத்தில் தெய்வீகக் களை பொங்கப் பிரசாதத்துடன் இருந்த     வாழை இலையை என்னிடம்  நீட்டி, ”இந்தாங்க, பிரசாதம் “ என்றார் . திகைப்புடனும் மகிழ்ச்சியுடனும்  அதை வாங்கிக்கொண்டேன். என் மெய் சிலிர்த்தது.   எனக்குக் கிடைச்ச பிரசாதம் ------------ . நான் ரொம்ப பாக்கியம் செய்திருக்க வேண்டும். ”இறைவா! எனக்கு உடலெல்லாம் கண்கள் இருந்தாக் கூட  உன்னைக் காண முடியாதே - நீயாக உன்னைக் காட்டிக்கொள்ளாவிட்டால் .....”நான் எப்போதோ கேட்ட மலையாளப் பாடல் என் நினைவுக்கு வந்தது. இறைவன் ஒருவரை அனுப்பி அவர்  மூலம் உதவி செய்கிறான் என்னும்  உண்மை எனக்குப் புரிந்தது. எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகின்றதோ அப்போதெல்லாம் இறைவன் ஓர் அவதாரத்தை வெளிப்படுத்துகிறார் என்பதை கீதையில் கண்ணன் அர்ஜீனனிடம் சம்பவாமி யுகே யுகே என்று கூறியது நினைவுக்கு வந்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்க, ”எண்டே குருவாயூரப்பா,எண்டே  குருவாயூரப்பா “ வாய்   முணுமுணுக்கச் சந்நதி இருந்த பக்கம்  இருகை கூப்பி வணங்கினேன்..                                                                             ##################                                   11. வாழ்க்கை வாழ்வதற்கே     அன்று கோர்ட் தீர்ப்பு சொல்லும் நாள்.  சுசித்ரா மிகவும் சந்தோஷமாக இருந்தாள். அவள்  எதிர்பார்த்தபடியே விவாகரத்துக்கு அனுமதி கிடைத்துவிட்டது. கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால்  ஒன்றா இரண்டா மூன்று வருடங்கள் அவள்  தனியாக வாழ்கிறாள். இன்றுதான் அவளுக்கு விடிவுகாலம் பிறந்தது. விவாகரத்து ஆர்டரைப் பெற்றுக் கொண்டதும் முதலில் அவள் மேல் அன்பு கொண்ட விவேக்கிடம்  சொல்ல வேண்டும் என்று அலைப்பேசியில் முயன்றாள். அலைப்பேசி சிணுங்கியதே தவிர விவேக்கைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மகிழ்ச்சியான விஷயமாச்சே வீட்டுக்குப் போய் சொன்னால் என்ன என்று ஆசைப்பட்டாள். அவள் இதுவரை அவன் வீட்டுக்குப் போனதில்லை. தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு. கடைசியில் ஆசை வென்றது. அவள்   ஒரு வாடகைக் காரை வரவழைத்து அதில் ஏறி அமர்ந்தாள். கார் முன் நோக்கி நகர்ந்தது. அவள் நினைவு பின்னோக்கிச் சென்றது.   சுசித்ரா செதுக்கிய சிலை போல் மிகவும் அழகாக இருப்பாள். பாட்டு, ஓவியம், கவிதை, நடனம்   ஆகிய நற்கலைகளில் மிகவும் சிறந்து விளங்கினாள். அவள் நடப்பதே ஒரு நடன தேவதை நடனம் ஆடு வருவதைப்போல் இருக்கும்.  படிப்பிலும் அதிபுத்திசாலி. சுவையாகப் பேசுவாள். ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி செய்துகொண்டிருந்தவளுக்கு அவள் பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டனர் , அவர்கள் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை ஜெகன். எக்ஸ்போர்ட்  பிசினஸ் செய்துகொண்டிருந்தான். வெளிநாட்டிலிருந்து ஆர்டர் வாங்கி திருப்பூரிலிருந்து  பின்னல் ஆடைகளை வாங்கி அனுப்புவான். ஜவுளி ஏற்றுமதியில் நல்ல லாபம் வந்து கொண்டிருந்தது.  கல்யாணம் ஆன புதிதில் ஒழுங்காகத்தான் இருந்தான். சுசித்ராவின் நளினத்துக்கும் அவன் முரட்டுத்தனத்துக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகவில்லை. அவன் ரசனையே வித்தியாசமானது. அவளுக்குப் பிடித்த ஓவியம், நாட்டியம், இசை எதிலும் அவனுக்கு ஈடுபாடில்லை. அவனுக்குப் பிடித்தது சினிமா மற்றும் அரசியல். அவள் எளிதில் உணர்ச்சி வசப்படுவாள். அவன் கல்லுளி மங்கன். முரணான சம்பவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை என்பது சுசித்ராவைப் பொருத்தவரை மிகவும் சரி. திருமணம் ஆகி முதல் ஆறு மாதம்தான் அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகச் சென்றது. அந்த ஆறு மாதத்தில் யாருமே எதிர்பாராத வகையில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி அடிவாங்கியது. ஜெகன் அனுப்பிய ஆடைகள் தரம் குறைந்தவை என்று நிராகரிக்கப்பட்டன. அதனால் அவனுக்கு பத்து லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்த மாதிரி சமயத்தில் இடிந்து விழாமல் பெரிய ஆர்டருக்கு முயற்சி செய்ய வேண்டும்.  ஜெகன் அப்படிச் செய்யவில்லை. அவன் வியாபாரம் செய்வதை நிறுத்திவிட்டு மனைவியிடம் பணம் கேட்டு செலவு செய்வான். வேலைக்குப் போகாமல்  வீட்டிலேயே இருப்பான். போதாதிற்குக் குடிப்பான். எவ்வளவு நாட்கள்தான் ஒரு பெண்ணால் அடங்கி இருக்க  முடியும்?. சுசித்ரா பணம் கொடுக்க மறுத்தாள். அவன் அவளை அடித்தான். அவள் வைத்திருந்த பணத்தைத் திருடுதல் மற்றும் வீட்டில் உள்ள சாமானையெல்லாம் விற்றுச் செலவு செய்தல் போன்றவற்றைச் செய்தான். சுசித்ராவின் பெற்றோர் ரயில் விபத்தில் மரணமடைந்து விட்டதால்  . அவனுக்குப் புத்தி சொல்ல யாருமில்லை. அவர்களுக்குக் குழந்தையில்லை.   மூன்று வருடங்கள் ஆனது அவர்களுக்கு ஒருவரை ஒருவர் முழுவதும் புரிந்துகொள்வதற்கு. சேர்ந்து வாழ முடியாது என்று திட்டவட்டமாகப் புரிந்த பிறகு தனியாக  ஓர் அடுக்கு மாடி குடியிருப்பில் ஐந்தாவது மாடியில்   வசித்தாள்.  மனசுக்குத் தோணும்போதெல்லாம் கவிதை எழுதுவாள். விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்தாள். சுசித்ரா, புத்தகங்களிலும்  முகநூலிலும் வாட்ஸ்அப்பிலும்தான் தன் நேரத்தைச் செலவிட்டாள். அவளுக்கு விவேக் என்னும் புதிய நண்பரிடமிருந்து  நட்பு அழைப்பு வந்தபோது . சம்மதத்தைத் தந்தாள். இருவரும் முகநூலில் நட்பை வளர்த்தனர். ஒருநாள்  விவேக் அவளைச் சந்தித்தான். . அவனுடைய மென்மையான குணங்கள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனுக்கும் அன்றலர்ந்த மலர் போலிருந்த அவளை மிகவும்  பிடித்துப்போய்விட்டது.. ஆடி காரில்தான் வருவான். பணத்தைத் தாராளமாகச் செலவு செய்வான். அவன் ”அப்சாரா” என்னும் மூன்று நட்சத்திர  ஓட்டலுக்கு அதிபதி.  ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் சனிக்கிழமை அலுவலகம் முடிந்தபிறகு சுசித்ரா அப்சாரா செல்வாள். அவர்கள் தனியறையில் டிபன் காபி சாப்பிட்டு மகிழ்ச்சியாய்ப் பேசிக்கொண்டிருப்பார்கள். வாய்ப்பு கிடைக்காதவரை ஆண்கள் எல்லாம் நல்லவர்கள்தான். புத்துணர்வோடு ஒரு பெண் பக்கத்தில் இருக்கும்போது ஒரு ஆணால் தடுமாறாமல் இருக்க முடியுமா? ஒருநாள் அப்படித் தனித்திருக்கும்போது அவளின் மோகனப்புன்னகை அவனுள்  மோகம் புக வைத்தது. அவளின் ஓரப் பார்வை அவனை என்னமோ செய்தது. விவேக் தன் வசம் இழந்து  சுசித்ராவைக் கட்டிப் பிடித்தான். திருமணத்துக்குப் பிறகு… என்றவளை உன் விவாகரத்து ஆன அடுத்த நாளே திருமணம்தான். அதற்காக என்னைத் தள்ளி வைத்துவிடாதே என்று கெஞ்சி அவள் மனம் மயங்கும்படி பேசினான்.  சஞ்சலத்தோடு இருந்த பெண்மையை ஆசையோடு இருந்த ஆண்மை வென்றது. அறையின் கதவை  அவன் மூட, நாணம் என்னும் நகையை அவள் நீக்க, இருவர் உடல்களும் ஒன்றாயின. ”தப்பு பண்ணிவிட்டோமோ?” என்று சுசித்ரா எண்ணினாள். , ”உங்கள் மோதிரத்தை எனக்குத் தாருங்கள்” என்றாள். ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்த அவன்,   மறுதலிக்காமல் மோதிரத்தைக் கழற்றி அவள் விரலில் அணிவித்தான். அவன் மனசு மாறமாட்டான் என்று நம்பினாள். தப்பு செய்வது   பழக்கப்பட்டுப் போனது. அன்று மதியம் கோர்ட்டிலிருந்து ஆர்டர் வந்து விட்டது. ”விவேக் கிட்ட சொல்லி  திருமணத்துக்கு நாள் பார்த்து விடவேண்டும். காவியமாய் வாழ வேண்டும்” என எண்ணினாள். விவேக் வீடு வந்துவிட்ட்து. வெளியிலிருந்த  காலிங் பெல்லை அழுத்தினாள். விவேக் வந்து கதவைத் திறந்தான். அவளைப் பார்த்ததும் அவன் முகம் இருண்டது. ” இங்கு ஏன் வந்தாய்? என்று பதட்ட்த்துடன் கேட்டான். ”கோர்ட் ஆர்டர் வந்து விட்டது? நம் திருமணத்தை எப்போது வைக்கலாம்?. நாம் இவ்வளவு நாள் பொறுத்தது வீண் போகவில்லை” என்று கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தாள். .  . ”யாருங்க வந்திருக்கிறது” என்று கேட்டுக்கொண்டே ஒரு அழகான பெண்மணி  வந்தாள். முகம் முழுக்க   பொல்லாத்தனம் தெரிந்தது. ” நான் விவேக்கைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவள். ஆமாம், நீங்க யார்  ? ” என்றாள் சுசித்ரா.   ”எப்படி உங்க கல்யாணம நடக்கும் ? நான் தான் அவர் பெண்டாட்டி. கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆகிறது . ஒரு குழந்தை இருக்கிறது.” விவேக்கைப் பார்த்து, ”என்னை ஏமாத்தீட்டிங்களே. நீங்கள் கல்யாணமானவர் என்று சொல்லவே இல்லையே. இது நியாமா? என் கிட்டே உண்மையை மறைச்சுட்டீங்களே” என்று குமுறினாள் சுசித்ரா. ”எழுந்து வெளியே போடி. வந்துட்டா பணம் பிடுங்க. சட்டப்படி நான் தான் அவர் மனைவி. நீ எதுவும் செய்ய முடியாது.” விவேக்கைப் பரிதாகமாகப் பார்த்தாள் சுசித்ரா”” ”உன் அழகு என்னைத் தவறு செய்ய வைச்சுட்டது.” என்றான் அவன். ”நீங்க யாருன்னு கேட்பீர்களோ என்று நினைத்து உங்களிடமிருந்து மோதிரத்தை வாங்கினேன். நீங்கள் நவீன துஷ்யந்தனாய் இருக்கிறீர்கள்.  எனக்கு என்ன பதில்?” அதைக்கேட்ட விவேக் மனைவி கோபத்துடன், ”முதலில் மோதிரத்தை அவிழ்த்துக் கொடு. வீட்டை விட்டு வெளியே போ” என்று கத்தினாள். விவேக் தன் மனைவி கிழித்த கோட்டைத் தாண்டாத கணவன் போல் அவளுக்குப் பின்னாலே நின்று பயத்துடன் பார்வையை மேய விட்டிருந்தான். கண்கள் கலங்க மோதிரத்தை அவளிடம் கொடுத்து விட்டுத் தத்தளிக்கும் மனசுடன் வெளியே வந்தாள். சுசித்ரா வீட்டை அடைந்ததும் கோர்ட் ஆர்டரை மேசை மீது தூக்கிப் போட்டாள். அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து யோசித்தாள். எல்லாம் இந்த முகநூலால் வந்த வினை. நாமே போய் சிக்கலில் மாட்டிக் கொண்டோமே என்று வருந்தினாள். விவேக்கை நம்பியது உன் தப்பு என்று அவள் மனசாட்சி அவளைக் குற்றம் சாட்டியது.. என்ன செய்யலாம் என்று வெகுநேரம் சிந்தித்தாள். காலையில் படிக்காமல் பிரிக்காமல் இருந்த  செய்தித்தாளை எடுத்துப் படித்தாள்.  ஒரு தற்கொலை செய்தியால் அதிர்ந்தாள்.  . ஹைதாராபாத்தில் வசித்த ஒரு டிவி தொகுப்பாளினி, ”என் சாவுக்கு யாரும் காரணமில்லை. மனஅழுத்தம் காரணமாக நான் என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன். மனமே எனக்கு எதிரி” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து மிகவும் வருந்தினாள்.   ” துன்பம் என்னும் அரக்கன் அடித்து வீழ்த்தும்போது குத்துச்சண்டை வீரர் கீழே விழுந்தால் எழுந்திருப்பது போல் உடனே  எழுந்திருக்க வேண்டும். உயிருள்ளவரை போராட வேண்டும். மனதைரியம் இல்லாத பெண்கள்தான் பிரச்சினை வரும் போது தற்கொலையை ஒரு வழியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது மிகவும் தவறு. வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணராததால் ஏற்பட்ட முடிவு அது. அதுபோல் நான் தற்கொலை  செய்துகொள்ள மாட்டேன். வாழும்வரை போராடுவேன். என் மனமே எனக்கு எதிரி ஆக மாறினாலும் அதற்கு அடிபணிய மாட்டேன். என்னைப்போல்  மற்ற பெண்கள் ஏமாந்துவிடக்கூடாது. அதனால் என் மானத்துக்குப் பங்கம் வந்தாலும் தைரியமாய் போராடுவேன்.  ”பாதகம் செய்வாரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா. மோதி மிதித்து விடு பாப்பா” என்று பாரதியார் பாப்பாவுக்குச் சொன்னது எனக்குத்தான். இரண்டில் ஒன்றைப் பார்ப்பேன்”   என்று எண்ணிக்கொண்டே வானத்தைப் பார்த்தாள். ஏழு வண்ணங்களோடு வானவில்லும் வெளிவந்தது. வாழ்க்கை அளித்த நம்பிக்கை புத்துணர்வுடன்  வீட்டைப் பூட்டினாள்.  வெளியே வந்து ஒரு ஆட்டோவில் ஏறி, ’போலீஸ் கமிஷனர் ஆபீஸீக்கு போ’ என்றாள்.                                    *************                                             12. கண்ணோட்டம்   உற்சாகமில்லாமல் வீட்டுக்குள்  நுழைந்த  மகள் யாழினையைப் பார்த்து சந்தியா கேட்டாள்? ”ஏன் கண்ணு சோர்வா இருக்கே? பாடம் அதிகமா ? யாழினி பிளஸ் ஒன் படிக்கும் மாணவி. தான் முன்பு படித்த நேரு பள்ளியிலிருந்து  சமீபத்தில்தான்  கலைமகள் பள்ளியில் சேர்ந்திருக்கிறாள். பள்ளிக்கூடம் ஆரம்பித்து மூன்று  மாதங்கள்தான் ஆகின்றன. முதல் மாதம் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டாள். இப்போது அப்படியில்லை. ”நான் நல்லாதான் இருக்கேன் அம்மா” ”உன் முகம் அப்படிச் சொல்லலியே கண்ணு . மனசில இருக்கிறதைச் சொல்லு”  ”நான் எப்போதும் போல் தான் இருக்கேன்”. ”பொய் சொல்லாதே. என்ன நடந்ததுன்னு சொல்லு”. ”சாரதா டீச்சர் சரியா பதில் சொல்லாவிட்டால்  கிள்ளறாங்க. இது கூட தெரியலையான்னு கேலி செய்யறார். எனக்கு அவமானமாய் இருக்கு”. பழைய பள்ளிக்கூடத்திலே பத்தாவது வகுப்பில் நீதான் முதல்  மாணவியாய் தேர்ச்சி பெற்றாய். . உன்னையே மக்குங்கிறாங்களா? உன் கிட்டே மட்டும் அப்படி நடந்துகிறாங்களா?” ” எல்லார்கிட்டேயும் .....  என் தோழிகளைக்கூடதான்  கிள்ளுகிறார் ”.. ”என்ன அக்கிரமம் . அப்பா வரட்டும் நாளை டீச்சர் கிட்டே கேட்கச் சொல்றேன்”. ”வேண்டாம்மா, அப்பா கிட்டே சொல்லாதே”. ”நீ சும்மா இருடி. உனக்கு ஒண்ணும் தெரியாது”. இரவு தன் கணவர் ராஜகோபாலிடம் இதுபற்றி பேசினாள்.”டீச்சர் மென்மையாய் நடந்து கொள்ள கூடாதா? பசங்களை ஏன் கிள்ளனும்?” என்றாள். “டீச்சர் கிள்ளினா கூட பரவாயில்லை சந்தியா. நம்ம  குழந்தையை ஏன் மட்டம் தட்டணும். ’உன்னால் முடியும்’  என்று டீச்சர் குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டாமா? மாணவிகளுக்கு இது புதியப் பாடம் என்பதால் புரியும்படி நடத்தவேண்டியது டீச்சருடைய கடமை. நாளை நான் போய் ஹெட்மாஸ்டரிடம் கேட்கிறேன்” என்றார் ராஜகோபாலன். ”நீங்கள் கேட்கவில்லையென்றால் நாளை நான் போய் கேட்பேன்” என்றாள் சந்தியா துடிப்புடன். அடுத்த நாள் காலை ராஜகோபாலன்  எழுந்திருக்கும்போதே குழப்பத்துடன் இருந்தார். அவர் வசிக்கும் தெருவில் இருக்கும் சம்பத் என்பவரிடம் இதுபற்றி யோசனை கேட்டார். சம்பத் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து  ஒய்வு பெற்றவர். ”டீச்சர் செய்த தப்பு. உடனே தலைமை ஆசிரியரிடம்  புகார் கொடுங்கள்” என்றார் சம்பத்.  ராசகோபாலன் யாழினையை இருசக்கரவண்டியில் தன் பின்னால் அமர்த்தி கலைமகள் பள்ளிக்கூடத்தை அடைந்தார் . “ நீ வர வேண்டாம் அப்பா. நானும் என் தோழிகளும்  சமயம் பார்த்து டீச்சரிடம் கேட்கிறோம். . நீ  ஹெட்மாஸ்டரிடம் டீச்சரைப் போட்டுக் கொடுத்தால் நாளை எனக்குத்தான் பிரச்சனை. பிளஸ் டூ முடியும் வரைக்கும் நான் இந்தப் பள்ளியில் படிக்கவேண்டும் அல்லவா? நான் நன்றாகப் படித்து டீச்சர் மெச்சும்படி நடந்து கொள்வேன். நீ வீட்டுக்குப் போப்பா” என்று பெரிய மனுஷி தெளிவாகப் பேசிய   யாழினையை வியப்போடு பார்த்தார் ராஜகோபாலன். ”இவளுடைய கண்ணோட்டமும் சரியாகத்தான் இருக்கு.இந்தக் காலத்து மாணவிகளுக்கு நாம் எதுவும் சொல்லித்தரவேண்டிய தேவையில்லை. அவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியதுபோல் இருக்கிறது” என்று நினைத்துக்கொண்டே இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தார். 13. எப்போ வருவாரோ ... ?   ”வைதேகி, வைதேகி” என்று சிவகாமி கத்தியது சமையல் அறையில் கூட்டுக்குத் தாளித்துக் கொண்டிருந்த வைதேகி காதில் விழுந்தது. அடுப்பை அணைத்துவிட்டு வந்து ”என்னம்மா வேண்டும் உங்களுக்கு?”  என்று மாமியாரைக் கேட்டாள். சிவகாமி படுத்தப் படுக்கையாய் இருக்கும் ஒரு நோயாளி. வயசு எழுபத்து ஆறு.. போன வருடம்வரை கோலோடு நடமாடிக் கொண்டிருந்தாள். இப்போது டையாபர் கட்டும் நோயாளியாய் மாறி விட்டாள். வைதேகிதான் மாமியாருக்கு  டையாபர் மாற்றி, ,குளிப்பாட்டி, வேளாவேளைக்கு மருந்து கொடுத்து சாப்பிடக் கொடுத்து கவனித்துக் கொள்கிறாள். மாமனார் சம்பத் எண்பது வயது ஆகிறது. அவருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை டெம்னிஷியா என்று சொல்லப்படும் ஞாபக மறதிதான். வெளியே போனால் வீட்டு முகவரியை மறந்து விடுவார். ஏன் அவர் பெயரையே சில சமயம் மறந்து விடுவார். அவரை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வது கடினமென்றாலும் பக்கத்தில் உள்ள தெரிந்தவர்கள் உதவியுடன் வைதேகி  எப்படியோ அவரைப் பார்த்துக்கொள்கிறாள். கிருஷ்ண குமாருக்கும் வைதேகிக்கும் ஜாதகம்  பொருத்தம்  பார்த்து சாஸ்திர சம்பிரதாயப்படி கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளைக்கு மதுரையில்  வங்கியில் வேலை . கை நிறையச் சம்பளம். பத்து மணியிலிருந்து ஐந்து மணி வரை வேலை. மாலை ஆறு மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடுவார். வைதேகி மிகவும் மகிழ்ச்சியாய் குடும்பம் நடத்தினாள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்குச் சான்றாக அக்‌ஷயா பிறந்தாள். மழலை தரும் இன்பத்தில் வாழ்க்கைக்  படகு   ஆனந்தமாய்ப் போய் கொண்டிருந்தது. கிருஷ்ணகுமாருக்கு இயற்கையிலே கடவுள் மேல் அதிக பக்தியுண்டு. காலை எழுந்ததும் குளித்துவிட்டு பூசை, புனஸ்காரம் எல்லாம் நியமமாய் செய்வான். அது போல் வைதேகியும் ஆசார குடும்பத்திலிருந்து வந்தவள். குளித்துவிட்டுத் தான் சமையல் அறைக்குள் நுழைவாள். மாமியார், மாமனாருக்குத் தேவையானதைச் செய்வாள். தீடிரென்று கிருஷ்ணகுமாருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அருகில் இருந்த ஒரு மடத்துக்கு அடிக்கடி போவான். கிருஷ்ண பக்தன் ஆனான்.   வைதேகியும் அதைப் பொருட்படுத்தவில்லை. கடவுளிடம் அதிக பக்தி வந்திருக்கு. அதுவும் நல்லதுதானே என்று மகிழ்ச்சியடைந்தாள். அன்று ஞாயிற்றுக் கிழமை . காலையிலே கிருஷ்ணகுமார் வெளியே போய்விட்டான். எப்போதும் ஞாயிற்றுக் கிழமை இருவரும் சேர்ந்தே சாப்பிடுவார்கள் என்பதால் வைதேகி தன் கணவருக்காகக் காத்திருந்தாள். மூன்று மணி ஆகி விட்டது . கிருஷ்ணகுமார் வரவேயில்லை. அடுத்த நாளும் வரவேயில்லை. வைதேகிக்கும் அவனுடைய பெற்றோர்களுக்கும் தாங்க முடியாத அதிர்ச்சி. அவன்  வேறு ஊர் எங்காவது போய்விட்டானா? அல்லது ஏதாவது விபத்தில் உலகத்தை விட்டு நீத்து விட்டானா? அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. கதவு தட்டப்படும்போது எல்லாம் அவன் வந்துவிட்டான் என்ற எதிர்பார்ப்புடன் கதவைத் திறப்பாள் வைதேகி.  வங்கி மேலாளர்  செய்தித்தாளில் காணவில்லை என்று அறிக்கை கொடுத்தார். பலனில்லை. ஆறு மாதம் ஆனது. கிருஷ்ணகுமாரைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவனை வங்கியிலிருந்து நீக்கி விட்டார்கள். அப்போது வைதேகிக்கு வங்கியிலிருந்து கணக்கு பார்த்து  கொஞ்சம் பணம் கொடுக்கப்பட்டது. கணவனே காணாமல் போனபின் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது ? கணவன் இறந்து விட்டார் என்றால் அந்தத் துக்கம் நாளிடையில் சரியாகிவிடும். கணவர் காணவில்லையென்றால் எந்தப் பெண்ணுக்கும் அது பெரிய இடி. அந்தச் சோகத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது. “ என் நிலைமை வேறு எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது” என்று வைதேகி மாமியாரிடம் சொல்லி அழுவாள். மூன்று வயதுக் குழந்தை அக்‌ஷயாவுக்கு அப்பா முகம் கூட சரியாக ஞாபகம் இருக்காது. அப்பா எப்போம்மா வருமா? என்று கேட்கும்போது அவளுடைய நெஞ்சைப் பிழிந்ததுபோல் வலி எடுக்கும். இரவில் படுக்கையில் படுத்திருக்கும்போது அவனுடைய நெஞ்சின் மயிர்க்கற்றைக்குள் முகத்தைப் புதைத்து இளைப்பாறியது, அவனுடன் உல்லாசமாய் இருந்த தருணங்கள், மகிழ்ச்சியாய் இருந்த கணங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்து அவளைத் துன்புறுத்தியது.  வைதேகிக்கு மனசு ஒடிந்துவிட்டது. பித்துப்பிடித்தவள் போல் எப்போதும் இருப்பாள். உளநல ரீதியாக மீண்டெழுந்து இயல்பான வாழ்க்கைக்கு வருவதற்குள் இரண்டு வருடங்கள் ஒடி விட்டன. நடந்தது விட்டது. எல்லாம் விதி செய்த பிழை . ஒடுங்கிபோய் இருப்பதைவிட ஆக வேண்டியதைப் பார்ப்போம்.மாமனார் மாமியாருடன் இருந்தாலும் ஏதாவது வேலையில் சேருவோம் என்று வேலைக்காக முயற்சி செய்தாள். இதற்கு மாமியாரிடமிருந்து எதிர்ப்பு வந்தது.  ” வீட்டிலேயே இரு, வேலைக்குப் போக வேண்டாம். வருகிற வருமானத்திலே சமாளித்துக் கொள்ளலாம்” என்று அதட்டினாள். மாமனார் அவளுக்கு ஆதரவு கொடுத்து, ”கணவனைக் காணவில்லையென்னும் சோகத்திலே அவள் இடிந்து போய் இருக்கிறாள். அவள் வீட்டிலே இருந்து அந்தத் துக்க  நினைவுகளில் மூழ்கி இருப்பதைவிட வேலைக்குப் போவதே மேல்” என்றதால்  ஸ்ரீஜி எக்ஸ்போர்ட்ஸ் என்னும் நிறுவனத்தில்  வேலைக்குச் சேர்ந்தாள். அந்த நிறுவனத்தின்  தலைமை அலுவலகம் அகமதாபாத் அருகில்  இருக்கிறது. அங்கு மொத்தம் பத்து பேர் வேலை செய்கிறார்கள். உரிமையாளர் உமாசங்கர் திருவேதி  குஜாராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இரண்டு மாதத்திற்கு  ஒருமுறை ஈரோடு வருவார். காலசக்கரம் வேகமாகச் சுழன்றது. தினந்தோறும் தன் கணவன் வந்து விடுவான் என்னும் நம்பிக்கையிலே ஏழு வருடங்கள் ஓடிவிட்டன.சுற்றத்தாரும் உறவினரும் இவ்வளவு நாள்  வராதவன் இனிமேல் எப்போ வரப்போகிறான்?  