[]           வாழு வாழவிடு      (16 உருவகக் கதைகளின் தொகுப்பு)                                                     பொன் குலேந்திரன்  (கனடா)      மின்னூல் வெளியீடு :    FreeTamilEbooks.com           படைத்தவர் : பொன் குலேந்திரன்  மிசிசாகா – கனடா    kulendiren2509@gmail.com      அட்டைப்படம்,மின்னூலாக்கம்  :  பிரசன்னா,    udpmprasanna@gmail.com       உரிமை:  Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License.    பொருளடக்கம் அணிந்துரை:  உருவாக்கியவன் பேனாவில் இருந்து:  வாழு, வாழ விடு  சோம்பேறியின் சாதனை  தன்னம்பிக்கை  ஒரு சுவரின் கதை  பந்தின் பரிதாபம்  சிலை  இரு பனை மரங்கள்  பொன்னாடை, மலர்வளையம், பிணப்பெட்டி  காகமும் – நாயும்  மலையும் மலை ஏறியும்  நதி எங்கே செல்கிறது…?  ஓடும் மேகங்கள்  சந்தனமரமும் சந்தானமும்  சுமைதாங்கி  (மா)ண்புமிகு மாமரம்  தெரு நாய்  எங்களைப் பற்றி  உங்கள் படைப்புகளை வெளியிடலாமே                அணிந்துரை: இராய செல்லப்பா    கவிஞர், எழுத்தாளர் (ChellappaTamilDiary.blogspot.com)   திரு பொன் குலேந்திரன் அவர்களின் வாழு, வாழவிடு  என்னும் இந்த மின்னூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரையில் தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்குத்தான் நான் அணிந்துரை வழங்கியிருக்கிறேன். கடல்கடந்து கனடா வந்து இலங்கைத் தமிழில் பொன். குலேந்திரன் எழுதியிருக்கும் நூலுக்கு, சென்னையில் இருந்து  கடல்கடந்து நியூஜெர்சி வந்திருக்கும் நான் அணிந்துரை எழுதுகிறேன். தமிழும் கடலும் எப்படி எம்மை இணைக்கிறது பார்த்தீர்களா? ஆனால், அதற்கு முன்பே இணையம் எம்மை இணைத்து விட்டது.   தமிழில் இலவச மின்னூல்களை உருவாக்கி வெளியிட்டுவரும் பெருமைக்குரிய FreeTamilEbooks.com  என்ற தளத்தில் வெளியாகியிருந்த அவருடைய 21 மரபுக் கதைகள் என்ற நூலைத் தற்செயலாக நான் வாசிக்க நேர்ந்தது. அதற்கு அணிந்துரை வழங்கியிருந்தவர், எனது மதிப்பிற்குரிய எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள். அந்த நூலைப் படித்தபோது குலேந்திரன் அவர்களின் எழுத்துத் திறமை எனக்குப் பிரமிப்பூட்டியது. இலங்கையில் மரபு வழியாக உலவிவரும் பண்டையக் கதைகளைச் சுவை குன்றாமல் தனக்கே உரிய தனிப்பட்ட தமிழ் நடையில் அவர் எழுதியிருந்தார்.   உடனே மின்னூல்களாக வெளியாகியிருந்த அவரது மற்ற நூல்களையும் படித்து முடித்தேன். தன்னையொத்த மூத்த குடிமக்களுக்காகத் தமிழ்-ஆங்கிலம் இருமொழிகளில் மாதாந்திர மின்-இதழையும் அண்மையில்  கொண்டுவந்திருக்கிறார் என்பதும் தெரிந்தது.  பொங்கிவரும் சிந்தனை ஓட்டத்தைக் கணினி வழியாக  இடைவிடாமல் எழுத்தில் வடிப்பதற்குத் தன்னைத் துடிப்போடு வைத்துக்கொண்டிருக்கும்  அவரது இளமை வேகம் என்னை அசத்துகிறது.        இப்போது உங்கள் கையில் தவழும் – மன்னிக்கவும்- கண்ணில் தவழும்- (மின்னூல் அல்லவா?) - இந்த நூலில் உள்ள கதைகளை உருவகக் கதைகள் என்கிறார் அவர். என்றாலும், இயற்கைச் சூழல் சார்ந்த கதைகள் என்னும் மேம்பட்ட வகைக்குள் இவை அடங்கும் என்பது உறுதி.   இக்கதைகளில் மரங்கள் வருகின்றன. செடிகொடிகள் வருகின்றன. மலர்களும் கனிகளும் சுவர்களும் சுமைதாங்கிகளும் வருகின்றன. மழையும் மேகமும் நதியும் நாய்களும் வருகின்றன. உயிரற்ற இவையெல்லாம் உயிரோடு பேசுகின்றன. யாரோடு ? தமக்குள்ளே யன்றி, இயற்கையை அணுவணுவாக அழித்துக்கொண்டிருக்கும் மனிதகுலத்தின் பிரதிநிதிகளோடு. ஒரு கவிஞனோடு. ஓர் ஓவியனோடு. ஒரு சோம்பேறியோடும்கூட. மனிதா, எம்மை வாழவிடு, நீயும் வாழ் என்று கெஞ்சுகின்றன. நூலுக்கும் அதுவே தலைப்பாவதில் வியப்பில்லை.  பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு என்கிறது தருமியின் கவிதை. அவர்களின் கன்னத்தில் புரளும் கூந்தல் இழையை அழகு என்கின்றன உருது ‘கஜல்’கள். இரண்டையும் விட இனிமையானது, இலங்கைத்தமிழ். அந்த இனிய தமிழில் ஒரு முழுநூல் இதோ உங்களுக்காக. இன்னும் இதுபோன்ற பல நூல்களை எழுதட்டும் திரு  பொன்.குலேந்திரன் என்று வாழ்த்துகிறேன்.    இராய செல்லப்பா   (Email: chellappay@gmail.com) நியூஜெர்சி / (சென்னை)  மார்ச் 1௦, 2௦17.      உருவாக்கியவன் பேனாவில் இருந்து:   உருவகத்தை வரலாறு காலமாகக் கதையிலும் இலக்கியத்திலும் சிக்கலான பிரச்சினைகளை எளிதில் புரியும் வகையில் சுவாரசியமாக எடுத்துச் சொல்லித் தீர்வுகாணப்  பயன்படுத்தி உள்ளார்கள். எழுத்தாளர்களும் தத்துவஞானிகளும, பேச்சாளர்களும் உருவகக் கதைகளை ஒரு இலக்கிய சாதனமாகப் பாவித்து  தார்மீகம், ஆன்மீகம், அரசியல் அர்த்தங்களை உணர்த்துவதற்கு பாவிக்கிறார்கள். அதில் பிளேட்டோ என்ற தத்துவஞானி காலத்தில் எழுதப்பட்டு  பிரபலமான இரு உருவகக் கதைகள் ‘குகை’யும் ‘குடியரசு’மாகும்.  குகை என்ற கதையில்> தங்கள் வாழ்நாள் முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, குகையில் வாழ்ந்த மக்கள் குழுவை விவரிக்கிறது. அம் மக்கள் அவர்களுக்குப் பின்னால் எரியும் தீ முன்னே நடப்பதன்  மூலம், குகையின் சுவரில் தம் நிழல்களைப் பார்த்து, நிழல்களோடு உரையாடி, உலகத்தை அறிந்து கொள்கிறார்கள்.   நாம் சிறுவயதில் காகமும் நரியும், முயலும் ஆமையும், முயலும் சிங்கமும் போன்ற பல கதைகளைப் பாட்டி சொல்லக் கேள்விப்பட்டோம.  இது போன்ற ஏசோப்பின் நீதிக்கதைகள் பல.  ஜாதகக் கதைகளில இருந்து உருவான உருவகக் கதைகள் பல. அக்கதைகளில் ஜீவராசிகளின் குணங்களை அடிப்படையாக  வைத்து கதைகள் உருவாக்கப்பட்டன.  ஒரு மனிதன் எப்படி உலகில் அறநெறியோடு வாழ வேண்டும் என்பற்கு எடுத்துக்காட்டாக  அமைகிறது. புத்திசாலியான நரி,  காகத்தை எப்படி ஏமாற்றுகிறது என்பது கதையின் ஒரு கோணம். காகம் வடையை காலுக்குக் கீழ்  வைத்தபடி காகா என்று பாட்டுப்பாடி நரியை ஏமாற்றுகிறது என்பது கதையின் மாறுபட்ட கோணம். இதே போல் சிங்கமும் சுண்டெலியும் என்ற கதை பிரதி உபகாரத்தை எடுத்துக்காட்டுகிறது. ஆமைக்கும் முயலுக்கும் இடையிலான ஓட்டப்பந்தயக் கதை  ஆணவம் கூடாது என்பதைச் சொல்லுகிறது. பெரிய ஜாடியின் அடியில் உள்ள தண்ணிரைக் குடிப்பதற்கு வழி தெரியாது சிறுகற்களை ஜாடிக்குள் போடடுத் தண்ணீரை மேலே வரச்செயது  கொக்கு தன் தாகத்தை தீர்த்ததாக ஓரு கதை உண்டு. இப்படிப் பல உருவகக் கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.   உருவகம் கதையில் மட்டுமல்ல, சித்திரத்திலும் சிற்பத்திலும் அமைந்திருக்கிறது. பிகாசோவின சித்திரங்களை பல தடவை பல கோணங்களில் பார்த்தால் எதைச் சொல்ல வருகிறார் என்பது புரியும். பிரபல காலம் சென்ற எழுத்தாளர் சுந்தர இராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை பல விருதுகள் பெற்ற உருவக நாவல். ஒரு தடவை வாசித்தால் புரியாது. பல தடவை வாசித்தால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியும்..   இந்த ‘வாழு வாழ விடு’ என்ற உருவகக் கதைத்தொகுப்பில் உள்ள கதைகள் பகிர்ந்து வாசித்து என்னாலும் முடியும் என்ற நோக்கோடு வாழத்  தூண்டும். இக்கதைகள் காதலோ. குடும்பப் பிரச்சனைகளோ  மர்மமோ அல்லது அறிவியலோ சார்ந்த கதைகள் அல்ல. சிந்திக்க வைக்கும் கதைகள். வாசியுங்கள, பல தடவை வாசியுங்கள். கதையில் உள்ள கருத்தைப் புரிந்து கொள்வீர்கள். வாழு வாழவிடு   கதை 1:   வாழு, வாழ விடு []   ஓர் உயர்ந்த செழித்த பனைமரம். கம்பீரமாகத் தன் உயரத்தையும் > செழிப்பையும் . தான் வளர்ந்த சுற்றாடலில் தனக்கு நிகர் தான் என்ற பெருமை அதற்கு வேறு. அதைச் சுற்றியுள்ள சிறு பனை மரங்கள் அதன் வயதுக்கும் வளர்ச்சிக்கும் மதிப்பு அளித்தன.   ஒரு நாள் மரம் கொத்திப்பறவை யொன்று அம்மரத்தைத் தன் கூரிய அலகினால் “டொக் டொக்” என்று துளைத்துக் கொண்டிருந்தது.   “ஏ பறவையே, என்னை ஏன் இப்படி உன் கூரிய அலகினால் கொத்திப் புண்படுத்துகிறாய். நான் உனக்கு என்ன குற்றம் செய்தேன்?” என மரம்  பறவையைப் பார்த்துக் கேட்டது.  “உனக்குள் இருக்கும் புழுக்களைக் கொத்தி எடுத்து உன்னைச் சுத்தம் செய்கிறேன். புழுக்களை உன் உடலுக்குள் இருக்கவிட்டால் உன் உயிருக்கு  அவை பங்கம் விளைவித்து விடும்” என்றது மரம் கொத்திப்பறவை.  “நல்லது. அதற்காக என்னைத் தினமும் கொத்தித் துன்புறுத்த வேண்டுமா?” என்றது பனை மரம்.   “அப்படிக் கொத்தி மற்றவர்களைத் துன்புறுத்தி> அவர்கள் படும் வேதனையைப் பார்த்து எனக்குள் மகிழ்ச்சி அடைவது என் சுபாவம். அதோ பார், உன் உத்தரவு இல்லாமல் உன் மேல் ஏறி ஒருவன் கள் சீவுகிறானே அவன் ஏன் அப்படிச் செய்கிறான் என்று நீ கேட்டாயா?”   உடனே மரத்தின் கவனம் கள் சீவும் மனிதன் பக்கம் திரும்பியது.  “ஓ மனிதா, என் உத்தரவு இல்லாமல் நீ எப்படி என் மேல் ஏறி என்னை டொக் டொக் என்று உன் மர உளியால் துன்பறுத்தி, கள் சீவ முடியும்?” என்றது.   “அட மரமே, நான் ஏன் உன்னிடம் அனுமதி வாங்க வேண்டும்? உன்னை வளர்த்து விட்ட என் எஜமானின் தாகம் தீர்க்க அவர் உத்தரவு பெற்றுத் தான் உன் மேல் ஏறி கள் சீவுகிறேன். இந்தக் கள்முட்டியை இதில் நான் விட்டுச் செல்வதால் எறுமபுகளினதும் பூச்சிகளினதும் தாகத்தைத் தீர்க்கிறேன். அது  தெரியுமா  உனக்கு? நீ இவ்வளவு கதைக்கிறாயே அங்கே பார், உன் இரத்தத்தை உறிஞ்சும் குறுவிச்சை மரத்தை. அதைப்போய்க் கேளேன், ஏன் என் சத்தை உறிஞ்சுகிறாயென்று” என்றான் கள் சீவும் மனிதன். மரத்தின் கவனம் குறுவிச்சை மரம் பக்கம் திரும்பியது. “ஏய் குறுவிச்சை மரமே, நீ எப்படி என் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து என்னைப் பலவீனப்படுத்த முடியும்?” என்றது பனைமரம். குறுவிச்சை சிரித்தது. “இங்கே பார் மரமே, மற்றவர்களை அண்டி வாழ்வது தான் என் குணம். மனிதர்களிடையே எத்தனை பேர் அப்படி மற்றவர்களை அண்டி வாழ்கிறார்கள் தெரியுமா உனக்கு? நீ அப்படி இருக்கக் கூடாது. அவர்களில் சிலர் தமக்கென வாழாமல் மற்றவர்களுக்கு இரத்த தானம் செய்து உதவுகிறார்கள். நீயும் வாழு, மற்றவர்களும் வாழ உதவு. அது சரி என்னில் குற்றம் கண்டு பிடிக்கிறாயே, அங்கே பார் ஒருவன் உன் செழித்த ஓலைகளையும் உனது குழந்தைகளையும் என்னிடம் இருந்து வெட்டிப் பிரிக்கப் பார்க்கிறான்”  என்றது குறுவிச்சை மரம். மரத்தின் கவனம் உடனே தன்மேல் ஏறியிருந்து தன் ஓலைகளையும் நுங்குகளையும வெட்டுபவன் மீது சென்றது. “ஏய் மனிதா, என் உத்தரவின்றி நீ எப்படி என் ஓலைகளையும் நுங்குகளையும் வெட்ட முடியும்? நீ செய்வது உனக்கே நியாயமாகப் படுகிறதா?”  என்றது மரம். “கொஞ்சம் பொறு. நான் ஏன் உன்னிடம் உத்தரவு பெறவேண்டும்? உன்னை வளர்த்து ஆளாக்கின என் எஜமானின் பேரப் பிள்ளைகள் கனடாவில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நுங்கைப்பற்றித் தெரியாது. சாப்பிட்டதும் கிடையாது. என் எஜமான் சொல்லி அவர்களுக்கு நான் வெட்டிக் கொடுக்கிறேன். வேலிக்கு உன் ஓலை வேணும். அது தான் அதையும் வெட்டுகிறேன். அது சரி, கீழே பார். ஒரு கிழவி உன்னுடைய பழைய ஓலைகள், பன்னாடைகள், பனம்பழங்கள் எல்லாவற்றையும் பொறுக்கி எடுக்கிறாளே,  அதற்கு என்ன சொல்லுகிறாய்?” என்றான் வெட்டும் மனிதன். மரம் கீழே குனிந்து பார்த்தது. கிழவி ஒருத்தி அமைதியாக மனிதன் சொன்ன பொருட்களைச் சேகரிப்பதைக் கண்டது. மரத்துக்கு கோபம் வந்தது. “ஏய் கிழவி, உன்னை யார் கீழே விழுந்த என் பொருட்களை என் உத்தரவு இல்லாமல் பொறுக்கச் சொன்னது?” என்று கேட்டது. “மரமே என் மேல் இரக்கம் காட்டு. நான் சாப்பிட்டு இரண்டு நாளாகிறது. இந்தப் பனம்பழத்தைக் கொண்டு போய், சுட்டு சாப்பிட்டு என் பசியை ஆற்றுவேன். சுடுவதற்கு உன் காய்ந்த ஓலைகளையும் பன்னாடைகளையும் பாவிப்பேன். உனக்குப் போகிற இடத்தில்  புண்ணியம் கிடைக்கும்”  என்றாள் கிழவி. அந்த நேரம் ஒருவன் மரத்தைக் கோடரியால் வெட்டத் தொடங்கினான்.  மரத்துக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை.   “ஏய் மனிதா. நீ ஏன் என்னை வெட்டுகிறாய். நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்?”  என்றது.  “உன் வீட்டு எஜமான் தான் உன்னை வெட்டும்படி சொன்னார். அது தான் வெட்டுகிறேன்” என்றான் மனிதன்.  “எதற்காக?”  “எஜமானின் புது வீட்டுக் கூரைக்கு நீ நல்ல முற்றின மரமாம், அது தான் வெட்டுகிறேன்.”  “நீ என்னை வெட்டினால் என்னிடம் உதவி பெற்ற பலருக்கு உதவி கிடைக்காமல் போய் விடுமே” என்றது மரம்.  “நீ தான் எல்லாம் என்று யோசிக்காதே. உனக்குப் பக்கத்தில் இருக்கும் மரங்களைப் பார்.  அவையும் உன்னைப் போல் உதவ மாட்டார்களா என்ன?” என்றான் மனிதன்.  மரம் நிலை தடுமாறிப் பெரிய சத்தத்துடன் கீழே விழுந்தது.  மற்றைய மரங்கள் அதை பார்த்துக் கைதட்டிச் சிரித்தன. அதில் ஒரு மரம் “ பிறப்பும் இறப்பும் உலக நியதி. அந்தக் காலத்துக்குள் நீங்களும் வாழுங்கள், மற்றவர்களும் வாழ உதவுங்கள்” என்றது.  கதை 2:   சோம்பேறியின் சாதனை []   அவன் ஒரு சோம்பேறி எனப் பலரிடம் பெயர் வாங்கியவன்.  நேரம் தவறாது சாப்பிட்டுவிட்டு தூக்கத்தில் கனவு காண்பது தான் அவன் பொழுது போக்கு. தகப்பன், சகோதரர்களுடைய  உழைப்பில் வாழ்பவன் எனப் பலரின் விமர்சனத்துக்கு உள்ளானவன். வாழ்க்கையில் தன்னால் ஒன்றுமே சாதிக்க முடியாதென நினைத்து, தற்கொலை செய்வது தான் சரி என்ற முடிவுக்கு வந்தான். தனிமையை நாடிக் கையில் கயிற்றுடன் ஒரு காட்டுப் பக்கத்தைத் தேடி நடந்தான். நடந்த களைப்பில்  ஒரு மரத்துக்கடியில் கயிற்றை வைத்துவிட்டுச் சற்று நேரம் தூங்கினான். திடீரெனக் கையில் யாரோ கடிப்பது போல் இருந்தது அவனுக்கு. திடுக்கிட்டு விழித்தான். பல கட்டெறும்புகள் வரிசையாக அவனைப் பார்த்துச் சிரித்தபடி நின்றன. “என்னைக் கடித்துவிட்டு ஏன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறீர்கள்?”  என்றான் சோம்பேறி.  “சிரிக்காமல் என்ன, உன்னைப் பார்த்து அழச் சொல்லுகிறாயா? எங்களைப் பார், நாங்கள் எப்படிச் சுறுசுறுப்பாய் வேலை செய்துகொண்டிருக்கிறோம்” என்றது  ஒரு எறும்பு.  “எனக்கு என்ன அப்படி வேலை இருக்குது செய்வதற்கு. வேலை கேட்டுப் பல இடஙகளுக்குப் போனால் வேலை இல்லை என்கிறார்கள்.”    “மனிதா, எங்களைக் குளவி, தேனீ போன்று சமூகப் பூச்சிகள் என்பார்கள்” என்றது எறும்பு.  “அப்படியென்றால்?”   “சமூகத்தில் ஒரு தலைவனுக்குக் கீழ்  எப்படிப் பலர் பலவிதமான  தொழில்கள் செய்கிறார்களோ அதே மாதிரி தான் நாங்களும் செயலாற்றுகிறோம். அதுவுமல்லாமல் சமூகத்துக்குப் பல உதவிகளைச் செய்கிறோம். எங்கள் இனத்தின்  உற்பத்திக்கு முக்கிய கர்த்தா யார் தெரியுமா?”   “யார்?”   “அதோ இருக்கிறாளே குவீன் என்ற அந்த அரசி தான். அவளின் முழு நேர வேலை ஆயிரக்கணக்கில் முட்டைகளையிட்டு எம்மினத்தைப் பெருக்குவது. அவள் 15 வருடங்களுக்கு மேல் வாழக் கூடியவள். அவளிடம் வேலை செய்பவர்கள் தான் அவளின் வேலைக் கூட்டம். ஒவ்வொருவருக்கும் வயதுக்கேற்பப் பல வேலைகளுண்டு.  அதோ பார்த்தாயா இலைகளை வெட்டித் தூக்கிக் கொண்டு செல்பவர்களை. அதில் கூட பலம்வாய்ந்த வீரர்கள் தான் தடித்த இலைகளை வெட்டுவார்கள். அதுவுமன்றி எம்மை எதிர்க்க வரும் வேறு எறும்புக் கூட்டத்துடன் போர் புரிந்து தம்முயிரைப் பலி கொடுத்து எம்மைக் காப்பாற்றுவார்கள்.”   “இலைகளை வெட்ட வெகு தூரம் செல்ல வேண்டிவருமோ?”   “பார்த்தாயா பார்த்தாயா உன் சோம்பேறித்தனம் உன்னை விட்டுப் போகவில்லையே! இலைகளை வெட்ட நூறு மீட்டருக்கு அதிகமாகப் பிரயாணம் செய்ய வேண்டிவரும். சில சமயங்களில் 35 மீட்டர் உயரம் ஏறி இலைகளை வெட்டியபின் தங்களுடைய நிறைக்கும் பார்க்க இரு மடங்கு கூடிய நிறையுள்ள இலைகளை அவை கொண்டு செல்லும். ஒரு இரவுக்குள் ஓரிரு தடவை இப்படி வெட்டிய இலைகளைச் சுமந்து செல்வார்கள்.”    “இலைகளை என்ன செய்வார்கள்?”   “தம் பொந்துக்குள் அவ்விலைகளைச் சிறு துண்டுகளாக வெட்டி, பூஞ்சை (Fungus) வளர்த்து, உணவாகச் சாப்பிடுவார்கள். அதுவும் ஒரு வகை விவசாயமுறை.”   “அடேயப்பா இந்தச் சிறிய உடம்பினால் இப்படிப் பெரிய வேலை செய்ய முடிகிறதே.”   “இன்னும் இவர்களிடம் இருந்து நீ படிக்க வேண்டிய பாடங்கள் அனேகம் இருக்கு. மனிதர்களிடையே தொடர்பு கொள்ளும் திறமையை விட எங்களிடம் அத்திறமை கூடுதலாகவுண்டு. ஏதாவது இனிப்பானதொரு   பொருளை ஒரு எறும்பு கண்டுவிட்டால், சில நிமிடங்களுக்குள் வரிசையில் பல எறும்புகள் அதைப் பகிர்ந்து எடுத்துகொண்டு  செல்லும். ஆனால் மனிதன் அப்படியல்ல. தனக்கு மாத்திரம் தான், தான் கண்டு பிடித்தது சொந்தமென நினைப்பவன். மற்றவர்களுக்குச் சொல்லாமல் தனக்குள் இரகசியமாக  வைத்திருப்பான். அப்படி வரிசையாகச் செல்லும் எறும்புக் கூட்டத்துக்குத் தடை ஏதும் வைத்தால் திடீரென அந்தப் பாதையை மாற்றி வேறு சுருக்கமான வழியில் சென்று, அடைய வேண்டிய இலக்கை அடையக் கூடியவைகள். எங்களின் செயல்முறைகளை அவதானித்துக் கணினியில் தகவல்களை எடுத்துச்செல்லும் வழியினைப் பற்றிய ஆராய்ச்சிகளை மனிதன் நடத்தியுள்ளான்.“    “எப்படித் தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறீர்கள்? உங்களால்  தான் பேச முடியாதே?”   “அன்டெனா (Antena) எனப்படும் உணரிகள் மூலம் தட்டி ஓசை எழுப்பியும் மணத்தின் மூலமும, தகவல்களைப் பரிமாறிக் கொள்வோம்.”  “அது சரி, எங்களைப்போல் உங்களிடையேயும் பல சாதிகளுண்டா?”   “ஏன் இல்லை.  பூமிக்குள் காற்று உட்புக உதவுகிறோம். சில தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை அழித்து மனித இனத்துக்கு உதவுகிறோம். தேவையற்ற தாவரங்களை இல்லாமலாக்கிறோம். விதைளைப் பரப்பிப் பயிர்கள் வளர உதவுகிறோம்.”     “கொஞ்சம் பொறு …மனித உயிரைக் காப்பாற்றி இருக்கிறாயா? “   “ஏன் இல்லை? கதை ஒன்று சொல்கிறேன், கேட்கிறாயா?”   “கதையா? சொல்லு சொல்லு.”   “ஒரு நாள் ஒரு விறகுவெட்டி காட்டுக்குள் சென்று மரம் வெட்டிக் களைத்து வீடு திரும்பும்போது, பாம்பு ஒன்று கடித்ததினால் உடம்பெல்லாம் விஷம் ஏறி மயங்கி விழுந்துவிட்டான்.”    “பிறகு பிறகு.... அவன் இறந்துவிட்டானா?”   “இல்லை. சில மணிநேரத்துக்குப் பிறகு கண்விழித்துப்  பார்த்தான். அவனால் நம்ப முடியவில்லை. உடம்பெல்லாம் எறும்புகள் கடித்ததினால் அவன் உடம்பில் இருந்த விஷம் நீங்கி அவன் பிழைத்தான்.”   “அது எப்படி?”   “அவன் விழுந்தது, ஒரு எறும்புப் புற்றுக்கு மேல்.  தம் உயிரைப் பலி கொடுத்து அவனைக் காப்பாற்றியிருக்கின்றன அந்த எறும்புகள்.”   “அடேயப்பா பெரும் தியாகிகள் எனச் சொல்லு.”   “அது மட்டுமா, இன்னொரு நாள் ஒரு புறாவை வெடிவைத்துக் கொல்ல  ஒரு வேடன் குறிவைத்தபோது, அவன் காலைக் கடித்து அவனுடைய குறியைத் தவறச்செய்து சில எறும்புகள் புறாவின் உயிரைக்  காப்பாற்றிவிட்டன.”  “புறா நன்றி சொல்லவில்லையா?”  “ஏன் இல்லை?  ஒரு  நாள் அதே எறும்புகள் மழைத்  தண்ணிரால் அடித்துச் செல்ல இருந்தபோது ஒரு பெரிய இலையைப் புறாக்கள் தம்முடைய அலகினால் கொத்திக் கீழே வீழ்த்தி, எறும்புகள் அதில் ஏறித் தப்பிச் செல்ல உதவியுள்ளன.”  “இப்ப எனக்கு எப்படி உதவப் போகிறீர்கள? “  “நீ மற்றவர்களை நம்பிச் சோம்பேறியாய் வாழாமலிருக்க வழி சொல்லப் போகிறோம்.”  “வழியா? சொல்லுங்கள். முடிந்தால் செய்து பார்க்கிறேன்.”  “அதோ தெரிகிறதே அது என்ன?”  “குப்பைமேடு. இது தெரியாதா எனக்கு”  “வடிவாகப் பார். “   “ஓ, பேப்பர்களும், போத்தில்களும்,   கார்டபோர்ட் பெட்டிகளும்.”  “இவைதான் குப்பைக்குள் பொக்கிஷங்கள். குப்பைக்குள் கோமேதகம் என்று கேள்விப்பட்டிருப்பாயே.”  “கேள்விப்பட்டேன்.  குப்பைக்குள் பொக்கிஷமா? என்ன கதைக்கிறீர்கள்?”  “ஆமாம் குப்பையில் உள்ள மட்டைகள், பேப்பர்களைப் பொறுக்கி, மடித்தெடுத்து, கப்பல்துறைக்கு எடுத்துச் சென்றால் அவற்றைப் பதப்படுத்தி, பேப்பர் செய்ய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அவர்களிடம் கொண்டு போய்க் கொடு. உனக்கு நாலு காசு கிடைக்கும்.”  “சரி நீங்கள் சொல்லுகிறீர்களே என செய்து பார்க்கிறேன். எனக்குக் காசு கிடைத்தால் அதில் கமிஷன் கேட்க மாட்டியளே?”  “உன் மனித புத்தி உன்னை விட்டுப் போகாது. நீ சொந்தக் காலில் நின்றால் எமக்கு சந்தோஷம். எங்களுக்கு வேலை கணக்க இருக்கு நாங்கள் வாறோம்” என்று  எறும்புகள் புறப்பட்டுச் சென்றன.  . .. ... .... ... .. .  பல மாதங்களுக்குப் பின் இதே எறும்புகள் அந்தச் சோம்பேறியை, குப்பை மேட்டில் சந்தித்தன.  “ஏய் சோம்பேறி எப்படி இருக்கிறாய்?” என்று அழைத்தன.  “என்னைச் சோம்பேறி என்று கூப்பிட வேண்டாம். நான் இப்ப ஒரு தொழிலாளி. சொந்தமாக உழைப்பது மட்டுமன்றி, இயற்கையை சுத்தப்படுத்தி   வாழ்கிறேன்” என்றான்.  “நீ ஒரு சாதனையாளன் என்று சொல்” என்றன எறும்புகள், சிரித்தபடி.  “ஆமாம் உங்கள் அறிவுரைக்கு நன்றி” என்றான் சோம்பேறியாக இருந்து சாதனையாளனாக மாறியவன்.    கதை 3 தன்னம்பிக்கை [] கன்னத்தில் கைவத்தவாறு எதையோ பறிகொடுத்தவன் போல் ஒரு இளைஞன் பக்கத்தில் கயிற்றோடு அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவாறு அந்த மரத்தின் கீழ அமர்ந்திருந்தான். அழுது வீங்கிய அவன் முகத்தில் சோகம் பிரதிபலித்தது. அவனைப் பார்த்துப் பல விழுதுகளுடன் சடைத்து வளர்ந்த ஆலமரம் பரிதாபப்பட்டது. “ஏய் மனிதா, உனக்கு என்ன அப்படி நடந்துவிட்டது? சோகமாய்ச் சிந்தித்தபடி இருக்கிறாயே” என்றது மரம் மனிதனைப்பார்த்து. “எனக்கு ஒன்றுமில்லை. என்ன வாழ்க்கை இது என்று யோசிக்கிறேன்” என்றான் இளைஞன். “நீ பொய் சொல்கிறாய். உனக்குப் பக்கத்தில் கயிறு ஒன்று இருக்கிறதே. எதற்காக?” “அதற்கென்ன உனக்கு?” “என் பெயருக்குக் களங்கம் விளைவிக்கப் பார்க்கிறாயா?” “உன் பெயர் என்ன? அப்படி உன் பெயருக்குக் களங்கம் விளைவிக்க நீ பெரிய ஆளா?” “ஆமாம். ஆலமரமான என்னைச் சுருக்கமாக ஆல் என்பார்கள். நான் பரிசுத்தமானவன். அதைக் கெடுத்து விடாதே.” “பரிசுத்தமா? புதுமையாக இருக்கிறதே. உன் உடம்பு முழுவதும் தூசியும் சிலந்தி வலைகளும் இருக்கின்றதே. காகங்கள் இருந்து எச்சம் இட்டிருக்கின்றனவே. நீ எப்படிப் பரிசுத்தமானவன் என்று சொல்லமுடியும்?“ “உனக்கு வேதத்தைப் பற்றித் தெரியுமா? என்னில் சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய திருமூர்த்திகள் குடியிருக்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது. அதனால் நான் பரிசுத்தமானவன்.” “அவர்கள் உன்னில் எங்கிருக்கிறார்கள். எங்கே எனக்குக் காட்டு?” “சிவன் என் உச்சியிலும், விஷ்ணு என் நடுப்பாகமான தண்டிலும், பிரம்மன் என் வேரிலும் இருக்கிறார்கள் என்கிறது வேதம். ஆகவே நான் மரங்களுக்கௌல்லாம் அரசன்.” “நீ அதனால் எப்படி அரசனாக முடியும்?” “என் கம்பீரத்தைப் பார்த்தாயா? நான் எத்தனை விழுதுகள் விட்டு அவை எல்லாம் எனக்குப் பாதுகாவலர்களாக நிலத்தில் வேர் ஊன்றி இருப்பதைக் கண்டாயா?. நான் வயதில் முதிர்ந்தவன், என்னை நம்பு. உன் தந்தையை எனக்குத் தெரியும்.” “தெரியுமா? அதிசயமாக இருக்கிறதே.” “ஆம். பல வருடங்களுக்கு முன் நீ சிறுவனாக இருக்கும்போது கடன் தொல்லை தாங்கமுடியாமல் என் மரக்கொப்பில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துமடிந்தார் உன் தந்தை. அதன்பின் உன் அக்கா காதலில் தோல்விகண்டு என்னில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டாள். அந்தத் தன்னம்பிக்கையில்லாத குடும்பத்தைச் சேர்ந்த நீயும் அவர்களைப் போல் என்னில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்யப் பார்க்கிறாய். அப்படித் தானே?” “அது என் சொந்த முடிவு. இப்போ அதுக்கென்ன?” “ஏற்கனவே பேய் ஆல் என ஊர்ச்சனங்களிடம் உன் அப்பனதும், அக்காவினதும் செயல்களால் கெட்டப் பெயர் வாங்கிவிட்டேன். அவர்களின் ஆவி இங்கு உலாவுவதாக மக்கள் நம்பினார்கள். அங்கே பார், ஒரு சூலாயுதத்தைக் காவலுக்கு எனக்குக் கீழ் குத்திவிட்டுப் போயிருக்கிறார்கள். ஒரு காலத்தில என் விழுதுகளைப் பறித்துப் பல் தேய்க்க வருபவர்கள் கூட இப்போது பயத்தால் வருவது கிடையாது.” “நீ என்ன பல் வைத்தியனா?” “ஏன், ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி - என்று நீ கேள்விப்பட வில்லையா? எனது விழுதுகளும் வேர்களும் பல ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது. அதோ பார் என் விழுதுகளில் தொங்கும் சின்னத் தொட்டில்களை. குழந்தை இல்லாதவர்கள் நேர்ந்துகொண்டு கட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அது மட்டுமா, எனக்குப் பின் பக்கத்தில் உள்ள சுமைதாங்கிக் கல்லைப்பார்.” “அந்தக் கல் எதற்கு?” “வெகுதூரம் நடந்துவந்தவர்கள் சுமைதாங்கியில் தம் பொருட்களை வைத்து என் நிழலில் இளப்பாறிச் செல்வதுண்டு. அது எனக்குப் பெருமையைத் தரும். என் மரத்தில் உள்ள காக்கைக் கூடுகள் எத்தனையென்று பார்த்தாயா? அதில் காகங்கள் முட்டையிட்டுக் குஞ்சுகள் பொரித்து, பறந்து செல்லும்போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைவேன் தெரியுமா?” “அதில் என்ன சந்தோஷம். அவர்கள் போகும் போது தம் எச்சத்தால் உன்னை அசுத்தப்படுத்திவிட்டுச் செல்கிறார்களே.” “அது பரவாயில்லை. கடும் மழையில் அவை இருந்த இடம் தெரியாமல் கழுவிப்போய்விடும். ஆனால் உன் அப்பனாலும் அக்காவாலும் எனக்கு ஏற்பட்ட கறை இன்னும் போகவில்லையே. மக்கள் பயத்தில் எனக்கருகே வருவதில்லையே! நீ வேறு என்னில் தற்கொலை செய்யப் பார்க்கிறாய்.” உனக்குத் தெரியுமா எனக்குள்ள பிரச்சினை?” “அப்படி என்ன தற்கொலை செய்ய உன்னைத் தூண்டிய பிரச்சினை? காதலில் தோல்வியா? அல்லது என் அப்பனைப்போல் கடன்காரர் தொல்லையா?” “இல்லை. இல்லை. எனக்கு ஒருவரும் உத்தியோகம் தரமாட்டார்களாம். என் மனைவியையும் ஒரு வயது குழந்தையையும் என்னால் காப்பாற்ற முடியாமல் தவிக்கிறேன். நான் வாழ்ந்து என்ன பயன்? அது தான் தூக்கு போட்டுச் சாகலாம் என்று வந்தால் உன் நச்சரிப்பு வேறு.” “தம்பி, நீ ஒரு கோழை. உன்னில் நம்பிக்கை யில்லாதவன். எல்லாம் நன்றே நடக்கும் என்று எப்போதும் நினை. என்னைப்போல் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உனக்கு வேண்டும். உத்தியோகம் உன்னைத் தேடிவரும். இயற்கையன்னையின் குழந்தைகள் நாம். ஆகவே ஒருத்தருக்கு ஒருவர் உதவ வேண்டாமா?” “உதவியா? நான் போக வழியைக் காணோமாம். நான் எப்படிப் பிறருக்கு உதவ முடியும்?” “உன்னால் முடியும் தம்பி. சற்றே சுற்றுமுற்றும் பார். எத்தனை ஆயிரக்கணக்கான விழுதுகள் இருக்கிறது பார்த்தாயா? அது மட்டுமா? அந்தச் சுமைதாங்கியில் எத்தனை பேர்கள் இளப்பாறிச் செல்வதையும் பார்த்தாயா?” “தெரிகிறது. இப்ப அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?” “இரண்டு மைல்தூரத்தில் உள்ள பக்கத்து ஊரில் ஆலமரங்கள் கிடையாது. அங்குள்ள ஆயுர்வேத வைத்தியருக்குப் பல்வைத்தியத்துக்கு மருந்து தயாரிக்க என் விழுதுகள் தேவைப்படும். நீ ஏன் அவற்றைச் சிறுதுண்டுகளாக வெட்டி எடுத்துச் சென்று அவருக்குக் கொடுத்துப் பணம் சம்பாதிக்க முடியாது? அதோடு சேர்ந்து சுமைதாங்கிக்கு அருகே இளநீர் விற்கும் வியாபாரமும் ஆரம்பிக்கலாமே. வந்து தங்கிப் போகிறவர்கள் தாகத்துக்கு நிச்சயம் வாங்கிக் குடிப்பார்கள். இரண்டு மைல் தூரத்துக்கு நல்ல தண்ணீர்க் கிணறு கூடக் கிடையாது.” “நல்ல யோசனைதான். என்னால் முடியும் என நீ நினைக்கிறாயா?” “உன்னால் முடியும் தம்பி. தற்கொலை முடிவை மாற்றித் துணிந்து செயல்படு. வெற்றி நிச்சயம்.” இளைஞனின் மனம் மாறியது. சிந்தித்தான். தான் கொண்டு வந்த கயிற்றைச் சுழற்றித் தூர எறிந்தான். மரத்தடியில் உள்ள வைரவருக்கு ஒரு கும்பிடுபோட்டான். திடமனதுடன் தன் புதுப்பயணத்தை ஆரம்பித்தான. மரத்தில் இருந்த குயில்கள் கூவி அவனை வாழ்த்தின. ஆலமரத்தின இலைகள் காற்றில் அவன்மேல் சொறிந்தன…தென்றல் காற்று அவனுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது…. அவன் ஒரு புதுமனிதனான். கதை 4  ஒரு சுவரின் கதை []    பழமையில் ஊறிய அந்த ஊரின் பிரதான வீதியில் ‘கேட் முதலியார்’ முருகேசம்பிள்ளை 1928ல் இரும்பு கேட் வைத்து கட்டிய ஐந்தறைகளை உள்ளடக்கிய நாற்சதுர முதற்கல்  வீடு அது. கேட்டின் இரு பக்கத்திலும், மதிற் சுவர்களுக்கு மேல் கற்களில் செதுக்கிய அழகிய இரு அன்னங்களின் உருவங்கள். அதற்கு உகந்தாற்போல் வீட்டின் மதிற் சுவரில் பித்தளைத்தகட்டில் அன்னவாசா என்ற பெயர் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அன்னங்களின் ஞாபகமாக கேட் முதலியார் அந்தப் பெயரை வீட்டுக்கு வைக்கவில்லை. அவர் மனைவி அன்னலஷ்மியின் சீதனக் காணியில், சீதனப் பணத்தில் கட்டிய வீடது. அதனால் அந்தப் பெயரை அவ்வீட்டுக்கு வைத்திருக்காவிடில் அவர் மாமனார் வீட்டில் பூகம்பம் வெடித்திருக்கும். வீட்டுக்கு இரும்பு கேட் வைத்து முதலில் கட்டியதால் அவருக்கு கேட் முதலியார் என்ற பெயர் வரவில்லை. எல்லாம் வெள்ளைக்காரனுக்கு முன் கை கட்டி வாய் பொத்தி நின்று அவன் இட்ட வேலைகளைச் செய்ததிற்கும், பல தடவை சேர் போட்டதிற்கும், ஊரில் மற்றவர்களை விட சாதியில் கூடியதிற்கும், பல நிலங்களுக்கு சொந்தக்காரராக இருந்ததாலும், மரியாதைக்காக அவருக்குக் கிடைத்த பட்டம் அது.    வீட்டுக்கு முன், அந்த மதிலின் சுவர் பழமை வாய்ந்தது. அதன் அகலம் மட்டும் சுமார் ஒன்றரை அடியிருக்கும். உயரம் ஆறடி. கண்ட கற்களால் அத்திவாரமிடப்பட்டுக் கட்டப்பட்டது அந்த மதில். ஒரு கோட்டையின் அரண் போல் ஒரு காலத்தில் தோற்றமளித்தது. சாதாரணமான தற்போதைய சுவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அதற்கு, தான் உயர்ந்தவன், பலமானவன், முதிர்ந்தவன், அகண்ட மனம் உள்ளவன், அனுபவசாலி என்ற பெருமைகள் வேறு. அதோடு கூட கேட் முதலியார் வீட்டிற்குப் பாதுகாப்பு கொடுக்கும் கம்பீரம் கூட அதன் அமைப்பில் தெரிந்தது. சுவர் உருவாக்கப்பட்டபோது  பளிச்சென்று வெள்ளை யடித்துப் புது மாப்பிள்ளை போல் அழகாகக் காட்சியளித்தது. தலைமயிர்களைப் போல கூரான கண்ணாடித் துண்டுகள் அதன் மேல் பகுதியை அலங்கரித்தன. “விளம்பரம் ஒட்டப்படாது” என்று கொட்டை எழுத்தில் இரு சுவர்களிலும் ஆரம்பத்தில் எழுதியிருந்தாலும், யாரோ சில புத்தி ஜீவிகள் “ஆனால் எழுதலாம்” என்ற சொற்றொடரையும் சேர்த்து எழுதிவிட்டுத் தமக்குள் தங்கள் கெட்டிக்காரத்தனத்தைப் பாராட்டிக் கொண்டார்கள். “குட்டிச் சுவர்கள் இதுகள்” என்று சுவர் தனக்குள் எழுதியவர்களைத் திட்டிக்கொண்டது. தானும் ஒரு காலத்தில் குட்டிச் சுவராகப் போகிறோமே என்று அதற்குத் தெரியவா போகிறது. கேட் முதலியார் சுவரை உயர்த்திக் கட்டியதற்கு அன்னலஷ்மியின் அழகைக் காரணம் காட்டினார்கள் ஊர் சனங்கள். ஊர் இளசுகள் அவள் மேல் எங்கே கண்வைத்து விடுவார்களோ என்று பயந்து தான் அவர் மதிலை உயர்த்திக் கட்டினார் என்பது பலர் கொடுத்த விளக்கம். உண்மையில் அன்னலஷ்மி அன்னத்தைப் போல் அழகானவள் தான். வீட்டுக்கு வெளியே அவளைக் காண்பது அரிது. கோயிலுக்குப் போவதானாலும் இரட்டை மாட்டு வண்டியில் கேட் முதலியாரின் பாதுகாப்புடன் தான் போய் வருவாள். முருகேசம் பிள்ளையைத் திருமணம் செய்யும் முன், அவளுக்கு மாமன் மகன் மைனர் மணியத்துடன் தொடர்பு இருந்ததாக ஊருக்குள் கதைத்துக் கொண்டார்கள். இதையெல்லாம் அறிந்து தான் மனைவியின் பாதுகாப்பு கருதி சுவரின் உயரத்துக்கும் இரும்பு கேட்டின் வலிமைக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்  முருகேசம்பிள்ளை.  “ஆறடி மதில் வீடு” , “அன்ன வாசா”, “கல் வீடு” , “கேட் முதலியார் வீடு”, “பேய் மதில் வீடு” இப்படி அடுக்கடுக்காக வீட்டுக்குப் பல பெயர்கள் அவ்வூர் வாசிகளால் சூட்டப்பட்டது. கேட் முதலியார் மறைந்து சில வருடங்களில் கேட்முதலியார் வீடு என்ற வீட்டுப் பெயர் மறையத் தொடங்கியது. அந்தச் சுவருடன் ஒரு வருஷத்தில் இரண்டு  தடவை கார்கள் மோதி இருவர் அதே இடத்தில் துடிக்கத் துடிக்க இறந்ததனால் பேய் மதில் வீடு என்ற பட்டம் வலுவடைந்தது. மதிலைக் காக்க அதற்குப் பக்கத்தில் ஒரு சூலம் வீட்டுக்காரர்களால் நடப்பட்டது. மதிலுக்கு செக்கியூரிட்டி வேலை செய்ய அச்சூலம் தோன்றியவுடன் சுவருக்குப் பெருமை. இனி ஒருவரும் கண்டபடி என்னோடு மோதி களங்கத்தை உண்டுபண்ண முடியாது என்ற தைரியம் அதற்கு.   முதலியாரின் மறைவிற்குப்பின் வீடு அவரின் ஒரே மகள் ஜெயலஷ்மிக்கு 1942ல் சீதனமாகக் கைமாறியது. முதலியாரின் பிணம் கேட்வழியே எடுத்துச் சென்றால் இன்னொரு பிணம் அதை தொடர வேண்டி வரும் என்று முதியோர்கள் ஆலோசனை சொன்னார்கள்.  வேலியோடு இருந்த சுவரின் ஒரு பகுதியை இடித்து, வழி அமைத்துப் பிணத்தை எடுத்துச் சென்றார்கள். பாவம் சுவர். தன்னை உருவாக்கியவருக்காக தன்னில் ஒரு பகுதியைச்  சிபிச் சக்கரவர்த்தியைப் போல் தியாகம் செய்தது. சிறிது காலம் அங்ககீனமாகச் சுவர் காட்சியளித்தது. அந்த இடைவெளியூடாகச் சிறுவர்கள் வீட்டு வளவுக்குள் வந்து மல்கோவா மாமரத்தையும், கொய்யா மரத்தையும் ஒரு கை பார்த்துச் செல்லத் தொடங்கினார்கள். தன்னால் திறமையாக வீட்டைப் பாதுகாக்க முடியாமல் இருக்கிறதே என்று சுவர் மனம் வருந்தியது. அதன் வருத்தத்தை உணர்ந்தோ என்னவோ கேட் முதலியாரின் முதலாம் திவசத்திற்கு முன்னரே சுவரின் சிதைவைப் பிளாஸ்டிக்  சர்ஜரி செய்யப்பட்டு திருத்தப்பட்டது. சுவரில் படர்ந்திருந்த பாசியையும் விளம்பரங்களையும் சுரண்டி எடுத்து, வெள்ளை அடித்துத் துய்மைப்படுத்திவிட்டார்கள். சுவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஏதோ அதிக காலத்துக்குப் பின் குளித்துப் புது ஆடை அணிந்தது போன்ற ஒரு பிரமை அதற்கு.  சில நாட்களில் சுவருடன் சேர்த்து இரு வாழை மரங்கள் நடப்பட்டு, மாவிலைத் தோரணம் கட்டி மேளமும் நாதஸ்வரமும் கேட்ட போது தான் சுவருக்கு விஷயம் புரிந்தது. முதலியாரின பேத்தி விஜயலஷ்மிக்கு கலியாணம் என்று. சுவர் ஓரத்தில் கிடந்த கலியாணவீட்டுச் சாப்பாட்டை உள்ளுர் சொறிநாய்களும் காகங்களும் போட்டிபோட்டுக்கொண்டு சாப்பிடுவதைக் கண்ட சுவருக்கு ஏதோ தான் இனாமாக சாப்பாடு போடுவது போன்ற உணர்வு. ஆனால் அந்தச் சொறிநாய்கள் சாப்பாட்டுக்குப்பின் தன் மேல் மலசலம் கழித்துவிட்டுப் போனபோது சுவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “நன்றி கெட்ட நாய்கள்” என்று மனதுக்குள் திட்டிக் கொண்டது.   விஜயலஷ்மியின் கணவன் ஒரு கட்டிடக்கலைஞர். அவருக்குச் சீதனமாகக் கிடைத்த வீட்டைத் திருத்தியமைக்க விருப்பம். மதிலை இடித்துப் புதுமையான வடிவத்தில் கட்டவேண்டும் என்று திட்டம் போட்டார். தனது விருப்பத்தை மனைவிக்கு எடுத்து விளக்கினார். விஜயலஷ்மி எதையும் தாயிடமும் பேத்தியாரிடமும் பேசி முடிவெடுப்பவள். திட்டம்; தாய்லஷ்மிக்குத் தெரியவேண்டி வந்தவுடன் அவள் கண்தெரியாத, 90 வயதாகியும் காது கூர்மையாக கேட்கக்கூடிய அன்னலஷ்மியிடம் விஷயத்தைக் கக்கினாள்.  “என்ன கதை கதைக்கிறாய்? இந்த வீடு உன் அப்பாவால் வாஸ்துசாஸ்திர முறைப்படி கட்டப்பட்டது. அந்த மதிலைப் பார். அது கூட நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து அத்திவாரமிட்டுக் கட்டப்பட்டது. எங்கடை வீட்டுக் கூரை பக்கத்து வீட்டுக் கூரையிலும் பார்க்க ஒரு முழம் உயரம். அது தான் இந்த வீட்டிலை நடக்கிறதெல்லாம் நல்லதாக நடக்குது. அந்த மதில் ஓரத்தில் இருக்கிற சூலம் கூட வீட்டைக் காக்கிறதிற்காக உன் அப்பாவால் வைக்கப்பட்டது. தம்பிக்குச் சொல்லு நான் உயிரோடை இருக்கும் மட்டும் வீட்டையும் மதிலையும் மாற்றி அமைக்க விடமாட்டன் என்று.” அன்னலஷ்மி தன் மேல் வைத்திருந்த பாசத்தைக் கேட்டுச் சுவர் பூரிப்படைந்தது.  மதிலை இடித்துப் புதுப்பிக்க முடியாததால் பாக்கியலஷ்மியின் கணவனுக்கு மனதுக்குள் கோபம். அதனால் சுவரை சினிமா போஸ்டர்களும், அரசியல் பிரச்சாரங்களும், தூஷண வார்த்தைகளும் அலங்கரித்தன. “சைக்கிளுக்குப் புள்ளடி, யானைக்குப் பொல்லடி”, “அம்மன் கோயில் பூசாரி அம்மன் நகையைத் திருடாதே” , “பாரளுமன்ற உறுப்பினரா? பாதாள குழுக்களின் தலைவனா?” இப்படிச் சுவையான பத்திரிகைத் தலையங்கங்கள் மதிலில் தோன்றின. வீதியில் நடப்போருக்குச் சுவர் பத்திரிகையாயிற்று.  கடவுளே என் உடம்பை எதற்காக இவர்கள் தீய காரியங்களுக்குப் பாவிக்கிறார்கள் என்று மனம் நொந்தது சுவர். பலர் சுவரில் உள்ள வாசகங்களை வாசிக்கத்  தன் முன் கூடி நிற்பதைக்கண்டு அவர்களைத் திட்டவேண்டும் போலிருந்தது சுவருக்கு.  அந்தக் காலக் கட்டத்தில் ஈழத்துப் போர் உச்சக் கட்டத்தை அடைந்தது. இந்திய சமாதானப் படை விடுதலைப் புலிகளை வேட்டையாடித் திரிந்த காலமது. பாக்கியலஷ்மி குடும்பம். பயத்தில் வீட்டைப் பூட்டிக்கொண்டு தற்காலிகமாக வெகு தூரத்துக்குச் சென்றுவிட்டார்கள். அன்னலஷ்மிக்கு வீட்டை அனாதையாக விட்டுப் போக விருப்பமில்லை.  ஒரு அமாவாசை இரவன்று. மூன்று  போராளிகள் தனக்கருகே எதையோ தோண்டுவதைக் கண்ட சுவருக்கு மனதுக்குள் பயம் வந்துவிட்டது. ஏதாவது செய்வினை சூனியம் செய்கிறார்களோ என யோசித்தது. ஆனால் நடந்தது வேறு. அடுத்த நாள் காலை அவ்வழியே இராணுவ வாகனத்தில் சென்ற ஐந்து இந்திய அமைதிப்படை வீரர்கள் கண்ணி வெடிக்குப் பலியானார்கள். அவர்கள் உடல்கள் சிதறித் தெறித்தது. சுவரும் வெடியில் சிதைந்து குட்டிச்சுவராயிற்று. கேட் முதலியார் போட்ட இரும்பு கேட், உருமாறி சுவரின் கற்குவியலின் மேல் பரிதாபமாகக் கிடந்தது. வீட்டின் கூரையின் ஒரு பகுதிக்குப் பலத்த சேதம். இந்திய இராணுவ வீரர்களின் சதையும் இரத்தமும் சிதைந்து குட்டிச்சுவரான சுவரில் தெறித்துக் கிடந்தன. எங்கிருந்தோ பறந்து வந்த காகம் ஒன்று சுவரில் ஒட்டிக் கிடந்த சதைத் துண்டொன்றை கொத்திக் கொண்டு பறந்து சென்றது. சொறிநாய்களும் தங்கள் பங்கை இடிந்த சுவரின் கற்குவியலைக் கிளறிச் சுவைக்கத் தயங்கவில்லை. ஒரு காலத்தில் உயர்ந்து கம்பீரத்துடன் நின்ற சுவர் குட்டிச்சுவராகி. உருமாறி. மயானமாகத் தோற்றமளித்தது. அடுத்தது தன் நிலை என்ன என்று சிந்தித்தது. மனிதனின் வாழ்க்கையுடன் தன்னையும் ஒப்பிட்டுக்கொண்டது. கண்ணிவெடியில் இடிந்து குட்டிச்சுவரான சுவரை மேலும் தரைமட்டமாக்கும் நோக்கத்துடன் தூரத்தில் வநதுகொண்டிருந்த இந்திய இராணுவத்தைச் சேர்ந்த புல்டோசர் வாகனத்தின் இரைச்சல் சத்தம் கேட்டு இடிந்த மதில் பெருமூச்சுவிட்டது.    கதை 5  பந்தின் பரிதாபம் []   அது ஒரு பெரிய விளையாட்டு மைதானம். ஒரு காலத்தில் எனக்குத் தொழிலைத் தேடித் தந்த இடம் என்பதை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. நான் ஒரு விளையாட்டு வீரன். விளையாடுவது எனக்கு சிறு வயது முதற்கொண்டே பிடித்தமான செயல். அது தான் நான் விரும்பிய பொழுதுபோக்கு. படிப்பில் நான் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்தேன்.  கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், டென்னிஸ், பில்லியர்ட்ஸ் போன்ற பலவகை விளையாட்டுகளை விளையாடும் சந்தர்ப்பங்கள் என்னைத் தேடி வந்தன. ஆனால் புட்பாலும் கிரிக்கெட்டுமே எனக்குப் பிரியமான விளையாட்டுக்கள்.  என் விளையாட்டுத் திறமையைக் கண்டு போலீஸ் சேவைக்கு தேர்ந்தெடுத்தார்கள்  சப்-இன்ஸ்பெக்டராக. போலீஸ் இலாக்காவில் சேவை விளையாட்டுப் பகுதியில் பயிற்சியாளராக என்னை நியமித்தார்கள். இந்த விளையாடடுகளில் முக்கியப் பொருளான பந்துக்கும் எனக்கும் ஏதோ உறவு இருந்து கொண்டு வந்ததை என் நண்பன் சொன்ன போது தான் உணர்ந்தேன்.  நான் போலீஸ் சேவையில் இருந்து இளைப்பாறிய பின்னர் பந்துக்கும் எனக்கும் இடையிலான உறவு அற்றுப்போகும் என நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு. கோல்ப் விளையாட வேண்டியதொரு  சந்தர்ப்பம் என்னைத் தானாகவே தேடி வந்தது. எனது இரசிகரான ஒரு பிஸ்னஸ்மன் நான் எந்த  விளையாட்டிலும் ஈடுபடாமல் இருப்பதைக்கண்டு தன்னோடு கோல்ப் விளையாட அழைத்தார். அவருடைய அழைப்புக்கு என்னால் மறுப்பு தெரிவிக்கமுடியவில்லை.  நான் கோல்ப் விளையாடுவதைக் கண்ட அந்த பிஸ்னஸ்மானுக்கு ஆச்சரியமாக இருந்தது.  “நீர் இதற்கு முன்பு கோல்ப் விளையாடியிருக்குறீரா?” அவர் என்னைக் கேட்டார்.  “நான் போலீஸ் சேவையில் இருந்து ரிட்டயராகு முன் கோல்ப் விளையாட வில்லை சார். ஆனால் பந்தோடு எனக்கு நெருங்கிய தொடர்பு  இருந்தது.  அதுவே எனக்குத்  தொழில் வாய்ப்பையும் கொடுத்தது” என்றேன்.  “என்ன நீர் சொல்லுகிறீர்?” அவர் புரியாமல் என்னைக் கேட்டார்.  நான் எப்படி புட்பால், கிரிக்கெட், வாலிபால், டென்னிசில் ஒரு திறமையான விளையாட்டு வீரனாக இருந்தேன் என்று அவருக்கு விளக்கியபோது தான் அவருக்கு நான் சொன்னது புரிந்தது.  . .. ... .. . அன்று சனிக்கிழமை. நான் இளமைக்காலத்தில விளையாடிய மைதானத்தைப பார்க்கச் சென்றேன். அந்த மைதானத்தில விளையாட்டுப் போட்டி என்றால் கூட்டத்துக்குக் குறைவில்லை. ஆனால் அன்று மைதானம் வெறுமையாக இருந்தது. மனிதர்கள் இல்லாத அந்த அமைதியான சூழலில் சில புறாக்களை மட்டுமே காணக்கூடியதாக இருந்தது.  தனிமையான அந்த இடத்தில் வெள்ளையும் கறுப்பும் கலந்த கால்பந்து ஒன்று கவனிப்பார் அற்று  கோல்போஸ்ட்  அருகே கிடந்தது. எனக்கு அதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அது போன்ற எத்தனைப் பந்துகளை நான் பார்த்திருப்பேன். உதைத்திருப்பேன். நான் சரியாகக் குறிவைத்து கோலுக்குள் பந்தை உதைத்துக் கைதட்டல் பெற்றிருக்கிறேன். அதை என்னால் மறக்கமுடியவில்லை. தனிமையாக இருக்கும் பந்தோடு பேசிப் பார்ப்போமே என்று அதை அணுகி என் பேச்சை ஆரம்பித்தேன்.  “எப்படியிருக்கிறாய், பந்து? உன் சொந்தக்காரர் உன்னை நிர்க்கதியாக விட்டு விட்டுப் போய்விட்டார்களா? அப்படி என்ன உனக்கு நடந்தது?”  “அதேன் ஐயா கேட்கிறியள். என்னைப் பாவித்த புட்பால் டீமுக்கு நான் நல்ல அதிர்ஷடத்தைக் கொடுக்கவில்லையாம். கடைசியில் நடந்த போட்டியில் அந்த டீம் கேப்டனின் உதைக்கு மதிப்புக் கொடுக்காமல் கோலுக்குள் நான் போகாததால் ஒரு கோலால் டீம் தோற்றுவிட்டதாம். நான என்ன செய்ய? அவர் சரியாகக் குறிவைத்து அடிக்காததால் கோல்போஸ்ட்டில்பட்டு, நான்  கோலுக்குள் போகாமல் வெளியேபோய் விழுந்தேன். அதற்கு நானா காரணம்?  “இப்போ விளங்கிறது உனக்கு ஏன் இக்கதி என்று. நல்ல இடத்தில் இருந்தால் மட்டுமே மதிப்பு. நீ சரிவர அவர்கள் விருப்பத்துக்கேற்ப நடக்காததால் உன்னை நிராகரித்து விட்டார்கள்.”  “அது மட்டுமல்ல எனக்கு இன்னொரு கவலை. என்னோடு டீமுக்குள் வந்த என் சினேகிதன் டீமின் அபிமானத்தைப் பெற்றுவிட்டான்.”  “எப்படி அவன் பெற்றான்?”  “அவன், அவர்கள் சொன்னபடி உதைவாங்கி ஒரு தடவையாவது கோலுக்குள் போகத் தவறவில்லை. அதனால் பல போட்டிகளில் டீமுக்கு வெற்றியே கிடைத்திருக்கிறது.”  “ஓகோ அப்படியா? இது தானப்பா அரசியலிலும் நடக்கிறது. நான் ஒரு கால்பந்தாட்ட வீரன் மட்டுமல்ல கிரிக்கட், வாலிபால், டென்னிஸ், விளையாடும்போது உன் சாதி ஆட்களோடு எனக்குத் தொடர்பு இருந்தது.”  “எங்களுக்கிடையே சாதியா? என்ன நீர் சொல்லுகிறீர் ஐயா?”  “உலகில் விளையாடும் பல விதமான விளையாட்டுக்களுக்கு ஏற்றவாறு உருவத்திலும், பருமனிலும, நிறையிலும், கலரிலும், பந்துகளை பாவிப்பதை நீ அறிவாயா?”  “நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன், நான் ஒருவன் தான் பந்து இனத்தைச் சேர்ந்தவன் என்று.”  “நான் சொல்வதைக் கேள். எனக்குத் தெரிந்த மட்டில் பந்துகள் எல்லாம் உருண்டை வடிவமல்ல. முட்டை வடிவத்தில் உள்ள பந்துகளையும் ஸாக்கர் போன்ற விளையாட்டில் பாவிப்பார்கள். மனிதர்களின் தோற்றத்தில் வித்தியாசம் இருப்பது போல், மனிதர்களில் மெல்லியவர்கள், குள்ளர்கள், குண்டர்கள், உயரமானவர்கள் இருப்பதுபோல் என்று சொல்வேன்.”  “கேட்கக் சுவாரசியமாக இருக்கிறது.”  “பந்து வடிவப் பொருளை விளையாட மாத்திரம் பாவிக்கிறார்கள் என்று நினைக்காதே. சுழலும் பந்து வடிவமுள்ள பால்பியரிங் (Ball Bearing) உராய்வை எதிர்த்துச் செயல்படக்கூடியவை. ஜிம்னாஸ்டிக் எனப்படும் உடற்பயிற்சிக்கு உருவத்தில் மிகப்பெரிய பந்தைப் பாவிப்பார்கள். சர்க்கஸ் கோமாளிகள், மந்திரவாதிகள், விஞ்ஞானிகள் கூட பந்துவடிவ உருவங்களைப் பாவிப்பார்கள். அது சரி, உன்நிறை என்ன என்று உனக்குத் தெரியுமா?”  “நான் என்னை நிறுத்துப் பார்த்ததில்லை. டீம் என்னைக் கடையில் போய்ப் பணம் கொடுத்து வாங்கியதாகக் கேள்விப்பட்டேன்.”  “சரி, நான் உனது நிறை, பருமன் பற்றிச் சொல்கிறேன் கேள். உனது சுற்றளவு 26 அல்லது 27 அங்குலம். நிறை சுமார் ஒரு இறாத்தல்.”  “இவ்வளவு எல்லோரிடமும் உதை வாங்கியும் என் சுற்றளவும் நிறையும் குறையவில்லையே, ஆச்சரியம் தான்!” பந்து சொன்னது.  “கிரிக்கெட் மட்டையால் அடி வாங்கும் பந்து உன்னை விடச் சிறியது. தக்கை என்ற கார்க்கினாலும், தோலாலும்  செய்யப்பட்டது. அதன் உருவம் இரு அரைக்கோளங்களின் இணைப்பால் உருவானது. வழக்கமாகச் சிவப்பு நிறமாகவும், இரவில் வெளிச்சத்தில் விளையாடும்போது  வெள்ளை நிறத்திலும் அமையும். ஒன்பது அங்குலச் சுற்றளவும், 163 கிராம் நிறையும் கொண்டது. இது டென்னிஸ் பந்தை விட நிறையும் சுற்றளவும் குறைந்தது.  “இவற்றைவிட பில்லயர்ட்ஸ், டேபிள் டென்னிஸ். கோல்ப் விளையாட்டுக்களில் பாவிக்கும் உன் இனத்தவர்கள் வேறுபட்ட நிறையும் உருவமும் கொண்டவர்கள். இப்போது உனக்குப் புரிகிறதா நான் ஏன் சாதியைப் பற்றிக் குறிப்பிட்டேன் என்று?”  “மிரட்டுவதைப் பந்து விளையாடுவது என்று சிலேடையாகச் சொல்வார்கள். அவ்வளவுக்கு என்னைக் காலால் உதைத்து, மட்டையால் அடித்துப் பெயர் வாங்குவது மட்டுமல்ல, மிரட்டுவதற்கும் பாவிக்கிறார்கள். என்ன மனிதர்கள் இவர்கள்?” பந்து குறைபட்டது.  “சரி சரி, எனக்கு என் நண்பரோடு கோல்ப் விளையாடப் போக நேரமாகிவிட்டது. வேறொரு நாள் நாம் சந்தித்து மேலும் பல விஷயங்கள் பேசுவோம். உன்னைக் கவனித்துக் கொள். நான் வருகிறேன்” என்று சொல்லிப் பந்திடம் இருந்து விடைபெற்றேன்.   கதை 6 சிலை [] ஊருக்கு நல்லது செய்து மாடாக உழைத்துத்  தன் நலத்தையும் கவனியாது தன் இனத்தவரை, பொருளாதாரத்தை,  வளர்த்த கட்சித்தலைவரினது  நாற்சந்தி ஒன்றில் அமைந்த சிலை. அவர் நல்ல பேச்சாளர். எழுத்தாளர். நடிகர். சுயநலம் என்ன என்று அறியாதவர். அவர் மறைவுக்குப் பின் அவர் நினைவாக அவர் தலைவராக இருந்த கட்சி அரசுப் பணத்தில் தமது கட்சித் தலைவர் நினைவாகச் சந்தியில் வைத்த வெண்கலச் சிலை அது. ஒவ்வொரு வருடமும் தலைவரின் மறைந்த தினத்தன்று. அவர் சிலையைத் தூசி தட்டிக் கழுவிச் சிலையருகே பெரிய கூட்டம் கூடி, போற்றிப் புகழ்பாடுவார்கள் பலர். பல மாலைகள் போடுவார்கள். பொன்னாடை கூட போர்ப்பார்கள். அதோடு சரி. பின் சிலை கவனிப்பாரற்று இருக்கும். காகங்கள் சிலையின் தலையில்  அடிக்கடி இளப்பாறி எச்சம் இடும். சொறிநாய்கள் சிலை முன்னாள்  தலைவருடையது என்று தெரியாமல் சிலைக்குக் கீழ் மலசலம் கழிக்கும். சில பிச்சைக்காரர்களுக்கு இரவில் தூங்க இடமில்லாது சிலைக்குக் கீழ் தான் படுக்கை. தன் கதியை நினைத்துச்  சிலை அடிக்கடி மூச்சு விடும்.  ஒரு நாள் சிலையை உருவாக்கியவன் அவ்வழியே வந்தான். தான் உருவாக்கிய சிலையைக் கண்டதும் சிற்பி அதைப் பார்த்துக்  கேட்டான்: “என்ன சௌக்கியமாக இருக்கிறீரா தலைவரே?”    “ஏதோ இருக்கிறேன் “ என்றது சிலை விரக்தியோடு.   “ஏன் உமக்கு என்ன குறை? நீர் யார் என்பதை மக்களுக்கு  நினைவூட்ட உமது பெயரையும், நீர் பெற்ற பட்டங்களையும், வகித்த பதவியையும் உம் சிலைக்குக்கீழ் பொன் எழுத்தில் பதித்திருக்கிறார்களே.  அதை வாசிக்கும் பலரும் உம்மைத்  தினமும் நினைவு கூர்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்  அல்லவா?”   “இருக்கலாம். ஆனால்…”   “ஆனால் என்ன? இதற்கு மேல் உமக்கு என்ன வேண்டும்?”   “என்னை வருடத்துக்கு ஒரு தடவை தானே கழுவிச் சுத்தப்படுத்தி மாலை போட்டு என் சாதனைகளைப் போற்றிப் பேசுகிறார்கள்” சிலை குறைப்பட்டது.   “அது போதாதா உமக்கு. வேறு என்ன வேண்டும் என்கிறீர்?”   “எனக்கு நல்ல பராமரிப்பு தேவை. போட்ட மாலைகள் காய்ந்து சருகாகி எனக்கு அவமானத்தைக் கொண்டு வருகிறது.”   “அதனால்?”   “இது மட்டுமல்ல, என் தலையைப் பார். இது என் தலையெழுத்து.  தலை முழுவதும் காகங்களின் எச்சங்கள்.”   “நீர் உயிரோடு இருக்கும் போது மக்களுக்குத் தங்குவதற்கு வீடுகள் கட்டிக் கொடுத்தீர். இப்போது காகம் உம் தலைமேல் உரிமையோடு வந்து தங்கி எச்சம் போடுகிறது.”   “அது மட்டுமல்ல. என் காலடியில் ஒரே துர்நாற்றம்.”   “அது எப்படி வந்தது?”   “நான் தெரு நாய்களின் மலசலம் செய்யும் இடமாகி விட்டேன். அதனால் எனக்குக் கவலை.  உயிரோடு இருக்கும் போது நான் மிகுந்த சுத்தம் பார்ப்பவன்.”   “கவலைப்படாதீர். வெகு விரைவில் நீர் இருக்கும் இடத்தில் வேறு சிலை வந்துவிடும்.”   “என்ன நீ சொல்லுகிறாய்?”   “நீர் தலைவராக இருந்த அரசியல் கட்சி இப்போது ஆட்சியில் இல்லை. நீர் தலைவராக இருந்த கட்சியின் ஆட்சிக்காலத்தில் உம்மைத் தோற்றுவித்தார்கள். இப்போது ஆட்சிக்கு வந்த புதுக் கட்சி மறைந்த தங்கள் கட்சியின் தலைவருக்கு இந்த இடத்தில் சிலை வைக்கப் போகிறார்களாம். என்னிடம் வந்து அவருக்கு சிலை செய்து தரும்படி ஓடர் கொடுத்திருக்கிறார்கள்.”   “என்ன நீ சொல்லுகிறாய்”?   “நீர் அதிக காலம் இச்சந்தியில் இருந்து விட்டீர். இந்த இடத்துக்கு புது சிலை வரவேண்டாமா? இது தான் அரசியல்” என்றான் சிற்பி சிரித்தபடி.   “என்றை இடத்தில் இன்னொரு சிலை வரட்டும். வரட்டும். எப்போதும் என்னைப் பார்த்த மக்களுக்கு மாற்றம் தேவைதான். வரப்போகும் சிலையையும் காலப்போக்கில் மக்கள் விரும்பாவிட்டால் மாற்றி விடுவார்கள். இது தான் ஜனநாயகம”, என்று சிலை சொல்லிற்று.   கதை 7  இரு பனை மரங்கள் [] “இயற்கையை ஊடுறுவிப் பார்! அப்போது உனக்கு எல்லாம் நன்றாகப் புரியும்”   - அல்பேர்ட் ஐன்ஸ்டையினின் பொன்வாக்கு     மனிதர்கள் எல்லோரும் ஒரே கருத்தைக் கொண்டவர்களாக இருப்பதில்லை. அவர்களது சிந்தனைகள் அவர்கள் செய்யும் தொழில் சம்பந்தப்பட்டதாகவே பெரும்பாலும் இருக்கும். எந்த காட்சியைiயும் பார்த்து வெவ்வேறு விதமாகச் சிந்திப்பார்கள். உதாரணத்துக்கு அறிவியல் அறிஞன் அல்லது ஒரு விவசாயி இயற்கையைப் பார்க்கும் பார்வயிலிருந்து ஒரு கவிஞனின் பார்வை வேறுபட்டது. அறிவியல் அறிஞன் இயற்கையை ஆராய்ச்சி நோக்குடன் பார்ப்பான். விவசாயி தனது விவசாய தொழில் நோக்கத்தோடு பார்ப்பான். சாதாரண மனிதன் இயற்கைக் காட்சியைப் பார்த்து மகிழ்வான். ஆனால் கவிஞனோ தான் மாத்திரம் பார்த்து மகிழாமல்  பிறரும் வாசித்து இரசிக்கும் சொல்லோவியம் ஆக்குகிறான். இதை அடிப்படையாக வைத்த உருவகக் கதை இது.   யாழ்ப்பாணத்தில் இருந்து வட்டுக்கோட்டை என்ற ஊருக்குச்  செல்லும் பாதையின் ஒருபுறம் வாவி, மறுபுறம் கற்கள் நிறைந்த கல்லுண்டாய் வெளி. வல்லைவெளிக்கு ஈடாகத் தோற்றமளித்த அந்த அமைதியான வெளியில் வாவிக்கு அருகே இரு உயர்ந்த பனைமரங்கள் ஒன்றை ஒன்று பிரியாத நிலையில் அருகருகே வானத்தில் உள்ள முகில்களை முத்தமிடுவது போல் காட்சியளித்தன. இம்மரங்கள் இப்போது இருக்கிறதோ தெரியாது.  சடைத்த பனம் ஓலைகள் சோழகக் காற்றின் தழுவலில் ஒரு இதமான  ரீங்காரத்தைக் காற்றில் பரவச் செய்தன. அம் மரங்களுக்கு அடியில் உள்ள பற்றைகள் தங்களுக்கும் அது போன்ற கம்பீரமான நிலை ஏற்படாதா என ஏங்கின. பாதையின் ஓரிடத்தில் இருந்து அவ்விரு மரங்களைப் பார்த்தால் ஒரு தனி மரமாகக் காட்சியளிக்கும். சற்று விலகி நின்று பார்த்தால் இரு மரங்களாகத் தோன்றும். இத்தோற்றத்தை இடமாறுதோற்றம் (Parallax) என்பர். வீதியில் செல்லும் பலதரப்பட்ட வழிப்போக்கர்கள் சற்றுநேரம் நின்று இயற்கையின் சிருஷ்டிப்பை ரசித்து தங்கள் கற்பனைரதத்தை ஓடவிட்டு,  மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்தினர். அவ்வெண்ணங்களின் பிரதிப்புகளைச் சற்று உற்று நோக்கின்:   இளம் தம்பதிகள்: "ஆகா... இதுவல்லவோ நெருக்கம். எம் வாழ்க்கை முழுவதும் இம் மரங்களைப் போல நெருக்கத்தோடு என்றும் நாம் பிரியாது இருக்க வேண்டும்.  என்ன அத்தான் சொல்லுகிறீர்கள்?”   இளம் காதலர்கள்: "ஒரு நிலையில் இரு மரங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மரமாகக் காட்சி தருவது எம்மிரு மனங்களும் ஒரு மனமாவது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது” இது காதலியின் கருத்து. “இருமனங்கள் ஒன்று சேர்ந்தால் இனி என்ன, திருமணம்தானே!” இது காதலனின் பதில்.   அவ்வழியே காரில் சென்ற ஒரு அரசியல்வாதி: "அடேயப்பா எவ்வளவு உயர்ந்த மரங்கள். நானும் அரசியலில் அந்த மரங்களைப் போல் எவ்வளவுக்கு உயர்ந்த நிலையை அடையமுடியுமோ அவ்வளவுக்கு அடையவேண்டும். செழிப்பான அந்த மரங்களைப் போல் நானும் செல்வத்தில் செழிக்க வேண்டும். எலலோரும் என்னைப் போற்றிப் புகழவேண்டும்."   ஒரு மூடநம்பிக்கையுள்ள சமயவாதி: "நிச்சயமாக இந்த இரண்டு மரங்களும் முற்பிறவியில் கணவன் மனைவியாகத் தான் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் இப்பிறவியிலும் இணை பிரியாது தோற்றமளிக்கின்றன. அவை செய்த கர்மாவின் பிரதிபலன் இது."    சூழ்நிலையைச் தனக்குச் சந்தர்ப்பமாக பாவிக்கும் திறமையுள்ள ஒரு வியாபாரி: "வீதி ஓரங்களில் தான் தோன்றி பிள்ளையார், வைரவர்,  முனியப்பர் போன்று இவற்றிற்கும்  தான்தோன்றிக் காதலர்கள் என நாமம் சூட்டி, இரண்டு சிலைகளும் உண்டியலும் வைத்து - இந்த இணைபிரியாத மரங்களைத் தரிசித்து உண்டியலில் பணம் போட்டுச் செல்பவர்கள், பூவும் மணமும் போல் பிரியாது வாழ்வார்கள் என்று விளம்பரம் போட்டால் ஏராளமான பணம் சேர வாயப்பு உண்டு.”   அவ்வழியே சென்ற வீடுகளுக்குக் கூரை செய்யும் தச்சன் தங்கராசு: "அழகான, முதிர்ந்த, வைரமான மரங்கள். இப்படியொன்றை அதிக காலமாகத்  தேடிக் கொண்டிருக்கிறேன். ஓவசியர் ஓங்காரமூர்த்தியின் இரண்டுமாடி வீட்டுக்கு உகந்த மரங்கள் இவை. இம் மரங்களை வெட்டித் துப்புரவாக்கி சிலாகை செய்தால் நல்ல விலைக்கு ஓவசியருக்குத் தள்ளி விடலாம்."   மதுவெறியில் தள்ளாடித் தள்ளாடி அவ்வழியே செல்லும் பொன்னுத்துரையின் மப்புக் கண்களுக்கு: "இதென்ன உவை இரண்டு பேரும் தள்ளாடினம். ஊவை இரண்டு பேருக்கும் நல்ல வெறிபோல தெரியுது. உவையளொடு ஒப்பிட்டுப் பாக்கும்போது எனக்கு அவ்வளவுக்கு வெறியில்லை போல இருக்குது. என்றை மனுசியைக் கொண்டுவந்து உந்தக் காட்சியைக் காட்ட வேணும். அப்ப தெரியும் அவளுக்கு ஆருக்கு வெறி அதிகம் எண்டு."   கோவில் திருவிழாவில் நடனமாடிவிட்டு அவ்வழியே செல்லும் சின்னமேளக்காரி சிந்தாமணியின் கண்களுக்கு: "இதென்ன சோழகக் காற்றிலை கூத்து ஆடினம். என்னை விடவே நல்லாய் ஆடினம்? என்றை இடுப்பை விடவே உவை இரண்டு பேரிண்டை இடுப்புகளும் மெல்லிசு?”   அவ்வழியே சென்ற சவரத் தொழிலாளி வினாசியின் கண்களுக்கு: "கனகாலம் உவை இரண்டு பேரும் முடிவெட்டவில்லை போல இருக்கு. தலைமுடி நல்லாய் வளர்ந்திருக்கு. எந்தக் கோயிலுக்கு நேத்திக்கடனோ தெரியாது. என்ன கூப்பிட்டிருந்தால் நான் வந்து வடிவாக வெட்டி விட்டியிருப்பேனே. கொஞ்சம் செலவு அவ்வளவு தான்."   அவ்வழியே ஜீப்பில் சென்ற இராணுவ அதிகாரி ஒருவர்: "உவை இரண்டும் சரியாக ஈராக் செய்த சுப்பர் துவக்குகளைப் (Super Gun)  போல அல்லவா இருக்குது. இது போல இரு சூப்பர் துவக்குகளை அரசு மூலம் வாங்கினால் மந்திரிக்கும் எனக்கும் நல்ல கொமிசன் கிடைக்கும். கன விடுதலைப் புலிகளைச் சுட்டு விழுத்தலாம்.”    அவ்வழியே சென்ற ஒரு கவிஞன் எண்ணத்தில தோன்றிய கவிதை:  மரத்துக்கு மரம் துணையா?  தனிமையில் சுகம் பெறுதலா?   தழுவலில் இன்பம் தேடலா?  வளர்ச்சியில் குளிர்ச்சி காண்பதா?  பலரின் பார்வைகளை ஈர்ப்பதா ?  சிந்தனைகள் பலர் மனதில் பூப்பதா?     அவ்வழியே சென்ற பொளதிக ஆசிரியர்: "அடடா என்ன அதிசயம். இன்று நான் வகுப்பில் விடலைகளோடு  இணைந்த பரிசோதனையில் இடமாறுதோற்ற வழு (Parallax Error) பற்றி விளக்க எவ்வளவு கஸ்டப்பட்டேன். இது நல்ல உதாரணம். மாணவர்களைக் கொண்டு வந்து காட்ட வேண்டும்"   அவ்வழியே சென்ற சூழலியலாளன் (Eenvironmentalist): “ஆகா இது போன்ற உயர்ந்த சடைத்த மரங்கள் சூழலுக்கு மிக முக்கியம். எவரும் இதை வெட்டாமல் பாதுகாக்க அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.”  அவ்வழியே சென்ற ஒரு புகைப்பிடிப்பாளன்: “இப்படி ஒரு காட்சியைத் தான் நான் இவ்வளவு காலமும் தேடிக்கொணடிருந்தேன். இம்மரங்களைப் படம் எடுத்து, “கண்டுகொண்ட காதல்” என்ற தலைப்போடு  போட்டிக்கு அனுப்பினால் நிச்சயம் பரிசு கிடைக்கும்.”   சிறுகதை எழுத்தாளர் ஒருவரின் பார்வையில்: "இவ்விரு மரங்களை வைத்து ஒரு காதல் கதையையே புனைந்துவிடலாம். தலைப்பு என்ன கொடுக்கலாம்? "கல்லுண்டாய் காதலர்கள்" என்ற பெயர் நல்ல பொருத்தம். கதையின் கருவில் அராலிக் கிராமத்தில, சாதி வெறி காரணமாகத் தற்கொலை புரிந்த காதலர்களை இணைத்து எழுதவேண்டும். அப்போது தான் கதையில் மண்வாசனை வீசும்.”   அவ்வழியே காரில் சென்ற உயர் அதிகாரி ஒருவர்: "இந்த இரு மரங்களையும் பார்த்தால் குறைந்தது எழுபது வருடங்ளுக்கு மேல் வயசு உள்ளதாகத் தெரியுது.  ஒரு வேளை பிரித்தானியர் இலங்கையை ஆண்ட காலத்தில் நட்ட மரமோ தெரியாது. எதுக்கும் அரசாங்க அதிபருக்கு இந்த இடத்தைச் சரித்திரப் பிரசித்தம் பெற்ற இடமாகப் பிரகடணப்படுத்த மனு கொடுப்போம். எனக்கும் பதவி உயர்வு கிடைக்கும்."   அவ்வழியே சென்ற தெய்வானை ஆச்சியின் பார்வையில்: "அங்கை பார்  கீழே கிடக்கும் காய்ந்த பனை ஓலைகளையும், மட்டையையும். எவரும் கவனிப்பார் அற்று கிடக்கு. ஒருத்தரும் இன்னும் காணவில்லையாக்கும். அப்ப நான உதை வீட்டுக்குக் கொண்டு போய் அவன் கனடாவில் இருந்து வந்திருக்கிற பேரனுக்குச் சுடுதண்ணி வைச்சு குடுக்கலாம். பனம்பழத்தில் பினாட்டும் பனங்காய் பணியாரமும் செய்து பழஞ்சோற்றுக்குக் கொடுக்கலாம். அவன் கனடாவிலை உதெல்லாம் கண்டவனே?"  *  **  ***  **  *   இரு காகங்கள் எங்கிருந்தோ பறந்து வந்து பனைமர உச்சிகளில் இருந்தன. அந்தச் சமயம் தொப் என்ற சத்தத்தோடு இரு பனம் பழங்கள் மரங்களில் இருந்து கீழே பத்தைக்குள் விழுந்தன. பத்தைக்குள் இருந்து இரண்டு முயல்கள் திக்குதிசை தெரியாது ஓட்டம் பிடித்தன. ஒரு காகம் மற்றைய காகத்தை பார்த்து சொல்லிற்று:  "பார்த்தியே பார்த்தியே... நாங்கள் இரண்டு பேரும் உந்த இரண்டு மரங்களை விட எவ்வளவு பலசாலிகள் என்று. நாங்கள் இருந்தவுடன் எங்களுக்கு பயந்து தங்கள் பிள்ளைகளைக் கூட கீழே தள்ளிப்போட்டினம். அது மட்டுமே, அங்கை பார் அந்த இரண்டு முயல்கள் தலைதெறிக்க ஓடுவது கூட எங்களுக்குப் பயந்துதான். இப்ப தெரியட்டும் யார் பலசாலி என்று."   அந்த நேரம் வீசிய சோழகக் சுழிக் காற்றில் இரு காகங்களுக்கு மரத்தில் இருக்கமுடியவில்லை. "சீ சீ,  இவைமேல் இருந்தால் நாம் பலமற்றவையாகிவிடுவோம். போவோம் வா" என்ற கூறிக்கொண்டு பறந்து போயின.    வருடங்கள் பல உருண்டோடின. அவ்வழியே சென்ற கிழவர் ஒருவர் தன் பேரனுக்கு மரங்கள் இருந்த இடத்தைக் காட்டி, “ரமேஷ்.. அந்த முறிந்து கீழே கிடக்கிற பனை மரங்களைப் பார்த்தாயா?” என்றார்.   "ஓம் தாத்தா...அவைக்கு என்ன நடந்தது? - அப்பா அடிக்கடி சொல்லுவார்- தான் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லுரிக்கு சைக்கிளிலை படிக்கப் போகும் போது இந்த மரங்களைப் பார்த்து அடிக்கடி அவற்றின் அழகை இரசிப்பதாக. ஏன் தாத்தா இந்த மரங்களுக்கு இந்த கதி?”   "அதேன் கேட்கிறாய். குண்டு வீச்சில் உந்த இரண்டு மரங்களையும் Anti Air Craft Gun என நினைத்து Air Force குண்டுவீசி அழித்துவிட்டார்கள். அந்த மரத்துக்கு கீழே மலம்சலம் கழிக்க வாயில் சுருட்டோடு இருந்த ஒரு கிழவனும் அந்த இடத்திலேயெ சரி. ஓரு வேளை அந்தக் கிழவனை Anti Air Craft Gun னை இயக்கும் விடுதலைப் போராளி என்று நினைத்தினமோ தெரியாது.”   கதை 8  பொன்னாடை,  மலர்வளையம், பிணப்பெட்டி   [] “சாந்தி” ஒரு பிரபலமான கடை. இறுதியில் மனிதனின் ஆன்மா சாந்தி பெறுவதை நினைவூட்டும் பெயர்.    பொன்னாடை, மலர்வளையம், பிணப்பெட்டி போன்ற முக்கியப் பொருட்களை ஈமச்சடங்கு நிகழ்வுக்காக விற்பனை செய்யும் கடை. குறுகிய நேரத்தில் தாங்கத்தக்க விலைக்கு ஏற்றவாறு  வாங்கக் கூடிய கடையாதலால், வாடிக்கையாளர்களுக்குக் குறைவில்லை. கடையின் விற்பனைப் பகுதியில் பொன்னாடை, மலர்வளையம், பிணப்பெட்டி ஆகிய மூன்றும், அன்று  நடக்கவிருக்கும் ஒரு தனவந்தரும், அரசியல்வாதியுமான  ஒருவரின் ஈமச்சடங்கு நிகழ்வுக்குப்  போவதற்குத் தம்மைத் தயார் செய்து கொண்டு இருந்தன. அவர்களிடையே நடக்கும் உரையாடல் தான் இது.    பிணப்பெட்டி: என்ன நண்பர்களே, என்னிடம் இருந்து சந்தன மணம் வீசுகிறதா? நான் ஒரு பிரபலமான அரசியல்வாதியும் தனவந்தருமான  ஒருவரின் உடலைச் சுமக்கப் போகிறேன். அவரின் கட்சி ஆதரவாளர்கள் பெரும்தொகை செலவு செய்து சந்தன மரத்தால் செய்த பிணப்பெட்டி வேண்டும் என்று என் முதலாளியிடம் கேட்டபடியால் என்னை அவர் தயார் செய்தார். அது மட்டுமல்ல, இறந்தவரின் பெயர், அவர் பெற்ற பட்டங்கள் . கட்சியில் அவர் தலைவரென்பதால்  பெட்டிக்கு வெளியே எல்லோரினது பார்வைக்கும்படும்படி  செய்யப்பட்டேன்.   மலர்வளையம்: நீ மாத்திரமே சுகந்த மணம் உள்ளவன் என்று பெருமைப்படாதே. நான் கூடத் தான் சுகந்த மணம் வீசுபவன். இறந்தவரின் கட்சிக்கொடியின் நிறத்தில் உள்ள மலர்களால் உருவாக்கப்பட்டவன். அவரின் பெயரும், அவர் வகித்த பதவியையும், கட்சிப்பெயரையும் எழுதிய லேபல் என்ற முகப்புச் சீட்டையும் சுமக்கிறேன். என்னோடு என் தம்பியும் கூடவே இருக்கிறான்.   பிணப்பெட்டி: உன் தம்பியா? புரியவில்லையே. கொஞ்சம் விளக்கமாகத் தான் சொல்லேன்.   மலர்வளையம்: நான் சொல்வது ஆறடி நீளத்துக்குத் தயாரித்த   ரோஜாப்பூ ,மல்லிகை, செவ்வந்தி போன்ற பூக்கள் கலந்த மலர் வளையம். இதைத் தான் அவரின் பிரேதத்தின் அருகே வைக்கப்போகிறார்,  கட்சியின் பொதுச் செயலாளர்.   