[] வளரி ஆசிரியர்:அருணாசுந்தரராசன் மின்னூல் வெளியீடு : freetamilebooks.com உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மின்னூலாக்கம் & அட்டைபடம் – ப.மதியழகன்– mathi2134@gmail.com     Table of Contents வளரி கவிதைகளில் வாழும் எரிக்கவியலாத நான்... என் நாட்குறிப்பிலிருந்து... ‘புல் புல்’ பறவைகளின் பரிதவிப்பும் கஸல் கவிதைகளின் கண்ணீரும் அருணாசுந்தரராசன் இரவுப் பாடகன் நா.காமராசனுக்கு... திராவி இயக்கத்தின் நவீன இலக்கிய பிதாமகன் அப்துல் ரகுமான் நாச்சியார்கோவில் மகாபவித்ரா கவிதைகள் பொம்மையின் மெளனம் கலாசகி ரூபி, இலங்கை பெருவெளியின் பறவை எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை வெயில் மீன்கள் ஜவாத் மரைக்கார், புத்தளம், இலங்கை நிம்மி சிவா, ஜெர்மனி நா.காமராசன் வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி உமா மகேசுவரி, மதுரை ஒன்பதாவது ஆண்டில் வளரி சுபஸ்ரீ முரளிதரன், சென்னை மழையாளின் காதலர் அஞ்சல் மூலம் வளரி பெற... கொழும்பில் மேமன்கவி மணிவிழா தமிழ் சிங்கள புரிந்துணர்வின் வெளிப்பாடாக அமைந்த நிகழ்வு! கமல் பெரேரா கே.எஸ்.சிவகுமாரன் பத்மாசோமகாந்தன் அருணாசுந்தரராசன் எங்களைப் பற்றி     வளரி முதன்மை ஆசிரியர் முனைவர் ஆதிரா முல்லை ஆசிரியர் அருணாசுந்தரராசன் இணைஆசிரியர்கள் நக்கீரன் மகள், டென்மார்க் தேவி ரவி, குவைத் துணை ஆசிரியர்கள் அ.சுகன்யா மீரா. ஜனனி ஆசிரியர் பீடம் அயலகம் வசுந்தரா பகிரதன், ஆஸ்திரேலியா கலாசகி ரூபி, இலங்கை சுபஸ்ரீ மோகன், சீனா வளர்மதி சிவா, கனடா கிருஷ். இராமதாஸ், துபாய் தியாக.இரமேஷ், சிங்கப்பூர் ஈழபாரதி, பிரான்ஸ் தமிழகம் உஷா மகேசுவரி சுகன்யா ஞானசூரி புதுவை சுமதி முதன்மை ஆலோசகர்கள் ஹேமசந்திர பதிரன, இலங்கை இரா. சிவகுமார், மதுரை சுப.பிரேம், சென்னை முனைவர் பாஸ்கரன், சென்னை தொடர்புக்கு வளரி 32, கீழ ரத வீதி மானாமதுரை-630606 மின்னஞ்சல் valari2009@gmail.com கைபேசி:78715 48146 [feather-pen-clipart-free-vector-ink-pen-clip-art_105837_Ink_Pen_clip_art_hight.png]பெருமாள் ஆச்சி கவிதைகளில் வாழும் எரிக்கவியலாத நான்...   நான் என்ற என்ஆவி பிரிந்து பல மணிநேரங்கள் ஆகின்றன என் கை கால்களைக் கட்டி வாயை அடைத்துக் குறுக்கி படுக்க வைத்திருக்கிறார்கள் குளிரூட்டிப் பெட்டியில். இன்னும் சில மணிநேரங்களில் எனது இந்த வெற்றுடம்பு எரியப் போகின்றது எல்லா ஏற்பாடுகளும் என் விருப்பமின்றி நடந்து கொண்டிருக்கின்றன என்னை இடும் காட்டிற்கு அனுப்பிவிட்டுக் குளித்துவிட்டுக் காத்திருக்கின்றனர் என் உறவுகள் அழுத கண்ணீர் உப்புக் கோடாய் அவர்களின் நன்றியை உணர்த்திக் கொண்டிருக்கிறது எனக்கான தேர் தயாராகிறது... மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மயானத்தேர் இருட்டுவதற்குள் இறுதிச் சடங்குகளை முடிக்க வேண்டும் என்கிறார் ஒரு பெரியவர்.. குளியலறையிலேயே குளித்துப் பழக்கப்பட்ட என்னுடல் வெட்ட வெளியில் பலரால் குளிப்பாட்டப்படுகிறது. என் விருப்பமின்றி எனக்கு ஆடை மாற்றப்படுகிறது.. பன்னீர் தெளிப்பதும் ஊதுபத்தி ஏற்றுவதுமென பரபரப்பாய் இயங்குகின்றனர் பயண ஏற்பாட்டாளர்கள்.. வாய்க்கரிசி போடுவததோடு தங்கள் வருத்தங்களையும் தூவுகின்றனர் பலர்... தேரில் தூக்கிக் கிடத்தப்படுகிறேன் நான் படுத்துறங்கிய தலையணையை இறுதி உறக்கத்தில் என்னோடு அனுப்பி வைக்கின்றனர் தெய்வமென கற்பூரமேற்றிக் கும்பிடுகின்றனர்... இறுதியாய்த் தீயிட்டுவிட்டனர் அழிந்துவிட்டேனா நான்... இல்லை, இல்லை என் நினைவுகள் எரிக்க இயலாத உள்ளங்களில் நான் வாழ்வதுபோல் இந்த கவிதைகளிலும் நான் வாழ்ந்து கொண்டுதான் இருக்க வேண்டும் வருடங்கள் பலவாயினும்...     என் நாட்குறிப்பிலிருந்து... ‘புல் புல்’ பறவைகளின் பரிதவிப்பும் கஸல் கவிதைகளின் கண்ணீரும் [abdul kama.jpg]   தமிழ்க் கவிதையின் இருபெரும் பேராளுமைகளை இழந்திருக்கிறோம். நா.காமராசனும் கவிக்கோ அப்துல் ரகுமானும் கவிதையின் இருவிழிகளுக்கு ஒப்பானவர்கள்.   நா.காமராசன் மாணவப் பருவத்திலேயே இந்திய ஆதிக்கத்தை எதிர்த்து களன் கண்டு சிறைவாசம் அனுபவித்த மொழிப்போராளி. ஆரவாரம் ஆர்ப்பாட்டம், வெற்று முழக்கம் எதுவுமின்றி தன் கருத்துக்களை வெளிப்படுத்திய கொள்கைப் பற்றாளர் கவிக்கோ.   தங்கள் கவிதைகளில் கையாண்ட மொழிநடை, கருத்து, வீச்சு அனைவரையும் ஈர்க்கும் வசீகரச் சொற்கள் இவற்றால் நா.கா.வும் கவிக்கோவும் மகாகவிகளே!   நா.கா. பாரசீகத்து புல் புல் பறவைகளுக்குச் சேதி சொன்னவர். கவிக்கோ கஸல் கவிதைகளின் பல்வேறு முகங்களை தமிழுக்குத் தந்தவர்.   நா.