[] []                               வள்ளுவரின் அறவியலும் அழகியலும் கோவை ஞானி     அட்டைப்படம் : லெனின் குருசாமி - guruleninn@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                உள்ளடக்கம் முன்னுரை 5  1.வள்ளுவரின் சிந்தனை முறை 7  2. வள்ளுவரது சமய நோக்கு 10  3. செல்வம் - வறுமைச் சிக்கலில் வள்ளுவர் நிலை 16  4. வள்ளுவரின் அரசியல் 23  5. வரலாற்றின் வழியில் வள்ளுவர் 26  6. வள்ளுவரின் மெய்ப்பொருள் 28  7. வள்ளுவருக்குள் முரண் – மெய்யியலும் சமயமும் 31  8. வள்ளுவரின் அறச்சிக்கல் 33  9. திருக்குறளின் அழகியல் 35  10. வள்ளுவரின் காவியம் 42  11. வள்ளுவர் - ஒரு கதைக் களஞ்சியம் 44  12. வள்ளுவரின் கடவுள் 46  13. 'கடவுள் வாழ்த்து - செய்தவர் வள்ளுவரா? 48  14. திருக்குறள் நமக்கு ஒரு கை விளக்கு 53  15. திருக்குறளும் என் வாழ்வும் 56  16. மணிக்குறள்கள் சில 59  முன்னுரை   1970-ன் தொடக்கத்தில் எழுதிய இந்தத் தொகுப்பிலுள்ள முதல் நான்கு கட்டுரைகளோடு பின்னர் வெவ்வேறு சூழலில் நான் வள்ளுவர் குறித்து எழுதிய கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் இடம் பெறுகின்றன. எனது திறனாய்வு நூல்கள் பலவற்றில் இடம் பெற்றுள்ள வள்ளுவர் குறித்த கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. இன்னும் குறிப்புகள் அளவிலேயே உள்ளவற்றைக் கொண்டு எழுதியிருக்க வேண்டிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இல்லை. என்னைப் பெரிதும் கவர்ந்துள்ள திருக்குறள் பற்றி இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். வாய்ப்பு நேரும் பொழுது எழுதுவேன்.   வள்ளுவர் குறித்து என் ஆய்வு முறையை இங்கு நான் சுருக்கமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். 19/20 - ஆம் நூற்றாண்டுச் சூழலில் தான் சங்க இலக்கியங்கள் முதலிய தமிழ்ப் பேரிலக்கியங்கள் நமக்கு நெருக்கமாயி. திருக்குறளும் தமிழ் மக்களின் நெஞ்சைக் கவர்ந்தது. இந்தக் காலத்தில் தான். இதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்?   9/20 - ஆம் நூற்றாண்டுச் சூழலில் தான் வரலாற்றின் மையமென மனிதன் அறியப்படுகிறான். அறிவியலும் தொழில் நுட்பங்களும் இயற்கையின் மாபெரும் புதிர்களை விடுவிக்கத் தொடங்கின. வரலாற்றியக்கம் குறித்து நாம் அறிய வந்தோம். மன்னர்கள் இனித் தேவையில்லை. மத பீடங்களின் கட்டுப்பாடுகளுக்கு அவசியமில்லை. மனிதன் தனக்கான வரலாற்றுச் சூழலை, பொருளியலைப் படைத்துக் கொள்ள முடியும். மனிதன் தன்னைத்தானே ஆண்டுகொள்ள முடியும். தனியுடமையும் அரசதிகாரமும் நிரந்தரமானவையல்ல. சமதர்மம்தான் மனித வாழ்வுக்கான ஆதாரமாக இருக்க முடியும். கடவுள், ஆன்மா, தீவினை, முற்பிறப்பு, மேலுலகம் என்பனவெல்லாம் மனிதன் படைத்துக் கொண்ட மாயைகள். மாயைகளை விலக்கி இவற்றினடியில் செயல்பட்ட வரலாற்று முரணை மனிதர் காண முடியும்.   இந்த 20-ம் நூற்றாண்டுச் சூழலில் திருக்குறள் உட்படத் தமிழ் இலக்கியங்கள் நமக்கு நெருக்கமானதற்கு இது தான் காரணம். நமக்கு தேசம் வேண்டும். விடுதலை வேண்டும், வாழ்க்கை வேண்டும். அறம் வேண்டும், நமக்கான அரசு வேண்டும். ஏற்றத்தாழ்வுகளுக்கு இனியும் இடம் இருக்கக்கூடாது. சாதிகள் தேவையில்லை . மதக் கலவரங்களுக்கு அவசியமில்லை. மனித ஆளுமை மதிக்கப்பட வேண்டும். சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் இனி இடம் இருக்க முடியாது. மனிதர்களுக்கு இடையில் அன்பு வேண்டும். சமத்துவம் வேண்டும். இயற்கையோடு நாம் நெருங்கி இருக்க வேண்டும். இத்தகைய உணர்வுகள் இன்று நமக்குத் தேவைப்படுகிறது போலவே பழந்தமிழ் இலக்கியங்களிலும் இத்தகைய உணர்வுகளே அழுத்தமாகப் பதிவு பெற்றிருந்தன. இடைக்கால சமயவாத இலக்கியங்களோடு நாம் நெருக்கம் கொண்டதற்கும் இது தான் காரணமாக இருக்க முடியும்.   துறவிகளுக்கும் மரங்களுக்கும் இன்று தேவையில்லை. மேலுலக நம்பிக்கை தேவையில்லை. விதி நம் வாழ்வை நிர்ணயிக்க முடியாது. அன்பையும் அறிவையும் தவிர நமக்கு வேறு கடவுள் தேவையில்லை. ஏற்றத்தாழ்வுக்கு இடம் தராத எல்லாவற்றையும் மக்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடிய அறம் இல்லாமல் நமக்கு முடியாது. இன்று இவ்வாறு நமக்குத் தேவைப்படுகின்ற அற உணர்வு திருக்குறளில் பொங்கி வழிகிறது. ஆகவே வள்ளுவரை இன்று நாம் நேசத்தோடு, திரும்பத் திரும்பக் கற்கிறோம்.   தமிழன் என்ற முறையில் மட்டுமல்லாமல் மார்க்சியன் என்ற உணர்வோடும் திருக்குறளை நான் நேசத்தோடு கற்றேன். என்னைப் பொறுத்தவரை தமிழனாக இருப்பதும் மார்க்சியனாக இருப்பதும் ஒன்று தான். இவற்றிற்கு இடையில் எனக்குள் சிறிதளவும் முரண்பாடில்லை. தமிழகத்தில் மார்க்சியர் என்பவர், இரண்டொருவர் தவிரப் பலர் இப்படியில்லை. வர்க்கப் போராட்டத்தின் வழியில் தான் வரலாற்றியக்கம் நடைபெறுகிறது என்பது மார்க்சியத்தின் ஓர் அடிப்படை. வள்ளுவர் காலத்திலும் வர்க்கப் போராட்டம் சில வடிவங்களிலேனும் நடைபெற்றிருக்கத்தான் வேண்டும். அப்படியானால் வள்ளுவர் எந்த வர்க்கத்தின் சார்பில் நின்றார் என்ற கேள்வி எழுப்பி வணிக வர்க்கத்தின், ஆளும் வர்க்கத்தின் சார்பில் வள்ளுவரை நிறுத்தி, இதற்கு ஒத்த விளக்கங்களை மார்க்சியர் தந்தனர். இந்த விளக்கம் எனக்கு எந்த வகையிலும் உடன்பாடில்லை.   1965 வாக்கில் நண்பர்களோடு மிகுந்த ஈடுபாட்டுடன் மார்க்சியம் கற்கத் தொடங்கினேன். 68/70 காலத்தில் கோவையில் ‘புதிய தலைமுறை' என்னும் மார்க்சிய இதழைக் கொண்டு வந்தோம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற அக்கறையோடு பேசினோம். பாரதிதாசனை மதித்து எழுதினோம். தொல்காப்பியம். சங்க இலக்கியம் என ஆய்வுகள் செய்தோம். இந்திக்கு எதிரான போராட்டத்தில் மக்களோடு நாங்கள் இணைந்திருந்தோம். இந்தியோடு ஆங்கிலமும் நம்மை ஆதிக்கம் செய்ய வேண்டாம் என்று எழுதினோம். தமிழ் உணர்வில் நாங்கள் திளைத்தோம். மார்க்சியம் எங்களுக்குள் செறிவு பெற்றது. ‘புதிய தலைமுறைக்கு’ப் பின்பு எழுபதுகளின் தொடக்கத்தில் திருக்குறள் குறித்து மார்க்சிய நோக்கில் சில விரிவான கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் நான்கு கட்டுரைகள். ஏற்கனவே நான் கூறியபடி இந்தத் தொகுப்பின் தொடக்கத்தில் இடம் பெறுகின்றன. (இந்த நான்கு கட்டுரைகளுக்கு. ஒரு உச்சம் என நான் உணர்ந்த - நான் எழுதிய ஐந்தாவது கட்டுரை, பின்னர் என் நண்பரிடம் வாசிப்புக்குத் தந்த பொழுது எப்படியோ கை தவறிப் போய்விட்டது. அது பற்றி நான், பலகாலம் வருந்தினேன்.)   வரலாற்றில் திருக்குறளின் தோற்றம் குறித்து நான் அறிந்த வகையில் என் மார்க்சியப் புரிதலை இங்குத் தர வேண்டும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தனியுடைமை. அரசதிகாரம் என்பன இல்லை. மனிதர் இயற்கையோடு ஒன்றி இருந்தனர். உழைப்பின் விளைவை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். சமூகத்தில் போட்டி, பொறாமை. வம்பு வழக்குகளுக்கு இடமில்லை . சமூகம் மாறத் தொடங்கியது. வர்க்கப் பிரிவினைகள். ஏற்றத்தாழ்வுகள், தனியுடைமை. அரசதிகாரம் என்பனவெல்லாம் ஏற்பட்டன. சமூகம் பிளவுபட்டது. மனிதனும் தனக்குள் பிளவுபட்டான்.   இல்லறமும் துறவறமும் எதிர் நிலைக்குச் செல்லத் துவங்கின. வாழ்க்கை மனிதன் கைகளுக்கு எட்டாத தொலைவுகளுக்கு நகர்ந்து கொண்டிருந்தது. அரசன் இன்னும் முற்றான கொடுங்கோலனாக மாறவில்லை. விதியின் வலிமையை இன்னும் மனிதன் கேள்விக்குட்படுத்த முடியும். காதலும் காமமும் முற்றாக முரண்படவில்லை. பெண் இன்னும் முற்றான அடிமையாகவில்லை. சான்றாண்மைக்கு இன்னும் மரியாதை இருந்தது. இவற்றோடு வரலாற்று இயக்கம் தொடர்கிறது. வரலாற்றின் முரண்பாடுகள் முற்றான எதிர் நிலைக்கு இனித்தான் செல்ல வேண்டும். முன்னைய பொதுமைச் சமூகம் இன்னும் மனித வாழ்வுக்குள் நிழல் பரப்புகிறது.   சமூகம் இப்படி மாறிக் கொண்டிருக்கிற ஒரு காலத்தில்தான் வள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும். முன்னைய சமூகத்தின் அறத்தை இனியும் காப்பாற்றி வைத்திருக்க வேண்டும். அறத்தைக் கைவிட்டால் மனிதனுக்கு உய்தி இல்லை. வள்ளுவரும் ஒரு சான்றோராக வாழ்ந்திருக்கிறார். சமயங்கள் சமூகத்திற்குள் ஊடுருவத் தொடங்கியிருக்கின்றன. சமயங்களை ஒதுக்க முடியவில்லை. அவற்றைச் செரித்தாக வேண்டும். எல்லாவற்றிற்கும் புதுப்பொருள் காண வேண்டும். இல்லறம், துறவறம், தெய்வம், ஊழ், மேலுலகம் எல்லாவற்றினுள்ளும் மனிதனுக்கான அர்த்தம் தேட வேண்டும். அரசனைக் வள்ளுவரின் அறவியலும் அழகியலும் கட்டுப்படுத்தத்தான் வேண்டும். வள்ளுவரின் அறவுணர்வு இப்படித்தான் தன் கால வரலாற்றுச் சூழலில் இயங்கியிருக்க முடியும். வர்க்கப் போராட்டத்தில் வள்ளுவர் மக்கள் சார்பில் தான் நின்றார். அறத்தை நிலைநிறுத்தும் நோக்கில் நின்றார். இருவேறு உலகங்கள் : ஏற்படுவதை வள்ளுவரால் ஏற்க முடியவில்லை. ஊர் நடுவில் இன்னும் ஊருணிகள், பழ மரங்கள், மன்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவை அழிந்துவிடக் கூடாது. வரலாற்றில் இவற்றைத் தக்கவைக்க வேண்டும். இவற்றை எல்லாம் என் கட்டுரைகள் பதிவு செய்திருக்கின்றன.   வள்ளுவருக்குள்ளும் செயல்பட்ட முரண் இயக்கத்தை அறச் சிக்கலை நான் காணத் தவறவில்லை. வள்ளுவருக்குள் திறனாய்வுப் பார்வை குறையவே இல்லை. தன்னையும் திறனாய்ந்து மனிதன் முன் செல்ல வேண்டும் என்பது வள்ளுவர் உள்ளக்கிடக்கை. வள்ளுவர் கவிதை ஓர் அற்புதம். வள்ளுவர் கற்பனைகள் இன்றைக்கும் புதியவை. வள்ளுவரின் அழகியல் அறத்தில் தழைப்பது. ஆழ்ந்து பார்த்தால் எனக்குள் மட்டுமல்ல தமிழ் உணர்வு மிக்க ஒவ்வொருவருக்குள்ளும் வள்ளுவர் இருக்கிறார். இயங்குகிறார். நம் காலத்திலும் நமக்குள்ளிருந்து வள்ளுவர் நம்மை இயக்குகிறார்.   சில பத்தாண்டுகளாக கோப்புகளில் மட்டும் கிடந்த என் கட்டுரைகள் இப்பொழுதுதான் அச்சுருவம் பெறுகின்றன. இதற்காக என்னோடு ஒத்துழைத்த நண்பர்கள் பலர். பிழைத்திருத்தம் பார்த்தவர் நண்பர். மு. குமரவேல், சேலம் கி. இளங்கோ . ஒளியச்சை அழகுறச் செய்தவர் ‘மயூரா’ திரு. இரத்தினசாமி, நண்பர் கவிஞர் திரு.வே.ராமசாமி அவர்களின் மூலம் சென்னையில் இந்நூல் வெளியாகிறது. வெளியிடும் பொன்னி பதிப்பகத்தாருக்கும் எனக்குப் பேருதவியாக இருந்த என் நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.   பல்வேறு சமயங்களில் எழுதிய கட்டுரைகளில் ஒரு சில கருத்துக்கள் திரும்பத் திரும்ப இடம் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை. நண்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.   10.12.2006                                                                                    - ஞானி   24. வி.ஆர்.வி.நகர் ஞானாம்பிகை ஆலை (அஞ்சல்)  கோயமுத்தூர் - 641 029                                                                                                                                 1.வள்ளுவரின் சிந்தனை முறை   பொருள் கண்ணோட்டத்திலிருந்து திருவள்ளுவரை ஆராய்ந்து முடிவு கட்ட வேண்டும். பொருள்முதல்வாத நோக்கம் தமிழ் இலக்கிய ஆய்வில் பயன்படுத்தப்பட்டு நெடுங்காலம் கடந்த பின்னரும் இத்துறையில் சரியான முடிவுகள் மேற்கொள்ள இயலாமல் இருப்பது வியப்பிற்கு உரியதாக இருக்கிறது. தமிழ் இலக்கியத் துறையில் வள்ளுவருக்கு உள்ள பெரும் பங்கைப் பார்க்கும் போதும், அஃதும் இக்காலத்தில் வள்ளுவருக்குத் தரும் பெரும் மதிப்பைக் கருத்தில் கொண்டு வள்ளுவரைப் பற்றிப் பொருள் முதல் நோக்கில் ஆய்வு மிகத் தேவையாக உள்ளது. இத்துறையில் ஓர் உண்மையான முயற்சியை மேற்கொள்வது நமது கடமை. குறிப்பாக வள்ளுவரது முறை பற்றி ஆய்வு வள்ளுவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வழிவகுக்கும் என்பதால் அது பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.   வள்ளுவரது முறை என்று குறிப்பிடும்போது சிந்தனை முறையையே குறிப்பிடுகிறேன். முடிவுகளைக் காட்டிலும் சிந்தனை முறையைக் கருத்திற் கொள்வது இன்றியமையாதது. சரியான சிந்தனை முறை இருந்தும் சில சமயங்களில் தவறான முடிவுகள் நேர்ந்துவிடலாம். அஃதும் கருத்துமுதல்வாதியாக உள்ளவர்கள் பற்றி ஆயும் போது, இக்கொள்கையை மனதிற்கொள்ள வேண்டியது : மிகத் தேவையாகிவிடுகிறது. முடிவுகளிலிருந்து முறையைப் பிரித்துக் காண்பதால் நாமே தேவைப்பட்டால் முடிவுகளையும் முறைக்கேற்ப மாற்றிக் கொள்வது அறிவுக்கு ஒத்ததாகும். வள்ளுவர் ஒரு கருத்துமுதல்வாதி என்பதில் ஐயமில்லை. கருத்துமுதல்வாதி என்று கூறிவிடுவதாலேயே சிக்கல் தீர்ந்து விடுமானால், இதைவிடச் சிக்கலைத் தீர்ப்பதற்குத் தவறான எளிய வழி வேறு இருக்க முடியாது. கருத்துமுதல்வாதிகளும் உலகியலால் பாதிக்கப்படவே செய்கிறார்கள். உலகப் பாதிப்பிற்கேற்பச் செயல்படுகிறார்கள். சிந்திக்கிறார்கள். உலகப் பாதிப்பிற்கேற்ப அவர்களின் கருத்து முதல்வாதச் சிந்தனையில் உலகின் மெய்ம்மை இடம் பெறவே செய்கிறது. வள்ளுவரும் இந்தப் பாதிப்பிற்கு உட்பட்டவரே. இந்தப்பாதிப்பு எந்த அளவிற்கு அவருடைய கருத்துமுதல்வாதத்தில் இடம் பெற்றது என்பதைத் தீர்மானிப்பது தேவை.   வள்ளுவருடைய முறை பற்றிச் சிந்திக்கும்போது, அவருடைய ஒப்பற்ற ஒரு சிந்தனை நினைவில் நிற்கிறது. "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு". (குறள் 423). வள்ளுவர் தம் குறள் நூலுக்கும் குறள் நூலில் கூறப்படும் கருத்துகளின் உண்மைக்கும் அளவுகோலாக இக்குறளை ஆக்கிக் கொள்வதை வள்ளுவர் உடன்படுவாரே ஒழிய மறுக்க மாட்டார். வள்ளுவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்பவர்களின் பக்தி நெறியை மறுப்பதற்கு இக்குறள் ஒரு தக்க கருவி என்பதில் ஐயமில்லை. பக்தி நெறியாளரின் மனப்பான்மையை வள்ளுவர் அறவே விரும்பமாட்டார் என்பதும் குறட்கருத்திலிருந்து தெளிவாகும். வள்ளுவரை உண்மையாக ஆய்பவர்தாம், வள்ளுவர் வழியில் நிற்பவர், வள்ளுவரைக் குறுகிய எல்லைக்குள் அடைப்பவர், வள்ளுவருக்கு இழிவு கற்பிப்பவர்களே என்பதிலும் ஐயமில்லை. இக்குறளை அளவுகோலாகக் கொண்டு, தேவையானால் வள்ளுவருடைய முடிவுகளிலிருந்து வேறுபடுவதற்கும் முடிவினை மாற்றுவதற்கும் நமக்கு உரிமை தந்திருக்கிறார் வள்ளுவர். தாம் மட்டும் சிந்தித்தால் போதும் என்ற மருள் நோக்கம் வள்ளுவர் நோக்கமாக முடியாது. பிறரையும் தம்மைப் போலவே சீரிய முறையில் சிந்திக்கத் தூண்டுவது வள்ளுவர் கருத்து.   இக்குறளொத்த வேறு சில குறள்களையும் கருத்திற்கொள்வது தேவையாகிறது. "தொட்டனைத் தூறும் மணற்கேணி" (குறள் 396) என்ற குறளில் அறிவு நாளுக்கு நாள் பெருகி வளரும் தன்மையையும் தேவையையும் உணர்த்துகின்றார். "அறிதோறும் அறியாமை கண்டற்றால்'என்ற குறளில் நாளும் அறிவு புதுமை - மலர்ச்சி பெற வேண்டும். இன்றைய அறிவுப் புதுமை - நாளைப்பழமை ஆகிவிட வேண்டும் (நாளைய புத்தறிவு இன்றைய அறிவைப் பழமையாக்கிவிட வேண்டும்); அறிவு இத்தகைய முறையில் ஆழ்ந்தும், அகன்றும் வளர வேண்டும் என்ற கருத்தைத் தெரிவிக்கிறார். ''கற்றனைத்து ஊறும் அறிவு என்று கூறும் போது ஒரு சில நூல்களைத் தொடர்ந்து பன்முறையும் திரும்பத்திரும்பப் படித்து அறிவு என்று கூறும் போது ஒரு சில நூல்களைத் தொடர்ந்து பன்முறையும் திரும்பத் திரும்பப் படித்து அறிவு நுட்பமும் பெருக்கமும் பெறுவதைத்தான் குறிப்பிட்டிருப்பார் என்று கருதுவது சரியாக மாட்டாது. "உலகத்தியற்கை அறிந்து செயல்" (குறள் 637) என்று வேறு ஒரு குறளில் கூறியிருப்பது போல், நேரிடையாக உலகைக் கற்று அறிவு பெறுவதை வள்ளுவர் மறுத்திருக்க மாட்டார். இலக்கிய அறிவு . மட்டுமன்று. வேறு பல்துறை அறிவும் நாளுக்கு நாள் வளர வேண்டும் என்பதில் வள்ளுவருக்கு மறுப்பிருக்க முடியாது. இவ்வாறு தொடர்ந்து பல நாடுகளிலும் பல ஊர்களிலும் தேடி அறிவை வளர்த்துக் கொள்பவர்களுக்குத்தான் "யாதும் நாடு” ஆகும். "யாதும் ஊரா”கும். (குறள் 397). இத்தகையவர்க்கே சாகும்வரை அறிவுத்தேட்டப் பற்றும் முயற்சியும் இடையறாது இருக்கும் பல ஊர்களுக்கும் பல நாடுகளுக்கும் சென்று அறிவைப் பெருக்கிக் கொள்வது வள்ளுவர் கருத்து. தன்னாடே அறிவிற்கும் பண்பிற்கும் தலைமையமைந்த நாடு என்று இருந்துவிடும் குறுகிய போக்கு வள்ளுவருக்கு உடன்பாடாக இருக்க முடியாது. உலகை ஒரு குலமாக்கவல்ல இவர்களது உலகளாவிய, உலகு தழுவிய அறிவே - விரிந்த பல்துறையறிவே - வள்ளுவர் தம் உள்ளக்கிடக்கை. இத்தகைய அறிவாற்றல் உடைய புலமையாளர்களே தாம். இன்புறுவதுடன், உலகையும் இன்புறுத்தும் வல்லமையுடையவர். (குறள் 399). வெறும் இலக்கிய நயம் நாடிய இடைக்காலத்துப் புலவர்கள் அல்லர் இவர்கள். பல்துறை அறிவுத் தேட்டத்தில் ஈடுபடும் அறிஞர்கள் இவர்கள். உலகிற்கு அறிவு செய்யும் நன்மையை இன்பத்தை ஆக்கத்தைப் புரிந்து கொண்ட இப்பேரறிவாளர்கள், மேலும் உலகம் ஆக்கம் பெறவேண்டும் என்பதற்காக அவ்வறிவுத் தேட்டத்தையே விரும்புகின்றனர். “தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்”. உலகியல் இன்பங்களைத் துறந்து அறிவு நாட்டத்திலேயே ஈடுபட்டுள்ள இவர்கள் உலகின் புறுவதற்குக் காரணமாகிறார்கள். உலகை இன்புறுத்துவது அறிவின் கடமை - தேவை. உலகின் தேவை நோக்கியே அறிவுத்தாகம் பெருகுகிறது. இறுதியில் அறிவும் வளர்கிறது. இத்தகைய அறிவுடையவர்கள், "எல்லாம் உடையவராகக் கருதப்படுகின்றனர். (குறள் 430) இத்தகையவரைப் பொருளற்றவர் என்று இகழ்ந்து உலகியலுக்குள் தள்ளிவிடுவதைவிட, இவர்களை எல்லாம் உடையவராகப் புகழ்ந்து அறவியல் நோக்குத் தூண்டிவிடுவது. இறுதியில் நன்மையே பயப்பதாகிறது. இத்தகைய "நல்லார்கண்" (குறள் 408) பட்ட வறுமையைப் புகழ்வது தேவையாகிறது.   ''உலகில் பல நாடுகளிலும் அறிவு வளர்ந்து வருகிறது. பல நாட்டறிவையும் நாம் பெற வேண்டும். இவ்வாறு புதுமை பெறுவது அறிவின் உள்ளார்ந்த இயல்பாகிவிட வேண்டும். அறிவுத் தேக்கம் அறவே கூடாது. உலகை ஒட்டி அறிவின் வளர்ச்சி இருக்க வேண்டும். உலக அறிவு நமக்கறிவாக வேண்டும். இவ்வாறு உணர்வது உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கற்பதாகும். (குறள் 140). அறிவு என்பது உலகத் தொடர்புடையது. உலகியல் சார்ந்தது. அதுபோலவே, அறிவு காலத்திற்குக் காலம் மாறுவது, நிகழ்காலத்தைக் காட்டிலும் எதிர்காலத்தில் அறிவு வளர்வது உறுதி. எதிர்காலத்தில் நிகழப்போவதை நிகழ் கால நிலைகொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும். நிகழ்கால நிலைமைகளில் சாத்தியமானது எதிர்காலத்தில் நிகழக்கூடியது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். (குறள் 429). அறிவு என்பது எதிர் நோக்கையும் தனக்கு இன்றியமையாத ஓர் இலக்கணமாக்கிக் கொள்ள வேண்டும். ''அறிவுடையார் ஆவது அறிவார்” என்ற குறட்கு இஃதே கருத்து என்று கொள்வதில் தவறு இருக்கமுடியாது. அறிவுடையவர்களே உலகில் அதிகம் பார்க்க - புரிந்து கொள்ள ஆற்றலுடையவர். அறிவு இவர்கள் வாழ்வு. அறிவற்றவர் வாழ்வைவிடப் பொருண்மை "பொலிவு” நிறைந்தது என்பதில் ஐயமில்லை. இவர்களே கண்ணுடையவர்கள். (குறள் 393). இவர்கள் பிறநலச் சார்புடையவர்கள். இவர்கள் உலகிற்காகப் பாடுபடுபவர்கள். இத்தகைய அறிவு உடையவர்கள் பெற்றோராகவும் இருக்கும்போது அவர்தம் கடமையையும் வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். தம்மைக் காட்டிலும் அறிவு உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் இன்பம் தருவதாக இருக்க வேண்டும். "தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது" (குறள் 68). இக்குறளில் தந்தை கால அறிவைவிட மக்கள் கால அறிவுப் பெருக்கத்தின் சாத்தியத்தை வள்ளுவர் கருத்திற்கொண்டே கூறியிருக்கிறார். அத்துடன் அறிவின் நோக்கம், உலகு தழுவியதாக இருக்க வேண்டும் (குறள் 425) என்றும் கருதியே கூறியுள்ளார்.   உலகளாவிய - உலகு தழுவிய - உலக நன்மை நோக்கிலான அறிவு தேவை என்பதற்கு உறுதிவாய்ந்த சான்று வள்ளுவரது நூலே ஆகும். வள்ளுவரின் பலதுறையறிவை நூல் முழுதும் பார்க்கிறோம். அறம், பொருள், இன்பம், அரசியல், தத்துவம், சமயம், இயற்கை, இல்லறம், துறவறம், பல்வகைத் தொழில், கலைகள் முதலிய பல துறை அறிவுடையவர் வள்ளுவர். இத்தகைய அறிவை, உலகளாவிய அறிவைப் பிறரும் பெறுவதை வள்ளுவர் மிக விரும்பினார் என்பதில் ஐயமில்லை.   இதுகாறும் கூறியவற்றிலிருந்து சில கருத்துக்களைத் தொகுத்துக் கொள்ளலாம். அறிவின் உலகச் சார்பை வள்ளுவர் ஒப்புக் கொள்ளுகிறார்.அறிவின் உலகியல் நோக்கத்தையும் ஒப்புக் கொள்கிறார். உலகு தழுவியதாக, உலகளாவியதாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். அறிவாளிகளைப் பொறுத்தவரை அறிவுத் தேட்டத்திற்குள்ளேயே அவர்களது வாழ்வு அடங்கிவிடுகிறது. அடங்கிவிடக் கூடும் என்ற கருத்தையும் வள்ளுவர் கொண்டிருந்தார். தந்தையின் நோக்கம், மகனுக்கு அறிவை வளர்ப்பது (குறள் 67) என்றும் வள்ளுவர் கருதுகிறார். குறுகிய நோக்கம் வள்ளுவருக்கு என்றும் உடன்பாடன்று. அறிவு, வாழ்வில் நிறைவை வளர்க்கிறது என்பதும் வள்ளுவர் கருத்து.   இதிலிருந்து வள்ளுவரது முறை என்ற முறையில் என்ன . தெளிவாகிறது? உலகியல் சார்பில், உலகியல் நன்மை நோக்கில், நாளுக்கு நாள் வளரும் போக்கில், அறிவு அமைய வேண்டும். வள்ளுவர் காலத்திற்குப் பின் வளரவிருக்கும் அறிவை வள்ளுவர் முறை ஏற்கிறது. வரவேற்கிறது. தமது காலத்துக்குப் பின்னர் வளர்ந்த அறிவை அடிப்படையாக வள்ளுவர் வகுத்த முடிவுகளை மாற்றிக் கொள்வதில் வள்ளுவருக்கு மறுப்பு இருக்க முடியாது. வள்ளுவர் அதை விரும்பி வரவேற்கவும் செய்வார். மக்களின் நலம் பற்றி வள்ளுவர் கருத்து, கருத்து முதல்வாதக் கருத்து என்பதில் ஐயமில்லை. மக்களின் நலம் வள்ளுவர் நோக்கம். மக்களின் நலத்திற்கு ஒத்த முறையில் அவரது முடிவுகளில் தேவையானால் மாறுதல்கள் செய்து கொள்வது, வள்ளுவர் முறைக்கு ஒத்ததே. இஃதன்றி வள்ளுவர் தமது கால் அறிவுக்கு ஒத்த முறையில் வகுத்த முடிவுகளும் மக்களுக்கு நன்மையாக அவை இருக்கும் என்று கருதியே வகுத்திருக்க முடியும். இன்றைய நிலைக்கு மாறுதல்கள் மக்களது நன்மை நோக்கில் தேவையானால் வள்ளுவர் ஏற்கவே செய்வார் என்பதிலும் ஐயமில்லை.   அறிவின் புற உலகச் சார்பைக் குறிப்பிடும் வள்ளுவர், அறிவு மனத்திற்குள்ளிருந்துதான் வருகிறது என்பதை மறுக்க வேண்டும். ''நிலத்தியல்பால் நீர் திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு என்றும் (குறள் 452)   "மனத்து ளது போலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு" (குறள் 454)   என்றும் “சிற்றினஞ் சேராமை”யில் குறிப்பிடுகின்றார். ஒருவனை நல்லவன் அல்லது தீயவன் எனக் கூறத்தக்க அறிவு, அவன் சேர்ந்துள்ள நல்லவர் அல்லது தீயவர் கூட்டத்தைப் பொருத்தே பிறிதின் நோய் ஏற்படும் என்பது வள்ளுவர் கருத்து. சேர்ந்தவர் கூட்டத்தைப் பொருத்து ஒருவன் பண்பு அல்லது அறிவு திரிகிறது என்று கூறிய கருத்தும் மக்கள் வாழும் வரலாற்றுக் கால கட்டத்தைப் பொருத்தும், நாட்டைப் பொருத்தும் தாம் சேர்ந்த வர்க்கத்தைப் பொருத்தும் அறிவு அமையும் என்று கூறிய கருத்தும் வெவ்வேறானவை. ஆயினும் பின்னைய முறையில் விரிவாக வளர்வதற்குத் தக்கதொரு கருத்துக்குரிய கரு, வள்ளுவரது கருத்தில் உள்ளது என்பது தெளிவு.   "நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும் (குறள் 958)   என்ற குறளில் ஒருவரது பண்பாக்கத்திற்கும் குலத்திற்கும் உள்ள உறவைச் சுட்டுகிறார். வறுமை வந்த சூழலில் பழைய குடிப்பண்புகளும் சொல்லுறுதியும் கெடும் என்று ஒரு குறளில் (குறள் 1043) குறிப்பிடுகின்றார்.   ''அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தன்நோய் போல் போற்றாக் கடை" (குறள் 315)   "ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் " (குறள் 214)   ஆகிய குறள்களில், பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போலக் கருதுவது அறிவு என்றும் பண்பாக்கத்திற்கு அறிவு கருவி என்றும் குறிப்பிடுகின்றார். பிறர் துன்பம் கண்டு இரங்கும் செயலை மட்டும்தான் என்று இல்லாமல் இரக்கத்துடன் புரியும் பிற உதவிச் செயல்களையும் வள்ளுவர் மறுப்பதற்கில்லை. கொடை முதலியவற்றை வள்ளுவர் மனிதர்க்குக் கடமையாகவே சொல்கிறார்.   பண்புகள், புறவுலகத்தால் சூழல்களால் பாதிக்கப்படவே செய்கின்றன. வெறும் சிந்தனை கொண்டே உலகம் திருந்த இயலாது. உலகம் உயர்வதற்குச் செயல்களும் துணை. இக்கருத்துகளும் அறிவைப் பற்றி வள்ளுவரது முற்போக்கு இயல்புடைய பல வள்ளுவரின் அறிவியல் கருத்துகளேயாகும்.   கருத்துகளைப் பார்த்தோம். "அறிவு இறைவன் வழங்கியது. அறிவினால் பயன் இல்லை"என்ற பிற்காலத்தவர் கருத்திற்கு வள்ளுவர் கருத்து மாறுபட்டது. முற்போக்கானது.   "பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை" (குறள் 372)   என்ற குறளில் தீயூழ் அறிவழிக்கும், நல்லூழ் அறிவு விரிக்கும் என்று ஊழுக்கும் - அறிவுக்கும் உறவு கூறவே செய்கிறார் வள்ளுவர். ஆனால் அறிவு விதியினால் தான் உண்டாகிறது - திரிபடைகிறது என்று வள்ளுவர் முற்றுரிமை கொண்டாடவில்லை. இவற்றைப் பார்க்கும் போது வள்ளுவர் தம் அறிவு பற்றிய கருத்துகள், முற்போக்கான இயல்புகள் பல உடையன என்பதையும், முற்போக்கு இயல்புடைய இக்கருத்துகள், முற்றான பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தை நோக்கிச் செல்லவில்லை.கருத்து முதல்வாத எல்லைக்குள் தான் இக்கருத்துகள் செயல்படுகின்றன என்பதையும் நாம் அறிகிறோம்.   2. வள்ளுவரது சமய நோக்கு   வள்ளுவரது சிந்தனை முறை சமயத் துறையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.   வள்ளுவரின் ஒருங்கமைந்த கட்டுக்கோப்புடைய பெயர் கூறத்தக்கதொரு சமயம் உண்டா என்றால் இல்லையென்றே கூறிவிடலாம். ஆனால் சமயம் என்று கூறுவதற்கான பல அடிப்படைத் தன்மைகளும் வள்ளுவர் நூலில் இடம் பெற்றே உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இறை நம்பிக்கை, அவரை வழிபடும் தேவை. அதனால் பெறத்தக்க விளைவுகள், இறைவனை அடைய வேண்டிய தேவை. துறவியின் தேவை, மேலுலகம், விதி நம்பிக்கை முதலிய கருத்துகள் வள்ளுவரிடம் இடம் பெறவே செய்கின்றன. ஆனால் இக்கருத்துகளுக்கு வள்ளுவரது அனைத்துக் கருத்துகளின் தொகுதிக்கு நடுவில் எவ்வளவு அழுத்தம் இருக்கிறது என்பதைத் தீர்மானித்தால்தான் வள்ளுவரிடம் சமயவகைச் சிந்தனைக்கு ஆக்கம் அதிகமா அல்லது குறைவா என்பதை முடிவு கட்ட முடியும். வள்ளுவரது சிந்தனை முறையை இதன் மூலமும் உறுதிப்படுத்த அல்லது மறுக்க வாய்ப்பு ஏற்படும்.   வள்ளுவர் நூலின் முதலதிகாரத்தில், முதல் குறளிலேயே இறையின் உண்மையைக் குறிப்பிடுகிறார். இதை உறுதிப் படுத்துவதற்காக அகர உவமையைப் பயன்படுத்துகிறார். மொழியின் முதல் எழுத்தாக உள்ளது அகரம். இரண்டாவது, பிற எழுத்துகள் தோன்றுவதற்கு முன்னர் இருந்தவன் இறைவன் என்று கருதுவதற்கு இடம் உண்டே ஒழிய, இறைவனால்தான் உலகம் உண்டாக்கப்பட்டது என்பது பெறப்படாது, இரண்டாவது கருத்தின்படி, இறைவனே, உலகத்தின் மூலம் உலகப் பொருட்கு இடையில், உலகப்பொருள் உருவமாக இருப்பவன் என்பது பெறப்பட்டாலும், அகரத்தின் மூலத்தன்மையை விளக்குவதற்குப் போதிய சான்றுகள் இல்லை. இவற்றில் எக்கருத்து, வள்ளுவர் கருத்து என்று துணிவதற்கு வேறு குறளில் விளக்கம் உண்டா என்று பார்த்தால் இல்லை என்பதே விடையாக இருக்க முடியும்.   ’கடவுள் வாழ்த்தின்’ பிற குறட்பாக்களில் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்'. 'இருவினையும் சேராதவன்': 'பொறிவாயில் ஐந்தவித்தான்’. ’தனக்கு உவமை இல்லாதவன்'. ’அறவாழி அந்தணன்' ‘எண் குணத்தான்'என்ற முறையில் இறைவனது குணங்களும் செயல்களும் தன்னிகரற்ற தன்மையும் கூறப்படுகின்றன. இவனைச் சேர்ந்தவர்க்குப் பிறவித் துன்பங்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. இவரை வணங்க வேண்டியது தலையாய கடமை என்றும் வற்புறுத்துகிறார். பிறப்பு என்பதே துன்பக்கடல் என்றும் கூறப்படுகிறது. கல்வியின் பயன், இறைவனைக் கண்டறிந்து வணங்குதல் என்ற கருத்தும் இடம் பெறுகிறது. இறைவனை அடைந்தவர்க்கு எக்காலத்தும் துன்பங்கள் இல்லை என்ற கருத்து வருகிறது.   முதற்குறளில் இறைவனின் உண்மையை நிரூபித்துக் கொள்ளும் வகையில் ஓர் உவமையை மட்டும் கூறிவிட்டுப் பிற குறள்களில் இறைவனின் குணங்கள் செயல்கள் முதலியவற்றைக் கூறத்தொடங்கிவிடுகிறார். தவிர இறைவனது குணங்கள், செயல்களாகக் கூறியவற்றை பிற அதிகாரங்களில் வரும் குறள்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் வேறு ஓர் உண்மை புலப்படுகிறது. ‘பொறிவாயில் ஐந்தவித்தான்' என்று கடவுள் வாழ்த்தில், இறைவனைக் குறிப்பிட்ட வள்ளுவர், நீத்தார் பெருமையில் ''ஐந்தவித்தான்"என்று துறவியைக் குறிப்பிடுகிறார். அதே அதிகாரத்தில் “சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்" என்று ஐந்தின் வகை தெரிந்த துறவியினிடம் உலகமே அடங்கியிருப்பது போல், அத்துறவியிடம் உலகத்தைத் தனக்குள் அடக்கும் தெய்வ ஆற்றல் இருப்பதாகக் கூறுகிறார். ''அறவாழி அந்தணன் "என்று முதலதிகாரத்தில் இறைவனைக் குறிப்பிட்டவர் "நீத்தார் பெருமையில், நீத்தார். துறவிகள். ''அறவோர்", அவர்களே ''அந்தணர்” என்றும் குறிப்பிடுகிறார். இறைவனை வணங்கினால் துன்பங்கள் நீங்கும் என்று முதல் அதிகாரத்தில் கூறியவர், அறன் வலியுறுத்தலில் - அறத்தினால்தான் இன்பங்கள் வரும் "அறத்தான் வருவதே இன்பம்"என்று கூறுகிறார். இறைவனை வணங்கினால் பிறப்புகள் அறும் என்று முதலதிகாரத்தில் குறிப்பிட்டவர். அறன் வலியுறுத்தலில் "வீழ்நாள் படா அமை"என்ற குறளில் நாள் தவறாமல் அறச்செயல்களைச் செய்து வந்தால் பிறப்பு அறும் என்று - கூறுகிறார்.   இது போலவே அருளையாள்கின்ற துறவிகளுக்கு ''அல்லல் இல்லை”     என்பதையும் அருளுடைமையின் கூறுகின்றார் துன்பம் வருவதற்கு காரணம் முதலதிகாரத்தில் கூறப்படவில்லை ஆனால் பிற அதிகாரங்களில் “பிறருக்கு நாம் துன்பம் செய்தால் நமக்குத் துன்பம் திரும்பிவரும் (பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்) (குறள் 319) என்றும் ‘பிறப்பீனும் வித்து அவா’வே (குறள் 361) என்றும் கூறுகின்றார் இவ்வாறு குறிப்பிடும் போதே துன்ப நீக்கத்திற்கும் வழிமுறைகளை கூறிவிடுகிறார்.  “காமம், வெகுளி, மயக்கம் தீர்ந்தால் துன்பம் தீரும் பிறப்புக்கள் அறும்” என்றும் கூறுகிறார்.ஆகவே, மனிதர் தாம் முயற்சி செய்யாமல் இறைவனை மட்டுமே தொழுவதால் பிறப்பு என்ற கருத்தை வள்ளுவரே மறுப்பவராகிவிடுகிறார்.   