உயிரோடு இருக்கிறானோ என்னவோ? நீ  இளமையாய்தான் இருக்கிறாய். நீ ஏன் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என்று அவள் மனதைக் கலைக்கப் பார்த்தனர். அவள் அத்தை பையன் கார்த்திக்கு அவள் மேல் ஒரு கண். அவனுக்குக் கல்யாணம் ஆகவில்லை. அவன் அவளிடம், ஏழு வருடம் ஆகியும் வராத உன் கணவர் எப்போ வருவாரோ என்று கேலியாக பேசி அவள் மனத்தைக் காயப்படுத்தினான். ”நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாய் இருப்போம். கணவனே இல்லாத போது அவருடைய பெற்றோருடன் நீ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன்னை ராணி மாதிரி வைத்துக் கொள்கிறேன். நீ என்னுடன் வா” என்று வற்புறுத்தினான். அவள் பிடிவாதமாய், ”என் கணவர் உயிரோடு இருக்கிறார் என்று என் உள்மனசு சொல்கிறது. அக்‌ஷயாவைப் படிக்க வைக்க வேண்டும்.  என் மாமனார், மாமியாரைக் கவனித்துக் கொள்ள வேண்டியது என் கடமை. நான்  அவருக்காகக் காத்திருப்பேன். அவர் வருவார் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதுதான் என் விருப்பம். என்னை யாரும் வற்புறுத்த வேண்டாம்” என்று உறுதியோடு கூறினாள். ”இப்படியும் ஒரு பொம்பளையா” என்று அவளை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தனர். கணவன் வீட்டை விட்டுப் போய் பதினைந்து வருடம் ஆகி விட்டது. அக்‌ஷயாவுக்கு பதினெட்டு வயது முடிந்துவிட்டது. அறிவோடும் பண்போடும் நல்ல முறையில் அவளை வளர்த்துவிட்டாள். அவள் இப்போது கல்லூரியில் வணிகத்துறையில் பட்டப்படிப்பு படிக்கிறாள்.   ஸ்ரீஜி எக்ஸ்போர்ட் நிறுவனம் நிறுவி ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டதால் பொன்விழா நடத்த  முடிவு செய்யப்பட்டு அதற்கு ஈரோடில் உள்ள கிளை அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் அழைப்பு வந்தது. நிறுவனமே சொந்த செலவில் விமானம் மூலம் பணி புரிபவர்களை அழைத்துச் சென்றது. இந்தச் சாக்கில் வைதேகிக்கும் அகமதாபாத் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அலுவலகத்தில் வேலை செய்த பைரவி, தீபா, சந்தியா  ஆகிய பெண்களும் அகமதாபாத் போனார்கள். அன்று இரவு ஏழு மணி சுமாருக்கு பக்கத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார்கள். அது ஒரு கிருஷ்ணர் கோவில் . ஏதோ மடம் நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. ஏராளமான காவி உடை அணிந்த துறவிகள் அங்கே தென்பட்டனர். ஆர்த்தி முடிந்தது. கோவிலை விட்டு கீழே இறங்கும்போது வைதேகியின் பார்வை ஒரு துறவியின் மேல் விழுந்தது. அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. அவருடைய மூக்குக்கு மேலே  இருக்கும் கறுப்புத் தலையும் வழுக்கை.  அவளுக்கு நன்றாகத் தெரியும் . அவளுடைய கணவர் கிருஷ்ண குமாருக்கு மூக்குக்கு மேல் மச்சம்  உண்டு. அப்படியானால் இவர் ... என்று அவள் உள்ளம் பரபரப்பு அடைந்தது. அவள் இன்னும் நெருங்கிப் போய் பார்த்துத் தன் கணவர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டாள். ”வாடிப் போகலாம். சாமியாரைப் பார்த்தது போதும்” என்று பைரவி கண் சிமிட்டக் கூட வந்தவர்கள் சிரித்தார்கள். இல்லை, இவரை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது.” இருங்கள் அவர் யார் என்று கேட்டு விட்டு வருகிறேன்” என்று அருகில் மேஜையின் அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம், ”அந்தத் துறவியின்  பேர் என்ன ? என்று தமிழில் கேட்டாள். அதிர்ஷ்டவசமாக அவள் யாரைக் கேட்டாளோ அவர், ”நீங்க தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கிங்களா?” என்று வினவினார். வைதேகி ஆச்சர்யத்துடன் , உங்களுக்குத் தமிழ் தெரியுமா? என்று கேட்க, ”நான் பதினைந்து வருடம் சென்னையில் செளகார்பேட்டையில் வசித்தேன். தமிழ் நன்றாகத் தெரியும்” என்றார். ”ரொம்ப நல்லதாய் போயிற்று. மூக்கில் மச்சம் இருக்கிற சாமியார் எனக்குத் தெரிந்தவர் போல் தோன்றுகிறார். அவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவரா?” என்று தெரிய வேண்டும் . அவர் பெயர் என்ன ? என்றாள். அவர் இங்கு பத்து வருடமாய் இருக்கிறார். அவர் தென்னாட்டிலிருந்து வந்தவர் என்று கேள்வி பட்டேன்.  எதுவும் தெரியாது. அவரிடம் போய் அவர் பூர்வீகத்தைப் பற்றிக் கேட்க முடியாது. வேறு ஏதாவது உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். என்னால் முடிந்ததைப் பண்ணுகிறேன். ”அவரை ஒரு முறை பார்த்து ஆசி வாங்க விரும்புகிறேன் அதாவது முடியுமா? தயவு செய்து…” என்று கெஞ்சினாள் வைதேகி. எங்கள் மடத்தில் உள்ள துறவிகள் பெண்கள் விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள்.  பெண்களை ஏறிட்டுப் பார்ப்பதில்லை. மடத்தின்  குருவின் கட்டளை அப்படி. அதனால் அவரை உங்களால் பார்க்க முடியாது. இருந்தாலும் நீங்க கேட்டதால் அவரிடம் கேட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டு வந்தவர், சுவாமிஜி யாரையும் பார்க்க முடியாது என்று கூறிவிட்டார் என்றார். ஆசி வாங்குவது பற்றி கேட்டீங்களா ? ”அவர் பெண்களைச் சந்திப்பதில்லை. அவர் இருக்கும் இடத்திலிருந்தே உங்களுக்கு ஆசி வழங்கி இருப்பார்.. அவரை நீங்கள் பார்க்க முடியாது . நேரம் ஆகி விட்டதால் வைதேகி அந்த இடத்தை விட்டுக் கிளம்ப வேண்டியதாயிற்று. அவள் மனசுக்கு ஒரு ஆறுதல். தன் கணவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். சாமியாராய் இருக்கிறார். அது போதுமே. அதுவரை தவித்த அவள் மனசுக்கு நிம்மதி  கிடைத்தது. ”இந்தப் பயணத்தால்  வைதேகிக்கு அவள் கணவனைப் பார்க்க முடிந்தது. அவருடன் பேச முடியாவிட்டாலும் பரவாயில்லை. அவரைப் பற்றி  எதுவுமே தெரியாமல் இருந்ததற்கு இது மேல்” என்றாள் சந்தியா. அங்கிருந்து விமானத்தில் கிளம்பி சென்னை வந்து பிறகு காரில் ஈரோடு வரும் வரை அவளுடைய மனசில் கணவரைப் பற்றிய எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தன. வீட்டை அடைந்ததும் மாமனாரிடம், மாமா, ”அக்‌ஷயா அப்பாவை அகமதாபாத்தில் ஒரு கோயில் பார்த்தேன். அவரைப் போலிருந்தது. மடத்தில்  துறவியாய் இருக்கிறார். என்னால் பேச முடியவில்லை.” ”யாரைப் பார்த்தாய் ? ” ”நம்ம பையன் கிருஷ்ணகுமாரைத்தான் பார்த்திருக்கிறாள்” என்று மாமியார் சொன்னார். ”எனக்கு யாரையும் ஞாபகமில்லை” என்று மாமனார் சொல்லி விட்டார். அவருக்கு ஞாபக மறதி வியாதியால் . பெற்ற பையனையே மறந்து விட்டார். ”சாமியாராய்ப் போன கிருஷ்ணகுமார் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை . வேறு பெண்ணை கல்யாணம் செய்துண்டு வாழ்க்கை நடத்தாமல் சாமியாராய் இருப்பதே  உத்தமம் “ என்றாள் மாமியார் . இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட கார்த்திக் அவளைத் தேடி வந்து, “ உன் புருஷன் உன்னையும் பெற்றவர்களையும் தவிக்க விட்டுவிட்டு சாமியாராய் போய்விட்டான். , நான் சொன்னமாதிரி முன்பே கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம். உன் முட்டாள்தனத்தால் காலத்தை விரையமாக்கி விட்டாய். இன்னும் குடி முழுகி விடவில்லை. இப்போதாவது நம் திருமணத்துக்கு ஒத்துக் கொள். உனக்காகத்தான் நான் யாரையும் திருமணம் செய்யாமல் காத்திருக்கேன். என்னிடம் ஏராளமாய் பணம் இருக்கிறது. நீ வேலைக்குப் போக வேண்டியதில்லை. நாம் சந்தோஷமாய் இருக்கலாம்.”. ”ஐயோ சாமி !  என்னை விட்டுவிடு. எனக்கு இதில் துளியும்  சம்மதமில்லை. என்னை வற்புறுத்த வேண்டாம். நான் கடைசி வரை இப்படியே இருந்து விடுகிறேன். நான் போய் விட்டால் படுத்தப் படுக்கையாய் இருக்கும்  மாமியார், ஞாபகமறதி  மாமனார் இவர்களை  யார் பார்த்துக் கொள்வார்கள் ? ” என்றாள். ”அந்த கிழங்கள்  எப்படியோ போகட்டும் . நான் நாளைக் காலை வருவேன். அதற்குள் யோசித்து உன் முடிவைச் சொல். நாளைக் காலை எட்டு மணிக்கு தாலியோடு வருவேன். தயாராய் இரு. வீட்டிலேயே உனக்குத் தாலி கட்டி என் வீட்டுக்கு உன்னை  மனைவியாய் அழைத்துச் செல்வேன் “  என்றவன் அங்கிருந்து அகன்றான். ”ஒரு பெண் அழகாக இருந்ததால் இந்த ஆண்கள் சும்மாவே இருக்க மாட்டார்களா? நாசமாய்ப் போறவன் ” என்று எண்ணினாள் வைதேகி. வைதேகி இரவில் படுத்திருக்கும்போது  நன்றாக யோசித்துப் பார்த்தாள். ஒரு பெண் தனியாக இருந்ததால் அவளுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போகிறது. கார்த்திக் மாதிரி இருப்பார்கள் வற்புறுத்தி வன்முறையில் பெண்ணை ஆட்கொள்கிறார்கள்.  உயிர் போனாலும் அதற்கு உட்படக்கூடாது. ஒரு பெண்ணுக்குத் தைரியம்தான் ஆயுதம் என்று சிந்தித்துக்கொண்டே உறங்கி விட்டாள். அடுத்த நாள் காலை எழுந்திருக்கும்போது மன உறுதியுடன் எழுந்தாள். மாமியார் மாமனாருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்தாள். அப்போது எட்டு மணி . சமையலறைக்குள் நுழைந்து ஒரு பொருளை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு வாசல்படி அருகே வந்தாள். அப்போது கார்த்திக் வீட்டின் வெளி கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். மீசையுடன் பார்க்க  ஆஜானுபவனாக இருந்தான். ”தயாராய் இருக்கியா?” என்று தன் கையிலிந்த மஞ்சள் கயிற்றைக் குதுகலத்துடன் காட்டினான். ”உள்ளே வராதே அப்படியே வெளியே போடா நாயே.” ஒரு அடி முன் வைத்தான்.   ”இன்னொரு அடி வைத்தாயானால் என்ன நடக்கும் என்று பார்” என்ற வைதேகி இருப்பிலிருந்து கத்தியை எடுத்து அவன் மேல் வீசுவது போல்  கோபத்தில் கண்கள் மின்ன நின்றாள். பாயும் புலி போல் நின்றிருந்த அவளைப் பார்த்து திகைத்த அவன், ” பயம் இல்லாமல் என்னை  எதிர்க்கிறாளே.. இவளை எலி என்று நினைத்தேன். தேவை ஏற்பட்டால் பெண் புலியாக மாறுவாள் போலிருக்கிறது ”என்று நினைத்து, “ நான் ஆண் சிங்கமடி என் கிட்டேயிருந்து நீ இன்று தப்ப முடியாது “ என்றான். அவள் புலி பாய்வதைப் போல் அவனருகில் தாவினாள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவன் அச்சத்துடன் இரண்டடி பின் வாங்கினான். ஒரு கும்பிடு போட்டு விட்டு தெருவில் இறங்கி திரும்பிப் பார்க்காமல் நடந்தான். ”அங்கே என்னம்மா சத்தம்” என்று கேட்ட மாமியாருக்கு, ”பூனை வந்தது . விரட்டி விட்டேன்” என்றாள் சிரித்துக்கொண்டே. ****** ******   14. அக்கரைச் சீமையில் ...   சங்கரி பூசையை முடித்து கற்பூர ஆரத்தியைக் காண்பித்துவிட்டு ஹாலுக்கு வந்தாள். அவள் கணவன் கோபி வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டிருந்தான். ”இவர் ஏன் இப்படி வாட்ஸ் அப் பார்த்து நேரத்தை வீணடிக்கிறார் ஏதாவது கோவிலுக்காவது போயிட்டு வரலாமில்ல. கேட்டால் எரிந்து விழுகிறார்”  என்று அங்கலாய்த்தாள். சங்கரி கோவில், பக்தி பூசை, என்று தன்னுடைய நேரத்தைச் செலவழித்தால் அவளுக்கு நேர் எதிர் குணமுடைய கோபி செய்தித்தாள், டீவி, வாட்ஸ் அப்பில்  மூழ்கியிருப்பான்.  கடவுள் வழிபாடு அவனுக்குத்  துளிகூட விருப்பம் இல்லை. ஆனால் கோபியிடம் இருக்கும் ஒரு நல்ல குணம் உண்மை பேசுவது. அதுவும் மறைக்காமல் பொய் கலக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்வது. ”வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்   தீமை இலாத சொலல்”. என்னும் வள்ளுவர் வாக்கில் அவனுக்கு உடன்பாடு இல்லை. அவனைப் பொறுத்தவரை, ”வாய்மை எனப்படுவது யாதெனில் உண்மையை உள்ளபடி மறைக்காமல்  சொல்வது” என்பது அவன் தரும்  உண்மை விளக்கம். பொய் சொல்லாமையை அதாவது உண்மையை அப்பட்டமாகப் பின்பற்றும் இவனுடைய இந்த அரிய குணத்தால் அவன் மனைவி சீதாவுக்குத்தான் தொல்லை அதிகம். அவனுக்குத்தான்  எதைப் பற்றியும் கவலை கிடையாதே.   தனியார் அலுவலகத்தில் வேலை செய்த அவன்  ஓய்வு பெறுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அலுவலகத்தை மூடி விட்டதால் வேலைக்குப் போகாமல் நாட்களைக் கழித்து அறுபதைத் தாண்டிவிட்டான்.அவனுக்கு இரண்டு பெண்கள், மூத்தவள் பாமா. ஆங்கில இலக்கியத்தில் பி ஏ. கல்யாணம் ஆகி இரண்டு வயதில் ஒரு பையன் இருக்கிறான்.. கணவர் பொறியியல் பட்டதாரி.. ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இருக்கிறாள். இளையவள் அனுஷா, வயசு இருபத்தி எட்டு. சென்னையில் பொறியியல் கல்லூரியில் பி ஈ படித்துவிட்டு அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கி அமெரிக்காவில் எம்.எஸ்  மேல் படிப்பு படித்துவிட்டு தற்போது கலிபோர்னியாவில்  வேலை செய்து கொண்டு கை நிறையச் சம்பாதிக்கிறாள். , அலைப்பேசி மூலம் அடிக்கடி அம்மாவுடன் பேசுவாள். அடுப்பில் பால் காய்ந்து கொண்டிருந்தது. சங்கரியின் நினைவு பின்னோக்கிச் சென்றது ஒரு வருடத்துக்கு முன் ஒரு மாத விடுப்பில் அனு  சென்னை வந்திருந்தாள். அனுஷாவுக்கு வழவழவென்றிருக்கும் கடைசல் உடம்பு.   அம்மா சங்கரி  போல நல்ல  அழகி.  தோற்றத்தில் செழிப்பாகவும் அறிவிலும்  சிறந்து விளங்கும்   மகளின் வளர்ச்சியைப் பார்க்க பெற்றோருக்குச் சந்தோஷமாய் இருந்தது. அனு நீ நல்லாயிட்டே என்று சங்கரிமகிழ்ச்சியுடன் மகளைக் கட்டிக் கொண்டாள்.   அனுஷா போல் யாராவது உண்டா? என்று கோபி எல்லாரிடமும் பெருமையுடன் சொல்லுவார். ”ஏம்மா, நீ நல்ல வேலை கிடைச்சு அமெரிக்காவிலே சமத்தா இருக்கே. உனக்குக் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம். அமெரிக்காவில் வேலை செய்யும் பையன் உனக்குச் சம்மதம்தானே” என்றாள் சீதா. ”அம்மா எனக்கு ... ”என்று இழுத்தாள் அனுஷா. ”கல்யாணம் வேண்டாம்னு சொல்றியா. அதுக்கு நாங்க சம்மதிக்க மாட்டோம்” என்றான் கோபி. அனுஷா அம்மாவின் காதில் மெல்லிய குரலில் ரகசியமாகக் கூறினாள். என்னடி சொல்றே. நாங்க உனக்குக் கல்யாணம் செய்ய மாட்டோமா? ஏங்க இவ சொல்றதைக் கேட்டீங்களா? அவளுடன் வேலை செய்யும் ரெட்டி பையனைக் கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொல்றா. கோபிக்குக் கோபத்தில் கண் சிவந்தது. ”அனு நீ யாரை வேண்டுமானாலும் கல்யாணம் செஞ்சுக்க நான் சம்மதிக்க மாட்டேன். நான் சொல்ற பையனைத்தான் நீ கல்யாணம் செய்யணும். என்னுடைய அக்கா பையன் தினேஷ் நல்லா படிச்சிருக்கான். அவனை நீ  கல்யாணம் செஞ்சுக்கோ”. ”முடியாதுப்பா. நான் ரெட்டியைத்தான் கல்யாணம் செய்துப்பேன்”. ”ரெட்டியின் ஊர் எதுடி?” என்று கேட்டாள் சீதா. ”அவர் சொந்த ஊர் காக்கிநாடா.   நான் இப்போ வேலை செய்யும் கம்பெனியில் வேலை செய்கிறார். அவரும் சென்னைக்கு என் கூட வந்திருக்கிறார். அவரை நான் கல்யாணம் செஞ்சுக்கிறேன். அம்மா ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்சினாள் அனுஷா. யாருடி அவன்? குலம் கோத்திரம் தாய் மொழி ... ? என்று வினவினான் கோபி. அவருடைய முழுப் பெயர் ரமேஷ் குமார் ரெட்டி. வருமானம் மாசம் பத்து இலட்சம். கார் வைத்திருக்கிறார். அமெரிக்காவில் வீடு, சொந்த ஊர் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம்.தாய் மொழி தெலுங்கு. சென்னையில் பொறியியல் கல்லூரியில் படித்ததால் தமிழ் கொஞ்சம் தெரியும். அப்பா அம்மா ஆந்திராவில் கிராமத்தில் இருக்கிறார்கள். கல்யாணத்துக்குச் சம்மதம் கொடுத்துவிட்டாங்க. இது போதுமா? இன்னும் வேண்டுமா?”. ”ஏண்டி ஆந்திரான்னு சொல்றே.  வேறே ஊர். வேறு பாஷை. எப்படிச் சரிப்படும்?  நான் ஒத்துக்கொண்டாலும் அப்பா அதுக்கு ஒத்துக்கவே மாட்டார்” என்றாள் சீதா. அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த கோபி கோபத்தில் கத்தினான். ” அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். அவ மாத்திரம் அவனைக் கல்யாணம் செஞ்சுண்டா நான் பொல்லாதவன் ஆயிடுவேன். அவளைத் தலை முழுகிவிட்டு என் பெண் ஒருத்தி செத்துப் போயிட்டான்னு நினைச்சுக்குவேன்” காதல் என்று வந்து விட்டால் மனசுக்கு வலிமை எப்படியோ வந்து விடுகிறது, பெற்றோர் மறுத்ததை லட்சியம் செய்யாமல், அவள் முகநூலில் கல்யாண அழைப்பைத் தைரியமாய் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும்  அனுப்பி கோயிலில் கல்யாணமும் செய்து கொண்டு விட்டாள். பாமா முகநூலில் அழைப்பிதழைப் பார்த்து விட்டு உடனே அம்மாவிடம், “என்னம்மா அனு கல்யாணம் பண்ணிக்கொண்டாள் போலிருக்கிறதே , முகநூலில் எல்லாருக்கும் செய்தி அனுப்பியிருந்தாள். உனக்குத் தெரியாதா?” என்று விஷயத்தைத் தெரியப்படுத்தினாள். என்ன தைரியம் அவளுக்கு. எனக்குச்சொல்லாமல் கல்யாணம் பண்ணிக்  கொண்டு விட்டாளே. பெத்த அம்மா கிட்டே சொல்ல வேண்டாமா? என்று சங்கரி புலம்பினாள்.    கோயிலில் மணம் முடித்து அனு ரெட்டியுடன் வீட்டுக்கு வந்தான்,. கழுத்தில் தாலிக்கயிறுடன்  வந்த அவளைப் பார்த்து சங்கரி சிலையாகி விட்டாள். ”அம்மா இவர்தான் ரெட்டி. என்....” ”ஏண்டி என் கிட்டே சொல்லலே? என்று கேட்டுவிட்டு ரெட்டியைப் பரீசிலிப்பதுபோல் பார்த்தாள். கண்ணியமான தோற்றம். கறுப்பாக இருந்தாலும் களையான முகம்.தாடி வைத்திருந்தான்.. ஆறடி ஆஜானுபாகு. அனுஷா பொருத்தமானவனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள்” என்று மனதுக்குள் நினைத்தாள். ”உன்கிட்டே சொன்னால் அப்பாகிட்டே சொல்லுவே. அப்பா கல்யாணத்தை நிறுத்திடுவா. கல்யாணம் முடிஞ்சி போச்சு. பதிவு திருமணம் முடிந்தது இங்கே வருகிறோம்”. ”எனக்குத் தெரிந்தால் கல்யாணத்துக்கு நேரில் வர முடியாவிட்டாலும் மானசீகமாக வாழ்த்தி இருப்பேன். அதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் செய்து விட்டாய். உட்காருங்க.  காபி போட்டு எடுத்து வரேன்” என்று சமையல் அறைக்குள் சென்றாள். அப்போது குளியலறையிலிருந்து வெளியே வந்த கோபி இவர்களைப் பார்த்து முகம் சுளித்தான். தன்னுடன் கை கொடுக்க வந்த ரெட்டிக்கு கைகொடுப்பதைத் தவிர்த்துவிட்டு அனுஷாவைப் பார்த்து, ”கல்யாணமே முடிஞ்சு போச்சா ! ! பேஷ், பேஷ். நீ பெரிய மனுஷி ஆயிட்டே.. நீ என்னுடைய பெண்ணும் இல்ல. நான் உன்னுடைய அப்பாவும் இல்ல.. எதுக்கு இங்கே வந்தே. கிளம்பு “கண்கள் சிவக்க கத்தினான். காபியைத் தம்பளிரில் எடுத்து வந்த சங்கரி அவர்கள் இருவரும் போவதை மனக்கிலேசத்துடன் பார்த்தாள். ”என்னங்க...” ”திமிர் பிடிச்ச கழுதை.குடும்ப கவுரவும் போச்சு. . நான் எப்படி உறவுகாரங்க முகத்திலே முழிப்பேன். மானம் போச்சு. எல்லாம் போச்சு. அவளைத் தலைமுழுகிட்டேன்” என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான்.   அந்தச் சம்பவம் கோபியை அடியோடு மாற்றி விட்டது. எங்கேயும் வெளியே போகாமல் நாலு சுவருக்குள் அடைபட்டுக் கிடந்தான். ”அனு எனக்குத் துரோகம் பண்ணிட்டா” என்று அடிக்கடி புலம்புவான். தாடி வைத்து எப்போதும் சோகத்துடனும் எந்த உத்வேகம், உற்சாகம்  எதுவும் இல்லாமல் நடைப்பிணம் போல் வாழ்ந்தான். அவனறையை விட்டு வெளியே வராமல் சோகை பிடிச்சவன்போல் எப்போதும் கட்டிலில் படுத்து மோட்டு வளையைப் பார்த்து சிந்தித்துக் கொண்டு இருப்பான். எப்போதும் சிடுமூஞ்சியாய் சின்ன விஷயத்துக்குக் கூட சீதாவிடம் சண்டை போடுவான். சனியனே, நாயே  என்று அவளைத் திட்டுவான். அடிப்பான்.  மனசைக் காயப்படுத்துவான்.ஒருமுறை காபி சூடாக இல்லை என்று காபி தம்பளரை அவள் மூஞ்சு மேலே விட்டெறிந்தான். அவன் செய்யும் இம்சையை அவளால் தாங்க முடியவில்லை. அன்பு எள்ளளவும் இல்லாமல் கோபத்தில் எரிமலையாய் யாரும் அணுக முடியாதவாறு இருந்தான். யாராவது வீட்டு அழைப்பு மணியை அழுத்தினால் கூட  எழுந்து போய் பார்க்க மாட்டான் என்று சங்கரி குறைப்பட்டுக் கொள்வாள்.  எப்போதும் சாப்பாடு, தூக்கம் என்று சோம்பேறியாய் இருந்ததால் அவன் உடல்  வாக்கில் பருக்க ஆரம்பித்து விட்டது. இரவில் தூக்கம் வராததால்  மாத்திரை போட்டுத்தான் தூங்குவான். அதனால் தினந்தோறும்  காலை நேரம் கழித்துத்தான் எழுந்திருப்பான். அவனுடைய நிலையைக் குறித்து சீதாவால் வருந்தாமல் இருக்க முடியவில்லை. அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே பால் பொங்கி விட்டது. அடடா! கவனிக்காமலிருந்து விட்டேனே என்று பாலைக் கீழ் இறக்கி வைத்து காபி போட்டாள். அப்போது அலைப்பேசி சிணுங்கியது. வாட்ஸ் அப் அழைப்பு. பாமாதான்....சங்கரி தன் பெண்ணிடம்.  ” என்ன  பண்ணறதுன்னு தெரியல பாமா? அப்பா ரொம்ப மோசாமாயிட்டா. ஒரு மாதிரியா இருக்கா” என்று வருந்தினாள். ”என்னம்மா அப்பாவுக்குப் புத்தி பெசகி போயிட்டிருக்குமென்று நினைக்கிறாயா? அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. நீங்க இருவரும் கிளம்பி சிட்னி வந்துடுங்க. கொஞ்ச நாள் எங்களுடன் தங்குங்க. இடமாற்றம் அப்பாவுக்கு மனமாற்றத்தை நிச்சயமாய் கொடுக்கும்” என்று சொன்னதோடு இல்லாமல் சென்னையில் இருக்கும் தன் மைத்துனன் மூலம் அவர்கள் ஆஸ்திரேலியா வருவதற்கு எல்லா ஏற்பாட்டையும் செவ்வனே செய்து விமான  டிக்கட்டையும் வாங்கிக் கையில் கொடுத்து விட்டாள். முதலில் எங்கும் வரமுடியாது என்று முரண்டு பிடித்த கோபி, பயணச் சீட்டு வாங்கிவிட்டதாலும், சங்கரி மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் வர ஒப்புக் கொண்டான். தீபாவளி முடிந்த அடுத்த நாளில் இருவரும் விமானத்தில் புறப்பட்டு விண்ணில் பறந்து சிட்னி விமான நிலையத்தை அடைந்தனர். பாமாவும் அவள் கணவர் ஆனந்தும் விமானநிலையம் வந்து அவர்களை தங்கள்  இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். மூன்று வயது பேரன் அபிஷேக் தாத்தாவைப் பார்த்ததும் அவருடன் ஒட்டிக் கொண்டு அவர் மடியில் ஏறி அமர்ந்து கொண்டான். முதல் இரண்டு நாள் ஓய்வு எடுத்துக் கொள்வதில் போய்விட்டது. சிட்னியில்  உள்ள முருகன் கோவிலுக்குப் பெற்றோரை பாமா அழைத்துச் சென்றாள். கோவில் விஸ்தாரமாய் இருந்தது. சங்கரிதினந்தோறும் வீட்டில் திருப்புகழ் பாடுவாள். எப்பவாது  முருகர் கோவிலுக்குப் போனால்  சன்னதி முன் நின்று மனம் உருகித்  திருப்புகழைப் பாடுவது அவள் வழக்கம். . அன்றும் அவ்வாறே திருப்புகழைப் பாடினாள்.  