காமராசனுக்கும் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கும் வளரியின் கண்ணீர் அஞ்சலி!                                                       [feather-pen-clipart-free-vector-ink-pen-clip-art_105837_Ink_Pen_clip_art_hight.png]ஆசிரியர் [iravu.jpg] [feather-pen-clipart-free-vector-ink-pen-clip-art_105837_Ink_Pen_clip_art_hight.png]அருணாசுந்தரராசன் இரவுப் பாடகன் நா.காமராசனுக்கு...     உன்னை இராஜகவி என்பதா மகாகவி என்பதா...?   மொழிக்களம் கண்டதினால் தமிழ் உன்னை ஆரத்தழுவிக் கொண்டது நீ தமிழை எழுதினாயா தமிழ் உன்னை எழுதியதா? தமிழ்க் கல்வெட்டில் உன் பெயர் இடம் பெறவா நீ எழுதினாய் இல்லை இல்லை உலக மொழிகளின் காலக்குறிப்பேட்டில் தமிழின் பெயர் இடம்பெற வேண்டியல்லவா நீ எழுதினாய் எழுதிக்கொண்டே இருந்தாய்   புறந்தள்ளப்பட்ட மண்ணின் மைந்தர்களை உன் வரிகளில் ஆராதித்தாய் நூல் தொகுப்புகளில் உன் எழுத்துக்களை வாசித்து மகிழ்ந்தவர்களை காட்டிலும் இசை கோர்க்கப்பட்ட உன் பாடல் வரிகளை இரசித்து வியந்தவர்களே இங்கு ஏராளம் உன்னை இராஜகவி என்பதா மகாகவி என்பதா..?   தமிழின் சுவையினை திராட்சை ரசமாய் பிழிந்து தந்தாய் உன் கவிதை வரிகள் வானம்பாடிகளுக்கு வெளிச்சம் தருவதாக அமைந்திருந்தது உன் கவிதையின் வருகை   சந்திப்பிழையென்று திருநங்கையரை வர்ணித்தாய் அவர்தம் பிறப்புக்கு இலக்கிய மகுடம் அணிவித்து உன்னத இடத்தில் இருத்தியவன் நீ மட்டுமே உன்னை இராஜகவி என்பதா மகாகவி என்பதா...?   ஓ! எங்கள் இரவுப் பாடகனே உன் மரணச் செய்தியறிந்து பாரசீகத்து புல் புல் பறவைகளும் கதறித் துடிப்பதை நீ அறிவாய்தானே..,.?       [maman.jpg]                        [abdul1.jpg] மேமன்கவி, இலங்கை திராவி இயக்கத்தின் நவீன இலக்கிய பிதாமகன் அப்துல் ரகுமான்     கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் காலமான செய்துயறிந்து மனம் கனத்து அவருடனான தனிப்பட்ட உறவில் மனம் கனத்தது. அவருடனான தனிப்பட்ட உறவினை மனம் அசை போட்டது. 1990ஆம் ஆண்டு அளவில் எனது நான்காவது தொகுப்பான நாளைய நோக்கிய இன்றில் தொகுப்புக்கு என் முகம் தெரியாத நிலையில் அதற்கு முன்னுரை வழங்கியவர். இவ்வளவுக்கும் முன்னு‍ரை சம்பந்தமாக அவருடன் நான் பேசவே இல்லை நர்மதா பதிப்பகம் தான் டொமினிக் ஜீவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பேசி இருந்தது அந்தத் தொகுப்புதான் 1990 ஆம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டல பரிசு பெறுகிறது. அப்பொழுது கூட அவருடன் தொடர்பு கொள்ளவில்லை. அதற்குப் பிறகான நாட்களில் அவர் இலங்கை வந்தபொழுது அவரை முதல் முதலாகச் சந்திக்கிறேன். வாடாமேமன் என உரிமையுடன் ‍அழைத்து கட்டித் தழுவிக் கொள்கிறார். எந்தவித பந்தாவும் இன்றிப் பழகியவர். பிறகான காலகட்டங்களில் அவர் இலங்கை வந்தப் பொழுதெலாம் அவரை நான் சந்திக்கத் தவறியதே கிடையாது.   தமிழகத்தில் திராவிட இயக்கத்தினரிடன் நவீனத்துவ ஈடுபாடும் நவீன இலக்கிய வெளிப்பாடும் இல்லையென்று சொல்லப்பட்ட காலத்தில் கவிதைத்துறையில் புதுக்கவிதையுடன் புறப்பட்டு அக்கருத்தினை மாற்றியவர். அதற்கு வாசலாகவும் முதலாகவும் அவரது பால்வீதி கவிதைத் தொகுப்பு அமைந்தது.   70களில் தமிழ்ப் புதுக்கவிதை தளத்தின் முக்கிய ஆளுமையாக அடையாளப்படுத்தப்பட்டவர். புதுக்கவிதை அவருக்கு திராவிட இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள் அவ்வியக்கத்திலிருந்து தூரமாகி முற்போக்கு இயக்கச் சிந்தனையுடன் புதுக்கவிதையில் ஈடுபட்ட பொழுது வானம்பாடி தோன்றுகிறது. அத்தகைய மாற்றத்திற்கு முன்னோடியாகவும் உந்துதலாகவும் திகழ்ந்தவர் கவிக்கோ. அவர்கள் அவரது கவிதைகளுடன் அவர் பத்தி எழுத்துக்களாய்த் தந்த கட்டுரைகள் மிக பயன்மிக்கவையாக இருந்தன. அவை அவரது பரந்த இலக்கியங்கள் ஊடான அவரது அனுபவம், பார்வை தமிழுக்குப் புதியவை மற்றும் நவீனத்துவத்தின் ஆரம்பகால உலக இலக்கிய முயற்சிகளைப் பற்றி அவரது அறிவும்(உதாரணத்திற்கு சர்யலிசம் போன்ற கோட்பாடுகள் பற்றி) அக்கட்டுரைகளில் வெளிபட்டது. இறுதி வரை கலை, இலக்கியம் சார்ந்த பணிகளை நிறுத்திக் கொள்ளாது செயற்பட்டவர். அவரது மறைவு ஓர் ஆளுமையின் மறைவு என்பதற்கு மேலாக ஒரு குடும்ப நண்பரின் மறைவாகவே நான் உணர்கிறேன். அவரது குடும்பத்தினரின் இலக்கிய ஆர்வலர்களின் துயரில் நானும் பங்குகொள்கிறேன்.                               [feather-pen-clipart-free-vector-ink-pen-clip-art_105837_Ink_Pen_clip_art_hight.png]நாச்சியார்கோவில் மகாபவித்ரா கவிதைகள்   நீ பார்வையால் தொடமுயலும் என் முகத்துவாரங்களில் அன்பை ஊற்றிவைக்கிறேன் ஒருவேளை நான் வெட்கப்பட நேர்ந்தால் நிரம்பித்ததும்பும் அன்பையேனும் ஆறுதலாய் தொட்டுவிட்டுப் போ   [bird.jpg]       பொம்மையின் மெளனம்   ஆசையாய் உணவு ஊட்டும்போதும் கேட்டுக் கேட்டு அலங்காரம் செய்யும் போதிலும் சண்டையிட்டுப்பேசாமல் காய்விடும் போதிலும் விளையாடலில் நெடு‍நேரம் விவாதிக்கும் போதிலும் குழந்தை கேட்கின்ற பதிலையே சொல்லிவிடுகிறது.       [feather-pen-clipart-free-vector-ink-pen-clip-art_105837_Ink_Pen_clip_art_hight.png]கலாசகி ரூபி, இலங்கை பெருவெளியின் பறவை மனதைக் கடந்துவிடுவது பற்றி ஒருத்தி சிந்தனை செய்துகொண்டிருந்தாளாம் மனதைக் கடப்பதற்கு மனம் வழிதானே போக வேண்டும் அவள் கண்களை மூடிக்கொள்கிறாள் காற்று மோதிச் செல்கிறது அவள் ஒரு பெருவெளியைக் காற்றின் வழியே கடந்துவிடச் சித்தமாகிறாள் அங்கு ஓர் ஒற்றைப் பனைமரம் உச்சியில் ஒரு பறவை அதன் தனிமையின் பாடல் இவளைத் தொடுகிறது வந்த பாதை மறந்து போகிறாள் வானம் பார்க்கிறாள் இணைப்பறவை எங்குதான் சென்றிருக்குமோ? எட்டும் தொலைவுவரை அவள் கண்கள் அலைகின்றன இதயம் மெலிதாய் வலிக்கிறது தனிமையின் தாங்கொணா துயரைத் துய்த்தபடி திரும்பிப் பார்க்கிறாள் அந்தப் பெருவெளியில் ஓர் பறவையின் கனத்த சோகத்தை இவள் நினைவோடு அணைத்தபடி மனதோடு மீள்கிறாள். ‍     [feather-pen-clipart-free-vector-ink-pen-clip-art_105837_Ink_Pen_clip_art_hight.png]எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை வெயில் மீன்கள்   வெளியெங்கும் மாலைவெயில் படர்ந்திருக்கும் அந்தி வேளையில் வீட்டில் வண்ண மீன்கள் வளர்க்கவென கண்ணாடிப் பாத்திரத்தில் கிணற்றுத் தண்ணீரை அள்ளிக் கையிலேந்தி வரும் சிறுமியின் கண்ணாடிக் குவளையில் ஒரு கணம் மஞ்சள் மீன்களாய் நீந்துகின்றன அந்த அந்திவேளையும் மறைய காத்திருக்கும் சூரியனும்.                             [feather-pen-clipart-free-vector-ink-pen-clip-art_105837_Ink_Pen_clip_art_hight.png]ஜவாத் மரைக்கார், புத்தளம், இலங்கை[marai.jpg] போய்வா நதியலையே....!   1970-80களில் புதுக்கவிதைப் பிரியர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்டவர் கவிஞர். நா. காமராசன். தமிழ்த்திரைப்படப் பாடல்களில் புதுக்கவிதைப் பண்புகளைப் புகுத்திய முன்னோடியாக அவரைக் கூற முடியும். கறுப்பு மலர்கள், சூரியகாந்தி, தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் பலவற்றைத் தந்தவர். 1978ஆம் ஆண்டு நான் தமிழகம் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்க விரும்பினேன். சென்னை அப்பலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலறிந்த வானம்பாடிக் கவிஞர் அக்கினிபுத்திரன் என்னை அங்கு அழைத்துச் சென்றார். அப்போது நான் உரையாடிய இலங்கைத் தமிழை அக்கினிபுத்திரனிடம் அவர் உணர்ச்சி ததும்பப் பாராட்டிப் பேசியது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனக்கு அன்பளிப்பு செய்ய தனது நூலெதுவும் அவ்விடத்தில் கைவசமில்லையே என்று அவர் வருந்தியபோது. நண்பர் அக்கினிபுத்திரன் தனது கையில் வைத்திருந்த கறுப்பு மலர்கள், தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் ஆகிய நூல்களை அவரிடம் கொடுத்து அதில் கையொப்பமிட்டு எனக்கு அளிக்கும்படி கூறினார். அவர் குளியலறையில் வழுக்கி விழுந்து காலில் முறிவு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததால், நீண்ட நேரத்தை அவருடன் செலவிடவில்லை. அவருடன் உரையாடிய குறுகிய நேரத்தில் இலங்கை இலக்கியங்களை பற்றிப் பேசிக்கொண்டோம். மலையாளப் படமொன்றுக்காகத் தான் எழுதிய பாடல் ஒலிப்பதிவு மறுநாள் நடைபெறுவதாகவும் என்னை அங்கு அழைத்துச் செல்லுமாறும் அக்கினிபுத்திரனிடம் நா.கா. கூறினார். ஆனால் வேறு அலுவல்கள் காரணமாக அங்கு செல்லக் கிடைக்கவில்லை. நா.காமராசன் எழுதிய நான் மரணத்தைப் பற்றிச் சிந்திக்கிறேன் என்ற கவிதையிலிருந்து சில வரிகள் "என்னுடைய மரண ஊர்வலத்தில் சாவுப் பறைகளை முழக்க வேண்டாம் சின்னச் சின்னப் புல்லாங்குழல்களை ஊதுங்கள்" "என்னுடைய உடலை ஒரு சேரியில் அடக்கம் செய்துவிடுங்கள்" "எனது கல்லறைக்கு அருகில் ஒரு சாக்கடையும் கொசுக்களின் ரீங்காரமும் இருக்கட்டும்" "ஏழைகளின் கவியை அவர்களுடைய சுடுகாட்டினிடமே பத்திரமாக ஒப்படைத்துவிடுங்கள்" "பாரசீகத்து" "புலம்பல்" பறவைகளுக்கு என்னுடைய மரணச் செய்தியை அறிவித்து விடுங்கள்...                                   [feather-pen-clipart-free-vector-ink-pen-clip-art_105837_Ink_Pen_clip_art_hight.png]நிம்மி சிவா, ஜெர்மனி தொடர்பு எல்லைக்கு அப்பாலும்...   