[] 1. Cover 2. Table of contents வகுப்பறையில் ஒளிரும் ஆசிரியர்கள் வகுப்பறையில் ஒளிரும் ஆசிரியர்கள்   முனைவர் மணி கணேசன்   munaivarmaniganesan@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/teachers_who_shine_in_the_classroom மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation நூல் விவரம் நூலின் பெயர் : வகுப்பறையில் ஒளிரும் ஆசிரியர்கள் முதல் பதிப்பு. : ஏப்ரல் 2024 ஆசிரியர் பெயர். : முனைவர் மணி கணேசன் வெளியீடு. : தமிழருவி வெளியீடு, மன்னார்குடி - 614001 தொடர்புக்கு : 7010303298 நன்கொடை. : ₹ 100 மாணவர்களுக்காக மெழுகாய் உருகிடும் ஆசிரியை மாலா! நம் மன்னார்குடி பகுதிகளில் தன்னார்வம் மற்றும் தொண்டுள்ளத்துடன் பணிபுரிந்து வந்து தம்மைப் பற்றி வெளியுலகிற்கு அதிகம் விளம்பரப்படுத்திக் கொள்வதைத் தவிர்த்து ஆழ்ந்த அமைதியோடு ஓயாத உழைப்பை மேற்கொண்டு வரும் ஆசிரியப் பெருமக்களின் தனித்த அடையாளங்களைத் திறவுகோல் மூலமாக அனைவருக்கும் தெரியப்படுத்த விழைவதே இத்தொடரின் தலையாய நோக்கமாகும். அந்த வகையில் இப்போது நாம் அறியவிருக்கும் ஒளிரும் ஆசிரியை திருமதி மாலா ஆவார். இவர் தற்போது தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வரும் பள்ளியானது நம் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்தில் கோரையாற்றின் கரையில் அமைந்துள்ள சித்தாம்பூர் ஶ்ரீராமகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப் பள்ளி ஆகும். சற்றேறக்குறைய இருபத்தைந்து ஆண்டு காலமாக இப்பள்ளியில் இவர் பள்ளி, மாணவர், சமுதாய வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பள்ளி நிர்வாகி திருமிகு நா.மதிவாணன் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து தம் சொந்தப் பணத்தைப் பல்வேறு அடிப்படை வசதிகளுக்குத் தன்னலம் பாராமல் செய்து வருவது வியப்பானது. குறிப்பாக, கடந்த 2012 ஆம் ஆண்டில் ரூபாய் ஒரு இலட்சம் மதிப்பிலான ஆழ்குழாய் கிணற்றுடன்கூடிய குடிநீர் வசதி ஏற்படுத்தித் தந்ததும் பிற்காலத்தில் ரூபாய் இருபதாயிரம் நிதியுதவியுடன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் நிறுவியதும் அனைவராலும் பாராட்டப்பட்ட நிகழ்வுகளாவன. ஏனெனில், அரசின் நிதியுதவி அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே! அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அல்ல. தம் சொந்த பொறுப்பில்தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அவலநிலை. அதுபோல் தம் உறவினர்கள் மூலமாகத் திரட்டப்பட்ட ரூபாய் ஐம்பத்தைந்தாயிரம் நிதியுதவியைக் கொண்டு இரும்புக் கம்பி வேலி அமைத்துப் பள்ளிப் பாதுகாப்பை உறுதி செய்ததும் கஜா கோரப்புயலில் வீழ்ந்த மரங்களை வீணாக்காமல் மேலும் மரங்கள் வாங்கி பள்ளித் தளவாடப் பொருள்களான மேசை, நாற்காலி, இருக்கைகள் என ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்பில் உணர்வுப்பூர்வமாகச் சொந்தமாகச் செலவழித்து உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் தம் அன்புக்கணவரின் பிறந்த நாளில் மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். கற்பித்தலில் தொடர்ந்து புதுமைகளையும் இனிமைகளையும் புகுத்திக் கற்றலை நிலைப்படுத்தி வருவது இவரது தனித்திறனாகும். குழந்தை மையக் கற்றல் முறைக்கு அடிப்படையாக விளங்கும் விளையாட்டு மற்றும் செய்து கற்றல் முறைகள் மூலமாகவே இவரது கற்பித்தல் பணி அமைந்துள்ளது. தொடக்க நிலையிலேயே நல்ல குடிமைப்பண்புப் பயிற்சியைக் குழந்தைகள் பெற்றிடவும் எதிர்காலத்தில் நல்ல குடிமக்களாக உருவாகிடவும் மாதிரி தேர்தல் மற்றும் மாணவர் பாராளுமன்றம் நிறுவும் நடவடிக்கையினை இதற்கு சான்றாகக் கொள்ளலாம். ஆங்கில வாசிப்பை மேம்படுத்த சரியான ஒலிக்குறிப்பு அட்டை பயிற்சி, கணித அறிவை வளர்த்துக்கொள்ள தம் மகனது அபாகஸ் மற்றும் பயிற்சித் தாள்களைக் கொண்டு பயிற்சி, விதை முளைத்தல் உள்ளிட்ட எளிய சோதனைகள் மூலம் அறிவியல் மனப்பான்மைக்கான பயிற்சி, அஞ்சலகம், வங்கி உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படும் படிவங்களைப் பூர்த்தி செய்ய பயிற்சி, தன்சுத்தம் பேணும் கைகழுவுதல் பயிற்சி, தமிழ் வாசிப்பை அதிகரிக்க சொல்வதெழுதுதல் மற்றும் வாக்கியம் அமைத்தல் பயிற்சி முதலானவை வாயிலாக நல்ல தரமான மாணவர்களை உருவாக்கும் பெருமுயற்சியில் இவரது பங்கு அளப்பரியது. தற்போது நவீனப்படுத்தப்பட்டுள்ள பாடப்புத்தகத்தில் அமைந்துள்ள விரைவுக் குறியீட்டு முறை கற்றலை வலுப்படுத்தும் பொருட்டு இணைய வசதியுடன் கூடிய மடிக்கணினி மற்றும் கம்பியில்லா ஒலிப்பெருக்கி வாயிலாகக் கற்றலில் நவீனத் தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரித்து, தம்மையும் அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ள முயன்று வருவது போற்றத்தக்க ஒன்றாகும். தற்போது சார்லட் தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வகுப்பறையை மெய்நிகர் வகுப்பாக உருவாக்கிடும் வகையில் திறன்மிகு தொலைக்காட்சிக் கருவி மற்றும் தொடர் மின் தேவைக்குதவும் மின்சேமிப்புக் கலன் ஆகியவற்றை பள்ளி நிர்வாகியுடன் இணைந்து குக்கிராம பள்ளி மாணவர்களின் கற்றலுக்குத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுள்ளது இவரது அண்மைச் சாதனையாகும். இதுதவிர, மாணவர்களின் பன்முகத் திறன்களை வளர்க்கும் பொருட்டு சுற்றுச்சூழல் நாடகங்கள், வில்லுப்பாட்டு, நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தெருக்கூத்து, சேமிக்கப் பழகுவோம் ஓரங்க நாடகம், தேசிய அறிவியல் நாள் உள்ளிட்ட தேசிய விழாக்கள் மற்றும் ஆண்டு விழாக்கள் நடத்துவது இவரின் தொடர் நிகழ்வுகளாவன எனலாம். இதுபோன்று இவ் ஆசிரியையின் சீர்மிகு பணிகளை அடுக்கிக்கொண்டே இருக்க முடியும். ஏழை, எளிய மாணவர்களின் இருண்டுக் கிடக்கும் வாழ்க்கையில் வெளிச்சத்தை அனைத்து வகையிலும் பாய்ச்சி வளப்படுத்துவதை ஒற்றை குறிக்கோளாக எண்ணி மெழுகாய் உருகும் இந்த மாலா தலைமை ஆசிரியை மனித சமூகத்தின் ஒளிரும் ஆசிரியை தானே?! வண்ணங்களால் மாணவர்களின் வாழ்க்கை வண்ணமயமாக்கும் ஆசிரியை ஜாஸ்மின்! அரசுப் பள்ளிகள் மீதான புதிய அடையாளங்களையும் நம்பிக்கைகளையும் விதைத்து வரும் மாற்றங்களை விரும்பும் ஆசிரியப் பெருமக்களை வெளியுலகிற்கு எடுத்துக் காட்டும் புதிய தேடல் இந்த ஒளிரும் ஆசிரியர் நெடுந்தொடர்… கடந்த இதழில் நம்மால் அடையாளப்படுத்தப்பட்ட தலைமை ஆசிரியை மாலா அவர்கள் பலராலும் அறியப்பட்டு அவரது கல்விச் சேவையைப் பாராட்டி திருவண்ணாமலையில் இயங்கி வரும் ஓர் அமைப்பு புகழ்பெற்ற ஒரு விருதுக்குப் பரிந்துரை