கோபி அவன் எப்போதும் செய்வது போல்  கோவிலுக்கு வெளியே நின்று தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.. இரண்டு மணி தூரத்திலிருக்கும் கடலோரமாகப் பொங்கும் நீரூற்று என்னும் இயற்கை அதியசத்தைப் போய்ப் பார்த்தார்கள். சங்கரி புது இடங்களை விரும்பிப் பார்த்தாலும்  கோபி எதிலும் ஆர்வமில்லாமல்  இருந்தான். சீதாவின் கவலை பாமாவையும் தொற்றிக் கொண்டு விட்டது. அப்பா ஏன் உற்சாகமில்லாமல் இருக்கிறார்?. என்ன செய்யலாம்? என்று யோசிக்க ஆரம்பித்தாள். அவள் ஒருமுறை டிபார்ட்மெண்ட்  ஸ்டோர் போகும்போது அவளுடைய தோழி ஹேமாவைப் பார்த்தாள். அவள் திருநெல்வேலியைச் சேர்ந்தவள். தமிழ் நாட்டுக் கல்லூரியில்  சட்டம்  படித்தவள். மெல்போர்னில் ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் பணி செய்கிறாள். அவள் முதல் கணவன் மூளையில் புற்று நோய் வந்து இறந்து விட்டான். இரண்டாவது கணவனுக்கும் மூளையில் புற்று நோய். அதனால் மன அழுத்தத்தில் இருந்தாள். “ குட் மார்னிங் ஹேமா, எங்கே உன்னை ரொம்ப நாளாக காணோம் ? நீ ஊரில் இல்லையா ?” ”நான் புளூ மவுண்டன்ஸ் என்னும் இடத்தில்  விபாசனா தியானப் பயிற்சிக்கு போயிருந்தேன். பத்து நாள் பயிற்சி. நேற்றுதான் முடிந்தது. அதிக  மன அழுத்தத்தில் இருந்தேன். நாம் உடல் நலம் பெற உடற்பயிற்சி செய்வதைப்போன்றே, மனநலம் பெற செய்யும் பயிற்சியே புத்த விபாசனா  தியானம் ஆகும். பத்து நாட்களிலும் யாருடனும் பேசக் கூடாது. அலைபேசி உபயோகிக்கக் கூடாது. அங்குப் போய் வந்ததிலிருந்து என் மனசு நிம்மதியாய் இருக்கிறது. என் மன அழுத்தம் எல்லாம் எங்கேயோ போய்விட்டது. கீதையில் சொன்னபடி சுகம் துக்கம் இரண்டையும்  சமமாக பாவிக்கக் கற்றுக் கொண்டால்  வாழ்க்கை பொலிவுறும்” என்று தெளிந்தேன்”.   அதைக்கேட்ட  பாமாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. புளூ மவுண்டன்ஸ் சிட்னியிலிருந்து அருகில்தான் உள்ளது. அங்கே தியானப் பயிற்சிக்கு பெற்றோரை அனுப்பினால் என்ன என்று தோன்றியது.  மும்முரமாக முனைந்து தன் பெற்றோரை ஹேமா சென்ற அதே தியான பயிற்சியில் சேர்த்து விட்டாள். கோபிக்கு அதில் துளி கூட விருப்பமில்லை. ஆனால் அவள் கட்டாயப் படுத்தியதால் வேறு வழியில்லாமல் விபாசனா தியான வகுப்பில் சேர்ந்தான். தியானப் பயிற்சி மையம்  இருந்த புளூ மவுண்டன்ஸ் அழகான இடம்.  ரம்மியமான இயற்கை சூழல் பார்ப்போரைப் பரவசப்படுத்தும். பத்து நாள் கடுமையான பயிற்சி. யாருடனும் பேச கூடாது. குட் மார்னிங் கூட  சொல்லக் கூடாது. போன் கிடையாது. தியானம் மட்டுமே செய்ய வேண்டும்.  இந்தக் கடின பயிற்சியைத் தாக்கு பிடிக்க முடியாமல் இருவர்  இரண்டாவது நாளே அந்த இடத்திலிருந்து ஓடி விட்டனர். நான்காம் நாள் வருவதற்குள் மனம் பெரிதும் அமைதி பெற்று, கூர்மையுற்று விபாஸனா பயிற்சி தொடங்கத் தேவையான திறனை அடைகிறது. உடலெங்கும் புலனாகும் உணர்ச்சிகளை உணர்ந்தறிந்து, அதன் தன்மைகளைப் புரிந்துகொண்டு, எதிர்வினைகளை ஏற்படுத்தாது, சமநோக்கை வளர்த்துக்கொள்வதே இந்தப் பயிற்சி.  மூன்று நிலைகளைக் கொண்டது இந்தப் பயிற்சி.  முதல் நிலை 'சீல', அதாவது நன்னடத்தை, என்பதே இந்த முறையின் அடித்தளம் ஆகும். சீலத்தின் அடிப்படையில் எழும் மன-ஒருநிலைப்பாட்டிற்கு 'சமாதி' என்று பெயர். ஒருவர் இடைவிடாது தன் மூச்சுக்காற்றின் போக்கின் மீது தன் முழு கவனத்தையும் நிலைநிறுத்தி, அதில் இயல்பாக நிகழும் பல மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் தன் மனதின் மேல் உள்ள கட்டுப்பாட்டை ஓரளவு வளர்த்துக் கொள்வது இரண்டாம் நிலை. அக-ஆராய்வினால் விளையும் ஞானம் மூன்றாவது நிலை.  இந்த ஞானத்தின் மூலமே ஒருவர் மனத்தூய்மை அடைகிறார். கோபிக்கு முதலில் ரொம்ப கஷ்டமாய் இருந்தது. எவ்வளவு நேரம் ஒருத்தன் மூச்சை கவனித்துக் கொண்டு இருக்க முடியும். உட்கார்ந்து உட்கார்ந்து கால் மரத்துப் போய் வலி உண்டானது,  யார் கூடவும் பேசவும் கூடாது என்பதால் தனக்குள்ளே பேசிக் கொண்டான். எப்போதும் தியானத்திலே ஈடுபட்டதால் தான் செய்தது சரியா? என்று தன்னை ஆத்ம விசாரணை செய்தான்.”அனுவின் மீது வெறுப்பை உமிழ்ந்தேனே” என்று அரற்றினான். அக ஆராய்வின் மூலம் இதுவரை எண்ணற்ற நாட்களை அன்பு  பாசம், நேசம் பொழியாமல்  வாழ்க்கையை  வீணடித்து தான் செய்தது தவறு என்றும் வாழ்நாள் குறுகியது அதனால் இனிவரும் நாட்களில் அன்பை அனைவரிடமும் பொழிய வேண்டும் என்னும்  ஞானோதயம் அவனுக்கு  வந்தது. அன்பு விலையில்லை  என்பதையும்  உணர்ந்தான்.   ராமேஸ்வரம் போனாலும் சனிஸ்வரன் விடாது என்னும் பழமொழியை மெய்ப்பிப்பது போல சங்கரிஎல்லாநாட்களிலும் கோபியை நினைத்தே கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள். இறுதியாக, கடைசி நாள் அன்று, அனைவரிடமும் நல்லுறவு வளர்க்கும் உரையாடலுடன் முகாம் நிறைவடைந்தது. கணவனும் மனைவியும் வெவ்வேறு இடத்தில் சீதாவுக்குப் கோபியைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பயிற்சி முகாம் முடிந்தது எல்லாரும் வெளியே வந்தார்கள். பாமா தன் பெற்றோரை அழைத்துச் செல்ல காரில் வந்திருந்தாள். கோபி தன் மனைவியைப் பார்த்ததும் சங்கரிஎன்றான் பாசத்துடன். அவ்வளவுதான் அன்பின் அரவணைப்பில் இருவரும் திளைத்தனர்- திணறினர். பாமாவுக்கு இன்ப அதிர்ச்சி. தன் நினைவு தெரிந்த நாள் முதல் தன் தந்தை தாயாரைக் கட்டிப் பிடித்து முத்தம் தந்ததைப் பார்த்ததே இல்லை அவள். ”தியானப் பயிற்சி எப்படிம்மா இருந்தது?” சங்கரிபுன்னகையை நெளிய விட்டாள். மனசுக்கு நல்ல பயிற்சி என்றாள். ”அப்பா உனக்கு எப்படி ...?” ” வாழ்க்கையில் துன்பம் வரும்போது அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் யதார்த்தம் என்று தெளிந்தேன்.  இப்போ என் மனம் என் கட்டுப்பாட்டில் இருக்கிறது”. நாலு நாட்கள் கழிந்து அவர்கள் சென்னை கிளம்பி விட்டார்கள். அபிஷேக் தாத்தாவின் கால்களைக் கட்டிக் கொண்டு, தாத்தா என்னை விட்டுப் போகாதே என்று கதறி அழுதான். ”அழாதேடா கண்ணு. நாங்க போய் அணு சித்தியை இங்கே அழைச்சிட்டு வரோம்” குழந்தைக்குச் சமாதானப் படுத்தினாள் சீதா. சின்ன பையனுக்கு எவ்வளவு பாசம் தாத்தாவின் மேலே என்று அவள் வியந்தாள். குழந்தையிடம் பொய் சொல்ல வேண்டி இருக்கிறதே என்று கோபி வருத்தப்பட்டான்.    விமானத்தில் சென்னை  போகும்போது கோபி தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மனைவியிடம் மெல்லிய குரலில் பேசினான். ”சங்கரி ” ”உம்” ”தியானப் பயிற்சியாலே உன்கிட்டே ஏதாவது முன்னேற்றம் உண்டா?” ”உஹும்” ”ஏன் ?” நான் தியான பயிற்சியின் போது,” நீங்கள் மனசு ஒடிஞ்சு போயிட்டீங்களே. நீங்க எப்போ சந்தோஷமா இருப்பீங்க” என்று உங்களைப் பற்றியே சதா காலமும் நினைச்சிருந்தேன். ”அசடு . நான் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்று நீ விட்டுவிட்டிருக்க வேண்டும்”. ”அது என்னாலே முடியாதுங்க”. அவன் அவளைப் பார்த்த பார்வையில் பாசம் பொங்கி வழிந்தது. சென்னை விமானநிலையம் வந்ததும் அவன் அன்புடன் அவள் கை/யைப் பிடித்து அழைத்து வெளியே வந்தான். அவன் எப்போதுமே வேகமாக முன்னால் நடப்பான்.. அவள் அவன் பின்னால் ஓடுவாள். அன்று அவன் செய்கையால் அதிர்ந்தாள். ஒரு மாதம் கழித்து வீட்டுக்கு வருவதால் சீதாவுக்கு  வீட்டில் எக்கசக்கமான வேலை.  ஓட்டடை அடித்து சாமான்களை அடுக்கி வைத்து பிரயாணக் களைப்பு தீர நான்கு நாட்கள் ஆகிவிட்டன. அப்பாடா என்று பெருமூச்சு விட்டு பாமாவிடமிருந்து அலைப்பேசியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்  அன்று காலை மேகத்திலிருந்து எட்டிப் பார்த்த  கதிரவன் அனுப்பிய  ஒளிக்கற்றைகள் வீட்டுக்குள் நுழைந்து பிரகாசித்தது போல் கோபியின் மனதிலும் இருள் நீங்கி வெளிச்சமாய் இருந்தது.  பூசை செய்வதற்காகக் காவி உடை அணிந்திருந்தான்.   ”அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே ”இராமலிங்க சுவாமிகளின் பாடலை அவன் உதடு முணுமுணுத்துக் கொண்டிருந்தது.  அனுவிடமிருந்து அலைப்பேசி வரவே அவளுடன் பேசிக் கொண்டிருந்தான். அன்பை அவளிடம் பொழிந்து கொண்டிருந்ததை வியப்புடன் சங்கரிபார்த்துக் கொண்டிருந்தாள். கோபி அலைப்பேசியை அவளிடம் கொடுத்து,”அனு பேசுகிறாள்”என்றான். சங்கரிஅலைப்பேசியை வாங்கிக் கொண்டாள். ” அம்மா  எப்படி இருக்கே?” என்றாள் குதுகலத்துடன். ”நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீ எப்படி இருக்கே அனு ? அப்பா ரொம்ப மாறிட்டார் தெரியுமோ?  காவி வேட்டி உடுத்திக்கிறார். என் கிட்டே அன்பா நடந்துக்கிறார். எல்லாரிடமும் அன்பை பொழகிறார்.  உண்மையைச் சொல்லனும்னா  புத்தருக்குப் போதி மரத்தடியில் ஞானம் வந்தது போல அப்பாவுக்கு அக்கரைச் சீமையிலே ஞானம்.....” ” அப்பா இப்போ என்கிட்டே பாசத்துடன் பேசினார். அவர்  மாறிவிட்டதில் எனக்கும் சந்தோஷம்தான். அப்படி மாற்றியது யாரோ?” ”சிறுகதையில் திருப்பம் வருவது போல் எல்லாருடைய வாழ்க்கையிலும் குருவின் போதனையாலோ   அல்லது ஏதாவது ஒரு சம்பவத்தாலோ  திருப்பம் வருகிறது. அது  மனிதன் வாழ்வில் இறைவன் செய்யும் விந்தை. அப்பாவின்  வாழ்க்கையில் தியானப் பயிற்சியால்  திருப்பம் ஏற்பட்டு விட்டது” ” அம்மா, உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நான் மூணு மாசம். முழுகாம இருக்கேன். உங்களுக்கு விமான டிக்கட்   வாங்கி அனுப்பிச்சுடறேன்.  நீயும் அப்பாவும் உடனே கிளம்பிய கலிபோர்னியா  வந்துடுங்க. குழந்தை பிறக்கும்போது நீங்க என்கூட இருக்கணும்”. சங்கரி ஆனந்த வெள்ளத்தில் மிதந்தாள்.                                                  ******************                       15. இதுவும் கடந்து போகும் ! !   ” பாஸ்கர் உங்க மனைவி நித்யாவை  இப்போ  வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம் ” என்றார் டாக்டர் பவானி.  ”பெண்கள் செயற்கை முறையில் குழந்தை பேறு பெற சிகிச்சை எடுத்துக்கொள்ளும் ”.பவானி  செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனை”  மயிலாப்பூரில் உள்ளது.அங்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த நித்யாவுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது. அவள் இப்போது தன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறாள். அந்த மருத்துவமனையிலிருந்து உடலாலும் மனத்தாலும் பலவீனமாக இருந்த மனைவி நித்யாவை பாஸ்கர் கையைப் பிடித்து மெதுவாக  அழைத்துக் கொண்டு வந்து காரில் அமர வைத்தான். வீட்டை நோக்கிக் காரைச் செலுத்தினான். நித்யாவின் நினைவலைகள் பின்னோக்கிச் சென்றன.   நித்யாவும் பாஸ்கரும். வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். கோவையில் பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் நித்யாவின் சொந்த ஊர் ஈரோடு. ஏழ்மையான குடும்பம்.  அப்பா இல்லை.. அழகும் அடக்கமும் இனிமையாய் பேசும் இயல்பு உடையவள்.  பாஸ்கரின்  தந்தை கதிரேசன் கோயம்பத்தூரில் பெரும் செல்வந்தர்.. பாஸ்கர் புத்திசாலி ;  நன்றாகப் படிப்பான். அவர்கள் இருவரும் பி.ஈ இறுதிப் பரீட்சையில்  சிறப்பான முறையில் தேறி சென்னையில் வெவ்வேறு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலையில்  சேர்ந்து விட்டனர். அவர்கள் நட்பு தொடர்ந்து பின் காதலாக மலர்ந்து விட்டது. மூன்று வருடம் காதலித்த பிறகு பாஸ்கர் தன் தந்தையிடம்  தன் காதலைப் பற்றிச் சொல்லி நித்யாவைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்றதும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இருவர் வீட்டிலும் பயங்கரமான எதிர்ப்பு. அவர்கள் திருமணம் நண்பர்கள் உதவியுடன் சென்னையில் வடபழனி   முருகன் கோவிலில்  நடந்தது. இருவரும்   பணி செய்வதால் வீடு வாங்க வங்கியில் சிரமமின்றி கடன் கிடைத்தது. வேளச்சேரியில் அடுக்கு மாடி குடியிருப்பில்  ஒரு ஃபிளாட் வாங்கி அதில் குடியேறி விட்டனர். இல்லற வாழ்க்கை இன்பத்தில் திளத்திருந்தனர்..குழந்தை இல்லையே என்னும் ஒரு குறையைத் தவிர வேறு எந்தக் குறையும் அவர்களுக்கு இல்லை. ஐந்து வருடம் முடிவதற்குள் வீட்டுக் கடனை அடைத்துவிட்டு  கடன் இல்லாமல்    நிம்மதியாய் வாழத்  தொடங்கினார்கள். இன்பமோ துன்பமும் நிரந்தரமாய் இருக்காது என்பது வாழ்க்கையின் நியதி  இல்லையா? பாஸ்கர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் ஆட்குறைப்பு காரணம் காட்டி அவனை வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள். மூன்று மாதம் தேடியும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அவன் மன அழுத்தத்தில் தத்தளித்தான். நித்யாதான் அவனுக்கு நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளைக் கூறினாள். ”பாஸ், கவலைப்படாதீங்க. நீங்களே ஒரு கம்பெனியை ஆரம்பியுங்க. என் நகைகளை உங்களுக்குத் தருகிறேன். உங்க கிட்டே கல்வி இருக்கிறது. திறமை இருக்கிறது. என் வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்தலாம்” என்று ஆறுதல் கூறினாள். பாஸ்கருக்கு கண்ணில் நீர் பொங்கியது. அவள் கையைப் பிடித்துக்கொண்டு, ”என் நிலைமையைப் பற்றி நன்றாகத் தெரிந்தும் என் அப்பா எந்த உதவியும் செய்யாமல் என்னிடம் பேசாமல் இருக்கிறார். உன்னிடம் தன்னம்பிக்கை அதிகம் இருக்கிறது. உன்   வார்த்தைகளும் எனக்குத் தன்னம்பிக்கை தருகின்றன.  நீ என் பக்கத்தில் இருக்கும்போது எனக்கு என்ன கவலை?. நீ சொல்றபடியே செய்கிறேன்” என்று நெகிழ்ந்து  சொன்னான். ”என்னுடைய பலமே தன்னம்பிக்கைதான். வாழ்க்கையில் உண்டாகும் பெரும் துன்பங்களைக் கடக்க அந்தத் தன்னம்பிக்கையே துணையாய் இருக்கும்” என்றாள் நித்யா. . அவள் கூறியபடி பாஸ்கர் ஒரு சாப்ட்வேர்  நிறுவனத்தை ஆரம்பித்தான்.  அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திற்காக  சில  வேலைகளை இங்கே செய்து கொடுக்க ஆரம்பித்தான்   நல்ல வருமானம் கிடைத்தது. முதல் வருட முடிவிலேயே இலாபம் ஈட்ட முடிந்தது. அடமானம் வைத்த நகைகளை மீட்டு அவளிடம் திருப்பித் தந்தான். ஒருநாள் நித்யா பல்பொருள் அங்காடியில் ஹமாம் சோப் தேடிக் கொண்டிருக்கும்போது எதிர்ப்புறம் வந்த   ஒரு பெண்மணியின் மேல் மோதிக் கொண்டு ”சாரி” என்றாள். அந்த மோதல் அவள் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது அப்போது அவளுக்குத் தெரியாது. அந்தப் பெண்மணிக்கு வயது சுமார் ஐம்பது இருக்கும். சிரித்த முகம். கனிவான பார்வை. ”நான் டாக்டர்  பவானி. ஜைனிகாலிஸ்ட். வேளச்சேரியில் மருத்துவமனை வைத்திருக்கிறேன்” என்று அறிமுகம் செய்து கொண்டார். ”ஜைனிகாலிஸ்ட்டா? மகப்பேறு மருத்துவர்தானே” என்றாள் நித்யா ”ஆமாம் உங்களுக்குக் குழந்தை இருக்கிறதா?” டாக்டர் நட்புடன்  கேட்டார்.    ”இதுவரை இல்லை டாக்டர் ” ”கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகிறது?” ”ஏழு வருடம் ஆகி விட்டது.” ”நீங்கள் ஏன் செயற்கை முறையில் குழந்தை பெற்று கொள்ளக் கூடாது. என்னுடைய மருத்துவமனைக்கு வாங்களேன்” என்று தன் ஹாண்ட் பேக்கிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து அவளிடம் கொடுத்தாள். ”வரேன் டாக்டர்” என்று நித்யா விடை பெற்றாள். அன்று இரவு பாஸ்கரனிடம் அதைப் பற்றி விவாதித்தாள். ” நானும் நிறைய டாக்டர்கள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். எனக்கு இதுவரை குழந்தைக்காகச் செயற்கை முறையில் சிகிச்சை பெற வேண்டும் என்று தோணலை . டாக்டர் பவானி சொன்னதும்தான் எனக்கு அவங்க சொல்றபடி செய்யலாம்னு தோண்றது.” ”நித்யா நாம் இருவரும் கடவுள் அருளினால் கை நிறையச் சம்பாதிக்கிறோம். எந்தப் பெண்ணுக்குமே கல்யாணம் ஆகி குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆசை இருக்கும். பவானி டாக்டர் மருத்துவமனையில் நீ சிகிச்சை எடுத்துக்கோ. பணம் போனால் பரவாயில்ல. நமக்குக் குழந்தை முக்கியம்” என்றான் அன்புடன். நித்யாவும் மருத்துவமனைக்குச் சென்று டாக்டர் பவானியைப் பார்த்தாள். அவள் முன்பு எடுத்திருந்த  மருத்துவ ரிப்போர்ட்களைக் காண்பித்தாள். எல்லாவற்றையும்  பார்த்த டாக்டர், ”விந்து வீரியமின்மை காரணமாக குழந்தைப் பேறில்லாதவர்களுக்கு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும். ஊசி மூலம் மூலம் ஒரு விந்தணுவை நேரடியாக ஒரு கரு முட்டையில் செலுத்தப்படும் தொழில்நுட்பம் செயற்கை முறையில் கருத்தரித்தலில் ஒரு வகையானதாகும்.. எங்கள் மருத்துவமனையில் அந்த முறையில்தான் சிகிச்சை அளிக்கப் படுகிறது. உனக்கும் அந்தச்  சிகிச்சைதான் தேவைப்படுகிறது “ என்றார். .   டாக்டர் பவானி கூறியபடி நித்யா அங்குக் குழந்தை பெறச் சிகிச்சை எடுத்துக் கொண்டாள். நித்யாவின் துரதிஷ்டம் !! முதல் முயற்சி   கருச்சிதைவில் முடிந்தது. காரை நிறுத்தி ”பலமான யோசனையோ ? வீடு வந்துவிட்டது” என்ற பாஸ்கரின் குரலைக் கேட்டபிறகே கனவுலகத்திலிருந்து  விழித்துக்கொண்டு  ”ஒன்றும் இல்லைங்க” என்றாள். . ” நித்யா நீ ரெஸ்ட் எடுத்துக்கோ நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன்”. ”நான் சோகமாய் இருக்கேன், என்னை விட்டு போகாதீங்க. நித்யா விம்மி விம்மி அழுதாள். செல்லமே அழாதே. பணம் செலவானால் பரவாயில்லை. மறுபடியும் முயற்சி செய்யாலாம் குழந்தை நமக்கு நிச்சயம் உண்டு.” என்று அவள் தோளில் தட்டி பாஸ்கர்  ஆறுதல் சொன்னான். அவள் பார்க்காத வண்ணம் தன் விழியோரத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான், நித்யா கொஞ்ச நாள் கழித்து மீண்டும் சிகிச்சையைத் தொடர்ந்தாள். அன்று  அவள் மருத்துவமனைக்குப் போக வேண்டும். பாஸ்கருக்காகக் காத்திருந்தாள். அப்போது மாலை சுமார் ஆறு மணி இருக்கும். அவள் அலைப்பேசி சிணுங்கியது. அவள் போனை எடுத்து காதில் வைத்தாள். விஷயத்தைக் கேட்டு அதிர்ந்தாள் . அது போலீஸ் கமிஷ்னரிடமிருந்து வந்த போன். அவள் கணவன் காரில் போகும் போது முன்னால் சென்ற லாரியின் மேல் மோதி விபத்து நடந்த இடத்திலே மரணம் அடைந்தார் என்று அறிந்ததும் அழுது கொண்டே விபத்து நடந்த இடத்துக்கு ஓடினாள். எல்லாம் முடிந்து விட்டது. அவன் ஆத்மா அவன் உடலை விட்டு நீங்கி விட்டது. இறந்த உடலைப் பார்த்து கோவென்று கதறி அழுதாள். அவள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவர்கள் அவளுக்கு உதவி செய்ய கணவனுக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை முடித்தாள். அவள் மாமனார் கதிரேசன் எந்த உதவியும் செய்யல. இறந்த மகனின் உடலைக் கடைசியாய் வந்து பார்க்கவும் இல்ல.. அதை அவள் பொருட்படுத்தவில்லை.” கணவனின் மறைவு அவள் எதிர்பாராதது . அவன் இழப்பு அவள் நெஞ்சில் இடி விழுந்தது போல் இருந்தது. ஆனால் அதற்காக அவள் சும்மா உட்கார்ந்து விடவில்லை. என்னதான் அழுதாலும் உருகினாலும்  மாண்டவர் திரும்ப வந்து விடப் போகிறானா? என்னும் யதார்த்தத்தை உணர்ந்து தான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்பதைப் புரிந்தது கொண்டு செய்ய வேண்டியதில் கவனம் செலுத்தினாள். அந்த விபத்துக்குக் காரணமாயிருந்த லாரி கம்பெனி  மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்தாள். இறப்புச் சான்றிதழ் வாங்குவது, வங்கியில் இறந்த கணவர் பெயரை நீக்குவது, இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு விண்ணப்பம் கொடுப்பது என்று இதெற்கெல்லாமே சுமார் இரண்டு மாதம் ஓடி விட்டது. அந்த மும்முரத்தில் மருத்துவ மனைக்குப் போவதை மறந்து விட்டாள் என்றே சொல்லலாம். அவள் அலைபேசி சிணுங்கியது டாக்டர் பவானிதான் போன் பண்ணியிருக்கிறாள் .”என்னம்மா மருத்துவமனையை மறந்திட்டியா? என்னிக்கு வர்ரே?” நித்யா யோசித்தாள்.. பாஸ்கர் அவளுக்குக் குழந்தை பிறக்க வேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டான். அவன் இப்போது இல்லை. அவனுடைய ஆசி தனக்குக் கண்டிப்பாக  கிடைக்கும் என்று நம்பினாள் . ”நாளைக்கு வருகிறேன் டாக்டர்” என்றாள். அடுத்த நாளே மருத்துவ மனைக்குப் போய் டாக்டர் பவானியைப் பார்த்தாள். உன் கணவரிடமிருந்து சேசரித்த விந்தணுக்கள் பத்திரமாய் இருக்கிறது. இன்றே சிகிச்சையை ஆரம்பிக்கலாம் என்று டாக்டர் பவானி கனிவோடு  கூறினாள். நித்யாவும் தேவையான போது அலுவலகத்துக்கு விடுப்பு போட்டு விட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டாள். டாக்டர் பவானியின் முயற்சிக்குப் பலன் கிடைத்தது. பவானி  கைராசி டாக்டர் ஆயிற்றே.  ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு, ”கங்கிராட்ஸ் நித்யா, பாசிடிவ் ரிசல்ட் வந்திருக்கு.  நீங்க அம்மா ஆக போறீங்க” என்று டாக்டர்  சொன்னபோது அவளால் நம்ப முடியவில்லை ! ! ”நிஜமாகவா, அவர் இருந்தால் ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பார்.மிக்க  நன்றி டாக்டர் . எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்.”. ”நான் காரணம் இல்ல. எல்லாம்  கடவுளின் செயல்தான் !  