இறுக்கமான ஓர் உணர்வைத் தளர்த்துவது கூட பாறாங்கல்லை உடைப்பது போன்றதுதான் என்பது முட்டிமோதும் அலைகளுக்குத் தெரிந்திருக்கிறது இழப்பின்வலியை உணர்த்தும் முயற்சியில் தோற்றுப்போகின்றது பனையின் வட்டுக்குள் சிக்கித்தவிக்கும் வெளவால் இலையின் முடியின் இறகின் உதிர்தலை காலம் தீர்மானித்த போதிலும் அவை தற்காலிக இழப்புகள் என்பதை துளிர்தலில் காணலாம் பரீட்சார்த்த ஒலி/ஒளிபரப்புப் போல தொடர்பு எல்லைக்கு அப்பாலும் நிரந்தர இழைப்பை உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன துயிலுகின்ற மணித்துளிகள்...                           நா.காமராசன்[kam1.jpg] வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி   நா.காமராசன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவ்வூரைச் சேர்ந்த பழங்கவிஞர் கான்முகமது என்பவரிடம் கவிதை இலக்கணத்தைக் கற்றவர். உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். கல்லூரியில் நான் தமிழ்ப்பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் பிற வகுப்பு மாணவர்களும் பேராசிரியர்களும் கதவு ஜன்னல்கள் எல்லாம் முகமாக நின்று தம் பாடங்களை ஆர்வத்தோடு கவனிப்பார்கள் என்று நா.காமராசன் கூறியிருக்கிறார். 1964ல் மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஆகியவர்களோடு இணைந்து திராவிட இயக்கத்தின் தனித்தமிழ்நாடு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கு கொண்டவர். அதற்காகச் சிறைக்கும் சென்றிருக்கிறார். சிறையில் அவர் கால்விலங்கு பூட்டப்பட்ட நிலையில் தண்டனை அனுபவித்தார். தாமரை, முரசொலி, மன்றம், காஞ்சி, காதல்சுரதா, தீபம் ஆகிய பத்திரிகைகள் நா.காமராசனின் கவிதைகளை வெளியிட்டன. தனது இலக்கியத் தாய்வீடு என்று தாமரை இதழை அவர் குறிப்பிடுவதுண்டு. தனது திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுத புதுப்புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதிலும் அதற்கான தேடலிலும் தீவிரமாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கண்ணதாசனோடு எம்.ஜி.ஆருக்கு அரசியல் ரீதியான பிரிவு தோன்றியிருந்த சமயம் அது. அவரை நாடமுடியாத நிலை எனவே, தவிர்க்கவே முடியாமல் வாலி போன்றவர்கள் எம்.ஜி.ஆர் படங்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தனர். வாலியின் பாடல்கள் கண்ணதாசன் பாடல்களோடு ஒப்பிடுகையில் ஒருபடி தாழ்ந்தே இருந்தன. மேலும் கவிஞர் வாலியும் அதிக எண்ணிக்கையிலான படங்களுக்கு நிறைய பாடல்கள் எழுதி வந்தார். எம்.ஜி.ஆருக்குத் தமிழ் அறிந்த புலவர்கள் மீது அளப்பறிய மதிப்பும் பற்றும் எப்போதும் இருந்து வந்தது. அந்தப் பற்றே தமிழறிஞரான கருணாநிதியோடு அவரை நெருக்கமான தோழமைக்கு இட்டுச் சென்றது. அவர் எப்போதும் தமிழறிஞர்களையும் புலவர்களையும் மதிப்போடு போற்றியும் ஆதரித்தும் வந்திருக்கிறார் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. எம்.ஜி.ஆர் தம் படங்களுக்காகப் புதிய சிந்தனையாளர்களைத் தேடியதோடு அவரகளுக்குத் தம் படங்களில் இயன்ற போதெல்லாம் உரிய வாய்ப்பைத் தந்து அவர்களை உயர்த்திவிட்டிருக்கிறார். தம் கடைசிக் காலத்தில் கூட திரைப்படக் கல்லூரிக்கு பரிந்துரைக் கடிதம் ஒன்றைத் தந்து இயக்குநர் பாடப்பிரிவில் மாணவன் ஒருவனைச் சேர்க்க உதவுகிறார் எம்.ஜி.ஆர். அப்படிச் சேர்ந்த மாணவர்தான் பிற்காலத்தில் திரைப்படக்கல்லூரி மாணவர்கள் வர்த்தகப் படங்களை வெற்றிகரமாக இயக்கமுடியும் என்பதை நிறுவிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். முதலமைச்சராக இருந்த போதும் கூட யார் அவரைச் சந்திக்கச் சென்றாலும் அவரே முன்வந்து கேட்கும் கேள்விகளில் ஒன்று சொல்லுங்க நான் உங்களுக்கு என்ன செஞ்சு தரணும்? என்பதே. பஞ்சு அருணாசலம், புலமைப்பித்தன், முத்துலிங்கம் ஆகியோரும் எம்.ஜி.ஆரின் அறிமுகங்களே. அந்த வரிசையில் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் நா.காமராசன். கடந்த நூற்றாண்டின் அறுபதுகளின் இறுதியில் அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதுவே தமிழ் இலக்கியத்தில் புதுக்கவிதை வடிவம் துளிர்விடத் தொடங்கியிருந்த நேரம். எழுத்து இதழில் கவிதை எழுதியவர்கள் புதுக்கவிதையின் உள்ளடக்கத்தோடு தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் நா.காமராசன் மரபுக் கவிதையைப் போன்றே சந்தச் சொற்றொடர்களில் புதுப்பதச்சேர்க்கைகளைத் தம் கவிதைகளில் பயன்படுத்தினார். அந்த உருவம் அப்போதைய காலக்கட்டத்தில் மிகவும் புதிதாக இருந்திருக்க வேண்டும். அப்போதைய காலத்திற்கேற்ற புதுமைகளை அவர் செய்ததால் நா.