[]  [] முறைசாராக் குறிப்புகள் சாத்தான் க்ரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் பகிரப்படுகிறது http://creativecommons.org/licenses/by-nc-nd/4.0/ [] முன்னுரை மாதிரி இந்த மின்னூலில் இருப்பவை 'மையநீரோட்டம்' என்ற எனது வலைப்பதிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இடுகைகள். மொழி, ஊடகங்களில் அதன் பயன்பாடு, நகைச்சுவை போன்ற தலைப்புகளில் எழுதியவை. சாத்தான் என்று 2006இலிருந்து இணையத்தில் எழுதிவரும் நான், தொழில்முறை மொழிபெயர்ப்பாளன். இப்போது ட்விட்டரில் @popmuseum என்ற பெயரில் உலவுகிறேன். பல இடுகைகளுக்கு சுவையான பின்னூட்டங்கள் கிடைத்திருக்கின்றன. எனவே உங்களுக்கு எந்தக் 'கட்டுரை'யாவது சுவையானதாகத் தெரிந்தால் வலைத்தளத்திற்குச் சென்று பின்னூட்டங்களையும் பாருங்கள். சென்னைத் தமிழ் உச்சரிப்பில் ஆங்கிலச் சொற்கள் தேர்ந்தெடுத்த சொற்களின் அகராதி அக்கிஸ்ட்டு (uh-kist-tu) – Accused (rowdy, gangster, criminal) Usage: அவன் ஒரு அக்கிஸ்ட்டுப்பா, அவங்கைல வச்சிக்காத. பக்கிட்டி (buh-ki-tee) – Bucket Usage: டே, அந்த பக்கிட்டி எடு… அதில்லடா, மஞ்சா. அசால்ட் (ah-saalt) – Casual, in a nonchalant or effortless manner Usage: அசால்ட்டா நாலு ஆஃப் அடிக்கிறாண்டா மச்சான்! சிகெர்ட்டு / சீர்ட்டு* (ci-ger-tu / seer-tu) – Cigarette Usage: ஒரு சிகெர்ட்டா? யான், உனுக்கு வாணாவா? கம்ப்பீட்ரு (kam-pee-tru) – Computer Usage: கம்ப்பீட்ரு மூளடா உனுக்கு! கண்ரைட்டர் (kan-rai-tar) – Conductor Usage: கண்ரைட்டர், ரெண்டு ராகி மால்ட் – சீ, ரெண்டு சாந்தி. சிம்ட்டி (sim-tee) – Cement Usage: அய்ய, இன்னாது மூஞ்சில்லாம் சிம்ட்டி? தொச்சின் வா போ. ரீஜன்ட் (ree-juhnt) – Decent Usage: பாக்க ரீஜன்ட்டாக்குற, ஆனா புடாக்கு மேரி பேசுற! யெஸ்ட்ரா / யஸ்ட்ரா** (yes-traa / yuh-straa) – Extra Usage: யெஸ்ட்ரா எதுனா வேன்னா சொல்டா. ஃபிகுரு (fi-gu-ru) – Figure Usage: ஃபிகுருக்காக ஃப்ரென்சிப்ப கூட உட்ருவாண்டா ஆப்பாய்ல் / ஆபாய்ல் (aab-baai-l / aa-baai-l) – Half-boiled (egg) Usage: டே கொச, இதாடா ஆப்பாய்லு? ஓல்டேன் (ol-day-n) – Hold on Usage: ட்ரைவர், ஓல்டேன், ஆல் வராங்க. லோக்குலு (lok-ku-lu) – Local (= plain) Usage: டே, நீதாண்டா லோக்குலு, நான் இன்டர்நேஸ்னுலு! மேட்ரு (mat-ru) – Matter Usage: ‘னா மேட்ரு, ஒரே டல்லாக்குறே? மிஷ்டேக்கு (mish-tay-ku) – Mistake Usage: ‘மால நீ பொர்ந்ததே பெரீ மிஷ்டேக்குடா தூமே! நம்புரு (nam-bu-ru) – Number Usage: மச்சான், உந்து இன்னா நம்புரு? பாய்ட்டி / பாகிட்டி (paai-tee / paa-gi-tee) – Packet Usage: லோகே, ஒரு ஃபில்ட்ரு, ஒரு தன்னி பாய்ட்டி. டேஸ்னு (tay-snu) – Station Usage: போல் டேஸ்னாண்ட வர் சொலோ ஒரு மிஸ்டு கால் குடு. சொட்ரு (sot-ru) – Sweater Usage: எதுக்கு சொட்ரு, குலுர்தா? ஸுச்சி (su-chee) – Switch Usage: அது பேன் ஸுச்சி, இது லைட் ஸுச்சி. டிக்கிட்டி / டிகிட்டி (ti-ki-tee / ti-gi-tee) – Ticket Usage: கண்ரைட்டர், அண்ணா ஸ்கொய்ருக்கு நால் டிகிட்டி! வாச்சி / வாச்சு (vaach-chee/vaach-chu) – Watch Usage: மச்சான், வாச்சி கட்டிகிறே? பிகிலு (bi-gi-lu) – Whistle Usage: ஓத்தா, அவுரு வாய்லேந்து பிகிலப் புடுங்கி ஊதுடா மொதுல்ல. ஆகஸ்ட் 11, 2006 “நேக்கு நன்னா வேணும்…!” கதை எழுதுபவர்களை எல்லாம் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிற விஷயங்களில் ஒன்று கதைக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுப்பது. ஆனால் சில பேருக்கு அது எந்த மூளைக் கசக்கலும் இல்லாமல் கைவந்துவிடுகிறது. இந்த வார குமுதம் சிநேகிதியை சோம்பேறித்தனமாகப் புரட்டிக்கொண்டிருந்தபோது 60-ஆம் பக்கத்தில் ஒரு நன்முத்து கண்ணில் பட்டது. சிறுகதை இப்படி ஆரம்பிக்கிறது - ஈஸ்வரி தன்னெதிரே இருந்த பெயர்ப் பலகையை பிரமிப்பாகப் பார்த்தாள். “ஈஸ்வரி ஐ.ஏ.எஸ்’ உச்சரிக்கும் போதே தித்தித்தது. ஈஸ்வரி கண்களை மூடினாள்… நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன… அடுத்து ஃப்ளாஷ்பேக். எவ்வளவு ஈஸி! (அந்த இரட்டை மேற்கோள் பிழை அச்சிலேயே இருக்கிறது) சிறுகதைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு நம் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் எல்லா கதைகளிலும் இந்த லாகவத்தைப் பார்க்கலாம். கதை எழுதுவதில் இவர்களுக்கு ஸ்டார்ட்டிங் பிராப்ளமே வர வாய்ப்பில்லை. தொடக்கத்தையும் நடுப் பகுதியையும் முடிவையும் எழுதப் பயன்படும் முக்கியமான ஒரு கருவி முப்புள்ளி (…). இது மல்ட்டி பர்ப்பஸ் நிறுத்தக் குறி. கமா, முற்றுப் புள்ளி, அரைப் புள்ளி, ஆச்சரியக் குறி – எல்லாவற்றுக்கும் மாற்று இந்த முப்புள்ளி. எ.கா.: “கௌரி வீட்டாரின் தித்திப்பான பேச்சும்… அந்த பிரமாண்ட வீடும்… சுந்தரிமாமியின் ஆசையை அதிகரிக்கச் செய்தது.” “தன்னுடைய சொந்த மாவட்டத்திற்கே… கலெக்டராய் பொறுப்பேற்றிருக்கிறாள்.” “மாமி… ஈஸ்வரிதான் சொன்னா…!” மிக அதிக எஃபெக்ட் கிடைக்க வேண்டும் என்றால் ஆச்சரியக் குறிக்கு முன் முப்புள்ளி போட வேண்டும். “காதலனின் பூஞ்சிரிப்பிற்காக எதையும் செய்யலாமே…!” கதை என்ன கருமாந்தரமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அது இப்படி முடிகிறது: “அழாதேள் மாமி…! உங்களுக்குத்தான் நானிருக்கேனே…! எங்காத்துக்கே வந்துடுங்கோ… நா… உங்களை ராணியாட்டம் வெச்சுக்கறேன்…!” என்றாள் ஈஸ்வரி கம்பீரமாய். சாட்சாத் அந்த அம்பாளே ஈஸ்வரி வடிவத்தில் தன்னெதிரே நின்று அபயம் தருவது போல இருந்தது சுந்தரிக்கு. கண்களில் கண்ணீர் வழிந்தோடி, தன் தவறுக்கு பிராயச்சித்தம் கேட்டது. தன்னையும் மீறி கைகூப்பினாள். கண்களில் கண்ணீர் வழியாமல் Heineken பியரா வழியும்? இந்தச் சிறுகதையின் தலைப்பு: “எப்போதும் அதன் பெயர் தென்றல் அல்ல…” இந்தப் புள்ளி நோய் பல பயங்கரக் கவிஞர்களையும் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு மூன்று வரிக்கும் கடைசி வார்த்தைக்கு சோத்துக் கை பக்கம் மூன்று புள்ளிகளை வைத்துவிட்டால் கவித்துவம் ஏறிவிடுவதாக ஒரு நம்பிக்கை. சில பேர் வகை தொகையில்லாமல் நாலு புள்ளி, ஆறு புள்ளியெல்லாம் கூட வைக்கிறார்கள். பின்வரும் வகை கவிதைகளில் இவற்றுக்கு மேஜர் ரோல் உண்டு: “ஓ…” கவிதைகள் – இவற்றில் “ஓ…” என்ற சொற்றொடர்தான் ஹீரோ. “என்பதால்தானோ என்னவோ” கவிதைகள் – என்பதால்தானோ என்னவோவுக்கு அப்புறம் பஞ்ச் லைன் டெலிவர் செய்யப்படும். “பெண்ணே…/…!/!” கவிதைகள் – சினிமா பாட்டுக்கு மானே, தேனே, சகியே, பூவே, அழகே, இத்யாதி மாதிரி கவிதைக்குப் “பெண்ணே!”