[] []     மெரினாவின்  பாரதி  இன்னொரு புதுக்கவிதை      இரா. ஜெகதீஷ்                []   கனவுசுதந்திரம்  வெளியீடு      மெரினாவின்  பாரதி  இன்னொரு புதுக்கவிதை  இரா. ஜெகதீஷ் ©   முதல் பாதிப்பு: நவம்பர் 2017  பக்கம்: 64    Marinavin Bharathi  By R. Jagadish ©  First Edition: November 2017 Pages: 64 Printed in India Kanavusuthanthiram Veliyeedu []     Author Email: Jdishjerry@gmail.com  Phone: +91 917171 8722               மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com     உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.      அட்டைப்படம் - சண்முக வேல் "Shanmuga vel" மின்னூலாக்கம் - த.சீனிவாசன் tshrinivasan@gmail.com           முன்னுரை      மனிதன் அடைக்கப்பட்டவனாக இருந்தாலும்,   அவன் மனம் சுற்றி திரியும் அழகிய பட்டாம்பூச்சி..!   அதில் கூட்டுப் புழுவாய் தோன்றி   சிந்தனைகளால் வளர்ந்து..,   பட்டாம்பூச்சியாய் மாறும் பொழுது   இந்த உலகம் அவனுக்கு அழகிய வனமாகிறது..!   அப்படி கூட்டுப் புழுவாக மாறிய   என் சிந்தனைகளிடம் இருந்து..,   பிறந்தப் பட்டாம்பூச்சிதான்   இந்த கவிதை தொகுப்பு...!   என் கோவம் வரிகளாகின என் காதல் கவிதையானது சமுதாயக் குப்பையைச் சேர்த்து வைத்து எரிக்க,    பேனாவை காகிதத்தில் உரசி தீப்பொறியை    உருவாக்கும் முயற்சியே..,   இந்த கவிதை தொகுப்பு..!   என் பயணத்தில் நான் பலருக்கு   நன்றி கடன் பட்டிருக்கிறேன்.!    நன்றிகள் பல........   இனி வருவோருக்கு..!   ஆதிமொழி தமிழுக்கும் ..! என்னை பெற்றவர்களுக்கு ரவி சுசிலா..!   அழகிய மருத்துவச்சிக்கு டாக்டர். சுமந்தா..!   என் வாக்கியப் பிழையைத் திருத்தும்   தங்கைகள் விசாலாட்சி, திவ்ய பாரதி - க்கு..!   என் உயர்வில் சிரிக்கும்   சுவாமினாதனுக்கு..!   நான் உயரத் துடிக்கும் தயாளனுக்கு..!   நான் சிரிக்கப் பிறந்த என் தங்கை மகள் சன்யுக்தா - விற்கு..!   என்னை செதுக்கிய சென்னை சமூக சேவை குழுவிற்கு. .!    என் உலகை அழகாக்கிய   திக்குகள் எட்டும் குழுவிற்கு..!   இந்நேரத்தில் இந்த புத்தகத்தின் மூலம் என் நன்றியை தெரிவிக்கிறேன்..!   இவண் இரா. ஜெகதீஷ் பொருளடக்கம் 1. கலைந்த குழந்தை .. 6  2. அத்தனையும் அழகு 7  3. கோவணம் 8   4. விவசாயியும் - இயற்கையும் 9  5. மனித வாழ்க்கை 10  6. டெல்லி தமிழ் விவசாயி 11  7. காதலர் தினம் 13  8. சொர்க்கம் 15  9. திருநங்கைகள் ( Trans-Gender) 16  10. உடைத்த வாடிவாசல் 17  11. மெரினாவில் இளைய பாரதி 18  12. புவியும் புத்தகமும் .. 20  13. காளை 21  14. ஆசிட் அழகி .. 23  15. பறையிசை .. 24  16. இன்று என் பயணம் .. 25  17. இறை .. 26  18. ஓசோனே விழித்திடு... 27  19. தாயின் இறப்பு .. 28  20. இரமலான் வாழ்த்துகள் .. 29  21. தோழி .. 30  22. அப்பா 31  23. கோபம் 33  24. சிட்டுக்குருவி 34  25. இரத்ததானம் .... 34  26. ஈழத் தமிழினம் 35  27. ஆசிரியர்கள் 37  28. நட்பு 38  29. மணப்பெண் 40  30. எறும்பு ( பகிர்ந்து உண்ணல் ) .. 42  31. அன்னை ..¿? ( தமிழ் அ முதல் ஃ வரை ) 43  32. பெண் .. 44  33 .பெண்கள் எல்லாம் ஏமாற்றுக்காரிகள் 45  34. மரம் .. 47  35. யானை 48  36. குழந்தை - கடவுள் - மனிதன் - தேவை = குழந்தைத் தொழிலாளி 49  37. மதராஸ் (Madras) 50  38. காதல் வலி 51  39. சுதந்திர தினம் 53  40. பிணவறை தொழிலாளி ..¿? 55  41. ஈரப்பதம் இல்லா கண்ணீர் .. 56  42. மனித நேயம் 56  43. முரண் 57  44.வெற்றி - தோல்வி .. 58  45. என் தேசம் 58  46. தேசம் 59  47. மழையே ..!! 60  48. அறிஞர் அண்ணா 61  49. உலக புகையிலை ஒழிப்பு தினம்  ..¿? 62        1. கலைந்த குழந்தை ..  இருவரின் ஆசையால்  ஆசை ஆசையாய் ஒரு குழந்தை ..!  யார் கண்ணோ பட   யார் கண்ணிலும் பட்டுவிடாமல் இருக்க  கருவறையில் உருவான கல்லறை அவலம்..!   இவள் அம்மா அழுது கொண்டு இருக்கிறாள் இவள் அம்மாவென்று அழாமல் இருப்பதற்காக ..!  தண்ணீர்க் குடத்தில் கண்ணீரில் வளர்பவளே தாகம் என்றால் கூட கள்ளிப்பால் உன் குளிர்பானம் ..!  ஏன் பிறந்தாய் என பாடுவதற்குக் கூட உன் கதகதப்பு தேவை தானே உன் உருவம் தெரியாமலே .. கலைத்து விட்டேன் என் கனவுகளையும் சேர்த்து ..!  கடவுள் நம்பிக்கை  இதுவரை இல்லை எனக்கு இன்று வேண்டுகிறேன் நீ சாமியானாய் என்ற நம்பிக்கையோடு ..!                2. அத்தனையும் அழகு  குழந்தைகளின் சுவர் ஒவியம் போல, தெளிவே இல்லாத வானம் ..!  பள்ளிக்குழந்தையின் கிழிந்த காத்தாடிப் போல  அங்கும் இங்கும் ஊசலாடும் மேகம் ..!  அழுக்கு படிந்த , ஆடை கிழிந்த  இயல்பான பெண்ணின் அழகு போல இயற்கையின் பார்வையில் வளர்ந்தும் , தேய்ந்தும் நிலா ..!  மலைகளின் இடுக்கில் வெட்கத்தோடு எட்டிப்பார்க்கும் சூரியன் ..!  கரிய யானையின், குழந்தை மிரட்டலோடு திரியும் கார்மேகம் ..!  வயலில் சிதறிய தானியக் கூட்டமாய் நட்சத்திரங்கள்..!  பார்வை அற்றவர்களின் பிடித்த உலகமாய் மாறும் இரவு இருட்டு சோம்பேறி, மனிதனின் வேர்வை போல,  எப்போதாவது வரும் மழை..!  அத்தனையும் அழகு ..!                  3. கோவணம்  தலைநகரில் பறக்குது கோவணக்கொடி  நெற்கதிரும் தலைகுனிந்தது இது ஏழை விவசாயக்குடி ..!  