[] 1. Cover 2. Table of contents முகில் மைக்கல் மர்மம் முகில் மைக்கல் மர்மம்   ராகவ சந்தோஷ்   ragavasanthosh5394@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - -   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/mugil_michael_secrets மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/mugil_michael_secrets This Book was produced using LaTeX + Pandoc 1 மழை விடாது பெய்து கொண்டு இருந்தது. காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவன் சிகரெட்டைப் பற்ற வைத்தான். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பொள்ளாச்சி போய்ச் சேர வேண்டும். நெடுஞ்சாலையின் வளைவில் ஒரு மூலையில் நின்றுகொண்டு இருந்தான். ‘’காலையிலேயே கிளம்பி இருக்க வேண்டும். என் நேரம்’’ என நினைத்துக்கொண்டு இருக்கும் போது செல்பேசி வினோத் காலிங் என ஒளிர்ந்தது. “டேய் முகில்..எங்கடா இருக்க? இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சுரும்…” ‘’சொல்ரா, வந்துட்டு தான் இருக்கேன், கண்டிப்பா வந்துருவேன், பெருந்துறை தாண்டியாச்சு’’. சிகரெட்டின் தலையை நசுக்கிவிட்டு முகில் காரை உசுப்பினான். ரஹ்மான் பாடத்தொடங்க கார் மறுபடி வேகம் எடுத்தது. வெளியில் மழை இன்னும் விடுவதாகத் தெரியவில்லை. வைப்பரை ஆன் செய்தான். இடம் புடிச்சாங்க பாரு, எங்கேயோ ஒரு மூலையில். இப்போ தான் சென்னைல வீடு வாங்கி செட்டில் ஆகியாச்சே, சென்னைல இல்லாத இடமா பார்ட்டி பண்ண? ஆபீஸ்ல பேசி லீவ் வாங்கறத்துக்குள்ள மானமே போகுது. இதுல மதுகிட்ட வேற பொய் சொல்லணும். இனி இவனுங்க எங்க கூப்பிட்டாலும் முடியாதுன்னு சொல்லிட்டு வந்தரணும். தேவையில்லாத அலைச்சல் என முகில் நினைத்தான்.எப்படியோ இந்த மழையைத் தாண்டி சேருமிடத்திற்குச் சென்றால் போதும் என்ற நினைப்பில் காரை முகில் இன்னும் வேகப்படுத்தினான். காரின் வேகத்திலேயே பொள்ளாச்சி வந்து சேர்ந்தது. வழி கிளைகளாய்ப் பிரிந்திருந்தது. சாலையோரமாக ஒருவர் தளர்வான நடையுடன் சென்றுகொண்டிருந்தார். முகில் காரை மெதுவாக அவரை உரசியபடி நிறுத்தினான். கண்ணாடியை இறக்கியதைப் பார்த்த அவரும் தன் நடையை நிறுத்தினார். “அய்யா! புலிப்பட்டி ஜமீனுக்கு வழி எப்படி?” என்று அவரிடம் கேட்டான். அவரின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தது. இடுங்கிய கண்களைச் சுருக்கி "அங்க யாரைப் பாக்கணும் தம்பி?’ என நடுங்கும் குரலில் கேட்டார். “விஷ்ணுனு என் பிரண்ட் ஒருத்தன் இருக்கான்.. அவனைப் பாக்கணும் தாத்தா” “இந்த இருட்டு நேரம், மழை வேற பெய்ஞ்சு .. போற பாதை ஒண்ணும் சரி இருக்காதே தம்பி?” “அவசர வேலையா வந்தேன் பெரியவரே..ஆமா இந்த மழை வேற ..” வழி கேட்டால் சொல்லிவிட்டு போக வேண்டியது தான? இவர் வீட்டுக்கா வழி கேக்கறோம்? முகில் எரிச்சல் ஆனான். “இதோ, இந்தப் பக்கம் போனீங்கண்ணா ஒரு காட்டு வழி வரும். அதுல போனா 15 நிமிஷத்துல போயிடலாம் தம்பி” “சரிங்க அய்யா ரொம்ப நன்றி” முகில் கார் கண்ணாடியை ஏற்றினான். கார் மறுபடியும் வேகம் எடுத்தது.கார் போகும் வழியையே அந்த பெரியவர் உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார். அவரிடம் இருந்து விஷமப்புன்னகை உதிர்ந்தது. குண்டும் குழியுமான சாலையில் ஒரு வழியாக கார் அந்த பங்களாவை அடைந்தது. கேட்டின் வாசலில் நின்ற படு வண்டியின் ஹாரனை விடாமல் அடித்தான்.. உள்ளே இருந்து மூன்று பேர் சிரித்துக் கொண்டே வெளியே வந்தனர். மூவரின் கண்களும் காரில் யார் எனப் பார்த்து முகில் என்றதும் காரின் கண்ணாடியை இறக்கச் சொன்னார்கள். “வா மச்சா, உனக்காகதான் இவ்ளோ நேரம் காத்துகிட்டு இருந்தோம்.. அஞ்சு மணி பார்ட்டிக்கு இவ்வளோ சீக்கிரமா ஏழு மணிக்கே வருவேன்னு தெரியாது” ஒருவன் சிரித்துக்கொண்டே வந்தான். “சாரிடா சாரதி, வழில செம மழை. காரையே ஓட்ட முடியல. அங்க அங்க நின்னு வந்தேன். அதான் லேட் ஆகிடுச்சு” “முகிலா, அது இதுனு சொல்லிட்டு சரக்க வாங்காம வந்துட்டியா என்ன?” “அது இல்லாம எப்டிடா? நீங்க கேட்டீங்கனுதான் பயங்கர ரிஸ்க் எடுத்து வாங்கியிருகேன்” “என்னதான் லோக்கலா வாங்கி அடிச்சாலும் நீ உஷார் பண்ற பாரின் சரக்குக்கு ஈடு இணையே இல்லடா” “ஏண்டா வினோத், உங்களுக்கு வேற இடமே கெடைக்கலையா டா? ஊர விட்டு இந்த பேய் பங்களால தான் வைக்கணுமா?” “கோச்சுக்காத மச்சி, இது நம்ம விஷ்ணுவோட தாத்தா பங்களா. மனுசன் அந்த காலத்துலையே செழிப்பா வாழ்ந்தவரு.அது மட்டும் இல்லாம இங்க தான் போலீஸ் கெடுபிடி எல்லாம் இல்ல. லாட்ஜ்னா நம்ம இஷ்டத்துக்கு ஆட முடியுமா?” “போன வருஷம் பார்ட்டிலயே கேஸ் ஆகி இருக்க வேண்டியது. யார் புண்ணியத்துலையோ தப்பிச்சோம். எல்லா வருஷமும் அதே மாதிரி லாம் அலைய முடியாது. புரிஞ்சுக்க மச்சி. இங்க எவனும் வரமாட்டான். லேட்டா வந்துட்டு வெறுப்பேத்தாத. பாட்டில வெளிய எடு. கச்சேரிய ஆரம்பிக்கலாம்” முகில் தன் பையினுள் கை விட்டான். வரிசையாக பாட்டில்களை எடுத்து நீட்டினான். “நம்ம நீண்டகால நட்புக்காக சியர்ஸ்!!” எல்லாரும் வட்டமாக அமர்ந்துகொள்ள அவர்களின் நடுவே ஆல்கஹால் ஆறு ஓடத்தொடங்கியது. சிப்ஸை எடுத்துக் கொறித்தபடியே வினோத் ஆரம்பித்தான். “எவ்ளோ வருஷம் ஆனாலும் நம்ம நட்பு இப்டியே தொடரணும்டா. எப்போ ஆரம்பிச்சது இதுலாம்?” “அய்யோ இவன் ரேடியோவ ஆன் பண்ணீட்டானே, இனி விடியற வரைக்கும் பேசியே சாகடிப்பான்” முகில் எழுந்து நடக்கத்தொங்கினான். “விஷ்ணு, நீ குடிக்கலையா டா? உனக்கும் சேர்த்திதானடா வாங்கிட்டு வந்திருக்கேன்.” “இல்ல வினோத், என் ட்ரீட் தான ? நீங்க என்ஜாய் பண்ணுங்க, நானும் முகிலும் சும்மா நடந்துட்டு வரோம்” முகில் “வா மச்சி, அரண்மனைய சுத்திக்காட்டு, இங்கயே சும்மா உக்கார்ந்திருந்தா போரடிக்கும்” என்றான். உள்ளே ஆறடி உயரத்தில் ஓவியமாக கிழவர் ஆனாலும் கம்பீரமாக புலிப்பட்டி ஜமீன் சிரித்துக்கொண்டிருந்தார். அரண்மனை எங்கும் பூ ஜாடி, நிலைக்கண்ணாடி கலைப்பொருட்கள் நிறைந்திருந்தன. திரும்பிய பக்கம் எங்கும் கருப்பு வெள்ளை படங்கள், உள்நாட்டு,வெளிநாட்டு தொன்சின்னங்கள் என நிறைந்திருந்தது. “விஷ்ணு, உன் தாத்தா அரண்மனையவே ஒரு மியூசியமா மாத்தி வெச்சுருக்காரு?” “ஆமாடா, அவருக்கு இது ஒரு ஹாபி.அவரும் அவர் கூட அவர் ப்ரண்டும் அந்தக் காலத்துலயே ஊர் ஊரா சுத்துவாங்க. தாத்தா எங்க போனாலும் கை நிறையா அந்த நாட்டொட பொருள் எதாவது வாங்கீட்டு வந்து சேத்தி வைப்பாரு. அந்த காலத்துலயே அவர் போகாத நாடுகளை விரல் விட்டு எண்ணிடலாம். நான் சின்ன பையனா இருக்கும்போது இங்க கூட்டிட்டு வந்து கதை கதையா சொல்லீட்டு இருப்பாரு” “இப்போ உன் தாத்தா எங்கடா?” “மனுஷனுக்கு 103 வயசாச்சு டா, பாட்டி இருந்த வரைக்கும் இங்க தான் இருந்தாரு. அவங்க போன அப்பறம் கோயம்புத்தூர்ல அப்பா கூட தான் வெச்சுருந்தோம். நடக்க எல்லாம் முடியாது. பேச்சும் குறைஞ்சுருச்சு. இப்போ அல்சைமரும் இருக்கு. அதனால ஹோம்ல இருக்காரு. அப்பப்போ நான் போய் பார்த்துட்டு வருவேன்” அங்கே ஒரு மூலையில் கல்லால் செய்த ஜப்பானிய வீரன் சிரித்துக்கொண்டிருந்தான். தோல் குடுவை ஒன்று செவ்விந்திய கலாச்சாரத்தை சொல்லிக்கொண்டிருந்தது. சிலைகள், தட்டுக்கள், பொம்மைகள் என மொத்த உலகமும் ஏதோ ஒரு வகையில் அங்கு இருந்தது. வேலைப்பாடுடைய கத்தி ஒன்று அழகாக இருந்தது. அதன் கைப்பிடியில் ஒரு சுருக்கங்கள் விழுந்த முகத்துடன் பொம்மை கிரீடத்துடன் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காதுகளில் குண்டலம், மணிகள் கோர்த்து தங்க முலாம் பூசப்பட்டு இருந்தது. ஆர்வம் மேலிட முகில் அதைக் கையில் எடுத்தான். இன்னும் பளபளப்பு குறையாமல் இருந்தது. “ஸ்ஸ் ஆ!!” முகில் அலறினான். கத்தி அவன் கையை கீறி இருந்தது. “அத எதுக்குடா எடுத்த? பாத்து இருக்க மாட்ட?” விஷ்ணு திட்டிக்கொண்டே முகிலின் காயத்தை கையில் இருந்த துணியால் துடைத்தான். “இன்னும் ஷார்ப்பா இருக்கானு பாத்தேன்” “இங்க விஷம் தடவின அம்புகள் கூட இருக்கு, அது தாத்தா அந்தமான் போனப்ப வாங்கினது. நீ பாட்டுக்கு எதையும் கெடுத்து வைக்காத. அதுக்கெல்லாம் மருந்தே இல்ல” போட்டோக்களின் வரிசையில் கடைசியாக மூலையில் மரத்தால் செய்த அம்புக்கூடு தொங்கிக்கொண்டு இருந்தது. “சரிடா. சும்மாதான் கையில எடுத்தேன். திடிர்னு பட்டுடுச்சு. நானே எதிர்பாக்கலை” “லேசான காயம்தான். கையை வெச்சுகிட்டு ஒழுங்கா இரு. எதுக்கு தேவை இல்லாம ப்ளட் எல்லாம்.. ரூமுக்கு வந்து சேரு, காலையில பாத்துக்கலாம்”. விஷ்ணு பேசிய படியே முன்னே நடந்து போனான். வினோத்தும் சாரதியும் தள்ளாடிய படியே வந்தார்கள். “மாப்ள, செம்ம ட்ரீட் டா இன்னைக்கு. நீ குடிக்க மாட்டனாலும் எங்களுக்காக வாங்கின பாரு..”. இருவரும் விழப்போனார்கள். “டேய், அரை போதையில உளறாமப் போய்ப் படுங்கடா.” முகில் போட்டோக்களைப் பார்த்தவாறே நடந்து போனான்.அங்கே கடைசியாக கண்ணப்ப நாயக்கரின் படமும் இருந்தது. தோற்றம் 1903, மறைவு 1976. புலிவால் மீசையுடன் கம்பீரமாக நின்றுகொண்டு இருந்தார். அவர், முகிலுக்கு வழி கூறிய அதே பெரியவர்! 2 இரவு நேரத்தில் கடல் தன் இன்னொரு முகத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. பகல் எல்லாம் சூரியனின் ஆளுகைக்குக்கீழ் அடக்கி வைத்து இருந்த எண்ணங்கள் முழுவதையும் இப்போது கரையிடமும் நிலவிடமும் வெளிப்படுத்தியது. முழு நிலவின் ஒளியில் என் முழு பலத்தையும் பார் என்பதாக அது கரையை அறைந்து கொண்டிருந்தது. இறுக்கி மடித்துக் கட்டப்பட்ட கட்டு மரங்களுடன் கடற்கரையில் படகுகள் இவை அவ்வளவையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. முழு கரையையும் சொந்தம் கொண்டாடும் அதன் எண்ணத்தைக் கலைத்தவாறு ஐந்து பேர் அதன் கரையில் ஓடிக்கொண்டிருந்தனர். ஒரு மோட்டார் படகை கரையில் இருந்து கடலுக்குள் தள்ளினர். அது மண்ணில் தன் தடம் பதித்து கடலின் அலைக்குள் ஆடியது. மைக்கலு.. இன்னைக்கு கண்டிப்பா போயிதா ஆகணுமா? அலை தூக்கிக் கெடக்குலே.. முழுசா கவுந்தோம்னா தூக்கக் கூட நாதி இல்ல.. நால்வரிலும் சிறுவனாய் இருந்தவன் பேசினான். சோசப்பு.. கிறுக்கா லே ஒனக்கு? திட்டம் போடும்போது வாயவாலே பாத்துகிட்டு கெடந்த? தொட நடுங்கிப்பய.. முத்து..போயி டீசல் கேன் அளவப்பாரு லே.. மாறா.. மணிகிட்ட போன வாங்கு. மொதல்ல செல்போன எல்லாத்தையும் ஆஃப் பண்னுங்க லே.. கோஸ்டல் காரன் கோழிய அமுக்கறாப்போல அள்ளிகிட்டுப் போவான். சரக்கும் போயி உள்ளயும் கெடக்கணும். கடல்ல இறங்கினதுலேர்ந்து கர மண்ண மிதிக்கற வரையும் எவனாச்சும் எதுத்துப் பேசுனா அப்பிடியே அறுத்துப் போட்டுட்டு மீனுக்கு இரையாக்கிடுவேன். படகிலும் விளக்குகள் அணைக்கப்பட்டது. தள்ள நினைத்து தன் மேல் மோதிய அலைகளை எல்லாம் மதிக்காமல் மோட்டாரின் விசையில் அது கடலைக் கிழித்துக்கொண்டு சென்றது. யாருக்கும் பேச இடம் கொடுக்காமல் மைக்கல் முழு படகினையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்தான். அவன் மேல் இருந்த பயத்தை விட படகில் அவனுடன் வந்த அனைவருக்கும் அவன் தந்தை ராயரின் மேல்தான் அதிக பயம் இருந்தது. “மைக்கலு.. உங்கப்பா பேச்சுக்குத்தான் மொத்த தூத்துக்குடியும் தல குனியுது. அவரு புள்ள … இப்பிடி ஊக்கு போட்டுத்தான் காசு எடுக்கணுமா? எங்களுக்கு தான் வயத்து பொழப்பு. மீனு பத்தல. அதையும் இதையும் விக்கோம். உனக்கென்னலே.. ராசா ஊட்டுப்புள்ள…” மணி ஒரு பயத்துடனே பேசினான். “போலே கோட்டி.. என்னையும் உன்னமாறி காசுக்கு ஆடுற பயனு நெனைச்சியா லே? இன்னைக்கு எங்கப்பன நிமிந்து பாக்க பயப்பற பய எல்லாம் நாளைக்கு என்னய ஏறி மிதிச்சுட்டு போவான். இன்னைக்கு மொத்த ஆர்பரும் மைக்கல்னா திரும்பிப் பாக்குது. அதுக்கு என்னலே காரணம்? நான் ராயர் புள்ளனு சொல்றத விட மைக்கல்னு பேரு சம்பாரிக்கணும்.. அந்த பேருக்கு தான் லே இம்புட்டு வேலையும் பாக்கன்”. படகில் இருந்த அனைவருக்கும் நாளைக்கே ஏதாவது பிரச்சினை என்றால் இவன் ராயரின் மகன் என்ற ஒரே காரணத்துக்காகவே வெளியே வந்து விடுவான். ஆனால் நாம் என்ன செய்வது என்ற பயம் இருந்தது. மணியும் ஜோசப்பும் ஒன்றும் அவ்வளவு நல்லவர்களும் அல்ல.. போன வாரம் கூட கடலுக்கு இரவில் இதே வேலையாய் சென்றவர்கள்தான். ஆனால் இவன் கை வைப்பது எல்லாம் துக்கடா விஷயங்கள் அல்ல.. இப்போது கூட போதைப்பொருள் எதோ தான் இறக்கப் போகிறான். நாம் உள்ளே போனால் நம் குடும்பத்தை யார் பார்ப்பது என்ற கவலை.. இவனை எதிர்த்துப் பேசினால் ராயரையும் பகைத்துக்கொள்ள வேண்டும்.. வேறு வழி இல்லாமல் தான் வந்திருந்தார்கள். முத்து தயங்கித் தயங்கி கேட்டான். “ஒங்க ஐயாவுக்கு தெரிஞ்சா என்னா ஆவும்? போற போக்குல கடல் போலீசு வாராய்ங்கனு வைய்யேன்..” “ராயரு போட்டுன்னா எவன் கேப்பான்? எங்கப்பனுக்குத் தெரியாம இன்னைக்கு சுளுவா வளைச்சுருக்கேன். ஓட்டுங்கலே பேசாம”. படகு உயிர் பெற்று ஓடத் தொடங்கியது. அதற்குப் பிறகு யாரும் பேச்செடுக்கவில்லை. படகும் பாதி தூரம் வந்தாயிற்று. இனி பாதிப்பில்லாமல் கரை சேர என்ன வழி என்று தான் யோசிக்க முடியும் என்ற மனநிலைக்கு எல்லாரும் வந்திருந்தனர். கடலினுள் சில தூரம் சென்ற பின் மைக்கேல்.. “அந்த மெதவ பக்கமாப் போங்கலே.. பொட்டி அங்கதான் விழும்.. மாறன எறக்கி உடுங்க.. அவனும் கத்துகிறட்டும்” என்றான்.. மாறன் தன் உடைகளைக் கழட்டி வளைந்த கொக்கி ஒன்றினை கையோடு எடுத்து குதிக்கத் தயாரனான். அலைகள் படகை முன்னும் பின்னும் இழுத்துத் தள்ளியது. மிதவை ஒன்றின் அருகில் நின்றுகொண்டு அடுத்த படகின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினர். தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள கடல் மிதவை போல் மின்னும் விளக்கை எரிய விட்டனர். பத்திருபது நிமிடங்கள் கழிந்த பின்னர் தொலைவிலிருந்து வெண் புள்ளியாய் படகு ஒன்று வந்து சேர்ந்தது. அதிலிருந்த ஒருவன் டார்ச் லைட்டை அடித்து வெளிச்சம் காட்டினான். பதிலுக்கு இவர்கள் படகில் இருந்தும் சமிக்ஞை வெளியாவதை உறுதிப் படுத்திக் கொண்டு மரப்பெட்டி ஒன்றை மிதவையுடன் சேர்த்துக்கட்டி கடலுக்குள் தள்ளினர். பின்பு படகு தன் வந்த திசையிலேயே திரும்பிச் சென்றது. வெற்றுடம்புடன் நின்றிருந்த மாறன் குளிரில் வெட வெடத்துப் போயிருந்தான். “குதிலே.. கோழி மாறி வெடவெடத்து நிக்கான்”…மைக்கேல் முதுகில் தட்டினான். தலையில் மூச்சுவிட முகமூடியை மாட்டி மாறன் கடலுக்குள் குதித்தான். படலிருந்து வெளிச்சம் பார்த்து கடலில் ஆடிக்கொண்டிருந்த பெட்டியை மாறன் இழுத்தான். தன் முதுகில் இருந்த கொக்கியை மாட்டி கையைத்தூக்கி சைகை செய்தான். மரப்பெட்டி மாறனுடன் படகை வந்து சேர்ந்தது. படகின் அடி அறையில் வைத்து ஜோசப் பெட்டியைப்பிரித்தான். வெள்ளை வெள்ளையாய் பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. “லே மக்கா.. சரியா இருக்குலே.. டெக்குக்கு அடியில வெச்சுருக்கேன். கரையில பிரிச்சுப்போம். போட்டத் திருப்புங்க லே” முத்து தெர்மாகோல் பெட்டியை வைத்து மூடினான். பார்ப்பதற்கு ஐஸ் எடுத்துச் செல்வது போன்ற பாவனையில் இருந்தது. மைக்கேல் இப்பொழுது தான் தெளிவானான். கையில் வைத்திருந்த சாராயத்தை ஒரு மடக்கு ஊற்றிக் கொண்டான். கரையில் எவ்வளவு பங்கு பிரிக்கலாம் எப்படி விற்கலாம் என அவன் மனது இப்போதே கணக்கு போடத்தொடங்கியது. கரைக்குப் படகு வந்து சேர்ந்தது. வலையில் சுற்றி பெட்டியை தனியாகக் கொண்டுவந்தனர். கரையில் அனைத்திற்கும் சாட்சியாய் நிலவைத்தவிர வேறு யாரும் இல்லை. மணி, மைக்கேல், ஜோசப், முத்து நால்வருக்கும் பங்கு பிரித்து முடிவானது. “இவ்வளோ சரக்க இதுக்கு முன்னாடி எடுத்ததே இல்ல.. சூதனமா விக்கணும், எவனும் மாட்டிக்காம இருக்கணும். பாத்துப் போங்கலே. மாறா.. நீ மணி கூட சேந்து கத்துக்க. அடுத்த எறப்புல உனக்கும் பங்கு தாரோம். இப்போதைக்கு இத வை..” அவன் கையில் ஐந்தாறு இரண்டாயிரம் ரூபாய்த்தாளை மைக்கேல் திணித்தான். மாறன் அதை வாங்கிக்கொண்டு கிளம்பினான். எல்லாரும் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஆளுக்கொரு திசையில் நடக்கத் தொடங்கினர். மொத்தம் 2 கிலோ ஹெராயின். நூறு நூறு கிராமாக இருபது பொட்டலங்களிருந்தது. ஆளுக்கு பங்கு பிரித்தது போக மைக்கலின் கையில் ஏழு பொட்டலங்கள் இருந்தன. ஐம்பது லட்சம் பெறுமானம் இருக்கும். போன முறை போல் ஒரு லட்சம் இரண்டு லட்சம் எல்லாம் இல்லை. இனி இதை வழக்கமாக்கிக் கொண்டு இந்த பிராந்தியத்தில் கடத்தல்காரர்களின் நடுவே ஒரு பேர் பெற்று விட்டால் பிறகு அரசியல் ஆள்பலம் எல்லாம் தானாக வரும். மைக்கல் தனக்குத் தானே பேசிக்கொண்டான். இந்த பயலுவ எங்க இத வைச்சுப் பொழைக்கப் போறானுவ? வழக்கம் போல தாசுகிட்ட குடுத்து ஆளுக்கு அம்பதாயிரம் வாங்குவானுவ. பொழைக்கத் தெரியாத பயலுவ. ஆன இவனுங்க இப்பிடி இருக்குற வரைக்கும் தான் நாம பொழைக்க முடியும். இத நேரா தூத்துக்குடி டவுன் பக்கம் கொண்டு போனா கோடிக்கணக்குல பொரட்டீர மாட்டேன்? இரவோடு இரவாக நல்ல இடம் பார்த்து மறைத்து வைக்க வேண்டும். பத்து நாட்களுக்குள் நல்ல விலை பேசி கை மாற்றி விட வேண்டும். குட்டியா போடப் போகிறது? மைக்கல் திரும்பித் திரும்பி பார்த்தபடியே நடந்து போனான். பாழடைந்த சுவர் ஒன்று வந்தது. அதன் மூலையில் இருந்த கல்லைப் பெயர்த்து எடுத்தான். பொந்து போன்ற இடம் தென்பட்டது. வழக்கமாய் வைக்கும் அதே இடம். பொட்டலங்களை ஒரு பாலித்தீன் பையில் சுற்றி உள்ளே வைத்து மறுபடியும் கல்லை வைத்து மூடினான். யாரும் பார்க்கவில்லை என உறுதிபடுத்திக் கொண்டான். செல்போனை உயிர்ப்பித்தான். இரண்டு நிமிடங்கள் சோம்பல் முறித்து பளீரென முகத்தைக் காட்டியது. தவறிய அழைப்புகள் இருபது எனக் காட்டியது. ஒரே நிமிடத்தில் வேர்த்தது. அப்பாவுக்கு மட்டும் தெரிந்தால் அவ்வளவுதான். போன முறை வலைத் தகறாரில் மாட்டிய போதே திருக்கை வாலால் விளாச வந்தார். இரண்டு தெரு தள்ளித்தான் வீடு. தெருவில் அனைத்து விளக்குகளும் அணைந்து போயிருக்க அவன் வீட்டு விளக்கு மட்டும் இன்னும் எரிந்து கொண்டிருந்தது. இன்றைக்கு என்ன சொல்லி சமாளிக்கப் போகிறோம் என்றே தெரியவில்லை. பார்த்துக்கொள்ளலாம் என தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வீட்டு வாசல்படியை அடைந்தான். “என்னலே தொர… எங்க திரிஞ்சிட்டு வாரவன்??” ராயர் வாசலிலேயே மறித்துக் கேட்டார். “சுரேசு வீட்டுலேர்ந்து வாரன்..” பேசப் பேச பளீரென கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. பொறி கலங்கி உலகமே எதிர்த்திசையில் சுழலுவதாகப் பட்டது. தூணைப் பிடித்துக்கொண்டு மைக்கல் நின்றான். வாயினுள் கரிப்பாக ரத்தம் எட்டியது. “இப்பத்தான்லே அவன் வீட்டுல அவங்கப்பனப் பாத்துட்டு வாரன். தாயில்லாப் புள்ளனு பாத்து பாத்து வளத்தினா ஊர் முன்னாடி மானத்த கெடுத்துட்டு சுத்தறீயா லே.. செயிலப் பாத்து வந்து ஒரு மாசம் கூட முடியல.. வீடு அடங்கிக் கெடன்னு சொன்னா வம்பு வளத்துட்டா லே திரியறவன்? காசக் கொட்டிக் கொட்டி படிக்க வச்சன்ல லே.. படிக்காம கிறுக்குத்தனம் பண்ணீட்டு சுத்தினப்பவே வெட்டிருக்கணும்… எந்தப்புத்தேன்.. எந்தப்புத்தேன்…” அடித்துக்கொண்டே ஓய்ந்து போய் உட்கார்ந்தார். “விடுங்க ராயரே.. சின்னப்பய.. சொன்னா கேட்டுகிருவான்… ஏதோ வயசுக்கோளாறுனு திரியறான். நான் சொல்லிக்கறேன்.. நீங்க விடுங்க.. ஏற்கனவே ரத்தக் கொதிப்பு சக்கரைனு ஆயிரம் இருக்கு.. மனக் கவலைய வேற சேத்தாதீய.. ஒடம்பு எம்புட்டுதான் நிக்கும்? இந்த ஜெரால்டு தன் பேரச் சொல்லுறனோ இல்லையோ மைக்கல் பேரச் சொல்லி கர்த்தர் கிட்ட வேண்டாத நாளே இல்ல”. தன் நெற்றிச் சுருக்கங்களை நீவி விட்டுக் கொண்டே ஃபாதர் பேசினார். இவருக்கு ஏன் என் மேல் இவ்வளவு கரிசனம் என்று தெரியவில்லை. இவர் ஒருவரின் பேச்சுக்குத்தான் அப்பா கட்டுப்படுகிறார். இவர் மட்டும் இல்லை என்றால் அப்பாவிடம் அடி வாங்கியே செத்திருக்க வேண்டும். வளர்ந்த பிள்ளையைப் போலவா நடத்துகிறார்? சீக்கிரம் இவரை விட வளர்ந்து காட்ட வேண்டும். நல்லவேளையாக படகையும் எடுத்துப்போன விஷயம் தெரியாமல் போனதை எண்ணி மைக்கல் நிம்மதி அடைந்தான். இருவர் பேசுவதையும் பார்த்துக்கொண்டே வீட்டுக்குள் போனான்.அதை இருவருமே கவனித்தார்கள். ராயர் எதுவும் பேசவில்லை. “புள்ள சாப்புட்டு இருப்பானா ஃபாதர்? பசி தாங்க மாட்டான்”. “இவ்வளோ பாசத்த வச்சுகிட்டு ஏன் அவன அவ்வளவு கண்டிப்பா வளக்கறீங்க ராயரே?” “என்னைய விடுங்க ஃபாதர். எனக்கென்ன.. நான் வாழ்ந்து முடிச்சிட்டேன். நாளைக்குன்னாலும் நான் போறதுனா அப்படியே கண்ண மூடிருவேன். ஆனா தாயில்லாம இந்தப்புள்ளைய யாரு பாத்துகிருவா? அந்தப் பயந்தேன். ஒரு கலியாணத்தப் பண்ணி வைக்கலாம்னா பொறுப்பாவா இருக்கான்? இவன நம்பி நானே எந்த வீட்டுப் படியும் ஏற முடியல”. “பயப்படாதீங்க ராயரே.. கர்த்தர் எல்லாரையும் ரட்சிப்பார். பையனப் பத்தி கொறவா மதிக்காதீய.. பெருசா வருவான்.. இப்ப ஏதோ சேர்க்கை சரியில்லனு இப்படி சுத்திகிட்டு இருக்கான். சொல்றத மொறையாச் சொன்னா எந்தப் புள்ளதான் மறுக்கப்போவுது?” “ஏதோ நீங்களும் ஒவ்வொரு வாட்டியும் வந்து பேசறதுதான் எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டுப் போங்க ஃபாதர். ஊரே எனக்கு நடுங்குது. எனக்கு இப்படி ஒரு புள்ள. அந்த மவராசி எப்படியோ கண்ண மூடிட்டா.. ஆண்டவா…” ராயர் பேசிக் கொண்டே மாத்திரையை விழுங்கினார். இப்பொழுதுதான் அவருக்குக் கொஞ்சம் ஆசுவாசமானது. மேல் மூச்சு வாங்கியபடியே நெஞ்சை நீவி விட்டுக்கொண்டார்.ஃபாதருக்கும் கிளம்பலாம் எனத் தோன்றியது. ராயரிடம் சொல்லிக்கொண்டு ஜெபமாலையும் பைபிளுமாக சாலையில் நடந்தார். ராயர் அப்படியே ஊஞ்சலிலேயே தலையைச் சாய்த்தார். மறுநாள்… கடலைக் கிழித்துக் கொண்டு சூரியன் சோம்பல் முறித்தான்.. மைக்கல் கண்ணைக் கசக்கி கொண்டு தன் அறையை விட்டு வெளியே வந்தான். ராயர் அதிகாலையிலேயே மீன் நிலவரம் பார்க்க மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தார். சமையல்காரி தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு கையைத் துடைத்தபடியே வந்தாள். “அய்யா.. நெத்திலிக்கொழம்பும் வெறாலும் வச்சுருக்கேன். பாத்திரம் எல்லாம் கழுவியாச்சு. வேற ஏதாவது செய்யணுமாங்க அய்யா?” “இல்ல.. இல்ல.. நீ கிளம்பு..” “பெரியய்யா கிட்ட சொல்லிருங்கய்யா.. நான் நாளைக்கு வாரேன்…” அவள் கிளம்பினாள்.. குழம்பு மனம் தூக்கலாக வந்தது. நன்றாக சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தூங்கப் போகலாம் என மைக்கல் நினைத்தான். கையில் ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வெளியே வாய் கொப்பளித்தான். வெயில் சுளீரென அடித்து கண்களை கூசச் செய்தது.பின்னாலிருந்து யாரோ கொத்தாகப் பிடித்தனர். மைக்கல் திமிறியபடியே திரும்பிப் பார்த்தான். காக்கி உடையில் நான்கு போலீஸ்காரர்கள் நின்றிருந்தனர். மைக்கல் மிரட்சியுடன் அவர்களைப் பார்த்தான். வந்தது போலீஸ் வாகனமாதலால் கொஞ்ச நேரத்தில் கூட்டம் கூடி விட்டது. மைக்கல் கையைத் தட்டி விட்டான். “சார். கையை எடுங்க. எதுக்கு சார் என்னைப் பிடிக்கறிங்க?” “தொர சொன்னாத்தான் வருவீங்களோ.. ஏறுலே வண்டீல..” மைக்கல் அத்தனை பேர் முன்பும் ஜீப்பில் ஏற்றப்பட்டான். 3 வெயில் சுளீரென முகத்தில் அடித்தது. முகில் போனை எடுத்து பார்த்தான். மனி பத்து எனக் காட்டியது. இவ்வளவு நேரமாகவா தூங்கியிருக்கிறோம் என முகில் தன்னைத் தானே நொந்து கொண்டான். 20 தவறிய அழைப்புகள். மது எனப் பெயரிடப் பட்டிருந்தது. முகில் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். மற்ற அறிவிப்புகளைப் புறந்தள்ளிவிட்டு உடனடியாகத் திருப்பி அழைத்தான். சில நொடி அழைப்புகளுக்குப் பின் மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டது. “ஹலோ.. ஆ… நீதானா சொல்லு மது.. என்ன விஷயம்?” முகில் கொட்டாவி விட்டுக்கொண்டே பேசினான். “ஏங்க இவ்ளோ நேரம் எடுக்கல? விடிய விடிய கூப்டு நான் ரொம்ப பயந்துட்டேன். என் நியாபகம் தான் இல்ல, குழந்தைங்க நியாபகம் கூடவா இல்லாமப் போச்சு? பெரியவ நீங்க குட்நைட் சொல்லுவீங்கனு முழிச்சுகிட்டே இருந்தா” “சாரி மது, நேத்து இங்க வரதுக்கே 12 மணி ஆகிடுச்சு. அதான் அப்படியே டயர்ட் ஆகி படுத்துட்டேன். இன்னைக்கு ஈவ்னிங் கிளம்பிடுவேன். நாளைக்குக் காலையில அங்க இருப்பேன். நீ, குழந்தைங்க எல்லாம் சாப்பிடாச்சா?” “மணி 10 ஆக போகுது. இன்னுமா சாப்பிடாம இருப்போம்? சாப்பிடுட்டு பெரியவளும் சின்னவனும் பக்கத்து காம்பவுண்ட்க்கு விளையாட போயிட்டாங்க. நான்தான் உங்களைக் காணோமேன்னு பாத்துகிட்டே இருந்தேன்.” “சரி சரி, நான் அப்புறமா கூப்பிடுறேன். பை” காலை கட் செய்தான். எல்லாரும் உறங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். அவன் காயத்தைப் பார்த்தான். ரத்தம் உறைந்து கருஞ்சிவப்பாகிக் காய்ந்து விட்டிருந்தது. வலியும் ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை. முகில் அதை உறுதிப்படுத்துவதற்காக ஒரு முறை அழுத்திப் பார்த்தான். “அய்யா, அய்யா.. யாராவது இருக்கீங்களா?” வாசலில் சத்தம் கேட்டது. முகில் எழுந்து போனான். வெளியே கைலியும் முண்டா பனியனுமாக ஒருவன் நின்று கொண்டிருந்தான். முகிலைப் பார்த்ததும் தோளில் கிடந்த துண்டை எடுத்து கையிடுக்கில் வைத்துக் கொண்டான். கையில் பெரிய கேரியர் இருந்தது. அவன் மூச்சுப் பிடித்து கேரியரை எடுத்து வீட்டின் வாசலில் வைத்தான். “சின்னய்யா இல்லிங்களா??” “உங்க சின்னய்யா தூங்கறாரு. என்ன எதாவது விஷயமா?” “பெரியய்யா சாப்பாடு குடுத்துட்டு வர சொல்லியிருந்தாரு, சாயங்காலம் மறக்காம அய்யனார் கோயிலுக்கு வரச் சொன்னாரு” "ம்ம்… வந்தர்லாம் வந்தர்லாம்.. கேரியர்ல என்ன குடுத்து விட்டுருக்காங்க? வீட்டுக்குள்ள கொண்டு போயி வச்சுட்டுப் போ.. “காலையில ஆடு அடிச்சாங்க அய்யா.. கறிக்கொழம்பா தான் இருக்கும். வேற உள்ளாற என்ன இருக்குன்னு தெரியல.. தப்பா நெனைக்காதீய. நாங்க உள்ள வந்தோம்னு தெரிஞ்சா பெரியய்யா தோலை உரிச்சிப்பிடுவார். வேற ஏதவது தேவைனா ஒரு குரல் கொடுங்க. நான் தோப்புக்குள்ள தான் வேலை பாத்துகிட்டு இருப்பேன். உடனே வந்திருவேன்” அவன் மறுபடியும் ஒரு கும்பிடு வைத்து வெளியேறினான். “டேய், எல்லாரும் எந்திரிச்சு சாப்டுங்கடா ஏதோ கோயிலுக்குப் போகணும்னு விஷ்ணு அப்பா சொல்லி ஆள் அனுப்பி விட்டுருக்கார் !! நாம லேட்டாப் போனா அப்புறம் தண்ணியடிச்சுட்டுதான் கிடக்கறொம்னு கண்டு பிடிச்சுடுவார்.” முகில் எழுப்பினான். போதை தெளியாமல் எல்லரும் புரண்டு புரண்டு படுத்தனர். முகில் ஒருவாறாக எல்லாரையும் எழுப்பினான். எல்லாரும் எழுந்து, சாப்பிட்டு விட்டு ஜீப்பில் ஊர் சுற்றக் கிளம்பினார்கள். கிராமம் முழுவதுமே பச்சை வயல் போர்த்தப்பட்டு இருந்தது. வயலும் தோப்பும் மண்வாசனையும் ரசித்துக்கொண்டே சென்றனர். காரை ஒருபுறம் நிறுத்திவிட்டு “வாங்கடா நடந்து போலாம்” விஷ்ணு அழைத்துச் சென்றான். பம்புசெட்டில் குளியல், இளநீர் குடித்து விட்டு தோப்பிலேயே உறங்கி எழும்போது மணி 5 ஆகி இருந்தது. எல்லோரும் கிளம்பத் தயாராயினர். விஷ்ணு “இங்க ஒரு அய்யனார் கோயில் இருக்கு, போகலாம் வரிங்களாடா?” முகில் “இல்லடா ஊருக்குப் போகணும், மது வேற கூப்பிடுகிட்டே இருக்கா. எனக்கும் பெருசா நம்பிக்கை இல்ல” “அஞ்சு மணி தான ஆச்சு? ஏழு மணிக்கு கிளம்பிடலாம். இவ்ளோ தூரம் வந்துட்டு இப்போ போனினா அப்பா சங்கடப்படுவார்டா” “என்னடா அப்பா, சென்டிமென்ட் அது இதுங்கற? சரி அப்பாவுக்காக சீக்கிரம் முடிச்சுட்டு கிளம்பீர்லாம்” பத்தடி உயரத்தில் அய்யனார் சிலை. சுத்தியும் ஆளுயர அருவாள் வைக்கப்பட்டு இருந்தது. அங்கங்கே மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. “வாங்கப்பா தம்பிகளா!! நல்லா இருக்கிங்களா??” விஷ்ணுவின் அப்பா வரவேற்றார். வயாதானாலும் முடி இன்னும் கருமையாக இருந்தது. தொப்பையை மறைத்து தோள் துண்டைத் தொங்க விட்டிருந்தார். கழுத்தில் தொங்கிய புலிப்பல் சங்கிலி எப்படியும் பத்து பவுன் தேறும் போல் இருந்தது. “நல்லாயிருக்கோம் அங்கிள்..” நால்வரும் தலை அசைத்தனர். “என்ன திடீர்னு கோவில், படையல் எல்லாம்? இவனுக்கு அப்படியே பொண்ணு பார்த்துட்டீங்களா?” சாரதி கேட்டான். “அதெல்லாம் இல்லப்பா.. இவன் நல்லபடியா வெளிநாடு போனான்னா படையல் போடுறதா வேண்டியிருந்தோம், அதான் இன்னைக்கு நாள் பாத்து வச்சோம். அதுக்கு அப்புறம் இவன் கிளம்பி போயிட்டான்னா எப்போ வருவான்னு யாருக்குத் தெரியும்.. வேண்டுதல் நின்னு போயிரக் கூடாதில்ல? இது கொஞ்சம் துடியான சாமி வேற” “ஆரம்பிச்சர்லாங்களா ஐயா?” பூசாரி பூஜையைத் தொடங்கினார். வேண்டியதெல்லாம் இருக்கிறதா என ஒருமுறை பார்த்துக்கொண்டார். பூ. பழம், அருவாள், சாராய பாட்டில், சுருட்டு இவையோடு நாட்டுக்கோழி ஒன்றும் ஒரு மூங்கிலில் கட்டி தொங்க வைக்கப்பட்டு இருந்தது. அது அடிக்கடி தன் சிறகை படப்படவென அடித்துக் கொண்டது. உடுக்கை அடித்துப் பாடப்தொடங்கினார். நாலு திசை நடுநடுங்க நாட்டு மக்கள் குலம் துலங்க நீயே காவலுன்னு நம்பிக் கெடக்கோம் வேல்கம்பு வீச்சருவா வெள்ளைக்குதிரை இவையோடு நாங்களும் உந்தன் சொத்து நலம் பெறவே வருவாய் எங்கள் அய்யா வெள்ளாமை செஞ்சு வச்ச மொத்த நெல்லு வேண்டி வெச்ச படையல், வெள்ளாட்டுக்கறி விருந்தெனவே காத்து கெடக்கு அய்யனாரே வாருமைய்யா பாடிய படியே கோழியின் கழுத்தை அறுத்து பலி கொடுத்தார். அதன் ரத்தத்தை எடுத்து எலுமிச்சம் பழத்தில் தடவினார். அதனை நான்காக அறுத்து திசைக்கொன்றாக எறிந்தார். கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். “ஏய்ய்ய் !!!” பூசாரி நாக்கைத்துருத்திய படி அருள் வந்து ஆடத் தொடங்கினார். அதுவரை நின்று கொண்டிருந்த விஷ்ணுவும் அவன் அப்பாவும் “சாமீ” என பூசாரியின் காலில் விழுந்தனர். தோளில் இருந்த அவர் துண்டு அடுத்த நொடியே இடுப்பில் எடுத்துக் கட்டிக் கொண்டார். “உன் மகன் என் மகன்டா, அவன நான் அனுப்பிச்சு வைக்கறேன்டா.. போ” “சரி சாமி சரி சாமி, உங்கள நம்பித்தான் இருக்கோம். நீங்க தான் காப்பாத்தணும்” இருவரும் மிகவும் பவ்யமாய் பூசாரியின் காலில் விழுந்தனர். ஆனால் அதனை அவர் சட்டை செய்ததாகவே தெரியவில்லை. ஆக்ரோஷமாக ஆடிக் கொண்டிருந்தார். “சொன்னபடியே பூசை வெச்சுட்ட, ரொம்ப திருப்திடா ரொம்பத் திருப்தி. என் ஆசிர்வாதம் உனக்கு என்னைக்கும் உண்டு. நான் காப்பாத்தறேண்டா உங்களை” எல்லாரும் போய் பூசாரியின் காலில் விழுந்தனர். “டேய், முகில் நீயும் விழுடா. தப்பா நெனச்சுக்க போறாங்க எல்லாரும் விழுகறப்போ நீ மட்டும் நின்னா மரியாதையாவா இருக்கும்?” வினோத் இழுத்தான். "டேய். எனக்குத்தான் நம்பிக்கை இல்லையின்னு தெரியும் தான அப்பறம் எதுக்கு என்னை இழுக்கற?முகில் வேண்டா வெறுப்பாய் அவர் பக்கத்தில் போனான். “சாமி, இவனுக்கும் ஒரு வாக்கு சொல்லுங்க” பூசாரி முகிலின் கண்ணையே பார்த்தார். அவர் முகம் மாறத்தொடங்கியது. தலையை இடம் வலமாக ஆட்டினார். சிலிர்த்துக் கொண்டார். “வாடா மகனே.. என்னடா கேட்ட… வாக்கா… இனிமே நான் சொல்ல ஒண்ணும் இல்ல டா!! நீயா மறுபடி வருவ.. என்னைத் தேடி நீயே வருவ. வாசல்ல நிக்கறடா நீ… வழி தெரியுதா இருட்டு தெரியுதா..” மேலே எதையோ வெறித்து நோக்கினார். அவரின் கண்கள் கோபத்தால் சிவந்தது. கைகள் இரண்டையும் வானத்தில் எதையோ விரட்டுவது போல் வீசினார். திடீரென எதையோ துரத்துவது போல் எழுந்தார். தட்டில் விபூதி நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து வானத்தினை நோக்கி வீசினார். குங்குமத்தை எடுத்து வீசினார். காற்றின் நிறத்தை அது ரத்தச் சிவப்பாக மாற்றியது. “என்ன தைரியம் இருந்தா என் பக்கத்துலையே வருவ?” பூசாரி மண்ணை நாலாபக்கமும் வாரி எறிந்தார். நாக்கைத் துருத்தி முறைத்துப் பார்த்தவாறே இருந்த அவரது கண்கள் திடீரென சொருகிய நிலையில் மாற அப்படியே மயங்கி விழுந்தார். முகிலுக்கு எதுவும் புரியவில்லை. அவன் அவரையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தான். 4 ஜீப் போலீஸ் ஸ்டேஷனில் கிறீச்சிட்டு நின்றது. பின் கதவு திறந்து மைக்கலை கீழே இறக்கினர். இன்ஸ்பெக்டர் அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். டேபிளின் மேல் கையை வைத்து நின்றான். திரும்பி இன்ஸ்பெக்டரையே முறைத்தான். பளீரென ஒரு அறை விட்டார். “என்னையே மொறைக்கறையா லே.. பொட்டலம் கடத்தற கூவ.. இந்த மொற உங்கப்பன் என்ன.. அந்த கடவுளே வந்தாலும் உன்னால வெளிய வர முடியாது. உங்க ரெண்டு பேரு ஆட்டத்தையும் இந்த ஒரே கேஸ்ல அடக்கறேன் பாருலே.. எலே ஏட்டு.. இவன்கிட்ட கையெழுத்து வாங்கீட்டு புடிச்சு செல்லுல போடு லே.. சாயங்காலம் உரிச்சுப்பிட்றேன்…” “சார்.. பழச எல்லாம் மனசுல வச்சு இப்பப் புடிச்சு உள்ள வச்சுட்டீங்கல்ல… வெளியில வருவேன்.. அப்ப மொத்த கணக்கையும் தீர்த்தர்றேன்.. இன்னைக்கு உங்க காட்டுல மழை.. ஆடிக்கோங்க நல்லா…” ஏட்டு மைக்கலை செல்லினுள் அடைத்துப் பூட்டினார். இது ஒன்றும் அவனுக்குப் புதிதல்ல..