[] []   ஆசிரியர் : கி . நடராஜன்   மின்னஞ்சல் : adalarasankn@gmail.com     மின்னூலாக்கம் :  த . தனசேகர்   மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com      வெளியிடு : FreeTamilEbooks.com      உரிமை: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.  பொருளடக்கம்   109. தகையணங்குறுத்தல் 5  110. குறிப்பறிதல் 7  111. புணர்ச்சி மகிழ்தல் 9  112. நலம்புனைந்துரைத்தல் 11  113. காதல் சிறப்புரைத்தல் 13  114. நாணுத் துறவுரைத்தல் 15  115. அலர் அறிவுறுத்தல் 17  116. பிரிவாற்றாமை 19  117. படர்மெலிந்து இரங்கல் 21  118. கண் விதுப்பழிதல் 23  119. பசப்புறு பருவரல் 25  120. தனிப்படர் மிகுதி 27  121. நினைந்தவர் புலம்பல் 29  122. கனவுநிலை உரைத்தல் 31  123. பொழுதுகண்டு இரங்கல் 33  124. உறுப்புநலன் அழிதல் 35  125. நெஞ்சொடு கிளத்தல் 37  126. நிறையழிதல் 39  127. அவர்வயின் விதும்பல் 41  128. குறிப்பறிதல் 43  129. புணர்ச்சி விதும்பல் 45  130. நெஞ்சொடு புலத்தல் 47  131. புலவி 49  132. புலவி நுணுக்கம் 51  133. ஊடலுவகை 53                                                                 என்னுரை      திருக்குறள்  மூன்றாம் பாலான இன்பத்துப் பாலுக்கு மட்டும் தனியே  கண்ணதாசன் தன்னுடைய எண்ணம் என்ற இதழில் கவிதை நடையில் உரை எழுதியிருக்கிறார். குறள்நெறிச் செல்வர் அ.சொ.சண்முகனாரும் திருக்குறள் இன்பத்துப் பாலுக்குப் புதுக்கவிதையில் உரை எழுதியிருக்கிறார். கவிஞர்.நீலமணியும் திருக்குறள்  இன்பத்துப் பாலின் 25 அதிகாரங்களுக்கும் உரையைப் புதுக்கவிதையாக எழுதி இருக்கிறார். நானும் இன்பத்துப் பாலுக்கு உரையைப் புதுக்கவிதையாக எழுதி இருக்கிறேன். அனைவர் மனங்களையும் இந்த நூல் மகிழ்விக்கும் என்றே நான் எண்ணுகிறேன்.     அன்புடன், கி. நடராஜன், மனை எண்- 13, ஆண்டாள் தெரு, அய்யப்பா நகர், திருச்சி - 620 021. அலைபேசி - 99424 47194 109. தகையணங்குறுத்தல்   இந்தப் பெண்ணே தேவதையா? பெண்மயிலா? அவள் முன்னே தாவுதடா என்மனமே!   படையெடுத்து வந்ததைப்போல் மடைதிறந்து பார்க்கிறாள்! தோற்றோட வைக்கிறாள்! கொல்லவும் செய்கிறாள்! இவள்தான் கூற்றுவனோ?   பார்ப்பவர் உயிரைத்தான் சேர்த்து  இழுக்கின்ற இவள் கண்கள்தாம் எமன் ஆயுதமா?   துள்ளி ஓடும் புள்ளி மானா?   மருவும் கண்களையே புருவம் மறைத்தால்தான் பாய்கின்ற கூரான பார்வைக் கணையிருந்து தப்பித்தான் நானோட இப்போது இயலுமடா!   கொல்லவரும் மதயானை முகத்தின்மேல் போர்த்திட்ட மெல்லிய துணிபோல இவளது மேலாக்கு!   போருக்கு நானஞ்சேன்! நேருக்கு  நேராகக் காதலியின்    நெற்றியினைக் கண்டுவிட்டால் வீழ்வேனே!   அழகான பார்வை உன் நகை! அதில் தவழும் நாணமும் மறு நகை! உனக்கெதற்குத் தேவை பிற நகை?               உண்டால்தான் போதைவரும்             மதுவாலே! பெண்ணே!  நீ கண்டாலே போதை ஏறிக் கிறுகிறுத்துப்  போகின்ற காரணம் என்னவோ? 110. குறிப்பறிதல்   நோய்தரும்  இவள்பார்வை நோய்தீர   வழிசெய்யும்!   உள்ளம்    முழுதும் கொள்ளை அடிக்கும் கள்ளப் பார்வை!   பார்த்தால் போதும்! பார்வையைத் தாழ்த்துகிறாள்! காதல் பயிருக்கு நீரூற்றி வளர்க்கிறாள்!   நான் பார்க்கும் போது, நிலம் பார்க்கும் மாது! பாராது   போது நேராகப்  பார்ப்பாள்! கூராகப்  பார்ப்பாள்!   நெருங்கி எனைப்பார்த்துச் சிரிக்காத  இவளே ஒதுங்கி அரைக்கண்ணால்  உயிர் பிதுங்கப் பார்த்திடுவாள்!   "பிரியமிலை"  என்று பொருள்படப் பேசிடுவாள்! ஆனாலும்  இவள்கண்கள்              எங்கு             போனாலும்  நிமிர்ந்து "பிரியவிலை  உன்னை" என்று அறிவிக்கும் எங்கும் தொடர்த்து!   பார்வையில் முறைப்பு! பேச்சிலோ  கசப்பு!   நமக்கது    வருத்துமெனத் தமக்குடன்  தெரிந்தாலோ நடிப்பென்று கண்ணாலே துடிப்போடு  உணர்த்திடுவாள்!   அழகாக   நடக்கிறாள்  அசைந்து அசைந்து! நான்பார்க்கச் சிரிக்கிறாள் இசைந்து இசைந்து!   