[] [cover image] வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - வரலாறும் படிப்பினைகளும் கோவை ஞானி FreeTamilEbooks.com CC-BY-SA-ND வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - வரலாறும் படிப்பினைகளும் 1. வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - வரலாறும் படிப்பினைகளும் 1. மின்னூல் உதவி 2. முன்னுரை 3. பகுதி 1 2. வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - வரலாறும் படிப்பினைகளும் – 2010 3. வானம்பாடிகள் இன்று - 2010 4. வானம்பாடி இயக்கத்தில் என் இடம் - 2010 1. பகுதி 2 5. வெளிச்சங்களுக்கு அப்பால் வெ.சா. 6. வானம்பாடிகளோடு - 1978 7. வானம்பாடிகள் வரலாற்றில் ….. மேலும் சில - 2001 1. பகுதி 3 8. வானம்பாடிகளின் கவிதை இயல் - 1994 9. தமிழ்த் தேசியமும் வானம்பாடி இயக்கமும் - 2004 1. பகுதி 4 2. பிற்சேர்க்கை 10. வானம்பாடிகளின் கவிதைகள் ஒரு மதிப்பீடு 11. வானம்பாடி குறித்த கவிதைகள் - 1975 12. பூம்பொழில் இலக்கிய வட்டம் : 1- 1971 13. பூம்பொழில் இலக்கிய வட்டம் - 2 1. பகுதி 5 14. வேள்வி - I 1. வானம்பாடிகளின் இயக்க வரலாற்றில் கற்பிதங்கள் சில….. படிப்பினைகள் சில….விளக்கங்கள் சில…. 15. வேள்வி - II வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - வரலாறும் படிப்பினைகளும் வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - வரலாறும் படிப்பினைகளும்   கோவை ஞானி   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-ND கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - அ.சூர்யா - suriya.alagar97@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/vaanampadigalin_kavithai_iyakkam_varalarum_padippinaigalum} மின்னூல் உதவி Author correspondence and acquisition of Creations Gnuஅன்வர் gnuanwar@gmail.com மெய்ப்புப் செய்தவர் தாரா முன்னுரை 1. கோவையில் 1970களின் தொடக்கத்தில் நெடுங்காலத் தமிழ்க்கவிதை வரலாற்றில் இன்னொரு கவிதை இயக்கம் என்ற முறையில் வானம்பாடிகளின் கவிதை இயக்கம் சிறப்பாகச் செயல்பட்டதை தமிழ்க்கவிஞர்களும் தமிழியல் ஆய்வாளர்களும் இன்றும் நினைவு கூர்கின்றனர். வானம்பாடி இயக்கம் சில காலமே செயல்பட்ட போதிலும், வானம்பாடி இயக்கத்தில் இருந்த கவிஞர்கள் மற்றும் திறனாய்வாளர்கள் பலரும் இன்றும் ஆற்றலோடு செயல்படுகின்றனர். (சிலர் இன்று இல்லை ). இன்னும் சிலர் தொடர்ந்து செயல்படவில்லை என்பது வருத்தம் தருகிறது). முப்பதாண்டுகளுக்கு மேல் கழிந்த நிலையில் புதுவையில் - 2010 அக்டோபர் 3, 4 ஆகிய நாட்களில் சாகித்ய அகாதெமியும் . மோகனூர் - சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து வானம்பாடிகளின் கவிதைகள் குறித்த கருத்தரங்கு ஒன்றைச் சிறப்பாக நடத்தியது. திட்டமிட்டுக் கருத்தரங்கை நடத்தியவர் என்ற முறையில் பேரா. சிலம்பு நா. செல்வராசு அவர்களை இங்குக் குறிப்பிடுவது தகும். கருத்தரங்கில் கவிஞர்கள் சிற்பி, மேத்தா, தமிழ்நாடன் ஆகியவர்களோடு நானும் கலந்து கொண்டேன். கருத்தரங்கில் படிப்பதற்கு என நான் ஒரு கட்டுரையை அணியப்படுத்தி இருந்ததோடு வானம்பாடி இயக்கம் குறித்து, இயக்கம் - நடைபெற்ற காலத்திலும் அதன் பிறகும் நான் எழுதி என் கோப்புகளில் மட்டுமே தங்கிவிட்ட சில கட்டுரைகளையும் கவிதைகளையும் தொகுத்துக் கொண்டதோடு, என் நினைவுகளிலிருந்து மீண்டும் ஒரு மதிப்பீடு என்ற முறையில் புதுவை கருத்தரங்கிற்கு என சில கட்டுரைகளையும் எழுதினேன். வானம்பாடி இயக்கம் தோன்றுவதற்கு முதற்களமாய் அமைந்தது திருமுல்லை ஆதவனும் அவரது நண்பர்கள் சிலரும் கோவை வட்டாரத்தில் நடத்திய ‘பூம்பொழில் இலக்கிய வட்டம்’. இந்த அமைப்பில் இரண்டு கூட்டங்களில் நான் கலந்து கொண்டது பற்றிய குறிப்புகள் என் பழைய குறிப்பேடுகளில் கிடைத்தன. இவற்றையும் தொகுத்துக் கொண்டேன். வானம்பாடி இயக்கம் பிளவுபட்ட பிறகு நானும் என் நண்பர்கள் சிலரும் இணைந்து, வானம்பாடி என்ற முறையில் ‘வேள்வி’ இதழைத் தொடங்கினோம். இரண்டு இதழ்களோடு வேள்வி நின்றது. வானம்பாடி இயக்கம் தோன்றுவதற்கு முன்னர் கோவையிலிருந்து சிறப்பாக வெளிவந்த புதிய தலைமுறை இதழில் நான் எழுதிய கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள் முதலியவற்றையும் தொகுத்துக்கொண்டேன். இவையனைத்தையும் ஒன்று சேர்த்து 320 பக்க அளவிலான ஒரு பெருந்தொகுப்பை, நண்பர்கள் தேவைக்காக 20 படிகள் மட்டுமே ஒழுங்குபடுத்தினேன். வானம்பாடி இயக்கத்திற்கு முன்னரே மார்க்சியம் தமிழிலக்கியம் ஆகியவற்றில் அழுத்தம் திருத்தமான கருத்துக்களை நான் கொண்டிருந்தேன் என்பதற்கு ஆதாரமாக புதிய தலைமுறைக் கட்டுரைகள் அமைந்தன. வானம்பாடி இயக்கப் பிளவுக்குப் பின்னரும் நாங்கள் சிறப்பாகவும் விரிவாகவும் செயல்பட்டதற்கு ஆதாரமாக ‘வேள்வி’ இதழ்கள் அமைகின்றன. இந்தப் பெருந்தொகுப்பில் இதை இணைத்துக் கொண்டதற்கு இதுதான் காரணம். என்னளவில் வானம்பாடி வரலாறு குறித்து எனது சில புரிதல்களை, மதிப்பீடுகளை நான் என் கட்டுரைகளில் முன்வைத்ததன் நோக்கம் வானம்பாடி இயக்கத்தோடு என்னை விடவும் கூடுதலான பங்கு வகித்த நண்பர்கள் வானம்பாடி இயக்க வரலாற்றை எழுதுவதற்கான தூண்டுதலை என் தொகுப்புத் தரும் என நம்பினேன். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடைபெறவில்லை. 2. புதுவைக் கருத்தரங்கில் வானம்பாடி இயக்கக் கவிஞர்களுக்கு வாழ்த்துரை வழங்க வந்திருந்தவர்களில் ஒருவர், ‘காவ்யா’ திரு. சண்முக சுந்தரம் அவர்கள். சில மாதங்களுக்குப் பிறகு திரு. சண்முகசுந்தரம் அவர்கள் புதுவைக் கருத்தரங்கை முன்வைத்து நான் தொகுத்த அந்தப் பெருந்தொகுப்பை வெளியிட வேண்டுமென்ற தன் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார். தொகுப்பை அதே வடிவில் வெளியிட நான் விரும்பவில்லை. புதிய தலைமுறை கட்டுரைகளோடு மேலும் சில கட்டுரைகளையும் நான் தவிர்த்துக் கொண்டேன். தேவை கருதி ‘வேள்வி’ இரண்டு இதழ்களையும் முழுமையாகச் சேர்த்துக் கொண்டேன். வானம்பாடிகளின் கவிதை இயக்கம், கவிதை இயக்கமாகவே இருந்து விட வேண்டாம், திறனாய்வு முதலியவற்றை உள்ளடக்கிய இலக்கிய இயக்கமாகச் செயல்பட வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை ‘வேள்வி’ இதழ் மூலம் நிறைவேற்ற விரும்பினோம். அத்துடன் மார்க்சியத்தின் ஆதாரத்தில் இலக்கிய இயக்கத்தைச் சிறப்பாகக் கொண்டு செல்லமுடியும் என்ற எங்கள் எண்ணத்திற்கும் வேள்வி இதழில் வெளிவந்த கட்டுரைகள் தக்க சான்றுகள். அன்றியும், வானம்பாடி கவிதை இயக்கத்தின் மூலம் கவிதை குறித்தும் இலக்கியம் குறித்தும் நாம் பெற்ற இலக்கியப் பார்வையை முன்வைத்து, நெடுங்காலத் தமிழ் இலக்கியத்தையும் சிறப்பாக அணுக முடியும் என்பதற்கும் ஆதாரமாக வேள்வியில் சில கட்டுரைகள் வெளிவந்தன. ஆழ்ந்த மார்க்சிய ஈடுபாடு, கவிஞர்களின் கலைத்திறனை அழித்து விடும் என்றும், வானம்பாடி இயக்கம் பிளவுபடுவதற்கு மார்க்சியத்தைப் பெரிதும் வற்புறுத்திய நானும் சில நண்பர்களும் காரணம் என்று இன்று வரை பேசுபவர்களின் கருத்தில் உண்மையில்லை என்பதற்கும் ‘வேள்வி’ இதழ் தக்க சான்று. எங்கள் இயக்கத்தின் மீது சிலர் சுமத்திய பழி காரணமாக சிலர் வேள்வியிலிருந்து விலக , இதழை நிறுத்த வேண்டி வந்தது. ‘வேள்வி’ இதழில் வெளிவந்த சில அருமையான கவிதைகள், நூல் மதிப்புரைகள், கி.ரா அவர்களின் கதையும் கதை பற்றி எழுந்த விமர்சனங்களுக்கு அவர் தந்த பதிலும், வேள்வி இதழை இன்றும் வாசிப்பதற்கான தகுதியை மெய்ப்பிக்கின்றன. வானம்பாடி இயக்கத்திலிருந்து நாங்கள் வெளியேறுவதற்கு / வெளியேற்றப்படுவதற்கு என்ன காரணம் என்பதையும் தக்க முறையில் நாங்கள் தந்த பதிலையும் சில கட்டுரைகளில் காணலாம். கவிஞர்கள் சிற்பி, புவியரசு முதலியவர்கள் உரிமை கொண்டாடும் வானம்பாடி இயக்கம் குறித்த திறனாய்வில் அக்கறை கொண்டவர்கள், வேள்வியின் இந்த இரண்டு இதழ்களை கவனத்தோடு படித்துப் பார்க்க வேண்டும். 3. ‘காவ்யா’ வெளியிடும் இந்த நூலில், இடைக்காலத்தில் நான் எழுதி வெளியிட்ட இரண்டு கட்டுரைகளோடு (பகுதி - 3) புதுவை கருத்தரங்கிற்காக 2010 செப்டம்பர், அக்டோபரில் நான் எழுதிய மூன்று கட்டுரைகளும் (பகுதி - 1) இடம் பெறுகின்றன. வானம்பாடி இயக்கக் காலத்திலும் அதன் பின்னரும் நான் எழுதி - வெளியிடாது என் கோப்புகளில் மட்டும் கிடந்த கட்டுரைகளும் (பகுதி 2) இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. பிற்சேர்க்கையில் (பகுதி 4) இடம் பெற்ற ஒரு கட்டுரையும் கவிதைகளும் இத்துடன் சேர்கின்றன. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சில சமயம் நான் நிதானத்தோடும் சில சமயம் சினத்தோடும் எழுதிய கட்டுரைகள், கவிதைகள் இவை. சினத்தோடு எழுதியபோது என் திறனாய்வுப் பார்வை வீரியம் பெற்றதாகத்தான் இருந்தது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ‘வெளிச்சங்களுக்கு அப்பால் வெ.சா’ என்ற என் கட்டுரைப் பற்றி இங்குச் சுருக்கமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். கோவையில் வைகறை என்ற அமைப்பை ஏற்படுத்தி, கூடியவரை சரியான நோக்கிலான மார்க்சியம் சார்ந்த கவிதைகளை வெளியிடும் நோக்கத்தோடு நண்பர்கள் பலரை வைகறை அமைப்பில் இணைத்துக் கொண்டு ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டோம். இத்தொகுப்பிலும் சிற்பி, புவியரசு, மேத்தா, அக்னிபுத்திரன் ஆகியவர்களின் - அன்று வரையிலான சிறந்த கவிதைகளோடு - மேலும் பலரது கவிதைகளையும் தொகுத்துக் கொண்டோம். ‘வெளிச்சங்கள்’ என்ற பெயரில் நூல் வெளியிட்டோம். இப்படி ஒரு தொகுப்பு வெளிவருவதை தொடக்கம் முதலே சிற்பி முதலியவர்கள் மறுத்த போதிலும் இறுதி நேரத்தில் சிற்பி ஒரு வாழ்த்து கவிதை அனுப்பியிருந்தார். வெளிச்சங்களில் வெளிவந்த கவிதைகள் குறித்து வெங்கட் சாமிநாதன் ஒரு சிலரைப் பாராட்டியும் சிலரை கடுமையாக விமரிசித்தும் ‘தெறிகள்’ இதழில் எழுதியிருந்தார். அதற்கு பதில் சொல்லும் முறையில் நான் எழுதி அனுப்பிய கட்டுரை ‘தெறிகள்’ இதழில் வெளிவரவில்லை. ‘வெளிச்சங்கள்’ இதழ் வெளியீட்டின் போது சிற்பி முதலியவர்கள் கலந்து கொள்ளவில்லை. (இது பற்றிய விபரங்களை உள்ளே இடம் பெற்ற சில கட்டுரைகளில் காணலாம்). வெளிச்சங்கள் வெளியீட்டின் போது சேவற்கொடியோன் முதலிய நண்பர்கள் தெரிவித்த சில கருத்துக்கள் வேள்வி முதல் இதழில் இடம் பெற்றிருப்பதை நண்பர்கள் பார்க்கலாம். 4. மேலும் ஒன்று எழுபதுகளில் நெடுங்காலத் தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு பேரியக்கம் எனத் தோன்றிய வானம்பாடி இயக்கம், தம் வரலாற்றுக்கால சூழலுக்கு ஒத்த முறையில் தமிழ்க்கவிதையை புதிய உள்ளடக்கத்தோடு மேம்படுத்தியது என்பதில் ஐயமில்லை. எண்பதுகளுக்குப் பிறகும் வானம்பாடி இயக்கக் கவிதைகள் போல இன்றுவரை எத்தனையோ பேர் எழுதினாலும், எண்பதுகளுக்குப் பிறகு தமிழ்க் கவிதை மெல்ல மெல்ல மாற்றம் அடைந்து 90களுக்குப் பிறகு முற்றிலும்புதியதாக மாறிவிட்டது. இன்று முற்றிலும் புதிய நோக்கில் தலித்தியம், பெண்ணியம் நவீனத்துவம், பின்நவீனத்துவம் முதலிய பார்வைகளில் நவீன கவிதைகள் மிகச் சிறப்பாகவே எழுதப்படுகின்றன. இத்தகைய நவீன கவிதை இயக்கத்திற்கு ஈடு கொடுக்கும் திறன் வானம்பாடிகளுக்கு இல்லையென்பதையும் இங்குச் சுட்டுவதில் தவறில்லை. எனினும் ஒரு குறிப்பிட்ட காலச்சூழலில் தமிழ்க் கவிதையில் மாற்றத்தை ஏற்படுத்திய வானம்பாடிகளின் வரலாற்றை இன்றைக்கேனும் சரியாகப் பதிவு செய்யத்தான் வேண்டும். என்னளவில் செய்த பதிவுகள் போதா என்பதிலும் எனக்கு ஐயமில்லை. தற்சார்பிலிருந்தும் இன்னும் நான் முழுமையாக விடுபடவும் இயலவில்லை என்றாலும் தமிழ்க் கவிதையின் உள்ளியக்கம் குறித்து இந்நூலில் இடம்பெற்ற பல கட்டுரைகளில் அழுத்தம் திருத்தமாக என் பார்வையை வெளியிட்டிருக்கிறேன். கவிதை என்பதன் மூலம் செயல்படும் மாபெரும் படைப்பியக்கத்தைப் பலரும் புரிந்து கொள்ள இக்கட்டுரைகள் பயன்படும். இப்படி ஒரு தொகுப்பை வெளியிடுவது தேவைதானா? என்ற தயக்கத்தோடுதான் இருந்தேன். என்றாலும் ‘காவ்யா’ திரு. சண்முக சுந்தரம் அவர்கள் தந்த ஊக்கம் காரணமாக, அவரது விருப்பத்தையும் நிறைவு செய்யும் முறையில் இத்தொகுப்பு வெளிவருகிறது. அவரது பேரன்பிற்கும் அவருக்கும் அவரது துணைவியாருக்கும் என் மனம் நிறைந்த நன்றி! -ஞானி குறிப்பு : 73 இல் வெளிவந்த வெளிச்சங்கள் தொகுப்பு மறுபதிப்பாக வருவதற்கு வாய்ப்பில்லை. வானம்பாடிகளின் அனைத்துக் கவிதைகளும் கொண்ட பெருந்தொகுப்பு இன்றுவரை வெளிவராமல் இருப்பது தமிழ்க்கவிதைக்கு ஒரு பேரிழப்பு. பகுதி 1 வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - வரலாறும் படிப்பினைகளும் – 2010 1. வானம்பாடிகளின் கவிதை இயக்கம் நெடுங்காலத் தமிழ்க் கவிதையின் ஒரு பகுதி என்பது மட்டுமல்ல. தமிழ்க்கவிதையின் ஒரு காலக்கட்டம் என்றும் கூறமுடியும். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு தமிழ்க் கவிதைக்கு உண்டு. தமிழ்க்கவிதையும் எத்தனையோ காலகட்டங்களையும் கடந்து வந்திருக்கிறது. என்றாலும் தமிழ்க்கவிதை ஒரு வற்றாத நீரோட்டம் போலத் தமிழ் வரலாற்றுக்குள் தொடர்கிறது. கவிதை இயக்கம் என்பது தனி மனிதர்கள் தமக்குள் தோற்றுவித்துக் கொண்ட இயக்கமல்ல. நீரோட்டம் போலத் தொடர்கிற ஒரு இயக்கம். இந்த இயக்கத்திற்குள் தனி மனிதர்கள் வந்து சேர்கிறார்கள். அல்லது வரலாற்றின் வழியே தொடரும் இந்த இயக்கத்தைத் தமக்குள் கண்டு கொள்கிறார்கள். தமிழ்க்கல்விதான் இந்த இயக்கத்தை இவருக்குள் தோற்றுவிக்கிறது என்று சொல்வதுகூட உண்மையில்லை. தமிழுக்குள் இடையறாது தொடர்கிற ஒரு ஆற்றல், பேருணர்வு இவர்களை வசப்படுத்தி, கவிதை எழுத வைக்கிறது. ஒருவகையில் தமிழின் இந்த ஆற்றலைத் தனக்குள் தாங்கியவர் பேறு பெற்றவர். தமிழ்க்கவிதைக்குள் தொடர்கிற இந்தப் பேருணர்வைக் குறைந்த அளவுக்கேனும் விரித்துச் செல்வதற்கு சற்றே இங்கு முயற்சி செய்யலாம். உடனடியாக நமக்குள் முன் நிற்பது வள்ளுவர் வழியே தொடர்கிற தமிழறம். சங்க இலக்கியத்தின் அகத்திணைக் கவிதைக்குள் இந்த அறவுணர்வின் கூறுகளைக் காணலாம். பாரி முதலிய இனக்குழுத் தலைவர்களுக்குள் இந்த உணர்வின் செறிவைக் காண முடியும். இந்த அறவுணர்வு மனிதர்களை மட்டும் காக்கும். (அ) மனிதர்களுக்குள் இயங்கும் பேருணர்வு மட்டுமன்று. இயற்கைக்குள்ளும் இந்தப் பேருணர்வின் இயக்கத்தைத் தமிழ்க் கவிஞர்கள் கண்டனர். ‘மாரியும் உண்டு’ என்று கபிலர் பாடுவதனுள் இந்தப் பேருணர்வைக் காணமுடியும். ஊருணி போன்றது செல்வம் என்ற வள்ளுவரின் கூற்றினுள்ளும் இதனைக் காணலாம். ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டு’ என்று கூறுவதோடு ‘செல்வத்துப் பயன் ஈதல்’ இப்படிச் செய்யவில்லை என்றால் வாழ்வில் ஒருவர் தவற விடுபவை பல என்று கூறும் நக்கீரருக்குள் இந்தப் பேருணர்வைக் காணமுடியும். ‘மேலுலகம் இல்எனினும் ஈதலே நன்று’ என்று கூறும் வள்ளுவர் மேலுலக வாழ்வை விட மண்ணுலக வாழ்வைப் போற்றியதன் வழியே இந்த உணர்வைக் காணமுடியும். மேலுலகம் இல்லை என்றாலும், பிறப்பு அறாது என்றாலும் புகழ் ஒன்றே எனக்குப் போதும் என்றுதான் சாகும் முன்பு கோப்பெருஞ்சோழன் கூறியதிலிருந்து இதை உணரமுடியும். இயற்கை எல்லாவற்றையும் தருகிறது. எல்லா உயிர்களையும் தாங்குகிறது. இயற்கையோடு மனிதர் ஒத்து வாழ வேண்டும். இயற்கையின் கூறாக மனிதர் இயங்க முடியும். கொல்லாமை தேவையில்லை. போலித் துறவறம் வேண்டாம். விதியின் வலிமையை மீறி மனிதன் வாழமுடியும். வேல் வெற்றி தராது. இம்மை மாறி மறுமை வரினும் உறவை இழக்க முடியாது. ஊழி பெயரினும் தாம் பெயராது வாழமுடியும். மனத்தில் மாசு படிய விடக்கூடாது. கல்வியறிவு மாநிலத்து மக்களுக்கு எல்லாம் பயன்தர வேண்டும். தமிழ்க் கவிதைக்குள் தொடர்ந்து தேடினால் எங்கும் நாம் கண்டு தெளிவது இந்தப் பேரறத்தைத்தான். மன்னரது கொடுங்கோல் ஆட்சி அதிகாரத்தை அறம் மதிப்பதில்லை. இறைவன் என்றாலும் இந்த அறத்தை மீறுவதற்கில்லை. இந்த அறம்தான் வாழ்வில் அறங்களைச் சேர்க்கும். இந்த அறமே இயற்கையைப் போற்றும். உயிர்களைக் காக்கும். வறுமை நிலையிலும் இந்த அறமே மனிதர்க்கு அழகு. இந்த அறத்தின் ஆட்சியைத்தான் வள்ளுவருக்குள் இளங்கோவுக்குள் சாத்தனாருக்குள் காண்கிறோம். தமிழகத்தில் எழுச்சி பெற்ற எந்த இயக்கமும் இந்த அறத்தின் ஆட்சியைத் தனக்குள் கொண்டதாகத்தான் இருந்தது. சமணமும், பவுத்தமும் இத்தகைய அறத்தைப் போற்றியதன் விளைவாகவே செல்வாக்குப் பெற்றன. சித்தர் இயக்கத்திற்குள் இந்த அறத்தின் ஆட்சியைக் காண்கிறோம். ஆட்சி அதிகாரத்திற்கு இந்த அறம் தேவையில்லை. இந்த அறத்தை மறுத்த நிலையில்தான் சாதியும் மதமும் ஆதிக்கம் பெறமுடியும். இந்த அறத்தை ஓரத்திற்கு ஒதுக்கிய பின்னர்தான் பார்ப்பனியம் இங்கு செல்வாக்கு பெற முடியும். மன்னருக்கு பார்ப்பனியர் தேவைப்படலாம். மக்களை ஒடுக்கிய நிலையில்தான் பார்ப்பனியத்தை மக்களுக்குள் மன்னர் திணிக்க முடியும். அறத்தை அழித்த பின்னர்தான் கோட்டை, கொத்தளங்கள் எழமுடியும். அறத்தை அழித்த பின்னர் எத்தகைய ஆட்சியாளரும் அமைதியாக வாழ்ந்திருக்கவும் முடியாது. எந்தச் சமயத்திலும் அவருக்கு அழிவு நேரலாம். மன்னரின் ஆட்சி அதிகாரத்தோடு மதபீடங்கள் ஒத்துழைக்கலாம். சமயச்சான்றோர்கள் ஒத்துழைக்க முடியாது. சாதியை ஒப்புக்கொள்ளும் எந்த மதமும் சான்றோருக்கு உடன்பாடாக இருக்கமுடியாது. ஆட்சி அதிகாரத்தோடு கம்பர் ஒத்துழைக்கவில்லை. திருத்தக்கத்தேவர் ஒத்துழைத்தாரா? சேக்கிழார் ஒத்துழைத்தாரா? என்றெல்லாம் கேள்வி எழுப்ப முடியும். 2. தமிழறம் என்பதன் ஆதாரத்திலிருந்து மக்களுக்குத் தேவையான அரசியலும் பொருளியலும் எப்படி இருந்தாக வேண்டும் என்று இன்று நாம் பேசமுடியும். மார்க்சியம் முதலிய அறிவு சார்ந்த கருத்தியல் மேலோங்கிய நம் காலத்தில் இப்படிப் பேசமுடியும். ஆதிக்கம் நமக்கு எந்த வகையிலும் தேவையில்லை. எவ்வகை அடிமைத் தனத்திலிருந்தும் மக்கள் விடுதலை பெற வேண்டும். சாதி மதம் முதலிய ஆதிக்கங்கள் இன்றைக்கு அறவே தேவையில்லை. ஒருகாலத்தில் இவை எத்தகைய தேவைகளை நிறைவேற்றியிருந்தாலும் இன்று இவை நமக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத் தடைகளாகத்தான் இருக்கின்றன. இவற்றை ஒதுக்கியாக வேண்டும். கலாச்சாரங்களுக்கிடையில் நல்லுறவுக்கே நாம் முயற்சி செய்ய வேண்டும். சமத்துவம் சமதர்மம் என்பவைதான் இன்று நமக்குத் தேவையான அறம். நெடுங்காலத் தமிழ்க்கவிதை வரலாற்றில் நம் காலத்தில் எழுந்த ஓர் இயக்கம் வானம்பாடி இயக்கம். இதுவும் ஒரு தமிழியக்கம். தமிழை, தமிழறத்தை , தமிழ் அரசியலை முன்னிறுத்தும் இயக்கம். ஒரு வகையில் ஆதிக்கங்களிலிருந்து தமிழை விடுவிக்கும் இயக்கம். தமிழை மக்களுக்குக் கொண்டு சேர்க்கிற இயக்கம். கவிதை உணர்வை மக்களுக்குள் எழுப்புகிற இயக்கம். தமிழறத்தை மீண்டும் நிலை நிறுத்தும் இயக்கம். இந்த இயக்கம் நெடுங்காலத் தமிழ்க்கவிதையின் நீரோட்டத்தில் எழுந்த இயக்கம். வானம்பாடி இயக்கத்திற்கு உடனடி முன்னோடிகள் என பாரதியைச் சுட்டிக்காட்டுவது பொருத்தம் என்பதில் ஐயமில்லை. பாரதிதாசன் வழியேயும் இந்த இயக்கம் வீறு பெற்றது. தமிழறத்தின் மீட்சி இந்த இயக்கம் என்று கூறும் பொழுதே வள்ளுவரும் இளங்கோவும் இந்த இயக்கத்திற்குள் இயல்பாகவே இடம் பெறுகின்றனர். பண்டிதர்களிடமிருந்து தமிழ்க் கவிதையை மீட்டது இந்த இயக்கம். அதேசமயம் வானம்பாடிகளின் கவிதை இயக்கம் என்பது நம் கால உலக அளவிலான கவிதை இயக்கத்திற்குள் தமிழ்க் கவிதையையும் இனங்கண்டது. சமதர்மம் நம் காலத்தின் குரல். பகுத்தறிவை ஒதுக்கிவிட்டு சமதர்மம் என்பதைப் பேசமுடியாது. தமிழைக் கைவிட்டவர்களோடு இந்த இயக்கம் கூட்டுச் சேர முடியாது. கட்சி அதிகாரம் மக்கள் நலத்தை வளர்த்தெடுக்க இயலாது. மக்கள் நெஞ்சில் அறிவொளியை, பகுத்தறிவை, சமதர்ம உணர்வைக் கிளறிவிடுகிற இந்த இயக்கம் இருளுக்கு, இருண்மைக்கு எதிரான இயக்கம். தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியதிகாரமும், அரசியலும் இன்று உலகளவிலான விரிவுக்குள் இடம் பெறுகிறது. நம் காலத்து அரசியலும் பொருளியலும் உலகளவிலானவை. உலகளவிலான அரசியலும் பொருளியலும் நமக்குள்ளும் வந்து சேரும். உலகளவில் நடைபெறும் அரசியல் ஆதிக்கத்தை நம்மவரும் நம் மக்கள் மீது திணிக்கவே செய்வார்கள். இதை நாம் ஏற்பதற்கில்லை . இதற்கெதிராகவும் கவிதை இயக்கம் - செயல்படத்தான் வேண்டும். பண்டிதர்களின் தமிழ்ப்புலமை என்பது நிகழ்காலத்திற்குள் எளிதாகத் தன்னைக் கண்டுகொள்வதில்லை. தமிழ்ப்புலவர்கள் மரபுக்குள் உடலும் உள்ளமும் பதிந்தவர்கள். நிகழ்காலத்திற்குள் இவர்களைக் கொண்டு வரத்தான் வேண்டும். இவ்வகையில்தான் தமிழையும் நம் காலத்திற்கு ஒத்த முறையில் புதுப்பிக்க முடியும். வானம்பாடியில் இணைந்த தமிழ்ப்புலவர்கள் காலத்தைப் (ஓரளவுக்கேனும்) புரிந்து கொண்டவர்கள். ஏற்றுக்கொண்டவர்கள். மரபு என்பதனுள்ளும் காலத்திற்கு ஒத்த முறையில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் கூறும் உண்டு. தமிழ் மரபுக்குள் இத்தகைய கூறுகள் தமிழ்க்கவிதையின் தொடக்ககாலம் முதற்கொண்டே உள்ளிருந்து இயங்குபவை. இவற்றை நம் காலத்திற்கு ஒத்த முறையில் புதுப்பிக்கவும், வளர்க்கவும் முடியும். தமிழ்க் கவிதை எந்தக் காலத்திலும் யாப்பிற்குள் முடங்கியதில்லை. முன்னைய யாப்பை உடைத்துக் கொண்டு புது வகை யாப்புகளும் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருந்தன. குறைந்த அளவுக்கேனும் ஓசைநயமில்லாமல் கவிதைக்கு இயக்கமில்லை. கவிதை மக்களோடு இணைகிற காலத்திலெல்லாம் மக்கள் வழக்கிலுள்ள சொற்களோடு இயங்கத்தான் செய்யும். இவ்வகையில் எல்லாம் வானம்பாடிகளின் கவிதை இயக்கம் நெடுங்காலத் தமிழ்க்கவிதை வரலாற்றில் எழுச்சி பெற்ற இன்னொரு கவிதை இயக்கம். தமிழ்க்கவிதையின் இயக்கங்கள் எனச் சங்கக் கவிதைகள், நீதிக் கவிதைகள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் முதலியவற்றை நாம் காண்பது போலவே இருபதாம் நூற்றாண்டுச் சூழலில் எழுந்த தமிழ்க்கவிதை இயக்கம்தான் வானம்பாடி இயக்கம். காலந்தோறும் தமிழுக்கும் தமிழறத்திற்கும் தமிழ் மக்களுக்கும் நெருக்கடிகள் நேர்ந்த போதெல்லாம், அந்த நெருக்கடிகளுக்குக் காரணமானவர்களுக்கு எதிராகத் தமிழ் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் நெருக்கடிகளின் தாக்கத்தால் தமிழ் தனக்குள் இருக்கிற ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், தமிழ் தன் பழைய தடத்தில் செல்லாமல் புதிய தடங்களில் பயணம் - செய்வதற்காகவும் தோன்றியவை சங்க இலக்கியங்கள் முதலிய தமிழ் இயக்கங்கள். இந்த வரிசையில் வந்ததுதான், தமிழில் செல்லப்பா முதலியவர்களோடு தோன்றிய புதுக்கவிதை இயக்கமும். அந்த இயக்கத்திற்கு உள்ளிருந்து தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் முறையில் தோன்றியது வானம்பாடி இயக்கம். இந்த இயக்கத்தினுள்ளும் எழுச்சியும் தளர்ச்சியும் இருப்பதை நாம் காணமுடியும். 3. நெடுங்காலத் தமிழ்க் கவிதை இயக்கத்தின் உள்ளார்ந்த சில ஆற்றல்களை வானம்பாடி இயக்கம் தனக்குள் கொண்டிருந்த காரணத்தால்தான் தமிழ் உணர்வாளர்க்குள்ளும் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் செல்வாக்கைப் பெற்றது. இயக்கத்தில் இணைந்திருந்த கவிஞர்களுக்குள்ளும் நெடுங்காலத் தமிழ்க் கவிதையின் மரபுகளோடு இவற்றைச் சமகாலச் சூழலில் தமக்குள்ளும் புதுப்பித்துக் கொள்ளும் உணர்வும் இருந்ததால் இவர்கள் கவிதைகள் ஆற்றல் மிக்கவையாய் இருந்தன. தனிக்கவிஞர்களின் தனிப்பட்ட கவிதை ஆற்றல் என்பதைக் காட்டிலும் தமிழ்ச்சமூகத்தின் உள்ளுரை ஆற்றல் காரணமாகத்தான் தனிநபர்கள் என்பதையும் கடந்து இவர்கள் செல்வாக்குப் பெற்றனர். தனிமனிதரும் சமூகமும் பெருமளவில் இணைந்ததன் வெற்றிகரமான விளைவை இங்கும் காணமுடியும். அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் தொடக்கத்திலும் பதவியிலிருந்த திமுக அரசு தமிழ் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் தவறியது. வசந்தத்தின் இடிமுழக்கம் என இந்தியா முழுவதும் அதிர்வலைகளைக் கிளப்பிய நக்சலைட் இயக்கம் வானம்பாடிக் கவிஞர்களையும் கவர்ந்ததில் வியப்பில்லை. 20/30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்மக்கள் நெஞ்சில் மார்க்சிய இயக்கங்கள் மட்டுமல்லாமல் திராவிட இயக்கம் முதலிய பல தமிழ் இயக்கங்களும் சமதர்மக் கனவை மக்கள் நெஞ்சில் விதைத்திருந்தன. இத்தகைய இயக்கச் சூழலில் வளர்ந்த வானம்பாடி கவிஞர்களுக்குள் திமுக அரசியலியக்கம் செயல்படுத்தாத சமதர்மச் செயல்பாட்டை மார்க்சிய இயக்கங்கள் - இனித் தம் கைகளில் பெரிதாக எடுத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை பெருமளவில் ஏற்பட்டிருந்தது. செல்லப்பா முதலியவர்கள் வழியே தோன்றி வளர்ந்த புதுக்கவிதை இயக்கத்திற்குள் இல்லாத சமதர்ம எழுச்சியை வானம்பாடிகள்தான் தமிழ்க்கவிதைக்குள் கொண்டு வந்தனர். 47’ விடுதலை தொடங்கி காங்கிரஸ் இயக்கமும் மக்களுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டிருந்தது. காந்தியும் நேருவும் விதைத்த கனவுகளை காங்கிரஸ் இயக்கம் தொடர்ச்சியாகக் கைவிட்டது. வெள்ளிவிழாக் கொண்டாட்டங்கள் மக்களை மயக்கவில்லை. வெள்ளிவிழாவை வானம்பாடிகளும் போற்றவில்லை. வியட்நாமில் அமெரிக்க ஆதிக்கம் செய்த போர்க்கொடுமைகள் ஓய்ந்தபாடில்லை. சோவியத் ஒன்றியம் தந்த நம்பிக்கைகள் இன்னும் குறைந்த அளவுக்கேனும் பசுமையோடிருந்தன. ஆதிக்க அரசியலை வானம்பாடி இயக்கம் ஏற்கவில்லை. வானம்பாடி இயக்கத்தின் இவ்வகைப் போக்கினுள் நெடுங்காலத் தமிழ்க்கவிதையின் ஆற்றல்கள் இயங்கின. வானம்பாடிகளின் இயக்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறுவதற்கான காரணங்கள் இவை என்பதில் ஐயமில்லை. பாரதி, பாரதிதாசன் முதலியவர்களும் வானம்பாடி வழியாக மக்கள் உணர்வில் மேலும் அழுத்தமாக இடம் பெற்றனர். தலித் மக்கள் மீதும் பெண்கள் மீதும் தொடர்ந்து நிலவும் ஆதிக்க உணர்வையும் வானம்பாடிகள் கடிந்து கவிதை எழுதினர். இவையெல்லாம் வானம்பாடி இயக்கத்தின் முக்கியமான கூறுகள். இவ்வகை உணர்வுகளுக்குள் மார்க்சிய உணர்வை நம்மால் இனங்காண முடியும். மார்க்சிய இயக்கத்தோடு நெருக்கமாக உறவுடைய சிலரும் குறைந்தளவுக்கேனும் மார்க்சிய உணர்வைப் பெற்ற பலரும் வானம்பாடி இயக்கத்தில் இருந்தனர். மார்க்சியத்தை வெறுப்பவர் என இவர்களுக்குள் எவரும் இல்லை. காங்கிரஸ் இயக்க உணர்வுடைய ஒருசிலர் வானம்பாடி இயக்கத்தினுள் இருந்தார்கள். எனினும் இவர்களுக்குள்ளும் காங்கிரஸ் இயக்கத்தின் வழியில் இருந்த சமதர்ம உணர்வு இருந்தது. சமதர்ம உணர்வை மேலும் வளர்த்துக் கொள்ளவும் உறுதிப்படுத்தவும் சிலர் கவிதைகள் பற்றிய திறனாய்வின்போது வற்புறுத்தினர். படைப்பாளிகளுக்கும் திறனாய்வாளர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் தொடக்கம் முதலே இருந்தன. நாளடைவில் முரண்பாடுகள் முற்றவும் செய்தன. இதன் விளைவாக ஒரு கட்டத்தில் வானம்பாடி இயக்கத்தில் இருந்த பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை வெளியேற்றினர். வெளியேற்றிய போது எந்தக் கூண்டுக்கும் எங்களைத் தாங்கும் வலிமை இல்லை என்று வானம்பாடி இதழில் ஒரு பிரகடனம் வெளியாயிற்று. வானம்பாடி இயக்கம் பிளவுபட்டதோடு தளர்ச்சியும் பெற்றது. கவிதைக்கு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் விடுதலை வேண்டுமென்று செயல்பட்ட கவிதை இயக்கம் குறைந்த கால அளவுக்குள் கலை இலக்கியப் பெருமன்றம் என்ற வட்டத்திற்குள் போய்ச் சேர்ந்தது. 1975 நெருக்கடி காலத்தில் இந்தியாவே இந்திரா ‘இந்திராவே இந்தியா’ என்ற முழக்கத்தை முன்வைத்ததன் மூலம் தன்னை முற்றாக இனங்காட்டிக் கொண்டது. இனி வானம்பாடி என்ற இதழின் வழியே தொடர்ந்து கவிதைகள் வரலாம். கூட்டமும் சேரலாம். ஆர்ப்பாட்டங்களும் வேடிக்கைகளும் எழலாம். இவர்களுக்குள் இயக்கம் இல்லை. ஆற்றல் இல்லை . 4. வானம்பாடி இயக்கத்தினுள் தொடக்கத்தில் வளர்ச்சியும் பின்னர் தளர்ச்சியும் ஏற்பட்டமைக்கான காரணங்கள் கூர்மையான ஆய்வுக்குரியவை. வானம்பாடிகள் என்று அறியப்பட்ட அனைவரும் மத்தியதர வர்க்கப் படிப்பாளிகள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இவர்களில் பலர் பணியாற்றினர். இவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உறுதி உண்டு. மத்தியதர வர்க்கத்திற்குரிய வாழ்நிலையோடு இவர்கள் இருந்தனர். மேலே உள்ள ஆதிக்கத்திற்கு எதிரான சினமும் தமக்குக் கீழே உள்ள உழைக்கும் மக்கள்பால் ஓரளவுக்கேனும் ஒத்த உணர்வும் இவர்களுக்கு இயல்பாகவே உண்டு. மத்தியதர வர்க்கம் கனவுகளை நிறையவே காணும்; கவிதைகள் எழுதும்; உரக்கப் பேசும்; உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் ஆழ்ந்து விடும்; விவாதங்கள் செய்யும்; உண்மையும் பேசும். மாயைகளிலிருந்து முற்றாக விடுபடவும் இயலாது. மார்க்சிய நெருக்கம் இவர்களுக்கு வேண்டும். சுகமான வாழ்வின் குளிர்ச்சியும் வேண்டும். தன்முனைப்பிலிருந்து இவர்களால் விடுபடவும் இயலாது. தன்முனைப்புத் தேவையில்லை என்று எவரேனும் சுட்டிக்காட்டினால் அவர்கள் மீது இவர்கள் பாயத்தான் செய்வர். அரசாதிக்கத்தின் ஆசைவார்த்தைகளுக்கும் பொய் வாக்குறுதிகளுக்கும் இவர்கள் மயங்கத்தான் செய்வர். இவர்களால் தம்மை உடைத்துக் கொள்ள முடியாது. மேலிருந்து செலுத்தும் ஆதிக்கத்தை இவர்கள் வெறுத்தாலும் மறுத்துவிட முடியாது. தமக்குக் கீழிருக்கும் உழைக்கும் மக்கள் மீது இவர்கள் வாழ்க்கை அமைந்திருந்தாலும் தம் வாழ்நிலையைத் தகர்த்துக் கொள்ளவும்முடியாது. சிற்பியின் ஓர் அழகிய கவிதையின் இறுதியில் இடம்பெற்ற இரண்டு வரிகளை இங்குக் குறிப்பிட வேண்டும். “தளையில் சிக்கிய கோழை முளையில் கட்டிய காளை’’ பசுமையான சோளக் கொல்லைக்கிடையில் ஒரு வரப்பில் கயிற்றால் கட்டப்பட்ட ஒரு காளையைப் பற்றி கவிதை கூறுகிறது. காளை மாட்டிற்கு இருப்பது பேராசை என்றாலும் கட்டப்பட்ட கயிற்றின் நீள அளவுக்கே கொல்லையை மேய முடியும் அதற்கு மேல் என்னதான் முயன்றாலும் கயிற்றை அறுத்துக் கொள்ள முடியாது. ஆசை இருந்தாலும், ஆசையை அடக்கிக் கொள்ள இயலாத நிலையில், கனவோடும் கற்பனையோடும் பதற்றத்தோடும்தான் காளை இருந்தாக வேண்டும். கவிதையில் இடம் பெற்ற இந்தக் காளை மத்திய வர்க்கத்திற்கான ஒரு குறியீடு. சிற்பிக்குள்ளும் இந்த உணர்வு இருக்கத்தான் செய்கிறது. சமதர்ம உணர்வையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். சமதர்ம உணர்வோடும், இதனால் செழித்த கற்பனைகளோடும் ஒருவித மயக்கத்தில் அழகியல் உணர்வில் தன்னைத்தானே நிறைவு செய்து வாழ்ந்துவிடவும் முடியும். இந்தக் குறியீடு வானம்பாடிக் கவிஞர்கள் அனைவருக்கும் பொருந்தும். ஒன்றை உறுதியாகச் சொல்லமுடியும். இந்தச் சமதர்ம கனவுக்கு இன்னும் நெடுங்காலத்திற்குத் தேவை உண்டு. கனவுகளோடு கூடிய கவிதைகளுக்கும் தேவை உண்டு. நெடுங்காலத் தமிழ்க் கவிதையினுள்ளும் கனவுகளும் மாயைகளும் உண்டு என்பதில் ஐயமில்லை. இந்தக் கனவுகளும், கவிதைகளும் மாயைகளும் கூட தமிழ் மக்களை, தமிழ் உணர்வாளர்களை வசப்படுத்தவும் முடியும். எல்லா மாயைகளையும் ஒரேயடியாகக் களைந்து கொள்வதும் சாத்தியமில்லை. ஆந்திராவில் செழித்திருந்த திகம்பர கவிஞர்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். வானம்பாடிகளில் எவரும் திகம்பரக்கவி இல்லை . திகம்பர கவிஞர்களை வானம்பாடிகளும் கொண்டாடத்தான் செய்தனர். 5. வரலாற்று மாயைகள் (Historical Illusion) என்று மார்க்ஸ் கூறியதை இங்கு நினைவு கொள்ளலாம். வரலாற்றுச் சூழலைக் கடந்து யாரும் இயங்க முடியாது. அல்லது வரலாற்றுச் சூழலை அறவே தகர்த்துக் கொள்ள முடியாது. மார்க்ஸின் இன்னொரு கூற்றையும் இங்கு நினைவு கூறலாம். “சூழல் மனிதனைப் பாதிக்கிறது என்பது உண்மையின் ஒரு பாதி மட்டுமே. இன்னொரு பாதி. சூழலை மனிதன் மாற்ற வேண்டும்” இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்கிறோம். சூழலை ஒருவர் அல்லது ஒரே மோதலில் தகர்க்க முடியாது. தொடர்ந்து பலமுறை பலர் இணைந்து மோதும்போது சூழலைத் தகர்க்க முடியும். வரலாறு என்பது இப்படித்தான் புதியதாகப் படைக்கப்படுகிறது. காளையினால் கயிற்றை அறுக்கமுடியாது. ஆனால் காளையும் பலமுறை முயன்றால் கயிற்றை அறுத்துக் கொள்ள முடியும். இப்படியும் காளைகள் அறுத்துக்கொண்டு மேய்கின்றன. மீண்டும் காளை அடிபட்டுக் கட்டப்படலாம். காளைபோல மனிதன் என்றும் இருப்பதில்லை. காளையோடு மனிதனுக்குள்ள ஒப்புமை ஓரளவுக்கே பொருந்தும். வரலாற்றை மனிதன் மாற்றியே வந்திருக்கிறான். வானம்பாடிகளும் வரலாற்றோடு மோதியவர்கள்தான். முதன்முறையான மோதலில் பின் வாங்கினர் என்பதும் உண்மைதான். என்றாலும் மோதலில் இருந்து சில பாடங்களையும் நாம் கற்கிறோம். நெடுங்காலத் தமிழ் வரலாற்றைப் புதிய நோக்கில், மார்க்சிய நோக்கில் கற்பதற்கும் செறித்துக் கொள்வதற்கும் முதன்முறை மோதலேகூட கற்றுத்தந்திருக்கிறது. மோதல் வீணாகவில்லை. பிளவுமே வீண் போகவில்லை. ஒரு சிலருக்கேனும் கூடுதலான வெளிச்சங்களைத் தந்திருக்கிறது. 6. வானம்பாடி இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுக்குப் பின்னர் நெருக்கடி நிலை காலத்தில் வானம்பாடிக் கவிஞர்கள் என இன்றுவரை அறியப்பட்ட பலரும் தொடக்கத்தில் ஒருவகை மிதப்பில் இருந்தனர். இவர்களுக்குள்ளும் மனச்சிக்கல் இருந்திருக்க வேண்டும். நெருக்கடி நிலை இவர்களின் சில மாயைகளை நாளடைவில் தகர்த்திருக்க வேண்டும். நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தபின்னர் முன்னர் நெருக்கடி நிலைமீது தாம் கொண்டிருந்த நம்பிக்கையிலிருந்து விடுபட்டனர். இனி இவர்கள் தம்மை சுய ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். வானம்பாடி இயக்கத்திலிருந்து வெளியேறியவர்களுக்கும் வேறு வகையான அனுபவங்கள் ஏற்பட்டன. அடுத்த சில ஆண்டுகளுக்குள் நக்சல்பாரி இயக்கமும் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகியது. இவர்களும் தம்மை சுய ஆய்வு செய்து கொள்ளத்தான் வேண்டும். இவையெல்லாம் நிதானமாக நடைபெற்றன. வரலாற்றை ஒரே அடியில் தாண்டிவிட இயலாது என்ற உண்மையை இரு சார்பினரும் உணர்ந்திருக்கக் கூடும். இத்தகைய அனுபவங்களின் வழியே இவர்கள் அனைவரின் ஆற்றலும் வீணாகவில்லை என்பது மட்டுமல்ல சிலவகைகளில் தீவிரம் பெற்றன. புதிய பாடங்களை இவர்கள் கற்றுக் கொண்டனர். மார்க்சியத்திலிருந்தும் பொதுப்படையான சமதர்ம உணர்விலிருந்தும் இவர்களில் எவரும் விலகவில்லை. இவர்கள் அனைவருமே மத்தியதரவர்க்கம் என்ற நிலையில், கவிதை என்றும் திறனாய்வு என்றும் பிறவகை ஆய்வுகள் என்றும் செயல்பட்டனர். வானம்பாடி இயக்கம் தொடரவில்லை என்றாலும் வானம்பாடி இயக்கத்தின் வழியே இவர்கள் கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து இவர்கள் தம்மைச் செழுமைப்படுத்திக் கொண்டனர். 75/80க்குப்பிறகும் இவர்களில் பலரது ஓயாத இயக்கம் இன்னும் தொடர்கிறது. ஓய்ந்தவர் ஒருசிலர். தமக்குள் புதிய நெறிகளில் தீவிரப்பட்டவர் பலர். எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இவர்களில் எவரும் உறுப்பினராக இருந்ததில்லை . ஆகவே, கட்சியின் கட்டுப்பாடு எதுவும் இவர்களைத் தொடவில்லை. கட்சி வட்டாரச் சிந்தனைகளுக்கு இவர்கள் தம்மைப் பலியிட்டுக் கொள்ளவில்லை. இந்திராவே இந்தியா என்று இவர்களில் சிலர் ஒரு கட்டத்தில் உரத்து முழங்கினாலும் பின்னர் இந்தப் பொய்மையிலிருந்து அவர்கள் மெல்ல மெல்லத் தம்மை விடுவித்துக் கொண்டனர். கவிதை இயக்கம் என்பதனுள் ஒரு கட்டத்தில் பொருளியலோடு இணைந்த அரசியல் ஆதிக்கத்தின் கொடிய விளைவுகள் மக்கள் வாழ்வை எந்த அளவுக்குச் சீரழித்தன, மக்களைப் பெரும் துயருக்கு உள்ளாக்கின என்பது கண்டு இவர்கள் தமக்குள் கொதித்தார்கள். இந்தக் கொடுமையிலிருந்து மக்களுக்கு விடுதலை இல்லாமல் முடியாது என்ற முறையில் தமக்குள்ளும் தீவிரப்பட்டார்கள். கவிதைகள் எழுதினார்கள். விரைவில் தாங்கள் எதிர்பார்த்த மக்களுக்கான விடுதலை நெடுந்தொலைவு தள்ளிப் போகிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள். அன்றியும் விடுதலை என்பது அரசியல் களத்தில் மட்டும் நடைபெறுவதாகவும் இல்லை . அரசியல் களத்தினுள்ளும் ஆதிக்கங்கள் தொடர்ந்து வலுப்படுகின்றன. இந்த ஆதிக்கங்களின் ஒரு பகுதியாகவும் கட்சிகள் இயங்குகின்றன. மனிதன் தன்னைப் புரட்டிப் பார்த்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆதிக்கங்கள் தம்வழியிலும் செயல்படுகின்றன. ஆதிக்கத்திற்குத் தாமும் துணை போகின்றனர். மக்கள் விடுதலைக்கான பேராற்றல்களில் அறிவியலும் தொழில்நுட்பமும் சில கூறுகள் என்று முன்னர் தாம் கொண்டிருந்த நம்பிக்கைகள் பொய்த்து வருகின்றன. இத்தகைய புரிதல்கள் இவர்களுக்குள் கூடி வந்தன. நகர வாழ்க்கை, நுகர்வு வெறி முதலியவை தம்மையும் தான் சிறைப்படுத்தியுள்ளன. ஒருவகையில் ஆதிக்கத்திற்குத் தாம் சேவை செய்வதன் மூலம் தன் தன்மானத்தை இழந்த நிலையில் தாமும்தான் வேசிகள் என்று உணரத் தலைப்பட்டார்கள். இத்தகைய படிப்பினைகள் இவர்களது அகக் கண்களைத் திறந்தன. நெருக்கடி மிகுந்த இந்த வரலாற்றுச் சூழலில் தமக்கான இடம் என்ன? தம் இருத்தலுக்கான நியாயங்கள் என்ன? என்று தமக்குள்ளும் தேடினார்கள். பேராற்றலோடு பிரபஞ்சம் இயங்குகிறது. பரிணாமம் என்ற முறையில் நெடுந்தொலைவு வந்திருக்கிறோம். மனிதனைப் படைக்க வேண்டுமென்ற நோக்கம் பிரபஞ்சத்திற்கு இருந்திருக்குமெனத் தோன்றவில்லை. கடவுளை முன்பே உதறிக்கொண்டோம். மாபெரும் பிரபஞ்சம் நம்மை எல்லாத் திசைகளிலும் அழுத்துகிறது. பிரபஞ்ச இயக்கத்தில் நாமும் மாட்டிக் கொண்டோம். மிகச்சிறு புள்ளியாகி நாம் அலைந்து கொண்டிருக்கிறோம். எத்தனை தொலைவு தேடினாலும் நமக்கு எதுவும் தட்டுப்படவில்லை. என்ன செய்யலாம் இந்த வாழ்க்கையை? அணுத்துகள் அளவுக்கே சிறியது இந்த வாழ்க்கை என்றாலும் தூக்கி எறிய முடியாது. நம் வாழ்வுக்கு என்னதான் பொருள்? தொடர்ந்து இந்தத் தேடலின் விளைவாக புவியரசு ‘மீறல்’ கவிதைகள் எழுதினார். சிற்பிக்குள்ளும் இத்தகைய தேடல் தொடர்ந்தது. ‘சூரிய நிழல்’ கவிதைகள் எழுதினார். அந்நியமாதல் என்ற நோக்கில் ஞானியும் கவிதைகள் எழுதினார். வரலாற்றுக்குள்ளும் தம்மைத் தேடிக் கண்டறிய வேண்டும். நெடுங்கால வரலாற்றுக்குள் நாம் எந்தத் தொடர்பில் இருக்கிறோம். வரலாற்றோடும் சமூகத்தோடும் நாம் இணைந்திருந்தாலும் தனி மனிதர்களாகவும் இருக்கிறோம். நமக்குள்ளும் தனித்துயரங்கள் இருக்கின்றன. நம்மைச் சூழ உள்ள மனிதர்களும் தனி மனிதர் என்ற முறையில் நெருக்கடிகளுக்கு உள்ளாகிப் பித்தர்களாகவும் வேசிகளாகவும் அலைகின்றனர். குடும்பச் சூழலும் இவர்களை இப்படித் துரத்துகிறது. விடுதலை அனைத்து மக்களையும் துயரங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் விடுவிக்கும் என்ற நம்பிக்கை பொய்யில்லை என்றாலும் அந்த விடுதலைக்கான விடியல் தோன்றும் வரையிலும் தனிமனிதர் என்ற முறையில் மனிதர் தம் துயரங்களைச் சுமந்தாக வேண்டும். தனிமனிதத் துயரங்களுக்குச் சமூகம் /வரலாற்றுச் சூழல்தான் காரணம் என்பதோடு தாமும் காரணமாக இருப்பதை ஏற்கத்தான் வேண்டும். சிற்பியின் பல கவிதைகள் இத்தகைய உள்ளடக்கத்தோடு இயங்கின. கடலூர் சிறையில் கைதியாக இருக்க நேர்ந்த நிலையில் காவல்துறையின் கெடுபிடிகளுக்கு இடையில் பாரதிக்கு என்ன நேர்ந்தது. பாரதிக்குள் நேர்ந்த வீழ்ச்சிக்கு என்னதான் காரணம். பாரதிக்குள் சிற்பி தேடுகிறார். ஜென் கவிதையும் எழுதுகிறார். 7. வானம் பாடிக் கவிஞர்களுக்குள் வானம்பாடி இயக்கம் சிறப்பாகச் செயல்பட்ட காலத்தில் முதன்மையான கவிஞர்கள் என புவியரசு, சிற்பி ஆகியவர்களோடு மேத்தாவையும் தமிழ் நாடனையும் குறிப்பிடலாம். உள்வட்டம் என்று இவர்களைக் குறிப்பிட இயலுமானால் இவர்களோடு அக்னியும் ஞானியும் இருந்தார்கள். இந்த உள்வட்டத்திற்கு வெளியில் தமிழன்பன் இருந்தார். ஞானி, அக்னி தவிர இவர்கள் அனைவரும் வானம்பாடிக்கு முன்னரும் கவிஞர் என்ற ஆளுமையோடு இருந்தவர்கள். வானம்பாடி இயக்கம் என்பதனுள் இவர்கள் இணைந்தபோது தமிழ்க்கவிதைக்குப் புதிய திசை வகுத்தார்கள். காலத்தின் குரலாக இவர்கள் முழங்கினார்கள். இவர்களின் முழக்கம் தமிழ்ச் சூழலில் நூற்றுக்கணக்கானவர்களின் கவி உணர்வுகளைத் தூண்டியது. செல்லப்பா முதலியவர்கள் தோற்றுவித்த புதுக்கவிதை இயக்கத்திலிருந்து இவர்கள் மாறுபட்டதோடு அவர்களை விமர்சனமும் செய்தார்கள். பேரா.வானமாமலை முதலியவர்களின் விமர்சனத்தோடு வானம்பாடிகளும் தம்மை இனங்கண்டார்கள். அதேசமயம் வானம்பாடிகளின் கவிதை இயக்கத்தைக் கட்சி மார்க்சியர் மதிக்கவில்லை. கட்சிக்குள் இருந்தாலொழிய வானம்பாடிகளை அவர்களால் ஏற்க முடியாது. மரபையும் தூக்கி எறிய முடியாது. நாளடைவில் வானம்பாடி இயக்கத்தின் ஆற்றல்கண்டு, நூற்றுக்கணக்கான கவிஞர்கள் இவர்களோடு இணைந்திருப்பது கண்டு தம் போக்கை மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டனர். கட்சிக்கு அனுசரணையாக வந்தவர்களைப் பாராட்டினார்கள். கட்சியோடு முரண்பட்டவர்களைச் சாடினார்கள். தொடக்கத்தில் தனிமனிதத் துயரம், தனிமனித அவலம் என்ற முறையில் எழுத்து / கசடதபற கவிஞர்கள் எழுதும் கவிதைகளைக் கடுமையாகக் கட்சியினரோடு சேர்ந்து வானம்பாடிகளும் விமர்சனம் செய்தார்கள். தனிமனிதர் அவலங்களுக்கு சமூகம் / வரலாற்றுச் சூழலும் காரணம் என்பதை எழுத்துக் கவிஞர்கள் ஏற்கவில்லை. அதன் காரணமாகவே மார்க்சியத்தோடு முரண்பட்டார்கள். அவர்களுக்குள்ளிருந்தும் சில மாறுபட்ட குரல்கள் ஒலிக்கத்தான் செய்தன. (வைத்தீஸ்வரன்) படிமம், குறியீடு என்ற உத்திகளை அவர்கள் முதன்மைப்படுத்தியதினால் கவிதைகள் புதிராக இருக்கின்றன என்று விமர்சனம் எழுந்தது. நாளடைவில் வானம்பாடிகளும் படிமம் என்ற உத்தியைக் கற்றுக்கொண்டனர். தொடக்கத்தில் நவீனத்துவம் என்ற குரல் வானம்பாடிகளுக்குச் சற்று நெருடலாக இருந்த போதிலும் நாளடைவில் தம் கவிதைகளும் நவீனமாக இருப்பதை, நவீனத்துவம் என்ற பெயருக்கும் பெருக்கமாக இருப்பதை ஏற்றுக்கொண்டார்கள். இப்பொழுது உறுதியாகச் சொல்ல முடியும். செல்லப்பா, க.நா.சு. முதலியவர்களுக்கும் கடமைப் பட்டவர்கள் என்ற முறையில் வானம்பாடி இயக்கத்தினரும் நன்றி சொல்ல முடியும். கவிதை, சமூகத்தின் குரல் மட்டுமல்ல. தனிமனிதரின் குரலும்தான். மேலும் ஒன்று. பண்டிதர்கள் என்று சொல்லப்பட்ட தமிழ்ப் புலவர்களுக்குத் தொடக்கத்தில் இருந்த கசப்பும் வெறுப்பும் இன்று பெரும்பாலும் இல்லை. மரபுக்குள்ளிருந்தே புதிய போக்குகள் தோன்றவும் இயலும். மரபுக்கவிதை, புதுக்கவிதை என்ற மோதலுக்கு இனித் தேவையில்லை. ஒன்று கவிதையாக இருக்கிறதா இல்லையா என்றுதான் இன்று பேசமுடியும். கவித்துவம், படைப்பியக்கம் என்று கூடுதலாகப் பேசமுடியும். எந்த ஒரு பெருங்கவிஞனுக்குள்ளும் தொடரும் கவிதை இயக்கத்தை இன்று தெளிவாகக் காணமுடியும். எந்த ஒரு கவிஞருக்குள்ளும் இயங்கும் கவிதை இயக்கம் கூட நெடுங்காலத் தமிழ்க்கவிதை இயக்கத்தின் தொடர்ச்சி அல்லது பகுதி என்றும் இன்று காணமுடியும். அன்றியும் தமிழ்க் கவிதை என்பதும் இன்று உலக அளவிலான கவிதை இயக்கத்தின் பகுதியாக மாறிவருகிறது. தமிழ்க் கவிதையினுள்ளும் தமிழ் மக்களின் விடுதலைக்கான கூறுகள் இனங்கண்டு வலுப்படுத்துவதன் மூலம் தமிழ்த்தேசியம் என்ற பேருணர்வை முன்னெடுத்துச் செல்லமுடியும். புவியரசு, சிற்பி மட்டுமல்லாமல் தமிழ்நாடனும் மேத்தாவும் தமிழன்பனும் தமிழ்க் கவிதை இயக்கத்தை அன்று தொட்டு இன்று வரை மேம்படுத்தி வருகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மையோடும் விளங்குகிறார்கள். தமிழ்ச்சூழலில் கவிஞர் இன்குலாப், கவிஞர் அப்துல் ரகுமான் போன்றவர்களும் நம் காலத்தின் குரலாக கவிதையோடு இயங்குகிறார்கள். இவர்கள் அனைவரும் ஓர் இயக்கம் எனத் திரளவில்லை என்றாலும் தனிமனிதர் என்ற முறையில் இவர்கள் சாதனையாளர்கள். நெருக்கடி மிக்க இன்றைய உலகச் சூழலில் தமிழன் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தமக்குள் இணைவு கண்டு ஒரு பேரியக்கமாகத் திரளவேண்டும். பாரதி பெருங்கவிஞராக விளங்க அவருக்குப் பின்னால் தேசிய இயக்கம் இருந்தது என்றும் பாரதிதாசன் பெருங்கவிஞராகத் திகழ அவருக்குப் பின்னால் திராவிட இயக்கம் இருந்ததென்றும் பேசும் சிலர் இன்று நமக்கான விடுதலைக்கான ஒரு பேரியக்கத்தின் தேவையை உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றனர். இந்தப் பேரியியக்கத்தின் பகுதியாக கவிதை இயக்கம் திகழ முடியும். அந்த இயக்கம் மேலும் ஒரு சமதர்ம இயக்கமாகவும் இருக்க முடியும். -2010 வானம்பாடிகள் இன்று - 2010 1. வானம்பாடி இயக்கத்தின் செயல்பாடு முடிந்த நிலையில் வானம்பாடி இயக்கத்தோடு இருந்த கவிஞர்களும் வானம்பாடி இயக்க உணர்வு பெற்ற பலரும் எழுதிய கவிதைகள் சிற்பியின் பொறுப்பிலிருந்த வானம்பாடி இதழில் வெளிவந்தன. 1982 வாக்கில் இதழ் நின்றது. 1980க்குப் பிறகு இந்தியாவின் அரசியல் சூழலில் பெருத்த மாற்றங்கள் நிகழத் தொடங்கின. தமிழிலக்கியத்தினுள்ளும் அமைப்பு மையவாதம் முதலியவை மேலோங்கின. இந்நிலை தொடர்ந்து தீவிரப்பட்டது. எண்பதுகளின் இறுதியில் உலகளவில் சோசலிசத்தின் தகர்வு உறுதிப்பட்டது. முதலாளியத்திற்கும், அதனை உள்ளடக்கிய ஏகாதிபத்தியத்திற்கும் முடிவு வரும் என்பது மாறி இனி இவற்றின் ஆதிக்கத்தில்தான் உலக மக்கள் இருந்தாக வேண்டும் என்பதும் மெய்ம்மையாயிற்று. சோசலிச உணர்வுகள் தனிநபர்களின் நெஞ்சில் இருக்கலாமே ஒழிய அவற்றை சமூக அளவில் செயல்படுத்த இயலாத நிலையும் தோன்றிவிட்டது. இருதுருவம் என்ற வடிவிலிருந்த உலகம் ஒரு துருவத்தின் ஆட்சிக்கு உள்ளாக நேர்ந்தது. பன்னாட்டு நிறுவனங்கள் எல்லா தேசங்களின் உள்ளும் நுழைவதோடு அந்த தேசங்களின் பொருளிய லோடு அரசியலையும் தம் வசத்தில் கொண்டு வந்ததோடு இனி தனி தேசங்களுக்கு இறையாண்மை இருக்கமுடியாது என்ற நிலை தோன்றியது. சோசலிசம் நோக்கிய சமூக மாற்றம் என்பது இனி அறவே சாத்தியமில்லை . தேசமும் சமூகங்களும் கடுமையான பிளவுகளுக்கு உள்ளாகின. இதன் தொடர்ச்சியான விளைவாக சமூகத்திலிருந்து தனிமனிதன் துண்டிக்கப்பட்ட நிலையோடு தனிமனிதனுக்குள்ளும் பிளவுகள் நேர்ந்தன. முன்னைய சமூகத்தில் தனிமனிதனுக்குள்ளிருந்த சமூக மனிதன் இப்பொழுது வெளியேற்றப் பட்டான். சமூக மனிதனாக இருந்த காலத்தில் மனிதனுக்குள் இருந்த, ‘நான் மனிதன்’ என்ற ஒருமை உணர்வு இனி இல்லை. ஒருங்கிணைந்த நானுக்கு இடமில்லை. சமூகத்தோடு, இயக்கத்தோடு, மொழியோடு, தேசத்தோடு இனி எந்த ஒரு மனிதனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. சமூகம், தேசம் முதலியவற்றின் வழியே மனிதனுக்குள் இருந்த ஆற்றல் இனி இல்லை. மனிதன் தனக்குள் பல நாள்களாகச் சிதறிவிட்டான். தேசமும் சமூகமும் தனக்குள் சிதறிவிட்டன. மனிதனுக்கு இனி மிச்சமிருப்பது அவனது உடலும் உள்ளத்தில் மண்டியிருக்கிற பசி, காமம் முதலிய உணர்வுகளும் மட்டுமே. மனிதன் தன் ஆசைகளை நிறைவு செய்து கொள்ளும் முறையில் நுகர்வுக்கான வாய்ப்புகள் கூடி வருகின்றன. முதலாளியம் தன்னளவில் தொடர்ந்து ஆதிக்கம் பெற்றே வந்தது. தொழிற் பெருக்கங்கள் ஏற்பட்டன. சந்தையில் பொருள்கள் குவிந்தன. இயற்கை நாசமாகத் தொடங்கியது. நிலங்கள் நஞ்சாகின. காற்றும் நீரும் மாசுபட்டன. தொன்னூறுகளின் இறுதியில் பழைய உலகம் முற்றாக அழிந்து இன்னொரு உலகம் உறுதிப்பட்டு விட்டது. இன்று நாம் காணும் உலகம்தான் இது. 2. வானம்பாடி இயக்கம் என்பது தன் சமகாலத்து சமூக இயக்கத்தின் ஒரு பகுதியாக இயங்கியது. இயக்கத்தின் மைய உணர்வாக சமதர்மம் இருந்தது. அனைத்து மக்களுக்குமான வாழ்வை, சமூகத்தை, தேசத்தை படைக்க முடியும் என்ற பெரும் நம்பிக்கைதான் இயக்கத்தின் மைய உணர்வாக இருந்தது. முதலாளிய அரசியலை சமூக இயக்கம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். முதலாளியத்தைக் கடந்து செல்ல முடியாது என்றாலும் மக்கள் இயக்கம் முதலாளியத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலும். எவ்வகை ஆதிக்கத்தையும் மக்கள் இயக்கம் வெல்ல முடியும். உலக அளவில் சமதர்ம சமூகம் உருவாகும் என்பதைத் தவிர வரலாறு வேறு திசையில் செல்ல முடியாது. இந்தியாவும் தமிழகமும் சமதர்மம் என்ற திசையில்தான் சென்றாக வேண்டும். இத்தகைய நம்பிக்கையோடுதான் வானம்பாடி இயக்கம் தனக்குள் தீவிரப்பட்டது. நெருக்கடி நிலை வானம்பாடி இயக்கத்தின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியது. 80களின் இறுதியில் முன்னைய நம்பிக்கைகள் தகர்ந்தன. வானம்பாடி இயக்கம் இனி தொடர்வதற்கில்லை. நம்பிக்கைகள் தகர்ந்து வரும் நிலையில் தம் சமகாலம் என்னவாகத்தான் இருக்கிறது. தகர்ந்து வரும் சமூகம் இனி என்ன ஆகும் என்றெல்லாம் வானம்பாடிகள் சிந்தித்து ஆகவேண்டும். சிந்திக்க முடியாத அளவுக்கு பிரமைகளில் அவர்கள் அடைபட்டு இருந்தார்கள் . என்றுதான் சொல்ல வேண்டும். வானம்பாடிகள் இயக்கம் தொடக்கம் முதலே ஒரு இலட்சியவாத இயக்கம். மத்திய தர வர்க்க படிப்பாளிகள் என்ற வகையில் இவர்கள் இலட்சியங்களில், கனவுகளில், பிரமைகளில், ஆவேசங்களில் வாழத்தான் விரும்புவர். வாழ்வின் எதார்த்தச் சூடு இவர்களையும் தாக்கும்போது தம் இலட்சியக் கனவுகளை இவர்களால் கலைத்துக் கொள்ளவும் முடியாது. பண்டிதர்களைப்போல் அல்லாமல் இவர்கள் சமகாலத்திற்குள் வந்து விட்டவர்கள். செல்லப்பா முதலியவர்களைப் போல் அல்லாமல் இவர்கள் சமகால அரசியல் உணர்வுகளையும் தமக்குள் தாங்கியவர்கள். சோவியத் ஒன்றியத்திலிருந்து வந்த சமதர்ம கனவுகள் இவர்களையும் வசீகரித்தன. நக்சல்பாரி அதிர்வலைகளும் இவர்களுக்குள் உணர்வெழுச்சியைத் தோன்றுவித்தன. திராவிட இயக்கத்தின் மோசடிகளை இவர்களால் ஏற்கமுடியவில்லை. திராவிட இயக்கத்தையும் ஓரளவுக்கு நம்பி இருந்தவர்களுக்கு திராவிட இயக்கத்தின் போக்கு கசப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் இயக்கம் நோக்கி இவர்கள் செல்லவே முடியாது. மார்க்சிய இயக்கம்தான் இவர்கள் சார்ந்திருக்க வேண்டிய ஒரே இயக்கம். 80களின் தொடக்கத்திலிருந்தே மாறிவரும் இன்னொரு உலகத்தை இவர்கள் கண் திறந்து பார்த்திருக்க முடியுமானால் தம் பிரமைகளைக் கலைத்துக் கொள்ள வாய்ப்பு நேர்ந்திருக்கும். சோசலிச உலகில் கடந்த சில பத்தாண்டுக் கால அளவில் முதலாளியமே தொடர்ந்து ஆதிக்கம் பெற்று வந்தது. சோசலிசம் என்ற பெயரில் அரசமைப்பினுள்ளும் கட்சியினுள்ளும் அதிகாரவர்க்கம் ஆதிக்கம் பெற்றது. சோசலிசம் என்பதன் மிகச்சில கூறுகள் சோவியத் ஒன்றியத்தில் இருந்தனவே ஒழிய ஆதிக்கத்தில் சோசலிசம் இல்லை. சோசலிச சமூகமும் ஆதிக்கச் சமூகமாக இருக்க முடியாது. மக்கள் மீது அரசு என்ற முறையிலும்கட்சி என்ற முறையிலும் ஆதிக்கம் செய்யும் சமூகம் சோசலிச சமூகமாகவும் இருக்க முடியாது. சோவியத் ஒன்றியத்தில் மட்டுமல்லாமல் இந்தியச் சூழலில் இருந்த மார்க்சிய இயக்கங்களினுள்ளும் இருந்த கோளாறுகள் குறித்த சிந்தனை இவர்களுக்கு இல்லை. கட்சிக்குள்ளும் மத்தியதர வர்க்கத்தின் தலைமைதான் நிலை பெற்றிருந்தது. மத்திய தர வர்க்கத்திற்கே உரிய தன்முனைப்பு ஆதிக்கப்பற்று முதலியவை மக்களுக்கான விடுதலை இயக்கமாக கட்சி தன்னை மாற்றிக் கொள்ளாததற்குக் காரணமாகவும் இருந்தது. கட்சிக்குள் இருந்த படிப்பாளிகள் மேதாவிதானத்தோடு கட்சிக்கு வெளியிலிருந்த மார்க்சிய அறிஞர்களை மதிக்கவில்லை. புரட்சி சாத்தியமில்லை என்று புரிந்தநிலையிலும் முதலாளியப் பாதையின் வழியே இனிச் செல்லலாம் என்று முடிவு செய்தனர். முதலாளியத்தோடு கைகோத்துக் கொள்வதில் தவறில்லை. முதலாளியத்திற்குள்ளிருந்தே ஏகாதிபத்தியத்தோடு போராடவும் முடியும். 3. வானம்பாடி இயக்கத்தினர் குறித்து இப்பொழுது பேசலாம். வானம்பாடிக் கவிஞர்களும் தமக்குள் இருந்த முதலாளிய உணர்வுகளைக் களைந்து கொள்ளவில்லை. தமக்குள்ளும் நேர்ந்த பிளவுக்கான காரணங்கள் எந்த அடிப்படையிலிருந்து எழுகின்றன என்று சிந்திக்கவில்லை. கவிஞர்களுக்குத் திறனாய்வாளர்கள் கற்பிக்க வேண்டியதில்லை. கவிஞர்கள்தான் படைப்பாளிகள். அவர்கள் தரும் படைப்புகளைத்தான் திறனாய்வாளர்கள் கற்றுப் பேசுகிறார்கள். திறனாய்வாளர்களுக்குள் படைப்பியக்கம் இல்லை. படைப்புத் திறனில்லாமல் வெற்றுப் படிப்பிலிருந்தே திறனாய்வாளர்கள் பேசுவதைப் படைப்பாளிகளான கவிஞர்கள் மதிக்க வேண்டியதில்லை. கவிஞர்கள் தம்மளவில் சுயமானவர்கள். படைப்புத்திறன் அவர்களுக்குள்ளிருந்தே சுயமாய் ஊற்றெடுக்கிறது. இத்தகைய ஊற்று திறனாய்வாளர்களுக்குள் இல்லை. வானம்பாடிக் கவிஞர் சிலருக்குள் இருந்த பிரமைகளில் இதுவும் ஒன்று. கட்சிக்குள்ளிருந்த மார்க்சியருக்கும் இத்தகைய பிரமைகள் உண்டு. மார்க்சியம் தமக்குத்தான் தெரிந்திருக்கிறது. தாம் கற்றுத்தருவதே மார்க்சியம். தாம் கற்றுக் கொண்டதே மார்க்சியம். தாம் போதிப்பதே மார்க்சியம். தம்மைப்போல் படிப்பாளிகளுக்கு வர்க்க உணர்வு இருக்க முடியாது. 4. 80க்குப் பிறகான சமூகச் சூழலில் அமைப்பு மையவாதத்தோடு பின்நவீனத்துவமும் செல்வாக்குப் பெற்றது. மார்க்சியர் என்று தம்மைக் கருதிக் கொண்ட ஒரு சிலரும் பின்நவீனத்துவம் குறித்து நுட்பமாகப் பேசினர். அனைத்தையும் விளக்குவதாகச் சொல்லும் எந்த ஒரு தத்துவமும் இனி இருக்க முடியாது. இத்தகைய உரிமையை மார்க்சியம் இதுவரை கொண்டாடியதோடு சரி, இனி கொண்டாட முடியாது. பாட்டாளி வர்க்கம் உலகை மாற்றும் என்பது உண்மையில்லை. பாட்டாளி வர்க்கமும் தான் முன்பு கூறியதைப் போலவே பாட்டாளி வர்க்கமாகவும் இல்லை. பாட்டாளி வர்க்கமும் முதலாளியத்தை உள்வாங்கிக் கொள்ளும் போக்கு அதிகரிக்கிறது. ஒரு வர்க்கம் இனி சமூகத்தை மாற்றவும் முடியாது. பாட்டாளி வர்க்கம் என்பதன் கருத்தியலுக்கு வெளியில் உள்ள சமூகத்தினருக்கும் சமூக மாற்றத்தில் பங்கு இல்லாமல் முடியாது. சமூக மாற்றத்தில் பெண்ணின் இடம் பற்றி மார்க்சியம் அக்கறை கொள்ளவில்லை. சாதி பற்றிய அக்கறை மார்க்சியருக்கு இல்லை. மார்க்சியனும் தனக்குள் சிதைவுக்குள்ளாகியிருக்கிறான். இவனும் பணத்திற்கும் அதிகாரத்திற்கும் காமத்திற்கும் வசப்பட்டிருக்கிறான். இவனுக்குள் மதமும் சாதியும் மிக நுட்பமான முறையில் செயல்படுகின்றன. இவனுக்குள்ளும் போலித்தனங்கள் உண்டு. தற்பெருமை உண்டு. மக்களை இவனும்தான் சுரண்டுகிறான். தன் அறிவுக்குத் தானே சொந்தம் என்று உரிமை கொண்டாடுகின்றான். அறிவும் இவனுக்குச் சொத்து. பெண்ணின் மீது இவனும் ஆதிக்கம் செய்கிறான். பின்நவீனத்துவம் மார்க்சியனை இப்படியும் கிழித்துப் பார்த்தது. மார்க்சியனுக்குள்ளிருக்கும் பிரமைகளைக் கலைத்தது. யதார்த்தவாதம் என்பதனுள்ளும் முதலாளியம் பதுங்கி நின்றது. யதார்த்தம் என்பதும் ஒரு கட்டமைப்பு. நன்மை, தீமை, உண்மை, பொய்மை என்பனவும் புனைவுகள். கற்பும் ஒரு புனைவு. தேசம், தேசிய இனம் என்பனவும் புனைவுகள். தத்துவம், இலக்கியம், வரலாறு என்பனவும் புனைவுகள். மார்க்சியம் என்பதும் ஒரு புனைவு/கட்டமைப்பு. வள்ளுவர், புத்தர், இயேசு என்பதெல்லாம் புனிதங்கள் இல்லை. கவிதை என்பதும் ஒரு கட்டமைப்பு, அறிவும் ஒரு புனைவு. கடவுளும் ஒரு புனைவு. அறிஞர் பெரியவர் தலைவர் என்றெல்லாம் இன்று பேச வேண்டியதில்லை. பின்நவீனத்துவர் இவ்வாறெல்லாம் எல்லாவற்றையும் கலைத்துப்போட்டுப் பின்னர் இவற்றையெல்லாம் மீண்டும் கட்டமைப்பது என்று தீவிரமாகச் செயல்பட்டனர். தமிழ்ச்சூழலிலும் திறனாய்வுகள், கதைகள், நாவல்கள் புதிய நோக்கில் எழுந்தன. வானம்பாடிகளுக்கும் இவ்வகைப் படைப்புகள் உவப்பாக இல்லை. பிரமைகளில் வாழ்ந்தவர்களுக்கு இவை அருவறுப்பாகத் தெரிந்தன. 80 களுக்குப் பிறகு இன்றுவரை தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவம் ஏற்படுத்திய நுட்பமான சிந்தனைகள் மிக விரிவாகவே இடம் பெறுகின்றன. வானம்பாடிகளும் தம்மைக் கலைத்துக் கொண்டு இருந்தார்கள் என்றால் இவ்வகைப் போக்கைப் புரிந்திருக்க முடியும். இவர்களுக்குச் சுயவிமர்சன உணர்வு இருந்திருக்குமானால் பின்நவீனத்துவர் சுட்டிக்காட்டிய எல்லா வகை விமர்சனங்களையும் தமக்குள்ளும் கண்டு தம்மைப்பற்றிய தன்னறிவைப் பெற்றிருக்க முடியும். சமூக இயக்க உணர்வு மேலோங்கிய சமயத்தில் தம்மால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையோடு இவர்கள் இருந்ததில் தவறில்லை. பழைய பெருமிதங்கள் இனியும் உண்மையில்லை என்ற புரிதல் ஏற்படுமானால் தமக்குள்ளும் இருந்த போலித்தனங்கள், பொய்கள், மிதப்புகள், ஆசைகள், வெறித்தனங்கள், வீம்புகள், முதலியவற்றை ஒப்புக்கொள்ள முடியுமென்றால் 80க்குப் பிறகான உலகை இவர்கள் கண்டிருக்க முடியும். சமய உணர்வில் இறுகிப் போயிருக்கிற பெரியவர்களுக்கு சமகால உலகம் தெரிவதில்லை. முதலாளிய உணர்வில் இறுகியவர்களுக்கும் மக்கள் சார்ந்த உலகம் தெரிவதில்லை. வணிகனுக்கும் அதிகாரிக்கும் மற்றவர்கள் உணர்வு புரிவதில்லை. ஆணாதிக்கத்தில் இருப்பவனுக்குப் பெண் பற்றிய புரிதல் இல்லை. இதே போல குடும்பத்தினுள் மூழ்கிவிட்ட பெண்ணுக்கு வெளிஉலகம் தெரிவதில்லை. உச்சத்திலிருக்கும் தலைவனுக்கு ஊழியனின் துயரம் தெரிவதில்லை. கட்சிக்காரருக்கும் மாற்றுக் கட்சியினரைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இவர்களைப் போலத்தான் வானம்பாடிகளும். 5. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் கவிதை எழுதுகின்றனர். படிமங்கள், குறியீடுகள், தொனிகள் என்றெல்லாம் முன்பு எழுந்த உத்திகள் பற்றி இப்பொழுது இவர்கள் கவலைப்படுவதில்லை.