போன மாதம் கூட மார்க்கெட்டில் ராயரை எதிர்த்துப் பேசினார் என்று இரண்டு பேரை அடித்து உள்ளே வந்து இருந்தான். ராயரின் செல்வாக்கால் கேஸ் கோர்ட்டு வரை கூட போகவில்லை. செல்லினுள் வைத்த ஒரு மணி நேரத்தில் வெளியே வந்துவிட்டான். புகார் கொடுத்தவர்களே வந்து திரும்பப் பெற்றுக் கொண்டதால் அந்தக் கேஸ் ஒன்றும் இல்லாமல் ஆகி விட்டது. அப்போதிருந்தே தன் மேல் இந்த இன்ஸ்பெக்டருக்கு ஒரு கண் இருந்ததை மைக்கல் அறிவான். அதையெல்லாம் அசைபோட்ட படியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான். அங்கே இன்னொருவனும் இருந்தான். எங்கேயோ பார்த்த உருவம் போல் இருந்தது. யாராயிருக்கும் என யோசித்தான். ஏற்கனவே நன்றாக அடித்துத் துவைத்திருந்தனர். கிழிந்த துணியை ஒரு மூலையில் சுற்றி வைத்திருந்தது போல் அந்த உருவம் கிடந்தது. இது கண்டிப்பாக அந்த இன்ஸ்பெக்டரின் வேலை தான். நம் மேல்தான் பகை என்று நினைத்தால் வேறு யாரையோ அடித்துத் துவைத்திருக்கிறார். எப்படியும் இன்னும் அரை மணி நேரமோ இல்லை ஒரு மணி நேரமோ அது வரைக்கும் நேரம் போக வேண்டுமே.. மைக்கல் மெதுவாக பேச்சுக் கொடுத்தான். “யாருலே அவன்?” “மைக்கலு…” தெரிந்த குரல்.. யாராயிருக்கும்? மைக்கல் பக்கத்தில் போய் தலையைத் திருப்பினான். “மாறா… நீயாலே… நீ எப்படி இவன் கிட்ட மாட்டுன? உனக்கு காச மட்டும்தான லே குடுத்து அனுப்பிச்சன்? நீ எப்பிடிலே சிக்குன?” மைக்கல் அதிர்ந்தான்.. மாறனின் உடல் இனி நிற்க முடியாது என்னும் அளவுக்கு இருந்தது. இன்னும் நான்கடி அடித்தால் கூட உயிர் பிழைக்க மாட்டான் போலத்தான் இருந்தான்.. சாட்சி தயார் செய்ய இந்த இன்ஸ்பெக்டர் இவ்வளவு தீவிரமாய் இருப்பான் என நினைக்கவேயில்லை..அவன் உடலெங்கும் ரத்தம் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. “எங்கம்மா உன்கூட சேரக்கூடாதுனு பலவாட்டி சொல்லுச்சு மைக்கலு.. ஆனாலும் நான் பொய்யச் சொல்லிட்டு உன்கூடயேதான் சுத்தீட்டு இருந்தேன், நீ நல்லவன்னு எங்கம்மா கிட்ட சொல்லியும் கேக்கல. நேத்து ராத்திரியும் இப்பிடித்தேன் பொய்யச் சொல்லிகிட்டு உன்கூட வந்தன். நீ கெளம்பிப் போயிட்ட பெறவு நானும் சோசப்பும் ஒண்ணாதான் போனோம். வெறுங்காச வெச்சுகிட்டு ஒண்ணும் பண்ணீட முடியாதுனு நான் சோசப்புகிட்ட நைசாப் பேசி ரெண்டு பொட்டலத்த என் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிட்டேன். எங்கம்மா ராவோட ராவா பொட்டலத்த எடுத்து வந்து டேசன் ல கொடுத்துருச்சு..” “எம்புள்ளைய மெரட்டி வுடுங்கனு சொல்லவும் அவனுங்க வீட்டுலேர்ந்து என்னய தூக்கீட்டு வந்திட்டாக. என் அம்மா முன்னாடி நல்லாத்தான் பேசுனாக. டேசனுக்கு வந்து அடி பின்னிட்டாக லே.. ஆனா நா இப்ப வரைக்கும் உம்பேர மூச்சு விடலலே… எப்பிடி உன்னத் தூக்கீட்டு வந்தாகன்னு சத்தியமாத் தெரியல…” “அதான் நீ எங்கூட்டாளின்னு உன் அம்மைக்குத் தெரியும்ல… தொக்காப் புடிச்சுட்டான்… விடுலே.. எங்கய்யா இப்போ வந்துருவாரு.. நான் உன்னையும் வெளிய கூட்டியாந்தர்றேன்..” “என்னைய நம்பு மைக்கலு.. உம்பேரச் சொன்னது நானில்ல…” “சரி சரி விடுலே.. இதென்ன எனக்குப் புதுசா.. நீதான் மொதவாட்டி வர்றவன்… நான் மாசாமாசம் வந்துட்டுப் போயிட்டு இருக்கன்… இதுக்கெல்லாம் நடுங்காதலே.. நான் ராயரு மவன்.. பார்த்துக்கிடலாம்”. செல்லின் கதவு திறக்கப்பட்டது. சட்டையின் பொத்தான்களை அவிழ்த்தபடியே இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். மாறன் இனியும் அடி வாங்கத் தெம்பில்லாததால் செல்லின் மூலையில் சென்று சுருங்கிக் கொண்டான். மைக்கலை நோக்கி நடந்து வந்தார். மைக்கலின் அலட்சியப்பார்வை அவருக்கு இன்னும் கோபத்தை மூட்டியது. லத்தியை எடுத்துத் தொடையிலேயே விளாசினார். இதை சற்றும் எதிர்பார்க்காத மைக்கல் சரிந்து விழுந்தான். “என்னடா மொறைக்கற? உரிச்சர்றேன் இன்னைக்கு” என ஆக்ரோஷமாகக் கூறிக்கொண்டே அவனைத் துவைத்து எடுத்தார். ஒரு பதினைந்து நிமிடம் அவனை அடித்துத் தள்ளிவிட்டு வெளியே வந்தார். வியர்வையால் மைக்கலின் சட்டை முழுவதுமாக நனைந்து இருந்தது. தானே கழட்டி செல்லின் மூலையில் வீசி எறிந்தான். அங்கங்கே வரி வரியாய் சிவந்திருந்தது. “எங்கய்யா வரட்டும்.. நான் வெளியில வந்ததும் இவனுக்கு இருக்கு..” எனக் கறுவினான்.. மைக்கல் பேசப் பேச ராயர், ஃபாதர் இன்னும் பத்து பேருடன் காவல் நிலையத்தில் நுழைந்தார். அனைவரின் பார்வையும் ஒரு சேரத் தன் மீது குவிவதைக் கண்ட ராயர் தன் மீதுள்ள பயம் இன்னும் யாருக்கும் போகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். ஆனாலும் இன்ஸ்பெக்டர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்பது போன்று தன் முகபாவத்தை வைத்துக் கொண்டார். “இன்ஸ்பெக்டர்.. என் பையனை வெளியில விடுங்க..” அவர் குரலில் அதிகாரம் தெறித்தது. இன்ஸ்பெக்டர் அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தார். ராயரை உட்கார கூடச் சொல்லவில்லை. நீயெல்லாம் யார் என்னிடம் பேச எனும் தோரணையில் பார்த்துக் கொண்டே தலையை இடதும் வலதுமாக ஆட்டினார். “நீங்க பத்து பேரக் கூட்டிட்டு வந்துட்டா வெளியில விட்டுரணுமா? முடியாது…” ராயரின் நெற்றி சுருங்கியது. மைக்கல் எதில் மாட்டுவான்? எதாவது பெட்டி கேஸாகத்தான் இருக்கும் இதற்கென்ன இவன் இவ்வளவு பேசுகிறான், இவனையெல்லாம் பேச விட்டதே தப்பு என நினைத்தார்… “என்ன இன்ஸ்பெக்டர்.. பத்து பேரக் கூட்டிட்டு சுத்தறது பெருமைக்குன்னு நெனைச்சியா? எல்லாம் பாசக்கார புள்ளைங்க.. இன்னொரு வார்த்தை நீ என்னை மரியதைக் குறைவாப் பேசுவனு தெரிஞ்சிது.. கோவத்துல என்ன வேணா செய்வாங்க..” “என்ன ராயரே.. மிரட்டுறீங்களா? அதுவும் ஸ்டேஷன் குள்ளயே வந்து?? உன் மவன் போதைப் பொருள் கடத்தீருக்கான்… போதைப் பொருள் தடுப்புச் சட்டத்துல கைது பண்ணியிருக்கோம். ஒருத்தனையும் வெளியில விட முடியாது.. ரெண்டு வருஷமாச்சும் உள்ள இருக்கணும்.. கோர்ட்டுக்கு வாங்க பேசிக்கலாம்… கம்பி எண்ணியாச்சும் இவனுங்களுக்கு புத்தி வருதான்னு பாப்போம்”.. இன்ஸ்பெக்டர் சாயலாக ராயரையும் பேசினார். திரும்பி ராயர் முறைத்தார். ராயரின் முகம் மாறுவதைக் கண்ட அவரது அடியாட்கள் இன்ஸ்பெக்டரையே அடிக்க வந்தார்கள். எதையுமே கண்டுகொள்ளாமல் திமிராகவே அமர்ந்திருந்தார் . தன் ஆட்களைக் கையமர்த்திய ராயர் இவனை கவனிக்கும் முறையில் கவனித்துக் கொள்ளலாம் என நினைத்துகொண்டே திரும்பி நடந்தார். செல்லினுள் இருந்த மைக்கல் தன் அப்பாவையே பார்த்தான். ராயர் கம்பியின் வழியாக அவனைப் பார்க்கப் பார்க்க கோபம் பொங்கியது. தனக்கு இப்படி ஒரு அவமானத்தைத் தேடித் தந்துவிட்டானே என்று அவன் அருகில் ஒரு அறை விட வந்தவர் அவன் காயங்கள் எல்லவற்றையும் பார்த்து அதிர்ந்துவிட்டார். மைக்கல் நிற்கவே சக்தி இல்லாமல் நடுங்கிக் கொண்டு இருந்தான்… “படிச்சு படிச்சு சொன்னனேடா.. ஒழுங்காப் பொழைச்சுக்கோன்னு… இப்படிப் பண்ணீட்டு வந்து நிக்கிறியேடா.. அடிச்சிட்டானுவளா?” “அதெல்லாம் ஒண்ணும் பெருசா இல்லப்பா.. நீ தான் வெளிய எடுப்பன்னு பாத்தேன். என்ன சொல்றான் அவன்? இந்தவாட்டி என்ன கேசு போட்டிருக்கான்?” “நான் உன்ன வெளிய எடுக்கறேன்டா. கவலைப்படாத. நீ போதை மருந்து கடத்துனன்னு சொல்றான்டா அந்த இன்ஸ்பெக்டரு. எலேய் அப்பிடி எதாவது கை வச்சியா?” “அப்பா.. அது வந்து..” மைக்கலுக்கு சொல்வதா வேண்டாமா எனக் குழப்பமாக இருந்தது. ஊருக்குள் சண்டை போட்டு சுற்றுவதற்கே அடி விளாசுவார். அவரிடம் போய் அதுவும் அவர் படகிலேயே கடத்திய விஷயம் தெரிந்தால் இவரே செத்துத் தொலை என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வேண்டாம். இப்பொழுது உண்மையைச் சொல்லி மாட்டிக் கொள்வதை விடப் பெரிய முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது. “அப்பா.. நான் எதுவும் பண்ணலப்பா.. அவன் அந்த மார்க்கெட் சண்டைய நெனைப்புல வெச்சுதான் இப்படிப் பண்ணுறான்னு நெனைக்கன்… இப்போ என்னைய என்ன செய்யப் போறானாம்?” “உன்னை எல்லாம் எதாவது பண்ணுனான்னு தெரிஞ்சுது.. கழுத்துக்கு மேல எதுவும் நிக்காது. கோர்ட்டுல பாத்துக்கிடுதேன். நம்ம கான்ஸ்டபிள் மதலமுத்துகிட்ட சொல்லீட்டுப் போறேன். கொஞ்சம் பொறுத்துக்க. அதுவரைக்கும் அவர் கவனிச்சுக்குவாப்ல…” “அப்பா.. அப்படியே மாறனையும் கொஞ்சம் கவனிக்கச் சொல்லுங்க..” “அவன் யாருலே? நொண்டிகிட்டு நிக்கான்.. உங் கூட்டாளியா?” “ஆமாப்பா.. அவன் அம்மா சொல்லித்தான் என்ன சிக்க வச்சுருக்காங்க.. அவனையும் புடிச்சு உள்ளதான் வச்சிருக்காங்க..” ராயர் எட்டிப் பார்த்தார். மாறனுக்கு இறுதி நம்பிக்கையும் போய்விட்டுருந்த படியால் ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தான். ராயருக்கு அவனை அடையாளம் தெரிந்தது. அவன் தாயும் மீன் தான் விற்கிறாள். “யாருலே அவன்? பேச்சி மவனா?” “ஆமாங்கய்யா..” மாறன் நடுக்கத்துடன் பதில் பேசினான். அவன் உடம்பில் பேசுவதற்குக் கூடத் தெம்பில்லை என பார்த்தாலே தெரிந்தது. நிற்பதற்கே முடியாமல் அவன் கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. இனி பார்த்துக்கொள்ளலாம் என ராயருக்கு ஒரு யோசனை மனதில் பளிச்சிட்டது. மைக்கலைப் பார்க்கும்போது தான் ராயரின் கண்கள் முழுதும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. தன் மகனை எப்படியாவது வெளியில் எடுத்து விட வேண்டும் என்ற முனைப்புடன் ராயர் வெளியே வந்தார். இன்ஸ்பெக்டர் இருவரையும் ஒரு சேர தோற்கடித்து விட்டதையும் மைக்கலை இரண்டு வருடம் உள்ளே வைக்கப் போவதையும் எண்ணி சிரித்துக் கொண்டார். 5 காற்று சிலீரென அடித்தது. முகில் கார் கண்ணாடியை இறக்கி விட்டான். பொழுது புலரத்தொடங்கி இருந்தது. நேற்று இரவு ஏழு மணிக்குக் கிளம்பியது, எப்படியாவாது சீக்கிரமே போய்விடலாம் என விடிய விடியக் காரோடியதில் தோள் வலித்தது. விடியற்காலையில் தான் பெருங்களத்தூர் தொட முடிந்தது. சாரை சாரையாகச் செல்லும் வாகங்கள் வழிவிட இடமில்லாமல் மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் மாடுகளைப் போல் மெதுவாக நகர்ந்தது. முகிலுக்கு தலை விண்விண்னென்று தெறித்தது. இனிமேலும் தன்னால் பொறுமையாக இருக்க முடியாது என நினைத்த முகில் சாலையோரமாக இருந்த டீக்கடைக்கு அருகில் காரை நிறுத்தினான். சிகரெட் ஒன்றின் தலையைக் கொளுத்தி மதுவுக்குக் கால் செய்தான். “மது, சென்னை வந்துட்டேன், வீட்டுக்கு வரும்போது உனக்கெதுவும் வாங்கிட்டு வரணுமா?” “இல்லங்க, நீங்க நேரத்துக்கு வந்தாப் போதும். இன்னைக்கு லீவ் போட்றீங்களா? இல்ல டிபன் ரெடி பண்ணவா?” “ஏற்கனவே மானேஜர் கத்துவான். லீவ் எல்லாம் போட முடியாது மது. நான் குளிச்சுட்டு கிளம்பிடுவேன் மது. டிபன் லாம் வேண்டாம். கேண்டீன் ல சாப்பிட்டுக்கறேன்.” “வார்த்தைக்கு வார்த்தை மது மதுன்னு நீங்க கூப்பிடற குரலையே இப்போதான் கேட்க முடியுது. சரிங்க, நான் போய் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பறேன். நீங்க பத்திரமா வாங்க. எதனை மணிக்கு வருவீங்க?” “இங்க இருக்கற டிராபிக்கைப் பார்த்தா இன்னைக்கு வர முடியாது போலத் தெரியுது. முன்னாடி நிக்கறவன் டிபனே ஆர்டர் பண்ணிட்டான்” “குழந்தைகளை ஸ்கூலுக்கு அப்போ யாரு கூட்டிகிட்டு போவா? உங்களுக்குக் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையா..?” “அதெல்லாம் கவலைப்படாதே. பக்கத்து வீட்டு குழந்தைகளும் அதே ஸ்கூலுக்குத் தானே போகுது? இன்னைக்கு ஒரு நாள் அவங்க கூடப் போகச் சொல்லு. நாளைக்கு அவங்க குழந்தைகளையும் நானே கூட்டிகிட்டு போய் விட்டர்றேன்”. “உங்களோட இதே தொல்லையாப் போச்சுங்க. வீட்டுக்கு வாங்க. பேசிக்கலாம். நான் வைக்கறேன்” முகில் காலை கட் செய்தான். சென்னை ட்ராபிக்கில் வீடு வந்து சேரவே 9 மணி ஆகி இருந்தது. அவசர அவசரமாய்க் குளித்துக் கிளம்பினான். குளித்து விட்டு வெளியே வரும்போது மது கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தாள். “என்னங்க இது? கத்தி?” மது கேட்டாள் முகிலுக்கு இரவெல்லாம் கார் ஓட்டியதில் தலை வலித்தது இன்னும் குறையவில்லை. இது, பங்களாவில் இருந்த கத்தி. இது எப்படி என் காருக்குள் வந்தது? ஒரு வேளை விஷ்ணு வைத்திருப்பானோ? தானே போதையில் எடுத்து வைத்தோமா?ப்ச், அவனுக்கு யோசிக்க எல்லாம் நேரம் இல்லை . “நீ அதை கொண்டு போய் வை மது, அப்புறமா சொல்றேன்”. “நல்லாயிருக்குங்க, ஏதோ அந்தக் காலத்துப் பொருள் போல. குழந்தைங்க கைல படாம தனியா எங்கயாச்சும் வைக்கறேன். பிச்சுப்போட்டுடுவாங்க.” மது கத்தியை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள். முதல் வேலையாக செய்தித்தாளை எடுத்து அதன் கூர்மையான பகுதிகளைச் சுற்றி மூடினாள். “ஆமா மது. அது விஷ்ணு அரண்மனைல இருந்தது. 400 வருஷம் பழமையானது. அவன் தாத்தா எங்கேயோ போனப்போ வாங்கினதாம். இது அவருக்கு ஒரு ஹாபி”. “கைப்பிடி தங்கமாங்க? பளபளன்னு மின்னுதே.. எங்க இருந்துங்க உங்களுக்கு இப்படியெல்லாம் கிடைக்குது?” “தங்கம் எல்லாம் இல்ல மது. நீ அதை எடுத்துட்டுப்போ சும்மா நய்யி நய்யின்னு தொந்திரவு பண்ணிகிட்டு”. “தெரிஞ்சுக்கலாம்னு கேட்டா இப்படி கத்தறீங்களே? உங்ககிட்ட போய் கேட்டேன் பாருங்க. சிடுமூஞ்சி” முகில் எதையும் கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை. தலை ரொம்ப பாரமாக இருந்தது. தூங்கி எழுந்தால் சரி ஆகிவிடும் என்று நினைத்தான். ஒரு 10 நிமிஷம் தூங்கி எழுந்து போகலாம் என்று படுத்தான். கண் விழித்துப் பார்க்கும்போது தன் மகள் காலைக்கட்டிக்கொண்டு இருந்தாள். அவள் முகத்தைப் பார்த்ததுமே முகிலின் முகத்தில் சந்தோஷம் அப்பிக் கொண்டது “நிஷாக்குட்டி, ஸ்கூல் முடிஞ்சு எப்போடா வந்த?” “உன்கூட டூ பா, என்ன விட்டுட்டுப் போய்ட்டல்ல நீ? நானும் தம்பியும் நீ இல்லாமயே விளையாடிடுனோம்.” “இல்லடா, இது அப்பா ரொம்ப தூரம் போக வேண்டி இருந்துச்சா, அதான். அடுத்த வாட்டி போறப்போ உன்ன கண்டிப்பா கூட்டிட்டுப்போறேன். சரியா?” நிஷா தலையை ஆட்டிக் கொண்டே மீண்டும் அவனைக் கட்டிக் கொண்டாள். பின்வமை விட்டு வெளியே விளையாடப்போனாள். “ஏன் மது, ஆபீஸ் போகணும்னு சொன்னனே, எழுப்பி விட வேண்டியது தான?” “நான் எழுப்பினேன், நீங்க அப்படியே கீழ விழப்போனீங்க. அதான் நானே இங்க படுக்க வெச்சேன்”. “சே, இனி அந்த மேனேஜர் கிட்ட வேற கதை சொல்லணும்”. போனை எடுத்தான். சார்ஜ் 0 எனக்காட்டியது. தூங்கும்போது ஃபுல்லாதானே இருந்தது? “மது , உன் போனைக் கொஞ்சம் கொடு. என் போன்ல சார்ஜ் இல்ல.மது, நீயே பேசிடேன். எனக்கு இன்னுமே தலைவலி சரி ஆகல” “உங்களுக்கு காரியம் ஆகணும்னா மட்டும் மது மதுனு சொல்லுவீங்க”. மது பொய்க்கோபத்துடன் பேசி போனை வைத்தாள். “ரெண்டு நாளா என் ஞாபகம் எங்க போச்சாம்? அப்போ மட்டும் இந்த மது வேண்டாம், உங்க ப்ரண்ட்ஸ் தான் உலகம். அப்படிதான?” முகில் மது பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அருகில் சென்று குந்தலில் வாசம் பிடித்தான். மது ஓரக் கண்ணால் அவன் செய்வதை ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் மறுப்பேதும் சொல்லாததை தனக்கான அனுமதியாக எடுத்துக் கொண்ட முகில் மதுவை கட்டிக்கொண்டான். “சரி சரி, அதெல்லாம் விடு. கொஞ்சம் அப்படியே எட்டி கொழந்தைங்க தூங்கிட்டாங்களானு பாரு” “ச்சீ, கையை எடுங்க, என்ன இது? கொஞ்சம் எடம் குடுத்தாப் போதுமே. தள்ளிப் போங்க. இது என்ன கிச்சன்ல புது பழக்கம்?” மது திட்டிக்கொண்டே இன்னும் நெருங்கி வந்தாள். அவளிடம் இருந்து சான்டல் சோப் மணம் வீசியது. முகில் அவளின் காதோரம் தன் முகத்தை வைத்து நன்றாக வாசம் பிடித்தான். “நீதான்டி என் உலகம். உனக்கு அப்பறம்தான் எல்லாமே” “போதும் போதும் விடுங்க, இந்த ரொமான்ஸ் எல்லாம் எவ்வளோ நாளைக்குனு நானும் பாக்கறேன்” “சேன்டல் ஸ்மெல் தூக்குது . நீ என் தேவதை மது” அவளை அப்படியே இறுக்கினான். அவள் கன்னத்தில் பின்னால் இருந்தவாறே முத்தம் ஒன்றைப்பதித்தான். மது திரும்பி நின்று முகிலின் கண்களையே பார்த்தாள். நாக்கால் தன் இதழை வருடினாள். முகில் சிரித்துக்கொண்டே அவளை முத்தமிட்டான். இருவரின் கைகளும் கோர்த்துக் கொண்டனர். மது முகிலின் தலைமுடிக்குள் விரல் விட்டு கோதினாள். “அப்பா….” சின்னவன் கத்திக்கொண்டே ஓடி வந்தான். மது முகிலைத் தள்ளிவிட்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். “சொல்லுடா நரேன்… என்னாச்சு??” முகில் தன் மகனைத் தூக்கிக்கொண்டான். “நீ ஊருக்குப்போய்ட்டல்ல? அப்போ… அக்கா ரொம்ப குறும்பு பண்ணுனா.. என்னை அடிச்சுகிட்டே இருந்தாப்பா” “அப்பனுக்குப் பிள்ளை அப்படியே பிறந்திருக்கு. உங்க அப்பா கூட குறும்பு தான்டா” மது சிரித்தாள். “நீ வாடா கண்ணா நம்ம போய் என்னனு கேப்போம்” முகில் மதுவைப்பார்த்து சிரித்தபடியே போனான். அங்கே நிஷா யாருடனோ தனியாகப் பேசிக்கொண்டிருந்தாள். “பாப்பா!! யாரங்க? இங்க வாங்க. தனியா என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க? தம்பி ஏதோ கம்ப்ளையிண்ட் சொல்லறான் பாரு உங்கமேல.. என்னன்னு கேளுங்க” “இருப்பா, இந்த புது அங்கிள் நல்லா விளையாடுறாரு. நான் இன்னும் ரொம்ப நேரம் விளையாடிகிட்டு தான் வருவேன்.” முகில் எட்டிப்பார்த்தான். அங்கே யாருமே இல்லை. குழந்தை ஏதோ விளையாட்டுக்குச் சொல்லும் போல என நினைத்தான். “அங்க தான் யாருமே இல்லையேம்மா.. யாரோட பேசிட்டு இருக்க?” நிஷா அவன் பேசியதை காதில் போட்டுக் கொண்டது போலவே தெரியவில்லை. அவள் பாட்டுக்கு கையையும் காலையும் ஆட்டி ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்,. “சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” மது இரவு நேர உணவுக்காக அழைத்தாள். எல்லாரும் சாப்பிட்டுவிட்டு படுத்தனர். மது விளக்கை அணைத்தாள். “என்ன சார் இன்னைக்கு ஏசிய இவ்ளோ சில்லுனு வெச்சுருக்கீங்க?” முகில் பதிலெதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே குளிருக்கு இதமாக அவளை அணைக்க, அந்த இரவு ரம்மியமாக இருந்தது. 6 மைக்கலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவன் மீதான வழக்கு விசாரணை ஒரு வாரம் தள்ளி வைக்கப் பட்டிருந்தது. அவனை விசாரிக்க வேண்டும் என்று தங்கள் பாதுகாப்பில் காவல்துறையினர் எடுத்திருந்தனர். மதலை முத்துவை இவனை நெருங்க விடாமல் வெளியில் வேலை கொடுத்து அனுப்பி விட்டனர். இது இன்ஸ்பெக்டருக்கு மிகவும் வசதியாகப் போனது. விசாரணை என்ற பெயரில் மைக்கலை விதம் விதமாய் சித்ரவதைக்கு உள்ளாக்கினர். ஏற்கனவே அடி வாங்கிக் களைத்துபோயிருந்த அவன் உடல் இனியும் நிற்க முடியாது எனும் அளவிற்கு அடிகள் விழுந்தது. இதெல்லாம் அவன் இனி எந்த வகையிலும் எழுந்து நின்று விடக் கூடாது என்பதற்காகவே நடப்பதாக மைக்கலுக்குத் தோன்றியது. தினமும் நேரம் ஆனால் அவனுக்கு உணவு வந்தது. ஆனால் இரவு பகல் பார்க்காமல் அடி விழுந்து கொண்டே இருந்தது. “என்னலே.. ராயரு மவனே… கையெழுத்துப் போடுதியா… கையெழுத்துப் போடத் தெரியுமாலே உனக்கு?” இன்ஸ்பெக்டர் கேட்டார். இவர் என்ன கையெழுத்து நம்மிடம் கேட்கிறார் என மைக்கல் குழம்பினான். தாடையிலிருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. வாயை மூடக் கூட முடியவில்லை. என்னவாக இருக்கும் என்பதாகவே பார்வையை வைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான். “என்னலே பாக்க?” இன்ஸ்பெக்டர் ஏளனமாகப் பார்த்தார்.. “விவரம் தெரிஞ்சுதான் போடுவியோ… உன் ஆசைய ஏன்லே கெடுக்கணும்? படிச்சுப் பாத்தே போடு. வேணாம். நீ படிக்காத. நானே காட்டுதேன். முத்தப்ப ராயரின் மகனாகிய மைக்கல் ஆகிய நான் இரண்டு கிலோ ஹெராயின் கடத்தினேன். பணம் சம்பாதிக்கும் நோக்கில் இவ்வாறு செய்தேன்.. இதில் மாறனையும் பங்கு தருவதாக நானே பணத்தாசை காட்டி கூட்டு ஏற்படுத்திக் கொண்டேன். இவை விவரங்கள் அனைத்தும் என் சுய நினைவுடன் அளிக்கப்பட்டது என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறேன். இப்படிக்கு மைக்கல்… சந்தோசமா லே? ம்ம்… போடு..” மொத்த சரக்கே இரண்டு கிலோ தான். அதிலும் நம்மிடம் ஏழு பொட்டலம் இருக்கிறது. இரண்டு கூட்டாளிகளும் மாட்டவில்லை.. பிறகெப்படி இவ்வளவு சரக்கையும் எடுத்தார்?? இல்லை. இது கண்டிப்பாக நம் சரக்கில்லை. வேறு ஏதோ வேலை நடக்கிறதாக மைக்கல் யோசித்தான். “என்னலே யோசிக்கற?? உங்கூட்டாளிகிட்ட சிக்குனது வெறும் நூறு கிராம் தான். அதுக்கெல்லாம் ரெண்டு பேரையும் உள்ளபோட்டா நாலு நாள்ல வந்துருவீங்க.. அதான்.. இது நானே உனக்காகவே ரெடி பண்ணுனேன்.. இப்போ ஆயுசுக்கும் உள்ள போவியா.. நீ மட்டும் இல்லன்னா உங்கப்பன் பல்லு புடுங்குன பாம்புலே.. வெறுங்கையலயே அடிச்சுத் தூக்கிப் போட்டுட்டுப் போய்டுவேன். என்கிட்டயாலே உங்க பவிசக் காட்டுதீய? பால்ராஜுன்னு பேரக் கேட்டா மொத்த ஊரும் அடங்கும்.. நீ என்னலே சுண்டெலி… நசுக்கிட்றேன் உன்ன…” அவர் பேசிக்கொண்டே தன் பூட்ஸ் காலால் மைக்கலின் கையை நசுக்கினார். மைக்கலுக்கு வலி உயிர் போனது. ஆரம்பத்தில் பொறுத்துப் பார்த்தான்.. பின்பு வலி தாங்காமல் “அம்மா…” எனக் கத்தினான்.. ஏற்கனவே அதிகம் அடி வாங்கியிருந்ததால் அவன் குரல் ஈனஸ்வரத்தில் மட்டுமே ஒலித்தது. “அய்யய்யோ வலிக்குதாலே.. கையெழுத்துப் போட்ற வரைக்குமாச்சும் கை வேணும்ல.. போடுலே..” ஃபைலைத் தூக்கி மைக்கலின் முன்னால் போட்டனர். அடி வாங்க இனித் தெம்பில்லை என்னும் நிலைக்கு வந்திருந்த மைக்கல் வேறு வழியில்லாமல் கையெழுத்துப் போட்டான். அவ்வளவுதான். குற்றத்தை ஒத்துக்கொண்டதாக கையெழுத்தும் போட்டாகி விட்டது. இனி இரண்டு வருஷம் களியும் கம்பியுமாக வாழ்க்கை நகரப் போகிறது என மைக்கல் நினைக்கும்போதே ஒரு பயம் வந்தது. அப்பா இருக்கும் தைரியத்தில் கொஞ்சம் அதிகமாகத்தான் ஆடி விட்டோமோ என நினைத்தான். நாளை தன் வழக்கு விசாரணை வருகிறது. குற்றம் நிரூபிக்கப் பட்டால் அவ்வளவுதான்.. இனி யோசித்து ஒன்றும் பயனில்லை. மைக்கலுக்கு மனத்தில் ஆயிரம் எண்ணங்கள் ஓடியது. அவன் இரவு முழுவதும் தூங்காமல் இருந்தான். அதிகாலையில் அவனுக்குப் பொருந்துமாறு சட்டையும் லுங்கியும் வந்தது. வேறு ஏதாவது கைதியின் உடையாக இருக்க கூடும். முகத்தில் இருந்த ரத்தக் கறையெல்லாம் போக அவனைக் குளிக்க வைத்து புது உடைகள் அணிய வைத்தனர். “காயமெல்லாம் ஏதுன்னு கேட்டா வழுக்கி விழுந்தன்னு சொல்லணும்.. ஜட்ஜ் ஐயா முன்னாடி கை கட்டி நிக்கணும். வேற எதாவது பேசுன… மறுபடியும் வழுக்கி விழ வேண்டியதா இருக்கும்..” ஏட்டு ஒருவர் வந்து சொல்லிவிட்டுப் போனார். “என்னலே.. மாப்பிள்ளை ரெடியா…” இன்ஸ்பெக்டர் உள்ளே வந்தவுடன் மைக்கலை விசாரித்தார். தான் ஜெயித்து விட்டோம் இனி மொத்த ஊரும் தன் கைக்குள் தான் என நினைக்கவே அவருக்கு இறுமாப்பு உருவானது. மைக்கலுக்கு கைகளில் விலங்கிட்டு ஜீப்பில் ஏற்றினர். பழைய சட்டை ஒன்றும் அழுக்கு லுங்கியுமாக பார்க்கவே பரிதாபமாக நின்றான். மைக்கலுடன் இன்னொரு கைதியையும் ஏற்றிக் கொண்டனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜீப் கோர்ட்டை அடைந்தது. இன்னொரு ஜீப்பில் மாறன் வந்து இறங்கினான். மாறனுக்கும் மைக்கலைப் போலவே அழுக்கு சட்டை லுங்கியும் மாட்டி விடப் பட்டிருந்தது. அவனுக்கும் என்ன பேச வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்துத் தான் கூட்டி வந்திருப்பார்கள் என மைக்கல் நினைத்தான். மாறன் மைக்கலின் முகத்தைப் பார்க்கவே முடியாமல் தலையைத் தொங்கப் போட்டிருந்தான். மாறனைப் பார்த்ததும் பேச்சியம்மாள் கண்ணீருடன் ஓடி வந்தாள்… “என் ராசா.. உன்னைத் திருத்தறதா நெனைச்சு உன் வாழ்க்கைய நானே பாழ் பண்ணிட்டனே.. இந்த பாவிக்கு இந்த சென்மத்துல மன்னிப்பே இல்லப்பு..” என மாறனைத் தழுவிக்கொண்டு அழுதாள். மாறனுக்கும் தன் தாய் அழுவதைப் பார்த்து கண்ணீர் வந்தது. ராயரின் காரும் நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்தது. ராயர் வக்கீல்களுடன் மைக்கலைப் பார்த்து நடந்து வந்தார். மைக்கலுக்கு அவரின் முகத்தை பார்க்கக் கூட திராணியில்லாமல் தலை குனிந்து நின்றான். ராயரே அவன் அருகில் வந்து அவன் தலையத் தொட்டுத் தூக்கினார்.. மைக்கலுக்கும் கண்ணீர் வந்தது. குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான். ராயர் திரும்பி வக்கீலைப் பார்த்தார்.. “இன்ஸ்பெக்டர். என் கட்சிக்காரர் அவர் அப்பாகூட தனியாப் பேசணுமாம்..கொஞ்சம் அலொவ் பண்ணுங்க..” என வக்கீல் கேட்டார். “என் முன்னாடியே பேசுங்க” என கூறிய இன்ஸ்பெக்டர் பக்கத்தில் வந்து நின்று கொண்டார். “நீங்க எதாவது பேசணும்னா அப்படிப் போய் பேசிட்டு வாங்க” என்று பேச்சியம்மாவையும் மாறனையும் பார்த்துக் கூறினார். ராயரை அவமானப் படுத்தியதாய் நினைத்து ஏளனமாகப் பார்த்தார். ராயர் அவரை ஏறிட்டுப் பார்த்து மைக்கலைப் பார்த்து திரும்பிக் கொண்டார். “மைக்கலு.. நீ ஆம்பளடா.. எதுக்கும் கலங்காத.. என்ன வந்தாலும் நான் உன்னை விட்டுற மாட்டேன். தைரியமா இருக்கணும் என்ன?” “ம்ம்..” மைக்கல் கண்களைத் துடைத்துக் கொண்டு தலையை ஆட்டினான். வக்கீல் வந்து உள்ளே என்ன நடக்கும் எனவும் என்னனென்ன சொல்ல வேண்டும் என்றும் அவனுக்கு எடுத்துச் சொன்னார்.. மைக்கல் அவர் சொல்வதை கவனமாகக் கேட்டுக் கொண்டான். இன்னும் ஒன்றிரண்டு மணி நேரத்தில் அவன் வாழ்க்கையே மாறப் போகிறது, எனினும் இப்போது ராயரைப் பார்த்தது அவனுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. “போதும் போதும்.. ஹியரிங் ஆரம்பிச்சுருவாங்க.. உங்கப்பா மவன் பாசத்தையெல்லாம் சென்ட்ரல் ஜெயில்ல மொத்தமாக் காட்டிக்கிடலாம்.. ம்ம் நகருங்க..” இன்ஸ்பெக்டர் மைக்கலை நெட்டித் தள்ளினார். மைக்கல் ராயரைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே குற்ற உணர்ச்சி நீங்காதவனாய் நடந்தான்.. மைக்கல்.. மைக்கல்.. மைக்கல்… அவன் பெயர் சம்பிரதாயமாக மூன்று முறை அழைக்கப் பட்டது. நீதிபதிக்கு வணக்கம் வைத்தவாறு கையைக் கட்டிக்கொண்டு நின்றான். வழக்கமான சத்தியம் வாங்கும் நடைமுறைகள் தொடர்ந்தது. பைபிளின் மீது கை வைத்து நான் சொல்வதெல்லம் உண்மை. உன்மையைத் தவிர வேறொன்றுமில்லை எனக் கூறி தலையை மறுபடியும் குனிந்து கொண்டான். நீதிபதி தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தார். “நீதான் மைக்கலா?” எனக் கேட்டார். “ஆமாங்கய்யா..” மைக்கல் பணிவுடன் பதில் கூறினான்.. “உன்பேர்ல சாட்டப்பட்ட குற்றம் என்னன்னு தெரியுமா ? போதைப்பொருள் கடத்தினாயா?” “இல்லங்கய்யா…” என மைக்கல் கூறியவுடன் நீதிபதியின் நெற்றி சுருங்கியது. என்ன என்பது போல் இன்ஸ்பெக்டரைப் பார்த்தார். இன்ஸ்பெக்டருக்கு பதற்றம் ஆனது. ஏதோ பேச வாயெடுத்தவர் நீதிபதி அனுமதி தராமல் யாரவது பேசினால் நீதிமன்ற அவமதிப்பாகும் என நினைத்து தலையை குனிந்து கொண்டார். “நீ கடத்தலன்னா எதுக்கு ஒப்புதல் வாக்கு மூலத்துல கையெழுத்துப் போட்ட? உன்னை யாராவது மிரட்டி கையெழுத்து போடச் சொன்னாங்களா?” “இன்ஸ்பெக்டர் தான்யா ஏதோ காயிதத்துல கையெழுத்துக் கேட்டாரு. போடலன்னு சொன்னதுக்குத்தான் அடிச்சாருங்கய்யா…” மைக்கல் நீதிபதியிடமே தன் காயங்களைக் காட்டினான். வக்கீல் என்னவெல்லாம் சொல்லிக் கொடுத்து அனுப்பினாரோ அதை எதுவும் பிசகாமல் அப்படியே செய்தான். “கனம் நீதிபதி அவர்களே.. குற்றவாளி வழக்கை திசை திருப்பப் பார்க்கிறார்..” அரசு வக்கீல் குறுக்கிட்டார்.. “குற்றம் நிரூபிக்கப்பட்டாதான் குற்றவாளி. அதுக்கு முன்னாடி குற்றம் சாட்டபட்டவர்தான்.. சாட்சி இருக்கா??” எனக் கேட்டார் நீதிபதி. “இருக்குங்கய்யா.. இவரோட கூட்டாளி மாறன்னு ஒருத்தரையும் விசாரிக்க அனுமதிக்கணும்..” நீதிபதியின் அனுமதி பெற்று டவாலி மாறன் மாறன் மாறன் என மூன்று முறை அழைத்தார். ஏட்டு மதலைமுத்து மாறனை அழைத்து வந்தார். மைக்கல் மக்களோடு அமர்ந்திருக்கும் தன் தந்தையையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். இவ்வளவு தூரம் தன்னால் அவருக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதே என்ற குற்றவுணர்ச்சியே அவனைக் குத்திக் கொண்டிருந்தது. மாறனையும் பார்த்தான். மாறனையும் குற்றம் சாட்ட முடியாது. நடப்பது நடக்கட்டும் என்பது போல மைக்கல் நின்றிருந்தான். மாறனிடமும் வழக்கமான விசாரணை தொடங்கியது. மைக்கலைப் போன்றே மாறனிடமும் சத்தியம் வாங்கினார்கள். மாறன் கையைக் கட்டி நின்று கொண்டான். அரசு தரப்பு வக்கீல் தன் கோட்டைச் சரி செய்துகொண்டு அவனிடம் வந்தார். “ஹெராயின் கடத்துனீங்களா மாறன்?” “ஆமாங்கய்யா..” மாறன் தலை குனிந்தவாறே பதிலளித்தான். “இது அரசாங்கத்துக்கு விரோதம்னு உங்களுக்குத் தெரியுமா?” “தெரியும்ங்கய்யா.. ஏதோ பணத்துக்கு ஆசைப்பட்டுக் கடத்திட்டேன். மாட்டிக்க மாட்டேன்னு நெனைச்சேன். ஆனா போலீஸ் புடிச்சுட்டாங்கய்யா…” “சரி.. இதோ எதிர்ல நிக்கறாரே.. இவர் யாருன்னு தெரியுதா?” “ம்ம்.. தெரியுங்கய்யா.. இவரு ராயர் அய்யாவோட புள்ள.. பேரு மைக்கல். இவரும் நானும்தான் ஒண்ணா சுத்துவோம்”. “சுத்துவோம்னா? என்ன அர்த்தம்? கோர்ட்ல எது பேசுனாலும் தெளிவாத்தான் பேசணும்”. “எனக்கு படிப்பு ஏறலைய்யா. அதனால சும்மா அவருகூட உக்காந்து பொழுதைப் போக்குவோம். ஊருக்குள்ள அங்க இங்கையின்னு போயிட்டு வருவோம். எப்பயும் ஒண்ணாத்தான் இருப்போம்ங்க அய்யா..” இப்போ ஹெராயின் கடத்தியிருக்கீங்களே.. அதுல இவருக்கும் பங்கு இருக்கா?? இல்லிங்கய்யா… மாறன் மறுத்துக் கூறியதும் மொத்த நீதிமன்றமும் உன்னிப்பானது. 7 பொழுது இனிதாக விடிந்தது. முகில் லேட்டாகத்தான் எழுந்தான். அவசரமாய் குளித்துக் கிளம்பினான். “என்னங்க இது? கழுத்துல சிவந்து போயிருக்கு?” மது கேட்டாள். “உன் கைங்கர்யம் தான். விடிஞ்சதுக்கு அப்புறம் ஒண்ணுமே தெரியாத மாதிரி இப்போ என்னைக் கேட்டா? நல்ல பிள்ளை ஆகிடுவியா?” “போங்க” மது அவனை அடிக்கக் கையை ஓங்கினாள். அவன் அவளைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான். மது அவனைத் தள்ளி விட்டாள். முகில் சிரித்துக்கொண்டே அலுவலகம் கிளம்பினான். ஆபீஸ் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. முகில் ஒவ்வொரு கேபினாகக் கடந்து நேராக மேனேஜரின் அறைக்குச் சென்றான். “குட்மார்னிங் சார்”. “வா முகில், என்னப்பா திடீர்னு இந்தப்பக்கம்?” மேனேஜர் ஸிஸ்டமைப் பார்த்தபடியே பேசிக்கொண்டிருந்தார். “இல்ல சார், நேத்து ஒரு மெடிக்கல் எமர்ஜென்சி , கார் ஆக்சிடென்ட். அதான் சடனா லீவ் போட வேண்டியதாப் போச்சு. சாரி சார்” “இதப் பாருங்க முகில்.. நான் ஒண்ணும் மத்த மேனேஜர் மாதிரி நான்தான் இங்க ராஜா.. எனக்கு ரெண்டு கொம்பு மொளைச்சுருக்கு அப்படி எல்லாம் ஆட்ற ஆளு இல்ல. என்னைப் பொறுத்த வரை நீங்க எல்லாரும் ஒரே டீம் தான். அதுதான் நானும் உங்ககிட்ட ஒரு பிரண்ட் மாதிரி பழகிட்டு இருக்கேன். ஆனா அதையே நீங்க அட்வான்டேஜா எடுத்துக்கக் கூடாது.” "சார்.. என்னைப் போய் இப்படி எல்லாம் சொல்லறீங்களே சார்.. ஆயிரம் தான் இருந்தாலும் நான் உங்க விசுவாசி.. என்னையே போய் அட்வான்டேஜ் எடுத்துக்கறேன்னுலாம் சொல்லலாமா? “உடனே ஐஸ் வைக்க ஆரம்பிச்சுருவீங்களே. ஆபீஸ் ஒர்க்ல டிசிப்ளினும் ரொம்ப முக்கியம்ப்பா. நீங்க பாட்டுக்குக்கு வந்துட்டுப் போறதுக்கு இது என்ன சத்திரமா?” “லாஸ்ட் பிராஜெக்டுக்கு நீங்க பத்து நாள்தான் டைம் குடுத்தீங்க. நான் அதுக்குள்ள கரெக்ட்டா சப்மிட் பண்ணலையா” “எல்லாத்துக்கும் ஒரு பதில் வெச்சுருப்பீங்க. உங்க லாஸ்ட் பிராஜெக்ட் முடிஞ்சு க்ளையண்ட்கிட்டயே போயாச்சு. இந்த பிராஜெக்ட் என்னாச்சு? நாளைக்கு டெட்லைன். இப்போ போய் நீங்க லீவ் போட்டுட்டு இருந்தா க்ளையண்ட் கிட்ட யாரு பதில் சொல்லுறது?” “சரி சரி போங்க, லெட்டர் எழுதி சப்மிட் பண்ணீட்டு வேலைய ஆரம்பிங்க, இன்னைக்கு ஈவ்னிங் குள்ள எனக்கு உங்க ப்ராஜக்ட் ரிப்போர்ட் வரணும். நாளைக்கு சப்மிட் பண்ணலைன்னா உங்க மேலதான் நான் ஆக்ஷன் எடுக்க வேண்டியிருக்கும்” அவர் பேச பேச முகிலுக்கு திடீரென்று தலை ஏனோ சுற்றுவது போல் வந்தது. அவர் பேசும் வார்த்தைகள் எதிரொலியாய் இவன் காதில் விழுந்தது.. நொடிகள் செல்லச் செல்ல என்ன பேசுகிறார் என்றே தெரியாத நிலைக்கு வந்தான். பதில் சொல்ல யத்தனிக்கும்போது நா குழறியது போல தெரிந்தது. “முடிச்சர்லாம் சார், நான் பாத்துக்கறேன்” அனிச்சையாகக் கூறியவன் அப்படியே திரும்பினான். கதவு கைப்பிடி எங்கோ தொலைவில் இருப்பது போல் பட்டது. திடீரென்று என்னச்சு? அவன் யோசித்துக்கொண்டே தடுமாறி நடந்தான். கதவைத் திறக்க தடுமாறுவதைக் கண்ட மேனேஜர் “முகில், ஆர் யூ ஓகே?” என வினவினார். “யெஸ் யெஸ் சார் ஐயாம் ஓகே” ஒரு வழியாகக் கதவைத் திறந்து வெளியே வந்தான். அவன் தன் கேபினுக்குச் சென்று கணிணியை எழுப்பினான். ஏனோ வியர்த்து வந்தது. தலை சுற்றல் இன்னும் நிற்கவில்லை. தன்னைச்சுற்றிலும் ஏதோ மாய உலகம் போல் தோன்றியது. தலையை தூக்கவே முடியாது போல் வந்தது. சமாளித்து வேலை செய்தான். லஞ்ச் அவரில் கேரியரைத் திறந்தான். சாப்பாட்டிலிருந்து கெட்ட வாடை வீசியது. எப்படி கெட்டுப்போயிருக்கும்? ஒருவேளை சரியாகக் கழுவாமல் போட்டிருப்பாளோ? சே. மதுவுக்கு இன்னும் பொறுப்பே வரவில்லை. “முகில், எப்படி இருக்கீங்க?” சக அலுவலர் தலையை நீட்டிக் கேட்டவர் அதிர்ச்சியானார். “என்ன சார் இப்படி மழைல நனைஞ்ச மாதிரி வேர்த்து போயிருக்கு? என்னாச்சு உங்களுக்கு ?” “ஒண்ணுமில்ல சார், தலைவலி, அதான்” “வெறும் தலைவலியின்னா வேர்க்கவா செய்யும்? நான் வேணும்னா டாப்லட் தரவா?” “வேண்டாம் ஸார், சரி ஆகிடும். வெறும் டயர்ட் தான் கொஞ்சம் ட்ராவல் அதிகமாப் போச்சு”. “வெறும் டயர்ட் ங்கறீங்க, இப்படி வேர்த்து போயிருக்கு? உங்க சட்டை எல்லாம் பாருங்க. நனைஞ்சே போச்சு. இந்தாங்க, இத போடுங்க, பத்து நிமிஷத்துல சரி ஆகிடும்” அவர் தன் டேபிளில் இருந்து மாத்திரை ஒன்றை எடுத்து நீட்டினார். “அதுதான் வேண்டாம்ங்கறேன்ல? சும்மா ஏன் தொந்தரவு பண்றீங்க? உங்களுக்கு ஒரு தடவை சொன்னாப் புரியாது?” முகில் டாப்லட்டை வாங்கித் தூர எறிந்தான். அது சுவரில் பட்டுத்தெறித்தது.அவர் மிரட்சியுடன் இவனையே பார்த்தார். “கூல் கூல், ஓகே ஓகே இப்போ என்னாச்சு? வெறும் டேப்லட் தான? அதுக்கு ஏன் இப்படி ரியாக்ட் பண்றீங்க? பிடிக்கலனா விடுங்க”. நடந்த நிகழ்வு அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது. என்ன நடக்கிறது.. ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று அவனுக்கே புரியவில்லை. ஒரு நிமிஷம் என்று எழுந்து போனான். ரெஸ்ட் ரூமில் குழாயைத் திறந்து விட்டான். தண்ணீரைக் கைகளில் எடுத்து முகத்தில் அறைந்தான். சிலீரென அடித்தது. கண்ணாடியில் முகத்தைப்பார்த்தான். கண்ணாடியில் பார்த்தபோது கண்ணாடியில் யாரோ நிற்பது போலத் தெரிந்தது. அவனையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். முகில் உற்றுப்பார்த்தான். திரும்பி "என்ன சார் வேணும்? என்றான். அவர் எதுவுமே பேசவில்லை. எரிச்சலானான். இன்னொரு முறை நீரை கை நிறைய அள்ளி திரும்பிப்பார்த்தான். யாருமே இல்லை. கண்ணாடியைத் துடைத்துப்பார்த்தான். அந்த நபர் அவன் அருகில் நின்று கொண்டு இருந்தார். திரும்ப யத்தனித்த போது அவனால் அசையக்கூட முடியவில்லை. அந்த மர்ம மனிதன் தன் கைகளால் முகிலின் கழுத்தை நெரிக்கத்தொடங்கினான். முகில் கத்த நினைத்து வாயைத் திறந்தான். ஹக் ஹக் என்பது தவிர சத்தம் எதுவும் வரவில்லை. கண்கள் பிதுங்கி வருவதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. கை கால்களைக் கூட யாரோ அழுத்திப்பிடிப்பது போன்று இருந்தது. உடம்பை வைத்துத் துள்ளினான். தலை தரையில் மோதியது. எழுந்து கண்ணாடியில் பார்த்தான். வலது நெற்றியில் நீளமான வெட்டு இருந்தது. ரத்தம் ஒழுகியது. கண்ணாடியில் மீண்டும் அதே உருவம் தெரிந்தது. முகில் கண்ணாடியை ஓங்கிக் குத்தினான். இம்முறை கைகள் கண்ணாடிக்குள்ளிருந்து நீண்டது. பின்னால் செல்ல நினைத்து கால் வைத்தான். டைல்ஸ் வழுக்கியது. அப்படியே சரிந்தான். உடைந்த கண்ணாடித் துண்டுகள் சுவரிலிருந்து தாமாகவே தெறித்து விழுந்தன. என்ன நடக்கிறது? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. உடைந்த துண்டுகள் எல்லாம் தரையில் ஊர்ந்து வந்து ஒன்றுடன் ஒன்று இணையத் தொடங்கின. முகில் எல்லாவற்றையும் வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு மனித உருவத்திற்கு மாறியது. அது கிட்டத்தட்ட பாதி அழுகிய பிணம் போல் இருந்தது. அதன் உடலில் புழுக்கள் நெளிந்துகொண்டு இருந்தது. பாதி அழுகிய அந்த பிணம் தன் தலையை உயர்த்தி முகிலைப் பார்த்தது. அவன் அசையக்கூட த்ராணியற்றுக் கிடந்தான். தன் எலும்பு துருத்திய கைகளைப் பார்த்த அந்த உருவம் மெதுவாக தன் கைகளை அசைத்து நகரத் தொடங்கியது. மளுக் களுக்கென்று சத்தத்துடன் முகிலை நோக்கி ஊர்ந்து வந்தது. அவன் வெளிறிப்போய் இருந்தான். தன் இரு கைகளையும் முகிலின் நெஞ்சின் மீது வைத்த அந்த பினம் அவன் முகத்தின் அருகில் வந்தது. முகில் அலறத்தொடங்கி தன் வாயைத் திறந்த தருணம் தானும் அவனைக்கொல்லும் ஆவேசத்துடன் அவன் முகத்தின் அருகில் வாரெனக் கத்தியது. புழுக்கள் அறையெங்கும் சிதறின. முகில் தன் முழு பலத்தையும் சேர்த்து அதைத் தள்ளி விட முயன்றான்.தன் அடியில் கிட்டத்தட்ட ஒரு கரும்புசக்கை போல் மாட்டிக்கொண்டிருந்தான். பெருங்குரலெடுத்து ஓவென அலறினான். டக்கென ரெஸ்ட் ரூம் கதவு திறக்கப்பட்டது. ஆபீஸ் முழுவதும் அவன் குரல் கேட்டு அங்கு குழுமி இருந்தது. முகிலின் நிலையைப் பார்த்த அனைவரும் அரண்டு போய் நின்றனர். முகில் அறையின் ஒரு மூலையில் குழந்தையைப் போல் கை கால் குறுக்கிக் கிடந்தான். நெற்றியில் இருந்து வழிந்த ரத்தம் சட்டையை முழுவதுமாய் நனைத்து இருந்தது. கழிவறை நீர் வழிந்து அவன் அருகில் சொதசொதவென இருந்தது. ரத்த விளாறாய் இருந்த அவனுக்கு அருகில் செல்ல எவருக்கும் துணிவில்லை. மானேஜர் அவசர அவசரமாக ஓடி வந்தார். கூட்டத்தை விலக்கி முன் சென்று பார்த்தார். முகில் கழிவறையில் ஏதோ அடிபட்ட புழுவைப் போல் நெளிந்து கொண்டிருந்தான். “ஷிட், வாட் ஹேப்பண்ட் டு ஹிம்?” அவன் பக்கத்தில் போய்ப் பார்த்தார். “கண்ணாடி கண்ணாடி” என்றவாறே மயங்கிப்போனான். கண்ணாடி புதிது போல பளிச்சிட்டது. “முகில்!! என்ன கண்ணாடி ல? அங்க ஒண்ணும் இல்லையே? என்னாச்சு உங்களுக்கு?” அவனை உலுக்கினார். முழுதும் நினைவே இன்றிச் சரிந்து கிடந்தான். ஆம்புலன்சிற்கு கால் செய்தார்கள், மதுவிற்கும் தகவல் சொன்னார்கள். அடுத்த 15 நிமிடத்தில் முகில் ஆம்புலன்சில் கிடத்தப்பட்டிருந்தான். முழு அலுவலகமும் அவனையே மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது. 8 மாறனின் ஒரு பதிலால் வழக்கே திசை திரும்பும் நிலைக்கு ஆகியிருந்தது. மைக்கல் தன் கண்களையே நம்ப முடியாமல் ஆச்சரியத்தில் உறைந்து போயிருந்தான்.. ராயரைத் தேடிப் பார்த்தான். ராயர் சிறு புன்னகையுடன் அவனையே பார்த்தார். பெருமிதமாக மீசையை முறுக்கி விட்டுக் கொண்டார். மைக்கல் திரும்பி வக்கீலைப் பார்த்தான். வக்கீல் இனி அவ்வளவுதான் நான் பார்த்துக் கொள்கிறேன் என்பதுபோல தலையசைத்தார். அரசு தரப்பு வக்கீல் கொஞ்சம் ஆடித்தான் போயிருந்தார். மாறனின் இந்த பதிலை அவர் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை. “கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க.. இவருக்கு இதில் சம்பந்தம் இல்லையா?” “அப்ஜெக்ஷன் மை லார்ட்.. கூட்டாளியே இதில் சம்பந்தம் இல்லை என்று சொன்னபிறகும் இப்படிக் கேள்வி கேட்பது அவரைக் குற்றவாளியாக்க முனைவது போலுள்ளது..” “க்ராண்டட்…” வழக்கு முழுவதும் மைக்கலுக்கு சாதகமாகி விட்டதாகவே தெரிந்தது. அரசு தரப்பு வக்கீல் தன் விசாரணையை அதற்கு மேலும் தொடர விரும்பாமல் முடித்துக் கொண்டார். மைக்கலின் தரப்பு வக்கீலுக்கு வாதாட வேண்டிய தேவையே இல்லாது போனது. மைக்கலுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லாதபோதும் அவரைக் கைது செய்தது, அடித்தது, பொய் வழக்கு போட முயன்றது, தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக என இன்ஸ்பெக்டருக்குக் கண்டங்கள் விதிக்கப்பட்டது. மாறனுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மைக்கல் அன்றே விடுதலை செய்யப்பட்டான். மைக்கல் ஓடி வந்து தன் அப்பாவைக் கட்டிக் கொண்டான். ராயரும் அவனை ஆரத் தழுவிக் கொண்டார். தன் வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தபோது தான் எப்படி வெளியே வந்தோம்.. அதுவும் விடுதலை ஆனோம் என்பது அவனுக்கு இன்னமும் நம்ப முடியாததாகவே பட்டது.. “எப்படிப்பா என்னை வெளியில கொண்டு வந்தீக?” “நீ போட் எடுத்துட்டுப் போனது.. யாரு யாரு உனக்குக் கூட்டு எல்லாம் எனக்குத் தெரியும்… ஆனா இந்த பேச்சி மவன நீ கூட்டிட்டு போவன்னு நான் எதிர்பாக்கல.. அதுவும் அவன் மூலமா இந்த இன்ஸ்பெக்டர் பய இப்பிடி விளையாடுவான்னு நெனைக்கல.. அதான் உன்னப் பாக்க ஸ்டேஷன் வந்தப்ப இவன் கூட இருந்தப்ப அதிர்ச்சி ஆனேன். காரை எடுத்துட்டு நம்ம பயலுவளோட நேரா பேச்சி வீட்டுக்குப் போனேன். உம்மவன் ஏதாவது வாயத் தொறந்தான்னு தெரிஞ்சிது.. கோர்ட்டுக்குள்ளயே அறுத்துப் போட்டுருவேன்னு சொன்னேன்.. போக ஒரு அஞ்சு லட்சம் பணத்தையும் கொடுத்தேன். இதுக்கு அப்பறமும் அவ பேசுவான்னு நீ நெனைக்கற??” “நான் வெளியில வருவேன்னு நானே நெனைக்கவே இல்லப்பா… மொதல்ல வீட்டுக்குப் போகலாம்ப்பா.. ஆனா மாறன நெனைச்சாத்தான் கவலையா இருக்கு..” “அதெல்லாம் பாக்காத.. ரெண்டு வருசம் தான.. வெளியில வந்த உடனே நாமளே மார்க்கெட்குள்ள கடை வெச்சுக் குடுத்திடுவோம்..” “லே… ஒரே குத்து… அந்த மைக்கல் பய இனி இருக்கக் கூடாது..” இன்ஸ்பெக்டர் ஒருவனுடன் பேரம் பேசிக் கொண்டிருந்தார். “என்ன சார்… சாட்சினு கூட்டியாந்துட்டு குத்தச் சொல்றீயளே.. அதும் கோர்ட்டுக்குள்ள..” “அதெல்லாம் உனக்கென்ன லே.. உம்மேல எந்தக் கேசும் போடாம நான் பாத்துகிடுதேன். அப்பனும் புள்ளையையும் நிரம்பவே ஆடிட்டானுவ.. செல்லுக்குள்ளாற முடிக்கலாம்னு தான் பொறுமையா இருந்தேன். இனியும் விட்டு வெச்சா அது எனக்கு நல்லதில்ல.. எப்படியோ வெளியில வந்துட்டானுவ. இனி அவனுங்க குறி நானாத்தான் இருக்கும்..” “அது உங்க பிரச்சனை சார்.. எதாவது சமாதானம் பேசிக்கிடுங்க.. ஒங்க பேச்சக் கேட்டு மைக்கலைக் குத்துனா ராயரு கையால நானல்ல சாவணும்?” “இன்னைக்கு மைக்கலை முடி லே.. நாளைக்கு ராயரை நானே முடிச்சிர்றேன்… அதுக்குப் பெறவு மொத்த தூத்துக்குடியும் எங்கையில தான்லே…” “என்ன இருந்தாலும் ராயரு மவனில்லைங்களா? அதுதான் கை வைக்க யோசிக்கிறேன்..” இன்னும் பத்து நிமிடத்தில் இருவரும் கிளம்பிப் போய் விடுவார்கள். அவர்கள் சென்றுவிட்டால் பிறகு கண்டிப்பாக ராயர் எதாவது செய்வார் இல்லையென்றாலும் மைக்கல் கண்டிப்பாக நம்மை விடமாட்டான்.. இனியும் பேசிக் கொண்டிருப்பது ஆபத்தையே வரவழைக்கும் என நினைத்த இன்ஸ்பெக்டர் கோபமானார். “என்னலே.. பேசிக்கிட்டே போற? இப்ப மட்டும் நீ போய் குத்தல, உம்பேருல எட்டு கேசு இருக்கு… நானே உன்னை என்கவுண்டர்ல முடிச்சுருவேன். நாளைக்குப் பொழுது தாண்ட மாட்ட.. ஜீப்புல கத்தி இருக்கு.. ஒரே சொருகா குத்தீட்டு ஓடு… உன்னையத் தொரத்தற மாதிரி வந்து நானே தப்பிக்க வைக்கிறேன்.. ம்ம்.. போ லே…” இவரிடம் நன்றாக மாட்டிக் கொண்டதாக நினைத்து வேறு வழியின்றி அவன் ஜீப்பின் பின்பக்கம் மறைத்து வைக்கப் பட்டிருந்த கத்தியை எடுத்துக் கொண்டான். இன்ஸ்பெக்டர் அவனுக்குக் கண்ணால் சைகை காட்டிக் கொண்டே ராயரிடம் பேச்சுக் கொடுத்தார். “என்ன ராயரே.. புள்ளைய சொன்ன மாதிரியே வெளியில கூட்டிகிட்டு வந்துட்டீய…” “தப்புப் பண்றவன்தான உள்ள போகணும்? என் மவன் ஏன் போகணும் இன்ஸ்பெக்டர்?” “அதுதான… நீரு என்ன தப்புப் பண்ண பேச்சி வீட்டுக்குள்ள போனீயரு?” ராயர் முறைத்தார். ஆனால் எதுவும் பேசவில்லை. இவன் கண்டிப்பாக ஏதோ திட்டத்துடன் தான் வந்திருக்கிறான். இவனை கவனிக்க வேண்டிய இடத்தில் கவனித்துக் கொள்ளலாம் என நினைத்தார். மைக்கலுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “மறுக்கா சொல்லுங்க சார்.. கேக்கலை..” மைக்கல் கையை முறுக்கியபடியே வந்தான்.. “மைக்கலு.. நம்ம சேத்தில வச்சி பாத்துக்கலாம் லே.. பொறு..” ராயர் மைக்கலைக் கையமர்த்தினார். “என்னலே.. அப்பனும் புள்ளையும் பாசத்துல பொங்குதீயளோ?? இது இன்னும் முடியலலே.. உங்கள ஒழிக்கற வரைக்கும் நான் ஓய மாட்டேன்” இன்ஸ்பெக்டர் தோற்றுப்போன வலியில் பேசினார். “அதுக்கு மொதல்ல நீங்க இருக்கீங்களான்னு பாக்கணும் சார்..” மைக்கலுக்கும் கோபம் வந்தது. ராயர் மைக்கலை இது கோர்ட்டு மைக்கலு.. என அடக்கினார்.. இனி அங்கிருந்தால் ஆபத்து , இருவரும் அடித்துக்கொண்டால் இன்ஸ்பெக்டர் அதைத் தனி கேஸாக எழுதுவான் என நினைத்து மைக்கலை தன் கையோடு கூட்டிக் கொண்டு காருக்கு விரைந்தார்.. அப்போது திடீரென எங்கிருந்தோ ஓடி வந்த ஒருவன் மைக்கலை கத்தியால் குத்த முயன்றான். ராயர் மைக்கலை அணைத்துப் பிடித்திருந்ததால் கத்தி அவர் விலாவில் இறங்கியது. ஒரு சில விநாடிகளுக்குள் ராயரின் சட்டை முழுவதும் சிவப்பானது.. “அப்பாஆஆஆ…” மைக்கல் சரிந்த ராயரைப் பிடித்தான். இன்ஸ்பெக்டர் ஒரு நொடியில் சுதாரித்தார். காரியம் முடிந்து விட்டது. இனி இவன் இருந்தால் ஆபத்து என தன் திட்டத்தின் அடுத்த பகுதியை செயல்படுத்தினார். துப்பாக்கியை எடுத்து குத்தியவனை சுட்டார். குண்டு அவன் கையில் பாய்ந்தது. அவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே இன்ஸ்பெக்டரை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது. கடைசி நேரத்தில் தன்னை சிக்க வைத்த வெறியில் வேறு இருந்தான். இன்ஸ்பெக்டர் தன் பக்கமே திரும்பியது அவனை மேலும் தூண்டி விட்டாற்போல் ஆனது. இன்ஸ்பெக்டரை ஒரு நொடி ஆத்திரத்தில் பார்த்தபடியே கத்தியுடன் இன்ஸ்பெக்டரின் மேல் பாய்ந்தான். இம்முறை சுட்ட குண்டு அவன் அருகில் இருந்ததால் சரியாக அவன் மார்பில் துளைத்த அதே நொடி அவன் கையில் இருந்த கத்தி இன்ஸ்பெக்டரின் கழுத்தில் இறங்கி இருந்தது. கோர்ட் வளாகமே களேபரமாகி இருந்தது. மைக்கலின் மடியில் கிடந்த ராயருக்கு லேசாக மூச்சு மட்டும் வந்தது. இன்ஸ்பெக்டரும் அவனும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.. அவர்கள் இருவரையும் புகைப்படக்காரர்கள், வக்கீல்கள் என அங்கிருந்த அனைவரும் சூழ்ந்து கொண்டனர். ராயரை ஒருவரும் கவனிக்கவில்லை. மைக்கல் ராயரைத் தன் நெஞ்சில் சாய்த்துப் படுக்க வைத்தான். ராயரின் நெஞ்சில் காது வைத்துப் பார்த்த மைக்கல்.. “அப்பாவுக்கு உயிர் இருக்கு அவரைக் காப்பாத்துங்க” எனக் கத்தினான். நீதிமன்ற வளாகத்தினுள் அவசர உதவிக்கென நின்றிருந்த ஆம்புலன்ஸ் ராயரை அள்ளிக்கொண்டு மருத்துவனைக்கு விரைந்தது. அடுத்த பத்தாவது நிமிடத்தில் அரசு மருத்துவமனை வாசலை அடைந்தது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ஆயத்தமாகினர். மைக்கல் கண்ணாடியின் வழியாகத் தன் தந்தையையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். பத்து நிமிடத்திற்கு ஒரு தரம் உள்ளே டாக்டரோ அல்லது நர்ஸோ போவதும் வருவதுமாக இருந்தனர். ராயருக்கு குத்துப் பட்டுவிட்டது எனும் செய்தி கேட்ட மாத்திரத்தில் அவன் ஊர் முழுவதும் மருத்துவமனை வளாகத்தினுள் திரண்டிருந்தது. மைக்கலுக்கு இப்பொது தான் எல்லாம் சரியாகி வருவதாகித் தோன்றிக் கொண்டிருந்த சமயம், ஒரே நொடியில் இப்படி மாறும் என்று அவன் நினைக்கவே இல்லை. சட்டை எல்லாம் அவன் அப்பாவின் ரத்தக்கறை படிந்திருந்தது. சட்டையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தபடி மைக்கல் குலுங்கிக் குலுங்கி அழுதான். தன் தோளை யாரோ பரிவுடன் தட்டிக் கொடுப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. மைக்கல் தலை நிமிர்ந்து பார்க்கும்போது அங்கே ஃபாதர் ஜெரால்டு கனிவுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். மைக்கல் செய்வதறியாது கலங்கி ஃபாதரையே கட்டிப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான். “கவலைப்படாத மைக்கல்.. ராயருக்கு எதுவும் ஆகாது… கர்த்தர் சோதிப்பார்.. ஆனா கைவிட மாட்டார்”. “இங்க மைக்கல் யாரு.. பேஷண்ட் உங்க கூட பேசணும்னு சொல்றாரு.. இப்போதான் ஸ்டிச்சஸ் போட்டிருக்கோம்.. அவர ரொம்ப ஸ்டெரெய்ன் பண்ண விடாதீங்க” நர்ஸ் அழைத்தார். ஃபாதரும் மைக்கலும் உள்ளே சென்றனர். ராயர் வயிற்றில் பெரிய கட்டுடன் படுத்திருந்தார். முகத்தில் ஆக்ஸிஜன் முகமூடியை ராயர் கழட்டினார்.. அவர் பேசும் நிலைமையில் இல்லை. இருந்தாலும் பேசியே தீர வேண்டும் என்று முயற்சி செய்தார். மைக்கலை கை அசைத்து அவரின் அருகில் வருமாறு அழைத்தார்.. “அப்பா…” மைக்கல் அவர் அருகில் போனான்.. ராயரின் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான். இருவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. மைக்கல் தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். ராயரின் அருகில் குனிந்தான்.. ராயர் தன் உடலில் மிச்சம் இருக்கும் பலத்தை எல்லாம் கூட்டிப் பேசத் தொடங்கினார். “மைக்கலு.. நான் பொழைக்க மாட்டேன்பா… நம்ம ஊரையும் ஜனங்களையும் இனி நீதான்பா பாத்துக்கணும்..” “அப்படியெல்லாம் பேசாதீங்கப்பா.. நீங்க இன்னும் ஒரே வாரத்துல பழையபடி ஆகிடுவீங்க…” “இல்ல மைக்கலு.. நான் பொழைக்க மாட்டேன்.. உன்னை இன்னைக்கு வரைக்கும் நான் நல்லாதான் கவனிச்சுருக்கேன்.. உன் மனசு கோணும்படி எதாவது செஞ்சிருந்தா மனசுல வச்சிக்காத..” “அப்பா.. நான்தான் உங்களுக்கு நல்ல புள்ளையா நடந்துக்கல.. நீங்க என் அப்பாப்பா… உங்களுக்கு என்னை வெட்டிப் போட்ற உரிமை கூட இருக்கு.. இப்படியெல்லாம் பேசி என்னை நோகடிக்காதீங்க..” “நீ பேசின வார்த்தையே ரொம்ப நிறைவா இருக்குப்பா.. உன்கிட்ட இன்னொரு விசயத்தையும் சொல்லணும் பா .. நீ நான் பெத்த புள்ள இல்ல..” “என்னப்பா சொல்றீங்க..” மைக்கலின் இதயமே வெடித்துவிடும் போலானது. “ஆமாப்பா.. நீ நான் பெத்தெடுத்த புள்ள இல்ல. நாங்க உன்னைத் தத்து எடுத்தோம். இந்த விஷயம் தெரிஞ்ச ஒரே ஆள் நம்ம ஃபாதர் அய்யா மட்டும்தான். அவர்கிட்ட உன்னை ஒப்படைக்கிறேன்…” அதோடு ராயரின் மூச்சும் அடங்கி விட்டிருந்தது. மைக்கல் அப்பா… எனக் கதறி அழுதான். 9 மது அழுதுகொண்டே நின்றிருந்தாள். முகிலுக்கு நெற்றியில் 6 தையல்கள் போடப்பட்டிருந்தது. அவன் இன்னும் மயக்கத்தில்தான் இருந்தான். அலுவலகத்தில் வழுக்கி விழுந்ததாகக் கூறினார்கள். ஒரு வாரம் லீவ் எடுத்துக்கொண்டு வரச் சொன்னார்கள். முகில் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தான். நிஷாவைத் தூக்கிக்கொண்டு மது வெளியே சென்றாள். முகில் மறுநாள் கண்விழித்தான். அவன் கண்ணெல்லாம் கருவளையம் வந்திருந்தது. வீரியமான மருந்துகளுக்கு அவன் உடல் ஏற்றுக் கொள்ளாமல் சோர்வாகக் காட்சியளித்தான். “என்னங்க ஆச்சு? நான் ரொம்ப பயந்து போய்ட்டேன். பாத்து நடக்கக் கூடாதா?” மது ஆதரவாய்த் தலையைத் தடவினாள். அவள் அருகில் இருந்தாலும் முகில் எதுவுமே பேசாமல் எங்கோ வெறித்துக்கொண்டு இருந்தான். அவள் பேசுவதைக் கேட்டது போலவே இல்லை. “என்னங்க எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க?, இந்தாங்க, மருந்து கொண்டு வந்துருக்கேன் சாப்பிடுங்க” முகிலிடம் எந்த பதிலும் இல்லை. அவன் பார்வை அப்படியே நிலை குத்திப்போய் இருந்தது. கட்டிலின் மேல் சம்மணமிட்டு உட்கார்ந்த அவன் நேரே சுவரையே வெறித்துப் பார்த்த படியே அமர்ந்திருந்தான். மது அவன் அருகில் சென்றாள். அவன் கையைப்பிடித்து மாத்திரையை வைக்க யத்தனித்தாள். “ஏய்ய்ய்ய்ய்….. நாயே ….போடி” முகில் மாத்திரையைத் தட்டி விட்டான். மது மிரட்சியுடன் பார்த்தாள். பளிரென அவள் கன்னத்தில் அறைந்தான். ஒரு நிமிடத்தில் அவளுக்கு உலகமே சுழல்வதைப் போல் வந்தது. அவளைப் பிடித்து சுவற்றின் பக்கம் தள்ளினான். மது தட் என மோதி தரையில் விழுந்தாள். முகில் பெரு மூச்சு வாங்கியபடி அவளையே முறைத்தான். கட்டிலின் மேல் எழுந்து நின்று அவளைக் கொன்று விடுவதைப் போல் முறைத்தான். நாக்கைக் துருத்தித் கொண்டு அவன் நின்ற கோலத்தைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அவளை உதைக்கக் காலைத் தூக்கினான். அப்படியே மயங்கி கட்டிலில் விழுந்தாள்.. மது அறையை விட்டு வெளியே வந்தவள் கன்னத்தைத் தடவிப் பார்த்தாள். அவன் கைவிரல்கள் ஐந்தும் பதிந்திருந்தது. அவராகவே வரட்டும் என அடுத்த வேலைகளில் மூழ்கினாள். குழந்தைகள் மாலையில் வீடு திரும்பினர். “அப்பா எங்கம்மா?” நரேன் கேட்டான் “அப்பா உள்ளதாண்டா தூங்கறாரு. தலை வலிக்குதாமா. ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காரு”. “வெளையாட வரமாட்டாரா அம்மா?” “இல்லடா, அப்பாக்கு ஒடம்பு சரி இல்லல்ல?, சீக்கிரம் சரி ஆன உடனே வந்துருவாரு, நீ ஹோம்வொர்க் எடுத்து எழுது” குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாள். அடுத்த நாள் காலை.. மது குழந்தைகளை பள்ளிக்குக் கிளப்பினாள். வீட்டில் எல்லாவற்றையும் எடுத்து வைக்க, சமையலைப் பார்க்க, நேற்றைய நிகழ்வுகள், கால தாமதம் ஆவது என மது பத்து எண்ணங்களை ஒரே சமயத்தில் சமாளித்து வேலையும் செய்து கொண்டிருந்தாள் “அம்மா, என் புக்கை தம்பி எடுத்து எங்கையோ போட்டுட்டான்மா” நிஷா நரேனைப் பிடிக்க ஓடினாள். “நான் எடுக்கவே இல்லம்மா நரேன் அழத்தொடங்கினான்”. “சரி சரி சண்டை போடாம கிளம்புங்க அம்மா சமைக்கணும் இல்ல?” மது குழந்தைகளை சமாளித்துவிட்டு இருவருக்கும் லஞ்ச் பாக்சில் உணவுகளை அடைத்தாள். முகிலுக்கு சூடாகக் கஞ்சி வைத்தாள். நேற்று முழுவதும் முகில் ஒன்றுமே சாப்பிட வில்லை. தலையில் வேறு அடிபட்டிருக்கிறது. இன்றைக்கு கட்டைப்பிரிது மருந்து வைத்துக் கட்ட வேண்டும். குழந்தைகளை அனுப்பிவிட்டு முகிலைப் போய் பார்க்கலாம் என் எண்ணினாள். “அம்மா என் புக்கை வாங்கி கொடும்மா இன்னைக்கு டெஸ்ட் இருக்கு” நிஷா கூப்பிட்டாள். மதுவுக்கு எரிச்சலானது. “உன் புக்ஸ் எல்லாம் நீதான் பாப்பா வெச்சுக்கணும். அம்மாவே எல்லாம் எடுத்துகொடுக்க முடியுமா? எனக்கென்ன 10 கையா இருக்கு?” பாப்பா மலங்க மலங்க விழித்தாள். அவளைப் பார்க்கவும் பாவமாய்த்தான் இருந்தது. மது சமையலை முடித்துவிட்டு தேடத்தொடங்கினாள். நேற்று அவள் பையில் வைத்தது நன்றாக நியாபகம் இருந்தது. திடீரென்று எங்கே போகும்? டெஸ்ட் என்றாளே? இரவில் எடுத்து ஒருமுறை திருப்பிப் பார்த்திருப்பாள்.இந்தக் குழந்தைகளை வளர்ப்பதே பெருங்கஷ்டம். முனகிக்கொண்டே தேடினாள். குழந்தைகள் பள்ளிக்குப் போவதும் வருவதுமாய் இதுவே சுழற்சியாக இரண்டு நாட்கள் போனது. நடுவே முகில் எதற்கும் எழவே இல்லை. அடுத்த நாள் காலை மது குழந்தைகளைக் கிளப்பினாள். “இன்னைக்கு அப்பா ஆபீஸ் போகலையா மா?” “இல்ல நிஷாக்குட்டி அப்பாக்கு உடம்பு சரியில்ல, அப்பறம் உன்னையும் தம்பியையும் பாட்டி ரொம்ப மிஸ் பண்றாங்களாம். கொஞ்ச நாள் பாட்டி கூட இருந்துட்டு வரலாம். என்ன?” “சரி மா!!” குழந்தைகள் டாடா காட்டியபடியே ஸ்கூல் வேனில் ஏறிச் சென்றனர். களைப்பு என முதலில் நினைத்த மது, இல்லை, எதற்கும் ஒருமுறை டாக்டரைக் கேட்பது நல்லது என நினைத்தாள். ஒரு நாள் என்றால் கூட பரவாயில்லை. ஆனால் இரண்டு நாட்கள் படுக்கையாகவே கிடப்பது ஏதோ விபரீதத்தை உணர்ந்தாள். அலைபேசியை எடுத்தாள். சார்ஜ் முற்றிலும் தீர்ந்து போய் இருந்தது. என்ன இது? காலையிலேர்ந்து சார்ஜ் போட்டும் ஏறவே இல்லையே? நல்லாதான இருந்தது? குழப்பத்துடன் சார்ஜரில் போட்டு போனை உயிர்ப்பித்தாள். அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு ஆம்புலன்ஸ் நின்று கொண்டு இருந்தது. “ஸ்டெரெச்சர் வேணுமாம்மா?” ஹெல்பர் கேட்டான். இல்லை, வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும். ஆம்புலன்ஸை தள்ளி நிறுத்தி முகிலை நடக்க வைத்து ஏற்றிச் செல்லலாம், யாராவது கேட்டால்கூட செக்கப் என்று சமாளிக்கலாம். “இல்லப்பா, நானே கூட்டிட்டு வரேன்”. மது முகிலின் அறைக்குச் சென்றாள். அங்கு மூச்சு கூட விட முடியாத அளவுக்குக் குளிராக இருந்தது. ஏசியை ஆஃப் செய்யப்போனாள். ஏசி உயிர்ப்பிலேயே லேயே இல்லை. அவன் அறையில் ஏதோ சதை கருகுவது போன்று கெட்ட வாடை வீசியது. முகில் தானாக ஏதோ அணத்திக்கொண்டிருந்தான். “ஏங்க…” மது அழைத்துப் பார்த்தாள். அவன் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தானே தவிர வேறு எந்த பதிலும் இல்லை. அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். காய்ச்சலாகவும் இருக்கலாம். அவளே அவனை கைத்தாங்கலாக அழைத்து வந்தாள். போனை எடுத்து ஆம்புலன்சில் அமர்ந்தபடியே யாருக்கோ கால் செய்தாள். “ஹலோ, அம்மா நான் மது பேசறேன்” … “அவருக்குத் தலைல சின்னதா அடி பட்டிருச்சு மா” … “இல்ல இல்ல பயப்பட்ற மாதிரி எதுவும் இல்ல, கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுக்க சொன்னங்க. நாளைக்கு மறுபடியும் அட்மிட் ஆகனும்னு நினைக்கிறேன்”. … “நான் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கேன் . நீ ஈவ்னிங் வந்து பிக்கப் பண்ணிக்கறியா” … “சரி மா. நான் வைக்கறேன்” 10 ராயரின் உடல் நடுநாயகமாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. கண்ணாடிப் பெட்டியில் ரோஜா மாலைகளுக்கு நடுவே அவர் தூங்குவதாகவே இருந்தது. ஊரே அவர் வீட்டு வாசலில் குழுமி இருந்தது. ஃபாதர் ஜெரால்டு ராயரின் தலைக்கருகிலேயே அமர்ந்திருந்தார். ஊர் முழுக்கவும் முத்தப்ப ராயர் .. இமயம் சரிந்தது.. வாழ்ந்ததும் வரலாறு வாழ வைத்ததும் வரலாறு என பலவிதமான போஸ்டர்களில் ராயர் சிரித்துக்கொண்டிருந்தார். மைக்கல் வருவோர் போவோரை விசாரித்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்குறி அப்பட்டமாகவே தெரிந்தது. எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என அவரால் வளர்த்துவிடப்பட்ட ஒவ்வொருவரும் வந்து இனி மைக்கலின் ஆதரவு தங்களுக்கும் வேண்டும் என்கிற தொனியில் அவனிடம் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். எல்லார் முன்பும் மைக்கல் அமைதியாகவே நின்றிருந்தான். அவ்வப்போது எட்டிப் பார்க்கும் கண்ணீரையும் துடைத்துக் கொண்டான். தன் தந்தையின் சாவுக்குக் காரணமாவர்களை கண்டிப்பாக விடக் கூடாது. என்றைக்கு அவர்கள் வீட்டிலும் இதே போன்று பிணம் விழுகிறதோ அப்போது தான் அழ வேண்டும். தன் தந்தையின் ஆன்மாவும் சாந்தியடையும் என தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். ஃபாதர் ஜெரால்டு அருகில் வந்தவுடன் அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். “தைரியமா இரு மைக்கல்.. ராயர் கர்த்தருக்குள்ள நித்திரை அடைஞ்சிட்டார். இனி அவர் நிம்மதியாத் தூங்குவார். அவர் ஸ்தானத்துல இருந்து நான் உன்னைப் பாத்துக்கறேன் மைக்கல்…” மைக்கல் ஃபாதரிடம் எதுவுமே பேசவில்லை. தனக்கென்று அவன் நினைத்தது அவன் அப்பாவை மட்டும் தான். இந்த ஃபாதரை பகைத்துக் கொண்டால் ஊர் மக்களின் ஆதரவும் கிடைக்காமல் போகும். பழி வாங்கும் வரை இவரையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என நினைத்த படியே அமைதியாகப் பார்த்தான். ஃபாதர் மறுபடியும் சென்று ராயரின் அருகில் அமர்ந்துகொண்டு பைபிள் வாசிப்பதும் ஜபம் செய்வதுமாய் ராயரின் நித்ய அமைதிக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். வெள்ளை சட்டை காக்கி பேண்டுமாய் மதலை முத்துவும் கையில் ஒரு மாலையோடு வந்தார். ராயரின் மேல் மாலையைக் கிடத்தி கண்களை மூடி மரியாதை செலுத்தினார். மைக்கலின் அருகில் வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டார். “ஐயா மட்டும் இல்லையின்னா நானும் கடல்ல மீனு வலைன்னு எங்கப்பனோட சுத்திகிட்டு இருந்திருப்பேன். இன்னைக்கு எம்புள்ள குட்டி எல்லாம் மூணு வேளை ஒழுங்கா சோறு திங்கிது, எனக்கும் ஒரு கௌரவமான உத்தியோகம் பாத்துகிட்டு இருக்கேன்னா அது உங்கப்பா போட்ட பிச்சை.. ஊருக்கெல்லாம் காசு பணத்தை அள்ளி அள்ளிக் குடுத்த மனுசன் தன் புள்ளைக்கு என்ன செய்யப் போறாருன்னு எல்லாரும் எதிர்பாத்தப்ப தன் உசுரையே குடுத்து காப்பாத்திட்டுப் போயிட்டாரே..” என்று அழுதார். “என்னண்ணே சொல்றீய… என்ன சொல்றீய…” “ஆமாப்பா… அந்த இன்ஸ்பெக்டர் உன் உசுருக்குத்தான் குறி வச்சான்… ஆனா ராயரு குறுக்க வந்து குத்த அவரு வாங்கிட்டாரு… உம்மேல உசுரையே வச்சிருந்தவரு இன்னைக்கு அந்த உசுரையே உனக்கே குடுத்துட்டாருன்னு நெனைக்கும்போது என் நெஞ்சே அடைக்குதுப்பா…” மைக்கல் தன் தந்தையின் மேல் ஓடிச் சென்று அப்பா… எனக் கதறி அழுதான்… தன்னைப் பெறக் கூட இல்லை என்றாலும் தனக்காக உயிரையே கொடுத்த ஒரு ஜீவன். அவரை இறுதி வரை நன்றாகப் பார்த்துக்கொள்ளவில்லை என்னும் துக்கம் மைக்கலின் நெஞ்சையே உலுக்கியது. ஃபாதர் ஓடி வந்து மைக்கலைப் பிடித்துக் கொண்டார். இப்போது மைக்கல் நிஜமாகவே அழுதான்… ஃபாதர் எல்லாவற்றிலும் முன் நின்று செய்தார். மைக்கலை சுடுகாட்டிற்கு அழைத்தும் வர மறுத்துவிட்டான். ராயரை எடுத்துச் சென்ற பிறகு அதே இடத்தில் உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தான். அவர்களுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. இது நாள் வரை ஒருவரும் வந்து பார்க்கவும் இல்லை. ராயருக்கு எல்லாமே இந்த ஊர் மக்கள் தான். தன் கடமைகள் முடிந்ததென ராயரின் உடல் எரியூட்டிய பின்னர் கலைந்து சென்ற கூட்டம் அப்படியே போனது. மைக்கல் சுவற்றின் ஓரம் சாய்ந்து கிடந்தவன் அப்படியே தூங்கினான். அந்த இடத்தை விட்டு அசையக் கூட இல்லை. தன்னாலேயே அவரின் உயிர் போனது அவன் உள்ளத்தை அரித்தது. அதிலும் தான் ராயரின் மகனே இல்லை என்பது அவரின் வாயாலேயே வந்ததும் அவன் நினைவையே பிறழச் செய்தது. கதவைக்கூடப் பூட்டாமல் அவன் அப்படியே அசையாது கிடந்தான். மறுநாள் காலை வேலைக்காரி வந்தாள். வாசலில் பால் வைக்கப்பட்டு இருந்தது. ராயர் இருந்தவரை காலிங் பெல்லை அழுத்தப் போனவள் கதவு திறந்திருந்தது கண்ணுற்று அவளே உள்ளே போனாள். ராயரின் படத்தின் கீழ் படுத்துக்கிடந்த மைக்கலை பார்க்க பாவமாக இருந்தது. அவனை எழுப்பித் தொந்திரவு செய்ய வேண்டாம். தூங்கட்டும். இரவு முழுதும் விழித்து அழுதிருப்பான் என நினைத்தாள். அறை முழுவதும் வாடிய பூக்கள் இறைந்து கிடந்தது. துடைப்பம் எங்கே எனத் தேடி எடுத்து அவளே அறையைப் பெருக்கினாள். சமைலறைக்குச் சென்று இருந்ததை வைத்து குழம்பு ரசம் என வைத்தாள். தன் வேலை முடிந்துவிட்டது, அப்படியே கிளம்பலாம் என நினைத்தவளுக்கு ஏனோ மனசு கேட்கவில்லை. மைக்கலைப் பார்க்கப் பார்க்க பாவமாக இருந்தது. தனக்கென இருந்த ஒரே ஒரு உறவையும் தொலைத்துவிட்டு இன்று இப்படிக் கிடக்கிறானே என வருந்தினாள். சட்டென தன் மனதை மாற்றிக் கொண்டு உள்ளே சென்றாள். பாலைக் காய்ச்சி டீ போட்டு எடுத்துக் கொண்டு மைக்கலை எழுப்பினாள். “அய்யா.. எழுந்திரீங்க… டீ கொண்டாந்திருக்கேன்… அய்யா…” மைக்கலிடம் எந்த அசைவுமில்லை. அவள் பயந்து போனாள். அவனைத் தொட்டு நன்றாக உலுக்கினாள். மைக்கல் அரை மயக்கமாய்க் கண் விழித்தான். அவன் கண் இரண்டும் ரத்தச் சிவப்பில் சிவந்திருந்தது. ஒரு நிலையில் உட்காரக்கூட முடியாமல் தள்ளாடினான். நேற்று முழுவதும் எதுவும் சாப்பிடவுமில்லை.. அவன் உடலில் கொஞ்சம் பலம் கூட இல்லை எனும் நிலை வந்திருந்தது. அவளே மைக்கலை சுவற்றில் சாய்த்து வைத்து அவன் கையில் டீயைக் கொடுத்து இதக் குடிங்கய்யா என்றாள். மைக்கல் டீயைக் கையில் வாங்கி அதையே உற்றுப்பார்த்து கொண்டிருந்தான். எதைப் பார்த்தாலும் அவனுக்கு ராயரின் முகம் தான் தெரிந்தது. டீயைக் கையில் வைத்துக்கொண்டே குலுங்கிக் குலுங்கி மறுபடியும் அழ ஆரம்பித்தான். அவள் மறுபடியும் பதறிப் போனாள். “ஐயா.. ஐயா.. அழாதிங்க.. அவர் காலம் முடிஞ்சிது, அவர் போயிட்டாரு.. ஆனா நல்ல மனுசன்.. இருந்த வரைக்கும் ராசா மாரி வாழ்ந்து எல்லாருக்கும் அள்ளி அள்ளிக் குடுத்த மனுசன்.. என்ன தன் புள்ள கலியாணத்தையாச்சும் பாத்துருக்கலாம்.. அதுக்குள்ள அந்த பாழாப்போன விதி அவரைத் தூக்கிட்டுப் போயிடுச்சு.. ஊருக்குள்ள எத்தனையோ பய இருக்கான். அவனுக்கு எல்லாம் வராத சாவு.. ம்ம்.. சரி.. ஆண்டவன் நல்லவங்களத்தான் சீக்கிரம் கூப்பிட்டுக்கறான்… என்ன செய்யிறது…”. அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டே மைக்கல் எங்கேயோ வெறித்து பார்த்தபடியே அமர்ந்திருந்தான். அவள் வார்த்தைகளை அவன் கவனித்ததாகவே படவில்லை. கையில் டீ சுட்டதும் அனிச்சையாய் அதைக் குடித்தான். வெறும் வயிற்றில் சூட்டுடன் அது இறங்கியதும் கொஞ்சம் மயக்க நிலை தெளிவதைப் போன்று இருந்தது. “சரிங்கய்யா.. சமைச்சு வைச்சிருக்கேன். எடுத்து சாப்பிட்டுக்கங்க. நாளைக்கு நா மறுபடி வாரேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள். ராயரின் படத்தைப் பார்த்து ஒரு தடவை கை எடுத்துக் கும்பிட்டுவிட்டு சென்றாள். மைக்கல் ஏதோ முடிவு செய்தவனாய் எழுந்தான். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ராயரே நிற்பது போலவும், பேசுவது போலவும் தெரிந்தது. அவர் ஆடிய ஊஞ்சல், வழக்கமாய் அமரும் நாற்காலி என அந்த வீடே அவரின் நினைவாலயமாக இருந்தது. உள்ளே சென்று பீரோவைத் திறந்தான். அவரின் உடைகள் அடுக்கி வைத்திருந்ததைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தான். எப்போதும் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை தான் ராயர் உடுத்துவார், அதில் இன்னும் அவரின் ஸ்பரிசம் மிச்சம் இருப்பதாக உணர முடிந்தது. பீரோவின் ஒரு மூலையில் கவர் ஒன்றினுள் பத்திரங்கள் நீளவாக்கில் மடித்து வைக்கப்பட்டிருந்தது. என்னவாக இருக்கும் என அதை வெளியில் எடுத்தான். கட்டுக் கட்டாகக் காகிதங்கள் இருந்தது. முத்தப்ப ராயர் முழு சுயநினைவுடன் எழுதிக் கொடுத்த சொத்துக்கள், ஊரில் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறார் என்பது பற்றிய விவரங்கள் என ஒவ்வொரு பத்திரத்திலும் ஒவ்வொரு சொத்து பற்றிய விவரங்கள் இருந்தது. மேலெழுந்தவாரியாக மைக்கல் எல்லாவற்றையும் பார்த்தான். கடைசியாக ஒரு பத்திரம். அதில் இது நான் சுயநினைவுடன் எழுதிக் கொடுத்த உயில் பத்திரம் என ஒரு வரியைப் பார்த்ததும் மைக்கலின் கண்கள் கூர்மையானது. வரிக்கு வரி படிக்கும்போது அவனுக்கு துக்கம் பொங்கி வந்தது. ராயர் ஐந்து வருடங்களுக்கு முன்னமே இருக்கும் எல்லாச் சொத்துகளையும் மைக்கலின் பேரில் எழுதியிருந்தார். மைக்கலின் கண்ணீர்த் துளி பத்திரத்தில் வட்டமாக விழுந்து காகிதத்தை நனைத்தது. இறுதியாக சாட்சிகளில் ஃபாதர் ஜெரால்டு கையெழுத்துப் போட்டிருந்தார். மைக்கல் அவர் பெயரையே உன்னிப்பாகப் பார்த்தான். யாரிவர்.. தன் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்விலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இவரின் பங்கும் இருந்திருக்கிறது. என்னதான் ஃபாதராக இருந்தாலும் தன் மீது தனிக்கவனம் செலுத்தில் ஒரு நிஜ மகனைப்பொலத்தான் நடத்தியிருக்கிறார். இவருக்கு மட்டும் எதற்கு தன் மேல் இப்படி ஒரு அக்கறை.. தன் அப்பாவின் மறைவு வரை இவரும் கூடவே இருந்திருக்கிறார். அப்பாவிற்கும் இவர் மேல் தனி அன்பு இருந்தது. ஏதோ இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கிறது. மைக்கல் தன் மனதை திடப்படுத்திக் கொண்டான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் பத்திரங்களை மடித்து மறுபடியும் பீரோவுக்குள் வைத்துவிட்டு பூட்டினான். அவரிடமே நேரில் கேட்டுவிட வேண்டும்.. இப்பொது ஃபாதர் எங்கிருப்பார்? அவன் கால்கள் நேராக தேவாலயத்தை நோக்கி நடையிட்டது. வெளியே மழை பெய்ய ஆரம்பித்து இருந்தது. எதையும் மைக்கல் பொருட்படுத்தும் எண்ணத்தில் இல்லை. தேவலயத்தை அடையும் முன் முழுவதுமாக நனைந்து போயிருந்தான். தேவலயத்தின் கதவைத் திறந்தவுடன் உள்ளே வெளிச்சம் பரவியது. அது நேராக மாதாவின் காலடியில் சென்று முடிவடைந்தது. மாதாவின் முன் மெழுகுவர்த்திகள் உருகிக் கொண்டிருந்தன. நீட்டியிருக்கும் கைகள் தன்னையே அழைப்பதைப் போலிருந்தது. மைக்கல் நேராக மாதாவையே பார்த்து நடந்தான்.. அது பிரார்த்தனை நேரமில்லாததால் அங்கே அவனைத் தவிர வேறு யாரும் இல்லை.. அனிச்சையாய் அவன் மாதாவின் முன் மண்டியிட்டான். மெழுகுவர்த்தியோடு சேர்ந்து அவன் மனமும் உருகியது. நான் யார்.. இவ்வளவு நாள் என்ன வாழ்க்கை வாழ்ந்தேன்.. தன்னைச் சுற்றி நடந்தது என்ன… அவனுக்குத் தலையே சுற்றுவது போலிருந்தது. கண்களை மூடிக் கொண்டான். “வா.. மைக்கல்… நீ இங்கல்லாம் வரமாட்டியே” கைகளில் பூங்கொத்துகளுடன் ஃபாதர் வெள்ளை உடையில் அவனிடம் நடந்து வந்தார். முதுமையின் தளர்வு அவர் நடவடிக்கைகளில் வெளிப்பட்டது. தினசரி அலங்கார வேலைகளை சிரத்தையுடன் தொடர்ந்தார். பூங்கொத்துகளை மாதாவின் காலடியில் வைத்துவிட்டு சிலுவையிட்டுக் கொண்டார். கண்களை மூடி சிறிது நேரம் தியானித்தவர் பின் மைக்கலை அங்கிருந்த மேசையில் அமருமாறு கையால் காட்டினார். மைக்கல் அமர்ந்தவுடன் அவரும் அருகில் சென்று அமர்ந்துகொண்டார். “உங்கப்பாவோட ஆன்ம சாந்திக்காகத்தான் வேண்டிகிட்டேன்.. நல்ல மனுஷன்.. இன்னும் கொஞ்ச நாள் இருந்துருக்கலாம். அதுக்குள்ள ஆண்டவர் அழைச்சுகிட்டார். கர்த்தரே..” “அப்பாவா.. ஃபாதர்.. என்னோட உண்மையான அப்பா யாரு… ஹாஸ்பிட்டல்ல அப்பா சொன்னதுக்கு என்ன அர்த்தம்… உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்… நான் எப்படி இங்க வந்தேன்… யாரு நீங்கள்ளாம்…” ஃபாதர் அவன் முகத்தையே பார்த்தார். அவன் வாய் விட்டுக் கேட்ட கேள்விகளை விட அவன் மனத்தில் இன்னும் ஆயிரம் கேள்விகள் இருப்பதை அவன் முகம் காட்டியது. வேறேங்கோ உற்றுப் பார்த்தார். “இதுல என்ன சந்தேகம்.. நீ ராயரோட புள்ளதான். இதுதான் ஊருக்கே தெரியுமே.. இப்போ என்ன கேள்வி?” “நான் அவர் புள்ளதான். ஆனா என்னப் பெத்த அப்பா யாரு.. என் அம்மா யாரு.. அவர் ஹாஸ்பிட்டல்ல பேசும்போது நீங்களும் தான கூட இருந்தீங்க? தயவு செஞ்சு சொல்லுங்க ஃபாதர்.. எனக்கு இப்போ தெரிஞ்சிக்கணும். நீங்க பொய் சொல்ல மாட்டீங்கன்னு தெரியும். இந்த புனிதமான எடத்துல நின்னு கேக்கறேன்..” “உன்னைப் பார்க்கும் போதே தெரிஞ்சிது. நீ கேள்விகளோட தான் வந்திருக்கன்னு”. “உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.. என் வாழ்க்கையில எல்லா எடத்துலையும் நீங்களும் இருந்துருக்கீங்க. எங்கப்பா என்னை எவ்வளவு பிரியமா வெச்சுருந்தாரோ அதே அளவு அன்பு நீங்களும் என்மேல வெச்சுருக்கீங்க. என் வாழ்க்கையைப் பத்தி எனக்கே தெரியாமா என்னால வாழ முடியல. தயவு செஞ்சு சொல்லுங்க ஃபாதர்..” ஃபாதர் பெருமூச்சு ஒன்றை உதிர்த்தார். வயதான அவர் நெற்றியில் சுருக்கங்கள் எட்டிப் பார்த்தது. மாதவைப் பார்த்து மறுபடியும் கண்களை மூடிக் கொண்டார். ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய் மைக்கலைத் திரும்பிப் பார்த்தார். “நீ தெரிஞ்சுக்க வேண்டிய நேரம் வந்திருச்சு மைக்கல்…” இடி இடித்தது. 11 முகில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான். ரத்தம் தொடங்கி வழக்கமான செயல்முறைகள் தொடர்ந்தன. எக்ஸ்ரே, ஈசிஜி என முழு உடலிலும் என்னன்ன எடுக்க முடியுமோ எல்லாமே பரிசோதிக்கப்பட்டது. முகில் ஏனோ வெளிறிப்பொயிருந்தான். உதடுகள் வெடித்துபோய் இருந்தது. மது அங்கும் இங்கும் ரசீதுகளுடன் ஓடிக்கொண்டிருந்தாள். நாள் முழுதும் அலைந்தபின் ஒருவாறாக மூன்று மணிக்கு அவனை ஐசீயூவில் கிடத்தினர். முகிலுக்கு மெதுவாக சுயநினைவு திரும்பியது. “மிஸஸ்.முகில், உங்க ஹஸ்பண்ட்-க்கு எப்படி தலைல அடி பட்டுது?” “அவர் ஆபீஸ்ல மயங்கி விழுந்ததா சொன்னாங்க டாக்டர். அதனால பக்கத்துலையே தையல் மட்டும் போட்டு வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டோம். வந்த அப்பறம் அவர் நார்மலாவே இல்ல டாக்டர்” “ஏன்மா, பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கிங்க, தலையில எல்லாம் அடி பட்டா எவ்ளோ சீரியஸ்னு தெரியுமா? உள்ள ப்ளட் க்ளாட் ஆகி ஹெமெரேஜ் ஆனா உயிரே போயிடும் தெரியுமா? நீங்களே பாத்துகிட்டா அப்பறம் நாங்க எதுக்கு படிச்சுட்டு வர்றோம்?” மருத்துவர் கடிந்து கொண்டார். “அய்யோ இனி அவரை காப்பாத்தவே முடியாதா டாக்டர்?” “சேச்சே அவருக்கு இந்த மாதிரி எல்லாம் ஒண்ணும் இல்லம்மா, அவருக்கு வெறும் டீஹைட்ரேஷன் தான். இப்போலாம் யாரு ஒழுங்கா தண்ணீர் குடிக்கறீங்க? அதான் ஸ்கின் ட்ரை ஆகி வெளிறிப்போற அளவுக்கு போயிருக்கு. இப்போவாச்சும் கூட்டீட்டு வந்தீங்களே… வாட்டர் கண்டென்ட் ரொம்ப கம்மியா இருக்கு. இதுபோக ப்ளட் வேற லாஸ்ல இருக்கு. இதுவே அவர் ப்ரெய்ன் ஃபங்ஷனை நிறுத்திடும். ரெண்டு நாள் அவரை அட்மிட் பண்ணுங்க. சரியாயிடும்”. “அவர் வீட்ல கூட தனியாவே பேசிட்டு இருக்கார் டாக்டர்”. “அது ஹெட் இஞ்சுரிக்கு குடுத்த செடேடிவ்வோட வேலை. மே பி வொர்க் ப்ரஷரா கூட இருக்கலாம். அவரை கம்ப்ளீட் ஆ ரெஸ்ட் எடுக்க விடுங்க. என்செபாலோகிராம் ரிபோர்ட்டும் பாத்துருக்கோம். நார்மல் தான். நீங்க பயப்படற மாதிரிலாம் இல்ல. நீங்களா மெடிசின் எதுவும் குடுக்காதீங்க. ரௌண்ட்ஸ் வரும்போது பார்க்கறோம்”. மதுவுக்கு இப்போதுதான் தைரியம் ஆனது. கண்ணாடி வழியாக தன் கணவனை எட்டிப்பார்த்தாள். அவனைச்சுற்றிலும் என்னென்னவோ வைத்து இருந்தார்கள். ஆனாலும் அவன் நிம்மதியாக உறங்குவதாகவே தோன்றியது. செவிலியர் ஒருவர் இவளைத் தாண்டிச் சென்றார். “நர்ஸ், அது என் ஹஸ்பண்ட் தான். மிஸ்டர். முகில்.. நான் அவரை இப்போ பார்க்கலாமா?” “சீக்கிரம் பாத்துட்டு வந்துருங்கம்மா. மத்த பேஷண்ட்ஸ் டிஸ்டர்ப் ஆனா ட்யூட்டி டாக்டர் கத்துவாரு” அவசர வேலை இருக்கும் போல. பேசியடியே நடந்து சென்றாள். மது கதவைத் திறந்து உள்ளே சென்றாள். “என்னங்க..” கூப்பிட்டவாறே அவன் தலையைக் கோதினாள். அவன் கையில் ஊசி சொருகப்பட்டு இருந்தது. மெதுவாக கண்களைத் திறந்தான். மது… நான் எங்க இருக்கேன்? குரல் குழறலாய் வெளிவந்தது. எனக்கு என்னாச்சு மது? உங்களுக்கு ஒண்ணும் ஆகலைங்க, இன்னும் 2 நாள்ல வீட்டுக்குப் போய்டலாம். நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் வெயிட்டிங் ஹால்ல தான் இருப்பேன். “பாப்பா பையன் லாம் எங்க மது? ஸாரி மது, உனக்கு நான் கஷ்டம் கொடுக்கறேன்” பேசப்பேச முகில் அப்படியே மயங்கிப்போனான். அவனையே பார்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றுகொண்டிருந்தாள். பின்பு கீழிறங்கி வந்து வெயிட்டிங் ஹால் சேரில் அமர்ந்து யோசித்தாள். நன்றாகத்தானே இருந்தான்? தண்ணீர் குடிக்காமல் இவ்வளவு பிரச்சனை வருமா? நாமெல்லாம் நாள் முழுதும் வீட்டு வேலை செய்து அலைகிறோம், எதுவுமே ஆனதில்லையே? சிறிய காயம் என்று விட்டது தான் தவறாய்ப் போய்விட்டது. ஏதேதோ நினைத்தபடியே தூங்கிப் போனாள். மறுநாள் காலை பொழுது விடிந்தது. வெயில் முகத்தில் அடித்தபோது தான் விழித்தாள். மருத்துவமனை இரவு பகல் பாராமல் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. இன்று முகிலை நார்மல் வார்டுக்கு மாற்றுவதாய்ச் சொன்னார்கள். மது ஐசியூவிற்கு வெளியே அமர்ந்திருந்தாள். முகிலை ஸ்டெரெச்சரில் எடுத்துச் சென்றனர். முகில் மதுவைப் பார்த்துச் சிரித்தான். அவன் நிறம் பழைய படி மாறி இருந்த்தது. அவன் உதடு வெடிப்பும்கூட இன்னும் கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும்போல்தான் தோன்றியது. வழக்கம்போல் டாக்டர் வந்தவர் முகிலின் டெஸ்ட் ரிபோர்ட் எல்லாம் எடுத்துப் பார்த்தார். அவன் கருவிழியில் டார்ச் அடித்துப் பார்த்தார். வாயில் உமிழ்நீர் ஊறியிருக்கிறதா எனப் பார்த்தார். தன் சக டாக்டர்களிடம் கலந்து பேசியபின் மதுவிடம் திரும்பினார். “மிஸஸ். முகில், உங்க ஹஸ்பண்ட் நல்லாவே இம்ப்ரூவ் ஆகியிருக்காரு. பொதுவா டீஹைட்ரேஷன்க்கு ஒன் டே ட்ரீட்மெண்ட் போதும். அவருக்குத் தலைல அடிபட்டிருக்குன்னு நீங்க சொன்னதுனாலதான் இன்னொரு நாளும் அப்சர்வேஷன்ல வெச்சுருந்தோம். பட் ஹி ஈஸ் ஹேவிங் நத்திங் சீரீயஸ். நீங்க இன்னைக்கே கூட வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். நாங்க சில மெடிசின்ஸ் எழுதித்தர்றோம். அதுகூட அவருக்கு வாட்டர் லெவெல் குறையாமப் பாத்துக்கணும். அதுக்கும் தண்ணீர்ல கலக்கிக் கொடுக்கற மாதிரி பவுடர் தரோம். அத ஒன் அவர்க்கு ஒருமுறை குடுங்க. மத்தபடி எதுவும் இல்ல”. “தாங்க்யூ சோ மச் டாக்டர். நான் கொஞ்சம் பயந்து போயிட்டேன்..” "நோ நோ டோன்ட் வொர்ரி.. ஹி வில் பி ஆல்ரைட்.. டாக்டர் அடுத்த பேஷண்டைப் பார்க்கப் போய்விட்டார். மதுவுக்கு அதற்குப் பிறகுதான் சாப்பிடத் தோன்றியது. அன்று முழுவதும் அவனிடம் எந்தக் குறைபாடும் இல்லை… சலைன் பாட்டில் பாட்டிலாய் ஏற்றினார்கள். மாலை எனும்போது மது வீட்டிற்கே திரும்ப ஏற்பாடு செய்தாள். அன்று மாலையே ஆம்புலன்சில் தன் வீடு வந்து சேர்ந்தாள். முகிலுக்கு அவ்வப்போது நினைவு திரும்பியது. ஆனாலும் இவளிடம் சரியாகப் பேசவில்லை. கண்கள் மட்டும் திறக்கும்.. பின் அப்படியே மயங்கிப்போவான். அவனை அதிகம் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி இருந்தார்கள். அவனை ஒரு வழியாய் கட்டிலில் கிடத்தினார்கள். மது மிகவும் சோர்ந்து போய் இருந்தாள். சோபாவில் வந்து பொத்தென அமர்ந்தாள். அவனுக்கு மருந்து மாத்திரைகளை ஊட்டிவிட்டு தனக்கு பிரெட் எடுத்துக்கொண்டாள். சோபாவில் படுத்து உறங்கிப்போனாள். காலையில் செல்போன் ஒளிர்ந்தது. மதுவின் அம்மா அழைத்து நலம் விசாரித்தார்கள். “சொல்லும்மா.. நேத்து நைட் தான்மா வந்தோம். பெருசா பயப்பட்ற மாதிரி எதுவும் இல்லைனு டாக்டர் சொன்னாங்க”. “டாக்டர் வீட்லையே வெச்சு பாத்துக்கலாம்னு சொல்லிட்டார் மா. கொழந்தைங்க இப்பொதைக்கு அங்கையே இருக்கட்டும். நேத்து தான வந்தாங்க? அதுக்குள்ளையே எதுக்கு திருப்பி கூப்பிட்டுக்கணும்? கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டும். பாட்டி பாட்டி நு உன்னைப்பத்தியே தான் பேச்சு. நிஷா கிட்ட குடும்மா…” “பாப்பா.. எப்படி இருக்க? பாட்டி கிட்ட சமத்தா இருக்கணும் என்ன? தொல்லை பண்ணக்கூடாது”. அதே நேரம்….. தடதடவென அதிரும் சத்தம் கேட்டது. மது உன்னித்துக் கேட்டாள். முகிலின் அறையில் இருந்துதான் வருகிறது. “ஒரு நிமிஷம்.. அம்மா கூப்பிட்றேன்….” பதட்டத்துடன் எழுந்து போனாள். படிக்கட்டுகளில் வேகவேகமாக ஏறினாள். அங்கே முகில் தன் கை கால்களை வெட்டி வெட்டி இழுத்துக்கொண்டிருந்தான். அவன் முகம் மேலும் கீழும் கோணியது. கண்கள் சொருகிய நிலையில் அப்படியே இழுத்துக்கொண்டிருந்தான். மது அதிர்ந்து போனாள். “என்னங்க, என்னங்க….. என்னாச்சு???” “மது… மது…” முகில் கஷ்டபட்டு வார்த்தைகளை உதிர்த்தான்.. பதறியபடி அவன் கை கால்களை இழுத்துப் பிடித்தாள். ஆனால் அவள் வலுவுக்கு அவனைப்பிடிக்க முடியவில்லை. அவளையும் மீறி அவன் துடித்தான். அவன் கை கால் முறுக்கி இழுக்கத் தொடங்கியது. அவன் உடல் தூக்கித் தூக்கிப் போட்டது. கட்டிலின் மேலே அவன் உடல் எழும்பி எழும்பி துடித்தது. அவளையும் சேர்ந்து இழுத்தான். நாக்கைக் கடித்துக் கொள்ளாமல் இருக்க வாயில் ஸ்பூன் வைத்தாள். கொஞ்ச நேரம் துடித்த பின்பு அப்படியே அடங்கிப்போனன். கொஞ்ச நேரம் அவனுக்கருகிலேயே அமர்ந்திருந்தாள். அறை முழுதும் ரொம்பவும் குளிராக இருந்தது. அவன் அறை மட்டுமே இவ்வாறு இருப்பது அவளுக்கு வித்தியாசமாய்ப் பட்டது. முகில் மெதுவாகக் கண்விழித்தான். மது அவனுக்குக் கண்ணாடி தம்ளரில் இருந்த மருந்துக்கரைசலை எடுத்து ஊட்டினாள். அவனுக்கு உடல் வெட்டி இழுத்ததில் ரொம்பவே சோர்ந்து போயிருந்தான். “எனக்கு….என்னாச்சு மது? என்ன நடக்குது??” முகில் தன் சக்தி முழுதும் திரட்டிப் பேசிக் கொண்டிருந்தான். “ஒண்ணும் இல்லங்க… நீங்க கவலைப்படாமத் தூங்குங்க… எல்லாம் சரியாய்டும்…” “இல்ல மது.. எனக்கு ரொம்பவே வித்தியாசமாத் தோணுது. என்னைக் கொன்னுடு மது.. நான் உயிர் வாழவே தகுதி இல்லாதவன்.. நான் பைத்தியமா மது? எனக்கு பயம்மா இருக்கு மது…” “சே… என்ன பேசறீங்க? சும்மா தலைல சின்னதா அடி பட்டிருக்கு.. அதுக்குப் போய் இவ்வளோ பேசுவீங்களா? நீங்க போயிட்டா அப்பறம் நாங்க என்ன செய்யறதாம்?” “மது… இல்ல… நான்… மது…. என்னவோ….” “ஒண்ணும் இல்ல… கொஞ்சம் இதக் குடிங்க… ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரி ஆகிடும்”. முகில் தலையை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டாள். முகிலுக்கு மாத்திரை கொடுத்தாள். அவன் தலையில் இருந்த வியர்வையைத் துடைத்தாள். அவன் உடல் கொதித்தது. அவன் விழித்திருந்தால் எதாவது யோசிப்பான். அது அவனுக்கு நல்லதல்ல என நினைத்த மது மயக்க மாத்திரைகளை தண்ணீரில் கரைத்திருந்தாள். முகில் இப்போது நன்றாகத் தூங்கத் தொடங்கி இருந்தான். போர்வையை இழுத்து போர்த்தி விட்டாள். அவன் உதடு வெடிப்பு இன்னும் அப்படியே தான் இருந்தது. தோல் இன்னும் வறண்டு போகத் தொடங்கி இருந்தது. 12 புனே இன்ஸ்டிட்யூட் ஆஃப் மென்டல் சயின்சஸ் அண்ட் பிரெய்ன் ரிசர்ச். நுழைவாயிலே அதன் பிரம்மாண்டத்தைப் பறைசாற்றுவது போலிருந்தது. சுற்றிலும் மரங்களும் கொடிகளும் என அரசாங்கத்தின் நிதி மிகச் சரியாக செலவு செய்யப்படுவதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. காலை வேளையில் கார்களும் பைக்குகளும் வருவதும் போவதுமாய் ஒரே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.. அந்த இளைஞன் வெகுநேரமாக வாயிலிலேயே நின்றுகொண்டிருந்தான். ஒரு கையில் இருந்த ட்ராலி தூரத்திலிருந்து பயணம் செய்து வந்திருப்பதை மறைமுகமாகச் சொல்லியது. படபடப்புடன் அவன் காவலாளியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான். அவன் கண்களில் தாமதம் ஆகிவிடக் கூடாது என்ற பதைபதைப்பு இருந்தது. எப்படியாவது உள்ளே சென்றுவிட வேண்டும் என எல்லா வகைகளிலும் முயன்று கொண்டிருந்தான். அங்கு நடந்து செல்பவர்கள் அவனை ஏதோ வித்தியாசமான ஜந்துவைப் போல் பார்த்துக் கடந்து கொண்டிருந்தனர். அவனுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. “சார்.. சார்.. இன்னைக்குதான் மொத நாள்.. இன்னைக்கே லேட்டாப் போனா புரபசர் என்னைப் பத்தி என்ன நெனைப்பார்? ஒரு முறை உள்ள விடுங்க. நானே உள்ள போய் உங்களுக்குத் தேவையான சைன் வாங்கித் தர்றேன்..” “ஓ.. மத்ராஸி ?? தேகோ சாப்.. யே இன்ஸ்டிட்யூட் பாரத் கே படா இன்ஸ்டிட்யூட் ஹே. பாஸ் நஹி, என்ட்ரி நஹி.. சம்ஜே?” இவனுக்கு ஆங்கிலத்தில் சொன்னாலும் புரியாது போலிருந்தது.. அவனுக்கு யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை. வாட்ச் மேனே இப்படி என்றால் கண்டிப்பாக தாமதமாகப் போனால் உள்ளே என்ன நினைப்பார்கள்.. அதுவும் முதல் நாளே போனால் தன் மீதுள்ள நன்மதிப்பையே பாழாகிவிடும். எப்படியாவது உள்ளே போக யத்தனித்தான்.. “கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.. நானும் இங்க ஜாயின் பண்ணதான் வந்துருக்கேன்.. பட் வரும்போது எப்படியோ சர்டிபிகேட் இருந்த பைல் தொலஞ்சுருச்சு..” அவன் மறுபடியும் ஹிந்தியில் கத்தத் தொடங்கினான். நடு நடுவே வந்த ஆங்கில வார்த்தைகளை வைத்து அவன் இது தான் சொல்கிறான் என அனுமானிக்க முடிந்தது. ஒண்ணா உள்ளாற விட எதாவது லெட்டர் வச்சிருக்கணும். இல்லாட்டி விசிட்டர்ஸ் பாஸ் எனக்கு உள்ள இருந்து வரணும். இந்த ரெண்டும் இல்லாம எப்படி உங்கள உள்ள விட்றது? நீங்க பாட்டுக்கு உள்ள புகுந்து ஏதாவது பிரச்சனை ஆயிடுச்சுன்னா என் வேலை தான் போகும். என் நிலைமையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. இது டைரக்டர் ரவுண்ட்ஸ் வர்ற நேரம். இப்படி செஞ்சுட்டு இருந்தா அது உங்களுக்கும் தான் சிக்கலாகும். தயவு செஞ்சு எடத்தக் காலி பண்ணுங்க. அப்போது ஒருவர் வியர்த்த முகத்துடன் அவர்கள் அருகில் நடந்து வந்தார்.. நீண்ட தூரமாக ஜாகிங் சென்றுவிட்டு வந்திருக்கிறார் என்பதை அவர் அணிந்திருந்த ட்ராக் சூட் நனைந்திருந்ததிலேயே தெரிந்தது. “முகுந்த் லால்… ஷுப் தின்… .. ப்ராப்ளம் க்யா ஹை..” அவ்வளவு நேரம் கத்திக் கொண்டிருந்த காவலாளியின் முகம் ஒரு நொடியில் மாறியது. கோபத்தில் சிவந்திருந்த அவர் முகம், செயற்கை புன்னகையை வலிய வர வைத்து வாயோடு தைத்துக் கொண்டது. ஹிந்தியில் பேசியது ஏதோ புரிந்தது. “அது ஒண்ணுமில்ல செல்வா தம்பி.. இவருக்கு இங்க அட்மிஷன் கெடைச்சுருக்குன்னு சொல்றாரு.. ஆனா கையில பாஸ் எதுவுமே இல்ல. நம்ம பிரின்சிபாலைப் பத்தி தான் உங்களுக்கே தெரியுமே.. என் நெலமையச் சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறாரு.. நான் என்ன செய்யட்டும் தம்பி…” செல்வா பார்ப்பதற்கு ஏதோ பணக்கார வீட்டுப் பையன் போன்ற தோற்றத்தில் இருந்தார். வாட்ச்மேன் அவரிடம் வெகுவாகக் குழைந்ததைப் பார்த்தால் கண்டிப்பாக ஏதோ இவரும் அங்கே ஒரு லெக்சரராகத்தான் இருக்க வேண்டும். அந்த இளைஞன் இன்னும் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தான். “பாஸ் இல்லன்னா எப்படி உள்ளாற விடுவான்.. சரி நிக்கட்டும். நமக்கென்ன..” செல்வா முணுமுணுத்தது அந்த இளைஞனுக்குக் கேட்டது. “சார்.. நீங்க தமிழா.. கொஞ்சம் இவர்கிட்ட எடுத்து சொல்லுங்க சார்.. ப்ளீஸ்”. அந்த இளைஞன் தமிழ் என்றதும் செல்வாவின் முகம் மாறியது. உள்ளே போகத் திரும்பியவன் அனிச்சையாய் அந்த இளைஞனின் அருகே வந்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழரைப் பார்த்ததும் செல்வாவின் முகத்தில் ஒரு மகிழ்ச்சி அப்பிக் கொண்டது. “உங்க பேர் என்ன சொன்னீங்க..” “ஜெரால்ட் சார்.. சைக்காலஜி டிப்பார்மெண்டில் தான் இன்டெர்ன் கோர்ஸ் பண்ண வந்திருக்கேன்..” “அடடே.. நானும் சைக்காலஜி தான். அங்க நீங்க யாரைப் பாக்கணும்?” “டாக்டர். ஸ்பிரின்ஸ்.. ஹெச்.ஓ.டி.. அவர் கைடன்ஸ்லதான் ஒர்க் பண்ணப் போறேன்..” “நானும் அவர் ஸ்டூடண்ட் தான். என்ன லால்ஜி.. நம்ம ஹெச்.ஓ.டி ஸ்டூடண்ட்டயே நிறுத்தி வெச்சுருக்கீங்க.. ஸ்லிப்ப காட்டுங்க.. நான் சைன் பண்ணித்தரேன்.. நீங்க மொதல்லயே சொல்லக் கூடாதா..” செல்வா அவரே பாஸில் விவரங்கள் எல்லாம் கேட்டு எழுதினார். இவ்வளவு நேரம் முரண்டு பிடித்துக் கொண்டிருந்த வாட்ச்மேன் அந்த ஒரு துண்டுச் சீட்டுக் கையெழுத்தில் அடங்கினார். கேட்டைத் திறந்து இருவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தனர். ஜெரால்டின் கண்ணுக்கு வானுயர்ந்த கட்டிடங்களைப் பார்க்கவே மலைப்பாக இருந்தது. செல்வா அதனை கவனித்து சிரித்தபடியே நடந்து வந்தார். “ஜெரால்ட்.. வாங்க.. நானும் சைக்காலஜி டிப்பார்ட்மெண்ட்க்குத்தான் போறேன்.. வாங்க பேசிகிட்டே போகலாம்.நான் உங்களுக்குத் தமிழ் தெரியாதுன்னு நெனைச்சுப் பேசிட்டேன். எதையும் மனசுல வெச்சுக்காதீங்க..” “அதெல்லாம் பரவால்ல சார். நீங்க மட்டும் ஹெல்ப் பண்ணலைன்னா நான் இன்னும் வெளியிலயே நின்னுட்டு அந்த ஹிந்திக்காரன் கிட்ட சண்ட போட்டுட்டு இருந்துருப்பேன்”. “நம்ம ஊர்க்காரர் நீங்க.. இது கூட செய்யலைன்னா எப்படி.. ஆமா.. பேப்பர்ஸ்லாம் பத்தரமா வெச்சுக்கறது இல்ல? பெரிய இன்ஸ்டிட்யூட்ல இன்டெர்ன் பண்ணப் போறீங்க.. கொஞ்சம் கவனமா இருக்க வேண்டாமா?” “சென்னைல ஏறும்போதே பத்திரமாத்தான் வெச்சுருந்தேன். ஆனா நான் வர்ற வழியில எப்படியோ ட்ரெய்ன்ல என் டாக்குமெண்ட்ஸ்லாம் மிஸ் ஆகிடுச்சு.. என் போனும் கூட ஒரு ஐந்தாயிரம் பணமும் வெச்சுருந்தேன்”. “கம்ப்ளைண்ட் பண்ணீருக்கீங்களா?? வேற எதாவது டாக்குமெண்ட் காப்பி வெச்சுருக்கீங்களா?” “ரயில்வே போலீஸ்கிட்ட கம்ளைண்ட் எழுதிக் கொடுத்துருக்கேன் சார். கண்டுபிடிச்சர்லாம்னு சொல்லீருக்காங்க.. கிடைச்சுடும்னு நம்பறேன்”. “அதெல்லாம் கவலைப்படாதீங்க.. கட்டாயம் கிடைச்சுரும். அப்பறம்.. சார்ன்னுலாம் கூப்படாதீங்க.. செல்வான்னே கூப்பிடுங்க.. என்னைப் பார்த்தா அவ்வளவு வயசான மாதிரியா தெரியுது?” “சாரி சார்… இனிமேல் அப்படி கூப்பிட மாட்டேன்..” “பாத்தீங்களா.. இப்போ நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்?” “இனி சொல்ல மாட்டேன் செல்வா..” இருவரும் பார்த்த அரை மணிக்குள்ளாகவே நன்கு பழகிய நண்பர்களைப் போல ஒட்டிக் கொண்டனர். நடக்க நடக்க தூரம் இன்னும் குறைவதாயில்லை என்பது போல் பட்டது. “ஜெரால்ட்.. நான் உங்ககிட்ட அப்போவே கேக்கணும்னு நெனைச்சேன்.. சென்டர்ஸ் அட்ரஸ்ல உங்க வீட்டு அட்ரஸ் போடாம எதுக்கு மெட்ராஸ் டிவினிடி காலேஜ் பேர் போட சொன்னீங்க?” “இல்ல செல்வா. எனக்கு வீடு சொந்தம் அப்படி இப்படின்னு எதுவுமே இல்ல. நான் எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து கருணை இல்லம்ல தான் வளர்ந்தேன். அங்க இருந்த மதர் மெர்லிதான் எனக்கு எல்லாமே. என்னைக் குழந்தைலேர்ந்து அவங்கதான் வளர்த்தினாங்க.என்னை பெரிய புரொபசர் ஆக்கிப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க. நான் காலேஜ் படிக்கும்போது திடீர்னு இறந்துட்டாங்க. அவங்க இறந்த அப்புறம் நானும் அவங்களை மாதிரியே மக்களுக்கு சேவை செய்யணும்னு ஆசைப்பட்டு டிகிரி முடிச்ச அப்பறம் டிவினிடி காலேஜ்லயே ஜாயின் பண்ணிட்டேன்”. “அப்போ நீங்க ஃபாதரா? ஐயாம் ஸோ ஸாரி.. நான் எதாவது மரியாதைக் குறைவா பேசியிருந்தா…” “அதெல்லாம் ஒண்ணும் இல்ல செல்வா.. எனக்கு ஸ்டடீஸ் போயிட்டு தான் இருக்கு. இன்னும் பாஸ்டர் ஆகலை.. கார்டினல் ஒருத்தர் என்னை இங்க ரெகமண்ட் செஞ்சாரு.. அவரோட லெட்டர் எடுத்துட்டுதான் வந்தேன். வர்ற வழியில தொலைஞ்சு போயிடுச்சு. கார்டினல்னா உங்களுக்குத் தெரியுமா?” “ஆர்ச் பிஷப்க்கு மேல இருக்கறவர் தானே?.. தெரியும் தெரியும். சொல்லுங்க.” “பரவால்லையே.. சரியாச் சொல்றீங்க. இதெல்லாம் எப்படி நீங்க தெரிஞ்சு வெச்சுருக்கீங்க? நீங்க கிறிஸ்டியனா?” “இல்ல இல்ல. நான் ஹிந்து தான்.. ஆனாலும் தெரியும். தெரிஞ்சு வெச்சுக்கறது நல்லது தானே?” “நல்லதுதான். எங்க ஸ்டடீஸ்ல ஸைக்காலஜியும் ஒரு பார்ட்டா வரும். அதான் என்னோட ட்ரெயினிங்க்கு பிரயோஜனப்படும்னு இங்க வந்தேன்”. “இது ரொம்ப நல்ல இன்ஸ்டிட்யூட். எல்லாருமே ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க..” “அது உங்களைப் பாத்த உடனே தெரிஞ்சுகிட்டேன். என்ன.. வாட்ச் மேன்தான் இங்க ஸ்டிரிக்ட் போல”. “ஹாஹா.. அவர் கொஞ்சம் கோபக்காரர்தான். ஆனா ரொம்ப நல்லவரு. நம்ம ஊருப்பக்கம் சொல்லுவாங்களே.. கோபம் இருக்கற இடத்துல தான் குணம் இருக்கும்னு.. இவரு அந்த மாதிரி ஆள். நாளைலேர்ந்து பாருங்க . லால்ஜியோட இன்னொரு முகத்தைப் பார்ப்பீங்க..” “இன்னொரு முகமா… அந்த முகமாச்சும் சிரிச்ச முகமா இருந்தா ஓக்கேதான்..” இருவரும் சிரித்துக் கொண்டனர். எங்கிருந்தோ வந்த ஐந்தாறு மாணவர்கள் கூட்டமாக வந்து செல்வாவை மொய்த்துக் கொண்டனர். அவர்கள் கையில் பிம்சாப் கல்ச்சுரல்ஸ் 1987 என எழுதப் பட்ட பதாகைகள் இருந்தன.. அவனிடம் ஒரு மாணவி கையில் இருந்த பேப்பரைக் காட்டி ஏதோ கேட்டுக் கொண்டிருந்தாள். செல்வாவும் அவர்களுடன் கொஞ்சம் பிசியானான். “ஜெரால்ட்., எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க இடதுபக்கம் வராண்டால நடந்து போங்க. கடைசி ரூம்தான் ஸ்பிரின்ஸ் சாரோட ரூம். நான் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து உங்களைப் பார்க்கறேன்..” “ஓக்கே செல்வா.. பை..” ஜெரால்ட் கையசைத்துவிட்டு செல்வா காட்டிய வழியில் வேகமாக நடக்க ஆரம்பித்தான். அவசரமாகப் போகும் போது திடீரென காலில் ஏதோ பிசுபிசுப்பாக ஒட்டியது. கவனிக்காமல் நடந்தான். படிக்கட்டுகளில் தாவி ஏறி வராண்டாவில் நடந்தான். அப்போதும் அந்த பிசுபிசுப்பு போகவில்லை. திரும்பிப் பார்த்தால் நடந்த இடமெங்கும் ரத்தத் தாரையாக இருந்தது. என்னவென்று குனிந்து பார்த்தால் ஷூவிலும் ரத்தக்கறையாக இருந்தது. ஜெரால்ட் திடுக்கிட்டான். அவன் நடந்து வந்த வராண்டா முழுவதுமே எட்டிப் பார்த்தான். அங்கு முழுவதுமே ரத்தத் தாரையாக அவன் காலடிச் சுவடு இருந்தது. வெளியே எட்டிப் பார்த்தான். படிக்கட்டுகளிலும் அவன் ரத்தக் கால்கள் தெரிந்தது. காலில் எதுவும் ரத்தக் காயம் எதுவும் இல்லை என உறுதிப் படுத்திக் கொண்டான். பின்பு எங்கிருந்து இந்த ரத்தத் தாரை தொடர்ந்தது என அவன் மனம் பதட்டமடைந்தது. வாய் அனிச்சையாக ஹோலி மேரி என முணுமுணுக்கத் தொடங்கியது. 13 மறுபடியும் மருத்துவமனை… மூளை மற்றும் நரம்பியல் துறை.. மதுவின் முன்பு 5,6 பேர் அமர்ந்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள். மது மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தாள். கண்ணாடி அறை, வளைவு மேசை என அந்த அறை கிட்டத்தட்ட ஒரு செமினார் ஹால் போல் இருந்தது. “டாக்டர்….” அவள் பொதுவாக அழைத்தாள். “அவருக்கு வெறும் டீஹைட்ரேஷன் தான் சொன்னிங்க.. இப்போ என்னடான்னா இவ்வளோ பேர் உக்காந்து டிஸ்கஸ் பண்ணீட்டு இருக்கீங்க.. அவருக்கு என்ன தான் பிரச்சினை?” நடுவில் கண்ணாடி போட்டு அமர்ந்திருந்தவர் பேசத்தொடங்கினார். “இதோ பாருங்கம்மா, உங்க ஹஸ்பண்ட் ஏற்கனவே டிப்ரஷன் ல இருந்துருக்கார். அதுக்கான மெடிகேஷன்லயும் இருந்துருக்கார். இதெல்லாம் லாஸ்ட் டைம் இன்பார்ம் பண்ணுணீங்களா?” “இல்ல டாக்டர்.. இது அவரு கப்போர்ட் ல இருந்தது. தலை வலினு யூஸ் பண்ணீட்டு இருந்த டேப்லட் போலனு விட்டுட்டேன். இப்போ க்ளீன் பண்ணும்போது எதுக்கும் இருக்கட்டும்னு காட்டலாம்னுதான் எடுத்துட்டு வந்தேன்” “அவர் சிடால்ப்ராம், செலிஜிலின், லுராசிடோன்னு ஹெவி ஆன்டி டிப்ரஷன் டேப்லட் எடுத்துருக்காரு. இதெல்லாம் ஒரு சைக்காலஜிஸ்ட் சஜஷன் இல்லாம எப்படி எடுத்துக்க முடியும்? நீங்க அவரோட வொய்ப். தெரியலனு சொன்னா எப்படி ஏத்துக்கறது?” “சாரி டாக்டர்.. எனக்கு அவர் மெடிகேஷன் எடுத்துக்கற விஷயமே தெரியாது”. “உண்மையா சொல்லுங்கம்மா.. டாக்டர் கிட்ட எதையும் மறைக்க கூடாது. நீங்க குடுக்கற ஒவ்வொரு டீட்டெயிலும்தான் அவர சீக்கிரம் குணமாக்க உதவும்”. “எனக்கு நிஜமாவே தெரியாது டாக்டர். என்கிட்ட அவரு எல்லாமே சொல்லுவாரு. ஆனா இப்படி மருந்து சாப்பிட்ற விஷயம்லாம் நிஜமாவே என்கிட்ட சொன்னதில்ல”. “அவர் ப்ரீவியஸ் ரிசல்ட் எல்லாம் பார்த்தோம். அவருக்கு பாடி ரெகுலேஷன்லாம் நல்லாதான் இருக்கு. திஸ் மஸ்ட் பி சம்திங் அதர். அவருக்கு எதாவது ஓவர் டோஸ் ஆயிருக்கலாம், இதுனால அவர் அடிக்ட் கூட ஆகி இருக்கலாம். இல்ல, சடனா வழுக்கி விழுந்து அதனால அவர் நெர்வஸ் ஸிஸ்டம் கொல்லாப்ஸ் ஆகி இருக்கலாம். சம் ட்ரக் காம்பினேஷன் கூட இப்படித்தான் ஒரு சிலருக்கு ஒத்துக்காது. நீங்க அவருக்கு ஒரு ப்ளட் சாம்பிள், ஈ சி ஜி, ஈ ஈ ஜி, அப்புறம் ஒரு எம்.ஆர்.ஐயும் எடுத்துருங்க. தேர்ட் விங் ல விசாரிங்க… இந்தாங்க அதுக்கான ப்ரிஸ்க்ரிப்ஷன்..” “டாக்டர்.. நீங்க என்ன என்னவோ சொல்றிங்க. எனக்கு எதுவுமே புரியல. அவருக்கு எதுவும் சீரியஸா இல்லையே டாக்டர்?” “இப்போதானம்மா ஸ்கேன் எடுக்க போறோம்? ரிசல்ட் வரட்டும். நாங்க எல்லாரும் ஸ்டேட் லயே பேமஸ் ஆன ந்யூராலஜிஸ்ட். எங்கனால முடியல னா வேற யாராலயும் முடியாது. நீங்க தைரியமா இருங்க”. ஒரு நர்ஸ் வந்து அவன் கையில் இருந்து ரத்த மாதிரி எடுத்தார். அவனை வீல் சேரில் உட்கார வைத்து மது ஸ்கேன் எடுக்க முகிலை அழைத்துச் சென்றாள். அந்த வெள்ளை நிறக் கருவிக்குள் அவன் தலையை விட்டு வித விதமாய் படம் பிடித்தார்கள். முகிலின் தோல் வறண்டு போய் உதடுகள் வெடிக்கத் தொடங்கி இருந்தது. அவனே முழுவதுமாய் வெளிறிப் போய் இருந்தான்.ஆனால் யாரும் இதெல்லாம் கவனித்ததாய்த் தெரியவில்லை. இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே முகிலின் தலையில் விதவிதமாக ஜெல் தடவப்பட்டு அவன் தலையில் எலெக்ட்ரோடுகளைப் பொருத்தினர். முகில் அங்கேயே ஒரு மணிநேரம் இருந்தான். அவன் தலையில் இருந்து ஒயர் ஒயராய்ப் போய் கணிணியில் முடிந்திருந்தது. அது வித்தியாசமாய் பீப் பீப் என ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. மறுபடியும் அதே அறை.. அவன் மூளையின் குறுக்கு வெட்டு, நீள்வெட்டு, நரம்புப்பரவல் என எல்லாம் சுவரில் தொங்க விடப்பட்டு இருந்தது. வழக்கம் போல் டாக்டர்கள் விவாதிக்கத் தொடங்கினர். “மிஸஸ். முகில்.. அவருக்கு மூளையில் எந்த குறையும் இருக்கற மாறி தெரியல. ஈ ஈ ஜி ரிப்போர்ட் லயும் டயலேஷனோ இல்ல ட்யூமரோ இல்ல. மே பி மெடிகேஷன் ஓவர் டோஸா இருந்தா கூட ஃபிட்ஸ் வர சான்ஸ் இருக்கு. பட் அது கார்டியாக் அரெஸ்ட் வரைக்கும் போகும். உங்க ஹஸ்பண்ட்க்கு இதயம் நல்லாதான் இருக்கு”. “அவருக்கு என்னதான் பிரச்சனை டாக்டர்? நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் தரத் தயாரா இருக்கேன். எனக்கு அவரைப் பழையபடி பார்க்கணும்”. “அதுக்கு தான நாங்களும் முயற்சி பண்ணீட்டு இருக்கோம்? உங்க ஹஸ்பண்ட் கேரக்டர் எல்லாம் எப்படி? உங்கள அவர் எப்படி நடத்துவாரு?” “அவர் ரொம்ப ஸாப்ட் நேச்சர் டாக்டர். என்கிட்ட அதிர்ந்து கூட பேச மாட்டாரு. குழந்தைங்க மேலயும் ரொம்ம்ப பாசமா நடந்துப்பாரு.. ஏன் டாக்டர்?” “டிப்ரஷன் டாப்லட் எடுத்துக்கற அளவுக்கு எதாவது பிரச்சனை இருந்துதா? ஏன்னா இப்போல்லாம் யாருக்கு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் வரலாம். நம்ம லைப்ஸ்டைல் அப்படி..” “இல்ல டாக்டர். அவர் வொர்க் பண்ற எடத்துலையும் அவருக்கு நல்ல பேருதான். எங்களுக்கு லோன் ப்ராப்ளம் மட்டும் இருக்கு. அதும் அவர் சேலரில மேனேஜ் பண்ணிக்கற அளவுலதான்”. “அதை அவர் எப்படி எடுத்துகிட்டாருனு தெரியணும் இல்ல? இன்னொரு விஷயம்.. அவர் கோபம் வந்தா கெட்ட வார்த்தை அதிகமா பேசுவாரா?” “டாக்டர்.. மதுவுக்கு சிரிப்பு வந்தது.அவர் அப்படிப்பட்டவர் எல்லாம் இல்ல.. அவ்வளோவா கோபப்படுற டைப் கூட கிடையாது. எங்ககளுக்குக் கல்யாணம் ஆன அப்பற வந்த சண்டைகளைக்கூட விரல் விட்டு எண்ணிடலாம்”. “அவர் எங்க ஸ்டாஃப் கிட்ட தகாத வார்த்தைகள் யூஸ் பண்ணியிருக்காருன்னு கம்ப்ளைண்ட் வந்துருக்கு..” “இம்பாஸிபிள் டாக்டர்.” மது பேசப்பேச மடிக்கணிணியின் திரை ஒளிர்ந்தது. அது முகில்தான். ஒருவன் முகிலின் நெற்றியில் ஏதோ ஜெல் வைத்துத் துடைக்கப் போனான். முகில் அவன் கையைத் தட்டி விட்டதுடன் மட்டுமல்லாமல் அவனைக் கையை நீட்டி ஏதோ கூறினான். முகிலின் உதடு அசைவின் மூலம் அவன் தாயைப் பற்றித்தான் பேசுகிறான் என்று தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் மதுவை ஒரு மாதிரி பார்த்தார்கள். மது தர்ம சங்கடமாக உணர்ந்தாள். “நோ நோ நீங்க எதுவும் ஃபீல் பண்ணாதீங்க. இத வெச்சி தான் எங்களுக்கு ஒரு லீட் கெடைச்சுருக்கு. இன்னும் ஒரு டெஸ்ட் எடுத்துட்டா அவருக்கு என்னன்னு கன்ஃபார்ம் பண்ணீடலாம். எபிலெப்ஸி பாக்ரவுண்ட் வேற இருக்கு.. ஸோ நீங்க அவர அட்மிட் பண்ணிடுங்க. ஈவ்னிங் சாம்பிள் எடுக்க ஸ்டாஃப் வருவாங்க. டூ டேஸ்ல ரிசல்ட் வந்துரும்”. மது எப்படியாவது அவனை பழையபடி பார்க்க வேண்டும் என்று மட்டுமே யோசித்தாள். அவனை அறைக்கு ஸ்டெரெச்சரில் எடுத்து வந்தார்கள். முகில் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான். படுக்கையில் கிடத்தியதும் தான் மதுவைப் பார்த்தான். “மது.. மது… என்ன நடக்குது மது? எனக்கு என்னாச்சு? ஏன் என்னை அட்மிட் பண்ணீர்க்க? நம்ம வீட்டுக்குப் போலாம் மது.. எனக்கு பயமா இருக்கு .. பேசு மது.. ப்ளீஸ்.. நம்ம போய்டலாம்…” “நீங்க இப்போ ரெஸ்ட் எடுக்கணும் ஸார்..” நர்ஸ் பேசிக்கொண்டே அவனுக்கு இறங்கிக் கொண்டிருந்த சலைனில் எதையோ ஏற்றினாள். “அவருக்கு இப்போ ரெஸ்ட் எடுத்தா தான் சேம்பிள் எடுக்கும்போது கோ ஆப்பரேட் பண்ண முடியும். அவர் இப்போ தூங்கட்டும். நான் ஈவ்னிங் இன்ஸ்ட்ரக்ஷன் தரேன்”. நர்ஸ் வெளியேறினாள். ஆறு மணியளவில் 3 பேர் வெள்ளை உடையில் வந்தனர். முகில் சாம்பிள் எடுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டான். ஸ்டெரெச்சர் இந்த முறை இன்னொரு கண்ணாடி அறைக்குள் சென்றது. முதுகுப்புறம் திறந்த ஆடைக்கு முகில் மாற்றப்பட்டான். அவனை தலை குப்புறப் படுக்க வைத்தார்கள். உடன் இருந்த இரு ஊழியரும் அவனிடம் விவரிக்கத் தொடங்கினர். “ஸார். உங்களுக்கு இப்போ சி.எஸ்.எஃப் சாம்பிள் எடுக்கப்போறோம். இது ப்ளட் மாதிரி கையில் இருந்து எடுக்கப் போறதில்ல. உங்க முதுகில் ஊசி மூலமா எடுக்கப் போறோம். ஸோ இது கொஞ்சம் பெய்ன்ஃபுல் ப்ராஸஸ். பட் நீங்க ஒத்துழைச்சா ரொம்ப ஈசியா முடிஞ்சுரும். வலிச்சா மட்டும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க. நீங்க முதுகை அப்படி இப்படி ஆட்டினா நாங்க மறுபடியும் சாம்பிள் எடுக்க வேண்டி வரும்”. முகில் கண்ணாடி வழியாக எட்டி மதுவை பார்த்தான். பின்பு தலையை ஆட்டினான். டாக்டர் ஒருவர் கைகளில் க்ளவுசை மாட்டிக்கொண்டு வந்தார். “பேஷண்ட் ரெடி யா? ஓ இவர் தானா? ஓகே, அவர பொஷிஷனுக்கு ரெடி பண்ணுங்க…” முகில் குத்துக்காலிட்டு மண்டி போட வைக்கப்பட்டான். தலையை மட்டும் நன்றாய்ப் பிடித்து அழுத்தினார்கள். அவ முதுகெலும்பை நன்றாக தடவிப் பார்த்து நடு முதுகில் மார்க் செய்யப்பட்டது. முகில் கண்களை நன்றாக மூடிக் கொண்டான். அவன் முதுகில் இப்பொது டின்சர் தடவினர். ஏசி அறையில் குளுகுளுவென்ற அந்த திரவம் சிலீரென்றது. முகில் தன் கை கால்களை நன்றாக விரைத்து வைத்துக்கொண்டான். “ஸ்டிஃப் ஆக்காதீங்க… லூஸா விடுங்க..” டாக்டர் கைகளைத் தட்டிவிட்டார். மீண்டும் தளர்வானான். இப்போது அவனுடன் இருந்த இருவரும் அவன் கை கால்களைப் பிடித்துக் கொண்டனர். “டாக்டர்.. என்ன பண்ணப் போறிங்க.. என்ன விடுங்க… மது எங்கே?? மதூ….” முகில் அலறினான். முகிலுக்கு பதட்டம் ஆனது. டாக்டர் சைகை காட்ட அவன் வாயிற்கும் ப்ளாஸ்டர் போட்டு இறுக்கிக் கட்டினர். “ஒண்ணும் இல்லை.. இப்போ ஒரு இன்ஜெக்ஷன் போடுவோம். கொஞ்சம் பொறுத்துக்கோங்க. அப்பறம் அவ்வளோதான். அசையாதீங்க.. நீடில இறக்கப் போறோம்..” நீடில் மார்க் செய்யப்பட்ட இடத்தில் நடு முதுகில் இறங்கியது. முதுகெலும்புத் தொடரின் நடுவில் இருந்து நீரை அதற்கு வேண்டுமளவும் உறிஞ்சியது. முகில் கை கால்களை உதற எத்தனித்தபோது அவனுடன் இருந்த இருவர் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்கள். “ம்ம்ம்மாஹ்ஹ்” முகிலிடம் இருந்து வெறும் முனகல் மட்டுமே வெளியேறியது. ஆனால் மொத்த முதுகெலும்புத் தொடரும் உருவி எடுத்ததைப் போன்ற வலி பரவியது. டாக்டர் அவர் கையில் இருந்த பாட்டிலில் சாம்பிளை ஊற்றி இறுக்கி மூடினார். அதன்மேல் முகிலின் வரிசை எண்ணை எழுதி இன்னொரு மேசையின் மீது வைத்தார். முகிலுக்கு வலி குறைய இன்னொரு ஊசி கையில் போடப்பட்டது. முகிலின் கண்கள் சொருக அவன் அப்படியே ஆழ்ந்த மயக்கத்திற்குப் போனான். இவை அனைத்தையும் கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த மதுவுக்கு பாதி உயிர் பிரிந்ததைப் போன்று வலி ஏற்பட்டது. முகில் ரூமிற்கே மறுபடியும் அழைத்து வரப்பட்டான். “மது… வலி தாங்க முடியல..” முகிலின் குரல் சோர்ந்து போயிருந்தது. மதுவிற்கு அவன் பேசுவதைக் கேட்கவே ஆறுதலாக இருந்தது. அவன் பேசப்பேச மயங்கிப் போனான். இது முதல் முறையல்ல. மதுவிற்கு அவர்கள் நாளை என்ன சொல்வார்கள் என்றுகூட ஊகிக்க முடிந்தது. முகிலோடு ரூம் ரூமாய் அலைவதும் வித விதமான டெஸ்ட்கள் எடுப்பதும் கடந்த பத்து ஆட்களாய் தொடர்கதையாகத்தான் நடக்கிறது. ஆனாலும் எதுவும் செய்ய முடியாது. இதுதான் சென்னையிலேயே பெரிய மருத்துவமனை.. எக்ஸ்பர்ட்களிடம் தான் பார்க்கிறோம், சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் கண்களை மூடினாள். ஆனால் அந்த இரவு விடியவே போவதில்லை என்பது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 14 ஜெரால்ட் மனதில் இருந்த பதட்டம் இன்னும் விலகவில்லை. எட்டிப் பார்த்தான். இதயத் துடிப்பு ஏகத்துக்கும் அதிகரித்தது. கால் தாரையை ஒவ்வொன்றாக பின்னோக்கி கவனித்துப் பார்க்கையில் அது ஒரு செத்துக் கிடந்த காக்கையில் முடிந்திருந்தது. செத்துக் கிடந்த காக்கையை மிதித்து வந்திருந்தான்.