[] [] நூல் : முதல் தளிர்  ஆசிரியர் : கவிமலர் சரண்யா  மின்னஞ்சல் : Saransaranya2211@gmail.com  வகை : கவிதைகள்  அட்டைப்படம் : லெனின் குருசாமி  மின்னஞ்சல் : guruleninn@gmail.com    மின்னூலாக்கம் :   அ.ஷேக் அலாவுதீன்    தமிழ் இ சர்வீஸ், மின்னஞ்சல் : tamileservice17@gmail.com     வெளியீடு :   FreeTamilEbooks.com   உரிமை :   Creative Commons Attribution -ShareAlike ( யாரும் பகிரலாம், விற்பனை செய்யலாம்)                   பொருளடக்கம் ஆசிரியர் குறிப்பு 6  முன்னுரை 7  என் முதல் கவிதை..! 8  எனக்காய் 9  நீ மட்டும் 10  என் நாட்குறிப்பு 11  நிலவும் அவனும் 12  நீயின்றி 14  உனக்கே உனக்காய் 15  பேருந்துப் பயணம் 16  என் தோழி 18  சில கணங்கள் 20  என் வண்ணத்துப் பூச்சி 21  விலாசம் 22  காத்திருப்பு.. 23  இமைகளிடம் கூறிவிடு..! 24  நீயின்றி 25  பிறந்தநாள் வாழ்த்துக்கள் 26  அன்புத் தோழியே 28  நீயின்றி 29  பெண்மை 31  பிறந்தநாள் வாழ்த்துக்கள் 32  கலைகள் 34  மனித மனம் 35  நெகிழும் நினைவுகள் 36  பிரிவு 37  நினைவுகளில் நீ..! 38  நினைவுகளைத் தொலைத்தேன்..! 39  இதயமெனும் புத்தகம்..! 40  என்னவள் 41  உன்னைக் கண்ட நொடி..! 42  உன் நினைவோடு..! 43  பேச நினைத்தேன்,.. 44  பிறப்பு 45  பிரிவு 46  மௌனம் 47  நிலவு 48  இதுவா சுதந்திரம்..? 49  சந்திப்பு 52  அவள் 53  இன்றைய நிலை 54  குற்றப் பத்திரிக்கை..! 56  சொற்கள் 58  இதயத்தின் நிசப்தம் 59  உன்னை தேடி 60  ஓர் மழைநாளில் நான் 61  ஓர் காலை நேரம் 62  நினைவுகளின் ஆழம் 63  அவள் 64  உன்னில் நீ 65  பெண்மைக்கோர் வழிவிடு 66  அவள் 67  உறக்கம் 68  சிதைக்கப்பட்ட என் கனவுகள் 69  வலிமை இழந்தேன்.. 70  உடைந்த கணங்கள் 71  கல்லறையின் காலடியில் 72  இரவில் ஓர் நாள் 73  தொழிலாளி 74  முகமூடி 75  என்னைத் தேடி 76  உணர்வுகள் 77  எங்கே என் அன்னை 78  என்னை மறந்த நொடி 79  அன்னை 80  அன்பு 81  கற்றுத் தந்த வாழ்க்கை 82  ஆறாத காயங்கள் 84    ஆசிரியர் குறிப்பு      எனக்கு சிறுவயதிலிருந்தே தமிழ்பற்று அதிகம். தமிழ் கலை விழாக்களில் பல நிகழ்வுகளில் பங்கேற்று பரிசுகளை எனதாக்கியுள்ளேன். கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒரு கலை. வாழ்வின் சாராம்சத்தை எழுத்துகளின் துணையுடன் தமிழ் உலகுக்கு படைக்க விரும்புகிறேன்... “என்னால் முடிந்ததை தமிழுக்கு செய்கிறேன்”..., “என்னை தமிழுடனே வாழ வைப்பாள் என் தமிழன்னை என்று”..! என் திறமைகளையும், படைப்பாற்றல்களையும் வெளிக்கொணற இந்த தளம் எனும் தமிழ்க் கடலில் உறங்குகிறேன்... தமிழின் மடியில் இறக்கும் வரை வாழ ஆசை... காலம் கற்றுக் கொடுத்த அனுபவங்களின் முகில்கள் என் அன்றாட வானம்பாடியாய் இருப்பதாய் எண்ணி வார்த்தைகள் வடிக்கும் காகிதக்காரி..! என் அனுபவப் பயணங்களில் சேமித்த விதைகளை அள்ளிப் பூசிட எண்ணினேன் அனைவர் உள்ளமும் வண்ண மலர்களாய் விரிந்திட..!               முன்னுரை சிறுகச் சிறுக சேர்த்த என் சிற்றிளங்காவியத்தில்.., ஒற்றைத் துளியதனை தெளிக்க நினைத்ததன் விளைவு..! என் உணர்வுகளின் சமுத்திரத்தில்.., என் நட்பு வட்டத்தை உரையாட அழைக்க நினைத்ததன் விளைவு..! மாய உலகின் கனாச்சித்திர புல்வெளிகளில் புல்லாங்குழல் இசை ரசிக்க புதுயுகம் கேட்கும் கானல்நீராய் என் சுற்றுவட்டத்திற்கு அழைப்பு விடுத்ததன் விளைவு...! பல விபத்துகளின் இடையில்., உயிர்தின்ற இதயத்திற்கு.., வார்த்தைகளோடு ஆறுதலாய்.., வாசகரின் நல்மொழி வினவ எண்ணியதன் விளைவு..! என் "முதல் தளிர்"..! 'வேரில் பழுத்த பலா'வாய்.., உங்கள் பன்னிற கருத்துத் துளிகளோடு தளிர்க்க நினைக்கிறது என் "முதல் தளிர்"..!           என் முதல் கவிதை..! முதல்முறை என் பேனா அழைத்தது..., என்னை உன் கனவுகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று..! காயம் மட்டுமே பழகிப் போன பாலைவனத்தில்.., எழுத்துக்களின் சரீரம் முதலாய் பக்குவப்படுத்தியது..! யாருமற்ற என் பொழுதுகளில், கரிசக்காட்டு குயிலினமாய்.., நினைவுக்கவிபாடும் என் "எழுதுகோல்"..! மௌனமாய் உருவாக்க நினைத்தேன் ஒரு சரித்திரம்..! வந்து நின்றது என் வெள்ளைக் காகிதத்தில் கொள்ளை நிறக் கனவுகளாய்..! அனைவர் உள்ளத்திலும் அள்ளிப் பூசிட எண்ணினேன்.., பட்டாம்பூச்சியின் வண்ணங்களாய்..! தனிமையை நான் அதிகம் நேசித்ததன் தருணங்கள்.., இன்று என் சிறகுகளில் வண்ணத்திரவியங்கள்..! இன்னும் நேசிக்கிறேன்..., என் வண்ணங்கள் கேள்விகளாய் மாறும்வரை..!       எனக்காய் சில கணங்கள் எனக்காய் வேண்டும்..., என்னை நானே ஒருமுறை பார்த்துக் கொள்ள..! வெற்றுப் புன்னகையின் விரிசல்களில் பட்டுப் போன தென்றலாய் சில கணங்கள்..! காற்றின் ஊமை மொழிகளில் கரைந்து போன மூங்கில்காட்டு உரசொலியாய் சில கணங்கள்..! நினைவின் அலைகள் நெருஞ்சிமுட்களாய் மோத.., காலத்தின் கைதியாய் தனிமைச் சிறையில் நான்..!                   நீ மட்டும் என்னவனே.., உன் இமைகளோடு சேர்ந்து தொலைந்ததடா என் இதயமும்..! என் அன்றாட பொழுதுகள் நீயின்றி அடம்பிடிக்கும்.., மழலையின் பிடிவாதமாய்..! கனவுகளில் உறக்கங்கள் வியாபித்து நின்றேன்.., என் ஒவ்வொரு நொடிகளிலும், என்னுள் படர்ந்து கொண்டிருக்கும் உன்னைக் காண...! என் ஒற்றைநொடி உறக்கங்களிலும் உன் முகம் தேடுகிறேன்.., பட்டாம் பூச்சியாய் படபடக்கவில்லை.., பட்டமாய் மனமும் பறக்கவில்லை.., ஆழமாய் சுவாசம் மட்டும்   என் கருவிழிக்குள் நீ நின்றதும்..!               