மற்றவர்களுக்குப் புரியத்தான் வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் எழுதுவதில்லை. பேருண்மைகளைக் கவிதைகளில் சொல்லத்தான் வேண்டும் என்பதில் இவர்களுக்கு ஈடுபாடு இல்லை. உண்மைகளைக் கண்டறிவதற்காக கவிதை எழுத வேண்டும் என்பதை இவர்கள் மறுக்கிறார்கள். என் கவிதைக்குள் வரலாறு உண்டு, வாழ்வு உண்டு, மக்கள் விடுதலைக்கான போதனை உண்டு என்று இவர்கள் சொல்வதில்லை. எங்களுக்குத் தெரிந்த அனுபவத்திலிருந்து எழுதுகிறோம். எங்கள் காயங்களிலிருந்து கவிதை எழுதுகிறோம். எங்கள் உணர்வுகளை நாங்கள் மறைப்பதில்லை. எங்கள் உணர்வுகளை எங்கள் மொழியில்தான் வெளியிடுகிறோம். சமூகத்திற்குள்தான் நாங்களும் இருக்கிறோம். நீங்கள் வரித்துக்கொண்ட உலகமும் எங்கள் உலகமும் வேறு வேறானவைதான். உங்கள் கற்பனைகள், கனவுகள் எங்களுக்குக் கசப்பைத் தருகின்றன. உங்கள் உலகத்தில் நாங்கள் இல்லை. எங்கள் மேல் உங்கள் உணர்வுகளைத் திணிக்காதீர்கள். எங்கள் உணர்வுகளை வெளியிடுவதன் மூலம் நாங்கள் சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். எந்தத் தத்துவத்திற்கும் நாங்கள் இறையாவதில்லை. வாழ்வதற்காக ஏதோ தொழில் செய்கிறோம் அவ்வளவுதான். யாருக்காக இந்தத் தொழில் என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. எங்களுக்கும் சோறு வேண்டும். துணி வேண்டும். ஆகவே வேலை செய்கிறோம். எவருக்கும் நாங்கள் அடிமை இல்லை. எங்கள் மனத்திற்குள் நாங்கள் சுதந்திரமாய் இருக்கிறோம். சுதந்திரத்தைத் தேடுகிறோம். கற்பு அது இது என்று உங்களைப்போல் நாங்கள் போலித்தனமாய் பேசுவதில்லை. உங்களைப் போல் காசை, பணத்தை, இறுக்கமாகப் பற்றிக் கொள்வதில்லை. எல்லாமே எங்களுக்கு நாடகங்கள், விளையாட்டுகள். இறந்தகாலம், எதிர்காலம் என்று நாங்கள் கவலைப்படுவதில்லை. நிகழ்காலம் எங்களுக்குப் போதும். புதிய உலகம் பழைய உலகம் என்றெல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. உலகம் ஏதோ அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறீர்கள். யாருக்குதான், எவருக்குத்தான் அழிவில்லை. இறுதியில்லை. நிரந்தரமாக யார் இங்கு வாழ்கிறார்கள். நாங்கள் குடிக்கிறோம். விடுதலை உணர்வுக்காக எங்கள் வழியில் நீங்கள் வராதீர்கள். நாங்கள் உங்கள் வழியில் வருவதில்லை. எங்களைப் பெற்றுவிட்டீர்கள், படிக்க வைத்தீர்கள் உங்களை கைவிடமாட்டோம். காப்பாற்றுவோம். இப்படியெல்லாம் இவர்கள் இன்று பேசுகிறார்கள். நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் இவர்கள் ஏன் பேச நேர்ந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இவர்களை உதிரிகள் என்றும் பொறுப்பற்றவர்கள் என்றும்ஒழுக்கம், கட்டுப்பாடு முதலியவற்றை மதிக்காதவர் என்றும் குறை சொல்வதற்கு முன் இவர்களை இப்படி செய்தவர்கள் யார் என்ற கேள்வி எழவேண்டும். பொருளியல், அரசியல் முதலியவற்றில் உலகளவிய ஆதிக்கம் செய்பவர்கள்தான் இவர்களை செய்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் பன்னாட்டு நிறுவனத்தார் இவர்களோடு ஒத்துழைக்கும் முதலாளிகள். தேசத்தை, மக்களை இப்படி பிளவுபடுத்தினால் துண்டுகளாக துணுக்குகளாக சிதறடித்தால் இவர்கள் தமக்குள் ஆற்றல் அற்றுப் போவார்கள். சமூக உறவுகளையும் கூட உதறிக் கொள்வார்கள். தனியராகி, தம்உடல், தம் தேவையென குறுகிவிடுவார்கள். தம் தேவைகள் இவர்களுக்கு கிடைத்தால் போதும், தம் ஆசைகள் தீர்ந்தால் போதும். அதற்காக எதையும் இவர்கள் துணிந்து செய்வார்கள். சந்தை திறந்து கிடக்கிறது. பொருட்கள், வகைவகையான உணவுகள், உடைகள், பொழுதுபோக்குகள், வேடிக்கைகள் எல்லாமே தம்மைச்சூழக் கொட்டிக் கிடக்கின்றன. புதிய தொழில்கள் தொழில் நுட்பங்கள் எல்லாமே வந்து சேர்ந்துள்ளன. தொழிற் திறன்களும் கற்றுத் தரப்படுகின்றன. எட்டுமணிநேரம் 10’ மணிநேரம் என உழைக்கும் அளவுக்கு காசு கை சேரும். புதிய குடியிருப்புகள் வாழ்க்கை வசதிகள், வாகனங்கள் எல்லாவற்றையும் எளிதில் பெற்றுக் கொள்ள முடியும். உலகம் சுருங்கி விட்டது. எங்கும் சென்று வரலாம். எவ்வகை நோய்க்கும் மருத்துவ வசதிகளும் உண்டு. இப்படி ஒரு சமுதாயம் வந்து சேர்ந்திருக்கிறது. ஆதிக்கவாதிகள்தான் தம் தேவைக்காக, முற்றிலும் தம் தேவைக்காக இப்படி ஒரு சமுதாயத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். கேள்வி கேட்காமல் இத்தகைய சமூகத்தில் உழைக்க வேண்டும். இதற்குத் தேவை கோடிக்கணக்கில் தனிமனிதர்கள். தமக்குள் எதுவுமில்லாத வெற்று மனிதர்கள். வரலாறு, சமூகம், மொழி என தேசம் பற்றிய சிந்தனை இவர்களுக்குத் தேவையில்லை. இறந்தகாலம், எதிர்காலம் பற்றிய அக்கறை இவர்களுக்குத் தேவையில்லை. இவர்கள் தமக்குள் உள்ளீடு அற்றவர்கள். உணர்ச்சி மட்டுமே உடையவர்கள். ஆதிக்கம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி இவர்களுக்கு இல்லை. யார் தேவைகளுக்காகத் தாம் இவ்வாறு சுருங்கி, கூடாகிப் போனோமென்ற சிந்தனை இவர்களுக்குத் தேவையில்லை. தத்துவம் என்றோ, வாழ்க்கை என்றோ, இவர்களுக்குத் தேவையில்லை. இவர்களை வைத்து ஆதிக்கங்கள் எதையும் செய்து கொள்ளலாம். இவர்களை வைத்துத் தொழில் செய்யலாம். இயந்திரங்களை இயக்கலாம். மற்றவர்களுக்குக் கற்பிக்கலாம். இவர்களை வைத்து மக்களை மேய்க்கலாம். இவர்களை வைத்து எதிரிகளை அழிக்கலாம். ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவிவது பற்றி கவலை இல்லை. இராணுவ சாதனங்கள் இவரது கைகளில் அற்புதங்களைச் செய்கின்றன. இவற்றைப் பார்த்துக் கைகொட்டலாம். மேலும் விவரிக்க வேண்டியதில்லை. மக்களை இவ்வாறெல்லாம் செய்யும் ஆதிக்கவாதிகள் தமக்குள்ளும் மனிதராக இல்லை. அரக்கர்களாகி விட்டனர். இயற்கையை எதுவும் செய்யலாம். கடல், நிலம், காடுகள், மலைகள், பறவைகள், உயிர் வகைகள் அனைத்துமே இவர்களுக்கான சோதனைக் கூடங்கள், கருவிகள். இந்த உலகமே அழிந்தாலும் விண்வெளியில் இன்னொரு உலகைக் கண்டுபிடித்து அங்கு குடியேறலாம். இவர்களின் ஆதிக்கத்திற்கு ஒத்துழைப்பதன் மூலம் தமக்கும் தற்காலிகமாகவேனும் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், படிப்பாளிகள், விஞ்ஞானிகள், காத்திருக்கிறார்கள். இவர்களோடு மதவாதிகளும் ஒத்துழைக்கிறார்கள். மக்களின் மனச்சாட்சிகளை மழுங்கடிக்கும் வேலையை இவர்கள், உறுதியாகச் செய்வார்கள். ஆதிக்கங்களுக்குத் தேவையான கல்விதான் கற்பிக்கப்படுகிறது. இலட்சக்கணக்கில் ஊதியம் கிடைக்கிறது. முதலாளியத்தோடு, ஆதிக்கத்தோடு ஒத்துழைக்கும் மார்க்சியவாதிகளுக்கு இவ்வகைப் பேரழிவுகள் நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். சோவியத் ஒன்றியத்தில் முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியர் குறைந்த அளவுக்கேனும் அழிவு வேலையை இப்படித்தான் செய்தார்கள்.பிறகு மார்க்சியத்தைக் கைவிடவும் செய்தார்கள். பின்னர் உலகளவிலான ஆதிக்கத்தில் தங்களுக்கும் இடம் வேண்டும் என்றார்கள். சீனாவும் இதைத்தான் செய்கிறது. இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள், மாபெரும் அணைக்கட்டுகள், அணுமின் நிலையங்கள், பசுமை புரட்சி, மாபெரும் அரசமைப்பு, அதிகார வர்க்கம், உளவுத்துறை, சிறைச்சாலை, இப்படியெல்லாம் ஆதிக்கங்களை உள்வாங்குகிற மார்க்சியர், மக்கள் மீது தொடர்ந்து சுரண்டலையும் அதிகாரத்தையும் திணித்து மக்கள் வாழ்வையும் வரலாற்றையும் அழிக்கவே செய்வார்கள். 6. தற்காலத்தில் நிலவும் பின்நவீனத்துவச் சூழல் குறித்தும் இத்தகைய சூழலில் இளைஞர்கள் படைக்கும் கவிதைகள் முதலியவை குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். இவர்கள் படைக்கும் பின்நவீனத்துவக் கவிதைகள் மார்க்சியருக்குப் புரிவதில்லை. அல்லது மார்க்சியர் இவ்வகைப் படைப்புகளை வெறுக்கின்றனர். இந்த இளைஞர்கள் முதலாளிகளின் கைக்கூலிகள் என்கின்றனர். இவர்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லை. உழைக்கும் மக்களைப் பற்றி பொறுப்பு இல்லை. இவர்களுக்கு மார்க்சியம் தேவை இல்லை. எவ்வகைத் தத்துவமும் இவர்களுக்குத் தேவையில்லை. இவர்களிடம் கவித்துவம் இல்லை. மனம் போன போக்கில் கவிதை என்று ஏதோ எழுதி வைக்கிறார்கள். இப்படியெல்லாம் இவர்கள் குறித்து மார்க்சியர் விமர்சனம் செய்கின்றனர். உலகளவில் இன்று தீவிரப்பட்டு வரும் ஆதிக்க அரசியலை, பொருளியலை அறிவியல் தொழில் நுட்பங்களை இவர்களால் புரிந்து கொள்ள இயலுமானால், இத்தகைய ஆதிக்கச் சக்திகளால் கிழிபடும் இளைஞர்கள் பற்றி மார்க்சியர் என்று கருதிக்கொள்ளும் இவர்களும் புரிந்து கொள்ள முடியும். பின்நவீனத்துவச் சூழலை மார்க்சியராலும் புரிந்து கொள்ள முடியும்.தமக்குள் ஆதிக்க உணர்வில்லாத மார்க்சியர் மட்டுமே இப்படிப் புரிந்து கொள்ள முடியும். அதிகாரம் வேண்டும், அணுமின் நிலையம் வேண்டும். பசுமைப் புரட்சி வேண்டும். தமக்கும் வாழ்வில் வசதிகள் வேண்டும். இன்பங்கள் வேண்டும். அரசியல் அதிகாரத்தில் பங்கு வேண்டும். இவ்வாறெல்லாம் கருதுவதோடு, இதற்கு ஏற்ற முறையில் மார்க்சியத்தைத் திரித்தவர்களுக்கு இன்றைய பின்நவீனத்துவச் சூழல் புரியாது. தொழில் வளர்ச்சியின் விளைவாக இயற்கை நாசமாகத்தான் செய்யும். மனித வாழ்க்கை தரமான வாழ்க்கையாக இருக்கமுடியுமென்றால் இயற்கை நாசத்தைத் தடுக்க முடியாது என்று பேசும் மார்க்சியர் ஆதிக்கத்தை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியர். பின்நவீனத்துவச் சூழலை இதனால் பாதிப்புக்குள்ளாகும் இளைஞரை, சமூகத்தை சரியான முறையில் புரிந்து கொள்ள இயலுமானால் மார்க்சியர் இன்றைய இளைஞர்களை மட்டுமல்லாமல் இவர்களின் படைப்புக்களையும் இன்றைய உலகச் சூழலில் வைத்துப் புரிந்து கொள்ள முடியும். எய்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பயன் என்பது போல ஆதிக்கங்களுக்கு எதிராக மக்களை, இளைஞர்களைத் திரட்ட முடியும். இளைஞர்களின் கவிதைகளில் சமூகமில்லை, வரலாறில்லை, என்பதற்கு என்ன காரணம் என்றும் புரிந்து கொள்ள முடியும். பின்நவீனத்துவவாதிகள் சொல்வது போல வரலாறும் சமூகமும் தேசமும் மொழியும் இல்லை என்பது உண்மையில்லை. ஆதிக்கவாதிகளுக்கு இவை தேவையில்லை. ஆனால் இவையனைத்தும் நமக்குத் தேவை. நம் மக்களுக்குத் தேவை. இதுதான் நமக்கான மார்க்சியம். இவர்களின் ஆதிக்கத்திலிருந்து எல்லாவற்றையும் விடுவிக்க வேண்டும். நமக்கான உலகத்தை இவர்களிடம் விட்டுவைக்க முடியாது. அப்படியானால் இவ்வகை ஆதிக்கங்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும். இதற்கு நமக்குத் தத்துவம் தேவை. மக்கள் தேவை. இயற்கை தேவை. மொழி தேவை. கல்வி தேவை. பண்பாடு தேவை. கவிதைகள், படைப்புகள், திறனாய்வும் தேவை. பாரதி பெருங்கவிஞனாகத் திகழ்வதற்கு தேச விடுதலை பின்புலமாக இருந்தது. பாரதிதாசன் பெருங்கவிஞனாகத் திகழ்வதற்கு திராவிட தேசியம் பின்புலமாக இருந்தது. அதைப் போலவே இன்று நமக்குப் பின்புலம் எதுவும் இல்லை என்று எவரேனும் சொல்வாரென்றால் அவர்களுக்கு இன்றைய உலகம், வரலாறு, வாழ்க்கை எதுவுமே தெரியவில்லை என்று எளிதாகச் சொல்லி விடலாம். முன் எந்தக் காலத்தைக் காட்டிலும் இன்றைக்கு நெருக்கடிகள் எல்லாக்களங்களிலும் உச்ச அளவில் பெருகி உள்ளன. இதை எதிர் கொள்வதற்கான மார்க்சியம் தேவை. கவிஞர்கள் படைப்பாளிகள் தேவை. இயக்கங்கள் தேவை. இவற்றில் கவிதை இயக்கமும் ஒன்று. நெடுங்காலத் தமிழ்க் கவிதை இயக்கத்தில் இந்த இயக்கமும் இணையும். 7. இந்திராவின் சோசலிசம் பொய்க்கனவுதான் என்பதை இவர்களும் காண நேர்ந்தது. இந்தச் சமயத்தில் இவர்களுக்குள் தனி நபர் என்ற முறையில் குறைந்த அளவுக்கேனும் தமக்குள் தேடிச் செல்லும் உணர்வு எழுந்திருக்க வேண்டும். சுய ஆய்வுக்குத் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட நிலையில்தான் வித்தியாசமான கவிதைகள் எழுதத் தொடங்கினார்கள். இருத்தலியல் நோக்கில் புவியரசு எழுதினார். மனிதனுக்குள் அவனது மூலம் தேடி சிற்பி எழுதினார். மற்றவர்கள் வானம்பாடி இயக்கத்திற்குள் வருவதற்கு முன்னரும் தமக்குள்ளிருந்த கவிதைப் பாதையில் இப்பொழுதும் சென்றார்கள். வானம்பாடிகள் இயக்கமாகவே தொடர்ந்தும் இருந்து, மார்க்சியத்தினுள்ளும் தேடலோடும் இருந்து, இதன் காரணமாகவும் தமக்குள் கவித்துவத்தில் செழுமை பெற்றிருப்பார்கள் என்றால் எண்பதுகளுக்குப் பின்னர் உலகம் மற்றும் தமிழகச் சூழலிலும் உருவாகி, பின்னர் வலுப்பெற்ற பின்நவீனத்துவச் சூழலில் தம் கவிதை இயக்கத்தைக் கொண்டு சென்றிருப்பார்கள். பின் நவீனத்துவச் சூழலில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் செய்த கவிதைகளை, வரலாற்றுச் சூழலில் வைத்துப் புரிந்து கொண்டிருப்பார்கள். தமிழ்க்கவிதை இயக்கம் இவர்கள் வழியே ஆற்றலோடு மேம்பட்டிருக்கும். பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் வாய்த்த பின்புலத்தை இவர்களும் கண்டிருப்பார்கள். இவர்களின் கவிதை இயக்கம் இன்னும் ஆற்றல் பெற்ற இலக்கிய இயக்கத்தின் பகுதியாகவும் மாபெரும் சமூக இயக்கத்தின் பகுதியாகவும் மாறி இருக்கும். வானம்பாடி இயக்கம், இயக்கமாகச் செயல்பட்ட காலத்தில், அவர்கள் மையத்தில் குவிந்திருந்த சமூகம் /வரலாற்றினுள் மார்க்சியம் இடம் பெற்றிருந்தது. தம் உணர்வுக்குள் இடம் பெற்றது மார்க்சியம்தான் என்று இவர்கள் கண்டு கொண்டு, தம்காலத்துக்கும் வரலாற்றுக்கும் ஒத்த மார்க்சியத்தைத் தேடிச் சென்றிருக்க வேண்டும். தத்துவத்தோடு நெருக்கம் வைத்துக் கொண்டால் கவிஉணர்வு தங்களுக்குள் மேம்படாது என்று இவர்கள் கருதி, கவிதைகளில் மட்டும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள். சமூகச் சூழலில் தமக்கு வந்த செல்வாக்கைக் கண்டு மதி மயங்கினார்கள். தம்மைக் கேள்விக்கு உள்ளாக்கியவர்களை இவர்கள் வெளியேற்றினார்கள். தம் செல்வாக்கைப் பெருக்கக் கூடிய கலை இலக்கியப் பெருமன்றத்தோடு இணைந்தார்கள். மார்க்சியத்தைத் தேடி கற்றுக் கொள்வதை ஒதுக்கியதால் இந்திராகாந்தி மூலம் இந்தியாவுக்கு எளிதாக வர இருக்கிற சோசலிசத்தை ஏற்றார்கள். இந்திராகாந்திக்கு இருந்த இரஷ்ய ஆதரவும் இவர்களின் பொய் நம்பிக்கைகளை வலுப்படுத்தியது. இப்பொழுது இவர்களின் கவிதைகளை விமர்சனத்துக்குள்ளாக்கும் நண்பர்கள் இல்லை. மிதப்பில் இவர்கள் இருந்தார்கள். இவர்களுக்குள்ளும் தனிநபர்கள் தம் மேன்மை சொல்லி, தம்மால் தான் செல்வாக்கு வருகிறது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்கள். இவர்களுக்கிடையில் தளர்ச்சியும் பிரிவும் தவிர்க்க இயலாமல் நேர்ந்தன. எனினும் இவர்கள் தனிநபர்கள் என்ற முறையிலும் கவிதைகள் படைத்துக் கொண்டிருந்தார்கள். இத்தகைய பெரும் வாய்ப்பை இவர்கள் தவற விட்டு தம்மைத்தாமே இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். விருதுகள் பாராட்டுகள். இவற்றில் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். -2010 வானம்பாடி இயக்கத்தில் என் இடம் - 2010 1. வானம்பாடி இயக்கம் பற்றி என் பார்வைகளையும் மதிப்பீடுகளையும் தொடர்ந்து நான் முன்வைத்துக் கொண்டிருக்கிறேன். இதே சமயம் வானம்பாடி இயக்கத்தின் வழியே நான் என்ன செய்து கொண்டிருந்தேன், வானம்பாடி இயக்கத்தோடு என் உறவு என்னவாக இருந்தது என்பது பற்றியும் நான் எழுத வேண்டும். வானம்பாடி இயக்கத்திற்குள் நான் இடம் பெறுவதற்கு முன்பே புதிய தலைமுறையில் (1967-68) நான் செயல்பட்டேன். அதற்கும் முன்பிருந்தே, இலக்கியத்தோடும் மார்க்சியத்தோடும் இடையறாத உறவோடுதான் இருந்தேன். இவை பற்றியெல்லாம் இங்கு இப்பொழுது எழுதுவதற்கில்லை. வானம்பாடி இயக்கத்தோடு நான் உறவு கொண்டிருந்த போதும் அதற்கு பின் இன்றுவரையும் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது பற்றியும் நான் சிந்திக்கும் பொழுது, அதற்கு முன்னரே என் எழுத்துப் பணிகளும் என் நினைவுக்கு வருகின்றன. குறைந்த அளவுக்கேனும் புதிய தலைமுறையில் இடம்பெற்ற என் கட்டுரைகளை இப்பொழுதேனும் தொகுத்துப் பார்த்துக் கொள்ள விரும்புகிறேன். ஒருவேளை வானம்பாடி குறித்த என் கட்டுரைகள் நூலாக வெளிவருமென்றால் ஒரு பின்னிணைப்பு போல புதிய தலைமுறை கட்டுரைகள் இடம் பெறலாம். எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும் போது எனக்குள்ளிருந்த இடையறாத எழுத்து இயக்கம் பற்றி நண்பர்களும் நானும் கூடப் புரிந்து கொள்ள இது பயன்படலாம். தொடர்ச்சியான என் எழுத்து இயக்கத்திலும் ஓயாமல் தொடரும் சில ஆக்கக் கூறுகள் பற்றியும் நண்பர்கள் அறிந்து கொள்ள முடியும். வானம்பாடி இயக்கத்திற்கு முன்பே மரபுமுறையில் நானும் கவிதைகள் எழுதினேன். தாகூரின் ‘சண்டாளிகா’ நாடகத்தை கவிதையில் தமிழாக்கம் செய்தேன். சி. சு. செல்லப்பா அவர்களோடும் புதுக்கவிதை பற்றி நிறையப் பேசியிருந்தேன். வானம்பாடி இயக்கத்திற்குள் வரும் பொழுதே புதுக்கவிதை இயக்கத்தோடு எனக்கு முரண்பாடு இருக்கவில்லை. எனினும் வானம்பாடி இயக்கத்தில் இருந்த பொழுது நானும் புதுக்கவிதை என்பதைக் கற்றுக்கொண்டேன். சில கவிதைகளும் எழுதினேன். புதுக்கவிதை சுருக்கமாத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. நெடுங்கவிதையாகவும் இருக்கமுடியும். பழைய தொன்மங்களை நவீன கால நோக்கில் புதுப்பித்து எழுதவும் வேண்டும். மார்க்சிய நோக்கிலிருந்தும் எழுத வேண்டும். இத்தகைய பார்வையை வற்புறுத்தியதோடு அகலிகை கதையை நவீன காலத்திற்கு ஒத்த முறையிலும் மார்க்சியப் பார்வையோடும் நெடுங்கவிதையாக எழுதினேன். இக்கவிதைக்கு ‘கல்லிகை’ என்று பொருத்தமான பெயரை புவியரசு தந்தார். கங்கை கொண்டான் அழகிய நவீன ஓவியம் வரைந்தார். தமிழகச் சூழலில் அன்று வளரத் தொடங்கிய பெண்ணிய நோக்கில் அகலிகை கதையை மறு படைப்பாக்கினேன். இப்படைப்பில் நான் புகுத்திய இரண்டு கூறுகளை இங்குக் குறிப்பிட வேண்டும். அகலிகையைச் சீரழிவுக்குள்ளாக்கிய இந்திரனை உடமை வர்க்கத்தின் சார்பிலும் அகலிகையின் பெண்மை உணர்வை மதிக்கத் தவறிய கவுதமனை, புலனடக்கம், தவம், முக்தி என்னும் முறையில் புறக்கணித்த கவுதமனை மதவாதி என்ற முறையிலும் படைத்தேன். இருவருமே பெண்ணைச் சிதைத்தவர்கள். இதைப்போலவே இராமனின் கதையையும் மறு படைப்பாக்கம் செய்தேன். எல்லாவற்றையும் தனக்கெனவே பறித்துக் கொள்கிற கொடுங்கோலனாக இராவணனையும், கொடுங்கோன்மையை ஒழிக்கும் முறையில் அரசப் பதவியைத் துறந்து வேடர்களோடும் நாகரிகமற்ற காட்டுவாசிகளோடும் உறவு கொண்டு அவர்களைத் திரட்டி ஆதிக்கத்திற்கு எதிராகப் போரிட்டு வென்றவனாக இராமனையும் படைத்தேன். என் படைப்பினூடே அகலிகை ஒரு பெண் என்பதையும் கடந்து அடிமைப்பட்ட மனிதனின் குறியீடாக வெளிப்பட்டது. ‘கல்லிகை’ என்ற எனது படைப்பைப் பற்றி மாறுபட்ட விமர்சனங்கள் எழுந்தபோதும் வரலாற்றுக்குள்ளிருந்து மார்க்சிய நோக்கில் மனித விடுதலை என்ற உள்ளடக்கத்தை ‘கல்லிகை’ என்ற நெடுங்கவிதை புலப்படுத்தியது. இராமாயணக் கதையை ஆரிய திராவிட போராட்டம் என்ற முறையில் திராவிடஇயக்கத்தினர் பேசியதோடு எனக்கு முரண்பாடு இல்லை எனினும் இராமாயணக்கதையை மார்க்சிய நோக்கில் புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சி என்ற முறையில் இந்த நெடுங்கவிதையைப் படைத்தேன். வானம்பாடி இயக்கத்தினரோடு என் இடையறாத விவாதங்களில் என் கருத்தியல் சார்பு என்னவாக இருந்தது என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள கல்லிகை பற்றிய இந்த விளக்கம் பயன்பட்டிருக்க வேண்டும். மக்கள் மத்தியில் நெடுங்காலமாக ஆற்றலோடு நிலைபெறுகிற தொன்மங்களை, பகுத்தறிவுப் பார்வையை முன்வைத்துப் புறக்கணிப்பதற்கு மாறாக, நவீன காலத்திற்கு ஒத்த முறையிலும் பயன்படுத்தும் முறையில் படைப்புக்களில் நாம் ஈடுபட வேண்டும். அன்றியும் வரலாற்றின் வழியே மார்க்சியத்தைச் செறித்துக் கொள்ளவும் வேண்டும். ஜீவா முதலியவர்கள் கம்பர் காதையில் மனிதம் என்ற உள்ளடக்கத்தை மட்டும் பார்த்தனர். இது போதாது மார்க்சியம் என்பதையும் கம்பர் கவிதைக்குள்ளிருந்து கண்டறிய முடியும். இவ்வகையில் கல்லிகை வானம்பாடி இதழில் இடம்பெற்றது. 2. வானம்பாடி இயக்கம் கவிதை இயக்கமாகவே இருந்துவிட வேண்டாம். இலக்கிய இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற முறையில் வானம்பாடிகள் மத்தியில் என் கருத்தை வற்புறுத்தி வந்தேன். இலக்கிய இயக்கம் என்ற முறையில் கவிதைகளோடு சிறுகதைகள் முதலியனவும் திறனாய்வும் இடம் பெறமுடியும். கவிஞர்களாக மட்டுமே நாம் இருக்க வேண்டாம். பிறவகையான படைப்பு முயற்சிகளும் நமக்குத் தேவை. திறனாய்வில்லாமல் சிறந்த படைப்புக்கள் உருவாக முடியாது. தமிழகச் சூழலில் நம் இயக்கம் விரிந்த அளவில் செயல்பட வேண்டும். சமூகம் மற்றும் மார்க்சிய உள்ளடக்கத்தோடு நம் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். நவீன கால நோக்கில் கவிதை பற்றிப் புதிய பார்வைகளையும் நமக்குள் செறித்துக் கொண்டிருக்கிறோம். இவ்வகையில் நெடுங்காலத் தமிழ்க்கவிதை குறித்தும் விரிவான பார்வையை நம் தமிழ்ச்சூழலில் முன்வைக்க வேண்டும். தமிழை இம்முறையில் நம்மால் புதுப்பிக்க முடியும். பழமைப் போக்கிலிருந்து விடுவிக்கவும் முடியும். பண்டிதர்கள் பார்வையிலிருந்தும் திராவிட இயக்கத்தவர் பார்வையிலிருந்தும் தமிழிலக்கியத்தை மீட்பதோடு நம்மால் மார்க்சிய நோக்கில் புதுப்பிக்கவும் முடியும். இத்தகைய பார்வையை நானும் என்னோடு சில நண்பர்களும் தொடர்ந்து வற்புறுத்தி வந்தோம். இதன் காரணமாகவும் வானம்பாடி இயக்கத்திற்குள் முரண்பாடுகள் முற்றி ஒரு கட்டத்தில் வெடித்தது என்பது வரலாறு. வானம்பாடி இயக்கத்தினுள் இருந்த கவிஞர்களில் ஒரு சிலர் வானம்பாடி இயக்கம் கவிதை இயக்கமாகத்தான் இருக்க வேண்டும். இலக்கிய இயக்கமாக விரிவு பெறும் என்றால் இயக்கம் திறனாய்வாளர் கைக்குப் போய்விடும். அன்றியும் கவிஞர்கள், ஒரு படைப்பாளிகள். படைப்பாளிதான் முதன்மையானவன். கவிஞன் போடும் பிச்சையைத்தான் திறனாய்வாளன் எடுத்து உண்ணுகிறான். ஆகவே திறனாய்வாளன் படைப்பாளிக்கு நிகராக முடியாது என்பது சிலரது கருத்து. வானம்பாடி வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள முனைபவர் எவருக்கும் இந்த உண்மை புரியாமல் இருக்க முடியாது. வானம்பாடி இயக்கம் பிளவுப்பட்டதற்கும் பின்னர் தளர்ந்ததற்கும் காரணம் இந்த அடிப்படையான உண்மைதான். உண்மையில் எவ்வகைப் படைப்பாளியும் தனக்குள் வரும் சமூக முரண்பாடுகள் பற்றிய உணர்வோடு இருப்பதோடு முரண்பாட்டுக்கு ஒரு எதிர்வினையைத் தனக்குள்ளிருந்து படைத்துக் கொள்ளும் முறையில் தன் படைப்பை முன்வைக்கிறான். இவ்வகையில்தான் ஒரு படைப்பு புதியதும் ஆகிறது. ஆகவே ஒரு படைப்பாளி திறனாய்வாளனை, அவன் தேவையில்லை என்று புறக்கணிக்க முடியாது. இகழவும் முடியாது. இது மட்டுமல்ல ஆற்றல் மிக்க திறனாய்வாளன் எவனும் தனக்குள்ளும் ஒரு படைப்பாளியாகவே இருக்கிறான். கவிஞன் தரும் படைப்பை நயந்து பாராட்டை மட்டுமே முன்வைப்பவனாக அவன் இல்லை. இப்படிச் செய்பவன் திறனாய்வாளனாகவும் இருக்க முடியாது. இதற்கு மாறாக, கவிஞன் தரும் படைப்பினுள் நுழைந்து படைப்பு எழுந்த சமூகம் மற்றும் வரலாற்றுச் சூழலுக்குள் படைப்பை வைத்துப் பார்ப்பதோடு, சமூகம் மற்றும் வரலாற்றுச் சூழலில் உள்ள முரண்பாடுகளை எதிர்கொள்ளும் முறையில் இந்தக் குறிப்பிட்ட படைப்பின் இடம் என்ன என்பதையும் மதிப்பீடு செய்பவனாகத் திறனாய்வாளன் இருக்கிறான். இவ்வகையில் திறனாய்வாளனுக்குள்ளும் செறிவான படைப்பியக்கம் இல்லாமல் முடியாது. ஒரு இலக்கிய இயக்கத்தை இவனால்தான் மேம்படுத்தவும் முடியும். கூடுதலாக இன்னொன்றையும் இங்குச் சொல்லமுடியும். வானம்பாடி இயக்கத்திற்கு முன்பிருந்தே ஒரு வளமான திறனாய்வாளனாக நான் இருந்தேன். வானம்பாடி இயக்கத்திலிருந்து நான் வெளியேறிய பின்னரும் இன்றுவரை தமிழிலக்கியச் சூழலில் மரியாதைக்குரிய திறனாய்வாளனாக இருக்கிறேன். தமிழிலக்கியத் திறனாய்வுக்கு வளமான மார்க்சியத்தையும் பயன்படுத்துகிறேன். என்னோடு கட்சி வட்டாரத்தினருக்கும் மற்றவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியும் என்றாலும், தமிழிலக்கியச்சூழலில் எனக்குரிய இடத்தை யாரும் மறுத்துவிடவும் இயலாது. மார்க்சியத்தையும் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து கற்றுக் கொள்கிறேன். பழந்தமிழ் இலக்கியத்தோடு தற்காலத் தமிழிலக்கிய ஆய்வுக்கும் மார்க்சியத்தை விரிவாகப் பயன்படுத்துகிறேன். சிற்றிதழ் இயக்கத்தோடு இடையறாத உறவு கொண்டிருக்கிறேன். கவிதைப் படைப்பிலும் என் ஈடுபாட்டை குறைத்துக் கொள்ளவில்லை. முன்பு இரண்டு தொகுப்புகள் வெளியிட்டேன். கண்பார்வை இருந்த காலம் முழுவதும் அவ்வப்பொழுது நானும் கவிதை எழுதி வந்தேன். பின்னர் ஒன்றிரண்டு கவிதைகளை மட்டும் வெளியிட்டேன். இதுவரை வெளியிடாத கவிதைகள் குறைந்த அளவுக்கு 200/300 பக்கங்கள் தேறலாம். என் கவிதைகள் எளியவை என்றாலும் புதிய பார்வைகளை வெளிப்படுத்துபவை. 3. வானம்பாடி இயக்கத்தில் என் பங்கு பற்றிச் சொல்லும் பொழுது இதழில் பதிவு பெற்ற சிலவற்றைப் பற்றியேனும் குறிப்பிட வேண்டும். வானம்பாடிகளின் கூட்டம் திங்கள் தோறும் ஒரு ஞாயிற்றுக்கிழமை தவறாமல் நடைபெறும். அப்படி நடைபெறும் கூட்டத்தில் அந்த மாதம் வெளியான வானம்பாடி இதழ் குறித்து கூர்மையான ஆய்வுகளும் விவாதங்களும் நடைபெறும். இவற்றில் பெரும்பாலும் அனைவரும் பங்கு பெறுவர். குறிப்பாக ஜனசுந்தரம் இளமுருகு, ஞானி,அக்னிபுத்திரன், ஜீவஒளி, நித்திலன், இவர்களோடு மேத்தா, புவியரசு முதலியவர்களும் கருத்துரை வழங்குவர். சிலசமயம் இராயப்பன், குப்புசாமி, ஆதி, வேங்கடசாமி ஆகியோர் பேசுவர். இவை பற்றியெல்லாம் பதிவுகள் இல்லை என்பது பெரும் வருத்தம். (இவர்களில் ஒரு சிலரேனும் தம் நினைவிலிருந்து நினைவில் பதிவு செய்தால் நல்லது. மற்றவர் பற்றி எனக்கு நினைவில்லை. என் நாட்குறிப்புகளில் சில இருக்கக் கூடும். தேடி எடுக்க வேண்டும். கவிஞர் தமிழ்நாடன் வெளியிட்ட மூன்று சிறுகவிதை நூல்கள் பற்றி வானம்பாடி இதழுக்கு நான் எழுதியதாக நினைவு. ‘காமரூபம்’ பற்றி என் கருத்து மஞ்சள்தனமாக எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்று எழுதினேன். பாலியல் தொழில் செய்யும் நிலைமைக்கு ஆளான பெண்கள் குறித்து இரக்கமும் ஈடுபாடும் இருப்பது போல எழுதுவதை நான் வெறுக்கிறேன். நா. காமராசு முதற்கொண்டு ஒரு சிலரேனும் இப்படி எழுதியிருக்கின்றனர். சிற்பியின் சொப்பனமயக்கங்கள் இவ்வகைப்பட்ட ஒரு படைப்பு. அதிகாரத்தில் உள்ளவர் முதலாளிமார்கள் பெண்களை வசப்படுத்துவது குறித்து கடுமையான விமர்சனத்தோடு பலர் எழுதுகின்றனர். சுரண்டலை வெளிப்படுத்துவதற்கு இது எளிதான முறை என்று கருதி இப்படி எழுதுகின்றனர். இப்படி எழுதும் பொழுதே பெண்கள் குறித்து வசீகரமாகவும், கொச்சைத்தனமாகவும் எழுதுவதன் மூலம் வாசகரை ஈர்க்கமுடியும் என்பது இவர்கள் கருத்து. இதுவும் ஒருவகையில் வேசித்தனம் என்று கருதுகிறேன். கல்கி, நா. பார்த்தசாரதி, அகிலன் முதலியவர்கள் இத்தகைய பெண்களையே கதாநாயகிகளாக்கியும் எழுதியுள்ளனர். இவையெல்லாம் வணிகமுறை எழுத்துக்கள். இன்னும் ஒன்றைச் சொல்லலாம். காமத்திற்கு வசப்படாதவர் யார்? எழுத்தாளர்கள் இவ்வகை உணர்விலிருந்து முற்றாக விடுபட்டவர்களா? கட்சிக்காரர்கள் காமத்திற்கு அப்பாற்பட்டவரா? பெண்களை மட்டுமல்லாமல் எழுத்தாளர்களையும் இவ்வகை எழுத்துக்கள் கேவலப்படுத்துகின்றன. இலக்கணம் மீறிய கவிதை என்ற ஜெயகாந்தனின் குறு நாவலைப் படித்தவர்கள் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியும். ஜெயகாந்தனின் இன்னொரு நாவல் ‘விழுதுகள்’ இழிதொழிலென்று எளிதாகக் கருதப்படுகின்ற இத்தொழிலில் நிர்பந்தம் காரணமாக ஈடுபடநேர்ந்த பெண்களை ஜெயகாந்தன் என்றும் தன் எழுத்துக்களில் இழிவுபடுத்தவில்லை . ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற நாவல் இன்னொரு சான்று. தாய்மைக் குணமுடையவள் பெண். இக்குணம் மரியாதைக்குரியது. எந்தப் பெண்ணிடத்தும் தாய்மைக் குணமே முதன்மையானது. கருணைமிக்கவள் தாய். காம ரூபம் பற்றிய நூலுக்கும் என் விமர்சனம் இந்தப் போக்கில்தான் இருந்தது. அங்கதம் என்ற பெயரில் இப்படியெல்லாம் எழுதுவது எனக்கு உடன்பாடில்லை. அதேசமயம் தமிழ் நாடனை நான் பெரிதும் மதிக்கிறேன். வானம்பாடிக்கு முன்னரும் பின்னரும் அவரது விரிவான பன்முகப்பார்வை வியக்கத்தக்கது. 4. வானம்பாடிக் கவிதைகள் பிரமிளுக்குப் பிடிக்காது. ‘அஃ’ பத்திரிக்கையில் வானம்பாடிகளை விமர்சனம் செய்யும் முறையில் ‘கவிதை எழுதுவதை விட்டு களையெடுக்கப்போ’ என்று அவர் எழுதினார். பிரமிளுக்கு நான் பதில் எழுத வேண்டும் என்று நண்பர்கள் கேட்டதை நான் மறுத்தேன். கம்யூனிஸ்ட்டுகள் களத்தில் இறங்கி புரட்சி செய்ய வேண்டும். கவிதை எழுதுவதில் பயனில்லை என்பது அவர் கருத்து. எனக்கும் இக்கருத்து உடன்பாடில்லை. கம்யூனிஸ்ட்டுகளுக்கும் கலை இலக்கியங்கள் தேவை. கம்யூனிஸ்ட்டுகளும் கலைஞர்களாக கவிஞர்களாக இருக்க முடியும். கட்சிக்குள் மற்றவர்களைக் கொண்டு வருவதற்காகவே கவிதை எழுத வேண்டும். ஓவியம் வரைய வேண்டும் என்று கட்சிக்காரர்கள் எவரேனும் சொன்னால் என்னால் அதையேற்க முடியாது. கலை இலக்கியவாதிகள் கட்சி அரசியலுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று கட்சிக்காரர்கள் எதிர்பார்ப்பர் என்றால், இப்படி அரசியலை முன்வைத்து எழுதப்படும் கலை இலக்கியங்கள் மலட்டுப்படைப்புக்கள் என்பதே என் கருத்து. மார்க்ஸ் இப்படி எழுதவில்லை. கட்சி இலக்கியம் என்று லெனின் எழுதியதும் இத்தகைய பார்வையோடு இல்லை. ஷேக்ஸ்பியரை மார்க்ஸ் கொண்டாடினார். டால்ஸ்டாயை லெனின் கொண்டாடினார். மனித வாழ்வின் ஆழத்திலிருந்து வெளிப்படுபவை கலைகள், இலக்கியங்கள். வாழ்வின் முரண்பாடுகளை, அதற்கான எதிர்வினைகளை நுண்ணுணர்வோடு கலை இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன. மனித வாழ்வின் தரத்தை மேம்படுத்துபவை கலை இலக்கியங்கள். ஆற்றல் மிக்க அரசியலுக்கு இவை உதவலாம். அரசியலுக்காக மட்டும் எழுதப்படும் கலை இலக்கியங்கள் மனித வாழ்வைக் குறுகத்தரிப்பவை. பெரும்பாலும் கலை இலக்கியங்கள் பற்றி பிரமிளுக்கும் இத்தகைய கருத்தே இருக்க முடியும். வானம்பாடி இயக்கத்தினரையும் கட்சிகளுக்கு ஏவல் செய்பவர்கள் என்று இவர் கருதியிருக்கக்கூடும். அவர் இப்படி எழுதிவிட்டார் என்பதற்காகத் தமிழின் மிகச்சிறந்த படைப்பாளியாகிய பிரமிளுக்கு எதிராக என்னால் எழுத முடியாது. வானம்பாடி இயக்கத்தினருக்கும் எழுத்து, கசடதபற, வட்டாரத்தினருக்கும் இடையில் இருந்த பகைமை எனக்கு உடன்பாடில்லை. ஞானக்கூத்தன் பற்றி அக்னியின் சாடலும் எனக்கு உடன்பாடில்லை. ஞானரதம் இதழில் இன்குலாப் ஒரு கவிஞரே அல்ல என்ற ஒரு விமர்சனத்தை மறுத்து வானம்பாடியில் நான் எழுதினேன். கம்யூனிஸ்ட்டுகளுக்கு இலக்கியம் தெரியாது என்னும் எழுதப்பட்டதை மறுத்தேன். கவிஞர் இன்குலாப் அவர்களைக் கவிஞர்களின் கவிஞர் என்றும் எழுதியதாக நினைவு. கம்யூனிசம் என்பது வெறும் அரசியல், பொருளியல் திட்டமல்ல. வரலாற்றுச்சூழலில் பிளவுபட்டு தனக்குள் தானே அந்நியமான மனிதனைப் பிளவுகளிலிருந்தும், அந்நியமாவதிலிருந்தும் விடுவித்து இயற்கையோடும் சமூகத்தோடும் இறுதியில் தன்னோடும் ஒருங்கிணைப்பது கம்யூனிசம் என்பதை விளக்கும் முறையில் எழுதினேன். பேரிலக்கியங்கள் இத்தகைய ஆழத்திலிருந்தே பிறப்பெடுக்கின்றன என்பது என் கருத்து. (பிறகு நான் எழுதிய எத்தனையோ கட்டுரைகளில் இது பற்றி விரிவாக நான் எழுதினேன்.) 5. வானம்பாடி இயக்கத்திலிருந்து வெளியேறிய நிலையில் நானும் நண்பர்களும் இணைந்து ‘வெளிச்சங்கள்’ தொகுப்பை வெளியிட்டோம். சிற்பி, புவியரசு முதலியவர்களின் சிறந்த கவிதைகளும் அத்தொகுப்பில் இடம் பெற்றன. (தொகுப்பு உருவான வரலாறு பற்றி வேரிடத்தில் நான் எழுதியுள்ளேன்.) நாகர்கோவிலிலிருந்து வெளிவந்த ‘தெறிகள்’ இதழில் வெங்கட் சுவாமிநாதன் வெளிச்சங்கள் தொகுப்பு பற்றி ஒருசிலரைப் பாராட்டியும் பலரைச்சாடியும் எழுதியிருந்தார். ‘தெறிகள்’ இதழுக்கு நான் விரிவாக எழுதிய கட்டுரை தெறிகள் இதழில் வெளிவரவில்லை. வானம்பாடிகளைக் கட்சியின் கட்டளைகளை ஏற்று கவிதை எழுதுபவர்கள் என்பது வெசா.வின் குற்றச்சாட்டு. வானம்பாடிகளில் எவரும் கட்சி உறுப்பினரில்லை என்று நான் மறுத்து எழுதியதோடு வானம்பாடி இயக்கத்தின் உள்ளீடு என்ன என்பது பற்றியும் விரிவாக எழுதினேன். இந்தக்கட்டுரை இன்றளவும் என்னிடம் பத்திரமாகவே இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கவிதை வராது என்பது பிரமிள் வெ. சா மட்டுமல்லாமல் இன்றளவும் பலர் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆதிக்கங்களுக்கு எதிராகக் கவிதை எழுதும் முறையில் அரசியல் முதன்மை பெறும் பொழுது கவித்துவம் குறைந்து விடும் என்பதில் ஐயமில்லை. இவ்வகை கவிதைகளில் ஆவேசம் மிகுந்திருக்கும். இவ்வகைக் கவிதைகளுக்கான தேவையை நானும் மறுக்கமாட்டேன். இவ்வகைக் கவிதைகளை எழுதுபவர்க்குக் கவிதைப்பொருள் குறித்த சுய அனுபவம் இல்லை என்பது ஒரு விமர்சனம். தன் சமூகச் சூழல் எவ்வகை ஆதிக்கங்களால் நாசப்பட்டு இருக்கிறது என்பது பற்றிய உணர்வு எந்த ஒரு மனிதருக்கும் தேவை என்பதை கம்யூனிஸ்ட்டுகள்தான் வற்புறுத்த வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதற்கில்லை. இப்படி ஒரு விமர்சனத்தை முன் வைப்பவருக்குள்ளும் ஆதிக்கம் பற்றிய சமூக உணர்வு எப்படி இல்லாமல் போய்விடும் என்பது எனக்குப் புரியவில்லை. சமூகத்திலிருந்து எந்த ஒரு மனிதனும் முற்றாகத் தன்னை விலக்கி வைத்துக்கொண்டு, தன் மன அவலங்களை மட்டுமே கவிதையாக்குவது என்று இவர்கள் சொல்வார்களென்றால், இவரது மன அவசங்களும் தன்னிலிருந்து பிறப்பது ஒரு சிறு பகுதி என்றாலும், பெரும்பகுதி இவர் சார்ந்த குடும்பம் மற்றும் சமூகச்சூழலிருந்துதான் பிறக்கிறது என்ற உண்மையை இவர்கள் எப்படி மறுக்கமுடியும். இப்படித்தான் இவர்கள் சொல்வார்களென்றால் இவர்கள் முற்றும் உடமை வர்க்கத்திற்குப் பலியானவர்கள் என்றும், இவர்களும் ஒருவகையில் சமூக விரோதிகள் என்றும் ஒரு மார்க்சியன் குற்றம் சாட்டாமல் இருக்கவும் முடியாது. அன்றியும் இவர்களது அறிவு, கலை உணர்வு, முதலிய அனைத்தையும் இவர்கள் சமூகம் தந்த வாய்ப்பிலிருந்துதான் பெறுகிறார்கள் என்ற உண்மையை இவர்கள் மறைப்பதோடு, தனிமனித ஆளுமைத் திறன்களை வேறெங்கிருந்து இவர்கள் பெற முடியும் என்று இவர்களைக் கேட்கத்தோன்றும். இன்னொன்றையும் சொல்லலாம். எழுத்தாளர்களாகிய இவர்களில் எவரும் சமூக விரோதிகளாகவும் இல்லை . அப்படி இவர்கள் எந்தக் குற்றத்தையும் செய்யவுமில்லை. முற்றான சமூக உணர்வு அற்றவர்களாகவும் இவர்கள் இல்லை. இப்படி இவர்களைக் கட்சிக்காரர்கள் புரிந்து கொள்ளாமல் இவர்களைச் சமூக விரோதிகள் என்பது போலத் தொடர்ந்து சாடும் பொழுது, இவர்கள் அதே பாணியில் கட்சிக்காரர்களைச் சாடுகிறார்கள். தமிழகச் சூழலில் இதுதான் நேர்ந்தது. க. நா. சு முதலியவர்களை சி.ஐ . ஏ . என்றெல்லாம் குற்றஞ்சாட்டிக் கேவலப்படுத்தினார்கள். (தி. க. சி. ஒருமுறை என்னையும்தான் சி.ஐ.ஏஜெண்ட் என்று வானம்பாடி இதழுக்கு எழுதினார். இந்தக் கடிதத்தையும் சிற்பி இதழில் வெளியிட்டார் இது ஒருபுறம் இருக்க) உண்மையில் செல்லப்பா, நா. பிச்சமூர்த்தி, க.நா.சு., முதலியவர்களை உள்ளடக்கிய புதுக்கவிதை இயக்கம் சுந்தர இராமசாமி, ஞானகூத்தன், அபி, ஆத்மாநாம், அழகிய சிங்கர் முதலிய எத்தனையோ கவிஞர்களை உள்ளடக்கியதாக இருந்து பெற்ற பெரும் வளர்ச்சியை நாம் மறுக்க முடியாது. அவர்களிடமிருந்தும் கூட விலகி இன்னொரு பாதையில் 80க்குப் பிறகு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நவீனத்துவ வயப்பட்ட கவிதைகளை ஒரு பேரியக்கம் போலச் செய்து வருகிறார்கள். இவர்களில் எவரும் கட்சி சார்ந்தவர்களாகவும் இல்லை. இவர்களைக் கவிஞர்கள் இல்லை என்றும் நாம் சொல்ல முடியாது. இவர்களுக்குள்ளும் இயங்கும் கவிதை இயக்கத்தை நாம் காணத் தவறவும் கூடாது. தமிழ்ச் சூழலில் இவ்வகையான முரண்பாடுகள் தமிழ்க்கவிதை வளர்ச்சியை இரண்டு அல்லது முப்பெரும் கூறுகளாக்கிச் சிதைக்கத்தான் செய்தது. முரண்பட்ட இவ்வகைக் கவிதைப் போக்குகளை அவ்வாறு இணைத்து பேசுவதும் ஒரு கடுமையான சிக்கல். இது பற்றி ஆழமான ஆய்வு தேவை. கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கவிதை தெரியாது என்று பிறர் கூறிய குற்றச்சாட்டுகள் ஒருவகையில் அரசியலை முதன்மைப்படுத்தி குறைவான கவித்துவத்தோடு எழுதிய கவிஞர்களைப் பொறுத்தவரை உண்மை என்பதை நாம் மறுப்பதற்கில்லை. வாழ்வியக்கத்தினுள் அரசியலோடு எவ்வளவோ சிக்கல்கள், உணர்வுகள் உள்ளன. அரசியலை முதன்மைப்படுத்தும் பொழுது பிறவகை வாழ்வியல் அம்சங்கள் சுருங்கிவிடுகின்றன. அரசியல் நெறியில் சமூக மாற்றம் நிகழ்ந்துவிடுமென்றால் பிற அனைத்து வகைச் சிக்கல்களும் தாமே தீர்ந்து விடும் என்பது உண்மையில்லை. எவ்வகை மனிதனுள்ளும் பல்வேறு சூழலில் வகைவகையான உணர்வுகள்/சிக்கல்கள் முதன்மை பெறுவதும் உண்மைதான். இவையனைத்துமே கவிதைக்குள் வரத்தான் வேண்டுமென்பதும் கட்டாயமில்லை. சமூக மாற்றம் என்பதும் எத்தனையோ வகைகளில் நேர்ந்தாலொழிய சமூகம் முழுமை பெறுவதற்குமில்லை. அன்றியும் ஆதிக்க உணர்வு தமக்குள்ளும் செயல்படுவதை உணராதவர் எழுதும் கவிதைகளும் தட்டையாக இருப்பதில் ஐயமில்லை. உண்மையில் கம்யூனிஸ்ட் என்பவர்கள் எத்தகைய ஆழ்ந்த புரிதலோடு, கவித்துவத்தோடு கவிதை எழுத முடியும் என்பது பற்றிச் சிலவற்றை இங்குச் சொல்லலாம். கவிதை இயக்கம் என்பது எந்த ஒரு கவிஞனின் உள் ஆழத்திலிருந்து, வாழ்வியல் சார்ந்த அனுபவச் செறிவோடு பிறப்பதாக இருக்க முடியும். 6. மார்க்ஸ் தந்த ஒரு விளக்கம் இங்கு குறிப்பிடத்தகுந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட சமூகத்தில் மனிதன் இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னோடும் ஒன்றியிருந்தான். இவனுக்குள் பிளவுகள் இல்லை. வரலாற்றுக் காலத்தில் இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் தன்னிலிருந்தும் பிளவுபட்டான்; அந்நியமானான். முன்னைய சமூகத்தில் ஆதிக்கங்கள் இல்லை. இயற்கையிலிருந்து கிடைத்தவற்றை மனிதர் தமக்குள் பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கிடையில் போட்டி, பொறாமை, தன்முனைப்பு முதலியவை இல்லை. வரலாற்றுச்சூழலில் தனியுடைமை அரசதிகாரம் ஏற்றத்தாழ்வுகள் முதலியவை ஏற்பட்ட சூழலில், தனக்குள் சிதைவுபட்ட மனிதன் போட்டி பொறாமைகள் முதலியவற்றுக்கு இடங்கொடுத்த நிலையில்,தனக்குள்ளிருந்தும் அந்நியப்பட்டுப் பலவகை துயரங்களுக்கும் உள்ளான நிலையில், தனக்கு என்னதான் நேர்ந்தது என்பது புரியாத நிலையில் தவித்தான். தனக்குள்ளும் கலவரங்களுக்குள்ளானான். பிளவு இல்லாத ஆதிச்சமூகம் என்றைக்கு வரும் என்று கவலைப்பட்டான். கனவு கண்டான். ஆதிச்சமூகம் தனக்குள் முற்றாக அழிந்துவிடவுமில்லை. ஆதிச்சமூகத்தின் பொதுமைப் பண்பு இன்னும் இவனுக்குள் ஒரு சிறு நீரூற்றுப் போலவேனும் இருந்தது. வர்க்கச் சமூகத்தில் கடுமையான முரண்பாடுகள் நேரும் போதெல்லாம் அந்த பழங்கனவுக்குள் மீண்டும் மீண்டும் சென்றான். பழங்கனவை அவன் இழந்துவிடவில்லை. அந்த பழங்கனவைத் தனக்குள் பல மடங்கு பெரிதுபடுத்திக் கனவுகண்டான். அதற்குள்தான் இவன் மனிதனாக இருந்தான். அந்தக் கனவை மீண்டும் இன்னொரு சமூகச்சூழலில் புறத்திலும் சாதித்தாக வேண்டும் என்று உறுதி கொண்டான். இந்தக் கனவும் கற்பனையும் அவன் ஆதிமனத்திற்குள், ஆழ்ந்த மனத்திற்குள் பத்திரமாகவே இருந்தன. வரலாற்றுச் சூழலில் மீண்டும் மீண்டும் அந்தப் பழங்கனவை சில வடிவங்களிலேனும் சாதிக்கவே முனைந்தான். இயேசுநாதர், வள்ளுவர் முதலிய நூற்றுக்கணக்கான கவிஞர்கள் மெய்யியலாளர்கள் அந்தப்பழங்கனவையே தமக்குள் புதுப்பித்துக் கொண்டார்கள். அந்தப் பழங்கனவிலிருந்தே தெய்வங்கள் எழுந்தன. விண்ணுலகம் முதலிய கற்பனைகள் எழுந்தன. மண்ணில் இந்த உலகத்தை மீட்பதற்கான முயற்சிகளும் நடந்தன. கனவின் விளைச்சல் என மார்க்ஸ், லெனின் முதலியவர்களையும் குறிப்பிடலாம். பேரிலக்கியங்கள் என்பவை மனிதனின் இந்த ஆதிக்கனவிலிருந்து பிறப்பெடுத்தவை. நம் காலத்தில் நாம் காணும் பெருங்கனவு சமதர்ம சமுதாயம். மார்க்ஸ் கூறியபடி இத்தகைய சமூகத்தில்தான் இயற்கையோடும் சமூகத்தோடும், தன்னோடும் அந்நியமான நிலையிலிருந்து விடுபட்டு ஒருங்கிணைவான். மார்க்ஸின் மாபெரும் கவித்துவம் என்பது இதுதான். இந்தக் கவித்துவத்தின் கீற்றுகள் இல்லாமல் எந்தக் கவிஞனும் கவிதை எழுதுவதில்லை. இந்தக் கவித்துவத்தின் ஊற்று எந்தப் பெருங்கவிஞனுக்குள்ளும் இயல்பாகவே இயங்குகிறது. வரலாறு, சமூகம் என்று தொடங்கி வாழ்வியலைப் பெயரளவில் தனக்குள்ளும் உணர்கிற எவனுக்குள்ளும் இந்தக் கவிதை ஊற்றுப் பொங்கத்தான் செய்யும். வரலாறு, சமூகம் பற்றிய விரிவான பார்வையை நமக்குள் வளர்த்துக்கொள்ள மார்க்சியம் தவிர வேற நெறி இல்லை. மார்க்சியத்தோடு முரண்படுபவர்கள் ஒருபுறம் இருக்க, மார்க்சியன் என்று தன்னைக் கருதிக் கொள்பவனும் வரலாறு குறித்த இத்தகைய பேரியக்கத்தைத் தனக்குள் கண்டு கொள்ளாமலும் இருக்கக்கூடும். மார்க்சியம் குறித்த ஆழ்ந்த பார்வையிலிருந்து வாழ்க்கை குறித்தும் மெய்யியல் குறித்தும் கவிதைகள் குறித்தும் இப்படிப் புரிந்து கொள்ளும் பெரும் வாய்ப்பை இழந்தவர்கள் பற்றி நாம் எதுவும் சொல்வதற்கில்லை. கட்சிக்காரர்கள் இப்படி எழுதவில்லை என்று குறை சொல்லியும் பயனில்லை. இத்தகைய ஆழ்ந்த அனுபவத்தோடுதான் கவிதை எழுத வேண்டுமென்று நாம் கட்டாயப்படுத்தவும் முடியாது. குறைந்த அளவுக்கேனும் வாழ்வியல், அனுபவம், கவிதை என்று எழுதத் தொடங்கி மேலும் மேலும் வாழ்க்கை , வரலாறு சமூகம் என்றெல்லாம் அறிந்தும் ஆய்ந்தும், இப்படியும் கவிதை எழுதித் தனக்குள் கவிதை இயக்கம் என ஒன்றைக் கண்டு, அந்தக் கவிதை இயக்கத்திற்கு மேலும் மேலும் வசப்பட்டு இந்நிலையில் நல்ல கவிதைகள் எழுதி, அத்துடன் நிற்காமல் மேலும் மேலும் வரலாறு, வாழ்வியல் அனுபவங்கள் என்பனவற்றின் வழியே தனக்குள்ளும் ஆழ்ந்து சென்று, ஒரு தரிசனம் போல எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் இணைத்து, கவிதை ஊற்று தனக்குள் பொங்க, கவிதை எழுதுவதென்பது ஒரு பேறு. கவிதை இயக்கம் என்பது இப்படித்தான் மெல்ல மெல்லத் தனக்குள் தொடங்கி இறுதியில் ஆறு போலத் தனக்குள் பொங்குகிறது. இந்நிலையில் கவிஞன் தன்னை மறந்து தானும் கவிதை இயக்கமும் ஒன்றாகி, ஒரு கட்டத்தில் கவிதை, கவிஞன் வழியே தன்னை எழுதிக் கொள்கிறது என்ற உணர்வுக்கு வருவான். இவன் பெருங்கவிஞன். இவன் மெய்யியலாளன். கவிதை , மெய்யியல் என்று இங்கு வேறுபாடில்லை. கவிதையும் மெய்யியலும் ஒன்றாகிறது. பெருங்கவிஞர் எவரையும் இந்த அடிப்படையிலிருந்தே புரிந்து கொள்ள முடியும், மதிப்பிட முடியும். இந்தப் பேரனுபவத்தின் சில துளிகளேனும் எவர் கவிதைக்குள்ளும் உண்டு. கவிதை பற்றிய புரிதல் இந்தச் சிறுதுளிகளையும் பொருட்படுத்துவதாகவே இருக்க வேண்டும். 7. கவிதை இயக்கம் பற்றிய இந்தப் பேரனுபவம் குறித்து நான் முன்னர் எழுதிய சில கட்டுரைகளிலும் விரிவாகவே எழுதியுள்ளேன் என்றாலும் இத்தகைய அனுபவத்தைக் ‘கல்லிகை’ எழுதும் பொழுது எனக்குள் கண்டேன் என்பதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். கல்லிகை கவிதையைத் தொடர்ந்து எழுதிவரும்போது நான் முன்பே திட்டமிட்டு இருந்த அனுபவ எல்லைக்கு அப்பாலும் எனக்குள் ஆழமாகச் சென்றேன். அகலிகையை, இந்திரன் என்ற உடைமை வர்க்கத்தானுக்கும் கவுதமன் என்ற மதவாதிக்கும் இடையில் மாட்டிக் கொண்டவள் என்ற என் முன்னைய புரிதலையும் விட, ஆழ்ந்து செல்லும் பொழுது வரலாற்றுச்சூழலில் இரு பெரும் சக்திகளுக்கிடையில் அகப்பட்டுச் சீரழிவுக்குள்ளான மனிதன் என்பதன் பிம்பமாக அகலிகை எனக்குள் வளர்ந்தாள். இந்த மனிதனுக்கு இன்னொரு வரலாற்றுச் சூழலில் விடுதலை கிடைத்தாக வேண்டும் என்ற முறையில்தான் ஆதிக்கத்தோடு போராடி தனக்குள்ளும் ஆதிக்க உணர்வற்ற, மானுடத்தை விடுவிக்க வந்த விடுதலை வீரன் என இராமன் எனக்குத் தோன்றினான். மானுட விடுதலை இப்படித்தான் நிறைவு பெறுகிறது என்பதாக என் உணர்வு இயக்கம் இருந்தது. வானம்பாடி இயக்கத்தில் இருந்தபொழுதே மார்க்சியம் பற்றிய எனது படிப்பும் புரிதலும் ’கல்லிகை’ என்ற படைப்பியக்கத்திற்குக் காரணமாக இருந்தது. வரலாற்றையும் வாழ்வையும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்ற என் புரிதலை வானம்பாடி இயக்கக் கவிஞர்கள் முன் வைத்தேன். மார்க்சியம்தான் நம்மை மேலும் மேலும் மனிதனாக உருவாக்கும் என்றும் விவாதித்தேன். எனக்குள் இயங்கியது மார்க்சிய இயங்கியல் என்ற தத்துவம் என்னளவில் நான் புரிந்து கொண்ட தத்துவம். தத்துவத்தோடு ஒரு கவிஞன் நெருங்கிவிடக் கூடாது. கவிதைக்குள் தத்துவம் இருக்கலாம். கவிஞன் தத்துவவாதி இல்லை என்று அன்று நண்பர்கள் விவாதித்தனர். மார்க்சியத்தை விடாப்பிடியாக நான் வற்புறுத்தியதால்தான் இயக்கத்தில் பிளவு நேர்ந்தது என்று வானம்பாடி இயக்கத்திலிருந்த நண்பர்கள் சிலர் இன்றுவரை பேசுகின்றனர். என் மீது குற்றம் சாட்டுகின்றனர். மார்க்சியத்தை ஆழ்ந்து கற்காதவர்கள் இவர்கள் என்று நான் எளிதாகச் சொல்லி விடலாம். எந்தக் கூட்டுக்கும் எங்களைத் தாங்க வலிமை இல்லை என்று பின்னர் சிற்பி எழுதியதை வேறு எப்படிப் புரிந்து கொள்ளமுடியும். கட்சி அரசியலுக்கு மார்க்சியத்தின் மாபெரும் பரிமாணம் தேவையில்லை. இப்படி மார்க்சியத்தைச் சுருக்குபவர்கள் எப்படி மார்க்சிய வாதிகளாகவும் இருக்கமுடியும். மனித விடுதலை இவர்கள் மூலம் எப்படிச் சாத்தியப்படும்? பகுதி 2 வெளிச்சங்களுக்கு அப்பால் வெ.சா. 1. ‘வெளிச்சங்கள்’ கவிதைத் தொகுப்பில் வானம் பாடிக் கவிஞர்களோடு பிற முற்போக்குக் கவிஞர்கள் சிலரும் இடம் பெற்றுள்ளார்கள். இரண்டொருவரைத் தவிர்த்து, பெரும்பாலானவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியையோ, பிற கட்சியையோ சார்ந்தவர்கள் அல்லர். ‘வெளிச்சங்களுக்கு’ நான் எழுதிய முன்னுரையில், ‘வானம்பாடி இயக்கம் கட்சி சார்பற்ற இயக்கம்’ என்று குறிப்பிட்டிருப்பதை வெ.சா. ஏற்காமைக்கான காரணம் புலப்படவில்லை . ‘கம்யூனிஸ்டுகளே இப்படித்தான் ; தம்மை ஒத்துக் கொள்ளமாட்டார்கள்’ என்று வெ.சா கருதமாட்டார் என்று நம்புகிறேன். ’வெளிச்சங்களில் இடம் பெற்ற கவிஞர்களைக் கட்சி வட்டாரத்தவர் என்றே கருதியதன் மூலம் வெ. சா. வெளிச்சங்களுக்கு வெளியிலேயே தன் பார்வையைச் செலுத்துபவராகிறார். 2. வானம்பாடி இயக்கம், சமுதாயக் கண்ணோட்டத்துடன் கவிதைப் படைப்பை நோக்கமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதில் மார்க்சியவாதிகளுடன் பிற முற்போக்குவாதிகளும் இடம் பெற்றார்கள். இவர்களுக்குள் ஏற்பட்ட இணைவுக்குக் கவிதைப் படைப்பே முதன்மையான நோக்கம். தாங்கள் கொண்டுள்ள சமுதாயக் கண்ணோட்டம் வகைகளுள் “மார்க்சியமா, வேறு கண்ணோட்டமா? எது சிறந்தது?’’ என்பதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்கள். இவ்வடிப்படையில் வரும் விவாதங்கள் முறையோடு செய்ய வேண்டும் என்பது இவர்கள் விருப்பம். இந்தக் கருத்து வேறுபாடுகள் தங்கள் கவிதை சார்ந்த இயக்கத்தைப் பாதிக்கக் கூடாது என்பதில் இவர்கள் அக்கறை கொண்டிருந்தார்கள். கட்சி ஆணைக்குக் கட்டுப்பட்டோ, தூண்டப்பட்டோ இவர்கள் இயக்கத்தைத் தோற்றுவிக்கவில்லை. சரியாகச் சொன்னால், கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத்தவர்களின் இலக்கிய அணுகல் முறை பற்றி இவர்கள் வேறுபட்ட கருத்துக் கொண்டவர்கள்தான். இந்த வேறுபட்ட அணுகல் முறையே கூட இவர்கள் வானம்பாடி இயக்கம் என்ற தனி இயக்கம் தோற்றுவிப்பதற்குக் காரணமாக இருந்தது. இவர்களைத் தம் பக்கம் இழுத்துக் கொள்ள, வெளியிலிருந்து சில கட்சியாட்கள் முயன்றிருக்கலாம் (இம்முயற்சியில் அவர்கள் இன்றுவரை வெற்றி பெறவில்லை.) இவர்களில் யார் யார் மார்க்சியத்தை ஏற்றவர்கள் என்பது அவரவர்களின் சொந்த வியங்கள். தவிர வானம்பாடிக் கவிஞர்கள் கட்சி சார்ந்தவர்கள் என்பதோ, நா. காமராசன் ’நீங்கள் என்னை சோசலிஸ்ட் ஆக்கினீர்கள்?’ எழுதியதனாலேயே அவர் கம்யூனிஸ்ட் அல்ல, ஆகவே அவரது கவிதை, கவிதையுமல்ல என்பதோ, நான் வெளிச்சங்கள் முன்னுரையில் சொல்லாத வி யங்கள். 3. புவியரசுவின் ‘சிலுவைப்பாடு’ அவருடைய தனிப்பார்வையை, அனுபவ உண்மையை வெளிப்படுத்துவதாக வெ. சா. கூறுகிறார். இயேசுவின் அனுபவத்தை புவியரசு பெற்றிருக்கிறார் என்ற கருத்தில் வெ. சா. கூறியிருக்க முடியாது. ஆளும் வர்க்கத்தின் கடுமையான அடக்குமுறைச் சூழலில் மனிதனின் அவலத்தை இக்கவிதையில் புவி வெளிப்படுத்துகிறார். இந்த அவலமும் புவி நேரிடையாகக் கொண்டது அல்ல. ஒரு சமூகத்தின் மேன்மைக்காக சமூகத்தின் மாற்றத்துக்காகப் பாடுபட முனைந்தவனின் சார்பில் புவி பேசுகிறார். ஆளும் வர்க்கத்தின் நேரிடையான தாக்குதலுக்கு ஆளாகாமல், இந்தத் தாக்குதல் நடைபெறும் சமூகச் சூழலில் வாழ்கின்றதனால் இந்தத் தாக்குதலின் பாதிப்பை உணர்கிற சமூக உணர்வுள்ள மனிதனாக இருந்து புவி பேசுகிறார். சிற்பியின் ‘சர்ப்ப யாக’மும் இத்தகைய கவிதைதான். இந்தக் கவிதைகளில் மார்க்சிய அணுகல் முறையே வெளிப்படுகிறது. அதேசமயம் வெ.சா.வும் ஒப்புக் கொள்கிறபடி இவை கவிதைகளாகவும் உள்ளன. நிலப்பிரபுத்துவம், சாதி ஏற்றத்தாழ்வுகள் ஆகிய சமுதாயச் சூழலில், தாழ்ந்த சமூகத்தைச் சார்ந்தவர்களின் துயரத்தை, கொடுமையை - அருக்காணி என்ற பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமை மூலமாகச் சிற்பி ’சிகரங்கள் பொடியாகும்’ என்ற கவிதையில் விவரிக்கிறார். இது போலவே ‘அக்னியி’ன் பிரளயங்கள் கங்கையின் ’எந்தக் கண்ணன்’ ஆகிய கவிதைகளும் இயங்குகின்றன. சுய அனுபவம் என்பது நேரிடையாகத்தானே உடலளவில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலிருந்து பெறுவதாக அல்லாமல், சமுதாயத்தில் உள்ள வேறு வகையான நிகழ்ச்சிகள், நிலைமைகள் அவலங்கள் முதலியவை, மனிதாபிமானம் உடைய ஒரு கவிஞனின் உள்ளத்தில் பிரதிபலித்து அனுபவமாவதும் சேர்ந்ததுதான். இந்தப் பிரதிபலிப்புக்கான ஒரு காரணம், சமுதாயத்தில் தம்மைவிடத் தாழ்ந்த நிலையில், அல்லது தன்னை ஒத்த நிலையில் உள்ளவர் அடையும் அனுபவங்கள் சிறிய அளவிலேனும், அதேசமயம் கூர்மையான முறையில் கவிஞன் தன் சொந்த வாழ்க்கையிலிருந்தே பெறுவதுதான். இந்தச் சுய அனுபவத்தைக் கவிஞன் தான் பெற்ற முறையில் வெளிப்படுத்துவதில்தான் கவிதையில் உண்மை ஒளியேறும் என்பது உண்மை. சமுதாயத்தில் ஒரு தனிமனிதன் என்ற முறையில் அவன் பெறும் அனுபவங்கள், அவனளவில் மட்டுமே நிகழ்பவையல்ல. சமுதாயத்தில் பல்வேறு வகை மக்களும் பெறுகின்ற அனுபவங்களே தவிர, காலங்காலமாகப் பலர் பெற்று வருகின்ற அனுபவங்களே என்பதை இந்தத் தனிமனிதன் அறிந்து கொள்வது, வெளியிலிருந்துதான். சில சமயம் கட்சிகள் இந்த அறிவைச் சரியாகவோ தவறாகவோ தருகின்றன. அந்த அறிவையும் கவிஞன் பெற்ற நிலையில்தான் அவனது சமூகப் பிரக்ஞை உருவாகிறது. தானாகச் சிறிய அளவிலேனும், பெறாத அனுபவத்தை, பிறர் அல்லது கட்சிக்காரர் ஏற்றும்போது அவ்வாறு ஏற்றிக் கொண்ட கவிஞன் எழுதும் கவிதை, வெறுக்கத்தக்க முறையில் தோல்வியடையும் என்பது உண்மை. தன் அனுபவம், சமுதாய அனுபவம் இவை இரண்டுக்கும் உள்ள உறவு; இவற்றின் இணைவு பற்றிய பிரச்சினைகள் சிக்கலானவை நான் சொல்லவந்த விடயம், கங்கை, அக்னி முதலியவர்களின் கவிதையில் சுய அனுபவ வெளிப்பாடு இல்லை என்று வெ.சா. கூறுவது போலவே சிற்பி, புவி ஆகியவர்களின் கவிதைக்கும் சேர்த்துக் கூற இடம் இருக்கிறது; அல்லது சிற்பி, புவியின் இரண்டொரு கவிதையில் காணப்படுகின்ற சுயஅனுபவம் அக்னி, மேத்தா, சக்திக்கனல் முதலியவர்களின் கவிதையிலும் காணப்படுகின்றது என்று கருதவும் இடம் இருக்கிறது என்பதற்காகத்தான். வேலுசாமியின் கவிதையில் ’வாட்கள் உறைக்குள் ஓய்வெடுப்பதை’ சுய அனுபவமாகக் கூறுகிறார் வெ.சா. இது நமக்கு புரியவில்லை. சாரதியும் விஜயனும் வீற்றிருக்கவில்லை என்ற பகுதியை, வெ.சா. கூறுவதற்கு மாறாகக் கட்சியின் கொள்கைப் பிரகடனத்திலிருந்து பெற்றார் என்று கூறுவதற்கு இடம் இருக்கிறது. சிற்பியின் ’நாங்கள்’ கவிதை, தமிழன்பனின் ’இமயப்பறவைகள்’ நாம் ஆகியவற்றை மறுத்துவிட்டு தமிழன்பனின் ’நமது சிறகசைப்பில் ஞால நரம்பதிரும்’ என்ற வரியை வெ.சா. கவிதையாக ஏற்பதற்கான காரணம் புரியவில்லை. அதாவது பெரும்பாலான கவிதைகள் வாய்ப்பந்தல் - காரணம் கம்யூனிசப் பாணியில் சமுதயாப் பிரச்சனைகளைப் பார்ப்பதே பொய். அவர்கள் விரும்புவதைப் போன்ற எதிர்காலச் சமுதாயம் உருவாகப்போவதில்லை. அப்படி உருவானாலும் அது உருப்படியாக இராது என்று வெ.சா. கருதுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா? இப்படிக் கருதுவது, இறுதியாக அவரவர் தத்துவக்கண்ணோட்டத்தைப் பொறுத்துக் கவிதையைப் பார்ப்பதாகிறது. கவிதையைப் பார்க்க இதுதான் இறுதியான அளவுகோல் என்றால் நமக்கு மறுப்பு இல்லை. எதைக் கவிதை இல்லை என்று அங்கீகரிக்கிறார் என்ற விடயம் அவர் கட்டுரையில் நெடுக விவாதித்த பின்னும் குழம்பியே கிடக்கிறது. கம்யூனிஸ்ட்கள் அல்லது கம்யூனிஸ்ட்டுகள் மாதிரித் தங்கள்கூட்டத்தின் உள்ளார்ந்த ஆற்றலை, எதிர்காலக் கனவுகளை வெளிப்படுத்துகின்ற ஆவேசக் கவிதைகளை வெ. சா. ஏற்கவில்லை. காரணம் அவருக்குக் கம்யூனிசம் பிடிக்காது என்று கூறிவிடுவது நேர்மையான விமரிசனம் ஆகாது. கவிதை அனுபவம், ஒவ்வொருவரின் தனி அனுபவத்தைச் சார்ந்தது என்ற சூத்திரமும் நமக்குப் பயன்படாது. இது உண்மையானால் கவிதை விமர்சனத்திற்கே தேவையில்லை என்றாகிவிடும். வெ. சா. கூறும் சமூகப் பிரக்ஞை பற்றிய விளக்கத்தில் பெரும்பகுதி எனக்கு உடன்பாடுதான். ’’சமூகப் பிரக்ஞை, சமூகத்துடன் கொள்ளும் உறவாடலில், தனிமனிதன் உள்ளிருந்து எழ வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனின் சமூகப் பிரக்ஞையும் அவனுக்கே உரிய தனித்துவத்தை அவனது ஆளுமையைத் தன்னுள் கொண்டதாக இருக்கும். அவனைச் சமூகத்தின் மற்ற ஒவ்வொருவரிடத்தும் வேறுபடுத்திக் காட்டும். அதேசமயம் அவனும் மற்றவரும் வாழும் சமூகத்தையும் பிரதிபலித்துக் காட்டும் “. 4. வெ.சா. வின் கூற்றை நான் ஏற்கும் போதே எனக்கான சில விளக்கங்களையும் கூறிக் கொள்கிறேன். இயற்கையாக - பிறப்பிலிருந்தே தனி மனிதனுள்ளிருந்து சமூகப்பிரக்ஞை எழுவதில்லை. இயல்பாக அவனுக்குள்ளிருப்பவை சில இயல்பூக்கங்கள் - உணர்ச்சிகள். குடும்பத்தோடு, ஊரோடு, சமூகத்தோடு வாழும் போதே இவனுக்கு தன்னைப்பற்றிய பிரக்ஞையும், சமூகப் பிரக்ஞையும் எழுகின்றன. தனிமனிதன் என்பவன், தனித்த மனிதனோ, தன்னலம் மட்டுமே உடைய மனிதனோ அல்ல. இவன் சமுதாயத்துடன் உறவாடும் போது தன்னை இழந்துவிடக் கூடாது. தனக்கு ஆர்வங்கள், ஆசைகள், திறன்கள் முதலியவை, சமுதாய உறவாடலில் பெற்று, மாற்றமடைந்து, வளர்ந்து - இப்படியாக இயங்குகிறான் இவன். தன்னை இழந்துவிட்டு, இன்னொன்றாகிவிட முடியாது மனிதன். சமூகத்திற்கும், தனி மனிதனுக்கும் உள்ள உறவு இருவழி உறவாக, ஒன்றை மற்றது வளர்க்கும் உறவாக இருக்க வேண்டும். ஒன்றை அழித்து விட்டு மற்றது வளரமுடியாது. ஒரு விஞ்ஞானி பெறும் சமூகப் பிரக்ஞை, அவன் மேலும் சிறந்த விஞ்ஞானியாவதாக இருக்கிறது. அதாவது நாளுக்குநாள் அவன் தனது உடலியல், குடும்பவியல் ஆர்வங்களை இழந்து விஞ்ஞான ஆர்வத்தின் வயப்பட்டுப் போகிறான். இந்தச் சமூகத்திற்கு அவனது சேவை, அல்லது தனக்குத் தானே செய்து கொள்ளும் கடமை என்பது, விஞ்ஞான வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதாகும். ஒரு நல்ல அரசியல்வாதி, ஆசிரியன், புலவன் முதலியவர்களும் இவ்வாறே. முதற்கால மனிதன் இப்படி இல்லை. வரலாற்றின் வளர்ச்சியின் போதே மனிதன், சமூகம் சார்ந்த பண்புகளைத் தனக்குள் பெறுகிறான். நேர்மை, கடமையுணர்வு, அறிவார்வம் முதலியவைகளைப் போலவே விஞ்ஞானப்பற்று, அரசியலார்வம் முதலியவைகளைப் பெறுகிறான். சமூகப் பிரக்ஞை என்பது இதுதான். எந்தச் சமயத்திலும் தன்னை இழந்துவிடாமல், சமுதாய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அல்லது பார்வையாளனாகி அனுபவங்களைப் பெற்று, முன்னைய தன்னை மறு உருவாக்கம் செய்து - இப்படிப்பட்டவனே மனிதன். இந்தக் காரியத்தைச் சரிவரச் செய்பவன் அறிஞன். இந்த நடைமுறை நிகழ்வின்போது திணிப்பு, அஜீரணத்தையே உண்டாக்கும். மனிதனை அவனது குறுகிய உடலியலுக்குள்ளிருந்து விடுவித்துச் சமூக இயல்பை அவனுக்குள் வளர்க்கும் முறையிலேயே சமயங்கள், தத்துவங்கள், கல்வி, கட்சிகள் தேவையாகின்றன. கம்யூனிஸ்ட் கட்சியும் இவைகளுள் ஒன்று. வரலாற்றின் இப்போக்கில்தான் மனிதனுக்கு அரசியல் என்பதும் அவனது இயல்பாகி விடுகிறது. பதவி வெறிக்காக, போட்டியின் பேரில், ஆதிக்க ஆசைக்காக நடைபெறும் அரசியல் மனிதனை வளர்க்காது, கெடுக்கும். இந்தச் சூழலில், இதன் ஆதிக்கத்தில் மனிதன் பெறும் சமூகப் பிரக்ஞை, தன்னையிழந்து பெறும் பிரக்ஞையாகிவிடும். பிற கட்சிகளில் இருப்பதைப் போலவே, கம்யூனிஸ்ட் கட்சியிலும் இத்தகைய நடைமுறை இருப்பதைக் கொண்டு கம்யூனிசத்தையே இகழ்ந்துவிட முடியாது. தனிமனிதன், சமுதாயம் பற்றிய சரியான உறவை இழந்துவிட்டு மறுத்துவிட்டுப் பேசுவது - கம்யூனிசமும் ஆகாது. இந்த இடத்தில், இடையில் இன்னொன்றையும் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். கம்யூனிசம் என்பதற்குக் கூறப்படும் பல்வேறு வகையான, ஒன்றை ஒன்று மறுப்பதாகிய விளக்கங்களையெல்லாம் கடந்து மார்க்சியம் பற்றிய மூல நூல்களிலிருந்தே மார்க்சியத்தை வெ.