[] []                           முகம் காட்டச் சொல்லாதீர்   கவிதைகள்    வெங்கட் நாகராஜ்  venkatnagaraj@gmail.com         அட்டைப்படம்:  வெங்கட் நாகராஜ் - venkatnagaraj@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியீடு : : FreeTamilEbooks.com    உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                      முகம் காட்டச் சொல்லாதீர் [புகைப்படக் கவிதைகள் தொகுப்பு]   பயணங்கள் செல்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனது “சந்தித்ததும் சிந்தித்ததும்” வலைப்பூவினை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களுக்கு எனது பயணங்களும், பயணங்கள் பற்றி நான் எழுதிய பயணக்கட்டுரைகளும் பிடித்தமான விஷயம் [அப்படித்தானே?].  அப்படி வெளியிட்ட கட்டுரைகளைத் தொகுத்து சில மின்னூல்களும் வெளி வந்திருக்கின்றன.  பயணங்களில் என் கூடவே வருவது எனது டிஜிட்டல் காமெரா – Canon DSLR. பயணக் குறிப்புகள் எடுத்துக் கொள்வது மட்டுமல்லாது நிறைய புகைப்படங்களும் எடுத்து கட்டுரைகளில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.   அப்படி எடுத்த சில புகைப்படங்கள் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். புகைப் படங்களுக்குப் பொருத்தமான கவிதை வரிகளை எழுதினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்ற யோசனை வரும்! கட்டுரைகள் எழுதும் அளவிற்கு கவிதைகள் எழுதுவது எனக்கு வராது! இதுவரை முயற்சித்ததும் இல்லை!  கல்லூரி சமயத்தில் வாக்கியங்களை மடக்கி எழுதி, “கவிதை” என்று நினைத்துக் கொண்டதுண்டு! அவற்றையும் என்னுடைய நண்பர்களுக்குக் கூட காண்பித்தது இல்லை!  மற்றவர்கள் எழுதும் கவிதைகளை ரசிப்பதும், அவற்றை சேகரிப்பதும் ஒரு பொழுதுபோக்காக இருந்திருக்கிறது.   வலையுலகில் எழுத ஆரம்பித்த பிறகு நான் எடுத்த சில புகைப்படங்களை எனது பக்கத்தில் பகிர்ந்து அவற்றுக்கு கவிதை எழுதச் சொல்லி, வலையுலக நண்பர்கள் எழுதிய கவிதைகள் எனது பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன். எனது வலைப்பூவில் அப்படி வெளிவந்த கவிதைகள் நிறையவே இருக்கிறது.  அப்படி வந்த கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து ஒரு மின்னூலாக வெளிக்கொணர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.  அந்த எண்ணத்திற்குக் கொடுத்த செயல்வடிவமேஇப்போது மின்னூலாக உங்கள் கணினி/அலைபேசித் திரையில்!   இப்புத்தகத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம், அவை எடுக்கப்பட்ட இடம், புகைப்படம் பற்றிய எனது கருத்துகளைத் தொடர்ந்து நண்பர்கள் எழுதிய கவிதைகளும் இருக்கின்றன.  இதோ புகைப்படங்களும், கவிதைகளும் உங்கள் ரசனைக்காக…..  புகைப்படத்திற்குத் தகுந்த கவிதைகளை எழுதி அனுப்பி, வெளியிட அனுமதித்த நண்பர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி.  பாராட்டுகள் அனைத்தும் கவிதை எழுதிய நண்பர்களுக்கே.  மின் புத்தகத்தில் குறைகள் இருப்பின் அதற்கான காரணம் - அவர்கள் அல்ல! நான் மட்டுமே! கவிதைகள் பற்றிய கருத்துகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். எனது மின்னஞ்சல் முகவரி venkatnagaraj@gmail.com .    நட்புடன்   வெங்கட் புது தில்லி. வலைப்பூ: சந்தித்ததும் சிந்தித்ததும்           கவிதை பங்களிப்பாளர்கள்   1. நிலா மகள். பறத்தல் – பறத்தல் நிமித்தம் – எனும் வலைப்பூவில் எழுதுபவர். எங்களூர்க்காரர்!  2. தில்லி நண்பர் பத்மநாபன். வலைப்பூவில் எழுதவில்லை என்றாலும் பல வலைப்பூக்களைப் படிப்பவர். நல்ல நண்பர்! 3. முகிலின் பக்கங்கள் வலைப்பூவில் எழுதும் தமிழ்முகில் அவர்கள்.  4. காரஞ்சன் சிந்தனைகள் எனும் வலைப்பூவில் எழுதும் திரு சேஷாத்ரி.  5. திருவரங்கம் ரிஷபன் அவர்கள்.  6. எங்கள் பிளாக் ஆசிரியர்களில் ஒருவரான ஸ்ரீராம்.  7. கே. பி. ஜனார்த்தனன் அவர்கள்  8. நான் ஒன்று சொல்வேன் எனும் வலைப்பூவில் எழுதிவரும் மீரா செல்வகுமார்.   9. தில்லையகத்து க்ரோனிக்கிள்ஸ் கீதா ரெங்கன், சென்னை.   10. கீதமஞ்சரி என்கிற வலைப்பூவில் எழுதி வரும் கீதா மதிவாணன், சிட்னி  11. வலையுலக நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி! அவரது வலைப்பூ – கில்லர்ஜி!  12. கற்றலும் கேட்டலும் எனும் வலைப்பூவில் எழுதி வந்த திருமதி ராஜி வெங்கட்.   13. தளிர் வலைப்பூவில் எழுதும் நண்பர் சுரேஷ்.   14. சுப்பு தாத்தா 15. “கரையோரம் சிதறிய கவிதைகள்” என்ற வலைப்பூவில் எழுதி வரும் அஜய்கர் சுனில் ஜோசப்  16. பி. பிரசாத் 17. விஸ்வநாத் வி. ராவ். 18. கணக்காயன் எனும் வலைப்பூவில் எழுதிய கவிஞர் கணக்காயன் [எ] இ.சே. இராமன்  19. நிஷாந்தி பிரபாகரன், ஸ்விஸ். வலைப்பூ: ஆல்ப்ஸ் தென்றல்  20. திரு ஜி.எம்.பாலசுப்ரமணியன், பெங்களூரு – வலைப்பூ: gmb writes  21. முரளி, நெய்வேலி மற்றும் 22. ஆதி வெங்கட், திருவரங்கம்                    பொருளடக்கம் 1. மாறுவேடப் போட்டி 7  2. முகம் காட்டு கண்மணியே! 10  3. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை 11  4. திறந்தவானே குளிர்பதனம்! பாறைக்கல்லே பஞ்சுமெத்தை!! 13  5. அழைப்பு விடுப்பாயாடா ? 15  6. மின்னல் கண்ணழகி! 18  7. இடம்பிடி! தடம் பதி! 21  8. எனக்கொன்றும் சிரமமில்லை… 24  9. முகம் காட்டச் சொல்லாதீர்.... 29  10. ஆறாம் அறிவின் பாதகம் 34  11. சிருங்காரம் 37  12. இறுதி யாத்திரை… 39  13. மாப்பிள்ளை! 41  14. நாணம்…. 42  15. பொறுமை…. 43  16. அரைவயிற்றுப் பசியேனும்…. 44  17. கடுந்துயரும் கரைந்திடுமே… 47  18. இமைக்கதவு… 49  19. வண்ணமகன்… 51  20. நட்பு… 53  21. வடமும் இடமும்… 54  22. சகோதரப் பாசம்… 55  23. நெஞ்சு பொறுக்குதில்லையே… 57  1. மாறுவேடப் போட்டி     புகைப்படம் – 1; கவிதை – 2 []     எடுக்கப்பட்ட இடம்:  குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதி – இந்திய எல்லைப் பகுதிக்கு சற்றே அருகே இருக்கும் இடம். அங்கே சென்ற போது பார்த்த கிராமத்துக் குழந்தைகள்.  போட்டிருக்கும் நகைகள் பெரும்பாலானவை அவர்களாகவே செய்தவை.  அணிந்திருக்கும் உடைகளில் செய்யப்பட்ட நகாசு வேலைகளும் அவர்களே செய்தவை தான்! பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாலும் பொழுது போக்க இப்படிச் செய்து, அவற்றை விற்பனையும் செய்கிறார்கள். படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  இச்சிறு வயதிலேயே இத்தனை உடைகள், அலங்காரங்கள் இவர்களுக்கு. இப்பகுதி பெண்கள் திருமணம் ஆன பிறகு இன்னும் அதிக உடையலங்காரம்/நகைகள் போட்டுக்கொண்டு அதுவே அப்பெண்களின் எடையை அதிகப்படுத்துமோ என்று தோன்றியது! அனைத்து குழந்தைகளுமே ரொம்பவும் சுட்டி! அதுவும் வலது ஓரத்தில் இருக்கும் பெண் ரொம்பவே அதிக சுட்டி. கொஞ்சம் பேசினால் போதும், அவள் வைத்திருக்கும் அனைத்து கைவினைப் பொருட்களையும் நம்மிடம் விற்று விடுவாள் – அத்தனை பேச்சு சாதுர்யம்! கண்களில் மின்னும் குறும்பு!  தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று தனது சொந்தங்களையும் அறிமுகம் செய்து வைத்தார் இந்தச் சுட்டிப் பெண்! இதோ இந்தப் படத்திற்கான கவிதை! எழுதியது நிலா மகள். பறத்தல் – பறத்தல் நிமித்தம் – எனும் வலைப்பூவில் எழுதுபவர். எங்களூர்க்காரர்!    மாறுவேடப் போட்டி இரவல் அலங்கரிப்பில் எம் ஏழ்மை மறைத்து ஆண்டுக்கு ஒருநாளின் ஆரவாரமிது வண்ணங்கள்சூழ் ஆடைகளின் பிரகாசம் வந்திடலாம் வாழ்வின் பிறிதொருநாள் அணிகலன்களால் செறிவூட்டப் பட்ட எம் அழகு உலக அழகியாக உயர்த்தினாலும் வியப்பில்லை மாறாப் புன்னகையுடன் வலிபழகிய நாங்கள் வாழ்வெனும் போரில் வென்று வழிகாட்டியாவோம். அன்றெம் புகைப்படங்கள் அனைவருக்கும் பொக்கிஷமாகும்.   