[]       []         வரலாற்று ப் பக்கங்களில் மட்டுமே   மணக்கும்  கங்கைகொண்டசோழபுரம்     [மாமன்னன் இராஜேந்திரசோழனின்  மகத்தான 10 சாதனைகளை  அடிப்படையாக கொண்ட வரலாற்று நூல்]    மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com    அ.இராஜராஜசோழன்    மற்றும்  இராஜராஜசோழன் அறக்கட்டளை மையம்-பொன்பரப்பி குடிக்காடு   rajarajasozhan151992 @gmail.com        அரியலூர் (விஷ்ணுபுரம்)    Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs  4.0 International.      கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்-இது என்னுடைய சொந்தபடைப்பு .இக்கருத்துக்களை யார் வேண்டுமானாலும் பிறருடன் பகிர்ந்துகொள்ளலாம்.ஆனால் ஆசிரியர் பெயரைக் குறிப்பிட வேண்டும்.              []     அட்டை வடிவமைப்பு :   இராஜராஜசோழன் அச்சகம்;  இராஜராஜசோழன் அறக்கட்டளை மையம்  பொன்பரப்பி குடிக்காடு                                 பொருளடக்கம் முன்னுரை 5  அரியலூர் மாவட்ட வரலாற்றுக்காலச்சிறப்பு : 8  அரியலூர் பெயர்க்காரணம் : 8  கங்கைகொண்ட சோழபுரம் பெயர்க்காரணம் : 8  அரசியலில் “சோழ நாட்டு பெண் உளவாளி”களின் பங்கு : 9  சோழப் பேரரசு நாவாய்களின் கம்பீரம் : 10  சோழர்கள் கடலின் தோழர்கள் : 11  இராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு: 12  இராஜேந்திரசோழனின் தாய்: 13  இராஜேந்திரசோழன் இளமைப்பருவம்: 14  இராஜேந்திரசோழனின் வடநாட்டு போர் வெற்றிகள்: 15  மாமன்னன் இராஜேந்திரசோழன் செய்த பத்து மகத்தான சாதனைகள்: 16  கங்கைகொண்ட சோழபுரத்தின் புகழ்ப்பாடும் தமிழிலக்கியங்கள்: 32  கங்கைகொண்ட சோழபுரத்தின் தனிச்சிறப்புகள்: 33   சோழர்கள் கட்டிடக்கலையில் நிகழ்த்திய அதிசயங்கள் : 35  கங்கைகொண்டசோழபுரத்தின் சிம்மகேணி 40  சோழர்களால் மட்டும் எப்படி கடல்கடந்து பலநாடுகளை வெற்றிகொள்ள முடிந்தது….? 45      முன்னுரை பிற்கால சோழர்கள்:   தமிழகத்தை பண்டைய நாள் முதலே சேர,சோழ,பாண்டிய என்னும் மூவேந்தர்களும் ஆண்டு வந்தார்கள்.எனினும் , கி.பி.3ம் நூற்றாண்டிற்கு முன்பிலிருந்தே தமிழகத்தை முதல் நிலையில் ஆண்டு வந்தவர்கள் சூரிய வம்சத்தோன்றாலான சோழர்களேயாவர்.    மாமன்னன் இராஜேந்திரனின் இடைவிடாத மனவலிமையாலும் அவனது படைபலத்தாலும்   கங்கைகொண்டான் ,கடாரம் கொண்டான் , சுமத்ராவை வென்றான்……!  இலங்கை ,மலேசியா, வியட்நாம், கம்போடியா அந்தமான் நிக்கோபார் தீவு ஆகிய   கடல் கடந்த நாடுகளில் நீந்தி சீனாவின் கிழக்கு  எல்லையையும் தொட்டான் ……!!  அதனால் உலகளாவிய புகழையும் பெற்றான் ……….!!                    என்பது உண்மை.ஆனாலும்,அவனுக்காக     நாம் செய்தது என்ன …?சோழமண்டலம் என்ற அழகிய தமிழ்பெயரை ‘கொரமண்டல் ’ என்று அகோரப்படுத்தியிருப்பது மட்டும்தான்….!அசோகர் ஆண்டார் , பாபர் ஆண்டார்,அக்பர் ஆண்டார் ,சத்ரபதி சிவாஜி ஆண்டார் என்று வடநாட்டரசர்களை  தெரிந்து வைத்திருக்கின்ற (தமிழர்கள்)நம்மவர்கள் பலகோடி…..! ஆனால் ,மேற்கூறியபடி வடநாட்டு அரசர்கள் ஆண்டதை விட இரண்டுமடங்கு பல தேசங்களை ஒரே மன்னாக இருந்து ஆண்ட நம் தென்னிந்திய மாமன்னர்கள் இராஜராஜசோழனைபற்றியும் அவரது ஒரேமகன் இராஜேந்திரசோழனைப்பற்றியும்  டெல்லியிலும் ,ஒரிஸாவிலும் ,மராட்டியத்திலும் உள்ள மக்களில் எத்தனைபேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள்….?என்பது ஒரு மாபெரும்வரலாற்று வினோதமாகும்.அந்த அளவிற்கு பெரும் புகழ்கொண்ட நம் சோழ மன்னர்கள் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.உலகளவில் மாபெரும்நிலபரப்பை ஆண்ட ‘‘பேரரசு சோழர்களின் வரலாறு’’ மத்திய அரசின் பாடத்திட்டங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.இது மட்டுமல்ல இராஜேந்திரசோழனின் கடற்படை வலிமையை கொண்டாடும் விதமாக முதலில் ‘‘இராஜேந்திரா’’ என்னும் பெயர் வழங்கியிருந்தது.அக்கப்பல் சிதிலமைந்ததால் அது புதுபிக்கும் பணி தொடரப்பட்டது.அதன் பின்னர் அக்கப்பலின் பெயர் ‘‘சாணக்யா’’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.  அது மட்டுமல்ல……, மாமன்னன் உலகப்புகழ்கொண்டான் என்றழைக்கப்பட்ட இராஜராஜசோழனின் பெரியகோவிலை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அக்கோவிலுக்கு சென்றிருந்தவர்கள் ஒருசிலர் கோவிலின் ஓரத்திலேயே மாமன்னன் இராஜராஜசோழனின் பூங்காவை (அதாவது மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் “சோழன் சிலை பஸ் நிறுத்தம்”) கண்டிருக்கலாம்.  உலகின் முதல் கப்பல் படையை நிறுவி பல நாடுகளை வென்று தற்போதுள்ள மத்திய அரசைவிட பல மடங்கு திறமையான மத்திய அரசை நிலைநாட்டி சோழப்பேரரசை அதன் செல்வசெழிப்பின் உச்சநிலைக்கு கொண்டு சென்ற மாமன்னன் இராஜராஜசோழனுக்கு….! பெரியகோவிலின் உள்ளே நிற்க ஒரு சாண் கூட  இடமில்லையாம் ….!  இன்றைய மத்திய அரசு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியஅரசை உருவாக்கியவனுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா…………….?பற்பல போராட்டங்கள் செய்தும் மாமன்னன் இராஜராஜசோழனின் சிலையை கோவிலினுள் நிறுவுவதற்கான  அனுமதி மத்திய அரசால் மறுக்கப்பட்டுள்ளது.மீறியும் கொண்டு வந்தால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் சலுகைகள் இரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது. அதனால் தான் மத்திய அரசை உருவாக்கிய மாமன்னனுக்கு இந்த அவல நிலை…..! யார் கண்ணிலும் படாதவாறு ஒரு ஒதுக்குபுறமாக நிறுத்தப்பட்டிருக்கிறான் தமிழ வளர்த்த தஞ்சை இராஜராஜசோழன்.  என்ன இராஜராஜசோழனாவது தமிழ் வளர்த்ததாவது……!என்று ஒருசிலருக்கு எண்ணம் தோன்றலாம்..ஆம் ,இராஜராஜசோழன் முத்தமிழையும் தன் உயிர் தமிழ் உலகை விட்டு பிரியும் வரை வளர்த்தான்.  .முதன்முதலாக கல்வெட்டு பொறிக்கும் பழக்கத்தை நடைமுறைபடுத்தியவனும் இவனே..!  தன் தாய்மொழி - தமிழுக்காக கோவிலமைத்த சோழப் பேரரசனும் இவனே..!    முதன்முதலாக தமிழ் மொழியிலுள்ள “வட்டெழுத்துக்களை” நடைமுறையில் அறவே நீக்கி தமிழை புதுபித்தவன் என்றே கூறலாம்…..!இன்னும் இவன் செய்த தமிழ்தொண்டுகள் எண்ணிலடங்காதவைகளாகும்…..! எப்படியாயினும் சோழமன்னர்களின் புகழ் மறைக்கப்பட்டு வந்துள்ளது.     இதற்கு காரணம் …..நமக்கே தெரியும் ……! ஆக மொத்தம் நம் தமிழர்களின் புகழ் முற்றிலும் மறைக்கப்படுகிறது.இனிமேலாவது நாம் நம் நாட்டிலுள்ள மன்னர்களின் வீரதீர வெற்றிகளை படித்தறிவோமாக ,…………..! என்று கூறி இந்நூலை உலகத்தமிழன்பர்களுக்கும், தமிழ்மொழி காதலர்களுக்கும்  சமர்பிக்கின்றேன்.     என்றும் சோழதேசப்பிரியனாக ..,  அ.இராஜராஜசோழன்.  பொன்பரப்பிகுடிக்காடு    “வரலாற்றுப் பக்கங்களில் மட்டுமே மணக்கும் கங்கைகொண்டசோழபுரம்”  இந்நூலைப் பற்றி……………………,   இருட்டடிப்புசெய்யப்படும் சோழப்பேரரசர்களின் பெரும்புகழ்  மாமன்னன் இராஜேந்திரசோழன் கங்கை ,கடாரம், சுமத்ரா, இலங்கை,ஜாவா ,மலேசியா, வியட்நாம், கம்போடியா அந்தமான் நிக்கோபார் தீவு ஆகிய கடல் கடந்த நாடுகளில் போரிட்டு வெற்றி வாகை சூடினான்..!  மிக மிக வேதனையாக இருக்கின்றது…..,   இத்தனை நாடுகளை வென்ற இராஜேந்திரசோழன் கட்டிய ஆலயம் இன்றும் இருட்டிலே கிடக்கின்றது.இத்தனை நாடுகளையும் வென்ற இராஜேந்திரசோழனுக்காகவும் ,அவன் கட்டிய நினைவு சின்னத்திற்காகவும்   மத்திய மற்றும் ,மாநில அரசுகளும் செய்தது என்ன….? வேறொன்றுமில்லை….சோழர்களின் பெரும்புகழை இருட்டடிப்புச்செய்தது தான்…...!     இந்த ஆலயம் ஒளி என்னும்  வெள்ளத்திலே காணவேண்டிய இடம்……..!  தமிழர்களின் புகழ் என்னும் வெளிச்சத்தை உலகறியச்செய்தவன் கட்டிய ஆலயம் இது….!!        இந்திய அரசாங்கமே முன்னின்று விழா எடுத்து  சோழர்களின் புகழையும்,பெருமைகளையும் இவ்வுலகிற்கு சொல்ல வேண்டிய இந்நேரத்திலே…………..