அவனுக்கு நன்றியைச் சொல்” என்றார் டாக்டர் பவானி. மாதங்கள் ஓடின. அவள் பிரசவிக்கும் நேரம் வந்து விட்டது. அன்றுதான் பாஸ்கரின் நினைவு தினம். அன்றோடு அவன் இறந்தும் ஒராண்டு முடியப் போகிறது. காலை பத்து மணிக்கு நித்யாவுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. சொர்ண விக்கிரம் போல் ஒரு ஆண் குழந்தை . ஒரு பெண் குழந்தை . அவள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினாள். இரண்டு நஞ்சுக் கொடி இருந்ததால்  இரட்டைக் குழந்தை பிரசவம் சுமூகமாக ஆகிவிட்டது. தாயும் சேயும் நலம்” என்றார் டாக்டர். அன்று மருத்துவமனை முழுவதும் இந்த விஷயம் பரபரப்பாக பேசப் பட்டது. கணவன் இறந்து ஒரு வருடம் கழித்து குழந்தை பிறக்கிறது, இதை அந்தக் காலத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாது. எல்லாவற்றுக்கும் நவீன மருத்துவ சிகிச்சை முறைதான் காரணம் என்று பேசிக் கொண்டார்கள். பத்திரிகை நிருபர்கள் வந்து நித்யாவைப் பேட்டி எடுத்துச் சென்றார்கள். நித்யா தனக்கு  இரட்டைக் குழந்தை பிறந்ததில் அளவுகடந்த  சந்தோஷம் கொண்டாள்.. பாஸ்கரை நினைவு கூர்ந்தாள். அவன் நினைவு நாள் அன்றே குழந்தை பிறந்த வாழ்க்கையின் விசித்திரத்தை நினைக்க நினைக்க அவளுக்கு வியப்புண்டாயிற்று. மறுநாள் .நித்யாவைப் பற்றிய செய்தி எல்லாத் தினசரி செய்தித்தாளிலும் வந்திருந்தது. மாமனார் கதிரேசன் வீட்டில் செய்தித்தாள் வந்து விழுந்தபோது அவர் பூசை அறையில் ”முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை....”  ராகத்தோடு திருவாசகத்திலுள்ள அச்சோ பதிகத்தை உருகிப் பாடிக் கொண்டிருந்தார். வயசு எழுபதைத் தொட்டுவிட்டதாலோ என்னமோ சமீபகாலமா அவர்  பக்தி மார்க்கத்தில் மூழ்கி விட்டார். பூசை முடித்தபிறகு  செய்தித்தாளைப் படித்த ஆரம்பித்த  கதிரேசனுக்கு தூக்கிவாரிப் போட்டது. ” இறந்த கணவரின் உயிரணுவால் இரட்டைக் குழந்தை” என்ற செய்தியை   அவரால் நம்ப முடியலே. ஒரு முறைக்கு இருமுறை அந்தச் செய்தியைப் படித்தார். சமையலறையில் வேலையாய் இருந்த தன் மனைவியைக் கூப்பிட்டு,” சிவகாமி நம்ம பாஸ்கருக்கு இரட்டைக் குழந்தை.  பிறந்திருக்காம் .ஆம்பிளப் பிள்ள ஒண்ணு, பெட்டை ஒண்ணு”. ”அது எப்படிங்க முடியும். நேத்தோடு   பாஸ்கர் இறந்து ஒரு வருஷம் முடிஞ்சு போச்சே” என்றாள் சிவகாமி திகைப்புடன். ”அடி அசடே, சேமிச்சு வைச்ச அவனுடைய விந்தணுவின் மூலம் செயற்கை மருத்துவ முறையில்  இரட்டைக் குழந்தை பிறந்திருக்குன்னு செய்தித்தாளிலே போட்டிருக்கு. எப்படி பிறந்தா என்ன? குழந்தை பிறந்தாச்சு இல்லையா? அது தானே வேண்டும். எனக்கு வாரிசு இல்லையேன்னு கவலைப் பட்டுக்கொண்டிருந்தேன். ஐம்பது கோடிக்கு மேலே சொத்து இருக்கு. வாரிசு இல்லையானா அது யாருக்காவது தர்மத்துக்குப் போகும்.. வா, நாம் உடனே  மருத்துவமனைக்குப் போய் ஆம்பிளக் குழந்தையை வாங்கிண்டு வந்து வளர்க்கலாம். உடனே கிளம்பு.” ”இதுவும் கடந்து போம்!! என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். மகனை வெறுத்த நீங்க  இப்போ மனசு மாறினதை நினைச்சா எனக்கு  ரொம்ப சந்தோஷமா இருக்கு.  அதுசரி நாம் போய் கேட்டால் அவ குழந்தையைக் கொடுப்பாளா? மாட்டேன்னு சொல்லிட்டா என்ன செய்றது?” நான் கில்லாடி ; அதோடு பலசாலி. அவ  எப்படிக் குழந்தையைக்  கொடுக்காம இருக்க முடியும்? அதையும்  பார்த்திடலாம். இருவரும் ஒரு காரில் கிளம்பி மருத்துவ மனைக்கு வந்தார்கள். குழந்தை நலமா? என்று கேட்டுக் கொண்டே தான் இருந்த அறைக்குள் நுழைந்த தன் மாமனார், மாமியாரைப் பார்த்து நித்யா திகைத்தாள். கட்டிலில் படுத்திருந்தவள் எழுந்து உட்கார்ந்து ”வாங்க” என்று அழைத்தாள். ”நீ எப்படிம்மா இருக்கே” என்று கேட்ட சிவகாமி இரண்டு குழந்தைகளில்  செக்கசெவேலென்று முகம் இருந்த   குழந்தையைப் பார்த்து  ”அப்படியே நம்ம பாஸ்கர் சாயல் இருக்குங்க ” என்றாள். ”எங்களைப் பார்த்து நீ ஆச்சரியப் பட்டிருப்பாய் ! இரட்டைக் குழந்தை பிறந்த சேதியைக்  கேட்டு ஓடி வர்ரோம். உன்னாலே இரண்டு குழந்தையைச் சமாளிக்க முடியாது. ஆம்பிள பையனை என்னிடம் கொடுத்துவிடு. என் சொத்துக்கு இவன் தான் வாரிசு ...” என்று கதிரேசன் குழந்தையை எடுக்கப் போனார்.  நித்யா அதைத்  தடுத்தாள். ” வேண்டாம், எடுக்காதீங்க. ” குழந்தையைத் தர எனக்குச் சம்மதமில்லை. உங்களுக்கு அப்படிக் கேட்க உரிமையும் இல்ல.” ”யார் கிட்டே பேசறேன்னு தெரியுமா? எனக்குப் பேரன் கிட்டே  இல்லாத உரிமையா ?” என்று கர்ஜித்தார். ”சிங்கம் மாதிரி கர்ஜித்தால் நான் பயப்படுவேன்னு நினைச்சிங்களா ? கல்யாணம் பண்ணிக்கிறோம்னு கேட்டு முதன் முறையாய் வீட்டுக்கு வலது காலை எடுத்து நுழைந்தபோது  நாயைத் துரத்தறமாதிரி எங்களை வீட்டை விட்டு வெளியேத்தினீங்க. அப்போ நீ வேறே சாதி என்று சொல்லிட்டு இப்போ வந்து என் பேரன் என்று உரிமை கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்? பேசாம வந்த வழியே திரும்பி போங்க”. ”எனக்கு ஐம்பது கோடி சொத்து இருக்கு. அதுக்கு வாரிசு வேணாமா? இவனுக்கு எல்லாத்தையும் எழுதி வைச்சுடறேன். நாங்க இவனை எடுத்துட்டு போறோம். உனக்குத்தான் இன்னொரு குழந்தை இருக்கிறதே. அது போதாதா? மேலும் நீ எப்படி ஒண்டியாய் இரட்டைக் குழந்தைகளைச் சமாளிப்பாய் ?”. ”என்னிடம் தன்னம்பிக்கை இருக்கிறது. தன்னம்பிக்கை என்னும் நதியில்தான் வாழ்க்கை என்னும் படகு ஓடுகிறது. நீங்க என் கணவருக்கு வேலை போனபோது உதவி செய்யல. அவர் உயிர் போனபோதும் எட்டிக் கூட பார்க்கல. இப்போ மட்டும் வந்துட்டீங்க...” . ”எனக்கு வயசாயிடுச்சு. அதனாலே ஞானம் வந்திருக்கு. வயசாச்சுன்னா  பக்குவம் வரும்கிறது உனக்குத் தெரியாதா?” என்று கூறி கிண்டலாகச் சிரித்தார். ”அட கடவுளே ! உயிர், மாயை, மற்றும் கடவுளைப் பற்றி முழுவதுமாக  அறிவதே ஞானம் என்பதை அறியாமல் இருக்கிறாரே” என்று நினைத்து நித்யா  மோன புன்னகையை உதிர்த்தாள். அப்போது வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து வந்த ஒருவர் அவள் கையில் ஒரு  கவரை கொடுத்துவிட்டு நகர்ந்தார். நித்யா அதைப்  பிரித்துப் பார்த்தாள். லாரி கம்பனியிலிருந்து நஷ்ட ஈடு காசோலை முப்பது இலட்சத்துக்கு அவள் பெயரில்  வந்திருந்தது.. அவள் முக மலர்ச்சி உள்ளத்தின் உவகையைக் காட்டியது. நித்யா தன் மாமனாரிடம் , “செத்தும் கொடுத்தான் சீதக்காதி  போல என் கணவர் இறந்தும் எங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து விட்டார். என்னிடம்   குழந்தைகளை வளர்க்க போதுமான பணம் இருக்கிறது”  என்றாள். கதிரேசன் மீண்டும் குழந்தையை எடுக்கப் போனார். குழந்தை கையையும் காலையும் ஆட்டி அழுதது. ”குழந்தைக்கே உங்களிடம் வர விருப்பமில்லை. தயவு செய்து எங்களைத் தொந்தரவு செய்யாமல் இப்போது  இங்கிருந்து போய் விடுங்கள்”  இருகை கூப்பினாள் நித்யா. ”வாங்கப் போகலாம். ’யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு...’ என்கிற பழமொழி போல்  இப்போ அவளுக்கு நேரம். “இதுக்கு மேலே பேச்சு கேட்டுண்டு இங்கே நிற்க வேண்டாம்” என்ற சிவகாமி அறையை விட்டு நகர்ந்தாள். கதிரேசனும் குத்துச் சண்டையில் தோற்ற பயில்வான் நடந்து போவது போல் தளர்ந்த நடையில் அவள் பின்னால் போனார். அப்போது ஆம்பிளப் பிள்ள அழ ஆரம்பித்தது. பசிக்காகத்தான் அழுகிறது என்பதை உணர்ந்த நித்யா குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு  பாலுட்டத் தொடங்கினாள்.. ***********************                   16. தாயன்பு   “அம்மா என்னைப் பள்ளிக்கூடத்திலே கொண்டு விடுமா” சிணுங்கிய மோகனை, ”வாடா போகலாம்” என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள் பவித்ரா. அவன் சரஸ்வதி வித்யாலயாவில் முதல் வகுப்பு படிக்கிறான். அவன் அம்மாவின் கையைக் கெட்டியாய் பிடித்துக்கொண்டு தான் வைத்திருக்கும் புத்தகப் பையுடன் நடந்து சென்றான். அவள் அம்மா விமலா சென்னையில் இருந்தவரை பவித்ராவுக்கு மிகவும் செளகரியமாய் இருந்தது. அவள் அண்ணன் ராம்  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஹீஸ்டன் நகரில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பத்து வருடமாய் வேலை செய்கிறான். அமெரிக்க நாட்டு  குடிமகன் ஆகி  கீரின் கார்ட் வைத்திருக்கிறான். அம்மா போன வருடம் அமெரிக்கா போனபோது அம்மாவுக்கும் கிரின் கார்ட் கிடைத்துவிட்டது.. அம்மாவுக்கு கிரீன் கார்ட் வாங்குவதில் விருப்பம் இல்லை. அமெரிக்காவிலேயே அதிக நாட்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகிவிடும் என்பதால்  தயங்கினாள்.. ஆனால்  ராம் பிடிவாதமாய்,, ”அம்மா, எனக்குச் சொந்த வீடு இங்கு இருக்கிறது. நீயும் எங்ககூடத்தான் இருக்கவேண்டும்” என்று ஆசைப்பட்டதால் அம்மாவால் மறுக்க  முடியவில்லை.    பவித்ராவுக்கு மூன்று வயதாய் இருக்கும்போதே அவளுடைய தந்தையை இழந்து விட்டாள்.  அவளுடைய உலகமே  அம்மாதான். விமலா தன் மகள் மேல் மிகவும் பிரியமாய் இருப்பாள். ஓட்டலுக்குச் சாப்பிடப் போனால் கூட பவித்ராவுக்குப் பிடிக்கும் என்று பூரி, கிழங்கை பார்சல் செய்து வாங்கி வருவாள். உறவினர் கல்யாணத்துக்குச்  சென்றால் இலையில் போட்ட இனிப்பைச் சாப்பிடாமல் கொண்டு வந்து பவித்ராவுக்குக் கொடுப்பாள். பவித்ராவும் அம்மாவின் மேல் ஆசையாய் இருப்பாள். பத்து மாதம் சுமந்து பெற்று, பாலூட்டி, சீராட்டி பாரத்துடன் வளர்த்தவள் இல்லையா? ஆனாலும் அண்ணன் ராம் வசிக்கும்  அமெரிக்காவுக்குப் அம்மா போனாலும் அலைப்பேசி மூலம் அடிக்கடி பேசுகிறாள். பவித்ராவின் கணவர் சுந்தர் கல்யாணம் ஆகும் போது சோப்பு  வியாபாரம் ஏஜென்சி எடுத்துச் செய்து கொண்டிருந்தார். அதில் அளவுக்கதிகமான நஷ்டம் ஏற்பட்டு நொடித்துப் போய்விட்டார். இப்போது சொற்ப சம்பளத்தில் ஒரு மார்வாடி கம்பெனியில் வேலை செய்கிறார். காலை எட்டு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினார் என்றால் இராத்திரி ஒன்பது மணிக்குத்தான் திரும்புவார். பவித்ரா தனியார்  அலுவலகத்தில் வேலைக்குப் போகிறாள். இருவர் வருமானம் வருவதால்  வாழ்க்கை தடையில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால் அந்தோ ! அந்தோ ! அந்தோதான் ! அவர் காலையில் மோகனைக் குளிப்பாட்டுவார். வேறெந்த விதத்திலும் அவரால் பவித்ராவுக்கு உதவி செய்ய முடியாது. ஆனால் குணத்தில் தங்கம். கோபப்படமாட்டார். அவளுடன் அனுசரணையாய் பேசுவார்.பவித்ரா எப்பவும் புலம்பற குணம் உடையவள்.  சீக்கிரத்தில்  திருப்தி அடைந்திட மாட்டாள். ஏதாவது நினைத்தது நடக்கவில்லையென்றால் கடவுளையே திட்டுவாள் .   மாமியாருக்கு முட்டி வலி என்பதால் அவராலும் எதுவும் செய்ய முடியாது. வீட்டில் வேலைக்காரி இருக்கிறாள். அவள்தான் மோகனை இரவு  பவித்ரா அலுவலகத்திலிருந்து வரும்வரை   கவனித்துக் கொள்வாள். வாலு பையன்  மோகனை வைத்துக்கொண்டு பவித்ரா படும் கஷ்டத்தை வார்த்தையால் சொல்ல  முடியாது. அமெரிக்காவில் இருக்கும் அவள் அம்மா, , பவித்ரா என்ன கஷ்டப்படறாளோ. நான் இருந்தாலாவது மோகனைப் பார்த்துக்கொள்வேன். பாவம் பவித்ரா என்று அடிக்கடி அங்கலாய்ப்பாள். பள்ளிக்கூடத்தில் நுழைந்த பவித்ரா, மோகனை அவன் வகுப்பில் விட்டுவிட்டு தலைமை ஆசிரியர் அறையை நோக்கிச் சென்றாள். அவளுக்கு மோகனின் படிப்பில் குறை இருக்கிற மாதிரி ஒரு உணர்வு. முன்பு எல்கேஜி, யூகேஜி படித்த பள்ளியில் அவன்  ஆங்கிலம் நன்றாகப் பேசினான்,   இந்தப் பள்ளிக்கூடத்தில்  பகவத் கீதை, தோத்திரங்கள் என்று கற்றுக் கொடுத்தாலும் குறிப்பாக ஆங்கிலம் சரியாக கற்றுக் கொடுக்கப்படவில்லை என்பது அவள் எண்ணம். தலைமை ஆசிரியர் முன் நின்று, ”நீங்க குழந்தைகளுக்குச் சொல்லித்தருவது பத்தாது. இன்னும் நல்லா சொல்லித்தரலாமே ? என்ற பவித்ராவைப் பார்த்து, நாங்க உங்க பையனுக்காக வாங்கற தொகை முப்பத்து ஐந்து ஆயிரம் ரூபாய்தான். எங்களாலே இவ்வளவுதான் கற்றுக்கொடுக்க முடியும். உங்களுக்குப் பிடிக்கலேன்னா உங்க பையனை வேறே பள்ளிக்கூடத்திலே தாராளமாய்  சேர்த்துடுங்க. எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை” என்று புன்சிரிப்புடன் கூறியவரைப் பவித்ரா கடுப்புடன் நோக்கினாள். ”என் மனசில் பட்டதை வெளிப்படையாய் சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க“ என்று சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து நகர்ந்தாள். தெருவில் போகும்போது மோகனை இரண்டு கிலோமீட்டர் தூரத்தில்  உள்ள லோட்டஸ் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட வேண்டுமென்று சிந்தித்துக்கொண்டே சென்றாள். அவள் மாமா பெண் கல்பனா எதிரே வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் பவித்ராவின் முகம் கதிரவனைக் கண்ட தாமரை போல் மலர்ந்தது. கல்பனா லோட்டஸ் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிகிறாள். கல்பனா என்ன ஆச்சரியம். நீ இன்னைக்கு பள்ளிக்கூடம் போகலையா ? நேற்று நானும் என் கணவரும் திருப்பதி போய் ஏழுமலையானைச் சேவித்துவிட்டு  வந்தோம். நான் நடந்தே மலை ஏறினேன். இன்று எனக்கு முடியவில்லை. இன்று நான் லீவு போட்டு விட்டேன். நான் சரஸ்வதி வித்யாலயாவில் மோகனை விட்டுவிட்டு வந்தேன். அலுவலகம் போகவேண்டும். ஆமாம், உங்கள் பள்ளிக்கூடம் எப்படி? மோகனைச் சேர்ப்பதற்காகக் கேட்கிறேன். எங்கள் பள்ளியில் இண்டெர்நேஷனல் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். குழந்தைகளுக்கு நல்ல கல்வியைப் போதிக்கிறார்கள். பிற்காலத்தில் மோகன் அமெரிக்கா அல்லது லண்டனில் மேற்படிப்பு படிக்க வசிதியாய் இருக்கும். பவித்ராவுக்கு மலைப்பாக இருந்தது. அவள் மனதில் மோகன் வாலிபன் ஆகி விட்டது போலவும் அவன் இலண்டனில் ஒரு கல்லூரியில் பொறியியல் சேர்ந்து படிப்பது போலவும் மனசில் கோலம் போட்டாள். ”பள்ளியில் சேர கட்டணம் எவ்வளவு?” ”மோகன் என்ன வகுப்பு படிக்கிறான்?” ”அவன் இப்போது முதல் வகுப்பு படிக்கிறான்”. அவன் இரண்டாம் வகுப்பில் சேர ஒரு இலட்ச ரூபாய் கட்டணம். வருடத்துக்கு. அதை ஆரம்பத்தில் சேரும்போதே கட்ட  வேண்டும். நீ வேலை செய்கிறதினாலே பணம் ஒரு பொருட்டாக இருக்காது உனக்கு. நான் சொல்றது சரிதானே? “ கஷ்டப்பட்டுத்தான் சமாளிக்க வேண்டும் என்று தெரிந்தாலும் தன் மாமா பெண்ணிடம் உண்மையைச் சொல்ல சங்கடமாய் இருந்தது அவளுக்கு. ”ஒரு இலட்சம்தானே பரவாயில்லை. குழந்தைகள் திறமைசாலியாய் ஆவார்களா? என்று அப்பாவியாய் கேட்டாள். குழந்தையின் திறமை மட்டுமல்ல, குழந்தையின் அம்மா அல்லது அப்பாவின் திறமை கூட அதிகரிக்கும். பள்ளிக்கூடத்தில் கொடுக்கிற வீட்டு வேலை அப்படி. ஏப்ரல் மாதம் முதல் புதிய  மாணவர்களை சேர்த்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள்.  ஜூன் மாதம் பள்ளிக்கூடம் தொடங்கிவிடும்..” ”என் கணவரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கிறேன். அவர் என் விருப்பத்துக்கு மாறாக எதுவும் சொல்ல மாட்டார். நான் தீர்மானித்தால் சரி என்று சொல்லிவிடுவார். ஏப்ரல் மாதம்  உன்னை வந்து பார்க்கிறேன். நன்றி கல்பனா” என்று விடை பெற்றாள். அன்று இரவு  சுந்தரிடம் இண்டெர்நேஷனல் பள்ளிக்கூடம் பற்றி விவாதித்தாள். இதோ பார் பவித்ரா, என்னுடைய வேலை நிரந்தமாய் இருக்குமா ? இல்லை என்னை வேலையிலிருந்து என்னை எடுத்துவிடுவார்களா என்பது மர்மமாய் இருக்கிறது. இந்த மாதிரி சூழ்நிலையில்  மோகன் பள்ளிக்கூடம் மாறுகிறது பற்றி என்னால் எதுவும்  சொல்ல முடியாது. ஒரு இலட்சம் என்பது பெரிய தொகைதான். ஆனால் நீ ஆசைப்பட்டதால் உன் விருப்பம் போல் செய். நான் தடை சொல்ல விரும்பவில்லை. ”மாமியாரிடம் கேட்டதிற்கு, எனக்கு எதுவும் தெரியாது . உன் இஷ்டம் போல் செய்” என்றாள். தன் தாயாரிடம் அலைப்பேசியில் போன் செய்து பேசினாள். பவித்ரா, உன் மனசுக்கு எது சரின்னு படுகிறதோ அதைச் செய். என்றாள் விமலா. கல்பனாவிடம் இன்னொரு முறை பேசி மோகன் சேருவது நல்ல பள்ளிக்கூடம்தான் என்பதை உறுதி செய்து கொண்டாள். தன் நெருங்கிய தோழியிடம் ஆலோசனை கேட்டாள். அம்மாவைக் கேட்டாய் . கணவனைக் கேட்டாய்.. பத்து பேரை கேட்டால் ஆளுக்கு ஒண்ணு சொல்லுவாங்க. நீ எடுத்த முடிவைச் செயல்படுத்து. மோகன் பெரிய ஆளாக வரவேண்டும். அதற்காக எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என்று எண்ணினாள். அவளிடம் பணமில்லை. முதலில் என்ன செய்வது ? என்று முதலில் யோசித்தாள்.. தன் பையனுக்கு நல்ல கல்வி கொடுக்கவேண்டுமென்னும் உந்துததில் பவித்ரா கடன் வாங்கிப் பணத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டாள். நண்பர்களும், சுற்றத்தாரும் அவளை வியப்போடும் மதிப்போடும் பார்த்தனர். அவள் முதுகுக்குப் பின்னால் அவளைச் சிலர் கேலி செய்தனர். ஒரு நல்ல நாளில் மோகனை புதிய பள்ளியில் சேர்த்து விட்டாள். ஜூன் மாதத்திலிருந்து  அவன் புதிய பள்ளிக்குப் போக ஆரம்பித்தான். எந்த ஒரு செயலும் அதன் பலன் தெரிய சில நாட்கள் அல்லது மாதங்கள் ஆகும். உடற்பயிற்சி செய்தாலோ அல்லது ஒரு மருந்தை உட்கொண்டாலோ அதன் பலன் சில மாதங்கள்  கழித்துத்தான் தெரியும். அதுபோல் மோகனிடம் சில நல்ல மாற்றங்கள் தெரிந்தன. அவன் வாயில் ஆங்கிலம் தாண்டவமாடியது. ஆனால் தாய் மொழியான தமிழை அறவே மறந்து விட்டான். ஆனால் பெரியோரிடம் மரியாதை, தெய்வ பக்தி என்பது எள்ளளவும் இல்லை. பழைய பள்ளிக்கூடத்தில்  கடவுள் வாழ்த்து, விநாயகர் வாழ்த்து என்று ஏதாவது சொல்லுவான். இப்போது சுத்தமாக ஒன்றுமே சொல்வதில்லை. அடம் பிடிக்கிறான். இருபத்தைந்து மாணவர்கள் இருக்கும் வகுப்பில் அவன் படிப்பில் கடைசியாய் இருக்கிறான் என்று வகுப்பு ஆசிரியர் சொன்னபோது அவள் மிகவும் வருந்தினாள். அவளால் வேலையும் பையனையும் சமாளிக்க முடியவில்லை.   தான் எடுத்து முடிவு தவறானதோ என்று சிலசமயம் அவளுக்குப் பட்டது. அன்று பவித்ரா அலுவலகத்திலிருந்து ஆறு மணிக்கே வந்து விட்டாள். மோகனுக்கு ரொம்ப சந்தோஷம். ஹை ! அம்மா வந்துட்டா, ஹை! அம்மா வந்துட்டா என்று கத்திக் கொண்டே வீட்டுக்குள் இரண்டு முறை ஓடினான், அம்மா என் கூட விளையாட வாம்மா என்று பவித்ராவின் கையைப் பிடித்து இழுத்தான். ”என்ன விளையாட்டுடா ?” ”உப்பு மூட்டை விளையாட்டு”. பவித்ரா அவனை வாரி எடுத்து உப்பு மூட்டை போல் தன் முதுகின் மேல் அவனைப் போட்டுக் கொண்டு உப்பு  வாங்கலையோ என்று வீட்டுக்குள்  வலம் வந்தாள். அவள் மாமியார் எனக்கு உப்பு கொடு என்று கேட்டு உப்பு வாங்கிக் கொள்வதுபோல் நடித்தாள். மோகனின் முகத்தில் மட்டுமல்ல , பவித்ராவின் முகத்திலும் அன்று சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது. அன்று இரவு பவித்ரா, இன்று மோகனுடன் உப்பு மூட்டை விளையாட்டு விளையாடினேன். குழந்தைக்கு ரொம்ப குஷி. என்னல் மோகனுடன் நிறைய விளையாட்டு விளையாடி இன்னும் நல்லா பார்த்துக்கொள்ள முடியவில்லையே . பாழாய்ப் போன   வேலை தடையாய் இருக்கிறதே ” என்று வருந்தினாள். அவளைக் கட்டித் தழுவி, ”ஐ லவ் யு பவித்ரா ” நெற்றியில் முத்தமிட்டான். ”டேக் இட் ஈசி”  அவள் முதுகை தட்டிக் கொடுத்தான். அவள் மனம் குளிர்ந்து விட்டது.   ஒரு முறை உறவினர் வீட்டு  கல்யாணம் போனபோது அங்கு மோகன் யாருடனும் விளையாடாமல் தனியாக இருந்தான். கேட்டால் மற்ற பசங்கள் ஆங்கிலம் பேச மாட்டேங்கிறாங்க. நான் என்ன செய்யட்டும்மா” என்கிறான். அந்தக் கல்யாணமோ பரபரப்பு இல்லாமல் திட்டமிட்டு செய்த மாதிரி அலட்டிக் கொள்ளாமல் நிதானமாக குறிப்பிட்ட நேரத்தில் மணப்பெண்ணுக்குத் மாப்பிள்ளை தாலி கட்டினார். பவித்ராவும் தானும் அதுபோல் திட்டமிட்டு மோகனைப் படிக்க வைக்க  வேண்டும் என்று உறுதிப் பூண்டாள்.   ஒருமுறை கடைத்தெருவுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது அவள் தோழி மிருதுளாவைப் பார்த்தாள். இருவரும் ஒரே கல்லூரியில் பட்டதாரி ஆனவர்கள். இருவரும் பேரழகிகள். படிப்பில் மகா கெட்டிக்காரிகள்.   ஒருவரை ஒருவர் ஜெயிக்க வேண்டும் என்று போட்டிப் போட்டவர்கள். இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் ஆகி ஒரே மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ரொம்ப நாள் கழித்து  பவித்ரா அவளைப் பார்க்கிறாள். மோகனைப் போல மிருதுளாவின் பையன் கோதண்டராமன் இரண்டாவது வகுப்பு படிக்கிறான். அவனைக் கோண்டு என்று செல்லமாகக் கூப்பிடுவாள் மிருதுளா. கருநீல வண்ணச் சேலையில் கொடிபோல் மிக்க  எழிலோடு காணப்பட்டாள். சிக்கென்று உடம்பை வைத்துக் கொண்டிருந்த மிருருதுளாவைப் பார்க்க பவித்ராவுக்குப் பொறாமையாய் இருந்தது. ”எப்படி இருக்கிறாய் மிருதுளா ? ”என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது ? குட்டி யானை மாதிரி இருக்கிறேன் இல்லையா?. சரி, பையன் எப்படிப் படிக்கிறான்?”. ”கோண்டு நல்லா படிக்கிறான். வீட்டுக்கு வாயேன் பவித்ரா.  காபி குடிச்சுட்டு போகலாம். வீடு பக்கத்தில்தான் இருக்கிறது என்று அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்றாள் மிருதுளா. அவள் வீட்டை வைத்திருக்கும் நேர்த்தியைப் பார்த்து அசந்துவிட்டாள் பவித்ரா. கோண்டு ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டுப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். மோகனாக இருந்ததால் தொலைக்காட்சியைப்  பார்த்துக் கொண்டிருப்பான் என்று நினைத்தாள். கோண்டு, மாமிக்கு பகவத் கீதையைச் சொல்லு என்றதும் கோண்டு மடை திறந்து வெள்ளம் போல் பகவத் கீதையைப் பொழிய ஆரம்பித்தான். அதற்குள் மிருதுளா காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். காபியை ரசித்துக் குடித்த பவித்ரா, “இவ்வளவு நல்லா சொல்றானே. அவன் சரஸ்வதி பள்ளிக்கூடத்திலேயா படிக்கிறான்” என்று கேட்டாள் பவித்ரா ஆச்சர்யத்துடன். ”ஆமாம். அவன் அங்கேதான் படிக்கிறான். மோகன் எப்படிப் படிக்கிறான்”. ”நன்றாகப் படிக்கிறான். ஆனால் அவனுக்கு பகவத் கீதை , சுலோகம் எதுவும் தெரியாது”. ”நீ தப்பு பண்ணிவிட்டாய் பவித்ரா. அவனை வேறு பள்ளிக்கூடத்துக்கு மாற்றி இருக்கக் கூடாது. உனக்கு ஒண்ணு தெரியுமா ? குதிரையைத் தண்ணீர் தொட்டி அருகே தான் நாம் அழைத்துச் செல்ல முடியும் . தண்ணீரைக் குடிக்க வைக்க முடியாது. அதுபோல் நீ எந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாலும் பையன் ஈடுபாட்டுடன் படித்தால்தான் உண்டு .