[] []   முக்தியளிக்கும் முக்திநாத் யாத்திரை        ஆசிரியர் : கைலாஷி muruganandam.subramanian@gmail.com      மின்னூல் வெளியீடு : www.freetamilebooks.com    அட்டைப்படம் : பிரசன்னா udpmprasanna@gmail.com    மின்னூலாக்கம் : த.சீனிவாசன் tshrinivasan@gmail.com      உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.     ஆசிரியர் :     சு.முருகானந்தம் என்னும் இந்நூல் தொகுப்பாளர்  நமக்குத்தொழில் ஆலயம் தொழுதல், அவற்றின் தொன்மை அறிதல், அதை மற்றவர்களுக்கு கூறுதல் என்று ஒரு சேவை  செய்யும் ஒரு சிறு  தொண்டன்.  இந்நூலைப் படித்து யாரேனும் முக்திநாத் சென்று வந்தால் மிகவும் மகிழ்ச்சி.  முக்தியளிக்கும் முக்திநாத் யாத்திரை    []    ஸ்ரீமுக்திநாதர்  (முன் அட்டைப்படம்)   []     முக்திநாதர் ஆலயம்  (பின் அட்டைப்படம்)                                          பொருளடக்கம்   முன்னுரை 7  1 முக்தி நாத் யாத்திரை பற்றிய விவரம் 11  2 மனோகாம்னா தேவி தரிசனம் 20  3 போக்ராவிலிருந்து ஜோம்சம் விமானப் பயணம் 24  4 ஜோம்சமிலிருந்து முக்திநாத் பயணம் 26  5 முக்தி நாதர் தரிசனம் 29  6 போக்ரா சுற்றுலா 38  7 யாத்திரை நிறைவு 42  8 கோரக்பூர் வழி யாத்திரை 44  9 முக்திநாத் யாத்திரைக்கான தமிழக அரசின் மானியம் 52  10 ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் 53                            முன்னுரை   []     பரமபதத்திலே   வியூக நிலையிலே  அமர்ந்த கோலத்தில் திருமகள், நிலமகள், நீளாதேவியுடன்  எழுந்தருளிச் சேவை சாதிக்கின்ற  அந்த மாயன், பாற்கடலில் நித்திய சூரிகளும் புடைசூழப்   பரவாசுதேவனாக  மாயத்துயில் கொண்டுள்ளார், அவரே தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காக்க மஸ்த்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி  அவதாரங்கள் எடுத்து  விபவ ரூபமாக  அருள் வழங்குகின்றார். அந்தப் பரம்பொருளே  அந்தர்யாமியாக எல்லா ஜீவராசிகளிலும் விளங்குகின்றார். நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு, ஒரு பெயரும், ஒரு உருவமும் இல்லாத அவரே   அர்ச்சாவதாரமாகப்  பூவுலகில்  பல்வேறு தலங்களில் எழுந்தருளிச் சேவை சாதிக்கின்றார்.  இந்த ஐந்து நிலைகளுக்கும் உரியவர் அவர் ஒருவரே.    திருமாலாகிய அவரின் பேர் எழிற் பொய்கையுள் ஆழ மூழ்கிக் குளித்துக் களித்து கவி பாடியவர்கள் ஆழ்வார்கள். இவர்கள்  எம்பெருமானின் திருவருளினால் மயர்வற மதிநலம் பெற்றுத் “திவ்வியப் பிரபந்தத்தை”  நாம் எல்லோரும் உய்ய அருளியவர்கள் எனவே “திவ்விய சூரிகள்”, இவர்கள் மங்களாசாசனம் செய்தத் திருப்பதிகள் “திவ்விய தேசங்கள்”  ஆகும்.  இவை மூன்றும் “திவ்விய த்ரயம்” என்றழைக்கப்படுகின்றன. திவ்யம் என்ற பதத்திற்கு தெய்வ சம்பந்தம் உடையது என்று பொருள்.    இந்தத் திவ்வியப் பிரபந்தங்களுக்கு  மூன்று சிறப்புகள் உள்ளன. அவையாவன பிரமாணம், பிரமேயம் மற்றும் பிரமாதா ஆகும்.  பிரமாணம் – உண்மை அறிவிற்கு கருவியாயிருப்பது (திவ்வியப் பிரபந்தங்கள்). பிரமேயம் – பிரமாணத்தால் அறியப்படும் பொருள் (திவ்விய தேசங்கள்). பிரமாதா – உண்மை அறிவுடையோர்,  திவ்விய சூரிகளாகிய ஆழ்வார்கள். இவ்வாறு அனைத்துமே தெய்வ சம்பந்தமான  சிறப்பு பெற்றவை. எனவேதான் மணவாள மாமுனிகளும்     ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி  தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி  ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தான் வாழி  செய்யமறை தன்னுடனே சேர்த்து -   என்று மங்கலாசாசனம் செய்துள்ளார்.     எனவே வேதமே திவ்வியப் பிரபந்தகளாகின. நம்மாழ்வாரின் நான்கு அருளிச் செயல்கள் நான்கு வேதங்கள் ஆகின. திருமங்கையாழ்வாரின் ஆறு அருளிச் செயல்கள் அதற்கான அங்கங்களாகின. ஆண்டாள் மற்றும் மதுரகவி ஆழ்வார்  இயற்றியவை தவிர மற்ற நூல்கள் உபாகமங்கள் ஆயின. வேதமே எம்பெருமானின் நிலைக்கு ஏற்ப மாறி வரும் முறையில் தமிழாகித் திவ்வியப் பிரபந்தங்களாக அவதரித்தன என்பது சம்பிரதாயம். ஆகையால் ஆழ்வார்களின் அருளிச் செயல்களான திவ்வியப் பிரபந்தங்கள் உபய வேதாதங்கள் ஆகும்..    ஓம் நம:  முதலாயிரம்.  நாராயணாய : திருமொழி  கீதா சரம சுலோகம் : இயற்பாக்கள்  த்வயம் : திருவாய் மொழி    திருப்பல்லாண்டு “ஓம்” என்ற பிரணவத்தின் விரிவு, “கண்ணி நுண் சிறு தாம்பு    நம:”,  பெரிய திருமொழி  “நாராயண” என்கிற பரம் பொருளின் விளக்கம். இவ்வாறு முதலாயிரமும்  இரண்டாமாயிரமுமே திருமந்திரம்.     நம்மாழ்வாரின் திருவாய் மொழியின்   முதல் பத்து : ஸ்ரீமந்  இரண்டாம் பத்து : நாராயண  மூன்றாம் பத்து : சரணௌ  நான்காம் பத்து : சரணம்  ஐந்தாம் பத்து : ப்ரபத்யே  ஆறாம் பத்து : ஸ்ரீமதே  ஏழாம் பத்து : நாராயண  எட்டாம் பத்து : நாராயண  ஒன்பதாம் பத்து : ஆய  பத்தாம் பத்து : நம:    அதாவது திருமகளோடு கூடிய நாராயணனின் திருவடிகளை புகலிடமாகப் பற்றுகின்றேன். திருமகளோடு கூடிய நாராயணனுக்கு எல்லா அடிமைகளையும் செய்யப் பெறுவேன் என்னும் நான்காமாயிரமாகிய திருவாய்மொழியே த்வயம்.     சர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ: |   அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி  மாசுச: ||    அதாவது “என்னை அடைவதற்கு அனைத்து நெறிகளையும் விட்டு என் ஒருவனையே சரணமாகப் பற்று. நான் உன்னை என்னை அடையவிடாமல் தடுக்கும் ஸர்வ பாபங்களிலிருந்தும் விடுவித்து என்னை அடைய வைப்பேன்”  என்னும் கீதா சரம (இறுதியான) ஸ்லோகம் சரணாகதி என்னும் பிரபத்தியாகும். அதாவது இறைவனையே உபாயமாகக் கொள்வதாகும். மூன்றாமாயிரமாகிய இயற்பாக்களே  கீதா சரம ஸ்லோகம்.     இவ்வாறு ஸ்ரீவைணவத்தின் திருமந்திரம், த்வயம், கீதா சரமஸ்லோகம், ஆகிய  மூன்று மந்திரங்களையும் உள்ளடக்கியத் திவ்விய பிரபந்தமாம் அருளிச் செயல்  பெற்ற திவ்விய தேசங்களை “உகந்தருளிய நிலங்கள்” என்று கூறுவது வைணவ மரபாகும்.    ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி  ஓர் பதின்மூன்றாம் மலைநாடு ஓரிரண்டாம் – சீர்நடுநாடு  ஆறோடு ஈரெட்டாம் தொண்டை அவ்வடநாடு ஆறிரண்டு  கூறு திருநாடு ஒன்றாக் கொள்.  என்றபடி கங்கையின் புனிதமான காவிரி பாய்ந்து வளம் பெருக்கும் சோழ நாட்டில் பூலோக வைகுண்டமாம் திருவரங்கம் முதலாக  40 திவ்விய தேசங்கள் அமைந்துள்ளன, தண்பொருநை என்னும் தாமிரபரணி பாயும் பாண்டிநாட்டில் 18 திவ்விய தேசங்கள் அமைந்துள்ளன. வேழமுடைத்து மலைநாடு என்ற சிறப்புப் பெற்ற அன்றைய சேரநாடு,   இன்றைய கேரளத்தில்  13 திவ்விய தேசங்கள் அமைந்துள்ளன, நடுநாட்டில் 2 திவ்விய தேசங்களும்,  திருக்கச்சி அடங்கிய தொண்டைநாட்டில்  22 திவ்விய தேசங்களும், தமிழகம் அல்லாத  வடநாட்டில் 12 திவ்விய தேசங்களும், திருவைகுந்தமாம் திருநாடு ஒன்றாகும் என்பது இப்பாடலின் விளக்கம் ஆகும்.   ஆக மொத்தம் திவ்விய தேசங்கள் மொத்தம் 108 ஆகும். தற்போது 84 திவ்விய தேசங்கள் நமது தமிழ்நாட்டிலும், 11 திவ்விய தேசங்கள் கேரளத்திலும், 2 திவ்விய தேசங்கள் ஆந்திர பிரதேசத்திலும், 7 திவ்விய தேசங்கள் உத்திரபிரதேசம் மற்றும் உத்தராகாண்ட மாநிலங்களிலும், ஓர் திவ்விய தேசம் குஜராத்திலும் ஆக 105 திவ்விய தேசங்கள் இந்தியாவிலும், ஓர் திவ்விய தேசம் நேபாள  நாட்டிலும் அமைந்துள்ளன.   மண்ணுலகிலுள்ள இந்த  106 திவ்விய தேசங்களை மட்டுமே நாம் பூத உடலுடன் சென்று சேவிக்க முடியும். விண்ணுலகில் உள்ள திருப்பாற்கடலும், ஸ்ரீவைகுண்டமும்  அவன் அருளின்றி கிட்டாது என்பர் ஆன்றோர்கள். திருப்பாற்கடல் ஷீராப்திநாதன் – கடல்மகள் நாச்சியார் வீற்றிருக்கும் தலம்.  திருப்பரமபதம் அல்லது வைகுந்தம் - பரமபதநாதன் - பெரிய பிராட்டியார் உறைந்திருக்கும் தலம். இவை இரண்டும் கடைசி நிலையாகிய வீடு பேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலையை எய்திச் செல்லும் இடமாகும்.   இம்மையில்  இந்த 106  திவ்விய தேசங்களையும் சேவித்தால் மற்ற இரண்டையும் சேவித்து பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய முடியும் என்பது ஐதீகம். ஆகவே திருவைணவர்கள் இந்த 106 திவ்வியதேசங்களையும் தேடித் தேடிச் சென்று நாடி நாடி நரசிங்கா! நரசிங்கா! என்றுச் சேவிக்கின்றனர்.    அவ்வாறு பல்வேறு திவ்யதேசங்களை சேவித்துக் கொண்டு வரும் போது, ஒரு வருடம் நேபாளம் வழியாக திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்ட போது  மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட  108  திவ்யதேசங்களில் ஒன்றான நேபாள் நாட்டில் அமைந்துள்ள முக்திநாத் என்றழைக்கப்படும்  சாளக்கிராமம்  எனும் திவ்வியதேசத்தை  சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.     நேபாளம் வழியாக  திருக்கயிலாய மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் அன்பர்கள் பலர் திருக்கயிலாய யாத்திரையை நிறைவு செய்த பின்னர்  காத்மாண்டிலிருந்து,  நான்கு நாள் பயணத்தில் முக்திநாத் பயணத்தை மேற்கொள்கின்றனர்.       தமிழக அரசு முக்திநாத் யாத்திரை சென்று வரும் இந்துகளுக்கு மானியம் வழங்குகின்றது. அதன் விவரங்களும்  நிறைவாக கொடுக்கப்பட்டுள்ளது.   இவ்வாறு அடியேன் காத்மாண்டிலிருந்து சென்ற யாத்திரை மற்றும் அடியேனின் நண்பர் ஒருவர் கோரக்பூர் வழியாக சென்ற யாத்திரையின் விவரங்கள் இந்நூலில் இடம் பெறுகின்றன. இக்கடினமான யாத்திரையை மேற்கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்ற நம்பிக்கையில் இந்நூலை முக்திநாதரின் திருப்பாதங்களில் சமர்ப்பணம் செய்கின்றேன்.                1 முக்தி நாத் யாத்திரை பற்றிய விவரம்   []   முக்திநாத் ஆலயம்     கண்டகி நதிக்கரையில் உள்ள  "முக்திநாத்"  க்ஷேத்திரம் நேபாள நாட்டின் தலைநகரம் காத்மாண்டு நகரிலிருந்து  272 கி.மீ. தொலைவில்,  இமயமலைத் தொடரான அன்னபூர்ணாமலைத் தொடருக்கு அப்பால் உள்ள தவளகிரிப் பிராந்தியத்தில்  3710 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இயமலையின் பனிச் சிகரத்தின் இடையே அமைந்திருப்பதாலும், நேபாள நாட்டில் விமானப்பயணம் அவசியம் என்பதாலும் இந்த புனித பயணம் மிகவும் கடினமானது, அதே சமயம் அபாயகரமானது என்பதில் எந்த ஐயமுமில்லை. யாத்திரைக் காலம் குறைந்தபட்சம் ஐந்து நாட்கள் ஆகும். எவ்வளவு கவனமாக திட்டமிட்டாலும்,  மலைப்பிரதேசம் என்பதால் இயற்கை ஒத்துழைத்தால் மட்டுமே திட்ட்மிட்டபடி யாத்திரை சுகமாக நிறைவேறும்.   இக்கடினமான யாத்திரையை வெற்றிகரமாக முடிக்க முதலில் அவனருள் வேண்டும், இரண்டாவதாக உடல், மனம் இரண்டும் ஒத்துழைக்க வேண்டும். அத்துடன் இயற்கையும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். பனி, மழை, நிலச்சரிவு, காற்றோட்டம்,  பாதை அடைப்பு, விமானக் கோளாறு என்று ஏதோ ஒரு தடங்கல் இல்லாமல் யாத்திரை முடித்தவர்கள் மிக குறைவாகவே இருப்பார்கள். எனவே ஓரிரு நாட்கள் அதிகமாக தங்கவேண்டி வரலாம் எனவே அதற்கு தயாராக செல்ல வேண்டும், அதற்கு அதிகப்படி செலவாகும் என்பதால் எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளுக்கும் சேர்த்தே பணம்  எடுத்துச்செல்ல வேண்டும்.   