காமராசனின் கவிதைகள் பெரும் புகழைப் பெற்றன. ஒரு வகையில் அவர் வானம்பாடிகளுக்கே முன்மாதிரியாக இருந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. இரவெரிக்கும் பரிதியை-ஏழை விறகெரிக்க வீசுவேன் ஒளிகள் பேசும் மொழியிலே-நான் இருள்களோடு பேசுவேன் என்றெல்லாம் அமைகிறது அவரது கவிதை. இந்தப் போக்கைக் கவிஞர் கண்ணதாசன் போன்ற மரபை மட்டுமே எழுதிய கவிஞர்களும் முன்வந்து வாழ்த்தியிருக்கிறார்கள். அதை நா.காமராசனின் "சூரியகாந்தி" கவிதைத் தொகுப்புக்குக் கண்ணதாசன் வழங்கிய முன்னுரையால் உணரமுடிகிறது. "ஒரு நூலுக்கு முன்னுரை என்பது யானைக்குத தந்தத்தைப்போல" என்பது நா.காமராசரின் கருத்து பிற்காலத்தில் வார இதழ்களில் வெளியாகி சாதாரணமான வாக்கிய அமைப்புகளாகிப்போன போக்குகளுக்கும் அவரிடமே தோற்றுவாய்களைக் காணமுடிகிறது. இந்தியாவிற்கு/சுதந்திரம் வந்தபோது/நான் மட்டும் அடிமையானேன்/ஆம்! அன்றுதான் நான்/ஆரம்பப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டேன். திருமணத்திற்குப் பிறகு/இரண்டு பேர் ஒருவராய் மாறுகிறார்கள்/அதற்குப் பிறகு /அவர்கள் இரண்டுபேரும் சண்டைபோடுகிறார்கள்/ஏன்?! அந்த ஒருவர்/யார் என்று தீர்மானம் செய்வதற்காக-என்பது போன்ற வரிகளை "சித்திரமின்னல்கள்" எனப் பெயரிட்டு தனது தொகுப்பில் வெளியிட்டிருக்கிறார். உருவகக் கவிதை வடிவத்தை அவரே முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். கறுப்பு மலர்கள் என்னும் அவருடைய சொல்லாட்சி நீக்ரோக்களைப் பற்றிய உருக்கமாக அமைந்தது. நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம்/ஆடை வாங்குவதற்காக... என்பது விலைமகளிரைப் பற்றிய அவருடைய புகழ்பெற்ற வரிகள். நடைப் பிணங்கள் என்ற தலைப்பில் கறுப்புமலர்கள் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் மலைவாழ் பளியர் குலத்தின் சோக வாழ்க்கைப் பாடல் "நடையிலொரு தவவேகம்/நயனத்தில் புத்த நிழல்/குடிசைகளில் துறவுநெறி/நாங்கள் காட்டு மூலிகைபோல்/கண்டெடுக்க முடியாமல்/ஓட்டைக் குடிசைகளில்/உயிர்வாழும் நடைப்பிணங்கள்"என்று முடிகிறது. ஒருவேளை தமிழ்ப் புதுக்கவிதையில் எழுதப்பட்ட விளிம்பு நிலை மக்களைப் பற்றிய முதல் வரிகளாக நா.காமராசனின் இவ்வரிகளே இருக்கக்கூடும். நா.காமராசனைக் கவிதையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் உவமைக் கவிஞர் சுரதா. சுரதாவைப் போலவோ நா.காமராசனிடமும் புதிய உவமைகளைக் காணமுடிகிறது. உவமை தரும் இன்பம் என்பது யாப்பு நமக்கு நல்கிய அரிய செல்வம். மொழி தள்ளாடி நடந்த ஆதிகாலத்தில் ஒவ்வொன்றும் உவமையின் வழியகாத்தான் எடுத்துச் சொல்லப்பட்டுக் கருத்துப் பரிவர்த்தனை நடந்திருக்க வேண்டும். உவமை எதிர்பாராத திசையிலிருந்து மின்னலைப் போல தோன்றும்போது அது உணர்த்த விரும்பும் பொருள் இடியைப் போல இறங்குகிறது. நா.காமராசன் உவமைகள் உருவாக்குவதில் அதிக ஈடுபாடு காட்டியவர். கரிகால் வளவனின் கால்போல் கறுத்த மேகம்-போர்க்களத்தில் ஓடுகின்ற தேர்கள்போலப் புதுவெள்ளம்-விதைநெல்லின் மூட்டையைப்போல் தூக்கிக் கொண்டு விரித்திருந்த மெத்தைக்குக் கொண்டு போனான். நிழல்பந்தம் போட்டதுபோல் நின்றிருக்கும் புளியந்தோப்பு -நினைவுகள் திரும்பிவர நீர்வீழ்ச்சி போலழுதாள்-வைகைநதித் தண்ணீர்போல் அடக்கம்-என அவரின் உவமைக் கணக்குகள் ஏராளம். ஒரே சொல்லை இருபொருள்படும்படி படிகையாள்வதைச் சிலேடை என்பார்கள். அப்படிப்பட்ட சிலேடை வாக்கியங்களை அமைப்பதில் நா.காமராசன் கெட்டிக்காரர். வஞ்சிக்கோமான் விழிகள் சந்திக்கின்ற வஞ்சிக்கோ மான்விழிகள் தன்நிழலைத் தண்ணீரில் விழவைக்காமல் தண்நிழலை வளர்க்கின்ற மண்டபம்/நிலையான தண்மையுள்ள எழிலே வாழ்வின் நிலையாமைத் தன்மையுள்ள நிழலே/ வஞ்சியாளும் சேரமன்னர் வஞ்சியாது இவ்வஞ்சியாளைச் சேர்ந்த மன்னர்/வெஞ்சமரில் வேல்மன்னர் வாள்மன்னர் என் வேல்விழியில் வாழ்மன்னர்/கொஞ்சுகின்ற மலரிதழ்மேல் அரும்பு மீசை கொண்ட மன்னர் கொடையருளில் கொண்டல் மன்னர். -இவையெல்லாம் எல்லோரையும் ஈர்த்து நின்றவை. பிற்காலத்தில் சிலேடைப் பயன்பாடுகள் வழக்கொழிந்துவிட்டாலும் அது தரும் சுவைக்கென்று ஒரு தனி மதிப்பு என்றும் இருக்கவே செய்யும். சிலேடைகள் தற்காலக் கவிதைகளில் காணப்படாமைக்கு முக்கியக் காரணமாக நான் கருதுவது அது புலமையைக் கொண்டு விளையாடும் ஆட்டமாக இருக்கிறது என்பதை்தான். தற்காலக் கவிஞர்களுக்கு மொழிப்புலமையோடு எந்த ஒட்டுறவும் இல்லை. புழக்கத்தில் உள்ள சில சொற்களைக் கொண்டு இங்கே