ஜெரால்ட் தன்னைத் தானே நொந்துகொண்டான். தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று உறுதிப்படுத்தியபின் ஹெச்.ஓ.டி என்று போர்ட் மாட்டியிருந்த அறைக்குள் நுழைந்தான். அங்கிருந்த மிதியடியில் காலை நன்றாகத் தேய்த்துக் கொண்டான். சற்று வழுக்கை விழுந்த தலையுடன் கண்ணாடி அணிந்த ஒருவர் அமர்ந்திருந்தார். மேஜையின் மீதிருந்த பெயர்ப்பலகை அவர் ஸ்பிரின்ஸ் தான் என்பதை உறுதிப்படுத்தியது. “மே ஐ கம்மின் ஸார்…” ஜெரால்டின் குரல் பவ்யமாக அறையெங்கும் ஒலித்தது. நெற்றியைச் சுருக்கி நிமிர்ந்து பார்த்தார். உள்ளே வரச் சொல்லி சைகை காட்டினார். அனுமதி பெற்று இருக்கையில் அமர்ந்தான். தான் யார் என்ன என முழுவதும் சொல்லி முடித்தவுடன் அவர் நெற்றிச் சுருக்கங்கள் மறைந்தது. “நீங்க அந்த ஹோலி க்ராஸ் காலேஜ்ல சைக்காலஜி ஸ்டூடண்ட் தான?” எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கேன்னு நெனைச்சேன்.. “ஆமாம் ஸார்.. உங்க கையால ப்ரைஸ் எல்லாம் வாங்கியிருக்கேன்..” “யெஸ் யெஸ்.. நியாபகம் இருக்கு.. நீங்க மிஸ்டர். தத்தாவைப் போய்ப் பாருங்க… அவர் உங்களுக்கு உங்க ரூமைக் காட்டுவார்.” “தாங்க்யூ ஸார்..” ஜெரால்ட் திரும்பி நடந்தான்.. பின்னாலேயே வயதான ஒருவர் நடந்து வந்து தத்தா என அறிமுகம் செய்து கொண்டார். ஹாஸ்டல் வளாகமும் மிகப் பரந்து விரிந்திருந்தது. தன்னை இன்னும் அவர் நினைவில் வைத்திருந்தது ஜெரால்டுக்குக் கொஞ்சம் பெருமையாக இருந்தது. அவன் ரூமை காட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க தத்தா போனார். தன் பெட்டியை ஓரமாக வைத்துவிட்டு கட்டிலில் தொப்பென அமர்ந்தான். அப்போது தான் அறையைச் சுற்றிலும் நோட்டமிட்டான். அறையெங்கும் விசித்திரமான பொருட்கள் கொம்புகள் என நிரம்பியிருந்தன. ஆட்டுத்தலையும் கொம்பும் வைத்துக் கொண்டு சாத்தானின் நின்றுகொண்டு அமர்ந்துகொண்டு இருக்கும் பலவிதமான படங்கள் அறை முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது. தனக்கு இவ்வளவு காலமாக எவை எல்லாம் தீயவை என போதிக்கப்பட்டு இருந்ததோ அவை மட்டுமே அந்த அறை முழுவதும் இருந்தது. மேசையின் மேல் புத்தகங்கள் பெரிதும் சிறிதுமாக கலைந்து கிடந்தது. மிகவும் பழையதாக இருந்த ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தான். மேசையிம் மேல் இருந்த குண்டூசி அவன் கையைக் குத்தியது. கருஞ்சிவப்பாக எட்டிப் பார்த்த ரத்தத்தை அனிச்சையாக ஜெரால்ட் வாயில் வைத்து உறிஞ்சினான். ஜெரால்ட் அதன் பக்கங்களைப் புரட்டினான். அவனுக்கே தெரியாமல் அவன் விரல் படும் பக்கங்களில் அவன் ரத்தம் கை ரேகையை அச்சாக்கி பதித்துக் கொண்டு வந்தது. சாத்தானின் வழிபாடுகள் எனத் தலைப்பிடப் பட்டிருந்தது. அறுங்கோண வட்டத்தில் பிறை, வளைவு என ஏதோ வரையப்பட்டிருந்தது. ஜெரால்ட் அதில் எழுதி இருந்ததைப் படிக்கத் தொடங்கினான்.. ஹம்பாபாவை வரவழைக்க… இரவு நேரம் சரியாக மூன்று மணிக்கு அறுங்கோண சக்கரம் வரைந்து அதை செம்மண்ணால் அலங்கரிக்க வேண்டும். சிகப்பு நிற மலர்கள் கொண்டு அதன் ஒவ்வொரு மூலையிலும் மெழுகுவர்த்தி ஏற்றி பிறையை வரைய வேண்டும். பின் கோழிக்கு மஞ்சள் நீரைக் குடிக்கக் கொடுத்து அதன் கழுத்தை அறுக்க வேண்டும். கோழியின் தலையைத் தனியாக எடுத்து வட்டத்தின் நடுவில் வைக்க வேண்டும். கோழியின் ரத்தத்தை வட்டத்தைச் சுற்றி ஊற்றியபின் ஆறு மூலைகளுக்கும் எலுமிச்சம் பழத்தை அறுத்து கோழியின் ரத்தத்தைத் தடவி வைக்கவும். ஷெம்ஹம்பொராஷ் என்று கூறி மணிகளை அடித்து காற்றை சுத்தப்படுத்தவும். பின் பன்னீரால் குளிக்க வைத்த ஆறு மாதக் குழந்தையை மஞ்சள் துணி சுற்றி எடுத்து கிழக்கு பார்த்து படுக்க வைத்து சாத்தானின் புத்தகத்தில் லீவியதான் னில் கூறியுள்ள வசங்களைப் படிக்கவும். பின், நீண்ட வெள்ளியினால் ஆன ஊசியை வைத்து குழந்தையின் பின்னங்கழுத்தில் வைத்து அழுத்தவும்… சே.. என்ன இது.. ஜெரால்டு பதட்டமடைந்தான். புத்தகத்தை மூடி மேசையின் மேல் வைத்து திரும்பும்போது அறையின் கதவு திறந்தது. ஜெரால்டு திடுக்கிட்டுத் திரும்பினான். அங்கே செல்வா நின்று கொண்டிருந்தான். ஜெரால்டின் கண்கள் மேலும் ஆச்சரியத்தை உமிழ்ந்தது. “செல்வா.. நீங்க எங்க இங்க..” “இது என் ரூம் தான்.. நீங்க இங்க என்ன பண்ணீட்டு இருக்கீங்க?” “இதுதான் எனக்கும் அலாட் பண்ணின ரூம். இது உங்க ரூமா.. ரொம்ப நல்லதாப் போச்சு… அது சரி.. இது என்ன செல்வா.. ரூம்ல எங்க பார்த்தாலும் ஒரே பேய், சாத்தான்னு இருக்கு?” “ஓ அதுவா.. அது தான் என்னோட தீஸிஸ் டாபிக். எக்ஸார்ஸிஸம் அண்ட் இட்ஸ் சைக்கலாஜிக்கல் இஷ்யூஸ். பேயோட்டுதலும் அது ரீதியான உளவியல் பிரச்சினைகளும்… அது பத்தி படிக்கும்போது பேய்கள் பத்தியும் படிக்கலாம்னு வாங்கி வச்சேன்.. ஹம்பாபா.. இதுவும் ஒரு டீமன் தான்.. எப்படியும் உங்களுக்கும் இதுல எல்லாம் நம்பிக்கை இருக்கும். நீங்க என்ன நெனைக்கிறீங்க?” “ஏன் செல்வா.. எவ்வளவோ இருக்கு.. இதை ஏன் எடுத்தீங்க..” “இதுல என்ன ஜெரால்ட் தப்பா இருக்கு… இதுவும் ஒரு பிரச்சினை தான். மக்கள்கிட்ட இருக்கற மூட நம்பிக்கைகளை நீக்கறது நம்ம கடமை இல்லையா…” “அப்போ.. பேய் இல்லங்கறீங்களா? இல்லாத பேயப் பத்தியா நீங்க ஆராய்ச்சி பண்ணப் போறீங்க?” “கண்டிப்பா பேய் இல்லதான் ஜெரால்ட். நான் இது பத்தி ஆராய்ச்சி பண்றதுலாம் இது பத்தின மூட நம்பிக்கைகளை ஒழிக்கத்தான். கிராமங்களில் எல்லாம் பேய் ஓட்றதைப் பாதுருக்கீங்களா? சாட்டையால அடிக்கறது, முடியப் பிடிச்சு ஆணி அடிக்கறது, செருப்பால அடிக்கறது.. இப்படி எத்தனையோ இருக்கு. இந்த பேய் பத்தின நம்பிக்கை தான் கடைசியில பேய ஓட்ட முடியலன்னு சொல்லி சம்பந்தப்பட்டவங்களை பலி குடுக்கற வரைக்கும் போகுது”. “ஓ.. அது உங்க புக் ல படிச்சேன். குழந்தைய பலி குடுக்கறது எல்லாம்.. இவ்வளவு கொடூரமான விஷயம் எல்லாம்.. கடவுளோட வழியில போகாமப் போனா இப்படித்தான்.” “அது எல்லாமே மன ரீதியான குறைபாடுகள் தான். எல்லாரும் தன்னைப் பார்க்கணும்னு நெனைக்கற மேனியா.. இல்லன்னா தனக்கு நடந்த வாழ்வியல் பாதிப்புனால ஏற்பட்ற மனப்பிறழ்வு.. ஹிஸ்டீரியா.. சோஷியல் டிஸார்டர்.. இப்படி எல்லாதுக்கும் மனப் பிரச்சினைதான். நான் இது பத்தி ஆராய்ச்சி பண்ணி இனிமேல் உலகத்துல பேயே இல்லன்னு நிறுவப் போறேன். இவங்களுக்கு எல்லாம் தேவை சிகிச்சை தான். இவங்களை சைக்கியாட்ரிக்கலா ட்ரீட் பண்ணாம கொடுமை பண்றதுனால அவங்களோட மனநிலை இன்னும் சிக்கலாத்தான் ஆகுது”. “நமக்கு தெரியாததுனாலையோ இல்ல நம்ம வாழ்க்கையில நடக்காததுனாலையோ ஒரு விஷயம் இல்லன்னு சொல்லிட முடியாது செல்வா. நாம பாக்காததை எவ்வளவோ நம்ம இன்னும் நம்பிகிட்டுதான் இருக்கோம். கரண்ட் மாதிரி..” “அதுக்குதான் லைட் எரியுதுன்ற ஆதாரம் இருக்கே… இந்த பேய் எல்லாம் சுத்தப் பொய். எவனோ பொழுது போகாதவன் கிளப்பி விட்டது. நீங்க படிச்ச புக்லயே பாத்துருப்பீங்களே. புத்தியுள்ளவன் எவனாச்சும் செய்வானா.. அதுவும் நீங்க சொன்ன மாதிரி கொழந்தையக் கொல்லுறது எல்லாம் கண்டிப்பா மனநிலை பாதிக்கப்பட்டவனாத்தான் இருப்பான். இதுல பெருசா யோசிக்க எதுவுமே இல்ல. நானும் எவ்வளவோ பேரை பாத்துப் பேசிட்டேன். இது வரைக்கும் எனக்கு ஒரு ஆதாரம் கூட கெடைக்கல. கெடைச்சது எல்லாம் இப்படி பேய் பிடிச்சுருக்குன்னு சொன்னவன் எல்லாம் மனநிலை பாதிக்கப் பட்டங்க அவ்வளவுதான்”. “கடவுள் இருக்கறது எவ்வளவு உண்மையோ அதே மாதிரி பேய் இருக்கறதும் உண்மைதான். எல்லாத்தையும் அறிவியல்னால வரையறுக்க முடியாது. சில விஷயங்களைப் புரிஞ்சுக்கற அளவுக்கு நம்ம அறிவு வளராமக் கூட இருக்கலாம்”. “கடவுள் இருக்கா இல்லையாங்கற நம்பிக்கை இந்த அளவுக்கு போகறதில்லை. ஒரு உயிரை கஷ்டப்படுத்த இல்லாத காரணங்கள் சொல்லி அதைக் கொடுமையும் படுத்தறது இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்..” “அறியாமையால சிலது நடக்கலாம் செல்வா. அதுக்காக முற்றிலுமாகவே மறுக்கறது எப்படி சரியாகும்?” “இப்போ என்ன சொல்ல வர்றீங்க ஜெரால்ட்.. என் அறிவு இன்னும் வளரலைங்கறீங்களா? என் தீசிஸ் தப்பு, அதானே?” “சே.. என்ன செல்வா. இப்படி சொல்லறீங்க.. நான் என்னையும் சேர்த்துதான் சொல்லறேன். நீங்க பர்சனலா எல்லாம் எடுத்துக்காதீங்க.. நீங்க உங்க அனுபவத்துல பார்த்ததைச் சொல்றீங்க. நான் என்னோட நம்பிகையைச் சொல்லறேன். அவ்வளவுதான்”. “பின்ன என்ன ஜெரால்ட்… இல்லாத ஒரு விஷயத்துக்குப் போய் இவ்வளவு பேசறீங்க.. அப்படி பேய் இருக்குங்கறது உண்மைன்னா இந்த ரூம்ல நீங்க பாக்கறது எல்லாமே சபிக்கப்பட்ட பொருட்கள் தான். இன்னைக்கு வரைக்கும் எனக்கு எதுவும் ஆகலை. அப்படி பேயோ சாத்தானோ இருக்குன்னா அதுக்கான அறிகுறியாவது காட்டி இருக்கணுமே. எனக்குன்னு தனிப்பட்ட முறையிலும் ஒன்னும் நடக்கலை. எனக்குத் தெரிஞ்சவங்களுக்கும் ஒண்ணும் நடக்கலை. பின்ன எப்படித்தான் நீங்க எல்லாரும் நம்பிகிட்டு இருக்கீங்களோ..” இனி இவனிடம் பேசுவது வீண் வாக்குவாதம் தான் ஏற்படும் என நினைத்த ஜெரால்ட் அவனை திசைமாற்ற நினைத்தான். சுற்றிலும் வேறு ஏதவது பற்றிப் பேசுவோம் என அங்கும் இங்கும் பார்த்தான். இருவரும் அமைதியாக இருந்ததால் அறையே இறுக்கமாக மாறியிருந்தது. விளையாட்டாகப் பேசப் போய் அவன் இவ்வளவு சீரியசாவான் என ஜெரால்ட் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நல்லவேளையாக அறையின் மெளனத்தைக் கலைக்கும் விதமாக திடீரென அறைக்கதவு தத்தாவினால் திறக்கப்பட்டது. “செல்வா சாப்.. விசிட்டர் ஆயேகா..” செல்வா அறையை விட்டு வெளியேற காரணம் தேடிக் கொண்டிருந்ததைப் போல் தத்தாவின் வார்த்தையைக் கேட்டதும் அறையை விட்டு வெளியே போனான். அவன் அறையை விட்டுப் போவதும் தேவையாகத்தான் இருந்தது. வாக்குவாதம் செய்ததற்காக ஜெரால்ட் மிகவும் வருந்தினான். இப்பொழுதுதான் உதவி செய்தான். அதற்குள் அவனிடமே பேச்சு கொடுக்க வேண்டியது போலாகிவிட்டதை நினைத்து மருகினான். நாளை காலையில் முதல் வேலையாக அறையை மாற்றிவிட வேண்டும். இவ்வளவு கோபப்படுவான் என்று தெரிந்திருந்தால் அவனிடம் பழக்கமே வைத்திருக்க மாட்டோம் என ஜெரால்ட் பலவாறாக அவனைப் பற்றியே யோசித்தான். சரி குளித்துவிட்டு வரலாம் என தன் பெட்டியில் இருந்த துணிகளை எல்லாம் ஒரு அலமாரியில் வைத்துப் பூட்டிவிட்டு ஜெரால்ட் குளித்துவிட்டு வந்தான். அவன் திரும்பி வரும்போது தனியாக அமர்ந்து செல்வா சிரித்துக் கொண்டிருந்தான். அவன் கையில் வண்ணக் காகிதங்களினால் சுற்றப்பட்ட பரிசு இருந்தது. அதையே ஆர்வமாக செல்வா பார்த்துக் கொண்டிருந்தான். ஜெரால்டைக் கூட கவனிக்கவில்லை. சரி இனிமேல் இவன் நம்மிடம் பேசப் போவதில்லை என ஜெரால்ட் ஊகித்தபடியே தன் கட்டிலில் அவனுக்கு எதிராக அமர்ந்தான். “சாரி ஜெரால்ட். நான் ஏதாவது பேசியிருந்தா மனசுல வெச்சுக்காதீங்க.. தெரியல. இப்போ எல்லாம் அடிக்கடி எமோஷன் ஆகீட்றேன். கொன்ட்ரோல் பண்ணிக்கணும்”. “சேச்சே. அதெல்லாம் அப்பவே விட்டுட்டேன். ஆமா.. கோவமா போனீங்க.. சிரிச்சுகிட்டே வர்றீங்க.. யாரு வந்திருக்காங்க.. அம்மாவா..” “அம்மா எதுக்கு இப்படி பரிசு எல்லாம் வாங்கப் போறாங்க.. வந்தது ஆஷா..” சொல்லும்போதே செல்வாவின் முகம் சிவந்தது. செல்வா பேசிக் கொண்டே பரிசைப் பிரித்தான். செல்வா ஆஷா ஒரு இதயத்தில் இருப்பது போன்று தைக்கப்பட்டிருந்தது. ஜெரால்டுக்குப் புரிந்தது. அதன் பிறகு அப்படி ஒரு வாக்குவாதம் நடந்ததாகவே இருவரும் காட்டிக்கொள்ளவில்லை. அன்று இரவு உணவருந்தக்கூட இருவரும் ஒன்றாகத்தான் சென்றனர். நாட்கள் செல்லச் செல்ல இருவருக்குள்ளும் நல்ல புரிதல் வந்து விட்டிருந்தது. இருவரும் அவரவர் வேலையில் முனைப்பாக நாட்கள் வேகமாக ஓடியது. எங்கே இருந்தாலும் இருவரும் சேர்ந்தே இருக்கும் அளவுக்கு நல்ல நெருக்கமாகினர். 15 “மிஸஸ். முகில்.. ஜெனரலாவே இப்போ சிலருக்கு எபிலெப்ஸி .. அதாவது வலிப்பு வரும். தலைல அடி பட்றது, ட்ரக் அடிக்ஷன், ஜெனெடிக்கல் இப்படி பல காரணங்கள் இருக்கலாம்.. அதுக்காகதான் ஆரம்பத்துலையே நாங்க ஈ ஈ ஜி எடுத்துப் பார்த்தோம். ஆனாலும் உங்க ஹஸ்பண்ட் ரீடிங் எல்லாமே ஒரு நார்மல் மனிதனுக்கு இருக்கற மாதிரி தான் இருக்கு.. ப்ரய்ன் ல ஏதாவது ஒரு காரணத்துனால தழும்பு உண்டாகலாம்..” “ஆனாலும் அப்படி வர்ற வலிப்புலயும் ஸ்டிமுலேஷன் பாயிண்ட்னு ஒண்ணு இருக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட வாசனை, வெளிச்சம்… இப்படி எதாவது ஒண்ணு.. அதுவும் பார்ஷியலா தான் ஆரம்பிக்கும்.. அதனாலதான் அதோட ப்ளேஸ் பாக்க சி டி ஸ்கேன் எடுத்தோம். பட், அவருக்கு எல்லாமே நார்மல்… கடைசியா அவருக்கு எடுத்த ஸ்பைனல் ப்லூயிட் சாம்பிளும் நில் க்றோத் தான் காட்டுது. ஸோ, ஸ்பீக்கிங் ஆன் அவர் சைட், அவர் நார்மல்…” “அவர் நார்மல்னா எதுக்கு டாக்டர் இப்பிடி எல்லாம் வித்தியாசமா நடந்துக்கணும்? மூச்சு பேச்சு இல்லாம இருக்காரு.. எப்போ கேட்டாலும் யாரோ மாரி பேசறாரு.. நேத்து நைட் ரூம்ல இருக்கப்போ விடிய விடிய ஒடம்பெல்லாம் வலிக்குது எரியுதுனு கத்திகிட்டே இருக்காரு… ஒரு சாதாரண மனுஷன் இப்பிடி எல்லாம் நடந்துப்பாரா என்ன? அவருக்கு என்னதான் பிரச்சனை டாக்டர்? உங்கனால முடியலனா சொல்லிடுங்க…” “ஸீ.. எங்களப் பேச விடுங்க… நாங்க உங்க ஹஸ்பண்ட்க்கு தி பெஸ்ட் ஆப் பெஸ்ட் டாக்டர்ஸ வச்சு ட்ரீட்மெண்ட் பாத்துட்டு இருக்கோம்… இவர் மிஸ்டர். செரியன்.. ந்யூரோ சைகாலஜிஸ்ட்.. உங்க ஹஸ்பண்ட் க்காகவே இவர வர வெச்சுருக்கோம். இவர் சொல்லிதான் நேத்து வரைக்கும் ட்ரீட்மெண்ட் பாக்கறோம்…” கண்ணாடி அணிந்திருந்த அந்த முதியவர் அனுபவம் உள்ளதைப்போலத்தான் தென்பட்டார். ரிப்போர்ட்களைக் கையில் வைத்துக்கொண்டிருந்த அவர் பக்கம் பக்கமாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். அதை மூடி மேஜையின் மீது வைத்து விட்டு மதுவைப் பார்த்தார். “ஹாஸ்பிட்டல் டீம் சொன்னது எந்த விதத்துலையும் தப்பில்ல.. உங்க ஹஸ்பண்ட் டோட்டலி ஆல்ரைட்.. பட், அவருக்கு வர்ற வலி , அவரோட அப்நார்மல் பிகேவியர் இதெல்லாம் வச்சு பாக்கறப்போ அவருக்கு இருக்கறது சொமட்டோபார்ம் அப்படீங்கற ஸ்டேட்…” “அது ஒரு மென்டல் ஸ்டேட்… இதுக்குன்னு ஒரு பர்டிகுலர் காரணம்னு எதுவும் இல்ல.. ஆனாலும் உங்க ஹஸ்பண்ட் உபயோகப் படுத்தின மருந்துகள், அவரோட வாழ்க்கை முறை இதுனால அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்துருக்கலாம். அவருக்கு வர்ற வலி.. அவரோட நிலைமை.. எல்லாமே நிஜம்தான்… ஆனா அது அவரோட உடம்புனால வந்தது இல்ல.. டிப்ரஷன்ல இருந்த அவரோட மனசு அவர இப்பிடி எல்லாம் செய்ய வைக்குது… அவருக்கு வந்த வலிப்பு கூட இந்த கண்டிஷனோட ஒரு பார்ட் தான்..” “இந்த வியாதியை எப்படி குணப்படுத்தறது டாக்டர்??” “இத ஒரு வியாதினே சொல்ல முடியாது.. பெண்கள்னா 25 வயசுலையும் ஆண்கள்னா 30 வயசுலையும் இந்த நிலையோட அறிகுறிகள் வெளிப்பட்றது சகஜம் தான்.. சிலர் காரணமே இல்லாம கால் வலிக்குதுனு சொல்லி நாள் கணக்கா மாத்திரை சாப்பிடுவாங்க.. ஆனா மெடிக்கலி அவங்களுக்கு எந்த குறையும் இருக்காது.. இத ஹைப்போகான்ரியாசிஸ்னு சொல்லுவோம்.. ஆக்ஸிடெண்ட் மாதிரி சில விரும்பத்தகாத இன்சிடெண்ட்னால அவங்க கையையோ காலையோ இழந்தவங்க கூட ரொம்ப நாள் கழிச்சு லாஸ் ஆன ஆர்கன் வலிக்குதுனு சொல்லுவாங்க.. இதுக்கெல்லாம் நாம ஃபிசிக்கல் ரீசன் கிடைக்காது.. இவருக்கு இருக்குறதும் கிட்டத்தட்ட இது மாதிரி ஸ்டேட் தான்.. ஆனா கொஞ்சம் டெவெலப்ட் கண்டிஷன்”. மதுவுக்கு ஒரு சிறிய நம்பிக்கை உண்டாகி இருந்தது.. இவ்வளவு நாள் என்னவென்றே கண்டுபிடிக்காத நிலையில் இப்பொழுது குணப்படுத்த ஒரு வழியும் இருப்பதை அறிந்து அவள் கடவுளுக்கு நன்றி கூறினாள். டாக்டர் தொடர்ந்தார்… “நாங்க ஸ்டார்டிங்லேர்ந்து இப்போ வரைக்கும் எடுத்த ஈ ஈ ஜி ரிப்போர்ட் ல கூட அவரோட மூளைல இடது வலது பக்க ரீடிங் வேற வேறயா இருக்குமோன்னு தான் இவ்வளோ நாள் சந்தேகப்பட்டோம்… அது ஸ்கைசோபெர்னியாவா இருக்கும்னு நெனைச்சோம்.. பட் அவருக்கு எல்லாமே நார்மல்.. ஸோ அவருக்கு இப்போ தேவை மெடிசின்ஸ் எதுவும் இல்ல.. மத்த எல்லா ரிசல்டும் நார்மல் தான்.”. “எவ்வளோ செலவானாலும் பரவால்ல டாக்டர்.. அவர பழையபடி நீங்க மாத்திக் கொடுத்தா போதும்..” “பழைய ஆன்டி டிப்ரசண்ட் ட்ரக்குக்கு பதிலா இப்போ வேற மைல்ட் ஆ தர்றோம். .அவருக்கு பிகேவியர் தெரபி தான் நாங்க சஜஸ்ட் பண்றோம்.இனி அவர் மாறுவது உங்க கைல தான் இருக்கு.” “என் கைலையா?? நான் என்ன செய்யணும் டாக்டர்?” “ஆமா.. இந்த பிஹேவியர் தெரபிங்கறது அவர் வாழ்க்கையோட சம்பந்தப்பட்டது. அவர் டெய்லி வொர்க் அவுட் பண்ணனும்.. டெய்லி அவரோட நீங்க அதிகமா டைம் செலவிடனும்.. அவர எவ்வளவுக்கு எவ்வளோ நீங்க ஸ்ட்ரெஸ் இல்லாம பாத்துக்கறிங்களோ அவர் அவ்வளவு சீச்கிரம் குணமாவார். அவர் ஸ்ட்ரெஸ் காண காராணத்தைக் கண்டு பிடிச்சு அது இல்லாமப் பாத்துக்கோங்க.. 15 நாள் கழிச்சு மறுபடியும் வாங்க.. டே பை டே … அவர் குணமாகிடுவாரு…” “ரொம்ப நன்றி டாக்டர்..” “அவர இன்னக்கு ஆப்சர்வேஷன் ல வெச்சுட்டு நாளைக்கு நீங்க டிஸ்சார்ஜ் ஆகிக்கலாம்… தெரபிக்குத் தேவையான கவுன்சிலிங், டயட் லிஸ்ட் எல்லாம் உங்களுக்கு ஈவ்னிங் சொல்றோம்.. பேஷண்ட் க்கு இது பத்தி எல்லாம் தெரிய வேண்டாம்.. அவர் நார்மலா இருக்கற மாதிரியே நடத்துங்க. அது அவர் இன்னும் சீக்கிரம் குணம் ஆக உதவியா இருக்கும்.. இனி எல்லாம் உங்க கையில தான் இருக்கு…” எல்லா ரிப்போர்ட்டிலும் டாக்டர். செரியன் என்று எழுதி பின்னால் மயில் வால் நீளத்திற்கு அவரின் படிப்புகள் சேர்க்கப்பட்டிருந்தது. மதுவிற்கு வெளிச்சக்கீற்று தெரிவதைப்போல் இருந்தது. அன்று மாலையே வித விதமாக நெறிமுறைகள் அவளுக்கு விளக்கிச் சொல்லப்பட்டன. கையில் முகிலின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் குறித்து வைக்க அட்டவணைகள் கொடுத்தனர்.. முகில் அவ்வப்போது உடல் வலி தாளாமல் முனகிய போதெல்லாம் வலி நிவாரணி ஏற்றினர்.. முகில் பெரும்பாலும் இரவு முழுவதும் மயக்கத்திலேயே இருந்தான். காலையில் கோதுமைக்கஞ்சி கொடுக்கப்பட்டது. பகல் முழுதும் அவன் காய்ச்சலில் இருந்து மீண்டவன் போலத்தான் நடந்து கொண்டான். இப்போது அவனுக்கிருந்த ஒரே பிரச்சினை உடல் வலியாக மட்டுமே இருந்தது. மதிய நேரம் கண் விழித்துப் படுத்திருந்தான். “மது.. டாக்டர் என்ன சொல்றாங்க? எனக்கு என்ன தான் ஆச்சு?? எப்போ வீட்டுக்கு போவோம்? கொழந்தைங்க எல்லாம் எங்க?” “பாப்பா பையன் ரெண்டு பேரும் எங்க அம்மா வீட்ல இருக்காங்க… உங்களுக்கு வெறும் உடம்பு வலி தானாம்..நல்லா ரெஸ்ட் எடுத்துக்க சொல்லிர்க்காங்க.. ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணி வேலை செஞ்சதால இப்படி ஆகிடுச்சாம்.. நாளைக்கே வீட்டுக்குப் போய்டலாம்னு சொல்லிர்க்காங்க… உங்க ஆபீஸ்லயும் நானே சொல்லீட்டேன்… இனி நீங்க மாத்திரை சாப்பிட்டு கொஞ்ச நாள் அமைதியா இருந்தா போதுமாம்…” “எனக்காக நீ பொய்யெல்லாம் சொல்லலையே மது?? நான் நல்லாயிருக்கேன் தானே? எதுவா இருந்தாலும் சொல்லு.. நான் தைரியமாதான் இருக்கேன்..” “நீங்க நல்லா தான் இருக்கீங்க..ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. நான் இருக்கும்போது நீங்க ஏன் கவலைப்படறீங்க? உங்களுக்கு ஒண்ணுண்ணா நான் என்ன வேணாலும் செய்வேன்…” “ஆமா.. அதான் தெரியுமே .. அந்த மேனேஜர் கிட்டயே பேசி லீவ் வாங்கீர்க்கேன்னா நீ வேற லெவல் தான்… என் கொலீக் இன்னொருத்தனுக்கு ஒரு எமர்ஜென்ஸி வந்தப்ப அவன ரிசைன் பண்ண வெச்சாங்க..” அவன் அப்படியே நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசப்பேச அவளுக்கு நிம்மதியாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனை அவனாகவே பார்த்தாள். அவன் சில நேரம் பேசி விட்டு மருந்துகளின் களைப்பில் தூங்கிப்போனான். இனி எந்த விதமான கவலையும் இல்லை. அவனை பழையபடி சீக்கிரமே பார்த்துவிடலாம்.. வீட்டுக்குப் போகும்போது யாரையாவது ஆரத்தி எடுக்கச் சொல்ல வேண்டும் என யோசித்துக்கொண்டிருந்தாள்.. அதே நேரம் அவரகள் அறையில் தொலைபேசி ஒலித்தது. மருத்துவமனையில் மீதிப்பணம் கட்டச் சொன்னார்கள். மது அவனைத் தூங்க வைத்து விட்டு போய் எல்லா ரசீதுகளையும் கட்ட மணி ஆறு ஆனது. செரியன் தன் உதவியாளர்களுடன் மறுபடியும் வந்து பார்த்துவிட்டு டிஸ்சார்ஜ் ஸ்லிப்பில் கையெழுத்திட்டார். ஒவ்வொருவரும் முகிலின் ரிப்போர்ட்டை படித்துப் பார்த்து குறிப்புகள் எடுத்துக்கொண்டனர். “பேஷண்ட அடுத்த மாசம் 12ம் தேதி செக்கப் க்கு கூட்டிட்டு வாங்க.. இம்ப்ரூவ்மெண்ட் பாத்துட்டு அடுத்த ஸ்டெப் போய்க்கலாம்.. என்ன மிஸ்டர் முகில்.. இப்போ எப்படி இருக்கு??” “அயாம் ஆல்ரைட் டாக்டர்…” “தட்ஸ் குட்… மெடிகேஷன் லாம் டைம்க்கு எடுத்துக்கோங்க… ஓக்கே??” “ஷ்யூர் டாக்டர்…” முகில் சிரித்துக்கொண்டே பதிலளித்தான். “தட்ஸ் த சீயர் யங் மேன்… யூ வில் பி ஓக்கே..” “பை தி வே.. உங்க பையனுக்கு உடம்பு இப்போ எப்படி இருக்கு டாக்டர்? நல்லா நடக்கறாரா?” “யா யா… கோயிங் ஆன்… பிசியோ போயிட்டு இருக்கு.. அடுத்த வாரத்தோட முடியுது”. அவர் ரிப்போர்ட்டைக் கொடுத்து விட்டு அடுத்த நோயாளியை பார்க்கப் போனார். எந்த நேரத்திலும் தன்னை அழைக்கலாம் என்றும் தன்னுடைய தனிப்பட்ட எண்ணையும் தந்துவிட்டுப்போனார். முகில் இரவோடு இரவாக வீடு வந்து சேர்ந்தான். செரியன் வீட்டில் தன் மகனுக்கு அருகில் அமர்ந்து இருந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த விபத்தில் அவன் கால் முறிந்து படுக்கையில் கிடந்தான். அவனுக்கான மருந்துகளைக் கொடுத்துவிட்டு அவன் அருகிலேயே அமர்ந்தார். "வலி எல்லாம் கொறைஞ்சுருச்சுப்பா.. பிசியோ தெரபிஸ்ட் வந்தாங்க.. ஒரு வாரத்துல தேறிடலாம்னு சொல்லீயிருக்காங்க… அப்பா.. உங்க கிட்ட தான் சொல்லிட்ருக்கேன்.. என்ன யோசிக்கறிங்க?? “ஆங்… ஒண்ணுமில்லப்பா…” தன் மகனுக்கு நடந்த விபத்து பற்றி இவனுக்கு எப்படித் தெரியும்?? செரியன் இன்னமும் முகில் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். 16 “என்ன ஜெரால்ட்.. இங்க கொஞ்சம் பேப்பர்ஸ் வெச்சிருந்தேன். நீங்க எதாவது பார்த்திங்களா? ரொம்ப முக்கியமாத் தேவைப் படுது. டேபிள் மேலதான் வெச்சிருந்தேன். இங்கதான் வெச்சிருந்தேன்.. நீங்க பாத்தீங்களா? ரொம்ப முக்கியமான பேப்பர்ஸ்..”. செல்வா அறையையே கலைத்துப் போட்டுத் தேடிக் கொண்டிருந்தான். நேரம் ஆக ஆக செல்வாவின் பொறுமை எல்லை மீறிக் கொண்டிருந்தது. அறையில் இருக்கும் எல்லாவற்றையும் தூக்கி வீசிக் கொண்டிருந்தான். “எங்க போயிடும் செல்வா.. ஏன் இப்படி இவ்வளவு பதட்டப்படுறீங்க.. நீங்கதான எடுக்கறீங்க.. வைக்கறீங்க.. அப்படி எங்க தொலையப் போகுது..” “இல்லை ஜெரால்ட், போன மாசம் கெடைச்ச ஒரு முக்கியமான ரிசல்ட் அது. இப்போவே அது வேணும். இங்கயேதான் வெச்சேன்.. இப்போ அது இல்லையின்னா பெரிய பிரச்சனை ஆகிடும்”. “இருக்கும் பாருங்க.. அதென்ன கால் மொளைச்சா நடக்கப் போகுது.. இல்ல குட்டி போடப் போயிருக்குமா…” செல்வாவிடம் ஜெரால்ட் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் செல்வா அதையெல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை என்பது அவன் தேடிக் கொண்டிருக்கும் பரபரப்பிலேயே தெரிந்தது. ஏதோ கலவர இடத்தில் நுழைந்தது போல அந்த இடமே காட்சியளித்தது. செல்வா எதையும் கண்டுகொள்ளாமல் எல்லாவற்றையும் துக்கி வீசி அலசிக் கொண்டிருந்தான். அவன் அவசரத்தைக் கண்ட ஜெரால்ட் தானும் கண்ணில் பட்ட இடத்தில் எல்லாம் பார்த்து தேடிக் கொண்டிருந்தான். “என்ன மாதிரி பேப்பர் செல்வா.. சொல்லுங்க நானும் பாக்கறேன்..” “அது.. இருக்கும்.. தேடுங்க.. இங்கதான் ஒரு கவர்குள்ள..” “இப்படி சொன்னா எப்படி.. ஏதாவது சொன்னாத்தானே நானும் பார்க்க முடியும்.. கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க” “என்ன யோசிக்கணும்.. நீங்க ஒண்ணும் யோசிக்க வேணாம். உன்னை எல்லாம் ரூமுக்குள்ள விட்டேன்ல.. என் தப்புதான்..” செல்வாவின் பேச்சு பட்டென ஒருமைக்கு மாறியது. இதற்கு மேலும் அங்கிருந்தால் மரியாதை இல்லையென உணர்ந்த ஜெரால்ட் அப்போதே அறையை விட்டு வெளியேறினான். அறையின் கதவருகில் தான் நின்றிருந்தான். ஆனாலும் உள்ளே செல்ல வேண்டும் என்றொ அவனைப் பார்க்க வேண்டும் என்றோ எதுவுமே தோன்றவில்லை. கொஞ்ச நேரம் கழித்து செல்வா அறையின் கதவுகளை விருட்டெனத் திறந்து வெளியே வந்தான். அவன் ஜெரால்டை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. அவனாக அப்படியே நடந்து போனான். ஜெரால்டுக்கு அவன் செய்கைகள் எல்லாமே இரண்டு நாட்களாக விசித்திரமாகப் பட்டது. இரவு உணவுண்ணும் நேரத்து சரியாக செல்வா வந்தான். ஜெரால்ட் எங்கேயோ பார்த்தபடி அமர்ந்திருந்தான். செல்வா எதுவுமே நடக்காததைப் போல் அவன் அருகில் வந்து தோளைத் தொட்டான். ஜெரால்ட் திரும்பிப் பார்த்தபோது தன் வழக்கமான புன்னகையுடன் செல்வா நின்றிருந்தான். ஜெரால்ட் பேச வாயெடுக்கும் முன் செல்வாவே பேசினான். “ஜெரால்ட்.. ரொம்பப் பசிக்குது.. வர்றீங்களா.. கேண்டீன் போகலாம்.. எனக்கு கண்ணுகூடத் தெரியல..” அவன் குரலிலேயே அவன் மிகவும் சோர்ந்து போயிருப்பது தெரிந்தது. இந்த நேரத்தில் அவனைப் போய் கேள்வி கேட்பது நன்றாக இருக்காது என ஜெரால்ட் எதுவும் பேசாமல் செல்வாவின் பின்னால் நடந்தான். கேண்டீனில் இருவரும் சாப்பிடத் தொடங்கினர். செல்வா இப்போதெல்லாம் அதிகம் சாப்பிடத் தொடங்கியிருந்தான். அதுவும் இப்போது சாப்பிடும் போது அருகில் யார் இருக்கிறார் இல்லை என்று கூடப் பாராமல் அள்ளி அள்ளி யாரோ சாப்பாட்டையே பார்க்காதவர் போல் அந்த தோசையைப் பிய்த்து தின்றான். எல்லாரும் அவனையே பார்த்தாலும் அவன் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை என்பதை அவன் சாப்பிடும் விதமே காட்டியது. ஜெரால்டும் சுற்றும் முற்றும் பார்க்கவில்லை. ஜெரால்டுக்கு இன்னும் தன் மனதில் கோபம் இருந்தது. இதன் காரணமாக செல்வாவின் கண்களைப் பார்ப்பதையே தவிர்த்தான். சாப்பிட்டு முடித்த பின்தான் செல்வாவின் முகமே இயல்பாகியது. தலையைக் குனிந்தபடியே ஜெரால்ட் சாப்பிடுவதை கவனித்த செல்வா நிலைமை ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து அவனே பேச்சைத் தொடங்கினான். “ஆஷா வீட்டில எங்க விஷயம் தெரிஞ்சு போச்சு ஜெரால்ட்.. பெரிய பிரச்சினையாகப் போய்கிட்டு இருக்காம்..” இதுதான் காரணமா.. சொந்தப் பிரச்சினையும் கூட தன் படிப்பும் குறுக்கிட்டதால் அவன் தன்னிலை இழந்திருக்க வேண்டும் என ஜெரால்ட் யோசித்தான். ஜெரால்ட் இப்போது தெளிவானான். இருவரும் கை கழுவ எழுந்தனர். “என்ன சொல்றீங்க செல்வா.. எப்படித் தெரிஞ்சிது?” “அதெல்லாம் தெரியலை ஜெரால்ட். திடீர்னு எனக்கு மதியம் போன் வந்துது. ஆஷா அழுதுட்டே விஷயத்தை மட்டும் சொல்லிட்டு வச்சிட்டா. எனக்குதான் இப்போ என்ன செய்யிறதுன்னே தெரியலை. ஒரே குழப்பத்தோட சுத்திகிட்டு இருக்கேன்”. “இதுல யோசிச்சு பார்க்க என்ன இருக்கு.. உங்க வீட்டிலயும் பேசுங்க.. போய் சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணிக்க வேன்டியதுதானே..” “அங்கதானே இருக்கு பிரச்சினையே… அதுதான் தலைவலியான விஷயம்..” “ஏன் செல்வா.. உங்க அப்பா அம்மா ஒத்துக்க மாட்டாங்களா.. எதாவது மதம், ஜாதி பிரச்சினையா..” “சேச்சே.. அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நீங்களே என்கூட இருக்கீங்க, உங்களுக்குத் தெரியாதா.. நான்லாம் அப்படி நெனைக்குறவன் எல்லாம் இல்ல. என் அம்மா அப்பாவும் அதெல்லாம் பாக்குறவங்க இல்ல. இது வேற..” “வேறன்னா.. புரியல செல்வா.. நீங்க போய் உங்க அப்பா அம்மா கிட்ட மொதல்ல பேசுங்க.. அவங்க என்ன சொல்றாங்கன்னு கேப்போம்”. “நான் பேசுவேன்.. ஆனா அவங்க பேச மாட்டாங்களே..” செல்வாவின் குரல் திடீரெனக் கம்மியது. இருவரும் அறைக்கு வந்தனர். செல்வா தலையில் கை வைத்தபடியே படுத்தான். ஜெரால்ட் தண்ணீர் குடித்துவிட்டு அப்படியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான். “அவங்க ஏன் பேச மாட்டாங்க செல்வா.. நான் பேசவா உங்களுக்காக? உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே..” “நீங்களா.. நீங்க பேசாமக் கொஞ்சம் சும்மா இருங்க” செல்வா தலையைத் தூக்கிப் பார்த்தான். “அப்படி என்னதான் உங்க வீட்டில பிரச்சினை?” “என் அப்பா அம்மா ரெண்டு பேருமே இப்போ உயிரோட இல்ல.. அதான் பிரச்சினை.. அவங்க பத்து வருஷம் முன்னாடி விபத்துல இறந்துட்டாங்க”. “என்ன செல்வா என்ன சொல்றீங்க.. நிஜமாவா.. கர்த்தரே..” “ஆமா ஜெரால்ட்.. இப்போ ஒரு அனாதைப் பையனுக்கு என் பொண்ணைக் குடுக்கணுமாங்கறதுதான் அவங்க அப்பாவோட கேள்வியே.. விடுங்க, நான் சமாளிச்சுக்கறேன்.. நீங்க படுங்க”. செல்வா பேசியபடியே தூங்கிப் போனான். ஜெரால்டுக்கு ஏனோ தூக்கமே வரவில்லை. அப்படியே அமர்ந்திருந்தான். இரவில் ஏதோ நாற்றம் அடிப்பது போல் வந்தது. ஒருவேளை வியர்வை நாற்றமாக இருக்கும் என சமாதானப் படுத்திக் கொண்டாலும் அறையில் என்னவோ இருக்க முடியாது எனத் தோன்றியது. இங்கு வந்ததில் இருந்து இடம் நன்றாகப் பழகி விட்டபடியால் காலாற நடக்கலாம் என வெளியே வந்தான். செல்வாவுக்கு தொந்திரவு ஆகாதபடி மெதுவாக நடந்து வந்து கதவை சாத்தினான். வெளியே காற்று ரம்மியமாக இருந்தது. இதுவே தன் ஆசிரமமாக இருந்திருந்தால் கண்டிப்பாக இங்கேயே பாயை விரித்து படுத்திருக்கலாம் என நினைத்தான். அங்கும் இங்கும் பார்த்த படியே ஜெரால்ட் செல்வாவைப் பற்றி யோசித்தான். என்ன இவன்.. பார்த்த புதிதில் அவ்வளவு உரிமையுடன் பழகிவிட்டு இப்போது ஒரு சின்ன காகிதத்துக்கு என்ன இவ்வளவு கோபப்படுகிறான்.. இவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே என ஜெரால்ட் தன்னைத் தானே நொந்து கொண்டான். எனினும் இவனும் இல்லை என்றால் இவ்வளவு பெரிய இடத்தில் காலம் தள்ளுவதே கடினமான காரியம்தான். நல்லவேளை கர்த்தரே அவனை அனுப்பியதாக நினைத்து நன்றி சொன்னான். வந்து ரொம்ப நேரம் கழிந்திருக்கும், இப்போது படுத்தால் தான் நாளைக்கு ரிப்போர்ட் வேலையை முடிக்க முடியும் , இல்லாவிட்டால் இவ்வளவு நாள் உழைத்ததும் வீணாகிவிடும் என என ஜெரால்ட் வேக வேகமாகா தன் அறையை அடைந்தான். அங்கே சென்றவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. வெளியே வரும்போது அடைத்து வைக்கப் பட்டிருந்த கதவு ஜெரால்ட் திரும்பி வந்து பார்க்கும்போது நன்றகத் திறந்திருந்தது. உள்ளே குளிர் காற்று சாவகாசமாய் சென்று தன் இஷ்டத்துக்கு எல்லா காகிதங்களையும் கலைத்துப் போட்டிருந்தது. போதாக்குறைக்கு அறையின் ஜன்னலும் காற்றுக்கு தடதடவென அடித்துக் கொண்டிருந்தது. யார் இதையெலாம் செய்திருப்பார்கள் என ஜெரால்ட் யோசித்தபடியே எட்டிப் பார்த்தான். எல்லா அறையின் கதவுகளும் அடைக்கப் பட்டிருந்தது. திறந்து வைத்தது செல்வாவாகக் கூட இருக்கலாம், அவன் எப்போது என்ன செய்கிறான் என்பதே புரியவில்லை என ஜெரால்ட் மறுபடியும் எல்லா கதவு ஜன்னல்களை சாத்திவிட்டு தன் கட்டிலில் படுத்தான். ஆனால் செல்வா இது எதுவுமே தெரியாததைப் போல அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். ஜெரால்டுக்கும் அயர்ச்சியாக இருந்தபடியால் படுத்தவுடனே தூங்கிப் போனான். சிறிது நேரம் கழித்து ஜெரால்டுக்கு இரவில் யாரோ முனகும் சத்தம் கேட்டது. தூக்கத்தில் அப்படியே புரண்டு படுத்தான். ஆனலும் அந்த சத்தம் நின்றபாடில்லை. நேரம் ஆக ஆக முனகல் சத்தம் அதிகமாகக் கேட்டது. ஜெரால்ட் விழித்து எழுந்து சத்தம் எங்கிருந்து வருகிறது எனப் பார்த்தான். செல்வாவிடம் இருந்து தான் வந்து கொண்டிருந்தது. ஜெரால்ட் தன் படுக்கையில் இருந்தே செல்வாவை அழைத்தான். ஆனால் அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஜெரால்ட் எழுந்து சென்று செல்வாவைத் தொட்டு எழுப்பினான்.