[]       ராஜராஜ சோழனும் விஞ்ஞானி ராஜாமணியும்      யோகி (விஜயகுமார் ஜெயராமன்)         ஆசிரியர் : யோகி (விஜயகுமார் ஜெயராமன்), vijayacumar21@gmail.com     மின்னூல் வெளியீடு :   http://FreeTamilEbooks.com     அட்டைப்படம்,மின்னூலாக்கம்  :  பிரசன்னா,  udpmprasanna@gmail.com      உரிமை :  Creative Commons Attribution-NonCommercial-  ShareAlike 4.0 International License.    உரிமை : கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம்,பகிரலாம்             பொருளடக்கம் புத்தக அறிமுகம் 4  என்னுரை 5  சமர்ப்பணம் 6  ராஜராஜ சோழனும் விஞ்ஞானி ராஜாமணியும் 7  எங்களைப் பற்றி: 39  உங்கள் படைப்புகளை வெளியிடலாமே: 43    புத்தக அறிமுகம்     சோழர்களைப் பற்றி அறிந்து கொள்ள பல வழிகள் இப்போது உள்ளது. உதாரணங்கள்: நீலகண்ட சாஸ்திரி அவர்கள் சோழர்களைப் பற்றி முழுமையாக எழுதிய புத்தகம், விக்கிபீடியா மற்றும் பல வரலாற்றுப்புத்தகங்கள். ஆனாலும், தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சோழ வம்சத்தைப் பற்றியும் அந்த வம்சத்தில் அரசாண்ட மாமன்னன் ராஜராஜ சோழனைப் பற்றியும் அதிகம் அறிந்து கொண்டது அமரர் கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்" என்ற வரலாற்றுப் புதினம் மூலமாகத் தான் இருக்கும். இந்த நூற்றாண்டில் இந்த வரலாற்றுப் புதினம் அளவுக்கு வேறு எந்த புத்தகமும் தமிழர்களை ஈர்க்கவில்லை.   மாமன்னன் ராஜராஜ சோழன் தென்னிந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளை ஒரே குடையின் கீழ் அரசாண்ட பேரரசன். 1000 ஆண்டுகளுக்கு முன்பே மிகச் சிறந்த ஆட்சி நிர்வாக முறையை அமல்படுத்தியவன். "குடவோலை" என்ற சிறப்பான தேர்தல் முறையையும் கடைப்பிடித்தவன்.   விஞ்ஞானி ராஜாமணி கண்டுபிடித்த கால இயந்திரம் மூலமாக மாமன்னன் ராஜராஜ சோழன் நிகழ்காலத்துக்கு வருகிறார். 1000 ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு வியக்கிறார். அதே நேரத்தில், மக்களாட்சியின் ஆணிவேரான நமது தேர்தல் முறையில் நடக்கும் கேலிக் கூத்துகளைப் பார்த்து நொந்து கொண்டு தன் காலத்துக்கே திரும்புகிறார்.   இது முழுக்க முழுக்க ஒரு கற்பனைக் கதை. இக்கதையில் இடம்பெறும் சம்பவங்கள் மற்றும் பெயர்கள் யாரையும் அல்லது எவரையும் குறிப்பனவில்லை. என்னுரை     கணினி மென்பொருள் துறையைச் சார்ந்தவன். கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவன். வரலாற்றுக் கதைகள் படிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவன்.     நான் கல்கியின் தீவிர ரசிகன். அவரின் நாயகன் பொன்னியின் செல்வன் நமது காலத்துக்கே வந்து நமது தலைமுறை மக்கள் அவரைத் தரிசிக்க முடிந்தால் எப்படி இருக்கும், என்ன நடக்கும் என்ற கற்பனையின் வெளிப்பாடே இந்தப் படைப்பு.       நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது எழுதவேண்டும் என்ற நினைப்பு வந்துகொண்டே இருக்கும். இருந்தாலும், நமக்கு சரியாக எழுதவருமா? நம்மால் நல்லப் படைப்புகளைக் கொடுக்க முடியுமா என்ற பயம் வரும்போதெல்லாம் என்னுடைய கிறுக்கல்களையும் பொறுமையாக படித்து எனக்கு ஊக்கம் அளித்து என்னை எழுதத் தூண்டிக் கொண்டிருப்பது என்னுடைய மனைவி.   எழுத்துலகுக்கு புதியவன் நான். கருத்துப் பிழையோ, எழுத்து நடைப் பிழையோ இருந்தால் மன்னியுங்கள்.   நன்றி. சமர்ப்பணம்       அன்னைத்தந்தைக்கும்...   என் உற்றத் தோழியான என் மனைவிக்கும்...             என் வாழ்க்கையில் தேவதைகளாக வந்த என் இரு மகள்களுக்கும்...   ராஜராஜ சோழனும் விஞ்ஞானி ராஜாமணியும் வருடம் 2016 மார்ச் 7ம் தேதி அதிகாலை 4 மணி. விஞ்ஞானி ராஜாமணி கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்தார். இரண்டு நாளாக துளியும் தூக்கமில்லை. இருந்தாலும் அவரால் தூங்க முடியாது. தூக்கத்தை வென்றாக வேண்டும்.     அவரின் கனவு நனவாகும் நேரம் வெகு தூரத்தில் இல்லை. அவரின் வெகு நாள் லட்சியத்தை அடையப் போகும் நேரம். கேவலம் தூக்கம் அதை நிறுத்தி விடக் கூடாதென்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தார்.   விஞ்ஞானி ராஜாமணி திருவேங்கடசாமி இந்திய அளவில் அறியப்பட்ட ஒரு மனிதர். திருவேங்கடசாமி அவரது தந்தை பெயர். திருவேங்கடசாமி ஏதோ ஒரு சாதாரண வேலை தான் பார்த்துக் கொண்டு இருந்தார். ஆனால், மகனிடம் அவன் ஒரு விஞ்ஞானியாக சாதிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்த்து வந்தார்.   ராஜாமணி இப்போது இந்திய அறிவியல் ஆராய்ச்சி துறையில் விஞ்ஞானியாக வேலை செய்து கொண்டு இருக்கிறார். அது பிழைப்புக்கு. ஆனால், இப்போது அவர் உருவாக்கிக் கொண்டிருக்கும் இயந்திரம் வேலை சம்பந்தப்பட்டதில்லை. இது அவரின் தனிப்பட்ட வாழ்நாள் கனவு. அது நனவாகும் நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது.   ராஜாமணி இந்திய அளவில் அறியப்பட்ட ஒரு விஞ்ஞானியாக இருந்த போதிலும், மக்களில் பல பேருக்கு அவர் எப்படி ஒரு விஞ்ஞானியாக ஆனார் என்ற சந்தேகம் அடிக்கடி எழும். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.         பார்க்க ஒரு பாமரனைப் போல, போடும் உடையில் கவனம் செலுத்தாமல் ஏதோ ஒரு உடையை அணிந்து கொண்டு, பேச்சும் ஒரு பெரிய விஞ்ஞானியை போல இல்லாமல் இருப்பதால் அப்படி ஒரு சந்தேகம் தோன்றி இருக்கலாம். ஆனால், அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப் படுவதில்லை.   கல்யாணம் செய்து கொள்ளாததால் குடும்பத்தில் இருந்து எந்த தொந்தரவும் இல்லாமல் இருந்ததால் அதுவே அவருக்கு நிம்மதியாக இருந்தது. தன் கடன் அறிவியல் செய்து கிடப்பதே. என்று இருந்தார். அம்மாவும் அப்பாவும் காலமாகி விட்டார்கள். அவருக்கு இப்போது சொந்தம் என்று இருப்பது அவரின் அக்கா குந்தளவள்ளியும் அக்காவின் குடும்பமும் தான்.   வயது ஐம்பதை நெருங்கி விட்டது. எப்போதும் வேலை வேலை என்று இருப்பதால் ரத்தக் கொதிப்பு வந்து விட்டது. அவ்வப்போது கைகள் நடுங்கும். மற்றபடி ஆரோக்கியமாகத் தான் இருந்தார்.   இப்போது அவரின் கண்டுபிடிப்புக்கு வருவோம். அவர் கண்டு பிடித்துக் கொண்டு இருப்பது ஒரு கால இயந்திரம். உலகத்தில் எத்தனையோ பேர் முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். இது வரை கண்டுபிடித்த பாடில்லை. ஆனால், ராஜாமணி அப்படி இல்லை. இதோ அந்த இயந்திரத்தை கண்டுபிடிக்கும் தருணத்தில் இருக்கிறார். அவரின் வாழ்நாள் கனவல்லவா?.   அவரின் செல்பேசி சிணுங்கியது.   "ஹலோ, ராஜாமணி பேசறேன் சொல்லுங்க"   எதிர்முனையில் அவரின் உயர் அதிகாரி ராகவ் ராவ்.   "ராஜாமணி பிசியா இருக்கீங்களா, இப்போ பேசலாமா"   "சொல்லுங்க சார்"   "உங்க விடுமுறையில் தொந்தரவு பண்றதுக்கு சாரி, இது கொஞ்சம் அவசரம்"   "ஒன்றும் பிரச்சினை இல்லை சார், சொல்லுங்க"   "நாளைக்கு நம்ம டிபார்ட்மெண்ட் மத்திய அமைச்சர் விசிட் பண்றார். நீங்களும் இருந்தீங்கன்னா நல்லது. வர முடியுமா?"   என்னடா இது புது பிரச்சினை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். எந்த தொல்லையும் இருக்கக் கூடாதென்று தான் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்.   "இல்லை சார், இங்கே முக்கியமான வேலை இருக்கிறது, வர முடியாது. சாரி சார். தப்பா நினைச்சுக்காதிங்க" பவ்யமாக மறுத்தார்.   "இட்ஸ் ஓகே ராஜாமணி. நோ ப்ராப்ளம்"   செல்பேசியை அணைத்தார். நிம்மதியாக இருந்தது.   ராஜாமணியின் சொந்த ஊர் விழுப்புரம். அவரின் சொந்த வீட்டிலேயே தன்னுடைய ஆய்வகத்தை அமைத்துக் கொண்டிருந்தார். அவர் வேலை செய்து கொண்டு இருப்பது பெங்களூருவில். அவ்வப்போது விடுமுறை எடுத்துக் கொண்டு இங்கே வந்து விடுவார்.   அன்று இரவு 7 மணி. இயந்திரத்தை சோதனை செய்ய வேண்டியது தான் மிச்சம். ராஜாமணிக்கு ஒரே படபடப்பாக இருந்தது. என்ன நடக்கும் என்பதில் அவருக்கே நிச்சயமில்லை. பக்கத்தில் சொல்லிக் கொண்டு போவதற்க்கு கூட யாருமில்லை.     கால இயந்திரத்தை இயக்க ஆரம்பித்தார். அந்த இயந்திரத்தில் செல்பேசி பட்டன்கள் போன்று செட் செய்து இருந்தார்.   "பாஸ்ட்" என்ற பட்டனை அழுத்தி விட்டு, எண்களை அழுத்த ஆரம்பித்தார். 100 வருடங்கள் பின்னால் போவது தான் அவரது திட்டம்.       100 என்ற எண்ணை கவனமாக அழுத்த ஆரம்பித்தார். ஏற்கனவே அவருக்கு கை நடுங்கும் பிரச்சினை இருப்பதால் 100 அழுத்திய பின் அவரின் ஒரு விரல் 9 என்ற எண்ணை அவருக்கே தெரியாமல் அழுத்தி விட்டதை அவர் கவனிக்கவில்லை. விதி வேறு விதமாக வேலை செய்தது. இந்தப் பாழாய்ப்போன கை நடுக்கம் இப்போது தானா வர வேண்டுமா?.      "கோ" பட்டன் அமுக்கப்பட்டது. கால இயந்திரம் இயங்க ஆரம்பித்தது. வெகு வேகமாக சுழன்று நொடிகளில் காணாமல் போனது.   வருடம் 1007. மாசி மாதம் 22. மாலைப்பொழுது முதல் சாமம். கால இயந்திரம் தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்ள ஆரம்பித்தது. இயந்திரம் முழுவதும் நின்ற பின்பு ராஜாமணி கதவைத் திறந்து வெளியே வந்தார்.      ஒரே இருட்டு. எங்கேயும் வெளிச்சம் என்பதே இல்லை. 100 வருடங்கள் முன்பு இப்படித் தான் இருக்கும் என்று ராஜாமணி தெரிந்து தான் வைத்து இருந்தார். ஆனால், அவருக்கு புரியாதது ஒன்று தான். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இவ்வளவு இருண்டு போயா இருந்தது நமது நாடு என்று.   கையில் டார்ச் லைட் எடுத்துக் கொண்டார். அதன் வெளிச்சத்தில் தட்டுத் தடுமாறி நடந்தார். எங்கே இருக்கிறார் என்பது அவருக்கு புரியவில்லை. கொஞ்ச தூரம் நடந்து வந்ததும் சில கூரை வீடுகள் கண்ணில் தெரிந்தது.  அதில் யாராவது இருப்பார்கள், போய் பார்க்கலாம் என்று நடந்தார்.   ஒரு கூரை வீட்டின் உள்ளே விளக்கு வெளிச்சம் தெரிந்தது. அப்போது அந்த வீட்டில் இருந்து ஒரு மனிதர் வெளியே வந்தார்.   ராஜாமணி டார்ச் லைட் பிடித்துக் கொண்டு தூரத்தில் இருந்து ஆடி ஆடி வந்ததை பார்த்தவுடன் ஏதோ கொள்ளிவாய் பிசாசு என்று நினைத்தாரோ என்னவோ விழுந்தடித்து கொண்டு அடுத்த வீட்டை நோக்கி ஓடிப் போய் கதவை படப் பட என்று தட்டினார்.   "டேய் பொன்னா பொன்னா, வெளியே வாடா" என்று அந்த மனிதன் கத்தினான்.   பொன்னன் கதவைத் திறந்து கொண்டு அவசரமாக வெளியே வந்தான்.   "என்னடா, எதற்காக இந்த நேரத்தில் தொல்லை செய்கிறாய். அப்படி என்ன தலை போகிற அவசரம்"   கதவைத் தட்டியவன் பொன்னனிடம் ராஜாமணி வரும் திசையை நோக்கி கைகாட்டினான்.   "அங்கே பாரப்பா, ஏதோ ஒரு உருவம் கையில் நெருப்புடன் நமது வீடுகளை நோக்கி வந்து கொண்டிருக்கிறது."   அந்தத் திசையை பார்த்த பொன்னனிடமும் கிலி தொற்றிக் கொண்டது.     ரெண்டு பேரும் என்ன செய்யலாம், எந்த ஆயுதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று நாலா பக்கமும் தேட ஆரம்பித்தார்கள்.  