[] [cover image] மாவீரன் சிவாஜி காவித் தலைவன் அல்ல காவியத் தலைவன் செ. நடேசன் FreeTamilEbooks.com CC-BY-NC-ND மாவீரன் சிவாஜி காவித் தலைவன் அல்ல காவியத் தலைவன் 1. மாவீரன் சிவாஜி காவித் தலைவன் அல்ல காவியத் தலைவன் 1. மின் நூல் வெளியீடு 2. எட்டுத்திக்கும்… 3. ஆசிரியர் குறிப்பு 4. மொழிபெயர்ப்பாளர் குறிப்பு 2. மாவீரன் சிவாஜி - காவித் தலைவன் அல்ல காவியத்தலைவன் 3. தனது விவசாயிகளிடம் அன்புகொண்ட அரசர் 4. மத உணர்வாளர், ஆனால் வெறியர் அல்ல 5. சிவாஜி – பிராமணர்கள் – 96 பெரும்குடும்பங்கள் குலமுறைகள் – சூத்திரர்கள் 6. வரலாற்றுத்திரிபு ஏன்? 7. சிவாஜியின் கடிதங்கள் 8. சிவாஜியிடமிருந்து தனது வார்த்தைகளுக்கு உண்மையாக ஔரங்கசீப்புக்கு. 9. சிவாஜி கோன் ஹோட்டா? மாவீரன் சிவாஜி காவித் தலைவன் அல்ல காவியத் தலைவன் மாவீரன் சிவாஜி காவித் தலைவன் அல்ல காவியத் தலைவன்   செ. நடேசன்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-ND கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - G.சுமதி - sumathig000@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/sivaji_kaaviya_thalaivan} மின் நூல் வெளியீடு http://freetamilebooks.com/ http://www.kaniyam.com/foundation/ உரிமை CC-BY-NC-ND யாவரும் படிக்கலாம்,பகிரலாம் காப்புரிமை பற்றி மேலும் தகவலுக்கு Author Correspondence Acquisition of Creations GnuAnwar [] gnuanwar@gmail.com மெய்ப்பு சிவந்தன் sivanthanv@gmail.com *நன்கொடை** உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account மாவீரன் சிவாஜி - காவித் தலைவன் அல்ல காவியத் தலைவன் மராத்தியில் கோவிந்த் பன்சாரே ஆங்கிலம் வழி தமிழில் செ. நடேசன் விஜய் ஆனந்த் பதிப்பகம் 20, பாரதி இல்லம், திருப்பூர் ரோடு, ஊத்துக்குளி ஆர்.எஸ். 638752 E mail: vijayanandpathippagam@gmail.com அலைபேசி : 75982 63236 / 94433 63236 எட்டுத்திக்கும்… பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் தனக்கென ஓர் ஆளுகைப்பகுதியைத் தனது அளப்பரிய ஆற்றலாலும், கூர்த்த சிந்தனைகளாலும் உருவாக்கிக் கொண்டவர் சிவாஜி. மனுதர்ம மதவாதிகள் இவரை சூத்திரன் எனக்கூறி முடிசூடிக்கொள்ளத் தடையாக நின்றனர். ஆனால் சிவாஜியின் ஆட்சியில் நிலவிய சட்டமும், ஒழுங்கும், கட்டுப்பாடும், சிந்தனைகளும் 21ஆம் நூற்றாண்டின், மக்களாட்சியிலும் காணப்படாதவையாக இருந்தன. பெண்களின் பாதுகாப்பும், விவசாயிகளுக்கான அரவணைப்பும், ஏழைமக்கள் மீதான நம்பிக்கையும் முன்னெப்போதும் மக்கள் சந்தித்திராதவை… அன்றைய வழக்கப்படி போரில் வெற்றி கொண்ட நாட்டின் அழகிய பெண்ணை மன்னருக்குப் பரிசாக அளித்தபோது, ‘இவர் என் அன்னையைப் போன்ற அழகுமிக்கவர்’ எனப் பெண்மையையும், தாய்மையையும் போற்றிய பண்பும், எதிரி நாட்டுப் பெண் தளபதியைப் போரில் வென்ற தனது போர்ப்படைத் தளபதி கற்பழித்தார் எனக் கேட்டு அவரது கண்களைக் குருடாக்கிச் சிறையிலடைத்த நேர்மையும், ஏழை விவசாயியின் அன்பு மகளைக் கற்பழித்த நிலப்பிரபுவின் கைகளையும் கால்களையும் வெட்டிச் சிறைப்படுத்திய உறுதியும், தனது படைவீரர்களுக்கு, விவசாய நிலங்களில் விளைந்து நிற்கும் எதுவும், ‘ஓர் பயிரின் இலைகூட’ அவர்களால் தொடப்படக்கூடாது என விதித்த கட்டுப்பாடும், சொந்த மதத்தின் மேட்டுக்குடியினர் எதிர்த்தபோது ஏழைவிவசாயிகள் மற்றும், முஸ்லீம்கள் நம்பிக்கையைப் பெற்றுத் தனது இலட்சியத்தை நிறைவேற்றிக்கொண்ட சாதுரியமும் வியப்பூட்டுபவை. மராட்டிய சிந்தனையாளரும், மார்க்சீய அறிஞருமான கோவிந்த் பன்சாரே, உண்மை சிவாஜியை உலகுக்கு இனம் காட்ட எழுதிய ‘சிவாஜி ஹோன் ஹோடா’ என்ற இந்த நூல் இந்து மதவெறியர்களை ஆத்திரப்படுத்தி அவரைக் கொலை செய்யவைத்தது. சிவாஜியும், பன்சாரேவும் மக்கள் ஒற்றுமையை, மனித நேயத்தை, மத நல்லிணக்கத்தைப் போற்றிய மகத்தான மனிதர்கள். இன்றைய நமது தேவைகளான அவர்களும், அவர்களது சிந்தனைகளும் பரவட்டும் எட்டுத்திக்கும்! மதவெறி சக்திகள் தந்திரமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள மிகவும் அபாயமான சமகாலத்தில் சிவாஜியைத் தங்கள் இழிவான நோக்கங்களுக்காக பயன்படுத்தும் வாய்ப்புக்களைத் தடை செய்து உண்மையான சிவாஜியை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் அவசர அவசியம் கருதி தமிழில் இந்த நூல் வரவேண்டும் என்று விரும்பிய, பல்வகையிலும் உதவியாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றியும் பிரியமும். தோழமையுடன், விஜய் ஆனந்த் பதிப்பகம். ஆசிரியர் குறிப்பு மொழிபெயர்ப்பாளர் குறிப்பு [] செ. நடேசன் எம்.ஏ.,பி.எட்., தலைமை ஆசிரியர் (ஓய்வு) முன்னாள் பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் அகில இந்திய செயலாளர், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு திருப்பூர் மாவட்டத்துணைத்தலைவர் த.மு.எ.க.ச. சிலமொழிபெயர்ப்புக்கள் சட்டோபாத்யாயா கமிஷன் அறிக்கை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வெளியீடு கல்வியின்மீதான மதவெறித்தாக்குதல்கள் எதிர்த்துப்போராட எழுக! ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வெளியீடு மாவோ சிந்தனைவழியில் காதுகேளாமை,வாய்பேசாமையைக் குணப்படுத்தும் அக்குபஞ்சர் இரகசியங்கள் விஜய் ஆனந்த் பதிப்பகம் வெளியீடு மாவீரன் சிவாஜி காவித்தலைவன் அல்ல: காவியத்தலைவன் (தமிழில் 5 பதிப்புக்கள்) விஜய் ஆனந்த் பதிப்பகம் வெளியீடு இந்தியா எதை நோக்கி?. எதிர் வெளியீடு கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் எதிர் வெளியீடு 2018 சிறந்த மொழிபெயர்ப்புக்காக ஆனந்தவிகடன் விருது பெற்ற நூல் புற்று நோயை வெற்றிகொள்ள விஜய் ஆனந்த் பதிப்பகம் வெளியீடு எங்கே செல்கிறது இந்தியா? எதிர்வெளியீடு செ. நடேசன் எம்.ஏ.,பி.எட் che.natesan@gmail.com மதவெறிக்கு எதிரான சிம்மக் குரல் பேராசிரியர் மாயா பண்டிட், ஆங்கில மொழியியல் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம், ஹைதராபாத். தோழர் கோவிந்த் பன்சாரே, தனது மனைவி உமா பன்சாரேவுடன் 2015 பிப்ரவரி 16ம்தேதி காலை 9.30 மணியளவில் காலை நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது அவருக்கு எதிரே வந்த மர்மநபர்களால் மிக அருகில் வைத்து நேருக்குநேர் சுடப்பட்டார். ஒரு குண்டு அவரது கழுத்தில் பாய்ந்தது. மற்றொன்று அவரது நெஞ்சில் பாய்ந்து நுரையீரலில் நுழைந்தது. மூன்றாவது குண்டு அவரது முழங்காலில் பாய்ந்தது. இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரது மனைவியும் பலத்த காயம் அடைந்துள்ளார். இந்த பயங்கர தாக்குதல், மதச்சார்பற்ற, பகுத்தறிவுவாத, இடதுசாரி மற்றும் ஜனநாயக இயக்கத்திடமிருந்து எழும் குரல்களை நசுக்குவதற்கான தொடர் தாக்குதலின் இரண்டாவது பெரிய நிகழ்வாகும். போராளிகள் மீது தொடரும் தாக்குதல்இதேபோல ஒரு காலைப்பொழுதில் புனே நகரில் நடைபயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பியபோது நரேந்திர தபோல்கர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தபோல்கரின் படுகொலை தொடர்பான வழக்கில் இன்னும் கூட காவல்துறை எதையும் கண்டுபிடிக்கவில்லை. குற்றவாளிகளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து சமூகவிரோதிகளின் ராஜ்யம் தீவிரமடைந்திருக்கும் நிலைமையில் மகாராஷ்டிர மாநிலம் இருக்கிறது என்பதை பன்சாரே படுகொலை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல், மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் குரல்களின் மீது - தொழிலாளர்கள், சிறுபான்மை மக்கள், பெண்கள் மற்றும் இதர பல்வேறு ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்காக யாரெல்லாம் போராடுகிறார்களோ அவர்களை அச்சுறுத்தும் நோக்கத்தோடு நடத்தப்பட்டுள்ளது. அநியாயங்களை எதிர்த்து மக்களின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புபவர்களை குறிவைத்து, நசுக்கும் நோக்கத்தோடு இந்தப் படுகொலை நடந்துள்ளது. அன்று, நரேந்திர தபோல்கர் ஏன் கொல்லப்பட்டார்? மிகத் தீவிரமாக அவர் போராடியதன் விளைவாகவே மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் “மூடநம்பிக்கைகள் மற்றும் நம்பிக்கை சார்ந்த தீய பழக்கங்களை ஒழிப்பதற்கான சட்டம்” நிறைவேற்றப்பட்டது. அதுவே அவரை காவிப்படையினரின் பிரதான எதிரியாக மாற்றியது. அதேபோலத்தான் கோவிந்த் பன்சாரேவும் மிக நீண்டகாலமாக மேற்கு மகாராஷ்டிராவில் இடதுசாரி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற இயக்கத்தின் முன்னணிப் படைத்தளபதியாக விளங்கினார். நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோரின் படுகொலைகள் நமது அரசியலில் ஒரு பயங்கர வெறிநோய் பரவி வருவதன் அறிகுறிகளே. ஆளும் வர்க்கங்களை நடுங்கச் செய்தவர்கள் இடதுசாரி ஜனநாயக சக்திகள் சமூகத்தில் மக்களோடு ஊடாடி, அவர்களை அநியாயங்களுக்கு எதிராகத் திரட்டுவது ஆளும் வர்க்க அதிகாரத்திற்கு விடப்பட்ட அரசியல் அச்சுறுத்தலாக கருதப்படுகிறதா? மகாராஷ்டிராவில் பிருதிவிராஜ் சவாண் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார். இப்போது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சியில் தோழர் பன்சாரே கொல்லப்பட்டுள்ளார். ஆனால் தோழர்கள் தபோல்கரோ, பன்சாரேவோ ஆளும் அதிகார வர்க்கங்களுக்கு ஒரு நேரடி அரசியல் அச்சுறுத்தலாக கருதப்பட முடியாது. ஏனென்றால் தேர்தல் அரசியலில் போட்டிபோட்டு ஆளும் அதிகார வர்க்கங்களுக்கு எதிராக நேரடியாக சவால் விடுவதற்கு இவர்கள் அரசியல் ரீதியாக வலுவான நிலைமையில் இல்லை. ஆனாலும், இவர்களை படுகொலை செய்வதற்கு ஏன் மிகத் தெளிவாக திட்டமிட வேண்டும்? ஏனென்றால் தோழர் பன்சாரே தாராளமய, தனியார்மய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டினார்; மதவெறிக்கு எதிராக நேரடியாக சவால்விடுத்தார்; மத அடிப்படைவாதத்திற்கு எதிராக, பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைக்கு எதிராக இவற்றையெல்லாம் ஆதரிக்கும் வலதுசாரி அரசியலுக்கு எதிராக மக்களிடம் இடைவிடாது பிரச்சாரம் மேற்கொண்டார். அதுவே அவரது அரசியல் எதிரிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உயிருக்கு அச்சுறுத்தல் அவருக்கு எதிரான அச்சுறுத்தல்களின் சமீபத்திய உதாரணமாக சிவாஜி பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கத்தின்போது பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏபிவிபியைச் சேர்ந்த ஒரு மதவெறியர், தோழர் பன்சாரேவுக்கு பகிங்கரமாக மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்தது. அந்த கருத்தரங்கில் தோழர் பன்சாரே, மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு சிலை வைக்க இந்துத்வா மதவெறியர்கள் முயற்சி மேற்கொள்வதைக் கடுமையாக சாடி பேசினார். நாதுராம் கோட்சேயின் சித்தாந்தத்தை அவர் கடுமையாக விமர்சித்தார். தேசத் தந்தையை சுட்டுக்கொன்றவனுக்கு சிலை வைத்துக் கோயில் எழுப்புவதா என அவர் கண்டனக் குரல் எழுப்பினார். இதை பொறுக்க முடியாத ஏபிவிபியைச்(இந்து மதவெறி மாணவர் அமைப்பு) சேர்ந்த ஒருவர், மேடையில் ஏறி, நாதுராம் கோட்சே ஒரு உண்மையான தேசபக்தர் என்றும், அந்த உண்மையான தேசபக்தரை பழித்துப் பேசுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் கூறி திட்டித் தீர்த்தார். அப்போது பன்சாரே மிகவும் அமைதியாக நீதிமன்றத்தில் வழக்குப் போடு, அங்கு வந்தும் இதைச் சொல்கிறேன் என்று கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் இந்துத்வா சக்திகளின் ஆத்திரத்தை மேலும் அதிகரித்தது. இதெல்லாம் எதைக் காட்டுகிறது? இந்த சமூகத்தில் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதற்கும், விவாதிப்பதற்கும் உள்ள சுதந்திரத்தை இழந்துவிட்ட ஒரு நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோமா? உண்மைதான், மகாராஷ்டிராவில் பல இடங்களில் சுதந்திரமாகப் பேச முடிவதில்லை. பிரிவினைவாத - மதவாத சக்திகள் உடனே அங்கு வந்து அச்சுறுத்தலில் ஈடுபடுவது நீடிக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள மகாராஷ்டிராவில், அதன் சித்தாந்தத்தை எதிர்த்து எவர் ஒருவரும் குரல் கொடுப்பதை அந்த அமைப்பு விரும்புவதில்லை. இந்த சகிப்பின்மை இரத்தவெள்ளத்தில் போய் முடிகிறது. மதவெறிக்கு எதிரான குரல்கள் இரத்தத்தில் மூழ்கடிக்கப்படுகின்றன. நமது சமூகத்தில் அதிகாரமிக்க ஆதிக்கக் கட்டமைப்பினை எதிர்த்து காலந்தோறும் மக்கள் போராடி வந்திருக்கிறார்கள்; மதச்சார்பின்மை மீதும் ஜனநாயகத்தின் மீதுமான தாக்குதலுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள். அவ்வப்போது தாக்குதல் தொடுத்து வந்த மதவாத சக்திகள் இன்றைக்கு இடைவிடாமல் தாக்குதல் தொடுக்கிற அளவுக்கு நாட்டின் அரசியலில் மையமான இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். நவீன தாராளமயக் கொள்கைகள் அமலான பிறகு ஆதிக்கம் செலுத்தும் மதவாத சித்தாந்தங்கள், வர்க்கங்கள், சாதிகள் மற்றும் ஆணாதிக்கச் சிந்தனை ஆகியவற்றோடு நவீன தாராளமயம் இரண்டறக் கலந்துவிட்டது. விநாயகர் சதுர்த்தி விழாக்களும், துர்கா பூஜைகளும் இன்றைக்கு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி உதவி இல்லாமல் நடப்பதை கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. இத்தகைய நவீன தாராளமய கொள்கைகளையும் மதவாத சக்திகளையும் ஒருசேர எதிர்த்து குரல் கொடுத்த தோழர் பன்சாரே போன்றவர்களை கார்ப்பரேட்டுகளும் மதவாதிகளும் சேர்ந்து ஒழித்துக் கட்டுவதில் எந்த வியப்பும் இல்லை. இதைச் செய்த வலதுசாரி அமைப்புகளுக்கு அரசியல் ஆதரவும், பாதுகாப்பும் தருவதற்கு இங்கு அதிகார மையத்தில் ஆள் இருக்கிறார்கள் என்பதால்தான் அது இன்னும் பகிரங்கமாக நடந்திருக்கிறது. இவர்கள் சமூகத்தின் அடித்தட்டில் இருக்கிற - அனைத்தையும் இழந்துவிட்ட - பிழைப்புக்காக எதையும் செய்யத் தயங்காத நிலையில் இருக்கக்கூடிய நபர்களை கூலி ஆட்களாக விலைபேசி அவர்களை தங்களது மதவெறி நோக்கத்திற்கும் - கொலை பாதகத்திற்கும் பயன்படுத்தும் நிலைமை தீவிரமடைந்து வருகிறது. இவர்கள் தபோல்கரை கொன்றிருக்கலாம்; தோழர் பன்சாரேவை வீழ்த்தியிருக்கலாம்… ஆனால் ஒரு போதும் மதவாதத்திற்கு எதிரான இந்தியாவின் குரலை நசுக்கிவிட முடியாது. தோழர் பன்சாரேவின் அரசியல் வாழ்க்கை தோழர் கோவிந்த் பன்சாரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகாராஷ்டிரா மாநில முன்னாள் செயலாளராவார். மகாராஷ்டிராவில் அக்கட்சியின் சிறந்த நிர்வாகியாக, தலைவராக செயலாற்றியவர். ஒரு முதுபெரும் கம்யூனிஸ்ட். வாழ்நாள் முழுவதும் உழைக்கும் வர்க்க மக்களுக்காக ஓயாது போராடியவர். எண்ணற்ற தொழிலாளர் போராட்டங்களுக்கு தலைமையேற்றவர். தொழிலாளர்களை பயிற்றுவிப்பதற்காக - அவர்களது உரிமைகள் என்ன, கவுரவமான ஊதியம், உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள், புதிய பொருளாதார கொள்கைகளால் ஏற்படும் கொடிய விளைவுகள் என எளிய நடையில் விளக்கி எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்தவர். சமீபத்தில் கோலாப்பூர் நகரில் நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து மிகப்பெரும் மக்கள் போராட்டத்தை நடத்தியவர். நரேந்திர தபோல்கரும் தோழர் பன்சாரேவும் வலதுசாரி மதவாத அரசியலுக்கு எதிரான போர்க்களத்தில் உறுதிமிக்க வீரர்களாகத் திகழ்ந்தவர்கள். நரேந்திர தபோல்கர் தனது பகுத்தறிவு இயக்கமான `அந்தஸ்ரதா நிர்மூலன் சமிதி’ மூலம் மதவாதத்திற்கு எதிராகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், மதத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் போலிச் சாமியார்களுக்கு எதிராகவும், சாதிய சக்திகளுக்கு எதிராகவும் குறிப்பாக ஜாட் சமூகத்தின் மோசமான கட்டப்பஞ்சாயத்துகளுக்கு எதிராகவும் வலுவாக குரல்கொடுத்தவர். தோழர் பன்சாரே, மகாராஷ்டிராவில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்டிய மகாத்மா ஜோதிராவ் பூலே, ஷாகு மகாராஜ் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் கருத்துக்களை உரத்து முழங்கிய கம்யூனிஸ்ட் தலைவர். சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக, வர்க்கச்சுரண்டலுக்கு எதிராக எளிய மக்களை விழிப்புணர்வு பெறச் செய்தவர்; தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமாக தங்களைச் சுற்றியுள்ள மோசமான விளைவுகளை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் விதைத்தவர். மகாராஷ்டிராவில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக நீண்டநெடுங்காலமாக நீடித்துவரும் சமூக சீர்திருத்தப் பாரம்பரியத்தின் உண்மையான வாரிசாக தன்னை வரித்துக் கொண்டவர் தோழர் பன்சாரே. மாவீரன் சிவாஜி காவித் தலைவன் அல்ல; காவியத் தலைவன்! தோழர் பன்சாரே எழுதிய `சிவாஜி கோன் ஹோட்டா?’(யார் அந்த சிவாஜி?) என்ற சிறிய நூல் மராத்தி மொழியிலும், ஆங்கிலத்திலும் இரண்டு லட்சம் பிரதிகளுக்கு மேலாக விற்கப்பட்டது. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நூலில், 19ம்நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே இந்துத்வா மதவெறி காவிப்படையினரால் திட்டமிட்டு மக்கள் மனதில் உருவாக்கப்பட்டுள்ள கலாச்சார தேசிய வாதம் தொடர்பான பல மாயைகளை தகர்த்தெறிந்திருக்கிறார் பன்சாரே. மிகச்சிறிய, ஆனால் மிகவும் சக்திவாய்ந்த இந்தப் பிரசுரம் ஆயிரக்கணக்கான மக்களிடையே சென்றதும், அவர்களால் படிக்கப்பட்டு பல முனைகளில் கேள்வி எழுப்பப்பட்டதும் பஜ்ரங்தள், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு வலதுசாரி மதவெறி அமைப்புகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வலதுசாரி சக்திகள் பகத்சிங்கையும் சிவாஜியையும் தங்களது அடையாளங்களாக முன்வைத்து வரலாற்றை திரித்து எழுதுவதற்கு முயற்சி மேற்கொண்ட தருணத்தில் இந்த நூல் வெளிவந்தது. மராட்டிய மன்னன் சிவாஜி பற்றி காவிப்படையினர் முன்வைத்த சித்திரத்தை பன்சாரே தகர்த்தெறிந்தார். மாவீரன் சிவாஜி, ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக ஓய்வின்றி உழைத்த ஒரு `மக்களின் மன்னன்’ என்று பன்சாரே வரலாற்று ஆதாரங்களோடு தனது நூலில் முன்வைத்தார். சிவாஜி, மராட்டியத்தின் விவசாயிகளையும், ஏழைகளையும் பாதுகாத்த மன்னனே தவிர, செல்வாக்கு படைத்த பிராமணர்களையும் அவர்களது பசுக்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கவில்லை; விவசாயிகள், பெண்கள், சூத்திரர்கள் மற்றும் முஸ்லீம்கள் உள்பட அனைத்து மக்களையும் பாதுகாத்த மன்னன் என்று பன்சாரே விவரித்தார். சிவாஜியின் கொள்கைகள் விவசாயத்திற்கு எப்படி உதவி செய்தன. தோட்டக்கலைக்கு எப்படி உதவி செய்தது என்றெல்லாம் அவர் விவரித்திருந்தார். காவிப்படையின் தலைவனாக-தங்களது மதவெறியை நியாயப்படுத்துவதற்கான ஒரு சித்திரமாக சிவாஜியை இந்துத்வா மதவெறியர்கள் முன்வைத்த போது, அதை எதிர்த்து சிவாஜியை ஏழைகளின் காப்பாளனாக, காவியத் தலைவனாக முன்வைத்தார் பன்சாரே. இந்து தேசியவாதத்தின் அடையாளமாக பகத்சிங்கை இதே காவிப்படையினர் முன்னிறுத்தியபோது, பகத்சிங்கின் மகத்தான சிந்தனைகள் பற்றியும் அவர் ஒரு கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் என்பது பற்றியும் தனது எழுத்தின் மூலம் சிவவர்மா எப்படி முன்வைத்தாரோ அதேபோல பன்சாரே செய்தார். 150 சமூகப் போராளிகளின் வரலாறு நூலான கதை கோலாப்பூரில் நூற்றுக்கணக்கான கிலோ தானியங்களையும் நெய்யையும் கொட்டி எரித்து நடத்தப்பட்ட மிகப்பெரும் யாகத்திற்கு எதிராக பெரும் போராட்டத்தை பன்சாரே வெற்றிகரமாக நடத்தினார். தபோல்கர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, `விவேக் ஜக்ருதி’ என்ற பெயரில் அறிவுப்பயணம் எனும் பிரச்சார இயக்கத்தை நடத்தினார். இதன்மூலமாக மக்களிடையே பகுத்தறிவுச் சிந்தனையை பரப்பும் போராட்டத்தையும் அவர் தொடர்ந்தார். அவரது 75வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டுமென்று கட்சித் தோழர்களும் அவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டவர்களும் விரும்பியபோது அதை உறுதியான முறையில் நிராகரித்தார். தனக்கு சிறுசிறு நிதி அன்பளிப்புகள் அளிப்பதற்கு பதிலாக சிறிய அளவில் ஒவ்வொருவரும் பிரசுரம் எழுதி வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதன்படி மகாராஷ்டிரா முழுவதும் 150 சமூகப் போராளிகளின் வாழ்க்கை வரலாறு சிறு நூல் வடிவமாக உருப்பெற்று வெளியிடப்பட்டன. அதேபோல அவர், ஒவ்வொரு கல்லூரியிலும் மகாத்மா ஜோதி ராவ் பூலே, ஷாகு மகாராஜ் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் பணிகள் குறித்து நூறு வகுப்புகளாவது நடத்தப்பட வேண்டுமென்று தீர்மானித்து களத்தில் இறங்கினார். ஒரு பன்முகக் கலாச்சார அமைப்பாக ஷ்ரமிக் பிரதிஸ்தான் எனும் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் வாயிலாக திரைப்பட விழாக்கள், பல்வேறு தலைப்புகளில் சிறப்பு வகுப்புகள், நூல் வெளியீடுகள் என இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக ஒரு விரிவடைந்த போராட்டத்தை நடத்தினார். கடந்த ஆறாண்டுகளாக தோழர் அன்னபாபு சத்தே நினைவாக சாகித்ய சம்மேளனங்கள் என்ற பெயரில் இலக்கிய மாநாடுகளையும் அவர் நடத்தி வந்தார். இதன் மூலமாக மக்களிடையே தங்களது சொந்த இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை நினைவுக்கு கொண்டுவரவும், அவற்றின் வாயிலாக சாதிய, வர்க்க, ஆணாதிக்க, மதவாத கருத்தாக்கங்களுக்கு எதிராக பெரும் கலகத்தைத் தூண்டவும் அவர் இடைவிடாது பணியாற்றினார். மத அடிப்படைவாதிகளிடம் சிக்கி எழுத்துரிமையும் பேச்சுரிமையும் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய அராஜக அரசியலின் சமீபகால உதாரணமாக தமிழ்நாட்டில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நேர்ந்த கதியினைக் குறிப்பிடலாம். இந்தப் பின்னணியில், தனது 80வயதிலும் மகாராஷ்டிராவில் தோழர் பன்சாரே பேச்சுரிமைக்கும் எழுத்துரிமைக்கும் ஆதரவாக இடைவிடாமல் எழுத்தாளர்களின் பேரணிகள், சிறப்பு மாநாடுகள், நாடகப் பட்டறைகள் என இயங்கிக் கொண்டே இருந்தார். குறிப்பாக இளைய தலைமுறையினரை ஈர்க்க, அவர்களிடையே விவாதத்தைத் தூண்ட, வலதுசாரி சக்திகளுக்கு எதிரான நிலைபாட்டை அங்கு விவாதங்களின் மூலமாக விளக்கிட தோழர் பன்சாரே பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். நாடெங்கும் ஒடுக்கப்பட்ட - ஒதுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தையும் மதவாத விஷத்தையும் கக்கிவரும் இந்துத்வா சக்திகளின் முயற்சிகளுக்கு எதிராக அறிவுப்பூர்வமாகவும் பகுத்தறிவுச் சிந்தனையை உயர்த்திப்பிடிக்கும் வகையிலும் அவர் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தினார். (எக்கனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி- 14.2.2015 இதழில் வெளியான கட்டுரை) தமிழில் - எஸ்.பி.ராஜேந்திரன் . நன்றி - இந்திய மாணவர் சங்கம், பாரதி புத்தகாலயம் நீதிபதி பி.பி.சாவந்த் சரங்க் பிளாட் எண் 14 ஜெனரல் ஜகநாத்போஸ்லே மார்க் பம்பாய் 400 021 அன்புள்ள கோவிந்தராவ் 29 மே 1988 நான் உங்கள் ‘சிவாஜி கோன் ஹோடா’ நூலைப் படித்தேன். நீங்கள் இந்த நூலை எழுதியதற்காக முற்போக்கு இயக்கங்களும், சமுதாயமும் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளன. இந்தப் புத்தகம் உண்மையில் மிகவும் பரவலாகப் படிக்கப்பட வேண்டும். குறிப்பாக, பிற்போக்காளர்களின் பொறியில் சிக்கியுள்ள இளைஞர்களிடம் இது எடுத்துச்செல்லப்படவேண்டும். இன்று இது அவசரமான, மிகவும் முக்கியமான கடமை. துவக்கத்தில் இது எல்லா மத அமைப்புக்களின் முக்கியமான பொறுப்பாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களிடம் சென்றுசேர்ந்தால் அது மிகப்பெரிய சாதனை ஆகும். இந்த ஆலோசனையை நீங்கள் பரிசீலித்து அதற்கேற்பத் திட்டமிடுவீர்கள் என்று நம்புகிறேன். உங்களுடைய மற்ற புத்தகத்தை இனிமேல் படிக்க வேண்டும். அடுத்து நாம் சந்திக்கும்போது மேலும் விவாதிப்போம். நட்புடன் உங்கள் பி.பி.சாவந்த் அவர் இந்தக்கடித்த்தை எழுதும்போது நீதிபதி பி.பி.சவந்த் பம்பாய் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தார். அடுத்து மிகவிரைவில் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மாவீரன் சிவாஜி - காவித் தலைவன் அல்ல காவியத்தலைவன் மாமன்னர் சத்ரபதி சிவாஜி பற்றி ஏராளமான கதைகள், நாவல்கள், நாடகங்கள், சிரிப்புத் துணுக்குகள், பாடல்கள், கதைப்பாடல்கள், வரலாறு, வாழ்க்கைச்சரித்திரம் என எழுதப்பட்ட எந்தவகையான இலக்கியத்திலும் சிவாஜியின் வாழ்வு அவரது காலம் பற்றிய பலவகையான எண்ணற்ற தகவல்களை நீங்கள் காணலாம். இவை மட்டுமல்ல திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. எண்ணற்ற அளவில் உரைகளும் பேச்சுக்களும் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த முயற்சி தொடர்ந்து முடிவில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. இவற்றிலிருந்தெல்லாம் பொதுக்கற்பனைகளால் உருவாக்கப்பட்டுள்ள சிவாஜியின் பிம்பம் அல்லது காலங்கள், வரலாற்று உண்மைகளோடு ஒத்துப்போகின்றன என்று உறுதியாக கூற முடியாது. ஒரு ஜனநாயகத்தில் மன்னனைப் புகழ்தல் நிலப்பிரபுத்துவம் என்பது இன்றைய காலத்துக்கு ஒவ்வாத ஒரு சமூக அமைப்பாகிவிட்டது. சிவாஜி நிலவுடைமைக் காலத்தைச் சார்ந்தவர். அத்தகைய அமைப்பில் அவர் ஒரு அரசராக இருந்தவர். உலகின் மற்றைய பகுதிகளைப் போலவே நமது நாடும் அந்த அமைப்பு முறையை விட்டுவிட்டது. மக்கள் நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்கப் போராடினார்கள். அரசர்களும் பிரபுக்களும் வரலாற்றின் குப்பைக் கூடைகளுக்குள் வீசியெறியப்பட்டார்கள். இவ்வாறு செய்தது மிகவும் சரியானது. நாம் அவர்களை மக்களாட்சி முறைக்கு மாற்றியதும் மிகச் சரியானது. சிவாஜியால் நிர்மாணிக்கப்பட்ட ராஜ்யம் அவரது இறப்புக்குப்பின் என்ன ஆயிற்று என்பதே நிலப்பிரபுத்துவம் ஏற்றுக் கொள்ளவோ, தொடரவோ கூடாத அமைப்பு முறை என்பதை நிரூபித்தது. இந்திய நிலப்பிரபுத்துவம் முற்போக்கான பிரிட்டிஷ் முதலாளித்துவத்தை எதிர்த்து நிற்கமுடியவில்லை. ஒரு சமூக அமைப்புமுறை என்ற வகையில் நிலப்பிரபுத்துவம் தேவையற்றது; நிராகரிக்கப்பட வேண்டியது என்பது மீண்டும் ஒரு முறை நிலைநாட்டப்பட்டது. அப்படியானால் மக்களாட்சியிலும் அரசர்கள் ஏன் மதிக்கப்பட்டார்கள்? இந்த மக்களாட்சிக் காலத்திலும் அந்த அரசரது சிந்தனைகளும் அவரது நினைவுகளும் நடைமுறைகளும் அவரது வாழ்க்கையும் இன்றும் நம்மை ஏன் ஈர்க்கின்றன? மற்ற எல்லா அரசர்களும் அல்ல; அவர்கள் எல்லாரும் நமது நினைவில் நிற்கவில்லை. எவர் ஒருவரும் அவர்களது பிறந்த நாட்களையோ, இறந்த நாட்களையோ கொண்டாடுவதில்லை. ஒருவேளை அவர்களது சந்ததியினர் செய்யக் கூடும். சில இடங்களில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் கொண்டாடக்கூடும். எனினும் அத்தகைய நிகழ்வுகள் பரவலாகவோ அல்லது உற்சாகத்தோடோ சிவாஜியைப் போலக் கொண்டாடப்படுவதில்லை. இது ஏன்? இந்த மன்னனுக்கு மட்டும் இவ்வாறு வித்தியாசமாக நடப்பதற்குக் காரணம் என்ன? தனது சமகால அரசர்களிடமிருந்து சிவாஜி எவ்வாறு வேறுபட்டிருந்தார்? சிவாஜியின் வாழ்வையும் அவரது காலத்தையும் பற்றிய ரகசியத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அவரது ஒப்பற்ற தன்மையைப் பற்றி நாம் அறிந்தாக வேண்டும். ராஜ்யத்தை ஸ்தாபித்தவர் முதலாவதாக சிவாஜி ஏற்கனவே உருவாக்கப்பட்ட அரியணையில் வாரிசு என்ற முறையில் எளிதாக அமர்ந்தவரல்ல. வாரிசு உரிமையை ஏற்றுக் கொள்வதற்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அதைப் போற்றிப் பாராட்டுவதிலும் எதுவும் இல்லை. இதுபோல் பல அரசர்கள் வெறும் வாரிசு உரிமைப்படி வந்துள்ளார்கள். சிவாஜி அவர்களைப் போன்ற ஒரு அரசரல்ல. அவர் ஒரு புதிய ராஜ்யத்தை உருவாக்கினார். ஒரு ராஜ்யத்தை உருவாக்குவது என்பது எளிதான ஒன்று அல்ல. சிவாஜியைப் பொறுத்தவரை அது மிகவும் கடினமானதாக இருந்தது. இருந்தாலும் அவர் அதைச் செய்தார். ஏற்கனவே இருந்த ஒர் அரியணையில் ஏறுவதற்கும், புதிதாக ஒன்றைத் தனது சொந்த முயற்சிகளால் உருவாக்குவதற்குமிடையே மாபெரும் வேறுபாடு உள்ளது. சிவாஜி தனது ராஜ்யத்தை உருவாக்கியபோது அவரது சமகாலத்தவர்கள் அத்தகைய ஒரு விஷயத்தைச் சிந்தித்துக்கூடப் பார்க்கவில்லை. அவர் ஒருவராகவே அதைச் சாத்தியமாக்க விட்டுவிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வின் நோக்கமாக இந்தப் பேரரசர் அல்லது அந்தப் பேரரசரின் அவையில் ஓர் இடத்தைப் பெறுவதும், அவர்களுக்கு விசுவாசத்தோடு சேவை செய்வதும், தங்களது கவுரவத்தை நிலைநாட்ட அவர்களைத் துதித்து எப்படியாவது அவர்கள் நம்பிக்கையைப் பெற்றுவிடவேண்டும் என்பதாகவே இருந்தது. இத்தகைய நேரத்தில்தான் சிவாஜி தனக்குச் சொந்தமான, ஒரு சுதந்திரமான ராஜ்யத்தை உருவாக்கச் சிந்தித்தார். அதற்காக சரியான திட்டத்தை வகுத்தார். நடைமுறையில் இறுதியாக அதை உருவாக்கினார். ஒருவேளை இவ்வாறு ஒரு ராஜ்யத்தை உருவாக்கியவர் சிவாஜி ஒருவர் மட்டுமே என்று இல்லாமல் கூட இருக்கலாம். மற்ற சிலரும் இருந்தார்கள். ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய அந்தச் சிலர் சிவாஜியைப் போல் மக்களின் மனங்களில் அன்போடு பெருமைக்குரிய இடத்தைப் பெற்றவர்கள் அல்ல. எங்கள் நோக்கம் எங்கள் தேசம் சிவாஜியுடையதற்கும் மற்றவர்களுடையதற்குமான ராஜ்யம் மற்றும் செயல்பாடுகளுக்கிடையே என்ன வேறுபாடு இருக்கிறது? அவருடைய ராஜ்யத்தில் வாழ்ந்த விவசாயிகளும், சாதாரண மக்களும், பெண்களும், தங்களுடைய நோக்கத்தைத்தான் சிவாஜி எடுத்துக் கொண்டிருக்கிறார் என நம்பினார்கள். அவர் ஸ்தாபித்தது தங்களுடைய ராஜ்யத்தைத்தான் எனக் கருதினார்கள். ஓர் அரசு, நல்லது அல்லது கெட்டது என்று சோதிக்க சிறந்த வழி எது? ஓர் அரசின் கீழ்வரும் பெரும்பான்மையான மக்கள் - சாதாரண மக்கள் - நல்ல அரசு என்று நம்புவதுதான் மிகச் சிறந்த அரசு. நாம் ஒரு மக்களாட்சியில் வாழ்கிறோம். இங்கே வேறு சில மக்களாட்சி நாடுகளும் உள்ளன. இந்த மக்களாட்சியில் வாழும் மக்களில் - சாதாரண மக்களில் - பெரும்பான்மையானோர் அது, அவர்களின் அரசு என்று உணர்கிறார்களா? தங்கள் நாடுகளில் நடைபெற்று வருபவை தங்களின் நன்மைக்காக என்று அவர்கள் நம்புகிறார்களா? என்னைப் பொறுத்தவரை இதற்கான நேர்மையான பதில் ‘இல்லை’ என்பதே. இந்த மக்களாட்சிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவை என்றபோதும் மக்களாட்சி என்ற பெயரால் நடைபெற்றுவரும் எதுவும் தங்கள் நலனுக்கானவை என மக்கள் திருப்தியடைவதில்லை. அரசு பற்றிய ஒரு நல்ல விளக்கம் உள்ளது. ‘அரசு என்பது மக்களிடமிருந்து உருவாகிறது. ஆனால் அது அவர்களிடமிருந்து தனிமைப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது’. இன்றைய மக்களாட்சி அரசு மக்களிடமிருந்து உருவாகி, மக்களிடமிருந்து விலகிச் செல்வது அதிகரித்து வருகிறது. ஆனால், இது சிவாஜியின் காலத்திய நிலப்பிரபுத்துவ அரசு இன்றைய மக்களாட்சியை விட சிறந்தது என்று கூறுவதற்காக அல்ல. அந்தக் காலத்திலிருந்து மூன்றரை நூற்றாண்டுகளாக நம்மைப் பிரித்து வைத்துள்ள நிலப்பிரபுத்துவம் நமக்குப் பயனற்றது. அதே போல் எந்தவகையான மக்களாட்சியும் இன்றைய வடிவில் சாதாரண மக்களுக்குப் பயனற்றதாகவும் உள்ளது. தன்னைத் தியாகப்படுத்திக் கொண்டு உற்சாகமூட்டுவது அந்தக் காலத்தில் விவசாயிகள் சிவாஜியால் வரித்துக்கொள்ளப்பட்ட இலட்சியங்களைத் தங்களது சொந்த இலட்சியங்கள் என்று நம்பினார்கள். அவரது நோக்கத்தோடு தங்களைத் தாங்களே அவர்கள் அடையாளம் கண்டுகொண்டார்கள். ஏராளமான நிகழ்வுகள் இதை எடுத்துக்காட்டுகின்றன. சித்தி ஜோகரும், ஃபாஸல்கானும் மிகப்பெரிய இராணுவத்தோடும், போர்த்தளவாடங்களோடும் பன்ஹாலா கோட்டையை முற்றுகையிட்டார்கள். மாதங்கள் கடந்த பின்னும் முற்றுகையின் பிடி சிறிதுகூடத் தளரவில்லை. நேதாஜி பால்கா, சித்தி ஹிலாலின் உதவியுடன் அந்த முற்றுகையை உடைக்க முயற்சித்தார். அந்த முயற்சி விரக்தியில் முடிந்தது. சத்ரபதியின் தளபதியும், இராணுவத்தளபதியும் பின்வாங்க நேர்ந்தபோது மிக மோசமாகத் தாக்கப்பட்டார்கள். தனது மகனைக் காப்பாற்ற முயன்ற விசுவாசமிக்க சித்தி ஹிலால் எதிரியின் கரங்களில் சிக்கினார். முற்றுகைக்குள் சிக்கிய சிவாஜிக்கு வெளியே செல்லும் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. முற்றுகையில் இருந்த சிறு துவாரத்தின் வழியாக விஷால்கட்டுக்கு சிவாஜி தப்பிச்செல்லும் ஒரு திட்டம் உருவானது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிவாஜியைப் போன்ற ஒரு போலி சிவாஜியை உருவாக்கினார்கள். அந்தப் போலி சிவாஜி ஒரு பல்லக்கில் அமர்ந்து சென்று எதிரிகளின் கைகளில் சிக்கினார். அவர் அடையாளம் காணப்படுவதற்குள் சிவாஜி ஏற்கனவே தப்பிச் சென்றுவிட்டார். இதற்கான எந்த முகாந்திரமும் சித்தி ஜோஹருக்குக் கிடைக்கவில்லை. போலி சிவாஜியாக இருந்தவர் சிவா என்ற ஏழை நாவிதர். அந்த சிவாவுக்கு தனது தலைவிதி என்னவாகும் என்பது நன்கு தெரிந்திருந்தது. தான் பிடிபடுவோம் என்பது அவருக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது. தான் கொல்லப்படுவோம் என்பதும் சந்தேகத்துக்கிடமில்லாமல் தெரிந்திருந்தது. இருந்தாலும் அவர் சிவாஜியின் வேடத்தை ஏற்றுக்கொண்டார். எதிர்பார்த்ததைப் போலவே அவர் பிடிபட்டார்: கொல்லப்பட்டார். நாவிதர் சிவா தன் திறந்த விழிகளோடு சாவை அணைத்துக் கொண்டது ஒரு பெரும் பரிசைப் பெற்றுக்கொள்வது அல்லது நிலச்சுவான்தாராக ஆகிவிடுவது என்ற நம்பிக்கையால் அல்ல. அவருக்கு உறுதியாகத் தெரியும் தான் கட்டாயம் இறந்துவிடுவோம் என்பது. மன்னர் சிவாஜி கட்டாயம் வாழவேண்டும். சிவாஜியின் இலட்சியம் தன்னுடைய சொந்த இலட்சியமே. அது விவசாயிகளின் நலனுக்காக. இதில் நாவிதர் சிவா திருப்தியடைந்தார். இத்தகைய உறுதிப்பாடு கொண்டவர் நாவிதர் சிவா ஒருவர் மட்டுமல்ல.. மாமன்னர் சிவாஜி பன்ஹாலாவிலிருந்து தப்பிவிட்டார். இதனால் எச்சரிக்கையடைந்த சித்தி ஜோஹர் சிவாஜியைப் பின்தொடர்ந்து துரத்தினார். சிவாஜி விஷால்கட் கோட்டையை அடைவதற்குமுன் சித்தி ஜோஹரிடம் பிடிபட்டுவிட்டால் சிவாஜியின் விதி கட்டாயம் முடிந்திருக்கும். ஆனால் அவர்கள் கோட்ஹிண்ட் கோட்டையைக் கடக்கவேண்டியிருந்தது. அந்தக் கணவாயில் பாஜி பிரபு தேஷ்பாண்டே ஒரு சில மாவ்லாக்களுடனும், மராத்தா படை வீரர்களுடனும் நின்றிருந்தார். அவரும் அவரது தோழர்களும் தங்கள் உயிர்களை இழக்கச் சித்தமாக இருந்தார்கள். இதன்மூலம் விஷால்கட் கோட்டையை அடைய சிவாஜிக்குப் போதுமான அவகாசம் கிடைக்கும். தவிர்க்கமுடியாத அந்த நிகழ்வு நடந்தது. பாஜி பிரபு வீழ்ந்தார். பல மாவ்லாக்களும் படுகொலை செய்யப்பட்டனர். இத்தகைய வீரச்செயல்கள் வரலாற்றில் பெயர்கூட இடம்பெறாமல் போய்விட்டன. பாஜி பிரபுவும், அந்தப் பெயர் தெரியாத மாவ்லாக்களும் ஏன் சண்டையிட்டு இறந்தார்கள்? அதே திடமான நம்பிக்கையால்தான். சிவாஜி வாழ்வதற்காக ஒருவர் சாவைக்கூட அணைத்துக் கொள்வார். ஏனெனில் அவர்(சிவாஜி) தாம் ஏற்றுக்கொண்ட நோக்கத்தை நிறைவேற்றுவார். அத்தகைய புனிதமான நோக்கத்துக்காக அவர்கள் மகிழ்வோடு இறப்பை எதிர்கொள்வார்கள். இதுதான் அவர்களின் திடமான நம்பிக்கை. இத்தகைய ஏராளமான நிகழ்வுகளை வரலாறு பதிவு செய்துள்ளது. ஔரங்கசீப்புக்கு விசுவாசமான ஆளுநர் மிர்ஸா ராஜா ஜெய்சிங்கிடம் மாமன்னர் சிவாஜி தோல்வியை ஒப்புக்கொண்டார் . மிர்ஸா ராஜா ஜெய்சிங்கிடம் கவர்ச்சிகரமான சமாதான உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு ஔரங்கசீப்பைச் சந்திக்கத் தாமாகவே சிவாஜி ஆக்ராவுக்குச் சென்றார். ஔரங்கசீப் சிவாஜியைச் சிறையில் அடைத்தார். ஆக்ரா சிறையிலிருந்து வெளியே செல்ல ஒருவழியும் தெரியவில்லை. மீண்டும் ஒருமுறை ஒரு புத்திசாலித்தனமான தந்திரத்தால் சிறையிலிருந்து தப்பினார். இரண்டுபேர் அவருடன் இருந்தனர். ஒருவர் சிவாஜியைப் போல படுக்கையில் படுத்திருந்தார். மற்றவர் அவரது பாதங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். சிவாஜி காணாமல் போனது வெளிச்சத்துக்கு வரும்முன் அவர் வெளியேறுவதற்குப் போதிய அவகாசம் கிடைக்கும் வகையில் அந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. உறுதியாகச் சாவை எதிர்கொண்டு அவருக்குப் பின்னால் இருந்தவர்கள் யார்? அவர்கள்தான் மாதாரி மெஹ்டரும், ஹிரோஷி பர்ஜான்டும். அவர்களது திட்டம் உடனடியாகவோ, அல்லது பிறகோ கட்டாயம் தெரிந்துவிடும் என்பது உறுதி. மாதாரிக்கும், ஹிரோஷிக்கும் தாங்கள் கைதுசெய்யப்பட்டு ஈவு, இரக்கமின்றிக் கொல்லப்பட்டுவிடுவோம் என்பது தெரியாதா? அவர்களுக்குத் தெரியும். இருந்தும் அவர்கள் ஏன் சாவை அணைத்துக் கொள்ளத் தயாரானார்கள்? மீண்டும் ஒருமுறை அதற்கான பதில் அதேதான். சிவாஜி ஏற்றுக்கொண்டுள்ள நோக்கம் மதிப்பிடமுடியாதது. அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக என்ன தியாகம் வேண்டுமானாலும், அதைச்செய்ய அவர்கள் தயார். மன்னர் சிவாஜி ஓர் அற்புதத்தை நிகழ்த்தினார். அந்த அற்புதம் அவரைப் பின்பற்றியவர்களிடம் தங்கள் உயிரைவிட சிவாஜியின் உயிர் மிகமிக முக்கியமானது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவரது வாழ்வுக்காக அவர்கள் சாகவும் துணிந்தார்கள். மற்ற அரசர்கள் இத்தகைய அற்புதத்தை நிகழ்த்திவிட முடியாது. அந்த அரசர்களுக்காகப் போரில் சண்டையிட்டவர்கள் யாரும் இல்லை என்பதல்ல. அந்த அரசர்களுக்காகப் போரிட்டு மடிந்தவர்களும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் செல்வத்தை அடைவதற்கோ அல்லது சிற்றரசர்கள் ஆவதற்கோ அல்லது இரண்டுக்குமாகவோ இறந்தவர்கள். அவர்களது தியாகம் ஓர் உன்னத இலட்சியத்துக்காக அல்ல. சிவாஜியின் இலட்சியத்துக்காகப் போர்வீரர்கள் மட்டும் பங்கேற்கவில்லை: மிக முக்கியமாகச் சாதாரண விவசாயிகளும், சிறு குடியானவர்களும் இந்த மகத்தான இலட்சியத்துக்காகத் தங்கள் பங்கைச் செலுத்தினார்கள். ஒரு இலட்சியத்துக்காக விவசாயிகள் பங்கேற்கும்போது அந்த இலட்சியம் உறுதியான வெற்றியைப்பெறும். அது மன்னர்களின் இலட்சியமாக மட்டும் இருப்பதில்லை என்பதால் வெற்றி பெறுகிறது. அது அனைவரின் பொது இலட்சியமாகி விடுகிறது. ஒரு சுயராஜ்ஜியத்தை அமைப்பதில் மக்களின் பங்கேற்பு என்ற இந்த வரலாற்று உண்மை மிக எளியமொழியில் நேரடி அறைகூவலாகக் கிராமியக் கதைப்பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘எச்சரிக்கையோடு இருங்கள். எப்போதும் பாய்ந்து முன்னேறுங்கள். நான் ஒரு கொல்லனைப் போல் உலைக்களத்தில் உருவாக்குவேன் உங்களை’. அந்தப் பாடகன் ஒரு அடிப்படையான நிகழ்ச்சியை இங்கே பாடிக்கொண்டிருக்கிறான். இது ஒரு மாபெரும் கிளர்ச்சியின் காலம். போர்வீரனை விட்டுவிடுங்கள்: ஒரு சிறு விவசாயி கூடத் தனது நிலத்தை எச்சரிக்கையோடு உழுகிறான். கடந்துசெல்லும் போர்வீரர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கிறான். அவர்கள் யாருடைய முகாமைச் சார்ந்தவர்கள்? எவன் ஒருவனாவது இந்த மகத்தான இலட்சியத்தைச் சீர்குலைக்க முயன்றான் என்றால் அவன் கட்டாயம் எதிர்க்கப்பட வேண்டியவனே. நான்கு குதிரைவீரர்கள் ஒருவேலியைத் தாண்ட உள்ளார்கள். அந்த நேரத்தில் 10-12 வயதுள்ள அந்தச் சிறிய பையன் (இன்னும் அவன் காதுகளில் பூவிதழ்கள்!) அவர்களை அழைத்து எச்சரிக்கிறான், ‘நில்லுங்கள்! இல்லாவிட்டால் நான் உங்களைத் துண்டுதுண்டாக வெட்டிவிடுவேன். நீங்கள் யார்? எங்கே போகிறீர்கள்?’ அந்தப் பொடியன் ஆயுதமேந்திய குதிரைவீரர்களுக்குச் சவால் விடுகிறான். பயம் அவனைத் தொடவே இல்லை. இதைச் செய்யவேண்டும் என அவன்கூட நம்புகிறான். ‘இது என்னுடைய கடமை. மன்னர் சிவாஜி நல்லவைகளைச் செய்கிறார். நான் அதில் பங்கேற்க வேண்டும்’. அந்தப் பாடகன் பின்னர் பாடுகிறான்: ‘அந்தக் குழந்தை பயமுறுத்தியது யாரை? சிவாஜியை! அவன் அதற்கு முன் சிவாஜியைப் பார்த்ததில்லை. அவனுக்கு மன்னனைப் பற்றித் தெரியாது. சிவாஜிக்கு உதவுவது என்றால் என்ன என்பதுகூட அவனுக்குத் தெரியாது. இருந்தாலும் அவன் அதனைச் செய்கிறான் தன் முன் உள்ள ஆபத்தைப் புறக்கணித்துவிட்டு!’ இத்தகைய உணர்வைத் தனது சகாக்கள், தனது படைவீரர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் உருவாக்குவதில் சிவாஜி வெற்றி பெற்றார். இதில்தான் அவரது வித்தியாசம் அடங்கியிருக்கிறது. அசாதாரணமான இலக்குகளை அடையப் போராடும்போது அசாதாரணமான வீரதீரச்செயல்கள் நடந்தேறுகின்றன. தங்கள் சொந்த சுயநலத்திற்காக நிலங்களை அடையப் போராடி உயிர் நீத்தவர்கள் எவரையும் வரலாறு கண்டுகொள்வதில்லை. போர்க்களங்களில் கிளர்ந்து போராடும்போது சிறியவர்களும், பெரியவர்களும் வீரதீரச் செயல்களைப் புரிகிறார்கள். போர்க்குரல்களால் ஈர்க்கப்பட்டு அவர்கள் சாவைக்கூட்த் தழுவிக் கொள்கிறார்கள். அத்தகைய செயல்கள் நிலத்தைப் பாதுகாப்பதற்காக அல்லது கைப்பற்றுவதற்காகக் கூட இருக்கலாம். ஆனால் தங்களுக்கு ஒரு சல்லிக்காசுகூடக் கிடைக்காது என்று தெரிந்தே சாவை அணைத்துக் கொள்பவர்களின் வீரதீரச் செயல்கள் முற்றிலும் வித்தியாசமானவை. சிவாஜியுடன் இருந்தவர்களும், அவரது விவசாயிகளும் எத்தகைய சுயநலமுமின்றி அவரது இலட்சியத்தில் பங்கேற்கிறார்கள் என்பது மறுப்புக்கிடமில்லாதது. சிவாஜியின் செயல்பாடுகளையும், அவரது ஆட்சியையும் தங்களது நெஞ்சங்களில் ஏந்தி நின்றார்கள். ஏனெனில் அவர் மேற்கொண்டுள்ளது தங்கள் சொந்த வேலை என்றும், அவருடைய ஆட்சி, தங்களது சொந்த ஆட்சி என்றும் நினைத்திருந்தார்கள் என்பது துளியளவும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால் இது எப்படி நடந்திருக்கும்? அவரது இலட்சியத்தைத் தங்கள் சொந்த இலட்சியமாக அவரது விவசாயிகள் நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு உண்மையில் சிவாஜி என்ன செய்தார்? அவரது சமகாலத்தவர்களோ அல்லது மன்னர்களோ இந்த வகையான விவசாயிகளின் விசுவாசத்தைப் பெற முடிந்ததில்லை. இங்கு உண்மையில் எழும் கேள்வி ‘மன்னர் சிவாஜி எப்படி இதைப் பெற்றார்?’ இந்தக் கேள்விக்கான பதில் சிவாஜி தன்குடிமக்களை எவ்வாறு மதித்தார் என்பதில் அடங்கியுள்ளது. இதில் அவர் தனது சமகால மன்னர்களிடமிருந்து மிகவும் பெருமளவுக்கு வேறுபட்டிருந்தார். நிலப்பிரபுத்துவமும், கிராம அமைப்பும் அன்றைய காலங்களில் சாமான்ய மக்கள், யார் அரசன் என்பதைப்பற்றிப் பெரிதும் கவலைப்பட்டதில்லை. எந்த அரசன் அரியணையிலிருந்து அகற்றப்பட்டான்? அதை எவன் கைப்பற்றினான்? இதைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்பட்டதில்லை. இதற்கான எளிய காரணம், யார் ஒருவன் அரசனாக இருந்தாலும் விவசாயிகளைப் பொறுத்தவரை அவர்களது அன்றாட வாழ்வை அது எந்த விதத்திலும் பாதித்ததில்லை. கிராமம் கிட்டத்தட்ட சுயதேவைப் பூர்த்தியுடையதாக இருந்தது. கிராமம் சொந்தமாகத் தனித்தியங்கும் அமைப்பாகவே இருந்தது. அங்கே பட்டீல், குல்கர்ணி என 12 வகையான பலூடாக்கள் அந்த அமைப்புக்காக வேலைசெய்தார்கள். அவர்கள் இந்தக் ‘கிராமம்’ என்ற வண்டியை ஓட்டினார்கள். ஆட்சியாளர்கள் மாற்றம் - யார் வென்றார்? யார் தோற்றார்? - என்பது கிராமத்தின் வாழ்க்கைச் சக்கரத்தைப் பாதிக்கவில்லை. அலுவலர்கள் வரிகளை எத்தகைய தடையுமின்றி வசூலித்தார்கள். அவர்கள் விவசாயிகளைச் சுரண்டினார்கள். இந்த அலுவலர்கள் விவசாயிகளுக்கு இழைத்த அநீதிகளை எவர் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. தங்களைக் கவனிக்க எவர் ஒருவரும் இல்லை என்பதை அறிந்திருந்த விவசாயிகள் எவரிடமும் புகார் செய்யக்கூடாது என்பதை அறிந்திருந்தார்கள். ஆட்சியாளர்கள் மாறினார்கள். ஆனால் குல்கர்ணிகளும், பட்டீல்களும், நிலப்பிரபுக்களும், தேஷ்முக்குகளும், ஜாஹிர்தார்களும் தங்கள் இடங்களில் நிலைத்து நின்றிருந்தார்கள். அவர்கள் ஒருபோதும் மாறவே இல்லை. ஒரே இரவில் அவர்கள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொள்வார்கள். “அரசர் இறந்துவிட்டார்: அரசர் நீடூழி வாழ்க” என்ற முழக்கம் அவர்களைப் பொருத்தவரை உண்மையற்றதாக இருந்தது. வெற்றிபெற்ற அரசனின் கால்களில் தங்கள் விசுவாசத்தைச் சமர்ப்பிக்க அவர்கள் விரைந்தார்கள். அதற்குக் கைமாறாக அவர்கள் தங்கள் அலுவலர் பதவிகளை உறுதிசெய்து நிலைத்து நின்றார்கள். அவர்கள் விவசாயிகளைக் கொடுமைப்படுத்துவதைத் தொடர்ந்தார்கள். அவர்களிடமிருந்து வரிகளைப் பறித்தார்கள். அரசரின் கஜானாவை நிறைத்தார்கள். விவசாயிகளோ தாங்கள் சுரண்டப்படுவதை மட்டுமே அறிந்திருந்தார்கள். எந்த அரசனின் கஜானா தங்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டவைகளால் நிரப்பப்பட்டது என்பதைப்பற்றி அவர்கள் ஏன் கவலைப்படவேண்டும்? எல்லா அரசர்களும் கொள்ளைக்காரர்கள்தான் என விவசாயிகள் உறுதியாக நம்பினார்கள். எனவே அவர்கள் ஓர் அரசனிடமிருந்து இன்னோர் அரசனை வேறுபடுத்திப் பார்க்கவில்லை. மாபெரும் வரலாற்றாளரான வி.கே.ராஜ்வாடே தனது ‘மஹிகாவாடிச்சி பாஹர்’ நூலின் முன்னுரையில் “இந்துஸ்தானத்தின் எல்லா ஆட்சியாளர்களும் கடந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக – அவர்கள் உள்நாட்டினராக இருந்தாலும் அல்லது அன்னியர்களாக இருந்தாலும் - சுயநலமிகளாக, திருடர்களாக, கொள்ளைக்காரர்களாக இருந்தார்கள். இந்து மக்கள் தங்கள் இதயங்களில் இந்த எல்லா அரசர்களும், அவர்களது அரசுகளும் ஒட்டுண்ணிகளாகவும், கொள்ளைக்காரர்களின் கூட்டமுமாகவே உள்ளார்கள் எனப் பெரிதும் நம்பினார்கள்” என எழுதினார். தொடர்ந்து திருட்டுக் கொடுப்பதற்குள்ளானவர்கள், யார் திருடன் என்றோ, அவன் எந்தச் சாதியைச் சார்ந்தவன் என்பதையோ அறிந்துகொள்வதில் அக்கறை கொண்டிருக்கவில்லை. ஓர் அரசன் வந்தான், ஓர் அரசன் போனான். அது விவசாயிகளிடத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பிரிட்டனிலிருந்து உலகின் ஒவ்வொரு தொலைதூர மூலைகளிலுமிருந்த அற்புதமான செல்வ ஆதாரங்களை ஆய்வு செய்த மார்க்ஸ் தனது மகத்தான நண்பருக்கு 14 ஜூன் 1853ல் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் ‘…போர், பஞ்சம், நோய்கள் போன்றவற்றால் அந்தக் கிராமங்கள் தங்களுக்குள் காயமடைந்தாலும், பாழடைந்து ஆறுதலற்றுத் தனிமைப்பட்டாலும் கூட, அதே எல்லை, அதே அக்கறைகளுடன், அதே குடும்பங்கள் காலம் காலமாகத் தொடர்கின்றன. அங்கு வசிப்பவர்கள் அந்த அரசுகளின் எல்லைகள் உடைபடுவதிலோ, பிரிக்கப்படுவதிலோ எவ்வித பாதிப்புக்களையும் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்வதில்லை. கிராமம் முழுவதும் ஒன்றாகவே நீடிக்கும் பொழுது, யாரிடம் அரசியல் அதிகாரம் மாறியிருக்கிறது? அல்லது எந்த அரசனிடம் அது முழுவதும் உள்ளது? என்பது பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை. அதன் உள்ளார்ந்த பொருளாதாரம் எவ்வித மாற்றமுமின்றி நீடிக்கிறது’ என்று குறிப்பிட்டார். அரசனுக்கும் விவசாயிகளுக்குமிடையே அங்கு உயிரோட்டமான உறவுகள் இருப்பதில்லை. அரசனின் மதம் விவசாயிகளின் வாழ்வை எந்த விதத்திலும் பாதித்ததில்லை. ஆட்சியாளர்கள் மாறினாலும் கூட அவர்கள் ஏற்கனவே நிலவிவந்த அமைப்பு முறைகளை ஏற்றுக்கொண்டு மக்களைச் சுரண்டுவதைத் தொடர்ந்தார்கள். நிலப்பிரபுக்கள் விவசாயிகளைச் சுரண்டுவதையும், கொள்ளையடிப்பதையும், துன்புறுத்துவதையும் கூட அரசர்கள் சிறிதும் கண்டுகொள்வதில்லை. அத்தகைய கொடுமைகள் பற்றி அரசர்கள் கவலைப்படுவதில்லை. நிலப்பிரபுக்கள் அரசனுக்குச் சேரவேண்டிய வரியை எவ்வளவு காலம் ஒழுங்காகச் செலுத்துகிறார்களோ அவ்வளவு காலமும் அவனது ஆட்சியில் ‘எல்லாமுமே நன்றாக’ இருந்தன! இத்தகைய ஒரு சமுதாயத்தில்தான் சிவாஜி தனது பணிகளைத் துவக்கினார். அவர் தனது ஆட்சிப்பகுதியை ஸ்தாபித்தார். அப்போதே, அந்த நொடியிலேயே மாற்றம் நிகழ்ந்தது. அரசருக்கும், விவசாயிகளுக்குமிடையே ஒரு தொடர்பு நிலைநாட்டப்பட்டது. விவசாயிகள் தங்கள் அரசரைத் தங்கள் சொந்தக் கண்களால் பார்க்க முடிந்தது. அரசர் அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்தார். அவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களைப்பற்றி அவர்களிடமே விசாரித்தறிந்தார். அவர்கள் இனிமேல் எத்தகைய அநீதிகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படக் கூடாது என எச்சரித்தார். அவர் தனது அதிகாரத்தை அவர்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தினார். பல்வேறு நிலப்பிரபுக்களையும், ஜாகிர்தார்களையும், வடந்தர்களையும், பட்டீல்களையும், குல்கர்ணிகளையும் இதுவரை அவர்கள் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளுக்காகக் கண்டித்தார். புறக்கணிப்புகளிலிருந்தும், தரகு வேலைகளிலிருந்தும் அடக்கிவைத்தார். நிலவுடைமையாளர்கள் அரசாங்கத்தின் வேலைக்காரர்கள்தானே தவிர அதன் எஜமானர்கள் அல்ல என்று விவசாயிகளிடம் கூறினார். இப்போது அவர்கள் அரசரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் என்ன செய்யவேண்டும்? எதைச் செய்யக்கூடாது? என்பதற்கான சட்டங்களும், விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது விவசாயிகள் நிலவுடைமையாளர்களிடமிருந்து தொந்தரவுகள், துன்புறுத்தல்கள் வந்தபோது நியாயம் கேட்பதற்கான தைரியத்தைப் பெற்றார்கள். கொடூரமான அலுவலர்கள், நிலவுடைமையாளர்கள் மீது விசாரணைகள் நடப்பதும், அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த நலன்களுக்காக அத்தகைய ஈனச்செயல்களில் ஈடுபடாதவாறு கடுமையான தண்டனைகளை அளிக்கப்படுவதும் சாத்தியமாயிற்று. சிவாஜியின் விவசாயிகளுக்கு இவையெல்லாம் புதிதாக இருந்தன. இது வேறு எங்கும் நடைபெறாததாகவும் இருந்தது. அவர்கள் தங்கள் அரசரையும், அவரது செயல்பாடுகளையும் பார்க்கும்போது தங்கள் பார்வையில் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்தார்கள். அரசரையும், அவரது நோக்கங்களையும் தங்களுக்குச் சொந்தமானதாக ஆக்கிக்கொண்டார்கள். தனது விவசாயிகளிடம் அன்புகொண்ட அரசர் சிவாஜியின் தந்தை சாஹாஜி பூனா மாகாணத்தின் தலைவராக இருந்தவர். சிவாஜி பதின்ம வயதுச் சிறுவனாக இருந்தபோதே தாதாஜி கொண்டதேவின் வழிகாட்டுதலில் தனது மாகாணத்தை மேற்பார்வை செய்திட ஏற்பாடு செய்தார். அந்த மாகாணம், முகலாயப்பேரரசு மற்றும் அடில்ஷாஹி எல்லைகளுக்கு நடுவே அமைந்திருந்தது. இந்த இரு ஆட்சியாளர்களும் ஒருவர் மீது ஒருவர் படையெடுத்தபோதெல்லாம் தொல்லைக்குள்ளானது. நகரங்களும், கிராமங்களும் அடிக்கடி எரியூட்டப்பட்டன. ஒப்பந்தங்கள் இந்தப் பகுதியைத் தனிமைப்படுத்தின. புகழ்பெற்ற வரலாற்றுக் குறிப்பான ‘சம்ஷத் பாஹர்’ இத்தகைய கோரமான நிகழ்வுகளை வரைபடங்களோடு விளக்குகிறது. பாழடைந்த நகரங்களும், குடியிருப்புக்களும் வனங்களாயின. நரிகளும், ஓநாய்களும், வேட்டை மிருகங்களும் இவற்றின் மீது சுதந்திரமாக நடமாடின. விவசாயமும், விவசாயிகளும் இத்தகைய சூழ்நிலையில் இருந்தபோதுதான் சிவாஜியும், தாதாஜியும் இந்தப்பகுதியின் நிர்வாகத்துக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இந்தக் கிராமங்களைத், தாங்களாகவே இவற்றில் மீண்டும் வாழ்வதற்காக வந்தவர்களுக்கு சிவாஜி கொடுத்தார். இந்த நிலங்களில் உழுது பயிர்செய்ய முயன்றவர்களுக்கு விதைகளையும், இடுபொருள்களையும் கொடுத்து அவர்களுக்கு உற்சாகமூட்டினார். புதிதாக விவசாயத்தின் கீழ்வந்த அந்த நிலங்களுக்கான வாடகையையும், வரியையும் மிகக் குறைத்து நிர்ணயித்தார். வரிவசூலிப்போர் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப வரிவசூலிக்கும் நடைமுறையை ஒழித்துக் கட்டினார். அவர் நிலங்களை அளந்தார். அவ்வாறு அளக்கப்பட்ட அளவுக்கேற்ப வரிகளை நிர்ணயித்தார். சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட வரி எவ்வளவோ அதை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவுகளைப் பிறப்பித்தார். தனது உத்தரவுகள் எழுத்திலும், செயலிலும் உணர்வுபூர்வமாக நடைமுறைப்படுத்தப் படுகின்றனவா என்பதைக் கண்டிப்புடன் பார்த்தார். வறட்சிக்காலங்களில் வாடகை செலுத்துவதிலிருந்து விவசாயிகளுக்கு விலக்களித்தார். எந்த விளைச்சலும் இல்லாதபோது விவசாயிகளால் எவ்வாறு வரிசெலுத்த முடியும்? சிவாஜி, விவசாயிகளின் நிலைமைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்தார். அவர் வரி செலுத்துவதிலிருந்து மட்டும் விலக்களிக்கவில்லை. அவர் உண்மையில் அவர்களுக்கு மேலதிக உதவிகளையும், நிவாரணங்களையும் அளித்தார். அந்த நிலப்பிரபுக்கள் “பண்டைக் காலங்களிலிருந்து அங்கு பல்வேறு நிலவுடைமையாளர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். தேஷ்முக், தேஷ்பாண்டே, தேசாய், பட்டீல், குல்கர்ணி, கோட், மிராஸ்தார் மற்றும் பிறர் உள்ளிட்டவர்கள் அவர்கள். அவர்கள்தான் மஹல் மற்றும் கிராமங்களின் தலைவர்கள். விவசாயிகளிடமிருந்து வருவாயை வசூலிப்பது அவர்களுடைய வேலையும், உரிமையும் ஆகும். அரசு அதிகாரிகள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து வரி வருவாயை வசூலிக்க மாட்டார்கள். அவ்வாறு வசூலிக்கும் முக்கியமான பொறுப்பு நிலப்பிரபுக்களிடமிருந்தது. இதன் விளைவாக இந்தக் கிராமங்களிலிருந்த மக்கள் மீது தங்கள் பிரபுத்தனத்தைப் பிரயோகித்தார்கள். அவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வரிகளைப் பறிமுதல் செய்தார்கள். ஒரு கிராமம் அரசுக்கு இருநூறு அல்லது முந்நூறு ரூபாய்களை வரியாக அளிக்க வேண்டுமென்றால், இந்த நிலப்பிரபுக்கள் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ரூபாய்களை வரியாகப் பறித்தார்கள். இவ்வாறு அவர்கள் தங்கள் சொந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசையும், மக்களையும் ஒருசேர ஏமாற்றினார்கள். அவர்கள் மாளிகைகளிலும், கோட்டை கொத்தளங்களிலும் வாழ்ந்து துப்பாக்கிகளையும், வாட்களையும், பெரும் எண்ணிக்கையிலான வீரர்களையும் குவித்து வைத்து கர்வம் கொண்டவர்களாக உருவானார்கள். இந்த நிலவுடைமையாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் அறிந்தபோது அவர்களிடமிருந்து அதிகப்பணம் கேட்டார்கள். இருந்தபோதிலும், பல சக்தி வாய்ந்த தேஷ்முக்குகளும், நிலப்பிரபுக்களும் அவர்களுடைய அதிகார பீடங்களுக்கு மதிப்பளிக்கவில்லை. இவையெல்லாம் மாகாணத்துக்கு மாகாணம் சட்டத்தை மீறும் குண்டர்களும், கொள்ளையர்களும் உருவாக வழிவகுத்தன.” இந்தப் பின்புலத்துக்கு எதிராகத்தான் சிவாஜி விவசாயிகளிடமிருந்து வரிகளை வசூலிக்க ஒரு கட்டுப்பாட்டை விதித்தார். இப்போது அதைப் பார்ப்போம். ’நில வருவாய்த்துறை அதிகாரி மாநிலத்திலிருந்த மொத்த நிலங்களையும் அளந்து, அந்த நிலங்களில் யார் உழுதார்களோ அவர்களது பெயர்களைத் தனது பதிவேட்டில் பதிவு செய்தார். அவர் நிலத்தை அளப்பதற்கு ஒரு குச்சியைப் பயன்படுத்தினார். அதனுடைய நீளம் ஐந்து முழங்களும், ஐந்து பிடிகளும் கொண்டது. ஒரு கைமுழம் என்பது பதினான்கு அங்குல நீளம் கொண்டதாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த நில அளவைக்குச்சி 82 அங்குல நீளம் கொண்டது. 