இது மட்டும் அன்று ‘தான்’ என்ற எண்ணமும் அற்றுவிட்ட துறவியை “மன்னுயிர் எல்லாம் தொழும்” (குறள் 268) என்றும் உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவர் உலகத்தார் எல்லோர் உள்ளத்தும் இடம் பெறுவார் (குறள் 294) என்றும் திருவள்ளுவர் கூறுகின்றார். இக்குறள்கள் முதலதிகாரத்தில் குறிக்கப்பெற்ற தெய்வ ஆற்றல், தெய்வ வணக்கம் இங்கு துறவிகளுக்கும் சேர்த்துச் சொல்லப்படுகிறது. துறவிகள் தொழத் தக்கவர்கள் தெய்வ ஆற்றல் கை வந்தவர்கள் இவர்கள் வேண்டியவற்றை வேண்டிய முறையில் பெற வல்லவர்கள் (குறள் 265) இது போலவே, அறத்திற்கும் தெய்வீகத்தன்மை கூறுகிறார் வள்ளுவர் “என்பிலதனை வெயில்போலக் காயுமே அன்பில் அதனை அறம் (குறள்77)” (தானே துன்பம் செய்யும்)   முதலதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை ஒத்த கருத்துக்கள் பிற அதிகாரத்திலும் இடம்பெறுவதை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஒரு சிலர் உரை கூறுவது போல, முதல் அதிகாரத்தில் இறைவனை கூறவில்லை துறவிகள் கூறியுள்ளார் என்று கூற வேண்டி வரும் அல்லது முதல் அதிகாரத்தை வள்ளுவர் பாடவே இல்லை என்றாவது கூறவேண்டிவரும். இத்தகைய ஆய்வுகளில் நாம் இப்பொழுது ஈடுபடுவது இன்றியமையாததாக தோன்றவில்லை. இறைவனைப் பற்றித் தான் கூறியிருப்பார் என்று கொண்டாலும் இறை நம்பிக்கையால் மட்டுமே உலகத் துன்பங்கள் பிறப்புக்கள் நீங்கிவிடும்.மனித முயற்சி முதலியவை அறவே தேவையில்லை என்பது வள்ளுவர் கருத்தா என்றால் இல்லை என்றே கூற வேண்டியிருக்கும். இறைவனையே கூறவில்லை என்று வைத்துக்கொண்டால் புத்த சமயம், சமண சமயம் போல இறைக்கு முக்கியம் தராமல் துறவுக்கு முக்கியந்தந்தே பிறப்பறுத்தல் முதலியவற்றை கூறிக் கொள்வது வள்ளுவர் கருத்து என்று ஏற்படும். எப்படிப் பார்த்தாலும், வள்ளுவர் கருத்தில் இறைவனுக்கு இடம் மிகச்சிறுத்து விடுகிறது. அல்லது இடமே இல்லாமற் போய்விடுகிறது. துன்பநீக்கம், பிறப்பு அறுத்தல் ஆகியவற்றைத் துறவியர் தமது முயற்சியின் விளைவாகச் சாதித்துக் கொள்ள வேண்டும். முயற்சி எதுவும் இன்றி வெறும் இறைவழிபாட்டால் மட்டும் சாதித்துக் கொள்வது வள்ளுவருக்கு உடன்பாடான கருத்து அன்று. இவ்வாறு இறையருளே முதன்மையும் கூறுவது பிற்காலத்தார் கருத்தாகுமேயல்லாமல் வள்ளுவர் கருத்தாகமாட்டாது. இவ்வாறு வள்ளுவர் கருதியிருந்தால், அவர் அறம், பொருள், இன்பம் எழுதி இருக்க வேண்டியதில்லை தேவார, திருவாசகங்கள் மட்டுமே பாடியிருக்க வேண்டும். ஆகவே, குறட்கருத்துக்கிடையில், உலகு கடந்த இறைமைக்கு இடம் மிகக் குறைவு என்பதுடன், தேவையும் இல்லை என்பது தெளிவாகிறது.   மனித முயற்சி என்று கூறும்போது பொருள்முதல்வாத நோக்கில் கூறவில்லை. இறைவனை மட்டும் நம்பியிருப்பதால் எல்லா நன்மைகளும் நேர்ந்துவிடும் என்ற சமய அழுத்தம் வள்ளுவருக்கு இல்லை. இந்த வகையில் வள்ளுவர் முற்றாக கருத்துமுதல் வாதத்திலிருந்து விலகிப் பொருள்முதல்வாதத்தை நெருங்கி செல்லுகிறார். துறவு முயற்சியை வலியுறுத்திக் கூறும் வகையில் கருத்துமுதல்வாதப் போக்கே புலப்படுகிறது. அறத்தைக் கடைபிடிப்பதால், இல்லத்திலிருந்து பிறப்பு அற வழி செய்துகொள்ளலாம் என்பது வள்ளுவர் கருத்து. இக்கருத்தைப் பார்க்கும்போது கருத்து முதல்வாத அழுத்தம் குறைகிறது என்பது தெளிவு.     வள்ளுவரது சமயச் சிந்தனையைத் தீர்மானிப்பதற்குரிய அச்சாணிக் குறள் இது. எல்லா மனிதர்களும் நல்லவராக, வறுமை நிலையற்றவராக வாழ்வாரெனில், கடவுள் இருக்கிறார் என்பது. அத்தகையவர்தான் கடவுளாகவும் இருக்க முடியும். தீயவர்களும் வறியவர்களும் இருக்கிறார்கள் என்றால் கடவுள் இருந்தும் பயன் இல்லை. அத்தகைய கடவுளும் தேவையில்லை. கடவுள் இருந்தும் தீமையும் வறுமையும் இருக்கின்றன. 'கடவுள் இதற்குக் காரணமும் இல்லை. தேவையும் இல்லை. இச்சிக்கல், சமுதாயத்தின் சிக்கல். இதைத் தவிர்க்க வேண்டியது சமுதாயம்.   திருவள்ளுவர் அறிவியலார். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர். மக்கட் சமுதாயப் பற்று இக்குறளில் மேலோங்கி நிற்கிறது. அப்பற்றுத்தான் கடவுளுக்கும் எதிராகக் கலகக் கொடி உயர்த்தச் சொல்லுகிறது. உண்மையான மனிதப் பற்றுடைய அற ஆசிரியர் செய்ய வேண்டிய கடமை இது. இதை வள்ளுவரும் ஒப்பற்ற முறையில் சாதிக்க விரும்புகிறார்.   "சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (குறள் 18)   என்ற குறளிலும் இம் மனப்பான்மையே விளங்குவதைப் பார்க்கிறோம். (மழை பெய்விப்பது தெய்வங்களின் கடமை) பெய்விக்கவில்லையானால் அவர்களுக்குத் தேர்த்திருவிழாக்கள் வழிபாடுகள். வாழ்த்துக்கள் நடைபெறாது என்பது மட்டுமல்ல அவர்களுக்குத் தேவையும் இல்லை. தானாகச் சென்று நல்ல செயல்களுக்கு உதவுவதுதான் தெய்வம். இவ்வாறு கூர்மையாகக் என்பதில் ஐயமில்லை உண்மை கடுமையாகக் கூறுவதற்கு வள்ளுவரின் கலகக்குரலே காரணம் பரந்து கெடுக என்று கூறுவதிலிருப்பது கலக உணர்வு. தெய்வம் தொழாஅள் என்பதிலுள்ள உணர்வும் இதற்கு இடம் கொடுக்கும்.   ''குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்" (குறள் 1023) என்ற குறளிலும் தனது குடியினை உயர்த்துவதற்காகப் பாடுபடுகின்றவனுக்குத் தெய்வம் தானாகச் சென்று உதவி செய்யும். செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார். தெய்வத்தை வேண்ட வேண்டியது இல்லை. தானாகச் சென்று உதவும். உதவ வேண்டும். அவ்வாறு உதவுவதுதான் தெய்வம் என்ற கருத்தும் இக்குறளில் அடங்கியுள்ளது. குடிசெய்வதற்கு மட்டுமன்று, பிற நல்ல சமுதாய நலச் செயல்களுக்கும் தெய்வம் விரைந்து உதவ வேண்டும் என்பது பொருள். நல்ல செயல்கள் முயற்சியால் நடைபெற வேண்டும் என்பது இங்கு முதன்மை. தெய்வம் உதவி செய்தால் நல்லது. இல்லையென்றால் வருந்தியழைக்க வேண்டியது இல்லை. உண்மையான அறப்பற்றாளர்கள் சமூகப் பற்றாளர்களுக்கு இத்தகைய தீவிரமான சிந்தனைகள் தேவை. இவையில்லாவிட்டால், அவர் அறங்கூறுபவராக இருக்க வேண்டியதும் இல்லை.   தெய்வத்தை வள்ளுவர் நேரிடையாக மறுக்கவில்லை. ஆனால் சமுதாயத்தின் தேவையை ஓட்டி மறுக்கவும் துணிந்துவிடக் கூடியவர். ''எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்" என்ற குறள் போலவே இக்குறளும் வள்ளுவரைக் கண்டறிய, வள்ளுவர் முறையைத் தீர்மானிக்க வாய்த்த குறள் என்பது தெளிவு.   வள்ளுவரது நூலில் இழையோடிவரும் இறைமை பற்றிய மற்றொரு கருத்தையும் இங்கு சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” (குறள் 50). இல்லறத்தில் இருந்துகொண்டு வாழ்வதற்கு உரிய முறைப்படி வாழ்பவன், வையகத்தில் இருந்த 'போதிலும் வானிலுறையும் தேவர்களுள் ஒருவராக வைக்கப்படுவான் என்பது இதன் பொருள். இதற்கொத்த கருத்தொன்று ''விருந்தோம்பலிலும்” இடம் பெறுகிறது. "செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு" (குறள் 86.) முகம் விரும்பி விருந்தோம்பு கின்றவனுடைய வீட்டில் மனம் விரும்பித் திருமகள் தங்குவாள் (குறள் 84) என்று மற்றொரு குறளில் கூறுகிறார். "ஒப்புரவு என்று புகழத்தக்க செயலுக்கு நிகரானதொரு செயல் இவ்வுலகத்தும் இல்லை. தேவர் உலகத்தும் இல்லை" என்று (குறள் 213) பாராட்டுகின்றார். உலகில் பெரும்புகழ் பெற்றவனையல்லாது தேவர் உலகம் வேறு ஒருவரைப் பாராட்டாது (குறள் 234) என்றும் 'வசையுள்ளவன் வாழும் உலகில் விளைச்சல் குன்றும் (குறள் 239) என்று கூறுவதன் மூலம் புகழ் பெற்றவன் வாழும் உலகில் விளைச்சல் பெருகும் என்றும் கூறுகிறார். வள்ளுவர் பொருட்பாலிலும் இக்கருத்து பலவிடங்களிலும் பயின்று வருகிறது. ''செவியுணவாகிய கேள்விச் செல்வத்தை உடையவர் அவியுணவை உடைய தேவர்களுக்கு நிகராவர் (குறள் 413) என்று கேள்விச் செல்வத்தின் பெருமை பேசுகிறார். ''முறைப்படி அரசாளும் மன்னவன் நாட்டில் மழை பெய்தாலும் விளைச்சலும் மிகப் பெருகும்” என்று (குறள் 545) கூறுகிறார். பிறர்மனக் கருத்தை ஐயுறாமல் தெரிந்து கொள்ளவல்லவன் தெய்வத்திற்கு நிகரானவன் (குறள் 702) என்றும் கூறுகிறார்.   இவ்வாறு உலக வாழ்விலிருந்தே தெய்வங்கள் உருவாகின்றன. முறைப்படி வாழ்வதனால், பலர்க்கு உதவி புரிவதால், உலகத்திற்கென உடல் பொருளைத் தருதலால், புகழ் பெறுவதால், நல்லறிவைத் தேடிப் பெறுதலால், பிறர் உள்ளத்தை அறிந்து உதவும் நுட்ப அறிவாண்மையால், தெய்வ வாழ்வின் பெருமை, மனித வாழ்வில் மலர்கிறது. இத்தகைய மனித தெய்வங்களால் மழை பெய்கிறது. விளைச்சல் பெருகுகிறது. உலகம் நிலைபெறுகிறது. இத்தகையவர் உயிர் வாழும் காலத்திலேயே உலகில் உலவுகின்ற தெய்வங்கள், மனித வாழ்வில் தெய்வீக வாழ்வு கலந்திருக்கிறது. கலந்துறைகிறது. இவ்வாறு கூறும் பல கருத்துகளுக்கு மணிமுடி வைத்தது போல ஒரு குறளைக் கூறுகிறார். ''தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்பது அக்குறள். முன்னர் கூறிய பல கருத்துகளும் இக்குறளில் வந்து நிறைவடைகின்றன. கணவனையே தெய்வமாகக் கருதி வழிபட்டால் போதும், வேறு தெய்வ வழிபாடு வேண்டாம். இத்தகையவர் இயற்கையை ஏவல் கொள்ளும் தெய்வ ஆற்றலுடையவராவார். தமக்குரிய கடமையை முறைப்படி செய்பவர்க்குத் தெய்வ வழிபாடு தேவை இல்லை. இவர்களை நோக்கித்தாமாகத் திருமகள் முதலிய தெய்வங்கள் வந்து தங்கும். “அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்" (குறள் 84). இத்தகைய முயற்சி உடையவர்க்குத் தெய்வங்கள் தேடி வந்து உதவி செய்யும். இத்தகைய இன்பத்திளைப்பில்தான் இன்பத்துப்பாலின் நாயகன் பேசுகின்றான். ''தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொள் தாமரைக் கண்ணான் உலகு" (குறள் 1103). "'உறுதோறு உயிர்தளிர்ப்பத் திண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்" (குறள் 1109) இவ்வாறாக மனிதனுக்குள் தெய்வ ஆற்றலைக் கண்டறிந்த வீரம்தான், "நல்லாறு. எனினும் கொளல் தீது : மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று” (குறள் 222) என்று பேசுகிறது. இக்குறளில், வள்ளுவருடைய ஒரு கருத்தை உறுதியாக அறிந்து கொள்கிறோம். மேலுலக வாழ்வு, வள்ளுவருக்கு இன்றியமையாதது அன்று. மேலுலகத்தையும், தேவைப்பட்டால் துச்சமாகத் தூக்கி எறிந்துவிடும் வீரம் உடையவர் வள்ளுவர். மனிதப் பண்புக்கே வள்ளுவர் முதன்மை தருகிறார். அப்பண்பு சீர்கெடாமல் காப்பதையே கடமையாகக் கருதுகிறார். மேலுலகப் பற்றைக் கூறித்தான் அறத்தை வளர்க்க வேண்டும் என்பது அவருக்குத் தேவையில்லை. உலகில் இருக்கும் வறுமை நிலைமைதான் வள்ளுவரை இவ்வாறு சிந்திக்கத் தூண்டுகிறது. இதனால்தான் ஈதல் வல்லவர்களை, அதனால் புகழ்பெற்றவர்களைத் தெய்வங்களாகவும் மதிக்கத் தொடங்கிவிடுகிறார். வள்ளுவர் மேலிருந்து காப்பதாகக் கூறப்படும் கற்பனைத் தெய்வங்களைப் போல் இவர்கள் உலகிலிருந்து மக்களைக் காப்பாற்றும் உண்மைத் தெய்வங்கள். இக்காரணம் பற்றியே வள்ளுவர் மழையை அமிழ்தம் (குறள் 11) என்று கூறுகிறார். மழையினது தெய்வ ஆற்றலை ஒரதிகாரத்தில் விரித்துரைக்கின்றார். இதனாலேயே துறவிகளின் தெய்வீக ஆற்றலையும் "நீத்தார் பெருமை" என்ற அதிகாரத்தில் விரிவாகப் பேசுகின்றார். துறவியாரை வீட்டுலகத்திற்கான வித்து என்றும், அவர்கள் செயற்கரிய செய்பவர் என்றும், அவர்கள் இந்திரனையும் ஏவல் கொள்ள வல்லவர்கள் என்றும் பாராட்டுகிறார். மனிதனுள் அமைந்திருக்கும் தெய்வ ஆற்றல் - தெய்வங்களையும் ஏவல் கொள்ள வல்ல ஆற்றலைத்தான் வள்ளுவர் இவ்விடத்தில் கூறுகின்றார்.   சமயத் தொடர்பான மற்றொரு கருத்து இல்லறம் - துறவறம் வேறுபடுவது பற்றியது ஆராய்வதற்குரியது. வள்ளுவருடைய கருத்துகளைப் பொருத்தவரை, பிறருடைய கருத்துகளிலிருந்து பெரிதும் வேறுபடக் கூடியதொரு கருத்தைப் பார்க்கிறோம். ''துறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை" (குறள் 42) என்று கூறியவர், அதே அதிகாரத்தில் - இல்வாழ்க்கை, நோற்பாரின், நோன்மையுடைத்து"என்று கூறுகிறார். ''உண்ணாது நோற்கும் பெரியவர். இன்னாச் சொல் நோற்பாரின் நோன்மையுடைத்து" (குறள் 48) என்று கூறுகிறார். ''உண்ணாது நோற்கும் பெரியரும் இன்னாச் சொல் நோற்பான் பின்" (குறள் 160) என்றும், இறந்தார்வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் துறந்தாரின் தூய்மை உடையர் (குறள் 159) என்றும் பொறையுடைமையில் குறிப்பிடுகின்றார். "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் - அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்" (குறள் 225) என்று ஈகை அதிகாரத்திலும் குறிப்பிடுகின்றார். ''மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய்வாரின் தலை"என்று (குறள் 295) வாய்மை அதிகாரத்தில் குறிக்கின்றார்.   மேற்கண்ட குறட்பாக்களில் பொதுவாக உணர்த்தப்படும் கருத்து என்ன? தமக்கு ஏற்படும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு பிறரால் தமக்கு வரும் துன்பங்களையும் தாங்கிக் கொண்டு பிறரது துன்பங்களையும் நீக்க முயல்பவர்கள், இல்லறத்தில் இருப்பவர்களாயினும் அவர்கள் துறவிகளைக் காட்டிலும் சிறந்தவர்கள். இக்கருத்தை விளக்கத் துறவின் இன்றியமையாத மற்றொரு பண்பாகிய தவம் பற்றிய வள்ளுவர் கருத்தையும் ஈண்டு காட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும். ''உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு” (குறள் 261) என்று கூறுகிறார் வள்ளுவர்.   தமக்குப் பிறர் செய்யும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதனால் பாதிக்கப்பட்டுப் பிறர்க்குத் துன்பம் செய்யக்கூடாது - என்ற கருத்தில் தான் துறவறத்திற்கு உரியனவாக வெகுளாமை, இன்னா செய்யாமை ஆகிய அதிகாரங்கள் வருகின்றன. பிறர் தமக்குத் துன்பம் செய்யாவிட்டாலும் தம்மால் பிறர்க்குத் துன்பம் நேர்ந்துவிடக்கூடாது என்பது பற்றியே கள்ளாமை, கொல்லாமை இடம்பெறுகின்றன. பிறர் தமக்கு உதவி செய்யாவிட்டாலும் தாம் பிறர்க்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதற்காகவே அருளுடமை கூறப்படுகிறது. இத்தகைய நிலையினை உடையவர்களின் மனத்தூய்மையே வாய்மையில் உரைக்கப்படுகிறது. துறவற இயலின் பல்வேறு அதிகாரங்கள் தவத்திற்கு உதவியாக - தவத்திற்கு வழியாக - உலகியல் அறமாக, சமுதாயத்தில் எழும் அறமாக இருக்கின்றன. இத்தகைய நல்லறங்கள், இல்லறத்திற்கும் (ஓரளவாவது) தேவையே என்பதில் ஐயமில்லை. இக்கருத்துப் பற்றியே ‘அன்புடமை' இனியவை கூறல், விருந்தோம்பல், செய்நன்றியறிதல், பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம், ஈகை, ஒப்புரவறிதல், புகழ் ஆகிய அதிகாரங்கள் வருகின்றன.அடக்கமுடைமை, நடுவுநிலைமை முதலியனவும் இந்நோக்கிற்கு உட்படுவனவே என்பதில் ஐயமில்லை. துறவறத்தையும், இல்லறத்தையும் இணைக்கும் ஒரு கருத்து, வள்ளுவரது தவம் பற்றிய கருத்து.   பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமலும் தமக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும் தான் தவமானால் முறைப்படி இல்லறம் நடத்துகின்றவர்கள், துறவியர்களுக்கு நிகராவர். "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை" (குறள் 280) என்ற குறளில் முறைப்படியான இல்வாழ்வில் அறம் முழுமையாக நிறைந்துள்ளது என்ற கருத்தைத் தெரிவிக்கின்றார்.   துறவறத்தில் எத்தகைய ஆற்றல் பெருமைகள் முதலியன அடங்கியிருக்குமாயினும், வள்ளுவர் கருத்தின்படி, இல்லறம் துறவறத்தினின்றும் சிறிதும் குறையாத பெருமை உடையது என்பதில் ஐயமில்லை. பின்னர் ஏன் வள்ளுவர் துறவைப்பற்றி விவரிக்கிறார் என்பது சிக்கலான, சுவையான ஆய்வு என்பதில் ஐயமில்லை.   இதுமட்டுமல்ல தவம் பற்றிய இக்கருத்தின் அடிப்படையில் பார்த்தால் சமுதாய நலத்திற்காகப் பாடுபடும் அனைத்து நல்லவர்களும், அறிஞர்களும், விஞ்ஞானியரும் - தம் நலம் துறந்து பிறர் நல மேன்மைக்காகப் பாடுபடுபவர் அனைவரும் ஒருவகையில் துறவியர்க்கு உரிய வாழ்வும் பெருமையும் உடையவர்களே. இவர்கள் திருமணம் புரிந்துகொண்டு மனைவி மக்களோடு வாழ்ந்தார்களாயினும் இவர்கள் துறவியரே. அதுமட்டுமல்ல புற வேடத்தைக் கொண்டு துறவுக்கு இலக்கணம் வகுப்பதை முற்றாக மறுப்பவர் வள்ளுவர். ‘உலகு பழித்தது ஒழித்து விடின் மழித்தலும் நீட்டலும் வேண்டா' என்பவர். இல்லறத்தின் சில வேடங்கள் இருக்கும் - விஞ்ஞானிகள் சமூகத் தொண்டர் முதலியவர்க்கு இருக்கும் துறவறப் பண்பைக் காணத் தவறிவிடமாட்டார் வள்ளுவர்.   வள்ளுவரது ''சமயம்” பற்றிய கருத்துத் தொகுதியில் விதி பற்றிய நம்பிக்கையின் இடத்தையும் பார்ப்போம். ’ஊழிற் பெருவலி யாவுள' (குறள்380) என்று உரக்கக் கூறுகிறார். கற்றறிந்த பேரறிஞருக்கு சில சமயங்களில் பேதைமை செயல்பட்டு அவரைச் சீர்குலைத்து விடுவதையும், கோடி தொகுத்தவரும் துய்க்க இயலாது சில சமயங்களில் நோய் முதலியன நேர்ந்து விடுதலையும், அறிவுடையார்க்கு நேர்ந்துவிடும் வறுமை நிலையையும், செல்வம் சேர்வதற்குத் தீமையே நெறியாகி விடுதலையும் பார்த்து விதி புகுத்திவிடும்" (குறள் 416) இன்மை நம்பிக்கை கொண்டவர் திருவள்ளுவர். விதி வலியது என்ற நம்பிக்கை உடையவராயினும், "உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவ” ரைப் பார்க்கும்போது, அவர்கள் ஊழையும் உப்பக்கம் காண்பதைப் பாராட்டவே செய்கிறார் (குறள் 620) ‘ஊழ்' அதிகாரத்திலேயெ “முற்றின்மை இன்மை புகுத்திவிடும்” (குறள் 416) என்றும் கூறி, வறுமைக்கு விதி காரணம் என்பது போலக் கூறினாலும் முன்னைய கருத்தை மறுத்துவிடுகிறார். விதிக் கொள்கையை உடன்பட்ட போதிலும் அவ்விதியின் அழுத்தத்திலிருந்து மனிதனை விடுவிக்க மிக விரும்புகிறார் வள்ளுவர். விதி அழுத்துவது உண்மையே என்ற போதிலும், அதைத்தாங்க, எதிர்க்க வல்ல மனிதனை உறுதியை வலுப்படுத்த அறம்   இடும்பைகளை உலகத்தின் தவிர்க்க இயலாத இயல்பு எனக் கொண்டவர்க்கு வாழ்வின் துன்பங்கள் இன்பமாகிவிடும் என்றும் குறிப்பிடுகின்றார். (குறள் 428 - 429). செல்வம் பெற்றோம் என்று மகிழ வேண்டாம். அவ்வாறு பெற்றமைக்கு மகிழாதவர், அற்றமைக்கா வருந்தவும் வேண்டாம் (குறள் 426) என்றும் கூறுகிறார். முயன்றால் விதியையும், புறங்காண முடியும் என்று கூறி விதியை விதியை அறவே வெல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் ஊட்டுகின்றார்.   விதியை அறவே வெல்ல இயலாது என்று மட்டும் கூறியிருப்பாரானால், முழுமையாகச் சமய நெறிக்குள் தான் நம்மை வள்ளுவர் அழைத்துச் சென்றிருப்பார். இத்தகையவர் சமயவாதியாகின்ற பெருமை பெற்றிருப்பாரே ஒழிய, அறவியலாளர் ஆகியிருக்க முடியாது. மனித சமுதாயத்தின் மீது பற்றும் சமுதாய ஆக்கத்தின் மீது நம்பிக்கையும் கொண்டவர்தான் சமுதாயத்திற்கு அறம் வகுக்க முடியும். முயற்சியுடன் பாடுபடுபவர்கள், விதியின் வகுப்பால் இடையிடையே தோன்றும் மடியையும் பேதைமையையும் வெல்ல முடியும். சமுதாயத்திலுள்ள நோய் தீர்க்க முடியும். அறிவும் செல்வமும் ஓரிடத்தில் சேர்க்க முடியும். வறுமையை வெல்ல முடியும். சமுதாயத்திலிருந்து தீமையைக் களைய முடியும். செல்வப் பெருக்கத்திற்கு வந்த நோயைத் தீர்க்க முடியும். நேர்மையான வழியில் செல்வம் பெருகுவதற்கு வழிவகை காண முடியும். இத்தகைய ஓர் உயர்நிலைக் குறிக்கோள் சமுதாயத்தை விரும்பும் வள்ளுவர், அத்தகைய உயர்நிலை கிட்டும் வரை இடையறாத, தளராத அதிகாரத்திலேயே முயற்சி வேண்டும் என்று கூறுகிறார். தொடக்க காலத்தில் ’மெய்வருத்தக் கூலி’ தான் கிடைக்கும். ஆனால் இறுதியில் கூறுகிறார் வள்ளுவர். சமுதாயத்தைப் பிடித்திருக்கக் கூடிய ‘ஊழை’ உப்பக்கம் காண முடியும். இடைக்காலத்தில் ‘உடம்பு இடும்பைக்கே இலக்காம்' என்றும் ’இன்னாமையே இன்பம்' எனக் கருதியும் பலர் உழைக்க வேண்டும். இவ்வாறு உழைத்தால் இடையில் தடையாக நிற்கும் ‘தெய்வங்கள்' விலகிவிடும் - வெற்றி கிட்டும்.   விதி என்பது உண்மையில் இயற்கை விதி, சமுதாய விதி. சிந்தனை விதியைக் குறிக்கிறது. இவற்றை மனிதன் விரும்பிய முறையில், விரும்பிய உடனே மாற்றிவிட இயலாது. இதனைப் புரிந்து கொண்டு இதற்கு ஒத்துச் செயல்படுவதனாலேயே சமுதாயம் வளர்ந்த நிலையிலேயே புலப்படுகிறது. பழங்காலத்தில் இது மிகக் குறைந்த அளவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். ஆகவே, மாயையுடன் கலந்தே, அமுங்கியே "விதி" தென்படுகிறது. வள்ளுவரின் விதிக்கருத்து இவ்வகைப்பட்டதே. இந்த ’மாய’ விதி, உயர் சமூக நிலையிலேயே மாறும். இம் மரபு விதியை மாற்றவும் இடையறாத முயற்சி தேவை. மிகமிகத் தேவை. இக்கருத்தே வேறொரு வடிவில் வள்ளுவரிடம் காணப்படுகிறது. இதுகாறும் கூறியவற்றுக்கும் வள்ளுவரது சமய நோக்கில் இறைவன், மேலுலகம், துறவு விதிக் கொள்கை முதலியவை. அவருடைய அறக்கருத்தின் தொகுதியில் இன்றியமையாத அடிப்படைக் கருத்துகளாக இல்லை - என்பது தெளிவாகும். இக்கருத்துகளுக்கு மாறாக மனிதன் முதலியவை பற்றியக் கருத்துகளும், கருத்து முதல்வாத எல்லைக்குள் தான் சுற்றி வருகின்றன. வள்ளுவர் ஓர் அறநூலறிஞர்தான் என்பதை வள்ளுவர் மிக அற்புதமான முறையில் நிறுவுகிறார். சமயவகை மாயச் சிந்தனையை அவரது மனிதவியல் அறச்சிந்தனைகள் வெற்றி கொள்ளுகின்றன.                                                                                                     3. செல்வம் - வறுமைச் சிக்கலில் வள்ளுவர் நிலை   இன்றைய உலகில் எந்தச் சிக்கலை ஆராய்வதென்றாலும் அடிப்படையில் பார்க்க வேண்டிய ஒரு கருத்து - உலகில் நிலவும் ஏற்றத் தாழ்வை ஆராய்வதற்கு எடுத்துக்கொள்கிற கருத்து நிலை என்பதை அறிவதாகும். ஆகவே, இது பற்றி வள்ளுவருடைய கருத்து என்ன என்பதை விரிவாகப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.   வறுமைக் கொடுமை பற்றி வள்ளுவருடைய கருத்துமிகத் தெளிவானது. மிக விரிவானது. நல்குரவு, இரவு, இரவச்சம் ஆகிய மூன்று அதிகாரங்களில் வறுமையின் கொடுமையை வள்ளுவர் பேசுகின்றார். வறுமை உடையவர்க்கு இம்மையும் இல்லை. மறுமையும் இல்லை. குடிப்பிறப்பை அழிக்கிறது. குடிப்பிறந்தாரின் சொல்லில் சோர்வை உண்டாக்கிவிடும். வறுமை பிறதுன்பங்களுக்கும் வித்தாகிவிடுகிறது. வறுமையுடையவர் சொல்லுக்கு மதிப்பில்லை. வறுமையுடையவனிடத்துத் தாயும் மனம் வேறுபடுவாள். வறுமையுடையவர்க்கு உறக்கம் இல்லை. தம் வறுமைத் துன்பத்தை வாய்விட்டுச் சொல்லும் போது உயிர் போய் வருகிறது. இத்தகைய வறுமை உடையவர்க்கு செல்வம் உடையவர் இரக்கம் காட்ட வேண்டும். இரப்பவர்க்குத் துன்பம் இல்லாமற் கொடுக்க வேண்டும்.   ஆகவே, வள்ளுவர் வறுமை உடையவரிடம் முழுமையாகப் பரிவு காட்டுகிறார். வறுமை மக்களது பண்பாட்டை , நல்லியல்புகளை நாசம் செய்துவிடுவதைப் பெருங் கொடுமையாகக் குறிப்பிடுகிறார். அதுபோலவே கொடுப்பவனை உலகிற்கு ஓர் அழகாகவும் குறிப்பிடுகிறார். வறுமையுடையவர்க்குத் தருதல் மூலமாக, கொடையாளர்க்கு ஏற்படும் பெருமையை நினைவு படுத்துகிறார். எந்நிலையிலும் இரவாமை சிறந்த கொள்கையாகவும் கூறுகிறார். கொடுப்பவனுக்கு ஏற்படும் பெருமை போலவே, இரவாதவர்க்கு ஏற்படும் பெருமையையும் பாராட்டுகிறார். உழைத்து வருவது கூழ் என்றாலும் அதன் உயர்வையே புகழ்கிறார்.   ஒப்புரவறிதல், ஈகை, புகழ் ஆகிய அதிகாரங்களில் கொடையினை விரிவாகக் கூறுகிறார் வள்ளுவர். மாரி போலக் கொடுக்க வேண்டும். செல்வம் திரட்டுவது முழுவதும் கொடுப்பதற்காகவே, பிறர் துன்பத்தை அறிபவனே - அறிந்து உதவுபவனே உயிர் உடையவன் மற்றவன் செத்தவன்.   1. வறுமைக்கும் தீக்குணத்திற்கும் உள்ள உறவை வள்ளுவர் குறிப்பிடுகிறார். வறுமைச் சூழலில் தீக்குணம் உண்டாகிறது. நற்குணம் நிலைப்பதில்லை. வறுமைத் துன்பம் பிற துன்பங்களுக்கும் நோய் முதலிய துன்பங்களுக்கும் காரணமாகிவிடுவதையும் குறிக்கின்றார். இக்கருத்திலிருந்து புரட்சிகரமான முடிவுகளை வள்ளுவர் வகுத்திருக்க முடியும். ஆனால் வகுக்கவில்லை.   2. ஒரு பொருட்டாக மதிப்பதற்கில்லாத தீயவரிடமும் செல்வம் சேர்ந்துவிடுகிறது. (குறள் 751). அந்தப் பொருள், எதையும் சாதிக்கத்தக்க ஆற்றலுடையதாகவும் மாறிவிட்டது. இத்தகையவன் செல்வத்தைப் பிடித்த நோய் - பேய். செல்வச் சேர்க்கை, சமுதாயத்தைப் பிடித்தநோய் - பேய். செல்வச் சேர்க்கையே ஒருவனைத் தீயவனாக்கிவிடுகிறது. மதிப்பற்றவனையும் மதிக்கத் தக்கவனாக்கிவிடுகிறது. நற்குணம் முதலியவை அவனுக்கு அலங்காரமாக்கப்படுகின்றன. இவ்வாறு வள்ளுவர் கருதுகிறார்.   வறுமையும் மனிதனைக் கெடுக்கிறது. செல்வமும் கெடுக்கிறது. எந்நிலையில் என்பது பற்றிய கருத்தும் இல்லை. வறுமையால் கெடுவதைக் குறிப்பிடுபவர், செல்வத்தால் கெடுவதைக் குறிப்பிடவில்லை. வறுமை நிலையிலும் நற்குணத்தை முயன்றால் காத்துக்கொள்ள முடியும். மனித இயல்புக்கு அத்துணையாற்றல் வேண்டும். அதுபோல ஏற்கனவே தீயவனிடம் சேரும் செல்வம் தான் நோயாகிறது. பேயாகிறது. எனவே, தீக்குணமே வித்து, தீமை, விளைவே மனித இயல்புக்கே முதன்மை தருவது வள்ளுவர் சிந்தனைப் போக்கு.   3. நடுவூருள் நச்சுமரம்: ஊர் நடுவிற்கேணி: உள்ளூர்ப் பழுத்த மரம் இவ்வாறு வள்ளுவர் குறிப்பிடுவதன் நோக்கம், ஊர் நடுவுள் நல்லவர்தான் இருக்கவேண்டும். ஆனால் தீயவன் வந்து திறமையாக இருக்கிறானே! அவனைக் கண்டு வேக வேண்டியிருக்கிறதே. ஊருக்குள் சமுதாயத்திற்குள் இருப்பவன் தீயவனாக இருக்கக்கூடாது. (ஊர் நடுவில், கேணியும், பழமரமும் ஊர்ப் பொதுவாக இருந்த கால நினைவு அல்லது குறிப்பும் இங்கு இருக்கலாம்).   4. செல்வம் தன்னளவில் நல்லது. செல்வம் அறமும், இன்பமும் ஆக்கும். பலரை வாழ்விக்கும். அது நன்பால் போன்றது. ஆனால் தீயவரிடம் சென்று தங்குவதால் பாலில் சேர்கிறது. (திறனறிந்து தீதின்றி வந்த பொருள் - தீதில்லாமல் செல்வம் சேர்க்க முடியும். தீதில்லாமல் செல்வம் வருமானால் நல்லது. வள்ளுவரிடத்தில் இரண்டு கருத்தும் உண்டு. நல்லவரிடத்துள்ள செல்வம் ஊர் நடுவிலுள்ள கேணியின் நீர் போன்றது. மருந்தாகித் தப்பா மரம் போன்றது. பயன் மரம் உள்ளூர்ப் பழுத்த மரம் போன்றது. இத்தகைய கொடைக்காக உயிரையும் கொடுக்கலாம். (குறள் 220). வறியவர்க்குக் கொடுக்க வேண்டும். (குறள் 221). அஃதே கொடை. மேலுலகத்தை எதிர்பார்த்துக் கொடுப்பது வேண்டாம். (குறள் 222) கொடுப்பது உலகியல்பாகிவிட வேண்டும். வறியவர் துன்பம் தீர்ப்பதே செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வழி. (குறள் 226). பகுத்துண்டவனுக்குப் பசி இல்லை. (குறள் 227). ஈத்து உவக்கும் இன்பம் பேரின்பம். (குறள் 228). இதற்கு நிகரானது இல்லை. கொடையின் மூலம் அழிவை ஏற்றுக் கொள்ளும் அறிவுடையவரே அழியாமையைப் பெறும் பேரறிஞர். (குறள் 231). ஈதலின் மூலம் கிடைக்கும் புகழே மனித உயிர்க்கு உயர்ந்த புகழ். இப்புகழைப் பெறுபவனே உலகிற் பிறந்தவன்.   கொடை வாழ்விற்குள்ளேயே முழுமையான வாழ்வைப் பார்க்கிறார் வள்ளுவர். இஃதே பேரின்பம். இஃதே உயிர் வாழ்க்கை . இதற்காகவே பிறக்க வேண்டும். உழைக்க வேண்டும். இறக்க வேண்டும். இடையில் எல்லாத் துன்பங்களையும் ஏற்க வேண்டும். வருபவை துன்பம் கூட அல்ல. அவையும் இன்பமே. இவ்வாறு கூறி. ஒரு முழுமையான வாழ்வினைக் கொடையைச் சார்ந்து உருவாக்கி விடுகிறார்.   மேற்குறிப்பிட்ட அதிகாரங்களைத் தவிர்த்து "பொருள் செயல் வகை” என்ற அதிகாரத்தில் முன்னர்க் குறிப்பிட்ட சிக்கல் பற்றிக் குறிப்பிடுகிறார். ஒரு பொருளை மதிக்கத் தகாதவரையும் மதிக்கத்தக்கவனாக்குவது பொருளே . செல்வர்க்கு எல்லாருமே சென்று சிறப்புச் செய்வார். பொருள் எத்தேயத்தும் சென்று, தன் காரியத்தை முடித்துக்கொள்ளும். பொருள், தேசத்தை மதிப்பதில்லை. பொருள். தேயம் கடந்தும் தன் ஆதிக்கத்தைச் செலுத்த விரும்பும். செலுத்தும் தேயங்களை வென்று ஒருமையாக்குவது பொருள். (பொருளுற்பத்தி பண்டமுறை பற்றிய இக்காலக் கருத்திற்கு ஒத்தது). தீதில்லாமல் வந்த செல்வம், அறமும் இன்பமும் தரும். அருளோடும் அன்போடும் பொருள் சேர்க்க வேண்டும். இவ்வாறு சேர்க்காதவர், தேவையில்லை. பொருள் என்ற செவிலி வளர்ப்பதால் அன்பு ஈன்ற குழவியாகிய அருள் வளரும். துறவிக்கு மட்டுமா அருள்? பகைவரைத் தொலைக்கும் கூரிய எஃகு. பொருளே தவிர வேறில்லை.   ’நன்றி இல் செல்வம்’ என்ற அதிகாரத்திலும், இதன் தொடர்பான கருத்துகள் வருகின்றன. பெரும் பொருளைத் தொகுத்து வைத்தும் அதனை நுகராதவன் செத்தவன். பொருளைத்தாமே வைத்திருப்பவர்க்கு, மாட்சியில்லாத பிறப்புக்கள் ஏற்படும். பொருளைத்தானே வைத்திருப்பவன் உலகில் வாழும் பேய். மாட்சியற்ற பிறப்புடையவன். ஆகவே. இவன் மறுபிறப்பும் - மாட்சி கெடும். இந்த வகையவர் உலகிற்குச் சுமை. பலர் தன்னை விரும்புதலே எச்சம். எச்சம் இல்லாதவன் என்ன மனிதன்? கோடி தொகுத்தவர்க்கும், துய்த்தல் இல்லாவிட்டால் என்ன இன்பம் உண்டாகும்? பிறர்க்கு ஈயாதவன் பெருஞ் செல்வம், செல்வத்தைப் பிடித்த நோய். இச் செல்வம், மிக நலம் பெற்றாள் தமியளாய் மூத்ததைப் போன்றது. இவன் செல்வம் நடுவூருள் நச்சுமரம் பழுத்தது போன்றது. இவன் செல்வத்தைப் பிறரே பயன்படுத்துவர்.   1. குறிப்பிட்டதொரு காலச்சூழலில் செல்வம். நோயாகவும், அமுதமாகவும் இரு வேறுபட்ட தோற்றம் அளிக்கவே செய்யும். தவிர்ப்பதற்கு இல்லை.   2. குணவியல்களின் தோற்றக் காரணத்தை ஆராய்ந்து வள்ளுவர் ஏதாவது கூறுகிறாரா என்று பார்க்க வேண்டும். ‘நிலத்தியல்பால் நீர்' (குறள் 452) என்ற பாடலில் சேரும் இனத்திற்கேற்ப குணம் மாறுவதைக் குறிப்பிடுகிறார். வறுமையால் குணம் கெடும் என்றும் குறிக்கிறார். ‘நிலத்திற் கிடைந்தமை கால் காட்டும்’ (குறள் 959) என்ற பாடலில், குலத்தின் இயல்புக்கேற்பக் குணம் மாறும் என்றும், ‘அறிவினால் ஆகுவது உண்டோ'(குறள் 315) முதலிய குறள்களில் வறுமை நிலையிலும் நற்குணங்களைக் காத்துக் கொள்ளவும் முடியும் என்று கூறுகிறார்.   ’சிறப்பீனும் செல்வமும் ஈனும்' - (குறள் 31) இக்குறள் பண்டைப் பொதுமை முறையிலேயே செல்வச் சேர்க்கை இருக்க முடியும். அதுவே உயிர்க்கு ஆக்கமும் தரும் என்ற கருத்தை உள்ளடக்கியது. உயிர் - பண்டையப் பொதுமையை உட்கொண்டது.   