[] [] வடுக்களின் வரலாறு     தொகுப்பாசிரியர் : பாம்பன் மு.பிரசாந்த்  தொடர்புக்கு: prasanthraman30@gmail.com    மின்னூல் வெளியீடு : freetamilebooks.com    உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0    கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.    மின்னூலாக்கம் - சீ.ராஜேஸ்வரி - sraji.me@gmail.com    அணிந்துரை திரு.கார்த்திகேயன் இமயவரம்பன் திருக்குறள் உணவகம், அடையாறு.   `கவிப்போம்`, இந்த சொல்லின் வழி கவிதை சுவாசிக்கும் கவிஞர்கள் ஏராளம். கவிஞர்களுக்கு ஒரு பரந்த, சுதந்திரமான, படைப்புத் தளத்தை உருவாக்கும் முயற்சியாகத் தான் `கவிப்போம்` என்கிற கவிதைக் குழு உருவாக்கப்பட்டது. 2015 முதல் இயங்கி வரும் இந்தக்குழு பல நல்ல கவிஞர்களை இனம் கண்டு தளம் அமைத்துத் தந்திருக்கிறது. ஒரு முகநூல் குழுவாக இயங்கி வரும் இந்த கவிஞர் குழாம், அளப்பரிய பல கவிதை முயற்சிகளைச் செய்து வருகிறது. மாதாந்திர கவிதைக் கூட்டம், வகுப்பறை நிகழ்வு என்கிற வகையில் கவிஞர்களின் சந்திப்புகளும் நடந்து வருகிறது. தமிழ், கவிதை, இசை, இளைஞர், சமூகம் என்கிற புள்ளிகளை இணைக்கும் முயற்சியைக் கவிப்போம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. எந்தவொரு முன்னெடுப்பும் அதன் விளைபொருளைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. கவிஞரின் விளைபொருள் கவிதை. ஆனால் ஒவ்வொரு சிறந்த கவிதையின் விளைபொருள் அதனை வடித்த கவிஞன் மட்டுமே. அவன் இந்த சமூகத்தின் நரம்புகளைச் சொடுக்கி ஏதோவொரு மாற்றத்தை தூண்டிக்கொண்டே இருப்பான். சொல்லின் வழி, செயலின் வழி. அப்படியான சில கவிஞர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு சிறு முயற்சிதான் இந்த நூல். குழுவினரின் படைப்புகளை மின் நூல்களாக மாற்றி பதிப்புச்செய்யும் எண்ணம் வந்தவுடன், அதற்கு செயல்வடிவம் தரும் முழு பொறுப்பையும் தன் சிரமேற்கொண்டு இந்தப் புத்தகத்தை வடிவமைத்து, கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து ஒரு சிறந்த படைப்பாக உங்கள் கண்களுக்கு கொண்டு வந்திருக்கும் அத்துனை பெருமையும் செல்வன். பாம்பன். மு. பிரசாந்த் ஐயே சாரும். கவிப்போம் குழுவில் இப்படிப்பட்ட ஆக்க எண்ணம் கொண்ட தம்பிகள் ஏராளம் என்பதற்கு பாம்பன் ஒரு பருக்கை உதாரணம். கவிஞர்களின் படைப்புகள் அனைத்தும் தனித்தன்மை வாய்ந்த்து. இந்த தொகுப்பில் இடம்பெறும் ஒவ்வொரு கவிதையும் நாம் மறந்த ஏதோவொரு சமூக அவலத்தை நம் கண்முன் கொண்டு வரும் என்பது மறுக்க முடியாத உண்மை. கவிதைகளின் வாயிலாக உணர்வேற்றிய கவிஞர்களுக்கு குழுவினரின் நன்றியும், பாராட்டுக்களும். இந்த நூல் படைப்புகளைக் கொண்டு சேர்க்கிற முயற்சியில் ஒரு படிக்கல் மட்டுமே. அன்றி எந்த இலாப நோக்கத்தோடும் பதிவாக்கப்படவில்லை. வளைதலங்களில் இலவசமாகக் கிடைக்கத் தேவையான அத்துனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கவிதைகள் கவிஞர்களின் ஒப்புதலோடு இணைக்கப்பட்டுள்ளன. பேசுகிற சொல்லை விட, எழுத்து சக்தி வாய்ந்த்து. காலங்களைக் கடந்து நிற்கும். அதனினும் கவிதைகளின் ஆற்றல் மிகை, அவை உள்ளங்களில் ஏதோவொரு விதையை விட்டு செல்லும் என்பதை நம்புபவன் நான். இந்தப் புத்தகத்தில் வரும் ஏதாவதொரு கவிதை அப்படியொரு விதையை உங்களில் விட்டுச் செல்லுமெனில், அது `கவிப்போம்` என்கிற குழுவின் எண்ணத்திற்குக் கிடைத்த ஆக்ச்சிறந்த வெற்றியாக அமையும். தொடர்ந்து கவிப்போம் மின்புத்தகங்களை வாசித்து பின்னூட்டம் தருவதன் மூலம் நீங்களும் இந்த கவிதைப் பயணத்தில் ஒரு அங்கமாக மாறலாம். வாருங்கள் கவிப்போம்..! For info: https://www.facebook.com/groups/182031845934439/ or www.kavippom.com  For Feedbacks/Suggestions: admin@kavippom.com / 9710849500                              தொகுப்புரை   பாம்பன் மு.பிரசாந்த் இராமேஸ்வரம் தொகுத்தவன் பேசுகிறேன், வணக்கம். தற்காலக் கவிதைத் தளங்களில் நான் பார்த்த வரையில் முற்றுமுழுதாக மாறுபட்ட கோணத்து சிந்தனையுடன் பயணிக்கும் ஒரே கவிதைக் குழுமம் ‘கவிப்போம்’ மட்டுமே. வழக்கம்போல் வெறுமனே கவியரங்கங்களோடு நின்றுபோகாமல் கவிதையில் புதுப்புது பரிமாணங்களை உருவாக்கியும், அவற்றை உலகுக்கு பரப்பியும் வருகிற கூட்டம் என்ற முறையில் கவிப்போம் கொஞ்சம் வித்தியாசமான தளமே.    கவிப்போமுக்கும் எனக்கும் நீண்ட நெடியகால இணக்கம் என்றேதும் இல்லை என்றாலும் கூட பரஸ்பரமாக எனக்கு கவிப்போம் தந்த உறவுகள் அதிகம். மிகக் குறுகிய கால இடைவெளியில் உயிருக்கு அணுக்கமாக மாறியிருக்கிறது கவிப்போம். முகநூல் குழுமங்களில் கவிதை எழுத வைப்பது என்பதொன்றும் கவிப்போமின் புதிய திட்டம் கிடையாது. ஆனால் தொடர்ந்து எழுதவும் இன்னும் சிறப்பாக சிந்திக்கவும் ஏனைய கவிஞர்களின் கவிதைகளோடு வாசகப்பார்வையில் தன் கவிதைகளை ஒப்பிட்டு பார்க்கவும் அவற்றை ஒரே தொகுப்பாக்கி வெளியிடுதல் என்கிற திட்டத்தை கையிலெடுத்திருக்கிறது இந்தக் கவிப்போம் குழு. வடுக்களின் வரலாறு என்கிற பொது தலைப்பின் கீழ், மனித குலம் போராடி பின்  மறந்துபோன  பிரச்சினைகளை நினைவூட்டும் விதமாகக் கவிதைகள் எழுதலாம் என்றொரு அறிவிப்பு வந்ததும், கவிப்போம் கவிஞர்கள் கவித்துக் குவித்த கவிதைகளின் தொகுப்புதான் இந்த நூல். கண்ணியமான முறையில் கையாளப்பட்டிருக்கின்றன பிரச்சினைகள். வெறுமனே வார்த்தைகளால் ஜாலம் காட்டுதல் என்றில்லாமல் வாசகனின் உணர்ச்சி நிலையைத் தொட்டுப்பார்க்கும் திறமுடைய கவிதைகள் இந்தத் தொகுப்பில் ஏராளம்.  