[] [cover image] மார்க்சிய அழகியல் கோவை ஞானி FreeTamilEbooks.com CC-BY-SA மார்க்சிய அழகியல் 1. மார்க்சிய அழகியல் 1. மின்னூல் உதவி 2. பதிப்புரை 3. அணிந்துரை 4. என்னுரை 2. பஞ்சாங்கம் கடிதம் - 1 1. கடிதம் - 2 2. கடிதம் - 3 3. கடிதம் - 4 3. வாழ்வியல் கோட்பாடு தொடர்ச்சி 4. அசுவகோஷ் கடிதம் - 1 1. கடிதம் - 2 2. கடிதம் - 3 5. எனது இலக்கியப் பார்வை 6. எழுத்தாளனும் வர்க்கப் பார்வையும் 7. இராசேந்திர சோழன் - கடிதம் 8. முத்துநிலவன் - கடிதம் 9. ரங்கராஜன் - கடிதம் 10. சிதம்பரநாதன் கடிதம் 1 1. கடிதம் 2 2. யதார்த்தம் - யதார்த்தவாதம் - நவீனத்துவம் 11. யதார்த்தவாதம் - நவீனத்துவம் – பின் நவீனத்துவம் 12. மார்க்சியமும் இலக்கியமும் - I 13. இலக்கியத்தை எவ்வாறு கற்கலாம்? 14. சிற்றிதழ் வளர்த்த தமிழ் – 1 15. சிற்றிதழ் வளர்த்த தமிழ் II 16. ரஷ்யப் புரட்சி: இலக்கிய சாட்சியம் - நூல் ஆய்வு 17. காற்றில் கலந்த பேரோசை - நூல் ஆய்வு 1. FREETAMILEBOOKS.COM 2. கணியம் அறக்கட்டளை 3. நன்கொடை மார்க்சிய அழகியல் மார்க்சிய அழகியல்   கோவை ஞானி   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - தாரா - thara.nakshatraa@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/marxia_azhagiyal} மின்னூல் உதவி Author correspondence and acquisition of Creations Gnuஅன்வர் gnuanwar@gmail.com மெய்ப்பு செய்தவர் தாரா பதிப்புரை கோவை ஞானி அவர்கள் குறிப்பிடத்தகுந்த மார்க்சிய ஆய்வாளர். மார்க்சியம் பற்றி இவர் நிறைய நூல்கள் எழுதியுள்ளார். அவை ஆகச்சிறந்த நூல்களாக விளங்கி வருகின்றன. பொதுவாக மார்க்சியத் திறனாய்வாளர்கள் ரொம்பக் கறாரானவர்கள்; அவர்களது ஆய்வுகள் எந்திரத்தனமாக இருக்கும்; தங்களது செருப்புகளுக்காகக் கால்களைக் கத்தரித்துக் கொள்பவர்கள், தாங்கள் பிடித்த முயலுக்குத் தான் மூன்று கால்கள் என்று சாதிப்பவர்கள் என்று பரவலாகப் பேசிக் கொள்வார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனினும் இதை என்றும் நான் நம்பியவனில்லை. ஒருவேளை ஒன்றிரண்டு பேர் அப்படி இருக்கலாம். எல்லோரும் அப்படி இல்லை என்பதுதான் உண்மை . எனக்குத் தெரிந்து தமிழவன், முத்து மோகன், எஸ். வி. ராஜதுரை போன்றவர்கள் விதிவிலக்கானவர்கள். தங்கள் எல்லைகளை விரித்துக் கொண்டே இருப்பவர்கள். இந்த வரிசையில் கோவை ஞானி அவர்கள் முதன்மையானவர் என்பதும் அவரது எழுத்துக்கள் பல்வேறு பரிமாணங்கள் இருக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். காவ்யா இவரது நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. நவீனத்துவம் பின் நவீனத்துவம், இந்தியாவில் தத்துவம், கலாச்சாரம், அறிவியல், அதிகாரம், ஆன்மீகம், தமிழில் படைப்பியக்கம், மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் என்ற வரிசையில் இப்போது “மார்க்சிய அழகியல்” வருகிறது. இந்நூல் ஒரு வித்தியாசமான அமைப்புடன் உள்ளது. இதில் கடிதங்களும் கட்டுரைகளும் இடம் பெற்றிருப்பது வாசிக்க எளிதாகவும் இனிதாகவும் அமைந்துள்ளது. இவரது - விவாதங்கள் ஆழ்ந்த புலமையையும் தமிழ்க் கலாச்சாரத்தின் மீது அவர் கொண்ட அக்கறையையும் காட்டும். மார்க்சியத்துடன் இவர் தமிழியம், தலித்தியம், பெண்ணியம், சூழலியம், பின் நவீனத்துவம் போன்றவற்றை இணைத்து சிந்திப்பது சிறப்புமிக்கதாகும். உலகமயமாதலாலும் சந்தைமயமாதலும் தமிழையும் தமிழ் அடையாளத்தையும் எவ்வாறு அழித்துவிடும் என்பதைப் பற்றியும் மிகுந்த எச்சரிக்கையோடு சுட்டிக் காட்டுகின்றார். மார்க்சிய அழகியல் பற்றிய இவரது எண்ணங்களும் எடுத்துக்காட்டுகளும் ஏற்றுக் கொள்ளத்தக்கவைதாம். இந்நூல் இதற்கான புதுவழியைக் காட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அணிந்துரை -அருள்திரு சுதாகர் அழகு மாயைகளும், அழகிய தேடல்களும் இயற்கையை நமக்குக் கிடைத்த வரலாறு, அரசியல், பொருளியல், குறியீடுகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே புரிந்து கொள்கிறோம். நமது உலகிற்கென்று ஒரு வரலாறு இருப்பது போன்றே, இயற்கைக்கும் ஒரு வரலாறு இருக்க வேண்டும். அந்த வரலாற்றை அறியும் ஆவல் மாந்தனின் சிறப்புமிக்க தொடர் தேடலாக எப்போதும் இருந்து வந்துள்ளது. கிரேக்கர்களுக்கு இயற்கை நிரந்தரமானது. கிறித்தவருக்கு அது படைக்கப்பட்ட ஒன்று; முடிவுடையது. நவீன அய்ரோப்பியருக்கு அது துல்லியமான கணிதம். தொழிற் புரட்சிக்குப் பிறகு இயற்கை என்பது பொருளியல் ரீதியாக சுரண்டப்படக்கூடியது. இயற்கையை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்றார் காண்ட். முடிவற்றதும், அழியாததுமே இயற்கை என்றார் அக்குயினாஸ். இயக்கத்திலிருப்பது இயற்கை என்றார் மார்க்ஸ். 21ம் நூற்றாண்டு விரிவடையும் பிரபஞ்சம் பற்றி எடுத்துரைக்கிறது. வியக்கத்தக்க வகையில், மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் இயற்கை என்பது இயங்கிக் கொண்டேயிருப்பதால் இது இயற்கை; புடைத்துக் கொண்டே செல்வதால் இது புடவி என்றனர். சூரியன் என்றும், விண்மீன்கள் என்றும், பால்வெளி என்றும் நம்மால் அறியப்பட்டுள்ளனவற்றைவிட, மிக நுண்ணிய அணுவின் இயக்கம் அதிக சிக்கலானதாயுள்ளது. 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, புவியில் தோன்றிய ஒரு செல் உயிர் இன்று பல படிமலர்ச்சி நிலைகளைத் தாண்டி, தனித்தியங்கும் ஆற்றல் மிக்க உயிரிகளால் மாற்றம் கண்டுள்ளது. மரபணுக் கூறுகளோடு ஒவ்வொரு உயிரியும் பலுகிப் பெருகும் தன்மையுடையதாயுள்ளது. பல்திசைப் படிமலர்ச்சியுடையதாக உயிரிகள் எதிர்காலத்தில் விளங்கக்கூடும். ஒரு செல், பல செல் தாவரங்கள், மீன்கள், விலங்குகள், பூச்சிகள், பறவைகள், பாலூட்டிகள் என்ற படிமலர்ச்சியின் கடைசித் தோன்றலான மானுட உயிர் வெறும் அறிவை மட்டும் மையமாகக் கொண்டு இயங்கவில்லை. அடுத்திருக்கும் உயிரியை நோக்கித் தன்னைத் திறந்து கொள்கிற வகையிலும் இயங்குகிறது. மூளையிலுள்ள பதினான்காயிரம் மில்லியன் நியூரான்களின் உயிர்த்துடிப்புமிக்க இயக்கம் மனிதனின் அக, புற இணைவைச் சாத்தியப்படுத்துகிறது. தொன்மை மாந்தன் அறிவைப் பெற்றிருந்தான். தன்னறிவு பெற்ற மாந்தன் பின்புதான் தோன்றுகிறான். குழுக்களாய் இயங்கிய மாந்தவுயிரிகளிலிருந்தே தனித்தன்மையுடைய மாந்தன் தோன்றியிருக்க வேண்டும். தனது வாழ்வைச் சிக்கலான அமைப்பினையுடைய மொழிகளாலும், குறியீடுகளாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் மாந்த இனத்தில் மட்டுமே காணக்கூடிய ஒன்று. பொருள் தன்னை திறந்து கொள்கிறது. வெளிப்படுத்துகிறது. உண்மையை உணர்கிறது. குறியீடுகளால் உண்மையை அர்த்தப்படுத்துகிறது. மொழியின் மூலம் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. நமக்கு முன்பே கூறப்பட்டுள்ள விசயங்களிலிருந்துதான் அர்த்தம் அல்லது அர்த்தமின்மையைக் உருவாக்கிக் கொள்கிறோம். ஆதிக்க சக்திகள் நமது வாழ்வின் அர்த்தங்களை அழித்துப் போடுகின்றன. விளிம்பு நிலை மக்களை நிலைகுலையச் செய்கின்றன. பாதுகாப்பற்ற கொடுஞ்சூழலை உருவாக்குகின்றன. அழகுப் போர்வைகளால் அசிங்கச் சேறுகளை மூடி மறைக்கின்றன. நமது மனங்களைச் சூறையாடி- வெறுமையில் நம்மை வீசியெறிகின்றன. கலைஞர்களால் இவற்றை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது. பிணங்களின் மீது போடப்பட்டுள்ள மலர்களை விலக்கி, மானுட வாழ்வில் உண்மையும், அழகும், நீதியும், அன்பும் வெளிப்படச் செய்வர். ஒடுக்கப்பட்டோரின் ஒடுங்கிய முகம், உழைத்து களைத்த உழவனின் உடல், காய்த்துக் காய்ப்பேறிய தலித் கூலியின் கைகள், ஒப்பனைகளுக்காய் செலவிட முடியாத வறிய பெண்மணி, குசராத்தில் கருகும் மானுடப் பிஞ்சுகள் போன்றன யாவும் மேட்டுக்குடியினர் நமக்குள் உருவாக்கிய அழகியல் உணர்வுகளை அவல் உணர்வுகளாக்கி விடுகின்றன. ஊடகங்கள் உருவாக்கும் ’அழகு மாயை ’களைத் தோலுரிக்கின்றன. வாழ்க்கை பன்முக நெருக்கடிகளுக்கு ஆளாகிறபோது, மனிதனுக்குள்ளிருக்கும் கலை உயிரி விழித்தெழுகிறது. யாதும் ஊரே ; யாவரும் கேளிர் என்று கலகக் குரல் எழுப்புகிறது. ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கப் போராடும் எவரிடமும் இக்குரல் ஓங்கி ஒலிக்கத்தான் செய்கிறது. இந்தக் குரல்தான் கலையாகவும், காப்பியமாகவும், பெருங்காப்பியமாகவும், ஓவியங்களாகவும், சிலைகளாகவும், சின்னங்களாகவும், இசையாகவும் மாறுகின்றது. இவ்வாறு, அழகியலின் மிகவுயர்ந்த வெளிப்பாடாக மக்களின் கலைகளைக் காண்கிறோம். மக்களின் அழகியலை மையப்படுத்தும் போதுதான், சமுதாயம் உன்னத நிலையை அடைய முடிகிறது. இலாப நோக்கிலான முதலாளியச் சந்தைச் சமூகத்தின் நாசகாரப் போக்குளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடிகிறது. அந்த வகையில், அழகியல் மனிதரின், இயற்கையின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. அழகியலை வரையறை செய்வது கடினம் எனினும், சமூகம் பற்றிய நமது புரிதலினூடே உண்மையை அழகு எனலாம். விடுதலையை அழகு எனலாம். நம்பிக்கை அழகு. லயித்தல் அழகு. படைப்பு அழகு. அன்பு அழகு. கனவும் கற்பணையும் அழகு…. என்று கூறிக்கொண்டே செல்லலாம். அழகியல் உருவாக்கத்தில் மக்களின் கலை, இலக்கியங்கள், மக்களுக்கான கலை இலக்கியங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு. கரும்பு தின்னக் கூலியா, கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடைபிடிப்பான் போன்ற வழக்காறுகள் மக்கள் அழகியலைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மேற்கத்திய அழகியல் நம்மை வெகுவாக ஆக்கிரமித்துள்ள நிலையில், அறவுணர்வுகளை மக்களிடம் கொண்டு செல்லும் சாதனங்களாக விளங்கிய நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன. நமது பண்பாட்டின் முக்கிய அம்சம் வணிகமயமாதலை எதிர்த்து நிற்பது. பாடுபட்டு பணத்தைத் தேடிப் புதைத்து வைக்கும் கேடு கெட்ட மானிடரை மக்களுள் பதடி என எள்ளி நகையாடியது. ஆனால், இன்று பண்பாட்டின் அனைத்து அம்சங்களும் வணிகமயமாகிவிட்டன. சரக்கு மயமாகியுள்ளன. இலக்கியம் கூட ஒரு விற்பனை பண்டமாகிவிட்டது. ஒரு படைப்பாளியின் தரம் படைப்பின் தரத்திலோ, அர்த்தத்தின் ஆழத்திலோ காணப்படுவதில்லை. எவ்வளவு படிகள் விற்பனையாகின்றன என்பதிலிருந்தே அவனது மதிப்பு உருவாக்கப்படுகிறது. மேட்டுக்குடியினரின் அழகியல் துய்ப்புகள் ஏழைகளை உற்பத்தி செய்கின்றன. கொள்ளையும் சுரண்டலும் இவை ஏற்படுத்தித் தரும் வசதிகளும் ஏழைகளை மென்மேலும் வறியோராக்குகின்றன. II மக்கள் சார்புடைய அழகியல் உருவாக்கத்தில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வருபவர் ஞானி அவர்கள். அவரின், “மார்க்சிய அழகியல், கடிதங்களும், கட்டுரைகளும்” நூல் மார்க்சியத் தமிழ் இலக்கியப் பெருங்கடலில் மூழ்கி, மூச்சடக்கி, வெளிக் கொண்டு வரப்பட்ட கலைச்சங்கு. கோவை ஞானியின் மற்றுமோர் சிகரப் படைப்பு இதுவெனலாம். மாந்தன் வாழும் சூழலையும், அவனுக்குள் அகன்று விரியும் அகமன இயக்கத்தையும் இடைவிடாமல் ஆராய்ச்சிக்குட்படுத்தி வருபவர் ஞானி அவர்கள். மண், விண், காலம் ஆகியவற்றோடு மானுடன் கொள்ளும் உறவைப் படைப்பு என்றும், பன்முக இயக்கம் என்றும், பல திசைப் பார்வை என்றும் அழகியல் என்றும் குறிப்பிடுகின்றார். சீர்கெட்ட முதலாளி யமும், செல்லரித்த ஏகாதிபத்தியமும் நமது அன்றாட வாழ்வை அர்த்தமிழக்கச் செய்கின்றன. சமூக விடுதலைக்கு எதிரானதாகவும், புதிரானதாகவும், நமது வாழ்வு கட்டமைக்கப்பட்டு வருகின்றது. சுரண்டலும், ஒடுக்கமுறையும், ஆதிக்கங்களும் நமது காலடியிலேயே வளர்த்தெடுக்கப்படும் கொடுஞ்சூழலில் அன்பையும், பண்பையும், நல்லுறவையும் தனிமனிதர்கள் பேணுவது எவ்வாறு என்று வினாத் தொடுக்கிறார். நம் கல்வி முறையும், குடும்ப, சமூகச் சூழலும் நமக்குள் சமதர்மச் சிந்தனைகளைத் தூண்டவில்லையெனக் கவலைப்படுகிறார். முனைவர் பஞ்சாங்கம், அசுவகோஷ், இராசேந்திரச் சோழன், முத்துநிலவன், சிதம்பர நாதன், எஸ்.வி.ஆர்., ரங்கராஜன் போன்றோருக்கு அவர் எழுதியுள்ள மடல்கள் கொள்கை ஆவணங்களாய் மிளிருகின்றன. கட்சிக்கு வெளியிலும் மார்க்சியம் வளர்கிறது என்பதையும், மார்க்சிய நோக்கில் தமிழ்த் தேசியம் இன்றைய காலத்தின் தேவை என்பதையும் தொடர்ந்து வலியுறுத்துகிறார். மார்க்சியம் தமிழ் இலக்கிய ஆய்விற்குத் தன்னை இட்டுச் சென்றதைக் குறிப்பிடுகிறார். தமிழருக்குள் குவியும் தமிழ்ப் பற்றினைப் பிற்போக்கு, மீட்புவாதம் என்றெல்லாம் கேவலப்படுத்தும் கட்சியின் தாறுமாறான பார்வைப் பழுதுகளைச் செப்பனிட வேண்டும் என்கிறார். கோவை வட்டாரத்தின் முப்பதாண்டளவிலான, பங்களிப்பை இருட்டடிப்புச் செய்கிற குள்ள மனப்பான்மையினரைச் சாடுகிறார். தனக்குள் திறனாய்வு வளமை பெற்றதற்கு இலக்கியத் திறனாய்வு ஆங்கில நூல்களும் காரணம் என்கிறார். தமிழ் இலக்கியத்தின் செழும் பகுதிகளைத் தொகுத்துக் கொள்கிறார். பாரி முதலிய வேளிர்கள் வெளிப்படுத்தும் ஆதிப் பொதுமைச் சமூக அறங்கள் நமது மரபு வேர்கள். வள்ளுவனும், இளங்கோவும் மக்கட் சார்பினர். சாத்தனின் அமுதசுரபி சமதர்மத்தின் குறியீடு என்கிறார். அன்பு, அறம், உழைப்பு, பகிர்வு ஆகியவற்றைச் கொண்டியங்குவதே தமிழ் மரபு, தமிழ் மெய்யியல் என்கிறார். வெங்கட் சாமிநாதன், பிரமிள், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜெயமோகன் போன்றோர் மார்க்சியத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களின் மக்கட் சார்பு மதிப்பிற்குரியதெனப் போற்றுகிறார். சமதர்மமும், சுயமரியாதையும் பெரியாரின் மெய்யியல் பகுத்தறிவு ஓர் ஆய்வுமுறை மட்டுமே. இன்று, பெரியாரியம் முதலாளியத்திற்குத் துணை நிற்கிறது. சாதி, மத, பார்ப்பனிய எதிர்ப்போடு நிற்பது முதலாளிய எல்லையே என்கிறார். பூமணி, செயப்பிரகாசம், தெய்வசுந்தரம், மு. இராமசாமி, இலக்கிய வெளிவட்டம் நடராசன், ராஜ்கவுதமன் போன்றோரைக் கொண்டு ஒருங்கிணைந்த கலாச்சார இயக்கம் ஒன்று செயல்பட்டிருந்தால், தமிழகத்தில் மக்கள் கலாச்சார மேலாண்மையை நிறுவியிருக்க முடியும் என்கிறார். கலாச்சாரம், தத்துவம், இலக்கியம் போன்றவை பெறும் பிரதிபலிப்பே என வாதிடுவது முடமான அரசியல் பார்வை என்கிறார். சோசலிச யதார்த்தவாதம் ஓர் அரைகுறைக் கோட்பாடு என்கிறார். நவீனத்துவத்திற்கு மார்க்சிய மரபு வேர்கள் உண்டு என்கிறார். கார்க்கி, மாயா கோவ்ஸ்கி, பிரெக்ட் போன்றோரை இதற்குச் சான்றாக்குகிறார். முத்தையா, வானமாமலை, ரகுநாதன், ஜீவா போன்றோரின் பங்களிப்பிலுள்ள மார்க்சிய சாரத்தை வடித்தெடுக்கிறார். கட்சி வட்டாரம் முன்னிறுத்துவது முதலாளிய மார்க்சியமே, தமிழ் மார்க்சியம் அல்ல என்கிறார். கட்சிகளுக்கு வெளியில்தான் மாவோ மார்க்சியம், தமிழ் மார்க்சியம் வளர்கிறது. எஸ்.வி.ஆர்., எஸ்.என்.ஆர். போன்றோரின் ஆக்கரீதியான மார்க்சியத்தைப் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டுகிறார். மார்க்சியத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்கிறார். பெண்ணியம், தலித்தியம், மார்க்சியத்தின் உள்ளுறை ஆற்றல்கள். பெண்கள், உழவர்கள், தலித்துகள், பழங்குடிகள் போன்றோருக்கான விடுதலைச் செயல்முறைச் சித்தாந்த தளமாக மார்க்சியத்தை மாற்றுவது நம் காலத்தின் தேவை என்கிறார். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றோரைப் பெயரளவில் உச்சரித்துக் கொண்டு, அதிகாரத்தை வளர்க்கும் சி.பி.ஐ., சி.பி.எம் மிற்கு நாம் மரியாதை தரமுடியாது என்கிறார். மாவோ வழி மார்க்சியமே வெல்லும் என்கிறார். தமக்கென பீடங்களை, ஒளிவட்டங்களை விரும்புவோரை நாம் ஏற்பதற்கில்லை என்கிறார். அமைப்பியல், பின் நவீனத்துவம் போன்றவற்றின் இடதுசாரிப் போக்கினை இனங்கான வேண்டும் என்கிறார். மார்க்சியத்தை வளப்படுத்தும் இப்போக்கு தமிழவனிடம் இல்லை என்கிறார். ஆதிப் பொதுமைச் சமூகத்தின் சமதர்ம நெறியாகிய அறமே மார்க்சியத்தின் தத்துவம். இயங்கியல் பொருள்முதல்வாதம் இதில் ஒரு கூறு மட்டுமே என்கிறார். இராசேந்திர சோழனின் இலக்கிய இயக்கக் கொள்கை அறிக்கை அரசியல் அறிக்கையாக உள்ளது என்கிறார். தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய விரிவான விவரத் தொகுப்பு தேவை என்கிறார். வண்ணநிலவன், பிரபஞ்சன், பாவண்ணன், பூமணி போன்றோர் எழுத்துப் பயில் மனைகளை உருவாக்க வேண்டும் என்கிறார். பசுமை முகாம்கள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் போன்ற உயிர்த்துடிப்புடைய இயக்கங்களை நம்பிக்கையுடன் கண்ணோக்குகின்றார். வாழ்வுக்கான அர்த்தத்தைத் தருவதே வாழ்வின் அறவியல் என்கிறார். படைப்பியக்கமே கவித்துவம். கவிதையின்றி தனக்கு வாழ்வில்லை என்கிறார். அறிவுவாதம், விஞ்ஞான வாதம், பகுத்தறிவுவாதம், முதலியவை யதாத்தவாதமே. யதார்த்தம் ஒரு கட்டமைப்புதான். அதைக் கலைக்க முடியும். நன்மை, தீமை, உண்மை , மேன்மை , பின் நவீனத்துவம் குறித்து விரிவாக எழுதுகிறார். நேர்கோட்டு விளக்கங்கள் வரலாறு ஆகமுடியாது என்கிறார். புதிய உண்மைகளுக்குத் திறந்து கொள்வதைக் கட்டமைப்பு / உடைப்பு என்கிறார். உணவு, உடை, பாதுகாப்பு போன்றவற்றிற்குள் எவரும் முடங்கிவிடக்கூடாது. போராடாமல் எவருக்கும் எவரெஸ்டு சிகரம் எட்டிவிடாது. வரலாற்றின் எல்லைகளைத் தகர்ப்பவனே மனிதன். சிக்கல் மிகுந்த உலகின் யதார்த்தச் சூழலைப் படைப்பின் மூலம் தெரிந்து கொள்வதையே நவீனத்துவச் சிந்தனை என்போம் என்கிறார். கலைஞனைப் புரிந்து கொள்ள முடியாதவன் மார்க்சியனே அல்ல என்கிறார். பன்முகப் பரிமாணங்களில் நம்மைப் படைத்து கொள்ள முடியும் என்கிறார். பாரதி, மெளனி, புதுமைப்பித்தன் போன்றோர் வளர்த்தது நவீனத்துவப் போக்கு என்கிறார். நவீனத்துவம் ஒரு வகைத் தர்க்கம் என்றால், அதை முற்றாக மறுப்பது பின் நவீனத்துவம் என்கிறார். யதார்த்தத்தை மறுக்கும் நிலையில் பிரதி, குறியீடு, கற்பிதம், புனைவு, கட்டமைப்பு போன்ற சொல்லாடல்கள் கலகம் செய்கின்றன என்கிறார். சந்தைப் பொருளாதாரத்தால் சிதைக்கப்படும் உலகில் எதுவும் நம் வசம் இல்லை என்கிறார். நாம் நகல்கள், பிம்பங்கள் என்கிறார். ஆதிக்கவாதிகளால் கட்டமைக்கப்படும் சமூகச் சூழல் நம்மை கடையர்களாக்கித் தற்கொலைக்குத் தள்ளுகிறது. சமூக, அரசியல், பொருளியல் சூழல்களில் சிக்குண்டு நாம் நமது அடையாளங்களை இழந்து விட்டோம். முதலாளிய மூர்க்கர்களிடமிருந்து நமக்கான உலகை நாம் கைப்பற்ற வேண்டும் என்கிற எச்சரிக்கையைப் பின் நவீனத்துவம் நமக்கு வழங்குகிறது என்கிறார். பல்வகை கலை, இலக்கியப் போக்குகளும், அரசியல் போக்குகளும் ஒரு சமூகத்தில் நிலவுவதை அவற்றின் வாழ்வுரிமை என்கிறார். சோவியத் ரசியாவின் பிளாக், யெஸினின், மாயாகாவ்ஸ்கி, தாஸ்தாயெவ்ஸ்கி, போன்ற உலகத்தரம் வாய்ந்த கலைஞர்களைத் தமிழ் மக்கள் இன்றும் ஆழமாய்ப் புரிந்து கொள்ள எஸ். வி. ஆர். போன்றோரின் இலக்கிய முயற்சிகள் பெரிதும் தேவை என்கிறார். மிகச்சிறந்த படைப்பாளிகள் எவ்வாறு ரசியாவில் புறக்கணிக்கப்பட்டார்களோ அதைப் போன்றே தமிழகத்தில் மார்க்சிய வட்டாரத்தினரும் செய்கின்றனர் என்கிறார். இந்தியாவில் புரட்சி வெற்றி பெறாமைக்குக் கம்யூனிசக் கட்சியே காரணம் என்கிறார். அரசியலுக்கு அழுத்தம் தந்து மெய்யியலைக் காணத் தவறும் மார்க்சியரை மார்க்சியராக ஏற்க இயலாது என்கிறார். கலைஞன், படைப்பாளி என்பவன் கலகக்காரன். தன்னை விற்பதற்கு இவன் ஒருபோதும் சம்மதியான் என்கிறார். தான் உருவாக்கிய படைப்பைத் தானே விற்பவன் தன்னை அசிங்கப்படுத்திக் கொள்கிறான். இயற்கை, பிரபஞ்சம், வரலாறு, அறிவியல் என்றெல்லாம் மனிதர்கள் சாதனை படைக்கக் காரணம் இவர்கள் தங்களை ஒரு போதும் குறுக்கிக் கொள்ளாதிருப்பதால்தான். தங்களின் இலட்சியக் கனவுகளுக்காகத் தங்களையே எரித்துக் கொள்வோரால் உலகம் ஒளி பெரும் என்கிறார். கடலும் கிழவனும், பட்டுப்பூச்சி, பிராமிதியஸ், விஷ்ணுபுரம் போன்றவை ஆதிக்கத்திற்கெதிரான ஆற்றல் மிக்க குறியீடுகள் . சூழலுக்கெதிர் வினைகள் என்கிறார். அனைத்தையும் கலைத்துப் போட்டு, புதிய அர்த்தங்களைச் சேகரித்துக் கொள்வது மார்க்சியத்திற்கெதிரானதல்ல என்கிறார். கலை, இலக்கியம், அழகியல், மெய்யியல் என்றெல்லாம் நமது பார்வைகள் விரிவடைவது இன்றையத் தேவை என்கிறார். தமிழில் தரமான இலக்கிய வாசிப்பிற்கு முறையான பயிற்சிகள் வேண்டும் என்கிறார். வாழ்விற்கான பார்வைகளோடுதான் வாசிப்பை நிகழ்த்த வேண்டும். வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கான மெய்காண் முறையே கலை. கலைகளுக்குக் கல்விக்கூடங்களில் இடம் இல்லை என்கிறார். கலை உணர்வையும், கற்பனை உணர்வையும் இலக்கியம் தூண்ட வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கலைஞன். ஒவ்வொரு படைப்பாளியும் விமர்சகனும்தான் என்கிறார். தீவிரமான இலக்கியத் தேடல் ஒரு புரட்சிகரச் செயலே என்கிறார். ஞானியின் பெருமைக்கு மேலும் அழகு சேர்ப்பது அவரின் அழகியல் குறித்த இந்நூல் எனலாம். சமூகம் முற்றாகச் சீரழிவுகளுக்கும், சிதைவுகளுக்கும் உள்ளாகி வரும் இன்றையச் சூழலில் எதிர்வினையாக இவரது படைப்பு அமைகிறது. ஒரு புதிய அழகியல் வாசிப்பை நமக்குள் நிகழ்த்துகிறது. அறிவாளிகள், படைப்பாளிகள் என்றறியப்படுவோரின் வாழ்க்கை முறைகளை மறு ஆய்வுக்குட்படுத்துகிறது. பண ஆதிக்கத்திற்கு முற்றாக தங்களை இழந்துவிட்டோரின் பரிதாப நிலைகளையும் காட்சிக்குட்படுத்துகிறது. அய்யா ஞானி அவர்களின் இத்தகைய விரிவான அழகியல் தேடல் நமது வேர்களையும், மரபுகளையும் இழந்துவிடாதிருக்க எச்சரிக்கை செய்கிறது. கடித வடிவிலான இலக்கிய முயற்சி அண்மைக்காலத்தில் அருகி வருகிறது. அதன் தேவையையும் இந்நூல் நிறைவு செய்கிறது. தமிழ் இலக்கிய உலகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள இந்நூல் களம் அமைக்கிறது. வேரடி மண்ணோடு பெயர்த்தெடுக்கப்பட்ட நமது மக்களின் பண்பாட்டுக் சுகூறுகளை வெளிக்கொணர்வதற்கான விவாத மேடையாகவும் அமைகிறது. நமது வாசிப்பிற்கும், யோசிப்பிற்கும் மட்டுமின்றி, நாம் வாழும் சமூக நிலவரங்களை மாற்றுவதற்கும் அறைகூவல் விடுக்கிற அற்புதமான இந்நூல் இன்னும் பல நூல்களாய், இலக்குகளாய், இயக்கங்களாய் நமக்குள் விரிவடையும் என நம்புகிறேன். என்னுரை அழகியல் உணர்வு மனிதனுக்கு இயல்பான உணர்வென்று இன்று கருதப்பட்ட போதிலும், மனிதனின் தோற்றக்காலம் முதற்கொண்டு அழகியல் உணர்வு இருந்தது என்று சொல்வதற்கில்லை. குயில் பாடுகிறது, மயில் ஆடுகிறது, மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. பெருமிதத்தோடு சிங்கம் நடக்கிறது என்றெல்லாம் நாம் குறிப்பிடுவது உண்மையென்றாலும் இத்தகைய கலை உணர்வு நம்மைச் சார்ந்த உணர்வே அன்றி பறவை முதலியவற்றுக்கு இத்தகைய அழகியல் உணர்வு குறித்த புரிதல் இருக்க முடியாது. தொல்பழங்காலத்தில் குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் வேட்டையாடி, தமக்குத் தேவையான உணவைப் பெற்றனர். தாம் வாழ்ந்த குகைகளில் விலங்குகளின் பல்வகைத் தோற்றங்களைத் துல்லியமான வரைபடங்களாய் வரைந்திருக்கின்றனர். வேட்டையாடுதலின் தேவைக்கு ஒத்த முறையில் விலங்குகள் குறித்து அவர்கள் வரைந்து வைத்தார்களே அன்றி, கலை உணர்வோடு அந்த வரைபடங்களைத் தீட்டினார்கள் என்று சொல்வதற்கில்லை. இவை குறித்தெல்லாம் விரிவான ஆய்வுகள் தேவையென்பதையும் நாம் மறுக்கவில்லை. விலங்குகளுக்கோ, பறவைகளுக்கோ இல்லாதத் தன்னுணர்வை மனிதன் பெற்றிருக்கிறான். இதனாலேயே மனிதன் தன்னைப் பற்றியும், தன் அனுபவங்கள் குறித்தும் இவற்றைப் புறத்தில் வைத்துச் சிந்திக்கிறான். விலங்குகள் முதலியவற்றின் வாழ்க்கை சில குறிப்பிட்ட வரையறைகளில் முடங்கிக் கிடக்க, மனிதன் மட்டுமே தன் வரையறைகளைக் காலந்தோறும் கடந்து வருகிறான். தேன்கூடு அற்புதமான வடிவ சிறப்புக் கொண்டது எனினும் தேனீக்களைப் பொருத்தவரை வேறு வடிவங்கள் பற்றிச் “சிந்திக்க” முடியாது. மனிதனைப் பொருத்தவரை எண்ணற்ற வடிவங்களில் புதுப்புனைவுகளைச் செய்கிறான். கருவிகள் முதலியவற்றைப் படைத்ததன் மூலம் பழங்காலச் சூழல்களிலிருந்து மனிதன் தன்னை விடுவித்துக் கொண்டான். தன் அனுபவங்களைத் தொகுத்துத் தன் தலைமுறைகளுக்குத் தருகிறான். உணவு முதலிய கட்டாயத் தேவைகளிலிருந்து இவன் தன்னை விடுவித்துக் கொள்கிறான். இப்பொழுது கிடைக்கும் சுதந்திரத்தின் காரணமாகத் தன்னைச் சூழ்ந்த உலகத்தை, உயிரினங்கள் முதலியவற்றை அச்சமின்றி மகிழ்ச்சியோடு பார்க்கிறான். மொழி, வரலாறு என்ற ஆக்கக் கூறுகளும் இவனுக்குள் வந்து சேருகின்றன. இப்பொழுது இந்த மனிதனின் கலை உணர்வு / அழகியல் உணர்வு என்று நாம் பேசமுடியும். வானம், பூமி, காடுகள், கடல்கள், பறவைகள், விலங்குகள் பற்றி எல்லாம் இவனுக்கு அச்சமில்லை என்பது மட்டுமல்ல, இவற்றை மெல்ல மெல்லத் தன் வாழ்வியல் எல்லைக்குள் இவன் வசப்படுத்த தொடங்கியிருக்கிறான். இவை தரும் வசதிகள் இவன் வாழ்க்கையை எளிமையாக்கி இருக்கின்றன, இவற்றால் இவன் இன்பமுறுகிறான். இப்பொழுது இவன் சுதந்திரமாக ஆட முடியும், பாட முடியும், படைக்கமுடியும். இவன் கதை சொல்கிறான், கற்பனை செய்கிறான், குழந்தைகளோடு கொஞ்சுகிறான். வயலில் தன் விளைச்சல் கண்டு மகிழ்ச்சியடைகிறான், ஆற்றைக் கடக்கிறான், தெப்பம் விடுகிறான். இப்பொழுது அழகியல் உணர்வு /கலை உணர்வு இவனுக்கு இயல்பாகி விட்டது. இந்த கலை உணர்விலிருந்து இனி இவனைப் பிரித்துப் பார்க்க முடியாது. இயன்றவரை எல்லாவற்றையும் இவன் அழகு படத் தொகுக்கிறான். தன் சூழலைத் தன் தேவைக்கும், விருப்பத்திற்கும் கற்பனை உணர்வுக்கும் ஒத்த முறையில் மாற்றி அமைக்கிறான். இப்படித்தான் இவன் கலைஞனாகிறான். அலங்காரம் போலத் தோன்றும் கலை இவனுக்குள் ஓர் உறுப்பாகிறது. கை, கால்களைக் காட்டிலும் இந்த கலை உணர்வு என்ற உறுப்பு இவனுக்குள் இதயமாகிறது அல்லது இதயத்திற்கு நெருக்கமாகிறது. அழகியல் என்பது வடிவ நேர்த்தி வண்ணங்கள் மற்றும் தர்க்க நெறி முதலியவை சார்ந்ததாக மட்டும் இருக்க முடியாது. வாழ்வுக்கு அழகு வேண்டும், அர்த்தம் வேண்டும் ஆற்றல் வேண்டும். வரலாற்றுக்குள் வந்துவிட்ட தனி உடமை, அரசதிகாரம் முதலியவை மக்கள் மீது சுரண்டலையும் ஒடுக்கு முறையும் திணிக்கின்றன. வாழ்வுக்கான அர்த்தங்களையும் அழகுகளையும் இவை சிதைக்கின்றன அழிக்கவும் செய்கின்றன. பொருளியில் முதலிய ஆதிக்க சக்திகளின் கைகளில் மக்கள் கருவிகளாகின்றனர். தமக்கான வாழ்வை மக்கள் இழக்கின்றனர். வறுமை, நோய் நொடிகள் முதலிய நாசங்களுக்கு உள்ளாகின்றனர். திரும்பவும் இவர்களுக்கு அர்த்தம் உள்ள வாழ்வை மீட்டுத்தர வேண்டும். இதுவும் அழகியலின் கலை இயலின் உருவம் மட்டும் அல்ல உள்ளடக்கமாகவும் கொள்ளத்தகுந்தது. இதுவே மார்க்சிய அழகியலின் தனித்தன்மை என்று கூறமுடியும். வாழ்வின் அர்த்தங்கள் முதலியவற்றை மனிதன் எத்தகைய வரலாறு மற்றும் பொருளியல் சூழலில் இழக்கிறான் என்பது பற்றி மார்க்சியத்தைப் போல இன்னொரு தத்துவம் விளக்கவில்லை. இயற்கையோடும், சமூகத்தோடும், தன்னோடும் வரலாற்று காலத்தில் ஏற்பட்ட அந்நியமாதலைக் கடந்து மீண்டும் இயற்கையோடும் சமூகத்தோடும், தன்னோடும் பிரிவும் பிளவும் அற்ற மனித வாழ்க்கையைத்தான் மார்க்சியம் தனக்கான கருப்பொருளாகக் கொண்டிருக்கிறது. ஆதிக்கங்கள் ஒழிந்தால் ஒழிய மனிதர்களுக்கான அழகிய மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாய்க்காது. இதற்காகத்தான் போராட்டங்கள் தேவைப்படுகின்றன. ஏற்ற தாழ்வுகளை முற்றிலும் ஒழிப்பதற்கான வர்க்கப் போராட்டத்தில் மனிதர்கள் காலந்தோறும் ஈடுபடுகிறார்கள். போரட்டத்தின் போது மனிதர் தம்மை திரட்டிக் கொள்கிறார்கள். இணைந்து இயக்கமாகிச் செயல்படுகிறார்கள். வெற்றிகளைப் போலவே தோல்விகளும் வாழ்வுக்கான அர்த்தம் ஆகிறது. சமத்துவம் மற்றும் சமதர்மத்தைக் காட்டிலும் வாழ்வுக்கு உயர்ந்த பேறு இல்லை. சமதர்மமே வாழ்வின் பேரழகு. மார்க்சிய அழகியலின் மையம் என்று இதைத் தான் கூறமுடியும். காலந்தோறும் இலக்கியம், பண்பாடு, மெய்யியல் ஆகியவற்றின் உள்ளுறை ஆக இருப்பது இந்த உணர்வுதான். நெடுங்காலத் தமிழ் இலக்கியத்தின் உள்ளுரை ஆக இருப்பது இந்தக் கருப்பொருள்தான் என்று நாம் காணமுடியும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து மனிதர்களுக்குள் இடையறாதுத் தொடர்ந்துவரும் பொதுமை என்னும் இந்த நீரோட்டத்தை நாம் இழந்து விடுவதற்கில்லை. யதார்த்தவாதம், நவீனத்துவம் என்றெல்லாம் பேசும் பொழுது இவ்வகை கலை இயலின் ஊடாகவும் இந்தக் கருப்பொருளையே நாம் காண்கிறோம். பெரியாரியத்திற்கு மட்டுமல்லாமல், பெண்ணியம் தலித்தியம் முதலியவற்றுக்கும் ஊடும் பாவுமாக இருப்பது இந்த மெய்யியல். பின் - நவீனத்துவமும் இந்த மெய்யியலை ஒதுக்கிவிட முடியாது. இவை குறித்தெல்லாம் இந்தக் கட்டுரைத் தொகுப்பு பேசுகிறது. மேலும் விரிவான ஆய்வுக்கு இடம் உண்டு என்பதையும் நான் மறுக்கவில்லை. இந்தத் தொகுப்பில் இடம்பெறுகிற சில கட்டுரைகள் குறித்து நான் சிலவற்றைச் சொல்லவேண்டும். “தமிழ் இனி - 2000” கருத்தரங்கில் மார்க்சிய அழகியல் குறித்து, நண்பர்கள் திரு.பஞ்சாங்கம், திரு. பா.செயப்பிரகாசம், திரு. அசுவகோஸ் வாசித்த கட்டுரைகளைக் கருத்தரங்கு முடிந்தபிறகு நான் பெற்று வாசித்தேன். மார்க்சிய அழகியல் குறித்து மார்க்சியர் என்று அறியப்பட்டவர்களுக்கு இடையில் ஒர் கலந்தாய்வு தேவை என்று கருதினேன். இதற்கு என் நண்பர் திரு. பஞ்சாங்கத்திற்கு நான் சில கடிதங்கள் எழுதினேன். திரு. பா. செயப்பிரகாசம், திரு. அசுவகோஸ் ஆகியவர்களின் கட்டுரைகள் குறித்து அவர்களுக்கு நான் கடிதங்கள் எழுதவில்லை எனினும், கடிதங்கள் வடிவில் என் கருத்துக்களை எழுதிவைத்தேன். இன்னொரு சமயம் திரு. இராசேந்திர சோழன், திரு. முத்துநிலவன், திரு. ரெங்கராஜன், திரு. ப. சிதம்பரம் ஆகியவர்களுக்குச் சில தேவைகள் கருதி கடிதங்கள் எழுதினேன். இந்தக் கடிதங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. கடிதங்கள் வடிவில் கட்டுரைகள் எழுதலாம் என்பதற்கு முன் உதாரணங்கள் இருக்கின்றன. நண்பர்கள் அறியக்கூடும். நான் விவரிக்க வேண்டியதில்லை. இந்தத் தொகுப்பில் சில நூல் திறனாய்வுகளும், வேறு சில கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. முப்பதாண்டுகளுக்கு மேலாக மார்க்சிய நோக்கில் தமிழ் இலக்கியம் குறித்தும், இலக்கியத் திறனாய்வுகள் குறித்தும் நான் நிறைய எழுதி வருகிறேன். இலக்கியம் என்று பேசும் பொழுதெல்லாம், வரலாறென்றும், மெய்யியல் என்றும் இடைவிடாது பேசுகிறேன். படைப்பியக்கம் குறித்து அழுத்திச் சொல்லுகிறேன். மார்க்சியத்தின் எல்லைக்குள் தமிழியம், பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம் ஆகியவற்றையும் இணைத்துப் பேசுகிறேன். நவீனத்துவம், பின் - நவீனத்துவம் என்பனவற்றையும் மார்க்சியத்தின் எல்லைக்குள் வைத்துப் பேசுகிறேன். மார்க்சியத்தின் அழகியல் எனத் தனிப்பட்ட முறையில் நான் எழுதவில்லை என்ற போதிலும், என் கட்டுரைகள் அனைத்திலும் மார்க்சிய அழகியலின் இழைகளை நண்பர்கள் காணமுடியும். இப்பொழுது வெளிவரும் மார்க்சிய அழகியல் என்று பெயரிடப் பெற்ற இந்தத் தொகுப்பிலும் இதேவகையான கட்டுரைகள், கடிதங்கள் இடம் பெறுகின்றன. மார்க்சிய நோக்கில் எது குறித்துப் பேசினாலும் அதனுள் அழகியல் இயங்குவதை நாம் உணர முடியும். மார்க்சியம் என்ற பார்வையின் வழியே மனிதனின் செழுமையான அழகியல் / கலை உணர்வை மேலும் துல்லியமாகவும், சிறப்பாகவும் காண்பதற்கான வாய்ப்புக்கள் கூடியிருக்கின்றன. இது குறித்து மேலும் ஆய்வதற்குத் தேவை இருக்கிறது என நான் நம்புகிறேன். இதற்கான ஒரு தூண்டுதலை இந்தத் தொகுப்புத் தரமுடியும். இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கட்டுரைகளை ஒழுங்கு படுத்துவதற்கும், ஒளி அச்சு செய்த படிகளில் பிழை திருத்தம் செய்வதற்கும் எனக்குப் பேருதவியாய் இருந்த நண்பர்கள் திரு. மு. குமரவேல், அருள்திரு சுதாகர் ஆகியவர்களோடு என் உதவியாளர் திரு. ஆ. செங்கல்வி அவர்களையும் இன்று நன்றியோடு நினைவு கொள்கிறேன். அணிந்துரை வழங்கிய என் மரியாதைக்குரிய நண்பர் அருள்திரு. சுதாகர் அவர்களை என் நெஞ்சில் வைத்துப் போற்றுகிறேன். ஒளி அச்சு செய்த செல்வி. மார்கிரேட் மேரியை நான் மறப்பதற்கில்லை. இவர்களோடு திரு. கோபி, அச்சகத்துப் பணியாளர்களையும் நன்றியோடு நினைவு கொள்கிறேன். பேரன்போடு நூலை வெளியிட்ட அன்பு நண்பர் காவ்யா சண்முக சுந்தரத்திற்கும் என் நன்றிகள். -ஞானி பஞ்சாங்கம் கடிதம் - 1 பெறுதல் : திரு. பஞ்சாங்கம் அவர்கள், புதுச்சேரி மதிப்பிற்குரிய நண்பருக்கு வணக்கம், “காலச்சுவடு” - “தமிழ் இனி” கருத்தரங்கில் நீங்கள் முன்வைத்த கட்டுரையைப் படித்த கையோடு இந்தக் கடிதம் எழுதுகிறேன். விரிவான ஆய்வுக்காக - பெரிதும் நெஞ்சாரப் பாராட்ட வேண்டும். ஒரு பெரிய நூலாக விரித்து எழுதும் வாய்ப்புக்களை உங்கள் கட்டுரை கொண்டுள்ளது. நீங்கள் அவசியம் இப்படி ஒரு நூலை விரைவில் எழுதி முடிக்க என் வேண்டுகோள். தமிழ்ச் சூழலில் மார்க்சியம் பற்றிய புரிதல் குறித்து இன்னும் கூடுதலான விவரங்களைத் தொகுத்துத் தருவது தேவை. குறிப்பிட்ட ஒருவர் பற்றியே கூட ஒரு தனி நூல் என்ற முறையில் எழுதுவதற்கும் இடம் உள்ளது. குறிப்பாக பேரா.வானமாமலை, முனைவர் கேசவன் குறித்து இப்படித் தனி நூல்கள் தேவை. நிறுவனம் சார்பில் திறனாய்வு செய்தவர்கள் மார்க்சியத்தின் இலக்கியம் முதலிய கொள்கைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளாமல் அடிக்கடி மாறும் கட்சிகளின் தேவைகளுக்கு ஒத்த முறையில் கரடுமுரடாகவும் திருத்தியும் வெளிப்படுத்தினர். மார்க்ஸ், ஏங்கல்ஸ் கொள்கைகளை இவர்கள் அக்கறையோடு வாசிக்கவில்லை. லெனின் ’’சார்பு இலக்கியம்" என்று கூறியது கட்சியின் தேவைகளுக்காக எழுதும் கட்டுரைகள் முதலியவற்றைக் குறிக்கிறது. இந்தச் சொல்லை அனைத்துவகை இலக்கியங்களுக்குமான லெனினின் புரிதல் என்று இவர்கள் எடுத்துக் கொண்டார்கள். கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டை ஆக்கமுறையில் பிளெக்னோவ் - புரிந்து கொண்டிருந்தார். நவீனத்துவம் என்ற கருத்தை இவர்கள் கடுமையாகச் சாடினர். கார்க்கி, மாயாகோவஸ்கி, பிரெக்ட் முதலியவர்களுக்குள் நவீனத்துவம் செழித்திருந்ததை இவர்கள் கண்டுகொள்ளவில்லை. சோசலிச யதார்த்தவாதம் என்பது ஸ்டாலின் காலத்தில் ஒரு அவசரத் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரைகுறையான கோட்பாடு. இந்தியச் சூழலில் இந்தக் கோட்பாட்டுக்கு இடம் இல்லை. இந்தச் சொல்லைக் காட்டிலும் மார்க்சிய யதார்த்தவாதம் என்ற சொல் சரியாக பொருந்தும் என்று தோன்றுகிறது. பிரதிபலிப்பு என்பதை லெனின் அற்புதமாக விளக்கினார். புறம் அகத்தில் பிரதிபலிக்கிறது. அகத்தின் இயல்புக்கு ஒத்தவாறு பிரதிபலிக்கிறது. இது பாசிட்டிவ் ரிபெலெக்சன். மனம் தூண்டப்பட்ட நிலையில் புறத்தின் மீது எதிர்வினை செய்கிறது. இது ஆக்டிவ் ரிபெளக்சன். கலாச்சாரம், இலக்கியம், தத்துவம் முதலியவை அனைத்தும் மனிதன் புறத்தின் மீது செலுத்தும் எதிர்வினைகள். இன்னும் எத்தனையோ வகைகளில் மார்க்சியத்தை இவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். திராவிட இயக்கத்தின் செல்வாக்கை ஒழிக்க வேண்டும் அந்த இடத்தில் தாங்கள் அமர்ந்து கொள்ள வேண்டும், என்ற முறையில் தான் இவர்கள் தமிழ் இலக்கியம் சம்மந்தமான மார்க்சிய இலக்கியக் கொள்கைகளை உருவாக்கிச் செயல்படுத்தினர். இந்த அரசியல்தான் இவர்களை இன்னும் முடமாக்கியே வைத்திருக்கிறது. நீங்கள் கட்டிக் காட்டுகிறபடி தமிழ் இலக்கிய ஆய்வுக்கு இவர்கள் புதிய வெளிச்சங்களைத் தந்தவர்கள் என்பதில் அய்யமில்லை. இவர்கள் ஒவ்வொருவரின், ஆக்கமுறையிலான பங்களிப்பு குறித்தும் நாம் இன்னும் கூடுதலாகச் சொல்லமுடியும். இவ்வகையில் முத்தையாவின் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் குறித்த ஆய்வுகள் எனக்கு இன்றும் வியப்பளிக்கின்றன. நாட்டார் வழக்காற்றியலைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் என்ற முறையில் வானமாமலை பாராட்டுக்குரியவர். பாரதி குறித்த ரகுநாதனின் பார்வை அற்புதமானது. அதே சமயம் இளங்கோவடிகள் குறித்த அவரது ஆய்வு மன நிறைவு தருவதில்லை. மனிதநேயம் என்பது தான் ஜீவாவின் உயிர்க் கொள்கை. மார்க்சியத்தின் வரையறைகளுக்குள் மனிதநேயம் என்பதன் இடம் அளவில் பெரிதில்லை. முற்போக்கு இலக்கியம், மார்க்சிய இலக்கியம் என்பதும்கூட - இரண்டும் ஒன்றல்ல. அந்நியமாதல் என்ற கோட்பாட்டை மார்க்சின் கோட்பாடுதான் என்று இன்றளவும் கட்சி மார்க்சியர் ஒப்புக் கொள்வதில்லை. இப்படி எவ்வளவோ சொல்லலாம். தமிழ் மீது இவர்களுக்கு என்றுமே ஆழமான பற்று இருந்தது இல்லை. இவர்களில் சிலர் அசலான பார்ப்பனர்கள் . ஜீவாவை இராமமூர்த்திமட்டும் அல்லாமல் கட்சியின் பெரும் தலைவர்கள் ஒதுக்கியே வைத்திருந்தனர். தமிழ்த் தேசியம் என்ற போக்கு ஜீவாவிடம் தொடங்கி இவர்கள் வளர்த்தெடுத்திருக்க வேண்டும். சிங்காரவேலருக்குள் இருந்த வளமான அணுகுமுறை இவர்களுக்குள் இல்லை. இந்தியாதான் இன்னும் இவர்களுக்குக் களம். சோவியத் யூனியன் தகர்ந்ததை இவர்கள் இன்னும் ஏற்பவர்களாக இல்லை. சோவியத் யூனியனிலும் மார்க்சியத்தை முதலாளியப் போக்கு வசப்படுத்தி இருந்தது. முதலாளியத்தைச் சோசலிசம் வெற்றி கொள்வது எளிதான செயல் இல்லை. நவீன அறிவியல் தொழில் நுட்பங்களுக்குள் ஏகாதிபத்தியம் ஆழமாகத் தங்கி இருக்கிறது. இதன் விளைவு இயற்கை நாசம் மற்றும் நுகர்வியம் முதலிய கேடுகள். இந்தக் குறை மார்க்சிடமே கூட இருக்கிறது. இன்னும் சில குறைகள். மாவோவின் நெறியில் மார்க்சியத்தை வளர்த்தெடுக்க வேண்டும். தோழர் எஸ். என். நாகராசன் தான் இதைச் செய்து கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் இவரது நூல்கள் வெளி வந்திருக்கும் என்றால் உலகளவில் இவர் பேசப்பட்டிருப்பார். இடையில் ஒன்றை இங்கு நான் குறிப்பிட வேண்டும். அந்நியமாதல் என்ற நூலை எஸ்.வி.ஆர். விரிவாக எழுதினார் என்பது உண்மைதான். மார்க்சின் அந்நியமாதல் என்பதை எங்களுக்கு ஆழமாக அறிமுகப்படுத்தியவர் எஸ்.என்.நாகராசன். 1960 களில் கடலூர் சிறையில் அவர் இருந்தபொழுது மார்க்சின் இ.பி.எம். என்று சொல்லப்படும் (Economic and Philosophic Manuscripts 1844) நூலிலிருந்து ES trangement அந்நியமாதல் என்ற இயலை மொழிபெயர்த்ததோடு ஏராளமான குறிப்புக்களையும் எழுதினார். 1960-65 ல் எஸ்.வி.ஆர். உள்ளிட்ட எங்களுக்கு இந்தக் கையெழுத்து படியை வைத்து நிறையச் சொன்னார். 1968-ல் ‘புதிய தலைமுறை’ என்ற இதழைக் கோவையிலிருந்து நாங்கள் வெளியிட்டோம். இந்த இதழில் ரமணன் என்ற பெயரில் அந்நியமாதல் குறித்து நாகராசன் விரிவாக எழுதினார். பரிமாணம் 2வது இதழ் முழுவதும் அந்நியமாதல் குறித்த ஒரே ஒரு கட்டுரை வெளியிட்டோம். இதன்பிறகுதான் எஸ்.வி.