நிலாமகள், நெய்வேலி.   பயமெதற்கு?   வண்ணங்கள் உடையிலுண்டு வசீகரிக்கும் புன்சிரிப்பு முகத்திலுண்டு உண்ண உறங்க வசிக்க ஓரிடம் உண்டு நின்று பேச நிறைய தெகிரியம் நெஞ்சில் உண்டு பாரதி கண்ட புதுமைப்பெண்களாய் வளைய வருகிறோம், வாழ்த்த நீர் உண்டு பயமெதற்கு எங்கட்கு?   விஸ்வநாத் வி. ராவ்                                 2. முகம் காட்டு கண்மணியே!   புகைப்படம் – 2; கவிதை - 1 []     எடுக்கப்பட்ட இடம்:  திருவரங்கம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அரங்கனின் திருக்கோவில் தான். ஆனால் அதே திருவரங்கத்தில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் ஒருங்கே வழிபட வசதியாய் “தசாவதார சன்னதி”யும் உண்டு என்பது தெரியுமா? அந்த தசாவதார சன்னதிக்கு ஒரு முறை போயிருந்த போது கோவிலின் வாசலில் இரண்டு குழந்தைகள் முகமூடி போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களை எடுத்த படம் தான் இது..... படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  இச்சிறு வயதிலேயே முகமூடி போட்டுக் கொண்டு பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டுமோ? பெரிதான பிறகு, விதம் விதமாய் முகமூடிகள் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் இப்பொழுதே பழக்கம் செய்து கொள்கிறார்களோ.....  ஒவ்வொரு நாளும் நாமும் விதம் விதமாய் முகமூடி போடாமலேயே முகமூடிகளோடுதானே வலம் வருகிறோம்! பிடித்தாலும் பிடிக்க வில்லை என்றாலும் பொய்ச்சிரிப்பு முகமூடி அணிந்து கொள்ள வேண்டியிருக்கிறதே! புகைப்படத்திற்கு கற்றலும் கேட்டலும் எனும் வலைப்பூவில் எழுதி வரும் திருமதி ராஜி வெங்கட் எழுதி அனுப்பிய கவிதை இதோ..…    முகம் காட்டு கண்மணியே! வளர்கின்ற பிஞ்சுகளே விளையாட்டோ முகமூடி? வெளிக்காட்டா கயமைகளை விரைவாக உள்புதைத்து, ஒளிக்கின்ற காலமுண்டு ஒவ்வொன்றாய் அணிவோமே! களிக்கின்ற வயதினிலே கழட்டுங்கள் கண்மணிகாள்!   ராஜி வெங்கட் [எ] ரேவதி வெங்கட்...... 3. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை   புகைப்படம் – 3; கவிதை – 1   []     எடுக்கப்பட்ட இடம்:  ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிசா எல்லையில் இருக்கும், ஸ்ரீமுகலிங்கம் என்ற ஒரு கிராமத்திற்குச் சென்றபோது பார்த்த காட்சி….. படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  தன்னந்தனியே நிறுத்தி இருந்த பழைய மாட்டு வண்டி மனதை ஏதோ செய்தது. எத்தனை உழைத்திருக்கும் இந்த வண்டி – இப்போது இதன் பயன்பாடு ரொம்பவே குறைந்து விட்டதே….. இருக்கும் ஆற்று மணலைச் சுரண்டிச் சுரண்டி எடுத்து, விளைநிலங்களையும் பாழ்படுத்தி வீடு கட்டி, தண்ணீர் இல்லை தண்ணீர் இல்லை என புலம்பிக் கொண்டிருக்கிறோம்.  இந்த ஆறும், ஆற்று நீரும் இன்னும் எத்தனை நாட்களோ! ஆறு என்ற சொல்லே அழிந்து விடுமோ என்ற பயம் எனக்குள்!   இதோ கவிதை! எழுதியது நிலா மகள். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை   நூறுநாள் வேலையில் தூர்வாரிய ஏரி இது கிடக்கும் சொற்ப நீரை இயந்திரம் கொண்டு உறிஞ்சியே கருகும் பயிரைக் காப்பாற்றப் பார்க்கிறோம்   அப்பன் பாட்டன் காலத்தில் முப்போக வெள்ளாமை. வண்டிமாடுகள் ஓய்ச்சலின்றி வீட்டுக்கும் வயலுக்குமாக நடைபோட்டபடி இருந்தன வாய்க்கால் பாசனமற்று வானமும் கருமியானதில் பஞ்சம் தலைமீற ஏர்மாடுகள் விற்று உயிர்வாழ்ந்தோம் அப்புறம் வண்டியிழுக்கும் காளைகளும்விலைபோயின   எஞ்சிய வண்டியிது தம் பயண அனுபவங்களை சக்கரங்கள் கடையாணிகளுடன் கதைத்துப் பொழுதோட்டும். உளுத்துப் போகும்முன் அடுப்புக்கு விறகாகும்.   கஞ்சிக்கு வழியற்றும் கெளரவம் பார்த்து ஏதோவொரு விதையை பூமியில் விசிறிவிட்டு சாவு வரும் பாதை தேடி தவிக்கும் உழவன் வாழ்வை பாழும் தெய்வமும் பார்த்து இரங்கவில்லை ஆளும் அரசுக்கும் ஆயிரம் சொந்தவேலை.   நிலாமகள், நெய்வேலி.                               4. திறந்தவானே குளிர்பதனம்! பாறைக்கல்லே பஞ்சுமெத்தை!! புகைப்படம் – 4; கவிதை - 1   []     எடுக்கப்பட்ட இடம்:  தலைநகர் தில்லியில் இருக்கும் கூவம் – அதாங்க யமுனை ஆறு – மழைக்காலங்களில் ஹரியானாவின் “ஹத்னிகுண்ட்” அணையிலிருந்து உபரி நீரை திறந்து விட யமுனையில் வெள்ளம் வந்து விடும்! ஆற்றின் இரு கரைகளிலும் வாழும் குடிசை மக்கள் சாலைக்கு வந்து விடுவார்கள். அப்படி வெள்ளம் வந்த சமயத்தில் யமுனையில் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் இரும்பு பாலத்தின் அருகே எடுத்த புகைப்படம்..... படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்: தில்லியின் பெரும்பாலான ரிக்‌ஷா ஓட்டுனர்கள் – கிழக்கு உத்திரப் பிரதேசம் அல்லது பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்தவர்கள் – நாள் வாடகைக்கு ரிக்‌ஷாவினை ஓட்டி இரவு அந்த ரிக்‌ஷாவிலேயே சாலை ஓரத்தில் படுத்து உறங்கும் பலர் உண்டு....  இவர்களுக்கென குடிசையோ, சொந்தமோ தலைநகரில் இல்லை. வருடத்தின் ஒன்பது மாதங்கள் இங்கே கஷ்டப்பட்டு உழைத்து தீபாவளி-ச்சட் பூஜா சமயத்தில் கிராமத்துக்குச் செல்லும் உழைப்பாளிகள்.....  மழை வந்து பிழைப்பைக் கெடுத்த ஒரு நாளில் உண்ண உணவின்றி, பசி மயக்கத்தில் படுத்து உறங்குகிறாரோ என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது! இவர் போன்றவர்களுக்கு காவல்துறையினர் தரும் தொல்லை – ஒவ்வொரு அடியும் இடி போல இறங்கும்! சாலையில் எப்போது நெரிசல் ஏற்பட்டாலும் அடி இவர்களுக்குத் தான்! என்று மடியும் இந்த ஏற்றத் தாழ்வு? இதோ கவிதை! எழுதியது தில்லி நண்பர் பத்மநாபன். வலைப்பூவில் எழுதவில்லை என்றாலும் பல வலைப்பூக்களைப் படிப்பவர். நல்ல நண்பர்! தில்லி வந்த முதல் நாள் முதலாய் தெரிந்தவர்! திறந்தவானே குளிர்பதனம்! பாறைக்கல்லே பஞ்சுமெத்தை!!   வங்கிக் கணக்கினிலே வரவு வைக்க ஏதுமில்லை! பங்குச் சந்தையினால் பாதிப்பும் எனக்கில்லை! வாசல் திறந்து வைத்து காத்திருக்கும் உறவுமில்லை! வசையோடு இசைபாடும் இல்லத்துணை ஏதுமில்லை! ஒன்று பெற்றால் போதுமென்ற உத்தரவும் எனக்கில்லை! சிந்தை குழம்பி நிற்கும் சிக்கலொன்றும் எனக்கில்லை!   தாலாட்டுப் பாட்டு சொல்ல தண்ணீர்ச் சாலைஉண்டு! வாலாட்டி உறவு சொல்ல வாயில்லா ஜீவனுண்டு! அன்றாடம் காய்ச்சி நான்! ஆகாயம் சொந்தமுண்டு! நின்றாடும் மரம் வீசும் சாமரமும் எனக்குண்டு! என்றும் இன்பம்தரும் உழைத்த களைப்புமுண்டு! உழைத்த வரவினிலே உண்ட நிறைவுமுண்டு!   வீடெடுத்து ஓய்வெடுக்கும் ஏக்கம் எனக்கில்லை! ஏடெடுத்து படிக்காத ஏக்கம்தான் எனக்குமுண்டு! படுத்து உறங்க ஒருபாயில்லா ஏக்க மில்லை! இடுக்கண் வருகையிலே யாருமில்லா ஏக்கமுண்டு! மனதினிலே உறுதியுண்டு! உழைப்பின்மேல் பக்தியுண்டு! நினைத்த பொழுதினிலே நல்லுறக்கம் வருவதுண்டு! நினைத்த பொழுதினிலே நல்லுறக்கம் வருவதுண்டு!   பத்மநாபன் [எ] ஈஸ்வரன்......                                   5. அழைப்பு விடுப்பாயாடா ?   புகைப்படம் – 5; கவிதைகள்  - 2   []       எடுக்கப்பட்ட இடம்:  இந்த புகைப்படம் தில்லியின் கடும் குளிர் சமயத்தில் எடுக்கப்பட்ட படம்.  