செய்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். தமிழகமெங்கும் இதுபோல் மாணவர் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சார்ந்த குழுக்கள் அறிமுகமும் கருத்துப் பகிர்வும் நிகழ்வதற்கு இத்தொடர் பேருதவியாக அமையும். அதுபோல், இந்த இதழை வாசிக்கும் வாசகர்கள், கல்வி ஆர்வலர்கள், சமுதாய சிந்தனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோருக்கு ஆசிரியர்கள் மீதான பார்வைகள் புதிதாகும். மேலும், அரசுப் பள்ளிகள் மீதான கண்ணோட்டம் மாற்றம் பெறுவதோடு மட்டுமல்லாமல் நேயம் வளர வாய்ப்பு ஏற்படும். அதேவேளையில் இந்தத் தேடல் என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், ஓர் ஒன்றியத்தில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகளில் செம்மையாகப் பணியாற்றி வரும் அடையாளப்படுத்தப்படாத ஆளுமைகளைத் தேர்வு செய்து, அவர்களிடமிருந்து உண்மைத் தரவுகளைப் பெறுவதென்பது மிகக் கடினமான செயலாக இருக்கிறது. பல பேர் எந்தவித ஆதாரங்களும் வைத்துக்கொள்ள விரும்பாமல் அயராது உழைத்து வருவது வேதனையளிப்பதாக அமைகிறது. தரவுகளின் முக்கியத்துவத்தை நிச்சயம் அத்தகையோர் இதன்வழி அறிவர். அந்தவகையில், இந்தப் பகுதியில் நாம் அறிய இருப்பவர் சுவர் சித்திரங்கள் மூலமாக மாணவர்களைக் கவரும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் கோரையாற்றங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரிந்து வரும் திருமதி. ச. ஜாஸ்மின் ஹில்டா ஆவார். இவர் இப்பள்ளிக்குப் பொதுமாறுதல் மூலம் வந்து சேர்ந்து மூன்றாண்டுகள்தாம் ஆகின்றன. தலைமை ஆசிரியரின் ஒத்துழைப்புடன் இவர் செய்து வரும் குழந்தை நேயப் பணிகள் அளப்பரியவை. நல்ல கற்றலுக்கு அடிப்படை நல்ல வகுப்பறை சூழல் என்பதை உணர்ந்து கொண்டவராய், தம்மிடம் உள்ள ஓவியத் திறனால் குழந்தைகளைக் கவரும் பல்வேறு வண்ணக் கேலிச் சித்திரங்களை நேர்த்தியாக வரைந்து மாணவர் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டார். மேலும், முதல் மூன்று வகுப்புகளுக்கு உரிய பாடப்பொருள் சார்ந்த அடிப்படைத் திறன்கள் வளர்ச்சிக்குதவும் எழுத்துக்கள், எண்கள், படங்கள் போன்றவற்றையும் இடம்பெறச் செய்து வகுப்பறையை வண்ணங்களாலும் எண்ணங்களாலும் அலங்கரித்துள்ளது அழகு. குறிப்பாக, கிராமப்புற மக்களிடையேயும் அண்மைக்காலமாக உருவாகிவரும் ஆங்கில மோகம் குறித்த தவறான புரிதல்களைப் போக்கும் வகையில் இவ் ஆசிரியை ஆங்கிலத்தை முதல் வகுப்பு மாணவர்கள் பிழையின்றி சரியான உச்சரிப்புடன் சரளமாக வாசிக்கவும், இரண்டாம் வகுப்பு முதற்கொண்டு ஆங்கில மொழிக்குரிய அழகிய சாய்வெழுத்துக் கையெழுத்துப் பயிற்சியையும் மாணவரிடையே இயல்பாகப் பழக்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளதைப் பலரும் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. சான்றாக, இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் உள்ள வாக்கியங்களைச் சரியான ஆங்கில உச்சரிப்பு முறையில் சரளமாகப் படிப்பதைக் கூறலாம். அதுபோல், தனியார் பள்ளிக்குஇணையாக வாரமொருமுறை மாற்றுச் சீருடையில் மாணவர்களை வருகைபுரியச் செய்து எளிய உடற்பயிற்சியுடன் ஆசன முறைகளும் கற்றுத் தந்து உடல் வளத்துடன் மன வளத்தையும் மேம்படுத்தும் பயிற்சிகள் இவரால் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கிராமப்புற சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு நல்ல தொடுதல் மற்றும் தீய தொடுதல் முறைகளையும் கை கழுவுதல் வழிமுறைகளையும் உள்ளாடைகள் உடுத்துவதன் அவசியம் குறித்தும் தொடர்ந்து எடுத்துரைத்து வருவது சிறப்பு. இவர் கற்றலை மேலும் மெருகூட்டிட தம் நண்பர்களின் உதவியுடன் ரூ.20000/= மதிப்புள்ள நவீன வண்ணத் தொலைக்காட்சி ஒன்றை வேண்டிப் பெற்று அண்மையில் கல்வியில் கொண்டு வரப்பட்டுள்ள விரைவுக் கோட்டுக் கற்றல் முறை (Pedagogy with QR Code)யில் உருவாக்கப்பட்டிருக்கும் பாடம் சார்ந்த காணொலிகள் யாவும் மாணவர்கள் கண்டு மகிழ கற்பித்தலின்போது போதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார். இதுதவிர, அண்மையில் பேரிடரைத் தோற்றுவித்த கஜா கோரப்புயலின்போது தலைமையாசிரியருடன் இணைந்து ரூ.40000/= மதிப்பிலான நிவாரண உதவிகளைப் பெற்று வழங்கியது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். ஆக, பள்ளி வளர்ச்சி, மாணவர் நலன், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றிற்கு ஓர் ஆசிரியர் பாடுபடுதல் இன்றியமையாதது என்பதற்கு திருமதி.ஜாஸ்மின் ஆசிரியையும் ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும். இவரின் கைவண்ணங்களால் அறியாமை இருளிலும் வறுமைப் பிடியிலும் அகப்பட்டுத் தவிக்கும் பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்க்கை நிச்சயம் வண்ணமயமாகும்! ஏனெனில் இவரே ஒரு வெளிச்சம். இயற்கையின் காவலர்களாக மாணவர்களை மாற்றி வரும் ஆசிரியர் பெ.சோமசுந்தரம்! அண்மைக்காலமாக உலக அரங்கில் பேசுபடு பொருளாகவும் தொடர்ந்து விவாதிக்கும் கருத்தாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இருந்து வருகிறது. புவி வெப்பமடைதல் உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. மரம் வளர்ப்பும் நெகிழிப் பயன்பாடுகள் தவிர்ப்பும் இதற்கு இன்றியமையாதவை ஆகும். போதிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் எப்போதும் விரும்புவதில்லை. தங்கள் மனங்களைத் தலைசிறந்த வகையில் ஆகச்சிறந்த செயல்களால் பாதிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள் கொண்டாடுவர். அத்தகைய வரிசையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் வெள்ளங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி கணித பட்டதாரி ஆசிரியாகப் பணிபுரிந்து வரும் திருமிகு பெ.