சா தெரிந்து கொள்ள ஏன் முயற்சி செய்யக்கூடாது? ‘உதயம்’ கூறுவதா, ‘விடியல்’ கூறுவதா, ‘வானம்பாடி’ கூறுவதா, ‘வேள்வி’ கூறுவதா, மற்றும் பலர் கூறுவதா என்ற கேள்விகளை வைத்தே ஒன்றை மற்றது மறுப்பதனால் எதுவும் மார்க்சியம் இல்லை என்று முடிவு செய்து விடுவதை விட மூல நூல்களிலிருந்து தெரிந்து கொள்வது தேவையல்லவா! கம்யூனிசத்தை ஏற்கும்போதே அவன் கவிஞனாக இருக்க முடியாது என்பதே வெ.சா. கருதுவது போல கம்யூனிஸ்ட் கொண்டிருப்பதானால் - அதாவது கனமான விரிந்த பல உண்மைகளை இவன் செரிக்க வேண்டியிருப்பதால் - அவசரப்பட்டு இவற்றைத் திணிக்க முயற்சி செய்துவிடுகின்றனர். இதனால் கம்யூனிசமும் அதைச் செரிக்காமல் ஏற்பவரும் இயந்திரங்களைப் போல், இயங்குவதில் வியப்பில்லை. இந்த இயந்திரவாதம் கம்யூனிசமல்ல. இயந்திரத் தன்மையாக, ஒலிபரப்பியாக இருப்பது சிறந்த கவிதையும் ஆகாது. கோபங்கள் இத்தகையவே. தனிமனிதனுக்குள் மிகப்பேரளவிலான சமுதாய நோக்கையும் அற்புதமான எதிர்காலத்தைப் பற்றிய உணர்வையும், உண்மையான உழைப்பாளிகளின் பேராண்மையையும் கொண்டு வருவதாகிய கம்யூனிசம் கம்யூனிசக் கொள்கை, கவிதையுடன் கவிதையின் தோற்றத்துடன், இன்றியமையாத, செறிவான உறவுடையதேயாகும். கவிதையோடு நெருக்கமாகச் சம்பந்தமுடைய புனைவியல், கற்பனை ஆவேசம் முதலியவை இவ்வகையில்தான் நமது கவிஞர்க்குள்ளும் இடம் பெறுகிறது. கம்யூனிசத்திற்கும் இலக்கியத்துக்குமான உறவை, (வெ.சா.வைப் போலவே) நானும் விரிவாகக் கூறுவதன் நோக்கம், வானம்பாடிக் கவிஞர்களை மறைமுகமாக நான் கம்யூனிஸ்டுகள் என்று கருதிவிட்டேன் என்பதல்ல. இவர்கள் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சாராதவர்களாக இருக்கும் அதே சமயத்தில் இவர்களுக்கு வாழ்க்கை கற்றுத் தரும் படிப்பினைகளின் போது, இவர்கள் அரசியலார்வத்தை இயல்பாகப் பெறுகிறார்கள். அந்த அரசியல் படிப்பினைகள் சில சமயம் கம்யூனிஸ்டுகளின் போதனைகளோடு ஒத்திருக்கின்றன. இந்தப் படிப்பினைகள், அரசியல் ஆர்வத்தை, ஆவேசத்துடன், குழு உணர்வுடன் இவர்கள், இதற்கு மேலாகக் கவிதை உணர்வுடன் வெளிப்படுத்துகிறார்கள். காலங்காலமாக நடந்து வரும் இலக்கியத்தின் ஆக்கத்துடன் இவர்கள் நிகழ்காலத்தில், தமக்குரிய சமுதாய ஆர்வத்துடன் இயல்பாகத் தொடர்புற்றிருக்கிறார்கள். இதற்காகத்தான் இவ்வளவு நீண்ட விளக்கம். கவிதையோடு, மொழியழகுகள், இயற்கையழகுகள் அன்பு, அருள், காதல் பக்தி, மதம் முதலானவை சம்பந்தப்பட்டது போலவே, வரலாற்றுப் போக்கில் சமுதாய ஆர்வங்களும், அரசியலும், கம்யூனிசமும் சம்பந்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் பிரித்துவிட்டுக் கவிதையைத் தனிப்படுத்த முடியுமா? செயற்கையான, ஒட்டப்பட்ட அழகுகள் எவ்வகையிலும் கூடாது என்பதில் நமக்குள்ள அக்கறை, கவிதையைக் காப்பதில் மட்டுமல்ல, இறுதியாக மனிதனைக் காப்பதில் அடங்கியுள்ளது. 5. ‘வெளிச்சங்கள்’ தொகுப்பிலுள்ள முற்போக்குக் கவிஞர்களை நான் வரவேற்பது, காதல் பற்றி, தமிழ் பற்றி, கற்பனையாக சந்தங்களோடு சிந்தனையில்லாமல் பாடுவதிலிருந்து விடுபட்டு - சமுதாயம் பற்றி, அது மாற வேண்டியது பற்றி, மரபுமுறைக் கவிதையிலிருந்து விடுபட்டுப் புதிய முறையில் தருகிறார்களே என்பதற்காக அதாவது, ஒரு புதிய காலத்திற்கான மனிதனைத் தமக்குள்ளிருந்து எழுப்பிக் கொள்கிறார்கள் என்பதற்காக - இந்தப் புதிய மனிதனின் எழுச்சியின் போதே இவர்களும் சேர்ந்து எழ முடியும் என்பதற்காக - ஒரு புதிய சமுதாயம் இவர்களுக்குள்ளும் அதன் கருவடிவில் இடம் கொள்கிறதே என்பதற்காக - கவிதைக்குள்ளும் தமது படிப்பிற்குள்ளும் தமது அலுவலகத்திற்குள்ளும், தமது பழமைக்குள்ளும் முடங்கிக் கிடப்பதை விட்டு, ஒரு புதிய உலகிற்குள் நுழைய விரும்பும் ஆர்வத்தை இவர்கள் தெரிவிக்கும் முறையில் பிறர்க்கும் இத்தகைய ஆர்வங்களைத் தருகிறார்களே என்பதற்காக - பட்டம் பதவி செல்வம் அதிகாரம் ஆகியவற்றைத் தேடியோடும் மனிதர்களுக்கிடையில் இவர்கள் தம்மைக் கவிதைக்காக, சமுதாய ஆர்வங்களுக்காக இழந்து விடுகிறார்களே என்பதற்காக – இப்படிப் பாடுவதனாலே கூட தங்களுக்கு நேர்ந்துள்ள, நேரவிருக்கும் துன்பங்களை , இழப்புக்களை இவர்கள் ஏற்க விரும்புகிறார்களே என்பதற்காக - நிகழப்போகும் சமுதாய மாற்றத்திற்கு இவர்கள் எத்தனையளவு முன்னனிப் படையினராக இருக்கப் போகிறார்கள் என்பதைவிட, இவர்கள் உறுதுணையாக இருப்பார்களே என்பதற்காக - உறுதுணையாக இல்லாவிட்டாலும் தடையாக இருக்கமாட்டார்கள் என்பதற்காக - கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத்தவரைப் போல வறுமை, நோய் நொடிகள் முதலியவற்றை இவர்களும் பாடுகிறார்களே என்பதற்காக - மட்டும் அல்லாமல் இவர்கள் பாடுவதற்கு வேறு வி யங்களும் இருக்கின்றன என்பதற்காக - வெ.சாவின் விமர்சனத்தில் இடம் பெற்ற கவிஞர்களோடு வேறு பலரும் வெளிச்சங்களில் இடம் பெற்றுள்ளனர். எவ்வளவுதான் மறுத்த போதிலும் இவர்களும் ஒரு சில தனித்தன்மைகளோடு எதிர்நிற்கத்தானே செய்கிறார்கள்! இவர்களை விமர்சனம் செய்யத்தான் வேண்டும். எப்படி? இவர்களை ‘உதயம்’, ‘விடியல்’ வட்டாரங்களில் விமர்சனம் - செய்கிறார்களே அப்படியா? கூடாது. ’வானம்பாடிகள் பாட்டாளி வர்க்கத்திற்காகப் பாடவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு. உண்மைதான். பாட்டாளி வர்க்கத்திற்கு அறிவூட்டுவதற்காக கம்யூனிசம் பற்றிக் கற்றுக் கொடுப்பதற்காக அவர்கள் பாடவில்லை. தம்மைப் பாதிக்கும்படியான பிரச்சினைகள், தாம் சிந்திக்க வேண்டிய பிரச்சினைகள் எதுவும் இல்லாதது போலவும், பாட்டாளி வர்க்கப் பிரச்சினைகள் மட்டுமே தம் சிந்தனைக்கு உரியவை போலவும் இவர்கள் கருதவில்லை. இவர்கள் தங்கள் அனுபவங்களை நுணுகப் பார்த்துச் செல்லும் போது பாட்டாளி வர்க்கத்துடன் தங்கள் பிரச்சினை சம்பந்தப்பட்டிருக்குமானால், பார்க்கிறார்கள். தமது வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களிலேயே இவர்கள் அக்கறை கொண்டிருக்கிறார்கள். வறுமை, நோய் நொடிகள், இல்லாமை, மானக்கேடுகள் முதலியவை இவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான். பாட்டாளி வர்க்கத்தைச் சுரண்டுவதில் இவர்கள் தமது பங்கைச் சில சமயங்களிலாவது உணரவே செய்கிறார்கள். பாட்டாளி வர்க்கத்தவரின் தத்துவத்திலிருந்து நடைமுறையிலிருந்து இவர்கள் கற்றுக்கொள்ளவும் விரும்புகிறார்கள். சரியாகவோ அரைகுறையாகவோ கற்றுக் கொண்டதை இவர்கள் பாடுகிறார்கள். இவர்கள் பாடுவது தம்மைப் போலவே, படித்தவர்களுக்காக; கலைஞர்களுக்காக; இலக்கியவாதிகளுக்காக; பல சமயங்களில் கவிஞர்களுக்காக. கம்யூனிஸ்ட் கட்சி என்ற வட்டத்திற்குள் இவர்கள் இதுவரை செல்லாததனால் இவர்கள் ஆளும் வர்க்கத்தின் கொடுமைகள் சோசலிச நாடுகளிலும் நடைபெற்றபோதிலும் அதை பார்க்காமல் உள்ளனர். இம்முறையில், புவியரசு, சிற்பி ஆகியவர்களின் கவிதைகளுக்கு வெ. சா. விளக்கத்தை நான் ஏற்கிறேன். (வெ. சா. வின் விளக்கம் குறிப்பிட்ட சூழலுக்கு அப்பால் இழுக்கப்படுவதாக இருந்தாலும் (farfetched) இந்நிலையில் இவர்களிடம் வைக்க வேண்டிய விமர்சனம், முதலில் இவர்கள் தங்களையே கற்றுக் கொண்டார்களா என்பது, இறுதியாக பாட்டாளி வர்க்கத்தின் தத்துவத்தை, நடைமுறையைச் சரியாகக் கற்றுக் கொள்ளுங்கள். உதயம் பத்திரிகையைச் சார்ந்தவர்களோ, விடியலைச் சார்ந்தவர்களோ பாட்டாளி வர்க்கத்தைச் சரியாகக் கற்றுக் கொண்ட மாதிரி வேங்களோடு ஆவேசமாகக் கத்தும் போதுதான், இவர்கள் மேலும் சீர்குலைந்து விடுகிறார்கள். ’வானம்பாடிகள் மத்தியதர வர்க்கச் சார்புடையவர்கள்; குட்டி முதலாளிகள் - இப்படி இன்னொரு குற்றச் சாட்டு. கம்யூனிஸ்ட் கட்சியில் மத்திய தர வர்க்கத்தவரே இல்லாத மாதிரி அல்லது நடை பெற வேண்டிய சமுதாய மாற்றத்தில் மத்தியதர வர்க்கத்தினருக்கும் பங்கே இல்லாத மாதிரி இவர்களே முதலாளிகளுக்கு ஏவல் நாய்கள் மாதிரி; கம்யூனிஸ்ட் கட்சிகள், முதலாளியப் பாதையில் இணைந்துவிட்ட கதை எடுத்துக் கூற வேண்டியதில்லை. பொருளாதாரவாதத்திற்குப் பலியாகி முதலாளிகளோடும் ஆளும் வர்க்கத்தோடும் இணைந்துவிட்ட நிலையில், அவர்களின் ஆவேசக்குரல் ரசிக்கத்தக்கதுதான். இந்தக் குரலோடு வெ.சா. வின் குரலும் இணைவதும் ரசிக்கத் தக்கதுதான். சமுதாயத்தில் அடிப்படையான மாறுதல்களை இவர்கள் விரும்பக் கூடியவர்கள். இத்தகையவர்கள் இலட்சக்கணக்கில் வெளியிலே இருக்கின்றார்கள். இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்களில், தம் கொடியை ஏற்றாதவர்கள் என்பதற்காக, எதிரிகளாகவே நோக்கப்படுகிறார்கள். இவர்களுக்குள் இருக்கின்ற திறன்களும் சமுதாய உணர்வும், ஒரு மேலான சமுதாய உருவாக்கத்திற்காகப் பயன்படக் கூடியவை என்பதுடன், இவர்களின் சார்பான நியாயங்களை, இவர்களின் தேவைகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் பார்க்கத் தவறுகின்றன. இவர்கள் தம்மை இழந்துவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புவதன் மூலம், அவர்கள் இவர்களை இழந்துவிடுகிறார்கள் - அத்துடன், சமுதாய மாற்றத்தில், பொருளாதார மாற்றத்தோடு கலாச்சார மாற்றங்களும் இன்றியமையாதவை. பொருளாதார அடிப்படை மட்டுமே மாறிவிட்டால் கலாச்சாரம் தானே மாறிவிடும் என்பது பொய்யாகிவிட்டது. பொருளாதார அடிப்படையை மாற்றிவிட்ட பிறகு கலாச்சாரத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்பதும் பொய். இரண்டும் ஒரே சமயத்தில் தேவையானவை. கலை இலக்கியவாதிகள் என்பவர்கள், கலாச்சாரத் துறையில் செய்ய வேண்டிய செயல்கள் பற்பல. இவர்களிடம் இலக்கிய நயம் என்பது, சமுதாயம் மாற்றத்தை ஏற்றுக் கொள்வதற்கான மனத்தோடு, மனவியலோடு இன்றியமையாத உறவுடையது. இலக்கிய நயமோ, கலையழகோ, மனிதனுக்கு வெற்று ஆரவாரமாக, பொழுது போக்காக, உடலில் ஊறும் மிகைச் சக்திக்கு வெறும் வாய்க்காலாகத் ‘தேவடியாள் சதிர்க் கச்சேரி மாதிரி’ தோன்றிவிடவில்லை. புதிய மனிதனை உருவாக்கும் கருவி முதலிய படைப்புக்களோடு இன்றியமையாது தோன்றியவை. இத்தகைய கலைகளை, கம்யூனிஸ்டுகளும் கூட வெறும் பிரச்சாரத்திற்கான நயங்களாகவே கருதுவது, பொருளியலுக்கே முதன்மை கொடுத்து ஆன்மவியலை மதிக்காததன் விளைவே. இவ்வகையில் கம்யூனிசம் இவர்களிடம் வாதமாக, பொருளாதாரவாதமாகப் பிடித்துக் கொண்டதில் வியப்பில்லை ….. இவர்களை விமர்சனம் செய்யும் முறை யாது என்று கேட்கலாம். இவர்கள் எதைப் பாடுபொருளாக எடுத்துக் கொள்கிறார்களோ அதையே இவர்கள் சரிவர அறிந்து கொள்ளவில்லை. இவர்கள் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. இவர்கள் தம் அனுபவத்தின் வேர்களை நாடிச் செல்லவில்லை. (இது பற்றிய விரிவான விளக்கங்கள் (மன்னிக்கவும்) கலை, இலக்கியம் பற்றிய எனது நூலில் உள்ளன) இவர்கள் எந்த இலக்கியத்திற்காக - அதன் ஆக்கத்துக்காக வாழ்வதாகச் சொல்லிக் கொள்கிறார்களோ, அதைச் சரிவரச் செய்வதில்லை , இடையில் இவர்கள் தேங்கிவிட்டார்கள். எதை இழந்தால் சிறந்த இலக்கியவாதியாக நிற்கமுடியுமோ அதை இழக்க மறுக்கிறார்கள். தம்மையே, தமது ஆர்வங்களையே இவர்கள் தொடர்வதில்லை. சிந்தனையும் செயலும் இணைவதன் தேவையை இவர்கள் ஏற்கவில்லை. சிந்தனை அளவில், இவற்றின் இணைவை ஏற்றாலும் செயல்வடிவில் செல்வதில்லை. செயல் வடிவிற்குள் இவர்கள் செல்ல மறுப்பது, இவர்கள் மட்டுமே தீர்மானிப்பதுடன் முடிந்து விடுவதல்ல. அதற்குப் பல முன்தேவைகள் இருக்கின்றன. வானம்பாடிக்குழு பிரிந்தது, இந்த அடிப்படையில்தான். தமது பார்வையில், தமது தத்துவத்தில் கூட செறிவாகச் செல்லாதவர்களை செயலுக்குள்ளே துரத்துவது, அவர்கள் வளர்ச்சியை முடமாக்கும் - அதுவும், செயலுக்குச் செல்லாதவர்கள், செயலைச் சரிவரச் செய்யாமல் வெறும் சடங்காக்கிவிட்டவர்கள், இவர்களோடு கம்யூனிசத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும், இறுதியாக வெ.சா.வும் சேர்ந்து இவர்களைச் செயலுக்குத் துரத்துவது வேடிக்கையாக இருக்கிறது. கட்டுரையின் இறுதிப் பகுதியில் வெ. சா. கூறுவதைப் பார்க்கும்போது, பாட்டாளி துயரம், முதலாளித்துவச் சுரண்டல், வர்க்கப் புரட்சி இவைகளில் வெ.சா.வுக்கு அக்கறை உண்டு என்று எடுத்துக் கொள்ளலாமா? -1978 வானம்பாடிகளோடு - 1978 வானம்பாடியில் எனது பங்கு மையத்திலானது அல்ல. ஓர் ஓரத்தில் நான் இருந்தேன். சமூக பிரக்ஞையோடு அவர்கள் கவிதை படைப்பதை வரவேற்கக் கூடியவனாக இருந்தேன். அவர்களது தேவைகள் சிலவற்றை நிறைவேற்றக் கூடியவனாக இருந்தேன். பத்திரிகை வளர்ச்சிக்கு எனது பங்கு சிறிய அளவினதே. பெரும்பங்கு வாசகர்களுடையது. கடிதங்கள் சில சமயங்களில் எனக்குக் காட்டப்படும். என்னிடம் ஆலோசனை கேட்கப்பட்டதாக நினைவு இல்லை. சிவராம், ஞானக்கூத்தன் முதலியவர்கள் பற்றி எனக்குக் காய்ச்சல் அறவே கிடையாது. எல்லோரும் ஓர் இடையறாத பயணத்தில் இருக்கிறார்கள். பயணத்தின் ஒரு கட்டத்தை வைத்து அவர்களை முற்றாகக் குறை கூறுவது சாத்தியமில்லை. இலக்கியத்தில் நிதானம் தவறில்லை. இவர்கள் கவிதைகளை விமர்சனம் செய்தபோது எனது கருத்துக்களைக் கூடிய அளவு எடுத்துரைத்தேன். கட்சிக்காரர்களைப் போல் இறுக்கமில்லாததாக எனது கருத்துக்கள் இவர்களுக்கு வியப்பளித்திருக்கலாம். தத்துவத்தையும் நான் வலியுறுத்தியது விளங்காதிருக்கலாம். இவர்கள் தமக்கு இடையில் நெருக்கமான பிணைப்புடைய குழு; இவர்களின் விருந்தில், வேடிக்கைகளில் எனக்குப் பங்கு இல்லை. இவர்களைப் போல ஆரவாரமாகக் கவியரங்கேறிக் கவிதை படிக்க என்னால் முடியாது. ரசிகர்களின் கைதட்டல்கள் இவர்களை உச்சத்திற்கு ஏற்றியிருக்கும். அந்த உச்சியிலிருந்து இறங்கி என்னோடு சமத்துவம் கொண்டாடுவதற்கு முடியாதிருந்திருக்கும். சிற்பியுடன் எனது பழக்கம் மிகக்குறைவு. இவரோடு நான் எதனையும் விவாதித்ததில்லை . ‘சிரித்த முத்துகள்’ கவிதை பற்றி இவருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியதோடு சரி. புவியுடன் இரண்டொரு கடிதங்கள். ரவி இவர்களோடு முற்றாக ஒத்துழைத்தார். இவர்களின் கூட்டத்தின் சார்பில் எங்களுடன் சண்டையிட்டவர் மேத்தா. கங்கை இப்படிச் செய்யவில்லை. மனிதாபிமானம் அவரிடம் உயிருடன் இருந்தது. ‘வைகறை’ யில் இவர்களைக் கூட்டி வைத்தேன். மேலும் வளரட்டும் என்று. இவர்கள் வளர விரும்பவில்லை . அதற்குள் இவர்கள் ‘தொழில்’ இவர்களை முடக்கியது. புவி தவிர மற்றவர்கள் மார்க்சிய நூல்களை, சிலவற்றையாவது படிக்கவில்லை. சிற்பியும்தான். இலக்கிய விமர்சனம், தத்துவத்தில் இவர்கள் ஈடுபாடு - கொள்ளவில்லை. இவர்களில் சிலரை, வாழ்க்கை நாயாகத் துரத்தியது. ஆயினும் இவர்கள் தேடலில் ஈடுபடவில்லை . பிஞ்சில் பழுப்பது இவர்கள் நிலை. ‘புதிய தலைமுறை’யிலிருந்து நான் வெளியேறிய நிலையில் ஒருசில ஆண்டுகள் பழைய நினைவுகளோடு இருந்தேன். முன்னைய அனுபவங்களைச் செரித்துக் கொள்வதற்கு இந்தச் சில ஆண்டுகள் பயன்பட்டன. ஒரு புதிய இலக்கியக் குழுவில் உடனடியாகச் சேர்ந்து கொள்வதில் வரும் தயக்கத்தோடு இருந்தேன். அப்போது ’தேனீ’ இலக்கியக் குழுவில் நடந்த விவாதங்களில் தயக்கத்தோடு பங்கு கொண்டேன். ஜெயகாந்தன் ஆடும் நாற்காலிகள்’, ‘ரிஷிமூலம்’, தி. ஜானகிராமன் ‘அம்மா வந்தாள்’ பற்றிய விவாதங்களில் நான் மற்றவர்களிடமிருந்து முழுமையாக வேறுபட்ட நினைவுகள் இன்றுவரை பசுமையாக இருக்கின்றன. உருவம், உள்ளடக்கம் பற்றிய பிரச்சனைகளும் இப்படி. நா.பா.வின் குறிஞ்சி மலர், பொன்விலங்கு பற்றிய விவாதங்கள் சிலபற்றியும் என் நிலைப்பாடு மிக வித்தியாசமானதாகவே இருந்தது. இலக்கியப் பிரச்சினைகளில் அரசியல் அளவுகோலை நான் பயன்படுத்தினேன் என்பதை நான் மறுக்கவில்லை. எனது நண்பர்கள் சிலர் அதையே முற்றான அளவு கோலாக வைத்திருந்ததை நான் ஏற்கமுடியவில்லை. குறிப்பிட்ட ஒரு படைப்பில் அதன் ஆசிரியன் தான் சொன்ன பிரச்னையைத் தெளிவாகப் பார்ப்பதில்கூட இந்த அரசியல் அளவுகோல் தடையாக இருப்பதை நான் அறவே விரும்பவில்லை. அதாவது அரசியல் இத்தகையவர் பார்வையை முற்றாக அடைத்திருப்பதன் விளைவு, வேறு பிரச்சினைகள் அந்தப் படைப்பில் இருக்கக்கூடும் என்பதையே இவர்கள் அங்கீகரிப்பதை மறுத்து விடுகிறது. புதிய தலைமுறைக் காலத்திலே கூட நான் இம்முறையில் வேறுபட்டதை நண்பர்கள் அறிந்திருக்கக் கூடும். ‘தேனீ’ இலக்கியக் குழு விவாதங்களின் போது புவியரசு இளமுருகு முதலியவர்களுடன் நான் கடுமையான கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாக நினைவு. ஒருமுறை சூலூரில் நடந்த பட்டிமன்றத்தைத் தொடர்ந்து இந்த விவாதம் எங்களுக்கு இடையில் கடுமையாக இருந்தது. அச்சமயத்தில் அவர்கள் மார்க்சியச் சார்பாளர்களாக இல்லை. இத்தகைய விவாதங்கள் கரடுமுரடானதாக இருந்த போதிலும் அவர்களை மார்க்சியம் நோக்கித் தள்ளியிருக்கக் கூடும். காலேஜ்புதூரில் சிறப்பான முறையில் மாதந்தோறும் தவறாது முறைப்படி நடந்து வந்த தோழமைக் கழகக் கூட்டங்கள் மார்க்சியத்தைச் செழுமையாகக் கற்றுக் கொள்ள எல்லோர்க்குமே உதவியாக இருந்து வந்தன. திராவிடர் கழகச் சார்பானவர்கள் சிலர் மார்க்சியவாதியாக மலர்ந்ததை இங்குக் குறிப்பிடுவது பொருந்தும். குறிஞ்சி, இளங்கோ முதலியவர்கள் இந்தக் கழகத்தைக் கட்டிக் காத்தனர். இந்தக் கூட்டங்களில் சுந்தரத்திற்கும் எனக்கும் ஏற்பட்ட கடுமையான விவாதங்கள் பல. இந்த விவாதங்கள் அப்பொழுதும், பின்னரும் சில நண்பர்கள் கருதியது போல, தனிநபர் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளாக இல்லை. இப்படிச் சில அம்சங்கள் இதில் கலந்திருக்கக் கூடும் என்றாலும், மார்க்சியம் பற்றிய புரிதலிலிருந்தே இந்த விவாதங்கள் எழுந்தன. கலை இலக்கியப் பிரச்சினைகளில் சுந்தரம் கலை வாதியாகவே முன் நின்றார். இலக்கியங்களில் உள்ளடக்கம் என்பது சமுதாயப் பிரச்சினைகள், தத்துவப் பிரச்சினைகளாக இருக்கலாம். இதைக் கட்டுரையாகக் கூட வெளிப்படுத்தலாம். இலக்கியமாக இவை வெளிப்படும் போது பாத்திரங்கள், நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிக் கோவை ஆகியவற்றின் வழியே இவை வெளிப்பட வேண்டும். இலக்கியத்தின் உருவம் இது. இலக்கியம் பற்றிய பிரச்சினையில் இதுதான் முதன்மையானது என்பது அவர் கருத்து. கலை இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் பார்வையோடு மிக நெருக்கமாகச் சம்பந்தப்பட்டது. பார்வை என்பது சமூக, பொருளாதாரப் புரிதலுடன் சம்பந்தம் உடையது. ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டதொரு படைப்பில் எடுத்துக் கொள்ளும் சமுதாயப் பிரச்சினைகள், பாத்திரங்கள், நிகழ்ச்சிகள் இவற்றைக் கோர்வைப்படுத்தும் முறை ஆகிய அனைத்துமே எழுத்தாளரின் பார்வையோடு இன்றியமையாத உறவு உடையவை. இந்த முறையில் உருவம் உள்ளடக்கம் பற்றிய பிரச்சினைகளைத் தனித்தனியாகப் பார்ப்பதில் தெளிவு ஏற்படாது என்பது என் கருத்தாக இருந்தது. மார்க்சியம் என்று சொல்வது தெளிவில்லாதது Vague-ஆக இருக்கிறது என்பது சுந்தரம் பலமுறையும் கூறிய கருத்து. இப்படிக் கூறியதை நான் ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை. சுந்தரத்தைப் பொறுத்தவரை பரதரின் ‘ரசக்’ கோட்பாடு பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார். ‘ரசக்’ கோட்பாடு பற்றிய அவரது படிப்பு, தொல்காப்பிய ஆய்வைக் கூராக்கி அவரைச் செலுத்தியது. நாளடைவில் சங்க இலக்கிய ஆய்வில் மிகுதியான ஈடுபாடு கொண்டார் சுந்தரம். அவரது ஆய்வு முறைகளும் முடிவுகளும் எனக்குப் பல சமயங்களில் அதிருப்தி தந்த போதிலும் அவரது ஈடுபாடும் பற்றும் எனக்கு அவரிடம் தொடர்ந்து மரியாதையை ஏற்படுத்தின. வானம்பாடி இயக்கத்துடன் எங்கள் ஆர்வமும் முயற்சிகளும் முற்றுப் பெற்று விடவில்லை. எங்கள் முயற்சிகளுக்கிடையில் ஒரு தங்கும் இடம் வானம்பாடி இயக்கம். வானம்பாடி இயக்கத்துக்கு வெளியிலும் முன்னும் பின்னும் எங்கள் முயற்சிகள் இருந்தன, தொடர்கின்றன. தத்துவமும் அரசியல் சார்பும் எங்கள் நிரந்தர ஆர்வங்கள். அரசியல் என்பது எங்களைப் பொறுத்தவரை குறுகிய அரசியல் கட்சி சார்ந்த முயற்சிகள் அல்ல. கட்சிகளுக்கு கலை இலக்கியப் பார்வை கிடையாது என்பதில் எங்களுக்கு ஒருமித்த கருத்து இருந்தது. கட்சிக்கு வெளியில்தான் இதை உருவாக்கியாக வேண்டும். இந்தப் பார்வை மார்க்சியம் சார்ந்ததுதான். கட்சிக்காரர்கள் தங்கள் குறுகிய தேவை அளவுக்கே கலை இலக்கியப் படைப்புக்களைக் குறுக்கி விடுகிறார்கள். வாழ்வின் முழுமை கலை இலக்கியத்திற்குள் வருவதில்லை. வாழ்க்கை என்பது உணவு, உடை, இருப்பிடம் ஆகிய தேவைகளின் நிறைவுதான் என்பது உண்மை இல்லை. வாழ்க்கை இதைவிட மேம்பட்டது. இவற்றைப் பெறுதலில் சில சமயம் வாழ்க்கை அழிதல் உண்டு. இவற்றை இழத்தலின் போது வாழ்வு சிறப்பதும் உண்டு. வாழ்வின் உன்னதம் தான் வாழ்வை நிறைவடையச் செய்கிறது. சாவு வாழ்வாவது இம்முறையில்தான். கலைப்படைப்புகள் இதனைப் பேசவேண்டும். இப்பார்வைதான் குறுகிய அரசியல் நோக்கத்திலிருந்து கட்சிகளை விடுவிக்கும். புரட்சிகரமான பார்வை என்பது இப்படித்தான் இருக்க முடியும். இக் கொள்கையிலிருந்து சுந்தரம் பல சமயங்களில் வேறுபட்டாலும் நானும் ஜீவஒளியும் நிச்சயமாக இப்பார்வையில் உடன்பாடு கொண்டிருந்தோம். அக்கினி எங்கள் கொள்கையோடு பெரும்பகுதி ஒத்திருந்தார். வானம்பாடி இயக்கத்தில் எங்கள் பங்கு என்பது, வானம்பாடிக் கவிஞர்களுக்குள் இப்பார்வையைத் தூண்டுவது தான். வெறும் வறுமை பற்றிய அவலக்குரல் எழுப்பிய பொழுது எங்கள் விமர்சனங்கள் கடுமையாக இருந்தன. CPI சார்பிலான அரசியல் முழக்கங்கள் கவிதைக்குள் வந்தபோது நாங்கள் அதை விமர்சனம் செய்தோம். வானம்பாடிக் கவிஞர்களை இந்நோக்கில் நாங்கள் வளர்க்க விரும்பினோம். நிச்சயம் அவர்களை இம்முறையில் ‘வார்க்க’ விரும்பவில்லை. இப்படிக் கவிஞர்களை வார்க்க முடியாது என்பது நாங்கள் அரிச்சுவடியிலிருந்தே கற்றிருந்தோம். தமிழ்க் கவிதையில் இதுதான் புதுக்குரலாக ஒலிக்க முடியும். தாமரையில் ஒலித்த பழைய குரலிலேயே வானம்பாடியின் குரலும் ஒலிக்க வேண்டியதில்லை. இத்தகைய ஒரு கவிதை - நாளடைவில் இலக்கிய இயக்கத்தைக் கட்டி வளர்ப்பது, இறுதியில் மக்கள் விடுதலையில் ஈடுபடும் மார்க்சிய அரசியல் நடைமுறைக்கு உறுதுணையாக இருக்க முடியும். கட்சி அரசியலுக்குள் இறங்காமல், கலை இலக்கியத் துறையின் மூலமாக உண்மையான மார்க்சியலாளர்க்கு உதவி புரிவது, இம்முறையில் சாத்தியம். இதில் ஒன்றும் தவறு இல்லை. கட்சி வட்டாரங்கள் சரியாக இருந்திருந்தால், இத்தகைய போக்கு கட்சிகட்கு வெளியில் வரவேண்டியதில்லை. கட்சி, தங்கள் வார்ப்பில் பிறரை உருவாக்க நினைத்தபோதே எதிர்ப்புக்கள் கிளம்புகின்றன. சரியான அரசியல் இயக்கம் நடைபெறும் நாளில், இந்தச் சக்திகள் இயக்கத்தோடு இயங்கும், வெளியிலிருக்கும் கலை இலக்கிய இயக்கம், ஆற்றலோடு இயங்குமானால், கட்சிக்காரர்களுக்கும் வளமான பார்வையைத் தரமுடியும். இத்தகைய நோக்கங்கள் எனக்கு இருந்தன. எனது புதிய தலைமுறைக்கால அனுபவங்கள் என் மனதில் பரப்பியிருந்த வெளிச்சம் இத்தகையது. தோழமை என்பது நிச்சயம் அடிமைத்தனம் ஆக முடியாது. அவரவர்க்கு தமக்குள்ளேயே எரியும் நெருப்பில்லாமல் மற்றவர் தூண்டிவிட முடியாது. புறத்தூண்டுதல், உதவி முதலியன எப்போதும் இரண்டாவது இடத்தையே வகிக்க முடியும். அகத்தூண்டலே இதில் முக்கியம். அகத்தூண்டலும் தேவையும் இல்லாமல், கவிதை செய்யக் கிளம்புவது, வணிகம், விளம்பரம் போலித்தனம். இத்தகையவர்களுக்கு கவிதை பெருமை தரவேண்டும். இவர்கள் தன்நிலைச் சார்பு, கவிதையையும் இயக்கத்தையும் கெடுக்கும். தமிழகச் சூழலில், கவிஞர்கள் எத்தனையளவு அரசியலை, தத்துவத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தான் நான் பார்க்க விரும்புகிறேன். காரணம் நம்மைச் சுற்றியுள்ள மக்களின் பிரச்சினைகள், அவற்றுக்குக் காரணமானவர்கள், இவர்களுக்கு எதிரான சக்திகள், இந்தச் சக்திகள் நடத்தும் போராட்டங்கள் இவை பற்றி நம் கவிஞர்கள் எந்த அளவு தெரிந்திருக்கிறார்கள் என்று கவனிக்க வேண்டியிருக்கிறது. கவிதைச் சார்பான அலங்காரம், ஆடம்பரம், சிறியதைப் பெரிதாக்குதல், உணர்ச்சிவசப்பட்டுக் கூறுதல் ஆகியவற்றைப் பொதுக்குணங்களாக உடையவர்கள் நம் கவிஞர்கள். இவர்கள் தாமாக, தமது அனுபவத்தில் தொடங்கி, தமது அனுபவத்திற்குக் காரணமான சமூகச் சூழலைப் பற்றி அக்கறையோடு அறிந்து, சமூகச்சூழலை அதன் பொருளாதார விவரங்களில் அறிந்து தெளிவது இவர்களுக்குச் சாத்தியமில்லாது இருக்கிறது. இடையில் தமிழ்ப் பண்பாடு முதலிய திரைகளும் விழுந்து கிடக்கின்றன. இவற்றை விலக்கிப் பார்த்தால் கவிஞர் தன்னைத்தானே உரித்துக் கொள்வதாகிறது. இது வேதனை தரும் செயல். இச்செயலை இவர்கள் இன்பமாக ஏற்கமாட்டார்கள். இதனால் தான், ஏற்கனவே தங்கள் அனுபவங்களை விளக்குவதற்கான காரணிகள் என்று அரசியல்வாதிகள் கூறும் விவரங்களை விமர்சனமில்லாமல் அப்படியே ஏற்கிறார்கள். அரசியல்வாதிகள் தரும் விளக்கங்களை இவர்கள் கேள்விக்கு உட்படுத்துவதில்லை. இந்நிலையில் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் இங்கு கொடிகட்டிப் பறக்கிறது. அப்புறம் கவிதை அரசியலுக்கு அடிபணிகிறது. அல்லது அரசியலை விட்டுத்தனியே விலகி விடுகிறது. இது கவிதைக்கான களத்தைச் சுருக்குவதுடன் உண்மையான கவிதைப் பிறப்புக்கும் தடையாகிறது. வானம்பாடிக் கவிஞர்கள் தாம் கேள்விப்படும் அரசியலை அப்படியே அங்கீகரித்துக் கொண்டார்கள். அதைக் கேள்விக்கு உட்படுத்திச் சரிவரத் தெரிந்து கொள்ளவில்லை. தம் கவிதைக்கான கருப்பொருளை அரசியல் தளத்திலிருந்து எடுத்துக் கொண்டார்கள். கவிதை செய்வது தம் கடமை எனக் கருதினார்கள். கொடுக்கப்பட்ட கருப்பொருளுக்குக் கவிதை இயற்றுவது என்பதற்கு மேல் இது செல்லவில்லை. இவர்கள் கவிஞர்கள் என்ற அளவுக்கே நின்றார்கள். இவர்கள் சிந்தனாவாதிகளாக, விமர்சகர்களாக, விரிவடையவேயில்லை. கட்சிக்காரர்கள் இவர்களை ஏவல் கொள்வதற்கான காரணிகள் இவர்களிடம் தொடக்கம் முதலே இருக்கின்றன. ஒன்று, இவர்கள் கட்சிக்காரர்களிடம் முடங்குவார்கள். அல்லது கட்சிக் கூட்டத்தை இவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். தான் சுயமாகக் கற்றலிலிருந்து, கேள்விக்குட்படுத்தி, சிரமப்பட்டுச் சேகரித்துக் கொண்ட அறிவுதான் இறுதியில் தம் ஆளுமையாக, பார்வையாக விரியப் போகிறது. இம்முறையில் செயல்படாதவர்கள் ஒட்டுண்ணிகள், இருப்பதைத் தின்று தீர்ப்பவர்கள். இவர்களால் இயக்கமோ, கட்சியோ வளரப்போவதில்லை. இவர்கள் தம்மையும் வளர்த்துக்கொள்வதில்லை. தாம் சார்ந்திருப்பவர் வளர்ச்சிக்கும் உதவப் போவதில்லை . வானம்பாடிக் கவிஞர்களில் பலர் இத்தகையவர்கள்தான். இவர்கள் கலை - இலக்கியங்களோடு உறவு கொள்வது இப்படித்தான். இத்தகையவர்கள் மகாகவிகளாகச் சிறக்க முடியாது. வானம்பாடிக் கூட்டம் என்ன செய்து கொண்டிருந்தது? கவியரங்கம் நிகழ்த்த ஒரு சிறு குழுவைச் சேர்த்துக் கொண்டு கச்சேரி செய்து கொண்டிருந்தது. கவிதையில் கச்சேரியும் உரைநடையில் பட்டிமன்றமும் நடத்திக் கொண்டிருந்தது. பட்டிமன்றத் தலைப்புகள் பெரும் பகுதி கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பாரதி பாடல்கள் சில சமயம் மார்க்சியமா? காந்தியமா? தமிழ்க் கவிதை வளர்ந்திருக்கிறதா? இல்லையா? நிகழ்த்திய இடங்கள், கோயில்கள், கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகள். இவர்கள் ஆண்டுக்கு சில விழாக்களை நடத்தியாக வேண்டும். இதற்காக யாராவது ஒரு குழு கச்சேரி செய்ய வேண்டும். வானம்பாடிக்குழு இதை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. தொடக்கத்தில் கவிதைப் படையல். தாம் எழுதிய கவிதைகளைப் படித்தல். பின்னர், கவியரங்கம். கொடுக்கப்பட்ட தலைப்புகளில் கவிதை எழுதிப் படித்தல். அதாவது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கவிதை தயாரித்தல். புதுக்கவிதை எந்த வாகனத்தில் கூட பவனி வரலாம் என்பது போல. சிலசமயங்களில் கவிராத்திரிகள், துணுக்கு, துக்கடா, வேடிக்கை விளையாட்டுக்கள், காதல் கவிதை, காமக் கவிதைகள், கூடவே ‘புரட்சிப் பாடல்களும்’ கூட்டத்தினரைக் கிளுகிளுக்க வைத்தல் இதன் நோக்கம். கச்சேரிக்குத் தகுந்த சன்மானங்கள் இடத்துக்கு இடம் வேறுபட்ட முறைகளில். கவிதை இயக்கம் உருப்படுமா? கவிதைதான் உருப்படுமா? விளைவு கவிதை வியாபாரம் வியாபாரத்திற்கான எல்லா உத்திகளுடனும். வெளிச்சங்கள் தொகுப்பு பற்றி : வெளிச்சங்கள் தொகுப்பை, அது வெளியாகி ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்க்கும் போது சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது. 1. சிற்பி, புவி ஆகியவர்களின் கவிதைக்குள்ளும் இழையாக ஓடியிருப்பது புரட்சி பற்றிய உணர்வுகள். வசந்தத்தின் இடி முழக்கமாய் வடதிசையில் தோன்றி இந்தியா முழுவதும் உலுக்கிய புரட்சிகரச் செயல்முறைகள் இவர்களையும் பாதித்திருக்கின்றன. 70-ன் தொடக்கத்தில் கவிதைத் துறைக்குள் வந்த நூற்றுக்கு மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகளுக்கு அடிநாதமாக அமைந்தது இந்த வசந்தத்தின் இடி முழக்கமே. இவர்கள் நிச்சயம் கட்சி சார்புடையவர்கள் அல்லர். இந்தியாவில் நெடுங்காலமாகச் சூழ்ந்துள்ள இருளைக் கிழித்தெறிவதில் இந்த இடி முழக்கத்தின் மேல் நம்பிக்கையும் ஆசையும் கொண்டார்கள் இவர்கள். இதற்கு மேல் அவர்களுக்கு அப்போது எதுவும் தெரியாது. இவர்களின் பெரும்பாலோர் நாளடைவில் எதுவும் தெரிந்து கொள்ளாமலேயே இருந்துவிட்டனர். அல்லது தெரிந்த அளவிலேயே அந்தச்சூடு தங்களையும் தாக்கும் என்பதை உணர்ந்து அதைக் கைவிட்டார்கள். சிலர் எதிர் நிலைக்குச் சென்றார்கள். புவியும் சிற்பியும் இப்படி எதிர்நிலைக்குச் சென்றவர்கள் ‘வெளிச்சத்தில்’ உள்ள வேறுபலர் கவிதைகளில் மார்க்சியத்திற்குச் சாதகமான, அல்லது எதிர் நிலையிலான கவிதைகள் இருக்கின்றன. வேலுச்சாமியின் கவிதை எதிர்நிலையிலானது. வசந்தத்தின் இடி முழக்கம் என்ற மாபெரும் கவிதையின் கவிதைச் சிதறல்கள் இவர்கள் கவிதைகள். ‘நான் வேறோரிடத்தில் கூறியுள்ளவாறு இடி முழக்கத்தின் முதற்பாதிப்புக்கள் இவர்கள் கவிதைகள். இந்தப் பாதிப்பின் தொடர்ந்த பதிவுகள் பற்றி இவர்கள் அக்கறை கொள்ளவில்லை. தங்கள் உணர்வுகளைக் குலுக்கிய சக்திகளின் வரலாறு, நிலைமை, தங்கள் வாழ்வுக்கும் இச்சக்திகளுக்கும் இடையிலான உறவுகள் பற்றி இவர்கள் கவலை கொள்ளவில்லை. நிகழ்வுகள் புறத்தில் இருக்கின்றன. இவர்களது அகம் ’தனித்து’ இயங்குகிறது. புற நிகழ்ச்சிகளை ஒதுக்கிவிட்டு இவர்கள் வாழ்ந்துவிட முடியும். 2. தமிழகத்தில் புதிதாகக் கவிதைக்குள் வந்திருக்கின்ற பலரது நல்ல கவிதைகளைத் தொகுக்கும் முயற்சியாக வந்தது ‘வெளிச்சங்கள்’. சிற்பியின் பொறுப்பில் அத்தொகுப்பு வந்திருந்தால் அவரையும் அவரோடு நெருக்கமாக இருந்த இன்னும் நால்வர் கவிதைகள் மட்டும் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும். சிற்பியின் பொறுப்பில் இத்தொகுதி வராதது தமிழ்க் கவிதைக்கு நல்லதாகத் தோன்றுகிறது. அரசப்பன், சித்தன், சுந்தரம், ஆதி, ஜீவ ஒளி, அறிவன் இளமுருகு முதலியவர்கள் கவிதைகள் நிச்சயம் சில தனித்தன்மைகளை உடையவை. இவர்களில் சிலர், அரசப்பன், சித்தன், அறிவன் போன்றவர் தொடர்ந்து கவிதைத் துறையில் ஈடுபடாதது தமிழ்க் கவிதைக்கு இழப்பு என்பதில் ஐயமில்லை . ஜீவஒளி, சுந்தரம், ஆதி ஆகியவர்களைப் பொறுத்தவரை தங்கள் ஆளுமையை கவிதையல்லாத வேறு துறைகளில் சிறப்பாக வளர்த்துக் கொண்டவர்கள். இவர்களில் ஜீவ ஒளியின் தனி வளர்ச்சி தன்னிகரற்றது. தாமரையில் வெளிவந்த இவரது சிறுகதையும் விமர்சனமும் இவரது தனி ஆளுமையை விளக்கவல்லவை. தொடர்ந்து தத்துவம், அறிவியல், கணிதம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவங்கள் பற்றி அவரது ஆய்வுகள் மிக விரிவானவை. சிற்பி, புவி, மேத்தா, அக்னி ஆகியவர்களின் சிறந்த கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இத்தொகுப்பு, வெளிவந்ததற்குப் பின் அவர்கள் எழுதிய கவிதைகள் பல இத்தொகுப்பில் சேர்ந்துள்ள கவிதையின் தரத்தில் இல்லை. அக்னியின் சில கவிதைகள் புவியின் ‘மீறல்’ ஆகியவை வித்யாசமானவை. கவியரங்கம், பத்திரிகை ஆகியவற்றின் தேவை கருதி எழுதிய கவிதைகளில் சிற்பி முதலியவர்கள் எழுதியதில் வியப்பு இல்லை. 3. முன்னுரையில் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான கருத்துக்களில் எனக்கு இன்றும் உடன்பாடுதான். வெளிச்சங்களில் இடம்பெற்ற கவிஞர்களுக்கு இடையில் பொதுவான ஆளுமை உண்டா என்று நண்பர்கள் சிலர் இடைக்காலத்தில் கேள்வி எழுப்பினர். நமது சமுதாய நிலைமைகளில் பெரும்பாலான மக்களின் வறுமை முதலிய கொடுமைகள், இந்தக் கொடுமைகளுக்குக் காரணமான சமூக நிலைமைகள், வர்க்க வேறுபாடு, இவை ஒழிய வேண்டியதன் தேவை - ஆகியவை பற்றிய ஆத்திரம், அவலம், கோபம் ஆகிய உணர்வுகளோடு கூடிய ஒரு பொதுவான மனநிலை இவர்களுக்கு உண்டு. இவ்வகையிலான சமூக உணர்வு என்ற முறையில் இவர்கள் இணைந்தவர்கள். இவர்கள் கொள்ளும் ஆத்திரம் முதலிய உணர்வு நிலைகளில் உள்ள வேறுபாடுகள் இவர்களின் பொது உணர்வைக் கண்டறிவதில் நம்மைத் தடுக்கவில்லை. முன்னுரையின் இறுதிப் பகுதியில் நான் குறிப்பிட்ட சில கருத்துக்கள் பற்றி இங்குச் சில விளக்கங்கள் தேவை. சுயவிமர்சன உணர்வும் கருத்து வேறுபாடுகளை மதிக்கும் எண்ணமும் இல்லாமல் தனிமனிதர்க்கோ, ஓர் இயக்கத்திற்கோ வளர்ச்சியில்லை. கருத்து வேறுபாடுகள் என்பன வித்தியாசமான சூழலிலிருந்து வந்தவர்களுக்கிடையில், வெவ்வேறான அனுபவங்களும் கோணங்களும் உடையவர்களுக்கிடையில் இயல்பானவை. இவற்றை அறிந்து கொள்வது ‘கல்வி’. பொறுமையோடு விசாலமான பார்வையோடு இதைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உணர்வு, சிலரிடம் அறவே இல்லை. பலரிடம் சிறிதே இருந்தது. இதை மனத்தில் கொண்டுதான் சுய விமர்சன உணர்வுடைய இவர்கள் தம் கருத்து வேறுபாட்டையே சாதனமாக்கி வளர்வார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன் - இல்லை என்பது தெரிந்தும், ‘வேண்டும்’ என்பதற்காக, வளரவேண்டும் என்பதற்காக. முன்னுரையின் இறுதியில் குறிப்பிட்ட கருத்து, என் முன் பல சமயங்களில் கேள்விக்குறியாக நின்றது. இவர்களிலிருந்து மகாகவிகள் உருவாவர். இவர்களால் தமிழ்க் கவிதை உலகக் கவிதையின் உயரத்திற்கு நிமிர்ந்து நிற்கும் இது நடைபெறவில்லை. இன்றுவரை என்பதோடு, இனி இதற்கான வாய்ப்பு இல்லை என்பதும் இன்று தெரிகிறது. இதனை எழுதும் போது, முக்கியமாக சிற்பி, புவி இருவரையும் மனதில் வைத்தே எழுதினேன். அவர்களின் கவிதையாற்றல் கருதி, சமூக அக்கறைகள் கருதி, கவிதை அவர்களை இழுத்துச் செல்லும் எல்லைகளுக்கெல்லாம் அவர்கள் செல்லவில்லை. தங்கள் கவிதையில் இடம்பெற்ற சமூக நிகழ்வுகளின் ஆழத்தோடும், விரிவோடும் அவர்கள் பயணமும் செய்யவில்லை. கவிதையோடு கைகோத்துச் சென்றால் வரலாறு, தத்துவம், கலையியல் முதலிய துறைகளுக்கு உள்ளும் சென்றிருக்கக்கூடும். செல்லவில்லை. தத்துவம் கவிதையைக் கெடுக்கும் என்ற நம்பிக்கையோடு சிற்பி நின்றார். நாடகம் முதலிய பல முயற்சிகளுடன் புவிநின்றார். இடையில் நெருக்கடி நிலை இவர்களைச் சீரழித்தது. நண்பர்களுடன் இவர்கள் விவாதிக்கவில்லை. பழி தூற்றலில் இவர்கள் பங்கு கொண்டனர். தமது ஆளுமையைத் தாமே சிதைத்துக் கொண்டனர். ‘வானம்பாடி’ இயக்கமாக வளர்ந்திருக்குமானால் மேத்தா, கங்கை முதலியவர்கள் அற்புதமாக வளர்ந்திருப்பார்கள். இயக்கமாதலுக்குத் தடையாக இருந்தவர்கள்தான், இவர்கள் வளர்ச்சியைத் தடுத்தவர்கள். இன்றைக்கே எங்கள் கவிதை உலக உயரத்தில் என்று கூறுவார்களானால் இவர்கள் தெரிந்தே பொய் சொல்வதாகப் பொருள். 4. வெளிச்சங்கள் தொகுப்பு பற்றிய விமர்சனத்தில் வெ.சா. குறிப்பிட்ட சில கருத்துக்களை மறுத்து நான் ‘தெறிகளுக்கு’ எழுதியிருந்தேன். திரும்ப இவர்களை ஒன்று சேர்க்க முடியாது. சேர்ப்பதும் என் கருத்தல்ல. ‘வைகறை’ தொடங்கிய போது, ‘நாங்களும் மார்க்சியத்தை ஏற்கிறோம்’ என்று இவர்கள் கவிதை தந்தார்கள். இவர்கள் மீது இப்படி மார்க்சியத்தை ஏன் பூசுகிறாய் என்று நண்பர்கள் என்னை விமர்சனம் செய்தார்கள். இவர்களை ஒரு தத்துவம் நோக்கிச் செலுத்த, அவர்களை வளர்க்க இது தேவை என்ற கருத்தில் இதைச் செய்தேன். இப்படிச் செய்ததில் எனக்கு மட்டுமே பங்கு உண்டு என்று நான் உரிமை கொண்டாடவில்லை. இது ஒரு சந்தர்ப்பமாக இருந்தது. இதைச் சிலர் பயன்படுத்திக் கொண்டார்கள். தங்களை மார்க்சியவாதிகள் என்று கருதுபவர்கள் இதில் சேரலாம், என்பதுதான் நிபந்தனை. இவர்கள் மார்க்சியவாதிதான் என்று யாரும் சான்றிதழ் தரவேண்டியதில்லை. இம்முறையில் இது ஒரு அழைப்பு. தம்மை மார்க்சிய அறிவில் வளர்த்துக் கொள்வது அவர்களுக்கே கடமை. நல்லதும் கூட. அவர்கள் செய்யாததற்கான தவறு என்னுடையதாகாது. வானம்பாடிகளின் தொகுப்பு அல்ல, வெளிச்சங்கள். தங்களை வானம்பாடிகள் என்று கருதிக் கொள்ளாதவர் கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. இன்குலாப் தம்மை வானம்பாடியாகக் கருதிக் கொள்ளவில்லை. ஏஜி, ஜாப்ஸன், கோ. ராஜாராம் முதலியவர்களும் இப்படியே. வானம்பாடிக் குழு இரண்டாக உடைந்ததும் சிற்பி, ‘எங்களைத் தாங்க எந்தக் கூட்டுக்குமே வலிமையில்லை’ என்று அறிவித்தது காரணத்தோடுதான். ‘வைகறை’ தொடங்கிய உடனே அதிலிருந்து விலகுவதாக அறிவித்ததும் இதனால்தான். பின்னர் விலகியதும் இக்காரணத்தால் தான். ஒரு நாட்டின் சமூக கலை இலக்கிய இயல் வரலாற்றில் இத்தகைய சிதறல் இயக்கங்கள் வருவது இயற்கை. சமூக வரலாற்றோடு மிக நெருக்கமாக இணைந்த இயக்கங்கள் சரிவர உருவாகாத காலத்திலும், அத்தகைய இயக்கங்கள் தமக்குள்ளே சிதறிய வடிவத்திலும் இத்தகைய துணை இயக்கங்கள் எழுவது தவிர்க்க இயலாது. இவற்றுக்குச் சுயமான இயக்கம் இல்லை. சமூக அடித்தளத்திலிருந்து, வரலாற்றின் கனல் மிக்க சக்திகளிலிருந்து இவை ஆற்றல் பெறுவதில்லை. சமூக இயக்கத்தில் இவற்றுக்கு உள்ள பங்கை நாம் மறுக்கவில்லை. தாமே சமூக இயக்கமாக இவை கருதிக் கொள்வதில்தான் இவற்றின் மாயை அடங்குகிறது. இதுவே இயக்கத்துடன் இவை சரிவர இணையத்தில் இவற்றின் சிதைவு தொடங்குகிறது. சமூக இயக்கம் சிதறுகிற காலத்தில் இத்துடன் இயக்கங்கள் வேரற்றுச் சிதைகின்றன. துணை இயக்கங்கள் சார்ந்தவர் மீது குற்றம் சொல்வதற்கு இடம் இல்லை என்றில்லை. முதன்மையான குற்றம், வரலாற்றோடு நெருக்கமான சமூக இயக்கத்தைக் கட்டி வளர்க்க வேண்டியவரையே சாரும். தமது இயக்கத்தைக் கட்டி வளர்க்கத் தெரியாத நிலையில் துணை இயக்கங்களில் நுழைந்து அவற்றில் ஆள் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். துணை இயக்கங்களின் தனித்தன்மையை ஒப்புக் கொள்ளாததோடு, அப்படி இருப்பது தவறு எனக் குற்றம் சாட்டி இங்கிருந்து கிடைப்பவர்களைக் கடத்திக் கொள்கிறார்கள். வானம்பாடி இயக்கம் இப்போது இல்லை. வானம்பாடி என்ற பெயரில் வரும் ஒரு கவிதை இதழ், இயக்கத்தின் இதழ் அல்ல. இயக்கம் செத்ததற்காக ஒப்பாரி வைக்கிறார்கள். செத்துவிட்டதை இன்னும் அங்கீகரிக்கிறவர்களின் கவலைக்குரல்கள். அவர்களும் இந்த உண்மையை அங்கீகரித்துக் கொள்வது நல்லது. சிற்பி அதற்கு இனி உயிர் கொடுக்க முடியாது. காரணம், அந்த இயக்கத்தைக் கொன்றவர்களில் முதன்மையானவர் அவர் இல்லை என்பதற்காக ஒரு பத்திரிகை நடத்துவது, அந்தக் குற்றத்திலிருந்து அவரைக் காப்பாற்றாது. அவரோடு இப்போது யாரும் இல்லை. அக்னியும் நானும் வெளியேற்றப்பட்ட பிறகு, சுந்தரமும், இளமுருகும் அதில் இல்லை. இன்னொரு கட்டத்தில் கங்கை, பிறகு மேத்தா அப்பொழுதே ரவி. இப்படிப் பலர் அதிலிருந்து விலகினர். புவியும் வேண்டாம் என்று கைவிட்டதை சிற்பி தான் ஏந்தியிருக்கிறார். வழக்கம் போலவே பலரிடம் கவிதை கேட்டு வாங்கி அச்சிடுகிறார். இதைப் பற்றியெல்லாம் மற்றவர்களும் பேச வேண்டும். இப்படிப் பேசினால் யார், எவ்வளவு உண்மை பேசுவர் என்பது பிரச்னை. இருந்தாலும் முதலில் பேசட்டும். அச்சில் வருவதும் பிரச்சினை? என்ன செய்ய? வானம்பாடி இயக்கம் செத்துவிட்டது. அதிலிருந்து மீட்க வேண்டிய - அல்லது நாங்கள் மீட்டுக் கொண்ட உண்மைகள் உண்டா என்பது கேள்வி. வானம்பாடி இயக்கம், தொடங்கப்பட்ட உடன் பெரும் வரவேற்பு இருந்தது. முற்போக்கு வட்டாரத்தில் கவிதைக்கான கட்டுகளை உடைத்துவிட்டது ஒரு காரணம். கட்சி சார்பில்லாமல் இருந்தது மற்றொரு காரணம். விலையிலாக் கவிமடல், அழகிய தாளில் நேர்த்தியான முறையில் அச்சிட்டமை, இவைகளும் காரணங்கள். சிற்பி, புவி , இளமுருகு முதலியவர்கள் கவிதைத் துறையில் பெற்றிருந்த செல்வாக்கும் காரணம். கூடவே கவிதைப் படையல் முறை இவையெல்லாம் வானம்பாடியின் அமோக வெற்றிக்கான காரணங்கள். இத்தகைய கவிதைக்கான தேவை இத்தகைய கவிதையையே ஏற்கக்கூடிய திறன் இங்கு இருந்தது. செல்லப்பா முதலியவர்கள் போட்டு வைத்த பாதையில் வானம் பாடிப்பறவை தடையில்லாமல் பறந்து திரிந்தது. இந்தச் சூழல் தமிழ்க் கவிதைக்கு இன்னொரு முறை வாய்க்காது. யாப்புத் தளைகள் உடைக்கப்பட்ட போது முற்போக்கு வட்டாரத்துச் சிந்தனைகள் கவிதை வடிவில் வெள்ளமெனப் பாய்ந்தது. புது வெள்ளம் அப்படித்தான் பாயும். புலவர்கள்தான் கவிதை எழுத முடியும் என்று இல்லாமல் உணர்வுள்ளவர்கள் அனைவரும் கவிதை எழுதலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. தமிழகமெங்கும், ஈழத்திலும் புதுக்கவிதை தங்கு தடையில்லாமல் வளர்ந்தது. கட்சிக்காரர்களையும் இது தாக்கியது. அவர்களிடத்தும் ஒரு மாற்றத்தை இது ஏற்படுத்தியது. இலக்கியவாதிகள் கட்சிக்காரர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு தனிச் சான்றாக விளங்கியது. ‘தாமரை’ தி.க.சி.யின் பொறுப்பிலிருந்த போது திட்டமிட்டு ஒரு முயற்சியைச் செய்தார். வானம்பாடிக் கவிஞர்களுக்குத் தாராளமாக இடம் தந்து அவர்களைச் சுற்றி வளைப்பது என்பது அவர் திட்டம். வானம்பாடிகளின் கவிதைகளும், மேத்தா கவிதைகளைப் புகழ்ந்து எழுதிய பாலாவின் கட்டுரையும் தாமரையில் இடம் பெற்றன. மதுரைத் தோழர்கள் வானம்பாடிக்கு இடம் தருவது பற்றி கடுமையாகக் கோபித்தனர். தி.க.சி. விலகினார். வானம்பாடி பற்றிய விமர்சனம் தாமரையில் வெளிவந்தது. கொஞ்ச காலம் வானம் பாடி விலக்கி வைக்கப்பட்டது. கோவையிலும் கட்சித் தோழர்கள் விமர்சனம் செய்தனர். இப்பொழுது முன்னைய விமர்சனங்களையெல்லாம் இரு சாராரும் மறந்து கூடிக்குலாவிக் கொள்வது, சந்தர்ப்பவாதத்தின் தனிமகிமை அரசியலில் எதுவும் நேரும். புதுக்கவிதை முறைக்கு இவர்கள் வந்து சேர்ந்தார்களே, புதுக் கவிதையைக் கற்றுக் கொண்டார்களா? பெரும்பாலும் இல்லை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது. யாப்பைக் கைவிட்டிருக்கிறார்கள். புதிய எல்லை, பொருள்களில் பிரவேசித்தார்களா? அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கவிதைகளைக் காட்ட முடியும். இளமுருகு குறிப்பிட்டது போல, புதிய பிரச்சினைகள் பற்றி - புதிய பார்வையோடு கவிதைகள் வரவில்லை. மார்க்சிய நோக்கில் எத்தனையோ அற்புதங்களைச் சாதித்திருக்க முடியும். இதையும் அரைகுறையாகவே செய்தனர். இன்குலாப், ஆதி ஆகியவர்கள் வானம்பாடிகளோடு சேரவில்லை . தமிழன்பனும்தான். பரிணாமன், வேலுச்சாமி முதலியவர்களும் இப்படி இவர்கள் கவிதையின் தரமும் சாதனையும் இப்பொழுது விவாதத்துக்குரியதில்லை. இவர்கள் செய்யாததை வானம்பாடிகள் என்ன செய்தார்கள்? இவர்கள் சிலரின் தோற்றத்திற்கு வானம்பாடி காரணமாக இருந்திருக்க முடியும் அவ்வளவே. ********* வானம்பாடியின் ஆர்வலர்கள் என்ற முறையில் சிலவற்றை அறிந்து கொள்ள விரும்புவார்கள். * 20 அம்சத்திட்டத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டதன் காரணம் என்ன? * கலை - இலக்கியப் பெருமன்றத்தில் சிற்பியும், புவியும் எப்படிச் சேர்ந்தீர்கள்? * உங்கள் கவிதைகள் பற்றியே நீங்கள் தரும் சுய விமர்சனம் என்ன? * வானம்பாடி ஓர் இயக்கம் ஆகாமல் தடைபட்டதில் உங்கள் பங்கு என்ன? மேத்தா, கங்கை ஆகியவர்கள் மார்க்சியவாதிகள் அல்லர். மேத்தா ஒரு கவிஞர். சிவப்பு அவருக்கு ஒரு அழகு. கங்கை கவிஞர், சிவப்பின் அழகில் அவர் ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பவில்லை. நீங்கள் அப்படியில்லை. டொமினிக் ஜீவா கூறியபடி, நீங்கள் செய்தது இலக்கியத் துரோகம் - இதற்கு என்ன பதில் சொல்லுவீர்கள்? புவி கூறியது போல நீங்கள் செய்து கொள்ளும் சுயவிமர்சனம் என்ன? சுரண்டல் சமூகத்தின் கொடுமைகள் தம்மையும் தாக்கியபோது, அந்தக் கொடுமைகளை எதிர்த்துக் கவிதை செய்தார்கள். சுரண்டல் சமூகத்தின் கொடுமைகளுக்குத் தாம் இடம் தந்திருப்பதையும் சுரண்டல் சமூகத்தின் அங்கமாகத் தாமும் இருப்பதையும் இவர்கள் மறைத்தார்கள். இச்சமூகத்தின் கேவலங்கள், பித்தலாட்டங்கள், போலித்தனங்கள், பொய்கள், ஆரவாரங்கள் இவை தமக்குள்ளும் இருப்பதை இவர்கள் பார்த்துக் கொள்ள விரும்பவில்லை. இவற்றோடு மறைவில் குலாவினார்கள். சமூகமும் கெட்டுவிட்டதை, தம் மூலமும் பார்க்கத் தவறினார்கள். சமூகக் கேடுகளுக்குத் தாமும் காரணமாக இருப்பதை மறைத்தார்கள். தமக்குள் இவற்றோடு நடத்தும் போர் பற்றி இவர்கள் சிந்திக்கவில்லை. அல்லது இவற்றோடு தாம் நடத்த வேண்டிய போராட்டம் பற்றி இவர்கள் அக்கறை காட்டவில்லை. பிறர் இதைக் காணாமல் இருந்தால் சரி என்ற அளவில் இருந்துவிட்டார்கள். வர்க்கப் போராட்டம் தமக்குள்ளும்தான் என்று இவர்கள் அறியவில்லை. கட்சிக்குள்ளும் தான் என்று பார்க்கவில்லை. விடுதலைக்குக் கிளம்பிய கட்சிக்குள்ளும் அடிமைகள் வளர்க்கப்படுவதைப் பார்க்கவில்லை. சமூக மாற்றம் இலக்கியத்தின் மூலமும் தான் என்பதை அறியவில்லை. கவிதை இதற்கான சிறந்த கருவி என்று இவர்கள் அறியவில்லை. திருக்குறள் முதலிய நீதிநூல்களை இதனால் இவர்கள் போற்ற முடியவில்லை. வரலாற்றில் நீதி இலக்கியத்தின் பங்கை இவர்கள் அறியவில்லை. பொதுவாக இலக்கியம் பற்றி இவர்கள் பார்வை இப்படியே இருந்தது. கவிதை பற்றித் தமது பார்வையிலிருந்து தமிழ்க் கவிதை வரலாற்றை இவர்கள் பார்த்திருக்க முடியும். செய்யவில்லை. இப்படி இவர்கள் விமர்சனங்களை வளர்த்திருக்க முடியும். செய்யவில்லை . விமர்சனம் கவிதையைக் கெடுக்கும் என்றே இவர்கள் நம்பினார்கள். கவிதையை அழகின் பீடங்களில் நன்றாகவே வைத்திருந்தார்கள். கவிதைப் பிரச்சினைகள் வரலாற்றோடும், தத்துவத்தோடும் கொண்டுள்ள நெருக்கமான உறவை இவர்கள் பார்க்காததால், வரலாறு தத்துவத்தில் ஆர்வங் கொள்ளவில்லை. இதனால் தத்துவமும் வரலாறும் இவர்கள் கவிதைக்குள் கருப்பொருளாகவில்லை. மார்க்சியம் இவர்களைத் தொட்டது மேல்மட்ட அளவிலேயே. மார்க்சியத்தின் வேர்வரை இவர்கள் செல்லவில்லை. இதனால் தங்கள் வேர்களைப் பற்றி இவர்களுக்குச் சிந்தனை இல்லை. இதன் விளைவு, ஒரு தலைமுறைக் காலத்திற்கு இலக்கியத் துரோகம். கவிதை அகவியற் சார்பானது. அகத்தின் படைப்பு புறஉலகை அகத்தில் வைத்துச் செரிக்கும் முயற்சி. புற உலகத் தாக்கத்திற்கு எதிராக அகஉலகம் வலுப்படுத்தும் முயற்சி. அக உலகத்தோடு இதன் நெருக்கத்தை அறிந்து கொள்ளும் போதே, கவிதை பெறும் புதுக்கோலங்கள் விளங்கும். படிமம், குறியீடு முதலியவை அக உலகப் பிறப்புக்கள். கவிதையாக்கம் இதற்கு இயல்பானது. அக் உலகம் செத்தவர்கள் கவிதையை வெறும் விலாச் சட்டமாக்குவர். ஆவேசக் கூச்சலாக்குவர். நீதி, கற்பு, நேர்மை என்பன அக உலகில் புதுக்கோலங்களில், புதுப் பொருளில் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன. சிலம்பும் இராமாயணமும் அழியாமல் அங்கு நிலைபெறுவதைக் கவிஞர் அறிவர். சர்ரியலிசம் இங்கு இயல்பானது. மதத்தைப் பற்றிய எனது கண்ணோட்டத்திற்கும், கலை இலக்கியம் பற்றிய எனது பார்வைக்கும் இந்த சுயதரிசனம் ஆதாரம். நான் வானம் பாடிகளோடு கொஞ்ச காலம் இருந்தேன். இதைவிட்டால் எனக்குக் கதியில்லை என்பதால் அல்ல. இவர்களோடு சேர்ந்து சில செய்யலாம் என்பதால். இவர்களோடு சேர்வதற்கு முன்னரே எனது கண்ணோட்டத்தில் எனக்கு உறுதி இருந்தது. இவர்களை விட்ட பிறகும் எனக்குத் தளர்ச்சியில்லை . இவர்களோடு இருந்த போது கவிதை, இலக்கியம் பற்றிய எனது முயற்சிகள் மேலும் தீவிரமடைந்தன. இவர்களுக்கு நான் ஏதாவது தந்தேன் என்றால், இவர்களுக்கு நிறையத் திருப்தியின்மையைத் தந்தேன் என்பது. இவர்கள் அதிருப்தி கொள்ளும் அளவுக்கு இவர்களது திருப்தியின்மையை அதிகரித்தேன். எனக்கு ஏதாவது அறிவோ அனுபவமோ இருக்குமானால், அதனையும் சேர்த்தே கொடுத்தேன். இவர்களோடு சேர்ந்தது ஒரு வகையில் என் வலிமையை அதிகரிக்கவும் செய்தது. சேர்ந்தே பறக்க விரும்பினேன். முடியவில்லை. இவர்களின் எல்லாக் குணங்களோடும் என்னால் உறவாட முடியவில்லை . இவர்களை விட்டுப் பிரிந்த போது சோகம் நிறைந்திருந்தது. சில மாதங்கள் இவர்களிடமிருந்தும் நான் நிறையக் கற்றுக் கொண்டேன். சந்தர்ப்பவாதிகளை நம்பவே கூடாது என்று. இதோடு என் பயணம் முடியவில்லை . சாகும் வரை இது தொடரும், தோழமையை எனக்குக் கற்றுத் தந்த சில நல்லவர் நினைவில், உறவில் அது தொடரும். என்னை விலகிச் சென்றவர்கள் இனி என் மீது கோபம் கொள்ள வேண்டியதில்லை. தங்கள் செயலை மீண்டும் சிந்தித்துப் பார்த்துக் கொள்வார்களாக! அனுபவங்களைத் தவிர உயர்ந்த ஆசான் இல்லை. இருளிலிருந்து ஒளிநோக்கி அவர்கள் முகம் திரும்பட்டும். இந்தச் சமூகத்தில் போலித்தனம், தற்பெருமை இவைதரும் பலத்தில் சிலர் நிமிர்ந்து நிற்கிறார்கள். இவை இல்லாமல் அவர்களால் வாழமுடியாது. பாவம் அவர்கள் நிலை பரிதாபத்திற்குரியது. புதிய தலைமுறையிலிருந்து வெளிவந்த காலத்தில் மனித உறவுகளுக்கிடையில் ஏற்படும் நெருக்கடிகள் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியிருந்தது. எல்லாமே ஒரு சோசலிச கட்டத்தில் தீரும் என்பது உண்மையில்லை. இங்கிருந்தேதான் சோசலிசம் நோக்கி என்பது என் சிந்தனையோட்டமாக இருந்தது. தங்களுக்கிடையில் பழி, அவதூறு, வெறுப்பு, ஆதிக்கம் இவற்றை உடையவர்கள் கூட்டம் சோசலிசத்திற்குள் கொண்டு செல்வது இவற்றைத்தான். இவற்றோடு கூடியது சோசலிசமாக இராது. உடமைச் சமூகத்தின் இன்னொரு வகைதான் அது. இதற்குப் பெயர் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது உண்மையாக இருக்க முடியாது. இங்கிருந்து என்பதில் ஒரு சமுதாயத்தின் கடந்தகால அனுபவங்களும் சேர்கின்றன. சோசலிசம் நோக்கிய வித்துக்கள் 1848 அல்லது 1917ல்தான் இடப்பட்டன என்பது உண்மையாகாது. இதன் வித்துக்கள் வரலாறு முழுதும் பழங்காலத்திலிருந்தே இருக்கின்றன. பண்டைச் சமுதாயம் என்பதும், அதன் சிதைவிலிருந்து தொடரும் எச்சங்கள் இவையெல்லாம் சோசலிசம் நோக்கிய வித்துக்கள்தான். மனித உறவின் மேன்மைகளைப் பற்றிய கவலையும் அக்கறையும் சோசலிசம் நோக்கியவைதான். எனது அக்கறைகள் இதிலிருந்தே தொடங்குகின்றது. வானம்பாடி இயக்கம் முடிந்து 4, 5 ஆண்டுகளாகிவிட்டன. இனிமேலும் ஆத்திரத்தைத் தாங்கியிருப்பது அறிவுடைமையல்ல. இதில் சம்மந்தப் பட்டவர்கள் பல இடங்களுக்கு பல்வேறு அனுபவங்களுக்குள் போய்விட்டார்கள். பழைய உருவத்தில் - பழைய முகவரியில் இப்போது இருக்க விரும்புபவர்களாகப் பலர் இல்லை. இயக்கம் சிதைந்த பிறகு அவரவர்க்கு ஏற்பட்ட அனுபவங்கள் அவர்களை ஆட்கொண்டிருக்க வேண்டும். வானம்பாடி அனுபவங்கள் அவர்களை இன்றும் இயக்கக் கூடியதாக இருக்க வேண்டியதில்லை. ஒரு மொழியின் இலக்கிய வரலாற்றில் இது மிகச்சிறிய ஒரு கால அளவு. இவற்றை இப்போது என்ன செய்வது? ஒரு நினைவுக் குறிப்பு தவிர வேறு இல்லை . -1978 வானம்பாடிகள் வரலாற்றில் ….. மேலும் சில - 2001 வானம்பாடி இயக்கத்தின் தோற்றம் குறித்து ஏற்கனவே சிலர் எழுதி உள்ளனர். வானம்பாடி இயக்கத்திலிருந்து முல்லை ஆதவன் விலகியதற்கான காரணங்களை அவர் ஒரு முறை சொல்லிக் கேட்ட பொழுது நான் வியப்படைந்தேன். அவர் விலகியது குறித்து முன்பு நான் கொண்டிருந்த தவறான கருத்தை நான் விலக்கிக் கொண்டேன். வானம்பாடி இயக்கத்தினுள், அதன் வளர்ச்சியின் போது பலர் உள்ளே வந்தனர். சிற்பி, தமிழ்நாடன் முதலியவர்கள் இப்படி வந்தவர்கள். பெ. சிதம்பரநாதனும் இப்படித்தான். தமிழன்பன் வானம் பாடி இயக்கத்தோடு நேரிடையான தொடர்பு கொள்ளவில்லை. எனினும் வானம்பாடி இதழுக்குக் கவிதைகள் அனுப்பினார். வானம்பாடி இயக்கத்தின் பொதுத்தன்மையோடு அவர் கவிதைகள் ஒத்திருந்தன. அப்துல் ரகுமான், இன்குலாப் போன்றவர்கள் வானம்பாடி இயக்கத்தினுள் இல்லை. ‘வெளிச்சம்’ தொகுப்பில் இன்குலாப், கோ. இராஜாராம் இன்னும் சிலரது கவிதைகளை உள்ளே புகுத்தியவர் தமிழ்நாடன்தான். வெளிச்சம் தொகுப்பு ‘வைகறை’ அமைப்பின் சார்பில் வெளிவந்த தொகுப்பு. நானும் நண்பர் இளமுருகுவும், அச்சிடும் பொறுப்பை தமிழ்நாடனிடம் ஒப்படைத்திருந்தோம். எங்கள் எண்ணத்திற்கு மாறாக சிலரது கவிதைகளை அவர் சேர்த்துக் கொண்ட போது வானம்பாடிகளின் தொகுப்பு என்று அவரே முத்திரை இட்டார். வானம்பாடிகள் என்று. வானம்பாடி இதழில் எழுதிய 50-க்கு மேற்பட்டவரை குறிப்பிடுவது எனக்குச் சரி என்று தோன்றவில்லை. வானம்பாடி இயக்கத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இவர்கள் கவிதை எழுதினார்கள் என்பதும் உண்மைதான். வானம்பாடிகளின் இயக்கம் என்று நான் குறிப்பிடுவதற்கான காரணம் குறித்துச் சொல்ல வேண்டும். வானம்பாடி இதழை வெளியிடும் பொறுப்பை தொடக்கத்தில் புவியரசும், அக்கினியும் மேற் கொண்டிருந்தார்கள். பின்னர் மேத்தாவும், கங்கை கொண்டானும், இணைந்து கொண்டார்கள். வானம்பாடி ஒவ்வொரு இதழும் வெளிவரும் பொழுது கல்வி அகத்தில் அந்த இதழ் குறித்து நாங்கள் விரிவாகப் பேசினோம். கவிதை குறித்த பார்வைகளை முன்னிறுத்தியவர் என்ற முறையில் நானும் ஜனசுந்தரமும் முக்கியமானவர்கள். ஜீவ ஒளியும் எனக்கும் அக்கினிக்கும் நெருக்கமாக இருந்தார். ஒருவகையில் நாங்கள் அனைவருமே கவிதை கற்றுக் கொண்டிருந்தோம். படிமம் குறித்து நிறையப் பேசினோம். வானம்பாடி இயக்கத்தினுள் மார்க்சியச் சார்பு மேலோங்கி இருந்தது. மேத்தா காங்கிரஸ்காரர்தான் என்ற போதிலும் அன்றைய காங்கிரஸ் இயக்கம் சமதர்மச் சார்புடையதாக இருந்தது. சமதர்மம் என்ற உணர்வில் நாங்கள் அனைவரும் ஒத்திருந்தோம். பாப்லோ நெரூடோ, மாயகோஸ்கி என்றெல்லாம் பேசினோம். எழுத்து, கசடதபற முதலிய இதழ்களின் கவிதைகளிலிருந்து நாங்கள் மாறுபட்டோம். பாரதியைச் சார்ந்திருந்தோம். தமிழ் மரபென்பதை நாங்கள் உள்வாங்கிக் கொண்டிருந்தோம். நாங்கள் படைத்தவை மக்கள் சார்புடைய புதுக் கவிதைகள். எழுத்து முதலிய இதழ்களில் படிமத்திற்கு அழுத்தம் கொடுத்தார்கள்.வெறும் படிமங்களைத் தொகுப்பதே கூட கவிதை என்ற கருத்துக்கு நாங்களும் இடம் கொடுத்தோம். உவமை, உருவகம், அணி நயம் முதலியனவும் தமிழ் மரபின் கவிதையின் உறுப்புக்கள். இதன் காரணமாக உவமைகளை அடுக்குவதே கூட கவிதை என அறியப்பட்டிருந்தது. எதுகை, மோனை, சந்தம் முதலியவற்றைப் புதுக்கவிதைக்காரர்கள் கவிதை இயக்கத்திலிருந்து விலக்கினார்கள். உவமையும் உருவகமும், கவிதையின் இன்றியமையாத உறுப்புகள் அல்ல என்ற தெளிவு மெல்ல மெல்லத்தான் எங்களுக்கும் ஏற்பட்டது. இந்நிலையில் படிமத்தைக் கொண்டாடத் தொடங்கினார்கள். இதன் காரணமாகவே படிமங்களை அடுக்கினார்கள். கவிதையின் அழகை இது குலைத்தது. படிமம் குறியீடாகவும் மாறும் இயல்புடையது. 1967-ல் ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கம் மிக விரைவில் மக்களிடமிருந்து விலகியது. இந்தச் சூழலில் மார்க்சியச்சார்பென்பது எங்களுக்கு இயல்பாயிற்று. 1965-க்கு முன்னர் புவியரசு, இளமுருகு முதலியவர்கள் மார்க்சியச் சார்புடையவர்களாக இல்லை. அவர்களோடு எல்லாம் நான் நிறைய விவாதித்தேன். பிறகு அவர்களும் மார்க்சியம் பேச ஆரம்பித்தார்கள். ஜனசுந்தரம் இதற்குக் காரணம். சிற்பி இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். புவியரசு ஆதியின் பெயரைச் சொல்லுகிறார். அக்கினி முதலில் காந்தியவாதியாக இருந்தார். பிறகு என்னுடைய பாதிப்பின் காரணமாக மார்க்சியச் சார்புக்கு வந்தார். நண்பர் ஜீவ ஒளியும் இதற்குக் காரணம் ஆனவர். சி. ஆர். ரவீந்திரனை மார்க்சியச் சார்புக்கு கொண்டு வந்தவரும் ஜீவ ஒளிதான். மார்க்சியச் சார்பு என்று நான் குறிப்பிடுகிறேனே ஒழிய இவர்களை மார்க்சியர் என்று குறிப்பிடவில்லை. ஜனசுந்தரமும் நானும் மார்க்சியம் பற்றிய புரிதலில் நிறைய வேறுபாடு உடையவர்கள். மார்க்சியப் புரிதலில் ஜீவ ஒளியும், நானும் ஒத்தவர்கள். நானும், ஆதியும் ‘புதிய தலைமுறை’ இதழில் இணைந்திருந்தோம். ‘புதிய தலைமுறை’ மார்க்சிய இதழ். மாவோ சிந்தனைக்கு நெருக்கமான இதழ் வடக்கில் தோன்றி வளர்ந்த நக்சல்பாரி இயக்கம் சிந்தனையாளர்களை வெகுவாகப் பாதித்தது. இந்தப் பாதிப்புக்கு உள்ளாகாதவர் என்று எவரும் இல்லை. 