குளிருக்கு இதமாய் மதிய நேர வெய்யிலில் அமர்ந்திருந்த மூதாட்டி. பின் பக்கம் அந்த மூதாட்டியின் கணவர் படுத்திருக்கிறார். படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  என்னதான் ஆண்கள் தங்களைப் பற்றி பெரிதாய் நினைத்துக் கொண்டாலும், வயதான காலத்தில் தங்களது துணை இல்லாது இருக்க முடிவதில்லை. துணையை இழந்த பின்னர் வாழும் ஆண்கள் படும் மனக் கஷ்டங்கள் சொல்ல முடியாதவை. பெண்கள் தனது துணையை இழந்தாலும், அத்தனை துயரம் கொள்வதில்லை. தங்கள் பேரக் குழந்தைகள், மகன்/மகள் ஆகியோர் மீது கொண்டுள்ள பாசத்தினால் தனது கவலைகளை ஓரளவு மறந்து விடுகிறார்கள் அல்லது மறைத்து விடுகிறார்கள். கணவன் படுத்துறங்க, மனைவி அமர்ந்தபடியே உறங்குவதைப் பார்த்தபோது அவரும் பாவம் – இன்னுமொரு கட்டில் போட்டு உறங்கலாமே என்றும் தோன்றியது...... சமீபத்தில் ஹிந்தி மொழியில் படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. சிறு வயதில் ”என் அம்மா, என் அம்மா” என்று போட்டி போட்டுக்கொள்ளும் ஒரு தாயின் இரு குழந்தைகள், வளர்ந்த பிறகு, அவளின் முடியாத காலத்தில், அம்மாவை வைத்துக்கொள்ள வேண்டும் எனும்போது, “உன் அம்மா, உன் அம்மா” என்று சொல்வது ஏன்? இந்தப் படத்திற்கான கவிதைகள் இரண்டு. முதல் கவிதை. எழுதியது வலையுலக நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி! அவரது வலைப்பூ – கில்லர்ஜி! இரண்டாம் கவிதை தளிர் வலைப்பூவில் எழுதும் நண்பர் சுரேஷ்.   கவிதை-1: அழைப்பு விடுப்பாயாடா ? திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து மகனே தவசி உன்னை பெற்றோமடா தெருவோரம் தவிக்க விட்டாயடா பாசம் கொட்டி வளர்த்தோமடா பாதையோரம் படுக்க விட்டாயடா கால் கடுக்க பாதயாத்திரை சென்று வந்தோமடா உன்னைப்பெற – இன்று என் கால் வலி தீர வழி இல்லையடா உன்னை ஈன்றபோது வலிக்கவில்லையடா உன்னவள் ஈட்டி வார்த்தை இன்னும் வலிக்குதடா மனைவியவள் வந்தவுடன் மதி மயக்கமாடா மனிதநேயம், பாசம், நேசம் மறந்து விட்டாயடா உனை மறக்க எமக்கு முடியாதடா உடன் நாங்கள் மரணித்தால் மீண்டும் உனக்கே வந்து பிறப்போமடா அப்பொழுதாவது உனது நேசம் கிடைக்குமடா இறைவா எங்கள் குரல் கேட்பாயடா இன்றே மரணம் கொடுப்பாயடா... உடனே ஜனனம் கொடுப்பாயடா... எங்களுக்கு அழைப்பு விடுப்பாயாடா ?   தேவகோட்டை கில்லர்ஜி    கவிதை-2: ஓய்வு! உழைத்திட்ட காலங்கள் ஓடிப்போயிட ஓய்வுக்கான காலம் இது! தழைத்திட்ட பிள்ளைகள்தான் தள்ளிப் போயினரோ? பாதையோரம் பாந்தமாய் படுத்த கணவருக்கு ஆதரவாய் அமர்ந்திட்டேன் ஆறுதலாய்! படர்ந்திட்ட பனியெல்லாம் விலகிஓட சுடர்விட்ட ஆதவனே வருக! சுருக்கம் வீழ்ந்த இந்த முதியோரையும் உன் கதிர் கரங்களால் தழுவி இன்பம் அதனை தருக! நாளை எண்ணிக்கொண்டிருக்கும் எங்களுக்கு நாளையை நல்ல பொழுதாய் நல்க!   தளிர் சுரேஷ்….                                                           6. மின்னல் கண்ணழகி!   புகைப்படம் – 6; கவிதைகள்  - 2   []     எடுக்கப்பட்ட இடம்:  காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் நடுவே திருவரங்கம்.  காவிரி ஆற்றில் இப்போதெல்லாம் தண்ணீர் வரத்து வெகு குறைவு. மணல் கொள்ளை போய்க்கொண்டே இருக்கிறது – அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு.....  கோடைக் காலம் வந்துவிட்டால், திருச்சி மாநகராட்சியே காவிரி ஆற்றின் மணல்வெளியில் Summer Beach என பதாகை வைத்து இசை நிகழ்ச்சிகளையும், தின்பண்டக் கடைகளையும் இங்கே அமைக்க அனுமதி தருகிறார்கள். பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணமும் உண்டு! வற்றிய காவிரி ஆற்றிலிருந்து பணம் சம்பாதிக்க இனுமோர் வழி!சென்ற ஆண்டு இப்படி Summer Beach அமைத்தபோது நாங்களும் சென்றிருந்தோம். அங்கே எடுத்த படம் இது. படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்: வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றின் கரை.  நேரம் மாலையும் இரவும் சந்திக்கும் நேரம்.  அங்கே இக்குழந்தை பந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.  அவள் கைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் மணல் துகள்! அவள் ஊடுருவும் கண்கள் எனை புகைப்படம் எடுக்கத் தூண்டியது. என்ன ஒரு தீர்க்கம் அந்தக் கண்களில்!  காவிரியில் தண்ணீர் இல்லாத நிலை மனதில் வருத்தத்தினை ஏற்படுத்தினாலும் குழந்தையின் புன்சிரிப்பில் அந்த வருத்தத்தினைக் கொஞ்சம் தள்ளி வைக்க முடிந்தது! இந்தப் படத்திற்கான கவிதைகள் இரண்டு. முதல் கவிதை எழுதியது தில்லி நண்பர் பத்மநாபன்! இரண்டாம் கவிதை முகிலின் பக்கங்கள் வலைப்பூவில் எழுதும் தமிழ்முகில் அவர்கள்.   கவிதை-1: மின்னல் கண்ணழகி!   காவிரியின் மேல் நின்று கண் விரியப் பார்க்கின்றாள்!   மணல் வாரி விற்பவரை, மதி கெட்ட மானுடரை, நஞ்சு உளம் கொண்டு நரகம் செல்ல விழைவோரை முக்கண்ணால் எரித்திடவும் மணல் வாரித் தூற்றிடவும் காவிரியின் மேல் நின்று கண் விரியப் பார்க்கின்றாள்!   மன்னனுக்கும் அஞ்சாதார் நல்ல மறைகளுக்கும் அஞ்சாதார்! வஞ்சம் ஒன்றேதான் வாழ்வெனவே நினைப்போரை பிஞ்சுக் கையாலே பந்தாடி முடித்திடவே காவிரியின் மேல் நின்று கண் விரியப் பார்க்கின்றாள்!   பொன்னி நதியாலே பொன் விளைந்த காலமதை களவாடிச் சென்றவரை, கலங்கி நிற்க வைத்தவரை, காலால் உதைத்திடவும், கண்ணால் எரித்திடவும், காவிரியின் மேல் நின்று கண் விரியப் பார்க்கின்றாள்!   காக்கை கொண்டு வந்த கற்பகமாம் காவிரியின் போக்கை மாற்றி விட்டு புதுச் செல்வம் சேர்ப்போர்கள் புல்லினும் சிறியரென காவிரியின் மேல் நின்று கண் விரியப் பார்க்கின்றாள்!   பத்மநாபன் [எ] ஈஸ்வரன்..…   கவிதை-2: காணாமல் போன காவிரி! ஆடி விளையாடும் ஆறும் இன்று காணவில்லையே என மணலுள் தேடித் தேடி ஓய்ந்தவளாய் - வீடு திரும்புகிறாளோ? - சிறு கிள்ளை!   வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி கண் முன் மணல் மேடாய் காட்சிப் படுகிறது - நன்றாக பார்த்துக் கொள் சிறு நங்கையே!   நாளை மணலும் கூட மாயமாகிப் போய் - காவிரி கட்டாந்தரையாய் காட்சியளித்தாலும் ஆச்சர்யமில்லை! - மீண்டும் இங்கு காவிரி புது நுரையாய் பொங்கி ஓட சிவபெருமானிடம் காவிரியை அகத்தியர் பெற்று வர - விநாயகர் காகமென வடிவெடுத்து வந்து கமண்டலத்தை கவிழ்த்திட வேண்டுமோ?   பி. தமிழ் முகில்......                                         7. இடம்பிடி! தடம் பதி!   புகைப்படம் – 7; கவிதைகள்  - 3   []     எடுக்கப்பட்ட இடம்:  விசாகபட்டிணம் அருகே இருக்கும் அரக்கு பள்ளத்தாக்கு எனும் இடத்திற்கு பாசஞ்சர் ரயில் மூலம் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பாசஞ்சர் ரயிலின் ஒரு பெட்டி முழுவதும் சுற்றுலா பயணிகள். அதில் பல இடங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள்.  அங்கே வந்திருந்த ஒரு சுற்றுலா பயணிக்கு இரண்டு பெண் குழந்தைகள். சுட்டியாக அங்கேயும் இங்கேயும் சென்றும், சிரித்தும் சக பயணிகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்.  அதில் மூத்த பெண் தான் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர். பாசஞ்சர் ரயிலின் மேல் சாமான்கள் வைக்கும் இடத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு கம்பிகள் வழியே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.  அவரை என் காமிராவில் சிறை பிடித்தேன். படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்: சிலரைப் பார்த்த உடனேயே பிடித்துப் போகிறது! பெரும்பாலும் குழந்தைகளை! அவர்களின் கள்ளமற்ற சிரிப்பு பெரியவர்களானதும் மறைந்து போவது ஏனோ….. சிறு குழந்தையாக இருக்கும் வரை எந்தக் கவலைகளும் இல்லை! பெரியவர்களானதும் மனது கணக்குப் போட ஆரம்பித்து விடுகிறது – இவருடைய நட்பால் நமக்கென்ன லாபம், இவரால் நட்டம் வருமோ என்றெல்லாம் கணக்குப்போட, பொய்யான வாழ்க்கை, பொய்யான சிரிப்பு என வாழ்க்கையே பொய்! இந்தப் புகைப்படத்திற்கு மொத்தம் மூன்று கவிதைகள்.  