குனிந்து குனிந்து முதுகெலும்பும் உடைந்தது  இந்தியத் தேசியம் இன்று அம்மணம் ஆனது..!  வாழை இலை விருந்து வெச்ச விதி இதுனு தெரியாம..!  பச்சரிசி பொங்கி வெச்ச  பாவபட்ட மக்களுக்கு ..!  காவிரிக்கு கண் இல்ல , கன்னடம் தான் என்ன செய்யும் பென்னிகுய்கு சாமதியில முல்லை பெரியாரும் தூங்கிடிச்சி  ஆந்திரம் பிரிஞ்சதுல பாலாறும் பதறிடிச்சி ..!  நதிகள் இணைப்பு எல்லாம் காவி செடி முழிங்கிடிச்சி  திராவிடம் பேசி பேசி கோவணம் தான் மிச்சமாச்சி ..!                      4. விவசாயியும் - இயற்கையும்  தன் ஒரு சொட்டுக் கண்ணீரில் கூட  விதைக்கத்தான் விரும்புகிறான் விவசாயி..!  உலகமெனும் இருக்கையில் அமர்த்தி,  தன் இருக்கையால் இறுக்கிப் பிடித்து  இருக்கதான் விரும்புகிறது இயற்கை ..!  காலி நிலமானாலும் காயாத பச்சை நிலம் விவசாயியின் கனவு ..!  வீட்டிலே பிறந்து  வீட்டீலே இறக்கும் மனிதனை,  தாங்க காத்துக்கிடக்கும் இயற்கை மடி ..!  நஞ்சில்லா உணவு  சிறு நதியோரம் வாழ்க்கை. உழவே தலை ..!  இயற்கையின் ஈரத்தை  இறுக்கிப் பிடிக்கும் இதயம்..!   நெகிழி போல மக்காத மனதை மகிழ்விக்க  மேகம்....  வெட்கம் அவிழ்த்தது பூமிக்கு மழையாய்..!                  5. மனித வாழ்க்கை  அழியாத கனவுகள்  அழுது வடிந்த கன்னங்கள் ..!  சுயநல மனிதர்கள் நடுவே  பொதுநலனும் போதை தான் இங்கு ..!   யாரையும் நம்பாதே  புத்திக்குப் புரிகிறது மனம் எங்கே ஏற்கிறது ..!  யானைக்கு மதம் பிடிக்கும்  அது இயற்கை,  ஆனால் யானையை பார்க்கும் போதெல்லாம் நடுங்குவது மனித இயல்பு ..!  தவறு யானை இழைத்ததா  மனித புத்தி பிதைத்ததா..!  அதுபோல் தான்,  இங்கு சில மனிதர்களின் கோபம் ..!  புரிதல் இல்லா மனிதர்கள் மத்தியில்  மரியாதை நிமித்தமாய் வாழ்ந்தென்ன பயன்..!  வீ ழ்ந்தென்ன பயன் ..!                    6. டெல்லி தமிழ் விவசாயி  ஆனை கட்டி போர் அடிச்ச  காட்சியெல்லாம் காணா போச்சு ..!  காவயிறு கஞ்சிக்கே  காந்தி போல அரை நிர்வாணக் காட்சி ..!   தலைவாழை இலைபோட்டு  அறுசுவைய படையல்வச்ச கூட்டமடா ..!  டெல்லியில் போராடும் விவசாயிக்கு,  காலை உணவு கொடுத்தாச்சு  பத்திரிக்கை பதறுதுபார் ..!  வானம் பார்த்த பூமிகூட  வெக்க பட்டு கூனிடிச்சு..!  விதை விதைக்க தண்ணீ இல்ல,  விவசாயம் பொய்துடிச்சு..!   மழைவரும்னு எண்ணி எண்ணி மனம் வறண்டு மாரி ( மழை ) போச்சு..!  செயற்கைய நீங்க நம்பி  இன்று இயற்கையோ கைய விரிச்சிடுச்சு..!  கல்ல கூட மஞ்சள் தேச்சி  சாமினு சந்தோஷப்பட்டான் ..!  அடக் கடவுளே நீ கல்லு தானா  அவன் சாவுல தான் கேட்டு வச்சான் ..!  பச்சைக்கொடிக் கோவண சாமி இனி மழைய நம்பி விடிவு இல்ல,  தண்ணிய தேக்கி வெக்க தெரசும் இங்கு இல்ல ..!  காவிரி கை விரிக்க  பெரியாறும் பல்லிலிக்க,  நீ விவசாயம் பண்ண ஒரு வழிஉண்டு ..!  உன் போராட்டத்த பார்த்து பார்த்து  உன் சாவு சேதி காதுல கேட்டு   கண்கலங்குது....  நீ சோறுபோட்டு வளத்த உன் தமிழினம் ..!    கண்ணீர் எத்தணை டி.எம்..சி? அத்தணை டி.எம்.சி யும் இனியேனும் வளர்க்குமா  உன் பச்சைகொடி விவசாயத்தை ..!                                                7. காதலர் தினம்  என்ன சொல்வது உன்னை அஜந்தா ஓவியம் என்றா ..!  பூமியில் பிறந்தாய் என்று,  என்று சொன்னால் நான் முட்டாள்தானே ..!  ஒரு வேளை நிலவுதான் உன் பூர்வீகமா ..!  சூரியனை பார்த்தால் தான் பூக்கள் கண்விழிக்கின்றன..!  நீ என்ன பூக்களின் சாதியா உன் இமைகள் திறக்கும்,  போது தான் எனக்கு அந்த சந்தோசம் ..!  உன் நிழலின் ஓரத்தில்  தாஜ்மகால் தோன்ற ..!  அசந்து நிற்கிறேன் உன் அழகைப் பார்த்து ..!  உன் இதழ்கள் திறக்கும் போது எல்லாம் ..!  சிட்டுக்குருவிக்கு சிறகு,  முளைத்தாற் போல் ஓர்  எண்ணம் ..!  உன் விரல்கள் என்னை தீண்டும் பொழுது எல்லாம் என்னிடம் புன்னகை உதிர்வது ஆச்சரியம்!!!  உன் சேலையின் சிறிய வருடல் கூட,  என் நெஞ்சத்தை கீறிச் செல்கிறது ..!  உன் கருவிழிகளில் என் முகம் பார்த்து என்,  அழகை ரசிக்கிறேன் ..!  உன் பளிங்கு பற்கள்  பளிச்சிடுவதை பார்த்து..!  என் கண்கள் கூசினாலும்,  பார்க்கவே தோன்றும் உன் முகம் ..!                                              8. சொர்க்கம்  மனிதன் காணாத தேசம் மதங்கள் உண்டாக்கிய தேசம் !!!!  கானல் நீரைப் போல .. பல கற்பனை நிறைந்த தேசம் !!!!  மண் வாசம் இல்லாத ... மனம் தேடும் மரண தேசம் !!!!                                    9. திருநங்கைகள் ( Trans-Gender)    முப்பால் படைத்த   தமிழ் இலக்கணத்திற்கே  இப்பால் எப்பால் என்ற  விடை தோனலையே ..!                                     10. உடைத்த வாடிவாசல்  திமிறிய திமிலோடு  வாடிவாசலை உடைத்த கோவில் காளை ..!  மரியாதை நிமித்தமாய்  காளையர்கள் சிலிர்த்துப் பார்க்க,  வாடிவாசலை உடைத்து முறைத்துப் பார்க்கும் கோவில் காளை ..!  திமிரோடு திமில் நிறுத்தி  மண் கிளரி , கண்ணால் அழைத்து  அடக்க அழைக்கும் சில காளை ..!  நெருங்க விடாத பெண்ணை போல  தொட நினைத்தால் துளைத்துவிடும்,  சில காளை ..!  எகிறிக் குதித்து , கயிற்றை அறுத்து , கோவக்கண்ணால் ,  கொம்பை உரசும் சில காளை ..!  