1968-ல் பிரான்சில் தோன்றிய மாணவர்களின் இயக்கம் உலக அளவில் பேர் அதிர்வு அலைகளை எழுப்பியது. இதன் பாதிப்புக்குள் எல்லோரும் வந்தனர். நக்சல்பாரி இயக்கம் இந்தியா முழுவதும் பரவியதில் வியப்பில்லை . வானம்பாடிகளும் இந்தப் பேரியக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். சிற்பி, அக்கினி, புவி முதலியவர்களின் கவிதைகளில் இந்தப் போக்கை வெளிப்படையாகக் காணமுடியும். இயக்கம் என்று சொல்லும்பொழுது ஒழுங்கமைந்த ஒரு அமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, திட்டவட்டமான கொள்கை, இயக்கத்திற்கு அங்கங்கே கிளைகள் - இப்படி எல்லாம் இருக்கும் என்று நாம் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை - காந்தி பூங்காவில் நாங்கள் ஒருமுறை கூடி இப்படி எல்லாம் முடிவு செய்தோம். எங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் சிலவற்றைத் தீர்க்கும் முறையில் இந்த முயற்சியை மேற்கொண்டோம். சில முடிவுகளும் செய்தோம். இவை அறவே செயல்படவில்லை. முரண்பாடுகள் முற்றி இருந்தன. வானம்பாடி இயக்கத்தினுள் மேத்தா தன்னை முதன்மையானவராகக் கருதியதன் விளைவு என்று இதைச் சொல்லலாம். அவரும், கங்கையும் கடுமையாக முரண்பட்டார்கள். அக்கினியும், நானும் நெருக்கமாக இருந்தோம். சிற்பியின் நிலைப்பாடு வெளிப்படையாகத் தெரியவில்லை. புவியும், கங்கையும் இணைந்திருந்தார்கள். இதுவரை கவிதை இயக்கமாக இருந்த வானம்பாடி இயக்கத்தை இலக்கியம் மற்றும் திறனாய்வு இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற எனது கருத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் அது செயல்படவில்லை. மக்கட் சார்பு, கவிதை என்ற முறையில் நாங்கள் ஒரு இயக்கத்தில் இருந்தோம். முற்போக்கு முகாமோடு எங்களில் சிலருக்கு உடன்பாடு இருக்கத்தான் செய்தது. இதன் விளைவாகத்தான் சிற்பியும், புவியும் பிறகு கலை இலக்கியப் பெருமன்றத்தோடு நெருக்கமானார்கள். இந்திராவே இந்தியா என்றெல்லாம் பேசினார்கள். தமிழ்நாடன் இந்தப் போக்கை ஊக்குவித்தார். திட்டவட்டமான வடிவமென்ற முறையில் இயக்கம் என்று நாங்கள் இல்லை என்றாலும் எங்களுக்குள் இயக்கம் இருந்தது. மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது கவிதை இயக்கம். ஆழ்ந்து பார்த்தால் தமிழ் இயக்கம். அண்மையில் பொங்கல் விழாவின்போது கோவையில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் மாநாட்டில் முத்துநிலவன் பேசும் பொழுது வானம்பாடிகளை வேர்கள் என்றும், தன்னைப் போன்ற தற்காலக் கவிஞர்களை விழுதுகள் என்றும் குறிப்பிட்டார். உண்மையில் வானம்பாடிகள் வழியாகவும் வெளிப்பட்ட வேர்கள் என்பவை தமிழ்க் கவிதையின் நெடுங்கால வரலாற்றில் இருந்து வருபவை. வள்ளுவரும் இளங்கோவும் தமிழ் மரபின் இந்த வேர்களைத் தாங்கியவர்கள். தமிழ்க் கவிதை என்பது எதுகை, மோனை என்ற வடிவத்தில் மட்டும் பார்த்து இதையே தமிழ் மரபென்று கருதிப் புதுக்கவிதையாளர்கள் ஒதுக்கினர். ஆனால் உள் இயக்கம் என்ற முறையில் வள்ளுவரின் ஒப்புரவு, இளங்கோவின் புரட்சிகர உணர்வு, சித்தர்களின் சாதிமத மறுப்பு முதலியவை தமிழ் மரபின் இன்றியமையாத கூறுகள். வானம்பாடிகளும் இந்த வேர்களில் இருந்து விளைந்தவர்கள்தான். தமிழ்க் கவிதையில் ஒரு முக்கியமான கூறு அற உணர்வு. வள்ளுவரின் ஒப்புரவை, அவர் வகுத்த பேரறம் என்று கூறமுடியும். இதனையே இன்றைய சூழலில் சமதர்மம் என்று கூறுகிறோம். இந்த வகையிலும் வானம்பாடிகள் தமிழ் மரபின் விளைச்சல். தமிழ்க் கவிதையின் இன்னொரு முக்கியமான கூறு, உயர்வு நவிற்சி அன்றியும் ஒன்றைப் பலமுறை அடுக்கிச் சொல்லுதல், இவற்றோடு கற்பனைத் திறன். வள்ளுவரும் ஒன்றைப் பலமுறை அடுக்கிச் சொல்லுகிறார். கலிப்பாவின் தாழிசைகளைப் போலவே, தேவாரப் பதிகங்களும் ஒன்றைப் பலமுறை அடுக்கிச் சொல்கின்றன. இவை எல்லாம் அணி நயன்கள். மேடைத் தோரணையிலும் இந்தக் கூறுகளைக் காணலாம். வானம்பாடிக் கவிதைகளிலும் இடம் பெறுவது இந்தப் போக்குத்தான். கவிதை வாசிப்பென்பது பலர் முன்னிலையில் உரக்க வாசித்தல். மெளன வாசிப்புக்கும் உரியது கவிதை என்பதில் அய்யமில்லை. இந்த மெளன வாசிப்புக்கு ஒன்றை ஒருமுறை சொன்னால் போதும். மக்கள் மத்தியில் உரக்கச் சொல்லும் பொழுது வெளிப்படையாக எளிமைப்படுத்தி, அழகுபடுத்திச் சொல்ல வேண்டும். மெளன வாசிப்புக்கு இது தேவை இல்லை. சுருக்கமாக, தெளிவாகக் கூர்மையாகச் சொன்னால் போதும். இம்முறையில் படிமங்கள் கவிதைக்குச் செரிவைத் தருகின்றன. புதுக்கவிதையின் இன்றியமையாத கூறு என இதையே சிலர் குறிப்பிடுகின்றனர். தேவை இல்லாத சொற்களைக் கவிதையிலிருந்து நீக்கிவிட வேண்டும். ஒரு செடியில் மலருக்கு முக்கியத்துவம் தந்து இலை மற்றும் கிளைகளை நீக்கிப் பார்ப்பது மாதிரி இது. இதுவே கவிதை என்று ஆக முடியாது. கவிதையை அழிக்கும் முயற்சியாகவும் இது மாறிவிடலாம். கவிதையின் தளங்கள் பலவகைப்படும். கதை சொல்வதும், நாடக ஆக்கமும் கூட கவிதையின் உத்திகள் ஆகமுடியும். உரத்துப் பேசுவதும் ஒரு உத்தி. நாலு வரிகளில் ஒரு செய்தியைச் சொல்வதும் கூட கவிதையின் ஒரு தளம்தான். இப்படிக் கவிதைக்குப் பல தளங்கள் இருந்த போதும், கவிதையின் உயிர்த்திறன் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். இதைத்தான் கவித்துவம் என்று குறிப்பிடுகிறோம். எந்த ஒரு கவிஞனுக்கும் கூடிய வரை தனித்துவமான பார்வை வேண்டும்.இந்தப் பார்வை வழியே இயங்குவது கவித்துவம். வாழ்வின் அர்த்தங்களைத் தேடித் தொகுப்பது கவித்துவம். ஒரு விஞ்ஞானிக்கும் கவித்துவம் இல்லாமல் முடியாது. டால்ஸ்டாய் முதலியவர்களின் இயக்கத்தினுள்ளும் கவித்துவத்தைக் காணமுடியும். கண்ணகியின் புரட்சி இளங்கோவின் கவித்துவம். மணிமேகலையின் அமுதசுரபி சாத்தனாரின் கவித்துவம். எந்த மெய்யியலும் கவித்துவத்தின் படைப்பு. எந்த ஒரு கவிஞனுக்குள்ளும் ஒரு மெய்யியலாளன் இருக்கிறான். இவனைக் கண்டு கொள்பவன் நல்ல கலைஞன். கவிதையும் மெய்யியலும் விலகியே நிற்க வேண்டும் என்று கூறுபவன் தலைச் சிறந்த கவிஞனாக வளர முடியாது. மார்க்சியம் என்ற மெய்யியலினுள் கவித்துவத்தின் பேராற்றலைக் காணமுடியும். என்னதான் மார்க்சியத்திற்கு ஒருவன் எதிர்நிலை எடுத்தாலும் அவனது ஆழ்மனத்தினுள் சமூகத்தின் கூட்டு இயக்கம் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஊற்றிலிருந்து தான் ஒருவன் தன் கவிதைகளைச் சேகரித்துக் கொள்கிறான். வாழை பற்றிய மேத்தாவின் கவிதை மட்டுமல்லாமல், எந்தக் கண்ணன் இங்கு பிறந்தால் என்ற கங்கையின் கவிதையும் அடிமனத்தின் ஊற்றிலிருந்து வெடித்தவை. இவ்வகையில் கவிதை இல்லாமல் மனிதனுக்கு வாழ்வு இல்லை. தமிழ்க் கவிதையில் காலந்தோறும் இந்த ஊற்று ஆறாய்ப் பெருகி ஓடுகிறது. இந்த நீரோட்டத்தை எந்த ஒரு கவிஞனும் தனக்குள் கண்டு கொள்ள வேண்டும். எழுத்து, கசடதபற கவிஞர்கள் இந்த நீரோட்டத்தைக் கண்டிருந்தால் தமிழ் மரபைப் போற்றி இருப்பார்கள். பிரமிளுக்குள் இந்த இயக்கம் உண்டு. சித்தர் இயக்கத்தின் வெளிப்பாடு என்று பிரமிளைக் கூற முடியும். நா . பிச்சமூர்த்தியும் சித்தர் இயக்கத்தில் விளைந்தவர்தான். புதுமைப்பித்தனும் இதே வகையினர்தான். பெரியாரையும் ஜெயகாந்தனையும் இந்த இனத்தில் சேர்த்தும் சொல்ல முடியும். தொகுத்துச் சொன்னால் வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - தமிழ் இயக்கத்தின் தற்கால வெளிப்பாடு என்று சொல்வது பொருந்தும். இதை வேறுவகையிலும் விளக்கலாம். வானம்பாடிகளோடு கசடதபறக்காரர்கள் முரண்பட்டார்கள். பேரா. வானமாமலை அவர்களை முதல்வராகக் கொண்ட நவபாரதி முதலியவர்களும் வானம்பாடிகளை மறுத்தார்கள். ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன் முதலியவர்களை அழைத்து திருச்சியில் ஒரு கூட்டம் நடத்திய பொழுது வானம்பாடிகளைக் கடுமையாகத் தாக்கினார்கள். வானமாமலை அவர்களின் தலைமையில் தென்மாவட்ட எழுத்தாளர்கள் கூட்டம் ஒன்றில் வானம்பாடிகளை அவர்கள் மறுக்க முற்பட்டுத் தோல்வி அடைந்தார்கள். சிற்பியின் தலைமையில் கவியரங்கு நடைபெற்ற பொழுது இந்த உண்மை வெளிப்படையாகத் தெரிந்தது. திருச்சியில் கடுமையாக முரண்பட்டு விவாதித்தேன். பிறகு அவர்கள் அமைதியானார்கள். வானம்பாடி பிளவுக்கு பின் வெளியிட்ட வேள்வி 2-வது இதழிலிருந்து கவிஞர்களின் பெயர் சொல்லாமல் கவிதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கவிதையின் அழகியல் குறித்து வானமாமலை கட்டுரை எழுதினார். தி. க. சி. தொடக்கத்தில் எங்களை ஏற்கவில்லை. பிறகு எங்களில் சிலரை வசப்படுத்த முயன்றார். பிரமிள் எங்களைத் தாக்கி எழுதினார். வெங்கட் சாமிநாதன் எழுதினார். தெறிகள் இதழில் வந்த அவரது கட்டுரைக்கு நான் விரிவான மறுப்பு எழுதினேன். தெறிகள் இதழின் ஆசிரியர் உமாபதி என்ற போதிலும் சுந்தரராமசாமியே அதன் பின்னணியில் இருந்தார். என் கட்டுரையை அவர்கள் திருப்பி அனுப்பினார்கள். கம்யூனிஸ்டுகளுக்குக் கவிதை தெரியும் என்று இன்குலாபை ஆதரித்து வானம்பாடியில் எழுதினேன். ஞானரதம் இதழின் ஆசிரியர் தேவபாரதி - இன்குலாப் கவிதைகள் கவிதைகளே அல்ல என்று அவர் எழுதியதற்கு என் மறுப்பு இந்தக் கட்டுரை. இவை எல்லாம் எதை மெய்ப்பிக்கின்றன. தமிழ்ச் சூழலில் செயல்பட்ட பல்வேறு போக்குகள், இயக்கங்களுக்கு இடையில் முரண்பாடுகள் நிலவின் என்ற முறையில் இதைப் பார்க்க முடியும். வானம்பாடிகளை ஓர் இயக்கம் என்று மற்றவர்கள் ஒப்புக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தான் இது மெய்ப்பிக்கிறது. வானம்பாடி இயக்கத்தினுள் பிளவு ஏன் ஏற்பட்டது என்பது பற்றிச் சிலவற்றை நான் சொல்ல முடியும். வானம்பாடி இயக்கத்தினுள் நான் தொடக்கத்தில் இல்லை. பிறகுதான் உள்ளே வந்தேன். அப்பொழுதும் ஓரத்தில்தான் இருந்தேன். பிறகுதான் உள்ளியக்கத்தினுள் இடம் பெற்றேன். சிற்பி முதலியவர்களின் கவிதைகளையும் விமர்சனம் செய்தேன். மேத்தாவின் வெற்று அழகியலோடு நான் கடுமையாக முரண்பட்டேன். நானும் கவிதைகள் எழுதினேன். புவியரசின் பார்வைக்கு ஒருமுறை அனுப்பினேன். இவை கவிதைகள் அல்ல, இவற்றிலிருந்து கவிதைகளை உருவாக்க முடியும் என்ற குறிப்போடு அனுப்பினேன். மார்க்சியத்தின் அந்நியமாதல் கோட்பாட்டில் இருந்து அற்புதமாகக் கவிதைகள் வடிக்க முடியும். கல்லிகையை இந்த ஆதாரத்தில்தான் எழுதினேன். புராணக் கதைகள் உள்ளும் நமக்கு அனுசரணையான மெய்ப் பொருளைக் கண்டு தொகுக்க முடியும். எந்தக் கண்ணன் இங்கு பிறந்தால் என்ற கங்கையின் கவிதை என் அறிவுறுத்தலின் விளைவாகப் பிறந்த கவிதை. புவியின் கவிதைகள் எப்பொழுதும் சிறந்த கவிதைகள். எனினும் ‘அய்யா நான் ஒரு பால்காரன்’ என்ற கவிதையைப் பாராட்டினாலும் என்னால் “குழலைக் கொடுங்கள் ஊதுகிறேன், அனலைப் புனலாய் மாற்றுகிறேன்’‘என்ற கவிதையை ஒப்புக் கொள்ள முடியவில்லை. இப்படி எவ்வளவோ விவாதங்கள். மேத்தாவின் தன் முனைப்பு அசிங்கமானது. சிற்பியின் மவுனம் நிரந்தரமானது. எனினும் வானம்பாடி இயக்கத்தின் தலைமைக்கு அவரே தகுதியானவர். புவியின் தாய்மை மரியாதைக்குரியது. மார்க்சியத்தைத் தொடர்ந்து வற்புறுத்தியதன் விளைவாக பிளவு ஏற்பட்டது என்றே நான் இன்று வரை கருதவில்லை. கவிதை பற்றி என்னுடைய விமர்சனங்களை அவர்கள் எப்பொழுதும் வரவேற்கவில்லை. படைப்பாளிதான் எப்பொழுதுமே உருவாக்குபவன். திறனாய்வாளன் அதைத் திண்பவன் என்று மேத்தா ஒருமுறை எங்களைச் சாடினார். நனைந்த உன்னுடைய தீக்குச்சிகளைக் கொண்டுவர வேண்டாம். என்று சிற்பி எழுதினார். அகலாது அணுகாது தீக்காய்வது போல் மெய்யியலோடு கவிஞனின் உறவு இருக்க வேண்டும் என்று சிற்பி அக்கினிக்குக் கடிதம் எழுதினார். சிற்பியின் ஏராளமான துணுக்குக் கவிதைகளை வானம்பாடி இதழுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். காதல் கவிதை ஏன் எழுதக்கூடாது என்றும் சிலர் கேட்டுக் கொண்டிருந்தனர். கங்கையும், மேத்தாவும் இப்படிக் கேட்டவர்கள். டி. எஸ். எலியட் ஒரு கவிஞன் என்ற முறையில் ஆங்கிலக் கவிதை வரலாற்றில் தனக்கென ஓரிடம் பிடித்துக் கொண்டவர்.கவிதை பற்றிய தன் ஆழமான பார்வையிலிருந்து, ஆங்கிலக் கவிதை வரலாற்றைப் புரிந்து கொண்டு விமர்சனம் எழுதினார். கவிதை பற்றி நமது இன்றைய புரிதலில் இருந்து தமிழ்க் கவிதை வரலாற்றை மீள் ஆய்வு செய்ய முடியும் என்று நான் கருதினேன். மனோன்மணீயம் பற்றி ஒரு முறை நான் பேசினேன். காலந்தோறும் மாறுதலும், புதுமையும் பெற்று வந்த தமிழ்க் கவிதை வரலாற்றை நாம் முயன்று தொகுக்க வேண்டும் என்று கூறினேன். இதை அவர்கள் மெளனமாக இருந்து மறுத்தார்கள் என்றே கருதுகிறேன். அக்கினியின் முயற்சியில் வானம்பாடி கவிதா மண்டலம் தொடங்கினோம். ஒவ்வொரு மாதமும் தமிழ் இதழ்களில் வெளிவரும் அனைத்துக் கவிதைகளையும் தொகுத்து ஆராய்ந்து ஒருவருக்குப் பரிசு தர வேண்டும் என்பது இந்த அமைப்பின் நோக்கம். சிற்பி - பிரமிளைத் தேர்ந்தெடுத்தார். ஜீவஒளி - கல்லிகையைத் தேர்ந்தெடுத்தார். தாமரையில் வந்த ஒரு கவிதையை ஜனசுந்தரம் தேர்ந்தெடுத்தார். தன் கவிதையை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்று மேத்தா கோபித்துக் கொண்டார். கவிதா மண்டலம் என்பது அக்கினியின் முயற்சி. இதை மற்றவர் விரும்பவில்லை. ’வைகறை’ என்ற அமைப்பை நான் தொடங்கினேன். வானம்பாடிகள் உட்பட, தமிழில் மார்க்சியச் சார்புடையவர்களின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட வேண்டும் என்பது என் நோக்கம் வைகறை அமைப்புக்கு சிற்பியைத் தலைவராக்கினோம். அடுத்த மாதமே சிற்பி தலைமையிலிருந்து விலகினார். நானும், இளமுருகுவும் கவிதைகளைத் தொகுத்தோம். வானம்பாடிக் கவிஞர்களில் ஐந்து பேரின் கவிதைகளை மட்டுமே தொகுத்து வெளியிடலாம் என்று அக்கினி முதலியவர்கள் கருதினர். இது எனக்கு உடன்பாடில்லை. முன்னுரை எழுதுமாறு சிற்பியைக் கேட்டதற்குப் பதில் இல்லை. நானே ஒரு முன்னுரை எழுதினேன். நானும் இளமுருகுவும் சேலம் சென்று அச்சிடும் பொறுப்பை தமிழ்நாடனிடம் ஒப்படைத்தோம். பலமாதம் காலம் தாழ்த்தி நூல் வெளிவந்தது. அட்டை முதலியவற்றை கலை அழகோடு தமிழ்நாடன் அமைத்திருந்தார். ‘வெளிச்சம்’ தொகுப்பு வெளியீட்டிற்கு சிற்பி, புவி முதலியோர் வரவில்லை. சேவற்கொடியோன் சிறப்புரை நிகழ்த்தினார். சிற்பி முதலியோர் வராதது தமிழ்நாடனுக்குப் பெரும் அதிர்ச்சி. சேவற்கொடியோன் பா. செயப்பிரகாசம் போன்றவர் எங்கள் சார்பில் இருந்தனர். எங்களை மார்க்சியராகவே ஒப்புக் கொள்ளாத தி.க.சி. அவர்கள் சார்பில் இருந்தார். எங்களைத் தாங்க எந்தக் கூண்டுக்கும் வலிமை இல்லை என்று சிற்பி தலையங்கம் எழுதினார். அக்கினியையும், என்னையும் வெளியேற்றுவதாக ஒரு துண்டறிக்கை அவர்கள் வெளியிட்டனர். வானம்பாடி இயக்கத்தின் உண்மையான தொடர்ச்சி என்று வேள்வி இதழ் வெளியிட்டோம். இதழின் ஆசிரியர் ஜனசுந்தரம் உளவுத் துறையினிடம் இருந்து வந்த ஒரு விசாரணையின் பிறகு தான் ஆசிரியராக இருக்க முடியாது என்று கூறி விலகினார். 2-வது இதழோடு இதழ் நின்றது. எங்களோடு ஜீவ ஒளி, அக்கினி இருந்தனர். இதழ் தயாரிப்புக்கு அக்கினி பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார். ஜனசுந்தரம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்தார். வானம்பாடி இயக்கம் சார்ந்த எவரும் இன்று வரை வீணாவிகிவிடவில்லை. ஜனசுந்தரம் இன்று எதுவும் எழுதுவதில்லை. இளமுருகுவும் எழுதுவதில்லை. மற்றவர் விடாப்பிடியாக தேடலோடு எழுதிக் கொண்டு இருக்கின்றனர். மகத்தானவை இவர்களது வளர்ச்சி என்று குறிப்பாகச் சொல்லமுடியும். வானம்பாடி இயக்கம் பற்றிய சுப்பிரபாரதிமணியன் எழுதிய நூலில் நிறையப் பிழைகள் உள்ளன. தமிழ்நாடன் சிறப்பாகச் செய்துள்ளார். எனக்கே வியப்புத் தரும் முறையில் சிறப்பாக எழுதி உள்ளார். பூர்ணச்சந்திரன் முதலியவர்கள் விமர்சனம் செய்து எழுதி உள்ளனர். நானும் இரண்டொரு கட்டுரைகள் எழுதி உள்ளேன். தமிழ்க் கவிதைக்கு வானம்பாடிகள் பெரும் சுமை என்று எழுதி உள்ளனர். நெடுங்காலத் தமிழ்க் கவிதைக்குள் இந்தப் போக்குத் தொடரும். வானம்பாடி இதழை புவி நடத்த இயலவில்லை என்ற நிலையில் சிற்பி அதைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். நிறைய மாற்றம் செய்தார். வானம்பாடிகள் 23 இதழ்களிலிருந்து இப்பொழுது இன்னொரு தொகுப்பை உருவாக்குவது தேவை என்றாலும், இதற்கு என ஒரு கோட்பாட்டை வரையறுத்துக் கொள்ள இயலுமா என்று தெரியவில்லை. நவீனத்துவம் சில வடிவங்களிலேனும் வானம்பாடியில் இடம் பெற்றது. சிற்பியின் மதுரைவீரன், தேனரசனின் ஆலமரம் முதலிய கவிதைகளில் படிமத்தின் சிறப்பைக் காணமுடியும். சுந்தரம், அறிவன் கவிதைகளில் நவீனக் கவிதைக்குரிய செரிவைக் காணமுடியும். புவி , கங்கை ஆகியவர்கள் அற்புதமான கவித்துவச் செழுமை உடையவர்கள். இவர்களுக்கு நிகரானவர் என்று இளமுருகுவைச் சொல்ல முடியும். இவர்களுக்கு அடுத்த நிலையில் சிற்பியைக் குறிப்பிடலாம். இன்று பார்க்கும் பொழுது சிற்பியின் சாதனைகள் சிறப்பானவை. இவருக்குள் மகா கவிக்கான கூறுகள் இருப்பதாக முன்பு நான் உணர்ந்தேன். இந்தக் கூறுகள் தொடர்ந்து வளர்ச்சி பெற்றாலும் இன்னும் முழுமை பெறவில்லை. மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனை ஒரு மகாகவி என்று சிற்பியின் மூலமும் நாம் இனம் காணமுடியும். புவியின் ‘மீறல்’ தொகுப்பு தமிழ்க்கவிதையில் ஓர் அற்புதம். அப்புறம் புவி சிதறிக் கிடக்கிறார். மேத்தா வெகுதூரம் விலகிப் போய் விட்டார். அக்கினி எதுவுமே எழுதவில்லை. சி. ஆர். ரவீந்திரன் வேறு பாதையைத் தெரிவு செய்து கொண்டார். ஜீவ ஒளியின் ஆய்வுத்திறன் பிரமிக்கத்தக்கது. என்னைப் பொருத்தவரை பல தளங்களில் இயங்குகிறேன். எனக்குள் இன்றும் தேடல் தொடர்கிறது. 5-5-2001 பகுதி 3 வானம்பாடிகளின் கவிதை இயல் - 1994 வானம்பாடிகளின் கவிதை இயக்கம், தமிழ்க் கவிதையின் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் எழுந்த இயக்கம் என்ற முறையில் வரலாற்றின் சில அம்சங்களை இங்குக் குறிப்பிட வேண்டும். இக்கவிதை இயக்கத்துக்கான வரலாற்றுச் சூழலில் குறிப்பாக இரண்டு அம்சங்கள் இருந்தன. ஒன்று, வானம்பாடிகளின் தோற்ற காலத்தில் இருந்த கவிதை மரபு / இலக்கிய மரபு. இன்னொன்று வானம்பாடிகளின் காலத்தில் இயக்கம் கொண்டிருந்த சமூக, அரசியல் சூழல். இந்த இரண்டு அம்சங்கள் பற்றியும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம். வானம்பாடிகளின் தோற்றக் காலத்தில் தமிழ்க் கவிதைக்குள், ஏற்கனவே பாரதி, பாரதிதாசன் வழியே தொடர்ந்து இயங்கிய மறுமலர்ச்சிக் கவிதை இயக்கமென ஒன்று. பாரதிதாசன், பாரதிக்கு முன்னரும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இயங்கிய தமிழ்ப்புலவர்களின் மரபுக் கவிதைப் போக்கு என்பது இன்னொன்று. இவ்விரு போக்குகளிலிருந்தும் பெரும்பகுதி விலகிய இன்னொரு போக்கு. எழுத்து, கசடதபற இதழ்களின் வழியாகத் தமிழ்க் கவிதைக்குள் வந்த புதுக்கவிதைப் போக்கு. நாட்டார் கலையின் பகுதியென இனம் காணத் தக்க சந்தக் கவிதை என்பதும் இன்னொரு போக்கு. தமிழ்க் கவிதைக்குள் இயங்கிய இந்த நால்வகைப் போக்குகளும் தமக்குள் முரண்பட்டிருந்தன. இந்த முரணியக்கத்தில் பாரதியின் வழியே எழுந்து தொடர்ந்த வசன கவிதைப் போக்கும், எழுத்து வழியே வந்த புதுக்கவிதைப் போக்கும் தீவிரத் தன்மையுடையனவாய் இருந்தன. இன்று பார்க்கிறபோது வானம்பாடிகளின் கவிதையைப் பாரதியின் வசன கவிதைப் போக்கினுள் வைத்துச் சொல்வதுதான் பொருத்தமாகிறது. புதுக்கவிதையின் தாக்குதலுக்கு எதிர்வினையாகத்தான் பிறகு வசனகவிதைப் போக்கு செயல்பட்டது. வானம்பாடிக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க சிலர் (சிற்பி, புவியரசு, மேத்தா, இளமுருகு) புலவர் மரபிலிருந்து சில சாதனைகளோடு வானம்பாடிகளின் இயக்கத்திற்குள் வந்தவர்கள். மரபுக் கவிதை முறை புதுக்கவிதைக்கு இடம் தந்தாக வேண்டும் என்ற உணர்வு உடையவர்கள். இவர்களுக்கு மரபு முறையிலான புலவர்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பிய போது தமக்கு மன நிறைவு ஏற்படுத்திக் கொள்ளும் முறையில் மரபுக் கவிதைக்கு எதிராக அங்கதக் கவிதைகள் சிலவற்றை இவர்கள் எழுதினர். தம் கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்றே கருதினர். தாம் எழுதும் புதியவகைக் கவிதைக்கான கோட்பாடுகளைத் தெளிவுறுத்தும் முறையிலும் இவர்கள் கவிதை எழுதினார்கள். புதுக்கவிதையின் நவீனத்துவச் சார்பை முதன்மைப்படுத்திப் பார்க்கிறபோது, வானம்பாடிகளின் கவிதைகள், பாரதியின் வசன கவிதைகளின் இன்னொரு தொடர்ச்சியாகத்தான் நாம் மதிப்பிட வேண்டியிருக்கிறது. வானம்பாடிகளின் கவிதை இயக்கம் தோற்றம் பெறுவதற்குச் சற்று முந்திய அண்மைக் காலத்தில் கலீல் ஜிப்ரான் கவிதைகளும், நா. காமராசன் கவிதைகளும் ஓரளவு தமிழில் செல்வாக்குப் பெறத் தொடங்கியிருந்தன. இளவேனிலின் உரைநடைக்குள் இவ்வகைக் கவிதையாக்கம் ஓங்கியிருந்தது. தாகூரின் மொழி பெயர்ப்புக் கவிதைகளும் அக்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன. ஏற்கனவே அப்துல் ரகுமான், தமிழன்பன், இன்குலாப் ஆகியவர்கள் மரபு முறையிலிருந்து சற்று விலகிக் கவிதை படைத்தார்கள். இவர்களிடமிருந்து, வானம்பாடிகளைப் பொறுத்தவரை, ஒரு பாய்ச்சல் என்று சொல்லக்கூடிய முறையில் கவிதையில் புது விளைச்சல் கண்டார்கள், எதுகை, மோனை, யாப்பு ஆகியவற்றில் கவிதை இல்லை என்பதை வானம்பாடிகள் கண்டுகொண்டனர். புதுக்கவிதை முன்னிலைப்படுத்திய படிமமுறையில் இவர்கள் சில பயிற்சிகள் செய்தனர்.மரபுக் கவிதையின் அகவல் ஓசை மரபை இவர்களில் பெரும்பாலோர் தம் கவிதைகளுக்கு வாகனமாகக் கொண்டனர். தமிழ் இலக்கிய மரபின் புலமைப் பயிற்சி இல்லாமல் வானம்பாடி இயக்கத்தில் வந்து சேர்ந்தவர்கள் கூடியவரை புதுக்கவிதைக்கு நெருக்கமான முறையில் தமிழ் நடையைக் கொண்டிருந்தனர். உலகளாவிய கவிதை மரபில் இருந்து நம் காலக் கவிதைச்சூழலையும் பாதித்த முக்கியமான மரபென ரொமாண்டிக் மரபையும், நவீனத்துவ மரபையும் நாம் குறிப்பிடலாம். வானம்பாடிகளின் மரபு ரொமாண்டிக் மரபு சார்ந்தது என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த ரொமாண்டிக் மரபுக்குத் தமிழிலக்கிய கவிதை மரபினுள்ளும் சில தொடர்ச்சிகள் உண்டு. இனி வானம்பாடிகளின் பின்னணியாக அமைந்த சமூக, அரசியல், வரலாற்றுச் சூழலைப் பார்க்கலாம். அறுபதுகளின் இறுதியில் தோற்றம் கொண்டு எழுபதுகளின் தொடக்கத்தில் இந்தியா முழுவதும் அலைகளைத் தோற்றுவித்த நக்சலைட் இயக்கத்தை முதன்மையாகக் குறிப்பிடுவது பொருந்தும். வசந்தத்தின் இடிமுழக்கம் என இந்தப் போக்கு வர்ணிக்கப்பட்டது. தமிழகத்தில் இதன் அலை எழுந்த காலச் சூழல் வானம்பாடிகளைப் பாதித்தது. சிற்பி, அக்னி, மேத்தா, கங்கை ஆகியவர்களின் கவிதைகளில் இப்படிச் சொல்வதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. நக்சலைட் இயக்கத்தின் தோற்றக்களம் எனத் தமிழகத்தில் கோவையைத்தான் குறிப்பிட முடியும். இந்த இயக்கம் கோவையில் தோன்றுவதற்கான சூழல் கோவையில் இருந்தது. ஏற்கனவே பொதுவுடைமை இயக்கம் பிளவுபட்டுத் தனித்தனி இயக்கங்கள் ஆயின. புது இயக்கம் தோன்றியது. 1947- ஐந் தொடர்ந்த சுதந்திரக் கனவுகள் பொய்யாகின. நேரு முதலியவர்கள் முன்வைத்த சோசலிசம் பின்னடைவுக்குழு உள்ளானது. காந்தி, காங்கிரசுக்காரர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டிருந்தார். சோசலிசமும் ஜனநாயகமும் கைகோர்த்த நிலை மாறியது. பாராளுமன்ற ஆட்சிமுறை மக்களுக்கு வாழ்க்கை மேம்பாட்டைத் தரவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை 67- இல் ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கம், தமிழ் மக்களின் மனத்தில் எழுப்பியிருந்த கனவுகளைப் பொய்யாக்கியது. இந்தியாவுக்கு வெளியில் பார்க்கும் பொழுது அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாமைத் தகர்த்துக் கொண்டிருந்தது. சிலியில் சனநாயகம் கொலை செய்யப்பட்டது. வங்கத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது. இந்தியா நெருக்கடி நிலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. வானம்பாடிக் கவிஞர்களில் காந்தியச் சார்பிலிருந்து வந்தவர் அக்கினிபுத்திரன். காங்கிரசு சார்பிலிருந்து வந்தவர்கள் என மேத்தா, கங்கை, சக்திக்கனல் ஆகியவர்களைக் குறிப்பிடலாம். ஞானி, சனசுந்தரம், ஜீவாளி, அறிவன் ஆகியவர் மார்க்சியச் சார்பிலிருந்து வந்தவர்கள். புவியரசு தமிழரசுக் கட்சியினர். சிற்பிக்குள் பாரதிதாசனின் ஆக்கத்தைக் காணமுடியும். அநேகமாக இவர்கள் அனைவர்க்குள்ளும் தமிழின் ஆக்கம் என்ற முறையில் திராவிட இயக்கத்தின் தாக்கம் இருந்தது. இவர்களுக்குள் கடுமையான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. தமிழ்ச் சிந்தனையின் ஆக்கம், தமிழ்க் கவிதையின் ஆக்கம் என்ற புள்ளியில் இவர்கள் ஒன்று சேர்ந்தனர். இயக்கம் கண்டனர். கோவையில்தான் வானம்பாடிக் கவிதை இயக்கத்தின் தோற்றம் அமைந்தது. தொடக்கத்திலேயே தமிழ்நாடன், தமிழன்பன் ஆகியோர் இதற்குள் வந்தனர். தமிழன்பன் திராவிட இயக்கச் சார்புடையவர். மீண்டும் இங்கு ஒரு முரண் இயக்கத்தைத்தான் காண்கிறோம். ஒரு புள்ளியில் இணைந்திருக்கிற அதே சமயத்தில் இவர்கள் முரணியக்கத்தில் இருந்தனர் என்பது ஒரு முக்கியமான உண்மை. தொடக்கத்தில் சில ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதச் சூழல்தான் வானம்பாடிகளை தீவிரமான படைப்பாளிகளாக மாற்றியது. தொடக்கத்திலிருந்தே வானம்பாடிகளின் சிந்தனைக்குள் மார்க்சியத்தின் தாக்கம்தான் அழுத்தமாக இருந்தது. சமூக மாற்றம் என்பதில் இவர்கள் அக்கறை கொண்டிருந்தார்கள். மார்க்சியத்திற்கு எதிர்நிலை சிலருக்குள் இருந்தாலும் தொடக்கத்தில் இது வெளிப்படவில்லை. ஒரு கட்டத்தில் மார்க்சியமா, அது எவ்வகை மார்க்சியம்? அல்லது மார்க்சியத்திற்குப் புறம்பா? என்ற சிக்கல் தீவிரப்பட்டபோதுதான் இயக்கம் தகர்ந்தது. சரியாகச் சொன்னால், இயக்கம் என ஒன்றைத் தமக்குள் காணவேண்டிய சூழலில்தான் இவர்கள் இயக்கமற்றுப் போனார்கள். அதன்பிறகு இயக்க வளர்ச்சி இல்லை. இடி எனத் தொடங்கி, மழை எனக்கொட்டி, பிறகு தூறலாயிற்று. எனினும் இயக்கத்தை நோக்கி திரட்சி கொண்டிருந்த காலச்சூழலில் வானம்பாடிக் கவிஞர்களுக்குள் திரண்டு கொண்டிருந்த காலச் சூழலில் வானம்பாடிக் கவிஞர்களுக்குள் திரண்டு கொண்டிருந்த கரு, இவர்கள் தனிக்குழுவாகப் பிரிந்த பொழுதும் அதன் பிறகு தனிநபர்களாகப் பிரிந்த பொழுதும் அந்தத் தனிநபர்களுக்குள்ளும் இக்கரு தகர்ந்து விடவில்லை . இயக்கம் இல்லை . இதன் பேராற்றல் இல்லை. எனினும் தனிநபர்கள் தமக்குள் பக்குவப்படுத்திக் கொண்ட பண்ணைகளில் விளைச்சல் செய்து கொண்டிருந்தார்கள். இன்று வானம்பாடிகளின் கவிதைகளைத் திரும்பப் பார்க்கிற போது சில உண்மைகள் நமக்குத் தெளிவாகின்றன. முதல் இதழில் பாரதியின் வாரிசுகளென தம்மை இவர்கள் அறிவித்துக் கொண்டார்கள். பாரதிதாசனின் வாரிசுகள் என இவர்களைச் சுட்டும் முறையில் வானம்பாடி இதழ்களில் வெளிப்படையான குறிப்பு எதுவும் இல்லை. தமிழுக்கு வழிபாடு செய்யும் கவிதை என ஒன்றுகூட இல்லை. திராவிடர் இயக்க அரசியலைக் கடுமையான முறையில் விமர்சனம் செய்யும் சில கவிதைகள் இருக்கின்றன. சிற்பியின் ‘மதுரை வீரன்’. ‘ஞானபுரத்தின் கண்கள்’ ஆகிய கவிதைகள் இப்படிச் சொல்வதற்கான ஆதாரம். பாரதியின் மரபைப் போற்றும் இவர்களுக்குள் இந்திய தேசம் பெரிதாகத்தான் தெரிகிறது. இராமாயண, மகாபாரத வீரர்கள் இவர்களின் கவிதைகளுக்குள் அடிக்கடி வந்து போகிறார்கள். புதிய இராமனைப் படைக்கிறார்கள். பாரதக் கண்ணனைத் திரும்ப அழைக்கிறார்கள். ஞானி, கங்கை, அக்கினி முதலியவர்களின் கவிதைகள் இப்படிச் சொல்வதற்கான ஆதாரங்கள். அக்கினி வேள்வியில் ஆகுதி ஆவதற்காக அக்கினி புத்திரன் பாடுகிறார். பாரத தேசத்தைச் சீரழிக்கும் அரசியல்வாதிகள் பற்றி இவர்கள் ஆத்திரம் கடுமையானதுதான். அநேகமாக இவர்கள் அனைவர்க்குள்ளும் உலக மனிதர் என்ற படிமம் வலுவாக இருந்தது. தமிழர் என்ற இன உணர்வைக் கடந்து இந்தியராகவும் உலக மனிதராகவும் இவர்கள் தம்மைக் கண்டார்கள். தமிழர் என்ற இன உணர்வு இவர்களின் கவிதைகளில் இல்லாமைக்கு, திராவிட இயக்கத்தின் அரசியலில் ஏற்பட்ட பின்னடைவைக் காரணமாகச் சொல்லலாம். வலதுசாரி, இடதுசாரி, புரட்சி சார்பு ஆகியவற்றோடு தொடர்புடைய மார்க்சிய இயக்கங்கள் தமிழ் இனம் என்பதற்கு எதிரான உணர்வு கொண்டிருந்தன என்பதையும் காரணமாகச் சொல்ல முடியும். இவர்கள் தம் மனித நேயத்தை உலக அளவிலானது எனக் கண்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வின் இன்னொரு பரிமாணமாக மூன்றாம் உலகச் சார்பு இவர்களின் கவிதைகளுக்குள் இடம் பெற்றது. வானம்பாடிகள் மூலம் தமிழ்க்கவிதை இவ்வாறு உலக கவிதையின் பகுதியாகத் தன்னைக் கண்டது. திராவிட இயக்கத்திற்கு எதிர்நிலைப் போக்கை இவர்கள் மேற்கொண்ட போதிலும் திராவிட இயக்கத்தின் மேடைத்தோரணை இவர்களுக்குள் அழுத்தமாகப் பதிந்திருந்தது. வானம்பாடிகளில் கட்சிக்காரர்கள் இல்லை என்பது உண்மைதான். இவர்களில் எவரும் கட்சி உறுப்பினராக இருக்கவில்லை. கட்சியோடு தொடர்புடையவர்கள் என இவர்கள் சந்தேகத்திற்குள்ளாகி விசாரணைகளுக்குட்பட்டதுண்டு. கட்சிக்காரர்கள்தான் என்று இவர்களைச் சிலர் குற்றம் சாட்டவும் செய்தனர். இதன் காரணமாகவும் இவர்களில் சிலர் தொல்லைக்குள்ளாயினர். இவை பற்றியெல்லாம் இவர்கள் கவிதைகள் எழுதினார்கள். ஒவ்வொரு இதழின் முகப்புக் கவிதை, மொழியாக்கம் செய்யப்பட்ட முகப்புக் கவிதைகள், இப்படி எதிராளிகளுக்குப் பதிலாக அமைந்தன. கட்சிக்காரர் இவர்களைத் தம் எல்லைக்குள் இழுத்துக் கொள்ள முயன்றதும் உண்டு. நெருக்கடி நிலைக்காலத்தில் இவர்களில் சிலர் கூடுகளில் அடைபட்டனர். ‘எங்களைத் தாங்க எந்தக் கூட்டுக்கும் வலிமை இல்லை’ என்ற இவர்களின் பிரகடனம் உண்மையாகவில்லை. தனக்கென தனிக்கூடுகள், குழுக்கள் அமைத்துக் கொள்ளவும் நேர்ந்தது. தமக்குள் வரித்துக் கொண்ட சமூக உணர்வை இவர்களில் யார்யார் மேம்படுத்திக் கொண்டனர் என்ற கேள்விக்கு எப்பொழுதும் இடம் இருக்கிறது. இன்று நினைத்துப் பார்க்கிற போது, இயக்கம் என இவர்கள் ஒன்றுபட்டு இல்லையாயினும் தனித்தனிப் பாதைகளில் இவர்கள் முன்னோக்கித்தான் சென்றிருக்கின்றனர் என்பதைக் காணமுடியும். அன்று இவர்களுக்குள் விழுந்த வித்துக்கள் வீணாகிவிடவில்லை. தமிழ்க்கவிதை வரலாற்றில் இவர்கள் தொடங்கிய பயணம் ஓய்ந்துவிடவில்லை. இவர்களின் புதிய முறைக் கவிதையைத் தொடக்கத்தில் எதிர்த்த மார்க்சிய வட்டாரம், இவர்களின் கவிதைச் சாலைக்கு பின்னர் வந்து சேர்ந்தது. கட்சிக்கு வெளியில் இவர்கள் தொடங்கிய இயக்கம் கட்சிக்காரர்களின் கவிதைப் பார்வையை மாற்றியிருக்கிறது. எந்த அளவில் என்பது ஆய்வுக்குரியது. வானம்பாடிகளின் கவிதை இயல் என்ற முறையில் இவர்களின் கவிதைக்கான ஆக்கக் கூறுகள் சிலவற்றை இப்பொழுது பார்க்கலாம். எந்த ஒரு கவிதை இயக்கமும் சமூக அளவிலான பல்வகை இயக்கங்களின் முரணில்தான் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறது. அன்றியும் தன்னைத் தக்கவைத்துக் கொள்கிறது. முரணியக்கத்தின் பகுதியாகத் தான் தம் இயக்கமும் தாமும் இருப்பதைக் கவிஞர்கள் அறிவுரீதியாகப் புரிந்து கொள்வது அவசியம். ஆனால் இப்படி நடைபெறுவதாகத் தெரியவில்லை. வானம்பாடிக் கவிஞர்களும் இந்த விதிக்கு விலக்கானவர்களாக இல்லை. கவிதை இயக்கம் அது தோற்றம் கொள்ளும் கால அளவிலான சமூகத் தேவையோடு தொடர்பு கொண்டிருக்கிறது. அறிவுரீதியாக இந்த அம்சத்தை வானம்பாடிக் கவிஞர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். எந்த அளவில் என்பது மீண்டும் கேள்விக்கு உரியதுதான். கவிதைக்குள் சமூகத்தை, அரசியலை இவர்கள் கொண்டு வந்தார்கள் என்பது இன்றளவும் இவர்கள் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டு. கவிதையிலிருந்து முற்றாக சமூக உணர்வை அல்லது அரசியலை நீக்கிவிட முடியுமா? என்பது ஒரு கடுமையான சிக்கல் தமிழ்க் கவிதைகளைப் பொறுத்தவரை சங்ககாலம் முதற்கொண்டு சமூக உள்ளடக்கத்தை ஏதோ ஒரு வடிவில் தாங்கியிருக்கின்றன. கவிதையில் நீதி என்பது எப்பொழுதுமே வற்புறுத்தப்பட்டிருக்கிறது. நம் காலத்தில் சோசலிசம் என்பது நீதி உணர்வின் இன்னொரு தொடர்ச்சி . அரசியல் அல்லது கட்சி அரசியல் கவிதைக்குள் வரும்பொழுது சில சமயம் பிரச்சார நெடி வீசுகிறது. பிரச்சாரம் எந்த அளவில் இருந்தால் நெடி வெளிப்படும் என்பதைத் தீர்மானமாய்ச் சொல்லவும் முடியாது. தமிழ்க் கவிதை மரபின் தொடர்ச்சியில்தான் வானம்பாடிக் கவிஞர்கள் தம்மைக் காண்கிறார்கள். புலமை மரபிலிருந்து தம்மை வெட்டிக் கொள்கிற அதே சமயத்தில் தமிழ் மரபிலிருந்து இவர்கள் தாண்டிச் செல்லவில்லை. பாரதியின் வாரிசுகளெனத் தம்மை இவர்கள் கருதுவது இதனால்தான். கவிதையில் நீதி உணர்வு வெளிப்படுகிறது என்று சொல்லும் பொழுது, கவிதையை ஒரு கவிஞர் தனக்காக எழுதிக்கொள்கிறாரா, பிறர்க்காக எழுதுகிறாரா, என்ற கேள்வி எழும். சமூகத்தில் அநீதி அழியவும், நீதி தழைக்கவும் கவிஞர் பாடுகிறார்கள். இவ்வகையில் கவிதை என்பது மந்திர உச்சாடனம் ஆகிறது. சமூக நீதிக்கு எதிரானவர்களைக் கவிதை சாடுகிறது. அநீதியாளர்களைக் கவிஞன் சபிக்கிறான். இக்கவிதைகளைப் படிக்கும் வாசகர்க்குள்ளும் இந்த உணர்வு தூண்டப்படுகிறது. வாசகர்களுக்குள்ளிருக்கும் குறைந்த அளவிலான சமூக உணர்வை கவிதை மேலும் தூண்டுகிறது. மேடையில் யாரும் கவிதை எழுதுவதில்லை. மேடையில் இருந்தபடியே கவிதை எழுதுகிறவரும், தனியே இருந்து எழுதும் கவிதையைத்தான் நகல் செய்ய முடியும். இப்படி சமூகத்திற்காக எழுதும் கவிஞர்க்குள்ளும் கவிதை கேட்கும் வாசகன் ஒருவன் இருக்கிறான். அந்த வாசகனைத் தனக்குள் எழுப்பிக் கொண்டு தான் கவிஞன் கவிதை படைக்கிறான். இவ்வாறு தனக்காக, எழுதிக் கொள்ளும் கவிதையும் சமூகத்திற்காக எழுதப்படும் கவிதையாகிறது. சமூகத்தின் தொடர்பு இல்லாமல் கவிதையாக்கம் இல்லை என்பதைத் தான் இங்கு மீண்டும் புரிந்து கொள்கிறோம். வானம்பாடிகள் இப்படித்தான் சமூக உணர்வைத் தாங்கிக் கவிதை எழுதினார்கள். சமூக உணர்வு என்பதில் அரசியல் முன்னிலை வகித்தது. சனநாயகம் சீர்குலைந்தது பற்றி எழுதினார்கள். சமூகத்தில் பெண்கள் நிலை பற்றி எழுதினார்கள். அரசியல் குரல் இவர்களுக்குள் ஓங்கித்தான் ஒலித்தது. சமூக உணர்வைத் தாங்கி எழுதிய வானம்பாடிக் கவிஞருக்குள் இருந்த ஒரு தனித்தன்மை பற்றி இங்கு சொல்ல வேண்டும். இமயப் பறவைகள் நாம் எரிமலையின் உள்மனம் நாம். அக்கினிக் காற்றிலே இதழ் விரிக்கும் அரும்புகள் நாம். திக்குகளின் புதல்வர்கள் நமது சிறகசைப்பில் ஞான நரம்ப திரும். இப்படி தமிழன்பனின் கவிதையில் வானம்பாடிகளின் பிரகடனம் வெளிப்பட்டது. தமிழன்பன் மட்டுமல்லாது, வானம்பாடிக் கவிஞர்கள் அனைவரும் இம்மாதிரிப் பிரகடனங்களை வெளியிட்டார்கள். கவிதையில் அரசியல் கூடாது என்ற கருத்துடையவர்களுக்கு இத்தகைய பிரகடனங்கள் நாராசமாய் ஒலித்தன. ஏகாதிபத்தியத்திற்கெதிரான போர்க்களத்தில் மக்கள் அனைவரையும் திரட்டும் போர்க்குரலாய் மார்க்சியம் எழுந்தது. இந்தப் போர்க்குரலை உள்வாங்கிக் கொண்டவர்கள் வானம்பாடிகள். சமூக இயக்கத்தில் இவர்கள் தம்மைக் கண்டார்கள். சமூகம் தங்களுக்குள் அலை மோதுவதை உணர்ந்தார்கள். தாங்கள் தனிமனிதர்கள் என்பதைக் காட்டிலும் சமூக மனிதர்கள் என்ற புள்ளியில் தம்மைக் குவித்துக் கொண்டார்கள். வரலாற்றுக் காலம் முழுவதும் அடிமைப்படுத்தப்பட்டவர்களின் ஆவேசத்தை தமக்குள் உணர்ந்தார்கள். அலையடிக்கும் சமூகம் என்ற கடலில் தம்மை அலையாகக் கண்டு ஆர்ப்பரித்தார்கள். இடிக்குரலில் முழங்கினார்கள். நான் மண்ணில் வேரோடி மாநிலத்தில் கால் பதித்து வீசும் புயற் காற்றை விழும் வரைக்கும் நின் றெதிர்ப்பேன். நின்றெதிர்த்த முடிவினில் நான் நிலத்தில் விழுந்துவிட்டால்….. என் கன்றெதிர்க்கும்! கன்றுகளின் கன்றெதிர்க்கும் கன்றுடைய கன்றெதிர்க்கும் ! மேத்தாவின் இந்த வரிகளைக் கேட்ட போது மக்கள் ஆர்ப்பரித்தார்கள். கவிஞர்கள் தமக்குள் ஒரு பேரலையைக் கண்டார்கள். மானுடக் கடலில் தாம் சங்கமமாவதை உணர்ந்தார்கள். வரலாற்றின் பேராற்றல் இவர்களுக்குள் திரண்டது. மேத்தாவின் மூலம் வெளிப்பட்ட இந்த ஆர்ப்பரிப்பை வானம்பாடிகள் பலரும் கொண்டிருந்தார்கள். இத்தகைய வெளியீட்டின் போது ஓர் அற்புதம் என நாம் ஒன்றைக் காண்கிறோம். சமயத்துறையில் அத்துவைதம் பற்றி நமக்குத் தெரியும். சமூக உணர்வுத் தளத்தில் அத்துவைத உணர்வு ஒருமை நிலையை வானம்பாடிக் கவிஞர் தமக்குள் கண்டு பூரித்தார்கள். பகவத் கீதையின் கண்ணனின் வீசுவரூப தரிசனத்திற்குள் அர்ச்சுனன் தன்னைக் கண்டான். வானம்பாடிக் கவிஞர்கள் இத்தகைய சமூக விசுவரூபத்தினுள் தம்மைக் கண்டார்கள். இந்து மத உணர்வுக்கு இவர்கள் பலியாகி விட்டார்களென்று அன்று யாரும் இவர்களை ஏசவில்லை. மார்க்சியம் இந்துமதமாகிவிட்டது என்று யாரும் குற்றம் சொல்லவில்லை. பகவத் கீதைக்கும் சமூகத் தளத்திலிருந்து ஒரு புதிய பொருள் காணும் போக்கு அன்று வந்தது. விமர்சகர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிட்டார்கள். ‘எந்தக் கண்ணன் இங்கு பிறந்தால்’ என்ற கங்கையின் வாசகம் அவரது தனிக்குரல் அல்ல. அக்கினி வேள்வியில் ஆகுதி ஆவதற்கு வானம்பாடிக் கவிஞர்கள் தம் மனதைத் திறந்து வைத்திருந்தார்கள். மேலும் ஒன்று: வானம்பாடிக் கவிஞர்களில் பலர் தமிழிலக்கிய பாரம்பரியத்தினுள் உரம் பெற்றுத் தழைத்தவர்கள். தமிழிலக்கியத்தின் கவிதைக் கிளைகள் ஆலமரம் போல கிளைகள் செழித்தவை. இந்தக் கிளைகளில் எத்தனையோ வகை அழகுகள் செழித்திருந்தன. சொற்கோலங்களும், கற்பனைத் திறன்களும், தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தின் வளங்களாக விளங்கின. இந்தப் பாரம்பரியத்தின் உள்ளிருந்து தமிழ்க்கவிஞன் எழும்போது இந்த ஆலமரத்தைத் தனக்குள் தாங்கியவனாகத்தான் எழுந்து நிற்பான். சிற்பியின் கவிதைகளில் இந்த ஆலமரத்தின் விரிவை நாம் எப்போதும் காண்கிறோம். நிலத்தின் வளம் அதன் விளைச்சலில் தெரிவதுபோல் தமிழின் வளம் கவிஞனுக்குள் வெளிப்படுகிறது. இளமுருகு, அக்கினி, தமிழன்பன் இவர்களின் கவிதைகள் எப்பொழுதும் காடுகளாய் விளைகின்றன. இவர்களின் கவிதைகளுக்குள் அடர்த்தி அதிகம். அழகுகளும் அதிகம். தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தை ஒரு கல்வியாக தமக்குள் கொள்ளாதவர்களின் கவிதையில் இந்த அடர்த்தி இல்லை. இவர்களின் மேடைத் தோரணையை இங்கு சேர்த்துச் சொல்லலாம். வானம்பாடிக் கவிஞர்களுக்குள் திராவிட இயக்கத்தின் மேடைத் தோரணைதான் வெளிப்பட்டது என்பதில்லை. பக்தி இயக்கக் காலங்களில் கூட்டமாய்ப் பலர் சேர்ந்து வழிபாட்டுப் பாடல்கள் பாடுவதை நாம் அறிந்திருக்கிறோம். கோயில் திருவிழாக்கள் ஊர்வலங்கள் பற்றி அறிகிறோம். தமிழ்ப் பாரம்பரியத்திற்குள் இப்படித் தொடர்ந்து சென்றால் சமூக உணர்வின் பேரோசையை எல்லாக் காலக் கவிதைகளிலும் காண்கிறோம். கோயில் திருவிழாக்களைப் போலவே, கோயில் கட்டடங்களும், கோபுரங்களும், பிரகாரங்களும் பெரியவை. இவ்வகைப் பாரம்பரியத்தினுள் கலந்திருந்தது ஒருவகைப் பூரிப்புணர்வு. பரவச உணர்வு. பக்தியில் வெளிப்பட்டது இந்தப் பேருணர்வு. திருத்தக்க தேவர் காவியத்தில் இயற்கையின் அழகைப் பலமடங்கு பெருக்கிப் பார்த்தது இந்தப் பேருணர்வு. புராணங்களிலும் காவியங்களிலும் வெளிப்பட்டது. இந்தப் பேருணர்வுதான். வானத்தையும் பூமியையும் இணைத்தது இந்தப் பேருணர்வு. இந்தப் பேருணர்வின் வசந்தத்திலிருந்து தமிழன் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது. இதைச் சொல்வதற்கு உச்ச உணர்வுத் தோரணை தேவை. வானம்பாடிகளுக்குள்ளும் இருந்தது. இந்தத் தோரணைதான் திராவிட இயக்கத்தவரின் தமிழ் சார்ந்த பெருமிதத்துக்குள்ளும் பேருணர்வின் தோரணைதான் செயல்பட்டது. தமிழகச் சூழலில் மார்க்சியத்தினுள்ளும் இந்தப் பேரலை அடிக்கத்தான் செய்தது. உலக அளவில் விரிந்த பார்வை இந்தப் பேரலையின் வீச்சுக்கு இன்னொரு காரணம். உண்மையில் கவிதை என்பது தனிமனிதனை சமூக உணர்வின் வயப்படுத்துகிறது என்பதை இங்கு மீண்டும் காண்கிறோம். கவிதைக்குள் பதிந்திருக்கிற மந்திரத்தின் ஆற்றல் என்றும் அழிவதாக இல்லை. இவ்வகையில் வானம்பாடிக் கவிதை பெற்ற வெற்றியை நாம் புரிந்து கொள்ள முடியும். மீண்டும் பாரதியின் தொடர்ச்சியில் வைத்துத்தான் வானம்பாடிகளை நாம் பார்க்கிறோம். சமூக உணர்வின் வயப்பட்டுக் கவிஞன் படைக்கிறான் என்பது ஓர் உண்மை. சமூக உணர்வு வயப்பட்ட நிலையில் கவிஞன் தன்னைக் காண்பதில்லை. சமூக உணர்வின் எத்தகைய / எத்தனை பரிமாணங்களைக் கவிஞன் தனக்குள் எழுப்பிக் கொள்ள முடியும்? சமூக உணர்வின் வயப்பட்ட நிலையில் கவிஞன் தன்னை இழந்துவிட முடியுமா? மேடைத் தோரணை இவனுக்குள் பெருமித உணர்வை எழுப்பும். பெருமிதத்தின் வயப்பட்டு இவன் தன்னை இழந்துவிட மாட்டானா? பாட்டாளி வர்க்கம் எனச் சொல்லிக் கொள்கிறபோதே தான் மத்தியதர வர்க்கம் என்பதைக் கவிஞன் மறைத்துக் கொள்ள முடியுமா? சமூக உணர்வு என்ற தளத்திலிருந்து இவன் எழுப்பும் பிரகடனங்கள் இவனை அடைத்துக் கொள்ளாதா? இவன் தன்னை எப்படிப் புரிந்து கொள்கிறான்? என்னவெனப் புரிந்து கொள்கிறான்? இவன் விரும்புகிற புரட்சி இவன் விரும்புகிற குறுகிய கால அளவில் நடைபெறுகிறதா, இவன் விரும்புகிறதைப் போல ஆதிக்க சக்திகள் தகர்ந்து விடுகின்றனவா, உண்மையில் ‘தான்’ என்ற உணர்வு அற்று சமூகப் பேருணர்வு என்ற வெள்ளத்தில் இவன் கலந்தானா? தன்கால வரலாற்றை இவன் எவ்வாறு புரிந்து கொண்டான். முதலாளியமும் ஏகாதிபத்தியமும் இவனுக்குள்ளும் செயல்படுவதை இவன் புரிந்து கொள்ளவில்லையா? தன் கவிதை கேட்டு மக்கள் கைதட்டுகிற போது இவனுக்குள் எழும் பெருமிதமும் மன உணர்வும் எங்கிருந்து எழுகின்றன. மேடையில், உயரத்தில் நின்று இவன் எப்படித் தன்னை அலங்கரித்துக் கொள்கிறான்? மேடையில் இடம் தேடி இவன் ஏன் அலைகிறான்? கவிதைக்குள் திரும்பத் திரும்ப ஒரே வண்ணத்தை இவன் ஏன் குழைத்துப் போடுகிறான்? இவனுக்குள் உள்முகப் பார்வை ஏன் அற்றுப் போனது. தனியே இருக்கும்பொழுது இவன் மனம் இவனைத் தின்னவில்லையா? இவன் தனக்குள் ஆதிக்கவாதியைக் காணவில்லையா? தனக்குள் ஒரு வணிகனை, வேசியை இவன் உணரவில்லையா? புரட்சி என்ற நெருப்பில் குதிக்க இவன் ஏன் தயங்குகிறான்? தன் குடும்பத்தை இவன் ஏன் துறக்கவில்லை. பொருளின் ஆதிக்கத்தை இவன் தனக்குள்ளிருந்து வெளியேற்றினானா? பெண்களைப் போதைப் பொருளாகப் பார்த்து ரசிப்பதை இவன் விட்டுவிட்டானா? மார்க்சியத்தை இவன் சார்ந்து நிற்கிற அதே சமயத்தில் மார்க்சியத்தினுள்ளும் ஆதிக்கம் வேர்கொள்வதை இவன் புரிந்து கொள்ளவில்லையா? இப்படியெல்லாம் ஒரு நூறு கேள்விகளை எழுப்பி வானம்பாடிகளுக்குள் அவர்களின் கவிதைகளுக்குள் தேடிச் செல்ல முடியும். இவ்வாறு தேடிச் சென்றால் வானம்பாடிகள் பலர்க்குள் மெய்யறிவின் தோட்டம் இல்லை என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். தத்துவ வறட்சி என்பதைக் கவிதை அழகியல் கொண்டு மூடி மறைத்துவிட இயலாது. திராவிட இயக்கத்தினுள் தத்துவப் பார்வை செழிக்கவில்லை. தத்துவம் என்றாலே மதம் என்றுதான் பகுத்தறிவுவாதம் பொருள்படுத்தியது. மார்க்சியத்தினுள்ளும், பொருள் முதல்வாதத்தையே தத்துவம் எனச் சாதித்துக் கொண்டிருந்தனர். தமிழ்ப்புலவர்களைப் பொறுத்தவரை ஒரு பகுதியினர் சைவம் பற்றிப் பேசினர். இன்னொரு பகுதியினர் தமிழையே தெய்வம் ஆக்கி வழிபாடு செய்தனர். தற்காலச் சமூகத்தினுள் நெருக்கடிகள் முற்றிவரும் நிலையில் தத்துவத்தின் தேவையை இவர்கள் அறியவில்லை. தாம் வரித்துக் கொண்ட நிலைபாடுகளைப் புதுப்பித்துக் கொள்ளவில்லை. புதுக்கவிஞர்கள் மத்தியில் இருத்தலியல் மெல்லத் தலைகாட்டியது. அதை இவர்கள் ஏற்கவில்லை. இனி விஞ்ஞானம்தான் மனிதனை ஆட்சி செய்யும். தத்துவம் அல்ல என்ற அறிவுவாதத்தை மார்க்சியரும் பகுத்தறிவுவாதிகளும் பரப்பினார்கள். வானம்பாடிகளின் கவிதைகளுக்குள் விஞ்ஞான வழிபாட்டை நாம் காணமுடியும். இளமுருகுவின் சில கவிதைகள் இதற்கு ஆதாரம். ‘ஞானபுரத்தின் கண்கள் திறக்குமா?’ என்று கேள்வி எழுப்பிய கவிஞருக்குள் ஞானம் திறந்து கொள்ளவில்லை. மதுரைவீரன் உருவம் மழையில் நனைந்து கரைந்தது. அனுபவ நெருப்பின் சூடுபட்டிருந்தால்….. என்று கவிஞர் சிந்திக்கிறார். அனுபவநெருப்பு என்பது அகத்திலிருந்து சுடர்விட வேண்டும். சாவி வேண்டுமா என்று அடுத்தவர்களை நோக்கிக் கேட்கிறார். தன்னைத் திறந்து கொள்கிற சாவியை அவர் தேடவில்லை. ‘எனக்குள் இருக்கிற வீடு என்று நித்திலன் விரல் நீட்டிச் சுட்டினார். பிற கவிஞர்கள் தமக்குள் அந்த வீட்டைக் கண்டுபிடிக்கவில்லை. பகலில் வானவெளியெல்லாம் சுற்றி, செல்வந்தர் மாளிகை முற்றங்களில் எச்சம் இட்டு, பின்னர் ஏழைக் குடிசைகளில் தங்கி அப்புறம் இரவில் தன் மனத்திற்குள் வந்தமரும் பறவை பற்றிப் புவி சொல்கிறார். வானம்பாடி இயக்கம் சிதைந்த பிறகு வாழ்வின் அர்த்தம் என்ன? என்ற கேள்வியை புவி தன் கவிதையில் எழுப்பினார். அப்புறம் மீறல் கவிதைகளைப் படைத்தார். மெய்யறிவுத் தேடல் புவிக்குள் செயல்பட்ட மாதிரி ஞானிக்குள்ளும் செயல்பட்டது என்பதைக் ’கல்லிகை’ காட்டுகிறது. தேடிப் பார்த்தால் ஒவ்வொருவர்க்குள்ளும் சில துளிகள் அளவுக்கேனும் மெய்யறிவுத் தேடல் கிட்டும். ஆனால் சில துளிகள் அளவுக்குத்தான் அதிகம் இல்லை. கவிதைக்கும், தத்துவத்திற்கும் இடையில் உறவு தேவை இல்லை என்று வானம்பாடிக் கவிஞர்களில் சிலர் வெளிப்படையாகப் பேசினார்கள். கவிஞனுக்குத் தத்துவம் தேவையில்லை என்றும் பேசினார்கள். அகலாது அணுகாது தீக்காய்வது போலத் தத்துவத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். தம் கவிதைகளை விமர்சனம் தீண்டமுடியாது என்ற முறையில் கவிதைகளும் எழுதினார்கள். விமர்சகர்களை வெட்டுக்கிளி என சக்திக்கனல் ஒரு கவிதையில் எழுதினார். தத்துவ நபும்சகர் என இன்னொருவர் எழுதினார். இப்படி எழுதியவர்களில் சிலர் இன்றுவரை மதத்தை ஒதுக்கவில்லை. கடவுளரை ஒதுக்கவில்லை. மதத்தின் வழியேயும் கடவுள் என்ற கருத்தின் வழியேயும், இவற்றைக் கடந்தும் இயங்குவது தத்துவம் என்ற பார்வை வானம்பாடிகளுக்கு இல்லை. இத்தகைய பார்வை இன்மை காரணமாகத்தான் அரசியல் கவிதைகள் என்ற பெயரில் கடுமையான தாக்குதல்களை முன் வைத்தார்கள். இவ்வகைக் கவிதைகள் மனத்தின் மேல்தளத்தில் உருவான கவிதைகள். இதன் காரணமாகக் கோபத்தையும், கூச்சலையும் இக்கவிதைகள் தமக்கு வடிவமாகக் கொண்டிருந்தன. இதன் காரணமாகத்தான் திரும்பத் திரும்ப உவமைகள், உருவகங்கள் என்ற எல்லைகளை இவர்கள் கடந்து செல்ல முடியவில்லை . உவமைகளையும் உருவகங்களையும் இவர்கள் திரும்பத் திரும்பப் படைத்துப் படிமம் எனச் சாதித்தார்கள். கவிதைகளுக்குள் நிறைய வார்த்தைகளைக் கொட்டினார்கள். சொற்களுக்கு அப்பாலும் கவிதை இயங்கும் என்ற உண்மையை இவர்கள் தேவையான அளவு கண்டு கொள்ளவில்லை. மனத்தின் மேல் தளத்தில் இவர்கள் வாழ்க்கை நடத்தினார்கள். மனத்தின் உள் ஆழங்களுக்குள் இவர்கள் செல்லவில்லை. தர்முசிவராமு, ஞானக்கூத்தன், அபி ஆகியவர்களின் கவித்துவத்தை இவர்களால் காணமுடியவில்லை . இந்நிலையில் இவர்களிடம் விரிவு பெற்றது வசன கவிதைதான். தமிழ்நாடன் தன் காம ரூபத்தைக் கடந்தும் தனக்குள் மஞ்சள்தனம் செயல்படுவதைக் கண்டிருக்க வேண்டும். இந்த மஞ்சள்தனம் எல்லோருக்குள்ளும்தான் உறைந்திருக்கிறது. வாழ்க்கையின் மீது ஆபாசமான வெறி, ஆதிக்க வெறி எல்லோர்க்குள்ளும் வேர்விட்டு கிளை பரப்பியிருக்கிறது. இதன் வழியே மனித ஆளுமை சிதைந்து நாறுகிறது. சுயபலம் இழந்து தவிக்கிறது. சிதைவுகளுக்கிடையில் தனக்கான ஆதாரம் தட்டுப்படவில்லை. போதைக் கூச்சல் போலிக் கூச்சலாகிறது. வண்ணங்கள் வெளிறுகின்றன. தனக்குள் கருடன் சிறகு விரித்திருக்கிறான். காந்தியை, சோசலிசத்தைக் கொன்றவர் கூட்டத்தில் நானும்தான் இருக்கிறேன். ஆதிக்கவாதி என் மூலமாகவும்தான் தன் ஆதிக்கக் கோட்டையை வலுவாகக் கட்டியிருக்கிறான். இனியும் இவனோடு வாழ்க்கை நடத்த என்னால் முடியாதென்று ஆதிக்கக் கணவனை நோக்கி அவன் மனைவி கூறுவதை இளமுருகு சித்திரிக்கிறார். இந்தக் கணவன் நமக்குள்ளும்தான் இருக்கிறான். நமக்குள்ளும் காமாலைக் கண்கள் இருக்கின்றன. சோனார் வங்கத்தில் அந்த இளம் பிஞ்சுகளைக் காயப்படுத்தியவர்களில் நாமும்தான் இருக்கிறோம். இப்படிப் பார்வை கொள்வது மனநோயல்ல. மனத்தின் விரிவு.மேல்தளத்திலிருந்து மனத்தின் அடித்தளம் நோக்கி விரிகிற பார்வை, அடிமனத்தில் பேய் பிசாசுகள்தான் உறங்கும் என்பது சரியில்லை. இதனுள் ஆழ்ந்து சென்றால் தெய்வங்களும் தென்படும். கடந்து சென்றால் வெட்டவெளி என்னும் சூரியனின் உதயம் - பொதுமை நிலம் - ஆதிவாசியின் குடியிருப்பு - உடைமைகளை, ஆதிக்கத்தை உடைத்து எறியும் ஆதிவாசி - எல்லோரோடும் தன்னைப் பகிர்ந்து கொள்ளும் சந்நியாசி - கவிதைக்குள் இயங்கும் தத்துவப் பார்வை இந்த ஆதிவாசியைக் கண்டெடுப்பது வரை ஆழப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த இடத்திலிருந்து கவிதைகள் பூச்சொரியும். தொன்மங்கள் சிறகு விரிக்கும். அன்பு வற்றாத நதியாகி ஓடும். நம்மை உடன் இழுத்துச் செல்லும். வானம்பாடிகளின் பயணம் இவ்வளவு ஆழப்படவில்லை. வானம்பாடிகளின் கவிதைகளை வசனகவிதைகள் என்று கூறினோம். எழுத்து வழியே வந்த புதுக்கவிதையின் தாக்கம் வானம்பாடிகளின் வசன கவிதைகளுக்குள்ளும் செயல்பட்டது. சான்றாக தேனரசனின் இரு கவிதைகளைக் குறிப்பிடலாம். ஆதிவாசிகள் என்று இவர் சுட்டுகிற போது இவர் தரும் விவரிப்புகளின் பலம் ‘பகல் வெளிச்சத்தில் கண்கூசும் ஆதிவாசிகளாக’ நமக்கு நாமே தெரிகிறோம். இன்னொரு கவிதையில், அழகாக வர்ணிக்கும் கவிஞர், அப்புறம் ‘சே உனக்கு அடியில் எந்தச் செடியும் முளைக்காதாமே’ என்று முடிக்கிறார். ஆலமரம் நமக்கு பல பரிமாணங்களில் அர்த்தப்படுகிறது. இவ்வகைக் கவிதைகள் தொனிப்பொருள் கொண்டவை. கவித்துவச் செறிவு மிக்கவை. இவ்வகைக் கவிதைகள் வானம்பாடிக் கவிதைகளின் எண்ணிக்கையில் மிகச்சில என்று சொல்ல வேண்டும். வானம்பாடியின் கல்யாண்ஜி ‘நீ’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இக்கவிதையின் உள்ளடக்கம் ‘புரட்சி’. இதை எவ்வளவு அழகாய் நம் கண்முன் கொண்டு வருகிறார். கல்யாண்ஜிக்குள்ளும் நாம் இப்படி ஒரு அற்புதக் காட்சியைக் காண்கிறோம். வானம்பாடி இயக்கம் அற்றுப் போன காலத்தில் வானம்பாடிக்குள் வந்தவர் கல்யாண்ஜி. தமிழ் இலக்கியக் கல்வியில் ஊறாதவர்கள் சிலர் வானம்பாடிகளுக்குள் இருந்தனர். இவர்களில் கங்கை குறிப்பிடத்தக்கவர். புதுக்கவிதைத் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டவர்களில் கங்கை முதன்மையானவர். ‘அகப்பட்டுக் கொண்டாயா?’ என்று சுந்தரம் ஒரு கவிதை எழுதினார். சொற்கோலங்கள் கவிதையில் அறவே இல்லை. ஏவாள் காலம் முதல் சீதையின் கற்பு, கண்ணகியின் கற்பு என ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். சிவப்பு முக்கோணம் வந்த பிறகு ஆண் இப்பொழுது அகப்பட்டுக் கொண்டான் என்று ஆண் ஆதிக்கத்தைக் கேலி செய்கிறது இக்கவிதை. ஜீவ ஒளியின் ஒரு கவிதை. ஒரு குடிசையில் ஒரு மெழுகுவர்த்தி வேண்டினோம். இப்பொழுது வானமே தீப்பற்றி எரிகிறது என்கிறார் ஜீவஒளி. சிலவரிகளில் அற்புதமாய் ஒரு கவிதை எழுந்திருக்கிறது. புதுக்கவிதைத் தாக்கத்தின் விளைச்சல்களென இக்கவிதைகளைச் சொல்லலாம். ராயப்பன், தமிழவன், அறிவன் போன்றவர்களின் கவிதைகளும் இத்தகையவை. புவியரசின் கவிதைகள் பலவற்றை வசனகவிதை என்று சொல்வதுதான் பொருந்தும். எனினும் ஏசுவை மையப்படுத்தி இவர் எழுதியிருக்கிற இரண்டு கவிதைகளில் ஏசு ஒரு புரட்சிக்காரனை உணர்த்தும் ஒரு குறியீடாகிறது. ஏசுவுக்குள்ளிலிருந்து நம் காலத்திற்கான அர்த்தங்களை எடுக்கிறார் புவியரசு. ஜீவஒளியின் கவிதையில் வானமே தீப்பற்றி எரிகிறது என்றார். எங்கும் புது வெளிச்சம் தெரிகிறது. புதிய தத்துவம் நமக்குள் எழுந்திருக்கிறது என்பதை இக்கவிதை குறிப்பதாகக் கொள்ளலாம். இது கவிதையின் தொனிப்பொருள். நான் மரணத்தைப் பற்றி சிந்திக்கிறேன் எனப் புவியரசு ஒரு கவிதை எழுதினார். சாவே உன்னைச் சந்திக்க இப்பொழுது எனக்கு நேரமில்லை. யாருக்காக எனது எழுதுகோல் தாலிகட்டிக் கொண்டிருக்கிறதோ அவர்களுக்காக என் அக்கினிப் பூக்களை அர்ச்சிக்கும் அந்தப் புனித வேளையில் வா. உன்னை சந்திப்பதற்கான நேரம் எனக் கவிஞர் முடிக்கிறார். வானம்பாடிக் கவிதைகளில் இவ்வகைப் புதிய ஒளித் தெறிப்புகள் அரிதாகவே கிடைக்கின்றன என்றாலும் இந்தப் புதிய ஒளி, வாழ்க்கையின் நெற்றியில் திலகமாக, தலையில் மகுடமாக, நெஞ்சில் உரமாக நமக்குக் கிடைக்கிறது. வானம்பாடியின் அழகியல் என்று நாம் தேடுகிற போது இவ்வகைக் கவிதைகள் தமிழின் சிறந்த கவிதைகளில் சேருகின்றன. புதுக்கவிதையில் நீண்ட கவிதைகளோ காவியங்களோ எழ வாய்ப்பில்லை. புதுக்கவிதையில் கதை சொல்லவும் இயலாது. ஒரு கணநேர ஒளித்தெறிப்பாகப் புதுக்கவிதை எழுகிறது. ஒரு மின்னல் வெட்டில் உலகப் பரப்பைக் காண்பது மாதிரி புதுக்கவிதை நமக்குள் எழுகிறது. தோன்றுகிற கணப்பொழுதில் அதே வேகத்தில் ஆற்றல்மிக்க சொற்களில் வடித்து வைப்பது புதுக்கவிதை. சொற்களுக்குள் அகப்படுவதைக் காட்டிலும் சொற்களில் இடைவெளியிலும் சொற்களைக் கடந்தும் இயங்குவது புதுக்கவிதை. ஒன்றைப் படிமமாக்கி அதன்வழியே இன்னொன்றைச் சொல்வது புதுக்கவிதை. ஒன்றின் அசைவில், பன்முகப் பொருள்களைக் காட்டுவது புதுக்கவிதை. ஒரு செடியில் மலரைப் புதுக்கவிதையெனக் கொண்டால் அந்த ஒரு மலரின் ஆக்கத்திற்குத் தேவையான இலைகள் கிளைகளை வைத்துக் கொண்டு பிற இலைகளையும், கிளைகளையும் களைந்த பான்சாய் வடிவம் புதுக்கவிதை. நுண் அறிவினர்க்குள் சலனங்கள் எழுப்பி இயங்குவது புதுக்கவிதை. இவ்வாறு கவிதையாக்கம் என்பது புதுக்கவிதையில்தான் நிறைவடைகிறது என்பதில் ஐயமில்லை. நவீனத்துவம் என்ற ஒளியில்தான் புதுக்கவிதை என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். இவ்வகைக் கவிதை சங்க இலக்கிய மரபுக்கு அந்நியமானதல்ல. இடைக்காலத்தில் இவ்வகைக் கவிதையை நாம் தொலைத்துவிட்டோம். சங்க அகப்பாடல்களை ஒருமுகப்படுத்தித்தான் உரையாசிரியர்கள் பொருள் கண்டனர். அதாவது கவிதையில் ஒரு பொருளை உரிப்பொருளை மையப்படுத்தினர். இதன் வெளிப்பாட்டுக்காகத் தான் கருப்பொருளும் முதற்பொருளும். இம்முறையில் அமைந்தது குறுந்தொகை. இக்கவிதைதான் நற்றிணையாக, அகநானூறாக வடிவம் கொண்டது. இந்த இலக்கணத்தைப் பத்துப்பாட்டுக்கள் மீற இயலவில்லை. புறப்பாடலினுள்ளும் உரிப்பொருள் என வகுத்துக் கொள்ள இயலும் என்றால் பத்துப்பாட்டுக்களின் கூர்முனை, உரிப்பொருள்தான். உரிப்பொருளை மையப்படுத்திக் கவிதையைப் பிரித்தெடுத்தால் கவிதை சில வரிகளில் அடங்கும். இந்த இலக்கணத்தை வைத்து மையப்படுத்தினால் வானம்பாடிகளின் நீண்ட கவிதைகளும் வாமன வடிவத்தில் சுருங்கும். மேடைத் தோரணைக்கு இக்கவிதை பயன்படாது. வானம்பாடிக் கவிதைகளிலிருந்து இப்படிக் கவிதையை மட்டும் பிரித்தெடுத்து வசனங்களை வெளித்தள்ளுவதை வானம்பாடிக் கவிஞர்கள் ஒப்பமாட்டார்கள். இம்முறையில் வானம்பாடிக் கவிதைகள் சற்று செறிவுடைய வசன கவிதைகள் ஆகின்றன. ஒற்றைத்தளத்தில்தான் கவிதை எப்பொழுதும் இயங்கும் என்று நாம் கருத முடியாது. நவீனத்துவத்தின் பகுதியாக வரும் புதுக்கவிதை என்ற கவிதை பல தளங்களில் இயங்கும். எடுத்துரை வடிவில் கவிதை இயங்குவது ஒரு தளம் ; நாடகமாக கவிதை இயங்கும்; நான், நீ என்று நாடகமாடும் ; உரையாடலில் கவிதை பேசும்; எள்ளல் தொனியில் இயங்கும்; தன் மனத்திற்குகந்த ஒன்றை வாயூறக் கவிதை அலங்காரம் செய்யும்; காதலியின் அழகு சொல்லும்; இயற்கை தனக்குள் எழுப்பும் பரவசம் சொல்லும். இன்னொரு சமயம், வாழ்வின் கிழிசல் சொல்லும்; தன் காயம் சொல்லும்; ஒப்பாரி பாடும் தாலாட்டுப்பாடும்; தன்சொல் அழகில் தானே மயங்கிப் பேசும். சொல்லின் இருபொருள் கண்டு நகையாடும். கவிதை நெடுங்கவிதையாகிக் கதை சொல்லும். காவிய அளவில் தன்னை விரித்துக்கொள்ளும். இப்படியெல்லாம் கவிதைகளுக்குப் பல முகங்கள் உண்டு. பல தளங்கள் உண்டு. வானம்பாடிகள் இப்படி பலவகைக் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். கவிதை வடிவில் கதை உருவாக்கத்தில் சிற்பி, தமிழன்பன் ஆகியவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். காவியம் செய்ய முடியும் என்பதை ஞானி காட்டியிருக்கிறார். ஒவ்வொருவர் சாதனையும் தனித்தனியாக மதிப்பிடத்தக்கது. இளமுருகுவின் சாதனை தனித்தன்மை மிக்கது. நம் காலக் கவிதை, உருவத்தில் மட்டுமல்ல உள்ளடக்கத்திலும் புதியதாக இருக்கவேண்டும் என்ற தன் கொள்கையிலிருந்து விலகாமல் அவர் கவிதை செய்திருக்கிறார். எதைத் தொட்டாலும் ஒரு காவியப் பரிமாணத்தில் நீள்திரையில் பல அடுக்குகளில் ஓவியம். தீட்டுபவர் சிற்பி. வானம்பாடிக் கவிஞர்கள் பலர் கவிதைகக்குள் எள்ளல் தொனியைக் கொண்டுவந்தார்கள். திருகலைச் சொல்ல எள்ளல் தொனி சிறப்பாகப் பயன்படும். உண்மையைத் திருகலாக்கிச் சொல்லும் பொழுது எள்ளல் தொனி தன்னை இழிவு படுத்திக் கொள்ளும். எள்ளல் தொனியில் பலர் குறுங்கவிதை செய்திருக்கிறார்கள். கவிதைத் துக்கடாக்களாக இவை வெடிக்கின்றன. குழந்தைகளின் கையில் விளையாட்டுத் துப்பாக்கிகள் இவை. எதிராளிகள் மீது செலுத்தும் எள்ளல் தொனியை தமக்குள்ளும் இவ்வகைக் கவிதைகள் வானம்பாடிகளுக்கு வளம் சேர்ப்பனவாக இல்லை. தம்மைப் பார்க்க இயலுமானால் கவிதைகளுக்குள் ஆரோக்கியமும் அழகுகளும் கூடியிருக்கும். இந்த வாய்ப்பை வானம்பாடிகள் தவறவிட்டார்கள். வானம்பாடிகள் தொடர்ந்து கவிதை என்றால் என்ன என்று கற்றுக் கொண்டிருந்தார்கள். கவிதைப் பயிற்சியை முனைந்து மேற்கொண்டிருந்தார்கள். புதுக்கவிதை என்ற கவிதையாக்க முறையை நோக்கி முன் செல்ல விரும்பினர். புதுக்கவிதை இவர்களைத் தாக்கிக் கொண்டுதான் இருந்தது. பாரதியின் வசன கவிதையிலிருந்து முயன்ற அளவுக்கு முன் சென்றார்கள். அருக்காணி காயம்பட்டுக் கிடந்ததை சிற்பி எழுதும் பொழுது வானம் காயம்பட்டுக் கிடந்ததைச் சொல்கிறார். இத்தகைய நுட்பங்கள் வானம்பாடிகளிடம் கூடிக் கொண்டிருந்தன. வானம்பாடிகள் ஒவ்வொருவரும் தமக்குள்ளிருந்து இத்தகைய நுட்பங்களைத் தம் கவிதைக்குள் கொண்டுவந்தார்கள். புலவர்கள் வழிவந்த மரபுக் கவிதையின் ஆளுகையிலிருந்து இவர்கள் தம்மை விடுவித்துக் கொள்ளவில்லை. முற்றாக விடுவித்துக் கொண்டால் மட்டுமே புதுக்கவிதையாக்கத்தினுள் செல்லமுடியும். இப்படிச் செல்வதன் மூலம்தான் காலத்துக்கேற்ற புதிய கவிதைகளை எழுதமுடியும் என்பது அவசியமில்லை. இவர்கள் தமிழ்க்கவிதையைப் புதுப்பித்துக் கொண்டுதான் இருந்தார்கள். தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் இவர்களுக்குள் ஆழமாக வேர்விட்டிருந்தது. இந்த வேர்களை இவர்கள் வெட்டிக் கொள்ள முடியாது. அந்த அளவு வேர்கள் இவர்களின் ஆளுமைக்குள் உறுதியான பிடிப்பைக் கொண்டிருந்தன. தம் காலத்திற்குத் தேவையான சமூக அரசியல் உணர்வைக் கவிதைக்குள் கொண்டு வரவேண்டுமென்ற கொள்கையின் வழியே தமிழ்க்கவிதையின் பாரம்பரியமும் வீரியமும் இவர்கள் கவிதைகளுக்குள் வலுப்பெற்றன. 2. இசைப்பாடல்களில் பல்லவி திரும்பத் திரும்ப ஆலாபனை செய்யப்படுகிறது. தவிர, பழந்தமிழ்க்கவிதைகளில் தாழிசைகள் பலமுறை அடுக்கிவருகின்றன. பக்தி இயக்கத்தினுள் பதிகங்கள் ஒன்றைப் பத்து முறை அடுக்கிச் சொல்கின்றன. கவிதைக்குள் வரும் ஓர் உணர்வை வாசகர் உள்ளத்தில் ஆழப்பதிக்கும் நோக்கில் இத்தகைய அடுக்குமுறை செயல்படுகிறது. புதுக்கவிதைக்கு இந்த முறை சற்றும் பொருந்தாது. புதுக்கவிதை அறிவை, நுண்ணறிவை ஆதாரமாகக் கொண்டது. மரபுக்கவிதை, சுவையை ரசத்தை உணர்வை ஆதாரமாகக் கொண்டது. மரபுக் கவிதையின் அடுக்குமுறையை, சுவை உணர்வை வானம்பாடிகள் தம் கவிதைகளுக்குள் தொடர்ந்தனர். 