முதலாவது கவிதை நண்பர் சேஷாத்ரி அவர்கள் எழுதியது. காரஞ்சன் சிந்தனைகள் எனும் வலைப்பூவில் எழுதுபவர். இரண்டாவது கவிதை “எங்கள் பிளாக்” ஸ்ரீராம் அவர்களின் கைவண்ணத்தில்! மூன்றாம் கவிதை தில்லி நண்பர் பத்மநாபன் அவர்கள் எழுதியது.  கவிதை – 1 - இடம்பிடி! தடம் பதி! பயணத் தடமெங்கும் பார்த்து மகிழ்ந்திட இடம்பிடித்தாயோ? அரும்பிடும் புன்னகையில் ஆர்வம் வெளிப்படுதே!   பயணங்கள் அனைத்துமே பயனுள்ளவைதான்! படிப்பினை தருவனதான்!   வாழ்க்கைப் பயணத்தில்- நல் வழிகளைத் தெரிவுசெய்! தக்க தருணங்களைத் தவறவிடாதே!   தன்னம்பிக்கையும் தளரா உழைப்பும் -நீ தடம்பதிக்கத் துணைநிற்கும்!   திறமையின் துணையுடன் தடம் பதிப்பாய்! உலகோர் உளத்தில் உனக்கென ஓர் இடம்பிடிப்பாய்!   சேஷாத்ரி.....   கவிதை - 2 - சிறை பின்னால் இருக்கிறது இன்னும் நாட்கள் அடைபட்டுக் கிடக்க…   கல்விச்சிறை, பண்பாட்டுச் சிறை காதல் சிறை, கல்யாணச் சிறை எனும் வாழ்க்கைச் சிறை!   இப்போது வெளியில் வந்து விளையாடு மகளே. ஸ்ரீராம்   கவிதை -3 - பூவுக்குள் புன்னகை! கண்ணே! இளைப்பாறு! உன் தாய்மேல் வருதே அழுக்காறு!   மின்னும் கண்கள்! மிளிர்கின்ற பூவதனம்! உள்ளம் போனது கொள்ளை! கொள்ளை கொண்டதனால் சிறைவாசம்! எம் மனச்சிறையில் உன்வாசம்!   கண்ணுக்குள் நீள்மின்னல்! பூவுக்குள் புன்னகை! பூவதனப் புன்னகையால் எம்மனச்சிறைக்குள் உன் சுவாசம்! நினைத்தாலே சுகம் வீசும்!   கொள்ளை போக திறந்ததென் மனக் கதவு! கொள்ளை கொண்டது இந்தச் சிறு நிலவு! கள்ளப் புன்னகையில் காட்டிய துள்ளல், அள்ளக் குறையாத அழகின் விள்ளல்!   கண்ணே! இளைப்பாறு! உன் தாய்மேல் வருதே அழுக்காறு!   பத்மநாபன் [எ] ஈஸ்வரன்.....             8. எனக்கொன்றும் சிரமமில்லை…   புகைப்படம் – 8; கவிதைகள்  - 5   []     எடுக்கப்பட்ட இடம்:  சென்னை ECR சாலையில் முட்டுக்காடு அருகே இருக்கும் தக்‌ஷிணசித்ரா. கிராமங்களிலேயே மாட்டு வண்டிகள் இல்லாத ஒரு நிலை இன்று. அங்கே சுற்றுலா வரும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பினால் காசு கொடுத்து மாட்டு வண்டி பயணம் மேற்கொள்ளலாம்.  அப்படி சில பள்ளிச் சிறுவர்கள் மாட்டு வண்டி பயணம் சென்றபோது எடுத்த புகைப்படம் இது.   படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்: மாட்டு வண்டிகளும் இல்லை, மாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. வரும் சந்ததியினர் மாடுகளின் பொம்மைகளை பார்க்க வேண்டி வந்தாலும் வரலாம்! இப்படி ஒவ்வொன்றாய் இழந்து கொண்டே வந்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டாலும், இப்படியும் இருந்தோம் என்று, வரும் சந்ததியினருக்குக் காண்பிக்கவாது இவை தேவையல்லவா…. அம்மாவின் கிராமமான பன்ரூட்டியை அடுத்த உறையூருக்குச் சென்ற போது இப்படி மாட்டு வண்டியில் பயணித்திருக்கிறேன். அம்மா தங்களது மாட்டு வண்டிப் பயணங்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார் – அதுவும் சினிமா பார்க்கவென்று கிராமத்திலிருந்து வண்டி கட்டிக்கொண்டு போனபோது கிடைத்த மகிழ்ச்சியைச் சொல்லும்போது நமக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும்! இந்தப் படத்திற்கு மொத்தம் ஐந்து கவிதைகள். எழுதியவர்கள் தமிழ்முகில், பத்மநாபன், தில்லையகத்து க்ரோனிக்கிள்ஸ் கீதா, சுப்பு தாத்தா மற்றும் அஜய்கர் சுனில் ஜோசப்    கவிதை - 1 - பாசத் துணைவன்! ஏர்க் கலப்பையில் காளையை பூட்டி விவசாயம் பார்த்தது ஒரு காலம்!   உறவோடு கூடி கொண்டாட கட்டுச் சோற்றுடன் வண்டி கட்டி சென்றது - ஒரு காலம்!   வீரத்தின் அடையாளமாய் பாசத் துணைவர்களை ஏர் தழுவியது ஒரு காலம்!   சல் சல் சலங்கை கட்டி- காளை பூட்டி வண்டி கட்டி வியாபாரம் பார்த்தது ஒரு காலம்!   மனித வாழ்வோடு இயைந்து வாழ்வின் ஆதாரமாய் இருந்த குடும்பத்தின் அங்கமாய் காணப்பட்ட காளையும் காளை பூட்டிய வண்டிகளும் அருங்காட்சியகத்தில் காணும் நிலை கண்முன் அரங்கேறும் வேளையில் -   மனித இனம் தனை அருங்காட்சியகத்தில் காணும் நாள் வெகுதொலைவில் இல்லை!   பி. தமிழ் முகில்   கவிதை – 2 - சுகமான சுமைகள்! பூந்தளிர்கள் சுமந்து செல்ல பெருமையுடன் நிற்கின்றேன்! பூமியில் பிறந்ததற்கே பேருவகை கொள்கின்றேன்!   பூமரங்கள் தான் சுமக்க பூமகள்தான் வருந்துவரா! பூமகளைத் தான் சுமக்க பெருமான்தான் வருந்துவரா!   தாமரையைத் தான் சுமக்க தண்ணீரும் வருந்திடுமா! தண்ணீரைத் தான் சுமக்க கார்மேகம் வருந்திடுமா! நன்னீரைத் தான் சுமக்க நெடும்புனல்தான் வருந்திடுமா! நெடும்புனலைத் தான் சுமக்க நீள்மருதம் வருந்திடுமா!   நறுமலர்கள் சுமந்து நிற்க தருவினங்கள் வருந்திடுமா! தருவினத்தை சுமந்து நிற்க முல்லைவனம் வருந்திடுமா!   கண்ணிமையைத் தான் சுமக்க நயனங்கள் வருந்திடுமா! நயனங்கள் தான் சுமக்க மதிவதனம் வருந்திடுமா!   கருங்கூந்தல் தான் சுமக்க கன்னிகைக்கு வருத்தமுண்டா! கன்னிகையைத் தான் சுமக்க காதலர்க்கு வருத்தமுண்டா!   தென்றலைச் சுமந்துதர பூமரங்கள் வருந்திடுமா! பூமரத்தை சுமந்து நிற்க பூமகளா வருந்திடுவாள்!   கார்முகிலைச் சுமந்து நிற்க கருமலைக்கும் வருத்தமில்லை! கருமலையை சுமந்து நிற்க கண்ணனுக்கும் வருத்தமில்லை!   பூந்தளிர்கள் சுமந்து செல்ல பெருமையுடன் நிற்கின்றேன்! பூமியில் பிறந்ததற்கே பேருவகை கொள்கின்றேன்!   -   பத்மநாபன்.....   கவிதை – 3 - எனக்கொன்றும் சிரமமில்லை ஐந்தறிவு செக்கு மாடு நான் ஆறறிவுச் செல்வங்கள் நீங்கள் செக்கு மாடாய் புத்தகச் சுமையைத் தினமும் சுமந்திட இன்று ஒரு நாளேனும் சுமை இல்லாது மகிழ்வாய் இருந்திட உங்களை இழுப்பதில் எனக்கொன்றும் சிரமமில்லை மகிழ்ச்சியுடன் இழுத்திடுவேன்! செல்வங்களே ஒரு வேண்டுகோள் கழனிகளில் வாழ்ந்த நாங்கள் இன்று கழனிகளை மனிதர்கள் தொலைத்ததால் வீதிகளில் நாங்கள் பாரமில்லைதான் நீங்கள், எனினும் நாளைய செல்வங்களே கழனிகளை மீட்டெடுத்திடுவீரெனில் எனது அடுத்த தலைமுறையேனும் கழனிகளில் வாழ்ந்திடுமே!   தில்லையகத்து க்ரோனிக்கிள்ஸ் கீதா   கவிதை – 4 -இறைவன் வகுத்து வைத்தது அப்படி... பின் கழுத்தில் ஏறிய நுகமும், என்னுள்ளே இருக்கும் அகமும் எனக்கென்றும் பாரம் ஆனதில்லை காரணம் எனக்கு இறைவன் வகுத்து வைத்தது அப்படி...   என்னெஜமான் நீ ஆனால் மனிதா நீ தூரங்கள் செல்ல நான் உன் பாரங்கள் சுமப்பேன் காரணம் எனக்கு இறைவன் வகுத்து வைத்தது அப்படி...   உந்தன் நடையில் பாரங்கள மாற, எந்தன் நுகமதில் பாரங்கள் ஏற தாக்கங்களின்றி முன்னேறிச் செல்வேன். காரணம் எனக்கு இறைவன் வகுத்து வைத்தது அப்படி...   என்றெனக்கு பாரங்கள் நீங்கும் அன்றெனக்கு சோகங்கள் நீங்கும் என்ற ஏக்கங்கள் எனக்குள் காரணம் எனக்கு இறைவன் வகுத்து வைத்தது அப்படி... உந்தன் வயிற்றுக்கு வாட்டம் வந்து விடாமல் இருக்க எந்தன் கால்களின் ஓட்டம் தொடரும்... காரணம் எனக்கு இறைவன் வகுத்து வைத்தது அப்படி...   அஜய் சுனில்கர் ஜோசப்   கவிதை – 5 மாட்டு வண்டி பயணம் இது. மாட்டும் கொண்டி வரும் வரை தொடரும் இது.   பாட்டு பல பாடி பகல் கனவு கண்டதெல்லாம் நாட்டு நடப்போடு சேராதடி,   ஊருக்கு வெளியிலே ஒரு வண்டிப்பயணத்திலே ஒண்ணாக இருந்ததெல்லாம் வெறும் கனவாக போகுமடி, உனக்கு வயசிலே புரியுமடி.   வாட்டும் வெய்யிலிலே வெந்ததெல்லாம் போதுமடி. வீடு நோக்கி போவுங்கடி.   சுப்பு தாத்தா 9. முகம் காட்டச் சொல்லாதீர்....   