கொம்பெனும் ஆயுதம் ஏந்தி காளை  ஆயுதம் இல்லா நிராயுதபாணியாய் காளை வீரன் ..!  இது வீரம் .. இனி தமிழும் பேசும் ..  சல்லிக்கட்டு இதுவரை கொம்பு சீவிய காளைக்கு  இனி  மீசை முறுக்கும் இளைய தமிழனுக்கு .. !  கொம்பு வெச்ச சிங்கம்  இது எங்க இனம் வளர்த்த தங்கம் ..!            11. மெரினாவில் இளைய பாரதி  புதுமைப்பெண் புதுமைப்பெண் என்று  கூவிக் கூவி திரிந்தாயே..!  உன் கனவுப் பெண்கள் எல்லாம்  மெரினாவின் கரையோரம்  கரை சேர்ந்துவிட்டார்கள் ..!  முண்டாசை விட்டுவிட்டோம் அதற்கு நீ காப்புஉரிமை பெற்றுவிட்டதால் ..!  உன் மீசை திருடிக் கொண்டோம்,  ஆம் நீயே .....அதை தமிழ் எனும் திமிரிடம் திருடியது தானே  இனி நாங்களும் வைத்து கொள்கிறோம் ..!  காக்கை குருவி எங்கள் சாதி பாடினாயாம் இங்கே வா பசியாத்த ஆயிரம் தாய் ..!  ஊட்டி விட  பல கைகள்  உணவிற்கு உழைக்க பல அப்பன்கள் , பிடுங்கி திண்ண பல தம்பி / தங்கைகள் என ..!  'கொதித்துப் போன மெரினா'  'யாதும் ஊரே யாவரும் கேளிர்' சாதிகள் இல்லையடி பாப்பா என்றாய் எவன் செய்தான் ??   காலை உணவு  எந்த சாதி தந்தது தெரியாது ..!   மதியம் எந்த சாதி தரும் தெரியாது ..!  இரவு  சாதி இருக்கா என்றே தெரியாது ..!  பார்க்க நீ இல்லையே என் பாரதி  காலா வா உன்னை காலால் உதைப்பேன் என்றாய் ..!  இங்கு எங்கள் முன்னே  காவலர்களாய் பல காலன்கள்,  அரசியல் சாட்டை சுற்றும் காலன்கள்  எறுமையின் மீதேறியே மிருக வதையென சில காலன்கள் .. !  கவலைபடாதே முகத்தில் உமிழ்ந்தே விட்டோம் ..  அன்னியர் வந்து புகழென்ன நீதி என்றாய் .. துணிந்து விட்டோம் நகல் எடுத்த பாரதிகளாய் ..  பாரதிக்கு ஒரு வேண்டுகோள் .. கனவு நிறைவேறியதாய் பூமிக்கு வந்து விடாதே ..!  அன்று ஒரு பாரதி .. இன்றோ பல நிழல் பாரதி ..!  கூட்டத்தில் தொலைத்துவிடுவாய்  உன்னை நீயே ..! []                                   12. புவியும் புத்தகமும் ..  நீலம் தீட்டிய விரிந்த உலக வானம் .. மனித மூளையாய் குட்டி குட்டி நூலகங்கள் ..!  காதின் வழியே பல புத்தகம் நுழைய .. யார் யாரோ அதை ஓதித்திரிய ..!  கண்கள் பேசும் சில புத்தகம் .. மெளனம் என்னும் மொழி எடுத்து ..!  விரல்கள் வருட உணர்ச்சியாய்  சில புத்தகம் .. கண்ணீரை இழுத்து பேனாவில் மையிட்டு ..!  பலநூறு மொழிகள் இங்கு  பேச ஒரு மனித இனம் தான் உண்டு ..  உலகின் உணர்வு , அனுபவப் பகிர்வு ,  வரலாற்றுக்குறிப்பு என .. !  மனித இனத்தின் மூளைநூலகத்தை ..  சேகரிக்கும் அலமாரிதான் நூலகங்கள் ..!  உலகம் என்னும் பரந்த நூலகத்தில் .. மனிதன் என்னும் எத்துணை புத்தகங்கள் ..  ஆச்சரியம் தான்  ஒவ்வொரு பக்கங்களும் .                  13. காளை  சல்லிக்கட்டு காளைகளின் மூக்கணாங் கயிற்றை அறுத்து ., இச்சமுதாயத்தை  சேர்த்துக்கட்டிய இளைஞர்களே..!  காளையைக் காக்க  கண்ணியமாய் நின்றாய் .., கடற்கரை தொடங்கி கன்னியாகுமரிவரை .. தலைவணங்கியது உலகம் ..!  விவசாயம் வேண்டி வீதிக்குவந்தாய் ..  உணவுக்குழாய் உணர்ச்சிவசப்பட்டு அடைத்து நின்றது ..!  அன்னியப்பொருட்கள் வேண்டாம் என்றாய். மூத்தக்குடிமகன் என்ற மீசை முறுக்கோடு ..!  ஊர் எல்லாம் சோறு போட உலகமே உற்றுப் பார்க்க., உணர்வின் விதையை உயிராய் விதைத்தாய் .. !  தொலைப்பேசி விளக்கெடுத்து  வானுக்கே வெளிச்சம் கொடுத்து ., பூமியில் உதித்த விண்மீனாய் ஒளிர்ந்து நின்றாய் ..!  ஆயிரம் அண்ணன்கள் .. எழுச்சி மிகு அக்காக்கள் ., முகம் தெரியா தங்கைகள் .. முந்தி நிற்கும் தம்பிகள் ..! கனிவான பந்தங்கள்  .. அழியாத நினைவுகளோடு ..+  என் இனக்குழந்தைகள் கூட உணர்வோடு களம் வந்தது புரிதலின் அழகு ..!  மாட்டின் பால் குடித்து  நமக்கு மானத்தையும்  அம்மாடே உணர்த்தியது காலத்தின் கட்டாயம் ..!  காட்சிப்பொருளாய் இருந்த நம்மையும் கட்டி இழுத்து தெருவில் விட்ட காளைக்கு நன்றி ..!  போராடிய தமிழர்க்கும் .. போராட வைத்த தமிழுக்கும் நன்றி.,  இன்று தான் உணர்கிறேன் ஆதி மனிதனாய் ..!                                14. ஆசிட் அழகி ..  சுற்றித் திரிந்தாள் மான்குட்டிப்போல  வேட்டையாடவே துடித்தது அவன் மனம்  ஆண் என்ற திமிரோடு அவள் முன் நின்றான் ..!  காகிதம் பொறுக்கி ... காதல் கிறுக்கினான்  அதை அவள் கையில் கொடுத்து   புன்னகை உதிர்த்தான் ..!  பதற்ற பார்வையில்  பாவமாய் பார்த்தாள்., பொறுக்கிய காகிதம் குப்பைக்கே சென்றது ..!  ஏன் பிடிக்கவில்லை என்று எண்ண வேண்டியவன்., ஏனோ அந்த குப்பைபோல் நாற்றம் எடுத்தவனாய் ..!  அவளுக்கு என்ன திமிர்  ஆதிக்க குரல் உயர்த்தினான் ., ஆம் அவன் ஆண் நெடில் அல்லவா ..!  ஒரு நாள் வந்தாள் ! திருமணம் என்றாள் ! திமிராய் நின்றாள் !  கர்வம் தலைக்கேற ஆசிட் எடுத்தான்  அவள் முகத்திரை கிழித்தான் ., ஒரு கணம் கோபம்  சில நொடி மௌனங்களில் பொசுங்கிப் போனது ..!  உற்றுப்பார்த்தான்  கண் மங்கி ...... அவன் தாய் முகம் தெரிந்தது  அம்மா அம்மா என்று கத்திக்கதறினான்  அவளும் அம்மா அம்மா என்று வலியால் துடித்தாள்..!  ஆண் என்ற மிருகம் ..?  15. பறையிசை ..  பெரியாரின் மண்ணில் நின்று .. ஜல்லிக்கட்டுக் காளைகளாய சீறிப்பாயும் பறையிசை ..!  மாட்டின் தோள் உரித்து  மதிமயங்கும் இசை அமைத்து .. கால் சிணுங்கி ஆட வைக்கும் பறைஇசை ..