நேபாளத்தில் விமான பயணம் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தே அமைகின்றது. அதிகாலை 5 மணி முதல் 11 மணி வரையில் அதிகமான மூடுபனி, காற்றோட்டம் இல்லாத போது மட்டுமே  விமானங்கள் இயக்கப்படுகின்றன. எப்போது வானிலை மாறும் என்று தெரியாது. எனவே தேவைப் பட்டால் நெளிந்து வளைந்து  செல்லும் கரடு முரடான பாதையில் அதிக நேரம் பயணம் செய்ய வேண்டி வரலாம். சில சமயம் வானிலை திடீரென மோசமடைவதாலும், விமான கோளாறுகளாலும், பேருந்துகள் அதல பாதாளத்தில் உருண்டு விழுவதாலும் ஒரு சில விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. ஸ்ரீமந்நாராயணா உன் பாதமே சரணம் என்று சென்றால் எல்லாவிதமான தடங்கல்களையும் நீக்கி திவ்யமான தரிசனமும் அளித்து அருளுவார் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை.   மலைப்பிரதேசம் என்பதால் குளிர் அதிகமாக இருக்கும் எனவே கம்பளி உடைகள் அவசியம் எடுத்துச்செல்ல வேண்டும். ஜோம்சம் முக்திநாத் ஆகிய ஊர்களில் காய்கறிகள் அதிகம் விளைவதில்லை என்பதாலும் அனைத்து உணவுப் பொருட்களையும்  மேலே கொண்டு வரவேண்டும் என்பதாலும் உணவு விடுதிகளில் அளவான உணவே கிட்டும். மேலும் எதிர்பாராத விதமாக பேருந்தில் பயணம் செய்ய நேரிட்டால்  சரியான சமயத்திற்கு உணவு கிட்டாமலும் போகலாம். எனவே கை வசம் நொறுக்குத் தீனிகளான, பிஸ்கெட், சாக்கலேட், இனிப்புகள்,  காரங்கள், சிப்ஸ், மற்றும் குடி தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்வது மிகவும் அவசியம்.   சாளக்கிராமம் (முக்திநாத்) யாத்திரை செல்ல ஏற்ற சமயம். ஏப்ரல் 10 தேதிக்கு மேல் மே மாதம் மூன்றாம் வாரம் வரை ஆகும். (மே மாதக் இறுதியில் பருவ மழை ஆரம்பமாகிவிடும்). மேலும் செப்டெம்பர் இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் முதல் வாரம் வரை ஆனால் இச்சமயம் குளிர் அதிகமாக இருக்கும் எனவே அதிகப்படியான  கம்பளி உடைகள் எடுத்து செல்ல வேண்டி வரும்.    முக்திநாத் செல்ல விழையும் அன்பர்கள் முதலில் போக்ரா என்ற ஊரை அடைய வேண்டும். நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டிலிருந்து முக்திநாத்  செல்பவர்கள் பேருந்து அல்லது சிறு விமானம் மூலம்  போக்ரா அடையலாம். முன்னர் டெல்லியிலிருந்து காத்மாண்டுவிற்கு விமானம் மூலம் பயணம் செய்தனர்.  தற்போது டெல்லி காத்மாண்டு இடையே பேருந்து போக்குவரத்தும் உள்ளது     இந்தியாவிலிருந்து கோரக்பூர் வழியாகவும் போக்ராவிற்கு  நேராக செல்ல இயலும்.  கோரக்பூருக்கு  சென்னையிலிருந்து ஒரு புகைவண்டி உள்ளது பின் அங்கிருந்து பேருந்து மூலம் போக்ராவை சென்றடையலாம்.    பின்னர் போக்ராவில் இருந்து ஜோம்சம் என்ற இடத்தை சிறு விமானம் மூலம் சென்றடையலாம் அல்லது நெளிந்து வளைந்து செல்லும் கரடு முரடான  மலைப்பாதையில்   பயணம் செய்தும் ஜோம்சமை அடையலாம், ஆனால் பயணநேரம் அதிகம் ஆகும். ஜோம்சலிருந்து பின்னர் ஜீப்/சிறு பேருந்து  மூலமாக முக்திநாத் செல்ல வேண்டும்.    காத்மாண்டிலிருந்து  போக்ரா செல்லும் வழியில்   மனோ காம்னா தேவி  ஆலயம் அமைந்துள்ளது. மனோகாம்னா என்றால் மனதில் தோன்றும் அனைத்து ஆசைகளையும் அதாவது பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் அன்னை என்று பொருள்.  அன்னை பார்வதி விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் பகவதியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.  இழுவை இரயிலில் ஆலயத்திற்கு  செல்ல வேண்டும்.     மனோ காம்னாவில் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் அன்னையை தரிசனம் செய்த பின் பக்தர்கள் போக்ரா வந்து தங்குகிறனர்.  போக்ராவின் சிறப்பு அதன் ஏரி. “பேவா ஏரி (Pewa Lake) இதன் நீர் அன்னபூரணா சிகரங்களை ‍ அருமையாக பிரதிபலிக்கின்றது,  அந்த அழகை இரசிப்பதே ஒரு அருமையான அனுபவம்.  போக்ராவில் காத்மாண்டுவைப் போல கூட்டம் அதிகம்   இல்லை, சப்தம் இல்லை கிராம சூழலே விளங்குகின்றது. எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் அமைதியாக தங்க ஏற்ற இடம். ஏரியை சுற்றிலும் நிறைய தங்கும் விடுதிகள்  உள்ளன.  கரையில் ஆல மரங்களும் அரச மரங்களும் உள்ளன அதன் அடியில் கற்பெஞ்சுகள் இடப்பட்டுள்ளது, அதில் அமர்ந்து ஏரியின் அழகை  அமைதியாக இரசிக்கலாம்.  படகுப்பயணம் செய்யலாம். சைக்கிளில் அல்லது நடந்து ஏரியை  வலம் வரலாம்.   இந்நகரத்தின்  காவல் தெய்வம்   பிந்து வாசினி ஆலயம் ஒரு சிறு குன்றின்மேல் அமைந்துள்ளது. சிறு ஆலயம் தான். சாளக்கிராம ரூபத்தில்  பகவதியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள் அன்னை பார்வதி இத்தலத்தில். மற்ற நேபாள அன்னை ஆலயங்களைப் போல இங்கும் பலியிடப்படுகின்றது. பகோடா அமைப்பில் இக்கோவில் அமைந்துள்ளது. குன்றின் மேலிருந்து போக்ரா நகரின் அருமையான அழகை இரசிக்கலாம்.     []   ஜோம்சமில் உள்ள  நீலகிரி  பனிச் சிகரம்    மறு நாள் போக்ராவில் காலை சூரிய உதய காலத்தில் அன்னபூர்ணா சிகரம் பொன் மயமாக மின்னும் அழகை ரசித்த பின்  அங்கிருந்து சிறு விமானம் மூலமாக ஜோம்சம் செல்கின்றனர், பேருந்து மூலமாகவும் ஜோம்சம் செல்ல முடியும் ஆனால் மிகவும் கரடு முரடான பாதை என்பதால் விமானத்தில் செல்வது நல்லது என்றாலும் சில சமயங்களில் இந்த விமானப்பயணம் விபத்தில் முடிந்துள்ளது. மேலும் தட்பவெட்ப நிலையைப் பொறுத்தே விமானப்பயணம் நடைபெறுகின்றது.  விமானத்தில் செல்லும் போது அன்னபூரணா சிகரங்களின் அழகையும்,  மீன் வால் சிகரத்தின் அழகையும்  கண்டு இரசிக்கலாம். ஜோம்சம் நகரிலிருந்து பின்னர் ஜீப் மூலமாக முக்திநாத்தை அடையலாம்.    முக்திநாத் தரிசனம் செய்தவர்கள் பிறப்பு,  இறப்பு என்னும் பிறவிச் சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். எம்பெருமானின் இருப்பிடமான வைகுந்தத்தில் நித்ய சூரியர்களாக வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம். இக்கோயிலில் இராமானுஜருக்கும் சன்னதி இருப்பது சிறப்பான அம்சம். விசுவாமித்திர முனிவரின் சாளங்காயனர் என்பவர் பிள்ளைப் பேறு வேண்டி காளி கண்டகி நதியில் நீராடி ஸால் மரத்தினடியில் இத்தலத்தில் தவம் செய்துகொண்டிருந்த போது சுயம்புவாக தோன்றிய பெருமாள் அவருக்கு அளித்த வரத்தின்படி ஸ்வயம்புவாய் இங்கே சேவை சாதிக்கின்றார். அது போலவே விஷ்ணு சாந்நித்யம் உள்ள சாளக்கிராம கல்லாகவும் அனைவருக்கும் அருள் வழங்குகின்றார்.    விஷ்ணுவின் சொரூபமாகத் திகழ்வது சாளக்கிராமம் ஆகும். இது ஒரு வகை கல். இதற்கு சுருள் என்பது பொருள். நேபாளத்தின் கண்டகி நதிக்கரையில் இவை கிடைக்கின்றன. பூஜிப்பதற்கு உகந்த மங்களகரமான சாளக்கிராமத்தின் அவதாரத் தலம் இந்த  முக்திநாத் ஆகும். முக்திநாத்தில் சங்கு, சக்கர, கதாதரராக திருமகளுடன் பெருமாள் தரிசனம் தருகிறார். இதற்கு பின்னால் விஷ்ணுவின் அம்சமான மிகப்பெரிய அபூர்வ சாளக்கிராம மூர்த்தியை தரிசிக்கலாம். எனவே இத்தலம்   சாளக்கிராமம்  என்றும் அறியப்படுகின்றது. பாக்கியமுள்ள பக்தர்கள் அங்கு சென்று சாளக்கிராம மூர்த்திகளை,  தாங்களே சேகரித்து எடுத்து வருகின்றனர். சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி உள்ளதாம். பக்தர்கள் இறைவனை வேண்டி துளசி செடியை கண்டகி ஆற்றில் போட்டு கைகளை விரித்து தண்ணீரில் மூழ்கியபடி நின்றால் தங்களுக்கு இறைவனின் அருள்படி சாளக்கிராமம் கிடைக்கும் என்கிறார்கள். நம் வீட்டிலும் இந்த சாளக்கிராமத்தை வைத்து வழிபடலாம். 12 சாளக் கிராமங்கள் இருந்தால் அந்த வீட்டில் பெருமாளே குடியேறி இருப்பதாக ஐதீகம்.     இத்தலம் பெருமாள் தானாகவே எழுந்தருளிய ஸ்வயம்வக்த ஸ்தலங்களுள்  ஒன்று. மற்ற தலங்கள்  ஸ்ரீரங்கம்,  ஸ்ரீமுஷ்ணம்,  திருப்பதி,  வானமாமலை, புஷ்கரம்,  நைமிசாரண்யம்,  பத்ரிகாச்ரமம்   ஆகியவை ஆகும்.    மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108  திவ்ய தேசங்களுள் இந்த முக்திநாத் என்னும் சாளக்கிராமமும் ஒன்று. இத்திவ்வியதேசத்தை திருமங்கையாழ்வார்    கடம்சூழ்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும் உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கைபொடியாவடியாய்ச்ச்ரம்துரந்தான் இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க, மணம் கமழும்  தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடை, நெஞ்சே!                                            (பெரிய திருமொழி 1-5-2)    என்றும், பெரியாழ்வார்   பாலைக்கறந்தடுப்பேறவைத்துப் பல்வளையாளென்மகளிருப்ப மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று இறைப்பொழுதங்கே பேசி நின்றேன் சாளக்கிராமமுடையநம்பி சாய்த்துப்பருகிட்டுப்போந்து நின்றான் ஆலைக்கரும்பின்மொழியனைய அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய்.    (பெரியாழ்வார் திருமொழி 2-9-5)     வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம் துவரையயோத்தி  இடமுடைவதரியிடவகையுடைய  எம்புருடோத்தமனிருக்கை தடவரையதிரத்தரணிவிண்டிடியத் தலைபற்றிக் கரைமரஞ்சாடி கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னுங் கடி நகரே (பெரியாழ்வார் திருமொழி 4-7-9)          என்றும்,  மொத்தம்  12  பாசுரங்களில்    மங்கலாசாசனம் செய்துள்ளனர்.  பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பியை கண்ணனாகவும் காண்கிறார். திருமங்கையாழ்வார் இவரை இராமனாக காண்கிறார். இங்கு பகவான் தீர்த்த ரூபியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.    வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்பந்தம் பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள்  தானும்  மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென தவமிருக்க அதற்கு மகிழ்ந்த எம்பெருமான் கண்டகி நதியில் நித்ய அவதாரம் (சாளக்கிராம ரூபியாக) செய்து கண்டகி நதிக்கு சிறப்பளிக்கிறார் என்பது ஓர் வரலாறு.    பக்தர்கள் அனுபவித்து ஆராதனம் / வழிபாடு செய்ய எம்பெருமான் சாளக்கிராம மூர்த்தியாக விளங்கி அருள்பாலித்து வரும் சாளக்கிராம திவ்ய தேசத்தின்    மூலவர் : ஸ்ரீமூர்த்தி - (முக்திநாத் / முக்தி நாராயணன் (சுயம்பு மூர்த்தி) நின்ற திருக்கோலம், மேற்கே திருமுகமண்டலம்.  தாயார் : ஸ்ரீதேவி நாச்சியார்  தீர்த்தம் : ஸ்ரீசக்ர தீர்த்தம்  விமானம் : கனக விமானம்  பிரத்யக்ஷம் : பிரம்மா, ருத்ரர், கண்டகி ஆழ்வார் பாடல்கள்:  பெரியாழ்வார் -2 பாசுரங்கள்,  திருமங்கையாழ்வார்  10 பாசுரங்கள்.    அர்ச்சாமூர்த்திகளில் (விக்ரகம்) ஸான்னித்யம் ஏற்பட முதலில் பிரதிஷ்டை செய்யப்படவேண்டுவது மிகவும் அவசியம். ஆராதனம் செய்பவர்கள் ஆசார்யர்களிடம் இதற்கான தீட்சை பெறவேண்டும். தீட்சை பெற்றவர்கள்தான் அர்ச்சா மூர்த்தியை ஆராதனம் செய்யத் தகுதிபெற்றவர்கள். ஆனால் எம்பெருமானின் ஸான்னித்யமுள்ள சாளக்கிராம மூர்த்தியை ஆராதிக்க பிரதிஷ்டையோ, இதற்கான விசேஷ தீக்ஷையோ பெற வேண்டிய அவசியம் போன்ற கடினமான நியதிகள் கூறப்படவில்லை. ஆசார்ய அனுக்கிரகமும், மேலும் ஆசார்யன் மூலம் ஆராதன மந்திரங்களை உபதேசம் பெற்று, ஆராதனம் செய்யலாம்.    