3. தமிழ்ச்சமூகங்கள் சூழலில் சிறுகதைகள், கவிதை, நாவல், திரைப்படம், பத்திரிகைகள் முதலியவற்றில் காதல் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இளைஞர்கள் சமூக உணர்வைப் பெறுவதற்குக் காதல் உணர்வு தடையாகத்தான் இருந்தது. வானம்பாடிகள் தமக்குள் திரண்டிருந்த பொழுது காதலை வைத்துக் கவிதை செய்ய விரும்பவில்லை. திரட்சி தகர்ந்தபொழுது காதல் கவிதைகள் வானம்பாடிகள் வழியே வெளிப்பட்டன. காதல் கவிதைகளினுள்ளும் சமூக உணர்வை ஏற்றிச் சொல்லமுடியும் என்ற உணர்வில் கனவுகள் கற்பனைகள் காகிதங்கள் என்ற தன் நீண்ட கவிதைக்குள் எங்கல்சின் மாணவனைப் போல், சோவிய கூட்டுப் பண்ணையை எதிர்பார்த்திருந்த இந்திய உழவனைப் போல என்ற முறையிலான உத்தியை மீரா பயன்படுத்தினார். இதன் மூலம் சமூக உணர்வும் காதல் உணர்வும் கைகோர்த்துச் செல்ல முடியும் என்று நம்பினார்கள். கங்கை, மேத்தா ஆகியவர்கள் கூடுதலாகக் காதல் கவிதை எழுதினர். தமிழ்நாடன் ‘காமரூபம்’ எழுதினார். ‘காமரூபம்’ காமத்தை எள்ளும் கவிதைகள் கொண்டது. சமூக உணர்வைக் குறைப்பதற்கும் தகர்ப்பதற்கும் தான் காதல் உணர்வு கவிதைக்குள் நுழைந்தது என்ற கருத்தை அவர்கள் ஏற்கமாட்டார்கள். தொடர்ந்து கவிஞர்களாக தம்மை மக்கள் மனங்களில் நிறுவிக்கொள்ளும் முறையில் நாட்டார் கதைமரபிலிருந்து சந்தப்பாடல் முறையை, கிராமியப்பாடல் முறையை வானம்பாடிகள் தம் கவிதைக்குப் பயன்படுத்தினார்கள். கிராமியப் பாடல்களில் செயல்படும் புனைந்துரை முறையிலான கற்பனையைத் தவிர வேறு முயற்சிகள் இப்பொழுது கவிஞர்களுக்குத் தேவையில்லை. கிராமியத் தாலாட்டில், சந்தப் பாடல்களில் தொடர்ந்து சொற்கள் ஒன்றை மற்றது இழுத்துக் கொண்டு ஓசையமைப்பில் முன் செல்லும். கவிஞரின் படைப்புத் திறனுக்கு இங்கு அதிக அளவில் வேலை இல்லை. எள்ளல் நோக்கில் துணுக்குக் கவிதைகளும், நீண்ட கவிதைகளும் நிறையவே எழுதப்பட்டன. வானம்பாடிகளின் கவிதையாக்கத்திற்குள் வீரம், சோகம், பெருமிதம் போன்ற உணர்வுகள் முதன்மையாக இருந்தன. இதன் காரணமாக இவர்களின் கவிதை, வீரியத்துடன் இயங்கியது. காவியப் பரிமாணம், இதன் காரணமாக இவர்கள் கவிதைகளுக்குள் இயல்பாக வந்தது. மேலோட்டமான, நகைச்சுவைத் துணுக்குள் போன்ற எள்ளல் கவிதைகள், வானம்பாடிகளின் கவிதைகளை இயக்கியப் பேருணர்வுக்கு எதிராகச் சென்றன. வானம்பாடிகளின் வரலாற்றிலிருந்து ஒன்றைக் கண்டறிந்து சொல்லலாம். வானம்பாடிகளின் கவிதை இதழ்களின் எண்ணிக்கை இப்பொழுது 22. பதினான்காம் இதழிலிருந்து சிற்பி கவிதை இதழுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். குழுமுயற்சி என்பது இக்காலத்தில் இல்லை. வானம்பாடி என்பது தனக்கு வந்து சேரும் கவிதைகளை வெளியிடும் கவிதை இதழாயிற்று. இதற்கு முன்னர் இதழ் பத்திலிருந்து பதிமூன்று முடிய நான்கு இதழ்கள் புவியரசின் பொறுப்பில் வெளிவந்தன. குறைந்த அளவுக்கேனும் ஒரு குழு முயற்சியாக இந்த இதழ்கள் வெளிவந்தன. வானம்பாடி முதல் இதழ் 1971 அக்டோபரில் வெளிவந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளை உள்ளடக்கிப் பார்க்கிற பொழுது இக்கால இடைவெளியில் வெளிவந்த எட்டு இதழ்கள் சூட்சும வானம்பாடி இயக்கம் என்ற ஆதாரத்தில் வெளிவந்தன. தீவிரமான விவாதங்கள் இக்காலத்தில்தான் நடைபெற்றன. கவிதை என்றும் தத்துவம் என்றும் தமிழிலக்கியப் பாரம்பரியம் என்றும் இக்காலத்தில் நிறையப் பேசப்பட்டன. வானம் பாடிகளின் ஆக்கக் காலம் என இதைத்தான் குறிப்பிட வேண்டும். வானம்பாடிகளுக்குள் ஆற்றல் திரண்ட காலம் இதுதான். முரண் இயக்கம்தான் இந்த ஆற்றலுக்கும் தனித்துவ வீரியத்திற்கும் காரணம். உள்ளும் வெளியிலும் முரண் இயக்கத்தினுள் இவர்கள் இருந்தனர். எட்டாம் இதழுக்குப் பின்னர் வானம்பாடிகள் தமக்குள் பிளவுபட்டனர். ஞானி, அக்கினி ஆகியவர்களை வெளியேற்றினர். ஞானி, அக்கினி ஆகியவர்களுடன் ஜன சுந்தரம், இளமுருகு ஆகியவர்களும் இருந்தனர். அதன்பிறகு சிற்பி, புவியரசு, கங்கை, மேத்தா ஆகியவர்களோடு வானம்பாடி வெளிவந்தது. பத்தாவது இதழ் முன்னுரை இதைத்தான் தெரிவிக்கிறது. அவர்களுக்குள் இனி விவாதங்களுக்கு, முரண்படலுக்கு அவசியமில்லை. இந்த வரலாற்றைச் சொல்வதற்கான காரணம், ஒன்று முதல் எட்டு முடிய வானம்பாடி வெளிவந்த காலத்தில்தான் இயக்கம் என ஓர் அமைப்பை இவர்கள் உருவாக்கிக் கொள்ளாவிட்டாலும் இயக்க உணர்வோடு செயல்பட்டார்கள். எட்டாவது இதழுக்குப் பிறகு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அமைப்பு அறவே செயல்படவில்லை. அதற்கு மாறாகப் பிளவு ஏற்பட்டது. ஆக, இயக்க உணர்வோடு செயல்பட்ட காலம்தான் வானம்பாடிகளின் ஆக்கக் காலம். இவர்கள்தான் அசல் வானம்பாடிகள். இக்காலத்திலேயே கூட வெளியில் பலரது ஆதரவைத் திரட்டுவதற்காக அவர்களின் கவிதைகளும் வானம்பாடி இதழ்களில் வெளிவந்தன. இக்கவிதைகளுக்குள்ளும் வானம்பாடி உணர்வை நாம் காணமுடியும். சமூக உணர்வுக்கு முதன்மை தந்து கவிதை படைப்பது என்பதுதான் இந்த வானம்பாடி உணர்வு. வானம்பாடி இயக்கத்தினுள் யார் யார் இருந்தார்கள்? வானம்பாடி உணர்வின் மையமாக மேற்போக்கான எள்ளல் உணர்வு இல்லை. நகைச்சுவை உணர்வு இல்லை. வீரியம்தான் வானம்பாடி உணர்வின் மையம். இந்த உணர்வுக்குள்தான் சமூக உணர்வு, தமிழிலக்கியப் பாரம்பரிய உணர்வு, பாரதி உணர்வு, இந்திய உணர்வு எல்லாம் கலந்தன. காவியப் பரிமாணத்தில் இந்த வீரியம் வெளிப்பட்டது. இதுதான் வானம்பாடியின் கவிதை இயல் அல்லது கலை இயல் என்று நான் கருதுகிறேன். வீரியம் மிக்க இந்த உணர்வு, செறிவான உணர்வு. சமூக உணர்வு என்பதனுள் வேறுபல உணர்வுகளும் கலந்து செறிந்த உணர்வு. இதன் காரணத்தால்தான் இதன் அழுத்தம் அதிகம். மனத்தின் முழுப் பரப்பையும் தனக்குள் ஆதிக்கம் கொள்கிற உணர்வு. பல சமயங்களில் கவிஞனை ஆளுகின்ற உணர்வு. இந்த உணர்வின் வசப்படலிலிருந்து கவிஞன் தப்ப முடியாது. இன்று சில திறனாய்வாளர்களின் பார்வையிலிருந்து பார்க்கிறபோது இது மத உணர்வாகத் தென்படும். கடவுள் அல்லது ஆன்மா என்ற ஒன்றை மையப்படுத்திப் பிரபஞ்சம் தொடங்கி அனைத்தையும் தனக்குள் குவித்துக் கொள்ளுகிற பேருணர்வு என இத்தகைய மத உணர்வைச் சொல்லலாம். இதற்கு அத்வைதம் என்றும் பெயர் சொல்ல முடியும். எல்லா மாதங்களும் அத்துவைத நிலையை ஏதோ ஒரு நிலையில் கொண்டிருப்பதாக நாம் விளக்கம் காணமுடியும். மனிதன், பிறவகை உயிரினங்கள், தாவரங்கள் முதலியவற்றின் தனித்தன்மைகளை அழித்து அல்லது அமுக்கி ஓர் உணர்வில் குவிப்பது அத்வைதம் ஒருமைநிலை. அத்வைதம் என்ற போக்கு எங்கு தென்பட்டாலும் இந்த உணர்வை மத உணர்வு என்று பெயரிடுவது சாத்தியம்தானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஒன்றாகக் காண்பதே காட்சி என்று தமிழ்ப்பாடல் கூறுகிறது. ஒரு பார்வையில் அனைத்தையும் உள்ளிழுத்து அல்லது இணைத்துக் காண்பது என்று இதனைப் புரிந்து கொள்ளலாம். தனித்தனியே பகுத்துப் பார்ப்பது என்பது ஒரு செயற்பாடு. பலவற்றையும் இணைத்துக் காண்பது என்பது இன்னொரு செயற்பாடு. இவ்விரு செயற்பாடுகளுக்கும் தேவை இருக்கிறது. எல்லாவற்றையும் எப்பொழுதும் பிரித்துப் போட்டு விடவும் முடியாது. எல்லாவற்றையும் எப்பொழுதும் இணைத்து வைப்பதும் முடியாது. அத்வைதம் என்று சொல்லக் கூடிய போக்கு, இணைத்துக் காண்கிற போக்கு சிந்தனைத் துறையின் அனைத்துக் களங்களிலும் பகுத்துக் காண்பதும் அவசியம். இணைத்துக் காண்பதும் அவசியம். சிந்தனை பல கட்டங்களைத் தாண்டி வளர்ச்சி பெறுவதற்கு இது அவசியம். பொதுமைப்படுத்தல் என்பது, அருவப் படுத்தலாகவும் சில சமயம் பாய்ந்து செல்லும். பகுத்துப் பார்த்தல் என்பதும் சில சமயம் நுட்பங்களுக்குள் தன்னை இழந்துவிடும். இவ்விரு போக்குகளும், எதிர்நிலைகள். எதிர்நிலைகள், ஒன்றோடொன்று, ஒன்றுக்குள் ஒன்று கலந்திருக்கும் ஒன்றில்லாமல் மற்றதற்கு உயிர்ப்பில்லை. ஒவ்வொன்றும் அதன் எல்லைக்குச் செல்லும்பொழுது அதற்கே அது எதிர்மறையாகிவிடும். மலை உச்சியில் மனிதன் வாழ முடியாது. அதுபோலவே முற்றான பிரம்மத்தினுள் ஒருவன் தன்னை இழந்துவிட முடியாது. அதுபோல அவ்வப்பொழுது பறத்தல் இன்றித் தரையில் வாழ்ந்து விடவும் முடியாது. சமூக உணர்வில் வானம்பாடிகள் மையம் கொண்டிருந்தார்கள் என்பதையும் நாம் இப்படித்தான் காண வேண்டும். ‘காக்கை, குருவி எங்கள் ஜாதி’ நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று பாரதி பாடியதனுள் அத்வைதம் கவிதைக்குள் கவி உணர்வுக்குள் வந்திருப்பதைத்தான் காண்கிறோம். உலக அளவிலான எல்லாவற்றையும் தன் உணர்வில் பதித்து அந்த உணர்வில் அமிழ்ந்து அந்த உணர்வின் பகுதியாகத் தன்னைக் கவிஞன் காண்கிறான். வானம்பாடிகளும் இவ்வாறு தமக்குள் சமூக உணர்வின் பொதுவயப்பட்ட சமூக உணர்வின் பகுதியாகத் தம்மைக் கண்டனர். ஒன்றாகக் காணும் காட்சி இது. மார்க்சியத்தின் வழியே ஏகாதிபத்தியத்திற்கு எதிர்நிலையில் அரசு அதிகாரத்திற்கும் முதலாளியத்திற்கும் எதிர்நிலையில் தமக்குள் திரட்சி கொள்ளும் மக்கள் உணர்வின் பகுதி இந்த உணர்வு. ஏகாதிபத்தியத்தின் அரசு அதிகாரத்தின் தாக்குதல் அதிகரிக்கிற பொழுது, அதற்கு எதிர்நிலையில் மக்கள் தமக்குள் சமூக உணர்வையும் திரட்டிக்கொள்வதன் மூலம் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. மார்க்சியர் மக்களுக்கிடையில் இத்தகைய பலப்படுத்தலைத் தூண்டுகிறார்கள். கட்சிக்கு வெளியிலிருந்த போதிலும் மார்க்சிய உணர்வின் வழியே வானம்பாடிகளும் இவ்வாறு தமக்குள் சமூக உணர்வில் திரட்சி கொண்டார்கள். இந்தத் திரட்சிக்கு ஆக்கரீதியான முறையில் இந்திய உணர்வு, தமிழிலக்கியப் பாரம்பரிய உணர்வு முதலியவை உட்கூறுகளாக வந்து இணைந்தன. இதன் காரணமாக அவர்களின் கவித்துவப் பார்வை வீறு கொண்டது. மத உணர்வை என்று இதைச் சமப்படுத்த முடியாது. அத்வைத நிலைக்குள் தன்னை ஒருவர் தொடர்ந்து நிறுவிக் கொள்ள முடியாது. மலை உச்சிக்குச் சென்றவன் உண்பதற்கு, உயிர்வாழ்வதற்குக் கீழிறங்கித் தரைக்கு வரவேண்டும். தனக்குள் திரண்ட ஒருமை நிலையைக் கலைத்துக் கொள்ள வேண்டியும் இருக்கும். இணைத்துப் பார்ப்பதற்கான தேவை இருப்பதைப் போலவே, பகுத்துப் பார்ப்பதற்கும் தேவை இருக்கிறது. பகுதிகளின் தொகுப்பே முழுமை என்ற இயந்திரவாதம் இங்கு பயன்படாது. பகுதிகள் தம்முள் கலந்து இணைகிறபொழுதே பகுதிகளின் தொடர்ச்சியாகவும், அதிலிருந்து ஒரு பாய்ச்சலாகவும் ஒரு புதியது என முழுமை உருவாகிறது. உயிர்களின் இயக்கத்தினுள் இத்தகைய உயிரி இயக்கத்தை நாம் காண்கிறோம். வானம்பாடிகள் தமக்குள் திரண்ட கவிதைப் பேருணர்வைக் கலைத்துப் பார்க்கிறபோது, தம்மையும் கலைத்துப் பார்த்துக் கொள்ளும் தேவை ஏற்படுகிறது. பொதுமை உணர்வை எப்பொழுதும் தலையில் சுமந்து கொண்டிருக்க முடியாது. அது ஒரு சுமை ஆகிவிடும். மாயை ஆகிவிடும். மாயையின் பிடியில் இருக்கும் பொழுது அப்படி இருக்கிற பொழுது ஆவிகளாகிறார்கள். மாயைகளைக் களைந்து கொள்கிற போதுதான் யதார்த்தம் கண்ணுக்குச் சரிவரப் புலப்படும். யதார்த்த உலகிற்குள் கவிஞன் கீழிறங்கி வரவேண்டும். ஆவி உலகிலிருந்து மனித உலகிற்கு வந்து சேர்கிற மாதிரி ஆரோக்கியமான பயணம் இது. யதார்த்த உலகின் நிலவரங்களிலிருந்துதான் மார்க்சியம் உட்பட அனைத்துத் தத்துவங்களும் உருவாகின்றன. தத்துவம் தன் தொடர் பயணத்தின்போது சில எல்லைகளில் குவியும். அருவமாகும். இந்நிலையில் அத்துவைதவாதி மட்டுமல்ல ஒரு மார்க்சியனும் தன்னைப் பிரபஞ்சமாகக் காண்பான். உலகமாகக் காண்பான். வரலாற்றியக்கமாகக் காண்பான். ‘கிருதயுகத்தை நான் கொணர்வேன்’ என்று பாரதி பாடியது இத்தகைய உணர்வு நிலையில்தான். வரலாற்றின் இயக்கம் தன் வழியே இயங்குகிறது என்பதில் அழுத்தம் கொள்கிற போது ஒரு மார்க்சியவாதி, வரலாற்றைத் தானே இயக்க முடியும் என்று கருதுகிற நிலைக்கு வருகிறான். கட்சிக்காரர் இப்படித்தான் கருதுகிறார். தன் விரலசைவில் நாடே இயங்கும் என்பது மாதிரி பிழைபட்ட கருத்து இது. இத்தகைய கருத்தாக்கம் வானம்பாடிக்குள்ளும் இருந்தது. இதைக் கலைத்துப் பார்த்துக் கொள்வதன் தேவை பற்றிய உணர்வு அவர்களுக்குள் குறைவாகவே இருந்தது. கலைத்துக் கொண்டால்தான் உலகம் தெரியும். தனது யதார்த்தம் புரியும். கவிதை உணர்வையும்தான் இப்படி கலைத்துக் கொள்ள வேண்டும். எந்நேரமும் ஒருவன் கவிஞனாக இருப்பதில்லை. கவிதைக்கான ஆக்கக் கூறுகளையே எந்நேரமும் ஒருவர் தேடிக் கொண்டிருந்தால் கவிஞன் மனிதனை அடைத்துக் கொள்கிறான். அதாவது தன் அக உலகத்தை அந்தக் கவிஞனே அடைத்துக் கொள்கிறான். அகஉலகத்தினுள் அகப்பட்டவனுக்குப் புறஉலகம் தெரிவதில்லை. கலைக்கக் கோருவது திறனாய்வு. கவிஞன் தன்னைக் கலைத்துக் கொள்ளமாட்டேன் என்கிறான். கலைத்துக் கொண்டால்தான் பயணம் தொடரும் என்கிறான் திறனாய்வாளன். அப்பொழுதுதான் பார்வைகள் விரியும் என்கிறான். திறனாய்வாளன். படைப்பின் சுகமே பெரிது என்ற நிலையில் படைப்பாளியைத் திறனாய்வாளனால் புரிந்து கொள்ள முடியாது என்கிறான் கவிஞன். கவிஞனின் இயக்கத்தைப் பின் தொடர்வதுதான் திறனாய்வாளனின் பணி என்கிறான் கவிஞன். இப்படி ஒரு முரண்நிலை வரும் பொழுது கவிஞன் வழி தனி, திறனாய்வாளன் வழி தனி என்ற பிரிவு நேர்கிறது. நேரக் கூடாத பிரிவு இது. வானம்பாடிகளுக்குள் இத்தகைய பிரிவுதான் நேர்ந்தது. சமூக உணர்வை மையப்படுத்தி அதன் ஆதாரத்தில் எழுந்த கவிதை உணர்வில் வானம்பாடிகள் மிதந்தார்கள். தமக்குள் செயல்பட்ட சமூக உணர்வை மார்க்சிய உணர்வோடு சேர்த்துப் பார்க்கிற பொழுது தமக்குள் புனித உணர்வு கண்டார்கள். தாம் புனிதர்கள். சமூக நலத்திற்காக தாம் வாழ்கிறவர்கள். நமது சிறகசைப்பில் ஞான நரம்பதிரும் - இம்மாதிரிப் பெருமித உணர்வில் வானம்பாடிகள் திளைத்தார்கள். இவர்களுக்குள் வந்து சேர்ந்த மார்க்சியம், சுய விமர்சனமற்ற மார்க்சியம். இவர்களின் பார்வைக்குள் எள்ளல் தொனி ஒரு முக்கியமான கூறு. எள்ளல் உணர்வை எதிரிகளை நோக்கிச் செலுத்தினார்கள். மரபுக் கவிஞர்களை நோக்கியும், புதுக்கவிதையாளர்களை நோக்கியும் செலுத்தினார்கள். இந்தியப் பாரம்பரியமும், தமிழ்ப் பாரம்பரியமும் இவர்களின் புனித உணர்வுக்கு ஆதாரமாக இருந்தன. எள்ளல் உணர்வை தமக்குள்ளும் இவர்கள் செலுத்திப் பார்த்திருக்க வேண்டும். பார்த்திருந்தால் இவர்கள் தலைக்கு வந்திருக்க முடியும். எதிரிகள் தமக்குள்ளும் இயங்குவதை இவர்கள் பார்த்திருக்கக் கூடும். சுரண்டல், ஒடுக்குமுறை, காமம் ஆகியவற்றில் தாமும் திளைப்பதைக் கண்டிருக்க முடியும். எள்ளல் இவ்வகையில் ஆற்றல் மிக்க உணர்வு. எள்ளலின் வழியே தமக்குள்ளிலிருக்கும் முரண்கள் தெரிந்திருக்கும். ஒற்றை ‘நான்’ இல் இவர்கள் தம்மை உயரத் தூக்கி நிறுத்தியிருந்தார்கள். இப்படித்தான் தங்கள் மிதப்புணர்வு இருந்தது என்பதைப் பார்க்க முடியுமானால், உடனே தாம் யார் என்ற கேள்வி இவர்களைத் துளைத்திருக்கும். தமக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட ‘நான்’ கள் இயங்குவதைத் தெரிந்திருப்பார்கள். ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு வரிசைக்கு மேல் தாங்கள் அமர்ந்திருப்பதைப் புரிந்து கொள்கிற போதே அடுக்குகள் தமக்குள் சரிவதை இவர்கள் உணர்ந்திருப்பார்கள். தமக்குள் தாமே கட்டிய கோட்டைகள் தகர்வதைப் பரவச உணர்வுடன் இவர்கள் அனுபவித்திருக்க முடியும். தம்மைத் தாமே உடைத்துப் பார்ப்பதைப் போலவே தம் கவிதைகளையும் உடைத்துப் பார்த்திருப்பார்கள். உடைத்துப் பார்த்திருந்தால் தம் சுய பலம் எது? இரவல் வாங்கிக் கொண்டது எது? என்பது தெரிந்திருக்கும். மார்க்சியம் தமக்குள் எந்த அளவு செறிந்திருந்தது, செறிவு ஆகாமல் தம் மேற் போர்த்துக் கொண்டிருந்தது எது என்பதும் தெரிந்திருக்கும். கூட்டுக்குள் மனிதன் அடைபட்டு வாழ முடியாது. கூடும் தேவை. அதைவிட்டு வெளியில் பறப்பதும் தேவை. அடைபடுவதற்காக கூடு தேவையில்லை. வாழ்வதற்கான கூடு வாழ்வின் தேவையை ஒட்டி விரிந்து இடம் கொடுக்க வேண்டும். இடம் போதாத பொழுது விரித்துக் கொள்ள வேண்டும். மார்க்சியமும் இத்தகையதுதான். இப்படி விரிந்து கொடுத்தால்தான் மார்க்சியம். மனிதனை தனக்குள் அடைத்துக் கொள்வது மார்க்சியம் ஆகாது. வானம்பாடி இயக்கம் தகர்ந்து இன்று இருபது ஆண்டுகள் ஆகின்றன. மீண்டும் இப்பொழுது சிந்தித்துப் பார்க்கிறோம். அன்று தம்மை உடைத்துப் பார்த்துக் கொள்வதற்கான காலநிலையுடன் கருவிகள் இன்று வாய்த்திருக்கின்றன. மனிதன் கவிதை இல்லாமல் வாழ முடியாது. கவிதை என்பது ஒரு புனைவு. கவிதை அன்றியும் வேறு புனைவுகளும் மனிதனுக்குள் இருக்கின்றன. மரபு ஒரு புனைவு. தமிழ் என்பது கூட ஒரு புனைவு. மார்க்சியமும் ஒரு புனைவு. புனைவுகளுக்குத் தேவையும் உண்டு. புனைவு என்ற முறையில் இதற்குள் உண்மையும் உண்டு. பொய்மையும் உண்டு. உண்மை பொய்மை என்பவைகளும் கூட புனைவுகள் என்று சொல்லி நாம் மாயைகளுக்குள் அமிழ்ந்துவிட முடியாது. வரலாற்றில் ஒரு கட்டத்தில் ஒரு சார்பில் நாம் இருக்கிறோம். யதார்த்தத்திலிருந்து நம்மைத் துண்டித்துக் கொள்ள முடியாது. யதார்த்தத்தை நமக்கேற்ற முறையில் நாம் மாற்ற வேண்டும். மாற்றுவதற்கான பாதை நமக்குத் தேவை. கவிதையும் இதற்காகத்தான் நமக்குத் தேவை. வானம்பாடிகள் அன்று எழுதிய கவிதையை இன்று எழுதமாட்டார்கள். எல்லாமே இன்று உடைந்து போய்விட்டன. நான்கள் சிதறிக் கிடக்கின்றன. எந்த நானோடும் நான் இல்லை. இப்படி இன்றும் வானம் பாடிகள் சொல்ல முடியாது. ஏகாதிபத்தியம் இன்றும் இருக்கிறது. அரசு அதிகாரமும், முதலாளியமும் முன்னைவிட ஆற்றல் பெற்றிருக்கின்றன. மரபு முற்றாக சாரம் அழிந்து விடவில்லை. மனிதன் தனக்குள் மேலும் சிதைந்து போயிருக்கிறான். சிதைவிலிருந்து இவனைச் சில புள்ளிகளில் திரட்ட வேண்டும். திரட்டுவதற்குக் கவிதை பயன்படும். தம்மைத் திரட்டிக் கொண்டே போய்த் தன்னை இமயமலை ஆக்கிவிடக் கூடாது. தன் தலையே தனக்கு கனமாகிவிடக் கூடாது. என்னை நாமே பார்த்துக் கொள்வதற்கு இன்று எனக்குத் தெரியும். எனக்குள் உலகம் வந்து போகிறது. வரலாற்றை எனக்கேற்ற முறையில் அர்த்தப்படுத்துகிறேன். இப்படி அர்த்தப்படுத்தத் தொடர்ந்து தெரிந்து கொள்கிறபோதுதான் வானம்பாடிகளையும் நான் தெரிந்து கொள்கிறேன். ஒருவகை மிதப்பில் அவர்கள் வாழ்ந்தார்கள். மிதப்பு இல்லாமல் அவர்களால் வாழ முடியவில்லை. ஒவ்வொருவர்க்குள்ளும் ஏதாவது ஒரு மிதப்பு வாழவேண்டுமானால் ஏதாவது ஒரு மிதப்புத் தேவை. அடுத்தவர் உயிரை உறிஞ்சி தான் வாழ்வதும் ஒரு மிதப்புத்தான். பிறரிடம் குற்றம் கண்டு, தான் குற்றமற்றவன் என்ற மிதப்பில் வாழ்வதும் ஒரு வகை வாழ்க்கைதான். இவையெல்லாமே புனைவுகள், புனைவுகளை, மிதப்புகளை, தொடர்ந்து கலைத்துக் கொண்டிருக்க வேண்டும். கூடியவரை யதார்த்தம் நோக்கி யதார்த்தங்களில் புனைவு குறைவாக இருக்க வேண்டும். ஆற்றல் குறைந்து இருக்க வேண்டும். புனைவுகளை, மிதப்புகளை புனைவுகள் என்று மிதப்புக்கள் என்று வானம்பாடிகளால் கண்டு கலைத்துக் கொள்ள முடியவில்லை. கலைக்கும் நெறி அவர்களுக்குத் தெரியவில்லை. கலைத்துக் கொள்வதனால் தாம் அழிந்து போவோம் என்று கருதினார்கள். ஆகவே கலைத்துக் கொள்ளாமல் தகர்ந்து போனார்கள். வானம் பாடிகளைப் பொறுத்தவரை இந்தத் தகர்வு ஒரு அவலம். -1994 குறிப்பு: தமிழில் நவீனத்துவம் தொடர்பான ‘காவ்யா’ கட்டுரைத் தொகுப்பொன்றில் இடம் பெற்ற கட்டுரை. தொகுப்பாசிரியர்: தமிழவன். தமிழ்த் தேசியமும் வானம்பாடி இயக்கமும் - 2004 தமிழ்த் தேசியத்திற்கும் வானம் பாடி இயக்கத்திற்கும் இடையிலான உறவு என்னவென்று ஆராய்வதற்கு முன்னர் கோவையில் 1970-ன் தொடக்கத்தில் தோன்றி வளர்ச்சி பெற்றுக் குறுகிய காலத்தில் பிளவுபட்ட வானம்பாடிகளின் கவிதை இயக்கம் குறித்து முதலில் சுருக்கமாகப் பார்த்துக் கொள்ளலாம். பஞ்சாலைகளும் இயந்திர உற்பத்தித் தொழிற்சாலைகளும் சில பத்தாண்டுகளாக நிலைபெற்ற கோவை நகரத்தில் தொழிற்சங்கத்தை நிலை நிறுத்துவதற்கான எத்தனையோ போராட்டங்கள் நடை பெற்றன. மார்க்சியம் இங்கு பாட்டாளிகளின் மத்தியில் வேர்பிடித்துக் கிளை விரித்த சூழல் என்ற பின்னணியில்தான் வானம்பாடி இயக்கம் தோன்றியது. வானம்பாடி இயக்கத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் புவியரசு, சிற்பி, இளமுருகு, கனல்மைந்தன், ஞானி, மேத்தா முதலியவர்கள் தமிழாசிரியர்கள் என்ற முறையில் நெடுங்காலத் தமிழ் இலக்கிய மரபையும், பாரதி, பாரதிதாசன் ஆகிய பெருங்கவிஞர்களுக்குள் செயல்பட்ட தமிழ்த் தேசிய உணர்வையும் உள்வாங்கிக் கொண்டவர்கள். வானம்பாடி இயக்கத்தின் தோற்றத்திற்குச் சற்று முன்னர் வசந்தத்தின் இடிமுழக்கம் என்று இன்றளவும் சிறப்பித்துச் சொல்லக்கூடிய நக்சல்பாரி இயக்கம் இந்தியாவின் வடதிசையில் தோன்றி, கேரளம், தமிழ்நாடு வரையில் மாபெரும் அரசியல் அதிர்வுகளைப் பரப்பியது. மார்க்சிய லெனினிய இயக்கம் என்று சரியான பெயரைப் பெற்ற நக்சல்பாரி இயக்கம் கோவையில்தான் தோற்றம் பெற்றது என்பதை நண்பர்கள் மறந்திருக்க மாட்டார்கள். பாரதி, பாரதிதாசன் மரபின் சிந்தனை வளத்தையும் கவித்துவச் செழுமையையும் தங்களுக்குள் பெற்ற இவர்கள் வானம்பாடி என்ற கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தனர். இவர்கள் அனைவருக்குள்ளும் இயல்பாகவே கோவைச் சூழலில் உருவான மார்க்சியத்தின் தாக்கமும், நக்சல்பாரி இயக்கத்தின் வீறும் நுழைந்து கவிதைகளில் உருப்பெற்றன. வானம்பாடிக் கவிதைகளை ஒருமுறை புரட்டிப்பார்க்கிற அனைவரும் மேற்குறிப்பிட்ட கவிஞர்களுக்குள் நக்சல்பாரி இயக்கத்தின் ஆற்றல் மிகுந்த சில இழைகளையேனும் காண முடியும். மார்க்சியத்தின் சமதர்மம் என்ற ஊற்று இவர்களுக்குள் மக்கள் திரளின் பிரச்சினைகளை உணர்வோடு வெளிப்படுத்தும் முறையில் கவிதைகளாய்ப் பொங்கின. வானம்பாடி இயக்கத்தின் இந்தப் பேராற்றலை இன்றுவரை யாரும் மறுப்பதற்கில்லை. தமிழகத்தில் 1930களிலேயே மெல்லத் தொடங்கி ந. பிச்சமூர்த்தி கு.ப.ரா. முதலியவர்களின் வழியே ஊட்டம் பெற்று, ‘எழுத்து’ காலத்தில் சி. சு. செல்லப்பா, க. நா. சு. தர்முசிவராமு (பிரமிள்), வைத்தீஸ்வரன், சி. மணி முதலியவர்களின் மூலம் அழுத்தமும் ஆழழும் விரிவுப் பெற்ற புதுக்கவிதை இயக்கம், கசடதபற இதழின் வழியே ஞானக்கூத்தன், சுந்தரராமசாமி முதலியவர்களையும் உள்வாங்கிக் கொண்டு ஒரு பேரியக்கமாக நிலை பெற்றது. இந்த இயக்கத்திற்கான மூலத்தை பாரதி முதலியவர்களுக்கு உள்ளும் காண முடியும் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. சி. மணி, கனகசபாபதி முதலியவர்கள் ஆய்ந்து கூறியபடி தொல்காப்பியர் முதற்கொண்டு தமிழ்ச் செய்யுள் மரபிற்குள்ளிருந்தே இதன் சில கூறுகளை இனம் காண முடியும் என்பது மறுக்க இயலாத உண்மைதான். எனினும் மேற்குலகத்தைச் சார்ந்த வால்ட் விட்மன், டி. எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட் இன்னும் சில பிரெஞ்சு கவிஞர்களை நம் புதுக்கவிதை இயக்கத்திற்கான மூலவர்கள் என்று இவர்கள் சொல்லிக் கொண்டார்கள். இப்படிச் சொல்லிக் கொண்ட அதே சமயத்தில் தமிழ் மரபின் யாப்பு முறையை இவர்கள் அறவே கைவிட்டதோடு மரபுக்கவிதை முறையை கடுமையாகச் சாடவும் செய்தார்கள் கவிதைக்கு எதுகை, மோனை, அடி, தொடை முதலிய யாப்புக் கூறுகள் தேவையில்லை என்று இவர்கள் கூறியதோடு கவிதை என்பது மிகக் குறைந்த சொற்களைக் கொண்டதாக அமைய வேண்டும் என்றும் உவமை, உருவகம் ஆகியவற்றை ஒதுக்குவதோடு பன்முகப் பொருளை உள்ளடக்கிய படிமம் என்ற இறுகிய வடிவத்தின் மூலம் இயங்க வேண்டும் என்றும் கூறினர். இவ்வகையான கவிதையின் கட்டமைப்பு முறை பற்றிய தம் கருத்துகளை விரிவாக அவர்கள் முன்வைத்ததற்கு இடையில், தம் கருத்தியல் பற்றியும் பேசினர். மார்ச்சியத்தை அவர்கள் முற்றாக ஒதுக்கினர். திராவிட இயக்கக் கருத்தியலையும் அவர்கள் ஒதுக்கினர். கவிதை என்பது பிரச்சார நோக்கில் அமைவது கூடாது என்றும் உள்மனத்தின் மெளன இயக்கமாகத்தான் கவிதை இருக்க முடியும் என்றும் கூறலாயினர். அகமனத்தின் இருண்மைக் கூறுகளையும் ஃபிராய்டிய காம உணர்வையும் தம் கவிதைகளில் முதன்மைப்படுத்தினர். இத்தகைய கவிஞர்களின் நகரச்சார்பும் உயர்சாதி மனப்பாங்கும் உழைக்கும் மக்களிடமிருந்து இவர்கள் விலகி இருந்த தன்மையும் மக்கள் இயக்கங்களை முற்றாக ஒதுக்கியதையும் இவர்கள் கவிதைகளிலிருந்தே கண்டுகொள்ள முடியும். தமிழ்மரபுக்கும் மக்கள் சார்புக்கும் எதிரான இவர்களை மறுக்கும் முறையில்தான் கோவையில் வானம்பாடி இயக்கம் தோன்றியது. இம்முறையில் நெடுங்காலத் தமிழ்ப் பேரியக்கத்தின் ஆற்றல் மிக்க ஒரு புதிய பேரலையாக வானம்பாடி இயக்கம் தோன்றிய வேகத்தில் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்ததில் வியப்பில்லை. 1968ல் தமிழகத்தின் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் மிகக் குறுகிய காலத்தில் தாங்கள் தமிழ் மக்களின் விடுதலைக்கான இயக்கம் அல்ல என்பதைக் காட்டிக் கொண்டனர். திராவிட இயக்க அரசியலை மறுப்பதற்கான நியாயத்தோடு மார்க்சியச் சார்பை வானம்பாடிகள் மேற்கொண்டனர். தமிழக மக்களின் விடுதலைக்கான கருத்தியலைத் தம் நெஞ்சில் தாங்கிய வானம்பாடிகள் மார்க்சியப் பார்வை காரணமாக மிக விரிவான உலக அளவிலான அரசியல் பார்வையையும் தமக்குள் வரித்துக் கொண்டனர். வியட்நாம் உள்பட உலக அளவில் அன்று நடைபெற்ற அனைத்து விடுதலை இயக்கங்களையும் வரவேற்றுப்பாடினர். இந்திய தேசியத்திற்கு எதிராக குரல் இவர்களுக்குள் இல்லை என்ற போதிலும் இவர்களுக்குள் தமிழ்த் தேசிய உணர்வு வீறுபெற்று விளங்கியது. எழுத்து , கசடதபற முதலிய இதழ்களுக்கும் அவர்கள் வெளிப்படுத்திய கருத்தியலுக்கும் எதிரான மக்களுக்கான கவிதை இயக்கத்தை வானம்பாடிகள் வெளிப்படையாக அறிவித்துக் கொண்டனர் கவிதையை மக்கள் மயப்படுத்தியதுதான் வானம்பாடி இயக்கத்தின் முதல் பெரும் சாதனை என்று இன்றளவும் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். வரலாறு மற்றும் பொருளியல் சூழலில் மக்களின் வறுமை, நோய் நொடிகள், மூடத்தனம், பெண்ணடிமை முதலியவற்றுக்கெதிராக மேடைகளில் கவிதைகள் முழங்கினர். மக்களோடு அவர்களின் மொழியில், அவர்களுக்கான விடுதலையை, அவர்களோடு, பேசும் முறையில் கவிதைகளை முழங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் இந்தக் கவிதை முழக்கங்கள் நடைபெற்றன. மக்களோடு பேசுவது என்றால் உணர்ச்சிகரமாக அவர்களின் நெஞ்சைத் தொடும் முறையில் அழகிய அடுக்கடுக்கான மொழியில் பேசத்தான் வேண்டும். மேடைத் தோரணை என்பது இவர்களின் இயல்பான கவிதைக்குரலாயிற்று மக்கள் வாழ்க்கையில் விடுதலை தேவை என்ற இவர்களின் குரல் அகமனத்தின் இருண்மைக்குரலாகவோ விடுகதை போல புதிராகவோ இருக்க முடியாது. மக்களோடு விரிவான உலக அளவிலான பிரச்சினைகளை முன்வைத்துப் பேசுகிற கவிதைகள் குறுகிய வடிவிலும் இயங்க முடியாது. இம்முறையில் வானம்பாடிகளின் கவிதை இயக்கம் தமிழ் மக்களின் நெஞ்சங்களைக் குறுகிய கால அளவில் வெற்றி கொண்டது. சி.சு.செல்லப்பா முதலியவர்களின் புதுக்கவிதை முறையிலிருந்து தமிழில் வீரார்ந்த மரபை உள்வாங்கிக் கொண்டு வானம்பாடிகளின் புதுக்கவிதை இயக்கத்தின் வளர்நிலையைக் குறித்து மேலும் சிலவற்றை இங்குக் கூற வேண்டும். தமிழ்க்கவிதை மரபின் ஆற்றல்மிக்க சில கூறுகள் என்று இறைச்சி, உள்ளுறை, குறிப்பு முதலிய உத்திகளைக் கூற முடியும். இவை உவமை, உருவகம் போன்ற உத்திகளிலிருந்து வேறுபட்டது என்பதையும் இங்கு குறிப்பிடலாம். சி. சு. செல்லப்பா முதலியவர்கள் மூலம் மேற்குலகிலிருந்து இங்கு வந்து சேர்ந்த படிமம் சில கூறுகளில் வேறுபட்டதும் சிறப்பு மிக்கதும் ஆகும். இந்த வடிவத்தை வானம்பாடிகளும் கற்றுக் கொண்டதோடு குறைந்த சொற்களோடு படிமத்தின் வடிவில் கவிதை சில படைக்கவும் செய்தனர். இன்னும் ஒன்று, செய்யுள் என்பது தமிழ் மரபு, கவிதை என்பது பெரும்பாலும் செய்யும் மரபிலிருந்து வேறுபட்டது. செய்யுள் வடிவத்தினுள் இயங்கும் ஆற்றல்மிக்க கவிதைக் கூறுகளை மரபு முறையில் வந்த புலமையாளர் உணர்ந்தனர் என்றபோதிலும், இந்தக் கவிதைக் கூறுகளைத் தனியே பிரித்தெடுத்து ஆய்வு மேற்கொண்டதாகச் சொல்வதற்கில்லை. தமிழ் மக்களின் கவிதைச் சாதனை பெரிது என்றபோதிலும், மேற்குலகத் தொடர்பு மூலமே கவிதை, கவித்துவம் பற்றி நாம் கூடுதலாக அறியத் தொடங்கினோம். செல்லப்பா முதலியவர்களின் வட்டாரத்தினுள் இருந்த பிரமிள் தமிழ் உணர்விலும் சற்றும் குறைந்தவர் இல்லை. ஞானக்கூத்தன், பிரமிள் முதலியவர்களோடு கடுமையான சொற்போரில் ஈடுபட்டிருந்தபோதே வானம்பாடிகள் கவிதை - கவித்துவம் பற்றியும் கற்றுக் கொண்டிருந்தனர். இத்தகைய கல்வி மூலம் சங்க இலக்கியத்தினுள் செயல்பட்ட கவித்துவம் பற்றி அறியும் கூடுதலான வாய்ப்பு ஏற்பட்டது. இதே சமயம் செல்லப்பா முதலியவர்களால் இனம் காணமுடியாத தமிழ் மரபு வானம்பாடிக் கவிஞர்களுக்குள் பல புதிய ஆக்கங்களை விளைவித்தது. மரபு என்பது எதுகை மோனை, யாப்பு முதலிய ஒரு சில கூறுகளை உள்ளடக்கியதாக மட்டும் இருக்க முடியாது. வள்ளுவருக்குள்ளும் இளங்கோவுக்குள்ளும் இயங்கிய தமிழின் அற உணர்வு மரபைத் தம் காலச் சூழலில் மார்க்சிய நெறியின் மூலம் வானம்பாடிகள் தமக்குள் வரித்துக் கொண்டனர். யாப்பு மரபை மட்டுமே மரபு என செல்லப்பா முதலியவர்கள் தவறாகத்தான் புரிந்து கொண்டனர். புலமை மரபைக் கேலி செய்த அவர்கள் தமிழ் மரபின் உள் ஆற்றலைக் காணத் தவறினர். இந்த இடத்தில்தான் செல்லப்பா முதலியவர்களின் நகர சார்பை மட்டுமல்லாமல் பார்ப்பனிய சார்பையும் காண வேண்டியிருக்கிறது. வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவர்கூட பார்ப்பன சாதியை சார்ந்தவராக இல்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். தமிழின் யாப்பு மரபில் மிகக் குறுகிய வடிவிலான குறட்பாவுக்கு இடமுண்டு. மிக விரிந்து செல்லும் ஆசிரியப்பாவுக்கும் இடமுண்டு. தமிழ் மரபின் கதைப் பாங்கினை வானம்பாடிகள் பின்பற்றவும் செய்தனர். புதுக்கவிதையில் கதைக் கவிதைகள் பலவற்றைப் படைத்தனர். ஒன்றை பலமுறை அடுக்கிச் சொல்லும் தமிழ் மரபு யாப்பு மரபில் இருக்கிறது. தாழிசைகள், பதிகங்கள் முதலியவை இவ்வகை வடிவங்கள். இம்முறையிலும் வானம்பாடிகள் தமிழின் யாப்பு மரபை பின்பற்றவே செய்தனர். தொகுத்துப் பார்க்கும்போது இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஒன்றுபட்ட இயக்கமாக செயல்பட்ட வானம்பாடிகள் இன்று வரை தொடர்கிற மக்கள் சார்புடைய மாபெரும் புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடிகள் என்ற பெருமையைப் பெறுகின்றனர். குறைந்த எண்ணிக்கையில் இவர்கள் தொடக்கத்தில் இருந்த போதும் மிக விரைவில் இவர்களோடு நூற்றுக்கணக்கானவர்கள் இணைந்து கொண்டனர். சிற்றாறு எனத் தொடங்கிய இயக்கம் பின்னர் பேராறாக விரிந்து பரவியது. எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கிற, இயங்குகிற கவிதையை, கவித்துவத்தை விடுவித்ததன் மூலம் தமிழ்க் கவிதைக்கு மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கும் இவர்கள் விடுதலை வழங்கினர். புலமையாளர்கள் யாப்பு என்ற சங்கிலியின் மூலம் கட்டி வைத்திருந்த யானைச் சங்கிலிகளை முறித்துக் கொண்டு கிளம்பியதைப்போல தமிழ் உணர்வாளர்கள் ஆயிரக்கணக்கில் தமக்குள்ளிருக்கும் கவிதை ஆற்றலை வெள்ளமாய் வெளிப்படுத்துகின்றனர் பெருகிச் செல்லும் வெள்ளத்தில் எத்தனையோ குப்பை கூளங்களும் வந்து போகத்தான் செய்யும். நாளடைவில் குப்பை கூளங்களை அகற்றித் தரமான கவிதைகளை நம்மால் சேகரித்துக் கொள்ள முடியும். வானம்பாடிக் கவிஞர்கள் மறுக்கமுடியாத மார்க்சிய சார்பு கொண்டவரெனினும் இவர்களுக்குள்ளும் மார்க்சியம் குறித்தும். கவிதைகள் குறித்தும் சில மாறுபட்ட கருத்துகள் இருக்கத்தான் செய்தன. வானம்பாடிகளின் இயக்கம் கவிதை இயக்கமாக மட்டுமே இருந்துவிட முடியாது. இலக்கிய இயக்கமாகவும், வாய்ப்பு நேரும்பொழுது மக்கள் இயக்கமாகவும் வளர்ச்சி பெறவேண்டும் என்று சிலர் கருதினர். மக்களின் விடுதலை நோக்கி மேலும் வளர்ச்சி பெற வேண்டிய இயக்கம் காதல் முதலியவை பற்றி பாடுவதன் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற முடியும் என்ற கருத்தில் சீரழிவுக்கு வசப்பட்டுவிடக் கூடாது என்றும் இவர்கள் கருதினர். கவிதை என்பது தத்துவத்திலிருந்து கொஞ்சம் விலகித்தான். இருக்க வேண்டும். நெருங்கிச் சென்றால் கவித்துவம் மறைந்து விடும் என்ற கருத்தையும் இரண்டொருவர் வெளிப்படுத்தினர். இப்படித் தொடங்கிய கருத்து வேறுபாடுகள் நாளடைவில் முரண்பாடுகளாய் முற்றிப் பிறகு வெடித்தன. இடையில் யார்யாரோ புகுந்தனர். எல்லாமுமே நடைபெற்றன. நாளடைவில் தவிர்க்கமுடியாமல் வானம்பாடி இயக்கம் இரண்டாகப் பிளந்தது. ஒரு பக்கம் வலது சாரிகள், இன்னொரு பக்கம் இடதுசாரிகள். வலதுசாரிகள் நாளடைவில் கலை இலக்கிய பெருமன்றத்தினுள் கலந்தனர். இவர்கள்தான் நெருக்கடிக் காலத்தின் போது “இந்திராவே இந்தியா. இந்தியாவே இந்திரா’’ என்று நூல் வெளியிட்டனர். இடையில் இன்னொன்றையும் கூற வேண்டும். மார்க்சிய சார்போடு வானம் பாடி இயக்கம் வளர்ச்சி பெற்றுவரும் காலத்தில் கட்சி சார்ந்த எவரும் இவர்களை மார்க்சியர் என்றோ இவர்களின் புதுக்கவிதை முறை சரியானதுதான் என்றோ ஏற்கவே இல்லை. கைலாசபதிக்கு இவர்களின் புதுக்கவிதை ஏற்றதாக இல்லை . தொ.மு.சி. முற்றாக மறுக்கவும் செய்தார். தாமரை இதழில் வானமாமலை அவர்களுக்கும் கனகசபாபதி அவர்களுக்கும் இடையில் நீண்ட விவாதங்கள் நடைபெற்றன. ஒரு கட்டத்தில் கனகசபாபதியின் கட்டுரையைத் தாமரை வெளியிடவில்லை. இன்னொரு கட்டத்தில் வானம்பாடியிலிருந்து பிரிந்து சென்ற இடது சாரியினர் வேள்வி இதழில் வெளிவந்த புதுக்கவிதைகள் பலவற்றைக் கவிஞர்களின் பெயர் குறிப்பிடாமல் மேற்கோள் காட்டி இவர்களின் புதுக்கவிதை உள்ளடக்கத்தை ஆதரித்து வானமாமலை விரிவான கட்டுரை எழுதினார். எதற்கெடுத்தாலும் ரஷ்யாவை மேற்கோள் காட்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு உட்படும் கட்சி வட்டாரத்தினர் ரஷ்யக் கவிஞர் மாயகவ்ஸ்கியை வெகுவாகப் பாராட்டி எழுதும்போதே அவரின் நவீன கவிதையாக்கத்தை ஏற்று எதுவும் கூறவில்லை. எனினும் சில ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் மார்க்சியக் கட்சி வட்டாரத்தைச் சார்ந்த கலை இலக்கியவாதிகள் புதுக்கவிதை முறையை வெட்கமில்லாமல் ஏற்கத் தொடங்கினர். பாரதியின் வாரிசு பேரன் என்றெல்லாம் கவிஞர் பரிணாமனைப் பாராட்டி வானமாமலை எழுதினார். தொடக்கத்தில் வானம்பாடிகளை முற்றாக ஒதுக்கிய கட்சி வட்டாரத்தினர் மெல்ல மெல்ல வானம்பாடி இயக்கத்தினுள் ஊடுருவி வானம்பாடி இயக்கத்தின் பிளவுக்கும் ஓரளவு காரணமாயினர். தி.க.சி. மிகச் சாதுர்யமாய் இந்தப் பணியைச் செய்தார். அப்புறம் வானம்பாடியின் வலது சாரியினருக்கும் கட்சியினருக்கும் இடதுசாரியினரோடு இவர்களின் பகை இன்றளவும் தொடர்கிறது. இப்போது வானம்பாடி இயக்கத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் இடையிலான உறவை மிகச் சுருக்கமாகக் குறிப்பிட வேண்டியுள்ளது. தமிழின் மரபோடுதான் வானம்பாடி இயக்கம் சார்ந்த கவிஞர்கள் இன்றளவும் செயல்படுகின்றன. இவர்கள் மார்க்சியத்தோடு பெரியாரியத்தையும் பெரிதும் நேசிக்கின்றனர். இந்தியத் தேசியத்தை முற்றாக ஒதுக்காத போதிலும் தமிழ்த் தேசியத்திற்கு முதன்மைத் தருகின்றனர். பெரியாரியமும் மார்க்சியமும் இணைந்து செயல்படுவதின் மூலமே தமிழ் மக்களின் வாழ்வு விடுதலை பெறும் என்று இவர்கள் நம்புகின்றனர். உலகச் சூழலில் நடைபெறும். விடுதலை இயக்கம் எதனையும் இன்றும் வரவேற்கின்றனர். நடுத்தர வர்க்கச் சார்பை விட்டொழிக்க இயலவில்லை என்ற போதிலும் தமிழக மக்களின் மேன்மையை இவர்கள் விரும்புகின்றனர். தமிழ் நிலத்தை தமிழ் மக்களின் தொழில் வளத்தை, அறிவு வளத்தை அந்நியர் கைப்பற்றுவதை இவர்களால் தமிழின் ஆக்கத்தோடு முற்றாக ஒத்துழைக்க விரும்புகின்றனர். சிற்பி, புவியரசு, மேத்தா, கனல்மைந்தன், ஞானி, தமிழ்நாடன், தமிழன்பன் என்று இவர்களை பெயர் சுட்டிச் சொல்ல முடியும். திருவள்ளுவர், இளங்கோ முதலிய அசலான தமிழ்ச் சிந்தனையாளர்களின் தமிழ் உணர்வை நெஞ்சில் தாங்கியுள்ள இவர்கள், வள்ளலார் என்றும் பெரியார், பாரதி என்றும் பாரதிதாசன் என்றும் நம் மரபைத் தமக்குள் வரித்துக் கொள்கின்றனர். உலக அளவில் எத்தகைய ஆதிக்கத்தோடும் முற்றாக முரண்படவே செய்கின்றனர். கவிஞர் எனத் தொடங்கிய இவர்கள் தமிழ்த் தேசிய உணர்வோடு, இப்போது இவர்கள் திறனாய்வாளர்களாகவும், சிந்தனையாளர்களாகவும் திகழ்கின்றனர். தமிழ்த் தேசியம் என்ற இயக்கம், அரசியல் என்ற இயக்கமாக மட்டுமே இருக்க முடியாது. இலக்கிய இயக்கமாகவும், பண்பாட்டு இயக்கமாகவும், தமிழ் இயக்கமாகவும் வளர்ச்சி பெற வேண்டுமென்றும் உலக அளவிலான விடுதலை இயக்கத்தின் ஒரு கூறாக இந்த இயக்கம் வளர்ச்சி பெற வேண்டும் என்றும் இவர்கள் விரும்புகின்றனர். தமிழ்த் தேசியமும், மார்க்சியமும், பெரியாரியமும் ஒரு புள்ளியில் இணைவதன் மூலம் தமிழக மக்கள் வாழ்வின் செழுமை நிறைவடையும். இந்த இலக்கு நோக்கி நாமும் செல்ல வேண்டும். குறிப்பு : தோழர் பெ. மணியரசன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ’தமிழர் கண்ணோட்டம் - 2004 சிறப்பு மலரில் வெளியான கட்டுரை. பகுதி 4 பிற்சேர்க்கை வானம்பாடிகளின் கவிதைகள் ஒரு மதிப்பீடு வானம்பாடிகளின் கூட்டம், நாளடைவில் இயக்கமாக மாறுவதற்கான வளர்ச்சிப் போக்கில் இருந்தது. சிற்பி, தன்னை வானம் பாடியாகக் கூறிக் கொள்ளாவிட்டாலும், வானம்பாடிகளோடு இருந்தார். தத்துவத்தை நெருங்கிச் செல்வது, கவிஞனுடைய படைப்பாற்றலைக் கெடுத்து விடும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. பல சிறு கவிஞர்களின் தோற்றம் ஒரு மகாகவியின் தோற்றத்துக்குத் தடையாகி விடும் என்று அவர் கருத்துத் தெரிவித்தார். வானம்பாடிகளுடன் சேருமுன்னரே வார்த்தைகளைக் கவர்ச்சிகரமாகத் தொகுத்து அடுக்குவதில் அவர் தனித்திறமை கொண்டிருந்தார். ‘ஒளிப்பறவையில் அவரது நல்ல கவிதைகள் சில உள்ளன. கவிதை, பொதுவாக இலக்கியம் பற்றிய அவரது விமர்சன நோக்கு சிற்பியின் தோற்றத்தை முக்கியத்துவப்படுத்தியிருந்தது. வானம்பாடிகளின் கூட்டத்திற்கு இவர் அடிக்கடி தலைமை தாங்கினார். தலைமை தாங்கக்கூடிய தகுதி இவருக்கு இருந்தது. ஆனால் இவரது ஒரு பக்கச் சாய்வு காரணமாகக் கூட்டம் இயக்கமாகாததற்கு இவர் முக்கியமான காரணமானார். எங்களைத் தாங்கள் எந்தக் கூண்டிற்கும் சக்தியில்லை என்ற ஆரவாரமான பிரகடனம் சிற்பியினுடையதுதான். கடைசியாகக் கிடைத்த கலை இலக்கியப் பெருமன்றக் கூண்டு, இவருக்கு வசதியாக இருக்கக் கூடும். நெருக்கடி நிலைக் காலத்தில் கிழிந்த தங்கள் முகத்திரையை மீண்டும் தைத்துப் போர்த்துக் கொள்வதற்கான வசதியை இது தந்திருக்க வேண்டும். அது சிற்பிக்கு மட்டுமல்ல வேறு சிலருக்கும். செல்லப்பா முதலிய புதுக்கவிதை முதல்வர்கள் பண்படுத்திய புதுக்கவிதை நிலத்தில் இவர்கள் அறுவடை செய்தார்கள். மார்க்சியத்திற்கு ஏற்பட்ட மரியாதையை இவர்கள் தமக்கான மரியாதையாக்கிக் கொண்டனர். இதன் மூலம் மார்க்சியம் மரியாதை கெட்டதைப் பற்றி இவர்கள் கவலைப்படவில்லை. மார்க்சியத்தை அதன் வேர் முதலிலிருந்து கற்றுக் கொள்ளக்கூட அவர்கள் முயற்சி செய்யவில்லை. மார்க்சியப் போக்கு தாங்கிய கட்சிகள் தமக்கெனக் ’கூத்தாடிகளைத்’ தேடிய போது இவர்கள் அந்த இடங்களை அலங்கரித்தார்கள். மார்க்சிய நோக்கில் ஒரு பிரச்சினையைக் கூட இவர்கள் புதிதாகக் காணவில்லை. சோவியத் யூனியன் சமூக ஏகாதிபத்தியமாகக் கொழுத்த சமயத்தில்தான் இவர்கள் ஸ்நேக புஷ்பங்களை அதற்கு அணிவித்தார்கள். வசந்தத்தின் இடிமுழக்கத்தின் ஓசைநயத்தில்தான் இவர்கள் கவிதைக்குரல் தொடங்கினார்கள். இடியை இவர்கள் தீண்ட நேர்வதற்கான சந்தர்ப்பம் நெருங்கி வந்தபோது, வசந்தத்தை மறுத்தார்கள். திருவிழாக்களில் - கவிராத்திரிகளில் கண்விழித்த இவர்கள் நெருக்கடி நிலையில் அரக்கர்களின் காலடி நிழலில் பதுங்கி அரக்கிக்குத் தம் கவிதையை அலங்காரமாக்கினார்கள். கலை இலக்கிய மன்றமும் இவர்களது சந்தர்ப்பவாதப் பயணத்தில் ஒரு தங்குமிடம்தான். தமிழ்க்கவிதையில் இவர்கள் சாதனை சிறிதளவுதான். இவர்களது சாதனைக் கவிதைகளைத் தொகுத்தால் ஒரு நூறு பக்கங்களுக்குள் அடக்கிவிடலாம். பிறகெல்லாம் வார்த்தைக் குவியல்கள், அடுக்குகள், ஆரவாரங்கள். இவை பெரும்பகுதி உண்மை சொல்லவில்லை. சொற்கோவைகளைக் கவிதை என மயங்கும் ரசிகர்களுக்கு மத்தியில் இவர்கள் தமிழ் வாணிகம் சிறப்பாக நடைபெற்றதில் வியப்பில்லை. வணிகர்கள் விளம்பரத் துறையிலும் விற்பன்னர்களாக இருப்பதிலும் வியப்பில்லை. சந்தர்ப்பவாதத்தையும் திருத்தல்வாதத்தையும் தமக்கான பலமாகக் கொண்ட கட்சி, இவர்களோடு கூட்டுச் சேர்ந்ததில் வியப்பில்லை. தி.மு.க.தனமான வாய்வீச்சில், உணர்ச்சிக் கொந்தளிப்பில், வார்த்தைப் போதையில், ஊறிப்போன மக்கள் மத்தியில், அவர்கள் போதை கலையாதிருப்பதற்காகப் புதிய முழக்கங்களை எழுப்பினார்கள். பட்டிமன்றங்களுக்கும், கோயில் திருவிழாக்களுக்கும் - காலத்திற்கேற்ற புதுப்பாணியில் கச்சேரி செய்ய புதுமுகங்களின் தேவையை இவர்கள் நிரப்பினார்கள். மக்களுக்கு மார்க்சியத்தை அறிமுகப்படுத்துகிறோம், கவிதையைக் கொண்டு செல்கிறோம் என்ற போர்வையில், இவர்கள் கதாகலாட்சேபங்களையே செய்தார்கள். இந்தப் போலி தெய்வங்கள் செய்த ஆர்ப்பாட்டத்தில் இவர்களை உண்மைத் தெய்வங்களாகக் கருதி வலம் வரும் ஒரு திருக்கூட்டத்தை உற்பத்தி செய்து கொண்டார்கள். இந்தத் திருக்கூட்டத்தின் மயக்கம் அண்மையில் தெளிய வழியில்லை. யாப்பின் கட்டு உடைந்த நிலையில் சிரமமில்லாமல் வந்து சேரும் வரிகளில் இவர்கள் பழங்கவிதைகளையே பெரும்பகுதி எழுதினார்கள். இவர்கள் கைக்கொண்ட நடைமுறைகளும், கவிதை முறையும், இவர்கள் பரப்பிய மயக்கமும், பொய்ப்பிரச்சாரங்களும் நச்சுக் களைகளாக நெடுங்காலத்திற்கு நிலவும். இவர்கள் போட்ட பாதை மறைய நாட்களாகும். அழுகி நாறிக் கொண்டிருக்கும் உடமை வர்க்கச் சமூகத்தின் இறுதிக்கால விளைச்சல்கள் இவர்கள். மார்க்சியம் தெரியாதவர்கள் மத்தியில் இவர்கள் மாமேதைகள் - கவிதை அறியாதவர் மத்தியில் இவர்கள், பாரதிக்குப் பேரர்கள். இவர்கள் சிதைந்ததில் இழப்பு எதுவுமில்லை . இவர்கள் ஒரு காலத்தின் கெட்ட கனவு. இவர்களை மறப்பது நல்லது. இவர்கள் கவிஞர்களாகவே இருப்பது என்று முடிவு கட்டிக் கொண்டவர்கள். விமர்சனம் இவர்களுக்குத் தீட்டு. இரண்டாயிரம் ஆண்டுத்தமிழுக்குத் தம்மைச் சொந்தக்காரர்களாகக் கருதித் தற்பெருமையும் ஆணவமும் கொண்ட கூட்டத்திற்குள் இவர்கள் இருப்பு தனிவகையானது. கவிதைச் சூழலில் முளைத்த காளான்கள் உண்ணவும் பயன்படும் என்ற உண்மைக்கு இவர்களும் ஒத்தவர்கள். ஆயினும் இவர்கள் காளான்கள். ஒரு சமூகத்தின் மரபில் உள்ள தீய குணங்களைக் களைய வேண்டிய கடமை, தம்முன் வந்து நின்ற போது, அந்தத் தீமைகளுக்குப் பலியானவர்கள். எதிர் நீச்சலில் வலிமை பெற்றிருக்க வேண்டியவர்கள், சுகக் குளியலில் சொக்கிக் கிடந்தார்கள். இந்த விமர்சனத்திற்கு உரியவர்கள் - முதன்மையாக தமிழ்நாடன், கங்கை, சிற்பி, புவி, மேத்தா இவர்களின் சகபாடிகள், ஆதரவாளர்கள் (இவர்கள் உற்பத்தி செய்திருக்கிற பாப்ரியாக்கள், சூரியகாந்தன்கள்). இவர்களைத் தூக்கி நிறுத்த முயன்ற - முயலும் விமர்சகர்கள், அப்புறம் இவர்களோடு கொஞ்ச காலம் உடனிருந்த நண்பர்கள், அவர்களில் இந்த விமர்சகர்களும் சேர்த்தி. இயக்கத்தில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. கூட்டத்தின் உற்சாகத்தில் கவிதை முதலியவற்றைக் கோட்டை விட்டார்கள்.ஒரு படைப்பாளிக்கு விமரிசகன் நிகராக முடியுமா? முடியாது என்றவர்கள் தங்களுக்கான ஒரு கவிதைக் கண்ணோட்டத்தை உருவாக்கிக் கொண்டு தமிழக் கவிதை வரலாற்றைப் பார்க்க மறுத்தார்கள். உலகக் கவிதையின் தரத்திற்குத் தமிழ்க் கவிதை உயர்வதை மனமார விரும்பாதவர்கள். போதும் இந்தப் புல்வெளி என்று அடியோடு மேய்ந்தார்கள். எப்போதாவது இவர்கள் திரும்பிப் பார்த்தால் தாங்கள் இருந்த இடத்தில் புல் கூட வரண்டது கண்டு அஞ்சி நடுங்குவார்கள். ஆனால் அந்தப் பாக்கியம் இவர்களுக்கு நேராது. இவர்களுக்குள் மகாகவி தோன்றியிருக்கலாம். அவனைக் குழந்தைப் பருவத்திலேயே கொன்று சவக் குழியின் மீது பாதுகாப்பாக அமர்ந்தார்கள் இவர்கள். கவிதையிலேயே ஊறிக் கிடப்பவனுக்கு கவிதையே அவன் பார்வையை அடைத்துக் கொள்ளும். இந்த விபத்து இங்கு பல பேருக்கு நேர்ந்திருக்கிறது. இவர்களுக்கு முதலில் கவிதை தவிர வேறு ஒன்றும் தெரியாதிருந்தது. இப்போது கவிதையே தெரியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. புதுக்கவிதையை அதன் வரலாற்று வழியிலும் உலகு தழுவிய வகையிலும் இவர்கள் கற்றுக் கொள்ளவில்லை. செரித்துக் கொள்ளவில்லை. கற்றுக் கொண்ட அரைகுறைப் பாடமே, தமிழகச் சூழலில் இவர்களுக்குப் போதுமானதாகத் தெரிந்தது. செரித்துக் கொண்டிருந்தால் புதுக்கவிதையின் அறிவார்ந்த மரபு இவர்களுக்குள் வந்திருக்கும். இவர்கள் கவிதை சிதையாமலே விமர்சகர்களாகி இருப்பார்கள். இவர்கள் கூறிக் கொண்டது என்ன? ஒரே பாய்ச்சலில் மறுகரையை அடைந்து விட முடியாது. மரபை மீறி விட முடியாது. சூழலை வென்று விட முடியாது. இதன் விளைவு தங்களுக்குச் சலுகை வேண்டும். தங்கள் விருப்பத்திற்கேற்ப, கவிதை எழுத, வாசிக்க, பெருமை கொள்ள, வெளியிட, பாராட்டுப் பெற்ற உயர்பீடங்களை அலங்கரிக்க, அதிகாரத்தில் உள்ளவர்களோடு சமமாகக் கொஞ்ச நேரம் அமர்ந்திருக்க, பெரிய மனிதர்களின் அருள் பெற சந்தர்ப்பவாதிகளின் உறவில் ஒளி பெற - இவற்றைத்தான் செய்து கொண்டார்கள். இப்போது இவர்களுக்குக் கிடைத்திருப்பது, அழிவுச் சக்திகளின் துணை, இது இவர்கள் பலம். இதைத் தவிர்த்துத் தமிழ்க்கவிதை முன்செல்ல வேண்டும். தற்காலிகமாக இது சிரமமான பணி. இதில் முனைபவர்களுக்கு இவர்கள் கூட்டமாக வழங்குவது அவதூறுகள்; புறம்பேசல்கள். இந்தக் குப்பைமேடுகள் தரக்கூடியது தூசிகளையே. கட்சிக் கண்ணோட்டத்தை ஏற்று அதன் எல்லைக்குள் இருந்து, அதன் தேவைக்காக மட்டுமே கவிதை தருவது என்பது இவர்கள் கொள்கையாக இருந்தால் கட்சி இலக்கியம் என்ற வரையறைக்குள் அதனை வைத்து அதற்கான அளவுகோல்களைக் கொண்டு மதிப்பிடலாம். இவர்கள் அப்படியுமில்லை. பொது இலக்கியம், உயர் இலக்கியம் என்ற தரத்தில் இயங்குவதாக நம்பியவர்கள் இவர்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் கொள்கைகள் திட்டங்கள், நடைமுறைகள், பொதுவாகவே மார்க்சியம், அதன் பிரச்சினைகள் பற்றி ஏதும் கற்றுக் கொள்ளாத நிலையில், இவர்கள் ’கட்சி இலக்கியம்’ செய்து கொண்டிருந்தார்கள். அப்படித் தாங்கள் செய்வதாக இன்றுவரை அவர்கள் அறியார்கள். இவர்கள் சார்ந்திருக்கும் மன்றம், கட்சியின் புறத்தோற்றங்களில் ஒன்றுதான் என்ற உண்மையை இவர்களேகூட மறுக்க முனைவார்கள் (மேத்தாவுக்கு இந்தக் குற்றச்சாட்டு பொருந்தாது. ஆரம்பம் முதலே அவர் காமராஜ் காங்கிரஸ் சார்புடையவர்). மார்க்சியக் குழல் ஊதுவதற்கும் அவர் சார்பிற்கும் இடையில் சில சமயங்களில் வேறுபாடு காணவில்லை அவர். வெறும் கட்சி இலக்கியமாகும் போது கவிதை வடிவம் பெருக்கும். ஒன்றைப் பலமுறை பற்பல வார்த்தைகளில் சொல்லும் குரல் ஓங்கிக் கத்தும். உரத்துக் கத்தலில் உணர்ச்சிகள் கொந்தளிக்கும்; அறிவு உறங்கும். கட்சிக்கு இது இலாபம். கவிதைக்கு நன்மையாகாது. மக்கள் மத்தியில் முழக்கப்படும் இக்கவிதைகள் எளிமையாகக் கவர்ச்சி தருவதாக இருக்கும்; இருக்க வேண்டும். இதே செய்முறையை பொது இலக்கியப் படைப்புக்குள் கொண்டு வருவது கவிதைக்கு ஆபத்து. கவியரங்கத்தில் தொடங்கிய இம்முறை தமிழ்க் கவிதையைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. கவிஞர்களின் சொந்தக் குரல் இத்தகைய கவிதை முறையால் செத்து விடுகிறது. செத்த நிலையில் தன்னை நிலைநிறுத்த ஓங்கிக் கத்த வேண்டியிருக்கிறது. அப்புறம் மாநாடுகள், தலைவர் சாவு இவற்றுக்கெல்லாம் கவிதை இயற்றும் கடமை வந்து சேர்கிறது. வானம்பாடி குறித்த கவிதைகள் - 1975 நாங்கள் உள்ளுக்குள்ளே தெரியும் காட்சியையே ரசித்துக் கொண்டிருக்கிறோம் காதுக்குள்ளேயே ஒலிபெருக்கியை வைத்துக் கேளாத ஒலிகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். காலை மாலையில் எங்கள் நிழல்களையே நாங்கள் படம்பிடித்து வைத்துக் கொள்கிறோம். எங்களைச் சுற்றி வால் குலைத்து வருவதற்கு நாய்களையே நாங்கள் வளர்க்கிறோம். எங்களை எதிர்த்து நிற்கும் எதிரிகளை நாங்கள் புழுதிகளைக் கிளப்பியே அழித்து வருகிறோம். எங்கள் குரல் இனிமையை நாங்கள் ரசிப்பதற்கு பதிவு ஒலிப்பெட்டியோடே பயணம் செய்கிறோம். புலி வேட்டைக்குச் சென்று நாங்கள் பெருச்சாலிகளையே பிடித்து வருகிறோம். வெல்ல முடியாத எதிரிகள் எங்களை வெல்வதற்குமுன் வெள்ளைக் கொடிக்குக் கீழ் கை குலுக்கிக் கொள்கிறோம். திருக்குறள்களையே தினமும் உச்சரிப்பதன் மூலம் நாங்கள் நல்லவர்களாகவே உள்ளோம். எங்களால் வெல்லப்பட்ட எதிரிகளுக்கு வைக்கோல் வயிற்றையும் மூங்கில் கால்களையும் வைத்து வானளாவ உயர்த்தியிருக்கிறோம். செத்துப்போன இராஜாதி ராஜர்களின் கல்லறைகளிலிருந்து அவர்களின் தந்திரங்களைச் சேகரித்து வைத்துள்ளோம். வண்ண விளக்குகள் வெளிச்சங்களை வாரி வீசும் இடங்களை நோக்கியே எங்கள் முகங்கள் திரும்புகின்றன. எங்களைப் பற்றி நாங்களே வண்ணத்தாள்களில் வகைவகையான படங்களோடு அச்சிட்டு உறுதியாக்கப்பட்ட புத்தகங்களை நூலகங்கள் தோறும் தவறாமல் வைத்திருக்கிறோம். மண்ணில் புழுக்களையே கொத்தித் தின்று வானிலிருந்து விழும் மழைத்துளிகளையே அருந்துகிறோம். கவியரங்கங்களில் பாடல்கள் பழகி பட்டிமன்றங்களில் ஆட்டங்கள் ஆடி கவிராத்திரிகளில் கதாகலாட்சேபம் செய்கிறோம். நாங்கள் வானத்தை மண்ணுக்குக் கொண்டு வந்துவிட்டோம் மண்ணின் மீது எழும் புழுதிகளில் பயணம் செய்கிறோம். நாங்கள் இந்த நாட்டையே வென்றுவிட்டோம். இப்போது நடப்பது எங்கள் இராச்சியந்தான். கேள்விகள் நாங்கள் கேட்போமே ஒழிய நாங்கள் எவருக்கும் விடை சொல்லமாட்டோம். எங்களால் விடை சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்க இங்கு யாருக்கும் உரிமை கிடையாது. பிறருக்கும் தேவையாகில் இன்னொரு விதி செய்வோம். மாரியம்மனை முருகனை - ஏன் எல்லாரைப் பற்றியும் கூட நாங்கள் பாடுவதெல்லாம் இந்தச் சமுதாய மேன்மைக்காகவே. நாங்கள் செதுக்கும் சிற்பங்கள் நாங்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் நாங்கள் நடத்தும் நாடகங்கள் இந்த நாட்டின் நலத்துக்காகவே எங்களுக்குள்ளே நாங்கள் ஏற்றி வைத்திருக்கும் தெய்வங்கள் எங்களிடம் கேட்கும் காணிக்கைக்காகவே உங்களிடம் வசூல் செய்கிறோம். வடக்கிலிருந்து வரும் அழைப்பைக் கேட்பதற்காகவே ரேடார்த் தட்டுகளாக எங்கள் காதுகள் வளர்ந்துள்ளன. அழைப்பொலி வராமல் இருக்காது எங்கள் கூக்குரல் வடதுருவத்தை எட்டாமலா போய்விடும்? புலவர் பாரம்பரியம் பொய்த்துவிடுமா? எங்களால் சுமக்க முடியாத பாரங்களை எடுத்துவரக் கழுதைகளுக்குப் பயிற்சி கொடுக்கிறோம். குரல் இனிமைக்காகத் தேன் சாப்பிடுவது போலவே ஆவேசம் வருவதற்கு அதற்கான மருந்தைச் சாப்பிடுகிறோம். களைத்துப் போன நேரங்களில் நாங்கள் கனிரசமே அருந்துகிறோம். வானம்பாடிகள் நாங்கள்!! வசந்த மின்னல்கள் நாங்கள்!! பட்டிமன்றங்களில் வாய்கிழிய வாந்தியெடுப்பதன் மூலம் எங்கள் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்கிறோம். கத்த முடியாத நாட்களில் எங்கள் குடல்களை எடுத்துச் சுத்தம் செய்து கொள்கிறோம். பள்ளிச் சிறுவர்களுக்காகவே பாரதியைக் கற்றுக் கொடுப்பதில் நாங்கள் தேர்ச்சி பெற்றுள்ளோம். பாட்டிகளின் பரவசத்திற்காக கம்பராமாயணத்தையும் நாங்கள் கற்றுத் தருகிறோம். காதற் கவிதைகளை கைநிறைய வைத்துள்ளோம். சந்தக் கவிதைகளையும் உங்கள் தேவைக்கேற்றபடி தயாரித் தளிப்போம். உங்களுக்குச் சேவை செய்வதற்காகவே நாங்கள் கடைதிறந்து வைத்துள்ளோம். இருபத்து நான்கு மணி நேரமும் உங்களுக்காகவே காத்திருக்கிறோம். கைநிறையக் காசு தருகிறீர்கள் நாங்கள் வாய் நிறையக் கவிதை தருகிறோம். உங்களை நாங்கள் சுரண்டுகிறோமா? சுரண்டலை ஒழிப்பதற்கல்லவா நாங்கள் சுற்றி வருகிறோம். எங்களுக்கு இது மழைக்காலம். எங்கள் தோட்டங்களில் காரட்களையே சாகுபடி செய்கிறோம். கச்சேரி சிறப்பாக அமைய வேண்டுமா? தமிழ்நாடு முழுவதிலும் ஆட்களைக் கொண்டு வருகிறோம். காசு கொஞ்சம் கூடுதல் தப்பில்லையே திரைப்படத்திற்கான வசனங்கள், பாடல்கள் எந்நேரமும் எங்களிடம் கிடைக்கும். இலவசமாக நாங்கள் தந்தால் நீங்கள் ஏதாவது தராமலா இருப்பீர்கள்! நாங்கள் புலவர்கள் நீங்கள் வள்ளல்கள் தானே! புகழே கூட எங்களுக்குப் போதுமே. சர்க்கஸ் கம்பெனி வைப்பதற்காக மிருகங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம். எங்களிடமே நாய்கள், கழுதைகள் கரடிகள் நரிகள் இருக்கின்றன. சிங்கத்தையும் யானையையும் தேடிக் கொண்டிருக்கிறோம். கிடைக்காவிட்டாலும் கவலையில்லை . நாங்களே வேம் கட்டிக் கொள்ளப் போகிறோம். பேனரை நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டோம். ரஷ்யா வரைக்கும் இந்தக் கம்பெனியைக் கொண்டு செல்லாவிட்டால் நாங்கள் வானம்பாடிகளல்ல! வளமான பார்வை மேலே எழுந்துவர எங்களை நாங்களே புரட்டிக் கொள்ளத்தான் புறப்பட்டோம். இரண்டாயிரம் வருடக் கணத்தை எப்படி எங்களால் புரட்டமுடியும்? இப்பொழுது என்ன செய்கிறோம். நெம்புகோலையே புரட்டத் தொடங்கிவிட்டோம். மலங்கள் நிறைந்து கிடக்கும் மனக்கோயிலைத் தட்டித் தகர்க்கத்தான் கிளம்பினோம். முடிகிறதா? பன்னீர் தெளிக்கப் பாடி வருகிறோம். சேறு நிறைந்த சகதிகளைத் தூக்க வந்து முடியாத நிலையில் செந்தாமரைகளாகி விட்டோம். எங்கள் வரலாற்றைக் கற்க விரும்பி ஏடுகளைப் புரட்டிப் புரட்டி முடியாமல் கரையான்களாகிப் போகிறோம். இருண்ட பாழ்வெளியில் மின்னல்களைப் பிரசவிக்கவந்து எங்களுக்கே மின்னல்களை அடித்துக் கொண்டும் மின்மினியாகி விட்டோம். (மினி மின்னலாகி விட்டோம்). வறண்ட பாலையைச் சோலையாக்க வந்து ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருக்கிறோம். அடிமைகளை விடுவிக்க வந்து நாங்களே கை விலங்குகளைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டோம். கோடிக்கணக்கான கூலியுழைப்பாளிகளின் கூட்டத்தில் பாடவந்து இப்பொழுது பாடல்களுக்குப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். பரிசுகளை எண்ணிப் பார்த்தும் போதவில்லையே என்று புகைந்து கொண்டிருக்கிறோம். ஆதிக்கக் கோட்டைகளைத் தகர்க்க வந்து அதனுள்ளே நுழைந்து அவர்களை நம்பவைக்க நாய்களாகிக் குறைக்கின்றோம். வால்கள் முளைத்து எங்களையே காட்டிக் கொண்டிருக்கிறது. நோய்களைத் தீர்க்க மருத்துவராக வந்த எங்களை எங்கள் நோய்களே தின்று கொண்டிருக்கின்றன. நாங்கள் இசைத்துக் கொண்டிருக்கிறோம். தொடங்கிய இடத்திலேயே பயணத்தை மறந்து பாடிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சமுதாயத்தின் எதிர்காலமாக வந்து இறந்த காலத்திற்குள்ளே சுழன்று கொண்டிருக்கிறோம். கனவுகளை நிஜமாக்க வந்து கனவுகளையே நிஜமாக்கிக் கொண்டிருக்கிறோம் யார்யாரையோ மீட்கக் கிளம்பிய நாங்கள் எங்களையே மீட்கத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறோம். கவிதையிலே கால்வைத்தோம் கவிதைகளைப் பாம்புகளாய் கால்களைச் சுற்றித் தளையிடுகின்றன. எங்களையே இழந்துவிட்ட நாங்கள் இனி யாரை மீட்கப் போகிறோம்? வானம்பாடிகள் நாங்கள் வசந்த மின்னல்கள் நாங்கள்! வேறு யாருக்கும் பாடுவதற்கும் உரிமையில்லை மின்னுவதற்கும் உரிமையில்லை. வேறு எங்கு மின்னினாலும் அங்கே எங்கள் இருள் திசைகளைப் போர்த்திடுவோம் இல்லாவிட்டால் முத்திரைகளில் முகம் புதைத்திடுவோம். எங்கள் கண்களுக்குள் புதைந்து கிடந்த தூசுகள் உறுத்துவது தெரியாமல் பிறர் கண்களில் படிந்திருந்த தூசிகளிலேயே கவனம் வைத்திருந்தோம். எங்கள் இதயத்தில் காடாக வளர்ந்திருந்த கள்ளிகளைப் பறித்தெடுக்க முடியாமல் நாட்டுக் கள்ளிகளைக் களைந்தெடுக்க முயன்று நாங்களே கள்ளிகளாகி விட்டோம். கழற்றப்படாமலிருந்த அடிமைச் சங்கிலிகளை அறிந்து கொள்ளாமல் நாட்டிலுள்ள அடிமைத் தளைகளை உடைக்கக் கிளம்பி நாங்களும் அடிமைகளாகி விட்டோம். நெடும் பயணம் புறப்பட்டுத் திசை தெரியாமல் வட்டத்தினுள்ளே சுற்றி வருகிறோம். இப்பொழுது நாங்கள் தூசிகளை, களைகளை தளைகளை வட்டத்தையே பாடிக் கொண்டிருக்கிறோம். வீரர்களை வேண்டி நிற்கும் நிலைமைகளில் கோமாளிகளையே கூட்டம் சேர்க்கிறோம். எங்களுக்குள் இருக்கும் வேர்கள் இரண்டாயிர வருடத்து வேர்கள் இந்த வேர்களிலிருந்து எங்களுள் விரிந்து