+  சாதிய வேரினை இறுக்கிப்பிடித்து .. இறையின் இதயம் ஏறி  கேள்வி எழுப்பும் பறையிசை ..!  ( சாதிகள் இல்லையடி பாப்பா )  பாரதியின் கைபிடித்து கவிஎழுத இசைத்த பறை ..!  மதிக்கப்படாத சமூகத்தின் மாற்றத்திற்கான இசை .. ஒடுக்கப்பட்ட சமூகத்தின்  உரிமைக்கு ஒலிக்கும் பறை .. சக மனித தத்துவத்தின் சரித்திரத்தின் எச்சம் தான்  'இந்த பறை '                    16. இன்று என் பயணம் ..  சின்னஞ்சிறு பெண் போலே தெளிந்த முகமாய் பரந்த வானம் ..!  மஞ்சள் இழைத்து நெற்றியில் இட்டார்போல் .. வட்டம் மாற மஞ்சள் நிலா ..!  பல்பம் துண்டுகளை போல அடிக்கி வைத்த பனைமர வரிசை ..!  வீட்டின் தலைமேலேறி செல்லமாய் வேடிக்கை பார்க்கும் குட்டிக்குரங்கு ..!  பறக்கும் சாலை மீது  பஞ்சமில்லாமல்  அணிவகுக்கும் வாகனங்கள் ..!  சற்றுக்கீழே வறுமையை வயிற்றில் சுமந்து .. வடிந்தும் ,வடியாமலும் ஓடும் ஆறு ..!  விவசாயத்திற்காய்  விடியவேண்டிய காலைகள் எல்லாம் .. விலைக்கு போன விளைநிலங்களாய் !!! வரவேற்பு பதாகையோடு நிற்கின்றன .!  யாரோ ஒருவரின் மனைபிரிவிற்காக              17. இறை ..  உன் கையால் நீ பிறர்க்கு உதவ !!! உன் உள்ளம் அதில் தெளிவு பெற ..  ஈசனையும் நீ முந்திச்செல்வாய் .. மனிதன் எனும் புறந்தோல் போர்த்திய இறை !!!  அன்பே சிவம் ..¿?                                        18. ஓசோனே விழித்திடு...  அரை வயிறு கஞ்சி என்று  கட்டாயமாய் ஹார்லிக்ஸ் ,நாய்க் குட்டியிடம் பாசம் தேடும்  நர்சரிக் குழந்தை...!  வீட்டில் ஆயிரம் சொந்தம் தொலைக்காட்சிப் பெட்டியில், ஆக்சிஜனுக்கே மூச்சி திணற வைக்கும் புகை மனிதர்கள்..! கேட்டால் வளருகிறதாம்  மார்டன் இந்தியா.!  கதிரவனின் வெப்பத்தால் புலம்புங்கின்றாள் பூமித் தாய், விளை நிலங்கள் எல்லாம்  இன்று எக்னாமிக் ஜோன்ஸ்..!  மழை தரும் மரங்கள் கூட மாளிகையின் மறைவில் வாழ்க்கை..! வானம் பார்த்த பூமி இன்று  வயல்களை பார்த்து கண்ணீர் விடுகிறது..!   வாகனப்புகை வங்கிக் கணக்காய்  ஓசோனில் வட்டிப் போட., வைப்புத் தொகையாய் சிகரெட்டில் கரும்புகை வேறு., வளரும் தொழிற்கூடங்கள்  வாரி வழங்கும் கார்பன்..!  மனிதனின் மாபெரும் உள்ளம் தூரத்தில் இருந்து  துன்பம் தந்தால் போதாது என்று.., ஓசோன் ஓட்டையில் பயணம்  செல்ல  புகை நிரப்பி ஆகாய விமானம்...!  ஓசோனே விழித்திரு  இனியும் நீ விழிக்கவில்லை என்றால்... என் சந்ததி என்னை பார்த்துக் கேட்கும் ஓசோன் என்றால்   என்ன என்று.??    19. தாயின் இறப்பு ..  ஓர் ஆயிரம் கடவுள் நீயடி  உன் தாய்மடிக்கு ஈடேதடி ..!  எரிதழல் தின்றே நின் உயிர் போக .. நடுநிசி வீதியில் உன் விரல் வருட .. பிணம் என உறவுகள் காதுக்குள் ஓத .. பெற்றவள் நீயடி இனி கடவுளின் தாயடி ..!  அம்மான்னு  உன்ன சொல்ல  இனி ஒருபோதும் வார்த்த இல்ல..!                                  20. இரமலான் வாழ்த்துகள் ..  மழை வெள்ளம் மண்டியிட மாநகரம் கையேந்த .. மனிதநேயத்தை முன்நிறுத்திய முஸ்லிம் உறவுகளுக்கு ..!  தீவிரவாதி என தேசம் பார்க்க சந்தேகக் கண்கொண்டு சகமனிதனை நாம் பார்க்க .. உயிர் போகும் நிலைதனிலே உதவிக்கரம் நீட்டிய நீ  உன் தீவிரத்தால் நீ தீவிரவாதி தான் ..!  வெள்ளம் வந்த நேரம் பார்த்து சக தமிழனாய் நீ நின்று  விருந்தோம்பினாய் வீடு தேடி .. கோவில் , தேவாலயம் நீ ஏறி மசூதி எல்லாம் வீடாக்கி  தொழுகைக்காய் நீ தெருவில் நின்றகாட்சி..!  உன் மதம் மனிதம் என்ற மனசாட்சி ..  சகதோழனாய் நீ நிற்க  மதயானையாய் நம் மதம் நிற்க அதைக்கொல்லத் தேவையில்லை யானையும் செல்லக் குழந்தைதான் அன்பு காட்டும் போது ..!  இனிய இரமலான் வாழ்த்துக்கள் என் சக இஸ்லாமிய உறவுகளுக்கு ...!            21. தோழி .. யாரோ இவள் என்றிருந்தேன் .. தொப்புள் கொடி இல்லா தோழி இவள் .. !  பேசா மெளனமே .. பேசியே கொன்ற பிசாசே ...!  உன் முகம் காண ஏங்குதடி காதல் இல்லை கண்கள் தேடுதடி ..!  மணமகளாய் நீ நி்ற்க.. பாவி நெஞ்சை வருடுதடி ..!  நீ போகும் தூரம் எல்லாம், என் நிழலையும் சேர்த்து இழுத்து போக ..!  உன் நினைவுகள் ஊடே  பிணமாய் நிற்கிறேன் ..!  ஓரு நாள் உன் முகம் பார்ப்பேன்  என்ற நம்பிக்கையோடு ...!                        22. அப்பா  ஆண் பிள்ளைக்கு...  அப்பா அதிகமா பேசாத அதட்டல்களின் மௌனம்... வள்ளுவனைப் போல் இரு வரியில் மிரட்டும் அதிகாரக் குரல்...!  நான் உயரும் போது நீ உதிர்க்கும் பொன்முறுவல்..... என்னைப்பெற்றதற்காய்  நீ தரும் அன்பு பரிசு..!  தவறுகள் செய்து நான் உன் முன் நிற்க... உன் கோவக் கண்கள் போதுமய்யா என் உயிரினை உறிஞ்சித் துப்பிட..!  அப்பா...  பெண் பிள்ளைக்கு  மகள் பிறந்த அந்த நேரம்.. தன் மனைவியூடே தன் தாயின் பெருமையையும் அறிந்து அழகாய் சிரிப்பான்...  கடவுள் இல்லை என்று கூறும் கனவான்கள் கூட, தேவதை பிறந்ததாய்  தண்டோரா அடிப்பான்..!  பிஞ்சுக்கால்கள் மண்ணில் தவழ.. தன் தாயின் இதயத்தை இறுக்கிப் பிடித்து  அஞ்சலி செலுத்துவான்...  அரைச்சட்டை போட்டு மகள் ஆட.., தன் மனைவியின் வயிற்றை,  தொட்டு வணங்கிப் பார்ப்பான்..!  பெண்பிள்ளை தவறு செய்தால் ஓங்கி அடித்து ,கட்டி அணைத்து..., தேர்ந்த நடிகனாய்  கண் கலங்கி, கைப்பிடித்து,  இதழ் விரித்து அழகாய்ச் சொல்வான்..!  