இராஜேந்திரசோழனின் புகழை இருட்டுக்குள்ளே தள்ளப்பார்க்கிறார்கள்…இவ்வளவு சிறப்பும் பெற்ற ‘‘இராஜேந்திரசோழனை இருட்டடிப்பு செய்கிறார்கள் என்றால்….?’’ எனக்கு என்ன வேதனை எனில்……? மாமன்னன் இராஜராஜசோழனின் புகழையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை………..!    ‘’ஒளி வெள்ளத்தில் மின்னிக்கொண்டு இருக்கவேண்டிய தமிழகவீரச்சின்னம் இன்று இருள் என்னும் கடலால் சூழப்பட்டுள்ளது’’ அதனால் தான் இம்மின்நூலுக்கு “வரலாற்றுப் பக்கங்களில் மட்டுமே மணக்கும் கங்கைகொண்டசோழபுரம்” எனப்பெயரிட்டேன்.          =தமிழினமே உலக வரலாறறியு முன் உன் வரலாறு தெரிந்துகொள்=    எனது, இந்நூலுக்கு அதிக அளவிலான வரலாற்று தகவல்களை அளித்தும் இவ்வரலாற்று நூலில்  உள்ள பிழைகளை நீக்கி செம்மை செய்த எங்களது ஆசான்       பொன்பரப்பிகுடிக்காடு  முனைவர்  உயர்திருத.செல்லமுத்து  (உதவி தலைமையாசிரியர்-தமிழாசிரியர் *ஒய்வு)       அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.                          இவ்வரலாற்றை எழுத எனக்கு ஊக்கம் தந்த என் குடுபத்தினர்களான……..        காசி.அன்பழகன்(தந்தை)                   அ.இராகவன் (அண்ணன்)  அ.இராஜப்பிரியா(தங்கை)            ஆகியோர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.            அரியலூர் மாவட்ட வரலாற்றுக்காலச்சிறப்பு : அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் இராஜேந்திரசோழனால் சுமார் 989 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது.அன்று தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கே தலைநகரக விளங்கிய வீரம்விளைந்த பூமியாக இருந்து வந்தது.அப்படிபட்ட தலைநகரை தற்போது தன்னுடைய எல்லையில் கொண்டிருக்கும் அரியலூரின் அக்கால வரலாற்றுக்காலப்பெயர்  “விஷ்ணுபுரம்” என்பதாகும். விஷ்ணுபுரம் என்னும் வரலாற்றுக்காலப்பெயரே (அரி+இல்+ஊர் = அரியலூர்) மாவட்டத்தின் உண்மையான தமிழ்பெயர் ஆகும்.ஆனால் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் மக்காளால்  அரி+இல்+ஊர் (விஷ்ணுபுரம்)  என்னும் அழகிய தமிழ் பெயர் சிறிது சிறிதாக மருவி இன்று  அரியலூர் என்றாகியுள்ளது.  அரியலூர் பெயர்க்காரணம் : []     விஷ்ணுபுரத்தைகுறிக்கும் உடையார்பாளைய அரண்மனை சிற்பம்  அரி+இல்+ஊர் = அரியலூர்; இங்குள்ள அரி – விஷ்ணுவையும் ; இல் –இல்லம் (அதாவது வீட்டையும்) ; புரம் – இடத்தையும் குறிக்கும்.ஆகவே இன்றைய அரியலூர்(விஷ்ணுபுரம்) மாவட்டம் பல்லாண்டுகளுக்கு முன்னர் விஷ்ணு பிறந்துவளர்ந்த ஊராகும்.  மற்ற எந்த மாநிலத்திற்கும் மாவட்டத்திற்கும் இல்லா வீரப்புகழ் சோழ நாட்டிலுள்ள தற்போதைய அரியலூர் மாவட்டத்துக்கு உண்டு.ஏன்னென்றால்….? இராஜேந்திரசோழனுக்கு பின்னர் முடிசூடிய 16 சோழப்பேரரசர்களுக்கும்…ஏன்…………? சுமார் 250 ஆண்டுகள் தொடர்ச்சியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கே தன்னிகரற்ற தலைநகராக விளங்கிய பெருமை கங்கைகொண்ட சோழபுரத்தையே சேரும்.   கங்கைகொண்ட சோழபுரம் பெயர்க்காரணம் : கங்கைகொண்ட சோழபுரம் என்னும் சோழர்கால மாபெரும்  தலைநகரின் வரலாற்றுக்காலப்பெயர்   “கங்காபுரி” என்பதாகும்.   மாமன்னன் இராஜேந்திரசோழன் தன் தந்தையைப் போலவே சிறந்த வெற்றி வீரனாக விளங்கினார்.கடல் கடந்து இலங்கை,இந்தோனேசியா,அந்தமான் நிக்கோபார் தீவுகள் முதல் வட இந்தியாவில் வங்காளம் வரை சென்று பல வெற்றிகளை குவித்தார்.கடாரம், கங்கைவரை சென்று  பெற்ற பெருவெற்றியின் நினைவாக “கங்கைகொண்ட சோழபுரத்தில்” மாபெரும் கற்றளி – சிவாலயத்தை எழுப்பினார்.மேலும் தன் புதிய தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திலமைக்க திருப்பணி, புதிய நகர் உருவாக்கும் பணியை கி.பி.1023ல்  தொடங்கினார்.              ஸ்தல விருட்சம்:    []   கங்கைகொண்டசோழபுரம் கோவில் ஸ்தல விருட்சம் - வன்னிமரம்  கங்கைகொண்டசோழபுரம் உருவாகும் முன் அந்த இடம் வன்னிமரங்களுக்கு சிறப்புபெற்ற வன்னிமரக்காடாக விளங்கியது . இந்த ஊரில் அக்காலத்திலிருந்தே நிறைய வன்னி மரங்கள் இருந்தற்கு சான்றாக இன்றும் ஸ்தல விருட்சமாக, கங்கைகொண்டசோழபுரம் கோவிலில், வன்னி மரம் உள்ளது.    அரசியலில் “சோழ நாட்டு பெண் உளவாளி”களின் பங்கு :   []   சோழ நாட்டு - பெண் உளவாளி(மாதிரி)  சோழர்கள் பெண்களையும் உளவாளிகளாக பயன்படுத்தினார்கள். பெண்களையும் தூதுக்கு அனுப்பினார்கள்... அவர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்.., அவர்களுடைய அங்க அவையங்களை  அறிந்துகொள்வதற்கு, ரோமக்கால்கள், ரோமத்தை வைத்தெல்லாம் ஆய்வு செய்துவிட்டு, இந்தப் பெண் உண்மையை சீக்கிரம் வெளியிடமாட்டாள், இரகசியங்களை சொல்லமாட்டாள். இவளா‌ல் அரசாங்கத்திற்கு எந்தக் கெடுதலும் இல்லை என்றெல்லாம் பார்த்து பார்த்து கவனமாக தேர்ந்தெடுத்தார்கள்.    ஒரு மூலிகை கலவை இருக்கும். அதில் அந்த ரோமத்தைப் போட்டால் எப்படி மாறுகிறது என்று பார்ப்பார்கள். கலவை நீர்த்துப் போனால் அவருடைய உடலும், மனக்கூறும் இப்படி இருக்கும். அபிலாசைகளுக்கு ஆசைப்பட்டு சீக்கிரமே அந்தரங்களை வெளியிட்டுவிடுவார்கள். ஆனால், அந்தக் கலவை திடநிலையை அடைந்தால், அவ்வளவு சீக்கிரத்தில் எந்தச் சூழ்நிலையிலும் இவர்கள் “உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இராஜாங்க இரகசியங்களை வெளியிடமாட்டார்கள்” என்பன போன்று குறிப்புகள் இராஜ இராஜ சோழ‌ன் ஆட்சி காலத்திலேயே இருக்கிறது. இதையெல்லாம் வைத்துதான் அரசர்கள் அந்தக் காலத்தில் பல கோணங்களில் எதிரிகளை வீழ்த்தினார்கள். போர்க்களத்தில் நின்று மட்டும் அவர்கள் எதிரிகளை வீழ்த்தவில்லை. இதுபோன்றும் செய்திருக்கிறார்கள்      சோழப் பேரரசு நாவாய்களின்  கம்பீரம் : []     சோழப்பேரரசின் நாவாய்-இராஜேந்திரசோழன் காலத்தை சேர்ந்தது   சோழப் பேரரசு நாவாய்களின்  கம்பீரம் எத்தகையது தெரியுமா…?  சோழர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே அமைதியாக வாழமுடியும் என்ற நிலை தென்கிழக்கு ஆசியநாடுகளுக்கு ஏற்பட்டது.  ஆர்பரிக்கும் அலைகள் வழியிலுள்ள நாடுகளில் ஆழிப்பேரலை வந்ததைப்போல ஆரவாரம் நிகழ்த்தும் சோழப்பேரரசு நாவாய்கள்.  பிரளையம் ஏற்பட்டது போன்ற பேரோசையுடன் கம்பீரமாக கடல் நீரைக்கிழித்துச்செல்லும்…..!  சோழப்பேரரசு நாவாய்கள் புறப்பட்டால் கடலையே ஆக்கிரமித்துக்கொண்டு மீன்கள் நீந்தக்கூட இடமில்லாத அளவிற்கு மரக்கலங்கள் அணிவகுக்கும்.  அவற்றை பார்த்த மாத்திரத்திலேயே எதிரி நாட்டு மன்னர்கள் ஒளிந்துகொள்ளுமளவிற்கு அவை காட்சியளித்தன.  []   உலகின் மாபெரும் இந்துமத வழிபாட்டுத்தலம்-கம்போடிய நாட்டிலுள்ள அங்கோர்வாட்  உலகிலேயே இன்று மாபெரும் இந்து வழிபாட்டுதலத்தை கம்போடியாவில் அன்று கட்டிய “சூரியவர்மன்”என்னும் சோழ வம்சத்தை சேர்ந்த பேரரசன் கூட தன் நாட்டில் உள்ள எதிரிகளை வதைக்க தன் சொந்த “தங்கத்தேரை”யே மாமன்னன் இராஜேந்திரசோழனுக்கு பரிசாக அளித்தான்.  []                சூரியவர்மன் இராஜேந்திரசோழனுக்கு பரிசாக அளித்த தங்கத்தேர்    சோழர்கள் கடலின் தோழர்கள் :  இராஜேந்திரசோழனுடைய வங்காளப் படையெடுப்பு சோழர்களின் கடற்படை தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு எதிரானப்படையெடுப்பிற்கு முன்னோட்டமாகவே இருந்தது. இராஜேந்திர சோழன் காலத்தில் சோழர்கள் இந்தியபெருங்கலையும், வங்காளவிரிகுடக்கடலையும் நிலப்பரப்பாக நினைக்குமளவிற்கு கப்பல் கட்டும் பணியில் சிறந்து விளங்கினார்கள்.  []   சோழர் கால கப்பல் அடித்தள மாதிரி  கடலும்,காற்றும் சோழர்களின் மரக்கலங்களுக்கு கட்டுப்பட்டன.சோழர்கள் கடலைத் தங்கள் கட்டுபாடின் கீழ் வைத்திருந்தார்கள்.வணிக்கப்பல்கள் பாதுகாப்புடன் பயணிக்க சோழக்கப்பல்கள் பகலிரவுபாராது ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தன. அதுவரை அப்படி ஒருஅமைப்பு  தமிழகத்தில் விரிவாக ஏற்படுத்தப்படவில்லை.