ஒருவன் கோடரியையும் ஒருவன் பெரிய கம்பையும் எடுத்துக் கொண்டான். வரப் போகும் ஆபத்து தெரியாமல், நமது ராஜாமணி நிதானமாக வந்து கொண்டிருந்தார்.   ராஜாமணி கிட்டே வர வர தெளிவாக தெரிந்தார். பொன்னனும் அவனது நண்பனும் உற்று நோக்கினார்கள். இப்போது ஏதோ ஒரு மனிதன் போன்ற உருவம் தான் வருகிறது என்பது புரிந்தது. ஆனால் அந்த உருவம் ஏன் இவர்கள் மாதிரி இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது என்பது புரியவில்லை.   ராஜாமணி போட்டிருந்த பாண்ட் சட்டையும், கிராப்புத் தலை முடியும் பார்ப்பதற்கு அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. அவன் ஒன்று வேற்றுக் கிரகத்து ஆள் ஆக இருக்க வேண்டும், அல்லது வேற்று நாட்டு வியாபாரியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருந்தார்கள்.   அவர் கையில் வைத்திருக்கும் சிறிய குழாயில் எப்படி நெருப்பை அடைக்கி வைத்திருக்கிறார் என்றும் அவர்களுக்கு புரிய வில்லை.   ராஜாமணி வெகு அருகில் வந்து விட்டார். அவருக்கு மனிதர்களை பார்த்ததும் கொஞ்சம் தைரியம் வந்துவிட்டது. பொன்னனைப் பார்த்து கேட்டார்.   "இது எந்த ஊர்"   இந்த உருவம் பேசுகிறது. அவன் ஒரு மனிதன் தான் என்று இப்போது தான் பொன்னனுக்கும் அவன் நண்பனுக்கும் உறுதியானது.     "நீங்கள் யார் அய்யா, எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள், தூர தேசமா, உங்களை பார்த்தால் எங்கள் நாட்டவர் போல தெரியவில்லையே" பொன்னன் தான் கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு கேட்டான்.   "நான் இதே ஊர் தான், எதிர்காலத்தில் இருந்து வருகிறேன். சுதந்திர போராட்ட வீரர்களைப் பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறேன்."  என்று ராஜாமணி சொன்னவுடன், பொன்னனும் அவனது நண்பனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.   ராஜாமணி சொன்னதில் சில வார்த்தைகள் தான் அவர்களுக்கு புரிந்தது. இது ஏதோ தூர தேசத்தில் இருந்த வந்த கிராக்கு என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.  ஏதோ போராட்டம் என்று வேறு சொல்கிறான். ஏதாவது புரட்சிக் குழுவைச் சேர்ந்தவனாக இருக்குமோ என்ற சந்தேகமே அவர்களுக்கு வந்துவிட்டது.      இதே ஊர் தான் என்று சொல்லி விட்டாலும் அவர்கள் 'நாடு' என்று சொன்னதில் ராஜாமணி சிறிது குழப்பமடைந்து விட்டார். 100 வருடங்களுக்கு முன்பு அநேகமாக இந்தியா ஒரே நாடாகி விட்டதே. அப்போது தான் முதல் முதலாக அவருக்கு அந்த சந்தேகம் எழ ஆரம்பித்தது.   நாம் நிஜமாகவே 100 வருடங்களுக்கு முன்பு தான் வந்திருக்கிறோமா அல்லது வேறு ஏதாவது வருடத்துக்கு வந்து விட்டோமா என்று. ஏதோ மூளையில் ஒரு பொறி தட்டியது.   கால இயந்திரத்தில் எண்களை தட்டிய போது தன் கைகள் சிறிது நடுங்கியது நினைவுக்கு வந்தது. நடுங்கியதில் ஏதாவது ஒரு பட்டனை அழுத்தி விட்டேனோ என்று யோசிக்க தொடங்கினார்.   அப்படி அழுத்தி இருந்தால் இப்போது அவர் 1000 வருடங்கள் பின்னோக்கி வந்திருக்கிறார். அவர் இயந்திரம் நன்றாக வேலை செய்கிறது என்ற மகிழ்ச்சியை தாண்டி இப்போது பயம் தான் வந்தது.   'இது எந்த நாடாக இருக்கும்' யோசிக்கத் தொடங்கினார்.   ராஜாமணி யோசித்துக் கொண்டிருக்கையில் பொன்னனும் அவன் நண்பனும் தங்களுக்குள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். ராஜாமணியை சோழப் படையிடம் ஒப்படைத்து விடுவதென்று.   சோழப் படையின் உபதளபதி பக்கத்தில் இருக்கும் சிறு நகரத்தைச் சேர்ந்தவர் தான். அப்போது அவர் ஊரில் தான் இருக்கிறார் என்று கேள்விப் பட்டு இருந்தார்கள்.   ராஜாமணிக்கு இவ்வளவு காலம் பின்னோக்கி வந்து விட்டு எதையும் அறிந்து கொள்ளாமல் தப்பித்து செல்லவும் மனமில்லை. அதனால் பொன்னனும் அவன் நண்பனும் என்ன சொல்கிறார்கள் என்று எதிர்பார்த்து நின்று கொண்டு இருந்தார்.   பொன்னனின் நண்பன் தான் முதலில் பேசினான்.   "அய்யா, நீங்கள் பேசுவது எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நாளை காலை உங்களை எங்கள் படையின் உபதளபதி அவர்களிடம் அழைத்துப் போகிறோம். நீங்கள் இன்று இரவு என்னுடைய வீட்டில் தங்கிக் கொள்ளுங்கள்."   அதுவும் நல்லதுக்கு தான் என்று ராஜாமணி நினைத்துக் கொண்டார்.     இரவு கொஞ்சம் பயத்தோடு தான் உறங்கினார். காலையில் சீக்கிரமே முழிப்பு வந்துவிட்டது.   மாற்றுடை எதுவும் எடுத்து வராததால் அதே உடையை உடுத்திக் கொண்டு பொன்னனுடன் கிளம்பி விட்டார். போகும் வழி எங்கும் மக்கள் ராஜாமணியை ஏதோ வேற்றுக் கிரகத்து மனிதனை போல பார்த்தார்கள்.   சிறிது நேரத்தில் பெரிய சாலையை வந்தடைந்தார்கள். சாலை ஓரத்தில் ஒரு கல்லில் ஏதோ எழுத்தைச் செதுக்கி இருந்தார்கள். ஜாங்கிரியை பிய்த்து போட்டது போல இருந்தது. ராஜாமணியின் மூளை விழித்துக் கொண்டது. ஆஹா, இது கிரந்த எழுத்து அல்லவா? இந்த வகை எழுத்தின் காலம் பிற்கால சோழர் காலம் ஆயிற்றே? நாம் சோழர் காலத்துக்கு வந்து விட்டோம் என்று நினைக்கும்போதே அவருக்கு மெய்சிலிர்த்தது. எந்த மன்னனின் ஆட்சிக் காலம் என்று மட்டும் தெரியவில்லை.   ரெண்டு பக்கமும் பார்த்துக் கொண்டே நடந்தார். எங்கும் பச்சை பசேல் என்று இருந்தது. சோழ நாடு சோறுடைத்து என்று சும்மாவா சொன்னார்கள்.   பராக்கு பார்த்துக் கொண்டே வந்ததில் ஒரு சிறு நகரத்துக்குள் வந்து விட்டதை அவர் கவனிக்க வில்லை. பொன்னன் தான் அவருக்கு நினைவு படுத்தினான்.   "அய்யா நாம் உபதளபதியின் மாளிகையை நெருங்கி விட்டோம். அங்கே பணிவுடன் நடந்து கொள்ளுங்கள்" என்று கூறினான்.   மாளிகையின் வெளியே படை வீரர்கள் பலர் இருந்தார்கள். என்ன ஏது என்று விசாரித்து விட்டு, சோதனை செய்து விட்டு தான் உள்ளே அனுப்பினார்கள். ராஜாமணியை பார்த்த போது அவர்களுக்கு வேடிக்கையாகவும் சந்தேகமாகவும் இருந்தது.   உபதளபதி மணித்தேவர் ஏதோ மும்முரமாக ஒரு ஓலையைப் படித்துக் கொண்டிருந்தார். ராஜாமணியைப் பார்த்ததும் அதிர்ச்சியில் எழுந்தே நின்று விட்டார்.   அவர் போரிலும் துறைமுகங்களிலும் நிறைய வேற்று நாட்டவர்களையும், யவனர்கள், சப்பை மூக்கு உள்ளவர்களையும் பார்த்திருக்கிறார்.   ஆனால் அவர்கள் யாரும் ராஜாமணியைப் போல உடையோ, கிராப்பு முடியோ கொண்டிருக்கவில்லை.   அதிர்ச்சி அடங்கிய பின்பு விசாரிக்க ஆரம்பித்தார்.   "பொன்னா, யார் இந்த மனிதர். எந்த நாட்டவர்."   "உப தளபதியாருக்கு வணக்கம். இந்த மனிதர் யார் என்று தெரியவில்லை. இவர் சொல்வதும் சரியாக புரியவில்லை உப தளபதியாரே. நீங்கள் விசாரித்தால் உண்மை விளங்கும் என்று உங்களிடம் அழைத்து வந்தேன்" பொன்னன் பணிவாக எடுத்துரைத்தான்.   இப்போது ராஜாமணிக்கு குழப்பம் வந்து விட்டது. இவர்களிடம் எப்படி விளங்க வைப்பது என்று.   "அய்யா நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர், எங்கள் மொழியை எப்படி பேசுகிறீர்கள்" உப தளபதி கம்பீரக் குரலில் கேட்டார்.   "உப தளபதி, நான் தங்களுக்கு பதில் அளிக்கிறேன். அதற்கு முன் எனக்கு சில விவரங்கள் தர வேண்டும்"   என்னடா இந்த கிராக்கு உப தளபதியிடமே எதிர்த்து கேள்வி கேட்கிறது என்று பொன்னனுக்கு உதறல் எடுத்தது.   மணித்தேவருக்கும் இந்த ஆச்சரியம் ஏற்பட்டாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் பேசினார்.   "கூறுங்கள் அய்யா, உங்களுக்கு என்ன விவரம் வேண்டும்"   "இது எந்த நாடு, இப்போது நாட்டின் மன்னர் யார் எனக் கூறுங்கள் உப தளபதியாரே"   "இந்த மாளிகையின் வெளியே கம்பீரமாக பறக்கும் புலிக் கொடியை நீர் பார்க்க வில்லையோ. அதை வைத்து இது சோழ நாடு என்று அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு நீர் எந்த உலகத்தில் வந்து உள்ளீர். எங்கள் மாமன்னர் அருள்மொழித் தேவரைப் பற்றியும் தாங்கள் அறிந்திருக்கவில்லையோ?" மணித்தேவரின் குரலில் உண்மையான தேசப்பக்தியும் ராஜாமணியின் மீது உள்ள கோபமும் தெரிந்தது.   ராஜாமணிக்கு ஒரு கணம் தலையைச் சுற்றுவது போல இருந்தது. தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழனின் காலத்தில் தாம் இருக்கிறோம் என்று. பொன்னியின் செல்வனை ஒரு நொடியாவது தரிசனம் செய்து விட வேண்டும் என்று அப்போதே கங்கணம் கட்டிக் கொண்டார்.   "உப தளபதியாரே, மிக்க மகிழ்ச்சி. மாமன்னர் அருள்மொழித் தேவரைப் பற்றி நான் வரலாற்று நூட்கள் மூலமாக தெரிந்து வைத்துள்ளேன். நேரில் தரிசனம் செய்ததில்லை. தாங்கள் அவரிடம் அழைத்துப் போனால் அங்கே வைத்து என்னைப் பற்றி விளக்கிக் கூறுகிறேன்."     வேற்று நாட்டில் தங்கள் மாமன்னன் பற்றி எப்படி வரலாறு எழுதப்பட்டுள்ளது என்று குழப்பத்தில் ஆழ்ந்து விட்டார் உபதளபதி. ஆள் கண்டிப்பாக ஒரு குழப்பப் பேர்வழி தான் என்று அவரும் முடிவுக்கு வந்து விட்டார். பேசாமல் மன்னனிடமே அழைத்துச் சென்று விடுவது தான் நல்லது என்று நினைத்துக் கொண்டார்.   மாமன்னர் அருள்மொழித் தேவர் அப்போது தான் வேங்கி நாடு சென்று திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் மணித்தேவரும் மன்னனின் பரிவாரத்தில் சேர்ந்து கொள்வதாக ஏற்பாடு. அப்போது ராஜாமணியை மன்னனிடம் அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்தார் உபதளபதி.        அது வரை ராஜாமணியை வெளியே எங்கும் விடாமல் உணவு கொடுத்து மாளிகையில் வைத்துக் கொள்வதென்று முடிவானது.   நான்கு நாட்கள் கடந்தது. மன்னன் வரும் நாள் வந்தது. ஊரெங்கும் விழாக் காலம் பூண்டது போல இருந்தது. மாமன்னனை நேரிலே தரிசிக்கப் போகும் ஆவல் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தது. மாமன்னனின் பரிவாரம் ஊருக்குள் நுழைந்தது.   முதலில் யானைப் படை வீரர்கள், அதன் பின் குதிரைப் படை வீரர்கள், பின்பு மன்னனின் அழகிய தேர் நகரைப் பவனி வந்தது. மன்னன் ஓய்வு எடுப்பதற்கென்று ஒரு சிறிய அரண்மனை அந்த நகரத்தில் இருந்தது. மன்னனின் தேர் அந்த அரண்மனையில் நின்றது.   அருள்மொழித் தேவர் கம்பீரமாக தேரில் இருந்து இறங்கினார். ஆறு அடிக்கும் மேல் ஆஜானுபாகுவாக இருந்தார். பல போர்களை பார்த்ததற்கு சாட்சியாக பல விழுப்புண்கள் உடலில் தென்பட்டன.   கைகள் இரண்டும் இரண்டு உலக்கைகள் போல இருந்தன. கால்கள் இரண்டும் இரு தூண்கள் போல தோன்றின.   தன்னுடைய அழகிய பொலிவான முகத்தைத் திருப்பி அந்த நகரத்து மக்களை நோக்கி புன்முறுவல் பூத்தார்.   "மாமன்னர் வாழ்க வாழக" என்ற கோஷம் விண்ணை பிளந்தது.   ராஜராஜ சோழ தேவர் சற்று நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஓய்வு எடுத்து முடித்தப் பின் பணியாளர் வந்து மன்னனிடம் வணக்கம் தெரிவித்து விட்டு மணித்தேவர் வந்து காத்துக் கொண்டிருப்பதை கூறினார்.   "வரச் சொல்லுங்கள்" கம்பீரமான குரலில் உத்தரவு வந்தது.   