நாம்தான் குழந்தைகளுக்கு நல்லறிவை ஊட்ட வேண்டும்” என்று சொல்லி கலகலவென்று சிரித்தாள். வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில் அவள் வென்று விட்ட ,மாதிரி தோன்றியது பவித்ராவுக்கு’. அவள் எதுவும் பதில் சொல்லாமல்  புன்சிரிப்பை உதிர்த்தாள். மோகன் ஒன்றுமே தெரியாமல் இருக்கிறானே என்று வருத்தப்பட்டாள். மோகன் விஷயத்தில் தான் அவசரப்பட்டு  விட்டோமோ. அவனை அந்தப் பள்ளிக்கூடத்திலேயே படிக்க வைத்து   இருக்காலோமோ” என்று அவளுக்குத் தோன்றியது. மிருதுளாவைச் சந்தித்தது பவித்ராவின் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. பொறாமை மனிதர்களின் பிறவிக் குணம். பவித்ரா அதற்கு விதிவிலக்கல்ல.  கோண்டு அழகாகச் சொல்லிய பகவத் கீதை அவள் மனதில் நினைவு வந்தது. இரவு வெகுநேரம்  தூக்கமில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள். கணவரிடம் புலம்பினாள். ”என்ன செய்யலாம்?” என்று சிந்தித்தாள். காலையில் எழுந்திருக்கும்போது அவள் தெளிவுடன் இருந்தாள், அதிகாலையில்  பவித்ரா உடற்பயிற்சி  செய்வதைக் கண்ட அவள் கணவன் ஆச்சரியப்பட்டான்.. என்ன விஷயம் எனக்கு இன்று அதிர்ச்சியைக் கொடுக்கிறாய், ”என் உடல் குண்டாகிவிட்டது. நேற்று மிருதுளாவைப் பார்த்தேன். என் உடம்பை இளைக்கத்தான் இந்த உடற்பயிற்சி”, அவன் கலகலவென்று சிரித்தான். தான் எடுத்த  தீர்மானத்தை தன் கணவனிடம் சொன்னாள். அவன் திகைத்தான். ”. “நன்றாக யோசித்துத்தான் இந்த முடிவு எடுத்தாயா?” என்று கேட்டான். ”ஆமாம் இரவு முழுவதும் யோசித்தேன். இதைவிட எனக்குச் சிறந்த வழி தோன்றவில்லை”. “அப்பச் சரி. உன்னிஷ்டம் “ என்று ஒப்புதலைத் தந்தான். அம்மாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டாள். இரவு ஏழு மணிக்கு அம்மாவிடம் அலைப்பேசியில் தொடர்பு கொண்டாள். அம்மாவிடம் தான் எடுத்து முடிவைத் தெரிவித்தாள். ”ஏண்டி உனக்கு என்ன யாரும் இல்லையா ? நீ ஏன் அந்த முடிவுக்கு வந்தே ?” என்றாள் விமலா. அவனைக் கவனிச்சுகிறது என் கடமையில்லையா? அதனாலேதான் நான் வேலையை விட்டு விடும் முடிவு எடுத்தேன். ”நான் இருக்கும்போது நீ எதுக்குக் கவலைப் படணும். வேலையை விடாதே. நான் வந்து உன்னுடன் இருக்கிறேன். நீ கஷ்டப்படுகிறதைப் பார்த்து என்னால் சும்மா இருக்க முடியாது”. ”உன்னால் ராமை விட்டு எப்படி வர முடியும் . கிரீன் கார்டு வேறு வைத்திருக்கிறாய். உன்னால் இந்தியாவில் ரொம்ப நாள் தங்க முடியாதே”. ” நீ தான் எனக்கு முக்கியம். ராம் எப்படியாவது சமாளித்துக் கொள்வான்.  வருடம் ஒரு முறை இந்தியா வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவான். உன் அண்ணியும் வீட்டிலே தான் இருக்கா. அதனால் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது பிரச்சனை அல்ல. நீ தான் பாவம் ! ! வேலைக்கும் போய்க்கொண்டு குழந்தையும் பார்த்துக் கொண்டு கஷ்டப் படுகிறாய். கிரீன் கார்டு எனக்கு ஒரு பொருட்டல்ல. அதை ராமிடம் கொடுத்து ரத்து செய்துவிட்டு வந்துவிடுகிறேன். அதுவரைக்கும் பொறுத்துக்கொள் கண்ணு” என்றாள் தாயன்புடன். அதைக்கேட்ட பவித்ராவின் மனதில் ஆனந்த தேனை சொரிந்தது போல் இருந்தது. கண்கள் பனித்தன. அ..ம்..மா, அ..ம்..மா என்றாள் .அவ்வளவுதான்  அவளால் பேச முடிந்தது.     ****************                     17. அழகின் விபரீதம் ! !   சமந்தா கைகளால் சோம்பல் முறித்துக் கொண்டே நேரத்தைப் பார்த்தாள். காலை 7 மணி என்று பார்த்ததும், அடடா ! நேரமாகி விட்டதே என்று சொல்லிக்கொண்டே பல் துலக்க சென்றாள். சமந்தாவுக்குப் பொற்சிலை போல் உடம்பு.. பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் கட்டழகி. . . பிறந்தது படித்தது எல்லாம் மும்பையில். இருபத்தி எட்டு வயதுதான் ஆகிறது . ஆனால் கொழு கொழுவென்று செழிப்பாக  இருப்பாள். கல்யாணம் ஆனதும் சென்னையில் மைலாப்பூரில் கணவனோடு வாழ்கிறாள்.  . ”அல்டிரா மாடர்ன் டிரஸ் போடுவேன்.  புடவை கட்ட மாட்டேன்” என்பது திருமணத்துக்கு அவள் போட்ட நிபந்தனை. அவள் அழகில் மயங்கிய பரத்தும் அவள் போட்ட நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டான்.  பரத்துக்கு வயது முப்பத்து இரண்டு.  குக்கர்  கம்பெனியில் வேலை. கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது குழந்தைப் பெறுவதை ஐந்து வருடத்திற்குத்  தள்ளி வைத்திருக்கிறாள். அவள் அழகுக்கு அவன் அடிமை. இருவரும்  ஆனந்தமாய் வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருக்கும் உல்லாசப் பறவைகள் .   சமந்தா ஒரு மென்பொருள்  நிறுவனத்தில் மேனேஜராகப் பணி செய்கிறாள். அலுவலகத்திற்குச் செல்லும்போது அவள் அணியும் டாப்ஸ் மற்றும்  இறுக்கமான  ஜீன்ஸ்   உடலழகை அதிகமாகக் காட்டும். வீட்டில் இருக்கும்போதுகூட எப்போதும் லெகிங்ஸ், டிரவுசர்  அல்லது பேண்ட்தான்.   அவளுடன் பணி செய்யும் ஆண்களில்   அவளைப் பார்த்து ஜொள்ளு விடாத ஆளே இல்லை. நூறு ஆண்கள் நூறு பெண்கள் பணி செய்யும் நிறுவனத்தில் எல்லா  ஆண்களும் அவள் இளமையை இமைக்காத விழிகளால் ஆசையுடன் பார்ப்பார்கள். அவளுக்காக எதுவும் செய்யத் தயாராய் இருப்பார்கள்.   ”ஏண்டி ஆண்களை  உன் உடையாலே சங்கடப் படுத்தறே “ என்று அவளுடன் பணி புரியும்  தோழிகள் கேட்கும்போது, ”நான்    ரொம்ப  ரொமாண்டிக்கான டைப் ” என்பாள் கண்சிமிட்டிக் கொண்டே.  தான் அழகி என்ற பெருமிதம் அவளுக்கு. வெட்கம் என்பதே அவளுக்கு மரத்து விட்டது என்பது போல்தான் உடை அணிவாள்.   காலைக் கடன்களை முடித்துவிட்டு அலுவலகம் செல்லத் தயாராகும்போது மணி 8.30.  பரத் ஊரில் இல்லை. அலுவலக விஷயமாய் பூனே சென்றிருக்கிறான். இருக்கமாக ஆடை அணிந்து இளமை பொங்க    வீட்டை விட்டு வெளியே வந்தாள். அப்போது பக்கத்து ஃபிளாட்டிலிருக்கும் மங்கையர்க்கரசி வெளியே நின்றிருந்தாள். மங்கையர்க்கரசிக்கு வயது ஐம்பத்து எட்டு . அவர் கணவர் வங்கியிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார்.  தொண்டையில் கேன்சர் வந்திருப்பதால்   அவருக்குப் பேச வராது. அந்த வேதனையை மறக்க   மங்கையர்க்கரசி ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு சிவனடியாராக மாறி  அடிக்கடி கோவில், குளம் என்று போய்க் கொண்டிருப்பாள். நெற்றியில் விபூதி பட்டையாய் அணிந்து குங்குமப் பொட்டு பெரியதாக இட்டிருப்பாள். கழுத்தில் உருத்திராட்சர மாலை . வாய் எப்போதும்  தேவாரத்தை முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.சமந்தாவைப் பார்த்து அதிர்ந்த அவள் , ” எங்கே ஆபீஸ்க்கு கிளம்பிட்டியா” என்றாள்  ”ஆமாம் ஆண்ட்டி. நீங்கள் எங்கே ? கோவிலுக்கா?” “ஆமாம்.கோவிலுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். வரும் ஞாயிற்றுக் கிழமை என் வீட்டில் லலிதா சஹஸ்ரநாம பூசை வைத்திருக்கிறேன். காலை பத்து மணிக்கு.கண்டிப்பா வந்துவிடு. “  ”அவசியம் வரேன் ஆண்ட்டி.” சமந்தா அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த மங்கையர்க்கரசி, ”இவள் உடம்பு தெரிய மாதிரி டிரஸ் போடுவதை நாகரீகம் என்று நினைக்கிறாள். இவளுக்குக் கடவுள்தான் புத்தி கொடுக்க வேண்டும்” என்று நினைத்தாள்.   அன்று ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணி. சமந்தா பக்கத்திலிருக்கும் மங்கையர்க்கரசி வீட்டிற்குச் சென்றாள். டீ சர்ட் , லெகிங்ஸ் அணிந்திருந்தாள். மங்கையர்கரசி, ”ஏம்மா சமந்தா, ஒண்ணு கேட்கிறேன்.  தப்பா நினைச்சுக்காதே. பூசைக்கு வரும்போது புடவை கட்டிண்டு வரலாம் இல்லையா?” ”புடைவையே எனக்குப் பிடிக்காது ஆண்ட்டி. காலைத் தடுக்கும். அதோடு இல்லாம அடிக்கடி மாராப்பைச் சரி செய்து கொண்டே இருக்கணும்.”   ”அதுக்கு உடம்பை மறைக்கிறமாதிரி சுடிதார் போட்டுண்டு வரலாமே. நீ இப்படி டிரஸ் செய்தால் உன்னை எல்லாரும்  சைட் அடிப்பதோடு மட்டும் அல்லாமல் உனக்கு பாலியல் தொல்லையும் கொடுக்க பார்ப்பார்கள். ஜாக்கிரதை.”   அன்று இரவு பரத் வந்து விட்டான். அடுத்த நாள்  தோழியின் கல்யாணத்துக்குப்   போகலாம் என்ற முடிவு செய்யப்பட்டது.  காலைத் திருமணத்துக்கு டிரஸ் செய்து தயாராய் இருந்த அவளைப் பார்த்து அதிர்ந்தான். அவள் முதுகு முழுவதும் தெரிகிற மாதிரி டிசைனர்  ஜாக்கெட் அணிந்திருந்தாள். பச்சை நிற பட்டுப் புடவை பாந்தமாய் அவள் உடம்பைச் சுற்றியிருந்தது.   கல்யாணத்தில் எல்லோரும் சமந்தாவை வியப்புடன் பார்த்தார்கள். அழகிய முதுகை அப்பட்டமாகக் காட்டிய அவள்  துணிச்சல்  ஆண்களை வியக்க வைத்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை சமந்தா  நடைப்பயிற்சிக்கு வெளியே சென்றாள். அவள் லூசான  டீ சர்ட், ஜீன்ஸ் போட்டு அலைப்பேசியில் பாட்டு கேட்டுக் கொண்டே போகும்போது உண்டான . குலுங்கும் அழகை  ஒரு முறை பார்த்தவர்கள் இரண்டாவது முறை திரும்பிப் பார்த்தார்கள். .   ஒருவன் அவள் மேல் இடிப்பதுபோல் வந்தான். அவள் நகர்ந்து ஒரு மாதிரியாய் சுதாரித்துக் கொண்டாள். தான் அணிந்திருந்த உடைதான் அவனுடைய மிருகச் செயலுக்குக் காரணமென்பதைப் புரிந்து கொள்ளாமல்  ”பொறுக்கி , கண்ணில்ல உனக்கு” என்று முணுமுணுத்தாள்.   அவள் வீட்டுக்குத் திரும்பும்போது அவள் வருவதைப் பார்த்துக் கொண்டு மங்கையர்க்கரசி நின்றிருந்தாள். அவள் நெற்றியில் திருநீறு.  ”காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி....” என்று அவள் வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.  வாடிய முகத்துடன் வந்த சமந்தாவைப் பார்த்து , ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறாய்? இதென்ன? இவ்வளவு கவர்ச்சியாய்  ஆடை போட்டிருக்கிறாய்.. உனக்கு ஒன்று தெரியுமா ? அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உடலை மறைத்துப் பல பெண்களையும், நவநாகரீக ஆடையுடன் பல பெண்களையும் நடக்கவிட்டுப் பரிசோதனை நடத்தினார்கள்.   அதில் அரைகுறை ஆடையுடன் நடந்த பெண்களில் 95% பேர் ஆண்களால் பாலியல் சேட்டைகளுக்கு உள்ளாயினர். உடலை மறைத்துச் சென்ற பெண்களை யாரும் நெருங்கக்கூட இல்லை என்று நிரூபித்திருக்கிறார்கள். இதிலிருந்து எது பெண்களுக்குப் பாதுகாப்பானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும்.   ”நடைப்பயிற்சி செய்யும்போது மனசைக் கிளர்த்தும் ஆடைகளை அணிந்து செல்லாதே. நீ கொழு கொழுன்னு வேறு இருக்கியா?  ரொம்ப ஜாக்கிரதையுடன் இருப்பது அவசியம். நம் கற்பை நாம் தான் பேண வேண்டும். இதுதான் நான் உனக்குச் சொல்ல விரும்புவது.   ”முயற்சி செய்கிறேன் ஆண்ட்டி” என்று வெடுக்கென்று உரைத்தாள்.  அறிவுரையை அவள் விரும்பவில்லையென்பது முகத்திலேயே தெரிந்தது.  மங்கையர்க்கரசி அப்பால்  போய்விட்டாள்.   ஒரு நாள்  பரத் அலுவலக நண்பர் வீட்டில்  ஒரு  பார்ட்டி  இருந்தது. மணமானவர்கள் மனைவியோடு வரவேண்டும். சமந்தா தன் உடலைக் காட்டும் வண்ணம் உடை உடுத்திச் சென்றாள். அன்று பரத்திடம் பணி புரிபவர்கள் எல்லோரும் அவனிடம், “ நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி. அழகான மனைவி உனக்கு” என்று பாராட்டினார்கள்.  அவனுடன் கூடப் பணிபுரியும் ராபர்ட், சமந்தாவிடம் ,” நாம் நடனம் ஆடலாமா?” என்று துணிச்சலோடு கேட்டப்போது .. மறுத்து விட்டாள் . எல்லாம் அவள் போட்டிருந்த டிரஸ்தான் காரணம் என்று பரத்  நினைத்தான். அன்று இரவு படுக்கையறையில் இருக்கும்போது கேட்டான்.  ” சமந்தா நீ கவர்ச்சியாய் ஆடை  அணிகிறாய். இது ந..ல்..லா இல்லையே ”  என்று தயக்கத்துடன் சொன்னான். ” பரத், எனக்கு ஆடை சுதந்திரம் வேண்டும். நான் எப்படி வேண்டுமானாலும் ஆடை உடுத்துவேன். அது என் உரிமை. நான் மும்பாயில் வளர்ந்ததால் நாகரீகமாகத்தான்….. நீங்கள் மும்பாய் சென்று பாருங்கள். அங்குள்ள பெண்கள் எல்லாம் எவ்வளவு நாகரீகமாக ஆடை அணிகிறார்கள் என்பது புரியும். தயவு செய்து என் ஆடை விவகாரத்தில் தலையிடாதீர்கள். எனக்கு ரொம்ப கோபம் வந்துவிடும்.”  ”நான் ஆட்சேபித்தால் என்ன செய்வாய்?” “என்ன செய்வாயா?... விவாக ரத்து செய்வேன். என்னைப் பொறுத்தவரை என் ஆடை சுதந்திரத்தில் யாரும் தலையிடுவதை நான் விரும்ப மாட்டேன். என் கணவரானாலும் சரி. தாய் தந்தை ஆனாலும் சரி . யார் சொல்வதையும் நான் கேட்க மாட்டேன். நான் சொல்வதை நீங்கள்  நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் பரத். எனக்கு ஆடை சுதந்திரம் வேண்டும்” என்றாள் உறுதியுடன். ”இதற்குப் பெயர்தான் சுதந்திரமா? . எனக்கு எதுவும் புரியலையே” என்று முணுமுணுத்தான். அவள் அழகுக்கு அவன் எப்போதும் பணிந்து போவான்.   இன்பம் துய்க்க வேண்டிய நேரத்தில் விவாதம் செய்து மனநிம்மதியைக் கெடுத்துக் கொள்ள பரத் விரும்பவில்லை.. ”உன் விருப்பம்போல் செய்.”  அவளைக் கட்டி அணைத்தான். இரவுப் பொழுதை இருவரும் இன்பமாய் கழித்தனர்.   பரத் ஒரு பயிற்சிக்காக பத்து நாள் பூனே சென்றிருந்தான். அவன் போய் இரண்டு நாள் ஆகி விட்டது.   அன்று பகல் மணி பனிரெண்டு இருக்கும். சமந்தா  கட்டிலில் படுத்து  ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். சமந்தா உள்ளாடை தெரியும்படி டாப்ஸ் அணிந்திருந்தாள்..அப்போது அழைப்பு மணி சப்தம் கேட்டது.  கதவைத் திறந்தால் கேஸ் சிலிண்டருடன் ஒரு பையன் நின்றிருந்தான். அவனுக்கு வயது சுமார் இருபது இருக்கும். அவன் கண் இமைக்காமல் அவளைப் பார்த்தான்.. சமந்தாவுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.    சமையல் அறையில் கேஸ் சிலிண்டரைப் பொருத்தி பரிசோதனைச் செய்து ”சரியாய் இருக்கிறது” என்று சொல்லிச் சமந்தாவைப் பார்த்தான். பணத்தை அவனிடம் கொடுத்து ”அவ்வளவுதானே” என்றாள்.   அவன் பணத்தை வாங்கிப் பாக்கெட்டில் போட்டு விட்டு சடக்கென்று அவளைத் மார்புறத் தழுவ முயன்றான். சமந்தா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போய்  தன்னைக் கட்டி அணைக்க வந்தவனை இரண்டு கைகளால்   பலமாக எதிர்பக்கம்  தள்ளினாள்..  பொத்தென்று கீழே விழுந்தவன் தலையில் அடிப்பட ”அம்மா” என்று அலறினான். சமாளித்து எழ முயற்சிக்கும்போது சமையலறையில் வைத்திருந்த பாட்டிலின் மூடியைக் கழற்றி அதிலிருக்கும்  மிளகாய்ப்பொடியை எடுத்து  அவன் கண்களில் வீசினாள். ”ஐயோ எரியறதே” என்று ஓலமிட்டான்..   வீட்டிலிருந்து வெளியே கிளம்பி கொண்டிருந்த   மங்கையர்கரசி அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்து விட்டாள். சமந்தா உடல்   நடுங்க நின்று கொண்டிருந்ததைப் பார்த்து நிலைமையை ஊகித்துக் கொண்டவள் சமையலறையில் இருந்த துடைப்பத்தை எடுத்து, ”நீ நாசமாப் போக” என்று கத்திக் கொண்டே அவனை மொத்து மொத்து என்று மொத்தினாள். “என்னை விட்டு விடுங்கள்” கதறிக்கொண்டே தலைதெறிக்க ஓடி விட்டான். ”ரொம்ப தேங்ஸ் ஆண்ட்டி. நீங்க வராவிட்டால் நிலைமை மோசமாயிருக்கும். என் உடலெல்லாம் நடுங்குகிறது. பாவி என்னைக் கெடுத்திருப்பான்.” ”வா, உடனே கேஸ் கம்பெனிக்குப் போய் அவன் மேல் புகார் கொடுத்துட்டு வரலாம்” என்றாள் மங்கையர்க்கரசி. ” சரி ஆண்ட்டி” ”சமயோசிதமாய் மிளகாய்ப்பொடியை அவன் கண்ணில் தூவினாயே. உன்னை நான் மெச்சுகிறேன். நீ போட்டிருக்கிற உடையினால் உண்டான விபரீதத்தைப் பார்த்தாயா?”   ”நீங்களும் துடைப்பத்தால் அவனைச் செம்மையாய்  மொத்தினீங்க. எல்லாம்  என் அழகால் வந்த விபரீதம்.” ”அழகால் மட்டுமல்ல. ஆடையும் ஒரு முக்கிய காரணம். நாகரீகம் என்ற போர்வையில் கிறங்க வைக்கும்   உடை அணிவதால் அது ஆண்களைப் பாடாய்ப் படுத்துகிறது. விரும்பத் தகாத செயலை செய்யத் தூண்டுகிறது.:..” “நான் உடலைக் காட்டும் ஆடை அணிந்தது தவறுதான். நாகரீக ஆடை பாதுகாவலன் அல்ல. எதிரி என்று உணர்ந்து கொண்டேன். இனிமேல் புடவையைக் கட்டிக்கிறேன். என் கண்களை நீங்கள் திறந்து விட்டீர்கள்.” ”மனிதர்கள் நித்திரையில் இருக்கிறார்கள் . இறப்பிலியே அவர்கள் விழிப்படைகிறார்கள் என்ற முகமது நபியின் வாக்கின்படி பாலியல் தொல்லை வந்தால்தான் பெண்கள் விழிப்படைகிறார்கள். அதுவரை நித்திரையிலேயே இருக்கிறார்கள். உன்னைப் போல் நாகரீக உடை அணியும்  எல்லாப் பெண்களுக்கும் விழிப்பு  வரவேண்டும்.  பெண்களின் ஆடைக்குறைப்புக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த பெண்கள்தான் முன்வர வேண்டும்.  இல்லாவிட்டால் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் ஆபத்து. ஒருதலை காதலில் ஆரம்பித்து கொலையில் போய் முடியும். என் பெண்ணின் வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அவளுக்கு இரண்டு பட்டுப்புடவை  வாங்கியிருந்தேன். அதில் ஒன்று உனக்குத் தருகிறேன்.நீயும் என் பெண் போலத்தான்...” என்று கையில் வைத்திருந்த பையிலிருந்து நீல வண்ண  பட்டுப் புடவையை எடுத்து சமந்தாவின் கையில் கொடுத்தாள்.   ”இதோ ஒரு நிமிஷத்தில் வருகிறேன்” என்ற சமந்தா உள்ளே சென்று பட்டுப் புடவையைக்  கட்டி சரசரக்க அழகாக  வந்தாள். புடவை தலைப்பை இழுத்துப் போர்த்து அடக்கவொடுக்கமாய் நின்றாள். ” புடவையில் அழகாய் இருக்கிறாய். உன்னைப் புடவையில்  பார்த்தால் லட்சணமாய் இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே அவளை ஆரத்தழுவி நெற்றியில் முத்தமிட்டு  ” நீ இந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டும்”  என்று வாழ்த்தினாள்...             18. பொய் எல்லாம் மெய்யென்று...   இராத்திரி பதினோரு மணி ஆனாலும் படுக்கை அறைக்கு வராமல் முகநூலில் மும்முரமாகத் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருந்த பைரவியைப் பார்த்து கோபத்துடன் அவள் கணவன் சண்முகம், ”ஏண்டி எவ்வளவு நேரம் மொபைல் பாப்பே. தாமசம் பண்ணாம சீக்கிரம் வாடி”  என்றான். . கணவன் எதற்குக் கூப்பிடுகிறான் என்று அவளுக்குத் தெரியும் ”கொஞ்சம் நேரம் கழித்து வரேங்க .” என்றாள் பைரவி. யூ டியுபில் பாட்டுக் கேட்டுக் கொண்டே. அவளுக்குச் சினிமா பாட்டுக் கேட்பது  பிடிக்கும்: பாடுவது மிகவும் பிடிக்கும். நாளை தன்  மியூசிக் பார்ட்னர் ராகுலுடன் பாடுவதற்கு   ஒரு  பாட்டை தேர்ந்தெடுக்காமல் படுக்கைக்குச் செல்ல அவள் மனசு ஒப்பவில்லை. ஒவ்வொருவருக்கு ஏதாவது ஒன்று பிடிக்கும். சிலருக்குப் புத்தகம் பிடிக்கும். சிலருக்கு இசையைக் கேட்கப் பிடிக்கும். பைரவிக்கோ சினிமா பாட்டுப் பாடப் பிடிக்கும். குயிலினும் இனிய குரலை உடையவள் என்று சொல்ல முடியாது. பேரழகி. மதமதர்த்த செழிப்பான   உடம்பு. காந்த சிலை போலிருப்பாள். சினிமா பாட்டு என்றால் உயிர். அவளுடைய ஆருயிர் தோழி லதா ஒரு  யோசனை சொன்னாள். ”ஸ்முலே என்னும் ஒரு செயலி இருக்கிறது. அதை ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்த பிறகு  பாட்டைப் பாடி ரிகார்ட் செய்து விட்டால் போதும், நண்பர்கள், இசைபிரியர்கள் எந்த இடத்திலிருந்தாலும்  உன்  பாட்டை கேட்க  முடியும் .” ”. டூயட் சாங் தனியாகப் பாட முடியாது. யாரவது ஆண் கூடச் சேர்ந்து பாட வேண்டுமே. நான் யாரைத் தேடிண்டு போறது” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் பைரவி   ” உன் மனசிலே இருக்கிற ஆசை எனக்குப் புரிகிறது. அதுக்கு ஒரு வழி இருக்கு. என்னுடைய கசின் ராகுல் உன்னைப் போலவே பாட்டுப் பைத்தியம். அவனுக்குக் கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறது. அவன் உனக்கு கம்பெனி கொடுப்பான். அவனாலே ஒரு பிரச்சனையும் வராது”  என்று ஜோடி சேர்த்து வைத்தாள் லதா. அவர்கள் இருவரும் சேர்ந்து முதல் பாட்டை அருமையாகப் பாடி பதிவு செய்துவிட்டார்கள். பைரவி அந்த பாட்டை கேட்பதற்கான பாஸ் வோர்டை தன் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி  நான் பாடிய பாட்டு, அனுபவியுங்கள் ...என்று மெசேஜ் அனுப்பினாள். பாட்டு சுமார்தான். ஆனால் அதை வெளிப்படையாய் சொன்னால் நட்பில் விரிசல் வந்துவிடுமென்பதால் எல்லாரும் பைரவி சூப்பர் . கீப் இட் அப் என்று பதில் கொடுத்திருந்தார்கள். பைரவிக்குப் பெருமை தாங்கமுடியவில்லை. இசை உலகில் வெற்றிக் கனியைப் பறித்து விட்டது போல்  சந்தோசப்பட்டாள். இரண்டாவது பாட்டாகப் பாட ஒரு நல்ல   காதல் பாடலைத் தேர்ந்தெடுக்கத்தான் இப்போது யூடியூபில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.   கூப்பிட்ட உடனே வராத பைரவியை வெறித்துப் பார்த்தான் சண்முகம். அவளை அதட்டிக் கேட்கும் நிலையிலா அவன் இருக்கிறான். தான் சம்பாதிப்பது போதாமல் பத்து கொடு நூறு கொடு என்று மனைவியிடம் கையேந்தி நிற்பவன் எப்படி அதட்டி வாழ முடியும். பெயருக்குத்தான் அவன் குடும்பத் தலைவனே தவிர பைரவிதான் நிஜமாக குடும்பத் தலைவி.  அவன் நினைவுச்சுழல் பின்னோக்கிச் சென்றது. கல்லூரி முதல் வருடம் படிக்கும்போது இரண்டு பேரும் காதலித்து வீட்டை எதிர்த்து மணம் செய்தனர். அவனுக்கு ஆங்கிலம் வராது. படிப்பில் சுமார்தான். ஏதோ வேலை கிடைத்ததே தவிரச் சம்பளம் அதிகம் இல்லை. பைரவி அதிபுத்திசாலி. தன்னை அபிவிருத்தி செய்து கொண்டாள். பிரைவேட்டாக எம்.ஏ, எம்.பி.ஏ பாஸ் செய்து இப்போது தனியார் கம்பெனியில் வேலை செய்கிறாள். சண்முகம் அடிக்கடி வேலையை மாற்றினான். எந்த வேலையிலும் நிலைத்து நிற்க முடியவில்லை.  