உங்கள் வாழ்த்துக்களுடன் தொடர்ந்து அடுத்தடுத்த தொகுப்புகளையும் வெளியிட காத்திருக்கிறது கவிப்போம். வாழ்த்தோ வசையோ எதுவாயினும் வளர்ச்சிப்பாதைக்கே என்பதால் உங்கள் மறுமொழிகளை அனுப்புங்கள். நன்றி.     படிப்போம்.................... .....படைப்போம்..... .......................கவிப்போம்     - தொகுப்பாசிரியன் 7299585174                                           பொருளடக்கம் அணிந்துரை 3  தொகுப்புரை 4  1 செல்லமுத்து இறப்பு வழக்கு 6  2 சிரியாவா? ஸ்ரீதேவியா? 8  3 அம்மா 10  4 ஸ்டெர்லைட் வழக்கு 11  5 திருநெல்வேலி தீக்குளிப்பு 12  6செங்கை சீற்றம் 13  7மண்மூடிய மேட்டில் கூவும் சேவல் 15  8 ஸ்டெர்லைட் 17  9 புறப்படு_தமிழா...! 18  10 அனிதா 20  11 விடைதேடும் விசும்பல் 21  12 வெட்டியெறியப்பட்ட மொட்டு 23  13 சாதிக்கு_பேதி கொடுப்போம் 25  14 கேட்டீரா கேவலத்தை 29  15 வடுக்களின்_வரலாறு_அனிதா 31  16அப்பாவி வாக்காளன் 32  17அரியலூர் அனிதா 34  18 டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் 35  19கோகுல கிருஷ்ணன் மறைவு 38  FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி 39                      1 செல்லமுத்து இறப்பு வழக்கு - கவிஞர் அரவிந்த் அர்வி   செல்லமுத்து இறந்துபோய் அன்றோடு ஐந்து நாட்களாகின அழுகிய பிணவாடையில் மூக்கை பொத்திக்கொண்டே செல்லமுத்துவின் சக இந்து சக தமிழன் சக இந்தியன் சக மனிதன் சக உயிர் சுடுகாட்டு யாத்திரைக்கு தடை சொல்கின்றான் ! சேரி வாசிக்கு வாழும்போது செருப்புக்கூட ஆண்டைத் தெருவில் அணிந்துவர அவனுக்கு உரிமையில்லை.   செத்த பின்பு பூமாலை தோரணமும் பாடை பல்லக்கில் ஊர்வலம் வரத்தான் அனுமதி கிடைக்குமோ !   எறும்புண்ண மாக்கோலமும் காக்கைக்கு படையலும் மாட்டுக்கு பண்டிகையும் நாய்க்கு நடுவீட்டிலும் இங்கெப்போதும் இடமிருக்கும்.. மனிதரை மனிதர் அண்டுதல் மட்டும் விலக்காகியிருக்கும் !   செல்லமுத்துவின் உடலில் புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தபோது வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. பாடையில் பிணத்தோடே வழக்காடி வென்று பொதுப்பாதையில் சுடுகாட்டு யாத்திரைக்கு உரிமையும் கிடைத்தது. சாதி வெறிகொண்ட சீழ்பிடித்த தலைகள் நீதிக்கு மட்டும் தலை வணங்கிடுமா ? சட்டத்தை மறுத்து பொதுப்பாதையில் செல்லவிடாமல் வெறியர்கள் நிகழ்த்தியது பிணமறியல் ! ஆதிக்கத்திற்கு அடிபணிந்த காக்கிகளும் புதுப்பாதை அமைத்து செல்லமுத்துவையும் செத்துப்போயிருந்த நீதியையும் ஒருசேர புதைத்தனர்.. ! மறக்காமல் ஒவ்வொரு அமாவாசைக்கும் மொட்டைமாடியில் காகங்களுக்கு படைத்தசோறு பரிமாறப்பட்டது ! - அரவிந்த் _x_x_x_x_x_x_x_x_x நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் திருநாள்கொண்டச்சேரி என்னும் கிராமத்தில் சனவரி 3,2016ல் செல்லமுத்து என்கிற தலித் முதியவரொருவர் மரணமெய்தினார்.அவ்வூரில் தலித்துகள் பயன்படுத்தும் சுடுகாட்டு பாதை பயன்பாட்டுக்கு இல்லாததால் வழுவூரில் உள்ள பொதுப்பாதையை பயன்படுத்த செல்லமுத்து குடும்பத்தினர் விரும்பினர். வழுவூர்காரர்கள் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து,செல்லமுத்துவின் பேரன் நீதிமன்றத்தை நாடி,நீதி கிடைத்து,ஆதிக்கசாதிக்காரர்கள் தீர்ப்பை புறக்கணித்து,காவல்துறை சட்டத்தை மீறி புது பாதையை உண்டாக்கி செல்லமுத்துவை அடக்கம் செய்தனர். செல்லமுத்துவின் குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றனர். நீதிக்கு போராடிய தலித்துகள் காவல்துறையால் தாக்கப்பட்டார்கள். தடியடி நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான தலித்துகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. []                           2  சிரியாவா? ஸ்ரீதேவியா? - கவிஞர் மணிமாறன் #வடுக்களின்_வரலாறு_சிரியா   (சிரியா நாட்டில் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அதை ஊடகங்கள் ஊதாசினப்படுத்திவிட்டு அந்த நேரத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை மிகைப்படுத்தி ஒளிப்பரப்பியபோது எழுதியது.                                                                   நாள் :25/2/2018) ----------------------------------------- சிரியா, நீ சீரிய நாடுதானே! ஏன் இப்படி கொலைவெறியோடு திரிகிறாய்? சிறிய நாடென்று சிரியாவை நினைத்து  பெரிய நாடுகள் போர்த்தொடுக்காமல்  விட்டதன் விளைவோ இக்கொலைகள்? சிரித்துக் கொண்டிருந்த சிறார்கள் மீது சீறீப்பாய்ந்தன தோட்டாக்கள்! பால்மனம் மாறாத பிஞ்சுகள் மீது....  பதம் பார்த்தன குண்டுகள்! மாச்சரியம் அறியாத மழலைகள் மீது  ஏறி மிதித்தன பூட்ஸ் கால்கள்! சிரியா, நீ சிறிய நாடுதான்! ஆனால் சிறார்களைக்கண்டாலே ஏன் இரத்த வெறிபிடித்து அலைகிறாய்.? ஸ்ரீதேவி இறந்த செய்தியை  இருபத்தி நான்குமணி நேரமும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கும் ஊடக உடும்புகள், சிரிய சிறுவர்களின் படுகொலையை பெரிது படுத்தாமல் புறம் தள்ளுவது ஏன்?  ஒளிபரப்பினால் ஒன்றும் பெரிதாக தேறாது என்பதால் ஓரவஞ்சனையா.? நாளைக்கு நமக்கும் இதுபோல் ஒரு நிலைமை வந்தால்  வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க எத்தனிப்போமா.? [] இறந்துபோன ஸ்ரீதேவிக்காக இந்திய தேசமே கண்ணீர் விடட்டும். இறந்துபோன சிரிய சிறார்களுக்காக கவிஞர்களே நாமாவது கண்ணீர் விடுவோம். அவரவர் கண்ணீர் கவிதைகள் மூலம்.       