. எழுத்தாணியால் புள்ளி வைத்தால் ஓலை கிழிந்துவிடும் என்ற பயத்தில் புள்ளி வைக்காமல் விட்ட காலத்தில் இந்தப் புள்ளி ராஜாக்கள் பிறந்திருந்தால் ரொம்ப அவஸ்தைப்பட்டிருப்பார்கள். ஆகஸ்ட் 22, 2006 மொழிப் பிரச்சினை “காலணிகளை வெளியே விடவும்”, “கவனிக்கவும்” என்றெல்லாம் எழுதுகிறார்களே, இதில் “உம்” எங்கிருந்து வந்தது? ஒன்று, செய்யுங்கள், கவனியுங்கள், எழுதுங்கள் என்று நேரடியாக எழுத வேண்டும். அல்லது செய்க, கவனிக்க, எழுதுக என்று எழுத வேண்டும், கொஞ்சம் பழைய வாடை அடித்தால் பரவாயில்லை என்கிற பட்சத்தில். இரண்டுமில்லாமல் ‘உம்’ போட்டு எழுதுவதில் ஏதோ சீரியஸ் பிழை இருக்கிறது. வார்த்தையிலிருந்து தனியாகப் பிரித்தால் பொருள் வராத ‘உம்’ எதற்கு? “ங்கள்” என்ற பின்னொட்டில் ஒரு pattern இருக்கிறது… பாருங்கள் = பார் + உ + ங்கள் செய்யுங்கள் = செய் + உ + ங்கள் வாருங்கள் = வா + ர் + உ + ங்கள் சிரியுங்கள் = சிரி + உ + ங்கள் “உம்”-இல் மூல வினைச் சொல் பிரிக்க முடியாமல் புதைந்திருக்கிறது… பார்க்கவும் = பார்க்க + உம் செய்யவும் = செய்ய + உம் வரவும் = வர + உம் சிரிக்கவும் = சிரிக்க + உம் உம்மைத் தொகையில் வரும் ‘உம்’மை ஏற்கலாம், எதிர்காலத்தைக் குறிக்கும் ‘உம்’மை (“சுடும்”) ஏற்கலாம். இந்த உம் என்னாத்துக்கு? ‘தெரிவியுங்கள்’ என்பதில் இல்லாத ஒரு பணிவு ‘தெரிவிக்கவும்’ என்பதில் இருப்பது போல் தோன்றலாம். தயவு செய்து என்ற சொற்றொடர் எதற்கு இருக்கிறதாம். ஷார்ட்டாக இருக்கிறது என்பதற்காக இல்லாததையும் பொல்லாததையும் எழுதலாமா? ‘உம்’மின் மூலத்தை யாராவது கண்டுபிடித்தால் நன்றாயிருக்கும். அது அனேகமாக அந்தக் காலத்துப் பாட்டிகள் எழுதிய கடுதாசிகளிலிருந்து வந்திருக்கும். இலக்கணப் புலிகள் தயைகூர்ந்தென் ஐயத்தைத் தெளிவித்து ~~உதவவும்~~ உதவுங்கள்!  ஆகஸ்ட் 26, 2006 உரத்த சிந்தனை: the மொழிபெயர்ப்பு ட்விட்டரில் பாஸ்டன் பாலா ‘the’வை எப்படி மொழிபெயர்ப்பது என்று ஒரு கேள்வி போட்டிருந்தார். Theவை மொழிபெயர்ப்பதில் சிரமம் இல்லை என்றாலும் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட விதமாக அதை மொழிபெயர்ப்பது ஏன் என்று விளக்கத் தொடங்கினால் ‘கேராக’ இருக்கிறது. எனவே இந்தப் பதிவைப் பாதி விளக்கமும் பாதி ரோசனையும் பாதி மறைமுகக் கேள்விகளுமாகத் தருகிறேன். article என்கிற விஷயம் தமிழில் இல்லை. A, an, the ஆகியவை தம்மை அடுத்து வரும் சொற்களில் சேர்க்கும் பொருள், எண்ணிக்கை போன்ற விஷயங்கள் தமிழில் -ஐ, -கள் போன்ற பின்னொட்டுகள் அல்லது சில சமயங்களில் அவற்றின் இன்மையால், சுட்டுச் சொற்கள் மூலம் புரியவைக்கப்படுகின்றன. இந்த விநோதமான ஸ்டேட்மென்ட் பின்வரும் உதாரணங்களைப் பார்த்தால் தெளிவாகும் என்று நம்புகிறேன். Theவை இப்படியெல்லாம் மொழிபெயர்க்கலாம்: 1. ஐ: இரண்டாம் வேற்றுமை உருபைப் பயன்படுத்தலாம் There was a knock on the door. He switched on the light and peered out the window. மொ.பெ.: யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவன் விளக்கைப் போட்டு ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். (கதவு, விளக்கு, ஜன்னல் ஆகிய மூன்றுமே வாசகர் முன்னனுமானம் செய்யக்கூடிய விஷயங்கள்தான். விளக்கைப் போடுவது என்ற சாதாரண காரியத்தை செய்வதற்கு பதில் மேஜை டிராயரிலிருந்து துப்பாக்கி எடுத்தால் ‘ஒரு துப்பாக்கியை’ எடுத்ததாக எழுத வேண்டியிருக்கலாம்) 2. அந்த/இந்த: சுட்டுச் சொற்களைப் பயன்படுத்தலாம் The boy was no more than six. மொ.பெ.: அந்தப் பையனுக்கு ஆறு வயது மேல் இருக்காது. (இங்கே ‘அந்த’ என்று எழுதுவது நடையொழுங்கிற்காகத்தான் என்று தோன்றுகிறது. வெறுமனே ‘பையனுக்கு ஆறு வயது’ என்று எழுதினால் படிக்க நன்றாக இருக்காது. இதில் ‘அந்த’ என்பது ‘நான் ஒரு முட்டாள்’ என்பதில் உள்ள ‘ஒரு’வைப் போல அடுத்து வரும் வார்த்தைக்கு ஒரு ஸ்டாண்டு போல் பயன்படுகிறது.) You will be given a form to complete. Please handover the form to the receptionist once you complete it. மொ.பெ.: உங்களுக்கு ஒரு படிவத்தைக் கொடுப்பார்கள். அதை/அந்தப் படிவத்தை நிரப்பியதும் ரிசப்ஷனிஸ்டிடம் சமர்ப்பித்துவிடுங்கள். (படிவம் முதலில் a form என்று அறிமுகப்படுத்தப்படுகிறது. பிறகு வெறுமனே form என்று குறிப்பிடப்படுகிறது. அதற்கு முன் handover என்ற வினைச்சொல் வருவதால் மொழிபெயர்க்கும்போது handover the form என்பது ‘படிவத்தை சமர்ப்பி’ ஆகிறது. ரிசப்ஷனிஸ்ட்டும் மேலே பார்த்த கதவு, விளக்கு, ஜன்னல் மாதிரிதான்.) 3. சில சமயங்களில் சும்மா விட்டுத்தான் ஆக வேண்டும். …the only person capable of it. மொ.பெ.: அதைச் செய்யக்கூடிய ஒரே ஆள்… (இதில் theவை மொழிபெயர்க்க முயன்றால் விபரீதமாக இருக்கும். அதனால்தான் யாரும் அப்படிச் செய்வதில்லை.) The Spy Who Loved Me = என்னைக் காதலித்த உளவாளி Conan the Barbarian = காட்டுமிராண்டி கானன் Harry Potter and the Prisoner of Azkaban = ஹாரி பாட்டரும் அஸ்கபான் கைதியும் a, an: சில சமயங்களில் ‘ஒரு’; சில சமயங்களில் மொழிபெயர்க்கக் கூடாது. தமிழில் a/anஐ ‘ஒரு’ என்று பலர் மொழிபெயர்க்கிறார்கள். அது பேச்சிலும் புகுந்துவிட்டது. மேலே சொன்னது போல, ‘ஒரு’ என்ற வார்த்தை நடை ரீதியாக ஒரு ஸ்டாண்டு போல் பயன்படுகிறது. ‘நான் ஒரு முட்டாள்’ என்பதில் ‘ஒரு’வை எடுத்துவிட்டால் சுய அறிமுகம் போல் ஆகிவிடும். சிலருக்கு அந்த அறிமுகம் தேவைப்படாமல் போகலாம். வேறு சூழலில் ‘ஒரு’வைத் தவிர்ப்பது பிரச்சினையாக இருக்காது: சூழல் அ: ‘நான்  முட்டாள், நீ முட்டாள், இன்னும் வேறு யாரெல்லாம் முட்டாள்?’ – இது பட்டியல் வடிவத்தில் இருக்கிறது.  ‘முட்டாள்’ என்ற சொல்லில் ‘கள்’ என்ற பன்மைப் பின்னொட்டு இல்லாததாலேயே அது ஒருமை என்று தெரிகிறது. இதற்கு எந்த முட்டுக்கொடுத்தலும் தேவையில்லை. சூழல் ஆ: ‘நானும் முட்டாள், நீயும் முட்டாள்.’ – இங்கே உம்மைத்தொகை ‘முட்டாள்’ என்ற வார்த்தைக்கு சப்போர்ட்டாக இருக்கிறது. இங்கேயும் ‘ஒரு’ தேவையில்லை. கமிங் டு த பாயின்ட்… Do you have a pen? (vs: Do you have the pen that you stole from my desk?) மொ.பெ.: உங்களிடம் பேனா இருக்கிறதா? (vs: என் மேஜையிலிருந்து திருடிய பேனா இருக்கிறதா? / என் மேஜையிலிருந்து திருடினீர்களே, அந்த பேனா இருக்கிறதா?) It’s called a bowler hat. மொ.பெ.: அதற்கு பவுலர் தொப்பி என்று பெயர். (இங்கே a என்பது எண்ணிக்கையைக் குறிக்கவில்லை, பவுலர் தொப்பியை அறிமுகப்படுத்துகிறது. அதனால் ‘ஒரு’ தேவையில்லை) If you are a man (you have a dick, blah blah) மொ.பெ.: நீங்கள் ஆண் என்றால்… (மொட்டையாக man என்றால் இலக்கணப் பிழை. என்ன man என்று கேட்கலாம். the man என்றால் ‘வேறு யாரும் இல்லை, குறிப்பாக நீங்கள்தான்’ என்று பொருள்படும். இங்கு a எண்ணிக்கையைக் குறிக்கவில்லை. ) He picked up a carrot from the basket and started eating it. மொ.பெ.: அவன் ஒரு காரட்டை எடுத்து சாப்பிடத் தொடங்கினான். (கூடையில் பல காரட்டுகள் இருக்கலாம், காரட்டுகளோடு இன்னும் பல வகைக் காய்கறிகள் இருக்கலாம், ஆனால் அவன் எடுத்தது ஒரே ஒரு காரட்டைத்தான்.) நிற்க. Theவை மொழிபெயர்க்க இன்னும் சில வழிகள்/உத்திகள் இருக்கலாம். அவை தட்டுப்படும்போது இந்தப் பதிவில் சேர்க்கிறேன். இலக்கணம் படித்தவர்களால் இதை இன்னும் தெளிவாக விளக்க முடியும். பி.கு.: ‘ஒரு’விற்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (புதிய பதிப்பு) தரப்பட்டுள்ள ஒரு பொருள்: ‘இன்னது இப்படி’ அல்லது ‘இவர் இப்படி’ என்ற திட்டவட்டமான எண்ணத்தை வெளியிடப் பயன்படுத்தும் ஒரு சொல்; word used to mean that s.o. or sth. mentioned is a reference. இதுவும் ஒரு அழகுதான்./ இது ஒரு வீடா?/ இது ஒரு படமா? பி.பி.