22குச்சிகள் கொண்டது 1 பிகாவாகவும், 22 பிகாக்கள் கொண்டது 1 சாவார் ஆகவும் கருதப்பட்டது. பயிர்களின் மதிப்பீடு வயலின் விளைச்சலைப் பார்வையிட்டு நிர்ணயிக்கப்பட்டது. விளைவிக்கும் விவசாயி மொத்த விளைச்சலில் மூன்று பங்கைத் தனக்கு வைத்துக் கொள்ளவும், அரசுக்கு இரண்டு பங்கு தரவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் அரசுக்கு உரியது எந்த வகையாகவும் அல்லது பணமாகவும் செலுத்தப்படலாம். வறட்சி போன்ற சிக்கலான காலங்களில் அரசு விவசாயிகளுக்குத் தாராளமாகக் கடன்களை வழங்கியது. இந்தக் கடன்கள் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் தவணை முறையில் திரும்பச் செலுத்தப்படலாம். ஏதேனும் புதிய நிலங்கள் விவசாயத்துக்கு உட்படுத்தப்பட்டால் அந்த விளைச்சல்தாரருக்குத் தன்னோடு வேலை செய்யச் சொந்தமாக ஆடு மாடுகள் இல்லாவிட்டால் அவருக்கு அரசால் ஆடுமாடுகள், விதைகளை மட்டுமல்ல: தானியங்களும், பணமும் அவர் விளைச்சலை அறுவடை செய்யும்வரை தாக்குப்பிடிக்க வழங்கப்பட்டது. இது நான்கு ஆண்டுகளுக்குப் பின் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு நிலங்களை உழுவதற்கு அளிக்கப்பட்ட உரிமைகள் எல்லா உழத்தக்க நிலங்களையும் வேளாண்மையின் கீழ் கொண்டுவரச் செய்தன. விவசாயிகளின் வருமானத்திற்கேற்ற வகையில் மட்டுமே வரிகளை வசூலிக்க வேண்டும் என அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்கள். எனவே வரி வசூலில் எத்தகைய நிர்ப்பந்தங்களும் நிலவவில்லை. நிலவுடமையாளர்களும், நிலப்பிரபுக்களும் அவிழ்த்துவிட்ட எல்லா ஒழுங்கீனங்களையும் சிவாஜி வீழ்த்தினார். அவர் வரிகளை வசூலிக்க அதிகாரிகளை நியமித்தார். அதுவரை இருந்த நிலப்பிரபுக்களோ, நிலவுடைமையாளர்களோ விவசாயிகளை எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என்பதை உறுதிப்படுத்தினார். அவர்களது வருமானம் முந்தைய ஆட்சியில் எவ்வளவாக இருந்ததோ அந்த அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனவே அவர்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வரியை வசூலிக்கக்கூடாது. இப்போது அவர்கள் தங்கள் பங்கை அரசு நிதியிலிருந்து எத்தகைய சிரமமுமின்றிப் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டிலும் அரசிடமிருந்து ஒப்பளிப்பை அவர்கள் பெறவேண்டும். இது அவர்களது விருப்பார்ந்த, சட்டத்திற்குப் புறம்பான நடத்தைக்குக் கடிவாளமிட்டது. விவசாயிகளை அவர்களது நுகத்தடியிலிருந்து விடுதலை செய்தது. விவசாயிகள் விடுதலை பெற்று மகிழ்ந்தனர். மகாராஜா, மக்களை அடிமைப்படுத்திய கிராம அதிகாரிகளின் - தேஷ்முக்குகளின், தேஷ்பாண்டேக்களின் - மாளிகைகளையும், கோட்டை கொத்தளங்களையும் அழித்தொழித்தார். அத்துடன் அவர்கள் இத்தகைய நாகரீகமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் விவசாயிகள் வாழ்வதைப்போல எளிய, போலித்தனமற்ற வீடுகளில் வாழவேண்டும் என்று உத்தரவிட்டார். விவசாயிகளையும், அவர்களது நிலங்களையும் இந்த அளவுக்குப் பாதுகாத்த அரசருக்குத் தங்களையே அர்ப்பணித்துக் கொள்ளாமல் இருப்பார்களா? சிவாஜியின் செயல்பாடுகள் இவ்வாறே தொடரவும், விரிவடையவும் வேண்டும் என்று எண்ணமாட்டார்களா? விவசாயச் சிறுவன் மிகச்சிறிய வயதில் தனது உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் சிவாஜியின் எதிரிகளுக்குச் சவால் விடாமல் இருப்பானா? சிவாஜியும், பெண்கள் பாதுகாப்பும் சிவாஜியின் வாழ்வில் சில உண்மைகள் விவாதங்களுக்கு அப்பாற்பட்டவை. எவர் ஒருவரும் அதைச் சந்தேகித்ததில்லை. இருந்தாலும், எல்லாரும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்கள் என உறுதியாகச் சொல்ல முடியாது. பெண்கள்மீதான அவரது மனப்பாங்கு அத்தகையது. பெண்கள் – குறிப்பாக ஏழைப்பெண்கள் - நிலப்பிரபுத்துவ காலங்களில் பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்பட்டார்கள். சிவாஜியின் காலமும் இதற்கு விதிவிலக்காக இருந்திருக்க முடியாது. அரசர்களையும், இளவரசர்களையும் விட்டுவிடுங்கள், அவர்களது தலைமை நிர்வாகிகளும், நிலவுடைமையாளர்களும், அவர்களது தேஷ்முக்குகளும், நிலப்பிரபுக்களும், ஏழை எளியவர்களின் மகள்களையும், மருமகள்களையும் எப்போதெல்லாம் அவர்கள் விரும்புகிறார்களோ, அப்போதெல்லாம் அனுபவிக்கும் பொருட்களாக நடத்தினார்கள். அவர்கள் பட்டப் பகல்களில் கற்பழிக்கப்பட்டார்கள். அங்கே ஓருவர் கூட நியாயம் வழங்க முன்வரவில்லை. நீதி வழங்கத் தாங்களாகவே முன்வந்தவர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் அதே குற்றவாளிகள்தான். அத்தகைய குற்றவாளிகள் தங்களுக்குத் தாங்களே பெருமையும் அந்தஸ்தும் மிக்க பட்டங்களைச் சூட்டிக்கொண்டார்கள். இத்தகைய காலகட்டத்தில் இந்த விஷயத்தில் சிவாஜியின் மனப்பாங்கு முற்றிலும் மாறுபட்டதாக, அடிப்படையிலேயே வித்தியாசமானதாக இருந்தது. ரஜ்ஜா கிராமத்தில் பட்டீல்களின் கதை மிகவும் நன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராமத்தின் பட்டீல் ஒரு பட்டப்பகலில் ஒரு ஏழை விவசாயியின் இளம் மகளைப் பிடித்துக் கற்பழித்தான். தன் வாழ்வின் எஞ்சிய நாட்களைத் துன்பத்துடன் வாழ்வதற்குப் பதிலாக அந்தப் பெண் இறந்து போவதையே விரும்பினாள். அவள் தற்கொலை செய்து கொண்டாள். அந்த ஒட்டு மொத்த கிராமமும் அழுதது. ஆனால் ஊமையாக. சிவாஜி இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டார். அந்தப் பட்டீல் கைது செய்யப்பட்டுப் பூனாவுக்குக் கொண்டுவரப்பட்டான். கடுமையான தண்டணையாக அவனது கைகளும், கால்களும் வெட்டி எறியப்படத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு சொல்லப்பட்டது மட்டுமல்ல: தாமதமின்றி உடனடியாக நிறைவேற்றவும் பட்டது. அந்த ஒட்டுமொத்த மாவல் பிரதேசமும் தனது காதுகளையும் கண்களையும் நம்பவில்லை. ஒரு ஏழை விவசாயியின் மகளைக் கற்பழித்ததற்காக ஒரு பட்டீலை – நிலவுடைமையாளரை - தண்டிப்பதற்குச் சிறிதும் தயங்காத சிவாஜியின்பால் விவசாயிகள் ஈர்க்கப்பட்டார்கள். அவர்கள் தங்கள் சொந்த வாழ்வையே சிவாஜியின் இலட்சியத்திற்காகத் தியாகம் செய்யத் தயாரானதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. பெண்களை அத்தகைய கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் இலட்சியம் அவர்களின் சொந்த இலட்சியம். ஓர் அரசன் தனது ஆட்சியில் நிலவுடைமையாளர்களின் ஆதரவு தேவை என விரும்பலாம். ஆனால், அது தவறு இழைக்கும் நிலப்பிரபுக்களைத் தண்டிக்கும் நீதியின் மதிப்புக்கு மிக வலுவான உறுதிப்பாடு கொண்டதாக இருக்கவேண்டும். இந்த உறுதிப்பாட்டை சிவாஜி ஏராளமாகப் பெற்றிருந்தார். இதுதான் ‘சிவ கார்யா’ என்ற சிவாஜியின் இலட்சியத்தில் விவசாயிகள் ஏன் பங்கேற்றார்கள் என்பதற்கான காரணமாக விளங்கியது. நமது காலங்களில் கூட கிராமங்களிலும், நகரங்களிலும் ஏழை விவசாயிகளின் மகள்களும், மருமகள்களும் கற்பழிக்கப்படுகிறார்கள். சிவாஜியின் வாரிசுகள் என்று உரிமை கொண்டாடி, அவரது பெயரால் முழக்கங்களை எழுப்புவோர் என்ன செய்கிறார்கள்? அந்தக் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுத் தண்டிக்கப் படுகிறார்களா? கை கால்களை வெட்டுவது இருக்கட்டும்: அத்தகைய வழக்குகள் நீதிமன்ற வாயிற் கதவுகளையாவது சென்றடைகின்றனவா? அந்தக் குற்றவாளிகள் அவர்களது அந்தஸ்துக்கும், செல்வாக்குக்கும் ஏற்றவகையில் எவ்வளவு விரைவில் விடுவிக்கப்பட வேண்டுமோ அவ்வளவு விரைவில் விடுவிக்கப்படுவதில்லையா? மக்களாட்சியிலும் ஒருவர் சிவாஜியை நினைவுகூர இதுதான் காரணம். ஆம். சிவாஜி நினைவுகூரத்தக்க அளவில் மதிப்பு மிக்கவர்தான்! சிவாஜியின் பெயரை உச்சரித்துக்கொண்டே தங்கள் அன்புக்குரியவர்களை, உறவினர்களை, அதிகாரிகளை, அவர்களது பாவங்களை மூடிமறைப்பவர்களுக்கும் சவால்விட நாம் சிவாஜியைக் கட்டாயம் நினைவுகூரவேண்டும். இதற்காகவே நாம் சிவாஜியை நினைத்துப் பார்க்கவேண்டும். ரஞ்சா பாட்டிலின் கதை ஒரு விதிவிலக்கு அல்ல: அங்கே மேலும் பல கதைகளும் உள்ளன. தளபதி சுகுஜி கெய்க்வாட் 1678ல் போலாவாடி கோட்டையை முற்றுகையிட்டார். அந்தக் கோட்டையின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் ஒரு பெண். அவரது பெயர் சாவித்திரி தேசாய். இந்த வீரப்பெண் அந்தக் கோட்டையை 27 நாட்கள் வீழ்ந்து விடாமல் பாதுகாத்தார். ஆனால், இறுதியாக சுகுஜி அந்தக் கோட்டையைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார். வெற்றியின் போதையில் சாவித்திரியைக் கற்பழித்தார். சிவாஜி இதைக் கேள்விப்பட்டு மிகுந்த கோபம் அடைந்து சுகுஜியின் கண்களைக் குருடாக்கி எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்துத் தண்டித்தார். சுகுஜி தனது வெற்றிகரமான தளபதியாக இருந்த போதிலும் சிவாஜி அந்தக் காமுகனை மன்னிக்கவில்லை. அவரால் அதைச் செய்யமுடிந்தது. ஏனென்றால், ‘ஒரு பெண்ணின் பெருமை அவள் யாராக இருந்தாலும் என்ன விலைகொடுத்தும் பாதுகாக்கப்படவேண்டும்’ என்பதில் உண்மையான நம்பிக்கை கொண்டிருந்தார். கல்யாண் சுபேதாரின் மருமகள் பற்றிய கொண்டாடப்பட்ட ஒரு கதை, பல கவிதைகளும், பாடல்களும் எழக் காரணமாக இருந்தது. அந்த அழகிய முஸ்லீம் இனப்பெண் சிவாஜியின் வெற்றிகரமான போர்வீரர்களால் அவரது தர்பார் மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டு ஒரு பரிசாக சிவாஜிக்கு அளிக்கப்பட்டாள். சிவாஜி அவளைப் பார்த்துவிட்டுச் சொன்னார், ‘என் தாயார்தான் இவ்வளவு அழகாக இருந்தாரோ?’ இத்தகைய வார்த்தைகளை உச்சரிக்க ஒருவருக்கு உயர்ந்த குணாதிசயமோ, அழகின் மீதான வளமான மனப்பாங்கோ தேவைப்பட்டிருக்கும். அத்தகைய ஒரு பெண் இன்று நாகரீகமற்ற, ‘சிவபக்தர்கள்’ என்று அழைக்கப்படுவோர் முன் வந்தால் என்ன நடக்கும் என்று நம்மால் கற்பனை செய்ய முடியுமா? உணமையான சிவாஜிக்கும், பொய்யான சிவ பக்தர்களுக்கும் இடையே இந்த வேறுபாடு இருக்கிறது. சிவாஜி தனது தளபதிகளிடமும், போர்வீரர்களிடமும், ‘எந்த ஒரு பெண்ணும் முஸ்லீமோ அல்லது இந்துவோ போர்க்களங்களில் துன்புறுத்தப்படக் கூடாது’ என எச்சரித்தார். அவர் தனது உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப் படுகின்றனவா? எனக் கண்காணித்தார். அன்றைய நாட்களில் இராணுவ முகாம்களுக்கு வைப்பாட்டிகளையும், விபச்சாரிகளையும் கொண்டுசெல்வதும், கொண்டாட்டங்களை மேற்கொள்வதும் ஒருவழக்கமான நடைமுறையாக இருந்தது. இந்து மற்றும் முஸ்லீம் அரசர்களும், அவர்களது தளபதிகளும் இதைச் செய்தனர். எதிரிநாட்டுப் பெண்களைக் கடத்தி வருவதும், அவர்களைக் கற்பழிப்பதும், இறுதியாக அவர்களை வைப்பாட்டிகளாக மாற்றுவதும் வழக்கமாக இருந்தது. சிவாஜி எவர் ஒருவரும் அத்தகைய வைப்பாட்டிகளையோ, அல்லது விபச்சாரிகளையோ அல்லது பெண் வேலையாட்களையோ தங்களுடன் முகாம்களுக்கு அழைத்துவரக் கூடாது என ஒரு கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார். எந்த ஒரு பெண்ணும் வைப்பாட்டியாக ஆக்கப்படக் கூடாது. நாம் 21ஆம் நூற்றாண்டில் நுழைந்து விட்டோம். மகாராஷ்டிரா ஒரு முற்போக்கான மாநிலம் என்று கூறிக்கொள்கிறோம். இன்றும் கூடப் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். அத்தகைய குற்றங்களைச் செய்பவர்களை ஆதரிப்பவர்கள் தங்களை சிவாஜியின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு அவரது பெயரால் முழக்கங்களை எழுப்பிவருகிறார்கள். இன்று சிவாஜி தாமாகவே நேரில் தோன்றினால் என்ன நடக்கும்? இந்த சிவபக்தர்கள் மீது எந்தவகையான நடவடிக்கையை மேற்கொள்வார்? சிவாஜியும் ஆட்சிமொழியும் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. மகாராஷ்டிராகூட ஒருமராத்தி மொழி மாநிலமாகி இன்றோடு 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இன்றும் மாநில நிர்வாகம் ஆங்கில மொழியிலேயே நடைபெற்று வருகிறது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் நோக்கம் எப்போதாவது நிறைவேறியிருக்கிறதா? நாம் அன்னிய ஆட்சியாளர்களைக் கடலுக்கு அப்பால் துரத்தி விட்டோம். ஆனால் நமது முதுகிலிருக்கும் ஆங்கில மொழிச் சுமையிலிருந்து நம்மால் விடுபட முடியவில்லை. நமது உள்ளூர் சாகிப்கள் – தலைவர்கள் - ஆங்கிலத்தில் பேசுவதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் பேசுவது ஒரு அந்தஸ்தின் அடையாளமாகவும், அவ்வாறு பேச முடியாதவர்கள் நாகரிகமற்றவர்களாகவும், பிற்பட்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள். சிவாஜியின் காலத்தில் நிர்வாக மொழியாக பெர்சிய மொழி இருந்தது. எந்த ஒரு மொழியும் மரபு வழியாக நல்லதோ அல்லது கெட்டதோ அல்ல. ஆனால், மக்களால் பெர்சிய மொழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இயல்பாகவே ஒரு மொழியால் நடத்தப்படும் நிர்வாகம் அந்த மக்களால் புரிந்துகொள்ளப்படாததாக இருந்தால், அது அந்த மக்களிடம் எத்தகைய விளைவையும் ஏற்படுத்தாது. நிர்வாகத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை சிவாஜி கண்டார். அவர் மிகவும் ஆழ்ந்து சிந்தித்து நிர்வாக மொழியின் சுருக்கத்தைத் தேர்வு செய்யும் வேலையைத் துவக்கினார். நிர்வாக மொழியாக மராத்தி மொழியை ஆக்கினார். இப்போது விவசாயிகள் நிர்வாகத்தோடு நெருக்கமாக உணர்ந்தார்கள். சிவாஜியின் ராஜ்ஜியம் தங்களுடைய சொந்த ராஜ்ஜியம் என்று கருதத் தொடங்கினார்கள். சிவாஜியும் விவசாயிகளும் ஏழை எளிய மக்கள் பிரிவைச் சார்ந்த விவசாயப் பெண்களின் மீதான சிவாஜியின் மனப்பாங்கு, அவரது சமகால அரசர்களிடமிருந்து எவ்வாறு மாறுபட்டு இருந்தது என்பதைப் பார்த்தோம். அதே போன்றதொரு மனப்பாங்கை விவசாயிகளின் உடமைகளின் மீதும் கொண்டிருந்தார். எந்த ஒரு பொறுக்கியும் தனது உரிமை என்று விவசாயிகளின் உடமைகளைக் கவர்ந்துகொள்ளக்கூடாது. இது ஒரு வழமையான நடைமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. போர்களும் அப்போது தினசரி நிகழ்வுகளாக இருந்தன. ராணுவமும், காலாட்படை வீரர்களும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்தனர். படைவீரர்கள் ஒரு கிராமத்தைச் சுற்றி முகாமிட்டிருந்தால் விவசாயிகளின் உடமைகளுக்கு என்ன நேரும்? காலாட்படையினர் எவ்விதத் தங்குதடையுமின்றி விளைந்து நிற்கும் பயிர்களினூடாகக் கும்மாளமிடுவார்கள். விவசாயிகள் ஆண்டு முழுவதுமாக தங்கள் கடின உழைப்பால், தங்கள் வியர்வைகளைத் தண்ணீராக்கி அறுவடைக்கு தயார் செய்த பயிர்கள் தரைமட்டமாகும். விவசாயிகளின் சொந்த அரசரின் இராணுவம் இதைச் செய்தால் யாரிடம் உதவிகோர முடியும்? அவர்களின் குரலுக்கு அனுதாபத்தோடு செவிமடுப்பவர் யார்? விவசாயியால் தன் விதியை நொந்துகொண்டு ஆதரவற்றவராய் வீட்டில் முடங்கியிருப்பதை விட வேறு எதையும் செய்யமுடியாது. படைவீரர்கள் எதை விரும்பினார்களோ அதை எவ்விதப் பயமுமின்றிச்செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். இத்தகைய தருணத்தில்தான் சிவாஜி தனது படைகளுக்கு ‘விவசாயிகளால் வளர்க்கப்பட்ட காய்கறிகளின் ஓர் இலையும்கூடத் தொடப்படக்கூடாது’ என உத்தரவிட்டார். தங்கள் அன்றாடத் தேவைகளுக்கான பொருள்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் எனத் தனது வீரர்களைக் கேட்டுக்கொண்டார். கொஞசம் கற்பனை செய்து பாருங்கள். அதுவரை ஆண்டாண்டு காலமாக படைவீரர்கள் தங்கள் குதிரைகளின் காலடிக் குளம்பின்கீழ், பயிர்களை நாசமாக்குவதைப் பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகள், இப்போது சிவாஜியின் படைகள் மிகக் கவனமாக விளைந்து நிற்கும் பயிர்களைத் தவிர்த்துச் செல்வதைக் காணும்போது எத்தகைய உணர்வைப் பெறுவார்கள்? தங்கள் பயிர்களின்மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ள அரசரைப்பற்றி எத்தகைய உணர்வைப் பெறுவார்கள்? அவருடைய இலட்சியத்தைத் தங்கள் சொந்த இதயங்களில் ஏற்றுக்கொள்ள மாட்டர்களா? மற்றவர்கள் பயிர்களை நாசப்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர்கள் தங்கள் சக்தியைப் பயன்படுத்துவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஒரு கிராமத்திற்கு அருகில் படைகளும் அதன் தலைமைகளும் முகாமிடும்போது என்ன நடந்தது? குதிரைகளுக்கான வைக்கோல் கிராமத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. கிராம அதிகாரிகளான பட்டீல் அல்லது குல்கர்ணிகள் அந்த ஒட்டுமொத்த கிராமத்தையும் அவர்களுக்குச் சேவை செய்ய அணிதிரட்டினார்கள். படைகளும், அதன் தலைமைகளும் இத்தகைய ஒரு வாழ்க்கை முறையை வழக்கப்படுத்திக் கொண்டபோது, விவசாயிகள் தங்கள் மீது எது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதோ அதைத் தங்கள் விதி என்று ஏற்றுக்கொண்டபோது ஒரு மாபெரும் மனிதனாக தோன்றித் தனது படைகளுக்கு அசாதாரணமான உத்தரவுகளைப் பிறப்பித்தார். காய்கறிகளின் ஓர் இலைகூட தொடப்படக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருங்கள். குதிரைகளுக்குத் தேவையான வைக்கோல் பணம் கொடுத்து வாங்கப்படவேண்டும். எந்த வகையிலும் விவசாயிகளுக்கு ஒரு தொந்தரவும் ஏற்பட்டுவிடக்கூடாது. அவர் கட்டளைகளைப் பிறப்பித்ததோடு நின்றுவிடவில்லை. அவற்றை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தினார். இத்தகைய மரியாதை விவசாயிகளுக்கும் அவர்களது கடுமையான உழைப்புக்கும் அபூர்வமானதாக இருந்தது. இது விவசாயிகளின் ஒப்புவமையற்ற விசுவாசத்தை அவருக்கு ஈட்டித் தந்தது. காலப்போக்கில் அத்தகைய தலைமைகளையும், படைவீரர்களையும் இன்று காணமுடிவதில்லை, ஆனால் புதிய தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய – படைவீரர்கள் என்றில்லாவிட்டாலும்- கார் அணிவகுப்புக்கள் உள்ளன. நவீன காலத் தலைவர்கள் போர்க்கள நடவடிக்கைகள் எதற்கும் போவதில்லை; ஆனால் அவர்கள் ‘ஆய்வுகள்’ என்ற பெயரில் தங்கள் பரிவாரங்களுடன் கார் அணிவகுப்போடு பல இடங்களில் முகாமிடுகிறார்கள். இந்த நவீனப்படைகள் தங்களுக்குத் தேவையானவைகளை எவ்வாறு பெற்றுக்கொள்கின்றன? அவர்களுக்குக் கறிகளையும், கோழிகளையும் தருபவர் அதற்கான விலையைப் பெறுகிறாரா? இந்த புதிய தலைவர்கள் தங்கள் செலவுகளுக்கான பணத்தைத் தங்கள் சட்டைப் பைகளிலிருந்தோ அல்லது சம்பளத்திலிருந்தோ தருகிறார்களா? அவர்கள் தாங்கள் வாங்கும் பொருள்களுக்குப் பணம் கொடுக்கிறார்களா? உண்மையில் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் தங்கள் வீடுகளிலும், அலுவகங்களிலும் சிவாஜியின் படத்தை மாட்டிக் கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள். தங்கள் ஒவ்வொரு மூச்சிலும் சிவாஜியைப் புகழ்கிறார்கள். அவர்கள் சிவாஜியிடமிருந்து எதைக் கற்றுக்கொண்டார்கள்? உண்மையில் சிவாஜி யார்? ‘காய்கறிகளின் ஓர் இலைகூடத் தொடப்படக் கூடாது’ என்ற சிவாஜியின் கண்டிப்பான உத்தரவை நாம் அவர்களிடம் சொல்லமுடியுமா? இந்த அரசன் தன்னுடைய சுயராஜ்ஜியத்தைப் பாதுகாக்கும் பணியில் சாதாரண மக்களுக்கு எந்தத்தொந்தரவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் அசாதாரணமான அக்கறை கொண்டிருந்தார். சிவாஜியின் காலத்திய இந்த ஒழுக்கவியல் நீதிமுறையை ராமச்சந்திரபந்த் அமார்த்தியா பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காணலாம். இந்தப் பல்வேறு உத்தரவுகளும் அமார்த்தியாவின் அறிவு நுணுக்கத்தை மட்டுமல்ல மக்கள் மீது கொண்டிருந்த பாசத்தையும் வெளிப்படுத்துகின்றன. கடற்படைக்கு இயல்பாகவே மரம் முக்கியமானது. அடர்ந்த காடுகளில் உத்தரங்கள் வளமாக உள்ளன. இருந்தாலும் அங்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் பாருங்கள். கடற்படைக்கு மாமரம் மற்றும் பலாமரங்களின் தடிகள் பெருமளவில் பயன்படும். இந்த மரங்கள் ஓரிரண்டு ஆண்டுகளில் வளர்ந்தவை அல்ல. விவசாயிகள் அவற்றை நட்டார்கள். தங்கள் சொந்தக் குழந்தைகளைப் போலப் பராமரித்தார்கள். அவற்றை நாம் வெட்டினால் அவர்களது ஆழ்ந்த கவலைகளுக்கு அளவே இருக்காது. ஒரு மரம் வறண்டு(இறந்து) போவதாக காணப்பட்டாலும் அந்த மரத்தின் உரிமையாளரிடமிருந்து விலைக்கு வாங்கப்படவேண்டும். அதுவும் கூட அந்த மரத்தை விட்டுத்தர அவரை சம்மதிக்கச் செய்து, அவர் முழுத் திருப்தி அடைந்து அவரது கைகளாலேயே வெட்டித்தர வேண்டும். சிவாஜியின் சொந்த வார்த்தைகள் சிலவற்றை ராஜ்வாடே தனது ஒன்பதாவது தொகுப்பில் பதிவுசெய்துள்ளார். அவரது குதிரைப்படை சிப்லன் அருகில் முகாமிட்டபோது சிவாஜி தனது அலுவலர்களிடையே எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக்கூடாது என்று சிலவற்றை எடுத்துக் கூறினார். ‘மழைக்காலங்களில் பயன்படுத்துவதற்காக மக்கள் வைக்கோலை இருப்பு வைத்திருப்பார்கள், அது கீழே கிடக்கும். இதைக் கவனிக்காமல் யாராவது ஒருவர் சொக்கப்பனை கொளுத்தினாலோ அல்லது குளிருக்குப் புகை பிடித்தாலோ அந்த வைக்கோல் தீப்பற்றி ஒவ்வொருவருக்கும் பெரும் துன்பம் இழைத்துவிடும். ஒட்டுமொத்த குதிரைப்படையும் அழிக்கப்பட்டுவிடும்; குதிரைகளின் இறப்புக்கு நீங்கள்தான் பொறுப்பாளியாக்கப்படுவீர்கள்’ அல்லது இதைப் படியுங்கள்: ‘உங்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. எது தேவைப்பட்டாலும் சந்தையிலிருந்து பணம் கொடுத்தே வாங்கப்பட வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால், மக்களுக்கு தீங்கு செய்தால் அவர்கள் முகலாயர்களே மேல் என்று உணர்வார்கள்…’ அவரது சமகாலத்தவர்களில் தங்கள் மக்கள் மீது இத்தகைய கருணை கொண்ட ஓர் அரசனையோ அல்லது நிலப்பிரபுவையோ நம்மால் காண முடியவில்லை. சிவாஜி தன் மக்கள் மீது கொண்டிருந்த பாசமும் கருணையும் வேறு வகையானது. எனவே அவர் மீதான அவர்களின் மறுதலையான விசுவாசமும் மிக உயர்ந்த தரத்திலானதாகும். படைகள் தங்கள் சொந்த மக்களையே அடிமைகளைப் போலவும், வைப்பாட்டிகளைப் போலவும் நினைத்துக் கொண்டு விவசாயிகளின் பொருட்களையும் செல்வத்தையும் கொள்ளையடிப்பதும், நாசம் செய்வதும், அவர்களது மகள்களையும் மருமகள்களையும் கற்பழிப்பதும் நடந்தபோது, சிவாஜியின் படைகள் குற்றமற்றவர்களாக நடந்து கொண்டார்கள். சிவாஜியின் இராணுவம் மாற்றமடைந்தது எப்படி? என்ன காரணம்? இது மிகவும் முக்கியமான கேள்வி. இதற்கான பதிலை சிவாஜியின் பெரும் குணாதிசயத்திலிருந்து மட்டும் காண முடியாது. இத்தகைய மாற்றத்திற்கு அவரது உத்தரவுகள் காரணமாக இருந்தன என்பதும் பொருத்தமானதல்ல. இந்தக் கேள்விக்கு சரியான பதிலைக் காண அவரது இராணுவத்தின் அமைப்பு முறையையும் அது நிலைத்திருந்ததற்கான நோக்கத்தையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். விவசாயிகளின் இராணுவம் மற்ற அரசர்கள் நிலையான இராணுவத்தை வைத்திருந்தார்கள். போர் செய்வது அவர்களது தொழில். தங்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் போர்களில் சண்டையிடுவதன் மூலம் சம்பாதித்தார்கள். தங்கள் வீடுகளை விட்டு வெளியே இருந்த வீரர்களால் உழப்படவேண்டிய நிலங்கள் கவனிக்கப்படாமல் வறண்டன. அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. எனவே வீரர்கள் பொறுப்பற்றவர்களாக மாறினார்கள். இவ்வாறு சம்பளம் பெற்ற வீரர்கள் மக்களைப் பற்றிய அக்கறையில்லாதவர்களாக ஆனார்கள். அவர்களது மனப்பாங்கு விவசாயிகளின் பெண்களையோ, உடைமைகளையோ பாதுகாக்கும் நிலையில் இல்லை. சிவாஜியின் இராணுவம் அத்தகைய தொழில்முறை வீரர்களைக் கொண்டதல்ல. அங்கே நிலையான இராணுவம் என்ற ஒன்றே இல்லை. ஆனால் பெரும்பான்மையான வீரர்கள் உழவு வேலைபார்க்கும் விவசாயிகள். அவர்கள் உண்மையில் நிலங்களைப் பண்படுத்தினார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களோடு வசித்தார்கள். அதே நேரத்தில் அவர்கள் படைவீரர்களாகவும் இருந்தார்கள். கிராம எல்லைகளைத் தாண்டிச் செல்வது அவர்களுக்கு வழக்கமான ஒன்று. சீமொல்லங்கான் என விஜயதசமி நாளில் பங்கேற்கச் செல்வதும், அட்சய திருதியை நாளில் தங்கள் குடும்பங்களுக்குச் சென்று நிலத்தில் வேலை செய்வதும் வாடிக்கையானது. குடும்பத்தோடும், நிலத்தோடும் நெருக்கமான உறவுகொண்டு வாழும் இத்தகைய வீரர்கள் மற்ற விவசாயிகளின் நிலம் மற்றும் உடைமைகளின் மீது அக்கறை கொண்ட மனப்பான்மை பெற்றிருந்தார்கள். அவர்கள் மற்றவர்களின் பெண்கள் மற்றும் மகள்களை மதித்தார்கள். யாராவது ஒருவருடைய பண்ணையில் உள்ள பயிர்களைக் காணும்போது தங்கள் சொந்த நிலங்களில் உள்ள பயிர்களை நினைத்தார்கள். அவர்கள் புதிய பெண்களைப் பார்க்கும்போது தங்களின் சொந்த தாய்மார்கள், மனைவி மற்றும் மகள்களாக நினைத்தார்கள். அதன்பின் அவர்கள் தங்கள் வலிமையைப் பயன்படுத்தவில்லை. அவர்களைக் கற்பழிக்கவில்லை. அவர்கள் வீடுகளுக்கும், பயிர்களுக்கும் தீயிடவில்லை. ஒரு விவசாயியின் நிலத்துடன் உயிரோட்டமான உறவுகளைக் கொண்டுள்ள ஒருவன் கொள்ளையடிப்பவனாக மாற மாட்டான். சமூகத்தின் எந்தப் பிரிவிலிருந்து, எந்த வர்க்கத்திலிருந்து ஒரு போர்வீரன் வருகிறான் என்பது மிகவும் முக்கியமானது. இங்கே இன்னொரு மிக முக்கியமான குறிப்பு உள்ளது. மற்ற அரசர்களின் இராணுவம் கொள்ளைக்காரர்களின் இராணுவம். கொள்ளையடிப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். மற்ற பிற அரசர்கள் ஏன் ராஜ்யங்களை விரும்புகிறார்கள்? கொள்ளையடிப்பதற்காக இல்லையென்றால் வேறு எதற்காக? அவர்கள் கொள்ளையிடவில்லையா? மிகவும் ஆடம்பரங்களில் புரள்வதை வழக்கமாகக் கொண்டவர்கள் தங்கள் இராணுவத்தைக் கொண்டு விவசாயிகளைக் கொள்ளையிடுவதன் மூலம் அதை நிகழ்த்தினார்கள். அவர்கள் நீதிநெறிகளின் மீது ஏன் அக்கறை கொள்ளப்போகிறார்கள்? அவர்கள் விவசாயிகளின் உடைமைகளைப் பாதுகாப்பார்களா? சிவாஜி ஸ்தாபித்த ராஜ்யம் கொள்ளையிடுவதற்கல்ல. அவர்களுடைய இராணுவத்தின் நோக்கமும் அதுவல்ல. அதற்கு மாறாக காலங்காலமாக நடைபெற்றுவரும் அத்தகைய கொள்ளைகளை முடிவு கட்டுவதற்காக இராணுவம் உருவாக்கப்பட்டது. முரட்டுத்தனமான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்ட. ஒடுக்குமுறைக்கு அச்சுறுத்தலாக எழுபவர்கள் ஒடுக்குமுறையாளர்களாக ஆக மாட்டார்கள். இதற்கு சிவாஜியின் படை எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் கொள்ளையடிக்கவே இல்லை என்று பொருள் அல்ல. அவர்கள் எதிரியின் நிலங்களைக் கொள்ளையடித்தார்கள். சூரத் கொள்ளை நன்கு அறியப்பட்டது. ஆனால் அது செல்வத்தை கொள்ளையடிப்பதற்காக நடத்தப்பட்டது. எனவே அது அவசியமாயிற்று. அது பெண்களைக் கற்பழிப்பது, போன்ற பிற ஒடுக்குமுறைகளில் ஈடுபடவில்லை. இங்கே மேலும் குறிப்பிட வேண்டிய ஒன்று. மற்ற பிற அரசர்கள் தங்களுடைய படை வீரர்களுக்கு சம்பளம் கொடுத்ததில்லை. அதற்கு பதில் கொள்ளையடித்ததில் ஒரு பகுதி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இயல்பாக எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ அவ்வளவுக்கு கொள்ளையிடத் தூண்டப்பட்டார்கள். சிவாஜி கொள்ளையடித்ததில் ஒரு பங்கு தரும் நடைமுறையை ஒழித்தார். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அரசு கஜானாவில் செலுத்தி அவர்களின் வேலைக்கான சம்பளம் அளிக்கும் புதிய நடைமுறையாக அது மாற்றியமைக்கப்பட்டது. வெளிப்படையாக படைவீரர்களுக்கு அதிகம் கொள்ளையடிக்க வேண்டும் என்ற தனிப்பட்ட தேவை எதுவும் இருக்கவில்லை. அவர்கள் – படைவீரர்கள் -கொள்ளையிட்டார்களா? இல்லையா? கொள்ளையடித்தது பெரிதா சிறிதா? என்பதைக் கருதாமல் தங்கள் சம்பளத்தைப் பெற்றார்கள். இது தனிப்பட்ட காரியங்களுக்காகக் கொள்ளையிடும் வழக்கத்தை படைவீரர்கள் விட்டுவிடுவதில் முடிந்தது. சிவாஜியின் தனிப்பட்ட ஒழுக்கம், குற்றம் குறையில்லாதது. அவரது எல்லா உத்தரவுகளும் மிகத் தெளிவானதும், நோக்கங்களைக் கொண்டதாகவும் இருந்தது. இந்த உத்தரவுகளை மீறியவர்களை மிகக் கடுமையாகத் தண்டித்தார். அவர் தனது ராணுவத்தை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளிடமிருந்து உருவாக்கினார். அவரது படைவீரர்கள், விவசாயம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்களிடையே உயிரோட்டமான உறவு கொண்டவர்கள். அவர்களுக்கு அவர் படையை வழங்கினார். இறுதியாக அவர் தனது வழியை அநீதியையும், கொள்ளையையும் முடிவுகட்டுவதற்காக அர்ப்பணித்தார். இவை எல்லாம் அவரது இராணுவத்தின் குணவியல்புகளை வடிவமைப்பதற்கு உதவின. குடியானவர்களும் சிவாஜியின் இராணுவம் கொள்ளையடிக்கும் கும்பல் அல்ல; அதற்கு மாறாக அவர்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட சேவகர்கள் என நம்பினார்கள். இராணுவம் விவசாயிகளைப் பாதுகாத்தது, பதிலுக்கு விவசாயிகள் இராணுவத்தை ஆதரித்தார்கள். இராணுவத்திற்கும், விவசாயிகளுக்குமிடையேயான உறவு தங்களது நலன்களுக்காக அரசு நடைபெற வேண்டும் என்ற தேவையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மக்கள் தங்கள் சொந்த இராணுவத்தைக் கண்டே அச்சம் கொள்ளக்கூடாது. இராணுவமும், விவசாயிகளும் ஒருவருக்கொருவர் உதவிகரமானவர்களாக அமைந்தால் மட்டும்தான் ஒருவர் தனது இலட்சியத்தில் வெற்றி காண முடியும். மக்களும், இராணுவமும் அத்தகைய உறவுகொள்ள இங்கு நவீனகால முன்னுதாரணங்கள் உள்ளன. வியட்னாமின் அனுபவங்கள் நம் மனங்களில் புதுவதாக ஒளிர்கின்றன. வர்த்தகம் – தொழில் பாதுகாப்பு நவீன அரசுகள் எல்லாம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது கடுமையான வரிகளை விதிக்கும் கொள்கையைப் பின்பற்றி வருகின்றன. இது உள்நாட்டு வணிகத்தையும், தொழில்களையும் பாதுகாக்கும் கொள்கை. ஆனால் மத்திய காலத்தில், ஒரு நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் சிவாஜி உள்ளூர் வணிகத்தைப் பாதுகாக்க இத்தகைய வரியை விதித்தார் என்பது ஆச்சரியமளிக்கிறது. சிவாஜி 1671 டிசம்பரில் குடால்-ன் சர்சுபேதாரான, நர்ஹரி ஆனந்தராவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் சங்கமேஷ்வரில் உப்பின் மீதான ஆக்ட்ராய் வரி விதிப்பதில் விழிப்போடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் அதே அதிகாரிக்கு ஆக்ட்ராய் வரியை மிக அதிகமாக விதிக்குமாறு அறிவுறுத்தினார். இல்லாவிட்டால் வெளியார் இதில் ஏகபோகம் கொண்டவர்களாக உருவாகி உள்ளூர் வணிகம் சாத்தியமற்றதாக ஆகிவிடும் என எச்சரித்தார். இது அவரது தொலை நோக்குப் பார்வையின் ஓர் அம்சம். அவர் தனது சுயராஜ்யத்தில் விவசாயத்தோடு வணிகத்திலும் கவனம் செலுத்தினார். அவரது காலத்தில் ‘டச்’ வணிகர்கள் மஹாராஷ்டிராவில் வாணிபம் செய்து வந்தனர். அவர்கள் சிவாஜியின் ராஜ்யத்திலும் அதற்கு அனுமதி கோரினர். அவர் அனுமதி அளித்தார். ஆனால் அவர் சில நிபந்தனைகளை விதித்தார். அந்த நிபந்தனைகளில் ஒன்று ஆக்ட்ராய். ஒரு டச் நிறுவனம் அவரது ராஜ்யத்தில் வணிகம் செய்ய 1677 ஆகஸ்ட் 24ல் பிறப்பிக்கப்பட்டு, அனுமதியளிக்கப்பட்ட உத்தரவு ’டச் நிறுவனம் ஜின்ஜி பிரதேசத்தில் தனது வியாபாரத்தை நடத்த அனுமதிக்கப்படுகிறது. டச் நிறுவனம் தங்கள் பொருட்கள் மீது 2.5 சதவீத ஆக்ட்ராய்-ஐ கடலூரில் செலுத்தவேண்டும். ‘ஏற்றுமதி இறக்குமதி பற்றி முன்கூட்டியே தகவல்கள் அளிக்கப்பட்டால் அலுவலர்கள் பொதிகளை ஆய்வுக்காகத் திறக்கமாட்டார்கள். ஹவில்தார் அதிகாரிகள் உரிய வரி செலுத்தப்பட்டாலொழிய அந்தப் பொருட்களை உள்ளே அனுமதிப்பதில் இருந்து தடுக்கப்படுகிறார்கள்.’ என்று கூறுகிறது. அடிமை வாணிகத்தின் மீதான தடை அந்த உத்தரவில் இன்னொரு மிக முக்கியமான பிரிவும் இடம்பெற்றிருந்தது. அது இதுவரை கவனிக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. அது கூறுகிறது, ‘முஸல்மான்களின் ஆட்சியில் நீங்கள் எவ்விதத் தடையுமின்றி ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக விற்கவும் வாங்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தீர்கள். ஆனால் எனது ஆட்சியின் கீழ் நீங்கள் ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறீர்கள். நீங்கள் அவ்வாறு செய்ய முயற்சித்தால் எங்கள் மக்கள் உங்களைத் தடுப்பார்கள். இந்தப் பிரிவு கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.’ இந்தியாவில் பல்வேறு இடங்களில் அடிமை வாணிகம் நடைபெற்று வந்தபோது, இந்திய ஆண்களும், பெண்களும் கைப்பற்றப்பட்டு வலுக்கட்டாயமாக அடிமைகளாக்கப்பட்டு, வெளிநாடுகளில் தொழிலாளர்களாக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சிவாஜி அடிமை விற்பனையைத் தடை செய்தார். ஏனெனில் அவர் உழவர் குடிமக்களின் அரசர். எல்லா சாத்தியமான வழிகளிலும் உழவர் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதே சிவாஜி அரசின் கொள்கையாக இருந்தது. மத உணர்வாளர், ஆனால் வெறியர் அல்ல சிவாஜியும் மதமும் பொதுவாக சிவாஜியின் மதம் சார்பான அணுகுமுறை என்னவாக இருந்தது? இந்து மற்றும் முஸ்லீம் என்ற இரண்டையும் அவர் எவ்வாறு மதித்தார்? இந்த விஷயத்தில் அவரது உண்மையான நடைமுறை என்ன? இவை வரலாற்று ரீதியாக முக்கியமான கேள்விகள். இவை இன்றைய காலத்திற்கும் பொருத்தமானவை. சிவாஜி ஒரு இந்து. அவர் மகாராஷ்டிராவில் பிறந்தவர். அது அவரது அனைத்து நடவடிக்கைகளுக்குமான இடமாக இருந்தது. எனவே இந்துக்கள் அவரைப் பற்றி பெருமை கொண்டார்கள். அது இயல்பானது. குறிப்பாக மகாராஷ்டிர இந்துக்கள் அவரைப் பற்றி பெருமைப்பட்டுக் கொண்டார்கள். இதுவும் கூட மிகவும் இயல்பானதுதான். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் ஒருவருடைய சொந்த மகத்தான மாண்பைக் காண விழைவது மனித இயல்பு. ஒருவருடைய சொந்த மதத்தின் மாண்பு, ஒருவருடைய சொந்த நாட்டின் அல்லது பிராந்தியத்தின் மாண்பு ஆகியவற்றை அந்த மாபெரும் கதாநாயகன் சார்ந்த சொந்த மதத்தின் வெளிச்சத்தில் பார்ப்பது மனித இயல்பே. மேலும் ஒரு சமுதாயத்தில் அல்லது மதத்தில் அத்தகைய நபர்கள் குறைவான எண்ணிக்கையில் இருக்கும்போது அவர்கள் அவர்மீதே மிக அதிகப் பெருமை கொள்கிறார்கள். அவ்வாறு இருந்தாலும் அந்த கதாநாயகர்களின் சொந்த வாழ்க்கைப் பிம்பத்தை விட பெரிய பிம்பத்தை நம்மை மறந்து உருவாக்கத் தூண்டப்படுகிறோம். பல நேரங்களில் இத்தகைய பிம்பங்கள் ஒருவரின் இன்றைய தேவைகளுக்கும் வசதிகளுக்கும் பொருந்தும் வகையில் ஒற்றைப் பரிமாணம் கொண்டவையாக உருவாக்கப்படுகின்றன. இந்த வளர்ச்சிப் போக்கில் வரலாற்றுத் திரிபுகள் உள்நுழைந்து விடுகின்றன. அதனால் அந்த பிம்பமும் சிதைக்கப்படுகிறது. அது தனது அடையாளத்தை இழந்து விடுகிறது. வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு சிவாஜியின் செயல்பாடுகள், அவரது நிர்வாகம், அவரது காலம், சமுதாய வாழ்வில் அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள், மதம் சார்பான அவரது மனப்பான்மைகள் ஆகியவை உயர்த்திப்பிடிக்கப்படவில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. புகழ்பெற்ற புனையப்பட்ட அவரது பிம்பம் பல நேரங்களில் உண்மைக்கு மாறாக இருக்கிறது. படிப்பறிவில்லாத ஒரு மகராஷ்டிரன் கூட சிவாஜியைப் பற்றி அறிவான். அவரது வாழ்வின் கதைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர் தொடர்பான பலவற்றை இடங்கள், பெயர்கள், நிகழ்ச்சிகளை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். மகாராஷ்டிராவின் நான்கு மூலைகளிலும் இருக்கும் இந்தக் கல்வி அறிவற்றவர்களிடம் இந்த எல்லாச் செய்திகளும் எவ்வாறு சென்றடைந்தன? சிவாஜியைப் பற்றிய எண்ணற்ற கதைப்பாடல்களில் அவரது காலங்கள், நிகழ்த்திய அற்புதங்கள், அவரது கம்பீரமான வாழ்வின் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகள் பாடப்பட்டன. சிவாஜியின் காலத்திலோ அல்லது இன்றோ சிவாஜியைப் பற்றிப் பாடாத பாடகனின் பெயரை அல்லது கவிஞனின் பெயரைக் கூற முடியுமா? இதற்கான அழுத்தமான பதில் ‘இல்லை’ என்பதே. ஒவ்வொரு பாடகனும் இதைச் செய்தான். அவ்வாறு செய்தது மிகச் சரியானது. எல்லா கிராமியப் பாடல்களிலும், கிராமிய நடனங்களிலும் இதுவே உண்மையாக இருந்தது. அதுபோலவே கீர்த்தனைகளும், இதில் விதிவிலக்கு அல்ல. மேடைப் பேச்சுக்கள், விளக்கப் பேருரைகள், நாடக மேடைகள், திரைப்படங்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் இவைதான் மக்களுக்குக் கொண்டு செல்லும் வழிமுறைகள், வாயில்கள். வரலாற்றைக் கற்பனையாக மறுகட்டமைப்புச் செய்து பதிவு செய்யும் வளர்ச்சிப் போக்கில் திரிபுகளும், இடைச்செருகல்களும் தேவையற்றவை. நாம் அந்தத் திரிபுகளை விலக்கிவிட்டுப் பார்த்தாலும் ஊடகங்கள் குறிப்பிடும் மேற்கண்டவை அவைகளுக்குரிய இயல்பான வரையறைகள் கொண்டன. கூடியுள்ள பார்வையாளர்களை மகிழ்விக்க வியக்கவைக்கும் அற்புதங்களை எவ்வாறு தவிர்க்க முடியும்? கற்பனைக் கதைகள் இல்லாவிட்டால் கதைப்பாடல்கள் சுவாரசியமற்றவை ஆகிவிடும். குறிப்பாக உயர்வு நவிற்சி என்பதும் பல்வேறு பேச்சுக்களும் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. இத்தகைய நிகழ்வுகள் வெறும் வரலாற்றுத் தேதிகளை மட்டும் பட்டியலிடுமானால், தர்க்கரீதியான ஆய்வுகளை மட்டும் செய்யுமானால், பேச்சுக்கள் உயர்வு நவிற்சி இன்றி அமையுமானால் ‘இரண்டாம் முறை’ அந்த நிகழ்ச்சி நடைபெறுமா? மேலும் கதாசிரியர்களும் நிகழ்ச்சியை நடத்துபவர்களும் தங்கள் பார்வையாளர்களின் புரிந்து கொள்ளும் ஆற்றலை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். அவர்களுக்கென்று அவர்களுக்கான சொந்த வரையறை உண்டு. இவை எல்லாம் சிவாஜியின் பிம்பத்தை உருவாக்குவதில் தங்கள் பங்களிப்பை செய்தன. இந்த வகையில்தான் நம் சிவாஜியின் பிம்பம் நமக்கு கிடைத்தது. மேலும் பல அம்சங்களும் இவ்வாறு வரலாற்றைத் திரித்தலில் இடம்பெற்றன. சுய விருப்பு-வெறுப்புகள், சமகால அரசியல் தேவைகள், வரலாற்றைத் தவறான முறையில் அணுகுதல், போதுமான புரிதல் இல்லாமை போன்ற பலவும் இங்கு இருந்தன. சிவாஜியும் முஸ்லீம்களும் சிவாஜி முஸ்லீம்களுக்கு எதிரானவர், முஸ்லீம்களின் மதத்தை எதிர்ப்பதுதான் அவரது வாழ்க்கையின் நோக்கம், அவர் இந்து மதத்தின் பாதுகாவலர், அவர் ஒரு இந்து பேரரசர் (ஹிந்து பத்பாட்ஷா) அவர் பசுக்கள் மற்றும் பிராமணர்களின் பாதுகாவலர் (கோ – பிராமின் ப்ரதி பாலகா) மக்களிடையே மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட சிவாஜியின் பிம்பம் இது. பூஷன் என்ற சமகாலக் கவிஞர் இந்த பிம்பத்தைப் பிரதிபலிக்கிறார். அவர் எழுதுகிறார். ‘சிவாஜி நா ஹோட்டா,’ ‘தோ சுந்தா ஹோடி சப்கி.’ இவ்வாறு தவறான வியாக்கியானங்களை அளிப்பது பெருமளவில் இருந்தது. சிவாஜியின் போர் ஒருவகையான புனிதப் போர். அவரது நற்செயலுக்கு மதம்தான் தூண்டுதலாக இருந்தது. சிவாஜி மதத்துக்காகப் போரிட்டார். அவர் வெற்றி பெற்றார். ஏனெனில் அவர் மதத்துக்காகப் போரிட்டார். உண்மையில் அவர் கடவுளின் அவதாரம். அவர் விஷ்ணு அல்லது சிவனின் அவதாரம். மதத்தைக் காப்பாற்றுவதற்காகக் கடவுள் இந்த அவதாரத்தை எடுத்தார். மதத்தைக் காப்பாற்றுவதற்காக அன்னை பவானி வாளைப் பரிசளித்தார். இதுபோல இன்னும்… இன்னும். இந்த எல்லாக் கற்பிதக் கோட்பாடுகளும் வரலாற்று உண்மைகளைக் கொண்டு பரிசீலிக்கப்பட வேண்டிய தேவை உள்ளவை. நாம் அனைவரும் இந்துக்கள் என்பதாலோ அல்லது இன்றைய சூழ்நிலைகளில் அவை நமக்கு வசதியாக உள்ளன என்பதாலோ விமர்சனமில்லாமல் அவைகளை ஏற்றுக் கொள்வது முறையானதல்ல. அதே வேளையில் நாம் அதன் எதிர்மறைப்பக்கம் பற்றியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முஸ்லீம்கள் மத்தியில்: ‘நாங்கள் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்துக்களை வெறுப்பதற்கு முஸ்லீம்களுக்கு கற்றுத்த வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது. ஏராளமான இந்துக்கள் சிவாஜியை வழிபடும்போது நாங்கள் அவரை இந்து மதத்தின் பாதுகாவலர் என்றும் முஸ்லீம் மதத்தை ஆக்கிரமிப்பவர் என்றும் கூற வேண்டியுள்ளது’ என்ற போக்கு வளர்ந்து வந்தது. இத்தகைய விமர்சனமற்ற அணுகுமுறையும் தவறானது. உண்மைதான் என்ன? சிவாஜி, பிரதாப், பிரிதிவிராஜ் போன்றோர் அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்: சிவாஜி வெற்றி பெற்றார் ஏனெனில் அவர் இந்து மதத்தின் பாதுகாவலர், இதுதான் உண்மை என்றால் ராணா பிரதாப் அல்லது பிரிதிவிராஜ் செளஹான் ஏன் வெற்றி பெறவில்லை. உண்மையைச் சொன்னால், அவர்கள் இருவரும் உயர்சாதி சத்திரிய இந்துக்கள். ராணா பிரதாப், பிரிதிவிராஜ் ஆகிய இருவரும் வீரத்திலோ, தியாகத்திலோ, உறுதிப்பாட்டிலோ கடும் உழைப்பிலோ சிவாஜியை விடக் குறைந்தவர்கள் அல்ல. இந்த அம்சங்களில் அவர்கள் சிவாஜியை விட ஒருபடி மேலானவர்கள். பிறகு ஏன் வரலாறு இவ்வாறு நிகழ்ந்தது? இது ஒரு புனிதப்போர் என்றால் ஒருவர் ஏன் வெற்றிபெறுகிறார்? மற்ற இருவரும் மிக மோசமாகத் தாக்கப்பட்டார்கள்? இந்து ராஷ்ட்ரா உருவாவது கடவுளின் விருப்பம் - கட்டளை என்றால் அது மஹாராஷ்ட்ராவில் மட்டும் ஸ்தாபிக்கப்பட்டது ஏன்? ராணா பிரதாப் சிங் மற்றும் பிரிதிவிராஜின் நாட்டிலும் அதைப்போலவே ஸ்தாபிக்க ஸ்ரீ (கடவுள்) ஏன் விரும்பவில்லை? இந்து மதத்தை நம்பியதால்தான் சிவாஜி வெற்றி பெற்றார் என்பது உண்மை அல்ல. மதத்தைப் பாதுகாப்பதை விட மேலான சிலவற்றைச் செய்திட அவர் உறுதி கொண்டிருந்தார் என்று தெரிகிறது. அவரது சமகால மன்னர்கள் இஸ்லாத்தைத் தவிர வேறு ஒரு மதத்தைப் பின்பற்றியவர்களா என ஒரு கணம் கற்பனை செய்து பார்ப்போம். அங்கே இந்து மதத்தைச் சார்ந்த மன்னர் இருந்திருந்தால் சிவாஜி முஸ்லீம்களை வெறுத்திருப்பாரா? சிவாஜி ஏன் முஸ்லீம் மன்னர்களுக்கு எதிராக போராடினார்? அவர்கள் முஸ்லீம்கள் என்பதாலா? அல்லது அவர்கள் அரசர்கள் என்பதாலா? இரண்டு காரணங்களுக்காகவும்தான் போரிட்டார் என்றால் அந்த இரண்டில் எது முதன்மைக் காரணம்? எது முக்கியமாக இருந்தது? அவர்கள் அரசர்கள் என்பதா? அல்லது அவர்கள் முஸ்லீம்கள் என்பதா? சில முஸ்லீம் மன்னர்களின் மத சகிப்புத்தன்மை எல்லா முஸ்லீம் மன்னர்களும் இந்துக்கள் மீதோ அல்லது அவர்கள் மதத்தின் மீதோ சகிப்புத் தன்மை இல்லாதவர்களாக இருந்தார்கள் என்பது வரலாற்று ரீதியாக உண்மை அல்ல. முஸ்லீம் மன்னர்களின் சகிப்புத்தன்மை பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளை வரலாறு அளிக்கிறது. மஹாராஷ்ட்ராவில், குறிப்பாக சிவாஜியின் மாகாணத்தில் பல முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்துக்களோடு அரசியல் மற்றும் குடும்ப உறவுகளைக் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் காணலாம். பரஸ்நிஸ் எழுதிய ‘மராத்தே சாதன்’ என்ற நூலிலிருந்து கீழ்வரும் பத்தியை படியுங்கள்; ‘மராத்தியர்கள் நிஜாம் சாஹி, குதூப் சாஹி மற்றும் அடில் சாஹி ஆகியவற்றில் மிகவும் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தார்கள். நிஜாம் சாஹியை ஸ்தாபித்தவரான கங்காவி இஸ்லாத்துக்கு ம்தம் மாறினார். அவர் பாஹிராம்பட் குல்கர்னி என்ற பிராமணரின் மகன்! அஹமத் நகர் அரசரின் தந்தையும்கூட ஓர் இந்து. விஜாப்பூரின் யூசுஃப் அடில்ஷா ஒரு மராத்தா பெண்ணை மணந்து கொண்டார். பிதார் அரசின் அரியணையை ஸ்தாபித்தவர் காஸிம் பாரித். அவரது மகனும் சாபாஜியின் மகளை திருமணம் செய்து கொண்டார். இத்தகைய உறவுமுறைகளும், பழக்கவழக்கங்களும் நிலவியதால் இந்துக்கள் மற்றும் மராத்தியர்களுடனான சகிப்புத்தன்மை இந்த ராஜ்ஜியத்தில் மிகவும் வலுவாக இருந்தது.’ பரஸ்நிஸ் இதே நூலில் நீதிபதி ராணடேயின் குறிப்பைச் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிபதி ராணடே எழுதுகிறார்: ‘தென்பகுதி முஸ்லீம் ராஜ்ஜியங்களின் கீழ் இருந்த இந்துக்கள் பல வகைகளில் அரசர்களால் ஊக்குவிக்கப்பட்டார்கள். அவர்களுக்குச் சலுகைகளும், அதிகாரங்களும் அளிக்கப்பட்டன. பல்வேறு அம்சங்கள் காரணமாக இவை நடைபெற்றன. தென்னிந்திய முஸ்லீம்கள் அடிப்படை மாற்றத்தை விரும்புகிற வட இந்திய முஸ்லீம்களிடமிருந்து வேறுபட்டிருந்தார்கள். பாஹமணி ராஜ்ஜியத்தில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலைகளிலும், பொதுவான நல்லெண்ணத்தைக் கொண்டும் இருந்தார்கள். கருவூலத்துறைகளிலும், வரிவசூல் துறைகளிலும் பிராமணர்கள் நுழைந்தார்கள். இவர்களால்தான் நிர்வாகத்தில் மராத்தி மொழி இடம்பெற்றது. மராத்திய வீரர்களும், அலுவலர்களும் பதவி உயர்வு பெற்றிருந்தார்கள். இந்துப் பெண்ணை முஸ்லீம் அரசர் திருமணம் செய்துகொண்டதன் முத்திரை அந்த ராஜசபையில் அழுத்தமாகப் பதிந்திருந்தது. இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்களுக்கும், சொந்தச் சாதியிலேயே இருந்தவர்களுக்குமிடையே ஆழமான பாசம் நிலவியது.’ பாஹமணி ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த ஹசன் கங்கு பாஹமணியின் பெயர் நமக்குச் சொல்வது என்ன? ஹசன் ஜாபா என்ற முஸ்லீம் கங்கு என்ற பிராமணரிடம் வேலைசெய்து வந்தார். பின்னாளில் டெல்லிப் பேரரசரான துக்ளக்கின் அரசவைப் பிரதிநிதியானார். அவர் மாகாராஷ்ட்ராவில் பேரரசரின் சுபேதார் ஆனார். அவர் பேரரரசருக்கு எதிராகக் கிளர்ச்சிசெய்து மகாராஷ்டிராவில் தனக்கான சொந்த அரியணையை ஏற்படுத்திக்கொண்டார். தனது முன்னாள் குருவுக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாகவும், அவரது நினைவாகவும் அவர் தனக்கு ஒரு புதிய பெயரைச் சூட்டிக்கொண்டார்; பாதி இந்து, பாதி முஸ்லீம்: ‘ஹசன் கங்கு’. அவரது ராஜ்ஜியம் பாஹமணி என்று அழைக்கப்பட்டது. அதாவது பிராமணர்களுடன் தொடர்புகொண்டதாக. இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையில் எப்போதும் அளவு கடந்த பகை உணர்வு இருந்திருக்குமானால், இது நிகழ்ந்திருக்காது. இந்துக்களும், இந்திய நிலப்பிரபுக்களும் முஸ்லீம் மன்னர்களுக்கு விசுவாசமாக இருந்தவரையிலும், முஸ்லீம் மன்னர்களும் அவர்களிடம் சகிப்புத்தன்மையோடு இருந்தார்கள். தங்களது அரசுக்கு ஆபத்து சூழ்ந்தபோது அவர்கள் சகிப்புத்தன்மையற்றவர்களாக ஆனார்கள். எது முக்கியம்? இந்துவாகவோ அல்லது முஸ்லீமாகவோ இருப்பது அல்ல. அரசுதான் மிகமிக முக்கியமானது. டெல்லிப் பேரரசர்கள் எல்லாருமே அடிப்படைவாத முஸ்லீம்களாக இருந்தார்கள் என்பதும் கூட உண்மையல்ல. அக்பரின் சகிப்புத் தன்மை நன்கு அறியப்பட்டது. அவர் தீன் இ லாஹி என்ற ஒருங்கிணைந்த ஒரு புதிய மதத்தை உருவாக்கவும் கூட முயற்சித்தார். அவரது காலத்தில் அங்கு குறிப்பிடத்தக்க கலச்சார ஒற்றுமை நிலவி வந்தது. வருவாய்த்துறை அமைச்சராக இந்து மதத்தின் தோடர்மால் தனது அறிவாற்றலை முஸ்லீமாக இருந்த அரசரின் இலட்சியத்திற்குப் பயன்படுத்தினார். ஷாஜகானின் அரசவையில் உயர்சாதி பிராமணரான ஜகநாத் பண்டிட் மகிழ்ச்சியுடன் சமஸ்கிருதக் கவிதைகளை இயற்றினார். பண்டிட் ஜகநாதின் ஒரு கதை மிகவும் பிரபலமானது. ஜெய்பூரின் இந்து அரசர் இந்த இந்து பண்டிட்டை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வர – தனது அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள – பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டார். அவரது அழைப்புக்கு பண்டிட் ஜகநாத்தின் பதில் மிகவும் விளக்கமானது. ‘எனது விருப்பங்களை நிறைவேற்றும் மகத்தான சக்தி டெல்லி பிரபுவிடம் மட்டும் அல்லது இந்த உலகத்தின் பிரபுவிடம் மட்டுமே உள்ளது. வேறு அரசர்கள் யாராவது எனக்கு ஏதேனும் செய்ய விரும்பினால் அது எனது கையும், வாயும் நீடித்திருப்பதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.’ டெல்லி பேரரசரின் சாதி முக்கியமானதல்ல. அவர் என்ன கொடுக்கிறார், எவ்வளவு கொடுக்கிறார் என்பது முக்கியமானது. ஷாஜகானின் மகன் தாரா ஒரு சமஸ்கிருத அறிஞன். அவர் காசியில் உள்ள அறிஞர்களை சந்திப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் சாந்தோக்யா பிரிஹதாரண்யா மற்றும் ஜென் முதலான உபநிடதங்களைப் போல் அந்த வரிசையில் ‘அல்லோபநிஷத்’ இயற்றப்பட்டது. சேஜ்வாக்கர் போன்ற உயர் தகுதியான ‘ஓர் அறிஞர்’, ஒளரங்கசீப்பின் மூத்த சகோதரரான தாரா அரியணை ஏறினால் இந்தக்கண்டம் முழுவதும் ஓர் ஆட்சியின் கீழ் வந்து இந்த நாடு மிகவும் வல்லமை மிகுந்தது ஆகும் என்று வாதிடுமளவுக்குச் சென்றார். சுருக்கமாக எல்லா முஸ்லீம் ஆட்சியாளர்களும் இந்துக்களை வெறுப்பவர்களாக இருந்ததில்லை என்பதை எளிதாகக் காணலாம். சிவாஜியின் முஸ்லீம் தளபதிகள் சிவாஜி தன் கீழ் வேலை செய்ய ஏராளமான முஸ்லீம்களை கொண்டிருந்தார். அவரது இராணுவத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் அவர்கள் மிகவும் முக்கியமான பதவிகளை வகித்தார்கள். அவர்களில் பலர் உயர்ந்த, பொறுப்பான பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்தார்கள். சிவாஜியின் பீரங்கிப்படையின் தலைமைத்தளபதி ஒரு முஸ்லீம். அவரது பெயர் இப்ராஹிம் கான். ஆயுதப்படைகளின் ஒரு மையமான பகுதியாக, மிகவும் முக்கியமானதாகப் பீரங்கிப்படை அமைந்திருந்தது. அந்தக் காலத்தில் துப்பாக்கிதான் மிகவும் முன்னேறிய வலுவான ஆயுதமாக இருந்தது. அத்தகைய ஒரு பிரிவிற்குத் தலைவராக இருந்தவர் ஒரு முஸ்லீம்தான். சத்ரபதி சிவாஜியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கப்பற்படை அமைக்கப்பட்டது குறிப்பிடப்படுகிறது. அது நியாமானதும் கூட. மிகப்பரந்த கொங்கணி நிலப்பகுதி மிக நீண்ட கடற்பகுதியைக் கொண்டது. அதைப் பாதுகாக்க நன்கு ஆயத்தப்படுத்தபட்ட கடற்படை அவசியம். சிவாஜி அத்தகைய கடற்படைப் பிரிவை உருவாக்கினார். அந்த மிக முக்கியமான ஆயுதப்படைப்பிரிவின் தலைவராக இருந்தவர் ஒரு முஸல்மானே. அவரது பெயர் தெளலத்கான் - தாரியா சரங் தெளத்கான். சிவாஜியின் தனிப்பட்ட மெய்க்காவலர்களில் மாதாரி மெஹ்டர் என்று அழைக்கப்பட்ட ஒரு முஸ்லீம் இளைஞன் இருந்தான். அவன் நம்பிக்கைக்குரிய ஒரு வேலையாள். சிவாஜி வீரதீர சாகசத்துடன் ஆக்ராக் கோட்டையிலிருந்து தப்பிச் செல்ல முஸ்லிமாக இருந்தும் அவன் ஏன் தன் உயிரையே பணயம் வைத்து சிவாஜிக்கு உதவினான்? முஸ்லிம்களை வெறுப்பவர்களாக சிவாஜி இருந்திருந்தால் இது சாத்தியமா? சிவாஜி இத்தகைய பல முஸ்லிம்களைப் பணியாளர்களாகக் கொண்டிருந்தார். அவர்களில் ஒருவர்தான் காஸி ஹைதர். சலேரிப் போருக்குப்பின் தென்பகுதியில் இருந்த ஒளரங்சீபின் தளபதிகள் சிவாஜியுடன் ஓர் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள ஒரு இந்து பிராமணரைத் தூதுவராக அனுப்பினார்கள். சிவாஜி தனது தூதுவராக காஸி ஹைதரை அனுப்பினார். இவ்வாறு முஸ்லிம் அரசரிடம் ஒரு இந்துத் தூதுவர் இருந்தார், ஒரு இந்து அரசரிடம் முஸ்லீம் தூதுவர் இருந்தார். சமுதாயம் இந்து, முஸ்லீம் என செங்குத்தாகப் பிளவுபட்டிருக்குமானால் இது நடந்திருக்காது. சிவாஜிக்காகப் பணியாற்றிய இத்தகைய ஒரு முஸ்லீம்தான் சித்தி ஹிலால். 1660ல் சிவாஜி ரெய்பக் அருகில் ரஸ்டம் ஜாமா மற்றும் ஃபாஸல்கானைத் தோற்கடித்தார். சித்தி ஹிலால் சிவாஜியின் தரப்பிலிருந்து போரிட்டார். அத்துடன் அதே ஆண்டில், சித்தி ஜோஹர் பன்ஹாலா கோட்டை முற்றுகையிட்டார். சிவாஜியின் நம்பிக்கைக்குரிய நேதாஜி பால்கர் முற்றுகையின்மீது தாக்குதல்களை தொடுத்துக்கொண்டே இருந்தார். சித்தி ஹிலாலும் அவரது மகனும் நேதாஜி பால்கரின் தரப்பில் இருந்தனர். ஹிலாலின் மகன் வாஹ்வா இந்தப் போர்க்களத்தில் காயம்பட்டு பிடிபட்டான். முஸல்மானான சித்தி ஹிலால் தன் மகனோடு சேர்ந்து இந்து சிவாஜிக்காக முஸல்மானை எதிர்த்து போரிட்டார். அந்தக் காலத்தில் போர்களின் தன்மை, மதரீதியானவைகளாக இருந்திருந்தால் இது நடக்குமா? ‘சபாசத் பாக்ஹர்’ எழுபத்தெட்டாம் பக்கத்தில் சிவாஜியின் தளபதியான இன்னொரு முஸல்மானைப் பற்றிக் கூறுகிறது… அவரது பெயர் ஷாமா கான். ராஜ்வாடே, சிவாஜியின் காலாட்படைத் தளபதியான நூர் கான் பெக்-ஐக் குறிப்பிடுகிறார். - ( மராத்தியன்க்யா இதிஹாசாச்சி சாதனே தொகுப்பு 17 பக்கம் 17) இவர்களெல்லாம் தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்கள் அல்ல. தஙகள்கீழ் உள்ள முஸ்லீம் படைவீரர்களோடு சிவாஜிக்காக பணியாற்றியவர்கள். முஸ்லீம்கள் மீதான சிவாஜியின் சகிப்புத்தன்மைக்கு மிக முக்கியமான நம்பத்தகுந்த ஆதாரங்கள் பல உள்ளன . ’…1648ல் விஜாப்பூர் இராணுவத்தை சேர்ந்த ஐநூறு முதல் எழுநூறு பதான்கள் சிவாஜியோடு சேரவந்தார்கள். கோமாஜி நாயக் பண்சம்பால் அந்த நேரத்தில் தந்த அறிவுரையை சிவாஜி ஏற்றுக் கொண்டார். கோமாஜியின் அறிவுரையை அடிப்படையாகக் கொண்ட கொள்கையை பின்னர் சிவாஜி கடைபிடித்தார். கோமாஜி சொன்னார், “உன்னுடைய தனிச்சிறப்பை பற்றி கேட்டறிந்து இந்த மக்கள் வந்திருக்கிறார்கள். அவர்களைத் திருப்பி அனுப்புவது சரியல்ல. இந்துக்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்க வேண்டும் என்று நீ நினைத்தால், மற்றவர்களைப் பற்றிக் கவலையில்லை என்று கருதினால், உன்னுடைய ஆட்சியை நிறுவதில் உன்னால் வெற்றிபெற முடியாது. ஆட்சியை அமைக்கவேண்டும் என்று யார் விரும்பினாலும், எல்லா 18 சாதியினரையும் நால்வகை வர்ணத்தவரையும் அணிதிரட்டி அவர்களுக்கான செயல்பாடுகளை ஒதுக்கித்தரவேண்டும்.” 1648ல் சிவாஜி தனது ஆட்சியை நிறுவியிருக்கவில்லை. மேலே குறிப்பிட்ட அறிவுரை பொருத்தமான விதத்தில் சிவாஜியின் எதிர்கால அரசின் கொள்கைகளை விவரிக்கிறது. கிராண்ட் டஃப் கூட சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில் கோமாஜி நாயக்கின் அறிவுரையைக் குறிப்பிட்டு, “…அதன் பிறகு சிவாஜி தன்னுடைய இராணுவத்தில் ஏராளமான முஸ்லீம்களையும் இணைத்துக்கொண்டார். அது அவருடைய ஆட்சியை நிறுவுவதில் மிகப்பெரிய அளவுக்கு உதவியது.” என்றார் இது சிவாஜியின் தளபதிகளும், வீரர்களும் இந்துக்கள் மட்டுமே அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியது. அவர்கள் முஸல்மான்களாகவும் இருந்தார்கள். சிவாஜி, முஸ்லீம்களைத் தவிர்ப்பது என்ற நிலையை எடுத்திருந்தால் இந்த முஸ்லீம்கள் அவரோடு கட்டாயம் இணைந்திருக்கமாட்டார்கள். முஸ்லீம் ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மையையும், சுரண்டலையும் கொண்ட ஆட்சியை சிவாஜி அழித்தொழிக்க வேண்டியிருந்தது. விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட ஓர் ஆட்சியை அமைக்க வேண்டியிருந்தது. முஸ்லீம்களும் அவருடைய இலட்சியத்தில் ஏன் இணைந்து கொண்டார்கள் என்பதற்கான காரணம் இதுதான். எந்த மதம் என்பது இங்கு முக்கியமான கேள்வி அல்ல. எந்த அரசு என்ற கேள்வியே இங்கு முக்கியத்துவம் பெற்றது. மதத்துக்கு விசுவாசம் என்பது அல்ல; அரசுக்கு விசுவாசமாக, ஒரு தலைவனுக்கு விசுவாசமாக என்பதே மிகவும் முக்கியமாயிற்று. முஸ்லீம் ஆட்சியாளர்களின் கீழ் இந்து சர்தார்கள்: சிவாஜியோடு முஸ்லீம் சர்தார்களும், படைவீரர்களும் பணியாற்றியதைப் போலவே, முஸ்லீம் மன்னர்களோடும், பேரரசர்களோடும் இந்து சர்தார்களும், படைவீரர்களும் சேவை புரிந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை ஏராளம். உண்மையில் சிவாஜியின் சொந்தத் தந்தை ஷாஹாஜி விஜாபூரின் முஸ்லிம் ஆட்சியாளரான அடில் ஷாவுக்காகப் பணியாற்றிய மிகவும் செல்வாக்கு மிகுந்த பெரிய சர்தார்தான். ஷாஹாஜியின் மாமனார் லகுஜி ஜாதவ் மஹாராஷ்டிராவின் நிஜாமின் மன்சப்தாராக இருந்தவர். பால்தானின் நிம்பால்கரா ஜவாலி, சாவந்த் ஜாடியன், சாவந்த் கெம், ஸ்ரீங்காபூரின் சூர்யராவ் ஸ்ரீங்காபூர் ஆகிய எல்லாரும் அடில்ஷாஜியின் மன்சப்தார்களாக இருந்தவர்களே. மிர்ஸாராஜா ஜெய்சிங்கின் இராணுவ வலிமையும், போர்த்தந்திரங்களும் சிவாஜியை தோல்வியை ஏற்கச் செய்தன. அதன்பிறகு ஒரு வெட்கக்கேடான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட சிவாஜி, அவரது மகன் சாம்பாஜியுடன் ஆக்ராவுக்குச் செல்ல நேர்ந்தது கைது செய்யப்பட. அவ்வாறு செய்தவர் ரஜபுத்திரா என்ற உயர்சாதியைச் சார்ந்த இந்துதான். அவர் செய்ததெல்லாம் ஒரு மொகலாய பேரரசரின் கீழ் பெருமையான சேவையே. மிர்ஸா ராஜா ஜெய்சிங், சிவாஜியின்மீது படையெடுத்தபோது அவரின் கீழ் பல இந்து சர்தார்கள் இருந்தார்கள். அவர்கள் ராஜா ராய்சிங் சிசோடியா, சுஜன்சிங் பண்டேலா, ஹர்பான் கெளர், உதயபான் கெளர், ஷேர்சிங் ரத்தோட், சதுர்புஜ் செளகான், மித்ரா சென், இந்திரா மன் பண்டேலா, பாஜி சந்திரா ராவ், கோவிந்த ராவ் உள்ளிட்ட ஜாட்டுகள், மராத்தாக்கள், ராஜபுத்திரர்கள். தானாஜி மலுசாரே என்ற சிவாஜியின் ஒரு தளபதி கோண்டானா கோட்டையைக் கைப்பற்றும்போது இறந்துவிட்டார். தானாஜியின் வீரம்செறிந்த தியாகத்தை நினைவுகூறும் வகையில் அந்தக்கோட்டை ‘சிம்ஹா கட்’ என மறுபெயரிடப்பட்டது. கோண்டானா கோட்டையின் பொறுப்பில் இருந்த அதிகாரி உதயபானு என்ற இந்து ரஜபுத்திரர். அவர் முஸ்லீம் பேரரசரின் தளபதியாக இருந்தார். அக்பரின் கீழ் கிட்டத்தட்ட 500 சர்தார்கள் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார்கள். இவர்களில் 22.4 சதவீதம் பேர் இந்துக்கள். எல்லா முஸ்லீம் ஆட்சியாளர்களிலும் மிகவும் கொள்கைப் பிடிவாதம் கொண்டவர் எனக் கருதப்பட்டவர் ஒளரங்கசீப். அவரது ஆட்சியின் துவக்கத்தில் 21.6 சதவீதமக இருந்த இந்து அதிகாரிகள் பின்னர் 31.6 சதவீதம் என அதிகரித்தார்கள். தக்காணத்தின் கவர்னராக இந்து ரஜபுத்திரரான ராஜா ஜஸ்வந்த்சிங்கை நியமித்தவர் ஒளரங்கசீப்தான். ஒளரங்கசீப்பின் முதல் அமைச்சரும் கூட ஓர் இந்துவான ரகுநாத் தாஸ் தான். அவர் ஒரு ரஜபுத்திரராக இருந்தாலும் ஒளரங்கசீப்புக்காக ரஜபுத்திரர்களை எதிர்த்துப் போரிட்டார். ராணா பிரதாப்சிங்கின் படைத்தளபதி ஒரு முஸ்லீமான ஹக்கீம் கான். பானிபட் போரில் பேஷ்வாவின் குதிரைப்படைத் தலைவர் இப்ராஹிம் கான் காத்ரி. முஸ்லீம் அரசர்களுக்கு விசுவாசத்தோடு சேவை செய்த இந்துக்கள் அவ்வப்போது இந்துக்களை எதிர்த்துப் போரிலும் ஈடுபட்டார்கள். அத்தகையவர்கள் பாவம் செய்தவர்கள் என்றோ, மதத்துரோகிகள் என்றோ கண்டிக்கப்பட்டதில்லை. அவர்கள் இந்துக்களின் எதிரிகள் என்றோ, முஸ்லீம்களின் ஆதரவாளர்கள் என்றோ அழைக்கப்படவில்லை. அந்தக்காலங்களில் மதத்தைவிடத் தனது அரசருக்கு விசுவாசமாக இருப்பது முக்கியமானதாக இருந்தது. பழங்கால அல்லது மத்தியகால இந்தியாவில் மதங்களின் அடிப்படையில் போர்கள் நடக்கவில்லை. ஆட்சியைக் கைப்பற்றுவது அல்லது வலிமைப்படுத்துவது என்பதே அதன் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்த முக்கிய நோக்கத்துக்காகத் தற்காலிகமாக மதமும் பயன்படுத்தப்பட்டது என்பது உண்மை. ஆனால் அதுதான் ஒட்டுமொத்த அல்லது முக்கிய நோக்கமாக எப்போதும் இருந்ததில்லை. அத்தகைய பல நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம். முஸ்லீம்களுக்கு எதிராக முஸ்லீம்கள், இந்துக்களுக்கு எதிராக இந்துக்கள், இந்து – முஸ்லீம்களுக்கு எதிராக இந்து முஸ்லீம்கள். பல முஸ்லீம்கள் சிவாஜியின் கீழும், பலர் முஸ்லீம் ஆட்சியாளர்களின் கீழும் பணியாற்றினார்கள் என்பது உண்மையாக இருந்தது. அதுபோலவே யாருக்கு எதிராக யார் போரிட்டார்கள் என்பதும் தெரிய வந்தது. இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராகப் போர்கள் நடைபெறவில்லை என்பது மிகவும் தெளிவாக விளங்கியது. முஸ்லீம் ஆட்சியாளர்கள் தங்களுக்குள்ளாகவே போரிட்டுக் கொண்டர்கள். முஸ்லீமான பாபர் அரியணையில் ஆட்சியில் இருந்த முஸ்லீம் பேரரசரான இப்ராஹிம் கான் லோடியைத் தோற்கடித்தே டெல்லிப் பேரரசரானார். இந்த பாபர்தான் முகலாய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவர். ஷேர்கானும், ஹூமாயுனும் முஸ்லீம்களாக இருந்தபோதிலும் ஒருவருக்கெதிராக ஒருவர் மிகவும் கசப்பான போர்களில் ஈடுபட்டார்கள். விஜாபூர் மற்றும் கோல்கொண்டாவின் ஆட்சியாளர்கள் முஸ்லீம்களே. இந்த முஸ்லீம் ஆட்சியாளர்களை எதிர்த்தே ஒளரங்கசீப் நீண்ட போர்களை நட்த்தினார். எது முக்கியம்? மதமா? அல்ல, ஆட்சி அதிகாரமே என்பதை இது காட்டுகிறது. மதத்துக்கு ஏதேனும் முக்கியத்துவம் இருந்திருக்குமெனில் அது இரண்டாம்பட்சமாகவே இருந்தது. முதன்மையான நோக்கம் அரசியல் அதிகாரமே. ராணா பிரதாப் சிங்குக்கும், அக்பருக்கும் இடையே வீரஞ்செறிந்த ஹால்டி போர் நடைபெற்றது. இந்தப் போர் பிரதாப்புக்குக் குறிப்பாகவும், ரஜபுத்திரர்களுக்கும், ராஜஸ்தானத்துக்கும் பொதுவானதாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இந்த ஹால்டி போரை, எப்படிக் கற்பனையை ஓடவிட்டாலும், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நடைபெற்ற போர் என்று விவரிக்க முடியுமா? முஸ்லீமான அக்பரின் இராணுவம் ரஜபுத்திரரான மான்சிங்கால் வழிநடத்தப்பட்டது. அந்த இராணுவம் 60,000 முகலாயப் படைவீரர்களையும், 40,000 ரஜபுத்திர படைவீரர்களையும் கொண்டது. அதேபோல் ராணா பிரதாப்பின் இராணுவம் 40,000 ரஜபுத்திர வீரர்களையும், பெரும் எண்ணிக்கையிலான பதான் படைப்பிரிவுகளையும் ஹக்கீம்கான் சூர் தலைமையில் கொண்டிருந்தது. தாஜ்கான் என்ற பதானின் கீழ் குதிரைப்படையையும் கூடக் கொண்டிருந்தது. ராணா பிரதாப்பின் பீரங்கிப் படையின் தளபதிகூட ஒரு முஸ்லீம். சர்தார் குரு கோவிந்சிங் கூட மத்திய முஸ்லீம் ஆட்சியை எதிர்த்து போரிட்டார். அவரது இராணுவமும் கூட சீக்கியர்களோடு 6000 முஸ்லீம்களையும் கொண்டிருந்தது. ஒளரங்கசீப்பின் இறப்புக்குப் பிறகு அவரது வாரிசுகளுக்கிடையே மிகக் கடுமையான போராட்டம் வாரிசு உரிமைக்காக நடைபெற்றது. இந்தக் குடும்பச் சண்டையில் குரு கோவிந்த், பகதூர் ஷாவுக்கு உதவினார். ஜாட்டுகள், ரஜபுத்திரர்கள், மராத்தியர்கள் மற்றும் சீக்கியர்களின் எழுச்சிக்குப் பின்னால் இருந்த மத அடிப்படை என்பது மிகவும் மெலிந்தது. அவர்களது எழுச்சி என்பது அடிப்படையில் மிகவும் கொடூரமான மத்திய ஆட்சிக்கு எதிரானது. படைவீரர்களும், உயர்குடியினரும் மதத்தைப் பொருட்படுத்தாமல் தங்கள் தலைவர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். இந்து தேசியமோ, இஸ்லாத்தைப் பரப்பும் நோக்கமோ நிலப்பிரபுத்துவக் காலத்தின் படைகளிடையே எவ்வித கிளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. தங்களைக் எவ்வளவு காலம் வாழ்விக்கிறதோ, அவ்வளவு காலமும் தங்கள் தலைமைக்குச் சேவை செய்வதே பொதுவான சமுதாய நடைமுறையாக இருந்தது. கோவில்களை கொள்ளையடிப்பதும் அழித்தொழிப்பதும் ‘முஸ்லீம் மன்னர்கள் கொடூரமானவர்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் இருந்தார்கள். அவர்கள் கோவில்களை அழித்தொழித்து அசிங்கப்படுத்தினார்கள். எனவே எல்லா முஸ்லீம்களும் இந்துக்களுக்கு எதிரானவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்களாக இருந்ததால், இந்துக்களும் கட்டாயமாக மூஸ்லீம்களுக்கு எதிரானவர்களாகவே இருக்க வேண்டும்.’ இது எப்போதும் அடிப்படைவாத இந்து அமைப்புக்களின் பல்லவியாக இருந்து வருகிறது. இத்தகைய வாதங்களை இந்து அமைப்புக்கள் பயன்படுத்தும்போது, முஸ்லீம் அமைப்புக்களும் கூட இதே போன்ற வாதங்களைப் பயன்படுத்தின. அவர்கள் தங்களது சீடர்களுக்கு சொன்னார்கள், ‘இந்து மதம் என்பது காஃபிர்களின் மதம். நமது மூதாதையர்கள் அதை அழிக்க முயன்றது மிகவும் சரி. முடிந்தால் நாமும் அதையே செய்ய வேண்டும். குறைந்தபட்சம் நாம் இந்துக்களுக்கு எதிரானவர்களாகவாவது இருக்க வேண்டும். நாம் பாரம்பரியமான ஆட்சியாளர்கள். நாம் ஆட்சிபுரியாவிட்டால் அவர்கள் வருந்துவார்கள்’. இந்த வாதங்களை அவர்கள் மத அடிப்படையில் தங்களை அணிதிரட்டிக் கொள்ளப் பயன்படுத்தினார்கள். தங்கள் ஆட்சியை விரிவுபடுத்த முஸ்லீம் இராணுவம் படையெடுத்து வந்தபோது கோவில்களைக் கொள்ளையிட்டு அழித்தார்கள் என்பது உண்மை. ஆனால் இதுவே முழு உண்மை அல்ல… இது பாதி உண்மை மட்டுமே. அராபியர்கள், துருக்கியர்கள், ஆப்கானியர்கள், முதலான குலவகையினர் போன்றவர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படவில்லை; கொள்ளையடிப்பதும் அதில் அவர்களுடைய பங்கைச் சம்பளமாக வைத்துக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையாக இருந்து வந்தது. இந்துக் கோவில்கள் மிகவும் பணக்காரக் கோவில்களாக இருந்தன. கொள்ளையடிக்கும்போது படையெடுப்பாளர்கள் அந்தக் கோவில்களை அழித்துக் கொள்ளையைப் பங்கிட்டுக் கொண்டனர். இந்தப் படைகள் மலை உச்சிகளின் மீதிருந்த அல்லது மிகவும் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளிலிருந்த கோவில்களின்மீது கவனம் செலுத்தவில்லை… இதற்கான காரணம் என்னவாக இருந்திருக்கும்? அவர்களின் முக்கிய நோக்கம் கோவில்களிலிருந்த சொத்துக்களைக் கொள்ளையடிப்பதுதானே தவிர அவற்றை அழிப்பதல்ல. சொத்துக்களைக் கொள்ளையடிப்பது முதன்மையான குறியாக இருந்தது; மதம் என்பது இரண்டாம்பட்சமே. இந்த நோக்கத்தை நிறைவேற்றக் ’கோவில்களை அழிப்பது ஒரு வழியாக இருந்தது. இந்தக் கொள்ளையின் பெரும்பகுதி அரசனுக்கும் சென்றது. அரசனின் நிதி வருவாய்க்கு இது தலையாய வாய்ப்பாக இருந்தது. கோவில்களைத் தாக்குவதின் இன்னொரு நோக்கம் அந்தச் சுற்றுப்பகுதிகளில் வசித்த மக்களை அதைரியப்படுத்தி அவர்களது போராட்ட உணர்வுகளைச் சிதறடித்து அவர்களுக்குள் அச்சத்தை உருவாக்குவதாக இருந்தது. மக்கள் மதத்தின் மீதும் கடவுளின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். கடவுளையே கொள்ளையடித்தவர்கள் தங்களை மிகவும் எளிதாகக் கொள்ளையடித்து விடுவார்கள் என்று மக்களை நம்ப வைப்பது படையெடுப்பாளர்களுக்கு எளிதாக இருந்தது. ‘இத்தகைய சக்திவாய்ந்த கடவுளாலேயே ஒன்றும் செய்ய முடியாதபோது, இறந்துபோகக்கூடிய நம்மால் என்ன செய்ய முடியும்?’ இத்தகைய ஆதரவற்ற நிலையும், திகிலும் எங்கும் பரவியது. இது எதிரிகளின் நிலப்பகுதியைப் படையெடுப்பாளர்கள் கைப்பற்றுவதைச் சுலபமாக்கியது. அந்த நாட்களில் கோவில்கள் மதத்தின் மையங்களாக மட்டும் இருக்கவில்லை. அவைகள் செல்வங்களின், அதிகாரத்தின், அந்தஸ்தின் மையங்களாகவும் இருந்தன. கோவில்களைக் கொள்ளையடிப்பதில் இன்னொரு பயனும் இருந்தது. படையெடுப்பாளர்கள் காஃபிர்களின் கோவில்களை இடிப்பதன்மூலம் அவர்களின் மதத்தையும் அழித்ததாகக் கூறிக் கொண்டார்கள். இது சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் உண்மையான நோக்கத்தை மறைத்து வைக்கும் சாதனமாகவும் வேலை செய்தது. முஸ்லீம் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான கருவியாக, மதப்பெரியவர்கள், முல்லாக்கள், மெளலவிகளின் ஆதரவைப் பெற்றிடவும் இது உதவியது. தவறான செயல்களை மூடிமறைப்பதற்கான சூழ்ச்சியாக மதம் பயன்படுத்தப்பட்டது. கொள்ளையைத் தொடர்ந்த தானதர்மங்கள் எந்த ஆட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தங்கள் வழியில் கோவில்களைக் கொள்ளையடித்து அழித்தார்களோ அவர்களே தங்கள் எதிரியின் ராஜ்யத்தைக் கைப்பற்றிய பின்பு, தங்கள் சொந்த ஆட்சியை நிலைநாட்டி அதே கோவில்களுக்குத் தான தர்மங்களையும், மானியங்களையும் வழங்கினார்கள். இத்தகைய எடுத்துக்காட்டுக்கள் ஏராளம் உள்ளன. கடுமையான மதவாதி என்று அறியப்பட்ட ஒளரங்கசீப் தனது சொந்த சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த பல அரசுகள்மீது படையெடுத்தபோது பல கோவில்களை அழித்தார். ஆனால் அதே ஒளரங்கசீப் கோவில்களுக்குப் பணத்தை நன்கொடையாக அளித்தார். அவர் அஹமதாபாத்திலுள்ள ஜெகநாதர் கோவிலுக்கு 200 கிராமங்களைப் பரிசளித்தார். மதுராவிலும் காசியிலும்(பனாரஸ்) உள்ள இந்துக் கோவில்களுக்கும் கூட பணத்தை நன்கொடையாக அளித்தார். பந்தர்பூர், துல்ஜாபூர் பவானிகோவில்களிலிருந்த விக்கிரகங்களை அஃப்ஸல் கான் உடைத்தாரா என்பது பற்றி அறிஞர்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. சிலர் அவர் அதைச் செய்தார் என்று நம்புகின்றனர். ஆனால் ஷேஜ்வாக்கர் வேறுவிதமாக சிந்திக்கிறார். அங்கு இன்று உள்ள கடவுள் சிலைகள் மிகவும் பழமையானவை. இந்தப் பிரச்சினை என்னவாக இருந்தாலும், அப்ஸல் கான் பிரதாப்கட்டில் சிவாஜியின் மீதான தாக்குதலை தொடங்குவதற்கு முன் பிராமண பூசாரிகளின் பாரம்பரிய உரிமைகளை தொடர்ந்து அனுமதித்தது மட்டுமல்ல; புதிய உரிமையையும் அவர்களுக்கு அளித்தார். இது வரலாற்றில் பதிவாகியுள்ளது. மேலும் அப்ஸல்கான் துல்ஜாபூரில் உள்ள பவானி கோவிலை அழித்தார் என்று கூறும்போது அவரோடு பிலாஜி மொஹித், சங்கர்ராவ்ஜி மொஹித், கல்யாண்ராவ் யாதவ், நாயக்ஜி சராதே, நாகோஜி பந்தாரே, பிரதாப்ராவ் மூர், ஜுஞ்ஜாராவ் காட்கே, காடே, பாஜி கோர்படே, மற்றும் சம்பாஜிராவ் போன்ஸ்லே ஆகியோர் உடனிருந்தார்கள் என்பதை மறக்க முடியுமா? மராட்டியர்கள் கொள்ளையில் ஈடுபட்டபோது, சிருங்கேரியில் உள்ள பெண்தெய்வம் சாரதாவின் கோவில் சேதப்படுத்தப்பட்டது என்பதும், பின் முஸ்லீம் மன்னரான திப்பு சுல்தான் அந்தக் கோவிலை மீண்டும் நிறுவினார் என்பதும் எல்லாருக்கும் நன்கு தெரிந்த நிகழ்ச்சியாகும். ஓர் ஆட்சி உறுதிப்பட்ட பிறகு கோவில்களுக்கு ஏன் பணம் நன்கொடையாக அளிக்கப்பட்டது? இத்தகைய நன்கொடைகளை அளிப்பதன் மூலம் இந்துக்கள் கோபம் தணிந்து ஆட்சிக்குத் தொந்தரவுகளை உருவாக்க மாட்டார்கள் என்றிருந்தால் முஸ்லீம் ஆட்சியாளர்கள் அதைச் செய்திருக்க மாட்டார்கள். உண்மையில் இத்தகைய ஏற்பாடுகளால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே கோவில்களைக் கொள்ளையிட்டு அழிப்பதற்கான காரணமாக இருந்தது. அதே அரசியல் அதிகாரம்தான் பணத்தையோ அல்லது சொத்துக் களையோ நன்கொடையாக அளிப்பதற்கும், அவற்றைப் பழுதுபார்ப்பதற்குமான உந்து சக்தியாகவும் இருந்தது. அதிகாரம் : ஆதிக்கம் ; மதம் : கீழ்படிதல் முஸ்லீம் மன்னர்கள் மட்டுமே கோவில்களைக் கொள்ளையடித்தார்கள் என்பது உண்மையல்ல. சொத்துக்காக இந்து மன்னர்களும்கூடக் கோவில்களைக் கொள்ளையடித்தனர். காஷ்மீர் மன்னரான ஹர்ஷாதேவ் இந்துக் கோவில்களை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் கடவுள் சிலைகளை அதிலுள்ள உலோகத்துக்காக உருக்கினார். அந்தச் சிலைகளை உருக்குவதற்கு முன் அவற்றின் மீது மனித மலத்தையும், சிறுநீரையும் பெய்து அசிங்கப்படுத்தினார். இந்த எல்லா விவரங்களும் படங்களோடு கல்ஹனரின் ‘ராஜதரங்கிணி’யில் கூறப்பட்டுள்ளன. எனினும் ஹர்ஷதேவின் இந்த அசிங்கப்படுத்தும் செயல்களால் மதக்கலவரங்கள் நடைபெற்றதாக எந்தப் பதிவும் இல்லை. அவர் தனது வருவாய்த்துறையில் ’கடவுள் கவிழ்ப்பு’ (தேவோட்படன்) என்ற தனிப்பிரிவையும் கூடத் துவக்கினார்! முஸ்லீம் ஆட்சிக்குத் தடையாகவும், தொல்லையாகவும் முஸ்லீம்கள் இருந்தால் அவர்கள் முல்லாக்களாகவும், மெளலவிகளாகவும் இருந்தாலும் கூட ஆட்சியாளர்கள் அவர்களைத் துன்புறுத்தினார்கள். முல்லாக்களையும், சய்யீதுகளையும் முகமது துக்ளக் படுகொலை செய்ததாக வரலாற்று எழுத்தாளர்கள் குற்றம் சாட்டினார்கள். சில வரலாற்றாளர்கள், ஜஹாங்கீரால் முல்லாக்கள் எவ்வாறு காயப்படுத்தப்பட்டார்கள் என்பதையும், அவர் வந்தால் தங்களை அவர்கள் எப்படி மறைத்துக் கொண்டார்கள் என்பதையும் குறித்துள்ளனர். இவை எல்லாவற்றின் முடிவும் என்னவாக இருந்த்து? அன்று ஆட்சியாளர்களுக்கு மிக முக்கிமாக இருந்தது ஆட்சியதிகாரம்தான்; மதம் அல்ல. மராத்தாக்களுக்கும், இந்துக்களுக்கும் எதிரான சிவாஜியின் போர்கள் சத்ரபதி சிவாஜிக்குத் தனது அரசாங்கத்தை நிறுவப் பெரியதும், சிறியதுமாகப் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. அப்போதிருந்த ஆட்சியாளர்கள் முஸ்லீம் மதத்தினர். இயல்பாகவே அவர்கள் மீது போர் தொடுக்க வேண்டியதாயிற்று. அதே நேரத்தில் அவர் மராத்தாக்களோடும் போரிட வேண்டியிருந்தது. மிகுந்த கவனத்துடன் செய்த இதைப்பற்றிய வரலாற்றுப்பதிவுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணிப்பது முறையல்ல. ரியாசட்கார் சர்தேசாய் தனது ‘மராத்தி ரியாசட்’ நூலில் எழுதுகிறார், “விஜாபுர்காரர்களுக்கு எதிரான போர் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமான போர் என்று பொருள் கொள்ளக்கூடாது. அது அத்தகைய குணவியல்புகளைப் பெற்றிருக்கவில்லை…” உண்மையில் சிவாஜி விஜாபுர்காரர்களின் கீழ் பணிபுரிந்துவந்த ஆற்றல்மிக்க மராத்தா உயர்குடியினரிடமிருந்து மாபெரும் பிரச்சினைகளைச் சந்தித்தார். அவர்கள் சிவாஜியை மதிக்கக்கூட விரும்பவில்லை. போரின் துவக்கத்திலிருந்தே மேட்டுக்குடியினரான மொஹிட், கோர்படே, மூர், சாவந்த், தாலவி, சுர்வே, நிம்பால்கர் முதலானோர் சிவாஜிக்கும் அவரது இலட்சியத்திற்கும் எதிராக இருந்தார்கள். இவர்களும், இவர்களைப் போன்ற இந்து மராத்தா மேட்டுக்குடியினரும் ஏன் சிவாஜிக்கு எதிராக இருந்தனர்? அவர்கள் அனைவரும் இந்துக்கள். அவர்கள் தங்கள் மதத்தை மிகுந்த நம்பிக்கையுடன் கடைப்பிடித்தவர்கள். சிவாஜி இந்து மதத்தைப் பாதுகாப்பதை தனது இலட்சியமாக ஏற்றுக்கொண்டிருப்பவர் என்றால் இவர்கள் எல்லாரும் அவருக்கு எதிராக ஏன் இருந்தார்கள்? ரியாசத்கார் தேசாயைப் போலவே சபாசர், கேபன் மற்றும் பரசானிஸ் போன்ற அறிஞர்களும்கூட சிவாஜியை எதிர்த்த மேட்டுக்குடியினரின் பட்டியல்களை தந்துள்ளார்கள். சிவாஜி ஒரு ‘தர்ம காரியத்தை’ எடுத்துக் கொண்டவராக இருந்திருந்தால் இந்த இந்துக்கள் அவருக்கு எதிராக ஏன் போரிட்டார்கள்? சர்தேசாய் எழுதுகிறார்: ‘அவர்கள் தாங்கள் வைத்திருந்தவைகளை இழந்துவிடுவோம் என பயந்தார்கள்.’ அவர்கள் எதை வைத்திருந்தார்கள்? காலவரிசைப்படி வரலாற்று நிகழ்வுகளைத் தொகுக்கும் கேபன், சிவாஜி ஒரு அழித்தொழிப்பவர் என எழுதுகிறார். அவர் எதை அழித்தார்? அந்த வரலாற்றுத் தொகுப்பாளர் நமக்குச் சொல்கிறார்: “விஜாபுர்காரர்களிடமிருந்து அவர் வென்றெடுத்த பகுதிகளில் வரி வசூலிப்பதில் தனி உரிமையாக இருந்த பழைய அமைப்பு முறையை மாற்றி ஒவ்வொரு ஆண்டும் பயிர் விளைச்சலை மதிப்பிடுவதை அடிப்படையாகக் கொண்டு நிதி வருவாயை வசூலிக்கும் புதிய முறையை சிவாஜி கொண்டு வந்தார்.” இந்த அறிக்கை சிவாஜி உண்மையில் எதை அழித்தார் என்பதை மிகவும் தெளிவுபடுத்துகிறது. இந்த வரலாற்றுத் தொகுப்பாளர், தனி உரிமை – ஏகபோகம் - என்ற அமைப்பு முறையைத் தகர்த்ததால் சிவாஜி மீது கோபம் கொண்டுள்ளார். ஆனால் அது மக்களுக்கு பயன் தருகிறது என்ற உண்மையை ஒத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. சிவாஜி யாரைத் துன்புறுத்தினார்; யாருக்கு உதவினார் என்பது மிகவும் வெளிப்படையாகிறது. இத்தகைய குறுகிய சொந்த நலன்கள் காரணமாகவே மராத்தா இந்து மேற்குடியின தலைவர்களான காட்கே, கண்ட காவே, பாஜி கோர்படே, பாஜி மொஹித், நிம்பல்கர், தாபீர், மூர், பந்தல் சாவந்த், சுர்வே, கோபாடே, பந்தாரே, கொங்கணி தேசாய்கள் மற்றும் மாவல் தேஷ்முக்குகள் முதலானோர் சிவாஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவரது மிக நெருக்கமான உறவினர்களான வியான் கோஜி போன்ஸ்லேவும், மம்பாஜி போன்ஸ்லேவும் அவருக்கு எதிராக இருந்தனர். அவரது தாய்வழி உறவினர்களான ஜக்தேவ்ராவ் ஜாதவ், ராதோஜி மானே ஆகியோரும் கூட அவரை எதிர்த்தார்கள். சைஸ்டா – ஏ – கான், சிவாஜியின் மீது படையெடுத்தபோது வடக்கிலிருந்த இந்து மேட்டுக்குடியினர் அவனோடு இணைந்து நின்றது இயல்பானதே. மகாராஷ்டிராவிலிருந்த பல மராத்தா உயர்குடியினரும் கூட அவனோடு கைகோர்த்தனர். சாகாஜி கெய்க்வாட், தின்கர்ராவ் க்காடே, ரம்பாஜி ரவ் பவார், சர்ஜேராவ் காட்சே, ஜஸ்வந்த் ராவ் ககாடே, திரியம்பன் ராவ் கண்டகாலே, கங்கோஜிராவ் காடே, அந்தாஜிராவ் மற்றும் தத்தாஜிராவ் கண்டகாலே இதில் உள்ளடங்கியிருந்தனர். மிகவும் ஆச்சரியமூட்டுவதாகவும், வலியை ஏற்படுத்துவதாகவும் அவரது சொந்த இரத்தபந்தங்களான திரியம்பன் ராவ்ஜி, ஜிவாஜி ராவ், பாலாஜி ராஜே மற்றும் பரசோஜி ராஜே ஆகியோர் முகலாய போர்ப்பிரபுவான சைஸ்டா – ஏ – கானுடன் இருந்தனர். இந்த முகலாய இராணுவம் சிந்த் கட்டைச் சார்ந்த தத்தாஜி ராஜேவையும், ரஸ்தம் ராவ ஜாதவையும் இணைத்துக் கொண்டது. இந்த ஜாதவ்கள் ஜீஜாபாய்க் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். லோனியில் கிருஷ்ணாஜி கல்பாரும் , காண்டயில், பூனாவில் சிற்றரசைப் பெறும் நம்பிக்கையோடு சேர்ந்து கொண்டார். கான், சியாட்டிலில் இருந்த தேஷ்முகியைப் பறிமுதல் செய்து கல்பாருக்குப் பரிசளித்தான். பூனாவில் லால் ம்ஹலுக்கு அருகில் வசித்து வந்த பாலாஜிராவ் ஹானோப் தனது வாழ்வின் சில காலங்களை சிவாஜியின் பாதுகாப்புக் குடையின் கீழ் கழித்தார். ஆனால் சிவாஜியைவிட சைஸ்ட் – ஏ – கானிடம் தான் அதிக உறவைக் கொண்டிருந்தார். ‘நமது சொந்தம்’ என்று சொல்லிக் கொண்டவர்களும், ‘இந்து’ என்று சொல்லிக் கொண்டவர்களும் இவ்வாறு தான் இருந்தார்கள். இதுதான் அவர்களின் தேசப்பற்று; இதுதான் மதத்தின் மீது அவர்களின் பற்று; அவர்களது ராஜவிசுவாசமும், தேசப்பற்றும் குறுநில மன்னர்களாவதை நோக்கியதாகவே இருந்தது. இதில் பாராட்டுக்குரிய விதிவிலக்காக இருந்தவர் கானோஜி தேஜே மட்டுமே. இந்தப் பிரபுக்கள் மற்றும் உயர்குடிமக்களின் மிகத்தெளிவான, மிகக் கசப்பான அணுகுமுறையை சிவாஜி அறிந்திருந்தார். அவரது முதலமைச்சர் ஓரிடத்தில் “அவர்கள் இயற்கையாகவே முன்கூட்டிய மனப்பாங்கை கொண்டவர்களாக, மற்றவர்களைக் கொள்ளையடிக்க அதிகாரம் உடையவர்களாக வரவேண்டும் என்ற அதிகாரப் பசியோடு இருந்தார்கள். எதிரி படையெடுத்து வந்த அன்றே அவனோடு நட்புக் கொண்டார்கள். குறுநிலத்தைப் பெறுவதற்கான நம்பிக்கையோடு, எந்த வித அழைப்பும் இல்லாமல் தாங்களாகவே சென்று சந்தித்தார்கள். இரகசியச் செய்திகளைத் தந்து, நமது நாட்டுக்குள் எதிரி நுழைவதற்கு உடந்தையாக இருந்தார்கள்… அவர்கள் தேசத்தைக் கொல்கிறார்கள்.” இந்த நிலப்பிரபுக்களுக்கும், உயர்குடிமக்களுக்கும் அவர்களது குறுநிலம்தான் முக்கியம். மதம் முக்கியமல்ல. அவர்களிடம் குறுநிலத்திற்கான வெறித்தனமான பற்றுதல் இருந்தது; அது மதத்திற்கானது அல்ல. சிவாஜியும் மதமும் சிவாஜி, மத நம்பிக்கை இல்லாதவரோ அல்லது நாத்திகரோ அல்ல. தனது அரசை மத சார்பற்ற அரசு என்று அறிவித்தவரும் அல்ல. அவர் தெய்வங்களையும், பெண்கடவுள்களையும், துறவிகளையும் வழிபட்டார். அவர் கோவில்களுக்கு மதத்தின் பெயரால் சொத்துக்களை வழங்கினார். ஆனால் அவர் முஸ்லீம்களின் மதத்துக்கு எதிரானவரா? அவர் இஸ்லாத்துக்கு எதிரியா? அவர் தன் மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது அவர் இஸ்லாத்தை வெறுத்தார் என்று அர்த்தமாகுமா? அவர்களை மகாராஷ்ட்ரமயமாக்க முயற்சித்தாரா? நாம் வரலாற்றுக்கு உண்மையாக இருக்க விரும்பினால் இந்தக் கேள்விக்கான பதில்கள் முற்றிலும் எதிர்மறையானவைகளே. சிவாஜி இரண்டு முறை சூரத்தைக் கொள்ளையிட்டார். இவை இரண்டையும் பற்றிய விரிவான கணக்குகள் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. ஜன்னார் கடைவீதி மற்றும் பிற இடங்களைக் கொள்ளையிட்டதும் கூடப் பதிவு செய்யப்பட்டுள்ன. இருந்தாலும், அவர் ஒரு சிறு மசூதியையாவது அழித்தார் என்பதற்கு சின்னஞ்சிறு ஆதாரமாவது இருக்கிறதா? ஒரு கோவிலை இடித்துக் கட்டப்பட்டது என்று கருதப்பட்ட இடத்தில் ஒரு மசூதியையாவது இடித்துக் கோவிலை மீண்டும் கட்டினார் என்பதற்கான ஆதாரமாவது இருக்கிறதா? இல்லவே இல்லை. அதற்கு மாறாக அவர் மசூதிகளுக்கு பணத்தையும், நிலங்களையும் நன்கொடையாக அளித்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ‘சபாசத் பாஹரில் இருந்து ஒரு பகுதி; “எல்லா இடங்களிலும் வழிபாட்டுத்தலங்கள் இருந்தன. சிவாஜியும் அவரது சமகால மராத்தாக்களும், இந்துக்களும் தர்ஹாக்களில் வழிபட்டு நன்கொடைகளை வழங்கினார்கள். அவர்கள் முஸ்லீம் பெரியவர்களை (குருமார்களை) பக்கீர்களை மதித்தார்கள். சிவாஜிக்கு பல குருக்கள் இருந்தார்கள். அவர்களில் யாகுத் பாபா என்ற முஸ்லீமும் ஒருவர். வரலாற்று ஆவணங்களில் முஸ்லீம் மதத்தின் மீதான சிவாஜியின் சகிப்புத் தன்மை பலவகைகளில் பதிவாகியுள்ளது. இந்த வகையில் முஸ்லீம் வரலாற்று ஆய்வாளரான கஃபிகானின் எழுத்து உண்மைமிக்க ஒரு பகுதி: ’சிவாஜி ஒரு கடுமையான விதியை உருவாக்கினார். தனது வீரர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம், மசூதிகளுக்கோ, குர்ஆனுக்கோ, பெண்களுக்கோ தீங்கு செய்யக்கூடாது. எவராவது குர்ஆன் நூலைக் கண்டெடுத்தால், அதற்கு மரியாதை அளிக்க வேண்டும். அதைத் தனது முஸ்லீம் பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆதரவற்ற இந்துவோ அல்லது முஸ்லீமோ காணப்பட்டால் அவரது உறவினர்கள் வந்து அழைத்துச் செல்லும்வரை சிவாஜி தனது சொந்தமுறையில் அவர்களைக் கவனித்துக் கொண்டார்.’ ரகுநாத் பண்டிட்ராவ் தனது 1699 நாளிட்ட கடிதத்தில் சிவாஜியின் இத்தகைய ஒரு உத்தரவை மேற்கோள் காட்டுகிறார். இந்த வகையில் அது மிகவும் தெளிவாக உள்ளது. ”ஸ்ரீமான் மகராஜ் உத்தரவிட்டார். ஒவ்வொருவரும் தனது மதத்தைச் சுதந்திரமாகப் பின்பற்றலாம். எவர் ஒருவருக்கும் அதைத் தடுக்க அனுமதியில்லை." மக்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக சிவாஜியைப் பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் இந்த வரலாற்று உண்மைக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். அவர்களது இஸ்லாம் மீதான வெறுப்புணர்வை வாங்குபவர்கள் எவரேனும் இருந்தால் அவர்களிடம் தங்கள் தகுதியைச் சொல்லியே அதை விற்பனை செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் பண்டங்களை சிவாஜியின் பெயரால் விற்பனை செய்யக்கூடாது. அந்தப் பண்டத்தை சிவாஜி என்ற அடையாளத்தின் கீழ் விற்கக்கூடாது. அதே வேளையில் முஸ்லீம்கள், சிவபக்தர்கள் என்று சொல்லிக்கொள்வோர் உருவாக்கியுள்ள பிம்பத்தோடு சிவாஜியை ஒப்பிடவே கூடாது. அவர்கள் வரலாற்றைப் பார்க்க வேண்டும். அவர்கள் இஸ்லாம் மதத்தின் மீதான சிவாஜியின் மனப்பாங்கை பாராட்ட வேண்டும். அதன் பிறகே தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும். சிவாஜி ஓர் இந்து; அவர் தனது மதத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் ஓர் அரசர் என்ற முறையில் அவர் தனது மக்களை மத அடிப்படையில் வேறுபடுத்திப் பார்த்ததில்லை. அவர் இந்துக்களை ஒரு விதமாகவும், முஸ்லீம்களை இன்னொரு விதமாகவும் நடத்தவில்லை. வேறு ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே முஸ்லீம்களை அவர் பாரபட்சமாக நடத்தவில்லை. இந்துக்கள் முஸ்லீம்கள் ஆகிய இரு தரப்பினரும் கட்டாயம் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது இரண்டு வகையான முஸ்லீம் அரசர்கள் இருந்தார்கள். அக்பரைப் போன்ற சிலர் இந்துக்களோடு பொறுமை பூண்டவர்களாக இருந்தார்கள். சிலர் (இந்துக்கள் மீது அநீதியான ஜிஸியா வரியை விதித்த ஒளரங்கசீப்பைப் போல) சகிப்புத் தன்மை அற்றவர்களாக இருந்தார்கள். ஒளரங்கசீப் முல்லாக்கள் மற்றும் மெளல்விகளின் வேண்டுகோளுக்கேற்ப ஜிஸியா வரியை விதித்தார். இந்த வரிக்கு எதிராக ஒரு கிளர்ச்சி நடந்தது. சிவாஜி இதைப் பற்றி ஒளரங்கசீப்புக்கு பெர்சிய மொழியில் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம், சிவாஜி எவ்வாறு மதத்தைப் பார்த்தார் - தனது சொந்த மதத்தையும் அதேபோல் வேற்று மதத்தையும் - என்ற வரைபடம் போன்ற சித்திரத்தைத் தருகிறது. ஏழை எளிய ஆதரவற்ற மக்கள் மீது ஜிஸியா வரியை விதிப்பது முகலாய ஆட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கே எதிரானது என்று சிவாஜி எழுதினார். ஒளரங்கசீப்பின் முப்பாட்டனான அக்பர் 52 நீண்ட ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவர் ஒவ்வொருவரையும் நீதிநெறிப்படி நடத்தினார். எனவே மக்கள் அவரை ’ஜகத்குரு’ என்று கொண்டாடினார்கள். ஜஹாங்கீரும், ஷாஜஹானும் அவரது கொள்கைகளை மேலும் முன்னெடுத்துச் சென்றனர். அவர்கள் எல்லாரும் இதனால் உலகப்புகழ் பெற்றார்கள். இந்தப் பேரரசர்களால் ஜிஸியா வரியை எளிதாக வசூலித்திருக்க முடியும். ஆனால் அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாகவும், பெருமைக்குரியவர்களாகவும் ஆனதற்கு இதுதான் காரணம். அவர்களின் பேரரசுகள் வளர்ச்சி பெற்றன. ஆனால் ஒளரங்கசீப்பின் ஆட்சியில் இந்து மற்றும் முஸல்மான் போர்வீரர்கள் மகிழ்ச்சியடையவில்லை. உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துவிட்டன. இதனால் ஏழை பிராமணர்கள், ஜோகிகள், பைராகிகள், ஜைனத் துறவிகள் மற்றும் சன்னியாசிகளிடம் ஜிஸியா வரியை வசூலிக்க யாருமில்லை. இத்தகைய நடவடிக்கை முகலாய அரசமரபுக்கு உறுதியாகக் கெட்டபெயரையே ஏற்படுத்தும். சிவாஜி மேலும் எழுதுகிறார்; ‘புனித நூலான குர்ஆன் இறைவனின் சொந்தச் சொற்களால் ஆனது. அது ஒரு தெய்வீக நூல். அது இறைவனை ஒட்டுமொத்த உலகுக்குமான இறைவன் என்று அழைக்கிறது. அது முஸல்மான்களுக்கு மட்டுமான இறைவன் என்று கூறவில்லை. இது ஏனென்றால் இறைவனின் முன்னால் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருவரே. முஸ்லீம்கள் மசூதிகளில் தொழுகை நடத்தும்போது, அவர்கள் உண்மை பகவானை வழிபடுகிறார்கள். அதுபோல இந்துக்களும் கூடக் கோவிலில் மணியை ஒலிக்கும்போது அதையே செய்கிறார்கள். எனவே ஒரு மதத்தை ஒடுக்குவது என்பது இறைவனோடு பகைமைகொள்வதைப் போன்றதாகும்’ எனவே சிவாஜி ஒளரங்கசீப்பிடம் அவர் தனது சிந்தனையைப் புறக்கணிக்கக் கூடாது என முறையீடு செய்கிறார். முன்பு குஜராத்தின் சுல்தான் தனது சிந்திக்கும் திறனை தியாகம் செய்தான். அதற்கான விலையை அவன் தர வேண்டியதாயிற்று. அதேபோலப் பேரரசரும் அதற்கான விலையைத் தரவேண்டும். “எரியாத எந்தப் பொருளும் நெருப்போடு தொடர்புகொள்ளும்போது எரிந்துவிடுகிறது. அதுபோலவே மக்களின் அதிருப்திக்குள்ளாகும் எந்த அரசும் அழிந்துவிடுகிறது. அப்பாவிகளைத் துன்புறுத்துவதிலிருந்து பிறக்கும் புரட்சிக்கனல் எந்த நெருப்பையும்விட ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தையும் எரித்துவிடும். எனவே பேரரசர் எந்த சமயக்கோட்பாட்டுக்கும் எதிராக பாகுபாடு காட்டவும், மக்களை ஒடுக்கவும் கூடாது. மக்கள் பூச்சிகளைப் போலத் தீங்கற்றவர்கள். எவ்வாறு இருந்தாலும் இந்து மக்கள் துன்பத்துக்குள்ளாக்கப் பட்டால் உங்கள் பேரரசு அவர்களது கோபப் பெருந்தீயில் சாம்பலாகிவிடும்.” சிவாஜி ஒரு முக்கியமான கொள்கையை நமக்கு, இங்குள்ள இந்தியர்களுக்கு முன்மொழிகிறார். அக்பரும், மற்ற பேரரசர்களும் இந்திய மக்களை மதக் கொடுமைகளுக்கோ, ஒடுக்குமுறைகளுக்கோ உள்ளாக்கவில்லை. அத்தகைய மத சகிப்புத்தன்மை காரணமாக அக்பர் ‘ஜகத்குரு’ எனப் போற்றப்பட்டார். ஆனால் ஒளரங்கசீப்போ, ஏழை மக்கள்மீது வரியை விதித்து இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டார். குர்ஆன் இறைவனின் சொல். இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இறைவன் வேறுவேறு அல்ல. அரசன் மக்களை இம்சித்தால், அவன் எத்தகைய ஆற்றல் பெற்றவனாக இருந்தாலும் அவர்கள் அவனை அழித்துவிடுவார்கள். அவரது காலகட்டத்தில் சிவாஜியின் சிந்தனைகளும் அவரது கொள்கைகளும் வரலாற்றில் ஒப்பற்றவையாகவும், உன்னதமானவையாகவும் இருந்தன. மக்களின் வாழ்வில் மதம் ஓர் அழுத்தமான தாக்கத்தைக் கொண்டுள்ளது. ஆனால் சிவாஜி, மற்ற மதங்களும் நமது சொந்த மதத்தைப் போலவே மகத்தானவை; ஒவ்வொரு மதத்தின் வழிபாட்டுமுறையும் வேறுவேறாக இருந்தாலும் அதன் இலட்சியம் ஒன்றுதான் என்று நமக்கு கற்றுக்கொடுத்தார். அக்பர், தாராஷிகோ, இப்ராஹிம் அடில்ஷா ஆகியோரின் சிந்தனைகள் இதற்கு மாறுபட்டவை அல்ல. சிவாஜி மத உணர்வு கொண்டவர், அவர் இந்துவாக இருப்பதில் பெருமிதம் கொண்டார். அவர் மிகப்பெரும் கொடைகளைக் கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் அளித்தார். இவை எல்லாம் உண்மையே. ஆனால் அவர் தனது மதத்தின் மீது கொண்ட பெருமிதம், மற்ற மதங்களின் மீதான வெறுப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. முஸ்லீம்களை வெறுக்காவிட்டால் தான் ஒரு மாபெரும் இந்துவாக இருக்க முடியாது என்று அவர் ஒருபோதும் எண்ணியதில்லை. மத்திய காலகட்டச் சூழலிலும்கூட அவரது மத நம்பிக்கை அறிவுப்பூர்வமானதாக இருந்தது. சிவாஜி – பிராமணர்கள் – 96 பெரும்குடும்பங்கள் குலமுறைகள் – சூத்திரர்கள் சிவாஜியின் பெயருக்கு முன் பல பட்டங்கள் பொருத்தப்பட்டன. பசு-பிராமணர் பாதுகாவலர் என்பது மிகவும் தெரிந்த ஒன்று. அவர் பசுக்கள் மற்றும் பிராமணர்களின் பாதுகாவலர் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டது. நம்பத்தகுந்தவை என்று ஒப்புக்கொள்ளப்பட்ட சத்ரபதி சிவாஜியின் பல கடிதங்கள் இப்போது கிடைத்துள்ளன. இந்த எல்லாக் கடிதங்களிலும் தம்மை பசு-பிராமணர் பாதுகாவலன் என்று கூறிக்கொண்டதேயில்லை. அவரது சமகாலத்தவர் பலர் அவருக்கு எழுதியுள்ளனர். அந்தக் கடிதங்களிலும் கூட எவர் ஒருவரும் அவரை பசு-பிராமணர் பாதுகாவலர் என்று குறிப்பிட்டதே இல்லை. அதற்கு மாறாக அவர் அரசராக உயர்த்தப்பட்ட பின் 29 கடிதங்கள் முத்திரை குத்தப்பட்டன. அந்தக் கடிதங்களில் அவர் சத்திரிய குல ராஜா சிவ சத்ரபதி என்றுதான் அழைத்துக் கொண்டார். அவர் பசு, பிராமணர் பாதுகாவலன் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டதேயில்லை. அப்படி என்றால் பசு-பிராமணர் என்பது எங்கிருந்து வந்தது. எஸ்.எம்.