3 அம்மா - கவிஞர் மணிமாறன்     #வடுக்களின்_வரலாறு_உயிர்த்திசை  (அம்மாவுடன் எனது பால்யகால நினைவுகள்) ******************************************* உன் முந்தானையில் முடித்து வைத்திருக்கும் மூன்று பைசாவை நீ முடிச்சவிழ்ப்பதற்காக உன்னை முப்பது முறை  சுற்றிச்சுற்றி வருவேன் ‘முருகம்மா’ ஆயா சுடும் முறுக்கு வாங்கித் தின்பதற்காக! ****** உன் இடுப்புபாவாடையின் மேல்நாடா ஓரத்தில் நீ சுருட்டி மறைத்து வைத்திருக்கும் ஐம்பது பைசாவை அடம் பிடித்து அழுது புரண்டு வாங்கிச்செல்வேன் ஆப்பக்கடை  அங்கம்மாளிடம்  ஆப்பம் வாங்கி விழுங்குவதற்காக! ****** நம் வீட்டிற்கு அருகிலுள்ள ஜெயராஜ் டாக்கீஸில் மாதம் ஒரு படமாவது பார்த்துவிட வேண்டும் எனக்கு! அதற்காக அப்பாவின் அனுமதியின்றி அவரது சட்டைப் பையிலிருந்து ஒத்தரூபாய் எடுத்து தருவாய்  என் அவா நிறைவேறுவதற்காக! ***** இப்போது நான் கைநிறைய சம்பாதிக்கிறேன் - உன்னை  அவ்வப்போது வெளியில் அழைத்துச் செல்கிறேன்! ‘முருகம்மா’ ஆயா முறுக்கு சுட்ட இடத்தில் – ஆனந்த் பவன்! ‘அங்கம்மா’ அக்கா ஆப்பம் சுட்ட இடத்தில் – ஆரியா பவன்! ‘ஜெயராஜ்’ டாக்கீஸ் இருந்த இடத்தில் –  மல்டிபிளக்ஸ் மஹால்! ****** ஆனந்த் பவனில்  "முறுக்கு – ரூ. முப்பது!. ஆரியா பவனில்  "ஆப்பம் –  ரூ . ஐம்பது.! மல்டி பிளக்ஸில் "டிக்கெட்– ரூ . முன்னூறு!   விலையைக் கேட்டதும்,  உன் உயிர்த்திசையானது மலரும் நினைவுகளில் முழுகுகிறது! அந்தப்_பழைய வாழ்க்கைக்குப் பழகிப்போன உனக்குப்   புதிய வாழ்க்கை புளிக்கிறது. ********************* #மாறன் மணிமாறன்  4 ஸ்டெர்லைட் வழக்கு - கவிஞர் அம்பிகா குமரன்.   #வடுக்களின் _ #வரலாறு_ஸ்டெர்லைட்   ( எண்சீர் விருத்தம்) *************************************** ஆலயங்கள் இருக்குதடா எங்கும் வானாய்      அதனுள்ளே இருப்பதெல்லாம் தெய்வம் தானா காலத்தில் நடப்பதெல்லாம்   கொல்லச் சூழ்ந்தும்      கண்டெதிர்க்க முடியாத முட்கள் தானா. ஓலங்கள் கேட்கலையோ ஒருவ ருக்கும்       ஒன்றேதான் குலமென்றீர் பேச்சில் தானா சீலத்தைக் காப்பதற்கு சிந்தை இல்லார்       சீக்கிரமாய்ச் செத்திடுவீர் மூச்சும் ஏனோ. . எங்கிருந்தோ வந்தவர்க்கு இடமும் தந்து      இத்தனையும் விற்பதற்கா அரசும் இங்கு அங்கிருந்தால் சீரழிவார் என்றே ஆய்ந்து        அங்குரங்காய் வந்தாரோ இங்கே பாய்ந்து பொங்குமெழில் புவிதன்னைத் தோண்டும் போது      புக்காத நோய்புக்கும்  மேனி தன்னில் எங்கணமும் இதையறியா அரசும் இங்கு      எதற்கென்று சொல்லிடுவீர் இப்போ திங்கு . காடுகளை அழித்திட்டீர் கவிகள் வாழும்    கூடுகளை அழித்திட்டீர் மனிதர் வாழும் வீடுநிலம் நீரின்றி வாழ்கின் றோமே       விட்டொழிப்பீர் காற்றேனும் சுவாசம் வேண்டும்   நாடறிந்து கொல்கின்றீர் நஞ்சைத் தந்து        நாங்களென்ன செய்திட்டோம் பாவம் இங்கு தேடுகின்ற வாழ்வெல்லாம் வேண்டாம் கேளீர்       தித்திப்போம் உயிர்மட்டும் தாரீர் தாரீர்   - அம்பிகா குமரன்.     5 திருநெல்வேலி தீக்குளிப்பு - கவிஞர் உதய் ராகவ்   #வடுக்களின்_வரலாறு    ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தீக்குளித்து இறந்தனா், சுற்றி அனைவரும் இருந்தும் யாரும் தடுக்கவில்லை.., அன்று எழுதியது..,   _______________________________________ அக்னி தேவனே   அக்குழந்தையின் அழுகுரல் கேட்டு் அணைந்திருக்கலாமே! இப்படி அணைத்து கொண்டாயே,   கார்மேக வருணணே கருணை கொண்டு நீயாவது பொழிந்திருக்கலாமே! இப்படி பொய்த்து போனாயே,   நீதி தேவதையே எப்பொழுதும் தூங்கும் நீ இன்றாவது விழித்திருக்கலாமே! மறுத்து விட்டாயே,   கடவுளர்களும் தத்தம் கடமை மறந்தனர்! மனிதமோ தன்னை மாய்த்துக் கொண்டது! இதுவே தினம் வாடிக்கை! இங்கெல்லாமே கேளிக்கை! தமிழரென நாம் சொல்வது தான் வேடிக்கை!     6செங்கை சீற்றம் - கவிஞர் மணிமாறன் #வடுக்களின்_வரலாறு_செங்கை சீற்றம்  ******************************************** ( திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பஜார் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அப்பாவிகளை  காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியபோது எழுதியது. நாள் : 12/6/2016) ******************************** காட்டு காகரூட்டிகளுக்கு காக்கிச்சட்டை மாட்டிவிட்டதா காவல்துறை..?   லத்தி சுயற்றத்தானே உரிமை கொடுத்தது சட்டம்.! எட்டி உதைக்க உரிமை கொடுக்கலையே சட்டம்.?   மன்னிப்புக்கேட்டு காலில் விழுந்த அப்பாவிகளை…. ஈவூ இரக்கமற்று அடித்து துவைத்தீர்களே அடப்பாவிகளே.!   “மன்னிப்பு கேட்பவன் மனுஷன். மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன்!”   சினிமாவில் மட்டும்தான் இது சாத்தியமா…? நிஜ வாழ்வில் நடப்பதில்லையே சத்தியமா..!   அய்யோ...அம்மா...என்று   ஈரகுலை நடுங்க அபயக் குரல் எழுப்பினாளே அந்த அபலை... அவள் அலரல் உங்கள் கொடூர காதுகளுக்கு நிஜமாகவே கேட்கவில்லையா நயவஞ்சக காக்கிகளே..?   சாமான்யர்கள் என்பதால்தானே சகட்டுமேனிக்கு நைய்யப்புடைந்தீர்கள்!- அவர்கள்  அம்பானிகளாக இருந்திருந்தால் இந்நேரம் ரத்தன கம்பளமல்லாவா விரித்திருப்பீர்கள்!   பணி இடமாற்றம் மட்டும் போதுமா.!– அவர்களின்  மினியை பிடித்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டாமா..?   காவல் துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வரே..! கருணை காட்டுங்கள் அந்த அப்பாவிகளுக்கு நஷ்ட ஈடுகளின் மூலமாக..!   காட்டமான கண்டனத்தைக் காட்டுங்கள் அந்த மூன்று காவலர்களின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்காக.!   