[] 1. Cover 2. Table of contents முதலிரவில் மயக்கம் முதலிரவில் மயக்கம்   நிர்மலா ராகவன்   nirurag@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/muthaliravil_mayakkam மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation நூல் அறிமுகம் 1. காதல் திருமணம். ஆவலுடன் எதிர்பார்த்தது திடீரென்று அச்சுறுத்தியது ஏனோ? 2. அரசியல்வாதி என்றாலே சுயநலமிதானோ என்று நினைக்கவைக்கும் கதை. ‘பெரிய மனிதர்’ வீட்டுப்பிள்ளை என்றால், எப்படி வேண்டுமானலும் நடக்கலாம் என்பதுபோல் நடக்கும் மகன். 3. கணவன் மரணத்தறுவாயில். தான் அவருடன் வாழ்ந்த (அவல) வாழ்க்கையை எண்ணிப்பார்க்கும் முதிர்ந்த மனைவி. 4. அரசியல்வாதியின் இன்னொரு கோணம் – தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்வது. 5. பதின்ம வயதில் செய்த தவறு வாழ்நாள் முழுவதும் தொடரும் அவலம். 6. தனக்கே குழந்தைகள் பிறந்த பிறகுதான் பெண்ணுக்குத் தெரிகிறது தாய் தன்னை வளர்க்க எத்துணை பாடுபட்டிருப்பாள் என்பது. முதலிரவில் மயக்கம் கல்யாணப் பத்திரிகைகளை என்முன் வைத்துவிட்டு, “வித்யா! ஒன்னோட சிநேகிதிகளுக்கு அனுப்பிடு,” என்று சொல்லிவிட்டு அம்மா போய் அரைமணிக்குமேல் ஆகிவிட்டது. சற்று நேரம் அக்கட்டையே வெறித்துப் பார்த்துவிட்டு, ஒன்றைப் பிரித்தேன். வேண்டாவெறுப்பாக. ‘எங்கள் ஒரே மகள் வித்யாவை விசுவநாதனுக்குக் கன்னிகாதானம் செய்துகொடுப்பதாய் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு..!’ அந்த எழுத்துக்கள் பத்திரிகையிலிருந்து மேலே எழும்பி என்னைப் பார்த்து நகைத்தபடி சுற்றிச் சுற்றி வருவதுபோன்ற பிரமை உண்டாயிற்று. இல்லாத ஒன்றை எப்படி தானம் செய்யப்போகிறார்களாம்? என்ன செய்கிறோம் என்று புரியாமலேயே கையில் பிடித்திருந்த பத்திரிகையைக் கசக்கினேன். அப்போது மீண்டும் அங்கு வந்த அம்மா தன் அதிர்ச்சியை வெளிக்காட்டாது, “சும்மா சும்மா என்ன யோசனை? காத்திலே உலாத்திட்டு வா, போ!” என்றாள் கனிவாக. அம்மாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தே பழகியவள் நான். கனத்த மனத்துடன் தோட்டத்துக்கு வந்தேன். காலையில் அடித்த காற்றிலும் பெருமழையிலும் ஊதா நிறச் செம்பருத்திக் கிளை ஒன்று தரையில் சாய்ந்திருந்தது அப்போதிருந்த மனநிலையில் அதைக் கவனிக்கத் தோன்றவில்லை. ‘சதக்!’ அக்கிளையின் நுனியிலிருந்த மலர் என் கால் செருப்படியில் மாட்டிக்கொண்டு சிதைந்தது. கடவுளுக்குப் படைக்கப்படவேண்டிய மலர்! அஜாக்கிரதையால் உருக்குலைந்துவிட்டது – என்னைப்போல. நான் மலர் என்றால், விசு என் கடவுளா? அயர்வுடன் அருகிலிருந்த பெஞ்சில் உட்கார்ந்தேன். மகிழமரம் உதிர்த்திருந்த பூக்கள், வாடியபோதும், மணம் வீசிக்கொண்டிருந்தன. எனக்கோ உயிர்மட்டும்தான் இருந்தது. மீண்டும் மணமூட்டத்தான் என் பெற்றோர் முயற்சி எடுத்துக்கொள்கிறார்கள். இரண்டு மாதங்களுக்குமுன் விசுவுடன் இதே இடத்தில்தான் அமர்ந்திருந்தேன். “இருட்ட ஆரம்பித்துவிட்டதே! உள்ளே போகலாம்,” என்று நான் எழுந்தபோது, என் கையைப் பிடித்திழுத்து, “என்ன அவசரம்? கைக்குழந்தையா அழுகிறது உள்ளே?” என்று தடுத்தார் விசு. அந்தச் செய்கையிலும் பேச்சிலும் நிறைந்திருந்த குறும்பு! “அடேயப்பா! என்ன வெட்கம்! இப்போதே ஆசைதீர உன்கூடப் பேசிடப்போறேன். குழந்தை பிறந்துட்டா, எனக்கெங்கே நேரம் கிடைக்கும்?” “சும்மா இருங்களேன்!” செல்லமாகச் சிணுங்கினேன். உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு. அவர் எப்போது குழந்தைப்பற்றிய பேச்சை எடுத்து என்னைச் சீண்டினாலும், உடலெல்லாம் புல்லரிக்கும். இன்பக் கனவுலகிற்குப் போய்விடுவேன். விசுவின் விரல்கள் என் விரல்களுடன் பின்னின. எங்களிருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. மூன்று வருடங்களில் எங்களுடைய நட்பு நன்கு கனிந்திருந்தது. நான் பதின்மூன்று வயதாக இருந்தபோது அம்மா சொன்னது அகாலமாக காதில் ஒலித்தது: ‘ஆம்பளை எல்லாரும் நல்லவனில்ல. மொதல்லே மணிக்கட்டைப் பிடிப்பான். இன்னொரு கை மெதுவா மேலே மேலே தடவும். நீதான் புரிஞ்சுக்கிட்டு விலகணும்’. பெரிய கரத்தில் சிறைப்பட்டிருந்த என் கையை வேகமாக விடுவித்துக்கொண்டேன். நீண்ட நேரம் எதுவுமே பேசவில்லை என் விசு. அவருடைய அன்புள்ளத்தைப் புண்படுத்திவிட்டோமோ என்ற தவிப்புடன் நோக்கினேன். “என்ன அப்படிப் பாக்கறே? இன்னும் சில வருஷங்களிலே நம்ப ரெண்டு பேரோட கையையும் பிடிச்சுக்கிட்டு, ஒரு குழந்தை நடக்கப்போறதைக் கற்பனை செஞ்சுபாத்தேன்”. “எப்போதும், குழந்தை, குழந்தை!” போலிக்கோபத்துடன் உரிமையாகக் கடிந்துகொண்டேன். “பின்னே என்னவாம்? பட்டிக்காட்டுப் பொண்ணுமாதிரி நீதான் பயப்படறியே!” குற்றம் சாட்டுவதுபோலப் பேசினாலும், என் கண்டிப்பான போக்கில் அவருக்கிருந்த நம்பிக்கையும் பெருமையும் எனக்குத் தெரியாமலில்லை. ஆனால், நான் பத்திரப்படுத்தி வைத்திருந்த புனிதத்தை எவனோ காமுகன்..! முன்பின் தெரியாதவனுடன் போகக்கூடாது என்பது எனக்குத் தெரியாததில்லை. ஆனால், வேலையிலிருந்து திரும்பும் அன்று மழை, இருள் எல்லாம் எனக்கு எதிராகச் சதி செய்தன. சோதனைபோல், வாடகைக்கார் எதுவும் கிடைக்கவில்லை. “இப்படி நனைஞ்சுகிட்டு நிக்கறீங்களே! வாங்களேன், நான் கொண்டுவிடறேன்!” முதலில் மறுத்தேன். கண்ணியமாகத் தோன்றிய அவனுடைய வற்புறுத்தலால் மனம் மாற, ஏதோ ஒரு அசட்டுத் தைரியத்துடன் அவன் பக்கத்தில் ஏறி அமர்ந்தேன். எத்தனை நேரம்தான் தனியாக மழையில் நிற்பது! மழையைக் கண்டு பயந்து, என் வாழ்வையே பாழடித்துக்கொள்ளப் போகிறேன் என்று அப்போது உணரவில்லை. நள்ளிரவில் பதைபதைப்புடன் வாசலிலேயே நின்றிருந்தினர் என் பெற்றோர். நான் பேசவேண்டிய அவசியமே இருக்கவில்லை. சற்று பொறுத்து, அம்மாதான் மெதுவாகக் கேட்டாள்: “ஒனக்கு அவனை அடையாளம் காட்டமுடியுமா? போலீசுக்குப் போய்..” “வேண்டாம்!” என்றார் அப்பா, தீர்மானமாக. அப்பாவுக்கு உலகம் தெரிந்திருந்தது. எது நடந்தாலும், பெண்களின்மேல்தான் பழி சுமத்தும் நம் சமூகம். எவனோ ராவணன் சிறைப்பிடிக்க, சீதாவைத் தீக்குளிக்க வைத்தாரே ஸ்ரீராமன்! சில தினங்கள் பொறுத்து. “அப்பா! கல்யாணம்.. இப்போ..நடக்கணுமா?” தயங்கியபடி வந்தது என் குரல். “பின்னே?” என்று இரைந்த அப்பா, உடனே தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார். “எல்லா ஏற்பாடும் செய்தாச்சும்மா. இப்போ நிறுத்தினா, கேக்கறவங்களுக்கு என்ன சொல்றது?” மணப்பந்தலில் உரிமையுடன் என் கணவர் என் கரத்தைப் பற்றியபோது, அவரது கண்கள் விஷமமாக என் முகத்தை நாடின – முன்பு நான் அனுமதிக்க மறுத்ததை நினைவுபடுத்துவதுபோல். அந்தக் குறும்பை ரசிக்கமுடியாது, நான் ஜடம்போல அமர்ந்திருந்தேன். மாலை சூடினேன், புன்னகையைக் களைந்துவிட்டு. முதலிரவு. ஆவலெல்லாம் ஒருசேர, நிலைகொள்ளாது அமர்ந்திருந்தார் அவர். நானோ! பலிக்குத் தயாராகும் ஆடு என்னைப்போல்தான் மிரளுமோ? வெளியே மழை வலுத்து, இடியோசை காதைச் செவிட்டாக்கியது. என் கையைப் பற்றியவர் கணவராகத் தோன்றவில்லை. காரில் அழைத்துப்போன அந்தக் கசடன்தான் எதிரில் தெரிந்தான். “என்னை விட்டுடுங்க!” என்று அலறியபடி, மயங்கிவிழுந்தேன், மலைத்துப்போன அவரது கைகளிலேயே. நான் கண்விழித்தபோது அம்மா மட்டும்தான் அருகில். நான் விசித்து விசித்து அழ ஆரம்பித்தேன். இடையிடையே, “கல்யாணம் வேண்டாம்னு சொன்னேனே!” என்று பிதற்றினேன். நிறுத்த முடியாத அழுகை, நிலைத்த கண்களுடன், ஓரிரு நாட்கள் படுக்கையில் அசைவற்ற நிலை – இப்படிக் கிடந்த என்னை மனநல மருத்துவரிடம் – அவர் ஒரு பெண் –அழைத்துப்போனார்களாம். “வித்யா! உலகம் தெரியாத வயசிலே ஏதாவது பாக்கக்கூடாததைப் பாத்து பயந்துட்டியா?” டாக்டர் மெள்ளக் கேட்டார். “ஐயோ டாக்டர்! அறியாத வயசிலே இல்லே”. அதன்பின், வார்த்தைகள் போட்டி போட்டுக்கொண்டு வந்தன. நான் கூறியது டாக்டரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை. முதலிலேயே ஊகித்திருப்பார். “ஒங்க அப்பா, அம்மாவுக்கு இது தெரியுமா?” “தெரிஞ்சும் விசுவை அவங்க இப்படி ஏமாத்தியிருக்கலாமா? தப்பில்லே?” எந்த ஆண் நெருங்கினாலும் அதிர்கிறதே என் உடல்! மனம் முழுவதிலும் குழந்தைக் கனவுகளைத் தேக்கியிருந்த அன்பான என் விசுவுக்கு ஏமாற்றத்தைத் தரலாமா? என் உணர்வுகளைவிட விசுவின் ஆசை நிராசையானதைத்தான் அப்போது பெரிதாக நினைத்தேன். எங்களுக்கிடையே ஒரு பாலமாக இருவர் கையையும் பற்றியபடி ஒரு சிறு குழந்தை! நிதானம் கலைந்துவிட, பெரிதாக அழ ஆரம்பித்தேன். மிகவும் பிரயாசையுடன் என்னைப் படுக்கவைத்தார்கள். ஊசிவழி