என் நாட்குறிப்பு என் நாட்குறிப்பின் பக்கங்களை மெதுவாக புரட்டுகிறேன்,... சற்றே தொலைந்து கிடைத்ததன் சந்தோசத்தை உணர்வதைப் போல..! உன் உருவத்தை காணாமல்.., உன் பெயரில் மகிழ்வை உணர்ந்த நொடிகளும்...! உன்னுடன் உரையாட ஆசைப்படுவதை.., என் விழிகளும் உன்னுடன் சொல்ல முடியா தருணங்களும்...! உன் எண்ணங்களில்.., சற்றே தொலைந்திடும் என் ஞாபகங்களை.., திரும்ப நினைவுறுத்தும் நிலைகளும்..! உன்னை மட்டுமே நினைக்கும் என் இதயத்தில்..,ஒப்புக்கொள்ள மறுக்கும் கணங்களும்..! உன் வார்த்தைகளுக்காக வாசகரைப்போல்.., காத்துக்கொண்டிருக்கும் என் எதிர்பார்ப்புகளும்..! உன் விமர்சனங்களை கேட்க மட்டுமே நினைத்து.., உறங்காத ஒவ்வொரு இரவுகளும்..! ஒவ்வொரு நாட்களும் உன் முகம் காண நினைத்து.., மனதுள் மகிழ்கின்ற மணித்துளிகளும்..! உன்னை நேரில் சந்திக்க தைரியமற்று .., கனவில்காண எண்ணும் பொழுதுகளும்..! ., இவைகளோடு பயணித்துக்கொண்டு தான் சென்றது.., என் நாட்களும்...! என்றாலும்..,இது கனவன்று..,இன்று நனவாகிறது..பக்கங்களை புரட்டுகையில்.., என் நாட்குறிப்பின் பக்கங்கள் உயிர்பெற்றது..!             நிலவும் அவனும் ஒவ்வொரு பிறைநிலவிலும் உன் நினைவுகள்..! அன்றாட உரையாடல்கள்.., இமைகளின் எதிரில் விலக மறுக்கிறது..! நீயும் நானும் ஒருமித்து பயணித்த நாட்களில்.., நிலவின் புன்னகையும் சுடராய் பிரகாசித்தது..! இன்று.., நான் மட்டும் பயணிக்கிறேன்.., பாதைகள் அறியாமல்..,கார்மேகக் கூட்டங்களுடன்..! உன் வரவை எதிர்நோக்கியே நகர்கிறது.., என் பாதைகளின் தேடல்..! நிழலாயேனும் நீ இல்லை,இருந்தும் பயணிக்கிறேன்.., நீ அளித்துச் சென்ற நம்பிக்கையில்..! பாதைகள் அறியாமல் பயணிக்கிறேன்.., உன் நினைவுகளின் நம்பிக்கையில்..! அன்றாட நிலவோ உன் நினைவுகளை எழுப்புகிறது..! துயிலும் முன்னர்..! 'என்னவள் என் நினைவை பத்திரப்படுத்தி வைத்துள்ளாளா?' என்ற உன் வினவலுக்கு பதில் வினவி..! என்னென்று நான் கூற..? நொடிப்பொழுதும் மறையாத உன் நினைவலையின் வேகத்தையா? அல்லது.., என் காத்திருப்பு உன் வருகை கணங்கள் வரை நீளும் என்பதையா? உன் புன்னகையில் நான் புதைந்துள்ளேன் என்றா? உன் இடைவெளியால் என் வினாடிகள் யுகமாய் உருமாறியதையா? அதற்குள் விடிகிறது பொழுது..! அது என் யோசனைகளுக்கும் நிறைவு..! மீண்டும் காத்திருக்கிறேன் பிறைநிலவுக்காய்.., என்னவனின் நினைவுகளில் சற்றே நனைய..! என் காலங்கள் கடந்து கொண்டுதான் செல்கிறது.., நினைவுகளோடும்..,இரவில் மலரும் நிலவுடனும்..! 'உன் வருகைதான் வேண்டுமென்பதில்லை..!' நிலவோடு, உன் புன்னகையும் என்னில் பத்திரம்..!                                     நீயின்றி சிலகணங்களுடன் போராடிப் பார்க்கிறேன்..., அவை உன் சாயல்களற்ற பொழுதுகள்..! என் இருட்டறைச் சிறு ஒளியாய் உன் பிம்பம்..! என் வெள்ளைக் காகிதத்தில் கொள்ளை நிற கனவுகள் நீ..! பிரிவின் சுமைகளுக்கு பிரசவம் இல்லை.., ஆம்..! பிணமாய் மாறும் வரை என் இதயம் சுமக்கும் உன்னை..!                                       உனக்கே உனக்காய் ஆயுள் வரை உன் இமைகளின் செல்களுக்குள் ஒளிந்திட ஆசை.., உன்னுடனான என் கணங்களை அர்த்தமானதாக்க..! உன் ஒற்றைவிழிப் பார்வையும் உணர்த்திவிடும்.., ஒட்டுமொத்த அன்பை.., உன் பயணங்களில் நிழலாய் பின்தொடர நினைக்கும் என் உள்ளம்.., நீயற்ற என் நொடிப் பொழுதுகளில் மரணத்தின் வாயில்களுடன் சற்றே உரையாடி வரும் என் மனம்..! உன் நினைவுகளின் மீட்டல்கள்.., கழுத்தை நெறிக்கையில்.., அன்னையைத் தேடும் இளம்பிள்ளையாய்..., கட்டிக் கதறிட நினைத்திடும் என் மனம்..! உன்னுடன் கடந்திடவே என் நொடிகளும் தவமிருக்கும்..!, உன் தோளில் சாய்ந்து சாகவே   இறப்பை கூட இனாமாய் கேட்கிறேன் ...! முடிந்தால் தந்துவிடு.., என் பிறவிப் பயனை அடைந்திடுவேன்..!                         பேருந்துப் பயணம் விரையும் ஒலியிலும் ஒரு நிசப்தம்...,   முதலில் உரையாடலை துவங்குவது நீயா நானா என்ற வினவலா?   இல்லை வார்த்தைகள் உன்னை கண்டதும் ஒளிந்து கொண்டதன் விரக்தியா?   சற்று நேரத்தில் நம் ஒன்றான பயணம் இருவேறு சாலைகளில் என்ற வருத்தமா?   அல்லது நீ வரும்வரை காத்திருக்கும் என் இமைகள் புன்னகையின் பொழுதுகளை தொலைத்துவிடும் தோரணையிலா?   என் மனதும் கணக்கிறது..,   நீண்டநாட்கள் பெய்து ஓய்ந்த மழைவானம் இன்று சட்டென தூரமாகிறது..!   ஒன்றாய் நகரும் கார்மேகக் கூட்டம் இன்று தனித்தனியாய் சிதறிப்போகிறது...!   இரட்டைத்தண்டவாளமாய் நாம் நகர...,   மனதோ ஒற்றையடிப்பாதையாய்...   உன் விழியின் ஒற்றைப் பார்வைகள்,   என்னோடு வந்துவிடு என உணர்த்த..,   இதழ்கள் மட்டும் ஊமை நாடகமாய் அரங்கேர,   வழியனுப்ப வந்த உன் கண்கள் சற்றே உன்னை மீறியும் இமைகளை விட்டு பொங்க..,   நான் பார்க்கவில்லை என நினைத்து துடைத்துக்கொள்ள..,   உன் உணர்வுகளை ஒரு குழந்தையாய் தூரத்தில் இரசித்துக் கொண்டிருந்தேன்...!   ரயில் கிளம்ப ,   கண்ணீரை ஒளித்து,   வெற்றுப் புன்னகையில் மனமில்லா மனதோடு வழியனுப்பும்,   உன் அன்பிற்க்கு நான் மழலையாய்   மகிழ்ந்திடும் தருணங்களை இப்போது ஒவ்வொரு நொடிகளிலும் புத்தக பக்கங்களின் வாசகனாய் வாசிக்கிறேன்..!   இதோ வந்துவிடுகிறேன்... என்னவளே..,   உன் அன்றாட அழைப்புமணி அலாரமாய்...   உன் செல்பேசியின் குறுஞ்செய்தியாய்..! என் தோழி தனித்து நின்ற தருணங்களில் உன் புன்னகைகள் கருணைக் கணங்களாய் சுடர்விட.., எங்கேயோ தோற்றுப் போனது என் கவலைக் கண்ணாடியின் உருத் தெரியா நகல்கள்..! அன்பின் மறுபக்க பூங்காவிடம் நடந்த நேர்காணலில்.., அவை.., உன் பிம்பங்களின் சாயல்களோடு தோற்றுப் போன சகாரா..! அடம்பிடிக்கும் என் பிடிவாதங்களில்.., சற்றே தொலைந்தவள்......, அக்கரை காட்டுவதில்.., அன்னையின் பிரதியவள்....., சில நொடிகளும் நீடிக்காத அவளின் செல்லச் சண்டைகள்.., என் மௌனத்தின் ஊமை மொழிகள்..! உன் கனவுகளோடு என்னையும் அழைத்துச் செல் தோழியே.., ஒரே குடையில் உன் ஒற்றையடிப் பாதையில் .., ஒரு வண்ணத்துப் பூச்சியாய் வருகிறேன்..! என் பூக்காடுகள் நீ உதித்த நாளையும் குறித்துவிட்டு காத்திருந்தது.., உனக்காய் ஒருநாள் மலர..! தோற்றுப் போனது என் பன்னிற மலர்களும் உன்னிடம்...! காலத்தால் கருணைக்கொலை செய்த மலர்கள் மீண்டும் ஒருநொடி மிளிர்ந்துதான் போனது...! கருகிய மலர்களாய்...