அறியாது  போலப் பார்க்கின்ற பார்வைதான் புரியாதா? காதலர்க்கே  பொதுவன்றோ?   கண்கள்  பேசும்போது சொற்கள் பேச்சிழந்தன! 111. புணர்ச்சி மகிழ்தல்   கண்டாலும்,   கேட்டாலும், இதழ் சுவைத்தாலும்,  முகர்ந்தாலும், தொட்டாலும்   இன்பம்தான்!   மற்ற  நோய்களுக்கு மருந்துண்டு! இவள்தந்த  நோய்க்கு இவள்மட்டும் மருந்து!   காதலியின்  தோள்சாய்ந்து               என்றும் கண்மூடித்  தூங்கவரும்  இன்பம் பக்கம்  இருக்கையில் சொர்க்கம்  எதற்கு?   இவள்  கொண்ட இந்த  நெருப்பு நீங்கினால்  சுடுகிறது! நெருங்கினால்  குளிர்கிறது!   அணைக்கும்  போதெல்லாம் ஆருயிரே   துளிர்ப்பதனால் பிணைக்கும்  இவள்தோள்கள் அமுதமே!   இவள் முகமோ குமுதமே!   தன்னுடைய   வீட்டினிலே, தான் ஈன்ற  பொருளினிலே உண்கின்ற   இன்பத்தை உருவாக்கும்  பாவையிவள்!   இருவருக்கும் இடையினிலே தென்றல் புகுந்தாலும் துன்பம்  உடன்வருமே!   ஊடலும்,  காதலும்,  வேதனையும் காதலர்   பெறுகின்ற பயன்கள்தாம்!                இவள்தரும் இந்தக் காமம் பலநூல்கள் பயின்றாலும் தொடர்கின்ற அறியாமை! 112. நலம்புனைந்துரைத்தல்   தனித்து  இருந்திடும் அனிச்ச  மலரே! உன்னிலும்  மென்மையே என்னுடைக் காதலி!   மலரைப்  பிறர்பார்த்தால் மனதில்  மயக்கம்தான் மலர்போல்  உன்கண்கள் மலர்ந்து  இருப்பதனால்!   தோளோ   மூங்கில்! மேனி  மாந்தளிர்! பல்லோ முத்து! கண்ணோ  கூர்வேல்!   இவளது  கண்கண்டு குவளை  மலர்கள்,கண் மூடின  நாணத்தால்! வாடின  சோகத்தால்!   காம்பை  அகற்றாமல் அனிச்சமலர்  சூடாதே! இடைமுறிந்து  போய்நீயே நிலைகுலைந்து  வீழ்வாயே!   வானிருந்து  விண்மீன்கள் வந்திறங்கி  உன்முன்னே உலவிடுமே  உன்முகத்தை நிலவென்று  எண்ணித்தான்!   நிலவுக்கும்  களங்கமுண்டு! அவள் முகத்திற்குக்  களங்கம்  சொல்ல முடியாது  யாராலும்!   வெண்ணிலவே! என்  காதலி  முகம்போல உன்  ஒளியே  இருக்குமெனில் வாயார,  மனதார வாழ்த்திடுவேன்  உன்னைநான்!               காதலியின்  முகம்போல  இருந்திட்டால் நீதனியே வாராதே  வெண்ணிலவே!   அனிச்ச  மலரும், அன்னத்தின்  சிறகும் இவளது  அடிக்குத்தான் ஈடாக  முடியுமோ? 113. காதல் சிறப்புரைத்தல்   தேனில்  ஊறிய  பால்போல்                இருக்கும் தானென் காதலி  இதழின்                அமுதம்!   காதலிக்கும்,  எனக்கும்  என்ன                உறவு? மேதினியில்   உடல்,உயிர் கொண்ட              உறவு!   காதலிக்கு  இடம்வேண்டும்! கண்ணின்  கருமணியே! உலவும்  நீஉடனே விலகிப்  போவாயே!   காதலியின்  மனம்மட்டும் புரிந்தால்  வாழ்வு! பிரிந்தால்  சாவு!   மறக்க   முடியவிலை                 காதலியை! மறந்தால்  தான்நினைக்க                முடியுமடா!   கண்ணிமைத்த  போதும், மனம் வருந்தாத  காதலரே கண்ணுக்குள்  குடியேறிக் கருத்துக்குள்  நிறைந்தாரே!   கண்ணுக்கு  மைதீட்ட எண்ணும்  போதவரே "மறைவாரோ?"  எனநினைத்து மைதீட்ட  மறுத்திட்டேன்!   என்நெஞ்சின்  உள்ளுக்குள் என்றென்றும்  இருக்குமவர் வாடாமல்    இருக்க   நினைத்தேன்! சூடான    உணவைத்  துறந்தேன்!             "கண்ணுக்குள்  குடியிருக்கும் காதலர்     மறைவாரோ?" கண்ணிமைக்க  மறந்துவிட்டேன்!   "எங்கோ   இருக்கிறார்"  என்று எள்ளிநகை  ஆடுகின்ற ஊராருக்குத்  தெரியாது, உறவான   என்காதலர்  என் உள்ளத்தில்  வாழ்வதுவே! 114. நாணுத் துறவுரைத்தல்   உடல், காதல்  வேதனையால் உருக்குலைந்து  போகிறது! வழியேதும்  இன்றி, நானே மடலேற  நினைத்தேனே!   காதல் கடுமையானது! உடலும்,  உயிரும்தான் ஒருசேர  வேதனையால் வெட்கத்தை அப்பொழுதே விட்டு,மடல்  ஏறிடுமே!   பேணும்  என்னருமை நாணம்,  மனஉறுதி இன்று  எனக்குத்தான் இல்லாது  போனதனால் வெட்கமும்  மறந்தேன்! மடலேறத்  துணிந்தேன்!   காமமோ வெள்ளமாய்ப்  பெருக்கெடுத்து  ஓடுகிறது! ஆண்மையை,  நாணத்தை அடித்துச்   செல்கிறதே!   மனம்கவர்ந்த  மங்கை மாலை  நேரத்தில் வளைய  லணிந்து வளைய  வந்தாள்! மயக்கம்  கொண்டேன்! மடலேறி  விட்டேன்!   