வர்த்தகம் செழிக்க ஏற்படுத்தப்பட்ட நாவாய்கள் ,அசுரவேகத்தில் சக்திவாய்ந்த கடற்ப்படையாக உருப்பெற்றது.”சோழர்கள் கடலின் தோழர்கள்” என்னும்நிலை ஏற்பட்டது.  சோழர்கள் காலத்திற்கு முன்னர்வரை தமிழகத்தில் “போருக்குபடைதிரட்டுதல்” என்ற பழக்கம் மட்டுமே இருந்து வந்தது.ஆனால், இராஜராஜசோழன் காலத்தில் தான் முதன்முதலாக நிலையான கப்பற்படை திரட்டப்பட்டது. உலகின் முதல் கப்பற்படையை அமைத்தவன் என்றபெருமை மாமன்னன் இராஜராஜசோழனையே சேரும்.    கப்பற்படையிலுள்ள சோழ வீர்ர்கள் எப்படிபட்டவர்கள்………..?  இராஜராஜசோழன் தன்னுடைய கப்பற்படையிலுள்ள ஒவ்வொரு வீரர்களையும் செதுக்கி,செதுக்கிசிறந்ததிறன்கொண்டகடற்ப்படைவீரர்களாகவடிவமைத்தான்.இராஜராஜசோழனால் நிறுவிபட்ட கப்பற்படை இராஜேந்திரசோழன் காலத்தில் துளியும் ஓய்வின்றி  தொடர்ந்து போர்க்களங்களிலேயே தன் வாழ்நாளைக் கழித்தன.    இராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு:  இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு;இலங்கை,அந்தமான் நிக்கோபார் தீவு , மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம்,மலேயா(சிங்கப்பூர் - மேலசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திரசோழனே முதன் முதலில் கடல் கடந்து பல்வேறு அயல்நாட்டிற்குப்  பெரும்படை எடுத்துச் சென்று அதில்  முற்றிலும் வெற்றி கண்ட இந்திய மன்னன் ஆவான். மகிபாலைன வென்று வங்காள த்தை சோழநாட்டுடன் இணைத்தவன்; அதன்  வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கைகொண்டசோழபுரம் என்னும் புதிய தலைநகரை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வாகித்தான்.வடநாட்டு பெரு வெற்றியின் நினைவுசின்னத்தை நிலைநாட்ட சங்க காலத்தில் கங்காபுரி என்றழைக்கப்பட்ட இன்றைய கங்கைகொண்டசோழபுரம் என்னும் ஊரை தேர்ந்தெடுத்தான்.      []     இராஜேந்திரசோழன் காலத்தில் சோழப்பேரரசு      இராஜேந்திரசோழனின் தாய்:  உலகப்புகழ் கொண்ட சோழப்பேரரசர்களில் முதன்மையானவராக மாமன்னன் இராஜராஜசோழனே விளங்குகின்றார்.இவரது பட்டத்தரசி உலகமகாதேவியாவாள்.எனினும் மாமன்னன் இராஜேந்திரசோழனைப் பெற்ற பெருமை திரிபுவனமாதேவி என்னும் சேர நாட்டு பெண்ணையே சேரும்.ஆம்,வானவன் மாதேவி (எ) திரிபுவனமாதேவி என்ற பெயரைக்கொண்ட இவள் தான் மாமன்னன் இராஜேந்திரசோழனின்  அன்னையாவாள்.  மாமன்னன் இராஜராஜசோழனுக்கும் சேரநாட்டைசேர்ந்த வானவன் மாதேவிக்கும் ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் தான் இராஜேந்திரசோழன்….!   இவனது இயற்பெயர் மதுராந்தகன் என்பதாகும்.இவன் இராஜராஜசோழனால் கி.பி 1012ல் முடிசூட்டபட்ட பின்னர் தனது மதுராந்தகன் என்னும் இயற்பெயரை மாற்றி இராஜேந்திரசோழன் என்னும் புதிய பெயரைசூட்டிக்கொண்டான்.                                இராஜேந்திரசோழன் இளமைப்பருவம்: []   மாமன்னன் இராஜேந்திரசோழனின் ஓவியம்  இராஜேந்திரசோழன் இளமைப்பருவம் பருவத்திலிருந்தே மிக சுறுசுறுப்பானவனாகவும், புத்திசாலியாகவும் , துணிச்சல் மிக்க வீரனாகவும் விளங்கினான்.     இராஜேந்திரனுக்கு உரிய பருவத்தில் கல்வியும்,கலைகளும் பயிற்றுவிக்கப்பட்டன.அரச வம்சத்தினர்க்கு முக்கியமானதாக விளங்கும்  வில் ,வாள், ஈட்டி எறிதல், சிலப்பு ,குதிரை ஏறுதல் , யானை ஏறுதல் என அனைத்தும் இராஜேந்திர சோழனுக்கு கற்றுகொடுக்கப்பட்டன. இராஜேந்திரனும்  நாம் நமது தந்தையை விட அதிகம் சாதிக்கவேண்டும் ….!அதனால் நாம் எல்லாக்கலைகளிலும் சிறந்து விளங்கவேண்டும்  என்ற வெறியில்  பலகலைகளையும் கற்றுதேர்ந்த முதல் வரிசை வீரனாக விளங்கினான்.    மேலும் , உயர்கல்வி ,அரசியல் பொருளாதாரம், அரசியல் இராஜதந்திரம் , வடமொழி பயிற்சி , கவிபாட மற்றும் இசைபாட பயிற்சி என அனைத்து துறைகளிலும் தலைசிறந்த இளவரசனாக விளங்கினான்.பகலிரவு பாராது போர்பயிற்சியிலும் ,ஆடல் பாடல் , கூத்து போன்ற கலைப்பயிற்சியிலும்  கல்வி , கேள்வியிலும் கடுமையாக ஈடுபட்டு வந்தான்.      []   கங்கைகொண்டசோழபுரத்து சரஸ்வதி கற்சிற்பம் (தென்புறம்)    இராஜேந்திரசோழனின் வடநாட்டு போர் வெற்றிகள்:  இராஜேந்திரசோழன் வடநாட்டு போர்களில் வென்ற இடங்களின் அக்காலப்பெயர்கள் படிப்பவர்களுக்கு எந்த மாநிலம் ,எந்த பகுதி என்பதயறிவது சிரமமாக இருக்கும் ,அதை தவிர்க்கவே இக்காலப் பெயர்களாக புரிந்துகொள்ளேதுவாக இந்த பகுதியில்  தந்துள்ளேன்.  இராஜேந்திரசோழனின் வடநாட்டு போர்கள் அனைத்தும் வெற்றியில் முடியக்காரணமாக முதற்காரணமாக இருந்தவர்கள்….இராஜேந்திரசோழனின் படைத்தளபதிகளான அரையன் இராஜராஜனும்,அருண்மொழி பட்டனும் மற்றும் இராஜேந்திரசோழனின் மனைவி  வீரமாதேவியும் ஆவார்கள்.  1.சக்கரகோட்டப்போர்:  வடநாட்டு போரில் முதலிடமாக விளங்குவது சக்கரகோட்டப்போர் ஆகும்.இது இன்றைய விசாகப்பட்டினமே அன்றைய சக்கரகோட்டமாகும்.    2.ஆதிநகர்ப்போர்:  வடநாட்டு போரில் இரண்டாவதாக விளங்குவது ஆதிநகர்ப்போர் ஆகும். அப்போது ஆதிநகரின் மன்னனாக இருந்த இந்திரதனை சோழப்படைகள் போரில் வென்றது .இன்றைய ஒரிசாவே அன்றைய ஆதிநகர் ஆகும்.இந்த வெற்றிக்கு பிறகு இராஜேந்திரன் கோதாவரிக்கரையிலேயே தங்கி விட்டான்.இப்போது சோழப்படைகள் படைத்தளபதிகளின் தலைமையில் இயங்கியது.    3. தண்டபுத்திப்போர்:  வடநாட்டு போரில் முன்றாவதாக விளங்குவது தண்டபுத்திப்போர் ஆகும். இன்றைய வங்காள நாட்டிலுள்ள மிதுனபுரி மாவட்டமே அன்றைய தண்டபுத்தியாகும்.    4.. தக்கணலாடப்போர்:  வடநாட்டு போரில் நான்காவதாக விளங்குவது  தக்கணலாடமாகும். இன்றைய வங்காத்திற்கும் பீகார் மாநிலத்திற்கும் இடையேயுள்ள ஒருசில பகுதியே  அன்றைய தக்கணலாடமாகும். தக்கணலாட்த்தின் மன்னன் இரணசூரன் ஆவான்.    5. வங்காளதேசப்போர்:  வடநாட்டு போரில் ஐந்தாவதாக விளங்குவது  வங்காளதேசமாகும்.அன்றைய வங்காளதேசம் முழுமைக்கும் மன்னனாக இருந்தவன் கோவிந்த சந்திரனாவான்.    6. உத்திரலாடம்  :வடநாட்டு போரில் ஆறாவதாக விளங்குவது உத்திரலாடமாகும். இது இன்றைய கங்கை நதிக்கு தென் கரையிலுள்ள மாபெரும் பகுதியாகும்.இதன் அரசனாக இருந்தவன் மகிபாலனாவான்.      மாமன்னன்  இராஜேந்திரசோழன் செய்த பத்து மகத்தான சாதனைகள்:  இராஜேந்திரசோழனின் எண்ணிலடங்கா சாதனைகளை தமிழர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக இந்த மின்னூலை எழுதினேன்.அவற்றில்  மிகமுக்கியமான…… மாமன்னன்  இராஜேந்திரசோழன் செய்த பத்து மகத்தான சாதனைகளை இங்கு காணலாம்.    இராஜேந்திரசோழனின் முதலாவது சாதனை: ஒரு இளவல் சொல்லுக்கு 9இலடசம் வீரர்கள் அசைந்தார்கள் :  இராஜேந்திரசோழன் தன் தந்தை இராஜராஜசோழனுடன் இளவரசனாக நியமிக்கப்பட்டகாலத்திலிருந்தே சோழப்படைகளுக்கு மாதண்ட நாயகனாக இருந்து போர்வீரர்களுக்கு  தலைமை தாங்கி அவர்களை வழிநடத்தியுள்ளான்.இராஜேந்திரசோழன் இளவரசனாக இருந்தபோதே 9 இலட்சம் சோழப்படை வீரர்களுக்கு மாதண்ட நாயகனாக தலைமை தாங்கிச் சென்று பாண்டிய மன்னர்களையும்,  சேரநாட்டு மன்னர்களையும் வென்று அவர்களது அரசியர்களையும் சிறைபிடித்து மாபெரும் வெற்றி வாகையுடன் சோழதேசம் நோக்கிப்புறப்பட்டான்..  அவன் சோழ தேசம் நோக்கி வெற்றி வாகையுடன் புறப்பட்டு வரும் செய்தியை முன்னரே தூது மூலம் அறிந்த இராஜராஜசோழன்  தன்மனைவி வானவன்மாதேவியிடம்….   தேவி….!நானின்றி நம் மகன் நம் நாட்டு சேனைக்கு முதன்முறையாக தலைமைத்தாங்கி சென்றனே..என்று கவலைபட்டாயே……….!   இப்போது பார்த்தாயா….? பாண்டிய மன்னர்களையும்,  சேரநாட்டு மன்னர்களையும் வென்று அவர்களது அரசியர்களையும் சிறைபிடித்து சோழதேசத்திற்கு வந்து கொண்டுஇருக்கிறான்.    இப்போது தெரிகிறதா நம் மகனின் வெற்றியும், எல்லையற்ற வீரமும்  என் கூறிக்கொண்டிருக்கும் போதே இராஜேந்திரசோழன் தன் படைத்தளபதிகளுடன் வந்து சேர்ந்தான்.