இங்கே பல உள்ளங்கள்... பரிவாய் உன் ஆறுதல்கள்... இவர்களின் வாழ்த்துக்கள் போதும்.., உன் புன்னகையின் பொழுதுகளுடன்... இந்நாளின் வானிலைகள் விடியட்டும்..!                   சில கணங்கள் என் பேனாவும் காகிதமும் எனைப் பார்த்து கோபம் கலந்த ஏளன சிரிப்பாய் சிரிக்க.., என்னையே ஒருமுறை நான் புதிதாய் பார்த்துக் கொண்டேன்..! உன் உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கு மட்டும் நான் விதியல்ல.., நான் மெழுகின் நகலல்ல.. சகாராவின் செல்கள் என்றது..! ஆம்..., என் கைகள் மறந்ததன் விளைவு உன் ஏளனச் சிரிப்பாய்.., என் குற்ற உணர்ச்சி கரிசக் காட்டு கள்ளிச் செடியாய் உரசிப் போனது..! என் வெற்றுச் சிரிப்பில் பதிவாகும் சில துளிகளை பருக.., நானும் வருவேன் என்றன என் காகித அருவி...!, கனவுகளோடு கலைநயமும் ஓவியமாய் மெருகேற்ற வருவேன் என்றது என் பேனாவின் கூர்முனைகள்..! என் உணர்வுகளிலும்,கவலையோடும் வந்த எழுத்துச் சுமையை கண்ணீரோடு சேர்த்து தாங்கிக் கொண்டது...!, ஏதும் புரியா வெறுமை கணங்களில்.., என்னோடு பயணித்தது என் பேனாவும் காகிதமுமே..! இதோ வந்துவிட்டேன்... உன்னிடமே...! மனதைக் காலத்தின் கருணைக் கொலை செய்யும் மனிதர்களின் காலடியில் சிக்கித் தவிக்க இந்தப் பெண்மை இனியும் தயார் இல்லை..! நிறமற்ற என் காகிதமும்.., பல வண்ணங்களில் என் மனக்கண்ணாடியை காட்டும் எழுதுகோலும் போதும்.., என் பாலைவன பயணத்திற்க்கு,.. இந்தச் சரித்திரத்தை சரிவரப் புரிந்திடவும்..!                 என் வண்ணத்துப் பூச்சி பேச்சுக்கள் தடுமாறும் பொழுது... நிலைகுலைந்து போகிறது மனது... வாய்ப்பு இருந்தும் பேசாமல்... முகம் பார்த்தும் சிரிக்காமல்... சில நாட்கள் நகர்ந்தாலும், அவ்வண்ணத்து பூச்சியின் மேல் கொண்ட பாசம் குறைய வாய்ப்புகள் ஏது.... பார்க்காமல்... பார்த்தும் பேசாமல்... வாடியதோ என் வண்ணத்து பூச்சி...                                 விலாசம் கனவுக் காட்டின் கள்ளிச் செடிகள்...நுரைபடிந்த கடலன்னையிடம் விலாசம் கேட்கின்றன..! என் இமைகளின் இரங்களுக்கு மலர் அஞ்சலி வேண்டி நிற்கிறேன்.., உன் வருகையின் விண்ணப்பம் வினவி...!       காத்திருப்பு.. காத்திருக்கிறேன்..! காத்திருப்புகளில் கூட.., இறுதித் தேர்வு முடிவாய் அவன் வருகை..!       இமைகளிடம் கூறிவிடு..! நீயற்ற என் கணங்களில் ஆக்கிரமிக்கும் உன் நினைவுகள்..., என்னுடனே வந்துவிடும் நாழிகைகளின் மோகனமாய்.., சொல்லித்தான் தீராது என் அன்பை.., என்னவனே.., புத்தக வரிகளின் சுவாரஸ்யத்தை நூலகம் எப்படி சொல்லும்..? சில கவிதை ஆயிரம் பொய் சொல்லும்... என் கவிதைகளில் கலப்படம் இல்லை..., உன் பால் போன்ற குணத்தால்..! உன் நேசத்தில் நிலைகுலைந்து போனவள் "நான்"..! என்றேனும் பிரிவு நம்மை நெருங்கையில்..., என் இமைகளிடம் கூறிவிட்டுப் போ.., இறுதியாக பார்த்துக் கொள்கிறேன், என்று..! நீ சென்ற பின் எப்படி உயிர்க்கும் என் "இமைகள்"..!.. நீயற்ற என் பொழுதுகள்.., "தாயற்ற மழலையாய்" அழுகிறது.., அன்பு பலவிதம்..., உன் அன்பில் உணர்ந்தேன் தூய்மை எனும் சொற்களின் "அகராதியை"..!             நீயின்றி பேருந்துப் பயணத்திலும்,,., பரவும் பனிச்சிதறலிலும்.., மழைச்சாரலின் கடுங்காற்றிலும்..., அனைவர் இமைகளின் விளிம்புகளில் உறக்கம் எட்டிப்பார்க்க.., நான் மட்டும் உணர்ந்தேன்...,ஏதோ வெறுமையை...!, நீயற்ற கணங்களின் வெற்றுத்தாள்களை எப்படி நிரப்பும் என் நாட்குறிப்பு...! உன் உரையாடலற்ற நாழிகைகள் என்னோடு வரமறுக்கிறது..., உன் வருகையின்றி வாடிப்போனது என் தமிழ் விசைப்பலகையும் அதன் சித்திர எழுத்துக்களும்..!       பிறந்தநாள் வாழ்த்துக்கள் எதார்த்தமாய் சந்தித்த உறவொன்று.., என் உறவாய் மலர.., புதிதாய் இறகு முளைத்த பறவையாய் என் மனம்...! அனுபவ நினைவுகளில் நனைந்த உன் நினைவுக்குறிப்புகளில் என்னோடும் சில துளிகளை பகிர.., உன் குழந்தை மனதை வாசித்தேன் ஒரு வாசகியாய்..! என் அன்றாட நாட்களும்.., உன் உரையாடல்களில் பாடல்களன்றி நகர மறுக்கும் ..! பாசமாய் நீ அழைக்கும் கணங்கள்.., நினைவுறுத்தும் சகோதர அன்பை..! ஒவ்வொரு நாட்களும் உன் ஆடை நிறத்தை மறக்காமல் கவனிப்பேன்.., உன் கடலை மிட்டாய்க்காக அல்ல.., "ஐயோ மாட்டிக்கிட்டேனே" என்பதை கேட்பதற்காகவே..! ஒவ்வொரு முறை நீ உறவுமுறையில் அழைக்கையில்.., சகோதரனற்ற எண்ணங்கள் தொலைந்தது..! உன்னை எழுதிட வரிகளின் நீளமும் போதவில்லை.., எழுத்துக்களும் ஒன்றோடொன்று சண்டை பிடித்துக் கொண்டது..! உனக்காய் எழுதப்பட்ட என் கவிதைத் தாள்கள் சிறகுமுளைத்து ஏழு வர்ண வண்ணத்துப் பூச்சிகளாய் அணிவகுத்து.., வானில் உலவுகிறது... உன்னைச் சென்றடைந்து வாழ்த்த..! "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா.." உன் வளமான,நலமான வாழ்வுக்கான பிரார்த்தனைகளுடன்.., உன் சகோதரியின் வாழ்த்துக்களும்..!     அன்புத் தோழியே பல்லாண்டு கால பள்ளி நட்புக்களில்.., பனித்துளியாய் தூவப்பட்ட நம் அன்றாட பதிவுகள்..., இன்றும் நினைவோடு தான் உலாவருகிறது...! டம்ளருக்குள் ஒளிந்து போன நிலவாய்..., சுருங்கிப் போன இலைக்குள் மறைந்து விட்ட பனிச் சிதறலாய்.., மேகத்தின் நடுவே கண்ணாம்பூச்சி ஆடும் விண்மீனாய்.., புராணங்களில் தவறப்பட்ட காவியங்களாய்.., பொக்கிஷமாய் பூட்டிவைத்தேன் உன் நட்பின் கவிதைத் தொகுப்பை..! உன் புன்னகையை மட்டும் சிறைபிடிக்கவில்லை.., நம் நட்பெனும் பயணக் குறிப்பு..! உன் துன்பங்களின் பக்கங்களையும் அனுபவமாய் சிறை பிடித்தது நம் பள்ளி நாட்களின் நாட்காட்டி..! இன்றும் மறக்கவில்லையடி உன் இமைகளில் அடிக்கடி கசியும் துளிகளும்.., அதில் சற்றே கரைந்த என் மனமும்..!, அவை நட்புவட்டத்தால் புன்னகையாய் மாற்றப்பட்ட சில கணங்களும்..! நான் வேண்டுவது உன் இருள் சூழ்ந்த வாழ்வில்.., சூரியக்கதிர்கள் மட்டுமே..! அன்புத் தோழியே கோடி அர்த்தங்கள் நிறைந்த என் தூய்மை அன்புடன்.., பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!           