இலங்கை தமிழர்களுக்காக சிங்களவர்களுக்கெதிராக இடைவிடாமல் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறோம் இங்கே செங்கை தமிழர்களுக்காக காவலர்களுக்கெதிராக ஒட்டுமொத்த தமிழகமும் மொத்தமாக குரல்கொடுப்போம் வாருங்கள்..!   ஆளும்கட்சியின் ஆதரவு இருக்கிறதென்று ஆட்டம் போடாதீர்கள். நாளை அது எதிர்கட்சி ஆகும்போது, உங்கள் காக்கிகள்மீது  காக்காக்கள் அமர்ந்து கக்கா போனாலும் சட்டைசெய்ய ஆளிருக்காது..   வினை விளைத்தவன் வினை அறுப்பான். இன்று நீங்கள் காப்பாற்றப்பட்டு இருக்கலாம், ஆனால் நாளை சட்டத்தின் முன்பு நிறுத்தப்படும்போது வெட்கி தலைகுனிந்தாலும் சட்டம் உங்களை காப்பாற்றாது.   வினையை விதைத்துவிட்டு நீங்கள் சென்றுவிட்டீர்கள் – ஆனால்  நீங்கள் நடந்துகொண்ட அத்துமீறிய அபத்தங்களால் அதிகமாக பாதிக்கப்படுவதென்னவோ மனிதாபிமானம் மிக்க உங்கள் சகாக்களே. ஏனெனில் தமிழக மக்களின் தவறான கண்ணோட்டம் காவல்துறைமீது எப்போதும் உண்டு ! அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக ஆகிவிட்டது அந்த வேண்டத்தகாத செங்கை சம்பவம். *********************************** #மாறன்மணிமாறன். 12/6/16 12:36pm     7மண்மூடிய மேட்டில் கூவும் சேவல் - கவிஞர் வாலிதாசன்  வடுக்களின் வரலாறு -தேள்  கொடுக்களின் நோவு இடுக்களின் சிக்கிய யானை அடுக்களம் மேவு.   தெருக்களில் தெறிக்கும் தெனந்தோறும் பிரச்சனை நூறு-முகப்  பருக்களில் வெடிக்கும் பல்வலி போல பாதகங்கள் நூறு   அடிக்கடி ஆர்ப்பாட்டம் அனைத்தும் நடக்கவே செய்கிறது-அட  நடிக்கிற நரிகளா நாள்தோறும் நன்மை பெய்கிறது.   பூட்டிய வீட்டுக்குள் பூவையர் உதிரம் கொட்டுகிறது- உளுத்தர்  தீட்டிய திட்டத்தால் தினவுக்கொழுப்பு பன்றி கை தட்டுகிறது.   உரிமைக்குரலின் மீதே உருட்டிச் செல்கிறார் ஆளும் ஆதித்ய சோழச் சிசுக்கள்- கண்ணீரில் காய்கிறது நாள்தோறும் பசுக்கள்.   எதிர்ச்சூரியனும் எழாமல் எதிரான இயக்கத்தை செய்தது பழங்கதை-நீ  எத்தனை நாள் அமைதி எல்லோரும் எழுந்து வழங்கதை.   ஊருக்குள்ளே கேட்குதே ஊமைகளின் சத்தம்-இதை  ஊன மனங்கொண்டவரின் உள்ளுக்குள்ளோ யுத்தம்.   லாரிக்குக் கீழிருக்கும் எழுமிச்சையா லாபிகொண்டு வாட்டுறாங்க பச்சையா   கோயில் கோயிலா போய்வந்து கோதையொருத்தி பிறக்கும் மண்ணிலே ஆயில்பட்ட வெஞ்சட்டை ஆனதாய் ஆகித்தான் போனாளே ஆஷிபா-பெண்  ஆண் பேதம்காணாது யோஷிபா.   தலைமுறைக்கோபம் தலையெடுக்கும்-அன்று  தரித்திரம் அலங்கரித்த தலை எடுக்கும். #வாலிதாசன்.       8  ஸ்டெர்லைட் - கவிஞர் அம்பிகா குமரன்   #வடுக்களின்_வரலாறு_ஸ்டெர்லைட்    ஊனும் உருவிழக்கும் உள்ளுறுப்புச் செத்துவிடும் மானும் மயிலும் மடிந்துவிடும் - கானுயர்ந்துப்   போற்றும் மரங்கள் பொலிவிழக்கும் ஆலைவரும் காற்றசுத்தம் கண்டால் கரைந்து. . முந்தி மடியுஞ்சேய் முக்கால் நடப்பவர்கள் பிந்திப்போ வார்கள் பிணமாக - சந்ததிக்காய்  பற்றிக் கருவாகப் பாவமறி யாவுயிருங் கற்பத்தில் போகும் கலைந்து. . மூச்சுத் திணறலால் முன்னம் மகளழுவாள் பேச்சுக் குறைந்தன்னைப் பின்னழுவாள் - தீச்சுடர்போல்   காரே நிகர்த்தபுகைக் கானழிக்கக் கண்ணழிக்க ஊரழுமே உள்ளம் உதிர்ந்து. . நீர்வண்ணம் மாறும் நிலமெல்லாம் நஞ்சாகும் ஊர்வண்ணங் கூடும் உறவினரும் - தூர்ப்புகையால்  ஒட்டும்நோய் என்றே ஒதுங்கிடுவர் நாளடைவில் கொட்டும் பிணங்களாய்க் கோர்த்து . ஊற்றுங்கூற் றாகி உணவுங்கூற் றாகிவிளை நாற்றுங்கூற் றாகிப்பின் நாவரண்டு - காற்றோடு   நஞ்சால் இடம்பெயர்வார் நோயில் இறக்காமல் எஞ்சியவர் சுற்றம் இழந்து . காலை எழுந்திட்டால் கண்முன் பிணந்தெரியும் பாலைநே ராகப் புவிமாறும் -  சாலைவழிச்  செல்வார் உதவிக்காய்ச் சிந்தை கலங்கிடுவோம் நல்லார் அரசிழந்த நாம்.   - அம்பிகா குமரன்    9 புறப்படு_தமிழா...! - கவிஞர் சிகரம் இரா.நா.கிரி   #புறப்படு_தமிழா...!   முள்ளி  வாய்க்கால்  அவலங்கள் முடிந்து  போன  கதையல்ல அள்ளித்  தந்த  துயரங்கள் ஆறிப்  போகும்  புண்ணல்ல! கள்வெறி  கொண்ட  மிருகங்கள் காட்டுத்  தர்பார்  நடத்தியதை உள்ளும்  தோறும்  தமிழ்மக்கள் உள்ளம்  வெடித்துச்  சிதறிடுதே!   துள்ளத்  துடிக்கத்  தமிழினத்தை துன்பப்  படுத்திக்  கொலைசெய்த கள்ள  மனத்தவர்  கொடுஞ்செயலைக் காட்டிட  இங்கே  தீட்டியதோர் முள்ளி  வாய்க்கால்  சின்னத்தை முடக்க  நினைப்போர்  முடங்கிடவே துள்ளி  நீயும்  எழுவாயே துடிப்புடன்  தமிழினம்  காப்பாயே !   வங்கக்  கடலலை  குமுறிடவே வன்முறைச்  நிகழ்வுகள்  அரங்கேற சிங்கத்  தமிழன்  செங்குருதிச் சிந்திய  முள்ளி  வாய்க்காலில் தங்கத்  தமிழினப்  பெண்குலத்தைத் தகாத  செயலால்  சீரழித்த மங்கா  நினைவுகள்  நம்முடைய மனத்திரை  யதனில்  மறையாதே!   வஞ்சகர்  செய்த  வன்கொடுமை வடுவாய்  வாழும்  வரலாறு நெஞ்சில்  சூடு  இருக்கின்ற நினைவுகள்  என்றும்  அகலாது! தஞ்சை  நகரில்  அமைந்ததொரு சரித்திரச்  சான்றை  அழித்திங்கே துஞ்சும்  புவியை  இடறுகிற துட்டரை  அழிக்கப்  புறப்படுவாய்!   தமிழன்  இரத்தம்  குடிக்கின்ற திருட்டு  ஒநாய்க்  கூட்டத்தை உமியென  இங்கே  ஊதிடவே ஒருநொடி  போதும்  புறப்படுவாய் இமியும்  கண்களை  மூடாது இன்றே  நீயும்  எழுந்திடுவாய் தமிழன்  வாழ்வைக்  காப்பதற்குத் தயங்கா  துடனே  புறப்படுவாய்!   பேய்கள்  ஆட்சி  செய்திட்டால் பிணமும்  தின்னும்  சாத்திரங்கள்! தாயின்  முலைப்பால்  தந்திட்ட தமிழன்  வீரம்   பெரிதென்று நாய்கள்  இங்கே  உணரட்டும் நமது  தமிழினம்  வாழட்டும் தாயொடு  சேய்களைக்  கொன்றிட்டச் சிறுநரிக்  கூட்டம் அழியட்டும்!     