அவள் வாழ்க்கை  இவன் கனவுகளால் ஆனது என்று..!  கல்யாணம் என்னும் சேலையை இவன் வாங்கி, மகள் உடுத்திமுன் நிற்க...  வந்தவனை அமைதியாய் பார்த்து  மனதினில் நினைப்பான்.. என் தேவதை என் மகளடா..!  கைப்பிடித்துக்கொள்  விட்டு விடாதே என்று..!  குழந்தை என் மகளை நினைக்க... அவளுக்கு ஒரு தேவதை பிறக்க ... குழம்பி நிற்பான் மருத்துவமனை வாயிலில்..!  எந்த தேவதையை முதலில் பார்ப்பது என்று..., இவன் மகள்களைப் பெற்ற 'அப்பா'....!              23. கோபம்  ஓங்கி ஒலித்தது ஓர்  இனிய குரல் ....  என் காதின் கனைவாயில்..!  அவள் கல்வியின் அன்னையாம் ....  ஒரு கேள்வியாம் ....  என் தாய்மொழி என்னவென்றாள் ..!  கோபம் தான் என்று ....  சிரித்து சொன்னேன்  அதிகமாய் பயன்படுத்துவது அதைத்தானே ..!  கவிதை ஒன்று கேட்டாள் ....  சிரித்தேன் ....  கோபத்தில் வரும் மௌனத்தை ....  கவிதை என்கிறாளோ என்று ..!  வீணையின் தலையில் அடித்தாள் ....  பித்தம் தெளிந்து ....  என் தாய்மொழி தமிழ் என்றேன் ..!  சரஸ்வதி சொன்னாள் ....  கவிதை வடித்தது போதும்  முடித்து விடு என்று ...!                  24. சிட்டுக்குருவி  மரங்கள் உறவை வெட்டிச் சென்றதால் வீட்டின் தாழ்வாரத்தில் தற்கொலைக்காக காத்துக் கிடக்கிறது  சிட்டுக்குருவி!!    25. இரத்ததானம் ....    பெண்ணின்சிறப்புதாய்மை!                                                         ஆண்தயாகும்தருணம்இரத்ததானம்!              26. ஈழத் தமிழினம்  என் தேசத்து குயில்கள் கூட்டம் பறந்து சென்றது இந்த நாட்டைப் பிரிந்து சென்றது..!  இறக்கையை விரித்து இமயம் சென்றன இறங்கிய போது ஒரு இருண்ட தேசம்..!  சிறுநரிகள் வாட்டத்தில் உறங்கிக் கிடக்க  சேகரித்த உணவாம் தேயிலை கரும்பை அம்மண்ணில் விதைத்தது..!  குயில்கள் கூவியதால் , காலையில் நரிகளும் எழுந்தன குயில்கள் விதைத்ததால் , நரிகளும் உழைத்தன உணவிற்காக..!  விளைந்தது நிலம் மட்டும் அல்ல நரிகளின் மனமும் குயில்களின் குரவளையை நசுக்க  நினைத்தன நரிகள்..!  மன்னித்த குயில்கள் அகதிகளாய் ஆயின..!  மண்ணின் உரிமையை பிடுங்க நினைத்தன நரிகள்..!  பொறுமையை இழந்த  என் இனம் பொங்கி எழுந்தது பீரங்கி குண்டுகளுக்கு  பலி ஆடுகளாய் வீழ்ந்தது..!  குயில்களை குற்றம் என்றது புறா  குள்ள நரிகள் தந்திரமாய்  அவை புலிகள் என்றது..!  குயில்களுக்காக குழல்   ஊதும் போது குண்டுகள் துளைத்தன, புலிகளாக இருந்து பாயும் போது பீரங்கிகள் பாய்ந்தன..!  எங்களுக்கு தேசம் தான் கிடைக்கவில்லை கல்லறைக்காவது இடம் ஒதுக்குங்கள்..!                                                27. ஆசிரியர்கள்  தமிழ்த் தாயின் பிள்ளைகள் நாங்கள் எங்களுள் தமிழ் வளர்த்த நீங்களும் எங்கள் வளர்ப்புத் தாய் தானே..!  கல்வியின் கடவுள் சரஸ்வதியாம் கனவில் கண்டதாய் ஞாபகம் ஆனால்.., உண்மை வகுப்பறையில் என்றது..!  வாக்கியத்தில் பல பிழைகள் செய்தவர்கள் நாங்கள்! ஆனால்.... எங்கள் வாழ்க்கை பிழையாகிவிடக்கூடாதென்று எங்களுக்காக உழைப்பவர்கள் நீங்கள்..!  நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம் ஆனால் மனம் வருடுகின்றது நன்றி என்ற ஒற்றை சொல் போதுமோ... என்று.  பூ மாலைகள் சூட்டலாம் என்று நினைத்தேன் நன்றி என்ற ஒற்றை சொல் போதாது..! ஒரு நாள் பூத்து மடியும்   பூக்களும் பொய்யோ...!  சிந்தித்தேன் பாமாலை வந்தது, வடித்து விட்டேன் உயிரோடு இருக்கும் என் உயிர் உதிரும் வரை..!                28. நட்பு  ஆயிரம் சிற்பிகள் சேர்ந்து செய்த  ஆயிரம் கால் மண்டபம் நாங்கள் சோழனின் யானைகள் போருக்கு வந்தாலும்  எங்களின் சிரிப்பில் சாய்த்து விடுவோம்..!  நட்பு என்னும் தேசத்திலே தினமும் பூக்கும் மலர்கள் நாங்கள்..!                 சோகம் எல்லாம்  உதிர்ந்து போக புன்னகை மட்டும் பூக்கும் தேசம் ..!  நட்பு என்னும் ஒற்றை வார்த்தையில்  இந்த உலகத்தை இழுத்துக் கட்டிவிட்டோம்  நண்பன் என்னும் சொல்லுக்குள் எத்தனை தாய்களைப் பார்த்துவிட்டோம்..!  கல்லூரி எங்களின் புதியதோர் உலகம் தோழியின் தோள்கள் தான்  எங்களின் விண்கலம்  என்றும் நட்சத்திரமாய் நாங்கள் ஜொலிப்போம்..!  எங்கள் நட்பு மட்டும் நிலவாய்  நின்று வேடிக்கை பார்க்கும்  எத்தனை அழகு இது எங்களின் தேசம்..  சூரியனின் தோள் மிதித்து  காலையில் எழுந்தால் , தோழர்களின் முகம் தான்  பேருந்துப் பயணத்தில்  தோழர்களின் இன்னிசை , கண்ணை மறைத்தாலும்  கண்கள் அலைவது  ஜன்னலின் ஓரத்தில் தோழிக்காக, சுகம் அது.. நட்பின் இன்னும் ஒரு பரிமாணம்..!     கல்லூரியின் வாயிலை காக்கையாய் சுற்றுவோம் , ஒற்றுமையும் பகிர்தலும் தானே எங்களின் நட்பு ..!  உரையாடலின் போது  தொலைபேசி வந்தால் அது என்றுமே  தொல்லைதான்  அதுவே.... அழைப்பது  தோழியாக இருந்தால்  தோழனே எங்களுக்கு தொல்லை தான்  சில நேரம்  நட்பு செய்யும் திருவிளையாடல் இது..!  விளையாட்டையும் விளையாட்டாக பார்ப்பவர்கள் நாங்கள் , எங்கள் நட்பு இருக்க விளையாடாமல் என்ன......?  உணவில் கூட காதல் இருக்கும் , ஊட்டிவிடவும்  ஆயிரம் கைகள் இருக்கும் ..!  ஆனால்.... இது கல்லூரியின் இறுதி ஆண்டு  ஏனோ வாழ்கைக்கு கூட எங்களின்  நட்பின் மீது பொறாமை  தான்..!  