ஆரின் நூல் வெளிவருகிறது. மேற்குலகில் அந்நியமாதல் பற்றி வெளிவந்துள்ள சில நூல்களை எஸ். வி. ஆர். கண்டறிந்ததோடு தன் நூல் ஆக்கத்திற்கு அவற்றை விரிவாகப் பயன்படுத்திக் கொண்டார். உங்கள் கட்டுரையில் சரியாகச் சொல்லப்பட்டிருக்கிற இன்னொரு கருத்தை நான் பெரிதும் பாராட்டுகிறேன். மார்க்சியத்தின் எல்லைக்குள் வைத்தே பெண்ணியத்தையும், தலித்தியத்தையும் புரிந்து வளர்க்க முடியும். இதன் காரணமாக மார்க்சியத்தின் உள்ளுறை ஆற்றல்கள் வெளிப்படுவதோடு செழுமை பெறும். லெனின் முதலியவர்கள் வளர்த்து வைத்துள்ள மார்க்சியத்துள் அதிகாரம் /ஆதிக்கம் இடம் பெறத்தான் செய்கிறது. மார்க்சியத்திற்குள் வந்துவிட்ட இந்த அதிகாரம் முதலாளியக் கூறுதான். அதிகாரத்தை மார்க்சியத்திற்குள்ளிருந்து களைவது என்ற முறையில் தான் முதலாளியம், சாதியம், ஆண் ஆதிக்கம் முதலியவற்றையும் களைய முடியும். அதிகாரம் இல்லாமல் கட்சிகாரர்களுக்கு முடியாது. இந்தப் போக்கை மார்க்ஸ் ஒப்புக் கொள்வார் என்று எனக்குத் தோன்றவில்லை. பின் - நவீனத்துவம் என்ற அணுகுமுறை உள்ளே வரும்பொழுது மார்க்சியத்தின் உள்ளிருக்கும் அதிகாரம் வெளியேறத்தான் வேண்டும். அதிகாரம் வெளியேறிய நிலையில்தான் மார்க்சியத்தினுள் பெண்கள், தலித்துகள், உழவர்கள், விளிம்புநிலை மனிதர்கள் என்று எல்லோரும் உரிமையோடு தங்க முடியும். உலகளவில் பெருகிவரும் சந்தைப் பொருளாதாரம் முதலியவற்றை முறியடிக்கும் முறையில் மார்க்சியம் இவ்வாறு வளம் பெற வேண்டும். இவ்வாறான புரிதல் கட்சிகாரர் ஒருவரிடம் கூட இல்லை. அதிகாரத்துவம் என்பதை ஸ்டாலின் முழு அளவில் கொண்டிருந்தார் என்பது உண்மைதான். இந்தப் போக்குக்கான மூலத்தை லெனினுக்குள்ளும் காணமுடியும். அடித்தளம்தான் மேற்கட்டை தீர்மானிக்கிறது என்ற கோட்பாட்டின் உள்ளே இது மறைந்திருக்கிறது. கிராம்சி தொடங்கி எத்தனையோ பேரை நாமும் கற்க வேண்டும். தமிழனாக உள்ள நம்மைப் பொறுத்தவரை வளமான மார்க்சியத்தை நம்மால் கண்டறிந்து கொள்ள முடியும். ஓயாமல் இவை குறித்து நான் எழுதுகிறேன். இயங்கியல் என்பதுதான் மார்க்சியத்தின் தத்துவம் என்று கட்சிக்காரர்கள் கருதுகிறார்கள். இயங்கியல் என்பது ஆய்வு முறை. பொருள் முதல்வாதம் என்பதும் கூட மார்க்சிய தத்துவத்தின் ஒரு கூறு மட்டுமே. இன்னும் ஆழமாகத் தேடவேண்டும். மார்க்கம் எங்கல்சும் இதற்கான வழித்தடங்களைத் தமக்குள் கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசியம் என்ற அரசியல் குறித்தும், ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டம் குறித்தும், மனிதனின் விடுதலை குறித்தும் பேசுவதற்கு மார்க்சிய இலக்கியக் கொள்கையில் இடம் உண்டு. அருள் கூர்ந்து பதில் எழுதுங்கள். நீங்கள் ஒரு தனி நூல் அவசியம் எழுதவேண்டும். - 8.9.2000 கடிதம் - 2 அன்பு நண்பருக்கு, நேற்று எழுதிய கடிதத்தில் விடப்பட்ட சில விவரங்கள் குறித்து இன்று எழுதுகிறேன். இலக்கியத்தில் அவலம் குறித்து மனஓசையில் நடைபெற்ற விவாதத்தில் நானும் இடம் பெற்றதாக உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். “மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்” என்ற எனது நூலில் ’அவலம்" பற்றிய ஒரு கட்டுரையின் மீது மனஓசையில் ஒரு விவாதத்தைக் கேசவன் தொடங்கி வைத்தார். கட்டுரை என் மீது ஒரு விமர்சனமாகவும் அமைந்திருந்தது கண்டு மனஓசை ஆசிரியர் குழுவுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். கேசவன் கட்டுரையில் உள்ள ஒரு முக்கியமான பிழையைச் சுட்டிக் காட்டியதோடு எனது செறிவான கட்டுரையை மன ஓசையில் வெளியிட்டு அதன் மீது கேசவனின் விமர்சனங்களை வெளியிட்டிருக்க வேண்டும் என்று என் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். இப்படி நான் எழுதிய பிறகும் என் கட்டுரையை அவர்கள் வெளியிடவில்லை. கேசவன் கட்டுரை பற்றி என் கருத்துக்களையும் அவர்கள் கேட்கவில்லை. என் கடிதத்தையேனும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அதையும் அவர்கள் செய்வில்லை. ஆசிரியர் குழுவில் பா. செயப்பிரகாசம் முக்கியமான உறுப்பினர். காலம் சென்ற தோழர் சீனிவாசனும் ஆசிரியர் குழுவில் இருந்திருக்கிறார். தோழர்கள் மூலம் பிறகு அறிந்த செய்தியை இங்கு குறிப்பிடுகிறேன். என் சார்பில் தோழர் சீனிவாசன் ஆசிரியர் குழுவில் விவாதித்திருக்கிறார். அதை மற்றவர்கள் மறுத்துவிட்டனர். இப்படித்தான் அவர்கள் “நீதி”யை நிலைநாட்டினர். கேசவனும் எனக்காக பரிந்து எதையும் செய்யவில்லை. இருட்டடிப்பு செய்வதில் மட்டுமல்ல, என்னைக் குறைத்துப் பேசுவதிலும் இவர்கள் ஒன்றுபட்டிருந்தனர். மேலும் ஒரு கருத்தை உங்கள் ஆய்வுக்கு முன்வைக்க விரும்புகிறேன். தமிழவன் தொடக்கத்தில் மார்க்சியராகத்தான் இருந்தார். இன்றுவரை அவர் மார்க்சியத்தோடு உறவு கொண்டவராகத்தான் இருக்கிறார் என்பதை நானும் புரிந்து கொள்கிறேன். இப்பொழுது அவருக்கு மார்க்சியத்தின் மீது கூடுதலான விமர்சனங்கள் இருக்கக்கூடும். போரா. வானமாமலை அவர்கள் மூலம் மார்க்சியத்திற்குள் தமிழவன் வந்தார். மார்க்சியத்தை ஒரு அறிவுக் கோட்பாடாகத்தான் அவர் கற்றிருக்க வேண்டும். கட்சியோடு அவருக்கு அன்றும் பிறகும் உறவு இருந்ததாகத் தெரியவில்லை. எனது நிலை வேறு. கட்சியோடு 1960 களின் இறுதியில் எனக்கு மிகவும் நெருக்கமான உறவு இருந்தது. சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளில் நான் எப்பொழுதும் இருந்ததில்லை. மார்க்சிய - லெனினிய கட்சியோடுதான் எனக்கு உறவு. தொடக்கத்தில் கட்சிக்குள் இருந்தேன். வெளியே வந்தபிறகும் மார்க்சிய லெனினிய கட்சி மற்றும் குழுக்களோடும் தத்துவத்தோடும் இன்று வரை நான் உறவு கொண்டிருக்கிறேன். கட்சி இல்லாமல் முடியாது என்பதும் எனது உறுதியான கருத்து. பெயரளவில் மார்க்சியத்தோடு உறவு கொண்ட கட்சி மீது எனக்கு மரியாதை இல்லை. மார்க்சியம் என்பதையும் மாவோவின் வழியே புரிந்து கொள்வதுதான் இன்று வளமான மார்க்சியமாக இருக்கமுடியும். இதன் காரணமாக மார்க்சியத்திற்கு வெளியில் செல்ல எனக்கு என்றும் நேர்ந்ததில்லை. மார்க்சியத்தோடு மாறுபட்ட அல்லது முரண்பட்ட வேறு கோட்பாடுகள் மற்றும் தத்துவங்களை மார்க்சியத்தின் எல்லைகளைத் தொடர்ந்து விரித்துக் கொள்வதன் மூலம் புரிந்து கொள்ளவும் முடியும். அன்றியும் மார்க்சியத்தை வளப்படுத்தவும் முடியும். என் மரியாதைக்குரிய தமிழவன் இப்படி இயங்கவில்லை. கட்சியோடு அவருக்கு நெருக்கமான உறவு இல்லை. மாவோவுக்குள் அவர் ஆழமாகச் சென்றதாகவும் தெரியவில்லை. சமூக மாற்றத்திற்கு மார்க்சிய நெறிமுறை தவிர வேறு வழி இல்லை என்பதை நாம் ஆழமாகப் புரிந்து கொள்வதற்கு மூலமான காரணம் என்று என் கட்சித் தொடர்பைத்தான் நான் குறிப்பிட முடியும். என்னதான் தவறு செய்தபோதிலும் கட்சிக்காக, மார்க்சியத்திற்காக உயிரைக் கொடுத்து உழைத்த தோழர்களை நான் அறிவேன். இவர்கள் என் நெஞ்சில் என்றும் பசுமையாகத் தங்கி இருக்கிறார்கள். தமிழவன் அவர்களுக்கு இத்தகைய அனுபவம் இல்லை என்றே கருதுகிறேன். மார்க்சியத்தின் எல்லைக்குள்ளிருந்தே தமிழவன் அமைப்பியல் முதலிய அணுகுமுறைகளோடு உறவு கொண்டிருக்க முடியும். மார்க்சியமும் ஒரு அமைப்பியல் என்பது தமிழவனுக்கும் நன்றாகவே தெரியும். மார்க்சியத்திற்கு எத்தனையோ கட்டமைப்புக்களும் உள்ளன. லெனின் மார்க்சியத்தை இன்னொரு வடிவில் அமைத்தார். ஸ்டாலினிடம் வேறு வடிவம், மாவோவிடம் இன்னொரு வடிவம். இப்படி எத்தனையோ வடிவங்கள். இப்படி எல்லா அமைப்புகளுக்குள்ளும் மார்க்சியத்தின் அடிப்படைகள் சில / பல இல்லாமலும் இல்லை. மார்க்சியத்தினுள்ளும் இப்படி நெகிழ்வுத் தன்மைகள் உண்டு. மார்க்ஸ் முதலியவர்களுக்குள் ஆழமாகச் சென்று மார்க்சியத்தைப் புதுப்பிக்கவும் முடியும். பின் - நவீனத்துவம் முதலியவற்றினுள்ளும் ஒரு இடதுசாரிப் போக்கைக் கண்டறிந்து மார்க்சியத்திற்குள் கொண்டு வரவும் முடியும். இப்படி எல்லாம் செய்வதன் மூலம் மார்க்சியம் ஒரு கலப்படமான தத்துவமாக மாறிவிடுவதும் இல்லை. பெரியாரியம் முதலியவற்றோடும் இப்படித்தான் நாம் உறவு கொண்டிருக்க வேண்டும். தமிழியம் என்றும் தமிழ்த்தேசியம் என்றும் நான் இன்று கூடுதலாகப் பேசுகிறேன். மார்க்சியத்திலிருந்து விலகிவிட்டது போலவும் எனக்குள் சுருங்கிவிட்டது போலவும் சில நண்பர்கள் கருதுகிறார்கள். எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு மார்க்சியத்தைப் பொருள்படுத்துவதன் மூலம் மார்க்சியத்திற்குப் புதுவளம் சேர்ந்திருப்பதாக நான் நம்புகிறேன். நான் மட்டுமே இதைச் செய்து விடவில்லை. எனக்கு முன்னோடிகள் இருக்கிறார்கள். நண்பர்களின் குற்றச்சாட்டு குறித்து நான் வருத்தம் கொள்ளவில்லை. கட்சியோடு உங்களுக்கு உறவு இருந்தது / இருக்கிறது என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மார்க்சியத்தின் மீது உங்கள் மரியாதை குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மார்க்சியத்தினுள் செயல்படும் அறம் என்பது சமதர்மம் அன்றி வேறு இல்லை. வரலாற்றுக்கு முன் நிலவிய ஆதிப் பொதுமைச் சமூகத்திலிருந்து இந்தப் பேரறம் ஒரு நீரோட்டம் போல நமக்குள் ஓடுகிறது. மனிதர்களின் உறவுகளில் மற்றும் எத்தனையோ வடிவங்களுக்குள் இந்த நீரோட்டம் எல்லாக் காலங்களிலும் கொப்பளிக்கத்தான் செய்கிறது. இந்த அறத்திற்கு இன்று நாம் வைத்துள்ள பெயர் சமதர்மம். இந்த அறம் என்றும் அழிவதில்லை. ஒழுக்கவியல் என்பது தான் மாறுதலுக்கு உட்பட்டது. மாறாதது இந்தப் பேரறம், சமயங்கள், இலக்கியங்கள் எல்லாவற்றினுள்ளும் இந்த அறத்தின் ஆட்சியைக் காணமுடிகிறது. மார்க்சியத்திற்கும் இந்த அறம்தான் தத்துவம். இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நீங்கள் நூல் எழுத வேண்டும். நமக்குள் விவாதங்கள் தொடரட்டும். பதில் எதிர்பார்க்கிறேன். - 9.9.2000 கடிதம் - 3 அன்புள்ள நண்பருக்கு, உங்கள் கட்டுரை மார்க்சியம் குறித்து என் சிந்தனையை மேலும், மேலும் கிளறுவதால் தொடர்ந்து எழுதுகிறேன். மார்க்சிய அழகியல் குறித்து நம் சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவது இன்றைய சூழ்நிலையிலும் இன்றியமையாதது என்று கருதுகிறேன். மார்க்சிய நோக்கில் அழகியல் என்பது என்ன? பேரா. வானமாமலை அவர்களைச் சரியாகவே மேற்கோள் காட்டி அப்புறம் விமர்சனமும் சரியாகவே செய்கிறீர்கள். உங்கள் கட்டுரையில் என்னை மிகவும் கவர்ந்த பகுதி இது. புறம் அகத்தைப் பாதிக்கிறது. அதாவது புறம் அகத்தில் பிரதிபலிக்கிறது. இந்தப் பிரதிபலிப்பு வெறுமனே பிரதிபலிப்பாகவும் இல்லை. அகம் என்பதனுள் வாழ்வியல் அனுபவம் என்று எவ்வளவோ உள்ளன. வரலாறு, சமூகம், பண்பாடு என்பதன் எத்தனையோ கூறுகள் எந்தந்த வகையிலோ அகத்தினுள் இணைந்தும், முரண்பட்டும் இருக்கின்றன. இந்த அகம் புறத்தின் தாக்குதலுக்கு எதிர்வினை தருகிறது. எல்லோருக்கும் இப்படி இருப்பதில்லை . சிலரிடம் கூடுதலான எதிர்வினை வெளிப்படுகிறது. பாரதி முதலியவர்களை இங்கு நினைவு கொள்வோம். நம் அகமன இயக்கத்திற்குப் புறம் ஒத்ததாக இல்லை என்றால் அதை முற்றாக மாற்றுவது வரை எத்தனையோ எதிர்வினைகளை மனிதன் காலம்தோறும் செய்து வருகிறான். இந்த இடத்தில் மார்க்சின் ஒரு ஆய்வுரை என் நினைவுக்கு வருகிறது. பயர்பாக் குறித்து மார்க்ஸ் எழுதிய ஆய்வுரைகளில் இது இடம் பெறுகிறது. “சூழல் மனிதனைப் பாதிக்கிறது என்பது உண்மையில் ஒரு பாதி மட்டுமே. இதன் இன்னொரு பாதி சூழலை மனிதன் பாதிக்கிறான் என்பதாகும். இது தான் புறத்திற்கும் அகத்திற்கும் இடையிலான சரியான இயங்கியல் உறவு. வறுமையினால் பாதிக்கப்பட்ட ஒருவன் திருடுவது என்பது முதல்வகைப் பிரதிபலிப்பு. ஆனால் நான் திருடமாட்டேன். வறுமைக்குக் காரணமான சூழலை மாற்றுவேன் என்பது இரண்டாம் வகைப் பிரதிபலிப்பு. எழுத்தாளர்கள் என்பவர்களில் பெரும்பகுதியினர் முதல்வகைப் பிரதிபலிப்போடு நின்று விடுகின்றனர். வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம் என்றெல்லாம் எழுதுவது, இவர்களுக்கு அரசியல் கடமை. ஒரு வகையில் இதை பிரச்சார நோக்கம் என்று கூறிவிடலாம். இலக்கியம் என்பது இதனுள் அடங்கி விடுவது இல்லை. ஆனால் இதையும் உள்ளடக்கியது தான் இலக்கியம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. இது இலக்கியத்தின் ஒரு தளம் என்றால் இதனைக் கடந்து இன்னொரு தளத்தில் இயங்குவது தான் உயர்வகை இலக்கியம். கலைஞன் என்பவனின் படைப்பியக்கத்தை இவ்வகை இலக்கியம் தான் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இங்கு பாரதி முதலியவர்களை மீண்டும் நினைவு கொள்ளலாம். புறத்திற்கெதிரான அகத்தின் இயக்கம் குறித்து வானமாமலை அவர்களின் கருத்தைச் சிறப்பாகவே மேற்கோள் காட்டி இருக்கிறீர்கள். ஆனால் வானமாமலை அவர்களைப் பொருத்தவரை இதிலிருந்து விலகி அப்புறம் அரசியல் நோக்கத்தை முதன்மைப்படுத்தி இலக்கியத் திறனாய்வை மேற்கொள்ளத் தொடங்கி விடுகிறார் என்ற உண்மையைச் சரியாகவே சுட்டிக் காட்டுகிறீர்கள். மார்க்சியத்தின் அழகியல் குறித்து முதன்முறையாக எழுதியவர் வானமாமலை என்று சிறப்பித்துச் சொல்கிறீர்கள். மார்க்சிய அழகியல் குறித்து சோவியத் நூல்கள் நமக்கு நிறைய ஆதாரங்களைத் தருகின்றன. பிரச்சார இலக்கியம் என்பதற்கும் இந்த நூல்களில் ஆதாரங்கள் உள்ளன. அன்வர் ஜிஷ் போன்றவர்கள் அழகியல் குறித்து சுயமாக ஆராய்ந்து எழுதி உள்ளனர். இவர்களும் மேற்கத்தியரிடமிருந்து இக்கருத்துக்களைப் பெற்றார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. மார்க்சிய அழகியல் குறித்து வானமாமலை அவர்கள் எழுதியுள்ள சிறு நூலில், சோவியத் ஆசிரியரை மேற்கோள்காட்டி இலக்கிய ஆக்கத்தினுள் நடை பெறும் உயர்வகை இயக்கம் ஒன்றை அற்புதமாக சுட்டிக் காட்டுகிறார். படிம வகைகளில் உயர்வகைப் படிமம் என ஒன்றைச் கட்டலாம். சிலப்பதிகாரக் கதையினுள் இடம்பெறும் கண்ணகி, நாளடைவில் கற்பு என்பதன் படிமம் ஆகிவிடலாம். இப்படித்தான் எந்த மொழியினுள்ளும் ஆற்றல் மிகுந்த படிமங்கள் உருவாகி இருக்கின்றன. ஆங்கில இலக்கியத்தில் ஹேம்லட், மேக்பத் என்பவை இவ்வகைப் படிமங்கள். கதே, பைான் முதலியவர்களிடம் வெளிப்படும் பாஸ்டு, டான் ஜீவான் முதலியவர்கள் மேற்கத்திய இலக்கியங்களில் மாபெரும் படிமங்கள். பாரதியிடம் கண்ணன், குயில் என்பவை இவ்வகைப் படிமங்கள். நம் ஆற்றலுக்கு ஒத்த முறையில் இவ்வகைப் படிமங்களை நமக்குள் விரித்துக் கொள்ள முடியும். இந்த படிமங்கள் வழியே இயங்கும் உயிர்த்துடிப்புள்ள மனிதர்களைக் காலங்கடந்து நாம் எங்கும் நகர்த்திக் கொள்ள முடியும். தொன்மங்கள் இம்முறையில் புரிந்து கொள்ளப்படக் கூடியவை. இப்படி விளங்கிக் கொள்ளும் பொழுதுதான் இலக்கியத்தின் அழகியல் நமக்குள் முனைப்புக் கொள்கிறது. மார்க்சியமும் இந்த அழகியலைச் செரித்துக் கொள்ள முடியும். பிராமிதியஸ் என்பது மார்க்சுக்குள் இயங்கிய ஆற்றல் மிகுந்த படிமம். “தமிழ் இனி” கருத்தரங்கில் மார்க்சிய இலக்கியம் குறித்து ஒரு விரிவான கட்டுரை தந்த தோழர் பா. செயப்பிரகாசம் அவர்கள் தன் கட்டுரையில் மார்க்சிய அழகியல் குறித்து விரிவாக எழுதி இருக்கிறார். மார்க்சிய அழகியலை நாம் மேலும் புரிந்து கொள்ளும் முறையில் இக்கட்டுரையைக் கவனிக்க வேண்டும். உருவம், உள்ளடக்கம் என்று மரபு முறையில் இலக்கியத்தை வகைப்படுத்திக் கொண்டு பா.செ. சொல்லுகிறார். படைப்பு ஒன்றினுள் இவ்விரண்டும் ஒத்து இயங்க வேண்டும். ஏதாவது ஒன்று துருத்திக் கொண்டு இருக்குமானால், படைப்பில் இடம்பெறும் அழகியலின் தரம் குறைந்துவிடும். இத்தகைய படைப்பு வாசகனைக் கவர முடியாது. இப்படிப் பா.செ. சொல்வதை நாம் ஏற்கிறோம். உள்ளடக்கம் என்பதனுள் பிரச்சாரம் இடம் பெறலாமா கூடாதா என்ற சிக்கல் குறித்து இவர் எழுதும் பொழுது எங்கல்ஸை மேற்கோள் காட்டுகிறார். ஆசிரியர் நிகழ்ச்சிகளின் இயக்கப் போக்கு வழியாக தன் கருத்தை உணர்த்த வேண்டுமே ஒழிய வெளிப்படையாகப் பேசக்கூடாது என்று சொல்லும் எங்கல்ஸ் அவர்கள், ஆசிரியர் தன் கருத்தைத் தட்டில் வைத்து வழங்கக்கூடாது என்றும் சொல்கிறார். இப்படி எங்கல்ஸை மேற்கோள் காட்டும் பா. செ. வர்க்க போதம் பெற்ற மக்கள் மத்தியில் தட்டில் வைத்து வழங்கலாம் என்றும் எங்கல்ஸ் கூறி இருப்பதைப் பா. செ. எடுத்துரைக்கவில்லை. எப்படியும் மறைத்தோ, வெளிப்படையாகவோ அரசியலைப் பிரச்சாரம் செய்வதை எங்கல்ஸ் மட்டுமல்லாமல் பா.செ.வும் ஏற்கத்தான் செய்கிறார். இத்தகைய போக்கைத்தான் சு.ரா. முதலியவர்கள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். முடிவுகளை முன்கூட்டியே வைத்துக் கொண்டு முற்போக்குவாதிகள் என்பவர்கள் எழுதுவதைச் சு.ரா. ஏற்பதில்லை. இலக்கியங்களுக்குள் இடம் பெறுவது ஒரு தேடலாக இருக்கவேண்டும் என்கிறார்கள் இத்தகையவர்கள். வாழ்வின் புதிர்கள் முதலியவற்றை தேடுபவன் கலைஞன் என்கிறார்கள் இவர்கள். இக்கருத்தின் தகவு குறித்து நாம் சிந்திக்க வேண்டும். எதுவும் துருத்திக்கொண்டு இருக்கக்கூடாது என்பது சரியான கருத்து என்பதில் அய்யமில்லை. இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல் வாழ்வின் எத்துனையோ துறைகளுக்கு இக்கருத்து பொருந்தும். ஒரு கட்டிடத்தில் எல்லாமே ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். ஒவியத்திலும் வெற்றிடம்கூட ஏதாவது பேசிக் கொண்டிருக்கும். ஒரு நாவலில் குறிப்பாக தி. ஜானகிராமன் போன்றவர்களின் நாவல்களில் இடம்பெறும் எல்லா மனிதர்களுக்கும் அவரவர்களுக்கான வாழ்க்கை இருக்கிறது. சிலரது நாவல்களில் ஒன்றிரண்டு மனிதர்கள் முக்கியத்துவம் பெற, மற்றவர்கள் முகம் அற்றுப் போகிறார்கள். இலக்கியத்தின் தனித்தன்மை குறித்து இக்கட்டுரையில் பா.செ. குறிப்பிடுகிறார். மார்க்சியத்தின் அழகியல் என்பது வேறு. மார்க்சியத்தின் அரசியல் என்பது வேறு. இலக்கியத்தின் அழகியல் என்று சரியாகவே வேறுபடுத்துகிறார். கட்டுரையின் இறுதிப் பகுதியில் பிரச்சாரம் முதலியவற்றைப் பா. செ. ஆதரித்துப் பேசுகிறார். இந்த உள் முரண்பாடு கட்டுரையின் தரத்தைக் கீழ் இறக்குகிறது. இதுபற்றி பிறகு பார்க்கலாம். உருவ உள்ளடக்க அமைதி குறித்து பேசும் பா. செ. அவர்கள் மார்க்சிய இலக்கியத்தின் இந்த அழகியலை, மார்க்சியர் முன்னைய இலக்கியங்களில் இருந்து பெறுகிறார்கள் என்று விளக்குகிறார். பெரிதும் பாராட்டப்படும் பழைய இலக்கியங்கள் உருவ உள்ளடக்க அமைதி கொண்டவை என்று கருதும் பா. செ. இலக்கியம் குறித்து இயங்கியல் விதிமுறைகளை மார்க்சியர் இவ்வாறு முன்னைய இலக்கியங்களில் இருந்து பெற்று கொள்ள முடியும் என்கிறார். தமிழிலும் சிலப்பதிகாரம் முதலிய பழைய இலக்கியங்களை நாம் நினைவுபடுத்திக் கொள்கிறோம். இளங்கோவின் உள்ளடக்கம் இன்றைய சூழலில் நமக்கு எந்த அளவில் பொருந்தும் அல்லது பொருந்தாது என்பது குறித்த ஆய்வை இப்பொழுது கொஞ்சம் தள்ளி வைக்கலாம். இளங்கோ தனது உள்ளடக்கத்திற்கு ஏற்ற முறையில் தன் படைப்பில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறித்துக் கொள்ளலாம். இத்தகைய ஆய்வுக்குள் பா.செ. செல்லவில்லை. மார்க்சியத்தின் அழகியல் என்று பேசும் பொழுது, மார்க்சியத்தின் வர்க்கக் கோட்பாடு முதலியவற்றிலிருந்து அழகியலைப் பிரித்துப் பேசவும் முடியாது. சரியாகச் சொல்வதென்றால் மார்க்சியத்தின் வர்க்கக் கோட்பாடு என்ற தளத்தில் இருந்துதான் இலக்கிய அழகியல் குறித்தும் பேசமுடியும். மார்க்சியம் என்பது கடந்த 150 ஆண்டுகளுக்குள், வரலாறு மற்றும் மனிதம் குறித்து ஒரு புதிய பார்வையை முன்வைத்திருக்கிறது. முந்தைய பார்வைகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது மற்றுமின்றி தனித்தன்மையும் வாய்ந்தது என்பதில் அய்யமில்லை. மார்க்சியம் மனிதனை வரலாறு மற்றும் பொருளியல் சூழலில் வைத்துப் பார்க்கிறது. இதுநாள் வரை கடவுள், மேலுலகம், முன்வினை, ஆன்மா என்பனவற்றுக்கு முதன்மை தந்த பார்வையை மார்க்சியம் மறுக்கிறது. மனிதன் இனி உலகத்தைத் தனக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளமுடியும் என்கிறது மார்க்சியம். இது குறித்து இங்கு நிறையப் பேசுவதை நாம் தவிர்த்துக் கொள்கிறோம். சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். இதுநாள்வரை நிலவிய பல்வேறு வகை ஏற்றத்தாழ்வுகள் இனி மனிதனுக்குத் தேவை இல்லை. வரலாறு முதலிய அனைத்தையும் ஒரு விரிவான மறு ஆய்வுக்கு உட்படுத்தி மனிதர் அனைவரும் சமம் என்ற முறையில் வளர்வதற்கான ஒரு புதிய உலகைப் படைக்க முடியும். சமதர்மம் தான் மனித வாழ்வின் ஆதாரமான நியதி. உழைப்பும் பகிர்வும் மனிதனின் இயல்பான செயல்பாடுகள். தனிஉடமை தேவை இல்லை. அரசு முதலிய எந்த அதிகாரமும் ஆதிக்கமும் மனிதர்களை இனி கட்டுப்படுத்துவதற்கில்லை. மனிதர்கள் தம்மைத்தாமே சுயமாக நிர்வாகம் செய்து கொள்ள முடியும். உயிர்களோடு இயற்கையோடு மனிதன் இனி ஒத்து வாழ முடியும். உழைப்பது மனிதனின் உடல் நலத்திற்கு இன்றியமையாதது. உழைப்பின் மூலமே மண்ணோடும், மனிதர்களோடும், உயிர்களோடும் மனிதன் உறவு கொள்கிறான், மற்றும் புற உலகைத் தன்வயப்படுத்திக் கொள்கிறான். புறத்திற்கும் அகத்திற்கும் இடையில் உள்ளார்ந்த உறவு இப்படித்தான் இயக்கம் கொள்கிறது. அன்பில் தழைப்பது இந்த உலகம் இவனுக்குள் வந்த பிரபஞ்சத்தோடு ஆழ்ந்த உறவு இருக்கிறது. மண்ணோடும், விண்ணோடும் இவன் உறவு கொண்டிருக்கிறான். காலங்களோடு உறவு கொண்டவன் இவன். முன்னைய வரலாறு இவனுக்குள் இப்பொழுது இருண்ட காலமாக இல்லை. இருள் விலகித் தெரிகிறது. சாக்ரடீஸ், ஏசு முதலியவர்கள் இவனோடு நெருக்கமாக இருக்கிறார்கள். முன்னைய பகைமைகள் கரைந்துவிட்டன. தெய்வங்களும் இப்பொழுது இவனுக்கு நெருக்கமாக வந்துவிட்டன. இறந்தவர்கள் எல்லோரும் இப்பொழுது உயிர் பெறுகிறார்கள். மனித குலத்திற்கு விடுதலை என்பது சாத்தியப்படுகிறது. சமதர்மம் இப்படித்தான் மனிதன் மட்டும் அல்லாமல் எல்லாவற்றினுள்ளும் புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது. இப்பொழுது ஆயிரம் மலர்கள் மலர்கின்றன. மனிதன் இசையில் மயங்குகிறான். எங்கும் கவிதைகளின் இயக்கம். இனி இவனுக்கு மரணம் இல்லை. இது பேரழகு. எங்கும் பரவசம். இப்பொழுது சொல்லலாம் மார்க்சியம் முன் வைக்கும் அழகியல் இது அன்றி வேறு இல்லை. இந்த அழகைப் பெற இன்றைய மனிதன் போராட வேண்டும். புதிய உலகிற்காக உயிரைக் கொடுத்துப் போராட வேண்டும். சாவிலும் கூட பேரின்பம் உண்டு. தடைகளைத் தகர்ப்பதன் மூலமே புதிய ஆற்றல்கள் மற்றும் புதிய வெளிச்சங்கள் நமக்குச் சாத்தியப்படும். இந்த மனிதனுக்கு ஓர் வீடு ஓர் நாடு போதாது. இவனுக்கு உலகமே வேண்டும். ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இப்படிப் போராடும் மனிதனுக்குள் வரலாற்றைக் காணமுடியும். இவனுக்குள் எத்தனையோ இராமர்களையும், இலட்சுமணர்களையும் காணமுடியும். மார்க்கம் லெனினும் நம் நவீன காலத்திற்கு உரியவர்கள் என்பதில் அய்யமில்லை. இவர்களைப் போலவே முந்திய காலங்களிலும் வரலாற்றைப் புரட்டிப் போட்டவர்கள் எத்தனையோ பேர். மேதைகள் மட்டுமல்லாமல், எளிய மக்களும் வரலாற்றின் இயக்கத்திற்கு ஊடகமாக இருந்திருக்கிறார்கள். முன்னைய எல்லோரையும் பிற்போக்குவாதிகள் என்று நாம் கருதுவதற்கில்லை. வரலாற்றின் இயக்கத்திற்கு எத்தனையோ வகைகளில் இவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். எதிர்மறையாளர் என்று கருதப்படுபவர்கள் இல்லாமல் வரலாற்றில் இயக்கம் இல்லை. இப்படி எல்லாம் மார்க்சியம் நமக்குப் புதிய அறிவைத் தந்திருக்கிறது. புதிய அழகியலைத் தந்திருக்கிறது. இலக்கியத்தினுள்ளும் இத்தகைய பேரழகைக் காண மார்க்சியம் நமக்கு உதவுகிறது. கட்சிக்காரர்களுக்கு இத்தகைய பார்வை வசப்படவில்லை. வரலாற்றின் எத்தனையோ திரிபுகளிலிருந்து நாம் இன்னும் விடுபடவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. இயற்கையிலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், தன்னிலிருந்தும் அந்நியமான மனிதனுக்கு எத்தனையோ திரிபுகள், கோளாறுகள் மற்றும் குழப்பங்கள். மீண்டும் இயற்கையோடும், சமூகத்தோடும், தன்னோடும் முற்றாக இணைந்து விட்ட நிலையில் மனிதனுக்குள் விளைவது பேரறிவு மற்றும் பேரழகு. இது மார்க்ஸ் நமக்குத் தந்த பேரறிவு. ` இத்தகைய விரிவான பார்வை தோழர் பா.செ. அவர்களிடம் இல்லை என்பதை ஒரு குறையாக நான் காண்பதற்கில்லை. மார்க்சியத்தை இப்படி எல்லாம் பல திசைகளில் ஆழமாகப் பொருள்படுத்துவதற்குரிய வாய்ப்புக்களை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் தமக்குள் இறுகிவிட்ட கட்சிக்காரர்களுக்கு இத்தகைய பார்வை சாத்தியமில்லை. அநேகமாக கலைஞர்களுக்குத்தான் இத்தகைய பார்வை வசப்படும். கார்க்கி முதலியவர்களிடம் நாம் தேடிப் பார்க்க முடியும். மார்க்ஸ் என்ற மாமேதைக்குள் இத்தகைய வெளிச்சங்கள் இல்லாமல் முடியாது. எங்கெல்ஸ் முதலியவர்களுக்குள்ளும் இத்தகைய பார்வைகளைத் தேடிச் சென்று தொகுக்க வேண்டும். இப்பொழுதைக்கு என்னால் செய்ய இயலாது. எனது பார்வைக்குள் சமயத்தின் பாதிப்பு இருக்கிறது என்று நண்பர்கள் கருதலாம், விமர்சனமும் செய்யலாம். நான் அதை வரவேற்கிறேன். சமயம் அல்லது மதத்தின் மேல் அடுக்குகளை விலக்கிவிட்டு உள் ஆழங்களுக்குள் செல்ல முடியுமானால், மனிதனின் எத்தனையோ பரிமாணங்களை நாம் காணமுடியும். இந்த விளக்கங்களை இத்துடன் நிறுத்தி வைக்கிறேன். இப்பொழுது மீண்டும் பா.செ.அவர்களின் கட்டுரைக்குத் திரும்பலாம். பாரதி தொடங்கி நம் காலத் தமிழ்க் கவிஞர்கள் குறித்தும், அதன்பிறகு தமிழ்ச் சிறுகதை, சிறுகதையாளர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் குறித்தும் பா. செ. பேசுகிறார். பாரதி, பாரதிதாசன் குறித்து இவர் தரும் மதிப்பீடுகள் மார்க்சியத்தோடு எந்தளவுக்கு இயைபுடையவை என்பது ஆய்வுக்குரியது. ஆனால் மார்க்சியத்தோடு ஒத்துச் செல்லும் நாவலாசிரியர் முதலியவர்கள் குறித்து பா. செ. பேசுகிறார். கலை இலக்கியம் குறித்த மார்க்சிய அணுகுமுறையில் அந்நியமாதல் என்பதை மையப்படுத்தினால் ஒழிய மனிதர்களுக்குள் நடைபெறும் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியாது. அந்நியமாதல் என்பது இன்றைய சமூகச் சூழலில் பெரும்பாலும் எல்லா மனிதர்களையும் சிறிய அல்லது பெரிய அளவில் பாதிக்கத்தான் செய்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் மனிதனுக்குள் இருக்கவேண்டிய பன்முகப் பரிமாணங்கள் இல்லை. பாட்டாளி வர்க்கம் மட்டுமல்லாமல் உடமை வர்க்கமும் அந்நியமாதலுக்கு உள்ளாகி இருப்பதை மார்க்ஸ் விளக்கி இருக்கிறார். பணம், அதிகாரம், ஆடம்பரம், போதை, தற்பெருமை, மதவாதம் என்பனவற்றுக்குள் மனிதர்கள் முடங்கி இருப்பது அந்நியமாதல் அன்றி வேறு இல்லை. பாட்டாளி வர்க்கம் என்பதும் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் இல்லை. முதலாளிகளும் இப்படி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் காரணமாக வாழ்வியக்கம் இவர்களுக்குள் முழுமையாக இல்லை. இயற்கை முதலியவற்றோடு இவர்களுக்கு முழு அளவில் உறவு இல்லை. இப்படி எத்தனையோ வழிகளில் இவர்களுக்குள் முடக்கம் நேர்ந்திருக்கிறது. வரலாறு மற்றும் பொருளியல் சூழல் இதற்கான காரணம் என்று இங்கு சுருக்கமாகச் சொல்லலாம். இத்தகைய சமூகச் சூழலில் பாட்டாளிகளின் சுதந்திரம் முதலியவை கட்டுப்பாட்டுக்கு உள்ளாகி உள்ளன. முதலாளியும் சுதந்திரவானாக இல்லை.பணத்திற்கும் அதிகாரத்திற்கும் அவனும் அடிமைப்பட்டிருக்கிறான். அவனுக்கும் தான் விடுதலை தேவை. ஆனால் அந்நியமாதலின் தொடர்ச்சியாக அவனுக்கு வாய்த்திருக்கும் சில வசதிகள் காரணமாக அவன் தனது அடிமைத்தனத்தை உணர்வதில்லை. இந்நிலையில் உடமை வர்க்கத்தினருக்கும் சேர்த்து பாட்டாளி வர்க்கம் பாடுபட வேண்டும் என்று மார்க்ஸ் கூறுகிறார். சுதந்திரம் பிரிவுபடாதது என்று மார்க்ஸ் கூறுவதை இப்படித்தான் பொருள் படுத்த வேண்டும். தொழிலாளிக்கு விடுதலையை மறுக்கும் முதலாளி தானும் விடுதலை பெறமுடியாது. இத்தகைய அந்நியமாதல் கோட்பாட்டை வைத்துத்தான் சாதி ஆதிக்கம், ஆண் ஆதிக்கம் இன்னும் எத்தனையோ வகையான ஆதிக்கங்களை விளக்கமுடியும். தம்மை மார்க்சியர் என்று கருதிக் கொள்ளும் முற்போக்கு வட்டாரத்தவரின் படைப்பு முறை குறித்து நாம் விவரிக்க வேண்டியதில்லை. பாட்டாளி எப்பொழுதும் நல்லவன். முதலாளி எப்பொழுதும் தீயவன். கட்சிக்காரர்கள் தூய்மையானவர்கள். இத்தகைய சித்திரிப்பு இவர்களின் படைப்புகளுக்குள் எத்தனையோ வடிவங்களில் தொடர்கிறது. இவர்களுக்குள் சுய விமர்சனம் இல்லை. இதன் காரணமாக பாட்டாளி அல்லது முதலாளியின் உள்ளத்தில் செயல்படும் முரண்பாடுகள் குறித்து இவர்கள் எழுதுவதில்லை. இவர்களுக்குள் செயல்படும் ஆணாதிக்கம் குறித்து இவர்களுக்குப் புரிதல் இல்லை. பெண்ணின் விடுதலை குறித்து இவர்கள் பேசுவதில்லை. உழவர்கள் குறித்தும் இவர்களுக்கு ஈடுபாடு இல்லை. ஒரு கலைப் படைப்பென்பது இப்படிப் பன்முக இயக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். முதலாளிக்குள்ளும் ஒரு மனிதன் இருக்கிறான். இப்படித் தொடங்கி பல திசைப் பார்வை கொண்டால் ஒழிய ஒரு நல்ல படைப்பு உருவாக முடியாது. இத்தகைய புரிதலோடு மார்க்சியர் செயல்பட வேண்டும். இவை பற்றி எல்லாம் பா. செ. அவர்கள் எழுதவில்லை. இந்த நாவலாசிரியர்கள் அனைவரையுமே பா.செ. பாராட்டிச் செல்கிறார். இவர்களுக்குள்ளும் பிரச்சார நோக்கம் இல்லாமல் இல்லை. இவர்களில் கட்சி சார்பானவர்களும் உள்ளனர். இவர்களின் படைப்புக்கள் குறித்து ஆசிரியருக்குத் திறனாய்வுகள் இல்லை. இவர்களுக்குள் இயங்கும் மார்க்சியம் குறித்து ஆசிரியர் கேள்வி எழுப்பவில்லை. முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியம் இவர்களுடையது. இதன் காரணமாக முதலாளிய எல்லைக்குள் மட்டுமே இவர்களது இயக்கம் இருக்க முடியும். இவை குறித்தெல்லாம் பா. செ. அவர்களுக்குப் பார்வை இல்லை. இவை தவிர தலித்தியம், பெண்ணியம், நவீனத்துவம், பின் - நவீனத்துவம் என்றெல்லாம் விரிவாகப் பேசப்படும் தற்காலச் சூழலில் இலக்கியம் குறித்த மார்க்சியப் பார்வையைத் தலித்தியம் முதலியவற்றின் உள்வாங்கலோடு செரித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களை பா.செ. அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் இல்லை. ஒன்றை உறுதியாகச் சொல்லமுடியும். இலக்கியத்தின் தனித்தன்மை பற்றியும் மார்க்சியத்தின் அரசியல் வேறு, இலக்கியம் வேறு என்றெல்லாம் கட்டுரையின் தொடக்கத்தில் கூறும் பா.செ., அவர்கள் கட்டுரையின் இறுதிப் பகுதியில் கட்சி சார்ந்து இறுகியவர்களின் மார்க்சிய பார்வையைத்தான் வெளிப்படுத்துகிறார். இவரும் கட்சிக்குள் இருந்தவர். இதுகுறித்து அவருக்குச் சுயவிமர்சனம் என்பது இல்லை என்பது வருத்தத்திற்கு உரியது. இவை குறித்தெல்லாம் உங்களிடம் தான் நான் விவாதிக்க முடியும். நேசத்தோடு உங்களால் விவாதிக்க முடியும். - 11.9.2000 கடிதம் - 4 அன்பு நண்பருக்கு வணக்கம், பா. செயப்பிரகாசம் அவர்களின் கட்டுரையில் உள்ள ஒரு முக்கியமான கருத்து என் சிந்தனையைத் தூண்டியது. இதுகுறித்து இப்பொழுது எழுதுகிறேன். மார்க்சியம் என்பது ஒரு திறனாய்வுக் கோட்பாடா? அன்றியும் வாழ்வியல் கோட்பாடா? என்பது குறித்து தொடர்ந்து ஒரு விவாதம் நடைபெறுகிறது என்று அவர் குறிப்பிடுகிறார். உண்மைதான் மார்க்சியத்தை ஒரு திறனாய்வுக் கோட்பாடு என்று உடனடியாகப் புரிந்து கொள்வதில் சிரமம் இல்லை. வாழ்வியல் கோட்பாடு என்று எடுத்துக் கொள்ளும்பொழுது நிறையச் சிரமங்களை நாம் எதிர்கொள்கிறோம். எந்த ஒரு கலை அல்லது இலக்கியத்தையும் அது தோன்றிய வரலாற்றுச் சூழலில் வைத்துக் காண்பதைப் பொறுத்தவரை மார்க்சியம் கூடியவரை சிறப்பான விளக்கங்கள் தருகிறது. கண்ணகி செய்த கலவரம் அல்லது புரட்சி என்பது எத்தகைய சூழலின் எதிர்வினை என்பதை எளிதாக விளக்க முடியும். பாண்டியன் ஏன் நீதி தவறினான் என்பதற்கான சூழல், சிலப்பதிகாரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சூழலில் கண்ணகி செயலற்றுப் போவதற்கான வாய்ப்பு இருந்து சோர்வுற்று தற்கொலை செய்து கொள்வதும் இப்படி நேரக்கூடியதுதான். ஆனால் கண்ணகிக்குள் இருந்து ஒரு பேராற்றல் வெளிப்படுகிறது. இந்தப் பேராற்றலைக் கண்ணகி எங்கிருந்து பெற்றாள் என்பதைச் சிலப்பதிகாரம் நமக்கு விளக்குவதில்லை. பண்பாடு, வளர்ப்பு, மரபு வழியில் கற்பிக்கப்படும் அறம் என்றெல்லாம் இங்கு நம் ஆய்வுகள் செல்ல வேண்டும். மார்க்சியம் இங்கு நுழைவதற்கில்லை. பழங்காலச் சூழலில் நீதி முறையாக வகுக்கப்பட வில்லை. பாண்டியனும் தன் மனைவி காரணமாக ஒரு நெருக்கடியில் இருக்கிறான். காணாமல் போய்விட்டதாக பொற்கொல்லன் சொன்ன சிலம்பை மீட்டுத் தருவதன் மூலம் அவள் ஊடலைத் தீர்க்கமுடியும். அமைச்சர்களை அவன் கலந்து கொள்ளவில்லை. கோவலன் கையில் சிலம்பு இருந்தால் அவனைக் கொன்று சிலம்பு கொண்டு வரும் என்று ஆணை இடுகிறான். காவலன் இப்பொழுது நீதியைச் செயல்படுத்த வேண்டி நேருகிறது. கோவலன் நல்லவனாகத் தோன்றுகிறான் என்று ஒரு காவலன் சொல்ல, இன்னொருவன் நமக்கது வேலை அல்ல. கோவலன் கையில் சிலம்பு இருக்கிறது. ஆகவே அவன் குற்றவாளி. கொல்வது நம் கடமை என்று அவன் செயல்படுகிறான். கோவலன் வெளி நாட்டிலிருந்து பிழைப்பு தேடி வந்தவன். அவனிடத்தில் விலை உயர்ந்த சிலம்பு இருக்க முடியாது. ஆகவே அவன் கள்வனாக இருக்க முடியும். இளங்கோ தரும் விவரங்கள் வரலாற்றுச் சூழலைப் புரிந்து கொள்ளப் போதுமானவை. இப்படியே நம் கால இலக்கியங்களையும், வரலாறு மற்றும் பொருளியல் சூழலை வைத்து விளங்கிக் கொள்ளமுடியும். இது குறித்து மார்க்சியம் மேலும் துல்லியமான விவரங்களை வேண்டுகிறது. ஓர் இலக்கியத்தைப் படைக்கும் எழுத்தாளன், சமுதாயத்தில் எத்தகைய வாழ்நிலையோடு இயங்குகிறான் என்றெல்லாம் நாம் திரட்டும் விவரங்கள் சிறிய அல்லது பெரிய அளவில் அவனது படைப்பை விளக்கமுடியும். வணிகமுறை எழுத்தாளர்களின் படைப்புக்களை இப்படி எல்லாம் திறனாய்வுக்கு உட்படுத்த முடியும். வரலாற்றுச் சூழல், அரசியல் முதலிய கூறுகளை முன்நிறுத்தி ஓர் இலக்கியப் படைப்பை ஆராய்கிற மார்க்சியனைப் பொருத்தவரை வாழ்வியல் என்பது இத்தகைய எல்லைக்குள் அடங்குவதாக கருத முடியவில்லை. கலைப் படைப்பைப் பற்றிய புரிதலுக்கும் மதிப்பீட்டிற்கும் இத்தகைய அணுகுமுறை கடுமையான சிக்கலைத் தோற்றுவிக்கிறது. வாழ்வியல் என்பது ஓர் திணையாக, அல்லது கருத்து வகையாக, அல்லது தத்துவத்தின் ஒரு கூறாக அரசியலை முன்னிறுத்தும் மார்க்சியனால் கருத முடியவில்லை. இவை குறித்து இங்கு சிலவற்றை நாம் தெளிவுபடுத்த வேண்டும். இந்த இடத்தில் லஃபார்கே என்ற பிரென்ச் மார்க்சியர் கூறும் ‘’அன்றாட மார்க்சியம்’ என்பது குறித்துக் கொஞ்சம் பார்க்க வேண்டும். வர்க்கப் போராட்டம் என்று தொடங்கி இன்றைய சமூகத்தில் அரசு அதிகாரம் முதலியவற்றை எவ்வாறெல்லாம் எதிர்கொண்டு முதலாளியப் போக்கை மாற்றி சமதர்மத்தை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதுதான் பொதுவாக மார்க்சியனின் சிந்தனை முறை. மார்க்சியன் என்று தன்னைக் கருதிக் கொள்பவன் எத்தகைய உணவு உட்கொள்ள வேண்டும்? எத்தகைய மருத்துவம் செய்து கொள்ளவேண்டும்? மனைவியோடு அவன் கொள்ளும் உறவு என்ன? அவன் குழந்தைகளுக்கு எத்தகைய கல்வி தரவேண்டும்? எத்தகைய வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும்? அவன் குடியிருக்கும் வீடு எப்படி இருக்கவேண்டும்? எந்த விழாக்களை அவன் கொண்டாடலாம்? நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு அவன் கொள்ளும் உறவு எத்தகையதாக இருக்க வேண்டும்? பணிபுரியும் நிறுவனத்தில் அவனது உறவு எப்படி இருக்க வேண்டும்? உழவர்களோடு, மற்றவர்களோடு அவன் கொள்ளும் உறவு என்ன? பணம் அல்லது அதிகாரத்தோடு அவன் கொள்ளும் உறவு என்ன? இயற்கை , இசை முதலியவற்றோடு அவன் உறவு என்ன? இப்படி எல்லாம் மார்க்சியனை நோக்கி மற்றவர் கேட்பது ஒருபுறம் இருக்கட்டும். தன்னைத்தானே அவன் இப்படி எல்லாம் கேட்டுக் கொள்வானா என்பது குறித்து அன்றாட மார்க்சியம் கேள்வி எழுப்புகிறது. இவை கூர்மையான கேள்விகள். சமூக மாற்றம் முதலியவை வெறும் அரசியல் போராட்டங்களின் மூலம் வந்து விடுவதில்லை. சமூகத்தில் நிலவும் ஆதிக்கங்களுக்கும் நமக்கும் இடையில் எத்தனையோ இணைப்புச் சங்கிலிகள் உள்ளன. குடியிருக்க ஒரு கான்கிரீட் வீடு வேண்டும், பயணம் செய்ய ஒரு இரண்டு சக்கர வாகனம் வேண்டும். நாம் பயணம் செய்யும் பேருந்து 30 கி.மீ. வேகத்தில் ஓட வேண்டும். டெரிகாட்டன் சட்டை வேண்டும். மகன் மருத்துவன் ஆகவேண்டும். பெண்ணுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். குடும்பத்தின் பொறுப்புக்களை மனைவி சரிவர நிர்வகிக்க வேண்டும். ஊதியம், போனஸ் என்றெல்லாம் நிறையக் கிடைக்க வேண்டும். இப்படி ஒரு மார்க்சியன் கருதுவான் என்றால் சீர்கெட்ட முதலாளியத்தோடு மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியத்தோடும் ஒத்துழைக்கிறான் என்று பொருள். நுகர்வு வெறிக்கு இவனும் ஆளாகி உள்ளான் என்பது பொருள். இவனும் பணம் மற்றும் அரசு அதிகாரங்களை உள்வாங்கி, தன் குழந்தை, மனைவி மீது மட்டுமல்லாமல் எத்தனையோ மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறான் என்று பொருள். இதற்காகத்தான் இவன் தொழிற்சங்கங்களில் செயல்படுகிறான். காப்பீட்டு நிறுவனத்திலோ, வங்கியிலோ பணிபுரியலாம். கல்லூரிப் பேராசிரியனாக இருக்கலாம். தொழிற்சங்கத்தில் ஒரு தலைவனாக இருக்கமுடியும். இத்தகைய வாழ்க்கை வாழ்பவன் சமூக விடுதலைக்கு எதிரானவன் மட்டுமல்ல, மார்க்சியம் பேசி மற்றவரையும் அப்புறம் தன்னையும் ஏமாற்றிக் கொள்கிறான். இவனும் தனக்குள் அந்நியமானவன். இவனது வாழ்க்கை பொய்யான, போலித்தனமான வாழ்க்கை. மார்க்சியம் என்பது இப்படித்தான் வாழ்வியலின் எல்லா முகங்களோடும் இணைந்திருக்கிறது / இயங்குகிறது. மார்க்சியனின் இலக்கியப் படைப்பென்பது இத்தகைய ஆழமான பார்வையோடு இயங்க வேண்டும். திறனாய்வுக் கோட்பாடென்பதும், வாழ்வியல் கோட்பாடென்பதும் எதிர் எதிராக இருக்க வேண்டும் என்பதில்லை. மார்க்சியனின் படைப்பை, திறனாய்வை உள்வாங்கிக் கொண்ட வாழ்வியல் கோட்பாட்டின் அடிப்படையில் நாம் ஆராய வேண்டும். மார்க்சியம் என்பது திறனாய்வுக் கோட்பாடா? அல்லது வாழ்வியல் கோட்பாடா? என்ற கேள்வியோடு நாம் நிறுத்திக் கொள்ளமுடியாது. மார்க்சியர் அல்லாதவர் சிலரின் படைப்புக்கள் மீது கொஞ்சம் நம் பார்வையை இப்பொழுது செலுத்தலாம். சுந்தர ராமசாமி அவர்களின் “குழந்தைகள், பெண்கள், ஆண்கள்” என்ற நாவல் உடனடியாக என் நினைவுக்கு வருகிறது. கூடியவரை மார்க்சிய நோக்கில் இந்த நாவலைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். நாவலில் எஸ்.ஆர். எஸ். ஒரு முக்கியமான பாத்திரம். நேர்மையிலிருந்து சிறிதளவும் இவர் விலகியதில்லை. தந்தை இவரிடம் கேட்டுக் கொண்டபடி அண்ணன், தம்பியின் குடும்பத்தையும் இவர்தான் காப்பாற்ற வேண்டும். இரண்டாம் உலகப் போர்ச் சூழல், வணிக உலகில் கடும் போட்டிகள் மற்றும் நெருக்கடிகள். இந்தச் சூழலில் வணிகர்கள் எதுவும் செய்ய முடியும். கோடி கோடியாக திரட்டிக் கொள்ள முடியும். எஸ். ஆர். எஸ். இப்படி செயல்பட மாட்டார். பெரும் வணிகர்க்கெதிராக இவரால் நிற்கவும் முடியாது. ஊரைவிட்டு இவர் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இரண்டாம் உலகப் போர்ச் சூழல், வணிக நெருக்கடி, தம் குடும்பத்தோடு மேலும் இரண்டு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை. இவை எல்லாம் சேர்ந்து எஸ்.ஆர்.எஸ்.ஸுக்குள் ஓர் இறுக்கமான மனிதனைத் தோற்றுவிக்கிறது. குடும்பத்திற்குள் இவர் கிழித்த கோட்டை யாரும் தாண்ட முடியாது. மனைவி இவரோடு ஒத்துழைக்கிறாள். வேறு வழி இல்லை. மகன் பாலுவுக்கு இது சாத்தியம் இல்லை. தன் நண்பன் லச்சுவோடு அங்கும் இங்கும் திரிகிறான். லச்சு ஒரு அற்புதமான சிறுவன். வீட்டில் ஒரு ஒதுக்குப்புறமான சுவரில் பாலு ஓவியம் வரைகிறான். தந்தைக்கு இது தெரிந்த பொழுது அவரது கடும் சினத்திற்கு எதிராக “என் ஓவியத்தை யாரும் அழிக்க விடமாட்டேன்” என்று கத்துகிறான். தந்தையின் அதிகாரக் கெடுபிடி இறுதியில் இவனை மனநோயாளி ஆக்குகிறது. மனநோய்க்கு ஆளான நிலையில் இவனுக்குள் வியக்கத்தக்க முறையில் சில தீர்க்க தரிசனங்கள் வெளிப்படுகின்றன. சிலரின் முகத்திற்கு எதிராக அவர் இதுநாள் வரை மறைத்து வைத்திருக்கிற சில உண்மைகளை வெளிப்படுத்துகிறான். இன்னும் எத்தனையோ திசைகளில் நாவல் இயங்குகிறது. இவை பற்றி முழுமையாக இங்கு பார்ப்பதற்கில்லை. கடுமையான போர்ச்சூழல், அன்றியும் வணிக நெருக்கடி. எஸ்.ஆர்.எஸ். நிமிர்ந்து நிற்கிறார். இவரை ஒரு மார்க்சியன் இப்படி புரிந்து கொள்ளமுடியும். இவர் எங்கிருந்து இந்த உள்ளாற்றலைப் பெற்றார். கடுமையான நெருக்கடிச் சூழலில் ஒருவன் மற்றவரை ஏமாற்றலாம், திருடலாம், பொய் சொல்லலாம். சூழலோடு சமரசம் செய்து கொள்ளலாம். எஸ்.ஆர்.