புரந்தரே, சிவாஜி தம்மை பசு-பிராமணர் பாதுகாவலர் என்று அழைத்துக் கொண்டதாகக் கூறுகிறார். அதற்கு ஆதாரமாக ‘சிவ் சரித்ர சாதனே’ தொகுப்பு 5 பிரிவு 534, 537 ஆகியவற்றை புரந்தரே தருகிறார். அந்த ஆதாரங்களையும், கடிதங்களையும் முழுவதுமாக ஆய்வு செய்தபின் தேஜ்வாக்கர் ஒரு முடிவுக்கு வருகிறார்; சிவாஜி தன்னை பசு, பிராமணர் பாதுகாவலர் என்று அழைத்துக் கொள்ளவே இல்லை. ஒரு பிராமணர்தான் தனது கடிதத்தில் சிவாஜியை அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரிவு 537ல் பசு-பிராமணர் பாதுகாவலர் என்ற வார்த்தையே இல்லை. அது மிகச் சாதாரணமான வெளுத்துப் போன பொய்! சிவாஜி தன்னை பசு-பிராமண பாதுகாவலர் என்று கூறிக்கொள்வதற்கும், ஒரு பிராமணர் அவ்வாறு அழைப்பதற்கும் இடையே உலக அளவிலான வேறுபாடு இருக்கிறது. பிச்சை கேட்டோ, அல்லது தனக்கு கருணையோ காட்டுமாறு அரசர் முன் செல்லும் எவர் ஒருவரும் இயல்பாகவே அவரைப் பாதுகாவலர் என்றுதான் அழைப்பார். இதில் சிறப்பாக என்ன இருக்கிறது? அப்படியானால் சிவாஜியின் பெயரோடு இந்தப் பட்டத்தை வலுக்கட்டாயமாக இணைத்தவர் யார்? பசுக்கள் இதைச் செய்திருப்பதற்கான சாத்தியம் இல்லை. எனவே பதில் மிகத் தெளிவானது. மகத்தான வரலாற்று மனிதர்களுக்குப் பட்டங்களை இணைப்பது புத்திசாலித்தனமும், தந்திரமும் மிக்க ஒரு வசதியான ஏற்பாடு. இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் எவ்வளவு காலம் படிப்பறிவற்றவர்களாக இருக்கிறார்களோ அவ்வளவு காலத்துக்கும் - அவர்கள் இந்தச் செய்தியின் வேர்களைச் சொல்லாதிருக்கும் வரைக்கும் - கவனிக்கப்படாமலே போய்விடும். ஒரு வரலாற்று உண்மையை சூழ்ச்சிக்குள்ளாக்கும் ஏற்பாடாக இது தெரியவராது. சிவாஜி தனது படைவீரர்கள் பசுக்களை, விவசாயிகளை, பெண்களைக் கவர்ந்து கொள்வதைத் தடை செய்தார் என்று கிராண்டஃப் தனது நூலில் குறிப்பிடுகிறார். வேறு பல சான்றுகளும் உள்ளன. பசுக்களின், விவசாயிகளின், பெண்களின் பாதுகாவலராக இருந்த சிவாஜி எவ்வாறு பசு-பிராமணர் பாதுகாவலாராக ஆனார்? அவரை இவ்வாறு ஆக்கியவர்கள் யார்? விவசாயிகள், பெண்கள் என்ற வார்த்தைகளை நீக்கி அந்த இடத்தில் பிராமணர் என்ற வார்த்தையைச் சொருகியவர் யார் என்பது ஊகிக்க முடியாதது அல்ல. சிவாஜியின் ஆட்சியில் பிராமணர்கள் எத்தகைய தனி உரிமைகளையும் பெற்றிருப்பதாகப் பார்க்க முடியவில்லை. அதற்கு மாறாக அவர் விஷமத்தனம் செய்த பிராமணனைப் பற்றி ஒரு கடிதத்தில் எழுதும்போது ‘அவன் பிராமணனாக இருந்தாலும்கூட, அவனை விட்டுவைக்கக் கூடாது’ என்று எழுதுகிறார். மேலும் அவர் ‘எதிரியைப் போல் நடந்து கொள்பவன் அதேபோல் நடத்தப்படுவான்’ என்று அச்சுறுத்துகிறார். மராத்தாக்களைப் போலவே எல்லா பிராமணர்களும் அவருக்கு ஆதரவாக இருந்ததில்லை! பசு-பிராமணர் பாதுகாவலர் என்ற பட்டத்தை சிவாஜி சுவீகாரம் செய்து கொள்ளாததற்கும் இவை எல்லாம் காரணங்கள். சந்தேகத்துக்கிடமில்லாமல் அவர் அதை ஏற்றுக் கொண்டதே இல்லை. இங்கே ஒரு வேடிக்கையான கதையும் உண்டு. சிவாஜியை எதிர்ப்பதற்காக பிராமணர்கள் கோடி அர்ச்சனை என்ற பெயரில் ஒரு யாகத்தையும் நடத்தினார்கள். டெல்லிப் பேரரசின் கீழ் சேவை புரிந்த, ஆற்றல் மிக்க உயர்சாதியினரான மிர்ஸாராஜா ஜெய்சிங், சிவாஜியைத் தன் பாதங்களின் கீழ் பணிய வைக்க மகாராஷ்டிராவுக்கு வந்தார். மகாராஷ்டிர பிராமணர்கள் அவர் சிவாஜியை எதிர்த்து வெற்றி பெறுவதற்காக இந்த யாகத்தை நடத்தினர். சிரிக்க வைக்கும் விதத்தில் இது ஓர் ஆவணமாகப் பதிவுசெய்யப்பட்டது: “சிவாஜி சண்டைகளில் விருப்பம் உடையவர்; அதிக தைரியமுள்ளவர்; மிகவும் புத்திசாலி என்பதில் மிர்ஸாராஜா கவலை அடைந்தார். சிவாஜி ஓர் ஆற்றல் மிக்கப் போர்வீரர்; அவர் அஃப்சல் கானைத் தாமே கொன்றவர். சைஸ்டா – ஏ – கானின் முகாமுக்குள்ளேயே குழப்பம் விளைவித்தவர். எனவே மிர்ஸா ராஜா தனது சொந்த வெற்றியின் மீது கவலைப்பட்டார். பிறகு மாபெரும் பிராமணப் பூசாரிகள் அவர் யாகம் செய்தால் அவர் கட்டாயம் வெற்றிபெறுவார் என்ற ஒரு வழியை ஆலோசனையாகக் கூறினர். அதன்பிறகு மிர்ஸா கூறினார்:”ஒருகோடி அர்ச்சனைகளையும், பதினோரு கோடி லிங்கபூஜைகளையும் தயார் செய்யுங்கள். எனது விருப்பத்தைப் பூர்த்திசெய்ய மந்திர உச்சாடனங்கள் நடக்கட்டும்." இவ்வாறு அவர் நானூறு பிராமணர்களை யாகத்தில் அமருமாறு ஏற்பாடு செய்தார். யாகமும், வழிபாடுகளும் நாள் முழுவதும் தொடர்ந்தன. அவர் யாகத்திற்காக இரண்டு கோடி ரூபாய்களை செலவிட்டார். அது மூன்று மாதங்கள் தொடர்ந்தது. யாகம் முடிந்த பிறகு பிராமணர்கள் உரிய முறையில் கெளரவிக்கப்பட்டார்கள். அதன்பிறகு அவர் தனது போர் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சிவாஜி ஒரு பிராமணப் பாதுகாவலராகவும், அவரது ஆட்சி பிராமணர்களையும், இந்து மதத்தையும் காப்பாற்றியது என்றிருந்தால் பிராமணர்கள் அத்தகைய மாபெரும் கோடி அர்ச்சனையை ஏன் நடத்தினார்கள்? சிவாஜி சத்ரபதியாக மகுடம் சூடுவதற்கு பிராமணர்களின் எதிர்ப்பு மகாராஷ்டிராவிலிருந்த பிராமணர்கள் சிவாஜி மகுடம் சூடுவதை எதிர்த்தார்கள். இப்போது அந்த உண்மை எல்லாருக்கும் தெரியும். இந்துமத சட்டத்தின்படியும், நால்வர்ண தர்மப்படியும் பிராமணர்களும், சத்திரியர்களும் மட்டுமே அரசராக உரிமை பெற்றவர்கள். சிவாஜி ஒரு மாபெரும் போராளியாக இருந்தாலும் அவர் தனது ராஜ்யமாக எளிதில் அடையக்கூடிய பகுதியை வெற்றி கொண்டிருந்தாலும் அவர் அரசராவதற்கு உரிமை பெற்றவர் அல்ல என்று அந்த (மனுதர்ம) சட்டம் கூறுகிறது. அவர் அதற்குப் பொருத்தமானவர் அல்ல. சிலர் அவர் சத்திரியரா என்று கூட ஐயப்பட்டார்கள். ஆனால் மற்றவர்கள் அவர் சத்திரியரா? அல்லது இல்லையா என்பது பற்றிச் சிறிதும் அக்கறைப்படவில்லை. அவர்களுக்கு அவர் சத்திரியர் குலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் சத்திரியரல்ல. ஏனெனில் அவர் (samskar kshaya) தீட்டுப் பட்டிருந்தார். அவருக்கு தோஷம் (maunji கழிக்கப்படவில்லை. அவரது திருமணம் முறையான சடங்குகளின்படி செய்யப்படவில்லை. அப்படியானால் அவர் எப்படி அரசராக முடியும்? மிகவும் வைதீகமான சில பிராமணர்கள் இறுதி எல்லைக்கே சென்றார்கள். அவர்கள் நந்த வம்சத்தின் முடிவோடு சத்திரியர்களும் முடிந்து போனார்கள். அதன்பின் எந்த ஒரு சத்திரியனும் ஜீவித்திருக்கவில்லை என்று வாதிட்டார்கள்.. கிருஷ்ண பாட் சேஷா, அக்பரின் காலத்தில், ‘சூத்ரசார் சிரோமணி’ யை எழுதினார். அதில் அவர் “பரசுராமர் உலகத்தில் எல்லா சத்திரியர்களையும் துடைத்து அழித்துவிட்டார். இந்து மதத்தில் அரச வம்சத்தைச் சார்ந்த, அரசாளும் தகுதியுள்ள சத்திரியர்கள் எவரும் இன்று இல்லை. இத்தகைய சூழலில் சிவாஜி எப்படி மகுடம் தரிக்க முடியும்?” என்று வாதிட்டார். மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பிராமணர் கூட பதவியேற்போடு இணைந்த மதச் சடங்குகளைச் செய்யத் தயாராக இல்லை. பின்னர் காசியிலிருந்து காகபட்டர் வரவழைக்கப்பட்டு வேதமுறைப்படி மதச் சடங்குகளைச் செய்து சிவாஜிக்கு மகுடம் சூட்டினார். சிவாஜி காகபட்டருக்கும் மற்ற பிராமண சகபாடிகளுக்கும் விலை உயர்ந்த பரிசுகளை வழங்கினார். அவர்களுக்கு ராஜ்கட்டிலிருந்து தூக்கிச் செல்ல முடியாத அளவுக்கு ஏராளமான தங்கம் அளிக்கப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. சிவாஜியின் பிராமணத் தோழர்கள் மகாராஷ்டிராவிலிருந்த பிராமணர்கள் சிவாஜி பதவியேற்பதை எதிர்த்தார்கள். சிவாஜிக்கு எதிராக மிர்ஸாராஜா வெற்றிபெற அவர்கள் எவ்வாறு யாகம் செய்தார்கள் என்பதையும் பார்த்தோம். இதிலிருந்து மகாராஷ்டிராவிலுள்ள பிராமணர்கள் அனைவரும் சிவாஜியை எதிர்த்தார்கள் என்ற முடிவுக்கு வருவது தவறு. இந்தப் பிரச்சினை தனிப்பட்ட இயல்பானது அல்ல. இது ஒருவகை பிராமண சமுதாயம் அல்லது இன்னொன்று என்பதைப் பற்றியதல்ல. இது ஒரு குறிப்பிட்ட மதகுருவைப் பற்றியதல்ல. அடிப்படைப் பிரச்சினையே நால்வர்ணம் பற்றியது. இந்தப் பிரச்சினை இன்றும் கூட இருக்கிறது. வருணதர்மம் சூத்திரர்கள் அரசர்களாக ஆகக்கூடாது என உத்தரவிடுகிறது. ஏனெனில் அவர்கள் பிரம்மாவின் பாதங்களிலிருந்து தோன்றியவர்கள். மூன்று மேல்வகை வர்ணத்தினருக்குப் பணிவிடை செய்வதுதான் அவர்களது மதம்சார்ந்த கடமை. கடவுள் மன்னனுக்குள் ஒரு பகுதியாக உள்ளார். ஒரு சூத்திரனுக்குள் அவ்வாறு கடவுள் இருப்பது சாத்தியமில்லை. இவ்வாறு சூத்திரன் எந்தக் காலத்திலும் அரசனாக முடியாது என மதம் வலியுறுத்துகிறது. ஒரு முஸல்மான் கூட அரசனாகலாம்; ஆனால் ஒரு சூத்திரன் அவ்வாறு அரசனாக முடியாது. இதைத்தான் வைதீக இந்து மதம் கூறுகிறது. எனவே இதன்படி மதமே சிவாஜி அரசராக மகுடம் சூட்டுவதை தானாக எதிர்க்கிறது. இந்த எதிர்ப்பு என்பது எல்லா பிராமணர்களாலும் அல்ல. உண்மையில் சிவாஜி தனது ராஜ்யத்தை ஸ்தாபிக்க பல பிராமணர்கள் அவருக்கு கைகொடுத்தார்கள். தாதாஜி கொண்டதேவ் தான் சிவாஜியின் குரு. ராம்தாஸ் சிவாஜிக்கு வழிகாட்டினாரா இல்லையா என்பது பற்றிய கசப்பான கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்தச் சச்சரவை முடிவுக்கு கொண்டு வருவதை அறிஞர்களிடம் விட்டு விடுவோம். ஆனால் சிவாஜியை ஒரு போர்வீரனாகவும், ராஜதந்திரியாகவும் பயிற்றுவித்ததில் தாதாஜி கொண்டதேவின் பங்கு பற்றி எவ்விதச் சந்தேகமுமில்லை. மோரோபந்த் பிங்களே அவரது பேஷ்வா, பிரதம மந்திரி. மோரோபந்த், அனாஜி தத்தோ, தாதாஜி திரிம்பக் ஆகியோர் அவரது அமைச்சர்கள் மட்டுமல்ல; எடுத்ததை முடிக்கும் மாவீரர்களும்கூட. ஆக்ராவிலிருந்து தப்பிவந்த மயிர்க்கூச்செரியும் படலத்தில், மகாராஷ்டிராவிலிருந்து வந்த இரண்டு பிராமணர்களான திரியம்பக்பந்த் தாபிர், ரகுநாத் பந்த் கோர்டே, வடக்கிலிருந்து வந்த கிருஷ்ணாஜி காஷி, விசாஜி ஆகியோரின் மதிப்பிட முடியாத பங்களிப்பு வரலாற்றில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பிராமணர்களைப் பற்றிய பிரச்சினை அல்ல. வைதீக இந்து மதம் பற்றியது. வரலாற்றின் எல்லை வரையறைகள் பற்றியது. இந்த வரையறைகளை சிவாஜியும் தன்னளவில் ஏற்றுக் கொண்டவர். அந்தக் காலத்தில் அத்தகைய கேலிக்கிடமான நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதற்கு அதுதான் காரணம். சிவாஜி தனது புனித்தன்மையை இழந்துவிட்டார் என்ற வாதத்தை எதிர்கொள்ள, காகபட்டர் தோஷம் கழிப்பதை சிவாஜியின் 44ஆம் வயதில் செய்தார். அவர் மீண்டும் ஒருமுறை மந்திரங்கள் ஓதத் திருமணம் செய்து கொண்டார். சிவாஜி ஏராளமான தங்கத்தைக் கொட்டிக் கொடுத்த பின்பே அவர் மகுடம் சூட்டப்பட்டார். சந்தர்ப்பவாத அடிப்படைவாதிகள் இன்று ‘இந்து மதக்காவலர்’ என்ற பட்ட்த்தைச் சூட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களால் இதே இந்துமதம்தான், அதே இந்துமதத்தின் காவலர்கள்தான் அவர் பதவி ஏற்பதை எதிர்த்தார்கள் என்ற உண்மையை மறைக்க முடியுமா? இதனால் அவர்கள், சிவாஜி தனது 44ஆம் வயதில் தோஷம் கழிக்கச் செய்யவும், அவரது மனைவியை இரண்டாம் முறையாக திருமணம் செய்து கொள்ளவும் வைத்தனர். சிவாஜி தனது மதத்தைப் பின்பற்றினார். அவரது சமகால மதத்தின் மீதும், அவரது காலத்தின் மீதும் சில எல்லைகளை வகுத்திருந்தார். மாபெரும் மனிதர்களும் கூட அவர்களது வரலாற்றின் காலத்திற்குள் கட்டுப்பட்டே இருந்தார்கள். சூழ்நிலைக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள். சிவாஜியும்கூட அத்தகைய கட்டுப்பாடுகளுக்குள்ளும், வரையறைகளுக்குள்ளும் இருக்கவேண்டி இருந்தது. சிலர் சிவாஜியின் சில நடவடிக்கைகளை வரலாற்றுக்குப் பொருத்தமில்லாத வகையில் அதிகப்படுத்தி புகழ்ந்திட முனைகிறார்கள். சிவாஜியின் அரசு ஒரு மதச்சார்பற்ற அரசு என்றும், சிவாஜிதான் உண்மையான சமத்துவவாதி என்றும் சிலர் அபத்தமான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. சிவாஜி நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் மன்னர். எனவே அவர் மதச்சார்பற்றவராக இருந்திருக்க முடியாது. அதேபோல் அவர் ஒரு சமத்துவவாதியாக இருந்தார் என்பது சாத்தியமற்றது. மிகவும் முக்கியமான அவரது தொலைநோக்குப் பார்வை அவரது சமகாலத்தவர்களுடையதை விட மிகவும் மேம்பட்டதாக இருந்தது. அவர் பல விஷயங்களில் எடுத்த முற்போக்கான நடவடிக்கைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. விவசாயிகளிடம் அவர் கொண்டிருந்த பாசத்தையும், பரிவையும் அவர் வெளிப்படுத்திய விதம் வித்தியாசமாக இருந்தது. சிவாஜியின் முதல் முடிசூட்டு விழா 1674 ஜூன் 5ல் ராய்கட்டில் நடைபெற்றது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு இன்னொரு முடிசூட்டு விழாவும் நடைபெற்றது. இது பலருக்கும் தெரியாது. இரண்டாம் முடிசூட்டு விழா முதலாவது விழாவுக்கு மூன்று மாதங்கள் கழித்து நடைபெற்றது. நிச்சால்புரி கோசவி என்ற யஜுர் வேத தாந்திரீகர் ஒருவர் இருந்தார். அவர் முதல் முடிசூட்டு விழாவுக்குப்பின் சிவாஜியைச் சந்தித்தார். சிவாஜியின் தாயார் ஜீஜாபாய் முடிசூட்டு விழா முடிந்த பதின்மூன்றாம் நாளில் இறந்துவிட்டார். அவரது இராணுவத் தலைமைத்தளபதி பிரதாப்ராவ் கெளரும் இறந்துவிட்டார். சிவாஜியின் மனைவிகளில் ஒருவரான காசிபாயும் கூட இறந்துவிட்டார். இந்தத் துன்பங்களுக்கெல்லாம் காரணம் முடிசூட்டுவிழாவின் போது சமயச்சடங்குகளில் காகபட்டர் செய்த சில தவறுகள்தான் என நிச்சால்புரி கூறினார். முடிசூட்ட அவர் குறித்த நாள் நல்ல நாள் அல்ல. பல்வேறு கடவுள்கள் தங்களுக்கு விலங்குகள் பலியிடாததால் திருப்தியடையவில்லை. இவற்றின் காரணமாகவே இந்த எல்லாத் துயரங்களும் நேர்ந்துவிட்டன என்றார் கோசவி. சிவாஜியும் அவரது ஆலோசகர்களும் மதநம்பிக்கை கொண்டவர்கள், எத்தகைய பாவச்செயல்களையும் செய்யக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பவர்கள். அன்றைய நாட்களில் அவர்களது உணர்வுமட்டமும் ஒரு வறையறைக்குட்பட்டே இருந்தது. நிச்சால்புரியின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு இன்னொரு முடிசூட்டுவிழாவும் நடைபெற்றது. யாகங்கள் வளர்க்கப்பட்டன. பிராமணர்களுக்கு ஏராளமான பரிசுகள் அளிக்கப்பட்டன. இந்த உலகில் எந்த ஒரு இடத்திலும் ஒரே மனிதனுக்கு இரண்டு முறை முடிசூட்டுவிழா நடத்திய நிகழ்வு எங்கும் நடைபெற்றதில்லை. ஆனால் இரட்டை முடிசூட்டு விழாக்களிலும் கடவுள்களுக்கும், பிராமணர்களுக்கும் பரிசுகளை கொட்டிக்கொடுத்தும் அவருக்குப் பலனளிப்பதாக இல்லை. அதன் பின் சிவாஜி வெறும் ஆறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, பின் இளம் வயதிலேயே மரணமடைந்தார். சிவாஜியின் இரட்டை முடிசூட்டு விழா நிகழ்வுகளிலிருந்து அந்த நாட்களிலிருந்த உணர்வு மட்டத்தை அறிந்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரலாம். சிவாஜிக்கு 96 குடும்பங்களின் எதிர்ப்பு சிவாஜி ஒரு சூத்திரர் அல்லாத தாழ்ந்த சாதியைச் சார்ந்தவர் என்று பிராமணர்கள் மட்டுமே கருதினார்கள் என்பதல்ல. ‘96 மாபெரும் குடும்பங்கள்’ என்று கருதப்பட்ட மராத்தி உயர்குடி மக்கள் தங்களை சத்திரியர்கள் என்று கருதிக்கொண்டு சிவாஜி அரசராக வர விரும்பியதை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கவில்லை. இந்தப் பெருமைமிக்க மேல்மட்டக் குடும்பங்களுக்கு 96 குடும்பப்பெயர் கொண்ட ஒரு பட்டியல் உண்டு. போன்ஸ்லே அதில் ஒன்றல்ல. இன்றும் கூட சாதி, குடும்பம், அந்தஸ்து மற்றும் மரபு அடிப்படையில் திருமணங்களை நடத்தும் மராத்தியர்கள் ‘போன்ஸ்லே’ என்ற குடும்பப் பெயர் கொண்டவர்களை கீழானவர்களாகவே நடத்துகிறார்கள். சிந்தே ராஜே, மூர் ராஜே என 96 பெரும் குடும்பங்களைச் சார்ந்த எல்லா மராத்தியர்களுமே தங்களை அரசர்கள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு ராஜ்யம் இல்லை. ஆனாலும் அவர்கள் தங்களை அரசர்கள் என்றே கூறிக்கொண்டார்கள். அஹமதுநகரில் உள்ள எல்லா மராத்தியர்களும் (மற்ற பிறரும் கூட) பட்டீல் என்ற தங்கள் குலப்பெயரை தங்கள் பெயர்களோடு இணைத்துக் கொண்டார்கள். எ-டு: லண்டாகே–பட்டீல், கோல்ஹே-பட்டீல், காலே-பட்டீல்,விக்கே-பட்டீல் இவர்கள் எல்லாருமே பட்டீல்கள்! அந்த 96 குடும்ப மராத்தியர்கள் சிவாஜியை எப்படி நடத்தினார்கள் என்பதற்கான ஒரு நிகழ்ச்சி பரவலாகவும், அடிக்கடியும் சொல்லப்பட்டு வந்தது. ஜவாலியைச் சார்ந்த மூர், விஜாபுர் ஷாவின் ராஜகுரு. அவர் ‘ராஜே’ என அழைக்கப்பட்டார். அத்துடன் சந்திரராவ் என்ற பட்டத்தையும் சேர்த்துக் கொண்டார். சிவாஜி இவருடைய சேவையை சுயராஜ்ய இலட்சியத்திற்காக இணைத்துக் கொள்ள முயற்சித்தார். அவர் கடிதங்களை அனுப்பினார். அத்துடன் தூதர்களையும் அனுப்பினார். இந்த நேர்மையான முயற்சிகளுக்கு சந்திரராவ் பதிலளிக்காதபோது சிவாஜி ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பினார். சந்திரராவ் இணைந்து கொள்ள தயாராக இல்லாவிட்டால் ஜவாலி கைப்பற்றப்பட்டு மூர் கைது செய்யப்படுவார். மூர் ஒரு அரக்கத்தனமான பதிலை அனுப்பினான்: நீ ஒரு அரசனா? நீயே உன்னை ஒரு அரசன் என்று அழைத்துக் கொள்வதால் நீ ஒரு அரசனாகி விடுவாயா? நீ சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அதை நிறுத்து. ஜவாலிக்கு கைகழுவ வா, நாம் சண்டையிடுவோம்! சிவாஜி மூரின் விருப்பத்தை நிறைவேற்றினார். சிவாஜி அவனோடு போரிடச் சென்று ஜவாலியைக் கைப்பற்றினார். இங்கே கவனிக்க வேண்டியது, மூர் தன்னை அரசன் என்று அழைத்துக்கொண்டான். சிவாஜியின் அரசுரிமையை ஏற்றுக்கொள்ள மறுத்தான். ரஞ்சே பட்டீலின் கதை சற்று வித்தியாசமானது. அவன் ஒரு ஏழை விவசாயியின் மகளை கற்பழித்தான். எனவே அவன் கைது செய்யப்பட்டு சிவாஜியின் முன் கொண்டுவரப்பட்டான். சிவாஜி அவனுக்கான தண்டனையை கூறியபோது ரஞ்சே பட்டீல் அங்கிருந்த தாதாஜி கொண்டதேவிடம், “முறையான அதிகாரம் கொண்டவர்தான் தீர்ப்பு சொல்லவேண்டும” என்றான். தான் சொல்ல வந்த அர்த்தம் என்ன என்பதில் பட்டீல் தெளிவாக இருந்தான். தீர்ப்பு வழங்கும் உரிமை அரசு அல்லது பிராமண உயர்சாதி அல்லது அரசவையில் இடம்பெறும் சாதியினருக்கே உரியது. சிவாஜி அரசரும் அல்ல; உயர்சாதியினரும் அல்ல. எனவே அவருக்கு நீதி வழங்கும் உரிமை இல்லை. சாஸ்திரங்களின்படியும் மத நூல்களின்படியும் பார்த்தால் ரஞ்சே பட்டீலின் கூற்று முற்றிலும் சரியே. ஆனால் சிவாஜி மத நூல்கள் சொல்வதை தூக்கி எறிந்துவிட்டு தானே தீர்ப்பு வழங்கினார். பட்டீலின் உயர்சாதித் திமிருக்கு எதிராக நீதிமன்றத்திற்கு வருமாறு சிவாஜி ஆணை பிறப்பித்தார் என்றாலும் தன்னைப் பிடித்து வர அனுப்பப்பட்ட தூதர்களோடு பட்டீல் வர மறுத்தான். “உன் சிவாஜியிடம் சொல், நீ பெயருக்குத்தான் அரசன், ஆனால் நான் பெயரளவிலான பட்டீல் அல்ல, நான் உண்மையான பட்டீல். கிராமத்தின் உண்மையான அதிகாரி. எனக்கு என் கிராமத்தில் உள்ள மக்கள் எல்லாம் வைப்பாட்டிகளே என்றான்.” உயர்சாதி பிராமணர்களோ அல்லது உயர்சாதி மராத்தியர்களோ முதலில் சிவாஜியை தங்களது தலைவராகவும், அரசராகவும் ஏற்கத் தயாராக இல்லை. சிவாஜியும் கூட நால்வருண அமைப்பு முறையால் திணிக்கப்பட்ட அநீதிகளால் பாதிக்கப்பட்டார். மதச்சட்ட வரம்புக்குள்ளேயே இதற்கான ஒரு வழியைக் கண்டறிந்தார். ஏனெனில் அவர் தனது மதத்தைப் பின்பற்றியவர். அவர் தனது பதவியேற்பை பிராமணர்களின் விருப்பங்களுக்கும், உரிமைகளுக்கும் ஏற்பவே செய்தார். தன்னுடைய சொந்த வலிமையால், வீரத்தால், புத்திசாலித்தனமான தந்திரங்களினால் ஒரு இராஜ்ஜியத்தை வென்றெடுத்து அரசரான சிவாஜியை ஔரங்கசீப்கூட மதித்தார். ஆனால் இந்துமதம் அவரை மதிக்கவில்லை. அதனால்தான் அவர் இரண்டுமுறை தனது முடிசூட்டுவிழாவை நடத்தவேண்டிவந்தது. அவர் மதத்தின் ஒப்புதலைப் பெறவேண்டியிருந்தது. விவசாயிகளின் மகுடத்தில் பதித்த வைரமணி மகாத்மா ஜோதிராவ் பூலே சிவாஜியின் மீது ஒரு கதைப் பாடலை எழுதினார். அந்தக் கதைப்பாடலின் துவக்கத்தில் பூலே சிவாஜியை “குல்வாடி பூஷண்” (விவசாயிகளின் மகுடத்தில் பதித்த வைரமணி) என அழைத்தார். அவர் அந்தக் கதைப்பாடலை “சூத்திரனின் மகனை ஜோதிராவ் பூலே பாடுகிறேன்” என முடித்தார். சிவாஜி போன்ஸ்லே சூத்திரர்களின் மகன். அவர் ஒரு விவசாயி. மகாத்மா பூலே ஒரு ஆராய்ச்சியாளரோ, வரலாற்றாளரோ அல்ல. சமூக சமத்துவம் என்ற இலட்சியத்துக்காக உறுதிபூண்ட ஒரு சமூக சீர்திருத்தவாதி. எனவே பூலே ஒரு குறிப்பிட்ட வழியில் பக்கச் சார்பு கொண்டவர். எனவே அவரது கூற்றுக்கு வரலாற்று ஆதாரம் இல்லை என்று சிலர் வாதம் செய்யலாம். ஆனால் இதில் வரலாற்று ஆய்வாளர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவர்கள் மிகுந்த தயக்கத்துடன் வரலாற்று ஆய்வுகளை எழுதுகிறார்கள். அவர்களிடம் பல வகைப்பட்ட பார்வைகள் உள்ளன. சேஜ்வாக்கர் சிவாஜியின் குடும்பத்தைப் பற்றிய சில தகவல்களைத் தொகுத்து சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்துள்ளார். அதில் உள்ள பதிவில்: உதயபூரின் ராணா பீம்சிங்கிற்கு அவரது வைப்பாட்டியின் மூலம் பிறந்த ஒரு மகன் பாக்சிங். ராணாவின் இறப்புக்குப்பின் பாக்சிங்கின் இரஜபுத்திர சகோதரர்கள் அவரை தங்கள் சகோதரராக ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே அவர் முதலில் கான்தேஷ்க்குச் சென்று பூனேவின் அருகில் ஒரு நிலத்தை வாங்கி ஒரு நிலப்பிரபுவாக ஆனார். அவரது நான்கு குழந்தைகளில் இருவர் மாலோஜி, பாம்போஜி. (Bundela’s Bakhar, tr.P.N.Patwardhan, 1920, p.1) சிவாஜி ஒரு இரஜபுத்திரர் என்று பல இடங்களில் பதிவுசெய்யப்படுள்ளது. மஹாமஹோ பாத்யாய தத்தோ வாமன் பொட்தார், என்ற மிகச்சிறந்த அறிஞர் இந்த எல்லா ஆதாரங்களையும் ஆய்வு செய்தார். அவர் கூறுகிறார்: “குடும்பத்தில் சார்புத்தன்மையை முடிவு செய்வது மிகவும் கடினமானது. பல பிற்கால ஆவணங்களும், சாகு மகாராஜின் காலத்திற்கு முந்தைய சிலவும் பெரும்பாலான குடும்பங்கள் சிசோடியாக்களைச் சார்ந்தனவா, அல்லவா என்ற ரீதியில் விசாரணைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவைகளுடைய முந்தைய சார்புகள் சிசோடியாவை சார்ந்திருந்தனவா என்பதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. நான் தனிப்பட்ட முறையில் சிவாஜி ஒரு இரஜபுத்திரர் என்பதிலும், அவரது போன்ஸ்லே குடும்பம் இராஜபுதனத்தின் சிசோடியாக்களில் ஒன்று என்பதிலும் சந்தேகம் கொள்ளவில்லை. சாஹாஜி தனது ஒரு கடிதத்தில் ‘நான் ஒரு இரஜபுத்திரன்’ என்று கூறுகிறார். இது இந்த விஷயத்தை மேலும் தெளிவுபடுத்துகிறது.” சிவாஜி பிறப்பால் ஒரு சத்திரியரா? என்பது அர்த்தமற்ற வாக்குவாதம். சிலர் தாங்கள் சிவாஜியின் உறவினர்கள் என்று மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ கூறி அவரது பெருமையில் பங்குபெற முயலலாம். ‘சிவாஜி ஒரு சத்திரியர். நானும் ஒரு சத்திரியன் தான்’ என்றோ ‘சிவாஜியின் குடும்பம் போன்ஸ்லே, நானும் கூட போன்ஸ்லே தான்’ என்றோ கூறலாம். இதன் மூலம் அவர்கள் தாமாகவே பெருமைக்குரியவர்கள் ஆகலாம். தங்களுக்கென்று சாதி, குடும்பச்சார்பு என்ற பெருமை எதுவும் இல்லாதவர்கள், சிவாஜியின் குடும்பத்தோடு தொடர்புடையவர்கள் என்று கூறி பெருமைகொள்ளலாம். சிவாஜியின் சாதனைகள் அவரது குடும்பப் பெருமைகளை விட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒருவர், தான் எந்தக்குடும்பத்தில் பிறக்கவேண்டும் என்பது அவரது கையில் இல்லை. ஆனால் நாம் பெற்றுள்ள இந்த வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது நம் கைகளில் உள்ளது. எவர் ஒருவருக்கு குறிப்பிடத்தக்க ஒன்றைச் செய்வதற்கான எந்தத் திறமையும் இல்லையோ அவர்கள்தான் குடும்பப் பெருமையைக் கூறிக்கொண்டு திரிவார்கள். சிவாஜியின் விவசாயத் தோழர்கள்: வர்ணாசிரம தர்மத்தின் மேன்மையை மீண்டும் நிலைநாட்டுவதற்காக சிவாஜியின் பெயரை எவர் ஒருவர் பயன்படுதினாலும் அவர்கள் ஒரு வரலாற்று உண்மைக்கு பதில் சொல்லியே தீரவேண்டும். சிவாஜியின் வரலாற்றுப்பணிகளில் யார் பங்கேற்றார்கள்? இந்த மாபெரும் பணியில் பங்கேற்ற அவரது சகாக்களில் மிகப்பெரும்பான்மையினர் உயர்சாதியினர் அல்ல. உயர்குடி மக்களோ, நிலபிரபுக்களோ, பிற நிலவுடைமையாளர்களோ அல்ல. அவர்கள் சமுதாயத்தின் அடித்தளத்திலிருந்து வந்தவர்கள். அவர்கள் கீழ் சாதிகளிலிருந்து வந்தவர்கள். அவர்கள் ஏழை விவசாயிகள். இந்த மாபெரும் பணியின் முதுகெலும்பாக விளங்கியவர்கள் மாவ்லாக்கள். அவர்கள் துரதிஷ்டங்களை எதிர்கொள்ளும் மகத்தான சக்தி படைத்தவர்கள். அவர்கள் சிவாஜியின்பால் பரிசுத்தமான, மாசுமருவற்ற விசுவாசத்தையும் அன்பையும் கொண்டவர்கள். சிவாஜியின் ஒப்புயர்வற்ற வீரதீரச் செயல்பாடுகள், சுயராஜ்யத்தை உருவாக்குவது என்ற இலட்சியத்துக்காக அளவற்ற தியாகங்களைச் செய்த இவர்களால்தான் சாத்தியமாயின. இந்த எல்லா மாவ்லாக்களும் விவசாயிகளே. நிலைத்து நின்றவர்களாக இருந்த மேட்டுக்குடி சாதியினர்களும், நிலப்பிரபுக்களும் சிவாஜிக்கு குறிப்பிட்ட எந்த வகையிலும் முதலில் உதவவில்லை. ஆனால், சிவாஜி சிறியதும் பெரியதுமான இராணுவத்தையும், தளபதிகளையும் உருவாக்கினார். அவர்கள் அனைவருமே ஏழை எளிய குடும்பங்களில் பிறந்தவர்கள். ஆனால், தங்களது வீரதீரச் செயல்களாலும் ஒரு சுயராஜ்யத்தை உருவாகுவதில் பெரும்பங்கு வகித்ததாலும் பெருமைக்குரியவர்களாக உருவானார்கள். கடுமையான முற்றுகைக்குள்ளான பன்ஹாலா கோட்டையிலிருந்து சிவாஜி தப்பிச்செல்ல உதவிய சிவா ஒரு நாவிதர். சிவாஜி அஃப்ஸல் கானை இரகசியமாகக் கொலைசெய்யச் சென்றபோது, மின்னல்வேகப் போராளியும், நம்பிக்கைக்குரிய படைவீரனுமான ஜிவா மஹாலாவை உடன் அழைத்துச் சென்றார். இந்த ஜிவா மஹாலாவும் கூட ஒரு நாவிதர்தான். அவரது குடும்பப்பெயர் சங்க்பால். அவர் ஜவாலி மாகாணத்தில் உள்ள மௌஜெ கொண்டிவாலி கிராமத்தைச் சார்ந்தவர். அவர் ஒரு சாதாரண விவசாயி. சிவாஜின் புலனாய்வுத்துறையின் தளபதி, ரமோஷி சாதியைச் சார்ந்த பகிர்ஜி நாயக். சிவாஜி இவ்வாறு நிலங்களை உழுது பயிரிட்டு வாழ்ந்த விவசாயிகளை தன்னோடு சேர்த்துக்கொண்டு தனது இராஜ்யத்தை ஸ்தாபித்தார். மராத்தியக் கும்பிகள் என்ற விவசாய சாதியினர் மரபுரீதியாக சூத்திரர்கள் என்றே கருதப்பட்டனர். வரலாறு இத்தகைய தனிப்பட்ட ஆதாரங்களை மட்டும் பதிவுசெய்யவில்லை. சிவாஜியின் வரலாற்றுக் கடமையில் பங்கெடுத்துக் கொண்ட சமுதாயங்களையும் பதிவுசெய்துள்ளது. ’சபாசத் பாகரி’ல் ஒரு பதிவு உள்ளது. பெராத், ரமோஷி, அதேகாரி முதலான சாதிகளிலிருந்த மக்களையும் சிவாஜி அவரவர் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்பப் பணியில் அமர்த்தினார். அதன் விளைவாக அவரது ஆட்சியில் குற்றங்களும், தொல்லைகளும் இல்லாமல் போயின. குற்றப்பரம்பரையினர் என்று முத்திரை குத்தப்பட்ட மக்கள் தங்கள் திறமைகளையும், வீரத்தையும் பயன்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டால், பொதுவாக அவர்கள் மரபுவழக்கப்படி சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள். சிவாஜியின் கப்பற்படையும் வழக்கம்போல் சத்திரியர்கள் அல்லது மராத்தியர்களின் உதவியோடு உருவாக்கப்படவில்லை. அதேபோல் அவரது கப்பற்படைத் தளபதி ஒரு முஸல்மான். பெரும்பாலான மாலுமிகளும், படைவீர்ர்களும் கோலி, சன்கோலி, பந்தாரி மற்றும் முஸல்மான்கள். தங்கள் வாழ்வுக்காகக் கடலை நம்பி உழைத்தவர்களைப் படைவீரர்களாக மாற்றினார். சிவாஜி சாமான்யர்களை மகத்தானவர்களாக மாற்றினார். இதனால் அவர்கள் அவரை மாபெரும் மன்னராக்கினார்கள். மகத்தான கடமையை நிறைவேற்ற இருவருமே ஒன்று கூடினர். மகத்தான கடமையைச் சாதாரண மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டால், அவர்கள் பெரும் சக்தியாக உருவாகிறார்கள் என்பது ஒரு நல்ல சிந்தனை. அத்தகைய சக்தி அசாதாரண பராக்கிரமச் செயல்களைச் சாதாரண மக்களையும் செய்யவைக்கிறது. வரலாற்றில் வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகள், சாதாரண மக்கள் அவற்றில் பங்கேற்காமல் நிகழ்வதில்லை. சிறந்த மேல்தட்டுக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் எப்போதும் மதிப்புமிக்கவர்கள். இயல்பாகவே அவர்கள் தங்கள் அந்தஸ்தை மாற்றிக்கொள்ள விரும்பமாட்டார்கள். சாதாரணமானவர்களாகவும், ஏழைகளாகவும் உள்ளவர்கள் மாற்றங்களை விரும்புகிறவர்கள். சிவாஜி அவர்களை அணிதிரட்டினார்; அவர்களிடம் விளக்கிக்கூறினார்; அவர்களுக்கு அந்தஸ்தை அளித்தார்; அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார். அநீதியால் பாதிக்கப்பட்டவர்கள் அதை அழிக்க முன்வந்தார்கள். அநீதிகளை இழைத்தவர்கள் யாரோ, அவர்கள் அதற்கு முடிவுகட்ட மாட்டார்கள். சிவாஜியும் மதமாற்றங்களும்: சிவாஜி இந்து மதத்தைப் பின்பற்றியவர். ஆனால், அவர் மதச்சகிப்புத் தன்மையற்ற இந்து அல்ல. மதத்திற்கு ஒவ்வாத பல செயல்களைப் பல நேரங்களில் அவர் செய்தார். அவருக்கு அதை விடவும் வரலாற்று இலட்சியம் மிகவும் மதிப்புமிக்கது; மதத்தின் கட்டளைகளை உறுதியாக பின்பற்றி நடப்பதல்ல. மதம் என்ன கூறுகிறது? முஸல்மானாக ஒருவர் ஆவது இந்து தர்மத்திற்கு இழப்பு. இந்து தர்மத்தை நழுவி விடுவது இறப்பதைப் போன்றது. இறந்தவரை மீண்டும் உயிர்ப்பித்து வாழ வைப்பது எப்படி? மேலும், ஏதாவது ஒருவர் இப்பிறவியில் பாவம் செய்தால் அடுத்த பிறவியில் மனிதனாகப் பிறக்கமுடியாது. அவர் ஒரு பூச்சியாகப் பிறப்பார். இதைத்தான் இந்து தர்ம சாஸ்திரம் நமக்குக் கூறுகிறது. சிவாஜியின் காலத்தில் இது மிகவும் கொடூரமான வார்த்தைகளில் கூறப்பட்டது. ஆனால் சிவாஜி இஸ்லாத்தைத் தழுவிய எல்லா இந்துக்களையும் மீள்மதமாற்றம் செய்தார். அது மட்டுமல்ல; அவர்களோடு திருமணங்கள் மூலம் உறவுகளையும் நிலைநாட்டினார். மதத்தை விட்டு விலகிய அவர்களை சாதியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்று சிவாஜி கருதவில்லை. பாலாஜி நிம்பல்கரும், நேதாஜி பால்கரும் முஸல்மான்களாக மாறி சுன்னத் சிகிச்சையும் செய்துகொண்டார்கள். அவர்கள் பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேலாக முஸ்லீம்களாக இருந்தார்கள். அவர்களை சிவாஜி இந்துக்களாக மதம் மாற்றினார். சிவாஜி தனது மகளை மத விலக்கம் செய்யப்பட்ட பாலாஜி நிம்பல்கருக்கு திருமணம் செய்து வைத்தார். அவர் ஆப்கானிஸ்தானில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்த நேதாஜி பால்கரை புனிதப்படுத்தித் தனது அரவணைப்புக்குள் மீண்டும் கொண்டுவந்தார். மதம் சார்பான இந்த அணுகுமுறை பேஷ்வாக்களின் ஆட்சியில் கைவிடப்பட்டது. சமூகம் மிகக் குறுகலாகிப்போனது. பேஷ்வாக்களின் மிகச் சிறந்த வீரரான பாஜி ராவ் தனது சொந்த மகனான முசைமான் மஸ்தானி என்று பிறந்த சம்ஷீர் பஹதூரை ஏற்க முடியவில்லை. அவர் அவனை கிருஷ்ணா ராவ் என்று அழைக்க விரும்பினார். குழந்தைக்கு மறுபெயரிட்டதால் பாஜி ராவ் தனது குடும்பத்தைவிட்டு விலகவேண்டியதாயிற்று. சிவாஜியின் இந்து மதமும், பேஷ்வாக்களின் மதமும் ஒன்றுதானா? சிவாஜி தீண்டத்தகாதவர்களையும் மஹர்களையும் தனது கோட்டைகளின் தளபதிகளாக்கினார். பேஷ்வாக்களால் தீண்டத்தகாதவர்கள், தங்கள் இடுப்பில் விளக்குமாருகளைக் கட்டிக்கொண்டு, தாங்கள் நடப்பதால் தீட்டுப்பட்டுபோன தெருவை தானாகவே கூட்டுமாறு நடத்தப்பட்டார்கள். அவர்கள் தங்கள் கழுத்தில் மண்பானைகளைக் கட்டிக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அதனால் அவர்கள் துப்பும் எச்சில் கீழே விழுவதால் சாலைகள் தூய்மை இழந்துவிக்கூடாது என்றார்கள். சிவாஜியின் இந்து மதம், பேஷ்வாக்களின் இந்து மதம் போன்றதுதானா? இந்த இரண்டு வகைகளில் இந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் கடமையை ஏற்றுக்கொண்ட சேனாதிபதி எதைத் தேர்ந்தெடுப்பார்? சிவாஜியின் இந்து மதத்தையா? அல்லது பேஷ்வாக்களுடையதையா? வரலாறு சிவாஜி மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர் என்ற மகிழ்ச்சியளிக்கும் ஒரு சிறுகதையைக் குறிப்பிடுகிறது. ஒரு குழந்தை பிறக்கும் போது வயிறு தரையில் படும் வகையில் குப்புறப் பிறந்தால் கெட்ட சகுனம் என்று நம்பப்படுகின்றது. சிவாஜியின் மகன் இது போலப் பிறந்தான். எல்லாரும் மூச்சுப் பேச்சற்று நின்றார்கள். குழந்தைப் பிறந்ததில் எவர் ஒருவரும் மகிழ்ச்சியடையவில்லை. இதைக் கேட்ட சிவாஜி சொன்னார்; “இது ஒரு குறியீடு. எனது மகன் குப்புறப் பிறந்துள்ளான். அதன் பொருள் இந்த சாம்ராஜ்யத்தையே அவன் தலைகீழாக மாற்றுவான்.” அதன் பிறகு குழந்தை பிறந்ததற்கான கொண்டாட்டங்கள் துவங்கின. நம்பிக்கை என்பது ஒன்று; மூடநம்பிக்கையும், அடிப்படை வாதமும் முற்றிலும் வேறொன்று. வரலாற்றுத்திரிபு ஏன்? சிவாஜி ஒரு அவதாரமா? சிவாஜி உண்மையிலேயே கடவுளின் ஒரு அவதாரம்தான் எனப்பெரும் எண்ணிக்கையிலான மக்கள் உண்மையிலேயே நம்புகிறார்கள். சிலர் அவரை ‘சிவனின்’ அவதாரம் என்கின்றனர். வேறு சிலர் அவரை ‘விஷ்ணுவின்’ அவதாரம் என்கின்றனர். நமது நாட்டிலும் அதன் மரபுகளிலும் மனிதர்கள், கடவுள்கள் ஆவதற்கு நீண்ட காலம் தேவையில்லை. மகத்தான மனிதர்களை விட்டுவிடுங்கள்; இந்திய மொழிகளில் நல்ல மனிதர்களைக் குறிப்பிட சிறப்பான ஒரு வார்த்தை இருக்கிறது; ‘தேவ மனுஷ்’- கடவுளைப் போன்றவர். மக்களின் நலன்களுக்காகப் பயனுள்ள பணிகளைச் செய்யும் எவர் ஒருவரையும் – எந்த அம்சத்தில் மகத்தானவராக இருந்தாலும் - அவரைக் கடவுளைப் போலக் கருதுகிறோம். இது கடவுளின்மீது கொண்டுள்ள எளிய நம்பிக்கை எனக் கருதலாம். ஆனால் இது குறிப்பிட்ட மக்களின் தந்திரமாகவும் கூட உள்ளது. கடவுள் என்ற கற்பிதம் இல்லாவிட்டால் வழிபடுகிற பக்தர் என்று சொல்லப்படுபவர் தனது சொந்த திட்டத்தைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாது. இவ்வாறு கடவுள்கள் இவருக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்படுகிறார்கள். சிவாஜியின் சமகாலத்தவர்கள் அவரை ஒரு அவதாரமாக, கடவுளின் மறுபிறப்பாக மாற்றினார்களா என்பது தெரியாது. ஆனால் அவர் அற்புதமான ஆற்றல்களைப் பெற்றிருந்தவர் எனக் கருதப்பட்டார். சிவாஜி பறவையைப் போலப் பறப்பார். அவர் சைஸ்டா - ஏ - கான் முன் சுவற்றில் இருந்து தோன்றினார். அவரிடம் மறைந்து போகும் சக்தி இருந்தது. இத்தகைய விளக்கங்கள் ஏராளம் உண்டு. ஆனால் இவையெல்லாம் தவறானவை. இத்தகைய வதந்திகள் தன்னைப் பின்பற்றுபவர்களின் விசுவாசத்தைச் சம்பாதித்துக் கொள்ள சிவாஜிக்கு ஓரளவு பயன்பட்டிருக்கலாம். ஆனால் வரலாற்றுக்கும் அறியாமைக்கும் இடையே வேறுபாடு உண்டு. சிவாஜி ஒரு மனிதப் பிறவி. அவர் ஒரு நல்ல மனிதர். அவர் ஒரு மகத்தான மனிதர். அவர் புத்திசாலி. அவரிடம் தொலைநோக்குப் பார்வை இருந்தது. அவர் ஒழுக்க நெறி மிகுந்த மனிதர். அவர் நம்பிக்கையாளர். அவர் தைரியமானவர். மாபெரும் வீரர். ஆற்றல் மிகுந்த ஒருங்கிணைப்பாளர். ஆனால் அவர் ஒரு மனிதர். அவர் கடவுள் அல்ல. அவர் அவதாரமும் அல்ல. அவரைக் கடவுளாக மாற்றுவதற்கான முக்கியத்துவம், தேவை, பயன் என்ன? அவர் கடவுளாக ஆக்கப்பட்டால் நாம் அவரைப் பின்பற்றி நடக்க வேண்டிய பொறுப்பிலிருந்து விடுபடலாம். யாராவது ஒருவர், ‘சிவாஜி எப்படி நடந்து கொண்டாரோ அப்படி நட; விவசாயிகளைத் துன்புறுத்தாதே; கற்பழிப்பவர்களுக்குக் கேடயமாக நின்று அவர்கள் குற்றத்தை மறைக்காதே; விவசாயிகளின் பயிர்களின் காம்புகளைத் தொடாதே; உனது சொந்த மதத்தை நேசி; ஆனால் மற்றவர்களின் மதங்களை வெறுக்காதே’ என்று கூறினால் உடனடியாகப் பதில் வரும். ‘நாம் சிவாஜியோடு நம்மை எப்படி ஒப்பிட்டுக் கொள்ள முடியும்? அவர் கடவுளின் அவதாரம். நாம் மனிதர்கள், நாம் அவரைப் போல நடந்து கொள்ள முடியும் என்று எப்படி நம்புவது? நம்மால் முடிந்தவகையில் தான் நாம் நடக்க முடியும். சிவாஜி ஒரு கடவுளாக இருப்பதால் அவரது உருவத்தை ஆண்டுக்கு ஒருமுறை வழிபடுவதும், அவரது பிறந்த ஆண்டுவிழாவைக் கொண்டாடுவதும் போதுமானது. அவரது பெயரால் நன்கொடைகளை வசூலித்து அதில் கொஞ்சத்தை சில நிகழ்ச்சிகளுக்காகச் செலவழித்துவிட்டு மீதீயுள்ளதை விழுங்குவதும் போதுமானது.’ உண்மையில் மிகக் கொஞ்சமாகச் செலவு செய்து அதில் பெரும் பகுதியைத் தவறாகப் பயன்படுத்துவதும், ஊர்வலங்களை ஏற்பாடு செய்வதும், நெற்றியில் திலகமிடுவதும் – அவ்வளவுதான். ஒருவர் தன்னை சிவாஜியின் பக்தர் என்று கூறிக்கொள்வதன் மூலம் செல்வாக்கைப் பெற்றுவிடலாம் என்று நம்புகிறார். எப்படியிருந்தாலும் அவர் சிவாஜியின் முன்மாதிரியைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற கடமை தனக்கு இருப்பதாக உணர்வதில்லை. சிவாஜி விவசாயிகளுக்கு உதவி வந்தார். இந்தப் போலி சிவாஜி பக்தர்கள் விவசாயிகளுக்கு உதவுகிறார்களா? உண்மையில் அவர்கள் மக்களை அச்சுறுத்தவே சிவாஜின் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். சிவாஜியின் படமும் அவரது கொடியும், சட்டத்துக்குப் புறம்பான காய்ச்சி வடிக்கும் தொழிற்சாலைகளிலும், சூதாட்டக் கிடங்குகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகள நடைபெறும் இடங்களிலும் மிக உயரத்தில் ஏற்றப்படுகின்றன. இது சிவாஜியைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். நாம் சிவாஜியை யார் என்று புரிந்து கொள்ள வேண்டும். அவரை இவ்வாறு தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். சிவாஜி யார் என்று நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் அவரை உண்மையில் பின்பற்றுவோர்களையும் போலி வேடதாரிகளையும் பிரித்தறிய முடியும். சிவாஜியும், பவானியின் போர்வாளும் சிவாஜியின் தன்னிகரற்ற வெற்றிக்கு இன்னொரு காரணம் விவசாயிகள், அரைப் படிப்பாளிகளின் சிந்தனையில் பதிந்திருக்கிறது. பெண் தெய்வமான அன்னை பவானி ஒரு வாளைக் கொடுத்து அவரை ஆசீர்வதித்ததால்தான் அவர் வெற்றிபெற்றார் என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. மகாராஷ்டிராவின் முதலமைச்சர்களில் ஒருவர் அந்த வாளை மீண்டும் பெறுவதன் மூலம் புகழ்பெறத் தீவிரமாக உள்ளார். மறுபக்கத்தில், மற்றொரு தலைவரோ ஆத்திரத்தோடு சிவாஜியின் பெயரை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பயன்படுத்துகிறார். சிவாஜி பயன்படுத்திய போர்வாள் உண்மையில் போர்த்துகீசில் தயாரிக்கப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளார்கள். பல்வேறு வகையான உலோகங்களிலிருந்து போர்வாள்களை அடித்து உருவாக்கும் தொழில்நுட்பம் போர்ச்சுக்கல்லில் மிகவும் முன்னேறியிருந்தது. போர்த்துக்கீசியர்கள் இந்த வாளை கோவாவுக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து அது சாவந்துகளிடமும், அவர்களிடமிருந்து சிவாஜிக்கும் சென்றது. அன்னை பவானி இந்த வாளோடு எந்த வகையிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. சதாராவில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒரு வாள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாள்தான் உண்மையில் சிவாஜியால் பயன்படுத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இப்போது அங்கு அது பவானியின் வாள்தானா என்ற வாதமும், எதிர்வாதமும் நடைபெற்று வருகிறது. ஆனால் அதன்மீது போர்த்துக்கீசியர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இப்போதும் கூட அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். மக்களின் அறியாமையையும், அவர்களின் நம்பிக்கையையும் மூலதனமாக்கிப் பல்வேறு இலாபங்களை அடைய நினைப்பவர்கள் மக்கள் உண்மையை அறிந்து கொள்ள அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் ‘ஜெய் சிவாஜி, ஜெய் பவானி’ என்று சத்தமிட்டு முழங்குவதன் மூலம் உண்மையான சிவாஜியையோ, அன்னை பவானியையோ புரிந்துகொள்வது சாத்தியமில்லை. போலிபக்தர்கள் –சிவாஜிக்கு அச்சுறுத்தல் மாபெரும் வீரர்கள் மீண்டும் மீண்டும் துன்பியலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும், அவரது காலத்திய ஆதிக்க சக்திகளும் அவர் வாழும்போதே அவரை எதிர்க்கிறார்கள். அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைகளையும், அவர் முன்னெடுத்துச் செல்லும் செயல்பாடுகளையும் எதிர்க்கிறார்கள். முடிந்தால் அவரைக் கொல்கிறார்கள். அவரையும், அவரது செயல்பாடுகளையும் முடித்துக்கட்ட அவர்களால் முடிந்த அளவுக்கு ஒவ்வொன்றையும் செய்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அவரது மேன்மையை அழிப்பதில் எப்போதும் வெற்றிபெற முடிவதில்லை. சாதாரண மக்கள் வாழும்போது அவரையும், அவரது மறைவுக்குப்பின் அவரது சிந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் அவரை ஆர்வத்துடன் பின்பற்றுகிறார்கள். அவரை எதிர்த்தவர்கள் இப்போது ஒரு புத்திசாலித்தனமான தந்திரத்தைக் கையாளுகிறார்கள். அவர்கள் அந்த மாமனிதரின் வெறிபிடித்த பக்தர்களாக மாறுகிறார்கள். அவர்கள் அவரை வழிபடுகிறார்கள். ஆண்டு விழாக்களையும் கொண்டாடுகிறார்கள். அவர்கள் கோவிலைக்கூடக் கட்டுகிறார்கள். அவரது படத்தை அச்சிடுகிறார்கள். இவற்றையெல்லாம் செய்யும்போது ஒருமெல்லிய தந்திரத்தைக் கையாளுகிறார்கள். அந்த மாவீரர் முன்மொழிந்த மக்கள் நலச்சிந்தனைகளைச் சிதைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் அத்தகைய சிந்தனைகளைத் துடைத்தெறிவதில் மிகக்கடுமையாக முயற்சிக்கிறார்கள். ஆட்சிக்கு அல்லது நிறுவனத்துக்கு எதிரான பார்வைகள் மக்களிடம் சென்றடையக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். புரட்சிகரமான கருத்துக்களும், போதனைகளும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். பொய்யான வரலாற்றை எழுதுகிறார்கள். அந்தப் பொய்யான வரலாற்றைப் போதிக்கிறார்கள். அவர்கள் உண்மையோடு ஏராளமான உண்மையற்றவைகளையும் மிகத்திறமையாகக் கலந்து கள்ளஉறவு கொண்ட வரலாற்றை விற்பனை செய்கிறார்கள். அவர்கள் அரசுக்கு, நிறுவனத்துக்கு எதிரான கொள்கைகளைத் தங்கள் சொந்தப் பழமைவாத நிலைகளை வலுவூட்டப் பயன்படுத்துகிறார்கள். இந்தப்போலி அறிஞர்கள், சமுதாயத்தின் தலைவர்கள் என்ற போர்வையின்கீழ் மக்கள் மதிக்கும் உருவங்களையும், அடையாளங்களையும் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் இந்த அடையாளங்களையும், உருவங்களையும் சிதைத்து அவற்றின் அடிப்படைகளையே அழிக்கிறார்கள். நிலைநிறுவப்பட்ட இவர்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள். தங்களிடம் அதிகாரம் உள்ளதால் சிலரும், தங்களிடம் செல்வம் உள்ளதால் சிலரும், தங்களுக்குள்ள சமூக அந்தஸ்தால் சிலரும் நிலை நிறுவப்பட்டுள்ளார்கள் உண்மையில் இவர்கள் எல்லாரும் ஒருவரே! கடந்த காலத்தில் பலவகைகளில் இது நடைபெற்றது. இன்றும் இது நடைபெறுகிறது. தியானேஷ்வர் சமஸ்கிருதத்திலிருந்து அறிவை பிராகிருதத்துக்குள் கொண்டுவந்தார். விரலுக்குள் அடங்கும் சிலரின் ஏகபோகத்தை அவர் முடித்தார். அவர் மக்களுக்கு அறிவை விடுதலை செய்தார். அறியாமையில் இருந்தவர்களில் கீழ் நிலையில் இருந்தவர்களுக்கு அவர் அறிவைக் கற்பித்தார். அவர்களுக்குத் தெரிந்த மொழியில் அவர் இதைச் செய்தார். அவர் ஒரு எருமையையும் கூட வேதத்தை ஓதவைத்துவிடுவார்.’இங்கு எருமை என்பது மிகவும் அறியாமையில் இருந்தவரின் குறியீடாக உள்ளது. அறிவை ஏகபோகமாகக் கொண்டவர்களுக்கு எதிராக அவர் கிளர்ந்தெழுந்தார். இந்த அறிவு ஏகபோகவாதிகள் அவரது வாழ்நாளில் அவரைக் கொடுமைப் படுத்தினர். அவரையும் அவரது குழந்தைகளையும் ‘குழந்தைச் சன்னியாசிகள்’ என்று வசைபாடி, சாதியை விட்டு விலக்கினார்கள். அவருக்கு மௌஞ்சி செய்ய மறுத்தார்கள். (துரதிருஷ்டவசமாக அவரிடம் இலட்சக்கணக்கான தங்க நாணயங்களும் இல்லை, காகபட்டரைச் சந்திக்கவுமில்லை, சிவாஜி தனது முடிசூட்டுவிழாவை நடத்தியதுபோல் அவரும் தனது மௌஞ்சியை நடத்தியிருக்கலாம்) தியானேஷ்வர் தனது இளம்வயதில் சமாதியடைந்தார். (அவர் உண்மையிலேயே சமாதியடைந்தாரா?) கலாச்சார, மத, பொருளியல் வாரிசுகளான இவர்கள், தியானேஷ்வரின் வாழ்நாளில் அவரைக் கொடுமைப் படுத்திய இவர்கள், கல்விப் பரவலை எதிர்த்த இவர்கள் அவரது மறைவுக்குப்பின் அவரின் புகழ்பாடத் துவங்கினார்கள்! தியானேஷ்வரைப் போன்ற மாபெரும் ஞானியை வரலாறு இதுவரை சந்தித்ததில்லை என்று பிரகடனம் செய்யத் துவங்கினார்கள். அவர்கள் இரவும் பகலும் அவரது பெயரை மந்திரம்போல உச்சரித்துக்கொண்டே, சாதாரண மக்கள் கல்விபெறும் உரிமையை மறுத்தார்கள். அவர்கள் கல்வியறிவு பெற்றவர்களாக உருவாகத் தடைவிதித்தார்கள். தியானேஷ்வருக்கு முன்பே பிராகிருதமொழியில் பாடநூல்களை எழுதிய சக்ரதார் என்ற துறவியைத், துறவிகளேகூடப் புறக்கணித்தார்கள். துக்காராமின் வாழ்நாளில் மம்பாஜியும் அவரது சகாக்களும் அவரைக் கொடுமைப் படுத்தினார்கள். அவரது ‘அபாங்க்’ பாடல்களை ஆற்றில் மூழ்கடித்தனர். அவரது ‘கதா’’வையும் இந்திராயணி ஆற்றில் மூழ்கடித்தனர். பிறகு அவரை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ’அவர் தனது உயிரோடும், உடலோடும் நேரடியாக வைகுந்தம் சென்றுவிட்டார் என்ற கொடுமையான வதந்தியைப் பரப்பினார்கள். ஒரு விமானம் சொர்க்கத்திலிருந்து வந்து அவரை ஏற்றிச்சென்றது என ஓவியங்களை வரைந்தார்கள். அவை திரைப்படங்களிலும் கூடக் காட்டப்பட்டன. ஆற்றில் மூழ்கடிக்கப்பட்ட பின்னும்கூட துக்காராமின் ‘அபாங்’‘பாடல்கள் மக்களிடம் இருந்தன. மக்கள் அவற்றைப் பாடிக்கொண்டே இருந்தார்கள். ஆற்றில் அவரது பாடல்கள் மூழ்கடிக்கப்பட்ட பின்னரும், அவரையே சொர்க்கத்துக்கு அனுப்பிய பின்னரும்கூட அவரது கருத்துக்களைத் தீர்த்துக்கட்ட முடியாததைக் கண்ட மம்பாஜியின் வாரிசுகளும், அவரது குடும்பத்தினரும் அவரது புகழ்பாடத் துவங்கினார்கள். அவர்கள் தங்கள் ’சொந்த அபாங்’குகளை துக்காராமின் ’அபாங்’கு’களுடன் ஊடுருவ வைத்தார்கள். இவற்றின் அடிப்படையில் கீர்த்தனைகளைப் பாடவும், கதைகளைச் சொல்லவும் துவங்கினார்கள். ஆனால், அவர்கள் தங்கள் வழக்கமான தந்திரங்களைச் செய்தார்கள். மூடநம்பிக்கைகளுக்கும், எல்லாவகையான அநீதிகளுக்கும் எதிராக துக்காராம் பயன்படுத்திய ’விப்ளவங்காதம்’ மக்களைச் சென்றடையக் கூடாது என்று எச்சரிக்கையோடு இருந்தார்கள். இத்தகைய உதாரணங்களுக்காக நாம் நீண்ட கடந்த காலத்திற்குத்தான் செல்ல வேண்டுமா? அவர்கள் மகாத்மா காந்திக்கு என்ன செய்தார்கள்? மிக நன்றாக வரையப்பட்ட ஒரு திட்டத்தின் மூலம் அவரைக் கொலை செய்தார்கள். அவர்கள் சதித்திட்டம் தீட்டி அவரைக் கொன்றார்கள். இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் புத்திசாலித்தனமாகத் தப்பிவிட்டார்கள் சிலர் தூக்கிலிடப்பட்டார்கள். சிலர் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்குள்ளானார்கள். இப்போது கூறுகிறார்கள். ‘ஒரு பைத்தியக்காரன் காந்திஜியைக் கொன்றுவிட்டான்’’ என்று. இந்தச் சதியாலோசனையாளர்கள் கிறுக்கர்களா? மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபோது இனிப்புக்கள் வழங்கிச் சந்தோஷம் கொண்டாடினார்கள். நாதுராம் கோட்சே ஒரு தியாகியைப் போலப் பாராட்டப்பட்டான். இப்போது நாதுராம் கோட்சேவின் சகாக்களும், பக்தர்களும் என்ன கூறுகிறார்கள்? அவர்கள் காந்தியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதாகவும், அத்துடன் சோசலிசத்தையும் சேர்த்துக்கொண்டதாகவும் சொல்கிறார்கள்! என்ன ஒரு மோசடி!. மகாத்மா காந்தியை முடித்துக்கட்ட முடியாது என்பதைப் பார்த்த அவர்கள், அவரது சீடர்களாக மாறிப்போனதைப்போல நடிக்கிறார்கள். பிறகு அவர்கள் காந்தியை முடிக்கப் புதுவழியைக் கண்டுபிடிப்பார்கள். இத்தகைய பல எடுத்துக்காட்டுக்களை உலக வரலாற்றில் காணலாம். சிவாஜி இன்று தோன்றினால்… தியானேஷ்வர், துக்காராம், மகாத்மா காந்தி ஆகியோருக்குச் செய்தது போல சிவாஜியையும் தீர்த்துக்கட்டும் முயற்சிகள் கொஞ்ச காலமாக நடைபெற்று வருகின்றன. இப்போது புதுப்பிக்கப்பட்ட ஆற்றலோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்தரங்கமாகத் தனிப்பட்ட உரிமைகளை அளிப்பதற்கு சிவாஜி எதிராக இருந்தார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் நிலப்பிரபுக்களுக்கு உரிமைகளைத் தருவதைத் தவிர்த்தார். இன்றைய சிவாஜி பக்தர்கள் புதிய புதிய தலைமைகளை உருவாக்குகிறார்கள். அவர்கள் நவீன இளவரசர்களிடமும், நிலவுடைமை ‘தாதா’‘க்களிடமும்’“உங்கள் தலைமையில் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். விவசாயிகளைக் கொள்ளையடித்து நீங்கள் உங்கள் வழியில் நன்றாக உண்ணுங்கள். குடியுங்கள். உங்களைக் குதூகலப்படுத்திக்கொள்ளுங்கள். அரசை நடத்திச் செல்ல எங்களை ஆதரியுங்கள். நாங்களும் விவசாயிகளைப் பெருமளவில் கொள்ளையடிக்கிறோம். நீங்கள் ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் சுருட்டிக்கொள்ளுங்கள். நாங்களும் கோடிக்கணக்கில் சுருட்டிக் கொள்கிறோம்’ என்கிறார்கள். நமது காலத்தில் பழைய முறையிலான கொள்கைகள் ஏதுமில்லை. எனவே இது உண்மை. இப்போது புதிய கொள்கைகளும், புதிய இளவரசர்களும் உருவாகி எண்ணிக்கையிலும், வலிமையிலும் வளர்ந்து வருகிறார்கள். எல்லா மாவட்டங்களிலும் ஜில்லா பரிஷத்துக்களில் (மாவட்ட ஊராட்சிகளில்) தலைவர்கள் இருக்கிறார்கள். இந்தச் சர்க்கரை ஆலை அதிபர்களுக்கு ‘புதிய இளவரசர்கள்’ என்பதைத் தவிர வேறு இனிய பட்டங்கள் எதுவுமில்லை. பல்வேறு விதமான அரசுக் கழகங்களும், மாநகராட்சிகளும், நகராட்சிகளும், சட்டமன்றங்களும் என எல்லாமுமே நிலவுடைமையாளர்களின் தனிப்பட்ட துண்டு நிலங்களாக மாற்றப்பட்டுவிட்டன. சில, மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் கைமாற்றப்பட்டு வருகின்றன. ஜனநாயகம், மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பதற்கு எதிராக அதிகாரப் பரவலுக்கு அழைப்பு விடுக்கிறது. மையப்படுத்தப்பட்ட அதிகாரக் குறைப்பு என்பது குடும்பத்திற்குள்ளேயே அதிகாரத்தை மரபு வழியில் பெறுவதல்ல. இந்தப் புதிய நிலப்பிரபுக்கள் சிவாஜியின் காலத்தில் செய்ததை விட அதிகமாக விவசாயிகளைச் சுரண்டி அடிபணிய வைக்கிறார்கள். ஒரு விவசாயி இந்தச் சர்க்கரை ஆலை அதிபர்களுக்கு எதிராகச் செல்லத் துணிந்தால், அவர்கள் கதை முடிக்கப்படுகிறது. அவனுக்கு எந்தக் கடனும் கிடைக்காது. உரங்களும் கிடைக்காது. கரும்புப் பயிர் வயலிலேயே கருகி இறக்க நேரிடும். இரண்டு ஆண்டுகளுக்குள் அவன் மண்ணைக் கவ்வுவான். இவனைப் பார்க்கும் மற்றவர்கள் சரியான பாடத்தைக் கற்று இந்த அதிபர்களை எதிர்ப்பதிலிருந்து பின்வாங்குவார்கள். அதிபர் வெல்ல முடியாதவராக வலம்வருவார். இந்தப்புதிய அதிபர்களும், இளவரசர்களும் தங்களது கொடிய கண்களை விவசாயிகளின் ஒரு பாவமும் அறியாத மகள்களின் மீது படரவிடாமல் இருப்பார்களா? கற்பழிப்பு நடக்காதா? எங்கு, விவசாயிகளின் அரசர் சிவாஜி எப்போதும் விவசாயிகளின் பயிர்களில் ‘ஓர் ஒற்றை இலைகூடத் தொடப்படக்கூடாது, துன்புறுத்தப்படக்கூடாது’ என வலியுறுத்தினாரோ அந்த சிவாஜியின் மகாராஷ்டிராவில், விவசாயிகள் இந்தப் புதிய இளவரசர்களுக்கும், அதிபர்களுக்கும் சேவை செய்தும், அவர்களை மகிழ்வித்தும் இளைத்துப் போகவில்லையா? இவை எல்லாமே, ‘சிவாஜி மகராஜாவுக்கு ஜே!’ என்று சத்தமிட்டுக்கொண்டே செய்யப்படுவது வெட்கக்கேடானது அல்லவா? இவற்றையெல்லாம் பார்ப்பதற்கு சிவாஜியே நேரில் தோன்றினால் என்னவாகும்? அவர் தோன்றமாட்டார். அவரால் தோன்றவும் முடியாது. ஆனால் அவரது போதனைகள் நம்மிடம் இல்லையா? உண்மையான வழியில் சிவாஜியை நினைவுகூர்வது என்பது இந்தப் புதிய இளவரசர்களின் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுவதுதான். தீர்த்துக்கட்டுவதுதான். இன்று இந்து முஸ்லீம் கலவரங்கள் சிவாஜியின் பெயரால் நடைபெறுகின்றன. அவரது முழக்கங்களை முழங்குகிறார்கள். நாம் இந்த மதவெறியர்களிடம், ’சிவாஜி ஒரு மதவெறியர் அல்ல. அவர் இந்துமதத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அவர் இஸ்லாமிய மதத்தை வெறுத்தவர் அல்ல. அவர் கடவுளை நம்பினார். ஆனால் மூட நம்பிக்கை கொண்டவரல்ல" என்று கூறவேண்டும். இந்துக்கள், தங்களுக்குள் கலவரத்தைத் தூண்டுபவர்களைக் கொண்டிருப்பது போலவே, முஸ்லீம்களுக்குள்ளும் கலவரத்தைத் தூண்டுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களும்கூடத் தங்கள் சொந்த மதத்தின்மீது வெறிகொண்டவர்கள். சில முஸ்லீம்கள் தங்களை ஷேகன் ஷா வின் வாரிசுகளாக நம்புகிறார்கள். ஒரு காலத்தில் தாங்கள்தான் இந்த நாட்டின் ஆட்சியாளர்களாக இருந்ததாக எண்ணுகிறார்கள். முஸ்லீம் மன்னர்கள் ஆண்டபோது எல்லா முஸ்லீம்களும் பிரியாணியைச் சாப்பிடவோ ஷரப்பை குடிக்கவோ இல்லை என்பதை மறந்துவிடுகிறார்கள். பெரும்பான்மையான முஸ்லீம்கள் பரம ஏழைகளாக இருந்தார்கள். சுயராஜ்ஜியத்துக்காக தங்கள் இரத்தத்தைச் சிந்தியவர்கள் யார்? தங்கள் உயிரையே தியாகம் செய்தவர்கள் யார்? அவர்கள் உங்கள் மூதாதையர்கள் இல்லையா? ஔரங்கசீப் உங்கள் கொள்ளுப்பாட்டன் என்றால், மாதாரி மெஹ்டர் யார்? அடில்ஷா உங்கள் முப்பாட்டன் என்றால் இப்ராஹிம் கானும், தௌலத்கானும், காஸி ஹைதரும் யார்? சிவாஜியின் சுயராஜ்யம் இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல. அது மகாராஷ்டிராவில் உள்ள முஸல்மான்களுக்குமானதுதான். அப்படியென்றால், மகாராஷ்டிரா முஸல்மான்கள் சிவாஜியைத் தங்களுடையவர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? சிவாஜியின் பெயரால் முசல்மான்கள் தாக்கப்பட்டது போலவே, தலித்துக்களும் கூடத் தாக்கப்பட்டார்கள். இப்போதும் அதே,‘ஜெய் பவானி! ஜெய் சிவாஜி’! என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அவர்கள் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். ஆனால், சிவாஜி என்ன செய்தார்? தலித்துக்களை உணர்வுபூர்வமாக அவரது பணிகளில் சேர்த்துக்கொண்டார். இதை மிகவசதியாக மறந்துவிடுகிறார்கள். சிவாஜி தலித்துகளுக்கு கௌரவத்தை அளித்தார். வரலாறு ஏன் திரிக்கப்படுகிறது? நவீன காலத்தலைவர்களோ அல்லது பழங்காலத்திய தலைவர்களோ, இருவகையினர்மீதும் ஒரேவிதமான மனப்பாங்கு எப்போதும் காணப்படுகிறது. அவர்களது வாழ்க்கை வரலாறுகள், அவர்களது சிந்தனைகள், அவர்களது நோக்கங்கள், இவையெல்லாம் எப்போதும் திரிக்கப்படுகின்றன. ஏன்? இவை எவ்வித உள்நோக்கமும் இன்றிச் செய்யப்படுவன அல்ல. இவற்றில் சில அறியாமையின் காரணமாகத் தோன்றியிருக்கலாம். ஆனால், மிகப்பெரும்பாலானவை மிகக் கவனத்துடன் தீங்கு விளைப்பதற்காகவே தயாரிக்கப்பட்டவை. இவை சிலரது தனிப்பட்ட விருப்பங்களுக்கு உதவுவதற்காகவே செய்யப்படுகின்றன. இவற்றில் என்ன வேறுபாடுகள் இருந்தாலும் அதனால் ஏற்படும் விளைவு ஒன்றுதான். அவர்கள் சிவாஜிக்கு என்ன செய்தார்கள்? அவர்கள் ஒன்றுசேர்ந்து சிவாஜிக்கு என்ன செய்தார்கள்? கடந்த 50 ஆண்டுகளில் அவர்கள் சிவாஜியை பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ செய்தார்களா? ‘மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமை’’ என்ற அவரது கொள்கைக்கு என்ன நேர்ந்தது? அது வளர்ந்திருக்கிறதா? அல்லது தேய்ந்திருக்கிறதா? 50 ஆண்டுகளுக்கு முன்பு அவரது உருவப்படங்கள் மகாராஷ்டிராவுக்கு வெளியிலும்கூட வைக்கப்பட்டன. அவை மத்தியப்பிரதேசத்தில் இடம்பெற்றன. தெற்கில், கர்நாடகாவிலும் அவை வைக்கப்பட்டன. பரோடாவிலும் அல்லது குஜராத்திலும் அவை தொங்கவிடப்பட்டன. ஒன்றுபட்ட மகாராஷ்டிரா இயக்கத்தின்போது, சிவாஜியிடமிருந்து ஊக்கம் பெற்ற மகாராஷ்டிரா அடையாளத்தைப் பாதுகாக்க அனைவரையும் விழிப்புணர்வு பெற வைத்தோம். மொழிவழி மராட்டிய மாநிலத்துக்கான ‘ஒன்றுபட்ட மகாராஷ்டிரா ’இயக்கம் மிகவும் நியாயமானது. சிவாஜி ஒரு ராஷ்ட்ரபாஷா கோஷத்தை உருவாக்கினார் என்பதை நினைவுகூரும்போது அரசியல்ரீதியாகவும் அது நியாயமானதே. ஆனால் இதற்கான நேர்மையின் வரம்பை நாம் கடைப்பிடிக்கத் தவறிவிட்டோம். ’ஒன்றுபட்ட மகாராஷ்டிரா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர் தன்னுடைய உரைகளில், ’மகாராஷ்டிராவுக்கான ஒரு வரலாறு உள்ளது. மற்றவர்களுக்கோ புவியியல் மட்டும்தான் உள்ளது’‘என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தப் பேச்சு பலத்த கைதட்டல்களை எழுப்பியது. அது தீவிரவாதம். சிவாஜி மகாராஷ்டிராவுக்கு நெருக்கமானவர். மகாராஷ்டிரா சிவாஜியின் வரலாற்றைக் கொண்டிருப்பதுபோல், கர்நாடகா ராணி சென்னம்மாவின் வரலாற்றைப் பெற்றிருக்கவில்லையா? ராஜஸ்தான் ராணா பிரதாப்பின் வரலாற்றைக் கொண்டிருக்கவில்லையா? மத்தியப்பிரதேசமும், குஜராத்தும் அண்மையில் தோன்றியவைகளா? அனல் பறக்கும் பிரச்சாரங்களில் நாம் நேர்மை உணர்வைத் தொலைத்துவிட்டோம் என்பது உண்மை. கடைசியில் ஒன்றுபட்ட மகாராஷ்டிரத்தை ஏற்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றோம். அதே நேரத்தில் நாம் சிவாஜியை மகாராஷ்டிரத்தின் சுவர்களுக்குள் அடைத்துவிட்டோம். வெளியிலும் புகழ்பெற்றிருந்த சிவாஜியை மகாராஷ்டிராவுக்கு மட்டுமே சொந்தமானவராக ஆக்கிவிட்டோம். இப்போது மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது? சிவசேனை அறுபதுகளில் தோன்றியது. இந்தக்கட்சி மகாராஷ்டிரர்கள் அல்லாதவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் எதிராகத் தான் என்ன செய்தாலும் அதில் சிவாஜியின் பெயரை உச்சரித்து வழிபடுகிறது. இந்தச் சக்திகள் பல்வேறு துணை அமைப்புக்களை - இந்து ஏக்தா மராத்தா மகாசங், படிட் பவன் சங்காதனா – என உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் சிவாஜியின் பெயரை மந்திரம்போல் உச்சரிக்கின்றன. மகாராஷ்டிரா முழுமைக்கும் உரிய சிவாஜி, இப்போது, மகாராஷ்டிரா இந்துக்களுக்கு மட்டுமே உரியவராக்கப்பட்டுவிட்டார். அவர் ’பசு–பிராமணர் பாதுகாவலர்’ ஆக்கப்பட்டார். மராத்தா மகா சங் அவரை மராத்தியர்களுக்கு மட்டுமானவராக்கி விட்டது. அவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்தபோது, ‘சிவாஜி மகராஜ் கி ஜெய்’ என்ற முழக்கத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள். மராத்வாடாவில் தலித் குடியிருப்புக்கள் தாக்கப்பட்டபோது எங்கெங்கும் ‘ஜெய் சிவாஜி! ஜெய் பவானி!’ என்ற முழக்கங்கள் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகின்றன. இவ்வாறு சிவாஜி ஒரு சாதி இந்துவாக ஆக்கப்பட்டுவிட்டார். அவர் பிராமணர்களின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டார். அவர் மராத்தாவின் – பரிசுத்தமானதோ இல்லையோ – 96 குடும்பங்களைச் சார்ந்தவராக ஆக்கப்பட்டுவிட்டார். இது உண்மைக்கு ஏற்புடையதல்ல. ஆத்திரம் கொண்ட சிலரின் சுயநல நோக்கங்களுக்காக சிவாஜியின் பெயர் பயன்படுத்தப்படுகிறது. இதேபோன்ற நிகழ்வு இரண்டாம் உலகப்போரின் போது நடைபெற்றது. பிரிட்டிஷார் இந்தியர்களை ஆயுதப்படைப்பிரிவுகளில் சேர்க்க விரும்பினார்கள். அவர்கள் சிவாஜியின் படத்தோடு சுவரொட்டிகளையும் அச்சிட்டு ‘சிவாஜியின் மாவ்லாக்களே, இன்றே சேருங்கள், சிவாஜி தைரியசாலி. நீங்களும் கூடத் தைரியசாலிகளே!! போரில் இணையுங்கள்’ என்று அழைத்தது. இந்த நாட்டை அடிமைத் தளைக்குள் சிக்கவைத்தவர்கள் சிவாஜியைப் பயன்படுத்தினார்கள் இப்போது இந்த நாட்டைப் பிரிவினைக்கு உள்ளாக்கியவர்கள் யாரோ அவர்கள் - ஏழை விவசாயிகளைச் சாதி, மத அடிப்படையில் பிரித்து வைத்தவர்கள் யாரோ அவர்கள் - மீண்டும் அவரைப் பயன்படுத்துகிறார்கள். இதை அவர்களுடைய தொழிலாக அவர்கள் செய்யட்டும். அதை நாம் ஏன் நமக்குச் சொந்தமானதாக ஆக்கிக்கொள்ளவேண்டும்? அவர்கள் அவ்வாறு செய்வதை நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? அவர்கள் பொய்யான வரலாற்றைச் சொல்லலாம். அல்லது (உண்மையான வரலாற்றைச்) சொல்லாமல்கூடப் போகலாம். அவர்கள் ‘ஜெய்’ என்று மட்டும் முழங்குவார்கள். அதிகாரம், சொத்து, அந்தஸ்து மற்றும் அறிவு ஆகியவற்றில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் அதை நிலைநாட்டிக்கொள்ள வெறும் சக்தியை மட்டுமே பயன்படுத்த மாட்டார்கள், அவர்கள் ஆயுதங்களை, துரோகத்தை, அரசின் அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்த மாட்டார்கள். அவர்கள் சிந்தனைகளைப் பயன்படுத்துவார்கள். வரலாற்றைப் பயன்படுத்துவார்கள். இத்தகைய சிந்தனைகளை மக்களிடம் சொல்வார்கள். அத்தகைய தத்துவங்களை உள்வாங்கச் சொல்வார்கள். அவர்கள் தங்களுடைய மேலாண்மையை நிலைநாட்டிக்கொள்ள எது உதவுமோ, அத்தகைய வரலாற்றைக் கற்பிப்பார்கள். அத்தகைய சிந்தனைகளும் தத்துவங்களும், அத்தகைய தவறான, பாதி உண்மைகளைக் கொண்ட, திரிக்கப்பட்ட வரலாறுகளும் அவர்களது தற்போதைய அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவும். சிந்தனை என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்த ஓர் ஆயுதம். அது நீடித்து நிலைக்கும். அது பீரங்கியைவிட மேலானது. ஆட்சியாளர்கள் எப்போதும் இந்த ஆயுதத்தை ஒடுக்கப்படுபவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு தங்களுக்கென்று சிலவற்றைப் பெற்றுள்ளவர்கள் யாரோ, அவர்கள் அவற்றை இழந்து விடுவோமோ என்று அஞ்சி அதைப் பாதுகாக்க விரும்புகிறார்கள். அவர்கள் அதற்காக அவர்களிடமுள்ள எல்லாவிதமான ஆயுதங்களையும் தனிப்பட்ட உரிமையோடு பயன்படுத்துகிறார்கள். அவர்களின் சிந்தனை என்பது கைகளில் உள்ள மிகவும் ஆற்றல்மிக்க ஆயுதம். அதுபோலவே தாங்கள் இழப்பதற்கென்று எதுவும் இல்லாதவர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் அதிகாரம், சொத்து, அந்தஸ்து அல்லது அறிவு என்ற எதுவும் இல்லை. இழந்துவிட்ட இவற்றையெல்லாம் பெறுவதற்காக அவர்களும் தங்கள் கொள்கை என்ற ஆயுதத்தைக் கூர்தீட்ட வேண்டும். சிந்தனை இல்லாமல் மாற்றம் சாத்தியமில்லை.. விவசாயிகள் இன்று ஏன் சிவாஜியின் வரலாற்றுக்குள் கட்டாயம் ஆழ்ந்து செல்லவேண்டும் என்பதற்கான காரணம் இதுதான். அது அர்த்தமுள்ள வகையில் எடுத்துச் செல்லப்படவேண்டும். வரலாற்றில் எவையெல்லாம் பயனற்றவையோ, அவையெல்லாம் குப்பைக்கூடைக் குள் வீசியெறியப்பட வேண்டும். எவையெல்லாம் மதிப்புமிக்கவையோ அவையெல்லாம் முறையாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். புதிய முற்போக்கான சிந்தனைகள் அத்துடன் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு இயன்றவரை புதுப்பிக்கப்பட்ட புதிய சிந்தனைகள் வரலாற்றின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும், சிவாஜியின் வரலாற்றில் அவரது சிந்தனைகளும், அவரது நடைமுறைகளும் ஏராளமாக உள்ளன. இவற்றால் உத்வேகம் பெற்ற சக்திகள் அவரது இலட்சியத்துக்கும், சாதனைகளுக்கும் பின்னால் நின்றன… இவையெல்லாம் இன்றைய விவசாயிகளுக்கு எல்லையற்ற பயன்களைத் தரக்கூடியன. இவை அனைத்தையும் நாம் முறையாகப் புரிந்து கொண்டு அவற்றை முன்னெடுத்துச் செல்லவேண்டும். சிவாஜியின் கடிதங்கள் சிப்லனில் உள்ள ஜம்லேதார்கள், ஹவில்தார்கள், எழுத்தர்களுக்கான கடிதம் 19 மே 1673 ஸ்ரீ பவானி சங்கர் அரசரின் இராணுவம் சிப்லன் மாகாணத்தில் முகாமிட உள்ளது. தாபோலில் உணவு தானியங்களும், மற்ற பொருள்களும் மழைக்காலத்திற்கான இருப்பாக வைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் இவையெல்லாம் இராணுவத்திற்காக வழங்கப்பட்டுள்ளன. எல்லா தனியங்களும், வைக்கோல்களும் இராணுவத்தைப் பேணுவதற்காகச் செலவிடப்பட்டுள்ளன. இதன்விளைவாக, விவசாயிகள் பெருமளவுக்குப் பாதிக்கப் பட்டுள்ளார்கள். மேலும், கோடைக்காலம் காரணமாக குதிரைப்படையும்கூட முகாமிட வேண்டியுள்ளது. செலவுகளைச் சமாளிக்க கணக்கர்களிடமிருந்தும், பல்வேறு கோட்டைகளிலிருந்தும் பணம் கடன்பெற முயற்சித்தோம். இந்த ஆதாரங்களைச் சட்டபூர்வமாக