நிற்பவை வேல மரங்கள். ஆலமரங்கள் எங்களுள் வேர்களாய் அமுங்கிக் கிடக்கின்றன. நாங்கள் என்ன செய்வோம்! வானம்பாடிகள் நாங்கள் வசந்த மின்னல்கள் நாங்கள் -1975 பூம்பொழில் இலக்கிய வட்டம் : 1- 1971 துரை! இன்று உம்மை இங்கு எதிர்பார்த்தேன். வழக்கம் போல் வரவில்லை. அடுத்து இங்கு வருவதற்குப் பல நாட்கள் ஆகலாம். நாய் வாலை நிமிர்த்த முடியுமா? இடையில் கடிதங்கள் தொடரட்டும்! இன்று நான் படித்த புத்தகம் பற்றிச் சொல்வதற்கு முன்னர், எதிர்பாராத வகையில் கலந்து கொண்ட இலக்கியக் கூட்டம் ஒன்று பற்றி முதலில் குறிப்பிடுகின்றேன். பூம்பொழில் இலக்கிய வட்டம் பற்றி நீர் கேள்விப்பட்டிருக்கலாமே! ஆர்வமுள்ள, செல்வாக்குள்ள சில இளைஞர்களால் நடத்தப்படுகிறது: தவறாமல், சிறப்பாக நடத்தப்படுகிறது. பொதுவாகக் கவிதை பற்றி இன்று பலரோடு நானும் பேசினேன். நண்பர் புவியரசு தமது கவிதைகள் சிலவற்றைப் படித்தார்: ‘ப்பூ’ என்று ஒரு கவிதை. ஆசிரியர் ஒருவரது ஒருநாள் வாழ்க்கை பற்றியது. அப்பளக் கவிதை என்ற முறையில் மரபுக் கவிதையை கேலிக்குள்ளாக்கி ஒரு கவிதை: கிழக்கில் என்ற பெயரில் புதுக்கவிதை ஒன்று : நீக்ரோக்களின் வேதனை பற்றிய மொழி பெயர்ப்புக் கவிதை கணக்கிடும் இயந்திரம் எழுதிய கவிதை இன்னொன்று. புதுக்கவிதையைச் சோதனை முறையில் எழுதுவதாகத் தெரிவித்தார். இவ்வகையில் அவர் வெற்றி பெறத் தகுதி உடையவர். பிறர் பேசியவைகளில் குறிப்பிடத் தக்கதொரு பகுதி: சு. அரங்கராசனுடையது: புதுக்கவிதையை மரபுக் கவிதையின் நோக்கில் விமர்சனம் செய்தார். எனது பேச்சில் புதுக்கவிதையின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறலானேன். கூறும் போது, அதன் வரலாறு எவ்வளவு சிக்கலானது என்பதை உணர்ந்து கூறினேன். இதன் தமிழக வரலாறும், அது எப்படி உலக வரலாற்றுடன் உறவுடையது. என்று குறிப்பிட்டேன். தமிழக வரலாற்றின் எல்லைக்குள் புதுக்கவிதையின் இயல்புகள் பற்றியும் குறிப்பிட்டேன். தமிழகத்தின் சமய, இலக்கிய மரபுகள், புதுக்கவிதைக்குள்ளும் இருப்பதைப் பார்க்கத் தவறிவிடக் கூடாது. மேல் நாட்டு முறையில் பாலியல், மரணம் ஆகியவை மிகுந்திருந்தாலும் தமிழகத்தின் பாதிப்பை புதுக்கவிதையில் பார்க்காமல், மட்டையடியாகப் புதுக்கவிதையை இகழக்கூடாது என்றேன். புதுக்கவிதையிலும் குறிப்பிட்ட அளவு எதுகை, மோனை, அடிமுறை, இசை உண்டு என்று குறிப்பிட்டேன். புதுக்கவிதை மரபுக்கவிதைக்கு ஒரு மாற்று, விமர்சனம் போல உள்ளது என்றும், இதன் படிமமுறை மரபுக்கவிதையின் செரிப்புக்குள்ளாக வேண்டும் என்றும் கூறினேன். இதைப்பற்றி இகழ்ந்து கொண்டு இருப்பதை விட ஒரு நூறு கவிதைகளையாவது தேர்ந்தெடுத்து ஆராய வேண்டும்: மரபு முறையில் பாடப்படும் பத்துக் கவிதைகளையே புதுக்கவிதை முறையிலும் பாடிப் பார்க்க வேண்டும். வேறுபாடுகள், தனிப்பண்புகளைச் சோதிக்க வேண்டும், என்றும் கூறினேன். தலைவர்: சக்திக்கனல் எனது சோதனை முறையை ஏற்றுக் கொண்டார். அத்துடன் குருவுக்கு அடங்காத மாணவன்: என்று புதுக்கவிதையைக் குறிப்பிட்டார். கருத்து வேறுபாடுகளை நான் வரவேற்பதில் முன் நிற்பவன். அது போலவே, புதுக்கவிதையையோ அல்லது வேறு எந்தச் சிக்கலையோ புறநிலைப் பொருளாக்கி ஆராய்வதன் தேவையை வற்புறுத்துகிறேன். பழைய சிந்தனை முறையில் ஊறியவர்களுக்கு இது அவ்வளவு எளிதாகப் பிடிபடாது என்று கருதுகிறேன். நன்றியுரை கூறியவர் முல்லை ஆதவன்: பாரதிதாசன், கவிதையைக் கெடுத்தார். பின்னர் வந்தவர்களின் கவிதைக் கேட்டுக்குப் பாரதிதாசன் வழி வகுத்தார் என்று குறிப்பிட்டார். பின்னர் விளக்குவதாகக் கூறிவிட்டார். இவருடைய விளக்கம் கேட்டு ஆராய்வதற்குரியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று நான் குறிப்பிட எடுத்துக் கொண்ட புத்தகம் : R.K. Narayan எழுதிய ‘Waiting for Mahatma’. ஏற்கனவே நீர் படித்த புத்தகம். எனக்கு, இது பற்றி நீர் கூறவில்லை. ஆகவே சிலவற்றை நான் கூற விரும்புகிறேன். காந்தியடிகளைப் பற்றிய படப்பிடிப்புத்தான் இந்நூலில் நான் விரும்பும் முதற்பண்பு. காந்தியாரைப் பற்றி நமது கருத்து எப்படியிருந்த போதிலும், இதை விடச் சிறந்ததொரு, உண்மையான கவர்ச்சியான படப்பிடிப்பு வேறு, இவ்வளவு சுருங்கிய முறையில் தர முடியாது. பாத்திரங்களில் Sriram, Bharati முதன்மையானவர்கள். பாரதியின் உறுதியான காந்தியப் பற்றுக்கு மேலாக அவரது இனிய கலகலப்பான பண்பு மறக்கமுடியாது. ஸ்ரீராம், பாரதியைப் பெறுவதற்காக காந்திய நெறியில் புகுகின்றான். சில சமயம் இவன் கேலிக்குரியவனாகவும், எல்லாச் சமயங்களிலும் பாரதியின் பாதையிலேயே கிடப்பவனாகவும், காண்பிக்கப்படுகிறான். ஜகதீசன் ஒரு தீவிரவாதி நேதாஜியின் அன்பன். நகராண்மைக் கழகத் தலைவர். சாதியப் பற்று வாணிகப் பற்றாக இருப்பது பற்றிய விளக்கம். காந்தியின் இயக்கம் பற்றி அரசின் கண்காணிப்பு. காந்தியாரின் இயக்கம் பற்றிப் பொது மக்களின் அக்கறையின்மை, அச்சம் ஆகியவை உண்மையாகச் சித்தரிக்கப்படுகின்றன. ஸ்ரீராமின் பாட்டி, சுடலையிலின்று எழும் காட்சி வியப்புத் தருகிறது. நாராயணின் சிறந்த நாவல்களில் ஒன்று இது என்பதில் ஐயமில்லை . காந்திய நாவல்களில் நா. பாவின் ‘ஆத்மாவின் தரிசனங்களை’ விடச் சிறந்த நாவல் இது. அதில் வரும் போதை இதில் இல்லை . இதில் தெளிவு இருக்கிறது. கவிஞர் கண்ணதாசனின் பேச்சை இன்று கேட்டேன். காங்கிரசு இணைப்புக் கூட்டத்தில் சம்பத்துடன் தானும் பேசுகிறார். முன்பு அவர் உடலில் இருந்த வீக்கம் இப்பொழுது இல்லை. வழக்கம் போலவே வளமான பேச்சு. என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் சிறு தூறல்கள் பல ; ஒரு மணி நேரம் கழித்து வந்து உதைபட்ட வேலைக்காரப் பெண், கேரம் விளையாடித் தோற்றுத் தலை குனிந்து உட்கார்ந்துவிட்ட பாரி: பாரி விளையாடிக் கிழித்த விளையாட்டுப் பொருள்களைத் தன் குழந்தைக்கு எடுத்துச் சென்ற என் தம்பி! இக்காட்சிகள் மனத்திற்குள் கிடக்கட்டும்! இங்ஙனம் ‘கி’ 30-05-71 பூம்பொழில் இலக்கிய வட்டம் - 2 துரை! நேற்று ஒரு கடுமையான சோதனைக்குப் போய் வந்தேன். தேவையான பயனுள்ள, எப்படியோ என் மனம் மிக விரும்புகின்ற சோதனை. விளக்கம் தேவை இல்லையா? நேற்று ‘பூம்பொழி’லின் சார்பில் ’வானம்பாடிகள்’ கூட்டம் நடைபெற்றது. பொருள்: உருவம், உள்ளடக்கம். முதல் உரை: இளமுருகு பின்னர் பலர் தாம் எழுதிய கவிதைகளைப் படித்தனர். இடையிலும் இறுதியிலும் விவாதங்கள் தலைவர் சக்திக் கனல். வியப்புக்குரிய ஒரு காரியம்: நான் பேசவே இல்லை. மிகச் சிரமப்பட்டு என்னை நான் அடக்கிக் கொண்டிருந்தேன். ஏன் என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். பற்பல விடைகள் மனத்தில் மோதுகின்றன. சரியான விடை தெளிவுறவில்லை. அடக்கிக் கொண்டு இருக்க முடியுமா என்று எனக்கு நானே சோதனை வைத்துக் கொண்டிருக்க வேண்டும். இளமுருகு என்னைப் புரிந்து கொள்ள மாட்டார் என்பதும் காரணமாக இருந்திருக்கலாம். பேச்சாளர்களுடன் சேர்ந்து மற்றவர்களும் தடுமாறுவதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை காரணமாக இருந்திருக்கலாம். இளமுருகை விமர்சனம் செய்ய ஆரம்பித்தால் எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்ற சிக்கலில் நான் ஆழ்ந்து விட்டிருக்கலாம். இளமுருகைப் புரிந்து கொள்ள அல்லது அவர் கூறுவதைத் தமக்குச் சிந்தனைக்குரிய ஒரு பொருளாக மற்றவர் அவர் கருத்தை முதலில் முழுமையாகத் தாங்கிக் கொள்ளட்டும்: உடனடி விமர்சனம் இதற்கு உதவாது என்பதும் வாய்ப்பைத் தவறவிட்டு விட்டேன். மறுமுறை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளமுருகு என்ன பேசினார் என்பதை முதலில் குறிப்பிடுகிறேன். கூட்டத்தில் அவர் முதலிலும் இறுதியிலும் பேசியவை : கூட்டம் முடிந்த பின் அவரோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் கூறியவை: அனைத்தையும் கலந்தே குறிப்பிடுகிறேன். தாகூரிலிருந்து விரிவான மேற்கோள் காட்டி அவர் கூறியது: கவிதை, உணர்ச்சியின் மொழி இது இவ்வாறு என் மனத்தில் தோன்றுகிறது என்பதைக் கவிஞர் எடுத்துரைப்பது கவிதை. நேரிடையாகக் கூற முடியாததை கூறுவதற்குக் கவிதை மொழி, உணர்ச்சி மொழி, பயன்படுகிறது. இதற்காக சிறப்புப் பொருள் அமைந்து, மொழியின் சொற்களை வளைத்துக் கவிஞன் கூறுகிறான். எல்லையற்றது பற்றி எல்லையுடைய சொற்களைக் கொண்டு விளக்க முடியாது. அப்போது எல்லைக்குட்பட்ட மொழியை உடைப்பது. தேவையாகிறது இதற்கு உருவகம் தேவைப்படுகிறது. ’’வெளியுலகம் நமது உள்ளத்து உணர்ச்சிகளுள் புகுந்து கலந்து நமது உலகமாகிறது. இது நமது (தனி) உலகம் வெளியுலகைக் கவிஞன் தனது உலகமாக - புற உலகைவிடச் சொந்தம் மிகுந்த உலகமாகச் செய்கிறான். உள்ளத்தின் ஜீரண ரசத்தைக் கொண்டு செரித்து இவ்வுலகை மாற்றி மனிதர்களுக்குத் தருகிறான். இது இதயத்தின் உலகம்" “ஆடவரின் உடை, தேவைக்காக மட்டும். பெண்களின் உடை அழகியது. அழகுக்காக உடுத்தப்படுவது. இவ்வுடை இதயத்தை வசியம் செய்ய வேண்டும். ஆணின் தோற்றத்தில் தெளிவு அமைய வேண்டும். பெண்களின் தோற்றத்தில் நாணம் - ஒளிவு மறைவு, நாணம் தேவை. அலங்காரம் அவளை மூடிவிடுவதில்லை . கவிதையும் பெண் போன்றது’‘. ’‘இலக்கியத்தில் ஓவியமும் இசையும் கலக்கின்றன. சொல்லுக்கு அப்பாற்பட்ட அழகைச் சொல்லுக்குள் நிலைநிறுத்த இவை தேவை. ஓவியம், உடல். இசை உயிர்’. உருவம், உள்ளடக்கம் பற்றிய இக்கருத்துக்கள் இவை. வழக்கமாக அவர் காட்டும் சில மேற்கோள்கள்: சோளப்பொறி நடுவே சுட்டு வைத்த தோசையைப் போல் இதற்கு அவர் தரும் விளக்கம்: சாதாரண மக்களின் மொழியே கவிதை. “அடிச்சானோ மல்லிகைப்பூச் செண்டாலே ‘’ இதன் விளக்கம்: தொனிப் பொருள் அடங்கியது கவிதை. நாட்டுப்பாடல், பாரதி ‘ஆதிசிவன் பெற்றதாக தமிழைக் கூறியது, மரபு - பழமைக் கருத்து: பாரதிதாசனிடம் விஞ்ஞான அணுகல் முறை இருக்கிறது. முந்திய நாளினில் அறிவும் இல்லாது, மொய்த்த நன் மனிதராம் புதுப்புனல் மீது - செந்தாமரைக் காடு பூத்தது போலச் செழித்தது தமிழ். இவ்வுவமையைக் கொண்டு “கூறவந்ததைக் கூறவும் இல்லை: கூறாமல் இருக்கவும் இல்லை பாரதிதாசனின் கிளிப்பாடல் : ’’தின்னப் பழங் கொடுப்பர்” : ஒரு உருவகம் : தன் கருத்தை கூறுவதற்குக் கிளி ஒரு கருவி" கிளி மீது மனித உணர்வுகளை ஏற்றிப் பாடியுள்ளார் பாரதிதாசன்’‘. கவிதையில் உருவகம் இருக்க வேண்டும்: சங்க இலக்கியத்தில் இம்முறை பரந்திருக்கிறது. அகத்தி: (நெய்தல் 210) உறுமீன் தலைவியைக் குறிக்கிறது : பாலையில் பருத்திக்காய் உணவு கூடக் கிடைப்பதில்லை. மருதத்தில் ’எருமை’ உருவகம். அகத்திணைகள் ஐந்தும் குறியீடுகள்: Symbols: குறிஞ்சி இளமைத் துடிப்பு : வீரச்செயல்: உணர்ச்சிவயப்பட்ட இன்பத்திளைப்பு சிறுபிள்ளைத்தனம் ஆகியவற்றுக்கு ஒரு குறியீடு : பாலை, வறுமைக்கு ஒரு குறியீடு : நெய்தல், பரிதாபத்திற்குக் குறியீடு : அனுபவித்துவிட்டுப் பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வரவே மாட்டான். தலைவி சாகிறாள்: மருதம், வாழ்வில் சிக்கலுக்குக் குறியீடு: அறம், பொருள், இன்பத்தில் சிக்கல். வாழ்வின் வெற்றியை உள்ளடக்கியது முல்லைத் திணை. பரணர் பாடல் (122) உருவச் சிறப்புடையது. Narrative poem: இது சிறந்த கவிதை இல்லை . இளமுருகின் கருத்துக்கள் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்னர் கவிதைகள், கருத்துக்கள் பற்றி முடித்துக் கொள்ள விரும்புகிறேன் நித்திலன் படித்த கவிதைகள் நான்கு: 1. சிட்டுக் குருவி. 2. கிளிஞ்சல் கைகள் 3. செம்மைக் கீற்றும் தோன்றும்: செந்தாமரைக் காடும் மலரும். 4. இதயப் பரப்பில் காதல் எழுந்தால் கழுத்தை நசுக்குங்கள். ‘கிளிஞ்சல் கைகள்’ கவிதை இணையற்றது. எந்தப் பெருங்கவிஞர்க்கும் அறைகூவல் விடக் கூடியது: ஜெயராஜ் தனக்கு பிடித்த கவிதை ஒன்று படித்தார்: Spiritlers sone: வேலையில்லாதவர் நிலை பற்றி சண்முகம், பிச்சைகாரர் நல்வாழ்வுத் திட்டத்தைக் கருத்தாகக் கொண்டு, ‘எங்கள் கழனிகளின் விடி வெள்ளிகள் பூக்கின்றன’ என்று தொடங்கிப் பாடினார். புதுக்கவிதை: முல்லை ஆதவன், இதே முதலடியில் மற்றொரு கவிதை படித்தார்.”எங்கள் கழனிகளில் விடிவெள்ளிகள் பூக்குமா?" என்று மாற்றி பரத்தையர்க்கு நல்வாழ்வு கிடைக்குமா என்று பாடினார் முல்லை ஆதவன், உவமை, உருவகம் எதுவும் இல்லாமல் கவிதை அமையும் என்ற கருத்துடன் பொற்கோவின் தலைமையில் அண்ணாமலை நகரிலுள்ளவர் குழு பற்றிக் குறிப்பிட்டார். ஆவிளங் கண்ணன், - ‘குடியுங்கள்’ என்று வசன கவிதை படித்தார். ‘மசை நாய்கள்’ என்று நக்சல்பாரிகளைக் குறிக்கும் கவிதை படித்து விட்டு, பத்திரிகையாசிரியர்க்காக இவ்வாறு எழுதியதாகக் கூறினார் - சக்திக்கனல். பாம்பண்ணன், வேலன் பற்றிய கதைக் கவிதை, மதப்பூதம் பற்றிய கவிதை படித்தார். படிமம் பற்றித் தமக்கு அறவே புரியவில்லை என்றார் அவர். பாம்பண்ணன் பற்றிய கதைக் கவிதை 48ல் எழுதியது. இன்று வெளியிட்டால் நக்சல்பாரிக் கவிதை ஆகிவிடும் என்று குறிப்பிட்டார். முல்லை ஆதவன் குழுவினர் கவிதை முயற்சி பாராட்டத்தக்கது. இனி இளமுருகின் கருத்துப்பற்றிய விமர்சனத்திற்கு வருவோம். 1. கவிதை உணர்ச்சியின் மொழி என்ற இலக்கணத்தில் தொடங்கினால் இறுதியில் தனிநபர் வாதம், மாயாவாதம் (Mystericism) ஆகியவற்றில் போய் முடிவதைத் தடுக்க முடியாது. ’என் மகிழ்ச்சிக்காகத் தேவைக்காகக் கவிதை எழுதுகிறேன். என் விருப்பம் போல எழுதுவேன் என்று தான் கவிஞன் கூற வேண்டிவரும். உருவ இயலுக்கு முதன்மை கொடுக்கும் போக்கும் இத்துடன் உருவாகி விடும். உணர்ச்சிக்கும் அறிவுக்கும் உள்ள நேர் எதிர் வினைகளைப் புரிந்து கொள்ளவில்லையானால் நேரப்போகும் - Meta physical and out look - ஒரு தலைச் சார்பான பார்வையைத் தவிர்க்க முடியாது. T.S. Elit கருத்துப்படி Intellectual emotion தேவை. உணர்ச்சி, உணர்ச்சி என்று கத்தினால், இறுதியில் குழப்பம், பைத்தியம், வெறி, மாயாவாதம் தான் மிச்சமாகும். 2. புற உலகம் மனத்திற்குள் புகுந்து அகவுலகமாகிறது என்பது உண்மை. கவிஞர்கள் இக்கடமையில் முன்னிற்கிறார்கள் என்பதும் உண்மை. கவிஞர்கள் இவ்வுலகத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதும் உண்மை ஆனால் இக்கருத்துக்கள் மட்டுமே முழு உண்மையல்ல. கவிஞர்கள் மட்டுமல்லாமல் எல்லா மனிதர்களும் உலகத்தை இப்படித்தான் அகவயமாக்கிக் கொள்கிறார்கள். உலகில் வாழ்வதென்றால் அகவயமாக்குதலை செய்துதான் தீர வேண்டும். இதனால் ஒவ்வொருவர்க்கும் ஓர் அக உலகமாகி விடாது. தவிர, அகவயமாக்குவதற்கான அடிப்படைகள், சிந்தனை முறைகள் முதலியவை யாவை என்பது பற்றியும் நமக்குத் தெளிவிருக்க வேண்டும். காலம், வரலாற்று நிலைமை, வர்க்க நிலைமைகளுக்கு ஏற்றவாறு அகவய உலகங்கள் வகைப்பட்டுச் சுருங்குகின்றன. சமயத் தத்துவம் முதலியவற்றுக்கேற்ப, புறவுலகம் அகவுலகமாகச் செரித்துக் கொள்ளப்படுகிறது. கல்விமுறை, சமயத்தத்துவம், குழந்தை வளர்ப்பு, அரசாங்கம் முதலியவை அகவய உலக ஆக்கத்தில் பெறும் பங்கை நாம் பார்க்கத் தெரிய வேண்டும். தவிர அக உலகமும் மாறுகிறது. அகவுலகத்திற்குள் எதிர்கால உலகமும் அடங்கியிருக்கிறது. இவ்வுலகம், அனுபவங்கள் சேரச் சேர, கல்விப் பயிற்சி தெளிவுடையதாக மாறும். இவ்வடிப்படைகள் இல்லாமல் அகவுலகத்திற்கு அதிக மதிப்பளித்தால், அதுவும் மாயாவாதமாகி விடும். இது பற்றிய மார்க்சிய விளக்கத்தை காட்டுவெல் மிகச் சிறப்பாகத் தந்திருக்கிறார். நம்மை இவ்வகையில் மாயாவாதிகள் ஏமாற்றிவிட முடியாது. இவர்களுக்கு பெண்கள், இரசிக்கப்படுவதற்காகவே உள்ளவர்கள். கவிதைகளும் இன்புறுவதற்கும் இன்புறுத்துவதற்குமாகவே உள்ளன. இது வடிகட்டின உடமைவாதிகளின் கண்ணோட்டம் என்பதில் ஐயமில்லை. 3. குறிப்பால் பொருள் தருவது கவிதையில் ஒரு குணம். இதனால் குறிப்பே கவிதையாகிவிடாது. குறியீடுகள், படிமங்கள் - கவிதைகளில் இடம்பெற்று, கவிதைக்கு அழகு சேர்க்கின்றன. ஆனால் படிமம் இருந்தால்தான் கவிதை அல்லது சிறந்த கவிதை என்றாகி விடாது - படித்த வட்டாரத்தில் அதுவும் குறிப்பிட்ட பகுதியினர்க்கே கவிதை என்றாகி விடும். 4. சங்க இலக்கியத்திற்கு மாயாவாத முறையில் பொருள்படுத்துவது வரலாற்று முறைக்கு மாறுபட்டது. சங்க காலத்தில் மாயாவாதம் ஓங்கியிருக்கவில்லை. கவிஞர்க்கு இடையில் இவ்வாதம் இடம் பெறவில்லை. இடம் பெற்றிருந்தது என்றாலும் அது மிகச் சிறிய அளவே இருந்தது. சித்தர் காலத்தில் இது உச்ச கட்டத்தை அடைந்தது. பாரதியிடம் சிறிதளவு உண்டு. இயேசு, முருகன் ஆகிய கடவுளர்க்கு அவர் கூறும் பொருள் - குயில் பாட்டில் வேதாந்தமாகப் பொருள் உரைக்கலாமா என்ற கேள்வி இதற்குச் சான்று. பாரதிதாசன் முழுக்க முழுக்க உலகாயதவாதி, கிளி பற்றிய பாடலில் கிளியைப் பார்த்துதான் பேசுகிறார். தேசியப் போராட்டத்தில் காந்தியவாதம் பற்றிய விமர்சனம் இப்பாடலில் இடம் பெறுகிறது. பாடலின் முதற் பகுதியும் மறுபகுதியும், முரண் அமைந்து, பாடலுக்கு அழகு சேர்க்கிறது. பாரதிதாசன், இப்படி குறிப்புப் பொருள் தொனிக்கப் பாடுபவரல்ல. வரலாற்றியல் நோக்கில் சங்க இலக்கியத்திற்குப் பொருள் காண்பதுதான் சரி. இதுதான் அற்புதங்களை வெளிக்கொணரும் முறை. இலக்கியத்தில் Symbolismத்திற்கு அதிக மதிப்புத் தந்ததன் விளைவே, பரணர் பாடல் சிறந்த பாடலாகாது என்ற கருத்து, பாரதிதாசனுக்குள் மாயாவாதம் காண்பது. சங்ககாலம் மெய்மையியல் (Realism) ஓங்கியிருந்த காலம் மாயாவாதம் ஓங்க வில்லை. இளமுருகு, தன் கருத்து மாயாவாதக் கருத்து என்பதை மறுத்தார். கிளி எப்படிக் குருவியாக முடியும் என்பதற்குப் பதில் கூறவில்லை. Symbolism முறைக்கும் மாயாவாதத்திற்கும் உறவே இல்லை என்று மறுத்தார். 5. இளமுருகுவின் கருத்தில் ஏற்றுக்கொள்வதற்குரியது ஒன்றும் இல்லையா என்று கேட்கலாம். முதலில் மார்க்சியத்தில் காலூன்றி நிற்க வேண்டும். பிறகு இச்சோதனைகள் செய்து பார்க்கலாம். இல்லையானால் அவை சோதனைகளாகி உண்மையாகி விடலாம். கவிதையில் வெறும் கருத்துக்கே முதன்மை தந்து - பிற அழகுகளின்றிப் பாடுவது பற்றி அவர் வெறுப்படைந்திருக்கலாம். படிமங்கள் அழகு சேர்ப்பவை. ஆகவே அவை தேவை என்ற முறையில் அவர் கருத்து அமையுமானால் மிக நல்லது. அப்பகுதியை நாம் வரவேற்கலாம். ஆனால் படிமங்களுக்கே மரியாதை முழுவதும் என்பதை நாம் ஏற்பதற்கில்லை. வற்புறுத்திக் கேட்டால், இதுதான் தன் கருத்து என்றும் கூறி விடுகின்றார். இதுதான் தொல்லை. 6. அப்படியானால் தாகூரைப் பற்றி என்ன சொல்கிறாய் என்று கேட்லாம். தாகூரைப் பற்றிய ஆய்வு மிக விரிவாகச் செய்ய வேண்டியது. நிச்சயமாக தாகூர் ஒரு மேதை: கவிஞர்க்கு வழிகாட்டி, ஆசிரியர். ஐயமில்லை. ஆனால் படிம முறையில் நிறைய எழுதினார். அப்படிமங்கள் சிக்கலானவையா? உட்பொருளை மறைப்பதற்காகவா அவர் படிமங்கள் வைத்துப் பாடினார்? கருத்தை அழகுபடுத்துவது அவரது நோக்கம் மறைப்பதல்லவே! இரண்டு செய்திகள் : 1. தாகூரை நாம் முழுமையாக எடுத்துப் பார்க்க வேண்டும். கடினமான பணி. நீண்ட நாட் பணி: ஆனாலும் செய்ய வேண்டும். 2. மார்க்சியம் தாகூரைச் செரிக்கும் ஆற்றலுடையது. நமக்குத் தாகூர் வழித்துணையாகக் கூட இருக்கலாம். வழிகாட்டியாக முடியாது. பிற ……………….. பின் ………………..னர் இங்ஙனம் ‘கி’ 21 -05-71 பகுதி 5 வேள்வி - I வானம்பாடிகளின் இயக்க வெளியீடு - 1 ஏப்ரல் 1974 வானம்பாடிகளின் வேள்வி பிரகலாதன் தந்தையே! உமது கையில் பகடைக் காய்களாய்… உமது காலில் பிய்ந்த செருப்பாய்… உமது வாயில் சாராய நெடியாய்…. நாங்கள் எத்தனை காலம் இருப்பது? கோடைப்பகல்களில் … பாலை வழிகளில்…. சூனிய கிளைகளின் தேயும் நிழல்களாய்…. நாங்கள் எத்தனை காலம் தேய்வது? சுமை தாங்கிக் கற்களாய்… சுயமற்ற கிளிகளாய்… எத்தனை காலம் இருந்து தொலைப்பது? உமது சுயநலம் ஊறிய கைகள் எங்கள் வாழ்வைக் காயடித்தன். மலடுகளாக்கிச் சிறகு முறித்தன. பறக்க முடியாப் பறவைகளாக… பார்வைகள் அற்ற குருடுகளாக… இன்னும் எத்தனை காலம் போவது? சகோதரி மார்கள் தாலிகள் அறுபட… எங்கள் அன்னையர் கால்களில் மிதிபட ஒருவன் சுகத்துக்கு ஊரே அழிவதா? முதுமைப் பிணத்தின் அரக்கப் பிடியில் இளைய தளிர்கள் கசங்கிச் சாவதா? இல்லை! இல்லை! இல்லை தந்தையே! எரியும் எங்கள் நெருப்பு நெஞ்சுகள்… கொதிக்கும் அக்கினிக்குழம்பை எடுத்து கொளுத்திய உனது சாம்பல் மேட்டில் எங்கள் செடிகள் இலைவிட காண்போம். -இளமுருகு பேசுவதெல்லாம் கவிதையல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கவிதையும் பேசும் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? வாழ்வை நேசிப்பதென்பது, கவிதையை நேசிப்பதாகவே சிலருக்குப் படுகிறது. வாழ்க்கை கவிதையாக இருப்ப தில்லை. வாழ்க்கை வாழ்க்கையாகத் தான் இருக்கிறது. உண்மையை, அழகு படுத்துவ தன்மூலம் உயர்த்துவது என்ற கோட்பாட் டைக் கைவிட்டு - உண்மையை, வெளிப்படுத் துவதன் மூலம் அழகு படுத்துவது - என்ற எல்லைக்கு கவிஞன் வரவேண்டும். அவனே மக்கள் கவிஞன் ! -ஜீவஒளி ஒரே கல்லில்…. - மீரா வேலுத்தேவன் பட்டி மிராசுதார் வேலையை விட்டே விரட்டி அடித்தார் காரியை தரிசியை … அவர் இருக்கும் வரை கல்யாணம் என்பது நடக்க மாட்டாதாம்! சோதிடன் எவனோ சொல்லி யுள்ளானாம்! சில மாதங்கள் சென்றன. புதிதாய்ப் போட்ட காரியதரிசியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார். இவர் இருக்கும் வரை பிள்ளை எதுவும் பிறக்க மாட்டாதாம்! இதுவும் – சொன்னது தானாம் மிராசுதாருக்கொரு மேலான யோசனை பேசாமல் – கன்னி ஒருத்தியை காரியதரிசியாய் நியமனம் செய்தால் நிச்சயம் கல்யாண வேலையும் நடக்கும் …. பிள்ளையும் கூடப் பிறக்கும்….. மயசரணாலயபடிப்பட்டயம் ’கோரா கவிதைகள் (1) திரை போட்டு மறைத்து வை உலகத்தை! குத்தீட்டி போல் கிளம்பும் வானளாவும் கட்டடங்கள் திரைகிழியத் தெரியுமெனில் அதற்குமொரு மறைப்பு வை இரும்புத்திரை நாடென்று ஒருகாலம் சொன்னது போல் திரை படிந்த உலகென்று பிரபஞ்சம் கதை பேசும் … பேசட்டும்! சரி… மூட்டம் பரவு மெனில் ஒரு புதிய சூரியனை உலவவிடு உள்ளே! அதனொளியில் கனவுகளைப் புதிதாக்கு அது போதும் நமக்கு. மொய்க்கும் இருள் - பர்வதகுமாரி என் இதயத்தில் …. ரத்தப் பொறிகள் - கோலங்களாய்த் தெறிக்கையில் … ரத்தின மாலை கண்ணீர்ச்சருகுகளை உதிர்க்கிறது உன்னிடத்தில் என்னுடலெங்கும் கண்ணீர்… உன்னிடமெங்கும் மலர்கள்…. உவர்நீர் வற்றிய என் தேகம் இனி… தன் செந்நீர் கொண்டுதான் உன் மாலைக் கால் மண்டபத்தின் மணிச் சுவரை இழைக்கும். இடையில்…. உன் வீட்டு நாய்க்கும் உதிக்கும் அச்சூரியன் என் வீட்டைப் பாராதோ….? கூரையில்லாத என் வீட்டில் இருள் கிடந்து மொய்க்கிறது …. என் சுருதி சோர்ந்து விட்டது … பண் நரம்புகள் தளர்ந்து விட்டன …. அறுந்த தந்தியாய்…. அவலத்தின் ஓலமாய் …. உதிர்ந்த இதழ்களாய்… கலைந்த காக்கைக் கூடாகி விட்டேன். ஓ…..! அந்தக் காக்கைக் கூட்டில் வாழும் குயில் கூட காக்கையை விரட்டுவதில்லை என் உழைப்பில் உயர்ந்த நீயோ … நான் எதைச் சொல்வது..? (2) நாம் இருவர் நமக்கு இருவர் அடுத்த குழந்தை இப்போது இல்லை. இரண்டுக்கு மேலே எப்போதும் இல்லை. இருந்தும் ஏன் எங்கள் பசி தீரவில்லை? ஒளியை விழுங்கி…. இருளை உமிழ்ந்து….. பொய்மையிலிருந்து சத்தியத்திற்கும் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கும் ….. மரணத்திலிருந்து நித்தியத்திற்கும்…. எம்மை அழைத்துச் செல்… என்று தொடங்கும் பிரஹதாரண்ய உபநி த் - சொல்லும் இம்மந்திர உண்மை, காலம் காலமாக நம் மூதாதைகள் அறிவின் மூலத்தைத் தேடி இடைவிடாது நடத்திய ஞான வேள்வியில் உதித்தது. இந்த மகத்தான உண்மைதான், யுக யுகாந்திரங்களாக மனித சமூகத்தை வழிநடத்திக் கொண்டு வந்திருக்கிறது. இந்த உந்தும் உண்மை - தற்காலத் தமிழ் இலக்கிய உலகின் அறிவியல் தேவைகளைப் பூரணமாக எதிரொலிக்கிறது. தமிழ்ச் சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து, சமூக மாற்றத்திற்கான இயக்கம் - அரசியல் பொருளாதார, கலாச்சாரத் துறைகளில் ஊடுருவிக் கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம். இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் இலக்கியச் சிந்தனை புரட்சிகரமாக மாறி வருகிறது. இலக்கியத்தைப் பற்றிய நமது நெடு நாளைய கருத்தோட்டம் - சமுதாயத்தின் கீழ்மட்டத்திலிருந்து கிளம்பும் மாறுதல்களின் தாக்கங்களால் சிதைந்து நொறுங்கி வருகிறது. இது இயற்கை நியதி. இந்த இயற்கையான நியதியை எந்த மகேஸ்வர சக்தியும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பற்றி எரிந்து கொண்டிருக்கும் பழம் கருத்துக்குடிசைகளின் சாம்பல் மேட்டில் - புத்தம் புதிய கட்டடங்களை நிர்மாணிக்கத் தக்க காலம் இது எனக் கருதுகிறோம் நாங்கள். புதிய கட்டுமானங்களை நிச்சயிக்கையில் நாம் கவனிக்க வேண்டியது:- படைப்பாளி ஒரு சமூக ஜீவி என்பதை நிகழ்கால இலக்கியப் போக்கின் சூழலில் இதை வலியுறுத்த வேண்டியது மிகவும் அவசர அவசியமாகப்படுகிறது. ’நம்மைப் பற்றி நாம் என்னதான்…. எண்ணிக் கொண்டிருந்தாலும், சாராம்சத்தில் நாம் சமூக ஜீவிகளே. நாம், நமக்கு முன் வாழ்ந்தோரிடமிருந்தும், நம்மைச் சுற்றி வாழ்வோரிடமிருந்தும் - கற்றுக் கொள்ளவும், பெற்றுக் கொள்ளவும் வேண்டும். எத்தனை பெரிய மேதையாயிருந்தாலும், தன்னிடமிருந்து மட்டுமே படைக்க முயன்றால் அவனால் வெகுதூரம் போக முடியாது. ஆனால் பல ‘வெள்ளைப் பறவைகள்’ இந்த நிஜத்தை புரிந்து கொள்ளாமல், தம் தனித்தன்மைகளைப் பற்றிய சொப்பனச் சுகங்களில் சிறகடித்தபடி தம்மை வாழ்வின் பெரும் பகுதியை இருட்டில் துழாவுவதிலேயே விரயமாக்கி விடுகின்றனர் என்ற கருத்துப்பட ஜெர்மானிய மகாகவி கதே சொல்லிப் போன உண்மையின் சூட்டை இந்த ‘நல்ல நேரத்தில்’ நாம் நெஞ்சில் வாங்கிக் கொள்வது நல்லது. படைப்பாளிக்கு ‘சமூகப்பிரக்ஞை’ இருக்க வேண்டியதன் அவசியத்தைத்தான் ‘கதே’ இங்கு வலியுறுத்துகிறார். இதன் பொருள்: - படைப்பாளிக்குத் தனித்தன்மை வேண்டாம் என்பதல்ல, மாறாக - அத்தனித்தன்மையை சமூகத்தின் அடித்தளத்தில் நிர்மாணிக்கப்படும் கலை சிருஷ்டியில் இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்பதுதான். சமுதாயத்தின் அடித்தளத்தின் மேல் தனித்தன்மையுள்ள படைப்புகளை எழுப்புவது என்றால் - என்ன பொருள்? கலைஞனின் தனித்தன்மையையும், சமுதாயத்தின் அடித்தளத்தையும் ஒன்றிணைப்பது எவ்வாறு? மரபுப் பார்வைகள் - புதிய தரிசனங்கள் - என்ற முரண்பாட்டை ஐக்கியமாக்குவது எப்படி கலை சிருஷ்டியின் இந்த மர்மங்களை இனம் காண, மேதை டால்ஸ்டாயின் கருத்து நமக்கு உதவும். கலைஞன் படைப்பது கலை என்ற பெயருக்குத் தகுதி உடையதாக இருக்க வேண்டுமானால் அவன், -cகாண்பதும் - அறிவதும் - உணர்வதும் அதற்குமுன் கண்டதற்கும் - அறிந்ததற்கும் -உணர்ந்ததிற்கும் முற்றிலும் மாறானதாக இருக்க வேண்டும். அதேபோது - அந்தப்புதிய தரிசனம் - மனித சமுதாயத்திற்கு ==தேவையானதாக, பொருத்தமானதாக, ==பயன்தருவதாக இருப்பதோடு - சமூகத்தவரால், ==காண்பதற்கும், அறிவதற்கும், உணர்வதற்கும் ==எளிதாக இருக்கவேண்டும். கலைஞன் இவ்வாறு காணவும், அறியவும், உணரவும் தேவையான தகுதியைப் பெற அவன் அதற்கேற்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பொருட்டு, அவன் முற்றிலும் சுயநலத்தில் மட்டும் அக்கறையோடு வாழக்கூடாது. மாறாக, மனித சமூகத்தோடு தன்னைப் பிணைத்துக் கொள்ள வேண்டும். சமுதாயப் பிரக்ஞையோடு கலைப் பிரக்ஞையை ஒருங்கிணைத்தால் ஒழிய, கலை அதன் பெயருக்கேற்ற தகுதி உடையதாய் இருக்காது என்பதே டால்ஸ்டாயின் கருத்து. ஆனால் இங்குதான் கலைஞனின் ஆளுமை சோதனைக்குள்ளாகிறது. தான் வாழும் நிகழ்காலச் சமுதாயத்தில் வழக்கிலிருக்கும் கோட்பாடுகளையும், அச்சமுதாயத்தின் கடந்தகால வரலாற்றில் தோன்றி மக்கள் சிந்தையில் மரபாகப் புதைந்து கிடக்கும் சமுதாயக்கலை இலக்கியக் கருத்தோட்டங்களை ஆராய்ந்தறிந்து தான் வாழும் சமூகத்தின் வருங்காலப் போக்கிற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் வல்லமையை பெற்றாலொழிய சமுதாயத் தேவைகளுக்கு ஏற்ற தனித்தன்மை பொருந்திய இலக்கியப் படைப்புகளை சிருஷ்டிக்க முடியாது. தமிழ் நாட்டில் தற்போது சமுதாயக் கோட்பாடுகளை ஆராய்வதும், மேலும் ஆராய்வதும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், கலை இலக்கியக் கோட்பாடுகளை ஆய்வதும் - என்று நாங்கள் கருதுகிறோம். தமிழ்ச் சமுதாயம், தன் நீண்ட நெடும் வரலாற்றுக்கால கட்டத்தில், பல்வேறுபட்ட சமயக்கருத்தோட்டங்களையும், பொருளாதார அரசியல் கலாச்சாரக் கோட்பாடுகளையும் சந்தித்திருக்கிறது. இவற்றில் பலவற்றைச் செரித்தும், பலவற்றைத் தனக்கேற்ற வகையில் புதிய வார்ப்புகளாக படைத்துக் கொண்டும் - இந்த வரலாற்றுச் சோதனைகளைத் தாண்டி வந்திருக்கிறது. இந்த நீண்ட பயணத்தின் அடிச்சுவடுகள் இருண்ட காலங்களில் புதையுண்டு கிடக்கின்றன. இவைகளைக் கண்டறிவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதன் வாயிலாக - தமிழ்க் கலாச்சாரத்தின் இன்றையப் பிரச்னைகளின் ஆழத்தைப் புரிந்து கொண்டு தேவையான தீர்வுகளைக் காண்பதிலும், வருங்காலப் போக்குகளைக் கண்டறிவதிலும் நமது முயற்சிகள் அமைய வேண்டும். இது விண்வெளியுகம். அறிவியல், இயற்கையின் மிக உயர்ந்த சிகரங்களில் சஞ்சரிக்கும் காலம். சமூக விஞ்ஞானத்தின் மிக வளர்ச்சி அடைந்த நிலையான இயக்க இயலையும், வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தையும், தமிழ்க்கலாச்சாரத்தின் மீது பிரயோகிப்பதன் வாயிலாகத்தான் - இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியுமென நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு சமுதாய அடித்தளத்தில் தனித்துவம் மிக்க படைப்புகளை உருவாக்குவதற்குரிய சூழலைத் தோற்றுவிப்பது – வேள்வியின் தலையாய நோக்கம். இதற்காக : கூட்டாகச் சிந்திப்பதும், செயல்படுவதுமாகிய பண்புகளை இலக்கியவாதிகளிடம் வளர்க்க வேண்டியது தேவையென நாங்கள் நம்புகிறோம். இப்படி, கூட்டுறவுடன் செயல்படுவதன் வாயிலாகத் தான் தமிழ் இலக்கியத்தரத்தை, சர்வதேச இலக்கியத்தரத்திற்கு உயர்த்தக் கூடிய பின்னணிகளை உருவாக்க முடியுமென்று திட்டவட்டமாக நம்புகிறோம். இந்த மகோன்னதமான இலட்சியங்களை அடைய எங்கள் முழுச்சக்தியையும் ஆகுதியாக்குவோம். என்று பிரகடனப் படுத்துகிறோம், எங்கள் ஆளுமை அனைத்தையும்’ அர்ப்பணிப்போம் என்று பிரதிக்ஞை கொள்கிறோம். கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்க்கவிதா மண்டலத்தில் சிறகடித்து வந்த வானம்பாடி இயக்கத்தின் எல்லைகள் விரிவடைகின்றன. வானம்பாடியைத் தொடங்கிய போதும், அதன் வளர்ச்சி காலத்திலும் - பல வகையாலும் இதன் மானுடம் பாடும் மைய ஈர்ப்பிற்கு வசமாகி இது இயக்கமாகத் தம் கதிர்களை நாலாபுறமும் ஒளிரச் செய்த மனித நெஞ்சங்களுக்கு நாங்கள் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். கடல் கடந்த நாடுகளிலும், பிற மாநிலங்களிலுமுள்ள முகமறியா தோழமைகளுக்கு நாங்கள் எவ்விதம் நன்றி தெரிவிப்பது? பரிணாமத்தின் வளர்ச்சியைப் புரிந்து கொண்டு இவ்வியக்கத்திற்கு முக்கியத்துவம் தந்து வரும் பல்கலைக்கழகங்களிலுள்ள தமிழ்ப் பேராசிரியர்களுக்கு எதிர்காலம் தன் நன்றியை சமர்ப்பிக்கும். இந்த ஆரோக்கியமான முயற்சிகளுக்குத் தம் ஆதரவை சகல விதங்களிலும் தந்து வரும் இளைய தலைமுறைக்கு வரும் சமுதாயமே நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது. இம்மாதிரியான அடித்தளங்கள் வானம்பாடிக்குக் கிடைத்த காரணத்தால்தான் என்று வேள்வி நம் சிந்தையில் புதிய நிறைவுகளைச் சேர்க்க வந்துள்ளது. இதுவரை மானுடத்தைப் பற்றிக்கொண்டு பாடிவந்த இவ்வியக்கம் - இனி மானிடனாய் நின்று பாட விருக்கிறது. பேச இருக்கிறது. புதிய அடிச்சுவடுகளின் முத்திரைகளைத் தாங்கி ‘வேள்வி’ வெளிவருகிறது. பொய்மைகளைத் தகனமாக்கும் இந்த வேள்வியில் பங்கேற்க மனித நேயமுற்ற சகலரையும் தோழமையுடன் அழைக்கிறோம். மானுடம் பாடும் வானம்பாடி இயக்கத்தின் வரலாற்றில் வேள்வியின் தாக்கங்கள் புதிய சரித்திரத்தை சிருஷ்டிக்கும் சாத்தியக் கூறுகளை இவ்விதழ் அடையாளம் காட்டும் என்று நம்புகிறோம். கருத்துலக நாகரிகத்தையும் கருத்துப் பரிவர்த்தனைகளால் மண்ணளாவப் பரப்பவிருக்கும் அனைவருக்கும் இது காலத்தின் அழைப்பு. வாருங்கள்…. பொய்மையிலிருந்து சத்தியத்திற்கும்…. இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கும்….. மரணத்திலிருந்து நித்தியத்திற்கும் செல்வோம்…. -ஆசிரியர் விளைவு -கி. ராஜநாராயணன் பாவய்யாவின் பூர்வீகம் சரியாகத் தெரியவில்லை. அவனை கீகாட்டுக்காரன் என்று சொல்லுவார்கள். கிழக்கே விளாத்திகுளம் பக்கத்தில் ஏதோ ஒரு ஊர். இந்தக் கிராமத்துக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்; போகும்போது இவனை, இங்கேயே கிட என்று சொல்லி விட்டுப்போய் விட்டார்களாம். பயலுக்கு அப்பொழுது நாலைஞ்சி வயசிருக்கும் இடுப்பில் அரணாக்கயிறு ஒன்றுதான்; உருட்டுக் கட்டை போல இருப்பான். நல்ல கரிசல் நிறம். பிரகாசமான பெரிய்ய கண்கள். யாருக்கும் அவனைப் பார்த்தவுடனேயே பிடித்துவிடும். முகராசியான பயல். என்ன கஞ்சி ஊத்தினாலும் கழிக்காமல் சாப்பிடுவான். பச்சை மிளகாய் வெங்காயம் எது கொடுத்தாலும் வாயில் போட்டு ஆற அமர மென்று கஞ்சியை எடுத்து கும்பாவிலிருந்து உருட் உறுட் என்று உருஞ்சி சாப்பிடும்போது, பார்க்கிறவர்களுக்கு நாக்கில் நீர் ஊறும்; நாமும் அப்படிச் சாப்பிட்டால் என்ன என்று தோணும். கிராமத்தில், சதா நச்சு நச்சு என்று அழும் குழந்தைகள், சாப்பிடாமல் முறண்டு பண்ணும் குழந்தைகளின் பெற்றோர்கள். தங்களின் குழந்தைகளிடம் “பாவய்யாவை பார், எப்படி சமத்தா அழாமல் நன்றாகச் சாப்பிடுகிறான்!’’ என்று சொல்லுவார்கள். ஆனால் அந்த அசட்டுக் குழந்தைகளோ, தங்களுக்குக் கிடைக்கும் தின்பண்டங்களைக் கூட ஒருத்தருக்கும் தெரியாமல் பாவய்யாவிடம் கொண்டு போய்க் கொடுத்து, எப்படி அவன் அதை ஆவலோடு சாப்பிடுகிறான் என்று பார்த்து அதிசயமும் ஆனந்தமும் படுவார்கள்! அவனிடம் ஒரு குணம்; எது கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே இருப்பான், கொடுக்கிறவர்கள் பார்த்து நிறுத்தினால்த் தானுண்டு. — எட்டாவது வயசில், பாவய்யாவின் அரணாக்கயிற்றில் ஒரு கோவணம் - நாலுவிரல் அகலத்தில் ஒரு முழ நீளத்தில் - தென்பட ஆரம்பித்தது. அப்போது அவன் பணியம் நாயக்கர் வீட்டில் மாடு மேய்க்க ஆரம்பித்திருந்தான். வீட்டில் பொம்பிளைகள் சண்டைக்கு வருவார்களே என்றுதான் அவன் அந்தக் கோவணத்தை வைத்துக் கொண்டான். மாடுகளைப் பத்திக்கொண்டு, ஊருக்குக் கொஞ்ச தூரம் வெளியே வருவதற்குள் கோவணத்தை உருவி தலையில் கட்டிக் கொண்டு விடுவான். “என்னலே பாவய்யா, கோமணம் தலைக்குப் போய் விட்டது!’’ என்று அவனோடு மாடு மேய்க்கும் பையன்கள் கேட்டால், ”எளவு ‘சீய்’ எண்ணு இருக்கு’‘என்பான். அரணாக்கயிற்றுக்கு மட்டும் பழகிப்போன அவனது ’அரை’ கோவணத்துக்குப் பழகவில்லை இன்னும். சாயந்திரம் ஊருக்குள் நுழையும் போதுதான் தலையிலிருந்த கோவணம் திரும்பவும் ’அரைக்கு’ வரும். — பாவய்யாவிடம் சில ‘கிறுக்குத் தனங்கள்’ உண்டு. வருடத்தில் சில நாட்கள் ஊர் மடத்தில் வந்து பேசாமல் குப்புற அடித்துப் படுத்துக் கொள்வான். சாப்பிடாமலும் யாருடனும் பேசாமலும் நாள்க் கணக்கில் படுத்துக் கொண்டே கிடப்பான். ராத்திரிக்கு ஊர் மடத்தில் படுத்துக்கொள்ள வருபவர்களில் இளவட்டங்களும் உண்டு. அவர்களில் சிலர் பாவய்யாவை சீண்டுவார்கள். இப்படி சமயங்களில் அவனை பேசவைக்கிறதே பெரும்பாடாக இருக்கும். யாராவது அகதிகள் அகாலநேரத்தில் வந்து ஊர் மடத்தில் படுத்திருப்பார்கள். அவர்களை இளவட்டங்கள், ‘’யாரு’‘’‘எந்த ஊரு" என்று கேட்டு சாப்பிட்டாச்சா என்று விசாரிப்பார்கள். “இல்லை” என்று அவர்கள் சொன்னால் இளவட்டங்களே நாலு வீடுகள் போய் ’தருமச்சோறு’ கேட்டு வாங்கிக் கொண்டுவந்து அவர்களுக்குப் படைத்து சாப்பிடச் சொல்லுவார்கள். சில சமயம் எடுத்துக் கொண்டுவந்த சோறு மிஞ்சிப்போகும். பாவய்யாவை எழுப்புவார்கள் சாப்பிடச் சொல்ல, ஆனால் பாவய்யா விழித்துக் கொண்டுதான் கிடப்பான். அவனை எழுப்பி உட்கார வைப்பதற்குள் அவர்கள் படும்பாடு! அவனை சாப்பாட்டில் கைவைக்கச் செய்ய இவர்கள் ரொம்பப் பிரயாசைப்படுவார்கள். ஒரு இளவட்டம் அவனை சிரிக்கவைக்க ஒரு நகைச்சுவை மிகுந்த கெட்ட வார்த்தைக் கதையைச் சொல்ல ஆரம்பிப்பான். அப்போது பாவய்யா சிரிப்பை மறைப்பதற்கு உதடுகளால் பற்கள் தெரியாமல் இருக்க இறுக்கி மூடுவான். ‘’ஓ… பாவய்யா சிரிச்சிட்டான்; சிரிச்சிட்டான் டோய்’‘என்று கூப்பாடு போட்டு அதில் ஒருத்தன் தரையில் படுத்து உருளுவான். அவ்வளவுதான்; பாவய்யா சமாதானமாகி மனம் விட்டு நிஜமாகவே, - கொஞ்சம் பொய்க் கோபத்துடன் பிகுபண்ணி - சிரித்து சாப்பாட்டில் கைவைத்து சாப்பிடத் தொடங்கி விடுவான். அப்படி அவன் சமாதானமாகி சாப்பிடும்போது இளவட்டங்கள் பாவய்யாவின் முதுகில், பதிலுக்குப் பழி வாங்குவதுபோல கையைப் பொத்திக் கொண்டு ஓசை வரும்படியாக ’பொய் அடி’ கொடுப்பார்கள். மத்தியில் நிஜமான அடிகளும் ரெண்டு விழும்! பாவய்யாவின் அகலமான முதுகுக்கு இந்த அடிகளெல்லாம் கொசுக்கடி மாதிரி. பாவய்யா குணத்துக்கு வந்து விட்டான் என்று கேள்விப்பட்டதும் மறுநாள் காலையில் ஊர்க் காவல் நாயக்கர் மடத்துக்கு வந்து “பாவய்யா…‘’ என்று கூப்பிடுவார். விசுவாசமுள்ள நாய்க்குட்டி மாதிரி அவன் மறு பேச்சு சொல்லாமல் அவருக்குப் பின்னால் போவான். பிறகு அவர் சொல்லுகிற ஏதாவது ஒரு வீட்டில் அவன் பழைய படியும் மாடு மேய்க்கத் தொடங்கி விடுவான். பாவய்யா இப்பொழுது வளர்ந்து விட்டான். கொண்டிக் காவல்கார நாயக்கர் சொன்ன மாதிரி ’பயலுக்கு கக்கத்தில் ரோமம் முளைத்து விட்டது.’ ஆனால் அவன் , அதே கோவணந்தான். வேட்டியை இடுப்பில் கட்டிக் கொள்வதற்குப் பதில் போர்த்திக் கொள்வான். உச்சந்தலையில் அப்பளம் அகலத்துக்கு வட்டமாக ஒரு விரல் கடை உயரத்துக்கு விட்டு தலைமுடியை, சுற்றிலும் நன்றாக மழிக்கப்பட்டிருக்கும். வேலை செய்யும் நேரங்களில் மட்டும், போர்த்திக் கொள்ளும் வேட்டியை எடுத்து தலையில் கட்டிக் கொள்வான். யாராவது ’’பாவய்யா, கொஞ்சம் கோமணத்தை சரியாக - இறுக்கலாக – வச்சிக்கோ” என்று சொல்வார்கள். அதுக்குக் கொண்டிக் காவல் நாயக்கர் சொல்லும் பதில், ‘’சர்த்தாங்ஙெ ; ’வேலைக்காரன் இது வெளியிலெ ’ங்கிற பளமொளி தெரியாதா உனக்கு? அது பாட்டுக்குக் கிடந்துப் போகுது. நீ அதைக் கண்டுக்காதே’’ — ஒருநாள் காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது பாவய்யா, கொண்டிக் காவல்காரரிடம் தன்னுடைய உடம்பில் ஊருகிற ஒரு பேன் ஒன்றை எடுத்துக் காட்டினான். அந்தப் பேன்,தலையிலுள்ள மாதிரி இல்லாமல் வட்டமாக இருந்தது! “அட பாவிப் பயலே!‘’ என்று சொல்லிச் சிரித்து விட்டு’’சரி, சரி; இண்ணைக்கு கம்மாயிலே மாட்டைப் போட கரைக்கு வருவெயில்லெ? அப்பொ, குடி மகன்ட்டெ சொல்லி உடம்பு பூராவையும் நல்ல வளிச்சி விட்டுரச் சொல்லுவோம்” என்று சொன்னார். அன்று திங்கட்கிழமை கண்மாய்க் கரையில் குடிமகனைச் சுற்றி கூட்டம் இருந்தது. கொண்டிக் காவல் நாயக்கர் பாவய்யாவை குடிமகனிடம் தள்ளிக் கொண்டு போய் விசயத்தைச் சொன்னார். அவன், ‘’அதுக்குத் தேங்காய் பழம் கால் ரூவாய் தட்சணை எல்லாம் வேணுமே?’‘என்று சொல்லி எகத்தாளமாய்ச் சிரித்தான். அப்பொழுது அவன் ஒரு பெரியவருக்கு மழித்துவிட்டுக் கொண்டிருந்தான். அவர் பின்பக்கம் இரண்டு கைகளையும், தரையில் ஊன்றிச் சாய்ந்து கொண்டு கால்களை அகட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். குடிமகனின் பேச்சைக் கேட்டு அந்தப் பெரியவர் உள்பட எல்லாரும் சிரித்தார்கள். பாவய்யா கொஞ்சம் பின் வாங்கினான் “அட, அவன் அப்படித்தான் சொல்லுவான் நீ ஓம்பாட்டுக்கு இரு” என்று இளவட்டங்கள் சொன்னார்கள். பெரியவர் எழுந்து வேட்டியை உதறிக் கட்டிக் கொண்டார். எல்லோரும் ஒரு மனதாக பாவய்யாவை அந்த இடத்தில் அமர்த்தினார்கள். இப்பொழுது கூட்டத்தில் ஒரு சின்னக் குஷி பரவியது! முதலில் தலை; அப்புறம் கக்கம், முடிந்தது; குடமகன் இடது கையை, நனைப்பதற்காக தண்ணீர்க் கிண்ணத்தில் முக்கினான். பாவய்யாவினால், சிரிப்பை அடக்க முடியவில்லை; உடம்பெல்லாம் கூச்சத்தினால் நெளிந்தது. குடிமகன் தன்னுடைய சிரிப்பை மறைக்க கூடி நின்றவர்களிடம் கோபப்படுவது போல் பேசினான்! “போங்களேன் அந்தப்பக்கம்; பார்த்ததே இல்லையாக்கும்!’’ பேசிக்கொண்டே குடிமகன் தொழிலைச் செய்தான். பேச்சு அவன் தொழிலுக்கு வெஞ்சனம்! ’’பாவய்யா, உமக்கு உம்ம பொண்டாட்டி அடங்கி இருப்பர். எப்பிடி வாய்ச்சி இருக்கிண்ணு பாரும் சரியான ஆளுதான் நீரு!” என்று சொல்லிவிட்டு சிரிக்கும் கூட்டத்தைப் பார்த்து ஒரு பொய்ச் சீறல் சீறினான். பாவய்யாவினால் சரியாக ‘இருக்க’ முடியவில்லை. கூச்சத்தினால் உளத்தினான். ‘’இந்தா, உளத்தாதீரும் சொல்லிட்டேன்; கத்தி விழுந்துரும் பிறகு அவ்வளவுதான் கல்யாணம் செய்ய முடியாது’’ என்று அதட்டுவான். கூச்சத்தை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சிரிப்பதன் மூலம் அதை குறைத்துக் கொள்ளப் பார்த்தான் அப்படி இடைவிடாமல் சிரித்ததனால் அவன் வாயிலிருந்து ஜொள்ளு வடிந்தது. இப்படிச் சமயங்களில், சவரம் செய்து கொள்பவர்களைக் குடிமகன் தன் கத்தியை மாற்றிப் பிடித்துக் கொண்டு அவர்களுட்யை கணுக்கால் எலும்பில் கணார் என்று ஒரு குடுப்புக் கொடுப்பான் அந்தத் தாங்க முடியாத வலி அவர்களை ஒரு நிதானத்துக்குக் கொண்டு வரும்! இப்படியாக பாவய்யாவுக்கு, கொண்டிக் காவல்காரர் சொன்ன மாதிரி பயலுக்குப் பிறந்த முடி இறக்கப்பட்டது. கம்மாய்க் கரையில் எப்பவாவது நிகழும் இந்த “முதல்ப்பகல்” நிகழ்ச்சி ஒரே கலகலப்பாய் அமையும். கம்மாய்க் கரை நிகழ்ச்சிக்கு அப்புறம் பாவய்யா கொஞ்சம் ‘ஒரு மாதிரியாக’ இருந்தான். வழக்கம் போல இவனிடம் வயசு வந்த பெண்கள் விளையாட்டுக்கு வாயாடுவார்கள். இவனால் அவள்களுக்கு பதிலடி கொடுக்க இயலாது. அதோடு ரகர, தகர உச்சரிப்புகள் இவனுக்கு சரியாக வராது. உணர்ச்சிவசப் படும்போது வாய் வேறு திக்கும். ஆகவே உதட்டை இழுத்து இறுக்கி மூடிச் சிரித்துக் கொண்டே நழுவி விடுவான். அன்று மறுநாள் அதிகாலையில் நல்ல தண்ணீர் எடுக்க ஊர்க்கிணற்றில் சுற்றிலும் பெண்களும் ஆண்களுமாக நல்ல கூட்டம். பாவய்யாவுக்குப் பக்கத்தில் சுப்பாலு, அவளுடைய தோழிகள் தண்ணி இறைத்துக் கொண்டிருந்தார்கள். சுப்பாலு ஒரு வாயாடிப் பொண். அந்தக் கிராமத்தின் பெரும்தனக்காரரின் செல்ல மகள். தான் பெரிய பணக்காரி என்கிற அகம்பாவம் அவளுக்கு உண்டு. அதனால் அவள் யாரையுமே மதிக்கிறதில்லை. எப்பப் பார்த்தாலும் பாவய்யாவை விறட்டிக்கொண்டே திரிவாள் இதில் அவளுடைய தோழிகளில் சிரிப்பு அவளை மேலும் உற்சாகமடையச் செய்யும். அவள் அன்றும் தனது தோழியரின் ஆதரவுடன் அங்கே பாவய்யாவை சீண்ட ஆரம்பித்தாள். அவனோ ஒதுங்கி ஒதுங்கிப் போனான். அவனை அன்று ஏதோ ஒன்று குறுகுறுக்கச் செய்தது. அவன் விலகிப் போகப்போக இவளை மேலும் அதிகப்படியாக அவனை விறட்டச் செய்தது. ‘ஓடுகிற நாயைக் கண்டால் விரட்டுகிற நாய்க்குத் தொக்கு’ என்பது போல. பாவய்யா குடத்தை வேகமாக நிரப்பினான். தலையில் கட்டியிருந்த வேட்டியைத் திரும்பவும் ஒருதரம் இறுக்கிக்கட்டினான். குடத்தை எடுத்து தலைக்குக் கொண்டுபோகக் குனிந்தான்; அவ்வளவுதான் இமை தட்டுவதற்குள் அந்தச் செயல் நடந்துவிட்டது! அவனுடைய மெளனம், அவளின் வாயாடித்தனத்தை அவமானப்படுத்துவது போல் அவளுக்குப் பட்டதோ என்னவோ, அவளால் அதைத் தாளமுடியவில்லையோ என்னமோ அவன் குடத்தை எடுக்கக் குனிந்த போது அவனுக்குப் பின்பக்கம் அரணாக் கயிற்றில் சொருகி இருந்த கோவணத்தின் நுனியை மட்டும் லேசாக உருவினாள். ஆனால் இப்படி ஆகும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. கோவணம் பூராவுமே கையோடு வந்து தரையில் விழுந்து விட்டது. அவ்வளவுதான்; கிணறே வாய் விட்டுச் சிரித்தது. திடுக்கிட்டவர்கள் சுப்பாலுவும் பாவய்யாவும் தான். அவன் அப்படி நின்றது பெண்களுக்கு முன் ஆண்களுக்கு நாணமாகவும், ஆண்களக்கு முன் பெண்களுக்கு நாணமாகவும் இருந்தது. இளவட்டங்கள் “டேய் தலை வேட்டியை எடுத்து இடுப்பில் கட்டிக்கோ’ என்று குரல் கொடுத்தார்கள். பாவய்யாவுக்கு அது கேட்கவில்லை. அவனுடைய கண்கள்தான் சிவப்பாகின. பெண்கள் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தார்கள். ஆண்களுக்கு சிரித்து வயிற்றை வலித்தது; பாவய்யா அப்படியே அதே மேனியில் நின்று கொண்டிருந்தான். ஒரு பெரியவர் அவன் கிட்டை வந்து, கீழே விழுந்து நனைந்து கிடந்த கோவணத் துணியை எடுத்து அவனிடம் நீட்டினார். அவன் அவரையும் அந்தத் துணியையும் மேலும் கீழும் பார்த்தானே தவிர வாங்கி அணிந்து கொள்ளவில்லை. ”டேய், இந்தா வாங்கி வச்சிக்கோ’‘அந்தக் குரலில் கொஞ்சம் அதட்டல் அதிகமாகவே இருந்தது. பாவய்யா அதற்கு தீர்க்கமாக பதில் சொன்னான் “ம்மு… மு. முடியாடு” அவர் அவனை அதிசயத்தோடி பார்த்து “ஏண்டா?” “அ.. அ… அப்படிட்டாண்; முடியாடு” எனக்கென்ன போ. என்று சொல்லி அவர் அதை எறிந்துவிட்டுப் போய்விட்டார். திரும்பவும் கொஞ்ச நேரத்தில் ஒரு பெரியவர் வந்தார். பாவய்யாவிடம் இது நல்லாயில்லை என்றும், அவனுடைய தலைவேட்டியை எடுத்து அவரே அவனுடைய இடுப்பில் சுற்றி “கட்டிக் கோப்பா” என்று சொன்னார். ஆனால் அவனோ வேட்டியை உருவி பந்துபோல் சுருட்டி எறிந்து விட்டான். “என்னடா இது? வம்பா பண்ரே … பொம்பளைகள் பிள்ளைகள் வந்து தண்ணி எடுக்கிற இடத்தில் இப்படி நிண்ணா என்னடா அர்த்தம்?’’ பாவய்யா இப்பொழுது நிதானமாக அவருக்குப் பதில் சொன்னான்.”ம்…. மாமா, என்பேடில் ஒரு டப்பும் இள்ளை இண்டா இவுக்கிட்டெ வேணும்ணாளும் கெ… கேட்டுப் பாடுங்கெ. நாணா கொ… கோமணட்டுணியெ எடுட்டு எடிஞ்சிடளே" “சரி, சரி; இப்பொ அதுக்கு என்னடா செய்யணும்னு சொல்ரே?’’ ”கொ… கோமணட்டெ எடுட்டு நா வச்சிக்கிட மாட்டேண். அவடாணே அவுட்டா அவடாண் வண்டு வச்சி விடணும்“! இதைக் கேட்ட இளவட்டங்கள் ஓஹோ ஹோ என்று ஆர்ப்பரித்தார்கள். ”இது நல்ல வழக்குடா அப்பா’ என்று அந்தப் பெரியவர் நடந்து விட்டார். கொஞ்ச நேரத்தில் ஊருக்குள் ஒரு பெரிய்ய பரபரப்பே உண்டாகிவிட்டது. பெரும் பாலானவர்கள் பாவய்யாவைத்தான் தப்பு சொன்னார்கள். ‘’அவன் என்ன கோமணமா வச்சிந்தான்! அதைவிட பேசாமல் இருக்கிறது எவ்வளவோ மேல்!’‘ “அது சரி. அவன் எப்படி வச்சிருந்தா இவளுக்கு என்ன? இந்தக் கோட்டிக் கழுதை அதைப் போயி என்ன மயித்துக்கு நோண்டனும்?’’ ”சரி; நோண்டிட்டாய்யா; வச்சிக்கிடுவோம். அவ வந்துதான் எனக்குக் கோமணத்தை வச்சிவிடம்ண்ணு இவன் சொல்றது மப்பு தானே?’‘ இப்படி பல மாதிரியாக ஜனங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கையில், சுப்பாலுவின் சித்தப்பா ஒரே கோபாவேசமாக பாவய்யாவைப் பார்த்து வந்தார். வந்தவர் அவனைப் பார்த்து, கெட்டவார்த்தைகள் கலந்த அனாதைப்பயலே, வந்தட்டிப்பயலே அது இது என்று தாறுமாறாக ஏசினார். அவருடைய ஏச்சும் ஆத்திரமும் பாவய்யா மீதுகூட அவ்வளவு காரம் இருப்பதாக தோன்றவில்லை. அவன் இப்படி நடந்து கொள்ள, பின் தூண்டுதலாக யாரோ இருப்பதாகக் குற்றம் சாட்டினார். “ஒன்றை இப்பொ செருப்பைக் களத்தி அடிக்கேன்; உன்னை தூண்டிவிட்ட ஊர்ப்பய புள்ளைகள்ளெ எவன் வந்து இப்பொ ஒனக்கு உதவுதாண்ணு பாப்போம்” என்று ஓங்கினார். ஓங்கிய அந்த கையை வந்து ஒருகை பிடித்துக் கொண்டது. அப்படிப் பிடித்துக்கொண்ட அந்த கைக்கு உடையவர் கேட்டார். “நீ செய்யிறது, இது ஒமக்கே நல்லாயிருக்கா? நீரு பெரிய்ய பணக்காரருண்ணா அது ஒம்மோட இருக்கட்டும். அதை விட்டுவிட்டு ஊர்க்காரன்தான் இதுக்கு காரணம்ண்ணு சொன்னா அதை உம்மாலே புரூ பண்ண முடியுமா? முந்தி இப்படித்தான், பாவம் அனந்தப்ப நாயக்கரை கோழி பிடிச்சான்ணு சொல்லி அநியாயமா உம்ம மகளும் நீரும் அவரு குடும்பத்தையே ஊரைவிட்டுத் துரத்திட்டீஹெ; இப்பொ என்னடாண்ணா ஊர்க்காரங்கதான் இப்படித் தூண்டி விட்டாங்கண்ணு சொல்ரீரு. சும்மா இப்படி வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோண்ணு பேசாதீரும். இப்பொ உம்ம மகள் செய்த ஏழைக்குறும்பு மட்டும் ஞாயமா?’’ இதைக் கேட்ட சுப்பாலுவின் சித்தப்பாவுக்கு உடம்பெல்லாம் வெட வெட என்று ஆடியது.”டேய் வெங்கம்பய புள்ளைகளா, இருங்க உங்களைப் பாத்துக்கிறோம்’‘என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார். உடனே அங்கிருந்த விடலைகளின் எக்காள ஒலி அவரைத் திரும்பி பார்க்காத படி வழியனுப்பி வைத்தது! ஊர்க்காரர்களின் தூண்டுதலால்தான் பாவய்யா இப்படி நடந்து கொண்டான் என்ற சுப்பாலு சித்தப்பாவின் பேச்சு, இப்பொழுது ஊருக்குள் பாவய்யாவுக்கு ஆதரவாகத் திரும்பியது. இளவட்டங்கள் பாவய்யாவின் நிலையை பலமாக ஆதரித்துப் பேசி ஒரு மின்னல் வேக பிரச்சாரத்தையே முடுக்கி விட்டார்கள். ’சுப்பாலு வந்து தான் பாவய்யாவுக்குக் கோவணத்தை வைத்து விடணும்’ என்று அவர்கள் கோஷம்தான் போடவில்லை. நேரம் ஆகிக்கொண்டே போனது. சம்சாரிகளுக்கு இதுவா வேலை? அவர்கள் சீக்கிரம் தண்ணீர் எடுக்கணும்; கஞ்சி குடிக்கணும்; காட்டுக்குப் போகணும்; இப்படி எத்தனையோ வேலைகள் காத்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இடைஞ்சலாக ’இந்த சனியம் பிடிச்ச சங்கதிவந்து சேர்ந்திட்டதே’ என்ற முகச்சுளிப்பு ஒரு பக்கம். இந்த மாதிரி பாவய்யா சொல்லிக்கொண்டு கிணற்றடியில் இன்னும் அதே படியாக நின்று கொண்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டதிலிருந்து சுப்பாலு வேறு அழுகையாய் அழுது கொண்டிருந்தாள். — விடயம் மணியம் நாயக்கர் காது வரைக்கும் போய் எட்டிவிட்டது. அவருக்கு சத்தம் போட்டுத்தான் எதையும் சொல்லணும்; காது அப்படி நடந்ததைக் கேட்டு அறிந்து கொண்ட அவர், “நல்ல கூத்துதான் போ…‘’ என்று சொல்லிச் சிரித்தார். அப்புறம் சுப்பாலுவின் சித்தப்பா வந்து சொன்னதைக் கேள்விப்பட்டதும் அவர் சிரிப்பதை நிறுத்திக் கொண்டார். நிறுத்திக் கொண்டதோடு மட்டுமில்லாமல் தலையை ஆட்டினார். கிழவர், ஓணான் மாதரி தலையை ஆட்டினார் என்றால் பழி வாங்காமல் விடமாட்டார் என்று அர்த்தம். ஒரு காலத்தில் இவர் ஊரிலேயே செழிப்பான புள்ளியாக வாழ்ந்து இப்போது பொருளாதாரத்தில் மிகவும் நொடித்துப் போனவர். என்றாலும் இன்னும் அவருக்குக் கிராமத்தில் சொல் சக்தி குறைந்து விடவில்லை. இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று மணியம் நாயக்கர், இன்னும் சில ஊர்ப்பெரியவர்களுடன் கிணற்றடிக்குப் போனார். அங்கே உள்ளவர்களிடம், நடந்தது என்ன என்பதைப்பற்றி தீர விசாரித்தார்கள். பிறகு அந்தப் பெண்ணையும் அவளுடைய தகப்பனாரையும் கூட்டத்துக்கு வரவழைத்தார்கள். தப்பிதம் பூராவும் சுப்பாலுவின் பேரில்தான் இருக்கிறது என்றும், அவள் ஒரு ஆணை , ஒரு தண்ணீர்த்துறையில் பல பேருக்கு முன்னால் பகிரங்கமாக வைத்து இப்படிப்பெரும் அவமானப்படுத்திய தப்பிதத்துக்காக அவளேதான் அவனுக்கு கோவணம் வைத்து விட வேண்டும் என்று மணியம் நாயக்கர் உள்பட பெரியாட்கள் தீர்ப்புச் சொன்னார்கள். இதைக் கேட்டதும் பெண்டுகள் திடுக்கிட்டார்கள். கூட்டத்தில் சலசலப்பு உண்டானது. சுப்பாலு ஓவென்று அழுதாள். மீசைக்கார சிங்கப்பூர் நாயக்கர், சுப்பாலு அழுவதைப் பார்த்து அவள் மாதிரியே உதடு கோணலாக வைத்துக் கொண்டு அழகு அழகு காட்டிவிட்டு “சீ! அழுகை வேறையா உனக்கு? இது முதல்லெயிலே தெரிஞ்சிருக்கணும் பொம்பளை; அழுகிற… போ; போ”. சுப்பாலு தயங்கினாள். என்ன செய்வதென்று தெரியலை. தனது கண்ணீரால் மன்றாடினாள். அங்குள்ளவர்களை, அந்தக் ’கொடிமையான வாயாடிக்காரிக்கு இது தான் சரி என்று அங்கிருந்த விடலைப் பிள்ளைகள் மனசுக்குள் கறுவிக் கொண்டார்கள். சுப்பாலு அழுது கொண்டே கிணற்றடிக்குப் போனாள். அவளைப் பின்தொடராமல் இருக்க கொண்டிக் காவல்காரரும் தலையாரியும் தடுத்து நிறுத்தியும் கூட பலர் அங்கே கூடி விட்டார்கள். முகத்தில் கண்ணீர் வடிய அவள் கிணற்றடிக்குப் படி ஏறி நடந்து போவதையே ஊர் கவனித்துக் கொண்டிருந்தது. அவள் குனிந்து கீழே நனைந்து கிடந்த அந்தக் கோவணத்துணியை இடதுகையின் இரண்டு விரல்களால் பிடித்து எடுத்து தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டு பாவய்யாவிடம் நீட்டினாள். பாவய்யா அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான். அவளும் முகத்தை மறுபக்கம் திருப்பியபடி கோவணத்துணியை நீட்டி கொண்டிருந்தாள். திடீரென்று அசரீரி மாதிரி எங்கிருந்தோ ஒரு இளவட்டத்தின் வாயிலிருந்து அந்தச் சொல் வந்தது.’‘பாவய்யா வாங்கிக்கோ’ உடனே சொல்லி வைத்த மாதிரி அங்கிருந்த பலர் அதை வாங்கி எதிரொலித்தனர்.”வாங்கிக்கோ; வாங்கிக்கோ பாவய்யா" என்று எதிரொலித்தனர். முதலில் கூட்டத்தில் ஒரு குறுஞ்சிரிப்புப் படர்ந்து, அது வளர்ந்து பெரிசாகிக் கொண்டே வந்தது. பாவய்யா பற்களை உதடுகளால் இழுத்து மூடிக் கொண்டு தன் கோவணத்தை வாங்கிக்கொள்ள சுப்பாலுவிடம் கையை நீட்டினான். கூட்டம் இப்பொழுது சந்தோ ஆரவாரமே செய்தது. மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்த சுப்பாலுவும் சிரித்தாள். அவள் உடம்பை நாணத்தோடு ஆட்டிச் சிரித்தது அழகாகவே இருந்தது. அப்பாடா; ஒரு மாட்டுக்கும் முடிந்ததே, என்று நினைத்தார்கள். அது முடிவு இல்லை; ஒன்றின் ஆரம்பம், என்பது பலருக்குத் தெரியாது! —— விளைவின் விளைவுகள் ‘’விளைவு" கதையைப் படித்ததன் விளைவாக, நண்பர்கள் இதில் வரும் நிகழ்ச்சி நடைமுறையில் சாத்தியமா? இம்மாதிரி நடைமுறையில் இருந்தாலும், இதை ஆசிரியர் பெரிதுபடுத்தி எழுதியது ஏன்? முடிவு - ஒன்றின் ஆரம்பம் என்றால், அது காதலாக இருக்குமென்றால் அது பொருத்தமாகவோ, யதார்த்தமாகவோ படவில்லையே! கதையோடு கதையாக ஆசிரியரின் ஆத்ம ஆளுமை வெளிப்படுகிறதா? கதையினூடே, தொனிப்பொருளாக வெளிப்படும் செய்திதான் என்ன? அப்படி ஒரு தொனிக்குறிப்பு இருக்கிறதா? கதையின் போக்கில் நிகழ்ச்சி மேலும் தொடர உள்ள வாய்ப்பை ஆசிரியர் ஏன் விட்டு விட்டார்? என்றெல்லாம் வினாக்களை எழுப்பினர். பொறுப்புமிக்க ‘பிரம்மா’ என்ற முறையில் இவ்வினாக்களுக்கு கி. ராஜநாராயணன் அளித்த பதிலும் கீழே தொடர்கிறது. வேள்வியின் நடைமுறை இத்தகையதாக இருக்கும் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்கிறோம். … இதெல்லாம் நடைமுறை சாத்தியமா? என்று கேட்கிறார். ஆம் என்பதே என்னுடைய பதில். ‘நாடறிய எவ்வளவோ அக்கிரமங்கள் ரகசியமாக நடக்கலாம்; ஊர் அறிய இப்படி ஒரு அசிங்கம் நடக்குமா? என்று கேட்கிறார். சபையில் வைத்துத்தான் பாஞ்சாலியை சேலையை அவிழ்க்கச் செய்தான் துரியோதனன். மாதவிடாய் ஆகி இருக்கிறேன் என்று சொன்னாளே…. என்றுகூட யோசிக்கவில்லை. பாரத நாட்டின் குக்கிராமங்களில் இன்றைக்கும் குளத்தங்கரையிலும் ஆத்தங்கரையிலும் மரத்தடிகளில் “திறந்தவெளி பார்பர் ஷாப்” இருக்கிறது. அங்கே அனைவருக்கும் மத்தியில் ’சர்வாங்க சவரம்’ செய்து கொள்கிறார்கள் மக்கள். இது ரகசியம் இல்லை. முறையுள்ள ஆண்களின் ஒரு மாதிரியுள்ள ஆண்களின் கோமணத்தை பின்பக்கமாக வந்து வேடிக்கைக்காக அவிழ்த்து விட்டு விடுவது கிராமத்தில் கொஞ்சம் மனத்துணிச்சலுள்ள பெண்டுகள் செய்கிற காரியம்தான். ஆனால் எதுவும் விவகாரம் என்று வந்துவிட்டால், முரட்டுத்தனமாகத் தான் தண்டனையை கொடுப்பார்கள் கிராமத்து மக்கள். சுப்பாலுவின் குடும்பம் அந்தக் கிராமத்தில் பெரும் பணக்காரக் குடும்பம். கிராமத்திலுள்ள பெரிய பணக்காரன் தனக்கு எதிராக ஜனங்கள் எப்பவுமே, சதா சதி செய்து கொண்டே இருப்பார்கள் என்று ஒரு எண்ணம். தாங்கள் வசதியாக செளகரியமாக இருப்பது மற்றவர்களுக்குப் பொறாமை என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இதை சுப்பாலு சித்தப்பாவின் பேச்சிலிருந்து நன்கு தெரிந்து கொள்ளலாம். அவன் கிராமத்து மக்களையெல்லாம் சேர்த்து ‘’வெங்கம்பய பிள்ளைகள்’’ அதாவது கஞ்சிக்குச் செத்த பயல்கள் என்று ஏசுகிறான் (எவ்வளவு கொழுப்பு?) மணியம் நாயக்கர் வாழ்ந்து கெட்டுப் போனவர். அதோடு இப்போதுள்ள செல்வந்தனைப் பழிவாங்கும் சுபாவம் இப்படிப்பட்டவருக்கு இருப்பது கிராமத்து இயல்பு. பாவய்யா, மணியம் நாயக்கர் வீட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருப்பவன், “தூண்டி விட்டவர்கள்’‘என்று குறிப்பது தன்னையே என்று மணியம் நாயக்கர் நினைக்க இடமுண்டு. அதோடு, ’செருப்பைக் கழத்தி அடிப்பேன்’ என்ற பிரயோகம் வேறு இருக்கிறது. சுப்பாலும், ஒரு தன்னகங்காரம் கொண்ட அகம்பாவம் நிறைந்த தறுதலைப் பொண். தான் ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பொண் என்ற கர்வம். அவள் இளவட்டங்களை மதிப்பதில்லை. ஏழை வாலிபர்களிடம் ஏழைக்குறும்பு செய்வாள். சுப்பாலுவின் குடும்பத்தை ஊரே ஒன்று சேர்ந்து பழி வாங்குகிறது இந்த சம்பவத்தின் மூலம். ஆனால் இதை கிராமத்து மக்கள், நாகரீகமில்லாதவர்கள் - அவர்கள் பாணியில் செய்து முடிக்கிறார்கள். ஊர் முடிவு - ஊர்கட்டுப்பாடு ஊர்கூட்டம் என்கிற ஆயுதம் மட்டும் இல்லையென்றால் சுப்பாலு குடும்பத்தைப் பணிய வைத்திருக்க முடியாது. “ஒரு தண்ணீர்த் துறையில் வைத்து பல பேருக்கு முன்னிலையில் அதுவும் ஒரு ஆண் பிள்ளையை, ஒரு பொட்டச்சி கோவணத்துணியை அவிழ்த்து விடலாமா? என்ற கிராமத்தின் கேள்விக்கு சுப்பாலுவின் குடும்பம் என்ன பதில் சொல்ல முடியும்? இரண்டாவது சித்தப்பாவின் வசவு, இந்த ஆணவமான வசவுதான் கிராமத்தாரை இந்தக் கொடுமையான முடிவை எடுக்கச் செய்தது. ஆனாலும் தீர்ப்பின்படி அப்படியே தண்டனை நிறைவேற்றப்படவில்லை. “வாங்கிக்கோ … பாவய்யா …’’ என்று ஒரு குரல் கேட்கிறதே! அதுதான் நம் கிராமத்தின் ஆன்மா. இந்த முடிவுக்குப் பின்னால் எவ்வளவோ விளைவுகள் ஏற்படலாம். பாவய்யாவை சுப்பாலுவின் குடும்பத்தார் சமயம் பார்த்துப் பழிவாங்கலாம். சுப்பாலுக்கு பாவாய்யாவின் பேரில் ஒரு மோகம் ஏற்படலாம். மணியம் குடும்பத்துக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் தீராத விரோதம் உண்டாகி அதன் விளைவு பயங்கரமாக இருக்கலாம். அவமானம் தாங்காமல் சுப்பாலு தற்கொலை செய்தும் கொள்ளலாம். இப்படி ஏதாவது …. இதெல்லாம் கதையின் - சிறுகதையின் - உருவத்துக்கு அப்பால்பட்டவை, ஆகவே இங்கே சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது இன்றொரு கதை. …… மேலும், ஒருவர் ஒரு விஷயத்தை வெளியீடு பண்ணும்போது, வாங்குகிறவர்கள் அவரவர்கள் சக்திக்கு ஏற்ப அவரவர்கள் தன்மைக்கு ஏற்பத்தான் வாங்கிக் கொள்வது உலக வழக்கம். இதிலிருந்து யாரும் எந்த வாசகனும் - விமர்சகனும் தப்ப முடியாது. இது ஒரு யதார்த்தம். —– உழைப்புப் உலகக் கூரையில்** பாஞ்சாலிகள் யுகச் சேவல்கள்** செடியும் பூத்து பூவும் மொட்டவிழும் காலம் வரும்….