ராஜாமணியை வெளியே நிறுத்தி விட்டு மணித்தேவர் மட்டும் தான் உள்ளே வந்தார். மன்னனுக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டாம் என்று அவர் நினைத்தது தான் காரணம்.   "வணங்குகிறேன் மன்னா" பணிவுடன் வணக்கம் சொன்னார் உப தளபதி.   "வாருங்கள் உப தளபதியாரே, தங்கள் சுகம் எப்படி? தாங்கள் என்னுடன் தஞ்சையம்பதி வருகிறீர்கள் அல்லவா"   "ஆம் மன்னா, தங்களுடன் வருவதற்கு ஆயத்தமாக உள்ளேன். அதற்கு முன் தங்களிடம் ஒரு மனிதரை அழைத்து வந்துள்ளேன். அந்த மனிதர் நம் நாட்டார் போல தெரிய வில்லை. ஆனால் நமது மொழியை பேசுகிறார். ஆளும் பார்ப்பதற்கு புதிராக உள்ளார். தாங்கள் விசாரணை செய்தால் நல்லது" இடைவிடாமல் பேசி முடித்தார்.   மன்னர் அவர்களுக்கு இயல்பாகவே புதிய இடங்கள், மனிதர்கள் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்ததால் அவரை உள்ளே அழைத்து வரப் பணித்தார்.   ராஜாமணி உள்ளே ஒருவிதமான பிரமிப்புடனே வந்தார். நான்கு நாட்களாக வீரர்கள் கொடுத்த ஏதோ ஒரு உடையை அணிந்து கொண்டு இருந்தார்.   இன்று தான் துவைத்து போட்டிருந்த தன்னுடைய பாண்டையும் சட்டையையும் அணிந்து கொண்டு வந்திருந்தார்.   உள்ளே நுழைந்ததும் எதிரே அமர்ந்திருந்த மன்னனின் ஆஜானுபாகான உருவத்தைப் பார்த்து அவருக்கு மயக்கமே வந்து விட்டது.   ராஜராஜ சோழனை நேரில் தரிசித்ததில் தன்னுடைய ஜென்மமே ஸாபல்யம் அடைந்தது என்று எண்ணிக் கொண்டார்.   நெடுஞ்சாண் கிடையாக மன்னனின் காலில் விழுந்து வணங்கினார்.      "வணங்குகிறேன் மன்னா"   ராஜாமணியின் உருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மன்னனுக்கு இன்னும் ஒன்றும் தெளிவாக விளங்க வில்லை.   இந்த மனிதன் எந்த நாட்டவனாக இருப்பான் என்றே யோசித்துக் கொண்டிருந்தார்.   "வணக்கம். தாங்கள் யார் என்று விரிவாக விளக்கிச் சொல்ல முடியுமா?" என்று வினவினான்.     "மன்னா, சோழ நாட்டு மக்கள், என்னைப் பார்த்து பயம் கொள்கிறார்கள். அது அவசியமில்லை. நான் இந்த மண்ணின் மனிதன் தான். ஆனால் எதிர் காலத்தில் இருந்து வருகிறேன். 1000 ஆண்டுகள் முன்னர் இருக்கும் காலத்தில் இருந்து வருகிறேன். நான் ஒரு ஆராய்ச்சியாளன். காலத்தைத் தாண்டி செல்லும் ஒரு கருவியைக் கண்டு பிடித்து உள்ளேன். அதைப் பயன்படுத்தி காலத்தைக் கடந்து பயணம் செய்ய முடியும். அப்படித் தான் நான் 1000 ஆண்டுகள் பின்னோக்கி வந்துள்ளேன். தங்களைப் பற்றி நான் வரலாற்றுப் புத்தகங்களில் படித்து உள்ளேன். ஆனால் தற்போது தான் தங்களை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது." இடை விடாமல் சொல்லி முடித்து மன்னனைப் பார்த்தார் ராஜாமணி.   மன்னனின் முகத்தில் குழப்ப ரேகைகள் தெரிந்தன.   ராஜாமணியே மீண்டும் தொடர்ந்தார்.   "தங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை எனில் இதோ எங்கள் காலத்தின் சில பொருட்களை பாருங்கள். இதை நீங்கள் எங்கும் காணமுடியாது." என்று சொல்லிவிட்டு தன்னிடமிருந்த பேனாவையும், டார்ச் லைட்டையும் எடுத்து காண்பித்தார்.   அவைகளைப் பார்த்ததும் மன்னனின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. இன்னும் அவர் குழப்பத்தில் இருந்து வெளியே வரவில்லை.   "தங்களின் பெயர் என்ன?" மன்னன் கேட்டான்.   "ராஜாமணி மன்னா" பணிவுடன் பதில் சொன்னார் ராஜாமணி.   நிச்சயமாக இது இந்த காலத்தின் பெயர் இல்லை. ராஜாமணி சொல்வதில் ஏதோ உண்மை இருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருந்தார் மன்னர்.   இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சோதனை செய்து பார்ப்போம் என்று எண்ணினார்.   "ராஜாமணி, வேறு என்ன அறிந்து கொண்டு இருக்கிறீர்கள் எம்மைப் பற்றி உங்கள் காலத்தில்"   "மன்னா, தாங்கள் கட்டிய பெரிய கோயில் கம்பீரமாக விண்ணைத் தொட்டுக் கொண்டு 1000 ஆண்டுகளைக் கடந்து இன்னும் நிற்கிறது. தங்களின் மகன் ராஜேந்திர சோழத் தேவர் தங்களை மிஞ்சிய வீரராக கடல் தாண்டிச் சென்று வெற்றிக் கொடி நாட்டினார். இன்னும் பல உள்ளன மன்னா."   பெரியக் கோயில் பெயரைக் கேட்டதும் மன்னனின் முகம் பெரிதாக மலர்ந்தது. தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டுமானப் பணி அப்போது தான் தொடங்கி இருந்தது.   ராஜாமணி அதைப் பற்றி குறிப்பிட்டு சொன்னதும் நிச்சயம் அவர் எதிர் காலத்தில் இருந்து தான் வந்திருக்கிறார். என்பது புரிந்தது மன்னனுக்கு. அறிவியல் பூர்வமாக எப்படி என்பது என்று புரியவில்லை என்றாலும் ஈசனின் அருளில் எதுவும் சாத்தியமே என்று நினைத்துக் கொண்டார்.   தம் மகன் தன்னை விட எதிர்காலத்தில் பெரிய வீரனாக விளங்கப் போகிறான் என்று கேட்ட போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.   முடிவே செய்து விட்டார் மன்னர்.   ராஜாமணியை தன்னுடன் தஞ்சையம்பதி அழைத்துச் சென்று இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று. தஞ்சையில் ராஜாங்க வேலைகள் நிரம்ப உள்ளதால் இப்போது அதற்கு நேரம் இல்லை.   "ராஜாமணி. தாங்கள் எம்முடன் தஞ்சையம்பதி வர இயலுமா, நம்முடைய பரிவரம் இன்னும் இரண்டு நாழிகையில் புறப்படுகிறது."   "அது என்னுடைய பாக்கியம் மன்னா" உண்மையாகவே சோழத் தலைநகரை நேரில் பார்க்கும் ஆவலில் சொன்னார் ராஜாமணி.   இரண்டு நாழிகை கடந்தது. மன்னனின் பரிவாரம் தஞ்சை நோக்கி கிளம்பியது. ராஜாமணியும் மன்னனின் படையுடன் கிளம்பினார். ஏற்கனவே உப தளபதியின் வீரர்களை அனுப்பி தன்னுடைய கால இயந்திரம் இருக்கும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடு செய்து இருந்தார்.     மன்னனின் பரிவாரம் குடந்தை வழியாக செல்வதாக ஏற்பாடு. செல்லும் வழி எங்கும் மக்கள் ராஜபாட்டையின் இருமருங்கிலும் நின்று கொண்டு மன்னனை வணங்கினார்கள்.   செல்லும் சாலையின் ஒரு பக்கத்தில் வீர நாராயண ஏரி கடல் போல காணப்பட்டது. சிறிது தொலைவில் இன்னொரு பக்கத்தில் பிற்காலத்தில் ராஜேந்திரச் சோழத் தேவரின் தலை நகரமாக விளங்கப் போகும் கங்கை கொண்ட சோழபுரம் வேறு ஒரு பெயரில் சிறு கிராமமாக காட்சி அளித்தது.   மன்னனின் பரிவாரம் குடந்தையில் நுழைந்தது. மன்னனின் வருகையால் குடந்தை நகரம் விழாக் கோலம் பூண்டது போல் இருந்தது.   மன்னன் தன்னுடைய தமக்கை குந்தவை தேவியை பார்த்து நலம் விசாரித்து, ஆசி பெற்று 2 நாழிகையில் தஞ்சை நோக்கி புறப்படுவார் என்று ஒரு வீரன் மூலம் ராஜாமணி தெரிந்து கொண்டார்.     2 நாழிகை கடந்த பின் மன்னன் தஞ்சை நோக்கி புறப்பட்டான். ராஜாமணிக்கு குந்தவை தேவியையும், வானவரையன் வந்தியத்தேவனையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டவில்லை.   மன்னனின் பரிவாரம் தஞ்சையை நெருங்கியது. தஞ்சை மாநகரம் பிரமாண்டமாக இருந்தது. மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் சாலையின் இரு பக்கமும் தென்பட்டன.   சாலைகள் பரபரப்பாக இருந்தன. மாலைப் பொழுது நெருங்கிக் கொண்டு இருந்ததால் வியாபாரமும் களை  கட்டியிருந்தது. மன்னனின் வருகை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இருந்ததால் மக்கள் இருபக்கமும் நின்று மன்னனை வாழ்த்தி வணங்கினார்கள்.   மன்னனின் அரண்மனை முன்பு பரிவாரம் நின்றது. மன்னன் மாளிகைக்குள் சென்றான். ராஜாமணி பக்கத்தில் இருந்த விருந்தினர் மாளிகைக்குள் தங்கிக் கொள்ள வேண்டுமென்பது ஏற்பாடு.   சற்று ஓய்வு எடுத்தபின்பு ராஜாமணி அன்று மாலை நகரத்தை சுற்றிப் பார்த்தார். எவ்வளவு நன்றாக உள்ளது இந்த ஊர். சுத்தமான காற்று, சுகமான சுற்றுப்புறம், நல்ல மக்கள். இப்படியே 1000 வருடங்களுக்கு பிறகும் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் மனது எண்ணியது.   ஒருவிதத்தில், அறிவியல் கண்டுபிடிப்புகள் தான் மனிதனின் நிறைய பிரச்சினைகளுக்கு காரணம் என்று அவருக்கு இப்போது தோன்றியது.   அடுத்த இரண்டு நாட்கள் சும்மாவே கழிந்தது. மன்னன் ஏதோ ராஜாங்க வேலையில் மும்முரமாக இருக்கிறார் என்று ராஜாமணிக்கு செய்தி வந்திருந்தது.   கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த பெரிய கோயிலை சென்று பார்த்து ரசித்தார்.       மூன்றாவது நாள் ராஜாமணியை மன்னர் அழைத்தார்.   "வாருங்கள் ராஜாமணி, இப்படி அமருங்கள்"   மன்னர் மட்டும் தனியாகத்தான் இருந்தார்.   பட்டுத் துணி போர்த்தி மெத்து மெத்தென்று இருந்த அந்த ஆசனத்தில் ராஜாமணி அமர்ந்து கொண்டார்.   "நீங்கள் அன்று உரைத்ததை இன்னும் சற்று தெளிவாக விளக்கிச் சொல்ல முடியுமா?" மன்னர் வினவினார்.   ராஜாமணி நிமிர்ந்து அமர்ந்து கொண்டார். முடிந்த வரையில் அறிவியல் வார்த்தைகள் கலக்காமல் மன்னனுக்கு புரியும் வகையில் சுலபமாக எடுத்துக் கூறினார்.   மன்னன் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தான். ராஜாமணி சொல்வதை அவனால் நம்ப முடியவில்லை என்றாலும், அவனால் அதில் உள்ள விஷயத்தை புரிந்து கொள்ள முடிந்தது.   தன்னுடைய அமைச்சர்களிடம் ஏற்கனவே ராஜாமணியின் பேனாவை கொடுத்து ஆய்வு செய்ய சொல்லியிருந்தார். அவர்களும் அந்த கருவி இந்த காலத்தில் எந்த நாட்டிலும் இல்லை என்பதை உறுதி செய்திருந்தார்கள்.   ராஜராஜ சோழனுக்கு இயல்பாகவே புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகம். புதுப் புது இடங்களுக்கு திக்விஜயம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்த ஒரு செயல்.   அவர் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருந்தார். விபரீத முடிவு தான். இருந்தாலும் முயற்சி செய்து பார்த்து விடுவது என்று எண்ணிக் கொண்டார்.   "ராஜாமணி, தாங்கள் உங்கள் காலத்துக்கு செல்லும்போது என்னையும் உடன் அழைத்துச் செல்லமுடியுமா?" ராஜாமணிக்கு கிட்டத்தட்ட மயக்கமே வந்து விட்டது. இது என்னடா வம்பாய்ப் போய்விட்டது என்று நினைத்துக் கொண்டார். என்ன பதில் சொல்வது என்று அவருக்குப் புரியவில்லை.   சற்று நேர குழப்பத்திற்கு பின் அவரின் ஆராய்ச்சியாள மூளை விழித்துக் கொண்டது. இப்பேர்ப் பட்ட மாமன்னன் தன்னுடன் வரவேண்டுமென்று ஆசைப் படுகிறார். அழைத்துப் போய் பார்த்தால் தான் என்ன என்று தோன்றியது.   அதே நேரத்தில் மன்னனை எந்த பிரச்சினையும் இல்லாமல் பாதுகாப்பாக அழைத்துச் சென்று திரும்பவும் கொண்டு வந்து விடவேண்டுமே என்று பயமாகவும் இருந்தது.   இருந்தாலும், ராஜாமணியின் காலத்தில் இருக்கும் கட்டி முடிக்கப்பட்ட பெரிய கோவிலையும், அவரின் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழப்புரம் கோவிலையும் மன்னருக்கு காட்ட வேண்டும் என்ற ஆசை எழுந்தது.   "தங்கள் உத்தரவு மன்னரே, நீங்கள் விரும்பினால் நாளையே நாம் என்னுடைய காலத்துக்கு புறப்படலாம்" மன்னரின் முகம் மலர்ந்தது.     "மிக்க மகிழ்ச்சி, நாம் எமது அரச சபையை இன்றே கூட்டி எமது முடிவை அறிவித்து விடுகிறோம்."   