எஸ். இப்படிச் செய்ய மாட்டார். இங்குதான் காலம் காலமாக தொடர்ந்து வரும் அறநெறி பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. சமூகத்தை மாற்ற இவர் கிளம்பவில்லை. சமூகச் சூழல் இவரை ஒரு வகையில் தண்டிக்கிறது. இவர் தன் குழந்தையைத் தண்டிக்கிறார். இதையும் மீறி மகனுக்குள் ஒரு கலைஞன் எழுகிறான். நெருக்கடி மிக்க சூழலில் இது ஒரு அற்புதம். இதற்கு மேல் இன்னும் ஓர் அற்புதம். மனநோய்க்கு உள்ளானவன் ஒரு தீர்க்கதரிசி போல் பேசுகிறான். மார்க்சியம் இதை எப்படி விளக்கும். வாழ்க்கை இப்படி எத்தனையோ புதிர்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்கிறது. இவற்றை எல்லாம் உள்வாங்கிக் கொண்ட மார்க்சியன் தான் மனித வாழ்க்கை குறித்துச் சரியாகச் சித்தரிக்க முடியும். சமயம், கடவுள், படைப்பியக்கம் என்பனவற்றுக்குள் ஆழமான தேடலை மார்க்சியன் செய்யவேண்டும். - 13.9.2000 வாழ்வியல் கோட்பாடு தொடர்ச்சி வாழ்க்கை என்பது எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கிராமத்திலும், நகரத்திலும் வாழ்க்கை வேறுபடுகிறது நகரத்தினுள்ளும் கிராமம் இல்லாமல் இல்லை. குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று நிலங்களுக்கு ஒத்த முறையிலும் வாழ்க்கை வேறுபடுகிறது. சமூகத்தில் எத்தனையோ பிரிவுகள். வருமானத்திலும் ஏற்றத் தாழ்வுகள். சாதி மதம் என்ற வகையிலும் வேறுபாடுகள். கல்வி அறிவுடையவர், இல்லாதவர்கள். உயர்ந்த பதவியில் உள்ளவர்கள், மருத்துவர், பொறியியல் வல்லுநர் இப்படி நூற்றுக்கணக்கில் வாழ்க்கை வேறுபாடுகள். உண்பது, உடுப்பது, இருப்பிடம், வாகன வசதிகள், கல்வியறிவு இவற்றோடு ஆண், பெண் வேறுபாடு என்றெல்லாம் வாழ்க்கையில் வேறுபாடுகளைக் காண முடியும். பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்க்கை இன்று இல்லை. அரசு ஊழியர்களுக்குத் தனி வாழ்க்கை . வாழ்க்கையின் இறுதித் தரத்தில் உள்ளவர்கள் என்று நம் சமுதாயத்தில் எவ்வளவோ சொல்ல முடியும். சமூகத்தில் அடித்தளத்தில் உள்ளவர்கள் விளிம்பு நிலையில் உள்ளவர்கள், வாழ்க்கைக்கு வெளியில் உள்ளவர்கள், மனநோயாளிகள் என்று எவ்வளவோ சொல்லமுடியும். கூடவே கட்சிக்காரர்கள், இன்னும் பல்வேறு இயக்கத்தவர் என்றெல்லாம் சொல்ல முடியும். இவர்கள் அனைவர்க்குள்ளும் ஏதேனும் ஒத்த கூறுகள் உண்டா என்பது குறித்து நாம் சிந்திக்க முடியும். எல்லோருக்கும் உயிர் வாழ்க்கை முக்கியம். உணவு, இருப்பிடம் இல்லாமல் முடியாது. குடும்பம் என்ற அமைப்புக்கு வெளியில் என்று யாரும் இல்லை. ஆண் பெண் உறவு முக்கியம். தொழில் வாய்ப்புக்கள் முக்கியம். கல்வி, மருத்துவம், பயணங்கள், சுகாதாரம் என்று இவை இல்லாமல் முடியாது. குழந்தைகள் முக்கியம். பொழுதுபோக்கு, விளையாட்டுகள், கோயில்கள், திருவிழாக்கள், உறவினர்கள், நண்பர்களோடு உறவு, இயற்கைச் சூழல். திரைப்படம், தொலைக்காட்சி, இசை என்று சில கலைகள். இவற்றோடுதான் எல்லோருடைய வாழ்க்கையும் நடைபெறுகிறது. சிலருக்கு வாய்ப்புக்கள் அதிகம். பலருக்கு வாய்ப்புக்கள் குறைவு. இவற்றுக்கு இடையில் எப்படியோ நமக்குள் நிறைவு காண வேண்டும். அமைதி பெற வேண்டும். இன்புற வேண்டும். அடுத்தவர்களுக்கு முடியுமானால் வாய்ப்புத் தரவேண்டும். பொறுமை தேவை. தவறுகள் கண்டபோது மன்னிக்கவும் தெரியவேண்டும். இப்படி வாழ்க்கையில் நிறை காண்பதற்கு எவ்வளவோ பண்புகள் தேவை. இவற்றோடு வாழ்க்கையில் எவ்வளவோ தடைகள், துயரங்கள், விபத்துக்கள், நோய் நொடிகள் இறுதியாக மரணம். இவை குறித்து எல்லாம் நம்மை நாமே சரிப்படுத்திக் கொள்வதற்குச் சில பார்வைகள் தேவை. இவற்றோடு கதைகள், கற்பனைகளும் இல்லாமலும் முடியாது. வாழ்க்கையில் உழைப்பைப் போலவே பகிர்வும் முக்கியம். நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், தேசத்தின் அரசியல் முதலியவை ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அரசு என்பது எல்லா மனிதர்க்குள்ளும் செயல்படுகிற மிகப்பெரிய அமைப்பாக மாறி இருக்கிறது. முதலாளியத்தோடு நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம். முதலாளிகள் தான் நம் வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற முறையில்தான் தொழில்கள், பொருள் உற்பத்தி, கல்வி, மருத்துவம் என்று எல்லாமே நடைபெறுகின்றன. ஏகாதிபத்தியம் கடுமையாகவே நம் வாழ்க்கைக்குள் ஊடுருவி இருக்கிறது. நில உடமை முறை என்பதுவும் நம் வாழ்க்கைக்குள் பாதிப்பை ஏற்படுத்தாமல் இல்லை. ஆதிச் சமூகங்களை விட்டு நாம் முற்றாக விலகவும் இல்லை. இப்படி எல்லாம் எல்லா மனிதர்களும் சிந்திப்பதில்லை. இதற்கேற்ற கல்வி இங்கு தரப்படவில்லை. பெரும்பாலான மனிதர்கள் குறுகிய எல்லைகளுக்குள் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக எவ்வளவோ வம்பு வழக்குகள், மனக் கவலைகள். இப்படித் தொடங்கி இன்னும் எவ்வளவோ சொல்ல முடியும். சமயவாதிகள், முதலாளிகள் என்று சமூகப் பிரிவினர் பலருக்கு வாழ்க்கை நோக்கு என்று இருக்கிறது. இப்படித்தான் எங்களுக்கு வாழ்க்கை என்ற முறையில் இவர்கள் தங்கள் வாழ்க்கை நோக்குகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். களிமண்ணிலிருந்து பானைகள் முதலியவற்றை உருவாக்குவது போல இவர்கள் குறிப்பிட்ட கண்ணோட்டத்தின் வழியே வாழ்க்கையைப் படைத்துக் கொள்கிறார்கள். கலைஞர்கள் என்று தொடங்கி பலரின் வாழ்க்கை நோக்குகள் வேறுபடவும் செய்கின்றன. எப்படி இருந்த போதிலும் புறத்தோடும், அகத்தோடும் நல்லுறவுகள் தேவையாகின்றன. உறவுகள் எப்பொழுதும் நெருடலோடுதான் அமைகின்றன. அவ்வப்பொழுது இவற்றைச் சரிப்படுத்திக் கொள்ளவும் வேண்டும். முற்றான சரிப்படுத்தலும் சாத்தியமில்லை. இப்பொழுது மார்க்சியரின் வாழ்வியல் கண்ணோட்டம் குறித்துப் பார்க்கலாம். வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டும், அழகு வேண்டும். வாழ்வுக்கான அர்த்தம் என்பது மார்க்சியனைப் பொறுத்தவரை சமூகம், வரலாறு என்ற தளங்களில் இருந்து பெறுகிறான். வரலாற்றில் நாம் முன் நகர வேண்டும். சமூக மாற்றங்கள் இல்லாமல் முடியாது. முதலாளியம் முதலியவற்றைக் கடந்து செல்லவேண்டும். உடனடியாகக் கடந்து செல்வதும் சாத்தியமில்லை. வரலாற்றுச் சூழலின் வரையறைக்குள் மார்க்சியனும் கட்டுப்பட்டிருக்கிறான். சாதி, மதங்கள், நிறுவனம், தொழில், பணம், அதிகாரம், குடும்பம் முதலிய வரையறைகளிலிருந்து இவன் தப்பித்துக் கொள்ள முடியாது. இவற்றுக்கிடையில் இவன் மார்க்சியனாக இருந்து செயல்படவேண்டும் இவனுக்கு மனநிறைவு வேண்டும், பாதுகாப்பு வேண்டும், இன்பங்கள் வேண்டும். பிறரோடு ஒத்துச் செல்லவும் வேண்டும். சமூகம், வரலாறு என்பனவற்றைப் பொறுத்தவரை இவனுக்கு விரிந்த பார்வை இருப்பதனால், இவனைப் பொறுத்தவரை வம்பு, வழக்குகளில், போட்டி பொறாமைகளில் மாட்டிக் கொள்ள மாட்டான். பணத்திற்கும், அதிகாரத்திற்கும் இவனால் முதன்மை தரமுடியாது. வரலாற்றில் எத்தகைய சூழல் மனிதர்களை முடக்கி வைத்திருக்கிறது என்பது குறித்து இவனுக்குத் தெரியும் என்பதனால், தனக்குள்ளும் இருக்கிற முடக்கங்களிலிருந்து இவன் விடுபடவே விரும்புவான். இவனும் காதலிக்கிறான், திருமணம் செய்து கொள்கிறான், குழந்தைகளைப் பெறுகிறான், தொழில் நிறுவனங்களில் பணிபுரிகிறான். எல்லாவற்றினுள்ளும் இவனைப் பொறுத்தவரை ஒரு வித்தியாசமான அணுகுமுறை தேவை. சமூகத்தின் விடுதலை என்ற நோக்கிலிருந்துதான் இவன் எல்லாவற்றையும் பார்க்க முடியும். பணம், அதிகாரம், குடும்பம் முதலியவை இவனைக் கட்டுப்படுத்துவதை உணரும் இவன் தனக்குள் ஆழ்ந்த துயரங்களோடுதான் இருக்கமுடியும். சமூகத்தின் கட்டமைப்போடு இவன் முற்றான சமரசம் செய்து கொள்ள முடியாது. சமரசம் செய்து கொள்வான் என்றால் இவன் தனக்குள் அழிந்து போவான். பிறரைப்போல் இவனும் பொய் சொல்லுவான், ஏமாற்றுவான், திருடுவான். இவை மட்டுமல்லாமல் இவற்றுக்கு எல்லாம் அவன் நியாயம் கற்பிப்பான். இயலுமானால் மார்க்சியத்திலிருந்தே நியாயம் கற்பிப்பான். பணம் இல்லாமல் முடியாது என்பான். மூலதனம் பற்றித்தானே மார்க்ஸ் எழுதினார் என்பான். இப்படி எத்தனையோ நியாயங்கள் இவனால் சொல்லமுடியும். அரசு அதிகாரத்தில் இடம் பெறுவது உட்பட இவன் எவ்வளவோ நியாயங்கள் சொல்வான். சோவியத் ஒன்றியம் தகர்ந்தது பற்றி இவன் கவலைப்பட மாட்டான். தங்கள் கட்சிதான் எல்லா அநியாயங்களையும் சரிப்படுத்தும் என்று இவன் உரக்கச் சொல்வான். இவனுக்கு அற உணர்வில்லை. இவனுக்குள் செறிந்திருப்பது அதிகாரம். இவன் முதலாளியத்திற்கு வசப்பட்டிருக்கிறான். இவனுக்கு விடுதலை தேவை இல்லை. பிறரிடமிருந்து வாழ்க்கை வசதிகளைப் பறித்துக் கொண்டு இவன் நிம்மதியாக இருப்பதாகக் கருதிக் கொள்கிறான். இப்படி எவ்வளவோ சூழல்களோடுதான் ஒரு இலக்கியவாதி உருவாகிறான். இவனை எடுத்த உடனே முதலாளியம் முதலிய ஆதிக்கங்களோடு சேர்த்துச் சொல்லிவிடக்கூடாது. இங்கு மார்க்சியன் மிகுந்த கவனத்தோடு எந்த ஒரு இலக்கியவாதியை மட்டுமல்லாமல் எந்த ஒரு படைப்பையும் அணுகவேண்டும். இங்குதான் திறனாய்வு என்பதன் பணி பெரிதும் தேவைப்படுகிறது. எந்த ஒரு மனிதருக்குள்ளும் நல்ல சில பண்புகளைக் கண்டு அவற்றின் ஆதாரத்தில் அவனுக்குள் இருக்கும் முடக்கங்களைக் களைவது எப்படித் தேவையோ அதைப் போலத்தான் எந்த ஒரு படைப்பையும் மார்க்சியன் அணுகவேண்டும். படைப்பாளி மத்திய தர வர்க்கத்தவன் என்பதனால் அவனுக்குள் ஆளும் வர்க்கச் சிந்தனைதான் மேலோங்கி இருக்கும் என்பதற்கு அழுத்தம் கொடுத்து அவனுக்குள் இருக்கும் விடுதலைக்கான உணர்வுகளை நாம் புறக்கணித்து விட முடியாது. நம்மைப்போல் அவனும் சில வகையான சூழலுக்குள் அகப்பட்டிருக்கிறான், அடிமைப்பட்டிருக்கிறான் என்ற புரிதல் உணர்வை நாம் இழந்து விடக்கூடாது. நம்மவர் என்பதனால் பாராட்டுவதும், பிறர் என்பதனால் இகழ்வதும் திறனாய்வும் ஆகாது. இத்தகைய அணுகுமுறையோடு கா. நா. க., தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் முதலியவர்களின் படைப்புகளுக்குள் நம்மால் மறுமுறை பயணம் செய்ய இயலுமென்றால் இவர்களுக்குள் இருந்து பெருமளவு நமக்குச் சாதகமான விவரங்கள் மற்றும் பார்வைகளை நம்மால் தொகுக்க முடியும். மெளனி, கு.ப.ரா. முதலியவர்களையும் ஒதுக்க வேண்டியது இல்லை. கய விமர்சன உணர்வோடு கூடிய மார்க்சியனுக்கு எந்தச் சிக்கலையும் வரலாறு மற்றும் பொருளியல் சூழலில் வைத்துப் பார்க்கிற அறிவும், உணர்வும் வாய்த்திருக்கிறது. சக மனிதர்கள் மீது இவனால் வெறுப்புக் கொள்ள முடியாது. ஒவ்வொருவரையும் அவர்களின் உளவியலோடு புரிந்து கொள்ளத்தான் மார்க்சியன் விரும்புவான். முதலாளியும் வரலாற்றுச் சூழலுக்குள், பொருளியல் சூழலுக்குள் மாட்டிக் கொண்டு இருக்கிறான். முதலாளிக்கும் தான் விடுதலை வேண்டும். முதலாளியத்தின் ஊடுருவல் இல்லாமல் எந்த மனிதனும் இல்லை. முதலாளியம் என்று சொல்லும் பொழுது, நிலவுடமைச் சார்பு முதலிய பிறவற்றையும் சேர்த்தே நாம் சொல்லுகிறோம். இப்பொழுது இலக்கியம்/ இலக்கியவாதிகள் குறித்து, சக இலக்கியவாதிகள் குறித்து மார்க்சியனின் அணுகுமுறை என்னவாக இருக்க முடியும் என்பது நமக்கு எளிதாகப் புரியும். மனிதர்கள் மத்தியில் அன்பை வேண்டுவது இலக்கியம். நல்லுறவுகளை வேண்டுவது இலக்கியம் சுரண்டலும் ஒடுக்குமுறையும் மனிதர்களுக்கிடையில் அன்பை / நல்லுறவுகளை வளர்க்க முடியாது. ஆதிக்கங்கள் மனிதர்களைச் சுருங்கச் செய்யும். எந்த மனிதனுக்குள்ளும் இருக்கும் படைப்பியக்கத்தை திரிபுபடுத்தும், கோணல்மாணலாக்கும் இறுதியில் அழிக்கும். இலக்கியம் என்று தொடங்கும் எந்த இலக்கியவாதியும் ஆதிக்கங்களுக்குச் சுய விருப்பத்தோடு சேவை செய்ய முடியாது. இவனுக்கு மார்க்சியம் தெரியாமலிருக்கலாம். நம் கல்வி முறை சமத்துவம் அல்லது சமதர்ம உணர்வை நமக்குள் வளர்க்கவும் இல்லை, தூண்டவும் இல்லை. குடும்பச் சூழல் எல்லோரையும் பாதிக்கத்தான் செய்கிறது. - 14.9.2000 அசுவகோஷ் கடிதம் - 1 பெறுதல்: திரு. அகவகோஷ் அவர்கள், மயிலம் “தமிழ் இனி 2000” - கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட உங்கள் கட்டுரை ஒரு வகையில் வியப்பும், இன்னொரு வகையில் அதிர்ச்சியும் தந்தது. தமிழகத்தில் மார்க்சியத்தின் வரலாறு குறித்தும், மார்க்சிய இலக்கியத்தின் வரலாறு குறித்தும் நீங்கள் கூடியவரை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். சிங்காரவேலரை நாம் மறந்துவிட முடியாது. ஜீவா முதலியவர்களையும் மறப்பதற்கில்லை. கலை இலக்கியப் பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவை குறித்தும் நாம் விரிவாக பேகவதற்கு இடம் இருக்கிறது. பேரா.வானமாமலையின் ஆய்வுப்பணிகள் நம் மரியாதைக்குரியவை. சமரன், சாந்தி, சரஸ்வதி ஆகிய இதழ்கள் கட்சி எல்லைக்குள் இல்லாத போதிலும், மார்க்சியத்திற்கும், இலக்கியத்திற்கும் இவற்றின் பங்களிப்புக்கள் மரியாதைக்குரியவை. சரஸ்வதியை ஒடுக்குவதற்கு கட்சி செய்த சதியையும் நீங்கள் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறீர்கள். கட்சிக்குள்ளிருந்து நீங்கள் வெளியேற்றப்பட்டதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறீர்கள். ரகுநாதன் அவர்களின் சாதனை குறித்தும் பேசுகிறீர்கள். 1980- க்குப் பிறகு மார்க்சிய இலக்கியம் வளர்ச்சி பெறவில்லை என்றும் குறிப்பிடுகிறீர்கள். விரிவானது உங்கள் கட்டுரை என்பதில் அய்யமில்லை. எனக்கேற்பட்ட அதிர்ச்சி என்ன என்பதை இப்பொழுது சொல்லுகிறேன். மார்க்சியத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் கோவை செய்த பங்களிப்பு குறித்து உங்கள் விரிவான கட்டுரையில் எதுவும் சொல்லப்படவில்லை. கட்சிக்கு வெளியில் மார்க்சியம் வளர்கிறது என்ற உண்மையை கட்சி வட்டாரங்கள் கண்டு கொள்வதில்லை. தன்னார்வக் குழுக்கள் குறித்து எதிர்மறைப் பார்வை கொள்வதைப் போலவே சிற்றிதழ் இயக்கத்தையும் கட்சி வட்டாரம் பொருட்படுத்துவது இல்லை. கட்சிக்குள் மார்க்சியம் இருக்க முடியும் / இயங்க முடியும் என்று கட்சிக்காரர்கள் நம்புகிறார்கள். நடைமுறைபடுத்துவதற்குத்தான் மார்க்சியம் என்ற வாய்பாட்டை கட்சிக்காரர்கள் சில சடங்கு நடவடிக்கைகளில் முடக்கிவிட்டார்கள். புரட்சிக்கு மக்கள் அணியமாக இல்லை என்று திரும்ப திரும்பக் கூறுகிறார்கள். புரட்சிகர இயக்கங்களை தீவிரவாத இயக்கங்கள் என்று மைய நீரோட்ட மார்க்சியர் மறுக்கின்றனர். மைய நீரோட்டத்தில் இருந்து மாறுபடுபவர்கள் ஏகாதிபத்தியத்தின் தரகர்கள் என்றோ புதிய மார்க்சியர் என்றோ பெயர் சூட்டித் தொடர்ந்து கேவலப்படுத்தப் படுகிறார்கள். இவர்களால் நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள். ஆனால் நீங்களும் தான் கோவை வட்டாரத்தைக் கண்டுகொள்ளவில்லை. உதயம், பிரச்சனை ஆகிய இதழ்களை நீங்கள் நடத்தியபோது அவற்றை தொடர்ந்து படித்த நாங்கள் உங்களை பெரிதும் மதித்தோம். “கசடதபற’ இதழ்களில் வெளிவந்த உங்கள் கதைகளை நாங்கள் கொண்டாடினோம். கட்சிக்குள் தமிழ்த்தேசியம் முதலியவை மறுக்கப்பட்ட நிலையில் நீங்கள் தமிழ்த் தேசிய இயக்கம் ஒன்றில் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் மதிக்கத்தான் செய்கிறோம். மார்க்சியம் சார்ந்த எங்களது பணிகள் குறித்து ஒரு தொகுப்பு என்ற முறையில் இங்கு சிலவற்றைச் சொல்லுகிறேன். ஒரு தனி நூல் எழுதும் அளவுக்கு எங்கள் அனுபவம் விரிவாக உள்ளது. ஒரு கடிதம் என்ற முறையில் இங்கு சிலவற்றைத் தொகுத்துக் கொள்கிறேன். கோவை வட்டாரம் பாட்டாளி மக்கள் நிறைந்த பகுதி. கோவையிலும் சுற்றுப் பகுதியிலும் கட்சியை உருவாக்குவதற்கு தோழர்கள் செய்த தியாகங்கள் அற்புதமானவை. இங்குதான் மார்க்சிய இலெனிய இயக்கம் தோற்றம் கண்டது. நக்ஸல்பாரியில் தொடங்கிய போராட்டத்தை உடனடியாக இனம் கண்டு எங்களுக்குச் சொன்னவர் தோழர் எஸ்.என். நாகராசன். 1954 -ல் கட்சிக்குள் தேசிய இனச் சிக்கலை இவர் எழுப்பினார். கட்சி இந்தச் சிக்கலைப் புறக்கணித்தது. டாங்கே - வை திரிபுவாதி என்று தொடக்கத்திலேயே கண்டு எடுத்துரைத்தார். கோஸாம்பி முதலியவர்களை ஆழ்ந்து கற்றவர் நாகராசன். உயிரியல் மாணவர் என்ற போதிலும் அறிவியலின் பல துறைகளை ஆழ்ந்து கற்றவர். மாவோ நெறியின் ஆழமும், விரிவும் பற்றி இன்றுவரை தொடர்ந்து கண்டு உணர்ந்து எடுத்துரைப்பவர். சோவியத் யூனியனின் தகர்வை மார்க்சியத்தின் வளர்ச்சிக்கான பெரும் வாய்ப்பு என்று கணித்தவர். நவீன அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குள் முதலாளியம் தங்கியிருப்பதை இடைவிடாது எடுத்துச் சொல்லுகிறார். மாவோவின் மார்க்சியத்திற்கு “கீழை மார்க்சியம்” என்று பெயரிடுகிறார். மேற்கத்திய மார்க்சியம் “ஆணியம்” என்றும் கீழை மார்க்சியம் பெண்ணியம் என்றும் பேசுகிறார். பசுமைப் புரட்சி செய்யும் போழிவை, அது தொடங்கிய காலத்திலேயே சுட்டிக் காட்டினார். அந்நியமாதல் குறித்து இந்தியாவிலேயே முதலாவதாகப் பேசியவர் நாகராசன் தான். தமிழ்நாடு கம்யூனிஸ்டு கட்சிக்கான ஆவணம் என ஒன்றை 1968-ல் வெளியிட்டார். நவீன காலனி ஆதிக்கம் குறித்து 1968 - முதலே விடாப்பிடியாகப் பேசுகிறார். இவரைப் பார்ப்பனர் என்று சாதிப் பெயர் சொல்லி இவரது தத்துவம் முதலிய அனைத்தையும் கேவலப்படுத்தும் ஒரு தீவிரமான போக்கு இன்றுவரை நிலவுகிறது என்பது ஒரு கொடுமை. இவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இதுவரை நான்கு நூல்கள் வெளியாகி உள்ளன. இப்பொழுது “கீழைக்காற்று’ என்னும் இதழின் ஆசிரியராக இவர் பணியாற்றுகிறார். கட்சி வட்டாரங்கள் இவரை எப்பொழுதோ ஒதுக்கி வைத்தன. எனினும் மார்க்சிய இலெனினியத்தில் இருந்து அணு அளவும் இவர் பிசகியதாகத் தெரியவில்லை . தனிப்பட்ட முறையில் இவரது பழக்கவழக்கங்களைச் சிலர் வெறுப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நாகராசனை உதாசீனம் செய்பவர்கள் இவற்றை முதன்மைப்படுத்தி கேவலப்படுத்துவதன் மூலம் மார்க்சியத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பை செய்து கொண்டிருக்கிறார்கள். 1965 வாக்கில் இவரது தூண்டுதலோடுதான் கோவையில் சிந்தனை மன்றம் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 1967-ல் ”புதிய தலைமுறை’’ இதழைத் தொடங்கினோம். “புதிய தலைமுறை” மார்க்சிய திங்கள் இதழ். புரட்சிகர மானுடம் என்று மார்க்சியத்தை இந்த இதழில் குறிப்பிட்டோம். இந்த இதழ் அன்று பலரைப் பெரிதும் கவர்ந்த இதழாக விளங்கியது. தோழர் இன்குலாபும், தோழர் பா. செயப்பிரகாசமும் இந்த இதழின் சிறப்புக் குறித்து பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அந்நியமாதல் குறித்து தொடர்ந்து பல கட்டுரைகள் “புதிய தலைமுறையில் ’’ எழுதப்பட்டன.”புதிய தலைமுறை” மூலம் மார்க்சியத்தையும், இலக்கியத்தையும் நாங்கள் விரிவாகப் பயின்றோம். புலவர் ஆதியும், எஸ்.வி.ஆரும் நானும் இன்னும் சிலரும் “புதிய தலைமுறையில்” தொடர்ந்து எழுதினோம். ஆதியின் கவிதைகள் அற்புதமானவை. தமிழ் செய்யுள் மரபின் ஆற்றல் இயல்பாகக் கைவந்தவர் புலவர் ஆதி. அவர் கவிதை இடம்பெறாத இதழ் ஒன்று கூட இல்லை. அந்நியமாதலைக் கருப்பொருளாகக் கொண்டு கதைகள் வெளியிட்டோம். எங்கும் எதிலும் தமிழ் என்பதை தொடர்ந்து வற்புறுத்தினோம். சங்க இலக்கியம் குறித்தும், தொல்காப்பியம் குறித்தும் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டோம். சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளை விமர்சனம் செய்தோம். ஜெயகாந்தனையும், நா. பார்த்தசாரதியையும் முதன்முறையாக திறனாய்வு செய்த பெருமை “புதிய தலைமுறைக்கு” உரியது. பாரதிதாசன் கவிதைகளைப் பாராட்டும் முறையில் கட்டுரைகள் வெளியிட்டோம் மார்க்சிம் கார்க்கி, லுனாசாவ்ஸ்கி, பற்றி எழுதினோம். ஸ்டாலினியம் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்தோம். கீழைக்காற்று என்ற புலவர் ஆதியின் கவிதை மாவோவின் சாதனைகள் குறித்த கவிதை. மார்க்சியத்தோடு ஒத்துவராத கட்டுரைகளைக் கருத்தரங்கம் என்ற பகுதியில் வெளியிட்டு அவை குறித்த விமர்சனங்களை வரவேற்றோம். தேவிபிரசாத் நூல் குறித்து எழுதினோம். 23 இதழ்களில் மார்க்சியத்திற்கும் இலக்கியத்திற்கும் “புதிய தலைமுறை” செய்த சாதனைகளை “புதிய தலைமுறை” கற்றவர் மறப்பதற்கில்லை. கட்சிக்கு வெளியில் இருந்து தான் புதிய தலைமுறையைத் தொடங்கினோம். நாளடைவில் மார்க்சிய லெனினிய கட்சியின் சார்புக்குப் புதிய தலைமுறை சென்றது. கட்சிக்குள்ளும், “புதிய தலைமுறை” ஆசிரியர் குழுவினுள்ளும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக எங்களில் சிலர் வெளியேற நேர்ந்தது. காவல் துறையின் கடுமையான அடக்குமுறையின் விளைவாகப் “புதிய தலைமுறை” நின்றது. எனினும் “புதிய தலைமுறை” யின் மூலம் எங்களுக்குள் ஏற்பட்ட வீச்சு இன்றுவரை தொடர்கிறது. பாரதி குறித்தும் பாரதிதாசன் குறித்தும் புலவர் ஆதி அவர்களின் பார்வை, அற்புதம் என்று சொல்வதில் மிகை இல்லை. அந்நியமாதல் குறித்து கவிதை நயம் தோய அவர் கட்டுரையில் எழுதியிருக்கிறார். மரபும், புதுமையும் இணைந்த பெரும் விளைச்சல் ஆதியின் கவிதைகள். கலாநிதி கைலாசபதி அவர்களின் முன்னுரையோடு கையெழுத்தில் அவர் தொகுத்து வைத்திருந்த கவிதைகளைக் காவல் துறையினர் எடுத்துச் சென்றனர். அவர்கள் திருப்பித் தரவில்லை. ஆகவே ஆதியின் கவிதைகள் நூல் வடிவம் பெறவில்லை. கட்சி சார்ந்த அவரது அனுபவங்கள் நம் மரியாதைக்குரியவை. எஸ். வி. ஆர். குறித்து இங்கு கருக்கமாகச் சொல்லலாம். அவரது விரிவான படிப்பு நமக்குப் பெரும் வியப்பைத் தரக்கூடியது. வியட்நாம் போர் குறித்தும் சேகுவரா குறித்தும் அவர் உணர்ச்சிகரமாக உரையாடியதை நாங்கள் பெரிதும் இரசித்திருக்கிறோம். அவரது வாழ்வியல் அனுபவங்கள் காவியப் பரிமாணம் உடையவை. தன் வாழ்க்கை குறித்து அவர் எழுதி வைக்க வேண்டும் என்பது என் பேராசை. மேற்கத்திய இலக்கியங்களை அவர் விரிவாகப் படித்து இருக்கிறார். “கசடதபற” குழுவினர் பெயரளவுக்கு இருத்தலியல் குறித்து பேசிக் கொண்டிருந்த பொழுது எக்ஸிஸ்டென்சியலிசம் குறித்த நூல்கள் பலவற்றைத் தொகுத்து விடாப்பிடியாகப் படித்து மிகச் சிறப்பான நூல் ஒன்றை எஸ். வி. ஆர். எழுதினார். அவரோடு பெருமளவில் ஒத்துழைத்தது குறித்து நான் என்றும் மகிழ்ச்சியடைவேன். நாகராசன் மூலம் எங்களுக்கு அறிமுகமான அந்நியமாதல் குறித்த மேற்கில் எழுதப்பட்ட அரிய நூல்கள் சிலவற்றைத் தொகுத்து “அந்நியமாதல்” என்ற நூலை எழுதினார். இளைய மார்க்ஸ் மட்டுமல்லாமல் முதிய மார்க்கம் அந்நியமாதல் குறித்து எழுதி உள்ளதை எஸ்.வி.ஆர். எடுத்துக் காட்டினார். “புதிய தலைமுறை” காலத்திற்கும் பிறகும் எஸ்.வி.ஆரின் ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. பல்வேறு அயல்நாட்டு இதழ்களில் வெளிவந்த சிறந்த கவிதைகளைத் தொகுத்து வைத்த எஸ்.வி.ஆர்., தமிழில் சில மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். அவரது மொழி ஆக்கத்தில் வெளிவந்த மாவோ கவிதைகளும் அன்னா அக்மதாவ் கவிதைகளும் தமிழ்க்கவிதைக்கு வளம் சேர்ப்பவை. ஜார்ஜ் தாம்சன் எழுதிய மார்க்சியம் குறித்த சில நூல்களைப் பழுதற்ற தமிழில் அவர் தந்திருக்கிறார். சோவியத் இரஷ்யா குறித்து அவருக்கு விரிவான விமர்சனங்கள் உண்டு. இவற்றை உள்ளடக்கி “இரஷ்யப் புரட்சி - இலக்கியச் சாட்சியம்” என்ற அரிய நூலை அவர் எழுதினார். கிராம்சி பற்றி அவர் எழுதி நூல் ஓர் அரிய பணி. சோல்ஜனிக்ஸின் குறித்து ’’பிரக்ஞை” இதழில் இரண்டு சிறப்பான கட்டுரைகளை எழுதினார். அண்மைக் காலத்தில் பெரியார் குறித்து அவர் எழுதிய ஆய்வு நூல்களை நாம் அனைவரும் அறிவோம். பிரிட்டீசாரின் அடக்குமுறை காரணமாக மார்க்சியம் பற்றி பெரியார் எழுதவில்லை என்பது உண்மை இல்லை. சுயமரியாதை என்று பல பெயர்களில் பெரியார் குறிப்பிடுவன எல்லாம் சமதர்மம் அன்றி வேறு இல்லை என்ற உண்மையைச் சிறப்பாக மெய்ப்பிக்கிறார் எஸ். வி. ஆர். தாழ்த்தப்பட்ட மக்களை முன்னிலைப்படுத்துவதில் பெரியார் என்றும் உறுதியாக இருந்திருக்கிறார் என்ற உண்மையையும் எஸ்.வி.ஆர். அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறார். எஸ்.வி.ஆர். என்றும் ஓய்வு என்பதை அறியாதவர். தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் நக்ஸலைட்டுகள் நரித்தனமாகக் கொல்லப்பட்டதன் விவரங்களைத் தொகுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மக்கள் உரிமைக் கழகத்தில் இணைந்து உறுதியான முறையில் பணியாற்றுகிறார். மரண தண்டனை ஒழிப்புக்காக இன்றும் அயராது பாடுபடுகிறார். எஸ்.என்.நாகராசனைக் கண்டு கொள்ளாததைப் போலவே எஸ்.வி.ஆரையும் மார்க்சிய கட்சிகள் கண்டு கொள்வதில்லை. கட்சிகள் இப்படி கண்மூடிக் கிடக்கின்றன. ஆனால் குறை சொல்லுவதில் கட்சிகள் எப்பொழுதும் குறைவைத்துக் கொள்வது இல்லை. மார்க்சிய இலெனிய கட்சிகள் மற்றும் இயக்கங்களோடு உள்ளும், வெளியிலும் இருந்து ஓய்வில்லாமல் பாடுபட்டவர் எஸ்.வி.ஆர். என்னைப்பற்றி நானே சொல்வதற்கில்லை. எனினும் சிலவற்றை இங்கு சொல்லாமல் இருக்க முடியாது. ”புதிய தலைமுறை" நின்றபிறகு வானம்பாடி இயக்கத்தில் கொஞ்ச காலம் இணைந்திருந்தேன். மார்க்சிய நோக்கில் என் விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைத்தேன். வானம்பாடி இயக்கத்தினுள் இதன் காரணமாக பிளவு ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை. வேள்வி என்ற இதழ் தொடங்கினோம். இரண்டு இதழ்களோடு அதையும் நிறுத்த வேண்டி வந்தது. வானம்பாடி இயக்கத்தில் இருந்த சிலரைக் கட்சிக்காரர்கள் கடத்திச் சென்றனர். “இந்திரா இந்தியா” என்று அவர்கள் முழக்கமிட்டனர். “தாமரை” இதழ் மூலம் சிலரைத் திக.சி. வசப்படுத்தினார். தொடக்கத்தில் இவர்கள் நக்ஸல்பாரி இயக்கத்தின் பாதிப்புக்கு உள்ளானவர்கள். இவர்களின் கவிதைகளில் இப்படிச் சொல்வதற்கானத் தடயங்களைக் காண முடியும். எனினும் இவர்களும் இன்றுவரை மார்க்சியச் சார்போடுதான் எழுதுகின்றனர். புவியரசு, சிற்பி, சி.ஆர். இரவீந்திரன், அக்கினி புத்திரன் என்று சிலரை இங்கு குறிப்பிட முடியும். “வேள்வி” இரண்டாம் இதழில் வெளிவந்த புதுக்கவிதைகள் பலவற்றை கவிஞர்களின் பெயர்களையோ, இதழின் பெயரையோ குறிப்பிடாமல் புதுக்கவிதைகளின் சமுதாய உள்ளடக்கம் மற்றும் அழகியல் குறித்து ஒரு விரிவான கட்டுரையைப் பேரா. வானமாமலை பிறகு எழுதினார். வானம்பாடி இயக்கம் தமிழ்ப்புதுக்கவிதையில் செய்த மறுமலர்ச்சியை எவரும் மறப்பதற்கில்லை. மார்க்சியச் சார்பான உள்ளடக்கத்தோடு வானம்பாடி இயக்கம் புதுக்கவிதையை மக்கள் இயக்கமாக மாற்றியது. கட்சி வட்டாரங்கள் புதுக்கவிதை முறையைக் கடுமையாக எதிர்த்தான். புதுக்கவிதை முறையையும் ஏற்றுக் கொள்வதற்கான தூண்டுதலைத் தந்தது வானம்பாடி இயக்கம்தான். வானம்பாடி இயக்கத்தின் மீது எவ்வளவோ பழிகளைத் தொடக்கத்தில் சொல்லி வந்த கட்சி வட்டாரத்தினர் மிக விரைவில் வானம்பாடிகளின் கவிதை தந்த மயக்கத்திற்குத் தமக்குள் இடம் கொடுத்தனர். தமிழ்க் கவிதைகளின் உள்ளடக்கத்தையும், வடிவத்தையும் விரிவுபடுத்தியதில் வானம்பாடி இயக்கத்தின் பங்களிப்பை மறுக்க முடியாது. இந்த இயக்கத்தின் வழியே நானும் கவிதை கற்றேன். கவிதை பற்றிய திறனாய்வில் புதிய பார்வைகளைப் பெற்றேன். “பரிமாணம்” இதழ் குறித்து இப்பொழுது சொல்ல வேண்டும். 1979-ல் “பரிமாணம்” தொடங்கினோம். மார்க்சிய தத்துவ இதழ் என்று “பரிமாணத்தின்” உள்ளடக்கத்தை வரையறுத்துக் கொண்டோம். மார்க்ஸ் ஏங்கல்ஸ் தொடங்கி மாவோ வரை மார்க்சியம் பெற்ற பரிமாணங்கள் பல. மேற்குலகில் மார்க்சியம் மேலும் புதிய பரிமாணங்களைப் பெற்று வளர்கிறது. கட்சி மார்க்சியம் பெரும்பாலும் ஒற்றைப் பரிமாணம் உடையது. தனக்குள் முடக்கம் கொள்கிற மார்க்சியம் இது. கட்சிக்கு வெளியிலும் மார்க்சியம் பெற்றுவரும் மாபெரும் வளர்ச்சியைக் குறைந்தளவுக்கேனும் தொகுத்துத் தருவது பரிமாணத்தின் நோக்கம். இந்த நோக்கத்தோடும் எஸ்.வி.ஆரும், நானும் அறிவன், இரத்தினம் முதலிய நண்பர்களும் உறுதியாகச் செயல்பட்டோம். எஸ். என். நாகராசன் என்றும் எங்கள் பார்வைகளை விரிவுபடுத்துபவர். அல்தூசர், டெரிஈகிள்டன், கிராம்சி முதலியவர்கள் பற்றி கட்டுரைகள் வெளியிட்டோம். மார்க்ஸ் குறித்து மெக்லெல்லன் எழுதிய சிறு நூலை மொழிபெயர்ப்பில் தந்தோம். கம்யூனிசம் - விடுதலையின் இலக்கணம் என்ற முழுநீளக் கட்டுரை ஒன்றை “பரிமாணம்” தனி இதழில் வெளியிட்டோம். எஸ். என். நாகராசன் இக்கட்டுரையைத் தந்தார். ஸ்டாலின் பிரச்சனை குறித்து பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொகுத்துத் தனி இதழில் வெளியிட்டோம். இந்திய வரலாறு குறித்து கட்சி வட்டாரத்திற்கு வெளியில் நடைபெற்ற ஆழமான ஆய்வுகளை விரிவாக வெளியிட்டோம். தமிழகச் சூழலில் இடங்கை - வலங்கை போராட்டங்கள் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து நடைபெற்றன. இவை அசலான வர்க்கப் போராட்டங்கள். இவை குறித்த கட்டுரை வெளியிட்டோம். பெரியார் குறித்த தரமான திறனாய்வுக் கட்டுரைகள் சிலவற்றை வெளியிட்டோம். சென்னையில் நடைபெற்ற “இலக்கு” கருத்தரங்கின் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை முழுமையாகத் தொகுத்து ஒரு தனி இதழில் வெளியிட்டோம். Monthly Review என்ற இதழில் வெளிவந்த “மாவோவுக்குப் பிறகு” கருத்தரங்கு கட்டுரைகளைத் தொகுத்துத் தனி இதழில் வெளியிட்டோம். கேரளாவில் மார்க்சிய அறிஞராகிய தாமோதரன் குறித்தும், ஜெர்மனியில் வாழ்ந்து மார்க்சியத்திற்காக உயிர்தந்த ரோசாலக்சம்பர்க் குறித்தும் விரிவான கட்டுரைகள் வெளியிட்டோம். இன்னும் பல வகையான கட்டுரைகள். அண்மையில் “மார்க்சியம் புதிய - பரிமாணங்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பை கோவையில் உள்ள புதுமலர் பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர் இத்தொகுப்பினுள் இடம் பெறாத இன்னும் சில நல்ல கட்டுரைகள் உள்ளன. தமிழில் இத்தகையது ஒரு மார்க்சிய தத்துவ இதழ் என்று இன்னொன்றைச் சொல்ல முடியாது. இந்தியப் பொதுவுடமைக் கட்சியினர் வெளியிட்ட மார்க்சிய ஒளி என்ற இதழையும் நாம் மறக்கமுடியாது. கட்சிக்காரர்கள் “பரிமாணம்” இதழை அன்றும் கண்டு கொள்ளவில்லை. இன்றைக்கும் நிலைமை மாறிவிடவில்லை. இத்தகையவர்கள் தான் மார்க்சியத்தைக் ’’காப்பாற்றுபவர்கள்”. ‘’பரிமாணம்” வெளிவந்த அதே கால அளவில் வ.புதுப்பட்டியில் இருந்து “இலக்கிய வெளிவட்டம்” வெளிவந்தது. நடராசனும், ராஜ் கெளதமனும் இந்த இதழை நடத்தினர். இவர்களும் மார்க்சியர். இதே காலத்தில் பெங்களூரில் இருந்து “படிகள்” இதழ் வெளிவந்தது. தமிழவன், சிவராமன் (ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன் ) ஜி. கே. ராமசாமி ஆகியவர்கள் இந்த இதழைக் கொண்டு வந்தனர். ’படிகள்" இதழ்களை ஒரு வரிவிடாமல் நாங்கள் கற்றோம். அந்தளவுக்குத் தரமான இதழ் இது. சமூகவியல் நோக்கில் பிரச்சனைகளை விரிவாக முன்வைத்தது’’படிகள்" இதழ். அமைப்பியல் என்று தொடங்கி வகைவகையான, ஆய்வுகளை “படிகள்” வெளியிட்டது. “இலக்கிய வெளிவட்டமும்” “படிகள்” இதழும், “பரிமாணமும்” தமக்குள் நெருங்கி இருந்தன. நாளடைவில் பெங்களூர் நண்பர்களின் முன்முயற்சியோடு இலக்கு - கலாச்சார இயக்கம் தோன்றியது. வணிக மயமாகிவரும் கலாச்சாரச் சூழலுக்கு எதிரான இயக்கமாக “இலக்கு” சில காலம் செயல்பட்டது. கிரியா முதற்கொண்டு பல்வேறு அமைப்புக்கள் இணைந்திருந்தன. மு. இராமசாமி நிஜநாடக இயக்கம் எங்களோடு சேர்ந்திருந்தது. திரைப்பட இயக்கம் ஒன்றை நடத்திய திருச்சி நண்பர்கள் எங்களோடிருந்தனர். இலக்கியம் திரைப்படம் குறித்து ஆண்டுதோறும் கருத்தரங்குகள் நடைபெற்றன. இக்கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை ‘’காவ்யா’’ வெளியிட்டிருக்கிறது. காரசாரமான விவாதங்கள் இக்கருத்தரங்குகளில் நடைபெற்றன. கலை, இலக்கியம், நாடகம், திரைப்படம் குறித்த தீவிரமான அலசல்கள் இங்கு நடைபெற்றன. பெங்களூர், சென்னை, கோவை, திருச்சி என மாறி மாறி கருத்தரங்குகள் நடைபெற்றன. மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு குறித்து கடுமையான விமர்சனங்களை நாங்கள் வெளியிட்டோம். அமைப்பியல் வாதம் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. மார்க்சியத்தை நானும் சில நண்பர்களும் விட்டுத் தராமல் போராடினோம். “முன்றில்” “மீட்சி” ஆகிய இதழ் சார்ந்த நண்பர்களும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். தமிழ் இலக்கியச் சூழலில் இப்படி ஒரு சிறப்பான காலம் இதற்கு முன்பும் இல்லை, பிறகும் இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும். இந்தக் கருத்தரங்குகளில் மார்க்சிய - லெனினிய கட்சி சார்ந்த சில தோழர்களும் இடையில் கலந்து கொண்டனர். உங்கள் நிலைப்பாடு என்ன என்று ஓயாமல் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். திரும்பத் திரும்ப அவர்களுக்கு நான் சொன்னேன். மார்க்சிய லெனினிய கருத்துச் சார்ந்தவர்களும் இந்த இலக்கு அமைப்பினுள் இருக்கிறோம். நீங்கள் தாராளமாக எங்களோடு உள்ளே இருந்து போராடலாம். உங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு எங்கள் நண்பர்களை நீங்கள் கவர்ந்து செல்லலாம். இதில் தடை எதுவும் இல்லை. இப்படி பலமுறை நான் சொன்னேன். நடராசன், மு. ராமசாமி முதலியவர்கள் என்னை ஒத்த கருத்துடையவர்கள். மார்க்சிய லெனினிய இயக்கம் சார்ந்தவர்கள் என் பதிலை ஏற்றமாதிரி தெரியவில்லை. சில நண்பர்களோடு அவர்கள் மறைமுகமாக பேசி இருக்கிறார்கள். இந்த இயக்கத்தில் இருந்து ஞானியை வெளியேற்றினால் உங்களோடு நாங்கள் இணைந்து கொள்கிறோம் என்ற முறையில் அவர்கள் பேசி இருக்கின்றனர். “இலக்கு” நண்பர்களுக்குள் தொடக்கம் முதல் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தான். இறுதியில் கலை இலக்கியம் மட்டுமே போதும் என்ற முறையில் சிலர் முடிவெடுத்தனர். பிறகு “இலக்கு” இயக்கம் செயல்படவில்லை. மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு எதிராக அட்டைகளில் பல வாசகங்களை எழுதி வைத்து ஆர்ப்பாட்டம் செய்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும். மிக விரிவான தளங்களில் ஆய்வுகள் தொடர்ந்து செய்துவந்த இயக்கம் நின்றுபோனது, தமிழ்ச் சூழலுக்கு ஆக்கம் தருவதாக இல்லை. இப்பொழுது “நிகழ்” குறித்து நான் நிறைய சொல்ல விரும்பினாலும் சுருக்கிக் கொள்கிறேன். 1983-ல் தொடங்கி 1996 வரை 32 இதழ்கள் வெளிவந்தன. தொடக்கத்தில் மார்க்சியத்தை மையப்படுத்த வில்லை என்ற போதிலும், நாளடைவில் மார்க்சியமே மையமாயிற்று. அமைப்பியல்வாதம், நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் ஆகிய குரல்கள் தீவிரமாக எழுந்த சூழலில் “நிகழ் நிதானத்தோடு செயல்பட்டது. புதிய அணுகுமுறைகளை நானும் நண்பர்களும் கற்றுக் கொண்டிருந்தோம். மார்க்சியத்தின் தளத்தைத் தொடர்ந்து விரிவுபடுத்தினோம். கவிதைகள், கதைகள், நூல் திறனாய்வுகள் என்று நிறைய வெளியிட்டோம். சில புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினோம். சோவியத் யூனியன் தகர்வை ஒட்டி மார்க்சியத்தின் உள்ளுறை ஆற்றல்கள் குறித்து நாங்கள் விரிவாகப் எழுதினோம். எஸ்.என்.நாகராசன் கீழை மார்க்சியம் என்ற முறையில் தொடர்ந்து எழுதினார். நிறப்பிரிகை புதிய வீச்சுக்களோடு வெளிவந்தது. தொடக்கத்தில் எங்களோடு அவர்கள் நல்லுறவு கொண்டார்கள். நிறப்பிரிகை நடத்திய கூட்டு விவாதங்களில் நாங்களும் பங்கு பெற்றோம். நாகராசனை ஒதுக்கிவிட்டு என்னை வசப்படுத்திக் கொள்ள நிறப்பிரிகை நண்பர்கள் முயற்சி செய்தனர். மார்க்சியத்தை விட்டு என்னால் விலக முடியாது. மார்க்சியத்தின் உள்ளிருந்தே நான் பலவற்றையும் கற்றுக் கொண்டிருந்தேன். நிறப்பிரிகை நண்பர்களின் விரிவான படிப்பறிவும், விவாதங்களில் ஜனநாயகப் பண்பும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. எனினும் விவாதங்களிலும் எழுத்துக்களிலும் சிலர் ஆரோக்கியமற்ற போக்குகளை வெளிப்படுத்தினர். நண்பர்களைக் காயப்படுத்தினர். திரும்ப திரும்ப இந்தப் போக்கு வேண்டாம் என்று நிகழில் எழுதினேன். நாளடைவில் பிரிவு ஏற்பட்டது. நிகழில் வெளிவந்த அறிவியல் மற்றும் ஆன்மீகம் குறித்த கட்டுரைகள் மிக முக்கியமானவை. மார்க்சியத்திற்குள்ளிருந்து அதிகாரத்தைக் களைய வேண்டும் என்ற கருத்தோடு நானும் செயல்பட்டேன். நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் குறித்து விரிவான பல கட்டுரைகள் நிகழில் வெளிவந்தன. ஆற்றல் மிக்க நண்பர்கள் இக்கட்டுரைகளைத் தந்தனர். கீழை மார்க்சியம் குறித்தும், கிராம்சி பற்றிய புரிதல் குறித்தும் கூர்மையான விவாதங்கள் நிகழில் நடைபெற்றன. மாவோ குறித்து நல்ல சில கட்டுரைகள் வெளிவந்தன. காட்வெல், ஃபூகோ, இவான் இலியம் பற்றிய கட்டுரைகளும் நிகழில் வெளிவந்தன. முந்நூறுக்கும் மேற்பட்ட நூல்களுக்கான மதிப்புரைகள் நிகழில் வெளிவந்தன. மதிப்புரைக்காக வந்த அனைத்து நூல்கள் பற்றியும் நாங்கள் எழுதினோம். நேர்காணல்கள் என்ற முறையில் சில மார்க்சிய அறிஞர்கள், தமிழ் அறிஞர்கள் குறித்தும் கட்டுரைகள் வெளிவந்தன. தமிழியம் என்ற கருத்து மெல்ல மெல்ல கருக்கொள்ளலாயிற்று. மார்க்சிய நோக்கிலான அணுகுமுறையின் மூலமே தமிழியத்தைத் தொகுக்க முடியும். நாளடைவில் தமிழ்த்தேசியம் என்ற அரசியல் நிலைபாட்டிற்கு நானும் நண்பர்களும் வந்து சேர்ந்தோம். ஏகாதிபத்தியம் குறித்தும், நவீன அறிவியல் தொழில் நுட்பம் - குறித்தும் ஏராளமான விமர்சனங்களை “நிகழ்” வெளியிட்டது. பசுமைப்புரட்சி நமக்கு செய்யும் கேடுகளுக்கு அளவில்லை. ஏகாதிபத்தியம் கல்வி, மருத்துவம், வேளாண்மை முதலிய எல்லாத் துறைகளையும் வசப்படுத்துவதன் மூலம் நம்மை அடிமைப்படுத்துகிறது. தமிழ் இலக்கியவாதிகள் இந்தப் பேராபத்தைப் புரிந்து கொள்ளவில்லை. இது குறித்தும் நாங்கள் தொடர்ந்து எழுதினோம். “நிகழ்” நடத்தியது ஒரு பேரியக்கம். பன்முகப் பரிமாணங்களோடு இந்த இயக்கம் நடைபெற்றது. நம்மாழ்வார் அவர்களைக் கண்டுபிடித்து இயற்கை வேளாண்மை கட்டுரைகள் வெளியிட்டோம். தலித்திய கதைகள் சிலவற்றை வெளியிட்டோம். இவை மிகச்சிறந்த கதைகள். மேற்கத்திய இலக்கியவாதிகள் சிலரைத் தமிழுக்கு அறிமுகம் செய்யும் முறையில் சில தரமான கட்டுரைகள் வெளியிட்டோம். இக்கட்டுரைகள் எல்லாம் தொடர்ந்து பல தொகுப்புகளில் வெளிவருகின்றன. மார்க்சிய கட்சிகள் எங்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதைப் போலவே தமிழ்த்தேசிய இயக்கங்களும் எங்களை இதுவரை புறக்கணித்தே வந்துள்ளன. தமிழ்த்தேசிய இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பெரியாரியமும், மார்க்சியமும் கைகோர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசத்தையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து அழிப்பவை ஏகாதிபத்திய சக்திகளும், இந்தியாவிலுள்ள சீர்கெட்ட முதலாளியமும். மைய அரசின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரிக்கிறது. மாநில அரசுகள் தம்மை மைய அரசின் ஆதிக்கத்திற்கு விட்டுக் கொடுக்கின்றன. மக்களாட்சி முறை நாசமாகிறது. தொழிற்சங்க இயக்கங்கள் வலிமை குறைந்துவிட்டன. புரட்சி இயக்கங்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றன. தமிழ் பயிற்று மொழியாக, ஆட்சி மொழியாக இல்லை. தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிராகவே தி.மு.க. முதலிய அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. நுகர்வியம் காரணமாக நடுத்தர மக்கள் அறம் முதலிய பண்புகள் அற்றுப் போகிறார்கள். காண்டலும் ஒடுக்குமுறையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக தலித் மக்கள், பெண்கள், உழவர்கள், கைவினைஞர்கள், பழங்குடிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்மக்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர். அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் மைய நீரோட்ட மார்க்சிய கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வரலாற்றில் இருந்து தமிழன் வெளியேற்றப்படுகின்ற நிலைமை நெருங்கி வருகிறது. கடுமையான போராட்டங்கள் இல்லாமல் வரலாற்றில் தமிழன் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது. வளமான மார்க்சியம் தவிர நமக்கு வேறு பார்வை இருக்கமுடியாது. பெரியாரியமும், தலித்தியமும், பெண்ணியமும், மார்க்சியத்தோடு இன்று கைகோர்த்துக் கொள்ளமுடியும். சமதர்மம் என்ற மையத்தில் அனைவரும் இணையமுடியும். தமிழ்த் தேசியம் என்ற அரசியலுக்கும் வேறு மையம் இருக்க முடியாது. இப்பொழுது நான் உறுதியாகச் சொல்ல முடியும். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சியத்தோடு நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த வகையிலும் நாங்கள் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை. கட்சி அமைப்புக்குள்ளும் கொஞ்ச காலம் இருந்தோம். கட்சிக்கு வெளியிலும் ஆதரவாளர்களாக இருந்து வந்திருக்கிறோம். இன்னும் ஒரு கட்சி கட்டுவது என்றும் ஒரு நோக்கமாக இருந்தது இல்லை. கட்சிக்குள் நாங்கள் இல்லை என்ற போதிலும் மார்க்சிய இயக்கத்தினுள் தான் நாங்கள் உறுதியாக இயங்கி வருகிறோம். கட்சிக்காரர்கள் எங்களைத் தொடர்ந்து ஒதுக்கினாலும் மார்க்சியம் பற்றிய உறுதியான நம்பிக்கையோடுதான் வாழ்ந்து வருகிறோம். கட்சிக்கு வெளியில் வளர்கிற மார்க்சியத்திற்கு எங்கள் பங்களிப்புகள் மிகச் சிறப்பானவை என்று நாங்கள் நம்புகிறோம். தன்னகங்காரத்திற்கோ, தற்பெருமைக்கோ நாங்கள் இடம் தருவதில்லை. பொருள் முதலியவற்றை நாங்கள் பெருமளவில் இழந்திருக்கிறோம். எனினும் எங்கள் மன உறுதி குன்றவில்லை. இக்கடிதத்தை இப்பொழுது நிறுத்திக் கொள்கிறேன். உங்கள் கட்டுரைகளில் எஸ்.என்.நாகராசன் குறித்து ஒரு குறிப்பும் இல்லை. மாவோவின் மார்க்சியம் குறித்து குறிப்பாக எதுவும் சொல்லவில்லை. சந்தைப் பொருளாதாரம் முதலிய பெயர்களில் கடுமையான தாக்குதல்கள் நம் வாழ்வின் மீது தொடுக்கப்படும் சூழலில் மார்க்சியர் என்ற முறையில் தற்காலத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. மார்க்சிய நோக்கில் தமிழ்த்தேசியம் என்ற அரசியலை வளர்த்தெடுப்பது குறித்து நீங்கள் சொல்லியிருக்கலாம். இப்படி எவ்வளவோ குறைபாடுகள் இருந்த போதிலும் உங்கள் கட்டுரை ஒரு தரமான நல்ல கட்டுரை என்பதில் அய்யமில்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நானும் நிறைய எழுதி வருகிறேன். “பரிமாணம்”, ’’நிகழ்” ஆகிய இதழ்களை நானே பொறுப்பேற்று நடத்தினேன். தமிழ் இலக்கிய உலகில் எல்லோரிடமும் நல்ல உறவை நான் தொடர்ந்து வளர்த்துக் கொண்டிருந்தேன். இவர்களை எதிரிகளாக எப்பொழுதும் நான் பார்க்கவில்லை. தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவர்கள் என்ற முறையில் இவர்கள் மிக நெருக்கமானவர்கள். முதலாளியச் சூழலுக்கு நம்மவர்களைக் காட்டிலும் இவர்களில் சிலர் கூடுதலாக வசப்பட்டிருக்கக் கூடும். மனித விடுதலை என்பது இவர்களுக்கும் தேவைதான். நமக்குள்ளிருந்து அதிகாரம் முதலியவற்றை களைந்து கொள்கிறபோது இவர்களை நாமும் அன்போடு நேசிக்கமுடியும். கட்சிக்காரர்களுக்குள் அன்பில்லாமல் போகமுடியாது. இவர்களையும் நாம் எப்படி அணுகுவது என்பது நமக்குச் சிக்கல்தான் ஆதிக்கங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் எதிரிகளை நாமே உற்பத்தி செய்து கொண்டிருக்க முடியாது. ஆகவே நேயத்தோடு / தமிழ் நேயத்தோடு நண்பர்களை அணுகுவது நமக்கு நல்லது. உங்கள் அன்புக்கும் என் மனம் நிறைந்த நன்றி. - 15.11.2000 கடிதம் - 2 அன்பு நண்பருக்கு வணக்கம், சென்ற கடிதத்தில் கோவை வட்டாரத்தில் செயல்பட்ட எங்களின் சிலரின் மார்க்சிய நிலைப்பாட்டையும், மார்க்சிய நோக்கில் இலக்கியப் பணி குறித்தும் எழுதி வருகையில் என்னைப் பற்றி எழுதுவதில் தயக்கம் கொண்டேன். இந்தத் தயக்கத்தை இப்பொழுது விலக்கி வைத்துக் கொண்டு, எனது இலக்கியப் பணி குறித்தும் இங்கு சொல்ல விரும்புகிறேன். என்னைப் போலவே இன்னும் பலரும் இப்படி தங்கள் மார்க்சிய நோக்கு மற்றும் இலக்கியப் பணி குறித்து எழுதுவது நல்லது என்று கருதுகிறேன். நம்மை நாமே தொகுத்துக் கொள்வதற்கும் திரும்பி பார்த்துக் கொள்வதற்கும் இப்படி எழுதுவது தேவை என்றும் கருதுகிறேன். தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து கற்றவன் என்ற முறையில் தொடக்கம் முதலே தமிழ்ப்பற்று / தமிழ்நேயம் எனக்குள் இயல்பாக இருந்தது. மார்க்சியம் கற்ற பொழுது தமிழ் இலக்கிய ஆய்வுக்கு மார்க்சியம் வளம் சேர்க்கும் என்பதை நன்கு உணர்ந்தேன். ஜீவா முதலியவர்களின் தூண்டுதலும் இதற்கான காரணங்களில் ஒன்று என்று குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்ச் சூழலில் திராவிட இயக்கத்தோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தோடு மார்க்சியர் முரண்பட்டது எனக்கு உடன்பாடில்லை. இது குறித்து எஸ்.