சோமசுந்தரம் அவர்கள் தனிமுத்திரை பதித்து வருகிறார். இவர் தற்போது பணியாற்றி வரும் வெள்ளங்கால் பகுதியானது நீர்வளம் குறைந்த பகுதிகளுள் ஒன்று. ஆகவே, விவசாயத்திலும் தொடர்ந்து இப்பகுதி பின்தங்கியே காணப்படுவதைக் கண்டு வேதனையடைந்த இவர், மாணவர்களை இயற்கையின் காவலர்களாகவும் காதலர்களாகவும் மாற்றிட பெருமுயற்சிகள் மேற்கொண்டு பசுமைப்படை ஒன்றை உருவாக்கிப் பல்வேறு பசுமைப் பாதுகாப்பு செயல்திட்டங்களை மாணவர்களுடன் இணைந்து முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்கது. நிலத்தடி நீர்வளம் பாதுகாக்க, தம் பசுமைப்படை துணையுடன் 2016 - 17 முதற்கொண்டு சற்றேறக்குறைய 20,000 க்கும் மேற்பட்ட பனைவிதைகளைப் பூமியில் பதித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்க முன்னோடி நிகழ்வாகும். மேலும், இதன் ஒரு பகுதியாக, இக்காலகட்டத்திலிருந்து இன்று வரை சற்றேறக்குறைய 50,000 விதைப்பந்துகளை மாணவர்கள் மூலமாக உருவாக்கி, அவற்றை மழைக்காலங்களில் ஆற்று ஓடை, மணல்திட்டு போன்ற விதை முளைக்கும் இடங்களில் தாமே முன்மாதிரியாக இருந்து மாணவர்களுடன் நல்லெண்ண முயற்சியோடு அவ்விதைப்பந்துகளை வீசிவருவது உலகம் காக்கும் நற்பணியாகும். அதுபோல, இப்பகுதியில் நீக்கமற நிறைந்து காணப்படும் நிலத்தடி நீர் குறைவிற்கு காரணமாக விளங்கும் சீமைக்கருவேல மரங்களையும் விதைகளையும் அழித்தொழிக்கவும் இவரது பசுமைப்படை முடிவெடுத்தது. இதன் பலனாக, 2015 திசம்பரில் பத்துக் கோடிக்கும் மேற்பட்ட சீமைக்கருவேல மரச்செடிகளை மீண்டும் முளைக்காதவாறு வேருடன் பிடுங்கி அழித்தது ஒரு மாபெரும் சாதனை நிகழ்வாகும். இதுதவிர, ஊரெங்கும் கொட்டிக்கிடந்த 5 இலட்ச சீமைக்கருவேல விதைக்கொத்துக்களை முறையே சேகரித்துப் பாதுகாப்பாக அழித்தொழிப்பு செய்ததும் போற்றத்தக்க செம்மைப்பணி ஆகும். பூமிக்குக் கேடுகள் விளைவிக்கும் இச்சீமைக் கருவேல மரச்செடிகளை தம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீளவும் முளைவிடாதிருக்க மாணவர்களை முடுக்கித் தொடர்ந்து இயங்க வைத்து வருவதென்பது பயனுள்ள தொடர்பணியாகும் எனலாம். தம்மிடம் படிக்கும் மாணவர்களைச் சிறந்த குடிமக்களாக உருவாக்கும் பொருட்டு, அவர்களை இளையோர் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களாக்கிப் பல்வேறு சமுதாய பணிகளில் இளம் வயதிலேயே ஈடுபடுத்தி வருவதென்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஊர் மக்களிடையே சீமைக்கருவேல மர ஒழிப்பு, நெகிழிப் பயன்பாடுகள் தவிர்ப்பு, நூறு விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பலரும் பாராட்டி மகிழும் செய்கைகளாவன. மேலும், பள்ளி மாணவர்கள் தம் கற்றலுக்குத் தேவையான குறிப்பேடுகள், எழுதுபொருள்கள் உள்ளிட்டவற்றிற்காக நெடுந்தொலைவு சென்று வாங்குவது பெரும் சிரமமாக அவர்களுக்கு இருப்பதை உணர்ந்து, பள்ளியில் மாணவர் அங்காடி ஒன்றை நிறுவியும் மாணவர்களையே அதை நிர்வகிக்க வைத்தும் தீர்வு கண்டார். இதற்கு உறுதுணையாக ரூ.7000/= மதிப்பில் இரும்பு அலமாரி ஒன்றும் ரூ.10000/= மதிப்பிலான கற்றல் பொருள்களும் வாங்கித் தந்து உதவினார். ஆண்டு முடிவில் வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பெற்று கிடைக்கும் இலாபத்தைச் சமமாகப் பங்கிட்டு மாணவர்களுக்கு வழங்கி வருவது கூடுதல் சிறப்பாகும். பொதுவாக கணிதப் பாடம் என்பது மாணவர்களிடையே சற்று கசப்பை ஏற்படுத்துவதாகவே காணப்படும். இவர் தம் தனித்துவம் மிக்க கற்பிப்பு முறைகளால் கசக்கும் கணிதத்தைக் கற்கண்டாக்கி வருகிறார். சான்றாக, எளிதில் புரிந்து கொள்ள முடியாத கணிதக் கருத்துக்களைப் பல்வேறு துணைக்கருவிகள் உதவியுடன் தாமே செய்து கற்றல் முறையில் மாணவர்களிடையே எளிதில் புரிய வைக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக உள்ளன. மாணவர்களை வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் புகுத்தாமல் இயற்கையின் மீது தீராத பற்றும் சமூகத்தின் மீது பேரன்பும் மிக்க மாமனிதர்களாக உருவாக்கி வரும் ஆசிரியர் பெ. சோமசுந்தரம் என்பார் ஓர் ஒளிரும் ஆசிரியர் என்பதில் ஐயமுண்டோ? மொழிப்பாட வாசிப்பில் மாணவர்களை மேம்படுத்தி வரும் அசத்தல் அரசுப்பள்ளி ஆசிரியை இரா.விஜயலெட்சுமி அரசுப் பள்ளிகள் இனி மெல்ல அழியும் என்னும் பொய்யான, போலியான பரப்புரை திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்டாலும் நாட்டில் கடைசி ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் புகலிடமாக விளங்கிவரும் அரசுப்பள்ளிகள் இருந்தே தீரும் எனலாம். தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகிய போதும் மாணவர்களை உருவாக்கும் நேரங்களில் ஆசிரியர்களைப் பதிவேடுகள் பலவற்றை தயாரித்திட அச்சுறுத்தப்பட்டு வருவது வேதனையளிக்கக் கூடிய கொடுஞ்செயல்களாகும். வகுப்பறையில் மாணவர்கள் சார்ந்த அடைவு ஆய்வில் மொழி வாசிப்பு தலையாயதாக இருக்கின்றது. மாணவர்களைப் படிக்கச் செய்தல் என்பது அவ்வளவு எளிதான செயலல்ல. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வும் வகுப்பறை சார்ந்த தொடர் பயிற்சியும் மிகுந்த பொறுமையும் மிக அவசியம் ஆகும். அரசுப்பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் திடீர் நலிவுற்றதற்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் பெருக்கத்திற்கும் இன்றியமையாத காரணமாக மாணவர்களிடையே ஆங்கில மொழி வாசிப்பு உள்ளது. இதனாலேயே சாமானிய மக்களிடம் கூட ஆங்கில மோகம் தலைவிரித்தாடும் அவலநிலை காணப்படுகிறது. இந்த அறைகூவல்களை எதிர்கொண்டு தம் சிறப்பான பங்களிப்புகளை ஆசிரியர்கள் சமூகத்திற்கு அளித்து வருகின்றனர். அந்தவகையில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம், பாமணி ஊராட்சிக்குட்பட்ட தேசிங்குராஜபுரம் ஊராட்சி ஒன்றிய ஈராசிரியர் தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்துவரும் தலைமையாசிரியை திருமதி இரா. விஜயலட்சுமி அவர்களின் கற்பித்தல் சார்ந்த பல்வேறு பணிகள் அளப்பரியவை. இப்பள்ளியில் தற்போது 43 மாணவ, மாணவியர் படித்து வருகின்றர். தனியார் பள்ளிக்கு நிகராக இப்பள்ளி மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிப்பில் முனைப்புக் காட்டி வருவது வியக்கத்தக்கது. வாசிப்பில் வெறும் சரளப்பண்பை மட்டும் கொள்ளாமல் புரிந்துகொள்ளும் தன்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ஆங்கில மொழியில் வாசிப்பை மேம்படுத்தும் உச்சரிப்பு முறை வாசிப்புப் பழக்கத்தைப் பெரும்பாடுபட்டு இவர் தம் உதவியாசிரியை ஒத்துழைப்புடன் முதல் வகுப்பு முதற்கொண்டு நிறைவேற்றி வருவது பாராட்டத்தக்கது. காட்டாக, இப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தைச் சரளமாக வாசித்துக் காட்டுவதை வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் உள்ளிட்ட பள்ளி ஆய்வு அலுவலர்கள் மனமுவந்து பாராட்டியது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதுதவிர, இவரது தொடர் முயற்சியாலும் தன்னார்வ ஊக்கத்தாலும் உயர்தொடக்க நிலை மாணவர்களுக்கு இணையாக வட்டார, மாவட்ட அளவில் நடைபெறும் பல்வேறு கல்வி இணைச் செயல்பாடுகள் சார்ந்த தனிநபர் மற்றும் குழுவினர் தொடர்பாக நிகழும் போட்டிகளில் தம் மாணவர்களைப் பங்குபெற செய்து வெற்றி வாகை சூடி அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி வருவது பாராட்டத்தக்கது. புத்தக வாசிப்பை நேசிக்கத் தூண்டும் புத்தகப் பூங்கொத்துத் திட்டத்தில் காணப்படும் பல்வேறு நூல்களில் இடம்பெற்றிருக்கும் சிறுவர் கதைகளை வாசித்து அவற்றை தம் சொந்த நடையில் வளரும் ’கதை சொல்லி’களாக மாறிவருவது அழகு. அதுபோல், கணிணியைக் கையாண்டு