நீதி  தவறிப்  போர்க்குற்றம் நிகழ்த்திய  நாட்டுடன்  நட்பென்று வேதம்  ஓதும்  சாத்தான்கள் வேதனை  தந்திடும்  துயரங்கள் ! மோதிப்  பகையை  மிதியென்ற மகாகவி  நமக்குச்  சொல்லிட்ட சேதி  தன்னைச்  செயலாக்க செருக்களம்  நோக்கிப்  புறப்படுவாய்!   ஈழத்  தீவில்  தமிழினத்தை இரக்க  மின்றி  அழிக்கின்ற பாழும்  அரக்க  மனிதர்நம் பாதம்  கழுவிக்  குடித்திங்கே வாழ்க்கை  நடத்தும்  வஞ்சகரை வீழ்த்திடத்  தயக்கம்  ஏன்தமிழா ? வேழம்  நிகர்த்த  வீரமுடன் வீறு  கொண்டு   புறப்படுவாய் !  10 அனிதா - கவிஞர். சிகரம் இரா.நா.கிரி   #வடுக்களின்_வரலாறு...!   காதல் தோல்விக்கு சாதலைத் தழுவும் பெண்ணாக இல்லாமல்   சமூக நீதிக்கு தன்னுயிரை முறித்துப் போட்ட அனிதா எனும் அக்கினிக் குஞ்சே...   நீ மூட்டிய நெருப்பு நீட்டைத் திணித்தோரை எரிக்கும்!   உன் தொண்டைக் குழியை இறுக்கிய கயிறு  சாட்டையாகி கோட்டையில் இருப்போர் பதவியைப் பறிக்கும்!                                   11 விடைதேடும் விசும்பல் - கவிஞர் ஏ.டி.வரதராஜன்   #வடுக்களின்_வரலாறு_ஆசிஃபா   அன்னை எனைத்தேடி அங்கே அழுவாளே என்னை விடுங்களேன் என்றழுதேன் -- கண்ணைப்  பிசைந்து முகந்துடைத்துப் பின்நடந்த போதும் அசையவிட வில்லை அவன். . கையை இருமிருகம் காலை இருமிருகம் மெய்யை ஒருமிருகம் மேலழுத்த -- ஐய்யய்யோ  அண்ணா வலிக்குதென்றேன் அப்பா வலிக்குதென்றேன் கண்ணால் அழுதவரைக் கண்டு. . கையால் அரைந்தென்னைக் காலடியில் தள்ளிவிட்டுச் செய்யாச் செயலெல்லாஞ் செய்யுங்கால் -- மெய்யுதறி  உங்களுக்கு நானும் ஒருமகளே என்றுரைத்தேன் அங்கவலி யாலே அழுது. . அஞ்சி நடுங்குகிறேன் ஆர்த்துப் புலம்புகிறேன் கெஞ்சியடி தாங்காமல் கேட்கின்றேன் -- மிஞ்சியதால்  சிந்துங் குருதியினைச் சேர்த்தே உடல்மறைத்தேன் முந்திகரம் பொத்தி முனம். . கண்டுபிழை செய்தால் கடவுள் விழிகெடுப்பார் அன்றன்னை சொன்னாள் அதுபொய்யா --- என்னையின்று  பொங்கிக் குருதிவரப் பூட்டீச் சிதைக்கின்றார் எங்குசென்ற தம்மா இறை. . தொண்டைப் பிடித்தழுத்தித் துய்யத் துகிலுரித்துக் கெண்டைக்கால் பற்ற ககதறுகிறேன் --- சண்டையிட்டு  ஓடி ஒளிவோமா என்றே ஒதுங்குகிறேன் நாடி அடங்கும்முன் நான். . சற்றே உயிர்வைத்துச் சாய்த்தென்னைப் போய்விடுங்கள் முற்றாய்என் தாய்முகத்தை முன்பார்க்க -- அற்றமற  என்னை மடிமீது ஏந்திப்போ கட்டும்நீர் உண்டு முடித்த உயிர். . போதுமையா என்று பயந்தே கரங்குவித்து ஏதுஞ்செய் யாதீர் எனவழுதேன் -- யாதுந்  தெரியா தெனக்கென்றேன் தேம்பியழு தொன்றும் புரியா தவர்முகத்தைப் பார்த்து. . அங்க உடைகளைந்தார் ஆர்கக் கரம்ஓங்கி எங்கெங்கோ தொட்டு எனையிழுத்தார் -- எங்கும்நான்  போகமுடி யாமல் பொழுதெல்லாம் என்நெஞ்சம் வேகத் துடித்தேன் விழுந்து. . அழுவதன்றி ஏதும் அறியேன்; இறையைத்  தொழுவதன்றி ஏதும் தெரியேன்; -- விழுகின்ற  ஆணென்ற சாதியென்றன் அங்கந் துளைப்பதெல்லாம் ஏனென்று கேட்டே எனை. . கண்ணால் மிரட்டியெனைக் காலைப் பிடித்தழுத்திப் புண்ணாக்கி வைத்தார்ப் புலனெல்லாம் -- என்னாவேன்  பொல்லாக் கரம்வந்துப் புக்கத் தழுவுங்கால் சொல்லா இடமெல்லாஞ் சூழ்ந்து. . முற்றும் முடிந்ததம்மா மூச்சும் அடங்குதம்மா இற்றிதயம் நிற்க இயங்காமல் -- சற்றேநான்  மெத்தவுனை வேண்டுகிறேன் மீண்டும் புணராதீர் செத்தவுடல் தன்னைச் சிதைத்து. . இனியிங்கு நில்லா(து) எனதுயிரும்; அன்னைப்  பிணியென்ன வாகும் புரியேன்; -- அணிசேர்ந்தோர்  என்னை விடுங்களேன் ஈதோர் பிணந்தானே அன்னைப்பார்க் கத்தான் அதை. . (ஆத்மாவின் வேண்டுகோள்) . அம்மா அழாதீங்க அப்பா இருக்கின்றார் நம்பிப்பால் ஆற்றுங்கள் நான்வருவேன் -- அம்புலியின்  போற்றுங் கதைசொல்வீர் போய்வருவேன் கண்காணாக் காற்றாய் மடியுறங்கிக் கேட்டு.     12 வெட்டியெறியப்பட்ட மொட்டு - கவிஞர் மணிமாறன்   #வடுக்களின்_வரலாறு_(ஆஃசிபா) ------------------------------------ அடே.. எட்டப்பன்களா.! எட்டுவயது பாலகி எப்படியடா உங்களுக்கு  காமுகியானாள்..? ***** மொட்டுவிடாத மொக்கின் முட்டிக்கு மேலே அப்படி என்னடா அட்டிகையை கண்டுவிட்டீர்கள்.? ***** பால்மனம் மாறாத பச்சிளம் பாலகி உங்களுக்கு என்னடா பாதகம் செய்தாள்..? ***** பாதகச்சிகள் பலபேர் இருக்க எதற்கடா இந்தப் பாதகச் செயல்..? ***** குத்த வெக்காத குருத்தோலையை குத்திக் கொன்ற காமக் கொடூரன்களே.! ***** மெழுகுவத்தியை சீரழித்து வத்திக்குச்சியால் சமாதி கட்டிவிட்டீர்களே..! ***** தீவிரவாதம் எந்த வகையில் வந்தாலும் முறியடிப்போம் என்று முரசு கொட்டுபவர்களே..! சிறுமியின் பலாத்காரம் எந்த வகை  தீவிரவாதம் என்பதைச் சொல்ல உங்களுக்கு திராணி உண்டா..? ***** ஆஃசிபாவுக்கு அந்நியாயம் நடந்த அடுத்த நாளே குற்றவாளிகள் யாரென்று தெரிந்தும் குற்றவாளிகளை தப்ப விட்டது யாருடைய குற்றம்..? ***** எங்கள் ஆஃசிபா என்ன உங்களுக்கு அவ்வளவு சீப்பா..? இது இயற்கை கொஞ்சும் காஷ்மீரா.? இல்லை குழந்தையைக் கொல்லும் சிரியாவா.? ***** தேசம் முழுதும் தங்கள் கட்சிதான் கோலோட்ச வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுபவர்களே..! இங்கீதம் உங்களுக்கு கொஞ்சமேனும் இருந்தால் சங்கோஜமின்றி பதவி விலகுங்கள்! ***** #மாறன் மணிமாறன்      13 சாதிக்கு_பேதி கொடுப்போம் - கவிஞர் மணிமாறன் #வடுக்களின்_வரலாறு_   அந்த வண்ணானுக்கு சொல்லி அனுப்பு வந்து வெள்ளைக் கட்டட்டும்!   அந்த அம்பட்டனுக்கு சொல்லி அனுப்பு வந்து மங்கள வாத்தியம் முழங்கட்டும்!   