அப்போது ‘’தன் வீர மகனான இராஜேந்திரசோழனை கட்டிதழுவி ஆரத்திஎடுத்து வரவேற்றாள் இராஜராஜசோழனின் தேவி’’ என இராஜேந்திரசோழனின் கல்வெட்டுகூறுகின்றது.  இளவரசனாக இருக்கும் போதே சுமார் 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட படைவீரர்களுக்கு மாதண்டநாயகனாக விளங்கியபெருமை இராஜேந்திரசோழனையே சேரும்.    சாதனை -2: 100 ஆண்டுகாலமாக சோழமன்னர்களால் தேடப்பட்டுவந்த பொக்கிஷ்த்தை இராஜேந்திரசோழன் மீட்டெடுத்தமை:    கி.பி-910 ஆம் ஆண்டில் முதலாம் பராந்தகசோழன் பாண்டியர்களை ‘வெள்ளூர்’என்னுமிடத்தில்  பந்தாடியபோது ,போரில் தோற்ற ‘‘பாண்டிய மன்னன் இராஜசிம்மன்’’ பயந்து ஓடினான்.பாண்டிய நாட்டை முடிசூட்டிக்கொள்ள வேண்டும் என்ற பராந்தகனுக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது……….!    போரில் தோற்ற பாண்டிய மன்னன் இராஜசிம்மன் அவனது இந்திர ஆரத்தையும்,மணிமுடியையும் போரில் உதவிய இலங்கை மன்னனிடம் ஒப்படைத்து விட்டு,சேர நாட்டுக்கு தப்பிவிட்டான்.    இதனால் கடுங்கோபமடைந்த   முதலாம் பராந்தகசோழன் இலங்கைக்கு தன் வலிமைமிக்க பெரும்படை ஒன்றை அனுப்பி இலங்கை மன்னனை வெற்றிகொள்ளவும் செய்தான்.ஆனால்,இந்திர ஆரமும்,மணிமுடியும் வைரப்போர்வைகளும் கிடைக்கவில்லை.ஆண்டுகள் பல கடந்தன…..சோழமன்னர்கள் பலர் முடிசூடினார்கள். அம்மணிமகுடத்தையும், ஆரத்தையும் சோழர்களால் , இராஜராஜசோழன் இலங்கை படையெடுப்பில்  கூட  கண்டுபிடிக்கமுடியவில்லை.    அதை சரியாக 107 ஆண்டுகள் கழித்து தன்னுடய படையெடுப்பில் மீட்டான் இராஜேந்திரசோழன்.அது மட்டுமின்றி அப்போது சிங்கள மன்னனாக இருந்த ஐந்தாம் மஹிந்தனுடைய மணிமகுடத்தையும் தட்டிபறித்து அவனை கூனிகுறுகிப்போகச்செய்தான். சிங்கள மன்னன் ஐந்தாம் மஹிந்தனை கைதுசெய்து சோழநாட்டிற்கு கொண்டு வந்து 12ஆண்டுகள் சிறையில் அடைக்க …..அவன் சோழநாட்டு சிறையிலே இறந்துபோனான்.    இராஜேந்திரன் பாண்டியர்களையும் ,சேரர்களையும் தன்னாதிக்கத்தால் அடக்கி  தனக்கு கைக்கட்டி கப்பம் கட்டும் நாடுகளாக மாற்றினான்.அதன் பிறகு தன் மூத்த மகனை ஜடவர்மன் சுந்தரசோழபாண்டியன் என்னும் பெயரோடு மதுரையை ஆளும்படி செய்தானகிட்டதட்ட சுமார் 100 ஆண்டுகாலமாக சோழ மன்னர்களால் தேடப்பட்டு வந்ததும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்தாக கூறப்பட்ட   ‘‘வைரங்கள் பதித்த போர்வையையும், வைர மணிமுடியையும்,செங்கோலையும்’’  மீட்டபெருமை மாமன்னன் இராஜேந்திர சோழனையே சேரும்.      சாதனை -3: மேலை சாளுக்கிய நாட்டை (மான்யகேடயத்தை) முழுமையாக கைபற்றுதல்:    []   இராஜேந்திரசோழன் மேலை சாளுக்கிய நாட்டை (மான்யகேடயத்தை)   முழுமையாக கைபற்றுதல்  பிற்கால சோழர் வரலாற்றில்  பல்லவர்கள் காலம் தொட்டே  சோழர்களுக்கும்,மேலைச்சாளுக்கியர்களுக்கும் பகைமையும் போருமாக  காலம் உருண்டோடிக்கொண்டிருந்தது. இங்கு ஒரு சில சமயங்களில் சோழர்கள் ,மேலைச்சாளுக்கியர்களையும்  மேலைச்சாளுக்கியர்கள் சோழர்களையும் வெற்றிபெற்றுள்ளார்கள் . அப்படிபட்ட தோல்வி வரலாற்றில்  ‘‘மாமன்னன் இராஜராஜசோழனின் தோல்வி’’ குறிப்பிடத்தக்கதாகும்.    ஆம்,சாளுக்கிய நாட்டின் (இன்றைய கர்நாடக மாநிலமே அன்றைய சாளுக்கிய நாடாகும்) மீது இராஜராஜசோழன் பலமுறை படைஎடுத்தும் ,போரிட்டும்  சாளுக்கிய நாட்டை முழுமையாக வெற்றிகொள்ள இயலவில்லை . அதனால் இராஜராஜசோழன் வெஞ்சினம் கொண்டு ‘‘மான்யகேத்தை நான் பிடிக்காத வரை கிரிஹா விகாரம் செய்வதில்லை ’’ என்று சூளுரைத்தான்.ஆனால் , அதை நிறைவேற்றுவதற்கு முன்னரே  இராஜராஜசோழன் (கி.பி.-1014 )ல் இறந்துவிட்டான்.    []     கல்லணையில் உள்ள மாமன்னன் இராஜராஜசோழனின் சிலை    தந்தையின் சூளுரையை நிறைவேற்றுதல் மகனின் கடமை என்பதால் ,இராஜேந்திரன் கி.பி-1020 ல்  தன் பெரும்படையுடன் மேலைசாளுக்கிய நாட்டைநோக்கி புறப்பட்டான்.கி.பி.-1016 ல் பதவிக்கு வந்த சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மனை  எதிர்த்து ‘‘முயங்கி ’’ என்னுமிடத்தில் போர்செய்தான்.அப்போரில்  சோழப்படைகள் இரட்டப்பாடி ஏழரை இலக்கத்தை (மேலைசாளுக்கிய நாட்டைநோக்கி) வெற்றிகொண்டது.    அப்போரில் தோற்ற  சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் உயிருக்கு பயந்து  அருகிலிருந்த காட்டுக்குள் ஒடிவிட்டான். அதன் பிறகு , அந்நாட்டிலுள்ள அற்புத மணித்திரள்களும், பொற்குவியலும்  சோழநாட்டிற்கு கொண்டுவரப்பட்டன என்று திருவாலங்காடு செப்பேடுகள் தெரிவிக்கின்றன.    மாமன்னன் இராஜராஜசோழனால் சாதிக்கமுடியாத  அரும்பெரும் சாதனையை அவன் புதல்வனாகிய மாமன்னன்  இராஜேந்திரன் சாதித்தது உலகசாதனையே….!  சாதனை -4: யானைப்பாலம் அமைத்து கங்கையை வெற்றி பெறுதல்:  மேலை சாளுக்கிய நாட்டை வெற்றிகொண்ட சோழப்படைகள்,மிகுந்த உற்சாகத்துடன் கங்கையை நோக்கி புறப்பட்டது.செல்லும் வழியில் தங்களை எதிர்த்துபோரிட்ட அனைத்து நாட்டு சிற்றரசு பேரரசுகளின் படைகளும் தோற்கடிக்கப்பட்டன.இவ்வாறு  கங்கையை சென்றடையும் வரையுள்ள நாடுகளையெல்லாம் தன்னடிப்படுத்திக்கொண்டு கங்கை பிரதேசத்தை அடைந்தது.   []   வட நாட்டு மன்னர்களின் கொட்டத்தை அடக்கிட கங்கை நதிவரை சோழப்பேரரசு படையெடுத்து சென்று வெற்றிவாகை சூடுதல்    அந்த சமயம் சோழர்கள் சற்றும் எதிர்பாரதவிதமாக கங்கையில் புதுவெள்ளம் (பூம்புனல்)ஓடிக்கொண்டிருந்தது.அதாவது யாணைகள் அடித்துச்செல்லப்படாத அளவிற்கு புதுவெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது.ஆனால் போர்வீரர்களால் அந்த புதுவெள்ளத்தை கடக்க இயலாத படியுமாக ஓடிக்கொண்டிருந்தது.  அதை கங்கை நதியின் எதிர்கரையிலிருந்து கண்ட கங்கை பிரதேசத்து அரசர்களும்,போர்வீரர்களும் சோழவீரர்களைக்கண்டு ஏளனமாகச்சிரித்தார்கள்.    உடனே சோழப்படைதளபதி ,தன்னுடைய சேனையிலுள்ள அனைத்து யானைகளையும் சோடி , சோடியாக  ஒன்றன் பின் ஒன்றாக ஆற்றினுள் இறக்கி நிறுத்தசெய்தான்.அந்த யானைகளின் மீது குறுக்குவசமாக மரக்கட்டைகளை அடுக்கி ‘‘யானைப்பாலம்’’ அமைத்தார்கள்.அடுத்தகணமே சோழப்படை மின்னல் வேகத்தில் தங்களை ஏளனம் செய்த கங்கைபிரதேசத்து மன்னர்களின் மீது போர்த்தொடுத்தது,அக்கடும் போரில்  வெற்றி வாகையும் சூடியது.    உலக வரலாற்றிலே…!இப்படி  முதன்முதலாக ‘‘ஓடும் நதியில் யானைப்பாலம்’’ அமைத்து தன் படைகளை வழிநடத்திச்சென்று வெற்றிவாகை சூடியவன் இராஜேந்திரசோழனும் அவனது படைத்தளபதி அரையன் இராஜேந்திரமேயாவார்கள்.இவையனைத்தும் திருவாலங்காடு செப்பேடுகளால் அறியமுடிகின்றது.        சாதனை-5:கங்கை மன்னர்களை தங்கக் குடங்களில் கங்கை நீரை  சுமக்கச்செய்தான்:  கங்கைபிரதேசத்து உத்திரலாட  மன்னன் மகிபாலனும்,அவனுக்கு கீழுள்ள பற்பல சிற்றரசர்களும் ஒன்றுசேர்ந்து சோழப்படையை எதிர்த்துப்போரிட்டார்கள்.அவர்கள் அனைவரையும் தோற்கடித்து அவர்களை கைது செய்து,1000 பொற்குடங்களில்  புனித தீர்த்தமான கங்கை நதிநீரை எடுத்துகொண்டு,அந்த கங்கை நீர் குடங்களை தோல்வியுற்ற கங்கை நாட்டு மன்னர்களின் தலையிலே சுமந்து வரும்படி செய்து , சோழதேசம் நோக்கி புறப்பட்டார்கள் சோழப்படைத்தளபதிகளான அரையன் இராஜராஜனும்,அருண்மொழிபட்டனும் ,வீரமாதேவியும்…….ஆனால் ,மாமன்னன் இராஜேந்திரன் அப்படைகளுடன் கங்கை வரை செல்லவில்லை.    கோதாவரி நதிக்கரையுடன்  இராஜேந்திரன் ஏன் தங்கி விட்டான்…….?   சோழ நாட்டுக்கு எதிரான மன்னர்களின் படைகள் கங்கை நதி  நோக்கி செல்லும் தன்னுடைய படையை சூழ்ந்து விட்டால் பேராபத்து ஏற்படும் என்பதனால்,….தன்னுடய ஒரு படைப்பிரிவை கோதாவரி நதிக்கரையிலேயே நிறுத்தி விட்டான். மற்றொறு படையினை மட்டுமே  கங்கை நதி தீர்த்தம் எடுக்க அனுப்பினான். (*கங்கை சென்ற சோழபடை வீரர்கள் திரும்பி வரும்வரை அவர்களுக்கு காவல் அளிக்கத்தான் கோதாவரி நதிக்கரையிலேயே இராஜேந்திர சோழன் தங்கி விட்டான்.)     