தம் கற்றலை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளுக்கு இவ் ஆசிரியை உரமூட்டி வருவதும் சிறப்பு மிக்கது. இவர் இப்பள்ளியில் தலைமை பொறுப்பு ஏற்று ஆறு ஆண்டுகளில் பள்ளி வளர்ச்சிக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் வசதிகள் ஆகியவற்றை உரிய அலுவலகத்தில் தொடர் படையெடுத்துக் கோரிப்பெற்று நிறைவேற்றி வருவது என்பது ஒரு முன்மாதிரி செயல்களாகும். இதுதவிர, தன்னார்வ தொண்டு அமைப்பான சகாயம் அறக்கட்டளை நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு கஜா கோரப்புயலில் சீரழிந்த பள்ளி மேற்கூரையினை ரூபாய் ஒரு இலட்சம் செலவில் சீர்செய்து மாணவர்கள் பாதுகாப்பைத் துரிதமாகச் செயல்பட்டு உறுதி செய்ததை பாராட்டாதவர் யாருமில்லை. ஆண்டுதோறும் குறுவள மைய அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் இளம் விஞ்ஞானிகளுக்கான தேடல் புத்தாக்கப் படைப்புப் போட்டியில் முதலிடம், அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாக நடைபெறும் பேச்சுப் போட்டியில் ஒன்றிய அளவில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகவும் மாவட்ட அளவில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகளாகவும் முதலிடம் பிடிக்கும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்தி வரும் இவரது அளப்பரிய செயல் நினைந்து போற்றத்தக்கது. “எங்கள் தேசிங்குராஜபுரம் பள்ளிக்கு முள்ளூர் என்று மற்றொரு பெயரும் உள்ளது. நான் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற இந்த 6 வருடங்களில் எனது பள்ளியை பெரிதும் மாற்றியிருக்கிறேன். மாதந்தோறும் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி குறித்த ஆரோக்கியமான கருத்துக்கள் விவாதிக்கப்படும். சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எங்கள் ஊர் கிராமம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமம். இருப்பினும் எங்களுடைய அறிவுறுத்தலின்படி எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவர் வீட்டிலும் கழிப்பறை வசதி உள்ளது. எங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கழிப்பறை பயன்படுத்த தெரிந்துள்ளதை ஒரு சாதனையாக நான் கருதுகிறேன்.” என்னும் தலைமையாசிரியை திருமதி இரா. விஜயலட்சுமி ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரிய சமூகத்தில் ஓர் ஒளிரும் ஆசிரியர் என்பதில் மாற்றுக் கருத்துண்டோ? அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியை அன்பரசி! மகிழ்வித்து மகிழ் என்பதுதான் ஆசிரியர்களின் அறம் ஆகும். அந்த வகையில் திறவுகோல் மின்னிதழில் கடந்த நான்கு மாதங்களாகப் பல்வேறு இருபால் ஆசிரியர்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் இத்தொடர் அவர்களது ஆசிரியப் பயணத்தில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பலதரப்பட்ட இணைய மற்றும் முகநூல் பக்கங்களில் இத்தொடரின் மூலமாக இடம்பெறும் ஆசிரியப் பெருமக்களின் கல்விச் சேவைகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக, அரசு சாரா பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருவது பெருமிதமாக உள்ளது. மன்னையின் மைந்தர்களின் திறவுகோல் மின்னிதழ் நிர்வாகத்திற்கு ஆசிரியர்களின் சார்பில் நான் என்றும் நன்றிக்கடன் பட்டவன். அதுபோல் ஒவ்வொரு மாதமும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களிலிருந்து குறிப்பிட்ட ஒன்றியத்தில் ஒரு சிறந்த நபரைத் தேர்வு செய்து, அவரைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் சேகரித்து வெளிப்படுத்துதல் என்பது கடின முயற்சியாகவே தொடர்கிறது… முத்துக்குளித்தலுக்கு ஒப்பானது இப்பணி. இந்த எனது செம்மைப் பணி சிறக்க ஒன்றியம்தோறும் காணப்படும் நண்பர்களின் ஒத்துழைப்பு நினைந்து போற்றத்தக்கது. அந்த வகையில் இந்த முறை நாம் அறிந்து கொள்ள இருக்கும் நபர் நன்னிலம் ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியை திருமதி கா.அன்பரசி ஆவார். பெயருக்கு ஏற்ப மாணவர்களின் அன்பாசிரியர் இவர். இரண்டு ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளி என்றாலும் இவரது பெருமுயற்சி காரணமாகப் பள்ளிக்குத் தேவையான கட்டிடம், குடிநீர் , கழிப்பிடம் மற்றும் தளவாட வசதிகள் அனைத்தும் ஒருங்கே பெற்று திகழ்வது சிறப்பாகும். சுற்றுச்சுவர் வசதியினை வேண்டிப் பெற்ற போதும் அதற்குரிய பெரிய, அகலமான இரும்பு வாயிற்கதவு அமைப்பதற்கு தம் சொந்த பணத்தைச் செலவழித்தது ஊர் மக்களிடையே நற்பெயர் பெற்றுத் தந்தது. ஒரு பள்ளியை செவ்வனே நிர்வகிக்க அரசு ஆண்டுதோறும் வழங்கும் பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானிய நிதி மட்டும் போதுமானதல்ல. ஏழை, எளிய, அடித்தட்டுக் குழந்தைகளின் ஒப்பற்ற புகலிடமாக விளங்கி வரும் அரசுப்பள்ளிகளில் குழந்தைகள் சார்ந்த பல்வேறு செலவினங்களை ஈடுகட்டும் பொருட்டு பள்ளியின் பெயரில் வைப்பு நிதி இருப்பது அவசியமாகும். இதன்பொருட்டு பள்ளிகளில் பள்ளிப் புரவலர் திட்டம் குறைந்த பட்சம் தொகையான ரூ.1000 மற்றும் அதன் மடங்குகளில் பள்ளி நிரந்தர வைப்பு நிதியாக அருகிலுள்ள அஞ்சலகம் அல்லது வங்கியில் முதலீடு செய்யப்பட்டு, அவற்றிலிருந்து பெறப்படும் ஆண்டு வட்டியினைக் கொண்டு மாணவர் நலன் சார்ந்த செலவினங்கள் மேற்கொண்டு வருவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். வயிற்றுக்கும் வாய்க்கும் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கும் படிக்காத, பாமர பெற்றோர்களிடம் புரவலர் நிதி கோருவதும் பெறுவதும் எளிதில் இயலாத ஒன்று. இவர் ஒரு முன்மாதிரியாக இத்திட்டத்தில் தாம் இணைந்தது மட்டுமல்லாமல் தம் குடும்பத்தினர் எழுவரையும் உறுப்பினர்களாக்கியதன் விளைவாக, இன்று இப்பள்ளியின் புரவலர்களாக மொத்தம் 13 பேர் உள்ளனர். ஒரு நல்ல தலைமையாசிரியர் என்பவர் பதிவேடுகளுடன் மட்டுமே போராடுபவர் அல்லர். பன்முகத்தன்மைக் கொண்டவராகவும் தரமான கற்பித்தலை மாணவரிடையே நிகழ்த்தும் ஆசிரியராகவும் திகழ்தல் இன்றியமையாதது. இவரது பள்ளி நிர்வாகம் மற்றும் கற்பித்தல் பணியினை உற்றுநோக்கி வரும் ஊர்மக்கள் ஆங்கில வழிக்கல்வியில் மோகம் கொண்டு தம் குழந்தைகளை அருகிலுள்ள தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் பணம்கட்டிப் படிக்க வைத்து அல்லல்பட்டுக் கொண்டிருந்த நிலையிலிருந்து விடுபட்டு இலவச கட்டாயத் தரம் மிக்க கல்வி வழங்கும் தம் ஊர் ஊராட்சிப் பள்ளியில் மனமுவந்து சேர்க்க முன்வந்தது நல்ல முன்மாதிரி செயலாகும். நடப்பு ஆண்டு வரை அவ்வாறு சொந்த மற்றும் வேறு குக்கிராமங்களில் இருந்து இங்கு வந்து படிக்கும் குழந்தைகள் எண்ணிக்கை 