சாப்பிடுவதற்கு ஒட்டலிருந்து வீட்டுக்குக் கொண்டுபோய் கொடுக்கும் மெசேஞ்சராக இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறான். ஆரஞ்சு டீ சர்டை போட்டுக்கொண்டு ஓட்டல் வாசலில் காத்திருக்க வேண்டியது அவன் தலையெழுத்தாகி விட்டது. எல்லாம் விதியின்  பிழை என்று  குற்றம் சாட்டுவான். உடலில்தான் அபிவிருத்தி ஏற்பட்டதே தவிர அவன் அறிவில் மாறுதல் ஏற்படவில்லை. போதாதக்குறைக்குத் தலை வேறு வழுக்கை. சண்முகம்  வெத்து வேட்டு ஆனதால் ஊக்கம் இல்லாமல் மரம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறான். காலை பைரவியை அலுவலகம் கொண்டு விடுவது, மாலை வீட்டுக்கு அழைத்து வருவது போன்ற சில உதவிகளைச் செய்வான்.    பைரவி கூட இந்த ஆளைப் போய் காதலித்தோமே என்று சில சமயம் வருத்தப்பட்டதுண்டு. கல்யாணம் ஆன உடனே பையன் ஆனந்த் பிறந்து விட்டான். அவனை கண்ணும் கருத்துமாய் வளர்த்தாள்., ஆனந்த் தஞ்சாவூரில் சாஸ்தா பொறியியல் கல்லூரியில் ஆஸ்டலில் தங்கிக்  கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறான். பைரவி ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறாள், அவனிடம் இருப்பது ஒரு மொக்கை போன். அவளுக்கு ஆங்கிலம் தெரியும். அதனால் வாட்ஸ் அப், முகநூல் எல்லாம் அவளுக்கு அத்துப்படி. அவனுக்கு ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தை கூட பேச வராது.  அவன் எப்போதாவதுதான் மொபைலை உபயோகிப்பான். இரண்டு சக்கர வாகனத்தில் வெகுதூரம் தினந்தோறும் பயணம் செய்வதால் இரவு ஒன்பது மணிக்கே தூங்கி விடுவான். பைரவிதான் இரவு பன்னிரண்டு மணி வரை  வாட்ஸ் அப், முகநூல் பார்த்துவிட்டு வந்து படுப்பாள். ஸ்முலேக்காக நாளைப் பாட அவளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ”சின்ன பெண்ணு வெட்கப்படுறா அம்மா அம்மாடி” என்னும் பாடலை   முணுமுணுத்துக் கொண்டே கணவன் அருகில் வந்து கையால்  அவனை மெதுவாக எழுப்பினாள். கண் விழித்த அவன், “ யாரடி சின்ன பெண்ணு ?  உனக்கா வெட்கம்...” என்று சிரித்தான்,. ”பாட்டுங்க...” என்று அவள் சொன்னதைக் கேட்கும் மனநிலையில் அவனில்லை.  “ரொம்ப நேரமாயிருக்கும் போல” என்றவன்  அவளை இழுத்துக் கட்டியணைத்தான். அடுத்த நாள் லதாவின் வீட்டுக்குப் பைரவி  போகும்போது ராகுல் வந்துவிட்டிருந்தான். ”சின்ன பெண்ணு வெட்கப்படுறா அம்மா அம்மாடி” பாட்டை பாடி முடித்து விட்டார்கள். ஜீஸ் போட லதா சமையலறைக்குள் சென்றாள். மெழுகு பொம்மை போல் வழ வழவென்று இருந்த பைரவியை வைத்த கண் வாங்காமல் ஊடுருவி பார்த்தான் ராகுல். பைரவிக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ”கொஞ்சம் கூட கண்ணியம் இல்லாமல் முறைக்கிறானே” என்று நினைத்தாள்.   திடீரென்று உணர்ச்சி வசப்பட்ட ராகுல்  அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு “ அன்பே, என் அன்பே” என்றான். கையை சடக்கென்று  உதறின பைரவி, ”என்ன ஆச்சு உங்களுக்கு? நீங்க பண்றதும் நல்லாயில்லை” என்றாள். ”உன் அழகிலே நான் தடுமாறிட்டேன். உன்னை எனக்கு மிகவும் பிடிச்சு போச்சு. நாம் ஏன் மிகவும் நெருங்கிய நண்பர்களாக ஆகக் கூடாது?” என்றான். அர்த்தம் புரிந்த பைரவிக்குக் கோபம் பொங்கியது. “சீல ஒழுக்கமான  வாழ்க்கையை  வாழ ஆசைப் படுகிறேன். படிக்காவிட்டால் கூட, நல்ல வேலையில் இல்லாவிட்டால் கூட என் கணவர் என் மேல் அன்பைப் பொழிகிறார்.  மனசில் கள்ளம் இல்லாதவர். அவருக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். நீங்கள் தயவு செய்து போயிடுங்க. இதுவே நம்முடைய கடைசி சந்திப்பாக இருக்கட்டும். இனிமேல் இந்த ஸ்முலே, டூயட் பாடுவது என்பதெல்லாம் அறவே  வேண்டாம்’. அதுக்கும் கும்பிடு உங்களுக்கும் கும்பிடு” என்று இருகைகளால்  கும்பிட்டாள். அதிர்ச்சி அடைந்த ராகுல் வேறு வழியில்லாமல் அவ்விடத்தை விட்டு அவசர அவசரமாக  நகர்ந்தான். லதா கையில் இரு தம்பளிரில் ஜீஸ் எடுத்துக்கொண்டு ராகுல் எங்கே? ஜீஸ் போட்டுண்டு வர்றத்துக்குள்ளே எங்கே ஒழிஞ்சான்” என்று கேட்டுக் கொண்டே வந்தாள். ”அவனுடைய நடத்தை சரியில்லை. என் கையைப் பிடித்து ஏதோ  உளறினான். நான் போட்ட கூச்சலில்  ஓடிப் போய் விட்டான். சே ! சரியான பொம்பள பொறுக்கி” என்றாள். ”ராகுல் அப்படியா செய்தான் ? என்னால் நம்பவே முடியவில்லை. அவன் மனைவியை எனக்குத் தெரியும்.  அவ நல்லவ.  ஒரு வேளை உன் அழகில் மயங்கி நெறி தவறி விட்டானோ தெரியவில்லை. வழ வழ கொழ கொழன்னு இல்லாம  வெட்டு ஒண்ணு துண்டு இரண்டுன்னு பதில் கொடுத்துட்டே. நீ பண்ணினது மிகவும் சரி.. நாந்தான் அவனை உனக்கு அறிமுகம் செய்தேன். சாரி. அவனுக்கோசரம் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்றாள். ” அவன் தப்பிதம் செய்தால் நீ என்ன செய்வாய்? இறைவனுடைய மாயை என் கண்களை மறைத்துவிட்டது. ஸ்முலேயில் பாடினா நண்பர்கள் உறவினர் மத்தியில்  பேரும் புகழும் கிடைக்கும் என்று நம்பினேன். அதனால் கணவனைக் கூட  அலட்சியம் செய்தேன்.  என் கண் திறந்து விட்டது. இனிமேல் ஒழுங்காய்  இருப்பேன்” என்றாள் பைரவி. அன்று இரவு சண்முகம் வருவதற்கு முன்னாலே படுக்கை அறையில் அவனுக்காகக் காத்திருந்த பைரவியைப் பார்த்து, ”என்ன ஆச்சரியம் ! ! எனக்காக நீ முன்னே வந்து காத்திருக்கிறாய்.. இன்று முகநூல் பார்க்கலையா ? என்று வியந்தவனிடம்,” பொய்யெல்லாம் மெய்யென்று நினைச்சுட்டேன்.. இப்போ உண்மையை உணர்ந்திட்டேன். இனிமேல் நீங்கள் தான் எனக்கு முக்கியம், முகநூல், பாட்டுக் கேட்பதெல்லாம் எனக்கு இரண்டாம் பட்சம்தான்” என்று பைரவி   சொன்னதைக் கேட்டு  இன்ப அதிர்ச்சியில் சிலையாகிப் போனான். ************                                         19. விதியின் விளையாட்டு   நான் என் வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டு அன்று காலைதான் வீட்டுக்குத் திரும்பி  வந்தேன். ”இன்று எதிர் வீட்டு பாட்டியின் பேரனுக்குக் கல்யாணம் ” என் மனைவி ஞாபகப்படுத்தினாள். கல்யாண மண்டபத்திற்குள் நான் நுழைந்த போது எல்லாருக்கும் பூ, அட்சதை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ”நல்ல வேளை இன்னும் பதினைந்து நிமிடம் கழிந்து வந்திருந்தால் கல்யாணமே முடிந்து விட்டிருக்கும் . அதற்குள் வந்து விட்டேன்.” என்று திருப்தியடைந்தேன். அப்போது கல்யாண மேடைக்கு அருகில் ஒரு வீல் சேர் வந்து நின்றது. எல்லாரும் அந்த வீல் சேரையே திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தொலைவில் இருந்த்தால் அதில் அமர்ந்திருப்பது யார் என்று தெரியவில்லை. ஆனால் வழுக்கை தலை மட்டும் தெரிந்தது. தாத்தாவைதான் வீல் சேரில் அழைத்து வந்திருக்கிறார்கள் என்று எண்ணினேன். தாலி கட்டும் தருணம் வந்த்தும் கொட்டு மேளம் கொட்டியது. அட்சதயைப் போட கல்யாண மேடை மேல் ஏறினேன். வீல் சேரில் ஒரு பெண்மணி நைட்டியுடன் , மூக்கில் ஒரு குழாய்டன், தலையில் முடியில்லாமல்................. பார்க்க பாவமாய் இருந்தார்.” அது யார் ?” என்று பக்கத்திலிருந்த ஒரு மாமியிடம் கேட்டேன். ”அவர்தான் கல்யாண பையனின் தாயார். ஒரு வாரத்திற்கு முன் இரு சக்கர வண்டியில் போகும் போது விபத்து ஏற்பட்டு தலையில் அடி. நினைவு இருக்கிறது. ஆனால் பேச முடியாது. கல்யாணத்தைத் தள்ளி போட வேண்டாம் என்று அவர் வற்புறுத்தியதால் இன்று கல்யாணம் நடக்கிறது. உடம்பு குணம் ஆக இன்னும் ஆறு மாதம் ஆகும்” என்றார். நான் அதிர்ச்சியுடன் பையனின் தாயாரைப் பார்த்தேன். அவ்வளவு துக்கத்திலும் அவர் முகத்தில் புன்னகை வெளிப்பட்டது. அவருக்கு மட்டும் ஏன் அந்தக் கொடுமை என விடை தெரியாமல் திகைத்தேன். பையனும் பெண்ணும் தாயார் பாதங்களில்  விழுந்து வணங்கினார்கள். பையன் தாயாரின்  பாதத்தைத் தன் தலைமேல் வைத்து ஆசிர்வாதம் பெற்றான். தாயார் கையிலிருந்த அட்சதை அவன் தலை மேல் விழுந்த்து.. அவருக்குச் சீக்கிரம் உடல் குணம் ஆக வேண்டும் என்றும் இந்த மாதிரி வேதனை யாருக்கும் வரக் கூடாது என்றும் வேண்டிக் கொண்டேன். கீழே இறங்கும்போது ஆ!!   இதென்ன   ,  வீடியோவின் ஒயர் தடுக்கி கீழே விழுந்தேன். கால் எலும்பு முறிந்து விட்டது.வலி தாங்க முடியாமல்  துடிதுடித்துப் போனேன். விதி செய்த சதியால் ஆன என் கதியை நினைத்து எல்லாம் விதியின் விளையாட்டு என்பதை உணர்ந்தேன்.                 20. அன்பின் சுடர்   அன்று அபூர்வமாய்  வீட்டிலிருந்தேன். பக்கத்து வீட்டிலிருந்து   ஆனந்த பைரவி ஆலாபனை செவியில் தேன் மாரி பொழிந்தது. அதை நான் ரசிக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதைப் போல் சமையல் அறையில் மிக்ஸி செயல்பட ஆரம்பித்தது. “ஒரு வேலையும் செய்யறதில்லை. குடும்பத்தை நீங்க நேசிக்கிறதில்லை” என்று என் மனைவி பாமா சமையலறையிலிருந்து  முணுமுணுத்தாள். அவள் ஏற்படுத்திய  தாக்குதலால் நிலைகுலைந்து , “பாமா, குடும்பம்னு எதைச் சொல்கிறாய்?” என்றேன். ”அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க குடும்பத்துக்காக நேரம் செலவழிக்காமல்  எப்பவும், வீட்டை விட்டு ஓடறீங்க. நா ஒண்டி ஆளா இருந்து கஷ்டப்படவேண்டி இருக்கு” என்றாள் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீருடன். அவளைச் சமாதானப்படுத்த முயற்சி செய்தேன். பாமா இப்போதெல்லாம் சின்ன விஷயத்துக்கெல்லாம் காரணமில்லாமல். சண்டை போடுகிறாள். அன்புதான் வாழ்க்கை என்பதை அவள் புரிந்து கொள்ளவில்லை. ஒரே பையன் சுந்தர்  திருச்சி பொறியியல் கல்லூரியில்   படித்துக் கொண்டிருக்கும்போது கூட படித்த அபிநயாவைக் காதலித்தான். அவனுக்கும் அவளுக்கும்  அமெரிக்காவில் வேலை கிடைத்தது. கல்யாணம் செய்து கொண்டு இருவரும் அமெரிக்கா போனார்கள்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. நானும் பாமாவும் அமெரிக்கா போய் தங்கியிருந்தோம். அபிநயாவுக்குக் குழந்தை இன்னும் பிறக்கவில்லை. மாமியாருக்குத் தரவேண்டிய மரியாதையைத் தராமல் அலட்சியப்படுத்தினாள். மிகவும் முக்கியமானது அவளுக்குத் தெய்வ பக்தி என்பது அறவே இல்லை. கேட்டால் வேலைக்குப் போறேன். அதுக்கெல்லாம் நேரம் கிடையாது என்பாள். இப்படி இருந்ததால் எப்படி அவளோடு நிம்மதியாய் இருக்க முடியும். அவளுக்கும் மருமகளுக்கும் ஒத்துப் போகவில்லை.  ஆறு மாதம்  இருக்கலாம் என்று முதலில் நினைத்த பாமா  எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இரண்டு மாதத்திலேயே, இந்த ராங்கிக்காரியுடன்  நான் இருக்க மாட்டேன்” என்று  பிடிவாதமாக அமெரிக்காவிலிருந்து  இந்தியா திரும்பி விட்டாள். சுந்தர்  நல்லவன்தான். ஆனால் மனைவி சொல்லைத் தட்ட மாட்டான்.   நானும் அவளும்தான் வீட்டில் இருக்கிறோம். நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற பிறகு அதே நிறுவனத்தில் கன்சல்டண்ட் ஆக வேலை செய்வதால் மாசத்தில் பத்து நாள் பாம்பே, டில்லி என்று போய் விடுவேன். பாமா இப்போ தனியாக இருப்பதற்கு மறுக்கிறாள்.. ”என்னை விட்டுவிட்டு வெளியே போகாதீங்க. என் கூடவே இருங்கோ” என்கிறாள். ”நாளைக்குக் காலையிலே கோயம்புத்தூர் போகணும் . திரும்பி வர நாலு நாள் ஆகும்” என்றேன். ”இதைத்தான் சொன்னேன். எப்பவும் உலகம் சுற்றும் வாலிபன் நீங்க” என்றாள். நான் பாமாவைத் தனியே விட்டுப் போகிறோமே என்னும் சஞ்சலத்துடன் கோயம்பத்தூர்  போனபோது என் நண்பன்  சீனிவாசனைச் சந்தித்தேன். நான் ” விருட்சம்  ” சீனியர் சிடிசன் ஹோமில் இருக்கிறேன் என்றான். ” முதியோர் இல்லம்  வசதியாக இருக்கிறதா? “ என்று கேட்டேன். ”வயோதிகர்களுக்கான சகல வசதியும் பாதுகாப்புமுடையது. சொர்க்கம் போல்தான்... என்றான். என்னை ஒரு முறை அவர் இருப்பிடத்துக்கு வந்து பார்க்கச் சொன்னார். நான் அடுத்த நாளே அவன் வசிக்குமிடத்துக்குச்  சென்றேன். அந்த இடம் எனக்கு  மிகவும் பிடித்துப் போய் விட்டது. ”இவர்களே  சென்னையிலும் ”ஆனந்தம்” சீனியர் சிடிசன் ஹோம்   என்று சமீபத்தில் திறந்திருக்கிறார்கள். நீ அங்குப் போய் பார்த்துவிட்டு பிடித்திருந்தால்...” என்றான்.” ”ஏன் அப்படிச் செய்யக் கூடாதென்று யோசிக்க ஆரம்பித்தேன். பாமா ஒப்புக் கொள்ள மாட்டாள் என்று முதலில் நினைத்தேன். பாமாவிடம் என் எண்ணத்தைச் சொன்னபோது,”நான் சொந்த வீட்டிலேதான் உயிர் விட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு . நீங்கள் எது செஞ்சாலும் எனக்குச் சம்மதம். நான் ஒரு யோசனை சொல்றேன்.  முதல்லே ஒரு மாசம் ஆனந்தம் சீனியர் ஹோம்லே வாடகைக்கு  இருக்கலாம். பிடிச்சிருந்துன்னா நம்ம  வீட்டை வித்திட்டு அங்கே போய் விடலாம்” என்று நிபந்தனையோடு தன் சம்மதத்தைத் தெரியப்படுத்தி என்னை ஆச்சரியப்படுத்தினாள் பாமா. எனக்கும் அது சரின்னு பட்டதால் தங்குவதற்காக ஒரு வாடகை வீட்டை ஏற்பாடு செய்துகொண்டு . குறைந்த சாமானுடன் போய் அங்கு தங்கினோம். சும்மா சொல்லக் கூடாது . அருமையான இடம் . பாமாவுக்கும் அந்த இடம் பிடித்துப் போய்விட்டது. எழுத்தாளர், கவிஞர், மத்திய மாநில அரசாங்கத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் தனியார்  நிறுவனங்களில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள் மனைவியை இழந்தவர்கள்   கணவனை இழந்த பெண்கள் என்று பலதரப்பட்ட மக்கள் எண்ணிக்கையில் நூறைத் தாண்டிக்  கூட்டுக் குடும்பமாக அந்த ஹோமில் வசித்தனர்.  கேண்டீன் சாப்பாடு அருமையாய் இருந்தது. சிறிய சிவன் கோவில், காலை தேவாரம் ஓதுதல், மாலை விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் என்று மனதுக்குத் திருப்தியாய் இருந்தது..   சுத்தத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருந்தது. பாதுகாப்புக்குச் சொல்லவே வேண்டாம். செக்குரிட்டிக்குத் தெரியாமல் யாரும் உள்ளே வர முடியாது. ஒரு டாக்டர் 24 மணி நேரமும் இருக்கிறார் விசாலமான இடத்தில், பூங்கா. நூலகம், திரை அரங்கு, ....சகல வசதிகளுடன் இருக்கும் ஆனந்தம் சீனியர் சிட்டிசன் ஹோமை யாருக்குத்தான் பிடிக்காது. ஒரு வீடு விற்பனைக்காகவும்  இருந்தது. விலை  எழுபது இலட்சம். மாசம் எட்டாயிரம் ரூபாய் தரவேண்டும் மெயிண்டனென்ஸ் சாப்பாட்டுச் செலவுக்காக. சென்னையிலுள்ள என் வீட்டை விற்க தரகரிடம் சொல்லி வைத்தேன். ஒரு பார்ட்டி ரெடியா இருக்கிறார் என்று சொல்லி அவரிடம் உடனே அட்வான்ஸ் வாங்கிக் கொடுத்தார். ஒரு கோடி ரூபாய்க்கு வீட்டைப் பேசினேன். வீடு விற்று பணமும் கைக்கு வந்தாச்சு. ஹோமில் எழுபது இலட்சத்தைக் கொடுத்து புது வீடு வாங்கி அங்குக் குடி புகுந்தோம். முப்பது இலட்சத்தை வங்கியில் டிபாசிட் பண்ணினேன். நாங்கள் ஹோமில் எங்கள் இருப்பிடத்துக்குள் நுழைந்தபோது, “வாங்க ! வாங்க !” என்று ஒரு வயதான பெண்மணி எங்களை வரவேற்றாள். ”என் பெயர் சித்ரா. நான பக்கத்து வீட்டில இருக்கேன்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். ஒல்லியாய், உயரமாய், கனிவான கண்களுடன், கீச்சு குரலில் ”நீங்க இன்னைக்குச் சமையல் செய்ய வேண்டாம். எங்க வீட்டிலே சாப்பிட்டுங்க” என்று அன்பு கோரிக்கை விடுத்தாள். ”உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்” என்று நாசுக்காக மறுத்தாள் பாமா”. காலையில் நடைப்பயிற்சி, பேப்பர் படித்தல், கோவில், பூசை என்று நேரம் போவதே தெரியாது. வீட்டில் சமையல் இல்லை. கேண்டீனிலிருந்து சாப்பாடு டிபன் எல்லாம் வேளா வேளைக்கு வீட்டுக்கு வந்துடும். சமையல் வேலை இல்லையென்றாலும்  பாமா எப்போதும் பிசியாகத்தான் இருப்பாள். எல்லாவற்றுக்கும் காரணம் நல்ல நண்பர்கள். நல்ல காற்று, நற் சிந்தனை ஆகியவைதான். உண்மையைச் சொல்வதென்றால் ஆனந்தத்தைத் தேடுவது மனித இயல்பு. ஆனந்தம் சீனியர் ஹோமில் நாங்கள் கவலையை மறந்து   ஆனந்தத்தோடு இருந்தோம். மூர்த்தி என்னும் அன்பர் மின்சார இலாக்காவிலிருந்து ஓய்வு பெற்றவர். ஒவ்வொரு மாதமும் ஆன்மீக சுற்றுலாவுக்கு அவர் பொறுப்பேற்று ஏற்பாடு செய்வார். அதுபோல் மாதந்தோறும் ஆன்மீக உபன்யாசமும் உண்டு. நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் தும்பைப்பூவாயு தலை நரைத்த பெண்மணியைச் சந்தித்தேன். பிரபல  எழுத்தாளர் விஜய லட்சுமி என்று தெரிந்ததும் மிகவும் குதூகலமாய் இருந்தது.  நேற்றுதான் ஒரு  நாவலை முடித்தேன் என்று கூறினார். தினமும்  காலையில் நடைப்பயிற்சி செய்யும்போது அவரைப் பார்ப்பேன். குட் மார்னிங் சொல்லுவேன்.   ”சித்ரா ஊருக்கு நல்லது செய்யும் உத்தமி. அவள் கணவர் சீனிவாசன் பஞ்சாப் நேஷனல் பாங்கில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். மாதம் நாற்பதாயிரம் ரூபாய் பென்ஷன் வாங்குகிறார்” என்று ஹோமில் வசிக்கும் நீலகண்டன் சொன்னார். சித்ரா அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாள். ”அண்ணா” என்று என்னை அழைப்பாள். ஒரு நாள் இன்று பஜ்ஜி செய்தேன். அண்ணாவுக்குக் கொண்டு வந்தேன் என்பாள். ஒரு நாள் இன்று என் பிறந்த நாள் பால் பாயசம் அண்ணாவுக்குக் கொடுங்க என்று அன்புடன் கூறுவாள். எனக்குப் பாசமுள்ள தங்கை கிடைத்து விட்டாள். அளவுக்கு அதிகமான அன்புத்தொல்லை சில சமயம் சங்கடத்தை உண்டாக்கும். நான் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை. எடுத்துக் கொள்ளவும் மாட்டேன். ஆனால் பாமா சராசரி  பெண் ஆயிற்றே. சிலரை முதல் முறை பார்க்கும்போதே பிடித்துப் போய் விடுகிறது.  அதென்னவோ பாமாவுக்குச் சித்ராவை முதல் முறை பார்க்கும்போதே பிடிக்கவில்லை. முதலில் சித்ரா வந்தாலே சனியன் வந்துடுத்து என்பாள்.நான் அவளிடம் பேசினால் கூட “ நீங்க எதுக்கு அவ கிட்டே பேசறீங்க “ என்று கடிந்து கொள்வாள். சித்ரா ஏதாவது கேட்டால் வெடுக்கென்று பதிலளிப்பாள். பெண்களுக்கு இயற்கையிலே உள்ள பொறாமைதான் இதற்குக் காரணம் என்பதை சொல்லவும் வேணுமா?   ஒரு நாள் சித்ராவின் கணவரைப் பார்த்து அதிர்ந்தது விட்டோம். அவர் கணவர் வீல் சேரில் அமர்ந்திருந்தார். வீட்டுக்குள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வீல் சேரில்தான் போகிறார். இரண்டு வருடத்துக்கு முன் அவருக்குப் பாரிச வாயு வந்து. கால், கை எல்லாம் செயலிழந்து போய் விட்டன.. அப்போதிலிருந்து நகருவதற்கு வீல் சேர்தான் துணை. குளறிக் குளறி இழுத்துப் பேசும் அரைகுரை வார்த்தைகள் சித்ராவுக்கு மட்டும்தான் புரியும். சித்ரா வீல் சேரில் அமர்ந்திருக்கும் தன் கணவரை மாலையில் பார்க்குக்கு அழைத்துச் செல்வார். சித்ரா முகத்தில் துளிக்கூட வருத்தத்தை காண்பிக்காமல் எப்போதும் மலர்ந்த முகத்துடன் எல்லாருக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறாள் என்றாள் பாமா. ”. நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால் நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்.” என்று அன்னை தெரசா சொல்லியிருக்கார்.”அதனால்  எல்லாரிடமும் அன்பைப் பொழிய வேண்டும்” என்பாள் சித்ரா. அவளுக்குத்   தெய்வ பக்தி அதிகம் ; நாராணீயம் மனப்பாடமாக தெரியும். தினமும் பதினோரு மணியிலிருந்து பன்னிரண்டு மணிவரை பாமாவையும் சேர்த்து பத்துப் பெண்களுக்கு அவள் வீட்டிலேயே நாராணீயம் சொல்லிக் கொடுக்கிறாள்..   எந்த இன்பமும் ரொம்ப நாள் நீடிக்கக்கூடாதென்பது கடவுளின் விதி போல் இருக்கிறது. நான் டெல்லி போயிருந்த சமயம் பாமா நாராணீயம் வகுப்பில் பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென்று மயங்கி விழுந்து விட்டாள்..  சித்ராதான்  அவளை  டாக்டரிடம் அழைத்துப் போய் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தாள். அப்போதுதான் பாமாவுக்குச் சித்ராவின்  அருமை புரிந்தது. சித்ராவின்  நல்ல உள்ளம் தெரியாமல்  அவளை முதலில் வெறுத்தது தவறு  என்பதை உணர்ந்தாள். தான் முகம் கொடுத்துச் சரியாகப் பேசாவிட்டாலும் தனக்கு உதவி செய்தாளே என்று  வியப்புக் கடலாடினாள். பாமாவின் மனம்  அவளை நேசிக்க  ஆரம்பித்தது. அன்றிலிருந்து சித்ராவிடம்  அன்யோனியமாய் பழகினாள். நான் டெல்லியிருந்து திரும்பி வந்ததும் பாமாவுக்கு இரத்த அழுத்தம் என்பதை அறிந்ததும்  பேரதிர்ச்சியாய் இருந்தது.. நான் என் வேலை விசயமாய் அடிக்கடி வெளியே போவதை நிறுத்தி விட்டு வீட்டிலேயே இருந்து  அவளைக் கவனித்துக்கொண்டேன். ”நல்ல உறக்கம் உடலுக்கும்  தியானம் மனதுக்கும் அவசியம்” என்று சித்ரா அவளுக்குப் புத்திமதி கூறினாள்.   நல்லவர்களின் சேர்க்கை நன்மையை ஏற்படுத்துகிறது. சித்ராவின் நட்பால்  பாமாவின் குணத்தில் பெரிய மாறுதல் தெரிந்தது. எப்போதும் படபடவென்று இருப்பவள் மனசு மாறி எல்லாரிடமும் அன்பாகப் பழகினாள். தன்னலம் பாராமல் உதவி செய்தாள். ”சுந்தர்  வந்து பார்ப்பான்னு நினைச்சேன். வேலை அதிகமாய் இருக்குது என்னாலே வர முடியலே. அடுத்த மாசம் வரேன்னு போன் பண்ணினான். அவன் எப்போ வருவான்னு தெரியல” என்று சொன்னாள். சுந்தர்தான் தினந்தோறும் காரிலே ஆபிஸ் போகும்போது அம்மாவிடம் பேசுவான். என்ன காரணமோ தெரில. அவன் மனைவி  கடந்த ஐந்து வருடங்களில் ஒரு தடவைகூட போனில்  பேசியதில்லை.. அவன் வராவிட்டால் என்ன ? நான் உன்னைக் கவனிச்சுகிறேன். ”என்னாலே உங்களுக்கு ரொம்ப சிரமம். உங்க வேலையெல்லாம் விட்டுட்டு என்னை கவனிச்சுக்க  வேண்டியதாயிடுத்தே” என்றாள் அன்று பாமா எழுந்திருக்கும்போதே தலை சுற்றுகிறது என்றாள். மிகவும் பலவீனமாக இருந்தாள். கொஞ்ச நேரம் படுத்துக்கோ என்றதும் சிறிது நேரம் கண்ணை மூடி அரைத் தூக்கம் போட்டாள்.  ”உடம்பு மிகவும், முடியாமல் போய்விட்டது “ என்று சொல்லிக்கொண்டே எழுந்தாள்.  