புகைப்படம் – 9; கவிதைகள்  - 4   []     எடுக்கப்பட்ட இடம்:  திண்டுக்கல் அருகே சிறுமலை எனும் சிற்றூர். திண்டுக்கல் நகரிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் சிறுமலை பிரிவு எனும் இடம் உண்டு. அந்தப் பிரிவுச் சாலையில் 18 கொண்டைமுனை வளைவுகளைக் கடந்து சென்றால் சிறுமலை எனும் மிகச் சிறிய ஊர் இருக்கிறது. அங்கே சென்ற போது மலைப்பாதையில் ஒரு குதிரையின் மீது விறகுகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்: வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டம் வந்தாலே அலறித்துடிக்கும் குணம் நம்மில் பலருக்கும். சுமைக்கு மேல் சுமை ஏற்றிக்கொண்டே இருந்தாலும், ஒரு குரல் கூட கொடுக்க முடியாத நிலையில் இந்த விலங்கினங்கள்…. தாம் படும் பாட்டை நினைத்து புலம்பும் மனிதன், சக மனிதனின் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்ளும்போது, இந்த விலங்கின் துன்பத்தினை நினைத்து வருந்தவா போகிறான்…. வடக்கே இருக்கும் மாநிலங்களில் எருமையைத் தான் வண்டியில் கட்டி இழுக்கச் செய்வார்கள்! வாயில் நுறை தள்ள, அவை பாரம் மிகு வண்டியை மெதுவாக இழுக்கும்போது சாட்டை கொண்டு அடிக்கும் அந்த மனிதனை, வண்டி இழுக்கச் செய்து சாட்டையால் அடிக்கத் தோன்றும்! இந்தப் படத்திற்கு மொத்தம் நான்கு கவிதைகள். எழுதியவர்கள் பி. பிரசாத், தமிழ்முகில், பத்மநாபன் மற்றும் மீரா செல்வகுமார் ஆகிய நால்வரும். இதோ கவிதைகள்….   கவிதை – 1 - ஆனந்தம் கொள்கின்றேன்.....   சிறகென்று இருந்திருந்தால் விண்வெளியில் பறந்திருப்பேன்! விறகிங்கு சுமக்கின்ற‌ வலியின்று திரிந்திருப்பேன்!   பொதி சுமக்கும் என்குடும்பக் கழுதையதன் கதியறிந்தேன்! அதி துன்பம் என்றாலும் தனக்கென்றால் தான் தெரியும்!   பரி என்னை அனுதினமும் பரிபாலனம் தான் செய்து பரிதாபமாக அவன் பளு சுமக்க வைத்தாலும்...   நான்சுமக்கும் விறகெறிந்தே அவன் வயிறு நிறையுமெனும் ஓர் உண்மை நானறிந்து...   ஆனந்தம் கொள்கின்றேன்!   பி. பிரசாத்.   கவிதை – 2 - சோர்விலா உள்ளங்கள் முதுகுச் சுமையேற்றி முன்னோக்கி நகர்கிறேன் ... சுணங்கி நிற்க நேரமில்லை சுருண்டு படுக்கும் எண்ணமுமில்லை !   தயங்கி நிற்கும் பொழுதுகளில் தயவு கிடைக்கும் சமயங்களில் ! ஆத்திரம் அதுவும் அதிகமானால் உடலும் துவண்டிடும்  சாட்டையடியில் !   சுமைகளை வகைப்படுத்துவதில்லை - முதுகிலேறும் அனைத்தும் - சுமையென ஆகிப் போக - சுமைக்குப் பின்னே சுகம் கிட்டுமென நாளெலாம் நகர்த்துகிறேன் !   நாளை வந்து எனை பார்த்தீர்களானால் சுகமாய் இருப்பேனோ இல்லையோ சுமையேற்றிச் செல்வேனொழிய ஒருவருக்கும் சுமையாய் சுனங்கிட மாட்டேன் !   உடலது பாரம் சுமந்தாலும் - உள்ளமதில் பாரமேற அனுமதித்ததில்லை ! அதனால் ஒவ்வொரு நாளும் புலர்கிறது புது நாளாய் - புத்துணர்வோடு !   பி. தமிழ்முகில்   கவிதை – 3 - முகம் காட்டச் சொல்லாதீர்....   முகம் காட்டச் சொல்லாதீர்! என்னை முகம் காட்டச் சொல்லாதீர்!   கவின் மொட்டாய் முகிழ்ந்த போதே கன்னியின் கூந்தலிலே கமழ்ந்திடுவேன், காதலனைக் கவர்ந்திடுவேன் என்று கனவு கண்ட நறுமண மலர் ஒன்று, காலையில் மலர்ந்தபோது காசுக்காய் தன்னை விற்ற கணிகையின் கல்லறையில் ஓய்ந்ததுபோல், ஓய்ந்துபோய் நிற்கின்றேன்!   முகம் காட்டச் சொல்லாதீர்! என்னை முகம் காட்டச் சொல்லாதீர்!   வானின்று வீழுமுன்பே, காத்திருக்கும் சிப்பி வாய் புகுந்து சீரான முத்தாவேன், சிங்காரச் சொத்தாவேன் என்று கனாக் கண்ட கார்மேகத் துளி ஒன்று, கார்மழையாய் பொழிந்த போது கடலிலும் வீழாமல், காத்திருந்த கழனியிலும் வீழாமல் கற்ற மனிதரும், கல்லா மனிதரும் சேர்ந்தே சீரழித்த கூவம் நதியில் கூறு கேட்டு ஓய்ந்தது போல் ஓய்ந்துபோய் நிற்கின்றேன்!   முகம் காட்டச் சொல்லாதீர்! என்னை முகம் காட்டச் சொல்லாதீர்!   புல்லாய் முளைத்தபோழ்தே வானுயர வளர்ந்து பின்பு ஏணியாய் மாறிடுவேன் ஏற்றம்பெற உதவிடுவேன் என்று ஓயாமல் கனாக் கண்ட ஒற்றை மூங்கிலொன்று, ஒய்யாரமான போது மதுபானச் சாக்கடையில், மதி கெட்டு, மிதி பட்டு மூச்சடைத்த மானுடனை சுமந்து சுடுகாட்டில் ஓய்ந்தது போல் ஓய்ந்துபோய் நிற்கின்றேன்!   முகம் காட்டச் சொல்லாதீர்! என்னை முகம் காட்டச் சொல்லாதீர்!   கருவாய் இருந்த போதே நானும் கனவு கண்டேன்! நீலவேணிக் குதிரையாவேன்! காலதேவன் குதிரைபோலக் காற்றினிலும் கடுகிச் செல்வேன்! ஆலமர நிழலினிலே, நெஞ்சம் நிமிர நிற்பேன்! திமிரில் கிளர்ந்து நிற்பேன்! கனவும் கலைந்தது! நனவும் கசந்தது! அடிமை ஆகிடவா ஆண்டவன் எனைப் படைத்தான்! அடிமை ஆனதனால் அழகு முகம் தொலைத்தேன்! அழகு முகம் தொலைந்ததனால் -   முகம் மட்டும் காட்டச் சொல்லாதீர்! என்னை முகம் மட்டும் காட்டச் சொல்லாதீர்! - பத்மநாபன் [எ] ஈஸ்வரன்   கவிதை – 4 - பிதாவே... மன்னிக்காதீர்கள்... துள்ளித்திரிந்த என்னை… காடழித்து சுள்ளி சுமக்க வைத்தோனே…   அள்ளிவை கொஞ்சம்… கொள்ளிவைக்க…   அசுவமேதக்கூட்டமே! பாரம் சுமப்பதனால் என்னைத் தள்ளிவைக்காதீர்... இது என் பிழையன்று... ச்சீய்... மனிதப்பிழைப்பு...   மீரா செல்வக்குமார்..…                   10. ஆறாம் அறிவின் பாதகம்   புகைப்படம் – 10; கவிதை  - 1   []     எடுக்கப்பட்ட இடம்:  அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் பழங்குடியினர்களின் அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. அவர்களது வாழ்க்கை, பழக்கங்கள், தொழில், கலை, என பலவற்றையும் அங்கே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அங்கே ஒரு கடைத்தெருவும் உண்டு – பழங்குடி மக்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய கடைகள் – ஆனால் பெரும்பாலான கடைகளில் வெளி ஆட்கள் தான்!  அங்கே விற்பனைக்கு வைத்திருந்த சாவிக் கொத்துகள்! படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்: வாழ்க்கையே வியாபாரமாகிப் போன உலகம் இது. கடவுள்களும் இங்கே விற்பனைப் பொருட்கள். பல மத போதகர்கள் இப்போதெல்லாம் விதம் விதமான பொருட்களை விற்பனை செய்கிறார்கள் – அவர்களிடம் வேலை செய்ய எம்.பி.ஏ. படித்தவர்கள் கை கட்டி நிற்கிறார்கள்… எங்கும் வியாபாரம், எதிலும் வியாபாரம்… கடவுளிடமும் பேரம் தானே நடக்கிறது! இந்தப் படத்திற்குப் பொருத்தமாக கவிதை எழுதி அனுப்பி இருப்பவர் நெய்வேலியைச் சேர்ந்த நிலாமகள். இதோ கவிதை. ஆறாம் அறிவின் பாதகம் விதவிதமான வினாயகர் உருவங்கள் சிரிக்கும் புத்தர் சிலைகள் குபேர பொம்மைகள் கொஞ்சும் சதங்கைகள் வண்ணவண்ண மணித்திரள்கள் இலைகள், பூக்கள், கனிக்கூட்டங்கள் உலகின் ஒட்டுமொத்த போன்சாய் உருவங்களாக சாவிக்கொத்துகளின் ஆதிக்கங்கள்.   கோர்க்கப்படும் சாவிகளுக்கு அணைவாய் இருக்க போட்டா போட்டிகள் ஒவ்வொருவர் கையிருப்பிலும் அவரவர் ஆளுகைக்கு உட்பட்டவற்றின் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அரணாய் விதவிதமான பூட்டுகளின் திறப்பான்கள்   ஒரே வளையதிலிருப்பினும் வெவ்வேறு மதிப்புகள் ஒவ்வொன்றுக்கும் வீட்டுக்கு ஒரு பூட்டு ஒவ்வொரு அறைக்கதவுக்கும் ஒவ்வொன்று வாகனங்களுக்குத் தனித்தனி சொந்த வியாபாரத் தலங்களுக்கும் அப்படியே வேலையிடத்தின் பதவிக்குத் தக்கன வங்கிகளில் வாயில்காப்போனிடம் வாசல் கதவுக்கென்றால் மேலதிகாரிக்கு அலுவலக மேசை மற்றும் பெட்டக அறைத் திறப்பான்...   எல்லா சாவிகளுக்கும் போலிகள் உண்டு உரிமையாளரிடம் மட்டுமல்ல கண்ணி வைத்து திருடும் கயவர்களிடமும்.   கணினியுகத்தில் பாஸ்வேர்டுகளும் அதையுடைக்கும் எத்தர்களும்...   அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதவராக அனைவருமிருந்தால் பூட்டுதானெதற்கு? சாவியுமெதற்கு??   பிரபஞ்சத்தின் ஐந்தறிவு வரை ஜீவராசிகளுக்கு பூட்டுமில்லை; சாவியுமில்லை; சாவிக்கொத்துகளுமில்லை!   நிலாமகள், நெய்வேலி.                                                   