என்.நாகராசன் தொடர்ந்து எங்களுக்கு உணர்த்தி வந்தார். கட்சி சார்ந்த மார்க்சியர் தமிழ்ப்பற்று என்பதை பிற்போக்கு என்றோ, மீட்சிவாதமென்றோ கருதியதை நாங்கள் ஏற்கவில்லை . திராவிட இயக்கம் மற்றும் தமிழ் இலக்கியம் குறித்துத் திறனாய்வு நோக்கை நான் என்றும் கைவிட்டதும் இல்லை. இலக்கியத் திறனாய்வு குறித்து ஆங்கில நூல்கள் பலவற்றை நான் தொடர்ந்து கற்றதனால் எனது திறனாய்வு உணர்வு வளம் பெற்றது என்பது உண்மைதான். ஆனால் வாழ்க்கைச் சூழல் எனக்குள் திறனாய்வு உணர்வைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டுள்ளது என்பதையும் நான் சொல்லவேண்டும். வாழ்க்கைச் சூழலிலிருந்து திறனாய்வுணர்வைப் பெறுவதற்கு இடம் இல்லை என்றால் என்ன தான் திறனாய்வு நூல்களைக் கற்ற நிலையிலும் அதனால் நம் பார்வை வளம் பெறுவது சாத்தியமில்லை. மார்க்சியம் வந்த பிறகுதான் வாழ்க்கை, இலக்கியம் முதலிய அனைத்துமே புதிய ஒளிபெற்றன என்பது உண்மைதான் என்றபோதிலும், தமிழ் மக்கள் எல்லாக் காலத்திலும் இருட்டில் தான் வாழ்ந்தனர் என்பது எனக்கு உடன்பாடில்லை. சங்க இலக்கியம் முதலியவற்றைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சியத்தின் வர்க்கப் பார்வை சரியான திறவுகோலாக இருக்கிறது என்பதில் அய்யமில்லை. வள்ளுவர், இளங்கோ முதலியவர்கள் வணிக வர்க்கத்தின் சார்பில், ஆதிக்க வர்க்கத்தின் நோக்கில் தான் தங்கள் படைப்புக்களை உருவாக்கினர் என்று கூறுவது வர்க்கப் பார்வை என்று என்னால் கருத முடியவில்லை. இதை வக்கிரமான பார்வை என்று கூட நான் சொல்வேன். வள்ளுவர், இளங்கோ முதலியவர்கள் பெருமளவில் மக்கள் சார்பினர். தமிழ்ச் சான்றோர் என்ற முறையில் இவர்கள் முன்னர் நிலவிய ஆதிப்பொதுமைச் சமூகத்தின் அறங்களைத் தம் காலச் சூழலுக்கு ஒத்த முறையில் தம் படைப்புக்களில் வெளிப்படுத்தியவர்கள். வள்ளுவரின் ஒப்புரவும், இளங்கோவின் நீதி உணர்வும் மக்கள் மத்தியில் சமத்துவ உணர்வை வேண்டியவை. சாத்தனாரின் அமுதசுரபி ஒரு வகையில் சமதர்மத்தின் குறியீடு, சங்க காலத்தில் பெருகி வந்த அரசாதிக்கம், வணிக மேலாண்மை, நகர நாகரிகம் முதலிய போக்குகளுக்கு எதிராக ஆதிப்பொதுமைச் சமூகத்தின் அறங்களுக்கு நெருக்கமாக நின்றவர்கள் பாரி முதலிய வேளிர்கள் மட்டுமல்லாமல், தமிழ்ச் சமூகத்தில் புதிதாகத் தோன்றி வளர்ந்து வருகிற செல்வம், குடிப்பிறப்பு முதலியவற்றுக்கு எதிராக மனிதர்கள் மத்தியில் அன்பையும், தலைவன் தலைவிக்கிடையில் காதலையும், அற உணர்வையும் முன்னிறுத்திய தமிழ்ச் சான்றோர்கள் குறித்தும் இங்கு சொல்லவேண்டும். இந்த வடிவில் தான் சங்க காலத்தில் வர்க்கப் போராட்டம் செயல்பட்டது. நாளடைவில் மூவேந்தர்களும், நகர நாகரிகமும் ஆதிக்கம் பெற்ற நிலையில் சங்க காலம் முடிவு பெற்றது. இத்தகைய பார்வைதான் வளமான மார்க்சியப் பார்வையாக இருக்கமுடியும். இவ்வகையில் கைலாசபதி முதலியவர்களை நான் வெளிப்படையாக மறுக்கவில்லை என்ற போதிலும் என்னளவில் இத்தகைய மார்க்சியப் பார்வையை முன் வைக்கத் தயங்கவில்லை. தமிழ் மரபு என்றும், தமிழ் மெய்யியல் என்றும் நான் தொடர்ந்து பேசி வந்திருக்கிறேன். ஆதிப் பொதுமைச் சமூகத்தின் அற உணர்வு மாறுபட்ட வரலாற்றுச் சூழலிலும் மக்கள் வாழ்வில் மட்டுமல்லாமல், சான்றோர்களின் இலக்கியங்களிலும் அங்கங்கே பெருகி வழிந்ததைத் தொடர்ந்து நான் சுட்டிக் காட்டுகிறேன். மதங்கள் என்பனவற்றுள்ளும் அடி நீரோட்டமாக இந்த மக்கள் சார்பு இருப்பதைக் காண்கின்றேன். இலக்கியங்களை மட்டுமல்லாமல் மதங்களைப் புரிந்து கொள்வதிலும் அந்நியமாதல் என்ற திறவுகோல் நமக்குச் சிறப்பாக பயன்பட்டிருக்கிறது. வர்க்கப் போராட்டங்களின் வழியே வர்க்கங்களைக் கடந்து செல்வதுதான் மார்க்சியமாக இருக்க முடியும் என்பதைத் தொடர்ந்து சொல்லுகிறேன். உழைக்கும் மனிதர்கள் அனைவரிடமும் அன்பு, அறம், உழைப்பு, பகிர்வு ஆகியவற்றிற்கு எப்பொழுதும் அழுத்தம் தருகிற வர்க்கம் உழைக்கும் மனநிலை காலந்தோறும் செயல்படுவதை நம்மால் காண முடியும். கடவுள் ஆன்மா என்றெல்லாம் அவர்கள் சொல்லுகிற பொழுதும் இந்த மேலடுக்குகளை நீக்கிப் பார்த்தால் அன்பு, அறம், முதலிய மனிதத் தேவைகளே இவற்றின் உள்ளடக்கமாக இருக்க முடியும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்த அறம்தான் இன்றைய பார்வையில் சமதர்மம். சித்தர்கள் இந்த அறத்தின் ஆற்றல் மிக்க வெளிப்பாடுகள். பாரதி, பாரதிதாசன், பெரியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் முதலியவர்களுக்குள்ளும் ஆழத்தில் செயல்படுவது இந்த அறமின்றி வேறில்லை. மேல் கட்டுமானம் என்பதனுள் மனிதனின் அற உணர்வை அடக்குவதன் மூலம், அடித்தளத்திற்கே எப்பொழுதும் அழுத்தம் தரும் போக்கு மார்க்சியமாக இருக்க முடியாது. ஸ்டாலினியத்தையும், மாவோ சிந்தனையையும் ஒன்று என வைத்துக் கொள்ளவும் முடியாது. மார்க்சியமும், தமிழ் இலக்கிய ஆய்வும் எனக்குள் இப்படித்தான் இணைந்திருந்தன. இந்த நோக்கில் நான் இன்று வரை எழுதி வருகிறேன். தமிழ்த் தேசியம் என்று அரசியலை முதன்மைப்படுத்துபவர்கள் தமிழ் இலக்கிய ஆய்விலோ, தமிழ் மெய்யியலில் அக்கறையோ கொள்வதில்லை. மரபுவழி மார்க்சியத்தினுள் இருக்கும் அதிகாரம் என்பது மார்க்சியத்தை முதலாளியமாகத்தான் மாற்றும். இந்த ஆபத்தை சோவியத் ஒன்றியத்தில் முழு அளவில் நாம் பார்த்தோம். இதன் வெளிப்பாடுதான் ஸ்டாலினியம். இவர்களின் இலக்கியக் கோட்பாட்டுக்கு இவர்கள் வைத்த பெயர்தான் சோசலிச யதார்த்தவாதம். இந்த இலக்கியக் கோட்பாட்டினுள் கட்சிக்கும், தலைவர்களுக்கும் முக்கியத்துவம் கிடைத்து விடுகிறது. அரசியலுக்கு அழுத்தம் கிடைக்கிறது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அரசியலே அன்றி இது மக்கள் விடுதலைக்கான அரசியலாக இல்லை. அரசியலை முதன்மைப்படுத்தும் பொழுது உழைக்கும் மக்களும், கலை இலக்கியங்களும், தத்துவமும் ஒதுக்கப்படுகின்றன. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் இப்படித்தான் இறுக்கமான வடிவங்களைப் பெற்றது. இந்த அரசியலைக் கடைப்பிடித்தவர்கள் இரஷ்யாவில் மட்டுமல்லாமல் இங்கும்தான் இருக்கின்றனர். தொடக்கத்தில் மார்க்சிய இலெனினியக் கட்சிக்குள் நானும் தான் இருந்தேன். ஸ்டாலினிய கொடுங்கோன்மையின் பாதிப்புக்கு நானும் உள்ளாகி அதனால் வெளியேற வேண்டி வந்தது. என்றைக்கும் கேள்விகள் இல்லாமல் நான் யாரையும் ஒப்புக் கொண்டதில்லை. மார்க்சியத்தோடும் நான் போராடித்தான் இன்னொரு கட்டத்தில் மார்க்சியத்தை ஏற்றேன். என் வாழ்வுக்கு அர்த்தமும், அழகும், ஆற்றலும் வழங்கியது மார்க்சியம் தான். சுயவிமர்சன உணர்வு என்றும் எனக்கு உண்டு. எப்பொழுதும் என் மனத்தைத் திறந்து வைத்துக் கொள்கிறேன். மாறுபட்ட கருத்துக்களோடு எப்பொழுதும் என் உரையாடல் தொடர்கிறது. மார்க்சியம், இலக்கியம், தத்துவம் முதலியவற்றின் மாறுபட்ட கோணங்களை நான் என்றும் பொருட்படுத்திக் கற்கிறேன். முதலாளியம் முதலிய ஆதிக்கங்களோடு என்னால் என்றும் ஒத்துச் செல்வது சாத்தியமில்லை. கட்சித் தலைவர்களுக்கு என்னால் துதிபாட முடியாது. இலக்கியவாதிகள் என்பவர்களை நான் மார்க்சியத்தின் பகைவர்கள் என்று கருதுவதில்லை. வெங்கட் சாமிநாதன், பிரமிள், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜெயமோகன் முதலியவர்களை மார்க்சியத்தின் எதிரிகள் என்ற பட்டியலில் என்னால் சேர்க்க முடியாது. இவர்களின் மக்கட்சார்பை நான் மதிக்கிறேன். இலக்கியம் என்றும் அரசியல் என்றும் பேக்கிற மார்க்சியருள்ளும் அதிகாரம் சிறியளவிலோ, பெரியளவிலோ செயல்படுவதை நான் அனுபவித்திருக்கிறேன். எனது நண்பர்கள், தோழர்கள் என்று நான் மதிக்கிறவர்களின் உள்ளும் இத்தகைய போக்கு என்னைப் பல சமயங்களில் காயப்படுத்தியது. இங்கு எத்தனையோ மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிட முடியும் எனினும் இப்பொழுது தவிர்த்துக் கொள்கிறேன். இந்தப் பட்டியலில் கைலாசபதி, கேசவன் என்று தொடங்கி பலருடைய பெயர்கள் இருக்கின்றன. பேரா.வானமாமலை என்றும் பலரைக் குறிப்பிட முடியும். என்னோடு ஒத்த கருத்துடைய எஸ்.என்.நாகராசன், எஸ். வி. ஆர். போன்றவரிடத்திலும் சிற்சில போக்குகளை நான் கண்டிருக்கிறேன். நானும் கூட இப்படிப்பட்டவனென்று சிலருடைய விமர்சனங்களை நான் மறுக்கமாட்டேன். இத்தகைய உணர்வுகள் எங்கிருந்து நமக்குள் எழுகின்றன, நிலை பெறுகின்றன என்பது குறித்து நமக்கு கவலை இருக்க வேண்டும். கூடியவரை தமிழ் இலக்கியத்தில் ஒரு பெரும்பகுதியை நான் மார்க்சிய நோக்கில் பார்த்திருக்கிறேன். தற்காலத் தமிழ் இலக்கியத்திலும், நாவல் என்றும், கவிதை என்றும், திறனாய்வென்றும் நான் பெருமளவு பார்த்திருக்கிறேன். பெரியாரியத்தோடு தொடக்கத்தில் நான் முரண்பட்ட போதிலும், பிறகு பெரியாரியத்தை கூடியவரை சரியாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சாதி, மதம், பார்ப்பனியம் ஆகியவற்றுக்குத் தீவிரமான எதிர்நிலை எடுப்பது என்ற முறையில் பெரியாரியத்தைக் குறுக்கி விடுவது எனக்கு உடன்பாடில்லை. சமதர்மம் என்ற மையத்தில் பெரியாரியத்தைக் கண்டெடுத்து வளர்க்க முடியும். பகுத்தறிவு என்பது ஆய்வு முறையே அன்றி பெரியாரின் மெய்யியல் அன்று. சுயமரியாதை என்பதுதான் உண்மையில் பெரியாரின் மெய்யியல். இந்த மெய்யியல் மார்க்சியத்திற்கு இன்னொரு பெயர். என்று சொல்லும் அளவில் பொருள்படுவதற்குரியது. மார்க்சியத்திற்குள் நுழைந்து முதலாளியம் தங்கிவிட்டதைப் போலவே முதலாளியச் சார்பில் இயங்கும் பெரியாரியம் சாதி எதிர்ப்பு முதலிய வகைகளில் முதலாளியத்திற்குச் சேவை செய்கிறது. இது மனித விடுதலைக்கு வழிதிறக்காது. இப்படியெல்லாம் பெரியாரியத்தைப் பொருள்படுத்துவதற்கு மார்க்சியம் தான் நமக்கு உதவி செய்கிறது. மார்க்சியர் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குப் பெரியாரியம் குறித்து இத்தகைய புரிதல் இல்லை. திராவிட இயக்கத்தில் இருந்து தொடங்கி மார்க்சியத்திற்கும், தமிழ்த் தேசிய அரசியலுக்கும் வந்து சேர்ந்தவர்கள் சாதி எதிர்ப்பையும், பார்ப்பன எதிர்ப்பையும் முதன்மையான திட்டங்களாகக் கொள்வதன் மூலம் திராவிட இயக்கத்தின் இறுக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டவர்களாகத் தெரியவில்லை. தொடக்கத்தில் திராவிட இயக்கத்தைக் கடுமையாகத் தாக்கி வந்த மார்க்சியரில் ஒரு பகுதியினர் இன்று சாதி, மதப் பார்ப்பனிய எதிர்ப்பில் முன் நிற்பது ஒரு வேடிக்கையாக இருக்கிறது. இறுகிப்போன திராவிட இயக்கத்திற்கு இவர்கள் தமிழகச் சூழலில் பலியாகி உள்ளனர். அந்நியமாதலையும், இருத்தலியலையும் சரியான முறையில் அணுகுவதன் மூலம் மதம் குறித்த வளமான மார்க்சியப் பார்வையை நாம் பெறமுடியும். இந்தியாவின் தத்துவங்கள், கலாச்சாரங்கள் முதலியவை குறித்து சரியான புரிதலைப் பெறுவதற்கு இத்தகைய மார்க்சியம் தான் பயன்படும். “கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை” என்ற என் புத்தகத்தில் விடுதலை இறையியல் குறித்து எழுதி உள்ளேன். இந்த நூலைக் கிறித்துவ நண்பர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். கடவுள் முதலியவை குறித்த தேடலில் இவர்கள் இருக்கிறார்கள். இத்தகைய தேடல் இந்து மதவாதிகளுக்கு இல்லை. பெரியாரியர்களுக்கும், மரபுவழி மார்க்சியருக்கும் இல்லை. எனது நூலில் பெரியாரியரைக் காட்டிலும் மார்க்சியர்தான் விரிவான திறனாய்வுக்கு உள்ளாகி இருக்கின்றனர். மதம் என்பதன் வடிவிலும் நடைபெறுவதும் வர்க்கப் போராட்டம்தான் என்பது என் மார்க்சிய அணுகுமுறை. தனிவுடமை, அரசதிகாரம் ஆகியவற்றின் வடிவில் முதலாளியம் நம்மை வசப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஏகாதிபத்தியத்திற்கும், வேறுவகை ஆதிக்கங்களுக்கும் நமக்குள் இடம் கொடுத்து நாம் அழிந்து போகிறோம். மார்க்சியர் என்று தம்மைச் சொல்லிக் கொள்பவர்களும் தனிவுடமை என்பதற்கு உச்சளவில் இடம் கொடுத்து, பணப்பற்றை மறைப்பதற்காக பார்ப்பனிய எதிர்ப்பு முதலியவற்றை உரத்துப் பேசுகின்றனர். பெரியாரே கூட பார்ப்பனிய எதிர்ப்பு முதலியவற்றில் தன்னைச் சுருக்கிக் கொள்வதாகிய சீர்திருத்த இயக்கம் என்று சுயமரியாதை இயக்கத்தைக் கருதவில்லை. எல்லாவற்றையும் தலைகீழாகக் கவிழ்க்கிற புரட்சிகர இயக்கம் என்று தனதியக்கத்தைக் கண்டார். தனிவுடமை, அதிகாரம் முதலியவற்றைத் தமக்குள்ளிருந்து களைந்து கொள்வதற்கான தீவிர இயக்கம் எதையும் மார்க்சியர் செய்வதில்லை. இத்தகைய மார்க்சியம் ஏகாதிபத்தியம் முதலிய ஆதிக்கங்களுக்குச் சரணடையும் என்பதில் அய்யமில்லை. என்னைப் பற்றி நண்பர்களின் சில விமர்சனங்களுக்கு இங்கு நான் பதில் சொல்ல வேண்டும். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஞானியிடம் வளர்ச்சி என்பதே இல்லை என்று ஒரு நண்பர் எழுதினார். மார்க்சியத்தை விட்டு அவ்வப்பொழுது விலகிச் சென்ற நண்பரின் கூற்று இது. 25 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சியத்தை விட்டு ஞானி விலகவே இல்லை என்று இவர் குறிப்பிட்டிருந்தால் இந்தக் கூற்று அவரைப்பற்றிய உண்மையையும் வெளிப்படுத்தியிருக்கும். எனது மார்க்சியத்தில் எத்தனையோ பரிமாணங்கள் தொடர்ந்து விரிவு பெற்றுள்ளன. நவீன அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய புரிதலின் விளைவாக இயற்கை வேளாண்மை, தமிழ் மருத்துவம் / தாய்த்தமிழ்க் கல்வி என்று நான் எவ்வளவோ பேசுகிறேன். ஏகாதிபத்தியம் என்பது சந்தைப் பொருளாதாரம் முதலிய வடிவங்களின் வெளிப்பட்ட நிலையின் டங்கல் திட்டம் முதலியவற்றில் கோவை வட்டாரத்தில் தொடர்ந்து கடுமையாக நான் பேசிக் கொண்டிருந்தேன். நிகழ் இதழில் நிறைய கட்டுரைகள் வெளியிட்டேன். தமிழ் இலக்கிய ஆய்வின் வழியே தமிழ் மெய்யியல் குறித்துக் கண்டறிந்தேன். தமிழ்நேயம் இதழ் தொடங்கினேன். தமிழ்த்தேசியம் என்று பேசும் அறிஞர் பலரின் உரைகளை நண்பர்கள் ஒத்துழைப்போடு தொகுத்து வெளியிட்டேன். “தமிழன் வாழ்வும் வரலாறும்” - தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஒரு முன்னுரை என்ற கட்டுரை தொகுப்பை வெளியிட்டேன். மார்க்சியம் பற்றி பேசிக் கொண்டிருந்த ஞானி தனக்குள் சுருங்கி இப்பொழுது தமிழ்த்தேசியம் பற்றி பேசுகிறார் என்றும் சில நண்பர்கள் கருதுகின்றனர். சிவசேகரம் ஒரு கட்டுரையில் என்னைப் பற்றி இப்படி எழுதினார். மார்க்சியம் என்பது தேசிய இன விடுதலைக்கு எதிராக இருக்க முடியாது. முதலாளியத்தின் குரலாக தேச விடுதலை, தேசிய இனங்களின் விடுதலை இருந்தது என்பது உண்மைதான். ஆனால் முதலாளியம் குறித்த தீவிரமான விமர்சனங்களின் வழியே இவை பாட்டாளி வர்க்கத்தின் முழக்கம் ஆக முடியும். தேசிய இன விடுதலை என்றவுடன் இந்தியாவின் இன்றைய சூழலைப் பொருத்தவரை சரியான கூட்டாட்சி என்ற கோட்பாட்டிலிருந்து இந்தச் சிக்கலை இன்று அணுக முடியும். இப்படி எல்லாம் தமிழ்த்தேசியம் குறித்த என் பார்வையை என்னால் விளக்க முடியும். மார்க்சியம் எனக்குள் மேலும் வளம் பெற்றதன் விளைவே தமிழ்த்தேசியம் குறித்த எனது புரிதல். தமிழ்த்தேசியம் என்பது, தமிழ் மற்றும் தமிழினத்தின் பெருமைகள் என்ற தளத்தில் நின்று விடவும். முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, சீர்கெட்ட முதலாளிய எதிர்ப்பு என்று தொடங்கித் தமிழ் மக்களுக்கான வேளாண்மை, கல்வி, மருத்துவம், வரலாறு, பண்பாடு, அரசியல் என்று பல தளங்களில் விரிவு பெறமுடியும். இப்படிச் செல்லும்பொழுது திராவிட அரசியல் மற்றும் இந்துத்துவத்தோடு நாம் கடுமையாக முரண்படவும் வேண்டியிருக்கிறது. தமிழ்த்தேசியம் என்ற அரசியல் இயக்கங்களுக்கு இத்தகைய விரிவான பார்வை இல்லை. இதற்குக் காரணம் அவர்களின் திராவிட இயக்கச் சார்பின் எச்சங்கள் மற்றும் வாழ்க்கை முறை. இந்தளவோடு நான் இப்பொழுது நிறுத்திக் கொள்கிறேன். கோவை வட்டாரத்தில் மார்க்சியம், இலெனினியம் என்று தொடங்கிய நண்பர்களுக்குள்ளும் நாளடைவில் பிளவு ஏற்பட்டது. புலவர் ஆதி கட்சி நிலைப்பாட்டோடு நின்றுவிட்டார். எஸ். என். நாகராசனும், நானும் தொடர்ந்து இணைந்து சென்றோம். ‘பரிமாணம்’ நடத்திய காலத்தில் எங்களோடு இருந்த எஸ். வி. ஆர். பிறகு விலகிச் சென்று விட்டார். எங்களுக்கு அணுசரணையாக இருந்த நண்பர்கள் பலரோடு எங்கள் வழியில் நானும், நாகராசனும், தொடர்ந்து இயங்கினோம். சமூக மாற்றம் குறித்த தீவிரமான நடவடிக்கைகளில் கட்சிதான் உறுதியாக நின்று செயல்பட முடியும், கட்சியின் தொடர்பு குறைந்த நிலையில், அல்லது அவ்வப்பொழுது தொடர்பு என்ற நிலையில் நாங்கள் சிந்தனை என்ற தளத்திலே செயல்பட முடிந்தது. கட்சியும் பெரிய சாதனைகளை நிகழ்த்திவிடவில்லை. இதற்கு எவ்வளவோ காரணங்கள். எங்களது இயக்கம் பிளவுபடாமல் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் நெடுந்தொலைவு சென்றிருக்க முடியும். கட்சிக்கு நெருக்கமாக நாங்கள் இருந்த சந்தர்ப்பத்தில், மார்க்சிய இலெனினிய இயக்கத்தின் முக்கியமான தலைவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தோம். 1980களின் தொடக்க காலம் அது. தோழர் இன்குலாப் கேசவன், இன்னும் பல படைப்பாளிகள் மற்றும் திறனாய்வாளர்கள், வேறு சில விஞ்ஞானிகளும் எங்களோடிருந்தனர். பூமணி, செயப்பிரகாசம், தெய்வசுந்தரம் என்று இன்னும் சிலர். நிஜநாடக இயக்கம் மு. இராமசாமி, இலக்கிய வெளிவட்டம் நடராசன், ராஜ்கவுதமன் இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு கலாச்சார இயக்கம் கட்டமுடியுமானால், கிராம்சி கூறிய கலாச்சார மேலாண்மையைத் தமிழக சூழலில் நிறுவமுடியும். இப்படி நான் கூறியதை ஒப்புக் கொண்ட பெரியவர், கலாச்சார இயக்கம் பற்றி பிறகு பார்ப்போம். இப்பொழுது கட்சி கட்டுவதற்கு ஆட்கள் வேண்டும் என்றளவில் நிறுத்திக் கொண்டார். படித்தவர்கள், அறிவாளிகள் என்ற முறையில் எங்களது வரையறைகளை நாங்கள் கடந்து செல்வது கடினம். கட்சி கட்டுவதற்கு எங்களை இழுப்பதென்றால் அதன் காரணமாகவும் சில கடுமையான தவறுகள் நேர்ந்துவிடும். இப்படி நேர்ந்ததை அனுபவங்கள் சொல்லுகின்றன. எங்களின் எல்லைக்குள்ளிருந்து மேலும் மேலும் கூடியவரை சரியான பார்வைகளைப் பெற்று வளர்ந்திருக்க முடியுமானால் எங்களிடமும் பெருத்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். இதற்கான வாய்ப்புக்களைக் கட்சி வட்டாரம் கணக்கில் கொள்ளவில்லை. கட்சிக்கு வெளியிலும் மார்க்சியம் வளம் பெற்றிருக்கிறது என்பது வரலாறு. இதைத் தான் நாங்களும் மெய்ப்பித்திருக்கிறோம். என்னைத் திறந்து கொண்டு இன்னும் சொல்வதற்கு இடம் இருக்கிறது என்ற போதிலும் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். என்னையும், நண்பர்களையும் விமர்சனத்திற்கு உட்படுத்தலாம். மார்க்சியம்தான் நம் வாழ்வுக்கு அர்த்தமும், அழகும், ஆற்றலும் தரமுடியும். சுயவிமர்சனத்தோடுதான் நாம் எல்லாவற்றையும் கற்கிறோம். இனியும் கற்போம். நன்றி. - 20.11.2000 கடிதம் - 3 மதிப்பிற்குரிய தோழருக்கு வணக்கம், ’’தமிழ் இனி 2000" கருத்தரங்கில் மார்க்சிய இலக்கியம் குறித்து நீங்கள் முன்வைத்த கட்டுரை படித்தேன். நிறைய விவரங்களோடும், தமிழில் மார்க்சிய இலக்கியம் குறித்து புதிய புரிதல்களோடும் எழுதப்பட்டிருக்கிறது இந்தக் கட்டுரை. தனிநூலாக எழுதப்பட வேண்டிய அளவுக்கு விரிவான விவரங்களை இந்தக் கட்டுரையில் தந்திருக்கிறீர்கள். இதுகுறித்து என் மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். மார்க்சிய இலக்கியம் என்ற தொடருக்கு இருவகையில் பொருள் காண்பது மிகச் சிறப்பாக இருக்கிறது. மார்க்சியர் அல்லாதவர் மார்க்சியத்திற்கு நெருக்கமான புரிதலோடு இலக்கியம் படைக்க முடியும் என்று நீங்கள் சொல்வது தமிழ்ச் சூழலில் வரவேற்கத்தக்க கருத்து. இம்முறையில் புதுமைப்பித்தன் என்று தொடங்கி சா. கந்தசாமி, வண்ணநிலவன், சிவகாமி முதலியோர் தமிழ் எழுத்தாளர் பலரை இந்த வகையில் சேர்த்திருக்கிறீர்கள். இதற்குரிய முறையில் மார்க்சியத்திற்குள்ளிருந்து நீங்கள் எடுத்து விளக்குகிறீர்கள். தனிமனிதர்கள் அவர்களின் சிக்கல்கள் இலக்கியத்தில் இடம் பெறுகின்றன என்பது உண்மைதான். அதே சமயம் இவர்கள் சமூகத்தோடு பல முனைகளில் இணைந்திருக்கிறார்கள். இலக்கியம் என்பதனுள் தனிமனிதன் குறித்த பார்வையைக் காட்டிலும் சமூகப் பார்வை மிக முக்கியமானது. தனிமனிதன் என்பவன் தனித்த மனிதன் அல்லன். சமூகச் சூழலில்தான் இவனுக்கான வாழ்வு கிடைத்திருக்கிறது. தனிமனிதனும் அவனுடைய பார்வையும் என்னதான் முக்கியத்துவம் உடையவை என்ற போதிலும் இவனுக்குரிய வாழ்வு மற்றும் பார்வை முதலியவற்றை இவனுக்குத் தருவதும் சமூகம்தான். இத்தகைய புரிதல் இலக்கியம் என்று தொடங்குகிற பலருக்கும் உரியது என்றாலும் இந்தப் பார்வைக்கு அழுத்தம் தருபவர் மார்க்சியர் என்பதில் அய்யமில்லை. தனிமனிதனை மையப்படுத்தி எழுதப்படும் எந்த எழுத்தினுள்ளும் சமூகம் உள் வராமலும் இல்லை. மார்க்சியத்தை மறுப்பவர்களும் கூட இப்படி ஒரு சமூகச் சார்போடுதான் எழுதவும் முடியும். சமூகப் பார்வை என்பதை மேலும் சில வரையறைகளோடு மார்க்சியர் கூறுகின்றனர். இத்தகைய வரையறைகளில் மிக முக்கியமானது வர்க்கக் கண்ணோட்டம். யதார்த்த வாதம் என்று மார்க்சியர் கூடுதலாகப் பேசும்பொழுது இந்த வர்க்கக் கண்ணோட்டத்தை உள்ளடக்கித்தான் பேக்கின்றனர். இந்தக் கண்ணோட்டத்தை சோசலிச யதார்த்தவாதம் என்பதைக் காட்டிலும், மார்க்சிய யதார்த்தவாதம் என்று சொல்வது கூடுதலான புரிதலுக்கு வழி திறக்கும். சோசலிச யதார்த்தவாதம் என்ற கலை இலக்கியப் பார்வை சோவியத் இரஷ்யாவில் எப்படி, எப்பொழுது ஏற்பட்டது என்பதை உங்கள் கட்டுரையில் விளக்கியிருக்கிறீர்கள். நீண்ட அனுபவங்களுக்குப் பிறகு இந்தப் பார்வையைத் தமிழ்ச் சூழலில் ரகுநாதன் மறுக்கிறார். ரகுநாதன் கருத்தை நீங்களும் ஏற்கிறீர்கள். இன்று கூடத் தமிழ்ச் சூழலில் மார்க்சியக் கட்சி சார்ந்தவர்கள் பழைய பார்வையிலேயே ஊன்றி நிற்கின்றனர். வறட்டு வாய்பாட்டுவாதத்திற்கு இவர்கள் பலியானவர்கள் என்பதில் அய்யமில்லை. இதன் காரணமாகவே இவர்களது படைப்புக்களில் கட்சியும் அரசியலும் முதன்மை பெறுகின்றனவே அன்றி வாழ்வின் பன்முகப் பரிமாணங்கள் இடம் பெறுவதில்லை. இலக்கியம் அல்லது படைப்பு குறித்தும் இவர்களிடம் வளமான பார்வை இல்லை. வர்க்கக் கண்ணோட்டம் என்பது மார்க்சியத்தின் ஒரு அடிப்படையான கருத்து என்பதைக்கூட கட்டுரையின் ஒரு பகுதியில் நீங்கள் மறுப்பதாகத் தெரிகிறது. தேசம் என்றும் தேச விடுதலை என்றும், தேசிய இனம் என்றும் மார்க்சியரும் பேசும் பொழுது, வர்க்கக் கண்ணோட்டம் என்ற கருத்தை ஒதுக்க வேண்டியதில்லை. தேச விடுதலை, தேசிய இனச் சிக்கல் ஆகியவற்றினுள் இடம் பெறுவது முதலாளியக் கண்ணோட்டம் தான் என்று மார்க்சியம் குறித்த பாடநூல்கள் சொல்வதை நாம் ஏற்கவேண்டியதில்லை. இலெனினுக்கும், எம்.என்.ராய்க்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் குறித்து நாம் நினைவு கொள்ள வேண்டும். தேசம், தேச விடுதலை முதலிய கருத்தினங்களைப் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டமாக நாம் மாற்றி பொருள்படுத்த முடியும். சோசலிசம் என்பது என்னதான் தொலை தூரத்திற்குத் தள்ளிப் போய்விட்டது என்றாலும், மார்க்சியத்தின் தோற்றத்தை ஒட்டி மனிதனைக் குறித்த சோசலிசப் பார்வை என்பது வரலாற்றுக்குள் உறுதியாகத் தங்கி இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும். தனிவுடமை, அரசு முதலிய நிறுவன அமைப்புகளுக்குள் கட்டுப்பட்டவனாக மனிதன் இருக்க வேண்டியதில்லை. ஆண் ஆதிக்கம் முதலிய எந்த ஆதிக்கத்தினுள்ளும் மனிதன் இறுக்க வேண்டியதில்லை. மனித விடுதலை என்பது வரலாற்றின் உள்ளுறை. இவை குறித்த இலட்சியம் நமக்கு இல்லாமல் மனிதன் இயங்க முடியாது. இத்தகைய ஆதிக்கக் கொடுமைகள் தன்னைச் சூழ இருந்த போதிலும் மனிதன் இவற்றுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளவும் முடியாது. இப்படி நேர்வது மாபெரும் மனித அவலம். இதற்குள்ளிருந்தும் மனிதன் திமிறித்தான் வந்திருக்கிறான். தனக்குள் மிகக் குறைந்தளவுக்கேனும் விடுதலை உணர்வுக்கான தளம் இல்லாமல் மனிதன் இப்படி கிளர்ந்தெழுவது சாத்தியமில்லை. இந்த இடத்தில் பகத்சிங் முதலியவர்களை நினைத்துக் கொள்ளலாம். வர்க்கக் கண்ணோட்டம் என்பதை மார்க்சியர் மேலும் விரிவுபடுத்திப் பார்க்கின்றனர். இந்த இடத்தில் என்னதான் சமூகப் பார்வை உடையவராக இருக்கும் ஒரு எழுத்தாளர் மார்க்சியரைத் தொடர்வதில்லை. ஆனால் உடனடியாக இத்தகையவர்களை மார்க்சியத்திற்கு அன்னியர்கள் என்றோ, எதிரிகள் என்றோ குற்றம் சொல்ல வேண்டியதில்லை. இத்தகையவர்களின் படைப்பினுள்ளும் நிதானமாகப் பார்க்கும்பொழுது, இவர்களுக்குள்ளும் அறியாமல் வர்க்கக் கண்ணோட்டம் ஏதோ ஒரு அளவில் செயல்படுவதை மார்க்சியர் புரிந்து கொள்ள முடியும். புதுமைப்பித்தன், சா.கந்தசாமி முதலியவர்களின் படைப்புக்களை நாம் ஏற்றுக் கொள்வது இத்தகைய பார்வையின் வழியேதான். சா. கந்தசாமி படைப்புக்களில் வாழ்வியல் அவலங்களோடு சிறுவர்களும், இளைஞர்களும், பெரியவர்களும் அலைந்து திரிகிறார்கள். கறாரான வர்க்கம் என்ற வரையறைகளுக்குள் இவர்கள் இல்லை. இவர்கள் உதிரிகள். வாழ்வைத் தொலைத்துவிட்டு இவர்கள் தேடித் திரிகிறார்கள். வன்முறை, ஊழல், காமம் முதலியவற்றுக்கு இவர்கள் பலியாகிறார்கள். எத்தகைய சமூக வரலாற்றுச் சூழலில் இவர்கள் இப்படி உதிரிகள் ஆனார்கள் என்பதை மார்க்சியர் புரிந்து கொள்ள முடியும். உதிரிகள் குறித்து ஜார்ஜ் தாம்சன் சிறப்பாக விளக்கி உள்ளார். மார்க்சிய திறனாய்வென்பது இத்தகைய புரிதலோடு செயல்பட வேண்டும். திறனாய்வின் பணி என்பது மாற்று கருத்துடையவர் படைப்புக்களையும் இப்படி வாசிப்பதாக இருக்கமுடியும். இப்படிச் செய்வதன் மூலம் மார்க்சியர் மரியாதை பெறவும் முடியும். உங்கள் கட்டுரையில் என்னைப் பெரிதும் கவர்ந்த ஒரு கருத்து குறித்து இங்கு நான் இப்பொழுது சொல்ல விரும்புகிறேன். வர்க்க வரையறைகள் முதலியவற்றில் முடங்கிக் கிடக்கும் மார்க்சியர்களுக்கு வாழ்வியல் தரிசனம் இல்லை என்று சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்வியல் என்பது பன்முகப் பரிமாணங்களை உடையது. பொருளியல் மட்டுமே மனித வாழ்வை நிர்ணயிப்பதில்லை. பண்பாட்டின் தொடுதல் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. பணமோ அதிகாரமோ வாழ்வுக்கு நிறைவு தருவதில்லை. வெற்றிகளைப் போலவே தோல்விகளும் கூட வாழ்வுக்குத் தேவையானவை. தன்னைத் தொலைத்து விடுவதும் பிறகு தேடிக் கண்டடைவதும் மனித வாழ்வில் தேவையான இயக்கங்கள். கலைகள் மற்றும் கதைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. காதலைப் போலவே இயற்கையோடும், உயிரினங்களோடும் ஒட்டி உறவாடுவதன் மூலம் தனக்குள் நிறைவு காண்பவன் மனிதன். கடவுள் ஆன்மா முதலிய கருத்தினங்கள் வழியேயும் மனிதன் தன்னைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான். கலை உணர்வில்லாமல் மனிதன் இல்லை. இப்படி எவ்வளவோ நாம் சொல்லமுடியும். வாழ்வியல் தரிசனங்கள் என்பவை இத்தகையவை என்று நான் கருதுகிறேன். மார்க்க லெனின் முதலியவர்கள் இத்தகைய தரிசனங்கள் கொண்டவர்களாக இருந்திருக்க முடியும். குழந்தைகள் இல்லாமல் வாழ்வில்லை. மரணம் என்பது கூட ஒரு அனுபவம். இசை முதலியவற்றின் வழியே மனிதன் தன்னை இழந்து தனக்குள் விரிவடைகிறான். பிரபஞ்சம் இவனுக்குள் வந்து போகிறது. இவனுக்குள் கதிரவனும், நிலவும், வானம், பறவைகள் முதலியனவும் தங்குவதன் மூலம் இவனது ஆளுமையை விரிவுபடுத்தியிருக்கின்றன. இவனது விடுதலை உணர்வென்பது இப்படித்தான் இவனுக்குள் இயக்கம் கொள்கிறது. இவன் தான் மனிதன். இவனைக் குறுக்குகிற எந்த ஒன்றும் தத்துவம் ஆகமுடியாது, இலக்கியமாக முடியாது. மனிதன் தன்னைத் தொடர்ந்து படைத்துக் கொண்டுதான் இருக்கிறான். வரலாற்றுக் கண்ணோட்டம் மேலும் பல தளங்களில் விரிவு பெறுவதை மார்க்சியம் நமக்குச் சொல்லுகிறது. வரலாற்றுக் கண்ணோட்டத்தில் முக்கியமான ஒரு கூறு போராட்டம். அதாவது வர்க்கப் போராட்டம். இது மார்க்சியத்தின் முக்கியக் கண்ணி. வர்க்கப் போராட்டம் குறித்து எழுதுவதுதான் மார்க்சிய இலக்கியம் என்பது முக்கியமான உண்மை. வர்க்கப் போராட்டம் என்பதை இந்தியச் சூழலில் மட்டுமல்லாமல் உலகச் சூழலிலும் விரிவான அடிப்படைகளில் பொருள்படுத்த வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. பாட்டாளி வர்க்கம் மட்டுமே மனித விடுதலையைப் பெற்றுத் தரமுடியாது என்பது வரலாற்றனுபவம். மார்க்சியத்தினுள்ளும் முதலாளியம் வந்து தங்கிவிட முடியும் என்பதும் வரலாற்றனுபவம். உற்பத்திச் சக்திகளுக்கு அழுத்தம் தருவது முதலாளியத்தில் கொண்டு சேர்க்கும் என்பதும் நம் அனுபவங்கள். சோசலிசம் என்று பேசி பெருந்தொழில்களை வளர்த்து இயற்கையை நாசப்படுத்த முடியும். உழைக்கும் மக்களைச் சிதைக்க முடியும். சோசலிசத்தை அழிக்க முடியும். இங்கெல்லாம் தான் மாவோ முதலியவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. மார்க்சியத்தை மேற்கு நாடுகள் முதலியவற்றிலிருந்தும் கற்க வேண்டி இருக்கிறது. ஸ்டாலின் காலம் என்றெல்லாம் விரிவாக பேச வேண்டியிருக்கிறது. மார்க்சியத்தின் அடிப்படை நூல்களை மீண்டும் மீண்டும் அக்கறையோடு கற்க வேண்டியிருக்கிறது. தமிழ்ச் சூழலிலும் தனித்தன்மைகள் உண்டு. இவை குறித்தெல்லாம் பேசாமல் மார்க்சியம் குறித்து இன்று பேசமுடியாது. மார்க்சியம் குறித்த பாடநூல்கள் நமக்குப் பயன்படுவதில்லை. கட்சிக்குள் மார்க்சியம் முடங்கித்தான் போய்விட்டது. கட்சிக்கு வெளியிலும் மார்க்சியம் வளரமுடியும். வர்க்கக் கண்ணோட்டம் /வர்க்கப் போராட்டம் என்று தொடங்கி வரலாற்றுப் பார்வைக்குள் மார்க்சியம் விரிந்து செல்ல முடியும். மார்க்சியத்தின் வளத்தை இங்குதான் நிறைவாகக் காணமுடியும். எந்த ஒரு இலக்கியமும் மனிதனின் சமூகத் தொடர்போடு நின்று விடமுடியாது. சமூகம் என்பது வரலாற்றின் தொடர்ச்சியில் நிலவுகிறது. எந்த ஒரு மனிதனின் சமூகத் தொடர்பு குறித்துச் சொல்லும் இலக்கியத்தின் வழியே இந்த மனிதனின் வாழ்வுக்குரிய வரலாற்றுச் சூழலைக் குறைந்தளவுக்கேனும் தொட்டுணர முடியும். தனிமனிதனின் சிக்கல்கள் என்பவை வரலாற்று முரண்களோடு தொடர்புடையவை. சா. கந்தசாமியின் ’’சாயாவனம்" நேருவின் காலச் சூழலில் எழுதப்பட்ட நாவல். பெரிய தொழிற்சாலைகள், அணைக்கட்டுக்கள், மின் உற்பத்தி நிலையங்கள் முதலியவற்றை உருவாக்குவதன் மூலம் இந்தியாவை நவீன காலத்திற்குள் செலுத்த முடியும் என்று நேரு நம்பினார். சர்க்கரை ஆலை முதலிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். இதற்காக காடுகளை அழிக்கலாம். காடுகளை அழித்துவிட்டு அந்த இடத்தில் தொழிற்சாலை ஏற்படுத்தலாம். இது ஒரு முற்போக்கான திட்டம். இப்படிப்பட்ட புரிதலோடுதான் “சாயாவனம்” என்ற நாவலைச் சா. கந்தசாமி அன்று எழுதினார். காடுகளை அழிப்பது குறித்து இப்பொழுது நாம் கவலைப்படுகிறோம். இன்று சா.கந்தசாமி தன் நாவல் குறித்து வேறு வகையாகப் பேசுகிறார். இயற்கையை நாசம் செய்யக் கூடாது என்ற கருத்தில் தான் “சாயாவனம்” நாவலை எழுதினேன் என்று சொல்லுகிறார். காலத்திற்கு ஒத்த முறையில் இலக்கியத்தைப் பொருள் படுத்துவது தேவைதான் என்ற போதிலும், “சாயாவனம்” எழுதப்பட்ட சூழலை இன்று நாம் மறுக்க வேண்டியதில்லை. வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்பது மார்க்சியத்தின் வளமான பகுதி என்று சொல்வதோடு நிறுத்த முடியாது. வரலாற்றுப் பொருள் முதல்வாதம் குறித்தும் மிக மிக விரிவான ஆய்வுகள் மார்க்சியத்தின் எல்லைக்குள் நடந்துள்ளன. வர்க்கம், வர்க்க போராட்டம், வரலாற்றில் முரண்பாடுகள் முதலிய கருத்தினங்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு எந்த ஒரு இலக்கியத்தினுள்ளும், வரலாற்றுச் சூழலினுள்ளும் நாம் நுழைந்துவிடக் கூடாது. இது குறித்து மார்க்சு, எங்கல்சு முதலியவர்கள் நிறையவே சொல்லியிருக்கிறார்கள். எந்த ஒரு நிகழ்வுப் போக்கையும், அதன் உள்ளியக்கத்திலிருந்து விளக்காமல் நம் கையிலுள்ள சட்டகங்களுக்குள் அந்த நிகழ்வுப்போக்கை பொருத்துவது என்பது மார்க்சியமாக இருக்க முடியாது. இப்படி ஒரு சூழலில்தான் ’’நான் மார்க்சியன் அல்ல" என்றார் மார்க்ஸ். சட்டகங்களைப் பொருத்துவது என்பது வரலாற்றின் உள்ளியக்கத்தைக் காண மறுப்பது மட்டுமல்ல அழிப்பதாகவும் இருக்கமுடியும். கட்சிகள் இந்தத் தவற்றை பல நூறுமுறை செய்துள்ளார்கள். தமிழ்ச் சூழலிலும் பெரும்பாலும் நடந்திருப்பது இத்தகைய மார்க்சியத்திற்கெதிரான செயல்பாடுதான். கோசாம்பி, ரோமிலா தாபர் முதலியவர்கள் இத்தகைய தவறுகளைச் செய்யவில்லை. இதன் காரணமாகவும் கட்சிகள் இவர்களை ஏற்பதில்லை . ஈ.எம்.எஸ்., கலாநிதி கைலாசபதி, கேசவன் முதலியவர்கள் இப்படித்தான் மார்க்சியத்தைக் குறுகத் தரித்துப் பயன்படுத்தினர். இதன் காரணமாகவும் ஆய்வுகள் சிறக்கவில்லை. எனினும் இவர்களின் வளமான ஆய்வுகளை நாம் முற்றாக மறுக்கவும் முடியாது. கைலாசபதி அவர்களிடம் செயல்பட்ட ஜார்ஜ் தாம்சன் முதலியவர்கள் வழியே நிலைபெற்ற பிரிட்டீஷ் நேர்க்காட்சிவாதம் குறித்து தமிழவன் ஒருமுறை எழுதினார். வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியது என்பது குறித்து நாம் கூடுதலான கவனம் கொள்ளவேண்டும். வரலாற்றுப் பொருள்முதல்வாதம் போலவே, மார்க்சியத்தின் மெய்யியல் குறித்தும் நமக்கு கவனம் தேவை. இயங்கியல் என்பது ஆய்வு முறை அன்றி மெய்யியல் ஆகாது. விரிவான வரலாறு மற்றும் சமூகச் சூழலில் வாழ்வின் அர்த்தங்களைக் காண்பதன்மூலம் தான் மார்க்சிய மெய்யியலைத் தேடித் தொகுக்க முடியும். மார்க்சு கூறிய மனிதனின் அந்நியமாதலை ஒதுக்கிவிட்டு மார்க்சிய மெய்யியல் குறித்துப் பேசவே முடியாது. இயற்கையோடும், சமூகத்தோடும், தன்னோடும் ஒன்றி வாழ வேண்டியவன் மனிதன். மனிதனின் வாழ்வியல் நிறைவு பெறுவது, அந்நியமாதல் அற்ற நிலையில் தான் இதை மார்க்க அற்புதமாக விளக்கி உள்ளார். தமிழகச் சூழலில் எஸ். என். நாகராசன் தவிர மூத்த மார்க்சியர் என்பவர் யாரும் இது குறித்துப் பேசவில்லை . அந்நியமாதல் என்பது முதலாளியக் கோட்பாடுதான் என்று எஸ். இராமகிருஷ்ணன் எழுதினார். மார்க்சியத்தைக் கறாரான கோட்பாடு ஆக்க வேண்டும் என்று முயன்ற அல்தூசர் முதலியவர்கள், மார்க்சு கூறும் அந்நியமாதல் மதம் என்றும் ஹெகலியத்தின் தொடர்ச்சி என்றும் கூறினர். மார்க்சின் அந்நியமாதலைக் கண்டறிந்தவர் ஜார்ஜ் லூகாஸ். மனிதனின் அவலம் குறித்தும் வாழ்வியல் சிக்கல்கள் குறித்தும், கலை இலக்கியங்கள் குறித்தும் பேசுவதென்றால் அந்நியமாதல் பற்றிய புரிதல் இல்லாமல் பேசமுடியாது. வாழ்வியல் தரிசனம் என்று நீங்கள் குறிப்பிடுவதை அந்நியமாதல் என்பதன் வழியே தான் நான் புரிந்து கொள்கிறேன். வாழ்வியல் பற்றி மார்க்சிய நோக்கிலான புரிதலைப் பல பரிமாணங்களில் விரித்துச் செல்வதற்கு இந்தக் கோட்பாடுதான் உதவியாக இருக்கிறது. மார்க்சிய நோக்கில் சமயம் பற்றிய நம் புரிதல் இதன் மூலம்தான் சாத்தியப்படுகிறது. மாற்றுக் கருத்துடையவர் என்று மார்க்சியரால் ஒதுக்கப்படும் இலக்கியவாதிகளையும் சரியாகப் புரிந்து கொள்வதற்கு அந்நியமாதலை உள்ளடக்கிய மார்க்சிய பார்வைதான் எனக்கு ஆதாரமாகிறது. இதனைத் தான் நீங்கள் தாராளவாதம் என்று குறிப்பிடுகிறீர்கள். இலக்கியவாதிகள் என்பவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் என்பதில் அய்யமில்லை. ஆளும்வர்க்க கருத்தியல் இவர்களைப் பாதித்திருக்கிறது என்பதையும் நான் மறுக்கவில்லை. படைப்பாளிகள் என்ற முறையில் மக்களிடமிருந்து இவர்கள் பிரிந்தவர்களாகவும் இல்லை. நடுத்தர வர்க்கம் என்பதனுள்ளும் இவர்கள் கீழ் நிலையில் உள்ளவர்கள், இதன் காரணமாக பெரும்பாலான மக்களோடு இவர்கள் நெருக்கமானவர்கள். இவர்கள் கூடுதலான உள் முரண்பாடுகளோடுதான் வாழ்கின்றனர். இதன் காரணமாகவும் இவர்கள் கலை இலக்கியப் படைப்புக்களில் ஈடுபடுகின்றனர். அன்பு பற்றி இவர்கள் அதிகம் பேசுகின்றனர். அமைதி என்று பேசுகின்றனர். வாழ்வில் முரண்பாடுகள் வேண்டாம் என்று கருதுகின்றனர். அந்நியமாதல் என்பதை கோட்பாடு என்றளவில் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், உணர்வு அளவில் இவர்களுக்குள் அந்நியமாதல் செயல்படுவதை நாம் உணரமுடியும். இவர்கள் ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகள் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. சா. கந்தசாமி முதலியவர்களை நானும் இம்முறையில்தான் ஏற்கிறேன். அந்நியமாதலை ஒப்புக் கொள்ளும்போது ஸ்டாலினியப் போக்கை நாம் ஏற்பதற்கில்லை. இஸாடனோவ் பெயரில் வெளிவந்திருக்கிற சோசலிச யதார்த்தவாதம் என்பதை நாம் ஏற்பதற்கில்லை. லெனின் காலம் தொடங்கிக் கலை இலக்கியம் மற்றும் மெய்யியல் கோட்பாடுகளில் ஏற்பட்ட மார்க்சிய இறுக்கத்தை நாம் ஏற்க வேண்டியதில்லை. “லெனின் சார்பு இலக்கியம்” என்பது குறித்துச் சொன்னதை நீங்கள் சரியாகவே பொருள்படுத்தியிருக்கிறீர்கள். அந்நியமாதல் என்ற கருத்தை சோவியத் அறிஞர்கள் ஏற்கவில்லை. சோவியத் இரஷ்யாவில் அந்நியமாதல் ஒழிந்துவிட்டது. சோசலிசத்திற்குள் நாம் இருக்கிறோம் என்று அவர்கள் கருதியதுதான் இதற்குக் காரணம். ஸ்டாலினிய வரையறைகளை இவர்கள் மறுக்கவில்லை . இதன் காரணமாகவே தமிழகச் சூழலிலும், கட்சி சார்ந்த மார்க்சியர் அந்நியமாதல் குறித்து அக்கறை கொள்ளவில்லை. இந்தியத் தத்துவங்களை இவர்கள் புரிந்து கொள்ளாததற்கும் இதுதான் காரணம். இப்படி எல்லாம் நான் சொல்வது தாராளவாதம் அல்ல. மார்க்சியத்தின் எல்லைகள் எனக்குள் விரிந்து செல்கின்றன. இத்தகைய விரிவு மார்க்சியத்திற்குள் இயல்பாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். மார்க்சிய இலக்கியம் குறித்து உங்கள் கட்டுரைக்கான எனது எதிர்வினையை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இன்னும் நான் உங்களுடன் உரையாடுவதற்குத் தேவை இருக்கிறது. - 21.11.2000 எனது இலக்கியப் பார்வை மார்க்சிய நோக்கிலான எனது இலக்கியப் பார்வையின் மையம் எது என்பது குறித்து இங்கு சிலவற்றைச் சொல்ல வேண்டும். படைப்பியக்கம் என்பது தான் எப்பொழுதும் என்னைக் கவர்ந்த மையம் என்று சொல்லுவேன். புறநிலைகளுக்கு அகம் தரும் எதிர்வினைதான் இந்தப் படைப்பியக்கம், சமூகம், முரண்பாடுகளோடுதான் எந்தக் காலத்திலும் இயங்குகிறது. ஆதிக்கம் ஒரு புறமும் அடிமைத்தனம் இன்னொரு புறமாகவும் சமூகம் முரண்பட்டு இயங்குகிறது. சமூகத்தில் நிலவும் வறுமை, நோய் நொடிகள், வன்முறை, போட்டி, பொறாமை, கொலை களவு முதலிய சிக்கல்கள் அனைத்திற்கும் மூலகாரணம் என்று சமூக முரண்பாடுகளைத்தான் சொல்ல முடியும். வறுமை, போர் முதலிய சிக்கல்களைச் சான்றோர்கள் எந்தக் காலத்திலும் ஏற்பதில்லை. இலக்கியவாதிகளும் ஒப்புக் கொள்வதில்லை. இவற்றுக்கு எதிர்வினை தராமல் மனிதர்கள் வாழ முடியாது. இந்த எதிர்வினை என்பது முதலில் அகத்தில் இருந்து கிளம்புகிறது. எந்த ஒரு சமூகத்தின் உள்ளும் இத்தகைய எதிர்வினைக்கு இடம் இருக்கிறது. மரபு என்பதனுள் ஒரு முக்கியமான கூறு இத்தகைய எதிர்வினை. புத்தர் இயேசு முதலியவர்கள் இப்படி எதிர்வினை புரிந்தவர்கள். வள்ளுவர் இளங்கோ முதலியவர்களும் அவரவர்க்குரிய முறையில் எதிர்வினை செய்கிறார்கள். இந்த எதிர்வினை என்பதைத்தான் படைப்பியக்கம் என்றும் பொருள்படுத்துகிறோம். படைப்பென்பது இல்லாமல் மனிதன் இல்லை. கருவிகளை மட்டுமல்லாமல் கருத்துக்களையும் படைப்பதன் மூலம் தான் புறச்சூழலை மனிதன் மாற்றுகிறான். புறத்தை மாற்றும் பொழுது இவனது அகமும் மாற்றத்திற்குள்ளாகிறது. இப்படித்தான் மனிதன் தன்னையும் படைத்துக் கொள்கிறான். விலங்கிலிருந்து பிரிந்தவன் மனிதன் என்று சொல்வதற்கு இவனது தன்னுணர்வு என்பதைத்தான் முக்கியமான கூறாக நாம் கருதுகிறோம். விலங்குகள் படைப்பதில்லை. மனிதன் படைக்கிறான். தனக்கான உலகத்தைப் படைத்துக் கொள்கிறான். பலநூறு தொழில்கள், நிறுவனங்கள், குடும்பம், மதம், அரசு நிறுவனங்கள் முதலியவற்றைத் தன் தேவைகளுக்கு ஒத்த முறையில் தான் மனிதன் படைத்தான். இவற்றின் வழியே சமூக முரண்பாடுகளும் இயங்குகின்றன. முரண்பாடுகள் இல்லாமல் மனிதனுக்கு வாழ்க்கையோ, வளர்ச்சியோ இல்லை. கடவுளை மனிதன் உருவாக்கியது போலவே இன்னொரு கட்டத்தில் மனிதன் கடவுளை மறுக்கவும் செய்கிறான். தன்னுணர்வு இவனிடத்தில் விரிவு பெறும்பொழுது கடவுள் இவனுக்குத் தேவை இல்லை. தன்னுணர்வின் விரிவில் இவன் சமதர்மம் என்ற சமூக அமைப்பை வேண்டுகிறான். இத்தகைய சமூக அமைப்பில் மனிதன் நோய் நொடிகளின்றி, போட்டி பொறாமையின்றி போர்கள் இன்றி வாழமுடியும். படைப்பவன் என்ற முறையில் இவனுக்குள் ஒரு கலைஞன் எப்பொழுதும் உயிர்த்துடிப்போடு இயங்குகிறான். இவனுக்குள் அழகியல் உணர்வும், அற உணர்வும் இயல்பாக செயல்படுகின்றன. இவன் படைக்க விரும்புவது ஓர் அழகிய உலகம். அறங்கள் செயல்படுகின்ற உலகம். உழைப்பும் பகிர்வும் இந்த மனிதனின் ஆக்கத்திற்குரிய பங்குகள். இவன் படைக்கும் இலக்கியங்களுக்குள் இத்தகைய மனிதனைத்தான் மையப்படுத்துகிறான். புதியதொரு உலகத்திற்காக புதிய அறங்களுக்காக போராடுபவன் இந்த நாயகன். தன்னை இழந்தும் இவன் போராடுகிறான். இவனைத்தான் சான்றோன் என்று தமிழ் இலக்கியங்கள் முதலியவை பதிவு செய்திருக்கின்றன. இவன்தான், முன்னைய சமூகச் சூழலுக்கு முழு அளவிலான எதிர்வினை தருபவன். எதிர்வினை என்ற இந்த உணர்வு யாரிடத்தில் ஆழமாகவும், விரிவாகவும் இருக்கிறதோ அவனே சிறந்த படைப்பாளி. இங்கு படைப்பென்று சொல்லும் பொழுது கலைஞனையும் உள்ளடக்கி நாம் பேசுகிறோம். எல்லா மனிதருக்குள்ளும் இப்படி ஒரு படைப்பாளி இருக்கிறான் என்று சொல்லுகிறோம். படைப்பியக்கம் இல்லாமல் மனிதனுக்கு வாழ்வில்லை. உழவன் முதற்கொண்டு எல்லோரும் படைக்கின்றனர். ஒரு சிறு குழந்தைகூட விளையாட்டு முதலியவற்றின் வழியே படைக்கிறது. அறிவியல் அறிஞர்கள் முதலியவர்களும் படைப்பியக்கத்தில் இருக்கின்றனர். மார்க்சியன் இந்த படைப்பியக்கத்தின் பல பரிமாணங்களோடு செயல்படுபவன். வரலாற்றில் இவனது தோற்றம் ஒரு அற்புதம் என்று சொல்லுமளவுக்கு இவன் உலகத்தை முழு அளவில் புதியதாக படைக்க விரும்புகிறான். வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் மனிதன் இயற்கையோடும், சமூகத்தோடும், தன்னோடும் ஒன்றி வாழ்ந்தான் என்று கூறும் மார்க்ஸ், வர்க்க வேறுபாடுகள், தனிவுடமை, அரசு முதலியவை தோன்றி நிலைபெற்ற காலத்தில் மனிதன் இயற்கை முதலியவற்றிலிருந்து அந்நியமானான் என்பதை சிறப்பாக விளக்குகிறார். இந்த அந்நியமாதலுக்கு இடமில்லாத ஒரு சமுதாயம் குறித்து மார்க்ஸ் சொல்லுகிறார். இந்தச் சமூகத்தில் மனிதனுக்குள் பிளவு இல்லை. சமூகத்தினுள்ளும் பகை வடிவில் பிளவுகள் இல்லை. மனிதன் இயற்கையோடும் ஒன்றி வாழ்கிறான். பிரபஞ்சம் இவனுக்குள் வந்து போகிறது. அன்பும் அறனும் இவனுக்குள் தழைக்கின்றன. ஆதிக்கங்களுக்கு இனி தேவை இல்லை. பிரபஞ்சத்தோடும், இயற்கையோடும், சமூகத்தோடும், தன்னோடும் பெருமளவில் இவன் ஒன்றியவன், கலந்தவன், கரைந்தவன். இருமை நிலை என்பது இங்கு இல்லை. இத்தகையவனை அத்வைதம் முதலிய தத்துவங்கள் பல்வேறு பெயர்களில் விவரித்தன. புத்தர் கூறும் நிர்வாணம் இவனுக்கு இயல்பாக வாய்க்கிறது. தானும், இயற்கையும், உயிர்களும் இவனுக்குள் ஒன்றியவை. இயற்கை முதலியவற்றுக்குள் இவன் தன்னையும் காண்கிறான். தனக்குள் இயற்கை முதலியவற்றையும் காண்கிறான். இவன்தான் மார்க்ஸ் கண்ட மனிதன். கலைஞர்கள், இலக்கியவாதிகள், சான்றோர்கள், மெய்யியலாளர்கள் முதலியவர்கள் வரலாற்றுக் காலம் முழுவதும் கனவிலும், கற்பனையிலும் கண்ட மனிதன் இவன்தான். பல்வேறு வரலாற்றுக் காலங்களில் மறைந்தும், பிறகு அரைகுறையாக வெளிப்பட்டும் திரிந்தும் காணப்பட்ட இந்த மனிதன் இப்பொழுது முழு நிறைவாய் வரலாற்றில் முன் வருகின்றான். இலக்கியம் பற்றிய புரிதலில் இந்த மனிதனைத்தான் நான் தேடுகிறேன். திறனாய்வு என்ற முறையில் பெரும்பாலும் எந்த ஒரு படைப்பினுள்ளும் இவனை இனம் காணத்தான் நான் முயற்சி செய்கிறேன். வள்ளுவருக்குள்ளும், இளங்கோவுக்குள்ளும், சாத்தனாருக்குள்ளும் இவனது பரிமாணங்களைத் தேடுகிறேன். இவனுக்கு இன்னொரு பெயர் சித்தன். சமய இலக்கியங்களில் இவன் வெளிப்பட்டோ, மறைந்தோ வாழ்கிறான். காவியங்களில் இவன் நாயகன். ஆதிப்பொதுமை சமூகத்தின் இறுதியில் காணாமல் போன இவன் அப்புறம் எங்கெங்கோ தலைகாட்டுகிறான். முரண்பாடுகளுக்கு மத்தியில் இவனைத் தேடுவது திறனாய்வின் பணி என்பது தான் என் கருத்து. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி முதலியவர்களுக்குள்ளும் இவன் முகம் காட்டுகிறான். இலக்கியப் பார்வையில் தரிசனம் என ஒன்றைக் குறிப்பிடுகிறோம். நமக்குள் ஆழ்ந்து செல்லும்பொழுது, இத்தகைய மனிதனை நாம் தரிசனம் செய்கிறோம். இலக்கியங்களில் இந்த மனிதனை நாம் தரிசனம் செய்கிறோம். இலக்கியங்கள் இந்த மனிதனைத் தமக்குள் நிலை நிறுத்தி வைப்பதன் மூலம் வாசகர்களுக்கு இவனைப் பற்றிய தரிசனங்களை வழங்குகின்றன. சமயங்களுக்குள்ளும் இவன் சிறைப்பட்டான் என்பதனால் சமயங்களின் படைப்பல்ல இந்த மனிதன். சமயங்கள் இவனைக் கொண்டாடி இருக்கலாம், எனினும் சமூகத்தின் படைப்பு இந்த மனிதன். இராமன் முதலிய பெயர்களில் உலவியவன் இவன். இத்தகைய மனிதனை நம் சமகால இலக்கியங்களிலும் தேடிக் காணமுடியும். இவன் பழையவன் மட்டுமல்ல இவன் என்றும் புதியவன். இலக்கியங்களை ஆராயும்பொழுது நெருக்கடிகளுக்குள் அகப்பட்டிருக்கும் மனிதனை முதலில் காண்கிறோம். இந்த நெருக்கடிகளுக்கான காரணங்கள் எவையாக இருக்கமுடியும் என்று தேடும் பொழுது வரலாற்றுக்குள் செல்கிறோம். தனிமனிதன் என்பவனின் சிக்கல்களை அவன் அளவிலேயே பார்த்துத் தீர்க்கமுடியாது. தனிமனிதனின் சிக்கல்கள் சமூகச் சூழலிலிருந்து தோன்றுகின்றன. சமூகச் சூழலையும் குறுகிய அளவில் வைத்துப் பார்ப்பது போதாது. இந்தப் போதாமையை உணரும்பொழுது வரலாற்றுக்குள் செல்லுகிறோம். வரலாறுதான் நமக்குப் பலவற்றைத் தெளிவுபடுத்துகிறது. மனிதனின் சிக்கல்கள் என்று நாம் கண்டவை பலவும் எப்படித் தோன்றின், எப்படி வளர்ச்சி பெற்றன, எப்படி மாறி வந்தன என்பதையெல்லாம் வரலாறுதான் நமக்கு விளக்குகிறது. தனிவுடமை முதலியவை வரலாற்றின் ஒரு கட்டத்தில் தோன்றியவை. இன்னொரு கட்டத்தில் இவை தீர்ந்தாக வேண்டும். இதற்காக நாம் உழைக்க வேண்டும், போராட வேண்டும். மனிதன் இப்படித்தான் உருவானான், தன்னைப் படைத்துக் கொண்டான். இன்றைய மனிதனும் இப்படி ஒரு சூழலில் வாழ்கிறான். துயரப்படுகிறான். முரண்பாடுகள், தடைகள், நெருக்கடிகள் என்பனவற்றைக் கடந்து செல்லும்பொழுதே மனிதன் தனக்குள் விரிவு பெறுகிறான், தன்னைக் கண்டடைகிறான். இவனுக்குள் செயல்படுவது மெய்யியல் பார்வை. தனிவுடமை முதலிய புறச்சூழலை வெல்பவன் இந்த மெய்யியலாளன். இவன்தான் சான்றோன், இவன்தான் சித்தன் , இவன்தான் மார்க்சியன். இலக்கியத் திறனாய்வு என்று தொடங்கி தனி மனிதன், சமூகம் என்று கடந்து வரலாற்றுக்குள்ளும் தேடி இந்த மனிதனைக் கண்டு வளர்த்தெடுப்பது மெய்யியல், எந்த இலக்கியத்தினுள்ளும் இத்தகைய மெய்யியல் பார்வை குறைந்தளவுக்கேனும் இடம்பெற வேண்டும். தனிமனிதன் என்ற அளவில் இலக்கியம் நின்று விடுவதில்லை. வரலாற்றுக்குள் செல்லும் பொழுது இலக்கியம் / நாவல் வளம் பெறுகிறது. மெய்யியல் பார்வையும் உள்ளடக்கி வரலாற்றுச் சூழலில் வைத்து மனிதனைப் படைப்பது பேரிலக்கியம். மார்க்சியவாதிக்கு இது சாத்தியம். மார்க்சியர் அல்லாதவர் படைக்கும் பேரிலக்கியங்களுக்குள்ளும் இத்தகைய மெய்யியல் பார்வை உள்ளடங்கி இருக்க முடியும். என்னைப் பொருத்தவரை வடிவங்களுக்கு நான் எப்பொழுதும் முதன்மை தருவதில்லை. உள்ளடக்கத்தின் வெளிப்பாட்டுக்கு வடிவங்களின் தேவையை நான் மறுப்பதும் இல்லை. இலக்கிய உத்திகள் முதலியவை இரசனைக்குரியவை. இவற்றையெல்லாம் கவனிப்பதோடு நின்றுவிட இயலாது. இலக்கியத்தின் உள் ஆழங்களில் பயணம் செய்யவேண்டும். மொழி என்ற அளவில் இலக்கியங்கள் கட்டுப்படுவதும் இல்லை. வரலாறு, உளவியல் முதலியவற்றை நேரிடையாக சொல்வனவற்றையும் இலக்கியம் என்ற விரிந்த எல்லைக்குள் வைத்து நாம் காணமுடியும். இலக்கியம் என்ற பயணத்தில் இருப்பவர்களுக்கு எதிரிகள் என்று எவரும் இல்லை. வரலாற்றுச் சூழலுக்குள் எத்தனையோ வடிவங்களில் கட்டுப்பட்டவர்கள் இந்த மனிதர்கள். கருணை இல்லாமல் இலக்கியங்களை வாசிக்க முடியாது. இப்படி ஒரு விரிந்த பார்வையை நமக்குத் தருவது மார்க்சியம். மனிதன் என்று நாம் தொடர்ந்து பல முறையும் குறிப்பிடும்பொழுது வரலாற்றுச் சூழலுக்குள் வந்துவிட்ட மனிதனைத்தான் குறிப்பிடுகிறோம். ஆதிக்கங்கள் மனிதனைப் படைப்பியக்கத்தில் எத்தனையோ குளறுபடிகளைச் செய்கின்றன, அழிக்கவும் செய்கின்றன. எனினும் மனிதன் தன்னை முற்றாக இழந்து விடுவதில்லை. வரலாறு இவனை தொடர்ந்து தீண்டுகிறது. வரலாற்றுச் சூழலை முற்றாகத் தாண்ட முடியாது என்பதும் உண்மைதான். அப்படி முயற்சி செய்து எம்பிக் குதிக்கும் பொழுது அவனது கைகால்கள் முறிபடவும் செய்யும். இத்தகைய நிகழ்ச்சிகளில் மனிதன் ஈடுபடவும் செய்கிறான். இந்த முயற்சிகள் ஒருவகையில் புனிதமானவை. இத்தகைய முயற்சிகள் அறவே வேண்டாம் என்று சொல்லி வரலாற்றுச் சூழலின் எல்லைகளுக்குள்ளேயே மனிதன் சுற்றிக் கொண்டிருக்க முடியாது. படைப்பியக்கம் குறித்து மார்க்சியம்தான் மிகச் சரியான விளக்கத்தைத் தரமுடியும். மார்க்சிய இயங்கியலில் பாய்ச்சல் என்ற ஒரு விதியை நாம் காண்கிறோம். உயரத் தாண்டுதல் அல்லது நீளத் தாண்டுதலில் முன் கொஞ்ச தூரம் ஓடிவந்து வேகமெடுத்து அப்புறம் பாய்ந்து தாண்ட வேண்டும். தர்க்கங்கள் ஒன்று, இரண்டு, மூன்று என்று அடி அடியாகச் சென்று கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் எட்டு, பதினாறு எனப் பாய்ச்சல் நிகழும். இதை பண்பு மாற்றம் என்றும் கூறுகிறோம். இலக்கியப் படைப்பு என்பதினுள் செல்லும் மூலப்பொருள்கள் என்பன, அதே கலவையின் படைப்பாக வெளிப்படுவதில்லை. இடையில் பாய்ச்சல் நிகழ்கிறது. அப்பொழுது புதியது பிறக்கிறது. உள்ளே மூலப்பொருள்கள் புதிய பொலிவோடு, புதிய அர்த்தங்களோடு வெளிப்படுகின்றன. இந்தப் புதிய படைப்பு அந்தப் படைப்புக்குரிய மனிதனை மட்டுமல்லாமல் மூலப் பொருள்களையும் மாற்றிக் காட்டுகிறது. வரலாற்றை இப்படித்தான் நாம் பொருள்படுத்துகிறோம். இன்றைய தேவைகளுக்கு ஒத்த முறையில் முன்னைய வரலாற்றைத் தொகுக்கிறோம், பொருள்படுத்துகிறோம். வரலாற்றை இப்படித்தான் கட்டமைக்கிறோம். அறுபட்டு வருவது வரலாறு என்பது உண்மை என்றாலும் மூலப்பொருளின் தொடர்பில்லாமல் படைப்பு இல்லை என்பதுபோல் வரலாறு இயங்கத்தான் செய்கிறது. படைப்பு என்பதை உற்பத்தி என்று மட்டுமே வர்ணிக்கிறவர்கள் மூலப்பொருள்களின் கலவை என்றுதான் படைப்பை விளக்கமுடியும். யதார்த்தவாதம் என்று சிலர் அழுத்திச் சொல்லும் பொழுது இப்படித்தான் அதைக் காணவேண்டியிருக்கிறது. யதார்த்தத்தினுள்ளும் நிகழும் பாய்ச்சலை நவீனத்துவம் விளக்குகிறது. இதுவும் மார்க்சியத்திற்கு ஒத்ததுதான். படைப்பு என்பதன் இயக்கம் மனிதனை முற்றாக வசப்படுத்துகிறது. கலைஞர்களைப் போலவே அறிவியலாளர் முதலியவர்களும் தமக்குள் செயல்படும் படைப்பியக்கத்திற்கு முற்றாக வசப்படுகிறார்கள். ஒரு உழவன் அல்லது தச்சுத் தொழிலாளி தன் கலைக்கு வசப்படாமல் இல்லை. இப்படி வசப்படும் பொழுது இவர்கள் தம்மை இழக்கிறார்கள். மெய் வருத்தம் பாரார், பசிநோக்கார் என்றெல்லாம் சொல்லப்படுவது இத்தகையவர்களைக் குறித்துத்தான். இவர்களுக்கும், காலம், இடம் என்ற உணர்வுகூட குறைந்து போகிறது. பணம், அதிகாரம் என்பவை கூட இவர்களிடம் செல்லுபடியாவதில்லை. மில்டன் முதலியவர்களை மார்க்ஸ் இப்படித்தான் விளக்கினார். கம்பர் காவியம் படைத்தது இந்த முறையில்தான். இதனால்தான் இவர்களின் படைப்புகளுக்கு விலை இல்லை, விலையில் முடியாது என்று சொல்லுகிறோம். இந்தப் படைப்புக்கள் இவர்களின் உயிர் சக்தியைத் தமக்குள் உள்வாங்கிக் கொண்டு பிறந்தவை. மரணம்கூட கலைஞனுக்கு முக்கியம் இல்லை. மரணத்தின் பிறகும்தான் படைப்புக்களின் வழியே கலைஞன் வாழ்கிறான். மார்க்ஸ், இலெனின், வள்ளுவர், இளங்கோ முதலியவர்கள் இப்படித்தான் நமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குள் நெடுங்கால் வரலாறு உயிர்த்துடிப்போடு விளங்குகிறது. எந்தளவுக்கு மூலப்பொருள்கள் எண்ணிக்கையில், அளவில் அதிக அளவு உள் செல்லுகின்றனவோ அந்த அளவுக்குப் படைப்பின் செறிவு கூடியிருக்கும். பலதுறை சார்ந்த படிப்பறிவு, வாழ்வியல் அனுபவங்களும் அதிக அளவில் உடைய மனிதன் பெரும் படைப்புக்களை உருவாக்குகிறான். ஐன்ஸ்டீன், மார்க்ஸ், டாவின்சி முதலியவர்களை இங்கு நினைவு கொள்ளலாம். இவர்கள் தான் வாழ்வின் நிறைவைத் தங்களுக்குள் அனுபவிக்கிறார்கள். ஒற்றைப் பரிமாணத்தில் அல்லது ஒரு சில பரிமாணங்களில் வாழ்பவன் வாழ்வின் முழு நிறைவைக் காண முடியாது. இலக்கியப் படைப்பென்பதற்கும் இந்த நியாயம் பொருந்தும். சிற்பி ஒருவன் தன் சிற்பத்தைச் செதுக்கும் / வடிக்கும் பொழுதே அவன் சிற்பி ஆகிறான் என்ற மார்க்ஸின் கூற்று இங்கு நினைவு கூறத்தக்கது. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பதன் பொருள் இதுவாகத்தான் இருக்கும். எழுதி, எழுதித்தான் நான் எழுத்தாளன் ஆனேன் என்று ஜெயகாந்தன் ஒருமுறை கூறினார். படைப்பியக்கத்தின் தீவிரமாக உள்ளிருக்கும் நிலையில், படைப்பவனே புரிந்து கொள்ள முடியாத நிலையில் புதிய வீச்சுக்கள் அவனுள்ளிருந்து புறப்படும். தனக்குள் இவன் ஆழ்ந்து செல்லும்பொழுது வரலாற்றின் ஆழத்திற்குள் செல்லுகிறான். தனக்குள் என்ன என்னவோ காண்கிறான். வரலாற்றுக்கு வெளியில் இவன் இல்லை. நெடுங்கால வரலாற்றினுள் ஆயிரக்கணக்கில் மனிதனுக்குள் அனுபவங்கள் சேர்ந்துள்ளன. ஆழ்மனத்தில் இந்த அனுபவங்களைக் கொண்டுள்ள இவனுக்கு மேல் மனத்தோடு உறவில்லை. வரலாற்றின் ஆழத்திற்குள் இயங்கும் பொழுதுதான் இவனுக்குள் அற்புதங்கள் புறப்படுகின்றன. தொன்மங்கள் முதலியவை இப்படித்தான் பிறக்கின்றன. பன்முகத் தன்மையோடு கூடிய படிமங்கள் இவனுக்குள் இப்படித்தான் பிறப்பெடுக்கின்றன. கண்ணகி, மாதவி, மணிமேகலை என்று எத்தனையோ படிமங்கள். ஹேம்லட், மேக்பத், பாஸ்டஸ் என்றும் எண்ணற்ற படிமங்கள். இலக்கியத்தினுள் இவை அற்புதங்கள். பேரிலக்கியங்கள் இத்தகைய படிமங்களோடு இயங்குபவை. இவை இன்றைக்கும் புதிய பொருள் வழங்குகின்றன. தனக்குள் படைப்பியக்கம் கொண்ட ஒரு வாசகன் இந்த உன்னதங்களைத் தொட்டுத் தனக்குள் கொண்டு வரமுடியும். பாரதிக்குக், கண்ணன் படிமம். கண்ணன் என்ற படிமத்திற்குள் பாரதி பலரைக் காணுகிறான். நம் வாழ்வுக்கு அர்த்தம் தரும் பலரையும் இந்தப் படிமத்திற்குள் பாரதி காணுகிறான். பன்முகப் பரிமாணங்களை உடைய எந்த ஒரு மனிதனுக்குள்ளும் குருவும் இருப்பான், சீடனும் இருப்பான், அரசனும் இருப்பான், ஆண்டியும் இருப்பான், இவனுக்குள் தோழனும் இருக்கமுடியும். காதலியும், குழந்தையும் இருக்கமுடியும். இவன்தான் அற்புத மனிதன். இந்தளவுக்கு அவன் தன்னை அவன் செறிவுபடுத்திக்கொள்ள முடியும். கண்ணன் இவனுக்குத் தெய்வம் மட்டுமல்ல சீடனும், தோழனும் ஆகிறான். பாரதிதாசனுக்குத் தமிழ் என்பது ஒரு மூலப்படிமம். எல்லாம் இவருக்குத் தமிழாகத் தெரிகின்றன. அன்பும், அறமும் இவருக்குத் தமிழ். அகமும் புறமும் தமிழ் காதலும், வீரமும், கலையும், தவமும் இவருக்குத் தமிழ். இப்படி எல்லாவற்றையும் தமிழ் என இவர் காண்கிறார். ஒரு பக்தன் கடவுளை வைக்கும் இடத்தில் பாரதிதாசன் தமிழை வைக்கிறார். இப்படித்தான் இவர்களுக்குள் படைப்பியக்கத்தைச் சரியாக நாம் காணமுடியுமென்றால் இனி வள்ளுவரையும், இளங்கோவையும் இந்தத் திறவுகோல் கொண்டு புரிந்துகொள்ள முடியும். இவர்களைப் போல் தான் புத்தர் முதலியவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்சியருக்குச் சமதர்மம் தான் மையம். இந்த மையத்திலிருந்து தான் அவன் எல்லாவற்றையும் காண்கிறான். இதன்வழியே தான் பேராற்றல், பெருங்காட்சி வசப்படுகிறது. - 27.11.2000 எழுத்தாளனும் வர்க்கப் பார்வையும் “புதிய கலாச்சாரம்” அக்டோபர் 2000 இதழில் வெளிவந்த இரண்டு கட்டுரைகளை முன்வைத்து, எழுத்தாளர்களின் வர்க்கப் பார்வைகள் குறித்து இங்கு பார்க்கலாம். அண்மையில் ஞானராஜசேகரன் தயாரிப்பில் வெளிவந்த “பாரதி” திரைப்படம் குறித்து ஒரு கட்டுரை. ’தமிழ் இனி 2000" கருத்தரங்கு குறித்து இன்னொரு கட்டுரை. செறிவாகவும், கூர்மையாகவும் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளில் கடுமை தொனிக்கிறது என்ற போதிலும் பெரிதும் வரவேற்கத்தக்கவை இந்தக் கட்டுரைகள். பாரதியார் திரைப்படம் பலரால் பாராட்டப்படுவதும், சிலரால் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தச் சிக்கல் இப்பொழுது நமக்குத் தேவை இல்லை. பாரதியார் குறித்த படிமம் ஞானராஜசேகரனால் எவ்வாறு முன் வைக்கப்படுகிறது என்பது நமக்கு முக்கியம். “நான் உயர்ந்த பீடத்திலிருந்து உலகைப் பார்க்கிறேன்’’ என்று பாரதியார் இப்படத்தில் சொல்லுகிறார். பாரதியார் கவிதையிலோ, உரைநடையிலோ இப்படி வாசகம் இல்லை. கவிதை ஆற்றலில் தன்னிகரில்லாதவர் என்று தொடங்கிப் பாரதிக்கு எவ்வளவோ புகழ் சேர்ப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். பாரதி நம்மிலும் மேம்பட்டவர்தான் இதற்காகப் பாரதியை வழிபாட்டுக்குரியவராக நாம் மாற்றவேண்டியதில்லை. பெருமிதம் மனிதனுக்குத் தேவை என்பதை நாம் மறுக்கவில்லை. எந்த ஒரு பெரிய மனிதனும் நாம் உங்கள் தலைக்கு மேல் இருக்கிறேன் என்று சொல்வதில் தொனிப்பது ஆணவம். “பணியுமாம் என்றும் பெருமை” என்று வள்ளுவர் கூறியது மிகச்சிறந்த உண்மை. சிறுமைதான் தன்னை பிறரைவிட உயர்த்திக் கொள்ளும். படம் முழுவதும் பாரதியார் இப்படி ஒரு படிமத்தோடு தான் அலைகிறார். இறுதியில் ஒரு காட்சியில் தன் பெண்ணின் திருமணத்திற்காகப் பாரதியார் பூணூல் போட்டுக் கொள்ள நேருகிறது. உயர்ந்த பீடத்திலிருந்து என்னால் இறங்கிவர முடியும் என்று அதே தோரணையில் பாரதி கூறுவதாக வசனம். இப்படி இறங்கி வருவதிலும் பாரதிக்குப் பெருமை சேர்க்கிறார் தயாரிப்பாளர். பாரதிக்கு வேறு வழி இல்லை இறங்கி வர வேண்டியிருக்கிறது, பெருமிதத்தோடு வரமுடியாது. அவமான உணர்ச்சியோடுதான் வரமுடியும். புதுவை வாழ்வின் இறுதிக் காலத்தில் பாரதி என்னவாக இருந்தார். அரவிந்தரோடு உறவு இல்லை. அரவிந்தர் மகானாகி விட்டார். பக்தர்கள் இவரது பாதத்தில் விழுந்து பணிகிறார்கள். அரவிந்தரும் ஏற்றுக் கொள்கிறார். பாரதியாரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. அரவிந்தரை விட்டுப் பிரிகிறார். வ.உ.சி. எங்கே போனார் என்று தெரியவில்லை. நண்பர்கள் இல்லை கடுமையான வறுமை. அபினுக்கும் ஆட்பட்டுவிட்டார். பாரதி முன்னைய பாரதியாக இல்லை. புதுவையை விட்டு வெளியேறுகிறார். கடலூரில் கைது செய்யப்படுகிறார். சி.பி இராமசாமி ஐயர் முதலிய பலரது ஆலோசனைக்கு இணங்க மன்னிப்புக் கடிதம் எழுதுகிறார். கடையத்துக்குச் செல்லுகிறார். அங்கும் பல கேவலங்கள். முற்றிலும் மதவாதி ஆகிறார். பிறகு சென்னைக்குச் சென்ற பாரதியார் பெரிதாக எதையும் சாதிப்பதற்கில்லை . இறக்கிறார். பாரதியாருக்குள் ஒரு வீழ்ச்சியைத்தான் பார்க்கிறோம். இந்த வீழ்ச்சிக்குப் பாரதியார் மட்டுமே பொறுப்பா? நம்மால் இப்படிக் கருத முடிவதில்லை. வெளியில் இயக்கமில்லை. வ.உ.சி. க்கும் இதுதான் நேர்ந்தது. திலகரோடு இருந்தபோது தீவிரமாக இருந்தார் பாரதியார். விடுதலை இயக்கம் தீவிரப்பட்ட காலம் அது. வங்கத்தில் நடைபெற்ற இளைஞர்களின் தீவிர இயக்கங்களை வரவேற்றவர் இந்த பாரதி. திலகருக்குப் பிறகு தீவிரம் இல்லை. காந்தி இன்னும் இயக்கத்தில் மேலுக்கு வரவில்லை. இப்படி ஒரு கால கட்டம். பாரதியின் வீழ்ச்சிக்குச் சமூகச் சூழலும் ஒரு முக்கியமான காரணம். இதை ஒதுக்கிவிட்டு பாரதியிடம் மட்டுமே குற்றம் காண்பது சரியான மார்க்சியப் பார்வையாகவும் இருக்கமுடியாது. பாரதி உயிரோடு இருந்திருந்தால் பைரன் போல மாறியிருப்பார். ஷெல்லியாக அவர் செயல்பட்டிருக்க முடியாது என்கிறது “புதிய கலாச்சாரம்”. மார்க்சின் அற்புதமான மேற்கோள் ஒன்றையும் “புதிய கலாச்சாரம்” எடுத்துக்காட்டுகிறது. 1920 - ல் கம்யூனிஸ்டுகள் இல்லை. விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள் பெற்ற பங்கு குறித்து நாம் பெரிதாக சொல்வதற்கில்லை. காங்கிரஸ் கட்சிக்குள் அவர்களும் இணைந் திருந்தனர். “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் அவர்கள் இல்லை. விடுதலை இயக்கம் எப்படியோ காந்தியின் வசப்பட்டிருந்தது. காந்தியோடு இருந்திருந்தாலும் பாரதி மீண்டும் புத்துயிர்ப்போடு செயல்படவும் வாய்ப்பு இருக்கக்கூடும். பாரதி ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் கவிஞர். பாரதி இந்த வகையில் போராளி. இதற்கு மேல் பாரதி இல்லை. இந்து மதச்சார்பு அவரது வீழ்ச்சிக்குக் காரணம் என்று “புதிய கலாச்சாரம்” போலவே வேறு சிலரும் சொல்லக்கூடும். மதம் குறித்த மார்க்சியப் பார்வை குறித்து இங்கு விரிவாக சொல்வதற்கில்லை. பாரதி கடவுளை நம்பினார். இந்துவாகத்தான் இருந்தார். அன்றியும் அவர் பார்ப்பனர். இந்துவாக இருக்கிறபோதே அல்லாவையும், இயேசுவையும் பாடினார். கண்ணனும், புத்தனும் ஒன்று என்றார். வேதங்களைப் புதுமை செய்தார். புராணங்கள் கூறும் பொய்க்கதைகளைச் சாடினார். தொன்மையான வேத காலத்தைக் கிருதயுகம் என்றார். அக்காலத்தில் ஆணும், பெண்ணும் சமம் என்றார். விவேகானந்தரைப் போல சமதர்மத்தைப் பாரதி ஏற்றுக் கொண்டார். பிற்போக்குப் பார்ப்பனியத்தைச் சாடினார். நந்தனை ஒரு பார்ப்பனன் என்றார். பொதுவுடமை தேவை என்றார். நிலத்தைப் பொதுவாக்குங்கள் என்றார். வன்முறையால்தான் இதைச் சாதிக்கலாம் என்றால் செய்ய வேண்டும் என்றார். பாரதிக்குள் செயல்பட்ட பார்ப்பனியம் இடதுசாரிப் பார்ப்பனியம். வெறும் பூணூல், சாதி முதலியவற்றை வழிபடுவது வலதுசாரிப் பார்ப்பனியம். அறிவே தெய்வம் என்று சொல்லுமளவுக்குப் பாரதி சென்றார். பாரதியைப் பொறுத்தவரை மதப்பார்வை என்பதும் தேசியம் மட்டுமல்லாமல், சமதர்மமும் இணைந்திருந்தது. வரலாற்றில் இத்தகைய போக்கை நாம் மறுக்கமுடியாது. எவ்வளவு காலத்திற்கு மதமும் தேசபக்தியும், சமதர்மமும் இணைந்திருக்கும், எப்போது வெட்டிக் கொள்ளும் என்றெல்லாம் ஆராய்வதற்கு இடம் உண்டு. ஆகவே பாரதியின் வீழ்ச்சியை இந்துமதம் என்று சொல்லி சுருக்கிவிட முடியாது. வள்ளுவர் மனநலம் என்றும், இனநலம் என்றும் சிலவற்றைச் சொல்லுகிறார். மனநலம் சிறப்பாக இருந்த போதிலும் ஒருவருக்கு இனநலமே வலிமை தரும் என்கிறார் வள்ளுவர். மனநலம் என்பதை இனநலத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்றும் வள்ளுவர் சொல்லுகிறார். இனம் என்பதற்குப் பல பொருள் காணமுடியும். ஒரு தனிமனிதன் சார்ந்துள்ள சாதி என்றும் வர்க்கம் என்றும், சான்றோர் என்றும், தேசம் என்பதுவரை பல கூறுகள் காணலாம். தனிமனிதனின் அறிவு, பண்பாடு, மன உறுதி, கலை உணர்வு என்று பல வகையான பண்புகளும் அவன் சார்ந்துள்ள சூழலைப் பொறுத்து அமைகின்றன. இங்கும் தனக்குரிய தேர்வு எது என்பதையும் நாம் மறுக்கவில்லை. இதுவும் எந்தளவுக்கு என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது. எழுத்தாளனின் வர்க்கப்பார்வை என்று பேசுவதற்கும் வள்ளுவரின் சில குறள்கள் நமக்குப் பயன்படுகின்றன. “தமிழ் இனி” கருத்தரங்கில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் குறித்து “புதிய கலாச்சாரம்” சில கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறது என்றபோதிலும் நாம் எழுத்தாளர்களின் வர்க்கம் மற்றும் பார்வை குறித்து சிலவற்றைச் சொல்ல வேண்டும். இந்த எழுத்தாளர்கள் நடுத்தர மக்கள். இவர்கள் வங்கிகளிலும், கல்வி நிலையங்களிலும் பணிபுரிபவர்கள். இவர்கள் பெரும்பாலோர் கைநிறைய ஊதியம் பெறுகிறார்கள். இலக்கியம் என்றும் கலாச்சாரம், விமர்சனம் என்றும் இவர்களால் பேசமுடியும். இவற்றோடும்தான் இவர்கள் வாழ்கிறார்கள். அறிவாளிகள் என்ற முறையில் இவர்கள் கடுமையாக விவாதிக்கிறார்கள். ஒருவரை மற்றவர் காய்கிறார்கள். தாக்கிக் கொள்கிறார்கள். தேவையான பொழுது கூடிக்குலவுகிறார்கள். வணிக பத்திரிகைகளில் எழுத வாய்ப்புக் கிடைக்கும் பொழுது மார்க்சியர்களும் மறுப்பதில்லை. தலித் இலக்கியவாதிகளும் எழுதுகிறார்கள். தங்கள் அறிவின் மீது இவர்களுக்குப் பெருத்த மரியாதை உண்டு. - பிறரைச் சாடுவதன் மூலம் தங்களை இவர்கள் உயர்த்திக் கொள்கிறார்கள். இவர்களுடைய மன ஆரோக்கியம் கேள்விக்குரியது. இவர்களது சமூக அக்கறை கேள்விக்குரியது. “புதிய கலாச்சாரம்” இவர்களைத் தாக்குவதில் உள்ள நியாயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும். இவர்களைத் தாக்கத்தான் வேண்டும். அடித்தள மக்கள் என்ற தளத்திலிருந்து இவர்கள் கல்வியறிவு, பதவி முதலியவை காரணமாக மேல்நிலைக்கு வந்துவிட்டவர்கள். இன்னும் அடித்தள மக்கள் மீது அக்கறை இருப்பதாக சொல்லிக் கொள்ள இவர்களுக்கு முடியும். 8000/10000 என்று இவர்கள் வாங்கும் ஊதியம் இவர்களுக்குப் போதுவதில்லை. காரணம் பெருக்கிக் கொள்வதற்கு இன்னும் வாழ்க்கை வசதிகள் உள்ளன. இவர்கள் பெரும் இந்த ஊதியத்தின் ஒரு பகுதி இவர்களது உழைப்பதிலிருந்து வருவது இல்லை. உழைப்பதைக் காட்டிலும் இவர்கள் அதிகம் பெறுகின்றனர். இந்தத் தொகை எங்கிருந்து வருகிறது. தமக்குக் கீழ் உள்ள மக்களைச் சுரண்டுவதிலிருந்துதான் இந்தத் தொகை கிடைக்கிறது. இவர்கள் நேரிடையாகச் சுரண்டுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் மக்களை வழிநடத்த, அதிகாரம் செய்ய, ஏமாற்ற இந்தக் கூடுதல் தொகை அரசு முதலிய நிறுவனங்களால் இவர்களுக்குத் தரப்படுகிறது. சுரண்டலோடு இப்படி உறவு கொண்டு இருப்பது இவர்களால் ஒப்புக் கொள்ள முடியாது. ஒப்புக் கொள்ள முடியுமென்றால் பகிர்ந்து கொள்வார்கள். கட்சிக்குக் காணிக்கை வழங்குவது பகிர்வு அல்ல. உடைமைப் பற்று இவர்களையும் பற்றிக் கொண்டுதான் இருக்கிறது. எழுத்தாளர்கள் இந்த வரையறையோடுதான் செயல்படுகின்றனர். புகழ், பெருமை, புத்தகம், பரிசு, பாராட்டு தேவைப்படுகிறது. வசதி குறைந்தவர்களும் இவற்றுக்காக அலைகிறார்கள். இவ்வளவு சொல்வது போதும். இவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கம். இவர்களால் கீழிறங்க முடியாது. கருணையோடு தம் கீழ் உள்ளவர்களைப் பற்றி இவர்களால் எழுத முடியும். கருணை என்பது யாருடைய பண்பு. பணக்காரன் கருணை காட்டுகிறான். அதிகாரத்தில் உள்ளவனும் கருணை காட்டுகிறான். எழுத்தாளனும் கருணை கொள்கிறான். இவன் தன்னை இழக்கமாட்டான். செல்வச் செழிப்போடு சிலர் நடத்தும் கருத்தரங்கில் இவன் பங்கு பெறுவானே அல்லாமல் தன்னைப் போன்ற சிலருடைய வாழ்க்கை வசதிகளைத் திரட்டி மக்களின் விடுதலைக்கான ஒரு கருத்தரங்கு என்ற முறையில் கூட இவன் செயல்பட மாட்டான். இவன் எழுத்தாளனாக இருக்கட்டும். யாரோடு இணைந்து, யாருக்காக, எந்த நோக்கத்திற்காக எழுதுவது என்பதில் இவனுக்குத் தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். உழவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெண்கள் மனநோயாளி ஆகிறார்கள். தம் குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்கிறார்கள். நெசவாளிகள், கைவினைஞர்கள், பான்பராக் முதலிய போதைகளுக்கு அடிமையாகிறார்கள். கம்யூனிஸ்டுகளும் மக்களுக்குத் துரோகம் செய்கிறார்கள். அதிகார வெறி பிடித்து அலைகிறார்கள். பதவியைக் கைப்பற்றச் சதி செய்கிறார்கள். இப்படி எத்தனையோ கொடுமைகள் இங்கு நாள்தோறும் நடைபெறுகின்றன. வறுமை முதலிய கொடுமைகளுக்கு ஆட்பட்டு சோரம் போகிறார்கள். உடல் உறுப்புக்களை விற்கிறார்கள். இப்படி நடைபெறும் எத்தனையோ கொடுமைகளுக்கு யார் காரணம்? இந்தக் கொடுமைகளின் மூலகாரணம் என்ன? அறிவாளிகள் யார் நலத்திற்காக உழைக்கிறார்கள்? வாழ்க்கைக்கு எந்த அளவிற்கு வசதிகள் தேவை? சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கு நாமும் தான் காரணம். இப்படித் தொடங்கி எவ்வளவோ நாம் சிந்திக்க வேண்டும். முதலாளிகளிடம் பரிசும் பாராட்டும் பெறுவது கேவலம். அரசு தரும் மரியாதையும் நமக்குத் தேவை இல்லை. நமக்கான வசதிகளை நம்மவர்களைக் கொண்டு திரட்டிக் கொள்ள முடியும். முதலாளிகளின் நன்கொடைகளுக்காகக் கையேந்துவது கேவலம். நம் சக்தியை நாம் உணரவேண்டும். ’கணையாழியை" காய்வது பயனில்லை. “காலச்சுவடு”இதழை நொந்து கொள்வதும் பயனில்லை. பெரும் செலவில் நடைபெறும் கருத்தரங்கைக் காய்ந்து கொண்டு இருக்க முடியாது. நாமும் செய்ய முடியும். சரியாகச் செய்யமுடியும். எழுத்தாளன் எந்த வர்க்கம்? எந்த வர்க்கத்தோடு வாழ்வு / விடுதலை? இப்படி எல்லாம் சிந்திக்காமல் எழுதமுடியாது. “புதிய கலாச்சாரத்திற்கு” நாம் நன்றி சொல்வோம். இப்பொழுது பாரதி பற்றியும் சிந்திப்போம். பாரதி எந்த வர்க்கம். சின்னசாமி ஐயர் பாரதிக்கு ஒரு எச்சரிக்கை செய்கிறார். காலத்தை மீறி நீ செயல்படக்கூடாது. அப்படிச் செயல்பட்டு நான் அழிந்து போனேன் என்கிறார். இனி எப்படிச் செயல்பட வேண்டும். காலத்திற்குக் கட்டுப்பட்டு தன் குடும்பம் முதலியவற்றை இழந்துவிடாமல், ஆளும் வர்க்கத்திற்கு ஒத்த முறையில் செயல்பட வேண்டும் என்று அய்யர் கூறுகிறார். பாரதி போலத்தான் நாம் செயல்பட வேண்டும். கைகால் முறிந்து விடும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. மரண ஊர்வலத்தில் எத்தனை பேர் என்று கணக்கிட வேண்டியதில்லை. நம் கல்வியறிவு முதலியவற்றிற்கு எல்லாம் இந்த மக்கள் தான் ஆதாரம். இவர்களிடமிருந்துதான் நாம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டோம். இவர்கள் வறுமை முதலியவற்றுக்கு நாமும் தான் காரணம். பாரதி தன் கவிதைகளை எங்கிருந்து பெற்றார்? இப்படி எல்லாம் நாம் சிந்திக்க முடியும். பாரதிக்குப் பெருமை சொல்லி நம்மை பெருமைப்படுத்திக் கொள்வது நீதி இல்லை. இலக்கியம் தேவை. எல்லோருக்கும் நல்வாழ்வு தேவை. வாழ்வில் விடுதலை தேவை. நமக்குள்ளும் எவரெவர்க்கோ நாம், எந்தெந்த சக்திகளுக்கோ அடிமைப்பட்டிருக்கிறோம். அடித்தள மக்களின் விடுதலை இல்லாமல் நமக்கும் விடுதலை இல்லை. தமக்கென பீடங்களை இட்டுக் கொள்கிற எந்த எழுத்தாளனையும் நாம் மதிக்க வேண்டியதில்லை. மார்க்சியனும் பீடம் இட்டுக் கொள்கிறான். தலித்தியலாளனும் பீடம் இட்டுக்கொள்ள விரும்புகிறான். இவனையும் நாம் மதிக்கத்தான் வேண்டுமா? எழுத்தாளர்கள் பல்வேறு வாழ்வுத் தரங்களில் இருந்து வருகிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் நடுத்தர வர்க்கத்தினர். நடுத்தர வர்க்கத்திலும் மேல் மட்டத்தில் உள்ளவர். மிகச் சிலர். கீழ்மட்டத்தில் உள்ளவர்களும் இப்பொழுது அதிகம். அரசியல் மற்றும் தனியார் நிறுவனங்களில் பலர் பணியாற்றுகின்றனர். கிராமங்களில் இருந்து வந்து நகரத்தில் குடியேறியவர்களும் பலர். உழவர் குடும்பத்திலிருந்து ஒரு சிலர் வந்துள்ளனர். அண்மைக் காலத்தில் தலித் இனச் சார்பிலிருந்தும் பலர் வந்துள்ளனர். இவர்களின் வாழ்வியல் அனுபவங்கள் இவர்களது எழுத்துக்களில் பெரும்பாலும் வெளிப்படுகின்றன. இவர்கள் எழுத்துத் துறைக்கு எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று நாம் பார்க்க வேண்டும். இளம் வயதில் கல்வி பயிலும் பொழுதே இவர்களுக்கு இலக்கியம் மற்றும் கலை ஆர்வங்கள் தோன்றியிருக்கக் கூடும். பெரும்பாலும் குடும்பச் சூழல் ஒரு முக்கியமான காரணம். கல்வி பயிலும் பொழுது ஆசிரியர் முதலியவர் தொடர்பு காரணமாகவும் கலை ஆர்வங்கள் ஏற்பட்டிருக்க முடியும். தொடர்ந்து இவர்கள் நண்பர்கள் மற்றும் பெரியவர்கள் மூலம் தூண்டுதல் பெற்றிருக்க முடியும். குறைந்தளவுக்கேனும் வெளிப்பாட்டு வாய்ப்புக்கள் கிடைத்திருக்குமானால் இவர்களுக்குள் கலையார்வம் அழுத்தம் பெற்றிருக்க முடியும். எல்லாவற்றையும்விட முக்கியமான ஒன்று கலை இவர்களிடம் எப்படியோ ஒட்டிக் கொண்டது. இவர்களுக்கு இது இயல்பாகி விட்டது. வாழ்க்கைச் சூழல் ஒரு வேளை குறுக்கே வந்து இவர்களின் கலை ஆர்வத்தைக் குறுக்கிவிடலாம் அல்லது வெட்டி விடலாம். இதை மீறியும் கலையில் இவர்கள் ஊன்றி நிற்கவும் முடியும்.எழுத்தில் இவர்கள் ஈடுபடும் பொழுது அதில் காண்பது இன்பம் மட்டும் அல்ல. எழுத்தின் மூலம் இவர்கள் தம்மை கண்டு கொள்கிறார்கள். எழுத்துக்கு இவர்கள் வசப்படுகிறார்கள். இயற்கையோடும், மனிதர்களோடும் நெருக்கமான உறவை இவர்கள் கூடுதலாகப் பெறுகின்றனர். தொடர்ந்து படிக்கின்றனர். படிக்காமல் இருக்கமுடியாது. அப்புறம் எழுதாமலும் இருக்கமுடியாது. எந்தச் சமூகத்திலும் எழுத்து / இலக்கியத்திற்கும் / கலைகளுக்கும் இடையே தொடர்ந்து வருகிற மரபு என்பது இருக்கிறது. இந்த மரபு இவர்களைப் பற்றிக் கொள்கிறது. குடும்பத்தின் வழியே தொடரும் இசைமரபு அதில் வருபவர்களைப் பற்றிக் கொள்கிறது. சில குடும்பத்தில் ஆசிரியர் என்ற மரபு தொடர்கிறது. இந்த மரபு ஆற்றல் மிக்கது. கலைக்கும் இப்படி ஆற்றல் மிகுந்த மரபு இருக்கிறது. தொழில், மருத்துவம் என்ற எல்லாக் களங்களிலும் மரபுகள் தொடர்கின்றன. சாதிய மரபுகளும் இத்தகையவை. மரபுகள் மாறி வருவதையும் நாம் இங்கு மறுக்கமுடியாது. எப்படியும் சமூகத்தில் நெடுங்காலமாக நிலவிவரும் ஏதோ சில மரபுகளோடு இவர்களும் இணைந்து கொள்கிறார்கள். எழுத்துமரபும் / இலக்கிய மரபும் இத்தகையவை. தமிழ் மரபு குறித்தும், தமிழ் இலக்கிய மரபு குறித்தும் நாம் இங்கு தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. கலை இலக்கியத்தால் ஈர்க்கப்பட்ட ஒருவர் அதில் ஊன்றி இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். கலை இலக்கியங்களும் பலவகைப்பட்டவை, மக்களோடு தொடர்புடையவை. சமுதாய நிகழ்வுகளோடும் தொடர்புடையவை. இலக்கியம் இப்படி மக்களோடும், சமுதாயத்தோடும், நெருக்கமான உறவுடையது. இவற்றில் அவர் ஆழ்ந்து செல்லமுடியும். இதுவே தனக்கு வாழ்க்கை என்று ஒரு கட்டத்தில் முடிவு செய்ய முடியும். மருத்துவராக ஒருவர் பணியாற்றுகிறார் என்றால் மக்களோடு அவருக்குத் தொடர்புகள் அதிகம் கிடைக்கின்றன. மக்களைப் பாதிக்கும் நோய் நொடிகளுக்கான காரணங்கள் குறித்து இவர் அக்கறையோடு அறியமுடியும். இதைப் போலத்தான் வழக்குரைஞர்களும், நீதிபதிகளும் மக்களை நெருக்கமாக புரிந்து கொள்வதற்கான வாய்ப்புக்களைக் கூடுதலாகப் பெற்றவர்கள். இவர்களைப் போல இலக்கியம் என்று தொடங்கி ஆழ்ந்து படிக்கிற பொழுது மனிதர்கள் குறித்தும், அவர்களின் சிக்கல்கள் குறித்தும் இவர் கூடுதலாக அறியமுடியும். ஆழ்ந்த மனிதநேயம் சமூக உணர்வு முதலியவற்றை இவரால் பெறமுடியும். மனிதர்களுக்கு இந்த உலகம் சொந்தம் என்று தொடங்கி சமூகத்தின் கட்டமைப்பு முதலியவற்றை இவர் அறிந்து கொள்ளமுடியும். இப்படி மனிதர்களைச் சமூகத்தின் கட்டமைப்பு முதலியவற்றோடு சேர்த்துப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. சமூகத்தின் கட்டமைப்பிலும் இவர்கள் ஏதோ ஒரு சார்பில் இருந்தவர்கள் என்ற போதிலும் நாளடைவில் சமூகத்தைக் கூடுதலாகப் புரிந்து கொள்ளும் பொழுது, தம் சாதிச் சார்பு முதலியவற்றை இவர்கள் கடந்து இயங்க முடியும். மருத்துவம் என்ற ஒரு கலை இப்படி ஒரு மனிதனைத் தனக்குள் உள்வாங்கிக் கொள்ளக் கூடியது. இப்படியேதான் எந்த ஒரு தொழிலும் அல்லது கலையும் அதன் உள்ளிருக்கும் நுட்பங்கள் காரணமாக அத்தொழில் அல்லது கலை அதனோடு உறவு கொண்டவர்களை முழுமையாக உள் வாங்கிக் கொள்ள முடியும். இத்தகையவர்களைப் பொருத்தவரை குடும்பம் முதலியவை கூட முக்கியம் இல்லை. இத்தகையவரால்தான் எந்த ஒரு துறையும் வளர்ச்சி பெறுகிறது. புதியதை இவர்கள்தான் படைக்கிறார்கள். நமது வரலாற்றில் என்ன நேர்ந்திருக்கிறது. சமுதாயத்தில் எத்தனையோ சக்திகள் செயல்படுகின்றன, அதிகாரங்கள் செயல்படுகின்றன. மனிதர்களை அவர்களது இயல்பான போக்கில் இவை விடுவதில்லை. அவர்களின் வாழ்வுக்கு வேறு வழியும் இல்லை என்பதனால் இவர்களின் ஆளுகைக்கு வந்து சேர்கிறார்கள். கலைஞன் முதலியவர்களும் இவர்களின் எல்லைக்குள் வருகிறார்கள். இந்தச் சக்திகளின் தேவைகளை இவர்கள் நிறைவேற்ற வேண்டும். சமுதாயம் வர்க்கங்களாக பிளவுபட்டிருக்கிறது என்ற உண்மையை இங்கு வைத்துப் பார்க்க முடியும். முன்னைய காலங்களைக் காட்டிலும் அண்மைக் காலத்தில் ஆளும் சக்திகள் கூடுதலான ஆற்றலோடு செயல்படுகின்றன. இதன் பாதிப்புக்கு உள்ளாகாதவர் என்று எவரும் இல்லை. மனித வாழ்வின் ஆக்கத்திறன்கள் முதலியவற்றை இந்தச் சக்திகள் வசப்படுத்துவதை ஒரு சிலரேனும் அனுமதிப்பதில்லை. ஆளும் சக்திகளுக்கு எதிராகவும் இவர்கள் செயல்பட விரும்புகின்றனர். எழுத்தாளர்களை இந்தச் சூழலில் தான் வைத்துப் பார்க்க வேண்டும். எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தினர் என்று கூறினேன். பல்வேறு வாழ்க்கைத் தரங்களிலிருந்து இவர்கள் வந்திருக்கிறார்கள் என்று கூறினேன். சமூக அளவில் நடைபெறும் எத்தனையோ சக்திகள் இவர்களுக்குள்ளும் புகுந்துள்ளன. ஒரு சிலரேனும் இதைப் புரிந்து கொள்கிறார்கள். ஆதிக்கச் சக்திகளுக்குத் தாம் வசப்படக்கூடாது என்று இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் ஆதிக்கங்களோடு ஒத்துச் செல்கிறார்கள் என்று கூறுவதற்கில்லை. இவர்களுக்குள் ஆதிக்கங்களைத் தமக்குரிய முறையில் எதிர்க்கிற போக்குகளும் இல்லாமல் இல்லை. இவர்கள் தமக்குள் முரண்பாடுகளோடு வாழ்கிறவர்கள். இந்த முரண்பாடுகளை இவர்கள் படைப்புகளுக்குள் காணமுடியும். முதலாளிகளுக்கே இவர்கள் முற்றிலும் வசப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுவதற்கில்லை. முதலாளிகள் என்றும், ஆதிக்கங்கள் என்றும் பேகம் மார்க்சியர்களை இவர்கள் எப்படியோ புறக்கணிக்கின்றனர். திராவிட இயக்கமும் இவர்களுக்கு உடன்பாடில்லை. இவர்களுக்குள் நிறையக் கேள்விகள் உண்டு. அவற்றுக்கான விடைகள் தேடி இவர்கள் இயங்குகிறார்களா என்றும் உறுதியாகச் சொல்லமுடியாது. இவர்களோடு விவாதிப்பது என்பதும் உரையாடுவதென்பதும் மிக முக்கியம். இவர்களைக் காய்வதில் பயனில்லை. முதலாளியத்திற்கு இவர்கள் சேவகம் செய்கிறார்கள் என்று சொல்லிப் பயனில்லை. இவர்கள் தமக்குள் கண்டுகொண்ட கலை அல்லது இலக்கிய இயக்கத்திற்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள். அதனுள்ளிருந்து இவர்களை வெளியில் இழுத்து வருவது தமக்குப் பேரிழப்பு என்று இவர்கள் கருதுகிறார்கள். மார்க்சியரும் திராவிட இயக்கத்தினரும் முன்வைக்கிற இறுக்கமான வரையறைகளும் இதற்குக் காரணம். இவர்களில் ஒரு பகுதியினர் தம் இளமைக்கால அனுபவங்களோடு கட்டுண்டு கிடக்கிறார்கள். நகரத்தில் பிறந்து வாழ்பவர்களுக்குக் கிராமத்து வாழ்க்கை தெரிவதில்லை. உயர்சாதியினருக்குக் கீழ் இருப்பவர்களின் துயரங்கள் புரிவதில்லை. ஆண்கள் பெண்களை முழுமையாக புரிந்து கொள்வதும் இல்லை. இலக்கியவாதிகளுக்கு இன்றைய சமூகத்தின் மாபெரும் சிக்கல்கள், இவற்றின் விரிவுகள், இவை எங்கிருந்து தொடங்குகின்றன என்பனவெல்லாம் தெரிவதில்லை. மார்க்சியர் தம் குறுகிய வரையறைகளை முன் வைத்து இவர்களோடு விவாதிக்கும் பொழுது இவர்களுள்ளும் இருக்கிற ‘நான்’ என்ற உணர்வு இவர்களுக்கு மேல் வந்துவிடுகிறது. உரையாடல்கள் வளர்வதற்கான வாய்ப்புக்கள் தடைபடுகின்றன. “எனக்கு என் கலை போதும், நான் எதற்கு அரசியலுக்குள்ளும், தத்துவத்துக்குள்ளும் ஏன் போக வேண்டும்” என்று இவர்கள் இருந்து விடுகிறார்கள். இங்கு மார்க்சியரும் தான் விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டியவர்கள். பெரிய அளவில் சமூகம் பிளவுபட்டுக் கிடக்கிறது. வர்க்கங்களாக முரண்பட்டுக் கிடக்கிறது. இந்தச் சூழலுக்குள்தான் இலக்கியவாதிகள் முதலியவர்கள் வாழ்கின்றனர். இந்தப் புரிதலோடுதான் நாமும் விமர்சனங்களை முன் வைக்க வேண்டும். விமர்சிக்கின்றவர்களும் விமர்சனங்களுக்குத் தம்மை உள்ளாக்கிக் கொள்ளத்தான் வேண்டும். கற்பிக்கிறவர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் மார்க்ஸ். 27.11.2000 இராசேந்திர சோழன் - கடிதம் பெறுதல்: திரு. இராசேந்திர சோழன், மயிலம். அன்பு நண்பருக்கு வணக்கம், தமிழ்த் தேசியம் என்ற நோக்கில் ஒரு இலக்கிய இயக்கத்தை உருவாக்குவதில் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு. தமிழகம் முழுவதிலும் உள்ள கூடியவரை நம் சார்பிலான கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை இந்த இயக்கத்திற்குள் கொண்டு வருவது நம் காலத்தின் கடமை. இதற்காக மாற்றுக் கருத்தினரோடு உடனடியாக தீவிரமான எதிர்நிலை எடுக்க வேண்டியதில்லை. நம் எழுத்தாளர்கள் முதலில் இலக்கியத்தின் பல்வேறு நுட்பங்கள் குறித்தும், தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் வாழ்நிலை மற்றும் போராட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு இயக்கம் ஆவன செய்ய வேண்டும். கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், திறனாய்வு முதலியவற்றின் நுட்பங்களை அறிந்து கொள்ள தமிழகத்தில் சில இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கே எழுத்தாளர்களுக்குப் பயில்மனைகள் அமைக்க முடியும். இவற்றில் வண்ணநிலவன், பிரபஞ்சன், பாவண்ணன், பூமணி முதலியவர்கள் கலந்து கொண்டு பயிற்சி தரமுடியும். கா.