14 ஆகும். அதுபோல், பள்ளி வளாகத் தூய்மையைத் தொடர்ந்து பேணிக் காப்பதும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதும் இவரது சுற்றுச்சூழல் சார்ந்த எண்ணத்தை வெளிக்காட்டும். மேலும், தம் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான கற்றல் சார்ந்த பொருள்களைப் பல்வேறு சமுதாய சேவை அமைப்புகள் வாயிலாகப் பெற்றுத்தந்து குழந்தைகளின் கற்றலுக்கு உரமூட்டும் நற்பண்பு அனைவரும் பின்பற்றத்தக்கது என்பது மிகையாகாது. ஆண்டுதோறும் சமத்துவப் பொங்கலிட்டும் விழாக்கள் நடத்தியும் மாணவரிடையே சகோதரத்துவம் வளரப் பாடுபவராக இவர் காணப்படுகிறார். குழந்தைகளின் எதிர்காலம் தொடக்கப்பள்ளி வகுப்பறைகளில் நிர்ணயிக்கப்படுவதாகக் கூறுவர். நல்ல அறிவியல் சிந்தனையும் மனப்பான்மையும் உருவாகும் இடம் வகுப்பறைகளே ஆகும். மேனாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், முதலாம் சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட அறிவியல் அறிஞர்களைத் தோற்றுவித்ததில் அக்கால அரசுப்பள்ளிகளில் பணியாற்றிய அறிவியல் பாட ஆசிரியர்களையே சாரும். பொதுவாக பள்ளிகளில் வகுப்பறைகளை உயிரோட்டமிக்கதாக உருவாக்கிக் காட்டுவதில் ஏனைய பாடங்களைவிட அறிவியல் பாடம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதனாலேயே, அறிவியல் போதிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள் அதிகம் நேசிப்பர். அறிவியல் சார்ந்த எந்தவொரு கடின கருத்தையும் எளிய செயல்விளக்கம் காட்டி எளிமையாகப் புரிந்து கொள்ள செய்வதை எப்போதும் அறிவியல் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அத்தகைய கருத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவரான இவர், இடைநிலை ஆசிரியர் பதவியின் பணிமூப்பு அடிப்படையில் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்தாலும் சூழ்நிலையியல் அறிவியல் பாடத்தைத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்கும் போது, செய்து காட்டல் மற்றும் செய்து கற்றலை மாணவர்களிடம் ஊக்குவித்து வீடுகள் தோறும் இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக மாணவர்களை உருவாக்கி வருவது போற்றத்தக்கது. எளிய அறிவியல் சோதனைகளைத் தாமே செய்து காட்டுவதன் மூலமாகக் கற்றல் இனிமையானதாகவும் இலகுவானதாகவும் மாணவர்களுக்குக் காட்சியளிக்கின்றது. இதுபோன்ற செயல்பாடுகளால் கற்றலில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் ஈர்க்கப்பட்டு மெல்ல முன்னேறத் துணிவர். மேலும், மாணவர்களின் அன்றாட வருகையானது தொடர்ந்து அதிகரிக்கும். குறிப்பாக, அண்மைக்காலத்தில் ஆசிரியர்கள் மீது பல்வேறு ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டாலும் அவற்றை தமக்குள் ஆழப் புதைத்துக்கொண்டு சின்னஞ்சிறு ஏழை, எளிய குழந்தைகளின் தெவிட்டாத, கள்ளம்கபடமற்ற நம்பிக்கையுடன் நோக்கும் முகத்தைக் கண்டதும் சூரியனைக் கண்ட பனித்துளி காணாமல் போவதுபோல் ஆசிரியர்கள் குழந்தைகள் உலகத்தில் குதூகலமாகி விடுகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். ஆசிரியர்களை இழித்தும் பழித்தும் பேசும் வழக்கை வாடிக்கையாகக் கொண்ட சமூகத்தில் தம் துயரங்களைப் புறந்தள்ளி மாணவர்கள் நலனுக்காகப் பாடுபடும் ஆசிரியர் கூட்டம் பெருகிக்கொண்டே இருப்பது உண்மை. ஒரு காலத்தில் சடங்குக்காகவும் சம்பிரதாயத்துக்காகவும் அரசு மட்டுமே தமக்கான விசுவாசம் மிக்க ஆசிரியர்களைப் பாராட்டிச் சிறப்பித்துவரும் நிகழ்வுகள் ஒருபுறம். தன்னலமின்றி மாணவர்கள் நலனுக்காகவும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து தொய்வின்றிப் பாடுபட்டு வரும் உண்மையான நல்லாசிரியர் பெருமக்களை இன்று பல்வேறு முன்னணி ஊடகங்களும் அரசு சாரா அமைப்புகளும் மனமார பாராட்டி மகிழும் கோலாகல கொண்டாட்டங்கள் மறுபுறம். ஆசிரியர்களுள் அனைவருமே நல்லாசிரியர்கள்தாம்! அவர்களுள் யார் மாணவர்கள் மனத்தில் நீடித்து நிலைத்து நின்று இருக்கின்றார்களோ அவர்களே ஒளிரும் ஆசிரியர்கள் ஆவர். தலைமையாசிரியர் திருமதி அன்பரசி அவர்கள் அத்தகைய மாணவர் மனம் கவர்ந்த ஒளிரும் ஆசிரியருள் ஒருவர் ஆவார். கணிதத்தைக் கற்கண்டாக்கி வரும் ஒப்பற்ற ஆசிரியர் கணேஷ்! அண்மைக்காலமாக ஆசிரியப் பேரினத்திற்கு நிகழ்காலம் போதாத காலமாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது. நின்று நிதானித்து மூச்சு விடக்கூட கால அவகாசம் தராமல் தொடர்ச்சியாகப் பல்வேறு கற்றல் கற்பித்தலுக்குப் பேரிடர் விளைவிக்கும் அலுவல் சார்ந்த வேலைகளை முடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் போக்குகள் மலிந்துள்ளன. இவையனைத்தையும் விட்டுவிட்டுக் கிடைக்கும் இணையவழி இணைப்பைக் கொண்டு ஆசிரியர்கள் தம் சொந்த செலவில் சுயமாகவோ அல்லது கணிணி மையங்களிலோ நேர காலமில்லாமல் அலைந்து திரிந்து முடித்தாக வேண்டிய நிலை என்பது பரிதாபத்திற்குரியது. ஆசிரியர்கள் வருகை, மாணவர்கள் வருகை, வாயில் எளிதில் நுழையாத பல்வேறு திடீர் திடீரென இறக்குமதி செய்யப்பட்ட சிக்ஷா, சமக்ரா, போஸான், ஸாலா ஸித்தி முதலான அழிந்தொழிந்த வடமொழிப் பெயர்களுடன் உலா வரும் மத்திய அரசுத் திட்டங்கள் என தொடர் படையெடுத்துத் தாக்குவனவற்றைச் சூதானமாக நிறைவேற்றி முடிக்க இருபால் ஆசிரிய, ஆசிரியைகள் படும் துயரங்கள் சொல்லவொணாதவை. ஆசிரியர் மீதான துல்லியத் தாக்குதல்கள் தற்போது அதிகரித்துக் காணப்படுவது சகிப்பதற்கில்லை. போதுமான தகவல் தொடர்பும் இணையவழி இணைப்பும் கிடைக்கப் பெறாத, போக்குவரத்து வசதியற்ற, தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து நிவர்த்தி செய்ய இயலாத குக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரிய, ஆசிரியைகளை ஆதார் அடிப்படையிலான தொடுவுணர் வருகைப்பதிவு மேற்கொள்ள அதிகார சாட்டைச் சொடுக்குவதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இது போதாதென்று வயது வேறுபாடின்றி யார் யாரோ ஆசிரியர்களுக்குப் பல்வேறு ஊடகங்கள் மூலமாக, ‘ஆசிரியர் என்பவர் இப்படி இருக்க வேண்டும்; அப்படி விளங்க வேண்டும்’ என்று வாய்வலிக்க புத்திமதி புகட்டுவது மறுபுறம். நல்ல விளைச்சல் நிலத்தில் ஓரிரு களைச் செடிகள் காணப்படுவதைப் போல நல்லாசிரியர் பெருமக்கள் திரளில் ஒருசில புல்லுருவிகள் இருப்பது தவிர்க்க இயலாத ஒன்று. அதற்கு ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தை எப்போதும் ஒருவித பதட்டத்தில் வைத்திருக்க நினைப்பது பேதமையாகும். அடுக்கடுக்காகத் தொடுக்கும் ஆயிரம் கொடும் அம்புகளைத் துச்சமாகப் புறந்தள்ளி ஏழை எளிய அடித்தட்டுக் குழந்தைகளின் கல்வி நலனே தம் தலையாயக் குறிக்கோளாகக் கொண்டு தம் மனசாட்சிக்கு மட்டும் செவிமடுத்துத் தீயாய் பணிபுரியும் ஆசிரியர் கூட்டம் அன்றும் இன்றும் என்றும் இருப்பது மறுப்பதற்கில்லை. அந்த வகையில் காவிரிக் கடைமடைப் பகுதியான, விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகம் வாழும் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யின் கணிதப் பட்டதாரி ஆசிரியர் திரு S.