இரண்டாண்டுகள் கடுமையாக நடைபெற்ற இப்போரில் வெற்றி  வாகையுடன் சோழதேசம் நோக்கி புறப்பட்டார்கள். வழியில் தன்னுடய படைத்தளபதிகளை வரவேற்று,அவர்கள் கொண்டு வந்த “கங்கை தீர்த்த்தை” கண்ணில் ஒத்திக்கொண்டான் இராஜேந்திரசோழன்.  அதன் பிறகு கோதவரிக்கரையில் முகாமிட்டிருந்த சோழப்படைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து பேரிடி போன்ற ஓசையோடு தங்களின் ஒட்டுமொத்த வெற்றியை கொண்டாடி சோழ நாட்டிற்கு புறப்பட்டது.      அப்புனித நீரை தன் தலைநகரில்  புதிதாக கட்டுபட்ட கங்கைகொண்டசோழீஸ்வரர்க்கு அபிசேகம் செய்தான் மாமன்னன் இராஜேந்திரசோழன்.அப்படி அபிசேகம் செய்த நீரை அக்கோவிலிலுள்ள திருக்கிணற்றிலும்,புதிய தலைநகரமைக்கும் போதே ஏற்படுத்தப்பட்ட சோழப்பேரேரியிலும் ஊற்றினான்.அன்றிலிருந்து தான் ‘‘கங்காபுரி’’ என்ற இடம் ‘‘கங்கைகொண்டசோழீச்சரம்’’ என்னும் சிறப்புபெயர்பெற்றது.    சாதனை -6: சோழ கங்கம்:  மேட்டுபாங்கான புஞ்சை நிலங்களில்புதிய தலைநகரான ‘கங்கைகொண்ட சோழபுரத்தை ’ நிர்மாணித்த இராஜேந்திரசோழன், கோவில் கட்டிடத் திருப்பணிக்கும் மக்களுக்கு  தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதிருப்பதற்காகவும், பாசன வசதியை மேம்படுத்தி நீர்வளத்தைபெருக்கவும் ‘‘16 மைல் நீளமும்,3மைல் அகலமும் கொண்ட ஒரு மாபெரும் ஏரி ஒன்றை சமவெளிப்பகுதியில்  வெட்டுவித்தான்’’ என திருவாலங்காடு செப்பேடுகள் கூறுகின்றன.  அந்தசோழப்பேரேரியின் மத்தியில் கிரானைட் கல்லால்  ஆனஒரு உயரமான வெற்றித்தூணைம், அதனடியில் கிரானைட் கல்லால் ஆன தொட்டி ஒன்றையும் கட்டி  கங்கைகொண்டசோழீஸ்வரர்க்கு அபிசேகம் செய்த நீரை ஊற்றினான்.    []   இராஜேந்திரசோழனின் ‘நீர் மயமான வெற்றித்தூண்’(நீருக்கு நடுவில் உள்ளது)  மேலும் , கொள்ளிடம் ஆற்றிலிருந்து வந்த காவிரி நீரை தொட்டியில் உள்ள கங்கை நீருடன் கலக்கச் செய்தான்.அன்றிலிருந்து அந்த சோழப்பேரேரிக்கு‘சோழகங்கம்’என்ற பெயரையும்…,அந்த கிரானைட் கல்லால் ஆன வெற்றித்தூணுக்கு ‘நீர் மயமான வெற்றித்தூண்’ என்ற பெயரையும் மாமன்னன் இராஜேந்திரன் சூட்டி மகிழ்ந்தான்.    []   இன்றும்.., சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரிகள்   மூலம் பயிரிடப்படும் வேளாண் நிலங்கள்    அப்படிபட்ட ‘சோழ கங்க ஏரியின்’ நாலாபுறமும் பெரிய, பெரிய பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டு,பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றன.‘‘மேடு பள்ளமற்ற  சமவெளிப்பகுதியில் இவ்வளவு பெரிய மாபெரும் ஏரி இராஜேந்திரசோழனால் வெட்டப்பட்டது’’ஒரு அசுரசாதனையாகவே கருதப்படுகின்றது.    ஏன்னென்றால்…..?  நாம் வாழும் இவ்வுலகில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர்வரை சமவெளிப்பகுதியில் இப்படிபட்ட ஒரு பேரேரி (முற்றிலும் மனித உழைப்பால்) உருவாக்கப்பட்டு பயன்பாட்டில்இருந்ததற்கான சுவடுகள் இன்றளவும் இல்லை.    சாதனை-7: தமிழகத்தின் மாபெரும் சிவலிங்கம்  கங்கை அரசர்களை வெற்றி கொண்டதன் நினைவுச்சின்னமே கங்கை சோழபுரமாகும்…..அன்றைய வடநாட்டுப் போரில் அடைந்த வெற்றியின் அடையாளம் தான் இன்றைய  கங்கைகொண்டசோழீஸ்வரர் ஆலயம்.  கம்பீரமான ஆணழகனைபோன்று காட்சிதரும் தஞ்சை இராஜராஜேஸ்வரத்திற்கு இணையான பெண்ணழகி போன்ற அழகிய சிற்பவேலைப்பாடுகளை கொண்டு விளங்குவது தான் கங்கைகொண்ட சோழீஸ்வரம். .     []   தமிழ் நாட்டின் மாபெரும் சிவலிங்கமாக விளங்கும் கங்கைகொண்டசோழீஸ்வரர்  கங்கைகொண்ட சோழபுரம் கி.பி.11ம் நூற்றாண்டில் மாமன்னன் இராஜேந்திரசோழனால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கத்தைக்கொண்டுஉள்ள சிவாலயம் கங்கைகொண்ட சோழபுரமேயாகும்.இங்குள்ள கங்கைகொண்டசோழீஸ்வரரின் உயரம்  13.5 அடியாகும்.    இக்கோயிலில் தஞ்சை பெரிய கோயிலை போன்று பெரிய நந்தி மட்டுமல்லாமல் நாட்டியமாடும் விநாயகர் உட்பட பற்பல எழில்மிகு சிற்பங்கள் நிறைந்துள்ளன. சிங்கத் தலை கொண்ட கிணறு மற்றும் மாமன்னன் இராஜேந்திரனுக்கு பார்வதி பரமேஸ்வரரே முடிசூட்டும் அரிய வகை சிற்பங்கள்(சிவபாதசேகரன்) இந்தக் கோயிலில் தான் உள்ளன.    இக்கோவில் திருச்சுற்று மாளிகை 567அடி நீளமும்,318அடி அகலமும் கொண்டுள்ளது.இத்திருச்சுற்று மாளிகையின்  நடுவில் தான் பிரதான ஆலயம் அமைந்துள்ளது…..?    இக்கோவிலின் பிரதான ஆலயம் கருவறை, அர்த்தமண்டபம் ,மகா மண்டபம்  ஆகிய மூன்று பிரிவுகளைக்கொண்டுள்ளது.இவ்வாலயத்திற்கு அழகான பெண்வடிவத்தை கொடுத்திருப்பது கருவறையின் மீது 9 தளங்களாக (அடுக்காக) அமைக்கப்பட்டுள்ள திருவிமானம் ஆகும்.இத்திருவிமானத்தின்  உயரம் 182 அடியாகும்.(*அதாவது 55 மீட்டர்) விமானத்தின் கழுத்துப்பகுதியின் நாற்புறமும் நான்கு தேவக்கோட்டங்களும் ,நான்கு நந்திகளும் உள்ளன.திருவிமான கழுத்துப்பகுதியின் மேல் சிகரம் அமைக்கப்பட்டு அதன் மேல் பொன்முலாம் பூசப்பட்ட ஸ்தூபியும் அமைந்துள்ளது.      []   வடகையிலாயம் – பெரியநாயகி அம்மன் சன்னதி  பிரதான ஆலயத்தின் வடக்கிலும் ,தெற்கிலும் வடகையிலாயம்  மற்றும் தென் கயிலாயம் என்ற இரண்டு சிற்றாலயங்கள் உள்ளன.இது மட்டுமின்றி சண்டிகேஸ்வரர்  ஆலயமும் , மகிஷாசுரமர்த்தினி ஆலயமும் அமைந்துள்ளன.இவ்வாலயத்தின் வடகிழக்குப்பகுதியில் வட்டவடிவிலான கிணறு ஒன்றும்  ,இக்கிணற்றுக்கு அருகில்  சிங்கமுக வாயிலும் அமைந்துள்ளன.இந்த  சிங்கமுக வாயிலின் வழியாகத்தான் வடகிழக்குப்பகுதியிலுள்ள கிணற்றுக்குச்செல்லமுடியும்.இந்த சிங்க முக வாயிலை ‘‘சிம்ம கேணி’’ என்றும் கூறுவார்கள்.இந்த கிணற்றில் தான் இராஜேந்திர சோழன் கி.பி.1023ல் ஊற்றிய கங்கை நீர் இன்றும் காட்சியளிக்கின்றது.  சோழர்களின் பழமையான தமிழ் பண்பாட்டு சாதனைகளில், பிரமாண்டங்களில் கங்கைகொண்ட சோழபுரத்திற்குகென்று தனிப்பெருமை உண்டு.  சிற்ப வேலைபாடுகளில் சிறந்து விளங்கும் கங்கைகொண்ட சோழபுரம் தன் பேரழகில் தஞ்சை இராஜராஜேஸ்வரத்தினைக்காட்டிலும் ஒருபடி மிஞ்சிநிற்கிறது என்றால் அது மிகையாகாது  .மாமன்னன் இராஜராஜசோழன் தஞ்சைஇராஜராஜேஸ்வரத்தையும்,சோழ நாட்டின் எல்லைக்குட்பட்டபல பகுதிகளிலும்  சிவாலயங்களை எழுப்பினான்.ஆனால்,இராஜேந்திரசோழன் ஒருவனே……! தன் தந்தை எழுப்பிய தஞ்சைஇராஜராஜேஸ்வரத்திற்கு  நிகரான கங்கைகொண்டசோழபுரத்தையும் இன்னும் பிற குறிப்பிடதக்க 31 சிவாலயங்களையும் சோழ நாட்டின் எல்லைகளுக்குட்பட்ட பல மாநிலங்களிலும் கட்டியுள்ளான்.அதனால் மாமன்னன் இராஜேந்திரன் ‘‘பெருங்கோயில்கள் கட்டுவதிலும்’’ உலகசாதனைப்படைத்தவனாவான்.  சாதனை-8:மாமன்னன் இராஜேந்திர சோழன் ஆட்சிகால கரந்தை செப்பேட்டும்,அதிலுள்ள  இராஜமுத்திரையும்:  சோழர்களின் ஆட்சிகாலத்திற்கு முன்பிலிருந்தே ஒவ்வொரு மன்னனும் தன்னுடைய ஆட்சிகாலத்தில் தனக்கென தன்பெயருடன் கூடிய புதிய நாணயங்களை வெளியிடும் பழக்கமிருந்து வந்தது.அம்மன்னர்கள் பிறநாட்டை வென்றபோது அந்நாட்டு சின்னங்களையும் தங்களது நாணயங்களில் பொறித்துவிடுவார்கள்.  கரிகாலச்சோழன் இமயம் வரைசென்று அதில் தன் புலிக்கொடிநாட்டினான் என்ற செய்தியை   ‘’தென்தமிழ்   நன்நாட்டுச் செழுவில் கயற்புலி  மண்டலையேற்ற வரை வீரங்க வெளி‘’ என்னும் சிலப்பதிகாரம் கூறுவதால் நன்கறியலாம்.  []   உலகின் மிகப்பழமையான நகரமான காவேரிப்பூம்பட்டினத்தின்(பூம்புகார்) வணிகப்பகுதி    காவேரிப்பூம்பட்டினத்தில் இறக்கப்பட்ட பொதிகளின் மீது ‘’சுங்கம் (வரி)விதித்து சோதனைசெய்ததற்கு அடையாளமாகப் புலிச்சின்னம் முத்திரையாக குத்தியனுப்பப்படும் என்பதை ‘புலி பொறித்து புறம் போக்கி’-என்னும் பட்டினபாலை கூற்றின் மூலமாக அறியலாம்.    []   இராஜேந்திரசோழனின் 8ஆம் ஆட்சியாண்டு கரந்தை செப்பேடு - இராஜமுத்திரை    படத்திலுள்ள இராஜமுத்திரையானது இராஜேந்திரசோழனின் 8ஆம் ஆட்சி காலத்தைசேர்ந்த (கி.பி-1020)  52 ஊர்களை ஒன்றாக இணைத்துத் தன் தாயின் பெயரால் ‘திரிபுவன மாதேவி ஸ்துர்வேதி மங்கலம்’ என பெயரிட்டு 1009 சதுர்வேத்தில் சிறந்த பட்டர்களுக்கு கொடையாக அளித்த விவரசெப்பேடு ஆகும்.     