சி. சிவக்குமார் போன்ற ஆற்றல் மிகுந்த இளைய எழுத்தாளர்களையும் நாம் அழைத்துக் கொள்ள வேண்டும். டாக்டர் ஜீவானந்தம் அவர்கள் பசுமை இயக்கத்தின் சார்பில் உதகை, கொடைக்கானல் போன்ற இடங்களில் எழுத்தாளர்களைக் கூட்டிவைத்து முன்பு பயில்மனைகள் நடத்தினார். சத்தியமங்கலம், திருப்பூர், கரூர் போன்ற ஊர்களில் எழுத்தாளர்களுக்கு முகாம் நடத்தமுடியும். முகாமில் சொற்பொழிவுகள் தேவை இல்லை. இலக்கியத்தினுள்ளும் அதிகாரிகள் உண்டு. இவர்களிடமிருந்து நாம் விலகியிருப்பது நல்லது. முகாம்களின் நடைமுறை குறித்து நாம் தெளிவாக இருக்கவேண்டும். இருபதுபேர் கூடுவார்கள் என்றால் இவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து குறிப்பிட்ட சிறுநகரத்தை அடுத்துள்ள பத்து / பனிரெண்டு ஊர்களுக்கு அனுப்பி அங்கங்கே உள்ள உழவர்கள், நெசவாளர்கள், கைவினைஞர், கலைஞர் என்று பல்வேறு சமூகப் பிரிவினரோடு ஒவ்வொரு குழுவும் குறைந்தது இரண்டு நாட்களாவது உரையாடி மக்களின் வாழ்வியல் விவரங்களை ஆழமாகவும், நுட்பமாகவும் தொகுத்துக் கொள்வது நல்லது. சத்தியமங்கலத்தைச் சுற்றி வகை, வகையான விவரங்களைத் தொகுக்க முடியும். சாதி / மதக் கலவரங்கள் நிகழ்ந்த இடங்களிலும் இப்படி குழுவினர் சென்று வாழ்வியல் மற்றும் வரலாற்று விவரங்களைத் தொகுக்கமுடியும். தமிழகம் முழுவதிலும் இப்படி சுமார் பத்து முகாம்களுக்கு நாம் திட்டம் இடுவதற்கு அங்கங்கே உள்ள பல்வேறு இயக்கங்கள் நமக்கு உதவி செய்ய முடியும். தமிழ் மக்களின் வாழ்வை முதலில் எழுத்தாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தம் சொந்த வாழ்வின் சரக்குகளை மட்டுமே கற்பனையோடு வினியோகம் செய்து கொண்டிருப்பதில் பொருள் இல்லை. இவ்வகை வாழ்வியல் தோட்டத்தின் மூலம்தான் நம் எழுத்தாளர்கள் தமிழர்களாகத் தேர்ச்சி பெறவும் முடியும். வாழ்வியலைப் புரிந்து கொள்ள வரலாற்றினுள்ளும் செல்ல வேண்டிவரும். இதற்கெல்லாம் அறிஞர் சிலர் உதவமுடியும். இத்தகைய பயில்மனைகள் மற்றும் முகாம்கள் நடத்துவது குறித்து நீங்களும் நண்பர்களும் விரிவாகச் சிந்தித்து முடிவு செய்யமுடியும். இதன் சார்பாக நான் இன்னும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டு வாழ்வுக்குள் எவ்வளவோ ஏற்றங்களும், தாழ்வுகளும் நிகழ்ந்துவிட்டன. பொதுவுடைமை இயக்கங்கள் ஒரு காலத்தில் பெற்றிருந்த மேன்மைகளும், நம் காலத்தில் ஏற்பட்டுள்ள சிறுமைகளும் எத்தனை நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் கருப்பொருள் ஆகமுடியும்! திராவிட இயக்க அரசியல் வட்டாரமும் இப்படி எத்தனையோ சீர்குலைவுகளுக்கு உள்ளாகி இருப்பதையும் பார்க்கிறோம். இவற்றை எல்லாம் நாம் இலக்கியங்களில் பதிவு செய்தால் ஒழிய நம் எதிர்காலத்திற்குத் தேவையான விடுதலை முதலியவைகள் குறித்து நம்மால் சிந்திக்க முடியாது. கீழ்வெண்மணியில் மட்டுமா நம் மக்கள் போராடினார்கள்? தமிழகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கில் போராட்டங்கள். இவற்றோடு தொடர்புடைய வீரர்கள் / மக்கள் இன்றும் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை வரலாறுகளை நாம்தான் அக்கறையோடு தொகுக்க முடியும். இவை குறித்த இலக்கியம் இல்லாமல் தமிழியக்கம் ஆற்றல் பெற முடியாது. இந்த மக்கள் தான் அசலான தமிழர்கள். இவர்கள் வாழ்வுக்குள் ஆழமாகச் செல்லும்பொழுது ஏகாதிபத்தியம் முதலிய எல்லாவகை ஆதிக்கங்களையும் சந்திக்க முடியும். ஆதிக்கங்களோடு ஒத்துழைத்ததின் விளைவாக இன்றுள்ள அரசியல் அரங்குகளில் உயர்பீடங்களில் அமர்ந்துள்ள மக்கள் எதிரிகளை நாம் காணமுடியும். இளம் எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல், மூத்த எழுத்தாளர்களும் இவ்வகை ஆய்விலும், படைப்பிலும் ஈடுபடத்தான் வேண்டும். தமிழ்த்தேசிய அரசியல் முன்நகர இயலாமல் தேங்கிக் கிடப்பது குறித்து எனக்கு வருத்தம் உண்டு. நமக்கான திசை வழியில் தெரிந்து கொள்வதற்கும், செயல்படுவதற்கும் இயக்கங்கள் இணையத்தான் வேண்டும். நெருக்கடிகள் கடுமையாக மிகுந்து வரும் இக்காலச் சூழலில் நமக்குள் ஒன்றிணைவு முதல் தேவை. மேடை அரசியல் போதாது. மக்கள் மத்தியில் பல்வேறு இயக்கங்களை உருவாக்கி ஆகவேண்டும். இயற்கை வேளாண்மை, பசுமை இயக்கம், தாய்த்தமிழ் பள்ளி, உள்ளாட்சி நிர்வாகம் என்று பலவற்றைச் செய்யவேண்டும். இளைஞர்களை இவ்வகையில்தான் செயலூக்கம் உள்ளவர்களாக உருவாக்க முடியும். இவற்றோடு ஓர் இலக்கிய இயக்கம், காலத்தின் கட்டாயம். உங்களோடு இணைந்து ஆவன செய்ய விரும்புகிறேன். பயில்மனை, முகாம் முதலியவற்றுக்கு அங்கங்கே அமைப்புக்கள் உதவி செய்ய முடியும். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். - 23.12.2000 முத்துநிலவன் - கடிதம் பெறுதல்: திரு. முத்துநிலவன், புதுக்கோட்டை. அன்பு நண்பருக்கு வணக்கம், 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ்க் கவிதை வரலாற்றை 480 பக்க அளவில் சொல்லும் உங்கள் முயற்சி எனக்கு பெரும் வியப்பையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இலக்கிய வரலாறு என்று தமிழ்ப் பேராசிரியர்கள் பலர் பாட நூல்கள் எழுதி உள்ளனர். தமிழை ஆயும் நம் போன்றவர்களுக்குப் பாடநூல் எழுதுவது சாத்தியமில்லை. அன்றியும் மார்க்சியம் கற்ற நம்மைப் பொருத்தவரை தமிழியல் / ஆய்வுக்கு தமிழ்க் கவிதை ஆய்வுக்குப் புதிய வளம் சேர்க்க முடியும். என்னைப் போலவே நீங்களும் தமிழ் இலக்கியம் கற்ற மாணவர். தமிழ்நேயம் நமக்குள் செறிந்திருக்கும் என்று நம்புகிறேன். தமிழ் கற்றதால் மார்க்சியம் எனக்குள் மேலும் செறிவு பெற்றதை இங்கு நினைத்துக் கொள்கிறேன். இலக்கிய ஆய்வு என்று தொடங்கினால் மார்க்சியரைப் பொருத்தவரை அரசியல் கண்ணோட்டம் மேலுக்கு வந்து விடும். இதன் காரணமாகக் கூட தமிழ்மொழிக்குள் நெடுங்காலமாக செயல்பட்டு வரும் கவிதை / இலக்கிய இயக்கம் பின்னுக்குப் போய்விடும், அன்றியும் மறைந்து விடுவதும் நேர்கிறது. இந்த விபத்துக்கு நீங்கள் ஆளாக மாட்டீர்கள் என்று நம்புகிறேன். தமிழில் இலக்கிய வரலாறு ஏதோ சில கண்ணோட்டங்களில் எழுதப்பட்டிருக்கிறதே தவிர கவிதை வரலாறு இதுவரை எழுதப்படவில்லை. கவிதை குறித்து மேலோட்டமான கண்ணோட்டம் கொண்டவர்களால் கவிதை வரலாறு என்ற பெயரில் இலக்கிய வரலாறுதான் எழுத முடியும். அதுவும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களால்தான் இலக்கிய வரலாற்றை ஓர் இயக்கமாகப் பார்த்து எழுத முடிந்திருக்கிறது. கவிதை வரலாறு மேலும் நுட்பமானது. இது குறித்து சிலவற்றை உங்களோடு இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எந்த ஒரு மனிதனுக்குள்ளும் ஒரு கவிஞன் / கலைஞன் இருக்கிறான். இவனுக்குள் படைப்பியக்கம் செயல்படுகிறது. குழந்தையின் விளையாட்டு என்று தொடங்கி எந்த ஒரு மனிதனுக்குள்ளும் செயல்படும் படைப்பியக்கத்தை நம்மால் புரிந்து கொள்ளமுடியும். வீட்டை நேர்த்தியாக வைத்துக்கொள்வது முதல் தச்சு முதலிய எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடும் கைவினைஞர் தன் படைப்பை நேர்த்தியாக உருவாக்குவது வரை மனிதனுக்குள் செயல்படும் படைப்பியக்கத்தைப் புரிந்து கொள்ளமுடியும். அந்த மனிதன் தான் தன் சூழலை / உலகத்தை / வரலாற்றைத் தன் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் ஒத்த முறையில் படைத்துக் கொள்கிறான். கற்பனை இல்லாமல் இந்தப் படைப்பியக்கம் செயல்படுவது இல்லை. வரலாற்றினுள் செயல்படும் முரண்பாடுகள் மனிதனுக்குள் படைப்பியக்கத்தைத் தூண்டுகின்றன. கடுமையான நெருக்கடிகள் மனிதனின் படைப்பியக்கத்தை முடக்கவும் செய்யும். அன்னியமாதல் என்று மார்க்ஸ் கூறியதை இங்கு இணைத்துப் பார்க்க முடியும். மனிதனுக்குள் சமயம் முதலியவை அன்னியமாதல் சூழ்நிலையில்தான் மேலோங்குகின்றன. கலைத்திறனும் இப்படி திரிபுபட்டோ அல்லது நுட்பம் கூடியோ செயல்படுவதும் சாத்தியம். முடங்கிவிட்ட மனிதனை, எத்தகைய சூழல் காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டது என்று அறிந்து அவனைப் புரட்டிப் பார்க்க நம்மால் முடியும். உடமையாளர்கள் அன்னியமான நிலையில் முடக்கங்களோடு, திரிபுகளோடு செயல்படுகின்றனர். மனிதர் என்ற முறையில் இவர்களுக்கும் விடுதலை தேவை. இவர்கள் விடுதலைக்காகவும் பாட்டாளி வர்க்கம் பாடுபட வேண்டும் என்பது மார்க்சின் கருத்து. கலைஞர்கள் பெரும்பாலும் நடுத்தரவர்க்கச் சார்புடையவர்கள். வரலாறு மற்றும் சமூகத்தின் முரண்பாடுகளுக்குள் இவர்களும் அகப்பட்டுக் கொண்டவர்கள். தமக்குள் வந்துவிட்ட அவலங்கள் குழப்பங்கள் முதலியவற்றுக்குக் காரணங்கள் எவை என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. மார்க்சியம் தங்களுக்கு வேண்டாம் என்பதில் கூட இவர்கள் பிடிவாதம் கொள்கின்றனர். இதற்கு மார்க்சியரும் காரணமாக இருக்கமுடியும். இந்த இடங்களில் நாம் நிதானத்தோடு செயல்படுவது இன்றியமையாதது. இத்தகைய கலைஞர்களை / படைப்பாளிகளை / திறனாய்வாளர்களை நாம் வெறுக்க வேண்டியதில்லை. வர்க்கப் போராட்டம் என்பது எத்தனையோ வழிகளில் நடைபெறுகிறது. மதம் என்பதினுள்ளும் நடைபெறுவது வர்க்கப் போராட்டம். குடும்பத்தினுள்ளும் நுட்பமாக நடைபெறுவது வர்க்கப் போராட்டம். இங்கெல்லாம் நாம் கவனத்தோடு செயல்பட வேண்டும். படைப்பாளிகளை வெறுத்துப் பயனில்லை. சிக்கலுக்குள் அகப்பட்டவரிடம் நாம் கருணை கொள்ளமுடியும். எந்த ஒரு மனிதனுக்குள்ளும் கலைஞன் இருக்கிறான், படைப்பியக்கம் செயல்படுகிறது என்ற பார்வையோடு தான் நாம் இவ்வளவும் சொல்லுகிறோம். மார்க்சியம் கற்றவர்கள் தமிழையும், தமிழ் இலக்கியத்தையும் முழு அளவில் நேசிக்க முடியவில்லை என்பதைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தமிழ்நேயத்தை ஆழமாகக் கொண்டிருக்கும் என்னைப் பொருத்தவரை தமிழை என் உயிர் போல நேசிக்கிறேன். இதே அளவு மார்க்சியத்தையும் என்னால் நேசிக்க முடிகிறது. சங்க காலம் பொற்காலம் என்று கூறியதை நான் என்றும் ஏற்றதில்லை. தமிழ் இலக்கியத்தின் தொன்மையறிந்து பலர் உரிமை கொண்டாடிய காலம் பற்றிய கருத்து என்னை எப்பொழுதும் கவர்ந்ததில்லை. தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்தைக் குறைத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக தமிழின் மீது வட மொழித் தாக்கத்தை மிகைப்படுத்தி கூறியவர்களிடம் எனக்கு மரியாதை இல்லை. வையாபுரி போன்றவர்களை நான் மதிக்கத் தவறியதில்லை. வையாபுரி அவர்களை முழுமையாக ஒப்புக் கொள்கிற மார்க்சியரோடு எனக்கு உடன்பாடில்லை. வள்ளுவர், இளங்கோ முதலியவர்களைக் குறித்து மார்க்சியர் முன்வைத்த வர்க்கப் பார்வை எனக்கு எப்பொழுதுமே உடன்பாடில்லை. இவர்களுக்குள் மக்கள் சார்பைத்தான் நான் அதிகம் பார்க்கிறேன். ஆதிப்பொதுமைச் சமூகம் தொடங்கி வரலாற்றுக்குள் மறைந்தும் வெளிப்பட்டும் ஓடுகிற சமதர்மம் என்ற நீரோட்டம்தான் வள்ளுவருக்குள்ளும் இளங்கோ முதலியவர்களுக்குள்ளும் செயல்படுகிறது. கம்பனுக்குள்ளும் செயல்படுவது இந்த நீரோட்டம். பக்தி இலக்கியகாலத்துக் கடவுளர்களுக்குள்ளும், பின்னர் வந்த சித்தர்களுக்குள்ளும் இந்த நீரோட்டத்தைக் காணமுடியும். இந்த நீரோட்டம் தான் இவர்களுக்குள் கவிதையாக, கவித்துவமாக செயல்படுகிறது. இந்த நீரோட்டத்தை வள்ளலார், பெரியார் முதலியவர்களுக்குள்ளும் காணமுடியும். பாரதி, பாரதிதாசன் முதலியவர்களுக்குள் செயல்படுவது இந்த நீரோட்டம். தமிழ்க்கவிதை வேறு எத்தனையோ வகை, வகையாக செயல்பட்ட போதிலும் இந்த ஆழ்ந்த நீரோட்டத்தைத் தனக்குள் இழந்து விடவில்லை. புராணங்களுக்குள்ளும் இந்த நீரோட்டம் வற்றிவிடவில்லை. புராணங்கள் கொண்ட வடிவங்கள் எப்பொழுதுமே நமக்குள் சிக்கலைத் தோற்றுவிக்கின்றன. இடைக்காலத்து பிரபந்தங்கள் முதலியவற்றை நம்மால் நேசத்தோடு கற்க முடியவில்லை. சமூக வாழ்வோடு நமது யதார்த்தவாத அழகியல் உறவு கொண்டதாக இருக்கிறது. எந்தக் கவிதை / இலக்கியத்தினுள்ளும் எவ்வளவு ஆழத்தில் இயங்கிய போதிலும் அங்குள்ள யதார்த்த உலகத்தைத் தான் நாம் கண்டறிய விரும்புகிறோம். யதார்த்த உலகத்தை முற்றாக மறைத்து விடுகிற கற்பனை உலகத்தை நம்மால் இரசிக்க முடிவதில்லை. ஜெயங்கொண்டார், திருத்தக்கதேவர் முதலியவர்களை முற்றாக இரசிக்கும் அளவுக்கு நமக்குள் கற்பனை போதை இல்லை. எனினும் இத்தகைய மிகையான கற்பனைகளும் போதைகளும் இத்தகைய கவிஞர்களிடம் எத்தகைய சமூக மற்றும் வரலாற்றுச் சூழலில் தோன்றின என்பது குறித்துச் சிலவற்றைச் சொல்லமுடியும். திருத்தக்கதேவரைக் குறித்து நான் ஒரு கட்டுரையில் கூறியுள்ளேன். நரைத்த ஒரு மயிரைப் பார்த்தவுடன் ஒருவருக்கு துறவு எண்ணம் வந்துவிட முடியாது. சீவகன் தன் தந்தையை இழந்து சுடுகாட்டில் பிறந்தவன். வணிகன் ஒருவனால் வளர்க்கப்பட்டவன். பிறகு எத்தனையோ அனுபவங்கள், போர் அனுபவங்கள். பல மனைவியர்களுக்கிடையில் கடுமையான முரண்பாட்டோடுதான் அவன் வாழ்ந்து கொண்டிருக்கமுடியும். தன் தாய் தந்தையரின் அவலத்தை மறக்க இயலாது. ஆட்சியிலும் அமைதியாக இருந்து விட முடியாது. இத்தகைய அனுபவங்கள் தான் துறவு நோக்கி அவனைத் தூண்டி இருக்கமுடியும். இப்படி எழுதினால்தான் ஒரு காவியம் தோன்ற முடியும். திருத்தக்கதேவர் எழுதியது ஒரு கதை. இவர் எந்த அளவுக்கு மரியாதைக்குரிய ஒரு துறவியாக இருந்திருக்க முடியும். படைப்பியக்கம் என்பதை மார்க்சியர் எப்பொழுதுமே முதன்மைப்படுத்துவதில்லை. இந்தப் படைப்பியக்கம் தான் என்னை எப்பொழுதுமே கவருகிறது. மில்டன் / பட்டுப்புழு மேற்கோளை நான் திரும்ப திரும்பச் சொல்வது இதற்காகத்தான். நமக்குள்ளும் செயல்படுகிற படைப்பியக்கம் காரணமாகத்தான் இலக்கியத்தினுள்ளும் இதனைத் தேடுகிறோம். தத்துவம் / அறிவியலுக்குள்ளும் செயல்படுவது இந்தப் படைப்பியக்கம்தான். இதைத்தான் கவித்துவம் என்றும் நாம் காண்கிறோம். இதைக் கண்டறிய முற்படும்போதுதான் வரலாற்றுக்குள் நான் பயணம் செய்கிறேன். இந்த வரலாற்றுப் பயணம் மார்க்சியர்களுக்கு கிடைத்திருக்கிற பேரனுபவம். இந்த இயக்கத்தின் போது தான் மெய்யியல் என்ற விரிவான பார்வையை நாம் பெறுகிறோம். வாழ்வின் அர்த்தம் என்ன என்று தொடங்கி இங்கு பலவற்றைப் பேசுகிறோம். வாழ்வுக்கு அர்த்தம் தருகிறது எதுவோ அதுவே வாழ்வுக்கான அற இயல். வாழ்வதற்கான ஆற்றலைத் தருவதும் இந்த அற இயல்தான். அறம் என்பது என்றைக்குமே சமதர்மம் என்பதைத் தவிர வேறாக இருக்க முடியாது. மார்க்சியம் குறித்து இப்படிச் சுருக்கமாக நான் ஒன்றைக் கூற முடியும். அதாவது வர்க்கப் போராட்டங்களின் வழியே, வர்க்கங்களைக் கடந்து செல்வது மார்க்சியம். இப்படி எல்லாம் நான் சொல்வதைக் கவிதையோடு, தமிழ் இலக்கியத்தோடு சார்த்தி உங்களால் புரிந்து கொள்ளமுடியும் என்று நம்புகிறேன். நீங்கள் எழுதும் தமிழ்க் கவிதை வரலாற்றில் சில புள்ளிகளிலேனும் இத்தகைய பார்வை வெளிப்படும் என்றால் தமிழ்க் கவிதைக்கு நீங்கள் வளம் சேர்த்தவர் ஆவீர்கள். 11.1.2001 ரங்கராஜன் - கடிதம் பெறுதல்: திரு. ரங்கராஜன், சேலம் - 7 மதிப்பிற்குரிய நண்பருக்கு, நாம் சந்தித்தபொழுது உலகளவில் நேர்ந்து வரும் இயற்கை நாசம் குறித்து நிறையப் பேசினோம். நம் மக்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கக்கூடும் என்று கவலைகளைப் பகிர்ந்து கொண்டோம். மனிதனை முதன்மைப்படுத்துகிற தத்துவங்கள், நிறுவனங்கள் முதலியவற்றை நாம் மறுக்கிறோம். உலகிலுள்ள உயிர்களுக்கிடையில் மனிதனும் ஒரு உயிர் என்ற முறையில் மனிதன் இனி இயற்கையோடு ஆழ்ந்த நேசம் கொண்டால் ஒழிய மனித வாழ்வுக்கும் எதிர்காலம் என்று இருக்க முடியாது. இப்படி ஒரு தத்துவம் தமிழனுக்கு உண்டா என்ற கருத்தில் சமண சமயம் குறித்து விரிவாகப் பேசினோம். தமிழ் இலக்கியத்தில் சமணர்களின் இடம் குறித்து நிறையவே பேசினோம். தொல்காப்பியரும், வள்ளுவரும், இளங்கோவும் சமண சமயச் சார்புடையவர்கள் என்பதோடு இவர்களை அசலானத் தமிழர்கள் என்று உடன்பட்டோம். இன்று வரையிலான தமிழ்ப் பண்பாடு என்பதற்கு இவர்கள் தான் அடிப்படை இட்டவர்கள். சமணர்கள் நுழைவால் தமிழ்ச் சமயம் அழிந்தது என்பது சைவர்களின் பொய்யுரை. இப்படியெல்லாம் நாம் பேசிய பொழுது நமக்கு இன்னும் சில விளக்கங்கள் தேவை என்பதை ஒப்புக் கொண்டோம். எழுத்து என்பது உலகத்தில் எப்படித் தோன்றியது என்பது குறித்து நீங்கள் ஓர் உண்மையைக் குறிப்பிட்டீர்கள். வணிக வர்க்கத்தவர் மற்றும் அரச குலத்தவர் தான் முதன்முதலில் எழுத்துக்களைப் பயன்படுத்தினார்கள். இவர்களின் நோக்கம் மக்களைக் கட்டுப்படுத்துவதாக, ஒடுக்குவதாக இருந்தது என்று கூறினீர்கள். எனக்கு வியப்பாக இருந்தது. தொல்காப்பியர் முதலிய சமணர்களும் எழுத்துக்களைப் பயன்படுத்தினார்கள் என்பது மட்டுமல்ல. தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தார்கள், வாழ்வுக்கு அறம் சொன்னார்கள். அகம் புறம் என்று தமிழ் இலக்கியத்தை வகைப்படுத்தினார்கள். முதல் கரு, உரி என்றெல்லாம் இலக்கிய ஆய்வுக்குப் பொது நெறி வகுத்தார்கள். இவ்வாறெல்லாம் செய்ததன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வைச் செழுமைப்படுத்தினார்கள் என்று சொல்ல முடியும். மது வேண்டாம், சூதாட்டம் வேண்டாம், பரத்தையரோடு உறவு வேண்டாம். பெண்ணுக்கு உரிய கற்பு மரியாதைக்குரியது. இப்படி எல்லாம் அவர்கள் அறம் வகுத்தார்கள். விதி என்றும் ஆன்மா என்றும் பேசினார்கள். ஒரு வகையில் இந்த அறங்கள் முதலியவை மனிதர்கள் மீது செலுத்தப்படுகிற கட்டுப்பாடுகள் என்பதில் அய்யமில்லை. இத்தகைய கட்டுப்பாடுகளின் தேவையை நாம் மறுப்பதற்கில்லை. சங்க காலத்திற்கு முற்பட்ட இனக்குழு சமூகங்கள் குறித்தும் நாம் பேசினோம். பாரி முதலிய வேளிர்களை வேந்தர்கள் எப்படி ஒழித்துக் கட்டினார்கள் என்பது குறித்தும் பேசினோம். இப்படித் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த போது நமக்குள் இன்னொரு சிக்கல் எழுந்தது. வரலாற்றை எப்படி அர்த்தப்படுத்துவது என்பது பற்றிய சிக்கல். இயற்கையோடு மனிதன் உறவு கொள்ள வேண்டும். இந்த உறவு இயற்கையை அடிமைப்படுத்துகிற உறவாக இருக்கக்கூடாது. பிற உயிர்களை மட்டுமல்லாமல், பிற மனிதர்களையும் அடிமைப்படுத்துகிற உறவாக இருக்கக் கூடாது. வரலாற்றில் இப்படி நடைபெறவில்லை. அடிமைத்தனமும், ஒடுக்குமுறையும் எல்லாக் காலங்களிலும் நடைபெற்று வந்துள்ளன. இந்தச் சிக்கலை அர்த்தப்படுத்துவது எப்படி? தனிஉடமை, அரசதிகாரம், வர்க்க ஏற்றத்தாழ்வுகள், போர்கள் என்றெல்லாம் வரலாற்றில் எவ்வளவோ நிகழ்ந்துள்ளன. மொழி, நாகரிகம், தேசம், குடும்ப உறவு மதங்கள் தத்துவங்கள் கலை இலக்கியங்கள் என்பனவும் வரலாற்றின் போக்கில் நிகழ்ந்தவை. இவை எல்லாம் இல்லாமல் வரலாற்றில் வளர்ச்சி இல்லை. அறிவியலும், தொழில் நுட்பங்களும், போக்கு வரவு மற்றும் தொடர்பு சாதனங்கள் முதலியனவும் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. இன்றைய மனிதன் பிரபஞ்ச அளவில் தன் பார்வையை விரித்துக் கொள்ள முடியும். இப்படி எத்தனையோ ஆக்கங்கள், இவற்றோடு அழிவுகளும் நேர்ந்துள்ளன. இனக்குழு என்றளவில் மட்டும் மனிதன் வாழ்ந்திருக்க முடியாது. இனக்குழுச் சமூகத்தில் மனிதன் இயற்கையிலிருந்து உணவு முதலியவற்றையும் பெற்றான். எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டான். தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. இந்த சமூக மனிதர்களுக்குத் தன்னுணர்வு இல்லை. இனக்குழுவில் இருந்து மட்டுமல்லாமல், இயற்கையிலிருந்தும் இவன் தன்னைப் பிரித்துக் காணவில்லை. எல்லாவற்றோடும் ஒன்றியிருந்தான். இந்த வாழ்க்கை தொடரவில்லை. எப்படியோ ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டன. மருதநில நாகரிகம் தோன்றியது. உடைமை, அரசு என்ற முறைகள் தோன்றின. மருத நிலத்தில்தான் மனிதன் உற்பத்தியைத் தொடங்கினான். மருத நிலம் தன் தேவைக்காக அயல் நிலங்களை வசப்படுத்தியது. மருத நிலத்தில் தோன்றிய மன்னர்கள் இனக்குழுச் சமூகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். பொருள் பரிவர்த்தனைகள் தொடங்கின. வணிகர்கள் தோன்றினர். மருத நிலத்தில் நகரங்கள் தோன்றின. இதைத்தான் நாகரிகச் சமூகம் என்று கூறுகிறோம். இப்படித்தான் வரலாறு தொடங்கியது. உபரி இல்லாமல் மனித வாழ்க்கை முன்னேறவில்லை. உபரிக்கு இன்னொரு பெயர் சுரண்டல். ஒடுக்குமுறை இல்லாமல் சுரண்டல் இல்லை. அறிவியல் தொழில்நுட்பங்கள் முதலியவை ஒடுக்குமுறையோடு ஒத்துச் செல்கின்றன. மதங்கள், தத்துவங்கள் கூட ஒடுக்குமுறையோடு ஒத்துச் சென்றன. எழுத்து, மொழி, கலை இலக்கியம் என்பனவற்றையும் ஒடுக்கு முறையின் கருவிகளாகக் கொள்ளலாம். இந்த இடத்தில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். வரலாற்றில் வளர்ச்சி என்று பேசுகிறோம். முன்னேற்றம் என்று பேசுகிறோம். முதலாளியம் வரலாற்றில் மாபெரும் வளர்ச்சியைக் கொண்டு வந்தது என்பதற்காக மார்க்ஸ் பெரும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் முதலாளியம் தன் வளர்ச்சிப் போக்கை ஏகாதிபத்தியமாக மாற்றிய பொழுது லெனின் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். முதலாளியத்தின் இன்னொரு வடிவம் பாசிசம் சோவியத் யூனியனில் சோசலிசம் என்று சொல்லப்பட்ட சமூக அமைப்பினுள் முதலாளியம் பதிந்திருந்தது. இந்த முதலாளியப் போக்கும் அசுரத்தனமான வளர்ச்சியை, சந்தைப் பொருளாதாரம் முதலிய இன்றைய போக்குகளில் காண்கிறோம். எதிர்காலம் குறித்து நாம் அஞ்சுகிறோம். இனி எத்தனை காலத்திற்கு மனித குலம் என்று ஒன்று இருக்க முடியும்? வரலாறு எப்பொழுது முடியப் போகிறது? என்றெல்லாம் நாம் அஞ்சுகிறோம். முதலாளியமோ, இதற்கு முற்பட்ட வரலாற்று வளர்ச்சியோ இல்லாமல் நாம் வாழ்ந்திருக்கமுடியுமா? தாஜ்மஹால், பிரமிடுகள் மட்டுமல்லாமல் பெரிய அணைக் கட்டுக்கள், கப்பல் மார்க்கங்கள், நெடுஞ்சாலைகள் என்றெல்லாம் ஏற்பட்டதன் விளைவுதான் இன்றைய மனிதன். விண்வெளி ஆய்வு, மரபு அணுக்கள் குறித்த ஆய்வு என்றெல்லாம் எவ்வளவோ நடந்திருக்கின்றன. மனிதன் தனக்குள்ளும் என்னென்னவோ தேடுகிறான். எத்தனையோ வகை தர்க்கங்கள் மற்றும் ஆய்வுமுறைகள். மனிதனின் பார்வையில் எத்தனையோ வெளிச்சங்கள் மற்றும் விரிவுகள். உச்சளவில் நமக்கு மகிழ்ச்சியும், பரவசங்களும், அதே அளவில் துக்கங்களும், துயரங்களும் ஏற்படுகின்றன. இப்பொழுது நமக்குள் நாமே கேட்டுக் கொள்கிறோம். வரலாறு என்று இருந்திருக்க வேண்டாம். வளர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டியதில்லை. விலங்குகளுக்கு அடுத்தபடியில் நாம் வாழ்ந்திருந்தால் போதும். இப்படி நாம் சொல்லமுடியுமா? இனக்குழு சமூகம் தன் வாழ்வைத் தொடர முடியாத நிலையில்தான் வர்க்க சமூகத்திற்கு இடம் கொடுத்தது. இனி சோசலிசம் இல்லாமல் முடியாதென்ற நிலை. வரலாற்றின் எந்தக் கட்டத்திலாவது இந்தப் போக்கை தடுத்து நிறுத்தி இருக்க முடியுமா? இயேசு, புத்தர் முதலியவர்கள் வரலாற்றில் சில வித்தியாசமான சில போக்குகளை உருவாக்க முயன்றார்கள் என்பதில் அய்யமில்லை. எனினும் வரலாற்றில் தடை ஏற்பட்டதா? இயற்கையோடு ஒத்த வாழ்க்கை இனியது என்பதில் அய்யமில்லை. இனக்குழு சமூகத்தில் உழைப்பின் விளைவை எல்லோரும் பகிர்ந்து கொண்டார்கள். இனக்குழு மக்களுக்குத் தன்னுணர்வு இல்லை. இன்று நாம் தன்னுணர்வைப் பெற்றுள்ளோம். சமத்துவம், சமதர்மம் என்று இன்று நாம் பேசுகிறோம். இவை இல்லாமல் இனி நமக்கு வாழ்வில்லை. இவை இல்லாமல் நமக்கு இயற்கையோடு நமக்கு சமத்துவமான உறவு இல்லை. இப்படிச் சிக்கலான முரண்பட்ட ஒரு பார்வையைக் கொண்டு தான் வரலாற்றை நாம் மதிப்பிட முடியும். இடையில் ஏற்பட்ட அழிவுகளை நியாயப்படுத்துகிற பார்வையாகவும் இவை இருக்க முடியாது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் மட்டுமே நின்று வரலாற்றைப் பார்க்க முடியாது. அடித்தள மக்களின் பார்வை என்று இன்று பலர் பேசுகின்றனர். இது ஒற்றைப் பரிமாணப் பார்வை. தலித்திய பார்வை என்பதும் இத்தகைய பார்வை. வர்க்கப் பார்வை என்று பேசும் மார்க்சியரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கே அழுத்தம் தந்து இப்படி ஒரு ஒற்றைப் பரிமாணப் பார்வையை முன் வைக்கின்றனர். இது வரலாற்றைக் குறைத்துப் பார்க்கும் பார்வை. மார்க்சியம் இதற்கு உடன்பட முடியாது. ஓர் உதாரணம் சொல்லத் தோன்றுகிறது. ரால்ட் பாக்ஸ் என்ற பிரிட்டீஷ் மார்க்சியர் ஒரு கட்டுரையில் இப்படி ஒரு காட்சியைத் தருகிறார். ஆல்ப்ஸ் மலையின் உச்சியில் செங்கிஸ்கானும் லெனினும் சந்தித்து ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்கிறார்கள். நில உடமைச் சமூகத்தைத் தகர்த்து சமதர்ம சமூகத்தைக் கொண்டு வந்ததற்காக லெனினைச் செங்கிஸ்கான் பாராட்டுகிறார். இனக்குழு சமூகங்களைத் தகர்த்து அரசனைத் தலைவனாகக் கொண்ட நிலஉடமைச் சமூகங்களைக் கொண்டு வந்ததற்காக செங்கிஸ்கானை லெனின் பாராட்டுகிறார். உங்களை நான் அன்போடு கேட்டுக் கொள்வேன். இயற்கை நாசம் என்று பேசும் பொழுது வரலாற்றிலிருந்து விலகி ஒரு விளிம்புக்கு நாம் சென்று விடமுடியாது. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நமக்கு நூறு சதம் அக்கறை உண்டு. இந்த இடத்தில் மார்க்சின் ஒரு வாசகத்தை நான் எடுத்துக் காட்ட முடியும். பாட்டாளி வர்க்கம் தனக்கு விடுதலை வேண்டும் என்றால் சுரண்டும் முதலாளி வர்க்கத்துக்கும் சேர்த்துப் பாடுபட வேண்டும். அடிமைக்கு விடுதலை தேவை என்றால், ஆண்டானையும் விடுவிக்க வேண்டும். சுதந்திரம் என்பது பிரிவுபடாதது. நமக்கு இந்த வாசகங்கள் முற்றாகப் பொருந்தும். மேற்குலகில் வரலாற்று வரைவியல் (Histriography) என்ற ஆய்வுத் துறையை மிகுந்த வளத்தோடு வளர்த்திருக்கிறார்கள். நூல்கள் தேடி நாம் படிக்க முடியும். இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். - 23.8.2000 சிதம்பரநாதன் கடிதம் 1 பெறுதல்: ப. சிதம்பர நாதன் - ஆசிரியர் “ஒம்சக்தி” மதிப்பிற்குரியீர் வணக்கம். தோத்தாத்ரி அவர்களின் மறுப்புக் கட்டுரை படித்தேன். கலை இலக்கியப் பெருமன்றத்தில் முதிர்ந்த தோழர். அவரிடம் எனக்கு மிகுந்த மரியாதையுண்டு. என் கருத்துக்களை அவர் திறனாய்வுக்குட்படுத்துவதை வரவேற்கிறேன். எனக்குக் கட்சி சார்பில்லை. அதாவது தோழர் தோத்தாத்திரி அவர்களின் கட்சியில் நான் இல்லை. அவர் சார்ந்துள்ள கட்சியோடு எனக்கு முரணுண்டு. முதலாளியத்தைப் பெருமளவு உள்வாங்கிக் கொண்ட கட்சி ஒன்றை கம்யூனிஸ்ட் கட்சி என்று என்னால் கருத இயலவில்லை. மார்க்சிய லெனினிய இயக்கத்தில் எங்கோ ஓரிடத்தில் நான் இருக்கிறேன். கட்சி உறுப்பினராக இல்லை. கட்சிக்கு வெளியில் ஒருவன் மார்க்சியனாக இருக்க முடியாது என்பதை நான் ஏற்கவில்லை. கட்சிக்குள் ஒருவர் இருப்பதாலே ஒருவர் மார்க்சியர் என்பதை என்னால் ஏற்கவும் முடியாது. நான் கட்சிக்குள் இல்லை என்பதை இப்படித் தனக்குச் சாதகமாக எடுத்து அவர் விவாதித்திருக்க வேண்டியதில்லை. இப்படி அவர் செய்வதால் அவர் மார்க்சியத்திற்கு வெளியில் நிற்கிறார் என்று விவாதிக்க மாட்டேன். இன்று மார்க்சியத்தை வெளியில் எடுத்துச் செல்ல என்னைப் போலவே அவருக்கும் தேவை இருக்கிறது. இப்பொழுது கட்டுரையின் மையப் பொருளாகிய கலைக்கும் சித்தாந்தத்திற்கும் இடையிலுள்ள உறவாகிய மையத்திற்கு வருகிறேன், வர்க்கப் போராட்டத்தில் எனக்கு முற்றான உடன்பாடு உண்டு. இயங்கியல் குறித்து லெனின் மற்றும் மாவோ நெறியில் மார்க்சியர் இன்னும் ஆழ்ந்து செல்லவேண்டும். தன் காலத்தில் ஆதிக்கத்திலிருந்த எத்தனையோ இராவணர்களுக்கெதிராக இராமனை மனித நிலையில் நிறுத்திக் கம்பன் காவியம் செய்துள்ளார். இது குறித்து முன்பே எழுதியுள்ளேன். கம்பருக்கு ஓய்விருந்தது. ஆகவே காவியம் பாடினார் என்று சிலர் கூறியிருப்பதை நான் மறுக்கிறேன். தன் காலத்திய வர்க்கப் போராட்டத்தில் மில்டனின் நிலை குறித்து நானும் அறிவேன். இலக்கியம் அல்லது கலை என்பது பசி, காமம் மாதிரி மனிதனுக்கு (instinct) அல்ல. வரலாற்று இயக்கத்தின் போது மனிதனுக்குள் வந்து சேர்ந்த கலையுணர்வு என்பது அவனுள் இயங்கும் படைப்பியக்கத்தின் ஆற்றல் மிகுந்த கூறு. கலை, சமயம் முதலியவற்றைப் பொருளியல் சூழலில் வைத்து பார்ப்பதைப் போலவே இவற்றின் தனித்தன்மையையும் பார்ப்பது மார்க்சியத்திற்கு உடன்பாடான போக்குதான். கலை பற்றிய ஆய்வை மார்க்சியன்தான் சரிவரச் செய்ய முடியும்.கலைக்கு விலை வைக்க முடியாது என்பதையும் நாம் கவனிக்கத் தவறக் கூடாது. சிந்தனைக்கும் வாழ்நிலைக்கும் இடையிலுள்ள உறவின் அடிப்படையில் தத்துவங்களைக் கருத்துமுதல்வாதமென்றும் பொருள்முதல்வாதம் என்றும் எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். இக்கருத்து எங்கெல்சுக்கு முன்பே மேற்குலகில் இருந்த கருத்து. அன்றியும் தத்துவங்களை இவ்வாறு இரண்டுகூறாகப் பிரித்துப் பார்த்த எங்கெல்ஸ், ஹூயும் மற்றும் காண்ட்டின் தத்துவங்களைப் பற்றி பேசும்போது இவற்றை இடையில் வைக்கவேண்டுமென்கிறார். மொழியை அடித்தளத்தில் வைப்பதா? மேற்கட்டில் வைப்பதா? என்ற சிக்கல் எழுந்த பொழுது மொழியை இடையில் வைக்கவேண்டும். அடித்தட்டுக்கு அருகில் வைக்க வேண்டும் என்றார் ஸ்டாலின். சிந்தனையும் பொருளும் முற்றாக வேறுபட்டவையுமல்ல. இதுகுறித்துப் புதிய வரையறைகள் இன்று முன்னுக்கு வந்துள்ளன. அடித்தளம் என்பதையும் மேற்கட்டு என்பதையும் கறாராகப் பிரித்துப் போடுவதும் சாத்தியமில்லை. இவ்வாறே மார்க்சியத்தின் எல்லைக்குள்ளிருந்தே கடந்த 50 ஆண்டுகளில் விவாதங்கள் நடந்துள்ளன. இவை பற்றியெல்லாம் சிந்தனையோ படிப்போ இல்லாமல் மார்க்சியம் குறித்த பழைய பாட நூல்களை வேதமாகக் கற்பிப்பவரின் அறிவாற்றல் குறித்து நான் என்ன சொல்ல வேண்டியிருக்கிறது? மார்க்சியத்திற்கு நான் தரும் முதல் மரியாதையை மார்க்ஸின் பெயரை மட்டுமே உச்சரிக்கும் கட்சிக்கோ மனிதருக்கோ நான் தர முடியாது. கடிதம் 2 அன்பு நண்பருக்கு வணக்கம். இது என் இரண்டாவது கடிதம். இதற்கு மேல் நான் எழுதுவதற்கு அவசியமில்லை. வாசகர் விவாதம் தொடர்வதை உங்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன். முன்பே எழுதியது போல விவாதத்தின் மட்டத்தை கீழ் இறக்குவது எனக்கு உடன்பாடில்லை. உலகளவிலும் இந்தியா மற்றும் தமிழக அளவிலும் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தில் என் நிலைப்பாடு என்ன என்பது பற்றிக் கடந்த 20 ஆண்டுகளில் நான் நிறையவே எழுதியுள்ளேன். மார்க்சியத்தை அணுகுவதில் எனது கோணத்தை ஒருவர் ஆய்வுக்குட்படுத்தலாம். ஆனால் என்னை மார்க்சியத்திற்கு வெளியே தள்ளி வைத்துப் பார்ப்பதன் மூலம் அவர் தன் மார்க்சியச் சார்பை மெய்ப்பிக்க முடியாது. குறிப்பிட்ட ஒரு கட்சி சார்ந்தவர் அவரோடு நான் இல்லை என்பதற்காக இப்படி செய்யும் தந்திரத்தால் மற்றவர் முன்னிலையில் மார்க்சியத்திற்கு மரியாதைக் குறைவுதான் ஏற்படுகிறது. மார்க்சியத்தின் மரியாதையைக் குறைத்துவிட்டு ஒருவர் தன் பெருமையை நிலைநாட்டிக் கொள்கிற விவாதமுறை அருவருக்கத் தகுந்தது. எனது முன்னைய கட்டுரையில் எனது விவாதத்தின் தொடர்ச்சியான கூறுகள் எதனுள்ளும் தோத்தாத்திரி அவர்கள் நுழையவே இல்லை. படைப்பியக்கம் என்று நான் மையப்படுத்துவதை அவர் மறுக்கவும் இல்லை. தரத்தில் உயர்ந்த படைப்பிற்கு (விலை) மதிப்பிட முடியாது என்ற மார்க்சின் கருத்தை அவர் மறுக்கவும் இல்லை. சமூகத்தில் சில கட்டங்களில் கலை அடைந்திருக்கும் உன்னதத்தை அந்தச் சமூகத்தின் பொருளியல் சூழலிலிருந்து விளக்க முடியாதென்ற மார்க்சின் கூற்றை அவர் ஏற்கத்தான் செய்கிறார். கலை முதலியவற்றின் தோற்றம், வளர்ச்சிக்கான வரலாற்றுச் சூழலை என் கட்டுரையில் நான் எங்கே மறுத்தேன்? கம்பர், மில்டன் என்று குறிப்பிடும் பொழுது, இவர்களுக்குள் செயற்படும் படைப்பியக்கத்தில்தான் என் கவனத்தைக் குவிக்கிறேன். படைப்பியக்கம் குறித்து மார்க்சியர் மத்தியில் போதுமான ஆய்வு இல்லை என்ற காரணத்தால் தான் நான் இப்படிச் செய்கிறேன். படைப்பியக்கத்தினுள் ஆழமாகச் சென்று வந்தவர்களுக்கு எனது ஆய்வின் முக்கியத்துவம் புலப்படும். படைப்பியக்கத்தினுள் நிகழும் பாய்ச்சல் தான் என்னைப் பெரிதும் கவருகிறது. மார்க்ஸ், லெனின் முதலியவர்கள் மாபெரும் படைப்பாளிகள். மார்க்ஸின் மேற்கோள் ஒன்றை இங்கு மீண்டும் நினைவுபடுத்துகிறேன். “சூழல் மனிதனை மாற்றுகிறது என்பது உண்மையில் ஒரு பாதி மட்டுமே, உண்மையின் மறுபாதி, சூழலை மனிதன் மாற்றுகிறான் என்பதாகும்”. உண்மையின் இரு பகுதிகளுக்கும் மார்க்ஸியம் முக்கியத்துவம் தருகிறது உண்மையென்றாலும் இதனுள் இரண்டாவது பகுதிக்கு அழுத்தம் தருவதன் மூலம்தான் மார்க்சியம் தன் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் இயற்கையோடும் சமுதாயத்தோடும் தன்னோடும் ஒன்றியிருந்தான். அவனுக்குள் பிரிவு இல்லை. தனியுடமை, அரசு முதலியவை தோன்றிய காலத்தில் இயற்கை முதலியவற்றிலிருந்து மனிதன் அன்னியப்பட்டான். தனக்குள்ளும் பிளவுபட்டான். தனியுடமை, அரசு முதலியவை ஒழிந்த காலத்தில் மனிதன் இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னோடும் ஒன்றிப்பைப் பெறுவான். இந்தக் கோட்பாடுதான் மார்க்சியத்தின் மையம். 1844 பாரிஸ் கையெழுத்துப் படிகளில் மார்க்சின் இந்தக் கோட்பாடு இடம்பெறுகிறது. இவரை இளம் மார்க்ஸ் என்று ஒதுக்கிவைக்க இயலாது. மூலதனம் என்ற நூலுக்கு முன்பு எழுதிய கிரென்ரிசே கையெழுத்துப் படிகளில் அன்னியமாதல் விரிவாகவே இடம்பெற்று உள்ளது. சோவியத் யூனியனில் ஸ்டாலின் காலத்திலும் அன்னியமாதல் நிலவியது. அரசு என்ற அமைப்பு இருக்கும் வரையிலும் அன்னியமாதல் நிலவும் என்றார் மார்க்ஸ். சோவியத் யூனியன் சுவர்க்கம் என்று மெய்ப்பிக்க முனைந்தவர்கள் அன்னியமாதலை மறுக்கத்தான் செய்வார்கள். அன்னியமாதல் என்பது ஒரு முதலாளியக் கோட்பாடு என்றும் இவர்கள் இன்றும், இங்கும் சொல்லுகிறார்கள். அன்னியமாதல் என்ற கோட்பாட்டில் தான் மார்க்சியத்தில் இருந்து மெய்யியலை வளர்த்தெடுக்க முடியும். இது இருத்தலியல் போக்கு என்று ஒதுக்குவதன் மூலம் மார்க்சியம் அரைகுறையான அரசியலாகத்தான் இருக்கமுடியும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தனக்குள் பிளவுபடாத, இயற்கையிலிருந்தும் சமூகத்தில் இருந்தும் தன்னை வேறுபடுத்திப் பார்க்காத, இவற்றோடு ஒன்றியிருந்த மனிதன் இருந்தானென்று குறிப்பிட்டோம். வர்க்க வேறுபாடுகள் மனிதனை ஆக்கிரமித்துக் கொண்ட காலத்திலும், மேற்குறிப்பிட்ட மனிதன் சாகவில்லை. நீர் வற்றிய நிலத்திற்கடியில் ஆழத்தில் ஓடும் நீரோட்டம் போல, வர்க்கமற்ற அந்த மனிதன் இருக்கத்தான் செய்கிறான். யங் முதலியவர்கள் குறிப்பிடும் சமூகத்தின் கூட்டு மனம் என்பது இந்த மனிதனைப் பற்றிக் குறைந்த அளவிற்கான ஒரு புரிதல். எல்லா மனிதருக்குள்ளும் ஆழத்தில் வர்க்கம் முதலிய வேறுபாடுகளில் இருந்து விலகிய அந்த மனிதனை உணரமுடியும். பெரும் கவிஞர்கள், சித்தர்கள், மெய்யியலாளர்கள் முதலியவர்களுக்குள் இந்த மனிதன் ஊற்றுப்போல மேல்மட்டத்திற்குப் பெருக்கெடுக்கிறான். இந்த மனிதனைத் தனக்குள் கண்டறிந்தவன் பெரும் கலைஞன். வர்க்கப் போராட்டத்தின் வழியே வர்க்கங்களைக் கடந்து செல்வது மார்க்சியம் என்று நான் திரும்ப திரும்பக் குறிப்பிடுகிறேன். தனக்குள் ஆழ்ந்து செல்லும் கலைஞன் உடமை, சாதி, வர்க்கம், தேசம், இனம் முதலியவற்றைக் கடந்தவனாகிறான். மேல்மட்டத்தில் செயல்படுவது சித்தாந்தம். ஆழத்தில் இயங்குவது மெய்யியல் மேல் மட்டத்தில் செயல்படும் பொழுது இந்த மனிதனுக்குள் அதிகாரம் சில குறிப்பிட்ட வடிவங்களிலேனும் செயல்படும். அதிகாரம், கட்சி முதலியவை தேவையே இல்லை என்று நான் எப்பொழுதும் சொன்னதில்லை. தனக்குள் அதிகாரம் செயல்பட்டுத் தன்னை அது இறுக்கும்போது, இவனுக்குள் இருக்கும் மெய்யியலாளன் இதனை உடனே உணர்ந்து கொள்வான். பிறகு வாய்ப்பு நேரும்போது அதிகாரத்தைத் தனக்குள்ளிருந்து களைந்து கொள்வான். கம்யூனிஸ்டு என்பவன் Saint / சித்தர் என்று லெனின் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். இவன் தன்னை எந்த வடிவத்திலும் குறுக்கிக் கொள்ள மாட்டான். பாவ்லோ, டால்ஸ்டாய் முதலியவர்களை லெனின் நேசித்ததைப் பிறகு எப்படிப் புரிந்து கொள்ள முடியும். அன்னியமாதல் பற்றி உணர்வு கொள்ளும் பாட்டாளி வர்க்கம் தனக்கு விடுதலை பெற வேண்டுமானால் முதலாளி வர்க்கத்திற்கும் சேர்ந்து போராடி விடுதலை பெறவேண்டும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். சுதந்திரம் பிரிவுபடாதது என்ற மார்க்ஸின் மேற்கோளைத் திரும்ப திரும்ப நான் எடுத்துக் காட்டுகிறேன். மார்க்ஸியத்தினுள் பகை முரண்பாட்டிற்கு மட்டுமே அழுத்தம் தருவது போதாது. நட்பு முரண்பாட்டிற்கும் அழுத்தம் உள்ளது என்பதை மாவோ விளக்கியிருக்கிறார். இந்தக் கூற்றுக்களையெல்லாம் மார்க்சியத்திற்கு வெளியில் தள்ளிவிட்டு அப்புறம் வெறும் வர்க்கப் போராட்டம் ஒன்றுதான் மார்க்சியம் என்று அதிகார அரசியலை ஒருவர் நடத்திக் கொண்டிருக்கலாம். முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியம் இப்படித்தான் தன்னைத்தானே சிறுமைப்படுத்திக் கொள்ளும். தனக்குள் பிளவுபட்ட இந்த மார்க்சியன், ஆத்திரம், ஆணவம், போட்டி, சதி என்று எதிலும் ஈடுபடுவான். சுரண்டல் சமூகத்தின் இன்னொரு வடிவத்தைத் தான் இவன் ஏற்படுத்துவான். மார்க்சியத்தின் பெயரால் மார்க்சியத்தைக் குழி தோண்டிப் புதைப்பவன் இவன். தனக்குள் பிளவுபடாத மனிதன் தான் இயற்கையை, உயிரினங்களை, மனிதர்களை முழு அளவில் நேசிப்பவன். உடமையோ அதிகாரமோ இவனைத் தீண்ட முடியாது. இவனுக்குள் அச்சமில்லை. போட்டி பொறாமைகள் இல்லை. ஆணவம் என்று வடிவம் பெறும் ‘நான்’ இவனுக்குள் இல்லை. இயற்கையை நாசப்படுத்தும் நாசகார சக்திகளை இவன் ஏற்கமாட்டான். காவியங்களும் இலக்கியங்களும் இவனைத்தான் தன் கருவில் கொண்டுள்ளன. இயேசுவும் புத்தனும் இவனுக்குள் இருக்கிறார்கள். இவனுக்குள் கடவுளின் பிம்பத்தையும் காணமுடியும். இவனுக்குள் இயங்குவது மெய்யியல். மார்க்சியத்திற்கு இப்படி ஒரு மெய்யியல் உண்டா? இல்லையா? என்று விவாதிப்பது பயன்படும். இயங்கியல் என்பது ஆய்வு முறை இதையே மெய்யியல் என்று குறைத்துச் சொல்லிவிட இயலாது. தத்துவவாதிகளுக்கு இன்னும் இந்த உலகில் வேலை உண்டு. உலகை மாற்றுவது என்பது தேவைதான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. மாற்றும் பொழுதே மனிதன் தானும் மாறுகிறான். தன்னைப் புரிந்துகொள்ள மெய்யியல் தேவை. வரலாறு முதலியவை பற்றிய ஆய்வு தேவை. கம்யூனிசம் முழு அளவில் நிறைவு பெறும் காலம்வரை மெய்யியலுக்குச் சாவு இல்லை. மெய்யியல் உணர்வோடு இயங்குபவன் கலைஞன். அதிகார அரசியலில் தன்னைக் குறுக்கிக் கொண்ட அரசியல்வாதிக்கு இவனால் சேவை செய்ய முடியாது. ஹெர்பெர்ட் மார்க்யூஸ் கூறியபடி அதிகார அரசியலுக்கு இந்தக் கலைஞன் என்றும் எதிர் நிலையிலேயே இருப்பான். கார்க்கிக்குள்ளும் மாயாகோவஸ்கிக்குள்ளும் இருந்தவன் இந்தக் கலைஞன். இவனை மார்க்கக்குத் தெரியும். லெனினுக்கும் தெரியும். பின்குறிப்பு : பெரியவர் தோத்தாத்ரி அவர்களை நான் பெரிதும் மதிக்கிறேன். அவர் நிறைய எழுதியுள்ளார். பேராசிரியர் வானமாமலை வட்டத்தில் இவர் முக்கியமானவர். தத்துவம், மதம், இலக்கியம் என்று ஓயாமல் எழுதுகிறார். இவரும் நானும் எதிர்நிலையில் நின்று விவாதிப்பது ஒரு மரியாதை. என்னுடைய புத்தகங்கள், இதழ்கள் முதலியவற்றில் நான் எழுதியதை இவர் படித்திருக்கலாம். மறுத்து எழுதவில்லை. பல தரப்பினரும் இடம்பெறும் ‘ஓம்சக்தி’ இதழில் என் கட்டுரை வரும்பொழுது மறுத்து எழுதட்டும். மார்க்சியத்திற்கு நான் ஒரு எதிரி போலவும் இதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறேன் என்றும் இவர் எழுதி யாரை திருப்திப்படுத்த நினைக்கிறார்? இதேபோல தேவபேரின்பன் இப்படி என்னைப்பற்றி எழுதினார். தேவபேரின்பனைக் கண்டித்து இவர் எழுதியிருக்க வேண்டும். செய்யவில்லை. என்னால் இவர்களைப் போல எழுத முடியவில்லை. எனக்குள் சிறிய அளவிலேனும் ஒரு மெய்யியலானை வைத்திருக்கிறேன். நன்றி. 1.9.2000 யதார்த்தம் - யதார்த்தவாதம் - நவீனத்துவம் 1. யதார்த்தவாதம் செத்துவிட்டது என்ற குரல் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த பொழுது, மார்க்சிய இலக்கியவாதிகளுக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. சோவியத் யூனியனில் சோசலிசம் தகர்ந்த சூழலில், இந்த அதிர்ச்சி அவர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இதே சமயம் மார்க்சியமும் கேள்விக்குள்ளாயிற்று. யதார்த்தவாதம் எப்படிச் சாக முடியும் என்று இவர்கள் தமக்குள் மயங்கினார்கள். யதார்த்தவாதமும், யதார்த்தமும் ஒன்று என இவர்கள் கருதியது காரணமாக நம்மைச் சூழ உள்ள புற உலகமாகிய யதார்த்தத்திற்கு எப்படிச் சாவு நேர முடியும் என்றும் இவர்கள் கேள்வி எழுப்பினார்கள். யதார்த்தவாதம் செத்துவிட்டது என்று கூறியவர்கள் அமைப்பியல் மையவாதிகளாக இருந்தார்கள். நவீனத்துவம் / பின் நவீனத்துவம் என்று பேசுபவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் யதார்த்தம் என்பதே ஒரு புனைவு / கற்பிதம் / கட்டமைப்பு என்று கூறியதை மார்க்சிய முற்போக்கு இலக்கியவாதிகள் புரிந்து கொள்ளவில்லை. யதார்த்தம் என்பது எப்படிப் புனைவாக இருக்க முடியும் என்றும் இவர்கள் எதிர்கேள்வி எழுப்பினார்கள். இவர்கள் இருவகையினரும் எதிர்நிலைகளிலிருந்து விவாதித்தார்கள். இவர்களுக்குள்ளும் இருந்த அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக எதிர்நிலைகளில் தம்மை ஊன்றிக் கொள்ளவும் செய்தார்கள். இதுகுறித்து இங்கு நாம் சற்று விரிவாக ஆராய வேண்டியிருக்கிறது. 2. யதார்த்தம் / யதார்த்தவாதம் என்பது மேற்குலகில் மட்டுமல்லாமல் இங்கும் முதலாளியத்தின் வருகையை ஒட்டித்தான் ஏற்பட்டது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை. முதலாளியத்திற்கு முற்பட்ட சமுதாயத்தினுள்ளும், இன்றும் நாம் யதார்த்தவாதம் என்று இனம் காணக்கூடிய கூறுகள் இருக்கத்தான் செய்தன. இது குறித்து இங்கு ஆராய்வது இப்பொழுதைக்குத் தேவையில்லை. முதலாளியத்தின் வருகையை ஒட்டி மனிதன் தான் சார்ந்திருக்கிற புற உலகம் குறித்து அதிகமாகச் சிந்தித்தான். மனித வாழ்வை நிர்ணயம் செய்வது கடவுளர்கள் அல்ல. இனி மன்னர்களுக்கும் தேவை இல்லை. இனி மக்கள் தம் வாழ்வைத் தாமே நிர்ணயித்துக் கொள்ள முடியும். பொருளியல் சூழலைத் தம் தேவைகளுக்கு ஒத்த முறையில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் கொண்டு மாற்றியமைத்துக் கொள்ள முடியும். மக்கள் தமக்குத் தேவையான அரசை நிறுவிக் கொள்ள முடியும். அன்னியர்கள் நம்மை ஆள வேண்டியதில்லை. பெரும் நிலக்கிழார்கள் முதலியவர்கள் தேவையில்லை. தொழில் வளர்ச்சி மிக முக்கியம். இவ்வாறெல்லாம் வரலாற்றில் முதலாளியத்தின் வருகையை ஒட்டி புதிய சிந்தனைகள், புதிய போக்குகள் ஏற்பட்டன. நாம் வாழும் உலகம் யதார்த்த உலகம். இதை நம்மால் புரிந்து கொள்ள முடியும், மாற்றி அமைக்கவும் முடியும். மனிதர் அனைவரும் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் வாழ முடியும். இது முதலாளியம் முன்வைத்த யதார்த்தம். 