செல்வா வீறிட்டபடியே எழுந்தான். செல்வாவின் உடல் முழுவதும் வேர்த்துப் போயிருந்தது. “பயப்படாதீங்க செல்வா.. நான்தான்… ஜெரால்ட்.. ஜெரால்ட் செல்வாவை ஆசுவாசப்படுத்தினான்…” செல்வாவிற்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான். ஆனாலும் செல்வாவுக்கு இன்னும் படபடப்பு குறையவில்லை. மலங்க மலங்க விழித்தான்.. ஜெரால்ட் செல்வாவை படுக்க வைத்து அவன் தலையைத் தடவி விட்டான். செல்வாவின் கண்கள் நிலைகுத்தியபடி இருந்தது. அவன் உடல் முழுவதும் அந்தக் குளிரிலும் வியர்வை பூத்தது. கொஞ்ச நேரத்தில் செல்வா வலிப்பு வந்தது போல இழுத்து வெட்டினான். செல்வாவின் நாக்கு ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டது. இதற்குப் பிறகும் அங்கேயே இருப்பது சரி அல்ல என நினைத்த ஜெரால்ட் உடனடியாக வெளியே வந்து தத்தாவை அழைத்தான். அவர் வராந்தாவின் மூலையில் கையில் டார்ச்சை வைத்து எங்கோ அடித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஜெரால்ட் இங்கிருந்தே கத்திக் கொண்டு போனான். செல்வாவைக் காப்பாற்ற வேண்டும் என்னும் பதட்டம் அவன் நடையை இன்னும் வேகப் படுத்தியது. அவர் பக்கத்தில் சென்று தத்தா என அழைத்த மறு வினாடி அவர் காற்றாக மறைந்துபோனார். ஜெரால்ட் அப்படியே உறைந்து நின்றான். பின்பு தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டு அவனே டெலிபோனின் பக்கம் போய் மூச்சிரைக்க நின்றான். வேகவேகமாக அருகில் இர்க்கும் மருத்துவமனையின் எண்ணை நோட்டீஸ் போர்டிலிருந்து பார்த்து அடித்தான். பத்து நொடி காத்திருப்புக்குப் பின்பு எதிர் முனையில் பெண்ணின் குரல் கேட்டது. “ஹலோ.. ஷர்மா ஹாஸ்பிடல்ஸ்..” “மேடம்.. புனே மென்டல் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட்.. மை பிரண்ட்.. சீரியஸ்.. கம் சூன்” ஜெரால்ட் மூச்சு வாங்கியபடியே தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் விவரித்தான். “ஓக்கே ஓக்கே சாப்.. குச் நயி.. பி காம். வி வில் பி தேர் இன் டென் மினிட்ஸ்…” தொடர்பு துண்டிக்கப்பட்டது. 17 பக்கத்து வீட்டில் பிரிசில்லா அக்கா வந்து அவனை உள்ளே கூட்டிப்போக உதவி செய்தார்கள். மது யாரிடமும் முகிலின் நிலை பற்றி சொல்லவில்லை. இராப்பகல் பாராமல் கடினமாக வேலை செஇததினால் இப்படி உடல்நலம் குறைந்து விட்டதாக கூறினாள். கர்த்தர் கண்டிப்பாய் சொஸ்தப்படுத்துவார். . முகிலை மாடியில் படுக்க வைத்துவிட்டு மது டீ போடப்போனாள். நம்பிக்கையோடு இருக்குமாறு பிரிசில்லா அக்கா கூறியதை புன்னகையோடு ஏற்றுக்கொண்டாள். தனக்குத் தெரிந்த பாதர் ஒருவர் வந்து பிரார்த்தித்தால் எல்லாம் குணமாகும் என்றும் கூறினர்.. கண்டிப்பா சொல்றேன் அக்கா என மது நாசூக்காகத் தவிர்த்து விட்டாள். வழியனுப்பி விட்டு வந்து வீட்டைச் சுற்றிலும் பார்த்தாள். ஒரு வாரமாய் கவனிக்கப்படாததால் அலங்காரச் செடிகள் எல்லாம் வாடிப்போய் இருந்தது. இரவுக்கான உணவாக பிரட் வாங்கி வைத்திருந்தாள். சமைலறையில் தான் எதாவது கெட்டு போயிருக்கும் என்று தேடிப்பார்த்தாள். எங்கிருந்தோ நாற்றம் அடிக்கிறது.. ஆனால் எங்கே என்று கண்டுபிடிக்க முடியவில்லை.. பிரட்டை கையில் எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தாள். மேலே அவன் நன்றாகத் தூங்கட்டும்.. சோபாவில் மது உடம்பைக் குறுக்கிப் படுத்துக்கொண்டாள்.. மழை பெய்யத் தொடங்கியது. அந்த நாற்றம்தான் தொந்தரவாக இருந்தது.. சே. என்ன ஒரு முடை நாற்றம்.. பத்து நாள் வீட்டைப் பூட்டி வைத்ததாய் இருக்கலாம்… களைப்பாக இருந்தது.. யோசித்தபடியே தூங்கிப்போனாள்.. உடம்பில் வாடைக்காற்று ஊசியைப்போன்று துளைத்தது.. கண் விழிக்கும் போது ஏதோ வெளிர் நிறக்காட்டுக்குள் நிற்பதாக இருந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். கல் சுவர் ஒன்று அவள் பக்கத்தில் இருந்தது. வித்தியாசமாக வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒரு சட்டை அணிந்திருந்தாள். சட்டை அவள் இடுப்பு வரைதான் இருந்தது.. கால்களில் எல்லாம் காற்று உரசி நடுக்கத்தை ஏற்படுத்தியது. கைகளை மார்பின் குறுக்காகக் கட்டிக் கொண்டாள். எங்கு பார்த்தாலும் நெருக்கமாக சவுக்கு மரங்கள் நிறைந்து இருந்தது. தூரத்தில் கருப்பாக நீள அங்கி அணிந்த ஒருவர் தொலைவில் எங்கோ நடந்து சென்று கொண்டிருந்தார். பனி மூடி கிடந்ததால் அவளால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. “ஐயா… பெரியவரே.. கொஞ்சம் நில்லுங்க.. உங்களைத்தான்… ஐயா…” அவர் காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை. தன் பாட்டுக்கு அந்த உருவம் நடந்து போய்க்கொண்டு இருந்தது. மது அவரைப் பிடிக்க ஓடினாள். மரங்களின் நடுவே ஓடியதால் சின்னச் சின்ன சவுக்குக் குச்சிகள் தொடையின் இரு பக்கங்களிலும் கீறியது. வலியை எல்லாம் பொருட்படுத்துகிற மனநிலையில் அவள் இல்லை.. அவள் எப்படியாவது அந்த கருப்பு உருவத்தைப் பிடிக்கும் நோக்கில் வேகமாக ஓடினாள். நிலம் மிகவும் சொதசொதவென ஈரமாக இருந்தது. கால்களில் செருப்பில்லாததால் தரையில் கிடந்த கற்களின் கூர்முனைகள் அவள் கால்களில் தன்னால் முடிந்த ஆழம் சென்றன. இப்போது அந்த உருவத்தின் அருகில் வந்து விட்டாள். அந்த உருவம் மெதுவாக தன் தலையைத் தூக்கிப்பார்த்தது. ஒரு கையில் சிலுவையைத் தலைகீழாகப் பிடித்திருந்தது.. அதனைத் தொட யத்தனித்து கையை மறுபடியும் நீட்டும் போது மீண்டும் அது தொலைவில் எங்கேயோ நடந்து சென்று கொண்டிருந்தது. மது மறுபடியும் ஓடினாள். அவள் இரண்டு தொடைகளிலும் ரத்த விளாறாக ஓடியது. இதற்கு மீறி ஓட முடியாது எனும் நிலையில் ஓடிச்சென்று அந்த உருவத்தைப் பிடித்தே விட்டாள். அது இப்போது அசையாமல் நின்றது. “ஐயா… இது என்ன இடம்? உங்களைக் கூப்பிட கூப்பிட நிக்காமப் போறிங்களே..” என்றாள். அந்த உருவம் எதுவும் அசையால் இப்போது அப்படியே நின்றது. அதன் தலையில் இருந்த முக்காடு நழுவி விழுந்தது. மது அதிர்ச்சி தாங்காமல் கீழே விழுந்தாள். அந்த உருவத்திற்குத் தலையே இல்லை… கத்துவதற்கு வாயைத் திறந்தாள்.. காற்றைத் தவிர எதுவுமே வரவில்லை.. அங்கே இருந்த பனிக்கு வெள்ளைப் புகையாய் மட்டுமே அவளால் ஓலமிட முடிந்தது. அந்த உருவம் இபோது தன் கையில் இருந்த சிலுவையை ஓங்கியது. அதன் கூரான முனை நேராக மதுவின் கழுத்துக்குக் குறியாகி இருந்தது. வாயைக்குவித்து எப்படியாவது கத்த வேண்டும் எனப் பெருங்குரலெடுத்தாள். ஓவெனக் கத்திய படியே முழித்தாள்.. கனவு கண்டதற்கா இப்படி என தன்னைத் தானே நொந்து கொண்டாள். முகமெல்லாம் வியர்த்துப் போனது. கைகளாலேயே துடைத்து விட்டுக்கொண்டாள். பக்கத்தில் இருந்த நீர்க்குடுவையை எடுத்து ஒரு மிடறு பருகினாள். திடீரென்று தட தடவென சத்தம் கேட்டது. மது பதறிக்கொண்டு எழுந்தாள். முகிலின் அறையில் இருந்து தான் கேட்டது.. கீழே விழுந்திருப்பானோ… மேலே போனதும் அவன் அறையைத் திறந்தாள்.. அவன் படுக்கையில் அமைதியாகத் தூங்கிக்கொண்டு இருந்தான். அந்த நாற்றம்.. அவன் அறையில் மிக அதிகமாகவே இருந்தது… அவன் அறை விறைத்துக்கொள்ளும் அளவுக்குக் குளிருடன் இருந்தது.. இவ்வளவு குளிருடனா தூங்குகிறான்? அவனுக்குப் போர்த்தி விட்டாள்.. அவன் நெற்றியைத் தடவிக் கொடுத்தாள். படிக்கட்டில் யாரோ இறங்கி ஓடுவது போன்று இப்போது சத்தம் கேட்டது.. அவன் அறைக் கதவைச் சார்த்தி விட்டு வெளியே வந்தாள்.. அதே சத்தம் கீழிருந்து கேட்டது.. மது திடுக்கிட்டாள்.. வீட்டின் மின்சாரம் தடைப்பட்டது. சத்தம் இன்னும் அதிகமாகக் கேட்கத் தொடங்கியது.. மது கையில் டார்ச்சை எடுத்துக்கொண்டு ஆன் செய்தாள். கவனமாக ஒவ்வொரு படியாக இறங்கி வந்தாள். “யா.. யாரு??? .. யாரது??… யாராவது இருக்கீங்களா?” மது கேட்டுக்கொண்டே இறங்கி வந்தாள்.. எதிர்ப்பக்கம் மழைத்துளி விழும் சத்தம் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. மது அறை முழுதும் வெளிச்சம் அடித்துப் பார்த்தாள்… கண்டிப்பாக யாரோ இருக்கிறார்கள். அவளால் உணர முடிந்தது. ஆனால் அங்கு வேறு யாரையும் காணவில்லை… அறையில் டார்ச் வெளிச்சம் தவிர வேறு எதுவுமே இல்லை.. அறையின் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாகப் பார்த்தாள். முகிலுக்கும் உடம்பு சரி இல்லை.. இந்த நிலையில் இப்படியே தனியாத் தூங்க முடியாது. அது என்னவென்று பார்த்து விடவேண்டும்.. மழைக்காற்றுக்கு ஜன்னல் திறந்து கொண்டது. டம் டம் என அடித்தது. மது நடந்து சென்று திரைச்சீலை நனையாதவாறு எடுத்து விட்டு ஜன்னலை மூடினாள். திடீரென யாரோ தன் பின் நிற்பது போன்று தோன்றியது. யாரோ கண்டிப்பாக நிற்கிறார்கள். ஒரு அண்மையை அவள் உணர்ந்தாள். டக்கெனத் திரும்பிப் பார்த்தாள். சே.. பிரம்மையாய் இருக்கும்.. ஒருவரும் இல்லை… இப்போது சத்தம் சமையலறையை நோக்கிச் சென்றது. காலடியோசை தெளிவாகக் கேட்டது. இல்லை.. இங்கு யாரோ இருக்கிறார்கள்.. அடி மேல் அடி வைத்து மெதுவாக உள்ளே சென்று எட்டிப் பார்த்தாள்.அவள் உள்ளே செல்லும் வரை மிதந்து கொண்டிருந்த டீ கப் கதவைத் திறந்த நொடியே படீரென உடைந்தது. அதே நேரம் முகிலின் அறையில் இருந்து மறுபடியும் இப்போது சத்தம் கேட்டது. என்ன இது… உன்னிப்பாய் கேட்டாள்… கூடவே முகிலின் சத்தமும் கேட்டது… “மது… மதூ… சீக்கிரம் வா மது… என்ன காப்பாத்து.. இவங்க என்னை அடிக்கிறாங்க… அம்மாஹ்ஹ்….” மது முகிலின் அறைக்குத் தாவிச் சென்றாள். அங்கே அவள் கண்ட காட்சி அவள் நெஞ்சை உறைய வைப்பதாக இருந்தது. முகில் கை கால்களை முறுக்கிக்கொண்டு கிடந்தான்.. அவன் கைகளை யாரோ முறுக்குவது போல் இருந்தது.. முகில் வலியால் துடித்தான். ’மது.. மது.. இவங்களைப் போகச் சொல்லு… என்னால தாங்க முடியல.. அய்யோ வலிக்குதே… ப்ளீஸ்…." முகில் அரற்றினான்… மது வேகமாக அவன் கையையும் காலையும் திருப்பி நேராக்கினாள். மிகவும் வலுவாக முறுக்கி இருந்தான்.. இன்னும் கொஞ்சம் திருப்பினாலும் அது முறிந்து விடும் போல இருந்தது… பக்கத்தில் இருந்த துணியை எடுத்து முகிலின் ஒரு கையைக் கட்டினாள். முகில் இன்னொரு கையை எடுத்து அவளை பளீரென ஒரு அறை விட்டான்.. மது அறையின் மூலையில் போய் விழுந்தாள். இருளில் அவன் கண்கள் ஒரு ஓநாயின் கண்களைப் போன்று மின்னியது.. மின்னல் வெட்டியதில் அவன் முகம் ஒரு வினாடி தெரிந்து மறைந்தது.. இல்லை.. இது நிச்சயமாய் அவனே இல்லை.. படுக்கையின் மீது விழுந்தவனின் கண்கள் மேலே நோக்கி நிலை குத்தி இருந்தது. அவன் தொண்டையில் யாரோ கையை வைத்து அழுத்துவது போன்று ஹக் ஹக் என துள்ளினான்.. அவன் நாக்கு முழுமையாக வெளியே வருவதைப்போன்று தொங்கியது.. மது வெளிறிய முகத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. இம்மாதிரியான அவன் செயல்பாடு அவளை சிலையாகி இருந்தது… முகில் அப்படியே துடித்தான்.. கைகளும் கால்களும் மின்சாரம் பட்டதைப் போன்று வெடவெடத்தது…தலை இடதும் வலதுமாக கழுத்தே முறிந்துவிடும் அளவுக்குத் திரும்பியது. அவன் உடல் தசைகள் எல்லாம் நன்றாக முறுக்கிப் போயிருந்தது. மது விழுந்த பக்கம் பார்த்தவன் அடித்தொண்டையிலிருந்து கத்தினான். ஆனால் அது வலியால் கத்துவதைப் போல் இல்லை.. ஆக்ரோஷமாக இருந்தது… அறையின் விளக்குகள் மங்கி மங்கி எரிந்தது.. அவன் முதுகு மட்டும் நேரானது.. அப்படியே பின் பக்கமாக வளைந்தான். திரும்பி இருந்த கழுத்து இன்னும் ஒரு நொடியில் உடைந்து போகும் நிலையில் இருந்தது.. ஆனாலும் அவளால் எழக்கூட முடியவில்லை… அப்போது அறையின் கதவு படாரெனத் திறந்தது.. கதவைத் திறந்த பிரிசில்லா அக்கா ஒரு நொடி இதயம் உறைந்து நின்றார். இருந்தும் மறுபடியும் சுயநினைவு வந்தவராய் முகிலை பாய்ந்து பிடித்தார். அவன் கையைப் பிடித்து அவனைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டினார். அவன் கைகள், கால்கள் எல்லாம் கட்டிலோடு சேர்த்து பிணைக்கப்பட்டது.. அவனுக்கு மது ஊசியில் மருந்தைச் செலுத்தியதும் முகில் முனகிக் கொண்டே மயங்கினான்… அவனுக்கு ஒரு போர்வை எடுத்துப் போர்த்தி விட்டனர். விளக்குகள் இப்போது எரியத் தொடங்கியது. அறையை கவனமாகப் பூட்டி விட்டு கீழே இறங்கி வந்து சோபாவில் இருவரும் அமர்ந்தனர். மது தண்ணீரை எடுத்து வேக வேகமாகக் குடித்தாள்.. “என்னம்மா ஆச்சு?? ஏதாவதுன்னா கூப்பிட வேண்டியது தான??..”. பிரிசில்லா அக்காவின் கேள்வியில் கோபம் இருந்தது. “இல்லக்கா… நாங்களே சமாளிச்சுக்கலாம்னு தான்…” மது இன்னும் பதட்டத்துடன் தான் இருந்தாள். முகிலின் கை விரல்கள் அவள் கன்னத்தில் நன்றாகப் பதிந்திருந்தது.. உதடுகளின் ஓரம் ரத்தம் எட்டிப்பார்த்தது.. “சரி சரி விடும்மா.. பதட்டப்படாத… நான் அவர் கிட்ட சொல்லீட்டு வந்தர்றேன்.. நான் இங்கயே படுத்துக்கறேன்.. எல்லாம் காலைல பேசிக்கலாம். நீ பயப்படாத…” வேண்டாம் என்று மறுக்கும் நிலையில் மது இல்லை.. இனி அவளால் தனியாக சமாளிக்க முடியாது என்னும் நிலைக்கு அவள் ஆளாகி இருந்தாள். பிரிசில்லா அக்கா வரும் வரையே கூட அவளால் தனித்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை.. மருத்துவமனையில் இதெல்லாம் பார்த்திருந்தாலும் தனியாகப் பார்ப்பது அவளுக்கு புதியது.. செல்பேசியில் சார்ஜ் இல்லாமல் அணைந்திருந்தது. அதற்கு உயிர் கொடுத்து நேரம் பார்த்தாள். இரவு மூன்றரை ஆகி இருந்தது. செரியனுக்கு அழைத்து நடந்ததை ஒன்று விடாமல் கூறினாள். இடம் மாறியதால் அவன் சமநிலை இழந்திருக்கலாம். பயப்படத் தேவையில்லை எனவும் காலையில் தான் வீட்டிற்கே வருவதாகக் கூறினார். அவனுக்கு ஊசியில் மயக்க மருந்து கொடுத்திருப்பதால் அவன் தூங்குவதாகக் கூறினாள். பிரிசில்லா அக்கா தனக்கென ஒரு தலையணையும் போர்வையும் எடுத்து வந்திருந்தார்… “பயப்படாமத் தூங்கும்மா.. நான் கூட இருக்கேன்..” என்று கூறியபடியே ஏசப்பா என தலையைச் சாய்த்தார். இவ்வளவு நடந்த பிறகு இனி எப்படித் தூக்கம் வரும்? மது விடிய விடிய விழித்திருந்தாள். சதை எரியும் நாற்றம் இன்னும் வீசிக்கொண்டு தான் இருந்தது. 18 தொடர்பு துண்டிக்கப்பட்ட சரியாக பத்தாவது நிமிடத்தில் வளாகத்தினுள் ஷர்மா மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் கிறீச்சிட்டு நின்றது. வெள்ளை உடை தரித்த இருவரை ஸ்டெரெச்சருடன் செல்வா தன் அறையினுள் அழைத்து வந்தான். கட்டிலின் மேலே வெறும் போர்வை மட்டும்தான் இருந்தது. உடனடியாக விளக்கைப் போட்டு செல்வாவைத் தேடினர். கட்டிலின் கீழே செல்வா ஒரு மூட்டையை போல் சுருண்டு கிடந்தான். அவன்தான் எனத் தெரிந்தவுடன் ஊழியர்கள் இருவரும் அவனை ஸ்ட்ரெச்சரில் கிடத்தி ஆம்புலன்சிற்கு எடுத்துச் சென்றனர். செல்வா.. செல்வா.. ஏதாவது பேசுங்க..ஜெரால்ட் கத்திக் கொண்டே செல்வாவின் பின்னாலேயே ஓடினான். ஆம்புலன்சில் அவனும் ஏறிக் கொண்டான். வெகு சீக்கிரமே மருத்துவமனையை அடைந்தனர். செல்வாவை இறக்கிய ஒரு நொடியில் அவனை உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் மொய்த்துக் கொண்டார்கள். ஜெரால்ட் மிகவும் பதட்டமாக இருந்தான். செவிலியர்கள் வித விதமான நிறத்தில் ஏதேதோ காகிதங்களை நீட்டினர். ஜெரால்ட் வேகவேகமாக எல்லாவற்றிலும் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தான். அவசர சிகிச்சைப் பிரிவே முடுக்கி விட்டதைப் போன்று மருத்துவர்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். ஜெரால்ட் அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தான். ஒரு மருத்துவரை நிறுத்தி தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் என்னாச்சு டாக்டர் எனக் கேட்டான்.. அவரும் அவருடைய ஆங்கிலத்தில் ஏதோ கூறினார். அவனுக்கு முழுவதும் புரியாவிட்டாலும் ஒரு விஷயம் புரிந்தது. நாம் செல்வாவை இழந்துகொண்டிருக்கிறோம். உள்ளே அவன் நாடித்துடிப்பை அறியும் கருவி தன் பீப் சத்தத்துக்கான இடைவெளியைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. அது நிலைமை கையை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி. மருத்துவர்கள் இறுதி முயற்சியாக மின்சாரம் பாய்ச்சத் தொடங்கினர். செல்வாவின் சட்டை பொத்தான்கள் கழட்டப் பட்டு அவன் நெஞ்சில் ஜெல் தடவப்பட்டது. ஒவ்வொரு முறை அவன் நெஞ்சில் மின்சாரம் பாய்ச்சும்போதும் செல்வா வில்லைப் போல வளைந்தான். நாலைந்து முறை தூக்கித் தூக்கிப் போட்ட பின் மருத்துவர்கள் அவன் இதயத் துடிப்பை அறியு ஈ.சி.ஜியின் முகப்புத் திரையைப் பார்த்தனர். அது எவ்வித அலையும் இன்றி கிடைமட்ட நேர்கோடாக ஓடிக் கொண்டிருந்தது. இனித் தங்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை என உணர்ந்த மருத்துவர்கள் செல்வாவின் முகத்தை மூடினர். வெளியே ஜெரால்ட் இன்னும் பதைபதைப்புடனே கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். கையுறையைக் கழட்டிய டாக்டர், ஜெரால்டின் தோளைத் தொட்டார். “வி டிட் அவர் பெஸ்ட், பட் சாரி மிஸ்டர்” ஜெரால்ட் கதவைத் திறந்துகொண்டு உள்ளே ஓடினான். அங்கே வெள்ளை போர்வையால் முகத்தை மூடி செல்வா கிடத்தப் பட்டிருந்தான். தன்னுடன் ஒரு மணி நேரத்துக்கு முன்பு வரை உரையாடிக் கொண்டிருந்த ஒருவன், இப்போது இல்லை என்பதை ஜெரால்டின் மனது ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஜெரால்ட் செல்வாவைப் பார்த்து உடைந்துபோய் அழுதான். இப்படி என்னை விட்டுட்டு போயிட்டியே செல்வா… எனக்குன்னு நீ இருக்கன்ற நம்பிக்கையைக் கொடுத்துட்டு இப்படி நீயும் பாதியிலையே என்னை விட்டுட்டுப் போயிட்டியே.. என்கூட பேசு செல்வா.. பேசு.. ஜெரால்ட் செல்வாவின் நெஞ்சின் மேல் படுத்து அழுதான். செல்வாவின் உடல் இன்னும் சூடு குறையாமல் அப்படியே இருந்தது. அதைப் பார்த்த ஜெரால்ட் இன்னும் அழுதான். அப்போது செல்வாவின் மேல் ஜெரால்ட் கழுத்தில் கிடந்த சிலுவை உரசியது. நிசப்தமாக இருந்த அந்த அறையில் பீப் என்ற ஒலி எழுந்து அடங்கியது. ஜெரால்ட் திடுக்கிட்டு அறையை சுற்றிப் பார்த்தான். ஈ.சி.ஜி தன் முகப்பில் ஒரு அலையைப் பதிவு செய்திருந்தது. ஜெரால்ட் அதிர்ந்து போனான். செல்வா.. செல்வா.. நான் பேசறது கேக்குதா… பேசுங்க… ஜெரால்ட் செல்வாவைப் பிடித்து உலுக்கினான். இப்போதும் செல்வாவின் மேல் சிலுவை பட, பீப் என்ற ஒலி மறுபடியும் அந்த அறையை நிரப்பியது. ஜெரால்ட் அங்கேயே மண்டியிட்டான். தன் சிலுவையைக் கழட்டி செல்வாவின் மேல் வைத்தான். கண்களை மூடி மேலே பார்த்து தன் நெஞ்சில் சிலுவைக் குறியிட்டுக் கொண்டான். கைகளைக் கோர்த்து அங்கேயே பிரார்த்திக்கத் தொடங்கினான்.. ஆவே மரியா.. பியனா டி கிரேசியா டு சேய்பெனடெட்டா ஃப்ரா லெ டன்னே ஈ பெனெடெட்டோ ஏ இல் ப்ரட்டோ டெல் டூவோ செனோ, ஜெசு ஜெரால்ட் சொல்லச்சொல்ல அறையின் விளக்குகள் அணைந்து அணைந்து எரியத் தொடங்கியது. கண்களை மூடியிருந்ததால் அவன் எதையும் உணரும் நிலையில் இல்லை. நிறுத்தாமல் தன் பிரார்த்தனையைத் தொடர்ந்தான். செல்வாவின் உடல் திடீரென பழையபடி தூக்கித் தூக்கிப் போடத் தொடங்கியது. செல்வாவின் கைகால்கள் தடதடவென கட்டிலில் அடித்தது.சத்தம் கேட்டு ஜெரால்ட் கண்விழித்தான். அதிர்ச்சியில் அவன் இதயம் நின்றுவிடும்போல் இருந்தது. தன் உயிர் நண்பனின் உடல், காற்றில் கட்டிலுக்கு மேல் நான்கடி உயரத்தில் மிதந்துகொண்டிருந்தது. ஆனால் அவன் உடலில் எந்த இதயத்துடிப்பும் இல்லை. அறையில் குளிர் ஒரு நொடியில் ஸீரோவுக்கும் கீழே போக, ஜெரால்டின் உடல் நடுங்கத் தொடங்கியது. கை,கால்கள் குளிரில் விறைக்க அவன் உதடுகள் நடுங்கியது. அறையின் மின்விளக்குகள் சிமிட்டி சிமிட்டி எரிய,அப்போதே அணைந்தது. செல்வா இன்னும் காற்றிலேயே மிதந்து கொண்டிருந்தான். அவன் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த சிலுவை அவன் உடலில் தகித்தது. அவன் தோல் எரிய, அறையில் பிணவாடை அடித்தது. அந்த இரவு நேரத்திலும் எங்கிருந்தோ பறந்து வந்த காக்கை ஒன்று, ஜன்னல் கண்ணாடியில் மோதித் திறந்தது. இரவு நேரத்தில் என்ன அது என ஜெரால்ட் சென்று அதை எட்டிப் பார்த்தான்.தரையில் விழுந்த காக்கை இறகு முறிந்தாற்போல் துடித்துக் கொண்டிருந்தது. வெளியில் இருந்து மெல்லிய வெளிச்சம் மட்டுமே அறையை நிரப்ப, துடித்துக் கொண்டிருந்த காக்கை ஜெரால்டின் முகத்தில் தாக்கி செல்வாவின் மேல் பறந்தது. ஆ எனக் கத்தியபடியே கீழே விழுந்த ஜெரால்ட்,ஒரு நொடியில் சுதாரித்துக் கொண்டு மிண்டும் தன் பிரார்த்தனையைத் தொடர்ந்தான். சான்டா மரியா மாட்ரெ டி டியோ ப்ரெகா பெர் நோய் பெக்காடொரி செல்வாவின் உடலைத் துக்கிக் கொண்டு தலையில் ரத்தத்துடன் கோரப்பற்களுடன் ஒரு உருவம் கண நேரத்தில் தோன்றி மறைந்தது. ஜெரால்ட் எதற்கும் அசராமல் மீண்டும் தன் கைகளை இறுக்கமாகக் கோர்த்துக்கொண்டான்… அடெஸ்ஸோ ஈ நெல்லோரா டெல்லா நாஸ்ட்ரா மார்டே… ஆமென் என முடிக்கும்போது பெரும் சத்தத்துடன் அறைக்கதவு திறந்துகொண்டது. செல்வாவின் உடல் தலைகுப்புற கட்டிலின் மேல் விழுந்தது. டாக்டர்ஸ், நர்ஸ் என ஒரு பட்டாளமே அந்த அறையை நோக்கி ஓடி வந்தது.ஜெரால்ட் ஆமென் சொன்ன மறுநொடியே அறையின் வெளிச்சம், வெப்பநிலை எல்லாம் மாறிவிட்டது. ஜெரால்ட் நிற்பதற்குக்கூட சக்தியற்று சோர்ந்து விழுந்தான். எல்லாரும் ஓடி வந்து பார்த்தபோது செல்வாவின் ஈசிஜி துடிக்க ஆரம்பித்தது. மருத்துவர் கூட்டம் சூழ்ந்து கொள்ள, பத்து நிமிடங்களில் செல்வா இயல்பானான். ஜெரால்ட் கண்விழித்தபோது எல்லாமே மங்கலாகத் தெரிந்தது. தன்னைச் சுற்றி நடப்பது என்ன என்றே தெரியவில்லை. எல்லாமே எதிரொலியாகக் கேட்க, மீண்டும் கண்களை மூடினான். மறுபடி கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தபோது அங்கே செல்வா நின்றுகொண்டிருந்தான். “செல்வா… எப்படி இருக்கீங்க..” ஜெரால்டின் குரல் அடித் தொண்டையிலிருந்து வந்தது. செல்வா சிரித்தான். “என்னை அட்மிட் பண்ணக் கூட்டிட்டு வந்து நீங்க அட்மிட் ஆயிட்டீங்க…உங்களைப்போய் ரூம் மேட்டா வச்சிருந்தனே..” செல்வா கிண்டலாகச் சிரித்தான். பழைய செல்வாவாக அவனைப் பார்த்ததில் ஜெரால்டுக்கும் மகிழ்ச்சியானது.சிரிப்பதற்காக உதட்டினை விரிக்க, அது காயத்தில் வலியை ஏற்படுத்தியது. “மயங்கி விழுந்ததிலே உங்களுக்கு அடி பட்டிருக்கு.. மூணு தையல் போட்ருக்காங்க.. பாத்து நடக்க மாட்டீங்களா??” செல்வா அருகில் இருந்த கண்ணாடியைக் கழட்டி காண்பித்தான். கன்னத்தில் நீளமாகக் கீறியிருந்தது. ஜெரால்ட் யோசித்தான். நாம் அப்படி ஒன்றும் கீழே விழவில்லையே.. என்னாயிற்று நமக்கு என யோசிக்கும்போது நடந்த அனைத்தும் ஒவ்வொன்றாக நியாபகம் வந்தது. தன் கண்கள் அதிர்ச்சியில் விரிய, கழுத்தில் கை வைத்து தன் மாலையைத் தேடினான். அதைக் கவனித்த செல்வா, எழுந்து சென்று கையில் மாலையுடன் திரும்பி வந்தான். “இதை தான தேடறீங்க.. இந்தாங்க.. என் கழுத்திலே இருந்துச்சு.. என்ன இருந்தாலும் அவசரத்துல உதவி பண்ணீருக்கீங்க.. என்க்கு இந்த நம்பிக்கை எல்லாம் இல்லை. நீங்களே வெச்சுக்கோங்க..” செல்வாவே ஜெரால்டின் கழுத்தில் போட்டான். தன்னைக் காப்பாற்றிய கர்த்தருக்கு நன்றி சொல்ல சிலுவையை முத்தமிட கையைத் தூக்கினான். அதற்குக் கூட வலுவின்றிக் கிடந்தான். தன் நிலையைப் பார்க்க தனக்கே விநோதமாக இருந்தது.இதற்கு முன் தன் வாழ்நாளில் தனக்கு இவ்வாறு ஆனதில்லை. உடலில் உள்ள சக்தியை எல்லாம் யாரோ உறிஞ்சி எடுத்து விட்டாற்போல் இருந்தது. இந்த நிலைமையில் எழுந்திருக்க முடியாது என முடிவு செய்துகொண்டு ஜெரால்ட் அப்படியே படுத்துக் கொண்டான். அறையின் கதவு திறக்கப்பட்டு உள்ளே அவனுக்கு உணவு கொண்டுவந்தனர். “விடிஞ்சுருச்சா செல்வா…” “நல்லா கேட்டீங்க போங்க.. மூணாவது முறையா விடிஞ்சுருச்சு…” “மூணு நாள் ஆகியிருச்சா.. இப்போதான் கண்ணு மூடின மாதிரி இருக்கு? என்ன சொல்றீங்க செல்வா… விளையாடாதீங்க..” “நான் ஏன் விளையாடப் போறேன்.. நான் மயங்கி விழுந்த அதிர்ச்சில நீங்க அப்படியே நெர்வஸ் பிரேக்டவுன் ஆகீட்டீங்க. தானா தூங்கி எழுந்தா சரி ஆகிடும்னு டாக்டர் சொல்லிட்டுப் போயிட்டாரு.. உங்களை எப்படி தனியா விட்டுட்டுப் போக முடியும்? அதுதான் நானும் உங்க கூட தங்கிட்டேன்”. “இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு செல்வா?” “ஓ.. நானா… எனக்கு எந்தப் பிரச்சினையுமே இல்லையாம். ஏதோ திடீர்னு குளிர் தாங்காம தூக்கித் தூக்க்கிப் போட்டிருக்கு. அதுக்குள்ள யாரோ பாத்து பயந்து இப்படிக் கொண்டு வந்து போட்டுட்டாங்க… நான் அடுத்த நாளே எழுந்துட்டேன்”. “ரொம்ப தேங்க்ஸ் செல்வா. உங்களைப் பாத்துக்க வந்து கடைசில நான் அட்மிட் ஆகிட்டேன்”. இவனிடம் நடந்தவற்றைக் கூறிவிடலாமா என செல்வா யோசித்தான். வேண்டாம், டாக்டர் ஒன்றுமில்லை என கூறிவிட்ட பின்பு நாமே புதிதாகக் கதை விடுகிறோம் என நினைப்பான். அதுதான் எல்லாம் சரி ஆகி விட்டதே.. இனி என்ன.. இதை அப்படியே விட்டு விடலாம். “யோசிக்காதீங்க ஜெரால்ட்.. இட்லி ஆறிடப் போகுது. இங்க இட்லி ஆறிட்டா பேப்பர் வெயிட்டா மாறிடுது. சீச்கிரம் சாப்பிட்டிருங்க.. அப்புறம் பட்டினி தான் கிடக்கணும். இவ்வளவு பெரிய ஹோட்டல்ல ஒரு சாப்பாடு கூட நல்லா இல்ல.. சே..” “செல்வா.. இது ஹாஸ்பிட்டல்..” ஜெரால்ட் சிரித்தான். “ஏன்.. ஹாஸ்பிட்டல்னா சாப்பாடு நல்லா இருக்கக் கூடாதா… நீங்களே சாப்பிட்டு பாத்துட்டு சொல்லுங்க..” செல்வா கட்டிலில் இருந்த லீவரைத் திருகினான். ஜெரால்டின் தலைப் பகுதி மேலே வந்தது. தலையணையை எடுத்து செல்வா ஜெரால்டிற்கு வசதியாக வைத்தான். ஜெரால்ட் அப்போதுதான் கவனித்தான். சிலுவைக்குறி தலைகீழாக ஆன் கையில் கீறி இருந்தது. ஜெரால்ட் திடுக்கிட்டான். “என்ன செல்வா.. உங்க கையில? ஏதோ காயம் மாதிரி?” “அது ஒண்ணுமில்ல ஜெரால்ட்.. நீங்க சாப்பிடுங்க..” செல்வா பேசிக்கொண்டே தன் சட்டையை இழுத்து கையை மறைக்க முயன்றான். ஜெரால்ட் முன் திரும்பி சாப்பிட ஏதுவாக அமர்ந்து கொண்டான். அந்த நேரம் கதவின் பின்புறம் அவ்வளவு நேரம் நின்றுகொண்டிருந்த நிழல் உருவம், அவர்களைக் கடந்து சென்றது. ஜெரால்டின் இதயத் துடிப்பு மேலும் அதிகமானது. 19 மறுநாள் காலை… இளவெயில் அறைக்குள் எட்டிப் பார்த்தது. நாற்றம், சத்தம் எல்லாமே நின்று போயிருந்தது.. ஒரு வழக்கமான வீட்டைப்போல் ஆகியிருந்தது. மது உட்கார்ந்த படியே தூங்கிக்கொண்டிருந்தாள். வெயில் பட்டு கண் திறந்தாள். சமையலறைக்குச் சென்று காபி போட்டு வந்து பிரிசில்லா அக்காவை எழுப்பினாள். “இதெல்லாம் எதுக்கும்மா?? நானே உனக்கு ஒத்தாசைனு வந்துட்டு உனக்கு வேலை வைக்கற மாதிரி..” “அதெல்லாம் பரவால்ல அக்கா.. எப்படியும் எனக்கு போட்றது தான்… சக்கரை சரியா இருக்கா?” “போதும் மா.. நைட் தூங்கிட்டு இருக்கும்போது உங்க வீட்லேர்ந்து சத்தம் வந்துச்சு.. அவர் தான் போய் பாக்கறேன்னு சொன்னார்.. நான்தான் கொழைந்தைகளைப் பாத்துக்கோங்கனு சொல்லீட்டு வந்தேன்… தம்பிக்கு இப்போ பரவால்லையாமா??” நம்மேல் இவ்வளவு அக்கறை கொண்டு விசாரிக்கும்போது இனியும் மறைப்பது நன்றாக இருக்காது என நினைத்த மது.. முகிலின் அலுவலகத்தில் நடந்தது முதல் நேற்றிரவு வரை எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள். கேட்கக் கேட்க பிரிசில்லா அக்காவின் கண்கள் விரிந்தன.. “இல்லம்மா.. நீ பேசறது எல்லாம் பார்த்தா இது ஏதோ மருந்துக்குக் கட்டுபட்ற விஷயம் மாதிரி தெரியல.. வேற ஏதோ போலத் தெரியுதும்மா…” “வேறன்னா என்னக்கா? அவருக்குப்பாத்தது எல்லாம் நம்ம சென்னைலயே பெரிய டாக்டர்ஸ்.. அவர்களுக்கே தெரியாதது உங்களுக்கு என்ன தெரிந்து விடப்போகிறது என்ற தொனியில் மதுவின் பேச்சு அமைந்தது..” “உனக்கு இந்த ஆவி நம்பிக்கை எல்லாம் இருக்காம்மா?” “இந்த காலத்துல ஏதுக்கா அதெல்லாம்? கடவுளே இருக்காரா இல்லையான்னு பிரச்சினை போய்ட்டு இருக்கு. இதுல நீங்க பேய்க் கதை எல்லாம் சொல்லீட்டு இருக்கிங்க…” “நம்ம அறிவுக்கு மேல எதுவுமே இல்லன்னு நெனைக்கறதும் ஒரு வகையான அறியாமை தான் மா.. நம்ம கண்டுபிடிக்காத விஷயம் எவ்வளவோ இருக்கற மாதிரி நம்ம கண்ணுக்குத் தெரியாத விஷயம்னும் எவ்வளவோ இருக்கு.. நம்ம தம்பிக்கு அந்த மாதிரி ஏதாவது…” “என்னக்கா… அவருக்குப் பேய் பிடிச்சுருக்குன்னு சொல்றிங்களா?” மது கோபத்துடன் இடை மறித்தாள். “சேச்சே.. நான் அப்படிச் சொல்லலைம்மா.. சரி .. உனக்கு என்ன தோணுதோ செய்மா… எப்போ உதவி வேணும்னாலும் என்னைக் கேளு. என்னை உன் கூடப் பொறந்த அக்காவா நெனைச்சுக்கோ…” “கண்டிப்பா அக்கா.. உங்களை நான் எப்பயுமே அப்படித்தான் பாக்கறேன்…” மது பிரிசில்லா அக்காவின் கையைப் பிடித்து நெகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.. அவள் வாக்கியத்தை முடிக்கும் முன்பே அழைப்பு மணி அடித்தது.. வாசலில் டாக்டர் செரியன் தன் உதவியாளர்களுடன் நின்று கொண்டிருந்தார். “டாக்டர்.. நீங்க எப்படி… வீட்லயே…?? நானே ஹாஸ்பிட்டலுக்கு வரலாம்னு இருந்தேன்”. ஹாஸ்பிட்டல் என்றால் முகிலின் சிகிச்சை வீடியோக்கள் கிடைக்காதே… பிறகு தன் ஆராய்ச்சிக்கு வேறு யாரையாவது தேடி அலைய வேண்டும் என மனதில் நினைத்த செரியன் அந்த எண்ணத்தைக் கலைத்து விட்டு முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு பேசினார்.. “ஒரு சின்ன சைக்காலஜி அனாலிசிஸ் தான்மா.. இதுக்கு எதுக்கு ஹாஸ்பிட்டல்.. எதாவது சீரியஸ்னா மட்டும் ஹாஸ்பிட்டல் போய்க்கலாம் மா,, அதுவும் இவரோட தெரபில இந்த மாதிரி நடக்கறதெல்லாம் ரொம்பவே நார்மல் தான்.. இப்போ அவர் எங்க?” அவர் மாடியில் தூங்கிட்டு இருக்கார் டாக்டர்.. பகல் நேரத்துல அவரால எந்த தொல்லையும் இருக்கறதில்லை.. நைட் ஆனா தான் கொஞ்சம் மாறிட்றாரு.. “ஓக்கே மா.. அவர ரெடி பண்ணி கூட்டிட்டு வாங்க.. நம்ம ஒரு ஹிப்னாடிக்கல் செஷன் வெச்சு பாத்தர்லாம்.. இவங்க யாரு? இங்க பேமிலி மெம்பர்ஸ் தவிர வேற யாரும் இருக்க வேண்டாம். பேஷண்ட் கான்சன்ரேட் ஆக மாட்டாரு..” மது பிரிசில்லா அக்காவை அனுப்பி விட்டு முகிலுக்கு நல்ல உடைகள் அணிவித்து அவனைக் கீழே அழைத்து வந்தாள். செரியனின் உதவியாளர் இரண்டு பேர் அவனைக் கைத்தாங்கலாய் பிடித்துக் கொண்டனர். முகில் நடக்கவே திராணியற்றுக் கிடந்தான்.. அவனை ஒரு நாற்காலியில் சாய்வாக அமர வைத்தனர்.. முகிலைச்சுற்றி மைக்குகள் வைக்கப்பட்டன். அவன் பேசுவது எல்லாம் பதிவு செய்ய வசதியாக எல்லாவற்றையும் செரியன் எடுத்து வந்திருந்தார். அறையில் மங்கிய வெளிச்சம் மட்டும் இருக்குமாறு ஜன்னல்கள், கதவுகள் அடைக்கப்பட்டன. செரியன் அவன் கையில் ஊசியின் மூலம் மருந்து ஒன்றைச் செலுத்தினார். “மிஸ்டர். முகில், இப்போ உங்களுக்கு ஹிப்னாடிசம் பண்ணப் போறோம்.. இதுல நீங்க கோஆப்ரேட் பண்றதைப் பொறுத்துதான் உங்க ட்ரீட்மெண்டை அடுத்த ஸ்டேஜ்க்கு மூவ் பண்ணுவோம்… நீங்க என் கையில் இருந்து ஸ்னாப் சத்தம் கேட்டவுடன் ஒரு மயக்க நிலைக்கு போவிங்க. நல்லா கான்சன்ரேட் பண்ணுங்க. உங்க கை கால தளர்வா வெச்சுக்கோங்க.. அன் த்ரீ டூ ஒன்.. ஸ்னாப்…” “முகில்.. நான் பேசறது கேக்குதா.. கேக்குதுனா ரெஸ்பாண்ட் பண்ணுங்க”. “ம்ம்…” கண்கள் மூடியிருந்தபடியே அவன் பதிலளித்தான். “உங்க பேர் என்ன?” “முகில்..” “இப்போ உங்களுக்கு என்ன வயச்சாச்சு?” “33…” “உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?” “ம்..” “உங்க மனைவி பேரென்ன?” “மது..” “உங்களுக்கு மதுவைப் பிடிக்குமா?” “ம்ம்.. ரொம்ப..” “முகில்.. அடிக்கடி ஒடம்பு வலிக்குதுனு சொல்றீங்களே.. எதனால?” “என்னை யாரோ அடிக்கிறாங்க.. என் கையைப் பிடிச்சு முறுக்கறாங்க..” “அப்படி அடிக்கறவங்க உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?” “இல்ல..” “அவங்க இப்ப உங்க கூட இருக்காங்களா?” “ம்ம்.. இருக்காங்க..” “அவங்க கூட நாங்க பேச முடியுமா?” “ம்ம்..” “இப்போ அவங்க கூட நாங்க பேசலாமா?” “ம்ஹும்..” “ஏன் நாங்க பேசக் கூடாது?” “அவங்க அடிப்பாங்க.. பயமாயிருக்கு..” “முகில்.. பயப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. நாங்க பேசி உங்களைக் காப்பாத்தறோம்”. “ம்ம்..” “இப்போ நாங்க முகிலுக்கு உள்ள இருக்குறவங்க கிட்ட பேசறோம்..” முகிலிடமிருந்து எந்த அசைவும் இல்லை.. “இப்போ நாங்க முகிலுக்கு உள்ள இருக்கறவங்க கிட்ட பேசறோம்.. உங்க பேர் என்னனு சொல்லுங்க..” முகிலின் குரல் இப்போது வேறு மாதிரி ஒலித்தது.. தன் அடித்தொண்டையில் யாரோ கை வைத்து அழுத்திப் பேசுவது போல் பேசினான்.. செரியன் மறுபடியும் உங்க பேரென்ன எனக் கேட்டார். அதற்கு அவனிடம் எந்த பதிலும் இல்லை. “நீங்கதான் முகிலை அடிக்கறவரா??” “ம்ம்..” “ஏன் அவரை அடிக்கறீங்க?” “பிடிச்சுருக்கு…” “முகிலை உங்களுக்குப் பிடிச்சுருக்கா?” “இல்ல..” “அவர துன்புறுத்தறது பிடிச்சுருக்கா?” “ஆமா..” “உங்களுக்கு மதுவைப் பிடிக்குமா?” “இல்ல..” “முகில் உங்களுக்கு எதாவது கெடுதல் பண்ணீருக்காரா?” “இல்ல..” “முகில் கூட இன்னும் எவ்வளோ நாள் இருப்பீங்க?” “அவன் சாகற வரைக்கும்..” “முகில் செத்துட்டா நீங்களும் செத்துற மாட்டீங்களா?” “எனக்கு சாவே இல்ல..” முகிலின் குரல் ரொம்பவும் மெதுவானது.. செரியன் மைக்கை எடுத்துக் கொண்டு முகிலின் பக்கத்தில் போனார்.. “உங்களுக்கு முகில் சாகணுமா?” “ஆமா..” “முகில் செத்துட்டா நீங்க எங்க போவிங்க?” அதற்கு முகிலிடம் இருந்து முனகலாக ஏதோ சத்தம் வந்தது. செரியன் மைக்கை எடுத்துக் கொண்டு முகிலுக்கு இன்னும் அருகில் போனார். “முகில் செத்துட்டா நீங்க எங்க போவீங்க?” முகில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பக்கத்தில் இருந்த மேசை கடிகாரத்தை எடுத்து செரியனின் தலையில் தாக்கினான். செரியன் கழுத்து மளுக்கென ஒரு சத்தத்தை எழுப்பியது. அவரின் நெற்றி கிழிந்து ரத்தம் ஒழுகியது. இரண்டு பேர் அவனைப் பிடிக்க வந்தனர்.. மேசை மீது இருந்த மற்ற அலங்காரப் பொருட்கள் தாமாகவே பறந்து அவர்கள் மேல் மோதியது.. அவர்கள் செரியனையும் ரெக்கார்டரையும் தூக்கிக் கொண்டு கதவைத் திறந்துகொண்டு ஓடினர்.. அதே வேகத்தில் மதுவின் பக்கத்தில் திரும்பினான்.. இரண்டு அடிகள் எடுத்து வைத்ததும் உடலில் இருந்து ஏதோ உருவி எடுத்ததைப்போன்று கீழே விழுந்தான்.. மது அரண்டு போயிருந்தாள். பொருட்கள் தானாகப் பறப்பதெல்லாம் அவள் கற்பனையில் கூட நடந்திருக்காத விஷயம்.. பிரிசில்லா அக்காவைக் கூப்பிட்டு அவனை