இதே சிக்கல் பற்றி இன்னும் பல்வேறு அதிகாரங்களில் வள்ளுவர் குறிப்பிடுகிறார். அறம் செல்வத்தையும் தரவல்லது. (குறள் 31). இல்லறத்தில் இருப்பதே விருந்தோம்புவதற்காக (குறள் 81). நாள்தோறும் விருந்து வரவேற்பவன் வாழ்க்கை கெடுவதில்லை. (குறள் 83). இத்தகையவன் வீட்டில் திருமகள் விரும்பித் தங்குவாள். (குறள் 84) இவன் தேவர்க்கு விருந்தாவான். (குறள் 86). யாரிடத்தும் இனிய சொல் பேசுகின்றவர்க்கு வறுமை இல்லை. (குறள் 84). நடுவுநிலைமை உடையவன் செல்வம் குறைவில்லாமல் எச்சத்திற்கு ஆகும். (குறள் 112). செல்வக் கேடும் செல்வப் பெருக்கமும் உலகில் இயல்பானவை. (குறள் 115). (பழைய வரலாறு மறந்துவிட்ட நிலை) நடுவு நிலைமை உடையவன் வறுமையைக் கேடாக உலகம் கருதுவதில்லை. (குறள் 117). நடுவு நிலைமையுடன் வாணிகம் செய்பவர்க்கு வாணிகம் நன்றாகும். (குறள் 120). பொறாமைப் படுபவனிடம் திருமகள் தங்கமாட்டாள். (குறள் 107). பொறாமைப்படுகின்றவன் செல்வம் பெறுகிறான். நேரியவன் செல்வம் இழக்கிறான். இதன் காரணமாக செல்வம் பெறுகிறான். நல்லவன் செல்வத்தில் கெட்டதும் இல்லை. (குறள் 170). நேர்மை இல்லாமல் பிறர் பொருளை விரும்பினால் குடி அழியும். குற்றம் பெருகும். (குறள் 171) தமக்கு இல்லை என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பக்கூடாது. (குறள் 174). செல்வம் குறையாமல் இருப்பதற்கு வழிபிறர் பொருளை விரும்பாமல் இருத்தல் (குறள் 178). பிறர் பொருளை விரும்பாதவனிடம் திருமகள் தங்குவாள் (குறள் 179) பிறர் பொருளை மனத்தாலும் விரும்பக்கூடாது. (குறள் 282). இவ்வாறே கருதிப் பலரும் பிறர் செல்வத்தைப் பறிக்க விரும்பவில்லை என்றால், தம்மிடம் உள்ள செல்வமும் குறைவதற்கு வாய்ப்பில்லை. இந்த உண்மையைத்தான் சுருக்கமான முறையில் வள்ளுவர் கூறுவதாக இருக்கவேண்டும். கூத்தாட்டத்தை போலச் செல்வத்தின் போக்கும் வரவும் இருக்கிறது. (குறள் 332). கூத்தாட்டத்தைப் போலச் செல்வம் - நிலவுடமைச் செல்வமாக இருக்க முடியாது. வணிக வகைச் செல்வமாக இருக்க முடியும். வணிக வகைச் செல்வமாகத்தான் இருக்க வேண்டும். இதுதான் சேரும்போது ஒவ்வொன்றாகச் சேரும். போகும் போது ஒன்றாகப் போய்விடும். செல்வத்தை அனுபவிப்பதும் நாடக மேடைக்காட்சி போல ஆரவாரத்தோடும் செயற்கையாகவும் இருக்கிறது. செல்வம் நில்லாத இயல்புடையது. அதைப் பெற்றால் நிலையான செயல் விரைந்து செய்து கொள்ள வேண்டும். (குறள் 332). உலகம் இருவேறுபட்ட இயல்புடையது. (பழைய வரலாறு மறந்துவிட்ட நிலை). செல்வமும். அறிவும் வெவ்வேறானவை. (குறள் 374). ஆகூழால் முயற்சி வரும். போகூழால் மடி தோன்றும். (குறள் 371). முயற்சியினால் தான் செல்வம் வருகிறது என்ற கருத்து உடமை வர்க்கத்தினருக்கே உதவியான கருத்து. எவ்வளவு முயன்றாலும் ஏழைகள் செல்வம் சேர்க்க முடிவதில்லை. சிறிது முயன்றாலும் பெருஞ் செல்வம் செல்வர்க்குச் சேர்ந்துவிடுகிறது. தவிர, வறுமைச் சூழலில் ஏழைகளுக்கு முயற்சியும் தோன்றுவதற்கில்லை. ஆகவே, முயற்சிகூட விதியினால் ஏற்படுகிறது என்ற மாயைக்குள் நுழைந்துவிட வேண்டும். ஏழைகளைச் சோம்பேறிகள், செல்வரை ஆள்வினையாளர் என்று கூறும் இப்போக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. முயற்சி - மடி என்பதைவிட விதி என்பது பொருந்திய காரணமாகத் தோன்றுகிறது. செல்வத்தை ஆக்குவதற்கு உரிய சிறந்த வழிகள், ஊழின் ஆட்சியால் தோல்வியுறும் தீயவழிகள் நல்லனவாகும். (குறள் 375). நல்ல விதியமைந்தால், பொருள்களைக் கொட்டினாலும் குறைவதில்லை. தீய விதிக் காலத்து, வருந்திக் காப்பினும் நிற்பதில்லை. (குறள் 376). ஊழ் விதிப்படியே அனுபவிக்க முடியும். கோடி தொகுத்தவரும் தம் விருப்பம் போலத் துய்க்க முடியாது. (குறள் 377) அறத்துப்பாலில் பொருள் - வறுமை பற்றி வருவன மேற்கண்ட கருத்துக்கள் பொருளாதாரத்தில் வரும் குறட் கருத்துகளை இனிப் பார்ப்போம். செல்வம் உடையவர் முன் வறியவர் பணிந்து நிற்பது போல ஆசிரியரிடம் மாணவர் பணிந்திருந்து கல்வியைப் பெற வேண்டும். (குறள் 395). கல்வியைத் தவிரப்பிற செல்வங்கள் அழிபவை - சிறப்பில்லாதவை (குறள் 400). நல்லவர் இடத்துள்ள வறுமையிலும், கல்லாதவரிடம் உள்ள செல்வம் துன்பம் செய்கிறது. (குறள் 408). அறிவு உடையவரே எல்லாவற்றையும் உடையவர் (குறள் 430). செருக்கும் சினமும் இல்லாதவரிடம் செல்வம் பெருகும் (குறள் 431). பொருளால் தேவையானவற்றைச் செய்து கொள்ளாமல் இருப்பவன் வறிதே கெடுவான் (குறள் 437). பற்றுள்ளம் கூடாது (குறள் 438). அளவறிந்து கொடுப்பதே, பொருளைப் போற்றி வழங்கும் முறை (குறள் 477). வருமானம் வரும் வழி சிறயதாயினும் குற்றமில்லை . செலவாகும் வழி மிகுந்துவிடக் கூடாது (குறள் 478) அளவறிந்து வாழாதவன் வாழ்க்கை பெருமை உடையது போலத் தோன்றி இறுதியில் கெடும். (குறள் 479). செல்வத்தால் பெற்ற பயன் சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகுதல் (குறள் 524). காக்கை போலக் கரைந்துண்பவர்க்கே ஆக்கம் உண்டு. (குறள் 527). மக்கள் அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அரசு செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் 555). கொடுங்கோல் மன்னன் நாட்டில் வறுமையினும் பொருளுடைமையே இன்னாத்து (குறள் 558). அருஞ்செல்வியும் இன்னாமுகமும் உடையவன் செல்வம் பேய் கண்டது போன்றது (குறள் 565). கடுஞ் சொல்லும் கண்ணற்ற தன்மையும் உடையன் செல்வம் கெடும் (குறள் 566). ஊக்கம் உடையவனிடம் செல்வம் வழிகேட்டுச் செல்லும் (குறள் 594 ) முயற்சியால் செல்வம் பெருகும். மடியால் செல்வம் கெடும் (குறள் 616,617). பழியால் வரும் செல்வத்தைவிடச் சான்றோர்க்கு வறுமையே சிறந்தது (குறள் 657). பிறர் வருந்தச் சேர்த்த பொருளெல்லாம் தான் அழுமாறு தன்னை விட்டு நீங்கும் (குறள் 659) வஞ்சனையால் பொருள் செய்து பாதுகாத்தல் பச்சை மண் பாத்திரத்தில் நீர் சேர்த்து வைப்பது போல (குறள் 660). குறையாத விளைச்சலும், தக்கவரும், செல்வரும் ஒரு நாட்டிற்குத் தேவை (குறள் 731). பேதை பெருஞ் செல்வம் பெற்ற போது அயலார் துய்ப்பர். உறவினர் பசிப்பர் (குறள் 837). பேதையினிடம் செல்வம் சேர்வது பித்தன் கள்ளுண்டது போன்றது (குறள் 838). புல்லறிவாளன் மனம் மகிழ்ந்து தருதலுக்குக் காரணம், பெறுவான் செய்த தவம் (குறள் 842). பண்பிலான் பெற்ற செல்வம் நன்பால் கலந்தீமையால் கெட்டது போன்றது (குறள் 1000). கொடிறுடைக்கும் கூன்கையர்க்கே கயவர் தருவர் (குறள் 1077). கரும்பு போல் கொன்றால்தான் கீழ்மக்கள் பயன்தருவர் (குறள் 1078)   1. இல்லறத்தின் குறுகிய எல்லைக்குள், துறவறத்தின் மாயத்திற்குள் பண்டையப் பொதுமையறத்தை மறைத்து வைத்துக் காப்பாற்ற வேண்டியுள்ளது.   2. அரசு, செல்வம் முதலியவற்றை நன்மை, தீமை என்று மட்டும் பார்த்து முடிவு செய்ய இயலாது. இதனையறிய வரலாறு வேண்டும்.   வள்ளுவரது இலட்சியமாக்கம் (Idealisation) 1. தமிழ் இலக்கியப் பரப்பில் முதன்முதலாக வாழ்வில் மிகச் சிறந்த பண்பாடுகளை எடுத்து நிறுத்திய பெருமை வள்ளுவர்க்கு உரியது. வாழ்க்கையின் இணையற்ற இலட்சியங்களை உருவாக்கியவர் வள்ளுவர். இவரது சான்றோர்கள் மிகச் சிறந்தவர்கள். வாழ்க்கையை இலட்சியமயப்படுத்த முயன்றவர் வள்ளுவர். இலட்சியப்பண்புகளை உருவாக்கிய வள்ளுவரது ''முறை” தொடர்ந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளது.   2. இத்தகைய இலட்சியமாக்குதல் போக்கு, வாழ்க்கையை முடமாக்கும் - புலன் உணர்வில் முற்றும் அழுத்திவிடும் போக்கு (Vulgarisation) எதிரிடையானது. இவ்வகையில் வள்ளுவரது இலட்சிய ஆக்கம் பாராட்டுக்கு உரியதுதான். மனிதனது அறிவு, பண்பு, மனிதன் - விலங்கு - மரம், செத்தவன் - உயிருள்ளவன் என்று வேறுபடுத்தும் போக்கு ஆகியவை - ஆகிய கருத்து உருவங்களைக் கொண்டு இச்சிக்கலை வள்ளுவர் கூறியுள்ளார்.   3. வள்ளுவர் தம் இறைமைக் கூற்று, உயிரைத் தனியாகப் பிரித்தல், உலகிற்கு இறைவன் காரணம், அறிவு, பண்பு ஆகியவற்றின் முதன்மை, மேன்மை ஆகியவற்றைக் கொண்டு கருத்து முதல்வாதி, ஆன்மீகவாதி என்று கூறிவிடலாம். ஆனால், இவ்வாறு கூறுவது எச்சிக்கலையும் தீர்ப்பதற்கு உதவியாவதில்லை. இவரது ஆன்மீகவாதத்தில் பொருளியல் தாக்கம் உண்டு. அது எவ்வளவு என்று கண்டறிய வேண்டும். இதுதான் ஆய்வுக்கு உரியது. புற உலகின் இருப்பை வள்ளுவர் மறுக்கவில்லை. நாடு, அரசு நன்றாக இருக்க வேண்டும் என்பதில் கருத்து உடையவர் வள்ளுவர்.   உயிராக்கம் - உடலாக்கத்திலிருந்து வேறுபட்டது - வள்ளுவரில் இடம் பெறுவது போலத் தோன்றுகிறது.   வள்ளுவரின் கருத்துகளில் ஒருசிலவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். வறுமை உலகில் அறவே கூடாது என்பதில் வள்ளுவர்க்கு முழு உடன்பாடு இருக்கிறது. வறுமை தீர்வதற்கு வழி. செல்வர்களின் கொடையைத் தவிர வேறு வழி வள்ளுவரைப் பொறுத்தவரை இல்லை. ஒப்புரவு, ஈகை முதலிய அதிகாரங்களில் வள்ளுவர் கூறும் கருத்துகளைப் பார்க்கும் போது, செல்வம் உடையவர் தமது அனைத்துச் செல்வத்தையும் கொடுத்தால் வறுமை தீருமென்றால் தீர்க்க வேண்டும் என்பதும், வறுமை அவ்வளவு பிரிந்து பெருகி வளர்ந்துவிட்டது என்பதும், வறுமைத் தீர்வு நோக்கில் இச்சிக்கல் பார்க்கப்பட வேண்டும் என்பதும் வள்ளுவர் கருத்தாக இருக்க வேண்டும். கடவுளை நம்பியிருப்பதால் இச்சிக்கல் தீர்வதற்கு இல்லை என்ற கருத்தும் வள்ளுவர்க்கு இருக்கவே செய்கிறது. செல்வம் உடையவனது கடமை, வறுமையைத் தீர்த்தல் என்ற முறையில் வள்ளுவர் பார்க்கவில்லை. காரணம் செல்வம் உடையவன் செயலால்தான் வறுமை உலகில் ஏற்பட்டது என்பது வள்ளுவர் கருத்தன்று. கொடைச் செயல் செய்யாதவனைப் பண்பற்றவன். அவன் செல்வம் நச்சுமரம், பேய்காக்கும் செல்வம் என்றெல்லாம் வள்ளுவர் இழித்துரைக்கவும் செய்கிறார். அதுபோலவே கொடுப்பவன் செல்வம், ஊருணி, ஊர் நடுவில் பழுத்த மரம், மருந்து மரம், என்றெல்லாம் புகழவும் செய்கிறார். வறுமைக் கொடுமை மிக்க உலகில், இரப்பவர்க்கு மனம் உவந்தளிப்பவன், ஓர் அழகு என்பதில் ஐயமில்லை. வறுமை மிக்கவன் மானக்கேடு நோக்கி இரவாமல் இருந்து உயிர்விடுவான் என்றால் வள்ளுவர் பாராட்டவே செய்வார். அதுபோலவே, இரப்பவர்க்கு இல்லை என்று கூறுபவன், ஏன் இறப்பதில்லை - இறந்துவிடக்கூடாதா என்றும் கேட்கிறார் வள்ளுவர். வறுமை தீர்வதில் வள்ளுவருக்கு முழுமையான விருப்பம் இருப்பது தெளிவு. செல்வம் என்பது ஊர் மக்களுக்குப் பொதுவான ஊருணிபோல பிணிதீர்க்கும் மருந்து போலத்தான் பயன்பட வேண்டும் என்பதிலும் வள்ளுவருக்கு முழுமையான உடன்பாடு உண்டு. (இவற்றிலிருந்து, வறுமைத் தீர்வுக்கு வள்ளுவர் பண்பாட்டைத்தான் வழியாக்குகிறார் என்று தோன்றுகிறது)   வறுமை அல்லது செல்வம் ஏன் சிலரிடம் சேர்கிறது என்பது வள்ளுவர் நூலில் சிக்கலான ஒரு கேள்வி. இக்கேள்விக்கு மாறுபட்ட, பலவகையான, ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட விடைகளை வள்ளுவர் தருவதாகத் தோன்றுகிறது. அறம் செல்வத்தைத் தரும். விருந்தோம்புபவன் வீட்டில் திருமகள் விரும்பித் தங்குவாள். நேர்மையான வாணிகம் செய்வார்க்கு வாணிகம் சிறக்கும். பொறாமைப் படாதவனுக்குச் செல்வம் சேரும். பிறர் பொருளை விரும்பாதவனிடம் திருமகள் தங்குவாள். காக்கை போலக் கரைந்துண்பவர்க்கே செல்வம் சேரும். பெருகும். தீமை செய்பவனிடம் செல்வம் நில்லாது நீங்கும். வஞ்சனையால் பொருள் சேர்த்து வைத்தால் நில்லாது: இத்தகைய கருத்துகளில் இழையோடும் ஓர் அடிப்படை, நல்லவர்க்குச் செல்வம் சேரும். தீயவரைச் செல்வம் சேராது. பிரித்துவிடும். செல்வச் சேர்க்கைக்கும், நீக்கத்திற்கும் நன்மை - தீமைப் பண்பே காரணம். இது ஒருவகைக் காரணம்.   தீயவனாகவும் இருக்கிறான். அவனிடம் எப்படியோ செல்வம் சேர்ந்துவிட்டது - அதுமட்டுமன்று: தொடர்ந்து இருக்கவும் செய்கிறது. பெருகவும் செய்கிறது. ஏன் என்று கேட்டால் வள்ளுவர் தரும் விடை, அளவிறந்து ஆவது போலத் தோன்றி இறுதியில் அச்செல்வம் கெடவே செய்யும். அழக் கொண்டவையெல்லாம் அவரே அழுமாறு, அவரை விட்டு நீங்கும். அன்றி அழியவே இல்லையென்றாலும் அவன் செல்வம் பேயின் செல்வம். பைத்தியக்காரன் கள்ளுண்டு களித்தலைப் போன்ற செல்வம்; அச்செல்வம் கள்வராலும் தியவரால் கவரப்பட்டு அழிந்துவிடும் நில்லாது.   முயற்சியால் செல்வம் பெருகும், முயற்சியின்மையால் வறுமை ஏற்படும் - இப்படியும் ஒரு காரணம் கூறியிருக்கிறார். ஊக்கம் உடையவனிடம் செல்வம் வழி கேட்டுச் செல்லும்.   நல்லூழ்க் காலத்தில் முயற்சி தானே வரும். தீயூழ்க் காலத்தில் முயற்சி கெடும். மடி பெருகும். செல்வம் திரட்டுதற்குத் தேவையான சிறந்த வழிகளும் தோற்றுவிடும். செல்வம் அதனுடைய இயல்பு நிலையில்லாதது கூத்தாட்டு அவைக் குழாம் போல வரும் - நீங்கும். கேடும் பெருக்கமும் உலகின் இயல்புகள். இவற்றைச் சார்ந்து நற்குணமோ தீய இயல்புகளோ இருந்துவிடக் கூடாது. இவ்வாறும் வள்ளுவர் கூறியிருக்கிறார்.   பொருளைப் போற்றி வழங்க வேண்டும். செல்வத்தைக் காக்கும் வழி இது - இஃதும் வள்ளுவர் கூற்று.   தவம் செய்தவர் மறுபிறப்பில் செல்வம் உடையவராவர். செய்யாதவர் மறுமையில் வறுமையுடையவர். இதுவும் வள்ளுவர் கருத்தே.   இறுதியாக ஒரு கருத்து. "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்". பொறாமைப்படுபவன் செல்வம் பெறுகிறான். நல்லவன் செல்வம் அழிகிறான். தீயவனிடம் செல்வம் இருக்கக்கூடாது. நல்லவனிடம் செல்வம் இருக்க வேண்டும். நிலைமை நேர்முரணாக இருக்கிறது. இரு வேறு உலகத்து இயற்கையாகிவிட்டது. திருவும் அறிவும் - செல்வமும் பண்பும் இருவேறு தன்மைகளாகிவிட்டன. இதன் காரணம் புரியவில்லை. இதுதான் ஊழ்.   இதுவரை பார்த்ததிலிருந்து என்ன முடிவுக்கு வருவது பொருத்தமாக இருக்கும்?   1. ஏற்றத் தாழ்வு சமுதாயத்தின் கொடிய சிக்கல் என்பதில் வள்ளுவருக்கு உடன்பாடுதான். ஆகவேதான் வேறு எந்த ஒரு கருத்திற்கும் தராத அளவு 135க்கும் மேற்பட்ட குறள்களில் இது பற்றிக் குறிப்பிடுகிறார்.   வறுமை தீர வேண்டும் என்பதில் வள்ளுவரின் பேரார்வம் இணையற்றது என்று கூறுவது மிகையாகிவிடாது.   செல்வம், வறுமைக்கான காரணம், ஆராய்ச்சிதான் இச்சிக்கலின் தீர்வுக்கு வழிவகுக்கும். வள்ளுவரைப் பொறுத்தவரை பலவகையான காரணங்களைக் கூறிச்சிக்கலை விளங்கிக் கொள்ள முயற்சி செய்கிறார். முயற்சி உண்மையானது. பாராட்டத் தக்கது. இறுதியில் தமது அறிவால் விளங்கிக் கொள்ள இயலாத தன்மையையும் குறிப்பிடுகிறார். இது சமுதாயத்தின் விதி என்று கூறி முடிக்கிறார். இதுவே உலகத்தின் இயல்பாகிவிட்டது. உலகம் தோன்றிய காலம் முதல் இந்நிலையே நீடித்து வருகிறது. இதற்குக் காரணம் இருந்தே தீரவேண்டும். காரணம் - விதிக்கே வெளிச்சம்.   விதி நம்பிக்கையாக்கத்திற்கு வள்ளுவர் கருதிய காரணங்களில் குறிப்பிடத்தக்கது, செல்வம் - வறுமைச் சிக்கல். செல்வம் இருந்தும் துய்க்க முடியவில்லை. முயற்சி செய்தும் வறுமை தீரவில்லை. அறிவிருந்தும் சில சமயங்களில் அறிவு பயனற்றுப் போய்விடுகிறது. நல்லவனுக்குச் செல்வம் சேர்வதில்லை. தீயவனுக்குச் சேர்கிறது. இவை சிக்கல்கள்.   புதிதாகச் சமுதாயத்தில் சேர்ந்துவரும் செல்வத்தைச் சிந்தனைக்குள் கட்டுப்படுத்த இயலாமல் வள்ளுவர் திணறுகிறார். செல்வத் தோட்டத்தில் நியாயமான மனித உழைப்புக்கு இடம் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. 2. செல்வம், வறுமை ஆகியவற்றின் தோற்றத்திற்கான காரணத்ததைப் புரிந்து கொள்ள இயலாத நிலையில், விதியின் கைகளில் மட்டும் சிக்கலை ஒப்படைத்துவிட்டு ஓர் அறவியலாசிரியர் சோர்ந்து இருந்துவிட முடியாது. ஆகவேதான் அறியாமை மிக்க சூழலில் தாம் அகப்பட்டிருப்பதை உணர்ந்து கொண்ட போதிலும், இந்த அறியாமையையே பயன்படுத்தி ஏதாவது அறத்தை மக்கள் மனத்தில் பதித்துவிட முடியுமா இருக்கும் கொடுமைகளைச் சிறிதளவாவது குறைக்க முடியுமா என்று ஆசிரியர் கருதினால் அதை முழுமையும் குற்றமுடையது என்று கூறிவிட முடியாது. கருத்துகளுக்கு இடையில் முரண்பாடு இருப்பது தோன்றினாலும் இந்த முரண்பாட்டைக் கடந்து செல்வதற்கு, இவ்வாறு கூறிச் செல்வதைவிட வேறு நெறியும் இல்லை.   செல்வம், வறுமைச் சிக்கலில் வள்ளுவருக்கு முரண்பட்ட கருத்துகள் உள்ளன என்பது தெளிவு. வள்ளுவர் தம் கருத்து. முரண்பாடில்லாத வளர்ச்சி நிலை தெளிவு நிலை நோக்கிச் செல்வதை வள்ளுவர் மறுக்கமாட்டார். சமுதாய நிகழ்ச்சிகளில் ஞானி தொடர்ந்து எக்காலத்தும் குழப்பம் - முரண்களும் இருப்பதை எந்த அறிஞரும் விரும்பமாட்டார். குறிப்பாக, வறுமை ஒழிப்பில் முதன்மையான கருத்துச் செலுத்தும் வள்ளுவரைப் போன்றவர், இந்நிலையை சமுதாயத்தில் விதியின் ஆளுகை என்றும் இருக்க வேண்டும் என்பதை விரும்ப முடியாது. ஆகவேதான், இன்றைய அறிவியல் நிலையிலிருந்து, சமுதாயச் சிக்கல்களைத் தீர்க்க வள்ளுவத்தில் ஏதாவது அடிப்படைகள் - அடிக்கருத்துகள் உள்ளனவா என்பதைச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். விதைக்குள் ஆலமரத்தைப் பார்ப்பது போன்ற தோற்றத்தை இக்கருத்துகள், தருவதற்கும் இடம் உண்டு என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.   3. ஒரு நாட்டு வாழ்விற்குச் செல்வம் பெரிதும் தேவை. செல்வம் பெருமளவில் உற்பத்தியாக வேண்டும். செல்வச் சூழலில் வறுமை கூடாது. அறவே கூடாது. செல்வத்தின் உற்பத்தி வறுமையின் உற்பத்திக்குக் காரணமாகவிடக் கூடாது. செல்வம் நேரிய முறையில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். துய்க்கப்பட வேண்டும். நற்பண்புகளின் காப்புக்குச் செல்வம் அரணாக இருக்க வேண்டும். வறுமைச் சூழலின் கொடுமை தீர்க்கச் செல்வர் ஏழ்மை நிலைப்பட்டும் உதவ வேண்டும். வறுமை ஒழிப்பில் செல்வர்க்குக் கடமை உண்டு.   இக்கருத்துடைய வள்ளுவர், செல்வ உற்பத்தி நேரிய முறையில் மட்டுமே நடைபெறும் ஒரு சமுதாய ஏற்பாட்டை மறுக்க மாட்டார். வறுமை ஒழிப்பிற்குச் செல்வர் தம் செல்வத்தைப் பகிர்ந்தளிக்கும் முறையை வள்ளுவர் ஏற்கவே செய்வார். செல்வப் பெருக்கம் வறுமை நிலை ஆகியவற்றிற்கு காரணமான விதியின் ஆட்சியிலிருந்து சமுதாயத்தை விடுவிக்கும் வழிமுறையை வள்ளுவர் ஏற்கவே செய்வார். எல்லாரும் துய்த்து இன்புறும் இனிய சமூக அமைப்பை அறநெறியாளர் என்ற முறையில் வள்ளுவர் மறுக்கமாட்டார்.   4. இவ்விடத்தில்தான் "கரும்பு போலக் கொல்லப்பயன்படுதல்”, "கொடிறு உடைக்கும் கூன்கை"ஆகிய கருத்துகள் ஆராய்வதற்கு உரியனவாகின்றன. வன்முறையைப் பயன்படுத்திச் செல்வத்தைச் சமுதாயத்திற்குப் பொதுமையாக்கல் என்ற கருத்து - மக்கள் கூட்டத்தை அதில் ஈடுபடுத்தல் என்ற கருத்து. - வள்ளுவரால் இங்கு குறிக்கப்படவில்லை. தானும் துய்க்காமல், பிறர்க்கும் தராதவனுடைய செல்வத்தை , கள்வரோ - பிறரோ, பிற தீயவரோ கொள்வர். அடித்து உதைத்துக் கொள்வர். அதை முழுமையாகக் குற்றம் கூறுவதற்கு இடம் இல்லை என்ற கருத்துதான் இங்கு வள்ளுவர் கருத்து. தீயவர் செல்வத்தின் மீது வள்ளுவருக்கு ஆத்திரம். பிற தீயவர் அதைக் கைப்பற்றும் போது, அத்தீயவர்பால் வள்ளுவருக்கு ஆத்திரமில்லை. அவர்கள், தீயவராக இல்லாமல், சமுதாய நோக்கில், நன்மையாக்கத்திற்காக முன்வந்து தீயவர் செல்வத்தைப் பொதுமையாக்கல் என்ற கருத்து வள்ளுவர் நூலில் இல்லை. உணவைப் பகிர்ந்து உண்ண வேண்டும் என்று அக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழலில் வற்புறுத்தியவர் வேறு ஒரு சூழலில் தேவையான காலத்தில் செல்வத்தைப் பொதுமை யாக்குவதை மறுக்கமாட்டார் என்பது தெளிவு.   வறுமையை ஒழிப்பதற்கும் பண்பாட்டு மலர்ச்சியை உருவாக்குவதற்கும் ஏற்ற முறையில் செல்வ உற்பத்தியை முறைப்படுத்துவதை வள்ளுவர் மறுக்கமாட்டார். செல்வத்தை ’ஊருணி' நடுவூர்ப்பழுத்த மரம் என்று கூறுபவர் பொதுமையை ஏற்கவே செய்வார். சாத்தியப்படுத்த இயலாத தருமகருத்தா முறையைவிடச் சாத்தியமாக்குவதற்குரிய பொதுமை முறையே வள்ளுவர் கருத்திற்கு உகந்ததாக இருக்க முடியும். பைங்கூழ் நடுவில் களையை வள்ளுவர் ஒப்புக் கொள்வதில்லை. அதைப் பறித்து எறிவதையே ஓப்புகின்றார். நடுவூருள் நச்சுமரத்தை உடன்பட மாட்டார். முள்மரம் கொல்வது வள்ளுவர் நெறிக்கு ஏற்றது. இரப்பார்க்கு ஈய்பவர் இருப்பது உலகின் பேரழகை விரும்பத்தான் செய்வார். பொருட்பாலைப் பொறுத்தவரை அஃதாவது அரசியல் துறையைப் பொறுத்தவரை வன்முறையில்தான் இச்சிக்கல் தீரவேண்டுமானால் வள்ளுவருக்கு மறுப்பும் இல்லை.   ’பொதுவுடைமை – வன்முறை’ ஆகிய கருத்துகளை மறுக்கும் காந்திய முறை வழிப்பட்டவர்களாலேயே வள்ளுவரின் ’இன்னா செய்யாமை தருமகர்த்தா முறைகள் செல்வாக்குப் பெறுகின்றன. (காலத்திற்கேற்பக் குறட் கருத்துகளுக்குப் பொருள் கூறிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்). இவர்கள் அரசியலிலும் வள்ளுவர் ஆன்மீகத்தையே இன்னா செய்யாமையையே வற்புறுத்தினார் என்று கூறுகிறார்கள். தவிர, தருமகருத்த முறை என்பது பொதுமை முறைக்கு மாறாகக் காந்தியாரால் வகுக்கப்பட்டது. வள்ளுவர் தமது காலத்தில் எந்தப் பொதுமைக்கு மாறாக இதை வகுத்தார் என்பதை இவர்கள் விளக்குவதில்லை.     பின்குறிப்பு: அறம், மறம் பற்றிய கருத்துகள் வாழ்க்கை நோக்கம், இலட்சியங்கள் முதலிய பல்வகைக் கருத்துகளும் இச்சிக்கலிலிருந்தே பிறக்கின்றன.   செல்வம் - வறுமைச் சிக்கலிலிருந்தே அறம், மறம் பற்றிய வாழ்க்கை நோக்கம் இலட்சியங்கள் முதலிய கருத்தோட்டங்கள் பிறக்கின்றன என்ற உண்மையை வள்ளுவரிடத்தும் காண்கிறோம். இச்சிக்கலிலிருந்தே விதி நம்பிக்கை - பண்பாடு - பண்பாட்டழிவு முதலிய கருத்துகளும் பிறக்கின்றன.                                                                                         4. வள்ளுவரின் அரசியல்   பொருட்பாலில் அரசு பற்றிய வள்ளுவரின் கருத்துகளை இக்கட்டுரையில் பார்ப்போம். அரசனின் இலக்கணம் அரசின் உறுப்புகள் அவற்றின் இயல்புகள் முதலியவை பற்றிய கருத்துகள் இப்பாலில் இடம் பெறுகின்றன.   'இறைமாட்சி’ என்ற அதிகாரத்தில் அரசனுக்கு உரிய இலக்கணம் கூறுகின்றார். படை, குடிமக்கள், கூழ், அமைச்சர், நட்பு, அரண் ஆகியவை உடையவன் அரசன். இவ்வரசன் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை ஆகியவற்றிலிருந்து நீங்காதவனாக இருக்கவேண்டும். அறம் தவறக்கூடாது. வீரத்தில் வழுவக்கூடாது. பொருள் வரும் வழிகளைச் செய்து தொகுத்துக் காத்து வகுத்தல் வேண்டும். காட்சிக்கு எளியவனாகவும் கடுஞ்சொல் இல்லாதவனாகவும், ஈத்து அளிக்க வல்லவனாகவும், முறை செய்பவனாகவும் இருக்க வேண்டும். கொடை, அளி , செங்கோல், குடியோம்பல் உடையவனாதல் வேண்டும்.   இவ்வதிகாரத்தில் முதல் ஐந்து பாடல்களில் அரசற்கு இயல்பான குணங்களைக் கூறுகிறார். பிறபாடல்களில் "மீக்கூறப்படும் நிலமுடைய மன்னன்". தான் கண்டத்து இவ்வுலகம், மக்கட்கு இறை, கவிகைக் கீழ் தங்கும் உலகு, வேந்தர்க் கொளி ஆகிய தொடர்களால் அரசனுக்கு உரிய சிறப்பியல்புகளை - தேவையான குணங்களைக் கூறுகின்றார். அல்லது சாதாரண அரசன். பேரரசனாக, உலகு முழுமையும் உரிமை கொள்ள வேண்டியவனாக உருப்பெற விரும்புபவனுக்கு உரிமையாக வேண்டிய குணங்களைக் கூறுகின்றார்.   நாட்டிற்கு - குடிமக்களுக்கு அரசன் தேவை: படை, அரண், அமைச்சன் ஆகியவற்றை அவன் உடையவன். அறிவு, கல்வி, ஊக்கம், துணிவு, வீரம் ஆகியவற்றை அவன் இயல்பாகப் பெற்றிருக்க வேண்டும். பொருள் அரசனுக்குத் தேவை. அதனை ஆக்கிக் கொள்ள வேண்டும். இத்தகையவனாக இருப்பதுடன், குடிமக்கள் குறை தீர்ப்பதற்கும் முறை கேட்பதற்கும் காண்பதற்கு எளியவனாக கடுஞ்சொல் இல்லாதவனாக இருக்க வேண்டும். குடிமக்களுக்குக் கொடுத்துக் காக்க வேண்டும். செங்கோல் தவறக் கூடாது. இவ்வாறு இருப்பானானால், இவன் உலகாளக் கடவன். இவன் உலகாளட்டும். இவன் நாடே - உலக நாடுகளுள் உயர்வாகப் புகழப்படும். இவனுடைய புகழுடன் உலகம் மேவி வாழும். இவன் மக்களுக்கு இறைவனாகவே கருதப்படுவான் இவன் குடைக்கீழ் உலகமே வரட்டும். வரும். இவன் வேந்தர்க்கெல்லாம் விளக்கமாகத் திகழ்வான்.   இவ்வதிகாரத்தில், குடிமக்கள் நோக்கிலிருந்து அரசனுக்குக் கடமைகளும் இயல்புகளும் கூறும் போக்கு, தெளிவாகத் தெரிகிறது. இத்தகையவன் உலகாளட்டும் என்ற விருப்பமும் தோன்றுகிறது. குடிமக்களுக்கு இறைவனாக இருந்து அருள் புரிய வேண்டும் என்ற விருப்பமும் காணப்படுகிறது. அடுத்து செங்கோன்மை பற்றி அதிகாரத்தில் வரும் கருத்துகளை பார்ப்போம். உலகம் வான்மழையை நம்பி வாழ்கிறது. மக்கள் மன்னனது செங்கோன்மையை நம்பி வாழ்கிறார்கள். வேந்தனது செங்கோலே சாத்திரங்களுக்கும் - நாட்டின் அறத்திற்கும் காரணமாகிறது. செங்கோல் செலுத்துவது, குடிமக்களைத் தழுவி நடைபெற வேண்டும். பல நாடுகளின் மீது வெற்றிகளைத் தருவது வேல் அன்று : படையன்று. செங்கோல்தான் வெற்றிக்குக் காரணம். உலகைக் காக்கும் அரசனைச் செங்கோல் முறைமைதான் காப்பாற்றுகிறது. இவன் யாரிடத்தும், நடுவுநின்று முறை கேட்டு ஆராய்ந்து தீர்ப்புத் தர வேண்டும். இவ்வாறு முறை செய்யாதவன்தானே கெடுவான். இவன் நாட்டில் மழையும் - விளைச்சலும் ஏற்படாது. குடிமக்களைக் காப்பதற்காக, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். அவ்வாறு செய்வது குற்றமன்று. அது வேந்தனுக்குத் தொழில் பயிர்களைக் காப்பதற்காகக் களைகளை அகற்ற வேண்டும். பறித்தெறிய வேண்டும். கொலைத்தண்டனைகள் பறித்தல் போன்றது. இத்தகைய மன்னனை உலகம் சார்ந்து நிற்கும் - விடாது.   அடுத்த அதிகாரம் ’கொடுங்கோன்மை’ மன்னவன் தன் நாட்டில் நடைபெறும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து முறைமை செய்ய வேண்டும். முறைமை செய்து மக்களிடத்தில் பொருள் பெற வேண்டும். முறைமை செய்யாது. பொருளை விரும்பிக் குடிமக்களை துன்புறுத்தக் கூடாது. அவ்வாறு துன்புறுத்தத் தொடங்கிவிட்டால் அத்தகையவன் வழிப்பறி செய்யும் கள்வனாகிறான். கொலை புரிபவனாகிறான். இவன் அரசன் அல்லன். கள்வன். இவன் புரிவது கொலைத் தொழில். இவன் குடிமக்களை இழந்துவிடுவான். இவனால் மக்கள் துன்புற்றுக் கண்ணீர் வடிப்பர். இறுதியில் அவன் அழிவான். அவன் ஒளி கெட்டுவிடும். மழையில்லாது மக்கள் படும் வேதனைக்கு ஒப்ப மக்கள் துன்புறுவர். இவனது நாட்டில் உடைமை, பறிக்கப்படும். செல்வம் உடையவர் துன்புறுத்தலுக்கும், கொலைக்கும் உள்ளாவர். அது கொடுமை: செல்வம் உடைமை கொடுமை. இவனது நாட்டில் மழை தவறும்: விளைச்சல் கெடும். இவனது நாட்டில் பசுக்கள் பால் குன்றும்: அறநூல்கள் தவறும், சாத்திரங்கள் அழியும். ''வெருவந்த செய்யாமை"என்ற அதிகாரத்திலும், இக்கருத்துகளே மேலும் விரிவாகக் கூறப்படுகின்றன. குற்றம் செய்த மக்களைத் தண்டிக்கும்போது, கடிது ஒச்சி மெல்ல எறிய வேண்டும். மக்கள் அஞ்சத்தக்க முறையில் கொடுங்கோல் புரியக்கூடாது. மக்கள் பழிச் சொல்லுக்கு ஆளானால், அரசன் ஆயுள் குறையும். செல்வம் அழியும், இவ்வாறு இருக்கும் அரசனது செல்வம், பேயால் பற்றிக் கொள்ளப்பட்டது போன்றது. கடுஞ்சொல்லும் கண்ணோட்ட மின்மையும், கையிகந்த தண்டமும் கடுஞ்சினமும் தவறானவை. முன்னரே தனக்குப் பாதுகாப்பைச் செய்து கொள்ளாத மன்னன் போர் வரும்போது விரைந்து கெடுவான். இவன் உலகத்திற்குச் சுமை.   மேற்கண்ட மூன்றதிகாரத்திலிருந்தும் தொகுப்பாக அறிந்து கொள்வது என்ன? அரசு இருக்கவேண்டும். அரசு தேவை என்பதில் வள்ளுவருக்குச் சிறிதும் மறுப்பில்லை. பல அரசுகள் ஒழிந்து ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும் என்றும் கூட வள்ளுவர் கருதியது தெரிகிறது. அந்த நல்ல அரசு உலகிற்கு மழை போல் இறைவனைப் போல இருக்க வேண்டும். குடிமக்களைக் காப்பாற்றும் அரசாக இருக்க வேண்டும். கொள்ளைக்கார அரசாக, கொலை புரியும் அரசாக இருந்துவிடக் கூடாது. கொலை புரியும் அரசு உலகத்தைப் பிடித்ததொரு பேய். இத்தகையவன் போர் வரும் காலத்து, மக்களின் ஆதரவற்று அழிவான். அவன் அழிவதும் நல்லது. இவன் அறங்களைச் சிதைப்பவன் அற நூல்களை - சாத்திரங்களை உருவாக்குபவன் அல்லன்; இவனால் மழைகெடும்: விளைச்சல் குன்றும், பால்வளம் கெடும்: இவன்கீழ்க் குடிமக்கள் இருக்க மாட்டார்கள் இருக்க கூடாது.   இக்கருத்து, வள்ளுவருக்கு ஏற்பட வேண்டுமானால், இக்கருத்து ஏற்படுவதற்கான சூழல் வள்ளுவர் காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. உலகை வெல்ல வேண்டும் என்ற ஆசை மட்டும் உடைய மன்னர்கள், அதற்காகப் படைகளைப் பெருக்க வேண்டும். அதற்காகப் பொருளை வலிந்தும் பறிக்கும் மன்னர்கள் இருந்திருக்க வேண்டும். அவர்கள் செங்கோன்மை செய்யாதவர்கள் பொருட் பறி செய்பவர்கள்: கையிகந்த தண்டம் அளிப்பவர்கள். அவர்கள் ஒழிவதையே மக்கள் விரும்பினார்கள். அவர்கள் தீமைகளை அறம் ஆக்கியவர்கள். இவர்கள் நாட்டைவிட்டு மக்கள் வேறு நாடு சென்றிருப்பர். இவர்கள் போர் ஆரவாரங்களில் நாளைக் கழித்தவர்கள்.   வள்ளுவர் தமது காலக் கொடுங்கோன்மையைச் சித்தரித்தவர். கொடுங்கோன்மைக்கு எதிராகப் பாடியவர். அறம் உரைத்தவர். மன்னர்க்கு வள்ளுவர் தெய்வீக உரிமையைக் கூறவில்லை. நல்ல மன்னரை மக்கள் தெய்வமாகத் தொழும் போக்கைக் குறிப்பிடுகின்றார். தொழத்தகும் போக்கைக் கூடக் குறிப்பிடுகின்றார். வள்ளுவரைப் பொறுத்தவரை மன்னனை மழையாகக் குறிப்பிடுவதையே விரும்புகின்றார். அரசன் மழையாக வேண்டும். மக்களுக்கு அருள் புரிய வேண்டும். பேயாகிவிடக் கூடாது. இவன் நாட்டில் அறங்கள் குன்றுவதையும், சாத்திரங்கள் அழிவதையும் வள்ளுவர் விரும்பவில்லை.   இத்தகைய அரசு சிறப்பாக அமைவதற்கேற்ற அரசரின் குண நலன்கள், செயல்கள் பற்றி அடுத்துவரும் அமைச்சு என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். குடிகாத்தலில் அரசனுக்கு அங்கமாக இருப்பவன் அமைச்சன். இவன் அறம் அறிந்தவன்; மதி நுட்பம் வல்லவன். உறுதியாக, சொல் மாற்றம் இல்லாமல் உரைக்குந் திறனுடையவன். உலகின் இயற்கையும் செயற்கையும் அறிந்தவன். இவனது சொல்வன்மை, வினையாற்றல் முதலியவற்றையும் வள்ளுவர் விரித்துரைக்கின்றார். இதுபோலவே, அரசின் காப்பிற்கும் வளர்ச்சிக்கும் ஏற்றவகையில், ஒற்றர், தூதுவர் இலக்கணங்களும் கூறப்படுகின்றன. இவர்கள் மன்னரைச் சேர்ந்து ஒழுக வேண்டிய முறை பற்றியும் கூறுகின்றார். வினைசெயல்வகை, குறிப்பறிதல், அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய அதிகாரங்களில் அரசின் உறுப்புகளாதற்கரிய அமைச்சர் முதலியவர்க்குத் தேவையான ஆற்றல்களைக் கூறுகின்றார்.   ‘நாடு' என்ற அதிகாரத்தில் நாட்டின் இலக்கணம் கூறுகிறார். குறைவில்லாத விளைச்சல் இருக்க வேண்டும். பெரும் பொருட் செல்வம் இருக்க வேண்டும். பசி, பிணி, ஆகியவை கூடாது. பாழ் செய்யும் உட்பகை கூடாது. நீர்வளம், மலைவளம் ஆகியவை இருக்க வேண்டும். பிறநாட்டை நாடிப் பெறாமல், தன்னாட்டிலேயே வளம், மிகுந்து இருக்க வேண்டும். பகை கூடாது. செல்வர் இருக்க வேண்டும். தக்கவர். நல்லவர் வாழ வேண்டும். ஒருக்கால் இடையில் கெட்டாலும் பின்னர் வளம் பெருகத் தக்கதாக இருக்கவேண்டும்.   'அரண்'பற்றிய அதிகாரத்தில் நீர், நிலம், மலை, மதில் ஆகிய அரண்களின் தேவையைக் கூறுகிறார். பொருள் செயல்வகையில் ‘உறுபொருள், உலகு பொருள், ஒன்னார்த்தெறுபொருள்' ஆகியவற்றை வேந்தர்க்கு உரிமையாக்குகின்றார். பகைவர் செருக்கை அழிப்பதற்கு உரிய கூரிய படைக்கலம் பொருளே என்றும் கூறி பொருளை மிகச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். படைமாட்சியில் தான் கெடாது, பகைவரால் கீழறுக்கப்படாது இருக்க வேண்டும். தனக்கு அழிவை ஏற்றும் அரசனைக் காப்பாற்ற வேண்டும். இதற்குச் சிறந்த தலைவர் வேண்டும் என்று கூறுகிறார். தம்மைப் புரந்த அரசனின் கண்ணீர் ஏற்று சாவையும் இன்பமாக்கிக் கொள்ளும் படைச்செருக்கை வள்ளுவர் சிறப்பாகக் கூறுகிறார். பிற அதிகாரங்களிலும், அரசனை வலுப்படுத்துவதற்குத் தேவையான கருத்துகளே வருகின்றன. பெரியவர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும். அறிவற்ற பகைவரைத் தேர்ந்து கொள்ள வேண்டும். நல்லவர்களை நண்பராக்கிக்கொள்ள வேண்டும்.   இவ்வாறு பொருட்பாலில், வரும் கருத்துகள், அரசனை மையமாகக் கொண்டு வருகின்றன. நாட்டுக்கு அரசன் தேவை. இன்றியமையாதவன். அவன் குடிமக்கள் நலன் கருதி ஆளவேண்டும்.அவனுக்கு ஏற்ற துணையாக அமைச்சன் இருக்கவேண்டும். உட்பகை, வெளிப்பகை அறிந்து கூறும் முறையில் ஒற்றர்கள் தேவை. தூதுவர்கள் தேவை. நாட்டில் பல வினைகளை மேற்கொள்ளத்தக்க அரசியலதிகாரிகள், வினை செய்வார் தேவை. (குறள் 519,520). அமைச்சர் சூழ்ச்சித் திறன் வல்லவராக இருத்தல் வேண்டும். பகைவரைப் பிரித்தல், சேர்த்தலில் வல்லவராக இருக்க வேண்டும். அறிவற்ற பகைவரை அரசன் தேடியும் பெற வேண்டும். செய்வதற்கு உரிய போர்கள், செயல்களைக் காலமறிந்து, இடனறிந்து முடித்துக் கொள்ள வேண்டும். பகைவர் வலிமை மிக்கிருந்தால் அமைதியாக இருந்து காலம் வாய்த்தால் தூக்கி எறிந்துவிட வேண்டும். (குறள் 438, 486,487,488).   