கு.: உதாரண ஆங்கில வாக்கியங்கள் நானாக யோசித்துருவாக்கியவை. அசிங்கமாக இருந்தால் மன்னித்தருள்வீர். தமிழ் உதாரணங்களிலும் எடுத்துக்காட்டுவதற்காகக் கொஞ்சம் வளர்த்தி எழுதியிருக்கிறேன். பிப்ரவரி 15, 2009 தேவையில்லாத பதிவு இப்போது தட்டச்சு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பதிவு தேவையில்லாதது. ஏனென்றால் இந்தப் பதிவு தேவையில்லை என்பதுதான் இதன் சாராம்சமே. இது தன்னைப் பற்றியே பேசுவதால் (என் மூலமாகத்தான்) இதை ரிகர்ஸிவ் பதிவு என்று சொல்லலாம். பொதுவாகப் பதிவு எழுதுவதைப் பற்றியதாகவும் இருப்பதால் meta பதிவு என்றும் இதை வர்ணிக்கலாம். இணைய அமைதிக்காக “This page is intentionally left blank” என்று போடுவார்களே அது போல இதுவும் ஒரு பிளாங்க் போஸ்ட். ஒரு வெற்றுப் பதிவு இதைப் போல் இலக்கற்ற வார்த்தை வீணடிப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றியதாகவும் இருக்கலாம். சொல்லப் போனால் அது குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றியதாக இருப்பதே நல்லது. ஆனால் ஆழமாக எதையோ சொல்ல வரும் பாசாங்கு கூட இருக்கக் கூடாது என்பதே நிபந்தனை. இது தேவையில்லாத பதிவு என்பதை இவ்வளவு தூரம் படித்தவர்கள் யாரும் மறுக்க முடியாது (படிக்காமலே முன்முடிவால் அந்த conclusion-க்கு வந்தவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை). ஆனால் இது வெற்றுப் பதிவாக இருந்தாலும் தன் இருப்பிற்கு நியாயம் கற்பிக்க முடியாது என்பதைத் திறம்பட நிலைநிறுத்துவது இதன் குறிக்கோளாகத் திகழ்கிறது. இந்தக் குறிக்கோளைச் செவ்வனே நிறைவேற்றிவிட்ட இப்பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!   செப்டம்பர் 1, 2006 பொருள் கோளாறுகள் குமுதத்தின் ‘வேட்டையாடு விளையாடு’ விமர்சனத்தில் ஒரு வாக்கியம்: [ஜோதிகா] கண்களை அகல விரித்து குழந்தையாய் பார்க்கும்போது, சூர்யா ஏன் காதலில் விழுந்தார் என்பது தெரிகிறது. ஒரு சினிமாப் பாட்டில் கூட “காதலில் விழுந்தேன்” என்று கேட்டிருக்கிறேன். காதலில் விழுவது இப்போது ஃபேஷன் ஆகிக்கொண்டு வருகிறது. இது falling in love என்ற சொற்றொடரின் மோசமான ~~மொழிபெயர்ப்பு~~ உல்டா இல்லை? காதல் வசப்படுவது சுலபமாக இருக்கும்போது இவர்கள் ஏன் அதில் விழுந்து தொலைக்கிறார்கள்? பாட்டு என்றால் கூட ட்யூனுக்காகப் பண்ணுகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். பத்திரிகைக்காரர்களுக்கு என்ன வந்தது? சுவையாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு “வேட்டையாடி விளையாடியிருக்கிறார்கள்” என்று தலைப்பையே திரும்பச் சொல்லும் மிகப் பழைய இதழியல் எழுத்து உத்தியை ஒவ்வொரு முறையும் தவறாமல் பயன்படுத்த மட்டும் தெரிகிறது. * * * பத்திரிகைகளையும் மோசமான கவிதைகளை உற்பத்தி செய்பவர்களையும் பொறுத்த வரை, கண்களை அகல விரித்தல் பெண் அழகின் அதிமுக்கிய குணாம்சங்களில் ஒன்று. * * * நேற்று வந்த ‘தினமணி’யில் முதல் பக்கத்தில் சென்னையில் ஆயிரக்கணக்கானோருக்கு சிக்குன் குன்யா என்று ஒரு கட்டுரை. அதிலிருந்து - கொசு உற்பத்தியைத் தடுக்கவும், சிக்குன் குனியா நோய் பரவாமல் தடுக்கவும் இதுவரை சுகாதாரத் துறையினர் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. குறிப்பிடத்தக்கது என்ற சொற்றொடரை நல்ல விதமான பொருளில்தான் பயன்படுத்துவார்கள். எ.கா.: குறிப்பிடத்தக்க முயற்சி, …முன்பே இந்த விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது… ஆனால் தினமணிக்காரர்கள், நோயைத் தடுக்க சுகாதாரத் துறை முயற்சி எடுக்காமல் விட்டதற்குப் பாராட்டுவது போல் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.  செப்டம்பர் 8, 2006 மூன்று காதல் கவிதைகள் அந்தோன் சேகவ் (நம்ம ஆன்டன் செக்கோவ் அல்லது செக்காவ்தான்) எழுதிய ‘மூன்று ஆண்டுக’ளையும் துர்கேனிவ் (டர்ஜெனிவ்) படைத்த ‘மூன்று காதல் கதைக’ளையும் வளர் இளம் பருவத்தில் படித்துக் கற்பனையில் ருஷ்யப் பனியில் நனைந்தவன் நான். இரண்டு படைப்புகளுக்கும் எனது ட்ரிப்யூட்டாக இம்மூன்று காதற்கவிதைகளைச் சமர்ப்பிக்கிறேன். சிலதுக்கு தபூ சங்கர்தான் இன்ஸ்பிரேசன் எனினும் அவர்தம் பெயரை இவை களங்கப்படுத்தா (இவற்றில் நாலை on the fly-ஆக வேர்ட்பிரஸில் இயற்றினேன்). 1 திருமணம் ஆனபிறகு உனக்கு என் ஞாபகம் வருமா எனக் கேட்கிறாய். நான் உன்னையே திருமணம் செய்துகொண்டுவிட்டால்? 2 அழகான பெண்களைப் பார்க்கும்போது உன் ஞாபகம் வருகிறது. உன்னைப் பார்க்கும்போது அழகான பெண்களின் ஞாபகம் வருகிறது. 3 வாழ்க்கையில் ஒரு புத்தகமாவது எழுதிவிடவேண்டும் உன்னைப் பற்றி. * * * மூன்று கவிதைகள் என்று சொன்னதாக ஞாபகம்… 1 தொலைவினால் ஆனது நம் பிரிவு. 2 நான் இல்லாமல் வாழக் கற்றுக்கொள். 3 நேற்று நீ என்னுதட்டில் பதித்த காயம் கண்ணாடியில் தனைக் கண்டு சிவக்கிறது. * * * நான் சொன்ன மூன்று கவிதைகள் இதோ: 1 என்னென்னவோ சொல்கிறதுன்¹ பார்வை. அட வேண்டாமடி², வாயைத் திற கேட்கிறேன் உன் குரலையாவது³. 2 எங்கோ போகும் வழியில் திடீரென எதிர்ப்படும் உன்னை எதிர்பாராமல் திகைக்கிறேன் ஆறாம் வாய்ப்பாடு மறந்தவனாய். 3 நான் மட்டும் இல்லையென்றால் எதைப் பற்றிக் கவிதை எழுதுவாய் என்கிறாய். யாரைப் பற்றி என்று கேள். * * * உதவிக் குறிப்புகள்: 1. ‘கிறது’வுக்கு அடுத்தாற்போல் ‘உன்’ வந்தால் பரம விசேஷம். ‘கிறதுன்’ என்று இணைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிடலாம் பாருங்கள்! 2. காதல் கவிதைகளில் ‘அடி’ எனப்படும் பெண்பாற் பின்னொட்டு வந்தாலும் ஊர்பட்ட விசேஷம்தான். 3. எதையும் முதலிலேயே சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் இருக்காது. அதனால்தான் சில கவிஞர்கள்* கவிதையின் முதல் சொல்லையோ சொற்றொடரையோ அடுத்த சில வரிகளுக்கு ஒளித்து வைத்துக்கொண்டு கடைசி வரியாக ரிலீஸ் பண்ணுகிறார்கள். சில சமயங்களில் இதன் எஃபெக்டுக்குத் தன்னிகரில்லை. தொல்காப்பியத்தை எழுதிய நாஸ்ட்ரடமஸ் நம் காலகட்டத்தை இப்படி முன்கூறியிருக்கிறார்: “முதற்சொல்லினைக் கடையிற்சேர்த்துக் கவிதையாக்குங்காலமாம் ஒன்றுமிருபதூஉம்.” (21-ஐ one and twenty என எழுதுவது மேற்கத்திய வழக்கமாகும். அவர் சொல்வது இருபத்தோராம் நூற்றாண்டை.) * கவிஞர்கள் என்பது பெண் கவிஞர்களையும் குறிக்கும். அவர்களும் மனுச பாசையில்தான் எழுதுவதால். 3a. மேற்சொன்ன உத்தியை முழுக் கவிதைக்கும் செயல்படுத்தி எழுதப்பட்ட எனது வேறொரு கவிதை: பூகம்பம் ‘என்ன கறை சட்டையில்?’ என்றார். ‘வந்ததல்லவா மதியம் லேசாக நில நடுக்கம், கொஞ்சம் சட்டையில் சிந்திவிட்டது அந்த அதிர்ச்சியில் கையில் இருந்த டீ’ என்றேன். இப்போதும் வைத்திருக்கிறேன் அந்தச் சட்டையை தோய்க்காமலே. 4. காதல் கவிதைகள் நிகழ்காலத்தில் (present tense) இருக்க வேண்டும். 5. நபர் 1, நபர் இரண்டை விளித்துப் பேசுவதாக இருக்க வேண்டும். Tense இல்லாமல் எழுதுவது என்றால் கட்டளைத் தொனியில் (imperative) அமைந்திருக்க வேண்டும். இந்தச் சூழலில் ‘அடி’ உத்தியைக் கையாளலாம். 6. மேலும் பல விதிமுறைகளை இப்பதிவில் அடிக்குறிப்பில்லாத கவிதைகளைப் பார்த்துப் புரிந்துகொள்ளலாம். 