நீயின்றி வாழ்வெனும் நீண்ட ரயில்பயணத்தில்.., பாதியில் தவறவிட்ட புத்தக தாள்களாய் "நீ"..! உன் மௌன வாசகங்களிலும்., அன்றாட உரையாடல்களிலும், பிரம்மித்துப் போனவன் "நான்"..! இன்று, தொலைந்த பாதையோடும், ஏற்க இயலாத இழப்புகளோடும்., நீயின்றி கடக்கும் என் விடியல்கள், என் அழகிய நாட்களின் கணங்கள்.., அத்தனை விரைவில் என்னிடம் நிலைக்கவில்லை...! நீயற்ற என் நாட்கள்.., அன்னையற்ற குழந்தையின் குமுறல்களாய் வெடித்துச்சிதறுகிறது..! வந்துவிடு என்னோடு என கூறமறுத்தேன்..! இன்று வழிதவறிப் போனது என் வாழ்க்கை..! நீயற்ற என் வானம் இருண்டு போகவில்லை.., இல்லாமல் தான் போனதடி..! பிறர்க்கான உன் தியாகங்களுக்குள்., மறைந்து மூழ்கிப்போனதடி.., என் காதலும்..! இப்போது நினைத்தாலும் குமுறிப் போகிறது குழந்தையாய் என் மனம்..! மறந்திட நினைக்கையில் வலிக்குதடி.., உன்னோடான என் அன்றாட நாட்களின் நிகழ்வுகளை..! சப்தமில்லா கதறல்களில் என் உள்ளம்.., முதன்முதலாய் உருகிப் போனேனடி உன் இழப்பில்..! கடக்கின்ற பெண்கள் உன்னை மட்டும் நினைவுறுத்த.., நினைவோடு மட்டும் வாழ்கிறது என் காதல்..! போராடிக் கொண்டிருந்த என் வாழ்விற்கு அர்த்தங்கள் தந்துவிட்டு.., என் மனக்குளத்தில் கவலைகள் நிரப்பிச் சென்றாய்..! உன் நினைவுகளை சுமக்கும் ஓர் உயிராய் வாழ நினைத்த உயிரின் நினைவு.., உன் ஒவ்வொரு நாளிளும் நினைவூட்டப்படும்..! என் மனதில் உள்ளதை வடிப்பதை தவிர என்ன கொடுக்க முடியும் என்னால்..? இதை படிக்கையில் ஏற்படும் பற்பல உணர்வுகளே.., உனக்கான என் "பரிசு"..!   பெண்மை செவ்வானக் கூட்டத்தில் மென்மையாக மேகங்களாய்..., சற்றே சாந்தமான பெண்மனது...! வாழ்வோடு போராடும் போர்க்களம் தான் எத்தனையோ உனக்கு...! இரு விழிகளோடு கருணையின் கண்ணீர் மட்டுமல்ல உனக்கு..., கண்ணீரின் சுவடுகளை எழுதிப்போன எழுதுகோலின் பரிவர்த்தனைகளும் உனதே..! புன்னகைச் சாவிகளை ஏதோ இரயில் பயணத்தின் கணங்களில் தவறவிட்டாயோ.., அன்றி கனவுகளின் சிற்ப்பிக்குள் ஒளிந்து போனதோ? தொலைத்த உனக்கான நிமிடங்கள், இன்று பிறரின் கேளிக்கைப் பேச்சுக்களாய்.., போதும் உன் பாலைவன கள்ளிச்செடியின் கதாப்பாத்திரம்..! சிறைகளின் வாயில்களை தகர்த்தி புதிதாய் அவதரித்தாலன்றி உன் சுதந்திரம் தொடுவானமாய்..! மென்மையின் சிகரங்களில் உன் மனப்பறவையின் சுதந்திர பறவையாய் சிறகுகளை பறக்கவிடு..!     பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோற்றுப்போனேன் கோபப்படுதலில் முதன்முறையாக.., என் ச௧ோதரா...உன் நகைச்சுவை நயங்களால்..! நெகிழ்ந்து நின்றேன் சற்றே.., கவலைகள் மறந்திட செய்யும் உன் யதார்த்தப் பேச்சுக்களால்..! பூவுதிர்க்கும் புன்னகையில் 'விஷம்' என்ற உன் வார்த்தைகளில் உணர்ந்தேன்.., தங்கையை சீண்டிப்பார்க்கும் அண்ணணின் குறும்புத் தனத்தை..! காலையில் ஒரு காலை வணக்கம்..., மதியம் உணவு முடிந்ததா என்ற வினவல்..., மாலையில் வாக்குவாதங்கள்... என அன்றாட நாட்குறிப்பில் தவறவிட்ட நிகழ்வுகளும் பதிவாகியது அவரவர் செல்பேசிப் புலனத்தில்..! உன் அன்னை போல் உன் வரவை புவியும் எதிர்நோக்கிய நாள் இன்று..! வெற்றிகள் குவியட்டும் வாழ்வில் வசந்தம் வீசட்டும் வெளிச்சம் ஒளிரட்டும் நித்தமும் உன் பொழுதாகட்டும் நொடிகள் உனது படிகளாகட்டும்...! என்றும் இன்பம் உன் வாழ்வில் பெருகட்டும்...! உனக்கு இந்த தங்கையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.... வாழ்த்துக்களோடு என்றும் உன் தங்கையின் அன்பும்...   கலைகள் அபிநயங்கள் அரங்கேற்றப்படும் மேடைகளில், அழிந்து போன கலாச்சார மிச்சங்கள் எச்சங்களாய்..! நவீன கலைகள் தான்தோன்றிப்பறவையாய் உலவ..! சிட்டுக்குருவியாய் என் தமிழ்க்கலைகள்... தொலைதூர அலைவரிசையில்.! சிதைந்த சிட்டுக்குருவிக்கு "பொழுது வணங்கி" மலர்களுடன் சின்னஞ்சிறு கல்லறைக் கடிதம்..! பட்டுப்போன காவியக்கலைக்கு, நவீன எழுதுகோலில் மரணமடல்..! விழியோரக் கண்ணீரின் ஒற்றைத்துளியில் உதித்து நின்ற உரத்துப் போன உள்ளுணர்வுகள் அவை..!     மனித மனம் என்றும் அமைதியாக இருக்கும் உன் நிமிடங்களே பிறரின் பரிகாசங்களுக்காய் விலை போவதை ஒத்திகை செய்கிறது..! என்னால் உணரமுடிகிறது.., ஒவ்வொருவரின் முகத்திரைகளும்.., வெற்றுச் சிரிப்புகளும்.., அவற்றால் நொந்துபோன என் இதயமும்..! இன்று போலிச்சிரிப்போடு மட்டும் நின்று போவதில்லை மனிதமனங்கள்.., முகத்தோடு ஒன்றிப்போன முகமூடிகளோடேதான் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது..! மனிதமே,எங்கே சென்றது நம் முன்னோர் விட்டுச் சென்ற பண்புகளும் பதுமையை மதிக்கும் முறைகளும்..! சாளரத்தின் வழி தோன்றும் நிலவையும் எட்டிப்பிடிக்க நினைக்கும் உன் எண்ணங்களுக்குப் புரிய வை, நீ நினைப்பது உண்மையை அல்ல.., உருவகத்தின் விளிம்பை...! நீ பருக நினைப்பது கடல் நீர் அன்று..,கானல்நீர்..! உருவங்களும் பிறர் மீதான உன் எண்ணங்களும் பிரிதொரு மாற்றுக்கருத்துகளும், உன் மீதும் பிறரால் தோன்றப்பட சிலகணங்கள் ஆகிவிடாது..! உண்மைகளின் சுவடுகளோடு வாழ்ந்துவிட்டுப் போ...!, திரும்பத்திரும்ப உன்னை சுமக்க புவியும் தவமிருக்கும்..!     நெகிழும் நினைவுகள் மழலைப் பருவத்தில் யுகமாய் பயணித்த நொடிகள், இன்று, நகர்பனியின் ஊடுறுவலாய், பிரதிபலிக்கிறது..! வயதை விட காலம் அதிவிரைவில் கரைகிறது..! ஒரு பாகம் அலைபேசியின்அபூர்வங்கள்..! மறு பாகம் அலுவலக ஆடம்பரங்கள்..! சற்றே திரும்பிப் பார்த்தேன்.., என் குறும்வயது நினைவலைகளை..! தேடித்தேடித் தின்ற தேன்மிட்டாய்..! பேருந்தை விட்டு விட்டு விளையாடி வீடு வந்த என் நட்பு வட்டங்கள்..! குட்டி போடாத எல்லா புத்தகத்திலும் ஒளிந்திருந்து கண்சிமிட்டிய மயிலிறகுகள்..! டோராவின் படமுடன் சிதறிக்கிடக்கும் நோட்டுகள்..! பள்ளிமைதான புள்வெளிகள் அரட்டை அரங்கமாய் உருமாற, அன்றாடம் கதை கேட்கும் சுற்றி நின்ற மரங்கள்..! விடுமுறை முடிந்ததை எண்ணி வருந்திய ஞாயிறுகளும், நண்பர்களை கண்ட புன்னகையில் புலரும் திங்களும் என கடந்தது என் பள்ளி நாட்காட்டியின் தாள்கள்..! இப்போது நினைத்தாலும் நிஐமாகும் நெகிழ்வுகள்...!           