இது தஞ்சாவூரிலுள்ள ‘கரந்தை’  என்னும் ஊரில் கிடைத்தால் இது கரந்தை செப்பேடு என்னும் பெயர் பெற்றது.இது 57 செப்பேடுகளில் 2500 வரிகளால் எழுதப்பட்ட மிகப்பெரிய செப்பேடு ஆகும்.  [] இராஜேந்திரசோழனின் 8ஆம் ஆட்சியாண்டு கரந்தை செப்பேடு [காலம் கி.பி1020 ]    இந்த இராஜமுத்திரையின் விளிம்பைச் சுற்றிலும் வட்டவடிவிலான அக்கால கிரந்த சமஸ்கிருத எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.இதன் துவக்க எழுத்து முத்திரையின் வெண்கொற்றக்குடைக்கு நேராக ஆரம்பிக்கிறது.     இந்த இராஜமுத்திரையில் உள்ள வாசகம் பின்வருமாறு உள்ள..,  ராஜத்ராஜந்ய மகுடஸ்ரேணி  ரத்னேஷீ ஸாஸனம் !  ஏதத் ராஜேந்த்ர  சோளஸ்ய  பரகேஸரி வர்மண ஹா!!  இதன்  அர்த்தம்:  இந்த சாசனம் ‘’மன்னனுக்கெல்லாம் மன்னாக விளங்க்கூடியவனின்  மணிமகுடத்தில் விளங்கி ஒளிவீசும் இரத்தினத்தைப்போன்றது.  இது பரகேசரி வர்மனாகிய இராஜேந்திர சோழனுடையது’’ என்பதாகும்.  []   பிறகு.., இம்முத்திரை நன்கு கவனிக்க வேண்டும்.இதன் உச்சியில் வெண்கொற்றக்கொடையும் அதன் இருபுறமும் வெண்சாமரை என்னும் கவரியுமுள்ளது.    அதனையடுத்து வரிசையாக ஒரு கோட்டின் மேல் அமைக்கபட்டுள்ளவை தண்டு ,உடைவாள்,இருபுறமும்  குத்துவிளக்குகள்,பின் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சோழர்களின் சின்னமான புலி.இதுக்கு எதிரில் இருப்பது இரண்டு மீன்கள் பாண்டியர்களின் சின்னமாகும்.இவையனைத்தும் வரிசையாக உள்ள கோட்டுக்கு கீழே தலைகீழாக அரைக்கோள வடிவில் சேரர்களின் வில் சின்னம் பொறிக்கப்பட்டு அதில்  5 உருவங்கள் பன்றி சாளுக்கியர்களின் சின்னம் , ஸ்வஸ்திக்-நண்டு , தாமரை , மத்தாளம் ,கண்ணாடி  ) இடம் பெற்றிருக்கும்.    இந்த இராஜமுத்திரையிலிருந்து பார் முழுதும் தனியாணை செலுத்திய இராஜேந்திரனின் தனிதன்மையை அறிந்துகொள்ளலாம்.  சாதனை-9:இராஜேந்திர சோழனின் மாபெரும் திருக்கோவிலும்,திருக்கோயிலும்:  பண்டித சோழன்,முடிகொண்ட சோழன் ,சோழேந்திரசிம்மன் ,கடாரம் கொண்டான் என பல்வேறு பட்டப்பெயர்களால் அழைக்கப்பட்ட இராஜேந்திரசோழன் வெற்றித்திருநகரே கங்கைகொண்டசோழபுரமாகும்.    []   இராஜேந்திரசோழனின் வெற்றித்திருநகர் கங்கைகொண்டசோழபுரம்.    கி.பி-1025 ஆம் ஆண்டு இராஜேந்திரசோழனின் 17 வது ஆட்சியாண்டில் இந்நகரம் புதியதாக தோற்றுவிக்கப்பட்டது.தஞ்சையை விட பெருமைமிக்கதாய் மற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு நினைத்த இராஜேந்திரன் இந்நகரை தன் தலைநகராக்கிக்கொண்டான்.மிகவும் சீரியமுறையில் திட்டமிடப்பட்டு, தேர்ந்தக்கட்டிடக்கலை வல்லுநர்களைக்கொண்டு ,இத்தலைநகரமும்,இதனை சேர்ந்த மாளிகைகளும் எழுப்பபட்டன என்ற செய்தியை இராஜேந்திரசோழனின் திருவாலங்காடு செப்பேடுகளாலும்,கல்வெட்டுகளாலும் அறியலாம்.    இத்தகைய சிறப்புடன் நிறுவப்பட்ட இராஜேந்திரசோழனின் கோவிலிருந்துதான் திக்கெட்டும் சென்று  வெற்றிகொண்டு வந்த தீர்த்தளபதிகளுக்கும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.அந்த மாளிகையிலிருந்து தான் பிறநாட்டு மன்னர்கள் பலரும் வந்து சிரம் தாழ்த்தி தங்களது திறையைசெலுத்திச் சென்றார்கள்.     []     மாமன்னன் இராஜேந்திரசோழன் திருமாளிகையின் அடித்தளங்கள்    இந்த  அரண்மனையில் உட்கார்ந்து தான் கருவூரார்,ஒட்டக்கூத்தர்,ஜெயங்கொண்டார்,கம்பர்,புகழேந்திப்புலவர்கள் எல்லாம் காவியம் பாடினார்கள்.இந்த  மாளிகையிலிருந்து தான் சோழஇளவரசி அம்பிகாபதியும், கம்பர் மகன் அமராவதியும் ஒருவரையொருவர் காதலித்து ஆடிப்பாடினார்கள்.இவ்வளவு மாபெரும் சிறப்புகளையெல்லாம் கொண்ட மங்கல மாளிகை தான் மாமன்னன் இராஜேந்திரன் திருமாளிகையாகும்.    ஏறத்தாழ 900 ஆண்டுகளுக்கு  முன்னர்வரை வரலாற்றில் புகழ்பெற்று  ,ஈடுஇணையற்று விளங்கிய இந்த  திருமாளிகை மிகப்பெரிய கோட்டை சுவர்களையும் திருமதில்களுடனும் விளங்கியது.    இந்த நகரங்களில தான் சோழக்கேரளன் திருமாளிகை என்று வீரராஜேந்திரன் காலத்தில் அழைக்கப்பட்டதும் , கங்கைகொண்டசோழன் திருமாளிகை என முதலாம் குலோத்துங்கன் காலத்தில் அழைக்கப்பட்டதுமான  மாபெரும் அரண்மைகள் இருந்து வந்தன.இம்மாபெரும் அரண்மனைகளைச்சுற்றிலும் இன்றைய நெடுஞ்சாலைகளைப்போல  பல முக்கிய நகரங்களை இணைக்கப் பெருவழிகள் அமைந்திருந்தன.              சாதனை-10:இராஜேந்திரசோழனின் மாபெரும் செப்பேடுகள்:  []   இராஜேந்திர சோழனின் புகழ்பெற்ற லெய்டென் செப்பேடுகள்  தஞ்சையில் முதன்முதலாக சோழப்பேரரசை நிறுவிய விஜயாலசோழன் முதற்கொண்டு,முதலாம் ஆதித்தசோழன்,இராஜராஜசோழன் ஆகிய மன்னர்கள் அனைவருமே தங்களுக்கென்று ஒன்று அல்லது இரண்டு செப்பேடுகளைத்தான் வெளியிட்டிருக்கிறார்கள்.ஆனால் மாமன்னன் இராஜேந்திரசோழன் ஒருவன் மட்டும் தான் இதுவரை அளவில் மிகப்பெரிய செப்பேடுகளை வெளியிட்டிருக்கிறான்.    இராஜேந்திரசோழன் செப்பேடுகளின் விவரம்:    1.திருவாலங்காடு செப்பேடுகள்  2.கரந்தை செப்பேடுகள்  3.திருக்களர் செப்பேடுகள்  4.ஆனைமங்கலம்  செப்பேடுகள்  5.எசாலம் செப்பேடுகள்    மேலுள்ள இந்த ஐந்து செப்பேடுகள் மூலமாகத்தான்  நம்மால் சோழர்களின் முழுவரலாற்றையும் வரிசைப்படுத்தி அறியமுடிகின்றது.இச்செப்பேடுகள் மட்டும் இல்லை எனில் உலகப்புகழ் கொண்ட சோழப்பேரரசர்களின் வரலாறு முற்றிலும் இவ்வுலகிற்கு தெரியாது போயிருக்கும்.சோழ வரலாற்றின் மாபெரும் சிறப்புகளும் இராஜேந்திரசோழன் வெளியிட்டுள்ள இந்த செப்பேடுகளால் தான் அறியமுடிகிறது.    கங்கைகொண்டசோழபுரத்தினைச் சுற்றிலும் மிகப்பெரிய அரண்மனைகளும்,பலத்தக் கோட்டைகளும் கட்டப்பட்டன.சோழகங்கமென்னும் மிகப்பெரியஏரி கட்டுமானம் மற்றும் மக்களின் தேவைக்காகப் பயன்படுத்தப் பட்டன.கி.பி.1026இல் ராஜேந்திரசோழன் தன்னுடைய பழையத் தலைநகரை தஞ்சையிலிருந்து புதிய தலைநகரான “கங்கைகொண்டசோழபுரத்திற்கு” மாற்றி மிக சீரும் சிறப்புடன் ஆட்சி செய்துவந்தார்.வடக்கே துங்கபத்திரை நதியும்,தெற்கில் இலங்கை வரையுள்ள சோழப்பேரரசுக்குஇராஜேந்திரசோழன் ஆட்சிக்காலத்திலிருந்தும் அவருக்கு பின் வந்த 16 சோழ மன்னர்களுக்கும் சுமார் 250 ஆண்டு காலம் கங்கைகொண்டசோழபுரமே தலைநகராக புலிக்கொடி கட்டிப் பறந்தது.    கி.பி.13ம் நூற்றாண்டில் சிறப்புபெற்றிருந்த பாண்டியன் சடையவர்மன் சுந்தரப்பாண்டியனின் (கி.பி.1126-12268) படையெடுப்பினால் இந்த வரலாற்று பழம் பெருமைவாய்ந்த நகரத்தின் சுற்றுப் பகுதியிலுள்ள    மதில்சுவர்களும், கோவிலின் வெளிசுற்று மதில்களும், அரண்மனைகளும் தகர்க்கப்பட்டன.அது மட்டுமின்றி ஆங்கிலேயரின் ஆட்சியில் திருவையாற்றிலுள்ள கொள்ளிடஆற்றுக்குப் பாலம் கட்ட கங்கைகொண்டசோழபுரத்துக் கோவிலின் உள் திருசுற்று மதில்களின் கற்கள் பயன்படுத்தப்பட்டது மிகவும் வருத்ததிற்குரியது.இதில் நமக்காக நமது முன்னோர்கள் கடின உழைப்பினாலும், பலமணிநேரம் செலவழித்து செதுக்கிய கிடைத்தற்கரிய கல்வெட்டுகள் எல்லாம் ஆற்றுப் பாலத்திற்க்கு தூணாக நின்று “பயனற்றுப்போனது”.இன்றும் அதன் எழுத்து வரிகளை அந்தப் பாலத்தின் கீழுள்ளத்தூண்களில் காணலாம்.   சடையவர்மன் சுந்தரப்பாண்டியனுக்குப்பின் வந்த மாறவர்மன் குலசேகரன்(1268-1310) மூன்றாம் இராஜேந்திரன் என்ற சோழ மன்னனை கி.பி-1279 ல்  தோற்க்கடித்தான்.சுமார் 450ஆண்டுகளாக புலிக்கொடிகட்டி பறந்த சோழ சாம்ராஜியத்திற்க்கு முற்றுப்புள்ளி வைத்தான் சுந்தரப்பாண்டியன் .மாளிகை மேடு என்னுமிடத்தில் மறைந்த தலைநகரின் எஞ்சிய அடிப்பகுதிகள் சிலவற்றை இன்றும் நாம் காணலாம்.    கங்கைகொண்ட சோழபுரத்திற்கு ஜெயங்கொண்டம்- கும்பகோணம் நெடுஞ்சாலை வழியே செல்லும் போது தென்கிழக்கிலுள்ள “மாளிகைமேடு”என்ற இடத்தில் இராஜேந்திரசோழன் அரண்மனையின் அடித்தள அஸ்திவார அடுக்குகள் மட்டுமே இன்று மிஞ்சியுள்ளன.