அந்த பறையனுக்கு சொல்லி அனுப்பு வந்து குருத்தோலை பின்னட்டும்! **** ஏம்ப்பா ! பறையன கூப்புடு –பறையடிக்க.   ஏம்ப்பா ! அம்பட்டன கூப்புடு–மீசை வழிக்க.   ஏம்ப்பா ! வண்ணான கூப்புடு வாய்க்கரிசி புடிக்க. **** இப்படியான ஏளனப் பேச்சுகள் கிராமப்புறங்களில் அங்கெங்கெனாதபடி இன்றும்  எங்கும் எதிரொலித்தபடி!   இப்படியாக நல்லதிலும் கெட்டதிலும் உங்களோடு ஒத்தாசை புரிபவர்களுக்கு நீங்கள் அளிக்கும் ஆணவப் பட்டம் உங்களை விட்டு நீங்காத இராணுவச் சட்டம் ! ****** டேய்.! வண்ணாமூட்டு சோத்தை தின்னாத நீ மண்ணாப் போயிடுவ !   டேய்.! அம்பட்டன் வீட்டு பொண்ணப் பாக்காத நீ அழிஞ்சிப் போயிடுவ !   டேய்.! பறையன்வூட்டு பொணத்தைப் தூக்காத நீயும் பொதைஞ்சிப் போயிடுவ ! *** இப்படியான வசைமொழிகள் கசைமொழிகளாய் எந்தச் சட்டத்திட்டங்களையும் மதியாமல்; ஆனால் இடஒதுக்கீட்டில் மட்டும் இருபது விழுக்காடு கட்டாயம் வேண்டுமாம்!   என்ன இது அந்நியாயம் யார் சொல்வார் நியாயம் அரசே நீ ஏமாந்தால் உனக்கே பூசிடுவார் சாயம் !   அழுக்குத் துணி வெளுப்பவன் இல்லையென்றால் பழுப்பேறிப் போகுமே உன் ஆடை!   அம்பட்ட குலத்தோன் இல்லையென்றால் செம்பட்டையாகுமே உன் தலை !   பறையர் இனத்தவன் இல்லையென்றால் பிணவாடை வீசுமே உன் அறை !   ஓட்டு கேட்டுப் போகும்போது மட்டும் உசந்தவனாக தெரிகின்றானே அம்மூவரும்! அவன் வீட்டு வாயிலை தேவுடு காத்து அழைத்துச் செல்கின்றாயே ‘கார்’மூலம் !   சுகபோகமாய் நீங்கள் வாழ யுகம் யுகமாய் அவர்கள் தேய வெறும் பகல்கனவாய் போகின்றதே அந்தப் பாவப்பட்ட ஜீவன்களின் ஆசைகள் !   அட  கண்டார ஓலிகளா..! முண்டாசு கவிஞன் மட்டும் முப்பதுல சாகாம இருந்திருந்தா இநேரம் உங்களையெல்லாம் கண்டம் துண்டமா வெட்டி காக்காவுக்குப் போட்டிருப்பான் !   சாதிக்கு சுடுகாடு தள்ளி வெச்சான் – அவன்  சந்தனக் கட்டையிலா  கொள்ளி வெச்சான் ? சுள்ளியிலே கொள்ளி வெக்கும்போதே கொல்லையிலே போறவனே என்ன ஏத்தம் !   முளையிலேயே மிளாகாய கிள்ளிவெச்சி பிஞ்சு நெஞ்சிலே வஞ்சக நஞ்ச தச்சி தன் சமூகத்தை வளர்ப்பதற்கே இராப்பகலா பாடுபட்டா பிறகெங்கே சமதர்ம சமூதாயம் தழைக்கப் போகுது.?   ஏகாளி வரலன்னா–ஆரு பாடை கட்டுவா ? முடியாளி வரலன்னா–ஆரு தாடி மழிப்பா ? பறையாளி வரலன்னா–ஆரு பறையடிப்பா ?   எல்லாம் தெரிஞ்சிருந்தும் எகத்தாளம் பேசுறீயே ! அவன் உழைப்பை சுரண்டிக்கிட்டு அவனயே ஏசுறீயே !   பொண்சாதி இருக்க; வேற பெண் சாதியிடம் போறவனே! உன்சாதி அப்போ உனக்கு ஞாபகத்துக்கு வரலையா.?   அட,  ஜாதி பித்துப்புடிச்ச தாயோலிகளா.! சாமின்னு ஒண்ணு நிசமா இருந்தாக்கா உங்களைத் தொண்டையில குத்தி கொன்னேப்போட்டிருக்கும்!   வீதிக்கு வீதி நீ–சாதி மாநாடு போட்டாலும்  அடிக்கடி உனக்கு பேதி மருந்து கொடுக்க; ஆதியில் இருந்தே ஒரு அம்பேத்கார் ஆங்காங்கே தோன்றிகிட்டேதான் இருக்கான்!   கீழ்சாதிக்காரனென்று என்னை இழிக்கிறாய்; மேல்சாதியில் நீ பிறந்து என்னத்த கிழித்துவிட்டாய் ? மேல்நாட்டுக்காரன் நம்மல காரி உமிழுறான் மேல்தட்டில் நீ பிறந்தும்–போடுறது நரிவேஷம்!   வண்ணாத்தி வரலன்னா; புதுசா சமைஞ்ச  உன் பொண்ணோட தூமத்துணிய துவைக்க, நீ வெச்சிருக்கும் வெப்பாட்டியா வருவா.?   அவசர சிகிச்சைக்கு அம்பட்டச்சி வரலன்னா வகுறு பெருத்த உன் பொண்டாட்டிக்கு - உன் ஒண்ணுவிட்ட பங்காளியா பிரசவம் பாப்பான்.?   அட வெளங்காத வெறும்பையலே ! இப்போதாவதுப் புரியுதா ? உன்சாதி உனக்கு  அப்போதைக்கு  உதவிக்கு  வராதுண்ணு.!   தொழிலை வெச்சித்தான் சாதியப் பிரிச்சான்! உன் சாதிய வெச்சா தொழிலைப் பிரிச்சான் ? இங்கு சாதிய வெச்சுதான் அரசியலே நடக்குது அந்த அரசியலே இல்லன்னா உன்சாதியும்  அம்போதான்!   மேல் படிப்பு முடிச்சி நாங்க ஆபிஸ்ல ஹயர் ஆபிஸசரா இருந்தாலும், பிஸ்கோத்து குமாஸ்த்தாவும் எங்களை ஒரு தினுசாத்தான் பாக்குறான்!   மனுசால மதிக்காத மானம்கெட்ட சாதிங்க மிருகத்தை தின்னுகிற மிருகத்துக்கு சமங்க! இது எகத்தால பேச்சு இல்ல; என்நெஞ்சுக்குள்ள  நெடுநாளா சுமந்துகிட்டிருக்கும் பெரும்பார சுமைங்க! #மாறன்_மணிமாறன்                              14 கேட்டீரா கேவலத்தை - கவிஞர் அம்பிகா குமரன் #வடுக்களின்_ #வரலாறு_ஆசிபா    கேட்டீரா கேவலத்தைக் கேடுகெட்ட மானிடத்தை நாட்டிற்குள் நடக்கின்ற நயவஞ்சகக் கோ;நடத்தை    ஆத்திரந்தான் தாங்கவில்லை ஆண்டவனும் பேசவில்லை சாத்திரங்கள் வாழவில்லை சங்கடங்கள் தீரவில்லை   நீட்டுகின்ற இடத்திலெல்லாம் நீள்கின்ற உம்குறிகள் காட்டுகின்ற பேரிழப்பில் கதறிநான் கேட்கின்றேன்   உதிரத்தின் பெருவலியை உம்தாயிடம் கேட்டீரோ உதித்துவிட்ட மோகத்தில் ஆசிபாவைத் தொட்டீரோ   குதிரையின் பசிதீர்த்த குலவிளக்கை அணைத்தீரோ மதியில்லா முண்டங்கள் மயிராகி இணைந்தீரோ   நிர்கதியாய் நின்றவளை நீள்துன்பம் செய்தீரோ அர்ச்சனை பூவைக்கொன்று அந்தவரம் கேட்டீரோ   கோழைகளே உம்ஆண்மை கோயிலுக்குள் சொன்னீரோ பேழைக்குள் உட்கார்ந்த கடவுளையும் ரசித்தீரோ   காவியின் கைக்கூலி காமத்தைச் சொன்னீரோ பாவிகள் உம்மாலே நாடெங்கும் கண்ணீரோ பூக்காத பெண்மைக்குள் உம்வெறியை விதைத்தீரோ பாக்காத  பாகமெல்லாம் பங்கிட்டுச் சிதைத்தீரோ   காமப்பசி கொண்டோரே காழ்ப்புணர்வில நின்றீரோ காமத்தின் உய்யநிலை எதுவென்று தெரிவீரோ   அங்கத்தில் ஏதுமில்லை அந்தரங்கச் சூதுமில்லை தொழுகின்ற எல்லாமே தோற்றத்தில் தெய்வமென்றால் மண்டியிட்டு நீர்தொழுத அவள்குறியே தெய்வமடா!! - அம்பிகா குமரன்.                                   