பலருக்கும் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. மிகவும் குறைபட்டுக் கூறுவீர்களேயானால் நவீனம் என்ற குத்தை விட்டு உங்களைப் படுக்கப்போட்டுவிடுவார்கள். தொட்டில் குழந்தைக்கு ஒரு தாலாட்டுப்பாடல் வடிவில் அவர் எழுதிய கவிதை ஒன்று. தொட்டில் துணி முரடோ இல்லை அவன் தோளெலும்பும் புதானோ ஆரோ எவரோ நீ அடிவயிற்றுப் புதையலோ உன் உதையெல்லாம் ஒத்தடமோ ‍உமிழ்நீர் இளநீரோ புதுக்கவிதையில் நாட்டுப்புறப் பாடல் அமைப்பில் முதலில் எழுதிப் பார்த்தவரும் அவரே. அழகு என்ற சொல்லைத் திரும்பப் பயன்படுத்தி அவர் பட்டியல் ஒன்றைப் போட்டு எழுதிய வரிகள் இவை. இந்தக் கவிதை பிற்பாடு எப்படிப்பட்ட திரைப்பாடலானது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை! மங்கைக்குக் கண்ணழகு! துள்ளுகின்ற மானுக்குப் பேரழகு வெள்ளைப்புள்ளி! செங்கதிர்க்குப் பேரழகு ஒளிநெருப்பு! சேய்மீன்கள் தானழகு பொய்கைத் தாய்க்கு! சங்கிற்கு நிறமழகு! தேய்ந்து போகும் சந்தனந்தான் மார்பிற்கு அழகு! நல்ல தங்க நகை கழுத்திற்கு அழகு! என்றன் தம்பிக்கோ தனியழகு குழந்தைப் பேச்சு! நீதிக்குத்லைவணங்கு என்னும் திரைப்படம் வாயிலாக நா.காமராசன் திரைப்பாடல் எழுத வந்தார். அவருடைய நூற்றுக்கணக்கான பாடல்களில் வெற்றிபெற்ற பாடல்கள் பல. கனவுகளே ஆயிரம் கனவுகளே, போய்வா நதியலையே, இரவுப்பாடகன் ஒருவன் வந்தான், விளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான், ஓ மானே மானே உன்னைத்தானே, மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ, ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே-ஆகிய பாடல்கள் அனைவரையும் கவர்ந்தவை. மிதமான உருவகமும் தகுதியழகோடு விளங்கும் பொருத்தமான வார்த்தைகளும் நா.காமராசன் பாடல்களின் சிறப்பு. கவிஞனுக்கே உரிய கர்வத்தோடு, தம்மை முன்னிறுத்தி முந்திக்கொள்ளாமல் தன் பாடல்களின் ஜீவமொழியைத் திரைத்துறைக்கு வழங்கிவிட்டு ஓரமாக நின்று கொண்டு தான் திரைத்துறைக்குப் பாடல் எழுதிய அனுபவங்களைப் பிற்காலத்தில் தன் கவிதையொன்றில் பதிவு செய்கையில் "பூவெடுத்து மாலை கட்டிக்கொண்டிருந்தேன், இடையில் புல்லறுக்கப் போய்விட்டேன்" என்று கசப்போடு கூறுகிறார். "பூபாள ராகம் புயலோடு போனது போல் ஆகாய கங்கை பாதாளப் படுகுழியில் விழுந்ததுபோல் என் சுயத்தைத் தொலைத்துவிட்டேன்" என்று மனம் வெதும்பிச் சொன்னார். திரையுலகம் அவருக்கு அநீதி இழைத்திருக்குமெனில் அதற்காக அது வெட்கப்பட வேண்டும். உரிய கன்னிமையோடும் தூய பேரழகோடும் வளர்ந்த பெண்களைத் தன்னில் இழுத்து அழுக்காக்கிச் சக்கையாக்கித் துப்பிவிடும் அந்த மாய உலகம் நா.காமராசனுக்கும் அதையே செய்ததில் வியப்பொன்றுமில்லை. இப்படி எத்தனையோ வெள்ளை உள்ளங்களை வாட்டித் துன்புறுத்திப் பாவக்கடலாக மாறி நிற்கும் திரைஉலகம் தனக்கான தண்டனையை உரிய மீட்பர் யாருமேயில்லாமல் "எட்டணாவிற்கும் நம்பகமில்லாத ஒரு தொழிலாக மாறி தற்காலத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை". சந்திப்பிழை போன்ற சந்திப்பிழை நாங்கள் காலத்தின் பேரேட்டைக் கடவுள் திருத்தட்டும்! காலமழைத் தூறலிலே களையாய்ப் பிறப்பெடுத்தோம் தாய்ப்பாலின் சரித்திரத்தில் சதுராடும் புதிரானோம்! விதைவளர்த்த முள்ளானோம் விளக்கின் இருளானோம் சதைவளர்க்கும் பிணம் நாங்கள் சாவின் சிரிப்புகள்! தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ தனிமலடி தாழம்பூ வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள் காகிதப்பூக்கள்! திருநங்கைகள் குறித்து இழிவான பார்வை மட்டுமே இன்றும் இருக்கும் சூழலில் 70களில் கவியரசு நா.காமராசன் எழுதிய கவிதை இது. புதுக்கவிதையைப் பரவலாக்கிய பெருமை இவருக்கு உண்டு "கறுப்பு மலர்கள்" "சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்" "கிறுக்கன்" "சுதந்திரதினத்தில் ஒரு கைதியின் டைரி" "தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும் ஆப்பிள் கனவு" என அவருடைய கவிதைத் தொகுதிகளின் தலைப்புகளே அந்த நாளில் பரபரப்பாகப் பேசப்பட்டன. மரபுக்கவிதைகள் எழுதி வந்த நா.காமராசன், புதுக்கவிதையின் பக்கம் தன்கவனத்தைத் திருப்பி, அதில் புதுமைகளைப் புகுத்தினார். மொழிநடை பாடுபொருள், தலைப்பு அனைத்திலும் அந்த புதுமை மிளிர்ந்தது. கிராமியச் சந்தங்களுடன் படிமக்கவிதைகளைப் படைப்பது அவரது பாணியாக இருந்தது. 1942இல் தேனி மாவட்டம் போ.மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, லெட்சுமி அம்பாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். உ.அம்மாபட்டி தா.