மறுபடியும் மாடியில் படுக்க வைத்துக் கட்டிப் போட்டனர். மது அழத் தொடங்கினாள்.. “அவளை ஆசுவாசப்படுத்திய பிரிசில்லா அக்கா இனியாச்சும் நான் சொல்றதைக் கேளும்மா.. என்றார்.” “நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன் அக்கா.. அவரை மட்டும் பழையபடி மாத்திக் குடுத்துருங்க..” “அது என்னால முடியாதும்மா… இது கொஞ்சம் நம்ம கையையே மீறின விஷயம். அதுக்கு ஒருத்தர் இருக்காரு..” “அவர் யாருக்கா?” “ஃபாதர் ஜெரால்ட்…” 20 ஜெரால்டுக்கு இனியும் அங்கிருப்பது சரியில்லை எனத் தோன்றியது. இந்த அறையில் கண்டிப்பாக அமானுஷ்யமாக ஏதோ ஒன்று இருக்கிறது. முதலில் எப்படியாவது ஹாஸ்பலுக்குச் சென்றுவிட வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம். அவசர அவசரமாக தட்டில் இருப்பதை சாப்பிட்டான். ஆனால் எப்போதும் மெதுவாக சாப்பிடும் செல்வா, அன்று ஏதோ சாப்பாட்டையே இதற்கு முன்பு கண்டிராதவன் போல அள்ளி அள்ளித் தின்று கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்த பின் ஜெரால்ட் திரும்பவும் படுத்தான். செல்வாவின் கண்கள் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அதே நேரம் அறைக்கதவு திறந்தது. டாக்டர் தன் குழுவினருடன் உள்ளே வந்தார். ஜெரால்டின் கேஸ் ஃபைல் அவரின் கைகளில் இருந்தது. அருகில் இருந்த அவரின் அசிஸ்டெண்ட்கள் அதை வாங்கிப் பார்த்தனர். “என்ன மிஸ்டர். ஜெரால்ட்?? எப்படி இருக்கீங்க…” “நல்லார்க்கேன் டாக்டர்.. இப்போ ஏதோ பரவால்ல.. ஓ, நீங்க தமிழா…” “இப்போ தமிழ்ல தான பேசினேன்? என்ன செல்வா?” “ஓ.. உங்களுக்கு செல்வாவையும் தெரியுமா?” “இப்போ அவரைத்தானே பார்த்து சிரிச்சேன்?” இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டர். “டாக்டர்.. நீங்களும் அவரை மாதிரியே பேசறீங்களே…” “ஜஸ்ட் ஜோக்கிங் மிஸ்டர்.. உங்களுக்கு பிபி எல்லாம் நார்மல் ஆகிருச்சு.. இன்னைக்கு உங்க பிஹேவியர் எல்லாம் நோட் பண்ணிட்டு நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிக்கோங்க..” “வேண்டாம் டாக்டர்.. எங்களை இப்போவே அனுப்பிடுங்க.. ரெஸ்ட் தான? ரூம்லயே எடுத்துக்கறோம்..” “என்ன செல்வா.. உங்க பிரண்ட் ரொம்ப அவசரப்பட்றாரே.. என்ன சொல்றீங்க..” “அவருக்கு சீரியஸா எதுவும் இல்லைன்னா அனுப்பிடுங்க டாக்டர். எனக்கும் இந்த ஹாஸ்பிட்டல் எல்லாம் செட் ஆகாது..” “பெரிசா எல்லாம் எதுவும் இல்லை செல்வா.. ரெஸ்ட் எடுத்துகிட்டா சரி, நான் பாத்துக்கறேன். கிளம்பிடுங்க..” டாக்டர் அறையை விட்டு வெளியேறினார். ஜெரால்ட் ஆம்புலன்ஸ் வரச் சொல்லி ஏறிக் கொண்டான்.. இன்ஸ்டிட்யூட் வரும் பத்து நிமிடங்களிலேயே அவன் உடல் நிலை பழைய தெம்புக்கு வந்திருந்தது. அவனுக்கு நடப்பது எதுவும் நம்ப முடியாத மாதிரி இருந்தது. இன்ஸ்டிட்யூட்டில் இறங்க்ய உடனேயே ஒரே கூட்டமாக இருந்தது. செல்வா கொஞ்சம் பிரபலமானவன்தான். அதற்காக இப்படியா என ஜெரால்ட் அதிசயித்தான். ஸ்டெரச்சர் வேண்டாம் எனச் சொல்லிவிட்டு இருவரும் வாசலிலேயே ஆம்புலன்ஸை திருப்பி அனுப்பினர். உள்ளே இருந்த கூட்டம், அவர்கள் நெருங்கும்போது கூட சட்டை செய்யாத பொழுதுதான் அது தங்களுக்கான கூட்டமில்லை என்பதையே உணர்ந்தனர். “என்ன செல்வா… நம்ப இல்லாத ரெண்டு நாள்ல என்னமோ நடந்திருக்கும் போலயே.. என்னன்னு விசாரிங்க..” “இல்ல ஜெரால்ட்.. நம்ம ரூமுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்பறமா பாத்துக்கலாம். எப்படியும் நமக்குத் தெரியாமையா போயிடும்… வாங்க..” “சரி செல்வா… நம்ம போலாம்.. என்னாலையும் நிக்க முடியல, படுத்துக்கலாம் போல இருக்கு…” அறைக்கு வந்ததும் இருவரும் கட்டிலில் சாய்ந்தனர். அறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த மாணவர்கள் சிலர் செல்வாவைப் பார்த்துவிட்டு உள்ளே வந்தனர். “என்ன செல்வா அண்ணா.. இவ்வளோ நாளா ஆளையே காணல.. நாங்க உங்களைத்தான் தேடிகிட்டு இருந்தோம்”. “கொஞ்சம் ஒடம்பு சரி இல்ல தம்பி.. இப்பொதான் ரூமுக்கு வர்றோம்.. என்ன கூட்டம் நம்ம காலேஜ்ல? யாராவது விஸிட் பண்ணீருக்காங்களா?” “ஆமாண்ணா.. நம்ம தத்தா செத்துட்டாரில்ல? அது விஷயமா விசாரிக்க வந்துருக்காங்க..” “தத்தா செத்துட்டாரா.. அவருக்கு என்ன ஆச்சு? நல்ல மனுஷனாச்சே?” ஜெரால்டுக்கு ஹாஸ்பிட்டல் போவதற்கு முன் தத்தாவைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. செல்வாவிடம் சொல்லலாமா… என யோசித்தான். “நல்லாதான் இருந்தாரு. யாரோடையும் எந்த தகராறும் இல்ல.. ஆனாலும் மனுஷன் எப்படியோ செதுருக்காரு.. நாங்க கூட தவறி விழுந்துருப்பாரு… இல்ல ஹார்ட் அட்டாக்கோன்னு தான் நெனைச்சோம். ஆனா வந்து பாத்தப்போ நாங்களே அதிர்ச்சியாயிட்டோம்”. “ஏன்பா.. எப்படி நடந்துச்சு? கத்தியால எதாவது குத்திட்டாங்களா?” “அதெல்லாம் எதுவும் இல்ல.. அவர் கழுத்தைப் பிடிச்சு திருகியிருக்காங்க.. முழுசாத் திருகியிருக்காங்க.. போலிஸ்காரங்க காலேஜ்ல இருக்கற எல்லாரையும் விசாரிச்சுருக்காங்க. ஆனா எதுவும் தடயம் கெடைக்கல”. “அவங்க வீட்டில சொல்லீட்டீங்களா?” ஜெரால்ட் கேட்டான். “அவருக்கு ஏது வீடு எல்லாம்… இங்கயே இருந்தவரு தான். எனக்கே கஷ்டமா இருக்கு. அவரைக் கொல்ற அளவுக்கு என்ன நடந்துச்சோ.. ஆஷான்னு ஒரு பொண்ணு அந்தநாள் நைட் நேரம் வந்திருக்கு. இப்போ அவங்ககிட்டதான் விசாரிக்கறாங்க”. அவர்கள் சோகமாகப் பேசியபடி வெளியே சென்றனர். செல்வா படபடப்பானான். “ஜெரால்ட்., ஒருவேளை அது நம்ம ஆஷாவா இருந்தாலும் இருக்கும்.. நான் இப்போவே போய்ப் பாத்துட்டு வரேன். நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க…” செல்வா எழுந்து போனான். “இருங்க.. நானும் வரேன்.. என்னதான் ஆச்சுன்னு பாக்கலாம்..” ஜெரால்டும் உடன் எழுந்து சென்றான். செல்வா வேகவேகமாக நடக்க, ஜெரால்டால் அவ்வளவு வேகமாக நடக்க முடியவில்லை. ஏற்கனவே கேட்டில் இருந்து நடந்து வந்ததும் திரும்பவும் நடக்கமுடியாமல் மூச்சு வாங்கியது. தூணைப் பிடித்து அங்கேயே நின்றான். “செல்வா… என்னால முடியல.. நான் மெதுவா வரேன்” நீங்க போய் பாருங்க.. செல்வா பதில் கூடப் பேசாமல் நடந்து சென்றான். ஜெரால்ட் அங்கேயே ஒரு பெஞ்சில் அமர்ந்தான். போலீசார் இருவர், அங்கே வந்து ஜெரால்டைச் சூழ்ந்து கொண்டனர். “ஆப் கா நாம் ஜெரால்ட்?…” ஜெரால்ட் மூச்சுவாங்கியபடியே எழுந்து நின்றான்… யெஸ் சார், ஹிந்தி நோ டாக் என்றான். அவர்கள் திரும்பி ஹிந்தியில் குரல் கொடுக்க இன்ஸ்பெக்டர் வந்து சேர்ந்தார். அவர் கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்க, ஜெரால்ட் பதில் பேசினான். “உங்க ரூம் பக்கத்துலதான் நடந்துருக்கு.. கொஞ்சம் யோசிங்க. உங்க ரூம் மேட் கிட்டயும் விசாரிச்சுட்டேன்.. நீங்க சொல்லற அதையேதான் சொல்லிகிட்டு இருக்கார்”. “எங்களுக்கு நெஜமாவே தெரியாது சார்… திருடனுங்க யாராவது வந்துருக்கலாம் இல்லையா”.. “நாங்களும் அப்படி நெனைச்சுதான் ரெண்டு நாளா தேடிகிட்டு இருந்தோம். ஆனா போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் இன்ன்சிக்குதன் கெடைச்சுது. திருடங்கனா அவர் சண்டை போட்டு போராடியிருக்கணும்.. ஆனா அவர் ஒடம்புல அடிபட்டி வேற எந்த ஆதாரமும் இல்ல.. உங்க ரூம் இருக்கற எடத்துல இருந்து அவர் கழுத்தத் திருகி தூக்கிப் போட்டுருக்காங்க. கிட்டத்தட்ட ஏழு அடி தூரம் வந்து விழுந்துருக்காரு.. கில்லர் கண்டிப்பா சாதாரண ஆள் இல்ல.. நாங்க கவனிச்சுகிட்டுதான் இருக்கோம். நாளைக்கு வருவோம். எதாவது கெடைச்சுதுன்னா யோசிச்சு வைங்க..” இன்ஸ்பெக்டர் பேசிவிட்டு சென்றதிலேயே இவர்கள் மேல்தான் சந்தேகப்படுகிறார் எனத் தெளிவாகத் தெரிந்தது. செல்வா சோர்வாக நடந்து வந்தான். “உன்னையும் விசாரிச்சாங்களா ஜெரால்ட்?” “ஆமா செல்வா.. இவரு என்னமோ நம்மதான் செஞ்சோம்னு சொல்லற மாதிரி இருக்கு. இப்படி விசாரிச்சா வெளங்கிரும். ஆமா, வந்தது நம்ம ஆஷா இல்லைல்ல?” “நம்ம ஆஷாதான் வந்துருக்கா.. ரொம்ப பயந்து போயிருக்கா.. அவளும் தத்தாவைப் பாத்து இருக்கா.. அடிக்கடி வர்றதுனால ரெண்டு பேரும் கொஞ்சம் க்ளோஸ்.. இதுல போலிஸ் வேற. நான்தான் அவள வெயிட்டிங் ஏரியால உக்கார வச்சுருக்கேன். நீங்க அவளைப் பாத்துக்கங்க ஜெரால்ட்..” “கொஞ்சம் டயர்டா இருக்கு செல்வா.. நான் அப்பறமா பாத்துக்கறேன். நைட் அந்த நேரத்துல எதுக்கு ஆஷா இங்க வந்தா?” “அது.. அவ இப்போ மாசமா இருக்கா ஜெரால்ட், அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சு வெரட்டி விட்டுட்டாங்க. இப்போ அவ பிரண்ட் வீட்டுலதான் தங்கி இருக்கா.. நீங்க என்கிட்ட ஒண்ணு மறைச்சுட்டீங்க ஜெரால்ட்.. ஹாஸ்பிட்டல்ல உங்களுக்கு ஏன் உடம்பு முடியாமப் போச்சு?” “அதான் டாக்டர் சொன்னாரே.. ஏதோ ..” “அதெல்லாம் பொய்னு எனக்கும் தெரியும் ஜெரால்ட். எனக்கு நடந்தது எல்லாம் நானும் பாத்துகிட்டுதான் இருந்தேன்”. “என்ன சொல்றீங்க செல்வா… அப்போ உங்களுக்கு…” “அதான் சொல்றேனே… எனக்கு எல்லாமே தெரியும் ஜெரால்ட்.. இனியும் மறைச்சு என்ன பண்ணப்போறேன்.. நான் என் ஆன்மாவை ஹம்பாபாவுக்கு ஒப்புகுடுத்துட்டேன். இது வரைக்கும் நான் அனுபவிச்ச தனிமைக்கு இனிமேல் என்னைச் சுத்தி உறவுகள் வேணும்னு நெனைச்சு நான் என்னையே குடுத்துட்டேன். அதுக்கப்பறம் தான் ஆஷா வந்தா.. நீங்களும் வந்தீங்க. என் வாழ்க்கைல எல்லாமே கெடைச்சுருச்சுன்னு நான் சந்தோஷப்பட்டப்ப அது என்னையே ஆக்கிரமிச்சுருச்சு.. இனி எதுவும் பண்ண முடியாது”. “அன்னைக்கு நாம பேசினோமே அதே பேயா.. சரி விடுங்க.. நான் விரட்டறேன்.. நீங்க கவலைப்படாதீங்க. நான் போய் ஷீலாவை இங்கே பேசிக் கூட்டிட்டு வரேன்”. “உங்களுக்கு இன்னுமா புரியல? தத்தாவைக் கொன்னது கூட அதுதான். இனி அது என்னைச் சுத்தி இருக்கற எல்லாத்தையும் கொன்னுடும். என்னால ஆஷாவுக்கும் எங்க கொழைந்தைக்கும் எந்த பாதிப்பும் வந்தரக் கூடாது. நான் உங்களதான் நம்பறேன்”. “அதெல்லாம் ஒண்ணும் நடக்காது செல்வா.. நீங்க இருங்க.. நான் ஆஷாவைக் கூட்டிகிட்டு வரேன்.” ஜெரால்ட் செல்வாவின் பதிலுக்குக் காத்திராமல் நடந்தான். ஆஷாவை வரவேற்பறையில் இருந்து அழைத்து வந்தான். ஆனால் அங்கே செல்வா இல்லை. வெளியே தேடிப் பார்க்கும் நோக்கில் வந்தான். செல்வா மாடி மேல் நின்று கொண்டு கத்தினான். “ஜெரால்ட், ஆஷா… என்னை மன்னிச்சுடுங்க..” அங்கே இருந்து நெட்டுக்குத்தலாக கீழே விழுந்தான். பொட்டென தலை பிளக்கும் சத்தம் கேட்டது. செல்வா தலை சிதறிக் கிடந்தான். 21 “அப்போ செல்வாதான் என் அப்பாவா… என்னோட அம்மா எங்க?? ராயரு யாரு? அவருக்கு ஏன் என்மேல இவ்வளவு பாசம் வரணும்?” மைக்கல் கண்களில் இப்படிக்கூட நடக்கலாமா என ஆச்சரியமா இல்லை அதிர்ச்சியா என சொல்ல முடியாத உணர்வு இருந்தது. அவன் முகம் கேள்விகளால் நிரம்பி இருந்ததை பார்த்தலே கண்டுகொள்ள முடிந்தது. ஜெரால்ட் அவனையே கருணையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். “செல்வா, அதுதான் உன் அப்பா, தன் கண்ணு முன்னாடியே விழுந்ததைத் தாங்கிக்க முடியாத உன் அம்மா, அங்கேயே மயங்கி விழுந்துட்டா. அவளுக்கு நெனைவு திரும்பும்போது அவ சுத்தமா எல்லாத்தையும் மறந்திருந்தா.. தான் யாரு… என்ன நடக்குது அப்படீங்கற எதுவுமே தெரியாத நெலைமைக்கு மாறிட்டா. நான் இனியும் அங்க இருந்தா நெலைமை இன்னும் மோசமாகும்னு நெனைச்சு உன் அம்மாவைக் கூட்டிகிட்டு சென்னை வந்துட்டேன். இங்க எனக்குத் தெரிஞ்சவங்க கிட்ட வச்சு கொஞ்ச நாள் பாத்துகிட்டேன். அப்படியே என்னோட டிகிரியும் வாங்கி ஃபாதர் ஆனேன்”. “அப்படின்னா இப்போ அவங்க எங்க இருக்காங்க ஃபாதர்? என்னால அவங்களைப் பார்க்க முடியுமா??” “கொஞ்சம் கொஞ்சமா அவ உடல் நிலையும் ரொம்ப மோசமாயிடுச்சு. உன்னைப் பெத்து எடுக்கற வரைக்கும் எப்படியோ எதுனாலையோ உசுரை கையில புடிச்சுட்டு இருந்தா. அப்பறம் நீ பிறக்கும்போது அவ கர்த்தருக்குள்ள நித்திரை ஆயிட்டா. அதுலேர்ந்து நான்தான் உன்னை வளத்திகிட்டு வரேன்”. “என் அம்மா இறந்துட்டாங்களா? என் அப்பா அம்மா ஃபோட்டாவாச்சும் இருக்கா ஃபாதர்?” “ஒரு நிமிஷம்ப்பா…” ஜெரால்ட் உள்ளே சென்று தன் பெட்டியைத் திறந்தார். அதில் அவரும் செல்வாவும் இருக்கும் படமும், ஆஷா மருத்துவமனையில் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த படமும் இருந்தது. எடுத்துக் கொண்டு வந்தவுடன் மைக்கல் அதைப் பிடுங்கிப் பார்த்தான். அவனுக்குத் தெரியாமலேயே அவன் கண்களில் நீர் பனித்தது. தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். படத்தைப் பார்த்து எதிரில் இருந்த கண்ணாடியில் தன் முகத்தையும் பார்த்துக் கொண்டான். தன் கன்னத்தைக் கைகளால் தடவி தான் யாரைப் போல என யோசித்தான். “நீ அப்படியே உங்க அம்மா மாதிரிப்பா.” ஃபாதர் ஜெரால்ட் அவனைப் பார்த்துச் சிரித்தார். இளவயதில் தன் தந்தையுடன் ஜெரால்ட் நிற்பதைப் பார்த்தான். பாதி செல்லரித்து போயிருந்தது. புன்னகையுடன் மலர்ச்சியாக நிற்கும் தன் தந்தையைப் பார்க்கப் பார்க்க சே.. இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே என யோசித்தான். இன்னொரு படத்தில் அருவருப்பான படம் ஒன்று இருந்தது. அதன் கீழே ஹம்பாபா என எழுதியிருந்தது. “அப்படின்னா ராயர் எப்படி எனக்கு அப்பாவா ஆனார்?” "கையில கொழந்தையோட இருக்கற ஃபாதரை யாருதான் ஏத்துக்குவாங்க? பேராயர் எல்லாருக்கும் நான் எப்படிப்பட்டவன்னு தெரியும். அதுனால எதையும் கேட்டுக்கல.. ஆனா பொது ஜனங்களுக்கு இது எல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியுமா? நான் உன்னைத் தூக்கிட்டுப் போன ஒவ்வொரு ஊருலையும் பிரச்சினை. கடைசியில் இந்த சர்ச்சுக்கு வந்தேன். ஊருக்குள்ள வீடு பாக்கறதுக்கு முன்னாடி வெளியில ஒரு லாட்ஜ்ல ரூம் தங்கியிருந்தேன். அங்கே பக்கத்து ரூம்லதான் ராயரும் அவர் மனைவியும் தங்கியிருந்தாங்க. கொழந்தை இல்லைன்னு ரொம்ப வருத்தப் பட்டுப் பேசினாங்க. நான் ஆறுதல் சொல்லிட்டு வந்து என் ரூமிலேயே படுத்துகிட்டேன். ராத்திரி ஏதோ சத்தம் கேட்க நான் எழுந்து போய்ப் பார்த்தேன். கதவை சாத்தாததுனால ஏதோ ஒரு வேகத்துல அவங்க ரூமுக்குள்ள போயிட்டேன். அங்கே கையில விஷ பாட்டிலோட ரெண்டு பேரும் அழுதுகிட்டு இருந்தாங்க. நான் ஓடிப் போய் அவங்க கையில இருந்த பாட்டிலைத் தட்டிவிட்டு சத்தம் போட்டேன். கொழந்தையே இல்லாம மலட்டுப் பட்டத்தோட வாழுறதுக்கு பேசாம செத்துப் போயிடலாம்னு தான் இங்க வந்தோம். எங்கள மன்னிச்சிடுங்க ஃபாதர்னு ரெண்டு பேரும் அழுதாங்க. கர்த்தரோட படைப்புலையே மனுஷனோட படைப்புதான் உன்னதமானது. எந்தக் காரணம் இருந்தாலும் அது யாரா இருந்தாலும் தற்கொலைங்கறது மிகப் பெரிய பாவம். இனியாச்சும் புத்திசாலித்தனமா நடந்துக்கோங்கன்னு சொல்லிட்டு விடியற வரைக்கும் அவங்க கூடவே இருந்தேன். அப்போ நீ அழுதுட்டே இருந்த. உன்னையும் அவங்க ரூமுக்கு எடுத்துப்போனேன். நீ சமாதானமெ ஆகலை. ஆனா அவங்க கிட்ட போன உடனே சட்டுன்னு அழுகையை நிறுத்திட்ட.. உன்னையும் அவங்களுக்கு ரொம்பப் புடிச்சுப் போச்சு. இந்தக் கொழந்தையை எங்களுக்கே தந்திடுங்க ஃபாதர்னு கேட்டாங்க. எனக்கும் உனக்கொரு அம்மா வேணும்னு தோணுனதால கொடுத்துட்டேன். அவங்களையும் இந்த ஊருக்கே கூட்டிட்டு வந்துட்டேன். உனக்கு அம்மா இல்லாத கொற தெரியக்கூடாதுன்னு உன்னை அவங்க கொழந்தையாவே வளக்கச் சொல்லி சத்தியமும் வாங்கிட்டேன். நீ அவங்ககிட்ட போய் சேர்ந்த நேரம், வெறுங்கையோட வந்த ராயர், அடுத்த நாலு வருஷத்துலையே பெரிய ஆளாயிட்டாரு. எல்லாம் உன்னாலதான்னு அவர் உன்னைச் சொல்லாத நாளே இல்ல.. நான் செல்வாவுக்குக் கொடுத்த வாக்குக்காக நீயே என்னை அவமானப் படுத்தினாலும் நான் உன்னை கவனிச்சுட்டே இருந்தேன்". “எல்லாம் சரிதான் ஃபாதர். ஆனா என் அப்பாவுக்கு பேய் பிடிச்சு செத்தார்னு சொன்னீங்களே , அதைதான் நம்ப முடியல. இந்தக் காலத்துல பேயெல்லாம் இருக்கா என்ன…” “பேய்க்குக் காலமெல்லாம் கிடையாது மைக்கல்.. எப்படி கடவுள் இருக்கறது எந்த தூரம் வரைக்கும் உண்மையோ அதே மாதிரி சாத்தான் இருக்கறதும் அப்பட்டமான உண்மை. என்ன, கடவுளோட வழி நேர்மையானது.சாத்தான் தந்திரமா வேலை செய்யும். அது இல்லைன்னு நம்ம எல்லாரையும் நம்ப வெச்சதுலையே அது பாதி வெற்றி அடைஞ்சுட்டுது. அது கடைசி வரைக்கும் நம்மள திசை திருப்பப் பார்க்கும். நம்மதான் கடவுளோட வழியில நிக்கணும்”. “அப்படின்னா யாரோ செத்துதான பேயா வந்துருக்கணும்? அவங்க கேட்டதைக் கொடுத்துருந்தா என் அப்பாவை நீங்க காப்பாத்தியிருக்கலாம்ல?” “செத்தவங்க ஆவியா வருவாங்க மைக்கல். இறந்தவங்களுக்கு நிறைவேறாத ஆசை இருந்தா அதைத் தன்னோட ஆவி ரூபம் மூலமா தீத்துக்குவாங்க.. ஆனா உன் அப்பாவைப் பிடிச்சது ஹம்பாபாங்கற ஒரு சாத்தான். சாத்தான்னா அது இதுக்கு முன்னாடி பூமியில மனுஷ ரூபத்துலையே இல்லாத ஒரு விஷயம்.. அதுங்கதான் லூசிபரோட படை.. நீ கர்த்தரை விசுவாசிக்கறியா மைக்கல்?” “என் முழு மனசா நம்பறேன் ஃபாதர்”. “அப்படின்னா அவரோட எதிரியையும் ஒழிக்க நீ நிக்கணும். இன்னைக்கு வரைக்கும் சாத்தான் வேற வேற வழியில பூமியைக் கெடுத்துகிட்டும் மக்களை பாதிச்சுகிட்டும் தான் இருக்கு. நாம கர்த்தரோட துணை கொண்டு அதை எதிர்த்துப் போராடிட்டு இருக்கோம்”. “கண்டிப்பா நிப்பேன் ஃபாதர். இனி என் வாழ்க்கை முழுசையும் நான் கர்த்தருக்காகவே அர்ப்பணிக்கத் தயாரா இருக்கேன்”. “உனக்கு பலப்பல சோதனைகள் வரும் மைக்கல். எல்லாத்தையும் நீ கவனமாத் தாண்டி வரணும். நான் இங்க இருக்கறது மட்டும்தான் உனக்குத் தெரியும். என்னோட போராட்டத்தை எதையும் நீ பாத்தது இல்ல. ஆனாலும் கண்டிப்பா நீ ஜெயிச்சு வரணும் மைக்கல்”. “நான் இனி கர்த்தருக்கே அடிமை ஃபாதர். நீங்க இனிமேல் என்ன சொன்னாலும் செய்யத் தயாரா ஃபாதர் மைக்கலைத் தழுவிக் கொண்டார். ஒரு வழியாக இப்படித்தான் மைக்கல் திருந்த வேண்டும் என்று இருக்கிறது போல, கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம் ஐயா என மனதுக்குள்ளேயே தொழுது கொண்டார். அவன் கண்களின் கண்ணீர் அவன் கடந்தகால பாவங்களைக் கழுவியது போலிருந்தது. மழையும் ஓய்ந்து வானம் வெறுமையாகி இருந்தது.அந்த நேரம், தேவாலயத்தின் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளே ஒளி பரவியது. ஃபாதர் எட்டிப் பார்த்தார். வெளியே இரு பெண்கள் நடந்து வருவது தெரிந்தது”. “மைக்கல்.. அப்படி உட்காருப்பா. இங்க யாரோ வந்துருக்காங்க. வெளியூர் போலத் தெரியுது. என்னன்னு பாக்கறேன்.” “ஃபாதர் ஜெரால்ட்… நீங்கதானே….” “ஆமாம் நான்தான் .. நீங்க யாரு.. உங்களுக்கு என்ன வேணும்?” “நான் பிரிசில்லா ஃபாதர். ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் உங்களைப் பாத்துருக்கேன். என் தம்பிக்கு உடம்பு சரியில்லாமப் போச்சுன்னு நீங்க வந்திருந்தீங்க.. சென்னைக்கு… பேரு ராபர்ட்..” “ஆமாமா.. நியாபகம் இருக்கு..” சென்னையில் ஒருவனுக்குப் பிடித்த பேயை ஜெரால்ட் விரட்டியிருந்தார். “இவங்க பேர் மது. இவங்களோட ஹஸ்பண்ட் கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்கறாரு.. வீட்டிலயும் உடம்பு சரியில்லாம இருக்காங்க..” “எதாவது சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போங்க.. நான் சர்ச் ஃபாதர். நான் என்ன செய்ய முடியும்.” மதுவே பேசினாள். “ஃபாதர், நீங்கதான் ந்ங்களுக்கு உதவி பண்ணனும். உங்கனால மட்டும்தான் என் புருஷனை காப்பாத்த முடியும்..” “நீங்க நல்ல டாக்டராப் பாருங்கம்மா.. இப்பொதைக்கு அதுதான் நல்லது. நான் வேணும்னா உங்களுக்காக கடவுள் கிட்ட பிரார்த்தனை பண்றேன்”. “ஃபாதர்.. ப்ளீஸ்… நாங்க பாக்காத டாக்டர் இல்ல. ஆனாலும் அவருக்கு என்ன பிரச்சினைன்னே யாருனாலையும் கண்டுபிடிக்க முடியல. போகாத இடமெல்லாம் போயிட்டுதான் இறுதி புகலிடமா உங்ககிட்ட வந்துருக்கோம். உங்க காலுல விழுகறோம் ஃபாதர். எங்களைக் காப்பாத்துங்க. நீங்களும் முடியதுன்னு சொல்லிட்டா நான் சாகத்தான் வேணும்”. “என்னம்மா இது… தேவ சந்நிதானத்துல வந்து இப்படியெல்லாம் பேசிகிட்டு.. சாகறதைப் பத்தியெல்லாம்…” மைக்கல் அவர்கள் பேசுவதையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். ஏதோ முடிவு செய்ததாய் அவர்களிடம் எழுந்து வந்தான்.. இருவரையும் பார்த்தான். “நாங்க வர்றோம்.. நீங்க போங்க…” “ரொம்ப தேங்க்ஸ்ங்க.. இந்த உதவியை மறக்கவே மாட்டோம்”. மது கண்ணீருடன் கை கூப்பினாள்.. “மைக்கல் சும்மாயிரு.. உனகென்ன தெரியும் இதைப்பத்தி? நீ மொதல்ல வீட்டுக்குப் போ..” “இல்ல ஃபாதர்.. நாம்ம எதுவும் பண்ண வேண்டாம்.. ஆனா ஒரு தடவ போய்ப் பாத்துட்டு வரலாமே.. என் அப்பாவுக்கு ஆன மாதிரி இன்னொருவருக்கு ஆக வேண்டாம்னு தான்” ஃபாதர் ஜெரால்ட் ஒரு நொடி யோசித்தார். அவர்கள் முன் மைக்கலிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம் என பின் தானே முடிவுக்கு வந்தவராய் “சரி.. ஒரு முறை உங்க வீட்டுக்கு வர்றோம்…” என்றார். மதுவும் பிரிசில்லாவும் ஃபாதருக்கு நன்றி சொல்லிவிட்டு திரும்பி நடந்தனர். ஃபாதர் திரும்பி மைக்கலைப் பார்த்தார். “அங்கே எதுக்கு நம்ம வர்றோம்னு வாக்கு கொடுத்த? இதுக்கெல்லாம் யார்கிட்ட எல்லாம் பர்மிஷன் வாங்கணும் தெரியுமா? ஆர்ச் பிஷப் வரைக்கும் பேசணும்.. நீ என்னடான்னா உன் பாட்டுக்கு வரேன்னு சொல்லிட்ட? எதுக்கு இதெல்லாம்..” “நீங்க எதுவுமே செய்ய வேண்டாம். சும்மா அவங்க வீட்டுக்குப் போய் பார்த்துட்டு வாங்க. அதுக்கு யார்கிட்டயும் கேக்க வேண்டியது இல்லை. நான் உங்க கிட்ட இது வரைக்கும் எந்துவுமே கேட்டதில்லை. இதுதான் முதல் தடவை. கொஞ்சம் எனக்காக பாருங்க ஃபாதர்” “சரி, நான் பாத்துக்கறேன். நான் திரும்பி வர்ற வரைக்கும் சர்ச்சையாச்சும் பாத்துக்க…” “நானும் வர்றேன் ஃபாதர்.. உங்களுக்கு உதவியா…” “நீ எதுக்கு மைக்கல்.. ஏற்கனவே அவங்க ஞானஸ்நானம் பண்ணாதவங்க. நான் அவங்களுக்கு உதவி பண்றதை சர்ச் எந்த அளவுக்கு அனுமதிக்கும்னு யோசிச்சியா? இதுல எவ்வளவு பிரச்சினை வரும்னு தெரியுமா…” “கண்ணு முன்னாடி ஒரு குடும்பம் கஷ்டப்படுது. அதைப் பாத்துட்டும் சும்மா இருந்தா கர்த்தரே நம்மை மன்னிக்கமாட்டார். எனக்காக செஞ்சு கொடுங்க ஃபாதர்..” மைக்கல் கெஞ்சினான். கடவுள் எதற்கோ முடிச்சுப் போட ஆரம்பித்துவிட்டார் என நினைத்த ஃபாதர், இனி எதையும் தடுக்க வேண்டாமென ஆமோதித்தார். 22 மறுநாள் காலை ஃபாதரும் மைக்கலும் மதுவின் வீட்டிற்கு முன் நின்றுகொண்டிருந்தனர். வீட்டைப் பார்த்த உடனேயே அங்கே ஏதோ சரீயில்லை எனும் உணர்வு ஃபாதருக்கு ஏற்பட்டது. வீட்டின் வாசலிலேயே சதை எரியும் துர்வாடை அடித்தது. வீட்டினுள் வெளிச்சம் வருவதற்கு வசதியில்லாமல் அறையின் ஜன்னல்கள் அனைத்தும் அடைக்கப் பட்டிருந்தது. ஃபாதரின் கண்கள் எதையோ தேடிக் கொண்டிருந்தது. மைக்கல் வாசலில் நின்றதற்கே முகத்தைச் சுளித்தான். ஃபாதர் காலிங் பெல்லை அழுத்த மது கதவைத் திறந்தாள். ஃபாதரைப் பார்த்த உடனேயே அவள் முகம் மலர்ந்தது. "வாங்க ஃபாதர்.. உள்ளே வாங்க.. உக்காருங்க.. நான் போய் பிரிசில்லா அக்காவைக் கூட்டிகிட்டு வந்தர்றேன்… மது வெளியே செல்ல யத்தனித்தாள். ஃபாதர் சைகையாலேயே வேண்டாம் எனத் தடுத்தார். ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தார். மைக்கல் வீட்டையே சுற்றிச் சுற்றிப் பார்த்தான். வெளியில் இருந்து பார்த்தபோது அடித்த வாடை, உள்ளே இன்னும் அதிகமாக வீசியது. மைக்கல் முகத்தைச் சுருக்கியப் பார்த்த மதுவின் முகம் வாடியது. ஃபாதர் அதை கவனித்து மைக்கலை அதட்டினார். “மைக்கல்.. இங்க வந்து உட்காரு.. இங்க பாருங்கம்மா.. நான் சர்ச் மூலமா இங்க வரல.. தனிப்பட்ட முறையிலதான் வந்துருக்கேன்.. ஸோ, நீங்க வெளியில யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம். நாங்க இன்னைக்கு சாயங்காலம் திரும்பியும் தூத்துக்குடிக்கே கிளம்பிடுவோம். உங்களுக்கு என்ன பிரச்சினைன்னு சொன்னிங்கன்னா அதுக்கு என்னால எதாவது உதவி பண்ண முடியுமான்னு பார்க்கலாம்..” மது தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். “என் வீட்டுக்காரர் பேரு முகில்” எனத் தொடங்கியவுடன் மாடியில் இருந்து தடதடவென சத்தம் கேட்டது. ஃபாதர் மேலே பார்த்தார். யாரு இருக்காங்க என்பது போல நெற்றியைச் சுருக்கினார். என் வீட்டுக்காரரை இப்போ மாடியிலதான் படுக்க வெச்சிருக்கோம் எனத் தொடங்கி இறுதியாய் வீட்டினுள் எல்லாம் பறந்து விழுந்ததுவரை சொல்லி முடித்தாள். ஃபாதர் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார். பின்பு எழுந்து வீட்டினுள் எல்லாப் பக்கங்களையும் சுற்றிப்பார்த்தார். வீட்டினுள் சாமி படங்கள் எதுவும் இல்லாததைக் கண்டார். “ஏம்மா.. உங்களுக்கு சாமி கும்பிடற பழக்கம் எல்லாம் இல்லையா? வீட்டில ஒரு சாமி படத்தைக் கூட காணோமே..” “இல்ல ஃபாதர். அவருக்கும் பெருசா நம்பிக்க இல்லை. நானும் கும்பிட்ற வழக்கம் இல்லை. பின்ன எதுக்கு அதெல்லாம் தேவையில்லாமன்னு எடுத்துட்டோம்.. வெறும் சுவரா வைக்க வேண்டாம்னு பெயிண்டிங், கலைப் பொருள்னு வாங்கி வைக்க ஆரம்பிச்சுட்டோம்” “சரிம்மா.. உங்க வீட்டுக்காரரைப் பார்க்கலாமா? அவர் பேர் என்ன சொன்னீங்க?” “முகில் ஃபாதர்.. வாங்க பார்க்கலாம்..” “இல்ல நீங்க இங்கயே இருக்கலாம். நானும் இவரும் போய்ப் பாத்துக்கறோம். மேலே எந்த ரூம்?” மது கை காட்டினாள். ஃபாதர் மைக்கலை வரச் சொன்னார். மைக்கல் ஃபாதரைத் தொடர்ந்தான். மேலே அறைக்குச் சென்றவுடன் அறையின் வாசலில் நின்றுகொண்டு மைக்கலைத் திரும்பிப் பார்த்தார். “இங்கே பாரு மைக்கல்.. என்ன நடந்தாலும் நீ எதுவும் பேசக் கூடாது. உள்ளே இருக்கறது என்னன்னு நமக்குத் தெரியாது. சாத்தான் என்ன வேணும்னாலும் சொல்லும். கவனமா இருக்கணும். புரியுதா?” மைக்கல் பணிவாகத் தலையாட்டினான். ஃபாதர் தன் மேலங்கியில் இருந்து சிலுவை மூடியிட்ட ஒரு சிறிய குடுவையை வெளியே எடுத்தார். தன் மேல் சில துளிகள் தெளித்துத் தன்னை தூய்மைப் படுத்திக் கொண்டார். பின் மைக்கலின் மேல் தெளித்தார். அவனுக்கும் சிலுவைக் குறியிட்டு புனிதப்படுத்தினார். கண்களை மூடி மீண்டும் பிரார்த்தித்து அறையின் கதவைத் திறந்தார். உள்ளே இருட்டாக இருந்தது. கதவுக்கருகில் இருந்த சுவிட்சை அழுத்தினார். முகில் கட்டிலில் ஒரு குச்சியைப் போல் கிடந்தான். மைக்கலுக்கு அவனைப் பார்த்ததுமே பயமானது. முகிலின் உடம்பில் வெறும் எலும்பு மட்டுமே துருத்திக் கொண்டிருந்தது. குழி விழுந்த கண்களும், எற்றிய பற்களுமாய் எப்போதும் சாகக்கூடிய தோற்றத்துடன் இருந்தான். மைக்கல் அறையெங்கும் சுற்றிப் பார்க்க ஃபாதர் கதவருகிலேயே நின்றுகொண்டிருந்தார். சுவரெல்லாம் பழுப்பேறி அந்த அறையில் அழுகிய வாடை வீசிக் கொண்டிருந்தது. அதுவும் ஃபாதர் முகிலின் அருகில் சென்று பார்க்க முற்பட்டபோது அந்த வீச்சம் இன்னும் அதிகமாக இருந்தது. ஃபாதர் மெதுவாக அருகே வந்து மைக்கலை பின்னுக்குத் தள்ளி வெளியே இருக்கும்படி சைகை செய்தார். அவன் ஃபாதரின் பின் நின்றுகொண்டு அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தான். “முகில்…” ஃபாதர் ஜெரால்ட் அவன் அருகில் நின்று அழைத்தார். முகில் கண்களைத் திறக்க முயற்சிப்பது தெரிந்தது.கொஞ்சம் சிரமத்திற்குப் பின் கண்களைத் திறந்த முகில் அறையில் இருவர் நிற்பதை மிரட்சியுடன் பார்த்தான். “யார் நீங்க.. எப்படி உள்ளே வந்தீங்க?” ஈனஸ்வரத்தில் முகிலின் குரல் வெளிப்பட்டது. “நான் ஃபாதர் ஜெரால்ட்.. உங்க ஒய்ஃப் உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க.. அதான் உங்களுக்காகப் பிரார்த்தனை பண்ண வந்துருக்கோம்” முகில் எழுந்து உட்கார முயன்றான். “நான் நல்லாதான் இருக்கேன் ஃபாதர்.. எனக்கு ஒண்ணுமில்ல.. பாருங்க… ஒருநாள் ஆபீஸ்ல வழுக்கி விழுந்துட்டேன். அதுக்கப்பறம் என்ன நடந்துச்சுன்னே தெரியலை. மது என்னை இங்க அடைச்சு வெச்சுருக்கா.. சாப்பாடு, தண்ணி எதுவுமே இல்லாம இங்க தான் அடைஞ்சு கிடக்கறேன். இங்க ஜன்னல் கூட பூட்டிதான் இருக்கு.. எனக்கு எதுவுமே இல்லை ஃபாதர்..” முகிலுக்கு அதற்கே மேல்மூச்சு வாங்கியது. தண்ணீர் வேண்டும் என்பது போல முகில் சைகை காட்டினான். மைக்கல் முகிலின் தலைமாட்டில் இருந்த ஜக்கை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகட்டினான். முகிலின் உடலில் புண்கள் அதிகமாகி சீழ் பிடித்திருந்தது. மைக்கல் முகத்தைச் சுருக்கினான். இரண்டு மிடறு குடித்தவுடன் போதும் என்பது போல் முகில் தலையை ஆட்டினான். “தாங்க்ஸ் மைக்கல்..” முகில் ஆசுவாசப்படுத்திக் கொண்டான். இன்னும் மேல்மூச்சு வாங்கியது. மறுபடியும் ஏதோ பேச முயற்சித்தான். ஆனால் வெறும் வாய் மட்டும்தான் அசைந்தது. ஃபாதர் முகிலை படுக்க வைத்தார். “நீங்க நல்லாத்தான் இருக்கீங்க முகில்.. படுத்துக்கோங்க.. நான் உங்க ஒய்ஃப் கிட்ட பேசறேன்.. கர்த்தர் துணையிருப்பார். கவலைப்படாதீங்க..” ஃபாதர் காற்றில் சிலுவையிட்டார். அறையை இன்னொரு முறை சுற்றிப் பார்த்தார். பின் வெளியே வந்தார். மைக்கல் ஃபாதரைத் தொடர்ந்து வந்து கவனமாக அறையின் கதவைப் பூட்டினான். கீழே மது கவலையுடன் நின்றுகொண்டிருந்தாள். “ஃபாதர்.. அவர் எப்படி இருக்கார்? ஏதாவது பேசினாரா?” “அவர் ரொம்ப நல்லாதான் இருக்காரும்மா.. நீங்க நெனைக்கற மாதிரி அவருக்கு பேயெல்லாம் எதுவும் பிடிக்கலை. என் கழுத்துல இருந்த சிலுவையைப் பாத்தும்கூட அவர் நார்மலாதான் பேசினார். சரியாகிடுவார். பயப்படாதீங்க…” “சரி ஃபாதர். என் அழைப்பை ஏத்துகிட்டு இவ்வளவு தூரம் நீங்க வந்ததை நான் மறக்கவே மாட்டேன் ஃபாதர்”. “பரவால்லம்மா.. எல்லாம் கர்த்தர் விருப்பம்.. நாம நெனைக்கறது எதுவும் நடக்கறதில்ல..” “வீட்டுக்குள்ள பாத்திரம் எல்லாம் பறந்ததே ஃபாதர்.. அதெல்லாம் எப்படி..” “வீட்டை ஆசிவாதம் பண்ணிக்கலாம்மா… வீட்டிலதானே பிரச்சினை… உங்க வீட்டுக்காரர் நல்லாத்தானே இருக்கார்? பயப்படாதீங்க. நாங்க ஆசிவதிக்கப்பட்ட நீரைத் தந்துட்டுப் போறோம். அதை தெளிச்சு விடுங்க. எல்லாம் தானாவே சரியாகிடும். சரி, நாங்க கிளம்பவா??” “ஏன் அதுக்குள்ள கிளம்பறீங்க? சாப்பிட்ற நேரம் ஆகிடுச்சு.. சாப்பிட்டுட்டு போலாமே ஃபாதர்.. ஒரு அஞ்சு நிமிஷத்துல தயாராகிடும்”. “இல்லம்மா.. அதெல்லாம் வேண்டாம். நாங்க கெளம்பணும்.. ரொம்ப தூரம் போகணும் வேற. இன்னும் ரெண்டு வேலை பாக்கி இருக்கு. அதான் கொஞ்சம் சீக்கிரமே போனா நல்லது”. “எனக்காக ஒரு காபியாச்சும் சாப்பிடுங்க ஃபாதர். முதல் தடவையா வீட்டுக்கு வந்துட்டு இப்படி எதுவுமே எடுத்துக்காமப் போனா… நல்லார்க்காது”. “சரி மா… காபி மட்டும் கொண்டு வாங்க..” மது சமையலறைக்குள் சென்றாள். மைக்கல் எழுந்து அறையையே சுற்றி நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். சுரவெல்லாம் இருக்கும் புகைப்படங்கள், அலங்காரப் பொருட்களைப் பார்த்தான். வேறு வேறு இடங்களில் முகில் மதுவுடன் குழந்தைகளுடன் சிரித்தபடி நின்றான். படத்தில் இருப்பவன்தான் மேலே படுத்திருக்கிறான் என்றால் யாராலுமே நம்ப முடியாதது போல் இருந்தது. படத்தில் இருப்பதைப் போல் முகில் இப்போது கால் அளவாகக் குறைந்திருந்தான். சுவற்றில் மாட்டியிருந்த கத்தி ஒன்றை எடுத்தான். பளபளப்பாக வித்தியாசமாக இருந்தது. கத்தியை முகத்துக்கு நேரே வைத்துப் பிடித்தான். வெயில் பட்டு எதிரொளித்தது. அதன் அழகில் தன் ஆள்காட்டி விரலால் நீவினான். விரலைச் சட்டென அறுத்தது. மைக்கலின் அரவம் கேட்டு ஃபாதர் திரும்பிப் பார்த்தார். அவரைப் பார்க்காது தலையைத் திருப்பிக் கொண்ட மைக்கல் பக்கத்தில் இருந்த மேசையில் மேல் வைத்திருந்த பூ ஜாடியைத் தட்டி விடப் போனான். உருண்டு கீழே விழப் போன பூ ஜாடியைப் பிடிக்க முயலும்போது கையில் இருந்த கத்தி கீழே விழுந்து க்ளாங் என ஒலி எழுப்பியது. ஃபாதர் மைக்கலை முறைத்தார். மைக்கல் தலையைத் தொங்கவிட்ட படியே ஃபாதரின் அருகில் வந்து அமர்ந்தான். “வந்த இடத்துல எல்லாம் சும்மாவே இருக்க மாட்டியா மைக்கல்.. ஏதாவது விலை உயர்ந்த பொருளை உடைச்சிட்டு போகதான் வந்தியா.. ஒரு அஞ்சு நிமிஷம் உன்னால உட்கார முடியாது?” “ஃபாதர்.. இங்க பாருங்க.. என்னையே திட்டாதீங்க.. எல்லாம் இந்தக் கத்தியால வந்தது. பாருங்க என் கையைக் கூட அறுத்திடுச்சி..” மைக்கல் தன் ஆள்காட்டி விரலை நீட்டினான். ரத்தம் தீற்றலாய் எட்டிப்பார்த்தது. மது சமையலறையில் இருந்து காபிக் கோப்பைகளுடன் வந்தாள். மைக்கலின் கையைப் பார்த்தவுடன் பதறிப் போனாள். “அய்யோ.. என்ன இது.. ரத்தம்.. எப்படியாச்சு ஃபாதர்..?” “ஒண்ணுமில்லம்மா.. ஏதோ கத்தி கீறிடுச்சு.. பேண்ட் எய்ட் இருந்தா கிடைக்குமா..?” “இருக்கு ஃபாதர்.. வாங்க வந்து வாஷ் பண்ணிக்கோங்க.. நான் போய் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்துட்டு வர்றேன்”. மதுவின் பின் மைக்கல் நடந்து சென்றான். ஃபாதர் அந்தக் கத்தியை எடுத்து மதுவிடம் கொடுத்தார். “இவ்வளோ ஷார்ப்பா இருக்கு.. பாத்து உள்ளே வைக்க மாட்டீங்களா? சும்மா தொட்டதுக்கே கையைக் கீறிடுச்சு..” மைக்கல் கையைக் கழுவினான். “உள்ளேதான் இருந்துச்சு.. இது அவர் பிரெண்ட் வீட்டுல இருந்து கொண்டு வந்தாரு. அப்பறம் எங்கயோ கிடந்துச்சு.. இப்போதான் நானே பாக்கறேன்.. ஸாரிங்க..” மது பேண்ட் எய்டை எடுத்துக் கொடுத்தாள். “கொழந்தைங்க போட்டோ எல்லாம் இருக்கே.. எங்கே ஒருத்தரையும் காணோம்? ஸ்கூலுக்குப் போயிருக்காங்களா?” “ஆமாங்க, ஸ்கூல் முடிச்சுட்டு அப்படியே எங்க அம்மா வீட்டுக்குப் போயிடுவாங்க. இவருக்கு சரியாகற வரைக்கும் அங்கேயே விட்டிருக்கேன். அவருக்கு ஒண்ணும் இல்லையே? ஃபாதர் உங்ககிட்ட எதாவது சொன்னாரா?” “உங்க ஹஸ்பண்ட் நல்லாத்தான் இருக்காரு. அவர் விஷயமா ஒரு டாக்டரை பாக்கத்தான் அடுத்து போகப் போறோம். ஃபாதருக்கு நெறையா பேரைத் தெரியும். நீங்க கவலைப் படாதிங்க. டாக்டர்ஸ் கண்டிப்பா சரி பண்ணிடுவாங்க”. மைக்கலும் ஃபாதரும் காபியைக் குடித்து விட்டு கிளம்ப ஆயத்தமாகினர். மது அவர்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தாள். எப்படியோ, தன் கணவனுக்கு எதுவும் இல்லை எனும் செய்தியே நிம்மதியாயிருந்தது. ஃபாதர் கொடுத்த நீரை வீடெங்கும் தெளிக்க ஆரம்பித்தாள். 