பிரிவு நினைவுகள் ஏனோ வாட்டியது.., நீ இல்லாத நிமிடங்களில்..! கனவுகள் ஏனோ கலைந்தது.., நீ தோன்றாத கனவானதால்..! உயிரும் ஏனோ உருகியது.., உன்னை மறக்க நினைக்கும்.., 'ஒவ்வொரு வினாடியும்'..! நானும் ஏனோ சிந்தித்தேன்., நீ ஏன் இல்லை... என்னோடு என்று..! காலமும் சொன்னது 'பிரிவு' எனும் பதிலை..!   நினைவுகளில் நீ..! எட்டாத தூரத்தில் நீ இருந்தும்.., தொட்டுவிட முயலும் 'நிமிடங்கள்'..! உனக்காக ஏங்கிவிடும் எண்ணமாய்.., காத்திருக்க வைக்கும் 'கணநேரம்'..! என்றாவது சந்திப்போம் என்றுதான்.., ஏணியாய் காத்திருந்ததோ.., 'உன் நினைவுகள்'..!   நினைவுகளைத் தொலைத்தேன்..! கனவில் வாழும் கணங்கள் கூட.., தொலையாத நிகழ்வு போன்றது..! ஆனால்.., நனவில் வாழும் நிமிடங்கள் கூட.., நிலைக்காமல் நீங்கிச் சென்றது.., உன் நினைவுகளைத் தொலைத்த நிமிடங்களில்..!     இதயமெனும் புத்தகம்..! வாசிக்க முடியாத நாவலின் பக்கங்களை.., புரட்டிவிட இயலாத விரல்களுக்கும் ஆசைதான்..! உன் மன எண்ணங்களை சேகரித்த இதயமெனும் புத்தகத்தின் பக்கங்களை ஆவலுடன் புரட்டிப் பார்க்க..!   என்னவள் 'காற்றுக்கும்' ஆசைதான்.., என்னவளை தீண்டிச்செல்ல..! 'நிலவுக்கும்' ஆசைதான்.., என்னவளின் முகத்தை ரசிக்க..! 'விண்மீனுக்கும்' ஆசைதான்.., என்னவளின் புன்னகையைக் காண..!   -'எனக்கும்' ஆசைதான் நெடுநாட்களாய்.., என்னவளை ஒருமுறையேனும் காண..!   உன்னைக் கண்ட நொடி..! கணநேரக் கற்பனையும், கலைந்து போனது..! விழியோர இலட்சியமும், விலகி்ப் போனது..! கனவுக் கோட்டையும், கலைந்து போனது..! 'உன்னைக்கண்ட அந்த நொடி'..!     உன் நினைவோடு..! காலத்தின் புத்தகத்தில்.., கலைந்துபோன பக்கங்கள் 'நாம்'! நிகழ்வுகளின் பிடியில்.., நீங்கிவிட்ட நினைவுகள் 'நாம்'! காலமும் சேர்க்கவில்லை.., நம் நினைவுகளுக்கு உயிரோட்டம் தரமறுத்து..! நிகழ்வுகளும் சேர்க்கவில்லை.., நினைவுகள் ஏனோ தொலைந்து போனதால்..! 'நான்' உன் நினைவோடு என்றறிந்த வேளை.., 'நீ' தொலைத்து விட்டாய் என் ஞாபகங்களை..!   பேச நினைத்தேன்,.. நிலவோடு பேசத்தான் நினைத்தேன்.., அதுவோ.., என்னைவிட்டு வெகுதூரம்..! விண்மீனோடு பேசத்தான் நினைத்தேன்.., அதுவோ.., கண்ணைவிட்டு வெகுதூரம்..! கதிரவனோடு பேசத்தான் நினைத்தேன்.., அதுவோ.., என்னையே எரித்திடும்தூரம்..! உன்னோடு பேசத்தான் நினைத்தேன்.., நீயோ.., என் கனவுகளை மதிக்காத மனநிலையில்..! பிறப்பு ஒரு முறையாவது காற்றாய் பிறக்க நினைத்தேன்.., 'புல்லாங்குழலில் இசையாகிவிட..'! ஒரு முறையாவது மலராய் பிறக்க நினைத்தேன்.., 'பனித்துளியில் திளைத்துப்போன இதழாய் மிளிர..'! ஒரு முறையாவது மின்மினியாய் பிறக்க நினைத்தேன்.., 'ஒளச்சுடரின் ஒளி அலையாய் உலா வர..'! ஒரு முறையாவது உன் இலட்சியமாய் பிறக்க நினைத்தேன்.., 'நீ என்றும் நினைக்கும் தருணங்களுக்காய்..'!             பிரிவு சோகத்தில் சோர்ந்துபோன இமைகளுக்கு தான் தெரியும்.., உன் பிரிவின் உயரம்..! அந்த இமைகள்தான்.., நீ இயற்றும் வாழ்வெனும் நாவலுக்கு.., 'புதுமை முகவுரை'..! அந்த இமைகள்தான்.., நான் இயற்றும் கனவெனும் கவிதைக்கு.., 'தொலையாத முடிவுரை'..!   மௌனம் அழகிய புன்னகைக்கரங்களில் சிக்கிக்கொண்ட.., உன் புன்முறுவல்கள்.., புதைந்துபோனது எதனாலோ..? விழியோரப் பார்வையில் பதிந்துவிட்ட.., உன் நினைவுகள்.., தொலைந்துபோனது எதனாலோ..? யுகங்களும் நிமிடமாய் தோன்றிவிடும்.., உன் மகிழ்வுகள்.., மறைந்து போனது எதனாலோ..? சந்திக்கும் நேரங்களின் கணப்பொழுதை விட.., சிந்திக்கும் சிலமணித்துளி அதிகம்தான்..! என்றாலும் பதில் இல்லை.., உன் 'மௌனம்' ஒன்றைத் தவிர..!       நிலவு அனைவர் மனதையும் வாசிக்க தெரிந்த எனக்கு,,, நிலவே.., உன் புன்னகையின் அர்த்தத்தை,,, புரிந்திட தெரியவில்லை..! அதற்கு அகராதியிலும் அர்த்தம் இல்லை..!       இதுவா சுதந்திரம்..? தீரவில்லை சுதந்திரதாகம்..! கிடைத்துவிட்டதா சுதந்திரம் பெண்ணியத்திற்கு..? கிடைத்துவிட்டதா சுதந்திரம் வாழ்விற்கு..? நாட்டிற்கு சுதந்தரமெனும் அடைமொழிதான் எச்சம்! ஆம்..! தொலைந்துபோகிறது கலாச்சாரங்களின் சுவடுகள்..! இதுவா சுதந்திரம்..? புதைந்துபோகிறது பண்பாட்டின் தளிர்கள்..! இதுவா சுதந்திரம்..? எங்கிருந்தோ பெற்றுவிட்ட பண்பாடு,கலாச்சாரம், நிர்ணயிக்கிறது நம் வாழ்வை..! இதுவா சுதந்திரம்..? அன்னியரிடம் அடிமையாய் அன்று, நமக்குள் நாமே அடிமையாய் இன்று..! பெண்ணியத்தின் கண்ணியம் சிதைவுறுத்தப்படுகிறது வலைதளங்களில்..! இதுவா சுதந்திரம்..? வரையறையில்லா சுதந்திரம் வழிவகுப்பதேனோ சீர்குலைவை..! இதுவா சுதந்திரம்..? ஊடகத்திரையின் பிண்ணணியில் திணறுகிறது.., பெண்ணிய சுதந்திரம்..! எல்லைமீறிய சுதந்திம்.., புதைக்குழியின் கரங்களாய் வரவேற்கிறது..! ஒற்றுமையில் திளைத்தது அன்றைய பாரதம்..! உற்றார் குருதி படர்ந்தாலும், பதறாத நெஞ்சங்களுடன், இன்றைய பாரதம்..! மரணத்தின் தருவாயில் கொண்டுசெல்லும் ஊடகம்..!, சுயக்கட்டுப்பாடற்ற சுதந்திரத்தின் இழிவுமுறையால்..! இதுவா சுதந்திரம்..? நம்மை ஆண்டவரின் எஞ்சிய கலாச்சாரமும்., பண்பாடும்., நம் வாழ்வின் பக்கத்திற்கு முன்னுரையாய் முன்வர.., முடிவுரை எய்தியது நம் நெறிமுறைகள்.., உலர்ந்த மலர்கொத்துகளாய்..! வேண்டுமோ இத்தகு சுதந்திரம்..? எங்கே நம் தியாகிகள் வழிநடத்திய சுதந்திரம்? எங்கே அகிம்சை சுதந்திரம்..?   சந்திப்பு பிரிகின்ற கணங்களில்.., நீர்த்துளிகளின் பிம்பமாய்.., 'நீயும்'..! கரைகின்ற கணங்களின்.., கண்ணீரின் அருவியாய்.., 'நானும்'.., மீண்டும் சந்திப்போம்.., பிரியாத நொடிகளின் 'வாயிலில்'., கலையாத கனவுகளின் 'புன்னகையில்'., 'என்றாவது ஒருநாள்'..!   அவள் தேடல் என்பதன் பொருள் அவளின் 'மௌனம்'..! என் உயிர் என்பதன் பொருள் அவளின் 'விழிகள்'..! அவளின் விழிகளின் .., விளக்கம் 'நான்'..!           