காய்த்து காயும் வெடித்தது மொத்த இருள் அத்தனையும் காலையிலே! கட்டவிழும் காலம் வரும்…. அதைச் * கொக்கரக் கோக் கோ இதோ செடியில் எடுத்து கணப் பொழுதில் மடியில் விரிச்சோம் விடியும் பொழுதில் புடவை கிழிந்தது மாலையிலே! கொக்கரக் கோக் கோ - சித்தன் உண்மை சுடும் வேள்வியில் வெளியாகும் படைப்புக்களைப் பற்றிய வாசகரின் விமரிசனக் குறிப்புகளும், படைப்பாளிகளின் பதில்களும் சுருக்கமாக வெளியாகும். தற்காலத்திய எரியும் இலக்கியப் பிரச்னைகளைப் பற்றிய மதிப்பீடுகளையும், எழுத்தாளரின் வாசகரின் இலக்கிய அனுபவங்களின் சாரங்களையும் இங்கே பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். - நாவலாசிரியர் ஸோல் ஸெனிட்சன் ரஷ்யாவிலிருந்து மேற்கு ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டார். சுதந்திர உலகம் இந்தச் சேதி கேட்டு குமுறிக் கொந்தளித்து பெரும் கூப்பாடு போடுகிறது. இந்த நிலைக்குக் காரணம், அண்மையில் பாரிசில் வெளியான அவரின் “குலாக் ஆர்ச்சி பெல்கோ ‘’ என்ற நூலே. ரஷ்யப் புரட்சியையும், அதைத் தொடர்ந்து உருவான சோசலிச சமுதாய நிர்மாணத்தையும் பச்சையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்கிறார். கம்யூனிசத் தத்துவத்தையும், கட்சியையும் ஆட்சியையும் பற்றி அவர் கூறுவதைப் பாருங்கள்: …… ஆனால் புயலின் கைமுஷ்டியான இடியைப் பொருட்படுத்தாமல், சட்டக்கப்பல் பெருமையோடும் நிதானமாகவும் செல்கிறது. மிக உயர்ந்த நீதிபதிகளும், ஆளும் தரப்பு வக்கீல்களும் அனுபவப்பட்டவர்களாக இருப்பதால் இந்தப் பேரிரைச்சல் அவர்களை வியப்பில் ஆழ்த்துவதில்லை. அவர்கள் தங்கள் பிளீனத்தை நடத்துகின்றனர். தங்கள் தீர்ப்பை வழங்குகின்றனர். ஒவ்வொரு புதுக் கடமையும் நெடுங்காலமாக விரும்பப்பட்டதாகவும், சரித்திரத்தின் முழுமையான வளர்ச்சிப் போக்கின் தேவை எனவும் - ஒரே ஒரு உண்மையான போதனையால் ஏற்கனவே தீர்க்க தரிசனமாகக் கூறப்பட்டதைப் போலவும் விளக்க உரைகள் தரப்படுகின்றன. அக்டோபர் புரட்சியையும், சோசலிச சமுதாயத்தையும் அவரால் ஒழித்துக்கட்ட முடியவில்லை. என்றாலும், உலகிலேயே மிகப்பெரிய பணக்கார எழுத்தாளராக வளர்ந்திருக்கிறார். இவ்வாறு அவர் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை முழுவதும் பணமாக மாற்றிவிட்டார். இந்த நூலின் மூலம் ஒரு எதிர்ப்புரட்சிக்காரராகத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொள்கிறார். ஏகாதிபத்திய சதித் திட்டங்களுக்குத் தன்னைத் தாழ்த்திக்கொண்டிருப்பதோடு ஒரு தேசத்துரோகியாகவும் ஆக்கிக் கொண்டார். இந்த நிலையில் ரஷ்ய அரசு மனிதாபிமானத்தோடு ஸொல் ஸெனிட்சனை - ரஷ்ய கொடுங்கோல் ஆட்சியிலிருந்து - விடுதலை செய்திருப்பதை பாராட்டுகிறேன். இப்படிப்பட்டவர்களைப் பற்றி லெனின் கூறியதை இங்கு நினைவு படுத்திக் கொள்ளலாம்.’‘சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பற்றி நீங்கள் இடைவிடாது பேசுகிறீர்கள். இது வெறும் ஏமாற்று வேலை. கிளிப்பிள்ளைப் பேச்சு. நாகரிகமானவன் என வேஷமிடுவது. இது வெறும் விளம்பர போர்டு. உங்கள் ஆவேசம் நீசத்தனமானது. உங்களது கல்வி, பண்பாடு பெருநோக்கு போன்றவை வெறும் விபச்சாரத்திற்காகத் தான். ஏனெனில் நீங்கள் உம் ஆன்மாவை விற்கிறீர்கள். ஏதாவது ஒரு நோக்கத்திற்காக அல்ல; மாறாக, அப்படிச் செய்வதில் நீங்கள் அடையும் மன மகிழ்ச்சிக்காக.’’ -ஜன சுந்தரம் - நான் செயல்படும் எழுத்துலகம், ஒரு மிகக்குறுகிய உலகம். பொருள் வகை யதார்த்த நிலையில், இதற்கு மதிப்பே கிடையாது. மாதம் 150 உரூபா ஊதியம் பெறத்தக்க ஒரு எழுத்தாளர் வேலைகூட, எழுத்தாளராக இருக்கும் ஒருவனுக்குக் கிடையாது. ஒரு சில மக்கள், ஒரு எழுத்தாளனைப் பற்றிப் பேசுவதும், அவன் எழுத்துக்களைப் படிப்பதும், அல்லது அவனை விரும்புவதும் என்பது ஒரு தற்காலிகமான விஷயமே. இலக்கியம் படைத்தேன் என்பதற்காக ஓர் எழுத்தாளன் பெருமைப்பட்டுக் கொள்ளவும் முடியாது. காரணம், அவன் படைத்ததை இலக்கியமா, இல்லையா என்பதை காலமே காரணியாக இருந்து தீர்மானிக்கிறது. இன்று ஒருவன் எழுதியுள்ளவை, நாளை முற்றிலும் மதிப்பிழந்து போய் விடலாம். ஆகவே, இவ்வளவு தீவிரமாக பொறாமையோடு, கொடுமையாக ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. ஆகவே, மனிதனும் வாழ்வுமே முதன்மையாகின்றன. எழுத்தும் எழுத்தைப் பற்றிய பிறவும் இறுதியாகவே இடம் பெறுகின்றன. ஒரு கதை எழுவதைப் போலவே…. -அசோகமித்திரன் அமெரிக்காவிலிருந்து திரு. ராஜதுரைக்கு எழுதிய கடிதக் குறிப்பிலிருந்து 4-2-74 - எப்படியோ வாழ்ந்து போவோம் என்றிருப்போருக்கு, வாழ்க்கை அர்த்தமுள்ள ஒன்றென்றும், மந்தை வாழ்வு மனித வாழ்வல்லவென்றும் உணர்த்துவது இலக்கியத்தின் இக்காலக்குறிக்ககோளாகும். ஏற்றத்தாழ்வுகளை காணமுடிகிறது. அலைவரிப் பாடல் - Wave Verse - (Blank Verse) முறை புதுக்கவிதைப் போக்கிற்குத் துணைபுரியும் வடிவமாகும். அலையின் வடிவத்தை நாம் நிர்ணயிக்க இயலாது. ஆனால் அலைவடிவமற்றதன்று, அலைகளில் சிற்றலைகள் பேரலைகள் இருப்பது போல், கவிதை ஓட்டத்தின் கம்பீரம் கருப்பொருளுக்கு ஏற்ப மாறுபடலாம். இத்தகைய கவிதைகளில் ஒவ்வொரு வரியும் தன்னுள் ஒழுங்கு பெற்றிருத்தல் வேண்டும். சம்பிரதாயப் புறக்கட்டுகள் நீங்கி, அவ்விடத்தை கூறும் பொருளுக்கு ஏற்ப கவிதை வரிகள் இயல்பான அக ஒழுங்கு நிரப்ப வேண்டும். வார்த்தை ஜாலங்கள், வரி வேடிக்கைகள், வாக்கியப் புதுப்புனைவுகள் ஆகியவற்றால் மட்டுமே கவிதைக்கு உயிருட்டிவிட முடியாது. கவிஞனின் நேர்மையான அனுபவம் (authentic experience) கையாளும் பொருளைப் பற்றிய ஆழ்ந்த உணர்வு படைப்பாற்றலுக்கு வேண்டிய வளமான கற்பனை ஆகியவற்றோடு வான் சிந்தனை (Subline) அல்லது மேல் நோக்கும் வேண்டும். இதுதான் ‘வான் சிந்தனை’ என்று எவரும் வரையறுக்க முடியாது. அதன் விதிகள் கவிஞனின் ஆளுமையோடு கலந்தவை. (73 - டிசம்பரில் நடந்த வானம்பாடிகளின் வெளிச்சங்கள் - வெளியீட்டு விழாவில் திரு. கு. வே. கிருஷ்ணசாமி எம்.ஏ., முதல்வர் தேசிய கல்வி அகம்) ஆற்றிய வெளியீட்டுரையில் சில பகுதிகள்) - நாடெங்கும் கவிஞர்கள் சங்கப் புலவர்களைக் காட்டிலும் அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்க் கவிஞர்கள் ஆண்மையில் கருக் கொண்டாலும், அலிகளையே பிரசவிக்கிறார்கள். சமத்துவம் பாடப் புறப்பட்டவர்கள் சமுதாய அவலங்களோடு சமரசம் செய்து கொண்ட கொடுமையைக் காண முடிகிறது. வளரும் கவிஞர்கள், வாழும் கவிஞர்களை ஆராதனை செய்து வாழத் துடிக்கிறார்கள். உழைக்கும் மக்களின் துடிப்பையும், சமூக நியாயங்களைக் கற்பழிக்கும் கனதனவான்களை எதிர்த்துப் போரிடும் இந்தத் தலைமுறை பற்றியும் எண்ணிப்பாராது,அற்பத்தனமான அபிலாசைகளுக்கு அடிமைப்பட்டு உற்சாக போதையுடன் கவிபாடும் கண்ணதாசனை - மாறுதலுக்குத் துடிக்கும் எந்த இதயமும் மறுதலிப்பதைத் தவிர வேறு வழியில்லை . கண்ணதாசன் காலத்தை மறந்து ஞானகீதம் பாடும் பொழுது, காலதேவனாகவே மாறிக் குரலெழுப்பிய கவிஞர்களையே நான் மரியாதையோடு நினைத்துப் பார்க்கிறேன். ஒரு தேவையான மாறுதலுக்கான போர்க்குணத்தோடு கீதமிசைக்கும் கவிஞர்களை வாழ்த்துகிறேன். வசந்தத்தின் வரவினை ‘பாடிநின்ற’ வானம் பாடிகள், இந்த யுகத்தின் ஈடில்லாக் கவிஞன் இன்குலாப், திரிசூலக் கவிஞர்களான, மஹாபிரபு - பிரபஞ்ச கவி இவர்களோடு, கோ. ராஜாராம், இலக்கிய தீபன், முத்துப் பொருநன், கே. எம். வேணுகோபால் ஆகியோர் 73ல் தமிழ்க்கவிதா மண்டலத்திற்குப் பெருமை சேர்த்தவர்கள். -சே. சேவற்கொடியோன் வெளிச்சங்கள், வெளியீட்டு விழா கருத்தரங்களில் முழங்கிய சொற்பொழிவில் ஒரு கீற்று. - வானம்பாடியை இயக்க ரூபமாய்க்கட்டி வளர்ப்பவர்கள் கவிதையின் எதிர்காலத்தை உணர்வு பூர்வமாக உருவாக்க முனைந்துள்ளனர். இந்த இயக்கம் - பலரையும் தமிழகம் முழுவதிலும் தன் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட நெகிழ்வு பொருந்திய அமைப்பிற்குள் பல சமயம் நிகழ்வது தத்துவப் போராட்டம். வானம்பாடி இயக்கத்திற்கும் அது தேவை. எல்லா வகையான சாதகபாதகா விமர்சனங்களும் இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்குச் சமமாகவே துணைபுரியும். சுய விமர்சனங்களும் மிகவும் அவசியம்….. இந்தச் சமயத்தில் நாம் நம் இயக்கம் இப்படியில்லை. இதை ஒப்புக்கொள்வது நமக்கு இழிவல்ல. ஒரு விதத்தில் பலம் கூட. இதை உணர்ந்து கொள்வதன் மூலம் நம் எதிர்காலத் திசையை நன்றாகத் தீர்மானிக்க முடியும். அப்போது - சந்தர்ப்பவாதிகள் கவிஞர்கள் ஆக மாட்டார்கள். ‘நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள்’ என்ற தன் குரலை - சோசலிஸ்ட் ஆக்கினீர்கள்’ என்று தணித்துக் கொள்ளமாட்டான். தான் சார்ந்துள்ள இயக்கம் - தன் மேல் இடப்பட்ட முத்திரை என்றோ, முகத்திரை என்றோ நினைக்க மாட்டான். நிறங்களில் சிவப்பையே நிச்சயித்துக் கொண்டதாக அறிவித்துவிட்டு, இந்தப் பூமி உருண்டையை புரட்டிவிடக்கூடிய நெம்புகோல் கவிதையை நம்மில் யார் பாடப் போகிறோம்? என்று கேள்வி கேட்டு விட்டு, “குர்ஆனை இதயப்பெட்டியில் வைத்துப் பின்பற்ற மறவாதீர்’’ - என்ற மெளல்வியாய் மாறி - இறைவன் ஒருவனைத்தவிர வேறெவர்க்கும் வேறெதர்க்கும் வணங்காத சுதந்திரத் தலையை நமக்கு எது கொடுத்தது? இஸ்லாம்! என்று மதவழி பாடல் பாடி - தன் முந்தைய குரல் ஒரு போலித்தனம் மிக்கது - வேஷம் – என்று நிரூபிக்கமாட்டான். வெளிச்சங்கள் - வெளியீட்டு விழாவில் - தமிழ்க்கவிதைப் பற்றி பேசிய கோ. ராஜாராமின் உரையிலிருந்து ஒரு பகுதி - மனிதனைப் பற்றிய, வாழ்க்கையைப் பற்றிய விமர்சனமே கவிதைக்கு உயிரூட்டம் தருகிறது என்பதை அந்தி’ தொகுப்பு நிரூபிக்கிறது. மனித மனத்தை தத்துவம் தான் பக்குவப்படுத்துகிறது. அதுவே கவிதையையும் பக்குவப்படுத்துவதுடன், மேன்மையும் படுத்துகிறது என்பதற்கு இத்தொகுதியே சாட்சி. தமிழ்ப் புதுக்கவிதையின் பிதாமகனாகிய பிச்சமூர்த்திக்கு இவரும் ஒரு வாரிசு. விமர்சன நோக்கில் வெளிப்படும் புதுக்கவிதை இயற்கையை ஆராதிப்பதற்கும் ஏற்புடையதாகும், என்பதை துரை சினிச்சாமி நிலை நாட்டுகிறார். தன்னலத்தை மறைத்துச் சமதர்மம் பேசும் போலிகளை அம்பலப்படுத்துவதில் சில கவிதைகள் வெற்றி பெறுகின்றன. கவிதைக்குள் கிறிஸ்துவத்தை உட்பொதியவைப்பது புதுமை. துரை சினிச்சாமி கேட்கிறார். “பாவங்கள் ஏசுநாதர் வந்த பிறகு தான் தீர்க்கப்படுமோ? அல்லது மனிதர்களே தீர்ப்புக்களை வழங்கிக் கொள்வார்களா? இக்கேள்வியின் முறையிலேயே கவிஞர் விடையை நெருங்கி வருகிறார். விடையைச் சொல்வதில் என்ன தயக்கம்? நாம் இருப்பது அந்தியில் அல்ல! வைகறையில். -ஞானி அந்தி - புதுக்கவிதைத் தொகுப்பு, விலை ரூ. 2.00 எழுத்துப்பிரசுரம், சென்னை - 5. - சாகித்ய அகாடமி ராஜம் கிருஷ்ணனுக்கு 73-ம் ஆண்டின் அன்பளிப்பைத் தந்தது பற்றி நாம் ஏதும் சொல்லக்கூடாது. அதில் தலையிட நமக்கு உரிமையும் இல்லை . அது, ராஜம் கிருஷ்ணனுக்கும் அகாடமிக்கும் உள்ள சொந்த விஷயம். ‘வேருக்கு நீர்’ என்ற நாவலைப் பார்ப்போம். காந்தியத்தின் பேரில் உயிர் விசுவாசம் பூண்ட பெற்றோரின் ஒரே மகளான யமுனா சுதந்திர இந்தியாவின் தந்திர பூமியில் காந்தியத்தைக் கடைப்பிடித்து வாழத் தொடங்கும் போது வாழ்வில் எதிர்ப்படும் முரண்பாடுகள் விளைவிக்கும் சோதனைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடும் மனநிலையோடு நாவல் முடிகிறது. பரந்த காட்சி அனுபவத்தையும், குறுகிய கேள்வி ஞானத்தையும் ஆதாரமாகக் கொண்டு, கற்பனா மாந்தர்களை உலவவிடும். இந்த நாவல், இன்று இம்மண்ணில் வேறொடிவரும் தத்துவப் போராட்டத்தைக் கருப்பொருளாக்கிக் கொண்டுள்ளது. அதன் தரிசனம் காணாமலேயே - முற்றிலும் நிராகரிக்கும் போக்கு இந்நாவலின் ஊடே அடிக்கடி தலை நீட்டுகிறது. கல்கத்தாவும் பீஹாரும் தேவையில்லை. சென்னையே போதும். பாத்திரங்களை அனாவசியமாக அங்கெல்லாம் இழுத்தடிப்பது - எதன் விளைவோ? சிருஷ்டித்த பாத்திரங்களில் யமுனாவைத்தவிர மற்றவற்றிற்கு மனிதமுகம் இன்றிப்போனதால் - சித்தரிக்கும் நிகழ்ச்சிகள்கூட ஜீவனில்லாமல் சாகின்றன. காலம் மட்டுமே இந்த நாவலின் யதார்த்தமாக இருக்கிறது. அதுவும் - ஒரு பக்கம் மட்டும் அச்சான நாணயத்தைப் போல - இதனால், இந்த நாவல் படித்தவர்களின் கவனத்திலிருந்தும்கூட நழுவிப்போகிறது. இம்மாதிரியான நாவல்கள் தோற்றுப் போகக் காரணம், வாழ்க்கையில் உட்பொதிந்துள்ள தத்துவக் கூறுகளை இனம் காணாமல், தம் தொனிகளை சப்திக்க இலக்கியத்தை தவறாகப் பிரயோகப்படுத்தும்போது தான், காலம் இம்மாதிரியான குறைகளை புறம் தள்ளிப் போகிறது. -அக்கினிபுத்திரன் - தமிழ்நாடனின் கவிதைகள் வழியே - தமிழ்க் கவிதை நாளுக்குநாள் - கவிதைக்குக் கவிதை - அரசியல் உள்ளடக்கம் பெற்று வருவதைக் காணலாம். அன்றாடப் பிரச்னைகள் கருத்தியல் ரூபங்களாகி ஏளன தொனியோடும் அலட்சிய பாவத்தோடும் இவரது வித்வத்தினால் கவிதைகள் ஆகின்றன. பாலியலைப் பற்றிய இன்றைய சமூகத்தின் பார்வைக் கோணல்களையும், குரூர ரசனைகளையும் - இவரது கவிதைகள் ‘பச்சையாக’ எடுத்துக்காட்டுகின்றன. உண்மையை நிர்வாணமாகக் காட்டும்போது கவிஞன் நிலை மேலும் சிக்கலாகிறது. அங்கே தமிழ் நாடனும் நிர்வாணமாகி விடுகிறார் - உண்மையைப் போலே! முரண்பாடுகளின் சங்கமமாக இவரது கவிதைகள் இருப்பதற்குக் காரணம் - கவிஞன் முரண்பாடுகளின் கூடாக இருக்கும் வர்க்கத்தவறாக இருப்பதே! இவருக்கு மட்டுமல்ல, இவரைப் போன்ற பல முற்போக்குவாதிகளுக்கும் இருக்கும் பலவீனங்களை இவரது கவிதைகள் ஒரு குறியீடாக காட்டுகின்றன. இதேபோல் கண்டனச் சிலுவை சுமந்த மற்றொரு கவிஞர் ஞானக்கூத்தன். இவரது அன்று வேறு கிழமைத் தொகுப்பில் வெளியான பிரச்னைக்குரிய கவிதைகளைப் படித்தால் பாட்டாளிகளின் கம்பீர “உழைப்பை” அவர் ஏளனம் செய்யவில்லை. மத்தியதர வர்க்கத்தவர் பார்க்கும் ‘வேலைகளையே " ஏளனம் செய்கிறார். தவறுகள் நடக்கும்போது கண்டும் காணாமல், கேட்டும் கேளாமல், அதைப்பற்றி வெளியே வாய் திறக்காமல், குருடாக, செவிடாக, ஊமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மத்தியதர வர்க்கத்தவரின் பரிதாபக்குரலை இந்தக் கவிதைகள் நமக்கு எதிரொலிக்கின்றன.’‘உழைப்பு’‘- அந்நியமாகிப் போன காலத்தில் நாம் வாழ்கிறோம். யாருக்கோ நம் உழைப்பின் பலன் போய்க் கொண்டிருக்கிறது. அந்த நிலையில் - ’வேலை செய் வேலை செய்…’ என்று உபதேசித்தால் அது ‘குசுப்போல் தான் நாறும்’ என்று முகம் சுளிக்கும் மனிதரை இந்தக் கவிதைகளில் நாம் காண்கிறோம். புதியதோர் உலகம் செய்வோம்! என்று சங்கு கொண்டு முழங்கிய நாம் இப்போது செய்துள்ள உலகத்திற்குப் பெயர்கூற வந்த கவிஞர் - ‘கழிவறை உலகம் செய்தீர்’ என்று இடித்துக் காட்டும் பாணி - நமக்குப் புதிது. 73ல் தமிழ்க்கவிதை மூன்று விதங்களில் முகம் காட்டுகிறது. 1. வெற்றுக் கண்ணீர்ப் பூக்களை மனிதாபிமானத்தில் நனைத்து அனுதாபச் சரடுகளில் கவித்துவ முடுச்சுகளால் மாலையாக்கிக் கொண்டிருக்கும் - போலி யதார்த்தம். 2. உண்மைகளை நிர்வாணமாக்கும் பரிதாபத்தில் தானே நிர்வாணமாகிப் போகும் இயற்பண்புவாதம். 3. உண்மைகளின் ஆழத்தைத் தொட்டதினால் கை சுட்டு விட்டது - என்பதை வெளியே தெரியப்படுத்தாமல் வாய்க்குள் விரலை வைத்துக் கொள்ளும் - (மிகையதார்த்தவாதம்) இந்தப் போக்குகளே - இன்றைய கவிதைகளின் போக்குகள். கருத்தரங்குகளில் அக்கினிபுத்திரன் சமர்ப்பித்த கட்டுரையில் சில பகுதிகள். விடு பூக்கள் -அக்கினி புத்திரன் ‘நானும் தான் எதிர்ப்பட்டேன்…. உன்னைப் போலவே கனாக்களுடன், ஆனால் நீயோ … சதுரங்க மேடையில் உன்ராஜ கனாக்களைக் காப்பாற்ற என் ராணி கனாக்களை வெட்டி முறிக்கத் துடிக்கிறாய். நான் ஒன்றும் …. பிறந்த மேனியுடன் வரவில்லை! கழுத்து மறைய அணிகளோடும் …. பெட்டி நிறைய துணிகளோடும் …. இதயம் கனக்க கனாக்களோடும் வந்து மிதித்தேன் உன்வாசலை, நான் ஒன்றும் …. பிடுங்கி வரப்பட்டவள் அல்ல! ஜீவ மகரந்தம் ததும்பும் ஜாதிப் பூக்களோடும்… பசுந் தளிர்கள் துளிர்க்கும் இளைய கணுக்களோடும் …. வேர் முடிச்சுகள் அவிழா பிடி மண்ணோடும் ….. நடப்பட்டேன் உன் தோட்டத்தில் …. உன் தோட்ட மண்ணில் நானறக் கலந்து – பழம் முடிச்சுகள் உதிரவும்…. புதிய தூவிகள் முகிழவும்… இன்னும் சிறிது நாளாகும்… இன்னும் சிறிது தொலைவாகும்…. ஆனால் இதற்குள்… என்னைச் சந்தேகிக்கிறாய்! இதுவும் கூட… நீயாகச் சந்தேகிப்பதில்லை . சந்தேகிக்கவும் கற்பிக்கப்பட்டாய். எனக்கும் கற்பிதங்கள் உண்டு. என் சீர்களில் அவையும் சில உன் மண்ணுள் புழுவாய் நான் நெளியும் நொடிகளில்… நானும் சற்று தலைநிமிர, என் பிறந்தகப் பெருமையை எப்போதாவது முணுமுணுத்து உன் கொடி மரத்தின் கீழே என் கொடியைப் பறக்கவிட்டால் எப்போதும் …. சிடுசிடுக்கும் உன் முகத்தை அப் போதும்… ரசிக்கத்தானே செய்கிறேன்… வலது காலெடுத்து நானும் புக்கம் பிரவேசித்த போது, ஆரத்தி சுற்றி திலகமிட்டு மருமகளாகத் தானே வரவேற்றீர்கள். ஆனால் இன்றோ …. நான் எப்படி வேலைக்காரி ஆனேன்? பருவக் காற்றாகத்தானே வந்தேன்.. நீ ஏன் என்னை வாடைக் காற்றாக மாற்றினாய்? வசந்த பூர்ணிமையாய் வெளி கிழித்து நான் வழித்தடம் காட்டியதற்காகவா என்னைக் கருக்கிருட்டில் புதைத்தாய்? தேக்கிய கனாக்களின் பூ நுரைகள் கொப்பளிக்க நான் உன்னில் சங்கமமானதும்…. பிரவாகமாய் வயல் வெளிதேடும் நம் ஜீவித நதிக்கு நாம்… கரைகளா வோம் என்றிருந்தேன். ஆனால் நீயோ …? ஒற்றைக் கரையின் கரம்பற்றி ஒருத்தி போவதைப் பார்த்ததில்லை. என் மசக்கை மேகங்களில் உன் சில்லென்ற வரவால் மின்னல் மின்னியும் என்ன? இடிகள் அதிர்ந்தும் என்ன? துளியழும் ஓசை விழவில்லை . ஊர்மெச்ச குளம் நனையவில்லை. என் கனாக் கொழுந்துகளை சருகாக்கி காற்றில் பறக்கவிட்டு உன்கனாச் சிசுக்களை முள்ளாய் என் கர்ப்பத்தில் வளரவிட்டாய். நான் பயன் மரமாய் பழுப்பேன் என்று தானே நீ – தினமும் நீர் விடுகிறாய்! உன் அர்த்தமற்ற வாரிசுகளை பிஞ்சுக் குலைகளாய்த் தள்ளி நிலை குலைந்த நானின்று உன் அடுப்பில்…. எரிந்தவியும் ஒரு விறகாக…. உன் கட்டில் கால்மாட்டில் ஒரு தலையணையாக…. உன் தொழுவத்தில் ஒரு பசுவாக… உன் முற்றத்தில் ஒரு நாயாக… நான் – உனக்கு வாழ்க்கைப் பட்டேனா? தீர்க்க முடியா கடன் பட்டேனா? எப்படியோ … ஜப்திக்கு ஆளானது என்ஜீவிதம். என்னைப் பழமாக எண்ணி சதை உரிக்கும் உன்னை … தூரமாகி நின்றாலும் துச்சாதனனாய் நெருங்கும் உன்னை … கணவனாக நினைக்க முடியாமல் – மனைவியாக நடிக்கிறேன். உன் தோட்ட மண்ணில் வேர் பிடிக்க வந்தேன்…. இன்றோ … இருந்த வேர்களையும் இழந்து சாய்கிறேன்… நிரந்தரமான சோக நிழலை என் விழிகளில் படர விட்டாய்… ஜீவித வேள்விக்கு ஆகுதியாக இளகி வந்தேன்… இன்றதன் தகனத்தில் எருவாகி அவிகிறேன். காலப்பளு அழுந்த கரி வைரம் ஆகுமாம்…. இறுகிய என் இதயமோ – ஈரமற்று எந்திரமானது. இனி அம்பை நொந்து பயனில்லை. எய்தவர்கள்…? உன்னுள்ளும் உன்னைச் சுற்றிலும் …. உத்தரீயம் நெகிழ நிற்கும் பாண்டவர்களாக…. துகில் பற்றி உரிக்கும் – கெளரவர்களாக…. அசோக வனத்தில் சிறைப்படுத்தும் இராவணன்களாக…. ஆரண்யத்திற்குத் துரத்தியடிக்கும் இராமன்களாக…. கற்புவடம் பூண்ட கற்களாக்கிவிட்டு மாதவிகளை மேய்க்கும் கோவலர்களாக மண் குதிரைகளாகி நட்டாற்றில் (கரையும் நளன்களாக…. துஷ்யந்தன்களாக கற்பைப் புதையலாக்கும் கெளதமன்களாக…. அதைக் கொள்ளை அடிக்கும் இந்திரன்களாக எய்தவர்கள் லெட்சணமே இப்படி என்றால்…? நீ ….? காலம் காலமாக எம் இதயக் கழுத்தை இறுக்கும் பொன் விலங்குகளைத் தகர்த்து எம்முன் உறைந்து போன மானுட ஆத்மாவை – உருகியோட வழி வகுத்து பாய்ந்துவரும் ஆத்ம பிரவாகத்தை தரிசிக்க… அள்ளிப் பருக… இறுகப் புணர… எந்தப் புரு னும் இது வரையில் வரவில்லை. இப்படி இருக்கையில் – ஆடிக் காற்றில் அம்மிகளே பறக்கும் போது – நீ எந்த மூலைக்கு? என் இதயத்தில் ரத்தப் பொறிகள் கோலங்களாய்த் தெறிக்கையில்…. ரத்தனமாலை கண்ணீர்ச் சருகுகளை உதிர்க்கிறது உன்னிடத்தில்…. என் உடலெங்கும் கண்ணீர் உன் இடமெங்கும் மலர்கள் உவர்நீர் வற்றிய என் தேகம் இனித் தன் செந்நீர் கொண்டுதான் உன் மாலைக் கால் மண்டபத்தின் மணிச்சுவரை இழைக்க வேண்டும். இடையில்…. உன் வீட்டு நாய்க்கும் உதிக்கின்ற அந்தச் சூரியன் என் வீட்டைப் பாராதோ.. கூரையில்லாத என் வீட்டில் இருள் கிடந்து மொய்க்கிறது ஏன் சுருதி சோர்ந்து விட்டது … பண் நரம்புகள் இற்று விட்டன. அறுந்த தந்தியாய்…. அவலத்தின் ஓலமாய் …. உதிர்ந்த இதழ்களாய்…. கலைந்த காக்கைக் கூடாகி விட்டேன் ஓ! அந்தக் காக்கைக் கூட்டில் வாழும் குயில் கூட காக்கையை விரட்டுவதில்லை. என் உழைப்பில் உயர்ந்த நீயோ… நான் எதைச் சொல்வது? முதல்தேதி -இலக்கியதீபன் எழுந்த போதே இரைச்சல் உள்ளே… குளிக்கும் போதும்…. டிபன் பாக்ஸோடு தெருவிறங்கும் போதும் கூட… உள் இரைச்சலின் ஓங்காரக் கூச்சலில்…. யந்திரங்களன்று மௌன விரதம்! சிந்தனைத் தடமோ சிக்கல் நூல்கண்டு. மாதம் ஒரு முறை மல்யுத்தம் இதோடு விலைவாசிப் பெருநெருப்பில் விழுந்த துளிச் சம்பளத்தின் வற்றிய மார்பில் வாய் சப்பும் பிடித்தங்கள். கரந்த மடிக்காக் கன்றாய்க் காத்திருக்கும் நுழை வாயில் கடன் காரன் தாகத்தால் வாய் பிளக்கும் பாலை நிலச் செலவுகள். நிதர்சனத்தை மறுக்கும் நெருப்பு விழிகள் நெஞ்சில் தகிக்க… வெறுப்பின் கொதிப்பில் கடல் விழும் பரிதி – கண்களில் எரியும். உளிநுனி தெறிக்கும் பாறை முகக்கடுப்பில் வீட்டில் நுழைந்து ஓங்கும் கரங்களில் முதல் தேதி முடியும். முடியுமா? -அறிவன் இரவுக் கன்னியின் கருவறையிலேயே…. சிறைவைத்து – பனி மூட்டமாய்க் காவல் இருங்கள்… விடியலுக்கு அறை கூவும் சிவப்புக் கொண்டை போர்ச் சேவல்களின் குரல் வளைகளை… நெறித்துப் போடுங்கள்! மறந்து விடாமல் இந்தத் தொழு நோய் சமூகக் கணவனின் உயிரை பிடித்து நிறுத்த… நாடக மேடை நளாயினிகளைக் கூட்டி வந்து ஆணையிடச் சொல்லுங்கள் ஒரு நிறைமாதச் சூரியப் பிள்ளையின் பிரசவத்தை நிச்சயமாய்த் தடுத்து விடலாம். ஆவிக்கலப்பின் அமுதசுகத்தினிலே மேவிக்கிடக்காத விழிநான்கு… -பரிணாமன் முன்பொரு பொழுதில் நாம் கண் பசி தீர்த்தோம்…. முச்சிறைந்தும் கிடந்தோம்…. பின் பொரு வளர்பிறை என் பசி தீராப் பிணமாய்ப் போனியடீ! தனிச் சொத்து அளித்த யந்திரக் கூடலில் தன்னிறைவு அடைந்திடவோ? மனிதனை மிருகமாக்கிடும் சதைச் சுக மரணம் அடைந்திடவோ? முன்பொரு பொழுதில் நாம் கண் பசி தீர்ந்தோம்…. மூச்சிறைந்தும் கிடந்தோம்…. பின் பொரு வளர்பிறை என் பசி தீராப் பிணமாய்ப் போனியடீ! இன்று, உன் புன் சிரிப்பில் உலகை மறந்தாலும் வர்க்க உணர்வேன் மறைய வில்லை ? உந்தன் குளிர்விழி மழையினில் நனைந்தும் அடி மனக் கொதிப்பேன் அடங்கவில்லை? உந்தன் செவ்விதழ் உந்திப் பதிந்தும் என் சிவப்பேன் மறையவில்லை? முன்பொரு பொழுதில் நாம் கண்பசி தீர்த்தோம்…. மூச்சிறைந்தும் கிடந்தோம்…. பின்பொரு வளர்பிறை என் பசி தீராப் பிணமாய்ப் போனியடீ! ஒரு புணர்ச்சி வேளையில் வைரத் தோடும் பொடிந்த தென்றே சினந்தாய் உன் புதுப்பட்டுச் சேலையும் கசங்கிய தென்றே குலுங்கி அடம் பிடித்தாய். நம் போக விந்துன் பூமியைத் தொடுமுன் எனை புறம் தள்ளியே கலைந்தாய். வைரம் பதிந்த யென் இதயக் கரத்திலுன் மார்பை வருடயிலே பூர்ஷ்வா வாழ்வின் தங்க வைரங்களோடு நீ சமரசம் ஆனதினால் தாண்டீ ! ரத்தம் கலந்தும் சித்தம் கலவாப் பல ராக்களை உன் மீது வீணடித்தேன்…. வெறும் ராத்திரி புரு னாய் அலைக்கழிந்தேன்…. முன்பொரு பொழுதில் நாம் கண்பசி தீர்த்தோம்…. மூச்சிறைந்தும் கிடந்தோம்…. பின்பொரு வளர்பிறை என் பசி தீராப் பிணமாய்ப் போனியடீ! மதமதப் போடு நானுமில்லை…. உன் சதை முனைகளும் தேவையில்லை …. இனி மண்ணைப் புணர்ந்தே உன்னைப் புணர்வேன். இந்த மரணத்துக் கெல்லாம் அஞ்சேன் கவிச்சக்கரவர்த்தி கம்பர் (வெ.சா. வின் விரிந்த பார்வைக்கு ) -ஞானி ‘விவேகசித்தனில் வெளியான உள்வட்டம், வெளிவட்டம் பற்றிய முதற் கட்டுரையில் ’கம்பன் கவிச்சக்கரவர்த்தி’ என்ற வழக்காறு ஏற்பட்டதன் வரலாற்றைப் பற்றி வெ. சா. ஆராய்கின்றார். இப்பிரச்சினையின் உண்மை பற்றித் தொடர்ந்து ஆராய்வது நமது நோக்கம். வெ. சா. குறிப்பிடுவது போல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கம்பனைக் கவிச்சக்கரவர்த்தியாக ஏற்றுள்ளார்கள் என்பது உண்மையல்ல. தமிழகத்தில் கல்வியறிவு இல்லாதவர் தொகை பெரும்பாலும் 12 கோடிக்குள் அடங்கி விடும். (வெ. சாவைப் போலவே நானும் ஒரு குத்துமதிப்பாகவே கணக்கிடுகிறேன்) இவர்கள் அனைவருக்கும் கம்பன் கவிச்சக்கரவர்த்தி என்பது கூற்றளவிலேனும் தெரிந்திருக்கும் என்பதுகூட உண்மையாகாது. இவர்களுள் ஒரு பாதிப் பேருக்காவது, கம்பன் கவிச்சக்கரவர்த்தி என்று கூற்று தெரிந்திருக்கும். இவர்களுள்ளும் படிப்பின் அளவுக்கேற்ப கம்பனைக் கவிச்சக்கரவர்த்தியாக நம்பும் போக்கு அமைந்திருக்கும், இவர்களில் புலவர்கள், சமயப்பற்றாளர்கள், வைணவப் பற்றாளர்கள், தமிழ்ப்பற்றுடையவர்கள், வெறியுடையவர்கள் என்ற வேறுபாடுகளுக்கு ஏற்ற அளவிலேயே கம்பனைக் கவிச்சக்கரவர்த்தியாக நம்பும் அல்லது ஏற்கும் அல்லது மறுக்கும் போக்கு அமையும். இவர்கள் அனைவருள்ளும் நிச்சயமாக கம்பனை, இளங்கோவோடு, சேக்கிழாரோடு, தமிழகத்திற்கு அப்பாலுள்ள காளிதாசன், மில்டன், தாந்தே முதலிய மகா கவிகளோடு ஒப்பிட்டுக் கம்பனைக் கவிச் சக்கரவர்த்தியாகக் கண்டவர்கள் மிகக்குறைவு அல்லது அறவே இல்லையென்று கூறிவிடலாம். இவர்களுள்ளும் சா. கணேசன் முதலிய கம்பராமாயணத்திளைப்பிலேயே மூழ்கியவர்களும், கம்பன் கவிச்சக்கரவர்த்தி என்பதை நிரூபணம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள், ஆய்வுக்குரியனவே. புறநிலையில் நின்று, தாந்தே முதலிய கவிஞர்களுடன் கம்பனை நிறுத்தி ஆயும் முறையை அவர்கள் சரிவரக் கடைப்பிடித்தார்களா என்பது கேள்விக்கு உரியதே! வ.வெ.சு. ஐயர் இதில் எத்துணையளவு வெற்றி பெற்றார் என்பதும் ஆய்வுக்குத் தேவை. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இவர்கள் நெடுங்காலமாக வழங்கிவரும் ஒரு கூற்றைப்பக்தி உணர்வோடு ஏற்றிப் போற்றி வருகிறார்கள் என்பதில் உண்மை இருக்கிறது. ஆனால் இதுவே ஒரு முழு உண்மையாகி விடாது. கம்பனை இவர்கள் கவிச்சக்கரவர்த்தியாகக் கண்டதில் இவர்களது நம்பிக்கையோடு, உண்மையும் கலந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற மரபுக்கூற்று கம்பரின் அளவற்ற கவித்துவத்திறனை விளக்குகிறது என்பது உண்மையே. நெடுங்காலமாக பல்வேறு கவிஞர்களின் பலத்தோடு இக்கூற்று நிலவி வருவதால் இதனை எளிதாகத் தள்ளிவிடமுடியாது. கம்பனின் ஆசுகவித்தன்மையினுள்ளும் அவன் கவிச்சக்கரவர்த்தியாக விளங்கியதற்கான ஒரு காரணம் உள்ளது. தமிழ்நாட்டில் தோன்றிய பக்தி இயக்கத்தின் பேராற்றல் கம்பனுள் இடம் பெற்று அவனுடைய படைப்பாற்றலை உயர்த்தியது என்பதையும் நாம் மறுக்க முடியாது. மேற்கண்ட அனைத்து விவரங்களினூடும் ஒருண்மை தெளிவாகிறது. கம்பனுக்கு ஓராயிரம் ஆண்டுக்காலமாக நல்ல விளம்பரம் கிடைத்திருக்கிறது. கம்பனைப் போலவே கவிச்சக்கரவர்த்தியாக பட்டம் கட்டப்பட்டவர்களாகிய ஒட்டகூத்தன், ஜெயங்கொண்டார் ஆகியவர்கள், தம்பட்டங்களைத் தக்க வைத்துக் கொள்ளாத போது கம்பர் இப்பட்டத்தை நிலை நிறுத்தி கொண்டுள்ளார். இதற்கொரு அல்லது பல நியாயமான காரணம் இருந்தாக வேண்டும். விளம்பரம் மட்டுமே போதிய காரணம் ஆகிவிடாது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பக்திக்கு, சமயத்திற்கு, இருந்து வரும் செல்வாக்கை ஒரு முக்கியமான காரணமாகக் காட்டலாம். இப்படிக் கூறினால், இடையில் ஒரு துணைக் கேள்வி எழுகிறது. சமயத்திற்கு பக்திக்கு இத்தகைய பெருஞ் செல்வாக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன? இக்கேள்விக்கான விடையைச் சுருக்கமாகக் குறிப்பிடலாம். மக்கள் வாழ்வில் சிக்கல்கள் தொடர்ந்து கடுமையாக இருந்து வருவதன் சூழலில்தான் பக்திக்கும் சமயத்திற்கும் இத்தகைய விரிவான செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறும் போதே, இன்னொன்றையும் நாம் மறந்துவிடக் கூடாது. பக்தி மட்டுமே கம்பர் நூலை வாழ்வித்து வருகிறது என்பதும் உண்மையல்ல. தேவாரத்திற்கும், திவ்வியப் பிரபந்தத்திற்கும் இல்லாத ஒரு செல்வாக்கு கம்பரின் காவியத்திற்குக் கிடைத்திருப்பதை நாம் புறக்கணித்துவிட முடியாது. வெ.சா.வைப் பொறுத்தவரை கம்பர் கவிச்சக்கரவர்த்தியான வரலாற்றில் இக்கருத்து ஏற்பட்டமைக்கான புறக்காரணங்களில் மட்டுமே கருத்துச் செலுத்தியுள்ளார். இப்புறக் காரணங்களை மட்டுமே முழுமைப்படுத்திப் பார்ப்போமானால் கம்பரைக் கவிச்சக்கரவர்த்தியாக கருதுவதற்கு இடமே இல்லை. மேற்குறித்த காரணங்களில் ஒன்றோ, சிலவோ அல்லது எல்லாமோ பிற கவிஞர்களுக்கும் பொருந்திவரக் கூடும். இவ்வகையில் பிறர் பெறாத ஒரு தனிப்பெருமையைக் கம்பர் பெற்றதற்கு இவை காரணங்களாக முடியாது. இது தவிர புறக்காரணங்களையே முழுமைப்படுத்திப் பார்ப்பதன் இன்னொரு விளைவு, கம்பர் கவிச்சக்கரவர்த்தியே அல்ல; யார் யாரோ, எதற்காகவோ விளம்பரப்படுத்தியதன் மூலமே இவர் கவிச்சக்கரவர்த்தி என்ற பெருமையை அடைந்துவிட்டார் என்பதாகும். இவ்வகை முடிவு வரலாற்றையே கேவலப்படுத்தியதாகிவிடும். கம்பர் கவிச்சக்கரவர்த்தி என்று நிரூபிப்பது வெ.சா.வின் ஆய்வு வரையறையைப் பொறுத்தவரை தேவையில்லாததாக இருக்கலாம். நம்மைப் பொறுத்தவரை, இவ்வாய்வு நமக்கு இன்றியமையாததாகிறது. கம்பர் கவிச்சக்கரவர்த்தி என்பதற்கான புறக்காரணங்களைத் தொகுப்பதை விட இவ்வாறு கூறுவதற்கான அகக்காரணமே நமக்கு முதன்மையாகிறது. அப்படியானால் நம் முன் நிற்கும் கேள்வி: கம்பரை ஏன் கவிச்சக்கரவர்த்தி என்று கூறுகின்றோம்? கம்பர் காலத்தில் எத்தனையோ இராவணர்கள் இருந்தார்கள். பிறர் உரிமையை, உடைமையைப் பறித்துத் தமக்காகக் கொண்ட இராவணர்கள், எத்தனையோ வகைகளில் எத்தனையோ அளவுகளில் இருந்தார்கள். இவர்கள் சிவபக்தர்களாக, தானம், தவம்களில் வல்லவராகக் கூட இருந்திருக்கலாம். இவர்கள் சந்திர, சூரியர்களைக் கூட ஏவல் கொள்ளும் பேராசைக்காரர்களாக இருந்தார்கள். தமது எல்லைக்குள் இவர்கள் எல்லாவற்றையும், எல்லா மக்களையும், ஆடவர், பெண்டிர் அத்தனைப் பேரையும் கொண்டு வருவதற்காக சுரண்டல் சாம்ராஜ்யக் கொடிகளை உயர்த்தியவர்கள். இவர்களால் மக்கள் பட்ட வேதனைகள் சொல்லி முடியாது. இவர்கள் ஒழிந்தாக வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். இவர்களைத் தாம் ஒழிப்பதை இவர்கள் தமக்குச் சாத்தியம் என்று கருதவில்லை. இந்நிலையில் தெய்வங்களே வந்தாலல்லது இவர்களை ஒழிக்க முடியாது என்று கருதியிருக்க வேண்டும். தெய்வங்களின் அவதாரத்தை இவர்கள் எதிர்பார்த்தார்கள்; வரவேற்றார்கள், இவ்வகையில் இவர்கள் தெய்வங்களை மகிமைப்படுத்தினார்கள்; இவர்கள் பக்தியில் தம்மை மூழ்கடித்துக் கொண்டார்கள். கம்பர் காலத்து நிலைமை இப்படித்தானா, என்று கேட்கலாம். உண்மை, இது முற்றிலும் உண்மை . கம்பர் காலத்துச் சோழப் பேரரசு, தமிழகம் கடந்து விரிந்திருந்த பேரரசு, கடல் கடந்த நாடுகளையும் தனது அதிகார எல்லைக்குள் கட்டி வைக்கப் பாடுபட்ட அரசு, பெருமளவுக்கு விளைநிலங்களை சாகுபடிக்குக் கொண்டு வருவதற்காகப் பல வகை ஏற்பாடுகளையும் செய்த அரசு சோழப் பேரரசு. சோழர் காலத்து வரி வகைகளின் பட்டியலைப் பார்க்கும் போது, மக்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று நம்மால் அறிய முடியும். சோழர்காலத்துக் கிராமங்களில் எப்படியெல்லாம் உடமை மிக்க நிலக்கிழார்கள் . ஆதிக்கம் செய்தார்கள் என்று அறிய முடியும். வரி செலுத்த இயலாதவர் பட்டாளம் எப்படியெல்லாம் துன்பத்திற்காளானது என்பதையும், நாம் அக்காலக் கல்வெட்டுக்களிலிருந்து அறிந்து கொள்ள முடியும். சோழநாட்டரசின் ஆதிக்கம் பெருகிய நிலையில் மக்கள் கடுமையான துன்பங்களுக்காளான செய்தியை வரலாற்று அறிஞர்கள் விரித்துரைக்கின்றனர். கம்பரைப் பற்றி வழங்கிவரும் மரபுக் கதைகளிலிருந்து (அவை முற்றிலும் உண்மையா பொய்யா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை. ஆயினும் காலம் கடந்து வந்த அக்கதைகளில் உண்மையின் தெறிப்பு இருத்தல் கூடும்.) கம்பரின் மகன் அம்பிகாபதிக்கு காதல் உரிமை மறுக்கப்பட்டமை - கம்பர் ‘மன்னவனும் நீயோ’ என்று கூறி நாடு விட்டுச் செல்லுதல். (அல்லது அரசனால் நாடு கடத்தப்படுதல்) முதலிய கதைகளில் உண்மையின் சாரம் இருப்பது சாத்தியமே. இடையில் நமக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு தேவை. நிலப்பிரபுத்துவம், வரலாற்று வளர்ச்சியின்போது தவிர்க்க முடியாத ஒரு கட்டம். ஏராளமான நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டு வருவதற்கான அணைகள், கால்வாய்கள், உழவர் படைகள் முதலியவற்றை நிலப்பிரபுத்துவம் ஏற்பாடு செய்வதன் மூலம் வரலாற்றின் வளர்ச்சிக்கு வழியாகிறது. இடையில் இறுதியில், இது தவிர்க்க முடியாத முறையில் கொடுங்கோன்மையை உருவாக்குவதன் மூலம் மக்களுக்குத் தீமை செய்கிறது. ஆதிக்கம் பெருத்த ஒரு பேரரசின் காலத்தில் கம்பர் வாழ்ந்தார். அதாவது நிலவுடைமைக்காலக் கொடுங்கோன்மைக் கிடையில், சிறிய அளவிலும், பேரளவிலும் நாடு முழுவதும் இருந்த இராவணர்களுக்கு மத்தியில் அவர் வாழ்ந்தார். இந்த இராவணர்கள் ஒழிந்து தீரவேண்டும் என்ற மக்களின் பேராசையை இவரும் தாங்கியிருந்தார். தமது காலத்தின் உள்ளடக்கத்தை, பொது மக்களின் ஆர்வங்களை தனது ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கு தக்க வாய்ப்பாக அவர் இராம கதையைக் கருதியிருக்க வேண்டும். காலத்தின் உள்ளடக்கம் இராம கதையில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைப் பார்ப்போம். இராவணக் கொடுங்கோன்மையை தவிர்ப்பதற்காக தொலைப்பதற்காக இராமன் பிறந்து வளர்கிறான். உடைமைப்பேயாய் விரிந்து நிற்பவனைத் தொலைத்தழிப்பதை உடைமைப்பற்றுடைய இன்னொருவன் சரிவரச் சாதிக்க முடியாது. ஆகவே இவன் கூடு திறந்து கோடுகள் கடந்து உடமை துறந்து, நாடற்றவனாகிறான், காட்டில் அலையும்போது தன் சாதிப் பெருமை இழந்து வேடர்களைத் தோழமை கொள்கிறான். தத்துவச் செழுமையைத்தவ முனிவர்களிடமிருந்து பெறுகிறான். கொடுங்கோன்மைக்கு ஆளாகி உயிருக்கும், வாழ்வுக்கும் போராடிக் கொண்டிருக்கும் நாகரிகமற்ற கூட்டத்தைத் தோழமை கொள்கிறான். நீதியின் நல்லுருவமாகத் திகழ்கிறான். இந்நிலையிலேயே உடமைக் கொழுப்பேறிய கொடுங்கோல் அரக்கனை இவன் சாடும் பலன் பெற்று இறுதியாக அவனை வெல்கிறான். சமுதாயம் முழுவதையும் ஒன்றிணைத்துத் தோழமை போற்றும் ஒருவனாலேயே இத்தகைய செயற்கரிய செயல் சாத்தியமாகிறது. பழங்கால நிலைமைகளில் கொடுங்கோல் மன்னர்களின் படைபடலம் முதலியவற்றை மக்கள் கூடி நின்று எதிர்த்து வெல்லுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் அவர்கள் தெய்வங்களையே நம்பியிருந்தார்கள். இம்முறையிலேயே இராமன் தெய்வீக அவதார முடையவனாகிறான். வால்மீகி படைத்த இராமாயணக் கதையின் அனைத்துக் கூறுகளும் கம்பர் காலச் சமுதாயத்தின் கூறுகளோடு இணைவுடையவை என்பதல்ல நம் கருத்து. இராமகாதையின் மையப் பிரச்னை எதுவோ அது கம்பர் காலச் சமுதாயத்திலும் மையப்பிரச்னையாகவே இருக்கிறது. கம்பர் காலத்திற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றி வளர்ந்து பெருகி ஒரு உச்சக்கட்டத்தை இப்பிரச்னை அடைந்த காலத்தில் கம்பர் வாழ்ந்திருக்கிறார். இக்கால முழுவதுமே இராமனுடைய கதையில் மக்கள் ஈடுபாடு கொண்டு இருப்பதற்கும் இதுவே காரணமாகிறது. கொடுங்கோன்மை மிக்க காலத்தில் மக்கள் மத்தியில் இராமனைச் சார்ந்த பக்தி உணர்வு பெருகியது - தவிர்க்க இயலாதது. சமுதாயம் முழுதும் எரியும் பிரச்னையாக - மாபெரும் பிரச்னையாக எது இருக்கிறதோ - எந்தப் பிரச்னை சமுதாயத்தின் அனைத்துப் பிரச்னைகளையும் தாங்கி நிற்கும் முதற் பிரச்னையாக இருக்கிறதோ - எந்தப் பிரச்னையைத் தொட்டால், இந்தச் சமுதாயத்தின் நாடி நரம்புகளை யெல்லாம் ஒருங்கு தொட்டசைக்க முடிமோ அப்பிரச்னையைத் தொடுவதுதான் மாபெரும் கவிஞனுடைய - கவிச்சக்கரவர்த்தியின் தோற்றத்திற்குக் காரணமாகிறது. மக்களுடன் ஐக்கியப்பட்டுள்ள கவிஞன் இப்பிரச்னையின் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறான். இப்பிரச்னையின் கனபரிமானத்தால் தாக்கப்பட்ட நிலையில் கவிஞனின் மனம் முழுமையாக இறங்கி மகாகாவியத்தைப் படைக்கிறது. சமுதாயத்தின் கடுமையான பிரச்னையே அவனது அக உலகத்தை இயக்குவதாகிறது. பிரச்னையின் கடுமை தாக்கப்பட்ட நிலையில் அதைச் செரிக்கும் முறையில், அதை மறுக்கும் வகையில் அவனது படைப்பாற்றல், கற்பனைத்திறன் உயர் அளவில் இயங்குகிறது. அந்தப் பழங்கால இருள் நிலைமையில், மாய வகையான உயிர் வகைகள், ஆற்றலின் கோலங்கள் அவன் சிந்தையை நிரப்புகின்றன. இவ்வடிப்படையிலேயே விந்தை உயிர்கள், விநோத நிகழ்ச்சிகள் கம்பன் கதையை நிரப்புகின்றன. கம்பர் காலச் சோழ அரசு, தமிழர்கள் முன் எப்போதும் கண்டிராத பேரரசு. இவர்கள் நடத்திய படையெடுப்புகள், அவர்கள் நிகழ்த்திய போர் வகைகள், பயன்படுத்திய கருவிகள், போர்த் தந்திரங்கள் முதலியவை முற்காலம் காணாதவை. இவர்கள் எழுப்பிய கோபுரங்கள், சிற்பங்கள் புதுமையோடு பொலிந்தவை. இவர்கள் உருவாக்கிய நாகரீகம் அக்காலம் வரை நாடு காணாதது. அக்காலம் வரை செயற்கரியனவாக விளங்கிய பல புதிய பிரம்மாண்டமான சாதனைகள், இலக்கிய உலகினுள்ளும் மாபெரும் சாதனையை தூண்டக் கூடியவை. பிரமாண்டங்களை உருவாக்கி வரும் காலச் சூழலில்தான் கம்பரும் ஒரு பார காவியத்தைப் படைத்தார். இச்சாதனைக்குச் சங்ககாலம் முதற்கொண்ட வளர்ந்த மொழி, பண்பாடு, கலைகள் துணையாகின்றன. இடைக்காலத்தில், சமுதாயச் சூழலுக்கு மத்தியில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் வீச்சு, கம்பரது காவியத்திற்குத் துணையாகிறது ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஆயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட தமிழர் நாகரீகத்தின் ஓர் உயர்வகை வெளியீடாகக் கம்பர் காவியம் அமைகிறது. தனது சமகால வரலாற்றோடு தன்னைக் கரைத்துக் கொண்டதனால் அன்றைய வரலாற்றின் சாற்றை செரித்துக் கொண்டு கம்பர் கவிச்சக்கரவர்த்தியாக நிமிர்ந்து நின்றார். இராவணக் கொடுங்கோன்மையை எதிர்த்துக் காவியம் படைத்த வகையில் கம்பர், தமது காலத்தில் ஒரு கலகக் கவிஞராகவே (வெ. சா. வின் சொற்களில்) எதிர்ப்புக் கவிஞராகவே இருந்திருக்கக் கூடும். ‘மன்னவனும் நீயோ’ என்ற இவர் கவிதை இதனை உணர்த்தக் கூடும். தனது காவிய நாயகனைப் போலவே மன்னரவைச் சுகத்தைத் துறந்து மக்களுடன் ஐக்கியப்பட்டதன் மூலம் மாபெரும் கவிஞரானவர் கம்பர். மாபெரும் பிரச்னையில் தன்னைக் கரைத்துக் கொண்டதனாலேயே இடையறாத கவிதை மழை பொழியும் ஆற்றலைக் கொண்டவர் கம்பர். இவரது கவிதாவேசக்கனல் தெறித்த நிலையில் கட்டுத்தறிகளைக் கூட கவிபாட வைத்தவர் கம்பர். மக்களுடன் முற்றாக ஐக்கியப்பட்ட நிலையில்தான். வண்மையில்லையோர் வறுமையில்லையால் முதலிய இலட்சிய வரிகளை இவரால் பாட முடிந்தது. குகனொடும் ஐவரானோம் முதலிய தோழமை நிறைந்த வரிகளைப் பாடியது இதனால் தான். மன்னன் என்ற உயிர் மக்களை உடலாகக் கொண்டுதான் வாழ்ந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் கம்பரின் அரசியல் சிந்தனை சென்றதற்கும் இதுவே காரணமாகும். இதே காரணத்தால்தான் கவிச்சக்கரவர்த்தி பீடத்திலிருந்து ஒட்டக்கூத்தர் முதலியவர் இறங்கிவிட, கம்பர் மட்டும் நிலையாக அமர முடிந்தது. கம்பர் காலத்திற்குப் பின்னரும் காலநிலை மாறிவிடாமல் தொடர்ந்தது. இன்னும் அந்த நிலை தொடர்கிறது. அறிவு வளர்ந்த நிலையில் கம்பரின் மாயக் கற்பனைகள் பல இன்று கிரகிக்க இயலாதவையாகிவிட்டன. ஆனால் மையப் பிரச்னை இன்று வரை எரியும் பிரச்னையாகவே இருக்கிறது. இப்பிரச்னை தீரும் காலம் வரை கம்பர் நமது மனங்களை அசைத்துக் கொண்டேதான் இருப்பார். கம்பனைக் கவிச்சக்கரவர்த்தி என்று நம்புபவர்களில் பலர் நாம் கருதுவன போன்ற காரணத்திற்காகத்தான் நம்புகிறார்கள் என்பது உண்மையில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களின் ரசனைக்கிடையில் இந்தப் பொறி தெறிக்காமல் இருப்பதில்லை. இவர்கள் வாழ்வில் சந்திக்கும் கொடுமைக்காரர்களை, இராவணர்களாக உண்மை பட்டுத்தெறிக்கும் நேரமேனும் தம் மனத்தினுள் சந்தித்து விட்டுத்தான் - அவர்களோடு இராமராக மோதி விட்டுத்தான் வறண்ட உலகியலுக்குள் ஒதுங்குகிறார்கள். இவர்களுள் பெரும்பாலோர், வெ. சா. குறிப்பிடும் வெளிவட்டத்தோர்தான். ஆனால் இந்த வெளிவட்டங்களுக்குள்ளும் கண்ணுக்குத் தெரியாத உள்வட்டக்கனல்கள் இருக்கவே செய்கின்றன. கம்பர் காலத்திலும் கம்பரைச் சூழ வெளிவட்டம் இருக்கத்தான் செய்தது. அந்த வெளிவட்டங்களின் தொகுப்புப் பிழம்பாகத்தான் கம்பர் என்ற உள்வட்டம் இயங்கியது. இந்த வெளி வட்டத்தில் அது இடம்பெறவில்லையானால் உள்வட்டமே உருவாகி இருக்கவும் முடியாது. வெளிவட்டம் உள்வட்டத்தைப் படைக்கிறது. படைக்கப்பட்ட உள்வட்டம் வெளிவட்டத்தை வேகமாக இயக்க முயல்கிறது. இருவட்டங்களும் ஒன்றுக்கொன்று இயக்கத் துணையாகி விடுகின்றன. —— தொல்காப்பியம் கூறும் அழகியல் கோட்பாடுகள்…. -ஜன. சுந்தரம் ஈறாயிரம் ஆண்டுக்கால வளம் செறிந்தது தமிழ் இலக்கியம். வட மொழியைத் தவிர இந்தியாவின் வேறெந்த மொழி இலக்கியமும் - தரத்திலும் - அளவிலும் தமிழுக்கு இணையாகாது. இத்துணைப் பெருமை படைத்த தமிழ் இலக்கியத்தின் வரலாற்றில், அழகியல் கோட்பாடுகளைப் பற்றிய சிந்தனைகள் எவை? இம்மொழி இலக்கியம், தனக்கென ஏதாவது கோட்பாடுகளைக் கண்டறிந்திருக்கிறதா? அல்லது பிற இலக்கியக் கோட்பாடுகளை சுவீகரித்திருக்கிறதா? இப்பிரச்சினைப்பற்றிய அடிப்படை ஆய்வுகள் தமிழில் இன்னும் தொடங்கியதாகத் தெரியவில்லை. அண்மையில், ‘தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிதை ஆய்வு கிடையாது; செய்யுள் ஆய்வுதான் நடந்திருக்கிறது. இலக்கிய ஆராய்ச்சி கிடையாது; இலக்கண ஆராய்ச்சிதான் நடந்திருக்கிறது’ - என்று கருத்துத் தெரிவித்துள்ளார் வெ. சாமிநாதன். வெ. சா. ‘செய்யுள், இலக்கணம்’ என்பதற்கு ‘யாப்பியல், மொழியியல்’ எனப்பொருள் கொள்கிறார் என்பதை, இவர் வடமொழியில் கவிதை ஆய்வும், விமர்சன ஆய்வும் இருப்பதாகக் கூறுவதிலிருந்தே நம்மால் அநுமானிக்க முடிகிறது. அவர் என்ன அடிப்படை நோக்கத்திலிருந்து இந்த முடிவுக்கு வந்தார் என்பதற்கு விளக்கம் ஏதும் இல்லை. ஆகவே, அவர் கூற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது…. என்பதை, இரு மொழிகளிலும் உள்ள அழகியல் நூல்களின் ஒப்புமை ஆய்வில்தான் கண்டு கொள்ள முடியும். வட மொழியில் கி.மு. 2-ல் வாழ்ந்த பரதமுனிவர்தான் அழகியல் ஆய்வுக்காக முதன் முதலில் நாட்டிய சாஸ்திரம் என்ற நூலை எழுதியதாகக் கூறுகின்றனர். அது கவிதை இலக்கியத்தை தனியே ஆய்ந்த நூல் அல்ல, அது நாடக நூல். வட மொழியில், முதன் முதலாக கவிதை இலக்கியத்தைத் தனியாக ஆராய்ந்து அழகியல் கோட்பாடுகளை உருவாக்கியவர் - கி.பி. 5ல் (அல்) 6ல் வாழ்ந்ததாகக் கூறப்படும் பாமஹானே ஆவார். இவர் உருவாக்கிய நூலின் பெயர் ‘காவியாலங்காரம்’ வட மொழியில் அழகியல் கோட்பாடுகளுக்கு ’அலங்கார சாஸ்திரம்’ என்று பெயர். இதனால் இவர் ’அலங்கார சாஸ்திரத் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். இவர் காலத்திற்கு முன்னாலேயே தமிழில் சங்ககாலக் கவிதைகளைக் காணலாம். அது மட்டுமல்ல, சங்ககாலக் கவிதைகள் எந்தெந்த கோட்பாடுகளைப் பின்பற்றி எழுந்தனவோ, அந்தந்த கோட்பாடுகளை விளக்கிக் கூறும் வகையில் தொகுத்து எழுதப்பட்ட தொல்காப்பியம் பாமஹனுக்கு முன்னாலேயே தமிழில் தோன்றி விட்டது. அந்த முறையில் இந்தியாவில் முதன் முதலாக கவிதை இலக்கியத்தின் அழகியல் கோட்பாடுகளை உருவாக்கி விளக்கம் தந்த நூல் தொல்காப்பியம் ஒன்றே. ஆனால் தமிழ் இலக்கிய வட்டாரத்தில் தொல்காப்பியத்தைப் பற்றி இன்று நிலவும் கருத்தோட்டம் அது ஒரு மொழி இலக்கணம் கூறும் நூல் என்பதே. இந்நூலை இப்படி எண்ணும் போக்கு இடைக் காலத்தில் தோன்றியது. இப்போக்கின் பாதிப்பிற்கு ஆளான காரணத்தினாலேயே, தற்கால அறிஞர்கள் தொல்காப்பியத்தின் இலக்கியக் கோட்பாடுகளை ஆராயாமல் விட்டனர் எனத் தோன்றுகிறது. இந்த முறையில் தொல்காப்பியம் ஆராய்ச்சிக்கு உகந்ததாகிறது. இலக்கியம் என்றால் என்ன? இலக்கியத்திற்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள வேறுபாடு எது? இந்த வேறுபாட்டின் வகைகள் யாவை? இந்தக் கேள்விகள் தாம் அழகியல் கோட்பாட்டு ஆராய்ச்சியின் அடிப்படைகளாக விளங்குகின்றன. இவைகளைப் பற்றி மற்றவர்கள் என்ன கூறுகின்றனர் என்பதையும், தொல்காப்பியர் கூறுவதையும் ஒப்பு நோக்கினால் - தொல்காப்பியத்தின் அழகியல் கோட்பாட்டைப் புரிந்து கொள்ளலாம். ஒரு வியத்தை வெளிப்படையாகக் கூறுவது அறிவியல்; கற்பனையாகக் கூறுவது இலக்கியம். இதை வட நூலார் முறையே ’வஸ்து ஸ்திதிக்தனம்’ என்றும், ‘அலங்காரம்’ என்றும் கூறுவர். உதாரணமாக, ‘சிங்கம் விலங்குகளின் அரசன்’ என்ற கூற்று - அறிவியலுக்குப் பொருந்தாது. விலங்கினத்தில் ஓரினம்தான் சிங்கம் என்று அறிவியல் கூறும். ஆனால், இலக்கியத்தில் சிங்கம் விலங்குகளின் அரசன்’ என அலங்காரமாகச் சொல்வதற்கே பொருளுண்டு. மொழிப் பிரயோகத்தில், அறிவியலுக்கும் கவிதைக்கும் உள்ள வேறுபாடானது - அறிவியலில் உள்ளது உள்ளபடி கூறுவதிலும்- இலக்கியத்தில் அலங்காரமாக (கற்பனையாகக்) கூறுவதிலும் அடங்கியுள்ளது. ஆகவே கற்பனைகளின் வகைகளை ஆராய்வது அழகியல் ஆராய்ச்சியாக மாறி விடுகிறது. இந்தக் கற்பனைகளை ஆராய்ந்து உருவாக்கும் கோட்பாடுகள் அழகியல் கோட்பாடுகள் என அழைக்கப்படுகிறது. கற்பனை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. வியப்புறக் கூறல் (Exaggeration) உருவகமாகக் கூறல் (Metaphor) பொதுமைப்படுத்தல் (Generalisation) என்பது. இதில் வியப்புறக் கூறல் இலக்கியத்தில் தலையாயது. அறிவியலில் இது அறவே கூடாது. டாஸ்டாவஸ்கியின் கூற்றுப்படி, எல்லாக் கலையும் ஓரளவு வியப்புறக் கூறுதலை உள்ளடக்கியிருக்கிறது. ஆனால் அது தன் எல்லையை மீறக்கூடாது. பாமஹன் தன் நூலில் அதிசய அலங்காரத்தில் கூறுகிறார்: வக்கிரோக்தி என்பது பொருளை வியப்புறக் கூறுவதால் புதுமையை உண்டாக்குவது; கவிஞன் சிறப்பாக இதற்கு முயல வேண்டும். இதை விட்டால் கற்பனைக்குப் பொருளே இல்லை. இதனடிப்படையில் வக்கிரோக்திதான் காவிய வாழ்வு என்ற பழமொழி வடமொழியில் வழங்கி வருகிறது. தொல்காப்பியர், கற்பனை தோன்றும் நிலைக்களன் இரண்டு என்கிறார். இசைதிரிந்திசைப்பினும் இயையு மன்பொருளே அசைதிரிந்தியலா என்மனார் புலவர். (பொருளியல்) சொல்லின் வடிவத்தை மாற்றுவதாலும், பொருளைத் திரித்துக் கூறுவதாலும், இலக்கியப் பொருள் தோன்றுமென்பது இதன் பொருள். உதாரணமாக, ‘காளை வந்தான்’ என்று கூறினால் வந்தான் என்ற உயர்திணை ஆண்பால் வினைமுற்று, காளை என்ற அஃறிணைப் பொருளை உயர்திணையாக மாற்றி விடுகிறது. இதை, திணைமயக்கம் என்பார் நச்சினார்க்கினியர். இது சொல்வடிவத்திரிபால் பொருளை வியப்புறக் கூறும் முறை. மொழி இலக்கணப்படி இது தவறான விநியோகம். ஆனால் இலக்கியத்தில் சரியான பிரயோகம் பொருளை மாற்றிக் கூறுவதென்பது கற்பனையின் பொதுவான விதி. இது பொருளை வியப்புறக் கூறுவதும் - உருவகமாகக் கூறுவதுமாகும். ஆகவே, கற்பனையின் பொது நெறிகளை தொல்காப்பியர் இந்த நூற்பாவில் சுருக்கிக் கூறுகிறார். பொருளியல் - 2வது நூற்பாவில் இதையே விரிவாகக் கூறுகிறார். நோயும் இன்பமும் இருவகை நிலையில் காமம் கண்ணிய மரபிடை தெரிய எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய உறுப்புடையது போல் உணர்வுடையது போல் மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் சொல்லா மரபின் வற்றொடு கெழீஇ செய்யா மரபில் தொழிற்படுத் தடக்கியும் அவரவர் உறுபிணி தம் போல் சேர்த்தியும் அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இரு பெயர் மூன்றும் உரியவாக உவமவியல் படுத்தலும் உவமம் ஒன்றிடத்து இருவர்க்கும் உரிய பாற் கிளவி. (பொருளியல் 2) பொருளியல் முதல் நூற்பா கற்பனை என்றால் என்ன? என்ற வினாவுக்கு, சொல்லை வைத்து விளக்கினால், 2 வது நூற்பா பொருளைக் கொண்டு விளக்குகிறது. இந்த நூற்பாவை மூன்று பகுதியாகப் பிரிக்கலாம். குடும்ப வாழ்வில் தோன்றும் துன்ப இன்பங்களை எண்வகை மெய்ப்பாட்டோடு ஒரு கவிதை வெளிப்படுத்த வேண்டும் என்பது முதல் பகுதி. (Generalisation) (நோயும் …………….. விளங்க) அதை வியப்புறக் கூறி வெளிப்படுத்தும் முறைகளை 2வது பகுதி விளக்குகிறது 2 (ஒட்டிய …………… சேர்த்தியும்) உருவகமாகச் சொல்வதை மூன்றாவது பகுதி விளக்குகிறது. 3(அறிவும் ………… ஒன்றிடத்து) இந்த நூற்பாவில் கற்பனையின் மூன்று பகுதிகளை சுருக்கமாக, ஆனால் தெளிவாக வரையறைப்படுத்துகிறார் தொல்காப்பியர். இப்பகுதிகளைப் பற்றி வட மொழியின் இலக்கியக் கோட்பாட்டில் தலைசிறந்து விளங்கும் ‘தொனி லோகம்’ கூறுவதை ஒப்பு நோக்குவது பயனுள்ளது. ‘’கவிஞன் கருதும் விஷயம் ரசங்களாகவும் பாவங்களாகவும் ரசங்களாகவும் பாவங்களாகவும் (மெய்ப்பாடு) இருந்து இருக்க வேண்டும். அந்த விஷயம் நேரடியாக வெளிப்படாமல் அலங்காரங்கள் வாயிலாக வெளிப்பட்டு, வெளிப்படையான பொருள் சிறப்பிழந்து மறைவான பொருள் சிறக்குமானால் அது ’தொனிக்கவிதை’ எனப்படும். கவிதை படைக்க விரும்புபவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும். “கவிஞன் வெளிப்படுத்த விரும்பும் கருத்து ரசங்களாகவும், பாவங்களாகவும் இருக்க வேண்டும்” என, தொனி லோக நூலாசிரியர் கூறும் போது – அது குடும்ப வாழ்வில் தோன்றும் துன்ப இன்பங்களும், அதன் பாவங்களும் (மெய்ப்பாடுகள்) ஆக இருக்க வேண்டும் என தொல்காப்பியர் கூறுகிறார். இவைகளை வெளிப்படுத்தும் வடிவங்களைப் பற்றிக் கூறும் போது, நேரடியாக வெளிப்படுத்தாமல் அலங்காரங்கள் வாயிலாக மறைமுகமாக வெளிப்படுத்த வேண்டுமென்று தொனி லோக ஆசிரியர் கூறும்போது, அந்த அலங்காரங்களின் இரு வடிவங்களான இறைச்சி, உவமம் ஆகியவைகளின் தன்மையை விரிவாக தொல்காப்பியர் விளக்குகிறார். மேற்கூறியவற்றிலிருந்து, வடமொழி அழகியல் ஆய்வாளர்களும், தொல்காப்பியரும் கவிதையைப் பற்றிக் கூறும் பொதுக் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், நாம் அறிந்து கொள்வது: கவிதை அறிவு வழிப்பட்ட கருத்துக்களை உள்ளடக்க மாக்குவதில்லை. மாறாக உணர்வு வழிப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கமாக்குகிறது. உணர்வு வழிப்பட்ட கருத்துக்கள் என்றால் ரசங்களும், ரசங்களின் பாவங்களும் என ‘தொனி லோகம்’ கூறும் போது - தொல்காப்பியர் அதிலிருந்து மாறுபட்டு குடும்ப வாழ்க்கையின் துன்ப இன்பங்களும் அதன் வழியாகத் தோன்றும் மெய்ப்பாடுகளும் எனக்கூறுகிறார். கவிதையின் உள்ளடக்கம் பற்றிய இவ்விருவகை கோட்பாடு, படைப்பாளியின் இலக்கிய தர்மம் என்ன? என்ற கேள்வியை எழுப்புகிறது. படைப்பாளி தன் ஐம்புலனால் பெறப்படும் உலகியல் உணர்வுகளின் வெளிப்பாடாக இலக்கியம் படைக்க வேண்டுமா? அல்லது - “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை”யை மையமாகக் கொண்ட குடும்ப வாழ்வையும், அதன் விளைவாகப் பெறும் அனுபவங்களின் சாரமான துன்ப இன்பத்தையும் - இலக்கியத்தின் உள்ளடக்கமாக்க வேண்டுமா? வேறு வார்த்தைகளில் கூறினால், படைப்பாளி தன் ஐம்புல அனுபவங்களின் சாரமான ரசத்திற்குப் பொறுப்பாளியாக அந்த ரசத்தை நேர்மையாக வெளிப்படுத்துவதுதான் இலக்கிய தர்மமா? அல்லது - தான் வாழும் வாழ்வும், தன்னைச் சுற்றி வாழ்வோரின் வாழ்வையும் - அதன் விளைவுகளின் சாரமான துன்ப இன்பங்களுக்கும் பொறுப்பாளியாக - அந்தத் துன்ப இன்பங்களை நேர்மையாக வெளிப்படுத்துவதுதான் இலக்கிய தர்மமா? இந்தக் கேள்விக்கு தொல்காப்பியர் கூறும் விடை: படைப்பாளி சமூகத்திற்குப் பொறுப்பாளியாக இருக்க வேண்டுமென்பது. சங்க இலக்கியத்தைக் கூர்ந்து ஆராய்ந்தால் இவ்வுண்மை மேலும் தெளிவாகும். கவிதையின் வடிவம் அலங்காரம் (கற்பனை) என இருவரும் கூறுகின்றனர். ஆனால் அந்த அலங்காரங்களின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதில் இருவரும் மாறுபட்ட கருத்தோட்டம் கொண்டுள்ளனர். அறிவு வழிப்பட்ட உவமம், புலன் வழிவந்த உவமம் என உவமத்தைப் பாகுபடுத்திப் பார்ப்பது தொல்காப்பியத்தில் காணப்படும் சிறப்பான அம்சம். இவ்வாறு, வட மொழி அழகியல் கோட்பாட்டையும், தொல்காப்பியரின் அழகியல் கோட்பாட்டையும் ஒப்பு நோக்கும் போது, கவிதையின் உள்ளடக்கத்தைப் பற்றியும் உருவத்தைப் பற்றியும் வெவ்வேறு விதமான விளக்கங்கள் கிடைக்கின்றன. கிடைக்கும் இவ்விளக்கங்களின் தராதரத்தை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. இதைத் தனியாக ஆராயலாம். இதுவரை கூறியவற்றிலிருந்து, தமிழில் இலக்கண ஆய்வுதான் உள்ளதே தவிர, கவிதை ஆய் வோ, விமர்சன ஆய்வோ இல்லை என்ற வெ.சா. வின் கூற்று உண்மை அல்ல என்பது விளங்கும். பண்டைய தமிழ்ப்புலவர் - கவிதையை ஆராய்ந்தது மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே முதன் முதலாக கவிதையின் அழகியல் கோட்பாடுகளை உருவாக்கியவர்களுமாவர் என்பது தான் உண்மை. அந்தக் கோட்பாடுகளை அடியொற்றி வளர்ந்த தமிழின் ஈறாயிர ஆண்டுக்கால இலக்கிய வளத்தை – தற்கால விமர்சகர் கண்டறிய முடியாததன் விளைவே - தமிழ் இலக்கியம் விமர்சனத்தையும் ரசனையையும் தனக்கு வேண்டாததாக ஒதுக்கி வைத்துள்ளது என்றுகூற வேண்டிய நிலை இன்று இருக்கிறது. இயக்கம் -சுப. செல்வம் ஒற்றைக்கல் ஓடையில் விழுந்தது ! உருட்டிப் புரட்டி வெள்ளம் மீற அமிழ்ந்… விழுந்தன கற்கள் …. நின்றது தண்ணீர் புரிந்தது ! நான் அல்ல, அவன் …. அவள் …. அவர்கள்…. நாம்! இலவுக்கிளிகள் -செங்குயில் பள்ளிக் கூண்டுகளில் பயிலும் கிளிகள் இலவம் பழத்திற்காய் கசடறக்கற்றவற்றை திருப்பித்திருப்பி சொல்கின்றன. இல்லை ….. யில்லை … எழுதுகின்றன! நிதானம் -ஜெயஸ்ரீ கானல் நீரென்று சாவகாசமாய்ச் சென்ற என்முன் ஒரு சமுத்திரமே விரிந்து கிடந்தது. தோல்வி -சூரியகாந்தன் பந்தயத்தில் எனது ஓட்டத்தை துரிதமாக்கி…. வெற்றியைத் தொடவைத்த முதல் மைல்கல் பழிக்குப்பழி -கார்த்தி வீட்டுக்காரர் இல்லாத வேளையில் வந்த நண்பரை தெருவில் நிறுத்தி…. இல்லையே என்றனுப்பி தன் கற்பில் கவனமாகும் கண்ணகியை – நெருக்கமான பஸ்ஸில் ஓரத்தில் ஒண்ட வைத்து எவனெவ னெல்லாமோ உரசிப் போக வழிவைத்து மோசமாய்ப் பழிவாங்கும் பொல்லாத விதி. வானம்பாடிகளின் இயக்க வரலாற்றில் கற்பிதங்கள் சில….. படிப்பினைகள் சில….