23 ஃபாதரும் மைக்கலும் டாக்ஸியில் ஏறி அமர்ந்தனர். கோயம்பேட்டுக்கு என ஃபாதர் டிரைவரிடம் கூறினார். வண்டி சென்னையின் பெருஞ்சாலையில் வேகமெடுத்தது. மைக்கல் கண்ணாடி வழியே வானாளாவிய கட்டிடங்களையே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஃபாதர் நெற்றியில் கை வைத்து ஏதோ யோசித்துக் கொண்டே வந்தார். அவரின் கை கழுத்தில் இருந்த சிலுவையை நீவியது. வெயில் சரியாக மைக்கலின் முகத்திலேயே அடித்ததால் அவன் ஃபாதரை இன்னும் கொஞ்சம் நெருக்கி அமர்ந்தான். ஃபாதர் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. மைக்கலே ஃபாதரிடம் பேச்செடுத்தான். “ஃபாதர்.. அப்படின்னா இவருக்கு பேய் பிடிக்கலையா.. நீங்க எதாவது வித்தியாசமா சொல்லுவீங்கன்னு பார்த்தேன். பார்த்தா இப்படி சப்பையா முடிஞ்சுருச்சே…” “பார்க்கற எல்லாருக்கும் பேய் பிடிக்கணும்னு அவசியம் இல்லை மைக்கல். அப்புறம் டாக்டர் எல்லாம் எதுக்கு இருக்காங்க? உடம்பு சரி இல்லாமப் போயிட்டா போக வேண்டிய இடம் கோவில் இல்லை. ஹாஸ்பிட்டல் தான். நம்மையும் தாண்டி சில விஷயங்கள் நடக்குது அப்படீங்கற போதுதான் நம்ம நமக்கும் மீறின சக்திகிட்ட போய் நிக்கணும். சும்மா நம்மளை நம்பி வர்றவங்களோட அறியாமையை உபயோகப்படுத்திக்கக் கூடாது. இது ஒரு வரம். அதைக் கொடுத்த கடவுளை நம்ம கெளரவிக்கற விதமாத்தான் நம்ம நடத்தை அமையணும். புரியுதா?” “சரிதான் ஃபாதர். அப்போ இவருக்கு நெஜமாவே ஏதும் இல்லையா..? நல்லா இருக்குற மனுஷன் வீட்டுல ஏன் இப்படி எல்லாம் கிடக்குறாங்க? வீடே அலங்கோலமா.. வீட்டுக்குள்ளாற கவனிசீங்களா ஃபாதர்? அப்படி ஒரு நாத்தம். நம்ம மீன் வாசம் தோத்துரும் போல” “வேறு ஏதாவது உடல் நலக் குறை இருக்கலாமில்ல? நீ ஒண்ணு கவனிச்சியா.. அவங்க நேத்தைக்கு தான் நம்ம ஊருக்கு வந்துட்டு திரும்பி இருக்காங்க. வர்றதுக்கு ஒரு பொழுது ஆகியிருக்கும். போக ஒரு பொழுது. ஆக இந்த நேரமெல்லாம் வீடு பூட்டித்தான் கெடக்கும். அதுதான் அப்படி வாசம் வீசியிருக்கும். வேற எல்லாம் எதுவும் இல்லை. அந்த மனுஷனுக்கு ஒடம்புல என்ன கோளாறோ..இல்ல, மனக் கோளாறாக் கூட இருக்கலாம். நல்ல டாக்டர் மூலமா அவரை கர்த்தர் தான் சொஸ்தமாக்கணும்” “அப்படீன்னா.. என்ன சொல்லறீங்க? பேய் எல்லம் எதுவும் இல்லையா.. வெறும் மனக் கோளாறூதான் எல்லாமா.. என் அப்பாவப் பத்தி சொல்லும்போது ஏதோ பிசாசு பேரெல்லாம் சொன்னிங்களே.. எனக்கு எதுவுமே புரியலை ஃபாதர்” “எல்லாமே வெறும் மனசோட முடியற விஷயம் இல்லை மைக்கல். எது என்னன்னு நம்ம தான் பிரிச்சு பாக்கணும். நான் என் கழுத்துல சிலுவையோட தான போனேன்? சாத்தான்னா இது முன்னாடி நிக்க முடியுமா.. என்னைப் பார்த்ததுக்கே இந்நேரம் அலறியிருக்கும். ஆசிர்வதிக்கப்பட்ட நீரை அதுனால தாங்கிக்க முடியாது. இது எல்லாத்துக்கும் வெறுமனே சும்மா தான இருந்துச்சு? வீட்டுக்குள்ள எரியிற வாசம் வர்றது, பொருட்கள் எல்லாம் எடம் மாறுறது இதெல்லாம் கெட்ட ஆவிங்களோட வேலை தான். இதை மட்டும் வெச்சு நம்ம பிரார்த்தனை பண்ணுணா அதுனால எந்தப் பிரயோஜனமும் இல்லை. உன் அப்பாவுக்கு நடந்தது வேற. அவரைப் பிடிச்சது ஹம்பாபா” “அப்போ அவர் செத்ததுக்கு போலிஸ் யாரையும் விசாரிக்கலையா? அந்தக் கேஸை அப்படியேவா விட்டுட்டாங்க?” “இல்லை மைக்கல்.. எல்லா விசாரணையும் நடந்துச்சு. செல்வா பேய் பிடிக்கறது பத்தியும் அதுனால ஏற்படுற மனரீதியான பிரச்சினைகளையும் தான் ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருந்தார். அது பத்தியே படிச்சிட்டு இருந்ததுனால அவர் தனக்கும் அப்படியே இருக்கறதா கற்பனை பண்ணி அதுக்கேத்த மாதிரி அவரோட மனநிலை பிறழ்வானதாகவும் கேஸை முடிச்சுட்டாங்க. சைக்கியாட்ரியில இப்படியும் வியாதி இருக்கு. பேரு ஹைப்போகான்ட்ரியாசிஸ். இது வலுவான பாயிண்டா இருந்ததுனால அப்பவே கேஸ் முடிஞ்சிருச்சு. அதையும் இன்னைக்குப் பார்த்ததையும் குழப்பிக்காதே” “அப்படின்னா உங்களுக்கு நடந்ததை சொல்லியிருக்கலாமே? ஹாஸ்பிட்டல்ல நீங்க பார்த்தது எல்லாம்?” “ஹாலுசினேஷன்னு ஒரே வார்த்தையில முடிச்சிட்டாங்க. எல்லாத்தையும் கோர்ட்டிலே நிரூபிக்க முடியாமப் போயிடுச்சு” “அப்போ அவருக்கு.. அதான் முகிலுக்கு.. வெறும் மனசுலயோ இல்லை, ஒடம்புலதான் ஏதோ கோளாறுன்னு வெச்சிக்கிறுவோம். அதுக்காச்சும் எதாவது உதவி செய்யலாம். அந்தம்மா நம்ம சர்ச்சுல வந்து எவ்வளோ கெஞ்சினாங்க.. அதுக்காகவாச்சும் ஏதாவது செய்யணும் ஃபாதர். அவங்களை நெனைச்சா பாவமா இருக்கு” “நம்ம சர்ச்சுலையே இருந்து பிரார்த்தனை பண்ணுவோம். எல்லாம் சரியாகிடும். நம்மனால இப்போதைக்கு அவ்வளவுதான் செய்ய முடியும்” “அந்த ஆளைப் பார்த்திங்களா ஃபாதர்.. எலும்பும் தோலுமா மெலிஞ்சு போயிருக்கான். நிக்கக் கூட தெம்பில்லை. ஆனலும் இந்த நிலமைலயும் அவனுக்குத் தண்ணி கொடுத்தப்ப தாங்க்யூ மைக்கல்னு சொன்னான். நல்ல மனுசன் போல. எதாவது டாக்டர் கிட்டையாச்சும் காட்ட சொல்லுவோம் ஃபாதர். உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?” “சொல்லிடலாம். நான் படிச்ச இன்ஸ்டிட்யூட்லயே நிறைய பேர் இருக்காங்க.. மைக்கல்.. நீ இப்போ என்ன சொன்ன?” “அந்தாளை ரொம்ப நல்ல மனுசன்னு சொன்னேன். ஏன் ஃபாதர்?” “அதில்லை மைக்கல். நீ தண்ணீர் கொடுத்ததுக்கு அவர் ஏதோ சொன்னாருன்னு சொன்னியே.. என்னது?” “ஓ அதுவா.. தண்ணி குடுத்ததுக்கு தாங்க்யூ மைக்கல்ன்னு சொன்னாரு. இதுல என்ன தப்பா இருக்கு ஃபாதர்?” “இது வரைக்கும் நான் கணிச்சது எல்லாமேதான் மைக்கல். டிரைவர்….. காரைத் திருப்புங்க.. எங்களை இப்பவே ஏத்துன இடத்துல இறக்கி விட்டுடுங்க. ப்ளீஸ் கொஞ்சம் அவசரம்” டிரைவர் எரிச்சலானான். காரை அங்கேயே ஓரமாக நிறுத்தினான். ஏறிய இடத்திலேயே இறக்கி விட்டால் காசு தேறாதோ என நினைத்தான். “சார்.. நீங்க எங்க புக் பண்ணி இருக்க இடத்துலதான் இறக்கி விட முடியும். உங்க இஷ்டத்துக்கு எல்லாம் ரூட்டை மாத்த முடியாது. என் பேமெண்ட் பாதிக்கும். நான் உங்களை கோயம்பேட்டில இறக்கி விட்டர்றேன். அதுக்கப்புறம் நீங்க எங்க எங்க போகணுமோ போயிக்கோங்க..” “உன்கூட சண்டை போடுறதுக்கு எல்லாம் நேரம் இல்லை. காசுதானே உனக்கு பிரச்சினை.. டபுளா வாங்கிக்கோ. எடு வண்டியை… நாங்க இப்பவே போயாகணும். அவசரம். புரிஞ்சுக்கப்பா…” காசு என்றவுடன் கார் சரேலெனத் திரும்பியது. கிளம்பி வந்த வேகத்தை விட இரு மடங்கு வேகத்தில் இப்போது மது வீட்டுக்கே கார் திரும்பியது. மைக்கலுக்கு எதுவுமே புரியவில்லை. நாம் இப்போது தப்பாக என்ன சொல்லிவிட்டோம் என்பதைப் பார்த்தான். ஃபாதர் பதட்டத்துடனே இருந்தார். “ஃபாதர்.. இப்போ என்ன ஆகிடுச்சுன்னு நம்ம திரும்பியும் அவங்க வீட்டுக்கே போறோம்? அங்க இருந்த வரைக்கும் எப்போடா கிளம்புவோம்னு இருந்தீங்க. இப்போ என்னடான்னா இவ்வளோ அவசரமா திரும்பிப் போயிட்டு இருக்கோம்? என்னாச்சு ஃபாதர்? எதாவது மறந்துட்டு வந்துட்டீங்களா? கொண்டு வஎததே இது ஒரே ஒரு பை தானே?” “எதுவும் மறக்கலை மைக்கல்.. கவனிக்காம விட்டுருக்கோம். உன்கிட்ட பேய் பிடிக்கறதுக்கும் மன வியாதிக்கும் வித்தியாசம் சொன்னேனில்ல? அதுல ஒரு விஷயம் இருக்கு” “என்ன ஃபாதர்? அப்படி என்ன விஷயம்?” “மன வியாதி வந்தவங்கனால எதையும் பிரெடிக்ட் பண்ண முடியாது மைக்கல். ஏற்கனவெ மனசுல பதிஞ்சு இருக்கற விஷயத்தை வேணும்னா சொல்லலாம். ஆனா நடக்கப் போறதை சொல்லறது.. மறைவான விஷயங்கள்.. இது வரைக்கும் யாருக்குமே தெரியாத விஷயங்களை எடுத்துச் சொல்லுவது.. அது சாதாரண மனுஷனுக்கு சாத்தியம் இல்லாத காரியம். மனுஷ உலகத்தையும் தாண்டி இருக்கற சக்திகளா இருக்குற தேவனாலையோ சாத்தானாலயோ மட்டும்தான் சாத்தியம்” “இப்போ அந்தாள் என்ன அப்படி சொல்லியிருக்கான் ஃபாதர்? எனக்கு வெறும் தாங்க்ஸ் தான சொன்னான்?” “வெறும் தாங்க்ஸ் மட்டுமா சொன்னான்? தாங்க்ஸ் மைக்கல்னு சொல்லலை? என் ட்ரெஸ்ஸை வெச்சு என்னை ஃபாதர்னு யாரலையும் சொல்ல முடியும். ஆனா உன் பேரு மைக்கல்ங்கறது எப்படி அவனுக்கு தெரிஞ்சிது? இதுல ஏதோ தப்பா இருக்கு மைக்கல். நம்ம போய்ப் பார்த்தே ஆகணும். அங்க கண்டிப்பா எதுவோ இருக்கு..” “அப்போ இருக்குங்கறீங்களா? உங்க சிலுவையை எப்படி பார்த்துட்டு சாத்தான் சும்மா இருந்தது?” “சாத்தான் நம்மையே நடிச்சு ஏமாத்தும். நம்மதான் கவனமா இருக்கணும். இப்போ இந்த உலகத்து மக்களை தான் இல்லவே இல்லைன்னு நம்ப வெச்சுருக்கே. இது மாதிரிதான். நீ போகப் போக தெரிஞ்சுக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு மைக்கல். சாத்தான்கிட்ட ரொம்ப கவனமா இருக்கணும். இல்லைன்னா அது நம்மையே அதோட வழியில இழுத்துரும்”. மதுவின் வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. இரு மடங்கு பணத்தைப் பார்த்ததும் டாக்ஸிக்காரன் சலாம் வைத்துவிட்டுக் கிளம்பினான். ஃபாதரும் மைக்கலும் மதுவின் வீட்டைப் பார்த்து நடந்தனர். காலிங்பெல் சத்தம் எழுப்பியது. இரு முறை, மூன்று முறை என அழுத்திப் பார்த்தும் கதவு திறக்கவில்லை. ஃபாதர் பொறூமையிழந்தார். அடுத்த முறையும் அழுத்த கையெடுத்தார். மைக்கல் அவரைக் கையமர்த்தி கதவைத் தட்டினான். மைக்கல் பல முறை தட்டியும் கதவு திறக்கவில்லை. இதற்கு மேலும் காத்திருக்க விரும்பாத மைக்கல் கதவில் மோதினான். இரண்டாவது மோதலில் கதவு தாழ்ப்பாளை உடைத்து கொண்டு திறந்தது. உள்ளே ஹால் காலியாகக் கிடந்தது. ஃபாதரும் மைக்கலும் மதுவைத் தேடினர். ஆனால் மதுவை எங்கும் காணவில்லை. மைக்கலுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. தண்ணீர் குடிக்கும்போது முகிலின் கைக் கடுகளை அவிழ்த்து விட்டான். பின் முகிலின் கைகளைக் கட்டிப் போடாமல் அப்படியே வெறூம் கதவை மட்டும் சார்த்திவிட்டு வந்திருந்தான். ஃபாதரைக் கூட்டிக் கொண்டு மாடிப் படிகளில் தாவி ஏறினான். அங்கே முகிலின் அறைக்கதவு திறந்திருந்தது. உள்ளே முகில் முதுகை காட்டியவாறு நின்று கொண்டிருந்தான். அவன் ஒரு கை மதுவின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தது. மதுவால் கத்தக் கூட முடியவில்லை. ஹக் ஹக் என வித்தியாசமான ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தாள். மைக்கல் மதுவை காப்பாற்ற நினைத்து முகிலின் தோளைப் பிடித்துத் தள்ளினான். வெறும் தோல் போர்த்தி இருந்த உடலுடன் நின்று கொண்டிருந்த முகிலை மைக்கலால் ஒரு துளி கூட அசைக்க முடியவில்லை. தன்னை யாரோ தள்ளுவதை உணர்ந்ததைப் போல் முகிலின் உடல் சிலிர்த்துக் கொண்டது. அவன் முகம் மட்டும் முதுகு வரை திரும்பியது. அதைப் பார்த்த மைக்கல் அதிர்ச்சியில் உறைந்தான். 24 முகிலின் முகம் எல்லாம் வெளிறிப் போயிருந்தது. அதில் அங்கங்கே கிழிந்து ரத்தம் தீற்றலாக ஒழுகிக் கொண்டிருந்தது. கண்கள் எல்லாம் பச்சை நிறமேறி பார்க்கவே முடியாததாய் மாறி இருந்தது. சிறீது நேரத்திற்கு முன் பார்த்த முகிலிற்கும் இப்பொது நிற்கும் உருவத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லத்தைப் போல் இருந்தது. நீரில் மூழ்கிச் செத்தவனனிப் போல் அவன் கைகள் வெண்ணிறமாக உப்பிப் போயிருந்தது. வெறியேறியவனைப் போல் அவன் கைகள் இன்னும் மதுவையே நெறித்துக் கொண்டிருந்தது. மைக்கல் தள்ளி விடப் போனதால் இப்போது முகிலின் கோபம் முழுவதும் மைக்கலின் மீதே திரும்பியது. மதுவை அப்படியே ஒற்றைக் கையில் எறிந்தான். அவள் கசக்கி வீசப்பட்ட துணியைப் போல் சுவற்றில் மோதி விழுந்தாள். முகில் நடந்து மைக்கலிடம் வந்தான். மைக்கல் முகிலைப் பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போய் கண்கள் விரிய அவனையே பார்த்து நின்றிருந்தான். முகிலின் கைகள் இப்போது மைக்கலை நோக்கி நீண்டது. மைக்கல் சிலையாகியதைப் போன்று அப்படியே நின்றான். ஃபாதர் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார். முகிலுக்கும் மைக்கலுக்கும் இடையில் வந்து தன் அங்கியின் உள்ளிருந்த வெள்ளிச் சிலுவையை எடுத்து முகிலின் நெற்றியில் வைத்தார். " எக்கே க்ரூஸம் டாமினி.. எல்லாம் வல்ல இறைவனின் பெயராலும் இறைமகன் யேசுவின் பெயராலும் கட்டளை இடுகிறேன். நரகத்துக்கே திரும்பிப் போ சாத்தானே" என்று கூறி முகிலின் நெற்றியில் வைத்த சிலுவையால் அப்படியே நெட்டித் தள்ளினார். சிலுவை பட்ட இடம் அடுத்த நொடியே வெந்துவிட்டதைப் போல் ஆனது. அடிபட்ட நாயைப் போல் ஊளையிட்ட படியே முகில் அறையின் மூலையில் சுருண்டு விழுந்தான். ஃபாதரும் மைக்கலும் அறையில் கிடந்த கயிறுகளை புனித நீரில் நனைத்து முகிலின் கைகளைக் கட்டிப் போட்டனர். மது மயங்கி இருந்தாள். மதுவைத் தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தனர். ஹாலில் கிடந்த சோபாவில் மதுவைக் கிடத்தி அவள் முகத்தில் மைக்கல் தண்ணீர் தெளித்தான். கண்களைச் சுருக்கியபடி கிடந்த மது, இப்போது கண் விழித்தாள். மைக்கலின் கைகளில் இருந்த நீர்க் குடுவையை வாங்கி மடக் மடக்கென்று குடித்தாள். அழுதுகொண்டே பேசினாள். “நான் சொல்லும்போது நீங்க நம்பலையே ஃபாதர்.. இப்போ பாருங்க.. நீங்க கிளம்பிப் போனதுக்கு அப்புறம் மேலே ஏதோ சத்தம் கேக்குதேன்னு போனேன். அப்போ அவர் அறையில இருந்த கட்டுகள் அவிழ்ந்து கிடந்தது. நான் போய் கட்டலாம்னு போனப்போ அவர் முழிச்சிகிட்டார். என்னை ஓங்கி அறைஞ்சுட்டு கழுத்தைப் பிடிச்சு நெறிக்க ஆரம்பிச்சுட்டார். அப்போ தான் கடவுள் புண்ணியத்துல நீங்க வந்தீங்க. மேல இருக்குறது நிச்சயமாச் சொல்றேன். அது என்னோட புருஷன் இல்லை. தயவு செஞ்சு எனக்கு என் புருஷனைக் காப்பாத்திக் கொடுத்துடுங்க ஃபாதர்..” “நீ எதுவும் கவலைப்படாதேம்மா. இனி நாங்க பாத்துக்கறோம். மைக்கல், நம்ம பேக்கைத் திற. அதுல இருக்க பைபிள், அங்கி, நீர், சிலுவை எல்லத்தையும் வெளியே எடு. இன்னைக்கு நம்ம இங்கையே அந்த சாத்தானை விரட்டியாகணும். நம்ம தாமதிக்கற ஒவ்வொரு நொடியும் முகிலை நம்ம இழந்துட்டு இருக்கோம்”. “ஃபாதர்.. ஏதோ அனுமதி வாங்கணும்னு எல்லாம் சொன்னீங்களே ஃபாதர்.. நான் காப்பாத்திடலாம்னு அத்தனை முறை சொன்ன போதும் நீங்க மறுத்திட்டு எதுவுமே இல்லாம இப்போ திடீர்னு எப்படி?” “அது போன முறை நம்மகிட்ட நடிச்சது இல்லையா .. அப்பவே அது முகிலோட உடம்பை முழுசாத் தன் கட்டுப்பாட்டுக்குள்ள எடுத்திருக்கு. இனி அது முகிலோட ஆன்மாவை ஆக்கிரமிச்சுடுச்சுன்னா அதுக்கௌ பிறகு அது நிரந்தரமா முகிலோட உடலை தன்னோட கருவியா மாத்திக்கும். அவனோட ஆன்மாவை தன்னோட அடிமையா எடுத்துக்கும். அதுக்கு நாம விடக் கூடாது. யார்கிட்ட பேசனுமோ நான் பேசிக்கறேன். நீ சீக்கிரம் நான் சொன்னதைச் செய்”. “சரிங்க ஃபாதர்..” மைக்கல் வெளியில் இருந்த பையை எடுக்க வேகவேகமாக நடந்து போனான். அதே நேரம் மாடியில் இருந்து முகிலின் குரல் ஈனஸ்வரத்தில் ஒலித்தது. " தண்ணி.. தண்ணி.. யாராவது கொஞ்சம் தண்ணி தாங்களேன்.. மது… இருக்கியா.. தாகம் ரொம்பத் தாங்க முடியல. என் உடம்பெல்லாம் எரியுது . மது.. ப்ளீஸ். ஒரு வாய் தண்ணி தா மது. என்னால மூச்சு கூட விட முடியல. வா மது" அது முகிலின் குரலே தான். மது தண்ணீர் குடுவையுடன் எழுந்தாள். ஃபாதர் அவள் மேலே செல்லும் வழியில் குறுக்காக நின்றுகொண்டார். கையை நீட்டித் தடுத்தார். “நாங்க சொல்லற வரைக்கும் நீங்க மேலே வரக் கூடாது. மேலே இருக்கறது உங்க ஹஸ்பண்ட் இல்லை. அது சாத்தான். அது ஒண்ணா உங்க ஹஸ்பண்ட் உயிரை.. அது முடியலைன்னா யார் கிடைக்கறாங்களோ அவங்க உயிரை எடுக்கப் பார்க்கும். அது ரொம்பத் தந்திரமானது. ஸோ.. நீங்க கீழேயே இருங்க. புரியுதா?” “சரிங்க ஃபாதர்.. எப்படியாவது அவரை நீங்க காப்பாத்திக் கொடுத்துட்டா அதுவே போதும். நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன் ஃபாதர்..” மது தலையைக் குனிந்தவாறே சென்று சோபாவில் அமர்ந்தாள். மாடியில் முகிலின் அறையில் இருந்து கிக்கிக்கென்று அந்த சாத்தான் சிரிக்கும் சத்தம் கேட்டது. மது அரண்டு போனாள். “பயப்படாதீங்க. நான் கட்டியிருக்கற கட்டுகளை அவிழ்த்துட்டு அதுனால கீழே இறங்கி வர முடியாது. நீங்க கீழே விளக்கேத்தி வெச்சு உங்களுக்குப் பிடிச்ச கடவுளை மனமுருக வேண்டுங்க. உங்க நம்பிக்கையும் ரொம்ப முக்கியம். அதுவும் அவரைக் காப்பாத்தும்.” மைக்கல் வெளியே இருந்து பையை எடுத்து வந்தான். உள்ளே பெரியதாக இரண்டு பைபிள்கள் இருந்தன. ஃபாதர் தன் மூக்குக் கண்ணாடியை எடுத்து அணீந்து கொண்டார். கத்தரிப்பூ நிறத்தில் இருந்த சால்வையை எடுத்து முத்தமிட்டு மேலே போட்டுக் கொண்டார். புனித நீரை எடுத்து ஆவே மரியா சொல்லியபடியே தன் மேல் தெளித்து தன்னை சுத்தப் படுத்திக் கொண்டார். இன்னொரு பைபிளை எடுத்து மைக்கலிடம் கொடுத்தார். “மைக்கல்.. பைபிள்ல இருக்கற ஒவ்வொரு வசனமா நான் படிக்கப் படிக்க நீ அடுத்த வசனத்தைப் படிக்கணும். நான் பிரார்த்தனை சொல்லும்போது நீ ஆமென் சொல்லணும். முக்கியமா சாத்தான் சொல்லுவதை எதையும் கேட்டுக்கக் கூடாது. அது உண்மையோட பொய்யையும் கலந்து நம்மைக் குழப்பும். அதுகிட்ட எந்த வகையிலும் நீ பேசவே கூடாது. புரியுதா? அதுக்கும் மீறி நீ ஏதாவது செஞ்சா அது பெரிய ஆபத்தா மாறிடும். உள்ளே போனதுக்குப் பிறகு ரொம்ப கவனமா நடந்துக்கணும். புரியுதா மைக்கல்?” மைக்கல் தலையை ஆட்டினான். என்ன இருந்தாலும் அவனுக்குள் பயம் அவனையே ஆக்கிரமித்திருந்தது. ஃபாதர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பொய்யாக்கி விடக் கூடாது என்பதற்காக தன் மனதைத் தானே தேற்றிக் கொண்டான். ஃபாதர் அவன் மீதும் புனித நீரைத் தெளித்து அவனையும் சுத்தப்படுத்தினார். இருவரும் மாடிக்கு நடந்தனர். மது வீட்டிற்குள் இருந்து ஒரு விநாயகர் படத்தை எடுத்து வந்தாள். என்ன ஆனாலும் நகரக் கூடாது என முடிவு செய்தவளாய் கண்களை மூடி பிரார்த்திக்க ஆரம்பித்தாள். ஃபாதரும் மைக்கலும் முகில் இருக்கும் அறைக்குள் நுழைந்தனர். அறையின் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே இருந்ததைப் போன்று சில்லிட்டது. இருட்டில் முகிலின் கண்கள் ஒரு ஓநாயின் கண்களைப் போன்று ஒளிர்ந்தது. மைக்கல் அறையின் விளக்கை ஒளிர்த்தான். முகில் கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தான். இருவரையும் பார்த்துச் சிரித்தான். “வாங்கடா பசங்களா.. என்னடா பேயோட்டலான்னு வந்தீங்களா? பொறுக்கித் திங்கற நாயிங்களா.. உங்களால ஒரு மயிரும் புடுங்க முடியாதுடா.. என் சக்தி என்னன்னு தெரியாம என்கிட்டயேவா மோத வந்துருக்கீங்க? என் வெரலை அசைச்சாப் போதும். ரெண்டு பேரும் இங்கேயே சுருண்டு விழுந்து செத்துப் போயிடுவீங்க. உங்களுக்கு என்னை ஓட்டணுமா..” “ச்சீ.. வாயை மூடிக் கிட” ஃபாதர் கையில் இருந்த புனித நீரை முகிலின் மீது ஊற்றினார். அது தன் மேல் நெருப்பை அள்ளிக் கொட்டினாற்போலத் துடித்தது. படுக்கையிலேயே நெளிந்து அலறியது. நாயின் குரலில் ஊளையிட்டது. மைக்கல் நடப்பதைத் தன் கண்களினாலேயே நம்ப முடியாதவனாக இருந்தான். ஃபாதர் மைக்கலை அழைத்து தன் பக்கத்தில் மண்டியிடச் செய்தார். ஃபாதர் தன் கையில் இருந்த பைபிளைத் திறப்பதைப் பார்த்த மைக்கல் அவனும் பைபிளைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு பைபிளைத் திறந்தான். ஃபாதர் சடங்கினை ஆரம்பித்தார். “பரம மண்டலத்தில் இருக்கும் பிதாவே. எங்கள் பாவங்களை மன்னியும். எங்களைப் பெற்றோரின் பாவங்களை மன்னியும். எங்கள் பாவங்களுக்காக எங்களை தண்டிக்காதேயும். எங்களை சோதிக்காதேயும்” சங்கீதம் 53ல் இருந்த வசனங்களை ஃபாதரும் மைக்கலும் படிக்கத் தொடங்கினர். பின் ஃபாதர் ஜெரால்ட் சடங்குகளுக்கான புத்தகத்தைப் பிரித்துப் படிக்கலானார். அவர் படிக்கப் படிக்க மைக்கலும் பின்னாலேயே படித்தான். “உங்கள் பிள்ளையைக் காப்பாற்றும்”. “உங்களையே நம்பி இருக்கிறோம் எங்கள் பிதாவே” “அவர் உங்களையே அரணாய் அடைவாராக” “எதிரியின் முன்” “எதிரிக்கு அவரின் மேல் எத்தகைய சக்தியும் இல்லாமல் போவதாக” “தீயதின் புத்திரனுக்கு இவரின் மேல் எத்தகைய சக்தியும் இல்லாமல் போவதாக. பரலோக ராச்சியத்தில் இருந்து அவரை எப்போதும் காப்பீராக”. “எங்கள் பிரார்த்தனை கேட்கப்படுவதாக”. “எங்கள் அழுகை கேட்கப் படுவதாக”. “ஆண்டவர் உங்களுடனே இருப்பாராக” “அவர் எப்போதும் உங்களுடனே இருப்பாராக..” அவர்கள் இருவரும் படிக்கப் படிக்க முகிலின் உடலில் இருந்த சாத்தான் முதலில் அமைதியாக இருந்தது, பின் கட்டிலிலேயே தன் உடலை முறுக்கியது. கட்டுகளை விடுவிக்கப் போராடி தன் உடலை அங்கும் இங்கும் அலைத்தது. கட்டிலின் காலோடு கட்டிலையே அசைத்தது. நாயைப் போலவும் எருமையைப் போலவும் எழுந்த அந்த சாத்தானின் குரல் அறையெங்கும் ஓலமாய் ஒலித்தது. ஃபாதர் எதைப் பற்றியும் கவலைப் படாமல் வசனகளைப் படிப்பதிலேயே தன் கவனங்களைக் குவித்திருந்தார். ஆனால் மைக்கலால் அவ்வாறு இருக்க முடியவில்லை. மைக்கலின் இதயம் தடதடவென அடித்துக் கொண்டது. மைக்கல் பயப்படுவதைக் கண்ட சாத்தான் அவனையே தன் கண்களால் கூர்மையாகப் பார்த்தது. ஹூங்காரமிட்டு சிரித்தது. மைக்கலுக்கு உலகமே இருண்டு வருவதைப் போல் இருக்க.. அப்படியே சொக்கிக் கீழே விழுந்தான். “என்னய்யா கெழவா.. பையன் இதுக்கே சுருண்டுட்டான். அவனையும் கொன்னு போட்டுரவா.. இல்லாத பரலோகத்துக்கு ரெண்டு பேரும் போங்க. நாங்கதான உலகத்தை அடைய மொதல்ல வந்தோம்? இவன் எப்பேற்பட்டவன் தெரியுமா.. இவனுக்காகப் போய் என்னைத் தொந்தரவு பண்றியேடா முட்டாப்பன்னி…”. தன் வாய்க்கு வந்த தரங்கெட்ட வார்த்தைகளால் சாத்தான் திட்டத் தொடங்கியது. மைக்கல் கட்டில் காலிற்குப் பக்கத்தில் விழுந்து கிடந்தான். ஃபாதர் மீண்டும் தன் சடங்கினைத் தொடர்ந்தார். “உனக்குக் கட்டளையிடுகிறேன். பாவப்பட்ட சாத்தானே.. நீ யாராக இருந்தாலும், உன் அடிமைகளுடன் இந்தக் கர்த்தரின் விசுவாசியை இம்சிக்காமல் இரு. இயேசு கிறிஸ்துவின் பிறப்பால், தியாகத்தால், மீள்திரும்புதலால், மேன்மையால், பரிசுத்த ஆவியின் பெயரால், தீர்ப்புநாளின் அதிபதியின் பெயரால் கட்டளையிடுகிறேன். உன் பெயரையும், இங்கிருந்து வெளியேறும் நாளையும் நேரத்தும் கூறுவாயாக…” ஆசிர்வதிக்கப்பட்ட நீரை சாத்தானின் மீது தெளித்தார். அது “எரியுதுடா நாயே.. நெருப்பைக் கொட்டினாயாடா பாவி.. அய்யோ..” எனக் கதறியது. பின் அப்படியே சாய்ந்த் பின்னோக்கி விழுந்தது. ஃபாதர் நீளமான வெண்போர்வையை கையில் ஏந்தி அதனை ஆசீர்வதித்து சாத்தானின் மேல் போர்த்தினார். அது அப்படியே மயங்கியது. பின் மைக்கலின் மீதும் புனித நீரைத் தெளித்தார். துள்ளி விழுந்த மைக்கல் கண் விழித்து ஃபாதரையே மலங்க மலங்கப் பார்த்தான். 25 “மைக்கல்.. நீ கவனமா இருக்கணும்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது? அதோட கண்ணைப் பாக்கதே, அதுகிட்ட எந்தப் பேச்சும் வெச்சிக்காதேன்னு சொன்னேன்ல? நாம் ரொம்ப முக்கியமான நேரத்துல இருக்கோம். நீ எதாவது பிசகினா அப்புறம் என்ன வேணா நடக்கலாம்” ஃபாதர் ஜெரால்ட் மைக்கலைக் கடிந்து கொண்டார். மைக்கல் தலையைக் குனிந்தவாறே நின்றான். “மன்னிச்சிருங்க ஃபாதர். எனக்கே தெரியாம இப்படி நடக்குது. நான் திருத்திக்கறேன் ஃபாதர்..” “சரி, இந்தக் குடுவையில புனிதமான ஆலிவ் எண்ணெய் இருக்கு. இதை அந்த சாத்தானோட வாயில் ஊற்று. அதை இன்னைக்கு நாம் விரட்டியே ஆகணும்”. மைக்கல் எழுந்து சென்று முகிலின் தலையைத் திருப்பினான். அந்த அறை முழுவதுமே இன்னதென்று சொல்ல முடியாத நாற்றம் பரவியிருந்தது. முகிலின் அருகில் செல்லச் செல்ல அதன் வீச்சம் இன்னும் அதிகமாக வந்தது. அவன் முகம் முழுதும் சதைகள் உரிந்து தொங்கியது. மைக்கல் கவனமாக அதன் வாயைத் திறந்து சொட்டுச் சொட்டாக அதன் வாயில் எண்ணெயை விட்டான். எண்ணெய் அதன் வாயின் வழியாக உள்ளே இறங்கிய அடுத்த நொடியே மஞ்சள் நிறத்தில் நுரை நுரையாக சாத்தான் கக்கியது. மைக்கல் அருகில் இருந்த துணியை எடுத்து அந்த சாத்தானின் வாயைத் துடைத்தான். நேரம் செல்லச் செல்ல அதன் வாயிலிருந்து கண்ணாடித் துண்டுகள் வர ஆரம்பித்தது. பின் மரத் துண்டுகள், இரும்புத் துண்டுகள் என கலவையாக வெளியேறியது. இது எதுவும் அதன் முகத்தில் காயம் படாமல் கவனமாக மைக்கல் துடைத்து எடுத்தான். மைக்கலின் பின் எழுந்து வந்த ஃபாதர் ஜெரால்ட், அந்தத் துணியை வாங்கிக் கொண்டார். நான் இதைக் கீழே போய் கொடுத்துட்டு வர்றேன். நீ இன்னும் எதாவது வந்தாலும் கவனமாத் தொடச்சிடு மைக்கல். ஃபாதர் கீழே மதுவிடம் சென்றார். மது பிள்ளையாரின் படத்தை விட்டு எழுந்திரிக்கவேயில்லை. ஃபாதர் மதுவின் முன் நின்றார். “கண்ணைத் திறந்து பாரும்மா.. நான் ஃபாதர் வந்திருக்கேன். இந்தத் துணியை இப்படியே வீட்டில் வெச்சிருக்கக் கூடாது. உடனே துவைக்கணும். எங்க துவைக்கற இடம் இருக்கு? கொஞ்சம் வந்து காட்டறியாம்மா?” “நானே துவைச்சுத் தரேன் ஃபாதர். அவருக்கு இப்போ எப்படி இருக்கு ஃபாதர்? நீங்க சொன்னதுலேர்ந்து நான் சாமி படத்தை விட்டு எழுந்திரிக்கவேயில்லை ஃபாதர். கண்ணை மூடி வேண்டிகிட்டே இருக்கேன். எனக்கு மந்திரமெல்லாம் தெரியாது. ஆனாலும் எப்படியாவது என் புருஷனைக் காப்பாதிக்கொடுன்னு கேட்டுகிட்டே இருக்கேன்” மது அழுது கொண்டே பேசினாள். “எதுவும் கவலைப்படாதீங்கம்மா. உங்க புருஷனை மீட்டுத் தர நானிருக்கேன். இந்தத் துணியை துவைச்சு வையிங்க. நான் வந்து வாங்கிக்கறேன்”. ஃபாதர் தன் பையில் இருந்து தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு சோபாவில் அமர்ந்தார். அதே நேரம் கட்டிலில் அவ்வளவு நேரம் மயங்கிக் கிடந்த சாத்தான் மைக்கலிடம் பேசியது. “என்னடா அந்தக் கிழம் கீழே போயிடுச்சா.. போய் அந்தப் பொம்பளைகிட்ட மோந்து பாக்கப் போறான். நீயும் போய் எட்டிப் பாரு. இந்நேரம் அவளே எல்லாத்தையும் அவுத்துப் போட்டிருப்பா. வீட்டுக்குள்ள வந்த உடனேயே அவ மேல நீதான கண்ணு வெச்ச?” “நீ வாயைத் திறக்காதே” மைக்கல் சாத்தானின் கழுத்தை நெறித்தான். அது இன்னும் சத்தம் போட்டு சிரித்தது. இவன் நெறிக்க நெறிக்க இன்னும் இன்னும் அதிகமாகச் சிரித்தது. “நீ இங்க அமுத்திகிட்டு இருக்க. அந்தக் கிழவன் கீழே அமுத்திகிட்டு இருக்கான். போயிப் பாருடா நம்பிக்கையில்லையின்னா.. ஹா.. ஹா.. ஜோரா நடக்குது கீழே… கிழவன் என்ன இந்தக் காட்டு காட்டிட்டு இருக்கான்..” மைக்கலுக்கு இன்னும் கோபம் அதிகமானது. தன் தந்தையின் இடத்தில் வைத்திருந்த ஃபாதரைக் கேவலமாகப் பேசிய சாத்தானின் கழுத்தைக் கிழித்துப் போட்டுவிடும் வெறியில் அழுத்திக் கொண்டிருந்தான். அறையின் கதவு திறக்க உள்ளே வந்த ஃபாதர் வேகமாக மைக்கலின் கையைத் தட்டி விட்டார். அவனை சாத்தானின் அருகில் இருந்து பின்னுக்கு இழுத்து நிறுத்தினார். “என்ன செய்ய இருந்த மைக்கல்.. இப்போ நீ கழுத்தை நெறிச்சா சாகப் போறது ஒண்ணும் சாத்தானில்லை. முகில் தான் சாவான். சாத்தானுக்கு எப்படியாவது ஒரு உயிரை எடுத்தாகணும். அதுக்காக அது எல்லாவிதமான தந்திரத்தையும் உபயோகப்படுத்தும்”. சாத்தான் மீண்டும் வாந்தி எடுத்தது. மஞ்சளாக நீராக வெளிவந்தது. அதில் நெளிநெளியாக ஆணித் துண்டுகள் வெளியே வந்தது. இம்முறை ஃபாதரே அதனைத் துடைத்து எடுத்தார். மைக்கல் அதைக் கைகளில் வாங்கிக் கொண்டான். “கீழே போக வேண்டாம் மைக்கல்.. இங்கேயே கழுவு”. ஃபாதர் சொன்னதும் மைக்கல் அங்கேயே அறையின் மூலையில் ஆணிகளைக் கொட்டினான். “நீ ஒரு அஞ்சு நிமிஷம் கீழே போயிட்டு வா.. இந்தக் கிழப்பன்னியோட கதையவே நான் முடிச்சிடறேன். அப்பறம் கீழே இருக்கறவ உனக்குதான். அவளை அப்படியே இழுத்து வெச்சு…” சாத்தான் மறுபடியும் கெக்கலிட்டுச் சிரித்தது. ஃபாதர் தன் கையில் இருந்த புனித நீரை அதன் மீது தெளித்தார். “சபிக்கப்பட்ட சாத்தானே.. இயேசு கிறிஸ்துவின் பெயரால் உனக்குக் கட்டளையிடுகிறேன். மீளா நெருப்பில் எரியும் உன் வீடான நரகத்துக்கே திரும்பிப் போ.. பரமபிதாவின் பிரதிநிதியான நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் வல்லமைகள் யாவையும் இங்கு வாய்க்காதே போவதாக. நீ இவ்விடத்தை விட்டே அகன்று போவாயாக… உன் பேரைச் சொல்.. கர்த்தரின் பேரால் கட்டளை இடுகிறேன்.” “அய்யா மைக்கலு..” சாத்தான் திடீரென ராயரின் குரலில் பேசியது. “அப்பாவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குய்யா.. இதெல்லாம் கொஞ்சம் நிறுத்தச் சொல்லுய்யா. அப்பாவுக்கு ஒடம்பெல்லாம் எரியுதுய்யா. அப்பா மேல பாசம் இல்லாமப் போச்சாய்யா… நானும் இந்த ஒடம்புக்குள்ள தான்யா இருக்கேன். உன்னைப் பாக்கவே வந்திருக்கேய்யா.. ஃபாதரைக் கொஞ்சம் போகச் சொல்லுய்யா…” மைக்கலின் கண்கள் ஒரு நொடியில் நீரானது. மெதுவாக நடந்து வந்து கட்டிலின் அருகில் நின்றான். கைகள் கட்டப்பட்ட நிலையில் ராயரே தான் படுத்திருந்தார். ராயரின் முகத்தை மைக்கல் தடவிக் கொடுத்தான். “கைக் கட்டெல்லாமாய்யா அப்பாவுக்குப் போட்டு விடுவ? வலிக்குதுய்யா.. கொஞ்சம் அவுத்து விடுறியா? அப்பாவுக்கு உன்னைக் கட்டி அணைச்சுக்கணும் போல இருக்குய்யா.. நீ எம்புள்ள இல்லையா…. இந்தக் கட்டுகளை அவுத்து விடுய்யா…” மைக்கல் கைக்கட்டுகளை அவிழ்க்கப் போனான். ஃபாதர் அவனை ஓடி வந்து தடுத்தார். மைக்கல் அப்பா அப்பா என மீண்டும் கட்டிலின் அருகிலேயே போனான். இப்போது கட்டிலில் ராயரின் உருவம் மறைந்து சாத்தான் படுத்திருந்தது. அவனைப் பார்த்து எள்ளிச் சிரித்தது. மீண்டும் தன் பேய்க் குரலிலேயே பேசியது. “என்னய்யா.. அப்பாவை அவுத்து விடுய்யா… ஹா ஹா…” ஃபாதர் மைக்கலிடம் திரும்பினார். இதெல்லாம் சரிப்படாது மைக்கல். நீ பேசாமப் போய் கீழேயே இரு. நானே இதை சமாளிச்சுக்கறேன். இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்க இருந்தா சாத்தான் உன்னை முழுசா அதோட கட்டுப்பாட்டுக்குள்ள எடுத்துக்கும். நீ இப்போவே இந்த அறையை விட்டு வெளியில போ.. ஃபாதர் அவரே சென்று அவனை அறையின் வெளியில் விட்டுக் கதவைச் சாத்தினார். மைக்கல் சோகமாகக் கீழே இறங்கி வந்தான். மது கையில் போர்வையுடன் நின்று கொண்டிருந்தாள். “என்னங்க இது? போர்வை? இது எதுக்கு இப்போ?” மைக்கல் கேட்டான். “ஃபாதர் தான் ஏதோ அவசரமாக் கேட்டாருங்க. இதை உடனே துவைச்சுக் கொண்டுவரச் சொன்னாரு. சரின்னு நான் வாங்கிட்டு துவைச்சுட்டு வர்றதுக்குள்ள மேல போயிட்டாரு. நானும் சரின்னு இங்கேயே நின்னுட்டேன்”. “சரி கொடுங்க. நானே கொடுத்தர்றேன். நீங்க மேல எல்லாம் வர வேண்டாம்”. மைக்கல் கைகளில் வாங்கிக் கொண்டு திரும்புப் போது காலடியில் கத்தி ஒன்று இடறியது. மைக்கல் கையில் எடுத்துப் பார்த்தான். அது முகில் கொண்டு வந்த அதே கத்தி.. மைக்கலைக் கீறிய அதே கத்தி.. அதன் கைப்பிடியில் உத்துப் பார்த்த போது தெரிந்தது ஹம்பாபாவின் உருவம். மைக்கல் உடனே அந்தக் கத்தியை ஜன்னலின் வழியாக வெளியே வீசினான். போர்வையைக் கீழே வீசிவிட்டு தாவி மாடிப் படிகளில் ஏறினான். கதவைத் தட்டினான். ஃபாதர் ஃபாதர் என அழைத்துப் பார்த்தான். ஆனால் அறைக்குள் இருந்து எந்தச் சலனமும் வரவில்லை. சற்றும் தாமதிக்காமல் கதவை மோதினான். திறந்து உள்ளே போனவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. கைக்கட்டுகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் கட்டிலின் நடுவே சாத்தான் உட்கார்ந்திருந்தது. ஃபாதர் ஜெரால்ட் அறையில் சுருண்டு விழுந்து கிடந்தார். அவரின் உடலில் எந்த அசைவும் இல்லை. மைக்கல் ஃபாதரை எடுத்துத் தன் மடி மீது கிடத்தினான். ஆனால் அவரின் உடல் அந்தச் சிறிது நேரத்தில் சில்லிட்டுப் போயிருந்தது. மைக்கல் அவர் நெஞ்சில் காது வைத்துக் கேட்டான். இதய துடிப்பதற்கான எந்தச் சத்தமும் வரவில்லை. ஃபாதர் ஜெரால்ட் தன் உயிரை விட்டிருந்தார். ஃபாதர் ஃபாதர் என மைக்கல் கதறியபடியே அவரின் நெஞ்சினை ஓங்கி ஓங்கிக் குத்தினான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாத்தான் “இன்னும் வேகமாக் குத்து” என்றது. மைக்கலின் ஆற்றாமை வெறியாக மாறியது. கீழெ கிடந்த புனித நீர்க் குடுவையைத் திறந்து அத்தனை நீரையும் சாத்தானின் மேல் ஊற்றினான். அது கட்டிலில் மேல் துள்ளி விழுந்து ஓலமிட்டது. மைக்கல் ஃபாதரின் சிலுவையைக் கைகளில் எடுத்துக் கொண்டான். சாத்தானின் கழுத்தில் கை வைத்துத் தூக்கினான். வெள்ளிச் சிலுவையை அதன் நெற்றியில் வைத்து அழுத்தினான். சிலுவையை வைத்த மாத்திரத்தில் சாத்தானின் தோல் வெந்து கருகியது. மைக்கல் தன் பிடியைக் கொஞ்சம் கூட அசைக்கவில்லை. பொறியில் மாட்டிய எலியைப் போல அப்படியே அவன் கைகளுக்குள்ளேயே துள்ளியது. அதன் கைகளும் கால்களும் வெட்டி வெட்டி இழுத்தது. “சபிக்கப்பட்ட சாத்தானே.. கர்த்தரின் பெயரால் ஆணையிடுகிறேன். ஹம்பாபா எனப் பெயர் கொண்ட நீ இனிமேல் நரகத்திலேயே கிடப்பாயாக. உன் இருப்பிடமான நரகத்துக்கே திரும்பிப் போ…” இதைக் கேட்டதும் அதன் ஓலம் இன்னும் அதிகமானது. வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் எல்லாம் வெடித்துச் சிதறியது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் எல்லாம் வீட்டின் முன் கூடினர். பிரிசில்லாவும் மதுவும் மேலே வந்து பார்த்தனர். அங்கே கட்டிலில் படுத்து வலுவின்றி ஒரு கையை மட்டும் தூக்கிக் கொண்டிருந்தது முகிலேதான். மது ஓடிச் சென்று கையில் இருந்த போர்வையால் அவனை மூடினாள். சிறிது நேரத்தில் அந்த வீட்டிற்குக் காவல்துறை, ஆம்புலன்ஸ் என வந்து சேர்ந்தது. ஃபாதர் ஜெரால்டின் உடலை ஸ்டெரெச்சரில் வைத்து எடுத்துப் போனார்கள். மைக்கல் ஒரு ஓரமாக அமர்ந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மது ஓடி வந்து அவன் காலில் விழுந்து எழுந்து சென்றாள். மைக்கல் ஆசிர்வதிக்கக் கையைத் தூக்கியபோது ஃபாதர் ஜெரால்டின் பைபிளும் சிலுவையும் இப்போது மைக்கலின் கைகளில் இருந்தது. முற்றும் FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.