பொன்னாடை: நீங்கள் உங்கள் சுகந்த மணத்தைப் பற்றி பெருமையாகப் பேசுகிறீர்களே, தங்கச்சரிகை வைத்து காஞ்சிபுரப்பட்டில்; உருவாக்கப்பட்ட நான் எவ்வளவு பெறுமதியம் அழகும் வாய்ந்தவன் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனது நிறமும், கட்சிக் கொடியின் நிறத்துக்குப் பொருத்தமாக அமைய வேண்டும் என்பது கட்சிக்காரர்கள் முதலாளியிடம் இட்ட கட்டளை. அதனால் பிரத்தியேகமாகக் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டவன் நான்.   பிணப்பெட்டி: அதுசரி எனக்குமேல்,  கண்ணாடி மூடிப் போட்ட பாதுகாப்பு இருக்கிறதைக் கவனித்தீர்களா? அது ஏன் தெரியமா?   மலர்வளையம்: நீ சொன்னால் தான் எங்களுக்குப் புரியும்.   பிணப்பெட்டி: எனக்குள் அடங்கப்போகும் அரசியல்வாதி ஆட்சியில் இருக்கும் போது அவரது போஸ்டர்கள் சாணத்தால் எதிர்க்கட்சியினால் அலங்கரிக்கப்பட்டன. அதுவுமில்லாமல் அவர் பேசிய கூட்டத்தில் கற்களும் செருப்பும் எறியப்பட்டது. அது போன்று ஒன்றும் அவர் உடலுக்கு இறந்த பின்னர் நடக்கக்கூடாது என்பதற்காகக் கண்ணாடி மூடியால் பாதுகாத்து இருக்கிறார்கள். ஒருவரும் ஊரிலை செய்வது போல் உடலைத் தொட்டு ஒப்பாரி வைக்க முடியாது.   பொன்னாடை: ஒப்பாரியா? அதென்ன? கொஞ்சம் விபரமாய்த் தான் சொல்லேன். நான் ஈமச்சடங்குகளில் இறந்தவரின் பெருமையைப் பற்றிப் பேச்சாளர்கள் பேசுவதைத் தான் கேள்விப்பட்டிருக்கிறேன்..   பிணப்பெட்டி : தாய், தந்தை, கணவன், பிள்ளை, உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்பஉணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகிறது. இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறிய முடியும். ஒப்பாரிப் பாடல்களின் இசை, விளம்பமும் மத்யமும் கலந்த ஒரு லய அமைப்பில் முகாரி, ஆகிரி முதலான இராகச் சாயலுடன் விளங்குகின்றது.   மலைர்வளையம்: எனக்குச் சினிமா பாடல் கேட்டு அலுப்புத் தட்டிப் போச்சு. ஒரு ஒப்பாரியைத்தான் கேட்போமே. உனக்குத் தெரிந்தால் ஒரு ஒப்பாரியைப் பாடேன்.   பிணப்பெடடி : ஒரு மனைவி தன்றை புருஷன் மறைந்ததுக்கு வைத்த ஒப்பாரியைப் பாடுகிறேன் கேளுங்கள்.   “ஆலமரம் போல அண்ணாந்து நிப்பேனு  நான் ஒய்யாரமா வந்தேனே  இப்ப நீ பட்ட மரம்போல  பட்டுப் போயிட்டையே.    பொட்டு இல்ல பூவில்லை  பூச மஞ்சளும் இல்ல  நான் கட்டின ராசாவே  என்ன தனியாக விட்டுத்தான் போனிங்க.    பட்டு இல்லை தங்கம் இல்லை  பரிமாற பந்தல் இல்ல  படையெடுத்து வந்த ராசா  பாதியில போரிங்களே    நான் முன்னே போரேன்  நீங்க பின்னே வாருங்கோ  என சொல்லிட்டு  இடம்பிடிக்கப் போயிதங்களா.    நான் காக்காவாட்டும் கத்தரனே,  உங்க காதுக்கு கேக்கலையா  கொண்டுவந்த ராசாவே  உங்களுக்குக் காதும் கேக்கலையா.    நான் கேட்ட நேரமெல்லாம்  ஆயிரம் ஆயிரமாய் தந்தனீங்கள்.  தங்கம் வைரமாய் எனக்குப் போட்டினீங்கள்  பினாமியில் ஊர் முழுவதும்  காணிகள், வீடுகள் வாங்கினீங்கள்  இப்ப அவை அரசு எடுக்கப் போகுதே  நான் என்ன செய்ய என் ராசாவே?     பொன்னாடை: நீ பாடிய பாடல் என் மனதை உருக்குகிறது. அழுகை வரும் போல் இருக்கிறது. அரசியலும் கலந்து இருக்கிறது. கடைசி சில வரிகள் உன் கற்பனையா?  பிணப்பெட்டி: இப்படி வந்திருப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரும் படி எல்லோராலும் சோகக் குரலில் பாடமுடியாது. இதற்கென ஒப்பாரி பாடி அனுபவம் வாய்ந்த கூலிக்கு மாரடிப்போர் உண்டு. ஒரு கிராமத்துக்கென தனிப்பட்ட கூட்டம் அது. கொடுக்கிற கூலிகட்கு ஏற்றவாறு பாடுவார்கள். நாலைந்து பேர் சுற்றியிருந்து கட்டிப்பிடித்துப் பாடுவார்கள். நீலிக் கண்ணீர் வடிப்பார்கள். கிளிசரினை கூடச் சில சமயம் அழுகை வரப் பாவிப்பார்கள். இனத்தவர்களைக் கண்டதும் தம் குரலை உயர்த்தி ஒப்பாரி வைப்பார்கள் பாடும் போது தமது இறந்த கணவனையோ பிள்ளையையோ நினைத்துப் பாடுவதால் அவர்களுக்கே அழுகை வந்துவிடும். கூலி வாங்கி ஒப்பாரிவைக்கும் அவர்களுக்கு இறந்தவர் பற்றி விபரம் தெரியாது.   மலர்வளையம்: கிராமத்து இலக்கியம் இன்னும் மறையவில்லை போல. பேச்சாளர் இறந்தவரைப் பற்றி பேசும் போது பீதாம்பரம் என்ற என்னை தங்களுக்குப் போர்த்தி பேச வைப்பார்கள் என நினைப்பார்கள். ஆனால் அந்தப் பொன்னாடை இறந்தவரின் உடலுக்கு மாலை போட்டு, பொன்னாடையால் போர்ப்பார்கள். பாவம் நன்றி சொல்ல முடியாத நிலை அவருக்கு.   பிணப்பெட்டி: அது சரி, திரு பீதாம்பரம் உம்மை முக்கிய புள்ளிகளுக்கு போர்ப்பதன் அர்த்தம் என்ன?   பொன்னாடை: பீதாம்பரம் என்று பெருமையாக அழைக்கப்படும் நான் வடமொழியான சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்டவன். பீதம், அம்பரம் என்று எனப் பெயரைப் பிரித்தால், பீதம்  என்பது தங்கவண்ணம் என்றும் அம்பரம் என்றால் துணி என்றும் பொருள்படும். தோள்களைச் சுற்றிப் போர்த்துக் கொள்ளவோ அல்லது இடுப்பில் கட்டிக்கொள்ளவோ பயன்பட்ட பட்டுச் சேலையிலான துணி. தற்காலத்தில் பொன்னாடை என்று பரவலாகப் பேசப்படுகிறது. தங்க இழைகளைக் கலந்து நெய்திருப்பர். அல்லது துணிக்கரையாவது தங்கம் கலந்து நெய்யப்பட்டிருக்கும். மொத்தத்தில் இந்தத் துணி தகதக என்று மின்னியபடி மிகக் கவர்ச்சிகரமாக இருக்கும். விசேட நாட்களில் பயன்படுத்தினர். இந்து மதத் தொடர்பான காரியங்களைப் பட்டாடை, பீதாம்பரம் அணிந்து செய்வது சிறந்த பலனைக் கொடுக்கும் எனக் கருதப்பட்டது. பொன்னாடை(பீதாம்பரம்) போர்த்திப் பொற்கிழியும் வழங்குதல் பண்டைக் காலத்தில் மன்னர்கள், தம்மை அண்டிய  புலவர்கள் முதலானோருக்குச் செய்த மரியாதையாகும்.   மலர்வளையம்: இந்த நிகழ்ச்சியில் பேசும் பேச்சாளர்கள் சிலர் சிலேடையாகப் பேசுவார்கள். நான் கேள்விப்பட்டேன் அண்மையில் இறந்த தமிழ்நாட்டு முதல் அமைச்சர்; மரணத்துக்கான இரங்கல் செய்திகளில் கவனத்தைக் கவர்ந்த வரிகள்: 'சந்தியாவின் மகளாகப் பிறந்தவர் இந்தியாவின் மகளாக இறந்தார்'. 32 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி படுகொலை செய்யப் பட்டபோது தமிழ் வார இதழ் ஒன்று அட்டையிலேயே அவருக்கான அஞ்சலிக் 'கவிதை'யை வெளியிட்டிருந்தது. அந்தக் 'கவிதை' இப்படி முடிந்தது: 'பிரியதர்சினி, உன்னையும் பிரிய நேர்ந்ததே'. இந்திரா காந்தியின் முழுப் பெயர் இந்திரா பிரியதர்சனி என்பது இங்கு நினைவுகூரத் தக்கது.   பொன்னாடை: அதெல்லாம் சரி. நாங்கள் எல்லோரும் இறந்தவரோடு உடன்கட்டை ஏற வேண்டியது தானா? எங்களுக்கு அஞ்சலி செலுத்த ஒருவரும் இல்லையா?   பிணப்பெட்டி: சத்தம் போட்டுப் பேசாதே. அதோ இறந்தவரின் கட்சியாளர்கள் வந்துவிட்டார்கள், எங்களைக் கூட்டிப்போக. இது நாம் மனித இனத்துக்குச் செய்யும் சேவையாக இருக்கட்டுமே.   கதை 9  காகமும் – நாயும் [] அன்று புரட்டாசிச் சனிக்கிழமை. அம்மாவும் அப்பாவும் புரட்டாசிச் சனிக்கிழமைக்கு விரதம். இருவரும் காலை, வண்ணார்பண்ணை வரதராஜப் பெருமாள் கோயிலுக்குப் போய் நல்லெண்ணை எரித்து, சிவனுக்கு அர்ச்சனை செய்து வந்தார்கள். அவர்கள் தங்களோடு என்னையும் வரும்படி கூப்பிட்டபோது நான் சாக்குப் போக்குச் சொல்லிக் கடத்திவிட்டேன். அப்பாவுக்கு ஏழரைச் சனி கடைக்கூறாம். அம்மா சொன்னாள். முதற் கூறில் அக்சிடென்ட் பட்டவர் நல்லகாலம் தன்றை மாங்கல்யப் பாக்கியத்தால் அவர் உயிர் தப்பியது ஏதோ கடவுள் புண்ணியம் என்பாள் அவள். அடிக்கடி. ஏழரைச் சனி முதல் கூறு நடக்கும் போது காணியில் பங்கு கேட்டு  அப்பா போட்ட கேஸில் தோற்றுப் போனார். நடுக்கூறு நடக்கும் போது தான் அப்பாவுக்கு புரமோசன் கிடைத்தது. அக்காவுக்குத் திருமணம் நடந்தது. கனடா மாப்பிள்ளை வேறு. அந்த நல்ல காரியங்களைப் பற்றி அம்மா பேசமாட்டாள். அம்மா பயப்பட்டாள்,  கடைக்கூறில் என்ன நடக்குமோ என்று. இதுக்கெல்லாம் காரணம் ஊர் சாஸ்திரி சதாசிவம் தான். மாதத்துக்கு ஒரு தடவை அவரிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து ஆலோசனை கேட்காவிட்டால் அம்மாவுக்குத் திருப்தியில்லை. அவர் சொன்னபடி சனிக்கிழமை விரதப் பைத்தியம் அவளைப் பிடித்துக் கொண்டது. சதாசிவத்தாரின் ஆலோசனைப்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் அப்பாவுக்காக அம்மா விரதம் இருந்தாள். எனக்குத் தான் வயிற்றில் அடி. சனிக்கிழமையில் தான் மார்க்கண்டன் கிடாய் வெட்டிக் கூறு போடுகிறவன். பனை ஓலையிலை கொழுப்போடை கட்டித் தரும் அந்த இறச்சியை ருசித்து சாப்பிடாமல் இந்தச் சனிக்கிழமை விரதம் தடுத்துவிட்டது. ஒரே ஒரு சனிக்கிழமை சித்தப்பா வீட்டுக்குப்போய் அம்மாவுக்குத் தெரியாமல் அந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்தனான். அம்மாவுக்குத் தெரிந்திருந்தால் வீட்டுக்குள்ளை என்னை விட்டிருக்கமாட்டாள். கோயிலுக்குப் போய் வந்து, சமைத்து, கையில் வாழையிலையில் காகத்துக்குப் படைக்கச்  சோறு கறியுடன் முற்றத்துக்கு அம்மா போவதைக் கண்டேன். கத்தரிக்காய் பொரித்த குழம்பு, முருங்கையிலை வறை, பாவக்காய்  பொரியல் , துவரம் பருப்பு கறி , புடலங்காய் வதக்கல், உருழைக் கிழங்கு பிரட்டல் வாசனை மூக்கைத் துளைத்தது. சனிக்கிழமை விரதத்துக்கு முருங்கையிலைக் கறி அவசியம் இருந்தாக வேண்டும். இது அம்மாவின் நம்பிக்கை. சுத்த பசு நெய்யின் மணம் கூட வீசியது. அடித்தது யோகம் காகங்களுக்கு.  வீட்டில் பழைய பராசக்திப் பாடலான கா கா கா என்ற பாடல் ரேடியோவில் கேட்டது. அவவின் கா கா கா என்று காகத்தை அன்பாக விருந்துக்கு கூப்பிடும் அழைப்பும் பராசக்தியில் வரும் கா கா பாடலையும் கேட்டவுடன் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. தாளத்தில் தான் என்ன ஒற்றுமை.   இந்தக் காகங்கள் பொல்லாதது. சமயம் பார்த்துப் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஓடி ஒளிந்துவிடும். பல வீடுகளில் காகங்களுக்கு வரவேற்பு.  பாவம் அம்மா தொண்டை கிழியக் கத்திய பிறகு எங்கையோ இருந்து பக்கத்து வீடுகளில் வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு வேண்டா வெறுப்பாக துணிமணிகள் காயப் போட்ட கொடியில் வந்தமர்ந்தது ஒரு காகம்.   “ஐயோ அம்மா பசிக்குது. இரண்டு நாளாகப் பட்டினி. ஏதும் சாப்பாடு இருந்தா போடுங்கோ”, பிச்சைக்காரன் குரல் கேட்டடியில் கேட்டது. அவன் போட்ட சத்தத்தில் காகம் பறந்து போய் விடுமோ என்ற பயம் அம்மாவுக்கு. ”ஏய் ஒரு மணித்தியாலம் கழித்து வா பார்ப்பம்” என்றாள் அம்மா. மனிதனின் பசியை விட காகத்தின் பசி தான் அவளுக்கு முக்கியமாகப் பட்டது. எல்லாம் சனிபகவான் செய்கிற வேலை.  மதில் மேல் நாய்க்கு எட்டாதவாறு சாப்பாட்டை வைத்தாள். அவள் முகத்தில் ஒரு திருப்தி. சனி பகவான் வந்துவிட்டார் என்ற திருப்தியோ என்னவோ. நடப்பதை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.    “உன் பொறுமைக்குப் பாடம் கற்பிக்கிறேன். போன கிழமை காய வைத்த மிளகாயை கிளறியதுக்கு என்னைக் கல்லால எறிந்து துரத்திய உன்னை பழி வாங்காமல் நான் விடப் போவதில்லை.  நான் சாப்பிட்டால் தான் நீ சாப்பிட முடியும். நான் பக்கத்து வீட்டை சாப்பிட்டு விட்டேன்” என்பது போல் சாப்பாடு இருந்த பக்கம் பாராமல் வேறு பக்கம் தன் தலையைத் திருப்பி வைத்திருந்தது அக்காகம். பழிவாங்க நினைத்த அக்காகம் என்ன நினைத்ததோ என்னவோ கொடியில் காயப் போட்டிருந்த அப்பாவின் வெள்ளை நிற மல் வேட்டியில் தன் எச்சத்தால் கோலம் போட்டது. அம்மா பார்த்துவிட்டாள். என் செய்வது வந்ததோ ஒரே ஒரு காகம். அதன் மேல் கல் எடுத்து வீசி தன் கோபத்தைத் தணிக்க முடியாதே, அதுவும் புரட்டாசி சனிக்கிழமை அன்று. சனி பகவானுக்கு எள் எண்ணை எரித்தப் பிறகு காகம் செய்த செயலுக்காக அதை தண்டிக்கலாமோ?. அவர் கோபிக்க மாட்டாரோ? அப்பாவுக்கு இன்னும் ஏழரைச் சனி முடியவில்லை. காகம் கோபப்பட்டு சனிபகவானுக்குக் கோள் மூட்ட, அவர் எதாவது எக்கச்சக்கமாக கடைக்கூறில் செய்து விட்டால்? அப்பாவுக்கு ஏழரைச் சனி முடியும் மட்டும் கவனமாக இருக்கும் படி சாஸ்திரி கூட எச்சரிக்கை செய்தவர். அவள் அதையெல்லாம் யோசித்திருக்க வேண்டும். விருந்துக்கு வந்ததோ ஒரே ஒரு காகம். அதை ஆதரவாக வரவேற்று சாப்பாட்டைக் கொடுக்காவிட்டால் இன்று நாங்கள் பட்டினி. அது சாப்பிட்டு ஏவறை விட்ட பிறகு தான் எமக்கு அம்மா சாப்பாடு போடுவாள். இல்லாவிட்டால் அவள் சுவையாக சமைத்த கறிச்சோறு ஆறிப் போய்விடும்.   “அம்மா, காகங்களுக்கு மரக்கறிச் சோறு பிடிக்காது. மீன் அல்லது இறைச்சி கறி வைத்தால் அவை மணத்துக்கு உடனே வந்திடும்” என்றேன் நான் கிண்டலாக.   “டேய் நீ வாயை மூடு. உனக்குத் தான் இதிலை நம்பிக்கையில்லலை என்றால் சும்மா இருக்க வேண்டியது தானே” அம்மா என்னை அதட்டினாள்.   பாவம் எங்கள் வீட்டு ஜிம்மிக்கு கூட பசி. பாவம் அதுவும் வீட்டோடை விரதம். நாக்கை வெளியே நீட்டியபடி தனக்கு அதில் ஒரு பங்கு கிடைக்காதா என்று தவித்து நின்றது. கலியாணவீட்டு மிச்சச் சாப்பாடும், ஹோட்டல்களில் எஞ்சி இருந்த சாப்பாட்டையும் ஒரு கை காகங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடும் ஜம்மிக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் காகங்களுக்கு ஏன் இந்த தனிச் சலுகை என்பது விளங்காத புதிராக இருந்தது. லொள் லொள் என்று அடிக்கடி குரைத்தது. கொடியில் இருந்த காகத்தை  கேட்டபோது அது சொல்லிற்று:  “ஏய் ஜிம்மி!  நாங்கள் சர்வ வல்லமை படைத்த சனிபகவானின் அலுவலக வாகனம். அதாவது ஒபிசல் வெகிக்கல். அவர் நினைத்தால் தன் ஏழரை வருட ஆட்சியில் ஆட்களை ஆட்டி வைக்க முடியும். என்னை தாஜா செய்தால் நான் அவருக்கு சிபாரிசு செய்து கஷ்டத்தை அவர் ஆட்சி காலத்தில் கொடுக்காமல் செய்து விடுவேன். அதற்காக எனக்கு ஒரு தனி மரியாதை.”   “ஓ அப்ப ஒரு வித ஊழல் என்று சொல்லேன்” என்றது ஜிம்மி.   “ஏய் ஜம்மி, அதிகம் பேசாதே. உனக்கும் பிரச்சினையை தரச் சொல்லுவன்.”   “என்ன என்னை மிரட்டுகிறாயா? நான் எல்லோரையும் பாதுகாக்கும் வைரவரின் வாகனம். அவர் இருக்கு மட்டும் எனக்கென்ன பயம்?”   “அப்படியென்றால் வைரவருக்குப் பொங்கிப் படைக்கும் போது உனக்கு என்னைப் போல் ஏன் சலுகை காட்டுவதில்லை?”   “ஏன் என்றால் உன்னைப் போல் நன்றியில்லாதவன் அல்ல நான். நாய் ஒரு நன்றியுள்ள மிருகம் எனக் கேள்விப்பட்டிருப்பியே. அது தான் என்னை அன்பாய் வீட்டில் வளர்க்கிறார்கள். உனக்கு வருஷத்தில் சில தினங்களுக்குத் தான் மரியாதை கொடுக்கிறார்கள். மற்ற நாட்களில் கல் எறிந்து துரத்திவிடுவார்கள்,” ஜிம்மி தன் கௌரவத்தை விட்டுக் கொடுக்கவில்லை.   அம்மாவுக்குக் காகம் சாப்பிடாமல் ஜிம்மியுடன் பேசிக் கொண்டிருந்தது புரியவில்லை. ஜிம்மி தொடர்ந்து குரைத்தது. காகம் கரைந்தது. இரண்டும் தொடர்ந்து பேசிக் கொண்டன. அவர்கள் பார்வையில் எனக்குப் புரிந்தது அவர்களுக்கிடையே உள்ள கௌரவப் பிரச்சினை என்று.   “ஏய் ஜிம்மி என்னைப் பற்றி மகா கவி பாரதியார் கூட காக்கைச் சிறகினிலே.. என்று பாடியிருக்கிறார். என் நிறத்தின் அழகைக் கண்டு ரசித்திருக்கிறார்.. அதோ கேட்டாயா அந்த காக்கா பாடலை. அது கூட நடிகர் திலகம் தன் முதல் படத்தில் பாடியது. அந்தப் படம் வந்தபோது எங்களைப் பார்த்து ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகப் பாடுவார்கள்.”   “ஒற்றுமையா?”   “ஆமாம். உங்களைப் போல் நாலு பேர் கூடினால் வள் வள் என்று குரைத்து, கடித்து, சண்டை போடமாட்டோம். பிரச்சனையெண்டவுடன் கா கா கா என்று ஒரு குரல் கொடுத்தால் போதும். நாலு திசையில் இருந்தும் எம்மினம் பறந்து வந்திடும். ஒரு நாள் இப்படித்தான் ஒரு சிறுவன் மரத்தில் ஏறி கூட்டில் உள்ள என் முட்டைகளைக் களவாடப் பார்த்தான். எனது சகோதரி அதைக் கண்டு விட்டாள். உடனே அவள் போட்ட   கூக்குரலில் என் சொந்தக்காரர், நண்பர்கள் எல்லோரும் பறந்து வந்து சிறுவன் தலையில் கொத்தோ கொத்தி இரத்தம் வழிய சிறுவனை ஓடச் செய்து விட்டார்கள். சாப்பாட்டைக் கூட பகிர்ந்துண்ணுவோம்.” என்றது பெருமையாக காகம்.   “ஓகோ. ஆனால் என்னைக் குளிப்பாட்டி, தலை வாரி கவனிப்பது போன்ற மரியாதை உனக்கு நடப்பதில்லையே.”   “ஏன் இல்லை? என் பெயரில் யாழ்ப்பாணத்தில் காக்கைத் தீவு என்ற பெயர் உள்ள கடலோரப் பகுதி கூட உண்டு. கிட்டடியில் கொழும்பில் என் இனத்தவர்கள் சிலர் தீடீரென்று இறக்கத் தொடங்கினர். உடனே மாநகரசபை அதற்கு காரணம் கண்டு நடவடிக்கை எடுத்தது. நாம் நகரைச் சுத்தம் செய்யும் தொழிலாளிகளுக்கு ஒரு விதத்தில் உதவி செய்கிறோம். உன்னைக் கண்டால் பிடித்து, கூட்டுக்குள் அடைத்து, கொண்டு போய் விடுவார்கள். மக்களை விசராக்கி விடுவாய் என்ற பயம் வேறு.”  “ஏய் அப்படிச் சொல்லாதே. நீ கூட தொற்று நோயைப் பரப்பி விடுவாய் என்று சனங்கள் பயப்படுகிறார்கள்.”   “நான் பிறருக்கு உதவி செய்யும் இனத்தைச் சேர்ந்தவன். குயில் கூட என் கூட்டில் தான் முட்டையிடும். நான் அடைகாத்து அதன் முட்டைகளைப் பொரிக்க வைப்பேன். குஞ்சுகள் வெளி வந்ததும் அவை வளரும் மட்டும் தாதியாக கவனிப்பேன். நீ அப்படி ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறாயா?”   “ஏன் இல்லை. என் வீட்டு எஜமானின் குழந்தைகளை என்னை நம்பி எத்தனை தடவை தனிமையாக விட்டுப் போயிருக்கிறார்கள். அது தெரியுமா உனக்கு?”   “ஏய் ஜிம்மி உன்னைப்பற்றி அதிகம் புழுகாதே. என்னைப் பற்றிய காகமும் நரியும் என்ற பிரபலமான கதை கேள்விப்பட்டிருக்கிறாயா?”   “ஏன் இல்லை. நீ நரியால் ஏமாற்றப்பட்ட கதையைத் தானெ சொல்லுகிறாய். அந்த வடைக்கு என்ன நடந்தது?”   “அடேய் ஜிம்மி, அதையல்ல நான் சொல்வது. ஏ.யீ மனோகரனின் பிரபலமான இலங்கைக் காகத்தின் பாடலில் வந்த கதையைப் பற்றி. நரிக்குக் காதுலை பூ வைத்துவிட்டுப் போன புத்தியுள்ள இலங்கை காகத்தின் மொடர்ன் கதை அது.”   அவர்களிடையே நடந்த சம்பாஷணை அம்மாவின் பொறுமையைச் சோதித்தது. ஜிம்மி காகத்தை சாப்பிட விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. காகமும் கரைந்தபடி இருந்தது. அவைகளுக்கிடையே என்ன பேசுகிறார்கள் என நான் கற்பனை செய்துகோண்டேன்.  அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது. கீழே கிடந்த கல்லைத் தூக்கி ஜிம்மி மேல் எறிந்து “ஓடிப் போ நாயே”  என்று துரத்தினாள்.  அது வள் வள் என்று கதறியபடி ஓடியது. பார்க்கப் பரிதாபமாகயிருந்தது. அடுத்த புதன் கிழமை அரசடி வைரவர் வடைமாலை சாத்தி பொங்கல்.. அது தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அப்போ பார்ப்போம் ஜிம்மிக்கு அம்மா மரியாதை செய்கிறாளா என்று.   ஜிம்மி போனபின்பும் கொடியில் இருந்த காகம் சாப்பிட மறுத்தது. அம்மாவின் கா கா என்ற பரிதாபமான ஓலத்தைக் கேட்டு மனம் இரங்கி இன்னும் இரண்டு காகங்கள் சாப்பிட மதிலில் வந்தமர்ந்தன. கொடியில் இருந்த காகமும் அவையளோடை சேர்ந்து உண்ண ஆரம்பித்தது.   “கனகம் எனக்குப் பசி வயித்தைப் பிடுங்குது” என்று அப்பா உள்ளுக்குள் இருந்து சத்தம் போட்டார். எனக்கு மனதுக்குள் சந்தோஷம். சாப்பிட வீட்டுக்குள் அம்மாவுக்குப் பின்னால் போனேன். ஜம்மியும் அப்பா சொன்னது விளங்கியோ என்னவோ என் பின்னால் வந்தது. நல்லகாலம் எல்லா காகங்களும் முழுதையும் சாப்பிடும் மட்டும் அம்மா நிற்கவில்லை.   காகங்கள் இல்லாத தேசங்களில் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் காகத்துக்கு சாப்பாடு வைக்க என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். பதில் கிடைத்தது. கலியாணத்தில் பொம்மைப் பசுக் கன்று, வாழை மரம், முருக்கை மரம்  வைத்து கலியாணச் சடங்குகள் செய்வது போல் பொம்மைக் காகத்துக்கு சாப்பாட்டை வைப்பார்கள் போலும் என்றது என் மனம். கிட்டடியில் கனடாவில், புரட்டாசிக் சனிக்கிழமை அன்று இரண்டு காகத்தை எங்கிருந்தோ கொண்டு வந்து கூட்டுக்குள் அடைத்து வைத்து கோயிலில் சாப்பாடு வைக்க இரண்டு டொலர் எடுத்ததாக என் அத்தான் போன் செய்த போது சொன்னார். கேட்கும் போது வேடிக்கையாகயிருந்தது. எல்லாம் மக்களின் மூட நம்பிக்கை தான். அதை வைத்து கோயில்கள் பிஸ்னஸ் செய்யினம்.  “காக்கைச் சிறகினிலே நந்தலாலா, மடைமைத் தனம் தோன்றுதடா நந்தலாலா” என்று எனக்குள் பாரதியார் பாடலை திருத்திப் பாடிக்கொண்டேன்.   கதை 10  மலையும் மலை ஏறியும் [] அந்த  மலைத் தொடர்களுக்குள் தனித்து நின்ற  உயர்ந்த மலையின் கம்பீரத்தின் மேல் மோகம் கொண்டு மேகங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு மலையைத் தழுவி முத்தமிட்டுக்கொண்டிருந்தன. சில கருமேகங்கள்  பூரிப்பில் அதன்மேல் ஆனந்தக்கண்ணீர் வடித்தன. அக் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. இதமான குளிர் காற்றின் பரிசத்திலும் தேகத்தின் அணைப்பிலும் மூழ்கிக்கிடந்த அந்த மலையை தன் ஊன்றுகோலினால் குத்தி உழுப்பினான் அந்த மலையேறி.  முதுகில் பாரத்தையும்  சுமந்து கொண்டு கீழ்மூச்சும் மேல்மூச்சும் வாங்கியவாறே ஏறும் மனிதனைப் பார்த்துச் சிரித்தது மலை.   “ஏன் சிரிக்கிறாய் நீ?” என்றான் மனிதன்.   “யார் நீ? எதற்காக உன் ஊசி போன்ற ஊன்றுகோலினால் என்னைக் குத்தி எழுப்புகிறாய்? என் மேல் ஏறுவதற்கு இவ்வளவு மூச்சு வாங்கிறாயே. அதோ பார்த்தாயா என் மேல் ஏறி நின்று இலகுவாகப் புல் மேயும் ஆடுகளை. அதை நினைக்கத்தான் சிரிப்பு வந்தது“ என்றது மலை.   “அவை மலை ஆடுகள். அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்கள் வாழக்கையை அமைத்திருக்கின்றன. அது சரி நீ தான் இங்குள்ள மலைகளுள் உயர்ந்தவனாமே. உன் பெயர் என்ன?  உன் உயரம் என்ன?” என்று கேட்டான் மனிதன்.   “தெரிந்திருந்து தான் என்னைப் பரிசோதிக்கக் கேட்கிறாயா? அல்லது தெரியாமல் தான் கேட்கிறாயா?”  சிரித்தபடி கேட்டது மலை.   “கிட்டத்தட்ட உன்னைச் சுற்றி உள்ள  மலைகள் எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கின்றன. அது தான் கேட்டேன். உன் உச்சியைத் தொட்டு என் நாட்டின் கொடியை பறக்க விடப் போகிறேன். நீதான் கண்ணாடியில் அழகாகத் தோற்றமளிக்கிறாயே.”  “கண்ணாடியா. என்ன நீ சொல்லுகிறாய்?”   “ஆமாம். உன் அழகையும் கம்பீரத்தையும் உன் கீழிருக்கும் களங்கமற்ற நீர்த்தடாகத்தில் பார்த்திருக்கிறாயா. எத்தனை பேர் உன்னழகைப் படம்பிடித்துச் சென்றிருக்கிறார்கள் தெரியுமா?”   மலை ஏறுபவனின் முகஸ்துதியால் மலைக்குத் தன்னைப் பற்றிப் பெருமை வந்துவிட்டது.   “என் அழகைப் பார்த்து   என் காதலிகள் சைரஸ், ஸ்டாரடஸ், கியூமலஸ்   ஆகியோர் என்னைத் தழுவிக்கொண்டு முத்தமிடுவதைப் பார்த்தாவது என் உயரம் உனக்குத் தெரியவில்லையா? அவர்களைப் போய் கேள். அவர்கள் சொல்லுவார்கள், என் உயரம் என்ன வென்று. என்னை இமையன்  என்பார்கள்” என்றது மலை.   “ஓகோ நீ தான் அந்த இமையனா? உன் மூதாதையார் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.”   “என்ன கேள்விப்பட்டிருக்கிறாய் சொல்லு.”   “பலநூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் தங்களுக்குள் கொதித்துக் கொண்டிருந்த மனநிலையை அடக்க முடியாமல் கோபத்தில் வெடித்து மக்களை அழித்ததாகவும். அதனால் பல கிராமங்கள் அழிந்ததாகவும். மக்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா?”   “நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். கிராமத்து மக்கள் இயற்கையன்னைக்கு எதிராகப் பல அட்டூழியங்கள் புரிந்ததாகவும் அவர்கள் அகங்காரத்தை அடக்க என் மூதாதையர்கள் கொதித்து வெடித்தாகவும் அதோ தெரிகிறானே என் அண்ணன் வீம்பன், அவன் எனக்கு அடிக்கடி சொல்லுவான். அவனையும் மக்கள் பல வழிகளில் துன்புறுத்துகிறார்கள்.”   “அது எப்படி?”   “அங்கே பார்! அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று. வீம்பனைக் குடைந்து பாதை போடப் போகிறார்களாம். அதனால் வீம்பனைச் சுற்றிப் போவதில் இருபது மைல்கள் குறையுமாம். அது மட்டுமா அவனுக்குள் உள்ள குகைகளில் தியானம் செய்யும் ரிஷகளின்  அமைதிக்குப் பங்கம் விளைவிக்கப் போகிறார்கள். எவ்வளவு பாவத்தை தேடிக் கொள்கிறார்கள் தெரியுமா?”   “பாதையின் தூரத்தைச் சுருக்கினால் பிரயாணநேரத்தைச் சுருக்கி அதை வேறு வேலைகளுக்கு பாவிக்கலாமல்லவா?” என்றான் மனிதன்.  “என் மேல் உன்னைப் போல் என் உச்சியை காணச் சென்ற மனிதர்கள் என் உடம்பில் கழிவுப்பொருட்களை எறிந்து அசுத்தப்படுத்திவிட்டார்கள். சில மனிதர்கள் உணவு சமைத்துச் சாப்பிடுவதற்காக என் மேல் தீயைமூட்டி அணைக்காமல் சென்றதால் என் தோலின் ஒரு பகுதி எரிந்துவிட்டது. நல்லகாலம் இயற்கையன்னை என் நிலையைப் பார்த்து அழுததால் அவள் கண்ணீரில் தீ பரவவில்லை.”   “நீ பயப்படாதே. நான் அப்படிச் செய்ய மாட்டேன். தகர டப்பாக்குள் உணவுகளைக் கொண்டு வந்துள்ளேன். காலி டப்பாக்களை இங்கே எறியமாட்டேன். அது சரி உன்னில் பல மூலிகைகள் வைத்திருக்கிறாயாமே, உண்மையா?”   “எனது முதுகுப் பக்கத்தில் அடர்த்தியாக வளர்ந்த பல மூலிகைகள் உண்டு. கீழே உள்ள கிராமத்து வைத்தியர்கள் பல விதமான நோய்கள தீர்க்க என் காவல் தெய்வத்திடம்  வந்து அனுமதி பெற்றுப் பறித்துச் செல்வார்கள்.”   “என்ன? காவல் தெய்வத்திடம் அனுமதியா?”   “ஆமாம். அதோ என் அடிவாரத்தில் தெரிகிறதே பெரியமரம். அதன் கீழ் உள்ள  மலையடி வைரவருக்கு ஊர்வாசிகள் பொங்கிப் படைப்பார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தது போல் மலையின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பது அவர்கள் பயம்.”   “உன் அண்ணன் வீம்பனுக்குப் பக்கத்தில் நிற்கிற அழகான மலையின் பெயர் என்ன?”   “ஓ அவளா. அதுதான் என் தங்கை அன்னபூரணா. அவளுக்குக் கொஞ்சம் கர்வம் அதிகம்.”   “ஏன் கர்வம் அவளுக்கு?”   “அவளுக்குள் வைரமும் தங்கமும் உண்டு. இன்னமும் அது மனிதர்களுக்குத்  தெரியாது. அவளிடம் தோன்றிச் செல்லும் ஆற்றில் சில தங்கக் கற்களைப் பலர் பொறுக்கி எடுத்துள்ளார்களாம். அது  மலையடி வைரவர் கொடுத்த பரிசு என்று மக்கள் நினைப்பு. உண்மை  தெரிந்தால் அவளைக் குடைந்து சிதைத்து விடுவார்கள். நான் சொன்னதாக மற்றவர்களிடம் போய்ச் சொல்லி விடாதே, என்ன?“   “இமயா. நான் வந்தது, யாராலும் தொட முடியாத உன் உச்சியைத் தொட்டு என் வீரத்தை நாட்டுக்குக் காட்டவே. நீ சொன்னவை யாவையும் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டேன். அது உன் காவல் தெய்வம் வைரவர் மேல் சத்தியம். நான் வருகிறேன்.”  மலையேறி  தன் பயணத்தைத் தொடர்ந்தான்.   மலைகள் புவித்தட்டுகளின நகர்வினால் பல விதமான தோற்றங்களோடு  உருவாகின்றன.  இதில் மடிப்பு மலைத்தொடர் மிகப் பொதுவானதொன்றாகும். பல ஆயிரம் கிலோ மிட்டர் நீளமுள்ளவை. இம்மலைத்தொடரில் வட அமெரிக்காவில் உள்ள ரொக்கி மலைத் தொடரையும்  இந்தியாவில் உள்ள இமாலய மலைத்தொடரையும் குறிப்பாகச் சொல்லலாம்.   கதை -11  நதி எங்கே செல்கிறது…? [] கவிஞன் ஒருவன் தனிமையை நாடி இயற்கையின் அழகைத் தேடிச்  சென்றான். எங்கு திரும்பினாலும் வீடுகளும், வாகனங்களும், மனிதர்களும், கட்டிடங்களும். சுற்றாடலின் இரைச்சல்களில் அவனால் நிம்மதியாகச் சிந்திக்க முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் எப்படிக் கவிதைப் போட்டியில் பங்கு கொள்வது? வீட்டில் மனைவியின் நச்சரிப்பு ஒரு பக்கம். குழந்தையின் அழுகை மறுபக்கம். வானொலியின் அலறலில் காதே செவிடாகி வீடும் போல் இருந்தது அவனுக்கு. வீட்டை விட்டு வெளியே வந்தான். இரைச்சல் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. வீதியில் வாகனங்களின் இரைச்சல், ஓடும் இரயிலின் இரைச்சல், ஓயாமல் கதைக்கும் மனிதர்களின் இரைச்சல். கீழே தான் இரைச்சல் என்றால் வானத்தில் பறந்துகொண்டிருந்த விமானங்களின் இரைச்சல் கூட அவனை விட்டுவைக்கவில்லை.   ஓடினான் நிம்மதியைத் தேடி. தேடினான் அமைதியான இடத்தை. நடந்தான் பல மைல்கள். கடைசியாக ஓர் ஆற்றினைக் கண்டான். அமைதியாகச் செழித்த மரங்கள் அரவணைக்க,  மரங்களில் இருந்த குயில்களின் இனிமையான ஓசையை இரசித்தபடி கடலைத் தேடி ஓடிக் கொண்டிருந்தது ஆறு.  மரங்களில் இருந்து விழுந்த மஞ்சள் பூக்களைச் சூடியபடி கம்பீரத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.  நதியின் ஓரத்தில் ஓங்கி வளர்ந்து நின்ற மூங்கில் மரங்கள், குயிலின் ஓசைக்கேற்ப காற்றின் உராசலில் புல்லாங்குழல் வாசித்தன.  நதியின் இரு பக்கத்திலும் இருந்த சந்தன மரங்களின் வாசனை அவனுக்கு இதமாகயிருந்தது. தான் வசிக்கும் வீட்டின் சமையல் வாசனையையும், வெளியில் வந்ததும் வீதியில் செல்லும் வாகனங்கள் கக்கும் வாயுக்களின் பரிசுத்தமற்ற நச்சுக் கலந்த வாசனையையும் நினைக்க அவனுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. பசுந்தரையில் போய் பேனாவும் பேப்பரும் கையுமாக அமர்ந்தான். ஜில் என்ற குளிர் காற்று அவனின் கற்பனையைத் தூண்டிவிட்டது. கண்களை மூடினான். கண்முன்னே புன்சிரிப்புடன் அழகிய பெண் ஒருத்தி மஞ்சள் நிறப் புடவையுடன் நெளிந்து வருவதைக் கண்டான். அவள் கூந்தலின் சந்தன மணம் அவனை மயக்கியது. “இங்கே தனியாக வருகிறாயே நீ யார் பெண்ணே? உன் பெயர் என்ன?” கவிஞன் அவளைப் பார்த்துக் கேட்டான்.   “என்னை யமுனா என்பர். எனது தாய் இயற்கை. தந்தை இறைவன்” என்றாள் அவள்.   “ஓ அப்படியா. உனக்கு சகோதரர்கள் சகோதரிகள் இல்லையா?” கவிஞன் கேட்டான்.   “ஏன் இல்லை. சற்றுத் திரும்பிப்பார் . இயற்கையின் சிருஷ்டிகளான மரங்கள், பறவைகள் , என்னுள் கவலையற்றுத் துள்ளிப் பாயும் மீன்கள், என்னில் உரிமையுடன் நீராடும் மிருகங்கள் எல்லாமே என் கூடப்பிறந்தவை.”   “நீ எங்கே ஓடுகிறாய் அவசரம் அவசரமாக?”   “என் துணைவன் சமுத்திரத்துடன் இணைய?”   “உனக்குக் குழந்தைகள்  இல்லையா?”   “ஏன் இல்லை. சற்று தூரம் நீ நடந்து சென்றால் நீ காணும் சிற்றாறுகள் எல்லாமே என்னுடைய  அரவணைப்பை நாடி வரும் என் குழந்தைகள் தான். நான் குடும்பத்துடன்  என் துணைவனை நாடிச் செல்கிறேன். ஆனால்…”   “ஆனால் என்ன? ஏதாவது பிரச்சினையா உனக்கு?” கவிஞன் விசனத்துடன் கேட்டான்.   “ஆமாம் என் ஓட்டத்தையும் அழகையும் கண்டு சில மனிதருக்குப் பொறாமை வந்துவிட்டது. அதோ அந்த ஓவியனைத் தெரிகிறதா. அவன் என் அழகை அங்கம் அங்கமாக இரசித்து ஓவியம் தீட்டுகிறான். சில சினிமாக் கவிஞர்கள் என்னை வைத்து “நதி எங்கே போகிறது” ,  “ஓடம் நதியினிலே..” போன்ற பாடல்களை சினிமாவுக்கு எழுதிப் பணம் சம்பாதிக்கிறார்கள். சினிமா இயக்குனர்கள் கூட என் ஓரத்தில் நடிகர் நடிகைகளைக் கொஞ்சிக் குலாவவிட்டும், நடனமாடவிட்டும் படம் பிடித்து மக்களுக்குக் காட்டிப் பணம் சம்பாதிக்கிறார்கள். எல்லாரும் என் அழகைப் பயன்படுத்துகிறார்கள். அதே நேரம் அங்கே பார், என்னைத் தடுத்து நிறுத்த அந்த இடத்தில் அணை கட்டத் திட்டம் போடுகிறான் இன்னொருவன்.  அணையைக் கட்டத் தடையாக இருக்கும் என் கூடப்பிறந்தவர்களை அழிக்கப் போகிறானாம். இயற்கைக்கு விரோதமாகத் தன் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடப் போகிறானாம். அதுமட்டுமா, எனது சில பிள்ளைகளின் பரிசுத்தமான மனதை அசுத்தப்படுத்திவிட்டான் மனிதன்” என்று  கவலைப்பட்டது யமுனா.   “நீ என்ன சொல்லுகிறாய் என்று எனக்கு விளங்கவில்லை. விபரமாய்த் தான் சொல்லேன்“ என்றான் கவிஞன்.  “தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுப் பொருட்களை என்னிலும என் குழந்தைகளிலும் செலுத்தி எங்களை அசுத்தமாக்குகிறான். அதானால் எங்கள் உடம்பின் நிறம் கூட மாறி வருகிறது.”   “உனக்கு மானிட இனத்தின் மேல் கோபம் போல் தெரிகிறது?”   “இல்லாமலா? அங்கே பார், என்னுள் புதைந்து கிடக்கும் இரத்தினக்கற்களையும் தங்கத்தையும் தேடி ஒருவன் எடுப்பதை. அதோ பார் ஒருவன் என் சகோதரனாகிய சந்தன மரத்தை வெட்டி எடுப்பதை. தூரத்தில் பார் என்னில் நீர் பருகும் என் சகோதரர்களான மான்களை ஒளிந்து நின்று சுட ஒரு மனிதன் எத்தனிப்பதை. எல்லாம் சுயநலம் தான்.”   “மனிதர்கள் எல்லோரும் கெட்டவர்களா?”   “இல்லை இல்லை. நல்லவர்களும் இருக்கிறார்கள். முதலாளித்துவவாதிகள் தங்கள் செல்வத்தைப் பெருக்க நம் இயற்கை அன்னைக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடும் பயங்கரவாதத்தை எதிர்த்து “பச்சை” பெயருடைய அரசியல் கட்சியும்  சில மக்கள் குழுக்களும் போராடுகின்றன. பணத்துக்கு எதிரான இப்போராட்டம் வெற்றி பெறவேண்டும்.”   “அந்த மனிதர்கள் உன்னை அசுத்தப்படுத்தாவிட்டால் நீ தூய்மையானவளா?”   “ஏன் இல்லை. அதோ தூரத்தில் தெரியும் மலையிலிருந்து பல மூலிகைகளைத் தழுவிக் கொண்டு ஓடிவருகிறேன். நான் என் சகோதரி கங்கையைப் போல் பரிசுத்தமானவள். பலர் என்னிடம் கையேந்தி நீர் பருகிறார்கள். பலர் என்னில் மூழ்கித் தங்களின் வியாதிகளைக் குணப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அந்த உதவிகளை எல்லாம் பலர் மறந்து செயல்படுகிறார்கள்.”   “சுயநலமுள்ள சில மனிதர்களின் பயங்கரவாத்துக்கு எதிராக நீ ஈடு கொடுக்கமுடியுமா?”   “என்னை அரவணைத்துச் செல்லும் பூமாதேவி என்னைக் கைவிடமாட்டாள் என நினைக்கிறன்.”   “அது எப்படி?”   “பூகம்பம் வந்து அணையில் வெடிப்பு ஏற்பட்டால் நீர்ப் பெருக்கால் மக்கள் அழிவர்.”   “வேறு என்ன நடக்கும்?” கவிஞன் கேட்டான்.   “இயற்கையன்னையின் கண்ணீர் என்னை நிரப்பினால், நான் பெருக்கெடுத்து ஓடி ஊர்களை வெள்ளத்தில் மூழ்கடிப்பேன். இயற்கையைச் சீண்டுவதன் மூலம் எற்படும் விளைவுகளை மனிதன் உணருவதில்லை. என் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி என்னுள் உள்ள சக்தியை மின்சார சக்தியாக மாற்றித் தொழிற்சாலைகளை இயங்க வைக்கிறான். அதே தொழிற்சாலைகள் மூலம் என்னையும் குழந்தைகளையும் அசுத்தப்படுத்துகிறான். நான் செய்த உதவியை மறந்து விடுகிறான். என்ன மானிட ஜென்மம் அப்பா” அழுதாள் யமுனா.   அவளின் கண்ணிர் மழைத்துளிகளாகக் கவிஞன் கைகளில் பட அவன் சுயநிலைக்கு வந்தான். யமுனா அவன் பார்வையிலிருந்து விடைபெற்றாள்.   “அப்பாடா. என் கவிதைக்குக் கரு கிடைத்து விட்டது” என மனதுக்குள் நினைத்துக்கொண்டு இடத்தை விட்டு நகர்ந்தான் கவிஞன். அவனும் ஒரு சுயநலவாதியா?   கதை 12  ஓடும் மேகங்கள் [] மேகநாதன் மரத்தின் கீழிருந்து வானத்தை அண்ணாந்து பார்த்தபடியே இருந்தான். மேகங்களின் விதம்விதமான தோற்றங்களும் நிறங்களும் அவனுக்குப் புரியாத புதிராக இருந்தது. சில நாட்களுக்கு முன் மகாகவி காளிதாசனின் மேகதூதம் படித்து இரசித்தவன் அவன். செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தனது ஊழியனான யட்சன் என்பவனை, கடமை தவறியதற்காகக் கைலாச மலையில் வாழும் அவன் மனைவியிடம் இருந்த பிரித்து, வெகு தூரத்திலிருக்கும் மலைத் தொடருக்கு நாடு கடத்தினான். மனைவியின் பிரிவைத் தாங்காத யட்சன், வானத்தில் கைலாச மலையிருக்கும் திசையை நோக்கிச் செல்லும் மேகங்களிடம் தன் நிலையை விளக்கித் தூது அனுப்பியதாக மேகதூதம் கவிதைகளில் கூறப்பட்டுள்ளது. அதில் மேகங்களுக்கு எவ்வளவுக்கு ஒரு பொறுப்பான வேலையைச் செய்ய  அக்கவிஞன் கொடுத்திருந்தான்! அந்தக் கற்பனைத்திறனை நினைத்துப் பார்க்கவே மேகநாதனுக்கு  ஆச்சரியமாயிருந்தது.   மேகங்கள், வானத்தில் பறக்கும் வாத்துக்கள், வேறு பறவைகள், ஓடும் நதிகள், மலர்களுக்கிடையே தாவும் வண்டினங்கள், வண்ணத்துப்பூச்சிகள் இவைகளையெல்லாம் தகவல்களை எடுத்துச் செல்லும் தபாற்காரக் கதாபாத்திரங்களாகப் பல கவிஞர்கள் கற்பனையில் படைத்திருக்கிறார்கள். ஈழத்தில் நடந்த அழிவுகளை அரசு ஊடகங்களில் இருட்டடிப்புச் செய்த வேளையில் யார் தான் நடந்த உண்மைகளைப் பிறநாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியும்? சிந்தித்தார் கவிஞர் காசி ஆனந்தன். ஈழத்தின் வானத்தில் சுதந்திரமாகப் பறந்து செல்லும் சைபீரிய வாத்துக் கூட்டத்தைக் கண்டார். நடந்த அழிவுகளை உலகுக்கு எடுத்தச் சொல்லும் தகவற்காரர்களாக அவ்வாத்துக்களைக் கற்பனையில் சிருஷ்டித்துக் கவிதை வடித்தார். புறாக்கள் தகவல்களை எடுத்துச் செல்வதை கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் இங்கோ மேகங்களும் கூட அத்தொழிலைச் செய்வதாகக் கவிஞர்கள் கவிதை புனைந்த கற்பனைத் திறனைச் சிந்தித்துத் தனக்குள் சிரித்தான் மேகநாதன். “என்ன தம்பி சிரிக்கிறாய். எனக்கும் கொஞ்சம் சொல்லிச் சிரியேன்.”   குரல் கேட்டு சுற்றும்முற்றும் பார்த்தான் அவன். ஒருவரையும் காணவில்லை. ஒரு வேளை பிரமையோ?   “என்ன தம்பி தேடுகிறாய்?. அண்ணாந்து பார். நான் தான் சில நிமிடங்களுக்கு முன் ஒரு மிருகம் போன்ற உருவத்தில் தோற்றமளித்தவன். என்னைப்பார்த்து இரசித்தாயே, ஞாபகம் இருக்கிறதா?”   “ஓ, நீ தான் அந்த மேகமா? இப்ப என்ன திடீரென்று வேறு உருவத்தில் தோற்றமளிக்கிறாய்?”   “நான் என் பயணத்தைத் தொடரும் போது உருமாறிக்கொண்டே போவேன். ஏன் உலகில் மனிதர்களின் குணம் மாறுவதில்லையா? அரசியல்வாதிகள் கட்சி மாறுவதில்லையா? உலகில் எதுவும் நிரந்தரமற்றது என்பதை மானிடருக்கு விளக்கத்தான் இந்த உருமாற்றம்.”   “அது சரி நீ எப்படி உருவாகிறாய்?”   “காற்றும் மிக சிறிய தண்ணீர்த் துளிகளும் கலந்ததினால் நாங்கள் உருவாகிறோம். ஒளிக் கதிர்களை  நாம் கிரகிக்காமல் ஊடுருவிச் செல்ல அனுமதிக்கிறோம். நேரத்துக்கு ஏற்பப் பெண்கள் சேலை மாற்றிக் கொள்வது போல நிறத்தை மாற்றிக் கொள்கிறோம். பெரும்பாலும் வெள்ளை நிறத்தோடு காட்சி தருவோம். சூரியக் கதிர்களில் இருந்து வரும் ஒளி, வானத்தின் வெளிர் நிறத்தோடு சேர்ந்தால் கிடைப்பது வெள்ளை நிறமே. மாலை நேரங்களிலும், அதிக வெளிச்சம் உள்ள நகரங்கள் மேலேயும் வெள்ளை மேகங்களைக் காணமுடியாது. பகல் நேரத்தில் மேகங்கள் அதிகமாக வெள்ளை நிறத்தில் காட்சி தரும். வேதிப் பொருட்களைத் தூவி, மழை மேகங்களை மழை பெய்ய செய்வதை மேக விதைப்பு என்பர்.”   “அடேயப்பா, நீ விஷயம் அறிந்தவன்  போல் பேசுகிறாயே?”   “இன்னும் எங்களைப் பற்றிச் சொல்கிறேன் கேள். மேகங்களை உயர் மேகங்கள், மதிய மேகங்கள், குறைந்த உயரத்தில் உள்ள மேகங்கள் என்று வகுத்துள்ளார்கள். பூமியில் இருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறோமோ அதற்கு ஏற்ப வகுத்துள்ளனர். சைரஸ் (Cirus ) என்ற உயர் மேகங்கள் 18,000 அடிகளுக்கு மேலான உயரத்தில் இருப்பவை. 6500 முதல் 18,000 அடி உயரத்தில் உள்ள அல்டோகியூமலஸ் (Altocumulus) மேகங்கள் மத்திய மேகங்களாகும். (அல்டோ என்பது உயரத்தையும்  கியுமலஸ்  என்பது குவியலையும்  குறிக்கும் லத்தீன் சொற்கள். உயரத்தில் குவிந்திருப்பதால் அப்பெயர் வந்திருக்கலாம். பத்து அடிப்படை மேகங்களில் இதுவும் ஒன்று. 6000 அடி உயரத்தில் உள்ள   ஸ்ட்ராடஸ் (Stratus) போன்றவை கீழ் மேகங்களாகும். ஸ்ட்ராடஸ் என்றால் அடுக்கு. லத்தீன் சொல்.) சில சமயங்களில் தூறலையும், பனியையும் கொடுக்க வல்லது.  உங்களைப் போல் எங்களுக்கும் ஒவ்வொரு பெயர்களுண்டு.”   “அது சரி. மேலே இருந்து கொண்டு கீழே என்ன நடக்கிறது என்று விடுப்பு பார்க்கிறாயா?”   “மேலிருந்தபடி   பூமியில் மானிடர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அவதானித்துக் கொண்டிருக்கிறேன். சில இடங்களில் கர்வம் கூடி அதர்மம் தோன்றினால் அங்கு வாழ்பவர்களுக்குத் தண்டனையும் கொடுக்கிறேன்.”   “நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை. வானத்தில் அவ்வளவு உயரத்திலிருக்கும் நீ எப்படி எங்களுக்குத் தண்டனை கொடுக்க முடியும்?”   “இது தெரியாதா உனக்கு? சில ஊர்களில் பொய்யும் புரட்டும் அநீதியும் அதிகமாகி, தண்ணீர் இல்லாமல் அயல்பிரதேசத்திடம் கை ஏந்தி நிற்கும் அளவுக்கு வறட்சி ஏற்படுகிறதே, அது தெரியவில்லையா உனக்கு?”   “தெரிகிறது, தெரிகிறது.”   “அந்த நிலையை உருவாக்குவதே நாங்கள் தான். என் சகோதரர்களான மழையைப் பொழியும் கரு மேகங்களை அந்த ஊர்ப் பக்கமே போகவிடமாட்டேன். அப்படிப் போனால் அவர்களும் அக்கூட்டத்துடன் சேர்ந்து தீயவர்களாகி விடுவார்கள். அட்டூழியம் அளவுக்கு மீறனால் சுழல் காற்றை உருவாக்கும் எனது மூத்த சகோதரனை ( Funnel Clouds) அனுப்புவேன். அவன் பொல்லாதவன்.”   “மேகங்களில்   பொல்லாத மேகங்களும் உண்டா?”   “ஏன் இல்லை? மனிதர்களில் நல்லவர்களும் தீயவர்களும் இருக்கிறதைப் போல் எம்மிலும் உண்டு.”   “யார் அவர்கள்?”   “புனல் மேகங்கள் (Funnel Clouds), மமட்டஸ் மேகங்கள் (Mammatus Clouds), அஸ்பராட்டஸ் (Asperatus) மேகங்கள், மதர்ஷிப் (Mothership) மேகங்கள், தட்டு மேகங்கள் (Shelf Clouds), வால் மேகங்கள் (Wall Clouds) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதில் புனல் மேகங்கள் பூமியை வந்தடையும் போது சுழிக்காற்றாகிறது ( Tornado). மதர்ஷிப் (Mothership) மேகங்கள் அபாயகரமானவை. சுழிக்காற்றை உருவாக்கக் கூடியது.”   “ஓ, இப்ப விளங்குகிறது எப்படி நீ பூமியில் நடக்கும் அட்டூழியங்களுக்குத் தண்டனை கொடுக்கிறாயென்று. நீ கடவுளைப் போல் என்று சொல்.”   “சக்தி தான் இயற்கை. இயற்கைதான் தான் கடவுள். நான் இயற்கையில்  ஓர் அங்கம். கடவுளின் சக்தியை நீ அறிவாய். அதுபோன்று என் சக்தியையும் நீ தெரிந்து கொள். மிகச் சக்தி வாய்ந்த மின்னலைக் கூட உருவாக்குவோம். எமக்குள் உள்ள சக்தியினையறிந்து கிரேக்கர்கள் எங்களைத் தெய்வங்களாக வணங்கினார்கள் என்பது உனக்குத் தெரியுமா?”   “கேள்விப்பட்டிருக்கிறேன். இது சரி, நீ உல்லாசமாக பவனி வரும் வானம் ஏன் எப்போதும் நீலநிறமாகயிருக்கிறது? அந்த நிறத்தைப் பார்த்து எனக்கு அலுத்துப் போய்விட்டது.