இங்கிருந்து அகழ்ந்து எடுக்கப் பட்ட தொல்லியல் பொருட்கள் அனைத்தும் தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையினரால் மாளிகைமேட்டிலுள்ள “அருங்காட்சியகத்தில்” பொது மக்கள் பார்வைகாக வைக்கப்பட்டுள்ளது.    கங்கைகொண்ட சோழபுரத்தின் “கோ இல்” மறைந்த பின்னும் “கோவில்”மட்டும் அழியாது நின்று ராஜேந்திரசோழனின் பெருமையை நிலைநாட்டுகிறது. (கோ-அரசன்,மன்னன்; இல்-இல்லம்,வீடு.   அரசன் வாழ்ந்த வீடு,அரண்மனை)    கங்கைகொண்ட சோழபுரத்தின் புகழ்ப்பாடும் தமிழிலக்கியங்கள்: கங்கைகொண்ட சோழபுரத்தின் புகழ்ப்பாடும் தமிழிலக்கியங்களாக பற்பல உள்ளன.அவற்றுள் முக்கியமான சில இங்கு காணலாம்…  []     கருவூராரும் [இடபுறம்] ,மாமன்னன் இராஜராஜசோழனும்[வலப்புறம்]  (தஞ்சை இராஜராஜேஸ்வரம் ஓவியம்)  கருவூராரின் திருவிசைப்பாவில் கங்க கங்கைகொண்ட சோழபுரத்தின் புகழை கருவூரார் “முக்கண்ணா-நாற்பெருந்தடந்தோள் கன்னலே,தேனே,அமுதே, கங்கைகொண்ட சோழசுரத்தானே’’ என்று மிகஅருமையாக பாக்களால்  வர்ணித்துப்பாடியுள்ளார்.அப்பாடல் பின்வருமாறு……..        கங்கைகொண்ட சோழேச்சுரம்  திருசிற்றம்பலம்  அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட  அங்ஙனே பெரியநீ சிறிய  என்னை ஆள் விரும்பி என்மன்ம் புகுந்த          எளிமையை யென்றும் நான் மறக்கேன்  முன்னம்மாள் அறியா ஒருவனாம் இருவா…!  முக்கனா..! நாற்பெருந்தடந்தோட்  கன்னலே,தேனே,அமுதே,கங்கை  கொண்டசோ ளேச்சரத் தானே        செயங்கொண்டார் தன்னுடய கலிங்கத்துபரணியில்…,  கலிங்கத்துபரணி  ‘‘கங்காபுரி மதிற்புறத்து கருதார் சிறம்போய் மிகவீழ’’  - செயங்கொண்டார்.  என கங்கைகொண்ட சோழபுரத்தின் புகழைப்பாடுகிறார்.    ஒட்டக்கூத்தர் தன்னுடைய இராஜராஜசோழனுலாவிலும்,மூவருலாவிலும் இப்பெருநகரின் தோற்றம் பற்றி பாடியுள்ளார்….! இராஜராஜசோழனுலாப் பாடல் பின்வருமாறு…..!                          இராஜராஜசோழனுலா                      கோயிலுரிமைக் குழாம் நெருங்கி-வாயினும்                மாளிகையும் சாலையும் ஆலயமும் மண்டபமும்  சூளிகையும் எம்மருங்குந் தோரணமும் – சாளரமுந்             தெற்றியும் மாடமும்,ஆடரங்கும் செய்குன்றும்                     கற்றிய பாங்களும் தோன்றாமே……..   - ஒட்டக்கூத்தர்.    கங்கைகொண்ட சோழபுரத்தின் தனிச்சிறப்புகள்:   []     []         []     []       []     []       []     []        சோழர்கள்  கட்டிடக்கலையில் நிகழ்த்திய அதிசயங்கள் :   இராஜேந்திரசோழன் தன் தந்தையைப் போல ஒரு ஆழ்ந்த சிவ பக்தனாக இருந்தார்.தனது தந்தை அமைத்த  தஞ்சைப் பெரியக்கோவில் புகழுடன் விளங்கினாலும் தம் புதிய தலை நகருக்கு கங்கை பெருவெற்றியின் நினைவாக ஒரு சிவாலயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தினாலும்,சிவன் மீது கொண்ட போரன்பினாலும் உருவாக்கப்பட்டதே சங்ககாலத்தில்“-கங்காபுரி” என்றழைகப்பட்ட இன்றைய கங்கைகொண்ட சோழபுரமாகும்.  ஆகம விதிப்படி கோவிலமைத்த சோழர்கள்:  []   சோழர்கள்  கட்டிடக்கலையில் நிகழ்த்திய அதிசயங்கள்   [ ஆகம  கட்டிடக்கலையியல்  நூலில் கூறப்படும் ஆண்வடிவம் (லிங்கா) என்றும் ,பெண் வடிவம் (ஜிங்கா) என இரண்டையும் தாங்கள் கட்டியகோவிலின் மூலம் உயிர்ப்பித்துள்ளார்கள் ]    தஞ்சையில் இராஜராஜசோழன் அமைத்த இராஜராஜேஸ்வரம்  வீரஆண் மகனுக்குள்ள கம்பீர மிடுக்குடன் காணப்படும் அதற்கு சோடியாக  அடக்கத்துடன் காட்சியளிக்கும் பெண் நலினத்துடன் கூடிய கங்கைகொண்டசோழீஸ்வரக்கோவிலை இராஜேந்திரசோழன்  விஷ்ணுபுரத்தில்(அரியலூரில்) அமைத்தான்.    தந்தையும் தமையனும்  ஆகம நூலில் கூறப்பட்டுள்ள கட்டிடக்கலைக்கு முழுவடிவம் கொடுத்துள்ள அதிசயம் சோழ நாட்டில் மட்டுமே இன்றும் நிலைத்திருக்கும் அபூர்வமாகும்.    1.திருவிமானம் ,அகமண்டபம்,முகமண்டபம்,அம்மன் கோவில்,திருசுற்று மாளிகை ,திருமதில்,கோபுரங்கள் முதலிய அம்சங்கள் யாவும் “ஒரே மன்னராட்சி காலத்தில்”கட்டப்பட்ட சிறப்பைக் கொண்டது “கங்கைகொண்ட சோழபுர சிவாலயம்” மட்டுமே…!    2.கோவில் கட்டடப்பகுதிகள் யாவும் “கிரானைட்கல்லினால்” ஆனவை.போக்குவரத்து வசதி ஏதுமற்றக்காலத்தில் கி.பி.11ம் நூற்றாண்டில் வெகுத்தொலைவிலிருந்து பல டன் எடைக்கொண்ட கருங்கற்களைக் கொண்டுவந்து ஒரு மாபெரும் கற்றளியை “கங்கைகொண்ட சோழபுரத்தில்” எழுப்பிய அசுர சாதனையை யாரலும் பாராட்டாமல் இருக்க முடியாது.     3. கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயமும்,தஞ்சாவூரிலுள்ள சிவாலயமும் கட்டிட மற்றும் சிற்பக்கலையில் பல அம்சங்களில் ஒன்று போலிருக்கின்றன. கங்கைகொண்ட சோழபுரக் கோவில் தஞ்சை பெரியக்கோவிலைப் உயரமான “அதிட்டானமேடையில்” ஏற்றி கட்டப்பட்டுள்ளது.இருந்தாலும் இக்கோவில்“அதிட்டானமேடையின் வடிவமைப்பு” கட்டிடக்கலையில் தஞ்சை பெரியக்கோவிலை விஞ்சும் அளவிலுள்ளது.ஆனால் தஞ்சைப்பெரியக்கோவிலின் அடித்தளம் கண்டுபிடிக்க முடியாதப் புதிராக உள்ளது.    4.தஞ்சைப் பெரியக் கோவிலைப் போல் “கங்ககைக்கொண்டசோழபுரக் கோவிலும் சிறப்புமிக்க விமானத்தைப் பெற்றுள்ளது. தஞ்சைப் பெரியக் கோவில் விமானத்தைப் போல் இவ்விமானமும் கவர்ச்சி மிக்கது.மூலவருக்கு மேலுள்ள விமானத்தின் கட்டுக்கோப்பு தஞ்சைப் பெரியக் கோவிலைப் போல் அடிமுதல் ஸ்தூபிவரை  கிரானைட்கற்ககளால் ஆனது.ஆனால், தஞ்சைப் பெரியக் கோவில் விமானத்தை விட உயரத்தில் குறைவாக உள்ளது.   தஞ்சைப் பெரியக் கோவில் விமானத்தின் உயரம் -61மீ,கங்கைகொண்ட சோழபுரத்த்து சிவால விமானத்தின் உயரம்-55மீ. தஞ்சைப் பெரியக் கோவிலைப் போல் இக்கோவிலின் அடிமுதல் ஸ்தூபிவரை சிற்பங்கள் மிகுந்த வனப்புடன் காட்சியளிக்கின்றன.விமானத்தின் மீதுள்ள பிரமமந்திரக்கல் தஞ்சைப் பெரியக் கோவிலைப் போல் ஒரே கல்லிலால் ஆனது.இது உடையார்பாளையத்திற்க்கு அருகிலுள்ள “பரணம்” என்ற கிராமத்திலிருந்து சாரம்-சாய்தளம் அமைத்து ஏற்றப்பட்டது.    5.விமானத்தின் சுவர்களிலுள்ள தேவ கோட்டங்களில் உயிர்ச்சிற்பங்களாக காட்சியளிக்கும் பல தெ ய் வ ங் க ளி ன்  சி ற் ப ங் க ள்   உ ள் ளன.  தெற்க்கு சுவற்றிலுள்ள நர்த்தன வினாயகர்,அர்த்தநாரீஸ்வரர்,தஷிணாமூர்த்தி,ஹரிஹரன்,நடராஜர் ஆகிய திருவுருவங்கள் குறிப்பிடத்தக்கவை. மேற்க்குச் சுவற்றிலுள்ள கங்காதரர்,லிங்கோத்பவர்,உபய தேவிகளுடன் கூடிய திருமால், தேவேந்திரன், உமாமகேஸ்வரர் ஆகிய திருவுருவங்கள் உள்ளன.வடக்கு சுவற்றில்காலசம்காரர்,விஷ்ணு,துர்க்கை,பிரம்மன்,பைரவர்,காமதகனமூர்த்தி(தட்சணாமூர்த்தி)ஆகிய திருவுருவங்கள் குறிப்பிடத்தக்கவை.கிழக்குச் சுவற்றில் சண்டேச அனுக்கிரக மூரத்தி,ஞான சரஸ்வதி ,பிஷாடனர்,கஜலட்சுமி ஆகிய திருவுருவங்கள் குறிப்பிடத்தக்கவை.  [] []     மெய்மற்க்கச் செய்யும் இச்சிற்பங்கள் யாவிலும் சோழர்காலச் சிற்பிகளின்  தனித்திறமை பல்லவசிற்பிகளைவிட ஒரு படிமின்னுவது பளிச்சென்றுத்தெரியும்.இந்து சமய வரலாற்றை பிரதிபலிக்கும் வண்ணமாக  “சண்டேச அனுக்கிரக மூர்த்தியின்”சிற்பம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.    6.துவாரபாலகர்கள்:  []    இக்கோவிலின் மற்றொரு சிறப்புமிக்க அம்சமாகக் கருதப் படுகிறது.கிழக்கு,தெற்க்கு,வடக்கு வாயில்கள் என மொத்தம்  10  துவாரபாலகர்களின் சிற்பங்கள் உள்ளன.இவை சுமார் 4மீ(18அடி) உயரமுள்ளன வாயிற்காவல கம்பீரசிலைகளாகத் தோற்றமளிக்கினறன.    7. ஒரே பீடத்தினாலான நவகிரகச்சிலைகள்:  []                 சூரியனை மையமாக கொண்ட 8 கிரகங்களின் சிற்பதொகுதி     கோவிலின் வாயிலையடுத்து வலபுறத்திலுள்ள நவகிரகச்சிலைகள் ஒரே கல்லில்செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலிலுள்ள நவகிரகச்சிலைகள் போல இந்தியாவிலே வேறு எங்கும் இல்லை என்பதும், நவகிரக மகாமண்டபத்தில் நவகிரகச்சிலைகளுடன் மேலும் பல அரிய சிற்பங்கள் அமைந்துள்ளது தனிசிறப்பு மிக்கதாகும்.    