கண் வைத்தது யார்?  எங்கள் மீது...  கண்ணீரைத் துடைக்க  ஆயிரம் கைகள் இருந்தாலும்  கலங்கி நிற்கிறோம் பிரிவை நினைத்து  ..!          29. மணப்பெண்  கண்கள் காத்திருக்க, கை பிடித்த காதலே பதுமை போல நீ இருக்க , பாவி நெஞ்சை வருடுவதா..!  சேலை கட்டி நீ நிக்க , நா பாத்தவ நீ தானா பல் இளிச்சு நீ காட்ட  பக்கத்துல நா நின்னேன் ..!  ஊரு எல்லாம் எட்டிப்பாக்க, யார் அவன்னு கேள்வி கேக்க  கை புடிக்க வந்தவளை ,  என்னன்னு நா சொல்ல ..!  அவ அம்மாவ விட்டுபுட்டு , சந்தோசமா வந்தனா, அப்பாவ வேணாம்னு  , விட்டு புட்டு வந்தனா  தம்பியை  தள்ளி விட்டு , சிரிச்சிகிட்டு வந்தனா,  இல்லை தோழி , தோழன் உறவு அறுத்து என் வீடு வந்தனா ..!  கட்டுனவன் தான் உலகம்-னா, அடிமை இல்லையா அவ மட்டும்  பாரதிக்கு புக்கு போட்டு,  இது பெண்களின் புதுமை தேசம்..!  போதும் டா உங்க உலக நியாயம் ,  கை பிடிக்க வந்தவளை  இந்த உலகிற்கு அடையாளம் காட்டு ,  அவ கைய நீ தொட்டு உன் தாயும் அவள்னு சொல்லி காட்டு ..!  உன் பிள்ளை யார் சாயல்னு ,  கேட்டதுஎல்லாம் போதும் நிறுத்து  பெருமை அது பெண்தான்டா , அமைதிக்கு உங்க அம்மாவா பாருடானு சொல்லிச் சொல்லி உன் புள்ளய உயர்த்து ..!  பெண் பார்த்து வளர்ந்த புள்ள , பொம்பள புள்ளய தப்ப பாக்கமாட்டான்  காதல பத்தி தெரியாம ,  காமத்தையும் தேடமாட்டான் ..!  கை புடிச்ச பெண் அவளை ,  கையில் வச்சி தாங்கணும் கல்யாண நாள் இதுன்னு,  தினம் தினம் எண்ணனும் ..!                                        30. எறும்பு ( பகிர்ந்து உண்ணல் ) ..  ஏழ்மையின் அரிச்சுவட்டோடு  அஃதையாய் இங்கு பலருண்டு..!  வியப்பின் உலகம் விதையாய் மாற , விடியலின் விழிப்போடு .. பசி எனும் படம் எடுத்து பலர்இங்கு ..!   கொடுத்து விடு .. கொஞ்சூட்டேனும் உணவையும், எறும்புகளைப் பார் இந்த  பார் போற்றும் உழைப்பை ..!  ஒன்றாய் சேர்ந்து , ஓடி உழைத்து  ஒரு கை உணவையும் , கூட்டாய் பிரித்து .. அரைவயிற்றுக் கஞ்சியை  அழகாய் பகிர்ந்து ..!  தன் தேவைக்கு  தானே இணைந்து, தன் இனம்  இத்தரணியின் சேமிப்பு கிடங்காய், உலகிற்குக் காட்டும்  எறும்புகளுக்கு உணர்வோடு நன்றிகள் ..!                31. அன்னை ..¿? ( தமிழ் அ முதல் ஃ வரை ) அதிகாரம் இல்லா  அழகின் முதல் இவள் .. ஆயிரம் கரம் கொண்ட ஆதி சக்தியும் இவள் ..!   இவள் வலி தந்த வரம் என் உயிர் .. ஈசனும் வணங்கும் ஓர் உன்னத உயிர் ..!  உயிர் தந்து உலகில் நீ இட்ட எச்சம் .. ஊறு ( உருவாக்கம் ) போல் சாதிக்கத் துடிக்கும் எச்சம் ..!  எச்சமாய் நீ விதைத்தாலும் வளர்ந்த ஐராவதமாய் .. ஏக்கம் பல என் மேல் உனக்கு பலமாய் நிற்பேன் ஐராவதமாய் ..!  ஐராவதம் கூட அஞ்சும் தாயின் ( ஓரக்கண் ) பார்வைக்கு . ஒக்கம் ( பொலிவு ) முகம் கொண்டு ஓரக்கண்ணால் ரசித்தவளே .. ஓரக்கண் கொண்டு என்னை மிரட்டி தமிழ் தந்த ஔவையே .!.  ஔவையாய் தமிழ் தந்ந தமிழே நீ இல்லையேல் நான் அஃதை  ஃ  ஆம் அஃதை (நாதிஅற்றவன் ) ..!        32. பெண் ..  மொழி தந்த மௌனம் உயிர் தந்த உண்ணதம் என் அழுகைக்காய் காத்திருந்த உலகின் முதல் புன்னகையே ..!( தாய் )  அடம்பிடிக்கும் பதுமை விளையாடும் விரல்கள் என்னுடனே பிறந்த என் தாய் தந்த எதிரி இவள் வீட்டிற்குள்ளே .. !( தங்கை )  அன்பின் அழுகை இவள் வம்பிழுக்கும் வாயாடி காதலும் காமமும் தள்ளி நிற்க கரம் பிடித்த குழந்தை இவள். !( தோழி )  நிகழ்காலம் நீயடி என் உயிர் சுமக்கும் காதலி நீ இன்றி நான் இல்லை என் வாழ்வில் பொருள் இல்லை ..!( மனைவி )  தேவதையின் நகல் இவள் தலைநிமிரும் என் தலைக்கணம் உன்னை படைத்த பிரம்மன் நான் உன் பிஞ்சுப் பாதம் மிதிக்கையிலே..!( மகள் )  பெண் ( பிரபஞ்சம் படைத்த பரிசு ) இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் ..  சமர்ப்பணம் : உலகம் படைத்த பெண்களுக்கும் , உலகையே படைத்த பெண்களுக்கும் ..!      33 .பெண்கள் எல்லாம் ஏமாற்றுக்காரிகள்  தாய் ..!  தாய் என்னும் வரமெடுத்து  நான் செய்த தவறுகளுக்காய் தலைகுனிந்து , சிறு கை உணவைக் கூட  என் சிறுகுடலில் திணித்து விட்டு , வறுமை என்னும் சோறெடுத்து தன் வயிற்றை நிரப்பி கொண்டு , என்னை ஏமாற்றி விட்டதாய் ஏளனமாய் பார்க்கிறாள் ..!  தங்கை ..!  பாசமெல்லாம் மனதில் பூட்டி  பாவிமவ சண்டையிட்ட காணொளிக் காட்சி , அவ கணவன் கரம்பிடித்து  கண் முன்னே நிற்கையிலே, சண்டையிட ஆள் இல்லாமல்  கை ஓங்கி ஏமாந்து நிற்கிறேன் ..!  அக்கா ..!  நான் பெயர் சொல்லி அழைத்த முதல் பெரிய மனுஷி .. முகம் சுழிக்காம கதைகேப்பா , அது என் காதல் கதையா இருந்தாலும்  இன்று அவளுக்கு கதைசொல்ல  அவள் குழந்தை  , என் கதைகள் எடுபடல  ஏமாற்றத்துடன் பல காதல் கதைகள் ..!  தோழி ..!  களவு இல்லா காதலின் முதல். ஸ்பரிசம், கைபிடித்து சண்டை போட்ட  பாரதியின் புதுமைப்பெண் ..! இன்று குடும்ப சூழல்களால் என் கை உதறி , காணாமல் போன உண்மை கண்ணகிகள் இவர்கள் .. ஏமாற்றிவிட்டாள் என்னுடன் இருப்பேன் என்று ..!    காதலி ..!  கண்தேடிய கண்ணனின் ராதை இவள் ,  என் பின்னே சுற்றி திரிந்த மான்குட்டி .. என் கண் கிணற்றின் ஆழத்தை முழுதாய் அறிந்த  உலகின் ஓர் உயிர் .. பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க என்னை ஏமாற்றி விவாகரத்து பெற்றுவிட்டால் ..!  