விளக்கங்கள் சில…. வானம்பாடி இயக்கத்தின் வெளியீடாக வேள்வி - வர இருப்பதைப் பலரும் இன்முகத்துடன் வரவேற்கும் தருணத்தில், இயக்கத்தைப் பாழ்படுத்தும் ‘உட்குழு’ வொன்று எதிர்த்து துண்டறிக்கை வினியோகித்துள்ளாக; பலரும் எம் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். சமுதாய மேம்பாட்டை எண்ணி, தோன்றி வளரும் தத்துவச் செழுமை மிக்க இயக்கத்தின் வரலாற்றில் ஏதாவது ஒரு காலத்தில் நிகழ வேண்டிய விபத்து; இப்போது சம்பவித்திருக்கிறது. பார்க்கப்போனால், வானம்பாடி இயக்கம் அவர்களுக்கோ, எமக்கே உரிய தனிச்சொத்து அல்ல; இது தமிழகத்தின் பொதுச்சொத்து; தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தின் தவிர்க்க முடியாத அவசியத் தேவையாகத் தோன்றி வளர்கிறது இவ்வியக்கம். வானம்பாடி இயக்கத்தின் வரலாற்றை முன் வைப்பதன் மூலம், சில கற்பிதங்கள் பொய்யானவை என்பதும், சில படிப்பினைகள் தேவையானவை என்பதும் விளக்கங்கள் இன்னும் சில தருவது தவிர்க்க முடியாதது என்பதும் புலனாகும். * இந்த இயக்கம் திடீரென ஆகாயத்திலிருந்து பொன்னூஞ்சலாடிக் கொண்டு வந்த தல்ல. ‘வானம்பாடி’ 1971 - ல் தோன்றியது. கோவையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த இலக்கிய அமைப்புகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தின் குறியீடாக வானம்பாடி சிறகடிக்கத் தொடங்கியது; வானம்பாடிக் கூட்டங்கள் மாதந் தோறும் நடந்தன. பின், வானம்பாடி - விலையிலாக் கவிமடல் வெளியிடும் பொறுப்பை அக்னியும் முல்லையும் ஏற்றனர். முல்லை விலகியபோது, அவர் இடத்தில் புவி தொடர்ந்து செயல்பட்டார். ஆறு இதழ்கள் வரை வெளியிடும் பொறுப்பை ஏற்றனர். இதை இயக்கமாக உருவாக்கும் எண்ணத்தை கவிஞர் இளமுருகு வற்புறுத்தி வந்தார். நாளடைவில் வானம்பாடி - இதழுக்கு ஏற்பட்ட சமூக அங்கீகாரம் - இலக்கிய இயக்கமாக செயல்பட ஏற்றதோர் சூழலைத் தோற்றுவித்தது. * மாதந்தோறும் இலக்கியப் பிரச்னைகள் பற்றித் தவறாமல் ஆய்வரங்குகள் நடைபெற்றன. தமிழ்க்கவிதை அந்தரத்தில் திரிசங்காய் இருப்பது சரியல்ல. துரித கதியில் மாறிவரும் உலகச்சூழலின் சூழலில் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டின் கலாச்சார, அரசியல், பொருளாதாரப் பிரச்னைகளைப் பற்றி இவ்வியக்கம் சரிவரத் தெரிந்து கொள்ளாமல், தன் காலடியை முன் வைக்கக்கூடாது. அதுவும் யுகத்தின் மீது சுவடுகள் பதிக்க விரும்பும் வானம்பாடிகள் இதைத் தம் கவனத்தில் வைத்துக் கொள்வது அவசியம். பிறமொழி இலக்கிய அறிமுகம் நம்மை வளர்க்கும். இவை தவிர, தன்னைத்தான் சுய விமர்சனம் செய்து கொள்ளாமல் - தான் வளர இயலாது. இந்த அடிப்படைகளின் மேல் வானம்பாடி இதழின் கட்டுமானங்கள் நடந்தன. ஆய்வரங்குகளில் கவிதைப் படையல்களும், விமர்சனங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கலை இலக்கியக் கருத்தோட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. வானம்பாடிகளின் வரலாற்றில் இது முதல் போக அறுவடையின் காலம். மரபிலிருந்து புதிய மரபிற்குப் பலர் தவழ்ந்து வந்ததும், சிலர் தாவி வந்ததும் -கலைக்கண்ணோட்டத்துடன், சமூகப் பிரக்ஞையுடன் மிகச்சிறந்த கவிதைகள் படைக்கப்பட்டதும் - கவிதைத் துறைக்கே அதிகம் தொடர்பில்லாத பலர், இதன் பொது ஈர்ப்பால் கவர்ந்திழுக்கப்பட்டதும் - கவிதை, புலவர்களின் செய்யுள் கட்டிலிருந்து விடுபட்டு, மக்களின் அரவணைப்பில் முகிழத் துடித்ததும் முற்போக்கு எண்ணத்துடன் எண்ணற்ற விலையிலாக் கவிமடல்கள் வெளி வந்ததும் முற்போக்கு இயக்கங்கள் ஆங்காங்கு அணிதிரளத் தொடங்கியதும் - தனிமனித வாதத்துக்கெதிரான சமூக யதார்த்தவாதம் தன் தத்துவ பலத்தோடு வியூகம் அமைத்ததும் - இந்தக் காலத்தில்தான். வானம்பாடிகளின் ’வெளிச்சங்கள்’ தொகுப்பில் உள்ள சிறந்த கவிதைகள் பலவும் - விவாதத்திற்கு மரியாதை தந்த (71-72) இக்காலத்தின் படைப்புக்களே. * இடையில் சில பிரச்னைகள் முளைத்தன. இவை எந்த இயக்கத்திற்கும் உரியவை தாம். ‘வானம்பாடிகள் ஒரே மாதிரி எழுதுகின்றனர். அதிகமாக போஸ்டர் கவிதைகளே எழுதுகின்றனர். இவர்கள் பொது உடமைவாதிகள். இத்தகைய பிரச்சாரங்கள் வெளியிலிருந்து வந்தன. உள்ளிருந்தும் சில ஐயவினாக்கள் எழுந்தன. படைப்புக்களைத் தத்துவம் கொண்டு பார்ப்பது முழுக்க சரியா? தத்துவமும் கவித்துவமும் இணையுமா? படைப்பாற்றலை தத்துவப் பயிற்சி நசுக்கி விடாதா? கவிஞனுக்கு அரசியல் சார்பு தேவைதானா? இந்தியாவில் புரட்சி சாத்தியமா? மார்க்சியம் முழுக்க முழுக்க சரியான தத்துவமா? கவிஞனின் சுதந்திரத்தை, தனித்தன்மையை சோசலிச அமைப்பு காயடித்து விட்டதா…? இத்தகைய வினாக்கள் உள்ளே எழுந்தன. கேள்விகளை சரியானபடி எழுப்பி முறையான விவாதம் நடத்தி ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்குப் பதிலாக, கேள்விகளோடு கேள்விக் குறிகளானார்கள். நாங்கள் படைப்புக் கர்த்தாக்கள். இவர்கள் யார் எங்களை விமர்சனம் செய்வதற்கு? கவிஞன் தன் வாழ்வில் கண்டறிகிற தத்துவத்தை விடவா, பிறர் கற்றுத்தர முடியும்? கவிஞனின் வளர்ச்சிக்கு விமர்சனம் தேவைதானா? என்று கேட்டு விலகத் தொடங்கினர். இடையில் வானம்பாடிக் கவிதா மண்டலத்தில் தன்னைச் சிறந்த கவிஞனாக, தேர்ந்தெடுக்கவில்லையே… என்ற அரிப்பால் - பிறரைச் சொரிய முற்பட்டதால் எழுந்த மனஸ்தாபங்கள் இதற்குள் வானம்பாடி ஏழு இதழ்கள் வெளிவந்து விட்டன. * முன் திட்டப்படி, சில குழப்பங்களைத் தீர்த்து விட்டு, 1972 - டிசம்பரில் காந்திப் பூங்காவில் சிற்பி தலைமையில் நடந்த கூட்டம் வானம்பாடி இயக்க வரலாற்றின் தொடக்க முனையாக இருந்தது. வானம்பாடி கவிதை இயக்கமாகவே இருக்க வேண்டும். இதில் விமர்சகர்களுக்கு இடம் இருக்கக்கூடாது - என்ற கருத்துக்கள் மறுக்கப்பட்டு வானம்பாடியை - இலக்கிய இயக்கமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. வானம்பாடி - இயக்க பூர்வமாய் ’பூர்ணிமை’ ஆனது அன்றே! * இலட்சியங்கள்: இருபதாம் நூற்றாண்டுச் சமூகத்தின் எரியும் பிரச்னைகள், முற்றிவரும் முரண்பாடுகள், வெடித்தெழும் போராட்டங்கள், கணிக்கும் தீர்வுகள் - இவற்றை விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் சமுதாய பிரக்ஞையுடன் படைப்பாக்குவதும், விமர்சிப்பதும் தலையாய நோக்கம். உலகக் கவிதைச் சூழலில் தமிழ்க் கவிதையின் இடத்தை நிர்ணயிப்பதும் - சர்வதேசக் கவிதைத் தரத்துக்கு தமிழ்க் கவிதையை வளர்ப்பதும், கலாச்சார இயக்கத்தின் ஒரு கூறாக இயங்கும் தமிழ் இலக்கிய இயக்கத்தை வரலாற்று ரீதியில் ஆய்தல், இன்றையத் தேவைகளுக்கேற்ப பணிபுரிதல். முற்போக்கு இயக்கத்தைவளர்த்தல். நடைமுறைகள் : 1. வானம்பாடி கூட்டம் மாதந்தோறும். 2. மாதந் தோறும் வானம்பாடி கவிமடல் வெளியிடல். 3. கவிதை இதழ் என்ற நிலையிலிருந்து வளர்ச்சி பெறும் போது - இலக்கிய இதழ் ஆக்குதல். பின், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவர் கொண்ட ஆசிரியர் குழு தம்பணி களைப் பகிர்ந்து கொண்டது. இதில் ஞானி அக்னி அங்கம் வகித்தனர். ஆனால், நாங்கள் பூர்ணிமைக்குப் பின்னால் மற்றொரு பூர்ணிமையை தரிசிக்க விரும்பினோம். அவர்களோ இடையிலொரு அமாவாசையை ஜோடித்து விட்டனர். 73 ஜனவரியில் செயல்படத் தொடங்க வேண்டிய இயக்கம் ஐவரில் மூவரின் ஒத்துழைப்பின்மையால் தடைப்பட்டது. இயக்கமானால் இதழ் தம்வசம் இல்லாது போகும் என்பதால் - இயக்கத்தைப் புறக்கணித்து விட்டு, இதழைத் தம்வசப்படுத்துவதில் கவனம் செலுத்தினர். வானம்பாடி வி. சி. எஸ். காலனி ஏகாதிபத்தியத்திற்குள் முடக்கப்பட்டது. வானம்பாடியில் நிமி முள்ளாய் இருந்த வலிமையான சிறகை வெளியேற்ற முயற்சித்தனர். தொடர்ந்து மூன்று மாதங்களாக இதழ் வெளிவராமல் இயக்கத்தின் லட்சியங்களை அனாதைகளாக அலைய விட்டனர். கடிதத் தொடர்புகள் விடுபட்டுப் போயின. வானம்பாடி ஆய்வரங்கங்களைப் புறக்கணித்தனர். கோஷ்டி சேர்க்கும் மனப்பான்மை அதிதீவிரமாகியது. பாராட்டப்படும் போது தலை கனக்கும் இவர்களால் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லை. பாராட்டையே விமர்சனமாக எண்ணியதால் வந்த விளைவு எதிர்முகாமைச் சார்ந்தவர்கள் வம்புக்கேனும் - இவர்கள் பொது உடமைவாதிகள் கட்சிக்காரர்கள் என்று கூறுவதை ஒரு பொருட்டாக எண்ணி அதற்குப் பயப்பட்டு ஆசிரியர், கடிதங்களும் பிரகடனங்களும் எழுதினர். எம்கொள்கை ஜனநாயக சோசலிசமே என்று லகுவாகப் பலருக்கும் எழுதித் தம்மைத் தற்காத்துப் பேணிக் கொள்ள முயன்றனர். புரியாமல் எழுதும் மிகையதார்த்தவாதப் போக்கில் குறுங்கவிதைகள் எழுதி, விற்றுவிட முயன்றனர். புரட்சிகரமான நெடுங்கவிதைகள் எழுதுவதைத் தாமும் தவிர்த்தனர். பிறரும் எழுதாமல் இருப்பதில் ஒரு கண்ணாக இருந்தனர். பத்தாவது இதழில் தம் முத்திரைகளைச் சிதைத்துக் கொண்டனர். - சிகரத்தைக் கவிதையிலும் லிங்கத்தை கருத்திலும் கொண்டு திரியும் இவர்களின் மரணத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல, என்ற முறையில் 72 டிசம்பரில் எடுத்த இயக்கத்தின் இலட்சியங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும் முறையில், 73’ ஜனவரியிலிருந்து வானம்பாடி ஆய்வரங்கக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். எமக்குள் உள்ள விவகாரத்தைப் பார்த்து உண்மையிலேயே மனம் நொந்த வெளியூர் நண்பர்கள் கோவைக்கு வந்த சமயங்களில் சமாதானத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். இறுதியாக அவர்கள் மூலம் எமக்குக் கிடைத்த பதில். சந்திப்பிற்கும் சமாதானத்திற்கும் அவர்கள் தயாரில்லை. வழிகள் பிரிந்து விட்டன. தொடர்ந்து இரு அணியும் செயல்பட வேண்டும். தனிமனிதனும் படைப்பும் மோதிக் கொண்டால், நான் படைப்பின் பக்கம், படைப்பும் தத்துவமும் மோதிக் கொண்டால் நான் படைப்பின் பக்கம். எவரிடம் தத்துவம் இருக்கிறது என்பதை அவரவர் பணிகள் நிரூபிக்கட்டும் என்று கூறிச்சென்றனர். வானம்பாடி இயக்கத்தைத் தொடர்ந்து நடத்திச் செல்லும் பயணத்தின் தொடர்ச்சியாக நாங்கள் வேள்வியைத் தொடங்குகிறோம். எமக்கும் உரிமை இருந்தும் கூட முரண்பாடுகள் கூர்மை அடையவும், குழப்பங்கள் தவிர்க்கப்படவும் வேண்டும் என்பதற்காகவே ‘வேள்வியை’ இயக்கத்தின் இதழ் ஆக்குகிறோம். வானம்பாடி இயக்கத்தைச் சிதைக்க முயன்ற இந்த முற்போக்குவாதிகள்!) இதுவரையிலும் போட்டுக் கொண்ட மாறுவேங்களை நாம் - இனம் கண்டு கொள்வது, ஓர் இலக்கிய இயக்கத்தின் சரியான வரலாற்று வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இவர்கள் யார் என்பது இவர்களின் முத்திரைகளை உடைத்தால்தான் தெரியும். இவர்கள் சில சமயங்களில் தம் முத்திரைகளை தாமே விலக்கிக் கொண்டதும் உண்டு. ஒருவர் எழுதினார். மார்க்சியத்தின் அரிச்சுவடியும் அறியாத நான்… தத்துவத்தை கவிஞர்களாகிய நாம் நெருங்கி விடக்கூடாது. வானம்பாடி கம்யூனிஸ்டுகளின் கையில் போய்விடும். அந்த உள்விவகாரங்களின் விவகாரங்களை இப்போதைக்கு வெளிப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. கொங்குக் கோமகன், கோவை வள்ளல், சோமசுந்தரப் பெருமானின் திருவிளையாடல் மகாத்மியங்கள், முருகப்பெருமான், அல்லா, மகாத்மா, மார்க்ஸ், பெருந்தலைவர், கண்ணதாசன் ம.பொ .சி. தி. க. சி, தீபம் முதலியவற்றின் கதம்பக்குழப்பதிலிருந்து அவர்கள் உருவாக்கும் - முற்போக்கு, மனிதாபிமானம், அரசியல், புத்துலகு - எத்தகையதாயிருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. - இப்போது எல்லோரும் ஒன்றை அறியலாம். வானம்பாடி இயக்கத்தின் மைய ஈர்ப்பு விசையிலிருந்து விலகி தடம் புரண்டு போனவர் யார் என்று மீண்டும் கூறுகிறோம். வானம்பாடி இயக்கத்தை சகலருக்கும் பொதுவுடைமை ஆக்குவது எங்கள் நோக்கு. தமக்கு மட்டும் தனியுடமை ஆக்குவது அவர்கள் போக்கு. இயக்கத்திற்காக இதழ் என்பது எம்நோக்கு. தங்களுக்காக இதழ் என்பது அவர்கள் போக்கு. தனி உடமைக் கோட்பாட்டின் இன்றியமையாத அங்கமாகிய ‘தான்’ என்ற அகந்தையை முன்படுத்தி செயல்படுபவர்கள் உடமைவர்க்கத்தின் சேவகர்களே ஒழிய, இவர்கள் முதலாளித்துவம் ஏகாதிபத்தியம் நிலவுடமை ஆகியவற்றை ஒழிப்பது பற்றி விஞ்ஞானக் கண்ணோட்டத்துடனும் சமூக பிரக்ஞையுடனும் சிந்திப்பது என்றால், சிரிப்புக்கு இடமாகத்தான் இருக்கிறது. தமிழ்ப்புலவர்கள் தமிழைக் கன்னி கழியாமல் வைத்திருக்க முயற்சித்ததைப் போலவே, இந்தப் புத்திலக்கியப் புலவர்கள் சமூகத்தை ஆண்மை கழியாமல் வைத்திருக்கப் பிரியப்படுகின்றனர். உடமையாளரின் கோட்பாடுகள் தாம் இவர்களின் அடி நெஞ்சில் முட்புதராய் அடர்ந்து வளர்ந்துள்ளன. - சாகும் தறுவாயிலும் இந்த இலக்கிய மாரீசர்கள் ஏச்சுக்கூக்குரல் கொடுத்துள்ளனர். மார்க்சியத்தையே இவர்கள் அதிதீவிரவாதம் என்று கூறுகின்றனர். மார்க்சியத்தை நாங்கள் கூண்டாக நினைக்கவில்லை. மாறாக எம்மைத் தாங்கும் வல்லமை அந்தக் கூட்டிற்கு மட்டுமே இருக்கிறது என்று அறிவு பூர்வமாக நம்புகிறோம். தமக்காகவே இயக்கம் என்று பார்க்கும் இவர்கள், தத்துவத்தை வேம்பாக வெறுக்கும் இவர்கள், கவிதைப் படைப்பைக் கூடச் சரியாகச் செய்ய முடியாது. இருட்டறையில் கண்ணீர்ப்பூக்கள் உதிர்க்க முடியுமே தவிர, இவர்கள் வெளிச்சங்களுக்கு வரமாட்டார்கள். இவர்களிடம் எமக்குக் கோபமா? இல்லை ! இவர்களைத் தோற்றுவித்து, தன் பிடியில் சிக்கவைத்து, தான் விரும்பியபடி எல்லாம் ஆட்டிப்படைக்கும் இந்தச் சமுதாயத்தின் உடமை அமைப்பை வேரோடு அழிப்பதன் தேவையை நாங்கள் மேலும் ஆழமாக உணருகிறோம். - இவர்கள் தொகை ஐந்து. ஐந்தும், ஐந்து விரல்கள் மாதிரி. இவர்கள் மட்டும் தான் சரித்திரத்தை சிருஷ்டித்தார்களாம். சிருஷ்டிப்பார்களாம். நிலத்தைப் பண்படுத்தி விளைவித்து வைத்திருந்தால், ஆள் அம்பு வைத்து அறுவடை பண்ணி, இயக்கத்தின் இரண்டாவது போக அறுவடையைத் தம் காலனி அறைகளில் பதுக்கி வைத்து கள்ளக்கணக்குப் பார்த்துப் பூரிக்கும் இவர்கள் ஜமீன்தாரைப் போன்றவர்கள் தாம்! சிறகு முளைவிட்ட குஞ்சுகளே! தாய்ப்பறவையின் சொல் கேளாது சிறகு முளைத்த அசட்டுத் துணிவில் பறக்க முயன்றும் முடியாமல், மண்ணில் வீழ்ந்ததும் ஆதிக்கக் கழுகுகளுக்கு இரையாகவிருக்கும் குஞ்சுகளே! - சொல்லுக்கும் வாழ் முறைக்கும் நிரம்ப வித்தியாசம் இருப்பதினால்தான் நீங்கள் இந்த இயக்கத்தை விட்டு உதிர்ந்து போனீர்கள். பறவை சிறகுலர்த்தும் போது - சில பலவீனமான இறகுகள் உதிர்ந்து போவதுண்டு, இந்த இழப்புக்கு எந்தப் பறவையும் வருந்துவதில்லை . புதிய இறகுகள் ‘விவேகம்’ பலத்தோடும், ‘சித்த’ காம்பீர்யத்தோடும் நாளும் வளர்ந்த வண்ணம் இருக்கின்றன. எம் விரிசல் பழுத்த காலத்தில் இதற்கு தனிமனித காழ்ப்புத்தான் காரணம் என்று சிலர் எழுதினர். விரிசல் உடைந்து போன நிலையில் இப்போது தனி மனித முரண்பாடுகளா? தத்துவ முரண்பாடுகளா? சிந்திக்குமாறு வேண்டுகிறோம். இன்னும் இரண்டு வியங்களை அவர்களுக்கு உணர்த்தக் கடமைப்பட்டுள்ளோம். வனவாசத்திற்குப் போன போது பாண்டவர்கள் துரியோதனாதிகளிடம் விட்டுப் போனது, அஸ்தினாபுரத்தைத்தான். அதில் தமக்குள்ள சுய உரிமையை அல்ல. நாங்களும் அவர்களிடம் விட்டுத்தந்தது வானம்பாடி - இதழைத்தான், இயக்கத்தை அல்ல. - குருச்சேத்திரத்தில் வெற்றி வேண்டுமானால் எவர்பக்கம் என்பது கடைசி வரையில் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் சத்தியம் எவரோடு என்பதை முதல் நாளே கண்ணன் தனது கீதையில் பிரகடனப்படுத்தி விட்டான். தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும். இதைத்தான் இப்போது எம்மால் கூற முடிகிறது. -ஞானி அக்னி வானம்பாடி இயக்கம் கோவை சிவப்பு வம்சம் -முத்துப்பொருநன் எங்களது மகளைக் கொடுத்து உனது நட்பினை உறுதிப்படுத்த நீயோ பேரரசுமில்லை…. நாங்கள் சிற்றரசுகளுமில்லை! உனது ஆட்சியை பொற்காலமென எழுதிப் போக… எங்களை யாத்ரீகர்களென்று நினைத்தாயா? உன்னால் விளைவிக்கப்பட்ட நீதி நூல்கள் அத்தனையுமே சமரச வாதம் புரிகின்றன… நாங்களோ – மத்தியஸ்தப்படுத்த அல்ல… மத்தியத்துவப் படுத்தவே எழுதுகிறோம்! நாங்கள் காண்டீபங்களை கீழே போட்டிருந்தால் தானே உனது கீதோபதேசங்களைச் செவிமடுக்க? எம்மிடையே வர்ண பேதங்கள் வெளிறிப் போனதால் வேத உபன்யாசங்களை உதாசீனிக்கிறோம்! உனது சாசனம் முழுதையும் அர்த்த சாஸ்திரமாக எடுத்துக் கொள்ள நாங்க ளென்ன கீமுவிலா வாழ்கிறோம்? ஒப்புக்கு வைக்கப்பட்ட சுமைதாங்கிகளால் மட்டும் சமாதானப் பட்டுவிட மாட்டோம்! எங்கள் தலை மீது ஏற்றிய சுமைகளையே விசிறியடிக்கிறோமே! அப்போது – சும்மாடுகளுக்கு மட்டும் என்ன வேலையாம்? அப்படி யொன்றும் உன்னைச் சுற்றி நெருங்க முடியாத கோட்டைகளுமில்லை கொத்தளங்களுமில்லை இறுதியாய்…. எங்கள் போர்த் தந்திரங்களுக்கு வெற்றி நிச்சயமென்பதால்… மரண வாக்குமூலம் சொல்லிக் கொள்ள நீ அனுமதிக்கப்படுகிறாய்! அதுவும் ஒரே வார்த்தையில்! உனது சவத்தை - எரிக்கவா? புதைக்கவா? எறியவா? கழுமரம் -கலையரசு கூர்மையாய் நுனி கூர்மையாய்…. உடலைத் துளைத்து உயிரைக் குடிக்க…. நெஞ்சில் கனலும் நெருப்பை அணைக்க …. உயரமாய் வெகு உயரமாய்… உழவு வயல்களில் வழிந்த வியர்வையை … ஆலை அரசர்கள் உறிஞ்சும் குருதியை… கீழ் வெண்மணிச் சாம்பல் துகள்களை … உழைக்கும் தோழனின் ஊமைத் துயர்களை … விடியல் கதிர்களை அறுவடை செய்ய – வர்க்கப் பாத்தியில் எங்கள் எழுது கோல் உரமாய்த் தூவும் வேள்விக் களங்களில்…. பூர்ஷ்வா மண்ணில் புதிய விளைச்சல்! சகலருக்கும் சாஸ்வதமாக சகல சம்பத்தும் பொதுவில் நிறுத்தும் வைகறைப் போரில் ஓ… கழுமரமே! அவரிடமிருந்தே உன்னைப் பறிப்போம்! அடி முதல் நுனிவரை சிவப்பாய்ச் செய்வோம். அதுவரை …. எம் பேனா வீணையின் மனு கானங்கள் உன்னை வளர்க்கும் ஊசி முனையிலும் கூராய் …. பதமாய்…. இமய வெற்பினும் பெரிதாய்… உயர்வாய்… வேள்வி - வானம்பாடி இயக்கத்தின் இரு திங்கள் வெளியீடு, ஆசிரியர்: ஜனசுந்தரம், 66 மெக்ரிகர் ரோடு, கோவை - 2 ஆண்டுக்கு ஆறு, அச்சு : முருகன் அச்சகம், மதுரை. வேள்வி - II வானம்பாடிகளின் இயக்க வெளியீடு - 1974 கற்பனை உலகிலிருந்து யதார்த்த உலகிற்குள் வரும் பயணம் ஒரு புனிதப் பயணம். இது, ஏமாற்றம் தருவதற்குப் பதிலாக நம்பிக்கை பலத்தைத் தர வேண்டும். -ஞானி இனிய வாசகர்களே! வணக்கம். இயக்கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த பலரும் ’வேள்வி’யைப் படித்து, தம் எதிர்பார்ப்புகள் பொய்க்கவில்லை என்று தெரிவித்தும், தொடர்ந்து பொய்மைகளை தகனமாக்கும் வேள்வியைத் தொடர்ந்து நடத்தும் என்றும் உற்சாகப்படுத்தியும், எம் சத்திய பலத்தை உத்வேகப்படுத்தியமைக்கு வெறும் வார்த்தைகளால் நன்றி கூறி முடிக்கத் தோன்றவில்லை. வேள்வியின் வருங்காலப் பணிகளே எம் நன்றியைத் தெரிவிக்கும். நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே, முதல் இதழில் வெளியான கட்டுரைகள் எதற்கு, தற்கால நிலைக்கு இந்த ஆய்வுகள் எந்த வகையில் உதவும் என்றெல்லாம் கேட்டுள்ளனர். கலைஞன் அகவயப் பார்வையிலிருந்து சமூக வாழ்வை விமர்சிக்கையில், சமூகத்தின் பண்புகளிலுள்ள கோணல்களின் மூலகாரணங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதன் வாயிலாகவே, சமூகத்தை நேர்வழிப்படுத்த முனைகிறான். இந்த அம்சத்தின் வேர்கள் ஊடுறுவிக்கிடக்கும் கடந்த கால சமூக வாழ்வின் வளர்ப்புகளாக இருக்கும் பழம் இலக்கண இலக்கியங்களை ஆய்வதன் மூலமே, படைப்பாளிகள் தம் காலச் சிக்கல்களுக்கு எப்படி தீர்வு கண்டனர் என்பதை உணர முடியும். அதனால்தான், நம் மரபை ஆய்வதன் மூலமாக நம்மை நாம் அறியவும், வளர்த்துக் கொள்ளவும் முடிகிறது. என்ற நோக்கில் தான் பழைய இலக்கியங்கள் மீது நம் கண்ணோட்டத்தைச் செலுத்துகிறோம். இதை மார்க்கியவாதிகள் என்று தம்மைக் கருதுகிறவர்கள் புறக்கணிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம், இந்த இதழில் வந்துள்ள எல்லா படைப்புக்களையும் சுதந்திரமாக விமர்சிக்க வேண்டுகிறோம். விமர்சியுங்கள் என்று வேண்டுவது ஒரு சடங்கு அழைப்பாகிவிடக் கூடாது. இதெல்லாம் இனி தன்னிச்சைச் செயலாக மாறினால்தான் படைப்பிலக்கியம் தலைநிமிரும். இது நான் மட்டுமா, நீங்களும் கூட ஒப்புக்கொள்ளும் கருத்துதானே? எழுதுங்கள்? மீண்டும் சந்திப்போம். 58, அருணாசலம் வீதி, -rஅன்புள்ள ஆர்.எஸ்.புரம், -rஜன. சுந்தரம், கோவை - 2. -rஆசிரியர், வேள்வி தீவுகள் கரையேறுகின்றன. -தமிழன்பன் கரையேறப் போகிறோம் - நாங்கள் கடல் மீறப் போகிறோம். குதிரை யலைப்படைகள் கொட்டும் புயல் பாறைகள் அதிருமெங்கள் செவியோரம் அநாதி காலமுதல். நாங்கள் திரவச் சிறைக்குள்ளே சிக்கிவிட்ட கைதிகள் கோடியலைக் கைகளினால் கொடியகடல் அறைகிறது… என்றாலும் அலைகளின் முற்றுகையால் அதிர்ந்துவிட மாட்டோம் எங்கள் சுதந்திரச் சூரிய விளக்கெரிய எங்களுக்கு நெய்யிந்தக் கடல் நீர் தான். எங்களைத் தனித்தனியாய் உறிஞ்சிக் கொழுப்பதற்கு - இத் தண்ணீர்க் காட்டில் தடம் கண்டு அதிகாரத் தோரணங்கள் அசைந்தாட அநேக கப்பல்கள் அன்றாடம். இக்கடலுள்ளே போக்கடித்த எங்கள் கற்பனைகளைத் தேடிப் புறப்பட்ட யதார்த்தங்கள் திரும்பவில்லை ஆள்வைத்துக் கடலடியே அவையள்ளிப் போனார்கள் முதலாளியானார்கள். மூளித் தூக்கத்தில் முடம்பட்ட விழிப்புகளில் விரக்திப் பருந்துகளின் கூரலகு குடைகிறது. ஆனாலும் கரையேறப் போகிறோம் - நாங்கள் கடல் மீறப் போகிறோம். கடல் போட்ட கால்விலங்கு விழிப்படையும் வேளையில் வீரக் கழலாகும் ! நாங்கள் தீவுகளாய்ச் சிதறியதால் இது கடலாகி விட்டது. நாங்கள் சேர்ந்து விட்டால் தேசங்கள் இந்தக்கடல் ஒரு கால்வாய் தான். நாங்கள் விசுவ ரூபத்தின் விதைகள் கொதிப்படைந்து விட்டாலோ விசுவரூபங்கள் எங்கள் வாமன வடிவங்கள்! கடல் கோட்டைத் தகர்க்கும் வெடிக் கண்ணிகள் - நாங்கள் இன்று சின்னக் நொடிகளாய்ப் பின்னமுற்றோம் - ஆனால் நாங்களே - நாள்கள் மாதங்கள் ஆண்டுகள் - யுகங்கள்! தற்பொழுது - இது என்ன அசையாத பாறையா? வேள்வி செய்யும் எம் வினாடி யுளிகளை வினாவிக் கொண்டிருக்கிறோம். கரை யேறப் போகிறோம் - நாங்கள் கடல் மீறப் போகிறோம். — கோபங்கள் -இஸ்காரா ஆரண்ய காண்டத்து சோகங்களை எதிர் நோக்கி கண்கள் நனைத்து கைகள் பிசையாதீர் மாரீசமார் வேந் தரித்து களத்திற்கு வருமுன்பே யுத்தகாண்டங்கள் வென்றெடுக்கப்படுவது அவசியம்! சிம்மாதனங்கள் சீரழிய செல்வ மேடுகள் சரிய இங்கு - எந்தச் சிவனும் கால்தூக்கத் தேவையில்லை உங்களின் நூறு - ஆயிரம் கோடி கரங்களின் அசைவுகளே ஊழிப் பிரளயங்களின் உற்பத்திக் கேந்திரங்கள் அழு குரல் கேட்டு ஓடி வந்து முந்தாணி மறைத்து முலைகள் பீச்ச எந்தப் பார்வதியும் தயாரில்லை சீக்கிரமே - கர்ப்ப கிரகத்தில் நுழைந்து விடுங்கள் பாலாபிகேம் நடக்கட்டும் காராம் பசுக்களை பிடித்துக் கட்டுங்கள் நாவுகள் நனைந்து புரளட்டும்! உங்களுக்காக எந்தச் சகாதேவனும் பஞ்சாங்கம் புரட்ட வேண்டாம் காட்டாறுகள் நாள் குறித்துக் கோபிப்பதில்லை கரை யோரப்பிலாக் கணங்கள் வேகத்தைத் தணிப்பதில்லை தடங்கள் புதிதாய்ச் சமையும் போது தடைகள் தாராளமாய்த் தூக்கி எறியப்படும் அதோ – எஜமானக் கொடிதாங்கி அராஜகங்கள் சாரத்யம் வருகின்றன சேவகம் செய்ய சாமரம் வேண்டாம் கடையாணிகளை கையில் எடுங்கள் சகடங்கள் தெறித்து வீழட்டும் சரித்திரம் சிவப்பில் நனையட்டும்! “சதி” -அறிவன் கால வெளியில் கீழைத் தத்துவக் கோயிலில் நீதான் மூலவிக்ரகம். அம்மா உன் முகத்தரிசனம் ஒன்றே முக்தி மார்க்கமாய் யாத்திரீக மனிதரும் முழங்கிப் போனார். நீ புவிமுதல் மகளாய் பெண் திலக மாய் உலக வீதிகளில் ஊர்வலம் வந்தாய் இன்று சுதந்திர சிம்மாசனத்தில் வேதாந்தப் பூசாரிகளின் வெள்ளி மணி யோசையில் உன் கோயில் வாசலில் கும்பிட்ட கைகளோடு பசியா வரம் கேட்கும் பாரத பிள்ளைகளை ‘சனியன்கள்’ என்று சலித்துக் கொள்வாய். ஆனால் கள்ளத்தனமாய் ஒரு சொர்ணமாளிகையின் சொந்தக்காரன் சரச வார்த்தைகளால் உன் முலைக் கவசங்களைத் திருடிக் கொள்ள நீ… அம்மா அடி அம்மா தங்க முலாம் பூசிய மேனி யழகை மோகித்த அந்நிய மூலதனங்கள் மிதியாடக் கொடுத்துவிட்டாய் உன்னை . விதவையாகக்கூட வாழ்ந்திருக்கலாம் நீயோ வேசியாக - அடி அம்மா ! நீ மறுத்தாலும் உன் ஏகாதிபத்தியக் காதலனோடு உடன்கட்டை ஏற… இங்கே ஒரு தீக்குண்டம் தயாராகிறது. ஏக்கம் - யமுனாபுத்திரன் உன்னைப் பார்த்ததும் பேச முடியா பொழுதுகள் எப்படி? உச்சிச் சூரியனில் உழைத்தும் வியர்வைக் கனிகளை கண்களால் மட்டுமே உண்டு விடை பெறும் கூலித் தொழிலாளியின் ஏக்க உணர்வுகள்தான் இதற்கு ஈடாகலாமில்லையா? புறாக்குடும்பம் -சுப. செல்வம் கர்த்தரே! அன்றன்றுள்ள அப்பத்தை எமக்கு அன்றன்று தாரும்…. ஒம்போது நாளாய் ஒருவேளைச் சோற்றுக்கும் வக்கற்றுப் போன ஜேகப் காந்தள் தினசரி ஜெபத்தை இன்றும் சொன்னார்.. இரவில் தங்க இடம் தந்த பாதிரியின் கருணையை எண்ணி கைகள் கூப்பின… அங்கே – பாதிரியாரின் இரவு உணவுக்காய் ஒரு புறா நெய்யில் வதங்கும் …. இங்கே பாதிரியின் படிப்பறையில் கொத்திப் பொருக்கவொரு….. குருணையுமின்றி வதங்கிச் சொரும் புறாக்குடும்பம் ஜேகப் காந்தளும் அற்புத மனைவியும் தேவராஜ் மோகன் தகுணா சாந்தியும் மோட்ச லோகம் போக குறுக்குவழி தேடினர் மறுநாள் …. விசமருந்தி மூன்று பேர் மரணம்! மூன்று பேர் உயிர் ஊசலாட்டத்தில் ….. கொட்டை எழுத்தில் நெட்டைச் செய்தி. கர்த்தரே! உமது சித்தம் பூலோகத்தில் இருப்பது போலவே பரலோகத்திலும் இருப்பதாக. ஆமென். சுதந்திரம் -அஜித்குமார் நாங்கள் குருடர்கள் பகல் எப்படி இருக்கும்? எல்லோரும் இந்நாட்டு மன்னர் -என். ராஜா நான் இப்போது நாடில்லாத ராஜா ஒரு ராணியில்லாத ராஜா வெளிச்சத்தின் நிழல் -சூரியகாந்தன் பூமியைப் புரட்டித்தள்ளுவதை எம் விரல்களின் நுனிகளே உரிமையோடு ஏற்றுக்கொள்ளும் சூரியனில் வேர் பதித்து இருளை எருவாக்கிய விருட்சங்கள் வெளிச்சத்தின் நிழல்களை பூமியில் விரிக்கும் சமூகப் பம்பரத்தில் உயிர் நூல்கள் - கயிறாய்ச் சுற்றப்பட்டு காலத்தின் சுழற்சிகளை பூமியில் குறிக்கும் தன் கால்களையே நம்பி மண்ணை எம்பி உதைத்து நிமிர்ந்தே உயர்வதால் மானிடம் பொலிவெடுக்கும் வாழ்க்கையை எழுத்தாக்கி உதிரத்தை உணவாக்கி உலகுக்கு ஊட்டுவதால் உள்ளம் வலிவெடுக்கும் துணிவுச்சுடர் உயிராகி உடல்களிலே ஆண்மையை செழிப்போடு பாய்ச்சுவதால் பூமியைப் புரட்டித் தள்ளுவதை எம் விரல்களின் நுனிகளே உரிமையோடு ஏற்றுக்கொள்ளும். இறுக்கம் -அன்பு. ஜவஹர் உணவில்லாமல் எமது மக்கள் இரத்தம் வெளுக்கிறது, இந்த அனலில் எரிந்து நாம் கொள்கையில் இரத்தமாய் சிவக்கின்றோம். களம் சிக்கட்டும் -கலாதீபன் இந்த தேசத்து மந்திரிமார்களுக்கு ராஜாங்கபவனிகளே இஷ்டமா னவைகளாகும்போது. வர்க்க பூமியின் கூட்டங்களும் மக்களைக் காப்பதை விட அவர்களை இம்சிப்பதே பிரியமானதாகும் போது நாட்டின் தேர்தல் முறைகளுக்கு ஜனநாயகத்திலும் பூர்சுவா பணநாயகமே ப்ரேமைக்குரியதாகும்போது. தோழா நமக்கு உழவு வயல்களும் உறிஞ்சும் ஆலைகளும் தொழிற்கூடங்களும் மட்டுமே இஷ்டமானவைகளாயும் பிரியமானவைகளாயும் ப்ரேமைக்குரியதாயும் இனியும் இருப்பதோ நமக்கொரு விடியல் நாளை சிவப்பாய் நம் எதிர்காலம் தெருக்களில் அமைப்போம் புரட்சி -ஆராமுதம் பாராமுகம் ஏன்? உன் மரவிழிகள் கரிக்கப்படுகையில்…. மன அமைதிகள் அமெரிக்க டாங்கியாய் நொறுங்கிக்கிடக்கையில் பூச்சூட நினைத்த காட்டின் ஒப்பாரி ஒலிக்கையில் பாராமுகம் ஏன்? அரவணைக்கத் துடிக்கின்ற அந்தப் பட்டிகளின் அலறலுக்காய் உன் காதின் கண்விழியைக் கொஞ்சம் தீட்டிக்கொள் ஜீவராசிகளின் ஜீவகாருண்யங்கள் உனக்கா தெரியாது? பாராமுகம் ஏன்? பைத்தியம் பிடித்துவிடும் நிசப்தப் பெருவெளியில் உன் நித்ய தாலாட்டில் தூங்க நினைக்கின்ற எங்கள் தோழருக்காக…. ஒருமுறை ஒரேயொரு முறை கொஞ்சம் பார்த்துவிடு… புதிய பாதை -மஹாபிரபு வழி தவறிய ஆடுகளாக இருக்கவே நாங்கள் ப்ரியப்படுகிறோம்! - மந்தையை விட எங்கள் தேர்ந்த பாதையே சிறப்பாகப் படுவதால் முரண்பாடுகள் -பேனாமனோகரன் புது வீடுகட்டி பூட்டி வைப்போரும் …. போர் ன்கள் பிரித்து பொருள் சம்பாதிப்போரும் வாழும் இச் சமூகத்தில் …. இந்நாட்டு மன்னர்கள் நாளை இவற்றை வெற்றி கொள்வதற்காய் இன்று மரநிழலில் குழாய்களுக்குள் குடிசைகள் கொண்டனர் நிச்சயதார்த்தம் -திக்குவல்லை கமால் கழுத்து நீட்டிய நாள் முதலாய் அடியும் உதையும் பசியும் பட்டினியுமாய்த் தவிப்பது எனது திருமணம் நரகத்தில் நிச்சயிக்கப்பட்டதாலோ சுதந்திரத்திற்குப் பின் -நிவேதினி அடித்து அடித்து கையும் வலிக்க கொள்ளைச் சாட்டையை எறிந்து போனான் அவன் பொறுக்கிக் கொண்டான் இவன் பூவரசு -கோமகன் நான் பேருக்குத்தான் பூக்களின் அரசு இந்நாட்டு மன்னரான உங்களைப் போல வட்டம் -சிந்து ஒரு ஆரம்பம் ஒரு முடிவுக்கு அஸ்திவாரம் போடுகிறது நாளை -பூலோக சுந்தர விசயன் நம்மீது அவர்களெறிந்த கற்களை பொறிக்கி வையுங்கள் மார்பில் முத்தமிட்ட துப்பாக்கி ரவைகளை எடுத்து வையுங்கள் இரத்தம் கசிந்த தடியடித் தழும்புகளை எண்ணி வையுங்கள் ஏனென்றால் – அவர்கள் வட்டி வாங்கியே பழக்கப்பட்டவர்கள் சுதந்திரம் -திருமங்கலம் கிருஷ்ணன் இரண்டடிக் கயிற்றால் முளையுடன் கட்டப்பட்டுள்ள மாடு கதறியது…. மா… மா… எங்கிருந்தோ வந்த ஒருவன் இரண்டடிக் கயிற்றை அவிழ்த்து இருபதடிக் கயிற்றைக் கட்ட மாடு இன்று துள்ளுகிறது. சுதந்திரம் அடைந்துவிட்டதாக! இந்தியப் புதல்வர்கள் -அறிவுமதி ஜனநாயகப் பசுவிடம் அரசியல் இடையர்கள் ஆதாயப் பால் கறக்க உதவும்…. நகரத்துக் கன்றுகள் உண்மை சுடும் மெளனத்தின் நாவுகள் - ஒரு மதிப்பீடு அபி தமது கவிதைகளைத் தொகுத்து “மௌனத்தின் நாவுகள்’‘என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். புத்தகத்தின் அழகான அச்சும், தயாரிப்பும் நம்மைக் கிரங்க வைக்கின்றன. ’முத்திரைகள், நீலாம்பரி , ஒரு முறையாவது பூக்கும்’ ராப்பிச்சைக்காரன் ஆகிய கவிதைகளில் அபியின் Individuality வெளிப்படுகிறது. ‘யாரோ அழைத்த ஞாபகத்தில், ஒரு நம்பிக்கை செத்துக் கிடக்கிறது’. ஆகிய கவிதைகளில் அபியின் Originality தெரிந்தாலும் யாரையோ நினைவுபடுத்துகின்றனவே. படிமம் போன்ற கவிதை வடிவ உத்திகளைக் கையாள்வதில் பிரம்மிக்க வைக்கிறார். ஒரு concept ஐ விளக்க வரும் படிமம் சிதைந்து பிளவுபட்டு, சிதறி Divided image ஆகவோ, Broken image ஆகவோ வெளிப்படாமல், படிமங்களில் ஒரு Evolutionary process வெளிப்படுவது அருமை. சமூக அநீதிகளை மக்களோடு இணைந்து நின்று சுட்டெரிக்க வேண்டிய கவிஞர் தமது காதலியைப் பார்த்துப் பெருமூச்சுவிடும் ஒரு சாதாரணமானவராகத் தம்மைச் சிறுமைப் படுத்திக் கொள்வது நமக்கு உடன்பாடில்லை. மனிதகுல விடுதலைக்குக் கீதமிசைக்க வேண்டிய கவிஞனின் படைப்புக்களை பாரங்களின் அழுத்தத்தில் பரிதவித்து முனகுவதாகக் கூறுவதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இந்தப் பூமியின் சகலவிதமான செளந்தர்யங்களையும், அதனைச் சிருஷ்டித்த வீரியமிக்க மக்கள் சக்தியையும் படைக்க வேண்டிய கவிஞர் தமது காதலியின் சாயலைச் சித்தரிக்கத் தயாராகிறார். இவைகள் எல்லாம் அபி பழைய பாதையிலேதான் போகிறார் என்பதைக் காட்டுகின்றன. இந்தச் சமுதாயம் மாறவேண்டும் என்ற ஏக்கத்தோனியோடு நாலுவரி கவிதை எழுதிவிட்டாலே புரட்சிக்கு அணிதிரட்ட முடியும் என்பதைப் போன்ற போலியான, கொச்சையான கருத்தோட்டங்களுக்கு ஆளாகாமல் - தமது பார்வையை விரிவுபடுத்திக் கொண்டால் அவருக்கிருக்கின்ற கவித்துவ ஆளுமையால் நிச்சயம் ஒரு புதிய பாதை அமைக்க முடியும். -ஓடை. பொ. துரை அரசன் அன்னம் நட்புறவுக் கழகம், 4, புதுத்தெரு, சிவகங்கை , விலை ரூ.5.00 புதிய வெள்ளம் – துருவங்கள் (சிறுகதை தொகுப்புக்கள்) மார்க்சியவாதிகளின் வட்டாரத்திலிருந்து கதைத்தொகுதிகள் வெளிவரும் போது நாம் குறிப்பாக இரண்டு அம்சங்களை எதிர்பார்க்கிறோம். 1. நமது மார்க்சியப் பார்வை இந்தச் சமுதாயத்தின் அனுபவங்களைச் சரியாகவும் ஆழமாகவும் பார்க்க நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறதா? 2. இவ்வகையில் நமது கதைகள் படைப்பின் தரத்தை அடைகின்றனவா? விமர்சனத்திற்கு எடுத்துக் கொண்ட இரு தொகுதிகளும் இந்தச் சோதனையில் வெற்றி பெறவில்லை. மார்க்சியம் நம்மிடம் வளமான பார்வையாக இல்லை; நாம் இன்னும் நீண்டவழி சென்றாக வேண்டும் என்பதை நாம் இதன் மூலம் புரிந்து கொள்கிறோம். இந்தச் சமுதாயத்தில் வேடம் போடுபவர் காந்தியவாதி மட்டுந்தானா? தொழிலாளர் நலத்திற்குத் துரோகம் செய்பவர் பொம்மை யூனியனைச் சார்ந்தவர் மட்டுமா ஐயப்பன் போஸ்டருக்கு மேலே செந்நிறப் போஸ்டரை ஒட்டுவதால் ஐயப்பன் பக்தி அழிந்து விடுகிறதா? நான் சீக்கிரமா கல்யாணம் பண்ணிட்டு குடும்பஸ்தனா இருந்து வாழ்ந்து காட்டணும் என்பதுதான் நமது கதாநாயகனின் இலட்சியமா? அந்நியரிடம் பெறும் உதவி தன்னைக் கட்டுப்படுத்தவே செய்யும் என்பதைப் பேராசிரியர் ஏன் முன்னரே உணர்வதில்லை ? பிரவசத்திற்கு உதவியாக கார் தராதவர், ஏன் முற்போக்கு வட்டாரத்தவராக இருக்கக்கூடாது? ஒரு பிச்சைக்காரனின் மனோபாவத்திற்குள் பாட்டாளி வர்க்க மனோபாவம் ஒளிந்திருப்பது உண்மை தானா? இவை நமக்கு எழும் சில கேள்விகள். சமுதாய உண்மைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளாமையினால்தான் நம்மவர் நிறைய பார்முலாக் கதைகள் எழுதுகிறோம். இவ்விரு தொகுதிகளில் அத்தகைய கதைகளை நிறையவே பார்க்கிறோம். குறைபாடுகளின் ஊடேயும் சில நல்ல கதைகளையும் காணுகிறோம். அவை விடிவின் புத்திரர்கள் (சந்துரபோஷ்); புயலில் பிறந்தவர்கள் (யாகநாதன்); ஞானத்தைத் தேடி (யுகமாறன்); சுழி (ஆ) ; புதை குழி . வரும் உலகம் வாழட்டும் (ராசுகுமார்). -ஞானி - புதிய வெள்ளம் : படைப்பாளிகள் பதிப்பகம், மதுரை. ரூ. 2.50 - துருவங்கள் : என். சி.பி.எச், சென்னை . ரூ.5.00 அக்கினிப்பூக்கள் நாவல், விமர்சனம் துறைகளில் வளர்ந்துள்ள ஈழம், ஏனோ கவிதைத் துறையில் சற்று பின் வாங்கியே வருகிறது என்பதற்கு இத்தொகுப்பு சான்று. ஈழத்தின் முற்போக்கு விமர்சகர்கள், கவிதையில் புதிய சோதனைகளை நிகழ்த்த ஆரம்ப காலத்திலும் அனுமதிக்கத் தயங்கியது இதற்குக் காரணமாக இருக்கலாம். இத்தொகுப்பில், மரபுக்கவிதைகள் தம்முகம் மறைத்துக் கொண்டு, புதுக்கவிதையின் உருவப்போர்வையில் அச்சிடப்பட்டுள்ளன. ஈழவாணனிடம் அற்புதமான படைப்பாற்றல் இருக்கிறது இத்தொகுப்பில் உள்ள ஆத்மராகம், ஒரு தாயின் தாலாட்டு, குடும்பம், போர், புத்துலகம் இவரது கவித்துவத்திற்கு சான்றுகள். நா. கா. வின் தாக்கத்திற்கு இவரும் உள்ளாகியிருக்கிறார். ஜோதிடக்கதைகளும், ஏக்க எதிர்பார்ப்பு கவிதைகளும் முராரி ராகங்களும் கவிஞரின் ஆளுமையை நமக்கு இனம் காட்டுகின்றன. கவிஞர்கள் விதைக்கப் பிறந்தவர்களே. விதைகளாகப் பிறந்தவர்கள் அல்ல என்பதை இத்தொகுப்பும் உறுதிப்படுத்துகிறது. இத்தொகுப்பிற்கு முன்னுரை எழுதிய கவி முருகையன், ‘அரிசிக்கும் பாணுக்கும் தட்டழிந்து மாய்ந்து மக்கள் உலையும் இந்தப் பஞ்சகாலத்தில் நாம் வாசிக்கும் கவிதைச் சொற்களாவது, முழுமையாக இருந்தால் என்ன? குடியா முழுகிவிடும்?’– கவிதா சொற்களுக்கு கட்டிளமை சொட்டும் கன்னிப்பருவ மெருகை இழப்பதால் உண்டாகும் அர்த்தச் செழுமையையும், வார்த்தைகளின் வயசுப் பூரிப்பையும் சுகிக்க விரும்பும் ஈழ கவிக்கு - இப்போக்கு கவிதையை ஒரு லாகிரி வஸ்துவாக்கி கலாபோதைக்குள் கவிஞனை மூழ்கடித்துவிடும் என்பது தெரியாதா? ஈழவாணனிடம் நாம் நிறைய எதிர்பார்க்கிறோம். சுதந்திரமாக அவர் இனி புதிய படைப்புகளை எழுத வேண்டும். - அறிவன் கண்ணீர் பூக்கள் நமது கவிதைகள் தொடர்ந்து புத்திசாலிகள், புத்திசாலிகளுக்காக மட்டுமே எழுதிக் கொள்வதாக தெரிகிறது பாட்டாளிகளின் பாத்திரத்தை - பார்வையைப் புரிந்து கொண்டு எழுதுவதில் ஒருவித முரண்டு பிடிப்பதாகவும் படுகிறது. தமிழ்க் கவிதைகளின் தரத்தை உலகக்கவிதைகளின் தரத்திற்கு உயர்த்துவதென்பது அவைகளின் சமூகப்பயன்பாடு சரிவரப் பூர்த்திச் செய்யப்படாத வரை கொஞ்சமும் சாத்தியப்பாடில்லை. கவிதை நமக்குப் போர்முனை. மேதைமைத்தனத்தின் வடிகால் அல்ல. வெகுஜனங்களின் நன்மைக்குரியதாக, முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதாக, ஜீவன் நிரம்பியதாக அவைகள் இருக்க வேண்டாமா? இன்னும் நம்மில் சிலர்க்கு இந்தக் கலையை நமது எதிர் அணியாரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது பாக்கி இருப்பதாக மயக்கம் வேறு உள்ளது. ஆமாம் கார்க்கி எங்கிருந்து கற்றுக்கொண்டானாம் அவ்வளவு சுத்தமாக! உண்மையில் போராட்ட காலங்களே புதிய புதிய சொற்களை சொற்றொடர்களை உருவங்களை உள்ளடக்கங்களை உண்டாக்கித் தரமுடியும். வீர்யமிக்க உள்ளடக்கக் கருக்கள் இல்லாத பொக்கையான உருவ ஓட்டிலிருந்து எப்படிக் குஞ்சு தலை நீட்ட முடியுமாம்? கங்கையின் இந்த ஓவியம் இந்தத் தொகுப்பிற்குக் குறியீடாகி நிற்க மறுக்கிறது. வானம்பாடி இயக்கத்தின் மையப்பகுதிக்குள்ளிருந்து, விமர்சனங்களால் புடம் போடப்பட்டு வெளிவந்த ‘வாழைமரம்’ கோழைத்தனம் காட்டாமல் - குழப்பமில்லாமல் வெளிப்பட்டுள்ளது ‘கண்ணீர்ப்பூக்கள்’, ‘உனக்கான உதிரிப்பூக்கள்’ போன்ற தன்னுணர்ச்சிக் கவிதைகளையும் சுவைத்து அனுபவிக்க முடியுமே என்று வாதிடலாம். காசு கொடுத்து அனுபவிக்கக் கண்ணீர்ப்பூக்களைத்தான் நாட வேண்டுமாக்கும்! முடிவாக பிரச்சனைகளை மட்டுமே வெளிப்படுத்தி, அவைகளின் வேர்ப்பகுதிகளைக் கண்டு சொல்லாதவரை பெருமதிப்பிற்குரிய நமது மக்கள் கவிஞர்கள் சீக்கிரமே சமுதாயத்தில் தங்களுக்கிருக்கும் ஸ்தானத்தை இழக்க நேரிடும். ஸ்தூலமாக கவிஞர் மேத்தா அவர்களுக்கும் இது பொருந்தும். - முத்துப்பொருநன் தோணி வருகிறது வானம்பாடி இயக்கத்தைப் பயன்படுத்தி பெயர் சம்பாதித்துப் போனவர் உண்டு. இயக்கத்தை பண்படுத்திப் பெருமை ஈட்டித் தந்தவரும் உண்டு. தந்தவரும் உண்டு. தமிழன்பன் இயக்கத்திற்குப் பெருமை சேர்த்தவர். வானம்பாடி கவிதா மண்டலத்தில் அவர் ஒரு விடிவெள்ளி. தமிழன்பனின் ‘தோணி வருகிறது’ தமிழ்க்கவிதைக்கு துடுப்பாகியிருக்கிறது. இவரால் - கவிதை புதிய வேகத்தைப் பெற்றுள்ளது. கரையோர எதிர் அலைகளை வெற்றி கொண்ட தமிழ்க் கவிதை இப்போது நடுக்கடலில் தன் பயணத்தைத் தொடர்வதை ‘தோணி உறுதிப்படுத்துகிறது. தமிழன்பன் இந்தச் சமூகத்தின் உள் எரியும் பிரச்னைகளின் தாக்கங்களை நேர்மையாக எந்தப் பர்தாவும் அணிந்து கொள்ளாமல் வெளிப்படுத்தியுள்ளார். பாரதிதாசனிடமிருந்து முற்றிலும் தன் தொப்புள் கொடியை அறுத்துக் கொண்ட இந்தத் தோணி தன் சமூக அழுகையை அவலத்தை சத்தம் போட்டுக்காட்டுகிறது. அழும் குழந்தைக்குத்தான் பால் என்பதை கவிஞர் நன்றாகவே உணர்ந்துள்ளார். இதில் உள்ள வெள்ளிக்கிழமை. சிவப்பு முக்கோணம். கடப்பை காந்தம்மா, புதுக்கவிதையின் உள்ளடக்க சாதனைகளுக்கு சுமை தாங்கிகளாக நிற்கின்றன. வானத்தைச் கீறியே வைகறைகள் பறித்தெடுப்போம், தண்ணீரால் வெறுக்கப்பட்ட தாகங்கள்…. வானத்தால் மறுதளிக்கப்பட்ட தங்க வைகறைகள் என்பன போன்ற அற்புத சொல்லாட்சிகளை இந்த நேரத்தில் இவரிடமே தரிசிக்க முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் இவரது பலமும் பலவீனமும் ஒன்றில் இருக்கிறது நயன்தாராவின் சோகமுடிவில் வாசகன் வேதனைப் படுவதைவிட, அவளின் செளந்தரியத்தில் தானும் பரவசப்பட்டு நின்றுவிடுகிறான்! வார்த்தைக்கு வார்த்தை உருவகப்படிமங்களை அனாயாசமாக தொடுக்கும் இவரது சிருஷ்டி ஆளுமை, கருத்தின் ஈர்ப்பிற்கு உபத்திரவம் விளைவிக்கிறது. இத்தொகுப்பிற்கு கலாநிதி முன்னுரை வழங்கி உள்ளார். புதுக்கவிதையின் தோற்ற காலத்தில் பாராமுகம் காட்டிய கலாநிதி இப்போது இதன் பரிணாம வளர்ச்சியை ஏற்றுக்கொண்டது, நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இம்முன்னுரையைப் படித்தபோது, செவ்வானத்திற்கு அற்புதமான உள்ளடக்க ரீதியாக விமர்சனம் எழுதிய அதே கலாநிதி கைலாசபதியா இதை எழுதி உள்ளார்? என்று ஐயம் எழுகிறது. ’தோணி வருகிறது’ நமக்கு நம்பிக்கை தருகிறது. - அக்கினி புத்திரன் மணிவாசகர் நூலகம், சிதம்பரம். விலை ரூ. 3.50 மீராவின் ‘ஊசிகள்’ சுரண்டல் அமைப்பின் வர்க்க நலன் பேண உருவாக்கப்பட்ட கலையும் இலக்கியமும் உழைக்கும் வர்க்கத்தின் போராட்ட சாதனமாக உருவாகிவரும் கால கட்டத்தில் மீரா ஊசிகளை வடித்தெடுத்திருக்கிறார். அவ்வப்போது விவேக சித்தன், வானம்பாடி, சிவந்த சிந்தனை பனித்துளிகள் போன்ற ஏடுகளில் வெளிவந்த கவிதைகள் இதில் கோக்கப்பட்டிருக்கின்றன. முகவாசலிலே முதுமைச் சிறுக்கி புள்ளிவைக்கிறாள் கோலம் போட - எனப் படிமங்களைக் கையாளும் மீரா புரியாத படிமங்களையும் புதிரான சொற்களையும் கவிதைப் பிரஷ்டம் செய்திருப்பது இத்தொகுப்பின் தனிச்சிறப்பு. ‘பழம் நீ அப்பா’ இந்தியப்பாது ‘காப்புச்சட்டம்’ போன்றவற்றில் முறுவலிக்க வைக்கும் நயமான நகைச்சுவை உணர்வு அவரது பலமாகவும் சில சமயங்களில் பலவீனமாகவும் தொகுப்பு முழுதும் வெளிப்படுகிறது. இந்தச் சமுதாய அமைப்பில் ‘தேசிய மயம்’ கூட எப்படி மக்களைத் திசை திருப்பப் பயன்படுகிறது என்பதை அரம் போலும் காட்டுகிறது வெட்டப்படும் ஆட்டின் கழுத்தில் போடப்படும் மாலை போல் தொழிலாளியிடம் அபூர்வமாகக் காட்டப்படும் அக்கறையும் முதலாளித்துவத்தின் நலன்கருதியதே. இதைத் தங்க முதலாளி அம்பலப்படுத்துகிறது. கையாலாகாத்தனத்தின் துப்பாக்கித் தனங்களை நெற்றிப்பொட்டில் அறைகிறது ‘ஒன்றே செய்க’. வீசப்பட்ட நாப்பாம் குண்டுகளிலிருந்து பித்தளையைப் பெயர்த்தெடுத்து ஆயுதம் செய்த விவேகமும் ஏகாதிபத்தியத்தை விரட்டியடித்த வீரமும் கொண்ட அந்தப் புரட்சிகர வியட்நாம் சோதரன் சந்தாதாரர்களோடு ஒரு சேரப் பேசப்படுவது நெருடலாக நிற்கிறது. வெள்ளிவிழாக்கால அவலங்களை வெளிப்படுத்தும் ‘நான் அவன் நண்பன்’ ஈறாகப் பெரும்பாலான கவிதைகளில் நகைச்சுவை மீறிய சோகம் தொனிக்கிறது. - இது மட்டும் போதுமா? தேசத்தைப் புணருத் தாரணம் செய்யும் போர்க்களத்திற்கு வலிமை மிக்க படைக்களன்களை மீரா வடித்துத் தர வேண்டுவோம். - கலையரசு மீனாட்சிப் புத்தக நிலையம், 60, மேலக்கோபுரவாசல், மதுரை. ரூ. 4.00 படைப்பிலக்கியம் - ஜீவஒளி - ஞானி வாழ்க்கை வாழ்க்கையாக மட்டும் இயங்குவதில்லை. வாழ்க்கை படைப்பிலக்கியமாகவும் இயங்குகிறது. அதேபோல படைப்பிலக்கியம் வாழ்க்கையாகவும் இயங்குகிறது. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தியங்கும் இயக்கங்கள். ஆனால் வாழ்க்கை எப்படி படைப்பிலக்கியமாகிறது என்பதும், படைப்பிலக்கியம் எப்படி வாழ்க்கையைத் தொடுகிறது என்பதும் சிந்திக்கத்தக்கவை ஒன்று தானாகவே மற்றொன்றாக மாறுவது இயலாது. இதற்கு ஒரு இயக்கம் உருவாக வேண்டும். வாழ்க்கையையும் படைப்பிலக்கியத்தையும் இலக்கும் சக்திகள் எவை? 1. படைப்பனுபவம், 2. ரசனை அனுபவம், இவை இல்லாத வாழ்க்கையோ, படைப்பிலக்கியமோ இருக்கமுடியாது. இவை வாழ்வை இயக்குவது போலவே படைப்பிலக்கியத்தையும் இயக்குகிறது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இயக்கும் சக்திகள் ஒன்றானாலும் இயக்கும் களங்கள் வேறுபடுகின்றன. இவ்வனுபவங்கள் வாழ்க்கையின் களத்தில் இயங்கும் போது, வாழ்க்கையின் களத்தை படைப்பிலக்கியத்தின் களத்திற்கு உயர்த்தவும், படைப்பிலக்கியத்தின் களத்தில் இயங்கும்போது, படைப்பிலக்கியத்தின் களத்தை வாழ்க்கை களத்துடன் இணைக்கவுமே இயக்குகின்றன. வாழ்க்கையின் தரம் வேறுபடுவதைப் போல, படைப்பிலக்கியத்தின் தரமும் வேறுபடத்தான் செய்யும், வாழ்க்கையின் தரம் வாழும் மனிதரின் இவ்விரு அனுபவங்களைப் பொருத்தது. வாழும் மனிதர்க்கெல்லாம் இவ்வனுபவங்கள் பொதுவாக இருந்தாலும்கூட, படைப்பிலக்கியம் பொதுவாக இல்லை. படைப்பிலக்கியம் உருவாக்கும் இவ்வனுபவங்கள் பாமரனுக்கு இல்லை. ஒரு படைப்பாளிக்குத்தான் உண்டு. பாமரனின் இவ்விரு அனுபவங்களும் படைப்பிலக்கியத்தை உருவாக்கும் அளவுக்கு உயர வேண்டுமானால், அவனுடைய வாழ்க்கைத்தரம் உயரவேண்டும். பாமர மனிதனின் வாழ்க்கைத் தரம் தானாக உயராது, எந்தச் சக்திகள் அவனுடைய வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கின்றனவோ அந்தச் சக்திகளிடையே ஒரு புதிய மாறுதல் நிகழ்ந்தாக வேண்டும். வாழ்க்கைத் தரத்தில் எந்தப் புதிய மாறுதலும் நிகழ்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல ஏனெனில், வாழ்க்கையின் களம் தன்னைத்தான் இயக்குகின்ற நிலையிலிருந்து தானாக மாற்றிக் கொள்ள முடியாது. வாழ்க்கையின் களம் மாறுவதைப் பொருத்தே படைப்பிலக்கியத்தின் களமும் மாறும். இதன் பொருள், இவ்விரு களங்களும் ஒன்றை ஒன்று பாதிக்காமல் சுயேச்சையாக இயங்குகின்றன என்பதல்ல. இவ்விரு களங்களுக்கும் இடையில் எந்தப் புதிய மாறுதல் ஏற்பட வேண்டு மென்றாலும் , இரண்டிற்குமிடையில் ஒரு இயக்கம் இல்லாமல், அது நடைபெறுவதில்லை என்பதுதான் அதன் பொருள். வாழ்க்கையை சிருஷ்டிக்கும் படைப்பிலக்கியத்தையும் படைப்பிலக்கியத்தை சிருஷ்டிக்கும் வாழ்க்கையையுமே நாம் தேடுகிறோம். ஒன்றைவிட மற்றொன்று சிறந்தது என்று நாம் வாதிட முடியாது. சிருஷ்டித் தன்மையற்ற பாமர வாழ்க்கையும், சிருஷ்டித் தன்மை மட்டுமே உள்ள படைப்பிலக்கிய வாழ்க்கையும், நமக்குத் தேவையில்லை, சிருஷ்டித் தன்மையற்ற பாமரர் வாழ்வை, அத்தன்மையுள்ள படைப்பிலக்கிய வாழ்க்கையை அத்தன்மையற்ற பாமர வாழ்க்கையோடும் இணைக்கிற உறவுகளே வாழ்க்கையின் இயக்கத்தையும், படைப்பிலக்கியத்தின் இயக்கத்தையும் உயிருள்ள இயக்கங்களாக இயக்கி வருகின்றன. பாமர வாழ்க்கையிலிருந்து பிரிந்து நிற்கிற பாமர வாழ்க்கையும் இயக்கமற்ற சவங்களாக மாறிவிடும். பாமர வாழ்க்கைக்கும் படைப்பிலக்கியத்திற்கும் இடையில் உயிருள்ள இயக்கத் தொடர்பின் வலிமையைப் பொருத்துத்தான் பாமர வாழ்க்கையும் உயரும். படைப்பிலக்கியமும் வளம் பெறும். பாமர வாழ்க்கையை இயக்கும் சக்திகள் தாம் படைப்பிலக்கிய வாழ்வையும் இயக்குகின்றன என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் பாமர வாழ்வை இயக்கும் சக்திகள் அப்படியே படைப்பிலக்கிய வாழ்வையும் இயக்குவதில்லை. இயக்க வடிவத்தில் அவை இரண்டும் வேறுபடுகின்றன. பாமர வாழ்வின் இயக்கம் ஒரு பாமர மனிதனோடு நின்றுவிடும். ஆனால் ஒரு படைப்பிலக்கிய வாழ்வின் இயக்கம் ஒரு படைப்பாளியோடு நிற்பதில்லை . பாமரன் பாமர வாழ்வோடு போராடி மடிகிறான். படைப்பாளி படைப்பிலக்கிய வாழ்க்கையில் தொடர்ந்து போராடுகிறான். பாமர வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட எல்லையுடன் முடிவடைகிறது. படைப்பிலக்கிய வாழ்க்கை குறிப்பிட்ட எல்லைகளைக் கடந்தும் வாழ்கிறது ஒரு படைப்பிலக்கியத்தில் படைப்பாளி தொடர்ந்து உயிர்வாழலாம். ஆனால் படைப்பாளியை மட்டும் நம்பி ஒரு படைப்பிலக்கியம் உயிர்வாழ முடியாது. அது பாமர வாழ்க்கையையும் தழுவி நிற்கிறது. பாமரனும் படைப்பாளியும் ஏக காலத்தில் படைப்பிலக்கியத்தோடு வாழ முடியாது. என்றாலும் இவர்கள் இல்லாமல் எந்தக்காலத்திலும் படைப்பிலக்கியம் ஜீவிக்க முடியாது. படைப்பிலக்கியம் படைப்பாளிக்குத் தாலிகட்டிக் கொண்ட மனைவியும் அல்ல; பாமரனின் விருப்பத்துக்கு எல்லாம் வளைந்து கொடுக்கும் காமக்கிழத்தியும் அல்ல. படைப்பிலக்கியம் கற்புள்ள மனித வடிவம். அதற்கு பாமரனை நேசிக்கின்ற பண்பும் உண்டு; படைத்தவனோடு வாழ்கின்ற குணமும் உண்டு. ஆனால் படைப்பிலக்கியத்தின் கற்பைக் கெடுக்கின்ற படைப்பாளிக்கும், பாமரனுக்கும் இடங்கொடுப்பதில்லை, சில சமயம் அது உரிமையுடன் கைப்பிடிக்கிற படைப்பாளிக்கும், உணர்ச்சி வசப்பட்டு முந்தானையை இழுக்கும் பாமரனுக்கும் தப்பித்து தீக்குளிக்க நேரிடுகிறது. படைப்பிலக்கியம் தீக்குளிப்பது என்பது மனித வாழ்க்கை தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பாகும். மனித வாழ்வை மனிதன் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு படைப்பாளியும் மறந்து விடுவான்; ஒருப் பாமரனும் அறியாமையில் இருந்து விடுவான். ஆனால் ஒரு படைப்பாளியின் மனதைத்திறந்து ஒரு பாமரனின் கண்களைத் திறந்து மனித வாழ்க்கைதான் படைப்பிலக்கியமாக உயிர் பெற வேண்டும். எல்லாவற்றிற்கும் ஆதாரமான மனித வாழ்க்கை தன்னை நேசிக்காத எவரையும் தயவு தாட்சண்யமின்றி தூக்கி எறிந்து விடும். படைப்பிலக்கியத்திற்கு மட்டும் தம் ஆத்மாவை அடகு வைத்துவிட்ட படைப்புக்கனவான்கள் வாழ்வின் அருவருப்பான முகத்தைக் கண்டு முகஞ்சுழிப்பார்களேயானால், வாழ்க்கை அவர்களின் படைப்பனுபவ முகத்தில் காரித் துப்பிவிடும். படைப்பாளி வாழ்க்கைக்கு செல்லப்பிள்ளை அல்ல. படைப்பிலக்கியத்தைக் காட்டி அவன் யாரையும் எதையும் மயக்கிவிட முடியாது வேங்களைக் களைந்து விட்டு அவனும் படைப்பிலக்கியத்தில் மனிதனாக வாழ்ந்து காட்ட வேண்டும். ஒரு பாமர மனிதன் வெள்ளையாக வாழ்கிறான். ஒரு படைப்பாளி வேங்களோடு வாழ்கிறான், என்ற பொய்க்குற்றம் நீங்கும்படியாக ஒருவன் ஒரு படைப்பிலக்கியத்தில் வாழ வேண்டும். படைப்பிலக்கிய வாழ்க்கை ஒரு படைப்பாளியின் தனி உரிமை என்ற நிலை போய் பாமர மனிதனின் பொது உரிமை என்ற நிலைக்கு வளர வேண்டும். அல்லாமல், படைப்பிலக்கியம் தொடர்ந்து உயிர்வாழ முடியாது. பாமரனின் தட்டுப்பட்டுச் சாகிற படைப்பிலக்கியங்களை விட படைப்பாளியின் கருவிலேயே கலைந்து போகிற படைப்பிலக்கியங்கள் எவ்வளவோ மேல் படைப்பிலக்கியங்களை முக்கி முக்கி பிரசவிக்கிற சில சனாதனிகள் தங்களின் படைப்பிலக்கியக் குழந்தைகளை பாவடை குள்ளேயே மூடிவைத்து வளர்க்க ஆசைப்படுகிறார்கள். பாமர மனிதனின் ஹரிஜனப் பார்வை பட்டுவிட்டால், திருஷ்டி கழிக்காமல், தீட்டு கழிக்காமல் அவர்களுக்குத் தூக்கம் வருவதில்லை. பரிசுத்தமான பிராமண ஜாதியில் பிறந்த படைப்பிலக்கிய குழந்தைக்கு பூநூல் போட ஆத்ம கங்கையில் முழுக்குப் போடுகிறார்கள். குழந்தையின் அங்க லாவண்யத்தை அறிவுப்பிரலாபத்தை அவர்களே தனிமையில் தழுவித் தழுவி உச்சி முகந்து உள்ளம் குளிர்கிறார்கள். முக்கி முணங்கிப் பெற்றவர்கள் அல்லவா? மோகம் கொஞ்சமா இருக்கும்? பெற்றவர்களுக்குக் குழந்தை மீது மோகம். படைப்பாளிக்குப் படைப்பிலக்கியத்தின் மீது மோகம். இருக்க வேண்டியதுதான். அதில் ஒன்றும் குற்றம் இல்லை. ஆனால் படைப்பாளிக்குப் படைப்பிலக்கியத்தின் மீதுள்ள மோகம், அந்தப் படைப்பிலக்கியம் பாமரனை நேசிக்கவிடாமல் தடுக்க வேண்டுமா என்ன? படைப்பிலக்கியம் யாருக்கு? படைத்தவனின் சொந்த சுக போகங்களுக்கா? பாமரனின் அனுபவ உயர்வுக்கா? படைத்தவனின் சொந்த சுக போகங்களுக்காகப் புதுக்கித் தள்ளப்படுகின்ற குழந்தைகள் பாவம் பிறக்கும் போதே அடிமை ஜீவன்களாக அவதரிக்கின்றன. சுதந்திரக் காற்றில் மூச்சு அவைகளுக்கு லவ லேசமும் கிடைப்பதில்லை. விடுதலை தாகத்தின் வேதனை தீராமலேயே அவை படைத்த ஆத்மாக்களின் பாவ விமோசனத்திற்குத் தம்மைத் தாமே அர்ப்பணித்துக் கொண்டு வெந்து மடிகின்றன. படைப்பிலக்கியம் உதிர்ந்த பூக்களாகி படைத்தவனின் கையிலேயே மடிய வேண்டுமா? வாழப்பிறந்த அதற்கு வாழ்வுதான் எங்கே? வாழ்வு, பிறந்த இடத்தில் இல்லை; வளரும் பெரிய உலகத்தில் தான் உள்ளது. பெற்றவர்களின் காலையே சுற்றிக்கொண்டிருக்கும் பேடிக்குழந்தைகள் பெரிய மனிதர்கள் ஆவதில்லை. பேசத்தெரிந்த பின்னும் ஊமைகள் போலே உறங்கிக்கிடக்கும் போதைக்குழந்தைகளும் வாழப்போவதில்லை. வாழவேண்டும் என்றால் விடுதலை முழக்கம் செய்ய வேண்டும். விடுதலை முழக்கம் செய்யாத படைப்பிலக்கியங்கள் வெற்றிமகளைத் தழுவப் போவதில்லை . விடுதலை - அதுவும் ஒரு படைப்பிலக்கியம் காணும் விடுதலை எப்படி இருக்கவேண்டும்? படைப்பாளியை மட்டுமல்ல, பாமரனையும் அது விடுவிக்க வேண்டும். பாமரனை மட்டுமல்ல மனித வாழ்க்கையையே அது விடுதலை செய்ய வேண்டும். மனித வாழ்க்கையை அதன் சகல தளைகளிலிருந்தும், கீழ்மைகளிலிருந்தும் விடுதலை செய்யும் படைப்பிலக்கியமே உண்மையான படைப்பிலக்கியம். உண்மையான படைப்பிலக்கியத்தை மனித வாழ்க்கையே சிருஷ்டிக்கும். மனித வாழ்வை உண்மையான படைப்பிலக்கியங்களே சிருஷ்டிக்க முடியும். மனித வாழ்க்கைக்கும் உண்மையான படைப்பிலக்கியத்திற்கும் உள்ள இந்த சிருஷ்டித் தன்மை என்றும் மாறாதது சிரஞ்சீவியானது. ஆகவே, மனித வாழ்க்கைக்கும் உண்மையான படைப்பிலக்கியத்திற்கும் இடையே உள்ள இந்த ஜீவித உறவே மனிதர்களையும் அவர்தம் வாழ்க்கை அனுபவங்களையும் நிர்ணயிக்கிறது எனலாம். ஒரு பாமரன் படைப்பாளி ஆவதும், ஒரு படைப்பாளி படைப்பிலக்கியத்தைப் படைப்பதும், ஒரு படைப்பிலக்கியம் பாமரனைத் தொடுவதும், ஒரு பாமரன் படைப்பிலக்கியத்தின் மூலம் உயர்வதும் எல்லாம் அந்த ஜீவித உறவின் அடிப்படையிலேதான் நிகழ முடியும். மனித வாழ்க்கை மகத்தானது படைப்பிலக்கியமும் மகத்தானதுதான். ஆனால் மனித வாழ்க்கைக்கும் படைப்பிலக்கியத்திற்கும் இடையில் உள்ள அந்த ஜீவிதத் தொடர்போ அதைவிட மகத்தானது பிரமாண்டமானது! பிரபஞ்ச பரிமாணமுள்ளது! அதை விளக்கிக்காட்டுவது என்பது எப்பேர்ப்பட்ட படைப்பாளிக்கும் சாத்தியமில்லை. நமது படைப்பனுபவத்திற்கும் மனித அனுபவத்திற்கும் இதுவரை எட்டிய அளவே நம்மால் பேசமுடியும். எட்டாத தூரம் இனி எவ்வளவு இருக்கிறது என்று யாராலும் கணிக்க முடியாது. அதற்குக் காலம்தான் விடை சொல்ல வேண்டும். மனிதன் வரலாற்றில் வளர்ந்து வந்திருக்கிறான். தன் வரலாற்றை மனிதன்தானே படைத்துக் கொண்டிருக்கிறான். மனிதன் மனிதனாக இருக்க வேண்டுமானால், அவன் வளர்ந்தே தீரவேண்டும். தன் வரலாற்றைத் தான் படைத்தே ஆகவேண்டும் இம்முறையில் மனிதன் ஒரே சமயத்தில் படைப்பாளியாகவும் பாமரனாகவும் இருக்கிறான். படைப்புக்கள் என்பவற்றில் மனிதன் உருவாக்கிய உற்பத்திப் பொருள்கள் அனைத்துமே அடங்கும், அவனது தத்துவம், கலாச்சாரம் முதலியவையும் படைப்பில் பகுதிகளே. மனிதப்படைப்பு என்பது மனித சமுதாயத்தின் படைப்பு சமுதாயம் என்ற தொகுப்பில் தன்னுணர்வுடைய படைப்பாளியை போலவே தன்னுணர்வு குறைந்த அல்லது இல்லாத பாட்டாளியும் - பாமரனும் அடங்குகிறான். இயற்கை அழகு பற்றிய இரசனை ஒரு படைப்பாளிக்கு இருப்பதைப் போலவே பாட்டாளிக்கும் அதன் குறைந்த அளவிலாவது இருப்பது சாத்யம். மனித உறவுகளை இரசிப்பதில் இவனும் தன்னளவில் ஒரு கலைஞன்தான். இவனுக்கும் குறிப்பிட்ட வகையில் இசை, ஓவியம், கலை, கற்பனைகள் இருக்கவே செய்கின்றன. இவ்வகைப்பட்ட இரசனைகளின் மூலம் தன்னை மனிதன் என்பதை தனக்கே நிரூபித்துக் கொள்கிறான். பாமரன் தன்னளவில் ஒரு படைப்பாளிதான். இம்முறையில் படைப்பு - இரசனை என்ற வகையிலும் படைப்பாளியும் - பாட்டாளியும் ஓரிடத்தில் சந்திக்கவே செய்கிறார்கள். வரலாற்றின் இயக்கத்தை எதிர்காலப் போக்கை, மனிதப் படைப்பின் உருவாக்க முறையை வாழ்க்கை இலட்சியங்கள் உருவாவதைச் சரிவர அறிந்து கொண்டவன் அவன் அரசயில்வாதியாக இருந்தாலும், விஞ்ஞானியாக இருந்தாலும், கலை இலக்கியவாதியாக இருந்தாலும் தனது துறையில் மாபெரும் பாட்டாளியாக விளங்குவான். ஆகவே படைப்பு என்பது வாழ்க்கையோடு நெருங்கிய, பிரிக்க முடியாத உறவுடையது. வாழ்க்கை வாழ்க்கையாக இருப்பதே அது படைப்போடு கொண்டுள்ள உறவினால்தான். வரலாற்றில் தன்னைக் காண்பவனே தத்துவவாதி ஆகிறான். தத்துவவாதிதான் தலை சிறந்த படைப்பாளி ஆகிறான்.பாமரனுக்குள் தத்துவாதியும் படைப்பாளியும் ஒரு குறைந்த அளவில் இடம் பெறுகின்றனர். இந்தப் பாமரன் தனது வாழ்க்கையுடன் விடாப்பிடியான தொடர்புடையவனாக இருக்கிறான். பிடிவாதம் இவனுக்குப் பெரும் நம்பிக்கையைத் தருகிறது.வாழ்க்கையின்பால் இவன் கொண்ட பற்று - பிடிவாதம்தான் முரட்டுத்தனமான நடப்பியலாக (யதார்த்தம்) ஆகிறது. இந்த நடப்பியலை அதன் விரிந்த தத்துவ வரலாற்றுக் கண்ணோட்டத்தில் காண்பவன் தத்துவவாதி அல்லது தலைசிறந்த படைப்பாளி. ஆகவே பாமரத்தனம், தலைசிறந்த தத்துவவாதிக்கும் படைப்பாளிக்கும் தேவை ஆகிறது. பாமரத்தனத்தின் உயர் அளவில்தான் சரியான தத்துவக் கண்ணோட்டம் உருவாகிறது. இந்தப்பாமரத்தனத்தைப் புறக்கணித்துப் போனவர்களே வெற்றுக் கற்பனாவாதிகளாகவும், அப்பாலைத் தத்துவவாதிகளாகவும் ஆனார்கள். இந்தப் படைப்பாளியின் படைப்புகள் மூலம் மனித வாழ்க்கை வளர்ந்திருக்கிறது. இந்தப் படைப்புக்கள் அனைத்திலும் கல்லும் மண்ணுமாக ஏடும் எழுத்தாணியுமாக ஓடும் உளியுமாக வண்ணமும் வார்ப்புமாக பாமரர்கள் இணைந்துள்ளனர். எங்கோ ஓரிடத்தில் பாமரன் படைப்பாளியாக உயர்ந்திருக்கிறான். இந்தப் படைப்பாளிக்கு பெயர் தெரிந்திருக்கலாம். ஆனால் இந்தப் பெயர் தெரிந்த படைப்பாளியினுள் எத்தனையோ பெயர் தெரியாத பாமரர்கள் இணைந்திருக்கின்றனர். பாமரன் கல்லாகக் கூடக் கருதப்பட்டிருக்கலாம். இந்த பாமரக் கல்லைக் கொண்டுதான் படைப்புச் சிற்பங்கள் உருவாகியுள்ளன. வரலாறு அவனிடத்தில் எங்கோ ஒரு மூலையில் சுருங்கி இயங்குகிறது. வரலாற்றை அவன் எப்படியோ இயக்கிக் கொண்டிருக்கிறான். தன்னை அறிந்து அவன் வரலாற்றை இயக்கும் கட்டத்தில் அவனே படைப்பாளி அவனுக்குள் படைப்பாளி இணைந்து கலந்து வருகிறான். வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை பாமரன் தன்னை படைப்பாளிக்குள் ‘விட்டு’ வைத்திருக்கிறான். தன்னை அறிந்த கட்டத்தில் தன்னை மீட்டுக் கொள்கிறான். தன்னை இழந்ததன் மூலமாகக்கூட இவன் வளர்ந்தே வந்திருக்கிறான். தனது ‘சீதை’யைத் தொலைத்து விட்டு, அவளைத் தேடுவதன் மூலமே இவன் வளர்ந்திருக்கிறான் தன்னைக் காட்டில் ஓட்டி வனவாசம் மேற்கொண்டே இவன் குருச்சேத்ரத்தில் வெற்றி பெற்றிருக்கிறான். தன்னை ‘மறந்த’ படைப்பாளி இந்தப் பாமரன் தன்னை ‘அறிந்து’ கொண்ட நிலையில் இவன் ‘சமையல்’ வேலைக்குள் மூழ்கிவிடமாட்டான் தனது சாம்ராஜ்யத்தை வெல்வான். படைப்பாளிக்கு முன்னர் பாமரன் மண்டியிட்டுக்கிடப்பது. ‘கண்ணுக்குத் தெரியும்’ ஒரு தோற்றம். அந்தத் தோற்றத்தை ஊடுறுவிப் பார்த்தால் பாமரன் முன்னால் படைப்பாளி மண்டியிட்டுக் கிடப்பதும் தெரிகிறது. சரியான படைப்பு, இந்தப் பாமரனை அவனது பாமரத்தன்மையிலிருந்து விடுவிக்க வேண்டும். தன் உணர்வில்லாமல் இதுவரை அவன் உருவாக்கி வந்த வரலாற்றை, தன் உணர்வோடு அவன் உருவாக்குவதற்குத் துணை புரிய வேண்டும். இம்முறையில் மனிதனை அவனது முன்வரலாற்றிலிருந்து விடுவிக்க வேண்டும். சமுதாய மூலத்தை சமுதாய சாரத்தை இழந்த நிலையில், வெறும் சிந்தனாவாதத்திற்குள்ளேயே ‘படைப்பு’ சுழலலாயிற்று. சமுதாயத்திற்கான படைப்பு என்றில்லாத நிலையில், இன்பத்திற்கான படைப்பு, தனக்காக படைப்பு கற்பனைக்காக படைப்பு படைப்புக்கான படைப்பு என்று ஏற்பட்டுவிட்டது. உழைப்பு படைப்பின் உறவற்றுப்போன நிலையில், படைப்பு வெற்று உழைப்பாகிவிட்டது. உழைப்பு அடிமைத்தனமான நிலையில் படைப்பு பொன் சங்கிலியாகிவிட்டது. ஊழைப்பின் விளை நிலத்தை விட்டுப்பிரிந்த படைப்பு வெறும் கற்பனாவானத்தில் சுற்றித்திரிந்து களைத்தது. உழைப்பு பேய்த் தன்மை பெற்ற நிலையில், படைப்பு தெய்வத்தன்மை பெற்றது. இரண்டிலும் மனிதத்தன்மை மறைந்தது. இரண்டும் அதன் தன் எல்லைக்குச் சென்று சேர்ந்தன. சமுதாயத்தில் ஆதிக்கம் வகித்த சக்திகளுக்கு இரண்டும் அடிமைப்பட்டன. உழைப்பாளி தன்னை இழந்தது போலவே படைப்பாளியும் தன்னை இழந்தான். இருவருமே ஆதிக்கச் சக்திகளால் சிறைபிடிக்கப்பட்டனர். இருவரும் இணைந்தே தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். உழைப்பாளி இயந்திரத்தின் உறுப்பாகப் பூட்டப்பட்ட நிலையில்தான் படைப்பாளியினிடத்தும் இயந்திரத்தன்மை ஏறியது. உழைப்பாளி விற்கவும் வாங்கவுமான பண்டமாகத் தேய்ந்தபோது தான் படைப்பாளியும் விற்பனைப் பண்டமானான். இருவருமே தம்மைத் தாமே விலைகூறி விற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவர்களின் உழைப்புச் சுதந்திரமும் படைப்புச் சுதந்திரமும் அடிமைச் சுதந்திரமும் அடிமைச் சூழலில் நடைபெறுகின்றன. இவர்கள் விடுதலை பெறவேண்டும். இதற்குரிய செயல், புரட்சிகரமான போராட்டச் செயலாகும். இவர்கள் தம் வாழ்க்கையை விடுவித்துக் கொள்வதன் மூலம், உழைப்பையும் படைப்பையும் விடுவிப்பவாராகின்றனர். யாருக்காகவோ, மாடமாளிகைகளையும், பட்டாடைகளையும், அணிகலன்களையும் உருவாக்கித் தந்து தமது அழகை இழந்து விட்ட இவர்கள் இனித்தான் தம்மை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும். தம்மை விடுவித்துக் கொண்ட நிலையில் தான் இவர்களது உழைப்பும் படைப்பும் ஒருங்கிணையும். உழைப்பு அழகு பெறும். படைப்பு நோக்கம் பெறும். ****