அரசியல் பற்றி நேரிடையாக வள்ளுவர் கூறும் கருத்துகளைத் தொகுத்துப் பார்க்கும் போது, அரசனை மையமாகக் கொண்டு பலவகை அங்கங்களின் தேவைகள் இவற்றின் இலக்கணங்கள் விரிவாக உரைக்கப்படுகின்றன. தமது கால அரசை வள்ளுவர் கடுமையான திறனாய்வுக்கும் உட்படுத்துகிறார். இக்கருத்துகள், காலச் சூழ்நிலையிலிருந்து எழுந்தவை என்பதை மறுத்தற்கில்லை. அரசியலில், அரசனை நேரிடையாகச் சார்ந்தவர்களின் கடமையை வள்ளுவர் விளக்குகிறாரே ஒழிய பொதுமக்கட்கு உரிய அரசியல் கடமையைக் கூறவில்லை. மக்களின் நலன் கருதி அரசு நடைபெற வேண்டும் என்பதில் வள்ளுவர் பேரார்வம் உடையவர்; மக்களைக் கொண்டு அரசு நடைபெறும் முறை - மக்களாட்சி முறை - குறளில் இல்லை. அதுபோலவே, தொழில், உழவு, மருத்துவம், கல்வி முதலியவற்றிலும் வள்ளுவர் கால அரசிற்குக் கடமை இல்லை. வெளிநாட்டுப் பகை, உள்நாட்டுப் பகை, கொள்ளை, திருட்டு முதலியவற்றிலிருந்து நாட்டைக் காப்பது அரசின் கடமை. முறை வழங்குதலும் அரசின் கடமை. பொருளை அறவழியில் தேட வேண்டும்.   வள்ளுவரைத் தொடர்ந்து படித்து ஆராயும் போது வள்ளுவருக்குள் இருவகை சிந்தனை முறைகள் தெரியவருகின்றன. இவை ஒன்றுக்கொன்று எதிரானவை. எனினும் இவற்றில் வள்ளுவர் மேலோங்கத் தெரியும் சிந்தனை எது என்பதை நாம் தெளிவாக அறியமுடியும்.   இறைவன் தான் உலகத்தையும். உயிர்களையும் மனிதர்களையும் படைத்தான் என்று தொடங்கும்போதுதான் பிறப்புகள், பாவம். புண்ணியங்கள், மேலுலகம், கீழுலகம், பிறப்பு, ஆறுதல், புலனடக்கம், விதி என்ற கருத்துகள் தொடர்வது ஒருவகை சிந்தனைமுறை. இந்தச் சிந்தனை முறைக்குள் சமயம் எளிதாக நுழைந்துவிடும். இந்தச் சிந்தனை முறைக்குள் அருவச் சிந்தனை அதிகம் இடம் பெறும். பழங்காலச் சூழலில் இந்தச் சிந்தனை முறையைத் தவிர்க்க இயலாது.   மனிதனின் குடும்பம், தொழில், உழவு, மருத்துவம், அரசு, பொருள், ஆண் - பெண் உறவு என்று சுழல்வது உலகியல் வகைப்பட்ட சிந்தனை. மேலுலகம், துறவு, விதி முதலியவற்றின் மேலாண்மையை இந்தச் சிந்தனை முறை ஏற்காது. கடவுளைக் கூட இது கேள்விக்கு உட்படுத்தும். அன்பு, அறம் என்று இச்சிந்தனை பேசும். சில சந்தர்ப்பங்களில் அருவத்தின் எல்லையைக் கூட இந்த சிந்தனை முறை தொட நேர்ந்தாலும் பிறகு அதிலிருந்து விலகிவந்துவிடும். வானம், நிலம், உயிர்கள், ஆகியவற்றை நேசிப்பது இந்த சிந்தனை முறை.   வள்ளுவருக்குள் உலகியல் சிந்தனைமுறைதான் மேலோங்கி நிற்கிறது. இதன் காரணமாகத்தான் வள்ளுவத்தை நாம் பெரியதாக மதிக்கிறோம். வள்ளுவரின் அரசியல் பற்றிய சிந்தனையிலும். அவரது உலகியல் சார்பு மேலோங்கி இருப்பதைத்தான் நாம் காண்கிறோம்.                     5. வரலாற்றின் வழியில் வள்ளுவர்   தமிழக வரலாற்றில் நெருக்கடிமிக்க காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழன் நிலை பெற இயலுமா என்ற சிக்கல் நம்மை எதிர் கொண்டுள்ளது. தமிழ் மொழியின் மீதும், தமிழ் இனத்தின் மீதும், தமிழ் மக்களின் அறவியல், பொருளியல் வாழ்வின் மீதும், பெரும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை நிறைவுபடுத்தும் சக்திகள், அரசியல் மற்றும் பொருளியல் களங்களில் தீவிரமாகச் செயல்படுகின்றன. தமிழகத்தின் இயற்கை சூறையாடப்படுகிறது. வாழ்வில் அறநெறி கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இத்தகைய சூழல் தமிழக வரலாற்றில் என்றும் ஏற்பட்டதில்லை என்ற நிலைமை தோன்றியுள்ளது. இதனை எதிர்கொள்ள, தமிழக வரலாற்று வழியில் வந்த ஆற்றல்களைத் திரட்டிக் கொள்ளும் தேவை நமக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான் தமிழர்களின் மெய்யியல் சிந்தனையின் ஒரு பகுதியான திருக்குறள் பற்றிச் சிந்திக்கிறோம்.   இன்று தமிழர் வாழ்வில் அறம் இல்லை. பொருள் இல்லை. இன்பம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லாமே குழம்பியுள்ளன. தமிழனுக்கு மெய்யியல் இல்லை. தேவையில்லை, என்ற சிந்தனை மேலோங்கியுள்ளது. வாழ்வில் காமம் முதன்மைக்கு வந்த நிலையில் காதல் மதிக்கப்படுவதில்லை. தமிழன் தன்மானத்தோடு வாழ இயலவில்லை. துறவிகள் பொருட் பற்று உள்ளவர்களாக, ஆள்வோர் பக்கம் அணி சேர்ந்தவர்களாக உள்ளனர். அதிகாரமே குறியாகக் கொண்டு அரசியல்வாதிகள் அலைகிறார்கள். சாதிகள் ஆரவாரத்தோடு எழுச்சி கொள்கின்றன. கடவுட் கொள்கை சிதைந்துவிட்டது. கடவுளைச் சமயவாதிகளும் தம் கருவிகளாக்கிச் செயல்படுகின்றனர். மக்களின் மடமையை வளர்க்கிறது கல்வி. முதலாளிகள் அடிமைத்தனத்தில் உழைப்பாளி களை ஆட்படுத்துகின்றனர். உணவு உற்பத்திப் பெருக்கத்திற்கு கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்பட்ட பசுமைப்புரட்சி தமிழக மக்களின் நிலங்களை மலடாக்கியதோடு, நீர் நிலைகளை மாசு படுத்தியதோடு தீரா நோய்களையும் கொடுத்துள்ளது.   பொருட்பற்றும், பதவிப்பற்றும் மட்டும் அல்லாமல், நுகர்வு வெறி உச்ச அளவில் தூண்டப்படுகிறது. மக்கள் வாழ்வு பொருள் மயமாக்கிவருகிறது. பொருளுக்கு, நுகர்வுக்கு, இன்பத்திற்கு, போதைக்கு மக்கள் பலியாகின்றனர். அரசே இவற்றை ஊக்குவிப்பதோடு இதற்கான திட்டங்களைச் செயல்படுத்துகிறது. தமிழக மக்களை உள்ளழிக்கும் சக்திகள் பெருகி வருகின்றன.   இந்தச் சூழலில்தான் - திருக்குறள் பற்றி நாம் சிந்திக்கிறோம்.அறச்சிந்தனை இன்று நமக்குப் பெரிதும் தேவைப்படுகிறது. மனித வாழ்வின் அடிப்படைகள் பற்றி இன்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இல்லறமோ - துறவறமோ - பொருளியல் வாழ்வோ - அறத்தின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும். இயங்க வேண்டும். இம்முறையில் நம்மை - நம் வாழ்வியலை, நம் சிந்தனையை நாம் திரட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. இவ்வகைச் சிந்தனையே மெய்யியல் என்று நாம் மதிப்பிட வேண்டும். இன்று நமக்குத் தேவையான அறம் எது என்று தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. தமிழன் - உலகில் தன்னை நிலைநிறுத்த, தன்னை உலகிற்கு அறிவித்துக் கொள்ள உலகளவிலான வரலாற்று இயக்கத்திற்குத் தன் தேவையை உணர்த்த, தனக்கென உரியதான நாகரிகத்தைப் புதுப்பித்துக் கொள்ள இதைச் செய்தாக வேண்டும்.   வர்க்கங்களின் தோற்றத்தோடுதான் வரலாறு தொடங்குகிறது என்ற கருத்தியலை இன்று நாம் ஏற்கிறோம். வரலாற்றுக்கு முற்பட்டதெனக் கூறப்படும் ஆதிகாலத்தில் ஆதிப்பொதுமைச் சமூகத்தில் மக்கள் ஒன்றாக உழைத்தார்கள் - ஒன்றாகத் துய்த்தார்கள் என அறிகிறோம். அந்தச் சமூகத்தில் தனி உடைமை இல்லை. அரசு, அதிகாரம் இல்லை. ஏற்றத்தாழ்வு இல்லை. சமூகம் தனிமனிதன் என்ற முரண் இல்லை. மக்கள் ஓர் உயிராக - ஓர் உடம்பாக முரணின்றி வாழ்ந்தார்கள். நிலைமைகள் மாறின. வேலைப் பிரிவினைகள் - இவற்றோடு ஏற்றத்தாழ்வுகள் உடைமை - அரசு முதலியவை தோற்றம் கொண்டன. இல்லறம், துறவு என்ற பிரிவு ஏற்பட்டது. கற்புடைய மனைவியர் - பரத்தையர் என்ற நிலைகள் தோன்றின. மருதநில் நாகரிகம் - நகரங்கள் - வணிகம் முதலியவை தோன்றின. முன்னைய பொது கூட்டு வாழ்வு சிதைந்து - பிளவு பட்டது. முன்னைய வாழ்வின் அடிப்படைகள் தகர்ந்தன. வாழ்வு மனிதர்களின் வசத்தில் இல்லை. இயற்கையோடு இயைந்த வாழ்வு இல்லை. வாழ்வின் ஆதாரங்கள் - மனிதர்களின் கைகளில் இல்லை. இந்த நிலையில்தான், நான் யார்? எனக்கு எந்த இடம்? நான் யாரால் படைக்கப்பட்டேன்? எனக்கு உய்வு என்ன? என்னை அழிக்கும், ஆக்கும் சக்திகள் எவை? எது விதி? கடவுள் எங்கே இருக்கிறார்? என் புலன்கள் என்னை என்ன செய்கின்றன? வானம் பெய்ய ஏன் மறுக்கிறது? பொருளோடு எனக்கு என்ன உறவு? என்ற கேள்விகள் எழுகின்றன.   வாழ்வின் ஆதாரங்களைத் தேடுவதும் தொகுப்பதுமாகிய சிந்தனை முறை ஏற்படுகிறது. வாழ்வின் ஆதாரங்கள் நிலத்தில் இல்லை. நீரில் இல்லை. உழைப்பில் இல்லை. இன்று யார் கைகளில் உள்ளன? வாழ்க்கை மண்ணில் தீர்மானிக்கப்படுவதில்லை. விண்ணில் தீர்மானிக்கப்படுகிறது. உயிர் எங்கிருந்து வந்தது? உடம்போடு உயிர் இணைந்தது எதற்காக? அரசன் யார்?   இவ்வகைச் சிந்தனைகள் வரலாற்றின் தொடக்க காலத்து மெய்யியல் சிந்தனைகள். மனிதனில் ஏற்பட்ட பிளவை - சமூகத்தில் ஏற்பட்ட உடைமை - அரசு என்ற முறையை மாற்ற எழுந்த சிந்தனைகள். அடிமைத்தனம் வேண்டாம். ஆதிக்கம் வேண்டாம் - மேலுலகமும் இவ்வுலகமும் முரண்பட வேண்டாம். இல்லறமும் துறவறமும் எதிர் நிலைகளாகவிட வேண்டாம் என்ற சிந்தனைகள். வாழ்வு இப்படிச் சிதைவதை ஏற்க முடியாது. பொருள் ஒரு பக்கமும், வறுமை எதிர்ப் பக்கமும் குவிய விடக்கூடாது. கள்ளும், களவும், போதையும், பரத்தமையும், திருட்டும், பொறாமையும், பகைமையும் வாழ்வைத் தீர்மானிக்கக் கூடாது. அறிவும், அறியாமையும் - என்ற முரண் வாழ்வின் மையமாகிவிடக் கூடாது. வறுமை, நோய், பசி இவை வேண்டாம். இவ்வகைச் சிந்தனைகள் மெய்யியல் சிந்தனைகள்.   வர்க்கச் சமுதாயம் தோன்றிய காலம் முதற் கொண்டு வர்க்கச் சமுதாயம் நிலவும் காலம் முழுவதிலும் தேவைப்படும் அறம் ஒன்றுதான். மனிதனுக்கு ஆதிக்கம் வேண்டாம். அதாவது சுரண்டல் வேண்டாம். ஒடுக்கு முறை வேண்டாம். எதன் பெயரிலும் ஆதிக்கம் வேண்டாம். அரசும் தனியுடைமையும் தவிர்க்க இயலாதவை என்ற போதிலும் இவை மனித வாழ்வை, அறத்தை அழிக்க வேண்டியதில்லை. இவைபோல சமயங்களும் தொழிற்பெருக்கமும் மனித வாழ்வை அழிக்க வேண்டியதில்லை. ஒரு சிலர் செல்வத்தில் பெருக மற்றவர் வறுமைக்கும் நோய் நொடிகளுக்கும் ஆளாகி அழிய வேண்டாம். இடைக்காலத்தில் இவை தோன்றி வளர்ந்தன என்ற போதும் இவை நிரந்தரமாக இருந்துவிட முடியாது. இவை என்றாவது அழிந்தாக வேண்டும். இதுவே நிரந்தரமான அறம்.                                                                           6. வள்ளுவரின் மெய்ப்பொருள்   தமிழ் மக்களின் தேசியத் திருநூல் என்றும் தமிழர்களின் அறவியலை தொகுத்துத் தரும் நூல் என்றும் போற்றுவதற்கான தகுதியுடையது திருக்குறள். திருக்குறள் குறித்துக் கடந்த ஒரு நூற்றாண்டு கால அளவில் நிறைய விளக்கங்களும் விவாதங்களும் நடைபெற்றுள்ளன. திருக்குறள் நீதி நூலாக இலக்கியமா என்பது ஒரு வாதம். திருக்குறளை வாழ்வியல் நூல் என்று போற்றி உரைக்கும்பொழுதே தற்கால நெருக்கடிச் சூழலில் திருக்குறள் நமக்கு ஒத்து வருமா என்ற விவாதமும் தொடர்ந்து எழுகிறது. இத்தகைய விவாதங்கள் ஒருபுறம் இருக்க, திருக்குறள் திருவள்ளுவர் சிந்தனையின் அடித்தளம் குறித்து இங்கு சிலவற்றைச் சொல்லலாம். நவீனகாலச் சூழலில் திருக்குறளைப் பயில்வதற்கான நெறி என்ற முறையில் வள்ளுவரின் சிந்தனைக்கும் நமக்கும் இடையில் உள்ள உறவு குறித்து காண்பதற்கு இத்தகைய ஆய்வு நமக்கு பயன்படக்கூடும்.    “எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் / எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற கருத்தின் வழியே வள்ளுவரது சிந்தனையின் அடித்தளம் நமக்குப் புரிகிறது.எத்தனையோ கருத்துக்களை திட்டத்தோடும் நுட்பத்தோடும் கூறும் வள்ளுவர் தன்னையும் திறன் ஆய்வுக்கு உட்படுத்தி கொள்ளவே விரும்புகிறார். தாம் அறிந்த பல்வேறு நூல்களிலும் வாய்மை காட்டிலும் சிறப்பித்து சொல்லக்கூடிய வேறு எதுவும் சொல்லப்படவில்லை என்கிறார் இன்னொரு குறளில். (குறள் 300)   பொறாமைப்படுவனிடம் / தீயவனிடம் செல்வம் சேரும் நேர்மையானவனுக்கு வறுமை நேர்வதும் ஏன் என்பது ஆய்வுக்குரியது என்றும் வள்ளுவர் கூறுகிறார். (குறள் 169) இப்படி வள்ளுவர் தன்னைத் திறந்து வைத்துக் கொள்ள விரும்புகிறார் என்பதைத் தான் இங்கு முதன்மையாக நாம் கவனிக்கவேண்டும் நவீன காலச் சூழலில் நமக்குத் தேவையான மனநிலை என்று இதைக் கூற முடியும். மேலுலகம் என்றோ. கீழுலகம் என்றோ இம்மை என்றோ மறுமை என்றோ, வள்ளுவர் குறிப்பிட நேர்ந்த பொழுதும் மனிதனின் செயற்பாடிற்கான உழைப்பு மற்றும் பகிர்வு ஆகியவற்றை வள்ளுவர் பெரிதும் போற்றுகிறார். கொடுப்பதனால் மேலுலகம் கிட்டாது என்று யாரேனும் சொன்னாலும் இரப்பது தீயது என்கிறார். (குறள் 222) துறவியைக் காட்டிலும் இல்லறத்தானை வள்ளுவர் போற்றுகிறார். தனக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதும் பிற உயிர்களுக்கு எந்த வகையிலும் தீங்கு செய்யாமலிருப்பதும் தான் தவம் என்கிறார். (குறள் 261 ) தெய்வம் அல்லது விதியினால் நாம் தொடங்கிய காரியம் நமக்கு ஊதியம் தரவில்லை என்றாலும் மெய்வருத்திச் செய்வதற்கான கூலி உறுதி என்கிறார். (குறள் 619) வறுமையை இறைவன் படைத்தான் என்றால் அவனே வறியவனாகி இரந்து உழலட்டும் என்கிறார். (குறள் 1062).   மேல் இருந்தும் மேன்மைக் குணம் இல்லாதவரைத் தாழ்ந்த குலம் என்கிறார். கீழ்நிலையில் இருந்தாலும் கீழ்மைக்குணம் இல்லாதவரை மேன்மையர் என்று பாராட்டுகிறார். (குறள் 973). செல்வம் சேர்ப்பதற்கு நன்னெறிகள் இல்லை என்கிறார். மக்களைத் துன்புறுத்தி வரி வசூலிப்பவனைக் கள்வன் என்கிறார். (குறள் 552). இப்படி எல்லாவற்றையும் புரட்டிப்பார்க்கிற வள்ளுவரின் சிந்தனைத் திறனை நாம் இன்றும் பாராட்டாமல் இருக்க முடியாது. வள்ளுவரின் பார்வையிலுள்ள தீவிரத்தை இப்படி எத்தனையோ குறட்பாக்கள் நமக்கு உணர்த்துகின்றன. குறள் கற்பது என்பது இத்தகைய சிந்தனைத் தீவிரத்தை நமக்குள் செரித்துக் கொள்வதற்காகத்தான் இருக்க வேண்டும்.   வள்ளுவரின் சிந்தனை முறையில் ஓர் அற்புதம் என்று சொல்லத்தக்க முறையில் அங்கங்கே சில குறட்பாக்கள் காணப்படுகின்றன. இத்தகைய குறட்பாக்கள் இன்னும் நமக்குள் ஓர் அறைகூவல் போல அமைகின்றன. இக்குறட்பாக்கள் நம் சிந்தனையின் ஆழத்தைக் கோருகின்றன.   எடுத்துக்காட்டிற்குச் சில குறட்பாக்களை இங்கு குறிப்பிடலாம். வானம் வழங்கவில்லை என்றால் தானமும் இல்லை தவமும் இல்லை என்கிறார் ஒரு குறளில். (குறள் 19). அதாவது இல்லறமும் இல்லை: துறவறமும் இல்லை என்கிறார். அரசியலும், பொருளியலும் கடுமையான குழப்பங்களுக்கு உள்ளாகும் என்பதற்கு இந்தக் குறள் ஆதாரம். வள்ளுவர் காலத்தில் மழை தெய்வமெனப் போற்றப்பட்டதை இன்று நம் உணர்வுக்குள்ளிருந்து எட்டிப் பார்ப்பது சிரமம்தான் என்ற போதிலும் மழை குறித்து, இயற்கை குறித்து, இயற்கையின் பேராற்றல் குறித்து இன்றைய சூழலில் நமக்குள்ளிருந்து ஆழமான உணர்வைத் திரட்டிக் கொள்ள நம்மைக் கோருகிறார். மழை பெய்வதால் மட்டுமே நிலம் விளைகிறது என்ற சிந்தனையின் தொடர்ச்சியாக உழுதொழில் குறித்து வள்ளுவரின் சிந்தனை இன்று நமக்குள் எழத்தான் வேண்டும். உழவு செய்பவனைத்தான் , தன்னோடு சேர்ந்து உழைப்பவனைத்தான் நிலம் என்னும் நல்லவள் மகிழ்ந்து ஏற்கிறாள். (குறள் 1040). அவனோடு இணைந்து இவள் உற்பத்தி செய்கிறாள். இவள் பொறுமையுடையவள். தன்னைத் துன்புறுத்துகிறவனையும் இவள் காப்பாற்றுகிறாள். (குறள் 151). இவள் நமக்குத்தாய்; இவளிடமிருந்து பொறுமையையும் அன்பையும் நாம் கற்றுக் கொள்கிறோம். இவளுக்குச் சலிப்பு இல்லை. இவள் நமக்கு உயிர் தருகிறாள். இவளிடமிருந்து வாழ்வின் நியதியை அன்பை, கருணையைக் கற்றுக்கொள்ள முடியும். இவளை இகழ்ந்தால் நமக்கு வாழ்வு அழியும். மழையோடும், வானத்தோடும், மண்ணோடும், மலையோடும், பழகிய, பயின்ற மனம் வள்ளுவருடையது. வள்ளுவரின் மனம் விளைந்த களம் என்று இவற்றைச் சொல்ல முடியும். ஊர் நடுவில் ஊருணியையும், (குறள் 216) நடுஊரில் பழுத்த பழமரங்களையும் (குறள் 217) பார்த்துப் பழகிய மனம்தான் ஒப்புரவில் திளைக்கிறது. (குறள் 215). இந்த மனத்தின் விளைச்சல் தான் சமதர்மம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் மனம் (குறள் 322). இந்த மனத்தின் விரிவில் இயங்குவது பேரா இயற்கை . (குறள் 370). அவாக்கள் அற்ற மனநிலை. இயற்கையின் பேரியக்கத்தை உள்வாங்கிக்கொண்ட மனம். இதில் சலனமில்லை.   "அரிதோறும் அறியாமைக் கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு" (குறள் 1110)   என்பது ஓர் அருங்குறள். நுட்பங்களின் செறிவுக்கு இந்தக் குறள் ஓர் அரிய சான்று. அறிவுத் தேடலின் நோக்கம் என்னவாம்? தேடத்தேட அறியாமையே மிகுந்து தென்படுகிறது. அறிந்தது குறைவு. அறிய வேண்டுவது எத்தனையோ. சாகும் வரை கற்றாலும் அறிவு நிறைவதில்லை. (குறள் 397). எவ்வளவு கற்றாலும் ஐயமும் திரிபும் தொடர்கின்றன. (குறள் 391). ஒவ்வொரு முறையும் முன்கற்ற நூல் புதிய பொருட்களை வழங்குகிறது. (குறள் 783) மணல் இடத்து உள்ள கேணி தோண்டத்தோண்ட நீர் சுரக்கிறது. என்றுதான் இந்தத் தேடல் நிற்கும்? தேடலில் இன்பமும், துன்பமும் (குறள் 394 ) தேடுவதே இன்பம். புலவர்கள் தமக்குள் சந்தித்து உறவாடுவதைப் போல வேறு இன்பம் இல்லை. கரும்பு தின்னக் கூலி வேண்டாம். கற்றலும், கற்பித்தலும் கூலி வேண்டாதவை. கல்வியே பெரும் ஊதியம். பண்புடையாளர் உறவைப் போலப் படிக்கப் படிக்க . பழகப் பழக நூல் நயம் அதிகரிக்கிறது. இந்த இன்பமும் ஒருவகையில் காமம். உடலளவில் தொடங்கினாலும் உயிருக்குள் நிறைவது காமம். (குறள் 1110). பழகப் பழக்கத்தான் இந்தப் பெண்ணின் பண்பு நலன்கள் தெரிகின்றன. இவளது தோள் அமிழ்தத்தால் செய்யப்பட்டது. இவள் தோள்களைத் தொடும் பொழுதெல்லாம் இவனுக்கு உயிர் தளிர்க்கின்றது. (குறள் 1106). இவள் தரும் இன்பத்திற்கு இணையாகத் தாமரைக் கண்ணான் உலகையும் சொல்ல முடியாது (குறள் 1103) இவளோ தோழி, தாய் மற்றும் தெய்வம். இவளே நமக்கு மண்ணும் வானமும். இவள் பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55).   இப்படி வள்ளுவருக்குள் அறிவுத் தேட்டமும், நட்பும், காமமும், இயற்கையும் ஒரு புள்ளியில் இணைகின்றன. ஒரு மலரின் பல இதழ்கள் இவை. வள்ளுவர் எங்கிருந்து நம்மோடு பேசுகிறார்? என்று நாம் வியக்கிறோம். இந்த அரிவையோடு கொள்ளும் மயக்கம் எத்தகையது என்று இன்னொரு குறளில் உவமை சொல்கிறார். தனது உழைப்பினால் விளைந்த பொருளைத் தனது சொந்த வீட்டிலிருந்து, பலரோடு பகிர்ந்து உண்பதைப் போன்றது என்கிறார். (குறள் 1107) உண்பதும், பகிர்வதும் எல்லாவற்றோடும் உரிமையோடு கலந்துறவாடுவதும் பேரின்பம். சமதர்மம் என்ற உணர்வு தரும் இன்பம். ஒரு வகையில் காம உணர்வு இவற்றை வேறு பிரித்து உணரமுடியாது. ஆண், பெண் உறவின் அற்புதம் குறித்து மார்க்ஸ் வியந்து உரைத்ததில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. சக்தி என்ற பெண் தெய்வத்தோடு பாரதியின் கலப்பையும் இங்கு நினைவு கூறுகிறோம். படைப்பியக்கத்தின் ஊற்றுப் பெருக்கை இங்கு நாம் நினைவு கொள்கிறோம். இப்படியே வள்ளுவரின் குறட்பாக்களின் ஊடாக குறுக்கும், நெடுக்குமாக நாம் பயணம் செய்ய முடியும். இப்படித்தான் வள்ளுவரிடமிருந்து அறத்தை நமக்குள் திரட்டிக் கொள்ளமுடியும்.     ‘அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல் நிற்கும் களவு அறிந்தார் நெஞ்சில் கரவு’ - என்கிறார். (குறள் 288). வள்ளுவர் அறம் என்றும் பொருள் என்றும் இல்லறம் என்றும் துறவறம் என்றும் அரசியல் என்றும் பொருளியல் என்றும் களவியல் என்றும் கற்பியல் என்றும் வேறுபடுத்திச் சொன்ன போதிலும் இத்தகைய பகுப்பாய்வில் ஆழ்ந்து செல்லும் பொழுது தான் நமக்குள் அற உணர்வு தங்கும் என்கிறார் வள்ளுவர். சான்றோர்க்கு அணி வறுமை என்பதை வேறு எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? (குறள் 115). தினையளவு நன்மை செய்தாலும் பனையளவாய்ப் பயன் தெரிவார் கொள்கின்றனர். காலத்தினால் செய்த நன்றி உலகைவிடப் பெரியது (குறள் 102). ஒத்தது அறிபவனே உயிர் வாழ்பவன் (குறள் 214) பண்புடையவரால் தான் உலகம் இன்னும் இயங்குகிறது. (குறள் 996). இப்படித் தொடங்கி வள்ளுவரின் தர்க்கம் எத்தனை திசைகளில் விரிவு பெறுகிறது? அளவு என்பது இங்கு அளவையில் அதாவது தர்க்க இயல். இத்தகைய மனநிலையில்தான் அறம் செழிக்கும். இப்படி ஆழ்ந்து அகன்று சிந்திப்பவனிடம் அறம் தங்கும். இந்த அறத்தை அறிவதே மெய்ப்பொருள். இத்தகைய மெய்ப்பொருள் நூல்தான் திருக்குறள். அதிகாரம் அதிகாரமாக உரை சொல்லிக் கொண்டே சென்றால் வள்ளுவரின் மெய்ப்பொருள் நமக்குள் செறிவது இல்லை. வாழ்வியல் அனுபவங்களோடு பலவற்றைத் தேடியும் தொகுத்தும் நம்மை விரிவு செய்துகொண்டே போகும்பொழுதே வள்ளுவரை ஒரு புள்ளியில் நாம் தரிசிக்கிறோம். ஒரு வகையில் எல்லாவற்றையும் கலைத்துப் போட்ட பின்புதான் இப்படி ஒரு புள்ளியில் தரிசனம் சாத்தியப்படுகிறது. இப்பொழுது வள்ளுவர் நமக்குள் அதிகாரமாய்க் குவியவில்லை. அன்பாய், மலையாய், ஊருணியாய் நமக்குள் சுரக்கிறார் வள்ளுவர். இந்த வள்ளுவர் நம் காலத்தில் நமக்கு நெருக்கமாய் வருகிறார். இன்னும் இன்னும் என நமக்குள் மெய்ப்பொருள் தேடச் சொல்கிறார்.   இறுதியாக ஒரு குறள். பல்லக்கில் அமர்ந்துள்ளவனுக்கும் அதைச் சுமப்பவனுக்கும் இடையில் நின்று அறநெறி இது என்று சொல்ல வேண்டாம் என்கிறார். (குறள் 37) முற்பிறப்பில் அறம் செய்தவன் இன்று பல்லக்கில் அமர்ந்திருக்கிறான் என்றால் மறுபிறப்பில் அவன் சுமந்தாக வேண்டும். இப்பிறப்பில் பல்லக்கைச் சுமப்பவன் முற்பிறப்பில் அமர்ந்து சென்றான் என்றால் மறுபிறப்பில் அடுத்தவன் மீது அமர்ந்தாக வேண்டும். இதற்கு முடிவு இல்லை. அறம் பற்றி இப்படிப் பேச வேண்டாம். இது எல்லாவற்றையும் குழப்பும். இந்தச் சிந்தனை முறையைக் கைவிட்டுவிடுங்கள். என்கிறார் வள்ளுவர். பல்லக்கைச் சுமப்பதும் அதில் அமர்வதும் தேவையில்லை. இதுவே அறம்.                                                                                         7. வள்ளுவருக்குள் முரண் – மெய்யியலும் சமயமும்   1. வள்ளுவர் கல்வி, அறிவு, ஆள்வினை, பண்புடைமை, பொருள் - செயல்முறை அன்பு என்ற இவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறார். இவை பற்றிப் பற்பல அதிகாரங்களில் பேசுகிறார்.   2. வள்ளுவரது நூல், மெய்ப்பொருளியல் நூல் என்று கூறத்தக்க அளவில், மெய்ப்பொருள் காண்பது பற்றிப் பேசுகிறது. மெய்ப்பொருள் என்பது, துறவு சார்ந்தது மட்டும் அல்ல. பொருள் உலகிற்கும் பொருந்தக்கூடியதுதான். இல்லறமா, துறவா என்று எதிர்நிலைப்படுத்துகிறார். இல்லறத்திற்கே முதன்மை தருகிறார். எல்லாவற்றினுள்ளும், அறமே அவருக்கு மெய்ப்பொருள் - வானம் வழங்கவில்லை என்றால், தானமும் தவமும் இல்லை. மழை இங்கு மெய்ப்பொருள். அறிவுடையார் எல்லாம் உடையார். அறிவு இங்கு முதற்பொருள். உழவர் கை மடங்கின், துறவிகள் நிலை இல்லை (குறள் - 1036). உழவர் முதற்பொருள். வாய்மையின் நல்ல பிற இல்லை (குறள் 300) - இங்கு வாய்மை முதற்பொருள். பெரியாரை மன்னன் பழித்தால் அழிவான் (குறள் 899) - பெரியார் முதற்பொருள். பண்புடையார்ப் பட்டு உண்டு உலகம் - பண்புடைமை முதற்பொருள். சான்றோர் - முதன்மைப் பொருள். பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்வது பொருள் (751) - பொருள் முதன்மை . இல்லறத்தான் முயல்வாருள் எல்லாம் தலை (47) - இல்லறத்தான் - முதன்மைப் பொருள். இம்மைக்கு முதன்மை - தெய்வத்தைக் காட்டிலும் மனிதனுக்கு - முதன்மை. பேரா இயற்கை - மெய்ப்பொருள். சார்பு உணர்ந்து - சார்பிலிருந்து விலக வேண்டும். (குறள் 359). விலகுதல் மெய்ப்பொருள் இவ்வாறாக வாழ்வின் ஆதாரப் பொருள் என்ன என்று தேடுகிறார் - ஆராய்கிறார். விதிக்கு முதன்மை அல்ல. (குறள் 620) முயற்சிக்கே முதன்மை . உறுதியாகச் சொல்லலாம் - வள்ளுவர் நூல் மெய்ப்பொருளியல் நூல். ஆகவே - குறள் தமிழ்மறை - பொய்யா மொழி - தமிழ் வேதம். இவ்வகை ஆய்வு, பிறகு தமிழில் இல்லை. திருக்குறளுக்குப்பின், மெய்ப்பொருள் ஆய்வு. சமய நெறிக்குச் சென்றது.   குறளில் தெய்வம், துறவு - முதன்மை பெறவில்லை . மேலுலகத்திற்கு முதன்மை இல்லை. சடங்குகளுக்கு முதன்மை இல்லை. பிறகு எல்லாமே மாறிவிட்டது. குறள் ஆய்வு - தொல்காப்பியர் ஆய்வின் தொடர்ச்சிதான்.   3. வள்ளுவரில் ஆள்வினைக்கு அழுத்தம் - பொருட்பாலில் பொருள் செயல்வகை பற்றி நிறையப் பேசுகிறார். காலம் அறிதல், இடன் அறிதல், வலியறிதல் முதலிய அதிகாரங்கள் - செயலுக்குரிய - வினையாளரை எவ்வாறு தேர்வது என்பது பற்றிக் குறள்கள் - அமைச்சர் - அரண் பற்றிய கருத்துக்கள் - இப்படி நிறையச் செய்திகள். எப்படியோ மக்களை விட்டு உலகம் - பிரிந்து செல்கிறது. அரசுக்கு முதன்மை வந்து கொண்டிருக்கிறது. பெரியாரை உதறலாம். தீயவழியில் பொருள் திரட்டலாம். கொடுங்கோல் முறையில் ஆட்சி செய்யலாம். மக்களின் பொருட்களைக் கவரலாம் என்ற போக்கு அதிகரிக்கிறது. அமைச்சன், ஒற்றன், அரசனுக்கு சார்பானவன்தான். ஒரு குடைக்கீழ் தங்கும் உலகம் என்ற கருத்து (குறள் 1034) மற்ற மன்னர்களை வீழ்த்தி - பேரரசன் உருவாதல் - நிலவரம் - சிந்தனை வந்து கொண்டிருக்கிறது. அரசனுக்குள் தெய்வத் தன்மை கூறப்படுகிறது (குறள் 388). தெய்வம் பற்றிய கருத்து - மனிதச் சார்பானதுதான் என்ற உண்மை - தாம் வீழ்வார் மென்தோள் துயில் (குறள் 1191) - என்பதனுள்ளும் இறைமை இயங்குகிறது.   4. வள்ளுவர் சமயங்களோடு போராடுகிறார் என்பதைக் குறளில் இருந்து அறியலாம். வள்ளுவருக்குச் சாங்கியம் உடன்பாடு என்பதை சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றமென்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு (குறள் 27) என்பதிலிருந்து அறியலாம். ஆதிபகவன் முதற்றே உலகு (குறள் 1) என்ற குறள் வள்ளுவரின் இறைக் கொள்கையை உணர்த்துவதாகக் கொள்ளலாம். ஆதி பகவன் என்பதை ஆதிநாதர் என்ற சமணக் கருத்தெனவும் கொள்ள வாய்ப்புண்டு. துறவுக்கு வள்ளுவர் இடம் தந்த போதிலும் இல்லறத்தையே முதன்மைப்படுத்துகிறார். மழித்தலும் நீட்டலும் வேண்டா (குறள் 280) என்கிறார். பொய்த்துறவு மேற்கொள்பவன் புதரில் மறைந்து பறவைகளை வலைவைத்துப் பிடிக்கும் வேடன் என்கிறார். தன் குடியை உயர்த்தப் பாடுபடுபவனுக்கு உதவி செய்யும் முறையில் மடிதற்று தெய்வம் முந்துறும் (குறள் 1023) என்கிறார். பெண்ணுக்குக் கணவனே தெய்வம் (குறள் 55). வாழும் முறைப்படி வாழ்பவன் தெய்வத்தோடு ஒப்பக் கருதப்படுவான் (குறள் 50). ஐம்புலன்களை வென்றவன் அடையும் பேற்றுக்கு இந்திரனே சான்று (குறள் 25).   இவ்வாறு வள்ளுவர் பலபடியாகக் கூறுவதை எண்ணிப்பார்க்கும் போது ஓர் உண்மை புலப்படுகிறது. உலகிலிருந்து, மனிதனிலிருந்து சிந்தனை பிரிந்து தனித்து இயங்கத் தொடங்குகிறது என்பது புலப்படுகிறது. இந்த உண்மைக்கு மேற்குறிப்பிட்ட குறட்பாக்கள் ஆதாரமாகின்றன. மனிதனிலிருந்து இறைவன் பிரிவதும் இங்குப் புலப்படுகிறது. இடைநிலையில் வள்ளுவர் இருக்கிறார். மனிதனிலிருந்து பிரிந்து செல்லும் உலகை , சிந்தனையை, இறையை, துறவை வள்ளுவர் இழுத்துப் பிடிக்கிறார். பொய்த் துறவிகளைக் காய்கிறார்.   5. வள்ளுவருக்குள் சமயச் சார்பு இடம்பெறுவது போலத் தோன்றுகிறது. புலனடக்கம் பற்றிப் பேசுகிறார். பெண்ணைப் போற்றும் பொழுதே ஆணுக்கு அடுத்தபடியாக வைக்கிறார். தெய்வம், மேலுலகு, நல்வினை, தீவினை, பல் பிறப்பு என்றெல்லாம் பேசுகிறார். ஊழ் பற்றிச் சொல்கிறார். மன்னனை இறைவன் என்கிறார். பிறப்பு அறவேண்டும் என்கிறார். வேண்டாமையை விழுச்செல்வமென்கிறார். கூற்றை வெல்லமுடியுமென்கிறார். வள்ளுவர் மெய்யியலினுள் நஞ்சு கலப்பது போலத் தோன்றுகிறது. சமயத்தின் வழியே மனித வாழ்க்கையை மதிப்பிடவும் செய்கிறார். மனிதன் இங்கெல்லாம் இன்னும் மறையவில்லை. அரசியலில் போருக்கு இடம் ஏற்படுகிறது. உலகம் இங்கெல்லாம் இரண்டாகிறது. பிளவு படுகிறது. இருவேறு உலகத்து இயற்கை (குறள் 374) என்றும் வள்ளுவர் பேசுகிறார். வேறுபடும் உலகத்தை இணைக்கவும்தான் வேண்டும். இதற்கு ஒப்புரவு தேவை. வள்ளுவர் இன்னும் வாழ்வின் பக்கமே இருக்க முயல்கிறார்.                                                                                         8. வள்ளுவரின் அறச்சிக்கல்   அறம், பொருள், இன்பம் எனக் குறள் நூலில் பெரும் பிரிவுகள் உள்ளன. இந்த மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கிய திருக்குறளை அறநூல் என்று குறிப்பதில் தவறில்லை. அறத்துப்பாலில் இடம் பெறும் அறத்திற்கும், பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியவற்றில் இடம் பெறும் அறத்திற்கும் முற்றான உடன்பாடு அல்லது வேறுபாடு உண்டா என்றெல்லாம் ஆராய்வதற்கு இடமுண்டு. இன்பத்துப்பால் என்பது ஓர் இலக்கியத் தனிநூல் போல் அமைந்திருப்பதையும் நாம் காணத்தவறக் கூடாது. இதற்குள்ளும் இடம்பெறும் அறம் என்ன என்பது குறித்தும் நாம் ஆராய்வது தேவை. அறத்துப்பால் என்ற முதல் பாலினுள்ளும் இல்லறம், துறவறம் என்று இருவகை அறங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றிற்கிடையிலும் சில வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியானால் திருக்குறள் என்ற நூல் முழுவதனுள்ளும் முரண் இல்லாமல் இயங்கும் அறம் என்பதுதான் என்ன என்ற கேள்வியும் எழும். உடனடியாக இன்னொரு கேள்வி. அறம் என்பது முரண்பாடில்லாமல் இருக்கமுடியுமா? இவற்றிற்கெல்லாம் நாம் நிதானமாக விடை காண வேண்டும். மனத்தில் மாசு இல்லாமைதான் அறம் என்று வள்ளுவர் கூறுகின்றார். மாசுடன் செய்யும் எந்தச் செயலும் விளம்பரத் தன்மையுடையது என்கிறார். புகழ் பெறும் நோக்கத்துடன் செய்வது அறம் இல்லை என்று வள்ளுவரை நாம் பொருள் படுத்தும் பொழுதே ஒரு சிக்கல் எழுகிறது.   "ஈதல் இசைபட வாழ்தல் அது வல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு " (குறள் 231)   என்றும் வள்ளுவர் தான் சொல்லுகிறார். ஈவதன் மூலம் புகழ் ஏற்படும் என்பது உலக இயல்பு. புகழ் பெறுவதற்காக ஈதல் செய்வதென்பது மனத்தில் தங்கும் ஒரு மாசு. புகழையும் கூட எண்ணாமை அல்லது கைவிடுதல் என்பது வள்ளுவர் நெறியாக இருக்கமுடியும். ஆவிற்கு நீர் என்று இரப்பதைக்கூட வேண்டாதவர் வள்ளுவர் (குறள் 1066) என்பதையும் இங்கு நினைவு கொள்ளலாம். புகழ் வேண்டுமானால் கொடு என்று தூண்டுவது வள்ளுவர் நெறிக்கு ஒத்ததாக இருக்க இயலுமா?   அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியவற்றிலிருந்து நீங்கிச் செய்வது அறம் என்கிறார் இன்னொரு குறளில். (குறள் 35) அறத்துப்பாலில் வாழ்க்கைத் துணை நலம், மக்கட்பேறு, விருந்தோம்பல், அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, கள்ளாமை, அருளுடைமை என்று பல்வேறு பண்புகளை வள்ளுவர் குறிப்பிடுகின்றார். இவை ஒவ்வொன்றும் எவ்வாறு அறமாகும் என்று நாம் கவனத்தோடு கற்கவேண்டும். இல்லத்தில் மனைவி மக்களோடு மற்றும் உறவினர் ஊரோடு வாழ்வதுதான் இயல்பான வாழ்க்கை . தன் முயற்சியோடு உழைத்து உற்றார் முதலியவர்களோடு பகிர்ந்து கொண்டு வாழ்வதை அறம் (குறள் 1100) என்று சொல்லமுடியும். தன்னையும் பிறரையும் காப்பதற்கான உழைப்பும் பகிர்வும் அறம். தனக்கென மட்டுமே வாழ்வது, பொருளை சேர்த்துக் கொள்வது அப்புறம் அதிகாரம் செய்வது இவையெல்லாம் அறத்திற்கு மாறான செயல்கள். உழைக்கத் திறன் இல்லாமல் விருப்பமில்லாமல் இன்பத்தை மட்டுமே எண்ணி, துன்பத்தை வெறுத்து வாழ்பவன் மன உறுதி இல்லாதவன். இவன் நெஞ்சில் அறம் தங்காது. இவனுக்கு அன்பு தெரியாது. இவன் தான் பிறர் உழைப்பும் மேன்மையும் கண்டு அழுக்காறு கொள்பவன். இவன் தான் பிறர் பொருளை நச்சுபவன். இத்தகையவனிடம்தான் வெகுளி இன்னாச்சொல் முதலிய தீக்குணங்கள் சேர்ந்து கொள்கின்றன. இப்படியெல்லாம் வள்ளுவரை நாம் புரிந்து கொள்ள முடியும். கல்வி, அறிவுடைமை, நட்பு, அரசு, அரண், நாடு என்றெல்லாம் அறம் குறித்துப் பொருட்பாலில் வள்ளுவர் விரிவாகச் சொல்லுகிறார். சமூகச் சூழலில், பொருள் தேடுவதற்கான பல்வேறு வகையான முயற்சிகள் நடைபெறும் சூழலில் உட்பகை, புறப்பகை என்று நிலவும் சூழலில் பல்வேறு சமூகப் பிரிவுகளுக்கிடையில் முரண்களும் மோதலும் நிலவும் சூழலில் - அறம் எது என்பது கேள்விக்குரியதாக மாறிவிடும். மழை இல்லையென்றால் அறம் தடுமாறும். (குறள் 19). செங்கோன்மை இல்லை என்றால் சிக்கல் ஏற்படும். பொருள் திரட்டுவதற்குப் பல சமயங்களில் நன்னெறிகள் இல்லை (குறள் 375) போர்ச்சூழலில் அறம் அடிபட்டுப் போகும். சூழ்ச்சிகள் செய்யாமல் எதிரிகளை ஒடுக்கமுடியாது. நண்பர்களுக் கிடையிலும் உறவில் சிக்கல் ஏற்படும்.   