பொம்மையன் மகள் லோகமணியைத் துணைவியாக ஏற்றுக் கொண்டவர். இவருக்கு தைப்பாவை என்ற மகளும், திலீபன் என்ற மகனும் உள்ளனர். தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்த நா.காமராசன் பின்னர் எம்.ஜி.ஆரால், "பல்லாண்டு வாழ்க" படத்தில் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டு பணிபுரிந்த நா.காமராசன் அதிலிருந்து விலகி, முழுநேர எழுத்தாளரானார். எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கதர் வாரியத் துணைத்தலைவராக இருந்தார். அ.தி.மு.க, தி.மு.க, ஆர்.எஸ்.எஸ் எனப் பல முகாம்கள் மாறினாலும், மாறாத தமிழ்ப் பற்று இவருடைய அடையாளமாக இருந்தது. அதனால்தான் கலைஞரிடமும், எம்.ஜி.ஆரிடமும், ஜெயலலிதாவிடமும் அவரால் பதவிகளும் விருதுகளும் பெற முடிந்தது. 1991 இல் தமிழ்நாடு இயல் இசை நாடகம் மன்றத்தின் உறுப்பினராக முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். நா.காமராசன் மே 24, 2017 அன்று உடல் நலக்குறைவால் தனது 74ஆம் அகவையில் சென்னையில் காலமானார். அந்த வேப்பமரம் "பெரியார் காவியம்" உள்ளிட்ட இவருடைய கவிதைத் தொகுப்புகள் சில, தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை முதலாம் ஆண்டு தமிழ்ப்பாடமாக உள்ளன. கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட திருநங்கை பற்றிய இவரது சந்திப்பிழை கவிதை "கறுப்பு மலர்கள்" தொகுப்பில் இடம்பெற்றது. இலக்கியம், திரைப்படம், அரசியல் ஆகியவற்றில் கால்பதித்து முத்திரை பதித்தவர். சிறந்த பேச்சாளர். கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது பெற்றவர். கவியரங்கங்களில் இவருடைய கவிதை உச்சரிப்புக்கு ஒரு தனி இரசிக வட்டம் உண்டு. நா.காமராசனின் நறுக்குத் தெறிக்கும் உச்சரிப்புக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. போய்வா நதி அலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா என்ற பாடல் எம்.ஜி.ஆருக்காக எழுதியது. செழுமையான இலக்கிய வரிகளைத் தமிழ்த் திரையிசைக்கு வழங்கியவர் நா.காமராசன் என்பது குறிப்பிடத்தக்கது.             [feather-pen-clipart-free-vector-ink-pen-clip-art_105837_Ink_Pen_clip_art_hight.png]உமா மகேசுவரி, மதுரை நீயானாய்...   விழியோரம் கதை பேசி விண்மீனாய் இழுக்கின்றாய் கவியெழுதத் தூண்டிடுதே கண்ணே உன் கன்னக் குழி...!   முழுமதியாய் வந்தேதான் முகமலர்ந்து சிரிக்கின்றாய் வரிவரியாய் நான் எழுத வண்ணமயமாய்ச் சிவக்கின்றாய்...!   கார்குழலின் கருவண்ணம் கட்டித்தான் போடுதடி கண்ணே உன் வளையோசை காதோரம் இசை பாடுதடி...!   தூண்டில்தான் போடுகின்றாய் துடிக்கின்றேன் மீனாக கையில்தான் தொட்டெடுக்க கரைந்தேதான் போகின்றேன்...!   எண்ணமெல்லாம் நீயானாய் என்னழகு ஓவியமே என்னுயிரைப் பறிக்கின்றாய் எந்தனுயிர்க் காவியமே...!   துள்ளுகின்ற மனதினிலே துடிப்பாக ஆனவளே இதயம் தொடும் பூவாக மனமெங்கும் நிறைந்தவளே...! என் மனமும் நாடுதடி உனைக் கொஞ்சிடவோ குறிஞ்சியே கொத்தும் கிளியாய் நான்மாறிடவோ...!   [crown.jpg]விண்ணோக்கி வருகின்றேன் விழியழகி உனைச் சேர வண்ணமலரே வாசப்பூவே வானிலிருந்து வந்த தேவதையே...!!!   ஒன்பதாவது ஆண்டில் வளரி   இம்மாத வளரி இதழ் ஒன்பதாவது ஆண்டின் முதல் இதழ். 2009இல் தனது கவிதைப் பயணத்தை ஆரம்பித்த வளரி, தொடர்ந்து கொண்டிருக்கிறது கவிதைக்கான தனது பயணத்தை. உங்களின் துணையின்றி வளரியின் பயணம் இல்லை.       இணைந்திருங்கள் வளரியுடன்,       இன்னும் இன்னும்       நல்ல கவிதை பேசுவோம்!                             [malai.jpg][feather-pen-clipart-free-vector-ink-pen-clip-art_105837_Ink_Pen_clip_art_hight.png]சுபஸ்ரீ முரளிதரன், சென்னை மழையாளின் காதலர்   நீயென் காதலன் என்னை நெடுநேரம் பிரிந்திருக்க உன்னால் இயலாது ஆனால் தார்மீக அடிப்படையில் மழையாளின் காதலர்கள் அவளைக்காணவும் அவளோடு மகிழ்ந்திருக்கவும் காத்திருக்கின்றனர் சற்றே அவர்கள் இன்புறட்டும் நானறிவேன் அவர்களின் களியாட்டங்களுக்குப் பின் உனக்கான பணிச்சுமை அதிகமே! மாசுகள் அனைத்தையும் நீக்குதல் சிரமமானதே நீ கடமை தவறாதவன் பொறுப்பானவன் பாரபட்சமற்றவன் என் ஆசை ஆதவனே! உன் காதலியாள் நானுனக்கு அனுமதியளிக்கிறேன். சற்றே ஓய்வு கொள். மழைமகள் வந்து செல்லட்டும். அஞ்சல் மூலம் வளரி பெற... [India_Post_Logo.jpg] ஆண்டுக்கட்டணம் ரூ.150       கொழும்பில் மேமன்கவி மணிவிழா தமிழ் சிங்கள புரிந்துணர்வின் வெளிப்பாடாக அமைந்த நிகழ்வு! [maman1.jpg] தான், என்ன செய்கிறோம் என்பதைத் தான் சார்ந்துள்ள சமூகத்திற்கும் தெரிவிக்க வேண்டும் அவர்களும் அதுகுறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்கிற அடிப்படை