சாளக்கிராம மூர்த்திகள், ஹிமாலயத்திலிருந்து (சாளக் கிராம சிகரம்) உற்பத்தியாகும் கண்டகி நதிப்படுகையில்  சக்ர தீர்த்தம்  என்ற புனிதமான இடத்தில் அதிக அளவில் கிடைக்கின்றன. இதன் அளவு சிறிய மிளகிலிருந்து பெரிய மாம்பழம் வரை பெரிதாகவும், அபூர்வமான சில சாளக்கிராம மூர்த்திகளில் ஸ்வர்ணரேகையும் இருக்கும். இதனால் அந்த நதி அங்கு “ஹிரண்யவதி” என்றும் கூறப்படுகிறது.நேபாளத்தில் உள்ள "மஸ்டாங்" என்னும் மாவட்டத்தில் சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் உள்ள "தாமோதர் பீடபூமியில் 60-க்கும் மேற்பட்ட பனிச்சிகரங்கள் உள்ளன.     அன்னை தாட்சாயணியின் வலது கன்னம் துண்டு துண்டாக வீழ்ந்ததாயும், அப்படி வீழ்ந்த இடங்கள் பள்ளங்கள் ஆனதாயும், அந்தப் பள்ளங்களில் இந்தப்பனிச்சிகரங்களில் இருந்து உருகி ஓடிய நீர் வழிந்து ஏரிகளாய் மாறினதாயும் சொல்கிறார்கள்.  இந்த ஏரிகள்  "தாமோதர் குண்டங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. திபெத் நாட்டின் எல்லைக்குப் பக்கத்தில் இருக்கும் இந்தக் குண்டத்தில் இருந்து உற்பத்தி ஆகும் நதிகளில் ஒன்றுதான் கண்டகி நதி. இந்த நதியின் வேறு பெயர்கள் ஸம்ட கண்டகி, நாராயணி, காளி கண்டகி என்பது ஆகும். இதன் அருகில் தான் பிரசித்தி பெற்ற "சாளக்கிராம மலையும்” அதன் அருகிலே உள்ள கிராமம் "சாளக்கிராமம்" எனவும் அழைக்கப்படுகிறது.    கண்டகி நதியைப் பற்றி , அங்கே உலவும் ஒரு செவி வழிக் கதை இது. வேசி குலப் பெண்ணான "கண்டகி" என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது. அது என்ன வென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை. ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான். வருந்திய கண்டகி செய்வதறியாது திகைக்க,  அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான். உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது. அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால் வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய பணிவிடைகள் புரிந்தாள். உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்ல மறுத்தாள் கண்டகி.    அன்றிரவை அவனுடன் கழிக்க, மறுநாள் பொழுது விடிகிறது. அவனை எழுப்புகிறாள் கண்டகி. என்ன பரிதாபம்! வாலிபன் உயிரோடு இல்லை. இதைக் கண்டு வருந்திய கண்டகி, அவன் தன் பதி என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் பின் அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள். திகைத்த உறவினர் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம் அற்புதம் நிகழ்கிறது. இறந்த வாலிபன் உடல் மறைய அங்கே சங்கு, சக்ர,  கதாபாணியான,  ஸ்ரீமந்நாராயணன் கௌஸ்துப,  வனமாலா விரதிஜனாக கோடி சூர்ய பிரகாசத்துடனும், மன்மத லாவண்யத்துடனும் பிரசன்ன வதனத்துடன் மஹா விஷ்ணு அங்கே சேவை சாதித்தார்.    கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒரு ஆணைத் தன் கணவனாக வரித்து வந்த போதிலும் அந்த ஆணுக்கு உண்மையான பத்தினியாக அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மத்தை உலகுக்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு நடந்ததாய் ஸ்ரீமந்நாராயணன் சொல்லிக் கண்டகிக்கு மூன்று வரங்கள் அளிப்பதாய்ச் சொல்கிறார். கண்டகி கேட்டதோ ஒரே ஒரு வரம் மட்டும் தான். அதுவும் என்ன? எப்போதும் ஸ்ரீமந்நாராயணன் பக்கத்திலேயே தான் இருக்க வேண்டும் என்பது தான் அது. அப்போது ஸ்ரீமந்நாராயணன் சொல்கிறார்" ஒரு பக்தனின் சாபத்தால் தான் மலையாக மாற வேண்டி இருப்பதால் மலையோடு சார்ந்த நதியாகக் கண்டகி எப்போதும் தன்னுடன் இருக்கலாம் என்று சொல்லுகிறார். சாபம் பெற்ற நாராயணன் சாளக்கிராம மலையாக மாறக் கண்டகி அதே பெயரோடு நதியாக ஓடுகிறாள். ஒரு மாலைபோல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடுவதாய்ச் சொல்கிறார்கள்.    []   கண்டகி நதி  பெருமாள் சாளக்கிராமக் கல்லாக இருப்பதற்கான இன்னொரு கதை.  சிவபெருமானுக்கும் ஜலந்திரனுக்கும் போர் நடந்து கொண்டிருந்த சமயம், மகாவிஷ்ணுவே ஜலந்திரன்போல் வடிவம் கொண்டு அவன் மனைவி மஹா திவிரதை  பிருந்தையிடம் வந்து, “”தேவி, போரில் நான் வென்று விட்டேன்”என்றார்.    மகிழ்ச்சி கொண்ட பிருந்தை  அவருக்கு பாதபூஜை செய்து நெற்றியில் திலகமிட்டாள். பிருந்தை திலகமிட்டதும், மகாவிஷ்ணுவாகக் காட்சி கொடுத்தார் பகவான். அதைக் கண்ட பிருந்தை, ”பிற ஆடவரைத் தொடும்படி நேரிட்டதே” என்று துடிதுடித்து, ”கல்மனம் கொண்ட நீர், உருவமற்ற சாளக்கிராமக் கல்லாக மாறி கண்டகி நதியில் கிடக்கக் கடவீர்” என்று சாபமிட்டாள்.   “பிருந்தை,  உன் சாபம் பலிக்கும். ஆனால் நீ எனக்கு அன்புடன் பாதபூஜை செய்தாய். எனவே நான் சாளக்கிராமக் கல்லில் உறைந்திருக்கும் போது, நீ துளசியாக மாறி எனக்கு மகிழ்ச்சியூட்டுவாய். அப்போது உன்னை எல்லாரும் போற்றுவர்” என்றார். []   புனித சாளக்கிராமங்கள்    சாளக்கிராம மலையைப் பூச்சிகள் துளைத்தெடுத்ததால் சாளக்கிராமங்கள் உருவாகி நதியிலும், நதிக்கரையிலும் கிடைப்பதாய்ச் சொல்கிறார்கள். இமயமலையின் இந்தப் பகுதியில் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்னால் சமுத்திரம் இருந்ததாயும், அது வற்றி போய்க் கடல்வாழ் பூச்சிகளின் ஓடாக இருக்கலாம் எனவும் சொல்லப் படுகிறது. சாளக்கிராமம் மூன்று வகைப்படுகிறது.    முதல் வகை: உடையாமல், துவாரம் இல்லாமல், கூழாங்கல் போல் இருக்கும். குளிர்ச்சியாக இருக்கும்.    2-ம்வகை: சரி பாதி உடைந்து உள்ளே சக்கரம் போன்ற அமைப்புடன் கூடியது.    3-ம் வகை: துவாரம், சக்கரம் இவற்றுடன் ரேகைகளும் தென்படும்.    எந்தச் சாளக்கிராமமாய் இருந்தாலும் தினமும் பூஜை செய்ய வேண்டும். தினமும் சாளக்கிராம ஆராதனை செய்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.   திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.    இச்சாளக்கிராமங்களை விலை கொடுத்து வாங்குவதை விட வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்து போனாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும்.  12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர்.  12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குல தனச் சொத்தாக கருதுவர்.     சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.   நீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும் தரும்  பச்சை - பலம், வலிமையைத் தரும்  கருப்பு - புகழ், பெருமை சேரும்  புகை நிறம் - துக்கம், தரித்திரம்.    சாபத்தினால் மலையாக மாறிய விஷ்ணுவை,  மஹாலக்ஷ்மித்தாயார் கண்டகி நதியாக ஓடி அறுத்துத் தள்ளுவதால் சாளக்கிராமங்கள் உருவாகின்றன. எப்போது மலை முழுவதுமாக அறுக்கப்படுகின்றதோ அன்று மஹா விஷ்ணுவின் சாப விமோசனம் என்பது ஒரு ஐதீகம்.    இது ஹிந்துக்களைத் தவிர பௌத்த மதத்தவர்களுக்கும் புனித க்ஷேத்ரமாக விளங்குகிறது. பௌத்தர்கள் இதை திபெத் மொழியில் “சம்மிங்க்யாஸ்தா” -   “மோட்சமளிக்கும் பள்ளத்தாக்கு”  என்று அழைக்கிறார்கள். இங்கு பெருமாளுக்கு பூஜை செய்பவர்கள் புத்த சந்நியாசினிகள் ஆவர்.    முக்திநாத் செல்லும் பக்தர்கள்  கண்டகி நதி தரிசனம் செய்து முக்திநாத் ஆலயத்தில், 108  தீர்த்தத்தில் மற்றும் பாவ புண்ணிய  சீதள தீர்த்தங்களில்  நடுங்கும் குளிரில்  நீராடி, பின்னர்  சாளக்கிராம  மூர்த்தியை  தரிசனம் செய்கின்றனர்.   பின்னர் மலையடிவாரத்தில் உள்ள புத்தர்,  ஜ்வாலாமுகி  தரிசனம் செய்து பின்னர் ஜீப் மூலம்     ஜோம்சம் அடைந்து ஹோட்டலில் தங்குகின்றனர்.    மறுநாள் காலை ஜோம்சமிலிருந்து விமானம் மூலம் போக்ரா வந்து அங்குள்ள டேவிஸ் பால்ஸ், லேக்வராகி, பிந்துவாசினி மற்றும் வராஹி கோயில் தரிசனம் செய்து போக்ராவில் தங்கி மறு நாள் காலை போக்ராவிலிருந்து பேருந்து மூலம் காத்மாண்டு அடைகின்றனர்.  நேபாளத்தின் தட்பவெப்பமும், சூழ்நிலைகளும் திடீரென்று மாறக்கூடியது. திட்டமிட்டது போல எதுவுமே நடக்க வாய்ப்புகள் குறைவு. அடியோங்களின் முக்திநாத் யாத்திரை எவ்வாறு அமைந்தது என்பதை இனி காணலாம் அன்பர்களே.            2 மனோகாம்னா தேவி தரிசனம்   []   மனோகாம்னா தேவி ஆலயம்   அடியேனுக்கு முக்திநாத் யாத்திரை ஒரு வருடம் திருக்கயிலாய யாத்திரை சென்ற சமயம் சித்தித்தது.  எனவே திருக்கயிலை நாதரின் அருமையான தரிசனமும் கிரி வலமும் நிறைவு செய்த பின் காத்மாண்டு வந்து தங்கினோம். பசுபதிநாதர் ஆலயம் சென்று சிவபெருமானுக்கு நன்றி தெரிவித்தோம்.  சென்னையில் இருந்து முக்திநாத் யாத்திரைக்கு ஒரு குழுவினர் காத்மாண்டு வந்திருந்தனர். ஆக மொத்தம் இரு பேருந்துகளில் முக்தி நல்கும் நாதரை தரிசிக்க கிளம்பினோம்.    எந்த ஒரு இந்திய  நகரத்தையும் போல காத்மாண்டு நகரிலும் சரியான போக்குவரத்து நெரிசல், நகரை விட்டு வெளியே வரவே சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆனது. திரிபுரேஸ்வரர் ஆலயத்திற்கருகில் பிருத்வி நெடுஞ்சாலையை அடைந்தோம். இந்த நெடுஞ்சாலை போக்ரா வழியாக இந்திய எல்லை நகரமான கோரக்பூர் வரை செல்லுகின்றது.  இங்கிருந்து ஒரு அருமையான பயணம் தொடங்கியது.     இரு வழிப்பாதை  திரிசூலி நதியின் கரையோரம் இப்பாதையை அமைத்துள்ளனர். இரு புறமும் நெடிதுயர்ந்த மலைகள் பச்சை போர்வை போர்த்துக்கொண்டு    எழிலாக காட்சி தருகின்றன. முடிந்த வரை உச்சி வரைக்கும் அடுக்குப்பாசனம் செய்ய ஏதுவாக தோட்டம் அமைத்துள்ளனர். வாழை, மக்காச்சோளம், நெல் எல்லாம் பயிரிடப்படுகின்றன. பாதை முழுவதும் வீடுகள், கடைகள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் என்று நிறைந்திருக்கின்றன. பல  ஆயிரக்கணக்கான சிற்றாறுகள் அவற்றின் குறுக்கே பாலங்கள் அமைத்துள்ளனர். பார்ப்பதற்கு உத்தராகாண்ட் மாநிலம் போலவே உள்ளது. வீடுகள் அனைத்தும் அதே போல மூன்றடுக்காக அமைத்துள்ளனர். ஆனால் வீடுகளை ஆற்றின் பக்கம் கட்டாமல் மலையின் பக்கம் கட்டியுள்ளனர்.  பல வீடுகளில் கூரையில் சாய்ந்த பகோடா அமைப்பில் சிறு பூஜை அறை அமைத்துள்ளனர் என்பதை கவனித்தோம். நாங்கள் பயணம் செய்தது  நமது புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால்  சிறப்பாக பல கிராமங்களில்  "விஸ்வகர்மா பூஜை"  சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. பாதை நெளிந்து நெளிந்து ஏற்றமும் இறக்கமுமாக சென்றது. போக்குவரத்தும் அதிகமாகவே இருந்தது. இடையில்  மலேகூ என்ற ஒர் இடத்தில் மதிய உணவருந்தினோம்.   இவ்வாறு நான்கு மணி நேரம் பயணம் செய்து மனோகாம்னா என்னும் ஊரை அடைந்தோம். வாருங்கள் இவ்வூரில் கோவில் கொண்டுள்ள பகவதி பக்தர்களின் மன விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் மனோகாம்னா அன்னையை தரிசனம் செய்யலாம். (2015ன் நில நடுக்கத்தில் இப்பாதை பெரும்  சேதமடைந்தது.)    இக்கோவிலுக்கு நாம் இழுவை வண்டி (Rope way) மூலமாக செல்ல வேண்டும் என்பது ஒரு சிறப்பு.  திரிசூலி ஆறு மற்றும் இரண்டு மலைத்தொடர்களை தாண்டி சுமார்  2.8 கி.மீ தூரம் இழுவை வண்டியில்   பயணம் செய்தே இக்கோவிலை அடைய முடியும். மூன்று அடுக்காக அமைந்துள்ளது இந்த தொடர். முதலில் 1 கி.