7. பயிற்சிக்கு: “என்பதால்தானோ என்னவோ”வைப் பயன்படுத்தி ஐந்து வரிக்கு மிகாமல் ஒரு கவிதை எழுதுக. செப்டம்பர் 9, 2006 குரூரமான நகைச்சுவை தயவு செய்து மென்மையான இதயம் கொண்டோர் மேற்கொண்டு படிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தயவு செய்யாமல் மென்மையான இதயம் கொண்டோருக்கும் இந்த வேண்டுகோள் பொருந்தும். * வழக்கமான வலையுலாத்தலில் கண்ணில் பட்டது இந்த limerick ‘அகராதி’. எளிமையான சிந்தனைகளை சந்தத்துடன் நறுக்கென்று எழுதும் இந்தப் பழம்பெரும் கலை அழியாமல் இருப்பது சந்தோசமான விசயம். சைட்டிலிருந்து ஒரு எ.கா.: An antipornography nut Sees commercials as televised smut. He’s complaining today About feminine spray And those diaper ads showing a butt. (Chris Doyle) லிமரிக் என்றதும் எனக்கு முழுசாக நினைவுக்கு வருவது என் கல்லூரி நாட்களில் நான் பாடித் திரிந்த ஒரு மோசமான லிமரிக்: Here lies the amorous Fanny Hicks The scabbard of ten thousand pricks If you want to do her honor Pull out your cock and piss upon her. இதில் நகைச்சுவை அதிகம் இல்லையென்றாலும் எப்படியோ மனதில் தங்கிவிட்டது. அதே போல Harry Graham என்பார் எழுதிய Ruthless Rhymes-ஐயும் கண்டுபிடித்தேன். வகுப்பறையில் நண்பர்களுடன் படித்து அடக்க முடியாமல் சிரித்த லிமரிக்குகள் இவை. சாம்பிள்: Auntie, did you feel no pain Falling from that apple tree? Will you do it, please, again? ‘Cos my friend here did’nt see. - – - Father heard his children scream, So he threw them in the stream, Saying, as he drowned the third, “Children should be seen, not heard!” OEDILF-ல் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகி நகைச்சுவைக் கவிதைகள் எழுதலாம். அது வலையில் பிரசுரிக்கப்படும் தகுதியை சைட்டின் ஆசிரியர் குழு தீர்மானிக்கும். இங்கே நல்ல கவிதைகள் நிறைய இருப்பது வியப்பளிக்கிறது (முன்பே கொடுத்த லிங்க்தான், இருந்தாலும் சுட்டுச் சொற்கள் லிங்க் இல்லாமல் வரக் கூடாதாமே). அப்டேட்: தமிழில் செய்யுள் வடிவமும் (காளமேகம் ஸ்டைல்) ஹைக்கூவும் லிமரிக்கிற்கு நன்றாக ஒத்துழைக்கும். என் முந்தைய மூன்று காதல் கவிதைகளும் கிட்டத்தட்ட free verse லிமரிக் முயற்சிகள்தாம். செப்டம்பர் 17, 2006 விளம்பரத் தமிழ் மோசமான மொழிபெயர்ப்பின் குணாதிசயங்களில் ஒன்று, மொழிபெயர்ப்பைப் பார்த்து மூலத்தை ஊகிக்க முடிவது. ஓர் உதாரணம், சில மாதங்களுக்கு முன் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பார்த்த விளம்பர டைட்டில் - “அழகாக நோக்குங்கள்” அதாவது “Look beautiful”. நம்ப முடியவில்லையா? தமிழ் விளம்பரங்களைப் பெரும்பாலும் படிக்காதவர்களுக்கு ஒரு தகவல்: இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. விளம்பர வாசகங்களை உருவாக்குபவர்கள் ஆங்கிலத்திற்கு மட்டுமே பொருந்துகிற மாதிரி ஒரு ‘காப்பி’யைத் தயார் செய்துவிட்டு எல்லா இந்திய மொழிகளிலும் (“vernacular”) அதே மாதிரி வர வேண்டும் என்று தங்கள் வசமுள்ள மொழிபெயர்ப்பாளர்களிடமோ வெளியே ஒரு மொழிபெயர்ப்பு ஏஜன்சியிடமோ கொடுப்பார்கள். இது பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் தமிழில் மொழிபெயர்க்கப்படும் விளம்பரங்களின் தரத்தை வைத்துப் பார்த்தால் அவர்கள் தங்கள் நிறுவனத்தில் இருக்கும் அமெச்சூர்களை வைத்தே வேலையை முடித்துக்கொள்வார்கள் போல் தெரிகிறது. இன்னொரு உதாரணம் போன வாரக் குமுதத்திலிருந்து: “கவனிக்கப் பெறுங்கள்.” (Get noticed.) மேலே பார்த்த காமெடிக்கு இது எவ்வளவோ மேல் என்றாலும் ‘கவனத்தைக் கவருங்கள்’ என்பது போல எளிமையாக சிந்தித்து மொழிபெயர்ப்பது கடினமான விஷயமாக இருக்கிறது. இது தலைப்புதான். அதற்குக் கீழே வரும் விளக்கத்தைப் படியுங்கள். இட்டாலிக்ஸ் மட்டும் நான் கொடுத்தது. ஒலினா க்ரீம் ப்ளீச் உங்களைப் பளபளப்பாக்க மூன்று வழிகளில் செயல்படுகிறது. அது தேவையற்ற முடிகளை மென்மையான நிறமாக்கி சருமத்தின் நிறத்திற்கேற்ப மாற்றுகிறது. அதன் மாய்சரைசிங் இமோலியன்ட்ஸ், பேபி ஆயில் மற்றும் வைட்டமின் ஈ சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. கூடுதலாக, அதன் மைக்ரோ ஆக்‍ஷன் ஃபார்முலா சருமத்தை மென்மையாகவும் மற்றும் இளமையாக வைத்து இளமையாக்குகிறது. அது ஆக்டிவ் ஆக்சிஜனை வெளியிட்டு சருமத்தை அழகாகவும், புதுப்பொலிவுடனும் வைக்கிறது. பொதுவான மற்றும் ப்ரூட் ஆக்டிவ் வேரியன்ட்களில் இருந்து தேர்ந்தெடுக்கவும் மற்றும் இரண்டாவது பார்வைக்காகப் பார்த்திருக்கவும். இதில் எவ்வளவு ஒருமை-பன்மைக் குழப்பங்கள், வாக்கிய அமைப்புக் குழப்பம், ஆங்கில வாக்கிய அமைப்பு போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன! தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பல விதமாக எதிர்மொழிபெயர்ப்பு (back translation) செய்து பார்த்தும் “இரண்டாவது பார்வைக்காகப் பார்த்திருப்பதன்” பொருளை ஊகிக்க முடியவில்லை! இரண்டாவது பார்வை second look/glance என்று தெரிகிறது. அதற்கு மேல் ‘இறந்த முனை’தான். தமிழைப் படு முரட்டுத்தனமாகக் கையாள்பவர்களிடம் ‘மற்றும்’ என்ற வார்த்தை அடிபட்டு சாகிறது. மேற்கண்ட உதாரணத்தில் ‘மற்றும்’ என்ற சொல்லை மூன்று இடங்களிலும் தவிர்த்திருக்க முடியும். ஆனால் இம்மாதிரி ஆட்கள் ‘மற்றும்’-ஐ வைத்துத்தான் வண்டியோட்டுகிறார்கள். இவர்கள் ‘ஆகியவை’ என்ற சொல்லைக் கோனார் நோட்ஸில் படித்ததோடு சரி. பொதுவாக விளம்பரங்களின் மொழியே ஓவர் பேத்தலாகவும் ஃபார்முலா, ஆக்சிஜன், ஹேலோஜன் என்று ஓவர் பீட்டராகவும் இருக்கும் (என் பர்சனல் ஃபேவரைட் “GermiCheck ஃபார்முலா”). ஆங்கிலமும் தமிழும் ஓரளவாவது தெரிந்திருந்தால்தான் இந்தக் குப்பையைக் கையாள முடியும். தமிழே தகராறு என்றால் கஷ்டம்தான். நான் என் செல்ஃபோன் கம்பெனியின் வாடிக்கையாளர் உதவிப் பிரிவுக்கு ஃபோன் போடும்போதெல்லாம் தமிழில் பேசுவேன். ஆனால் ஏ.டி.எம். போன்ற சென்சிட்டிவான சமாச்சாரங்களுக்கு எனது டீஃபால்ட் மொழி ஆங்கிலம்தான். இவர்களது தமிழ் மொழிபெயர்ப்பை விட ஆங்கிலம் யாருக்குமே எளிதாகப் புரியும். செப்டம்பர் 23, 2006 அமெரிக்காவைப் பார்! அந்தக் காலத்து எழுத்தாளர் சோம.லெ. இலக்குமணச் செட்டியாரின் ‘அமெரிக்காவைப் பார்!’ என்ற புத்தகம் (வெளியீடு: இன்ப நிலையம், சென்னை-4, பிப்ரவரி 1950) பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. சுவாரஸ்யமான நடையும் கருப்பு-வெள்ளைப் படங்களும் நிறைந்த புத்தகம் இது. சும்மா மேய்ந்தபோது தென்பட்ட ஒரு பகுதி பின்வருமாறு: பெண்கள் ஒரு நாட்டில் மக்கள் வாழும் வகையை யறிவதற்குக் குடும்பங்களைப் பற்றிய விவரங்களையும், குடும்பத்தின் சிறந்த உறுப்பினராகிய பெண்களின் நிலையையும் ஆராய்ந்தறிவது இன்றியமையாதது. இந்த நூற்றாண்டில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய மாறுதல் இருபாலருக்கும் இடையேயுள்ள உறவைப் பற்றியதே. இப்போது அமெரிக்க ஆடவரும் பெண்டிரும் ஒருவரோடொருவர் எளிதாகவும் மனவேறுபாடின்றியும் பழகி வருகின்றனர். பஸ் அல்லது ரயிலில், முன் பின் அறியாத ஒரு பெண்ணும் ஓர் ஆணும் அடுத்தடுத்து இருந்து பிரயாணம் செய்ய நேரும்போது, அவர்கள் இருவரும் இனிமையாய்ப் பேசிக்கொள்வது இயல்பு; ஆனால், இது போன்ற நிகழ்ச்சிகளால் மேலும் உறவு கொண்டாட ஒருவர் விரும்புவதாக மற்றவர் கருதுவதில்லை. உடல் வலிமை அமெரிக்க ஆடவரைப் போலவே பெண்டிரும் கலங்காத நாட்டுப்பற்றும், அசைக்க முடியாத ஆண்மையும் அருளும், பொது நன்மைக்குப் பாடுபட வேண்டுமென்ற உறுதிப்பாடான உள்ளமும், அதற்குரிய உடல் வலிமையும் உடையவர்களா யிருக்கின்றனர். ஆடவரைப் போலப் பெண்டிரும் விளையாட்டுக்களில் மிக்க விருப்பமுடையவர்கள். இருபாலரும் தமது முக்கிய அலுவல்களில் விளையாட்டையும் ஒன்றாகக் கருதுகின்றனர். எல்லா விதமான விளையாட்டுகளிலும் பெண்களும் ஈடுபடுகின்றனர். பெரும்பான்மையான அமெரிக்கப் பெண்கள் மோட்டார் கார்களை ஓட்டுகின்றனர்; அமெரிக்காவில் ஆடவர் மோட்டார் கார்கள் ஓட்டும்போதுதான் பெரும்பாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றனவாம்! ஆகாய விமானம் ஓட்டும் வல்லமையுள்ள ஏழாயிரம் அமெரிக்கப் பெண்டிர் இருப்பதும் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. விளையாட்டுக்கு அடுத்த படியாக, அமெரிக்கப் பெண்கள் தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வமுடையவரா யிருக்கின்றனர். சராசரியில் அமெரிக்க ஆடவர் 64 வயதளவும் பெண்டிர் 69 வயதளவும் வாழ்கின்றனர்; ஆடவர் 5 அடி 9 அங்குல உயரமும் பெண்டிர் 5 அடி 4 அங்குல உயரமும் இருக்கின்றனர்; ஆடவர் 159 பவுண்டு நிறையும் பெண்டிர் 132 பவுண்டு நிறையும் உள்ளவர்கள். மணம் அமெரிக்காவில், மணம் செய்துகொண்டே ஆகவேண்டும் என்ற வழக்கமிலை. இதனால், ஆடவரிலும் சரி, பெண்களிலும் சரி, வயது வந்தும் மணமாகாதவர் பல்லாயிரவர் உளர். தத்தம் உரிமைகளை மனைவிக்கோ கணவனுக்கோ விட்டுக் கொடுக்கவும், குடும்பப் பொறுப்பை ஏற்கவும் இவர்கள் விரும்பாததே இந்நிலைக்குக் காரணம். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், குடும்பப் பொறுப்பேற்கக் கணவனைத் தேடும் வழக்கம் அமெரிக்காவில் கிடையாது. இடையே, சில காலம் ஏதாவதொரு வேலையில் பெண்களும் அமருவது முறையாகிவிட்டது. சராசரி 23 வயதில் ஒரு பெண், 25 வயதுள்ள ஓர் இளைஞனைத் திருமணம் செய்துகொள்ளுதலே இங்குள்ள வழக்கம். அமெரிக்காவில் காதல் முறையில் மணம் நடைபெறுகிறது. ஒவ்வொரு பெண்ணும் தனக்கு விருப்பமுள்ள ஆண்மகனோடு பல மாதங்கள் – சிலர் பல ஆண்டுகள் – வரை எல்லாத் துறைகளிலும் கூடிப்பழகி, ஒருவர் மற்றவரின் பழக்கவழக்கம், விருப்பு வெறுப்பு, குற்றங்குறை ஆகியவற்றைத் தெரிந்து சம்மதித்துத்தான் திருமணம் முடித்துக் கொள்ளுகின்றனர். எனவே, மனம் ஒத்தாலன்றிச் செல்வம் அல்லது பதவிக்காகத் திருமணங்கள் அமெரிக்காவில் நடைபெறுவதில்லை. சாதிமத வேறுபாடுகளால் திருமணங்கள் தடைப்படுவதில்லை. காதலித்துத் தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பெண், தன் தாய் தந்தையருக்குத் தெரிவித்தால்தான், அவர்கள் (அன்பளிப்புக்களுடன்) மண வைபவத்துக்கு வருவது வழக்கம். மனம் ஒன்றுபடாவிடில், விவாக ரத்து (Divorce) செய்துகொள்ள இருதிறத்தாருக்கும் உரிமையுண்டு. விவாகரத்து செய்து கொள்ளுபவர்கள் எட்டுப்பேரில் ஒருவர்தான். இவ்வாறு பிரியும்போது, அவர்களில் யாராவது ஒருவர் குழந்தைகளைத் தம்முடன் அழைத்துச் செல்லுவர். குழந்தைகளைத் தாயார் அழைத்துச் செல்லவேண்டுமென்றும், குழந்தைகளைப் பேணும் செலவுக்காக ஒரு தொகையைத் தந்தை சில ஆண்டுகளுக்குக் கொடுக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தார் கட்டளை யிடுவதுமுண்டு. கணவன் இறந்துவிடின் மனைவி மறுமணம் செய்து கொள்ளுவாள். பெரும்பாலும் கணவனை இழந்த பெண்களிடம் பெருஞ் செல்வம் சிக்குவதால், அவர்கள்மீது மற்றப் பெண்கள் பொறாமைப்படுவதும் உண்டு. ஏப்ரல் 16, 2007 ஆண்களுக்கு ரப்பர் கருவி நாள் ஒரு நூல் வலைத்தளத்திலிருந்து பி.டி.எஃப். கோப்புகளை சரமாரியாக டவுன்லோட் செய்து மேய்ந்துகொண்டிருந்தபோது 1937 அக்டோபர் ‘பிரசண்ட விகட’னில் கண்ணில் பட்டது இந்த முத்து. படிப்பதற்க்குக் கடினமா யிருப்பின் க்ளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள். [] அப்போது ஆணுறையை ரப்பர் என்றிருக்கிறார்கள். இப்போது ரப்பர் என்றால் டில்டோ. ஒரு கனெக்சன் இருக்கத்தான் செய்கிறது. ‘பெண்களிடமிருந்து நோய்களை வாங்கிக் கொள்ளாமல் தடுப்பதற்கு’ – பயங்கரம்! மார்ச் 14, 2009 புதுப் பஞ்சாங்கம் Progress Publishers என்ற முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், மீர் பதிப்பகம் உள்ளிட்ட சோவியத் பதிப்பகங்களின் புத்தகங்களை சோவியத் காலத்தில் தமிழகத்தில் விற்றுவந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தற்போது தன் கையிருப்பில் உள்ள ருஷ்யப் புத்தகங்களைத் தொடர்ந்து விற்றும் தாறுமாறாகப் பதிப்பித்தும் வருவது தெரிந்த விஷயம். முன்னேற்றப் பதிப்பகத்தின் ‘ருஷ்யப் புரட்சி 1917' என்ற படக்கதையின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மறுபதிப்பை  ‘சித்திரக்கதை'யில் பார்த்தேன். உள்ளே ஒரு பக்கத்தில் மொண்ணை செவ்வகத்திற்குள் நியூ செஞ்சுரிக்காரர்கள் போட்டிருக்கும் விவரங்களைப் பார்த்தபோது மகா எரிச்சல் ஏற்பட்டது. Progress Publishersஇன் புத்தகப் பிரதிகளை குறைந்தது இருபதாண்டு காலம் லட்சக்கணக்கில் விற்றவர்கள், முதல் பதிப்பை வெளியிட்டோர் Progressive Publishers என்று தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். பெயரை சரியாக எழுதக் கூடவா துப்பில்லை? அந்தப் புத்தகத்தின் காப்பிரைட் தங்களுக்கே உரியது என்ற பொருளில் ‘Copy Right’க்கு நேராக Publisher என்று போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ‘வேதியியலைப் பற்றி 107 கதைக'ளுக்கும் இந்த கதிதான் ஏற்பட்டிருக்கும். அதை வெளியிட்ட மீர் பதிப்பகம் பிராக்ரஸ், ராதுகா போலில்லாமல் இப்போதும் இருக்கிறது. முன்னேற்றப் பதிப்பகத்திற்கு வந்த நிலைமையைப் பாருங்கள்! தரமான உருவாக்கத்தில், பல சமயங்களில் நல்ல மொழிபெயர்ப்பில் வந்த அற்புதமான சிறுவர் நூல்களையும் புஷ்கின், சேகவ், துர்கேனிவ், தல்ஸ்தோய் போன்றோரின் படைப்புகளையும் படித்தவர்களால்/பார்த்தவர்களால் அவற்றை மறக்க முடியுமா? ஒரு நல்ல விஷயத்தை நம்மவர்கள் கையில் சிக்கினால் என்ன ஆகும் என்பதை நியூ செஞ்சுரி புக்ஸ் நிரூபித்துவிட்டது. NCBHக்குத் தொழில் அறிவு துளியாவது இருந்திருந்தால் பெரும்பாலான புத்தகங்களைக் கையிருப்பில் வைத்திருந்து ஏதாவதொரு விதத்தில், கொஞ்சம் கூடுதல் விலையிலான மறுபதிப்புகளாகவாவது கிடைக்கச் செய்திருக்கும். ஆனால் உருப்படியான காரியங்களைச் செய்வதைவிட நம்முடைய முத்திரையைப் பதிப்பது அதிமுக்கியமாகிவிடுகிறது. NCBH கையில் இருந்தது மாபெரும் சொத்து. அதை நாசமாக விட்டதே பெரிய துப்புகெட்டத்தனம். கரையான்களும் இன்ன பிறவும் தின்றது போக மிஞ்சியதை இப்படி ஒப்பேற்றுவது அசிங்கம். இதற்கு பதிலாக ஈசாப், தெனாலி ராமன், பீர்பால் கதைகள் என்று ஓட்டுவது எவ்வளவோ மேல். மார்ச் 26, 2009  கொரட்டூர் கொலை வழக்கு அகதா க்றிஸ்டி என்ற மகத்தான மர்மக் கதாசிரியர் இவ்வளவு காலமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்படாதிருந்த காரணத்தை சமீபத்தில் ஊகித்தேன். காப்பிரைட் போக, நமது மொழிபெயர்ப்பாளர்கள் கைவைத்து சுட்டுக்கொண்டதுதான் காரணமாக இருக்கும். சிட்னி ஷெல்டனைவிட அகதா க்றிஸ்டியை மொழிபெயர்ப்பது கடினம். முயன்ற