3. முதலாளியம் முன்வைத்த இலட்சியங்களைப் பொறுத்தவரை தொடக்கத்தில் மக்களுக்கு உவப்பாக இருந்தபோதிலும் நாளடைவில் இந்த இலட்சியங்கள் செயல்படவில்லை என்பதை அறிஞர் சிலர் அறிந்து கொண்டார்கள். ரஷ்யப் புரட்சியை அடுத்து சோசலிசத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய உலகத்தைக் காணமுடியும் என்று பலர் நம்பினார்கள். இவர்கள் மார்க்சியர். உலகிலிருந்து முதலாளியத்தை அகற்ற முடியும். தனி உடமையை ஒழிக்க முடியும். நிலக்கிழார்களுக்குத் தேவையில்லை. வரலாற்றை உருவாக்குபவர்கள் மக்கள். நாளடைவில் அரசு அதிகாரமும் உதிரத்தான் வேண்டும். அறிவியல் தொழில் நுட்பங்கள் கொண்டு பொருள் உற்பத்தியைப் பெருக்கமுடியும். விளைவை எல்லோரும் பகிர்ந்து கொள்ள முடியும். உலகில் வறுமைக்கும், வேலையில்லாத் திண்டாட்டங்களுக்கும், நோய் நொடிகளுக்கும் அவசியமில்லை. மனிதன் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியும். முதலாளியம் முதலிய ஆதிக்கச் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தின் மூலம்தான் புதிய உலகம் பிறக்கும். போராட்டம்தான் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. மக்கள் தம்மை அணிதிரட்டிக் கொண்டு போராட வேண்டும். கட்சிதான் மக்களை இப்படித் திரட்டுகிறது. பாட்டாளி வர்க்கம் தான் முதன்மைச் சக்தி. உழவர்கள் முதலியவர்கள் துணை சக்திகள். இலக்கியத்தின் நோக்கம் சமூக மாற்றம். யதார்த்தம் என்பது இனி சோசலிசம் என்பதைத்தான் மையப்படுத்த வேண்டும். இவ்வகை கருத்தோட்டம் மார்க்சியரின் யதார்த்தவாதம். 4. இதுவரை விவரித்த பொதுப்படையான வர்ணணைகளிலிருந்து நம் காலச் சூழலுக்குள் இனிவந்து விடலாம். நம் காலச் சூழலில் விடுதலைக்கான போராட்டத்தின்போது காந்தியம் என்ற கருத்தியல் முன்னுக்கு வந்தது. தன் கால யதார்த்தம் குறித்து காந்தியடிகளும் ஒரு சித்திரிப்பை முன்வைத்தார். அன்னியரிடமிருந்து இந்தியா விடுதலை பெறவேண்டும். வன்முறை வடிவிலான விடுதலை இயக்கம் நமக்குத் தேவையில்லை. வன்முறை என்பது மனிதனுக்குள் இருக்கும் விலங்குணர்வு. ஆங்கிலேயர் உட்பட எந்த மனிதனுக்குள்ளும் அன்பு உண்டு, கருணை உண்டு. இந்த உணர்வுகளை அவனுக்குள் தூண்டுவதன் மூலம் அவனையும் மனிதனாக்க முடியும். இதற்குரியது ஒத்துழையாமை இயக்கம். முதலாளிகளை ஒழிக்க வேண்டியதில்லை. சாதி முறைகூட ஒழிக்கப்பட வேண்டியதில்லை. என்னைப் பொருத்தவரை கடவுள் என்பவர் உண்மையின் வடிவத்தில் இருக்கிறார். தர்மகர்த்தா முறைதான் இந்திய மரபுக்கு ஒத்தமுறை. கிராமங்கள் மறுமலர்ச்சி பெறவேண்டும். சுரண்டல் தேவையில்லை. சர்வோதயம்தான் நமக்கு இலக்காக இருக்கமுடியும். எல்லா மதங்களும் ஒரு கடவுளைத் தான் மையமாகக் கொண்டுள்ளன. இவ்வாறு காந்தியடிகள் தமக்கென ஒரு யதார்த்தத்தை கண்டார் / முன்வைத்தார். காந்தியடிகளிடமிருந்து கடுமையாக வேறுபட்ட பெரியார் முன்வைத்தது இன்னொரு வகையான யதார்த்தம். சாதி, மதம், கடவுள் முதலியவற்றை முன்வைத்து மக்களைப் பிரித்தவர்கள் பார்ப்பனர்கள். காங்கிரஸ் கட்சி பார்ப்பனர் கட்சி. காந்தி முதலியவர்கள் கூறும் இந்திய விடுதலை என்பது பார்ப்பனர் மற்றும் உயர்சாதியினர்க்குத்தான் பயன்படும். நெடுங்காலமாக நிலவுகிற சாதிய அமைப்பை இவர்கள் காப்பாற்றுவார்கள். வகுப்புவாரி உரிமை இருந்தால் ஒழிய தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னுக்கு வரமுடியாது. கடவுள் முதலியவற்றை ஒழிக்க வேண்டும். இப்படித் தொடங்கி பெரியார் யதார்த்தம் குறித்து ஒரு விரிவான சித்திரிப்பை முன்வைத்தார். இன்னும் இவைபோல மேலும் பல விவரிப்புக்கள். 5. இங்கு நாம் என்ன பார்க்கிறோம். ஒரே சமகாலத்தில் யதார்த்தம் என்பது குறித்து பல்வேறு விவரிப்புக்கள் நிலவுகின்றன. ஒவ்வொருவரும் தமக்கான நியாயங்களை முன்வைக்கிறார்கள். சமுதாயம், வரலாறு குறித்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பார்வைகள் உள்ளன. இவற்றினுள்ளும் ஒத்த பார்வைகள் என்ற முறையில் சில இழைகள் இருக்கக்கூடும். அறிவியல், கல்வி, மருத்துவம், வேளாண்மை என்று எதை எடுத்துக் கொண்டாலும் இவர்களின் பார்வைகளில் வேறுபாடுகளைக் காண முடியும். இவர்கள் அனைவருமே ஒரு பொதுவான உலகில்தான் வாழ்கிறார்கள் என்ற போதிலும், ஒவ்வொரு வரும் தனக்கான உலகில்தான் வாழ்கிறார்கள் என்பதாகவும் நாம் புரிந்து கொள்ளமுடியும். அண்மைக்காலத்தில் சந்தைப் பொருளாதாரம் முதலிய பல்வேறு பெயர்களில் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிற அன்னிய சக்திகளின் ஊடாட்டத்தையும் இந்தச் சித்திரிப்பில் நாம் இணைத்துக் கொள்ளவேண்டும். தேசிய இனங்களின் போராட்டம் முதலியவைகளையும் இங்கு சேர்த்துக் கொள்வது பொருந்தும். இவை அனைத்தையும் உள்ளடக்கி ஒவ்வொரு இயக்கத்தினரும் யதார்த்தம் குறித்து குறைந்தளவுக்குத் திட்டவட்டமான ஒரு பார்வையை முன்வைக்க முடியும். இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம். ஒரே சம காலத்தில் யதார்த்தம் குறித்து பல்வேறு கருத்தினங்கள் நிலவுகின்றன. முதலாளியத்திற்கு ஒருவகை யதார்த்தம், மார்க்சியருக்கு இன்னொரு வகை, காந்தியவாதிகளுக்கு வேறு ஒரு வகை. பகுத்தறிவாளர்களுக்கு இன்னொரு பார்வை. இவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு பார்வையைக் கொண்டவர்கள் தலித் மக்கள். பெண்ணியவாதிகளும் தமக்கென ஒரு அழுத்தமான பார்வையைக் கொண்டிருக்கிறார்கள். கலைஞர்கள் இலக்கியவாதிகள் என்பவர்களும் இவர்களோடு ஒத்தோ, முரண்பட்டோ யதார்த்தம் என ஒன்றைப் பேசமுடியும். இங்கு சற்று விளக்கிச் சொல்வதென்றால் காதலர்களுக்கு, கள்வர்களுக்கு என்று வெவ்வேறு பார்வைகள். சமூக பிரிவு. சாதி, மதம், கல்வி, செல்வம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகப் பார்வைகள் வேறுபடுகின்றன. ஒவ்வொருவரும் தம் பார்வைதான் சரி என்று அழுந்தியிருக்கின்றனர். விட்டுக் கொடுக்காமலும் விவாதிக்கின்றனர். இவர்களுக்கிடையில் உரையாடலுக்கு இடமும் இல்லை. ஒருவரோடு மற்றவர் மோதவும் செய்கின்றனர். இதனால் பிரச்சனைகள் தீரப்போவதில்லை, இவர்கள் நிதானத்திற்கு வந்தாக வேண்டும். தனக்கென நியாயம் இருப்பதைப் போலவே எதிராளிக்கும் ஒரு நியாயம் இருக்க முடியும். வரலாறு மற்றும் சமுதாயச் சூழலில் எத்தனையோ முரண்பாடுகள் நிலவுகின்றன. வரலாறு மற்றும் சமுதாயச் சூழலில் வைத்துத்தான் ஒவ்வொரு சமுதாயப் பிரிவின் நியாயத்தையும் நாம் கண்டறிய வேண்டும். இன்றைய சூழலில் உரையாடல் என்ற முறையில் நமக்குள் இறுக்கத்தைத் தளர்த்தி, நம் மனத்தைத் திறந்து மற்றவர்களுக்கும் நமக்குள் இடம் தந்து கலந்தாய்வு என்ற முறையில் எல்லாவற்றையும் மறுபார்வைக்கு உட்படுத்த வேண்டும். இறுக்கம் என்பது தன்னோடு மற்றவரையும் அழிக்கும். சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும் வழிவிடாத இறுக்கம் நமக்குத் தேவையில்லை. 6. எல்லோரும் வாழ்வது ஒரு பொதுவான உலகம் என்றாலும், ஒவ்வொருவரும் தனக்கென ஒரு யதார்த்தத்தை, அவரவர்க்கான நியாயத்தோடு வரித்துக் கொள்கின்றனர். பிறர் சொல்லும் நியாயங்களைத் தமக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர் அல்லது கண்டு கொள்வதில்லை. இப்படித்தான் ஒவ்வொரு இயக்கத்தவரும் தமக்கான யதார்த்தம் என்பதை உணர்ந்து கொள்கின்றனர்/ கற்பித்துக் கொள்கின்றனர்/ கட்டமைத்துக் கொள்கின்றனர். புனைவு என்பது கற்பனை இல்லை. கற்பனைக் கூறுகள் சில இவர்களின் சித்திரிப்புக்குள் இருக்கலாமே ஒழிய, இதன் முழு வடிவத்தையும் கற்பனை என்று சொல்வது பொருத்தமில்லை. காலந்தோறும் மனிதர்கள் இப்படித்தான் எத்தனையோ புனைவுகள் / கட்டமைப்புக்கள் செய்து கொண்டு வாழ்கிறார்கள். சாதி, மதம், கடவுள் என்பவை கட்டமைப்புக்கள். தேசம், வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் என்பனவும் கட்டமைப்புக்கள். மார்க்சியம் என்பது கூட இப்படி ஒரு கட்டமைப்பு. முதலாளியம் முதலியனவும் கட்டமைப்புக்கள். மனிதன், ஆண், பெண் என்பனவும் கட்டமைப்புக்கள். கணிதம் என்பனவும் கட்டமைப்புக்கள். ஒரு சமயம் ஒரு கட்டமைப்பினுள் வாழ்கிறோம், பிறகு நாமே அதைக் கலைத்துக் கொண்டு இன்னொன்றுக்குள் செல்கிறோம். 7. யதார்த்தவாதம் செத்துவிட்டது என்று சிலர் உரக்கக் கூவியபோது, மார்க்சியர் நிதானத்துடன் சிந்தித்திருக்க முடியும். சோவியத் யூனியனில் சோசலிசம் தகர்ந்தது. ஏன் என்று நிதானமாகச் சிந்தித்திருக்க வேண்டும். என்னதான் அழகுடையதாக இருந்தாலும் சோசலிசம் நிறைவேறவில்லை. முதலாளியம் அழிந்துவிடவில்லை. மார்க்சியத்திற்குள் முதலாளியம் நுழைந்து தன்னை நிறுவிக் கொள்ளவும் செய்தது. விவசாயிகள் மீது பாட்டாளி வர்க்கம் அமர்ந்து கொள்ள முனைந்தது. முதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்டது. முதலாளிய உணர்வைத் தனக்குள்ளிருந்து வெளியேற்றிக் கொள்ளவில்லை. பெண்ணுக்குச் சமத்துவம் வழங்கவில்லை. இயற்கையை நாசம் செய்து கொண்டு இருந்தது. நுகர்வியத்திற்கு இடம் தந்தது. அரசு அமைப்புகளுக்குள் சனநாயகம் இல்லை, அதிகாரப் பரவல் இல்லை. இராணுவம் முதலியவற்றின் தயாரிப்புக்காகத் தொழிலாளர் முதலியவர்கள் சுரண்டப்பட்டனர் மற்றும் ஒடுக்கப்பட்டனர். தலைவர்கள் படத்தில் தம்மை நிறுவிக் கொண்டனர். இந்த யதார்த்தத்தை மார்க்சியர் புரிந்து கொள்ளவில்லை. தமக்குள் இருந்து களைந்து கொள்ளவில்லை. தம்மைத்தாமே கலைத்துக் கொண்டால் ஒழிய இந்த யதார்த்தம் அவர்களுக்குப் புரிந்திராது. ஆகவே இவர்கள் முன்வைத்த யதார்த்தம் / யதார்த்தவாதம் கேள்விக்குள்ளாகியதில் வியப்பில்லை. இப்படி மார்க்சியரே கூட கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். கேள்வி எழுப்பியவர்கள் நவீனத்துவம் / பின் நவீனத்துவம் சார்ந்தவர்கள். அவர்களை நோக்கிக் கேள்வி எழுப்பும் வகையில் மார்க்சியர் தம்மைத் தயாரித்துக் கொள்ளவில்லை. 8. இங்கு இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும். வழக்கமாக யதார்த்தம் என்பதையும் / யதார்த்தவாதம் என்பதையும் வேறுபாடு இல்லாமல் நாம் சொல்லுகிறோம். ஒவ்வொரு இயக்கத்தவரும் யதார்த்தம் என்ற ஒன்றை முன்வைத்ததோடு அதுதான் சரி என்று விவாதிக்கும்போது அது யதார்த்தவாதம் ஆகிறது. யதார்த்தம் தனக்குள் இறுகிவிடும்போது அது யதார்த்தவாதம். இதற்குள் வன்முறை, விதண்டாவாதம் இயல்பாகவே வந்து விடும். இதற்குள் செயல்படுவது அதிகாரம். மையத்தில் இது தன்னை இறுக்கிக் கொள்கிறது. இதற்கு இனி நிறுவனம் தேவை, கட்சி தேவை. இயக்கம் என்ற அளவில் இருக்கும்பொழுது பிறருக்கு இது தன்னைத் திறந்து கொள்ளும். இறுகிய நிலையில் தனக்குள் வருபவரை இது அமுக்கும். பகை முரண்பாடுகளை இது ஊக்குவிக்கும். எதிரிகளை உருவாக்கிப் போருக்கு அழைக்கும். இது ஆயுதங்களைச் சேகரிக்கும். அறிவு வாதம், விஞ்ஞான வாதம், பகுத்தறிவு வாதம் முதலியனவும் இத்தகையனவே. தனக்குள் இறுகிய மார்க்சியரால் தாம் முன்வைத்த யதார்த்தம் செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ள இயலவில்லை. யதார்த்தம் என்பது ஒரு கட்டமைப்பு என்பதைப் புரிந்து கொண்டிருக்க இயலுமானால் தம் கட்டமைப்பைத் தாமே கலைத்துப் போட்டு, இதனுள்ளே இடம் பெற்றிருக்கும் கூறுகள் எங்கிருந்து வந்தன? ஏன் வந்தன? இந்தக் கூறுகள் எவ்வாறு தமக்குள் இணைந்தன? இன்று இவற்றுக்கு என்ன நேர்ந்துள்ளது? என்றெல்லாம் சிந்தித்திருக்க முடியும். இப்படி விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்க முடியும். இப்படி அவர்களால் செயல்பட முடியவில்லை. தனக்குள் இருந்த மையம் அதிகாரத்தை வெளியேற்றிக் கொள்ள இயலவில்லை. வெளியேற்றிக் கொள்ள முடியும் என்றால் தாம் வரித்துக் கொண்ட மார்க்சியத்தையே கூட இவர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கக் கூடும். தமக்குள்ளிருந்து மார்க்சியத்தைப் புதுப்பித்திருக்க முடியும். மார்க்சியத்திற்குப் புத்துயிர் கொடுத்திருக்கக் கூடும். யதார்த்தம் பற்றிய மறு ஆய்வின்போது உலகளவில் தொடர்ந்து வந்திருக்கும் எத்தனையோ புதிய போக்குகள், இயக்கங்கள், கூறுகள் முதலியவற்றைக் கண்டறிந்திருக்கக் கூடும். இதைச் செய்யத் தவறியதன் மூலம், மார்க்சியத்தையும் இவர்கள் சாகடிக்கவே துணிந்தார்கள். 9. சோசலிசத்திற்கான வாய்ப்புக்கள் பெருமளவு அடிபட்டுப் போன இந்திய / தமிழகச் சூழலில் மார்க்சியரைத் திறனாய்வுக்குட்படுத்தியவர்கள் நவீனத்துவம் / பின் நவீனத்துவவாதிகள். இவர்கள் தலித்தியம் / பெண்ணியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்கள். சமுதாயத்தில் மட்டுமல்லாமல் மார்க்சிய கட்சிகளினுள்ளும் செயல்பட்ட அதிகாரம் இவர்களுக்கு உவப்பாக இல்லை. சாதி குறித்து மார்க்சியத்தில் ஆய்வு இல்லை. பெண் விடுதலைக்கான முயற்சிகளுக்கு மார்க்சியம் இடம் தரவில்லை. மார்க்சியம் பெருமைப்படுத்துகிற பாட்டாளி வர்க்கம் தலித் மக்களுக்கு விடுதலை தராது. பார்ப்பனீயத்தோடு இங்கு மார்க்சியம் ஒத்துச் செல்சிறது. மார்க்சியத்தினுள் மையம் கொண்டிருக்கிற அதிகாரம் மக்களுக்கு விடுதலை தராது. முழுமையைப் பற்றிச் சொல்லும் எந்த மெய்யியலுக்கும் இனி உலகில் இடமில்லை. இப்படித் தொடங்கி அமைப்பு மையவாதத்தினரும், பின் நவீனத்துவவாதிகளும் மார்க்சியரைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். இலக்கியம், அழகியல் என்பன குறித்து புதிய விளக்கங்கள் தந்தனர். இலக்கியத்தில் தரம் பார்க்கக் கூடாது என்றனர். நன்மை, தீமை, உண்மை, மேன்மை என்று மரபு வழிப்பட்ட கருத்தினங்களை எல்லாம் சாடி ஒதுக்கினர். அறம், ஒழுக்கம் என்பவை உயர் சாதிக்குரியவை. யதார்த்தவாதம் என்பதனுள் கலை இலக்கியங்கள் முடங்குவதில்லை. நேர்கோட்டு முறையில் எதையும் சொல்ல வேண்டியதில்லை. எல்லாவற்றையும் கலைத்துப் போட வேண்டும். புதிய வாசிப்பு முறை தேவை. வாசிப்பு என்பது ஒரு அரசியல் செயல்பாடு. வரலாறு என்பது நேர்கோட்டில் இயங்குவதில்லை. கதைக்கு / இலக்கியத்திற்கு மையம் தேவை இல்லை. யதார்த்தவாதம் மனிதனை முடக்குகிறது. மனிதனை ஒரு திசையில் மட்டும் கட்டமைக்கிறது. மனிதனுக்குள் சுதந்திரத்தை அழிக்கிறது. இப்படித் தொடர்ந்து கருத்துரைத்த பின் - நவீனத்துவவாதிகள் யதார்த்தவாதம் செத்துவிட்டது என்று சொன்னதில் வியப்பில்லை. யதார்த்தவாதம் - நவீனத்துவம் – பின் நவீனத்துவம் 1. யதார்த்தவாதம் / யதார்த்தம் என்பதை ஒரு கட்டமைப்பு என மார்க்சியர் எளிதாகப் புரிந்து கொண்டிருக்க முடியும். இப்படிப் புரிந்து கொண்டிருந்தால் மார்க்சியம் என்பது கூட ஒரு கட்டமைப்புத்தான் என்ற புரிதலையும் ஒத்திருக்க முடியும். மார்க்சியத்திற்குள் வந்து சேர்ந்திருக்கிற முதலாளியம், அதிகாரம் என்று பலவற்றையும் கண்டறிந்து வெளியேற்றியிருக்கவும் முடியும். இதன் காரணமாக மார்க்சியம் தனக்குள் இருக்கிற உள்ளுறை ஆற்றல்களைக் கண்டறிந்து தன்னைத்தானே மேம்படுத்தியிருக்கக் கூடும். புற உலகம் அதில் நிலவும் பல்வேறு ஆதிக்கங்கள் ஆகியவை அழிந்துவிடவில்லை. இலக்கியம் என்பது இல்லாமல் போய்விடவில்லை. நன்மை தீமை பற்றிய வரையறைகளும் மாற்றத்திற்குள்ளாயினவே ஒழிய அழிந்துவிடவில்லை. மார்க்சியம் மட்டுமே எல்லாவற்றையும் விளக்கக் கூடியதும் எதிர்கொள்ளக் கூடியதுமான ஒரே ஒரு மெய்யியலாகவோ, அல்லது அரசியலாகவோ இல்லை. மனித வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் ஏதோ சில / பல வடிவங்களில் இருக்கத்தான் செய்கின்றன. சோசலிச சமூகத்தினுள்ளும் ஏற்றத்தாழ்வுகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கேனும் இருக்கத்தான் செய்கிறது. மனித வாழ்வில் இருந்து வறுமை, நோய் நொடிகள் முதலியவற்றை அறவே ஒழிக்க இன்னும் நெடுங்காலமாகலாம். வரலாற்றையோ, காலத்தையோ நம்மால் ஒழித்துவிட இயலாது. மனித வாழ்க்கையைச் சூனியத்தில் கொண்டுபோய் முடித்துவிட இயலாது. முதலாளியம் முதலியவற்றோடு இன்னும்தான் உரையாட வேண்டியிருக்கிறது. மார்க்சியம் தன்னை முழு அளவில் திறந்து கொள்ள வேண்டும். சுரண்டலையோ, ஒடுக்குமுறையையோ முற்றாக ஒழித்துவிட இயலவில்லையென்றாலும் மார்க்சியம் இவற்றுக்கு ஆதரவு நல்கமுடியாது. மார்க்சியம் தனக்கு ஏற்கனவே இருக்கிற கட்டமைப்பைக் கலைத்துக் கொண்டு சமகால வரலாற்றுச் சூழலுக்கு ஒத்த முறையில் வேறு ஒரு கட்டமைப்பில் தன்னை உயிர்ப்பித்துக் கொள்ள முடியும். யதார்த்தவாதம் என்பது மட்டுமே இலக்கியத்தின் வடிவமாக இருக்க முடியாது. காலந்தோறும் இலக்கிய வடிவங்கள் எத்தனையோ வடிவங்களைப் பெற்றும், மாறியும் வந்துள்ளன. யதார்த்தவாதமும் ஏற்கனவே தனக்கு நிலவுகிற கட்டமைப்பைக் கலைத்துக் கொள்வதில் சிரமமில்லை. யதார்த்தவாதம் என்பதனுள் அரசியல் மையமாக இருக்கிறது. சமூகத்தை மாற்றி அமைப்பதனுள் மார்க்சியர் மேலும் சில இயக்கங்களோடு கைகோர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். மார்க்சியம் அடித்துக் கூறுகிற பொருளியல் மட்டும்தான் மனித வாழ்வைத் தீர்மானிக்கிறது என்பது உண்மையில்லை. பண்பாடு முதலியனவும் மனித வாழ்வின் அர்த்தங்களைத் தீர்மானிக்கின்றன. கலையோ, இலக்கியமோ இல்லாமல் மனித வாழ்க்கையில்லை. இயற்கையோடும், உயிர்களோடும், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய பிரபஞ்சத்தோடும் மனித வாழ்க்கை உறவு கொண்டுள்ளது. மனிதனின் ஆளுமையை உருவாக்குவதில் இவற்றுக்குப் பங்குண்டு. மனிதன் தன்னைத் திரட்டிக் கொண்டு, இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டால் ஒழிய இவனது ஆளுமை விரிவு பெறாது என்பது மட்டுமல்ல, இவனுக்குள் அழகியல் உணர்வும், அற உணர்வும் வளர்ச்சி பெறாது மற்றும் தங்காது. இத்தகைய மனிதன் தான் சமதர்மம் என்ற பேருணர்வைத் தனக்குள் இயல்பாகப் பெறமுடியும். அரசியலுக்கும், பொருளியலுக்கும் கூடுதலான அழுத்தம் தருவதன் மூலம், மனிதன் வாழ்வியலில் சில பரிமாணங்களை இழந்து விடுவதை மார்க்சியம் எனவும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை. ஆன்மிகம் என்பது ஓர் பேருணர்வு. எளிய வாழ்க்கை மனிதனுக்குப் போதும். காந்தியடிகள் முதலியவர்களை மார்க்சியர் இனம் கண்டு ஏற்கமுடியும் விளிம்பில் எந்த மனிதனும் இருக்க வேண்டியதில்லை. இசை முதலிய கலை உணர்வுகளில் தன்னை மூழ்கடித்துக் கொள்கிற மனிதர்களும் மார்க்சியத்துக்குத் தேவை. கணிதம், இயற்பியல் முதலிய ஆய்வுகளுக்குள்ளேயே தன்னை ஆழ்த்திக் கொள்கிற மனிதர்களை மார்க்சியன் புரிந்து கொள்வான். இவர்களுக்குள் வர்க்க அறிவைப் புகுத்தியாக வேண்டுமென்று மார்க்சியன் முனைப்புக் கொள்ளமாட்டான். வரலாறு மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு இவர்களெல்லாம் தம்மை இழந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்றோ வரப்போகிற சமதர்ம சமுதாயத்திற்காக மார்க்ஸ் முதலியவர்கள் இப்படித்தான் தம்மைத் துறந்தார்கள். கம்யூனிஸ்ட் என்பவன் ஒரு SAINT என்று லெனின் கூறியதை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும். கம்யூனிஸ்ட் என்பவன் ஒரு ஞானி / மகான் / துறவி /புத்தன் / சித்தன் என்றெல்லாம் நாம் பொருள்படுத்த முடியும். உற்பத்தியைப் பெருக்குவதனால் மட்டுமே ஒரு உயரிய சமூகம் வாய்த்து விடாது. மரபின் வளங்களிலிருந்து மார்க்சியத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் லெனின் கூறியிருக்கிறார். பாவ்லோ மார்க்சியத்திற்கு எதிரானவர். அவரை லெனினால் புரிந்து கொண்டு போற்ற முடிந்தது. தாஜ்மகாலோ தஞ்சைப் பெரிய கோயிலோ, அடிமைகளைக் கொண்டுதான் கட்டப்பட்டது என்ற போதிலும், இந்தக் கலைச் செல்வங்களை மார்க்சியன் இகழ்ந்துவிட முடியாது. வள்ளுவரின் அறம் முதலியனவும் இத்தகையவை. கடவுள் என்ற கருத்தாக்கத்தினுள்ளும் மனித ஆளுமையை நாம் காண முடியும். இப்படித்தான் ஒரு மார்க்சியன் வரலாற்றை மதிப்பிட முடியும். சூன்யத்திற்குள் தன்னை மனிதன் புதைத்துக் கொள்ள முடியாது. பல்லாயிரமாண்டுகளாக மனிதன் சேகரித்த அறிவு / கலைச் செல்வங்கள் அனைவருக்கும் உரியவை. 2. ஏற்கனவே நிலவுகிற கட்டமைப்பை நாம் கலைத்துக் கொள்வதற்கான காரணம் அந்தக் கட்டமைப்பு நம்மை இறுக்குகிறது. புதிய உண்மைகளுக்கு அது தன்னைத் திறந்து கொள்வதில்லை என்பது தான் காரணம். ஆகவே முன்னர் நிலவிய கட்டமைப்பைக் கலைத்துப் போட்டு, அதனுள் இன்னும் பயன்படுகிற கூறுகளோடு புதிய கூறுகளை இணைத்துக் கொண்டு இன்னொரு கட்டமைப்பை உருவாக்குகிறோம். இப்படித்தான் வரலாற்றுக் காலம் முழுவதும் மனிதன் செயல்படுகிறான். கருவிகள் என்பனவும் கட்டமைப்புக்கள், கருவிகள் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. கருத்துக்கள் சிந்தனைகள் கொள்கைகள், கோட்பாடுகள் என்பனவும் கட்டமைப்புக்கள் தான். கடவுளும் ஆன்மாவும் கட்டமைப்புக்கள். மனிதன், இயற்கை, பிரபஞ்சம், வரலாறு என்பனவெல்லாம் இத்தகைய கட்டமைப்புக்கள். இவற்றின் வரையறைகளை நம் காலத்திற்கு ஒத்த வடிவில் மாற்றியமைக்கிறோம். இலக்கியம் முதலியன எல்லாமே இப்படித்தான் மாறி வருகின்றன. கற்பனை, அன்பு, கருணை, கலை முதலியவற்றோடுதான் மனிதன் வாழ்கிறான். யதார்த்தவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தின் தேவை மற்றும் ஆக்கம். இது போதாதபொழுது கலைத்துப் போட்டு மேலும் தேவை என்றால் இன்னொரு வடிவில் புதிய கூறுகளை உள்வாங்கிக் கொண்டு படைக்கிறோம். புதிய கோட்பாடுகள் முதலியவை நமக்கு எதிராக நிற்கும் பொழுது, நம்மை எதிர்த்து நிற்கும் பொழுது அதைச் சரியானபடி எதிர்கொள்ள வேண்டுமானால் நமது ஆயுதங்களை, நமது அரண்களை மறு ஆய்வுக்குட்படுத்தி நம்மைத் திருத்தமுற அமைத்துக் கொள்ள வேண்டும். யதார்த்தவாதம் செத்துவிட்டது என்ற குரல் எழுந்தவுடன், யதார்த்தமே செத்துவிட்டது என்று நாம் அஞ்ச வேண்டியதில்லை. யதார்த்தம் என்ற கட்டமைப்பு கேள்விக்குள்ளாயிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அதைக் கலைத்துப் போடுவது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். புற உலகம் அழிந்து விடவில்லை . உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பு, கல்வி, மருத்துவம் என்பனவெல்லாம் மாற்றியமைக்கப்பட்ட வடிவிலும் நமக்குத் தேவைப்படும் யதார்த்தங்கள். இவற்றைப் போலவே இசை, கலை, இலக்கியங்கள் முதலியனவும். சுதந்திரம், சமத்துவம் முதலியனவும் இத்தகையவை. இவற்றை ஒரு சிலர் மட்டும் வசப்படுத்திக் கொள்வதாக இருக்க முடியாது. இவை எல்லோருக்கும் தேவை. புதியது படைக்கவும் வேண்டும். இவற்றுக்கெல்லாம் நம் கருத்தியல் கோட்பாடு இடம் தரவேண்டும். யதார்த்தத்தில் இருந்து முற்றாக விலகிய கலையோ, மெய்யியலோ இருக்க முடியுமா? என்ற கேள்வியோடு, புதியதான நம்மை எதிர்ப்படுகிற நவீனத்துவம் என்ற கலை / இலக்கியப் போக்கு குறித்து இப்பொழுது பார்க்கலாம் எடுத்துக்காட்டுக்கு யேர்னஸ்டு ஹெமிங்வே எழுதிய “கடலும் கிழவனும்” என்ற நாவலை இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். கிறிஸ்டியன் என்ற கிழவன் கடலில் மீன் பிடிப்பதற்காக படகில் ஏறிச் செல்கிறான். அவனது தூண்டிலில் அகப்பட்டது ஒரு சுறா மீன். சுறா மீனுக்கும் இவனுக்கும் கடுமையான போராட்டம். ஒரு பகல் இரண்டு இரவுகள் போராட்டம். இடையில் அவன் தன் ஈட்டியால் சுறா மீனைக் குத்த, பொங்கி வழிந்த இரத்தத்தின் சுவை காரணமாக எத்தனையோ கறா மீன்கள் வந்து சூழ்ந்து கொள்கின்றன. இறுதிவரை கிறிஸ்டியன் தன் முயற்சியைக் கைவிடவில்லை. காலையில் கடற்கரையில் விழுந்து கிடக்கிறான். இறுதியில் அவன் தூண்டிலில் எஞ்சியிருப்பது சுறாமீனின் எலும்புக்கூடு. அற்புதமான நவீனத்துவ நாவல் இது. பொருளியல் அரசியலுக்கு அழுத்தம் தருகிற யதார்த்தவாதி இந்த நாவலை ரசித்துப் படிக்க முடியாது. இவன் வயதானவன். சுறாமீனுடன் இவன் எப்படி போராட முடியும். தூண்டிலை விட்டு விட்டு இவன் திரும்பி வந்திருக்க வேண்டும். இவனுக்குள் செயல்படுவது அர்த்தமில்லாத தன் முனைப்பு. இவன் ஒரு மூடக்கிழவன். இறுதியில் இவனுக்கு என்ன கிடைத்தது. உயிர்போகாமல் தப்பித்தான். நாவலை இப்படித்தான் பொருள்படுத்துவதென்றால் நாவலில் இருந்து நமக்குக் கிடைப்பது ஒற்றைப் பரிமாண கதை மட்டுமே. இப்படி பொருள்படுத்துகிற யதார்த்தவாதி தனக்குள் இறுகியவன். உணவு, உடை, பாதுகாப்பு என்பதற்கு வெளியே இவனுக்குள் பார்வை விரிவுபடவில்லை. மனிதன் மகத்தானவன் என்று சொல்லுகிறோம். இதற்கு என்ன பொருள். வரலாற்றின் வழியே மனிதன் தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறான். இதற்காக அவன் தளர்ச்சி இல்லாமல் போராடி இருக்கிறான். வெற்றிக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் போராட்டத்தில் அவன் பின் வாங்குவது இல்லை. தனிமனிதன் என்ற முறையில் இவனுக்கு எது நேர்ந்தாலும் அடுத்தவன் இதைத் தொடர்கிறான். இயற்கையோடு மட்டுமல்லாமல் மன்னர்கள், நிலப்பிரபுக்கள் முதலியவர்களோடும் போராடித்தான் மனிதன் இன்றைய நிலைக்கு வந்துள்ளான். எவரெஸ்டு சிகரத்தை மனிதன் வெற்றி கொண்டது இப்படித்தான். நாவலைத் தொடர்ந்து ஊன்றிப் படிக்கும் பொழுது, இந்தக் கிழவன் மனித இனத்தின் குறியீடாகத் தெரிகிறான். கடல் இன்னொரு குறியீடு. இவனுக்குள் ஏசு இருக்கிறார். சாக்ரட்டீஸ் முதல் யார் யாரோ இருக்கிறார்கள். உணவோ, பாதுகாப்போ முக்கியமில்லை. வரலாற்றின் எல்லைகளைத் தகர்த்து முன் செல்பவன் இந்த மனிதன். இப்படித்தான் நாவல் நமக்குள் பொருள்படுகிறது. இது நவீனத்துவப் படைப்பு. இந்தக் கிழவன் வரலாற்றின் வழியே பெருகிவரும் அற்புத மனிதன். இவனுக்குள் மார்க்ஸ், லெனின் முதலியவர்களைக் காணமுடியும். இவனை ஒரு மார்க்சியனால் புரிந்து கொள்ள முடியும். யதார்த்தவாதி இவனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். குறுகிய சூழலை மட்டும் தனக்குள் வரித்துக் கொள்வது யதார்த்தமாகாது, யதார்த்தவாதமாகாது. வரலாற்றுக் காலம் முழுவதையும் உள்வாங்கிக் கொள்வதாக யதார்த்தம் இருக்க முடியும். ஒரு தனிமனிதன் வறுமைப்படுகிறான் என்றால் இதன் காரணங்களை ஆராய்ந்து செல்லும்பொழுது சமூகம், வரலாறு என்று பல தளங்களுக்குள் சென்றாக வேண்டும் நாவலில் செயல்படும் யதார்த்தம் இவ்வளவு விரிவாக இருக்க முடியும். மணிமேகலை காப்பியத்தினுள் இடம்பெறும் அமுதசுரபி கற்பனை பாத்திரம் குறித்து இங்கு பார்க்கலாம். சங்க காலத்தை அடுத்துத் தமிழகச் சூழலில் நிலவிய வறுமை, கொடுமைகள் குறித்து மணிமேகலை சொல்லுகிறது. இத்தனை பெரிய வறுமையைத் தீர்க்க மனிதனால் முடியாது போல் தோன்றுகிறது. ஆயிரம், ஆயிரம் என்று கண் பார்வை இல்லாதவர்கள், கால் முடம்பட்டவர்கள், நோயாளிகள், உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள், எல்லோரும் மதுரையில் குழுமியிருக்கிறார்கள். செல்வந்தர்கள் தந்து இவர்கள் வறுமை தீராது. தெய்வம் முன்வந்து உதவ வேண்டும். பெரிய பாத்திரம் எடுக்க, எடுக்க குறையாமல் உணவு வந்தால் மட்டுமே வறுமை நோயைத் தீர்க்க முடியும். சமைத்துப் போடுவது கூட அனைவரின் பசிப்பிணி தீர்க்காது. இப்படித்தான் அமுதசுரபி என்ற கற்பனைப் பாத்திரம் எழுந்தது. பல நாள் உண்ணாதவன் கனவில் என்ன வரும்? மலை, மலையாய் உணவு குவிந்திருக்கிற கனவு தானே அவனுக்கு வரும்? இதைத்தான் அமுதசுரபி என்ற கற்பனை நமக்கு உணர்த்துகிறது. பன்முகப் பரிமாணங்களை உள்ளடக்கியதாகத் தெரியவரும் ஒரு படிமம் /படைப்பின் மூலம் நாம் தெரிந்து கொள்வது சிக்கல் மிகுந்த உலகின் யதார்த்தச் சூழல். இத்தகைய நவீனத்துவம் யதார்த்தச் சூழலில் இருந்துதான் வெடிக்கிறது. கற்பனை எனத் தெரியவரும் வடிவம் யதார்த்தத்தின் சிக்கலை அற்புதமாய்ச் சொல்லுகிறது. இப்பொழுது சொல்லலாம் நவீனத்துவப் படைப்புக்களை யதார்த்தவாதி மறுத்திருக்க வேண்டியதில்லை. பிகாசோவின் படைப்புக்கள் நவீனத்துவம் சார்ந்தவை. முதலாளியத்திற்குச் சேவை செய்ய முடியாது என்ற முறையில் கலைப் படைப்புக்களை உருவாக்கிய 17/18-ம் நூற்றாண்டு கலைஞர்களை பிளெக்னோவ் பாராட்டினார். இவர்கள் தமக்குள் அன்னியப்பட்ட கலைஞர்கள். அன்னியப்பட்டதன் மூலம் தம் கலைகளை இவர்கள் காப்பாற்றுகிறார்கள். நவீனத்துவக் கலைஞன் என்பவன் முதலாளியத்தை நேரிடையாக உள்வாங்கிக் கொண்டவன் அல்லன். சமூகத்தில் நிலவுகிற ஆதிக்கங்களுக்கு இவன் எப்பொழுதும் எதிரானவன். இயேசுவைப் போலவே சாக்ரட்டீஸ், சேக்ஸ்பியர், கத்தே, டால்ஸ்டாய், தாஸ்தாவெஸ்கி முதலியவர்களையும் இப்படித்தான் நாம் பார்க்க வேண்டும். இந்த வரிசையில்தான் புதுமைப்பித்தன், மெளனி, சு.ரா. முதலியவர்களையும் நாம் மதிப்பிட வேண்டும். கலைஞர்கள் எப்பொழுதுமே ஆதிக்க கருத்தியல்களை ஏற்றுக் கொண்டவர்கள் என்பது அபத்தம். இவர்களைப் புரிந்து கொள்ளாதவன் மார்க்சியனாக இருக்க முடியாது. 3. இனி பின் - நவீனத்துவம் என்பதை மார்க்சியன் எவ்வாறு எதிர்கொள்வது என்ற முறையில் சிலவற்றைச் சொல்லலாம். பின் நவீனத்துவம் என்பதனுள் இரண்டு போக்குகள் செயல்படுகின்றன. ஒன்று வலது சாரிப் போக்கு. இன்னொன்று இடது சாரிப் போக்கு. இடது சாரிப் போக்கு மார்க்சியத்தோடு ஒத்துச் செல்லும் போக்கு. மார்க்சியத்திற்கு எதிரான போக்கு வலது சாரிப் போக்கு. பின் - நவீனத்துவம் தன்னை விளக்கும் முறையில் பல்வேறு கலைச் சொற்களைப் பயன்படுத்துகிறது. இவற்றில் புனைவு / கற்பிதம் என்பதை முன்னரே பார்த்தோம். கட்டுடைப்பு, தலைகீழாகப் புரட்டிப் போடுதல், பிரதி என்பனவும் சில கலைச்சொற்கள். மொழி என்பதற்கு அழுத்தம் தந்து குறிப்பான், குறி, குறிப்பிடு என்றும் இவர்கள் பேசுகிறார்கள். எல்லாச் சொற்களும் குறிகளாகின்றன. மொழி என்பதே குறிகளின் கிடங்கு. மொழிக்குள் நாம் இருக்கிறோம். மொழிதான் நம்மைக் கட்டமைக்கிறது. இலக்கியம் என்றோ, வரலாறு என்றோ, தனித்து எதுவும் இல்லை. எல்லாமே குறியீடு. இப்படி எல்லாம் இவர்கள் விளக்குவதை நாம் முற்றாக மறுக்க வேண்டியதில்லை. மறுப்பதும் கூட சாத்தியம் இல்லை. இவர்களை நாம் புரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றையும் கலைத்துப் போடுவது என்று தொடங்கி இடையில் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கி எல்லாமே நாடகம் என்று சொல்லி இறுதியில் ஏதுமற்ற சூனியத்தில் இவர்கள் நம்மை கொண்டு போய் நிறுத்துகிறார்கள். முற்றான சுதந்திரவெளி, வெட்டவெளி இங்கு எதுவும் செய்யலாம். நன்மை தீமை என்று எதுவும் இல்லை. இப்படிச் செல்லுகிறது அவர்கள் தரும் விளக்கம். இவர்கள் மொழி என்று சொல்லுகிறார்கள். மொழிக்குள் நாம் இருக்கிறோம். மொழி நம்மை கட்டமைக்கிறது. வரலாறு நம்மை கட்டமைக்கிறது. வரலாற்றுக்குள், கலாச்சாரத்துக்குள் நாம் இருக்கிறோம் என்று நாம் சொல்லுகிறோம். எல்லாமே குறிகள். குறிகள் என்ற முறையில் இவை அருவங்கள். உருவங்களிலிருந்து இவை பிரிந்துவிட்டன. மொழி குறித்து ஆழ்ந்த உண்மை ஒன்றை இதன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்ற உண்மையை நாம் மறுக்கவில்லை. எல்லாமே குறிகள் / அருவங்கள் என்று சொல்லும் பொழுது புற உலகிலிருந்து, நம் உடம்பிலிருந்தும் கூட நாம் விடுபடுகிறோம். இருப்பது வெட்டவெளி. திசைகள்கூட நமக்கு இல்லை. நாம் எங்கும் பறந்து செல்லலாம். இப்படிச் சொல்வது எந்தளவுக்கு உண்மை? விருந்து உணவு நமக்கு வேண்டாம். குறைந்த அளவுக்கு உணவு தேவை. மிக, மிக எளிய உணவு. இயற்கை உணவு. தரையில் இருக்கமுடியும். குடியிருக்க ஒரு குடிசை வீடு. பொருளோடு / உலகத்தோடு நம் உறவை வெட்டிக் கொள்ள இயலவில்லை. அருவங்களில் குடியிருப்பவனுக்கும் உணவு, உடை முதலியவற்றைத் தர பலர் உழைக்க வேண்டும். சிலர் மட்டுமே இப்படி அருவங்களில் குடியிருந்து கேலி பேசிக் கொண்டு இருந்துவிட முடியாது. எல்லோருக்கும் எளிய உணவு முதலிய குறைந்த தேவைகள் நிறைவேற வேண்டும். இதற்கு இயக்கம் வேண்டும். இயக்கத்திற்குள் அதிகாரம் சேரும் என்பதும் உண்மைதான். பெரிய அதிகாரங்கள் / அமைப்புக்கள் நம் சுதந்திரத்தை அழிக்கும் என்பதும் உண்மைதான். இவை சிறியனவாக இருக்க வேண்டும். அதிகாரம் இறுகும்பொழுது அதைக் கலைத்து மாற்றிப் போட வேண்டும். சூன்யம் என்று இவர்கள் சொல்வது மனிதனிலிருந்து முற்றாக பிரிந்து விடும் சூன்யமும் அன்று. சூனியம் என்பதும் மனிதச் சூனியம். தியானத்தின்போது நாம் கரைந்து விடுவதைப் போன்ற ஒரு சூனியம். இது புத்தர் கண்ட நிர்வாணமாகக் கூட இருக்கலாம். புத்தரும் கீழ் இறங்கி வந்து மனிதச் சூழலை மாற்ற முற்பட்டார் என்பதையும் நாம் இங்கு மறக்க வேண்டியதில்லை. சூன்யம் என்பது ஒரு பூஜ்யம். எதுவுமற்றது அன்று பூஜ்யம். இன்னது இதன் மதிப்பு என்று நம்மால் அறிய முடியவில்லை என்றாலும் பூஜ்யத்திற்கும் ஒரு மதிப்புண்டு. ஒன்றும் இல்லாத ஒன்று இந்த பூஜ்யம். மனிதன் தன் தர்க்கத்தின் வழியே படைத்துக் கொண்டது இந்த பூஜ்யம். நவீனத்துவம் என்ற கருத்தியலை நாம் இப்படித்தான் பொருள் படுத்த முடியும். இது இடதுசாரி முறை. மார்க்சியத்திற்கு ஒத்த முறை . பின் - நவீனத்துவம் நமக்குள் நம் மார்க்சியத்தைக் கலைத்துப் போடும் வகையில் பேருதவி செய்திருக்கிறது. அதிகாரம் சிறிய அளவிலேனும் இல்லாமல் முடியாதென்றாலும் அதிகாரத்தில் நாம் இறுகிவிடக் கூடாது. அது மார்க்சியத்தையும் இறுதியில் அழிக்கும். பிரதி என்பது ஒரு அற்புதமான கோட்பாடு. கதைகள், தத்துவங்கள், இலக்கியங்கள் முதலிய எல்லாவற்றினுள்ளும் நுழைந்து பன்முகப் பரிமாணங்களில் இவற்றை நாம் பொருள் படுத்தலாம். கம்பர் காவியத்திற்குள் நுழைந்துவரும் பொழுது, நமக்குள் இராமனையும், இராவணனையும் காணமுடியும், இருவரும் நமக்குள் போரிடுகின்றனர். குகனையும், அனுமனையும் காணமுடியும். சீதையைப் போலவே சில சமயம் சூர்ப்பநகையும் நமக்குத் தேவைப்படலாம். இப்படி எல்லாம் அந்தக் கதைகளின் கட்டமைப்பைக் கலைத்துப் போட்டு நமக்கான ஒரு கதையை அதிலிருந்து வாசிக்கிறோம். மெளனி என்று தொடங்கி நம் கால கலைஞர்களையும் இப்படி நாம் வாசிக்க முடியும். மார்க்சியத்திலிருந்தும் இப்படி வெவ்வேறு பிரதிகள் வாசிக்கப்பட்டிருக்கின்றன. யதார்த்தமும் இப்படி ஒரே ஒரு பிரதியாக இருக்க வேண்டியதும் இல்லை. ஆகவே பின் - நவீனத்துவத்தை இப்படிப் பொருள்படுத்துவதன் மூலம் நம்மை நாமே விரிந்த பொருளில் புரிந்து கொள்கிறோம். நன்றி - 22.3.2000 மார்க்சியமும் இலக்கியமும் - I மார்க்சிய நோக்கில் இலக்கியம் பற்றிய புரிதலில் இரு வேறு முக்கியமான போக்குகளை நாம் கவனிக்க முடியும். அடித்தளத்துக்கு முதன்மை கொடுத்து மேற்கட்டுமானத்தை இறுதியாக தீர்மானிப்பது அடித்தளம் தான் - என்ற ஒரு போக்கின் பகுதியாக இலக்கியத்தின் நோக்கம் அரசியல் தான் என்பது ஒருவகை. இவ்வகை போக்கு மார்க்சியத்தின் தொடக்கம் முதலே இருந்து வருகிறது என்ற போதிலும், ஸ்டாலின் காலத்தில் இந்தப் போக்குக்குக் கூடுதலான அழுத்தம் தரப்பட்டது. ஸ்டாலின் அமைச்சரவையில் கலாச்சாரத் துறை அமைச்சராக செயல்பட்ட ஜாடனோவ் பெயரால் இவ்வகைப் போக்கு ஜாடனோவியம் என்றும் அழைக்கப்படுகிறது. வர்க்கப் போராட்டம் என்பதை மையப்படுத்தி பாட்டாளி வர்க்கத்துக்கும் பொதுவுடைமைக் கட்சிக்கும் முதன்மை தந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இலக்கியம் கட்சித் தலைமையின் நெறிப்படுத்தலில் இயங்க வேண்டும். சோஷலிசத்தைச் செயல்படுத்துவதாகிய அரசியல் பணியில் இலக்கியம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். படைப்பாளிகள் கட்சியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மத்திய தர வர்க்கப் படைப்பாளிகள் எப்பொழுதும் ஆதிக்க வர்க்க கோட்பாட்டைக் கொண்டவர்கள். இவர்கள் தம்மை வர்க்க நீக்கம் செய்து கொள்வதற்காக கட்சியின் நெறிப்படுத்தலில் இயங்க வேண்டும். இப்படி உருவாகிய கலை இலக்கிய கோட்பாடு சோசலிஸ் எதார்த்தவாதம் என்று பெயரிடப்பட்டது. இந்தியாவிலும் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட படைப்பாளிகள் இந்தக் கோட்பாட்டில் நம்பிக்கை வைத்தனர். எதார்த்தவாதம் என்ற இந்தக் கோட்பாட்டின் முக்கிய கூறு பிரதிபலிப்புக் கோட்பாடு இலக்கியம் வர்க்க முரண்பாட்டை, இந்த முரண்பாட்டின் அடிப்படையில் எழும் வர்க்கப் போராட்டத்தைச் சித்தரிக்க வேண்டும். இப்படி சித்தரிக்க வகை மாதிரிப் பாத்திரங்களைப் படைக்க வேண்டும். கட்சியை, பாட்டாளி வர்க்கத்தைக் குறை சொல்லக் கூடாது. இம்முறையில் மார்க்சிய நோக்கில் ஒரு வகையான இலக்கிய கோட்பாடு உருவாயிற்று. ரஷ்யாவில், சோவியத் யூனியனில் இது கடுமையாக செயற்படுத்தப்பட்டது. முன்பு நிலவிய கலை, இலக்கியப் போக்குகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்தக் கோட்பாட்டை கொண்டவர்களுக்கே அரசு ஆதரவு, பரிசு முதலியன வழங்கப்பட்டன. நல்ல வேளையாக டால்ஸ்டாயை லெனின் காப்பாற்றி வைத்தார். இந்த மரியாதை இன்றளவும் தாஸ்தாவ்ஸ்கிக்கு இல்லை. சொலக்கோவுக்குக் கிடைத்த மரியாதை சோலிஜியிட்சினுக்குக் கிடைக்கவில்லை. அன்னா அக்மதாவ் முதலிய பெருங்கவிஞர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டனர். மாயகாவ்ஸ்கி தற்கொலை செய்ய நேரிட்டது. தமிழகத்தில் கட்சி சார்ந்த மார்க்சிய வட்டாரத்தினர், தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளைப் புறக்கணிப்பது என்பதும் இவ்வகைப் போக்கின் ஒரு வெளிப்பாடுதான். 2. மார்க்ஸிய நோக்கில் இலக்கியம் பற்றி இன்னொரு முக்கியமான கோட்பாடு குறித்து இப்பொழுது சொல்லலாம். அடித்தளம்தான் மேற்கட்டைத் தீர்மானிக்கும் என்ற கோட்பாடு குறித்த விமர்சனங்கள் தொடக்கம் முதலே இருந்து வருகின்றன. தொடக்கத்திலேயே எங்கல்ஸ், மேற்கட்டுமானம் சில சந்தர்ப்பங்களில் அடிக்கட்டுமானத்தைப் பாதிக்கும் என்ற கருத்தை வெளியிட்டார். எனினும் இறுதியாக தீர்மானிப்பது அடித்தளம்தான் என்றார். ஸ்டாலின் காலத்தில் மொழியை எதில் சேர்ப்பது என்ற விவாதம் எழுந்தபோது இறுதியாக ஸ்டாலின் ஒரு வரையறையை முன்வைத்தார். இரண்டுக்கும் இடையில் இருப்பது மொழி. தவிர அடித்தளத்துக்கு நெருக்கமாக இருப்பது மொழி என்றார். இதைப்போலவே எல்லா வகையான மெய்யியல்களையும், கருத்து முதல்வாதம், பொருள்முதல்வாதம் என்ற இருவகைப் பகுப்பினுள் அடக்கிவிடலாமென்று கூறிய எங்கல்ஸ், தொடர்ந்து தன் ஆய்வில் ஹியூம், கான்ட் ஆகியவர்களின் மெய்யியல்களை இவற்றுக்கு இடையில் வைக்க வேண்டும் என்றார். வாழ்நிலைதான் சிந்தனை அல்லது உணர்வுகளை தீர்மானிக்கிறது - என்பது மார்க்சியத்தின் ஒரு அடிப்படைக் கருத்து. சிந்தனை மனிதனை பற்றும்பொழுது அது ஒரு பொருண்மைச் சக்தியாக மாறுகிறது என்றும் மார்க்ஸ் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் ஒரு முக்கியமான மார்க்ஸின் கருத்து - சூழ்நிலை மனிதனைப் பாதிக்கிறது என்பது உண்மையில் ஒரு பாதி என்கிறார். இதன் மறுபாதி சூழ்நிலையைத் தீர்மானிப்பவன் மனிதன் தான் என்றும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இத்தகைய ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்பொழுது வழக்கமான கட்சி வட்டாரத்தினர் அழுத்தம் தந்து எடுத்துரைக்கும் மார்க்சியத்துக்குள்ளும் அதன் எதிர் நிலைகள் தென்படுகின்றன. இவை மார்க்சியத்தை மேலும் வளப்படுத்தக் கூடிய எதிர்நிலைகள். அடித்தளத்துக்கு அழுத்தம் தருபவர்கள் உற்பத்திச் சக்திகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருகிறார்கள். உற்பத்தி உறவுகளைக் கொஞ்சம் தள்ளி வைக்கிறார்கள். இதன் விளைவாக சோவியத் யூனியனில் கனரக தொழில்களுக்கு முதன்மை தரப்பட்டது. ராணுவப் பெருக்கம், அரசியல் கட்சி அதிகாரப் பெருக்கம் நேர்ந்தன. அரசின் ஆதிக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்தியவர்கள் மாஸ்கோ விசாரணை முதலிய பெயர்களில் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். வன்முறை வடிவில் கூட்டுறவுப் பண்ணைகளை ஏற்படுத்தினார்கள். ஒத்துழைக்க மறுத்தவர்கள் கொல்லப்பட்டனர். அரசு மற்றும் கட்சியின் ஐயத்துக்குள்ளானவர்கள் உழைப்பாளர் முகாம்களில் அடைக்கப்பட்டனர். தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டன. தொழில்கள் பெருமளவில் இயந்திரமயம் செய்யப்பட்டன. இயற்கைச் சூழல் பெருமளவில் நாசமாகியது. இறுதியில் மக்கள் மீது பாட்டாளிகள் மீது ஒரு சர்வாதிகாரம் செயல்படுத்தப்பட்டது. மேற்கத்திய நாடுகளை முன்னுதாரணம் ஆக்கி தொழில் பெருக்கம் முதலியவை செய்ததன் விளைவாக அரசு நிர்வாகம், கட்சி நிர்வாகம் முதலியவற்றினுள் முதலாளியப் போக்கு நுழைந்தது. சோசலிசம் சீர்குலைந்தது. இந்தச் சூழலில் தான் சோசலிச எதார்த்தவாதம் என்ற கோட்பாடு கலை, இலக்கியவாதிகளுக்குக் கற்பிக்கப்பட்டது. இலக்கியவாதிகள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்த முடியாது. மனித மாண்புகள் குறித்துப் பேசமுடியாது. 