“   “வெள்ளை நிற ஒளியானது வானவில்லில் உள்ள எல்லா நிறக் கதிர்களையும் உள்ளடக்கியுள்ளது. ஒளியின் தெறிப்பு அதன் நிறத்தில் தங்கியுள்ளது. ஒளியானது அலை போன்றது. ஒரு அலையின் அடுத்தடுத்துள்ள குன்றுச்சிகளுக்கிடையே உள்ள தூரத்தை  அலை நீளம் என்பர். சிவப்பு நிற ஒளிக்கு மிக நீண்ட அலை நீளமுண்டு. நீல நிற ஒளியின் அலை நீளம் சிவப்பு நிற ஒளியின் அலை நீளத்திலும் பார்க்க கிட்டத்தட்ட அரைமடங்கு குறைவு.  இந்த அலை நீள வித்தியாசத்தால் நில நிற ஒளியானது  சிவப்பு  நிற ஒளியிலும் பத்து மடங்கு கூடுதலாக சிதறக்கூடியது. ஊதா நிறம் நீல நிறத்திலும் பார்க்க கூடியளவு சிதறக் கூடியது ஆனால் ஊதா நிறத்தை மனிதர்களின் கண்கள் உணர்வது குறைவு. இக்காரணத்தாலேயே வானம் நீலநிறமாக காட்சி தருகிறது. அதில் பல நிறங்களில் நாங்கள் தவழ்ந்து விளையாடுகிறோம்.”  “நீ ஒரு பௌதிக ஆசிரியரைப் போல் அல்லவா விளக்கம் கொடுக்கிறாய்? அதற்கு நன்றி. உனக்குச் சகோதரர்கள் இல்லையா?”   “ஏன் இல்லை. பலர் இருக்கிறார்கள்.”   “அவர்களுக்குப் பெயர்களுண்டா?”   “உண்டு. ஆங்கிலத்தில் மேகங்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்கள் இலத்தீன் மொழியை அடிப்படையாகக் கொண்டதாகும். பெயர்கள் தோன்றுவதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் லூக் ஹவார்ட் (Luke Howard ) என்ற ஆங்கிலேயர். இவரால் 1802-1803 ல் வெளியான  மேகங்களைப்பற்றிய அறிக்கையை அடிப்படையாக வைத்துப் பெயர்கள் சூட்டப்பட்டன.”   “மேகங்கள் பூமிக்குக் கீழே இறங்கி வரும் போது மூடுபனி (Fog) தோன்றுகிறது எனக் கேள்விப்பட்டேன். உண்மையா?”   “ஏன் மூடுபனி பற்றிக் கேட்கிறாய்? பாலுமகேந்திராவின் மூடுபனி படம் உன் ஞாபகத்துக்கு வந்துவிட்டதோ?”   “அதில்லை, மூடுபனியில் கார் ஓட்டுவது ஆபத்தானது. பல விபத்துகள் நடந்துள்ளன. அது தான் கேட்டேன்.”   “எந்த ஒரு மேகமும் பூமியைத் தொடும் போது மூடுபனி தோன்றுகிறது. அனேகமாகத் தாழந்த இடங்களில் இவை தோன்றும். மூடுபனியில் 1 கிமீ தூரத்துக்கு மேல் பார்க்க முடியாது. ஆனால் (Mist) என்ற மறைபனியில் 2 கிமீ வரையான தூரத்துக்குப் பார்க்கலாம். இதுதண்ணீர்த் துளிகளால் உருவாகிறது. விரைவில் காற்றாலும் வெப்ப உயர்வாலும் மறையக் கூடியது.”   “உன் சகோதரர்களை எனக்கு அறிமுகப்படுத்த முடியுமா?”   “சைரஸ் (Cirrus) என்பவன் அதோ வெகு உயரத்தில் இருக்கிறான். பனிக் கட்டியினால் ஆன படிகங்களைக் கொண்டவன் அவன். சிரோஸ்ட்ரேடஸ் (Cirrostratus) என்பவன் பனிக் கட்டியினால் ஆன பால் விரிப்பினைக் கொண்டவன். அதோ வெகு தூரத்தில் நிற்கிறான் தெரிகிறதா. இவனைச்  சூரியனைச் சுற்றியும் சந்திரனைச் சுற்றியும் வளையமாகக் காணலாம். அடுத்தது சைரோகியூமிலஸ் (Cirrocumulus) என்பவள். இவளை நீ சந்திப்பது  அபூர்வம். கொஞ்சம் கூச்சமுள்ளவள். இவர்களை வெகுஉயரத்தில் தான் காணலாம்.”    “அது சரி, உன்பெயரைச் சொல்லவில்லையே.”   “தாழ்ந்த உயரத்தில் தவழும் எனது பெயர் கியூமிலஸ் (Cumulus). சுமார் 3300 அடி உயரத்தில் இருப்பவன்.”   “உன்னுடைய பெயரில் பல மேகங்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டேனே.”   “இது என்ன அதிசயம். உங்களில் பெரியதம்பி, சின்னத்தம்பி,  முருகுதம்பி, வேலுத்தம்பி, செல்லத்தம்பி என்று இல்லையா?”   “கோசுப்பூவைப் (Cauli flower) போல் வெள்ளை நிறமாய்ப் பார்க்க அழகாகயிருக்கிறாய்.”   “என் அழகைப் பற்றிச் சொன்னதற்கு நன்றி. நான் சாதாரண வானிலையின் போது வானில் உலாவுவேன்.  ஸ்ட்ராடா கியூமஸ் (Strata Cumus) என்ற என் சகோதரன் அனேமாக சூரிய ஒளி பூமியை அடையாமல் தன் தடித்த வெள்ளை நிறப் போர்வையால் மறைக்கும் சுபாவம் உள்ளவன். ஸ்ட்ராடாஸ் (Stratus)  என்பவன் நிலமட்டத்திலிருந்து கொஞ்ச உயரத்தில் வாழ்பவன். மூடுபனியென்றும் அவனை அழைப்பர். காற்றினால் மூடுபனி சற்று உயரத்துக்குத் தள்ளப்பட்டு ஸ்ட்ராடஸாக மாற்றமடைகிறது.”   “அது சரி கருப்பு நிறச் சகோதரர்கள் இருக்கிறார்களே, அவர்களைப்பற்றி நீ கூறவில்லையே.”   “நிம்போ ஸ்ட்ரேடஸ் என்பவன் பயங்கரமாகக் கண்ணீர் விடுபவன். அவனை மழை மேகம் அல்லது கார்முகில் என்பர். விவசாயிகள் அவனைக் கண்டதும் குதுகாலம் அடைவர். வானை மூடி, சூரிய வெளிச்சம் பூமியை அடையாமல் தடுத்து மழை பொழிபவன் அவன். இவனைப் போல் கியூமுலோனிம்பஸ் என்பவனும் மின்னல் இடியுடன் மழையைப்  பொழிபவன்.”   “அடேயப்பா இவ்வளவு சகோதரர்களா உனக்கு? உச்சரிக்கக் கடினமான பெயர்களாக இருக்கிறதே. அது சரி உன் தோற்றத்தைப் பற்றிச் சற்று விளக்கமாய்ச் சொல்ல முடியுமா?”   “பண்டைய கிரேக்கர்கள் இயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், காற்று, தென்றல், சூரிய உதயம், வானவில், இரவு, புயல் ஆகியவற்றிற்குப் பெயர்கள் வைத்துக் கடவுளாக வணங்கினார்கள். அதில் இருந்தே எமது பெயர்களும் கிரேக்கப் பெயர்களாக அமைந்துள்ளன.”   "தோற்றத்தைப் பற்றி நீ சொல்லவில்லையே.”   “பூமியிலும், சமுத்திரங்களிலும் உள்ள நீர், சூரிய வெளிச்சத்தில் ஆவியாக மாறி காற்றினால் மேலே எழும்பிய பின் குளிர்ந்து, சிறு நீர்த் துளிகளாக மாறுகிறது. இதே மேகங்களாகிய நாங்கள் உருவாகும் இரகசியமாகும். பூமிக்கு அருகில் இருக்கும் போது மூடுபனி என்பார்கள். இந்த நீர்த்துளிகள் ஒன்று சேர்ந்து உங்களுக்கு மழையாகப் பொழிகிறோம். வெப்ப நிலை மிகக் குறைந்தால் சிறு நீர்த்துளிகள் உறைந்து பனிக்கட்டியாகவும் (Snow) சில வேலை ஆலங்கட்டியாகவும் (Hail) பூமியில் விழுகிறது.”   “உனது சகோதரர்கள் ஏன் இப்படி அவசரம் அவசரமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்? அவர்களைப் பார்த்தால் எனக்கு ‘ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…’ என்ற  கண்ணதாசனின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.”   “காற்றே மேகங்கள் பயணம் செய்ய உதவுகிறது. சில சமயங்களில் மணிக்கு 100 மைல் வேகத்தில் செல்வோம். இடிமின்னலின் போது மணிக்கு 30 முதல் 40 வேகத்தில் செல்வோம்.”   “மனிதர்கள் மற்றவர்களைப் பார்த்துக் கவிதை புனைவதிலும் பெயர் வைப்பதிலும் கெட்டிக்காரார்கள். கார்மேகம், மேகநாதன், முகிலினி,  மேகவண்ணன் இப்படி எங்கள் பெயர்களையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள். எங்களை அங்கம் அங்கமாக இரசித்துக் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். கருமுகில் போன்ற கூந்தல் எனப் பெண்களை வர்ணித்திருக்கிறார்கள். உயர்ந்த மலை உச்சியில் நாம் சற்று இளைப்பாறுவதைக் கவனித்துவிட்டு ‘அதோ பார் முகிலினி என்ற பெண் மலையைத் தழுவி முத்தமிடுவதை’ என்று கற்பனை செய்து எங்கள் கற்புக்குக் களங்கம் விளைவித்திருக்கிறார்கள். நல்லகாலம் சுழல்காற்றின் போது தோன்றும் கூம்பு வடிவமான மேகங்களைப் பார்த்து பெண்ணின் பின்னலுக்கு ஒப்பிடவில்லை.”   “பார்த்தாயா மனிதனின் கற்பனைத் திறனை. நீ மட்டும் வானில் சஞ்கரிக்க முடியும் என நினைக்காதே. மனிதர்களால் கூட கற்பனை உலகில் சஞ்சரிக்க முடியும் . இயற்கையின் அழகை எவ்வளவுக்கு அங்கம் அங்கமாக இரசிக்கிறார்கள் பார்த்தாயா? பெயர்களைப் பற்றிச் சொன்னாயே அது உண்மை. என்பெயர் கூட மேகநாதன் தான். அது தெரியுமா உனக்கு?“ “பார்த்தாயா மேகநாதா. நீ எங்களில் ஒருவனாகிவிட்டாய். எங்கள் சக்தியை உலகுக்கு எடுத்துச் சொல். எங்களை அசுத்தப்படுத்த வேண்டாமெனச் சொல். பத்தாண்டுகளுக்கு முன்  மத்திய கிழக்கில் நடந்த யுத்தத்தின் போது எண்ணெய்க்கிணறுகள் எரிந்தன.  அதில் இருந்து மேலே கிளம்பிய புகை எங்களை அசுத்தப்படுத்திவிட்டது. பல தேசங்களுக்கு அந்த அசுத்தத்தை எடுத்துச் செல்ல வேண்டி ஏற்பட்டது. நாம் சில இடங்களில் பொழியும் அமிலம் கலந்த மழை, மனிதர்கள் குளம் குட்டை நதி போன்றவற்றை அசுத்தப்படுத்துவதாலேயே ஏற்படுகிறது. அதற்கு நாம் பொறுப்பில்லை. அமேசன் காடுகளில் உள்ள உயர்ந்த மரங்களால் நாம் அப்புகுதிக்கு ஒரு காலத்தில் வேண்டிய மழையைக் கொடுத்தோம். இப்போது பொல்லாத மனிதர்கள் காடுகளை அழித்ததன் மூலம் அப்பகுதிக்கு மழை பெய்வது குறைந்து விட்டது. காடுகளுக்கு நெருப்பு வைப்பதும் எமக்குப் பாதகமாக அமைகிறது. மழை குறைந்து மின்சார உற்பத்தி குறைகிறது. இது தெரியாமல் அரசியல்வாதிகள் எம்மேலும் கடவுள் மேலும் பழியைப் போடுகிறார்கள்.”   “சரி என்னால் முடிந்தமட்டும் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் எடுத்துச் சொல்லுகிறேன்.  ஆனால் அந்தக் கரும் முகில்கள் இருக்கிறதே அதைக் கண்டால் எனக்குப் பயம்.“   “ஏன் பயம்?”   “அவை சுழிக்காற்றையும் மின்லையும் தரக்கூடியவை.”   “கியூமோலொனிபஸ் ( Cumolonius) என்ற என் சகோதரன் தான் நீ சொல்லும் மின்னலையும் இடியையும் உருவாக்கிறவன். அவன் தன் கடமையை உலகுக்குச் செய்கிறான். அவன் கண்ணீர் விடாவிட்டால் உங்கள் பூமியில் உள்ள குளம், ஆறு , குட்டை எல்லாம் வற்றி விடும். பிறகு ‘தண்ணீர் தண்ணிர்’ சினிமாப் படம் போல் ஆகிவிடும். அல்லது கர்நாடகாவிடம் தண்ணீருக்குக் கெஞ்சவேண்டி வரும்.”   “அடடா. உனக்கு அந்தச் சினிமாப் படம் பற்றிக் கூடத் தெரியுமா?  அரசியல் கூட பேசுகிறாயே?” “ஏன் தெரியாது? ‘மூடுபனி’ என்ற படப் பெயர்கள் கூட வைத்திருக்கிறார்கள். நான் தான் சொன்னேனே மேலேயிருந்து கீழே நடக்கும் உங்கள் திருக்கூத்துக்களை அவதானிக்கிறேன் என்று. சினிமா எடுக்கிறவன் இந்து கடவுள்மாரை எங்கள் மேல் நடந்து செல்வது போல் படம் பிடித்து மக்களை நம்பவைக்கிறார்கள். காதல் ஜோடிகள் கூட மேகங்களுக்குள் ஓடி பிடித்து விளையாடிப் பாட்டுப் பாடுவதாகக் காட்டுகிறார்கள். நான் அப்படி ஒருவரையும் என் மேல் நடந்து செல்லும் போது சந்திக்கவில்லை. அது மட்டுமா ஒரு படத்தில் சோகக்காட்சி வந்தவுடன் வானத்தில் எனது சகோதரன் மழையெனும் கண்ணீர் விடும் போது அவனைப் படம்பிடித்துக் காட்டி, சோகத்தை இரசிகர்களுக்கு வெளியிடுகிறான் சினிமாக்காரன். இடி மின்னல் சுழல் காற்று திரண்டு வரும் மேகங்கள் கூட அவனின் பார்வையிலிருந்து தப்பவில்லை. சினிமாக்காரன் பணம் சம்பாதிக்கிறான் எங்களை மக்களுக்கு காட்டி. அவனுக்குப் போய்ச் சொல்லு இக்காட்சிகளுக்கு அவனிடம் இனி கட்டணம் வசூலிக்கப் போகிறேன் என்று.”   “அப்படிச் சொல்லாதே. பணம் பெறாது உன்னை உலகுக்கு விளம்பரம் செய்கிறார்கள் அவர்கள். அப்படி யோசித்துப் பார். அதற்கு  நன்றியாக இரு. இயற்கை எல்லோருக்கும் சொந்தமான சொத்து.”   “சரி சரி. நான் செய்ய வேண்டிய கருமங்கள் பல இருக்கு. நான் கிளம்புகிறேன். அதற்கு முன் உன்னிடம் ஒரு கடைசிக் கேள்வி. பூமியைப் போல் மற்றைய கிரகங்களிலும் மேகங்கள் உண்டா?”   “ஏன் இல்லை? மேகங்கள் தண்ணீர் இருந்தால் தான் உருவாகலாம் என்பதில்லை. வியாழக் கிரகத்தில் உள்ள மேகங்கள் அமோனியாவும் மீதேனும் கலந்தது. ஏன் சனி கிரகத்தில் கூட மேகங்கள் உண்டு. சனி கிரகத்துக்கு 62 சந்திரன்கள் உண்டு. இதுவே சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கிரகம். சனியின் சந்திரனான டைட்டனில் (Titan) நச்சுத் தன்மையுள்ள சயனைட் உள்ளது. ஏன் பூமியின் சந்திரனில கூட தூசிகள் உள்ளடக்கிய மேகங்கள் உண்டு.”   “அடேயப்பா, மற்றைய கிரகங்களில் உள்ள மேகங்களைப் பற்றியும் அறிந்து வைத்திருக்கிறாய் போலத் தெரிகிறது.”   “அது சரி உன் மனைவிக்குப் பிறக்கப் போகும் பிள்ளைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறாய்?”   “ஆண் குழந்தை தான் பிறக்கும் என வைத்தியர்கள் சொன்னபடியால் உன்னோடு கதைத்தபின் முகிலன் எனப் பெயர் வைக்க இருக்கிறேன்.“   “நல்லது. ‘முகிலன்’ பிறக்கும் போது நாம் இடி என்ற வாத்தியம் வாசித்து மின்னல் என்ற ஒளி வெளிச்சத்தில் மழை என்ற பூமாரி பொழிந்து வாழ்த்துவோம்.“   கதை 13  சந்தனமரமும் சந்தானமும் [] “சந்தனப் பொட்டுக்காரா கோணங்கி கிராப்புக்காரா…”  என்ற பழைய பாடலை வானொலிப் பெட்டியில் இரசித்தவாறு அவன் தனிமையில் அந்த உயர்ந்த பூத்துக் குலுங்கிய மரத்துக்கடியில் வந்தமர்ந்தான். மரத்திலிருந்து வீசிய நறுமணம் அவன் மூக்கைத் துளைத்தது. எங்கிருந்து அந்த மணம் வருகிறது என்று கண்டுபிடிக்க அவன் சுற்றும் பார்த்தான். யாராவது சந்தனக் குச்சியை எரிக்கிறார்களோ என யோசித்தான். அப்படி இருக்காதே. இங்கு என்னையும் இந்த மரத்தையும் தவிர வேறு ஒருவருமில்லையே. அப்படியிருந்தும் இந்த நறுமணம் மூக்கைத் துளைக்கிறதே. யோசனையில் தலையைச் சொரிந்தான். வாசனையை உள்ளேயிழுத்துக் கண்களை மூடிச் சுவாசித்தான். யாரோ சிரிப்பது போன்று  பிரமை.   “என்ன எங்கிருந்து இந்த நறுமணம் வருகிறது என யோசிக்கிறாயா?”  குரல் ஒன்று கேட்டது.   “யார் பேசுகிறது?”   “நான் தான் மரம் பேசுகிறேன்.”   “புதுமையாக இருக்கிறதே!”   “புதுமையில்லை. அந்த மணம் என் உடம்பிலிருந்து தான் வருகிறது.”   “நீ சொல்வது உண்மையானால் இந்த நறுமணத்தை வீசும் நீ யார் ? உன் பெயர் என்ன?”   “என் பெயர் நீ கேட்டுக்கொண்டிருக்கும் பாடலில் மறைந்திருக்கிறது.”   அவன் சற்றுச் சிந்தித்தான்.   “ஓ, நீ சந்தன மரமா? என் பெயருக்கும் உன் பெயருக்கும் நல்ல பொருத்தம் என்று சொல்.”   “அது எப்படி?”  மரம் கேட்டது.   “என் பெயர் சந்தான கிருஷ்ணன். சுருக்கமாகச் சந்தானம் என்பார்கள். உன் பெயர் சந்தனம். என் பெயர் சந்தானம். ஒரு அரைவு தான் நம்மைப் பிரிக்கிறது.”   “வேடிக்கையாக இருக்கிறதே. அப்போ உன்னைத் தம்பி என அழைக்கலாமா?”   “அதுக்கென்ன அண்ணா?”   “அது சரி தம்பி உன் நெற்றியில் சந்தனப் பொட்டு இருக்கிறதே. கோயிலுக்குப் போய் வந்தாயா?”   “எனது நண்பனின் திருமணத்துக்குப் போய் வந்தேன். அது சரி நீ சந்தன வீரப்பனின் காதலியா?” சிரித்தபடி அவன் கேட்டான்.   “அவன் பெயரை உச்சரிக்காதே. எனக்குப் படுகோபம் வரும். எங்களைப் பிறருக்கு விற்றுப் பணம் சம்பாதிக்கும் வியாபாரி அவன். எங்களின் புனிதமும் அருமையும் அவனுக்குத் தெரியவா போகுது? இயற்கையில் எங்களைப் போன்று விலைமதிக்க முடியாத பொருட்கள் எத்தனையோ இருக்கிறது. யானைத் தந்தம், மயில் இறகு, கருங்காலி மரம், தேக்கு மரம்,  புலி-மான்-முதலைத் தோல்கள், வைரக்கற்கள், முத்துக்கள், பவளம்,   தங்கம்- வெள்ளி-இரும்பு போன்ற உலோகங்கள் இப்படிக் கணக்கில் அடங்காதவை எத்தனையோ. இதையெல்லாம் மனிதர்கள் விட்டுவைப்பது கிடையாது.  எவ்வளவுக்கு இயற்கை அன்னையைக் கொள்ளையடிக்க முடியுமோ அவ்வளவுக்குக் கொள்ளையடித்துப் பணம் சேர்க்கிறார்கள்.”   “ இயற்கையில் இருப்பது எல்லாம தன் சொத்து என்ற நினைவாக்கும். அதேன் உனக்குக் கோயில்களில் அவ்வளவுக்கு மதிப்பு?”   “கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே என் அருமையையும் வாசனையையும் வேத கால மக்கள் அறிந்திருந்தனர். இராஜாக்கள், சுல்தான்கள், ரிஷிமார்,  பௌத்த பிக்குமார் என்னைப் பாவித்தனர். தங்கம், வெள்ளி,  யானைத் தந்தம்  போன்றவைக்கு ஈடாக என் மதிப்பிருந்தது. என் நறுமணத்தில தியானம் செய்தால் மனதைச் சாந்தப்படுத்தி ஒரு நிலை நிறுத்துவது இலகுவாகும். விழிப்புணர்வைத் தூண்டவைக்கும். மனோ வியாதிகளைத் தீர்க்கவும் என்னைப் பயன் படுத்தினார்கள்.”  “அதேன் நெற்றியில் உன் பசையைப் பொட்டாக வைக்கிறார்கள்?”   “மனிதர்களுக்கு ஏழு சக்கரங்கள் உடம்பில் உண்டு. இவையூடாக உடம்பு சக்தியை உள்ளடக்குகிறது. நெற்றியில் இருப்பது ஆறாவது சக்கரம்.  முக்கண்ணன் சிவனின் நெற்றிக் கண் ஆறாவது சக்கரத்தைக்  குறிக்கும். இந்தச் சக்கரம் உள்ள இடத்தில் என் பசையினால் திலகமிட்டால், மூளைச் சுரப்பியை திறம்பட இயங்கச்செய்து சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்குகிறது. அதனால் தான் ஆயுர்வேதம் என் பசையைப் பாவிக்கும்படி பரிந்துரைக்கிறது.”   “ஓகோ அதுவா காரணம். சிலர் கைகளிலும் உடம்பு முழுவதும் சந்தனம் பூசிக்கொள்கிறார்களே அது எதற்காக?”   “மனிதர்களின் தோலில் நீர் நீங்குவதால் பல விதமான தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் உருவாக ஏதுவாகிறது. அது மட்டுமல்ல வியர்வையினால் உடம்பில் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது. என்னை உடம்பில் பூசுவதினால் தோல் ஈரமாக்கப் படுகிறது. துர்நாற்றம் நீங்குகிறது. சூரியனின் கதிர்களினால் தோல் சம்பந்தப்பட்ட புற்றுநோய் வராமல் தடுக்கிறது.”   “உனது மருத்துவத் தன்மையைக் கேட்க அதிசயமாக யிருக்கிறது. இந்தியாவில் மட்டுமா உனக்கு மதிப்புண்டு ?” சந்தானம் கேட்டான்.   “யார் சொன்னது? பண்டைய எகிப்தியர்கள் என்னை இறக்குமதி செய்து மருத்துவத்துக்கும்  கிரியைகளுக்கும் பாவித்தார்கள. சோர்வு,  மனக்கவலை,  உறக்கமின்மை,   மூச்சு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கவும் என்னை பாவித்தனர். ஏன் கிளியோபாத்ரா என்ற எகிப்திய அழகி கூட என்னை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வாசனைத் திரவியமாகக் குளிக்கும்போது பாவித்தாள். சாலமன் என்ற அரசனின கல்லறையில் கூட எனக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தோனேசியா,  வியட்நாம்,  அவுஸதிரேலியா ஆகிய நாடுகளிலும் சந்தன மரங்களை வளர்த்து எண்ணெய் எடுத்து ஏற்றுமதி செய்கிறார்கள்.  வாசனைத் திரவியமாகப் பல நாடுகளில் விலை போகிறேன். எனது மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சிலைகள், உருண்டை, மணிமாலைகளுக்கு வெளிநாடுகளில் தனி மதிப்புண்டு.”   “அடேயப்பா என் இனத்துக்கு இவ்வளவு மதிப்பா? அது சரி இவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறாயே உன் வயதென்ன?”   “எனக்கு இப்போது அறுபது வயதாகிறது. பொதுவாக ,நான் முதுமையடைய, கிட்டத்தட்ட அறுபதிலிருந்து எண்பது வருடங்கள் எடுக்கும். இப்போது என் உயரம் இருபத்தைந்தடி. என் வளர்ச்சி விரைவானதல்ல.  அரசாங்கம் சட்டத்தின் மூலம் எங்ளுக்குப் பாதுகாப்பு தருகிறது. கர்நாடகாவில் உள்ள வீட்டு வளவுக்குள் ஒரு சந்தன மரம் இருந்தால் அது அரசின் உடமை.  நன்றாக முற்றிய மரங்களைத் தான் தறிக்கலாம் என்கிறது சட்டம். எங்களைக்  கூடுதலாக மைசூர் பகுதியில்  காணலாம். 1792ல் மைசூரில் எங்களை அரசாங்க  மரமாகப் பிரகடனப்படுத்தி கௌரவித்தார்கள்.”   “அடேயப்பா அவ்வளவு உன் சந்ததிக்கு மதிப்பிருக்கிறதா?”   “இல்லாமலா  மகாத்மா காந்தி, இந்திரகாந்தி ஆகியோரைத்  தகனம் செய்யும்போது சந்தனக் கட்டைகளைப் போட்டுத் தான் தீ மூட்டினார்கள்? அதிலிருந்து தெரியவில்லையா என்னுடைய புனிதம் எவ்வளவு என்று? கோயில்களிலும்  திருமணம்,  திருவிழாக்களிலும் எனக்குத் தனி இடமுண்டு. ஏன் உன் முருகன் கோயிலில் தினமும் வாசிக்கும் நாதஸ்வர வித்துவானும் அவர் கோஷ்டியும் நாள் தவறாது எனக்குத் தங்கள் நெற்றிகளில் தனி இடம் கொடுப்பதை பார்த்திருப்பாயே.  என் சந்ததிக்கு இந்து, பௌத்தம்,  பார்சி, இஸ்லாம் ஆகிய  மதங்களிடையே நல்ல மதிப்புண்டு.“   “என்ன மதிப்பிருந்தும் நீ ஒரு ஒட்டுண்ணிதானே” சந்தானம் சிரித்தபடி கேட்டான்.   “நான் ஒரு வேர் ஒட்டுண்ணி என்பதை மறுக்கவில்லை. எனக்கு அருகே வளரும் மற்றைய மரங்களின் சத்தினை என் வேர்கள் மூலம் உறிஞ்சி எடுத்து வாழ்கிறேன். அதனால் அவர்கள் என்னிடமிருக்கும் நறுமணத்தைப்  பெறுகிறார்கள். இது ஒரு கொடுத்து வாங்கும் வியாபாரம் என எடுத்துக் கொள்ளேன். என் வேரில் தான் கூடிய அளவு எண்ணெய் உண்டு.”   “மதிப்பும் பெறுமதியும் உள்ளவனுக்கு எப்போதும் ஆபத்து காத்திருக்கிறது என்பது உண்மை. நீ இங்கு தனியாக இருப்பதை வீரப்பன் போல் ஒருவன் கண்டால் உன் உயிருக்கு ஆபத்து. அதனால் வன இலாக்காவுக்கு அறிவித்து நான் உனக்குப் பாதுகாப்பு தரப்போகிறேன்.“   “நன்றி தம்பி. நீ எப்போதும் கோயிலிக்குப் போய் ஐயர் கொடுக்கும் சந்தனத்தை நெற்றியில் வைக்கும்போது என்னை மறந்து விடாதே. என்ன?”   “ நிச்சயமாக மறக்கமாட்டேன். நேரமாச்சு நான் வருகிறேன்” சந்தானம் சந்தனத்திடமிருந்து விடைபெற்றான். *  **  ***  **  *  வீடு திரும்பிய சந்தானத்திற்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. பெங்களூரில் வேலை செய்து கொண்டிருந்த அவனது தங்கை மகன் வந்திருந்தான். அவனைக் கண்டு பல காலம்.   “என்னடா கோபால் திடீரென்று இந்த பக்கம்?”   “இல்லை மாமா. கம்பெனி வேலையாக வந்தானான். உங்களையும் மாமியையும் பார்த்து அதிகநாட்கள். அது தான் உங்கள் இருவரையும் பார்த்திட்டு போவம் எண்டு வந்தனான். இந்தாருங்கோ உங்களுக்கு பிடித்தமான ஒன்றை என் அன்பளிப்பாகக் கொண்டு வந்திருக்கிறன்” என்ற ஒரு பெரிய பார்சலைக் கொடுத்தான்.   “அனபளிப்பு இருக்கட்டும். இன்று நீ எங்களுடைய வீட்டில சாப்பிட்டுவிட்டுத்  தான் போக வேண்டும். மாமியின் தயிர்க்குழம்பும் உருளைக் கிழங்கு வறுவல் கறியும் என்றால் உனக்குப் பிடிக்குமே.”   “சாப்பாடு இருக்கட்டும் மாமா. என் பரிசு பிடித்திருக்கிறதா பாருங்கள். பங்களூரில் பல கடைகள் எறி இறங்கி தேடி வாங்கினனான்.”   