அடுத்த 3 நாழிகையில் அரச சபை கூடியது. மன்னர் தனது அமைச்சர்களிடம் தமது முடிவை அறிவித்தார். ராஜாங்க அலுவல்களை அமைச்சர்களிடம் பகிர்ந்து அளித்தார்.   அங்கே எல்லோருடைய முகத்திலும் கவலை குடி கொண்டு இருந்தது. புதிதாக வந்த இந்த மனிதனின் சொல்லை நம்பி மன்னர் இந்த விபரீதமான முடிவை எடுக்கிறாரே என்று. ஆனாலும், யாருக்கும் மன்னனை எதிர்த்துப் பேச துணிவில்லை.   இளவரசர் ராஜேந்திரரும் இப்போது ராஜாங்க அலுவலாக லங்கைக்கு சென்று இருக்கிறார். குந்தவை தேவியோ குடந்தையில் இருக்கிறார். அதனால், ஈசன் அருளால் நடப்பது நடக்கட்டும் என்று எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.   அன்று இரவே மன்னன் மற்றும் ராஜாமணி, அவர்களுடன் ஒரு சிறிய படை ஒன்றும் புறப்பட்டது. அடுத்த நாள் மழைப்பொழுதில் அவர்கள் ராஜாமணியின் கால இயந்திரம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.   அதைப் பார்த்த மன்னனுக்கு பலத்த ஆச்சரியம் ஏற்பட்டது. இந்த இயந்திரம் எப்படி காலத்தை கடந்து நம்மை கொண்டு செல்லும் என்று.   ராஜாமணி இயந்திரத்தின் உள்ளே சென்று எல்லாம் நன்றாக வேலை செய்கிறதா என்று பரிசோதனை செய்து கொண்டார். பாட்டரீ பவர் தான் கொஞ்சம் குறைவாக இருந்தது. இப்போது ஒரு குழப்பம் வந்தது அவருக்கு. ஒருவர் அமர்ந்து செல்லும் வகையில் தான் அந்த இயந்திரத்தை ராஜாமணி வடிவமைத்து இருந்தார் ராஜாமணி.   இப்போது எப்படி இருவர் செல்வது என்பது அவருக்கு புரியவில்லை. ஒரே வழி தான். யாராவது ஒருவர் முதலில் உட்கார்ந்து கொண்டு அவரின் மடியில் இன்னொருவர் அமர்வது.   நிச்சயமாக ராஜாமணியின் மடியில் ராஜ ராஜர் அமர முடியாது. அப்படி அமர்ந்தால் ராஜாமணி சட்னியாகி விடுவார். பின்பு, மன்னர் முதலில் அமர்வது அதன்பின் ராஜாமணி அவர் மடியில் அமர்ந்து கொள்வது என்று முடிவானது. மடியில் அமர்ந்து கொண்டு இயந்திரத்தை இயக்குவது சற்று சிரமம் தான். வேறு வழி இல்லை.   ராஜாமணி "கரண்ட்"  என்ற பட்டனை அமுக்கி இயந்திரத்தை இயக்கினார்.   இயந்திரம் சுழலத் தொடங்கியது. சில நொடிகளில் அவர்கள் ராஜாமணியின் ஆய்வகத்தில் இருந்தார்கள். இயந்திரத்தை நிறுத்தி விட்டு அவர்கள் வெளியே வந்தனர்.   மன்னருக்கு அங்கே இருப்பது எல்லாமே ஆச்சரியத்தை தந்தது.   1000 ஆண்டுகளில் இவ்வளவு மாறிவிட்டதா தம் நாடு என்று அவருக்கு வியப்பாக இருந்தது.   இரவு மன்னர் உறங்குவதற்கு படுக்கை தயார் செய்து கொடுத்தார் ராஜாமணி. அடுத்த நாள் காலையில் பயணம் புறப்படலாம் என்று சொல்லி விட்டார்.   மன்னன் செங்கோல், கிரீடம் என்று முழு ராஜ உடையில் வந்திருந்ததால் முதலில் தற்கால உடையை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார் ராஜாமணி.   வழக்கம்போல மன்னர் அதிகாலையில் எழுந்துவிட்டார். ராஜாமணிக்கு கொஞ்சம் தாமதமாகத் தான் விழிப்பு வந்தது.  அதற்குள் அவருக்கே தெரியாமல் ஒரு விபரீதம் நடந்துவிட்டது.   மன்னர் முழிப்பு வந்ததும் ராஜாமணி சொல்லிக் கொடுத்த படி காலைக் கடனை முடித்துக் கொண்டு ராஜ உடையுடனே சற்று வெளியே நடந்து வரலாம் என்று வெளியே சென்று வந்தார்.     அப்போது பார்த்து தானா அந்த பாழாய்ப்போன '100 ரூபாய் ரிபோர்டர்' கோரா வரவேண்டும். அவன் கவனித்துவிட்டான் மன்னனை.  அவனுக்கு சந்தேகம் முளைத்து விட்டது.   இப்போது உங்களுக்கு அந்த 100 ரூபாய் ரிபோர்டர் கோரா பற்றி சொல்லியாக வேண்டும். அவன் உண்மையான பெயர் கோதண்டராமன் தான். அந்தப் பெயர் அரதப்பழசாக தெரிந்ததால் அவனே ஸ்டைல் ஆக கோரா என்று மாற்றிக்கொண்டான்.   தேங்காய் மூடி வக்கீல்கள் இருப்பது போல இவன் ஒரு 100 ரூபாய் ரிபோர்டர். அதாவது ஒரு தனிப்பட்ட செய்தியாளன். எந்த பத்திரிக்கைக்கு செய்தி வேண்டும் என்றாலும் தருவான். ஆனால் ஒரு செய்திக்கு 100 ரூபாய் கண்டிப்பாக தந்துவிட வேண்டும். அதில் அவன் கறார்.   கோரா ரொம்ப நாளாகவே ராஜாமணி வீட்டையே சுத்தி சுத்தி வந்தான். அவர் ஏதோ ஒரு கண்டுபிடிப்பில் மும்முரமாக இருக்கிறார் என்பது அவனுக்கு தெரியும். ஆனால், என்ன என்பது அவனுக்கு தெரியவில்லை.   ஆனாலும் ஏதாவது ஹாட் ஆன செய்தி கிடைக்கும் என்று காத்துக் கொண்டே இருந்தான்.     சில நாட்களாக ராஜாமணி வீட்டில் தென்பட வில்லையென்பதால் இன்று காலையிலேயே வீட்டின் அருகில் சென்று பார்த்து விட எண்ணி அங்கே வந்த போது தான் அங்கே மன்னனை பார்த்து விட்டான். மன்னனை ராஜா உடையுடன் பார்த்தவுடன் அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. என்னடா இது, ராஜாமணியின் வீட்டில் இருந்து யாரோ ஒரு மனிதர் மாறுவேடப் போட்டியில் இருந்து பாதியில் எழுந்து வந்ததைப் போல் இருக்கிறாரே என்றெண்ணிக் கொண்டே மன்னனை உற்று கவனித்தான். ஆனால், ஆள் வாட்ட சாட்டமாக இருக்கிறாரே. முகமும் அவ்வளவு பொலிவாக உள்ளதே. இந்த பகுதியில் இந்த மனிதரை இதற்கு முன் பார்த்ததில்லையே? இதில் ஏதோ மர்மம் உள்ளது என்று அவன் ரிபோர்டர் மூளை சொல்லியது.   ராஜாமணியை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். அதற்குள், ராஜாமணி மன்னனை தேடி வந்துவிட்டதால், கோரா சற்று மறைந்து நின்று கொண்டான் ராஜாமணி என்ன பேசுகிறார் என்று கவனித்தான்.   "மன்னரே, இந்த உடையினை அணிந்து கொண்டே வெளியில் வந்து விட்டீர்களே, வீட்டிற்கு வாருங்கள், நான் வேறு உடையினை வாங்கி வருகிறேன், அதன் பின் நாம் தஞ்சை செல்லலாம்."   "ராஜாமணி, எமக்கு அதிகாலையில் எழுவது தான் வழக்கம். எழுந்த பின் நடை பயில்வதும் வழக்கம், அதனால் தான் வெளியே வந்தேன்"   கேட்டுக் கொண்டு இருந்த கோராவுக்கு தலையைச் சுற்றியது. இது என்னடா, இந்த விஞ்ஞானிக்கு ஆராய்ச்சி செய்யும்போது ஏதாவது தலையில் அடி கிடி பட்டு விட்டதா. ஏதோ மன்னர் அது இது என்கிறான். அவனுக்கு ஆர்வம் அதிகமாகி விட்டது.   ராஜாமணியின் வீட்டுக்குள் சென்று ஒளிந்து இருந்தாவது இந்த ரகசியத்தை கண்டு பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.   ராஜாமணி மன்னனை வீட்டில் விட்டு காலை உணவை முடித்துக் கொண்டு கடைக்கு புறப்பட்டார். இருப்பதிலேயே பெரிய ஸைஸ் உடையும், காலணியும்  இரண்டு செட் வாங்கிக் கொண்டு வந்தார்.   மன்னர் பாண்ட் சட்டை அணிந்து கொண்டு தன்னை கண்ணாடியில் பார்த்ததும் அவருக்கே வேடிக்கையாக இருந்தது. பாண்ட் குழாய்க்குள் அவருக்கு காலை விடத் தெரியவில்லை. ராஜாமணி தான் உதவி செய்தார்.   "ராஜாமணி, இப்போது என்ன திட்டம்" மன்னர் கேட்டார்.   "மன்னரே, இப்போது நாம் இருவரும் ஒரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு தஞ்சாவூர் செல்கிறோம். அங்கே தாங்கள் கட்டிய பெரிய கோவிலை தரிசிக்கலாம். போகும் வழியில் தங்கள் மகன் கட்டிய கங்கை கொண்ட சோழபுர கோவிலையும் தரிசிக்கலாம்" ராஜாமணி பணிவுடன் பதில் கூறினார்.   ராஜாமணி சொன்னதில் வாடகைக் கார் என்பது மட்டும் மன்னருக்கு புரியவில்லை. அது ஏதோ தேர் போன்ற ஒரு வாகனமாக இருக்கும் என்று அவரே முடிவு செய்து கொண்டார். "பயணம் எத்தனை நாட்கள் ராஜாமணி"   "இங்கிருந்து 2 சிறுபொழுதுக்குள் சென்று விடலாம் மன்னா" என்று அவருக்கு புரியும்படி சொன்னார் ராஜாமணி. மன்னனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு விரைவாக செல்லும் வாகனம் எது என்று பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். ரிப்போர்டர் கோரா மறைந்து நின்று கேட்டுக் கொண்டு இருந்தான். இது என்னடா இவர்கள் பேசுவது ஒன்றும் புரியவில்லையே. தஞ்சாவூருக்கு போகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. ராஜாமணி தஞ்சாவூர் கோவில் அந்த புது மனிதன் கட்டிய கோவில் என்கிறாரே. கோரா வரலாற்றில் கொஞ்சம் வீக். தஞ்சை கோவிலை கட்டியது யார் என்று அவனுக்கு தெரியாது. உடனே தன்னுடைய செல்பேசியில் கூகுள் செய்து தெரிந்து கொண்டான்.   ஆஹா, அப்படி என்றால் இங்கிருப்பது ராஜ ராஜ சோழ மன்னன். ஆனால், இது என்ன மந்திரமா, தந்திரமா என்பது அவனுக்கு புரியவில்லை.   அவனின் ரிப்போர்டர் அறிவு வேலை செய்யத் தொடங்கியது. சமீபத்தில் தான் டைம் மஷின் பற்றி வந்த தமிழ்ப் படம் ஒன்று பார்த்திருந்தான். ஒரு வேளை, அது மாதிரி ஏதாவது இருக்குமா? இருந்தாலும் இருக்கும், இந்த ராஜாமணி பெரிய விஞ்ஞானி. செய்தாலும் செய்திருப்பார்.   அப்படி மட்டும் இருந்தால், கோராவுக்கு அடித்தது ஜாக்பாட். இந்த செய்திக்கு ஒவ்வொரு பத்திரிக்கை அலுவலகத்திலும் குறைந்தது 1000 ரூபாய் கறந்து விடலாம். இன்னும் கொஞ்சம் தெளிவுப்படுத்திக் கொண்டு செய்தியை வெளியில் விடலாம் என்று முடிவு செய்து கொண்டான்.   ராஜாமணியும் மன்னனும் புறப்பட்டு விட்டார்கள். ராஜாமணி செல்பேசி வழியாக வாடகை டாக்ஸிக்கு சொல்லி இருந்தார். கார் வந்து விட்டது. கோராவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே ஓடிப்போய் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்தக் காரை பின் தொடர்வது என்று முடிவெடுத்தான்.   எவ்வளவு தூரம் பின் தொடர முடியுமோ அவ்வளவு தூரம் தொடர்வது, அதன் பின் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான்.   கோராவுக்கு அதிர்ஷ்டம் இருந்தது. டாக்ஸி ஓட்டுனர் ஒரு வயதான மனிதர். அவர் எப்போதும் வண்டியை நத்தை வேகத்தில் தான் ஓட்டுவார். அதனால் கோராவுக்கு பின் தொடர்வது சுலபமாக இருந்தது.      வண்டி வடலூர் தாண்டி சென்று கொண்டிருந்தது. ராஜாமணி தனக்கு தெரிந்த சோழ வரலாற்றை மன்னனுக்கு சொல்லிக் கொண்டே வந்தார்.   ஒருபக்கம் ராஜாமணி பேசுவதைக் கேட்டுக்கொண்டே மன்னன் இருபக்கமும் தெரியும் புது விஷயங்களை பார்த்து ரசித்துக்கொண்டே வந்தார். அவருக்கு அந்த வாகனமே அதிசயமாக இருந்தது. அது எப்படி எந்த மாடோ அல்லது குதிரையோ இல்லாமல் இந்த வாகனம் ஓடுகிறது. ஒரு வேளை, வண்டிக்கு முன் பக்கம், சிறு குதிரைகளை மறைத்து கட்டி வைத்து இருக்கிறார்களோ என்று கூட அவருக்கு தோன்றியது. ஆனாலும் ராஜாமணியிடம் அதைக் கேட்க வெட்கமாக இருந்தது. ஆனாலும், மனதில் குறிப்பெடுத்துக் கொண்டார். திரும்பச் சென்றவுடன் தம் அமைச்சர்களிடம் சொல்லி இதுமாதிரி ஒரு வாகனம் தயார் செய்ய சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். பக்கத்தில் சாலையில் இந்த வாகனத்தை விடப் பெரியதாக போகும் பஸ், லாரி போன்ற வாகனங்களையும், குதிரை போன்ற இரு சக்கர வாகனத்தையும் பார்க்கும்போது அவருக்கு இன்னும் வியப்பாகிப் போனது.     வீர நாராயண ஏரிக்கரை வந்துவிட்டது. ஓட்டுனர் வண்டியை நிறுத்தினார்.     ராஜாமணி மன்னனிடம் ஏரியை சுட்டிக்காட்டி சொன்னார் "மன்னா, இதுவே தங்கள் முன்னோர்கள் கட்டிய வீர நாராயண ஏரி. இன்னும் அப்படியே இருக்கிறது."   மன்னனுக்கு மெய் சிலிர்த்தது. தன்னுடைய முன்னோர்களை நினைத்துக் கொண்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.   