இரவிலே  தூக்கமின்றி பகலிலே  மடலேற மடலை  மட்டுமே மனமே  நினைக்குதே!   காமம்  நெஞ்சிலே கடலளவு  இருந்தாலும் மடலேற,  பெண்முதலில் மனதாலும்  நினையாளே!   'இரங்கத்  தக்கவன்'  என்று எண்ணாமல்,  'கல்லறையில் உறங்கத்  தக்கவன்'  என்று உள்ளூரக்    காமம்தான் தெருவெங்கும் அலையவிட்டு உருக்குலைக்க  வைத்திடுமே!   "என்னுடைய  காதல், இங்கிருக்கும்  மக்கள் யாருக்கும்  தெரியாது, ஊருக்கும்  தெரியாது", என்று  எண்ணியதால்,              இன்று  அலைகின்றேன்!   எந்தன்      துயரை இதுநாள்      வரையில் அனுபவித்து  அறியாத அறிவிலிகள்   மட்டும்தான்             போலிவேடம்   பூண்டென்னைக் கேலிசெய்து     மகிழ்கின்றார்! 115. அலர் அறிவுறுத்தல்   எங்களைப்  பற்றித்தான் எவ்விடமும்  பலபேச்சு! அதில்தான்   வாழ்கிறது என்னுடைய  உயிர்மூச்சு!   மங்கையின் அருமை தெரியாமல் வதந்திகளைப் பரப்புகிறார்கள்! எங்களின்  காதலை எல்லோர்  மனங்களிலும்             இயல்பாக   நிரப்புகிறார்கள்!   பாடுபட்டுத்  தேடிக் கிடைத்திட்ட  செல்வம்போல் வதந்தி! அது எங்கள் காதலை ஊரறிய   மிக  வசதி!   தூற்றுவதால்     எம்காதல் தோற்கவிலை!  வளர்கிறது!   மதுவருந்த  வருகின்ற  போதைபோல், பரவுகின்ற  தீப்போல்  வதந்தியினால் யாம்வருந்த  மாட்டோம்! எம்காதல்  வளர்ந்திடுமே!   நிலவைப்   பாம்பு  உண்டதுபோல், வதந்தியால்  எம்காதல் நிதந்தோறும் வளர்ந்திடுமே!   எருவாக  ஊராரின்  அலர்ப்பேச்சு! நீராகத்   தாயின்   சினப்பேச்சு! காதல்       பயிர்வளரத் தோதாய்த்  துணைபுரியும்!   நெய்யை   ஊற்றினால் நெருப்பே  அணைந்திடுமா?   பழிகூறும்  பேச்சால்,  எம்காதல் வழிதோறும் வளர்ந்திடுமே!   "அஞ்ச   வேண்டாம்!'   எனச்சொல்லி அவர்   பிரிந்தார்! நெஞ்சில்  நானெதற்கு நாணம்  கொளவேண்டும்?                       காதில்   வதந்தியே விழுந்திட்ட போதில்,  அதனையே  பொய்ப்பிக்கக் காதல்   கொண்டவரே வந்திடுவார்! இன்பம் தந்திடுவார்! 116. பிரிவாற்றாமை              "போக  மாட்டேன்!" என்றால்   எனக்குச் சொல்! போனாலோ             "சாக   மாட்டேன்!'              என்று எண்ணாதே! உனைப் பிரிந்து உயிர்  துறப்பேன்!   அன்பாய்ப்   பார்க்கிறார்! அச்சமாய்   இருக்கிறது! இன்னும்   சிறுபொழுதில் பிரிவாரோ?  தெரியவிலை!   "உனைப்பிரிய   மாட்டேன்!" எனப்பிரிய    மாக ஆறுதல்    கூறுகிறார்! அதைநான்   நம்பவிலை!   "அஞ்சாதே!"   என்றார்! கொஞ்சியே   பேசினார்! நெஞ்சிலே   அணைத்தார்! பின் பஞ்சாகப்    பறந்தார்!   காதலர்       பிரியாமல் கண்கொத்திப்  பாம்பாகப் பார்க்க        வேண்டியது பாவையின்    கடமைதான்! "பிரிந்தால்    சேர்வது   கடினம்"     என்று புரிந்தால்     நன்று!   'பிரிவு   என்னைக்  கொல்லும்'             எனஅறிந்து  காதலரே, பரிவு    கொண்டு  மீண்டும் வருவாரோ? தெரியவிலை!   கையில்  இருந்து  கீழேதான் கழன்று  விழுந்த  வளையல்கள் காதலர் பிரிந்த  செய்தியைப் பரிந்து  சொல்லிடும்!   உறவில்லா  ஊரினிலே உயிர்வாழ்தல்  கடினம்தான்! காதலரைப்  பிரிந்திருக்கும் போதுவரும்  துன்பம்தான் அதைவிடவும்  மிகப்பெரிது!   காதலர்   கை விட்டால்  சுடுகின்ற  காமத் தீ தொட்டால்  சுடுகின்ற தீயைவிட   மிகப் பெரிது!   காதலர்  பிரிந்திட்ட போதிலும்,  அவர்நினைவில் உயிர்வாழும்   பெண்கள்தாம் உலகிலே  பலருண்டு! 117. படர்மெலிந்து இரங்கல்   இறைத்தாலும் ஊற்றுநீர்               பெருக்கெடுக்கும்! மறைத்தாலும் காமநோய்                அதிகரிக்கும்!   ஆசையைச்  சிறிதும் மறைக்கவும்  முடியவில்லை! நேசத்தை   அவரிடம் உரைக்கவும்  முடியவில்லை!   காமமும், நாணமும்  இருபக்கம்! என் உயிர்க் காவடி அதில் நிற்கும்!   காமக்  கடல்தாண்ட தோணியின்றி  தவிக்கின்றேன்!   ஆதரவாய்   இருக்கின்ற காதலிக்கே  துயர்தருவார்! எதிரிகள்   இவராலே என்னகதி   ஆவாரோ?   