இன்றைய நிலை   வாழ்வின் மாற்றங்களை வரவேற்று.., வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்..! புன்னகையின் பொழுதுகளை புறம்தள்ளி, புதுமொழியின் புனைவுகளை வரவேற்கிறோம்..!   கனவுகள் கண்ணாடியின் பிம்பமாய்..! காலங்கள் அர்த்தமற்ற கணங்களாய்..! தொலைந்து போகும் விநாடிகளுடன்.., தோன்றாமல் போகிறது தனிமனித எண்ணங்களும்..!   விரையும் பறவையின் சிறகாய்... விஞ்ஞானத்தில் உலவுகிறோம்..! விழும் கணங்களில் விஞ்ஞானம்.., விரிப்பதில்லை தன் சிறகை..! உண்மைகள் ஒளிந்துகொள்கிறது.., உரையாடும் கணங்களில்..!   பண்புநலனை விதைத்தவர்களின் கல்லறையில்., பாரமானது "காய்ந்த மலர்க்கொத்து"..! பணத்தை ஈந்தவர்களின் காலடியில்., வர்ணமலர்கள் "அர்ச்சணைப் பூக்களாய்"..!   வாழ்வின் படிநிலைகளோடும் ., வாடிப்போன எண்ணங்களை சுமந்துகொண்டும் - சிலர் ஊடகங்கள் பொழுதுபோக்காய் உலாவர.., ஊடுருவும் நிசப்தங்களின் அலைகள்..!   களங்கரை விளக்கின் சுடர்இருக்க.., மின்மினியின் ஒளியை வேண்டும் - சிலர் கடல்நீர் விரிந்திருக்க.., கானல்நீரை வியாபிக்கும் - சிலர்..!   வாழ்வதற்கான வாழ்க்கைகள்.., வழிகாட்டுதல்கள் இருந்தும் வீணாகிறது..! மகிழ்வதற்கான தருணங்கள் இருந்தும்.., மறைந்துபோகிறது மனித உணர்வுகள்..!   எதிர்கால தேவையின் உந்துதல்கள்.., எதிரொலிக்கின்றன இடையூறுகளாய்..! இயற்கையின் இருப்பிடங்கள் தொலைந்தன..! விடுபட்ட வேளாண்மையின் வேர்கள்.., துளிர்விடும் கட்டிடங்களுக்கு நிகராய்..!                 குற்றப் பத்திரிக்கை..! விலையில்லாத வெறுமைகளாய்ப் போனது.., நம் எதிர்காலக் கனவுகள்..! பற்றி எரியும் உள்ளங்களின் சுவடுகள்.., நிர்க்கதியாய் நிராசைக் குழிக்குள் மூடப்பட்டது..! கற்றால் மட்டும் கனவுகள் காட்சிக்கெட்டும் அடிவானமா..? அன்றி., உண்மையின் சுவடுகளில், உயர்வுகள் சாத்தியமா..? பெண்மனம் குமுறிப் போகும் பிதற்றல்களில்.., நிசப்தமாய் உள்ளிருக்கும் குரூரக் குரல்கள்..! இன்னும் வெளிவேடமா.., பிறக்குமா உன் சுதந்திரம்..? புகைப்படங்கள் பரிகாசமாய்ப் போக.., பரிநமித்த கனவுகள் உன் கண்ணீரின் மார்க்கமா? வாழ்வாதார வேர்கள் சிதைந்த நிலையில்.., அன்றாடத் தேவைகளும் சுருங்கிப் போனது..! தலைவிரிக்கும் ஊழல்கள்.., ஒளிந்து மாய்ந்த உண்மைகள்.., கொடுக்கல் வாங்கல்களாய் கல்விகள்.., உயிர்கொல்லிகளாய் பணிநிறுவனங்கள்.., மாணவியாய் உருவான அன்றிலிருந்து.., பணியாளராய் மேருகேற நினைத்து.., என் விதியில் நானே சதிசெய்து, கருகிப் போனேன்.., பணசாம்ராஐ்யச் சிறைத்தீயில்..! என் மனதுள் நானே, தாக்கல் செய்து கொண்டேன்,,, ஒரு குற்றப் பத்திரிக்கை..! மிரட்டும் சமூகத்தில்.., வாசிக்க மனமின்றி.., எழுத்துகளின் எழிலோடு முடிவெய்தினேன்..!       சொற்கள் விவாதங்களின் வீரியத்தில் வீழ்ந்த என் யதார்த்தங்கள்..! என் எண்ணங்களை சிறைபிடிக்க வாழும் சிற்றில்களாய் பலர்..! தனிமைக் கரங்கள் என்னை அழுத்திக் கூறவைக்கும் சில சொற்கள்..! ஏனென்று புரியாத வாழ்வோடு.., என் புன்னகை மட்டும் எப்படி சாத்தியம்..? உணர்கிறேன்... வீழ்ந்து விடும் பெண்மை...! எதுவாயினும் அன்று.., துளைக்கும் சொற்களின் கூர்மையில்..! துளைத்த நொடிகளில்... கண்ணீர் கணக்கவில்லை..., வெறுமை விடுத்த அழைப்புகளில் வீண் சுமையானது..!     இதயத்தின் நிசப்தம் வாழ்வின் கணங்கள் அனைத்தும் வலிகளாய் நிறைந்திருக்கையில்.. இன்று உன் வார்த்தையும் சிதைத்துவிடுகையில் மரத்துப்போகிறது மனஅறை குமுறல்களும்..! அன்றாட என் பொழுதுகளில் உன் ஒற்றைநொடிக் காத்திருப்புகளும் என் மனதை புரிகையில்.., நீ மட்டும் வார்த்தைகளை என் கண்ணீருடன் சலவை செய்கிறாய்.. என் அன்றாடப் பொழுதுகள் உன் நினைவுகளுடன் கடக்கையில்.., எனக்காய் அளித்த உன் சில நொடிகளும் சினமாகத்தான் பிறக்கும் என்றால் அதற்கு உன் மௌனமொழியே அளித்துவிடு.. நினைவுகளுடனே வாழ்ந்திடுவேன்.., அழகான தருணங்கள் வலித்தாலும் அது அழகே..! போதும் என் வாழ்க்கை...!         உன்னை தேடி என்னுள் தொலைந்த பழைய கண்ணாடியின் நகல்கள் இன்று உன்னால் பிரதிபலித்தது..! உன்னோடு தருணித்த கணங்கள் என் முன் ஜென்ம தேடல்களின் முகவரியை மீட்டு வரும் பக்கங்கள்..! உன்னோடு என்றால் வாழ்க்கை ஒருமுறையா என்ற துக்கங்களே கண்முன் கதை பேசிடும்..! என் வழி நெடுகிலும் கனவுகள் நிறைய.., விழிகள் மட்டும் வினவும் உன் சுவடுகளின் அடையாளம்..!     ஓர் மழைநாளில் நான் யாருமற்ற என் பொழுதுகளில் மழைத்துளிகளின் ஓசையுடன் .., இறுக்கமான மனநிலையில் கண்ணீர் தேங்கியபடி வெறித்துப் பார்த்த விரக்தியில் அசைவற்ற என் கருவிழிகள் ..! கண்ணீர் சிந்த மறந்த நிலையா அன்றி மரத்த நிலையா என்பதே தோழியின் குறும்புத் தொடுதல் உணர்த்துகையில்.., சட்டென நினைவுகள் திரும்புகிறது..! கண்ணாம்பூச்சி ஆட்டம் போல் என் வாழ்க்கை கேள்விகளின் நிதர்சனத்தில் பயணிக்க.., உண்மை நிலைகள் இருளுக்குள் ஒளிந்ததா அன்றி மறைந்ததா என்பது ஐயமாகவே தொலைந்திட.., இருள் விடுக்கும் ஒளி வினவி நிற்கிறேன் கார்மேக கூட்டத்தின் நடுவில்..! பழைய நினைவுகள் தூறலுடன் துளியாய் சில்லிட.., என் கண்ணீரில் உன் பிம்பத்தை அழிக்க முயல்கிறேன்.., உன் பிம்பம் என் இமைகளில்..! அனைத்தையும் அழித்து போக எண்ணுகிறேன் மீண்டும் என் தனிமை கனவுக்குள்.., நீ நிழலென்று உணர்ந்தும்...! என் இருப்பிடம் சேர்ந்து விட்டேன்.., கனவுகளை கொலை செய்து விடுவதாய் எண்ணி, என்னை நானே ஏமாற்றிக் கொண்டு..!   ஓர் காலை நேரம் சில்லென்ற இளந்தூரல் பனியில் நனைந்திடாமல் மேகப் போர்வை உடுத்தியிருந்த மலைகள்... அதனுடன் கண்ணாம்பூச்சி ஆடும் சின்னஞ்சிறு பறவைகள்... எப்போதும் போல் என் பயணம்... வழி நெடுகிலும் காணக்கிடைத்த வழிக் காட்சிகளுடன் என்னில் மழலையின் ஏக்கமாய் தவித்து ஒளிந்து கொண்டிருக்கும் உன் நினைவுகள்..., பாடல்களிலும் ஒரு நொடி நிசப்தத்திலும் எனக்குள் மட்டும் இடறிக்கொண்டிருக்கும் யாரிடமும் பகிரப்படாத உன் நினைவுகள்..!                 