மீ உயரமான  ஒரு ஏற்றம் திரிசூலி நதியைக் கடக்கின்றோம். மேலிருந்து  அமைதியாக பாயும்  நதியைப் பார்ப்பதுவே ஒரு ஆனந்தம் பலர் நதியில் படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.    பின்னர் இன்னொரு மலையைத் தாண்டிய பின் சம அளவில் பயணம் செய்கின்றோம்.  பல கிராமங்கள் மலைகளில் அமைந்துள்ளன. கூரைகளுக்கெல்லாம் கத்திரிப்பூ வர்ணம் பூசியுள்ளனர். கூர்ந்து கவனித்தபோது அது NCELL எனப்படும் நேபாளத்தின் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தினர் தங்களது விளம்பரத்திற்காக இவ்வாறு செய்துள்ளனர் என்று புரிந்தது.  ஐரோப்பியர்கள் இந்த கிராமங்களில் வந்து தங்கி இவர்களுடன் தங்கி இப்பகுதியின் சிறப்பான தக்காளி (Takali - நம்முடைய தக்காளிப்பழம் அல்ல)  அதாவது ஒரு வகை சிறப்பு அசைவ சமையலை இரசித்து சாப்பிட்டு செல்கின்றனராம்.  மேலும் இக்கிராமங்களில் விளையும் ஆரஞ்சுப்பழங்கள் மிகவும் சுவைக்காக பெயர் போனவை.  இவ்வாறு பல கிராமங்களையும் அடுக்கு பாசன மலைகளையும் இரசித்துக்கொண்டே பயணம் செய்த பிறகு இறுதியில் இனி ஒரு ஏற்றம் மனோகாம்னா தேவி ஆலயத்தின் அடிவாரத்தை அடைகின்றோம். அங்கிருந்து ஆலயத்தை அடைய சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். பாதையின் இரு புறமும் கடைகள் பல்வேறு கலைப்பொருட்கள், ஒவியங்கள் விற்கின்றனர். எங்கள் குழுவில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு நினைவுப்பொருள் வாங்கினர். கோயிலின் நுழைவில் அருமையான பூங்கா உள்ளது.    நேபாளத்தின் இந்த சுயம்பு அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.மனோகாம்னா என்றால் மனதில் நினைக்கும் அனைத்து விருப்பங்களையும் அதாவது பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் அன்னை என்று பொருள். அன்னை பார்வதி விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் பகவதியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். இரண்டடுக்கு பகோடா அமைப்பில் இக்கோயில் அமைந்துள்ளது. கருடன் நம்மை வரவேற்கின்றார் மற்றும் வழியனுப்புகிறார்.    கோபுரத்தில் இருந்து தொங்கும் பட்டைகள் என்ன என்று வினவிய போது அம்மனுக்கு பக்தர்கள் அர்ப்பணம் செய்த நெற்றிச் சுட்டி என்று பதில் கிட்டியது. நேபாளத்தில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் நாம் காணலாம். தாந்த்ரீக முறைப்படி பூஜைகள் நடைபெறுவதால் இன்றும் மிருகங்கள் பலியிடப்படுகின்றது. இழுவை வண்டிகளில் பொருட்கள் மற்றும் மிருகங்களை மேலே கொண்டு செல்லவும் தனி வண்டிகள் உள்ளன.     இழுவை வண்டி நிலையத்திலிருந்து ஆலயத்திற்கு செல்ல சிறிது தூரம்   மலை ஏறி செல்ல வேண்டும். பாதையின் இரு புறமும்  கடைகள், நேபாளத்தின் பல கலைப்பொருட்களை வாங்கலாம். மெல்ல மெல்ல கடைகளில் உள்ள கலைப்பொருட்களை இரசித்துக்கொண்டே மலை ஏறி ஆலயத்தை அடைந்தோம்.  . இத்தலத்தின் வரலாறு இவ்வாறு கூறப்படுகின்றது. இராம் ஷா என்ற கூர்க்கா அரசனின் பட்டத்தரசியாக அம்பாள் வந்து அவதரித்தாள். இந்த இரகசியம் அம்மனின் பக்தரான லக்கன் தாபா என்பவரைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஒரு நாள் அரசன் இராணியை அம்பாளாக சுய ரூபத்தில் பார்த்தவுடன் இறந்து விடுகின்றார். அவ்வூர் வழக்கபப்டி இராணியும் உடன்கட்டை ஏறுகின்றாள். பின்னர் லகன்தாபா வேண்டிக்கொண்டபடி ஆறுமாதங்கள் கழித்து அம்மன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டாள்.  தந்தோஜ் தாபா என்ற குடியானவர் நிலத்தை உழும் போது   இரத்தமும் பாலும் வெளி வந்தது. லகன் தாபா அங்கு வந்து தாந்திரீக முறையில் பூஜை செய்ய இரண்டும் நின்றது. தற்போதைய பூசாரி இவரது 21வது தலைமுறையினர் ஆகும். தினமும் காலையில் தாந்திரீக முறைப்படி முட்டை ஆரஞ்சுப்பழம், அரிசி, குங்குமம், சுன்ரி ( சிவப்புத் துணி) படைத்து வழிபாடு செய்த பின்  பக்தர்களை அனுமதிக்கின்றனர்     நேபாளக்கோவில்களைப் போலவே மலை உச்சியில் இரண்டடுக்கு பகோடா அமைப்பில் அமைந்துள்ளது  இவ்வாலயம். நேபாளக்கோவில்களைப் போலவே மலை உச்சியில் இரண்டடுக்கு பகோடா அமைப்பில் அமைந்துள்ளது கோவில். தங்க முலாம் பூசப்பட்டுள்ளது சன்னல்கள் மற்றும் கூரைகளைத் தாங்கும் மர சட்டங்களில் அருமையான வேலைப்பாடுகளை இங்கும் காணலாம். ஒரு பிரகாரம் சுற்றி வந்து கர்ப்பகிரகத்திற்குள் நுழைகிறோம். அம்மன் மலை சிகரமாக சுயம்புவாக அருள் பாலிக்கின்றாள். கருவறையில் மனோகாம்னா தேவியுடன் விநாயகர், பைரவர், துர்கா, கன்யாகுமரி மற்றும் சப்த மாதர்களும் சுயம்பு வடிவில் அருள் பாலிக்கின்றனர். மேலே சிலைகளாகவும் அமைத்துள்ளனர் பூசாரி வரும் பக்தர்களுக்கு திலகமிட்டு அனுப்புகிறார். நாம் அன்னையை தொட்டு வணங்க முடியும்.    ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி |  தன்னோ துர்கி பிரசோதயாத் ||    என்று அம்மனை வணங்கி  எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும், முக்திநாத் யாத்திரையும் எந்த சிரமமும் இல்லாமல் முடிய வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு வந்தோம். நவராத்திரி இங்கு மிகவும் சிறப்பாகக்  கொண்டாடப்படுகின்றது. பின்னர் இழுவை இரயில் மூலம் இயற்கை அழகை இரசித்துக்கொண்டே கீழே வந்து போக்ரா நோக்கி பயணம் செய்தோம், வழியில் சூரியன் மறையும் அந்தி நேரம் என்பதால் அன்னபூர்ணா சிகரங்கள் பொன் மயமாக ஒளிரும் அழகை இரசித்துக்கொண்டே போக்ரா அடைந்து அங்கு தங்கினோம்.                        3   போக்ராவிலிருந்து ஜோம்சம் விமானப் பயணம் []   போக்ராவிலிருந்து அன்னபூரணா மலைச்சிகரங்கள்   அன்னபூரணா மலையேற்றம் செல்பவர்களும் மற்றும் முக்திநாத்  யாத்திரை செல்பவர்களும் போக்ராவில் தங்கி செல்கின்றனர். ஆனால் புனல் மின்சாரம்  அபரிமிதமாக தயாரிக்கக்கூடிய தேசமாக இருந்தும் கூட  காத்மாண்டுவிலும் சரி இங்கு போக்ராவிலும் மின்சாரம் எப்போதும் இருப்பதில்லை. எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை இரவு மட்டும் தங்கும் விடுதிகளில் மின்ஜெனரேட்டரை இயக்குகின்றனர். போக்ரா 800 மீ உயரத்தில்தான் அமைந்துள்ளதால் வெகு நாட்களுக்குப் பிறகு கம்பளி ஆடைகளை  கழற்றினோம்,  மின் விசிறி தேவைப்பட்டது.    மறு நாள் போக்ராவில் அதிகாலை 5 மணிக்கே  விமான நிலயத்திற்கு கிளம்பினோம். சூரிய உதய காலத்தில் அன்னபூர்ணா சிகரம் பொன் மயமாக மின்னும் அழகை ரசித்தோம். மேகம் இல்லாமல் வானம் நிர்மலமாக இருந்ததால் அன்னபூரணாவின் ஆறு சிகரங்களையும் அற்புதமாக பார்த்தோம் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இந்த போக்ராவிலிருந்து ஜோம்சம் செல்லும் விமான பயணம் ஒரு பக்கம் நெடிதுயர்ந்த அன்னபூரணா மலைத்தொடர்கள் மறு புறம் அதே அளவு உயரமான தவளகிரி மலைத்தொடர்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே விமானப்பயணம் என்பதால், மழையோ   அதிக மேகமூட்டம் இல்லாத போது  பொதுவாக காலை 6 மணி முதல் 11 மணி வரையே இயக்கப்படுகின்றன. அதற்கப்புறம் காற்றின் வேகம் அதிகமாகிவிடுவதால் விமான இயக்கம் நிறுத்தப்படுகின்றது. எனவே வானிலை சரியாக இருந்தால் அதிகபட்சமாக 4 முறை மட்டுமே ஒரு நாளில்  விமானங்கள் சென்று வருகின்றன. பனி மூட்டமாகவோ அல்லது காற்றின் வேகம் அதிகமாகவோ இருந்தால் விமானங்கள் இயக்கப்படுவதில்லை.   அடியோங்களின் சுற்றுலா அமைப்பாளர் Simrik Airlines என்ற விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். அன்றைய தினம் வானிலை நன்றாக இருந்ததால் நான்கு தடவை  விமானப் பயணம் நடைபெற்றது குழுவினர் அனைவரும் ஜோம்சம் வந்தடைந்தோம். ஒரு விமானத்தில் அதிகபட்சம்  20 பேர் பயணம் செய்யலாம். சுமார்  11000 அடி உயரத்தில் 400 கி.மீ வேகத்தில் விமானத்தை இயக்குகிறனர். ஜோம்சம் அடைய சுமார்  20  நிமிடங்கள் ஆகின்றன. இப்பயணத்தில்  Turbulance எனப்படும் காற்று சுழற்சியில் இரு தடவை விமானம் தடுமாறியது    போக்ராவில் இருந்து ஜோம்சம்  பேருந்தில் பயணம் செய்தால் கரடு முரடான கற்கள் பாவிய நெளிந்து வளைந்து செல்லும் மலைப்பாதை என்பதால் எலும்பை முறிக்கும் பயணம், எந்த நிலசரிவும் இல்லையென்றால்  சுமார் 12 நேரத்தில் ஜோம்சம்  அடையலாம்.  விமானத்தில் பறக்கும் போது அன்னபூரணா மற்றும் தவளகிரி மலைத்தொடர்களின் சிகரங்களை தெளிவாகக் காண முடிகிறது. திருக்கயிலாய யாத்திரையின் போது அன்னபூரணா மற்றும் தவளகிரி மலைத்தொடர்களின் இந்தியப்பகுதி மற்றும் திபெத்திய பகுதிகளின் அழகை முன்னரே கண்டிருந்தோம் இன்றைய தினம் நேபாளப் பகுதியின் அழகை விமானத்தில் இருந்து அருகாமையில் இரசித்தோம்     குறிப்பாக போக்ராவில் கூம்பு போன்று காட்சி அளிக்கும் “மச்சேபுச்சரே” (Machapuchare) எனப்படும்   “மீன் வால் சிகரம்"  பார்த்து இரசித்தோம். விமானத்தில்  இருந்து பார்க்கும் போது அப்புறம் இச்சிகரம் மீனின் வால் போலவே உள்ளதால் இப்பெயர்.   இந்த சிகரத்தை நேபாள  மக்கள் சிவபெருமானின் இருப்பிடமாக புனிதமானதாக கருதுகின்றனர். அருமையாக இயற்கையை இரசித்துக்கொண்டே  சுமார் நாற்பது நிமிடங்களில் போக்ரா வந்தடைந்தோம். வானிலை சீராக இருந்ததால் எந்த வித சிரமும் இருக்கவில்லை.       4 ஜோம்சமிலிருந்து முக்திநாத் பயணம்   ஜோம்சம் விமானநிலையம் பனி மூடிய நீலகிரி சிகரங்களை பின்னணியாகக் கொண்டு அருமையான சூழ்நிலையில் அமைந்துள்ளது.  குறைந்த உயரம் (1500 மீ) தான் என்றாலும் அதிக குளிராக இருப்பது போல தோன்றியது. அனைவரும்  ஜோம்சம் வந்து சேர சுமார் 11 மணி ஆனது அது வரை சத் சங்கத்தில்  “குறையொன்றும் இல்லாத கோவிந்தனை”  போற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தோம். பின்னர் பேருந்து மூலம் சாளக்கிராமங்கள் கிடைக்கின்ற மிகவும் புனிதமான கண்டகி நதியை அடைந்தோம். காளி கண்டகி, சாளக்கிராமி, நாராயணி, கிருஷ்ண கண்டகி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்நதியின் குறுக்கே தற்போது ஒரு பழைய பாலமே உள்ளது அதுவும் பழுதடைந்து விட்டதால் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை, மேலும் பாதசாரிகளும்  ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு மேல் செல்ல வேண்டாம்  என்று எச்சரிக்கின்றனர். பாலத்தை கடந்து அப்புறம் உள்ள பேருந்து நிலயத்தை அடைந்தோம். அருகில் ஒரு புது பாலம் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது.  அங்கிருந்து சிறு பேருந்துகளும், ஜீப்களும் முக்திநாத் வரை செல்கின்றன. நாங்கள் ஒரு  பேருந்தில் முக்திநாத் புறப்பட்டோம்.    இவ்விடம் ஒரு புத்தவிகாரமும் உள்ளது.  ஜோம்சம் கிராமத்தில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன. சாளக்கிராமமும் பல கடைகளில் கிடைக்கின்றன. ஜோம்சமிலிருந்து குதிரை மற்றும் இரு சக்கர  வாகனங்கள் மூலமாகவும் முக்திநாத் செல்ல முடியும். முன்னர்  காத்மாண்டு/போக்ராவிலிருந்து  கோவில் வரை ஹெலிகாப்டர்கள் சென்று கொண்டிருந்தன தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறினர்.     ஜோம்சம் ஒரு சிறு நகரம் தான் தங்கும் விடுதிகளும், உணவகங்களும் கடைகளும் நிறைந்திருக்கின்றன. மற்ற நேபாள நகரங்களைப் போலவே நிறைய சுற்றுலாப் பயணிகளை அதிலும் அன்னபூரணா மலைச்சிகரம் ஏற முயலும் ஐரோப்பியர்களை அதிகம் காணலாம். முன்பே கூறியது போல இங்கு இவர்களின் சிறப்பு உணவான தக்காளி உணவு கிடைக்கின்றது.  