இன்பக்   கடலாக இருந்த   காமம்தான் துன்பக்   கடலாகத் தொடர்ந்து  வருத்திடுமே!   கடலாகக்  காமம்தான்! கரைசேர   முடியவிலை! இரவு    நீள்கிறது! எனையே   கொல்கிறது!   நீண்ட   இரவுதான்!              அதற்குத்  துணையிருக்க வேண்டி  என்னைத்தான் தூண்டி  அழைக்கிறது!             உறவாய்  எந்தனது உள்ளம்  நினைத்திட்ட காதலர் பிரிவோ  கொடிது! இரவின்  நீட்சியோ கொடிது!  மிகக்  கொடிது!   உள்ளம்   நினைத்தவுடன் அவரிடமே  செல்கிறது! உடலும்   செலமுடிந்தால் கண்ணீரே  வாராது! 118. கண் விதுப்பழிதல்   அவரைக் காட்டியதும்  கண்கள்தாம்! காண      வேண்டுமென்று கலங்குவதும் கண்கள்தாம்!   அறியாமல் கண்கள்  கண்டன!      அவர்   பிரிவது புரியாமல்  துயரம்   கொண்டன!   பார்த்ததும்  மயக்கம்  கொண்டன! பாராமல்   கண்ணீர்  சொரிந்தன!   கண்களை   நினைத்துத்தான் கலங்குவதா?  சிரிப்பதா?   அவரைப் பற்றிக்  கொண்ட வரையில் பற்றுக்  கொண்ட கண்கள்          இன்றோ நீர் வற்றிக்  கிடக்கின்றன!   கடலை  விடப்பெரிய  துயரை உடனே  எனக்களித்த  கண்கள் தூங்க   முடியாமல் ஏங்கித்  தவிக்கிறது!   கடும்துயரை   எனக்களித்த கண்களே    இப்பொழுது படும்பாட்டை   நினைத்தாலே பரவசமாய்    இருக்குதடி!   உருகிக்    காதலரின் உளம்புகுந்த  என் கண்கள் நீர் பெருகி    நீர்வற்றிப் போகட்டும்   இப்பொழுதே! காதலரின்     மனம்புரிந்த கண்களுக்கோ உறக்கமிலை!   என் காதலரே, வந்து   நின்றாலும்  தூக்கமில்லை! வராது  போனாலும்  தூக்கமில்லை!   கண்களை  நினைத்துத்தான் கதிகலங்கி  நிற்கின்றேன்!   என் கண்களின் வேதனை  கண்ட ஊரார்,  எம் காதலைக்  கண்டு கொண்டார்! 119. பசப்புறு பருவரல்   பிரிய  மானவரே பிரிய  நேர்ந்ததுமே பசலை  உடலினிலே படர்ந்து  விட்டதடி!   காதலர்  எனக்களித்த காதல்   பரிசுகளில் பசலை   மட்டும் உடலை  விட்டுப் பிரிய   மறுப்பது ஏன்? புரிய   வில்லையடி!   நாணமும், அழகும்  பறிபோனது! ஏக்கமும், பசலையும் உரித்தானது!   கணப்பொழுதும் அவரைத்தான் நினைப்பதுவும்,  பேசுவதும்! பசலை  எப்படித்தான் படர்ந்தது  உடல்மீது?   புறப்படும்   வரை,உள்ளே சிறைப்பட்ட  பசலைநோய் புறப்பட்ட  பின்னாலே புறப்பட  மறுக்கிறதே!   ஒளி  அகன்றதும்,  இருள்  படர்ந்தது! அவரே  அகன்றதும்,  பசலை  படர்ந்தது!   அவரென்னை   நெஞ்சோடு அணைத்திருந்த  வரைகாணா பசலை,  அவர்பிரியப் பாய்ந்துவந்து  அணைக்குதடி!   அவர்பிரிந்து  போனதையே யாருமே  சொல்லவில்லை! பாய்ந்துவந்து  படர்ந்திட்ட பசலையைத்  தான்சொல்வர்!               பசலை  என்மீது படர்ந்துவிட்டுப்  போகட்டும்! நான்விரும்பும்  காதலரே நலமாக  இருக்கட்டும்!   பசலை  என்மீது படர்ந்தாலும்   வருந்தவிலை! வசவுச்     சொற்களினால் ஊரார்   அவரை வருத்தாமல்   இருக்கட்டும்! 120.  தனிப்படர்  மிகுதி   காதலரின்   உறவினிலே எதையெண்ணி  நானின்று விதையில்லாக்  கனியானேன்?   நீர்மழை  பெய்திட்டால் நிலமெங்கும் செழிப்பாகும்! காதலர்   மேலன்பை நீ மழை   போல்,பெய்தால் நீங்காமல்  இருந்திடுவார்!   இருவருக்கும்  இருக்கும் அன்பு  நெருக்கம் பெருமித  உணர்வைப் பரிசாக  அளிக்கும்!   வரவு    பெருத்தும், செலவு சிறுத்தும் இருந்தால்  குடும்பத்தில் இன்பம்   நிலவிடுமே!   என் காதலரின் வரவோ   சிறுபொழுது! செலவோ   பெரும்பொழுது! அமைதி  உள்ளத்தில் அமர  முடிந்திடுமா?   காதல்    கொண்டவரே கலந்தார்!   பின்,பிரிந்தார்! ஆவல்  மிகக்கொண்டு அவர்வரவை  எண்ணுகிறேன்!   காவடி  போலத்தான் காதல்    இருபுறமும் இருந்தால்   இன்பத்தின் எல்லை  மிகநீளும்! பருவ  வேதனை  பொது! ஒருத்தி  மீதுமலர்க்                கணைகளையே பொருத்தி விடுகிறான்  மன்மதனே, இருவ  ரிருக்கும்  போது!   அருமைக்   காதலரின் அன்புமொழி   கேளாமல் வருந்தும்   நிலைபோலக் கொடுமை   ஏதுமில்லை!   அவரது   பெருமைகளை ஊராரென்  காதுபட ஒலிக்கக்  கூறுகிறார்! அதைக் கேட்கக்   கேட்கவே இன்பம்தான், அவரைப் பார்க்க   முடியாது  போனாலும்!   