தூரத்தில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டு இருந்த கோராவுக்கு உறுதி ஆகிவிட்டது. இதற்கு மேல் காலம் கடத்தக்கூடாது, இல்லையென்றால் வேறு யாருக்காவது தெரிந்துவிடும். உடனே கைப்பேசியை எடுத்தான்.   செய்தி காட்டுத் தீயாக பரவியது. அடுத்த நாள் பதிப்பு வரை தாங்காது என்பதால் பத்திரிக்கைகள் உடனே தங்களது இணைய பக்கத்தில் செய்தியை வெளியிட்டன. அடுத்த சில நிமிடங்களில் தொலைக்காட்சிகளில் வந்துவிட்டது.   "விஞ்ஞானி ராஜாமணியின் புதிய கண்டுபிடிப்பு - மாமன்னன் ராஜராஜ சோழன் தமிழ்நாட்டுக்கு விஜயம்" போன்ற தலைப்புகளில் செய்திகள் ரெக்கை கட்டிப் பறந்தன.   இது எதுவும் அறியாமல் ராஜாமணியும் மன்னனும் கும்பகோணம் தாண்டி சென்று கொண்டிருந்தார்கள்.   அடுத்த அரை மணி நேரத்தில் முகநூல், வாட்ஸ்ஆப்பில் இந்த செய்தி வைரல் ஆனது.   கோரா ஒரு உத்தேசமாகத்தான் இந்த செய்தியைக் கொடுத்திருந்தான். ஆனால், அவர் அவர் இஷ்டத்துக்கு இந்த செய்தியை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.     ஒரு பத்திரிக்கை,  மாமன்னன் ராஜராஜ சோழனே ஒரு கால இயந்திரம் கண்டுபிடித்து இங்கே வந்திருப்பதாக செய்தி வெளியிட்டது.   இளைஞர்கள் பலர் கூகுள் தளத்தில் யார் அந்த ராஜாமணி என்று தேடியதில் கூகுள் கணினி சர்வரே திணற ஆரம்பித்திருந்தது. இணையத்தில் எங்கும் ராஜாமணி, எதிலும் ராஜாமணி.   ராஜாமணியும் மன்னனும் வந்த கார் பெரிய கோவிலைச் சென்று சேர்ந்தது. ரிப்போர்டர் கோரா மற்றவர்களுக்கு செய்தியை மட்டுமே சொல்லியிருந்தான். ராஜாமணி தற்போது எங்கே இருக்கிறார் என்று சொல்லவில்லை. அதனால் எந்த தொல்லையும் இல்லாமல் ராஜாமணியும் மன்னனும் கோவிலின் உள்ளே சென்றார்கள்.   மாலை நெருங்கிக்கொண்டு இருந்ததால் கோவிலில் சிறிது கூட்டம் இருந்தது. ராஜராஜனுக்கு மகிழ்ச்சியில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தன்னுடைய கனவுக் கோவில் 1000 ஆண்டுகள் கடந்த பின்பும் கம்பீரமாக நிற்பதைப் பார்த்து அவருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பைக் கொடுத்த ராஜாமணியை நன்றியுடன் நினைத்துக்கொண்டார்.     கோராவுக்கு செல்பேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. எல்லோரும் ராஜாமணி எங்கே இருக்கிறார் என்றே கேட்டார்கள். கோரா இன்னும் யாரிடம் சொல்லலாம் என்று முடிவெடுக்கவில்லை.   யாரிடம் அதிகம் பணம் கிடைக்குமோ அவர்களிடம் தான் அதை சொல்வது என்று உறுதியாக இருந்தான். இன்னும் கொஞ்சம் அலையவிடுவோம் என்று நினைத்துக் கொண்டான். அதே நேரம் ராஜாமணி மேலும் ஒரு கண் வைத்துக்கொண்டான்.   ராஜாமணியின் உயர் அதிகாரி ராகவ் ராவ் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து விட்டு மிகுந்த கடுப்பில் இருந்தார். தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் மறைத்துவிட்டாரே என்று.   தமிழக முதல்வர் இல்லம்.   முதல்வர் அப்போது தான் தேநீர் அருந்தி விட்டு வீட்டில் இருக்கும் அலுவலக அறைக்குள் வந்து அமர்ந்தார். தன்னுடைய நேரடி உதவியாளர் காளமேகத்தை உள்ளே அழைத்தார்.   "எஸ் சார்" உதவியாளர் பணிவாக எதிரில் குனிந்து நின்றார்.   "டீவீயில் ஏதோ ஒரு ந்யூஸ் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. என்ன ந்யூஸ் அது. எனக்கு உடனே ஒரு ரிபோர்ட் ரெடி பண்ணிக் கொடுங்க" என்று உத்தரவிட்டார்.   உதவியாளர் காளமேகம் உடனே கிளம்பினார்.   காளமேகம் தன்னுடைய அறைக்கு வந்து தன் உதவியாளர்கள் நால்வரையும் அழைத்தார். ஒவ்வொருவருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.   கோரா எந்தப் பத்திரிக்கைக்கு ராஜாமணி பற்றி அதிக விவரம் தருவது என்று முடிவு செய்து விட்டான். அந்த தகவலுக்கு "தின முந்திரி" பத்திரிக்கை 10000 ரூபாய் தருவதாக சொன்னவுடன் கோரா ஒத்துக்கொண்டான். அது என்ன "தின முந்திரி" என்று ஒரு பெயர் என்று நீங்கள் கேட்கலாம். செய்தியை அனைவருக்கும் முன்பாக முந்திக் கொண்டு முந்திரிக் கொட்டையைப் போல் தருவதால் அந்தப் பெயர்.     "தின முந்திரி" பத்திரிக்கையின் தலைமை செய்தியாளர் முருகேஷ் தான் பேசினார். அவரிடம் தனக்கு தெரிந்த விவரம் அனைத்தையும் சொன்னான் கோரா. அதோடு, ராஜாமணியின் விழுப்புரம் முகவரியையும் சொல்லி விட்டான். இன்று இரவு ராஜாமணியும் மன்னனும் திரும்ப அங்கே வந்து விடுவார்கள் என்றும் தெரிவித்தான்.   ராஜாமணியும் மன்னனும் கோயிலுக்குள் ஈசனைத் தரிசித்துக் கொண்டு இருந்தார்கள். மன்னனுக்கு பரம திருப்தி.   "தின முந்திரி" பத்திரிக்கையின் தலைமை செய்தியாளர் முருகேஷின் உதவி ஆசிரியர் பெயர் ராஜன். அவன் இ.க.மு.க கட்சித் தலைவர் ராமசாமியின் உறவினன். அவன் இந்த செய்தியை ராமசாமியிடம் சொல்லப் போய் அது உடனே எல்லா கட்சிகளுக்கும் பரவி விட்டது.   பத்து நாட்களுக்கு முன்பு தான் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்து இருந்தார்கள். அதனால் எல்லா கட்சியும் இந்த செய்தியை தங்கள் வெற்றிக்கு எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று மும்முரமாக ஆலோசனையில் இறங்கிவிட்டார்கள்.       இதில் முந்திக்கொண்டவர் ம.நி.க (மக்கள் நிம்மதி கழகம்) கட்சியின் தலைவர் ஜனமித்திரன் தான்.  மிகவும் அதிரடியான மனிதர். கட்சியின் பேரில் தான் நிம்மதி உள்ளதே தவிர இவரது கட்சியால் மக்களுக்கு என்றும் நிம்மதி இருந்ததில்லை.  தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் என்றாலும் செய்வார். அவருக்கு ஒரு பலத்த யோசனை தோன்றியது. வழக்கமாக வாக்குப் பதிவு இயந்திரம் தான் பயன்படுத்துவார்கள்.        இந்த தடவை ஒரு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பழைய வாக்குப் பதிவு முறையே   இருக்கும்     என்று தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டு இருந்தது.   ஜனமித்திரன் வரலாறு நன்கு அறிந்தவர். அதனால் தான் இந்த யோசனை அவர் மனதில் உதித்தது.   இந்தத் தேர்தலில் கள்ள ஓட்டு போட்டாவது 10 தொகுதியாவது பெற்று விட வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார். கள்ள ஓட்டு போடும் பழைய முறைகள் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அதனால் தேர்தல் ஆணையம் சுலபமாக கண்டுபிடித்து விடுகிறது.   அதனால் ஏதாவது புது முறையை கண்டுபிடிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களாக மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருந்தார் அவர். அந்த நேரத்தில் தான் ராஜாமணியைப் பற்றியும் மன்னனைப் பற்றியும் செய்தி அவர் காதுக்கு வந்து சேர்ந்தது. மண்டைக்குள் குண்டு பல்பு ஒன்று எரிந்ததைப் போல ஒரு ஐடியா வந்துவிட்டது அவருக்கு.   கட்சியின் தஞ்சை மாகட்ட செயலாளர் ரத்னசாமியை செல்பேசியில் உடனே அழைத்தார். உடனே சென்று ராஜாமணியையும் மன்னனையும் பிடித்து அடைத்து வைக்கும்படி கட்டளையிட்டார்.  ரத்னசாமி ஒரு மரமண்டை என்பது அவருக்கு தெரியும். அதனால் தான் தன்னுடைய ஐடியா என்னவென்று தெரிவிக்காமல் ராஜாமணியையும் மன்னனையும் பிடித்து அடைத்து வைக்கும்படி மட்டும் உத்தரவிட்டார்.   ரத்னசாமிக்கு வரலாறு சுத்தமாக வராது. அவருக்கு ராஜாமணியும் தெரியாது, ராஜராஜ சோழனையும் தெரியாது.     அவர்களை கோவிலுக்குள் எப்படி கண்டுபிடிப்பது என்று அவருக்கு தெரியவில்லை. கட்சியின் பெரிய கோவில் பகுதி கட்டச் செயலாளர் ராமன் விஷயம் தெரிந்த ஆள். அவனிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்தார்.   இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழும். அது என்ன 'கட்டச் செயலாளர்' என்று. இந்தக் கேள்வியை நீங்கள் அவனிடம் கேட்டால் வடிவேல் படத்தில் கேட்பது போல் "வட்டத்துக்கு ஒரு செயலாளர் இருக்கும்போது கட்டத்துக்கு ஒரு செயலாளர் இருக்கக் கூடாதா?" என்று உங்களையேத் திரும்பக் கேட்பார். ஆனால், காரணமே வேறு. கட்சித் தலைவர் ஜனமித்திரன் ஜாதகத்தை மிகவும் நம்புபவர். அவருக்கு எல்லாமே கட்டம் தான். தன்னுடைய எல்லா வெற்றி தோல்விகளையும் கட்டங்கள் தான் தீர்மானிக்கின்றன என்று உறுதியாக நம்புபவர். அதனால் அவர் கட்சியில் எல்லாமே கட்டம் தான். மாவட்டச்செயலாளர் பதவி கிடையாது. மாகட்ட செயலாளர் பதவி தான்.   உடனே ராமனை செல்பேசியில் அழைத்தார். ராமனிடம் விஷயத்தை விளக்கினார். ராமனுக்கு ராஜாமணியின் முகம் தெரியும். அதனால் உடனே ரத்னசாமியிடம் ஒரு காரும் அதில் நான்கு ஐந்து குண்டர்களையும் அனுப்பி வைக்குமாறு சொல்லிவிட்டு உடனே பெரிய கோவிலுக்கு கிளம்பினான்.   ராஜாமணியும் மன்னனும் அப்போது தான் கோவிலுக்கு வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார்கள். மன்னன் கோவிலைப் பிரிய மனமில்லாமல் வந்து கொண்டிருந்தான். ராஜாமணியின் செல்பேசி ஒலித்தது.   "ஹலோ, ராஜாமணி பேசுறேன்"   "மிஸ்‌டர் ராஜாமணி, நான் முதல்வர் அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன். நான் அவரின் நேர்முக உதவியாளர் காளமேகம். முதல்வர் உங்களிடம் பேச வேண்டும். இன்னும் ஒரு மணி நேரத்தில் இந்த எண்ணுக்கே அழைப்பார். தயாராக இருங்கள்" அனுமதி கேட்கவில்லை, உத்தரவு தான் வந்தது.   இது என்னடா வம்பு. முதல்வர் ஏன் தம்மிடம் பேச வேண்டும். ஏதாவது விருது கிருது தரப் போகிறாரோ. ஒன்றும் புரியவில்லை ராஜாமணிக்கு.   அவரைப் பற்றி தொலைக்காட்சியில் வினாடிக்கு வினாடி ஓடிக்கொண்டு இருக்கும் செய்தியை அவர் இன்னும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் இந்த குழப்பம் வந்திருக்காது அவருக்கு.   கட்டச் செயலாளர் ராமன் கோவிலுக்கு எதிரே கார் நிறுத்தும் பகுதியில் நின்று கொண்டு கோவில் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான்.   அவன் பின்னால் அவனது அடியாட்கள் நின்று கொண்டு இருந்தார்கள். ராஜாமணியையும் மன்னனையும் பார்த்த பின் அவர்களின் பிடரியில் ரெண்டு போட்டு காரில் தூக்கிப் போட்டு செல்வதாக ஏற்பாடு.   தொலைவில் ராஜாமணியை பார்த்து விட்டான் ராமன். கூட வருபவன் தான் மன்னனாக இருக்க வேண்டும். அடியாட்களிடம் கண்ணைக் காட்டினான். கார் நிறுத்தும் பகுதிக்கு அவர்கள் வரும் வரை காத்திருந்தார்கள். ராஜாமணி தான் முதலில் அவர்கள் இருக்கும் பகுதியில் கடந்து நடந்தார். பின் மண்டையில் ஒரே அடி. ராஜாமணி அங்கேயே மயங்கி விழுந்தார். ராஜராஜ சோழத் தேவர் ஒரு நொடியில் சுதாரித்துக் கொண்டார். மாவீரன் அவருக்கு முன்னால் கூலிக்கு வேலை செய்யும் அந்த குண்டர்கள் எம்மாத்திரம். தன்னுடைய உலக்கை போன்ற கைகளால் சில அடிகளில் அந்த அடியாட்களை தூக்கி வீழ்த்தி விட்டார்.   