அளவான உணவே வழங்குகின்றனர். அனைத்து பொருட்களும் விலை அதிகமாகத்தான் உள்ளது.    அவனருளால் குழுவினர் சுமார் 40 பேரும் விமானம் மூலம் போக்ராவிலிருந்து ஜோம்சம் வந்தடைந்தோம். பின்னர் காலை உணவை முடித்துக் கொண்டு சிறு பேருந்து மூலம் கண்டகி நதியை அடைந்தோம். காளி கண்டகி (கறுப்பு கண்டகி) என்ற பெயருக்கேற்றார் போல - அந்த கருவிளை வண்ணன் பாதம் தொட்டு வருவதால் கருமையான நிறத்தில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாள் கண்டகி. ஆற்றங்கரையில் எதாவது சாளக்கிராமம் கிடைக்கின்றதா என்று தேடினோம். இங்குள்ளவர்கள் தாமோர் குண்டத்தில் இருந்து நதி புறப்படும் இடத்தில் இருந்தே  வலை கட்டி சாளக்கிராமங்களை சேகரித்து விடுவதால் அவரின் பிராப்தம் உள்ளவர்களுக்கு மட்டுமே சாளக்கிராமம் ஆற்றில் கிடைக்கும் என்பதால் யாருக்கும் சாளக்கிராமம் கிட்டவில்லை. சில கூழாங்கற்களை மட்டும் சேகரித்துக் கொண்டோம்.    ஆதி காலத்தில்  இமயமலைப் பிரதேசம் சமுத்திரமாக இருந்தது. அப்போது நமது இந்தியக் கண்டம் தனியாக இருந்தது. சுமார் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய நிலப்பரப்பு மெல்ல மெல்ல வடமேற்காக நகர்ந்து வந்து  ஆசிய நிலபரப்போடு மோதியதால் உருவானவையே உலகின் உயர்ந்த மலையான இமயமலை. எனவே உயர் பீடபூமியான திபெத்தில் உள்ள பல   ஏரிகள் இன்றும் உப்பு நீராக இருப்பதற்கு இதுவே காரணம். சாளக்கிராமங்களும் அந்த கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் என்று அறிவியலார் கூறுகின்றனர். நேபாள அரசும் சாளக்கிராமங்களை விற்பதையும், நேபாளத்தில் இருந்து வெளியே எடுத்து செல்வதையும் தடை செய்துள்ளது. ஆனால் விஞ்ஞானமும் மெய்ஞானமும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லையே, கடல் வாழ் உயிரினங்களின் கூடு என்றால் இமயமலையில் இருந்து உருவாகி ஆசியா முழுவதும் பாயும் எண்ணற்ற நதிகளில் இந்த ஒரு நதியில் மட்டுமே ஏன் சாளக்கிராமங்கள் கிட்டுகின்றன என்பதை யாராலும் விளக்க முடியவில்லை.  எது எப்படி இருந்தால் என்ன நம்புகின்றவர்களுக்கு சாளக்கிராமங்கள் பெருமாள்தான்.  []   கண்டகி நதியின் குறுக்கே உள்ள பழைய பழுதடைந்த பாலம்  பழுதடைந்த பாலத்தைக் கடந்து லூப்ரா கிராமத்தை அடைந்தோம். இக்கிராமத்தில் உள்ள முக்திநாத் செல்லும் சிறு பேருந்துகளும், ஜீப்களும் புறப்படும் நிலையத்தை அடைந்தோம். இந்த பேருந்து நிலையத்தின் எதிரே போன்பா அவர்களின் புத்த விகாரம் உள்ளது. புது வர்ண கலாபத்தில் எழிலாக இருந்தது புத்த விகாரம். இங்கிருந்து நடைப்பயணம் மூலமாகவும் பலர் முக்திநாத் செல்கின்றனர்.     []   லூப்ராவில் உள்ள போன்பா புத்த விகாரம்  இங்கிருந்து முக்திநாத் செல்ல  சரியான பாதை கிடையாது மலையில் கல் நிறைந்த பாதையில் மேலும் கீழும் இறங்கி   குலுங்கிக்கொண்டே பயணம் செய்தோம் பின்னர் சிறிது தூரம் சென்றவுடன் பேருந்து கண்டகி நதியில் இறங்கியது மிகப்பெரிய நதி ஆனால் தண்ணீர் சிறு பகுதியில்தான் ஓடிக்கொண்டிருந்தது. பின்னர் மலையேற்றம் என்று சுமார் 20  கி.மீ தூரத்தை 3 நேரத்தில் கடந்தோம். வழியெங்கும் சிறு சிறு கிராமங்கள் உள்ளன. கடுகு, வரகு அரிசி முதலியன பயிர் செய்கின்றனர். ஆப்பிள் மரங்களையும் பார்த்தோம்.  சில கிராமங்களில் தக்காளி, முள்ளங்கி கூட விளைகின்றன. அனைத்து இல்லங்களின் முன்புறம் டிஷ் ஆன்டனாக்கள் போல  சூரிய குக்கர்கள் (Solar cookers) அமைத்துள்ளனர்.   அனைத்து கிராமங்களிலும் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன. அன்னபூரணா மலைதொடரின் பனி படர்ந்திருந்த தொராங் லா கணவாயை பார்த்தோம். இந்த உயரத்தில் பொதுவாக மரங்கள் இருக்காது. ஆனால் இவ்வழியில் பல மரங்களைக் கண்டோம்.      அக்டோபர் மாதத்திற்கு பிறகு பனி பெய்ய ஆரம்பித்து முக்திநாத் முழுவதும் பனியால் மூடிவிடும் பின்னர் இளவேனில் காலத்தில் பனி  உருக ஆரம்பிக்கும் மே மாதம் சில சமயம் குறைவாக பனி இருக்கும் சாகச பயணம் மேற்கொள்ள விரும்பும் ஐரோப்பிய  அன்பர்கள் அப்போது இங்கு வருவர், பருவ மழை துவங்குவதற்கு முன்னர் ஜூன் மாதம் இங்கு வர ஏற்ற காலம்.   நேபாள அரசு இந்த ஜோம்சம் - முக்திநாத்  பாதையை 2020க்குள் தார் சாலையாக  மாற்ற திட்டமிட்டுள்ளதாம்.  அப்படி நடந்தால்  தொராங் லா எனப்படும் கணவாய் வழியாக சீனாவில் நுழைந்து  திருக்கயிலாய யாத்திரை செல்ல இனியொரு வழி உருவாகும் என்றும் வழிகாட்டி  கூறினார்.    கோவில் வரை ஜீப்கள் செல்வதில்லை சுமார் அரை கி.மீ தூரம் முன்னதாக உள்ள ஜீப் நிறுத்ததில் இறக்கி விடுகின்றனர். ஜீப் நிறுத்ததில் இருந்து இரு சக்கர வண்டி நிறுத்தம் செல்ல சிறிது தூரம் நடக்க வேண்டி உள்ளது. அங்கிருந்து ஆலய வாசல் வரை இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன. விரும்புபவர்கள் சுமார் 100  படிகள் ஏறியும் கோவிலை அடைகின்றனர். அடியோங்களில் சிலர் இரு சக்கர வண்டியிலும் சிலர் நடந்தும் கோவில் வாசலை அடைந்தோம். வழியில் உள்ள கிராமத்தில் ஒவ்வொரு வீட்டின் முன்னரும் சாளக்கிராமங்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். அன்றைய தினம் சூரியன் பிரகாசித்துக்கொண்டு இருந்தான் எனவே வெளியே அமர்ந்து கம்பளி உடைகளை பின்னிக் கொண்டிருந்தார்கள்.     வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் ஏற்றத்தில் இரு சக்கர வண்டி பயணமும் த்ரிலானதாகத்தான் இருந்தது. 15 நேபாள ரூபாய்கள் செல்வதற்கும் வருவதற்குமாக வசூலிக்கின்றனர் ஒரு அடையாள அட்டை கொடுத்து விடுகின்றனர் தரிசனம் முடித்து திரும்பி வரும் போது  அடையாள அட்டையை  காண்பித்து எந்த வண்டியில் வேண்டுமென்றாலும் அமர்ந்து திரும்பி வரலாம். திரும்பும் போது முடியாதவர்களை ஜீப் நிறுத்தம்  வரை  கொண்டு வந்து விடுகின்றனர். இதனால் அப்பகுதி இளைஞர்களுக்கு வருமானம் கிட்டுகின்றது. வாருங்கள் இனி முக்திநாதரின் ஆலயத்தை தரிசனம் செய்வோம்.               5 முக்தி நாதர் தரிசனம்   முக்திநாதர் ஆலயம் மிகப்பெரிய வளாகம் ஆகும். இந்து மற்றும் பௌத்த அம்சங்கள் இணைந்த பல சன்னிதிகள் இவ்வளாகத்தில் உள்ளன. ஆலய வளாகத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அலங்கார வளைவில் கருடனும் நாக கன்னிகைகளும் முக்திநாதரை சேவிக்க வரும் நம்மை வரவேற்கின்றனர்.     []   முக்திநாதர் ஆலய வளாக வரைபடம்  அருகில் மூன்று   பெரிய பிரார்த்தனை உருளைகள் உள்ளன. இந்த உருளைகளின் உள்ளே மந்திரங்கள் எழுதிய காகிதங்கள் வைத்துள்ளனர். நாம் அந்த உருளைகளை சுற்றும் போது அவ்வளவு மந்திரங்களை ஜபித்த பலனை நாம் பெறுகின்றோம் என்பது இவர்கள் ஐதீகம்.    நுழைவு வாயிலைத் தாண்டியவுடன் சாங்தோ புத்தவிகாரம் அமைந்துள்ளது. இவ்விகாரத்தில் புத்தர்,  அவலோகிதேஸ்வரர் மற்றும் திபெத்திற்கு புத்தமதத்தை கொணர்ந்த பத்மசம்பவரும் அருள் பாலிக்கின்றனர். முக்திநாத்தின் லாமாக்களும், இங்கு பூசை செய்கின்ற  புத்த பிக்குணிகளும் இதன் அருகில் உள்ள கட்டிடத்தில்  தங்குகின்றனர்.    அடுத்து இடப்பக்கத்தில்   சுவாமி நராயண் என்று தற்போது அழைக்கப்படும் சுவாமிகளின் நினைவிடம் உள்ளது அதில் விஷ்ணு பாதம் அமைத்துள்ளனர். இவர் தனது பதினோராவது வயதில் முக்திநாத் வந்து சில காலம் இங்கு கடுமையான தவத்தில் இருந்து சித்தி பெற்றார். பின்னர் சபீஜ் யோகத்தை உலகெங்கும் பரப்பினார். இவ்வாலயத்தின் இப்போதுள்ள  சுற்று மதிலை இவரின் சீடர்கள்தான் கட்டினார்களாம்.    []   யாக சாலை - திருமங்கையாழ்வார் பாசுரங்கள்    அடுத்து யாகசாலை அமைந்துள்ளது. அதன் முகப்பில் திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் எழுதிய  பலகை வைத்துள்ளனர். இமயமலையில் இவ்வளவு உயரத்தில் தமிழ் படித்தபோது மிகவும் பெருமையாக இருந்தது.    அடுத்து நாம் சேவிப்பது சிவபார்வதி சந்நிதி. நடுநாயகமாக இரண்டடுக்கு பகோடா அமைப்பில்   பெரிய சிவன் சன்னதியும் அதன் நான்கு திசைகளிலும் சிறிய இராமர், கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் கணேசர்களுக்கு சிறு சன்னதிகள் என்றபடி பஞ்சாயதன அமைப்பில் அமைந்துள்ளது. சிவபார்வதி பளிங்குச்சிலை பெரிய சாளக்கிராமம் ஒன்றும் சன்னதியில் உள்ளது. சிவபெருமானுக்கு எதிரே சிறு நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. புத்தமத கலப்பில்லாமல் இந்த வளாகத்தில்  முழுதும் இந்து கோவிலாக அமைந்துள்ள சந்நிதி இது ஒன்றுதான். சிவபார்வதியை வணங்கிவிட்டு முக்கிய மைய  சன்னதியை நோக்கி சென்றோம். இருபுறமும் பெரிய மரங்கள் வளர்ந்திருக்கின்றன என்பது இத்தலத்தின் ஒரு தனி சிறப்பு ஆகும். பொதுவாக இந்த உயரத்தில் (3750 மீ) மரங்கள் வளராது. வளாகத்திற்ககுள் சிறு ஆறு ஒடுகின்றது.    []   ஒரு முன் மண்டபம் ஒரு பிரகாரத்துடன் மூன்றடுக்கு பகோடா அமைப்பு    இந்த ஆலயத்தை நேபாள அரசர் ஷா ராணா பகதூரின் பட்டமகிஷி சுவர்ணா பிரபா தனது கனவில் வந்து முக்திநாதர் கட்டளையிட்டபடி 1815ல்  கட்டி முடித்தார்.  நேபாளக் கோவில்களைப் போலவே மூன்றடுக்கு பகோடா அமைப்பில் எழிலாக அமைந்துள்ளது முக்திநாதர் ஆலயம். ஆலயத்திற்கு முன் புறம் இரண்டு குளங்கள் புண்ணிய-பாவ குளங்கள் உள்ளன.     கோவிலைச் சுற்றி அரை வட்ட வடிவத்தில் 108  நீர் தாரைகள் விழுந்து கொண்டிருக்கின்றன. பக்தர்கள் இந்த 108 தாரைகளில் நீராடி பின்னர் இரு குளங்களிலும் முழுகி எழுந்து உடல் தூய்மையான பின் முக்திநாதரை சேவிக்க செல்கின்றனர். இந்துக்களுக்கு இந்த 108 தாரைகள் 108  திவ்ய தேசங்களை குறிக்கின்றது. பௌத்தர்கள் பத்ம சம்பவருடன் வந்த  84  சித்தர்கள் உருவாக்கிய புனித தாரைகள் இவை என்று நம்புகின்றனர். இந்த புனித நீரானது மானசரோவரின் தீர்த்தம் என்றும், வரும் காலத்தில் பாவம் செய்தவர்கள் பாவத்திலிருந்து விடுபட இந்த தீர்த்தங்களை அவர்கள் ஆசீர்வதித்து சென்றுள்ளனர் என்பதும் இவர்கள் ஐதீகம். எனவே இந்த 108  தாரைகளில் நீராட ஒருவரது கன்ம வினைகள் அனைத்தும் நீங்கும்.   தண்ணீர் விழும் தாரைகள் பசு முகம் போல உள்ளன, முதல் மற்றும் கடை தாரைகள் மட்டும் ட்ரேகன் போல உள்ளன. சங்பா ரின்போசே அவர்கள் இவைகளை அமைத்தாராம். மிகவும் குளிர்ந்த தண்ணீர்தான் இவைகளில் இருந்து வருகின்றன மேலும் எப்போதும் தண்ணீர் விழுந்து கொண்டிருப்பதால் பாசமும் பிடித்துள்ளது. கவனமாக நீராடவும். பாதுகாப்பிற்காக  தடுப்புக் கம்பி வளையம் அமைத்துள்ளனர் அதை பிடித்துக்கொள்ளலாம்.  முதல் தாரையில் கீழ் வந்த உடனே அந்த சீதள நீரினால் உடல் சில்லிட்டு விட்டது.    []     புண்ணியக்  குளம்    ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாசுரங்களை சேவித்துக்கொண்டே ( முதல் பாசுரத்திலிலேயே மார்கழி நீராடத்தானே அழைக்கின்றாள் கோதை)  அவசர அவசரமாக மற்ற தாரைகளில் தலையை நனைத்துக்கொண்டே ஓடினோம். பாவக்குளத்தில் இறங்கியவுடன் உடல் அப்படியே உறைந்து விட்டது போல உணர்ந்தோம், அவசர அவசரமாக வெளியே வந்து புண்ணிய குளத்தில் மூழ்கி நீராடினோம். இரண்டும் நீங்கப்பெற்றோம். வெளியே வந்து தலை துவட்டி புது ஆடை அணிந்தவுடன் புது ஜென்மம் பெற்றது போல புத்துணர்வு பெற்றோம்.  