இத்தகைய சூழல்களில் அறச்சிக்கல் ஏற்படுகிறது. கல்வி, அறிவு முதலியவை இங்குப் பெரிதும் தேவைப்படுகின்றன. ஆய்வு தேவைப்படுகிறது. அறம் தடுமாறும் பொழுது அதை நிலைநிறுத்த வேண்டும். தண்டிப்பது அறம் அன்று என்றாலும் பலரைக் காப்பாற்ற ஒருவரைத் தண்டிப்பது அறமாகும். இவ்வகையில் கொலைத்தண்டனை கூட அறமாகிறது. நாட்டில் அமைதி நிலவ வேண்டுமென்றால் கள்வர் முதலியவரை ஒழிக்க வேண்டும். தன் நாட்டு மக்களைக் காப்பாற்ற அயல் நாட்டு எதிரிகளை ஒடுக்க வேண்டும். இவ்வாறெல்லாம் செய்வது அறம். நட்பு ஒரு பேரறம். உழவுத் தொழில் ஒரு நல்லறம். நோய் தீர்த்தல் ஓர் அறம். மக்களை வருத்திப் பொருள் பறிப்பது அறச் செயல் அன்று. குற்றத்திற்கான தண்டனை வழங்கும் போது அதைக் கருணையோடு செய்ய முடியும். நாட்டிற்குத் தேவையான அரண்களை அமைப்பது அறம். நாட்டின் பாதுகாப்புக் கருதி ஒற்றர்களை ஏவுவதும் அறம்.   நாடுகள் என பிரிவுகள், எல்லைகள் ஏற்பட்டிருக்கின்றன. நாடுகளைக் கைப்பற்ற போர்கள் நடத்தப்படுகின்றன. அரசன் தன் தேவைக்காக மக்களிடம் கடுமையாக வரிவசூல் செய்யவும் நேருகிறது. குற்றவாளிகள் தாமே தோன்றிவிடுவதில்லை. பொருள் திரட்டுவது எப்பொழுதும் நன்நெறியில் நடைபெறுவதில்லை. ஒற்றன் என்பவன் மனத்திரிவுக்கு உள்ளாகாமல் இருக்க முடியாது. மன்னனின் ஆட்சி நடைபெறுகிற காலத்தில், சமூகப் பிரிவுகளுக்கிடையில் முரண்பாடுகள் எழுதற்கான நியாயங்களை மறுக்கவும் முடியாது. இத்தகைய சமூகச் சூழலில் அறம் தடுமாறுவதும் சிக்கலுக்குள்ளாவதும் இயல்பு. அறத்தின் தடுமாற்றம் அல்லது அறச்சிக்கல்கள் குறித்து வள்ளுவரும் தடுமாறத்தான் வேண்டியிருக்கும். இத்தகைய தடுமாற்றம், இன்றுவரை நமக்குள்ளும் தொடரத்தான் செய்கிறது. முற்றான அறம், முற்றான அநீதி என்று எதையும் குறிப்பிட இயலாது. வரலாற்றுச் சூழலை முற்றாகக் கடந்துவிடவும் இயலாது. மனத்தில் மாசு இல்லாமல் செயல்படுவதுதான் அறம் என்றால் நீர் அறவே இல்லாத பால் பற்றிப் பேசுவதாகத்தான் இருக்கும். வள்ளுவருக்குள் செயல்படுவது இலட்சிய வேட்கை. இத்தகைய இலட்சிய வேட்கை தேவைதான். கம்யூனிச சமூகம் என்றேனும் ஏற்படும் என்று இன்றும் நாம் நம்புகிறோம். வள்ளுவரின் அறக்கருத்தும் இத்தகையதுதான். இதை மாயை என்று ஒதுக்கிவிடக்கூடாது. எல்லையின்மை என்று ஒன்று இல்லை என்றாலும் அதை நோக்கி நாம் இயங்க விரும்புகிறோம். வரலாற்றுக்குள் எப்படியோ கடவுளைப்போல் முற்றான இலட்சியங்களும் வந்துவிட்டன.                                                                           9. திருக்குறளின் அழகியல்   1. பொதுவாக இன்றைய சூழலில் தமிழர்களின் அழகியல் பற்றி நாம் விவாதிப்பது பொருந்தும். தமிழ் என்றவுடன் பிற பண்பாடுகளிலிருந்து தமிழர்க்கெனத் தனியே இருக்கும் பண்பாடு என்று பிரித்துப் பேசுவது தவறாகிவிடும். இந்தத் தவறான அணுகுமுறை சில வட்டாரங்களில் ஓங்கி ஒலிப்பது நமக்குத் தெரியும். இந்த அணுகல் முறைக்கு மாறாகப் பொதுவாக மனித சமூகத்தின் ஆரோக்கியமான பண்பாட்டுக் கூறுகளைத் தமிழர் பண்பாடு என்ற தொகுப்பினுள் கண்டு மனித சமூகத்தின் ஆக்கக் கூறுகளில் ஒன்றாகத் தமிழர் பண்பாட்டை மதிப்பிடுவதே பொருத்தமாகும். தமிழ்ப் பண்பாட்டின் ஒரு கூறாக தமிழ் இலக்கியங்களில் செயல்பட்டு செயல்படும் அழகியல் பற்றி இங்கு நாம் சிந்திக்கலாம்.   2. விரிவான ஆய்வுக்குரிய தமிழர்களின் அழகியல் என்ற தொகுப்பின் சில அம்சங்களை இங்கு சுருக்கமாகப் பார்த்துக் கொள்ளலாம். தமிழ் இலக்கண நூல்களில் விரிவாகப் பேசப்படும் அணி இலக்கணம், அழகியலின் ஒரு முக்கியக்கூறு. தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள மெய்ப்பாடுகள், அழகியலின் இன்றியமையாத ஒரு பகுதி. இவற்றோடு இறைச்சி, உள்ளுறை, குறிப்பு என்பனவும் அழகியலின் இன்றியமையாத ஒரு பகுதி. தொல்காப்பியர் நாடக வழக்கினுள் உலக வழக்கை இணைத்து. புலனெறி வழக்கு என்று கூறியிருப்பது அழகியலின் ஒரு முக்கியக்கூறாகிய படைப்பு முறை பற்றிய கொள்கை. உரிப்பொருளை வெளிப்படுத்தும் முறையில் முதற்பொருள். கருப்பொருள் ஆகியவற்றின் இணைவு இன்னொரு முக்கியக் கொள்கை. அகத்திணை, புறத்திணைப் பகுப்புகள் இன்னொரு தொகுப்பு. தமிழ் இலக்கண நூல்களில் செய்யுள் மரபுகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. செய்யுட்களைப் பொருள்படுத்தும் முறை, பொருள்கோள், இலக்கிய வகைகள் எனக் கொண்டால் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் எனத் தொடங்கி இடைக்காலத்து இலக்கிய வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படித் தொகுத்துச் சொல்வதென்றால் தமிழிலக்கிய இலக்கண நூல்களில் அழகியலை மிக விரிவாகக் காண்பதற்கு இயலும். தமிழர்கள் இலக்கியக் களத்தினுள் ஆக்க முறையில் செயல்பட்டதை இந்த ஆய்வு நமக்குத் தெளிவுபடுத்தும்.   3. குறிப்பாகத் திருக்குறளின் அழகியலின் ஓர் அடிப்படை அம்சம் பற்றியது இந்தக் கட்டுரை. திருக்குறளின் அணிகள், மெய்ப்பாடுகள், வெண்பா இலக்கணம் என்ற ஆய்வுகளையும் இக்கட்டுரையில் தவிர்க்கிறேன். இலக்கியத்தில் இடம்பெறும் அழகியல் என்பது வாழ்வியல் அழகியலிலிருந்தே ஆக்கம் பெறும். இலக்கியத்திற்கென அழகியலின் தனி நுட்பங்கள் சில/பல இருக்கத்தான் வேண்டும் என்ற போதிலும் இலக்கியத்தின் அழகியல் வாழ்வியலிலிருந்துதான் பெறப்படும் என்பது பொது உண்மை. இலட்சிய நோக்கில் வாழ்வுக்கு அறம் உரைப்பது வள்ளுவர் கோட்பாடு. இப்படித் தொடங்கி வாழ்வுக்கான அறங்கள் என வள்ளுவர் எவற்றை எல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தொகுப்பது வெறும் புலமை நெறி. இந்த நெறி இங்கு நமக்குப் பயன்படாது. வள்ளுவர் தமிழ்ச்சமூகத்தின் ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் அறநூல் எழுதியவர். இவ்வாறு கொண்டு வள்ளுவரின் வாழ்வியல் அறத்தின் அடிப்படையில் அழகியலைக் காண்பது எனது நோக்கம்.   4. மார்க்சிய நோக்கில் வரலாற்றை ஆய்வு செய்பவர் வரலாற்றுக்கு முற்பட்ட ஆதிப் பொதுவுடைமைச் சமூகம் என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கின்றனர். இத்தகைய கருத்தாக் கத்திற்கான ஆதாரங்கள் தொடர்ந்து கேள்விக்குட்படுத்தப்பட்டு திருத்தமான கருத்தாக்கம் உருவாகத்தான் வேண்டும் என்பதை நாம் ஏற்க வேண்டும். தமிழ்ச்சமூக வரலாற்றுக் காலத்துக்கு முன்பு தமிழர்களுக்கும் ஓர் ஆதிப் பொதுமைச் சமூகம் இருந்தது . என்பதற்கான தடயங்கள் சங்க இலக்கியத்திலிருந்து நமக்குக் கிடைக்கின்றன. கடையெழு வள்ளல்கள் அல்லது வேளிர்கள் எனக் கருதப்படுபவர் அநேகமாக இனக்குழுச் சமூகம் என்பதன் அடுத்த கட்டத்தைச் சார்ந்த தலைவர்கள் குறுநிலத் தலைவர்கள் எனக் கொள்வது பொருந்தும். இவர்கள் வரையாது கொடுத்தனர். அதாவது, தம் செல்வத்தைப் பலரோடு பகிர்ந்து கொண்டனர். மருதநில நாகரிக வளர்ச்சிப் போக்கில் தோன்றிய மூவேந்தர்கள் இந்த வேளிர்களை அழித்தனர். இதற்கு ஒரு முக்கியமான காரணம், வேளிர்கள் தம் செல்வத்தை வரையாது கொடுத்ததின் விளைவாக தமிழ் நிலமெங்கும் அவர்களுக்கு ஏற்பட்ட செல்வாக்கு வேளிர்களோடு வேந்தர்கள் மோதிய பொழுது வேளிர்கள் சார்பில் மக்கள் திரண்டனர். வேளிர்களிடம் அநேகமாக நிலைப்படை இல்லை. வேந்தர்கள் நால்வகைப் படைகளைத் திரட்டி வைத்திருந்தனர். வேளிர்கள் குறிஞ்சி நிலப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள். வேந்தர்கள் மருதநில நாகரிகத்தினர். தனியுடைமை முறையின் அடிப்படையை நிலை நிறுத்தியவர் வேந்தர்கள். கோப்பெருஞ்சோழனுக்கு எதிராக அவன் மக்கள் போர் தொடுத்ததையும், ஒரு மாங்கனிக்காக நன்னன் செய்த கொலைச் செயலையும் இந்த அடிப்படையில்தான் புரிந்து கொள்ள முடியும். இனக்குழுச் சமூகத்தின் ஒரு முக்கியமான அங்கம் பாணர்கள். வேளிர்கள் அழிந்த நிலையில் உரிமையோடு அவர்களை ஆதரிப்பவர் இல்லை. ஆகவே, அவர்கள் பழுமரம் தேடியலையும் பறவைகளைப் போலத் திரிந்தார்கள். புலவர்கள் எனப்படுவோர் வேந்தர் காலத்தவர். மருதநில நாகரிகத்தின் ஒரு முக்கியக்கூறு நகரங்கள். நகர ஆக்கத்திற்கு வணிகப் பெருக்கம், ஒரு முக்கியமான காரணம். நகரங்களில் கைவினைஞர்கள் கூடி இருந்தனர். வேந்தர்கள், வேளிர்கள் மீது தொடுத்த போர்கள் காரணமாகவும், வேந்தர்கள் தமக்குள் செய்த போர்களின் விளைவாகவும் தமிழ் நிலத்தில் வறுமை கடுமையாயிற்று. இத்தகைய விவரங்களைச் சங்க இலக்கியங்களிலிருந்து நாம் பெறுகிறோம்.   5. சங்க இலக்கியம் சங்க காலம் அழிந்து தனி உடைமை, அரசு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இன்னொரு சமூகம் தோன்றியது. மருத நில நாகரிகம் குறிஞ்சி, முல்லை, முதலிய நாகரிகங்களின் ஊடே தன் செல்வாக்கைச் செலுத்தியது. மருதநில நாகரிகத்தின் ஒரு முக்கியக்கூறு வணிகர்கள் என்ற முறையில் இந்தப் புதிய நாகரிகத்தின் ஆக்கத்திற்கு வணிகர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது, புதிய நாகரிகத்தை வணிகர்தான் கட்டமைத்தனர் என்று கூறுவதைக் காட்டிலும், தனிஉடைமை, அரசு அதிகாரம் என்ற அடிப்படைக்கு அழுத்தம் கொடுத்துக் காண்பதே பெரிதும் பொருந்தும். நகரிய ஆக்கம் என்பது, தொன்மைக்கால சமூகத்திற்குப் பின் வரலாற்று வளர்ச்சியின் ஒரு முக்கியக்கூறு என்பதில் ஐயமில்லை.   இனக்குழு சமூக முறை மாறி தனி உடைமை, அரசு அதிகாரம் ஆகியவற்றின் ஆதாரத்தில், உடைமைச் சமூகம் தோன்றி நிலை பெறுவதற்கு நெடுங்காலம் ஆகும். இந்த இடைக்காலம் கடுமையான நெருக்கடி மிக்க காலம். இனக்குழுச்சமூகத்தின் பொதுமை அறம் பொது உடைமை அறம் அழிந்து உடைமை உறுதி பெறுவதை சமூகம் செரித்துக் கொள்ள இயலாது. பொதுமை அறம் தான் மக்களின் மனத்தைக் கவ்விப் பிடிக்கவல்ல அறம். இதற்கெதிரான தாக்குதல்கள் தொடர்ந்து இடைவிடாமல் நிகழ்த்தினால் ஒழிய, பொதுமை அறத்தின் ஆளுகை அழியாது. அதே போலத் தனிஉடைமை அல்லது அரசு அதிகாரத்தின் குரூரமான தாக்குதலுக்கு முன் மக்கள் சமூகம் நிலை குலையும் எனினும் இறுதியில் நிமிர்ந்து நிற்கும். சங்க இலக்கியத்திலிருந்து இங்கு ஒரு சான்றை எடுத்துச் சொல்லலாம். முன்னர் நிலவியது தலைவன் தலைவிக்கு இடையிலான களவுமுறை. அதுவே, மணமுறையுமாகும். உடைமையை அடிப்படையாகக் கொண்ட புதிய சமூகச் சூழலில் பெற்றோர், தலைவன், தலைவிக்கான களவை ஒப்புக் கொள்வதில்லை. குலம், செல்வம், என்று இவர்கள் பார்க்கின்றனர். இந்நிலையில் தலைவியை அழைத்துக்கொண்டு தலைவன் உடன்போக்கு நிகழ்த்துகிறான். அல்லது பெற்றோர் மனத்தை மாற்றுவதற்காகத் தலைவி அல்லது தோழி அறத்தோடு உறுதியாக நிற்கின்றனர். அறத்தோடு நின்ற பிறகு இவர்கள் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புக்கொண்டனர் என்பது புலமைநெறி. தலைவன் மடலேறுவதாகச் சொல்லவும் செய்வான். உடன்போக்கிலிருந்து தலைவியைப் பிரித்து வரவும் செய்வர். இப்படியெல்லாம் அங்கங்கே நடைபெற்றதைப் பாடல்கள் கூறுகின்றன. அதாவது உடைமைமுறை குலமுறை தோன்றிக் கடுமையாகச் செயல்பட்டதற்கு இப்பாடல்கள் ஆதாரம்.   மலையிலிருந்துப் பாறைகளோடு மோதி கீழிறங்கிவரும் பெரிய ஆற்று வெள்ளத்தில், வெள்ளத்தின் மோதலுக்கேற்றபடி, மேட்டிலும், பள்ளத்திலும் அலைக்கழிக்கப்படும் புணை மரக்கட்டை என்ற உவமையைத் தன் பாடல்களில் கணியன் பூங்குன்றனார் பயன்படுத்துகிறார். இந்தப் புணை என்பது அக்காலச் சமூகநிலையில் மக்கள் அலைக்கழிக்கப்பட்ட தன்மையை வெளிப்படுத்துகிறது. தம் காலத்தின் முறை விதி எனக் கணியன் பூங்குன்றனார் இதைக் குறிப்பிடுகிறார். விதிவாதம் என்ற கொள்கையை இந்தப் பாடலிலிருந்து பெறுவதைக் காட்டிலும் அக்காலச் சமூகம் ஒரு பிரளயத்தில் சிக்குண்டிருந்தது. மனிதர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை இப்பாடல் வெளிப்படுத்துகிறது என்று கொள்வது சமூகவியல் அறிவுக்குப் பொருந்தும்.   இப்படி ஒரு வெள்ளப் பெருக்கு சமூகத்திற்குள் வந்துவிட்ட நிலையில் இதைப்பற்றி எத்தகைய பார்வை கொள்வது என்ற சிக்கலுக்கு கணியன் தீர்வு சொல்லுகிறார். இவ்வகையில் இந்தப்பாடல் தமிழிலக்கியத்தில் ஓர் ஒளிவிளக்கென மதிப்பிடலாம். பாடலை இங்கு ஒருமுறை முழுமையாகப் பார்த்துக் கொள்ளலாம்.   யாது மூரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னா தென்றலு மிலமே மின்னொடு வானந் தண்டுளி தலைஈ ஆனாது கல்பொரு திறங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர் முறைவழிப் படூஉ மென்பது திறவோர் காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை இகழ்தலனினு மிலமே (192)   பூங்குன்றனார் சொல்லுகிறார். வெள்ளத்தில் அடிபட்ட புணை ஒரு சமயம் மேட்டில் ஏறிக்கொள்ளும். இன்னொரு சமயம் பள்ளத்தில் விழுந்து தடுமாறும். மேட்டிலிருப்பதற்காக, புணையைப் பாராட்ட முடியாது. பள்ளத்தில் விழுந்துவிட்டது என்பதற்காகப் புணையை இகழ முடியாது. புணைக்குத் தனி ஆற்றல் இல்லை. இருந்தாலும் பெருவெள்ளத்தில் அதற்கு இடமில்லை. இழுத்த இழுப்புக்குச் செல்லவேண்டியதுதான். இதிலிருந்து கணியன் சொல்லும் அற்புதமான அறம் இனி வருகிறது. கணியன் விதி வாதம் பேசவில்லை. அறம் சொல்லுகிறார். ஒருவர் பெரியவர் என்பதற்காக அவரைப் பாராட்ட வேண்டாம். சிறியவர் என்பதற்காக இகழவும் வேண்டாம். துன்பமும், இன்பமும் இயல்பாக வருவன. சாவு கூடப்புதியது இல்லை. வாழ்க்கை இன்பமானது என்று மகிழ வேண்டாம். துன்பம் என்று வருந்த வேண்டாம். வருந்துவதால் பயனில்லை. இந்தப் போக்குகளினால் மனம் சிறப்பது கூடாது. வாழ்க்கையின் இயல்பு அறிந்து மனம் விரிவடையவேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர். மாறுதல் காலத்தில் கணியன் பூங்குன்றன் வகுத்துரைத்த உச்சஅறம் இது. நெருக்கடிக்காலத்தில் அறம் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கவேண்டும். உடைமை முறைக்கு ஒருவன் இடம் கொடுத்து அழிந்துவிடக்கூடாது. சிறுத்துவிடவும் கூடாது. முன்னைய நிலையிலிருந்து பெயர்ந்துவிடக்கூடாது. தடுமாறக்கூடாது.   6. உடைமை தந்த நெருக்கடியை வள்ளுவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதை இப்பொழுது பார்ப்போம். ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு – ஆழி எனப்படு வார் (குறள் 989).   உலகத்திற்கு இறுதிக்காலம் நேர்ந்தாலும் சான்றோர் தடுமாறுவது இல்லை. நிலைபெயராத நெடுந்தூண் போன்றவர் சான்றோர்.   சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம் தான் தாங்காது மன்னோ பொறை. (குறள் 990).   சான்றோர் தம் பண்பாட்டிலிருந்து குறைவாரென்றால் இந்த நிலம் தாங்காது. அழியும். இன்னொரு குறள்:- பண்புடையார்ப் பண்டுண்டு உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன். (குறள் 996)   சான்றோர், பண்புகளால் நிறைந்தவர், இவர்களால் தான் இந்த உலகம் நிலைபெறுகிறது. இவர்கள் இல்லை என்றால் உலகம் அழிந்துவிடும்.   யார் இந்தச் சான்றோர் என்று ஆராயும் பொழுது சங்க இலக்கியம் நமக்கு வழி திறக்கிறது. சங்க காலத்தில் ஊர்கள் தோறும் அறங்கூர் அவைகள் இருந்தன. இந்த அவையிலிருந்து அறம் உரைத்தவர் சான்றோர். இவர்கள்தான் ஊரில் அறம் காவல் செய்தவர். அது இலக்கியங்களில் விவரிக்கப்படுவது சான்றோர் அறம் உடைமை அரசு அதிகாரம் காரணமாகச் சமூகத்தில் பிரளயம் நேர்ந்த காலத்தில் அறம் கண்டு உரைத்தவர் இந்தச் சான்றோர். துலாக்கோல் போல நடுவுநிலைமை பிறழாதவர் இந்தச் சான்றோர் ''கோடாமை சான்றோர்க்கு அணி" (குறள்,115,118) நடுவுநிலைமை பிறழாதது சான்றோர்க்கு அணியாகும். இங்கு சான்றோர் அழகுபடுத்தப் படுகின்றனர். சான்றோர் அழகு சொல்கிறது குறள். திருக்குறள் முழுவதும் சான்றோர் பரவலாக இடம் பெறுகின்றனர். இவர்கள் வகுத்த அறம் என்ன என்பதில் இங்கு நம் கவனத்தைக் குவிக்க வேண்டும். இங்குதான் வள்ளுவரின் வாழ்வியல் அழகியலை நாம் காண்கிறோம்.   7. உடைமை என்ற பெருநெருப்பு சமூகத்தைப் பற்றிக்கொண்ட பொழுது அதை மாற்ற அல்லது தணிக்க வள்ளுவர் என்ன சொல்கிறார் என்பதில் நாம் கவனம் குவித்துப் பார்க்கலாம். உடைமைச் சமூகத்தை வள்ளுவர் ஏற்றுக்கொள்கிறாரா? ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் நாம் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. பகைவரை அழிக்கப் பொருள் செய் என்று ஒரு சமயம் வற்புறுத்துகிறவர் (குறள் 759) இன்னொரு சமயம் பொருட்படுத்தத் தகுதியில்லாவரையும் பொருட்படுத்துமாறு செய்வது பொருள் என்கிறார்.(குறள் 751). கைக்கு வந்த பொருள் விரைவில் நீங்கிவிடும். நில்லாத செல்வத்தைக் கொண்டு நிலையானதை உடனே செய்துகொள் என்கிறார். (குறள் 335). பொருள் திரட்டுவதற்கு நல்ல நெறி உண்டா என்றால் இல்லை என்கிறார் (குறள் 315) பொருள் திரட்டுவதைப் பொறுத்தவரை தீயநெறி தான் நல்ல நெறி என்றும் சொல்லிவிடுகிறார். முற்பிறவியில் நல்லது செய்தவனுக்கு இப்பிறவியில் செல்வம் சேர்கிறது என்ற கருத்தை வள்ளுவர் மறுக்கவில்லை. ஆனால் உடனே பொறாமைப்படுகிறவன் அதாவது தீயவனுக்கு செல்வம் சேர்கிறது. நல்லவனுக்கு செல்வம் அழிகிறது. இதன் காரணம் அறியாது திகைக்கும் வள்ளுவர் இதனை ஆராயவேண்டுமென்று சொல்லுகிறார். (குறள். 169).   வள்ளுவர்க்குள் தொடர்கிறது சிக்கல்: வறியவன் செல்வனிடம் கையேந்தி நிற்கலாமா? பசு மாட்டிற்கு நீர் என்று இரப்பது கூட தவறு என்று அழுத்திச் சொல்கிறார் வள்ளுவர். (குறள் 1066), தாயின் பசிதீர்க்கக் கூட சான்றோர் பழிக்கும் வினை செய்யக்கூடாது என்கிறார். (குறள் 656) பசிக் கொடுமைப் பற்றிச் சொல்லும்போது நெருப்பினுள் கூட உறங்கலாம் வறுமையில் வாழமுடியாது என்கிறார் (குறள் 1049). மீண்டும் வறுமை தீர்க்க இரக்கலாமா? முகக்குறிப்பு அறிந்து கொடுப்பவன் முன்னிலையில் நிற்பது ஓர் அழகு என்கிறார். (குறள் 1053). குறிப்பறிந்து அவனாகக் கொடுக்கவேண்டும். கேட்கக்கூடாது என வள்ளுவர் அழுத்திச் சொல்கிறார். இரப்பதன் மூலம் மேல் உலகம் கிட்டுமென்றாலும் இரப்பது கூடாது என்கிறார். (குறள் 222). கொடுப்பதனால் மேல் உலகம் இல்லை என்றாலும் கொடுப்பது நல்லது. கடவுளை ஓரிடத்தில் வள்ளுவர் கடுமையாகச் சாடுகிறார். இரந்துதான் உயிர்வாழ வேண்டுமென்றால் இவனைப் படைத்த கடவுள் இவனைப் போலவே பிச்சையெடுப்பதற்காக அலைந்து சாகட்டும் என்கிறார். (குறள் 1062).   வள்ளுவரிடம் நாம் காண்பது கடுமையான முரண் நிலை. சமூகத்திற்குள் வந்துவிட்ட கடும் நெருக்கடி நிலை : எதிர்நிலைகளில் வள்ளுவரின் சார்பு எந்தப்பக்கம்? கேடும் பெருக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல. அதாவது இயல்பானவை, கேடு வரும் பொழுது மனிதன் தன்னிலையிலிருந்து தாழ்ந்துவிடக்கூடாது. இந்நிலையில் கோடாமை சான்றோர்க்கு அணி என்கிறார். நேர்மையிலிருந்து தவறக்கூடாது. இழிச்செயலுக்கு இடம் தரக்கூடாது. இத்தகைய மனிதனுக்கு வறுமை கூட அழகு என்கிறார். இன்னும் சொல்கிறார். அறிவுடையார் பார்வையில் பெருக்கத்தின் அழிவும் அழிவினுள் ஆக்கமும் தெரியும் என்கிறார். அழிவின் மூலமும் ஆக்கம் பெறமுடியும். இப்படிச் சொல்லுகிறது வள்ளுவரின் அறம்.   8. சங்க காலத்திற்கு முன்பு நிலவியது ஆதிப்பொதுமைச் சமூகம். தனியுடைமை அங்கு இல்லை. அரசோ, அதிகாரமோ அங்கு இல்லை. சமூகம் ஒன்றாக உழைத்தது. பகிர்ந்து கொண்டது. அது பொதுமை அறம். அந்த அறம் வள்ளுவர்க்குத் தொலைவில் இல்லை. பாரியும் அதியமானும் இந்த அறத்தின் விளைச்சல். இந்தப் பொதுமை அறம்தான் வள்ளுவர்க்குள்ளும் தங்கியிருக்கிறது. காலம் மாறித்தான் போயிருக்கிறது. மாறிவிட்ட காலச் சூழ்நிலையிலும் பொதுமை அறம் வள்ளுவர் வழியே இப்படி வெளிப்படுகிறது. ஒப்புரவு அறிந்தவனிடம் ஊருணியிலிருந்து நீர் எடுக்க அனுமதி தேவையில்லை (குறள் 215). ஊர் நடுவே பழுத்திருக்கும் மரம் போன்றது இச்செல்வம் என்கிறார். பசித்தவன் தன் தேவைக்குப் பறித்துக் கொள்ளலாம் (குறள் 216). இந்தச் செல்வம் மருந்து மரம் என்கிறார் (குறள் 217 ) பசிநோயால் பாதிக்கப்பட்டவன் மரத்திலிருந்து பறித்துக் கொள்ளலாம். தன் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளாதவன் நடு ஊரில் நச்சுமரம் என்கிறார். இந்த மரத்தை வெட்டலாம் (குறள் 1077). வள்ளுவர்க்கு மறுப்பு இல்லை . செல்வம் பொது என்பதற்கு இன்னும் நெருக்கமாகத்தான் வள்ளுவர் இருக்கிறார்.   வள்ளுவர் அறம் பற்றி ஆழ்ந்து பார்க்கும் பொழுது இரண்டொரு கூர்மையான விமர்சனங்கள் தெளிவாகப் புலப்படுகின்றன. வள்ளுவர்க்கு முன்பு உலகம் ஒன்றாக இருந்திருக்கிறது. அதுதான் ஆதிப் பொதுமைச் சமூகம். இப்பொழுது உலகம் இரண்டாகிவிட்டது. திருவும் அறிவும் பிரிந்துவிட்டன. இவை இனி சேரமுடியுமா என வள்ளுவர்க்குத் தோன்றவில்லை.   இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியராதலும் வேறு (குறள் 374)   குறளை ஆழ்ந்து கற்றால் எல்லா மட்டங்களிலும் எல்லாக் களங்களிலும் உலகம் இரண்டாயிருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம் மனிதனும்,விலங்கும் எதிர்நிலைகள். அறிவும்-பண்பும் எதிர்நிலைகள். அருளும்-பொருளும் எதிர்நிலைகள்; இன்னும் இவைபோலப் பல இந்த எதிர் நிலைகளுக்குள் ஊடாட்டங்களும் நேருகின்றன. பொய்மையும் வாய்மையாகும். வாய்மையும் பொய்யாகலாம். அறம் மறமும் எதிர்நிலைகள். இவற்றுக்கிடையில் அன்பின் ஊடாட்டம் வள்ளுவரின் பார்வை கூர்மையாகப்பட்டுத் தெறிக்கும் இன்னும் ஓரிடம். பல்லக்கில் அமர்ந்திருப்பவன் பல்லக்கைத் தூக்கிச் செல்பவன் இவர்களுக்கிடையில் இதுதான் அறம் என வகுக்க வேண்டாம் என்கிறார்(குறள் 37). சென்ற பிறவியில் நாம் நன்மை செய்தவன் இப்பொழுது பல்லக்கைத் சுமக்கிறான் இவர்கள் நிலைமை அடுத்த பிறவிகளில் தலைகீழாகும் இப்படிச் சொல்ல வேண்டாம் என்கிறார் நிலைமை இங்கு மிக சிக்கலாய் இருக்கிறது என்ற புரிதல் வள்ளுவருக்கு இருந்திருக்கிறது நன்மை தீமைகளுக்கு இடையில் தொடர்பு உண்டு என்ற கருத்துடையவர் தான் வள்ளுவர். வள்ளுவர் இங்கு என்ன செய்ய முடியும்? இதைப்போலவே கடவுள் என்ற கருத்தை வள்ளுவர் ஒப்புக் கொள்பவராக இருந்தபோதிலும் கடவுள் மீது வள்ளுவரின் விமர்சனம் கடுமையானதுதான். உலகில் பசித்தவன் அலைகிறான். படைத்தவனும் பிச்சை எடுத்துத் திரியட்டும் என்கிறார். தன் குடியின் உயர்வுக்காக உழைப்பவனுக்கு தெய்வம் துணியை மடித்துக்கட்டிக்கொண்டு உதவிக்கு ஓடி வரும் என்கிறார்.ஓடி வர வேண்டும். ஓடி வந்தால்தான் தெய்வம்.   தனிஉடமையைப் போலவே இந்தப்புதிய சமூகத்திற்குள் வந்து சேர்ந்திருக்கும் அரசு அதிகாரம் பற்றி வள்ளுவரின் விமர்சனம் என்ன? அரசு அதிகாரம் இல்லாத ஒரு காலம் பற்றி வள்ளுவர் சிந்திக்க முடியவில்லை. அரசன் மக்களை கொடுமைக்குப் உள்ளாக்க கூடாது. கொடுமைக்கு உள்ளாக்கினால் மக்கள் வடித்த கண்ணீர் அரசு செல்வத்தை அழிக்கும் படை என்கிறார். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் இறைவனாக மக்களால் மதிக்கப்படுவான் என்கிறார். இங்கு இறைவன் முறை செய்யவேண்டும் என்று வள்ளுவர் கருதுவதை காணலாம். பொதுவாக மக்கள் சார்பில் அரசு அதிகாரத்திற்கு நீதி சொல்கிறது வள்ளுவரின் ஆழம் பெரியாரை அதாவது சான்றோரை இகழ்ந்தால் அரசன் ஆவான் என்றும் கூறுகிறார். தனி உடமையை விமர்சனம் செய்யும் அளவிற்கு அரசு அதிகாரத்தின் மீது வள்ளுவருக்கு விமர்சனம் இல்லை.   எதிர் நிலைகளுக்கிடையில் வள்ளுவரின் சார்பு எந்தப் பக்கம் என்று பார்க்கும் பொழுது உழைப்பவர் பக்கம் என்று தெளிவாகச் சொல்லலாம். விதி வலிமை உடையதுதான். எனினும் முயற்சி செய்தால் விதியை வெல்லமுடியும். வெல்ல முடியாவிட்டாலும் உழைப்புக்கேற்ற கூலியாவது கிடைக்கும். உழைப்பின் போது துன்பங்களை ஏற்பது கூட இன்பம். இடுக்கண் கண்டு ஒருவன் தளரக்கூடாது. தொகுத்துச் சொன்னால் வள்ளுவர் அறம், கொடு, வாங்காதே, கடுமையாக உழைத்து உனக்காக உலகத்தை உருவாக்கு. அன்பு உயிர்க்குணம். ஆகவே, அன்பு செய் தீமைக்கு ஒத்துப் போகாதே.   9. இடைக்காலத்துச் சமூகம் நெருக்கடிகள் மிகுந்தது என்று கூறினோம். உடைமை ஆதிக்கம் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கிறது. இந்த நெருக்கடிகளுக்கிடையில் மனிதன் அழிந்துவிடக்கூடாது. அவன் நிலைத்து நிற்கவேண்டும். இந்த மனிதனுக்கு அறம் வகுக்கிறார் வள்ளுவர். இடைக்காலச் சமூகத்தில் இருந்த சான்றோர் அறம் காத்தனர். இந்த அறத்தைச் சான்றோர் அறம் எனச் சொல்வது பொருந்தும். ஆதிப் பொதுமைச் சமூகத்திலிருந்து வடித்தெடுக்கப் படுவது இந்த அறம். ஆதிச் சமூகத்தில் செல்வம், பொது. அதாவது உழைப்பதும் பகிர்ந்து கொள்வதும் பொதுவாக இருந்தது. இந்த வாழ்க்கை மேன்மையானது என்ற உணர்வு அந்தச் சமூகத்துக்கு இல்லை. உடைமையும், ஏற்றத்தாழ்வுகளும், நெருக்கடிகளும் ஏற்பட்ட சூழலில், அந்தப் பழம் சமூகம் பற்றிய புரிதல் உணர்வளவிலேனும் சான்றோர்களுக்கு ஏற்படுகிறது. அதாவது இழந்த பிறகு, இழந்தது எது, இழந்தது எவ்வளவு மேன்மையானது என்ற புரிதல் ஏற்படுகிறது. அந்தத் தொன்மைச் சமூகத்தின் தொடர் விளைச்சலாக பாரி, அதியமான் போன்றவர்கள் இருந்தார்கள். தொன்மைச் சமூகத்தின் நினைவுகளும், கனவுகளும் வள்ளுவர் காலத்தில் நிறையவே இருந்திருக்கவேண்டும். இந்தப் பொதுமை அறம் என்ற ஊற்றிலிருந்து புதிய சமூகத்திற்கான அறம் சான்றோரால் வகுக்கப்படுகிறது.   சான்றோர் அறத்தின் மையமாக இருக்கும் மனிதன் தனக்கென வாழாதவன், தன்னிடமிருப்பதைப் பகிர்ந்து கொள்பவன். உழைப்புக்கு அஞ்சாதவன், துன்பங்களின் வழியே தன் ஆற்றலைப் பெருக்கிக் கொள்பவன். இவனைப் பற்றி ஒரு தொகுப்புச் சித்திரம் புறநானூற்றில் கிடைக்கிறது. இந்தச் சித்திரத்தை வரைந்தவன் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி . புதிய சமூகத்திற்கு அறம் வகுத்த சான்றோர்கள் எத்தனையோ பேர். அவர்களுள் ஒருவர் கணியன் பூங்குன்றனார். இன்னொருவர் இளம் பெருவழுதி . இன்னும் ஒருவர் நம் வள்ளுவர். இவர்கள் எல்லோருமே புதிய சமூகத்திற்குப் பழைய சமூகத்தின் ஊற்றிலிருந்து அறம் வகுத்தவர்கள். இவர்களுள் ஒருமித்த கருத்து இருப்பது வியப்புக்குரியது அன்று. இப்பொழுது கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் பாடலைக் காண்போம். உண்டா லம்ம. விவ்வுலக மிந்திரர் அமிழ்த மியைவ தாயினு மினிதெனத் தமியருண்டலு மிலரே முனிவிலர்   துஞ்சலு மிலர் பிறரஞ்சுவ தஞ்சிப் புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனில் உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர் அன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுநர் ருண்மை யானே (182)   வரிக்கு வரி இந்தப் பாடலின் கருத்துகளை வள்ளுவரிடத்திலும் நாம் காண முடியும்.   10. வள்ளுவரின் அறத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியலுக்கும் அவரது இலக்கியவியலுக்கும் உள்ள உறவை இப்பொழுது பார்க்கலாம். ஒரு சான்றோரை ஆதாரமாக்கி அறம் வகுத்தார் வள்ளுவர். வள்ளுவர் நூலின் ஆதாரமையம் இந்தச் சான்றோன் . வள்ளுவரின் அறநூலை நீதி இலக்கிய மென்று கொண்டால், இந்தச் சான்றோர் தான் இலக்கியத்தலைவன். தனி உடைமை என்னும் வெள்ளப்பெருக்கை இவன் தன் கையால் தடுத்து நிறுத்த முனைந்திருக்கிறான். மரபின் ஆற்றலை இவன் தனக்குத் துணையெனத் தேர்ந்திருக்கிறான். உலகம் பெயரினும் தான் பெயர மாட்டேன் என்று இவன் உறுதியாக நிற்கிறான். சமூகம் என்னும் கட்டடத்தைத் தாங்கும் தூணாக நிற்கிறான். செல்வத்தோடும் அதிகாரத்தோடும் வரும் தீயவர்களை இவன் சாடுகிறான். சந்தேகப்படுகிறான். ஆராய்கிறான். தன் வாழ்க்கையைத் திறந்து வைத்து, தன்னைப் பற்றிப் பிறரது ஆய்வுக்கு வாய்ப்புத் தருகிறான். வள்ளுவர் நூலிலிருந்தே இந்தச் சான்றோரின் வாழ்க்கை இந்தச் சூழலில் என்ன ஆகிறது என்று பார்க்கமுடியும். இவன் வறுமைப்பட்டுப் போகிறான். தன் நிலையிலிருந்து இவன் தாழவில்லை. இன்னும் பெருமிதத்தோடுதான் இவன் வாழ்கிறான்.   வறுமை மற்றவரின் மனங்களை மாற்றுகிறது. அரசு அதிகாரத்தின் சேவைக்குப் பலர் சென்றுவிட்டார்கள். உடைமை திரட்டுவதற் காகவும் பலர் சென்றுகொண்டிருக்கிறார்கள். இரண்டாகிவிட்ட உலகத்தில் அறிவு அன்பற்றுப் போவதை இந்தச் சான்றோன் பார்க்கிறான். செல்வத்திற்கு ஆதிக்கம் சேர்வதையும் இவன் பார்க்கிறான். புதிய சமூகம் நிலைபெற்றுவிடும் என்றுதான் தோன்றுகிறது.   சான்றாண்மை தனக்குள் திரண்டிருக்கிற ஒப்புரவாளர்கள் பற்றி வள்ளுவர் தந்திருக்கும் சில சித்திரங்களை இங்கு நாம் தொடரலாம். வள்ளுவரின் அறநூலில் நிறைய சித்திரங்கள் உள்ளன. இவை மடித்து வைக்கப்பட்டு சிறிய வடிவினதாய் நமக்குத் தோன்றுகின்றன. சித்திரங்களுக்குள் நம் பார்வையைச் செலுத்தினால் சித்திரங்களின் முன்னைய காட்சிகளும், தொடர் காட்சிகளும் நம் மனத்திரையில் விரிவு பெறும். இங்கு ஒப்புரவாளன் பற்றிய சித்திரங்களை மட்டும் மடிப்பு நீக்கிப் பார்க்கலாம்.   முதலில் ஊருணி பற்றிய சித்திரம் - எல்லோரும் வந்து குடம் குடமாய் நீரெடுத்துச் சென்றனர். வற்றிவிட்டால் என்ன செய்வதென்று அவசரமாய் நீரெடுத்துச் சென்று தம் வீடுகளில் நிரப்பிக் கொண்டனர். குளத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி. இவ்வளவுக்கு நான் பயன்படுகிறேனே என்ற மகிழ்ச்சி. நீர் குறைந்து போகிறது. தொடர்ந்து ஊறுவதும் குறைகிறது எனினும் குளத்திற்கு மகிழ்ச்சிதான். இறுதியில் நீர் அற்றுப் போகிறது. பறவைகளுக்கும் கூட நீர் இல்லை . பறவையின் பாடல்களை இனிக் கேட்க முடியாது. குளத்திற்கு நீர் வேண்டாமா? நீர் இல்லை. மக்களுக்கு ஏன் இவ்வளவு பேராசை? தனக்கு நீர் இல்லாவிட்டாலும் கொடுத்தோமே என்ற மன நிறைவு. இனி தருவதற்கில்லையே என்ற கவலை. ஏமாற்றப் பட்டேனோ என்னும் கவலை. நீர் வரத்துக்கு வழி இல்லை. இனி என்றும் கோடைதான். இனி தனக்கு வாழ்வில்லை. மனநிறைவோடு செத்துப் போக வேண்டும். இன்னொரு காலத்தில் விழித்துக் கொள்ளவேண்டும்...   