ஏற்றிய மருந்தாலோ, அல்லது உண்மை வெளியானதில் மனம் லேசானதாலோ, அயர்ந்து உறங்கிவிட்டேன். மறுநாள். “வித்யா!” யார் குரல் இது? கனத்த இமைகளைத் திறந்தேன். தவிப்பும் காதலும் போட்டியிட்ட கண்களுடன் விசு! எந்த முகத்துடன் அவரைப் பார்ப்பேன்! “எங்கே வந்தீங்க? என்னை நிம்மதியா இருக்கவிடுங்களேன்!” என்று அழுதேன். “அசடு! ஆயுசுபூராவும் அழுதாலும், நடந்தது நடந்ததுதான். மாத்த முடியாததைப் பின்னால ஒதுக்கிட்டாத்தான் நிம்மதி. அதுதான் புத்திசாலிக்கு அழகு! நீ சமர்த்தில்லே!” அவருக்கு உண்மை தெரிந்திருக்கிறது! “எனக்கு ஒரு வருத்தம்தான், வித்யா. ஒங்க குடும்பத்திலே ஒருத்தனாத்தான் என்னை நினைச்சுக்கிட்டிருந்தேன்”. “விசு! நானும் ஒங்களை ஏமாத்திட்டேன்!” “விடு!” என் கண்ணீரை அவர் கை ஒத்தி எடுத்தது. “நீ மனசறிஞ்சு எந்த தப்பும் செய்யலேடா! ஒரு விபத்துக்காக நம்ப சந்தோஷத்தை ஏன் பலி குடுக்கணும்?” என்னையே தன் குழந்தையாகப் பாவித்துப் பேசினார். என் அழுகை ஏன் இன்னும் நிற்கமாட்டேன் என்கிறது? என் விம்மலோ, கண்ணீரில் கரைந்துகொண்டிருந்த துயரமோ என் கணவரைக் கலங்கடிக்கவில்லை. நம்பிக்கையுடன் என்னை அணைத்தார். நான் திமிறவில்லை. மந்தி(ரி) மனம் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த மிஸ்.கமலாம்பாளின் கவனம் தடைப்பட்டது. அந்த மூன்று மாணவர்களும் எழுந்து வெளியே நடையைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். தங்களை யார் என்ன செய்துவிட முடியும் என்ற மிதப்பு அவர்கள் நடையில் தெளிவாகத் தெரிந்தது. தன் கையாலாகாத்தனத்தை நொந்துகொண்டு, எதுவும் நடக்காததுபோல் பாடத்தைத் தொடர்வதா என்ற குழப்பம் ஏற்பட்டது ஆசிரியைக்கு. விதிமுறைகளை மீறுவதற்கேபோல் பள்ளிக்கு வருகிறவர்களை என்ன செய்வது? முதல்முறை, இப்படித்தான் உல்லாசமாகச் சுற்றிவிட்டு அரைமணிக்குப்பின் வகுப்பினுள் நுழைந்தார்கள், வாயை மென்றபடி. அவர்களின் தலைவன் யார் என்பதில் அவளுக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. கணேஷை முறைத்தபடி கேட்டாள்: “பாடம் நடந்துக்கிட்டிருந்தபோது எங்கே போனீங்க?” “பாடம் போர்! அதுதான் என் பைக்கை எடுத்துக்கிட்டு வெளியே போனேன். நூடுல்ஸ் சாப்பிட்டோம்”. திமிருடன் வந்தது பதில். பள்ளிக் காண்டீனில் கண்ட நேரத்தில் உணவு விற்கமாட்டார்கள். ஆசிரியைக்கு வாயடைத்துப்போயிற்று. பையனின் அப்பா பேரம்பலத்திற்குப் புகார் போக, “சின்ன வயசில ஃப்ரெண்டஸோட சுத்தறதுதானே ஜாலி! நானும் அந்த வயசில அப்படித்தான் இருந்தேன்,” என்று தலைமை ஆசிரியரிடம் சிரித்தபடி கூறினார். ‘சிறு வயதில் எப்படி இருந்திருந்தால் என்ன, இப்போது உங்களையெல்லாம்விட மேலான நிலைக்கு வந்துவிடவில்லையா?’ என்று கேலியாகக் கூறியதுபோலிருந்தது. “இதையெல்லாம் பெரிசு படுத்தாதீங்க!” என்றபடி ஐயாயிரத்திற்கு ஒரு செக்கும் கொடுத்தார் அந்தப் பெரிய மனிதர். மகனுக்காக நேரத்தைச் செலவழிப்பதைவிட பணம் கொடுத்துச் சமாளிப்பது எளிதாக இருந்தது அவருக்கு. அத்துடன், தான் சிறுவயதில் அனுபவிக்காததையெல்லாம் மகனுக்குக் கொடுத்துவிடுவதுதானே அன்பு! படகுபோன்ற காரில் அந்த மந்திரி, பாடம் கற்பிக்கும் ஆசிரியையோ கணவனுடன் பைக்கில் தொத்திக்கொண்டு வரும் நிலை. மாணவர்கள் அவர்களை மதிக்காததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று பட்டது தலைமை ஆசிரியருக்கு. ஆசிரியர்களின் பொதுக்கூட்டத்தில், “இந்த பணக்கார வீட்டுப் பையன்களை நம்பளாலே ஒண்ணும் செய்யமுடியாது. மாசம் பிறந்தா நமக்குச் சம்பளம் வந்துடுதேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்!” என்று அந்த விஷயத்தை அத்துடன் முடித்தார். கிடைத்த ஐயாயிரத்தில் ஒன்றை மட்டும், ‘பார்ட்டி’ என்று கணக்குக் காட்டிச் செலவழித்துவிட்டு, மீதியைத் தன் கணக்கில் வைத்துக்கொண்டவர் அதன்பின் பையனிடம் அருமையாக நடந்துகொள்ளத் தீர்மானித்தார். அவனுடைய சேட்டைகள் தொடர்ந்தன. ஆண்டு முடிவில் பள்ளியிலிருந்து விலகும்போது, கணேஷ் இளித்தபடி ஆசிரியையிடம் வந்தான். “தாங்க்ஸ், டீச்சர்!” அந்தச் சிரிப்பு ‘இனி உன்னால் என்னை எதுவும் செய்யமுடியாது!’ என்று கேலிசெய்வதுபோல் இருந்தது. அவளால் சும்மா இருக்க முடியவில்லை. “வயசுக்கோளாறால பிள்ளை தப்பு செய்தா, வீட்டில பெரியவங்க கண்டிக்கணும். ஒனக்கு நல்லது செய்யறதா நினைச்சுக்கிட்டு ஒங்கப்பா ஒன்னை ஒன் மனம் போனபோக்கில விட்டிருக்கார். இது எங்க போய் முடியப்போகுதோ!” என்று அங்கலாய்த்தாள். “என்னடா சொன்னாங்க?” என்று கேட்ட நண்பர்களிடம், “பாடம் நடத்தினோமா, சம்பளம் வாங்கினோமான்னு போய்க்கிட்டே இருக்கணும். அதை விட்டுட்டு லெக்சர் அடிக்குது கிழவி!” என்றான் ஆத்திரத்துடன். கணேஷ் வளர்ந்தான். கூடவே, தீயபழக்கங்களும், கூடாத சேர்க்கையும்தான். வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டிருந்த மகனைப் பார்த்து மெள்ள, “ஏதாவது வேலை தேடிக்கயேன்!” என்றார் பேரம்பலம். அவரைவிட கிட்டத்தட்ட ஓரடி உயரமாக வளர்ந்திருந்தவனிடம் அதிகாரத்தொனியில் பேசவே பயமாக இருந்தது. போதாத குறைக்கு, அவருடைய நீண்டகால பதவி வேறு ஆட்டம் கண்டிருந்தது. அவர் பக்கம் திரும்பாது, “எதுக்கு? அதுதான் நீங்க நிறைய பணங்காசு சேத்து வெச்சிருக்கீங்களே, ஏதேதோ தில்லுமுல்லு பண்ணி! அதையெல்லாம் செலவழிக்கவே எனக்கு நேரம் பத்தாது,” என்று அவருடைய கரிசனத்தை அலட்சியப்படுத்திவிட்டு, கார் சாவியைச் சுழற்றியபடி வெளியே நடந்தான். “இந்த ராத்திரி வேளையில எங்கேப்பா போறே?” என்று அவர் ஈனஸ்வரத்தில் கேட்டதை அவன் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. ‘நல்லவேளை, நான் இந்த மனுசனுக்குப் பொண்ணா பிறக்கலே. வீட்டிலேயே வெச்சு பூட்டியிருப்பார்!’ என்று நினைத்துக்கொண்டான். மறுநாள் காலை போன் அடித்தது. "யாருடா இந்த வேளையிலே, என் தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு!’ என்று திட்டியபடி அருகிலிருந்த மேசையைத் தடவினார் பேரம்பலம். அளவுக்குமீறி குடித்து, போதையிலிருந்த மகனால் ஏற்பட்ட விபத்து! மழைக்காக பைக்குடன் மேம்பாலத்தின் அடியில் ஒதுங்கியிருந்த நான்குபேர்மேல் அவன் காரை ஏற்ற, மூவர் தலத்திலேயே மாண்டிருந்தனர். இன்னொரு ஏழைத்தொழிலாளி உயிருக்காக மன்றாடிக்கொண்டிருந்தார். அந்த நிலையிலும் ஒன்று மட்டும் புரிந்தது அந்த அரசியல்வாதிக்கு. கட்சியிலும், மக்களிடையேயும் தன் மதிப்பு அதிகரிக்க இதைவிட வேறு நல்ல தருணம் கிடைக்காது! நடந்ததை மறைக்கமுடியாது போலிருக்கிறதே, அடுத்து என்ன செய்வது என்று அவரிடமே காவல்துறை மேலதிகாரி கேட்க, “என் மகன்னு பாக்காதீங்க. மத்தவங்களுக்கு என்ன தண்டனையோ அதுவே இவனுக்கும் கிடைக்கட்டும்!” என்றபோது, தன் நாணயத்தில் சற்று பெருமைகூட உண்டாயிற்று. தன் பதவி நிலைத்திருக்க வழி செய்துவிட்டோம்! “எங்கப்பா யார் தெரியுமா?” என்று சிறைச்சாலையில் சவால் விட்டபடி இருந்தவனுக்கு அந்த மந்திரியின் மனம் புரியத்தான் இல்லை. அவருடைய வருகையை எதிர்பார்த்து – அவர் வருவார், மகன் செய்தது தவறே இல்லை என்று பக்கபலம் அளிப்பார் என்று காத்திருக்கிறான். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக. நினைவுச் சங்கிலி ஊதுபத்தி விட்டுக்கொண்டிருந்த புகை சிதைவாகிக்கொண்டிருந்த உடலிலிருந்து எழும் துர்வாசத்தை தணிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தது. அதன் அருகே அருகே அமர்ந்திருந்த சாரதா மெள்ள எழுந்தாள். ‘இங்கிருந்து தப்பித்தால் போதும் என்று எழுந்து ஓடாது இருந்தோமே, நல்லவேளை!’ அந்த நினைப்பு எழ, சாரதாவுக்கு லேசாகச் சிரிப்பு வந்தது. மகள் பார்த்துவிடாமல் இருக்க, முகத்தைக் குனிந்தபடி பின்னாலிருந்த அறைக்குள் நுழைந்தாள். நீண்ட நேரம் நின்ற நிலையில் சமைக்க முடியவில்லையென்று, மளிமைச் சாமான்களும், பண்டிகை நாட்களில் மட்டும் பயன்படுத்தும் பாத்திரங்களும் வைத்திருந்த அறையில் ஒரு பாயை விரித்திருந்தாள். “அம்மா! இப்போ எல்லாரும் வந்துடுவா”. நினைவுபடுத்தினாள் கோகிலா. அப்பாவின் மரணச் செய்தி இந்நேரம் எல்லா தமிழ், ஆங்கில தினசரிகளிலும் வந்திருக்கும். அவளுக்கிருந்த மனநிலையில் காலையில் பேப்பர்காரன் வாசலில் எறிந்துவிட்டுப்போன தினசரியை உள்ளே எடுத்துவரக்கூடத் தோன்றவில்லை. “எனக்கு யாரையும் பாக்க வேண்டாம். நான் கொஞ்சம் படுத்துக்கப்போறேன்,” என்று குரல் கொடுத்தவளை எரிச்சலுடன் பார்த்தாள் மகள். அம்மாவைப் பொறுத்தவரை, தாம்பத்தியம் என்னதான் இனிமையாக இல்லாவிடினும், ஐம்பது வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தவருக்காக கிஞ்சித்தும் துக்கம் இருக்காதா? ஊருக்காகவாவது வேஷம் போடவேண்டாமா? அப்படி என்ன துவேஷம்? மகள் தன்னைப்பற்றி என்ன நினைத்திருப்பாள் என்று நன்றாகவே தெரிந்திருந்தது சாரதாவுக்கு. ஆனால், அதற்கு முக்கியத்துவம் அளிக்கத் தோன்றவில்லை. அதுதான், ‘பிறர் என்ன நினைப்பார்கள் என்று பயந்தே வாழ்க்கையில் முக்கால்வாசியைக் கடந்தாகிவிட்டதே! இனியும் என்ன!’ என்ற விரக்தி எழுந்தது. அவள் கல்யாணத்தின்போது, பக்கத்தில் அமர்ந்திருந்த மணமகன் சங்கரன், ஐயர் சொல்லிய மந்திரங்களை அர்த்தம் புரியாமல், சொல்வதாக நடித்தபோது, அவளுக்குச் சிரிப்பு வந்தது. “ஸார்வாள் நன்னா மந்திரம் சொல்றார்!” என்று அயல்நாட்டு மாப்பிள்ளையைப் புகழ்ந்துவைத்தார் ஐயர். அப்போதுதானே லாபம் அதிகரிக்கும்! அவள் சிரிப்பை அம்மா பார்த்திருக்கவேண்டாம். முறைத்தாள். சிறிது பொறுத்து, ‘பிறர் என்ன நினைப்பார்கள்!’ என்ற பொன்மொழி போதிக்கப்பட்டது – அம்மா லலிதா, அத்தை சாந்தா ஆகியோரால். ‘நீ படிச்ச பொண்ணு. ஒனக்கு நாங்க சொல்லித் தெரியவேண்டாம்,’ என்று ஆரம்பித்து, பேசிக்கொண்டே போனார்கள், அவள் கொட்டாவி விடும்வரை. “அவரோட அம்மாவை நீயும் அம்மான்னுதான் கூப்பிடணும்”. “போற எடத்தில எல்லார்கிட்டேயும் மரியாதையா நடந்துக்கோ. அப்போதான் பொறந்தாத்துக்குப் பெருமை!” “நம்ப குடும்பத்திலே நடக்கறது நாலு சுவருக்குள் இருக்கணும். இல்லாட்டா, மத்தவாளுக்குக் கேலியாப்போயிடும்!” அவ்வளவெல்லாம் சொன்னவர்கள், எல்லாவற்றிற்கும் தப்பு கண்டுபிடிக்கிற மாமியாரையும், அடிக்கடி காரணமின்றி கோபப்பட்டு, பிறகு கொஞ்சி, பரிசுப்பொருட்களால் சமாதானப்படுத்த முயன்ற கணவரையும், அவளுடைய இளமை எழிலில் பங்குபெற முனைந்த கணவரது நண்பர்களையும் எப்படிச் சமாளிப்பது என்று ஏன் சொல்லிக்கொடுக்கவில்லை? ‘இவருக்குச் சாதாரணமாகப் பேசவே யாரும் கற்றுக்கொடுக்கவில்லையோ?’ என்ற அயர்ச்சி ஏற்படும்போதெல்லாம் மனதை எப்படிச் சமாதானப்படுத்துவது என்றும் விளக்கியிருக்கலாம். ஐந்து வயதில் மூன்று ஆண்குழந்தைகளுக்குப்பிறகு பிறந்த மகள் சாரதா. இயற்கையிலேயே பிடிவாத குணம் அமைந்திருந்தது. ‘இது பத்ரகாளி! எவன் மாட்டிக்கப்போறானோ!’ என்று கேலியாகச் சிரித்தபடி, உறவினர் பெண்கள் கூறியது மறக்குமா! அவர்கள் கூற்றைப் பொய்ப்பிக்க வேண்டும், தான் ஒரு ஆதர்ச மனைவியாக நடந்துகொள்ள வேண்டும் என்று உறுதிபூண்டோமே! பைத்தியக்காரத்தனம்! காலங்கடந்து ஞானம் வந்திருந்தது சாரதாவுக்கு. மகனுக்குக் கல்யாணம் பண்ணும் உத்தேசத்துடன் அவனை மலேசியாவிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறாள் அவனுடைய அம்மா; அவள் பக்கத்து வீட்டுக்காரர்களின் தூரத்துச் சொந்தம்தானாம் என்ற தகவல் கிடைத்ததும், நம் வீட்டுப்பெண்ணை அவர்களுக்குப் பிடித்துபோய்விட்டால், அவளைவிட அதிர்ஷ்டக்காரி இருக்கமாட்டார்கள் என்று சாரதாவின் உறவினர்கள் நிச்சயித்தனர். ‘பெண்பார்க்கும் வைபவ’த்தில் அவளைப் பார்த்தவுடனேயே பிடித்துப்போயிற்று சங்கரனுக்கு. முதலில் பார்த்த பெண் ’குண்டு’ என்று நிராகரித்திருந்தவனை சாரதாவின் அழகு கிறங்கவைத்தது. வரதட்சணை கேட்காது, ‘ஒங்க பொண்ணுக்கு என்னென்ன நகை போடப்போறேள்? சீர்செனத்தி?’ என்று பலவிதமாக வியாபாரம் நடத்தாது அவர்கள் ஒத்துக்கொண்டபோது, மேற்கொண்டு எதுவும் விசாரிக்கத் தோன்றவில்லை பெண்வீட்டுக்காரர்களுக்கு. கல்யாணத்துக்குமுன் சாரதா உண்மையிலேயே பட்டப்படிப்பு படித்தவள்தானா என்று உறுதிபடுத்திக்கொள்ள உறவினர் ஒருவரை அழைத்து வந்திருந்தான் சங்கரன். ‘பாடத் தெரியுமா, சமைக்கத் தெரியுமா?’ என்றெல்லாம் வழக்கம்போல் கேட்காமல், கல்லூரியில் அவள் எடுத்திருந்த பாடங்களிலிருந்து அந்த மனிதர் சரமாரியாகக் கேள்விகள் தொடுத்தது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. இவளாவது உண்மை பேசுகிறாளா என்று அறியத்தான் அப்படி ஒரு பரீட்சை என்பது அப்போது அவளுக்குப் புரியவில்லை. வருங்கால மாமனாரின் உத்தியோகத்திலிருந்து கணவனுடைய கல்வித்தரம்வரை இயன்றவரை பொய் கூறியிருந்தார்கள் என்று பிறகுதான் அவளுக்குத் தெரிந்தது. ‘நாங்கள் அப்படியொன்றும் பணக்காரர்கள் இல்லை,’ என்று வாய்க்கு வாய் சங்கரன் கூறியபோது, ‘தங்கம் கொட்டிக்கிடக்கும் நாட்டிலிருந்து வந்தவர்! எத்தனை அடக்கமாகப் பேசுகிறார்!’ என்று மெச்சத்தான் தோன்றியது அவளுடைய வீட்டாருக்கு. தானும் பதிலுக்கு எதையாவது கேட்டுவைப்போமே என்று, “நீங்க எப்போ பட்டம் வாங்கினேள்?” என்று தன் கணவனாகப்போகிறவனை விசாரித்தாள். அவன் தடுமாறினான். “எங்க நாட்டிலே.., வேற விதமான படிப்பு. அடுத்த வருஷம்தான்,” என்று குழறியவனைச் சந்தேகிக்கத் தோன்றவில்லை அவளுக்கு. “அவரைப் பிடிக்கிறதோ, இல்லியோ, ஒத்துக்கோடி. அங்கே தங்கம் கொள்ளை மலிவாம். நிறைய ஜப்பான் நைலக்ஸ் புடவை வாங்கலாம். அப்படியே எங்களுக்கும் அனுப்பு!” என்றெல்லாம் ஒன்றுவிட்ட அக்காமார்கள் மாறி, மாறிக் கூறியபோது சிரிப்புதான் வந்தது. எதிலும் சவாலை விரும்பியவளுக்கு தனக்கேற்ற வாழ்வு கிடைத்துவிட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. அடுத்த வாரமே கல்யாணம். அதன்பின், ஒரு வாரம் கழித்து வேறொரு நாடு, அங்கே புதிய குடிஉரிமை என்று அடுக்கடுக்காக நடக்க, ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பதுபோல் இருந்தது சாரதாவுக்கு. முதன் முறையாக விமானத்தில் பறக்கப்போகிற மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு உறவினர், தோழிகள் எல்லாரையும் பிரிந்து போகிறோமே, இனி எப்போது அவர்களைப் பார்க்கப்போகிறோம் என்ற கலக்கத்தில் மறைந்தது. அழ ஆரம்பித்தாள். விமான நிலையத்தில் அம்மா மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தினாள்: “போற எடத்திலே..,” என்று ஆரம்பித்த தாயை, “போறும்மா. நீ சொன்னபடியெல்லாம் நடந்துக்கறேன். விடு!” என்று அடக்கினாள், எரிச்சலுடன். சற்று அதிர்ந்த அம்மா, ‘புது அனுபவம். கொழந்தைக்கு தொடை இத்துப்போறமாதிரி வலிக்கிறதோ, என்னமோ!’ என்று ஊகித்து, அதன்பின் வாயே திறக்கவில்லை. விமானத்தில் ஏறியபின்தான் சாரதாவுக்குத் தன் வாழ்க்கை திசை மாறிவிட்டது லேசாகப் புரிந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்தவன் யாரோ அந்நியன்போல் இருந்தது. முன்பின் தெரியாதவர்களுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்றெல்லாம் போதித்துவிட்டு, ஒரு நாள் கூத்துக்குப்பிறகு, முன்பின் தெரியாத ஒருவரிடம் ஒரு பெண்ணை எப்படி ஒப்படைத்துவிடமுடிகிறது என்று அதிசயப்பட்டாள். “சாரதா! நானும் ஒன்னை சாருன்னே கூப்பிடட்டுமா?” என்று தயங்கிவிட்டு, “காதிலே பஞ்சு வெச்சுக்கோ. பழக்கமில்லாட்டா காதுவலி வரும்”. உரிமையாக அவள் கையில் பஞ்சைத் திணித்தான் சங்கரன். ‘அதற்குள் என்மேல் என்ன கரிசனம்!’ என்று நெகிழ்ந்துபோனாள். அவளையே சற்று நேரம் உற்றுப் பார்த்தவன் அடுத்து கூறியதோ! “எங்கப்பா ஒன்னைப் பாத்தா, ’என் கண்ணு!’ம்பார்!” அவன் குரலில் ஒலித்த பெருமை அவளுக்குப் புரியவில்லை. மாமனாருக்கு என்னைப் பிடித்து என்ன ஆகவேண்டும்? இவர் தனக்காக என்னைக் கல்யாணம் செய்துகொள்ளவில்லையா? சங்கரன் மெல்லிய குரலில் கூறினான்: “எங்கப்பா எங்களோட இல்லே! அவரோட இன்னொரு பெண்டாட்டியோட வேற ஊரில இருக்கார்!” முதல் அதிர்ச்சி. ‘பிள்ளையோட கல்யாணத்தை நடத்திவைக்க அவனுடைய அப்பா வரலியா?’ கேட்டவர்களுக்கெல்லாம் ஏதோ சால்ஜாப்பு கூறிய மாமியாரை நினைத்துக்கொண்டாள். குழப்பமாக இருந்தது. அவளையும் அறியாது, சாரதா தன் குடும்பத்தை நினைத்துப்பார்த்தாள். அவளுடைய அப்பாவுக்கோ அம்மாதான் உற்ற தோழி. அம்மாவுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வார். அவளை அதிகம் யோசிக்கவிடாது, இன்னொரு குண்டைத் தூக்கிப்போட்டான்: “அப்பா ரொம்ப குடிப்பார்”. சற்றுப் பொறுத்து: “நீ அடி வாங்கியிருக்கியா?” “இல்லே,” என்று சற்று ஆச்சரியத்துடன் கூறினாள். புதிய மனைவியிடம் இப்படியெல்லாமா பேசுவார்கள்! “சும்மா சொல்லு. நான் நிறைய வாங்கியிருக்கேன்,” என்று ஊக்குவிப்பதுபோல் மறுபடியும் கேட்டான். “நிஜம்மா இல்லே”. “எங்கப்பா என்னைத் தூணிலே கட்டிவெச்சு அடிப்பார்”. அவன் முகத்தில் வருத்தமில்லை. கோபம்தான். “எதுக்கு? அப்படி என்ன தப்பு..?” அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை. “அப்போ எனக்குப் பத்து வயசு. அப்பா அம்மாவை ரொம்ப அடிக்கறார்னு அவரைப் பிடிக்காது. நான் அம்மா பக்கம். அவருக்கு அந்த ஆத்திரம். சாயந்திரம் விளையாடப்போனா, அஞ்சு மணிக்குள்ளே ஆத்துக்கு வந்துடணும். ஒரு நிமிஷம் லேட்டானாக்கூட அடி!” ‘ஓ! அதுதான், உனக்குக் கிடைக்கக் கொடுத்துவைக்காத பெண் இப்போது என் மனைவி!’ என்ற போட்டியா! அடுத்த மூன்றரை மணி நேரம் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. முன்னறையில் பேச்சுச் சப்தம் கேட்டது. சாரதா குரலை வைத்து, யாரென்று ஊகிக்க முயன்றாள். ‘யாராக இருந்தால் என்ன! பார்ப்பவர்கள் எல்லாரும் அவருக்கு நெருங்கிய சிநேகிதர்கள்! அப்படித்தானே அறிமுகப்படுத்திவைப்பார்!’ என்ற அலட்சியம் எழுந்தது. அவர்களில் ஒருவரையும் அவளுக்குப் பிடித்ததில்லை. வீட்டில் கிடைக்காத நிம்மதியை வீட்டுக்கு வெளியே, நண்பர்களிடம் தேடினார் என்று பிறகுதான் புரிந்தது. அவள் விரும்பினாளோ, இல்லையோ, வந்தவரின் குரல் காதில் விழாமலில்லை. “சங்கரனுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ! ஒங்கம்மாவைப்பத்திதான் வாய் ஓயாம, பெருமையாப் பேசுவான்!” சாரதா உதட்டைச் சுழித்துக்கொண்டாள். தன்னைவிடப் பெயரும் புகழுமாக இருந்த ஒருவருடன் தான் நெருக்கமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டால், தானும் உயர்ந்துவிடுகிறோம் என்றுதானே பலரும் நினைக்கிறார்கள்! அதற்காகத்தானே தேடித் தேடி, தன்னைவிட அதிகமாகப் படித்த, தன்னைவிடப் பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்த, பார்த்தவர்கள் பொறாமைப்படக்கூடிய அழகைக்கொண்ட பெண்களைத் தேடிப் பிடிக்கிறார்கள்! யோசியாமல் காலை விட்டுவிட்டு, அதன்பின் தன் மதிப்பு குறைந்துவிடாது இருக்க, அவளைக் கால்தூசுபோல் நடத்துவார்கள்! ரத்தத்திலேயே ஊறிப்போன குணமாக, சங்கரனும் குடித்தான். போதை அதிகரித்துக்கொண்டே போனபோது, மனைவியை வானளாவப் புகழ்ந்ததும் அவளுக்குத் தெரிந்ததுதான். அதற்காகப் பெருமைப்பட்டுவிட முடியுமா? தனிமையில் வேறொரு முகத்தைக் காட்டவில்லை? அவள் தன் சொல்லைச் சிறிதும் மீறக்கூடாது, அவளுக்கென ஆசைகளோ, சிநேகிதிகளோ இருக்கக்கூடாது, எங்கு செல்வதானாலும் அவர் துணை கண்டிப்பாக இருக்கவேண்டும், அவளுடைய சம்பாத்தியமும் தனக்குத்தான் என்று பிடுங்காத குறையாக எடுத்துக்கொண்டு, அவளுடைய செலவுக்குக் கொஞ்சம் கிள்ளித் தெறித்துவிட்டு – இப்படி அவள் தன் நிழல், தனிப்பிறவி இல்லை என்பதுபோல் நடத்தினானே! வேலைபார்த்த இடத்தில் ஆண்களுடன் பேசினாளா என்று தினமும் துருவித் துருவிக் கேட்பானே! ‘முக்கியமான மீட்டிங்!’ என்று ஏதோ காரணம் காட்டிவிட்டுத் தான் நண்பர்களுடன் கும்மாளம் அடிப்பதுபோல், இவளும் தனித்திருக்கும்போது எப்படி நடக்கிறாளோ என்ற சந்தேகம் அவன் மனதை அரித்ததோ? பல ஆண்டுகள் கழித்து, “கணவன் என்றால், மனைவியை எப்படி நடத்தவேண்டும் என்று தமிழ்ப்படங்களில் பாத்துக் கத்துண்டேன். அது எவ்வளவு தப்புன்னு இப்போதான் புரியறது!” என்று அவளிடம் மன்னிப்பு கேட்பதுபோல் மனதைத் திறந்தான் சங்கரன். அவள் மனப்புண்களை ஆற்ற அந்த வார்த்தைகள் போதவில்லை. அக்கம்பக்கத்தில் எல்லாப் பெண்களும் இவளுடைய நிலையில்தான் இருந்தார்கள். கணவர் குடிபோதையில் சாக்கடையில் விழுந்ததை வர்ணிப்பார்கள். அதைக் கேட்டு, பிற பெண்கள் சிரிப்பார்கள். ஆனால், சாரதாவுக்கு அத்தகைய ஆண்களின் நடத்தை வேடிக்கையாகப் படவில்லை. பெற்றோர்களிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது. அப்பாவுக்குத் தெரிந்தால், துடித்துப்போவார். பூஜை, புனஸ்காரம் என்று இருந்தவரது செல்லப்பெண்ணாக வளர்ந்தவளாயிற்றே! அம்மா என்ன சொல்வாள் என்று யோசித்தாள் சாரதா. ‘நீதான் அன்பு காட்டி, அவரை மாத்தணும்!’ நினைத்தபோதே எரிச்சல் மிகுந்தது. அன்பாக அரவணைப்பதாவது! அர்த்தஜாமத்தில், சுயநினைவு இல்லாது அவன் அருகில் வந்தாலே அருவருப்பாக இருக்கிறதே! அலுவலகம் முடிந்தபின், அடுத்த எட்டு மணிநேரம் எங்கு போய், என்ன செய்வார்? அவளுடைய உணர்ச்சிகள் என்னவென்று அவன் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. ஒருமுறை அவளே அந்தப் பேச்சை எடுத்தபோது, “சும்மா தொணதொணக்காதே. உன்னைமாதிரிப் பெண்கள்தான் ஆண்களைக் ‘கண்ட’ பெண்களிடம் போகச் செய்கிறார்கள்!” என்று இரைந்தான். “இப்போ நான் என்ன சொல்லிட்டேன்! என்னையும் எங்கேயாவது அழைச்சுண்டு போகப்படாதா?” என்றாள் அழுகைக்குரலில். “வெளியில அழைச்சுண்டு போகலேன்னு குறைப்பட்டியே! புறப்படு” வேண்டா வெறுப்பாக அழைத்ததுபோல் இருந்தது. “எங்கே?” என்று கேட்டாள், ஈனஸ்வரத்தில். “என்னோட ஃப்ரெண்ட் ஒரு பார்ட்டி வெச்சிருக்கான். ஒன்னையும் அழைச்சுண்டுவரச் சொல்லியிருக்கான்”. அவள் எந்தப் புடவை உடுத்தவேண்டும், அதற்குப் பொருத்தமாக என்னென்ன நகைகள் அணியவேண்டும் என்று அவன் ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்தபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பிற பெண்களைவிடத் தான் சிறப்பாகக் காட்சி அளிக்கவேண்டும் என்பதில் இவருக்குத்தான் எவ்வளவு அக்கறை! தன்மேல் எவ்வளவு அன்பு இருந்தால், இப்படித் தனக்காக நேரத்தை ஒதுக்குவார்! தான் வீட்டிலேயே அடைந்துகிடப்பதால்தான் குருட்டு யோசனை வருகிறது என்று தன்னைத்தானே கடிந்துகொண்டாள். போகும் வழியில், “அங்கே எல்லார்கிட்டேயும் பேசிக்கிட்டு நிக்காதே. இங்கே இருக்கிறவா குணம் ஒனக்குத் தெரியாது!” என்று கூறியபோது, சற்றுமுன் எழுந்த மகிழ்ச்சி சற்றே மட்டுப்பட்டது. இவருடைய நண்பர்கள் என்றாரே! அவர்களைக்கூட இவரால் நம்ப முடியவில்லையா? அவளுக்குப் பழக்கமில்லாத சூழ்நிலையாக இருந்தது. கணவர் சொற்படி, ஓரிரண்டு வார்த்தைகளில் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு, தர்மசங்கடத்துடன் அவனுடைய ஆமோதிப்பை எதிர்பார்ப்பதுபோல், அவனை நோக்கினாள். கையில் மதுக்கோப்பையுடன், புன்சிரிப்புடன் அவள் செய்வதையே அவன் பார்த்துக்கொண்டிருந்தது தைரியத்தைக் கொடுத்தது. வீடு திரும்புகையில், “சாரு! எல்லாரும் ஒன் அழகைப் பாத்து அசந்துட்டா. என்னைப் பாத்து ஒரே பொறாமை, போ!” என்று குழறியபடி அவள் கையைப் பிடித்தான். எல்லாவற்றிற்கும் பிறருடன் போட்டிபோட்டு, அதில் ஜெயிக்கும் மனப்பான்மை! நண்பர்களுடன் போட்டி. அப்பாவுடனும் போட்டி! ஏன் அப்படி? விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு இருந்ததால், ‘ஜெயிக்கவேண்டும்!’ என்ற அதே மனப்பான்மை எல்லா சூழ்நிலைகளிலும் எழுகிறதோ? சில சமயம், நண்பன் எவனாவது சங்கரனுடன் வீட்டுக்கு வருவான். “ஏன் உள்ளேயே இருக்கே, சாரு? போம்மா. போய் அவனோட பேசு!” “நான் என்ன பேசறது!” என்று முணுமுணுத்தபடி அவள் போவாள். அப்போது அவளுக்குப் புரியவில்லை, அவன் தன்னை ஆழம்பார்க்கிறான் என்று. சிறு வயதிலிருந்தே தனியார் பள்ளிகளில் ஆண்களுடன் கலந்து பேசியிருந்திருக்கிறாள். ஆனால், அவள் அறிந்த நண்பர்கள் மரியாதையாக, மென்மையாகப் பழகுவார்கள். இருந்தாலும், கணவன் சொற்படி நடந்தால், தன் விருப்பப்படி அவரை மாற்றலாமோ என்ற நப்பாசையுடன் பேசப் போனாள். கணவன் உள்ளேயே இருந்ததைப் பெரிதாக நினைக்கத் தோன்றவில்லை. நண்பன் போனதும், “அது என்ன, ஒரு ஆம்பளேயோட அப்படி சிரிச்சு, சிரிச்சுப் பேச்சு? அவன் என்ன சொல்லிட்டுப் போறான், தெரியுமா? ‘நீ குடுத்துவெச்சவண்டா, சங்கரா. அழகும் புத்திசாலித்தனமும் நிறைஞ்ச இப்படி ஒரு பெண் கிடைக்கிறது லேசில்ல,’ அப்படின்னான்,” என்று குரோதத்துடன் அவளைப் பார்த்தான். அவனுக்கென்று வாழ்க்கையில் முதன்முறையாகக் கிடைத்த பொக்கிஷம் அவள். ஒரு குழந்தை தன் ஒரே பொம்மையை இறுகப் பிடித்துக்கொண்டிருப்பதுபோல் அவளைப் பிடித்துக்கொண்டிருந்தான். எந்த வினாடியும் அவள் தன்னை மீண்டும் தவிக்கவிட்டுப் போய்விடுவாள் என்ற பயம் அவனை ஆட்டுவித்தது. இதையெல்லாம் அவனே உணரவில்லையே, அவளிடம் எப்படிச் சொல்வான்? தன்னை அவனுடன் பேசச் சொன்னதே இவர்தானே! சாரதாவுக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது. “இப்போ என்ன சொல்லிட்டேன், அழுது மாய்மாலம் பண்றே?” அவள் பெரிதாக அழ ஆரம்பித்தாள். “ஏய்! சும்மா விளையாடிப் பாத்தா..,” என்று அவள் தோளை அணைத்தபடி படுக்கையறைக்கு அழைத்துச் சென்றான். அவளுடைய உணர்ச்சிப்பெருக்கு உள்ளே வேறு விதமாக வெளிப்பட்டது. கல்வித்தரத்தில் மட்டும்தான் என்னைவிட உயர்ந்திருக்கிறாள். மற்றபடி, குழந்தைதான்! நன்றாக ஆட்டுவிக்கலாம். கணவனது வெற்றிப்புன்னகையைக் கவனிக்கவில்லை அவள். அறையின் வெளியே இன்னொரு குரல் கேட்டது. “சங்கரனுக்கு அவனோட குழந்தைகள்மேலே கொள்ளைப் பிரியம்! கோகி இதில ஜெயிச்சா, இப்படிப் பண்ணினான்னு எப்பவும் ஒங்க பிரதாபம்தான். ஒங்களுக்கு எப்படி இருக்கும்னு புரியுது!” இன்னொரு குரல். ‘அவர் குழந்தைகளுடன் பேசியதைவிட அவர்களைப் பற்றிப் பேசியதுதான் அதிகம்!’ என்று கத்த வேண்டும்போல் இருந்தது சாரதாவுக்கு. அவள் கர்ப்பமாகி இருக்கிறாள் என்று அறிந்ததும், அவன் அடைந்த மகிழ்ச்சி மிகையாகத் தோன்றியது. தினமும் சாயங்காலம், பருத்த வயிற்றுடன் மனைவி பக்கத்தில் நடக்கும்போது, சாரதாவின் கையைப் பிடித்து அழைத்துப்போவான். அவளுக்குப் புரியவில்லை, தான் எதையோ சாதித்துவிட்ட பெருமையை இப்படிக் காட்டிக்கொள்கிறான் என்று. “ஒன்னோட வளைகாப்பு, சீமந்தம் ரெண்டையும் எல்லாரும் பிரமிக்கறமாதிரி நடத்திக் காட்டப்போறேன்!” என்று பலமுறை கூறியபோது, அவள் மகிழ்ந்து சிரித்தாள். ஐந்தாம் மாதமும் வந்தது. “இப்போ வளைகாப்பு வேண்டாம், சாரு. வீண் செலவு! என்ன?” என்றபோது, அவளுக்கு எதுவும் பதில் சொல்லத் தெரியவில்லை. மீண்டும் ஏமாற்றம். குழந்தை பிறந்தால், பொறுப்பு வந்துவிடும், முன்போல் ஊர்சுற்றமாட்டார் என்ற நம்பிக்கையும் பொய்த்தது. “கொஞ்சம் குழந்தையைப் பிடியுங்கோ,” என்று அவள் கேட்டுக்கொண்டபோது, அசட்டுச்சிரிப்புடன், “நீயே தூக்கிண்டு வா. அப்புறம் என்னை வயசானவன்னு நினைச்சுடுவா!” என்று மறுத்தானே! ஒரு குழந்தைக்குத் தகப்பனாகி இருக்கலாம். ஆனால், அந்த உண்மை பிறருக்குத் தெரிந்தால் அவமானமா? இவர் ஏன் இப்படி இருக்கிறார்? விழித்திருக்கும்போது தன்னை எப்படி நடத்தினாலும், அவருக்குத் தான் எதற்கெல்லாமோ தேவைப்படுகிறோம் என்று புரிந்துகொண்டாள். கல்யாணமான புதிதில், இரவு அவள் அயர்ந்து தூங்கும்போது, அவன் குரலைக் கேட்டு விழிப்பாள். “என்னது? ஏதாவது வேணுமா?” அவனுடைய சீரான மூச்சுதான் பதிலாக வரும். தூக்கத்தில் பேசுகிறார்! சிரிப்புடன் மீண்டும் கண்ணயரப்போனவளை அவனுடைய தெளிவான குரல் எழுப்பும்: “என்னை இந்த நரகத்திலிருந்து வெளியிலே கொண்டுவிடு, சாரு!” யாரைக் குறிப்பிடுகிறார் என்று அறிய அவள் ஏதேதோ கேட்டாள். பதில் கிடைக்காதபோது, அயர்ந்து உறங்குகையில், ஆழ்மனம் எழுப்பிய அவல ஓசை அது என்று விளங்கியது. தகப்பனில்லாத குடும்பப்பொறுப்பு தலையில் விழ, பள்ளிப்படிப்பை அரைகுறையாக நிறுத்திக்கொள்ளவேண்டிய சூழ்நிலை சங்கரனுக்கு. ‘கல்யாணமே பண்ணிக்காதேண்ணா!’ என்று கெஞ்சலும் கொஞ்சலுமாக வேண்டுகோள் விடுத்த இரு தங்கைகள். கல்யாணம் செய்துகொடுத்த பின்னரும், மகன் குடும்பச்செலவுக்கென்று கொடுத்த பணத்தில் பெரும்பகுதியை அவர்களுக்காகச் செலவிடும் அம்மா. கணவரைப்போல மகனும் தன்னைத் தவிக்கவிட்டுப் போய்விட்டால், தன் கதி என்னவாகும் என்று கலங்கியவள்போல், அவனைச் சிறுபிள்ளையாகவே நடத்தியவள்! தினமும், “ஏண்டா இப்படி குடிச்சுட்டு வர்றே?” என்று மாமியார் தன் கணவனைக் கண்டபடி ஏசியதைப் பொறுக்க முடியவில்லை சாரதாவால். “ஒங்கம்மா என்ன, இப்படிப் பேசறாளே!” என்று தனிமையில் கணவனிடம் குமுறுவாள். “என்னைத்தானே பேசறா, எனக்கென்ன?” என்பான் அலட்சியமாக. ஆனாலும், அடுத்தமுறை அவள் சொல்லிக்கொடுத்ததுபோல் பேசினான்: “என்னைக் கண்டிக்க பொண்டாட்டி வந்தாச்சு. நீ எதுவும் சொல்லவேண்டாம்!” தாய்க்கு வாய் அடைத்துப்போயிற்று. அவன் அப்பால் போனதும், “நீ நல்லபடியா அவனை நடத்தினா, அவன் ஏன் கெட்டுப்போறான்!” என்று பழியை அவள்மேல் திருப்பினாள். அவளுடைய அம்மா அப்படி இருக்கவில்லை. பதின்ம வயதானபோது, பீங்கான் ஜாடி ஒன்றை சாரதா கை தவறி நழுவவிட்டு, “இதை எடுக்கும்போதே நினைச்சேம்மா, கீழே விழப்போறதுன்னு,” என்றாள். அதற்காக மகளைக் கண்டிக்கவில்லை லலிதா. “எப்பவும் நல்லதையே நினைக்கணும். நாம்ப எது நினைக்கிறோமோ, அது அப்படியே நடந்துடும், தெரிஞ்சுக்கோ!” என்று புத்தி புகட்டினாள். ஒரு பெண்குரல் கேட்டது. மறக்கமுடியுமா அந்தக் கட்டைக்குரலை! ‘சாரதா! நானும் ஒங்க ஹஸ்பண்டும் காதலர்களா இருந்தவங்க. நீங்க சொல்லலியா, சங்கர்?’ என்று அவள் கேட்டபோது, கணவரின் முகம்தான் எப்படி வெளுத்துப்போயிற்று! கணவனிடமிருந்து பிரிந்து, பல ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்தவளுக்குப் பிற பெண்களின் மகிழ்ச்சியான இல்லறத்தைப் பொறுக்கமுடியாதுதான். அவள் அப்பால் சென்றதும், அதற்குமேலும் பொறுக்கமுடியாது, “கழுதை! நான் அதுகிட்ட ஹலோகூட சொன்னதில்லே!” என்று சங்கரன் மனைவியிடம் குமுற, சாரதா சிரித்தாள். “அவளைப்பத்தி எனக்கு நன்னாவே தெரியும்! எந்தப் பொண்ணும் இப்படிப் பேசமாட்டா!” சாரதா நனவுலகுக்கு வந்தாள். ‘பொறுக்க முடியாதது’ என்று கணவர் செய்ததை எல்லாம் நினைவு படுத்திக்கொண்டு இருக்கிறோமே, அவர் நல்லது எதுவுமே செய்யவில்லையா? ‘நீ அப்பாவோட குறைகளையே பெரிசா நினைச்சுக்கறே! அப்பா ரொம்ப நல்லவர்மா,’ என்று மகள் எப்போதோ உரிமையாகக் கண்டித்தது நினைவில் எழுந்தது. சாரதாவைப்போன்று, ‘உற்ற மனிதர்கள்’ என்று யாரும் அருகே இல்லாதவர்களுக்கு பெற்ற குழந்தையே ஆலோசகர். அன்பே இல்லாது, வன்முறையில் வளர்ந்த கணவர் இவ்வளவாவது பிரியமாக இருப்பதே பாராட்டப்பட வேண்டியதுதான். தவறு தன்மேல்தானோ? உள்ளே புழுங்கியது. மூச்சடைத்தது. ‘இந்த ரூமில காத்து, வெளிச்சம் எதுவுமில்லையே! நாள்பூராவும் இப்படி அடைஞ்சுகிடக்கியே!’ என்று கரிசனப்பட்டுவிட்டு, சங்கரன் அங்கு குளிர்சாதன வசதியைப் பொருத்தியிருந்தான். அவளுக்கிருந்த மனநிலையில், அன்று அதைப் பொருத்திக்கொள்ளத் தோன்றவில்லை. அவன் இன்றுதான் பேசுவது போலிருக்க, ‘அவர் எப்படி இருந்தார்?’ என்ற கேள்வி மனத்துள் எழுந்தது. பேச்சு சப்தம் எதுவும் கேட்காததால், சாரதா அறையிலிருந்து வெளியே வந்தாள். ‘வாழ்வில் பட்டதெல்லாம் போதும்டா சாமி!’ என்ற நிம்மதி அந்த உயிரற்ற முகத்தில் படர்ந்திருந்ததுபோல் அவளுக்குத் தோன்றியது. அடுத்த வீட்டிலிருந்து ரேடியோவோ, தொலைக்காட்சியோ ஏதோ பாட்டை ஒலிபரப்பிக்கொண்டிருந்தது. அவளுக்குத் தெரிந்த கர்னாடக சங்கீதம்! மகிழ்ச்சியும் வருத்தமும் ஒருங்கே எழுந்தன. சாரதாவுடைய அப்பாவுக்குப் பாட்டென்றால் உயிர். தனக்கு ஒரு ஸ்வரம்கூட ஒழுங்காகப் பாட முடியவில்லையே, குரல் தகறாறு செய்கிறதே என்ற குறை எப்பவும். சற்றும் அலுக்காமல், தினமும் அவளைப் பாடச்சொல்லி, ரசித்துக் கேட்பார். “நீ பொறக்கறதுக்கு முன்னாடி, ’சரஸ்வதி! நீயே வந்து பிறந்துடு,’ன்னு வேண்டிண்டேன்,” என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார். தன் வேண்டுதல் பலித்து, கலைக்கடவுளே தன் மகளாகப் பிறந்திருக்கிறாள் என்ற நம்பிக்கை அவருக்கு. கணவரோ அவருக்கு நேர் எதிர். “என்ன எப்போ பாத்தாலும் பாட்டு?” என்று இரைவார். மாமியாரும், “நீ என்ன, குடும்பப்பொண்ணா, இல்லே, வேற ஏதாவதா?” என்று சேர்ந்துகொண்டாள். எந்தக் காலத்திலோ, “தேவர்களின் அடியார்கள்” என்று கூறப்பட்ட பெண்கள் கோயிலில், விழாக்களில் பாடி, ஆடினராம். இறைவனுக்கே தம் வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டதால், அவர்கள் யாரையும் மணக்க முடியாது என்ற நிலை. ஆனால், அவர்களது வம்சம் விருத்தியாக, சில ‘பெரிய’ மனிதர்கள் முன்வந்தனர். அந்த வழக்கம் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டுவிட்டாலும், சாரதாவின் மாமியார் பழங்காலத்து நினைவிலேயே இருந்தாள். அவள் கண்ணோட்டத்தில், பாடி, ஆடுகிறவர்கள் ஒழுக்கம்கெட்டவர்கள். சாரதாவுக்கு அவமானமாக இருந்தது. ‘இனி இந்த வீட்டில் பாடினால், ஏனென்று கேளுங்கள்!’ என்று சவால் விட்டுக்கொண்டாள். நவராத்திரி சமயம், தெரிந்தவர்கள் அழைப்பை ஏற்று, அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தாள். “அம்மனுக்கு ஒரு பாட்டு பாடு, சாரதா,” என்று கேட்டபோது, “எல்லாம் விட்டுப்போச்சு, மாமி” என்று சிரிக்க முயன்றாள். “வருஷக்கணக்கா கத்துண்டு இருக்கே! அது எப்படி மறக்கும்?” என்று வற்புறுத்தினாள் அந்த அம்மாள். பாடினாள். குரல் பிசிறடித்தது. “பாடப் பாட ராகம் அப்படிம்பா. உனக்கு நல்ல ஞானம் இருக்கு. இப்படி துருப்பிடிக்க விடலாமோ?” என்று அங்கலாய்த்தாள் அந்த மாமி, விவரம் புரியாது. வருத்தம் மிக, ‘கோயிலுக்குப் போய், சாமிக்குப் பாடினா, தப்பில்லே,’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டாள் சாரதா. “கோயிலுக்கு ஒன்னை அழைச்சுண்டு போகணுமா! அப்படி என்ன பாவம் பண்ணியிருக்கே?” என்று கேட்ட சங்கரன் குரலில் எகத்தாளம். எத்தனைபேர் அவளைக் கச்சேரி செய்ய அழைத்தார்கள்! எவ்வளவோ நாசுக்காக மறுத்தும், ‘கர்வி’ என்ற பட்டப்பெயர் கிடைத்தது. ‘அவருக்குப் பிடிக்காது,’ என்று சொல்லி இருக்கலாம். ஆனால், அம்மா, ‘நம்பாத்தில நடக்கிறது நாலு சுவருக்குள் இருக்கணும்’ என்று பலமுறை போதித்திருந்தாளே! அந்த அம்மாவிடம் முறையிடவேண்டும், ‘நீ சொன்னபடியெல்லாம் நடந்துபாத்தேம்மா. என் சந்தோஷம் பறிபோனதுதான் கண்ட பலன்!’ என்று. ஒருமுறை, பொறுமை மீறி அவளும் சண்டைபிடித்தபோது, மூன்று வயதான கோகிலா பெரிதாக அழுதாள்: ‘பயம்! பயம்!’ அதற்குப்பின், சாரதா தன் குரலை எழுப்பவேயில்லை. தனக்குக் கிடைத்ததைப்போல் நல்ல தந்தை கிடைக்க இந்தக் குழந்தைக்குக் கொடுத்துவைக்கவில்லை, நாமும் படுத்தவேண்டுமா என்று அவள் யோசனை போயிருந்தது. அவ்வப்போது, ‘அதே மனிதர்தானா இவர்!’ என்று சாரதா ஆச்சரியப்படும் அளவுக்கு நடந்துகொண்டான் சங்கரன். அலுவலக விஷயமாக வெளிநாடு போயிருந்தவன், ஐந்து புடவைகளை அவளுக்காக வாங்கி வந்திருந்தான். “கஸ்டம்ஸில எத்தனை தண்டம் அழுதேள்?” புதிய ஆடைகள் இருந்தால் சுங்க வரி கட்டவேண்டும் என்பதை அனுபவத்தில் அறிந்திருந்தாள். “ஒண்ணுமில்லே. என் மனைவிக்கு’ன்னு சொன்னேன். சிரிச்சுண்டு விட்டுட்டா!” என்று பெருமையாகச் சொன்னான். “‘மனைவியே மாணிக்கம்’ சினிமாவில கதாநாயகி இதேமாதிரி புடவையைத்தான் கட்டிண்டாளாம். இதைப் பாத்தியா? ரெடிமேட் பிளவுஸ்! ஒன் அளவுதான். போட்டுப்பாரு!” அவன் குரலிலிருந்த உற்சாகம் அவளையும் பற்றிக்கொண்டது. உடனே மாற்றி, அணிந்து வந்தாள். பிரமிப்புடன், “எப்படி இவ்வளவு கரெக்டா இருக்கு?” என்றபோது, “அங்கே ஒரு பொண்ணு இருந்தா. ’என் ஒய்ஃப் ஒங்க சைஸ்தான் இதைக் கொஞ்சம் போட்டு, சரியா இருக்கான்னு சொல்றீங்களா, ப்ளீஸ்?’னு கேட்டேன்.” சாரதாவுக்குச் சிரிப்புப் பொங்கியது. இன்னொருத்தியின் மார்புச் சுற்றளவை கண்ணாலேயே அளந்திருக்கிறார்! “அவ தப்பா எடுத்துக்கலியா?” அவன் விழித்தான். “ஊகும். நான் கேட்டது தப்பா?” ஒரு டிரான்ஸிஸ்டரும் வாங்கி வந்திருந்தான். “ஒங்கப்பாவுக்குக் கொண்டுபோய் குடு, சாரு. நான் வாங்கிக்குடுத்தேன்னு சொல்லு!” பக்கத்து வீட்டு ரேடியோவில் திரைப்படப் பாடல் ஒலித்தது. ஒரு சாயந்திர வேளை, கணவனுடன் சென்றிருந்த நாட்டிய நிகழ்ச்சி சாரதாவின் நினைவில் ஆடியது. நாட்டியம் சுமார் என்றால், பின்னணிப்பாடகி அதை இன்னும் மோசமாக்கினாள். “பாட்டு சகிக்கலே. நீ பாடேன்!” என்று திரும்புகையில் சங்கரன் கேட்டுக்கொண்டபோது, அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. பாடினாலே, ‘ஆரம்பிச்சுட்டியா?’ என்று வீட்டைவிட்டு வெளியேறியவர் இன்று வலிய, தன்னைப் பாடச்சொல்லி கேட்கிறார்! இரவில் படுக்க ஆயத்தமானபோது, “இன்னிக்கு நீ ரொம்ப நன்னாப் பாடினே,” என்று கேட்டபோது, அவள் காதுகளை அவளாலேயே நம்ப முடியவில்லை. தொடர்ந்து, “டிரைவருக்காகப் பாடினியோ?” என்று குத்தலாக ஒரு கேள்வி வர, அவளுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது, தங்களுடன் இன்னொருவரும் காரில் இருந்தது. ‘இவருக்கு மூளையில் சாணி!’ என்று தனக்குள் திட்டிக்கொண்டாள். சற்றுமுன் அடைந்த அவமதிப்பு குறைந்தது போலிருந்தது. திருமணமாகி ஈராண்டுகள் கழித்து, “நான் எங்கப்பா, அம்மாவைப் பாக்கப் போயிட்டு வரட்டுமா?” என்று கெஞ்சலாகக் கேட்டவளை உற்றுப்பார்த்தான் சங்கரன். “எனக்குத் தெரிஞ்சுபோச்சு. ஒனக்கு அங்கே இன்னொருத்தன் இருக்கான்!” என்று விஷத்தைக் கக்கினான். “அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ,” என்று அழத்தான் முடிந்தது அவளால். ‘அப்படி ஒருத்தன் இருந்தா, நான் ஒங்களோடேயா இருப்பேன்?’ என்று சொல்ல நினைத்து, முகத்தைச் சுருக்கிக்கொண்டாள். ஐந்து வருடங்கள் கழிந்தபின், தாயகம் திரும்பினாள், ‘பேத்தியை தாத்தா-பாட்டியிடம் காட்ட’ என்ற சாக்குடன். அம்மாவைக் கண்டதும், இவ்வளவு காலமாக அடக்கி வைத்திருந்தது வெளியே பீறிட்டது, எரிமலைக்குழம்பாக. “அவருக்கு உன்னைக் கண்டால் பொறாமை!” லலிதா முடிவெடுத்தாள். “அப்பாவுக்கும் எனக்கும் எத்தனையோ தடவை சண்டை வந்திருக்கு. ஆனா, இப்படி – கண்டவனோட சம்பந்தப்படுத்தி – அசிங்கமா அப்பா பேசினதேயில்லே,” என்றவள், “சகிக்க முடியலேன்னா, நீ திரும்பி வந்துடு,” என்று ஒரு வழி காட்டினாள். சற்றும் யோசிக்காது பதிலளித்தாள் மகள். “நான் அவருக்கு வேணும்மா. அவருக்கு இப்போ அது புரியலே. குழந்தைக்கும் அப்பா வேணுமில்லியா?” புரிந்தவளாக, அம்மா தலையாட்டினாள். இரண்டுவயதுக் குழந்தையாக இருந்தபோதே, எடுத்த காரியத்தை நேர்த்தியாக முடிக்காமல் விடமாட்டாளே! “என்னமோ, போ! விசாரிக்காம, ஒன்னைப் படுகுழியில தள்ளிட்டோமோன்னு மனசு கிடந்து அடிச்சுக்கறது!” என்றாள், விரக்தியுடன். “நீ என்னைக் கொடுமைப்படுத்தி இருக்கணும்மா,” என்று, கொஞ்சலாக சாரதா முறையிட்டாள். வலிதா பெருமிதத்துடன் சிரித்தாள். “இப்போ ஒனக்கு அதுதானே ஞாபகம் இருக்கு? இங்கே இருக்கிறவரைக்கும் நிறைய கச்சேரி கேளு. எதையாவது படிச்சுண்டு, சந்தோஷமா இரு”. என்றோ படித்திருந்தது நினைவுக்கு வந்தது சாரதாவுக்கு. தானும் துன்பம் அனுபவித்திருந்தால், பிறரது துன்பத்துக்காகப் பரிதாபப்பட முடியாது. ஆற்றிலே முழுகுபவரைக் காப்பாற்ற கரையிலே இருப்பவரால்தானே முடியும்? ‘வாழ்க்கை ஒரு சவால், அதில் நான் வெற்றி பெற்று உலகிற்குக் காட்டுவேன்!’ என்று தீர்மானம் எடுத்திருந்தாலும், இருபத்து ஐந்து வருடங்கள் உள்ளேயே அமுக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் சாரதாவின் உடலைப் பாதித்தன. “மனிதராகப் பிறந்த நம் எல்லாருக்கும் ஏதாவது மனஇறுக்கம் இருக்கத்தான் செய்கிறது,” என்று மருத்துவர் பட்டுக்கொள்ளாமல் கூற, உடன் வந்திருந்த சங்கரன் அவசரமாக, “இவள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாள், டாக்டர்,” என்றுவிட்டு, அவள் பக்கம் திரும்பினான். “இல்லையா?” சாரதா லேசாகச் சிரிக்க முயன்றாள். கணவரை விட்டுக்கொடுப்பானேன்! மாறி, மாறி ஏதோ வியாதி வந்தவண்ணம் இருந்தது. எதுவும் இல்லாவிட்டால், கால் கட்டை விரலிலாவது அடிபட்டு, வீங்கும்! சாரதாவுக்குப் புரிந்தது. உடலில் ஒரு கோளாறும் இல்லை. மனம்தான் இடக்கு செய்கிறது! தான் எதற்கு கடந்தகாலத்திலேயே எண்ணங்களைப் பதித்து, தன்னையே வருத்திக்கொள்கிறோம்? நடந்ததை என்னவோ மாற்ற முடியாது. தன்னிரக்கம்! அதை வென்றாலே போதும். எந்த சந்தர்ப்பத்திலும், எவராலும் தன்னை அசைக்க முடியாது! சாகப்போகிறோம் என்று புரிந்தவுடன், கடந்த காலத்திய தவறுகள் கணவருக்கே தெரிந்திருக்கவேண்டும். கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக, பலமுறை வருத்தத்துடன் கூறிவிட்டார், “நான் ஒரு மோசமான கணவனா, அன்பில்லாத அப்பாவா இருந்திருக்கேன்!” இரண்டு நாட்களுக்குமுன் அவர் கூறியது இன்னும் காதில் ஒலித்தது. “அடுத்த ஜன்மத்திலேயும் நீதான் என்னோட பொண்டாட்டியா வரணும்னு சாமியை வேண்டிக்கப்போறேன், சாரு!” அப்போது அவள் கலீரென்று சிரித்தாள். “நான் பொண்ணாத்தான் பிறப்பேன், அதிலும் இப்போ இருக்கிறமாதிரியேதான் இருப்பேன்னு என்ன நிச்சயம்?” என்றவள், மெள்ள, “அடுத்த ஜன்மத்திலேயாவது நல்ல அப்பா-அம்மாவுக்குக் குழந்தையா பிறக்கணும்னு வேண்டிக்கோங்கோ!” என்றாள். அவளுடைய குரலில் இருந்த பரிவு அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவர் முகத்தில் இருள் சூழ்ந்தது. தன்மேல் கொண்ட பொறாமையுடன், அழகான மனைவியுடன் கழிக்கும் நேரத்தைக் குறைக்க எண்ணியவர்கள்போல் அமைந்த ஓரிரு நண்பர்கள்! வயதான காலத்தில் எல்லாரும் எங்கே காணாமல் போய்விட்டார்கள்? எந்த நிலையிலும் தன்னிடமிருந்து விலகாத மனைவி! அவளுக்கு என்ன கைம்மாறு செய்வது? “நாளைக்கு நான் ஒன்னைப் பாப்பேன்னு தோணலே. அப்படி என் உசிரு போயிட்டா.,” என்ற குரல் தழுதழுத்தது. “என்ன பேச்சு இது?” என்று அவள் தடுக்கப்பார்த்தாள். “நாம்ப எல்லாரும் ஒருநாள் போகத்தானே போறோம்! அப்படி எனக்கு ஏதாவது ஆகிட்டா, நீ இப்போ இருக்கிறமாதிரிதான் இருக்கணும் – சிரிச்ச முகமா, நெத்தியில பொட்டோட! அதை அழிச்சுடாதே!” கணவனுடன் இந்துப் பெண்கள் பூவையும் பொட்டையும் வைத்துக்கொள்ளும் பாக்கியத்தையும் இழந்துவிடுவதை சூசகமாக உணர்த்தினார். இப்போது அவர் நெற்றியில்தான் பெரிய குங்குமப்பொட்டு! சாரதா பெரிதாக அழ ஆரம்பித்தாள். “என்னை விட்டுட்டுப்போக ஒங்களுக்கு எப்படி மனசு வந்தது?” அள்ளிக் கொடுத்தவன் ‘எவன் எவனுக்கோ பேரும் புகழும் கிடைக்குது!’ கையிலிருந்த தொலைபேசியை சோபாவின் பக்கத்தில் எறிந்தார் பழனியப்பன். அவருக்கு எழுந்த எரிச்சலில் தூர வீசியிருக்கலாம்தான். ஆனால் நஷ்டம் தனக்குத்தானே என்ற விவேகம் அவருக்கு இருந்தது. யாரோ நடிகனாம். அதுவும் ஆரம்ப கால நடிகன். ஆனால் பிழைக்கத் தெரிந்தவன். இல்லாவிட்டால், அவனுடைய அற்ப சொற்ப வருமானத்தில் பெரும்பகுதியை தருமத்திற்குக் கொடுத்திருப்பானா! அதையும் நான்கு பதிவுகளில் – பெரிய போட்டோவுடன் – முகநூலில் போடச் செய்திருப்பானா? எல்லாம் அரசியலில் நுழையச் செய்கிற சதித்திட்டம்! தானும்தான் நாற்பது வருடங்களாக இதே துறையில் இருக்கிறோம். இந்த யுக்தி தோன்றாமல் போய்விட்டதே! பழனியப்பன் உடனே காரியத்தில் இறங்கினார். ஏதாவது ஓர் அனாதை ஆசிரமத்துக்குப் போய், அங்குள்ள குழந்தைகளுக்கு ஐந்தோ, பத்தோ கொடுப்பது என்று தீர்மானித்தார். என்ன, ஆயிரம் வெள்ளி செலவாகுமா? அது போதாது. பத்தாயிரமாவது கொடுத்தால்தான் பெயர் வரும். சற்று யோசித்து, பாலஸ்தீனத்தில் போரினால் அவதிப்படுகிறவர்களுக்கு எவ்வளவு அள்ளிக் கொடுத்தாலும் போதாது. தன் தர்ம குணத்தைப் பறைசாற்ற நல்ல வழி அதுதான் என்று பலவகையாக யோசித்து, காசோலையில் எழுத ஆரம்பித்தார். அவர் தோள்வழியே எட்டிப்பார்த்த மனைவி, “எதுக்குங்க இவ்வளவு காசு?” என்று வாயைப் பிளந்தாள். கோயிலில் தட்சணையாக ஒரு வெள்ளி போடுவதே அதிகம் என்று அவளைக் கண்டித்திருக்கிறார். “சாமிதான் நமக்குக் குடுக்குது. அது கடனா, நாம்ப திருப்பிக்குடுக்கறதுக்கு?” என்று அவர் சொல்லியதும் அவளுக்கு நியாயமாகத்தான் பட்டது. இப்போது தன் காசு எங்கே போகிறது என்பதை விளக்கிவிட்டு, “அவங்க நம்ப இனம் இல்லே. இப்படியெல்லாம் ஏதாச்சும் செஞ்சாத்தான் முன்னுக்கு வரமுடியும். நாளைக்கே, ‘மந்திரி பொண்டாட்டி!’ அப்படின்னு நாலு பேர் வாயைப் பிளந்து, ஒன்னைக் கையெடுத்துக் கும்பிடுவாங்க, பாரு!” தான் என்ன, பிற ஆண்களைப்போல் ஊருக்கு ஒரு சின்ன வீடு வைத்திருக்கிறோமா? மனைவியே அழகாக, மக்காகத்தானே இருக்கிறாள் என்ற பெருமை கலந்த திருப்தி அவருக்கு. தன் நல்ல குணத்துக்கு கண்டிப்பாக அரசியலில் முன்னுக்கு வந்துவிடலாம். தன் காரியதரிசியை அழைத்தார். “புத்தாண்டு வருதில்ல? அதுக்கு ஏதாவது அனாதை ஆசிரமத்துக்கு நான் போய் நன்கொடை குடுக்க ஏற்பாடு பண்ணு”. “அதுக்கு இன்னும் ரெண்டு வாரம் இருக்குங்களே! நாலே நாள்லே கிறிஸ்துமஸ் வருது!” “அப்போ சரி. அப்படியே இதையும் அனுப்பிடு!” என்று, காசோலையை அவன் கையில் கொடுத்தார். உள்ளூர் முகவரிதான். போரினால் பொருளையும் நாட்டையும் இழந்து திண்டாடுகிறவர்களுக்கு அளிக்க யாரோ புண்ணியவான் நிதி திரட்டுகிறான். அனாதைக் குழந்தைகள் ஒவ்வொருவராக வரிசையில் வர, பழனியப்பன் போலிப்புன்னகையுடன் அவர்கள் கையில் பத்து வெள்ளியைக் கொடுக்க, காமராக்கள் இயங்கின. அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை, அவர்களைப் பார்த்துக்கொள்வதற்கென நியமிக்கப்பட்டிருந்த ஆயா உடனே அவர்களிடமிருந்து அதைப் பிடுங்கிக்கொள்வாள் என்று. “என்னோடது!” என்று ஒரு சிறுவன் தப்பித்து ஓடப்பார்த்தான். அவளும் விடாது துரத்தினாள். கிரீச்! திரும்பிப் பார்த்துவிட்டு, “ஏதோ விபத்து, ஸார்,” என்று கூடவே இருந்த காரியதரிசி கூறினார். “இதெல்லாம் போலீஸ் விவகாரம். நாம்ப மாட்டிக்கப்படாது! வந்த வேலை முடிஞ்சுடுச்சில்ல!” அப்போது அவருக்குத் தெரியவில்லை அவர் கொடுத்திருந்த பத்து வெள்ளியைப் பத்திரப்படுத்துவதற்காக நடுத்தெருவில் ஓடி, விரைந்து வந்த வாகனச் சக்கரத்தில் மாட்டி உயிரை இழந்தான் ஒரு சிறுவன் என்று. மேலும் இரு தினங்கள் கழிந்தன. தினசரியைப் புரட்டியவருக்கு அதிர்ச்சி. ‘போரினால் பொருளையும் நாட்டையும் இழந்து திண்டாடுகிறவர்களுக்கு அளிக்க நிதி அளியுங்கள்!’ என்று கூவி, லட்சக்கணக்கில் பணம் சேர்த்து, அதைத் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்ட பத்து நபர்களின் புகைப்படம்! குற்றம் செய்யும்போது அவமானம் இல்லை, பிடிபட்டால்தான் கேவலம் என்ற உண்மையை வெளிக்காட்டுவதுபோல், எல்லாரும் குனிந்த தலையுடன் அமர்ந்திருந்தார்கள். ‘இது நல்லவனுக்குக் காலமில்லே!’ என்று உரக்கவே கூறினார் பழனியப்பன். அறியாப் பருவத்திலே மணப்பெண்ணைப் பார்த்தபோது அதிர்ச்சியைவிட ஆனந்தம்தான் அதிகம் எழுந்தது ரமணனுக்கு. இவளுக்கு என்ன, இருபத்து நான்கு வயதிருக்குமா? கணக்குப் போட்டுப்பார்த்தால் சரியாக வந்தது. ‘கணக்கு’ என்றதுமே உமா ஞாபகம்தான் எழுந்தது. கண்டிப்பாக உமாவுக்குப் பிறந்தவளாகத்தான் இருக்கவேண்டும். அதே சாயல், அதே வெட்கங்கலந்த சிரிப்பு. அவனுடன் படித்த உமா படிப்பில் கெட்டிக்காரி. பாடத்தில் சந்தேகம் கேட்பதுபோல் அவளுடன் பழகியவன் அவளுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானான். சிடுமூஞ்சி கணக்கு வாத்தியாரைப்போல் இல்லாது, பொறுமையாக விளக்கிவிட்டு, “நான் என்ன, ஒன்னோட டீச்சரா?” என்று சிரிப்பாள் உமா. வெட்கமும் பெருமையும் அதில் கலந்திருக்கும். "சனிக்கிழமை என்கூட ஒரு இடத்துக்கு வர்றியா? என்று அவன் கெஞ்சலாகக் கேட்டபோது, அவள் அதிகம் யோசிக்கவில்லை. “எங்கேடா?” என்றுமட்டும் கேட்டாள். “சொன்னாத்தான் வருவியா? அது ஒரு சர்ப்ரைஸ்! ஒனக்கு நிச்சயம் பிடிக்கும்,” என்று புதிர் போட்டுவிட்டு, “லைப்ரரின்னு வீட்டிலே சொல்லிட்டு வா!” என்று திட்டம்கூட வகுத்துக்கொடுத்தான். “எங்கேடா?” மீண்டும் கேட்டாள். “ராஜன் வீட்டுக்கு!” என்று மட்டும் தெரிவித்தான். அவர்களுடன் இன்னும் நாலைந்துபேர் இருந்தார்கள். ஒன்றாகப் படித்தவர்கள். “டி.வி பாக்கத்தான் என்னை வரச்சொன்னியா? இதுக்கு வீட்டிலேயே ஒக்காந்து படிச்சிருப்பேன்,” என்று அலுத்தவளிடம், “இது வேற மாதிரி,” என்று நமட்டுச்சிரிப்புடன் புதிர்போட்டான் ரமணன். அவளுக்குப் பயம் வந்தது. “ராஜன்! ஒங்க வீட்டிலே பெரியவங்க யாரும் இல்லே?” என்று கேட்டாள். “அப்பா வேலை விஷயமா வெளிநாட்டுக்குப் போயிருக்கார். அம்மாவும் கூடப்போயிருக்காங்க. வீட்டிலே நானும், அண்ணனும்தான். நல்ல காலம், அவனுக்கு இன்னிக்கு ஏதோ விளையாட்டுப்போட்டி! நாம்ப ஜாலியா படம் பாக்கலாம்!” பெரிய சிரிப்புடன் பதில் வந்தது. “நான் போறேன்,” என்று எழுந்தவளின் கையைப்பிடித்து இழுத்தான் ரமணன். “ஒனக்கும் சேர்த்துக் காசு குடுத்திருக்கேன் உமா. கொஞ்சம் பாரு. பிடிக்காட்டி போயிடலாம்”. அறையில் அசாத்திய மௌனம் நிலவியது. எல்லாம் படம் ஆரம்பிக்கும்வரைதான். அதன்பின் ஒரே கூச்சல், கும்மாளம். படிப்பைத்தவிர வேறு எதையும் அறிந்திராத அந்த பதினான்கு வயதுப் பெண்ணுக்கு வெட்கமாக இருந்தது. ‘பெண்களை என்னமாக இழிவு படுத்துகிறார்கள்!’ என்று கோபமும் வந்தாலும், புதிய விஷயத்தை அறிந்துகொள்வதில் ஏற்பட்ட ஆர்வத்துடன் பார்த்தாள். திரையில் வரும் பெண்ணாகவே காமத்துடன் தன்னைப் பார்க்கிறார்கள் நண்பர்கள் என்று புரிந்துகொண்டபோது நிலைமை முற்றியிருந்தது. அதற்கடுத்த வாரம் பள்ளியில், “ஸாரி உமா. இனிமே அப்படிப் பண்ணமாட்டேன்,” என்று ரமணன் மன்னிப்பு கேட்டுக்கொண்டான். “நடந்ததை மறந்துடு”. ஆனால், நடந்ததை மறக்கமுடியாதபடி விதி விளையாடியது. “யாருடி அவன்? நீ படிச்சு முன்னுக்கு வருவேன்னு பாத்தா, இப்படி கெட்டுப்போய் வந்து நிக்கறியே!” அப்பா குதித்தார். இருபுறமும் போலீஸ் காவலுடன், தலையைக் குனிந்தபடி, ரமணன் நடந்தபோது பள்ளி முழுவதும் வேடிக்கை பார்த்தது. பின்னால், வருத்தமே உருவாக அவனுடைய விதவைத்தாய். இளம் வயது அவனுக்குத் துணையாக இருந்தது. சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினார்கள். ராஜன்தான், ‘எனக்கென்ன பயம்? எங்கப்பா எனக்கு ஆதரவா இருக்காரு!’ என்று வீறாப்பாகப் பேசினாலும், ஈராண்டுகளாக இப்படி ஒரு தொழிலில் சாமர்த்தியமாகச் சம்பாதித்த தனக்கு உலை வைத்துவிட்டானே பாவி என்று குமுறினான். ‘அந்தப் பொண்ணு ’நோ! நோ!’ ன்னு கத்தினா. அவ கையையும், காலையும் ரெண்டு, ரெண்டு பேர் பிடிச்சுக்கிட்டு," என்ற வர்ணனையுடன் வாக்குமூலம் அளித்தான். வீடியோ கடைக்குப்போய், ‘ஸ், ஸ்’ என்று ரகசியக்குரல் கொடுக்க, மேசை அடியில் கொடுப்பார்கள் அப்படங்களை. அவன் நல்ல காலம், ‘அவங்க அந்த மாதிரி படம் பாக்கறப்போ ஒனக்கென்ன அங்கே வேலை?’ என்று யாரும் அவனைக் கேட்கவில்லை. போலீஸ் அதிகாரியின் பிள்ளையாயிற்றே! வியாபார நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, புதிய மனிதனாக வெளியே வந்த ரமணன் முதல் வேலையாக உமாவைத் தேடிப்போனான். அவளிருந்த வீட்டில் யாரோ குடியிருந்தார்கள். எங்கு போய் தேடுவது என்ற குழப்பம்தான் எழுந்தது அவனுக்குள். விரக்தியுடன், தானுண்டு, தன் கடை உண்டு என்று வாழ ஆரம்பித்தான். ரமணனுடைய மினி மார்க்கெட்டில் வேலை செய்த பரதனுக்குக் கல்யாணமாம். “எல்லாரும் ஒங்களைமாதிரி சன்யாசியா இருப்பாங்களா ஸார்?” என்று விளையாட்டாகக் கேட்டபடி பத்திரிகை கொடுத்தான் மாப்பிள்ளை. நானா சன்யாசி! நான் பிஞ்சிலேயே வெம்பிப்போனவண்டா! “என்னடா? லவ்வா?” வெட்கப்பட்டான். “அதெல்லாம் இல்ல ஸார். அனாதை ஆசிரமத்திலே வளர்ந்த பொண்ணு. பஸ் ஸ்டாப்பில பாத்தேன். பிடிச்சுப்போச்சு”. “அப்போ அது லவ்தான்!” தனக்கும் மீண்டும் கலகலப்பு வந்துவிட்டதே என்ற ஆச்சரியம் எழுந்தது ரமணனுக்கு. மணவறையில் அமர்ந்த பெண்ணைப் பார்த்ததும், அவன் மனம் ஆடிப்போயிற்று. இவளா? இவளா அனாதை? அப்பன் நானிருக்கிறேன். ஆனால், அதை உரக்கச் சொல்லமுடியுமா? பிறந்ததுமே, ‘வேண்டாம்!’ என்று உன்னை உதறிவிட்டுப் போய்விட்டாளா உன் தாய்? ஆத்திரம் எழுந்தது. ‘பாவம், சிறு பெண்! அவள் வேறு என்ன செய்திருக்க முடியும்?’ என்று மூளை தர்க்கம் செய்தது. நான் செய்த தவற்றுக்கு இப்பெண்கள் இருவரும் பலி! “மொதல்லே முதலாளி காலிலே விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கலாம், வா!” கூச்சத்துடன் காலை பின்னுக்கு இழுத்துக்கொண்டான் ரமணன். “நல்லா இருங்க!” என்று வாழ்த்தியபோது, குரல் தழுதழுத்தது. தனக்கு நாதியில்லாமல் போய்விட்டதே என்ற கவலை இனி இல்லை. கடையை பரதனுக்குக் கொடுப்பதுதான் தான் செய்யக்கூடிய பிராயச்சித்தம். இனியாவது மகள் செல்வச்செழிப்புடன் வாழ்வாள். தன்னைப்போல் தனிமரமாக இல்லாது, எங்கோ குடும்பம், குழந்தைகள் என்றிருப்பாள் உமா. அந்த எண்ணமே மகிழ்ச்சி அளித்தது. “ஸார் முகத்திலே இன்னிக்குத்தான் சிரிப்பைப் பாக்கறேன்!” என்று மகிழ்ச்சியுடன் புதுமனைவியிடம் கூறினான் பரதன். அது நிலைக்காது என்று அப்போது எவரும் நினைக்கவில்லை. ஒரு வாரத்திற்குப்பின். “ஒங்க மொதலாளி நீங்க நினைக்கிறமாதிரி நல்லவரில்லே. என்னை வெறிச்சு வெறிச்சுப் பாக்கறாருங்க. நாம்ப வேற எங்கேயாச்சும் போயிடலாம். ஒங்களுக்கு இந்த வேலை வேணாம்!” என்று கெஞ்சலும் பயமுமாகக் கூறியபோது, மனைவியின் விருப்பத்திற்கு அடிபணிந்தவனாக, “நானும் கவனிச்சுட்டுத்தான் வரேன். காலாகாலத்திலே கல்யாணம் கட்டாட்டி இப்படித்தான்!” என்று அந்த பிரச்னைக்கு முடிவு கட்டினான் பரதன். அம்மாவுக்குப் படையல் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாகச் செய்ய ஒன்று இருந்தது. கைத்தொலைப்பேசி வேண்டாம், கணினியில்தான் படங்கள் பெரிதாகத் தெரியும் என்று யோசித்து, மேசைக்குமுன் உட்கார்ந்தாள் காஞ்சனா. அரைத்தூக்கத்தில் கணவர் ஏதோ முணுமுணுத்ததை அலட்சியம் செய்தாள். ‘இன்று அம்மாவின் பத்தாவது நினைவுநாள். அதை ஒட்டி நான் படைத்தது!’ என்ற விளக்கத்துடன் பத்து விதமான வண்ண வண்ண உணவுப்பண்டங்கள் வெவ்வேறு அளவைக்கொண்ட பாத்திரங்களில். முதல்நாளையப் பதிவு. அவள் பார்வை அதன்கீழ் போயிற்று. உதடுகள் பெருமைச்சிரிப்பில் விரிந்தன. விதவிதமான விமரிசனங்கள். எழுதியவர்களுடைய குணாதிசயங்களும் அவளுக்குள் எழுந்தன. பார்த்தாலே நாவில் ஊறுகிறதே! – யாரோ சாப்பாட்டுப் பிரியர். உங்களுக்குத்தான் எவ்வளவு பொறுமை! எத்தனை மணிநேரம் அடுப்பில் வெந்தீர்கள்? – சமைப்பதே தண்டனை என்று வெறுப்பவர். அம்மாவைவிட மேலான வேறு தெய்வமில்லை இவ்வுலகில் – சினிமாவில் காட்டுவதெல்லாம் உண்மை என்று நம்பிவிடும் ஏமாளி. அடுத்ததைப் பார்த்ததும் சட்டென மனம் அதிர்ந்தது. அம்மாமேல் எத்தனை அன்பு வைத்திருந்தால் இப்படிக் கொண்டாடுவீர்கள்! சற்றுமுன் எழுந்த உற்சாகம் வடிந்தது. குற்ற உணர்ச்சியால்தான் இவ்வளவும் செய்தோமா? அதை உடனே மறுத்தாள். பதின்ம வயதில் சற்று முன்னேபின்னேதான் இருப்பார்கள். தன்னைத் தன் போக்கில் விடாது, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்த அம்மாவுடன் ஓயாது சண்டை பிடித்துக்கொண்டிருந்ததில் என்ன தப்பு? அண்ணா ஊர்சுற்றிவிட்டு வந்தபோதெல்லாம் எதுவும் கேட்டாளா அந்த அம்மா? அவன் மட்டும் உயர்த்தியோ? கேட்டபோது, ‘என்ன இருந்தாலும் நீ ஒரு பொண்ணு!’ என்றுவிடுவாள். ‘ஆண்களுக்கு நான் எந்த விதத்திலும் சளைத்தவளில்லை’ என்ற வீம்பு அப்போதுதான் எழுந்தது. இரவு நேரங்களில் ‘பார்ட்டி’ என்று கண்ட இடங்களுக்கு போக ஆரம்பித்தாள். பல தரப்பட்ட ஆண்களுடன் பழக்கம் ஏற்பட, வீட்டில் கிடைக்காத நிம்மதி வெளியிலாவது கிடைத்ததே என்ற நிறைவு ஏற்பட்டது. அம்மாவுடன் அப்பாவும் சேர்ந்துகொண்டார். அவள் பெயர் கெட்டுவிடுமாம். ‘அப்புறம் யார் உன்னைக் கல்யாணம் செய்துகொள்வார்கள்?’ என்று இரைந்தார். ‘எனக்கே தேடிக்கத் தெரியும். இந்த வீட்டை விட்டுத் தொலையறேன்!’ என்று கத்திவிட்டு வெளியேறினாள். எங்கு போவது என்ற குழப்பம் இருக்கவல்லை. அம்மாவுடன் சண்டை போட்டபோதெல்லாம் தன் தோழி ஆலிஸிடம் அதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறாள். படிக்கப் பிடிக்காது, ஒரு உத்தியோகத்தை தேடிக்கொண்டவள் ஆலிஸ். அவளுடைய பெற்றோர் கடல் கடந்து, வேறு நாட்டில். அப்போதெல்லாம், ‘நான் தனியாத்தானே இருக்கேன். அம்மாகூட இருக்கப் பிடிக்காட்டி, இங்கே வந்து இரேன்!’ என்று அபயகரம் நீட்டியவளே அவள்தானே! ‘செத்தாலும் அந்த வீட்டுக்குப் போகமாட்டேன்!’ என்றபடி நிர்க்கதியாக வந்து நின்று தோழியின் தோளில் கரம் போட்டு அணைத்துக்கொண்டாள் ஆலிஸ். அப்பா இறந்த செய்தி கிடைத்தபோது, மரியாதைக்காக வீட்டுக்குப் போனாள் காஞ்சனா. அம்மா அவளைக் கண்டுகொள்ளவில்லை. முப்பது வயதில், ‘தனக்கு எல்லா விதத்திலும் ஈடு கொடுக்கக்கூடியவன் இவன்தான்!’ என்று தோன்றிப்போக, ஒருவனை மணந்தாள். தறுதலை’ என்று தான் அஞ்சிய மகள் ஒருவாறாகச் சராசரி பெண்ணைப்போல் இல்லறத்தில் இணைந்துவிட்டாளே என்ற பூரிப்புடன், அம்மா கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டாள். ‘எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு!’ என்று பார்ப்பவரிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தாள். இரு குழந்தைகளையும் பெற்றபிறகு, ‘இனி அம்மா நம்மைக் கண்டிக்க என்ன இருக்கிறது!’ என்று அம்மாவைத் தன்னுடன் வந்து தங்கும்படி அழைத்தாள் காஞ்சனா, ‘தனியா இருக்கீங்களேம்மா!’ என்ற உபசார வார்த்தைகளுடன். ‘இத்தனை வருஷம் தனியாத்தானே இருந்தேன்!அபார்ட்மெண்டில அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க இருக்காங்க. என்ன பயம்?’ என்று மறுத்துவிட்டாள் அம்மா. கடந்ததை அசை போட்டுக்கொண்டிருந்தாள் காஞ்சனா. தான் வற்புறுத்தி அழைத்தும், அம்மா ஏன் தன்னுடன் வரச் சம்மதிக்கவில்லை? ‘வயதான என்னைப் பார்த்துக்கொள்ளாது, எவளோ சிநேகிதிக்குச் சமைத்துப் போட்டுக்கொண்டிருந்தாயே!’ என்ற எண்ணமோ? பல வண்ணங்களில் தான் சமைத்து வைத்திருந்ததை அம்மா இனி சாப்பிட வரமாட்டாள் என்ற எண்ணம் உதிக்க, காஞ்சனா உரக்க அழுதாள். தான் பெற்ற பெண்களும் தன்னைப்போலவே பெற்றவளைப் புரிந்துகொள்ளாது, சுயநலமே பெரிதென வதைப்பார்களோ என்ற பயமும் அதில் கலந்திருந்தது. நிர்மலா ராகவன் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்-ஆங்கில இருமொழி எழுத்தாளர்.   1967 தொடக்கம் மலேசியாவில் தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், கலை விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியாவின் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. பல மேடைகளிலும் கருத்தரங்கங்களிலும் உரையாற்றியுள்ளார். இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சினைகளை அலசி, தமது எழுத்துக்களில் அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இளைஞர் மனோநிலைகள் பற்றி அதிகம் எழுதியுள்ளார். நேரடிச் சமூகச் சேவையிலும் ஈடுபட்டவர். இவரது சிறுகதைத் தொகுப்பான “ஏணி” தமிழ்நாட்டுக் கல்லூரி ஒன்றில் இளநிலை பட்டப்படிப்புக்கு பாட புத்தகமாக அமைந்தது. பரதநாட்டியத்திற்கான 125 பாடல்களை கர்னாடக இசைப்பாணியில் எழுதி, அவற்றில் சிலவற்றைப் பாடிப் பதிவு செய்துள்ளார். கேட்க; (https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A) பரிசில்களும், விருதுகளும் - “சிறுகதைச் செம்மல்” விருது (1991) - “சிறந்த பெண் எழுத்தாளர்” விருது (1993) - சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006) - ஆஸ்ட்ரோ, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் போட்டிகளில் மூன்று முறை பரிசு பெற்றிருக்கிறார். - மின்னூல்கள்: தமிழ் –37, ஆங்கிலம் –8 (Amazon Kindle, Amazon paperback) கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account