பலர் அவருடைய மொழிநடை, நகைச்சுவை, பொதுவாகத் தூக்கலாகத் தெரியும் பிரிட்டிஷ் தன்மை, மற்றும் இன்ன பிற மொழிபெயர்க்கவியலாத்தன்மைகள், எல்லாவற்றையும் உணர்ந்து கைவிட்டிருப்பார்கள். ஆனால் இதெல்லாம் மொழிபெயர்ப்பாளர்கள் கவலை. குத்துமதிப்பாளர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் எதுவும் காணப்படாது. இப்போது எழுத்துக்களில் எது இருந்தாலும் அச்சிட்டுப் பின்பக்கம் ஒரு விலையைப் போட்டுவிடலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது போல. உதாரணமாக, கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் என்பவரின் மொழிபெயர்ப்பில் கண்ணதாசன் வெளியீட்டில் அகதா க்றிஸ்டியின் The Hollow என்ற நாவல். முதல் பத்தியைப் படித்தின்புறுக - வார இறுதியின் ஓய்வினையும் பொழுதுபோக்கினையும் நெருங்கிப் புலர்ந்துக் கொண்டிருந்த அந்த வெள்ளிக் கிழமைக் காலையில், கமிஷனர் ஹென்றியின் பரந்து விரிந்த பங்களாவான ‘ஹாலோ’வில் அனைவரும் இன்னும் கொட்டும் பனியின் குளிர் தாக்கத்தால் படுக்கையில் சுருண்டே கிடக்க, தன் நீல விழிகளைப் பட்டென திறந்து, தனக்கே உரிய உடனடி சுறுசுறுப்புடன் மெத்தையிலிருந்துத் துள்ளி எழுந்தார், லூசி ஆங்கட்டேல். நெளிந்து, சோம்பி, குளிரால் வெடவெடத்து, இன்னும் கொஞ்சம் படுத்திருப்போமா என்று படுக்கையைத் திரும்பித் திரும்பிப் பார்த்து – என, எந்த மந்த நடவடிக்கையும் இல்லாமல், தன் பிரத்யேக முத்திரைச் சக்தியோடு கிளம்பினார் லூசி. முக்கியமான ஒரு விஷயம் குறித்து உடனடியாக ஆலோசனை செய்து உரையாட, எழுந்த குழந்தையின் துள்ளல் போன்ற யாராலும் ஈடுகொடுக்க முடியாத ஒரு வேகம் லூசிக்குள் புரண்டது. ஆலோசனைக்கு, நேற்று இரவு ஹாலோ வந்திறங்கியிருந்த இவரின் ஒன்று விட்டு சகோதரி மிக்டே-வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். படுக்கையிலிருந்து இறங்கிய லூசி, இந்த வயதிலும் இன்னும் பளபளப்புடன் மிளிரும் தன் இருதோள்களையும் அசட்டை கலந்து பெருமிதமாய்ப் பார்த்துக் கொண்டு, மிக்டே அறை நோக்கிப் பாய்ந்தார். தன்னுடைய இயல்பான வழக்கப்படி, மிக்டேவுக்கும் தனக்குமான சம்பாஷணையைத் தனது வளமிக்கக் கற்பனைத் திறனால் தன்னுள்ளேயே நிகழ்த்தி, அதற்கு மிக்டே தரும் பதில்களையும் ஊகித்துக் கொண்டு, சம்பாஷணையின் போது எப்படியெல்லாம் கொடிகட்டித் திகழலாம் எனும் திட்டமிடலூடே, மிக்டே அறை வாயிலை அடைந்தார். ஒரு பத்தியில் தனிநபராக ஒரு மொழிப் புரட்சியே நடத்தியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். தெளிவு, தர்க்க ரீதியாக வாக்கிய அமைப்பு, தகுந்த நிறுத்தக்குறிகள், சொலவடைகள் என்று எதையும் மிச்சம் வைக்காமல் கொந்தித் தள்ளியிருக்கிறார் இவர். மூல வடிவமோ எளிமையின் மறுவடிவம். மொழிபெயர்ப்பாளர்தான் வேண்டாத விஷயங்களைச் சேர்த்து செறிவூட்டியிருக்கிறார். Midge என்ற பெயர் மிக்டே என்றே புத்தகம் முழுவதும் வருகிறது. “…!” நிறைய உண்டு. அகதா க்றிஸ்டி ரசிகன் என்ற முறையில் பாதி நாள் கொலைவெறியில் அலைந்துகொண்டிருந்தேன். [] நாவலின் தலைப்பு ‘மன்மதக் கொலை’! கண்ணதாசன் பதிப்பகம் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி நேரடியாக அச்சகத்திற்கு அனுப்பிவிடும் போலிருக்கிறது. அகதா க்றிஸ்டியை மொழிபெயர்ப்பது அசாத்திய காரியமல்ல. ஆனால் செய்பவருக்குத் தொழில் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? இந்த மாதிரி எழுதினால் எந்த மர்மமும் அவிழ வாய்ப்பில்லை. “தனது ஆழ்ந்த நிம்மதியான ஒரு மனோஹரக் காலைத் தூக்கத்திலிருந்து , அதிருப்தியாய் விழித்துக் கொண்டார் மிக்டே.” இப்படியே 424 பக்கம். விலை ரூ. 100. இ.ப.: முன்னுரை ஜூன் 25, 2010  ஈவினிங் நேரத்திலே! அக்டோபர் 1, 1950 குமுதம் இதழில் ‘காங்கேயன்’ எழுதிய ‘ஈவினிங் நேரத்திலே!’ என்ற பாடல் டவுன் பிலோ. அந்தக் காலத்திலேயே ஆங்கிலம் கலந்து எழுத என்ன தைரியம்! ஈவினிங் நேரத்திலே! 'காங்கேயன்' (ஒரு காலேஜ் கன்னியின் காதல்) 'ஈவினிங்' நேரத்திலே-சகியே ஈஸ்டர் விடுமுறையில் கூவம்நதிக்கரையின் 'பார்க்கில்' 'குஷி'யாய் வீற்றிருந்தேன். சிகரெட்டுப் புகையும்-சகியே ஜிம்மென்றடித்ததடி. புகைச் சுருளோட்டம்-பின் னிருந்து புரண்டு வந்ததடி. திரும்பிப் பார்த்தேனடி-க்ளியராய்த்' தெரிய வில்லையடி. விரும்பும் ஓர் உருவம்-புகைக் குளே 'விஸிபிள்' ஆச்சுதடி. எங்கோ பார்த்த முகம்-ஒரு 'யங் லேட்' அங்கு நின்றான் இங்கே வந்தனையோ-என்றே இங்கிதம் பேசலுற்றான். 'கர்லிங்' கிராப் அழகும்-கழுத்தில் கட்டிய 'டை' அழகும் 'மிர்ரர்' அதைப் போலே-மின்னி மிளிரும் 'பேஸ்' அழகும் புகை மணங் கமழும்-கறுவாயின் புன்னகையின் அழகும் மிகைப் படுத்து வானேன்-அவனோடு 'மிக்ஸர்' ஆகிவிட்டேன். வாயிற் புகையினையே-குப்பென்று வானத்தில் ஊதிவிட்டு காயும் உதடசைத்து-அவன் சொன்ன கதையைக் கேளடியே. 'பேப்பர்' மலர் அழகின்-'பேஷனில்' பேதித்து விட்டாயடி 'வேப்பராய்ப்' போகுதடி-என்னாவி வெந்து புழுங்குதடி. 'ஸ்பெக்ட்' விழிகளிலே-என்னை 'எக் ஸ்பெக்ட்' பண்ண வைத்தாய் 'சஸ்பெக்ட்' வேண்டாமடி-உனக்குச் சரணம் என்றானடி. 'பார்க்கிங் டாக்' ஒன்று-எங்கிருந்தோ பாய்ந்து வந்ததடி ஆர்க்குந் தெரியாதடி-அப்பவே 'அப்ஸ்காண்ட்' ஆகிவிட்டான். 'ஹார்ட்டைக்' கவர்ந்து சென்ற-அந்தக் கள்வன் நினைவினில் 'க்லாத் மார்ட்டும்' பிடிக்கவில்லை-'ஹேர் ஆயில்' மணமும் சகிக்கவில்லை. வெள்ளைச் 'சுனோ'வினிலே-என்னமோ வெப்பத்தைக் கண்டேனடி. சள்ளை பிடித்த 'பவ்டர்'-எனக்குச் சஞ்சலந் தந்த தடி. என்ன படித்தாலும்-மூளையில் ஏறுவதில்லையடி. என் மார்க் கெல்லாமே-பரீக்ஷையில் 'டென் மார்க்' காச்சு தடி. 'ரேஷன்' குறைவது போல்-எடையின் 'ரேட்டில்' குறைந்தேனடி. காசம் பிடித்தவன் போல்-தினமும் கரையலுற்றேனடி. 'இன்ஜெக்‍ஷன்' செய்தாலும்-படிப்பு இம்மியும் ஏறவில்லை 'கன் ஜங்ஸனு'ங் கூட-சகியே 'ஹார்ட்டில்' நிற்கவில்லை. 'ஸாரி' என் சகியே-அவனை சந்தித்துத் தீர வேணும் 'மேரி' பண்ண வேணும்-இல்லையேல் வீழ்ந்து மடிய வேணும். ஜூன் 2, 2011 பிரெஞ்சில் ழ இல்லை உலக மொழிகளிலே ழ என்னும் எழுத்தினைக் கொண்ட ஒரே மொழி தமிழேயாம் என்று பள்ளிப் பருவத்தில் படித்திருப்போம். அப்புறம் இந்த ழான் ழாக் ரூசோ, ழான் பால் சார்த்தர், ழாக் ப்ரெவர், ழாக் லக்கான், ழாக் தெரிதா முதலான ழாக்குகளும் ழான்களும் எங்கிருந்து வந்தார்கள்? பிரெஞ்சு மொழியில் அரிச்சுவடி கோர்ஸ் படித்தவர்களுக்குக் கூட (என்னைப் போல) பிரெஞ்சின் J/G ஒலிக்கும் ழ-வுக்கும் தொடர்பில்லை என்று தெரிந்திருக்கும். TV5Asie அலைவரிசையில் கொஞ்சம் பிரெஞ்சைக் கேட்டாலே கூடப் போதும். இது ஷ-வும் ஜ-வும் கலந்த ஒலி. ஆனால் ழ அல்ல. எழுபதுகளிலோ எண்பதுகளிலோ யாரோ செய்த சதியால் இந்த ஒலி  மாற்றப்பட்டிருக்கிறது. பெயர்கள் ழ-வில் தொடங்கும் அபத்தம் உறுத்தத்தான் செய்கிறது. ஆப்பிரிக்கப் பெயர்கள் சில ‘ங்’-இல் தொடங்குவது எனக்கு உறுத்தவில்லை. அவை அப்படித்தான் தொடங்க வேண்டும். அவர்கள் பெயர் அவை. ஆனால் ழாக் லக்கானின் பெயர் ழாக் அல்ல. ஏனென்றால் ழாக் என்பது போங்கு. Jean, Jacques என்ற பெயர்கள் முறையே John, Jack/Jacob ஆகியவற்றின் பிரெஞ்சு வடிவங்கள் என்பதும் யாரும் அறியாத தகவல் அல்ல. Jean-ஐ ஜான் என்றோ ஷான் என்றோ சொன்னால் பிரெஞ்சின் ஜா/ஷா ஒலிக்கு