பழுமரத்தைச் சார்ந்தும் இந்தக் கற்பனையை விரிக்கலாம். இதைச் சுருக்கமாகச் சொல்லலாம். காய்களைக் கூட பறித்துக் கொண்டு செல்கிறார்கள். பழுக்கும் வரை காத்திருக்கப் பொறுமையில்லை. பழம் பறிக்க வருவோர்க்கிடையில் போட்டி பூசலும் தகராறுகளும், ஊர்ப் பொதுவில் மரம் வேண்டாம். வெட்டித் தள்ளுங்கள் என்று ஒரு பெரிய மனிதன் வருகிறான். மரம் வெட்டப்படுகிறது. மரத்தின் ஆசைகள் அழிகின்றன. இதேபோலத்தான் மருந்து மரத்திற்கும் நேர்கிறது. இந்த மரம் வெட்டப்பட்ட பிறகு மருந்து தேடி மக்கள் அலைகின்றனர். மருந்தும் இனி விலைப்பொருள். வாழ்க்கையும் இனி விலைப்பொருள். பொதுமை அறம் இனி கனவில் மட்டுமே. அங்கங்கே இந்தச் சான்றோரைப் போல இன்னும் மனிதர்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வரலாற்றுக் காலத்தில் இவர்களுக்கு அழிவு இல்லை. அற நம்பிக்கை குறைந்த சமூகம் அழுகிப்போகும். சிலரேனும் ஊருணியாக, மருந்து மரமாக இருக்கத்தான் வேண்டும். இப்படியும் சான்றோர் சிந்திப்பதாக நாம் கற்பனை செய்து கொள்ளலாம். வள்ளுவரின் சான்றோன் சமூக தளத்தில் ஓர் ஒளிவிளக்கு, விளக்குக்கு எண்ணெய் வேண்டும். எண்ணெய் குறைந்த நிலையில் திரியும் சேர்ந்து எரிகிறது. ஒளி அணைந்த தெனினும் சிலர் உள்ளங்களிலேனும், இந்த ஓளியின் நினைவு பதிந்திருக்கிறது. உடைமை அறம், அரசு அதிகாரத்தின் அறம். ஊர்களைப் பற்றிக் கொண்டாலும் உழைக்கும் மக்களுக்குள் வள்ளுவர் வழியே இன்னொரு உயிர்ப்பைப் பெற்ற அந்தப் பழங்காலத்துப் பொதுமை அறம் வாழத்தான் செய்கிறது. உழைப்பவன் பகிர்ந்து கொள்வான். துன்பப்படுகிறவனுக்குப் பிறர் துன்பம் தெரியும். சேர்த்து வைத்தால் தீமை விளையும் என்பதும் தெரியும். பகிர்ந்து உண்பதில் தான் பரவசம் கிட்டும். இருப்பது குறைவெனினும் இவன் பகிர்ந்து கொள்வான். ஊருக்காக உழைப்பது இவனுக்கு யோகம். தன்னை அழித்துக் கொண்டும் ஊருக்காக உழைப்பதன் மூலம் இவன் மக்கள் நெஞ்சங்களில் நிலை பெறுவான். இவனுக்குள் தங்கியிருப்பது அறம். இவன் எளியவன். அன்பானவன். இவனது வாழ்வுக்குத் தோரணங்கள் இல்லை. மாடங்கள் இல்லை. எனினும் இவனுக்குள் அன்பு மழையாய்ப் பெய்கிறது. இவனுக்குள் அன்பு ஊற்றெடுக்கிறது. இவனுக்குள் மரம் தழைக்கிறது. மரம் தேடி வந்து பறவைகள் பாடுகின்றன. வானம் இவனுக்காக விரிந்திருக்கிறது. இவன், நிலத்திற்கு வித்து. உப்பு. இவன் ஒளிவிளக்கு. செல்வம் தங்களைச் சிதைத்து மக்கள் நோயாளிகளாக மாறுகிறபோது இவனைத் தேடி வருவார்கள். அதிகாரம் இவர்களை நொறுக்குகிற போது இவன் தாயாய் இருந்து அவர்களுக்கு மருந்திடுவான். இவனுக்குள் ஆர்ப்பாட்டம் இல்லை. தோரணங்கள் இல்லை. எளியவனுக்கு இவன் அழகு தெரியும். இவன் வாழ்வின் அழகியல் தெரியும். ஒருகாலத்தில் இவன் பெருமிதத்தோடு வாழ்ந்தான். இப்பொழுது அவனிடம் பெருமிதம் இல்லை. இப்போது அவன் எளியவன். எனினும் அழகியவன்.   வள்ளுவரின் வாழ்வியலின் அழகியல் என்று இதைச் சொல்லலாம். எளிமையில் அழகு நன்மையின் அழகு. உண்மையில் அழகு. நல்லதில் அழகு. இன்னும் ஒன்றைச் சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கலாம். வள்ளுவரின் சான்றோனுக்கு, மனிதனுக்கு வரலாற்றில் அழிவில்லை. வரலாற்றுக்குள் இன்னும் ஈரம் இருக்கத்தான் செய்கிறது. அந்த ஈரத்தில் இந்த வித்து முளைக்கும். மரம் தழைக்கும். இதற்கு இடப்படும் பெயர் சமதர்மம்/ சோசலிசம்.                                                                                   10. வள்ளுவரின் காவியம்   வள்ளுவர் காவியம் எழுதவில்லை என்பது உண்மைதான். ஆனால் மனிதனைப் பற்றிய வள்ளுவரின் பார்வையில் காவியப்பரிமாணங்கள் இருப்பதை நாம் உணர முடியும். வள்ளுவருக்குள் ஒரு காவியத்தலைவன் இருக்கிறான். வானத்தையும் பூமியையும் ஒருங்கிணைக்க வல்லது காவியம் என்றால் வள்ளுவருக்குள் இப்படி ஒரு காவியம் இருக்கிறது.   ’ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்’ (குறள் 989)   என்பது ஓர் அற்புதமான குறள் உலகத்திற்கே இறுதிக்காலம் வந்த நிலையிலும் சான்றாண்மையில் நிலை நிற்பவர் தம் நிலையிலிருந்து பெயர்வதில்லை. அன்றியும், உலகத்தை அதன் மையத்திலிருந்து பிறழாமல் உலகை நிலை நிறுத்தும் வல்லமை உடையவர் இந்த சான்றோர். இந்தச் சான்றோர் தான் வள்ளுவரின் காவியத் தலைவன். திருக்குறளின் அறம். முழுமையும் இந்தச் சான்றோனின் பார்வையிலிருந்துதான் எழுகிறது மற்றும் விரிவடைகிறது. வள்ளுவருக்குள் தங்கியிருப்பவர் இந்தச் சான்றோர் சங்ககாலத்தில் எழுச்சி பெற்ற இச் சான்றோரை வள்ளுவர் தனக்குள் தாங்கியுள்ளார்.   ‘பண்புடையார் பட்டுண்டு உலகம் அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன்' (குறள் 996)   என்பது இன்னொரு குறள். பண்புடைய இந்தச் சான்றோர் தான் உலகத்தை அழியாமல் காப்பவர். சங்க காலம் ஒரு மாறுதல் காலம். பழைய உலகம் அழிந்து வருகிறது. புதிய உலகம் சான்றோர்க்கு உவப்பு தராத உலகம். திரு ஒரு பக்கம். தெள்ளியராதல் இன்னொரு பக்கம். இப்படி இரு வேறுபட்ட உலகத்தை இடையில் நின்று பார்ப்பவர் இந்த சான்றோர். அறத்தை ஆதாரமாக வைத்து இந்த உலகத்தை மீண்டும் அதன் அச்சில் நிலைநிறுத்த வேண்டும்.   ‘கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றும் கொல்லோ உலகு' (குறள் 211)   என்ற குறளில் கைம்மாறு கருதாமல் மழை பெய்யும் மேகத்திற்கு  உலகம் எந்த வகையில் எதை திருப்பி தர முடியும். எதைத் தந்தாலும் மேகம் தரும் பயனுக்கு ஈடாகாது. சான்றோரின் பார்வையில்தான் மேகம் இந்த வளத்தைப் பெறுகிறது.   இந்தச் சான்றோரை எத்தனையோ பெயர்களில் வள்ளுவர் குறிப்பிடுகிறார். பேரறிவாளன் என்கிறார். நயனுடையார் என்கிறார். இத்தகையவர் நீரால் நிறைந்த ஊருணி போன்றவர் என்கிறார். உள்ளூரில் பழுத்த மரம் என்கிறார். தம்மிடம் வந்து சேரும் எல்லாவற்றையும் இவர்கள் எல்லோருக்கும் வழங்கவல்லவர். என்கிறார் வள்ளுவர். ஊருணியை யாரும் கேட்டு நீர் எடுக்க வேண்டியது இல்லை. பழுத்த மரத்திலிருந்து பழத்தை யாரும் பறித்துண்ணலாம்.   இந்தச் சான்றோரின் பண்பு நலன்களை வகைவகையாகச் சொல்லிச் செல்கிறார் வள்ளுவர். பிறர் செய்யும் துன்பங்களை இவர். பொறுத்துக் கொள்கிறார். இவருக்கு வறுமை வரலாம். வறுமை காரணமாக இவர் மனம் சிறுத்துப் போவதில்லை. வறுமை கூட இவருக்கு ஒரு அழகுடன் தன் எலும்பை கூட பிறருக்கு இவர் உரிமையாக்குவர். இவருக்குள் நடுக்கம் இல்லை. இவரது பார்வை என்றும் தெளிவானது. இவருக்கு யாரும் தீங்கு செய்துவிட முடியாது. பிறர் தமக்கு செய்யும் தினையளவு நன்மையும் பனையளவாகக் காண்பவர் இந்த பெரியவர். தப்பித்தவறி மனம் தடுமாறி இவர் ஏதாவது தவறு செய்வாரெனின் கவரிமான் போன்ற இவர் தம் உயிரை மாய்த்துக் கொள்வர். குன்று போன்ற பெருமிதமான தோற்றம் உடையவர் இவர். வானைப் போன்ற விரிந்த மனமுடையவர் இவர். இந்தச் சான்றோரிடமிருந்து தான் திருக்குறளின் அறம் விரிகிறது மற்றும் செழிக்கிறது.    ‘காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்  ஞாலத்தின் மாணப் பெரிது ’(குறள் 102).   இந்தக் குறளில் செயல்படும் கற்பனையை மனத்தில் இருத்தி நாம் சற்றுச் சிந்திக்க வேண்டும். பிறர் நமக்குச் செய்த உதவி, பொருள், கால அளவு முதலியவற்றை வைத்துப் பார்க்கும் போது சிறியது தான் என்பதில் ஐயமில்லை. எனினும் பண்புடையார் பார்வையில் உலகத்தைவிடப் பெரியது அல்லது உலகத்தையே வழங்கினாலும் இந்த உதவிக்கு ஈடாகாது. வள்ளுவர் இதற்கு மேலும் செல்லுகிறார். பயன் கருதாமல் பிறர் நமக்குச் செய்யும் உதவியை எண்ணிப் பார்க்கும் பொழுது வானத்தையும் வையகத்தையும் தந்தாலும் ஈடாகாது. உதவி என்பதை மதிப்பிடும் அளவுகோல் எது என்பதை வள்ளுவர் ஆராய்கிறார். செய்த உதவி தினையளவு என்றாலும், அதைப் பனையளவு என்கிறார். வானமும் வையகமும் வள்ளுவர் பார்வைக்குள் சுழன்று வருகின்றன. பண்புடைய மனிதரின் மன இயல்பு குறித்து நாம் சிந்திக்க வேண்டும். தினை எப்படிப் பனை ஆகும்? கண்ணருகில் விரலை வைத்தால் கதிரவனும் மறைந்துவிடுகிறான். நுண்பெருக்காடியில் சிறிய புள்ளி கூட மலையெனத் தெரியும். மனிதனுக்குள் செயல்படும் ஒருவகை கற்பனைத் திறன் இது. அறவுணர்வோடு இந்தக் கற்பனைத்திறனும் ஒத்து இயங்கும்போது மிகச் சிறியதும் மிகப் பெரியதாகிவிடுகிறது.   ’வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன் நெஞ்சம் தானறி குற்றப் படின்’ (குறள் 272)   இதே போல் இன்னொரு குறள்   'எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்’ (குறள் 144 )   இங்கெல்லாம் நம் பார்வைகள் வள்ளுவர் வழியே காவியப் பரிமாணங்கள் வந்து போவதைக் காண்கிறோம்.   ’வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்' (குறள் 50)   என்பது ஒரு குறள். மனிதன் இங்குத் தெய்வம் ஆகிறான்.   ‘தன்னுயிர் தான் அறப்பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் (குறள் 268 )   இங்கும் மனிதனுக்குள் தெய்வத்தைக் காண்கிறார் வள்ளுவர். இத்தகைய மனிதருக்கு மேலுலகம் கூட முக்கியமில்லை . மண்ணுலகமே முக்கியம். உயிர்களே முக்கியம். இப்படி மண்ணுலகில் காலூன்றி நிற்கும் மனிதருக்கு தெய்வம் கூட ஒரு பொருட்டில்லை. இவர்கள் தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலம் போன்றவர்கள். தம் நாவுக்கு நீர் என்று பிறரை இவர் யாசிப்ப தில்லை . (குறள் 1065). வறுமையைப் படைத்தவன் இறைவனே என்றாலும் அந்த இறைவனையும் கடிந்துரைப்பவர்கள் இவர்கள். மனித முயற்சிக்கு தெய்வம் ஓடி வரவேண்டும் என்று கூறுபவர்கள் இவர்கள். இவர்கள் வழிபடத்தக்கவர். இவர்கள் பற்றற்றவர்கள். செம்பொருள் கண்டவர்கள். இயற்கையோடு இணைந்தவர்கள். இயற்கையானவர்கள். (குறள் 370). இவர்கள் பார்வையில் துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே மேல். அறத்திற்கு எதுவுமே ஈடாகாது என்பவர்கள் இவர்கள்.   வள்ளுவர் காவியம் எழுதவில்லை. வள்ளுவர் காலத்திற்குப் பிறகுதான் தமிழில் காவியங்கள் எழுந்தன. எனினும் வள்ளுவருக்குள் காவியத்தின் இயக்கம் தொடங்கிவிட்டது. பிறகு தோன்றிய காவியங்களுக்கு உரிய வித்தும் விரிவும் வள்ளுவருக்குள் கிடைக்கின்றன. வானத்தையும் பூமியையும் உள்ளடக்கிய பார்வை வள்ளுவருக்குள் வந்துவிட்டது. மனிதரையும் தேவரையும் இணைத்துப் பார்க்கின்றார் வள்ளுவர். மனிதனுக்குள் விலங்கையும் விலங்கிற்குள் மனிதனையும் பார்க்கிறார். தினையும் பனையும் வள்ளுவருக்குள் வெவ்வேறு பரிமாணங்களில் தோற்றம் தருகின்றன. அமுதம் நஞ்சாகிறது. மனிதனுக்குள் வானமும் பூமியும் அடங்கி யிருக்கின்றன. தன் ஆர்வங்களுக்கேற்ப உலகை மாற்றிப் பார்க்க மனிதன் தெரிந்து கொண்டிருக்கின்றான். காவியப்பார்வை இப்படி வள்ளுவருக்குள் வளமாகத் தெரிகிறது.                   11. வள்ளுவர் - ஒரு கதைக் களஞ்சியம்   திருக்குறள் இலக்கியமல்ல. நீதி நூல்தான் என்று சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு க. நா. சு. ஒரு கருத்தை முன்வைத்தார். இலக்கியத்தின் நோக்கம் அறிவுறுத்துவது அன்று. இன்பம் தருவதுதான் என்பது அவர் கருத்து. க.நா.சு.வின் கருத்தை நாம் எளிதாக மறுத்துவிட இயலும். எந்த இலக்கியமும் அறவுணர்வை உள்ளடக்கமாகக் கொண்டதாகத்தான் இருக்கிறது. வாழ்வு என்று சொல்லும் பொழுது அறவுணர்வை ஒதுக்கிப் பேச முடியாது. எனினும் அறம் சொல்வதை அழகுபட இலக்கிய நயத்தோடு, உவமை உருவகம் முதலிய அணிநலன்களோடு சொல்வதனால் மட்டுமே ஒரு அறநூலை இலக்கியம் என்று சொல்லவும் முடியாது. திருக்குறளில் இலக்கிய நயங்கள் விரிவாகவே இடம்பெறுகின்றன. பிற்காலத்தில் எழுந்த கோவை இலக்கியம் போல் இன்பத்துப்பால் அமைந்திருக் கிறது. அகத்திணை இலக்கணம் என்பதற்கு தொல்காப்பியர் கூறிய வரையறைகளை கூடியவரை உள்ளடக்கியதாகத்தான் இன்பத்துப் பால் அமைந்திருக்கிறது. வரையறை என்ற எல்லைக்குள் இயங்கினாலும் இலக்கிய ஆக்கத்தின் தனிக்கூறுகள் இன்பத்துப் பாலில் விரிவாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளன. திருக்குறளின் ஒரு பகுதியைத்தான் இலக்கியம் என்று சொல்லலாமா என்ற கேள்வியும் நமக்கு உறுத்தலாகத்தான் இருக்கிறது. திருக்குறளை இலக்கியம் என்று இனம் காண்பதற்கு வேறுசில விவாதங்களை இங்கு முன்வைக்க முடியும்.   வள்ளுவர் நமக்கு நிறைய கதை சொல்லுகிறார். இலக்கியம் என்பதன் முக்கியமான கூறு கதை சொல்லுதல். ஒரு காவியத்தில் நிறைய கிளைக்கதைகள் இடம் பெறுகின்றன. கிளைக்கதைகளை ஆசிரியர்கள் விரித்துச் சொல்வதில்லை. சுருக்கமாகவே சொல்லு கின்றனர். திருக்குறள் ஒரு காவியமா என்ற கேள்வியைப் பிறகு பார்க்கலாம். நமக்குள் விரித்து பார்த்துக் கொள்வதற்கு உரிய பல கதைகளை வள்ளுவர் சுருக்கமாகக் குறள் நெடுகச் சொல்லுகிறார்.   கதை என்பதனுள் எவ்வளவு நிகழ்ச்சிகள் இடம் பெறலாம்? குறைந்த அளவிற்கு ஒரு கதையில் இரண்டு நகர்வுகள் இருந்தால் போதும் என்று நாம் கருத முடியும். புலி பாய்ந்தது என்று சொல்லும் பொழுதே ஒரு கதை தொடங்கிவிடுகிறது. இதில் இரண்டு நகர்வுகள் உள்ளன. அமைதியாக அமர்ந்திருந்த புலி என்பது கதையில் சொல்லப்படாத ஒரு நகர்வு. பாய்ந்தது என்பது இன்னொரு நகர்வு. கதை நமக்குள் தொடங்கிவிடுகிறது. இரண்டு நகர்வுகளுக்கிடையில் ஒரு முரண் தேவை. இந்த முரண்தான் நமக்குள் கதை என்பதன் சுவை நுகர்வைத் தூண்டுகிறது. வள்ளுவர் சொல்லும் கதைகளில் இரண்டும் இரண்டிற்கும் மேற்பட்ட நகர்வுகள் உள்ளன. கதைகளும் வகைவகையாக உள்ளன. "இளையதாக முள் மரம் கொல்க" (குறள் 879) என்று தொடங்குவது ஒரு குறள். வீட்டின் முன்னால் வளர்கிறது ஒரு முள்செடி. பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிறியது தானே என்று அதைப் பிடுங்கி எறிவதில்லை. நன்றாக வளர்ந்து வயிரம் பாய்ந்த மரமாகி விடுகிறது. இப்பொழுது வெட்டியாக வேண்டும். அரிவாள் கொண்டு வெட்டுகிறோம். கையில் பலமுறை முள் தைக்கிறது. இடத்தைவிட்டு மரத்தை அகற்றும் போதும் துன்புறுகிறோம். சிறியதாக இருந்த பொழுதே வெட்டியிருக்க வேண்டும்.   இந்தக் குறளில் சொல்லப்படுவது ஒரு கதை. இது உருவகக் கதை. மரத்தை எப்பொழுது வெட்ட வேண்டும் என்ற அறிவுரையை வள்ளுவர் நமக்குச் சொல்லவேண்டியதில்லை. இந்த குறள் இடம் பெற்ற அதிகாரத்தை வைத்து கதையின் பொருளை நமக்குள் விரிவுபடுத்துகிறோம். பகைவர்களை அவர்கள் வலிமையில்லாத தொடக்க காலத்திலேயே கண்டறிந்து ஒழித்துவிட வேண்டும். வளரவிட்டோம் என்றால் பிறகு அவரை அழிப்பதற்குப் பெரும் சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இப்பொழுது நமக்கு ஒரு கதை கிடைக்கிறது. அதிகாரத் தொடர்பிலிருந்து நீக்கியும் பொதுமைப்படுத்தி இந்தக் கதையைப் பொருள் படுத்த முடியும். இளம் வயதில் நமக்குள்ளும் சில தீய குணங்கள். பழக்கங்கள் இருக்கலாம். இருக்கட்டும் என்று இருந்தோம் என்றால் பிறகு களைவது கடினம். இந்தக் கதைக்குள்ளிருந்து இதன் எதிர்நிலைக் கதையையும் இதற்குள்ளிருந்தே எடுத்துக்கொள்ளலாம். இளம் வயதிலிருந்தே நமக்குள் தென்படும் இசை முதலிய கலையுணர்வு என்று தொடங்கி நம் தனித்தன்மைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இவை நமக்குப் பேரின்பம் தரும்.   வள்ளுவர் கூறும் இன்னொரு கதையைப் பார்க்கலாம். "செல்லான் கிழவன்” (குறள் 1039) என்று தொடங்குவது ஒரு குறள். நிலத்திற்கு உரிமையுடையவன் நிலத்தை பக்குவப்படுத்தி உழுது. விதைத்துப் பாதுகாப்பதைத் தன் கடமையாகக் கொள்ள வேண்டும். நிலத்திற்கு உரிமையுடையவன் இதைச் செய்வான். இவன் இப்படிச் . செய்யவில்லை என்றால் நிலம் இவனுக்கு எந்த விளைச்சலையும் தராது. நிலம் என்பது இவனிடமிருந்து உழைப்பை எதிர்பார்க்கிறது. விளைச்சல் தருவது, நிலத்திற்கு விருப்பமான செயல். நிலம் என்பதை வள்ளுவர் இவனது இல்லாள் என்கிறார். மனைவி கணவனிடம் எதை எதிர்பார்க்கிறாள் - இவளுக்குக் குழந்தைப் பேறு வேண்டும். சோம்பியிருக்கும் கணவனை மனைவி விரும்ப முடியாது. இவனிடம் மனைவி கோபம் கொள்கிறாள். மனைவியை ஆள்வது இவனது உரிமை மட்டுமல்ல. கடமை.   இந்தக் குறளில் சொல்லப்படுவது ஒரு கதையல்ல. இரண்டு கதைகள். புலவி (ஊடல்) பிறகு இன்பத்துப்பாலிலும் வள்ளுவர் பேசுவார். புலவிக்கான காரணம் என்று அங்கு சொல்லாததை இங்கு வள்ளுவர் சொல்லுகிறார். தனக்குக் குழந்தைப் பேற்றைத் தராத கணவனை மனைவி கோபித்துக் கொள்கிறாள். இக்குறளில் இன்னொரு பேருண்மை அடங்கியுள்ளது. நிலம் என்பது மனைவி மாதிரி. நிலம் என்பது நமக்குத் தாய். உழைக்கும் அளவிற்கு நிலம் விளைச்சலைத் தரும். இக்கருத்தை இன்னொரு குறளில் தருகிறார். ''இலமென்ற சைகி இருப்பாரைக் காணின்   நிலமென்னும் நல்லாள் நகும் (குறள் 1040).   என்பது முன் சொன்ன குறளின் தொடர்ச்சி . என்னுடைய நண்பர் காலம் சென்ற கவிஞர் வேங்கடசாமி குறளிலிருந்து இன்னொரு உண்மையையும் கண்டு சொன்னார். கிழவன் என்ற சொல் "உரிமையுடையவன்" என்று பொருள்படும். உழுபவனுக்கு நிலம் சொந்தமாக இருந்தால் அவன் பாடுபடுவான். கூலிக்குப் பாடுபடுபவன் உண்மையாக உழைக்க மாட்டான். ஆகவே, உழுபவனுக்கு நிலத்தை உரிமைப்படுத்த வேண்டும் என்று வள்ளுவர் குறளுக்கு புதுப் பொருள் கண்டவர் என் நண்பர்.   இரண்டு கதைகளைக் குறளிலிருந்து எடுத்துச் சொன்னேன். முதல் கதை உருவகக் கதை என்றால், இரண்டாவது கதை எதார்த்த கதை. இப்படிக் கதை உணர்வோடு குறளுக்குள் பயணம் செய்வோம் என்றால் வள்ளுவரை ஒரு கதைக் களஞ்சியம் என்று காண முடியும். வள்ளுவருக்குள் வகை வகையான கதைகள் உள்ளன. சில பயங்கரக் கதைகள். இன்னும் சில கற்பனைக் கதைகள். சில தேவதைக் கதைகள். சில குடும்பக் கதைகள். இன்பத்துப் பாலில் காதல் கதைகள்.   ஒன்றிரண்டு வகைக் கதைகள் இங்கு எடுத்துக்காட்டலாம். (குறள் 890). உடன்பாடு இல்லாதவரோடு வாழ்வது கொடுமை. தன் மனத்தோடு, உடன்பாடு இல்லாத மனைவியோடு, நண்பரோடு, உறவினரோடு. ஒரு குடும்பத்தில் ஒரு ஊரில் ஒரு தேசத்தில் வாழ்வது கடினம். இதை விளக்க வள்ளுவர் ஒரு கதை சொல்கிறார். ஒரு குடிசைக்குள் பாம்போடு வாழ்க்கை நடத்துவது மாதிரி என்கிறார். (குறள் 890). இது பயங்கரக் கதை. இதைப்போல இன்னொரு கதை ''ஏதில் பிணம் தழிஇ அற்று” (குறள் 913) என்கிறார் ஒரு குறளில். அரசன் சண்முகனார் என்ற பெரும் புலவர் இந்தக் குறளுக்குப் பொருள் சொல்லும் உண்மைக் கதையை எடுத்துச் சொன்னார். என் பேராசிரியர் ப. சு. மணியம் அவர்கள் சொன்னதை நினைத்துக் கொள்கிறேன். இத்தகைய பழக்கம் இன்னும் கேரளாவில் இருப்பதாக நண்பர்கள் சொல்லுகிறார்கள். திருமணமாகாமல் இறந்துவிடும் கன்னிப் பெண்ணை , ஏதிலாளன் ஒருவனைக் கொண்டு இரவில் தழுவச் செய்த பின்னர்தான் இறந்த அந்தப் பெண்ணை புதைப்பார்களாம். புறநானூற்றில் போரில் ஈடுபட்டுக் காயம் படாதவனை அவன் இறந்த நிலையில் அவன் நெஞ்சில் வாளினால் கீறிப் புதைப்பார்கள் என்று சொல்லப்பட்டிருப்பது போன்ற நிகழ்ச்சி இது. தழுவுதல் என்பது இடக்கர் அடக்கலைக் குறிப்பிடும் சொல். புணர்ச்சி என்பது இதன் பொருள். பணத்திற்காகப் பரத்தையரோடு கொள்ளும் உறவுக்கு உவமையை வள்ளுவர் குறிப்பிடுகிறார். உணர்ச்சி எதுவுமில்லாத தழுவல் என்பது இதன் குறிப்பு வள்ளுவர் சொல்லியிருப்பது பயங்கரக் கதை.   வள்ளுவர் சொல்லும் கதைகளை இனியும் நான் விரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மரங்கள் பற்றி, பறவைகள் பற்றி, மனித உடலுறுப்புகள் பற்றி நிறையக் கதைகள் சொல்லுகிறார் வள்ளுவர். இவற்றையெல்லாம் இனிப் படிக்கும் பொழுது வாசகர்கள் தமக்குள் விரித்துக் கொள்ளலாம். குறளிலிருந்து இப்படிக் குறைந்த அளவிற்கு 200 300 கதைகளை நாம் எடுக்க முடியும். நம் அறிவுத்திறன். வாழ்வியல் அனுபவம் கற்பனைத் திறன் ஆகியவற்றிற்கு ஒத்த முறையில் கதைகள் நமக்குள் கிளைகள் விரிக்கும்.                       12. வள்ளுவரின் கடவுள்   வள்ளுவருக்குள் மனித எல்லைக்குள் வைத்து கடவுளை காணும் போக்கு இருக்கிறது. மனிதனும் கடவுளும் உறவு கொள்ளும் சில இடங்கள் குறித்து வள்ளுவர் பேசுவது நமக்குள் வியப்புணர்வை தோற்றுவிக்கிறது.   தன் குடியை உயரச் செய்வதற்காக ஒருவன் உழைக்க முற்படும்பொழுது ’தெய்வம் மடிதற்று தான் முந்துறும் ’(குறள் 1023) என்று ஒரு குறளில் கூறுகிறார். மனிதனின் முயற்சிக்கு தெய்வம் முன்வந்து உதவி செய்யும். வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு தெய்வம் மனிதனுக்கு முன் செல்லும் என்கிறார் வள்ளுவர். இந்த மனிதன் சலித்துவிடக்கூடாது. களைத்து விடக்கூடாது.   ’இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்' (குறள் 1062) என்பது இன்னொரு குறள். பிச்சையெடுத்துதான் மனிதன் வாழவேண்டும் மென்பது அவனுக்கு விதியாக இருக்க முடியாது. இப்படி அவனுக்கு விதித்தவன். விதி வகுத்தவன் இறைவன்தான் என்றால் அவனும் பிச்சையெடுத்து உலகில் அலைந்து கெடட்டும் என்கிறார் வள்ளுவர். உலகில் வறுமை இருக்க வேண்டாம். மனிதன் வெறுக்கும் வறுமையை இறைவன் மனிதனுக்கு விதித்திருக்க முடியாது. விதி அல்லது வினை என்ற கோட்பாடு உண்மைதான் என்றால் இதன் அடிப்படையில் வரும் வறுமையையோ செல்வத்தையோ நாம் ஏற்க வேண்டிவரும். இதற்கு இறைவன் தேவையில்லை. இறைவன் தான் என்று சிலர் கூறுகிறார்கள். இவர்களின் இறைவன் தான் வறுமையைப் படைத்தான் என்றால் அந்த இறைவன் கொடியவன். இவனும் பிச்சையெடுத்து அழியட்டும் என்று இறைவனை சபிக்கிறார் வள்ளுவர். இறைவன் இருப்பது உண்மையென்றால் உலகில் வறுமை இருக்கக் கூடாது. இறைவனுக்கு வறுமை உடன்பாடாக இருக்க முடியாது. இறைவனை கேள்விக்குள்ளாக்கும் எல்லை வரை செல்கிறார் வள்ளுவர். வினைக் கோட்பாட்டை வள்ளுவர் முற்றாக மறுக்கவும் இல்லை. வள்ளுவருக்குள் இப்படி முரண் இருப்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். முரணைக் கடந்து செல்வதைத்தான் (குறள் 1103) வள்ளுவர் விரும்புகிறார்.   ’தாம் வீழ்வார் மென்தோள்' என்பது இன்பத்துப்பாலில் ஒரு குறள். தன்னை வேட்கையோடு விரும்பும் பெண்ணின் மென்மையான தோள்களில் உறங்குவதாகிய இன்பத்தைக் காட்டிலும் தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலின் வைகுண்டம் கூட இனியதாக இருக்கமுடியுமா என்று தலைவன் தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான். சமயப்பற்றாளர்களை சங்கடத்திற் குள்ளாக்கும் இக்குறள். மனிதக்காதலையும், தெய்வக் காதலையும் வள்ளுவர் இங்கு இணைத்துப் பேசுகிறார். மனிதக் காதலின் மேன்மை சொல்லுகிறார் வள்ளுவர்.    ‘தன்னுயிர் தான் அறப் பெற்றானை' (குறள் 268 ) என்ற குறளில் தன் உடலை ஓம்புவதற்காக பிற உயிர்களைக் கொல்லாதவனை உலகில் உள்ள எல்லா உயிர்களும் தொழும் என்கிறார் வள்ளுவர். சமண முனிவர்களை இங்கு நாம் நினைத்துக் கொள்கிறோம். துறவில் உறுதி கொண்ட சமண முனிவர்கள் கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்கு தெரியாத எந்த உயிருக்கும் தங்களால் தீங்கு நேரக்கூடாது என்ற முறையில் உணவும், நீரும் கூட உண்ணாமல் உயிர் துறந்தனர். இத்தகைய அருளாளர்களிடம் தெய்வத் தன்மையைக் காண்கிறார் வள்ளுவர்.  ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ - (குறள் 50).       என்கிறார் இன்னொரு குறளில் வாழும் நெறிப்படி வாழ்ந்தவர் அவர் இறந்தபின் வானுலகத்தில் உள்ள தெய்வங்களுள் வைத்து மதிக்கப்படுபவர் என்கிறார் வள்ளுவர். மண்ணுலகத்தில் இருக்கும் போதும் அவர் இறந்த பின்னரும் தெய்வமாக மதிக்கப்படுவர் அல்லது தொழப்படுவர். முன்னோர்களை தெய்வமாக வழிபடுவதையும் இங்கு நினைவு கொள்ளலாம். வாழும் நெறிப்படி வாழ்தல் ஒரு அரிய செயல் என்றும் கருதலாம். மனித வாழ்விற்குள் தெய்வத்தன்மை அடங்கியுள்ளது என்பதை வள்ளுவர் கருத்தாகக் கொள்ளலாம். தெய்வம் என்பதற்கு மனிதனிலிருந்து விலகிய தனிவாழ்வு இல்லை என்றும் இங்கு கருதுவதற்கு இடமுண்டு. மனிதனையும் தெய்வத்தையும் இங்கு முற்றாக முரண்படுத்த வேண்டியதில்லை. மிகச்சிறந்த முன்னோர் நம் நினைவிலும் நெஞ்சிலும் தங்கி நம்மை படைக்கின்றனர்.  ‘வாழ்வாங்கு வாழ்தல்’ என்பது சான்றோர் நெறி.   நம் மனதிலுள்ள உணர்வு அல்லது கருத்தை நம் முகத்தின் மூலம் குறிப்பால் உணர்பவரை  ‘தெய்வத்தோடு ஒப்பக் கொளல்’ என்கிறார் வள்ளுவர். நம் துயரத்தை வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதில்லை. உள்ளத்தில் அடக்கிவைத்தாலும் முகம் அதைக் காட்டிவிடும் (குறள் 702,703), முகத்தைப் பார்த்தே உள்ளத்தில் உள்ள துயரை உணர்பவர் தாமே வலிந்து வந்து துயரம் தீர்க்கும் பண்புமிக்கவராக இருப்பர். இத்தகையவரை தெய்வத்திற்கு நிகராக நாம் கருதலாம் என்கிறார் வள்ளுவர். இவர்கள் நேரே தெய்வங்களல்லர். தெய்வங்களுக்கு நிகராவர். இத்தகைய குணமும் அருளாளருக்கே பொருந்தும். சான்றோரும் அருளாளரும் வெறுவேறாக இருக்க வேண்டியதில்லை. இத்தகையவரைத் தான் வள்ளுவர் தம் அறத்திற்கு அச்சாணி எனக் கருதுகிறார் என்று நாம் கொள்ளலாம். எல்லாவற்றையும் காக்கும் முறையில் அருளுடையது தெய்வம் என்ற கருத்தோடு ஒத்தது இக்கருத்து.    ‘தெய்வம் தொழாஅள் (குறள் 55) என்ற குறளில் கணவரைத் தெய்வமாகத் தொழுபவள். பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்கிறார் வள்ளுவர். (இத்தகைய பெண் பெய் என்று சொல்லும் பொழுது பெய்வதாகிய மழை போன்றவள் என்று இக்குறளுக்குக் காணும் புதுப் பொருளை நாம் சுவைக்கலாம். மறுக்கவில்லை.  ‘வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் ’(குறள் 1193) என்ற குறளின் கருத்தும் இந்த புதுப் பொருளுக்கு அரண் செய்வதையும் நாம் இங்குக் கருதலாம். எனினும் உரையாசிரியர் கருத்தை ஒதுக்க வேண்டியதில்லை)   கணவனையே தெய்வமெனத் தொழுகிறாள் இவள். இன்னொரு தெய்வத்தை இவள் தொழுவதில்லை. கணவனைத் தவிர இன்னொரு தெய்வம் இவளுக்கு வேண்டியதில்லை. கணவன் மூலமும் தன்னை ஆள்வது அந்த தெய்வம்தான். பெண்ணின் கற்பு இத்தகையது. இத்தகைய கற்பு தெய்வத்தன்மை வாய்ந்தது. இவள் பெய்யென்று சொன்னால் மழை பெய்யும். காமன் கோட்டத்திற்கு சென்று வழிபாடு செய்தால் கண்ணகியின் துயர் தீரும் என்று தேவந்தி கூறிய பொழுது - இது நமக்கு பெருமை தருவதன்று என்று கண்ணகி மறுத்துரைத்ததை இங்கு நினைத்துக் கொள்ளலாம். கணவனைத் தெய்வமாகத் தொழுவதும் வேறு தெய்வம் தனக்கு வேண்டாமென்று மறுப்பதும், இதுதான் கற்பு என்று சொல்வதும் ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது சமயச் சிந்தனையின் தாக்கம் இங்கு உச்ச அளவில் புகுந்துள்ளது என்று நாம் கருதவேண்டியிருக்கிறது. இந்தப் பகுதியில் எடுத்துக் காட்டிய பிற குறட்பாக்களிலிருந்து இக்குறளின் கருத்து விலகி நிற்கிறது. பெண்ணுக்குக் கணவன் இங்குத் தெய்வமாகிவிடுகிறான். பெண் அவனைத் தொழ வேண்டியவள் ஆகிறாள். பெண்ணைக் காப்பாற்றும் தெய்வம் கணவன் அல்லது கணவனின் வழியே தெய்வம் பெண்ணைக் காப்பாற்றுகிறது. அருள்புரிகிறது. இவ்வகையில் இது ஒரு பக்திக் கவிதை, சமயம் தழைத்த காலத்துக் கவிதை. பெரும்பாலும் இக்குறள் ஓர் இடைச் செருகல் ஆகலாம்.   ’பின்கேடு சூழற்க’ என்று தொடங்கும் குறளில் பிறருக்கு கேடு தரும் செயல்களை நீங்கள் சிந்திப்பீர்களென்றால் உங்களுக்குரிய அழிவை அறக்கடவுள் சிந்திக்கும் என்கிறார் வள்ளுவர்.    ‘பிறருக்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா  பிற்பகல் தாமே வரும் ’(குறள் 319)    என்ற குறளிலும் இக்கருத்தே அடங்கியுள்ளது.    ‘நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம்' (குறள் 320) என்ற குறளிலும் பிறருக்குத் துன்பம் செய்தவர்களுக்கே துன்பங்கள் வருகின்றன என்கிறார். ‘யாதனின் யாதனின் நீங்கியான்' (குறள் 341) என்ற குறளுக்கும் இதே முறையில் பொருள் காணலாம். (நோய் என்பது இங்கு துன்பம். மருந்து எனும் அதிகாரத்தில் உடலுக்கு வரும் நோய் பற்றிச் சொல்லுகிறார். இங்கு சொல்லப்படும் நோய் வேறு).   பிறருக்கொருவன் தருவது கண்டு இன்னொருவன் பொறாமைப்படுவானென்றால் அப்படிப் பொறாமைப் படுபவன் மட்டுமல்லாமல் அவனைச் சூழ்ந்துள்ளவர்களும் உண்பதும் உடுப்பதும் இன்றிக் கெடுவார்கள் (குறள் 166) என்றும் வள்ளுவர் சொல்லுகிறார்.   இங்கும் அறம் என்பது தெய்வத்தன்மை பெறுகிறது. தீயதை நினைத்தாலும் செய்தாலும் தீங்கு திரும்பி வரும். அறம் இப்படிச் செயல்படுகிறது என்கிறார் வள்ளுவர்.  என்கிறார் வள்ளுவர்:   அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தை தேய்க்கும் படை என்று வள்ளுவர் சொல்லும் பொழுது இங்கும் அறம் தரும் தண்டனையையே கருத்தில் கொள்கிறோம். (குறள் 555).                 13. 'கடவுள் வாழ்த்து - செய்தவர் வள்ளுவரா?   திருக்குறள் நூற்பாக்களில் கடவுள் என்ற பெயர் காணப்படவில்லை . ஆதிபகவன் முதலிய பல்வேறு பெயர்கள் கடவுளைக் குறிக்கும் என்றும் சமணம் பவுத்தம் ஆகிய சமயங்களின் ஆதி முதல்வர்களைக் குறிக்கும் என்றும் ஏற்கனவே பலர் . கருத்துரைத்திருக்கின்றனர். சமயத்தை மறுக்கும் முறையில் பெரியாரியம் தமிழ் நாட்டில் ஆக்கம் பெற்ற பொழுது பெரியோர் திருக்குறளைப் பகுத்தறிவுவாத நோக்கில் பார்த்தனர். இந்தச் சூழலில்தான் கடவுட் கொள்கை வள்ளுவருக்கு உடன்பாடில்லை என்ற கருத்து ஏற்பட்டது. கடவுள் என்பதை ஒரு கருத்தாக்கம் என்றும் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் தான் எல்லாச் சமூகங்களிலும் கடவுளின் தோற்றம் நிகழ்ந்துள்ளது என்றும் இவர்கள் பார்க்கவில்லை. கடவுள் என்ற கருத்தாக்கத்தின் உள்ளடக்கம் என்ன என்று இவர்கள் பார்க்கவில்லை. கடவுள் என்ற கருத்தாக்கத்தின் உள்ளடக்கம் என்ன என்று இவர்கள் காணவில்லை. வள்ளுவருக்குள் சமயச் சிந்தனை அறவே இல்லை என்று நாம் அடித்துப் பேசவும் முடியாது. உலகியல் சிந்தனை வள்ளுவருக்குள் மேம்பட்டுள்ளது என்பதையும் நாம் மறுக்கவேண்டியதில்லை. வள்ளுவரின் காலம் எதுவாக இருக்கமுடியும் என்றும் நாம் ஆராயவேண்டியிருக்கிறது. வள்ளுவருக்குள் தென்படும் சமயக்கூறு பிற்காலத்தில் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளது. கடவுள் வாழ்த்து என்ற இந்த முதல் அதிகாரத்தை வள்ளுவர் இயற்றியிருக்க முடியாது என்ற கருத்துரையையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த முன்னுரையோடு முதல் அதிகாரம் குறித்த ஆய்வில் நாம் ஈடுபடலாம்.   1.  “அகர முதல எழுத்தெல்லாம்”   தமிழ் மொழியில் முதல் எழுத்து அகரம். நமக்கு தெரிய வந்துள்ள . வேறு சில மொழிகளிலும் முதல் எழுத்து அகரம்தான். வள்ளுவருக்கு எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்பது குறித்து நாம் எதுவும் சொல்வதற்கில்லை. எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டிருப்பது போல் உலகத்திற்கு ஆதி பகவன் முதலாக, மூலமாக இருக்கிறான் என்பது வள்ளுவர் கருத்து. எல்லா மொழி எழுத்துக்களுக்கும் அகரம்தான் முதல் என்பதை உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் இக்கருத்து, உலகத்திற்குத் தான் முதல் என்பதைச் சொல்வதற்கான உவமை என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அறிவார்ந்த முறையில் ஒன்றை மெய்ப்பிப்பதற்கு உவமை ஆதாரமாகாது. ஆனால் இப்படி சொல்வது கவித்துவமுறை. கவிதை சற்று நம் மனத்தை நெகிழ வைக்கும் பொழுதே கவிஞர் வேறொன்றைச் சொல்லி முடித்துவிடுவார். நாமும் அதை மெய்யென ஏற்றுக்கொள்வோம். வள்ளுவரும் இங்கு இப்படித்தான் செயல்படுகிறார் என்று கூறுவதில் தவறில்லை .   