மனைவி ..!  என் மகள் குழந்தை என்று  அவள் தந்தை என்னிடம் சொல்ல .., எனக்காக ஒரு குழந்தையை தந்து  இவ்வுலகின் மரபில் என்னை உயர்த்த செய்தாய் ..! என் இறுதிச்சடங்கை நடத்தும் உரிமை  அவளிடம் மட்டுமே உண்டு .. நான் இல்லாமல் போய்விட்டால் இவள் கண்ணீரில்  இந்த உலகை ஏமாற்றி தனியாய் நிற்பாள்  நான் ஏமாற்றியதற்காய் ..!  'மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்மா '..!                  34. மரம் ..  மரமெனும் வரமெடுத்து , அதன் உச்சிதனில் தேன் பிடித்து ..! பழரசத்தோடு தேன் நனைத்து ,  நா நனைத்த மனிதா ..!  கிளைதனில் இலையெடுத்து , சருகினால் விதைவிதைத்து ..!  மரக்கட்டையிலே தீ வளர்த்து ,  காட்டை கரைத்த இறைவா ..!  மரப்பட்டையிலே பல மருந்தெடுத்து , காகித வாடையிலே ..! பல நூறு பணம் படைத்த மூடா ..!  வேறெடுத்து பூமியை , வளர்க்க வேண்டிய நீ ..! இன்று மரத்தின் வேரறுத்து , வேடனாய் நிற்பது சரியா..?  மரம் மளர்ப்போம் ..!                      35. யானை  சேர , சோழ , பாண்டியனின்  அசையும் சொத்து இது ..!  உலகமே உற்றுப் பார்க்கும்  வியப்பின் ஆச்சரியக் குறி ..!  கால்கள் எல்லாம் தூணாக தாங்கி நிற்கும் கோபுரமே ..!  கண்கள் எல்லாம் சிலையாக எவன் வடித்த ஓவியமோ ..!  உன் தும்பிக்கை மூக்கினிலே பலருக்கு நீ தந்த முத்தம் ..!  பயம் கலந்த காதல் உலகின்  முதல் எதார்த்தத்தின்  அழகு ..!  குழந்தைகளின் மனம் கவர்ந்த மும்முதற் கடவுளே ..!  மனித இனம் நிமிர்ந்து பார்க்கும் கனவுகளின் கருணையே  நீ பிச்சை கேட்டு  தும்பிக்கை தூக்கையிலே.. இதயம் இறுகி கண் தேடுது கற்றுக் கொடுத்த கயவனை ..!  உன் தந்தங்களுக்காய் நீ மண்ணில் சாய்ந்த போது மனம் கேட்பது மனிதனுக்கும் மனிதநேயம் உண்டா என்று ..!  அசைந்தாடும் மலையே கருப்பின் பெருமை நீயே..!      36. குழந்தை - கடவுள் - மனிதன் - தேவை = குழந்தைத் தொழிலாளி  கல்வியின் கடவுள் சரஸ்வதியே  என் பெயரும் கலைவாணிதான்..!  உன் விரல் தொடும் முன்பே , என் விரல் பட்டது உன் வீணையில் ..!  குழந்தை தொழிலாளியின் மரப்பட்டறையில்  அழகாய் விளையாடும் கிருஷ்ணரே..!  என் பெயரும் கண்ணன் தான்   உன் வயதே இருக்கும்  உன்னைப் போல் விளையாட  ஆசை தான் எனக்கும்  ஆனால் மாடு மேய்க்கவே  நேரம் போதவில்லையே ..!  பணம் படைத்த லட்சுமி தேவிக்கு  என் பெயரும் வேத லட்சுமி தான்  படிப்பு .....பணம் கொடுத்து  வாங்க வேண்டிய காரணத்தால்  பாறைகள் உடைத்து  பாவமாய் நிற்கிறேன்..!   மலை மீது அமர்ந்த முருகா..! நானும் கூட வேலவன் தான்  வேலை என்ன தெரியுமா ? நீ அழித்த சூரனுக்காய் பட்டாசு தயாரித்து கொண்டு இருக்கிறேன்  ..!  குழந்தையும் , கடவுளும் ஒன்று ..  பட்டாம்பூச்சி பாறை உடைப்பது சரியா  மின்மினி பூச்சியிடம்  பட்டாசு தயாரிப்பா  அழகிய காகிதம் குப்பை பொறுக்கலாமா ?  உலகின் விதைகளை ,  அறிவு என்னும் உரம் போட்டு வளர்ப்போம் ..! குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்போம் ..!  37. மதராஸ் (Madras)  வறுமைக் கோட்டை வங்காள விரிகுடா உடன்  இணைத்த வரைபடமே .., ஆங்கிலேயன் வந்து நின்று ஆட்சிப் புரிந்த புனித ஜார்ஜ் கோட்டை கொத்தலமே ..!  கவிக்கொரு பாரதி கண்ட மண்  இன்று காணொளியில் அரசைப் பார்ப்பது காலத்தின் கவர்ச்சி ..!  பச்சை,பசுமை என்றிருந்த சென்னை வெள்ளம் வந்தப்ப அடிச்சிட்டுப்  போக தேடுச்சுப்பார் மண்ணை..!  இருந்தும் அழகு தான் நீ .. தன்னைத் தானே காத்து நிற்கும் திறமை உனக்கு மட்டுமே உண்டு  இவ்வுலகில் ..!                        38. காதல் வலி  ஓரப் பார்வையிலே உயிர் பிடித்து போறவளே..!  காதின் ஓரத்திலே பல கதைகள் சொன்னவளே ..!  இதழ் விரித்து இதயம் குடித்த திமிரே ..!  முகம் மூடி நாணம் மூட்டிய உறவே ..!  விரல்கள் இரண்டில்  விதை விதைத்த உழவே..!  சிரிப்பு என்னும்  ஆயுதம் ஏந்திய மழலையே ..!  கண்ணீர் சிந்தியே என்னை மூழ்கடிக்கும் மழையே..!  எனக்காய் பிறந்த என் ஏளனமே ..!  மண்ணில் கலந்த  பிளாஸ்டிக் போல  உன் நஞ்சு மனதோடு என்னை அழித்து வர ..!  கண்ணீர் கூட  இறங்க மறுக்கிறது கண்களை விட்டு உன் பிளாஸ்டிக் நெஞ்சம்  மக்காமல் இருப்பதால் ..!  விட்டுச் செல்ல  நினைத்து விட்டால்  உன் கால் கொலுசில்  ஒன்றைத் தந்து விடு ..!  தூக்கில் இட்டு தொங்கி விட  எமன் தந்த வரம்  அது எனக்கு ..!                                            39. சுதந்திர தினம் காந்திஜீயின் அகிம்சை சிரிப்பு -இன்று கரன்சி நோட்டில் காட்சி சாராயம் வித்த காசுல தான்  நடக்குது இங்க குடிமக்கள் ஆட்சி!  நேதாஜி விதைத்த இந்தியன் வீரம் ஆங்கிலேயனோடு போச்சு ஜல்லிக்கட்ட அடகுவச்சு நிக்குது தமிழன் தன்மான உணர்ச்சி!  பகத்சிங் பஞ்சாப்சிங்கும் -எங்க  தல பாரதி பாடுச்சு!  முல்லை பெரியாறு, காவிரி தண்ணி  கிடைக்காதான்னு எங்க ஜனம் தேடுச்சு!   தாகூர் பாடுன தேசீயகீதம் -தான் இந்தியன் என்கின்ற கிளர்ச்சி! இன்னைக்கு வள்ளுவனுக்கே சிலை வைக்க  வடமாநிலத்தில் நடக்குது பார் பல கிளர்ச்சி!  பிபிசி தமிழ் தந்திடீவி வரை வந்து ஒலிக்குது  ஆனால் அகில இந்திய வானொலியோ  பிராந்தியமொழிகளில்  செய்திகள் வேண்டாமுனு மறுக்குது!  