நீங்கள் பயன்படுத்தவில்லையென்றால், எவ்விதப் பட்டியலுமின்றி நீங்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தால், அவையனைத்தும் விரைவில் தீர்ந்துபோய் மழை ஊற்றும்போது நீங்கள் உணவின்றிக் கிடக்கநேரிடும். நீங்கள் பட்டினி கிடப்பீர்கள்: குதிரைகள் இறக்கத் துவங்கும். இதன்பொருள் அவற்றின் இறப்புக்கு நீங்கள்தான் பொறுப்பு என்றாகிவிடும். அதன்பின் நீங்கள் விவசாயிகளுக்குத் தொந்தரவு தரும் முடிவுகளுக்குச் செல்வீர்கள். உங்களில் சிலர் விவசாயிகளிடமிருந்து தானியங்களை, ரொட்டிகளை, கொஞ்சம் வைக்கோல்களை, கொஞ்சம் விறகுகளை, கொஞ்சம் காய்கறிகளைப் பறிப்பீர்கள். நீங்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால், விவசாயகள் தங்களைக் கொள்ளைகளிலிருந்தும், ஒடுக்குமுறைகளிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள எவர் பின்னால் நிற்பது என்று கருதி அந்த இடத்தை விட்டு நீங்கிச் சென்று விடுவார்கள். விவசாயிகள் உங்களைச் சபிப்பார்கள். பலர் பட்டினியால் இறப்பார்கள். இதன்பொருள் நீங்கள் மொகலாயப் படையெடுப்பாளர்களை விட மோசமானவர்கள் என்றாகிவிடும். ஒட்டுமொத்தப் பழியும் உங்கள் மீது வந்துசேரும். எனவே, இதை நீங்கள் புரிந்துகொள்வது நல்லது. நீங்கள் சிப்பாயோ, அல்லது படைவீரரோ, ஒரு இலையையோ, அல்லது ஒரு கிளையையோ பறித்து விவசாயிகளுக்கு பளுவைத் தந்துவிடக்கூடாது. நாங்கள் அரசின் கஜானாவிலிருந்து தந்துள்ளோம். எந்த ஒன்று வேண்டுமென்றாலும், அது உணவாகவோ அல்லது கால்நடைகளுக்கான வைக்கோலாகவோ, விறகாகவோ அல்லது காய்கறிகளாகவோ எதுவாக இருந்தாலும், கடைவீதிகளுக்குச் செல்லுங்கள். உங்களுக்கு எது தேவையோ அதை வாங்குங்கள். எவர் மீதும் உங்களுக்கு உணவளிப்பதற்காக பலத்தைப் பிரயோகிக்க வேண்டிய தேவை இல்லை. உங்களுக்கு வழங்கப்பட்டவை சிக்கனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதனால் அவை ஒட்டுமொத்த மழைக்காலத்திற்கும் போதுமானதாக இருக்கும். அந்த அளவுக்கு எழுத்தர்களால் அளிக்கப்படும் அளவீட்டை வாங்கிக்கொள்ளுங்கள். எவர் ஒருவரும் பசியால் வாடவில்லை: குதிரைகள் நாளுக்கு நாள் செழிப்பாக வளர்கின்றன என்னும் அளவுக்கு அதைப் பயன்படுத்துங்கள். எழுத்தர்களை உங்கள் விருப்பத்திற்கேற்ப எதையும் கேட்டுத்தாக்கவேண்டிய அல்லது சேமிப்புக்கிடங்கையோ, பண்டகசாலையையோ கொள்ளையடிக்கவேண்டிய தேவை இல்லை. சிலர் சொக்கப்பனை கொளுத்த விரும்புவார்கள்: சிலர் அடுப்புக்களைத் தவறான இடங்களில் அமைப்பார்கள். சிலர் புகையிலையைப் பற்றவைக்க விரும்பு வார்கள். வைக்கோல் சுற்றிலும் சிதறிக்கிடக்கும். காற்றுவீசும்போது யாராவது கவனக்குறைவாக இருந்தால் அது மிகப்பெரிய துன்பத்தைக் கொண்டுவந்து விடும். ஒரு முறை வீடு பற்றிக் கொண்டால், அது மற்ற வீடுகளுக்கும் சீக்கிரம் பரவிவிடும். மிகச்சிறிய கங்கு வைக்கோலில் பட்டுவிட்டால், சுற்றிலுமுள்ள வைக்கோல்களை நெருப்பு சுற்றிவளைத்துக் கொள்ளும். அதன்பிறகு, நீங்கள் விவசாயிகளின் தலைகளை வெட்டினாலோ, அல்லது எழுத்தர்களை அச்சுறுத்தினாலோ உங்கள் முகாமுக்கு ஏதாவது மேலும் இடங்களைக் கட்ட வேண்டுமென்றால் அங்கு ஒரு மரம் கூட எஞ்சியிருக்காது. ஒவ்வொருவரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, பொறுப்புமிக்க எல்லாரும் இதன்மூலம் ஆணையிடப் படுகிறார்கள்: அவர்கள் சுற்றுக்குச் செல்லும்போது அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதனால், சொக்கப்பனை கொளுத்துவதனாலோ, அடுப்புப் பற்ற, எலிகள் விளக்குத் திரியை இழுத்துச் செல்வதனாலோ, திரியைப் பற்ற வைப்பதனாலோ தீப்பிடித்துக் கொள்ளாது. வைக்கோலைப் பாதுகாக்க சாத்தியமுள்ள ஒவ்வொன்றையும் செய்யவேண்டும். இது மழையினுள்ளும் குதிரைகள் நீடித்து வாழ்வதை உறுதிப்படுத்தும். இது செய்யப்படவில்லையென்றால், அங்கே கவனித்துக்கொள்ள ஒரு குதிரையும் இருக்காது. உணவு அளிக்கவும் எந்தக் குதிரையும் இருக்காது. நீங்கள் அவற்றைக் கண்காணிக்க வேண்டிய தேவையே இருக்காது! இவ்வளவு விளக்கமாக நான் எழுதுவதற்குக் காரணம் இதுதான். முக்கியமான எல்லா ஜம்லேதார்களும், ஹவில்தார்களும், எழுத்தர்களும் இந்த விவரங்களைப் பின்பற்றுவதற்கான சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். இதைப் புறக்கணிக்கும் எவரும், தவறு செய்யும் எவரும் மராத்தாக்கள் பெயரைக் களங்கப்படுத்துகிறார்கள் என்று பொருள். பின் அவர் எப்படி வேலைபெற முடியும்? எவரொருவரும் இதிலிருந்து விலகிச்செல்ல முடியாது. ஏனெனில் யாரும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. கடிதம் எண் 2 வருவாய்த்துறை சுபேதாருக்குக் கடிதம் 5 செப்டம்பர் 1676 ஸ்ரீ சங்கர் ராஜா ஸ்ரீசிவாஜி ராஜேவிடமிருந்து பிரபாவதி மாகாண சுபேதார் ராம்ஜி ஆனந்த்-க்கு, வாழ்த்துக்கள். நீங்கள் அரசுக்கு கௌரவத்தோடும், வஞ்சனையின்றியும் சேவைசெய்து வருகிறீர்கள். அதேபோல, தனிப்பட்ட இலாபங்களுக்கான விருப்பமின்றி ,விதைப்பது முதல் அறுவடை வரைக்குமான பயிர்விளைச்சலை கவனிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறீர்கள். நாடு முழுவதும் பயிர்பங்கீட்டு முறை நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. நிலவாடகைதாரருக்கும், அரசுக்குமான பங்கு முறையாகப் பங்கீடு செய்யப்பட வேண்டும். விவசாயிகளிடம் எந்த வகையிலாவது ஏதேனும் சூழ்ச்சிகள் செய்யப்பட்டால் நீங்கள் அரசின் அதிருப்திக்குள்ளாவீர்கள். விவசாயிகளிடமிருந்து பணம் வசூலிக்கப்பட வேண்டுமென்பது எனது கட்டளையல்ல. நீங்கள் தானியத்தின் மதிப்புக்கான பணத்தை வசூலிக்கவேண்டுமென்று கருதப்படவில்லை. நீங்கள் நமது பங்கைத் தானியமாக மட்டுமே வசூலிக்க வேண்டும். பின்னர் அவை நல்ல விலைக்கு விற்கப்பட வேண்டும். இத்தகைய விற்பனையிலிருந்து அரசு இலாபம் பெற முடியும். எல்லா வரிகளும் விளைச்சலை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். அவை பின்னர் முறையாக இருப்பு வைக்கப்பட்டு பொருத்தமான பருவத்தில் விற்கப்பட வேண்டும். முழுப் பரிவர்த்தனைகளும் இந்த வகையில் திட்டமிடப்பட்டு பொருள்கள் சரியான பருவத்தில் அதிக விலைக்கு மட்டுமே விற்கப்பட வேண்டும். இதில் எந்தச் சேதாரமும் இருக்கக்கூடாது. தேங்காய்கள், பாக்கு, அடைக்காய்கள், மிளகு போன்றவற்றை இந்த விதத்தில் நீங்கள் விற்கவேண்டும். நீங்கள் பத்துக் கடைத்தெருக்களில் பொருட்களை இலாபத்துக்கு விற்றால் நீங்களும்கூட பொருத்தமான இலாபத்தை அதிலிருந்து பெறலாம். பயிர்களை விதைக்க விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டு, நீங்களும் அவர்களுக்கு உதவவேண்டும். இதற்காக நீங்கள் பெரும் முயற்சி எடுத்து ஒவ்வொரு கிராமத்தையும் பார்வையிட வேண்டும். நீங்கள் கிராமத்திலுள்ள எல்லா குத்தகைதாரர்களையும் ஒன்றாகக் கூட்டி, யார், எதை, எவ்வளவு நிலத்தில் பயிரிட முடியும் என்பதை அடையாளம் கண்டு, அவரவர்கள் சக்திக்கு மனித உழைப்பையும் மற்றவற்றையும் செலுத்த வைக்கவேண்டும். அங்கு சில மாற்றுத்திறனாளிகள் இருக்கக் கூடும். அவர்களிடம் காளைகளோ, கலப்பைகளோ அல்லது உண்ண உணவோ இருக்காது. அவர்கள் ஒருஜோடி காளைகளை வாங்கவும் ,உணவுக்கான தானியம் வாங்கவும் போதுமானதைப் பணமாக அளிக்கவேண்டும். அவர்கள் எவ்வளவு நிலத்தை உழமுடியுமோ அவ்வளவு நிலத்தை உழட்டும். இந்தக் கடன் தொகைக்கு வட்டி எதுவும் வசூலிக்கக்கூடாது. அசல் மட்டுமே, அவர்கள் திருப்பிச் செலுத்தக்கூடிய நிலை வரும்போது, வசூலிக்க வேண்டும். நீங்கள் இதற்காக இரண்டு இலட்சம் ரூபாய்களைச் செலவிட்டாலும், நான் அதை ஆட்சேபிக்க மாட்டேன். இவ்வாறு செலவிட்ட பணம் பயனாளிகளுக்குச் சென்று சேர்ந்ததா என்பதை உறுதிசெய்யுங்கள். எல்லா விளையாத நிலங்களும் விளைச்சலின் கீழ் கொண்டு வரப்பட்டதா என்பதைக் கவனியுங்கள். இது விவசாயிகளை மேலும் வேலை செய்ய ஊக்குவிக்கும். அவருக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அவர் அரசு நிதிக்குப் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அவர் செலுத்த வேண்டிய எல்லாவற்றிலிருந்தும் அவருக்கு விலக்கு அளிக்கவேண்டும். உங்கள் மூத்த அதிகாரிக்கு இது பற்றிய விவரங்களை அனுப்புங்கள். அவர் விலக்களிக்கும் முறையான உத்தரவை வழங்குவார். நீங்கள் உங்கள் கடமையை உரிய கவனத்துடனும், விருப்பத்துடனும் செய்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். கடிதம் எண் 3 ஜிஸியா வரி பற்றி ஔரங்கசீப்புக்கு கடிதம் சிர்கா 1657. சிவாஜியிடமிருந்து தனது வார்த்தைகளுக்கு உண்மையாக ஔரங்கசீப்புக்கு. ஒருவழியனுப்பு நிகழ்ச்சி கூட இன்றி, விதியின் சூழ்ச்சியால் நான் விடைபெற வேண்டியதாயிற்று. நாங்கள் திரும்பிவந்த பிறகு பேரரசரின் கருவூலம் காலியாகி விட்டது என்று கேள்விப்பட்டோம். மேலும், பேரரசு தனது அன்றாட நிர்வாகத்தை இந்துக்களிடமிருந்து ஜிஸியா வரியை வசூலிப்பதிலிருந்துதான் நடத்துகிறது என்றும் கேள்விப்பட்டோம். முன்பு, உண்மையில் பேரரசர் அக்பர் மிகுந்த பெருந்தன்மையோடு ஆட்சி நடத்தினார். எனவே தாவூதிகள், மொஹமதியர்களுக்கு அப்பாலும், பிராமணர்கள், ஷேவாதிகள் ஆகிய இந்துக்களின் மத நடவடிக்கைகளும் பாதுகாக்கப் பட்டன. பேரரசர் இந்த மதங்களுக்கு உதவினார். எனவே அவர் ‘ஜகத் குரு’ என்று போற்றப்பட்டார். இது அவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளிலும் அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது. அவர் நாடுகளைஅடுத்து நாடுகள் என வெற்றிகொண்டார் அவருக்குப்பின் எல்லாம்வல்ல சக்தியின் வாழ்த்துக்களோடு 22 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து சொர்க்கம் சென்றார். ஷாஜகானும்கூட 32 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். அவர்கள் வீரம்செறிந்த பேரரசர்கள்: மிகுந்த மரியாதையைப் பெற்றவர்கள். அவர்கள் பல்வேறு புதிய நடைமுறைகளை உருவாக்கினார்கள் அவர்களாலும்கூட ஜிஸியா வரியை விதித்திருக்க முடியும். ஆனால், எல்லாரும், பெரியதோ, சிறியதோ, தங்கள் சொந்த மதத்தைப் பின்பற்றிய அவர்கள் இறைவனின் குழந்தைகள். இவற்றுக்கெல்லாம் மேலாக அவர்கள் நீதியற்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. இப்போதும்கூட எல்லாரும் அவர்களைப் புகழ்ந்து பாடுகிறார்கள். பெரியவர்களோ, சிறியவர்களோ எல்லாரும் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். ஒருவர் விதைக்கும்போது ஒருவர் அறுவடை செய்கிறார். அந்தப் பேரரசர்கள் எப்போதும் மக்களின் நலன்களின்மீது தங்கள் கண்களைப் பதித்திருந்தார்கள். இப்போது தங்கள் ஆட்சியின்கீழ், நீங்கள் பலகோட்டைகளையும், மாகாணங்களையும் இழந்துவிட்டீர்கள். மீதியுள்ளவையும் இவ்வாறே இழக்கப்பட உள்ளன. இது ஏனென்றால், ஒவ்வொரு செயலையும் செய்யும்போது நீங்கள் அடிப்படையில் எதையும் விட்டுவைக்கவில்லை என்பதே. விவசாயிகள் மகிழ்ச்சியற்றவர்களாக ஆகிவிட்டனர். எந்தஒரு வருவாய்க் கோட்டமும் அதன் மொத்த உற்பத்தியில் 1% கூட உங்களுக்குக் கொடுப்பதில்லை. பேரரசரும் அவரது சந்ததியினரும்கூட வறுமை சூழ்ந்த நிலையில் வாழ்கின்றனர். ஆகையால் மற்ற பிரபுக்களும் எத்தகைய நிலையில் வாழ்கிறார்கள் என்று கற்பனைசெய்து பார்ப்பது கடினமானதல்ல. மொத்தத்தில், படைவீரர்கள் விரக்தியில் உள்ளார்கள். வியாபாரிகள் அலறுகிறார்கள். முஸ்லீம்கள் அழுகிறார்கள். இந்துக்கள் தங்களுக்குள் எரிகிறார்கள். பலரால் போதுமான உணவைக்கூடப் பெற முடியவில்லை. இதுதானா நிர்வாகம்? அத்துடன் மேலும் இந்த ஜிஸியா. இந்த வார்த்தை, கிழக்கிலும், மேற்கிலும், தொலைவிலும், அகலத்திலும் பரவி, இந்துஸ்தானத்தின் பேரரசர் ஃபக்கீர்கள், பிராமணர்கள், ஷேவாதிகள், ஜோகிகள், சன்யாசிகள், பைராகிகள், ஏழைகள் மற்றும் துன்பப்படுபவர்கள் மீது ஜிஸியா வரியை விதித்துள்ளார் என்கிறது. பேரரசர் இதில் பெருமை கொள்கிறார். பேரரசர், தைமூரின் செயல்களைக்கூட விஞ்சிவிட்டார். புனித நூலான குர்ஆன் ஒரு தெய்வீக நூல். அது இறைவனால் அருளப்பட்டது. இறைவன் எல்லா முஸல்மான்களுக்கும், மற்றும் உலகம் முழுவதற்கும் சொந்தமானவர் என்று கட்டளையிடுகிறது. நல்லதோ அல்லது கெட்டதோ இரண்டுமே இறைவனின் படைப்புக்கள். மசூதிகளில் அவர்தான் தொழப்படுகிறார். கோவில்களில் அவருக்காகவே மணிகள் ஒலிக்கின்றன. எவர் ஒருவருடைய மதத்தையும் எதிர்ப்பது தனது சொந்த மதத்தையே கைவிடுவது போன்றது. அது இறைவன் எதை எழுதினாரோ அதைத் துடைத்து எறிகிறது. அது இறைவனையே நிந்திப்பது போன்றது. எனவே நீங்கள் நல்லதற்கும் கெட்டதற்கும் இடையே வேறுபடுத்திப் பார்க்கவேண்டும் இதற்கெல்லாம் மேலாக ஒருபொருளை அவமதிப்பது, அப்பொருளைப் படைத்த இறைவனையே அவமதிப்பதாகும். ஜிஸியா எந்த வகையிலும் நியாயமானது அல்ல. சுல்தான் அஹமத் குஜராத்தி இந்தவகையில் ஆட்சிபுரிந்து மிகவிரைவில் மண்ணைக் கௌவினார். அநீதிகளால் துன்பத்துக்குள்ளாக்கப் படுபவர்கள் இறுதியாகத் தங்கள் வாய் மூலம் வெளியேற்றும் புகை, துர்தேவதைகளை எரிக்கும் நெருப்பைவிட உஷ்ணமானவை. குற்றவாளிகள் பேய்களை விட மிகச் சீக்கிரமாக எரிக்கப்படுகிறார்கள். அழுக்குப் படிந்த மனம் காலம் தாழ்த்தி அல்ல, மிகவிரைவில் தூய்மைப்பட வேண்டும் என்பது நல்ல அறிவுரை. எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையான மதம் என்பது இந்துக்களைத் தண்டிப்பதுதான் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் முதலில் ஜிஸியா வரியை வசூலிக்க வேண்டியது ராஜா ஜெய்சிங்கிடம். மற்ற பரிவாரங்கள் இதை எளிதில் பின்பற்றுவார்கள். ஏழைகள் எறும்புகளையும், பூச்சிகளையும் போன்றவர்கள். அவர்களைத் துன்புறுத்துவதில் வீரம் எதுவுமில்லை. விசுவாசம் மிக்கவர்கள்கூட வெட்கமில்லாமல் வைக்கோலுக்கும் கீழே நெருப்பை ஒளித்துவைப்பது மிகவும் ஆச்சரியமளிக்கிறது. அவ்வாறே இருக்கட்டும். பேரரசின் சூரியன் வீரம்செறிந்த கீழ்த்திசை மலைகளிலிருந்து பிரகாசமாக ஒளிரட்டும். சிவாஜி கோன் ஹோட்டா? - எஸ்.பி.ராஜேந்திரன் நாங்கள் குழந்தைகளாக இருந்த போது ஒரு விளையாட்டு உண்டு. “சிவாஜி உத்தரவு” என்பது அந்த விளையாட்டின் பெயர். இதில் ஒரு நபர், சிவாஜி மன்னரின் சார்பில் உத்தரவுகளைப் பிறப்பிப்பார். மற்றவர்கள் அதற்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். இதில் “சிவாஜி”க்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அவர் எப்படிப்பட்ட உத்தரவு வேண்டுமானாலும் பிறப்பிப்பார். அவர் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். மகாராஷ்டிரா மாநிலத்துக் குழந்தைகளின் மனதில் மாமன்னர் சிவாஜி என்பவரைப் பற்றி இப்படித்தான் ஒரு சித்திரம் எழுப்பப்பட்டுள்ளது. அவர் துணிச்சல்காரர், அச்சமில்லாதவர், அறிவாளி, எப்போதும் இந்துத்துவா கோட்பாட்டிற்காகப் போராடியவர், பசுக்களையும் பிராமணர்களையும் பாதுகாத்தவர், இஸ்லாமியர்களை வெறுத்து ஒதுக்கியவர்… என்றுதான் எங்களது குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள். சிவாஜி என்றால் இப்படித்தான் இருப்பார் என எனது மனதிலும் அழுத்தமாகப் பதிந்திருந்தது. ஆனால், கோவிந்த் பன்சாரே எழுதிய " யார் அந்த சிவாஜி" என்ற நூலைப் படித்த போது எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைத்தது. சிவாஜியைப் பற்றி என் மனதில் திணிக்கப்பட்டிருந்த பிம்பம் தகர்ந்தது. அந்த நூலைப் படித்த நாளில், உண்மையிலேயே சிவாஜி என்ன செய்தார் என்பதை அறிய மனம் தவித்தது. சிவாஜியைப் பற்றித் தேடித் தேடிப் படிக்க முற்பட்டேன். அப்போது தான் வரலாற்றைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் நான் கொண்டிருந்த பிம்பங்கள் எல்லாம் தகர்ந்து விழுந்தன. சிவாஜி என்ற மாமன்னன் எளிய மக்களின் தலைவனாகத் திகழ்ந்தான் என்பது விளங்கியது… -இப்படி எழுதிச் செல்கிறார் மகாராஷ்டிராவின் பத்திரிகையாளர் அத்திஷ் நாக்புரி. ‘யார் அந்த சிவாஜி?’ என்ற நூலை தோழர் கோவிந்த் பன்சாரே எழுதி வெளியிட்ட போது, அதைப் படித்து ஒட்டுமொத்த மகாராஷ்டிரமும் அதிர்ந்தது. சிவாஜியைப் பற்றி மகாராஷ்டிரா மக்களிடையே சிவசேனையும், ஆர்எஸ்எஸ் -பாஜக போன்ற கட்சிகளும் இதர இந்துத்துவா மதவெறி அமைப்புகளும் உருவாக்கி வைத்திருந்த சித்திரம் அழிந்தது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது அந்தப் புத்தகம். மராத்தி மொழியில் எழுதி, கன்னடம், உருது, குஜராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் 24 பதிப்புகளைக் கண்டது “சிவாஜி கோன் ஹோட்டா” என்ற அந்த புத்தகம். “சிவாஜி ஒரு இந்து மன்னர் என்ற காரணத்தால் அவர் புகழ் பெறவில்லை; மாறாக, அவர் ஏழை எளிய மக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்தார். நீதிக்காகப் போராடினார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தார். சாதி மற்றும் இன அடையாளங்களை புறக்கணித்து அனைத்துத் தரப்பிலிருந்தும் தனது படைக்கு வீரர்களைச் சேர்த்தார்” என அந்த நூலில் எழுதிச் செல்கிறார் கோவிந்த் பன்சாரே. " மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் சிவாஜியின் புகழ் ஓங்கியிருந்தது. ஆனால், சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்தின் போது பி.கே. அட்ரே போன்ற தலைவர்கள் சிவாஜியை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மட்டும் சொந்தக்காரர் என்பது போல முன்வைத்தனர். பின்னர் சிவசேனை, சிவாஜியை ஒரு இந்து மன்னராக முன்னிறுத்தியது. படிப்படியாக தங்களது முஸ்லிம் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக சிவாஜியின் பெயரை சிவசேனை பயன்படுத்தத் துவங்கியது. இதன் தொடர்ச்சியாகவே, சிவாஜி மேல்சாதி ஆதிக்க மன்னராக ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டது. சாதி ஆதிக்க சக்திகளின் அடையாளமாக வீர சிவாஜியை முன்னிறுத்தினர். மகாராஷ்டிரம் முழுவதும் தலித் மக்களைத் தாக்குவதற்காக, ஒடுக்குவதற்காக சிவசேனை உட்பட மேல்சாதி ஆதிக்க அமைப்புகள் ‘ஜெய் பவானி, ஜெய் சிவாஜி’ என்று கோஷத்தை முன்வைத்தனர்" என்று அந்த நூலில் விரிவாக ஆதாரங்களோடு முன்வைக்கிறார் தோழர் கோவிந்த் பன்சாரே. இப்படிப்பட்ட நூல்களின் மூலம் மகாராஷ்டிரத்தின் மதவெறி அரசியலை அதிரச்செய்த தோழர் கோவிந்த் பன்சாரே, 1933 நவம்பர் 26 அன்று அகமது நகர் மாவட்டம் ஸ்ரீ ராம்பூர் தாலுகாவிலுள்ள கோல்ஹர் எனும் கிராமத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் மிகவும் வறிய நிலையிலிருந்த விவசாயத் தொழிலாளிகள். வெகு காலத்திற்கு முன்பே கந்து வட்டிக்காரர்களிடம் தங்களது நிலத்தை இழந்துவிட்ட பரிதாபத்திற்கு உரியவர்கள். சிறுவயதிலேயே தங்களது வறிய நிலைக்குக் காரணத்தை தேடி அலைந்த கோவிந்த் பன்சாரே, பள்ளியில் படிக்கும் போதே கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் பள்ளி இறுதியாண்டு படித்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.பி.பாட்டீலுக்கு ஆதரவாக சட்டமன்றத் தேர்தலில் தீவிரமாக வேலை செய்தார். பிறகு கோலாப்பூர் நகரில் பட்டப்படிப்பு முடித்து, சட்டப்படிப்பையும் முடித்தார். அன்றாடம் காலையில் வீடு வீடாக பத்திரிகை போடும் இளைஞனாக, நகராட்சி அலுவலகத்தில் ஒரு பியூனாக, பின்னர் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய கோவிந்த் பன்சாரே பிற்காலத்தில் சிவாஜி பல்கலைக்கழகத்தில் பத்தாண்டு காலம் இணைப் பேராசிரியராக பணியாற்றினார். 1964 முதலே தொழிலாளர்களின் வழக்கறிஞராக தனது பணியைத் தொடர்ந்த அவர், சம்யுக்தா மகாராஷ்டிரா எனும் மாபெரும் இயக்கத்திலும் கோவா சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றவர். 1962ல் இந்தியா - சீனா யுத்தம் நடந்த போது நாடு முழுவதும் சீனாவுக்கு ஆதரவாளர்கள் என்று கருதப்பட்ட கம்யூனிஸ்ட்களை மத்திய காங்கிரஸ் அரசு வேட்டையாடியது. அப்போது கோவிந்த் பன்சாரேயும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகாராஷ்டிரா மாநிலச் செயலாளராக பத்தாண்டு காலம் திறம்படப் பணியாற்றிய அவர், அக்கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். மகாராஷ்டிராவில் எண்ணற்ற மக்கள் இயக்கங்களின் தளகர்த்தராக விளங்கிய பன்சாரே, விவசாயத் தொழிலாளிகள் , வீட்டு வேலைத் தொழிலாளிகள், ரிக்க்ஷா இழுப்பவர்கள், பால் விநியோகிக்கும் தொழிலாளர்கள், குடிசைப் பகுதி வாழ் மக்கள் என சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் மக்களின் தலைவராகக் திகழ்ந்தார். மார்க்சியம், முஸ்லிம்களின் நிலை, அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் கொள்கைகள், உலகமயம் மற்றும் விவசாயத்தின் அழிவு எனப் பல்வேறு அடிப்படையான பிரச்சனைகள் குறித்து ஏராளமான நூல்கள் எழுதியுள்ளார். கோவிந்த் பன்சாரே விடுத்த சவால்களுக்கு பதிலளிக்க முடியாத இந்துத்துவா மதவெறி கும்பல் 2015 பிப்ரவரி 16ம் தேதி கோலாப்பூரில் அவரது வீட்டிற்கு அருகே நேருக்கு நேராக துப்பாக்கியால் சுட்டுத் தனது வெறியை தணித்துக் கொண்டது. அவரும் அவரது மனைவி உமாவும் படுகாயமடைந்தனர். சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 20ம் தேதி மும்பை பீரிச் கேண்டி மருத்துவமனையில் பன்சாரேயின் உயிர் பிரிந்தது. தோழர் கோவிந்த் பன்சாரேயின் மரணச் செய்தியறிந்து, நாடே அதிர்ந்தது. இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக இயக்கங்கள் பெரும் கண்டனக்குரல் எழுப்பின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு , இந்தியாவின் தலைசிறந்த மார்க்சிய அறிவுஜீவிகளில் ஒருவரை இழந்துவிட்டோம் என்று துயரத்தோடு கண்டனத்தைப் பதிவு செய்தது. 2013 ஆகஸ்ட் மாதம் புனே நகரில் மதவெறி பயங்கரவாதிகளால் சமூகச் சீர்திருத்தவாதியான டாக்டர் நரேந்திர தபோல்கர் எப்படி சுட்டுக்கொல்லப்பட்டாரோ , அதேபோல பன்சாரே கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, இரண்டு படுகொலைகளிலும் இன்னும் ஒரு குற்றவாளியைக் கூடக் கைது செய்யாததை வன்மையாகக் கண்டித்தது. தோழர் பன்சாரேயின் இறுதி நிகழ்ச்சி பிப்ரவரி 21 ம் தேதி கோலாப்பூரில் நடந்தது. அதில் ஆயிரம் ஆயிரமாய் ஏழை எளிய மக்கள் , முற்போக்கு மற்றும் ஜனநாயக இயக்கங்கள், பல்வேறு தலித் இயக்கங்களின் தோழர்கள் , இடதுசாரிக்கட்சிகளின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற காட்சி , மதவெறி சக்திகளுக்கு கோவிந்த் பன்சாரேயின் சிந்தனைகள் மரணமில்லாத எச்சரிக்கையாகத் தொடரும் என்பதைப் பறைசாற்றியது. நாங்கள் தபோல்கர்கள், நாங்கள் பன்சாரேக்கள். எஸ்.வி.வேணுகோபாலன். ‘தும்ச்சா தபோல்கர் கரு’ (நரேந்திர தபோல்கருக்கு நேர்ந்த அதே கதிதான் உனக்கும்!) என்று அச்சுறுத்தல் கடிதம் அனுப்பியவாறே, கோவிந்த பன்சாரேவின் உயிரையும் பறித்துவிட்டன பாசிச மதவெறி சக்திகள். மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் நகரைச் சேர்ந்த கோவிந்த பன்சாரே (82) கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். மூடநம்பிக்கைகளுக்கும் மதவாதத்துக்கும் எதிரான மகத்தான போராளியான பன்சாரே, தனது மனைவி உமாவுடன் கடந்த திங்கட்கிழமை காலை நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைய இருந்த நேரத்தில், இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம ஆசாமிகள் இருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். பன்சாரேவின் உடலுக்குள் மூன்று குண்டுகள் பாய்ந்தன. அவரது மனைவியின் தலையின் இடது பக்கத்தைத் துளைத்தது மற்றொரு குண்டு. அக்கம்பக்கத்து வீட்டார்கள்தான் இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சேர்த்தார்கள். மருத்துவர்களின் இடைவிடாத சிகிச்சை முயற்சிகளையும் மீறி பன்சாரேவின் உயிர் வெள்ளியன்று பிரிந்துவிட்டது. உமா சிகிச்சையில் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதேபோன்ற முறையில்தான் இந்துத்துவ வெறியர்கள் புனேவில் நரேந்திர தபோல்கரின் உயிரைப் பறித்தார்கள். பன்சாரே போன்றே தபோல்கரும் மக்களுக்காகப் போராடிய எளிய மனிதர். தபோல்கர் போன்றே பன்சாரேவும் இலட்சியத்தில் உறுதிகொண்டிருந்தவர். இருவருமே மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள். மக்களை விழிப்படைய வைத்து அவர்களின் சமூக, பொருளாதார விடுதலைக்காகப் போராட இடைவிடாது ஊக்குவித்துக் கொண்டிருந்த களப்போராளிகள்தான் இருவருமே. தபோல்கரும் பன்சாரேவும் பிள்ளையார் பால் குடித்ததாக 20 ஆண்டுகளுக்குமுன் அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகள் நாடு முழுவதும் பரப்பப்பட்டபோது, அறிவியல் செயல்விளக்கத்தின் மூலம் எளிமையான முறையில் மறுத்து, மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார் தபோல்கர். அதேபோல், வீர சிவாஜியை இஸ்லாமிய எதிர்ப்பாளராக உருவகப்படுத்தி, அவரது பிம்பத்தை வைத்துத் தங்கள் தத்துவங்களை நியாயப்படுத்தி, இளைஞர்களுக்கு ஆவேசப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கும் சிவசேனா-ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளை வரலாற்றுரீதியாகக் கேள்விக்கு உட்படுத்தியவர் கோவிந்த பன்சாரே. ‘உண்மையாக, சிவாஜி யார்?’ (சிவாஜி கோன் ஹோட்டா?) என்ற அவரது புத்தகம், சாதி-மத உணர்வுகளுக்கு அப்பால் ஏழை எளிய மக்களின் நலன்களை நேசித்தவர், போராடியவர் சிவாஜி என்ற அடையாளத்தை எடுத்து வைத்தது. இது சங் பரிவாரத்துக்கு எரிச்சல் ஊட்டியது. காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்குச் சிலை வைக்க வேண்டும் என்று இந்துத்துவ சக்திகள் அண்மையில் குரல்கொடுக்கத் தொடங்கியதும், பன்சாரே மிகவும் அதிர்ச்சியடைந்து அதைக் கண்டிக்கத் தொடங்கினார். கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகக் கூட்டம் ஒன்றில் இத்தகைய முயற்சிகளை வெளிப்படையாக விமர்சித்தார் பன்சாரே. அந்தக் கூட்டத்திலேயே அதற்கு எதிராகக் குரல்கொடுத்த பாஜகவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பன்சாரே வரலாற்றைத் திரித்துக் கூறுவதாகக் குற்றம்சாட்டினார். வகுப்புவாத அச்சுறுத்தல்களில் ஈடுபட்டுவரும் சில இந்துத்துவ அமைப்புகள்மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பன்சாரே கோரியதும், தொடர்புள்ள ஆட்கள் அவர்மீது அவதூறு வழக்கைத் தொடுத்தார்கள். நரேந்திர தபோல்கர் வெறும் அறிவியல் பிரச்சாரப் பணிகளை மட்டிலும் செய்துகொண்டிருக்கவில்லை. சாதாரண மக்கள் நலனுக்காகத் தம்மால் இயன்ற வழிகளில் உதவியும், அவர்களைத் திரட்டிப் போராடியும் வந்தார். அவரைப் போன்றே அடித்தட்டு மக்களுக்காகத் துடித்த கோவிந்த பன்சாரேவின் இதயத்தைத்தான் வகுப்புவாத வெறியர்கள் தற்போது செயலிழக்க வைத்துவிட்டார்கள்.’ “அண்ணா… அண்ணா!” ஆகஸ்ட் 2013-ல் நரேந்திர தபோல்கர் மறைவை அடுத்து, சதாரா வீதிகள் துயரத்தைச் சுமக்க முடியாமல் தத்தளித்தன. மூங்கில் கழியின் துணையோடு மெல்ல நடந்து வந்த - எண்பதுகளில் இருந்த முதிய மனிதர் பாபன் ராவ் உத்தாலே தன்னிடம் கபடி விளையாட்டு பயின்ற தனது அன்புக்குரிய தபோல்கரின் முகம் வெறியர்களது குண்டுகளால் சிதைக்கப்பட்டிருந்ததை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார். இந்த சனிக்கிழமையன்று கோலாப்பூரின் பீடித் தொழிலாளர்களும், வீட்டு வேலை செய்யும் பெண்மணிகளும், துப்புரவுத் தொழிலாளர்களும் கோவிந்த பன்சாரே உடலின் அருகே திரண்டு நின்று “அண்ணா… அண்ணா” என்று கதறிக்கொண்டிருந்தார்கள். மக்கள் நலனுக்காக உழைக்கும் போராளிகளை மதவெறியர்கள் ஏன் குறிவைக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதன் அரசியல் மிகவும் நுட்பமானது. அது மக்களுக்கு எதிரானது. தங்கள் தத்துவத்தை எதிர்ப்பவர்களைப் பாசிச சக்திகள் மன்னிப்பதில்லை. ஆனால், மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்கள் ஒருபோதும் இந்தப் போராட்டத்தில் சமரசம் செய்துகொள்வதில்லை. தபோல்கரின் பாதையில்… தனது சொந்தத் துயரத்தைவிடவும், மறைந்த தனது கணவர் தபோல்கர் படைக்க விரும்பிய சமூகத்துக்கான இலட்சியம் முக்கியமானது என்ற முடிவை தபோல்கரின் மனைவி ஷைலா அப்போதே எடுத்தார். அவரது மகன் ஹமீத் மனநல மருத்துவராக இருக்கிறார். அவரும் தனது பணியையெல்லாம் விட்டுவிட்டு, தனது தந்தையின் அடிச்சுவட்டில் சென்றுகொண்டிருக்கிறார். தபோல்கரின் மனைவி, மகன் மட்டுமல்ல அவரது மருமகள், மகள் உட்பட மொத்தக் குடும்பமும் கடந்த மாதங்களில் ஒருவரை ஒருவர் சந்திக்கக்கூட நேரமின்றி ஊர் ஊராகப் பயணம் செய்து, தபோல்கர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது நினைவுநாள் அன்று மட்டுமே குடும்பம் ஒன்றுகூடுகிறது. தனது மருத்துவத் தொழிலைவிடவும் தந்தையின் இலட்சியமே முன்னுரிமை என்கிறார் ஹமீத். கோவிந்த பன்சாரே இறுதி நிகழ்ச்சியில் குழுமிய பெருங்கூட்டத்தில் உரத்த முழக்கங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன: “நாங்கள் நரேந்திர தபோல்கர்கள், நாங்கள் கோவிந்த பன்சாரேக்கள்.” அதன் பொருள், இந்த இரு மனிதர்களுக்குமே மரணம் கிடையாது என்பதுதான். வகுப்புவாத வெறி என்பது மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் மக்கள் ஒற்றுமைக்கு எதிராகப் பூதாகரமான சவாலாக வளர்ந்து நிற்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதைச் சந்திக்கும் துணிவுடைய மக்கள் சக்தி, அதைவிடப் பிரம்மாண்டமாக வளரவே செய்கிறது என்பதுதான் மகத்தான உண்மை. ஜனநாயகம் நீடித்து நிலைக்க வேறெதுவும் வேண்டாம். மிகமிகச் சாதாரண, அடித்தட்டு மக்களிடமிருந்து எழுந்துவரும் இந்தக் குரல்கள் அளிக்கும் நம்பிக்கை ஒன்றே போதும்! நன்றி – தி இந்து தமிழ் 23 பிப்ரவரி 2015