நினைவுகளின் ஆழம் அன்றாட புன்னகைகளிடம் ஒளிந்துபோன கண்ணீர் தடயங்களின் தாரை.., நினைவுச் சுவடுகளின் கழுத்தை நெறிக்கிறது... சுகமான நினைவுகள் ஆழ்கிணற்றின் ஆழம் வேண்டி விண்ணப்பித்து நின்றது தற்கொலைக்கு..! நினைவுகளின் ஆழத்திற்கு இணையேதும் சான்றாவதில்லை.., நேசித்த உள்ளம் நிஐத்துடன் உயிர்க்கையில்..!         அவள் ஏழைப் பெண்ணின் நித்திரைக் கனவுகளின் விளக்குகள் மெதுவாய் மங்கிப்போனது சமையல் அறையின் மூலையில் சிறைப்பட்டு... திறமைகள் விலைபேசப்பட்டதன் கணங்களில் ஏழையின் இறுதி பயண நேரமும் குறிக்கப் படுகிறது..! உண்மைக்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்ட சுவடுகளின் வேர்களாய்..! கற்பதும் களவுக் கூடத்திடம் என்ற நிஐங்களின் நிராசையில் அவள் கனவுகள் விழிமூடின...     உன்னில் நீ கலங்கிய இதயமும், ஆதரவற்ற சுமைகளின் அழுத்தமும் உன் திறமைகளை அழிக்கும் ஆயுதம்..! உன்னை நீயே பலப்படுத்துவதை விட உற்றோர் ஆறுதல் கூட நிலையிழக்க வைக்கும்..., பலவீனக் கண்ணீரை அளித்துச் செல்லும்..! அனைத்திலும் விழுந்து பிறரிடம் பெறப்பட்ட ஏளனங்களையும் எறித்துவிட்டு., உன் வழியின் மண்துகழ்களையும் பத்திரப் படுத்து.., இலட்சியப் பாதைகள் மன்றாடி நிற்கும் உன் வழிநெடுகில் பாதம் சுமக்க..!               பெண்மைக்கோர் வழிவிடு யதார்த்தங்களின் நித்திரைக்குள் தொலைக்கப்பட்ட பெற்றொரின் அச்சங்கள்.., சிறகொடிந்தும் கனாச்சித்திர புல்வெளிக்குள் இடறிக்கிடக்கும் பெண்மையின் கனவுகள்... பெண்ணிற்கென இழைக்கப்பட்ட அநீதிகள் இன்று சாதிக்க எண்ணும் பெண்ணின் ஆசைக்கனவுகளின் ஆரம்பப் புள்ளிகள் ஒவ்வோர் வீட்டின் அறைகளுக்குள் கண்ணீராய்.., இருளில் கரைந்து போகிறது..! பெண்மைக்கான சுதந்திரம் பாரதியின் கனவோடு பகல்கனவாய் பரிநமித்துப் போனது..! உரக்க கத்தி அழ நினைக்கும் பதிவுகள் எல்லாம் இரவுநேர வேளையிலும், தலையணை தாங்கிக் கொள்ளப்பட்ட மௌனியங்களாய்..! பெண்மைக்கோர் வழிவிடுங்கள்.., ஆண்வர்க்கத்தின் பாவத்தால் சிதிலங்களாய் சிதைக்கப்பட்ட பெண்ணியத்தின் சாதிக்க நினைத்த தடயங்களின் தாரைகள்.. ஆணிணமே உன்னால் அச்சப்பட்டு தன் மகள்களை காக்க நினைக்கும் ஒவ்வோர் பெற்றோரின் மனவேதனையும்.., வீட்டிற்குள் புதைக்கப்பட்ட பெண்மையின் கருகிப் போன கனவுச்சிறகுகளின் வேதனைகளில் காணப்பட்ட வலிகளும் உன் ஆனந்தம் என்றால் மனிதம் மரணித்துப் போகவில்லை.., அகராதியில் மனிதத்தின் பொருள் தான் தற்கொலை செய்து கொண்டன..!      அவள் சிறுமையிலே அனுபவங்களின் தொகுப்பை ஒட்டுமொத்தமாய் அள்ளிக் கொண்டவள்..! காதற்கனவுகள், என எல்லா பெண்மைபோல இளமைக்கால கனவுகளுக்கு இடம் தராமல் நீண்ட அவள் பயணங்கள் இலட்சியப் பாதைகளின் தேடலில் மட்டுமே..! ஒவ்வொரு சாதிக்க எண்ணிய கணங்களையும் சிதைக்கப்பட்ட சூழ்நிலைகள் சிறைபிடிக்க.., பெண்மை எனும் நூற்பாவை நூழிலைக்குள் கட்டப்பட்டு தத்தளிக்க.., அவள் தூரதேசக் கனவுகள் கடலோர காற்றில் அடித்துச் செல்லப்பட்ட மணல் துகள்களாய்..!   தொடக்கமறியா தெருவோரத் தளிர்களாய்.., அவள் சாதனைக் கனவுகள்..!   உறக்கம் பாலைவன மழை போல்  இடைவெளிகளின் ரணத்திற்குப் பின்   என் பார்வையில் அவன்..! பகிர்ந்துகொள்ள   பல நினைவுகள் இருந்தும்..,   மவுனத்திலும் கண்ணீரிலும் நகர்ந்து கொண்டிருந்த நாழிகைகள்..! விழிகளின் மொழிகளை முதலாய் உணர்கிறேன்..! என்னவனே.., வாடிப் போன என் உயிர் இன்று உன் சந்திப்பால் உயிர்பெற .., தூக்கிலிடப்பட்ட தூக்கங்களை சுமக்கும் என் இரவுகள் உன் தூரத்தால் ...! இன்று.., புது உலகின் தடயங்களுடன் நி்ம்மதியாய் என்   நித்திரைக்கனவுகள்..!       சிதைக்கப்பட்ட என் கனவுகள் அனைவரின் வெற்றுப் பிடிப்புகளில் நொறுங்கிப் போனது என் ஆசைக் கனவுகள் மட்டுமல்ல.., ஒட்டுமொத்தமாய் புதைந்து இன்று கடலலையில் அடித்துப் போன கிளிஞ்சல்களாய் ஓரமாய் என் திறமைகளும் ஒதுங்கித்தான் நிற்கிறது..! இன்னும் ஏன் பார்க்கிறீர்கள்.., என் ஆசைகள் உங்களுக்கு எறிபந்தாக கொடுத்துவிட்டு..., இன்று கானல்நீரோடு எதற்கிந்த ஒப்பந்தங்கள் ? என் பாதைகளில் தெரிந்தும் உருவங்காட்டியின் சில்லுகளை வழிநெடுக விதைத்துவிட்டு.., உன் வழியை தெரிவு செய் என்பதன் நியாயத்தில் இப்பெண்மையின் இலட்சியப் படலங்கள் மௌனியத்தால் மர்மதேசம் போனது..! உங்களுக்கு தொடுவானம் என்றபோதும்.,., என் திறமைக்கான சான்றை அடையும் ஆசை ஒன்றும் பேராசையாய் எனக்குத் தோன்றாத போது.., இயலாத பெண்மை இடிந்தே போனது.., பலவருடக் கோட்டைகள் உங்கள் தூறல்களிடையே சரிந்ததே..! இனி வேண்டாம் எனக்கான கனவுகள்.., மீண்டும் உயிர்க்கவெனில் மீண்டும் என் மௌனம் மௌனமாய் மட்டும் மாயாது..!                 வலிமை இழந்தேன்.. கனவுக் காட்டின் தூறல்களிடம் என் பயணத்தை விதைத்தேன்... உடனிருந்த மேகங்களை, வானை விலக்கிப் போனேன் தூறல்களுக்காய்... இன்று நிழல்களற்ற உருவமாய் நான்... என்னை நானே புதிதாய் உணர.., வாழ்க்கையின் பாவங்கள் பரிகாசம் செய்ய.., என் கண்ணீர் துளியும் வலிமையிழக்கிறது...! ஒவ்வொருமுறை விழிநனைக்கும் என் கண்ணீருடன் ..., என் உணர்வுகளும் உன் விழிக்கு பொம்மையாய் மாறியபின்.., இனி இந்த பெண்மைக்கு வலிமையில்லை..! தேவையில்லை என்ற உன் வார்த்தைக்குள் ஒளிந்திருப்பது அத்தனை வலிகளையும் சேர்த்து வைத்து வாசித்த நேசத்தின் இடிந்து போன இதயத்தின் கண்ணாடித் துகள்கள் என்பதை மறவாதே...! ஒவ்வொரு கணங்களிலும் ஒதுக்கும் உன்னால் உயிர் போய்க்கொண்டிருக்க.., இறுதியில் மறத்துப் போனது என் உயிர்..! யாருக்கும் நான் பாரமில்லை..., எனக்கு நானே!!!                 உடைந்த கணங்கள் உனக்காக சந்தித்த துரோகங்கள் இன்று என்னை ஏளனமாய்ப் பார்க்க.., உடைந்து போன உதிரங்கள் அடைமழைப் பாறை போல்... சற்றும் நினைக்கவில்லை என் உதிரமும் தோற்றுப் போகும் என்று...! இனி உணர்வற்ற சடலமாய்..!   கல்லறையின் காலடியில் மௌனங்களின் மடிகளில் மழலையாய் சேர்ந்திட்ட உனக்கான என் இறுதிக் கண்ணீர்..! வெகுநாளாய் எனக்காய் அழைப்பு விடுத்து காத்திருக்கும் கல்லறைகளே.., வந்து விடுகிறேன்... பொய்மையின் வட்டத்தில் மெழுகாவதற்கு உன்னில் புதைந்திட...!               