எல்லாவற்றிற்கும் முதல் அல்லது மூலம் என்பது ஒன்று இருக்கவேண்டும் என்பது தர்க்கம். அதுபோல உலகம், உயிர்கள் முதற்கொண்டு பேரண்டத்தின் தோற்றத்திற்கு மூல மென்று ஒன்று இருக்க வேண்டும் என்பது நெடுங்காலமாக செயல்படும் தர்க்கம். அந்த மூல முதல்தான் எல்லாவற்றிற்கும் தொடக்கம் என்றோ எல்லாவற்றையும் தோற்றுவித்தது என்றோ தர்க்கம் தன்னை விரித்துக்கொள்ளும். தொடக்கம் என ஒன்றை ஆராயாமல் நம்மால் இருக்க முடிவதில்லை. இதேவகை தர்க்கம் அந்த மூலத்திற்கு எது முதல் என்ற கேள்வி எழும்போது இந்த தர்க்கம் தடுமாறும். சிதைந்துவிடும். பல சந்தர்ப்பங்களில் பயன்படும் இந்த தர்க்கம் சிலபோது நம்மைக் கைவிட்டுவிடும். வள்ளுவருக்கு முன்பே தோன்றியது இந்த தர்க்கம். தர்க்கத்தின் எல்லைக்குள்தான் வள்ளுவர் செயல்படுகிறார். ஆகவே, இந்த முதல் குறளில் கடவுள் மெய்ப்பிக்கப்படவில்லை என்று நாம் காண முடியும். எனினும் ஒரு கேள்வி. இன்று வரை இது பெரும் கேள்வி. பிரபஞ்சமும் நாம் வாழும் உலகமும் உயிர்களும் எவ்வாறு தோன்றின? பொருள் என்றைக்கும் இருந்தன. இயங்கின என்பதை வைத்து எல்லாவற்றையும் விளக்கிவிட முடிகிறதா? இல்லவே இல்லை. இங்குதான் கடவுள் இன்னும் வாழ்கிறார். சமயங்களும் வாழ்கின்றன.   ஆதிபகவன் என்பது சமண சமயத்தின் முதல் ஆசிரியராகிய அருகதேவரைக் குறிக்கும் அல்லது இன்னொருவரைக் குறிக்கும் என்று வைத்துக்கொண்டால் இந்தக் குறளை எப்படி விளக்குவது? பிறந்து வளரும் போது தாய் தந்தை முதலியவர்களும் ஆசிரியர்களும் உலகத்தை நமக்கு விளக்குகின்றனர். இவர்கள் வழியேதான் உலகத்தை நாம் பெறுகிறோம். இவர்கள் சொல்லித்தான் நாம் உலகத்தைத் தெரிந்துகொண்டோம். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உலகம் தெரியாது. அருகதேவன் முதலியவர்கள் உயிரினங்களின் இயக்கம் பற்றி விளக்கினர்.   எல்லா எழுத்துகளும் முதலெழுத்து அகரம் என்று விளக்குவதோடு ஒவ்வொரு எழுத்தினுள்ளும் அகரம் ஏதோ ஒரு வடிவில் மறைந்துள்ளது போல எல்லா வகை உயிரினங்களிலுள்ளும் இறைவனே மறைவாக இருந்து செயல்படுகிறான் என்றும் இக்குறளுக்கு சமயம் சார்ந்த விரித்தி உரை செய்து கொள்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. அத்வைதக் கருத்தியலின் தோற்றத்திற்கு இங்கு ஓர் அடிப்படையை நாம் காணலாம்.   2. "கற்றதனால் ஆன பயன்"   கல்வியறிவுடையவர் வாலறிவனை ஏற்றுக் கொள்வதோடு வணங்கவும் வேண்டும் என்று இக்குறளில் ஆசிரியர் கூறுகிறார்.   முதற்குறளில் உலகின் தோற்றம், இயக்கம் முதலியவற்றிற்கு இறைவனைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்கமுடியாது என்பதைக் கல்வியறிவுடையவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாக ஆசிரியர் கருதுகிறார். கல்வியின் நோக்கம் கடவுளை அறிதல். தவிர கடவுளின் நற்றாள் தொழ வேண்டும் என்கிறார். கடவுளுக்கு இங்கு உருவம் கூறப்படுகிறது. தொடக்க காலத்தில் புத்தரின் திருவடிகள் வணங்கப்பட்டன. (புத்தரின் முழு உருவம் அன்று இல்லை அல்லது உருவாக்கப்படவில்லை ) கடவுள் உருவையும் இப்படி வரையவோ செதுக்கவோ முடியாது. இக்குறளில் தென்படுவது சமயச்சிந்தனை. ‘கற்க கசடற கற்பவை’ என்ற குறளில் கல்வியின் நோக்கமாக கற்ற்படி நிற்றலை வள்ளுவர் சுட்டுகிறார். இந்த இரண்டு குறள்களுக்கிடையில் முரண்பாடு காணவேண்டிய தில்லை. கல்வியின் இறுதி நோக்கம் கடவுளை தொழுதல் என்று வைத்து அமைதியடையலாம். எதற்குத் தொழ வேண்டும் என்றால், அவர்தானே  ‘இந்த உலகத்தையும் உன்னையும் படைத்தார்' என்று சொல்லிக்கொள்ளலாம்.   இந்தக் குறளில் கடவுளுக்கு இலக்கணம் சொல்லுகிறார். வாலறிவன் என்பது தூய்மையான அறிவுடையவன் என்று பொருள்படும். மனித அறிவில் குற்றம் குறைகள் உண்டு. மனித அறிவுக்கு வரையறைகள் உண்டு. இறைவனுடைய அறிவு எல்லையற்றது. தூய்மையானது. இறைவனுடைய அறிவு இத்தகையது என்று மனிதன் எப்படிக் கண்டறிந்தான் என்ற கேள்வியை இங்கு எழுப்பிக் கொள்ளலாம். தன்னைவிட இறைவன் பெரியவன். தன் அறிவில் குற்றம் குறைகள் இருக்கலாம். இறைவனுக்கு இவை இருக்க முடியாது. இந்தச் சிந்தனையும் மனிதச் சிந்தனை தான். மனிதனுக்குள் இப்படி ஒரு தர்க்கம் செயல்படுகிறது. மனிதன் பேரறிவை விரும்புகிறான். தூய அறிவை விரும்புகிறான். இது மனிதன் தனக்குள் வகுத்துக் கொண்ட இலக்காகவும் இருக்க முடியும். மனிதன் இப்படித்தான் கடவுளைக் கண்டுபிடித்தான். இவனுக்குள் செயல்படும் தர்க்கம் தான் கடவுளைக் கண்டுபிடிக்கிறது. கடவுளுக்கு இலக்கணம் சொல்லுகிறது. என்றாவது ஒருநாள் தானும் இறைவனாக முடியுமென்ற மனிதச் சிந்தனையின் ஒரு கூறு இக்கருத்தினுள் அடங்கியிருக்கிறது. இன்னும் ஒன்று. பேரறிவு என்பது இறைவனின் இயல்பு. இதன் ஒரு துளியேனும் மனிதனுக்குள் இருக்கிறது. மனிதனுக்குள்ளும் இறைஇயல்பு இருக்கிறது. இறைவனைக் கண்டறிந்தது. மனிதன் தான் என்றால் தனக்குள்ளிருந்தும் தான் அந்த இறைவனை இவன் கண்டறிந்திருக்க வேண்டும். மனிதன் தான் இறைவனைப் படைத்தான். வள்ளுவருக் குள்ளும் எங்கோ தொலைவில் தென்படுகிறது இந்த உண்மை .   வாலறிவன் என்பதைத் தூய அறிவையுடைய அருகன் என்றோ இன்னொருவர் என்றோ கருதவும் இடமுண்டு. நற்றாள் தொழல் என்பதும் கூட மனித இயல்புதான். பெற்றோரைத் தொழுதல், சிறந்த முன்னோரைத் தொழுதல் என்பது போலத்தான் இதுவும். முன்னோர் வழிபாடுதான் பிறகு தெய்வழிபாடு ஆகியது என்பதையும் இங்கு நினைவு கொள்ளலாம். தொழல் என்பது ஒன்றே மனத்துக்குள் உறுதியாக வரித்துக்கொள்வது. அதன் அருளை வேண்டுவது. தன்னிடமிருந்து அதனையும் அதனிடமிருந்துத் தன்னையும் அந்நியப்படுத்திக்கொள்வது. தனக்குள் இன்னொன்றை குடியேற்றி அதன் அருளை வேண்டித் தவிப்பது. இப்படியெல்லாம் செய்யாமல் மனிதன் இல்லை. சமயம் இப்படித்தான் மனிதனுக்குள் குடியேறியது.   3. “மலர்மிசை ஏகினான்"   இறைவன் மலரின் மீது அமர்ந்துள்ளான். அவனுடைய அடிகள் மாண்புடையவை. அந்த அடிகளை நெஞ்சில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இத்தகையவர்கள் நெடுநாள் வாழ்வார்கள். இக்குறளில் இறைவனுக்கு உருவம் சொல்லப்படுகிறது.   வணங்குவதன் பயனையும் ஆசிரியர் சொல்லுகிறார். இறைவன் மீது எல்லாச் சுமைகளையும் இறக்கிவைத்துவிட்டு மனக்கவலை இல்லாமல் இருப்பவர் நெடுங்காலம் வாழமுடியும். இப்படி இந்தக் குறளுக்கு பொருள் காணலாம்.   மலரும் இறைவனும் இங்கு சேர்த்துச் சொல்லப்படுகின்றன. மலரில் இறைவன் அமர்ந்துள்ளான். இறைவன் அமர்வதற்கான இடம் மலர். மலர் அழகியது. தூய்மையானது. புதிய ஓளியுடையது. அழகிலும் தூய்மையிலும் ஓளியிலும் இறைவன் உள்ளான். இயங்குகிறான். நீண்ட நாள் வாழ்வது மனிதனின் பெரு விருப்பம். நீண்ட நாள் வாழ இறைவனைத் தொழ வேண்டும் என்பது ஒருவகையான தூண்டுதல். மலர்மிசை ஏகினான் என்பதற்கு மனிதரைச் சார்ந்து பொருள் கொள்ளமுடியாது. மலரின் மீது மனிதன் அமர்வதில்லை . நீண்ட நாள் வாழ்வதற்கு இறைவனைத் தொழுவது தான் காரணமா என்ற கேள்வி எழலாம். இன்ப துன்பங்களை இறைவன் தான் தருகிறான் என்ற சிந்தனை அழுத்தம் பெற்றால் இறைவனே பார்த்துக் கொள்வான் என்று கவலையின்றி இருக்கமுடியும். கவலைதான் மனிதனின் வாழ்நாளைக் குறைக்கிறது. கவலையின்றி மனிதன் வாழவேண்டும். இப்படியும் சில உணர்வுகள் இந்த குறளுக்குள் இயங்குகின்றன.   4. "வேண்டுதல் வேண்டாமை"   இறைவன் விருப்பு, வெறுப்பு அற்றவர். இத்தகையவனை நெஞ்சில் தாங்கியவருக்கு துன்பங்கள் இல்லை என்கிறார் ஆசிரியர்.   விருப்பு, வெறுப்பு அற்ற மனநிலை ஓர் அரிய , வேண்டத்தக்க மனநிலை. மனிதன் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படலாம். இதன் காரணமாகத்தான் எவ்வளவோ நல்லதும் கெட்டதும் நடைபெறுகின்றன. இறைவன் இப்படி இருக்க முடியாது. விருப்பு வெறுப்பு கொண்ட மனநிலைதான் துன்பங்களுக்குக் காரணம். செயலில் ஈடுபடும் பொழுது விருப்பு என்றும் வெறுப்பு என்றும் பாராமல் செயல்படவேண்டும். இது சாத்தியம் தானா என்பதைக் காட்டிலும் இதை சாத்தியப்படுத்துவது நல்லது. இக்கருத்தை வள்ளுவர் வேறு குறள்களிலும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். ''இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்” என்பது ஒரு குறள். விருப்பு, வெறுப்பற்ற நிலையில் போட்டி பொறாமைகளுக்கு இடமில்லை. பகைமைக்கு இடமில்லை. இத்தகையவரிடம்தான் அறம் தங்கும். மனத்தில் மாசற்ற தன்மையே அறம் என்றும் வள்ளுவர் கூறுகிறார். வரலாற்றுச் சூழலில் நிகழும் சிலவற்றைத் தவிர்க்க இயலாது. நாம் அவற்றை ஏற்கத்தான் வேண்டும். சாவு தவிர்க்க இயலாதது. புயலின் போது அழிவைத் தடுப்பது கடினம். விருப்பு, வெறுப்பில்லாமல் இவற்றை ஏற்கத்தான் வேண்டும். இப்படித்தான் மனிதன் தனக்குள் ஓர் உயர்வைத் தேடுகிறான். இறைவனைத் தேடுகிறான். இது மனிதனின் இயல்பு. புத்தனுக்கும் அருகனுக்கும் வேண்டிய இலக்கு. இக்கருத்தின் மனிதச் சார்பைத்தான் சமயங்கள் தமக்குள் கொண்டாடுகின்றன.   5. ''இருள்சேர் இருவினையும்”    இறைவனின் புகழை எடுத்துரைக்க வேண்டும். அவனது புகழ் பொருள் நிறைந்தது. பொய்யில்லாதது. மனிதனைப் பற்றிய புகழ்ச்சிகளுக்குள் பொய்மைக்கு இடமுண்டு. இறைவனை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். இத்தகைய இறைவனை அண்டியவர்களை இருவகை வினைகள் சேர்வதில்லை.   இறைவனைப் புகழவேண்டும். தொடர்ந்து பலவகையாலும் புகழவேண்டும். இவற்றை இறைவன் ஏற்கிறான். இப்படிப் புகழ்பவர்களை இருவகை வினைகள் தொடராமல் காக்கிறார்.   விருப்பு வெறுப்பில்லாதவன் இறைவன் என்றால் புகழை அவன் விரும்ப வேண்டியதில்லை. புகழ்பவனுக்குதான் அருள் புரிவது என்ற நியதி தேவையில்லை. இப்படி சொல்வதன் மூலம் மனிதன் தன் எல்லைக்குள் கொண்டுவந்துவிடுகிறான். இது இறைவனுக்குப் பெருமை இல்லை. புகழுக்காகச் செயல்படுபவனை நம்மால் மதிக்க முடியவில்லை.   வினை என்பது செயல்பாடு. மனிதச் செயல்களில் நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றன. நன்மையென்றும் தீமையென்றும் செயல்களை மனிதன் தன் சூழலுக்கேற்றபடி வகுத்துக் கொள்கிறான். செயல்படாமல் மனிதனால் இருக்க முடியாது. செயல்படுபவன் மனிதன் செயல்படாமல் இருப்பது உயிரியல்பு அன்று. இருவினை களும் அற்றவர் இறைவன் என்றால் அவன் செயல்படுவதில்லை என்பது பொருள். சிந்தனைக்குள் அடங்காதது இந்த இறைவனின் இயல்பு. சமயங்கள் இப்படித்தான் இறைவனை வகுத்துரைக்கின்றன. மனிதன் சமயங்களையும் தோற்றுவிக்கிறான். மனிதனுக்குள் இயங்கும் அருவச் சிந்தனையின் இயக்கத்தினுள் தான் சமயத்தைக் காணமுடியும். அருவச் சிந்தனை எல்லை கடந்து செல்லும்போது தன்னையே மறுத்து சவமாகிறது. இந்தச் சவத்தைச் சமயங்கள் கொண்டாடமுடியும். மனிதனுக்கு இது தகாது. வள்ளுவருக்குள் இப்படியும் ஒரு போக்கு என்றுதான் இங்கு நாம் காண முடியும். மனித வாழ்க்கை பற்றிப் பேசுபவர், மனித வாழ்வின் இயக்க எல்லை கடந்து செல்வதை இங்கு பார்க்கிறோம். இவர் வள்ளுவர் இல்லை. இத்தகைய சிந்தனைப்போக்கு நமக்கு அந்நியமானது. வேண்டாதது. விருப்பங்களும் வெறுப்புகளும் வேண்டாதது போலவே நன்மையும் தீமையும் ஆகிய இருவகை வினைகளும் நமக்கு வேண்டாமென்று சிலர் சொல்லமுடியும். வினை என்பது செயல். செயலை எப்படி மறுக்கமுடியும்? விருப்பு வெறுப்பில்லாத மனநிலையை சிரமப்பட்டேனும் பெறமுடியும். ஆனால் செயல்படாமல் இருக்க முடியாது.     6.  “பொறிவாயில் ஐந்தவித்தான்"   இறைவனுக்கு பொறிகள் உண்டா? புலன்கள் உண்டா? புலன்களை அழித்தவன் என்று இறைவனை இங்கு சொல்லமுடியுமா? பொறிகளும் புலன்களும் இவற்றின் வழியே செயல்படும் வேட்கைகளும் இல்லாதவன் இறைவன் என்று ஆசிரியர் இங்கு குறிப்பிடுகிறார். இத்தகையவன் இறைவன் என்றால் இவனைப் போலவே வேட்கைகளுக்கு வசப்படாமல் வாழும் நெறியை மேற்கொண்டவர் நெடுங்காலம் வாழ்வார் என்று ஆசிரியர் கூறுகிறார்.   இறைவனுக்குப் பொறிகளும் புலன்களும் இல்லாமல் இருக்கலாம். வேண்டாதும் இருக்கலாம். மனிதனுக்கு இவை இல்லாமல் இருக்க முடியாது. பொறிகள் இருக்கும்போது புலன்களும் இருக்கும். அப்போது வேட்கைகளும் இருக்கும். ஆகவேதான் பொறிகளும் புலன்களும் இல்லாதவன் என்று இறைவனை மனிதன் கற்பனை செய்கிறான். தொடர்ந்து சில குறள்களில் பார்க்கிறோம். நெடுங்காலம் வாழ்வதற்கு, துன்பங்கள் இல்லாமல் இருப்பதற்கு, ஆசைகள் இல்லாமல் இருப்பதற்கு இறைவனைத் தொழவேண்டும். இறைவன் மீது புகழ்மொழிகள் சொல்ல வேண்டும். புகழ் மொழிகள் என்பவை பாடல்கள் அல்லது மறைமொழிகள். இறைவனுக்கு உருவம் உண்டு. இறைவனை நெஞ்சில் தங்கவைக்க வேண்டும். இறைவன் நமக்குள் வரவரத் துன்பங்கள் நீங்கும். நீண்ட நாள் வாழ்வதற்கு என்ன தேவை என்று ஆசிரியர் சொல்வதில்லை. விருப்பு வெறுப்புகளை அவற்றின் சரியான வழியில் செலுத்துவது பற்றி ஆசிரியர் சொல்வதில்லை. ஒடுக்குவது பற்றித்தான் பேசுகிறார். தறிகெட்டு ஓடும் சமூகச் சூழலுக்கு இக்கருத்து பொருந்தலாம். எல்லா சமூகத்திற்கும் எல்லா காலத்திற்கும் இக்கருத்து பொருந்தாது. விருப்பு வெறுப்பு இல்லாதவன், இருவினை சேராதவன். பொறிவாயில் ஐந்தவித்தவன் - இவர்களெல்லாம் மனிதப் பிறவிகள் என்றே வைத்து கொண்டாலும் இவர்களின் ஒழுக்க நெறிகள் அவ்வாறே கடைபிடிக்க கூடியனவாக இல்லை. இப்படித்தான் அவர்கள் கடைபிடித்தார்கள் என்று சீடர்கள் சொல்லும் பொய்க்கதைகளை நாம் நம்ப வேண்டியதும் இல்லை. வள்ளுவரே கூறுவது போலப் புதருக்குள் தம்மை மறைத்துக் கொண்டு வலைவீசிப் பறவைகளைக் கவரும் கயவர்களும் இவர்களுக்குள் இருக்கக்கூடும். புலன்களை நெறிப் படுத்துவது என்பது பற்றித்தான் நாம் பேசமுடியும். உடலின் மீது அளவு கடந்த கட்டுப்பாடுகளை விதித்து உள்ளத்தை ஆன்மீகத்தை வளர்க்க முயன்றவை சமயங்கள். சமயங்கள் சொல்லும் இறைவன் புலன்கள் அற்றவன். பொறிகள் அற்றவன். அவன் ஓர் அருவம். மனிதனுக்குள் தொடங்கி மனித எல்லைகளை விரித்து கொண்டே சென்று அப்புறம் மனித எல்லைகள் கடந்து சவமானவன். இவனுக்குத் தான் கோயில் கட்டிக் கொண்டாடுகின்றனர். மந்திரங்கள் சொல்லி இவனை சமயவாதிகள் தமக்குள் எழுப்புகின்றனர். சமூகத்திலிருந்து இவர்கள் தம்மைத் தாமே ஒதுக்கிக் கொள்கின்றனர். இவர்களின் வழியே சமூக ஆக்கம் பெற முடியாது.   7. தனக்குவமை இல்லாதான் 8. அறவாழி அந்தணன் -   9 கோளில் பொறியில்   இறைவன் தனக்கு உவமை இல்லாதவன். இறைவனுக்கு எந்த மனிதனும் நிகராக முடியாது. இத்தகைய இறைவனை மனிதன் வணங்க வேண்டும். இல்லையென்றால் இவனுக்கு மனக்கவலை தீராது. இறைவன் அறம் எனும் சக்கரத்தை சுழற்றுகிற அந்தணன். இவன் அருளுணர்வு மிக்கவன். அறத்தை இவன்தான் செயல்படுத்துகிறான். இறைவனது அறம் தான் உலகிற்கும் உயிர்களுக்கும் ஆதாரம். அறச் சக்கரம் சுழலவில்லை என்றால் உயிர்கள் அழியும். பிறப்பு எனும் கடலை நீந்திக் கடப்பதற்கு இறைவனைச் சார்ந்து இருக்க வேண்டும்.   கண் பார்க்க வேண்டும். காது கேட்க வேண்டும். இதைப் போல மற்ற பொறிகளும் செயல்பட வேண்டும். பார்வையில்லாத கண்ணால் பயனில்லை. கேட்காத செவியால் பயனில்லை. இதைப் போல் இறைவனை வணங்காத் தலையினால் பயனில்லை.   இறைவனது இயக்கத்தால் உயிர்களையும் உலகத்தையும் அறம் தாங்குகிறது. அருள் நிறைந்த இறைவன் அறத்தின் மூலம் உலகத்தைத் தாங்குகிறான். இப்படி இறைவனையும் அறத்தையும் இணைத்துக் காண்கிறார் ஆசிரியர். அறமும் இறைத் தன்மையுடையது என்பதை வள்ளுவர் வேறு சில குறள்களிலும் சொல்லுகிறார். இறைவன் காரணமாக அறம் இயங்குகிறது என்று இறைவனுக்கு அடுத்தபடியாக அறத்தை வைக்கிறார் ஆசிரியர். அறம்தான் இறைவனென்று ஆசிரியர் சொல்லவில்லை .   10. "பிறவிப் பெருங்கடல்"   பிறப்பு என்பது ஒரு பெருங்கடல். பிறப்பு என்பது ஒன்றல்ல. பல. பல்வேறு உயிரினங்களின் பிறப்பு. ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரை பல்வேறு பிறப்புகள். தொடர்ந்து பிறப்பும் சாவும், ஓயாத துன்பங்கள், மனிதப் பிறவியில் தான் இறைவனை அறிய முடியும். பிறவித் துன்பத்திற்கு மனிதப் பிறப்பில் தான் முடிவுகட்ட முடியும்.   இப்படித்தான் உரையாசிரியர்கள் கூறுகின்றனர். தனக்குவமை இல்லாதவன், அறவாழி அந்தணன் , எண்குணத்தான். என்ற பெயரீடுகளில் மனிதர்களையும் குறிப்பிடலாம். இப்படி குறிப்பிடுவதனால் சமயத்தின் எல்லைக்குள்ளிருந்து நாம் வெளியேறி விட இயலாது. பிறவியைத் துன்பம் என்றுதான் ஆசிரியர் கருதுகிறார். பிறவாமை வேண்டும். ‘பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்’ என்று வேறு இடத்திலும் வள்ளுவர் கூறுகிறார்.   பிறவிகள் தொடரும் என்பதை நாம் ஒதுக்கிவிட்டாலும் பிறவியே துன்பம் என்பதை நம்மால் ஏற்கமுடியாது. மனிதப் பிறப்பில் மனக்கவலைகள், இடும்பைகள், துன்பங்கள் முதலியவை இருக்கத்தான் செய்கின்றன. இவற்றிற்கான காரணங்கள் குறித்து சமயங்கள் சொல்வதை நம்மால் ஏற்க முடியாது. இறைவனை வணங்குவதால் இவை தீர்வதில்லை. விருப்பு, வெறுப்பு அற்ற மனநிலையைப் படைத்துக் கொள்வதென்பது ஒருவகையான தீர்வு. இறைவனைத் தொழும்போது துயரங்கள் விலகி நிற்கும். பிறகு மீண்டும் வந்து நம்மை அடைத்துக் கொள்ளும்.   கடவுளைக் குறித்த ‘வாலறிவன்’ முதலிய இலக்கணங்களைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது சில உண்மைகள் புலப்படுகின்றன. துயரங்களுக்குப் பொறிகளும் புலன்களும் காரணம். மனிதப் பிறவி காரணம். உடல் காரணம். உடலியல் வாழ்க்கையில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். மனத்தைப் பக்குவப்படுத்த வேண்டும். இறைவனைக் கண்டறிந்து அவனை நமக்குள் குடியேற்றிக் கொள்ள வேண்டும். அவரைத் தொழுது வாழ்த்த வேண்டும். இறைவனைக் கண்டு கொள்வதுதான் அறிவுடைமை.   அறத்தின் இயக்கத்திற்கு இறைவன் தான் ஆதாரம். அவன்தான் உலகத்திற்கு மூலம்.   கடவுள் வாழ்த்தென்ற இந்த அதிகாரத்தில் ஆசிரியரின் கவித்துவம் கூட மிகக்குறைந்த அளவிற்கே செயல்படுகிறது. இந்த அதிகாரத்தை வள்ளுவர்தான் இயற்றினாரென்றால் சங்க காலத்திலிருந்து இவரை வெகுதூரம் விலக்கி வைத்துதான் பார்க்கவேண்டும். மனித வாழ்க்கையை மருளுக்குள் ஆழ்த்துகிற சமயச் சிந்தனை என்ற இருண்ட காலத்திற்குள் தான் இவரை வைத்துப் பார்க்கமுடியும். நாம் போற்றும் குறள்நெறி இதுவாக இருக்க முடியாது. ஆகவே, இந்தக் கடவுள் வாழ்த்தை இயற்றியவரை நாம் திருவள்ளுவர் என்று கருதமுடியாது. சான்றோர், பெரியவர்கள், குருமார் ஆகியவரை மனத்தில் இருத்தித்தான் இந்த அதிகாரத்தை வள்ளுவர் படைத்தார் என்று உறுதியாகச் சொல்வதற்கும் இல்லை.                   14. திருக்குறள் நமக்கு ஒரு கை விளக்கு   1. திருக்குறளின் மையம் அறம் என்றுதான் நாம் பொருள்படுத்துகிறோம். திருக்குறளின் அறம் பலவகைப்பட்டது என்பதை மேலோட்டமாகத் திருக்குறளைப் படிக்கும் பொழுதும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். அறம் சில சந்தர்ப்பங்களில் மறமாவது பற்றியும் , அதே போல மறமும் அறமாவது பற்றியும் கூட வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். இப்படி இருந்த போதிலும் அறம் என்பதன் அடிப்படை எது என்பது குறித்தும் தேடலோடுதான் திருக்குறளை நாம் வாசிக்கிறோம். வாழ்வியல் அனுபவங்களோடு தான் திருக்குறளை நாம் படிக்கிறோம். அன்றியும் பொருள் படுத்துகிறோம். வாழ்வின் வழியே அறம் எது என்பது குறித்து நமக்கும் ஐயங்கள் இருக்கின்றன. திருக்குறளில் நம் ஐயங்கள் தீருமா? என்பதற்கான அக்கறையோடு குறளை வாசிக்கிறோம். வள்ளுவருக்கும் ஐயங்கள் இருந்திருக்கின்றன என்பதையும் அவர் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.   வாழ்வியல் அறம் என்பதற்கான அடிப்படை உலகியலாகத்தான் இருக்கமுடியும். உலகியல் என்பதை குறைந்தளவுக்கு உலகாயதம் என்றும் கூறுவதில் தவறு இல்லை. தற்காலத்தில் இத்தகைய சிந்தனைப் போக்கை பொருள்முதல்வாதம் என்று நாம் குறிப்பிடுகிறோம். வாழ்வதற்குத்தான் அறம் தேவை. மனித வாழ்வுக்கு ஆதாரம் இன்று நீர், நிலம். வானம், மழை, பெற்றோர், கல்வி, பெரியவர்கள், உழவு, உழைப்பு, மருத்துவம், வணிகம் என்று பலவற்றைக் கூறமுடியும்.   குடும்பம் ஆண், பெண் உறவு, பகிர்தல், நட்பு என்றும் இன்னும் பலவற்றைக் கூறமுடியும். இவற்றுக்கு இடையில் ஆழ்ந்த உறவுகள் உண்டு. முரண்பாடுகள் கூட உண்டு. இவற்றுக்கு இடையில் பகைமைக்கும் இடமுண்டு. உடமை. அரசு என்பது இல்லாமல் வாழ்க்கை இல்லை. துறவு கூட வாழ்க்கையின் எல்லைக்குள் வந்துவிடுகிறது. வாழ்வு குறித்த தேடலின் போதும் கடவுள், ஆன்மா, மேலுலகம், நல்வினை, தீவினை, பிறப்புக்கள், உயிர் வகைகள், விதி முதலியனவற்றையும் நாம் எதிர்கொள்கிறோம். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகத்தான் உலகியல் என்று நாம் பேசுகிறோம். கடவுள் முதலிய கருத்துகளையும், வாழ்வியலின் எல்லைக்குள் வைத்துத்தான் நாம் பேசமுடியும். சாதி, மதம், பேதம் முதலியனவும் இந்த எல்லைக்குள் அடங்குபவை. இப்படித்தான் பொருள் முதல் என்று நாம் பேசுகிறோம். சிந்தனை என்பதன் இயக்கத்திற்கும் பொருள் முதல் இடம் தருகிறது. மனித வாழ்வின் எல்லைக்கு வெளியே கடவுள், ஆன்மா முதலியவற்றைக் கொண்டு செல்லும் மதவாதம் அல்லது புலன் கடந்த போக்கு நமக்கு உடன்பாடில்லை. புலன்களுக்கு வெளியே இவை நெடுந்தொலைவு செல்லும்போது இவற்றை இன்னொரு கட்டத்தில் திரும்பவும் புலன்களின் எல்லைக்குள் நாம் கொண்டு வரவும் செய்கிறோம். இப்படித்தான் வரலாற்றில் இயக்கம் நடைபெறுகிறது.   வள்ளுவத்தின் ஆதாரம் எது என்று பார்க்கும் பொழுது இவ்வகை உலகியல் அல்லது உலகாயதத்தை நாம் காணுகிறோம். இவ்வாறு வியக்கத்தக்க முறையில் வள்ளுவரை நாம் பொருள் படுத்துகிறோம். மழை இல்லாமல் மாநிலத்தில் தானமோ, தவமோ நடைபெற முடியாது (குறள் 19) என்கிறார் வள்ளுவர். இல்லறத்தார் துணை இல்லாமல் துறவு நடைபெற முடியாது என்கிறார். (குறள் 42). மக்களின் வறுமையைத் தீர்க்க வேண்டியது தெய்வத்தின் கடமை என்கிறார். (குறள் 1062). வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதைத்தான் வள்ளுவர் போற்றுகிறார். (குறள் 50). இந்த வகையில் மனிதர்களுக்குள் இயங்குவது தெய்வம் என்கிறார். வாழ்வின் இயக்கத்தைப் புரிந்து கொண்டவர்களுக்கு வையத்தைக் காட்டிலும் வானுலகம் நெருக்கமாக இருக்கிறது என்கிறார். (குறள் 353) விதியை வெல்ல முடியும் என்கிறார். (குறள் 619). ஊருக்காக உழைப்பதைப் போற்றுகிறார். (குறள் 68). பெண்ணை மதிக்கிறார். (குறள் 53). பெரியவர்களை வழிபடுவது பற்றிச் சொல்லுகிறார். (குறள் 891). காதல் இன்பத்தை இறை உலகம் என்கிறார். (குறள் 1103) தீமைகளிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியும் என்கிறார். (குறள் 796). உழவுத் தொழிலின் மேன்மை குறித்துச் சொல்கிறார். (குறள் 1031) மக்களை வருத்திப் பொருள் சேர்ப்பதையோ, அதிகாரம் செய்வதையோ வள்ளுவர் கண்டிக்கிறார். (குறள் 552). நடுவு நிலைமையோடு வணிகம் செய்ய வேண்டும் என்கிறார். (குறள் 120). அரசு என்ற அமைப்பை ஒத்துக் கொண்டாலும் மக்கள் நலத்தை முன்னிறுத்தி அரசின் கடமையை வற்புறுத்துகிறார்.   கடுமையாகத் தொடங்கினாலும் அரசன் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்கிறார். (குறள் 562). அரசு என்ற அமைப்பினுள் வன்முறைக்கு இடம் இருக்கத்தான் செய்யும், (குறள் 550) இதனையும் மக்கள் நலம் என்ற கண்ணோட்டத்தோடுதான் அணுக வேண்டும் என்கிறார். இந்தளவுக்கு உலகாயதம் என்ற அதிகாரத்திலிருந்து வள்ளுவரை நாம் பொருள் படுத்த முடியும். இத்தகைய வள்ளுவர் நமக்கு நெருக்கமானவர். வள்ளுவரிடம் உலகாயதம் என்ற எல்லைக்கு வெளியிலிருந்தும் மதவாதிகள் என்று அறியப்பட்டவர்கள் சொல்லும் சில கருத்துக்களும் இருக்கின்றன. அன்பு செய்வதற்காகத்தான் உயிர் உடம்போடு கூடுகிறது என்று வள்ளுவர் கூறுகிறார். அழுக்காறு உடையவன் அழிந்து போவான் என்கிறார். மனத்தில் அறவே மாசில்லாத நிலைதான் அறம் என்கிறார். (குறள் 34). கூற்றையும் வெல்ல முடியும் என்கிறார். (குறள் - 269) பெரியவர்கள் சினந்தால் நாம் அழிவோம் என்கிறார் (குறள் 891). புலன்களை ஒடுக்குவது பற்றியும் வள்ளுவர் பேசுகிறார். (குறள் 126) மெய்ப்பொருள் என்று சில சமயம் வள்ளுவர் பேசும் பொழுது புலன் கடந்த சில உணர்வு நிலைகளை வள்ளுவர் சொல்வது போல் தோன்றுகிறது. சமணம் மற்றும் பவுத்த மதத்தில் சில கூறுகளையும் வள்ளுவத்தில் நாம் காணுகிறோம். இறைவன் அடி சேராதவர் பிறவிக் கடலை நீந்த முடியாது என்று சொல்லுகிறார்.   இவ்வகைப் போக்குகளை நாம் மிகுந்த கவனத்தோடு பார்க்க வேண்டி உள்ளது. இதற்காக வள்ளுவரை குற்றம் சொல்ல முடியுமா என்றும் நாம் சிந்திக்கிறோம். வள்ளுவர் தம் காலத்தில் மதவாத சிந்தனையிலிருந்து முற்றாக விடுபட்டு இருக்க முடியாது. இன்றும் கூட உள்ளுணர்வு என்ற முறையில் சிலவற்றை நாமும் பேசுகிறோம். நமது உணர்வுகள், சிந்தனைகள் முதலியவற்றுக்கான வாழ்வியல், வரலாற்று ஆதாரங்கள் என்ன என்பதை நம்மால் உறுதியாகக் கூற முடிவதில்லை . மிகச் சிறந்த சிந்தனையாளர்கள் முதலியவர் களிடமும் இவ்வகைப் போக்குகள் இடம் பெறுகின்றன. நம்மைப் பொறுத்தவரை உலகியல் வாழ்க்கையில் தான் ஊன்றி நிற்கிறோம். இதை மேம்படுத்துவதற்கான சிந்தனை, செயலில் நாம் ஈடுபடுகிறோம். இவ்வகையிலும் வள்ளுவர் நமக்கு நெருக்கமாக இருக்கிறார். இதனால் வள்ளுவரை நாம் ஆழ்ந்து கற்கிறோம். நம் வாழ்வுக்குள் வைத்துத்தான் வள்ளுவரை நாம் பொருள் படுத்துகிறோம். அறம் என்பது இல்லாமல் வாழ்வை நாம் அர்த்தப்படுத்த முடியாது. அறம் என்பது இன்றியமையாதது என்று கண்டிருக்கிறோம். இன்று அரசியல், பொருளியல் முதலிய எல்லாக்  களங்களிலும் அறத்தை நாம் நிலை நிறுத்த வேண்டியிருக்கிறது. அன்பில்லாமல் அறம் இல்லை. உழைப்பும் பகிரவும் இல்லாமல் இருக்க முடியாது. இப்படித்தான் அறம் என்பதன் இன்றியமையாமை குறித்து நாம் சிந்திக்கிறோம். இவ்வகை அறத்தை அழிப்பவர்களை காய்வதும் இதற்குத்தான். செல்வம், அதிகாரம், மதம், முதலியவற்றில் ஊன்றி . இருப்பவர்களுக்கு அற உணர்வு என்பது இருக்க முடியாது. செல்வம் முதலியவை இவர்களைத் தம் பிடிக்குள் வைத்திருக்கின்றன. இதன் காரணமாகவும் அற உணர்வு இவர்களிடத்தில் இடம் பெறுவதில்லை. இவர்களைக் குறித்து அனுதாபத்தோடு தான் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இவர்களை வள்ளுவர் கோபிக்கவும் செய்கிறார். அதே சமய அனுதாபமும் கொள்கிறார். இவர்களைப் போன்றவர்கள் சில சமயங்களில் குன்றிமணியாகச் சிறுத்து விடுவின்றனர். (குறள் 965) என்று வள்ளுவர் சொல்லும் பொழுது அவரிடம் இரக்க உணர்வைக் காண்கிறோம். துறவிகளின் போலித் தன்மை குறித்து அனுதாபப்படுகிறார். ஒருவகையில் இத்தகையோரையும் புரிந்து கொள்ள நமக்கு அன்பு தேவைப்படுகிறது. இவ்வகை அன்பையும் உலகியலிருந்து செறிவு பெறும் பொழுது தான் உலகளாவிய கண்ணோட்டமும் பேரன்பும் நமக்கு ஏற்படும். வாழ்வைப் புரிந்து கொள்வதற்குப் பல துறை அனுபவங்கள் தேவைப்படுகின்றன. பொருள் - பற்று முதலியவற்றை முதன்மைப்படுத்தும் பொழுது வாழ்வின் எல்லைகள் நமக்குள் சிறுத்துவிடுகின்றன. வள்ளுவருக்குள் வாழ்வின் எல்லைகள் பெருமளவுக்கு விரிந்திருக்கின்றன. அறம் என்றும், பொருள் என்றும் விரிவாகப் பேசமுடியும். நமக்கும் இத்தகைய விரிந்த பார்வை இன்றும் தேவைப்படுகிறது. இந்த விரிந்த பார்வையோடுதான் அறம் பற்றி நாம் சிந்திக்க முடியும். சமதர்மம் தவிர வேறு பேரறம் இன்று இல்லை. வள்ளுவருக்குள் சம தர்மத்தை இன்றும் நாம் காண முடியும். அறம் பற்றிய சிக்கல்கள் முழு அளவில் இன்றும் தீர்ந்துவிட்டன என்றும் சொல்ல முடியாது. வள்ளுவர் குறித்து நுட்பமாக ஆராயும் பொழுது அறம் பற்றிய உணர்வில் நாம் தீவிரம் கொள்கிறோம். நம் வாழ்வைப் புரட்டிப் பார்க்கிறோம். இவ்வகையில் என்றும் நமக்கு வள்ளுவர் கை விளக்காக இருக்கிறார்.   தவம் பற்றி வள்ளுவர் தரும் விளக்கம் சிறப்பானது என்பதில் ஐயமில்லை. ‘உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை - அற்றே தவத்திற்கு உரு’ என்று வள்ளுவர் தவம் என்பதற்கு வரையறை கூறுவது போலப் பேசுகிறார். (குறள் 261). துறவிகளுக்கு இந்த வரையறை எவ்வளவு பொருந்தும் என்பது ஆய்விற்குரியது. தமக்கு என வாழாமல் சமூக நலம் கருதித் தமக்கு வரும் துன்பங்களை பொறுத்துக் கொள்ளும் சான்றாண்மை மிக்கவர்களுக்கும் இக்கருத்து பெரிதும் பொருந்தும்.   வள்ளுவர் காலத்திலேயே பவுத்த மதத்தினரும் சமணர்களும் தமிழகத்தில் வாழ்ந்தனர். இவர்கள் தவம் செய்பவர்கள். புலன் இன்பங்களைத் துறந்து பிறப்பு அறுவதற்காக புலன்களை ஒடுக்கி தவம் செய்பவர்கள். இத்தகைய தவ முயற்சி எப்பொழுது, எதற்காகத் தொடங்கியது என்ற சிந்தனைகள் எல்லாம் மறந்துவிட்ட நிலையில் இவர்கள் தவம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களைப் போல வேறு சிலரும் இருந்திருக்கலாம். இவர்களும் துறவிகள்.   துறவி வேடம் தரித்து மக்களை ஏமாற்றி வருபவர்கள் குறித்து வள்ளுவர் கடிந்துரைக்கிறார்: இகழ்ந்துரைக்கிறார். தவவேடத்தில் தம்மை இவர்கள் மறைத்து கொண்டவர்கள். பறவைகளைக் கண்ணிவைத்துப் பிடிப்பதற்காகப் புதர் மறைவில் மறைந்திருக்கும் வேடர்களை ஒத்தவர்கள் இவர்கள். (குறள் 274). பசுத்தோல் போர்த்தி ஆடுகளுக்கிடையில் மேயும் புலிகளைப் போன்றவர்கள் இவர்கள். இவர்கள் பொய்யர்கள். (குறள் 273).   வள்ளுவரைப் பொறுத்தவரை வேடம் முக்கியமில்லை என்பது மட்டுமல்ல, வேடம் தேவையில்லை. (குறள் 280). மொட்டையடித்துக் கொள்வதோ முடி வளர்த்துக்கொள்வதோ தேவையில்லை. உலகம் பழிக்கும் குற்றங்களை இவர்கள் ஒழித்துவிட வேண்டும். ஆனால் இவர்கள் ஓழிக்கவில்லை. தவவேடத்தில் தம்மை மறைத்துக்கொண்டு இவர்கள் குற்றம் செய்கிறார்கள்.   துறவு, தவம் குறித்த வள்ளுவரின் சிந்தனை எந்தத் திசை நோக்கி இயங்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். தவம் குறித்து அவர் கூறிய வரையறை நம்மை இவ்வாறு சிந்திக்கத் தூண்டுகிறது. வாழ்வின் மெய்ப்பொருள் என்ன என்ற தேட்டத்தில் ஈடுபட்டவர்கள் துறவிகள். பிறவித் துன்பங்கள் எங்கிருந்து வருகின்றன இவற்றை மாற்றுவது எப்படி என்பது போன்ற சிந்தனைகளில் இவர்கள் ஈடுபட்டவர்கள். கடவுள் உண்டா இல்லையா என்பதும் இவர்கள் சிந்தனையில் எழுந்த ஒரு கேள்வி. உலகம் மற்றும் உயிர்களின் . இயக்கத்தை எவ்வாறு புரிந்து கொள்வதென்பதும் இவர்களது கேள்வி. சொந்த ஊர் மற்றும் உறவினர்களை விட்டு இவர்கள் பசி நோக்காமல் கண்துஞ்சாமல் அலைந்தார்கள். பல தேசங்களில் அலைந்தார்கள். இத்தகையவர்களில் ஒருவர்தான் கௌதம புத்தர். இன்னொருவர் அருக தேவர். இப்படி எத்தனையோ துறவிகள் . இவர்கள்தான் துறவை அறமாக நிறுவினார்கள். இவர்கள் சிற்சில விடைகளைக் கண்டார்கள். இந்த விடைகளும் தமக்குள் முரண்பாடு கொண்டவை. ஆகவே, தேடுதல் இன்னும் தொடரத்தான் வேண்டும்.     இன்றுவரை இந்தத் தேடல் தொடர்கிறது. பிரபஞ்சம், இயற்கை, உயிரினங்கள், வரலாறு, சமூகம், தர்க்கம், அறிவியல் என்றெல்லாம் இந்தத் தேடல் தொடரத்தான் செய்கிறது. மனித விடுதலைதான் இந்தத் தேடலின் இறுதி இலக்கு. உலகத்தைப் புரிந்து கொள்வதோடு மாற்றவும்தான் வேண்டும். இதற்காகவும் பலர் பாடுபட வேண்டும். உடலின்பங்கள், பாதுகாப்பு முதலியவை மட்டுமல்ல உயிரையும் இழந்தும் தான் இந்த தேடலில் வெற்றிகாண முடியும்.   மனித வாழ்வை மறைக்கும் முறையில் பணம், அதிகாரம் என எத்தனையோ இங்கு வாழ்வின் மீது கொட்டப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் களைந்து வாழ்வின் அடிப்படைகளை நோக்கி நம் சிந்தனைகள் செல்ல வேண்டும். ஒரு காலத்தில் புத்தர் இன்னொரு காலத்தில் மார்க்ஸ் முதலியவர் இப்படிச் சிந்தித்தவர்கள். இத்தகையவர்களில் வள்ளுவரும் ஒருவர்.   