என்னுடைய  வேதனையை அன்புடையார்  முன்கூறி எமது    மனமே  தான்கொண்ட சுமையைக்  குறைப்பதை விடவும்தான், கடல்நீரை  வற்றவைத்தல் கடிதிலே   முடிந்திடுமே! 121.  நினைந்தவர்  புலம்பல்   குடித்தால்தான்  போதைவரும்                 கள்ளாலே! நினைத்தாலே   போதைவரும்                 காமத்தால்!   என்னவரை  நினைத்ததும், துன்பமே  பறந்தது! இன்பமே  நிறைந்தது!   தும்மல்  வருகிறதே! தொடருமென  நினைத்தாலோ உடனே  நிற்கிறதே! காதலர்  நினைத்தாரோ? கணப்பொழுதில்  மறந்தாரோ?   என்நெஞ்சில்   குடியிருக்கும் அவர்நெஞ்சில்   நான்,இன்று "இருக்கிறேனோ?" என்று, தவிக்கிறேனே   நின்று!   தன்நெஞ்சை  மூடிவிட்டார்! என்வரவைத்  தடுத்துவிட்டார்! என்நெஞ்சில்  குடியேற வெட்கமின்றி வந்துவிட்டார்  படியேறி!   என் நெஞ்சில்  முன்பு குடியிருந்தார்!  என்னோடு கூடி இருந்தார்!   வாடிய  பொழுதெல்லாம் கூடிய  பொழுதெண்ணி நெஞ்சம்  மகிழ்ந்தேனே! கொஞ்சம்  மலர்ந்தேனே!             ஒருபோதும்  அவரைநான் மறவாது   இருந்தேனே! இருந்தும்   அவர்பிரிவு ஏனோ    சுடுகிறதே? மறந்தால்   என்னாவேன்? மயக்கம்   கொண்டேனே!   அல்லும்,    பகலும்தான் அவர்நினைவில்  வாழுமென்னை அவர் மதிக்கவில்லை! இருந்தும்தான்   ஒருபோதும் பொருந்தாச்சொல்  கூறி,எனை அவமதிக்கவில்லை!   நாம், இருவர்  அல்ல! ஒருவர்  என்றார்! தாவி  எங்கோ  ஓடி  விட்டார்! ஆவி  முழுதும் வாட  விட்டார்!   தொலைந்தவரைத்  தேடித்தான் அலைந்துகொண்டு  இருக்கின்றேன்! நிலவே! நீ  மறையாதே! நின்னொளியில்  குறையாதே! 122.  கனவுநிலை  உரைத்தல்   கனவிலே  தூது  சொன்னார் காதலர்!  ஏது  செய்வேன்? கனவே  உனக்கென்ன கைம்மாறு  செய்திடுவேன்?   கனவினிலே   என்நிலைமை காதலர்க்குச்   சொலவேண்டும்! நினைத்ததும்  உறக்கமே விரைந்துதான்  வாராதா?   நேரிலே  வாராமல் நெடுங்கனவில் வருவதனால், ஊரிலே  இன்றுவரை   உயிரோடு  இருக்கின்றேன்!   காதலர்  பெரும்பொழுது, கனவிலே  வரும்பொழுது, கனவைத்தான்  ஆசையே  கொண்டு தினமும்நான்  நேசிப்ப  துண்டு!   அன்று  என்னைக் கலந்து, சென்று  விட்டார்  தளர்ந்து! கனவிலே  பேரின்ப உணர்விலே  ஆழவைத்தார்!   விழியே,  மூடிவிடு! காதலர்  பெரும் கனவிலே வரும் வழியே  திறந்துவிடு!   கனவிலே  தினம்வந்து கலங்க   வைக்கின்றார்! தூங்கும்  போதெனது தோளைத்  தழுவுகிறார்!   விழித்துப்  பார்த்தாலோ மனம்புகுந்து  கொள்கின்றார்!   பாய்ந்து,  கனவில்  என்             மார்பில் சாய்ந்து  கொள்கின்றார்! இதைக்காணா  பெண்கள்தாம் பதைப்போடு  பேசிடுவர்!   காதலர் அருகில்  இல்லையென உருகிப்  பேசுவோர்க்குக் கனவே  வருவது இலையெனப்  புரியுது! 123. பொழுதுகண்டு  இரங்கல்   பாலாகப் பொழியும் மாலையே! காதலர்  பிரிந்த பின்பு வேலாகக் குத்தி  வதைக்கிறாய்!   மாலையே!  ஏன் நீயே மயக்கத்தில் இருக்கின்றாய்? உனையுமொரு  காதலனே உருகவைத்து    விட்டானோ?   மாலையாகப்  பனிதான் மாலையில்    பொழிகிறது! மலையாக     வேதனை மனதில்        எழுகிறது!   பலகாலம்   தேடிக்  கொல்லும் கொலைகாரன் போல  மாலை!   காலை முழுதும்நான் கண்டதிலை துன்பத்தை! மாலை  வந்தாலோ வருத்தம் வருகிறதே!   காலைக்குச்  செய்தது  நன்மையா? மாலைக்குச்  செய்தது  தீமையா?   மாலை  போலணைத்தார்!              கலந்தார்!  பின்பு பிரிந்தார்! இன்று மாலை கொல்கிறதே!   காலையில்  மொட்டாய், பகலிலே     மொக்காய், மாலையில்  மலரும் காமநோய்  படரும்!                மாலை      நெருப்பாகும்!              நான்படும்  துயருக்கு   ஆயர்  குலச்சிறுவர் குழல்படையே பொறுப்பாகும்!   பொன்மாலை  வருகிறது! என்னாவி      துடிப்பதுபோல் ஊரே  கதிகலங்கி உருகி  வாடட்டும்!   பொருள்தேடிப்  பிரிந்திட்டார் பொறுப்பான   காதலரே! அவரை  நினைத்தேன்              பாவனையாய்! ஆவி    துடிக்குது              வேதனையால்! 