சந்தானம் பார்சலை பிரித்துப் பார்த்தார். ஒரு அழகிய பெட்டிக்குள் சந்தனமரத்தில் இருந்து செதுக்கப்பட்ட அழகிய அருச்சுனனுக்கு மகாபாரதப் போரில் ரதம் ஓட்டும் கிருஷ்ணர் சிலை. ரதம்,  நான்கு குதிரைகள், கிருஷ்ணர்,  அருச்சினன் உருவங்கள் அழகாக செதுக்கப்பட்டிருந்தன. கீதையை உலகுக்கு கிருஷ்ணர் எடுத்துச் சொன்ன சூழ்நிலை அது. அதிலிருந்து நறுமணம் வீசியது.   “பிடித்துக் கொண்டதா மாமா? நீங்கள் ஒரு கிருஷ்ண பக்தர். உங்களுக்குத் தான் பகவத் கீதையென்றால் பிடிக்குமே.”   ஆசைப்பட்டுப் பரிசு வாங்கி வந்த கோபாலின் மனதைப் புண்படுத்தாமல் இருக்க ஒரு நீண்ட உம்… என்ற ஒலி அவரிடமிருந்து வந்தது. அது சந்தனமரத்தின் சந்திப்பின் விளைவு.   கதை 14  சுமைதாங்கி [] பல விழுதுகளுடன் சடைத்து  வளர்ந்த ஆல மரம் பாதையோரத்தில் கம்பீரமாக காட்சியளித்தது. அதன் அருகில ஒரு சுமைதாங்கி. ஏறத்தாழ நாலரை அடி (1.2 மீட்டர்) உயரமும், ஒன்றரை தொடக்கம் 2 அடிவரை தடிப்புக் கொண்டதுமான ஒரு சிறிய சுவர் போன்ற கட்டுமானம்.  யாரோ ஒரு புண்ணியவான் தயவால்; பல தசாப்தங்களுக்கு முன்னர் கற்களால் உருவாக்கப்பட்ட உபயமது. சுமைதாஙகியோடு அதன் அருகே ஒரு நீர தொட்டியம்,  ஆவுரோஞ்சிக் கல் (ஆ உரோஞ்சும் கல்) அதன. துணைக்கு நின்றன. மாட்டு வியாபாரிகள் மாடுகளை அழைத்துக்கோண்டு அவ்வழியே போவதுண்டு. போவார் கலைப்பை போக்க ; தம் பொதிகளை சுமைதாங்கியில வைத்துவிட்டு, மாடுகளை தொட்டியில் நீர் அருந்த விடுவது வழக்கம்.  பின அவை தமது சுனைப்பை தவிர்க்க ஆவுரோஞ்சிக்கல்லில் தமது உடம்மைத் தேய்க்கும். அதுமட்டுமல்ல கிராமத்தில் பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இறந்துவிட்டால் அவளுக்காகப் பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது சுமைதாங்கிபோடுதல் எனப்பட்டது. பிறரது சுமைத் துன்பத்தைப் போக்குவதன் மூலம் அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் இதனால் நீங்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை.  சுமைதாங்கியில்; கற்களில யாரோ தமிழ் எழுதிப் பழகியிருக்கிறார்கள். தூம ;சுமைதாங்கியை பாவித்ததைக் குறிப்பிட தம் ; பதிவு செய்து விட்டு சென்டறிருநதாரகள். சுல்லகாலம் சுமைதைஙகியை அவரகள் உரிமை கொண்டாடவில்லை.  பாவம் சுமைதாங்கி, ஏடாக மாறிவிட்டது போலும். எத்தனையோ வழிப்போக்கர்கள் தலையில் சுமந்து வந்த சுமைகளை அது கூலிபெறாமல் தாங்கிச் சேவை புரிந்தது.  அச் சுமைதாங்கி 18ம் நூற்றாண்டில் மன்னர் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டது என அதன் வரலாறு பேசினர் கிராம மக்கள் சிலர். பஸ்போக்கு வரத்து இல்லாத அப்பதையில செல்லும்; வழிப்போக்கரகள் சுமையை இறக்கிவைத்துவிட்டு வழிப்போக்கர்கள் ஆலமர நிழலில் இளப்பாறிச் செல்வதுண்டு . மரமும் சுமைதாங்கியும நீர தொட்டியம்,  ஆவுரோஞ்சிக் கல்லும்  இணைந்து வழிப்போகரகளுக்கும் மாடுகளுக்கும் செய்த செய்த சேவையை அவ்வூர் மக்கள் பாராட்டியதாக தெரியவில்லை.   பாதைக்கருகே இருந்த அந்த சுமைதாங்கியை பெயர்த்து எடுத்து பாதையை விரிவாக்க வழி விட வேண்டும். அப்பொழுதுதான்  கிராமத்துக்கு பஸ் போக்கு வரத்து வருவதற்கும் கிராமம் முன்னேறவும் வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்கள் சிலரட ஊருக்கு ஏதோ நல்லது செய்யப் போவதாக நினைத்த சில பணம் படைத்த அரசியல் பிரமுகர்கள். முதலில் சுமைதாங்கி, அதன் பின்னர் நீர தொட்டி;,  ஆவுரோஞ்சிக் கல் ஆல மரமா அவர்களது இலக்கு என்ற கேள்வியை எழுப்பினான்; முற்போக்குவாதியான ஒரு கிராமத்து இளைஞன். அத் திட்டத்தை முன் வைத்தவர்களுக்கு வாழ்க்கையில பணம் கைநிறைய இருந்ததால் குடும்பச் சுமை, உழைப்பாளிகளின் பாரம் , சமூக சேவை போன்றவை முக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாதை ஓரமாக, ஆல மரத்துக்கு அண்மையில் ஓலைக் கூரையுடன் சிறு தேனீர் கடை வைத்திருந்த முருகேசு சுமைதாங்கியும் ஆல மரமும் செய்த சேவை பற்றி கதையாக சொல்லக்; கூடியவன். அது தேனீர் கடை மட்டுமல்ல சைக்கில் கடையும் கூட.    ஒரு சமயம் கடும் வெய்யிலில் தலையில் தனது உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்;று விற்பதற்காக வியர்க்க வியர்க்க சுமந்து வந்த விவசாயி ஒருவன் மூர்ச்சித்து கீழே விழாத நிலையில் அவனுக்கு கைகொடுத்தது அந்தச் சுமைதாங்கி. கொண்டு வந்ததை அதில் வைத்துவிட்டு மயக்கம் கண்களைச் சுழட்ட கீழ் முச்சு பெரு முச்சு வாங்கியபடி  சுமையை தாங்கி வந்தவன்; தூணில் சாய்ந்தபடி மயங்கிவிட்டான்.. அரை உயிரோடு இருந்த அம்மனிதனைக் கண்ட முருகேசு ஓடிப்போய்; முகத்தில் தண்ணீர்; தெளித்து வரண்ட தொண்டை இதமாக இருக்க பானையில இருந்த குளிர்ந்த தண்ணீரைக் கொடுத்து சுயநிலைக்கு அவனைத் திருப்பிக் கொண்டுவந்தான். பிறகு தான் தெரிய வந்தது தன்னைப் போல் பெரும் குடும்பச்சுமையையும் கடன் சுமையையும் அவ்விவசாயி சுமக்கிறான் என்று. அது போல் எத்தனையோ வழிப்போக்கர்களை முருகேசு சந்தித்து உறவாடியிருக்கிறான். அக்கிராமத்துக்கு வந்து போகும் வழிபோக்கர்கள் பலர் முருகேசுவின் ஆட்டுப்பால் கலந்த ஆடை மிதக்கும் தேனிரையும் கண்ணாடிப் போத்தல்களுக்குள் இருந்த சுடச் சுட வடையையும்; சுவைத்துச் செல்லாதவர்கள் இல்லை. அதுவும் தன் கைப்பட தயாரித்த தேனீரும் இறால் புதைத்த கடலை வடைக்கும் ஒரு தனி இலட்சனை இருப்பது முருகேசுவுக்குத் தெரியும். அந்த வடையின் சுவையை அனுபவிக்கவே வெகுதூரத்தில் இருந்து நேரே கள்ளுத்தவறணைக்குப் போக முன் பலர் வந்து வாங்கிப் போவதுண்டு. மாலை நான்கு மணிக்குள் தயாரித்த வடைகள்முடிந்து விடும் அளவுக்கு வியாபாரம் ஓரளவுக்குச் சிறப்பாக இருந்தது.  தேனீர் கடை மட்டுமல்ல சைக்கில்கள் வாடகைவிடுவது, பஞ்சரான டியூப்புகளை சில நிமிடங்கள் தேனீர் குடித்து முடிப்பதற்குள் ஒட்டிக் கொடுப்பது, சைக்கில் சில்களை நெளிவெடுப்பது, புது டயர்கள் மாற்றுவது விற்பனைக்கு வந்த பாவித்த சைக்கில்களை நல்ல விலைக்கு விற்று கொமிஷன் பெறுவது முருகேசுவுக்கு கைதேர்ந்த கலை. ரலி , ரட்ஜ், ஹம்பர், பஜாஜி சைக்கில்களின் . தரம் , சூட்சுமங்களை முற்றாக அவன் அறிந்து வைத்திருந்தான். மரமும் சுமைதாங்கியும் செய்த சமூக சேவையில் தனக்கும் பங்குண்டு என்பதை அவன் அறியாமல் இல்லை. ஆனால் தான் செய்த சேவை வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது  என்பதும் அவனுக்கு தெரியும். இன்னும் சில வருடங்களில் மோட்டர் சைக்கில்களை திருத்துவதும், வாடகைக்கு விடுவதும் போன்ற தொழில் ஸ்தானத்துக்கு தான் உயர வேண்டும் என்பது அவன் தினமும் கண்டுகொண்டிருக்கும் கனா. அவ்வியாபாரம் அவனது தந்தை விட்டுச் சென்ற முதுசம். அக்கடையில் தான் தன் தந்தையிடமிருந்து வேலை கற்றவன். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன். படித்துப் பட்டம் பெற்றவர்கள் வேலையில்லாமல் திரிவதைக் கண்ட அவன் தன் குடும்பப் பாரத்தைச் சுமக்க தனக்குக் கைகொடுப்பது அக்கடைதான் என்பதை அவன் புரிந்து கொள்ள அதிக காலம் எடுக்கவில்லை.  கடை அமைந்திருந்த காணி அவனுக்குச் சொந்தமில்லாவிட்டாலும் கடையின் உரிமை அவனுடையது. பாதை விரிவுத் திட்டத்தில் சுமைதாங்கியும் ஆலமரமும் மறைந்து விட்டால் தன் காணியும் கடையும் பறி போய் விடும் என்ற பயம் அவனுக்கு இருந்து வந்தது. தனது மனைவி, அவளது வயிற்றில் வளரும் குழந்தை அதோடு வளர்ந்தபிள்ளைகள் மூவர் இவர்களின் வருங்கால வாழ்க்கைச் சுமையைத் பல வருடங்கள் தானும் தன் சைக்கில் கடையும் தான் சுமக்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்கு உதவியாக சில சமையங்களில் அவனது மூத்த மகன் செல்வராசு உதவியாக இருப்பான். தன் தொழிலை, நம்பிக்கை உள்ள ஒருவனுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் தனக்குப் பின் தன்னைப் போல் கடையின் பொறுப்பை அவன் எடுக்கலாம் அல்லவா? கடையிருந்த இடம் அவனுக்கு அதிர்ஷடத்தைக் கொடுத்தது. “சுமை தாங்கி சைக்கிள் கடை” என்றால் அவ்வூரில் தெரியாதவர்கள் இல்லை. கடைக்கு வந்திருந்து முன்னே போடப்பட்டிருந்த சுண்ணாம்பு கறைகள் படர்ந்த இரு பழைய வாங்குகள். கடையில் தொங்கிக் கொண்டிருந்த சுவையான கதலி வாழைக் குலை. போத்தல்களில் அலங்கரிக்கும் உணவுப் பண்டங்கள், தேனீர் தயாரித்து வழங்க உதவியாக இருக்கும் பித்தளைப் பாத்திரம். இவை முருகேசு கடையின் அடையாளச் சின்னங்கள். வாங்குகளில் அமர்ந்து பொழுது போக்க அரசியல் பேசுவது முருகேசுக்கு பிடிக்காத விடயம். அதற்காகவே கடையில் “வம்பும் வதந்தியும் வேண்டவே வேண்டாம்” என்ற இரத்தினச் சுருக்கமான வசனத்தை பலகையில் எழுதியிருந்தான். “ கடன் நட்புக்கு பகை” என்ற வாசகம் கடன் கேட்பவர்களை கிட்ட நெருங்கவிடாது தடுத்தது.  அரசியல் பேசுவதால் சண்டை உருவாகி சினிமாப் படங்களில் வரும் காட்சியைப் போல் தனது கடை பாதிப்படையக் கூடிய நிலையை அவன் தவிர்த்தான். இரு சினிமா நடிகைகளின் விளம்பரப் படங்கள் மட்டும் அவனது கடை மேல் வழிபோக்கரின் கவனத்தை ஈர்த்;தது. அதை இரசித்து விமர்சனங்கள் செய்பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். படங்களை தன் கடையில் ஒட்டுவதற்கு முருகேசு பணம் கேட்காமல் இல்லை. “வாழ்க்கையே ஒரு வியாபாரம்” என்பது அவனது கொள்கை. வம்பு பேசி பிரச்சனை உருவாகாமல் தவிர்ப்பதற்காக தனக்குத் தெரிந்த ஒருவர் அன்பளிப்பாக கொடுத்துச் சென்ற பழைய வானொலி பெட்டி ஒன்றை அடிக்கடி தட்டிக் கொடுத்து பாட வைத்து வாடிக்கையாளர்களின் வீண் பேச்சை திசை திருப்பி விடுவான்.   சில சமயங்களில் முருகேசு தன் கடையை தன் பதினான்கு வயது மகனின் பொறுப்பில விட்டு விட்டு தன் குடும்பச்சுமையை சைக்கிளில் சுமந்து செல்வான் பாடசாலைகளுக்கும் உள்ளூர் சந்தையில் பொருட்கள் வாங்குவதற்கும். அந்தப் பயணத்தை பார்த்து பலர் அதிசயித்ததுண்டு. எவ்வாறு முருகேசு தன் குடும்பத்தோடு சரிந்து விழாமல் சாதுர்யமாக சமநிலைபடுத்தி சைக்கிளில் சர்க்கஸ் வித்தை செய்பவன் போல் குடும்பத்தோடு பயணம் செய்கிறான் என்பது அவர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. மூன்று மைல் தூரத்தில் உள்ள அவனது குடிசை வீட்டுக்கும் நகரத்தில் உள்ள கடைகளுக்கும் போக அவனது நாற்பது வயசுள்ள சைக்கில் தான் வாகனம். அவன் தந்தை பாவித்த ரெலி சைக்கிள் என்ற படியால் அதை தன் மனைவிபோல் கவனித்து வந்தான். யாரும் அதை களவெடுத்து செல்லாத வாறு இரண்டு செயின் போட்டு பெரிய ஆமை பூட்டு போட்டு செல்வது அவன் வழக்கம். தன் மகன் செல்வராசு கூட அதைப் பாவிப்பதை அவன் விரும்பியதில்லை. அவன் குடும்பத்தோடு சைக்கிலில் போகும் காட்சியைப் பார்த்து. அதோ பார் முருகேசுவின் குடும்பச் சுமையை சைக்கில் சுமப்பதை. பாவம் டவுனில் மட்டும் இக்காட்சியை பொலீஸ் கண்டால் நான்கு பேர் ஒரு சைக்கிளில் போன குற்றத்திற்காக வழக்கு தொடர்ந்து தண்டப்பணம் கட்டவைத்து விடுவார்கள். பாவம் முருகேசுவின் ரலி சைக்கில். அதற்கு மட்டும் முறைப்பாடு செய்ய ;வாயிருந்தால் தன்னை சுமைதாங்கி போல்; முருகேசு குடும்பம் பாவிக்கிறது என்று மனித உரிமை மீறல் குழுவுக்கு முறையிட்டு முருகேசு மேல் நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால் அப்படி செய்யாது தன் மேல் விசுவாசம் வைத்திருந்த காலம் சென்ற முருகேசுவின் தந்தை மீதும், தன்னைத் தினமும் பராமரித்து, துடைத்து அழகு படுத்தும் முருகேசுக்கும் அவமானத்தை கொண்டு வர அது விரும்பவில்லை. ஆலமரத்து சுமைதாங்கி போல் நான் இந்த பிறப்பில் இருக்குமட்டும்; சுமையை தாங்கி நல்ல கர்மாவை சேர்த்துவிட்டு அடுத்த பிறவியில மோட்டார் சைக்கிளாகவோ அல்லது வாகனமாகவோ சரி பிறக்க மாட்டேனா என்ற நப்பாசை அதற்கு. தனது நீண்ட கால சேவயின் போது ஒரு தரமாவது நடுவழியில் முருகேசு குடும்பத்தை நட்டாற்றில் விட்டுவிடவில்லை அவ் ரெலி சைக்கிள்.    தனது குடும்பத்தை வீட்டில் இறக்கிவிட்டு  கடைக்கு திரும்பிய முருகேசுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு பிற நாட்டவர் அவனை சந்திப்பதற்காக காத்திருந்தார்.   “ அப்பா இவர் பெயர் ஜோன் உங்களுக்காக கண நேரம் காத்திருக்கிறார்” என்றான் ஆங்கிலம் அறைகுறையாகத் தெரிந்த அவர் மூத்த பிள்ளை செல்வராசு. மகன் செல்வம் ஆங்கிலம் பேசுவதை முருகேசு பெருமையாக பேசிக் கொள்வான்.   “ வந்தவருக்கு தேனீரும் வடையும் கொடுத்தனீயா?” முருகேசு மகனை பார்த்து கேட்டார்.   “ இல்லையப்பா நீங்கள் வந்தபின் பார்ப்போம் என்று விட்டார்”   வந்தவரின் தோளில் ஒரு கமெரா தொங்கிக் கொண்டிருந்தது. அவர் தமிழ் பேசியது முருகேசுக்கு வியப்பாக இருந்தது.   “ யுசந லழர ஆச ஆரசரபநளர?” என்று முதலில் ஆங்கிலத்தில் கேட்டார்.   “ தன் பெயரை கேட்டவுடன் உடனே “ ஓம் சேர்” என்றான் பணிவுடன் முருகேசு அவரது தோலுக்கு மதிப்பு கொடுத்து. பிரித்தானிய ஆட்சியின் பிரதிபலிப்பு.   “ யோசிக்காதையும் நான் தமிழ் கொஞ்சம் பேசுவன். நீர் உமது ரெலி சைக்கிள் நாலு பேரை சுமந்து செல்வதை என் நண்பர் எடுத்த ஒரு புகைப்படத்தில் பார்ததேன். பிரமாதமான படம். எப்படி அப்படி பலன்ஸ் செய்து கொண்டு குடும்பத்தோடு டிரவல் செய்கிறீர். ஏதும் அக்சிடென்ட் நடக்கும் என்ற பயமில்லையா உமக்கு?”   “ எல்லாம் அனுபவம் தான் சேர். இது உறதியான சைக்கிள் பல வருடங்களாக பாவிக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு என் தந்தைiயார் இதை புதுசாக வாங்கி பாவித்தவர். அவர் இறந்த போது இது என் கையுக்;கு வந்துவிட்டது அவர் நினைவாக.”   “ இப்போ இதன் வயது நாற்பது வருடம் இருக்குமா ”   “ கூட இருக்கலாம். என் அப்பா எப்போ வாங்கினார் என்று எனக்குத் தெரியாது”   "சைக்கிலைப் பார்த்தால் அப்படி நாற்பது வருடத்துக்கு முன்பு வாங்கினதாக தெரியவில்லை. ஏதோ புதிய சைக்கிள் போல் அதை கவனித்து வருகிறீர் போல் தெரிகிறது”    “ ஓம் சார். இதை நம்பித்தான் என் குடும்பம் இருக்கிறது. குடும்பத்தின போக்கு வரத்துக்கு இது தான் சேர் உதவுகிறது”    “புரிகிறது அந்தப்படத்தைப் பார்த்தபொது. ரலி சைக்கிள் கொம்பெனிக்காரர்களுக்கும், சஞ்சிகை ஒன்றும்; உமது சைக்கிலை சுமையோடு படம் எடுத்து கட்டுரையொன்று எழுதி தங்களுக்கு அனுப்பும்படி கேட்டிருந்தார்கள். அது தான் உம்மை சந்தித்துப் பேசலாம் என வந்தேன்.”  அவர் சொன்னதைக் கேட்டது முருகேசுவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.   “ என்ன சேர் சொல்லுகிறீhகள். இந்த பழைய சைக்கிளுக்கு அவ்வளவு மதிப்பா?   ” மதிப்பு அதன் தரத்திலும் உத்திரவாதத்திலும் வயதிலும் தங்கியுள்ளது. பழைய பொருட்களுக்கு வெளி நாடுகளில நல்லமதிப்பு அதை யுவெஙைரந Pசழனரஉவள என்பார்கள ஆங்கிலத்தில். உமது சைக்கிள் கடை நான்; எழுதப் போகும் கட்டுரைக்கு துணை போகப் போகிறது. பின்னடைந்த நாடுகளில் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிலைப் போல் சைக்கில் தான் முக்கிய வாகனம். எல்லோராலும் காரும் . மோட்டார் சைக்கிலும் வாங்கும் வசதிகள் இல்லை. அதோடு பெற்றோல் விலை அதிகம்.”   “ உண்மைதான் சேர். இப்போ என்னிடம் ரிப்பெயருக்கு வரும் சைக்கில்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதில் இந்தியாவில் தயாரிக்கப்படும் சைக்கிலை தான் பலர் விலை குறைவு என்ற காரணத்தால் வாங்குகிறார்கள். ஆனால் அவை ரெலி சைக்கிலின் தரத்துக்கு ஈடாகாது என்பது பலருக்கத் தெரியும்”. ரலி சைக்கிள்கள் இன்னும் பழைய ஒஸ்டீன் ஏ போர்டி கார்களைப் போல் ஓடுகிறது பிரித்தானிய ஆட்சி நினைவாக.  பள்ளிக்கூட மாணவர்கள் , விவாசாயிகள் , மீன் வியாபாரம் செய்பவர்கள் , பல தொழிலாளிகள் எல்லோரினதும் சுமையைத் தாங்குவது இது போன்ற சைக்கிள்கள் தான். அதோ தெரிகிறதே சுமைதாங்கி, அது போல என்று சொல்லுங்களேன்.   “ நல்லது உம்மையும் உமது மகனையும் வைத்து கடைப் பின்ணணியில் சில படங்கள் எடுக்கப் போகிறேன். அதற்கு உமது சம்மதம் வேண்டும்”   “ படமா?. எதாவது உள்ளூர் பத்திரிகைக்கு அனுப்பப்போகிறீர்களா?   “ இல்லை இது ஒரு பிரபல்யமான வெளிநாட்டு ஆங்கில சஞ்சிகையில் கட்டுரையுடன் வரப்போகிறது. பல நாடுகளில் வாசிப்பார்கள். அதோடு உமக்கு சஞ்சிகையில் இருந்தும் ரெலி சைக்கிள் உற்பத்தி செய்யும் ஸ்தாபனத்தில்  இருந்தும் தகுந்த வெகுமதியும் உமக்கு டொலரில் கிடைக்கும்.. ”   டொலரில் வெகுமதி என்றவுடன் முருகேசுவுக்கு தான் பட்ட கடன் தான் நினைவுக்கு வந்தது. அதை தீர்த்தால் தனது கடன் சுமையை குறைக்கலாம் என்று யோசித்தான்.   “ என்ன யோசிக்கிறீர். இப்படி ஒரு சந்தர்ப்பம் உமக்கு கிடைக்காது”   “ சரி உங்கள் இஸ்டம். இதனால் எனக்கு பிரச்சனை வராமல் இருந்தால் சரி. இந்த பணம் தரும் விஷயத்தை மட்டும் மற்றவர்களுக்கு சொல்லவேண்டாம்.”   “ சரி சரி. பயப்படாதையும். உமக்கு அதனால் பிரச்சனை வராது. உமது மகன் அந்த அழுக்கான உடுப்போடு காட்சிதரட்டும். நீரும் அப்படித்தான். படம் இயல்பாக இருக்கட்டும். அந்த சுமைதாங்கியையும்; ஆலமரத்தையும் சேர்த்து அதற்கு கீழ் உம்மையும் சைக்கிளையும் வைத்து ஒரு படம் எடுப்பேன்.   “ அது நல்லது அவைகளின் சேவையை ஒருவரும் கவனித்து கௌரவிப்பது கிடையாது. உங்கள் கட்டுரையும் படமும் இந்த சுமைதாங்கிகளை கௌரவிப்பதாக இருக்கட்டும். படம் எடுப்பதற்கு முன் எங்கள் கடையின் தேனீரையும் வடையையும் சுவைத்துப் பாருங்கள். அவற்றின தரம் அப்போது புரியும் என்று வந்தவருக்கு சொல்லிவிட்டு கடைக்குள் போனான் முருகேசு. கடைக்கு முன்னே போடப்பட்டிருந்த வாங்கில் அமர்ந்தபடி தனது கமெராவை எடுத்து தயார் செய்தார் வந்தவர். அதை ஆவலுடன் வேடிக்கை பார்த்தபடியே நின்றான் செல்வம்.   கதை 15  (மா)ண்புமிகு மாமரம் [] வெம்பி விழுந்த மாம்பழங்களும்; வண்டுகளும்; அணில்களும் சுவைத்த பழங்களும் அந்த செழித்த மா மரத்தின் கீழ் சிதறிக் கிடந்தன. அருகில் இருந்த மாட்டுக்கொட்டிலில் “ம்மா..” என்ற பசு மாட்டின் குரலும்; வீட்டிலிருந்து “அம்மா” என்ற அன்புடன் அழைத்த என் மகளின் குரல்களும் ஒன்றாக ஒலித்தன. அதில் தொனித்த “மா” என்ற வார்த்தைக்குத் தான் என்ன மதிப்பு? என்ன புனிதம்?. அம்பா என்ற அம்மனைக்குறிக்கும் வார்த்தை மாமாரத்தின் மறு கருத்தாகும். சிந்தனையுடன் பழங்களைப் பொறுக்கியவாறு மாமரத்தை அண்ணார்ந்து பார்த்தேன். அது என்னைப் பார்த்து சிரிப்பது போன்ற ஒரு பிரமை.  “ஏன் சிரிக்கிறாய்” என்றேன் கோபமாக.   “ இல்லை. என் மரத்தில் நல்ல பழுத்த பழங்கள் இருக்கும் போது புழுக்குத்திய பழங்களைப் பொறுக்கிறியே அதை நினைத்து சிரிக்கிறேன்” என்றது மரம்.   “ உன் பழங்களுக்குத் தான் எத்தனை மரியாதை, போட்டி. முருகனுக்கும் கணபதிக்கும் உன்னால் போட்டி. ஞானப் பழத்தை தருபவனல்லவா நீ.”   “அது சரி எனக்கும் புராணத்துக்கும் உள்ள தொடர்புகள் உனக்கு தெரியுமா?..”   “கேட்கப் போகிறாயா? உன் புராணக் கதைகளை சொல்கிறேன் கேள்.. மாமரம் தேவலோகத்து விருட்சங்களி;ல் ஒன்றாகும.; இந்த மா என்ற எழுத்துக்கு விளக்கத்தை அகத்தியரே சிறப்பித்துக் கூறுகிறார். பெரும்பாலும் நம் நாட்டு மூலிகைகளுக்கு பெயரிட்ட அகத்தியரே ஒரு சில மூலிகைகளுக்குத் தான் ‘மா’ என்ற பதத்தை முன் வைத்துள்ளார். மா மரம், மாசிப் பத்திரம், மாகதி, மாதுளங்கம், மாமுனி மாமுலி, மாவிலங்கு மற்றும் இரண்டொரு பெயருக்கு அதிகமிருக்காது. இந்த ‘மா’ வுக்கு அகராதியில் நூற்;றுக்கும் மேலான பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. எனினும் மகிமை வாய்ந்;ததும் பெருமைக்குரிய வஸ்துகளுக்குத்தான் ‘மா’ பொருத்தமாகும் என்பது மஹா சன்னிதானத்தின் வாக்கு. ஆங்கிலத்தில் கூட இதற்கு ‘ஓமேகா’ என்பார்கள், “மேலான சக்தியுடையது” என்று பொருள். நம் நாட்டு தேன் மதுர மொழியில் “மா”வுக்கு பொருள் லஷ்மி, அன்னம், குதிரை, யானை, தேர், சக்கரவர்த்தி, நாகம், மாணிக்கம், சிம்மாசனம் ஆகியவைகளுக்கும், சிருஷ்டி கர்த்தாவாகிய பிரம்ம தேவனையே சிறையில் வைத்து சிருஷ்டி தொழிலை நடத்திக் காண்பித்து செருக்கடக்கிய மால்மருகன் ஸ்ரீ முருகப் பெருமானுக்கும் ‘மா’ என்றுதான் ஸ்கந்த புராணம் விளக்கம் கூறுகிறது ‘ம்’ என்ற சப்தம் பிரணவ ஒலியின் முடிவானது. இத்தோடு ‘அ’ என்ற அகரம் சேரும்போது “மா” என விரிந்து அண்டமெல்லாம் பரவுகிறது. உயிர்களெல்லாம் அன்னை வயிற்றில் பிண்டமாகி கருவுற்றபோது ‘ஓம்’ என்ற வடிவாகி இறைவனை துதி செய்து கொண்டிருக்கும். ஆனால் கருப்பையிலிருந்து நழுவி பூமியில் ஜனனமெடுத்த அடுத்த வினாடியே ம்மே! என்று தாயை துதிக்க ஆரம்பி;த்து விடுகின்றன. இப்படித்தான் பெரியவர்கள் அடிக்கடி சொல்லக் கேட்பதுண்டு. இவ்வண்ணம் பெருமைதாங்கிய ‘மா’வை தாங்கிய மாமரம் நீ.   