பொய்யாமை, பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை நன்று என்கிறார் வள்ளுவர். (குறள் 297). பொய்மைகளை அறவே களைந்து கொள்ள முடியுமானால் வேறு அறமே தேவையில்லை என்கிறார் வள்ளுவர். உண்மைதான். செல்வத்தை மறைத்து வைப்பவன் பொய்யன் . நானே பெரியவன் என்பவன் ஒரு பொய்யன். இப்படிப் பலவற்றை நாம் எண்ணிப் பார்க்கலாம். தனது உடம்பை வளர்ப்பதற்காக பிற உயிர்களின் ஊனை இறைச்சியினை ஒருவன் எப்படி உண்ண முடியும் (குறள் 251) என்று வள்ளுவர் எழுப்பும் கேள்வி வாழ்வியலின் அடிப்படையை நோக்கி எழுப்பப்படும் கேள்வி. வானம் வழங்கவில்லை என்றால் தானமோ, தவமோ இங்கு நடைபெற இயலாது (குறள் 19) என்று வள்ளுவர் சொல்லும் பொதுத் தானம், தவம் முதலியவற்றையெல்லாம் கடந்து இவர் சிந்தனையை நம்மால் புரிந்துகொள்ள முடியும். மழை இல்லை என்றால் இங்கு எல்லாமே குழம்பிவிடும். பெரியவர், சிறியவர், நல்லவர், கெட்டவர் என்றெல்லாம் நாம் பெருமைப்படுவதற்கும், சிறுமைப்படுவதற்கும் இடமில்லாமல் போய்விடும். இப்படிச் செல்கிறது வள்ளுவரின் சிந்தனை .                               15. திருக்குறளும் என் வாழ்வும்   திருக்குறளுக்கும் என் வாழ்வுக்கும் என்ன உறவு இருக்கமுடியும் என்பது குறித்து நான் இங்கு சிலவற்றைச் சொல்ல வேண்டும். நான் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். உழவர்களோடும், நெசவாளர் களோடும் நெருக்கமான உறவில் நான் வளர்ந்தேன். மண்ணோடும், உயிர்வகைகளோடும் நான் நேசம் கொள்வதற்கான வாய்ப்பை இந்தக் கிராமத்து வாழ்வு எனக்குள் ஏற்படுத்தியது. இந்த மக்கள் எளியவர்கள் மட்டுமல்ல. வறுமையோடும் தான் வாழ்க்கை நடத்தினர். எங்கள் குடும்பத்தினுள்ளும் வறுமையின் நிழல் படிந் திருந்தது. என் பெற்றோருக்கு ஆண்களும் பெண்களுமாக எட்டுக் குழந்தைகளில் நானும் ஒருவன். எல்லாவற்றையும் நாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெருந்தன்மைக்கும், கண்ணியத்திற்கும் பெயர் பெற்றவர் என் தந்தை அன்பில் ஊறியவர்கள் என் பாட்டியும், அத்தைமாரும். கருணையும் வீரமும் மிக்கவர் என் பாட்டனார். இவர்கள் அனைவரும் இன்றும் எனக்குள் வாழ்கின்றனர். இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். இந்த மண்ணில் தான் வள்ளுவரும் அறத்தைத் தனக்குள் தாங்கியிருந்தார்.   எனக்குத் தமிழ் கற்பித்த நல்லாசிரியர்களை இப்பொழுது நினைவு கூர்கிறேன். வாழ்வியலுக்கு ஆதாரமாக வள்ளுவத்தை எங்களுக்கு உணர்த்தியவர் புலவர் நா. சுந்தரராசனார் . வள்ளுவரின் பகுத்தறிவுப் பார்வையை எங்களுக்குள் ஆழப்படுத்தியவர் புலவர் மருதவாணன் அவர்கள். வள்ளுவரின் காலங்களையும், நுட்பங் களையும் பேராசிரியர் ப.சு.மணியம் அவர்களிடமிருந்துதான் நாங்கள் கற்றுக் கொண்டோம். இவர்கள் என்றும் என் வணக்கத்திற்குரியவர்கள்.   மார்க்சியத்தோடு எனக்கு ஏற்பட்ட ஆழமான உறவின் மூலம் வள்ளுவரின் அறத்தை நான் கற்றுக்கொண்டேன். சமதர்மம் என்பதுதான் வள்ளுவரின் அறம் என்பது என் புரிதல். சமதர்மம் இல்லாமல் நமக்கு வாழ்க்கை இல்லை. வளர்ச்சி இல்லை. வரலாற்றில் தமிழன் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விரும்பினால், சமதர்மம் தவிர தமிழனுக்கு வேறு வாழ்க்கை நெறி இருக்க முடியாது. தமிழ் வாழ்வின் அரசியல், பொருளியல், பண்பாடு. வேளாண்மை , கல்வி . மருத்துவம் ஆகிய அனைத்துக் களங்களிலும் வள்ளுவரின் அறமாகிய சமதர்மத்தை நாம் நிலை நிறுத்த வேண்டும். பாரதி கூறியவாறு தமிழன் அமரத்துவம் எய்த வள்ளுவரின் அறம் நமக்கு ஆதாரம். என் வாழ்வுக்குள் வள்ளுவர் இப்படித்தான் ஆழமாக இடம் பெறுகிறார். என் வாழ்வுக்கான அர்த்தத்தையும், அழகையும் ஆற்றலையும் வள்ளுவர் இப்படித்தான் வழங்குகிறார். இதற்காகவும், என் கிராமத்திற்கும், என் மூதாதையர்களுக்கும், என் நல்லாசிரியர் களுக்கும், மார்க்சியத்தை எனக்குக் கற்பித்த நல்லறிஞர்களுக்கும் நான் என்றும் நன்றி உடையவனாக இருப்பேன்.   2. இன்றைய உலகச் சூழலில் வைத்து வள்ளுவத்தை பொருள்படுத்துவது என் கொள்கை. இயற்கை முதலிய அனைத்தும் மூலதனத்திற்கே உரியது என்ற முறையில் பொருளியல் வல்லாண்மைச் சக்திகள் இன்று அதிகரித்து வருகின்றன. எல்லாவற்றையும் சந்தையே தீர்மானிக்கட்டும் என்று இவர்கள் கூறுகின்றனர். அரசுகளின் இறை யாண்மையைக் கூடத் தகர்க்கும் முறையில் உலகளவிலான பொருளியல் சக்திகள் செயல்படுகின்றன. இவர்களோடு தான் நம் தேசத்தின் அரசியல்வாதிகளும், முதலாளியச் சிந்தனையாளர்களும் ஒத்துழைக்கின்றனர்.   இயற்கை நாசமாகிறது. பசுமைப் புரட்சி என்ற பெயரால் வேளாண்மை அழிகிறது. நிலமும் நீரும் நஞ்சாகின்றன. ஆறுகளும். கடல்களும் அழிகின்றன. உயிரினங்கள் வாழ்வு மட்டுமல்லாமல், மனித வாழ்வும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. அநீதிகள் இப்பொழுது அறமாகி வருகின்றன. நுகர்வு வெறி எல்லோருக்குள்ளும் ஊருடுவி மக்களின் மன உறுதியைக் குலைப்பதோடு, அற உணர்வையும் அழிக்கிறது. மனிதர்கள் கோழைகளாகின்றனர் அல்லது போக்கிரிகளாகின்றனர் ஆக்கப்படுகின்றனர். பணம் பண்ண எந்த நெறியையும் கடைப்பிடிக்கலாம். சூதாட்டமும், களவும் வாழ்வின் நெறிகளாகி வருகின்றன. உழவர்கள் மட்டுமல்லாமல், பெண்களும் அடித்தள மக்களும் கடுமையான சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாகி வருகின்றனர். மனித மாண்பு எனச் சொல்லிக் கொள்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு வருகின்றது. எல்லாமே விற்பனைக்கான சரக்குகள் ஆகி வருகின்றன. மனிதன் பகுத்தறிவையும், தன்மானத்தையும் இழந்து வருகின்றான். எந்த வகையிலும் தன்னை விற்றுக் கொள்வதற்கு மனிதன் முந்துகிறான். துறவிகள் பொய்த் தவ வேடத்தில் பெருகி வருகின்றனர். வழிப்பறிக் கள்வனைப் போல அரசுகள் மக்களிடமிருந்து பொருளை மட்டுமல்லாமல், வாழ்வுரிமைகளையும் பறிக்கின்றன. பாழ் செய்யும் உட்பகைகள் என்ற வரிசையில் கட்சிகள் நாட்டையும் மக்களையும் சூறையாடுகின்றன. கற்பென்பது பெண்ணுக்குரிய தன்மானம். நேர்மையைக் கைவிட்டு பொருளுக்காகத் தன்னை விற்றுக் கொள்பவர்கள் தன்மானம் அற்றவர்கள். கற்பையும் தன்மானத்தையும் அழிக்கும் சக்திகள் இன்று ஆதிக்கம் பெற்று வருகின்றன. பொய்யான கடவுளுக்கும், போலித்துறவிகளுக்கும் இன்று மரியாதை அதிகரித்துவருகிறது.   இத்தகைய அரக்கத்தனமாக சூழலில் வள்ளுவரைக் குறித்து நாம் சிந்திக்கிறோம். இத்தகைய சூழலை வள்ளுவரால் ஏற்க முடியாது. ஊழலோடு வள்ளுவர் ஒத்துப் போக முடியாது. அதிகார வெறியோடும் ஆணவத்தோடும் வள்ளுவர் ஒத்துப்போகமுடியாது. காமத்தோடு மட்டுமல்லாமல் பொருள் வெறியோடும் வள்ளுவருக்கு உடன்பாடு இருக்கமுடியாது. வாழ்க்கையையே வணிகமாக்கும் அசுர சக்திகளோடு வள்ளுவருக்கு உடன்பாடு இருக்கமுடியாது. இப்படியெல்லாம் இன்று வள்ளுவத்தைக் கற்கவும், கற்பிக்கவும், பொருள் படுத்தவும், செயல்படுத்தவும் வேண்டியிருக்கிறது.   என் கிராமங்களை, எனக்கு அன்பையும் அறத்தையும், கற்றுத்தந்த உழவர்களை, கைவினைஞர்களை அழிக்கும் சக்திகளோடு ஒருகணமும் என்னால் ஒத்துழைக்க முடியாது. இந்தச் சக்திகள் என் முன்னோர்களின், தமிழ் மக்களின் வாழ்வியலை , வாழ்வியல் அறங்களை அழிப்பவர்கள். இவர்கள் என்னையும் என் வாழ்வின் அர்த்தங்களையும் அழிப்பவர்கள். இவர்களுக்கு எதிரான சக்தி என வள்ளுவத்தை எனக்குள் இனம் காண்கிறேன்.   செல்வம் ஒரு பக்கமும், அறிவும் பண்பாடும் இன்னொரு பக்கமும் முரண்படுவதை, மோதுவதை வள்ளுவர் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி உலகம் இருவேறு உலகங்களாக மாறியதை வள்ளுவர் ஏற்கவில்லை. நல்லவனிடத்தில் செல்வம் சேருவதில்லை. தீயவனிடத்தில் செல்வமும் சென்று சேருகிறது. நல்லவர், சான்றோர், வறுமைக்குள்ளாகின்றனர். செல்வம் திரட்டுவதற்கு நல்வழி என்று எதுவும் இல்லை. வள்ளுவர் இந்தப் போக்கைக் கேள்விக்குட் படுத்துகிறார்.   எல்லாவற்றையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த விரும்புகிறார். எப்பொருள் எத்தன்மையதாக இருந்தாலும், யார் சொன்னாலும் இவற்றையெல்லாம் கேள்விக்குட்படுத்தி மெய்ப்பொருள் காண வேண்டும் என்கிறார் வள்ளுவர். வள்ளுவர் தேடுவது மெய்ப்பொருள் - அதாவது மெய்யியல்.   தீயவனிடத்தில் செல்வம் பெருகுவதும், நேர்மையாளனிடத்து வறுமை வந்து சேருவதும் ஆய்வுக்குரியவை என்கிறார் வள்ளுவர்.   இரண்டாகப் பின்னப்பட்ட உலகை, உலகியலை மாற்றுவதற்கு வள்ளுவர் கண்ட நெறி என்ன என்ற கேள்வியோடு நம் சிந்தனையைத் தொடர்வோம். ஒப்புரவுதான் வள்ளுவர் கண்ட நெறி. இதை விளக்குவதற்கு வள்ளுவர் சில அற்புதமான உவமைகளைப் பயன்படுத்துகிறார். இயற்கையாகப் பெய்த மழை நீர் ஊருணியில் சேர்கிறது. இதை எடுத்துக் கொள்ள எல்லோருக்கும் உரிமை உண்டு. ஊர் நடுவில் பழுத்த மரத்திலிருந்து யாரும் பறித்துக் கொள்ளலாம். மருந்தாகச் சில மரங்கள் பயன்படுகின்றன. தேவையானோர் பயன்படுத்திக் கொள்ளலாம். அறிவுடையார். பெருந்தன்மையாளர் தன்னிடம் சேரும் செல்வத்தை இப்படித்தான் பகிர்ந்தளிப்பர். தமக்கு என எதையும் இவர்கள் வைத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் அன்புடையவர்கள். அருளுடையவர்கள். இவர்களுக்கு அறம் எது ? எனத் தெரியும். இவர்கள் சான்றோர்கள் . வழிவழிவந்த தமிழ்ச் சான்றோர்கள், இந்தச் சான்றோர்கள் தாம் வள்ளுவரின் அறத்திற்கு ஆதியாய் இருப்பவர்கள். இவர்கள் பகுத்து உண்பவர்கள். பல்லுயிர் ஓம்புபவர்கள். ஊழி பெயரினும் நடுவு நிலையிலிருந்து இவர்கள் பிறழாது இருப்பதனால்தான் உலகம் அழிவுறாமல் இருக்கிறது.   இவர்கள்தான் அருளாளர்கள் மற்றும் அந்தணர்கள். இவர்கள் தம் மனத்தில் மாசு இல்லாதவர்கள். காமத்திற்கும், வெகுளிக்கும், மயக்கத்திற்கும் இவர்கள் தம் மனத்தில் இடம் தருவதில்லை . இவர்கள் வாழ்வாங்கு வாழ்பவர்கள். எந்த உயிர்க்கும் இன்னா செய்யாத வர்கள் இவர்கள். எல்லா உயிர்களும் இவர்களைத் தொழத்தக்க தூய்மையானவர்கள். இவர்களுக்கு அழிவில்லை. வாழ்வில் அச்சமில்லை. இவர்கள் தெய்வத்தைத் தமக்குள் உணர்ந்தவர்கள். இவர்கள் பார்வையில் இந்த உலகில் வறுமை என்று இருக்க முடியாது. இருக்கக்கூடாது. வறுமையை தெய்வம் படைத்திருக்க முடியாது. இப்படிப் படைத்திருக்கும் என்றால் பண்பற்றது அந்தத் தெய்வம். அதற்கும் அழிவு நேரட்டும் என்பவர்கள் சான்றோர்.   வள்ளுவரின் அறத்தை இன்னும் நுட்பமாக நாம் கற்கமுடியும். வானம் வழங்கவில்லையென்றால் இங்குத் தானமும் இல்லை, தவமும் இல்லை என்கிறார் வள்ளுவர். அறத்திற்கும் அந்தணர் நூலுக்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோள் என்கிறார். ஒருவரிடம் சேரும் அறிவு மாநிலத்து மண்ணுயிர்க்கெல்லாம் பயன்பட வேண்டுமென்கிறார். தம் இல்லத்திலிருந்து தம் உழைப்பால் விளைந்த பிறரோடு பகிர்ந்துண்ணும் வாழ்க்கையை வள்ளுவர் தலைவியோடு தலைவன் நுகரும் பேரின்பத்திற்கு ஒப்பானது என்கிறார். இந்தப் பேரின்பம் உயிரைத் தளிர்க்கச் செய்வது என்கிறார். இதற்கு நிகரான இன்பம் தாமரைக் கண்ணான் உலகிலும் இல்லை என்கிறார். அறத்தோடு வருவது இந்த இன்பம். அருளோடு வருவது இந்த இன்பம். இதில் தன்னலம் இல்லை . இப்படியெல்லாம் வள்ளுவரின் மெய்ப்பொருளியல் விரிவு பெறுகிறது.   மனித உழைப்பை மதிக்கிறார் வள்ளுவர். உழைப்பில் உரம் ஏறியவன் விதியை வெல்ல முடியும் என்கிறார். தெய்வம் என்பதை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே வள்ளுவர் நெறி. தெய்வத்தை இப்படிப் புரிந்து கொண்டு தம் வாழ்வையே அருளாக, அறமாக மாற்றிக் கொண்டவர்களுக்கு அழிவில்லை. இவர்கள் பிறவிக்கடலை எளிதாகக் கடந்துவிட முடியும்.   வள்ளுவரின் சில அற்புதமான குறட்பாக்களை இங்குச் குறிப்பிடலாம்.   "அறத்திற்கே அன்பு சார்பென்ப" என்ற குறளில் வள்ளுவர் எதை மையப்படுத்துகிறார்? அன்புள்ளவனுக்குத்தான் அறம் தெரியும். தன்னலம் கருதாது அறத்தை ஒருவன் செயல்படுத்த வேண்டும் என்றால் அவனுக்குள் மன உறுதி இருக்க வேண்டும். அதாவது வீரம் இருக்க வேண்டும். மறம் என்பது வீரம். வீரம் உள்ளவன் தான் அன்பு செய்யவும் முடியும். அறம் இல்லாதவனுக்கு அன்பு தெரியாது. கோழைக்கும் அன்பும் இல்லை. அறமும் இல்லை. இங்கு எல்லாமே ஒரு புள்ளியில் இணைகின்றன. இந்த மையத்திலிருந்தே வள்ளுவர் தொகுக்கும் எல்லா நற்பண்புகளும் பிறக்கின்றன.   எல்லாவற்றிற்கும் காரணம் மற்றும் காரியம் எது என்று இடைவிடாமல் கேள்விக்குட்படுத்திச் சிந்திப்பவனிடத்தில் தான் அறம் தங்கும் என்கிறார். அளவறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் என்பது வள்ளுவர் வாக்கு. இவனுக்குள் தன்னலமில்லை. அச்சமில்லை. இவன் அருளாளன். இவனுக்கு அல்லல் இல்லை என்கிறார் வள்ளுவர். இதற்கு வழி வழங்கும் மல்லல் மாஞாலம் - சான்று (245) என்கிறார். தோண்டிய அளவுக்கு நீர் ஊறும். தன்னைத் தோண்டுபவனையும் தாங்குகிறது நிலம். இவையும் வள்ளுவர் கூற்றுகள். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கமுடியும்.                                                                   16. மணிக்குறள்கள் சில      “மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்   கீழல்லார் கீழல் லவர்" (குறள் 973)    உயர்ந்த இடத்தில் உயர் பதவியில் இருந்தாலும் மேன்மைக் குணம் இல்லாதவர் மேலானவர் அல்லர். தாழ்ந்த இடத்தில் இருந்த போதிலும் கீழ்மைக்குணம் இல்லாதவர்கள் தாழ்ந்தவர்கள் அல்லர்.   தோற்றமும் உண்மையும் மாறுபட்டிருப்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும். இது மெய்ப்பொருள் காணும் முறை. “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் ”(குறள் 695) என்று மெய்ப்பொருள் காணும் முறை குறித்து வள்ளுவர் கூறியிருப்பதை இங்கு நினைவு கொள்ளலாம். மேல், கீழ் என்பதை பல நிலைகளில் வைத்துப் பொருள்படுத்தலாம். உருள் பெரும் தேருக்கு அச்சாணி என்பதும் இப்படிப் பொருள்படுத்தக்கூடிய ஒரு குறள். (குறள் 667) இப்படி எத்தனையோ குறள்கள். "நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்” (குறள் 373)   நூல்கள் பலவற்றைக் கற்க வேண்டும். நுட்பமாகக் கற்கவேண்டும். இப்படிக் கற்றாலும் கற்பவரின் உண்மையறிவுதான் மிகுந்து தோன்றும் மேம்பட்டுத் தோன்றும்.   நூல்கல்வியையும் உண்மையறிவையும் இங்கு முரண்படக் காணுகிறார் வள்ளுவர். (இது சரிதானா?) நூற்கல்வி ஒருவனது உண்மையான அறிவைப் பாதிப்பதில்லை அல்லது மாற்றுவதில்லை. சுய சிந்தனை இல்லாத வெறும் படிப்பு ஒருவனது பண்பை மாற்றாது. இளம் வயதிலேயே குடும்பச் சூழல் முதலியவை காரணமாக சினம் முதலிய தீய குணங்கள் ஒருவரிடம் படிந்து விடுகின்றன. இவற்றை வெறும் படிப்பு மாற்றுவதில்லை. தன்னைப் பற்றிய தன்னுணர்வோடு நூல்களைக் கற்பவர் தன்னைச் சரியாகப் புரிந்து கொள்ளும் பொழுது தன் குணத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்படலாம். எனினும் ஆணிவேரைக் களைவது அவ்வளவு எளிதன்று. இனம் முதலியவற்றின் சார்பில் ஒருவருக்குள் பதிந்து விடுவது உண்மையறிவு (குறள் 452). "இனத்தான் ஆம் இன்னான் எனப்படும் சொல்" (குறள் 454 ) என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். உண்மையறிவு நல்லறிவாக இருக்கவும் கூடும். அதை நூல்கல்வி மாற்றாது என்றும் பொருள்படுத்துவதற்குக் குறள் இடம் தருகிறது. (இதுவும் சரிதானா?)   "கல்லாதான் ஓட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடையார்" (குறள் 404).   கல்வியறிவில்லாத ஒருவனிடம் நுண்ணறிவு மிகச்சிறப்பாக அமைந்திருக்கலாம் எனினும் இவன் கல்வியறிவு பெறாதவன் என்பதனால் கல்வியறிவு பெற்றவர் இவனது நுண்ணறிவை ஏற்பதில்லை -மதிப்பதில்லை. இயல்பாகவே நுண்ணறிவு இருந்த போதிலும் தனது அறிவை மதிக்கப் பெற வேண்டுமென்றால் கல்வியறிவு பெறவேண்டும். இத்தகையவன் தான் அறிவுடையவர் கூடிய அவையில் இடம் பெறத் தகுதியுடையவன். இவ்வாறு கல்விபெறத் தூண்டுவது வள்ளுவரின் கருத்தென்றால் நாம் ஏற்க முடியும். (அதுவும் தயக்கத்தோடு தான்) தான் படித்தவன் என்ற இறுமாப்பு உடையவன்தான் நுண்ணறி விருந்தும் கல்வி பெறாதவனை மதிக்க மாட்டான். இத்தகையவரை அறிவுடையவர் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர் சார்பில் வள்ளுவர் பேசுவாரா? நுண்ணறிவும் கல்வியும் முரண்படக் கூடாது. சான்றோர் அவையில் பேதை புகக்கூடாது (குறள் 840) என்று வள்ளுவர் கூறுகிறார்.   கல்வியறிவு தேவை என்பதை நாம் ஒப்புக்கொள்ளலாம். கல்வியறிவு இல்லாத போதும் வாழ்வியல் அனுபவங்களோடு நுண்ணறிவு மிக்க பலரை நாம் காண்கிறோம். இப்படிச் சொல்வதுதான் சரியான கருத்துரையாக இருக்கமுடியும். (வள்ளுவர் இங்கு தடுமாறுகிறாரா?)   "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநுால் கற்றாரோடு ஏனைய வர் (குறள் 410)   விலங்குகளைக் காட்டிலும் மனிதர் எத்தனை அளவு உயர்ந்தவரோ, அத்தனையளவு தாழ்ந்தவர். கல்வியறிவுடை யவரோடு ஒப்பிடும் பொழுது கல்லாதவர். வள்ளுவரின் சொல் முறையின் தனித்தன்மையை இக்குறளில் காணமுடியும். ஒரு பக்கம் உயர்வும் இன்னொரு பக்கம் அதேயளவு தாழ்வும் என்று சொல்லுகிறார்.   இத்தகைய சொல் முறையை பரிமேலழகர் நுட்பமாகச் சுட்டிக்காட்டுகிறார். இதை வெறும் எதிர்நிரல் நிறையணி என்று இலக்கணத்திற்குள் அடக்குவது இத்தகைய செயல்முறையின் ஆற்றலைப் புலப்படுத்தாது. இந்த நுட்பத்தை எங்களுக்குக் கற்பித்தவர் பேராசிரியர் ப.சு.மணியம் அவர்கள்.   கல்லாதவரை விலங்குகளோடு ஒப்பிடுகிறார் வள்ளுவர். கல்வியறிவுடையவர்தான் மனிதர். விலங்குகளுக்கு உலகம் தெரியாது. கலை தெரியாது. வாழ்க்கை தெரியாது. வெறும் புலன் நுகர்வில் கட்டுப்பட்டவை விலங்குகள். விலங்குகளிடமிருந்து மேம்பட்டவர் மனிதர். இதைத் தெளிந்து கொள்வதற்கும் மேலும் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்கும் கல்வியறிவு தேவை. புலணுணர்விற்குள் கட்டுப்பட்டவரை மனிதராகக் கருத வேண்டியது இல்லை. கற்றவர்தான் கண்ணுடையவர் (குறள் 393) என்று வள்ளுவர் கூறுகிறார்.   "செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்” (குறள் 637)   செயற்கை பற்றிய அறிவு தேவைதான் என்றபோதிலும் உலகில் இயற்கையறிந்து செயல்பட வேண்டும்.   இக்குறளை எவ்வாறு பொருள்படுத்துவது? நாகரிக மிகுதியை செயற்கையின் ஒரு பகுதி என்று கொள்ளலாம். தொழில், வணிகம், நகரம், ஆட்சி என்பவை நாகரிகத்தின் கூறுகள். இவை பற்றிய அறிவு நமக்குத் தேவைதான். செயற்கை என்னதான் வளர்ச்சி பெற்றாலும் ஆதிக்கம் பெற்றாலும் அன்பை அழித்துவிடக் கூடாது. எளிய மக்களை இகழ்ந்து விடக்கூடாது. மரபை அழித்துவிடக் கூடாது. மரபறிந்து செயல்பட வேண்டும். செயற்கை நாகரிகத்தை ஒப்புக்கொள்ளாதவரும் இருக்கக்கூடும். இத்தகையவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிச் சொல்லுகிறாரா வள்ளுவர்? இதுதான் “உலகத்தோடு ஒட்ட ஒழுகலா?" (குறள் 140).   திருச்சியிலுள்ள என் நண்பர் ராசாராம் இயற்கை வேளாண்மை முதலியவற்றில் பேரார்வம் உடையவர். என்னதான் செயற்கையை மேம்படுத்துவதாக இருந்தாலும் இயற்கையை அழித்துவிடக்கூடாது என்று புதுப்பொருள் சொல்லுகிறார்.   "அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு" (குறள் 1110)   தொடர்ந்து நாம் கற்கும் பொழுது நம் அறிவு வளர்கிறது என்பது உண்மைதான். பல துறைகளிலும் நம் அறிவைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டிருக்கும்போழுதே நமக்குள் ஓர் அச்ச உணர்வு ஏற்படுகிறது. துறைகள் விரிந்து செல்கின்றன. உலகம் விரிந்து செல்கிறது. நமக்கு வசப்பட்ட அறிவு மிகமிகக் குறைவு. நமக்கு வசமாகாத அறிவு மிகமிக அதிகம். இவை என்று நமக்கு வசப்படுமோ என்பது நம் கவலை. அப்படியானால் இதுவரை நாம் என்ன தெரிந்து கொண்டோம்? தெரிந்த்து குறைவு. தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம். ஆக, கல்வியறிவின் மூலம் நாம் அறியாமையைத் தான் கற்றுக் கொளகிறோம். நம் அறியாமையை நாமே தெரிந்து கொள்வது கூட ஒரு இன்பம்தான். இப்படிக் கற்பவர்தான் கற்ற கல்விக்காக பெருமைப்பட இயலாது. ஆணவம் கொள்ள இயலாது. கல்வியறிவு இல்லை என்பதால் பிறரை இகழ முடியாது. இத்தகையவர் இயல்பாகவே பணிவுடையவராய் இருப்பர். (குறள் 95).   சாந்துணையும் கற்க வேண்டுமென்று வள்ளுவர் கூறுகிறார் (குறள் 937). நாம் புரிந்து கொள்கிறோம். அறிதோறு அறியாமை எனும் காமத்துப்பாலில் இடம் பெறுகிறது. கல்வியறிவு பெறப்பெற அறியாமையே மிகுந்து தெரிவது போல் இந்த சேயிழையிடம் செறியும் தோறும் காமம் மிகுகிறது. பழகப் பழக இப்பெண்ணின் பண்புகள் விரிந்து தெரிகிறது. ஆகவே, இவனிடம் காமம் மிகுகிறது. உடலளவில் தொடங்கிய காமம் உள்ளத்தில் பேரன் பாய் விரிகிறது.   "தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்'' (குறள் 305)   தன்னை ஒருவன் காத்துக்கொள்ள விரும்பினால் சினம் வராமல் காத்துக்கொள்ள வேண்டும். அப்படி காத்துக் கொள்ளாவிட்டால் தன்னையே கொல்லும் சினம். சினம் ஒரு வலிமை அன்று. ஆயுதம் அன்று. சினம் ஒரு தீ. தன்னையே எரித்து அழித்துக் கொள்வது சினம். (குறள் 306 ) தன்னைக் காத்துக் கொள்ள விரும்பினால் சினம் அறவே கூடாது என்கிறார் வள்ளுவர்.   குணம் என்னும் குன்றேறி நின்றார் (குறள் 29) என்பது இன்னொரு குறள். என்னதான் சான்றோர் என்றாலும் சினம் கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால் சான்றோரின் சினம் ஒரு கணம் மட்டுமே நிலவும். மறுகணம் அந்தச் சினத்தைக் கட்டுப்படுத்திக் கொள்பவர் சான்றோர். குன்றேறி நிற்கிறோம் என்று கருதி அடுத்தவரை சினந்து எரிப்பது ஆணவம். (குறள் 965). (ஒரு கணம் மட்டுமே நிலவினாலும் அதனால் இவரது சினத்திற்கு உள்ளாகுபவர் அழிவர் என்று பொருள் காண்பது சரியில்லை).   "அரம் போலும் கூர்மைய ரேனும்" (குறள் 997) என்பது இன்னொரு குறள். என்னதான் அறிவுக்கூர்மையுடையவராயினும் மனிதப் பண்பு வேண்டும் என்கிறார் வள்ளுவர். அறிவு. பண்பை அழித்துவிடுகிறது என்பது வள்ளுவர் கருத்தாக இருக்கக்கூடும். துறையல்லார் கண்ணும் தோல்வியை ஏற்பது பண்புடையவர் செயல். பண்பில் அறிவு கரைந்துவிட வேண்டும் அறிவு துருத்திக் கொண்டு இருக்கக் கூடாது. பணியுமாம் என்றும் பெருமை என்றும் வள்ளுவர் கூறுகிறார்.   "அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை ' (குறள் 76) அறச் செயலுக்குத்தான் அன்பு காரணம் என்று கூறுபவர்கள் மறச் செயலுக்கும் அன்புதான் காரணமாகிறது என்பதை அறியாதவர்கள். அறம், மறம் என்பதை இங்கு முரண்படுத்தி மறம் என்பதற்குப் பாவச் செயல் என்று பொருள்படுத்த வேண்டியதில்லை. அறத்தில் உறுதியான பற்றுக் கொள்பவன் தான் பிறரிடம் எல்லாச் சமயங்களிலும் அன்பு செய்ய முடியும். இத்தகையவன் ஒரு வகையில் வீரன். இதை வேறு வகையிலும் சொல்ல முடியும். தன்னுள் மன உறுதியோடு கூடிய வீரன்தான் அறத்திலும் அன்பு செய்ய உறுதியாக இருக்க முடியும். கோழைக்கு அன்பு தெரியாது. அறம் தெரியாது. அன்பு, அறம், மறம் என்பவை ஒன்றோடொன்று இணைந்தும் கலந்தும் இருக்கும் பண்புகள்.   வள்ளுவரின் அற்புதமான குறள்களில் இதுவும் ஒன்று. வள்ளுவருக்குள் வெளிப்படும் ஒரு பெரும் காட்சியென இக்குறளைச் சொல்ல முடியும். உண்மையான அன்புடையவர் தன் எலும்பையும் பிறருக்கு தரவல்லவர் (குறள் 72) என்று வள்ளுவர் சொல்லும்போது அறம், மறம் ஆகியவை இங்கு அன்பினுள் இணைந்து இருப்பதைக் காண்கிறோம். உயிரானது உடம்போடு இணைவது எதற்காக என்ற கேள்வியெழுப்பினால் வள்ளுவர் கூறும் பதில் (குறள் 73) (வள்ளுவரின் அருவச் சிந்தனையை இங்குக் காண்கிறோம்) அன்புடையோர்தான் உயிரோடு இயங்குபவர். அன்பிலாதவர் நடமாடினாலும் உயிரில்லாத பிணம் என்கிறார் இன்னொரு குறளில்   "அளவறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு” (குறள் 288)   தருக்க முறையில் எல்லாவற்றையும் பகுத்தும் தொகுத்தும் ஆராய்பவர் நெஞ்சில் அறம் தங்கும். அதுபோல எங்கெல்லாம் எப்படியெல்லாம் திருடுவது என்பதை ஆராய்பவர் நெஞ்சில் வஞ்சம் தங்கும்.   ஒரு வித்தியாசமான குறள். சரியாகச் சொன்னால் இரண்டு கருத்துகள் இங்கு ஒரு குறளில் இணைக்கப்படுகின்றன. இரண்டு குறள்கள் ஒரு குறளுக்குள் அடங்கியிருக்கின்றன. ஒன்றோடு ஒத்த இன்னொன்றைத்தான் உவமையாகச் சொல்வது கவிதை முறை. ஒன்றுக்கொன்று எதிரானதை உவமைப்படுத்துவது ஒரு வினோதம். ஒரு வியப்பு. தேவரனையர் கயவர்' (குறள் 1073) என்ற இன்னொரு குறளிலும் வள்ளுவர் இப்படி வேடிக்கை காட்டுகிறார்.   எல்லாவற்றையும் பகுத்து ஆராய்பவன் நெஞ்சில் தான் அறம் தங்குமென்கிறார் வள்ளுவர். உலகம் எப்படித் தோன்றியது? வரலாறு என்றால் என்ன? வாழ்வு என்றால் என்ன? நன்மை, தீமை என்பவை யாவை? இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகளை எழுப்பித் தொடர்ந்து சிந்திப்பவனுக்குள் தான் அறவுணர்வு தங்கும். வள்ளுவரும் இப்படிச் சிந்திக்கிறார். தன் உடம்பை வளர்ப்பதற்காகப் பிற உயிர்களைக் கொல்ல வேண்டாம். (குறள் 251) தனக்கு வரும் துன்பத்தை ஏற்றுக்கொண்டேனும் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் (குறள் 615) இப்படிச் செல்லுகின்றன வள்ளுவரின் சிந்தனைகள் திருடனும் இப்படித்தான் ஓயாமல் சிந்திக்கிறான். யார் தான் திருடாதவர்? இப்படி அவன் கேட்ட எத்தனையோ கேள்விகள். இந்த இருவரும் தர்க்கத்தை விடாப்பிடியாகக் கடைப்பிடிப்பவர்கள். "அல்லல் அருளாள்வாருக்கு இல்லை வளிவழங்கும் மல்லல் மாஞாலம் கரி” (குறள் 245)   அருளை ஆள்பவர்களுக்குத் துன்பம் இல்லை. துயரங்கள் இல்லை. இப்படிச் சொல்லும் வள்ளுவர் தொடர்ந்து சொல்லுகிறார். காற்று ஓயாமல் அலைந்து திரியும் வளம் பொருந்திய இந்தப் பேருலகமே இதற்குச் சான்று என்கிறார். நமக்குள் சிந்தனையை தூண்டுகிறார். அருளுடையவருக்குத் துன்பமில்லை என்பதற்கு இந்த உலகம் எப்படிச் சான்று ஆக முடியும்?   ஓயாமல் காற்று வீசுகிறது. புயல் அடிக்கிறது. இடியும் மின்னலும் தொடர்கின்றன. மழை கொட்டுகிறது. உலகம் அதிர்கிறது. எனினும் மீண்டும் உலகம் தழைக்கிறது. முன்னைவிட வளம் பெருகுகிறது. உலகம் இப்படி எல்லாத் துயரங்களையும் தாங்கிக் கொள்கிறது. இதன் மூலமே வளம் பெறுகிறது. அகழ்வாரைத் தாங்கும் நிலம் (குறள் 151) என்று இன்னொரு குறளிலும் கூறினார். தோண்டத் தோண்ட கேணியில் நீர் ஊறும் (குறள் 396 ) என்று கூறுகிறார். (இப்படித்தான் இக்குறளைப் பொருள்படுத்தவேண்டுமா? வள்ளுவருக்குள் இயங்குவது கவிதை ) அருளை ஆள்பவன் என்கிறார் வள்ளுவர். யார் என்ன துன்பம் செய்தாலும் இவர் தாங்கிக் கொள்வார். துன்பம் செய்பவன் ஏன் அப்படிச் செய்கிறான் என்று கேள்வியெழுப்பி அவனைப் புரிந்து கொள்ள முடியும். அவனுக்குள் ஏதோ சில காயங்கள். அவன் தன்னை அறிந்தவன் அல்லன். தன்னையே முதன்மைப் படுத்திச் சிந்திக்கிறான். அவன் அன்பு செய்யத் தக்கவன். கொடுப்பதனால் நம்மிடம் எதுவும் குறைந்து விடுவதில்லை. இப்படித்தான் அன்பை, அருளை நமக்குள் வளர்க்க முடியும்.   "அறத்தாறு இது என் வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" (குறள் 37)   பல்லக்கில் அமர்ந்துள்ளவனுக்கும் பல்லக்கைச் சுமந்து செல்பவனுக்கும் இடையில் இதுதான் அறநெறி என்று சொல்ல வேண்டாம்.   முற்பிறப்பில் செய்த நல்வினை காரணமாக இப்பிறப்பில் இவன் பல்லக்கில் அமர்ந்து செல்கிறார். முற்பிறப்பில் செய்த தீவினை காரணமாக இப்பிறப்பில் இவர்கள் பல்லக்கைச் சுமக்கிறார்கள். இதுதான் அறநெறி என்று சொல்ல வேண்டாம் என்கிறார் வள்ளுவர்.   இதுதான் அறம் என்றால் இப்பொழுது பல்லக்கில் அமர்ந்திருப்பவன் அடுத்த பிறவியில் பல்லக்கைச் சுமக்க வேண்டும். இப்பொழுது பல்லக்கைச் சுமப்பவர் அடுத்த பிறப்பில் பல்லக்கில் அமரலாம். இப்படிச் சிக்கல் தொடருமேயொழியத் தீராது. ஆகவே, இப்படி அறத்தை விளக்கமுடியாது. வரையறை செய்யமுடியாது இப்படிப் பேச வேண்டாம் என்கிறார் வள்ளுவர்.   வள்ளுவருக்குள் செயல்படும் உள்ளுணர்வு என்ன? ஊர்ந்து செல்லவும் வேண்டாம். சுமக்கவும் வேண்டாம். ஊர்ந்து செல்பவன் இறங்கி நடப்பதே நல்லது. இப்படிச் செய்தால் சிக்கல் தீருகிறது. சமய நெறியில் பொருள் காணும் போது ஏற்படும் சிக்கல், சமூக உணர்வோடு பொருள் காணும் போது தீர்கிறது. முன்வினை - பின்வினை என்பதை வைத்து வாழ்வை விளக்கமுடியாது.   "வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்” (குறள் 271)   துறவியின் நெஞ்சில் கள்ளத்தனம் கூடாது. இப்படித் துறவி வேடம் தரித்தவன் நெஞ்சில் கள்ளத்தனம் புகும் என்றால் அவனுக்கு உள்ளும் வெளியிலும் இருக்கின்ற பூதங்கள் ஐந்தும் தமக்குள் சிரித்துக்கொள்ளும். பூதங்கள் நல்லவை. வல்லமை மிக்கவை. இவற்றின் சேர்க்கையால் தான் மனிதனுக்கு உடம்பு வாய்த்துள்ளது. உடம்பினுள்ளும் இருக்கிற பூதங்கள் நல்லதையே விரும்புகின்றன. உடம்பை வைத்து நல்லதே நினைக்க வேண்டும். நல்லதையே செய்ய வேண்டும்.   இல்லறத்தான் எப்படியிருந்தாலும் துறவி தன் உடம்பையும் மனத்தையும் தீமைக்கு இடம் தராமல் காக்க வேண்டும். இப்படி இருப்பதற்காகத்தான் ஒருவன் துறவியானான் துறவிக்குரிய வேடம் தரித்தான். வேடத்தில் தன்னை மறைத்துக் கொண்டு தீமை பற்றி சிந்திப்பானென்றால் இவனுக்குள்ளிருக்கும் பூதங்கள் இவனது தீங்கு கண்டு தமக்குள் சிரித்துக் கொள்ளும். பூதங்கள் நகும் என்பது நல்ல கற்பனை.   அன்பு செய்வதற்காகத்தான் உயிர் உடம்போடு இணைந்தது என்ற வள்ளுவர் கருத்தை இங்கு நாம் நினைவு கூறலாம். பூதங்களின் சேர்க்கை நன்மை செய்வதற்காகத்தான். அன்பு செய்வதற்காக என்பதனுள் வள்ளுவரின் சமூக உணர்வைக் காண்கிறோம். பூதங்கள் நகும் என்ற கூற்றினுள் வள்ளுவரது சமயச் சிந்தனையைக் காண்கிறோம். நன்மையும் தீமையும் எப்படித் தோன்றின, ஏன் தோன்றின என்பது ஒரு அடிப்படையான கேள்வி..   பிறருக்கு ஒருவன் துன்பம் செய்தால் அதே வகையான துன்பம் இவனுக்கு இன்றில்லை என்றாலும் இன்னொரு நாள் வரத்தான் வேண்டும். மக்கள் வருந்தி அழுமாறு அவர்களது உடமைகளை ஓர் அரசன் பறிப்பானென்றால் அவனும் வருந்தி அழுமாறு அவனது செல்வமும் பறிபோகத்தான் வேண்டும். இப்படியெல்லாம் நடந்தால் நல்லதுதான். இப்படியும் சில சமயங்களில் நடைபெறத்தான் செய்கின்றன. ஆனால் எப்பொழுதும் இப்படித்தான் நடைபெறுகின்றதா?   சமுதாயத்திற்குள் இத்தகைய போக்குகள் என்று தொடங்கின என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எனினும் தன்னலம் கருதிப் பிறர் உடமைகளைப் பறிப்பதும் பிறருக்குத் துன்பம் செய்வதும் யாரோ ஒரு சிலர் தொடங்கிவைத்த பிறகு வேறு வழியில்லாமல் பிறரும் அதையே செய்ய நேர்ந்திருக்கிறது. வறுமைச் சூழலில் பொறாமை, திருட்டு, கொடுமைகளும் நடைபெறுகின்றன. ஓர் அரசனுக்கெதிராக இன்னொருவன் தோன்றுகிறான். போர்க் கொடுமைகள் நடைபெறுகின்றன. வாளெடுத்தவன் வாளினால் சாவான்', 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பன சில பழமொழிகள். "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்” (குறள் 169)   என்ற குறளில் பொறாமையுடையவனிடம் செல்வம் சேர்கிறது. நல்லவனிடம் வறுமை சூழ்கிறது என்பதையும் கண்ட வள்ளுவர் இவற்றை ஆராய வேண்டுமென்கிறார்.