124. உறுப்புநலன் அழிதல்   காதலர்  பிரிந்திட்டார்! கண்ணீர்  பெருகியது! காணும் மலரைக் கண்டு நாணும் மலர்கள் இன்று!   காதலர் பிரிந்ததை,என் கண்ணீரே சொல்லிவிடும்!   காதலர் பிரிந்த போதிலே எனது பூரித்த  பெருந்தோள்கள் பாதித்துப் போனதுவே!   களையான  தோள்கள் மெலிந்தன! வளையல்கள் கைவிட்டுக் கழன்றன!   வாட்டத்தை  மட்டுமல்ல, என் காதலரின்  கொடும்மனதை வளையலும்,  தோளும்தான் மாறிமாறிச்  சொல்லிடுமே!   ஆனாலும்,  ஊரவரைக்             குறைகூறிப் போனாலும் தாங்கவிலை!   வாடி  நின்ற  தோள்களை, ஓடிச்  சென்ற காதலர்க்கு நெஞ்சே!  நீமெதுவே கொஞ்சம்  சொல்வாயே!                தழுவினார்  காதலர்!பின் நழுவினார்!  உடனேஎன் நெற்றி  மீதுபசலை சுற்றி    விட்டதடி!   காற்று  எம்நடுவில் புதுந்து  விட்டதடி! தோற்றுப் போய்க்கண்கள்  நீர் ஊற்றாய் மாறியதே!   நெற்றியும்,  கண்களும்               தொடர்ந்துதான் சுற்றியும்    பசலையால்               வாடியது பற்றியும்  அவரறிந்தார்! வரவில்லை  இன்னும்! தரவில்லை  இன்பம்! 125. நெஞ்சொடு  கிளத்தல்   அந்தி  வேளையில் நொந்து  கொளவைக்கும் என்காம நோய்தீர எந்த மருந்து எனக்கு உகந்தது? நெஞ்சே!சொல்  மனமார!   காதலர்க்கு  என்மேலே கடுகளவும்  அன்பில்லை! நீதவித்து  அவரைஏன் நினைக்கிறாய்  மடநெஞ்சே?   அவர்வருந்தா  விட்டாலும்,  என் மனம்வருந்தித்  தவிக்கிறதே!   காதலரிடம்  செலும்போது கண்களையும் கொண்டேசெல்! காண  வேண்டுமெனக் கலங்கி  அழுகிறதே!   நான்விரும்பும்  அவர்,என்னைத் தான்விரும்ப  வில்லையே! இருந்தும்  அவரைநான் எதிர்க்க  முடியவிலை!   திரும்பி,அவர்  வரும்போது, விரும்பி,எதிர்  கொளும்நெஞ்சே! உன்  கோபம், பொய்க் கோபம்!   ஆசையை,  நாணத்தைத் துறந்திடு  என்நெஞ்சே! நாசமே அவையெனக்குத் தொடர்ந்து   செய்கிறதே! அன்பு தந்தவர்,ஏன் இன்பம்  தரவில்லை? அறிவாய்நீ!   அவர்பின்னே அலைவதுஏன்  மடநெஞ்சே!   இதயத்தில்  இருக்கின்றார்! ஏன்வெளியே தேடுகிறாய்?   அழகுமிகக்   கொண்டநானே அவரைநெஞ்சில் வைத்தேனே! அழகிழந்து   போனேனே! அவமதிப்பு   அடைந்தேனே! 126.  நிறையழிதல்   கற்புக்  கதவுகொண்ட நாணத்  தாழ்ப்பாளை, உடைத்தே  எறிகிறது காமக்  கோடாலி!   உறக்கமே  கெடுக்கின்ற காமத்திற்கு, இரக்கமே  இல்லையோ கடுகளவும்!   தும்மலாய்  என்காதல் எம்,ஊர்க்குத் தெரிந்ததடி! வருந்தினேன்  காமத்தால்! தெரிந்ததே     ஊருக்கே!   விரும்பாத  காதலரை நெருங்குவது தவறென்று காமநோய்  கொண்டவர்க்குத் தாமேதான்  தெரியாது!   விரும்பாத  காதலர்பின் வரும்படியே  செயவைக்கும் இந்த நோய்க்கு என்ன பேரோ?   காதலர்  நான்கொண்ட காமத்தைத் தீர்த்திட்டால் நாணம் ஒருபோதும் நானும்  கொளமாட்டேன்!   காதலர்  பேசும் கள்ளப் பேச்சில், என் பெண்மை வீழ்கிறது முழு    வீச்சில்!   பிரிந்தவர்  மீண்டும் திரும்பினார்! ஊடலை  நான் நினைத்தேன்! என் மனமோ கூடலை  நினைத்ததடி!                தீ பட்டால்  நெய்  உருகுமடி! காம  நோய்கொண்டேன்! காதலரைச் சிறிதாவது ஊட வேண்டும் என்ற என் எண்ணமே  கருகுமடி! 127. அவர்வயின் விதும்பல்   காதலர் வரும்வழியைப் பார்த்துப் பார்த்துக்  கண்கள்                பூத்தன! அவர்வரும் நாளைத்தான் எண்ணி,  எண்ணி   விரல்கள்                தேய்ந்தன!   அணிந்த  என்நகைகள் பணிந்து  மண்வீழும்! அவரை   மறக்கத்தான் அகத்தால் முடிந்திடுமா?   காதலரின் வருகை    எண்ணித்தான் என் வாழ்க்கை நடக்கிறது!   உரம்வாய்ந்த  காதலரே வரும்வழியை  எதிர்நோக்கி மரம்,ஏறி  என்மனமே மருண்டு,  மருண்டு  பார்க்குதடி!   உடலைப் புண்ணாக  வைக்கும் பசலை, அவரைக் கண்ணாரக் கண்டால் மறையும்!   காதலர்      வரும்போது உடல் பசலையை  விரும்பாது!   காதலர்  வந்தவுடன் கலப்பேனோ?  பிணப்பேனோ?   போரிலே,  மன்னன்  வெல்லட்டும்! ஊரிலே,   என்தலைவி மாரிலே    சாய்வேனே! மகிழ்ச்சியே கொள்வேனே!   தலைவன்  பிரிவினிலே தலைவி   வருந்துகையில் ஒருநாள்  கழிந்தாலும் ஏழுநாள்  போலிருக்கும்!   