கணேஷ் அவர்களது கல்வித் தொண்டு அளப்பரியது. பல்துறை அறிவும் மொழிப்புலமையும் கொண்ட மகாகவி பாரதியே கணிதம் குறித்து, ‘கணக்குப் பிணக்கு ஆமணக்கு’ என்று கசந்த நிலையினை சாதிய, பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய அரசுப்பள்ளிப் பிள்ளைகள் அடையாதவாறு கற்கண்டு கணிதம் என்று தித்திக்க வைக்கும் இவரது முயற்சிகள் பாராட்டத்தக்கவை. எளிய, விளையாட்டு மற்றும் தானே செய்து கற்றல் முறைகளில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத கணிதத் தேற்றங்கள் மற்றும் கணக்குகள் ஆகியவற்றை இவர் இலகுவாக மாணவ, மாணவியரிடம் கொண்டு சேர்க்கும் உத்தி ஏனையோருக்குப் பாடம் எனலாம். கணித உருவங்கள் பெயரில் குழு உருவாக்கி வடிவியல் கருத்துக்களை தாமே செய்து கற்றல் முறையில் மகிழ்ச்சியாகக் கணிதத்தைக் கற்கும் சூழலை வடிவமைத்து தந்தது பாராட்டத்தக்கதாகும். அதுபோலவே, ஒழுங்கற்ற உருவங்களின் பரப்பு காணும் முறைக்கு வரைபடங்களைக் கொண்டு வரையச் செய்து விளக்கம் அளித்துள்ளது சிறப்பு. பொதுவாகவே, கணித கருத்துக்களை எளிய விளையாட்டுகள் மூலமாகக் கற்க ஆசிரியர்கள் மாணவர் மைய அணுகுமுறையை வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் கற்பித்தலில் உட்புகுத்தி வெற்றி காண்பது இன்றியமையாதது. இவையெல்லாம் தொடக்கநிலைக்குத் தான் சாத்தியம் என்றும் பொருத்தம் என்றும் புறம்தள்ளும் நடவடிக்கைகளை உயர் தொடக்க, உயர்நிலை மற்றும் மேனிலை வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்கள் கருதுவது ஏற்கத்தக்கதன்று. அதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் மாணவர் நிலைக்கு இறங்கி வருவதைக் கீழான செயல் என நினைக்காமல் எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத கணிதக் கருத்துக்களைப் புரிந்துகொள்ள மாணவருக்கு இடமளிக்க வேண்டியது ஆசிரியரின் கடனாகும். கணிதம் கற்பித்தலில் தகவல் தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடுகள் குறிப்பிடத்தகுந்தவை ஆகும். ஏனெனில், இக்கால பச்சிளம் குழந்தைகள்கூட பெரியவர்கள் கையாள அச்சப்படும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை வெகு இயல்பாக, மிக இலாவகமாக, அசாத்தியமாகப் பயன்படுத்தி வருவது கண்கூடு. இன்றும் சில ஆசிரியப் பெருமக்கள் திறன்மிகு செல்பேசியைத் திறமுடன் கையாளத் தெரியாமல் தவிப்பதைக் காண முடியும். ஆதலாலேயே, ஆசிரியர்களுக்கு அண்மைக்காலத்தில் வழங்கப்படும் பயிற்சிகளில் ஆன்ட்ராய்டு செல்பேசிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் வகுப்பறைகளில் செல்பேசி உள்ளிட்ட கருவிகள் துணைக்கொண்டு கற்பித்தலை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. காலந்தோறும் நிகழும் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் ஆசிரியர்கள் பிழைத்துக் கொள்கின்றனர். அவ்வாறின்றித் தேங்கிக் கிடப்போர் பல்வேறு வகையான இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இவ் ஆசிரியர் முதல்வகை. கற்பித்தலில் ஏமாற்றங்களைத் தவிர்க்க புதிய மாற்றங்களுக்கேற்ப தன்னை உருமாற்றிக் கொண்டு கற்றலில் புதுமைப் படைத்து வருவது முன்மாதிரி செயலாகும். கணிணியில் கணிதத்தை மாணவர்கள் எளிதாகவும் விரைவாகவும் ஆர்வமுடன் கற்றுக்கொள்வது மட்டுமல்ல. கற்றலில் மிகவும் பின்தங்கிய, மெல்ல மலரும் மாணவர்களிடையே அதிகம் காணப்படும் தொடர் விடுப்பு மற்றும் இடைநிற்றல் போக்குகள் கணிணிவழிக் கற்றலால் மாறி வருகின்றன. மாணவர்கள் நாடோறும் பள்ளி வருவதை இது ஊக்குவிக்கிறது. விலையுயர்ந்த கற்றலுக்கு உதவும் இதுபோன்ற கருவிகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பழுதாகிப் போய்விடும் என்று கருதி இரும்பு அலமாரிக்குள் மிக பாதுகாப்பாக, பயன்படுத்தாது வைத்திருக்கும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. மாணவர்கள் தம் கற்றலுக்காகப் பயன்படுத்திப் பழுதாகிப் போவதே சாலச்சிறந்தது. இவரது கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகள் மிகுந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதுமட்டுமின்றி, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய திறனாய்வு வழித் தகுதித் தேர்வு (NMMS) மூலமாக மாதந்தோறும் கிடைக்கப்பெறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகையானது தம் பள்ளிப் பிள்ளைகளுக்கு மட்டும் அல்லாமல் ஒன்றியத்தில் உள்ள தகுதியும் ஆர்வமும் மிக்க ஏனைய பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்திட தன்னார்வ பயிற்சி வகுப்புகளை இவர் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த உயரிய செயல் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது கூடுதல் சிறப்பாகும். இதற்கு இவருடைய சக ஆசிரிய நண்பர்கள் மனமுவந்து எல்லா வகையிலும் உதவி வருவது பாராட்டத்தக்கது. மேலும், இப்பயிற்சியின்போது நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு அறுசுவை உணவுடன் பயிற்சிக்குப் பின் மாணவர்கள் பயிற்சியில் கற்றுக்கொண்டவற்றை வீட்டிலும் ஓய்வு நேர வகுப்பிலும் வலுப்படுத்திக் கொள்ளும் பொருட்டு அதற்குண்டான பல பக்கங்கள் நிறைந்த கற்றல் பொருள்கள் விலையில்லாமல் வழங்கி வருவதும் இவரது சமூக சேவைக்குத் தக்க சான்றாகும். அறியாமை இருளை அகற்றுவதுதான் ஆசிரியரின் தலையாயப் பணி. அந்த வகையில் இவர் தாம் கற்றுக்கொண்ட புத்தாக்க அறிவை மற்றவர்களுக்குக் கடத்துவதை சமுதாயப் பணியாகக் கொண்டுள்ளதை இவரது கற்கண்டு கணிதம் இணையதளம் பறைசாற்றும். மாணவர்களை மட்டுமல்லாது சக ஆசிரியர் பேரினத்தையும் தம் அரும்பெரும் செயல்களால் ஒளிரச் செய்து கொண்டிருக்கும் இவர் ஓர் ஒப்பற்ற ஒளிரும் ஆசிரியர் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது! அயராமல் உழைத்து வரும் குழந்தைகளின் நல்லாசிரியர் வே.