இரவில் ஓர் நாள் நினைவுகளுடன் வாழும் ஓவியம் என் மனம்... செதுக்கப்பட்ட எழுத்தும் சிதறிப் போய் பொருள் தரும் .., இமைமூடி உன் முகம் காண முற்பட்ட முடிவுகளில்..! கருஞ்சிறைக்குள் வாழும் பறவைக்கு.., கனவுகள் மட்டுமே கண்மூடும் வரை..! முரண்பட்ட ஒளியும் நித்திரைக்குள் நீளும் கனவாய்..! கண்ணோரம் நீ இருக்க கனக்கின்ற இதயமும் கற்பனைக்குள் தொலைய.., மரத்துப் போய்விட்ட இதயத்துடன் எண்ணப்பட்ட என் வாழ்நாட்கள்..! நேசிப்பதாய் நடிக்கப்பட்ட தனிமை..! மீண்டும் நினைவுகள் நிஐங்கள் பெறாது.., இனி என்னால் வரும் புன்னகையும் போலிதான்...!     தொழிலாளி உழைப்பின் பொருள் உயர்ந்துதான் விளங்கியது.., சிறப்பு "ழ" லகரமும் உழைப்பிடம் தஞ்சம் புகுந்தது..! தொ"ழி"லாளி முத"லா"ளி..! முகமூடி ஏளனம் செய்பவனுக்கு எட்டாத சிற்றறிவில்.., கொட்டித் திணிக்கப்பட்ட பாரங்கள் கானல்நீர்க் கண்ணாடியின் நகல்கள்..! முடிக்கப்படாத வாழ்க்கையின் தூரதேச புத்தகத்தில்.., ஒவ்வொருவரும் முகமூடி அணியப் பெற்ற நடிகர்களே..! பொறுத்திரு.., விரைவில் உன் பிம்ப நகலும்..!       என்னைத் தேடி சில புதைக்கப்பட்ட உணர்வுகளை விழுங்கிக் கொண்டிருக்கும் இரவு நேரக் கண்ணீர் துளிகள்..! தேக்கி வைக்க நினைக்கையில் இருளின் யதார்த்தங்களில் கொட்டித் தீர்க்கப்பட்ட வலிகளின் திரவியங்கள்..! பெண்மனம் வலிமைதான்.., மெழுகாய் உணர்வுகளில் கரைந்து மீண்டும் திடமாகும் வலிமை ஆணிடத்தில் இல்லையன்றோ..? உணர்வுகளை.., கண்ணீரைக் கடந்து வாழ்ந்த என் நாட்கள் இன்று இவற்றுள் குறுகிப் போக.., மீண்டும் என்னைத் தேடி நான்..! உணர்வுகளற்ற மழலையாய் எல்லாவற்றிற்கும் புன்னகை பதில்களுடன் பொலிவடைந்த என் நாட்கள் இன்று கற்பனையிலும் கரைசேரா படகாய் பரிக்ஷித்து நிற்கிறது..! இன்றெல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது.., என்னுடன் என் நாட்களும்..! கண்ணீரின் அனுமதியின்றி அவ்வளவு எளிதில் கடக்க இயலவில்லை ஒவ்வொரு இரவுகளும்.., தனிமைகளின் துணையின்றி நகரப்படுவதில்லை நாட்கள்.., சாளரத்தில் வெறுமை விரக்திகளை விதைக்கும் அதிகாலை பேருந்தின் பயணம்..! அனைத்தும் பக்குவப் பட்டுக் கொண்டிருந்தாலும் மாற்றங்களின் வலிகள் ரணமாகத்தான் கணக்கிறது..!         உணர்வுகள் தன் மழலைக்கு அன்பிலும் அரவணைப்பிலும் சோறூட்டும் அன்னையை சாளரத்தில் நின்று எட்டிப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தது.., அனாதை இல்லத்தில் தவிக்கும் சிறுமியின் உணர்வுகள்..!         எங்கே என் அன்னை நள்ளிரவில் கழுத்துவரை நனைந்து உதிர்க்கப்பட்ட மழலையின் கண்ணீரில்.., அன்னைமடியற்ற உணர்வுகள் அன்றாடம் ஏங்கிக் கொண்டிருக்கிறது கனவாய்..!           என்னை மறந்த நொடி வீதியில் ஒட்டுக் கந்தல் துணியில் மகளே என்று கையேந்தி நிற்கும் பெண்மணியிடம்., அத்தனையும் மறந்துபோய் துடித்து விடுகிறது மனம்.., பதைபதைப்பாய் ஓரிரு நிமிடம் அன்னையின் அன்புமுகம் அலையாய் மோத..!           அன்னை எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில்.., என்னை மறந்து அம்மா என அனிச்சையில் கதற வாய் திறக்கும் நொடிக்குள்.., குமுறிய உதிரத்தின் வலியறிந்தேன் முதல் முறை...   அன்பு அரவணைக்க எண்ணிய கரங்களும் விளங்காய் மாறிய இமைகளிடம் அன்பும் "விடம்" தான்..       கற்றுத் தந்த வாழ்க்கை * யதார்த்தமாய் மௌனிக்கும் வேளையிலும்.., அசரீரியாய் அவன் நினைவுகள்..! * இருட்டறைக் கண்ணீரில் இரையும் ஞாபகங்களில் "அவள்". * கற்றுத் தேர்ந்த அனுபவங்களிடம் இறுதியாய் சேர்க்கப்பட்ட மரணக் கடிதம்..! * சகாராவின் பிம்பங்களுக்குள் மறைந்து நீடிக்கும் அவள் நினைவுகள்..! * சில நினைவுகள் விழுங்கும் இரவுகளிடம் போராடும் விழிகள்..! * கண்ணீர் சாயல்களிடம் ஏற்க மறுக்கும் பகலவன் விடியலிலும் மெழுகுதிரியின் ஒளி..! * விற்றுப் போன பல சுமைகளுக்கு., உரிமையாளனாய் இன்னும் "சில நினைவுகள்" * கரைந்து போன மௌனங்களிடம் துக்கம் அனுசரிக்கும் உறுத்தல்கள் சில... * உரைந்து எஞ்சிய உயிர்த்துளிகளில் உணராத அவன் நினைவுகள்..! * கல்லறைக் கனவுகளாய் அவனுடனான என் வாழ்க்கை.., கிழித்துப் போட்ட காகிதக் கடிதமாய் அவன் வருகை..! * தூரதேச மலர்களிடம் பெற்றுக் கொண்ட புன்னகையை..,வழியில் சகாராவிடம் ஒட்டு மொத்தமாய் பறிகொடுத்த பட்டாம்பூச்சியின் சாயல்களாய்..."அவன் நினைவு"..! * வழிநெடுக வளர்த்த வண்ணக் கனவுகளை கரிசல்காட்டுக்குள் புதைத்துவிட்டு மரணித்த "விட்டில் பூச்சி"..! * மிளிரும் காலைநேரம் எல்லாம் நெடுஇரவில் உப்புநீரில் குளித்த இமைகளின் இன்னல்கள் நீரோவியமாய் ஒளிந்திருந்தது..! * ஒருமுகப் படுத்தப்பட்ட மனதும் சில கணங்களில் சிதறிப் போகிறது கூழாங்கட்களாய் எறியப்பட்ட "அவன் நினைவுகள்"..! * கடன் சுமைக்குள் மூழ்கிப் போன ஏழையிடம் நேரம் கூட நிர்கதியாய்.., "சுவர்க்கடிகாரம்"..! * மாணவியின் தொடுவானக் கனவுகள் பரிகாசமாய் சிரித்தன.., மிளிராத ஏழைவீட்டு மின்விளக்கை பார்த்து..! * வறுமைக்குத் தாலாட்டுப் பாடும் நிலவிடம்.., ஏழைவீட்டு மழலையும் தஞ்சம்..! *சில்லறைக்காய் கையேந்தும் ஏழ்மையிடம்.., ஏளனப் பார்வையும் கொலைக்குற்றமாய் எழுதப்படுகிறது..! ஆறாத காயங்கள் எழுத்துக்கள் இல்லையெனில் என் பேனாவைவிடக் குறுகியிருக்கும் என் வாழ்நாளும்..! சில ஆறுதல்கள் என்னுள் பிறக்கின்ற போதும்.., மரணிக்காத அவன் நினைவுகளிடம் மட்டுமே விலை போகிறது..! பத்திரப் படுத்திய உணர்வுகளும்.., ஆறாத காயங்களின் நகல்களும்.., உணராத நிமிடங்களில் சிந்திய ஈரங்களும்.., விட்டுவிட்டுத் துடிக்கும் சில நினைவுகளும்.., ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் அவனும்.., வெறுமைகளிடம் விலைபோன நாட்களும்.., என அத்தனையும் மொழிபெயர்த்துவிட்டு.., உறங்க நினைத்தது என் பேனா.., எஞ்சிய வெள்ளைத்தாள்கள் விதவையாய்..!