மனமுடைந்து  என்தலைவி மறைந்துவிட்ட  பின்னால்,நான் வந்தால்தான்   என்ன? வராவிட்டால்   என்ன? 128. குறிப்பறிதல்   மறைக்க        முயன்றாலும் முடியவிலை!   என்கண்கள் காதலை        உனக்குத்தான் காட்டிவிடும்   வெளிப்படையாய்!   அடக்கம்    இவளுக்கு அதிகமாய்  இருக்குதடா!   மணிமாலைக்  குள்ளிருக்கும் நூல்போல, இவளழகில்   ஒருகுறிப்பு எங்கோ    ஒளிந்திருக்கும்!   அரும்பு    மலரினிலே நறுமணமே  இருப்பதுபோல், இவள் குறும்புச்   சிரிப்பினிலே குறிப்பு    இருக்குமடா!   மெள்ளவே   எனைநோக்கிக் கள்ளநகை  அவள்புரிந்தாள்! உள்ளமே    தெளிவுபெற ஒருமருந்து  அதுவன்றோ?   அன்புமிகக்    காட்டிநின்றார்! அகமகிழ்ந்து   போனேன்நான்! பின்பு,எனைப்  பிரிவதற்கு முன்புஅது    ஒருகுறிப்போ?   பின்னால்   அவரென்னைப் பிரிந்திடப்  போவதற்கு முன்னால்  வளையல்கள் தன்னால்   கழன்றனவே!   நேற்றுத்தான்  அவர்பிரிந்தார்! தேற்றத்தான்   யாருமின்றி ஏழுநாட்கள்   ஆனதுபோல், பாழும்மனம்    தவித்ததடி!   "பிரியாதே!"  எனச்சொன்னால் புரியாதே     காதலர்க்கே! அதனால், வளையல்கள்,  தோள்கள் இளைத்திட்ட   கால்கள் மூன்றையும்  காதலரின் முன்பாகக்   காட்டிநின்றாள்!               "வரவிருக்கும்  துன்பம்தான் காதலரின் வரவிருக்கும்   வரையில்லை!" என்று  மௌனமாய் நின்று  உரைத்தாள்!   கண்ணோடு கண்நோக்கிக் காதலைச்   சொல்லுவது பெண்ணுக்கு  மிகப்பெரும் பெருமையைத் தருமன்றோ? 129. புணர்ச்சி  விதும்பல்   பார்த்தாலும்,  நினைத்தாலும் பரவசமே காமத்திற்கு   உண்டு! கள்ளுக்கு    இல்லை!   காமம்   கூடியது! காதலியின்  தளிருடலும் ஊடாமல் கூடியது!   தவறு  செய்தாலும், காதலரைக் காதலியர் எவரும் வெறுப்பதுவே இல்லை  ஒருநாளும்!   ஊடலை நினைத்தே நான் சென்றேன்! என் மனமே, கூடலை  நினைத்துக் கட்டித்    தழுவியதே!   எழுதிடும்     போதேதான் எழுதுகோல்  தெரியாது! நேருக்கு  நேர்கண்டால்     காதலியர் யாருக்கும்  காதலரின் பேருக்குக்   களங்கத்தைக் கற்பிக்கும்   குறைகளுமே எப்போதும்  தெரியாது!   பார்க்கும்  போதவரின் குறைகளே தெரியவில்லை! பார்க்க   மறந்தாலோ நற்குணமே தெரியவில்லை!     "உயிர்போகும்"  என்றறிந்தும் வெள்ளத்தில்  குதிப்பதுவோ? காமத்தில்  தவிக்கையிலே ஊடலால்  பயனில்லை!   மதுவின்மேல்   பேராசை வைத்தல்போல் காதலரின் மார்பின்மேல்  நானாசை வெட்கமின்றிக் கொண்டேனே!   மெல்லிய  மலரினும் மெல்லிய  காமத்தால் வருத்தம்   வாராது! இன்பத்திற்கே அர்த்தம்  கிடைக்குமன்றோ?   விருப்பம்  இல்லாமல் இருப்பது  போலவளே இருந்தாள்!  நான்நெருங்க, தனை மறந்தாள்!  பற்றினாள்! மார்போடு  தழுவினாள்! 130. நெஞ்சொடு புலத்தல்   என்வசமே  அவர்நெஞ்சம் இல்லையென நீயறிந்தும், ஏன்வசமே  இழந்தவர்பின் ஓடுகிறாய்  மடநெஞ்சே?   அன்பில்லை  அவருக்கு என்றுனக்குத் தெரிந்திருந்தும் பின்னாலே  ஓடுவதுஏன்? பிழையன்றோ என்நெஞ்சே?   நெஞ்சே!  உனக்குச் சொந்தமில்லை!  நண்பரில்லை! எந்தஒரு  பந்தமில்லை! அதனாலோ வந்தவர்பின் ஓடுகிறாய் நொந்துநீ  மதிகெட்டு?   அவரோடு  பிணங்க  மாட்டாய்! அவரோடு  இணங்கி விட்டாய்!   காணாத  போதும்,நீ கலங்குகிறாய்! கண்டுவிட்ட பின்னருமே "பிரிவாரோ?"  என்றெண்ணி உருகுகிறாய்!   தனிமையில்  நானோ   தவிக்கின்றேன்! நெஞ்சே!  நீ துணையாக நில்லாமல்  சிரிக்கின்றாய்!   வஞ்சம்  அவர்செய்தார்! மறக்க  முடியவிலை! நெஞ்சம்,  நாணம் இரண்டும்  நானிழந்தேன்!   காதலரைக்  கண்ட காதல்  நெஞ்சம் இகழ்ந்தால்  தவறென்று புகழ்கிறதே!  எதற்காக?   அஞ்சுகிறேன்  துன்பத்தால்! ஆறுதலே  யார்சொல்வார்? நெஞ்சே!      நீயே துணைவரு    வாயோ?   நெஞ்சே!  எனக்குத்தான் நீயே  பகையானால், மற்றவர்   துணையைப் பற்றியே  என்சொல்வேன்? 131.  புலவி   கொஞ்ச  நேரம்    அவரோடு, கொஞ்ச  வேண்டாம்,  நீஊடு! அவரும் சிறுபொழுது அவத்தைப் படட்டுமே!   உப்பாக  அளவோடு ஊடல்   இருக்கட்டும்! தப்பாக  நீட்டித்தால் தவிப்பாய் நீபின்பு!   