சற்று எட்டியே நின்ற ராமன் இதை எதிர்பார்க்க வில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று மயக்க மருந்து ஸ்ப்ரேயை எடுத்து வந்திருந்தான். அதை கையில் எடுத்து வைத்துக் கொண்டான். மன்னன் அப்போது எல்லோரையும் அடித்து வீசி விட்டு, ராஜாமணிக்கு எப்படி இருக்கிறதென்று குனிந்து சோதனை செய்து கொண்டு இருந்தார். ராமன் மெதுவாக அவருக்கு பின்னால் போய் மயக்க மருந்து ஸ்ப்ரேயை அவர் முகத்தினில் அடித்தான். மன்னன் மயக்கமடைந்தார். அடித்து வீசப்பட்ட அடியாட்களை எழுப்பி ராஜாமணியையும் மன்னனையும் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு பறந்தார்கள்.   ரத்னசாமி தன்னுடைய பண்ணை வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தார். ராமன் எப்போது வருவான் என்று எதிர்பார்த்து வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்.   தலைவர் ஜனமித்திரன் இன்று இரவே இந்த பண்ணை வீட்டுக்கு வருவதாக சொல்லியிருந்தார்.   கார் உள்ளே நுழைந்தது. ராஜாமணியையும் மன்னனையும் உள்ளே கொண்டு சென்று கட்டிப் போட்டார்கள்.   ரத்னசாமி தலைவருக்கு செல்பேசியில் விஷயத்தை சொன்னார்.       இருட்டு அறைக்குள் அடைத்து வைத்து இருந்தார்கள் இருவரையும். ராஜாமணிக்கு ஓரளவுக்கு மயக்கம் தெளிந்து விட்டது.   மயக்க மருந்து அடித்ததால் மன்னனுக்கு தான் இன்னும் மயக்கம் தெளியவில்லை. யார் இவர்கள், ஏன் தங்களை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று ராஜாமணிக்கு புரியவில்லை. ஒரு மணி நேரம் ஆகி இருந்தது. ராஜாமணியின் செல்பேசி ஒலித்தது. ராமன் ராஜாமணியை சரியாக பரிசோதிக்கவில்லை. அதனால் அவரின் செல்பேசி அவரிடமே இருந்தது.   "ஹலோ, ராஜாமணி"   "மிஸ்‌டர் ராஜாமணி, நான் சி.எம் பேசுகிறேன்" தமிழக முதல்வரின் கணீர்க்குரல்.   ராஜாமணிக்கு பதற்றமே வந்துவிட்டது.   "சொல்லுங்கள் சார்"   "மிஸ்‌டர் ராஜாமணி, எனக்கு உங்கள் உதவி தேவைப் படுகிறது. நீங்கள் கண்டு பிடித்துருக்கும் இயந்திரத்தைப் பற்றியும் உங்களுடன் ராஜராஜ சோழ மன்னர் இருப்பதைப் பற்றியும் வந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன், எங்கள் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் உங்களை வந்து பார்ப்பார். என்ன உதவி தேவைப் படுகிறதென்று அவர் உங்களிடம் தெரிவிப்பார்."   இப்போது தான் ராஜாமணிக்கு கொஞ்சம் புரிவது போல இருந்தது. ஆனால் இது எப்படி தொலைக்காட்சியில் வந்தது என்பது தான் அவருக்கு புரியவில்லை. எது எப்படியோ இப்போது முதல்வர் அவர்களின் உதவி நமக்கு தேவை.   அதனால் அவர் சொல்வதற்கு சரி என்று சொல்லி விட்டு தம்மை காப்பாற்றும்படியும் கேட்க வேண்டும். "நிச்சயம் சார், ஆனால் இப்போது நானும் மன்னனுமே ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம், யாரோ எங்களைக் கடத்திக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள், நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும்"   இதைக் கேட்டவுடன் முதல்வர் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.   "அப்படியா, டோன்ட் வொரி, நான் இப்போதே காவல்துறையிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கிறேன்"     சி.எம் அவர்களின் நேரடி உத்தரவு என்பதால் காவல்துறை பரபரப்பாக வேலை செய்தது. ராஜாமணி செல்பேசி சிக்னல் ட்ரேஸ் செய்து பார்த்ததில் அது தஞ்சை திருச்சி சாலையில் ஏதோ ஒரு இடத்தில் இருந்து வருவது தெரிந்தது. உடனே தஞ்சை காவல்துறைக்கு தகவல் பறந்தது.   மன்னனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந்து கொண்டு வந்தது. இரவு ஒன்பது மணிக்கு ராஜாமணிக்கும் மன்னனுக்கும் சாப்பாடு கொடுத்தார்கள். மன்னன் மாவீரன் என்பதால் அவனை மட்டும் இரும்புச் சங்கிலி போட்டு கட்டி இருந்தார்கள்.   மயக்கம் தெளிந்த மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை.   1000 ஆண்டுகளுக்கு பிறகும் தமக்கு எதிரிகள் இருக்கிறார்களா, ஒரு வேளை பாண்டியர்களாக இருக்குமோ, அல்லது களப்பிரர் வம்சத்தை சேர்ந்தவர்களாக இருக்குமோ என்று பலவிதமாக எண்ணிக் குழம்பினார்.   "ராஜாமணி, யார் இவர்கள், எதற்காக நம்மைத் தாக்கி சிறைப் பிடித்து இருக்கிறார்கள்" என்று கேட்டார் மன்னர்.   "மன்னரே, சற்று முன் தான் எனக்கும் காரணம் கொஞ்சம் விளங்கியது. யார் மூலம் என்று தெரியவில்லை. ஆனால், நான் கண்டுபிடித்த கால இயந்திரத்தைப் பற்றியும், நீங்கள் இங்கு வந்திருப்பதும் வெளியே தெரிந்துள்ளது. அதனால், அதை அறிந்து கொண்ட ஏதோ ஒரு கூட்டம் தான் நம்மை இங்கே கடத்திக் கொண்டு வந்து வைத்துள்ளார்கள்"   இது என்னடா தனக்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொண்டார் மன்னர். தம்மால் தம் காலத்துக்கு திரும்பச் செல்ல முடியுமா என்றே சந்தேகம் வந்து விட்டது மன்னருக்கு. இருந்தாலும், அவர் மாவீரர் அல்லவா, எத்தனையோ போர்க்களங்கள் பார்த்தவர் இல்லையா? இந்த குண்டர்கள் எம்மாத்திரம் அவருக்கு. அதனால் இங்கே இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார்.   ஆட்கள், ஆயுதங்கள் என்றால் சமாளிக்கலாம். ஆனால் ஒருவன் ஏதோ ஒன்றை கையில் வைத்துக்கொண்டு முகத்தில் படும்படி "புஸ்ஸ் புஸ்ஸ்" என்று அடித்து தன்னை மயக்கம் கொள்ள வைத்தானே, அது என்னவாக இருக்கும். ராஜாமணிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.   "ராஜாமணி என்னுடைய முகத்தில் ஏதோ ஒன்று அடித்து மயக்கம் கொள்ள வைத்தானே ஒருவன், அது என்ன ஆயுதம்"   "மன்னா, அதன் பெயர் மயக்க மருந்து ஸ்ப்ரே, அதை சுவாசித்தால் மயக்கம் வரும்"   அப்போது அறையின் கதவைத் திறந்து கொண்டு ஒருவன் வந்தான்.   அவனுக்கு பின்னால் நீர் யானை போல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக்கொண்டே ஒரு மனிதர் வந்தார்.     ம.நி.க கட்சியின் தலைவர் ஜனமித்திரன்.   மன்னனின் கம்பீரத்தைப் பார்த்ததும் அவருக்கு மெய்சிலிர்த்தது. கட்டிப் போடப்பட்டிருந்தாலும் சிங்கம் மாதிரி இருக்கிறாரே.   "மன்னரே, தங்களை இப்படி அடைத்துப் போட்டிருப்பதற்கு என்னை மன்னிக்க வேண்டும். ம.நி.க கட்சியின் தலைவர் ஜனமித்திரன். எனக்கு உங்களிடம் ஒரு உதவி தேவைப்படுகிறது. அதனால் தான் உங்களை இங்கு அழைத்து வந்திருக்கிறோம்."   கட்சி என்றால் என்னவென்று அவருக்கு புரியவில்லை. ஏதாவது சிறிய நாடாக இருக்குமோ, அதற்கு இவர் தலைவராக இருப்பாரோ என்று எண்ணிக்கொண்டார்.             ஜனமித்திரனே தொடர்ந்து பேசினார்.   "தமிழ்நாட்டில் அடுத்த மாதத்தில் தேர்தல் நடக்கிறது. அதில் எங்கள் கட்சி ஜெயிக்க வேண்டும். அதற்கு தங்களின் உதவி தேவைபடுகிறது.   திருவிழாவில் காணாமல் போன பையனைப் போல மன்னர் திரு திருவென முழித்துக் கொண்டு இருந்தார். ஜனமித்திரன் பேசியது அவருக்கு ஒன்றும் புரியவில்லை.   ராஜாமணி இடையில் புகுந்தார். மன்னரிடம் மக்கள் ஆட்சி முறையைப் பற்றியும், தேர்தல் நடைமுறையைப் பற்றியும் விளக்கமாக எடுத்து சொன்னார்.   இப்போது மன்னனுக்கு ஓரளவுக்கு புரிந்தது.   "சொல்லுங்கள், உங்களுக்கு நான் எப்படி உதவி புரிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்" என்று ஜனமித்திரனை பார்த்துக் கேட்டார்.   "மன்னரே, தேர்தல் என்று ஒன்று இருந்தால், கள்ள வாக்கு என்ற ஒன்றும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் கள்ள ஓட்டு போடும் பழைய முறைகள் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அதனால் தேர்தல் ஆணையம் சுலபமாக கண்டுபிடித்து விடுகிறது. இப்போது நாங்கள் புது வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் ஆட்சியில் நடைமுறையில் இருந்த குடவோலை முறைப் பற்றி படித்திருக்கிறேன். அதில் எப்படியும் மக்கள் கள்ள வாக்கு செலுத்தி இருப்பார்கள். அந்த வழிமுறைகளை எனக்கு தாங்கள் கூற வேண்டும்"   மன்னனுக்கு பலத்த கோபம் வந்துவிட்டது. தீய செயலுக்கு தன்னிடம் உதவி கேட்பதும் இல்லாமல், தன்னுடைய ஆட்சியையும் மக்களையுமே குறை கூறுகிறானே இந்த குண்டன். இவனுக்கு எவ்வளவு நெஞ்சழூத்தம் இருக்க வேண்டும்.   மன்னனின் முகம் சிவந்தது. அவரின் இரும்பு போன்ற உடல் திமிரியது. அவரின் உலக்கை போன்ற கைகள் விடைத்தன. பலம் கொண்ட மட்டும் இழுத்தார். இரும்புச் சங்கிலிகள் தெரித்து விழுந்தன. சிங்கம் போன்று எழுந்து நின்றார்.   கட்சித் தலைவரும், அவர் கூட இருந்த குண்டர்களும் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் ஆள் ஆளுக்கு ஒரு திசையில் போய் விழுந்தார்கள். மன்னன் கொடுத்த அடிகளும் உதைகளும் அப்படி.   ராஜாமணியின் கை கால் கட்டுகளையும் அவிழ்த்து விட்டார்.   இருவரும் பண்ணை வீட்டை விட்டு வெளியேறினார்கள்.   அப்போது சைரன் சத்தத்துடன் போலீஸ் வாகனம் உள்ளே நுழைந்தது. ராஜாமணியும் மன்னனும் தடுத்து நிறுத்தப் பட்டார்கள்.   போலீஸ் அதிகாரி வண்டியில் இருந்து இறங்கி வந்து அவர்களை நெருங்கினார்.   "சார், உங்களுக்கு ஏதோ ஆபத்து என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. நீங்கள் எப்படி தப்பி வந்தீர்கள்."   ராஜாமணி தாங்கள் தப்பி வந்த கதையை விரிவாகச் சொன்னார்.   ராஜாமணி எதுவும் புகார் கொடுத்து பெரிய விஷயமாக்க விரும்பாததால் ம.நி.க கட்சியின் தலைவர் ஜனமித்திரன் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.   போலீஸ் அதிகாரி தொடர்ந்து பேசினார்.   "மிஸ்‌டர் ராஜாமணி, நீங்கள் எங்களுடன் கொஞ்சம் வரவேண்டும். ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்."   இது என்ன புதுக்குழப்பம் என்று தோன்றியது ராஜாமணிக்கு. சி.எம் தம்மிடம் பேசிய விஷயம் சம்பந்தமாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். சரி, சென்று பார்த்துவிட்டுத் தான் வரலாமே என்று நினைத்துக் கொண்டார்.   அவ்வளவு பெரிய அரசனை கூட்டி வந்து அலைக்கழிக்கிறோமே என்று மனதில் குற்ற உணர்ச்சி எழுந்தது.   ஆனால், மன்னன் நடப்பதை பார்த்து இன்னும் ஆர்வத்தோடு தான் இருப்பது போல தெரிந்தது.   போலீஸ் வாகனத்திலேயே தஞ்சையில் இருக்கும் ஆளுங்கட்சியின் மாவட்ட அலுவலகத்துக்கு சென்றார்கள்.   ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் இமையவரம்பன் அமைச்சராகவும் இருப்பவர். முதல்வர் உத்தரவின் பேரில் அவசர அவசரமாக சென்னையில் இருந்து கிளம்பி வந்திருந்தார்.   அவரே வெளியே வந்து ராஜாமணியையும் மன்னனையும் வரவேற்றார். அவர்களை பார்த்ததும் அவருக்கு சப்பென்று ஆகிவிட்டது.  இவர்களை ஏன் முதல்வர் நம் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியுமா என்று கேட்கச் சொன்னார்?. இமையவரம்பனுக்கும் அறிவியலுக்கும் வெகு தூரம் என்பதால் அவருக்கு ராஜாமணியைப் பற்றி தெரியாது. ஏதோ திரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகள் வந்து பிரச்சாரம் செய்தாலும் மக்களிடம் எடுபடும், ஓட்டும் கிடைக்கும். அதை விட்டுவிட்டு இவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதால் என்ன பிரயோஜனம் என்று அவருக்கு குழப்பமாக இருந்தது.   