அருகில் வரும். ‘ஷா’ குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் (Sean Connery). என்னைக் கேட்டால் இந்த ஒலியை ‘ஜா’ என்று துணிந்து எழுதலாம். ஆகையினாலே  தமிழ்கூறு நல்லுலகோர் புராதனமானதும் பிழையானதுமான இவ்வொலிபெயர்ப்பு மரபைக் கழற்றிவிட வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். ஜூலை 28, 2007  ஆங்கிலம்வழித் தமிழ் மொழிபெயர்ப்பு இன்று வெளிநாட்டு இலக்கியப் படைப்புகளில் பலதும் ஆங்கிலம்வழித் தமிழ் மொழிபெயர்ப்பில் கிடைக்கின்றன. காப்ரியல் கார்சியா மார்க்கஸ், இட்டாலோ கால்வினோ, ஆல்பேர் காம்யு, எல்லோரையும் வாழவைக்கும் காஃப்கா என்று பலர் தமிழாக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்புகளின் புண்ணியத்தில். இதன் பக்கவிளைவு: மார்க்கஸையோ காஃப்காவையோ தமிழில் படித்தால் ஆங்கிலச் சொற்கள், வழக்குகள், சொற்றொடர்கள் என்று ஆங்கில watermark தெரிகிறது. என்னைப் போன்ற சிலருக்கு (அல்லது பலருக்கு) தமிழ் மொழிபெயர்ப்பில் பிற மொழிப் படைப்புகளைப் படிப்பதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இந்த அவநம்பிக்கைக்குக் காரணம், வெளிநாட்டு மொழிபெயர்ப்பாளர்கள் நேரடியாக மூலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கிறார்கள். நம்மவர்கள் சம்பந்தப்பட்ட மொழி தெரியாமல் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத் தங்களுக்குப் புரிந்த வரை மொழிபெயர்த்து வைக்கிறார்கள்.* இந்த second hand மொழிபெயர்ப்பில் என்ன ஆபத்தென்றால், ஒன்று: நம்மாட்கள் மூல மொழியிலிருந்து பெயர்க்காமல் வேறொன்றிலிருந்து பெயர்த்தெடுக்கிறார்கள், இரண்டு: அவர்களுக்குப் போதுமான ஆங்கில அறிவு இல்லை. உதாரணமாக, தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளை ஆங்கிலத்திற்குப் பலர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. வார்த்தைகள் மாறி, சமயத்தில் பொருளும் தொனியும் மாறுகின்றன. அங்கீகாரம், விமர்சனங்கள், மதிப்புரைகள் ஆகியவற்றை வைத்துத்தான் எந்த மொழிபெயர்ப்பு துல்லியமானது, தரமானது என்று தெரிந்துகொள்ள முடிகிறது. நேரடியாக மூலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு வரும் படைப்புகளுக்கே இந்த கதி என்றால் சிறுபத்திரிகைகளையும் மற்ற சுமாரான மொழிபெயர்ப்புகளையும் மட்டுமே படித்துவிட்டு ஐரோப்பியப் பெயர்களை எடுத்து வீசும் நம்மவர்கள் அவற்றை மூலத்திலிருந்து அல்லாமல் ஆங்கிலத்திலிருந்தே மொழிபெயர்க்கிறார்கள். ஏமாறுபவர்கள் வாசகர்கள்தான். சமீப காலத்தில் எந்தச் சிறுபத்திரிகையில் வந்த எந்த மொழிபெயர்ப்பை எடுத்துப் பார்த்தாலும் அதில் ஆங்கிலம்தான் தலைவிரித்தாடுகிறது. பத்திரிகையின் ஆசிரியர் குழு என்னத்தைப் பிடுங்கிக்கொண்டிருக்கிறது என்ற கேள்வியே நம் முன் எழுகிறது. பலர் அடிப்படை ஆங்கில இலக்கணமும் மிக சாதாரணமாகப் புழக்கத்தில் இருக்கும் ஆங்கில வழக்குகளும் சொற்றொடர்களும் கூடத் தெரியாமல் வாடுகிறார்கள் (தாங்கள் வாடுவது அவர்களுக்குத் தெரியவில்லை). மொழிபெயர்க்கும் அளவிற்குப் போதுமான ஆங்கிலம் தெரியாவிட்டால் பிரச்சினையில்லை. ஆனால் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது என்று தீர்மானித்த பின் அந்த அறிவை வளர்த்துக்கொள்வது மொழிபெயர்ப்பாளருக்குள்ள பொறுப்பு. நமக்குத் தெரிந்தது தாராளமாகப் போதும், அதான் எல்லாம் டிக்‍ஷ்னரியில் இருக்கிறதே என்ற இவர்களது பொறுப்பில்லாத்தனத்தால் நஷ்டப்படுவது இலக்கியமும் மொழியும்தான். மிகக் கடுமையான, மிக அன்னியமான தமிழ் நடையில் இருக்கும் நாராசத்தை, உலக இலக்கியத்தைப் படித்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால் வாசகர்கள் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்புகளைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற நிஜமான ஆர்வம் கொண்ட ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ன செய்வார்? தான் மொழிபெயர்க்க விரும்பும் படைப்பு எந்த மொழியில் இருக்கிறதோ அந்த மொழி தனக்குத் தெரியவில்லை என்றால் அதைக் கற்றுக்கொள்வான் – அது ஆங்கிலமாக இருந்தாலும் சரி, ருஷ்ய மொழியாக இருந்தாலும் சரி. நானும் லத்தீன் அமெரிக்க இலக்கியமெல்லாம் படிக்கிறவன்தான், நானும் இலக்கியத்தில் கொம்பன்தான் என்று காட்டிக்கொள்ள விரும்புபவர்கள்தான் தமிழ் மொழிபெயர்ப்பில் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. * * * பாப்லோ நெரூடாவின் கவிதைகளை மொழிபெயர்த்து ‘துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்’ என்ற தொகுப்பைக் கொண்டுவந்த ஆ.இரா. வேங்கடாசலபதி, முன்னுரையின் கடைசிப் பகுதியில் இப்படி எழுதுகிறார்: ஸ்பானிய மொழியைக் கற்று நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கும் பொற்காலம் ஒரு நாள் வரலாம். அதுவரை ஆங்கிலவழி நிகழும் என் மொழிபெயர்ப்புகள் போன்ற அரைகுறைகளைத் தமிழ் வாசகர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய மொழிபெயர்ப்பாளரின் தமிழாக்கம் ஒன்றில் இந்த மாதிரி ஒரு வாக்கியம்: “அவன் சென்ற மாதம்தான் தன் மாமாவை இழந்திருந்தான்.” Had lost என்பது போன்ற ஒரு சொற்றொடர் “இழந்திருந்தான்” என்று மூல மொழியின் வாடையோடு வந்திருக்கிறது. அவர் ஆங்கிலத்திலிருந்து பெயர்க்கவில்லை, ஆங்கிலம் போன்ற வாக்கிய அமைப்பு கொண்ட இன்னொரு மொழியிலிருந்துதான் எழுதியிருக்கிறார். ஆனால் அவரது தமிழாக்கத்தில் இப்படிப் பல பகுதிகள் இயல்பான தமிழில் வரவில்லை. அவரளவுக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தால் கூடப் பரவாயில்லை என்பதே நம் நிலைமை. இந்த மாதிரி வேலையை ஆங்கில மொழிபெயர்ப்பாளர் யாராவது செய்திருந்தால் ஒருத்தர் விடாமல் எல்லோரும் உரித்தெடுத்துவிடுவார்கள். நம் சூழலுக்கு, ஆங்கிலமல்லாத ஒரு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்ய அந்த மொழியைக் கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றால் பல படைப்புகள் மொழிபெயர்க்கப்படாமலே போக வாய்ப்பிருக்கிறது. நேரடியாக மூல மொழியிலிருந்து தமிழாக்கும் “பொற்காலம்” வரும் வரை நம்மவர்கள் குறைந்தது ஆங்கிலத்தையாவது கற்றுக்கொள்ள வேண்டும். * நானும் சில வருடங்களுக்கு முன்பு காஃப்கா கதைகளையும் பெர்ட்டோல்ட் பிரெக்த்தின் கவிதைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறேன். இப்போதும் மொழிபெயர்க்க மனசாட்சி தடுக்கிறது. டிசம்பர் 28, 2006  கவிதை உத்தி நெ. 