வாருங்கள் இனி முக்திநாதரை சேவிப்போம்.      []   அரை வட்ட  வடிவில்    108 நீர் தாரைகள்    முன் மண்டபத்தின் கதவில் அருமையான சிற்பங்கள் மற்றும் அருமையான மரவேலைப்பாடுகள் அமைந்துள்ளன. ஒரே பிரகாரம் சுற்றி வந்து முக்தி நாதரின் எதிரே நின்றோம்.      []   முக்தி நாராயணரின் திருமுக மண்டலம்      []   பெரிய திருவடி    அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களில் சங்கு சக்கரம், பத்மம், கதை தாங்கி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார் முக்தி நாதர். அப்படியே நம்முடன் பேசுவது போல உள்ளது பெருமாளின் திருவழகு. பெருமாள் மற்றும் உபய நாச்சியார்களின் திருமேனிகள் செப்பு சுயம்பு திருமேனியாகும். அந்த ஆரவமுதை அப்படியே பருகினோம். கண்ணீர் மல்க அப்படியே நின்றோம்  நேரம் சென்றதே தெரியவில்லை. முதலில்    சிற்றஞ்சிறு காலே வந்துன்னை சேவித்து உன்  பொற்றாமறையடியே போற்றும் பொருள் கேளாய்  பெற்றமேய்துண்ணூம் குலத்தில் பிறந்து நீ  குற்றேவல் எங்களைக் கொள்ளமல் போகாது  இற்றைப்பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா  எற்றைக்கும் ஏழேழ்  பிறவிக்கும் உந்தன்னோடு  உற்றோமேயாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்  மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்  என்று சரணாகதி செய்தோம். கண் குளிர சேவித்தோம் மனம் குளிர நன்றி கூறினோம்.  ஒரு வகையில் பார்த்தால் முக்திநாதர் தரிசனம் மிகவும் துர்லபமானது, வானிலை, உடல் நலம், நிலசரிவுகள், விமானப்பயணம் என்று ஏதாவது ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டாலும் நாம் இங்கு வரமுடியாது, பெருமாளின் அருள் பூரணமாக இருந்தால் தான் நாம் இங்கு வரவே முடியும் அதற்கு அவருக்கு நன்றி செலுத்தினோம்.    முன்பே கூறியது போல நேபாள நாட்டில் மஹா விஷ்ணுவிற்கும் புத்தருக்கும் இடையே  இவர்கள் வேறுபாடு காண்பதில்லை. முக்தி நாதர் நமக்கு பெருமாள், புத்தர்களுக்கு அவலோகிதேஸ்வரர், ஆதி சேஷன் குடைபிடித்து, பிரபையாகவும் விளங்க, வெள்ளி கிரீடம், காதுகளில் குண்டலங்கள், பட்டுப்பீதாம்பரம், முத்துமாலைகள் என்று அற்புதமான அலங்காரத்தில்  தாமரை  மலரில் பத்மாசனத்தில்  அமர்ந்த கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கும் முக்தி அளிக்கும் பெருமாளை திவ்யமாக  சேவிக்கின்றோம்.    நாம் உபய நாச்சியார்கள் என்று வணங்கும் தாயார்கள் இருவரும்  சாமரம் வீசும் பாணியில் நின்ற கோலத்தில் எழிலாக  சேவை சாதிக்கின்றனர். புத்தர்கள்  தாயார்களை டாகினிகள் என்று வணங்குகின்றனர். மேலும் புத்தர், நர நாராயணர்கள் (சிலர் லவ குசர்கள் என்கின்றனர்), இராமானுஜர், கணேசர், அஞ்சலி ஹஸ்தத்துடன் கருடன் ஆகிய மூர்த்திகளும் சேவை சாதிக்கின்றனர். பெருமாளுக்கும், உபய நாச்சியார்களுக்கும், கருடன், இராமனுஜர் ஆகியோருக்கு  திருமண் அழகு சேர்க்கின்றது. மேலும் பெரிய நரசிம்ம சாளக்கிராமமும் உள்ளது. புத்த சந்நியாசிநிகள் தீர்த்தப் பிரசாதம், சடாரி சாதிக்கின்றனர்.  பெருமாளின் திருமூக்கு சிறிது வித்தியாசமாக பட்டது, காரணம் பின்னால் தெரிய வந்தது முற்காலத்தில் நாம் கர்ப்பகிரகத்தின் உள்ளேயே சென்று  பெருமாளை ஆலிங்கனம் செய்ய முடியுமாம். 2004 முதல் அந்த வழக்கத்தை நிறுத்தி விட்டனராம்.     இங்கு வந்து சேவித்த அருளாளர்களில் திருமங்கையாழ்வாரையும் இராமனுஜரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். விசிஷ்டாத்வைத்தை நிலை நாட்டிய இராமானுஜர் கர்ப்பகிரகத்தில் எழுந்தருளியுள்ளார். மேலும் ஆண்டாள் மற்றும் மணவாள மாமுனிகளுடன்   பிரகாரத்தில் உள்ள யக்ஞ சாலையிலும் எழுந்தருளியுள்ளார்.     விமானம்  வாகனங்கள் என பல வசதிகள் மிக்க இந்த காலத்திலேயே சாளக்கிராமத்தை  தரிசிக்க   நாம் பெரும்  பிரயத்தனம்  எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால்,  இவர்கள்  எவ்வாறு  பல நூற்றாண்டுகளுக்கு முன்னால்  எப்படி இங்கு வந்து,  பெருமாளை  தரிசனம் செய்து, மங்களாசாசனமாக பாசுரங்களை  இயற்றினார் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.      திருமங்கையாழ்வார்  சாளகிராமத்தை  பத்துப்  பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.  இவற்றில்  கடைசி  பாசுரம் தவிர  மற்றவற்றில் எல்லாம்,  ‘சாளக்கிராமம் அடை நெஞ்சே’  என்று  சொல்லி  முடிக்கிறார்   ஆழ்வார். சாளக்கிராமத்தை அடைவது  அத்தனைக்  கடினமானது  என்று மறைமுகமாக  உணர்த்தினாலும்,  அந்த  சிரமம்  தெரியாமலிருக்க  , இராம, கிருஷ்ண காலத்துச் சம்பவங்களைச் சொல்லி, ‘அந்தப்  பெருமாள்  கோயில்  கொண்டிருக்கும் சாளக்கிராமத்தை  அடைவாயாக’   என்று   நமக்கு  அறிவுறுத்துகின்றார்.   நம்முடைய  பயணச்  சோர்வை  நீக்க முயன்றிருக்கிறார் நம் கலியன்.   மேலும்   திருவூரகத்தானையும்  குடந்தை  உத்தமனாம்  சார்ங்கபாணியையும்,  திருப்பேர்நகர்  எம்பெருமானையும்  குறிப்பிட்டு  அந்தப்  பெருமாள்களைப்  போல  பல பெருமாள்களைத்  தரிசித்திருக்கிறீர்களே,  அதே போல  இந்த ஸ்ரீமூர்த்திப்  பெருமாளையும்  தரிசிக்க  வாருங்கள் என்று  அழைப்பு  விடுத்தாற் போலவும்  பாசுரங்களை  அமைத்திருக்கிறார் என்பது சிறப்பு.     தாராரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை  காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய் தமிழ்மாலை  ஆரார் உலகத்து அறிவு உடையார் அமரர் நல்நாட்டு அரசு ஆளப்  பேராயிரமும்  ஓதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே  என்று ஆழ்வார் பாடியபடி பிரகாரத்தில் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமத்தின் ஆயிரம் நாமங்களால் பெருமாளை போற்றினோம், ஆழ்வாரின் பாசுரங்களையும் சேவித்தோம் (பிதற்றினோம்). ஆழ்வார்களின் பாசுரங்களையும் சேவித்தோம்.      சந்நிதிக்கு எதிரே யாக சாலை அதில் குழுவினர் சார்பாக யாகம் நடத்தினோம். இந்த யாக சாலையில் இராமனுஜர், ஆண்டாள், மணவாள மாமுனிகள் மூர்த்தங்கள் உள்ளன. சின்ன ஜீயர் சுவாமிகள் இந்த மூர்த்தங்களை இங்கு பிரதிஷ்டை செய்தாராம்.    மேலும் இரண்டு புத்தவிகாரங்களை நாம் முக்திநாத்தில் தரிசிக்கலாம். முதலாவது நரசிங்க கோம்பா. இந்த சன்னதி முக்திநாதர் சன்னதியை விட   சிறிது உயரத்தில் வளாகத்தின்  வடக்கு மூலையில் அமைந்துள்ளது. இந்த புத்தவிகாரத்தில் பத்மசம்பவர் தன்னைப்போலவே உருவாக்கிய சிலை அமைந்துள்ளது. அடுத்து நாம் தரிசிக்கும் புத்த விகாரத்தில் ஒரு ஜுவாலை எப்போதும் எரிந்து கொண்டிருக்கின்றது எனவே இது “ஜ்வாலாமாயி” என்றும் அழைக்கப்படுகின்றது.  இந்த புத்தவிகாரம் வளாகத்தின்  தெற்கு மூலையில் அமைந்துள்ளது  மெபர் லகாங் கோம்பா (Mebar Lakhang Gompa) என்றும் அழைக்கப்படுகின்றது.      இந்த முக்திநாத் தலத்தை பராமரிக்கும்  “லாமா  வாங்யால்”  புத்த பிக்குணிகள் இங்குதான் தங்களது புனித நூல்களை கற்கின்றனர். இங்கு தண்ணீரில் நீல நிறத்தில் எப்போதும் ஒரு ஜ்வாலை எரிந்து கொண்டிருக்கின்றது. ஜ்வாலையை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தால்  அந்த ஜுவாலை எரியும் நீர் சேரும் “துர்கா  குண்டத்தை” தரிசிக்கலாம். இவ்வாறு நீர், நிலம், அக்னி, காற்று வாயு என்று பஞ்ச பூத சம்பந்தமும் பெற்றுள்ளது முக்திநாத் தலம்.  இவ்வாறு முக்திநாதர் சேவை  அருமையாக அமைந்தது பின்னர் இரு சக்கர வண்டிகள் மூலம் அனைவரும் கீழே கிராமத்தை வந்தடைந்தோம்.     []     அணையாது எரிந்து கொண்டிருக்கும் ஜுவாலை( நீல நிறம்)    அக்கிராமத்தில் மதிய உணவு உண்டோம். இங்கு  உணவு விடுதிகளில் அனைவருக்கும் அளவாகவே  சாப்பாடு தருகின்றனர். ஆனால் மிகவும் சுவையாக உள்ளது. சுடு தண்ணீர் கொடுக்கின்றனர். தண்ணீர் பாட்டில் விலை  மிகவும் அதிகம்.  இதை எதற்காக எழுதுகின்றேன் என்றால் பசி தாங்க முடியாதவர்கள் கையில் பிஸ்கெட் மற்றும் நொறுக்குத்தீனி  மற்றும் குடிதண்ணீர் கையில் எடுத்துசெல்வது நல்லது. வழியில் ஒவ்வொரு இல்லத்தின் முன்னரும் சாளக்கிராமமும், திபெத்திய கலைப்பொருள்களும் விற்பனைக்காக வைத்துள்ளனர். விரும்புபவர்கள் பேரம் பேசி வாங்கிக்கொள்ளலாம்.    பின்னர் பேருந்து மூலம் திரும்பி வந்து ஜோம்சமில் தங்கினோம்.    மறு நாள் காலை விமான நிலையம் சென்ற போது அடியோங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானத்தினர் யாரையும் காணவில்லை. விசாரித்ததில் விமானம் பரிசோதனைக்காக காத்மண்டு சென்றுள்ளது எப்போது வரும் என்று தெரியவில்லை என்றார்கள். எப்படியோ 8 மணி அளவில் விமானம் வந்தது. வேண்டிக்கொண்டதின் பேரில் ஒரு சிலரை மற்றொரு  விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்து தந்தனர்.  ஏதோ ஒரு  கோணல் நடைபெறும் என்பது எங்கள் குழுவினருக்கும் சரியானதாகியது. அனைவரும் அன்று போக்ரா திரும்ப முடியவில்லை. எட்டு அன்பர்கள் ஜோம்சமிலேயே ஏகாதசி தினத்தன்று தங்கும்படியாயிற்று.                    6 போக்ரா சுற்றுலா   []   போக்ரா விமான நிலையம்     திரும்பி வரும் போது போக்ரா நகரத்தில் உள்ள பேவா ஏரியின் (Phewa Lake)  அழகை பறவைப்பார்வையாக பார்த்து இரசித்தோம். மலைகளுக்கு நடுவில் மரகத வர்ணத்தில் மிகப்பெரிய ஏரியை பார்க்கும் ஆனந்தமே தனி. தங்கும் விடுதி வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு மதிய உணவிற்குப்பின் போக்ரா சுற்றுலாவிற்காக கிளம்பினோம்.     போக்ரா நேபாள நாட்டில் காத்மாண்டு நகருக்கு அடுத்த  பெரிய நகரம் ஆகும். அருமையான பனி மூடிய அன்னபூரணா, தவுளகிரி, மனசுலு  சிகரங்கள் பின்னணியில் விளங்க,  மிகப்பெரிய ஏரி, அருங்காட்சியகங்கள், கோவில்கள், நீர்வீழ்ச்சி, பாதாள ஆறு, குகைகள் என்று சுற்றுலா பயணிகள் பார்த்து இரசிக்க  வேண்டிய பல அம்சங்கள் இந்நகரத்தில் அமைந்துள்ளன.  மற்றும் அன்னபூரணா மலை சிகர ஏற்றதிற்காக செல்பவர்கள், முக்திநாத் செல்பவர்கள் ஆகியோர் வந்து செல்வதாலும் பல  தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும் இவ்வூரில் அமைந்துள்ளன. இவ்வூரிலிருந்து நமக்கு அன்னபூரணா மலைச்சிகரங்களின் அருமையான காட்சி நமக்கு கிட்டுகின்றது என்று முன்னமே பார்த்தோமல்லவா? எனவே அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இங்கு ஒரு நாளாவது தங்கி சுற்றிப்பார்த்து விட்டுத்தான் செல்கின்றனர். எனவே நாங்களும் போக்ராவை சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.    முதலில் நாங்கள் சென்றது விந்தியாவாசினி ஆலயம் ஆகும். போக்ரா நகரின் காவல் தேவதை இந்த அம்மன் என்று போற்றப்படுகின்றாள். அஷ்டபுஜ துர்க்கையாக அருள் பாலிக்கின்றாள் அன்னை. இப்பிரதேச அரசன் விந்திய மலையிலிருந்து அம்மன் சிலையை கொணர்ந்ததால் அம்மனுக்கு இந்தத்திருநாமம்.  ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது ஆலய  வளாகம். ஒரு தனி சன்னதி வட இந்தியக்கோவில்கள் போல  விமானம்  உள் பக்கம் ஸ்ரீசக்ரம் அமைத்துள்ளனர். அம்மனை தொட்டு வணங்க அனுமதிக்கின்றனர். மேலும் கணபதி. பசுபதிநாதர், லக்ஷ்மி நாராயணர், இராதா கிருஷ்ணர், சீதா இராமன் சந்நிதிகளும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளன. ஒரு ருத்ராட்ச மரமும் ஆலய வளாகத்தில் உள்ளது. அருமையான மர வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள், ஜன்னல்கள் இவ்வாலயத்தின் ஒரு தனி சிறப்பு ஆகும்.  