லதா! அண்மைக் காலமாக ஆசிரியப் பெருமக்களின் பணித் திறத்தை வேண்டுமென்றே ஏதோ குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடிக்க இயக்குநர் முதற்கொண்டு மாவட்ட, வட்டார அளவில் அலுவலர்களை ஏவிவிடும் வேடிக்கை மலிந்து வருகிறது. வேறெந்த துறைகளிலும் கடைப்பிடிக்காத இதுபோன்ற பதட்ட நிலை நடைமுறைகள் ஆகச்சிறந்த உயர்பணியாக விளங்கும் கல்விப் பணியில் கணந்தோறும் பணியிடைக் குறுக்கீடுகள் என்பது மனித ஆக்கப் பேரிடர்கள் அன்றி வேறில்லை. ஆசிரியர்களின் மீதான நம்பிக்கைகளும் மதிப்புகளும் சமூகத்தில் அதிகரித்திட அரசு மற்றும் அலுவலர்களின் அரவணைப்பு மிக அவசியம். ஆங்காங்கே மண்டிக் காணப்படும் களைகளைக் களைய நல்ல விளைச்சல் நிலத்தை ஒட்டுமொத்தமாக யாராவது அழிக்க முன்வருவார்களா? இருந்தபோதிலும், தம் துறை சார்ந்த மன நெருக்கடிகளைப் புறந்தள்ளி வைத்து மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மாணவர்களின் நலனைக் தோள்களில் சுமந்து கொண்டு கண்துஞ்சாமல் உழைக்கும் காரிகைகள் இங்கு ஏராளம். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் விதமாக கடந்த பல ஆண்டுகளாகவே அரசுப் பள்ளிகளின் மீதான மறைமுகத் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. அதன் ஒரு பகுதியாக தனியார் பள்ளிகள் வெடிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் வெளிப்படையான ஊரகப்பகுதி மாணவர்கள் சேர்க்கைக்கான கோடிக்கணக்கிலான நிதியுதவிகள் ஆண்டுதோறும் அளித்து வருதல் என்பன ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஓர் அரசு என்பது அதன் கீழுள்ள அரசுப் பள்ளிகளை நல்ல முறையில் வளர்த்தெடுக்க முன்வரவேண்டும். அதைவிடுத்து நடுத்தர மற்றும் பாமர மக்களிடையே அரசுப்பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அவநம்பிக்கைகளை அதிகரிக்கச் செய்து போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக நிறைவேற்ற நிதிச் சுமையைக் காரணம் காட்டி மறுப்பதும் என்பது வேதனைக்குரியது. கடந்த பத்தாண்டுகளில் பல நல்ல நிலைமையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் எண்ணிக்கையும் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடிக்குமேயானால் எதிர்காலத்தில் அரசுப் பள்ளிக் கூடங்கள் மாணவர்கள் ஒருவரும் இல்லாத மயானக் கூடங்களாகத்தான் காட்சியளிக்கும். கூடவே, பல இலட்சக்கணக்கான ஆசிரியப் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டு வருங்கால படித்த இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும். இந்நிலையில் 35 மாணவர்களுடன் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஈராசிரியர் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றார் திருமதி மே.லதா! இவர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரிடம் வீடு வீடாகச் சென்று காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் கட்டுப்பட்டதன் விளைவாக பள்ளி மாணவர் சேர்க்கை இருமடங்கு அதிகரித்தது. அதுமட்டுமின்றிக் கூடுதலாக ஓர் ஆசிரியர் பணியிடத்தையும் பெற்று பள்ளியின் முகத்தை மாற்றினார். மேலும், ஒரு பள்ளிக்குரிய போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தமிழகத்தில் இன்றளவும் காணப்படும் பரிதாபப் பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் தம் பள்ளிக்குத் தேவையான மின் இணைப்பு வசதியினைப் போராடிப் பெற்றது இவரது பெரும் சாதனையாகும். அதன்பின் இருண்டு கிடக்கும் வகுப்பறையை மின் விளக்குகளால் ஒளிரச் செய்துள்ளார். பள்ளிக் குழந்தைகளின் புழுக்கத்தைப் போக்கும் வகையில் மின் விசிறிகள் பலவற்றை நிறுவிப் பிஞ்சு உள்ளங்களில் தென்றலாக இவர் உலவியது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே, குடிநீர் இணைப்பையும் கோரிப் பெற்று, நல்ல பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியைக் குழந்தைகளுக்கு வழங்கி தாகம் தணித்ததையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இருபாலருக்கும் தனித்தனிக் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தித் தந்து குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தது அனைவருக்கும் வியப்பைத் தந்தது. புதிய சமையலறை ஏற்படுத்திக் கொடுத்ததும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சுற்றுச்சுவர் வசதியினைத் தோற்றுவித்துப் பூமியை மட்டுமல்லாமல் ஊர்ப் பொதுமக்கள் மனங்களையும் குளிரச் செய்தார் என்பது மிகையில்லை. குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகப் பள்ளிக்கு இடையூறாகவும் பள்ளிப் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பங்களைச் சட்டமன்ற உறுப்பினர் உதவியுடன் அகற்றப் பெருமுயற்சி எடுத்தது பாராட்டத்தக்கது. அதுபோன்று, வெகு தொலைவில் இருந்து வரும் குழந்தைகளுக்கு மாதாந்தோறும் ரூ. 3000/= வழங்கி இருவேளையும் வாகன வசதி மூலம் கடந்த ஐந்தாண்டுகளாகத் தம் சொந்த செலவில் அழைத்து வரச் செய்து வருவது என்பது இவரது சமூக அக்கறையைப் பறைசாற்றும். பள்ளிக் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கச் செய்யும் பொருட்டு தக்க பயிற்சியாளரைக் கொண்டு தற்காப்புக் கலை பயிற்சி வகுப்பையும் அதற்குரிய சிறப்புத் தனி உடை மற்றும் தனியார் பள்ளிக் குழந்தைக்கு இணையான உடுப்புகளுக்கு ஆகும் செலவினைத் தாமே ஏற்றுக் கொண்டதுடன் மேலும், ரூ.75,000/=ஐ மனமுவந்து பள்ளிக்காக அளித்து மெய்நிகர் வகுப்பு ஒன்றையும் உருவாக்கிக் கொண்டுள்ளார். வகுப்பறைகள் செயல்பாடுகளிலும் தனி முத்திரை பதிக்கும் விதமாக இவர், குழந்தை மைய அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கும் வகையில் தாமே செய்து கற்றல் மற்றும் விளையாட்டு முறைகளில் பாடக் கடினத் கருத்துகளை குழந்தைகள் மனத்தில் நன்கு பதிய வைக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் உயர் அலுவலர்களின் பாராட்டுக்களைக் குவித்தன. எளிய களப் பயணம், மரத்தடி நிழலை அனுபவித்துக் கொண்டு நாளிதழ் வாசிப்பு, உணவுத் திருவிழா எனக் குழந்தைகளின் உற்சாகமும் ஊக்கமும் குன்றாத வகையில் மகிழ்ச்சியான கற்றலுக்கு வழிவகுத்த இவரது செய்கைகள் பலரது பாராட்டைப் பெற்றது. மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் மாநில அரசின் நல்லாசிரியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவரை அவ்வப்போது அலங்கரித்து வந்தாலும் என் ஊர், என் பள்ளி, என் பிள்ளைகள் என்பதில் உறுதியாக இருந்து பள்ளி முன்னேற்றத்தை முழு மூச்சாகக் கொண்டு அயராமல் உழைத்து வரும் இவர் கல்வி வானில் சிறப்பாக ஒளிரும் (தலைமை) ஆசிரியர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மாணவர்களை நேசிக்கும் ஆசிரியர்களின் ஆசிரியர் முனைவர் ப. இரமேஷ் அண்மையில் உலகம் முழுவதும் பேரிடரை விளைவித்து வரும் தீநுண்மி - 19 இலிருந்து மக்கள் விடுபடும் நாள் எந்நாளோ? தெரியவில்லை. ஒவ்வொருவரும் இக்கொடும் நோய்த்தொற்றுப் பீடிப்பதிலிருந்து தப்பிக்க தங்கள் இன்னுயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உழலும் அவலம் கொடுமையானது. இக்கொடிய சூழலில் அதிகம் பாதிக்கப்பட்ட பிரிவினராக மாணவச் சமுதாயம் காணப்படுகிறது. ஒரு