15 வடுக்களின்_வரலாறு_அனிதா - கவிஞர் மணிமாறன் ----------------------------------- அனிதா,.! உன் மரணம் சொல்வது என்ன? வணிகத்தனமான அரசியலில்   நீ மலிவு தேவதையாகப்  பார்க்கப்பட்டதின் விளைவு உன் மருத்துவக் கனவு தகர்க்கப்பட்டுவிட்டது. நீட்  என்னும் எமன் உன்னை தூக்கிலிட்டு விட்டான்.  நாங்கள்  என்னதான் காட்டுக்கத்துக்கத்தினாலும்   செவிடன் காதில் ஊதிய சங்குதான் காட்டாட்சி தர்பாரில்,. *********** #மாறன்மணிமாறன்   3/5/18     16அப்பாவி வாக்காளன் -பாம்பன் மு.பிரசாந்த் #வடுக்களின்_வரலாறு.  #கவிதை_வேள்வி    ஆனாலும் நானென்ன அப்பாவி வாக்காளன். அதனாலே இப்போது அடங்குகிறேன் இந்த அவலத்தை நினைவூட்ட தொடங்குகிறேன்.     #வடுக்களின்_வரலாறு  #மறதி    மறந்திடத் தானே மண்ணில் பிறந்தோம் மத்திய மாநில அரசுகளே. நீ மாத மொருகொலை செய்திடத் தானே காத்திருக் கிரதெம் சிரசுகளே!       ...............................     மறப்போம் என்பதை அறிந்தாய் -அந்த  மமதையில் ஆயிரம் புரிந்தாய். கொடுமைகள் பலவாய் கொடூரம் பலவாய் கொண்டாடிக் களித்துத் குதித்தாய் - யாம்  திண்டாடும் நிலைகண்டு சிரித்தாய்.   எல்லாமே மறப்பது எங்கள்குணம் - எதையும்  சொல்லாமல் கிடப்பது எங்கள் பயம்.   வெல்லாமல் பேசுகின்ற வெறுந்தமிழ் தேசத்தார் கொல்லாமல் விட்டதும் பிழையானது - உனை  கொல்லாத தாலிந்த நிலையானது.   உன்னை   என்னென்ன வோசொல்லி புண்ணுள்ள இடம்பார்த்து மண்ணள்ளி மேல்கொட்டி மனதார தீமூட்டி மனவேத னைதீர்க்க மனங்கொள்கிறேன்......   ஆனாலும் நானென்ன அப்பாவி வாக்காளன். அதனாலே இப்போது அடங்குகிறேன் இந்த அவலத்தை நினைவூட்ட தொடங்குகிறேன்.                   -பாம்பன் மு.பிரசாந்த்  03.04.2018      12.16  PM       17அரியலூர் அனிதா - கவிஞர் அரவிந்தன் குருநாதன்   அரியலூர் அனிதா, கனவுகள் மட்டுமே காண கற்றுத் தந்த ஏழ்மை கொண்டவள்.   கல்வி, அவள் வென்றெடுத்தது. மருத்துவர் கனவு, அவள் அகவையோடு வளர்ந்தது.   தென்றலை நாடிய பூங்கொத்து அவள் கனவு, நீட் எனும் புயலின் கரங்களால் பிய்த்தெரியப்பட்டது.     கைதொடும் தூரம்தானென கனவினை வளர்த்தவள் கையாலாகாத பொம்மை போலும் அரசின் அலட்சியத்தால் நீட் அரக்கனுக்கு இரையானாள்.   மருத்துவர் கனவு இனி ஏழைக்கு கானல் நீரா? வசதி படைத்தோர்க்கு மட்டும் கோயில் தேரா?   தட்டிக் கேட்காமல் குடியில் மூழ்கி தத்தளிக்கும் தமிழ்நாட்டிற்கு "போதையூர்"தான்  இனி பேரா? 18 டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் #வடுக்களின்_வரலாறு #டி_எஸ்_பி    காக்கிப் பூ ************** தூக்கிட்டுக் கொண்டதா.? தூக்கு மாட்டப்பட்டதா.? உடற்கூறு ஆய்வென்பது ஒருதலை பட்சம்தான் ! சிபிஐ விசாரணையென்பதும் வெறும் கண்ணாமூச்சிதான் !   பொறுப்பு வகிப்பவருக்கே பொறுப்பு இல்லாதபோது பொங்கி எழுந்து போர்க்கொடித் தூக்கி என்ன பயன் ?   மேலிடத்து டார்ச்சர் தாங்காமல் மெல்லிய மேனகை மேலோகம் போனதால் எதிரணியினரின் வாயெல்லாம் - அவல் ! மென்றுத்துப்பி மென்றுத்துப்பி வாய்கள்தான் புண்ணானதே தவிர வழக்கு ஒன்றும் மேலிடத்தை பாதித்ததாக தெரியவில்லை.   அவரவர் ஜோலிகளை அவரவர் ஜாலியாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் சம்பவம் நடந்த தடயங்களே தெரியாதபடி!   கம்பீர நடைநடந்து கர்ஜனை ஏதுமின்றி காக்கி சட்டைக்கே கவுரவம் தேடித் தந்தவரின் கடைசி நிமிடம், தூக்கு கயிற்றில் நாக்கு வெளியில் தள்ளியபடி!     உறவுகள் ஒப்பாரி வைக்க நட்புகள் கதறி அழ மீடீயாக்கள் மாறி மாறி க்ளிக்க ஆள்பவரை தவிர அனைத்து தரப்பினரும் அனுதாபம் என்ற பெயரில் அறைகூவல் விட,   பாவம் பரிதாபத்துக்குரிய ஜீவன் பாடையில் சலனம் ஏதுமின்றி இறுதி ஊர்வலத்துடன் இடுகாட்டை நோக்கி சுடுகாட்டானின் ஆணைக்கினங்க இந்து மரபுப்படி ஈமச்சடங்கு !   வீர மங்கையின் மரணத்திற்குப் பின்னால் ஜாதி என்னும் சாக்கடை நதி கழுத்தை அமுக்கியதால் காக்கிப்பூவின் தன்மான உணர்ச்சி தூக்கு கயிற்றை முத்தமிட்டது !   வெளிவராத இரகசியங்கள் வெளிவர நேர்ந்தாலும் வழக்கு என்னவோ உழவன் வீட்டு ஒழக்காய் துருபிடித்துப் போவதென்னவோ உண்மை !   சாமான்யனின் சாவுக்கு நீதி வேண்டி சாட்டை சுயற்றிய ஒரு காவல்காரிக்கு காவலர்களே சகுனிகளா?   கமாண்டோ படை காவல்பூனை படை பறக்கும் அதிரடி படை எல்லாம் இருந்தும் ஏன் காவல்த்துறை கறுப்பாடுகளின் கைகளில் ?   ஒரு சாமான்யக் கவிஞனின் நியாயமான கேள்விக்கு சரியான பதில் கிடைக்குமென்றால் உயிர் நீத்த உத்தமியின் ஆத்மா சத்தியமாய் சாந்தியடையும்.   இரங்கல் தீர்மானம் என்பது வெறும் சம்பிரதாயக்  கோர்வைகள் வரங்கள் வாங்கி வந்தவர்க்கே இரங்கல் பாக்கள் மோட்சம் தரும். *********************************************** பொறியியல் மாணவர் கோகுல்ராஜ்  கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 18/9/2015 அன்று தனது அலுவலக வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தபோது எழுதியது.   மாறன்மணிமாறன்     19கோகுல கிருஷ்ணன் மறைவு - கவிஞர் கதாதாசன் #சாஸ்தா #வடுக்களின்_வரலாறு_சாஸ்தா  குறிப்பு: பொறியியல் கல்லூரியின் விடியாத விதிமுறையினால் உயிர் விட்ட மாணவன்.பல போராட்டம் பின்னும் சரியான முடிவின்றி மறைக்கப்பட்ட உண்மைகள்...... அரியர் ஆறு இருந்தால் வகுப்பறையில் இடமில்லை என கல்லறையில் இடம் தந்த கல்லூரியின் முகத்திரை   அறம் பேசி செய்த கொலையை புறம் பேச ஆள் இல்லை அறம் தேடி சென்ற போராட்டமும் ஆறு நாளை தாண்ட வில்லை கால விதியினால் சாகாமல் கல்லூரி விதியினால் செத்தவனுக்கு நீதி இங்கு கிடைக்க வில்லை அந்த சேதி கூட நிலைக்க வில்லை பல பத்திரிகை வாயை பணம் மூடியது சில பத்திரிகை பணத்தின் வாயை மூடியது வடுக்களுக்காக வருந்துவதும்  மறப்பதும் மறைப்பதும் மறுபடியும் மறப்பதும் மறப்பதும் இயல்பாகி விட்டன...... ~ கதாதாசன் (முத்து கருப்பையா.