குன்றின் மேலிருந்து போக்ரா நகரத்தின் அழகைக் கண்டு இரசிக்கலாம்.    []   இராதா கிருஷ்ணர் - லக்ஷ்மி நாராயணர் - சீதா இராமர் சன்னதி    அடுத்து நாங்கள் சென்றது  செட்டி கண்டகி நதி என்னும்  வெள்ளை கண்டகி நதி, முக்திநாத் சென்ற போது நாங்கள் பார்த்தது காளி கண்டகி நதி அதாவது கருப்பு கண்டகி நதி, இந்நதி பூமி மட்டத்தில் பாய்கின்றாள். இங்கு பாய்வது சேதி கண்டகி நதி அதாவது வெள்ளை கண்டகி நதி இவள் பாதாளத்தில் பாய்கின்றாள். K. I. சிங் என்ற இந்தியர்  நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய   இந்நதியின் ஓட்டதைப் பயன்படுத்தினார் எனவே அந்த நீர் மின் நிலையம் அவர் பெயரால் அழைக்கப்படுகின்றது. அவ்விடம் சென்று Calcium Carbonate என்னும் தாதுப் பொருள் அதிகமாக உள்ளதால் வெண்மையாக  பூமிக்குக்கீழ் பாயும் ஆற்றை கண்டோம். எனவே இந்நதியின் குறுக்கே உள்ள பாலம் இவர் பெயரால் K.I.சிங் பாலம் என்றே அழைக்கப்படுகின்றது.   அருகிலேயே கூர்க்காக்களின் அருங்காட்சியகம் உள்ளது.    அடுத்து நாங்கள் இங்கு பாதாளே சாங்கோ (Patale Chhango - Nether Fall) என்றும் தற்போது Devis  Falls என்றும் அழைக்கப்படும் அருவியைக் காணச்சென்றோம். பேவா ஏரியிலிருந்து உருவாகி ஓடி வரும் ஒரு ஆறு இங்கே பாதாளத்தில் சென்று மறைந்து ஓடி மீண்டும் வெளியே வருகின்றாள். Davis என்ற ஐரோப்பியர் தவறி இந்நதியில் விழுந்து  பாதாளத்தில் சென்று மறைந்து பின்னர் வெளியே வந்ததால் அவர் நினைவாக தற்போது இப்பெயரில் அழைக்கப்படுகின்றது. அருகே பல கடைகள் உள்ளன பல திபெத்திய கலைப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.      []         இதன் எதிரே குப்தேஸ்வர் மஹாதேவ் என்னும் ஒரு குகைக்கோவில் சென்று சிவபெருமானை வழிபட்டு நிறைவாக இவ்வூரில் அவசியம் பார்க்க வேண்டிய   ஃபேவா ஏரியை அடைந்தோம்.     போக்ராவின் சிறப்பே அதன் ஏரிதான். இந்த ஏரியில் படகுப்பயணம் செய்யாவிட்டால் போக்ரா சென்றதே வீண் என்று சொல்லலாம்.  ஃபேவா ஏரி” (Phewa Lake) என்று அழைக்கப்படும் இந்த அழகான ஏரி  நேபாள் நாட்டின் இரண்டாவது பெரிய ஏரி ஆகும். சுற்றிலும் நெடிதுயர்ந்த பனி மூடிய மலைச்சிகரங்கள் அதன் அடிவாரத்தில் பச்சை நிரத்தில் மிகவும் விலாசனமான ஏரி. அருமையான சூழலில் அமைந்துள்ளது பேவா ஏரி.     []   பேவா ஏரியில் படகுகள்      பனி மூடிய அன்னபூர்ணா மலைச் சிகரங்களின் அழகை இந்த ஏரியின் நீர் அருமையாக பிரதிபலிக்கின்றது, கரையில் போடப்பட்டுள்ள பெஞ்சுகளில் அமர்ந் து  அந்த அழகை இரசிப்பதே ஒரு அருமையான அனுபவம்.  போக்ராவில் காத்மாண்டுவைப் போல கூட்டம் அதிகம் இல்லை, சப்தம் இல்லை கிராம சூழலே விளங்குகின்றது. எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் அமைதியாக தங்க ஏற்ற இடம். ஏரியை சுற்றிலும் நிறைய தங்கும் விடுதிகள்  உள்ளன.  கரையில் ஆல மரங்களும் அரச மரங்களும் உள்ளன அதன் அடியில் கற்பெஞ்சுகள் இடப்பட்டுள்ளது, அதில் அமர்ந்து ஏரியின் அழகை  அமைதியாக இரசிக்கலாம்.  படகுப்பயணம் செய்யலாம். சைக்கிளில் அல்லது நடந்து ஏரியை  வலம் வரலாம்.     ஏரியின் நடுவில் லேக் வராஹி ஆலயம் அமைந்துள்ளது.  ஐரோப்பியர்கள் அதிகம் வருவதால், கண்காணிப்பு கோபுரம், அதி வேக மீட்புப் படகுகள், படகில் பயணம் செய்யும் அனைவரும் பாதுகாப்பு கவசம் அணிய வேண்டும் எல்லா வகையான பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. நேரம் குறைவாக இருந்ததால் அடியோங்கள்  லேக் வாராஹி ஆலயம் படகில் சுற்றி வந்து வணங்கி விட்டு தங்கும் விடுதிக்கு திரும்பி வந்தோம். வரும் வழியில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது, சூரியன் மறையும் அழகையும் இரசித்தோம். இவ்வாறாக அரை நாளில் அவசரம் அவசரமாக போக்ராவின் சுற்றுலாவை நிறைவு செய்தோம்.      []   பொன் மாலைப் பொழுதில் ஃபேவா ஏரியின் அழகு           7 யாத்திரை நிறைவு   மறு நாள் காலையிலும் மழை தொடர்ந்தது,  ஜோம்சம் விமான போக்குவரத்து அதிகாலையில் நடைபெறவில்லை. போக்ராவிலிருந்தவர்கள்  பேருந்து மூலம் காத்மாண்டிற்கு புறப்பட்டோம். சுமார் 9  மணியளவில் வானிலை சரியாகி ஜோம்சமில் மாட்டிக்கொண்டவர்கள் போக்ரா வந்து உடனே காத்மாண்டிற்கு கிளம்பினார்கள்.    2 []   படான் தர்பார் சதுக்கம்  (2015 நில நடுக்கத்தில் இந்த புராதன கட்டிடங்கள் பல சேதமடைந்து விட்டன, மறுபடியும் புதுப்பொலிவுடன் கட்டுவார்களா???)       அடியோங்கள் மாலை காத்மாண்டை அடைந்தோம் தேமல் பகுதியில் உள்ள ஹாரதி ஹோட்டலில் தங்கினோம். இங்கும் மழை பெய்து கொண்டிருந்தது. ஹாரதி என்பது ஒர் யக்ஷிணி. புத்த விகாரங்கள் மற்றும் ஸ்தூபங்களின் காவல் தெய்வம். நம்மூர் மாரியம்மன் போல் அம்மை நோயில் இருந்து காப்பவளாக வணங்கப்பட்கிறாள்.. அங்கு இந்த  அம்மனின் கதையை இவ்வாறு கூறினார்கள்.  குழந்தைகள் மேல் மிகுந்த பிரியம் கொண்ட இவள் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள குழந்தைகளை கடத்திச் சென்று தன்னுடன் வைத்துக்கொண்டு அவர்களை நன்றாக போஷித்து வந்தாள். இதனால் துன்பமுற்ற அந்தக் குழந்தைகளின் பெற்றோர் புத்தரிடம் முறையிட்டனர். புத்தரும் ஹாரதி தேவியை திருத்த ஒரு உபாயம் செய்தார். அவளது குழந்தையை புத்தர் எடுத்துக் கொண்டு வந்து விட்டார். தாய் பாசம் என்பது அப்போது ஹாரதி தேவிக்கு புரிந்தது. புத்தரின் அறிவுரையின் பேரில் அனைத்து குழந்தைகளையும் விடுவித்தாள். அப்போது புத்தர் அளித்த வரத்தின் படி குழந்தைகளை மற்றும் புத்தரின் புனித தலங்களை  காக்கும் பேறு பெற்றாள். எனவேதான் அனைத்து புத்த தலங்களிலும் ஹாரதி தேவிக்கு தனி சன்னதி உள்ளது.      இனி அந்த ஹோட்டலில் அழகிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய அரிய சிற்பங்கள் மற்றும் இவர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல ஓவியங்கள் இருந்தன.       காத்மாண்டு நகரத்தில் சுற்றிப் பார்க்க பல ஆலயங்கள் உள்ளன. யாத்திரை துவங்கும் போதே பசுபதிநாதர் ஆலயம், குஹ்யேஸ்வரி அம்பாள்,  ஜல நாராயணர்  ஆலயம் மற்றும் பௌத்நாத் மற்றும் ஸ்வயம்புநாத் புத்த விகாரகங்களை தரிசித்திருந்தோம் எனவே  அடியோங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் இருந்த படான் தர்பார் சதுக்கம்  சிலர் சென்று சுற்றிப்பார்த்து விட்டு வந்தோம்.    நேபாளத்தில் கன்னிப் பெண்ணை அம்மனாக வணங்கும் வழக்கம் உள்ளது.  அந்த வாழும் அம்மன் சிக்கும் அரண்மணை குமாரி பஹல் என்று அழைக்கப்படுகின்றது. அங்கு சென்று   குமாரியின் தரிசனமும் பெற்று வந்தனர். சிலர் மறுபடியும் பசுபதிநாதர் ஆலயம் சென்று நன்றி கூறிவிட்டு வந்தனர். அடியோங்களுக்கு ஐயனின் காலை அபிடேகம் தரிசனம் செய்யும் பெரும்  பாக்கியம் கிட்டியது..    இவ்வாறாக திருக்கயிலாய யாத்திரையின் தொடர்ச்சியாக  முக்திநாத் யாத்திரையையும் அவனருளால்  நிறைவு செய்து விமானம் மூலம் சென்னை திரும்பினோம். இந்த யாத்திரையின் போது அவனருளால் சிவசக்தி தரிசனமும், ஹரி தரிசனமும் திவ்யமாக  கிட்டியது.                   8 கோரக்பூர் வழி யாத்திரை      உத்திரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் என்ற நகரம் நேபாள எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்நகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 29 (NH - 29)  நேபாள எல்லை நகரமான சுநௌலி (Sunauli) வரை செல்கின்றது. பின்னர் அங்கிருந்து  சித்தார்த் ராஜ பாதை வழியாக போக்ரா நகரத்தை அடையலாம்.  ஆகவே விமானம் மூலம் நேபாளம் செல்ல இயலாதவர்கள் இவ்வழியாக  முக்திநாத் யாத்திரை மேற் கொள்கின்றனர்.  அடியேனின் நண்பர் ஒருவர் கோரக்பூர் வழியாக முக்திநாத் சென்று வந்தார் இவ்வழியாக செல்லும்  இராமர் மற்றும் புத்தருடன் சம்பந்தம் கொண்ட பல தலங்களை  தரிசிக்க இயலும் எனவே  அவரது  முக்திநாத் யாத்திரை அனுபவங்களை இனி  சுருக்கமாகக்  காணலாம்    எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பி கோவை,  சென்னை, விஜயவாடா வழியாக பரௌணி செல்கின்ற 12522 ரப்தி சாகர்  விரைவு வண்டி  நேராக  கோரக்பூருக்கு செல்கின்றது,  இப்புகை வண்டி  வாரம் ஒரு முறை  (தற்போது வெள்ளிக்கிழமை)  மட்டுமே  கிளம்புகின்றது.       சென்னையிலிருந்து டெல்லி செல்கின்ற  12621 தமிழ்நாடு விரைவு வண்டி அல்லது  12522  கிராண்ட் ட்ரங் விரைவு வண்டி மூலம் முதலில் ஜான்சி சென்று அங்கிருந்து வேறு புகைவண்டிகள் மூலம் கோரக்பூரை அடையலாம்.        நண்பர் இவ்வாறு  முதலில்  ஜான்சி சென்று பகலில் ஜான்சி கோட்டையை சுற்றிப் பார்த்து விட்டு   அன்றிரவு வேறு புகைவண்டி மூலம் கோரக்பூர் சென்றார். ஜான்சி இராணியைப் பற்றிக் கூறும் போது வடநாட்டில் இவ்வாறு கூறுவார்கள்.  ’ கூப் லடி மர்தானி, யோ தோ ஜான்சி வாலி ராணி தீ"    அதாவது . ஒரு ஆண்மகனைப் போல மிகவும் வீரமாக போரிட்டாள் அவள் ஜான்சியின் இராணி   என்று பெருமையாக கூறுவார்கள்.  ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த முதல் இந்திய சுதந்திரப் போரில் வீரமாக அன்னனியரை ஆண் வேடமிட்டு போரிட்ட ஜான்சி இராணியின் கோட்டை இது.  அடுத்து அவர்கள் புகை வண்டி  மூலம் கோரக்பூர் சென்றனர். ஜான்சிக்கும்  கோரக்பூருக்கும் இடையில் பல புகைவண்டிகள் ஓடுகின்றன. அடுத்து கோரக்பூரை அடைந்தனர்.       []   கோரக்கநாதர் ஆலயம்     கோரக்கர் பதினெட்டு சித்தர்களுள் ஒருவராக கருதப்படுகின்றார். இவரது குரு மச்சேந்திரநாதர் ஆவார்.  ஒரு சமயம்  மச்சேந்திர நாதர் மாயையின் வசப்பட்டு மலையாள தேசத்தின் அரசியை மணந்து கொண்டு  குடும்பமாக இருந்தபோது அவரை மீட்டுக் கொண்டு வந்தவர் கோரக்கர். அவருக்கான கோவில் இது. நேபாளத்திலும் மச்சேந்திரர் மற்றும் கோரக்கர் வழிபாடு உள்ளது.   கோரக்பூரில் இருந்து பேருந்து மூலம் எல்லைப்புற நகரமான சுனௌலியை (Sunauli) அடையலாம். நம் இந்திய பேருந்துகள் நேபாளத்திற்குள் செல்ல அனுமதியில்லை எனவே அங்கு இறங்கி நடந்து எல்லையைக் கடந்து அப்புறம் சென்று பேருந்து, ஜீப் மூலம் போக்ராவை அடையலாம்.     நேபாளத்தில் இவ்வழியில் புத்தர் பிறந்த இடமான லும்பிணி உள்ளது.  கோரக்பூருக்கு அருகில் அவர் பரிநிர்வாணம் அடைந்த குஷி நகரம் உள்ளது.  சிலர் புத்தரின் இந்த நினைவிடங்களையும் சென்று தரிசிக்கின்றனர்.  கோரக்பூர் போக்ரா இடையிலான தூரம்  சுமார் 215 கி.மீ ஆகும். சுமார் 7   மணி நேரம்  பயணம் செய்த  பின் இவர்கள் போக்ரா அடைந்தனர்.      இவர்கள் முதலில் போக்ரா வந்தடைந்ததால்  இருக்கின்ற சமயத்தில் போக்ராவின் சுற்றுலாவை மேற்கொண்டனர். இப்பதிவில்  பிந்தியாவாசினி ஆலயம் மற்றும் டேவிஸ் நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு சென்றனர்.   போக்ராவில்  வானிலை சரியாக இல்லாததால் இவர்கள் ஜோம்சம் செல்ல முன்  பதிவு  செய்திருந்த விமானம் இரத்தானது. ஒரு நாள் முழுவதும் காத்திருந்தாலும்  மறு நாளும் விமான போக்குவரத்து நடைபெறுமா? இல்லையா என்பது தெரியாது என்பதால் இவர்கள் ஜீப் மூலமாக ஜோம்சம் செல்ல முடிவு செய்தனர்.     []   போக்ரா விமான நிலையத்தில் மலர்ந்திருந்த   வண்ண வண்ண மலர்கள்     போக்ராவில் இருந்து ஜோம்சம் விமானப்பயணம் வெறும் 45  நிமிடங்கள் தான் அதுவே  ஜீப்பில் அல்லது பேருந்தில்  சென்றால் பாதை மலைப்பாம்பு போல வளைந்து வளைந்து செல்கின்றது என்பதாலும்  தூரம் சுமார் 250 கி.மீ  என்றாலும் பாதை சரியில்லை வெறும் மண்பாதை என்பதால்  12 மணி நேரத்திற்கும் மேல் ஆயிற்றாம். பயணமும் மிக கடினமாக இருந்த்து என்றார்கள்.     பயணம் மிகவும் சிரமமானதுதான், குலுக்கி குலுக்கி போடும்,  இடுப்பு  கழன்று விட்டது என்று சொல்வோமே அது போல மிகவும்  சிரமமான பயணமாக இருந்ததாம். விமானம் இரத்தாகி விட்டால் மறு நாள் விமானத்தில் இடம் கிடைப்பதும் கடினம், மேலும் தொடர்ச்சியாக இரண்டு மூன்று நாட்கள் வானிலை சரியாகாமல்  போகலாம் என்பதாலும். வேறு வழியில்லாமல் ஜீப்பில்  அல்லது சிறு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியது அவசியமாகின்றது.     ஜீப் மூலமாக செல்லும் போது   பெனி, காசா, தாதோபாணி, மர்பா, டுகூசே   ஆகிய கிராமங்களை கடந்து செல்கின்றனர். மிகவும் சிரமப்பட்டு ஜீப்பில் பயணம் செய்து ஜோம்சம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்து  முக்திநாத் ஜீப் மூலம் சென்று நிறைவு ஏற்றத்தை நடந்தே சென்று முக்திநாத் அடைந்தனர்.       []   முன் மண்டப முகப்புப் பதாகை    []   உபயநாச்சியார்களுடன்  ஸ்ரீ மூர்த்தி    இவ்வளவு சிரமங்களுக்குப்பின் முக்திநாத்தை அடைந்தாலும் முக்திநாதரின் தரிசனம் திவ்யமாக இவர்களுக்கு  கிட்டியது.  108  திவ்ய தேசங்களைக் குறிக்கும் 108 தாரைகளில் நீராடி, பின்னர் புண்ணிய - பாவ குளங்களில் மூழ்கி எழுந்து மிகவும் அருமையாக முக்திநாதரை தரிசனம் செய்தனராம். பின்னர் ஜுவலா மாயி எனப்படும் ஜோதியையும் தரிசனம் செய்தனர்.       []     புண்ணிய குளம்   []   கதவின் ஒரு அழகிய சிற்பம்     ஜோம்சமில் இருந்து  போக்ரா திரும்பி வரும் போது விமானம் கிடைத்ததாம்..  போக்ராவிலிருந்து பின்னர் பேருந்து மூலம் காத்மாண்டு செல்லும் மனோகாம்னாவில் அம்மனை தரிசனம் செய்தனர். இழுவை இரயில் பயணத்தையும் இரசித்தனர்.      []   கருடன்     பின்னர் பேருந்து மூலம்  காத்மாண்டு நகரை அடைந்து பசுபதிநாதர் ஆலயம், குஹ்யேஸ்வரி அம்மன் ஆலயம் மற்றும் புத்த நீலகண்டர் ஆலயம் (ஜல நாராயணர் ஆலயம்)  சென்று தரிசனம் செய்தனர்.    []   பசுபதி நாதர் ஆலயம்       []   ஜல நாராயணர் ( புத்த நீலகண்டர்)    முக்தி நாதரை தரிசனம் செய்த பின்னர்,   இவர்கள் குழுவில் இருந்து ஒரு சிலர் காத்மாண்டுவிலிருந்து விமானம் மூலமாக டெல்லி வந்து பின்னர் சென்னை வந்தடைந்தனர்.  இன்னொரு குழுவினர் காத்மாண்டுவிலிருந்து பேருந்து மூலமாக மஹேந்திர நெடுஞ்சாலை வழியாக  ஜனக்பூருக்கு புறப்பட்டு சென்றனர். ஜனக்பூர் நேபாளத்தில், காத்மாண்டிலிருந்து 135 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.  பேருந்தில் சுமார் 7 மணி நேரம் பயணம். இப்பகுதி சமவெளி என்பதால் பசுமையான வயல்களைக் காணலாம். காத்மாண்டுவிலிருந்து சிறு விமானம் மூலமும் ஜனக்பூரை அடைய முடியும். ஜனக்பூரில் இருந்து சிறு புகைவண்டி பாதை (Nattow Gauge)  இந்திய  எல்லையான ஜெயநகர் வரை உள்ளது.      []   குஹ்யேஸ்வரி   ஆலயம்      சீதா சுயம்வரத்தில்  சிவ   தனுசை முறித்து  சீதையை இராமர் திருமணம் செய்து கொண்ட இடம் ஜனக்பூர், எனவே  கார்த்திகை  சுக்லபக்ஷ பஞ்சமி விவாக பஞ்சமி என்று ஜனக்புரி ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது, மேலும் இராமநவமியும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. ஹோலி, சாத் பண்டிகை, தீபாவளியும் மிகவும் விசேஷம்.     []    ஜனக்பூர் ஜானகி மந்திர்    ஜனக்பூர் ஜனக மஹாராஜாவின் தலை நகரம், சீதா இராமர் திருக்கல்யாணம் நடந்த இடம். மேலே உள்ளது கல்யாண மண்டபம்.  சீதா மார்ஹி  ஜனகருக்கு சீதா தேவி கிடைத்த இடம். அதாவது சீதா தேவியின் பிறந்த இடம்.  இது பீகார் மாநிலத்தில் தற்போது அமைந்துள்ளது.        []     சீதா இராமர் திருக்கல்யாணக் கோலம்     ஜனக்புரிலிருந்து சீதாமார்ஹி 60 கி. மீ தூரம் சுமார் 2 மணி நேரத்தில் எல்லையைக் கடந்து வந்து சேரலாம். சீதாமார்ஹியில் இருந்து 4  தொடர்வண்டிகள் கல்கத்தாவிற்கு உள்ளது.  இக்குழுவினர்  கொல்கத்தா வந்து பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர்.      9 முக்திநாத் யாத்திரைக்கான தமிழக அரசின் மானியம்   தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வந்த பின்பு, தமிழகத்தை சேர்ந்த இந்துக்களுக்கு மானியம் வழங்குகின்றது. இத்திட்டம் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது. கீழ்க்கண்ட  நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட பக்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேபாளத்தில் உள்ள முக்திநாத்துக்கு யாத்திரை சென்று வந்த  விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்த இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். அதற்காக தாசில்தாரிடம் சான்று பெற வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், 70 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். புனித யாத்திரைக்கான முழு செலவினத்தையும் பக்தரே ஏற்று யாத்திரைக்கு முதலில் யாத்திரையை முடிக்க  வேண்டும். யாத்திரை முடித்ததற்கு ஆதாரமாக பயணச்சீட்டு, வருமான சான்று, இருப்பிட சான்று, 3 புகைப்படங்கள், பயணத்திட்ட நகல் சான்று ஆகியவற்றுடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அரசு மானியம் வேண்டி யாத்திரையை முடித்த ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். மானியத்திற்கான விண்ணப்பங்கள் இந்து சமய அறநிலையத்துறையால் ஆய்வு செய்யப்பட்டு, 250 பக்தர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மானியம் அளிக்கப்படும். 250 விண்ணப்பங்களுக்கு மேல் வந்துவிட்டால், இந்து சமய அறநிலையத்துறையால் கணினி குலுக்கல் முறை மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பக்தர்கள் மானியம் பெறுவதற்கான உயர்ந்தபட்ச வருமான வரம்பு ஏதும் இல்லை  ஆயினும்  பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளி தனது ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே மானியம் பெற முடியும். மேற்கண்ட மானியம் கோரும் விண்ணப்பதாரர்கள் அதற்குரிய விண்ணப்பத்தினை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமான www.tnhrce.org மூலம் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விரும்பும் அன்பர்கள் அவ்வசதியினை பயன்படுத்திக்கொள்ளலாம்.   முக்திநாத் யாத்திரை மிகவும் கடினமானது, பல சமயங்களில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. சமீபத்திய நேபாள நிலநடுக்கத்திற்குப்பின் கடந்த இரு ஆண்டுகளாக யாத்திரை  தடைபட்டுள்ளதாக அறிகிறேன். வரும் காலத்தில் யாத்திரை செல்ல விழையும் அன்பர்களுக்கு இந் நூல் ஒரு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் இந்நூலை திருமகள் கேள்வனின் திருப்பாதங்களில் சமர்ப்பணம் செய்கின்றேன்.     ***   சுபம்  ***         10 ஆழ்வார்களின் அருளிச் செயல்கள்   பாலைக்கறந்தடுப்பேறவைத்துப் பல்வளையாளென்மகளிருப்ப மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று இறைப்பொழுதங்கே பேசி நின்றேன் சாளக்கிராமமுடையநம்பி சாய்த்துப்பருகிட்டுப்போந்து நின்றான் ஆலைக்கரும்பின்மொழியனைய அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய்.   (பெரியாழ்வார் திருமொழி 2-9-5)     வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம் துவரையயோத்தி இடமுடைவதரியிடவகையுடைய  எம்புருடோத்தமனிருக்கை தடவரையதிரத்தரணிவிண்டிடியத் தலைபற்றிக் கரைமரஞ்சாடி கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னுங் கடி நகரே (பெரியாழ்வார் திருமொழி 4-7-9)     திருசாளக்கிராமம் பெரிய திருமொழி 1-5-2      கலையும்கரியும்பரிமாவும் திரியும்கானம்கடந்துபோய் சிலையும்கணையும்துணையாகச் சென்றான்வென்றிச் செருகளத்து மலைகொண்டுஅலைநீரணைகட்டி மதிள்நிரிலங்கை வாளரக்கர் தலைவன் தலைபத்துஅறுத்துகந்தான் சாளக்கிராமம் அடைநெஞ்சே! (1)     கடம்சூழ்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும் உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கைபொடியாவடியாய்ச்ச்ரம்துரந்தான் இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க, மணம் கமழும்  தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடைநெஞ்சே! (2)    உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாஎண்திக்கும் நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி வலவன் வானோர்தம் பெருமான் மருவாஅரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன் சலம்சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடைநெஞ்சே! (3)   ஊரான் குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய தேராஅரக்கர்தேர்வெள்ளம் செற்றான் வற்றாவருபுனல்சூழ் பேரான் பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டு அறைகின்ற தாரான் தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமம் அடைநெஞ்சே! (4)   அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கு அயில்வாளால் விடுத்தான் விளங்குசுடராழி விண்ணோர்பெருமான் நண்ணார்முன் கடுத்தார்த்தெழுந்தபெருமலையை கல்லொன்றேந்தி இனநிரைக்காத் தடுத்தான் தடம்சூழ்ந்துஅழகாய சாளக்கிராமம் அடைநெஞ்சே! (5)   தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்இழுதும்உடனுண்ட வாயான் தூயாரியுருவிற்குறளாய்ச் சென்று மாவலியை ஏயானிரப்ப மூவடிமண்இன்றேதாவென்று உலகேழும் தாயான் காயாமலர்வண்ணன் சாளக்கிராமம் அடைநெஞ்சே! (6)   ஏனோர் அஞ்சவெஞ்சமத்துள் அரியாப்பரியைரணியனை ஊனாரகலம்பிளவெடுத்த ஒருவன் தானேஇருசுடராய் வானாய்த்தீயாய்மாருதமாய் மலையாய்அலைநீருலகனைத்தும் தானாய் தானுமானான்தன் சாளக்கிராமம் அடைநெஞ்சே! (7)   வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசி, கையகத்து ஓர்  சந்தார்தலைகொண்டு உலகேழும்திரியும் பெரியோன்தான் சென்று என் எந்தாய்! சாபம் தீரென்ன இலங்குஅமுதுநீர்திருமார்பில் தந்தான் சந்தார்பொழில்சூழ்ந்த சாளக்கிராமம் அடைநெஞ்சே! (8)   தொண்டாமினமும்இமையோரும் துணைநூல் மார்பிணந்தணரும் அண்டா! எமக்கருளாயென்று அணையும்கோயிலருகெல்லாம் வண்டார்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய தண்தாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமம் அடைநெஞ்சே! (9)   தாராரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை  காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய் தமிழ்மாலை  ஆரார் உலகத்து அறிவு உடையார் அமரர் நல்நாட்டு அரசு ஆளப்  பேராயிரமும்  ஓதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே  (10) திருமங்கையாழ்வார்