பிணங்கியது   போதும்! இணங்கிவிடு!   மேலுமவர் சுணங்கி,உனைப் பிரிந்தாலோ அணங்கே,நீ   நிலைகுலைவாய்!   கிளையை  வெட்டினால் வளரும்  செடியோடு! வேரை      வெட்டினால் அழியும் அடியோடு!   அளவாக  ஊடலே   இருந்தால் பிளவாக  மாறுமோ  காதல்?                 ஆணுக்கு  அழகு அனைவரும்  வணங்குதல்! பெண்ணுக்கு அழகு சிறிதாவது   பிணங்குதல்!   பிணக்கில்லா  காமம் உனக்கில்லா   விட்டால் வாழ்க்கை   ரசிக்காது! உறவும்      ருசிக்காது!   கூடும்     நேரமே குறைதல்  மட்டுமே ஊடும்     பொழுதிலே உணரும்   துன்பமே!   நீவருந்  தடம்பார்த்தே நின்றிருந்த காதலர்,  இன்று நீவருந்த  வேண்டுமென நினைக்கின்றார்!   கோடை  வெயிலில் வாடி     நடந்தேன்! குளத்தின்  அருகிருக்கும் மரத்தின்    கீழமர்ந்தேன்! நீரும்    கிடைத்தது! நிழலும்  கிடைத்தது! அதுபோல், பிணங்குவதும்  இன்பம்தான்! இணங்குவதும் இன்பம்தான்!   நான்  ஊடி  நின்றேன்! அவர்  ஓடி   விட்டார்! மனம்  கூடி  மகிழ, தினம்  நாடி  நிற்கும் அவரைத்தான்!   காரணம் ஆசைதான்! 132. புலவி நுணுக்கம்   காதலா!     உன்மார்பைக் கண்டபெண்கள் பார்க்கின்றார்! ஆதலால்    உனைத்தழுவ அஞ்சியே    ஓடுகிறேன்!                "தலையில்   நான்,ஓடித் தட்டுவேன்"  என்றெண்ணித் தும்மினார்!  நான்  அசையவிலை! வெம்பினார்  விரகத்தால்!   கோட்டுப்பூ  சூடிநின்றேன்! ஈட்டியாய்ப் பார்த்தாளே! எவளுக்குக் காட்ட,நீர்    சூடிநின்றீர்? காட்டமாய்க் கேட்டாளே!   யாரையும்  விட,எனது காதல்      பெரிதென்றேன்! நான்தவிரப்  பலபெண்கள் தான்நிறைய உள்ளாரோ? கோபித்தாள்!  நானுமிங் கோபித்தால்   அலைகின்றேன்!   "இப்பிறவி    உனைப்பிரியேன்!" என்றேன்    காதலுடன்! பார்த்தாள்!    கோபமுடன் கேட்டாள்    ஒருகேள்வி! "மறுபிறவி    எனைப்பிரிய மனதிலெண்ணி  விட்டீரோ?"               "தினைத்தேன்   அதரத்தாய்!                 உன்னை நினைத்தேன்!"  எனச்சொன்னேன்! "மறந்தால்தான்   நினைப்புவரும்! மறந்தீரோ?" என்று  நெடுநேரம் நின்று  கேட்டாளே!   தும்மினேன்!   சினங்கொண்டு விம்மினாள்!  வெடித்தாளே! "யாரோ   உமைநினைத் தாரோ?"  கடிந்தாளே!   தும்மலை      அடக்கத் தொடர்ந்து   முயன்றேன்! "மறைக்காதீர்!"   என்றாளே! என்னோடு மல்லுக்கு         நின்றாளே!   ஊடலைநான்   நீக்கிவிட்டேன்! உவகைஅவள்   கொள்ளவில்லை! சற்று  வருத்தமுடன், "மற்ற  பெண்கட்கும் இதுபோல்  செய்வீரோ?" என்றாள்!   நான்விழுந்தேன்!   அவள் அழகை     நான்ரசித்து அழகாய்ப்    பார்த்துநின்றேன்! "ஒப்பிட்டுப்    பார்த்தீரோ உறவில்லா     பெண்களுடன்?" கணைதொடுத்தாள் கடுஞ்சொல்லால்! அணையாமல்   நானகன்றேன்! 133.  ஊடலுவகை   ஊடியே  விட்டாலும்,  பின்னாலே கூடியே   வருமின்பம் தன்னாலே!   வருந்தி    அவர்தவித்தால்                தவறில்லை! மருந்தாய்  உன்,ஊடல்                   இருக்கட்டும்!   மலையோடு   தோன்றும்நீர் கலையோடு   நிலத்தினிலே கலப்பதுபோல்  ஊடலினால் புலப்படுமே      பேரின்பம்!   ஊடலைத்  தீர்க்க,அவர் உடல்சேரத் தழுவினார்! மனஉறுதி  குலைந்துநான் மண்ணிலே வீழ்ந்தேன்!   காதல்   கொண்டவள் ஊடல்   கொண்டுதான் வெளிப்படையாய்  உமிழ்ந்திட்ட   வெறுப்பான   வார்த்தைகளென் உள்படையாய்  மாறித்தான் ஓயாமல்  ரணமாக்கும்! இருந்தும் சிறுபொழுதில் இதழ்வடியும் தேனமுதை அருந்தும்  எண்ணமே என் மனதைக் குணமாக்கும்!                உண்டபின்  செரித்தல் மிகநன்று! ஊடலின்பின் கூடல்   மிகநன்று!   ஊடலில்      தோற்பதுவும் ஒருவகையில் நல்லதுதான்! இதைக் கூடலின்   போதுணர்வாய்! இன்பத் தேடலின்   போதுணர்வாய்!               கூடுவதால்  வருமின்பம் ஊடுவதால்  கிடைத்திடுமா?                இரவு  முழுதும் இணைந்து  தழுவும் உறவு  கிடைப்பதற்கு, ஊடத் தொடங்கிவிடு!   ஊடலும்  இன்பம்தான்! வாடலும்  இன்பம்தான்! ஊடலின்  பின்னாலே கூடலும்   இன்பம்தான்! இரண்டிலும் எது பெரிது?