11. சிருங்காரம் புகைப்படம் – 11; கவிதை - 1   []     எடுக்கப்பட்ட இடம்:  அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் பழங்குடியினர்களின் அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. அவர்களது வாழ்க்கை, பழக்கங்கள், தொழில், கலை, என பலவற்றையும் அங்கே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையையும் அங்கே சிலைகள் மூலமும், படங்கள் மூலமும் பார்வையாளர்களுக்கு வசதியாக அமைத்திருக்கிறார்கள். அப்படி அமைக்கப்பட்ட ஒரு பழங்குடிப் பெண்ணின் சிலை. படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்: தண்ணீர் – மனிதன் வாழ்வதற்கு காற்று எப்படி அத்தியாவசியமோ, போலவே தண்ணீரும். பூமித்தாயை உறிஞ்சி உறிஞ்சி, அதுவும் இயந்திரங்கள் துணையோடு உறிஞ்சி அவள் மார்பையே பிடுங்கி எடுத்து விட்டோம்…. மரங்களை வெட்டி, ஆற்று மணலைக் கொள்ளையடித்து, ஆற்றுப் படுகைகளில் வீடுகட்டி, மழை வருவதற்கான எல்லா தேவைகளையும் அழித்து, மழை வரவில்லை என தவிக்கிறோம். குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் பஞ்சம் எங்கெங்கும்.  புலம்புவதில் பயனில்லை! இப்படத்தில் இருக்கும் பெண் போல, தண்ணீர் குடம் சுமந்து பல மைல்கள் நடக்கும் பெண்களை ராஜஸ்தானில் பார்த்திருக்கிறேன். தண்ணீருக்காகவே போர் வரும் காலம் வெகுதொலைவில் இல்லை! இன்னுமொரு விஷயமும்…..  இப்பெண் போல இன்றைய நவநாகரீகப் பெண்களால்/ஆண்களால் [பெண்கள் மட்டும் தான் தண்ணீர் தூக்க வேண்டும் என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன?] முடியுமா? நிச்சயம் முடியாது! பட்டனைத் தட்டினால் தானே தண்ணீர் வர வேண்டும் என நினைக்கிற காலம் தானே இது! இந்தப் படத்திற்குப் பொருத்தமாக கவிதை எழுதி அனுப்பி இருப்பவர் நெய்வேலியைச் சேர்ந்த நிலாமகள். இதோ கவிதை. சிருங்காரம் தட்டுசுற்றா உடையணிந்த செல்லம்மா-உன் தலைச்சுமையா இருப்பதுவும் என்னம்மா கோணக் கொண்டைக்காரி கொள்ளைச் சிரிப்புக்காரி கைவளை கலகலக்க கட்டுடல் பளபளக்க என் கண்ணைப் பறிக்குறடி கண்ணம்மா உன் காலுக்கு செருப்பா நான் வரட்டுமா?   முதல் குண்டு கூழ்ப்பானை அதுக்கு மேல மோர்ப்பானை மூணாவதா நெல்லுச்சோறு நெத்திலிக் குழம்பு அடுத்ததில மிச்சத்துல வகையான வெஞ்சனம்.   உச்சியில ஏறி உள்ளங்காலைக் கொதிப்பேத்தும் ஒத்தைக் கண்ணன் சாயட்டும் மேற்கே உழவும் பறம்படியும் முடிஞ்சிடும் அங்கே பொழுதடங்க வந்துடுவோம் நாங்க புடிச்சிருந்தா பொண்ணு கேட்டு வீடுதேடி வாங்க இப்ப வழிய விட்டு ஓரமாப் போங்க.   நிலாமகள், நெய்வேலி.                 12. இறுதி யாத்திரை…   புகைப்படம் – 12; கவிதை  - 1   []   எடுக்கப்பட்ட இடம்:  ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு சின்ன யானையில் [வண்டி தாங்க!] ஏற்றிச் செல்லப்பட்ட இரண்டு மாடுகள். இந்தியாவின் பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் இப்படி வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் விலங்குகளைப் பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு காட்சி…. படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்: மனிதன் இடம் மாறிக் கொண்டே இருக்கிறான். விலங்குகள் தனக்கென்று ஒரு எல்லை வைத்திருக்கின்றன. அந்த எல்லைகளை அவை தாண்டுவதில்லை! சில வனங்களில் பயணிக்கும்போது மரங்களில் நகம் கொண்டு கீறப்பட்ட அடையாளங்கள் பார்த்திருக்கிறேன்.  காட்டில் வசிக்கும் புலிக்கூட்டத்தின் தலைவன் தன்னுடைய எல்லையை இப்படி நகங்களால் கீறி வைத்திருக்கும் என எங்களுடன் வந்த வழிகாட்டி சொல்லிக் கொண்டு வந்தார் – எல்லையைத் தாண்டுவதில்லை அப்புலிகள் – மற்ற எல்லையிலிருந்து காட்டின் புலிகள் தன் எல்லைக்குள் வந்தால் விட்டு விடுவதும் இல்லை!  எல்லை தாண்டாத விலங்குகளையும் மனிதர்கள் விட்டு வைப்பதில்லை. முன்பெல்லாம் நடத்தியே அழைத்துச் சென்றவர்கள், தானும் கூட நடக்க வேண்டியிருக்கிறதே என இப்படி வாகனங்களில் விலங்குகளை அடைத்து எல்லை மீறுகிறார்கள்!  கயிறு கொண்டு இறுக்கிக் கட்டி, அப்படி இப்படி நகர விடாமல் பல மணி நேரப் பயணம்! அப்படிக் கட்டுவது அதன் பாதுகாப்புக்காக என்ற சப்பைக்கட்டு கட்டினாலும், ஒரு விதத்தில் அவற்றை தொல்லைப் படுத்துகிறோம் தானே….. இந்தப் படத்திற்குப் பொருத்தமாக கவிதை எழுதி அனுப்பி இருப்பவர் நெய்வேலியைச் சேர்ந்த நிலாமகள். இதோ கவிதை.   இறுதி யாத்திரை… வாலிப முறுக்கில் தாம் கண்ட களங்களையும் துவம்சம் செய்த வீரப்பிரதாபங்களையும் அசை போட்டபடி அசைவற்றுப் பயணிக்கின்றன கிழட்டுக் காளைகள்... தம் இறுதி யாத்திரையில்.   நிலாமகள், நெய்வேலி.                                                         13. மாப்பிள்ளை! புகைப்படம் – 13; கவிதை  - 1   []     எடுக்கப்பட்ட இடம்:  ஆந்திரப் பிரதேசத்தின் அன்னவரம் கோவில் – ஹரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்க மலைகளின் மன்னனான மேருவின் புதல்வன் ரத்னாகர் பெயரில் ரத்னகிரி என அழைக்கப்படும் மலையின் மீது அமைக்கப்பட்டிருக்கும் கோவில் – அங்கே கோவில் கொண்டிருப்பது ஸ்ரீ வீர வெங்கட சத்யநாராயண ஸ்வாமி, உடன் இடப்பக்கத்தில் ஸ்ரீ அனந்த லக்ஷ்மி, வலப்பக்கத்தில் சிவபெருமான்! ஹரியும் சிவனும் ஒரே கர்ப்பக்கிரஹத்தில் குடிகொண்டிருக்கும் கோவில். ஹரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு! என்பதை எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்திருக்கும் கோவில்! சத்யதேவா என்று அழைக்கப்படும் விஷ்ணு, முறுக்கிய மீசையோடு இருக்கிறார்! எப்போதும் இங்கே பக்தர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. மலைமேலே அமைந்திருந்தாலும், கோவில் பிரம்மாண்டமாக இருக்கிறது. தினம் தினம் திருமணங்கள், உபநயனங்கள் என நடந்தபடியே இருக்கிறது. இப்பகுதியில் இருக்கும் மக்கள் இக்கோவிலில் வந்து திருமணம் செய்து கொள்வது சிறப்பு என்பதை நம்புவதால், ஒவ்வொரு நாளும் பல திருமணங்கள் நடந்தபடியே இருக்கின்றன. அப்படி திருமணம் புரிந்த ஜோடிகளில் இரண்டு! படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்: ஒரே சமயத்தில் பல திருமணங்கள். என்ன தான் பார்த்துப் பார்த்து திருமணம் செய்து வைத்தால், கூட்டத்தில் ஆள்மாறாட்டக் குழப்பங்கள் நடந்து விட்டால்…. என்ன ஆகும் என்ற எண்ணம் வராமல் இல்லை.  பார்த்த பெண் வேறு… திருமணம் நடந்தது வேறு ஒரு பெண்ணுடன் என நடந்து விட்டால் இரண்டு பேர் வாழ்விலும் குழப்பங்கள், சஞ்சலங்கள் தோன்ற வாய்ப்புண்டு அல்லவா! இந்தப் படத்திற்குப் பொருத்தமாக கவிதை எழுதி அனுப்பி இருப்பவர் நெய்வேலியைச் சேர்ந்த நிலாமகள். இதோ கவிதை. கம்பீரமாய் அமர்ந்து சிரிக்கிறார் மாப்பிள்ளை கல்யாணமான மகிழ்வில். மணப்பெண்ணின் கவலையெல்லாம் அன்றைய தொலைக்காட்சித் தொடர்நாடகம் என்னவாகியிருக்கும் என்பதில் தான். நிலாமகள், நெய்வேலி. 14. நாணம்…. புகைப்படம் – 14; கவிதை  - 1   []     எடுக்கப்பட்ட இடம்:  ஆந்திரப் பிரதேசத்தின் அன்னவரம் கோவில் – ஹரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்க மலைகளின் மன்னனான மேருவின் புதல்வன் ரத்னாகர் பெயரில் ரத்னகிரி என அழைக்கப்படும் மலையின் மீது அமைக்கப்பட்டிருக்கும் கோவில் – அங்கே கோவில் கொண்டிருப்பது ஸ்ரீ வீர வெங்கட சத்யநாராயண ஸ்வாமி, உடன் இடப்பக்கத்தில் ஸ்ரீ அனந்த லக்ஷ்மி, வலப்பக்கத்தில் சிவபெருமான்! ஹரியும் சிவனும் ஒரே கர்ப்பக்கிரஹத்தில் குடிகொண்டிருக்கும் கோவில். ஹரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு! என்பதை எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்திருக்கும் கோவில்! சத்யதேவா என்று அழைக்கப்படும் விஷ்ணு, முறுக்கிய மீசையோடு இருக்கிறார்! படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்: அது என்னமோ புரிவதில்லை, சிலருக்கு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாலே அப்படி ஒரு வெட்கம் வந்து விடுகிறது! இந்தப் பெண்களின் புகைப்படம் எடுத்தது கூட காரில் பயணித்தபடியே தான்! ஆனாலும் தன்னை புகைப்படம் எடுக்கப் போகிறார்கள் எனத் தெரிந்ததுமே வெட்கத்தில் தன் முகத்தினை மறைத்துக் கொண்டார் இச்சிறுமி! ஏன் இந்த நாணம் மகளே…. இந்தப் படத்திற்குப் பொருத்தமாக கவிதை எழுதி அனுப்பி இருப்பவர் நெய்வேலியைச் சேர்ந்த நிலாமகள். இதோ கவிதை.   