நாட்டின் வளமும் நம்பிக்கையும் மாணவர்களே ஆவர். கல்வி இனி செல்ல வேண்டிய பாதை அடர்ந்த இருள்வெளியாக இருப்பது கண்கூடு. இத்தகு கடின சூழலில் இணையவழியிலான கற்றல் மற்றும் கற்பித்தல் வகுப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. மாறிவரும் புதிய சூழலுக்கு ஆசிரியச் சமூகத்தைப் பழக்கவும் இயற்கைப் பேரிடரைத் திறம்படக் கையாளும் ஆளுமையை அடையவும் பயிற்சிகள் இன்றியமையாதவை. பயிற்சிகளின் குறிக்கோள்கள் முழுமையடைய சுய முயற்சி அவசியம். ஆசிரியர்களிடையே இதனைத் தூண்டித் துலங்க செய்ய தன்னலம் கருதாத முன்மாதிரிகள் ஒரு சிலர் தேவைப்படுகின்றனர். இத்தகையோரில் பலர் தம் மேல் பேரொளி ஒன்றை செயற்கையாகப் பரவ விட்டுக்கொண்டு பள்ளிப் பிள்ளைகள் மற்றும் சமூகத்தின்மேல் அக்கறைக் துளியுமின்றி தம்பட்டம் அடித்துக் கொண்டு திரியும் கும்பலில் ஆட்படாமல் அகப்படாமல் பிறர் நலம் காப்பதையே முழுமூச்சாகக் கொண்டு விளங்கும் தூண்டுகோல்கள் மிக சொற்பம். அந்த வகையில் மன்னையின் மைந்தராகப் பிறந்து தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்கபெருமாள்கோவிலில் வசித்துக்கொண்டு கருநிலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியரும் முனைவருமான ப. இரமேஷ் என்பவர் தனித்துவமானவர். இவரை ஆசிரியர்களின் ஆசிரியர் என்று அழைப்பது சாலப் பொருத்தம். நாம் அறிந்து வைத்திருக்கும் இவர் போன்ற பல ஆளுமைகள் ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் இதயங்களில் மட்டும் வீற்றிருந்தால் போதாது. பிஞ்சு உள்ளங்களில் நெஞ்சங்களில் நீங்காமல் நிறைந்திருப்பது இன்றியமையாதது அல்லவா? ஊர்க்குருவி உயரப் பறந்தாலும் சின்னஞ்சிறு கிளையில் அதற்காகவே இருக்கும் குட்டிக்கூடு மிக முக்கியம். அதுபோல் தான் ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவருக்கென்று தவமிருக்கும் பள்ளிப் பிள்ளைகளின் கல்வி நலன் மிக முக்கியம். அந்த வகையில் இவர் ஆசிரிய இனத்திற்கு மட்டுமல்ல மாணவ சமுதாயத்திற்கும் பெரிய கொடுப்பினை. இவர் வகுப்பில் பயிலும் அனைத்து தொடக்கநிலை மாணவர்களும் முழுமையாகத் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிக்க தொடர்ந்து பயிற்சி அளித்தன் விளைவாக வாசிக்கக் கற்றுக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள் அனைவருக்கும் அறைகூவலாக இருப்போர் மெல்லக் கற்கும் மாணவர்கள்தான். அவர்களையும் கல்வியில் முழுமையடைய வைப்பதே ஒரு சிறந்த ஆசிரியரின் கடமையாகும். அத்தகு, மெல்லக் கற்கும் மாணவர்களை வாசிக்க வைப்பதற்கு தொழில்நுட்ப உலகில் அனைத்துக் குழந்தைகளும் விரும்பும் செல்பேசி, கைக்கணிணி, மேசைக்கணிணி ஆகியவற்றைப் பயன்படுத்தி தமிழ், ஆங்கில எழுத்துக்கள் வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கும் விளையாட்டு முறையில் பல்வேறு செயலிகள் மூலம், எழுத்துக்களை வாசிக்கவும் உச்சரிக்கவும் கற்றுத்தருவது வாடிக்கை. ஆங்கில வாசிப்பிற்கு ஒன் நோட் (One Note) இல் காணப்படும் ஆழ் வாசிப்பு (Immersive Reader) மற்றும் குழுக்கற்றலை மேம்படுத்த பகுப்புமுறை (SPLITTER METHOD) மென்பொருள்களை ஏழை எளிய மாணவர்களிடம் அறிமுகம் செய்து வைத்து கற்றலை மேம்படுத்தியது அனைவரின் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், ஊருக்கு வெளியே ஏரிக்கரை ஓரமாக பல குடிசைகளில் தங்கி இருந்த பழங்குடியின மக்களின் பள்ளி செல்லாக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க எடுத்த முயற்சியின் விளைவாக 15 பேர் பள்ளியில் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். அடுத்ததாக, பள்ளியின் வகுப்பறைச் சூழலை மாற்றியமைக்க வேண்டும் என்ற கனவுகளோடு வேல்ட் விஷன் நிறுவனத்தை அணுகிக் கேட்டதன் விளைவாக இரண்டரை இலட்சம் நிதியுதவியில் கனவினை நனவாக்கிக் கொண்டது சிறப்பு. தமிழ்நாடு டிஜிட்டல் டீம் என்ற வாட்சப் குழு மூலமாக கொரோனா கால ஊரடங்கில் வீட்டில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் ஜூம் ஆப் வழியாக ICT (கணினி தொழில்நுட்பம்) ஆன்லைன் பயிற்சியை ஏப்ரல் மாதம் 01.04.2020 முதல் 13.04.2020 வரை 13 நாட்கள் ஆசிரியர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வழங்கியதும் இந்த பயிற்சியில் 27 தலைப்புகளில் 27 வகுப்புகள் 25 கருத்தாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்ததும் ஒரு வகுப்புக்கு 100 ஆசிரியர்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்ட ஆசிரியர்கள் 2700 பேர் இந்த பயிற்சியின் வாயிலாக தொழில்நுட்பம் சார்ந்த பாட கருத்துக்களைக் கற்றுப் பயன் அடைந்ததும் ஒரு மைல்கல் எனலாம். பின்னர் 20.04.2020 முதல் 22.04.2020 வரை மூன்று நாட்கள் 3 வகுப்புகள், மைக்ரோசாப்ட் மென்பொருள் கருவிகள் மூலம் வகுப்பறை கற்பித்தல் என்னும் தலைப்பில் வழங்கிய பயிற்சியில் 500 ஆசிரியர்கள் பயன்பெற்றது அறியத்தக்கது. மூன்றாம் கட்டமாக மே மாதம் 08.05.2020 முதல் 17.05.2020 வரை 10 நாட்கள் மைக்ரோசாப்ட் டீம்ஸ் ( Microsoft Teams Application) செய்தி வழியாக வழங்கப்பட்ட பயிற்சியில் முதல் நான்கு நாட்கள் TNTP, DHIKSHA, E LEARN முதலான கற்றல் கற்பித்தல் வள வலைத்தளங்களில் ஆசிரியர்கள் எவ்வாறு பயன்படுத்துவது, எப்படி பங்களிப்பு செய்வது என்பது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதன்பின், பாடங்களை எவ்வாறு மின் பாடப்பொருள் (e-Content) காணொலியாகத் தயாரிப்பது, வகுப்பறையில் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்திப் பாடங்களை எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்தும் பயிற்சிகள் இவரால் நடத்தப்பெற்றன. இந்த பயிற்சியில் 2000 ஆசிரியர்கள் பயன்பெற்றனர். மொத்தமாக 26 நாட்களில் 50 இணையவழிப் பயிற்சி வகுப்புகள் இவரது ஒருங்கிணைப்பில் பல்வேறு கருத்தாளர் பெருமக்களின் உதவியோடு நடைபெற்றதும் பயிற்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் மின் சான்றிதழ் (e-Certificate) வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களைப் பணி சார்ந்து வளப்படுத்துவது என்பது காலத்தின் கட்டாயம். மாறிவரும் புதிய புதிய மாற்றங்களுக்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் ஆசிரியப் பெருமக்கள் மாணவர்களுக்குக் கிடைத்த வரம் ஆகும். அதற்கு திறன்மிகு பயிற்சியும் தன்னார்வ முயற்சியும் உரம் எனலாம். நண்பர் இரமேஷ் தம் அயராத முயற்சியினால் நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகவும் ஏழை, எளிய, பழங்குடியின மாணவர்களின் இருண்ட வாழ்க்கையில் ஒளிரும் ஆசிரியராகவும் விளங்கி வருவது பெருமையாகும். கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account