பிள்ளைங்க படிக்க  சரியான பள்ளிக்கூடம் இல்ல ஆனா கிளீன் இந்தியான்னு சொல்லி  கக்கூசுல காச கழுவுறாங்க!  ஓடி ஓடி உழைச்ச சனம்  யானை கட்டி போர் அடிச்ச இனம்! ஒலிம்பிக்கோட வாசலில் நின்னு  வாய்பிளந்து வேடிக்கை பார்க்கிறான்  ஒரு தங்கம் வாங்காதா  இந்த நூறுகோடி சனத்துக்காகனு!  காமராஜர் ஆட்சிதான்  இப்ப வேணும்னு கேட்டவன்லாம்  கலாம்னு ஒருத்தரு இருந்தாரு அவர் காலடி செல்லத் தோணலையே!  இன்னும் இருக்குது இந்த தேசம் இழுத்துக்கிட்டே இருக்குது இந்த தேசம் இளைஞனே எழுந்து வா!! ஒலிம்பிக்கில் உலகமே இந்தியாவை வியப்பாய் பார்க்கட்டும்!                                40. பிணவறை தொழிலாளி ..¿? உடம்பெங்கும் பிணவாடை மூக்கின் நுனியில்  உயிரின் வாசம் ..!  இரத்தம் ஊறிய கைரேகை பெயர்கள் தெரியா  உறங்கும் நண்பர்கள் ..!  பயமறியா வாழ்க்கை  கண்கள் தன் கரம் பிடித்து தூங்க பழகிக்கொண்டன..!  மாமிசம் வெட்டி  வாழும் வாழ்க்கை மனிதனின் பார்வை மட்டும் ஏளனமாய் ..!  அவன் உள் தோன்றுமோ ...  ஒரு நாள் வரும்  ஆம் வரும் காலம் நீயும் வருவாய் ..!  மனிதன் என்ற கர்வத்தால் அன்று நீ என்னை ஆட்கொண்டாய் .. என் பிணம் நீ  என்ற மனம் கொண்டு உன்னை நான் பார்த்துக்கொள்வேன் ..!  கவலைப்படாதே உன் உறவுகளுக்காய் உன்னை . உறங்க வைக்க தந்து விடுகிறான் ..!          41. ஈரப்பதம் இல்லா கண்ணீர் ..  நாம் விரும்பிய விடயங்கள்  விரும்பியவர்களே தூக்கி எறிய ..!  கண்ணில் இருந்து கசியும் கண்ணீர்  கன்னத்தை மட்டும் முத்தமிட  மீண்டும் கண் கலங்கியது .!.  ஈரப்பதம் இல்லா கண்ணீர் என்று ..!          42. மனித நேயம்  மனிதன்... தவறுகளை செய்யும் பொழுது உலகம் தள்ளி நின்று  வேடிக்கை பார்க்கிறது .. !  தவறுகளை திருத்திக்கொள்ள  நினைக்கும் பொழுது   அவனை தள்ளி வைத்து  வேடிக்கை பார்க்கிறது ..  மிருகத்தின் வருடலாகவே  இன்று மனிதநேயம் ..             43. முரண்  இறக்கும் வரை தன் பிணத்தைத் தானே சுமக்கிறான் மனிதன் ., பிறர்மீது நம்பிக்கை இல்லாமல் ..  இறந்த பின் தான் தன் பிணத்தை  பிறரிடம் கொடுக்கிறான் .. இனி இழக்க ஒன்றுமில்லை  என்ற நம்பிக்கையோடு...                                  44.வெற்றி - தோல்வி ..  தோற்றவன் எல்லாம் ஏறிக்கொண்டே தான் இருக்கிறான் ஜ, வெற்றி என்னும் படிகளில்  பதறாமல, வென்றவன் மட்டும் தான் வேடிக்கைப் பார்க்கின்றான், மீண்டும் நானே வெல்வேன் என்ற மமதையோடு ...                45. என் தேசம்  உண்ணுவதற்கு உதவாத தங்கம் உயர்ந்தால் என்ன?  விலை வீழ்ந்தால் என்ன?  உணவுக்கும் உழைப்புக்கும் உறவே இல்லையா?                46. தேசம்  ரியல்எஸ்டேட் விதைத்த விதை விளைநிலங்கள் எங்கும்  விளைந்து நிற்கும் வீட்டு மனைகள்!  மழையில் முளைக்கும் காளான்கள் போல  இப்போது எல்லாம்  வெயிலில் ஆங்காங்கே முளைக்கின்றன பதாகைகள்!  வானம் பார்த்த பூமி கூட இப்போது எல்லாம் வாகனம் பார்த்து  மூச்சடைத்து நிற்கின்றன..!  கொஞ்சி விளையாட வேண்டிய குழந்தைகள் இன்று காப்பகங்களின் வாயிலில் நின்று உறவுகளுக்காக உறுகிக் கொண்டு இருக்கிறது ..!  விலங்குகளை விளையாட்டுக்காய் வேடிக்கை பார்த்த என் சமூகம் இன்று வேடிக்கை பார்க்க மட்டும் விலை கொடுத்து வாங்கும் நிலை ..! மண்ணை மதித்த நாம் இன்று பொருளுக்காய் ஓடி திரிகிறோம் சந்தோஷம் கூட சந்தையில் தேட என்றும் பணப் பஞ்சத்தில் மனம் ..            47. மழையே ..!!  பூமிக்கு அன்னையாய் இருக்க வேண்டிய நீ  இப்படி எச்சரிக்கை சின்னமாய் வருவது சரியா ? உன் வருகை காலதாமதம் ஆனதால் , காலன் வந்து பல விவசாயிகளின் காரியம் முடித்துச் சென்றுவிட்டானே..  மாதம் முந்தி மாரி நீ தவழத்தொடங்கி இருந்தால் மண் வாசனை எனும் சாம்பிராணி போட்டு உன்னை வரவேற்று இருப்பான் மனிதன் ..!  வறண்ட கரையோரம்  யாரைக் காண இன்று வந்தாய் மண் வெடிப்பால் மனம் வெடித்த விவசாயி  இங்கு இல்லை ..!  இது சென்னை மாநகரம்  தூறலுக்கே குடை விரிப்போம் .. நீ அடை மழையானால் வீட்டிற்குள்ளே ஒளிந்துகொள்வோம் ..!  வரவேற்க  நாங்கள் என்ன உன் உறவா ..  சமர்பணம் இன்று உயிர் நீத்த கவிஞர் இன்குலாபிற்கு..            48. அறிஞர் அண்ணா  உதயமானது  சூரியன் உன் நினைவில்... உருவமானது தமிழகம் உன் பணியில்!  தமிழகம் என்ற நீல வானிலே கருப்புச் சூரியனாய் உதித்தவனே... ஆங்கிலம் என்னும் அந்நிய மொழியிலும்  ஆதிக்கம் செலுத்திய தமிழே..!  கலை என்னும் சொல்லுக்கு  கலைஞரையும்... யார் இவர் போல் என்பதற்கு ஏற்ப  எம்.ஜி.ஆரையும்..!  வங்கக்கடல் வழிவந்த வேந்தனாய்... வறுமையை வேரறுத்த மைந்தனாய்... உலகம் உற்றுப் பார்த்த  மனிதனாய் வாழ்ந்தவனே..!  உன் கல்லறையில்  உற்றுப் பார்த்தேன்  உறங்குகிறாயோ என்று... கேட்டது ஒரு மொழி சத்தம்  உள் வாங்கியது வங்கக் கடலாய் என் மனம்..!  காலம் கடந்த கருப்பின் கருவறையே... கண்கள் கலங்கின, நீ காற்றில் கரைந்த போது... இலக்கியம் எழுந்தது என்னவென்று நினைத்தேன்.. பிறகுதான் தெரிந்தது இளஞ்சிவப்பையும், இனிமையான தமிழையும் என்று?    49. உலக புகையிலை ஒழிப்பு தினம்  ..¿?  தன் சாம்பலைத் தானே  பார்க்கும் பாக்கியம் புகைப்பபவனுக்கே மட்டுமே கிடைக்கும் .  ( Smoking is injuries to health)                            []