கருவரைக்கு அதிசயம் ( சூரியஒளி அமைப்பு) :    8.கர்ப்பகிரகத்திலுள்ள லிங்கம் இக்கோவிலின் மிக முக்கியமான அம்சமாகும்.மூலவர் லிங்கம் 13.5 அடி உயரத்துடன் கூடிய மிகப்பிரம்மாண்ட வடிவிலுள்ளது.பகலில் எவ்வித மின்சார விளக்குகள் இல்லாத சூழ்நிலையில் கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது மட்டும் சூரிய ஒளிபிரதிபலிக்கும்படி வினோதமாகவுள்ளது. []     இது எப்படி சாத்தியமாகிறது என்றால்…? கோவிலின் முன்புறம் சுதையால் செய்யப்பட்ட  நந்தியினுடைய நெற்றியின் உச்சி வெயில்படும்.அப்போது நந்தியின் நெற்றியில் விழுந்த உச்சி வெயில் அதிலிருந்து 90டிகிரி  நேராக கருவரையிலுள்ள பிரம்மாண்ட லிங்கத்தின் நெற்றியிலுள்ள பட்டையில் பட்டு வெளிச்சம் தரும்.    9.இக்கோவிலிலுள்ள செப்புத்திருமேனிகள் மிகவும் சிறப்பு மிக்கனவாகும்,இவற்றுள் சோமாஸ்கந்தர் சிலையும்,சுப்பிரமணியரது சிலையும்  “சோழர்களின் வார்ப்பு திறனுக்கு”சான்றாகவுள்ளன.          [] [] []       இராஜேந்திரசோழன் காலத்து செப்புதிருமேனிகள்  (இடமிருந்து வலமாக) 1.சுப்பிரமணியன், 2.பிட்சாடனார்,3.கண்னப்ப நாயனார்    கங்கைகொண்டசோழபுரத்தின் சிம்மகேணி []   கங்கைகொண்டசோழபுர  சிங்கமுகக் கிணறு  - சிம்மகேணி    சிங்கமுகக் கிணறு  இக்கோவிலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இராஜேந்திரசோழன் ஆட்சிக்காலத்தில் உடையார்பாளையம் நிலக்கிழாரால் கட்டப்பட்ட இந்த சிங்கமுகக் கிணறு  இன்றும் பயன்பாட்டிலுள்ளது. இராஜேந்திரசோழன் தனது கங்கை பெருவெற்றியின் நினைவாகத்தான் “கங்கைகொண்டசோழபுரத்தை”கட்டி இக்கோவிலிலுள்ள பிரம்மாண்ட லிங்கத்திற்குகங்கை  நதியிலுள்ள நீரை 1000 பொற்குடங்களில் யானையின் மீது கொண்டுவந்துஅபிஷேகம் செய்தான். பிரம்மாண்ட லிங்கத்திற்க்கு அபிஷேகம் செய்த கங்கை நீரைஇந்தக்கிணற்றிலும்,தான் வெட்டிய மாபெரும் ஏரியான “சோழகங்கம்” என்ற ஏரியிலும் ஊற்றினான்.    10..இக்கோவிலின் வாயிலில்  இராஜேந்திரசோழன் காலத்திலமைத்த கோபுரம் இன்று பாதிமட்டுமே சிரமைக்கப்பட்டு காணப்படுகிறது.  []   இருந்து .., இல்லாது போன… கங்கைகொண்டசோழீஸ்வரம்கோவிலின்- -- “இராஜேந்திரசோழன் நுழைவுவாயில்”    []   சீரமைப்பிற்கு முன்னர்                                               []   சீரமைப்பிற்கு பின்னர்  1836ல் ஆங்கிலேயரின் ஆட்சியில் திருவையாற்றிலுள்ள கொள்ளிட ஆற்றுக்குப் பாலம் கட்ட கங்கைகொண்டசோழபுரத்துக் கோவிலின் நுழைவாயில்,முன்மண்டபங்கள் மற்றும் உள் திருசுற்று மதில்களின் கற்கள் பயன்படுத்தப்பட்டது.கங்கைகொண்டசோழபுரத்துக் கோவில் 1000ஆண்டுகளுக்கு முன்.., நவீன வசதியின்றி வாழ்ந்த தமிழர்களின் பண்பாட்டினை உலகிற்கு  உணர்த்தும்   ஒர் உன்னதச்சின்னமாகும்.       []   இராஜேந்திரசோழன் நம் நாட்டுக்குவிட்டு சென்ற மரபுரிமை சொத்து      11.இக்கோவில் இராஜேந்திரசோழன் நமக்குவிட்டுசென்ற தலைசிறந்த தமிழக மரபுரிமைச் சின்னமாகும்.தமிழக,இந்திய வரலாற்றில் மட்டுமின்றி தென்கிழக்கு ஆசியா வரலாற்றின் “பொற்காலம்”எனப் போற்றத்தக்கவகையில் ஆட்சிசெய்த பேரரசுச்சோழர்களான இராஜராஜசோழனையும் அவரது மகன் இராஜேந்திரசோழனையும் பெற்ற பெருமை நம் தமிழகத்திற்குமட்டுமே உள்ள தனிச் சிறப்பாகும். .      இராஜேந்திரசோழன் மற்றும் அவன் தேவியின் இறப்பு:  கடாரப்படையெடுப்பிற்குப்பின்னர் இராஜேந்திரசோழனின் ஆட்சிகாலம் எவ்வித போர்களுமற்ற அமைதியான காலமாவே இருந்தது. இராஜேந்திரசோழனின் இறுதி காலத்தில் அண்டை நாடுகளில் ஏற்பட்ட கலகங்களை இராஜேந்திரனின் மகன் இராஜாதிராஜன் வீறுகொண்டு அடக்கினான்.   தன்னுடைய முடியாத காலத்திலும் ,அண்டை நாடுகளில் எழுந்த கலகங்களை தன் மகன் அடக்க  இராஜாதிராஜன் வீறுகொண்டு அடக்கியபோதிலும் இராஜேந்திரன் மகிழ்ச்சி பெறவில்லை.   உடல் பலவீனப்பட்டாலும் தன் மக்கள் அரசியல் நிலைகளைப்பார்வையிடுவதிலும் , இறைவழிபாடு செய்வதிலும் , புதிதாக சோழநாட்டுடன் இணைக்கப்பட்ட நாடுகளை கண்கானிப்பதிலும் நாட்டம் கொண்டவனாகவே இருந்தான்.  []   இராஜேந்திரசோழன் திருவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்  [ இடம் --  திருவண்ணாமலை பிரம்மதேசம் ]  இராஜேந்திரசோழன் தன்னுடைய 84 ஆம் வயதில் (கி.பி-1044)ஆம் ஆண்டு இன்றைக்கு திருவண்ணாமயில் உள்ள பிரம்மதேசம் என்றழக்கப்படும் ஊரில் உள்ள மாபெரும் அரண்மனையில் தங்கியிருந்த காலத்தில் உடல் நிலை மிகவும் பலவீனமடைந்து இப்பூவுலகை விட்டு மறைந்தான்.  இவனது திருவுடல் பிரம்மதேசத்திலுள்ள சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது .    இராஜேந்திரசோழன் இறந்தபோது அவனது தேவி வீரமாதேவியும் உடன்கட்டை  ஏறி வீரமரணமடைந்தாள்.இவ்விருவர் உயிர்களின் நீர்வேட்கை தணியும் பொருட்டு வீரமாதேவியின் தம்பியும் ,சேனாதிபதியுமான மதுராந்தகன் பரகேசரி நீர்பந்தல் அமைத்தான் என்று ‘இக்கோவிலிலுள்ள கல்வெட்டுகள்’கூறுகின்றன.      தமிழ்நாட்டு மண்ணிலே பிறந்து …..!கன்னி தமிழை சோழநாட்டில் வளர்த்து….!!வட மொழிகளையும் ஆதரித்து….!!! வட நாட்டினர்களின் கொட்டத்தையடக்கி …..,கடல் கடந்தும் தமிழரின் வீரத்தையும் , தமிழ் மொழியின் கலாச்சாரத்தையும் பரப்பிய ஆற்றல் மிக்க பண்டிதசோழனின் சாதனைகள் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.    []   இராஜேந்திரசோழனுடைய சிற்பம்    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்        பெருமை உடைத்திவ் வுலகு.    காலவெள்ளத்தாலும் அழிக்க வொண்ணாப்புகழினைத் தமிழக வரலாற்றுகல்வெட்டுகளில் பதித்துவிட்டுத் தமிழர்களின் மனங்களில் மாசற்றப்பொன்னாய் ஒளிவீசிக்கொண்டிருக்கும் மாமன்னன் பரகேசரி இராஜேந்திர சோழனின் புகழ் வாழ்க…!  இராஜேந்திரசோழனின் பொன்னுடல் மறைந்தாலும், புகழுடல் மறையாது என்பதை அரியலூர் மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டசோழீஸ்வரம் இன்றளவும் உணர்த்திக்கொண்டுள்ளது.          சோழர்களால் மட்டும் எப்படி கடல்கடந்து பலநாடுகளை வெற்றிகொள்ள முடிந்தது….?   1)சோழர்களிடம் மட்டும் தான் “யானைகளை ஏற்றிசென்று போரிடும் அளவிற்கு மிகப்பெரிய போர்க்கப்பல்கள்” இருந்தன    2)அப்படிப்பட்ட கப்பல்கள் கட்டுமானம் செய்யப்பட்ட இடம் காவேரிப்பூம்பட்டினம்(இன்றைய பூம்புகார்). கப்பல்கள் கட்டுமானத்தில் முன்னோடியாக விளங்கியவர்கள் சோழநாட்டினரே…!     3)கப்பற்படையை முதல்முதலாக நிறுவியவர்கள் சோழர்களே…..!                அறிவியல் நோக்கில் ………., ‘‘கங்கைகொண்டசோழபுரம்’’  []   சுண்ணாம்பு சுதையினாலான கங்கைகொண்டசோழபுரத்து நந்தி  இக்கோவிலின் கருவரையிலிருந்து 200மீ தொலைவில்.. முன்புறம் கருவரையை நோக்கியவாறு அமைந்துள்ள சுண்ணாம்பு சுதையினாற் செய்யப்பட்ட நந்தியின் நெற்றியிலிருந்து தினமும் பிரகாசமான சூரியஒளி கங்கைகொண்டசோழீஸ்வரர்க்கு செல்லும்படியாக கோவிலின் கட்டுமானம்  அமைக்கப்பட்டுள்ளது.    கருவரையின் உள்புறம் கிடைத்தற்கரிய ‘’சந்திர காந்தக்கல்’’ சோழ காலச்சிற்பிகளால் அமைக்கப்பட்டுள்ளது.இக்கல்லின் சிறப்பம்சம் என்ன்னவென்றால்…, கோடை காலங்களில் கருவரையை குளிர்ச்சியாகவும்…, குளிகாலங்களில் (மழைக்காலங்களிலும் கூட) கருவரையை வெதுவெதுப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றது.   இந்த இரண்டு விஷயங்களும்  பிற்க்காலச்சோழர்கள் அறிவியல் துறையில் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்தவர்கள் என்பதற்கு அழியாச்சான்றாக  இன்றும் விளங்குகின்றது.                      இந்நூலின் அடுத்தப் பகுதியில் மாமன்னன் இராஜராஜசோழன் செய்த புதுமைகளையும், சாதனைகளையும் காணலாம்.)    உசாத்துணை நூல்கள்:   1. குமரி முதல் இமயம்வரை  2.உலக மகா சக்கரவர்த்தி -இராஜேந்திரசோழன்  3.கங்கைகொண்டசோழபுரம்-விக்கிபீடியா  4.சோழர் வரலாறு  5.கலிங்கத்துப்பரணி  6.இராஜராஜசோழனுலா  7.திருவிசைப்பா