1 பிதற்றலான உரைநடையைக் கவிதையாக்க நம் கவிஞர்கள் கையாளும் ஒரு உத்தியைப் பற்றிப் பயனுள்ள தகவல் ஒன்று இன்று வந்த டெக்கான் க்ரானிக்கிளின் இலவச இணைப்பில் கிடைத்தது. வாக்கிய/வாசக அமைப்பை உல்டா ஆக்கும் உத்தியைத்தான் சொல்கிறேன். என்னையே மேற்கோள் காட்டிக்கொண்டால் - எதையும் முதலிலேயே சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் இருக்காது. அதனால்தான் சில கவிஞர்கள் கவிதையின் முதல் சொல்லையோ சொற்றொடரையோ அடுத்த சில வரிகளுக்கு ஒளித்து வைத்துக்கொண்டு கடைசி வரியாக ரிலீஸ் பண்ணுகிறார்கள். இதற்கு anastrophe என்று பெயராம் (தமிழ் இலக்கணத்திலும் இதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டும்). விளக்கம்: Inversion of the normal syntactic order of words. For example: “To market went she.” அப்படியாயின் நம் கவிஞர்களில் பலர் poets அல்லர், anastrophists. குறிப்புகள்: » அனாஸ்ட்ரஃபிக்கு சில உதாரணங்கள் என் மூன்று காதல் கவிதைகளில். » கவிதையில் வாக்கிய அமைப்பை மாற்றுவது தவறு என்று நான் சொல்லவில்லை. அதுதான் கவிதை நடை என்றும் கவித்துவம் என்றும் நம்பிக்கொண்டு அதை மட்டுமே வைத்துக் கவிதை எழுதுவதே தமிழ் அனாஸ்ட்ராஃபி. பிப்ரவரி 25, 2007  அபத்த மொழி கல்லூரி நாட்களில், Waiting for Godot என்ற (அபத்த) நாடகத்தை எழுதிய பிரிட்டிஷ் எழுத்தாளரான சாமுவல் பெக்கட்டின் நாடகங்களை விட நாவல்களும் சிறுகதைகளும் என்னை அதிகம் கவர்ந்தன. காரணம் அவரது மொழிநடை. லேசில் புரியாது. கவிதை போல் இருக்கும். இசைக்குரிய ஒரு ரிதம் இருக்கும். உரக்கப் படித்தால் சத்தம் நன்றாக இருக்கும். இந்த அம்சங்களும் அவரது முதன்மைப் பாத்திரத்தை impersonal-ஆக ஆக்கிவிடுகின்றன. மொத்தத்தில் மொழியைக் கையாள்வதில் அவருக்கு இருந்த அபரிமிதத் திறமையும் நகைச்சுவையும் இந்தப் படைப்புகளில் வெளிப்படுகின்றன. அவரது Fizzles என்ற உரைநடைத் துண்டுகளில் எட்டாவது துண்டின் தொடக்க வரிகள் இவை: For to end yet again skull alone in a dark place pent bowed on a board to begin. Long thus to begin till the place fades followed by the board long after. For to end yet again skull alone in the dark void no neck no face just the box last place of all in the dark the void. Place of remains where once used to gleam in the dark on and off used to glimmer a remain. Remains of the days of the light of day never light so faint as theirs so pale. Thus then the skull makes to glimmer again in lieu of going out. முழுசாகப் படித்ததில்லை. ஆனால் சுமார் பத்து வருடங்களுக்கு முன் இந்தப் புத்தகத்தை சும்மா மேய்ந்ததில் “For to end yet again skull alone in a dark place” என்ற வார்த்தைகள் மட்டும் எனக்கு மறக்கவே இல்லை. பெக்கட்டின் உரைநடைப் படைப்புகளில் Molloy என்ற அற்புதமான நாவலையும் The End என்ற நல்ல சிறுகதையையும் மட்டும் படித்திருக்கிறேன். பெக்கட் Ulysses என்ற பயங்கரமான புத்தகத்தை எழுதிய ஜேம்ஸ் ஜாய்ஸுக்கு மாணவர் போல் இருந்தார். யுலிசிஸ், ஃபினெகன்ஸ் வேக் போன்ற நாவல்களில் ஜாய்ஸ் கையாண்ட நடையின் தாக்கத்தாலோ என்னவோ, பெக்கட்டும் ‘வெய்ட்டிங் ஃபார் கொடோ’ போன்ற நாடகங்களில் சில சமயம் நான்சென்ஸ் மாதிரியும் சில இடங்களில் லத்தீன் மாதிரியும் தெரியும் சொற்களையும் சொற்றொடர்களையும் பயன்படுத்தினார். ‘யுலிசிஸ்’ பெருநாவலிலிருந்து ஓர் உதாரணம்: They came down the steps from Leahy’s terrace prudently, Frauenzimmer: and down the shelving shore flabbily, their splayed feet sinking in the silted sand. Like me, like Algy, coming down to our mighty mother. Number one swung lourdily her midwife’s bag, the other’s gamp poked in the beach. From the liberties, out for the day. Mrs Florence MacCabe, relict of the late Patk MacCabe, deeply lamented, of Bride Street. One of her sisterhood lugged me squealing into life. Creation from nothing. What has she in the bag? A misbirth with a trailing navelcord, hushed in ruddy wool. The cords of all link back, strandentwining cable of all flesh. That is why mystic monks. Will you be as gods? Gaze in your omphalos. Hello! Kinch here. Put me on to Edenville. Aleph, alpha: nought, nought, one. இருவரின் மொழிநடையிலும் ஒற்றுமையைப் பார்க்கலாம் (ஜாய்ஸ் எழுதிய எதையும் நான் படித்ததில்லை). பெக்கட்டைத் திரும்பிப் பார்த்து ரொம்ப காலமாகிவிட்டது. அவரை நினைவுபடுத்தியது எனக்கு வந்த சில குப்பை மின்னஞ்சல்களின் தானியங்கி ‘மொழிநடை’. பெக்கட்டும் அவரைப் போன்றவர்களும் எழுதியதை இன்றைய spam அனுப்புநர்கள் மென்பொருள் உதவியுடன் அனாயாசமாக உருவாக்குகிறார்கள். இரண்டு பேரின் நடையையும் கலக்கி உருவாக்கியது போல் ஒரு நடை … (ஃபார்மேட்டிங் நான் கஷ்டப்பட்டு செய்தது) Upset market lose becomes mentian complient hes. Taxes doesnt complexity judged swap existing ibmsuse forth. Happy fedora amd commercial closer production patch? Glass nigel technical strategist! Heck quotpoeple tabsquot nonsense poeple aka linforcer rick? Philosophy towards as return carriages paragraphs commas colons? Damage cumulative hotfixes recover! Rethinking cagily tycoon herald tribune orlando ayala foreign. Usersquot deadline delivering, barber gone stumped therefore. Futur hightech reacting hrhrhr, jay rosen heavy, few! Little niche learned quotis, usersquot deadline delivering. Coded wcs perform suggests hurts internet pushing. Tips inbox scripts, bc main log create newscreate! Wtf export importable zonequot? Committing, text looks slogan unskilled copywriter. இரண்டும் ஒன்று என்று சொல்ல வரவில்லை. குப்பை அஞ்சல் போன்ற ஒரு விஷயம் சாமுவல் பெக்கட்டையும் ஜேம்ஸ் ஜாய்ஸையும் நினைவூட்டும் பியூட்டியைத்தான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். குப்பை போடுபவர்களிடம் காணப்படும் இன்னொரு சுவாரஸ்யமான ட்ரெண்ட், இலவசமாகக் கிடைக்கும் பழைய ஆங்கில இலக்கியப் படைப்புகளில் கொஞ்சம் உருவியெடுத்துக் குப்பைக்கு முலாம் பூசுவது. ஜேன் ஆஸ்டனின் Pride and Prejudice, Emma ஆகிய புகழ்பெற்ற நாவல்களிலிருந்து சில பத்திகள் என் ஜிமெயிலின் ஸ்பாம் ஃபோல்டரில் கிடந்தன. முதலில் கன்னாபின்னாவென்று வெட்டியெடுத்த வரிகள். கீழே விளம்பரம். அதற்குக் கீழே மீண்டும் கண்டபடி கத்தரித்து அள்ளிப்போட்ட துண்டுகள். எலிசபெத் பென்னட்டோ மிஸ்டர் நைட்லியோ ஒரு வாக்கியத்தையும் முழுசாகப் பேச முடியாது. குப்பைக்காரர்கள் ஜேன் ஆஸ்டனின் உரைநடையை சாமுவல் பெக்கட்டின் உரைநடையைப் போல் மாற்றிய வேடிக்கை… “Nor, if you were, could I ever bear to part with you, my Harriet. You Emma spared no exertions to maintain this happier flow of ideas, and h Soon afterwards Mr. Elton quitted them, and she could not but do him t “Pray, Mr. Knightley,” said Emma, who had been smiling to herself thro No, upon no account in the world, Mr. Weston; I am much obliged to yo “Never, madam,” cried he, affronted in his turn: “never, I assure you. நிற்க. இந்தக் கோணத்தில் பார்க்கும்போது தமிழ் ஸ்பாம் அவசியமான ஒரு தீமை என்று தோன்றுகிறது. பழைய இலக்கியங்களை சாஃப்ட்வேரை வைத்துக் குதற வேண்டிய அவசியம் இல்லை. இன்று சிறுபத்திரிகைகளில் வரும் கதைகளையும் பின்நவீனத்துவ மோஸ்தர் கவிதைகளையும் அப்படியே எடுத்துப் போடலாம். எங்கோ ஆரம்பித்து இங்கே வந்து முடிய வேண்டும் என்று இருக்கிறது இந்தப் பதிவு. மே 25, 2007  சுட்டிகள் மையநீரோட்டம் - வலைப்பதிவு அழகிய படங்களுடன் கூடியது - வெகுஜன கலைக்கான வலைத்தளம் ட்விட்டர்