உடைக்குப் பொருத்தமாய் வளையல், நகப்பூச்சு, கொண்டையூசி எல்லாம் அழகுதான். உன் வெள்ளைப் பல்லிலும் பஞ்சு முட்டாய் தின்று படிந்த பக்கி ரோஸ் கலர் பிரமாதமென்றேன் நாணிக் கவிழ்கிறாய் தோழியின் தோளில்.   நிலாமகள், நெய்வேலி. 15. பொறுமை…. புகைப்படம் – 15; கவிதை  - 1   []     எடுக்கப்பட்ட இடம்:  விசாகப்பட்டிணம் சென்றிருந்த போது, கடற்கரையின் அருகே அமைந்திருக்கும் கைலாசகிரி சென்றிருந்தோம். மலைமீதிருந்து ஓயாது கரைவந்து திரும்பும் அலைகளைப் பார்ப்பது ஆனந்தமான விஷயம். அப்படி கைலாசகிரியில் இருந்த போது, புகைப்படங்கள் எடுப்பது பார்த்து, இப்படி ஒரு புன்னகை புரிந்தாள் இந்தச் சிறுமி!   படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  சிலருக்கு தன் மீது ரொம்பவே நம்பிக்கை உண்டு.  தன்னைப் புகைப்படம் எடுக்கிறார்கள் என்று தெரிந்தபோது, “புகைப்படத்தில் நான் நன்றாகவே இருப்பேன்” என்ற நம்பிக்கையோடு காட்சி தருவது போலத் தோன்றியது! எடுத்த படத்தினை, அப்பெண்ணிற்குக் காண்பித்தபோது, “நான் நினைச்ச மாதிரியே அழகாய் வந்திருகேன் இல்ல!” என்ற ஒரு தோற்றம் காண்பித்தாள்! இந்தப் படத்திற்குப் பொருத்தமாக கவிதை எழுதி அனுப்பி இருப்பவர் நெய்வேலியைச் சேர்ந்த நிலாமகள். இதோ கவிதை. இந்தத் தோடு யார் வாங்கித் தந்தா? இந்த சட்டை? உன் கழுத்து மணி அழகாயிருக்கே... சாக்லேட்டா சாப்பிடுகிறாய்? உருட்டி விழிக்கும் கண்களோடு வாய் திறவாமல் மென்று கொண்டிருக்கிறாய் என் பொறுமையை. நிலாமகள், நெய்வேலி. 16. அரைவயிற்றுப் பசியேனும்…. புகைப்படம் – 16; கவிதை  - 4   []   எடுக்கப்பட்ட இடம்:  திருவரங்கம், தமிழகம்.  சித்திரை மாதத் தேர் திருவிழா சமயத்தில் விசிறி விற்பனை செய்து கொண்டிருந்த பெரியவர். படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  ஏப்ரல்-மே மாதம் திருவரங்கத்தில் அடிக்கும் வெயிலில் இருந்து மற்றவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள விசிறி விற்பனை செய்யும் இந்த மனிதர் வெயிலில் அலைந்து திரிந்து கறுத்துப் போயிருக்கிறார்! அவருக்கு யார் விசிறி விடுவார்களோ! இந்தப் படத்திற்குப் பொருத்தமாக, நான்கு கவிதைகள் – கீதா மதிவாணன், கணக்காயன், ஸ்ரீராம் மற்றும் புதுவை சேஷாத்ரி. இதோ கவிதைகள்.   கவிதை-1: அரை வயிற்றுப் பசியேனும்… விசிறிகள் இத்தனை இருந்தென்ன லாபம்… விற்பவர் வெக்கை தணிக்கத் தோதில்லையேதும்… வீதிகளை அளந்து களைத்த பாதம் நினைந்தோ… விதியினை நொந்து சலித்த முகம் பார்த்தோ… விற்குமோ… ஒற்றை விசிறியேனும்… ஆற்றுமோ… அரைவயிற்றுப் பசியேனும்.   கீதா மதிவாணன், சிட்னி. வலைப்பூ- http://geethamanjari.blogspot.com      கவிதை-2: ரங்கத்தில் நாதரொடு…   ரங்கத்தில் நாதரொடு நாயகியும் தேருலாவில் பங்கேற்றோர் நூற்றின்மேல் நீள்வடத்தை நேரிழுக்க வெங்கனலால் வெய்யோன்தன் சுட்டிடல்தான் உச்சிதனில் உள்ளங்கால் என்றவர்க்கும் வேர்த்திடவே காண்புழுக்கம் மண்டியது; அங்குசிலர் நீள்பனையின் சிற்றோலை கைவிசிறி விற்றிட்டார் மற்றவர்க்கே அன்னவர்க்கு அவ்விசிறி யார்தருவார்? ஓவியத்தைக் கண்டதனால் திவ்வியமாய்த் தீங்கவிதைத் தீந்தமிழில் நின்றதுவே!   கவிஞர் கணக்காயன் [இ.சே.இராமன்]/11.06.2018 வலைப்பூ: http://www.kanakkayan.blogspot.com    கவிதை-3: அல்லல்கள் அகலட்டும்…   கொளுத்தும் வெயிலுக்கு வெளுத்த உடை தேர்காண வந்தோரின் வேர்வை போக்கிட விரிந்த கரங்களில் விற்பதற்காய் விசிறிகள் அரங்கனின் பார்வைக்கு அவர் விசிறி செய்யும் தொழிலதனை தெய்வமாய் நினைப்பதால் அரங்கனும் ஆவாரோ அவரின் விசிறி? கடைக்கண் பார்வைக்குக் காத்திருக்கும் அவருக்கு அரங்கன் அருளால் அகலட்டும் அல்லல்கள்!   காரஞ்சன்(சேஷ்), வலைப்பூ: http://esseshadri.blogspot.com/  கவிதை-4: வாழ்க்கை…    வாழ்க்கை கருப்பு வெள்ளையில் இருந்தாலும் விசிறிகள் வண்ணங்களில்!   ஸ்ரீராம், வலைப்பூ: http://engalblog.blogspot.com                                                  17. கடுந்துயரும் கரைந்திடுமே…   புகைப்படம் – 17; கவிதை  - 4   []     எடுக்கப்பட்ட இடம்:  திருவரங்கம், தமிழகம்.  சித்திரை மாதத் தேர் திருவிழா சமயத்தில் எடுக்கப்பட்ட படம். திருவிழாவிற்கு வந்திருந்த சிறுவர்களை [என்னைப் போன்ற சிலரையும்!] கவர்ந்திழுத்த ஒரு மனிதர்! தனது கை[பை]யில் இருக்கும் அனைத்தையும் விற்று விட முயற்சித்துக் கொண்டிருந்த உழைப்பாளி. படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  எத்தனை வயதானாலும் சில விஷயங்கள் அலுப்பதே இல்லை. சோப்பு நுரை கொண்டு இப்படிச் செய்வது சிறு வயதுப் பழக்கம் என்றாலும் இப்போதும் பார்க்கும்போது முட்டைவிடத் தோன்றும் – ஆனால் வெட்கம் தடுத்துவிடுகிறது! இந்தப் படத்திற்குப் பொருத்தமாக, நான்கு கவிதைகள் – புதுவை சேஷாத்ரி, கணக்காயன் அவர்கள், ரிஷபன்ஜி மற்றும் கே.பி. ஜனா! இதோ கவிதைகள்.   கவிதை-1: கடுந்துயரும் கரைந்திடுமே…   கரையாத துயரமுண்டோ? ஊதிப் பெரிதாக்கி உருவான நீர்க்குமிழி காற்றில் கரைகிறதே கணநேரத்தில்! உடையாத மனமிருந்தால் கடுந்துயரும் கரைந்திடுமே கால  வெள்ளத்தில்! காரஞ்சன்(சேஷ்), வலைப்பூ: http://esseshadri.blogspot.com/    கவிதை-2: வயிறு… உடைத்து விடாதே என் வியாபாரக் கனவுகளை… வயிறு குடியிருக்கிறது ஒவ்வொரு குமிழியிலும். ரிஷபன், வலைப்பூ : http://rishaban57.blogspot.com/    கவிதை – 3: துயரம்… ஊதிப் பெருக்கும் மனத்துயரங்கள் உடைந்து விடாதா இது போலே? கே.பி. ஜனா - http://kbjana.blogspot.com/    கவிதை-4: குமிழிகள்   நீர்க்குமிழி காண்கனவு கானல்நீர் விண்மின்னல் பல்வண்ண வானவில் கற்பனைபோல் அநித்தியமாய் தோன்றிமறைப் பாங்கேபோல் நம்வாழ்வும் செல்வமதும்   நண்ணுகின்ற நல்மகிழ்வும் வாட்டுகின்ற துன்பமதும் வாதைசெய் நோய்பலவும் நில்லாதே செல்வனவே! ஈட்டுவது ஈவதற்கே என்றுணர்ந்து நாம்வாழ்ந்தால் நற்பெயரும் சீர்புகழும் நம்காலம் ஓய்ந்தபின்னும் வாழ்மக்கள் ஆழ்உளத்தே நின்றிலங்கி வாழ்வோமே!   கவிஞர் கணக்காயன் [இ.சே.இராமன்]/14.06.2018 வலைப்பூ: http://www.kanakkayan.blogspot.com   18. இமைக்கதவு…   புகைப்படம் – 18; கவிதை  - 3 []     எடுக்கப்பட்ட இடம்:  திருவரங்கம், தமிழகம்.  சித்திரை மாதத் தேர் திருவிழா சமயத்தில் எடுக்கப்பட்ட படம். தேரோட்டம் பார்க்க வந்த கூட்டத்தில் பார்த்த, அனைவரையும் வசீகரித்த ஒரு சிறுமி. படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  அட, என்ன சுகம் என்ன சுகம். குழந்தையாகவே இருந்திருந்தால், இப்படி அம்மா தூக்கிக் கொண்டு இருந்திருப்பாள். சுகமாய் இருந்திருக்கலாம்! இப்போது இந்த ஆறடி உயரக் குழந்தையை யார் தூக்கி வைத்துக் கொள்வார்கள்! இந்தப் படத்திற்குப் பொருத்தமாக, மூன்று கவிதைகள் –ரிஷபன்ஜி, தில்லையகத்து கீதா மற்றும் நெய்வேலி முரளி நெய்வேலி முரளி, எனது இளமைக் கால நண்பர். நெய்வேலியில் என்னுடன் கல்லூரியில் படித்தவர்.  இப்போது நெய்வேலியிலேயே இருப்பவர். புகைப்படங்களுக்கான தனது கருத்துகளைச் சொல்லி வந்த நண்பருக்கு மனம் நிறைந்த நன்றி!  இதோ கவிதைகள்.   