[] [cover image] மாற்றம் ஏமாற்றமில்லை (கட்டுரைத் தொகுப்பு) நிர்மலா ராகவன் FreeTamilEbooks.com Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License மாற்றம் ஏமாற்றமில்லை (கட்டுரைத் தொகுப்பு) 1. மாற்றம் ஏமாற்றமில்லை (கட்டுரைத் தொகுப்பு) 1. முன்னுரை 2. காதல் வந்துவிட்டதே! 1. கதையின் முன்பகுதி 3. சிரிப்புத்தான் வருகுதையா! 4. நாமகரணங்கள் 5. உற்று உற்றுப் பார்க்கிறார்களே! 6. மாற்றம் ஏமாற்றமல்ல 7. விடு, விட்டுத்தள்ளு! 8. வாழ்க்கை எனும் பாதை 9. சலிப்பு ஏன்? 10. பணக்கார வீட்டுக் குழந்தையா! ஐயோ, பாவம்! 11. அழுமூஞ்சியும் சிரித்த முகமும் 12. விழு-அழு-எழு 13. வெற்றியால்தான் மகிழ்ச்சியா? 14. கோபம் பொல்லாத வியாதி 15. பயணம் போகலாமா? 16. பள்ளியில் BULLY 17. காலம் மாறிப்போச்சு 18. நீங்கள் குதர்க்கவாதியா? 19. பொறுத்துப்போகவேண்டுமா! 20. சகோதரச் சண்டைகள் 21. வயிற்றின்வழி இடம் பிடிப்பது 22. இருவரும் வெற்றி காண.. 23. பயிரை மேய்ந்த வேலி 24. சாதி செய்த சதி 25. என்றோ செய்த பாவபுண்ணியங்கள் மாற்றம் ஏமாற்றமில்லை (கட்டுரைத் தொகுப்பு) மாற்றம் ஏமாற்றமில்லை (கட்டுரைத் தொகுப்பு)   நிர்மலா ராகவன்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Maatram_Yematramillai} முன்னுரை விஞ்ஞானத்தில் மனிதன் எவ்வளவுதான் முன்னேறினாலும், தன்னைத்தானே புரிந்துகொள்வது அவனுக்குக் கடினமாகத்தான் இருக்கிறது. ‘மனிதர்களில்தான் எத்தனை வகை, மனித உள்ளம் எப்படியெல்லாம் செயல்படுகிறது!’ என்ற வியப்பில், பார்ப்பவர்களையெல்லாம் கூர்ந்து பார்த்து, அவர்களை தர்மசங்கடத்துடன் நெளிய வைத்திருக்கிறேன். பதினைந்து வயதுமுதலே அது சம்பந்தமாக கையில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் படிக்கலானேன். நான் சந்தித்த பலவித மனிதர்களின் மனப்போக்கை இக்கட்டுரைகளில் காணலாம். இவை சமூக இயல், உளவியல் அடிப்படையில் எழுதப்பட்டவை. தவிர்க்க முடியாததால், நானும் ஒரு கதாபாத்திரமாக ஆகியிருக்கிறேன். எனக்கு ஊக்கமளித்து, இக்கட்டுரைகளை வெளியிட்ட vallamai.com ஆசிரியை திருமதி பவளசங்கரிக்கு எனது மனமார்ந்த நன்றி. அன்புடன், நிர்மலா ராகவன், மலேசியா காதல் வந்துவிட்டதே! பலர் என்மீது ஒருதலைப் பட்சமாக காதல் கொண்டிருந்தார்கள். எனக்கு அதனால் பெருமையோ, படபடப்போ எழவில்லை. மாறாக, சிரிப்புதான் வந்தது – நான் பெற்ற குழந்தைகளைவிட அவர்கள் இளையவர்கள் என்பதால். ஆம், என்னிடம் படித்த மாணவர்களைத்தான் குறிப்பிடுகிறேன். கதையின் முன்பகுதி ஆசிரியர்களுக்கான மேற்பயிற்சி ஒன்றில், ‘டீச்சர்! ஒங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?’ என்று தயக்கத்துடன் என்னை அணுகினார் ஒரு சீன இளைஞர். ‘எங்கள் பள்ளியில் நான் கவுன்சிலர். நான் மாணவிகளுக்கு அறிவுரையோ, நல்லதொரு வழிகாட்டலோ வழங்கினால், உடனே காதல் கடிதம் எழுதிவிடுகிறார்கள். என்ன செய்வது?’ ‘இது தவிர்க்க முடியாதது!’ என்றேன், பதிலுக்கு. எந்த ஆணை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். பதினான்கு வயதில் ஏதாவது ஒரு ஆசிரியைமீது காதல் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்தக் காதல் வித்தியாசமானது. இதில் காமக்கலப்பு கிடையாது. ‘இந்தமாதிரி ஒரு பெண்ணைத்தான் நான் மணக்க வேண்டும்!’ என்ற ஆசைதான் தோன்றுமாம். (நான் சில ஆண்களைக்கேட்டு அறிந்த ஞானம்!). அவர்கள் குடும்பத்திலுள்ள அம்மா, அக்கா முதலிய பெண்களிலிருந்து ஏதோ ஒரு விதத்தில் இந்த ஆசிரியை வேறுபட்டிருப்பார். மார்க் என்ற பையன் விஞ்ஞானப் பரிசோதனைக் கூடத்தில் எதைச் செய்யவும் அஞ்சுவான். ‘ஐயே! உடம்புதான் பெரிசு! பயந்தாங்கொள்ளி!’ என்று வகுப்பில் பெருவாரியாக இருந்த மலாய் மாணவர்கள் அந்த இந்தியப் பையனைக் கேலி செய்வார்கள். ஏன் அப்படி இருக்கிறான் என்று அவனைத் தனியாக அழைத்து விசாரித்தேன். அவனுடைய தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்றும், அம்மா ஒரே மகனான அவனைப் பொத்திப் பாதுகாக்கிறார்கள் என்றும் அவன் கூறியதிலிருந்து புலப்பட்டது. அடுத்த முறை, ‘நீ இந்தப் பரிசோதனையைப் பண்ணு. நான் பக்கத்திலேயே நிற்கிறேன். ஒன்றும் ஆகாது!’ என்று தைரியம் அளித்துப்பார்த்தேன். ‘உயிருக்கு ஒன்றும் ஆகாதே?’ என்று சந்தேகப்பட்டான். ‘அப்படி ஆனால், நான்தான் போலீஸில் மாட்டிக்கொள்வேன்!’ என்று நான் சிரிப்புடன் கூற, சற்றுத் துணிந்தான். நாளடைவில், அவனுடைய தைரியம் பெருகியது. சற்று அபாயகரமாகவே நடக்க முனைய, நான் கண்டித்தேன். ஆனால், அவன் நல்லவிதமாக மாறிவிட்டான் என்ற பெருமிதமும் எழாமலில்லை. தானும் பிறரைப்போல தைரியசாலிதான் என்ற நம்பிக்கையும், அதனால் மகிழ்ச்சியும் எழ, அந்தக் குணம் வெளிப்படக் காரணமாக இருந்த ஆசிரியைமேல் ஈர்ப்பு வந்தது அந்தப் பையனுக்கு. ஒரு நாளைக்குப் பலமுறை என்னைத் தற்செயலாகப் பார்ப்பதுபோல் சந்தித்து, ‘இன்று உங்களுக்கு ஐந்து முறை குட்மார்னிங் சொல்லிவிட்டேன்!’ என்று பெருமிதப்படுவான். ‘எங்கள் வகுப்புக்கு வாங்களேன்!’ என்று, நான் இன்னொரு வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்து கெஞ்சுவான். ஒரு நாள் பள்ளி ஆரம்பிக்குமுன் என் அறைக்கு வந்து, ‘டீச்சர்! உங்கள் கணவர் எங்கு உத்தியோகம் பார்க்கிறார்?’ என்று விசாரிக்க, நான் சற்று கோபத்துடன், ‘நான் என் குடும்ப விவகாரங்களை மாணவர்களுடன் விவாதிப்பதில்லை,’ என்றேன். மார்க் மனந்தளராது, ‘எங்கம்மாவுக்கு அவரைத் தெரியுமாம்,’ என்றான். நாங்கள் இருவரும் ஏதோ விதத்தில் நெருங்கிவிட்டதைப்போல ஒரு பூரிப்பு அவனிடம். அந்த ஆண்டின் இறுதியில் மார்க்கின் போக்கில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. பிறரும் அவனை முன்போல் கேலி செய்யாமல் ஏற்றுக்கொண்டார்கள். அதற்கடுத்த வருடம் நான் அவன் வகுப்பில் பாடம் நடத்தவில்லை. ஆனால், என் வருகைக்காகக் காத்திருப்பவன்போல் பள்ளிக்கூட வாசலில் இருந்த சிமெண்டு பெஞ்சில் உட்கார்ந்திருப்பான். முகம் வேறு பக்கம் திரும்பியிருக்கும். உடலில் படபடப்பு தெரியும். கைகள் இறுகியிருக்கும். ஒருவழியாக, ‘குட்மார்னிங், டீச்சர்!’ என்று திக்கித் திணறிச் சொல்வான். சற்று வளர்ந்திருந்ததால், தன் போக்கில் அவனுக்கு வெட்கம் உண்டாகியிருந்தது. நான் வேறு பள்ளிக்கூடத்திற்கு மாற்றிப் போனபின், ஒரு நாள் மார்க்கை ஒரு பேரங்காடியில் பார்த்தேன். பெரியவனாக வளர்ந்திருந்தான். ‘ஹலோ, மிஸஸ். ராகவன்,’ என்றபடி, முகத்தைச் சட்டென திருப்பிக்கொண்டு, உடலை விறைத்தபடி நகர்ந்தான். அவன் பின்னாலேயே வந்துகொண்டிருந்த அம்மாவும், அக்காளும் பெரிதாகச் சிரித்தபோதுதான் எனக்கு விஷயம் விளங்கியது. என்னைப்பற்றி எப்போதும் வீட்டில் பேசிக்கொண்டிருந்திருப்பான் வேறு சில மாணவர்கள் செய்ததுபோல்! அந்தந்த வயதில் ஏற்படும் உணர்வுகள் ஒருவருக்கு உண்மையாகத்தான் இருக்கும். அதைக் கேலி செய்யாது ஏற்கவேண்டும். ஒரு குழந்தை இடியோசை கேட்டு அஞ்சுவதுபோல்தான் இதுவும். இதையெல்லாம் சீன நண்பரிடம் கூறினேன். அவர் சமாதானம் அடையாமல், ‘இதை எப்படித் தவிர்ப்பது?’ என்று துளைத்தார். எனக்கு வேறொரு நிகழ்ச்சி நினைவில் எழுந்தது. நீச்சல் குளத்தில் வேலையாக இருந்த ஜூல்கிஃப்லி என்ற ஒரு மலாய் இளைஞன் வேறு மாநிலத்திலிருந்து வந்திருந்தான். கோலாலம்பூரில் எல்லாமே அவனைப் பயப்படுத்தியது. நான் ‘குட்மார்னிங்¸ ஜூல்!’ என்று கூற, உற்சாகமாக என்னிடம் பேச்சுக்கொடுப்பான். பிற பெண்கள் ஜூல்கிஃப்லியை வேலைக்காரன்போல் நடத்தியதைப்போல் இல்லாது, ஒரு நண்பனிடம் பழகுவதுபோல் அவனிடம் பேசினேன். அவன் வயதில் மகள், மாப்பிள்ளை எல்லாரும் வீட்டில் இருக்கிறாள், ஆனால் நான் அதிகாலையில் நீந்த வந்துவிடுவேன் என்று கேட்டு அவனுக்கு ஒரே ஆச்சரியம்: ‘எல்லாரும் காலை உணவுக்கு என்ன செய்வார்கள்?’ ‘அது அவர்கள் பாடு!’ என்றேன், அலட்சியமாக. அவன் அதிர்ந்து போனான். திடீரென்று ஒருநாள் உடலை நெளித்துக்கொண்டு, ‘எனக்கு எப்போது ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுக்கப்போகிறீர்கள்?’ என்று கொஞ்சலாகக் கேட்டானே, பார்க்க வேண்டும்! இப்போது நான்தான் அதிர்ந்தேன். திசை தெரியாது தவித்த ஒருவனுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று நினைத்து நான் பேசப்போக, இப்படி ஒரு திருப்பமா! அவன் முதுகில் பளாரென்று அறைவிட்டு, ‘ரொம்பப் பேசாதே! போய் வேலையைக் கவனி!’ என்று மிரட்டினேன். அதன்பின் ஜூல்கிஃப்லி என்னிடம் வாலாட்டவில்லை. ‘ சே! இவளும் நம் அம்மாபோல்தான் இருக்கிறாள்!’ என்ற கசப்பான உண்மை புரிந்திருக்கும். கதையின் பிற்பகுதி சீன நண்பரிடம் கூறினேன், ‘மாணவிகளை நீங்கள் அடிக்க முடியாது. ஆனால், நீங்கள் சிடுசிடுத்தாலே போதுமே! உங்கள்மீதுள்ள மோகம் போய்விடும்!’ அவர் பெருமூச்சு விட்டார். ‘பிரச்னை’ என்று தன்னை நாடி வருகிறவர்களின் மனதை மேலும் நோகடிக்க வேண்டுமா என்ற குழப்பம் அதில் தெரிந்தது. சிரிப்புத்தான் வருகுதையா! ‘சிரிப்பு ஆன்மாவை சுத்தப்படுத்தும்’ என்கிறது யூதர்களின் பழமொழி. ‘பெண் சிரிச்சாப் போச்சு..!’ தமிழர்களை மிரட்டவே ஏற்பட்டது. ‘பெண்குழந்தைகள் அதிகமாகச் சிரிக்கக்கூடாது. அப்புறம், வாழ்க்கையே சிரிப்பாச் சிரிச்சுப்போயிடும்!’ என்றெல்லாம் முதிய பெண்டிர் அளிக்கும் அறிவுரை. ‘எப்பவும் கஷ்டம்தான். சிரிக்க என்ன இருக்கிறது?’ பொதுமக்கள். இதனால் எல்லாம் சிரிப்பு என்று ஒரு மருந்து இருப்பதே மறந்து போய்விட்டது நம்மில் பலருக்கும். சிரிப்பதற்காகவென ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் சேர்ந்து, உடல் நலத்திற்காக பூங்கா போன்ற பொது இடங்களில், காரணமின்றி ‘ஹாஹ்ஹா’ என்று சிரிக்கிறார்கள் இவர்கள். ‘எதற்காகச் சிரிக்க வேண்டும்? அதனால் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா?’ என்பவர்களுக்குப் பதில்: பிரச்னைகள் தீராவிட்டாலும், அவைகளை ஏற்கும் பக்குவம் வரும். இதோ ஒரு உதாரணம். என் தோழி மிஸஸ். ஃபாங் தானே கார் ஓட்டுவாள். எப்படி என்றெல்லாம் கேட்கக்கூடாது. ‘இவளுக்கு யார் லைசன்ஸ் கொடுத்தார்கள்!’ என்று பிற வாகன ஓட்டிகளை அயரவைக்கும் அவளுடைய திறமை. ஒரு நாள் காலை, மிஸஸ். ஃபாங் கோபமாக வந்தாள் நாங்கள் வேலை பார்த்த இடத்திற்கு. தானே ஆரம்பித்தாள். “நேற்று என் கணவர் பக்கத்தில் உட்கார, நான் காரை ஓட்டிப்போனேன்,” என்று ஆரம்பித்ததுமே நாங்கள் புன்னகைக்காமல் இருக்கப் பாடுபட்டோம். மனைவி காரை ஓட்டிப் போகும்போது, எந்தக் கணவர்தான் திட்டாமல் இருக்கிறார்! அதிலும், இவளுடைய காரோட்டும் திறனோ – கேட்கவே வேண்டாம்! மரியாதை குறித்து, “அவர் ஏதாவது திட்டினாரா?” என்று விசாரித்து வைத்தேன். “திட்டினால்தான் தேவலையே! நான் சரியாக ஓட்டும்போதே, எதுவும் பேசாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருந்தாரா! கார் நின்றுவிட்டது!” தொடர்ந்து, “உணர்வுபூர்வமாக நம்மைத் தூண்ட ஆண்களில்லாமல் நாம் என்னதான் செய்யப்போகிறோம்!” என்றாளே பார்க்க வேண்டும்! அதற்கு மேலும் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளும் சேர்ந்து சிரித்தாள். ‘துன்பம் வருங்கால் நகுக’ என்று இதற்குத்தானோ சொல்லிப் போனார் திருவள்ளுவர்? தான் செய்வதில் ஓயாது குற்றம் கண்டுபிடிக்கும் கணவரை எண்ணி எதற்காக மனைவி வருந்தவேண்டும்? இல்லை, பார்ப்பவர்களிடமெல்லாம் ஆதங்கத்துடன் சொல்லி, அவர்கள் ஆதரவை நாட வேண்டும்? அவர் செய்ததையே வேடிக்கையாக நினைத்து, உற்ற பிறருடன் பகிர்ந்தபடி சிரித்துவிட்டால், மனப்பளு குறையுமே! கிண்டலும் எள்ளி நகைப்பதும் வர வர, சிறுநீர் கழிப்பதெல்லாம் வேடிக்கை என்று நம்மைச் சிரிக்க வைக்க முயல்கிறார்கள் தமிழ்ப்படங்களில். உரக்கப் பேசுவதும், பிறரது தோற்றதைக் கேலி செய்வதும் நகைச்சுவைதான் என்றும் காட்டுகின்றன. பிறரைக் கிண்டல் செய்வது எளிதுதான். ஆனால், கேலி செய்யப்படுவது தாமாக இருந்தால் ஒருவரால் ஏற்க முடியுமா? பொதுவாக, பெண்களால் பிறர் தம்மைக் கேலி செய்வதை எளிதில் ஏற்க முடியாது. தாமே தம்மைச் சிறுமைப்படுத்திக்கொள்வதுபோல் பேசுவதும் அவர்களால் முடியாத காரியம். அதனால்தான் பெண்கள் நகைச்சுவை எழுத்தாளர்களாகவோ, நடிகைகளாகவோ இருப்பதில்லை என்று முன்பு ஒரு பத்திரிகையில் படித்தேன். தமிழில் மனோரமா, அமெரிக்காவில் லூசில் பால் (Lucile Ball) , காரல் பர்னெட் இவர்கள்தாம் குறிப்பிடத்தக்கவர்கள். பிறர் மற்றவரைக் கிண்டல் செய்து, எரிச்சல் மூட்டுவதோடு சரி. காதலும் சிரிப்பும் ‘அவன்மேல் உனக்கு எப்படி காதல் வந்தது?’ என்று கேட்டால், ‘அவன் என்னைச் சிரிக்க வைக்கிறான்!’ என்று பதிலளிப்பார்கள் அனேகப் பெண்கள். பிறரிடம் எளிதாக நட்பு கொள்ள சிரிப்பு ஒரு நல்ல வழி. எங்கும் சிரிப்புதான் சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் நான் கண்டு ரசித்த காட்சி: “அங்கிள்! நீங்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவரா?” கேட்டவர் குண்டாக இருந்த ஒரு சீனர். ஐம்பது வயதிருக்கும். மலாய்க்கார முதியவர் ஆமென்றார். “உங்களுக்கென்ன! மருந்து, சிகிச்சை எல்லாவற்றிற்கும் அரசாங்கமே கொடுத்துவிடுகிறது! என்னைப்போலவா! கைவிட்டு அழ வேண்டியிருக்கிறது!” என்றார் மிஸ்டர். குண்டு. “நீங்கள்தாம் பணக்காரர் ஆயிற்றே!” (பெரும்பாலான சீனர்கள் வியாபாரம் செய்வதால் அவர்களிடம் நிறையப் பணம் புழங்குகிறது என்பது பொதுவான கணிப்பு. ஆனால் உண்மை அதுவல்ல). “எங்கே! அரசியல்வாதிகளின் மனைவிகளிடம்தான் எல்லாப் பணமும்!” சுற்றி உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எல்லாரும் பலக்கச் சிரித்தோம். “எனக்கு எத்தனை வயது தெரியுமா? எண்பத்து இரண்டு! இருதய சிகிச்சை நடந்து இருபது வருஷங்களாகி விட்டன!” பெருமையுடன் தெரிவித்தார் முதியவர். “உங்களுக்கென்ன! இப்போதும் மாப்பிள்ளைமாதிரிதான் இருக்கிறீர்கள்!” என்று பாராட்டிவிட்டு, “அந்த அக்கா சம்மதித்தால், நீங்கள் அவர்களைக் கல்யாணம் செய்துகொள்ளலாம்!” என்று சற்று தூரத்திலிருந்த பெண்மணியைக் காட்டினார். “ஹேய்! நான் அவர் மருமகள்!” என்று அவள் சிரிப்புடன் எதிர்க்க, அங்கிருந்த நோயாளிகள் தம்மை மறந்து சிரித்தனர். நினைத்து நினைத்துச் சிரித்தபடி இருந்தார்கள். அவர்களால் நோயின் கடுமையைத் தாற்காலிகமாக மறக்க முடிந்தது. சிரிப்பும் புளிப்பும் சில காலம்தான். பதின்மவயதுப் பெண்கள் ஒன்று சேர்ந்தால், அவர்களுக்குக் காரணமின்றி சிரிப்பு பொங்கும். அந்த வயதாக இருந்தபோது, ‘நான் இன்று ரொம்ப சிரிக்கிறேன். ராத்திரி அழப்போகிறேன்!’ என்று அஞ்சுவாள் என் தோழி பத்மஜா. சிரிப்பும், அழுகையும் பகலும், இரவும்போல. ஒன்றையடுத்து ஒன்று வரத்தான் செய்யும். அதற்காக சிரிக்காமல் இருப்பார்களா, யாராவது! சிரிப்பதற்கு முகத்திலுள்ள பதினேழு தசைகள்தாம் பயன்படுகின்றன. (சிடுசிடுப்புக்கோ நாற்பத்து மூன்று!). மனம்விட்டுச் சிரியுங்கள். அப்படியாவது அழகு வளர்ந்துவிட்டுப் போகட்டுமே! நாமகரணங்கள் கதை 1: ‘டார்லிங்!’ இந்த நவீன உலகத்தில் புதிதாக மணமானவர்கள் தம் கணவரையோ, மனைவியையோ விளிக்கும் விதம் இது என்றுதான் நினைத்திருந்தேன். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி கணவரை இப்படி அழைப்பது கண்டு வியந்து போனேன், ‘ஆகா! கல்யாணமாகி பத்து வருடங்களுக்குப் பின்னரும் இவளுக்கு இவ்வளவு காதலா!’ என்று. ஒரு நாள் இருவருக்குள்ளும் ஏதோ வாக்குவாதம் நடந்தது. இறுதியில், அதற்கு மேலும் பொறுக்க முடியாத மனைவி, “ஷட் அப், டார்லிங்!” என்றாளே பார்க்க வேண்டும்! எனக்குச் சிரிப்புதான் வந்தது. அவளைப் பொறுத்தவரை, டார்லிங் என்பது அவருடைய பெயர். அவ்வளவுதான். அச்சொல்லில் அன்பு அறவே கிடையாது. கதை 2: துர்கா இதற்கு நேர் எதிரிடை. அவளுக்கு நிறையத் துன்பங்கள் கொடுத்தவர் அவளது கணவர். எல்லாவித கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையானவர். அவள் அவருடன் பேசுவதையே விட்டுவிட்டாள். ஆனால் அவர்மேலிருந்த ஆத்திரத்தை மகன்மேல் காட்டினாள். மகனுக்கு என்ன பெயர் வைத்தார்களோ, அவனை ‘துடைப்பக்கட்டை’ என்றுதான் அழைப்பாள். அவனுடைய அக்காள்மேல் எந்த வருத்தமுமில்லை துர்காவுக்கு. ஏனெனில் அவளும் தன்னைப்போல் ஒரு பெண். அப்பாவைப்போல் நடக்க மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது. தாயின் நம்பிக்கை பொய்க்கவில்லை. மகள் ஓரளவு படித்து, உத்தியோகத்திலும் அமர்ந்தாள். மகனுக்கோ, ‘நான் உதவாக்கரை!’ என்ற எண்ணத்தை பெற்ற தாயே சிறுவயதிலிருந்தே மனதில் பதிய வைத்திருந்ததால், படிப்பும் ஏறவில்லை. மதுவுக்கு அடிமையானான். ஆறு மாதங்கள் ஏதாவது வேலை செய்து, கையில் கொஞ்சம் காசு சேர்ந்ததும், வேலையை விட்டுவிடுவான். ‘பகலில் அக்கம்பக்கத்தினருக்கு உதவியாக ஏதாவது செய்வான். சாயங்கால வேளையானால் அவனுடைய போக்கே மாறிவிடும்,’ என்கிறார்கள் அவனுடைய அண்டைஅயலார். நான் பார்த்தபோது, சாதுவாக, தன்னம்பிக்கை குன்றியவனாக காணப்பட்டான். அவனுடைய கதையைக் கேட்க பரிதாபமாக இருந்தது. ஏதோ காரணத்தால் மனத்துக்குப் பிடிக்காத மணாளனுடன் சேர்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும் பெண்கள் தம் விதியையே நினைத்து மருகி, அந்த நிராசையை பெற்ற பிள்ளைகளின்மேல் காட்டினால், வாழையடி வாழையாக குடும்பம் உருப்படாமல்தான் போகும். பெற்றவர்களில் ஒருவர் ஆதரவாக இருந்தால்கூட பிள்ளைகள் நல்ல விதமாக வளர வாய்ப்பிருக்கிறதே! கதை 3: பதினைந்து வயதான லேகாவிற்குத் தான் புத்திசாலி என்பதில் கொள்ளைப் பெருமை. அவள் வளர்க்கும் நாய்க்கோ, அறிவு குறைவாகத்தான் இருந்தது என்று அவளுக்கு இளக்காரம். தினமும் உலாவ அந்த நாயை அழைத்துச் செல்வாள். அதுவோ, தன் இனத்தின் குணப்படி அங்கும் இங்கும் எதையோ தேடி அலையும். ‘இடியட்!’ என்று உரக்கக் கத்தி, அதன் கழுத்துப்பட்டியில் பொருத்தப்பட்டிருந்த சங்கிலியை இழுப்பாள். சிறிது நேரத்திற்குப்பின், இதே நிகழ்ச்சி தொடரும். தினமும் அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குப் பொறுக்கவில்லை. “பாவம்! அதை ஏன் அப்படிக் கூப்பிடறே?” என்று லேகாவைக் கேட்டேன். நாய்க்கு ஆங்கிலமோ, இடியட் என்ற வார்த்தைக்கு அர்த்தமோ தெரிந்திருக்க நியாயமில்லைதான். ஆனாலும், கூப்பிடும் தொனி புரியாதா, என்ன! “இது சொன்னாலே கேக்கறதில்லே!” என்றாள். “அதுக்கு அவ்வளவுதான் தெரியும். ஒன் நாய்க்குப் பேர் கிடையாதா? அதைச் சொல்லிக் கூப்பிடு,” என்றதும், எதுவும் பேசாது, குனிந்த தலையுடன் நடையைக் கட்டினாள். அவளுக்கு நேர் எதிரிடை தினேஷ். பொதுவாக எல்லா மிருகங்களின்மேலும் உயிராக இருப்பவன். லேகா குடும்பத்தினரின் உறவினன். அவர்கள் வீட்டுக்குத் தினமும் போவான். லேகாவின் நாய் அவன் முகத்தை நக்கிக் கொஞ்சுகிறது என்று அவ்வீட்டிலுள்ளவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்’ என்பதில், ‘மிருகங்களும்’ என்று சேர்த்துக்கொள்ளலாம். கதை 4: மலேசியாவில் ஒரு சிற்றூரில் அமைந்திருந்த மிருகக்காட்சி சாலைக்குப் போயிருந்தேன். இருபது வயதை எட்டியிராத ‘தமிளன்’ எல்லா மிருகங்களையும் அன்புடன் அழைத்து, பரிவுடன் நடத்துவதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. “உனக்கு மிருகங்கள் என்றால் ரொம்பப் பிடிக்குமா?” என்று அநாவசியமான கேள்வி ஒன்றைக் கேட்டேன். “சின்ன வயசிலேருந்தே அப்படித்தான், ஆன்ட்டி,” என்று ஒத்துக்கொண்டவன், “எல்லாரும் என்னைப் பைத்தியம்கிறாங்க. அதான் வீட்டுக்கே போறதில்லே. இங்கேயே தங்கிடறேன்!” என்றான், வருத்தத்துடன். “நீ ரொம்ப நல்லவன். இப்படி இருக்கறதுதான் சரி. மாறிடாதே!” என்றேன். “இதுங்களையும் சாமிதானே படைச்சார்?” என்று அவன் கேட்டதில் தான் செய்வதன் நியாயத்தை ஏன் பிறர் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்ற குழப்பம் வெளிப்பட்டது. அவன் ஞானி என்றுதான் எனக்குத் தோன்றியது. பெற்ற பிள்ளைகளை ஒரு தாய் இழிவாக நடத்துவதையோ, தன் ‘செல்லப் பிராணி’யை ஒரு பெண் கண்டபடி திட்டுவதையோ பொறுக்கும் உலகம் மனித நேயத்துடன் நடக்கும் ஒருவனை ’பைத்தியம்’ என்கிறது! இது மோசமான உலகமா, இல்லை உண்மைக்கும், பொய்க்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள் உலகமா? உற்று உற்றுப் பார்க்கிறார்களே! “ஏன் சில ஆண்கள் எங்களை உற்று உற்றுப் பார்க்கிறார்கள்?” என்று என் மலாய் மாணவி ஒருத்தி என்னிடம் சந்தேகம் கேட்டாள். “ஆனால் சீனர்கள் அப்படிப் பார்ப்பதில்லை,” என்றபோது, சிறிது மகிழ்ச்சி அந்த பதின்ம வயதுப் பெண்ணின் முகத்தில். பதிலளிக்க ஒரு சீன மாணவியை அழைத்தேன். “It is silly!” (அசட்டுத்தனம்! என்று முகத்தைச் சுளித்தாள். இன்னொரு பெண் சேர்ந்துகொண்டாள்: “இவர்களுக்குப் பயந்து உடலைக் குறுக்கிக்கொண்டு நடப்பதில், இடுப்பு வலிக்கிறது, டீச்சர்!” மலேசியாவில் குட்டையான ஜட்டி போன்ற ஆடையை அணியும் சீனப்பெண்களை எங்கும் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். குளிர் நாட்டிலிருந்து வந்ததால் அவர்களுக்கு பூமத்திய ரேகை அருகிலிருக்கும் இந்நாட்டின் வெப்பத்தைத் தாங்கமுடியாது. ‘வீட்டுக்குள் நுழைந்ததும், முதல் வேலையாக நான் செய்வது ஷார்ட்ஸ் அணவதுதான்!’ என்று என் சக ஆசிரியைகள் பேசிக்கொள்வார்கள். வேலைக்கு கவுன், குட்டைப் பாவாடை என்று அணிவார்கள். மலாய்க்காரப் பெண்களோ குதிகால்வரை தொங்கும் ஆடை, தலைமுடியை மறைக்க ஒன்று என்று அணிவார்கள். என்கூட வேலை பார்த்த ஒரு பெண்மணி மதத்தைப் போதித்த ஆசிரியை. “உன்னிடம் ஒரு விஷயம் கூறுகிறேன், நிர்மலா,” என்று ஆரம்பித்தாள். “ஒரு பெண்ணின் மணிக்கட்டையும், குதிகாலையும் ஆண்கள் பார்த்துவிட்டால், அவளுடைய உடலிச்சையை அவர்களால் உணர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றாள். அவள் எப்போதும் காலுறை, கையுறை அணிந்திருப்பாள். எனது புடவை பிளவுஸின்கீழ் வெளிப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு, மூன்று அங்குல முதுகுப் பகுதியைப் பார்த்துவிட்டு, “அது எப்படி நீங்கள் உடலின் நடுப்பாகத்தைக் காட்டுகிறீர்கள்?” என்று அதிசயப்பட்டுக் கேட்டாள் இன்னொருத்தி. “அது அப்படித்தான்!” என்றேன் அலட்சியமாக. ஒரு சீனத்தோழி என் முதுகில் கிள்ளிப்பார்த்தாள். எனக்கு உறைக்கவில்லை என்பதில் அவளுக்கு ஆச்சரியம். ஐரோப்பாவில் சில நாடுகளில் குறிப்பிட்ட பகுதிகளில் நிர்வாணமாக இருக்க அனுமதி உண்டு. ஸ்வீடனில் NUDIST CAMP என்ற பகுதியைப்பற்றி IRVING WALLACE என்ற ஆசிரியர் எழுதியிருந்த ஒரு ஆங்கில நாவல் படித்திருந்தேன். கதாநாயகனின் குறிப்புப்படி, அந்த இடத்தில் இருக்கையில் எந்தவித காம இச்சையும் தோன்றவில்லையாம். ஆனால், குறிப்பிட்ட நேரம் முடிந்து, அவர்கள் ஒவ்வோர் ஆடையாக அணியும்போதுதான் மனதில் கிளர்ச்சி ஏற்பட்டதாம். பெண்கள் தம் உடலை மூடி மறைக்க வேண்டும் என்று விதித்தவர்கள் ஆண்களாகத்தான் இருக்க வேண்டும். ‘இதெல்லாம் இயற்கைதான்!’ என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளாததால், ‘நம் மனம் இப்படி அலைபாய்கிறதே!’ என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி, அந்தக் ‘கேவலமான’ இச்சையைத் தோற்றுவித்த பெண்களின்மேல் ஆத்திரம் கொண்டு, அவர்களைக் கட்டுப்படுத்தக் கையாளும் உபாயம் என்றே தோன்றுகிறது. கதை ஒருவர் தாம் பெற்ற மகள்களின் உடை விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். சற்று மெல்லிய துணியை பதினெட்டு வயதான அவர்கள் வாங்கி வந்தபோது, ‘இதுவா!’ என்று அவர் முகத்தைச் சுளித்தாராம். உடனே அவர்கள் கடைக்குத் திரும்பப் போய், மிகக் கனமான துணியை வாங்கினர், புடவைக்கு ஏற்ற பிளவுஸ் தைக்க. அந்தப் பெண்கள் மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்த செய்தி இது. தந்தை நம் பாதுகாப்பில் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறாரே என்ற பெருமையில் விளைந்த மகிழ்ச்சி அது. அந்த மனிதர் மகள் வயதை ஒத்த பெண்களுடன் தகாத முறையில் பழகுவார் என்பது குறிப்பிடத்தக்கது. வட, தென்னிந்தியக் கோயில்களில் பெண்களின் மார்புச்சேலை சற்று முன்னேபின்னே இருந்தாலும், முதுகில் (MIDRIFF) ஓரடி தெரிந்தாலும், பிள்ளை பெற்று அப்படியே தங்கிவிட்ட தொந்தி தெரிந்தாலும், எந்த ஆணும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் கவனித்திருக்கிறேன். கோயிலுக்கு வருவது கடவுளைக் கும்பிட்டுச் செல்ல; பிறரைக் கவனித்து, வம்பு பேச அல்ல என்று புரிந்தவர்கள் இவர்கள். இப்போதெல்லாம் மலேசிய நகர்ப்புறங்களில், ஹிந்தி திரைப்படங்களில் கதாநாயகி அணிவதுபோல் பாதி அல்லது முழுமையான முதுகை வெளிக்காட்டும் பிளவுஸ் அணிவது இளம்பெண்களிடம் நாகரிகமாக ஆகிவருகிறது. ‘இது அசிங்கம்!’ என்று ஆர்ப்பரிப்பவர்கள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்களா, அல்லது ‘அவரவர் செய்வது அவரவருக்குச் சரி’ என்ற பெருந்தன்மை இல்லாதவர்களா? ஒருவேளை, எப்போதும், எதற்கும் பிறரைப்பற்றி எதிர்மறையாகவே பேசி, தம் உயர்வையும் அதிகாரத்தையும் நிலைநாட்டிக்கொள்ள நினைப்பவர்களோ? மாற்றம் ஏமாற்றமல்ல ஆடை நனைந்த சிறுகுழந்தைகள்தாம் மாற்றத்தை விரும்புவர் என்று விளையாட்டாய் சொல்வதுண்டு. மாறுவது நல்வழியில் இருப்பின், அதைத்தான் முன்னேற்றம் என்கிறோம். இல்லாவிட்டால், காலத்தையும், விதியையும் பழித்துக்கொண்டு, வாழ்வில் பிடிப்பில்லாது இருக்கவேண்டியதுதான். எதுவும் பழையபடியே இருந்தால், அது பழகிப்போய்விடுகிறது. புதிய வழி எப்படி இருக்குமோ என்ற அச்சமே மாற்றத்தை ஏற்கவிடாது தடுக்கிறது. தெருவில் நடந்து போகையில், ஒரு வாகனம் நம் எதிரில் விரைந்து வந்தால் நேராகவே போவோமா? திசையை மாற்றுவதில்லையா? வாழ்க்கையும் அதுபோல்தான். சில தடங்கல்களை மாற்றத்தால் விலக்கலாம். மாற்றத்துக்கு முக்கியமானது ‘பிறர் என்ன சொல்லி விடுவார்களோ!’ என்ற பயத்தை விலக்குவது. ‘சரியானதுதான்’ என்று நமக்குப் பட்டதை துணிந்து செய்தால் வெற்றி நிச்சயம். “உலகில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், நீ உன்னையே மாற்றிக்கொள்!” (மகாத்மா காந்தி) கதை நான் ஆசிரியத் தொழிலில் புகுந்தபோது, கோலாலம்பூரிலிருந்த பிற ஆசிரியைகளைவிட மிகவும் மாறுபட்டிருந்தேன். பெரும்பாலானோர் சீனர்கள். எண்ணை வைத்து வாரிய என் ஒற்றைப்பின்னல் அவர்களை மட்டுமின்றி, மாணவிகளையும் முகம் சுளிக்க வைத்தது. நான் தனித்து உணர்ந்தேன். முடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டேன். ‘ஒரு சொட்டுக்குமேல் எண்ணை வைத்துக்கொள்ளாதே! அடிக்கடி தலை சீவிக்கொள்,’ என்றெல்லாம் சக ஆசிரியைகள் நட்புரிமையுடன் போதித்தார்கள். ‘லிப்ஸ்டிக் அணியுங்கள், டீச்சர்!’ என்று கெஞ்சினார்கள் மாணவிகள். வெளி அலங்காரத்தில் அவர்களைப்போல சில மாறுதல்களைச் செய்துகொண்டதால் அவர்களுக்கு என்னைத் தங்களில் ஒருத்தியாக ஏற்க முடிந்தது. என் புக்ககத்தினரைப் பொறுத்தவரை, கணவன் இறந்தபின்தான் ஒரு பெண் தலையை மழித்துக்கொள்வாள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள். எனவே அவர்கள் அதிர்ந்தார்கள். எல்லாரையும், எப்போதும் திருப்திப்படுத்த முடியாது. என் பெயர் சற்று பிரபலமானதும், “என் பொண்ணும் ஒன்னைமாதிரியே தலைமயிரை வெட்டிண்டுட்டா!” என்று பெருமையுடன் சொன்னார்கள் சில தாய்மார்கள்! கேலியைப் பொருட்படுத்தாதே! ‘நடக்கிறோம், ஓடுகிறோம். இது போதாதா?’ என்று திருப்தியுடன் பலரும் இருக்க, ‘மனிதனும் பறக்கலாம்’ என்று நம்பி ஆராய்ச்சிகள் செய்த ரைட் சகோதரர்கள் எவ்வளவு கேலிக்கு ஆளானார்கள்! ‘ அவர்கள் நிகழ்த்திய மாற்றத்தால் உலகம் இன்று சுருங்கித்தான் விட்டது. பிறர் ஏற்கவில்லையே என்று அவர்கள் தமது ஆராய்ச்சியைப் பாதியிலேயே கைவிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்! கல்வியால் மாற்றங்கள் ’ஏழைகள் ஏழைகளாகவே இருந்தால்தான் அடங்கி இருப்பார்கள், அவர்களை எதற்காக மாற்றுவது?’ என்று பின்தங்கிப்போனவர்களுக்கு கல்வி அறிவே கூடாது என்றிருந்த காலம் அது. ஒரு பிராமணர் சேரிகளுக்குச் சென்று, கல்வி போதித்ததால் அவரை அச்சமூகம் விலக்கி வைத்துவிட்டதாகப் படித்திருக்கிறேன். எந்தவித மாற்றமும் முதலில் எதிர்ப்புக்கு ஆளாகும். அதுபோல்தான் பெண்கள் கல்வி பயில்வதும். ‘நிறையப் படித்தால், கர்வம் வந்துவிடும். நம்மை மதிக்கமாட்டாள்!’ என்ற அச்சத்தால் ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஆவதே துர்லபம் என்றிருந்தது போன நூற்றாண்டின் பாதிவரை. பட்டப்படிப்புப் படித்த பெண் ஒருத்தி சில பழக்கவழக்கங்களை அறிவுபூர்வமாக எதிர்க்கும்போது, ‘இதுக்குத்தான் பெண்களைப் படிக்க வைக்கக்கூடாது என்கிறது!’ என்று உறவினர் கண்டனம் செய்வார்கள். படித்து வேலைக்குப் போகும் பெண்ணானவள் குடும்பத்தின் பொருளாதார நிலைமையை உயர்த்துவதோடு, சொந்தக்காலில் நிற்கவும் பழகுகிறாள். அவளுடைய தன்னம்பிக்கை கூடுகிறது. அதனால், குழந்தைகளும் நல்லவிதமாக வளர்க்கப்படுவார்கள். ஒருக்கால் கணவனை இழந்தாலும், பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கணவனை அச்சத்துடன் பார்த்து வந்த நிலை மாறி, இன்று நண்பனாகக் கருத முடிகிறது என்றால், அது பெண் கல்வியினால் அல்லவா? இதெல்லாம் புரியாது, பெண்கள் கல்வியறிவே அற்றவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்றிருந்த வழக்கத்தை துணிந்து மாற்றியவர்களுக்குப் பாராட்டுகள். மாற்றுவது எப்படி? பேசும், எழுதும் வார்த்தைகளாலும், புதிய எண்ணங்களாலும், செயலாலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். என்னிடம், ‘யாரும் உங்களைப்போல் புகார் செய்து எழுதுவதில்லை!’ என்றார் என் மாஜி மாணவியின் தந்தை. முதல்முறையாக அப்போதுதான் சந்தித்திருந்தோம். என்ன புகார்? தமிழ்ப்பெண்கள் நெற்றிப்பொட்டு வைத்துக்கொண்டு வந்தார்கள் என்ற காரணத்தால் அவர்கள் கன்னத்தில் அறைந்த தலைமை ஆசிரியைப்பற்றி; தமிழ்ப்பையன் வகுப்பில் பேசினான், வீட்டுப்பாடம் செய்துகொண்டு வரவில்லை என்று அவனைத் தன் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி அடித்த கட்டொழுங்கு ஆசிரியருக்கு எதிராக; மாணவிகளை பாலியல் வதைக்கு உட்படுத்த முயன்ற ஆசிரியர்களைப்பற்றி; தினமுமே, ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்கள் செய்த சில தவறுகளை ஒலிபெருக்கியில் அலறி, மாணவர்களும் கேட்டு பரிதாபப்படச் செய்த தலைமை ஆசிரியையைப்பற்றி; மனைவியை அடித்துத் துன்புறுத்திய எனது பக்கத்து வீட்டுக்கார மலாய்க்காரரைப்பற்றி; இங்குள்ள பிரபலமான கோயில் பிரகாரத்திலேயே ஒரு குரங்குக்குட்டியை கயிற்றில் கட்டி, அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கட்டணம் விதித்தவனையும், அதை அனுமதித்தவர்களையும்பற்றி. குரங்குக்குட்டி தன் சாகசங்களைக் காட்ட குட்டிக்கரணம் அடித்தபோது, அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த குட்டையான கயிறு அதைப் பின்னால் இழுத்ததைப் பார்க்க என் மனம் கொதித்தது. இதைப்போல் இன்னும் எவ்வளவோ! நான் கணவனால் வதைபடும் இந்தியப் பெண்களைப்பற்றி (ஆங்கிலத்தில்) எழுதி, எவ்விதம் நம் சமூகம் அதைக் கண்டும் காணாததுபோல் நடந்துகொள்கிறது என்று எழுதியபோது, முன்பின் தெரியாத ஒருவர் என்னைப் பொது இடத்தில் பார்த்தபோது, அடிக்காத குறை. வதைபடும் பெண்களுக்கு அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரியாத நிலையில், என்னைப்போன்ற பிறர் அதை அலசுவதில் என்ன தப்பு? (மனைவியை அடிப்பது இப்போது மலேசியாவில் சட்டவிரோதம்). இப்படியாக, பிறருக்கு நன்மை விளைவிக்கும் பற்பல மாற்றங்களையும் எழுத்தால் ஒருவர் நிகழ்த்த முயன்றால், நிறைய எதிர்ப்புகளையும், அவமானங்களையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள், ‘எதிரிகள் வேண்டுமென்றால், ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்து,’என்று! (இதனால்தான் கோழைகள், ’நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கிறோம். பிறர் எப்படி நாசமாகப் போனால் என்ன!’ என்று, சுயநலமிகளாக இருப்பதிலேயே திருப்தி அடைந்துவிடுகிறார்கள்போலும்!) மாற்றம் நிகழ்ந்து, பிறர் அதனால் பயனடையும்போது நமக்கும் மகிழ்ச்சி உண்டாக, இப்படித்தான் துணிச்சலாகச் செயல்பட வேண்டும் என்ற தெளிவு பிறக்கும். தைரியம் அதிகரிக்கும். வேண்டாத மாற்றங்கள் எல்லாவித மாற்றங்களும் நன்மையில்தான் முடியும் என்பதில்லை. உதாரணமாக, சிகரெட்டு பிடித்தாலோ, அல்லது மது அருந்தினாலோதான் நண்பர்களுடன் கலந்து பழகமுடியும் என்ற மாற்றம் தகாது. இளமையில் உற்சாகமாக இருப்பது போகப் போக வீண்செலவிலும், ஆரோக்கியக் கேட்டிலும்தான் முடியும். ‘தீயது’ என்று புரிந்தவுடன் விலக, அப்பழக்கங்களை மாற்றிக்கொள்ளும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவைகளை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் பிற நண்பர்கள் கேலி செய்வார்கள். ‘கெட்ட பழக்கம்’ என்று ஒருவர் மட்டும் சேராதிருப்பது அவர்களைப் பழிப்பது போலாகிவிடுகிறது. இது புரிந்தால், அஞ்சத் தேவையில்லை. இயற்கை நிகழ்த்தும் மாற்றங்கள் ‘நாங்கள் மாறவே மாட்டோம்!’ என்று பெருமை பேசுகிறவர்கள் உண்டு. வயது ஏற ஏற, நாமும் மாறவேண்டும் என்ற எண்ணமும் பலருக்கு இருக்கிறது. வயது வந்த பெண் இருந்தால், தாய் அலங்காரத்தில் நாட்டம் கொள்ளக்கூடாது; தாய் தந்தையர் தனித்தனியே படுக்க வேண்டும் – இப்படி தம்மைத்தாமே கட்டுப்படுத்திக்கொள்வது. ‘எனக்கென்ன, வயதாகிவிட்டது!’ என்று அலுத்துக்கொள்வதுபோல் பெருமையாகச் சொல்லிக்கொள்பவர்களைத்தான் வயதுக்கேற்ற வியாதிகளும் அண்டுகின்றன. என் தோழி ஒருத்தி தன் தந்தை தனது எண்பத்து இரண்டாம் வயதில் ஒரு குழந்தைக்குத் தந்தை ஆனார் என்று அவள் பெருமையுடன் தெரிவித்தாள். அவள் மலாய்க்காரி. பசித்தால் சாப்பிடுகிறோம். உடற்பசி என்றால் மட்டும் கேவலமா! இத்தகைய மனப்போக்கினால், மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்பவர் விவரம் தெரியாத பெண்களுடன் சல்லாபம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். எனக்குப் பேரக்குழந்தை பிறந்ததும், என் சிநேகிதி மிஸஸ் கோ, “நீ இன்னும் நீச்சல் குளத்துக்குப் போகிறாயா?” என்று கேட்டாள். “ஏன் கூடாது?” என்று கேட்டேன். “நீச்சல் உடை அணியும் பாட்டி!” என்று கேலி செய்தாள். நான் சட்டை செய்யவில்லை. வயதாகிவிட்டதே என்று நடக்காமல் இருந்துவிடுகிறோமா? நீச்சல் ஆரோக்கியமான பொழுதுபோக்குதானே! எதற்கு மாற்றிக்கொள்வது? கதை நான் ஆசிரியப் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது அங்கு ரோமியோவும் இருந்தார். தினம் ஒரு சீனப்பெண்ணின் கையைக் கோர்த்துக்கொண்டு நடந்ததால், எல்லாரும் அவரை அப்படித்தான் குறிப்பிடுவார்கள். நான் அவருடன் பேசியதே கிடையாது. அவருடைய இயற்பெயரையும் அறியேன். (வெவ்வேறு பாடங்களை எடுத்திருந்தோம்). இருபது ஆண்டுகள் கழித்து, மேற்பயிற்சியின்போது என்னைச் சந்தித்து, “நீங்கள் மிகவும் மாறிவிட்டீர்கள்!” என்றார். நான் அதற்கு நேரிடையாகப் பதில் கூறாது, “உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறதா?” என்று விசாரித்தேன். “இருபது வயதில் மகள்,” என்றார், பெருமையுடன். “இருபது வருடங்களுக்கு முன்பு உங்கள் மகள் இப்போது இருப்பதுபோலவா இருந்தாள்?” என்று கேட்டுவிட்டு, அவர் வாயைப் பிளக்க வைத்துவிட்டு, அப்பால் நகர்ந்தேன். இயற்கை நமது உடலில் மட்டுமா மாற்றங்களை ஏற்படுத்துகிறது? நடை, உடை, பேச்சு எல்லாமே இடத்துக்குத் தக்கபடி மாறிவிடுகின்றன. கதை எங்கள் நண்பர் ஸலிஹின் மேற்படிப்புக்காக கானடா சென்றிருந்தார். திரும்பி வந்ததும், அவருடைய உச்சரிப்பு ‘அமெரிக்கானோ’ மாதிரி ஆகிவிட்டது என்று நண்பர்கள் கேலி செய்தார்கள். “நான் அங்கு வகுப்பில் பேசியபோது எல்லாரும் சிரித்தார்கள். (சாதாரணமாகவே, அவர் பேசுவது மலாய் மொழியா, அல்லது ஆங்கிலமா என்று புரியாது). அதனால் உச்சரிப்பை மாற்றிக்கொண்டேன். இப்போது இங்கும் எல்லாரும் சிரிக்கிறார்கள்!” என்றார் அழமாட்டாக்குறையாக. கல்யாணமான பின்போ, அல்லது வேறு நாட்டுக்குச் செல்ல நேரிட்டாலோ, தம் குழந்தைகள் மாறிவிடுகிறார்களே என்று பெற்றோர் அங்கலாய்ப்பதிலும் அர்த்தமில்லை. மாறாக, சிறுவயதில் தாம் போதித்த அன்பு, நேர்மை, பரோபகாரம் போன்ற நற்குணங்களை என்ன துன்பம் வந்தாலும் இழக்காது இருக்கிறார்களே என்று பெருமைப்படலாமே! விடு, விட்டுத்தள்ளு! ஒரு குழந்தை பலூனைப் பிடித்திருந்தது. கையை லேசாகத் திறக்க, பலூன் பறந்தே போய்விட்டது. பறிபோன பலூனையே நினைத்து அக்குழந்தை கதறிக்கொண்டிருந்தது – இன்னொன்று கையில் கிடைக்கும்வரை. அந்த நிலையில்தான் நம்மில் பலரும் இருக்கிறோம், வளர்ந்தபின்னரும். பலூனுக்குப் பதில் நினைவுகள். அவை இன்பம் அளிப்பனவாக இல்லாவிட்டாலும், கைவிட்டுப் போகாமல் அவைகளை கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஒன்று போனால், இன்னொன்று. அடுத்து என்ன செய்வது என்று புரியாததால் இந்தக் குழப்பம். சில சமயம், மீளாத்துயர். பொதுவாகவே, நாம் அனுபவித்த துன்பம் சம்பந்தமான எதையோ கேள்விப்படும்போதோ, படிக்கும்போதோ பழைய நினைவுகள் வந்து அலைக்கழிக்கும். விவாகரத்துபற்றி நான் எழுத, என்னைத் தொடர்புகொண்டு, தன் அவல வாழ்க்கையை நெடுநேரம் பகிர்ந்துகொண்டாள் ஒரு பெண்மணி. கதை கணவனது நீண்ட காலக் கொடுமையைத் தாங்கமுடியாது போனாலும், தன் குழந்தைகள் சற்று பெரியவர்களானதும் விலகலாம் என்று நிச்சயித்திருந்தாள் யமுனா. இறுதியில் விவாகரத்து பெற்றாள். ஆனாலும், அவர்பால் எழுந்த வெறுப்பை மறக்க முடியவில்லை. பிறரது செயல்களையோ, சொற்களையோ நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், நம்மையே கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். அப்படிச் செய்தால்தான் நிம்மதி கிட்டும். ‘இத்தனை காலமாக எதற்காக இப்படி ஒருவரைப் பொறுத்திருந்தோம்! எவ்வளவு மடத்தனம்!’ என்று மனதிற்குப் பட்டாலும், நம்மையே மன்னித்துக்கொண்டால்தான் அமைதி கிட்டும். பிறரை வெறுப்பதால் எந்தப் பலனுமில்லை. அவர் நம் எண்ணத்தால் மாறப்போவதுமில்லை. ‘கணவன் எப்படி இருந்தால் என்ன, இனி அவன் என்றும் நம்மைப் பாதிக்க முடியாது!’ என்று விட வேண்டியதுதான். “இப்போது என்ன செய்கிறீர்கள்?” என்று யமுனாவை நிகழ்காலத்திற்கு இழுத்துவந்தேன். நல்லவேளை, அவள் மாற்றத்துக்கு அஞ்சி ஒடுங்கவில்லை. தன் புதிய தொழிலைப்பற்றி, குழந்தைகளைப்பற்றி உற்சாகமாகப் பேசினாள். நாம் கடந்தகால நினைவுகளையே அசைபோட்டுக்கொண்டிருந்தால், நிகழ்காலம் நரகமாகிவிடாதா! அத்துடன், எதிர்காலத்திற்கான ஆயத்தங்களையும் செய்ய முடியாது போகிறது. இருப்பினும், சில நிகழ்வுகளை, ‘விட்டுத்தள்ளு!’ என்று ஒதுக்க முடிவதில்லையே! கதை என் ஒரே மகன் சசி நீரில் மூழ்கி இறந்தபின், குடும்பத்தாருடன் நான் அவனைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் நான்கு வயதே ஆன சசி எங்களுடனேயே இருப்பதுபோன்ற ஒரு திருப்தி, மகிழ்ச்சி, உற்சாகம் – எல்லாருக்குமே. பிறகு கவுன்சிலர்போன்ற ஒரு தோழி எனக்காக நேரத்தை ஒதுக்கினாள். எதிர்பாராத சம்பவம் என்பதால் அதன் பாதிப்பு மிகுந்த அதிர்ச்சியை அளித்திருந்திருந்தது. ஏழு மாதங்களுக்குப்பின், ‘நீங்கள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள். இவையெல்லாம் அற்புதமான நினைவுகள். காலப்போக்கில் மறந்துவிடுமே! அவைகளை எழுதிவைங்கள்!” என்றபோது, அயர்ச்சியாக இருந்தது. மறக்கக்கூடியவையா அவை! “ஆங்கிலத்திலா! எப்படி எழுதுவது?” “என்னிடம் சொல்வதுபோலவே!” குழந்தை என் பக்கத்தில் இல்லாவிட்டால் என்ன! எவ்வளவோ மகிழ்ச்சியான தருணங்களை அவனுடன் கழித்திருந்தேனே! அப்படி ஆரம்பித்தது இருநூறு பக்கங்களில் நிறைவடைந்தது. Through My Heart என்ற தலைப்பில், nirurag@wordpress.com என்ற தளத்தில் முப்பது ஆண்டுகளுக்குப்பின் வெளியிட்டேன். உலகின் பல பாகங்களிலிருந்தும் கடிதங்கள் வந்தன. பிறரும் என்னுடன் சேர்ந்து கலங்குகிறார்கள் என்பது சொல்லமுடியாத ஆறுதலை அளித்தது. என் துக்கம் சற்றே குறைந்தது. பெற்ற குழந்தையை இழந்த சில தாய்மார்களைப்போல் நான் பூஜை அறையைவிட்டே வெளியே வராது, நிம்மதி தேட முயற்சிக்கவில்லை. அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தேன். அதனால் எதிர்காலத்தைப்பற்றியும் யோசிக்க முடிந்தது. காதல் தோல்வியா? விடு! காதல், திருமணம் ஆகியவைகளில் தோல்வி அடைந்தவர்கள், ’விடு!’ என்ற மனப்பான்மை இருந்தால்தான் முன்னேற முடியும். ஒரு பெண்ணால் விரக்தி அடைபவர்களில் பலருக்கு எல்லாப் பெண்களுமே நம்பத் தகாதவர்கள் என்ற அச்சம் ஏற்பட்டுவிடுகிறது. இப்படிப்பட்ட இருவர் தம் கதையை என்னுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள், வெவ்வேறு தருணங்களில். “சில பெண்களுக்கு எவ்வளவுதான் சுதந்திரம் கொடுத்தாலும், கணவனை ஏசிப் பேசுகிறார்களே!” என்று ஆரம்பித்திருந்தார் ஒருவர். குறுக்கே சில கேள்விகள் கேட்டு, சரியாகப் புரிந்துகொள்ள முயற்சித்தேன். (சிலர் வாய்மூடி, தலையாட்டியபடி கேட்டுக்கொள்வார்கள். அம்முறை ஆறுதல் தருவதில்லை என்று கூறினார் அவர்). அதன்பின், “உங்களிடம் என் கதையைச் சொல்ல வேண்டுமே!” என்றார், கெஞ்சலாக. அவர் கதையை முழுமையாகக் கேட்டுவிட்டு, “நடந்ததையே நினைத்து வருத்தப்படாதீர்கள். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ளுங்கள்!” என்று சமாதானப்படுத்தினேன். ஒரேமாதிரி இருவரும் பதிலளித்தார்கள்: “ஐயோ, வேண்டாம்பா!” ஒருவரை அவர் இருப்பதுபோலவே ஏற்காதவர்களைப்பற்றி எண்ணிக் குழம்பி, நேரத்தை வீண்டிப்பானேன்! நம் அருகில் இல்லாவிட்டாலும், அப்படிப்பட்டவர் நம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டேதான் இருப்பார். நமக்குப் பிடிக்காத ஒருவருக்கு எதற்காக அந்த உரிமையைக் கொடுக்க வேண்டும்? கதை எனக்கு ஒரு அமெரிக்க தம்பதிகள் நண்பர்களாக இருந்தார்கள். எங்கள் வீட்டு விருந்துக்கு அழைத்தபோது, அவர்களுடைய நெருக்கத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். லூசி தன் நாட்டுக்குத் திரும்பிய பின்னரும், எங்கள் நட்பு தொடர்ந்தது. கோலாலம்பூரில் இரவு நேரங்களில் கோல்ஃப் ஆடப்போவதாகச் சொல்லி, கிளப்பில் வேலைபார்த்த ஒரு சீனப்பெண்ணுடன் கணவர் உறவு வைத்துக் கொண்டிருந்ததை அறிந்து விவாகரத்து செய்துவிட்டதாக எழுதியிருந்தாள். அதன்பின், ஒரு வயோதிகரை மணம் செய்துகொண்டாள். இருந்தும், ‘தன்னை நம்பச்செய்து ஒருவன் ஏமாற்றிவிட்டானே!’ என்று முதல் கணவர்மீது கொண்ட ஆத்திரம் அடங்கவில்லை. என் அமெரிக்கப் பயணத்தின்போது, நான் லூசியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். திக்கித் திக்கிப் பேசினாள். ‘உன்னை யார் அழைக்கச் சொன்னது?’ என்பதுபோலிருந்தது அவள் பேசிய முறை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. விவாகரத்து ஆன இன்னொரு பெண்மணி சமாதானமாகக் கூறினாள்: “அவள் பேசிய விதத்திற்கும் உனக்கும் சம்பந்தமில்லை. ‘மலேசியா’ என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே அவளுக்கு கடந்தகாலக் கசப்புகள் மேலெழுந்துவிட்டன!” பழையன கழிதலும் புதியன புகுதலும்தான் வாழ்க்கைத் தத்துவம். அதனால்தான் இந்துக்களின் போகி பண்டிகையின்போது, பழைய சாமான்களை எரிப்பதைப் பழக்கமாக வைத்திருக்கிறார்கள். சீனர்களும் அப்படித்தான். “துடைப்பம், முறம், பழைய தினசரி எல்லாவற்றையும் ஏன் குப்பைமாதிரி வீட்டின் முன்வாசலிலேயே ஒரு ஓரமாகக் குவித்து வைத்திருக்கிறார்கள்?” என்று நான் உறவினர் ஒருவரைக் கேட்டபோது, “பண்டிகைக்குமுன் எரிப்பார்கள்,” என்று பதில் வந்தது. பழங்குப்பைகளோடு நம்மை வாட்டும் நினைவுகளையும் ஒதுக்கினால், ‘உரக்கச் சிரித்தால்தான் மகிழ்ச்சி!’ என்ற பொய்யான நிலைமை மாறும். வாழ்க்கை எனும் பாதை திருமணமான பத்து வருடங்களில் மகிழ்ச்சியாக இருந்ததாகவே ரத்னாவிற்கு நினைவில்லை. சர்வாதிகாரியான மாமனார், ‘இது என் ராஜ்யம்!’ என்பதுபோல் அவளை சமையலறைப்பக்கமே விடாத மாமியார், வாயில்லாப்பூச்சியான கணவன் – இவர்களைப் பொறுத்துப் போக வேண்டிய கடமை. தனிக்குடித்தனம் போகலாம் என்றாலோ, ‘பெரியவர்களை விட்டுவிட்டு உனக்கென்னடி வாழ்வு!’ என்று பிறந்தவீட்டினர் பழிப்பார்களே என்ற தீராத பயம். தன் விருப்பப்படி எதுவும் செய்ய முடியாது, தலையாட்டி பொம்மையாக இருந்த நிலையில், தன் பொறுமையைத் தானே பாராட்டிக்கொண்டு இருக்கதான் முடிந்தது ரத்னாவால். கிட்டத்தட்ட ரத்னாவைப்போன்ற மணவாழ்க்கைதான் வாணிக்கும் அமைந்தது. ‘பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று பயந்து பயந்தே பொறுத்துப்போனால் உடலுடன் மனநிலையும் கெடும் அபாயம் இருப்பதை உணர்ந்தாள். தாயின் ஏச்சுப்பேச்சுகளை எதிர்பேச்சின்றி பொறுத்துப்போன சாதுவான கணவரை எப்படி நல்வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்தாள். ஓர் உபாயம்தான் தென்பட்டது. தொலைவில் ஒரு உத்தியோகம் தேடிக்கொண்டு, அதைச் சாக்காக வைத்து தனிக்குடித்தனம் போனாள். ‘நீங்கள்தானே இந்தக் குடும்பத்தின் தலைவர்!’ என்று அவள் அடிக்கடி கூற, கணவரும் தன்னம்பிக்கையுடன் செயல்பட ஆரம்பித்தார். தன் நன்றியைக் காட்டும் விதமாக மனைவியின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டினார். “ஹூம்! சில பேருக்கு வாழ்க்கை இப்படி அமைஞ்சுடறது!” வாணியைப் பார்த்துப் பொருமினாள் ரத்னா. ‘பிறர் என்ன சொல்லிவிடுவார்களோ!’ என்று அஞ்சியே தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள எந்தவித முயற்சியும் எடுக்காதவள் அவள். தான் இப்படி வாழ்க்கையுடன் போராடும்போது எந்த உறவினரும் தன்னுடன் சேர்ந்து துயரப்படவில்லையே என்ற வருத்தம்தான் அவளுக்கு மிஞ்சியது. வாழ்க்கைப்பாதையைக் கடந்துதான் ஆகவேண்டும் – அது எவ்வளவு நிரடலாக இருந்தாலும். ‘எப்படி நம் வாழ்க்கைப் பாதையை மாற்றலாம் என்று புரியவில்லையே!’ என்று குழம்புகிறவர்களுக்கு சீனத் தத்துவ ஞானி ஒருவர் என்றோ அறிவுரை கூறி வைத்திருக்கிறார்: ‘ஆயிரம் மைல்களைக் கடக்க வேண்டுமானாலும் ஒவ்வொரு அடியாகத்தான் நடக்க வேண்டும்!’ மாறுதலே இல்லாது ஒரே இடத்தில் நிற்க மனிதன் என்ன, தாவரமா! புதிய பாதையா, ஐயோ! புதிதான பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, அச்சமாகத்தான் இருக்கும். நிறைய வலிகளையும் சந்திக்க நேரிடலாம். இதற்கெல்லாம் பயந்தே பலரும் எவ்வளவு கடினமான வாழ்க்கையையும் மாற்றத் துணியாது, ‘என் தலைவிதி அவ்வளவுதான்!’ என்று பேசியே காலத்தைக் கடத்துகின்றனர். ஆனால், அது ஆறுதல் அளிக்குமா? கடந்த காலத் துயரைப்பற்றிப் பேசினால், அது நடந்தபோது இருந்த அதே பாதிப்பை ஏற்படுத்தி, ஒருவரை பலகீனராக ஆக்கும். இன்றைய பயணம் செம்மையாக இருக்க வேண்டுமானால் நேற்றைய பயணத்தையே நினைத்து வருந்திக்கொண்டிருப்பது சரியல்ல. அதிலிருந்து ஏதாவது கற்க முடிந்தால் அப்பாடத்தை மட்டும் கற்றுக்கொண்டு, விட்டுவிட வேண்டியதுதான். நடந்து முடிந்தவைகளை மாற்றவா முடியும்! பலர் தமக்குப் பிடித்ததை செய்ய முயன்று, ஆரம்பித்தில் தோல்வியோ, அல்லது கேலியோ எதிர்ப்பட்டால் செய்ய முயன்றதை அரைகுறையாக விட்டுவிடுவார்கள். அப்படி நாம் வெற்றி காண்பதைப் பொறுக்காதவர்களை அலட்சியம் செய்ய வேண்டியதுதான். கதை சுமார் இருபது வயதாக இருந்தபோது, எனக்கு எழுத்துலகில் பத்து வருட அனுபவம். பிரமிக்க வேண்டாம். எதையும் பிரசுரத்திற்கு அனுப்பியதில்லை. என் படைப்புகளின் தரக்குறைவு எனக்கே தெரிந்திருந்ததுதான் காரணம். ‘உருப்படியாக ஏதாவது செய்யேன்!’ என்று தாய் கெஞ்சினார். (திட்டினாலோ, மிரட்டினாலோ நான் மசியமாட்டேன் என்று அவர் அறிந்ததுதானே!) ‘இவள் ஒரு போர்!’ என்று பழித்தார்கள் பிறர். நானோ ஓயாமல் படிப்பேன், இல்லையேல் எழுதுவேன். நான் தொடர்ச்சியாக கதைகள் எழுத ஆரம்பித்ததும், புதிய விஷயங்களைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்ததது. புதிய இடங்களுக்குப் பயணித்தேன். நிறையத் திண்டாட்டம். இருந்தாலும், வாழ்க்கையைப்பற்றி சிறிது புரிந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் பலவிதப் புத்தகங்களைப் படித்தேன். பலரைப் பேட்டி கண்டேன். அவர்களுள் நோய் முற்றிய நிலையிருந்த பெருநோயாளிகள், வீட்டைவிட்டு ஓடி வந்த இளம்பெண்கள், குண்டர் கும்பலிலிருந்து விலகிய இளைஞர்கள், உடல்வதைக்கு ஆளான மனைவிகள் என்று பலதரப்பட்டவர்களும் அடக்கம். இதையெல்லாம் விரிவாக ஒரு உரையின்போது கூற, “எழுத நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கீங்க!” என்று வியந்தார் ஒருவர். கஷ்டமா! நான் அவைகளை அனுபவம் என்றுதான் எடுத்துக்கொண்டேன். விஷயங்களைத் தேடுவதே சுவாரசியமாக இருந்தது. என்று, எவ்வாறு எழுதப்போகிறோம் என்றெல்லாம் அப்போது யோசிக்கத் தோன்றவில்லை. மனிதர்களையும் வெவ்வேறு விதமான வாழ்க்கையையும் புரிந்துகொள்வதே கலக்கத்தையும் வியப்பையும் ஒருங்கே உண்டாக்கியது. வெற்றி காண நீண்ட பயணம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். எழுத ஆரம்பித்த காலத்தில், என்னைப் பரிகசித்து, என் நம்பிக்கையைக் குலைக்க சிலர் முயன்றவர்களுக்கு நான் பயணிக்க விரும்பிய பாதையைப்பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பது வேறு விஷயம். அன்று பிறரது பரிகசிப்பு என்னைத் துளியும் பாதிக்கவில்லை. சவாலாக எடுத்துக்கொண்டேன். அதேபோல், இப்போது புகழ்ச்சியும் என்னைப் பாதிக்க விடுவதில்லை. வளர்ச்சி குன்றி, மாறாமல் இருக்கலாமா? கற்பனையும் நிதரிசனமும் ‘நம் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும்!’ என்று தீர்மானித்துக்கொண்டால் அது நடக்கிற சமாசாரமில்லை. இளைஞர்கள் திரைப்படங்களிலும் புதினங்களிலும் வரும் காதல் மற்றும் மணவாழ்க்கையைப் பார்த்துவிட்டு, சொந்த வாழ்க்கையிலும் அதையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. வெளிநாடு போய் சம்பாதித்தால், லட்சாதிபதியாக சொந்தநாடு திரும்பலாம் என்று மனப்பால் குடிக்கும் தொழிலாளிகளுக்கும் இதே நிலைதான். உற்றவர்களைவிட்டுத் தனிமையுடன் போராடியபடி வாழவேண்டிய கட்டாயம், நினைத்தபடி பணம் சேமிக்க இயலவில்லையே என்ற ஏமாற்றம் – இப்படி அவர்கள் எதிர்பாராத பல தோல்விகள். இவற்றைப் பெரிதாக எண்ணாது, கருமத்திலேயே கண்ணாக இருப்பவர்கள்தாம் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். கதை கோலாலம்பூரில் சாப்பாட்டுக்கடை ஒன்றில் பரிசாரகராகப் பணியாற்ற பங்களாதேஷி ஒருவர் வந்திருந்தார். தன் நாட்டில் புதுமனைவியை விட்டு வந்திருந்ததாக என்னிடம் தெரிவித்தார். ஒரு வருடம் கழித்து, தனக்கு ஒரு மகன் பிறந்திருப்பதாகச் சொன்னவர், என்னுடன் வந்திருந்த என் பேரனுக்கும் அதே நான்கு மாதங்கள்தாம் என்று கேட்டு, ‘நான் தூக்கிக்கொள்கிறேனே!’ என்று கெஞ்சலாகக் கேட்டார். குழந்தையுடன் உள்ளே போனவர் விசித்து விசித்து அழுவதைப் பார்த்தோம். பரிதாபமாக இருந்தது. குழந்தையின் கையில் ஐந்து ரிங்கிட் நோட்டைத் திணித்திருந்தார்! அவருக்கு அது பெரிய தொகை. தடுத்துப்பார்த்தோம். ‘ஏன்?’ என்றவருக்குத் திரும்ப அழுகை வந்துவிட்டது. அதற்கு மேலும் மறுத்துப் பேச முடியவில்லை. அண்மையில், அவருடைய பிள்ளைகள் பெரிய படிப்பு படிப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவருடைய உண்மையான உழைப்பால் மற்ற ஆட்களுக்கு மேலதிகாரியாக ஆகியிருந்தார். ‘இது ஃப்ரீ!’ என்று என் பேரனுக்குப் பிரத்தியேகமாக குலாப்ஜாமூன் கொண்டு வைக்கும் அளவுக்கு அவருக்குச் சுதந்திரம் அளித்திருந்தார்கள். சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று, நட்சத்திர ஹோட்டல் திறக்குமளவுக்கு அவரிடம் சொத்து சேராதிருக்கலாம். ஆனால், ‘வாழ்க்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்கத்தானே செய்யும்!’ என்று புரிந்து, கடினமான வாழ்க்கையால் மனம் தளராது, அதை அனுபவித்து ஏற்று, வெற்றி கண்டவர் அவர். சலிப்பு ஏன்? எந்த வயதாக இருந்தால்தான் என்ன! பலருக்கும் சலிப்புதான். இருபத்து ஐந்து வயதில் ‘வாழ்க்கை கடினமானது! (Life is hard!)’. ஏதோ மந்திரம்போல் இந்த வாக்கியத்தை என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்கள் அமெரிக்காவில் முனைவர் பட்டத்துக்குப் படித்துக்கொண்டிருந்த சில மாணவ மாணவிகள். மனிதராகப் பிறந்த ஒவ்வொருக்கும் எந்த வயதில்தான் கஷ்டமில்லை? அதை எப்படிச் சமாளிப்பது என்று புரிந்துகொண்டால் நாம் நிரந்தரமான சோகத்துடன் நடந்து, பார்ப்பவர்களையும் மகிழ்ச்சி இழக்கச் செய்யவேண்டாமே! மேல்படிப்புப் படிக்க வந்திருந்த அந்த இளைஞர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளுக்குப் பஞ்சமில்லை. படிக்க, ஆராய்ச்சி செய்ய நிறைய நேரம் தேவைப்பட்டதால் கேளிக்கைகளுக்கு அவகாசம் போதவில்லை. அவ்வளவுதான். அதையே அவர்களால் தாங்க முடியவில்லை. தாமதமாக வரும் பலன்கள் ஓய்வு என்பது நிலத்திற்கு மட்டுமல்ல, மனிதனுக்கும் அவசியம்தான். ஆனால், இளமைக்காலத்தில் கடுமையாக உழைத்தால், வாழ்வின் பெரும்பகுதியைப் பிறர் மதிக்க வாழலாம். இதை அம்மாணவர்கள் நினைக்கத் தவறியதால் அப்படி அலுத்துக்கொள்வதே ஒரு கலாசாரமாக ஆகிப்போயிற்று. நாற்பத்து ஐந்து வயதில் ‘காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது!’ ‘இனிமேல் என்ன இருக்கிறது! உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற இன்னும் பதினைந்தே வருடங்கள்தாம் இருக்கின்றன!’ எப்போதோ வரப்போகும் மரணத்தை இப்போதிலிருந்து எதிர்பார்த்தே விரக்தி அடைந்துவிடுகிறார்கள் சிலர். எதிலும் பற்றற்று வாழ்வதில் என்ன சுகம் இருக்க முடியும்? கதை முப்பந்தைந்து வயதுப் பெண்மணி ஒருத்திக்கு நான் வண்ண வண்ண பட்டைகள் வைத்த கைக்கடிகாரத்தைப் பரிசளித்தபோது, ‘ஒரு வயசுக்கப்புறம் அலங்காரத்திலே கவனம் செலுத்தக்கூடாது!’ என்றாள் உறுதியாக. ஆனாலும், அவளைவிட வயதுமுதிர்ந்த பெண்கள் நன்கு அலங்கரித்துக்கொண்டால் பொறாமையுடன் வெறிப்பாள். தானே தனக்கொரு வேலி போட்டுக்கொண்டு, பிறரை நோவது ஏன்? ‘பிறர் ஏதேனும் சொல்லிவிடுவார்களே!’ என்று பயந்து, எல்லாரும் ஏற்கும் விதத்தில் நடப்பவர்களுக்கு வாழ்க்கையினால் திருப்தியோ, மகிழ்ச்சியோ இருப்பதில்லை. ‘எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும். ஏனென்றால், நான் எல்லாருடனும் ஒத்துப்போவேன்!’ என்ற பெருமைதான் மிச்சம். எல்லாரும் நடிகர்கள்தாம் பலர் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எதிரிலிருப்பவர்களுக்குச் சரியாக நடிக்க வேண்டியிருக்கிறது. பிறருக்காக நடிக்க வேண்டியிருக்கும்போதுதான் மன அழுத்தம், உற்சாகமின்மை எல்லாம் வருகிறது. வேறு சிலரோ எதிலும், எவரிலும் தப்பு கண்டுபிடித்தே தம்மை உயர்த்திக்கொள்ள நினைக்கிறார்கள். கதை எங்கள் வீட்டுக்கு அயல்நாட்டிலிருந்து இரு குழந்தைகள் தம் பெற்றோருடன் வருகை புரிந்திருந்தார்கள். நீண்ட பயணம், குழந்தைகள் ஓய்ந்துபோய், சுரத்தில்லாமல் இருக்குமே என்று யோசித்து, அவர்களுக்கு ஏற்ற கலர் பென்சில், விளையாட்டுக் கார் என்று வாங்கி அவர்களை எதிர்கொண்டபோது, ‘நம்மை இவர்களுக்குப் பிடிக்கிறது!’ என்று புரிந்துகொண்டார்கள். குழந்தைகளாகவே இருந்தார்கள். அந்த கலகலப்பு எல்லாரையும் தொற்றிக்கொண்டது. ‘போன மாதம்தான் பார்த்தேன். மூன்று வயதாகியும், அவன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், அம்மா மடியிலேயே உட்கார்ந்திருந்தானே!’ என்று இன்னொரு உறவினர் பெண்மணி ஆச்சரியப்பட்டாள். ‘ரொம்ப சமர்த்தாயிருக்கணும்!’ என்று தாய் எச்சரித்து அழைத்து வந்திருப்பாள். அல்லது, பிறர் வெளிப்படையாகவே எடைபோடுவார்கள். எதைச் சொன்னால், செய்தால், பிறர் ஏற்காது இழித்துரைப்பார்கள் என்று புரியாதபோது, மௌனமாகிவிடுவது இயல்பு. எந்த வயதிலும் பிரச்னைதான் நாற்பது வயதினருக்கு ஒரு விதப் பிரச்னை என்றால், அறுபது, எழுபது வயதில் வேறு விதமான சமூக எதிர்பார்ப்புகள். தரமான தமிழ்ப்படங்களைத் திரையில் பார்க்க எனக்குப் பிடிக்கும். ஒரு முறை, படம் ஆரம்பிக்குமுன் தியேட்டரிலிருந்த கடையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். இளைஞன் ஒருவன் என முகத்தருகே குனிந்து, ‘உனக்கெல்லாம் சினிமா ஒரு கேடா!’ என்ற அர்த்தம் வெளிப்பட, எகத்தாளத்துடன் என்னைப் பார்த்தான். நானும் தலையை லேசாக நிமிர்த்தி, ஒரு கேலிச்சிரிப்புடன் பார்வையாலேயே அவனை எதிர்கொண்டேன்: ‘நான் என்ன செய்தால் உனக்கென்ன? நீயா காசு குடுத்து டிக்கட் வாங்கித் தரப்போறே? உன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போ!’ அவன் அதிர்ந்துபோய், அப்பால் விரைந்தான். அவனுடைய தாய் பாவம்! நம்மை அச்சுறுத்தவோ, நம்மை நாமே தாழ்மையாக நினைக்க வைக்கவோ பிறர் முயலும்போது, அவர்கள் முயற்சி தோல்வி அடையும்படி நாம் உறுதியாக இருக்கவேண்டும். சுவற்றில் அடிக்கப்பட்ட பந்துபோல் அந்த பயமும், அவமானமும் அவர்களையே போய் சேர்ந்துவிடும். வீண்கவலை ஏன்? இப்போது ஏதாவது கவலையா உங்களுக்கு? போன தடவை எதற்காகக் கவலைப்பட்டீர்கள் என்று நினைவிருக்கிறதா? அக்கவலை எத்தனை நாள் நீடித்தது, அதனால் உங்கள் உடல் நலன் எப்படியெல்லாம் பாதிப்படைந்தது என்று யோசித்துப்பார்த்தால், சிறிய விஷயத்திற்கெல்லாம் கவலைப்படுவது அநாவசியம் என்று தோன்றிப்போகும். பள்ளிக்கூட, கல்லூரி பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு முன், முடிவு வெளியாகுமுன், அதற்குப் பிறகு, என்று எல்லா தருணங்களிலும் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதனால் அவர்கள் மதிப்பெண்கள் என்னமோ மாறிவிடப்போவதில்லை. இதை யார் யோசிக்கிறார்கள்? நன்றாகப் படித்துவிட்டு, ‘நான் எப்படி எழுதப்போகிறேனோ! என்று எதற்காக கவலை? பதின்ம வயதில் என் தோழி ஒருத்தி தலை வாரிக்கொள்ளாமல், சோகமே உருவாகக் காட்சியளிப்பாள், சில சமயங்களில். ’உனக்கென்ன வந்தது?’ என்று நான் சிரிப்புடன் கேட்டபோது, ‘கஷ்டப்பட்டு பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கிறேன்!’ என்று பதில் வந்தது. நானோ, அந்தமாதிரி சமயங்களில்தான் இன்னும் அதிகமாக அலங்காரம் செய்துகொண்டு, என்னையே உற்சாகப்படுத்திக்கொள்வேன். அபூர்வமாக ஒரு மாணவி கவலைப்படாமல், அமைதியே உருவாக இருந்தால், அவளுக்காக பிறர் கவலைப்படுவார்கள்! இன்னும் அதிகமாகப் பயப்படுவார்கள். நாக்கை வெளியில் தொங்க போட்டுக்கொண்டு, நாய்கள் செய்வதுபோல, ‘ஹா, ஹா’ என்று ஓசை எழுப்பினால், நாம் சிரிக்கிறோம் என்றெண்ணி, மூளை உற்சாகமாகிவிடுமாம். உடல் வலிகூட இம்முறையால் மறைந்துவிடும். இதற்கு மாறாக, நாம் சோர்வாக காட்சி அளித்தால்தான் பிறர் நம்மைப் பார்த்துப் பரிதாபப்படுவார்கள் என்றெண்ணினால், உடலுடன் மூளையும் அயர்ந்துவிடுமே! இப்படிச் செய்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதுபோல் ஆகிவிடாதா? புன்னகையின் பலம் கோபமாகச் சண்டை போடுவதைவிட புன்முறுவலுடன் கூடிய கருணை பலன் வாய்ந்தது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். கதை பெங்களூரிலிருந்து அதிகாலையில் விமானவழி பம்பாய் சென்று, அங்கிருந்து அஜந்தா குகைகளைப் பார்க்க ஔரங்காபாத்துக்கு ரயில் பிடிக்க ஏற்பாடுகள் செய்துவிட்டோம். விமான தளத்தில், ‘சிறிது தாமதம்!’ என்று உணர்ச்சியற்ற குரலில் அறிவித்து, முதலில் காலை உணவு கொடுத்தவர்கள், பகலுணவும் கொடுத்து, அதன்பின் ‘விமானத்தில் கோளாறு! அதனால் பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது!’ என்று அறிவித்தார்கள். பயணத்துக்கான பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், ஒரே அமர்க்களம். கெஞ்சிப் பார்க்கலாமோ என்ற நப்பாசையுடன், கவுண்டரில் அமர்ந்திருந்த இளம்பெண்ணை நெருங்கினேன். அனேகமாக எல்லாப் பயணிகளும், ‘எங்களுக்கு எவ்வளவு கஷ்டம், தெரியுமா?’ என்று தங்களால் இயன்றவரை குரலை உயர்த்தி, அவளைத் தாறுமாறாகப் பேச ஆரம்பித்தார்கள். அவள் ஒரேயடியாக மிரண்டு போனாள். விமானக்கோளாறு என்றால், இதில் அவள் தவறு என்ன? அவளைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருந்தது. “I don’t envy you!” (உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இல்லை) என்றேன். லேசாகச் சிரித்தேன். ஒருவர் சிரித்தால், எதிரிலிருப்பவர்களும் சிரிக்க முயல்வார்களே! ஏதோ, நம்மாலான உதவி! அவள் கண்ணில் ஒளி – ஒருவராவது நம் கஷ்டத்தைப் புரிந்துகொண்டார்களே என்று. அவளும் புன்னகைத்தாள். எங்கே, எதற்காகப் போகிறேன், எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றெல்லாம் விசாரித்தாள். நான் கேளாமலேயே, வேறு ஒரு பெண்ணிடம் போய், “உன் விமானத்தில் ஆன்ட்டிக்கு இடம் கொடேன்!” என்றாள் கெஞ்சலாக. எகானமி கிளாஸ் டிக்கட் வாங்கியிருந்த நான் அன்று பிசினஸ் கிளாசில் சொகுசாகப் பயணம் செய்ய வேண்டும் என்றிருந்திருக்கிறது! இதைத்தான் ஒரு கதவு மூடினால் இன்னொன்று திறக்கும் என்கிறார்களோ? பணக்கார வீட்டுக் குழந்தையா! ஐயோ, பாவம்! எங்கள் தெருவில் நாலைந்து வீடுகள் தள்ளி இருக்கிறாள் மிஸஸ் வாங். பெரிய படிப்பு, அதற்கேற்ற உத்தியோகம். கணவன், மனைவி இருவரும் கைநிறைய சம்பாதித்தார்கள். பெரிய வீடு இல்லாமலா! ஆனால், தம்பதியர் வீட்டிலிருப்பதே அபூர்வம். அவர்களுடைய மூன்று குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது? வெளிநாட்டுப் பணிப்பெண்கள் எதற்காக இருக்கிறார்கள்! “எங்கள் வீட்டில் மூன்றுபேர் வேலை செய்கிறார்கள்,” என்று என்னிடம் சாதாரணமாகத் தெரிவித்தாள். பெருமை என்றில்லை. வேறு என்ன செய்வது என்ற தொனி. “மாடியைச் சுத்தப்படுத்த ஒருத்தி, கீழே ஒருத்தி. இவர்களிருவரும் இந்தோனீசியர்கள். குழந்தைகளைக் கவனித்து, அவர்களுக்குப் பிடித்ததை சமைத்துப்போட ஃபிலிப்பீனோ!” என்றாள். ஃபிலிப்பீன் நாட்டைச் சேர்ந்த பெண்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பதால், மலேசியாவில் அவர்களுக்குச் சம்பளம் அதிகம். எனக்குத் தெரிந்த ஒரு பணிப்பெண் கணக்காய்வாளராக இருந்தவள்! ‘வீடு என்றால் ஓய்வெடுக்கத்தான்!’ என்பதுபோன்ற மனப்பான்மை கொண்ட மிஸஸ் வாங் பருமனாக இருந்ததில் ஆச்சரியமில்லை. சுமாரான வருமானம் உடையவர்கள்கூட வீட்டிலேயே விளையும் மரவள்ளிக்கிழங்கையும், உருளைக்கிழங்கையும் சாப்பிட்டு குண்டாக இருக்கையில், தானும் அவர்களைப்போல் இருப்பதா என்று அவள் நினைத்திருக்க வேண்டும். பொழுதைக் கழிக்க கோல்ஃப் ஆடும் பழக்கத்தை மேற்கொண்டாள். அதோடு, லைன் டான்ஸ் என்ற நாட்டியப்பயிற்சி வேறு. “மிகவும் ஷேப்லியாக (shapely) ஆகிவிட்டீர்களே!” என்று நான் பாராட்டியபோது, மகிழ்ந்துவிட்டாள். உடனே அவள் முகம் மாறியது. “என் மகள் யென் யென்னையும் (Yen Yen) இதையெல்லாம் கற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறேன். ஆனால் அவளுக்கு எதுவுமே வணங்குவதில்லை,” என்றுவிட்டு, “எப்போதும் சாப்பாட்டில்தான் கவனம்!” என்று பிரலாபித்தாள். எனக்கு ஆச்சரியம் எழவில்லை. சமைப்பதற்கென்றே அமர்த்தப்பட்ட ஒரு பணிப்பெண். சிறுமிகள் தம் காலைச் சுற்றி வராமலிருக்க தின்பண்டங்கள் ஓயாது கொடுத்துக் கொண்டிருப்பவள். தாய், தந்தை இருவருடைய கவனிப்பும் இல்லாது, என்ன செய்வது என்று புரியாது, தொலைகாட்சி பார்த்தபடி எதையாவது கொறிக்கும் பழக்கம் அவளுடைய மூன்று குழந்தைகளுக்கும். அது மட்டுமா? ஏதாவது ஒரு விளையாட்டிலோ, படிப்பிலோ சற்றே தோல்வியுற்றால் அதிர்ந்து போகும் பெற்றோர். தம்மைப்போன்று தாம் பெற்ற குழந்தைகளும் வாழ்க்கையில் பெருவெற்றி அடையவேண்டும் என்ற ‘நல்லெண்ணத்துடன்’ அவர்களை அளவுக்கு மீறிக் கண்டிப்பவர்கள். இதனால், தான் எதையாவது செய்யப்போய், அதில் தோல்வி அடைந்து எப்போதோ பார்க்கும் பெற்றோரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியிருக்குமே என்று பயந்து புதிதான எதிலுமே ஆர்வமில்லாமல் போயிருக்கிறாள் அப்பெண், பாவம்! குமுறி எழும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாது, உணவால் அதை மறக்க முயற்சிக்கிறாள். விலையுயர்ந்த ஆடைகளும், ஆளுக்கொரு கணினியும் இருந்தாலும் யென் யென் ஏழைதான் என்றே தோன்றியது. வாழ்க்கையில் பிடிப்போ இலக்கோ இல்லாது, சாப்பிடுவதில் மட்டும் ஆர்வம் காட்டிக்கொண்டு, எப்படியோ பொழுது போனால் சரி என்று காலத்தை ஓட்டுகிறவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்தானே? என்னிடம் படிக்க வந்த ஒரு மலாய் பையனும் இப்படித்தான். “இந்தக் கணக்கைப் போடு,” என்று நான் சொல்ல வேண்டியதுதான், நாற்காலியில் சரிந்து உட்கார்ந்துவிடுவான். நாம் இவனுடன்தான் பேசுகிறோமா என்ற சந்தேகம் நமக்கே வந்துவிடும். அப்படி இருக்கும் அவனுடைய தோரணை. ‘என்ன சொன்னால் சுறுசுறுப்பாக மாறுவான்?’ என்ற குழப்பத்துடன் தாய் ஓயாமல் விரட்ட, மேலும் அடங்கிப்போயிருந்தான். ‘திட்டினால், குழந்தைக்கு அவமானம் அளிப்பதுபோல!’ என்று சிறு வயதில் எந்த தவறு செய்தாலும் கண்டிக்காது விட்டதில், பதின்ம வயதில் மனம் போனபடி நடக்கும் இப்படிப்பட்ட சிறுவர்கள் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பாரமாகி விடுகிறார்கள். நான் இப்படி ஒரு பையனைப்பற்றி அவனுடைய தாயிடம் புகார் செய்தபோது, “வீட்டிலும் இப்படித்தான்! எதிர்த்து எதிர்த்துப்பேசுவான். என்ன செய்வதென்றே புரியவில்லை,” என்றாள் வருத்தத்துடன். உரிய காலத்தில் கண்டிக்காது விட்டது யார் தப்பு? கதை அது கூட்டுக்குடும்பம். ஆனாலும், ஒருவர் விஷயத்தில் இன்னொருவர் அநாவசியமாகத் தலையிடாது சுமுகமாக இருந்ததால், வீட்டில் அமைதியும், சிரிப்பும் நிலவின. தாய் வேலைக்குப் போனால், பார்த்துக்கொள்ள தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். தனிமை தெரியாது குழந்தைகள் வளர்ந்தார்கள். மூன்று வயதாக இருந்த ராணியை ஒரு நாற்காலியின்மேல் ஏறவைத்து, அவளுடைய தோய்த்த துணிகளை உலர்த்தச் செய்தார் தந்தை. அன்று பூராவும், ‘நானே செய்தேன்!’ என்று பெருமையாக எல்லாரிடமும் சொல்லி மகிழ்ந்தாள். எவ்வளவு சிறிய குழந்தையானாலும், ஒரு காரியத்தை அதன் வயதுக்கேற்ப செய்து முடித்தால், தன்னம்பிக்கை வளருமே! அடுத்த ஆண்டு பாலர் பள்ளியில் விளையாட்டு விழா. ராணிக்கு எல்லாவற்றிலும் முதல் பரிசு. ஒரு விளையாட்டில், சிறிது தொலைவு ஓடி அருகிலிருந்த வாளியிலிருந்து துணியை எடுத்து உலர்த்துவது. மற்ற குழந்தைகளெல்லாம், ‘இது நம் வீட்டு வேலைக்காரியின் வேலை அல்லவா?’ என்று திகைத்து நின்றார்கள். ‘இதற்கெல்லாமா போட்டி வைப்பார்கள்!’ என்று பெற்றோர் அதிருப்தியுடன் முணுமுணுத்தார்கள். ‘போகட்டும், சிறு குழந்தைகள்தானே!’ என்கிறீர்களா? தமிழ்நாட்டில் எங்கள் உறவினர் வீட்டுப்பையன். இருபது வயது. “இன்னிக்கு ரெண்டு வேலைக்காரியும் மட்டம் போட்டுட்டா. கொஞ்சம் துணியை உலர்த்துப்பா,” என்று நான் கெஞ்சலாகக் கூற, “எப்படின்னே தெரியாது,” என்று அலட்சியமாகக் கூறியபடி அப்பால் போய்விட்டான். அவன் ஒரு குறிப்பிட்ட துறையில் மேதாவி. ஆனால், அதுமட்டும் போதுமா? ‘களவும் கற்று மற’ என்று எதற்காகச் சொல்லி வைத்தார்களோ! வாழ்க்கைக்குத் தேவையான பலவற்றையும் அரைகுறையாகவாவது கற்றிருந்தால் எங்கு சென்றாலும், எப்படியாவது பிழைக்கலாம். எல்லாவற்றிற்கும் பிறர் கையை நாட வேண்டியதில்லை. கடந்த நூற்றாண்டின் பிரபல அமெரிக்க வயலின் விற்பன்னர் யஹூதி மெனுஹின் ஒரு முறை கூறியிருந்தார், “நான் என் மாணவர்களுக்கு வயலின் வாசிக்க மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை. தம் விரல்களை இழந்தாலும், அவர்களால் பிழைத்துக்கொள்ள முடியும்!” அழுமூஞ்சியும் சிரித்த முகமும் புதிது புதிதாக எதையாவது செய்ய முற்படும்போது ஆர்வமும் பயமும் ஒருங்கே எழலாம். எதையும் புரிந்துகொண்டால் பயம் போய்விடும். எளிதான காரியம் ஒன்றை எவர் வேண்டுமானாலும் செய்யலாம். பிறர் செய்யத் தயங்கும் காரியத்தில் துணிச்சலுடன், ஆனால் தகுந்த பாதுகாப்புடன், இறங்குவதுதான் மகிழ்ச்சியைத் தரும். தன்னம்பிக்கையையும் வளர்க்கும். யாரோ துணிச்சலாக எதையோ செய்வதைப் பார்த்து, ‘எனக்கு எதற்கும் பயம் கிடையாது!’ என்று அபாயகரமான ஒரு காரியத்தில் ஈடுபடுவது மடத்தனம். நான்தான் தெனாலி – எல்லாவற்றிற்கும் பயம் “நான் பெரிய பயந்தாங்கொள்ளி! கல்லூரியில் கடலுக்கு அடியில் நீச்சலடிக்கும் பாடத்தை (Ocean Archaeology) எடுத்துக்கொண்டேன். அதற்கு முன்னர் சுமாராக நீச்சல் தெரியும். அவ்வளவுதான். இரண்டு பயிற்சியாளர்களுடன் நள்ளிரவில் பயிற்சி எடுக்க வேண்டும். முதலில் நடுக்கமாக இருந்தாலும், போகப் போக பயம் போய்விட்டது. உற்சாகமாக அப்பயிற்சியை எதிர்நோக்க ஆரம்பித்தேன்!” இப்போது, குடும்பத்துடன் படகில் போகும்போது, கடலில் குதிக்கிறாள் இப்பெண். பிறருக்கு மூச்சு நின்றுவிடுவது போலிருந்தாலும், இவள் முகத்தில் என்னவோ பூரிப்புதான். மேலே இருக்கும் கதையில், ‘இரண்டு பயிற்சியாளர்கள்’ என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். தனியாகப் போயிருந்தால், இன்று தன் வெற்றிக்கதையைச் சொல்லிச் சிரிக்க அவள் இருக்கமாட்டாள். எப்போதும் சிரித்த முகம் ‘நீ நிறையப்பேரை பகைத்துக்கொள்கிறாய்!’ ஒரு முறை இப்படிக் கண்டனம் செய்யப்பட்டவர்கள் மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டு, பிறரை மகிழ்விக்க முயலுவார்கள். அப்படிச் செய்வதால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதோ, இல்லையோ, எப்போதும் சிரித்த முகத்துடனே வளைய வருவார்கள். பிறருக்காக ஒருவர் நடிக்கும்போது, தன் இயல்பான குணங்களை விட்டுக்கொடுக்கிறார். அதனால்தான் அவருக்கே புரியாத ஏதோ வெறுமை. மற்றவர்கள் எப்படியோ போகட்டும். வெளிப்படையாகப் பகைத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமோ என்ற குழப்பம் அநாவசியம். அவர்களை மாற்ற முயல்வதும் வீண் முயற்சி. நம்மை நல்ல விதத்தில் மாற்றிக் கொண்டாலாவது நன்மை பிறக்கும். போடு பழியை, பிறர்மேல் பலருக்கும் மாற்றம் என்றால் பயம். ‘நம்மை அறியாமலேயே ஏதேதோ நிகழ்கிறதே, நாம் வேறு வாழ்க்கையை இன்னும் குழப்பிக்கொள்ள வேண்டுமா?’ என்று ஒரே நிலையில் இருப்பார்கள். ‘விதி!’ ‘ஜோசியர் சொல்லி இருக்கிறார், எனக்கு இப்போது போதாத காலமாம்!’ என்று எவர் மேலாவது பழி போட்டு, தம் வாழ்வில் நடப்பது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், உற்சாகம் என்னவோ கிடையாது. நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் சம்பவங்களால் நாம் மாறலாம். ஆனால் அவை நம்மைத் தாழ்த்த விடக்கூடாது. நண்பர்கள்போல் நடித்துக் குழி பறிப்பவர்களிடமிருந்து பயந்து ஓடினால், ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். அவர்களைச் சொல்லாலோ, செயலாலோ அடிப்பதால் நம் பலம் பெருகிவிடப் போவதுமில்லை. தனிமை எப்போதும் இனிமையா? எப்போதும் பிறருடன் சேர்ந்தே இருந்தால், ஒருவர் மற்றொருவரைக் கட்டுப்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. நாளடைவில் எரிச்சல்தான் உண்டாகும். அவ்வப்போது பிரிந்திருப்பதே நல்லது. (மனைவி அவ்வப்போது தன் பிறந்தகத்துக்குப் போய்விட்டுத் திரும்பும்போது, கணவனின் அன்பு கூடியிருக்கும்போலத் தோன்றுவது இதனால்தான்!) தனியாக, ஆனால் ஆக்ககரமான சிந்தனைகளுடன் இருப்பவர்களே சாதிக்க முடியும். ‘நான் எப்போதும் தனிமையை விரும்புகிறவன்!’ என்று தன் நேரத்தை குருட்டுத்தனமான யோசனைகளிலும், எதிர்காலத்தைப்பற்றிய கனவுகளிலும் நிறைத்துக்கொள்பவர்கள் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறார்கள். இவர்களது அன்றாட வாழ்க்கையில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் மனமுடைந்து போய்விடுவார்கள். ஒன்றுமில்லாத விஷயத்துக்காக ஒரேயடியாகப் பூரித்து, அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பின், வாழ்க்கையில் சாதிப்பது எப்படி? “வேகமாகச் செல்ல தனியாகப் போ. நெடுந்தொலைவு செல்ல பிறருடன் சேர்ந்துகொள்!” (ஆப்பிரிக்கப் பழமொழி) அக்கண்டத்தில் கொடிய மிருகங்கள் உண்டு. பாலைவனங்களில் தண்ணீர் கிடைப்பது அரிது. அதனால், பிறருடன் சேர்ந்து போவது அபாயங்களைத் தவிர்க்க உதவலாம். அதற்காக, மாராதான் (Marathon) ஓட்டப்பந்தயத்தில் பிறருடன் இணைந்து செல்லவா முடியும்? நீதி: சிலருக்குச் சரியென்று படுவது எல்லாருக்கும் ஏற்றதாகாது. அழுமூஞ்சிகள் இவர்கள் சுமாரான வெற்றி அடைந்துவிட்டு, அதன்பின் தோல்வி அடைபவர்களாக இருக்கக்கூடும். தம்மைப்போல் இல்லாது, வெற்றிமேல் வெற்றி பெறுபவர்களை வீழ்த்த நினைப்பார்கள், தம்மையும் அறியாது. கதை “நான் பட்டப் படிப்பு படித்துத்தான் தீர்வேன் என்று வீட்டில் சண்டைபோட்டு, கல்லூரியில் சேர்ந்தேன். இப்போது ஏன்தான் இவ்வளவு படிக்க வேண்டுமோ என்று எரிச்சலாக இருக்கிறது. எப்படி பாஸ் பண்ணப்போகிறோம் என்று பயமாக இருக்கிறது!” என்று ஓயாமல் அரற்றுவாள் என்னுடன் படித்த பெண் ஒருத்தி. எட்டாம் படிவம்வரை பாடங்கள் தமிழில் இருந்தபோது, எல்லாவற்றிலும் பரிசுகள் வாங்கியவளுக்கு அவைகளை ஆங்கிலத்தில் படிக்க நேரிட்டபோது சிறப்பான தேர்ச்சி அடைய முடியவில்லை. கடுமையாக உழைப்பதைவிட புலம்புவது எளிது. இத்தகையவர்களின் ‘அழுகை’யைக் காதில் வாங்காமல் இருந்தால் பிழைத்தோம். இல்லாவிட்டால், நமக்கும் ’இவள் சொல்வது சரிதான்!’ என்று தோன்ற, நம்மைத் தளர்ச்சி அடைய வைத்துவிடும். எப்போதும் சிரித்த முகமா! ‘நீ நிறையப்பேரை பகைத்துக்கொள்கிறாய்!’ ஒரு முறை இப்படிக் கண்டனம் செய்யப்பட்டவர்கள் மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டு, பிறரை மகிழ்விக்க முயலுவார்கள். அப்படிச் செய்வதால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதோ, இல்லையோ, எப்போதும் சிரித்த முகத்துடனே வளைய வருவார்கள். பிறருக்காக ஒருவர் நடிக்கும்போது, தன் இயல்பான குணங்களை விட்டுக்கொடுக்கிறார். அதனால்தான் அவருக்கே புரியாத ஏதோ வெறுமை. நம்மைக் குறைசொல்பவர்களை வெளிப்படையாகப் பகைத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமோ என்ற குழப்பம் அநாவசியம். அவர்களை மாற்ற முயல்வதும் வீண் முயற்சி. போடு பழியை, பிறர்மேல் பலருக்கும் மாற்றம் என்றால் பயம். ‘நம்மை அறியாமலேயே ஏதேதோ நிகழ்கிறதே, நாம் வேறு வாழ்க்கையை இன்னும் குழப்பிக்கொள்ள வேண்டுமா?’ என்று ஒரே நிலையில் இருப்பார்கள். ‘விதி!’ ‘ஜோசியர் சொல்லி இருக்கிறார், எனக்கு இப்போது போதாத காலமாம்!’ என்று எவர் மேலாவது பழி போட்டு, தம் வாழ்வில் நடப்பது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், உற்சாகம் என்னவோ கிடையாது. நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் சம்பவங்களால் நாம் மாறலாம். ஆனால் அவை நம்மைத் தாழ்த்த விடக்கூடாது. நான்தான் தெனாலி – எல்லாவற்றிற்கும் பயம் புதிது புதிதாக எதையாவது செய்ய முற்படும்போது ஆர்வமும் பயமும் ஒருங்கே எழலாம். எதையும் புரிந்துகொண்டால் பயம் போய்விடும். எளிதான காரியம் ஒன்றை எவர் வேண்டுமானாலும் செய்யலாம். பிறர் செய்யத் தயங்கும் காரியத்தில் துணிச்சலுடன், ஆனால் தகுந்த பாதுகாப்புடன், இறங்குவதுதான் மகிழ்ச்சியைத் தரும். தன்னம்பிக்கையையும் வளர்க்கும். கதை “நான் பெரிய பயந்தாங்கொள்ளி! கல்லூரியில் கடலுக்கு அடியில் நீச்சலடிக்கும் பாடத்தை (ocean archaeology) எடுத்துக்கொண்டேன். அதற்கு முன்னர் சுமாராக நீச்சல் தெரியும். அவ்வளவுதான். இரண்டு பயிற்சியாளர்களுடன் நள்ளிரவில் பயிற்சி எடுக்க வேண்டும். முதலில் நடுக்கமாக இருந்தாலும், போகப் போக பயம் போய்விட்டது. உற்சாகமாக அப்பயிற்சியை எதிர்நோக்க ஆரம்பித்தேன்!” இப்போது, குடும்பத்துடன் படகில் போகும்போது, கடலில் குதிக்கிறாள் இப்பெண். பிறருக்கு மூச்சு நின்றுவிடுவது போலிருந்தாலும், இவள் முகத்தில் என்னவோ பூரிப்புதான். மேலே இருக்கும் கதையில், ‘இரண்டு பயிற்சியாளர்கள்’ என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். தனியாகப் போயிருந்தால், இன்று தன் வெற்றிக்கதையைச் சொல்லிச் சிரிக்க அவள் இருக்கமாட்டாள். ‘எனக்கு எதற்கும் பயம் கிடையாது!’ என்று யாரோ செய்வதைப் பார்த்து அபாயகரமான ஒரு காரியத்தில் ஈடுபடுவது மடத்தனம். தனிமை எப்போதும் இனிமையா? எப்போதும் பிறருடன் சேர்ந்தே இருந்தால், ஒருவர் மற்றொருவரைக் கட்டுப்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. நாளடைவில் எரிச்சல்தான் உண்டாகும். அவ்வப்போது பிரிந்திருப்பதே நல்லது. (மனைவி அவ்வப்போது தன் பிறந்தகத்துக்குப் போய்விட்டுத் திரும்பும்போது, கணவனின் அன்பு கூடியிருக்கும்போலத் தோன்றுவது இதனால்தான்!) தனியாக, ஆனால் ஆக்ககரமான சிந்தனைகளுடன் இருப்பவர்களே சாதிக்க முடியும். ‘நான் எப்போதும் தனிமையை விரும்புகிறவன்!’ என்று தன் நேரத்தை குருட்டுத்தனமான யோசனைகளிலும், எதிர்காலத்தைப்பற்றிய கனவுகளிலும் நிறைத்துக்கொள்பவர்கள் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறார்கள். இவர்களது அன்றாட வாழ்க்கையில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் மனமுடைந்து போய்விடுவார்கள். ஒன்றுமில்லாத விஷயத்துக்காக ஒரேயடியாகப் பூரித்து, அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பின், வாழ்க்கையில் சாதிப்பது எப்படி? எல்லாரையும் நம்பாதே! நண்பர்கள்போல் நடித்துக் குழி பறிப்பவர்களிடமிருந்து பயந்து ஓடினால், ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். அவர்களைச் சொல்லாலோ, செயலாலோ அடிப்பதால் நம் பலம் பெருகிவிடப் போவதுமில்லை. நமக்காகவே யார் நம்மை ஏற்கிறார்களோ, அவர்கள்தாம் உண்மையான நண்பர்கள். இவர்களே நம் திறமைகளை வெளிக்கொணர உதவுபவர்கள். இன்ஸ்டண்ட் வெற்றி ஏதாவது சாதிக்க விரும்புகிறவர்கள், ‘எத்தனை குறுகிய காலத்தில் இதை முடிக்கலாம்?’ என்றெண்ணி ஆரம்பித்தால் அரைகுறையாகத்தான் செயல்பட முடியும். உடனடி வெற்றி என்பது வீண்கனவு. ‘எல்லாவற்றையும் யார் யாரோ செய்துவிட்டார்களே! இனி என்ன இருக்கிறது!’ என்ற நம்பிக்கையின்மையை ஒழித்துக் கட்டிவிட்டு, இப்போது இருக்கும் சவால்களை, சந்தர்ப்பங்களை, நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டால் புதிய விஷயங்களில் நம் கவனம் செல்லும். விடாமுயற்சியால் எதையாவது செய்யலாம். சொந்தக்கதை சில வருடங்களுக்குமுன் பெட்டி பெட்டியாக இருந்த எனது கதைகளையும், புதினங்களையும் பார்த்தபோது, வருத்தமாக இருந்தது. எல்லாமே ஒருமுறை பிரசுரம் கண்டவை. தோள் வலிக்க, இரவு பகலாக பேனாவால் காகிதத்தில் எழுதியவை. அடித்துத் திருத்தும்போது, பல தடவை எழுத வேண்டியிருந்தது. ஆதாயம் இல்லாவிட்டாலும், எழுதும்போதே புத்துணர்வு எழ, விடாது எழுதினேன். ஆனால் எனக்குப்பின் அவையும் உபயோகமற்றுப்போய்விடுமே! அப்போது ஒருவர் நல்ல வழி ஒன்றைக் காட்டினார்: ‘இணையதளத்தில் எழுதுங்களேன்!’ ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் மிரண்டு போனேன். ஓருங்குறியா? அப்படியென்றால்? தட்டச்சு என்றால் டைப் செய்வதா? பலர் உதவிக்கரம் நீட்டினார்கள். கணினி அரிச்சுவடிகூட அறியாதிருந்த நான் இப்போது, “இண்டர்நெட்டில் எழுதுகிறேன்!” என்று சொல்லிக்கொள்ள முடிகிறது. பெருமையாக, எல்லாரிடமும் அல்ல – ’உங்கள் எழுத்துக்களை பத்திரிகைகளில் பார்க்கவே முடிவதில்லையே!” என்பவர்களிடம் மட்டும். இப்போது உலகெங்கும் வாழும் தமிழர்களில் 13,500 வாசகர்கள் “பள்ளியினூடே ஒரு பயணம்” என்ற என் ஒரு நாவலைப் படித்திருக்கிறார்கள், நகைச்சுவை புதினமாகிய “பெண்களோ பெண்கள்” பத்தாயிரம் வாசகர்களுக்குமேல் எட்டியுள்ளது என்றெல்லாம் அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க்கையில் நாம் சந்திக்கும், நமக்கு அறிமுகம் ஆகும் எல்லாருமே பொறாமை பிடித்து, நம்மை வீழ்த்தும் எண்ணம் கொண்டவர்களாக இல்லை என்ற உண்மை பெருமகிழ்ச்சியுடன் நிறைவையும் அளிக்கிறது. விழு-அழு-எழு முன்பு, என் பக்கத்து வீட்டு மலாய்க்காரப் பெண் சாயங்கால வேளைகளில் எங்கள் வீட்டுக்கு அவளுடைய கைக்குழந்தையுடன் வந்து, என்னுடன் பேசிக்கொண்டிருப்பாள். “எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது,” என்று ஆரம்பித்தவள், “குழந்தையின் குரல் ஆண்பிள்ளைகளுடையதுபோல் கட்டையாக இல்லையே!” என்றாள். அவளுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். “மூன்று மாதம்தானே ஆகிறது! பையனோ, பெண்ணோ, எல்லாக் குழந்தைகளுக்கும் குரல் கீச்சு மூச்சென்றுதான் இருக்கும். தானே பதினான்கு வயதானால் ஆண்பிள்ளைகளின் குரல் உடைந்துவிடும்,” என்று சமாதானப்படுத்தினேன். ““நிஜமாகத்தானே சொல்கிறீர்கள்? நான் ரொம்ப பயந்துவிட்டேன்!” என்று, திரும்பத் திரும்ப அதையே நான் சொல்லும்படி கேட்டுக்கொண்டாள்! ஆண்பிள்ளை என்றால் கட்டைக்குரலுடன், யாருக்கும் படியாத முரடனாக இருக்க வேண்டுமா, என்ன? ‘வீரம்’ என்றால் மீசையை முறுக்குவது, சிறு காரணத்திற்கெல்லாம் பிறரை அடித்து உதைப்பது, சட்டையின் பின்புறத்திலிருந்து அரிவாளை உருவுவது என்பதெல்லாம் தமிழ்ப்படங்கள் நமக்கு உணர்த்தும் பாடம். அதிகாரத்தால் பிறரை பயப்பட வைக்கலாம். ஆனால் அப்படிச் செய்வதால் உண்மையான அன்போ, மரியாதையோ கிடைக்குமா? மூன்று, நான்கு வயதுக் குழந்தை அழுதால்கூட, “ஐயையே! வெக்கமேயில்லே. ஆம்பளை அழலாமா?” என்று கேலி செய்து, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதுதான் ஆண்மையின் லட்சணம் என்று சிறு வயதிலேயே உணர்த்திவிடுகிறார்கள். அதனால், கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளும்போது, ‘அழுதால் பிறர் கேலி செய்வார்களே!’ என்று பயந்து, அதை அடக்கிக்கொள்வார்கள். எதையும் பொறுத்துப்போவதும் உண்டு. அது தவறு. கதை ஐந்து வயதுக்குள் இருக்கும் அவனுக்கு. எப்போதும் அழுவான். அப்படி என்ன வருத்தம் அவனுக்கு? தாத்தா காரணமில்லாமல் அவனைத் திட்டிக்கொண்டே இருப்பார். மரியாதை கருதி, அவனைப் பெற்றவர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில், அந்த வீட்டில் தாத்தா வைத்ததுதான் சட்டம். அப்படி ஒரு சர்வாதிகாரம். உறவினர்கள் அச்சிறுவனுக்குக் கொண்டுகொடுக்கும் விளையாட்டுச் சாமான்களை உடனே பிடுங்கி, அவனுக்கு எட்டாத தூரத்தில் வைத்துவிடுவார்கள். உடனே உடைத்துவிடுவானே! ‘என்ன கொண்டு வந்தார்கள்?’ என்று வம்படிக்க வரும் அக்கம்பக்கத்தினருக்கு உடைந்த சாமான்களையா காட்டுவது? தான் யாருக்குமே ஒரு பொருட்டாக இல்லையே என்ற ஏமாற்றத்துடன், வாயைத் திறந்தாலே மிக உரக்கத்தான் பேசுவான் சிறுவன். இல்லாவிடில், அழுதுகொண்டே இருப்பான். நல்ல வேளை, எல்லா விளையாட்டுகளிலும் ஈடுபாடு இருந்ததால், நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். இப்போது, உலகப் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஒன்றில் தலைமைப் பதவியில் இருக்கிறான். சிறு வயதில் அவனை அறிந்தவர்கள், ‘இவன் எப்படி இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்தான்!’ என்று வியப்படையும் அளவுக்கு ஒரு வளர்ச்சி. பொறுமையும் நிதானமும் அவன் குணமாகிவிட்டது. இளமையில் எவ்வளவோ கஷ்டப்பட்டபோதும், அவ்வப்போது அழுது அவைகள் தன்னைப் பாதிக்க விடவில்லை அவன். அத்துடன், பிற மனிதர்களின் குணமும் புரிந்துபோயிற்று. ஆண் என்றால் அதிகாரம் ஆண் என்பவன் எந்த நிலையிலும் உறுதி படைத்தவனாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியால் ஒருவரின் மன அழுத்தம்தான் அதிகரிக்கிறது. வளர்ந்த பின்னரும், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாது இருப்பவர் ஆண்மை மிகுந்தவராக இருக்கிறார் என்று பிறரை நினைக்க வைக்க முயலுகிறார்கள். தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களோ? அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு அடங்கி நடப்பவர்கள் வீட்டில் தம் அதிகாரத்தைக் காட்டி ஆறுதல் தேடிக்கொள்வார்கள். இவர்களைப் போன்றவர்கள் பெண்கள் தம்மைவிட உயர்ந்த நிலையில் இருந்தால் பலவீனமாக உணர்வார்கள். தம் அதிகாரத்தை மறைமுகமாக அவர்கள்மேல் செலுத்துவார்கள். மட்டம் தட்டவும் தயங்குவதில்லை. ‘ஆண்’ என்றாலே அதிகாரம் என்று எளியவர்களை ஆட்டிப்படைக்கும் குணம் எப்படி வருகிறது? முன்காலத்தில், ஒருவயதுக்குட்பட்ட பெண்களைவிட ஆண்குழந்தைகளே அதிகமாக இறக்க, அவர்களது உடல் நிலையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருந்ததாம். ‘பெற்றோரும் உற்றாரும் தம்மீது பாசத்தைப் பொழிகிறார்களே, தாம் உயர்த்தி என்பதால்தானே!’ என்ற எண்ணம் ஆண்களுக்கு அப்படி ஏற்பட்டிருக்கலாம். ஹார்மோனால் கூடுதலான உடல் வலிமைவேறு! (இப்போதும், முதுமையில் பெண்களைவிட ஆண்கள்தாம் சில வருடங்கள் முன்னரே இறக்கிறார்கள். பெண்கள் அவ்வப்போது அழுது தம் மனக்கவலைகளைத் தீர்த்துக்கொள்வதும் ஒரு காரணம்). ‘தவறு செய்துவிடுவோமோ!’ என்று பயந்து எதுவுமே செய்யாதிருப்பவரும் இல்லாமலில்லை. ஒரு வேலைக்கான பேட்டிக்கு வந்த பட்டதாரியிடம் கேட்கப்பட்ட கேள்வி: “சம்பளம் கிடைத்தால், என்ன செய்வாய்?” “வங்கியில் போடுவேன்!” அந்த இளைஞனுக்கு வேலை கிடைக்கவில்லை. புதிதாக எதையாவது கற்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமோ, தைரியமோ இல்லையே! பிறர் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்று எதிர்பாராது, ‘என்னால் முடியும்!’ என்ற நம்பிக்கையுடன் ஒரு காரியத்தில் பொறுப்பாக இறங்குபவர்கள்தாம் முன்னேறுகிறார்கள். சோம்பலுக்கு இடங்கொடேல் மிகுந்த பிரயாசையுடன் மலையேறுகிறார்களே சிலர், ஏன்? கடினமாக உழைப்பதே நாம் எதிலும் தோல்வி அடையாது இருக்கும் வழி என்று உணர்ந்தவர்கள் அவர்கள். ஒரு கடினமான முயற்சியில் ஈடுபடும்போது எவ்வளவோ வேண்டாத விமரிசனங்கள், இன்னல்கள் எழலாம். சில சமயங்களில், அபாயங்களும் இருக்கக்கூடும். அவை நிகழும்போது சற்று மனம் தளர்ந்தாலும், கீழே விழுந்து மீண்டும் எழுந்திருப்பதுபோல், விடாமுயற்சியுடன் தொடர்ந்தால், முன்பு இருந்ததைவிட உயரத்தில் இருப்பதைக் காண்போம். மனமும் உறுதி பெற்றிருக்கும். “ஆண்மை என்றால் தனிமையை விரும்புவது, அலட்டலாக நடந்துகொள்வது என்பதில்லை. சரியென்று நமக்குப்பட்டதை, விளைவு என்ன ஆகுமோ என்று யோசிக்காது, துணிச்சலுடன் செய்வது”. (மகாத்மா காந்தி) உடல் வன்மை இருக்கிறதோ, இல்லையோ, அறிவு, ஒழுக்கம், கடமை உணர்ச்சி எல்லாவற்றிலும் சிறந்திருப்பவர்களே மரியாதைக்கு ஏற்றவராகக் ஏற்கப்படுகிறார்கள். கதை தமிழ்நாட்டில் ஓரிடத்தில் பெண்பார்க்க என்னையும் அழைத்துப்போனார்கள் உறவினர்கள், என் மறுப்பை லட்சியம் செய்யாது. ‘நான் மூன்று தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்தேன்!’ என்று திரும்பத் திரும்ப என்னிடம் கூறினார் பெண்ணின் தந்தை. அவர் வீட்டில் அவ்வளவாக வசதி இருக்கவில்லை. ஆனால் தன் சுகத்துக்காக பொறுப்புகளைத் தட்டிக்கழிக்காது இருந்த தந்தை! கணவரின் போக்கில் குறுக்கிடாது, அவருக்குப் பக்கபலமாக இருந்த தாய். இவர்களிடம் வளர்ந்த பெண்ணும் அப்படித்தானே இருப்பாள் என்று நாங்கள் நினைத்தது வீண்போகவில்லை. எங்கள் குடும்பத்தில் ஓரங்கமாகி, எல்லாருடைய பாராட்டையும் பெற்றுவிட்டாள் அப்பெண். சிறு பிராயத்தில் உலகமே தன்னைச் சுற்றித்தான் இயங்குகிறது என்ற எண்ணம் இயற்கையாக எழுவது. வளர்ந்தபின்னும் அப்படியே இருந்தால் அது அழகல்ல. எப்போது, எதிலும், தான்தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றால் நடக்கிற காரியமா! பிறரை அடித்துப்பிடித்துக்கொண்டு முந்தாமல், விட்டுக்கொடுத்து, வெற்றியடைந்தால் அதற்காக தோல்வி அடைந்தவரை ஏளனமாகக் கருதாது இருப்பவர்களை ஜெண்டில்மேன் (gentleman) என்று குறிப்பிடுகிறோம். இவர்களே மாறுபட்டவர்களையும் புரிந்துகொள்ளும் சூட்சுமம் நிறைந்தவர்கள். பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுவிட்ட நடிகரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது: “நீங்கள் தலைசிறந்த நடிகர். ஒப்புக்கொள்வீர்களா?” தொண்ணூறு வயதான அவரது பதில்: “அப்படி நினைத்தால், அன்றே நான் இறந்துவிடுவது நல்லது!” வெற்றியால்தான் மகிழ்ச்சியா? “எனக்கு வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை. எதிலும் வெற்றி பெற முடியவில்லை!” இப்படிக் கூறுபவருக்கு முக்கியமான ஒன்று புரியவில்லை. மகிழ்ச்சி என்பது வெற்றியால் வருவதில்லை. நமக்குப் பிடித்ததை செய்தாலே போதும். பிடித்த காரியத்தை நாம் எதிர்பார்த்ததைவிடச் செம்மையாகச் செய்தால் கிடைப்பது மகிழ்ச்சி. தோல்வி ஏன்? ‘தோல்விக்குமேல் தோல்வி வருகிறதே!’ என்று மனமுடைபவர்கள் தங்கள் ஆற்றலுக்குட்பட்ட செயல்களைச் செய்யாமலிருக்கலாம். அல்லது, தவறுகளை மறக்கமுடியாது, அவைகளிலிருந்தும் பாடம் கற்காமல், திரும்பத் திரும்ப அதே தவறுகளைச் செய்பவர்களாக இருக்கலாம். பணம், புகழ், வெற்றி – இதெல்லாம் குறுகிய காலத்தில் வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். இவையெல்லாமே போதை தருவன. எவ்வளவு கிடைத்தாலும், இன்னும் அதிகமாக வேண்டும் என்ற பேராசைக்கு நம்மை உட்படுத்திவிடும். இவற்றைத் தட்டிப் பறிக்க யாராவது வந்துவிடுவார்களோ என்ற கவலை வேறு உடன் வரும். சில குழந்தைகள் சிரித்தபடி இருக்கும். இன்னும் சில குழந்தைகள் ‘உர்’ரென்று இருக்கும். ஏன் அப்படி? குழந்தை சிரித்தபடி இருக்க இரண்டு அல்லது மூன்று மாதங்களே ஆன குழந்தை விழிக்குமுன் தயாராக அதன் எதிரில் நின்றுகொண்டு, முகத்தில் சிரிப்பைத் தவழ விட்டுக்கொண்டால், நம்மையே உற்றுப் பார்க்கும். சில நாட்களில், அதன் இதழ்களும் சிரிப்பால் விரியும். அழும் குழந்தையை கண்ணாடியில் காட்டி, “அசிங்கமா அழறது பாரு, இந்த அசட்டுப் பாப்பா! எங்கே, நீ சிரி!” என்றால் சிரிக்கும். (இதெல்லாம் எனது ’பைத்தியக்காரத்தனமான’ கண்டுபிடிப்புகள்). இயல்பாகவே சிரிக்கக் கற்றால், என்ன நடந்தாலும் அதிகம் கலங்காது இருக்கமுடியும். தவற்றுக்குப் பயப்படாது இருக்கும் துணிச்சல் வரும். ‘நம்மால் முடியும்!’ என்ற நம்பிக்கையுடன், நிறைய சாதிக்க முடியும். ஆரோக்கியம் ஆரோக்கியம் முக்கியம்தான். ஆனாலும், நமக்கோ, நம்மைச் சார்ந்தவர்களுக்கோ உடலில் ஏதாவது குறைபாடு இருந்து, அதைத் தவிர்க்க முடியாது என்ற நிலை வருமாயின், பொறுமையுடன் ஏற்பது அமைதியைக் கெடுக்காது. சிலருக்கு மன ஆரோக்கியம் கிடையாது. எந்த சந்தர்ப்பத்திலும் பிறரைக் குறை கூறிக் கொண்டிருப்பார்கள். ஒரு பத்திரிகை விழாவில் நடந்த விருந்தில் பலவகை உணவு இருந்தது. சுவை எப்படி இருந்தது என்றெல்லாம் கேட்கக்கூடாது. ஒரு பெண், “வீட்டிலே தயிர் சாதம், ஊறுகாய் சாப்பிடறது இன்னும் நன்றாக இருக்கும், இல்லையா?” என்று என்னைக் கேட்டாள். நான் பதில் சொல்லவில்லை. பிறரிடம் என்ன குறை என்று ஆராய்ந்தபடி நம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தால், நம் மகிழ்ச்சிதான் கெடும். நமக்குப் பிடிக்காததை, ஏற்க முடியாததை விடலாமே! ஏதோ, அவர்கள் வசதிக்கு ஏற்றபடி ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று அனுசரித்துப் போகவேண்டியதுதான். எதிர்ப்பைச் சமாளி நம்மைப் பழித்துக் கீழே தள்ள முயற்சிப்பவர்களை, அல்லது ‘உலகை ஒட்டித்தான் வாழவேண்டும்!’ என்று நிர்ப்பந்தம் செய்பவர்களை எப்படிச் சமாளிப்பது? வாய் வார்த்தைகளாலோ, உணர்ச்சிபூர்வமாகவோ அவர்களுக்கு எதிராக எதுவும் செய்தால் அவர்கள் நினைத்ததுபோல், அவர்கள் வெல்ல விடுகிறோம். கூடியவரை, அமைதியாக இருக்க முயலவேண்டும். கதை சிறு வயதில் பெற்றோரும் ஆசிரியர்களும் திட்டி, அடித்து, ‘படி, படி’ என்று மிரட்டியதைக் கடைப்பிடித்து, கல்வியிலும் உத்தியோகத்திலும் உயர்ந்தாள் அமிர்தா. முப்பது வயதுக்குமேல், எதற்காக ஓர் ஆணுக்கு அடங்கி நடப்பது என்ற மனோபாவம் எழுந்தது. திருமணத்தில் ஆர்வம் காட்டாது இருந்தாள். ஆனால் பார்ப்பவரெல்லாம், ‘ஏன் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கிறாய்?’ என்று துளைத்தார்கள். அவளைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். இதை மற்றவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்களே என்று எரிச்சல்தான் ஏற்பட்டது. ஒப்பிடாதே! நாம் எவ்வளவுதான் முயன்றாலும், நம்மைவிடச் சிறப்பாக யாராவது இருப்பார். அவருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டு, வேண்டாத எண்ணங்களுக்கு இடங்கொடுத்தால் மகிழ்ச்சி ஏது! நாம் நாமாகத்தான் இருக்க முடியும். நமக்கு இருக்கும் நிறைகளை – பார்வை, நடக்கும் திறன் போன்றவைகளை – நினைத்துப் பார்த்தாலே போதுமே! உற்சாகம் எழும். கதை நல்ல அழகியான பூர்ணிமா இளம் விதவை. குடித்துவிட்டு, அவளை உடல் ரீதியாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் வதைத்த கணவன் இறந்தபோது, அதை பெரிய இழப்பாக அவள் கருதவில்லை. பிடிக்காத ஒன்றை இழப்பது இழப்பா, என்ன! ‘எல்லா ஆண்களும் இப்படித்தான் இருப்பார்களோ?’ என்று சந்தேகப்படாது, அவளை விரும்பிய ஒருவரை மறுமணம் செய்தாள். மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்க முடிந்தது. ‘நம் சமூகம் என்ன சொல்லிவிடுமோ!’ என்று எண்ணி அஞ்சாது, தனக்குப் பிடித்த காரியத்தைத் துணிச்சலுடன் செய்தது அவளுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது. நமக்கு உகந்த காரியத்தைச் செய்ய நாமே ஏன் தடை விதித்துக்கொள்ள வேண்டும்? ஆனால் அது பிறருக்குத் தீங்கு விளைவிக்காததாக இருத்தல் அவசியம். சுயக் கட்டுப்பாடு மனம் போனபடி நடந்தால்தான் மகிழ்ந்திருக்க முடியும் என்பதுபோல் சிலர் நடப்பார்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி நிலைக்காது. கதை கல்வியால்தான் உயரலாம் என்று புரிந்து, மிகுந்த பிரயாசையுடன் படித்து, பெரிய உத்தியோகத்திலும் அமர்ந்திருந்தான் சுப்ரா. ஆனால் பதின்ம வயதிலிருந்தே பெண்களிடம் முறைகேடாக நடந்துகொண்டான். புத்திசாலி ஆகையால், ரகசியமாகத் தொடர்ந்தது அவனது லீலைகள். திருமணம் ஆனதும், மனைவி லட்சுமி அவனைத் தெய்வமாகவே தொழுதாள். அவளைப் புகழ்ந்து, ‘நீ இல்லாமல் நானில்லை!’ என்று பசப்பி அவளை நம்ப வைத்திருந்தான். பெண்களின் மனப்போக்கு புரிந்தவன் ஆயிற்றே! “உங்களைப் பிள்ளையாகப் பெற உங்கள் அம்மா ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும்!” என்று அடிக்கடி தான் கணவரிடம் கூறுவதாக லட்சுமி என்னிடம் தெரிவித்தபோது, எனக்குப் பரிதாபம் மேலிட்டது. அப்போது எனக்கு அவன் குணம் தெரியும். முப்பது வருடங்கள் கழித்து, அவனுடைய உண்மையான சுபாவம் லட்சுமிக்குப் புரியவந்தது. ‘எவ்வளவு ஏமாளியாக இருந்திருக்கிறோம்!’ என்று தன்மேலேயே வெறுப்பு வந்தது. இப்போது அவள் கை ஓங்கியது. அவன் நடுநடுங்கிப்போனான். பெரிய உத்தியோகமும், யோசிக்காது செலவழிக்கும்படி வருமானமும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி; அதனால் மகிழ்ச்சி என்று நினைத்தவன் சுயக் கட்டுப்பாடு இல்லாததால் மகிழ்ச்சியை இழந்தான். தன்னைச் சுற்றி இருந்தவர்களின் மகிழ்ச்சியையும் பறித்தான். நம்மையே நாம் விரும்பி, பிறர்மேலும் அன்பு செலுத்துவது மகிழ்ச்சியை அளிக்கும் வழி. “ஒங்ககிட்ட சொன்னேனா? எனக்குப் பேரன் பிறந்திருக்கான்! இப்பவே முழிச்சு முழிச்சுப் பாக்கறான்!” என்று மூன்று மாதக் குழந்தையைக் கண்டு மகிழ்ந்து, பெருமை பேசும் தாத்தா இதைப் புரிந்துகொண்டிருப்பவர். கடுமையான உழைப்பு, எளிமை, கருணை ஆகிய குணங்கள் பொருந்தியவர்களே தாமும் மகிழ்ந்து, பிறரையும் மகிழவைப்பவர்கள். ஒரு சிறுமி தன்னிடம் அன்பாக இருந்த சித்தியைப் பார்த்து மகிழ்ந்து கூறிய வார்த்தைகள்: “நீதான் ஒலகத்திலேயே அழகானவ!” கோபம் பொல்லாத வியாதி கோபம் மனித இயற்கை. சிறு குழந்தைகூட பசி வரும்போது, அழுது, தன் தேவையை வெளிப்படுத்தும். உடனே பால் கிடைக்காவிட்டால், கோபம் அதிகரிக்க, அழுகையும் பலக்கும். ‘நான் கோபக்காரன். அதற்கு என்ன செய்வது? கோபம் இயற்கைதானே!’ என்று, கோபத்தை அடக்கத் தெரியாது, வன்முறையில் இறங்குபவர்களும் உண்டு. இது எந்த விதத்தில் சரி? கோபம் ஆத்திரமாக மாறும்போது, பிறரும் அதனால் பாதிக்கப்படுகிறார்களே! தார்மிக கோபம் தீயது என்று தெரிந்தே சிலர் செய்யும் காரியங்களால் நாம் அடையும் கோபம் இது. ‘ஒன் வே’ (One Way) என்று போட்டிருந்தாலும், எல்லாரும் தவறான வழியில் அத்தெருவில் காரோட்டிப் போகும்போது, ‘நான்தானே சரியாகப் போகிறேன்!’ என்ற மிதப்புடன் ஒருவன் சென்றால் யாருக்குக் கெடுதல் விளையும்? அவர்களைப் பின்தொடராது, வேறு வழியைப் பார்த்துக்கொண்டு போக வேண்டியதுதான். பதின்ம வயதினல் பலரும் உலகம் எப்படியெல்லாம் சிறந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்திருப்பார்கள். அது பொய்த்து, ‘உலகம் இவ்வளவுதானா!’ என்று தோன்றிப்போவதை ஏற்க முடியாதபோது, கோபம் வருவது இயல்பு. ஆனால், அதை மாற்ற முடியாது என்கிற உண்மை புரியும்போதும் அந்தக் கோபத்தை விடாமல் பிடித்துக்கொண்டிருப்பதால் யாருக்கு நன்மை? கோபத்தை ஒத்திப்போட்டால், அதன் தீவிரம் குறையும். மாற்று வழியும் புலப்படும். கதை ஒரு முறை நாங்கள் குடும்பத்துடன் மிருகக்காட்சி சாலைக்குப் போயிருந்தபோது, மலாய் இளைஞன் ஒருவன் தன் கைநிறைய சிறு சிறு கற்களை வைத்துக்கொண்டு, கூண்டுக்குள் இருந்த குரங்குக்குட்டிமேல் எறிந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் அது வலியில் துடித்துக் கத்தியபடி வேறு இடத்துக்குத் தாவியபோது, உரக்கச் சிரித்தான். பக்கத்திலிருந்த காதலியைப் பார்த்துப் பெருமிதத்துடன் பார்த்தான் – என்னமோ தன் வீரத்தால் அவளை அசத்த நினைத்தவன்போல். எங்களால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அவன் காதில் படும்படி, “மிருகங்களைப் பிடிக்காதவர்கள் இங்கு (Zoo) வந்திருக்கவே கூடாது!” என்று ஆங்கிலத்தில் கடுமையாகச் சொன்னாள் என் மகள். முகம் சிறுத்துப்போக, அவன் அங்கிருந்து விரைந்தான். நிராசையே கோபம் ஒன்றரை வயதுக் குழந்தையான பாலன் ஓயாது ஏதேதோ பேசினான். மழலையில் அவன் கூறியது தாய்க்கு விளங்கவில்லையே என்று அழுதும் பார்த்தான். அப்படியும் பலனில்லாது போகவே, நிராசை கோபமாக மாறியது. அம்மாவைக் கோபித்துக்கொள்ள முடியுமா? தன்மேலேயே கோபம் வர, நெற்றியைச் சுவற்றில் முட்டிக்கொள்ள ஆரம்பித்தான். நெற்றி புடைத்துப்போயிற்று. ஆனாலும் அம்மாவுக்கு அவன் மொழி புரியவில்லை. ‘அப்படிச் செய்யாதே!’ என்று அவள் மன்றாடியும், அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. அதனால், அவன் சுவற்றருகே போகும்போதெல்லாம் தன் கையை அதன்மேல் வைத்து, அவனுடைய நெற்றியைப் பாதுகாப்பாள் தாய்! தெருவில் நெரிசல் அதிகமாக இருக்கும்போது, எல்லா வாகன ஓட்டிகளும் பல்வேறு ஒலிகளை எழுப்புவார்கள். இதனால் முன்னாலிருப்பவர்கள் வேகமாகப் போய்விடுவார்களா, என்ன? பிறர் தான் நினைத்தபடி நடக்கவில்லையே என்ற ஆத்திரத்தை வெளிப்படுத்த ஏதோ ஒரு வழி! இதேபோல், பதவியிலிருக்கும் சிலர் செய்யும் அக்கிரமங்களை பார்ப்போரிடமெல்லாம் கூறிக் கூறி அங்கலாய்ப்பார்கள் சிலர். இதற்கென்றே டீக்கடைகளுக்குப் போகிறவர்களும் உண்டு! ஒருவர் அடையும் கோபத்தால் பிறரை மாற்றிவிடுவது நடக்காத காரியம். கதை எவ்வளவோ எதிர்பார்ப்புகளுடன் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்திருந்தாள் துர்கா. ஆனால், அவள் கணவன் ஈச்வரனோ, எப்போதும்போல் தன் நண்பர்களுடனேயே பெரும்பொழுதைக் கழித்தான். இரவில் நேரங்கழித்து அவன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் துர்கா தன் கோபத்தில் உழன்று கொண்டிருப்பாள். அவர்களுக்குடையே விவாதம் முற்றும். அவளைத் தவிர்க்க, இன்னும் அதிக நேரத்தை வெளியில் செலவிட்டான் ஈச்வரன். துர்காவின் ஆரோக்கியம் கெட்டது. மன இறுக்கம் தலைவலி, வயிற்றுக்கோளாறு, இளைப்பு என்று பல உபாதைகள். சில வருடங்களுக்குப் பிறகு, கணவனை மாற்ற முடியாது என்று புரிந்துகொண்டாள். செய்ய முடியாத காரியத்திற்காகத் தன் உடலை எதற்காகக் கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஞானோதயம் பிறக்க, தோழிகளுடன் நேரத்தைச் செலவிட ஆரம்பித்தாள். ‘விவாகரத்து,’ என்று வழிகாட்டினர் சிலர். துர்கா ஒப்பவில்லை. எந்த எதிர்பார்ப்பையும் விடுத்து, தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட்டாள். மனமும் தெளிந்தது. இவள் சுமுகமாக, ஈச்வரனும் அதிகப் பொழுதை வீட்டில் கழிக்க ஆரம்பித்தான். (இது நடக்க பல வருடங்கள் ஆயின). நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால் போட்டியில் பரிசு பெறாதவன் நீதிபதிகளைக் குற்றம் சாட்டுவதும், உற்றவர் இறந்துவிட்டால், மருத்துவர்மேல் கோபம் கொள்வதும் இயற்கை. ஆனால் அந்தக் கோபம் நீண்ட காலம் நம்மைப் பாதிக்க விடுவது அபாயம். பரிசும் கிடைக்கப் போவதில்லை, இறந்தவர் மீண்டு வரப்போவதுமில்லை. கையாலாகாத்தனத்தால் வரும் கோபம் கதை “தெருவில நடக்கும்போது மனைவி என் கையைப் பிடித்து அழைச்சுட்டுப்போறா! எப்படிங்க!” “இவரு தன்பாட்டில நடுரோட்டில நடக்கிறாருங்க! பயமா இருக்கே!” அத்தம்பதிகள் இருவரும், மாறி, மாறி, என்னிடம் முறையிட்டார்கள். கணவருக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் இருதயத்தில் அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. ‘இனிமே நீ என்கூட வராதே!’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு, தனியாகப் போக ஆரம்பித்திருந்தார். மனைவியின் பயம் நியாயமானதுதான் என்றாலும், எந்த ஆணுக்குத்தான் மனைவி தன்னைக் குழந்தைபோல் நடத்துவதை ஏற்க முடியும்? “சின்னக் குழந்தைக்குச் சொல்றதுமாதிரி ஒவ்வொண்ணையும் அவருக்குச் சொல்லிக் குடுக்காதீங்க! ஃப்ரீயா விடுங்க!” என்று நான் எடுத்துச் சொன்னேன். “அவங்க ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க,” என்று அவர் மனைவிக்குப் பரிந்தார்! கணவனும், மனைவியும் இப்படி ஒருவருக்காக மற்றவர் கவலைப்படுவதைப் பார்க்க நிறைவாக இருந்தது. சிரிப்பும் வந்தது. இல்லற வாழ்வில் இல்லாத பூசல்களா! ஏமாற்றமே கோபமாக எல்லாருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் கோபம் வரத்தான் செய்யும். அத்தருணங்களில் ஒருவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் அவரது குணத்தை எடைபோட முடியும். எங்கள் வீட்டருகே இருந்த கடையில் ஒரு கிலோ உருளைக்கிழங்கை ஒவ்வொன்றாகப் பொறுக்கி வாங்கினேன். ‘கொஞ்சம் குறைகிறதே!’ என்று கடைக்காரர் கரிசனமாக தானே ஒரு கிழங்கை எடுத்துப்போட்டார். வீட்டுக்கு வந்து பார்த்தால், அந்தக் கிழங்கு அழுகல்! கடைக்காரர் தான் மிகவும் பக்திமான் என்று சொல்லிக்கொள்வார். ஒரு பள்ளிக்கூடத்தில் மதபோதகர் வேறு! எதிலிருக்கும்போதே ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்ற கோபம் என்னுள் வினாடிக்கு வினாடி அதிகரித்தது. திரும்பக்கொடுப்பது என்று முடிவெடுத்ததும் மனம் சமாதானமாக, வேறு காரியங்களைக் கவனித்தேன். ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் கடைக்குப் போய், “நீங்கள் போட்ட கிழங்கைப் பாருங்கள்,” என்று காட்டினேன், கடுமையாக. “நீங்கள்தானே எடுத்துக்கொண்டீர்கள்?” என்றார், பதிலுக்கு. விடாப்பிடியாக, “நீங்கள் இப்படிச் செய்தது நன்றாகவேயில்லை,” என்றதும், “சரி, சரி. வேறு எடுத்துக்கொண்டு போங்கள்!” என்றார் அசுவாரசியமாக. சிறு விஷயம்தான் என்றாலும், என் கோபம் வெற்றிச் சிரிப்பாக மாறியது. கோபம் என்பது ஒருவர் அடையும் பயத்தால், வருத்தத்தால் வருவது. கதை பதினேழு வயதான மாலினியை அவளுடைய பாட்டு வாத்தியாரே கெடுக்க முயற்சித்தார். அவள் தப்பித்துவிட்டாலும், தான் பெரிதும் மதித்த ஒருவர் இப்படிச் செய்துவிட்டாரே என்ற வருத்தம் நாளடைவில் கோபமாக மாறியது. நடந்த சம்பவத்தைப் பிறரிடம் பகிர்ந்து, ஆறுதல் தேடவும் பயம். ‘அவருடைய நடத்தைக்கு நீதான் காரணம்!’ என்று பழியைத் தன்மீதே போட்டுவிட்டால் என்ன செய்வது? இதனால் பார்க்கும், பழகும் ஆண்களையெல்லாம் சந்தேகப்பட ஆரம்பித்தாள். (முன்னெச்சரிக்கையாக, மாலினி ஒரு தோழியுடன்தான் சென்றிருந்தாள். ‘அவளையும் ஏன் அழைச்சுண்டு வந்தே?’ என்று அவர் ஆத்திரப்பட்டபோதே அவளுக்குச் சந்தேகம் எழுந்திருந்ததால் தப்பிக்க முடிந்தது). பல வருடங்கள் கழித்து, மாலினி தன் துயரக்கதையை என்னிடம் பகிர்ந்துகொண்டாள், ‘யாரிடமும் சொல்லிவிடாதே!’ என்ற கெஞ்சலுடன். ‘இதில் உன் தவறு எதுவுமில்லை,’ என்று சுட்டிக்காட்டினேன். ஓர் அறியாப்பெண்ணைத் தனியாகத் தன் வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டு, அவளை பலாத்காரம் செய்ய முயன்றவர்தான் – அதிலும், அவளைவிட இருபது வயது மூத்தவர் _ குற்றமிழைத்தவர். ‘பாடவே பிடிக்காமல் போய்விட்டது!’ என்று ஒப்புக்கொண்டாள். பல பிரபலமான ஆசிரியர்களிடம் இசை பயின்று, நல்ல பாண்டித்தியம் கொண்டவள். ‘வாத்தியார் கெட்டவராக இருந்தால், அதுக்கு (கர்னாடக சங்கீத மாமேதைகள்) தியாகராஜரும், தீக்ஷிதரும் என்ன செய்வார்கள்? அவர்கள்மேல் உனக்கு என்ன கோபம்?’ என்று எடுத்துரைத்தேன். சற்றுத் தெளிந்து, ‘அதுவும் சரிதான்,’ என்று மீண்டும் பாட ஆரம்பித்தாள். கோயில்களில் மட்டும் மனமுருகிப் பாடுவாள். நமக்கு ஆத்திரம் விளைவித்தவரின்மீது நாம் எவ்வளவுதான் கோபப்பட்டாலும், அவருக்கு அதனால் ஒரு பாதிப்பும் கிடையாது. கெடுவது என்னவோ கோபத்தைத் தமக்குள்ளேயே அடக்கிவைத்தவர்களின் உடலும், மனமும்தான். திறமைகளும் வெளிப்படாமலேயே போய்விடும். என்றோ நடந்தது ‘சிறு வயதில் அப்பா காரணமின்றி அடித்தார், ஆசிரியை திட்டினாள்,’ என்று நடந்து முடிந்தவைகளை (அவை நடந்தபோது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும்) பெரியவர்களானபோதும் ஓயாது அசைபோட்டு வாடுவார்கள் சிலர். இவர்களது நிகழ்காலம் மட்டுமன்றி எதிர்காலமும் வீணாகாதா! “கோபம் அடைவதால், பிறர் நம்மைத் தண்டிக்கப்போவதில்லை. கோபமே நம்மைத் தண்டித்துவிடும்” (யாரோ). பயணம் போகலாமா? ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஆசிய எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி ஒன்றை வைத்திருந்தனர். நீதிபதிகள் ஒரு கண்டுபிடிப்பைத் தெரிவித்திருந்தனர்: அந்த இருபது எழுத்தாளர்களும் ஒரு நாட்டிற்குமேல் வசித்திருப்பவர்கள். (அவைகளில் என்னுடையதும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது). வேலை நிமித்தம் வெளிநாடு செல்பவர்களைத் தவிர, வெகு சிலருக்குத்தான் பயணம் செய்யப் பிடிக்கிறது. சிலர் உள்நாட்டில்கூடப் பிரயாணம் செய்யத் தயங்குவார்கள். கதை “விடுமுறை வரப்போகிறதே! எங்கே போகப்போகிறாய்?” என்று என்னுடன் வேலை பார்த்த மிஸஸ் சின்னைக் கேட்டேன். அந்த இளம் சீனப்பெண், “எனக்கு வெளியூர்களுக்குப் போகவே பிடிக்காது. திரும்பி வந்ததும் குப்பை மாதிரி சாமான்கள் கிடக்கும்! அவைகளை ஒழித்துவைக்க எனக்குப் பொறுமை கிடையாது,” என்று முகத்தைச் சுளித்தாள். அவளுடைய போலிச்சிரிப்பும், நயந்து பேசி, பிறரை உபயோகப்படுத்தும் தன்மையும் அவளைப் பிறருக்குப் பிடிக்காமல் செய்திருந்தது. நிறையப் பயணம் செய்பவளாக இருந்திருந்தால், பலதரமான மக்களை அறிந்திருக்க முடியும். பார்ப்பவர்களெல்லாம் தனக்கே உதவ வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை அகன்றிருக்குமோ? அனுபவம் புதுமை ‘வாழ்க்கை ஒரு நீண்ட பயணம்!’ என்கிறார்கள். நம் வாழ்வில் அடுத்து என்ன நிகழப்போகிறது என்று தெரியாது. அதுதான் சுவாரசியமே. வீட்டைவிட்டு வெளியே செல்லும் பயணமும் அப்படித்தான். நல்லதும் நடக்கலாம், நமக்குப் பிடிக்காததும் நடக்கக்கூடும். அனுபவங்கள் என்று எடுத்துக்கொண்டால், நமக்கு வேண்டாதவற்றை மறுமுறை தவிர்க்கலாம். விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு என்று சொல்லி வைத்திருக்கிறார்களே! பிறர் வீட்டில் தங்கினால் நாம் அடுத்தவருக்குச் செலவு வைக்கிறோம் என்பது ஒருபுறமிருக்க, அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளை நம் சௌகரியத்துக்காக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். புதிய இடத்தில் வசதி, பிறருடைய பழக்கவழக்கங்களைப் புரிந்து நடப்பது – இதெல்லாம் நமக்கும் கடினம்தான். நாட்டின் அருகாமையிலுள்ள பிற நாடுகளைச் சுற்றிப் பார்க்கவோ சில தினங்களே போதும். வீடு திரும்புகையில், எல்லாமே புதியதாகத் தோற்றமளிக்கும். புத்துணர்ச்சி பெருகுவது இதனால்தான். எவ்வளவுதான் புதிய அனுபவங்களைப் பெற்று வந்தாலும், வெளியில் அலைந்து திரிந்து, ஓய்ந்துபோய் வந்தால், ‘நம் வீடு, நம் அறை!’ என்று நிம்மதியாக, மிதப்பாக இருக்கும். வியட்நாமில் ஒரு கோயிலில் ஷேக்ஸ்பியரைக் கடவுளாகக் கும்பிடுகிறர்கள்! புதிதாக ஓரிடத்திற்குச் செல்கையில், அங்கு எதை எதிர்பார்க்க முடியும் என்பதை அறியாததே உற்சாகத்தை அளிக்கவல்லது. எதையும் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க முடிவதால், அங்கு பெறும் அனுபவங்களே சிறந்த கல்வி. வித்தியாசமான பிறரை ஏற்று, விசாலமான மனப்பான்மையை அடைய ஒருவருக்கு தூரப்பயணத்தைப்போன்று வேறில்லை. ஆனால், அவை மட்டமானவை என்ற எண்ணம் கொண்டால் நம் வளர்ச்சியில் ஒரு மாற்றமும் இருக்காது. இருபது ஆண்டுகளுக்குமுன், இந்தோனீசியாவிலுள்ள பாலித் தீவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இடுப்பில் சாரோங் மட்டும் உடுத்துப் போவதைக் கண்டிருக்கிறேன். மார்பு திறந்திருக்கும். அது அவர்கள் கலாசாரம். மலேசியாவிலும், பூர்வ குடியினப் பெண்கள் அப்படித்தான். வெளிநாட்டுக்காரர்கள் இவர்களை புகைப்படம் எடுத்ததைப் பார்த்து எனக்கு ஒரே ஆத்திரமாக இருந்தது. பெண்மையை மதிக்கத் தெரியாதவர்கள்! ஆனால், இப்போது இப்பெண்களெல்லாம் சட்டை அணிகிறார்கள். அவர்களது நாகரீகத்தை மதிக்காது, உல்லாசப்பயணிகள் விரிந்த கண்களுடன் புகைப்படம் எடுத்ததன் விளைவோ? புதிய இடங்களில், நமக்குச் சிறுவயதில் சொல்லிக் கொடுக்கப்பட்டவைகளை வேறு கோணத்திலிருந்து பார்க்கவும் கற்கிறோம். அவைகளை மாற்றுவதிலேயே ஒரு மகிழ்ச்சி. கதை மழை நாட்களில் என் தாய் என்னை பள்ளிக்கூடம் அனுப்பமாட்டாள், ‘மழையில் நனைந்தால் ஜூரம் வரும்!’ என்று. மறுநாள் ஆசிரியரிடம் திட்டு வாங்குவேன், ‘நீ என்ன வெல்லக்கட்டியா? கரைஞ்சு போயிடுவியா?’ என்று. சில ஆண்டுகளுக்குமுன், பாலியில் நானும் என் பேத்தியும் ஒரு சாயங்கால வேளையில் உலவச் சென்றோம். எங்களுடன் அருகில் தங்கியிருந்த செல்லம்மாள் என்ற ஒரு மூதாட்டியும் வந்திருந்தாள். வழியில் மழை வரும்போல் இருந்தது. அந்த அம்மாள் பயந்து, திரும்பிப் போய்விட்டாள். நாங்கள் தங்குமிடம் பதினைந்து நிமிடத் தொலைவில் இருக்க, “இன்னும் சில நிமிடங்களில் மழை வரப்போகிறது. எப்படியும் நனையப்போகிறோம். எதற்காக ஓடவேண்டும்?” என்றேன். என் பேத்திக்குப் பரம சந்தோஷம். (எந்தச் சிறுமியைத்தான் நனைய விட்டார்கள் பெற்றோர்!) மழை கொட்ட, இருவரும் கைகளைக் கோர்த்து, வீசிக்கொண்டு, பாடியபடி மெதுவாக நடந்தோம். பார்ப்பவர்களெல்லாம் சிரித்து, “குடை கொண்டுவரவில்லையா?” என்று (அநாவசியமாக) விசாரித்தார்கள். நாங்களும் சிரித்தபடி கையை ஆட்டினோம். அறைக்குத் திரும்பியதும், குளிர்ந்த நீரில் தலைக்குக் குளித்தோம். அப்போதுதான் மழைநீர் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மறுநாள் காலை. செல்லம்மாள், “நல்ல வேளை, நான் ஓட்டமும் நடையுமா மழைக்குமுந்தி வந்துட்டேன்!” என, நான், “நாங்க ஜாலியா மழையிலே நனைஞ்சுண்டே வந்தோம்!” என்றேன், அந்த நினைவு எழுப்பிய பூரிப்புடன். “ஜாலியா?” என்று விழித்தாள் அம்மாது. எங்களுக்குக் காய்ச்சல் வரவில்லை என்பதுடன், சில வருடங்களுக்குப் பின்னரும் அந்த நிகழ்ச்சி பசுமையாக மனதில் பதிந்திருக்கிறது என்றால், அது அந்த வித்தியாசமான அனுபவம் அளித்த மகிழ்ச்சியால். எல்லாம் மனதில்தான் கானடா நாட்டிலுள்ள விக்டோரியா தீவில் (அது ஆர்க்டிக் பகுதியாம்) நான் சந்தித்த ஒரு ஐரோப்பிய மாது மிக மெல்லிய சட்டை மட்டும் அணிந்திருந்தாள். நானோ, சட்டைக்குமேல் ஸ்வெட்டர், கோட்டு இத்தியாதிகளோடு நடுங்கிக்கொண்டிருந்தேன். “உங்களுக்குக் குளிரவில்லையா?” என்று அதிசயப்பட்டுக் கேட்டேன். “நான் சின்னப்பெண்ணாக இருந்தபோது, என் பாட்டி, “குழந்தே! ரொம்பக் குளிர்கிறது. வாசலில் நிற்காதே!’ என்று பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். இப்போது இந்தக் குளிர் என்னை எதுவும் செய்வதில்லை. எல்லாம் நம் மனதில்தான் இருக்கிறது,” என்று சிரித்தாள். அவள் வீட்டில் பல பூனைகள் இருந்தன. சாய்பாபா பஜன் கேட்கும்போதெல்லாம் அவை ஒரே இடத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும் என்று கூற ஆச்சரியமாக இருந்தது. எந்தப் பயணமும் எளிதாக அமைந்து விடுவதில்லை. காய்ச்சல், தலைவலி, அஜீரணம் (அல்ட்ரா கார்பன்தான் (ULTRA CARBON) மிகச் சிறந்தது என்று விமானதளத்தில் உள்ள கடையில் சிபாரிசு செய்ய, உடனுக்குடன் குணப்படுத்தும் அது இல்லாமல் நான் எங்கும் செல்வதில்லை), வயிற்றுப்போக்கு என்று பலவித உபாதைகளுக்கும் மருந்துகளை எடுத்துப்போவது நல்லது. புதிய இடத்தில் மருந்துக்கடையைத் தேடி அலைய வேண்டியதில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக நிறைய இடங்களைச் சுற்றிப்பார்க்கலாம். எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டாலும், எப்படியோ குளறுபடி ஆகிவிடும். அதற்குப் பயந்து, நமக்குப் பழக்கமான சொகுசான இடத்திலேயே இருந்தால், புதிய அனுபவங்கள் எப்படிக் கிடைக்கும்? என்னதான் படித்தாலும், தொலைகாட்சியில் பார்த்தாலும் நேரில் பார்ப்பதுபோல் ஆகுமா? தென்கிழக்கு ஆசியாவிலிருக்கும் அங்கோர் வாட்டைக் கண்டு களிக்க கம்போடியா சென்றிருந்தபோது, போரில் கால்களை இழந்தவர்கள் உட்கார்ந்த நிலையில் பாடிப் பிழைப்பதையும், அங்கிருந்த KILLING FIELDS என்னுமிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்டையோட்டையும் கண்டு மிகுந்த அதிர்ச்சி உண்டாயிற்று. அதேபோன்ற பாதிப்பைத்தான் வியட்நாமிலிருந்த யுத்த கால அருங்காட்சியகமும் உண்டாக்கியது. “இனிமேல் இங்கெல்லாம் வரவே கூடாது,” என்றேன், அந்த வேதனை அளித்த அலுப்புடன். என் மகள், “இங்குள்ள மக்களின் பிழைப்புக்கு நம்மைப்போன்ற உல்லாசப் பயணிகள் பெருமளவு உதவுகிறார்கள். யாருமே வராவிட்டால் என்ன ஆகும்?” என்றாள். உண்மைதான். பயணங்கள் மேற்கொள்வதால், நமது அறிவும் விசாலமாகிறது, அந்நியர்களும் பலனடைகிறார்கள். ‘எப்போதும் மகிழ்ச்சி குன்றாத நிலையில்தான் இருப்பேன்!’ என்றால் நடக்கிற காரியமா? துன்பம் அனுபவித்தால்தானே இன்பத்தின் அருமை புரியும்? பள்ளியில் BULLY நான் மலேசியாவிற்கு வந்தபின் ஒரு புதிய ஆங்கில வார்த்தையைக் கற்றேன்: BULLY. அப்படியென்றால், ஒருவரை மிரட்டியோ, அச்சுறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ அவருக்கு இணக்கமில்லாத காரியத்தைச் செய்யவைப்பது. இதனால் பாதிக்கப்பட்டவர் மனம் நோகும். பல சந்தர்ப்பங்களில், உடல் நிலையும் நீண்ட காலம் பாதிக்கப்படலாம். ஏன், மரணத்தில்கூட முடியலாம். உண்மைக்கதை (ஆதாரம்:THE STAR, ஜூன், 2017) சமீபத்தில் மலேசியாவில் நடந்த அவலக்கதை இது. பதினைந்து வயதாக இருந்தபோது, பினாங்கிலுள்ள பள்ளிக்கூடத்திற்குச் சென்ற மகன், நவீன், அலங்கோலமாக வீடு திரும்பியதைக் கண்டு தாய் திடுக்கிட்டாள். விசாரித்தபோது தெரிந்தது, இவனைச் சில மாணவர்கள், ஆண்பிள்ளைத்தனமாக இல்லை, ‘கோழை’ என்று கேலி செய்தனர் என்று. வன்முறைக்கு ஆளாக்கினால், அவன் மாறிவிடுவான் என்று நினைத்தவராக அடித்துப் போட்டிருக்கிறார்கள். ‘ஆசிரியர்களிடம் சொன்னால், இன்னும் அடி வாங்குவாய்!’ என்று மிரட்டியிருக்கிறார்கள். மறுநாளே தாய் பள்ளிக்கூடத்திற்குச் சென்று அந்தப் பையன்களைக் கண்டித்திருக்கிறாள். ‘இன்னும் இரண்டு வருடங்களில் படிப்பு முடிந்துவிடும்!’ என்று மகனுக்கு ஆறுதல் அளித்தாள். நவீனுக்கு இசைதான் உலகமே. பரம சாது. பதினெட்டு வயதில் பள்ளி வாழ்க்கை முடிந்து, தாற்காலிகமாக உத்தியோகமும் தேடிக்கொண்டான். ஆறு மாதங்கள் கழிந்தபின், இவனைக் கொடுமைப்படுத்தியவர்களை மீண்டும் சந்திக்க நேர்ந்தது என்று தாயிடம் தெரிவித்த நவீன், அவர்களிடம் எதுவும் கேட்கவேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறான். அப்போது அவளுக்குத் தெரியவில்லை, முதல் முறை அவள் கண்டித்தபோது, மகனுடைய தலையை சுவற்றில் மோதி அவர்கள் பழி தீர்த்துக்கொண்டார்கள் என்று. இதை அமைப்பதைக் கற்க கோலாலம்பூரில் ஒரு கல்லூரியில் அடுத்த வாரம் சேருவதாக இருந்தான் நவீன். ஆனால் அது நடக்கவில்லை. அண்மையில், (ஜூன்12) ஏதோ தின்பண்டம் வாங்க கடைக்குச் சென்ற நவீனுடன் அவனுடைய நெருங்கிய நண்பன் ஒருவனும் இருந்தான். அப்போது பள்ளியில் அவர்களுடன் படித்த அந்த ஆறு பேரும் சேர்ந்து இருவரையும் ஹெல்மெட்டால் அடித்திருக்கிறார்கள். நண்பன் தப்பிக்க, நவீனை எரித்து, பாலியல் வதைக்கும் ஆளாக்கிவிட்டார்கள். நண்பன் அடையாளம் காட்ட அவர்கள் பிடிபட்டுவிட்டாலும், brain dead என்று முதலில் அறிவிக்கப்பட்ட நவீன் மூன்று நாட்களுக்குப்பின் இறந்துபோனான். (தனித்து வாழும் அவன் தாய்க்கு ஒரு மகள் இருக்கிறாள்). ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? பிறரைத் தொடர்ச்சியாக வன்முறைக்கு ஆளாக்குபவர்கள் உண்மையில் பயந்தாங்கொள்ளிகள். (இவர்களேகூட வன்முறைக்கு ஆளாகி இருக்கக்கூடும்). தம்மைப்போன்ற பிறரைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு, கோழை என்று தாம் நினைப்பவரை, அல்லது உடல்வலிமையிலோ சமூக நிலையிலோ தம்மைவிட குன்றியவரை அடையாளம் கண்டுகொண்டு, பலவிதமாக நோகடிப்பார்கள். அப்படிச் செய்யும்போதெல்லாம் தம் வலிமை கூடுவதுபோன்ற பிரமை உண்டாகும். இதுவும் ஒருவித போதைதான். இப்போது கணினிவழி பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் கிளம்பிவிட்டார்கள். இதை CYBER BULLYING என்கிறார்கள். நீண்ட காலம் இப்படிப்பட்டவர்களுக்கு இலக்காகுபவர்கள் எளிதில் நிம்மதி பெறமுடியாது போகும். கதை ஒரு பெண்ணைப்பற்றி கண்டபடி இணையத்தில் எழுதிப் பரப்பினாள் கூடப் படிக்கும் பெண்ணொருத்தி. அவை உண்மை இல்லையென்றாலும், பாதிக்கப்பட்டவளுக்கு மனம் நொந்தது. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குப் போய்விட்டாள். வேறு சிலர் எப்படி இந்தக் கொடுமையைத் தவிர்ப்பது என்று புரியாது, தன்னம்பிக்கை இழந்து, மது, போதைப்பொருள், வன்முறை ஆகியவைகளை நாடுகிறார்கள். அல்லது, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடத்தை விட்டுவிட்டாலும், கணினிமூலம் விளையாடுபவர்கள், மின்னஞ்சல் வைத்திருக்கும் இளைஞர்கள் ஆகியோர் பாலியல் வதை (வேண்டாத விவரங்களை அனுப்புவது) உட்பட ஏதோ ஒருவித வதைக்கு ஆளாகிறார்களாம். இதனால், இளைஞர்கள் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று அவர்களுடைய பெற்றோர் கண்காணிப்பது அவசியமாகிறது. (வீட்டில் கணினி வசதி இல்லாதவர்கள் கடைக்குப் போய், கண்ட விளையாட்டுகளில் ஈடுபடுவது கூடுதலான அபாயம் விளைவிக்கும்). தற்போதைய கணினி யுகத்தில் இது உலகளாவிய பிரச்னை ஆகிவிட்டது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று Stop cyerbullying Day அனுசரிக்கப்படுகிறது. காலம் மாறிப்போச்சு பக்கத்து வீட்டு மலாய்க்காரப் பெண் சாயங்கால வேளைகளில் எங்கள் வீட்டுக்கு அவளுடையகைக்குழந்தையுடன் வந்து, என்னுடன் பேசிக்கொண்டிருப்பாள். “எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது,” என்று ஆரம்பித்தவள், “குழந்தையின் குரல் ஆண்பிள்ளைகளுடையதுபோல் கட்டையாக இல்லையே!” என்றாள். அவளுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். “மூன்று மாதம்தானே ஆகிறது! பையனோ, பெண்ணோ, எல்லாக் குழந்தைகளுக்கும் குரல் கீச்சு மூச்சென்றுதான் இருக்கும். தானே பதினான்கு வயதானால் ஆண்பிள்ளைகளின் குரல் உடைந்துவிடும்,” என்று சமாதானப்படுத்தினேன். “நான் ரொம்ப பயந்துவிட்டேன்!” என்று ஒத்துக்கொண்டு, திரும்பத் திரும்ப அதையே நான் சொல்லும்படி கேட்டுக்கொண்டாள்! சிறு குழந்தையானாலும், ஆண்பிள்ளை என்றால் கட்டைக்குரலுடன், யார் சொல்வதையும் கேட்காத முரடனாக இருக்க வேண்டுமா? ‘வீரம்’ என்றால் மீசையை முறுக்குவது, சிறு காரணத்திற்கெல்லாம் பிறரை அடித்து உதைப்பது, சட்டையின் பின்புறத்திலிருந்து அரிவாளை உருவுவது என்றெல்லாம் சினிமா நமக்கு உணர்த்துகிறது. அதிகாரத்தால் பிறரை பயப்பட வைக்கலாம். ஆனால் அவர்களுடைய உண்மையான அன்போ, மரியாதையோ கிடைக்காது. ஜெண்டில்மேன் (gentleman) என்று யாரைக் குறிப்பிடுகிறோம்? பிறரை அடித்துப்பிடித்துக்கொண்டு முந்தாமல், விட்டுக்கொடுத்து, வெற்றியடைந்தால் அதற்காக தோல்வி அடைந்தவரை ஏளனமாகக் கருதாது இருப்பவர்களை. தன்னிலிருந்து மாறுபட்டவர்களையும் புரிந்துகொள்ளும் சூட்சுமம் நிறைந்தவர்களை. உணர்ச்சி காட்டக்கூடாதா? மூன்று, நான்கு வயதுக் குழந்தை அழுதால்கூட, “ஐயையே! வெக்கமேயில்லே. ஆம்பளை அழலாமா?” என்று கேலி செய்து, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதுதான் ஆண்மையின் லட்சணம் என்று சிறு வயதிலேயே உணர்த்திவிடுகிறார்கள். அதனால், கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளும்போது, ‘அழுதால் பிறர் கேலி செய்வார்களே!’ என்று பயந்து, அதை அடக்கிக்கொள்வார்கள். எதையும் பொறுத்துப்போவதும் உண்டு. ஆண் என்பவன் எந்த நிலையிலும் உறுதி படைத்தவனாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியால் ஒருவரின் மன அழுத்தம்தான் அதிகரிக்கிறது. வளர்ந்த பின்னரும், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாது இருப்பவர் ஆண்மை மிகுந்தவராக இருக்கிறார் என்று பிறரை நினைக்க வைக்க முயலுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் உணர்ச்சி என்னவோ கொந்தளித்துக்கொண்டுதான் இருக்கும். ‘ஆண்’ என்றாலே அதிகாரம் என்று எளியவர்களை ஆட்டிப்படைப்பது ஆணுக்கு அழகுதானா? அலுவலகங்களில் அதிகாரிகள் அப்படிச் செய்யும்போது, அடங்கி நடப்பவர்கள் வீட்டில் தம் அதிகாரத்தைக் காட்டி ஆறுதல் தேடிக்கொள்வார்கள். இவர்களைப் போன்றவர்கள் பெண்கள் தம்மைவிட உயர்ந்த நிலையில் இருந்தால் பலவீனமாக உணர்வார்கள். தம் அதிகாரத்தை மறைமுகமாக அவர்கள்மேல் செலுத்துவார்கள். ‘தவறு செய்துவிடுவோமோ!’ என்று பயந்து எதுவுமே செய்யாதிருப்பரும் இல்லாமலில்லை. ஒரு வேலைக்கான பேட்டிக்கு வந்த பட்டதாரியிடம் கேட்கப்பட்ட கேள்வி: “சம்பளம் கிடைத்தால், என்ன செய்வாய்?” “வங்கியில் போடுவேன்!” அந்த இளைஞனுக்கு வேலை கிடைக்கவில்லை. புதிதாக எதையாவது கற்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமோ, தைரியமோ இல்லையே! பிறர் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்று எதிர்பாராது, ‘என்னால் முடியும்!’ என்ற நம்பிக்கையுடன் ஒரு காரியத்தில் பொறுப்பாக இறங்க இவனைப்போன்றவர்களால் முடியுமா? சோம்பலுக்கு இடங்கொடேல் ஆண்மைத்தனம் மிக்கவர்களுக்கு எதுவும் செய்யாது சோம்பி இருப்பது கடினம். மிகுந்த பிரயாசையுடன் மலையேறுகிறார்களே சிலர், ஏன்? கடினமாக உழைப்பதே நாம் எதிலும் தோல்வி அடையாது இருக்கும் வழி என்று உணர்ந்தவர்கள் அவர்கள். ஒரு கடினமான முயற்சியில் ஈடுபடும்போது எவ்வளவோ வேண்டாத விமரிசனங்கள், இன்னல்கள் எழலாம். சில சமயங்களில், அபாயங்களும் இருக்கக்கூடும். அவை நிகழும்போது சற்று மனம் தளர்ந்தாலும், கீழே விழுந்து மீண்டும் எழுந்திருப்பதுபோல், விடாமுயற்சியுடன் தொடர்ந்தால், முன்பு இருந்ததைவிட உயரத்தில் இருப்பதைக் காண்போம். மனமும் உறுதி பெற்றிருக்கும். உடல் வன்மை இருக்கிறதோ, இல்லையோ, அறிவு, ஒழுக்கம், கடமை உணர்ச்சி எல்லாவற்றிலும் சிறந்திருப்பவர்களே மரியாதைக்கு ஏற்றவராகக் ஏற்கப்படுகிறார்கள். கதை தமிழ்நாட்டில் ஓரிடத்தில் பெண்பார்க்க என்னையும் அழைத்துப்போனார்கள் உறவினர்கள், என் மறுப்பை லட்சியம் செய்யாது. ‘நான் மூன்று தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்தேன்!’ என்று திரும்பத் திரும்ப என்னிடம் கூறினார் பெண்ணின் தந்தை. அவர் வீட்டில் அவ்வளவாக வசதி இருக்கவில்லை. ஆனால் தன் சுகத்துக்காக பொறுப்புகளைத் தட்டிக்கழிக்காது இருந்த தந்தையிடம் வளர்ந்த பெண்ணும் அப்படித்தானே இருப்பாள் என்று நாங்கள் நினைத்தது வீண்போகவில்லை. எங்கள் குடும்பத்தில் ஓரங்கமாகி, எல்லாருடைய பாராட்டையும் பெற்றுவிட்டாள் அப்பெண். சிறு பிராயத்தில் உலகமே தன்னைச் சுற்றித்தான் இயங்குகிறது என்ற எண்ணம் இயற்கையாக எழுவது. வளர்ந்தபின்னும் அப்படியே இருந்தால் அது அழகல்ல. எப்போது, எதிலும், தான்தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றால் நடக்கிற காரியமா! பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுவிட்ட நடிகரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது: “நீங்கள் தலைசிறந்த நடிகர். ஒப்புக்கொள்வீர்களா?” தொண்ணூறு வயதான அவர் பதில்: அப்படி நினைத்தால், அன்றே நான் இறந்துவிடுவது நல்லது!” “ஆண்மை என்றால் தனிமையை விரும்புவது, அலட்டலாக நடந்துகொள்வது என்பதில்லை. சரியென்று நமக்குப் பட்டதை, விளைவு என்ன ஆகுமோ என்று யோசிக்காது, துணிச்சலுடன் செய்வது”. (மகாத்மா காந்தி) நீங்கள் குதர்க்கவாதியா? ‘குதர்க்கம்!’ யாராவது உங்களை இப்படிப் பழித்திருக்கிறார்களா? பெருமைப்படுங்கள்!  நீங்கள் சுயமாகச் சிந்திக்கிறீர்கள். உங்களுக்குக் கற்பனைத்திறன் அதிகம் என்பதைப் பிறர் புரிந்து கொள்ளவில்லை.   உங்கள் தனித்திறமையைக் காட்ட வரைவது, எழுதுவது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட ஆரம்பிக்கவில்லையா இன்னும்? ஒருவர் எப்போது எழுத்தாளனாக ஆசைப்படுகிறார் என்றால், பிறரது எழுத்தை நிறையப் படித்தபின், ‘இதைவிட நன்றாக என்னால் எழுதமுடியுமே!’ என்ற எண்ணம் எழும்போது. ‘என்ன எழுதுவது?’  என்ற குழப்பமானால், ஒரு நோட்டுப் புத்தகத்தில் உங்களைப் பாதித்த ஏதாவது ஒன்றைப்பற்றி கொஞ்சம் எழுதுங்கள். முடிவைப்பற்றி யோசிக்காது,தினமும் தூங்குமுன் இருபது நிமிடங்களாவது அதற்காகச் செலவிடுங்கள். நாளடைவில்,எழுதுவது எளிதாகும். பிரபலமான ஆங்கில எழுத்தாளர்கள் பலரும் இம்முறையைப் பரிந்துரைக்கிறார்களே என்று நானும் முயன்று பார்த்தேன். நல்ல பலன் கிடைத்தது. ஒரு சிறு புத்தகத்தை எப்போதும் உங்களுடன் வைத்துக்கொண்டிருந்தால், வெளியில் போகும்போது வித்தியாசமாகக் காணப்படும் எதையாவது உடனடியாகக் குறித்துக்கொள்ள முடியும். திரைப்படங்கள், நல்ல எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஆகியவையும் கற்பனையைத் தூண்ட வல்லவை. உதாரணமாக, ஒருவன் காதலியுடன் வந்த பெண்ணைப் பார்க்கிறான்.அவன் மனம் சலனமடைகிறது என்று குதர்க்கமாக யோசியுங்கள்.  ‘இவள்தான் எனக்கு ஏற்றவள்!’ என்று தோழியை  மணந்துகொள்கிறான். அப்போது காதலியின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்தால், ஒரு கதை கிடைக்கும். ஒவ்வொரு நாளையும் ஒரேமாதிரி கழிக்காது, அதாவது வீட்டு வேலை முடிந்து புத்தகத்தைக் கையில் எடுத்தபடியே தூக்கம் அல்லது தொலைகாட்சி பார்ப்பது என்று நேரத்தைச் செலவிடாது,  அசாதாரணமாக எதையாவது செய்வது மூளைக்குப் பயிற்சி கொடுப்பதுபோல். உதாரணம்: இயற்கைக் காட்சிகளை ரசித்துப் பார்த்தபடி சாயந்திர வேளையில் உலவுவது. வெவ்வேறு திசைகளில், வேடிக்கை பார்த்துக்கொண்டே நடப்பது(பார்ப்போர் நம்மைப் பைத்தியம் என்று நினைத்தாலும்) வித்தியாசமாகச் சிந்திக்க வைக்கும். நடைப்பயிற்சியால் மன இறுக்கம் குறைய, கற்பனைக் குதிரை விரைந்து ஓட ஆரம்பிக்கும். வளரும்போதே தாழ்வு மனப்பான்மை “ஒன் தங்கையைப் பார்! எப்படி கலகலன்னு இருக்கா! நீயும் இருக்கியே,உம்மணாமூஞ்சி!” “என்ன இருந்தாலும் நீ பொம்பளைப்பிள்ளை!” இம்மாதிரியெல்லாம் பெரியவர்களால் சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள் தாழ்மை உணர்ச்சியுடன் வளர்கிறார்கள்.  துணிந்து எதையும் சாதிக்கப் பயம் எழுகிறது.தம்மைப்போல் இல்லாத பிறரைப் பார்த்து ஆச்சரியமோ, பொறாமையோ எழுகிறது.   இப்படிப்பட்டவர்கள் எந்த வயதானாலும், ‘நான் ஒரு தனிப்பிறவி. பிறர்போல் இருக்க வேண்டிய அவசியமில்லை,’ என்று தமக்குத்தாமே வலியுறுத்திக்கொண்டால் தன்னம்பிக்கை வளரும். எத்தனை வயதானாலும், பிறர் கூறுவதையெல்லாம் ஆமோதித்து, அதன்படியே இம்மி பிசகாது நடக்க ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மூளை எதற்கு? அரைத்த மாவே அரைபடுவது இதனால்தான். ‘ஊருடன் ஒத்து வாழ்!’ என்று என்றால், ஒருவருக்குத் தனித்தன்மை இருக்கக்கூடாது என்று அர்த்தமா?   எழுத்தால் புரட்சி பேனாவால் கத்தியைவிட அதிகம் சாதிக்க முடியும். பிறர் எழுதியதைப் படித்தே தம் வாழ்வின் போக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் எத்தனைபேர் துணிந்து, பேனா (இப்போது கணினி) பிடிக்கிறார்கள்? ‘புரட்சி எழுத்தாளர்!’ நூதனமான, ஆனால் சமூகத்தை நல்விதமாக மாற்றக்கூடிய கருத்துக்களை எழுதுபவரை பலவீனமாக்க சிலர் கையாளும் உத்தி இது. தமக்குச் சாதகமாக இருக்கும் நடைமுறையை இவள் ஏன் மாற்ற முயற்சிக்கிறாள் என்ற அச்சத்தில் அவளைப் பழிக்கிறார்கள். எப்போதும் பிறரால் பாராட்டப்பட வேண்டும் என்று நினைத்து வாழ்பவர்களால் எதையும் சாதிக்க இயலாது. எந்தவித எதிர்ப்பையும் சமாளித்து, துணிந்து  எதிர்க்கும் தைரியம் இருப்பவர்களால்தான் எத்துறையிலும் நிலைத்து நிற்க முடிகிறது.   கரு எப்படிக் கிடைக்கும்? பரிச்சயமில்லாதவர்களுடன் பேசினால், புதிய விஷயங்களை அறியமுடியும். ஒரு முறை தைப்பூசத்திற்கு முதலிரவு நான் மலேசியாவில் பிரசித்தமான பத்து மலைக்குச் சென்று தங்கினேன். தனியாக. பையில் பேனா, காகிதத்துடன்.லட்சக்கணக்கான பக்தர்களும், காவல் துறை அதிகாரிகளும் அங்கிருந்ததனால் பயமில்லை. நள்ளிரவில் மழை பிடித்துக்கொண்டது. ஒரு கட்டடத்தின்கீழ் தங்கியபோது,அருகிலிருந்த முதியவர் தாமாகப் பேசினார்: “கட்டையன் உசிருள்ள பாம்பை கத்தியால ரெண்டா வெட்டி, சீனியில தோய்ச்சு சாப்பிடுவாம்மா!” அவர் குறிப்பிட்டது ஜப்பான்காரனை என்று புரிந்து, “உங்களுக்கு எப்படித் தெரியும்?”என்று சந்தேகத்துடன் வினவினேன். புதிய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள நிறைய கேள்விகள் கேட்க நேரிடும்.சிலர், ‘நம்மைச் சோதிக்கிறாளோ?’ என்று ஆத்திரப்படவும் செய்வார்கள். அனைவருக்குள்ளும் பல விஷயங்கள், அந்தரங்கம்  இருக்கின்றன. அதை யாரிடம் சொல்லி நிம்மதி அடையலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.உண்மையாகவே தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறோம், நமக்கு அவர் கூறப்போவதில் ஆர்வம்  என்பதைப் புரியவைத்தால், தயக்கமின்றி பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். 1942 -ல், அன்றைய சயாமிலிருந்து பர்மாவரை ஒரு ரயில் பாதையை அமைக்க பல்லாயிரக்கணக்கானவர்கள் தேவைப்பட்டனர். அதற்காக மலாயாவில் வாழ்ந்தவர்கள்,   பிணைக்கைதிகளாக இருந்த ஆங்கிலேயர்கள் ஆகியோரை ஜப்பானியர்கள் பிடித்துப்போனார்கள். என் பக்கத்தில் அமர்ந்திருந்தவரும் ஒருத்தராம். (மதுக்கடையிலிருந்தபோது, அங்கிருந்த அனைவரையும் துப்பாக்கி முனையில் ஒரு லாரியில் கடத்திக்கொண்டு போய்விட்டனர், வீட்டுக்கே தெரியாது). நான் பேராவலுடன் பல கேள்விகள் கேட்டேன் அதைப்பற்றி.  வாய்வழி சரித்திரம் போல் ஆகுமா? எங்களைச் சுற்றி பத்து இளைஞர்களும் சுவாரசியமாக அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நிறையப் பேசிவிட்டு, பழைய நினைவுகளின் தாக்கத்தைத் தாங்கமுடியாது, “போகணும்!” என்று எழுந்து, வேகமாக அப்பால் சென்றார்.     கும்பலோடு கும்பலாக இருக்க வேண்டும், தனித்துத் தெரியக்கூடாது என்று பழைய புடவை ஒன்றைக் கட்டிக்கொண்டு போயிருந்தேன் அன்று. நட்புடன் பழகி, தன் விரிப்பில் என்னைப் படுத்துக்கொள்ள உபசாரம் செய்த வெள்ளையம்மா என்ற மாது, ‘டீச்சருங்களுக்கு சம்பளம் கம்மியா?’ என்று விசாரித்தாள்! அவளுடைய கணவனையும் ஜப்பானியர்கள் பிடித்துப்போக இருந்தபோது, எதிர்வீட்டு இளைஞனின் குடும்பத்துக்கு முன்னூறு வெள்ளி கொடுத்து, கணவனுக்குப் பதிலாக அவனை அனுப்பினார்களாம். போன இடத்தில் இறந்த 60,000 தமிழர்களில் அவனும் ஒருத்தனாகிப்போனான். அதனால்தான் அரைகுறையாக நின்றுபோன பலரின் முயற்சி இன்று “மரண ரயில்வே” என்று அழைக்கப்படுகிறது. “நாங்க முன்னூறு வெள்ளி குடுத்தோம்!” என்று திரும்பத் திரும்ப அழுத்திச்சொன்னாள் வெள்ளையம்மா, தனது குற்ற உணர்ச்சியைக் குறைத்துக்கொள்ள முயற்சிப்பவளாக. (அந்தக் காலத்தில் ஒரு சவரன் தங்கம் பத்து அல்லது இருபது வெள்ளியாக இருந்திருக்கும். ஐம்பது வருடங்களுக்குமுன்னரே முப்பது வெள்ளிதான். அப்போதெல்லாம், ‘பணத்தட்டுப்பாடு வந்தால், அடகு வைத்துக்கொள்ளலாம். தங்கம் வாங்குங்கள்,’ என்று வானொலியில் தமிழில் அறிவுரை கூறுவார்கள். தொடுத்து வைத்த மல்லிகைச்சரம்போல், தங்கச்சங்கிலியை கடை வாசலில் தொங்க விட்டிருப்பார்கள்.காவலுக்கு யாரும் கிடையாது என்பது என்னைப் பெரிதும் அதிசயப்படுத்தியது.வாடிக்கையாளர் தமக்கு வேண்டிய நீளத்தில் வெட்டச் செய்து வாங்கிப் போவார்!) பூரி, அது, இது என்று தைப்பூசத்திற்கு முதல் நள்ளிரவில் சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலை, சக்கரங்களில் அமைக்கப்பட்ட, தாற்காலிகமான கழிப்பறைகளுக்கு வெளியே பெரிய வரிசை. ‘ஒண்ணுக்குப் போறதுக்கெல்லாம் காசு கேக்கறான்!’ என்று ஒரு பெண்மணி கத்திக்கொண்டிருந்தாள். ஓர் உபகாரி எல்லாருக்கும் வாளியில் தண்ணீர் கொண்டு வந்தபடி இருந்தாள். புதிய அனுபவங்களைத் தேடிப்போனால், அசௌகரியங்கள் ஏற்படத்தான் செய்யும்.அவைகளைப் பெரிது பண்ணாமல் ரசிக்கத் தெரிந்தால், எல்லாமே அனுபவங்கள்தாம்.உடனுக்குடன் எழுதுகிறோமோ, இல்லையோ, மூளை சுறுசுறுப்பு குன்றாமல், எப்போதுமே நம்மை உற்சாகமாக வைக்கும். பொறுத்துப்போகவேண்டுமா! சீனாவில் ஒரு நாளைக்கு இருநூறு பேர், ‘எங்கள் தாம்பத்தியம் தொடர்ந்து நடக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன்!’ என்று ஷி என்கிற கவுன்சிலரிடம் வந்தவண்ணம் இருக்கிறார்களாம். இவர்களில் எழுபது சதவிகிதம் படித்து, உத்தியோகம் பார்க்கும் பெண்கள். ஐந்து வருடங்களுக்குள் திருமணம் புரிந்தவர்கள். கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கிறான் என்பதுடன், ஒருவரை ஒருவர் எப்படிப் பொறுத்துப்போவது என்பதில்தான் குழப்பம். புக்கக்கத்தினருடன் ஒத்துப்போக முடிவதில்லை என்பதும் ஒரு காரணமாம். (ஆதாரம்: THE STAR, 21-9-16). இப்போது தமிழ்ப்பெண்களுக்கு வருவோம். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தாம் இலக்கியத்தில் படித்ததையும், வீட்டில் முதிய பெண்டிர் சொல்லி வந்ததையும் கடைப்பிடித்தவர்கள் நாம். அதுதான், ‘பெய்யெனப் பெய்யும் மழை,’ வீட்டில் நடப்பது நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும், பத்தினி ஒருத்தி கல்லால் ஆன நெல்லிக்காயை வேகவைத்தது, – இப்படி எவ்வளவோ மறைமுகமான அறிவுரைகளும் கதைகளும் இருக்கின்றனவே! சுருங்கச் சொன்னால், கணவன் கடவுளைப்போல் இல்லாவிட்டாலும், பொறுமையின் பூஷணமாகத் திகழ்ந்தார்கள். நிம்மதியும், மகிழ்ச்சியும் இருந்ததோ, என்னவோ, ‘நான் ஒரு நல்ல மனைவி!’ என்று பெருமிதம் கொண்டார்கள். ஒரு முதிய மாது, ‘நான் பாட்டுக் கச்சேரிக்குப் போயிட்டு, லேட்டா வந்தேனா! மு என்று அவர் திட்டினாருடி!’ என்று பிற பெண்களிடம் பெருமையுடன் சொல்லிக்கொண்டதைக் கேட்டிருக்கிறேன். (‘கணவரை இழந்தவள்’ என்ற பொருள்பட கணவரே திட்டிவிட்டால் சரியாகப் போயிற்றா?) ‘அது ஏன், பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முதலில் கணவனின் கை ஓங்கியிருக்கிறது, ஆனால் வயதானபின், சுதந்திரம் அற்றவன்போல் அவன் எல்லாவற்றிற்கும் மனைவியை நாடுகிறான்?’ நாற்பது வயதான ஒரு சீன மாது என்னிடம் கேட்ட கேள்வி இது. ‘என் பெற்றோரும் அப்படித்தான். ஆனால், இந்தத் தலைமுறையில் நாங்கள் எல்லோரும் காதல் கல்யாணம்தான்! நானும் என் கணவரும் மிகுந்த நட்புடனும், மரியாதையுடனும் ஒருவரை ஒருவரை ஒருவர் நடத்துவோம்,’ என்று தெரிவித்தாள். அவள் சொன்னதுபோல், வயதான காலத்தில் கணவர் தன்னை நாடுவார் என்று பிறரைப் பார்த்துத்தான் நம்பிக்கையோடு பல பெண்கள் பொறுமைசாலிகளாக இருந்தனரோ? ஆனால் எல்லாப் பெண்களுமா இப்படி இருக்கிறார்கள்! கணவன் செய்வது எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து, ஏளனம் செய்து, நான்கு பேர் முன்னிலையில் கண்டபடி பேசும் பெண்களும் நம்மிடையே இல்லாமலில்லை. ஏன் இப்படி நடக்கிறார்கள் என்று பார்த்தால், சில காரணங்கள் தட்டுப்படுகின்றன. அவர்கள் பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி கணவன் எதுவும் சாதித்துவிடவில்லை; ஏதாவது கெட்ட பழக்கத்தில் ஈடுபட்டு, சேமிப்பைத் தொலைத்துவிடுகிறான்; அல்லது என்ன காரணத்தாலோ ஆண்வர்க்கத்தின்மீதே அவர்கள் கொண்ட வெறுப்பு, அவநம்பிக்கை, இன்னும் பல. கதை: சுகன்யாவின் தாய் இப்படித்தான். தந்தையோ குடும்பத்தில் எதற்கு வீண் குழப்பமென்று மனைவி எவர் முன்னாலும், என்ன ஏசிப் பேசினாலும் வாயைத் திறக்காது இருந்துவிட்டார். அவரைக் கண்டு நொந்துபோய், ‘எனக்குக் கல்யாணம் ஆனால், நான் அம்மாவைப்போல் இல்லாது, அருமையான மனைவியாக இருப்பேன்,’ என்று தீர்மானம் செய்து கொண்டதுபோல் பரமசாதுவாக வளர்ந்தாள் சுகன்யா. வாய்த்தவன் எவ்வளவு கொடுமை செய்தாலும், தந்தையைப்போல் பொறுத்துப்போனாள். இருபது, இருபத்தைந்து வருடங்கள் இப்படி துன்பத்தை அனுபவித்துவிட்டு, பிறகு சற்றுத் தெளிந்து, ‘அவர் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். நான் என் வாழ்க்கையை என் விருப்பப்படி அமைத்துக்கொள்கிறேன்!’ என்பதுபோல், சுதந்திர உணர்ச்சியோடு வாழ்கிறாள். காலம் மாறிவிட்டது. படித்து, பொருளாதார சுதந்திரம் கொண்ட பெண்கள், ‘பெண் என்றால் விட்டுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டுமா?’என்று வாதம் செய்கிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மூன்று பேரை நான் இந்த விவகாரத்திற்கென பேட்டி கண்டேன். எல்லாருமே முப்பது வயதைத் தாண்டியவர்கள். ’தன்னையே கிறக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணையே ஆண்கள் விரும்புகிறார்கள்!’ என்றாள் ஒருத்தி, கசப்புடன். ‘நான் என்னைவிட குறைந்த படிப்பும், சம்பளமும் உள்ள ஒருவனையே மணப்பேன். அப்போதுதான் என் கை ஓங்கியிருக்கும்!’ என்றார்கள், ஒருமித்து. ‘ஒருக்கால், தாழ்மை உணர்ச்சியால் பாதிக்கப்பட்டு, அவன் உங்களை முதலில் மட்டமாக நடத்த ஆரம்பித்துவிட்டால்?’ என்று எதிர் கேள்வி கேட்டேன். ‘முதலில் பழகிப்பார்த்துவிட்டுத்தானே மணப்போம்!’ என்று பதில் வந்தது. இவர்களில் ஒருத்தி குழந்தையே வேண்டாம் என்றிருக்கிறாள். இன்னொரு பெண்ணோ, குழந்தைகளைச் சரிவர கவனிக்காது, தன் முன்னேற்றம், தன் சம்பாத்தியம் என்று சுயநலத்துடன் வாழ்கிறாள். மூன்றாமவளின் திருமணம் ஒரு குழந்தைக்குப்பின் விவாகரத்தில் முடிந்தது. வேறொரு பெண் கல்யாணமான நாற்பத்தைந்தாவது நிமிடத்தில்(!), ‘நான் இவனுடன் வாழ முடியாது!’ என்று விவாகரத்து கோரினாளாம். காரணம்: திருமணம் முடிந்து எந்தக் காரில் வீடு செல்வது என்பதில் இருவரது கருத்தும் வேறுபட்டதாம்! உலகில் எட்டு சதவிகிதத்தினர், ‘அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது? எங்கு தங்குவது?’ என்ற கலக்கம் இல்லாது வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை எளிதுதான். ஏனோ பலரும் தாமே அதைக் கடினமாக்கிக் கொள்கிறார்கள். எதுதான் நல்ல தாம்பத்தியம்? மகிழ்ச்சியாகப் பல வருடங்கள் சேர்ந்திருக்கும் தம்பதிகளைப் பார்த்தால் ஒன்று புரிகிறது. குடும்பங்களில் யாரும் யாரையும் பொறுத்துப் போகவேண்டியது போன்ற நிலைமை இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தாமல், தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, நல்ல ஆலோசனையாக இருந்தால், ‘உன்னை யார் கேட்டது?’ என்று அலட்சியப்படுத்தாது ஏற்று, ‘பெண்ணின் வேலை’, ‘ஆணின் வேலை’ என்ற பாகுபாடு இன்றி எல்லாவற்றிலும் பங்கு போட்டுக்கொள்வது, ஒருவர் ஆத்திரப்படும்போது, மற்றவரும் சேர்ந்து கத்தாமல் விலகிப்போவது, கணினியைப்போல் என்றோ மனதில் பதிந்த வேண்டாத சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வராமல் இருப்பது போன்ற தன்மைகள் தம்பதியரின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும். அவர்களுக்குள் சண்டையே வராது என்பதில்லை. ஆனால், அதிலிருந்து மீண்டுவரத் தெரிந்தவர்கள் இவர்கள். இருவரில் ஒருவராவது, ‘நான் இப்படிச் செய்தால், அடுத்தவரின் உணர்ச்சிகள் பாதிப்படையுமோ?’ என்று யோசித்து நடந்தால், தானே மற்றவரும் அதேபோல் நடக்கத் தலைப்படுவார். பிறரது உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்தவரால்தான் சுயநலமின்றி தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்க முடியும். சகோதரச் சண்டைகள் கல்யாணமாகியிருந்த ஓர் இளம்பெண்ணிடம், ‘உன் சிறுவயதில் நடந்ததில் ஏதாவது ஒன்று மீண்டும் நடக்காதா என்று நீ ஆசைப்படுவது எது?’ என்று கேட்டேன். யோசிக்காது வந்தது அவள் பதில்: ‘என் அண்ணனுடன் பிடித்த சண்டைகள்!’ பிறகு, சற்று ஏக்கத்துடன் தொடர்ந்தாள் ‘இப்போது சண்டையே போட மாட்டேன் என்கிறான். விட்டுக்கொடுத்து விடுகிறான்!’ கூடப்பிறந்தவர்களுடன் சண்டை போடாத குழந்தை இருக்கிறதா? சந்தேகம்தான். போட்டி பெற்றோரின் அன்பில் தனக்குப் போட்டியாக வந்துவிட்டதே என்று மூத்தவனும், ‘நான்தான் அம்மா வயத்திலேருந்து முதல்லே வந்திருக்கணும். அண்ணாவுக்குத்தான் எல்லாம் நிறையக் கிடைக்கிறது!’ என்று சிறியவனும் பொருமுகிறார்கள். கதை: கத்திச்சண்டை சிறு குழந்தைகள் சண்டை போடுவதற்குக் காரணம் எதுவும் தேவையில்லை. நீண்ட காம்பைக்கொண்ட ஒரு பழுத்த இலையை கத்தியாகவே பாவித்து அதற்காகச் சண்டை போடுவார்கள். ‘இது என் இலை! நான்தானே பறித்தேன்? என்னுடையதுதான்!’ ‘நான்தான் முதலில் பார்த்தேன்? எனக்குத்தான் சொந்தம்!’ இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு இளம் தாய் முழிப்பாள். “இப்படி எல்லாவற்றிற்கும் சண்டைதான்! இரண்டுபேருமே குழந்தைகள்! எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அடிக்கவும் மனம் வரவில்லை,” என்றாள். “‘உனக்கும் ஒரு கத்தி பறித்து தருகிறேன்,’ என்று சிறியவனைச் சமாதானப்படுத்தினால் தீர்ந்தது கதை!” என்றேன் சிரிப்புடன். அவளும் சிரித்தாள். “அவ்வளவுதானா?” சிறிது நேரத்தில் இரு சிறுவர்களும் முதலில் போட்ட வாய்ச்சண்டையை மறந்து, ‘கத்திச்சண்டையில்’ தீவிரமாக ஈடுபட்டார்கள். அவர்கள் வாயிலிருந்தும், அடித்தொண்டையிலிருந்தும் கார்ட்டூன் படங்களில் பார்த்திருந்த ஒலிகள் எழும்பிக்கொண்டிருந்தன! கத்தி உடையும்வரை அவர்கள் விளையாட்டு நீடித்தது. சிறிது நேரம் கழித்து, வேறு எதற்காவது சண்டை போடுவார்கள். இப்படிச் சமாதானம் செய்யாமல், ‘அவன் சின்னவன்! அவனோடு உனக்கென்ன சண்டை? அழவிடாதே. குடு!’ என்று தாய் கூறியிருந்தால், அம்மாவுக்கு என்னைவிட தம்பிதான் உயர்த்தி என்ற எண்ணம் எழும் மூத்தவனுக்கு. இளையவனோ, அம்மா தன்பக்கம்தான் பேசுவாள், எது வேண்டுமானாலும் அழுது சாதிக்கலாம் என்று எண்ணிவிடுவான். ஐந்து வயதுக்குள் பிறருடன் பழகும் தன்மை புரியாததால் சண்டை வருகிறது. குடும்பத்தினர் அவர்களது சண்டையில் குறுக்கிட்டு தக்கபடி வழிநடத்தாவிட்டால், அப்போது எழும் மனக்கசப்பு எல்லா வயதிலும் நிலைத்திருக்கும். என்னையும் கவனியேன்! குடும்பத்தில் கடைக்குட்டி தாயிடம் ஒட்டிக்கொண்டிருக்கும். அதுபோல்தான், நோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தையும். அதன் அண்ணனோ, அக்காளோ தனக்கும் தாயின் பிரத்தியேக கவனிப்பு கிடைக்கவேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக்கொள்வார்கள். இது நல்லதல்ல. ஒரு தாய் எல்லாக் குழந்தைகளையும் அவரவர் தேவைக்கு ஏற்றபடி கவனித்துத்தான் ஆகவேண்டும். அம்மாவின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பவும் சில குழந்தைகள் சண்டையில் ஈடுபடலாம். அம்மாதிரித் தருணங்களில், அவர்களைக் கவனிக்காது விடுவதுதான் சரி. தன் ஒவ்வொரு நிமிடத்தையும் குழந்தைகளுக்காகவே செலவழிக்க நேரிட்டால், தாய்க்குத்தான் நிம்மதி பறிபோய், மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். (இதேபோல், வீட்டில் போதிய கவனிப்பு இல்லாத சிறுமிகள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையின் கவனத்தைப் பெறவேண்டி, வேண்டுமென்றே ஏதாவது தவறிழைப்பார்கள். அவர்களைக் கவனிக்காமல், அலட்சியப்படுத்துவதுதான் அவர்களுக்கு அளிக்கக்கூடிய பெரிய தண்டனை). இது உன் வேலை! சற்றுப் பெரியவர்களாக ஆனதும், வீட்டு வேலைகளை யார் செய்வது என்பது சண்டைக்கு முக்கியமான காரணமாக அமையும். இதைத் தவிர்க்க, காலையில் ஒருவர், மாலையில் ஒருவர், அல்லது வாரத்தில் சில நாட்கள் ஒருவருக்கு என்றெல்லாம் பகிர்ந்துவிடலாம். வயதுக்கு ஏற்றபடி அவர்களுக்கு அளிக்கப்படும் வேலையை அவரவர்தான் தவறாது செய்ய வேண்டும் என்று வகுத்துவிட்டால், முணுமுணுக்காமல் செய்வார்கள். வசவு கற்றுக்கொடுப்பது ஒரு குடும்பத்தில் தாயும் தந்தையும் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்தால், அவர்களைப்போல் நடக்கத்தானே குழந்தைகளும் கற்பார்கள்? இதற்குத்தான் பெரியவர்கள் பேசும்போது குழந்தைகள் அங்கு இருக்கக்கூடாது என்று விலக்கி வைப்பது. வயதுக்கு மீறிய வளர்ச்சி வேண்டாமே! திரைப்படங்களைப் பார்த்தும் வேண்டாத வசவுகளைக் கற்கிறார்கள் குழந்தைகள். நானும் அப்படித்தான். சொந்தக்கதை நான் சிறியவளாக இருந்தபோது பார்த்த படங்களில், வில்லன் தன் மனைவியைத் திட்டுவான். (கெட்டவன் என்றால் துளிக்கூட நல்ல குணம் இருக்கக்கூடாது என்பது திரைப்பட விதி). ‘பாவி, துரோகி, சண்டாளி, நயவஞ்சகி,’ என்று அடுக்கிக்கொண்டே போவான். ஒவ்வொரு சொல்லுக்கு அடுத்தும், ‘நானா!’ என்று நெஞ்சில் கைவைத்து அதிர்பவள்தான் நல்ல மனைவி. இதில் வேடிக்கை என்னவென்றால், எல்லாப் படங்களிலும் இதே வரிசையில், இதே வார்த்தைகள்தாம் வரும். எங்கள் வீட்டில் இந்தமாதிரி வார்த்தைகள் எல்லாம் உபயோகிக்கப்படாததால், இப்புதிய வார்த்தைகளை ஆர்வத்துடன் கற்றேன். எப்போது, எவ்வாறு உபயோகிக்க முடியும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. எட்டு வயதுக்குட்பட்ட எனக்கும், என் தங்கைக்கும் சண்டை வரும்போது, நான் ‘பாவி!’ என்று ஆரம்பிக்க, அவள் அடுத்த வார்த்தையைப் பிரயோகிப்பாள். இருவருக்கும் எதற்கும் அர்த்தம் தெரியாது என்பது ஒருபுறமிருக்க, அவற்றை உச்சரிக்கும்போதே பலம் பெருகி, எதிராளியை வீழ்த்திவிட்டதுபோல் உணர்வோம். முடிந்தவரை உரக்கக் கத்துவோம் – அம்மா, ‘ஏய்! என்ன அசிங்கம் இது?’ என்று எங்கிருந்தாவது குரல் கொடுக்கும்வரை. இரண்டுபேரும் ஒரே சமயத்தில் ஒற்றுமையாகி, ‘ஒண்ணுமில்லேம்மா,’ என்று குரல் கொடுப்போம். ஒருவரையொருவர் பார்த்துப் பெருமையுடன் சிரித்துக்கொள்வோம். பல முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிட, அவ்வார்த்தைகள் மனதில் பதிந்துவிட்டன. எதற்குச் சண்டை போட்டோம் என்று நினைவில்லை. சமீபத்தில் ஏதோ அரதல் பழசான படத்தில் வில்லன், ‘பாவி!’ என்று ஆரம்பிக்க, நான் மகிழ்ச்சியுடன், மீதி வார்த்தைகளைப் பூர்த்தி செய்தேன்! வீட்டில் எல்லாருக்கும் ஒரே சிரிப்பு. சண்டை அவசியம் சகோதர சகோதரிகள் சண்டை போடுவது பிற்கால வாழ்க்கைக்கு அவசியம். எப்படி என்கிறீர்களா? பிறரது எண்ணப்போக்கைப் புரிந்துகொண்டு, அனுசரணையாக நடந்துகொள்ளவும், நல்லவிதமாகப் பழகவும் சிறுவயதில் நாம் போடும் சண்டைகள் உதவுகின்றன. ‘இந்தப் பொம்மையை நீ வெச்சுக்கோ, அதை நான் எடுத்துக்கறேன்,’ என்று சமாதானம் பேசும் குழந்தை தகறாறின்போது பேச்சுவார்த்தை நடத்தக் கற்கிறது. முரட்டுத்தனமாக நடப்பது நன்மையில் முடிவதில்லை என்று புரிந்து, அதை அடக்கிக்கொள்ள முயல்கிறது. எப்போதும் சிறிய மகனையோ, மகளையோ பெரிய குழந்தைக்கு எதிராக ஆதரித்துப் பேசும் தாய் தன்னையுமறியது அதற்குக் கேடு விளைவிக்கிறாள். எல்லாருமே எப்போதுமே விட்டுக்கொடுத்துக்கொண்டே இருப்பார்களா, என்ன! சண்டை போடவும் தைரியம் இல்லாது, சமாளிக்கும் வழியும் புரியாது விழிப்பார்கள் அப்படி வளர்க்கப்பட்ட சிலர். ‘என்னையும் அடிச்சு வளர்த்திருக்கணும்!’ என்று தாயிடமே குறைகூறுவார்கள். வேறு சிலர் எல்லாவற்றிற்கும் பிறருடன் சண்டை போடுவார்கள். கதை: வளர்ந்த செல்லக்குழந்தை என்னுடன் உத்தியோகம் பார்த்த ஓர் ஆசிரியை விஞ்ஞானப் பாடத்தை என்னுடன் பகிர்ந்து கற்பித்தாள். நான் பௌதிகம் மற்றும் ரசாயனம் மட்டும். ஒரு பரீட்சைக்கு, ‘நீ உன் பாடத்தில் கேள்வித்தாளை அமைக்க வேண்டுமாம். உன்னிடம் தெரிவிக்கும்படி தலைமை ஆசிரியர் என்னிடம் சொல்லிவிட்டுப் போனார்,’ என்று நான் அவளிடம் கூறினேன். ‘நான் பண்ணமாட்டேன், போ! நீ என்ன சொல்வது?’ என்று அவள் முரண்டுசெய்தது பிற ஆசிரியர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. எனக்கோ ஒரே எரிச்சல். ‘என்னவோ பண்ணிக்கொள்!’ என்றேன். அவள் போய் தலைமை ஆசிரியரைச் சந்தித்தாள். அவர் என்ன ‘டோஸ்’ விட்டாரோ! தோல்வியடைந்தவள்போல் முகத்தை வைத்துக்கொண்டு, ‘சரி. நானே செய்யறேன்!’ என்று என்னிடம் வந்து கூறினாள், எனக்காக ஏதோ பெரிய தியாகம் செய்வதுபோல. நான் எதுவும் பேசவில்லை. அவள் அப்பால் சென்றதும், ‘இவளுக்கு ஆறு அண்ணன்மார்கள். இவள் ஒருத்திதான் பெண். வீட்டில் செல்லக்குழந்தையாக இருந்திருக்கலாம். அதற்காக எப்போதுமே எல்லாருமே அருமையாக நடத்தவேண்டும் என்றால் நடக்கிற காரியமா?’ என்றார் முதிர்ச்சியுடைய ஆசிரியை ஒருவர். அதை ஒப்புக்கொண்டு, எல்லாரும் நமட்டுச்சிரிப்புச் சிரித்தோம். உங்கள் குழந்தைகள் சண்டை போடுகிறார்களா? ஒருவர் பக்கமும் சாயாமல், அவர்களை ரசியுங்கள். அடிதடியில் இறங்கினால் மட்டும் குறுக்கிடலாம். தானே பெரியவர்களானதும், ஒற்றுமையாகிவிடுவார்கள். அப்போது அவர்கள் போட்ட சண்டைகளையெல்லாம் நினைவுகூர்ந்து சிரிக்கலாம். அவர்களுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள், ‘எவ்வளவு வேடிக்கை! இப்போ சண்டையே போடறதில்லையே!’ என்று ஏங்கும் அளவுக்கு! வயிற்றின்வழி இடம் பிடிப்பது ‘இன்னும் நிறையச் சாப்பிடுங்கள்!’ கல்யாண வீட்டில் பந்தி உபசாரம். நம் வயிறு கொள்ளும்வரை சாப்பிட்டிருப்போம். இருந்தாலும், உபசாரம் செய்வார்கள். எனக்குத் தெரிந்த ஓர் இசைக்கலைஞர் நான் ஒவ்வொரு ஆண்டு பார்க்கும்போதும் பல கிலோ எடை கூடியிருப்பார். முப்பத்தைந்து வயதுதான். அவர் மனைவி என்னிடம் முறையிட்டார். “என்ன, இப்படி குண்டாகிக்கொண்டே போகிறீர்களே! இனிப்பு வியாதி வந்துவைக்கப்போகிறது!” என்று கவலைப்பட்டேன். “என்ன செய்யறது, மாமி! அடிக்கடி கல்யாணக் கச்சேரி. அப்போதெல்லாம், ஒரேயடியாக உபசாரம் செய்து சாப்பிட வைக்கிறார்கள்!” என்றார், பரிதாபமாக. இப்படிப் பிறர் நம்மை உபசாரம் செய்வது உபகாரமில்லை. உபத்திரவம்தான். மறுநாள் நம் வயிறு கெட்டால், அவர்களிடம் போய் சண்டை போட முடியுமா? ஏதாவது வியாதி வந்தாலும், ‘நான்தான் சொன்னேன் என்றால், உனக்கெங்கே போயிற்று புத்தி?’ என்று திருப்பிக் கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சசயம்? ‘ஏழைகள் என்றால் சோனியாக இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் சாப்பாட்டுக்குத் திண்டாடுபவர்கள். நமக்குத்தான் பணப்பிரச்னை இல்லையே!’ என்பதுபோன்ற எண்ணப்போக்குடன் தேவைக்கு அதிகமாகப் பலரும் சாப்பிடுகிறார்களோ? சற்று வசதியாக இருப்பவர்களைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. சிறு வயதில் வயிறாரச் சாப்பிட வசதி இல்லாதவர்கள் பெரியவர்களானதும், அந்த இழப்பிற்கு ஈடு செய்வதுபோல் அளவுக்கு அதிகமாகவே உண்பார்கள். நான் இதைச் சொல்லக்கேட்ட ஒரு பெண், “ஓ! அதுதான் என் பாட்டி அப்படிச் சாப்பிடுகிறார்களா! யுத்த காலத்தில் அவர்களுக்குப் போதுமான உணவே கிடைக்கவில்லையென்று அடிக்கடி சொல்வார்கள்!‘என்றாள், அதிசயப்பட்டு. நான் மருத்துவரிடம் போகும்போதெல்லாம், ’உங்களுக்கு என்ன வயது?’ என்று கேட்டுவிட்டு, ‘எடையைக் குறைக்கலாம்!’ என்று ஆலோசனை வழங்குவார்கள். என் அனுபவத்தில், நாற்பது வயதில் சாப்பிட்ட அளவு உணவையே நாற்பத்து ஐந்து வயதிலும் சாப்பிட்டால்கூட, கடினமான வேலை செய்யாவிட்டால் எடை அதிகரித்து விடுகிறது. (சமையல், வீட்டில் சிறிது வேலை செய்வது இதெல்லாம் கணக்கில்லை). இப்படியே ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் எடை கூடுவதால், சாப்பாட்டின் அளவைக் குறைத்தால்தான் எடை ஒரே சீராக இருக்கிறது. ‘நான் உயிர் வாழ்வதே சாப்பிடுவதற்குத்தான். அப்படியாவது என்ன அழகு வேண்டிக் கிடக்கிறது?’ என்பவர்களுக்கு: எடை அதிகரித்தால் முழங்கால் வலி, மூச்சிரைப்பு, அசதி என்று என்னென்னவோ உபாதைகள்! கூடவே, சோம்பல் அல்லது சிடுசிடுப்பு மற்றும் விரக்தி வேறு. ஆனால், விருந்தையே மருந்தாக எண்ணி அளவோடு உண்டால், சுறுசுறுப்பாக உணரமுடியும். ‘இளமையாக இருக்கிறீர்கள்!’ என்று யாராவது பாராட்டினால், அது போனஸ்தான். கதை: சாருமதி கணவனிடம், ‘வேலை முடிந்து வரும்போது, இளநீர் வாங்கி வாருங்கள்!’ என்றாள். புது மனைவி ஆயிற்றே! கணவனோ, இரண்டு இளநீர் வாங்கி வந்தான். முலாம்பழம், மாதுளை என்று சாருமதி எது கேட்டாலும், இரண்டாக வாங்கி வந்தான். அவளும் உடனுக்குடனே சாப்பிட்டுத் தீர்த்தாள். விளைவு: அந்தக் கர்ப்பிணியின் உடல் வெகுவாகப் பருத்தது. “இப்படி இவள் சாப்பிட்டால், பேறு காலம் விரைவாக வந்துவிடும். அப்புறம் வயிற்றைக் கீறித்தான் குழந்தையை எடுக்கவேண்டி வரும்,” என்று அந்த இளைஞனின் தாயிடம் எச்சரிக்கை செய்தேன். “அவளிடம் சொல்லி விடாதீர்கள்! பாவம், சின்னப்பெண்! என் மகனும் ஆசையாக வாங்கி வருகிறான்!” என்று பரிந்தாள். சில மாதங்கள் கழித்து முகம் சிறுக்க, “நீங்கள் சொன்னபடியேதான் ஆயிற்று!” என்று ஒத்துக்கொண்டாள். ஏழு மாதத்திலேயே சிஸேரியன் அறுவைச் சிகிச்சையால் குழந்தை பிறக்க, சாருமதியால் உடற்பயிற்சி எதுவும் செய்ய முடியவில்லை. வயிறு பருத்த நிலையிலேயே இருந்தது. அதற்காக அவள் கவலைப்படவுமில்லை. கணவன் தன்மீது காட்டிய அன்பைத் திருப்பியளிக்க ஆரம்பித்தாள் சாருமதி. அவனுக்குப் பிடித்ததாக சமைத்து, ‘இன்னும் கொஞ்சம், ப்ளீஸ்!’ என்று உபசாரம் செய்ததில், இப்போது அவனுக்கு இனிப்பு நோய். The shortest way to a man’s heart is through his stomach (ஒரு மனிதனின் இதயத்தில் இடம் பிடிக்க மிகக் குறுகிய வழி வயிற்றின்மூலம்தான்) என்பது உண்மையோ, என்னவோ! சாப்பாட்டின் அளவுதான் அன்பின் அளவுகோல் என்பதுபோல் நடப்பது வேண்டாத விளைவுகளில் கொண்டுவிடும். ஒருவர்மீது நமக்கு அன்பு என்றால், அவருக்கு நிறைய உணவு அளிப்பதுதான் என்று தம்பதிகள் மட்டுமல்ல, தாய்மார்களும் எண்ணுகிறார்கள். அதுவும் ஒரே குழந்தையாக இருந்தால் போயிற்று! ஒரே மகனது உடல் பருமனுக்குத் தான்தான் காரணம் என்று எந்தத் தாயும் ஒத்துக்கொள்ள விரும்புவதில்லை. ‘என் மகன் எப்பவும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். ஏனோ ஓடியாடி விளையாட முடியவில்லை,’ என்று காலங்கடந்து மருத்துவர்களிடம் அழைத்துப்போய் குறை கூறி என்ன பயன்? இருவரும் வெற்றி காண.. ஆணோ, பெண்ணோ, எந்த நாட்டுக்காரர்கள் ஆனாலும், அவர்கள் படும் அவதிகள் பொதுவானவைதாம். இருபாலருக்குமே சரியான முறையில் ஒருவரையொருவர் நடத்துவது எப்படி என்று தெரிவதில்லை. ஒருவருடைய சுயமரியாதையை, தன்னம்பிக்கையை, இன்னொருவர் பறிக்காமல் இருந்தால்தான் உறவு நீடிக்கும். கதை டாங் (TONG) கோலாலம்பூரிலுள்ள ஒரு கல்லூரி மாணவன். பணக்காரப் பெற்றோருக்கு ஒரே மகன். பெண்களுடன் நெருங்கிப் பழகியது கிடையாது. அவன் அறிந்ததெல்லாம் படிப்பும், பாட்டும்தான். இவனிடம் வலுவில் வந்து உறவாடி, பலவாறாக அவன் திறமைகளைப் பாராட்டி, நெருங்கிப் பழகலானாள் ரோஸ். இவனுடைய மென்மையான குணம் அவளுடையதைவிட நேர்மாறாக இருந்ததே முதலில் இருவருக்குள்ளும் ஈர்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தது. ஈராண்டுகள் இன்பமாகக் கழிந்தன. பல இடங்களிலும் ஒன்றாகச் சுற்றினார்கள். அதன்பின், காதலன் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும், தனக்காகவே செலவு செய்யவேண்டும் என்பதுபோல் ரோஸ் எந்நேரமும் உரிமை கொண்டாட ஆரம்பிக்க, ஏதோ தன்னை நெருக்குவதுபோல் உணர்ந்தான் டாங். ‘நம்மிருவருக்கும் ஒத்துவராது,’ என்று கழன்றுகொண்டான். அவளுக்கு ஒரே ஆத்திரம், நல்ல பொருள் கைவிட்டுப்போகிறதே என்று. அவனைப்பற்றித் தாறுமாறாக அவனுடைய நண்பர்களிடம் சொல்லிப் பொருமினாள். “ஆனால் எங்களுக்கு அவன் குணம் நன்றாகத் தெரியும். அவள் சொல்லியதை யாரும் நம்பவில்லை,” என்று என்னிடம் கூறினான் இக்கதையை என்னுடன் பகிர்ந்துகொண்ட டாங்கின் நண்பன். பெண்களுக்கு மரியாதையா! பெண்களுடைய எல்லாப் பிரச்னைகளுக்கும் ஆரம்பம் பெண்களை மதித்து நடக்க வேண்டும் என்று ஆண்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்பதுதான். இளம் வயதிலேயே பெற்றோரும், ஆசிரியர்களும் செய்ய வேண்டிய கடமை அது. சில ஆசிரியர்களுக்கே அந்த அறிவு இருப்பதில்லையே, என்ன செய்வது? கதை என் பள்ளி மாணவர்கள் கால்பந்து விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் வேறு ஏதோ வேலையாக சற்றுத் தொலைவில் நின்றுகொண்டிருந்தேன். பந்து என்னருகே விழ, அவர்களுடைய ஆசிரியர் ஃபாதில் (FADHIL) “ஏய்! பந்தை எடுத்துப்போடு!” என்று என்னை விரட்டினார். அவர் கட்டொழுங்கு ஆசிரியர் ஆனதால், ‘நான் மிகப் பெரியவன்!’ என்ற எண்ணம். மாணவர்கள் மட்டுமின்றி, எல்லாரையும் விரட்டலாம் என்ற மமதை. அவரது கூப்பாடு காதில் விழாதமாதிரி நின்றேன்.‘தான் சொல்ல, மாணவர்களுக்கு எதிரே இவள் – ஒரு பெண் – தன்னை மதிக்காமல் நடந்துகொள்வதா!’ என்ற ஆத்திரத்துடன் “உன்னைத்தான்! பந்தை எடுத்துப்போடச் சொன்னேனே!” என்று அவர் மீண்டும் மலாய் மொழியில் கத்த, நான் நிதானமாக அவர் பக்கம் திரும்பினேன். “Who do you think you are? No one talks to Mrs. Raghavan like that, Mister. Speak with respect,” (உங்களை நீங்கள் யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்னிடம் யாரும் அப்படிப் பேசிவிட முடியாது. மரியாதையாகப் பேசுங்கள்!” கண்களைச் சுருக்கிக்கொண்டு, ஆள்காட்டி விரலை நீட்டியபடி மிரட்டினேன். மெதுவாக ஆரம்பித்து, ஒவ்வொரு வாக்கியத்திலும் சூடு ஏறிக்கொண்டே போக, மாணவர்களுடன் சேர்ந்து அவரும் அரண்டு போய்விட்டார். புரியாதவர்போல நடித்து, “ஓ, அப்படியா?” என்று சமாளிக்கப் பார்த்தார். நான் பந்தை எடுக்கவில்லை. இம்மாதிரியான ஆசிரியரை முன்னோடியாகக் கொண்ட மாணவர்களும், அவருடைய மகன்களும் அவரைப்போலத்தானே ஆவார்கள்? இன்னொரு முறை, வேறு பள்ளிக்கூடத்தில் கால்பந்து என்னருகே விழ, ‘”டீச்சர், டீச்சர்! பந்து!” என்று மாணவர்கள் கெஞ்சலாகக் கூவினார்கள். ’இருங்கள்!’ என்று நான் சைகை காட்டிவிட்டு, சில அடிகள் பின்னோக்கி நடந்து, பந்தை உதைத்தேன். அது வெகு தூரம் பறக்க, மாணவர்களுக்கு ஒரே அதிர்ச்சியும், ஆச்சரியமும். பிறகு, ஒரே குரலில் சிரித்தார்கள். மரியாதை கொடுத்தால்தான் மரியாதையை எதிர்பார்க்க முடியும். அன்று பிற வகுப்புகளைச் சேர்ந்த சில மாணவர்கள் என்னிடம் வந்து, “டீச்சர் கால்பந்து விளையாடி இருக்கிறீர்களா?” என்று மிக மரியாதையாக விசாரித்தார்கள்! பள்ளிக்கூடத்தில் எல்லாவித விளையாட்டுகளையும் தினமும் முக்கால் மணி கற்றிருக்கிறேன். குறிப்பிடும்படியாக எதிலும் சிறக்காவிட்டாலும், இளமையில் முடிந்தவரை எல்லாவற்றையும் கற்பது எக்காலத்திலாவது உதவுகிறது. அச்சுறுத்திப் பெறுவது மரியாதை இல்லை. அது வெறும் கட்டுப்பாடுதான். நாளடைவில் இரு தரப்பினருக்குமே வெறுமை ஏற்பட்டுவிடும். யாரையெல்லாம் கட்டுப்படுத்துகிறார்கள்? 1. பதின்ம வயதுப்பெண்கள்தாம் பலவிதமாகப் பழிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுக்கு ஆளாகிறார்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இந்த வயதில், தம்மைப்பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்களோ, அழகாக இருக்கிறோமா, எல்லாருக்கும் நம்மைப் பிடிக்குமா என்று ஏதேதோ குழப்பங்கள் எழும். ‘நீ குண்டு!’ ‘முட்டாள்!’ என்று பிறர் பழிக்கும்போது, மனமுடைந்து போய்விடுவார்கள். 2. பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, பணத்தை நிர்வகிக்கத் தெரியாது வளர்ந்திருக்கும் பெண்ணைக் கட்டுப்படுத்துவது எளிது. இவளைப் போன்றவர்களுக்குப் பணத்தின் அருமை தெரியாது. சம்பாதிப்பது எல்லாவற்றையும் கணவனிடம் கொடுத்துவிட்டு, அத்துடன் தன் சுதந்திரத்தையும் இழந்து, தன்னைக் கட்டுப்படுத்தும் உரிமையை அவனுக்கு அளித்துவிடுபவள். 3. ஆண்களுடனும் அதிகம் பழகியிராது, மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்திருக்கும் பெண். ‘கணவன் சொற்படி நடந்தால்தான் பிறந்த வீட்டுக்கு மரியாதை!’ என்பதுபோல் வளர்க்கப்பட்டிருப்பாள். இவள் திருமணத்துக்கு முன்னரோ, பின்னரோ வதைக்கு ஆளாகிறாள். அவளுடைய திறமைகள் ஒடுக்கப்படுகின்றன. ‘ஏன் முன்போல் எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியவில்லை?’ என்ற குழப்பத்திற்கு அவளால் விடை காண முடிவதில்லை. உடல் ரீதியிலோ, உணர்ச்சிபூர்வமாகவோ வதைக்கு உள்ளாகுபவர்கள் தன்னம்பிக்கை குன்றிப், மன இறுக்கத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் உண்டு. அடுத்த தலைமுறையினரும் இப்படி ஆகாமலிருக்க என்ன வழி? பெற்றோர் சொல்வதையெல்லாம் மறுபேச்சு பேசாது ஏற்று நடப்பவர்கள்தாம் நல்ல பிள்ளைகள் என்பதில்லை. ஆணோ, பெண்ணோ, சுயமாகச் சிந்தித்து நடக்கும் உரிமையை, திறமையை, பெற்றோர் அவர்களிடம் வளர்க்க வேண்டும். ஆனால், தமது கருத்திலிருந்து மாறுபட்டிருந்தாலும், அது நன்மைதானா என்று அறியும் பக்குவம் பலருக்கு இருப்பதில்லையே! மகனுக்கு வழிகாட்ட, ‘உன் மனைவியை மதித்து நட. உன் தந்தையைப்போல் மனைவியைத் தூக்கி எறிந்து நடத்தினால், இந்தக் காலத்துப் பெண் ஒரே மாதத்தில் உன்னை விவாகரத்து செய்துவிடுவாள்!’ என்று பேச்சுவாக்கில் கூற, பெண்களை எப்படி நடத்துவது என்று புரிந்துகொள்வான். கதை அன்று காலைதான் அவனுக்குக் கல்யாணம் நடந்து முடிந்திருந்தது. ஆனால் மணமகனின் முகத்தில் கலக்கம். “எல்லாரும் Happy married life! என்று வாழ்த்துகிறார்கள். அது எப்படி என்றுதான் யாருக்கும் தெரியவில்லை!‘என்று அயர்ந்தான். “பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதைப் புரிந்து, மதித்து நட. அவளுடைய பொழுதுபோக்குகளில் ஊக்கமளிப்பதுடன், முடிந்தால், நீயும் உதவி செய். ஆனால், ரொம்பத் தழைந்துபோய், மனைவி உன்னை மட்டமாக நினைத்து நடத்த இடம் கொடுக்காதே!” என்று அறிவுரை கூறினேன். (பணியில் சேர்ந்த முதல் ஆண்டு மாணவர்களுடன் மிகுந்த நட்புடன், சிரித்த முகத்துடன் பழகும் ஆசிரியர்களுக்கு பிறகு எப்போதுமே அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது போய்விடும். இது என் அனுபவம். ஆரம்பத்தில் கெடுபிடியாக இருந்தால், பிறகு அதிகாரத்தைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ளலாம். இதைத்தான் மணமகனுக்கு மாற்றிச் சொன்னேன்). அவன் மணந்த பெண் பணக்காரி, கர்வி. கல்யாணம் முடிந்து, ஒரு வாரத்திலேயே அவளுடைய சுபாவம் புரிந்தது. பெற்றோர்களிடமே மரியாதைக்குறைவாகத்தான் நடந்துகொண்டாள். ஆனால் அவளுடைய அதிகாரம் அவனிடம் செல்லவில்லை. தான் மிரண்டால் கணவருடைய அதிகாரம் இன்னும் அதிகரித்துவிடும் என்று பயந்தோ, என்னவோ, மரியாதையாக இருக்கிறாள். இல்லறம் நல்லபடியாக நடக்கிறது. சில பெண்கள், ’நாங்கள் நீண்ட காலம் ஆண்களைவிடக் கீழான நிலையிலே இருந்துவிட்டோம். இப்போது, ஒரு மாறுதலுக்காக, நீங்கள்தாம் எங்களைவிடத் தாழ்ந்த நிலையில் இருந்து பாருங்களேன்!’ என்பதுபோல் மிரட்டலாக நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது பிரச்னைகளைப் பெரிதாக்கும் வீண்முயற்சிதான். தாழ்ந்தே இருக்க நேரிட்டால், எவருக்குமே ஆத்திரம்தான் வரும். ஒருவர்க்கொருவர் ஊக்கமளித்து உதவினால், இருவருமே முன்னேறலாமே! பயிரை மேய்ந்த வேலி “அந்தப் பெண்ணின் பின்னணி உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்ட குரல் ஆசிரியர்களின் பொது அறையில் என்னெதிரில் வந்து அமர்ந்திருந்தவருடையது. ஐம்பதுக்கு மேற்பட்ட வயதையே தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, பதினான்கு வயது மாணவிகளைத் தம் இச்சைக்குப் பணிய வைக்கத் தயங்காதவர் அவர். ‘வதைக்கு உள்ளானால், உடனே எதிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பிறரிடம் அதைப் பகிர்ந்துகொண்டு, அதை நிறுத்தும் வழியைப் பார்க்கவேண்டும்!’ என்று நான் வகுப்பில் எப்போதோ கூறியதை நினைவு வைத்துக்கொண்டு, இரண்டு மாணவிகள் என்னிடம் அவருடைய லீலைகளைத் தெரிவித்திருந்தனர். நான் பள்ளிக்கூடத்தின் மேலிடத்துக்குப் புகார் செய்ததை அறிந்து, என்னை வசப்படுத்திக்கொள்ள நினைத்திருப்பார்! தான் செய்த தவறு சரிதான் என்று என்னை நம்ப வைக்க முயற்சி செய்கிறாரா? எனக்கு ஆத்திரம் பெருகியது. விருட்டென எழுந்து அப்பால் சென்றேன். “இவள் மிகவும் ANTI-SOCIAL! பிறருடன் கலகலப்பாகப் பழகத் தெரியவில்லை,” என்று என்னைப்பற்றிய குற்றச்சாட்டை ஒருத்தியிடம் கூறியிருக்கிறார். எல்லாம், அது என் காதில் விழுந்து, நான் இளகிவிடுவேனோ என்ற நப்பாசைதான்! “இந்தமாதிரி மனிதரை என் நண்பர் என்று கூறிக்கொள்வதைவிட, நான் உம்மணாமூஞ்சியாகவே இருந்துவிட்டுப்போகிறேன்!” என்றேன், அலட்சியமாக. தான் செய்வது காதில் விழுந்தாலும், மற்றவர்கள், ‘பெண்கள் விரும்பித்தானே இப்படி செய்கிறார்!’ என்று அவரை ஆதரிக்க, அவர் வேறு பல முயற்சிகளைக் கையாண்டார். தினமும் ஏதாவது கேக் வகைகளோ, பஜ்ஜி போன்ற தின்பண்டங்களோ வாங்கிவந்து, தலைமை ஆசிரியையிடம் கொடுத்து, எல்லா ஆசிரியர்களுக்கும் விநியோகிக்கச் செய்வார். என் முறை வந்ததும், நான் அதை வாங்க மறுத்துவிடுவேன். வற்புறுத்துவார்கள், ஒவ்வொரு நாளும். என் பதில் என்னவோ ஒரே மாதிரிதான் இருக்கும்: ‘NO THANKS’. விளையாட்டுத் தினத்தன்று மாணவ மாணவிகளுக்குப் பரிசுப்பொருட்கள் வாங்க நிறைய காசு கொடுத்தார். அது போதாதா, பிறரது கணிப்பில் அவர் உயர! அந்த சமயம், ‘பாலியல் வதை’ என்ற தலைப்பில் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சி நடக்கப்போவதாக அறிவித்திருந்தார்கள். ஒரு தினசரியின் சார்பில் நான் கலந்துகொண்டேன். ‘ஒரு மாணவி தான் வதைப்படும்போது, அதை பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ தெரிவிக்க வேண்டும்,’ என்றாள் நிகழ்ச்சியை நடத்துபவள். “ஆசிரியரே வதைத்தால்?‘என்னையுமறியாமல் என் குரல் எழும்பியது. என் குரலுக்கென ஒரு தனி மூளை உண்டு. பல சந்தர்ப்பங்களில், நானே எதிர்பாராமல், அது ஆக்ரோஷமாகக் கிளம்பிவிடும். ஒரு பிடி கிடைத்த மகிழ்ச்சியுடன், என்னை நிறையக் கேள்வி கேட்டாள். பலமான வற்புறுத்தலுக்குப் பிறகு, எந்த மாநிலம் என்று மட்டும் சொன்னேன். அடுத்த நாளே ஆரம்பித்தது தலைவலி. மேலதிகாரிகள் என்னை விசாரணை செய்ய ஆரம்பித்தார்கள். “எதற்காக இப்படிச் செய்தீர்கள்?” “என் பேரக்குழந்தைகளுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடம் என்பது ஒரு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்!” “நல்லவேளை, என் குழந்தைகள் இருவரும் ஆண்கள்!” என்றான் ஒரு மடையன். “இதைக் கேளுங்கள்!” என்று ஆரம்பித்து, எங்கள் பள்ளியில் ஒரு பையனிடம் மாடிப்படியிலேயே முறைகேடாக ஒரு தாற்காலிக ஆசிரியர் நடந்துகொண்டதை நான் கேள்விப்பட்டதாகச் சொன்னேன். அவர்கள் பதறிப்போனார்கள். உண்மையிலேயே எனக்கு அந்த ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. என்னிடம் கூறியதோ ஒரு ஆண். அவரையும் நான் விட்டுக்கொடுக்கவில்லை. “தொலைகாட்சிக்கு ஏன் போனீர்கள்? யாரிடமாவது சொல்லியிருக்கலாமே!” “பள்ளிக்கூடத்தில் இதுபற்றி நான் பலமுறை புகார் கொடுத்தும், ஒருவரும் எதுவும் செய்யவில்லை. அந்த மனிதருக்குப் பயந்து, சில பெண்கள் பள்ளிக்கூடத்துக்கே வருவதில்லை!” என்று பொங்கினேன். “ஆசிரியர் ஒருவர் அதெப்படி ஒரு பெண்ணைத் தனியாக அழைத்துப்போய், தகாத முறையில் நடக்கலாம்?” அவர்கள் சற்று அயர்ந்து போனார்கள். “நீங்களும்தான் இப்போது தனியாக எங்கள் இருவருடன் இருக்கிறீர்கள்!” என்றான் இன்னொரு மடையன். “நான் இங்கு – தலைமை ஆசிரியையின் அறைக்கு – வந்திருப்பது எல்லாருக்கும் தெரியும்,” என்று பதிலடி கொடுத்தேன். அவர்கள் கேள்விக்கணையால் என்னை துளைத்ததைப் பொறுக்க முடியாது, “இங்கு தப்பு செய்தது நான் இல்லையே! என்னை ஏன் இப்படிப் போட்டு வாட்டுகிறீர்கள்?” என்றேன். “எங்கள் கலாசாரத்தில் இதெல்லாம் தப்பே இல்லை, தெரியுமா?” என்றபோது, நான் பதிலே சொல்லவில்லை. வெறித்தபடியிருந்தேன். சம்பந்தப்பட்ட ஆசிரியரும் பெண்ணும் ஓரினம். நான் வேற்றினத்தவள். அதுதான் அவர்களுக்கு ஆத்திரம், ’இவள் என்ன நம்மைக் காட்டிக்கொடுப்பது?’ என்று. நடந்தது தப்புதான் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனால், பிரச்னையே இல்லை என்று கண்ணை மூடிக்கொண்டுவிட்டால், அதற்கான தீர்வைத் தேடவேண்டாமே! (அதுவரை பள்ளிக்கூடங்களில் இம்மாதிரியான செக்ஸ் வதை நடப்பதாக எவரும் வெளியில் சொல்லவில்லை. இப்போது, இருபத்து ஐந்து வருடங்களுக்குப்பின், அம்மாதிரிக் குற்றம் புரியும் ஆசிரியர்களை வேறொரு பள்ளிக்கு மாற்றம் செய்தால் போதாது, எங்காவது அலுவலகத்தில் மேசைமுன் உட்காரும் வேலை கொடுத்துவிடலாம் என்று யோசிக்கிறார்கள்). அவர்கள் சற்று திக்குமுக்காடிவிட்டு, “ம்.. அவரையும் விசாரிப்போம்,” என்றார்கள். ஸ்ருதி இறங்கியிருந்தது. அதன்பின் அந்தக் கபட ஆசிரியரை இன்னும் அதிகமாக வறுத்தெடுத்து, அவரது காலம் முடிவதற்குள், ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள். அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் நடுங்கினார். எனக்கு நிறைவாக இருந்தது. அவரது சொரூபம் புரியாத மாணவர்கள், ஒரு காரை மலர்களால் அலங்கரித்து, மேளதாளத்துடன் தடபுடலாக அவரை வழியனுப்பினார்களாம். இதுவும் நான் கேள்விப்பட்டதுதான். என்னைத்தான் வேறு பள்ளிக்கு மாற்றல் செய்து விட்டிருந்தார்களே! குற்றம் செய்தவர்கள் தப்பிக்க, தட்டிக் கேட்பவர்களைப் படாத பாடு படுத்துகிறது அதிகார வர்க்கம். இதனால்தான், ‘மற்றவர்கள் எப்படியோ தொலைகிறார்கள்! நாம் நன்றாக இருந்தால் சரி!’ என்று பலரும் அசிரத்தையாக இருக்கிறார்கள். பிறகு, ‘இது கலிகாலம்! அதனால்தான் உலகம் ஒரேயடியாக சீர்கெட்டுக் கிடக்கிறது!’ என்று எதையோ பழிப்பார்கள், தாமும் இவ்வுலகத்தின் ஓர் அங்கம்தான் என்பது புரியாது. சாதி செய்த சதி ‘என் கணவரோட அண்ணனை இப்போ பாத்தா, சுட்டுக் கொன்னுடுவேன்!’ நானும் என் சிநேகிதி மாதங்கியும் காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். மூன்று மணி நேரப் பயணம். அரை மணி நேரம் ஏதேதோ பேசிவிட்டு, அவள் தன் திருமணக் கதையை விவரிக்க ஆரம்பித்தாள். பாதியில், ஆத்திரத்துடன் தன் கொலைவெறியை வெளிப்படுத்தினாள். அப்படி என்னதான் ஆகிவிட்டது? தந்தையின் செல்லப்பெண் குடும்பத்தில் கடைக்குட்டியான மாதங்கி. அயல் நாடுகளில் பத்து வருட கல்லூரிப் படிப்பு படித்திருந்தாலும், ஆண்களுடன் அதிகப் பழக்கம் இருக்கவில்லை அவளுக்கு. படிப்பு முடிந்ததும் கைநிறையச் சம்பளத்துடன் உத்தியோகம். அடுத்தது கல்யாணம்தானே! வேற்றூரில் இருந்த தந்தை, ‘நம் சாதியிலேயே ஒரு பையன் இருக்கிறார். உன்னைமாதிரியே நன்றாகப் படித்தவர். நீ போய் பார்!’ என்று தொலைபேசிவழி கூற, மகள் மறுத்தாள். மாப்பிள்ளைப் பையனும், அவரது அண்ணனும் அவளைப் பார்க்க வந்தார்கள். ஏதோ பொது இடத்தில். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தட்டிக்கழிக்கப் பார்த்தாள். மாப்பிள்ளைக்கும் சந்தேகம் வந்தது: நம் சாதியில் இவ்வளவு படித்த பெண்களே கிடையாதே! இவள் நம்மை மதிப்பாளா? “அந்த அண்ணன்தான் இவர் மனசைக் கலைச்சிருக்கணும் – ‘அவ நல்லா சம்பாதிச்சுப் போடுவா. நீ மொதல்லேயே அடக்கி வைச்சுடு,’ அப்படின்னு,” மனம்நொந்து பேசினாள். “என் பெற்றோர் ஏழைத் தொழிலாளிகளாக இருந்தவர்கள்,” என்று வருங்காலக் கணவர் ஒப்புக்கொள்ள, ‘நம் பெற்றோரும் அப்படித்தானே!’ என்று அவளுக்குத் தோன்றிப்போயிற்று. ஆண்களுடன் கலந்து பழகியது கிடையாததால் அவர் குணம் அவளுக்குப் பிடிபடவில்லை. கல்லூரியில் அவ்வளவு தூரம் அவளைப் பொத்திப் பாதுகாத்திருந்தனர் இரு அண்ணன்களும். வருங்கால மாப்பிள்ளை அடிக்கடி மாமனாரைச் சந்தித்தான். இப்போது அவர் பெரிய முதலாளியாகி இருந்தார், கடுமையான உழைப்பினாலும், நேர்மையாலும். அவனுடைய போலிப் பணிவில் மயங்கினார் பெரியவர். தந்தையே இவ்வளவு தூரம் வற்புறுத்தும்போது சரியாகத்தான் இருக்கும் என்று கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டாள் மாதங்கி. கணவரோ, தாய் சொல்லியபடியெல்லாம் ஆடினார். அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டு மனைவியை நையப் புடைத்தார். “ஏன் பொறுத்துப் போனீர்கள்?” என்று கேட்டேன். மலேசியாவில் சிறிய ரப்பர் எஸ்டேட்டில் வளர்ந்திருந்த பெண். தன் அறிவுத்திறனாலேயே பலரும் மதிக்க வாழ்ந்திருந்தாள். எது கேட்டாலும், ‘போ. படி!’ என்று தந்தை விரட்டியதாலேயே தான் இந்த நிலைக்கு உயர்ந்ததாகச் சொல்லிச் சிரித்தாள். அப்படிப்பட்ட தந்தை பார்த்து வைத்த மருமகன்! அவரைப்பற்றிக் குற்றம் சொல்வது தந்தையைப் பழிப்பதுபோல் ஆகிவிடுமோ? தான் சொன்னாலும் தந்தை நம்புவாரா? ‘ஆண்கள் முன்னேபின்னேதான் இருப்பார்கள்!’ என்று அவளைச் சமாதானம் செய்துவிட்டால்? தான் கணவரிடம் படும் பாடு பிறருக்குத் தெரியாதிருந்தால்தான் தனக்கு மரியாதை என்று கணக்குப்போட்டாள் அப்பேதை. எப்போது பார்த்தாலும், ‘எங்க ஐயா!’ என்று கணவரைப்பற்றி பெருமையுடன் மாதங்கி பேசியதைக் கேட்டிருந்தேன் நான். அப்போதெல்லாம், ‘தாலி கட்டியவரிடம் எப்படி உயிரையே வைத்திருக்கிறாள்!’ என்று வியந்து போயிருக்கிறேன். ஒரு பொது நிகழ்ச்சியில் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தபோது அதிர்ந்து போனேன். குணவானாகத் தெரியவில்லை. இவரைப்பற்றியா பெருமையாகப் பேசுகிறாள்! சில ஆண்டுகள் கழித்து, நானும் மாதங்கியும் ஓர் ஊருக்கு ஒன்றாகப் பயணம் செய்துகொண்டிருந்தபோதுதான் அதற்கு மேலும் பொறுக்க முடியாது, என்னிடம் எல்லா உண்மைகளையும் கூறினாள். அதற்காகவே என்னை வருந்தி அழைத்திருந்தாள் என்றுதான் தோன்றியது. ஏதோ வேகத்துடன், ஒரே மூச்சில் சொல்லி முடித்தவள், “எல்லாத்தையும் இப்பவே மறந்துடுங்க, நிர்மலா!” என்று கெஞ்சியபோது எனக்குப் பரிதாபமாக இருந்தது. கணவர் மோசமாக இருந்தால் இருந்துவிட்டுப் போகிறார்! அதனால் அவரை மணந்த பெண்ணுக்கு என்ன இழுக்கு? அவள்மேல் என்ன தவறு? எதற்காக மூடி மறைத்து, பொய்யான வாழ்க்கை வாழவேண்டும்? நாங்கள் திரும்புகையில், அவள் கணவரிடமிருந்து அழைப்பு வந்தது. “ஸாரிம்மா. என்னால ஒன்கூட வரமுடியலே!‘என்று உருகினார். தான் கிளப்பில் குடித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னாராம். மனைவி சம்பாதிப்பதையெல்லாம் பின் எப்படித்தான் செலவழிப்பது? இவள் அலட்சியமாக, “அதனால என்ன! என் கூட்டாளி எங்கூட வந்திருக்காங்க,” என்றாள். “யாரு?” “நிர்மலா ராகவன்!” “ஒங்க பேரைக் கேட்டு அவருக்கு ஒரே ஷாக்! என்னை நம்பலே!” என்றாள் பெருமையுடன் சிரித்தபடி. “நீங்க பேசுங்க!” நான் அவருக்கு ’ஹலோ’ சொன்னேன். அந்தப் பக்கத்திலிருந்து வார்த்தைகள் எதுவும் வரவில்லை. அவள் தொலைபேசியை மூடிவிட்டுப் பெரிதாகச் சிரித்தாள். நானும் லேசாகச் சிரித்தேன். ‘தான் எப்படி வளைத்தாலும் வளைந்து கொடுக்கும் மனைவி எதற்காக இப்படி ஒரு தோழியைத் தேடிப் பிடித்தாள்? நம் போதாத காலம், இவளுக்கு எங்காவது தன்னை எதிர்க்கும் தைரியம் வந்துவிட்டால்?’ என்று அஞ்சியிருப்பார். எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? இதேபோல் வேறு ஒரு பெண் என்னை நாடி, தான் கணவரிடம் படும் அவதிகளைக் கூற, நான் அவளுக்குப் பரிந்து பேசினேன். எங்கள் வீட்டுக்கு வந்திருந்தவர், பாதி வாக்கியத்தில், ‘போகலாம். வா!’ என்று அவளை இழுக்காத குறையாக திரும்ப அழைத்துப்போனார்! தாம் செய்வது – மனைவியைக் கேவலமாக நடத்துவது, உடல்வதை மட்டுமின்றி, பிறர்முன் மட்டம் தட்டி, உணர்ச்சிபூர்வமாகவும் வதைப்பது – தவறு என்று இவரைப் போன்ற ஆண்களுக்குத் தெரியாமல் இல்லை. தெரிந்தே செய்வதால், தம்மை மாற்றிக்கொள்ளும் எண்ணமும் இவர்களுக்கு இல்லை. ஆகையால், அது ‘தவறு’ என்று பிறர் சுட்டிக்காட்டுவதை பொறுக்க முடியாது. பெண்ணுக்குப் பொறுமைதான் சிறந்த ஆபரணம் என்று நம்பவைக்கிற, நம்புகிற, பிற பெண்கள் இருக்கும்வரை இத்தகையவர்கள் எதற்காக மாறப்போகிறார்கள்! என்றோ செய்த பாவபுண்ணியங்கள் பள்ளி விடுமுறை வந்தால், எங்கள் பாட்டி வீட்டில் குழந்தைகளும் பெரியவர்களுமாக வெளியூர்களிலிருந்து பலர் வந்து தங்கிவிடுவோம். முப்பது, நாற்பது பேருக்கு வேண்டுமே என்று வழக்கத்தைவிட முப்பது மடங்கு பால் வாங்க முடியுமா? தயிரில் நிறைய தண்ணீர்விட்டு, நீர்மோராக்கிவிடுவார்கள். ‘மோர்தான்!’ என்று சத்தியம் செய்தால்தான் நம்ப முடியும். அப்படி ஒரு திரவமாக இருக்கும். அதைச் சாப்பிடப் பிடிக்காமல், நான் ஒரு முறை துணிந்து, ‘பாட்டி! இன்னிக்கு ஒரே ஒரு நாள் எனக்கு மட்டும் கெட்டியா தயிர் குத்த முடியுமா?’ என்று கெஞ்சிக் கேட்டுவிட்டேன். பாட்டியின் பதில் உடனடியாக வந்தது: ‘நான் மாட்டேம்பா. பாரபட்சம் காட்டினா, அப்புறம் கடைசி காலத்திலே கை கால் விளங்காமப் போயிடும்!’ இப்படி ஏதாவது பயமுறுத்தி வைத்தால்தான் மனிதர்கள் ஒழுங்காக இருப்பார்கள் என்று யாராவது கட்டிவிட்ட கதையோ என்று அப்போது தோன்றியது. ஆனால், இறக்கும்வரை பாட்டி நன்றாகத்தான் இருந்தார்கள். வாழும்போது ஒருவரின் நடத்தை எப்படி இருக்கிறதோ, சாகும்வரை, இன்னும் சொல்லப்போனால், இறப்பிறகுப் பின்னும் அதன் பாதிப்பு இருக்கும். அதாவது, ஒருவருடைய சந்ததிகள் மூத்தவர்களின் செயலின் விளைவுகளை அனுபவிக்கிறார்கள். நான் என் பாடல்களைப் பதிவு செய்யத் தமிழ்நாட்டுக்குப் போயிருந்தபோது, இளம் பெண்பாடகி ஒருத்தியின் இசைப்புலமையைப் பாராட்டினேன். “எல்லாம் ஒங்க ஆசிர்வாதம்,” என்றாள். ‘பெரியவர்களின் நல்வாழ்த்துகள் நன்மையை விளைவிக்கும் என்றால், ஒருவர் தீங்கு செய்தால்?’ என்று என் யோசனை போயிற்று. கதை 1 ‘உங்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தபின், எதற்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொண்டீர்கள்?” என்று உறவினர் ஒருவரைக் கேட்டேன். ’ஆரஞ்சு பழத்தின் சக்கையை உறிஞ்சிவிட்டேன். சக்கையைத் தூக்கித்தானே போடணும்?” என்றார் அலட்சியமாக. ’சக்கை’ என்று அவர் வர்ணித்த முதல் மனைவி அவரை வெறுத்ததில் ஆச்சரியமில்லை. தான் ஒருத்தியாகவே பாடுபட்டு குழந்தைகளை வளர்க்க நேரிட்டபோது, தந்தையைப்பற்றி பெருமையாக எதுவும் சொல்ல முடியவில்லை. குழந்தைகளும் தான்தோன்றித்தனமாக வளர்ந்தார்கள். தாய் கவலைப்படவில்லை. ‘பெரியவர்கள் ஒழுங்காக இருந்தால்தானே அதைப் பார்த்து, அவர்கள் குழந்தைகளும் சரியாக வளர்வார்கள்!’ என்று அலட்சியமாகச் சொன்னார். வயதானபின், இரண்டாவது மனைவியையும் நிராதரவாகவிடத் தயங்கவில்லை மனிதர். அடைக்கலம் தேடி முதல் மனைவியிடம் வந்தார். ஆனால், யாரும் அவரை ஏற்கவில்லை. கதை 2 பதின்ம வயதான தன் மகள்களை ஒத்த பெண்களை சிரிப்பும், வேடிக்கையுமாகப் பேசிக் கவர்வதே தான் ஆணாகப் பிறந்ததன் பலன் என்பதுபோல் நடந்துகொண்டார் அந்த மனிதர். பதின்ம வயதுப்பெண்களைச் சிரிக்க வைத்தால், அவர்களது எதிர்ப்பு குறைந்துவிடும், எளிதில் தன் வலையில் விழுந்துவிடுவார்கள் என்று அவர் போட்ட கணக்கு தப்பவில்லை. பெற்ற மகள்களே அவமானத்துடன் குறுகும்படி இருந்தது அவரது நடத்தை. உறவினர்கள் அவரைத் தம் வீட்டில் சேர்க்கவே அஞ்சினார்கள். (மேல் நாடுகளில் இந்த சமாசாரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்களோ, என்னவோ! ஆனால், இந்தியாவில் அறியாப்பெண்களின் மனநிலையை, அவர்களது எதிர்காலத்தை, பெரிதும் பாதிக்கும்). அவரது காலம் முடிவதற்கள் தன் லீலைகளின் விளைவுகளை அவர் காணவேண்டிவந்தது. சில பிள்ளைகளுக்குப் பிள்ளைப்பேறே கிட்டவில்லை. ஒருவனுக்கு ஆண்மை இல்லை. தப்பிப் பிறந்த பேரக்குழந்தைகளையும் அவரது வினை தொடர்ந்தது. பிறக்கும்போதே நோய். ஒருவனுக்குக் கல்யாணமான அன்றே மனைவி அவனுடன் வாழ மறுத்துப் போய்விட்டாள். ‘அப்பாவியான குழந்தைகள் எப்படித் துயர்ப்படுகிறார்கள்!’ என்று உறவினர்கள் பரிதாபப்பட்டாலும், அவர்களுக்கும் காரணம் தெரிந்தே இருந்தது. பல தாய்மார்களின் சாபம் சும்மா விடுமா! வேறு சிலர், தம் நடத்தையில் மி்கக் கவனமாக இருப்பார்கள். ‘என்னைப்பற்றித் தவறாகப் பேச என்ன இருக்கிறது!’ என்ற மிதப்புடன், பிறரை ஓயாஉ விமர்சிப்பார்கள். கதை 3 விவரம் அறியாத வயதில் வத்சலாவை சற்று வயதானவருக்கு மணமுடித்தார்கள். அதனால் விளைந்த கலக்கமோ, என்னவோ, அவளுக்கு ஆண்-பெண் உறவைப்பற்றி கண்டபடி பேசுவதில் அளப்பற்ற ஆர்வம். அண்ணன்-தங்கை அன்பாக இருந்தால்கூட அவர்களுக்குள் தகாத உறவு இருக்கவேண்டும் என்று பேசுவாள். விளைவு: தன் இறுதிக்காலத்தில் இருபது ஆண்டுகள் படுத்த படுக்கையாக, அத்தியாவசியத் தேவைக்காக பேசக்கூட இயலாத நிலை ஏற்பட்டது. நாவைச் சரியான முறையில் பயன்படுத்தாத பாவமோ! வத்சலா பெற்ற குழந்தைகளுக்கும் இன்பகரமான வாழ்க்கை அமையவில்லை. அம்மா பேசுவதைக் கேட்டே வளர்ந்த ஆண்குழந்தைகள் பதின்ம வயதிலேயே ‘செக்ஸ்’ என்ற விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டி, பல சிறுமைகளுக்கு உள்ளாகி, நோய்வாய்ப்பட்டுப்போனார்கள். அதற்கு அடுத்த தலைமுறையிலும் பல கோளாறுகள். பெரும்பாலான இளைஞர்களுக்கு முதியோர் என்றால் இளக்காரம். தாம் என்றும் இளமையாகவேதான் இருக்கப்போகிறோம் என்ற மிதப்புடன் நடந்துகொள்வார்கள். அவர்களே மூப்படைநதும், அவர்கள் நடந்துகொண்டதைப்போலவே இளைஞர்கள் அவர்களை அலட்சியப்படுத்த, அதை மாற்றத் தெரியாது, வருத்தத்துடன் ஏற்பதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்? சிறு வயதிலிருந்தே எனக்கு முதியவர்களுடன் பேசுவதும் பழகுவதும் பிடித்த சமாசாரம். ‘இவர்களுக்குத்தான் எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கிறது!’ என்று வியப்பாக இருக்கும். ஒரு முறை என் தாயின் அத்தை சென்னையிலிருந்த எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவரை எப்படித் தனியாக ரயில் நிலையத்துக்கு அனுப்புவது என்ற பிரச்னை எழுந்தது. பதினைந்து நிமிடத்துக்குமேல் நடந்து போகவேண்டும். (அந்தக் காலத்தில் ஆட்டோ ரிக்ஷா கிடையாது) என் பாட்டி பதின்ம வயதாக இருந்த என்னைச் சிபாரிசு செய்தார், ‘நிரு கையைப் பிடிச்சுண்டு போய், மெதுவா எல்லாத்தையும் காட்டி அழைச்சிண்டு போகும்!’ என்று. என் வழக்கம்போல், சிறு குழந்தைக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல், பார்ப்பதையெல்லாம் விளக்கினேன். வெளியில் அதிகம் போய்வர உடல் வலுவோ, வாய்ப்போ இல்லாதவர்கள், பாவம்! அத்தை பாட்டி அந்நாளை எவ்வளவு தூரம் மதித்தார்கள் என்று பதினேழு வருடங்களுக்குப்பின் தெரிந்தது. “நீ அத்தைக்கு என்ன பண்ணினே? என்னை எப்போ பார்க்கிறபோதும், ‘நிர்மலாவுக்குக் கல்யாணமாகி, பதினோரு வருஷத்துக்கு அப்புறம் ஒரு பிள்ளைக்குழந்தை (ஆண்) பிறந்து, அதுவும் அல்பாயுசில போயிடுத்தாடி?’ன்னு அழறா!” என்று என் தாய் கேட்டபோதுதான் எனக்கு அந்தச் சம்பவமே நினைவில் வந்தது. ’இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா!’ என்று சிரித்தபடி சொன்னேன். ‘எவ்வளவு அனாதரவாக உணர்ந்தால், இதைப்போய் நினைவு வைத்திருப்பார்கள்!’ என்ற பரிதாபம் ஏற்பட்டது. சமீபத்தில் ஒரு மருத்துவர், ‘உங்களுக்கு ஒரு பல்கூட ஆடவில்லையா? ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற எந்த வியாதியும் கிடையாதா?’ என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டபோது, ‘என்றோ பெரியவர்கள் செய்த ஆசிர்வாதம்!’ என்று சொல்லத் தோன்றியது.