பி)   ................................................................நன்றி.....................................................................         FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.  ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:    ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.    தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:    தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.    சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.    எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.    சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?    சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.    நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.    அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.    எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.    தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?    கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.    அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.    அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.    வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.    பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்  வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.  FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும்.  PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT  இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம்.  அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.  இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.  அவ்வளவுதான்!  மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:  1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல்  2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.comஎனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?  யாருமில்லை.  இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.  மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.    இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?    ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை.  ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம்.  அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது.  தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.    நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?    உள்ளது.  பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.  1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net    எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.  <துவக்கம்>  உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்].  தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.  இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.comஎனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும்.  இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.  எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.  இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம்.  http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.  e-mail :freetamilebooksteam@gmail.com FB :https://www.facebook.com/FreeTamilEbooks  G +:https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி.    மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள்.  முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள்.  கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.comஎனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?  அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும்.  ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது.  அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.    மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?  ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-Iபகுதி-IIஎன்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை?  இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.    எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?    நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - email : freetamilebooksteam@gmail.com  - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks  - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948  இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?    குழு – http://freetamilebooks.com/meet-the-team/    Supported by  - Free Software Foundation TamilNadu, www.fsftn.org  - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/