கவிதை-1: இமைக்கதவு…   இமைக் கதவைத் திறந்து விடாதே… ஓரிரு நிமிடங்களேனும். சிறைப்பிடித்த இப்பிரியம் உன் இதயத்தில் சேரட்டும்… அவ்வப்போது கண்ணுக்குக் கொண்டு வந்து காட்சியாய்க் காணலாம் வாழ்நாள் முழுதும்! ரிஷபன், வலைப்பூ : http://rishaban57.blogspot.com/    கவிதை-2: நவீன ஆண்டாள்… வேங்கடவனை நெஞ்சில் இருத்தி திருநாணை நெற்றியில் இருத்தி சூடி கொடுப்பாளோ இந்த நவீன ஆண்டாள்? முரளி, நெய்வேலி   கவிதை-3: ஒரு நிமிடமேனும்… கண் இமை திறந்து இவ்வுலகைப் பார்ப்பதற்குள் அந்த ஒரு நிமிடமேனும் மகிழ்வாய் இருந்திடு பாப்பா!! திறந்த பின் மனிதரைப் பார்த்திடாமல் இவ்வுலகின் அழகை மட்டும் ரசித்திடு பாப்பா.   தில்லையகத்து க்ரோனிக்கிள்ஸ் கீதா ரெங்கன், சென்னை.                             19. வண்ணமகன்… புகைப்படம் – 19; கவிதை  - 2   []     எடுக்கப்பட்ட இடம்:  திருவரங்கம், தமிழகம்.  சித்திரை மாதத் தேர் திருவிழா சமயத்தில் எடுக்கப்பட்ட படம். தேரோட்டத்தின் போது தேரை எடுத்த படங்களை விட மனிதர்களை எடுத்த படங்கள் தான் அதிகமாக இருக்கிறது! படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  விதம் விதமான ஊதுகுழல்கள் என்னிடத்தில் உண்டு. அனைத்தும் விற்று விட்டால் நல்லது தான். இன்றைக்கு நல்ல வியாபாரம் நடக்க வேண்டும் இவருக்கு.  காலை நேரத்திலேயே உழைக்க ஆரம்பித்து விட்ட இந்த உழைப்பாளியின் மனதும் வயிறும் குளிர்ந்திருக்குமா? இந்தப் படத்திற்குப் பொருத்தமாக, இரண்டு கவிதைகள் –ஸ்விஸ் வாசி நிஷாந்தி பிரபாகரன் மற்றும் ஆதி வெங்கட். இதோ கவிதைகள்.   கவிதை-1: வண்ணமகன்…   வானவில் வர்ணங்களாய் ஊது குழல் தரு உந்து சக்தி   இளம் சீட்டுக்களின் இசை மீட்டல்   வான் தொட வைக்கும் வாழ்க்கை போராட்டம்   முடிவிலிகள் இல்லாத முகவரியாய் வாடி நிற்கும் வண்ண மகன்! நிஷாந்தி பிரபாகரன், ஸ்விஸ். வலைப்பூ: ஆல்ப்ஸ் தென்றல்    கவிதை -2: வயிறும் மனமும்…   குழலால் ஒலியெழுப்பி குழந்தைகள் மனம் சந்தோஷத்தால் நிறைவது போல…   இந்த மனிதனின் வயிறும் மனமும் நிறைவது என்றோ????? ஆதி வெங்கட்                             20. நட்பு… புகைப்படம் – 20; கவிதை  - 1   []     எடுக்கப்பட்ட இடம்:  தஞ்சை பெரிய கோவில். அங்கே உள்ள சிற்பங்களைப் படம் பிடிப்பதற்காகவே செய்த ஒரு பயணத்தில் இந்த இரு சிறுவர்களையும் படம் பிடித்தேன்!   படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  ஒரு சிறுவன் கண்ணில் பயம் – விழுந்துவிடுவோமோ? என்ற பயம்! மற்ற சிறுவன் அவன் மீது கை வைத்து, “பயப்படாத லே! நான் தான் பக்கத்துல இருக்கேன்ல, உன்னை கீழே விழ விடமாட்டேன்….” என்று சொல்கிறானோ? இந்தப் படத்திற்குப் பொருத்தமாக, ஒரு கவிதை –தமிழ் முகில் பிரகாசம். இதோ கவிதை.   கவிதை-1: நட்பு…   தோளோடு தோளாய் தோழனென்று ஆனாய்! பேசிப் பேசி தீராக் கதைகள் காலமெலாம் எஞ்சி நிற்பது நட்பெனும் பெட்டகத்துள்ளே! பேசுவோம் ... பேசுவோம்... இப்போது நமக்குள்ளே! நாளை நம் நட்பின் பெருமையை பகிர்ந்து மகிழ்வோம் நம் சுற்றத்தோடே! தமிழ் முகில் பிரகாசம்   21. வடமும் இடமும்… புகைப்படம் – 21; கவிதை  - 1 []     எடுக்கப்பட்ட இடம்:  திருவரங்கம், தமிழகம்.  சித்திரை மாதத் தேர் திருவிழா சமயத்தில் எடுக்கப்பட்ட படம். தேரோட்டத்தின் முதல் நாள் தேரடியில் நிற்கும் சமயத்தில் தேர் வடம் பிடித்துப் பார்த்த சிறுவர்கள்… படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  முயன்றால் முடியாதது உண்டோ? சிறுவர்களே, உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், தேர் வடம் என்ன, தேரையே நீங்கள் இழுத்து விட முடியும்! முயற்சி செய்யுங்கள்….   இந்தப் படத்திற்குப் பொருத்தமாக, ஒரு கவிதை –புதுச்சேரி வாழ் சேஷாத்ரி. இதோ கவிதை!   கவிதை-1: வடமும் இடமும்…   திரித்த கயிறுகளின் திரட்சி தேருக்கு வடமாச்சு! சிரித்த முகத்துடன் சிறுவர்களின் முயற்சி சிந்தைக்கு விருந்தாச்சு! வடம் பிடித்த நீங்கள் வாழ்வில் தடம் பதித்து இடம் பிடிப்பீர்கள் எல்லோர் இதயங்களில்!   காரஞ்சன்(சேஷ்), வலைப்பூ: http://esseshadri.blogspot.com/    22. சகோதரப் பாசம்… புகைப்படம் – 22; கவிதை  - 1   []     எடுக்கப்பட்ட இடம்:  தஞ்சை பெரிய கோவில். அங்கே உள்ள சிற்பங்களைப் படம் பிடிப்பதற்காகவே செய்த ஒரு பயணத்தில் இவர்களையும் படம் பிடித்தேன்!   படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  கண்ணில் பயத்துடன் இருந்த சிறுவன், தன் சகோதரி பக்கத்தில் அமர்ந்ததும், தன்னை மறந்து, சகோதரியைப் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்ட செயல் – என்னே ஒரு பாசம்!   இந்தப் படத்திற்குப் பொருத்தமாக, ஒரு கவிதை –ஸ்விஸ் நிஷாந்தி பிரபாகரன் கைவண்னத்தில்… இதோ கவிதை.   கவிதை-1: சகோதரப் பாசம்… தாய் போலே தாலாட்டி தோள் மீது தொட்டில் கட்டி சேயாக எனை நடத்தி சேயோனாய் நீயிருந்து சுமைகளை சுகமாக்கும் அண்ணா என் அரண் நீயே.   தன் கை அணைப்பை தங்கைக்கு அரணாக்கி என் தங்கை இவளெனும் உரிமையாய் பார்க்கும் தனயன் இவன் அன்பை சொல்ல வார்த்தை இல்லை. நிஷாந்தி பிரபாகரன், ஸ்விஸ். வலைப்பூ: ஆல்ப்ஸ் தென்றல்                                                              23. நெஞ்சு பொறுக்குதில்லையே…   புகைப்படம் – 23; கவிதை  - 1   []     எடுக்கப்பட்ட இடம்:  சித்திரைத் தேரோட்டத்தின் முதல் நாள் மாலை எடுத்த படம் – இடம் – திருவரங்கம் வெள்ளை கோபுரம் அருகே…. மே, 2018.   படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  தேரோட்டத்தின் முதல் நாள் – சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராமத்து மக்கள் அனைவரும் பக்தியோடும், கோவிந்தா கோஷத்துடன் தங்கள் கிராமங்களிலிருந்து நடந்தே திருவரங்கத்திற்கு வருகிறார்கள். கோவிலின் கிழக்கு வாயிலில் இருக்கும் வெள்ளை கோபுரத்திற்கு அருகே நாற்சந்தியில் கோவிந்தா கோஷம் முழங்க ஒவ்வொருவராய் கீழே அமர்ந்து கொள்ள, மற்றவர் உடகார்ந்திருப்பவர் தலையில் தேங்காய் உடைக்கிறார் – இப்படி ஒரு முறை மட்டுமல்லாது சிலர் தலைகளில் இரண்டு மூன்று தேங்காய்கள் கூட உடைக்கப்படுகின்றன.  பக்தியில் திளைத்திருந்த மக்கள் – அவரவருக்கு அவரவர் நம்பிக்கை – என்றாலும் சிலருக்கு ரத்தம் கசிய, “ஐயோ” என்றிருந்தது எனக்கு! வீபூதியை/மஞ்சள் தூளை தலையில் பூசிக்கொண்டு தொடர்ந்து கோவிந்தா கோஷம் எழுப்பியவர்களைப் பார்க்க வியப்பாக இருந்தது.     இந்தப் படத்திற்குப் பொருத்தமாக, ஒரு கவிதை –பெங்களூரு ஜி.எம்.பி. ஐயா.… இதோ கவிதை.   கவிதை-1: நெஞ்சு பொறுக்குதில்லையே…   நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் தன் துயர்களுக்குக் காரணம்கடவுள் என்பார் கடந்தஜென்மக்கர்மா என்பார் பரிகாரம் என்பார் தலையில் தேங்காய் உடைத்திடுவார் அலகு குத்திடுவார் அந்தணன் உண்ட இலையில் புரண்டெழுவார் தானாய் சிந்தனை என்பதே இல்லாதார் எண்ணங்களில் எண்ணிலா நோயுடையார் இவர் ஏது கூறினும் பொருளறியார்-இவர் சிந்தையில் உரைக்க இவர் வணங்கும் தெய்வமே வந்தால்தான் ஒருக்கால் சீர்படுமோ.? (நெஞ்சு)   ஜி.எம்.பாலசுப்ரமணியன், பெங்களூரு – வலைப்பூ: gmb writes    நன்றி! இந்த மின்புத்தகத்தில் இருக்கும் படங்களையும் கவிதைகளையும் ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!  புகைப்படத்திற்கான தங்களது கவிதைகளை பகிர்ந்து கொண்ட, தொகுப்பில் இணைத்திட அனுமதித்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  புகைப்படக் கவிதைகளின் இந்தத் தொகுப்பு உங்களுக்குப் பிடித்திருந்ததா, உங்கள் எண்ணங்கள் என்ன என்பதை எனக்கு மின்னஞ்சல் மூலமாக – venkatnagaraj@gmail.com தெரிவிக்கலாம்.   நட்புடன் வெங்கட், புதுதில்லி. வலைப்பூ: www.venkatnagaraj.blogspot.com