இவ்வளவு மகிமை வாய்ந்த நீ மன்னிக்கவும் நீர் புராண வரலாற்றிலும் நிறைய இடம் பெற்றுள்ளீர். பார்வதியம்மையார் பூலோகத்தில் பல தடவை ஜனித்து சிவபெருமானை வழிபட்டதாக புராண வரலாறு. காஞ்சிபுரத்தில் 1008 சிவாலயங்களும் 108 விஷ்ணு ஆலயங்களும் இருந்ததாக காஞ்சி ஸ்தல புராணம் கூறுகிறது. இன்றும் காஞ்சி ஏகாம்பர ஈஸ்வரர் கோயிலில் ஒரு பிரம்மாண்டமான மாமரமும் அதனடியில் ஏகாம்பரநாதர் லிங்கவடிவமாகி இருப்பதையும் காணலாம். இந்த மா மரத்தடியில் காமாட்சியம்மையாக அவதரித்து மணலால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு முக்தியடைந்ததாக புராண வரலாறு கூறுகிறது. காஞ்சிபுரத்தில் வருடா வருடம் ‘மாவடி சேவை’ உற்சவம் இன்னும் நடைபெறுகிறது. காமாட்சியம்மை மா மரத்தினடியில் சேவை செய்து முக்தி பெற்ற வரலாறு தான் அந்த உற்சவம். அந்த மாமரமும் அழியாமல் இருக்கிறது. இந்த மாவடி ஈஸ்வரனை காண்போருக்கெல்லாம் சகல பாபங்களும் ரோகங்களும் விலகும்.   மா மரமும் முக்தியைத் தரக்கூடியது என்றால் ஒரு சிலருக்கு சந்தேகம் வரலாம். முக்தியை மட்டுமல்ல பிறவி என்ற பெருங்கடலை நீந்தக் கூடியது மாமரம். அசுரர்களில் வல்லமையுடையவனும் தேவர் மூவர் யாவராலும் வெல்ல முடியாத சக்தியைப் படைத்த சூரபன்மன் ஸ்ரீ முருகப் பெருமானிடம் போரிட்டு பல மாயா ஜாலங்கள் புரிந்து விரக்தியடைந்து கடைசியில்; மாமரமாகி நின்று விட்டான். இப்படி மாமரமாகி நின்ற அசுரனை முருகவேள் என்ன செய்தார் தெரியுமா? தன் கை வேலாயுதத்தால் மாமரத்தை பிளந்து ஒரு பாதியை மயில் வாகனமாகவும், மற்ற பாதியை சேவல் கொடியாகவும் வைத்துக் கொண்டார்! மாமரம் முக்தியை கொடுத்துவிட்டது அசுரனுக்கு. அது மட்டுமா? முருக பக்தர்கள் மயில் வாகனா! சேவல் கொடியோனே! என்றெல்லாம் பக்த கோடிகள் புகழ்ந்து பாடுவது மாமரத்தால் அடைந்த முக்தியல்லவா”?   “அடேயப்பா. நீ சொல்வதைக் கேட்டு என் உடம்பு ;பூரிக்கிறது. என்னைப் பற்றி புகழ்பாடியதுக்கு இதோ என் பழங்கைளைப் பரிசாகப் பெற்றுக் கொள்” என்று மரத்தில் இருந்து சுவையான பழங்களை உதிர்த்தது மரம்..”   “ சுட்ட பழமா சுடாத பழமா” என்றேன் நான் சிரித்தபடி.   “வெய்யிலில் சுட்டபழம் தான். சில வேளை பொல்லாத வண்டு உள்ளே குடியிருக்கும் வெட்டி, ஒட்டிய மண்ணை ஊதிச் சாப்பிடு. இவ்வளவு நேரமும் நீ என் புராணம் பாடினாய். நான் இனி எப்படி என்னிடம் இருந்து மானிடர்கள் நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கிறார்கள் என்று சொல்கிறேன் கேள்.”   “ சொல்லேன். உன் பழத்தைச் சுவைத்தபடி கேட்கிறன்”   “எனது முற்றிய இலை பொதுவாக உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்க வல்லது. ஆகையால் இதை சட்டியில் போட்டு தேன் விட்டு வதக்கி இலை கருமையாகும் தருணம் 1 குவளை தண்ணீர் விட்டு கொதிக்கக் காய்ச்சி வடிகட்டி கஷாயத்தை மட்டும் தினம் இரண்டு முறை குடிக்க சீதளத்தால் தொண்டை கட்டி பேச முடியாது குரல் கம்மியவர்கள் மீண்டும் குரல் தொனியை உண்டாக்கி உஷ்ணத்தை கொடுக்கும். பச்சை இலையை நெருப்பில் போட புகை வரும். அந்தப் புகையை வாய் திறந்து தொண்டைக்குக் காட்டினாலும் குரல் கம்மல் குணமாகும். அத்துடன் இம்முறை விக்கலுக்கும் சிறந்தது. பசுமையான மர இலைகளை இடித்துப் பிழிந்த சாரம் 1 அவுன்ஸ், பசுநெய் கால் அவுன்ஸ், பசும்பால் அரை அவுன்ஸ், சுத்தமான தேன் அரை அவுன்ஸ் இவைகள் ஒன்றாய்க் கலந்து வைத்துக் கொண்டு தினம் இருவேளை குடித்துவர மூலச்சூடு, உஷ்ணம், இரத்தமாகவே போகும் ரத்தமூலம் யாவும் குணமாகும். மா இலையால் பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது சாஸ்திரம்;. மாவிலைத் தோரணங்கள் இல்லாத மரணங்கள், சுபச் சடங்குகள், பண்டிகைகள் கொண்டாட்டங்கள் நம் நாட்டில் இருப்பது அபூர்வமல்லவா? லஷ்மி வாசம் செய்யும் பொருள்களில் மா இலையும் ஒன்று. “மாவிலையில் பல் துலக்காதவன் மாபாவி” என்ற பழமொழியும் உண்டு, பிரதி தினமும் பல் துலக்காவிட்டாலும் மாளய பட்ஷம் வரும்போது பெரியோர்கள் அந்த 15 நாளும் தினம் மாவிலையில் பல் துலக்குவதால் தோஷங்கள் விலகி பிதுர்களின் கடாட்சமும், தெய்வ பலமும் பெருகுமென்பது சாஸ்திரம். வாழை இலையில் சாப்பிடுவது போல் இதன் இலையைத் தைத்து அதில் அன்னம் பரிமாறி சாப்பிடுவதும் நம் நாட்டு வழக்கமாகும். இதை ‘மாழை இலை’ என்றும்  கூறுவர்.   பூவை சாதாரண பேதி நாள்பட்ட பேதிகளுக்கும் உபயோகிக்க தீரும். பூவை சேகரித்து வைத்து வேண்டும் போது நெருப்பிலிட்டு புகைக்க இந்த வாசனை சகிக்காது கொசுக்கள் ஓடிப்போகும். அது சரி நீ மாஙகாய் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறாயா?”   “ஆம் என் பாட்டி நல்ல மாங்காய் ஊறுகாய் தயாரிப்பாள். என் மகள் கூட கற்பிணியாக இருக்கும் போது மாங்காயை விரும்பிச் சாப்பிடுவாள்.”   “மாங்காய் ஊறுகாயைச் சாப்பிடுவதால் பசியின்மை, வாய் நீரூறல், குமட்டல், வாந்தி முதலியன தீரும். “மாதா ஊட்டாத அன்னம் மாங்காய் ஊட்டும்” ஆனால் பச்சை மாங்காயில் உடம்புக்கு கெடுதலே தவிர  நன்மை கிடையாது. “தின்றால் தினவெடுக்கும் தீபனம்போம் நெஞ்செரிவாம், அன்றே விழிநோய் அடருங் காண் துன்றிமிக வாதக் கரப்பானும் வன்கிரந்தியும் பெருகும். சூதக்கனியின் சுகம்” -என்று அகத்தியர் சொன்னபடி சொறி சரிங்கு, கண்நோய், ஆறாதரணம், தாது நஷ்டம், பல்கூச்சம், உஷ்ணரோகங்கள் ஆகியவற்றை உண்டாக்கிவிடும். எனவே மாங்காய் மாம்பழம் ஆகியவற்றை அளவோடு உண்பது நல்லது. மாங்கொட்டை விளையாடத் தெரியுமா உனக்கு?”   “ ஏன் தெரியாது. சிறுவயதில் நண்பர்களுடன் நிலத்தில் கோடுபோட்டு மாங்கொட்டை விளையாடி இருக்கிறன்”   “மாங்கொட்டையின் மகிமையைச் சொல்லுகிறேன் கேள். மாங்கொட்டைகளைச் சேகரித்து உலர்த்தி எடுத்துக் காய்ந்த பின்பு உடைத்து அதனுள் இருக்கும் பருப்புக்களை சிறிது நெய்விட்டு பொன் வறுவலாக வறுத்து இடித்துத் தூள் செய்து வைத்துக்கொண்டு அதிக உஷ்ணம் தரக்கூடிய பதார்த்தங்கள் சமையலுடன் சேரும்போது இதையும் சிறதளவு சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது பண்டைய வழக்கமாகும். இதனால் சகல உஷ்ணமும் தணியும். மேலும் இந்தத் தூளையே ரத்தபேதி, சீதபேதி, நீரான பேதி, வயிற்றுக் கடுப்பு> ஆசனவாய் எரிச்சல் ஆகியவைகளுக்கும் 1 டம்ளர் பால் கலந்து சாப்பிடலாம். சிறுவர்களுக்கு பாதி அளவு உபயோகிக்கலாம். இந்தத் தூளுடன் சுக்கு, ஓமம், கசகசா இவைகள் சமமாக எடுத்து எலுமிச்சம்பழ ரசத்துடன் கலந்து அரைத்து ஒரு புளியங்கொட்டை அளவு நெய்யோடு கலந்து கொடுக்க மூலச்சூடு மலத்தில் கிருமி விழுதல், கிராணி, வயிற்றுக் கோளாறுகள் யாவும் தீரும். மாங்கொட்டைப் பருப்பு மூல ரோகங்களுக்கு மிகச் சிறந்தது. சர்ம ரோகங்கள் சொறி சிரங்குகளுக்கும், மாம்பிசின் உடன் எலுமிச்சம் பழம் ரசம் சேர்த்து கலந்து அவைகளுக்கு மேலும் பூசுவதால் குணம் ஏற்படும்.”   “ உங்களிலிலும் பல சாதிகள் உண்டோ?”    “இந்தியாவில் என் சாதியைச் சேர்ந்தவர்கள் 100 க்கு மேலுண்டு. அவர்கள் என்னைப்பற்றி புகழ்வதை கேட்டால் கோபப் படுவார்கள்” என்றது மரம்.   “ ஏன் யாழ்ப்பாணத்தில் கூட பல சாதி மாமரங்களுண்டு. கறுத்தக் கொழும்பான் , பச்சைத் தின்னி, செம்பாடு, வெள்ளைக் கொளும்பான், அம்பலவி இதில் கறுத்தக் கொழும்பானுக்கு சிங்களவரிடையே நல்ல மதிப்புண்டு. பாவம் செம்பாடு படும் பாடு. வண்டுகள் அதன் பழத்துக்குள் எப்படியும் புகந்துவிடும்”   “ அதென்ன பச்சைத் தின்னி என்று ஒரு சாதியைச் சொன்னா அது ஒரு புதுமையான பெயராக இருக்கிறதே.?”   “ பச்சசையாக மரத்தில் மோதி சாறு போன பின் தின்றால் அந்த மாங்காய்க்கு தனிச் சுவையுண்டு. அதனால் தான் அந்த பெயர் அதற்கு வந்தது. நான் சிறுவயதில் பள்ளிக்குப் போகும் போது திருட்டுத்தனமாக கல்லெறிந்து  பாதையோரம் உள்ள வீட்டிலிருக்கும் மாமரத்தில் இருக்கும் பச்சைத் தின்னி மாங்காய் பறித்து தின்பது இன்னும் நினைவில் நிற்கிறது. காய்க்;கிற மரம் தான் கல்லெறிபடும்.  அது தெரியுமா உனக்கு”   “ஓகோ தத்துவமா பேசுகிறாய்?. எனக்கு விளங்கிறது நீ எதை சொல்கிறாயென்று. எவன் திறமையாக செயல் படுகிறானோ அவன் கடும் விமர்சனத்துக்கு ஆளாகிறான் என்கிறாய். அப்படித்தானே?”   “ஆமாம். அது சரி நீ என்ன சாதியைச் சேர்ந்தவன் என்று சொhல்லவில்லையே?”   “ நான் மல்கோவா மாமரச்சாதி. பெண்களை என் பழத்துக்கு ஒப்பிடுவார்கள்”   “ தெரியும். இல்லாமலா சந்திரபாபு ஒரு சினிமாப் படத்தில் “மல்கோவா மாம்பழமே” என்ற பிரபல்யமான பாடலை பாடியிருக்கிறார். அது சரி உனக்கும் கோவாவுக்கும் என்ன தொடர்பு?.   “ மல்கோவா அல்பொன்சோ, டயாஸ் என்ற சாதி மாம்பழங்கள் போர்த்துக்கேயருடன் தொடர்புடையவை. போர்த்துக்கேயர் கோவாவை ஆண்டது தெரியும் தானே?. ருமணி , பங்கனாபாளி, பீர் பசன்ட் , இவை மோகல்(ஆழபாரட) மன்னர்காலத்தில் அறிமுகமான மாமரங்கள். 16ம் நூற்றாண்டில் மாமரம் போர்த்துக்கேயரால் ஆபிரிக்காவில்    அறிமுகப்படுத்தப்பட்டது. 1700ல் அவர்கள் மாமரத்தை பிரேசிலுக்கு அறிமுகப்படுத்தினர். அக்பர் பேரரசர் ஒரு லட்சம் மாமரங்களை தர்பங்காவில் நாட்டினார். அங்கு ஒரு மாஞ்சோலையே உண்டு”   “ நல்லது. எனக்கு தோரணம் கட்டவும்; கும்பம் வைக்கவும்  உன்னிடம் இருந்து சில மாவிலைகள் தேவைப் படுகிறது. எடுக்கட்டுமா?”   “நீ இப்போது என் நண்பன். உன்னிடமிருந்து என்னைப்பற்றி பல விஷயம் அறிந்துவிட்டேன். உனக்கு இல்லாமலா?. தாராளமாய் எடுத்துக்கொள்” என்றது மாமரம்.   அதன் இலைகளைப் பறித்துக்கொண்டு அதனிடம் இருந்து விடைபெற்றேன்.    கதை 16  தெரு  நாய் [] நான் தினமும் ஓபீசுக்குப் போவதற்கு, கொழும்பில் உள்ள வெள்ளவத்தை விவேகானந்தா வீதி வழியே, என் வீட்டில் இருந்து நடந்து சென்று, பிரதான வீதியான  காலி வீதியில் உள்ள பஸ் தரிப்பில் பஸ் எடுப்பது வழக்கம். விவேகானந்தா வீதியின் இருபக்கத்திலும் விலை உயர்ந்த வீடுகள். நிச்சயமாக அதன் உரிமையாளர்கள் செல்வந்தவர்களாகவே இருக்க வேண்டும். அவ்வீடுகளில், இரு வீடுகளுக்கு செக்கியூரிட்டி ஆட்கள்  இருந்தனர். சில வீடுகளின் கேட்டுகளில் “நாய் ஜாக்கிரதை” என்று எழுதப்பட்ட பலகை அலங்கரிக்கும். இக்காட்சிகளை இரசித்தபடி நடந்து போகும் எனக்கு, “சாந்தி நிலையம்” என்ற பெயர் பலகையோடு சேர்ந்து வீட்டுச்சொந்தக்காரர் வைத்தியத் துறையில் பெற்ற பட்டங்கள் கொண்ட பெயர்ப் பலகையும் ஜொலித்தது. அப்பலகையின் கீழ்  “நாய் ஜாக்கிரதை” என்று எழுதிய பலகையும் என் கவனத்தைக் கவர்ந்தது. பெயருக்கு ஏற்ப அமைதியான வீடாக அவ்வீடு இருக்கும் என நினைத்த எனக்கு, தினமும் அவ்வீட்டைத் தாண்டிப் போகும்போது கம்பீரமான ஒரு நாயின் குரல் கேட்கும். கம்பி போட்ட கேட்டுக்குப் பின்னால் இருந்தவாறே இப்படி உரத்த குரலில் குரைக்கும் நாய், எப்போது இவன்மேல் பாய்ந்து, கடித்துக் குதறுவோம் என்ற பார்வையொடு பார்க்கும். ஒரு காலத்தில் ரொடேசியா (Rhodesia) என்ற பெயரில் இருந்த ஜிம்பாப்வே தேசத்தில் நான் சில ஆண்டுகள் தொலைபேசி நிறுவனம் ஒன்றில் ஆலோசகராக வேலை செய்ததால், என்னை வேட்டையாடும் நோக்கத்தோடு குரைக்கும் கறுப்பு நிற, இரண்டரை அடி உயரமுள்ள, ஆண் வேட்டை நாய், நிச்சயமாக  “ரொடேசியன் டோபர்மன் ரிட்ஜ்பாக்” (Rhodesian Dhorman Ridgeback) என்ற உயர்சாதியைச் சேர்ந்த வேட்டை நாயாகத் தான் இருக்கும் என்பது என் அனுமானம். அதை உறுதிப்படுத்துவது போல் அதன் முதுகில் பெயருக்கு ஏற்ற,  இரண்டரை அங்குலத்துக்கு, நீண்ட,  அகலமான, மயிர் வரம்பானது, அதற்குப் பிரத்தியேக அடையாளத்தைக் கொடுத்தது. அதனால் தானோ என்னவோ அச்சாதி நாய்க்கு அப்பெயர் வந்திருக்கலாம். அதோடு மட்டுமல்ல என்னோடு ஜிம்பாப்வேயில் வேலை செய்தவர்களிடம் விசாரித்தபோது, அச் சாதி நாய், சிங்கத்தை வேட்டையாடும் போது அவ்வூர் சோனா இனக் குடிமக்களால் பாவிக்கப்படும் வேட்டைநாய். அதனால் சிங்க வேட்டைக்காரன் (Lion Hunter) என்ற பெயரும் உண்டு என்றார்கள். அவர்கள் சொன்ன விளக்கம் உடனே என் நினைவுக்கு வந்தது, ஒரு வேளை எனது பெயரான ராஜசிங்கத்தில், சிங்கம் கலந்திருப்பதாலோ என்னவோ என்னை வேட்டையாட அந்த நாய் எதிர்பார்த்திருக்கலாம் என்று நினைத்தேன்.   என்னைக் கண்டு தொடர்ந்து நாய் குரைப்பதைக் கேட்டு அவ்வீட்டு எஜமாட்டி நாயின் குரலை விடத் தன் பெருத்த குரலில் “சோனா, குரைக்கிறதை நிறுத்திவிட்டுக் கூட்டுக்குள் போ” என்றாள் ஆங்கிலத்தில். நாய்க்கு ஆங்கிலம் மட்டுமே புரியுமோ என்னவோ. நாயின் பெயரைக் கேட்டவுடன் நல்ல பொருத்தமான பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள் என நினைத்தேன். காரணம் ஜிம்பாப்வேயில் வாழும் இனங்களில் சோனா என்ற பெரும்பான்மை இனமும் உண்டு. அவர்கள் பந்து மொழி பேசுபவர்கள்.   பிரதான காலி வீதியில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்துக்குப் போகுமுன், அதற்கு அருகே உள்ள காந்தி விலாசில் கோப்பி அருந்திவிட்டு, இரண்டு வடைகளை வாங்கிக் கொண்டு வெளியே வருவேன். அப்போது தினமும் நான் சந்திப்பது கடைக்கு முன்னால் இருந்த குப்பைத்தொட்டிக்கு அருகே, சுருண்டு படுத்திருக்கும் ஒர பெண் தெருநாய். வெள்ளையும் பிரௌனும் கலந்த நிறம். அதன் பார்வையில் ஒரு சாந்தம் தெரிந்தது. நான் சில   வருடங்களுக்கு முன் ராணி என்ற பெண்  நாய் ஒன்றை வீட்டில் வளர்த்தேன். எனக்கும் நாய்க்கும் பொருத்தமில்லையோ என்னவோ இரண்டு வருடத்துக்குள் காரில் அடிபட்டு அந்நாய் இறந்து விட்டது.   நான் விவேகானந்தா வீதியில் சாந்தி நிலையத்தில் கண்ட நாய்க்குப் பெயர் இருந்தது. கொடுத்து வைத்த நாய். பாவம் இது பெயரில்லாத, அனாதையான தெருநாய். இதன் பரம்பரை, தெருநாயைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஆனால் தினமும் அந்நாயைக் காணும்போது அது குரைக்காமல் என்னைப் பார்த்துத் தன் வாலை ஆட்டும். ஆதனால் எனக்கு அதன் மேல் பிரியம் ஏற்பட்டது. குப்பைத்தொட்டியில், காந்தி விலாசில் இருந்து வந்து விழும் சாப்பாட்டுக் கழிவுகளை நம்பி உயிர் வாழும் தெருநாய் மேல் எனக்குப் பரிதாபம் ஏற்பட்டது. தினமும் நான் வாங்கும் இரண்டு வடைகளை அதற்கு  உண்ணக் கொடுப்பேன். இந்த தெருநாய்க்கு ஒரு பெயர் வைத்தால் என்ன என்று யோசித்த போது நான் வளர்த்த ராணியின் பெயர் எனக்கு ஞாபகம் வந்தது. பொருத்தமான பெயர். அந்தப் பெயரை வைத்தால் என்ன?  ஒவ்வொரு தினமும் வடையைக் கொடுத்து “ராணி சாப்பிடு” என்பேன். காலப்போக்கில் அதற்கு நான் பெயர் சொல்லிக் கூப்பிடுவது புரியத் தொடங்கி விட்டதற்கு  அடையாளமாக வடையைக் கண்டதும் இருதடவை குரைத்து நன்றி தெரிவிக்கும்.   ஒரு நாள் ராணி, சாந்தி நிலையத்தின் கேட்டருகே சோனாவோடு நின்றதைக் கண்டேன. ஓகோ! பெரிய வீட்டு நாய் மேல் ராணிக்குக்  காதலா? “ஏய் ராணி நீ இங்கை என்ன செய்கிறாய்? கனவு காணாதே. உண்டை இடத்துக்கு ஓடிப்போ” என்று விரட்டினேன்.     மாதங்கள் உருண்டோடியது. ராணியின் வயிறு பெருக்கத் தொடங்கியதை நான் அவதானித்தேன். பாவம் ராணி ஏமாற்றப்பட்டுவிட்டாளா? நான் தினமும் கொடுக்கும் வடை அவளுக்கும் அவள் வயிற்றில் வளரும் ஜீவனுக்கும்  போதாமல் இருக்கலாம். காந்தி விலாஸ் முதலாளியிடம் சொன்னேன். “ஐயா உங்கள் கடையைக் காவல் காக்கும் அந்தத் தெருநாய்க்குத் தினமும் இரண்டு தோசைகள், என் கணக்கில் போடுங்கள். செலவை நான் தாரன்” என்றேன்.  காந்தி விலாஸ் முதலாளிக்கு என் செயல் ஆச்சரியமாகப்பட்டது.   ஒரு நாள் ஒபீசுக்குப் போக பஸ் தரிக்கும் இடத்துக்குப் போனபோது ராணியை ஒரு அழகான குட்டியோடு கண்டதும் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. ராணி தன் குட்டியை நக்கியபடி பால் கொடுத்துக் கொண்டிருந்தது. கறுப்பு நிறக்குட்டியின் தோற்றத்தால் கவரப்பட்டேன். தெரு நாய்க்குப் பிறந்த குட்டியின் முதுகில் அதே  மயிர் வரம்பு இருந்தது.   “அப்போ இக்குட்டியின் தந்தை உயர் சாதியைச் சேர்ந்த சோனாவா? மிருகங்களிடையே சாதிக்கு இடமில்லை போலும். இந்த சாதி, மதம், இனம், அதன் வேற்றுமையால் நடக்கும் கொலைகள் எல்லாம் மனித இனத்தில் மட்டும் தானா” என்றது என் மனம்.   எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:   மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.   ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:   ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.   தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:   தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.  சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.  எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.  சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.  எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது.  ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.  அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.  வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.  பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்.  வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.  FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT , இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.   இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?   நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.  அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:    - ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் - தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் - சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்   விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com  எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை.  இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.   இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?   ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை.  ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது.   பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.   1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  and more - http://freetamilebooks.com/cc-blogs/   எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?   இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்>   உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்].   தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.   இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.  எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/     நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.     e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks    G +: https://plus.google.com/communities/108817760492177970948           நன்றி.   உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம்.  1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/  தமிழில் காணொளி .    2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –  கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்  http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101   https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses     உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/     3.  மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.       நூலின் பெயர்     நூல் அறிமுக உரை     நூல் ஆசிரியர் அறிமுக உரை     உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்     நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url)  இவற்றை freetamilebooksteam@gmail.com  க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.   விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.   நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்   மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  –  தமிழில் காணொளி, offline method  – https://youtu.be/0CGGtgoiH-0    press  book  online  method  - https://youtu.be/bXNBwGUDhRs     A4 PDF, 6 inch PDF கோப்புகளை  Microsoft word இலேயே உருவாக்க – http://freetamilebooks.com/create-pdf-files-using-microsoft-word/    எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum       நன்றி !