காபி தயார் செய்து கொடுத்தேன். அவள் காபி குடிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மடியில் தலை வைத்துப் படுத்தவள், என்னை ஏறிட்டுப் பார்த்து, “நான் ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டேன் என்று  தோன்றுகிறது. நான் பூவோடும் மஞ்சளோடும் போகணும். அதுதான் என் ஆசை” என்றாள் கண்களில் கண்ணீர் அருவியாய் பொழிய. அவள் தலையைக் கோதி, ” அடி அசடேஅமங்கலமா பேசாதே, நீ இன்னும் ரொம்ப நாள் உயிரோடு இருப்பே.” என்று  கண் கலங்கக் கூறினேன். விடியற்காலை  பொழுது நன்றாகப் புலர்ந்து விட்டது. ஆதவன் வானில் பிரகாசித்துக் கொண்டிருந்தான். ஒரு ஜோடி காக்கைகளின் கரைதல் விருந்தினர் வரப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிவித்தது. காலை உணவு சாப்பிட்டுவிட்டுப்  பேசிக்கொண்டிருக்கும்போது. அழைப்பு மணி அடித்தது. ”அம்மா” என்று அழைத்துக்கொண்டு சுந்தர் வீட்டுக்குள் வந்தான். கூடவே அபிநயாவும் பாப் செய்த தலையுடன் இறுக்கமான முகத்துடன் அவனைத் தொடர்ந்து வந்தாள். எதிர்பாராமல் மகனையும் மருமகளையும் பார்த்த மகிழ்ச்சியில் நான் திக்குமுக்காடிப் போனேன். அளப்பரிய சந்தோஷத்துடன்,” வாங்க,  வாங்க !!  பாமா, சுந்தர் வந்திருக்கான்” என்று கத்தினேன்.   படுத்துக் கொண்டிருந்த பாமா சுந்தரைப் பார்த்ததும் எழுந்து  தள்ளாடிக் கொண்டே ஹாலுக்கு வந்து விட்டாள். மாமியாரைக் கண்டதும் சாட்டையில் அடிப்பட்டது போல் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் அபிநயா.  அவளுக்குத்தான் தன்  மாமியாரை அறவே  பிடிக்காதே.   ” ரொம்ப இளைச்சுட்டியே அபிநயா? என்றாள் அன்புடன். ”உம்” என்றாள் அபிநயா. உடனே கிளம்பி விட வேண்டும் என்னும் உறுதியோடு வந்திருக்கிறாள் என்பது அவள் முகத்தில் தெரிந்தது.  ”வாடா சுந்தர் . சொல்லாமலே வந்திருக்கே. எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆமாம் உன் பெட்டி எல்லாம் எங்கே காணோம், கையை வீசிண்டு வந்திருக்கீங்க இரண்டு பேரும். “ என்றாள் பாமா.  சுந்தர் அபிநயா முகத்தைப் பார்த்துவிட்டு  தாயிடம் கூறினான். .”நாங்க ஒட்டலில் ரூம் எடுத்திருக்கேம்மா,. மும்பையில் ஒரு கான்பரென்ஸ். இரண்டு நாள்  சென்னையில் இருப்பேன்.  கான்பரென்ஸ் முடிஞ்சதும் மும்பையிலிருந்து அமெரிக்கா போய்விடுவேன்.  உனக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப் பட்டதும் எனக்கு இருப்பு கொள்ளல. . உங்களைப் பார்த்துட்டு போலாம்னு சென்னை வந்தேன். அபிநயா பெங்களுருக்குப் போயிட்டு அவ பெற்றோரைப் பார்த்துவிட்டு நான் கிளம்பும்  நாளன்று என்னுடன் விமானத்தில் வந்துடுவா. இங்கே எப்படி வசதி இருக்குமோ தெரியாது. அவ ஓட்டலிலே தங்கணும்னு வற்புறுத்தினா. அதனாலேதான்...” என்று இழுத்தான். ”பரவாயில்லேப்பா. நாங்க தப்பா எதுவும் எடுத்துக்கல” என்றேன்.. அதற்குள் பாமா காபியைப் போட்டு இரண்டு தம்பளிரில் எடுத்து வந்து சுந்தருக்கும் அபிநயாவுக்கும் கொடுத்தாள். ” அபிநயா, உனக்கு என்ன கவலை ? உனக்குக் குழந்தை பிறக்கணும்னு நான் தினந்தோறும் கடவுள் கிட்டே பிரார்த்தனை பண்ணிண்டு இருக்கேன். .உனக்கோசரம் வாராவாரம் நான் சனிக்கிழமை விரதம் இருக்கேன்.”   பாமாவிடம் கிளர்ந்த அன்பின் சுடர் அபிநயாவைத் தகித்தது. கரிசனத்துடன் பேசும் மாமியாரைத் திகைப்புடன் பார்த்தாள்.   ”என்னம்மா, நான் மாறிட்டேன்னு பார்க்கிறாயா? தாவரத்துக்கு நீர் போல் மனிதருக்கு அன்பு. நாம் மற்றவர்களிடம் அன்பைப் பொழிந்தால் அவர்கள் நம்மிடம் அன்பைப் பொழிவார்கள். இந்த உண்மையை  இந்த ஹோமில் பலதரப்பட்ட மனிதர்களைப் பார்த்து நான் கற்றுக் கொண்டேன். நம் மனதில் உள்ள அன்பு நம் வாழ்க்கையில் அன்பை உருவாக்குகிறது. நான் உன்னை விட வயசில் மூத்தவள். அமெரிக்காவில் இருக்கும்போது  உன்னுடன் அனுசரித்து[ப் போயிருக்கலாம். என் தவறை மன்னித்து விடு. என்றாள். அபிநயாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ”நாந்தான் மாமியாரின் மனம் புண்படும்படி பேசினேன். ஆனால் அவர் என்னவோ பெருந்தன்மையாய்  தான் தவறு செய்தது போல் மன்னித்து விடு என்கிறார்” என்று நினைத்தவள் ”என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் அருமை புரியாமல் கர்வத்துடன் நடந்து கொண்டு  விட்டேன் என்று சொல்லிக்கொண்டே மாமியார் காலில் விழுந்து நமஸ்கரித்தாள். மருமகளை வாரியணைத்த பாமா, ”நீ கவலைப் படாதேம்மா. நீ விரும்புவது நடக்கும். உனக்கு நல்லதே நடக்கும்” என்றாள் கனிவுடன். இந்தக் கண் கொள்ளாக் காட்சியைக் கண்கள் இமைக்க மறந்து பார்த்தேன். என் கையைக் கிள்ளி கனவல்ல என உறுதிப் படுத்திக்கொண்டேன்.   ”என் பெட்டியை இங்கு அனுப்பிச்சுடுங்க நான் இங்கே கொஞ்ச நாள் இருந்துட்டு அம்மாவுக்கு உடம்பு சரியானவுடன்தான் அமெரிக்காவுக்கு  வருவேன். மாமியாரின் அன்புக்கு நான் அடிமை.” என்று அபிநயா சொன்னதைக் கேட்ட சுந்தர்  அபரிதமான சந்தோஷத்தில் திளைத்தான். அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்  வற்றன் மரந்தளிர்த்தற்று                      (திருக்குறள்)                                                             21. அடுத்தது என்ன ?   காலை மணி ஐந்து.  வெளியில் எங்கும் அந்தகாரமாயிருந்தது. சம்பந்தம் நடைப்பயிற்சி யோகா செய்ய வீட்டை விட்டுக் கிளம்பிய விட்டார். மழையாக  இருந்தாலும், புயலாய் இருந்தாலும், மனைவிக்கு உடம்பு சரியில்லையென்றாலும் அவருக்கே உடம்பு சரியில்லையென்றாலும் அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. சம்பந்தம் ஓய்வு பெற்ற ஐஏஸ் அதிகாரி. டில்லி, மும்பாய், பூனே, போபால் நாட்டின் பல பாகங்களில் பணி செய்தாலும் பணி இறுதியில் மூன்று வருடங்கள் சென்னையில் தலைமைச் செயலகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றார். மிகவும் ஜாக்கிரதையானவர். அஞ்சல் பெட்டியில் கடிதத்தைப் போட்டுவிட்டு அதன் பின் பக்கம் போய் பத்திரமாய் உள்ளே போய்விட்டதா அல்லது பின் பக்கம் ஏதாவது ஓட்டை வழியாக விழுந்தது விட்டதா? என்று பார்த்துவிட்டுத்தான் வருவார். எப்போதும் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பதைப் போல் பேசி அசத்துவார்.   மனைவி மோகனா இல்லத்தரசி. நாற்பது வருடத் தாம்பத்தியம். கணவன் மனம் கோணாமல் நடந்து கொள்வாள், கடவுள் பக்தி அதிகம். தினந்தோறும் கோவிலுக்குப் போவாள். கும்பிட்டுவிட்டு  உடனே திரும்பி வர மாட்டாள். ஒரு முறைக்குப் பலமுறை தரிசித்துவிட்டு தான் வருவாள். “நீ வேரோடு இறைவனைப் பிடுங்குகிறாய் என்று சம்பந்தம் கேலி பண்ணுவார். சம்பந்தம் ஓய்வு பெற்ற பிறகு சென்னையில் அடையாரில் தன் மகன் மருமகளுடன்  வசிக்கிறார். அவருடன் அவருடைய மகன் சுந்தர்  சிஏ படிப்பை முடித்து விட்டு ஒரு பெரிய நிறுவனத்தில் பணி செய்கிறான். மருமகள்  பார்வனா கேரளா மாநிலத்தைச் சேர்ந்து கோட்டயத்திலிருந்து வந்தவர். தங்கச்சிலை போல் அழகாய் இருப்பாள். வணிகத்துறையில்  முதுகலைப் பட்டம் வாங்கியவர்.  மாமியார் மெச்சும் மருமகளாய் இல்லத்தரசியாய்  இருக்கிறார். பேரன் அரவிந் முதல் வகுப்பு படிக்கிறான். சம்பந்தம், மனைவி மோகனா, சுந்தர், பார்வனா, அரவிந் என்னும் ஐவரோடு அந்த குடும்பம் ஆனந்தமாய் அமைதியாய் போய் கொண்டிருந்தது. பார்வனாக்கு நவ நாகரீக உடை அணியப் பிடிக்கும். புகுந்த வீட்டில் ஆடை அணியும்  விஷயத்தில் அவளுக்கு  முழு சுதந்திரம் கொடுத்திருந்தனர். வீட்டிலிருக்கும்போது எப்போதும் சுடிதார் அணிவாள். பண்டிகை, நாள் கிழமையில் சேலை கட்டுவாள். கடைவீதிக்குப் போகும்போது டாப்ஸ், லெகின்ஸ் அணிவாள். சம்பந்தம் காலையில் ஆறு மணிக்கு எழுந்திருப்பார். பல் துலக்கி வந்தவுடன் அவர் மனைவி கொண்டு வந்து கொடுத்த காபியைப் பருகுவார். பிறகு பக்கத்திலிருக்கும் பூங்காவிற்குப் போய் நடைப்பயிற்சி செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது ஏழரை மணி. அரை மணி நேரம் செய்தித்தாளைப் பார்த்துவிட்டு குளிக்கப்போவார். சிவராமன் எப்போதும் பட்டா போட்டிப் போட்ட  கால் சராயை உள்ளாடையாய் அணிந்து அதன் மேல் வேட்டி அணிந்திருப்பார். குளிக்கப் போகும்போதே உள்ளாடை, துவட்டிக் கொள்ளத் துண்டு எல்லாம் எடுத்துப் போவார். குளித்துவிட்டு நன்றாகத் தூண்டால் துடைத்துக் கொண்டு கால் சராயை அணிந்து கொண்டு தன் அறைக்குச் சென்று  வெள்ளை வெளேரென்று  இருக்கும் வேட்டியை உடுத்திக்கொண்டு நெற்றியில் விபூதியைக் குழைத்துப் பூசி பிறகு பூசை அறையில் அமர்ந்து,”நமச்சிவாய வாழ்க,நாதன் தாள் வாழ்க” என்று சிவபுராணத்தை ஓதுவார். உலகமே ஸ்தம்பித்து நின்றாலும் இப்படித் தினந்தோறும் செய்வது அவர் பழக்கம்.   அவரது பால்ய நண்பன் சிவராமன் அவருடன் பேசி விட்டுப் போவார். சிவராமன் டெல்லியில் அரசாங்கத்துறையில் சட்ட நிபுணராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். “வா, சிவராமா, நேற்று ஏன் வரவில்லை?” என்று வீட்டுக்குள் நுழைந்து தோழனைப் பார்த்து அன்புடன் வினவினார் சம்பந்தம். நேற்று நான் ஊரில் இல்லை. காஞ்சிபுரம் போயிருந்தேன். வரும்போது பத்து மணி ஆகிவிட்டது. என் மாப்பிளை வேலையில்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார். நான் போய் எனக்குத் தெரிந்த சில பெரிய மனுசர்களைப் பத்திச் சொல்லி அவங்களைப் போய் பார்க்கச் சொன்னேன். அவருக்கு இப்போ ஏழரை நாட்டுச் சனி. அதனால்தான் அவருக்கு இந்தப் பாடு. ”துன்பம் என்பது சிலர் அவர் செய்யும் செயலால் வருகிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா. சில சமயம் நம்மைப் பிடிக்காதவர் அல்லது வேறு யாராவது செய்யும் செயல் நமக்குத் துன்பத்தைக் கொடுக்கிறது. சில சமயம்  நாம் எதுவுமே செய்யாமல் இயற்கையாகவே நாம் இன்னல் பட வேண்டியிருக்கிறது. திடீரென்று காற்று புயல் அடித்து நம்மைத் துன்புறுத்துகிறது. நாம்  முன்பிறவியில் செய்த வினைப் பயனை இந்தப் பிறவியில் அனுபவிக்கிறோம். அதனால்தான் மனிதர்கள் அனுபவிக்கும் துன்பத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன” என்றார் சம்பந்தம். மோகனா காபியை தம்பளரில் கொடுத்தாள். சிவராமன் காபியைக் குடித்துவிட்டு சிறிது நேரம் பேசி விட்டுப் பிறகு புறப்பட்டுச் சென்றார். அன்று சம்பந்தம் எப்போதும்போல் குளித்துவிட்டு பட்டா பட்டி நிக்கரை அணிந்து கொண்டுக் குளியலறைக்கு வெளியே வந்து முழித்துக்கொண்டு  நின்றார். அவருக்கு என்ன செய்வது என்பது தெரியவில்லை. அப்போது குளிப்பதற்காக வந்த பார்வனா, மாமனார் நிற்பதைப் பார்த்து, மாமா என்ன வேண்டும்? வழியை மறிச்சிண்டு ஏன் நிக்கறீங்க? என்று கேட்டாள். அடுத்தது என்ன? என்றார் சம்பந்தம் மாமா நீங்க என்ன சொல்றீங்க? அடுத்தது என்ன? பார்வனாவுக்கு பயம் வந்துவிட்டது. அவள் உடனே மாமியார் இருந்த அறைக்கு ஓடிச் சென்று, மாமி, எனக்குப் பயமாய் இருக்கு. மாமா குளியலறைக்கு வெளியே நின்னு பேந்த பேந்த முழிக்கிறார். ”அடுத்தது என்ன?” என்று கேட்கிறார். நீங்க போய் பாருங்களேன்” என்றாள். அதிர்ந்து போன மோகனா வெகுவேகமாக கணவர் நின்று கொண்டிருக்கும் இடத்துக்கு வந்து, என்ன வேண்டுங்க?  இங்கே நின்று என்ன பண்ணறீங்க? ”அடுத்தது என்ன?” என்னைத் தெரியலையா உங்களுக்கு? தெரியலையே. அவ்வளவுதான் அதிர்ச்சி தாங்க முடியாமல் மயங்கி வீழ்ந்தாள் மோகனா. அம்மா என்று ஓடி வந்த சுந்தர் அவள் முகத்தில் தண்ணீர் அடித்து மயக்கம் தெளிவித்தான். மோகனா கண்களில் கண்ணீர் மல்க, சுந்தர் , அப்பாவுக்கு என்னமோ ஆயிடிச்சுபா. என்னையே ஞாபகம் இல்லை. நாற்பது வருஷம் அவரோடு குப்பை கொட்டியிருக்கேன். நாற்பது வருட தாம்பத்யதை  ஒரு நிமிஷத்திலே மறந்துட்டார்.” என்றாள் புண்பட்ட மனசுடன். அப்பா என்னப்பா ஆச்சு உனக்கு? என்றான் சுந்தர் பதட்டத்துடன் அடுத்தது என்ன? என்றார் சம்பந்தம் என்னப்பா இது பச்சை குழந்தை மாதிரி . பார்வனா அப்பா வேஷ்டியை எடுத்து வா. அவள் எடுத்து வந்து அவரிடம் கொடுக்க அவர் வேஷ்டியைக் கட்டிக் கொண்ட பிறகு, ”அடுத்தது என்ன?” என்றார் அப்பா என் பேர் என்ன சொல்லுங்க? என்றான் சுந்தர் ”அடுத்தது என்ன?” ”விளையாடதீங்க அப்பா. உங்களுக்கு நிஜமாகவே ஒண்ணும் ஞாபகம் இல்லையா?” அவர் எதுவும் புரியாமல் மலங்க மலங்க முழித்தார். மோகனா பூசை அறையைக் காண்பித்து, நீங்க இப்போ பூசை செய்யணும் என்றாள். அரவிந்த் அவருகில் சென்று தாத்தா என் கூட வாங்க கடைக்குப் போலாம். நான் பத்திரமாய் உங்க கையைப் பிடிச்சு அழைச்சிட்டுப் போறேன் என்றான் பெரிய மனுசன் போல். வேலைக்காரி செல்லம்மா, ஐயா, ”என்ன ஆச்சு உங்களுக்கு? யாரையுமே ஞாபகம் இல்லையா? என்று கேட்டாள். அடுத்தது என்ன?    ”அம்மா, அப்பாவுக்கு ஞாபக மறதி நோய் வந்துவிட்டிருக்குப் போலத் தெரிகிறது.  மருத்துவமனைக்கு உடனே அழைத்து போகவேண்டும். நான் போய் காரை வெளியே எடுக்கிறேன். நீ அவரைப் பத்திரமாய் கூப்பிட்டு வா” என்றவாறு  காரை எடுக்கச் சுந்தர் வெளியே போனான்.. செல்லம்மா எதிர் வீட்டு மாமியின் காதில் விஷயத்தைப் போட்டு விட்டு மேலே தான் வேலை செய்யும் வீட்டுக்குப் போய், கலெக்டருக்கு எல்லாம் மறந்து போச்சு என்று விஷயத்தைப் பரப்பினாள். அவ்வளவுதான் அடுத்த ஐந்து நிமிடத்தில் பத்து பேர் சம்பந்தம் வீட்டில் இருந்தார்கள் ஏதாவது உதவி வேண்டும் என்னும் நல்ல எண்ணத்துடன். அவர்கள் எல்லாரையும் பார்த்ததும் மோகனாவுக்கு மிகவும்  வெட்கமாய் போய்விட்டது. தன் கணவர் இப்படி ஆகிவிட்டாரே என்று வருத்தப்பட்டாள். அப்போது உள்ளே நுழைந்து சிவராமன் நிறைய பேர்  கூட்டமாய் நிற்பதைப் பார்த்து,”என்ன விஷயம்.  சம்பந்தத்துக்கு என்ன ஆச்சு ? அவர் ஏன் அப்படி நிற்கிறார்” என்று கேட்டார். ”அதை ஏன் கேட்கறீங்க. அவர் என்னையே மறந்து விட்டார். உங்களையாவது  ஞாபகம் வைத்திருக்கிறாரா? கேட்டுப் பாருங்கள்” என்றாள் மோகனா. சம்பந்தம் என்ன இது? உன் மனைவி சொல்வது நிஜமா? அவளை நீ மறக்கலாமா? என்னை மறந்தா கூட பரவாயில்லை.  உனக்குத் தெரியலையா?” என்றார் சிவராமன் ”அடுத்தது என்ன ?” ”அடப்பாவி என்னையே மறந்துட்டியா? நான் உன்னுடன் பள்ளிக்கூடத்தில் ஓண்ணா படிச்சவன்” திகைத்துச் சொன்னார் சிவராமன். நீங்களும் வாங்க , நாம் மருத்துவமனைக்குப் போகலாம் என்று சுந்தர் கூப்பிட, சம்பந்தம், சிவராமன், மோகனா.பார்வனா, அர்விந்த் எல்லோரும் காரில் ஏற சுந்தர் காரை ஓட்டினான். மாம்பலத்திலிருக்கும்  மருத்துவமனையை நோக்கி கார் விரைந்தது. சுந்தர் காரை ஓட்டும்போது ‘ஓர் உரு ஆயினை, ஈர் மங்காரத்து ... என்னும் தேவாரத்தில் வரும் பாடலை அவன் வாய் முணுமுணுத்தது. அவனுக்குச் சின்ன வயசிலிருந்தே தேவாரம், திருவாசகம் எல்லாம் அத்துப்படி. சம்பந்தம் அவனை அப்படி பழக்கியிருந்தார். மருத்துவமனையில் டாக்டர் மாதவன் அப்போது வந்துவிட்டிருந்தார். அவர்  சிறந்த நீயூராலஜிஸ்ட். மூளை சம்பந்தமான நோயில் நிபுணர். சம்பத்துக்கும் சிவராமனுக்கும் மிகவும் பரிச்சியமானவர். அவருக்கு இலக்கியத்திலும் ஆர்வம் உடையவர். நோயாளிக்கு மருந்து மட்டும் கொடுக்க மாட்டார். இலக்கிய விருந்தும் கொடுப்பார். அவருடைய சிறுகதைகள், கட்டுரைகள் பிரபல பத்திரிகையில் வந்திருக்கின்றன. வந்து கொண்டே இருக்கின்றன. .     ”டாக்டர், அப்பா எல்லாத்தையும் மறந்துட்டார். நீங்க அவரைச் சோதித்து விட்டு  சொல்லுங்க” என்றான் சுந்தர். சம்பந்தம் டாக்டரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவர் கேட்ட கேள்விக்கு நேரிடையான பதிலைச் சொல்லவில்லை. ”முழு உடல் ஸ்கேன் பண்ணிண்டு வாங்க. அவர் எல்லாவற்றையும் மறந்து விட்டிருக்கார். டெம்னிஷியா என்னும் மறதி நோய் சாதாரணமாய் வயசானவங்களுக்கு வருகிற வியாதிதான். சம்பத்துக்கு நினைவு மறதி  வராமல் இருந்திருக்கலாம். எதுவும் நம் கையில் இல்லையே என்ன செய்வது” என்றார் டாக்டர். ”நீங்க சொன்ன மாதிரி .... என்று சுந்தர் எழுந்தான். சிவராமன் டாக்டரிடம் உங்க கதை சமீபத்தில் எந்த பத்திரிகையில் வந்தது என்றான். கலைமகள் தீபாவளி மலரில் என்னுடையச் சிறுகதை, ”ஓரே பொய்” வரவிருக்கிறது என்றார் டாக்டர் . இரண்டு நாவல்களை சிவராமனிடம் கொடுத்து நீங்க  படிச்சிட்டு சம்பந்தம் கிட்டே கொடுங்க. இரண்டுமே அருமையான நாவல் என்றார். எல்லாரும் டாக்டர் அறையை விட்டு வெளியே வந்தனர். சம்பந்தம் தயங்கிக்கொண்டே அவர்களுடன் வந்தார். அவருக்கு ஒன்றும் புரியல. ”அடுத்தது என்ன?” என்று கேட்டார் சிவராமனைப் பார்த்து ”தி.நகருக்குப் போறோம். உடம்பை முழுஸ்கேன் பண்ணனும்” என்றார் சிவராமன். எல்லாரும் காரில் ஏறினர். சிவராமன் முன் சீட்டில்  சுந்தருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். பின் சீட்டில் சம்பந்தம், மோகனா, பார்வனா அரவிந் எல்லாரும் உட்கார்ந்திருந்தனர். சுந்தர் காரை ஓட்டிக் கொண்டு வந்தான். பார்வனா மாமியாரிடம், ’நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. எல்லாம் சீக்கிரத்தில் சரியாயிடும். கவலைப்பாடாதீங்க’ என்று ஆறுதல் சொன்னாள். ”அம்மா நீங்க சஞ்சலத்தோடு இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். அப்பா நீ யாருன்னு கேட்டது பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். நாற்பது வருடம் குடும்பம் பண்ணின நீ மலைத்துத்தான் போயிருக்கணும். என்னாலே அதிர்ச்சியைத் தாங்க முடியலே. வயசானவங்களுக்கு ஒரு சாபக்கேடு ஞாபக மறதி. சில பேர் வீட்டை விட்டு வெளியே போய் விட்டுத் திரும்ப வர வழி மறந்து போய் காணாமல் போய் விடுகிறார்கள். சம்பந்துக்கு வந்திருக்கிறது முதுமை மறதிதான். மருத்துவ சிகிச்சை மூலம் அவரைக் குணப்படுத்திவிடலாம்” என்று  தேற்றினார் சிவராமன். ”நான் கடவுளைத் தினமும் வணங்குகிறேன். அப்படி இருந்தும் எனக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தாய் இறைவனே” என்று புலம்பினாள் மோகனா. அடுத்தது என்ன ? என்று பார்ப்போம். எனக்கு என்னமோ அவருக்குச் சீக்கிரம் குணமாயிடும்ன்னு தோணுது என்றான் சுந்தர். அப்போது முன்னால் போய்க்கொண்டிருந்த ஒரு ஆட்டோ சடாரென்று பிரேக் போட சுந்தரும் காரில் பிரேக் போட்டான். திடீரென்று பிரேக் போட்டதால் காரில் பின் சீட்டில் உட்கார்ந்திருந்தவர்களின் நெற்றி சடாரென்று தன் முன்பக்கம் உள்ள சீட்டின் முன் பலமாக மோதியது. அம்மா என்று எல்லோரும் தன் நெற்றியைத் தடவிக் கொண்டனர். எல்லாம் முன்னாலே போன ஆட்டோவாலே வந்தது. பார்த்து ஓட்ட மாட்டானோ ஒருத்தன்” என்று முணுமுணுத்தான் சுந்தர். சுந்தர் நாம் எங்கே போய்க்கொண்டிருக்கோம். சிவராமா நீயும் காரில் இருக்கியா? என்ற சம்பந்தனின் குரம் எல்லோருக்கும் ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. “என்..ன.ங்க. என்..ன்ங்க என்றாள் மோகனா கண்களில் கண்ணீர் மல்க. அழுதுகொண்டே. எங்களை ரொம்ப படுத்திட்டீங்க. நான் கதி கலங்கிப் போயிட்டேன் “ என்ன சொல்றே? நான் எதுவுமே செய்யலையே . ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் எவ்வளவு சந்தோஷம் வருமோ அவ்வளவு சந்தோஷத்துடன் சுந்தர் காரை தெருவின் ஓரமாய் நிப்பாட்டினான். அப்பாவின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்து, ”அப்பா உனக்கு இன்னைக்கு காலையிலே எல்லாம் மறந்து போச்சு. நீ யாரு? நாங்க யாருன்னு எதுவும் தெரியாமே இருந்தே. அடுத்தது என்ன? இதுதான் நீ அடிக்கடி சொன்ன வார்த்தைகள். நாங்கள் பதறி போயிட்டோம். டாக்டர் கிட்டே கேட்டதுக்கு அவர் உடம்பு முழுக்க ஸ்கேன் எடுக்கச் சொன்னார். அதுக்காகத்தான் இப்போ தி நகர் போய்க்கிட்டிருக்கோம்” என்றான் ”ஹாய், தாத்தாவுக்கு ஞாபகம் வந்துடுத்து. நீ நல்லாயிட்டே”  என்று அம்மாவின் மடியிலிருந்து அவர் மடிக்குத் தாவிய  அரவிந் அவர் கழுத்தைக் கட்டிப் பிடித்துச் சிரித்தான். ”சம்பந்தம் உனக்கு நினைவு வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கு. உன் மனைவி ஆடி போயிட்டா டாக்டர் வைத்தியம்  எதுவும் செய்யாமல் தானாகவே சரியா போயிடுத்து”.என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சிவராமன்  ””அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார் என்பது உனக்குத் தெரியாதா சிவராமன். தானாகவே சரியாகல. எல்லாம் அவன் அருளாலேதன் ... ’’’.” என்ற சம்பந்தம்  இன்னல் வருவதும் இன்பம் தருவதும் எல்லாம் அவன் செயல்.” என்றார். தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மனைவியிடம் , ”அசடே இப்போதான் சரியாயிட்டேனே எதுக்கு அழறே” என்று அன்புடன் அவள் கண்ணீரைத் தன் விரல்களால் துடைத்தார். மோகனா அவர் விரல்களைக் கையால் பிடித்து கண்களில் ஒத்திக்கொண்டு, “நான் ரொம்ப பயந்து போயிட்டேன் நீங்க எனக்குத் திரும்ப கிடைச்சுட்டீங்க. அது போதும் எனக்கு. எல்லாம் கடவுள் செயல். நான் ரொம்ப கொடுத்துவைத்தவ” என்றாள். பார்வனா சுந்தரைப் பார்த்து மாமாதான் இப்போ சரியாகிவிட்டாரே. அடுத்தது என்ன? என்று வினவினாள். அதைக் கேட்டு  காரில் இருந்தவர்கள் எழுப்பிய சிரிப்பலையால் கார் அதிர்ந்தது.                            ***************************                                     22. மனித நேயம்   ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மனோகரனும்  அவர் மனைவி கலாவதியும்  வழக்கம் போல் அதிகாலையில்  நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். தெருவில் மின்கம்பங்கள் விளக்குகளின் ஒளி வீச  நாலைந்து நாய்கள் அல்லாடிக் கொண்டிருந்தன. மனோகரன் சைவ சித்தாந்தத்தில் மிக்க  புலமை உடையவர். சிவ பக்தர். தேவாரத்தைப் பண்ணோடு பாடுவார். சிவ சிந்தனையில் எப்போதும் திளைத்திருந்தாலும் மற்றவருக்கு உதவ வேண்டுமென்னும் நல்ல மனசும் அவருக்குண்டு.   