உணர்வுடன் எழுதியும் செயல்பட்டும் வருபவர் மேமன் கவி. வணிகச் சமூகமான மேமன் சமூகம் இந்தியாவின் குசராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டது. தன் குடும்பமே வணிகத்தில் மூழ்கித் திளைத்திருந்த போது, தமிழையும் அதில் பரவிக்கிடக்கும் இலக்கியச் சுவைகளையும் தனக்குள் வரித்துக் கொண்டிருந்தார் மேமன்கவி. அந்த ஈடுபாடு தான் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் அரவணைப்பையும் வழிகாட்டுதலையும் அவருக்கு ஒருங்கே பெற்றுத்தந்தது. அதன்பின்... அப்துல்ரசாக் மேமன்கவி ஆனார். மே ஆறாம் நாள் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் மேமன்கவியின் மணிவிழா நிகழ்வுகள் தொடங்கின. தமிழ்-சிங்களம்-ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது. பேராசிரியர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற மணிவிழாவில், சிங்கள-தமிழ் எழுத்தாளர் ஒன்றியச் செயலாளர் கமல்பெரேரா, ஈழத்தின் மூத்த இலக்கிய விமரிசகர் கே.எஸ்.சிவகுமாரன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பத்மா சோமசுந்தரன் மற்றும் வளரி ஆசிரியர் அருணாசுந்தரராசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.                                               கமல் பெரேரா தமிழர் சிங்களவர் ஒற்றுமைக்காக இலக்கியப் பாலம் அமைத்து நம்மை[kamal.jpg] அழைத்துச் செல்லும் பணியினைப் பல்வேறு சிரமங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் செய்து வருகிறார் மேமன்கவி. வியாபாரச் சமூகத்தில் பிறந்த மேமன்கவி இலக்கியத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு செயல்படுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. [siva.jpg]கே.எஸ்.சிவகுமாரன் இந்தியாவின் மேமன் சமூகத்தின் வழிவந்தவர் தமிழ்மொழியில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு ஈழத்தின் தமிழ் இலக்கியத்திற்குத் தொடர்ந்து தன் பங்களிப்பைத் தந்து கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. புதுக்கவிதைத் துறையில் அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் வியக்கத்தக்கவை. பத்மாசோமகாந்தன் படபடப்பும் துடிப்புமிக்க இளைஞராக இருந்த காலம் தொட்டு நான் மேமன்கவியை அறிவேன். அவருக்கு அறுபது வயது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வளர்ச்சியில், செயல்பாட்டில் மேமன்கவிக்கும் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு என்பதை நான் குறிப்பாகச் சொல்லிக் கொள்கிறேன். அருணாசுந்தரராசன் [aruna.jpg]எங்கள் இருவருக்கும் 37ஆண்டுகால நெருங்கிய கொள்கை வழிப்பட்ட ஆழமான நட்பு உண்டு. அவரது இலக்கியப் பணிக்கான அங்கீகாரமாகவே இந்த மணிவிழா நிகழ்வை நான் பார்க்கிறேன். இம்மாத வளரி அட்டையில் மேமன்கவி படத்தை வெளியிட்டிருக்கிறோம். அது என் நண்பருக்கு மணிவிழா என்பதற்காக அல்ல. அவர் இலக்கியம் மூலம் கவிதை மூலம் தன்னலம் கருதாது ஆற்றிக்கொண்டிருக்கும் சீரிய முயற்சிகளுக்காகவும் பணிகளுக்காகவும் வளரி அட்டையில் அவர் படத்தை இடம் பெறச் செய்துள்ளோம். தமிழ்-சிங்கள மக்களிடம் ஒரு புரிந்துணர்வை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் மொழி ரீதியாக ஏற்பட்டுள்ள இன வேறுபாடுகளும் அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை போக்குவதற்காகவும் மேமன்கவி ஆற்றிவரும் செயல்களை நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள். இதை நாம் அனைவரும் ஒருமனதாக ஆதரிக்கவும் பின்பற்றவும் வேண்டும். [tamil.jpg]சிங்கள எழுத்தாளரும், மொழிப்பெயர்ப்பாளருமாகிய ஹேமசந்திர பதிரன விழாவில் வரவேற்புரை நிகழ்த்தியதோடு நிகழ்ச்சித் தொகுப்பையும் மேற்கொண்டார். மணிவிழாவைச் சிறப்பிக்கும் வகையில் "மனித நேய நேசன்" என்ற மணிவிழா மலரும் சிங்களப் பதிப்பகமான கொடேயே வெளியிட்ட மேமன்கவியின் "ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து" என்னும் கவிதைத் தொகுப்பும் விழாவில் வெளியிடப்பட்டன. நூல்களை என்.எஸ்.வாசு வெளியிட முதற் பிரதிகளை புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர் இலக்கியப் புரவலர்களாலும் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டார். டென்மார்க் வாழ் ஈழக்கவிஞர் நக்கீரன் மகள் சார்பில் மணிவிழா நாயகர் மேமன்கவிக்கு வாழ்த்துக் கேடயம் ஒன்றை வழங்கினேன். வளரி சார்பிலும் ஒன்று வழங்கப்பட்டது. நன்றியுரையையும் ஏற்புரையையும் மணிவிழா நாயகர் மேமன்கவி நிகழ்த்தினார். [nak.jpg]       எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/