இருந்தாலும் முதல்வர் ஆர்டர், மீறமுடியாது. இவர்களிடம் பேசித் தான் ஆக வேண்டும்.   "வாங்க சார், உக்காருங்க" இருவருக்கும் இருக்கைகளை காட்டினார். மன்னனுக்கு அந்த இருக்கை போதவில்லை. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு தான் அமர்ந்தார்.   "இந்த சட்டசபைத் தேர்தலில் நீங்க எங்களுக்காக பிரச்சாரம் பண்ணனும்னு முதல்வர் நினைக்கிறார். முக்கியமாக மன்னர் அவர்கள் நம் முதல்வர் ஆட்சித்திறமையைப் பத்தி எடுத்து சொல்லி தமிழ்நாடு முழுதும் பிரச்சாரம் பண்ணனும்னு சி.எம். எதிர்பார்க்கிறார்.  உங்களுக்கு எல்லா வசதியும் பண்ணிக்கொடுக்கறதுக்கு தான் என்னை அனுப்பிச்சு இருக்காங்க"   இது ஏதோ வேண்டுகோள் மாதிரி தெரியவில்லை ராஜாமணிக்கு. வேறு வழியில்லை. இல்லையென்றால் இங்கேயும் இருட்டு அறைக்குள் கட்டிப் போட்டு விட்டால் என்ன செய்வது. இப்போதைக்கு தலையாட்டி வைக்க வேண்டியது தான். ஆர அமர அப்புறம் எப்படி தப்பிக்கிற வழியை யோசிக்கலாம் என்று நினைத்துக் கொண்டார்.   'கே.கே.க' கட்சியின் தலைமை அலுவலகம். பின் குறிப்பு: கட்சிப் பேரைப் பற்றி நீங்களே ஏதாவது விபரீத எண்ணங்கள் கொள்ளக் கூடாது. கேள்வி கேட்போர் கழகம் என்பதின் சுருக்கம் தான் 'கே.கே.க'. அந்த கட்சியின் தலைவர் கோ.பா(கோவிந்தராஜன் பாவேந்தன் என்பதின் சுருக்கம் தான் இந்தப் பெயர்) எப்போதும் அரசை எதிர்த்து ஏதாவது கேள்விக் கேட்டுக் கொண்டே இருப்பதால் அதுவே அந்தக் கட்சிக்கும் பெயராக அமைந்துவிட்டது.   அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தொண்டர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். தலைவர் கோ.பா அப்போது தான் காலை உணவை முடித்துக் கொண்டு வந்து அமர்ந்தார். தலைவரின் இன்றைய நிகழ்ச்சிகள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார்கள் எதிரில் அமர்ந்து இருந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள்.   தலைவர் கோ.பாவே சில நாட்களாக நெடிய சிந்தனையில் தான் இருந்தார். உடலில் கொலஸ்ட்ரல் அளவு அதிகமாகிவிட்டது என்று டாக்டர் எச்சரித்து கண்டிப்பாக வாக்கிங் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார். பேசாமல் ஏதாவது காரணத்தை வைத்து நெடிய நடைபயணம் செல்வது என்று முடிவு எடுத்திருந்தார். ஆனால், இன்னும் தகுந்த காரணம் தான் கிடைக்கவில்லை.     போன மாதம் பெய்த மழையில் வேறு எல்லா அணைகளிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. ஒரு வாரமாக இலங்கைக்காரனும் எந்த மீனவனையும் சுடவில்லை. பின்பு என்ன தான் காரணம் சொல்வது.. தேர்தல் வேறு வந்து விட்டது. அவர் அமைத்த கூட்டணியில் கிட்டத்தட்ட 8 கட்சிகளை சேர்த்து விட்டார். ஆனாலும் இன்னும் அவருக்கு திருப்தி இல்லை. இப்படி பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் தான் ராஜாமணியைப் பற்றிய செய்தி அவருக்கு வந்து சேர்ந்திருந்தது.   அப்போதே அவர் முடிவெடுத்துவிட்டார். "கோ.பா கூட்டணியில் ராஜராஜ சோழன்", அடுத்த நாள் காலை தலைப்புச் செய்தி இதுவாகத் தான் இருக்க வேண்டும்.   சில பல செல்பேசி கால்களுக்கு பிறகு அவருக்கு ராஜாமணி எங்கே இருக்கிறார் என்பது தெரிந்து போனது. ராஜாமணியும் மன்னனும் இப்போது தஞ்சையில் இருக்கும் ஆளுங்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இருப்பது தெரிந்தது.   இதே நேரத்தில் தமிழ்நாட்டின் எதிர்கட்சி தலைமை அலுவலக நிலைமையை பார்ப்போம். அங்கேயும், இந்த செய்தி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கட்சியின் தலைவர் நீதிமணி அவர்கள் இந்த செய்தியை எப்படி தன்னுடைய கட்சியின் எதிர்காலத்துக்கு உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தார்.   ஏற்கனவே தாம் சோழப் பரம்பரையென மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதை அந்த ராஜராஜ சோழனே வந்து கட்சி மேடையில் நின்று ஆமோதித்து விட்டால் கண்டிப்பாக இந்தத் தடவை ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பது அவரது திட்டம்.   இரண்டு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் தங்கள் திட்டங்களோடு தஞ்சையை நோக்கி காரில் பறந்து கொண்டிருந்தார்கள்.   தஞ்சையில் இருக்கும் ஆளுங்கட்சியின் மாவட்ட அலுவலகம் இன்று வெகு பரபரப்பாக இருந்தது.   மூன்று கட்சிகளின் தொண்டர்களும் கார சாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.  தலைவர் நீதிமணியும், தலைவர் கோ.பாவும் காரிலேயே அமர்ந்து இருந்தார்கள்.   ராஜ ராஜ சோழன் யாருக்கு சொந்தம் என்ற விவாதத்தில் தள்ளு முள்ளு ஏற்படும் நிலை ஏற்பட்டு இருந்தது. போலீஸ் என்ன செய்வது என்று தெரியாமல் தேமே என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றுகொண்டு இருந்தார்கள்.   மூன்று கட்சிகளின் தொண்டர் படையும் சம அளவில் இருந்ததால் எவ்வளவு விவாதம் ஏற்பட்டாலும் தீர்வு கிடைக்காது என்பது தெரிந்தபின்பு, அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்தார்கள். பேசாமல், மன்னனிடமே கேட்டு விடுவது, "உங்களுக்கு யாருடன் செல்ல விருப்பம்" என்று. மன்னன் யாருடன் செல்ல விரும்புகிறானோ அது அவன் இஷ்டம். அப்போது மற்ற இரண்டு கட்சிகள் பிரச்சினை எதுவும் செய்யக் கூடாதென்று உடன்பாடு ஏற்பட்டது.   எல்லோரும் கும்பலாக மன்னனும் ராஜாமணியும் இருந்த அறைக்குள் சென்றார்கள். அதிர்ச்சி காத்திருந்தது அவர்களுக்கு. அங்கே அறை காலியாக இருந்தது. மன்னனையும் காணவில்லை. ராஜாமணியையும் காணவில்லை.     இங்கே அதிகாலையில் நடந்த ஒரு விஷயம் உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ராஜாமணியும் மன்னனும் காணாமல் போனது ஒரு சினிமா இயக்குநரின் கைங்கரியம்.   இயக்குநர் மௌனரத்தினம் இந்திய அளவில் ஒரு பெரிய சினிமா இயக்குநர். தேசிய விருது எல்லாம் அவருக்கு பால்கோவா சாப்பிடுவது மாதிரி. அவருக்கு ரொம்ப நாளாக கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" கதையை படமாக எடுக்க வேண்டும் என்று ஆசை. அப்படி எடுத்தால் யாரை அருள்மொழித் தேவனாக நடிக்க வைப்பது என்று நெடு நாட்களாக சிந்தித்துக் கொண்டே இருந்தார்.   ராஜாமணியின் இயந்திரத்தின் மூலம் ராஜராஜ சோழனே இங்கே வந்திருப்பது தெரிந்த பின் அவருக்கு இது தான் தோன்றியது.   "எதற்கு அருள்மொழித் தேவன் கேரக்டரில் யாரையோ நடிக்க வைக்க வேண்டும். ரியல் அருள்மொழித் தேவனையே(அதாவது ராஜராஜ சோழன்) நடிக்க வைத்து விட்டால் என்ன?"   இந்த அருஞ்சிந்தனை அவர் மனதில் உதித்த பின் அவர் ஒரு கணமும் தாமதிக்க வில்லை. உடனே தன்னுடைய உதவி இயக்குநர்களை தஞ்சைக்கு அனுப்பி விட்டார். அவர்களும் அதி காலையிலேயே வந்து சினிமா பாணியில் ராஜாமணியையும் மன்னனையும் கடத்திக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்.   கார் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தாண்டி பறந்து கொண்டிருந்தது. ராஜாமணிக்கும் மன்னனுக்கும் அப்போது தான் மயக்கம் தெளிந்து இருந்தது.   மயக்கம் தெளிந்து எழுந்த மன்னன் எப்போதும் போல இப்போது சாந்தமாக இருக்கவில்லை.   "என்னடா, நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். ஆள் ஆளுக்கு ஏதோ மூட்டையை தூக்கிக் கொண்டு போவதைப் போல மாறி மாறி கடத்திக் கொண்டு போகிறீர்கள். நான் யார் என்று நினைத்தீர்கள். நான் சோழ மாமன்னன் ராஜராஜன்" என்று கத்திக் கொண்டே கையை ஒரு வீசு வீசினார். முன்னால் அமர்ந்து கார் ஓட்டிக் கொண்டிருந்த உதவி இயக்குநரும் அவனின் அருகில் அமர்ந்திருந்த இன்னொரு உதவி இயக்குநரும் மன்னனின் ஒரே அடியில் சாய்ந்து விட்டனர்.   ஓட்டுனர் மயக்கமடைந்து விட்டதால் கார் சாலையில் தாறுமாறாக சென்றது. ராஜாமணியும் இன்னும் முழுதாக மயக்கம் தெளியவில்லை. மன்னனுக்கும் தேர் தான் ஓட்டத் தெரியும், கார் ஓட்டத் தெரியாது.   கடைசியில் கார் இடது பக்கத்தில் இருந்த பள்ளத்தில் சென்று பாய்ந்தது. அது ஒரு ஆற்றுப் பாலத்தை ஒட்டிய பகுதி.  நல்லவேளை அங்கே யாரோ திருட்டுத்தனமாக அள்ளி கொட்டி வைத்திருந்த மலைப் போல குவிக்கப்பட்டிருந்த ஆற்று மணலில் கார் பாய்ந்து நின்றது. ராஜாமணிக்கும் மன்னனுக்கும் காயம் பெரிதாக  ஏற்படவில்லை.     காலம் - சோழர் காலம்   சோழ நாடே களை இழந்திருந்தது. எங்கே பார்த்தாலும் மன்னரைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.   அரசாங்கத்தில் எவ்வளவு தான் ரகசியமாக வைத்து இருந்தாலும் மன்னன் ஏதோ ஒரு மனிதனுடன் மறைந்து போனது எல்லோருக்கும் தெரிந்தே விட்டது.   கால இயந்திரம் மறைந்த இடத்தில் சோழப் படை முகாமிட்டு இருந்தது. எப்போதும் வேண்டுமென்றாலும் மன்னன் திரும்ப வரலாம் என்பதால் அந்த ஏற்பாடு.   இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஆனதால் மன்னன் திரும்ப வருவானா என்ற சந்தேகம் அமைச்சர்களுக்கு ஏற்பட்டது. அமைச்சர்கள் கூடிப் பேசினார்கள். இளவரசர் ராஜேந்திரனும் இன்னும் சோழ நாட்டுக்கு திரும்ப வில்லையாதலால் அமைச்சர்களாலும் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை.   ராஜராஜன் மறைந்து போனதை அறிந்த சேரப் பாண்டிய மன்னர்களும் சோழ நாட்டின் மீது எப்போது படை எடுக்கலாம் என்று தருணம் பார்த்துக் கொண்டிருந்தர்கள்.   சோழ மக்கள் விஞ்ஞானி ராஜாமணியை ஒரு பேயோ பூதமோ என்றே நினைத்து விட்டார்கள். அது மன்னனை எங்கே கொண்டு போனதோ, என்ன செய்கிறதோ என்று மனம் நொந்து பேசிக் கொண்டார்கள்.   காலம் - நிகழ்காலம்   மன்னர் மெல்ல எழுந்து காருக்கு வெளியே வந்தார். ராஜாமணியும் வெளியே வருவதற்கு உதவி புரிந்தார்.   கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே மணல் மட்டுமே தெரிந்ததால் அவருக்கு அது என்ன இடம் என்று தெரியவில்லை. அவர் காலத்தில் எப்போதும் ஆற்றில் தண்ணீர் மட்டுமே அவர் பார்த்து இருந்ததால் அவரால் மணல் மட்டுமே இருந்த அது ஒரு ஆறு என்று கண்டு பிடிக்க முடியவில்லை.     "ராஜாமணி, என்ன இது ஒரே மண்ணாக இருக்கிறது, என்ன இடம் இது"   "மன்னரே, இது காவிரி ஆற்றின் ஒரு கிளை ஆறு. இப்போது தண்ணீர் இல்லை. போன மாதம் பெய்த  மழையில் அணைகள் எல்லாம் நிரம்பி விட்டன. இன்னும் அங்கே தண்ணீர் திறக்கவில்லை. அணை திறந்த பின் இந்த ஆற்றில் தண்ணீர் வந்துவிடும்."   பொன்னியின் செல்வனுக்கு நெஞ்சே அடைப்பது போல இருந்தது. தம் காலத்தில் ஆண்டின் அத்தனை நாளும் ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் பொன்னி ஆற்றுக்கா இந்த நிலைமை. சோழ நாடு சோறுடைத்து என்று சொல்வார்களே.   மன்னனின் மன நிலையைப் புரிந்து கொண்டார் ராஜாமணி.   "மன்னா, இப்போதெல்லாம், காவிரி ஆற்றில் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ, மணல் மட்டும் தான் எப்போதும் நிறைய இருக்கிறது." ஆற்றாமையோடு சொன்னார் ராஜாமணி.   "ராஜாமணி, இதெற்கெல்லாம் யார் காரணம்? இயற்கையா அல்லது மனிதர்களா?" மன்னரின் குரலில் கோபம் தெரிந்தது.   "மன்னரே, அண்டை மாநிலம் நமக்கு சரியாக தண்ணீரை தருவதில்லை"   "என்ன, தண்ணீரைத் தருவதா? தண்ணீரை யார் தடுக்க முடியும். அது அதன் பாட்டில் போய்க் கொண்டிருப்பது இயற்கை அல்லவா. தண்ணீரைத் தடுத்து வைத்திருப்பவர் யார். யாராவது குறுநில மன்னனா? வாருங்கள், இப்போதே ஒரு படையைத் திரட்டிக் கொண்டு போய் அவர்கள் மீது போர் தொடுப்போம்."   சொல்ல முடியாது. மாமன்னன் அல்லவா? செய்தாலும் செய்து விடுவார்.   இதற்கு மேல் மன்னனை இங்கே வைத்து இருந்தால் என்ன விபரீதம் ஏற்படுமோ என்று அவருக்கே திகிலாக இருந்தது.   உடனே இருவரும் வேறு ஒரு வண்டியை பிடித்து ராஜாமணியின் வீட்டிற்கு வந்தார்கள்.   ஏதாவது ஆபத்து இருக்கலாம் என்று எண்ணிய ராஜாமணி வண்டியை வீட்டுக்கு சற்று முன்னரே நிறுத்தச் சொல்லி இறங்கிக்கொண்டார்.  இருவரும் சற்று தூரத்திலிருந்து வீட்டைக் கவனித்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அங்கே வீட்டுக்கு வெளியே நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். இவர்கள் எந்தக் கட்சிக்காரர்களோ என்று ராஜாமணி நினைத்துக்கொண்டார்.   ராஜாமணிக்கு ஒரு யோசனை வந்தது. இதே ஊரில் தான் சற்று தொலைவில் அவரது அக்கா குந்தளவள்ளியின் வீடு உள்ளது. அங்கே சென்று மறைந்து இருக்கலாம் என்று முடிவெடுத்தார்.   ராஜாமணியும் மன்னனும் அங்கே சென்றனர். ராஜாமணியின் அக்காவின் பெயர் குந்தளவள்ளி என்று கேட்டதும் மன்னன் அப்படியே நெகிழ்ந்து விட்டார். ராஜராஜனுக்கு எப்போதுமே தன்னுடைய தமக்கை குந்தவை தேவி மீது அளவு கடந்த பாசம். அதனால் எங்கே அந்த பேர் கேட்டாலும் அவருக்கு பாசம் கட்டுக்கு அடங்காமல் போய் விடும். அப்படியே நெடுஞ்சாண் கிடையாக ராஜாமணியின் அக்காவை விழுந்து வணங்கினார். ராஜாமணியின் அக்காவுக்கு சற்று வெட்கமாக போய் விட்டது. எவ்வளவு பெரிய மன்னன், தான் காலில் விழுந்து வணங்குகிறாரே என்று.     மன்னர் உணவருந்திக் கொண்டிருந்தார். ராஜாமணி ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார். மன்னனை எப்படி பத்திரமாக அவர் காலத்துக்கு திரும்ப அனுப்பி வைப்பது என்று.   ஒரு யோசனை வந்தது அவருக்கு. உடனே செல்பேசியை எடுத்தார். நேர்முக உதவியாளர் காளமேகத்துக்கு கால் செய்தார். ராஜாமணி விவகாரத்தில் முதல்வர் தன்னை திட்டி விட்டதால் ஏற்கனவே பலமான கோபத்தில் இருந்தார் காளமேகம். அந்த ராஜாமணியே கால் செய்தவுடன் கன்னா பின்னாவென்று திட்டத் தொடங்கினார். திட்டி முடிக்கும் வரை பொருத்திருந்த ராஜாமணி "சார், நான் சொல்றதை கேளுங்க. நான் மன்னரிடம் பேசிவிட்டேன். அவர் உங்கள் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்கிறேன் என்று சொல்லிவிட்டார். இப்போது உங்களைப் பார்ப்பதற்குத் தான் சென்னை வந்து கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே இருப்போம்"   "அப்படியா சீக்கிரம் வாங்க." மகிழ்ச்சியுடன் சொன்னார் காளமேகம்.   ராஜாமணி அப்படியே இந்த விஷயத்தை ரிபோர்டர் கோராவிடமும் செல்பேசியில் சொல்லி வைத்தார்.   சற்று நேரம் பொறுத்து ராஜாமணியும் மன்னனும் ராஜாமணியின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்கள். ராஜாமணி எதிர்பார்த்தது போலவே யாரும் அங்கே இல்லை. அப்பாடா, நிம்மதி ஆக இருந்தது அவருக்கு.   ராஜாமணி இப்போது ரொம்பவே பயந்து போய் இருந்தார். இதற்கு மேல் எதுவும் விபரீதம் நடப்பதற்கு முன்னால் மன்னனை அவரின் காலத்துக்கு அனுப்பி விடுவது தான் நல்லது என்று அவருக்கு தோன்றியது.   அதோடு, அந்த கால இயந்திரத்தையும் அழித்து விடுவது நல்லது என்று எண்ணிக் கொண்டார்.   "மன்னா, நீங்கள் உங்கள் காலத்துக்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது. இந்த இயந்திரத்தையும் அங்கேயே அழித்துவிடுங்கள். இந்த இயந்திரம் பல விபரீதங்களுக்கு தான் வழிவகுக்கும் என்று எனக்கு தோன்றுகிறது."   இயந்திரத்தை எப்படி அழிக்கவேண்டும் என்ற வழிமுறையையும் மன்னனுக்கு விளக்கினார்.   "மிக்க மகிழ்ச்சி ராஜாமணி. உங்கள் காலத்தை எமக்கு காட்டியதற்கு உமக்கு நன்றி"   "வருகிறேன்" மன்னன் விடைபெற்றுக் கொண்டார். அந்த கால இயந்திரம் தனது கடைசி இயக்கத்தில் சுழன்று மறைந்து போனது.   போகும்போது இந்தக் காலத்தின் நினைவாக ராஜாமணியின் பேனாவை பெற்றுக் கொண்டார். ஏற்கனவே அந்தப் பேனா அவரை மிகவும் கவர்ந்திருந்தது. .   "எவ்வளவு அற்புதமான சிறிய இயந்திரம் இது, எதுவுமே இல்லாமல் எப்படி எழுதுகிறது. கல்வெட்டுகளுக்கு பதில் இந்த கருவியையே வைத்து எழுதிவிடலாம்" என்று நினைத்துக் கொண்டார்.  அவருக்குத் தெரியாது அதில் இருக்கும் மை தீரும் வரை தான் அந்தப் பேனா எழுதும் என்பது. ராஜாமணியும் அதை அவருக்கு சொல்லவில்லை.   முற்றும்  எங்களைப் பற்றி:   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:   மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.   ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:   ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.   தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:   தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.   சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.   எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.   சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?   சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.   நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.   அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.   எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.   தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?   கூடாது.   ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.   அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.   அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.   வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.   பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்   வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.   FreeTamilEbooks.com   இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும்.   PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT   இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம்.   அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.   இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?   நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.   அவ்வளவுதான்!     மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:       ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல்     தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல்     சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்   விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.   இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?   யாருமில்லை.   இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.   மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.   இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?   ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை.   ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம்.   அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது.   தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.   நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?   உள்ளது.   பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.   1. www.vinavu.com   2. www.badriseshadri.in   3. http://maattru.com   4. kaniyam.com   5. blog.ravidreams.net   எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?   இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.   <துவக்கம்>   உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்].   தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.   இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.   இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும்.   இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.   எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.   இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம்.   http://creativecommons.org/licenses/   நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.   e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks   G +: https://plus.google.com/communities/108817760492177970948       நன்றி. உங்கள் படைப்புகளை வெளியிடலாமே:   உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம்.   1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/   தமிழில் காணொளி  –   2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –   கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்   http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses   உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/   3.   மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.       நூலின் பெயர்     நூல் அறிமுக உரை     நூல் ஆசிரியர் அறிமுக உரை     உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்     நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url)   இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.   விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.         நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.   மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  –     தமிழில் காணொளி offline method  – https://youtu.be/0CGGtgoiH-0   press  book  online  method   - https://youtu.be/bXNBwGUDhRs     இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook      A4 PDF, 6 inch PDF கோப்புகளை  Microsoft word இலேயே உருவாக்க – http://freetamilebooks.com/create-pdf-files-using-microsoft-word/   எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum   நன்றி !