கலாவதி  இலக்கியவாதி. அவள் எழுதும் கட்டுரைகள் பிரபல பெண்கள் பத்திரிகையில் அடிக்கடி பிரசுரம் ஆகும். சில சமயம் பத்திரிகையின் ஆசிரியரின் கட்டளைப்படி அவள் யாரையாவது நேர்காணல் செய்வதும் உண்டு. காலை ஐந்து மணிக்கு இருவரும் வீட்டை விட்டுக் கிளம்பினால்  நெடுந்தூரம் நடந்துவிட்டு  வீட்டுக்குத் திரும்ப சரியாக ஒரு  மணி நேரம் ஆகிவிடும். மழை புயல் எதுவானாலும் கையில் குடையுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருப்பார்கள். வீட்டில் அவர்கள் இருவர் மட்டும்தான். கலாவதிக்கு முன்பு பிறந்த குழந்தை இரண்டு வயசுலே இறந்து விட்டது. அப்புறம் எதுவும் பிறக்கல. அதுதான் கடவுளின் விருப்பம் போல  என்று எடுத்துக் கொண்டார்கள். அதிகாலை நேரம் என்பதால் பால் பாக்கெட் போடும் பையன்கள் தவிர மக்கள் நடமாட்டம் இல்லை. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடந்தார்கள். ஒரு குப்பைத் தொட்டியின் அருகில் போகும்போது ’குவா குவா’ என்று குழந்தையின் சப்தம் கேட்டது. கலாவதியும்  திகைத்துப் போய், “ என்னங்க குழந்தை அழற சப்தம் கேட்கிறதே, குப்பைத்தொட்டியிருந்து சத்தம் வருகிறதே... என்று கையைக் காண்பித்தாள். ”ஆமாம் அங்கிருந்துதான் வருகிறது” ஆமோதித்த மனோகரன் குப்பைத்தொட்டியை எட்டிப் பார்த்தார். சுருட்டி வைக்கப்பட்டிருந்த போர்வை துணியிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு அதிர்ந்தார். துணிச்சுருளை லாகவமாக வெளியில் எடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தால் சின்ன கையையும் காலையும் உதறிக் கொண்டு ஒரு சிசு அழுது கொண்டிருந்தது. சிறிய கண்கள் பிரகாசிக்கச்  செக்க செவேலென்று முகத்தினுடன் அழுது கொண்டிருந்த குழந்தையைப் பார்த்துக் கலாவதி ஸ்தம்பித்து நின்றாள். குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு , “யார்  உன்னை வீசிட்டுப் போனது… என்றாள். அப்போது தெருவின் கோடியில் நின்று மனோகரன் குழந்தையைக் குப்பைத் தொட்டியிலிருந்து எடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் ஒரு இளைஞனும் இருசக்கரவண்டியில் ஏறிச் சென்றதை இவர்கள் கவனிக்கவில்லை.    ”ஏங்க, கடவுளே இந்தக் குழந்தையை நமக்குக் கொடுத்திருக்கிறார் போல இருக்கு. நாம்ப வீட்டுக்கு எடுத்துண்டு போய் வளர்க்கலாமா?” என்று ஆவலுடன் கேட்டாள் ”அடி அசடே,  இது யார் பெத்த குழந்தையோ? நாளைக்கு யாரவது வந்து உரிமை கொண்டாடினால் நாம் குழந்தையை அவர்களிடம் கொடுத்து விட வேண்டும். அப்படி யாரும் வரவில்லையானலும் குப்பைத் தொட்டியில் உங்க அம்மா உன்னைப் போட்டுட்டு போயிட்டான்னு பின்னாளில்  அந்தக் குழந்தைக்குத் தெரிந்தா அது எவ்வளவு வருத்தப்படும்? முதலிலே குழந்தையின் அம்மா யார் என்று கண்டு பிடிக்கவேண்டும். அப்புறம் குழந்தையை நாம் வளர்க்கலாம்”. ”எப்படிக் கண்டு பிடிப்பீங்க,? இங்கே யாருமில்லையே” என்று சொல்லிக்கொண்டே  திரும்பிப் பார்த்தாள். ஆறு பேர் அங்கே ஆச்சர்யத்துடன் நின்றிருந்தனர். ”என்ன சார் ஆச்சு? குழந்தை யாருது?” என்று கேட்டார்  மனோகரன் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் ஏகாம்பரம்..   அடீ அம்மா ! எப்படித்தான் ஒருத்திக்கு இப்படி மனசு வருகிறதோ. அவள் மனசு என்ன பாறாங்கல்லா…. என்று அங்கலாய்த்தாள் ஒரு பெண்மணி. ”காலை நடைப்பயிற்சிக்காக போய்க் கொண்டிருக்கிறோம். அப்போது குப்பை தொட்டியில் அழுகுரல் கேட்டது. என்னது என்று பார்த்தால் பச்சிளம்  குழந்தை.ஒரு தாய்க்கு எப்படி குழந்தையைக் குப்பை தொட்டியில் வீச மனசு வந்ததோ  தெரில . ஒரு தாய் இப்படிக் கூட இருப்பாளா ? அதிர்ச்சியாய் இருக்கே” என்றார். குழந்தையை எங்கேயாவது அரசு  மருத்துவ மனையில் வைச்சிருக்கிற  தொட்டிலில் போட்டுட்டுப் போயிருக்காலாம். யாராவது தத்து எடுத்துப்பாங்க” என்றாள் கலாவதி. ”ஏன், இப்போ கூடக் குழந்தையை நீங்க எடுத்து வளருங்களேன். எப்போ ஒரு அம்மா குழந்தையை வேண்டாம்னு வீசி எறிஞ்சிட்டாளோ அவ திரும்ப அதை எடுத்துக்க மாட்டா என்பது திண்ணம். எவ்வளவு துணிவு இருந்தா இந்த மாதிரி ஒருத்தி செய்வா? பெண்ணில்லை அவள், பேய்” என்றார் ஒரு கிழவர். ”குழந்தையை என்ன சார் செய்யப் போறீங்க? ஏம்மா, நீங்க வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் வளர்க்கலாமே” என்று கேட்டார் ஏகாம்பரம்,, கலாவதி பதில் எதுவும் பேசாமல் மனோகரன் என்ன சொல்கிறார் என்று அவர் முகத்தைப் பார்த்தாள். ”பின்னாடி யாராவது உரிமை கொண்டாடினால் என்ன செய்யறது? அதனால் போலீஸ் ஸ்டேஷனிடம் ஒப்படைப்பதுதான் சரியானது. அவர்கள் பார்த்து ஆதரவற்றோர் இல்லத்துக்கோ அல்லது  தத்தெடுக்கும் மையத்துக்கோ அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று அவர்  சொல்லிக் கொண்டு இருக்கும்போது அங்கு ஒரு போலீஸ் வேன் வந்து அவர்கள் பக்கத்தில் நின்றது. அதில் டிரைவர் போலீஸ்காரரும் பெண் போலீசும் இருந்தனர். ”இந்தக்  குழந்தை குப்பைத் தொட்டியில் கிடந்தது” என்று ஏகாம்பரம் குழந்தையை நோக்கிக் கையை நீட்டினார். ”என்னது ! என்னது !”  என்று உரத்தக் குரலில் கூவிக்கொண்டே வண்டியை விட்டு கீழே இறங்கினார் போலீஸ் டிரைவர். குழந்தையைப் நன்றாகப் பார்த்துவிட்டு, “இந்த ஏரியாவுக்கு பி2 போலீஸ் ஸ்டேஷன். அங்குப் போய்ப் புகார் கொடுத்து குழந்தையை ஒப்படைங்க” என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறினார் டிரைவர். ”அவங்களுக்குக் குழந்தையை எடுத்துண்டு போறது கஷ்டங்க. அது மட்டுமில்லாமல் குழந்தை அழுகிறது. நாம் ஜீப்பிலேயே கொண்டுப் போய் அவங்களை ஸ்டேஷனில் விட்டு விடலாம்” என்று கனிவோடு கூறினாள் பெண் போலீஸ். மனோகரன் போலீஸ் வண்டியில் ஏறத் தயங்கினார். இதுவரை போலீஸ் ஸ்டேஷன் படி ஏறாதவர். இப்போது போலீஸ் ஜீப்பில் ஏற வேண்டியிருக்கே என்று எண்ணி வருந்தினார். திருஞான சம்பந்தர் பாடிய, ”மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்” என்னும்   இடர்களை நீக்கும் பதிகத்தை முணுமுணுத்துக் கொண்டே வண்டியில் ஏறினார். கலாவதி குழந்தையைப் பத்திரமாய் பிடித்துக் கொண்டு வண்டியில் ஏறியதும் டிரைவர் வண்டியை எடுத்து விரைவாய் ஓட்டி  பத்து நிமிடங்களில் போலீஸ் ஸ்டேஷன் போய் சேர்ந்துவிட்டார். டிரைவர் நகைச்சுவை உணர்வு உடையவர். அவர் போலீஸ் ஸ்டேஷன் நுழையும்போதே ”ஆபத்து.ஆபத்து” ஒரு கைக்குழந்தை ஸ்டேஷனுக்கு வருகிறது என்று சிரித்துக்கொண்டே அறிவிப்பு செய்தார். அங்கிருந்த போலீஸ்காரர் அதிர்ந்து போய், “எங்கே,” என்று உரத்த குரலில் வினவினார். . மனோகரனும் . கலாவதியும் குழந்தையுடன் தயங்கித் தயங்கி போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தனர். அவரைப் பார்த்ததும், நாற்காலியில் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர் எழுந்து மரியாதையுடன், ”சார் நீங்களா?” என்றான்.” இவர், சரவணன் என் பழைய மாணவன் என்று  கலாவதியிடம் மனோகரன் அறிமுகம் செய்து வைத்தார். சரவணன் சொன்னபடி மனோகரன் குழந்தை கிடைத்த விவரத்தை  ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுத்தார்.  அவர்கள் இருவரும் கிளம்பும்போது குழந்தை பலமாக அழுதது. “ குழந்தை பாலுக்கு அழறது. தாயா? அவள் !  ராட்சசி ! !.  இப்போ என்ன பண்ணுவது என்று அன்போடு கேட்டாள் கலாவதி. போலீஸ் ஸ்டேஷனில் இருந்த பெண் போலீஸ் மீனா, ”நாலு வீடு தள்ளி எனக்குத் தெரிஞ்சவங்க வீடு இருக்கிறது. அவங்க குழந்தைக்கு இரண்டு மாசம். ஆகிறது. நான் அங்குப் போய் பால் கிடைக்குமா?  பார்க்கிறேன்”  என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.   கலாவதியும், ”கொஞ்சம் இருங்க” என்று  பார்த்துட்டுப் போகலாம்” என்று அங்கேயே இருந்தாள். வெளியே போன போலீஸ்காரி மீனா ஃபீடிங் பாட்டிலில் பாலுடன் வந்தவுடந்தான் கலாவதிக்கு நிம்மதியாய் இருந்தது. ஆனாலும் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. ”குழந்தையை என்ன செய்வீங்க” என்று கலாவதி தவிப்புடன் கேட்டாள். ”குழந்தையை உடனே மருத்துவ மனைக்கு அனுப்பி சிகிச்சை கொடுத்து பின் தத்தெடுப்பு மையத்துக்கு அனுப்பிவிடுவோம்” என்று சரவணன் சொன்னான் ”வாங்க போகலாம்” என்று கலாவதி நிம்மதியுடன் கிளம்பினாள். மனோகரன் வெளியே வர எழுந்தபோது இன்ஸ்பெக்டர் , ”கோர்ட்டில் கேஸ் வரும்போது நீங்க இரண்டு பேரும்  சாட்சி சொல்ல வர வேண்டியிருக்கும் சார் ”என்று சொன்னார். வீட்டுக்குத் திரும்பியதும் அவர்கள் அன்று பூராவும் அந்தக் குழந்தையைப் பற்றியும் குழந்தையின் தாய் யாராயிருக்கும் என்பதைப் பற்றியே  பேசிக் கொண்டிருந்தார்கள்.   குழந்தை பாவங்க ! என்று குறைந்து பத்து தடவையாவது கலாவதி சொல்லி மாய்ஞ்சு போனாள். அடுத்த நாள் காலை மனோகரன் செய்தித்தாளை வாங்கி வந்து படித்தவுடன் ஆச்சர்யத்துடன், ”கலா விஷயம் தெரியுமா? குழந்தையின் அம்மாவைக் கண்டு பிடித்துவிட்டார்கள்” என்று உரத்தக் குரலில் கத்தினார். சமையல் அறையில் மும்முரமாய் சமையல் செய்து கொண்டிருந்த கலாவதி அதைக் கேட்டு ஓடி வந்தார். ”என்ன விஷயம்? சொல்லுங்க.  எப்படிக் கண்டு பிடிச்சாங்கலாம்? என்று ஆவலுடன் கேட்டாள். அவள் காதில் விழும்படி மனோகரன்செய்தித்தாளை உரக்கப் படித்தார். பச்சிளம் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய பெண் கைது – இன்று விடியற்காலை சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஒரு குப்பைத்தொட்டியில் கிடந்த பிறந்து பத்து நாட்கள் ஆன பெண் குழந்தையை மனோகரன் என்பவர் கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்தார். உடனடியாக அந்தக் குழந்தைக்கு தனியார் மருத்துவ மனையில்  முதல் உதவி அளிக்கப்பட்டு அரசாங்க மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டது. இது குறித்து மாம்பலம் போலீசார் விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள சிசி டிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பெண் ஒருவர் ஓர் இளைஞனுடன் வந்து குழந்தையை வீசிச் செல்லும் காட்சிகள் பதிவு ஆயிருந்தன. இதை அடுத்து போலீசார் அந்தப் பெண்ணை  அடையாளம் கண்டு  பிடித்து விசாரித்தனர். அந்தப் பெண் சூப்பர் மார்கெட்டில் பணி புரியும் 22 வயது தேவி  என்பது  தெரிய வந்தது. கல்யாணத்துக்கு முன்னே கர்ப்பம் ஆகி குழந்தை பிறந்து விட்டதால் தன்னை அந்தக் கதிக்கு ஆளாக்கிய  இளைஞனுடன் வந்து குழந்தையைக் குப்பைத்தொட்டியில் வீசியது தெரிய வந்தது. போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்து மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர். அவளுக்கு அங்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. அந்த இளைஞனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.   படித்து முடித்தும் மனோகரன், ”ஒரு தாய் தன் குழந்தையையே வீசி எறிந்து விட்டாள். குழந்தை எப்படிப் பிறந்தால் என்ன? அது உலகத்துக்குள் வந்து விட்ட உயிர் அல்லவா? அதனுடன் வாழா விட்டால் என்ன ? அதை யாரவது குப்பைத் தொட்டியில் வீசுவார்களா? அவள் ஒரு  பைத்தியக்காரி” என்றார்.    கொஞ்சம் பொறு, இதைப் பற்றிய செய்திகள் வர ஆரம்பித்துவிடும். உண்மை வெளியிலே வந்து விடும், தினந்தோறும் செய்தித்தாளிலும் யூ டியூபிலும் தேவியைப் பற்றி வந்த செய்திகளிலிருந்து ஓர் உண்மை புலப்பட்டது. தேவி ஒரு வெகுளி. திருவண்ணாமலையைச் சேர்ந்தவள். அவளுக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். அம்மா ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துத் திருமணம் நிச்சயம் செய்து இருந்தாள். நிச்சயம் ஆன மாப்பிள்ளை தேவியுடன் நெருங்கிப் பழகியதால் அவள் கர்ப்பம் ஆகி விட்டாள். அந்த அதிர்ச்சியில் அவள் அம்மா இறந்து விட்டாள். அவளுடைய திருமணமும் அதனால் நின்று போய்விட்டது, ஆனால் குழந்தை பிறந்து விட்டது. அவள் அதைக்  குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டாள். யாருக்கோ எங்கேயோ எதுவோ நடந்தால் நமக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதனால் அதைப் பற்றி நாம் கவலைப் படுவதும் இல்லை. அவள் செய்தது தப்பு, பெண் குலத்துக்கே இழுக்கு ஏற்படுத்தி விட்டாள் என்று பல பெண்கள் கொதித்தெழுந்து அவள் செய்தது மன்னிக்க முடியாத தவறு என்று பேட்டிக் கொடுத்தனர். ”பாவி, நெஞ்சில் இரக்கம் இல்லாமல் இப்படிச் செய்துவிட்டாளே. குழந்தையின் அருமை தெரியாம குப்பைத் தொட்டிலிலே வீசிட்டாளே, ராட்சசி என்றார் மனோகரன். ‘அவள் செய்தது தவறுதான். ஆனால் ஏன் அப்படிச் செய்தாள்? என்று தெரியாமல் அவளைக் குறை கூறக்கூடாது. கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். அவளைப் பார்த்துப் பேசினால் உண்மை புலப்படும்” என்றாள் கலாவதி. அவள் தவறு செய்திருக்கிறாளே? அவளைப் போய் நீ ஏன் பார்க்கணும்? ஏன் அவளுக்கு உதவி செய்யணும்? நீ புத்தியோடுதான் பேசறியா கலா ? ”யார்தாங்க தவறு செய்யலே? நீங்கத் தப்பே செய்யலையா ? இல்லே நான் தான் தப்பு செய்யலையா? தாய் தகப்பனில்லாத பெண்ணுங்க. சரியா சொல்றதனா அநாதை. எனக்கு என்னமோ  அவள் மேல் தப்பிதம் இருக்காதுன்னு தோன்றது. ஒரு தாய்ங்கிற கோணத்திலே சொல்றேன். எந்தத் தாயும் தன் குழந்தையைக் குப்பைத்தொட்டியில்போடமாட்டா. அதுக்கு ஏதாவது காரணம் இருக்கணும். புதிருக்கு விடைக் கிடைக்குணும்னா…  “ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அலைப்பேசி சிணுங்கியது. பத்திரிகையின் ஆசிரியர்தான் பேசினார், “நான் அந்தப் பெண்ணைப் பேட்டி எடுக்கணும்ணு எடிட்டர் கேட்டுண்டு இருக்கார். நாம்ப நினைக்கும்போது அதற்குச் சாதகமாய் சூழ்நிலை உருவாகுவதே நல்ல சகுனம். நீங்க ஓண்ணு பண்ணுங்கோ. உங்க அத்தை பையன் போலீஸ் டிபார்மெண்டிலே இருக்கிறார் இல்லையா? அவரிடம் சொல்லி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மயிலாப்பூரில் பெண்கள் காப்பகத்தில் இருக்கும் தேவியிடம் பேட்டி எடுக்க உதவிக் கேளுங்கள் ” .என்றாள் புன்னகையுடன், இரண்டு நாள் கழித்து பத்திரிகை நிருபராக கலாவதி மயிலாப்பூரிலிருக்கும் காப்பகத்தில் தேவியைச் பார்க்கச் சென்றாள். காப்பகத்தின் ஆயாவிடம் விஷயத்தைச் சொன்னபோது, ஓ ! அந்தப் பெண்ணா ..... கேலியுடன் விளித்து  அவளைத் தேவியிடம் அழைத்துச் சென்றாள்.  கலாவதி வந்ததைக் கவனிக்காமல்  அவள் பாட்டுக்குக்  குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். கொடி போல் ஒல்லியாய் இருந்தாள். மாநிறம். அழகி என்று சொல்ல முடியாது.  முகம்  கள்ளம் கபடு இல்லாமல் இருந்தது. சாயம் போன புடைவையும் கிழிந்த ஜாக்கெட்டுடன் எண்ணெய் போடாத தலைமயிர் காற்றில் பறக்கக் கழுத்தில் கருப்பு மணிமாலையுடன் ரயிலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரி போல் தோற்றமளித்த அவளை உன்னிப்பாகக் கவனித்தாள். யாரோ ஒருத்தி தன்னையே  உற்றுப் பார்த்துக்கொண்டிருந்ததை திடீரென்று கவனித்த தேவி புலியைக் கண்ட மான்போல் பதறி அடித்து ஓட யத்தனித்தாள். ”தேவி, நான் உன் அம்மாவின் தோழி. பயப்படாதே. உனக்கு உதவி செய்ய வந்திருக்கேன்”.” சொல்வது பொய்தான். அப்போது அப்படிச் சொல்லாவிட்டால் தேவி சகஜமாய் பேச மாட்டாள். ”நீங்க போலீஸ் இல்லையே?” கண்களில் மிரட்சியுடன் கேட்டாள். ”நான் கலாவதி. பத்திரிகை நிருபர் . உன்னைப் பேட்டி காண வந்திருக்கேன். உன்னைப் பத்திச் சொல்லேன்” என்று குழந்தையை அவளிடமிருந்து வாங்கி  மார்பில் அனைத்துக் கொண்டு அதன் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு அவளிடமே திருப்பிக் கொடுத்தாள்.   ”என்னுடைய சொந்த ஊர் திருவண்ணாமலை.  ப்ளஸ் டூ வரை படித்திருக்கேன். சின்ன வயசிலே அப்பாவை இழந்து விட்டேன். அம்மாவுடன் வசித்து வந்தேன். எனக்குச் சென்னையிலிருந்த  கைலாசம்  என்பவருடன் திருமணம் நிச்சயம் ஆயிற்று. ஆனால் அம்மா ஏழு  மாசத்துக்கு முன்னே இறந்துட்டாங்க. அதனாலே எங்க கல்யாணம் நின்னுடிச்சி”. ” உனக்குக் கல்யாணமே ஆகலே . அப்போ இந்தக் குழந்தை... ?”. ”கல்யாணம் நிச்சயம் ஆனவுடன் அவர் அதாவது கைலாசம் ஒரு முறை என்னைப் பார்க்க சென்னையிலேயிருந்து வந்திருந்தார். அப்போ அம்மா வீட்டிலே இல்ல. இவர் எனக்குச் சாப்பிட சாக்லெட் கொடுத்தார். அது சாப்பிட்டவுடன் எனக்குத் தலை சுத்தியது. அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியல. நான் எழுந்து பார்க்கும்போது என் உடையெல்லாம் கலைஞ்சி அலங்கோலமாயிருந்தது. அவர் வீட்டை விட்டு வெளியே போய்விட்டிருந்தார். மூணு மாசம் கழிச்சு வயித்திலே குழந்தை இருக்குதுன்னு தெரிஞ்ச . அதிர்ச்சியைத் தாங்க முடியாமே அம்மா இறந்துட்டாங்க. அம்மா இறந்ததும் அவர் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னுட்டார்.” ”அப்புறம் ? “நான் வேலைக்காகச் சென்னை வந்துட்டேன். இங்கே ஒரு சூப்பர் மார்கெட்டில்  வேலை கிடைச்சது. அங்கே வேலை செய்யற பெண்கள் எல்லாம் ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தாங்க. நானும் அங்குத் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தேன். இருபது நாளுக்கு முன் எனக்கு அரசாங்க ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. விஷயத்தை எப்படியோ  கேள்விப்பட்ட கைலாசம் என்னை வந்து ஆஸ்பத்திரியில் பார்த்தான். கல்யாணம் பண்ணிக்கோங்க என்று கெஞ்சினேன். குழந்தை இருந்தா பண்ணிக்க மாட்டேன். குழந்தையை குப்பைத் தொட்டியிலே வீசிட்டு வந்துடுன்னான். அஞ்சு நாள் முன்னாலே அவனே என் கூட வந்தான். அவன் சொன்னபடி  குழந்தையைக் குப்பைத்தொட்டியிலே போட்டேன்”. வேறு யாராவது இந்தப் பதிலைக் கேட்டிருந்தால் கோபம் பொங்கியெழுந்து தேவியைக் கன்னத்தில் அறைந்திருப்பார்கள். குறைந்த பட்சம் அவளைக் கடுமையாய் திட்டியிருப்பார்கள். ஆனால் கலாவதி கனிவுடன் அவளைப் பார்த்துக் கேட்டாள்.. ”ஏன் அப்படி செஞ்சீங்க தேவி? . குழந்தையை வளர்க்கறது கஷ்டமாயிருக்கும்னா? குழந்தையைச் சுமைன்னு நினைக்கலாமா? ஏதாவது அநாதை ஆசிரமத்து வாசலிலே குழந்தையைப் போட்டுட்டுப் போயிருக்கலாமே? நீங்கத் தப்பு பண்ணீட்டீங்க தேவி. யாரும்  உங்களுக்குத் துணைக்கு இல்லையா? யார் கிட்டேயாவது ஆலோசனை கேட்டிருக்கலாமே?” ”எனக்கு யாரும் கிடையாது. கைலாசம்தான் குழந்தையைக் குப்பைத்தொட்டியிலே எரிஞ்சுடு அப்போதுதான் உன்னைக் கல்யாணம் செஞ்சுப்பேன் என்று என்னை மிரட்டினான். அவனுக்குப் பயந்துதான் அப்படிச் செய்தேன். கலாவதி அவள் கண்களை அனுதாபத்துடன் கூர்ந்து நோக்கினாள். கண்டிப்பாக இவள் சொல்வது எல்லாம் உண்மை. ஒன்றும் தெரியாதவளாய் இருக்கிறாள். திக்கற்ற பேதைப் பெண் என்று நினைத்தாள். ”நீங்க செஞ்சது தப்புன்னு உங்களுக்குத்  தோணலையா?” ”எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஒண்ணுதான். எனக்குக் கல்யாணம் ஆகணும்”. ”பிரச்சனையில் அடிப்பட்டவள். அவளுடைய கோணத்தில் பார்க்கிறாள். பொதுவாக எது சரி? எது தப்பு என்ற கோணத்தில் அவள்  யோசிக்கல” என்பது கலாவதிக்குப் புரிந்தது. , .   ”சரி , கைலாசம் எங்கே?” ”அவன் எங்கேயோ ஒடிட்டான்”. அப்போது ஆகாயத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் சப்தம் வந்தது. தேவி குழந்தையைக் கலாவதியிடம் கொடுத்துவிட்டுத் திறந்து வெளிக்குப் போய், ஹை, ஏரோப்ளேன், ஏரோப்ளேன் என்று கைகொட்டி சின்னக் குழந்தை மாதிரி குதூகலத்துடன் துள்ளிக் குதித்தாள். அதைப்   பார்த்த கலாவதிக்கு அந்தப் பைத்தியக்காரி பெண்ணின் செயலில் ஒருவிதப் பரிதாபம் பிறந்தது. ”இருபது வயசு இளம்பெண். ஒரு குழந்தை போலிருக்கிறாள். இவளுக்கு ஒரு குழந்தை !!  நல்லது கெட்டது தெரியாத இரண்டாம் கெட்டான்.  இவள் மேல் எந்தத் தப்பும் இல்லை. எல்லாம் பகவான் லீலை ! ! ”   என்று தோணியது. தேவியைப் பற்றிய தன் கணிப்பு சரியானது என்று நினைத்தாள். தேவியை தன் அலைப்பேசியின் கேமிரா மூலம் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டாள். நேர்காணல் ”தேவியின் குற்றம் எதுவுமில்லை” என்னும் தலைப்பில் பத்திரிகையில் பிரசுரம் ஆகிவிடும். ஆனால் இவளுக்கு யார் உதவி செய்வார்கள்? இவளுடைய கேசை நீதிமன்றத்தில்  சரியான முறையில் விண்ணப்பித்தால்தான் இவள் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று நிரூபணம் ஆகும். அதை யார் செய்வார்கள். இந்தக் காலத்தில்  திக்கவற்றவருக்கு யார்  துணை?  பகவான் பார்த்துப்பார் என்று விட்டுப் போக முடியாது. அந்தக் காலம் போல் இல்லை இந்தக் காலம். திரெளபதிக்குத் துன்பம் வந்தவுடனே ஓடி வந்து உதவிய  கிருஷ்ணர் போல் இப்போது பகவான் வருவதில்லை. நாம்தான் இந்த அபலை பெண்ணுக்கு முடிந்த   எல்லா உதவியையும்  செய்யணும்” என்று தீர்மானித்தாள். அதே சமயம் வீட்டில் இருந்த மனோகரன், ” தேவி எந்தக் குற்றமும் செய்திருக்க முடியாது. அவள் இந்தச் சிக்கலிருந்து மீள வேண்டுமானால்  யாராவது நல்லவர்கள் உதவி செய்ய வேண்டும்  திக்கற்றவருக்கு நல்லவர்களே துணை. ” என்று எண்ணினார்.   நேர்காணல் காண வந்த பத்திரிகையாளர் போல் இல்லாமல், நெருங்கிய உறவினர் போல் தேவியின் தோளைப் பற்றி ,  ” தேவி, என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன். குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள். ஜாக்கிரதையாய் இரு.  நான் போய் வருகிறேன்” என்று கனிவுடன் சொல்லிவிட்டு வெளியே வந்து காரில் ஏறினாள்.  டிரைவரிடம், ”பக்கத்து  தெருவுக்குப் போப்பா. அங்கே அட்வகேட் கிருஷ்ணா வீட்டுக்குப் போகணும்” என்றாள்.   எல்லாரிடத்திலும் உயிருக்குள் கடவுள் வாசம் செய்தாலும், மிக   நல்ல உள்ளம் உடையவர்   மட்டுமே மனித தெய்வம்  என்பது உண்மைதானே?                         **நிறைவு**