3. அடித்தளம், மேற்கட்டு எனக் கறாராக பிரித்துவிட இயலாது - என்ற புரிதல் மார்க்சிய வட்டாரத்தில் மெல்ல மெல்லத்தான் ஏற்பட்டது. உற்பத்திச் சக்திகளுக்கு அழுத்தம் தந்ததன் ஒரு முக்கியமான விளைவு சோவியத் யூனியனில் முதலாளியப் போக்கின் பெருக்கம். உற்பத்தி உறவுகளுக்கு முக்கியம் தருவது பற்றி மாவோ பேசினார். சீனாவின் அனுபவங்கள் - சோவியத் யூனியனிலிருந்து பெருமளவு வேறுபட்டு இருந்தன. இவை தவிர அடித்தளம், மேற்கட்டு ஆகியவற்றைக் கலைத்துப் போடுவதன் தேவையையும் அல்தூஸர் முதலியவர்கள் உணர்ந்தனர். ஸ்டாலின் பற்றி தொடக்கம் முதலே கடுமையான விமர்சனங்களும் செய்யப்பட்டன. இந்த அனுபவங்கள் மிக விரிவானவை. ஆய்வுக்குரியவை. மார்க்சியத்தினுள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் மக்கள் மீது திணிக்கப்பட்ட சர்வாதிகாரத்தை மார்க்ஸியத்துக்கு ஒத்தது என்று இன்று நாம் வழக்காட முடியாது. மக்களை ஒதுக்கிவிட்டு சோசலிசத்தைக் கொண்டுவர முடியாது. மக்களுக்கு நெறிகள் சொல்லி மக்களைத் திரட்டி இயக்கங்கள் வழியே சமூக மாற்றத்தைத் தூண்ட வேண்டிய கட்சி மக்களை அழிக்க முடியாது. கோர்பசேவை முழு அளவில் குற்றவாளி ஆக்க முடியாது. சீனாவைப் பற்றியும் சில விமர்சனங்களுக்குத் தேவை இருப்பதை நான் மறுக்கவில்லை. சோவியத் யூனியனில் சோசலிஸம் தகர்ந்தது என்பதற்கு ஏகாதிபத்தியத்தில் ஊடுருவலை காரணம் ஆக்கவும் முடியாது. சோவியத் யூனியன் தகர்வுக்குக் கட்சிதான் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்தியாவிலும் புரட்சிகரப் போக்கு வெற்றி பெறாமைக்குக் கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் குறை சொல்ல முடியும். 4. இப்பொழுது இலக்கியம் குறித்து கவனம் செலுத்துவோம். மார்க்ஸின் வியக்கத்தக்க இரண்டு ஒரு மேற்கோள்களை இங்கு தருகிறேன். ஒரு சமுதாயத்தில் கலை அடைந்திருக்கிற உச்சத்தை, அந்த சமூகத்தின் பொருளியல் காரணிகளிலிருந்து விளக்க முடியாது என்றெழுதினார் மார்க்ஸ். மரபு மார்க்ஸியருக்கு அதிர்ச்சி தரக்கூடியது இந்தக் கூற்று. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரேக்கர்களின் கலைச் செல்வங்கள் இன்றும் நம்மை பாதிப்பதற்கான காரணங்கள் நமக்கு இன்றும் விளங்கவில்லை என்று மார்க்ஸ் எழுதினார். பிறகு (இது குறித்து மார்க்ஸே ஒரு விளக்கம் தந்தார் ) மில்ட்டன் ஸ்வர்க்க நீக்கம் என்ற காவியத்தை ஏன் படைத்தார் என்ற கேள்விக்கு மார்க்ஸ் தந்த விடை பட்டுப்புழு பட்டு உற்பத்தி செய்கிறது. இதன் காரணமாகத்தான் இறப்பது உறுதி என்று அதற்குத் தெரிந்தாலும் பட்டு உற்பத்தியைத் தான் செய்து கொண்டிருக்கும். பட்டு உற்பத்தி என்பது அதன் வாழ்வுச் செயல்பாடு. இத்தகைய செயல்பாடு மூலமாகத்தான் தன் வாழ்வை நிறைவு செய்து கொள்கிறது. மில்ட்டனும் தன் காவியத்தை இப்படிப் படைத்தார். இப்படி மார்க்ஸ் சொன்னதன் சூழல் அற்புதமானது. உபரி மதிப்பு என்ற முறையில் எல்லா வகை பண்டத்துக்கும் மதிப்பைத் தீர்மானிக்க முடியும். ஆனால், கலைப் படைப்பிற்கான மதிப்பு அல்லது விலையைத் தீர்மானிக்க முடியாது என்கிறார் மார்க்ஸ். பண்டத்தை உற்பத்தி செய்யும் போது அதற்குள் உழைப்பாளியின் திறன் செல்கிறது. இழந்த திறனை உழைப்பாளி மீட்டுக் கொள்ள முடியும். இதற்கான தொகை ஊதியம். ஆனால் படைப்பினுள் ஈடுபடும் பொழுது ஒரு கலைஞன் தன்னையே அதனுள் இழக்கிறான். இப்படித் தன்னை இழந்தாலொழிய ஒரு உயர்வான படைப்பு உற்பத்தியாகாது. இத்தகைய படைப்புக்கு விலை மதிப்பிட முடியாது என்பது மார்க்ஸின் கருத்து. இந்த இடத்தில் பிரதிபலிப்பு குறித்து, லெனினின் கருத்தைக் குறிப்பிடுவது பொருந்தும். பிரதிபலிப்பு என்பதை இருவகைப்படுத்துகிறார் லெனின். புறத்திலிருப்பதை அதேபோல பிரதி செய்வதை ‘Passive Reflection’ புறத்திற்கு எதிர்வினை தருவது ‘Active Reflection’. இது செயல் ஊக்கமுள்ள பிரதிபலிப்பு. வறுமைச் சூழல் காரணமாக ஒருவன் திருடுகிறான். ஒரு பெண் தன் உடலை விற்கிறாள் என்பது ’Passive Reflection’ சூழலோடு ஒத்து இயங்கும் பிரதிபலிப்பு. எவ்வளவு வறுமை இருந்த பொழுதிலும் நான் திருடமாட்டேன், நான் சூழலை மாற்றி அமைப்பேன் என்று எதிர்வினையோடு அமைவது செயல் ஊக்கமுடைய பிரதிபலிப்பு. சூழலை மாற்றுபவன் மனிதன் என்ற மார்க்ஸின் கூற்றையும் இங்கு நினைவு கொள்ளலாம். சூழலையே குற்றப்படுத்தி குளிர் காய்பவர்களும் தம்மை மார்க்ஸியர் என்று சொல்லிக் கொள்ள முடியாது. இருப்பதைப் பிரதிபலிக்கிறேன் - இது எதார்த்தவாதம் என்பதும் மார்க்சியத்துக்கு ஒத்த போக்கு அன்று. எதிர்வினை என்ற முறையில் அரசியலுக்கு அழுத்தம் தருவதுதான் மார்க்சியம் என்றும் அழுத்தமுடியாது. 5. இந்த இடத்தில் மார்க்சின் அந்நியமாதல் குறித்துச் சிலவற்றைச் சொல்ல வேண்டும். இயற்கையிலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், இறுதியாக தன்னிலிருந்தும் மனிதன் அந்நியப்பட்டான். வரலாற்றுக்கு முற்பட்ட ஆதிபொதுமைச் சமூகத்தில் மனிதன் அந்நியமாகவில்லை. ஏற்றத்தாழ்வுகள், தனிவுடைமை, அரசு ஆகியவை தோன்றி வலுப்பட்ட நிலையில்தான் மனிதன் இவ்வாறு அந்நியப்பட்டான். இயற்கை அவனுக்குச் சொந்தமில்லை. முரண்பட்ட சமூகச் சூழலில் அவனுக்கு இருப்பு இல்லை. தனது உழைப்புச் செயல் முதலியனவும் தனக்கு எதிராக மாறிய நிலையில் நான் யார்? என்ற கேள்வி அவனுக்குள் தீவிரமாக எழுகிறது. இந்தச் சூழலில் தனக்குத்தானே அந்நியமாகிறான். இப்பொழுதுதான் இவனை மதம் முதலியவை பற்றிக் கொள்கின்றன. இயற்கையோடும் சமூகத்தோடும் இறுதியில் தன்னோடும் ஒன்றுபடும் சூழல் சோசலிச சமூகத்தின் வழியே, இறுதியில் கம்யூனிச ரூபத்தில்தான் அவனுக்கு ஏற்படும். அப்பொழுது இயற்கையோடும் சமூகத்தோடும், தன்னோடும் இவன் இணைந்திருப்பான். இழந்த அவன் படைப்பாற்றலை மீண்டும் பெறுவான். வரலாற்றுச் சூழலில் மனிதன் தன்னை இழப்பதும் மீண்டும் தன்னைப் பெறுவதும் என்ற மாபெரும் நாடகமாக வரலாற்றை மார்க்ஸ் பார்க்கிறார். ஆதிபொதுமைச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாத சூழலில் இவன் வாழ்ந்தான். மனிதர் எல்லோரும் சேர்ந்து உழைத்தனர். பகிர்ந்து கொண்டனர். மாறிய சூழலிலும் மனிதன் இந்த ஆதிப்பொதுமையை மறக்கவில்லை. பொதுமை என்பது இவனது கனவாக, என்றும் இருக்கிறது. இயற்கையோடும் சமூகத்தோடும் எப்பொழுதும் இவன் இணைந்திருக்கவே விரும்புகிறான். தன்னைப் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறார். தன்னலம் இவன் துயரத்துக்குக் காரணம். பொதுநலத்துக்காக உழைப்பதில் தன்னை இழக்கிறான். இது இவனுக்கு விடுதலை. இலக்கியங்கள் மனிதனின் இந்த மாபெரும் கனவையே உள்ளீடாக கொண்டிருக்கின்றன. இந்தக் கனவைத் திரும்பத் திரும்ப தனக்குள் உயிர்பித்துக் கொள்வதற்காக இவன் இலக்கியம் படைக்கிறான். பேரிலக்கியங்களின் உள்ளீடு இந்த சமதர்மம். படைப்புக்கள் குறித்து மார்க்ஸ் விரிவாகப் பேசுகிறார். தன்னைத்தானே படைத்துக் கொள்பவன் மனிதன் என்கிறார். விலங்குகளுக்குத் தன்னுணர்வு இல்லை. ஆகவே அவை படைப்பதில்லை. கருவிகள், கருத்துக்கள் முதலியனவும் மனிதனின் படைப்புக்கள். இவற்றைப் படைக்கும்பொழுதே மனிதன் தன்னையும் படைத்துக் கொள்கிறான். ஒருவன் ஒரு சிலையைப் படைக்கும் பொழுது தன்னை சிற்பியாக படைத்துக் கொள்கிறான். அந்தச் சிலை மேலும் பலரைப் படைக்கிறது. தன்னிலிருந்து அந்நியமான மனிதன், தன் படைப்பின் மூலமும் தன்னை அந்நியப்படுத்திக் கொள்கிறான். வாழ்வின் ஆதார தளங்கள் தன் வசத்தில் இல்லாத பொழுது முதலாளிக்காக, விற்பனைக்காக, சந்தையின் தேவைகளை முன்னிறுத்தி படைப்பைத் தருகிறான். அந்தப் படைப்புக்குள் இவனில்லை. இப்படி இவன் தன்னை விற்றுக் கொள்கிறான். அழகை உற்பத்தி செய்யும் இவன் தன் அழகை இழக்கிறான். தன்னை இழக்கிறான். இப்படி செல்கின்றன மார்க்ஸின் கருத்துக்கள். முதலாளியத்தின் தேவைகளை முன் நிறுத்தி படைக்கிறவன் தன்னைத்தானே விற்றுக் கொள்பவன். இவனுக்குள் பெருங்கனவுக்கு இடமில்லை. தான் அந்நியப்பட்டிருப்பதையும் இவன் உணர்வதில்லை. தனக்குள் இயற்கையின் குரலைச் சமூகம் என்ற பேருணர்வை இவன் கொள்வதில்லை. குறுகிய சூழல் இவனுக்குப் போதும். சில தேவைகளில் இவன் தன் வாழ்வை நிறைவு செய்து கொள்ள முடியும் என நம்புகிறான். இவன் தன் ஆன்மாவின் குரலைக்கூட கேட்பதில்லை. மதம் இவனை வழிமறித்து வேறு திசைகளில் அழைத்துச் சென்று இவனை ஏமாற்றுகிறது. இயற்கையோடும், சமூகத்தோடும் தன்னோடும் இணைகிற சூழலில்தான் இவனுக்குள் பேருணர்வுகள் எழும். இவன் தனக்குள் வரலாற்றைக் காண்பான். தெய்வங்கள் முதலியவற்றையும் இவன் உற்பத்தி செய்கிறான். பிரபஞ்சம் இவனுக்குள் ஊடுருவுகிறது. எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்வதன் மூலமே இவன் தன்னைப் படைத்துக் கொள்கிறான். இவன் தனக்கான சூழலை, தனக்கான உலகத்தைப் படைத்துக் கொள்பவன். படைத்துக் கொள்ள வேண்டும். இவன் தான் மனிதன். 6. மார்க்சிய இலக்கியக் கோட்பாட்டில் முதல் வகையினர் அரசியலுக்கு அழுத்தம் தருகின்றனர். நம்மைப் பொறுத்தவரை மெய்யியலுக்கு அழுத்தம் தருகிறோம். வர்க்கப் போராட்டம் என்ற அரசியலுக்குள் முடங்கி விடுவதல்ல மார்க்சியம். வர்க்கங்களைக் கடந்து செல்வதற்கான அரசியல் தான் மார்சியம். ஆதிப் பொதுமைச் சமூகத்தில் வர்க்கங்கள் இல்லை ஏற்றத்தாழ்வுகள் இல்லை. மனிதன் தனக்குள் பிளவுபடவில்லை. இத்தகைய சமூகத்தை நாம் திரும்பப் பெற வேண்டும். ஆதிப் பொதுமைச் சமூகத்தின் வாழ்வியலுக்குள் இயல்பாக இருந்தது சமதர்மம். இயற்கையோடும், சமூகத்தோடும், தன்னோடும் ஒத்தியங்கும் தன்மை சமதர்மம். இயற்கையோடும், உயிர்களோடும் ஒத்து வாழ்கிற வாழ்நிலை சமதர்மம். வர்க்க வேறுபாட்டில் மையம் கொள்ளாமல் வர்க்கம் கடந்த மனநிலை மனிதனுக்குள் இருக்கிறது. தன்னைப் பகிர்ந்து கொள்கிற மனநிலை இது. உயிர்களுக்கும், உறவுகளுக்கும் இடம் கொடுத்து தன்னைப் பகிர்ந்து கொள்கிற, உழைக்கிற, போராடுகிற, சாகிற மனநிலை இது. இந்த உணர்வு மனிதனை இயக்குகிறது. முதலாளியும் அந்நியமாதல் என்ற சூழலுக்குள் அகப்பட்டு இருக்கிறான். அவனுக்குள்ளும் துயரம் இருக்கிறது. கூடுதலான சில வாழ்க்கை வசதிகள் காரணமாக இவன் தன் துயரத்தை மறைக்கிறான். போதை, காமம் முதலியவற்றில் தன்னை இழக்கிறான். இதன் காரணமாகவும் இவனது துயரங்கள் அதிகரிக்கின்றன. முதலாளியச் சூழலில் இவன் அகப்பட்டு கொண்டவன், இவனுக்கும் விடுதலை தேவை. இவனுக்காகவும் சேர்த்து பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும் என்கிறார் மார்க்ஸ். சுதந்திரம் பிரிவுபடாதது என்று மார்க்ஸ் கூறுவதன் உட்பொருள் இதுதான். முதலாளியும் ஒரு அடிமைத்தனத்தில் வாழ்கிறான். தனக்குச் சுதந்திரத்தை வேண்டும் ஒருவன் பிறருக்கு விடுதலை தரவேண்டும். அடிமைத்தனத்தின் மீது சுதந்திரத்தை எழுப்ப முடியாது. பாட்டாளி வர்க்கம் இத்தயை கருணையோடு செயல்பட வேண்டும். இப்படி ஒரு மெய்யியல் மார்க்ஸியத்திற்குள் இருக்கிறது. அந்நியமாதல் என்ற கருத்தாக்கத்துக்கு வழியே தான் நாம் இந்த மெய்யியலுக்குள் செல்கிறோம். இந்த மெய்யியலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஒருவன் தனக்குள் அதிகாரத்தைச் சேகரிக்க இயலாது. இவனுக்குள் சாதி, மதம் இல்லை. இவன் என்றும் ஊழியன் உறவுகளில் தழைப்பவன். இவன் தான் இலக்கியத்தின் கருப்பொருள். மார்க்ஸ் தனக்கு முன்னுதாரணமாக பிராமத்தியஸ் என்ற நாயகனைக் கொண்டிருந்தார். தேவ உலகிலிருந்து மனிதர்களின் தேவைக்காக நெருப்பைத் திருடி வந்து மக்களுக்குத் தந்தவன் பிராமத்தியஸ். இதன் காரணமாக தேவர்களின் தண்டனைக்குள்ளானவன். இரும்புச் சங்கிலிகளால் பெரிய பாறையில் கட்டப்பட்ட இவனது இருதயத்தை எந்நேரமும் கொத்தி இரத்தம் குடித்து கொண்டிருக்கும் ஒரு கழுகு. இது இவனுக்குத் தரப்பட்ட தண்டனை. இந்த தண்டனையைப் பேரின்பமாக ஏற்றுக்கொண்டவன் பிராமித்தியஸ். இவன் தான் மார்க்சுக்குக் கதைத் தலைவன். கிரேக்க வரலாற்றில் வர்க்கப் பிரிவினைகள் தோன்றிவிட்ட தொடக்ககாலச் சூழல் இன்னும் அவர்கள் இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் முற்றாகப் பிளவுபடவில்லை. வரலாற்றின் குழந்தைப் பருவத்தில் கிரேக்கர்களுக்குள் ஆதிப் பொதுமைச் சமூகத்தின் பேருணர்வுகள் செயல்பட்டன. இயற்கையும் பிரபஞ்சமும் மனிதனும் இணைந்திருந்த காலம் அது. இந்தச் சூழலில் கிரேக்கர்கள் பெரும் கலைப்படைப்புகளை உருவாக்கினர். மீண்டும் அத்தகைய பெரும் கனவின் முன் நாம் நிற்கிறோம். குழந்தைப் பருவக் கனவுகள் இன்றும் நமக்கு இனிக்கின்றன. இப்படி மார்க்ஸ் ஒரு விளக்கத்தைத் தந்திருக்கிறார். வர்க்க வேறுபாடுகளைப் போராட்டங்களின் வழியே கடந்து வர்க்கமற்ற சூழலை உறுதிப்படுத்திக் கொள்கிற கோட்பாடுதான் மார்க்ஸியம். வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட மனநிலை நமக்குள் இயங்குவதால்தான் நாம் வர்க்கமற்ற சமூகத்திற்காக போராடுகிறோம். நமக்குத் தேவையான ஆற்றல்கள் இங்கிருந்துதான் நமக்கு கிடைக்கின்றன. சமூகத்தின் கூட்டு மனத்திற்குள் - கூட்டு நனவிலி மனத்திற்குள் நாம் இருக்கிறோம். நமக்குள் பிரிவினைகள் பிளவுகள் இல்லை. யுங் இந்த மனநிலை பற்றி தெளிவுபடுத்தி இருக்கிறார். மார்க்ஸியத்திற்கு ஒத்த மனநிலை இது. இந்த மனநிலையிலிருந்துதான் பேரிலக்கியங்கள் பிறக்கின்றன. வர்க்கப் போராட்டத்துக்கு மட்டும் அழுத்தம் தருகிற அரசியல், ஆதிக்கத்தை தனக்குள், தனது கட்சிக்குள் சேகரித்துக் கொள்ளும் அரசியல். அதிகாரம் மனிதனைப் படைப்பதில்லை. அழிக்கிறது. தன்னை இழப்பவன்தான் தன்னைப் பெறுபவன். மெய்யிலில் அழுத்தம் கொண்டவனுக்கே இந்த மனநிலை வாய்க்கும். லெனின், கம்யூனிஸ்ட் என்பவன் ஒரு சித்தன் என்று கூறினார். மார்க்சுக்குள்ளும் இப்படி ஒரு சித்தன் இருந்தான். சமதர்மத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவன் ஒரு சித்தன். கட்சிக்குள் அதிகாரத்தை சேர்த்துக் கொண்ட ஒரு தலைவன் சித்தனாக இருக்க முடியாது. டால்ஸ்டாயை, லெனின் பாராட்டினார். பால்ஸாக்கை மார்க்ஸ் புரிந்து கொண்டு இருந்தார். இதே பார்வையில் தாவ்ஸ்தாவ்ஸ்கியை ஒரு சித்தன் என உணர்ந்து நாம் பாராட்ட முடியும். அந்நியமாதல் என்று தொடங்கி மனிதன் மீண்டும் இயற்கையோடும், சமூகத்தோடும், தன்னோடும் ஒத்து இயங்குகிற போக்கை மையப்படுத்தி கண்டவர்களில் ஒருவர் ஜார்ஜ் லூகாக்ஸ் மனிதனின் முழுமை பற்றி அவர் பேசினார். அரசு இருக்கும் வரை அந்நியமாதல் நிலவும் என்றார் மார்க்ஸ். அந்நியமாதலை ஒப்புக் கொள்ளாதவன் கலைஞன். அரசு, அதிகாரம் எப்பொழுதும் அந்நியமாதலைத் தோற்றுவிக்கும். ஆகவே கலைஞன் என்பவன் அரசு, அதிகாரத்துக்கு எதிராக கலகக்காரனாகத்தான் இருக்க முடியும் என்றார் ஹெர்பர்ட் மார்க்யூஸ். ஆகவே ஒரு கலைஞன் கட்சி, அதிகாரத்துக்குக் கட்டுப்பட முடியாது. அதிகாரத்தைச் சேகரித்துக் கொள்ளும் எந்த அமைப்பும் கலைஞனைத் தோற்றுவிக்க இயலாது. ஆகவே கலைஞன் எப்பொழுதும் எதிர் நீச்சல் போடுபவன். இவன் எப்பொழுதும் ஒரு கலகக்காரன். வர்க்க முரண்பாடுகளால் அலைக்கழிக்கப்படுபவன். இவனுக்குள் முற்றான நிம்மதிக்கு இடமில்லை. இவனொரு Tragic Hero. அவல வீரன். ஷொலக்கோவ் உயர் பீடங்களில் வாழ்ந்திருக்க சொல்சனிட்ஸின் நாடு கடத்தப்பட்டது இதனால்தான். இங்கும் என்ன வாழ்கிறது? கட்சிக்குள் பொன்னீலனுக்கு என்ன மரியாதை? இன்குலாப்பை எந்தக் கட்சி ஏற்றுக் கொண்டது? பரிணாமனுக்குக் கிடைத்த பாராட்டு இங்கு வேறு யாருக்கு கிடைத்தது? II 1. மார்க்சியத்தின் இலக்கியக் கோட்பாட்டைப் பொதுவாக எதார்த்தவாதம் என்று கூறினாலும் எதார்த்தவாதப் போக்கு மார்க்சியத்துக்கு முன்பே தொடக்கத்தில் மெய்யியல் களத்தில் பிறகு கலை இலக்கியத்திலும் தோன்றிவிட்டது. எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுதல் என்பது அனேகமாக மனிதனின் தோற்ற காலம் முதலே எத்தனையோ வடிவங்களில் நடைபெற்று வருவதாகவே நாம் கருத முடியும். கடவுள், ஆன்மா முதலிய கருத்துக்களும் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுவதற்கான முயற்சிகள் தாம். ஆழ்ந்து பார்த்தால் கடவுள் ஆன்மா முதலிய கருத்தாக்கங்களுக்குள்ளே எதார்த்தம் என்பதைக் கண்டு எடுக்க முடியும். எல்லாவகை மெய்யியல்களும் குறிப்பிட்ட எதார்த்தச் சூழலைப் புரிந்து கொள்வதற்கான முயற்சிகள் என்பது மட்டுமல்ல. குறிப்பிட்ட எதார்த்தச் சூழலில் உள்ள சிக்கல்களுக்கு இவை எதிர்வினைகள் என்றும் கொள்வதே பொருந்தும். எதார்த்தம் எப்பொழுதுமே அதன் சரியான வடிவில் நம் அறிவுக்கும் உணர்வுக்கும் அகப்படுவதில்லை. நமக்குள் எத்தனையோ உணர்வுகள் இயங்குகின்றன. பிரம்மைகள் மட்டுமல்லாமல் எத்தனையோ வேட்கைகளும், ஆர்வங்களும் நமக்குள் இருக்கின்றன. நாம் சார்ந்திருக்கிற சமூகப்பிரிவு காரணமாகவும் சிலவகை உணர்வுகள் நமக்குள் தங்கியுள்ளன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து மனம் அல்லது அகம் என்று கூறுகிறோம். வெளியேயுள்ள எதார்த்தம் / எதார்த்த உலகைப் புறம் என்று கூறுகிறோம். இவை எப்பொழுதுமே ஒன்றை மற்றொன்று ஊடுருவியதாகவும் கட்டமைப்பதாகவும் உள்ளது. அகமும் புறமும் ஒன்றை மற்றொன்று ஊடுருவி ஒன்றை மற்றொன்று கட்டமைப்பதாக உள்ளது. மெய்யியல் முதலியவைகளும் இத்தகைய கட்டமைப்புக்கள், கருத்து அல்லது பொருள் என்று தனியாக ஒன்றை பிரித்துச் சொல்லிவிட முடியாது. சூன்யம் என்பது ஒரு கருத்து மட்டுமே. இந்தக் கருத்துக்குக் கீழே எத்தகைய எதார்த்தம் செயல்படுகிறது என்று காண்பதுதான் பொருத்தமாக இருக்கும். எதார்த்தம் என்ற சொல் பழங்காலத்தில் இல்லை. முதலாளிய தோற்றத்தை ஒட்டித்தான் இந்தச் சொல் தோன்றி இருக்கிறது. உலகியல் முதலிய சொற்கள் - பழங்காலத்துச் சொற்கள் சிலம்பிலும் மணிமேகலையிலும் துல்லியமான எதார்த்தச் சித்தரிப்பை நாம் காண முடியும். முதலாளியத்தை ஒட்டி கடவுள், ஆன்மா முதலிய கருத்துக்கள் கூர்மையான கேள்விக்குள்ளாயின. மனிதனின் எதார்த்த உலகை இறைவன் படைக்கவில்லை. மனிதனுக்கான உலகில் இனி மன்னர்களுக்கு இடமில்லை. மதவாதிகளுக்கும் இடமில்லை. மனிதனின் வாழ்வை நிர்ணயிப்பவை பொருளியல் மற்றும் அரசியல் கருத்துக்கள். எல்லோருக்கும் கல்வி என்றெல்லாம் பேசப்பட்டது. இந்தியச் சூழலில் மதம் மட்டுமல்லாமல் சாதி, மதம் முதலியனவும் கேள்விக்குள்ளாயின. உயர்ந்தோர் சார்பில் இயங்கிய இலக்கியம் சாதாரண மக்களை நோக்கித் திரும்பியது. மக்களின் சமூக, பொருளியல், அரசியல், சூழல் என்பதை மேன்மைப்படுத்தியதாக இலக்கியம் இருக்க வேண்டும் என்ற கருத்துத் தோன்றியது. ஆங்கிலேயருக்கு எதிரான இயக்கம் காரணமாகவும் இந்தப் போக்கு உறுதிப்பட்டது. இந்தச் சூழலில் தான் நாவல் சிறுகதை முதலிய வடிவங்கள் தமிழுக்கு வந்தன. 2. எதார்த்தம் பற்றிய புரிதல் முழு அளவில் எப்பொழுதும் சாத்தியமில்லை. நம் ஒவ்வொருவரும் சார்ந்திருக்கிற சமூகப் பிரிவு காரணமாகவும் தனிமனிதன் என்ற முறையில் நம் குடும்பச் சூழல் வளர்ப்பு, கல்வி காரணமாகவும், எதார்த்தம் பற்றிய புரிதலில் பல்வேறு வகையான வேறுபாடுகள் இருப்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.இத்தகைய புரிதலின் வடிவங்கள் பல. இவற்றில் இயல் நெறிவாதம் (Naturalism) என்பது ஒரு போக்கு. விமர்சன எதார்த்த வாதம் என்பது இன்னொரு போக்கு. எதார்த்தத்துக்கு நாம் தரும் எதிர்வினை என்பனவற்றுள் நாம் தரும் லட்சியங்கள், கருத்தியல் சார்புகள், சாதி மத உணர்வுகள் அடிப்படையானவை. கனவியல் என்பதனுள் அதிகளவு லட்சியங்கள், கற்பனைகள் எதார்த்தத்தை வடிவமைக்கின்றன. நம் உணர்வு அல்லது கருத்தியல் சார்பில் எதார்த்தத்தை வடிவமைக்கும் பொழுதே அதை எதார்த்தவாதம் என்று சொல்லுகிறோம். மார்க்சியர் தம் கருத்தியல் சார்பில் தம் எதார்த்தத்தைக் கட்டமைக்கின்றன. பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கையை, பாதையை நெறிப்படுத்தி கட்டமைப்பது ஒருவகை எதார்த்தவாதம். நா. பார்த்தசாரதி, அகிலன் ஆகியோர் காந்திய எதார்த்தவாதம் என்று பேசியதை நினைவு கூறலாம். மார்க்சியம் தோன்றிய பிறகு குறிப்பாக ருஷ்ய புரட்சிக்குப் பிறகு சோஷலிஸம் என்ற கருத்தாக்கம் வரலாற்றில் உறுதிப்பட்டிருக்கிறது. இந்தப் பார்வை இனி உலக வரலாற்றிலிருந்து மறையாது. மனிதனின் வரலாற்றுக் காலம் முழுவதையும் இந்த பார்வை தன் மையத்திலிருந்து விவாதிக்கிறது. வரலாறு என்பது வர்க்கப் போராட்டம் என்பது இந்தப் பார்வை. இந்த அடிப்படையில்தான் அடிமைச் சமூகம், முதலாளியச் சமூகம் சோஷலிஸ சமூகம் என்று வரலாற்றுப் போக்கை இது வகைப்படுத்துகிறது. பாட்டாளி வர்க்கத்துக்கு முதன்மை தரும் முறையில் இந்தப் பார்வை உருவாக்கப்பட்டது என்ற போதிலும், இந்தியச் சூழலில் - உழவர் சமூகம், தலித் சமூகம், பெண்கள், ஆதிவாசிகள் முதலியவர்களையும் உள்ளடக்கியதாக இந்தப் பார்வையை விரிவுபடுத்துவதன் தேவை இன்று மேம்பட்டிருக்கிறது. சோஷலிச சமூகம் இந்த இலக்கை மையப்படுத்தினால் இவர்கள் அனைவருக்குமான வாழ்க்கை நலன்கள் கிட்டும். பாட்டாளி வர்க்கத்தை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்ட சோஷலிஸ எதார்த்தவாதம், என்ற பார்வை நம் சூழலில் கேள்விக்குள்ளாவதைத் தடுக்கமுடியாது. பொருளுக்கும் அதிகாரத்துக்கும் இனி அழுத்தம் தருவது இயலாது. உழைப்பும் பகிர்வும் தான் இனி வாழ்க்கை விதியாக இருக்கமுடியும் அடிமைத்தனம் இனி வேண்டாம். இத்தகைய பார்வைதான் சோஷலிசப் பார்வை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை இலக்காகக் கொண்டு இயங்குவது என்ற தனி வழி இன்று சாத்தியமில்லை. பல்வேறு சமூகப் பிரிவுகள், ஒவ்வொரு பிரிவுக்கும் தனிப் பார்வை. எல்லாப் பார்வைகளையும் மையப்படுத்துகிற பார்வை. இப்படித்தான் இனி முன் செல்லமுடியும். மார்க்சியம் என்ற எல்லைக்குள் எல்லோரும் இணைய முடியும். இந்த ஆதாரத்தில்தான் எதார்த்தவாதம் அமைய முடியும். சோஷலிஸ எதார்த்தவாதம் என்று இதற்கு பெயரிடுவதை விட மார்க்சிய எதார்த்தவாதம் என்று சொல்வது பொருந்தும். 3. எதார்த்தவாதம் பலவகைப்படும் என்று கூறினோம். எதார்த்தத்தை எதிர்கொள்ளும் போக்கில் இப்படி பல்வேறு வகை எதார்த்தவாதங்கள் உருவாகின்றன. இதன் காரணமாகவும், எதார்த்தம் பற்றிய புரிதல்களும் வேறுபடுகின்றன. எதார்த்தவாதத்தை மறுக்கும் முறையில் நவீனத்துவம், அமைப்பியல், பின் - நவீனத்துவப் போக்குகள் இன்று வந்திருக்கின்றன. இவற்றுக்கும் எதார்த்தவாதத்துக்கும் என்ன உறவு என்று நாம் பார்க்கலாம். எதார்த்தம் என்பதை பொருளியல் காரணிகளின் தொகுப்பு என்ற முறையில் கட்டுடைத்துப் பார்க்கிறது மார்க்சியம். பொருளியல் வாழ்வை உழைக்கும் மக்களுக்குப் பொருந்தியதாக உருவாக்குவதன் மூலம் உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கை மேம்படும் என்பது ஒருவகையான புரிதல். உடைமையை பொதுவாக்க வேண்டும். தொழில், முயற்சி முதலியவை மக்கள் நலனுக்குரியதாக அமைய வேண்டும். மக்களுக்குத் தேவையான அளவுக்குக் கல்வி மருத்துவம் முதலிய வசதிகள் கிட்ட வேண்டும். இயக்கங்கள் மூலமே மக்கள் இவற்றைப் பெற முடியும். இதற்காக மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும். இங்கு மக்களுக்கான பொருளியல் காரணிகளோடு அரசியல் இணைந்து கொள்கிறது. இதற்கு மேல் இந்தப் பார்வை விரிவதில்லை. பொருளியல் காரணிகள் என்பனவற்றை அடித்தளம் என்று வரையறை செய்வோமென்றால் அரசியல் என்பதை மேல் கட்டுமானத்தினுள் தான் சேர்க்க முடியும். பொருளியல் காரணிகள் என்பனவற்றுள் உற்பத்திச் சக்திகள், உறவுகள் மட்டுமல்லாமல், வேறு பலவும் இணைந்துவிடுகின்றன. அடித்தளம், மேற்கட்டுமானம் என்ற கறாரான பிரிவு இங்கு செயல்படுவதில்லை. தேசம், தேசிய இனம், சாதி, மதம், பெண்ணடிமைத்தனம், தலித் சிக்கல், சூழல் சீர்கேடு என்று எவ்வளவோ சிக்கல்கள் இந்த எல்லைக்குள் வந்துவிடுகின்றன. இவற்றையெல்லாம் உள்ளடக்கியதாக எதார்த்தவாதம் விரிவடைய வேண்டும். இவற்றுக்கு அடியில் மெய்யியல் தளம் என்ற ஒன்று இயங்குகிறது. வாழ்க்கை வசதிகள், வாழ்வியல் அமைப்புகள் என்பதில் நாம் முழு கவனம் செலுத்தும்பொழுது இந்த எல்லைக்குள் மெய்யியல் தளம் வருவதில்லை. மெய்யியல் தளம் நமக்குள் வராத நிலையில் வாழ்க்கை வசதிகள், வாழ்வியல் அமைப்புக்கள் என்பன. முதலாளிய எல்லைக்குள்ளேயே சுழல்கின்றன. ஊதிய உயர்வு, போனஸ் என்ற எல்லைக்குள்ளேயே தொழிற்சங்கச் சூழல் அமைகின்றன. இந்நிலையில் தொழிற்சங்கங்கள் சுழல்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். பிற சமூகப் பிரிவுகளின் தேவைகளையும் உள்ளடக்கி பார்க்கும் நிலையில் இவையும் முதலாளிய எல்லைக்குள் சுழல்வதை நாம் புரிந்து கொள்ளலாம். இதன் காரணமாகத்தான் மார்க்சியர்கள் கூறும் எதார்த்தவாதம், முதலாளிய எதார்த்தவாதம் தான். இது மார்க்சியம் ஆகாது என்றும் நாம் கூற வேண்டியுள்ளது. மார்க்சியம் இந்தச் சூழலைக் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொன்றினுள்ளும் சோஷலிஸப் பார்வை முதன்மைப்பட வேண்டும். முதலாளியச் சமூகத்தின் சிக்கல்களுக்குள் மனிதன் அகப்பட்டிருப்பதை இந்தப் பார்வை வெளிப்படுத்த வேண்டும். தொழிலாளி மட்டுமல்லாமல் முதலாளியும், பெண் மட்டுமல்ல ஆணும், தலித் மட்டுமல்லாமல் பார்ப்பனனும், மாணவன் மட்டுமல்லாமல் ஆசிரியனும். நம் சமூகச் சூழலில் அகப்பட்டிருப்பதை இந்தப் பார்வை வெளிப்படுத்த வேண்டும். வியாபாரிகள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும், நிர்வாகிகளும் வேசிகள்தான் என்று இப்பார்வை வெளிப்படுத்த வேண்டும். இயற்கை நாசமாவதைப் போலே குழந்தைகளையும், பெண்களையும், பறவைகளையும், விலங்குகளையும் நாம் கொன்று வருகிறோம் என்பதை இப்பார்வை சொல்ல வேண்டும். பிராமணனும் அசுத்தமானவன். கடவுளர்களும் மூடர்கள். ஊழலுக்கு உட்படுபவர்கள். மதங்கள் ஓயாமல் பொய் சொல்லுகின்றன. அலங்காரங்கள் என்பவை அசிங்கங்கள். ஆர்ப்பாட்டங்கள், பொழுதுபோக்குகள் என்பன அழிவுகள் - என்றெல்லாம் சொல்லவேண்டும். மார்க்சிய நோக்கில் இலக்கியப் பார்வை என்பது இப்படித்தான் அமைய வேண்டும். எல்லாவற்றையும் தகர்த்துப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. 4. நவீனத்துவம் என்ற புதிய பார்வை மார்க்சியத்தின் இலக்கியப் பார்வையை மறுக்கிறதா என்ற கேள்வியை எழுப்பி இப்பொழுது சிந்திக்கலாம். எதார்த்தம் குறித்து மார்க்சியனுடைய பார்வைக்குள்ளும், சிக்கல்களும் முரண்பாடுகளும் இருக்கவே செய்கின்றன. தலித், பெண்கள் குறித்து மார்க்சியனுக்குத் தெளிவான உறுதியான பார்வையைப் பெறுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. மார்க்சியனைப் போலவே பிறவகை கருத்தியல் சார்ந்தவருக்கும் இத்தகைய சிக்கல் இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இவை சிக்கல்கள் அல்ல. நான் தெளிவாகத்தான் இருக்கிறேன் என்று ஒருவர் சொல்லும்போது இப்படி அவரைப் புரிந்து கொள்ளமுடியும். புறச்சூழலுக்கு வெளியே நின்று புறச்சூழல் எனக்குள் ஏற்படுத்தும் உணர்வுகளை நான் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். இப்படி ஒருவர் சொல்வதை நான் மறுக்க வேண்டியதில்லை. இதன் பெயர் தான் Impressionism மனப்பதிவு வாதம். ஒரு விபத்து நேர்ந்துவிட்டது. ஒருவர் இறந்துவிட்டார். இந்தச் சூழலில் ஒருவர் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று சிந்திக்காமல், இறந்தவரோடு தனக்கு இருந்த உறவு குறித்து புலம்புகிறார். ஒருவகையில் தன் மன உணர்வை இப்படி வெளிப்படுத்திக் கொள்வது அவரைப் பொறுத்தவரை மனநலம் பெறுவதற்குத் தேவை. இத்தகைய வெளிப்பாட்டை Expressionism என்கிறோம். இது மனவெளிப்பாடு இத்தகைய இருவகைப் போக்கு குறித்து துல்லியமான ஆய்வுகளில்லை. துல்லியமான ஆய்வுகளும், விவரங்களும் அவருக்கு இருக்குமானால் இத்தகைய வெளிப்பாட்டுக்கு அவர் அழுத்தம் தரமாட்டார் என விவாதிக்கலாம். சாவு தடுக்க இயலாதது. நம் சமூகச் சூழலில் ஒருவருக்கு எந்த நேரத்திலும் விபத்து நேரலாம். இதை நாம் ஏற்கத்தான் வேண்டும். அழுது பயனில்லை. இப்படி விவாதிப்பது எந்த அளவுக்கு அறிவுடைமை. இப்படி ஒரு மார்க்சியவாதி விவாதிக்க இயலாது. இதைப் போலத்தான் இவ்வகை போக்கை உள்ளடக்கிய நவீனத்துவப் போக்கு குறித்து நாம் சொல்ல முடியும். நான் ஒரு கலைஞன். கலைப் பார்வைதான் எனக்கு முக்கியமான பார்வை. எனக்கு பொருள், வாழ்க்கை வசதி முக்கியமல்ல. இசையில், ஓவியத்தில் என்னை மூழ்கடித்துக்கொள்ள வேண்டும். அழகு ஆராதனை எனக்கு வாழ்க்கை. காதல் நிறைவேறவில்லை என்றால் வாழ்க்கை வேண்டாம். என் இலட்சியம் சிகரத்தை அடைவது. அதற்கு குறைவாக நான் ஏற்க மாட்டேன். இப்படி இலட்சிய / கலைப் பார்வைகள் கொள்பவரை எப்படி நாம் குற்றம் சொல்ல முடியும்? இவர்களுக்குத் தன்னலம் இல்லை. இவர்களின் முயற்சிகள் ஏதோ ஒருவகையில் வாழ்வதற்கு வளம் சேர்ப்பவை. எவரெஸ்ட் சிகரத்தை இதுவரை எத்தனையோ பேர் முயற்சி செய்து அடைந்துவிட்டனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் இப்படித் தனி முயற்சியில் மாபெரும் சாதனை செய்துள்ளான். இவர்களில் பலர் தோல்வியைத் தழுவியிருக்கலாம் எனினும் இது மகத்தான தோல்வி. வாழ்க்கை , குடும்பம் முக்கியம் என்று கருதி குறுகிய சூழலுக்குள் இவர்கள் வாழ்ந்திருந்தால் விஞ்ஞானம் முதலியவற்றுள் பல சாதனைகளை நாம் அடைந்திருக்க முடியாது. இயற்கை, பிரபஞ்சம் வரலாறு குறித்தும் எவ்வளவோ அற்புதங்களை இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் உண்மையான கலைஞர்கள். சூழலை முழு அளவில் உள்வாங்கிக் கொண்டு இவர்கள் செயல்படவில்லை என்று இவர்களைக் குறை சொல்வது பயனில்லை. இப்படித்தான் நவீனத்துவம் என்ற பார்வை நமக்கு வந்து சேர்ந்திருக்கிறது. நவீனத்துவப் பார்வையில் மார்க்சியனையும் சேர்த்தே சொல்ல முடியும். இவன் தனக்குள் கொண்டுள்ள சோஷலிஸம் ஒரு பெரிய கனவு. இதற்காகத் தன்னை எரித்துக் கொண்டு இருக்கிறான். இவனால் உலகம் ஒளி பெறும். வாழ்க்கையின் மெய்ப்பொருள் எது என்று தேடும் ஒருவன் வாழ்வின் இறுதி காமம் என்கிறான். தனது தேடலில் அவன் கண்ட இறுதி நிலை காமம் / வாழ்வின் மீது வேட்கை / ஆசை. பிராய்ட் இப்படி காமம்தான் வாழ்வின் இறுதி உண்மை என்று கூறியதாகச் சிலர் சொல்கின்றனர். வாழ்க்கையைப் பற்றிய புரிதலில் இதுவும் ஒரு வகை. இதுவே முழுமையான புரிதல் என்றால் நாம் இதை மறுப்பதற்கிடமுண்டு. இப்படித்தான் ஒவ்வொரு தத்துவமும் ஒரு ஆதார உண்மையை முன்வைக்கிறது. சில சூழல்களில் இதன் மெய்மையை மறுக்க வேண்டியதில்லை. வாழ்வுக்குப் பல கோணங்கள் உண்டு. எந்த ஒரு தத்துவம், ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைத் தனக்குள் கொண்டுள்ளதோ அது மேலான தத்துவம். இந்த வகையில் மார்க்சியம் இன்று நமக்குரிய தத்துவம். மனிதர்கள் மண்ணோடு இயற்கையோடு, மனிதர்களோடு, உறவில் வாழ்பவர்கள். மனிதன் தன் மனத்தைக் கடந்து சென்று மண்ணோடும், இயற்கையோடும் தன்னைக் கரைத்துக் கொள்ள வேண்டும். ஆதிக்கவாதி என்பவனும் தன் மரணத்தின் போதாவது தன்னை திறந்து பார்த்துக் கொள்ளுகிறான். விஷ்ணுபுரம் அழியும் என்பது இந்த ஆதிக்கவாதிகளுக்கு நன்றாகத் தெரியும். எனினும் ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்க இயலாது தோற்றுப் போகிறார்கள். இந்த நாவலை இரண்டு எதிர்நிலைகளில் நிறுத்தலாம். ஒன்று ஆதிக்கம் சார்ந்தது. மற்றது மக்கட்ச் சார்புடையது. இந்தக் கூறு நம் காலத்துக்கு நெருக்கமானது. தர்க்கத்தால் மனிதன் வாழ்ந்துவிட முடியாது. தர்க்கத்தை அதர்க்கம் ஊடுருவி அதை நிலைகுலையச் செய்கிறது. மனிதன் இயற்கைக்கு, மண்ணுக்குத் திரும்ப வேண்டும். தர்க்கம் கட்டி அமைக்கிற ஆதிக்கத்தை அதர்க்கம் உள்நுழைந்து சிதைக்கிறது. இந்த அதர்க்கம் என்பது இன்று பெரிதாகப் பேசப்படுகின்ற பின் - நவீனத்துவத்தின் குரல். இது நமக்கு அந்நியமானதல்ல. நம் மரபுக்குள்ளிருந்தே காலகாலமாகக் கேட்கும் குரல். இந்தக் கூறுதான் இந்த நாவலை, நமக்கு, நம் காலத்துக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது. III 1. கலை இலக்கியம் என்பதை யதார்த்தவாதம் என்பதன் உருவத்திலோ அல்லது உள்ளடக்கத்திலோ அடக்கிவிட இயலாது. யதார்த்தம் என்பது என்றைக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ, மனித சமூகத்தின் எந்தப் பிரிவினரையும் பாதிக்கத்தான் செய்யும். எந்த மெய்யியலும் கருத்தியலும் யதார்த்தத்தின் ஊடுருவலோடு தான் நடைபெறும். கருத்தும் பொருளும் ஒன்றை ஒன்று ஊடுருவுவதோடு கட்டமைக்கவும் செய்கின்றன. வாழ்க்கையைப் பொருளின் நிர்ணயத்துக்கு அப்பாலும் நிர்ணயிக்கிற வேறு பல சக்திகளும் உள்ளன. சூழலை மனிதன்தான் தீர்மானிக்கிறான் என்ற முறையில் இதைச் சொல்ல முடியும். பொருளைப் பற்றிய அணுகலின் உள்ளும் கலாச்சாரம் தன் ஊடுருவலைச் செய்ய முடியும். பொருள் அல்லது அதிகாரம் வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக இருக்க முடியாது. உழைப்பும் பகிர்வும்தான் வாழ்க்கையை, உறவுகளைத் தீர்மானிக்க முடியும். முதலாளியம் மட்டுமல்லாமல், கட்சி அதிகாரம் மனிதனுக்குத் தீங்கு செய்யும். ஆகவே தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் உள்ள அதிகாரங்களை குறைத்துக்கொண்டே செல்ல வேண்டும். இவற்றுள் ஆணாதிக்கமும், சாதி ஆதிக்கமும் உள்ளடங்கக் கூடியவை. வர்க்கப் போராட்டம் என்பது ஒருபுறத்தில் ஆதிக்கவாதிகள் மறுபுறத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வடிவத்திலேயே நடைபெறுகிறது. இந்தியச் சூழலில் மாவோ வகையிலான இத்தகைய புரிதல் தான் நமக்குத் தேவை. 2. வாழ்வின் அர்த்தங்களைத் தொடர்ந்து தேடி கண்டறிவதாகிய இருத்தலியல் என்ற மெய்யியல், இயல்பாகவே மார்க்சியத்தையும் ஊடுருவக் கூடியதுதான். வரலாறு மற்றும் பொருளியல் என்ற மிக விரிந்த சிக்கலான சூழலுக்குள் வைத்து வாழ்வின் அர்த்தங்களை அல்லது அர்த்தமின்மையைக் கண்டறிவது இருத்தலியல். சோசலிஸம் என்ற போக்கு வரலாற்றினுள் வந்தபிறகு, வாழ்வைத் தழைக்க வைப்பது சோஷலிஸம்தான் என்ற உணர்வோடு அனைத்துச் சமூகப் பிரிவினரது வாழ்க்கை நோக்கையும் விசாரணைக்கு உட்படுத்துவது இருத்தலியலும், மார்க்சியமும் இணைகின்ற நோக்கு. பொருளின் தேவையை மறுப்பதற்கு இல்லை. அதே சமயம் எந்த அளவில் பொருள் சேர்க்கை பிறரது வாழ்வுக்கு ஊறு செய்யாமல் நமக்குப் பயன்படும் என்ற புரிதல் தேவை. காமம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால் காமமே வாழ்க்கையாகிவிட முடியாது. ஆன்மீகத் தேடல் வாழ்க்கைக்கு அவசியம். தனி மனிதனின் ஆன்மீகத் தேடல் சமூகத்தின் வாழ்வியல் மேம்பாட்டிலிருந்து விலகிவிட இயலாது. கலை, குறிப்பாக இசை, ஓவியம் முதலியவற்றிற்குள்ளும் மனிதன் தன்னை அன்னியப்படுத்திக் கொள்ளும் போக்கு இன்னும் நெடுங்காலத்துக்குத் தொடரத்தான் செய்யும். இதன் வழியேயும் சமூகத்தின் ஆற்றல் கூடத்தான் செய்யும். எந்த சமூகப் பிரிவின் உழைப்பின் மீது தன் கலைச் செயல்பாடு நடைபெறுகிறது என்ற உணர்வு கலைஞனுக்குள், இருப்பது அவசியம். ஒரு கட்சிக்காரனுக்கும் இத்தகைய உணர்வு தேவைதான். இயற்கையையும் உயிர்களையும் நாம் நாசப்படுத்தக்கூடாது என்ற உணர்வையும் உள்ளடக்கித்தான் கலைஞனும்,கட்சிக்காரனும் செயல்பட முடியும். இருத்தலியம் என்ற வடிவை இப்படி பல திசைகளில் மார்க்சிய சிந்தனையோடு நாம் வளர்க்க முடியும். 3. வாழ்க்கை, பல்வேறு சூழல்களில் அபத்தமாகத்தான் இருக்கிறது. இருண்மையோடும் இருக்கிறது. யதார்த்தத்துக்குப் புறம்பான, கோணல் மாணலான திரிவுகளோடும்தான் இருக்கிறது. இவற்றையெல்லாம் கலை, இலக்கியங்களின் வழியே நாம் வெளிப்படுத்தும்பொழுது நம் சமூகத்தின் இயங்கியலை நாம் மேலும் கூர்மையாகப் புரிந்து கொள்ள முடியும். ஆகவே நவீனத்துவம் என்பது மார்க்சியத்துக்கு எதிரான போக்கு என்று விவாதிக்க இயலாது. நவீனத்துவம் என்பதை உத்தியாகச் சுருக்கிவிட இயலாது. வாழ்வியக்கத்தின் சில கூறுகளை முன்னுக்கு கொண்டுவந்து காட்டுகிறது என்பதனாலேயே யதார்த்தத்தை அது அழிக்கிறது அல்லது திரிக்கிறது என்றும் விவாதிக்க முடியாது. சிக்கலான யதார்த்தத்தை அது வெளிப்படுத்துகிறது என்ற முறையில் யதார்த்தத்துக்கு அனுசரணையான போக்கு என்றே இதைக் கருத முடியும். இத்தகைய பார்வையை யதார்த்தவாதம், கொண்டிருக்கவில்லை. யதார்த்தத்தைச் சில தளங்களில் சில அர்த்தங்களில், யதார்த்தவாதம் குறுக்கிவிட்டது. மனிதனின் கற்பனைத் திறனை கதையாடல் திறனை, பெருமளவில் யதார்த்தவாதம் ஒதுக்கிவிடுகிறது. வாழ்க்கை என்பது பொருள்தான் என்ற வகையில் கருக்கியதன் விளைவாகவே முதலாளியத்துக்கு எதார்த்தவாதம் இடம் கொடுத்துவிட்டது. சோஷலியத்தின் இடையறாத இயக்கத்துக்கு யதார்த்தவாதம் பயன்படாது. யதார்த்தவாதத்தினுள் முடங்கிவிட்ட யதார்த்தத்தை நாம் விடுவிக்கத்தான் வேண்டும். இத்தகைய விடுவித்தலுக்குப் பின் - நவீனத்துவம் பெரிதும் பயன்படும். உன்னதம், அழகு, உண்மை என்றெல்லாம் மேம்படுத்திச் சொல்லுகிற வாழ்வு சார்ந்த பல்வேறு போக்கையும் கலைத்துப் பார்க்கிற தேவை இன்று அதிகரித்து விட்டது. சூழலின் கெடுபிடி அதிகரிப்பதன் காரணமாக பின் - நவீனத்துவத்தின் தேவையும் அதிகரிக்கிறது. கலை, இலக்கியம், பண்பாடு, மெய்யியல், கல்வி, பொருளியல், மருத்துவம், வாழ்க்கை, வரலாறு, சமயம் என்று எல்லாவற்றையும் கலைத்துப்போட்டு புதிய அர்த்தங்களோடு சில பலவற்றை தொகுத்துப் பார்க்கிற (புதிய அர்த்தத்தில்) செயல்பாட்டை இடது - சாரி பின் - நவீனத்துவம் கோருகிறது. எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு மிஞ்சுவது சூனியம்தான் என்ற வலதுசாரிப் பின் - நவீனத்துவப் போக்கை நமக்கு எதிரிடையானது என்று நாம் கருத வேண்டியதில்லை. இப்படித்தான் கலை, இலக்கியம் குறித்து மார்க்சியம் இன்று தன் தேடலை நிகழ்த்த வேண்டும். தமிழ்ச் சூழலில் மார்க்சியத்தின் தேவை பெரிது. இதுபற்றியும் நம் கவனம் செல்லவேண்டும். இலக்கியத்தை எவ்வாறு கற்கலாம்? 1. இலக்கியத்தின் நோக்கம் இன்புறுத்தல் என்றும் அறிவுறுத்தல் என்றும் கூறுகிறோம். அறிவுறுத்தல் என்பதனுள் மனிதத் துயரம் என்றும் விடுதலை என்றும் பேசுகிறோம். துயருக்கான காரணங்கள், துயர் தீர்க்கும் வழிகள், துயருக்குப் பின் மனிதனுக்கு வாய்க்கும் விடுதலை என்றும் பேசுகிறோம். இன்புறுத்தல் என்பது வெறும் பொழுதுபோக்காக இருக்க முடியாது. துயரங்களை அடுக்கிச் சொல்லும் பொழுதும் இலக்கியம் நம்மை ஒருவகையில் இன்புறுத்துகிறது. மனத்தை நெகிழ்விக்கிறது. துயரப்படுபவர்களின் துயரில் நாமும் பங்கு பெறுகிறோம். நாம் வாசகர்களாக இலக்கியத்திற்கு வெளியே இருப்பதில்லை. இலக்கியம் நமக்குள்ளே வந்து விடுகிறது. பாத்திரங்கள் வழியே நம்மையும் உணர்கிறோம். அறிவுறுத்துதல் என்பதனுள் சமூகம் வரலாறு மற்றும் வாழ்வியல் விவரங்களையும் அறிகிறோம். துயரங்களோடு வாழ்ந்தாக வேண்டும் என்பது கூட அறிவுறுத்துதல்தான். வாழ்க்கை என்பது ஒரு பெரும் புதிர். வாழ்வின் எல்லைகள் தொடர்ந்து விரிபவை. சமூகத்தில் அல்லது வரலாற்றில் எங்கோ ஒரு இடத்தில், ஒரு புள்ளியில் இருக்கிறோம். சமூக இயக்கம் நம் கைகளுக்கு வசப்படுவதில்லை. விடுதலை என்பது ஒரு தேடல். தனிமனிதத் துயரங்கள், சில நடவடிக்கைகள் மூலம் குறைந்த அளவிற்கு அல்லது குறைந்த கால அளவிற்குள் தீரலாம். இது நிரந்தரமான தீர்வு அல்ல. துயரங்கள் மீண்டும் நம்மைப் பற்றிக் கொள்ளும். நிரந்தரத் தீர்வுக்கு மனம் ஏங்கும், தீர்வுக்காகப் பலரை நாம் தேடி அலைவோம். இறுதி வரையிலும்கூட, தீர்வு கிட்டாமலிருக்கவும் கூடும். துயரங்களுக்கு நாமும் காரணமாகிறோம். வாழ்வில் நமக்குப் பாதுகாப்பு இல்லை. உறவுகளில் உறுதியில்லை. குடும்பம் முதலிய நிறுவனங்களோடுதான் வாழ வேண்டியிருக்கிறது. வெளியிலும் பல நிறுவனங்கள். பணத்தையும் அதிகாரத்தையும் தொடர்ந்து திரட்டுகிற நிறுவனங்கள். உலகளவில் இவை விரிவு பெற்றிருக்கின்றன. நாம் ஆணாக இருக்கலாம். பெண்ணாக இருக்கலாம், தொழில் வகைகளில் சில பிரிவுகளில் நாம் இணைந்திருக்கலாம். இவை காரணமாகவும் நமக்குச் சிக்கல்கள். இலக்கியம் குறித்து பேசும்போது இன்று இப்படியெல்லாம் தவிர்க்க இயலாமல் பேசுகிறோம். இலக்கியத்தைப் புரிதல் என்று தொடங்கி இலக்கியத்தின் வடிவம் முதற்கொண்டு படைப்பியக்கம் வரை பயணம் செய்கிறோம். திறனாய்விலும் ஈடுபடுகிறோம். பல்வேறு இலக்கியங்களை ஒப்பிட்டும் கற்கிறோம். புதிய அணுகுமுறைகள் குறித்தும் பேசுகிறோம். இவ்வாறெல்லாம் தான் நாம் இன்று இலக்கியம் கற்கிறோம். 2. இன்று என்று நாம் குறிப்பிடும்பொழுதே நேற்று நாம் இலக்கியம் என்று கற்ற முறையிலிருந்து இன்று நாம் வேறுபட்டு இருக்கிறோம் என்பதை விளங்கிக் கொள்கிறோம். மனிதனைப் பற்றிய பார்வை / புரிதல் / ஆய்வு காலந்தோறும் வேறுபடுகிறது. நாம் இன்று வாழ்வது ஒருவகையான முதலாளியச் சமூகம். இந்தச் சமூகம் பற்றி புரிந்து கொள்வதென்றால் இன்று செயல்படுகின்ற பொருளியல், அரசியல், நிறுவனங்கள், உடமைமுறை, கல்வி, மருத்துவம், கட்சி, அறிவியல், தொழில்நுட்பம் என்று எவ்வளவோ பேசவேண்டும். இன்றைய மனிதன் அவனுடைய இருப்பு மற்றும் இயக்கம் என்ற புரிதலில் வரலாறு சமூகம் என்று எவ்வளவோ பேச வேண்டும். இறந்த காலத்தின் தொடர்ச்சி என்றும் எதிர்காலம் நோக்கிய இயக்கம் என்றும் எவ்வளவோ பேசவேண்டும். இவை குறித்து பல்வேறு கருத்தியல்கள் முன்வருகின்றன. இன்று வாழ்வின் எல்லைகளுக்குள் கடவுள் மையமாக இல்லை. இன்றைய சமூகம் மதச் சார்பற்ற சமூகம். மதங்கள் என்பவை சமூக வாழ்விற்கு மையமாகிவிடக் கூடாது. மதமும், சாதியும் இன்று அரசியல் வடிவங்கள் தாங்கி அதிகாரங்களைக் கைப்பற்ற முயலும் சக்திகளின் செயல்பாடுகளுக்கு இடம் தருகின்றன. இவ்வகை ஆதிக்கங்களை நாம் விரும்பவில்லை. இலக்கியவாதிகள் என்ற முறையில் இவற்றை நாம் ஏற்கவில்லை. சாதியோ மதமோ தனிமனிதர் அல்லது குடும்பம் என்ற அளவில் இருப்பது போதும். அரசியல் மற்றும் பொருளியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக இவை இருக்கவேண்டாம். மதத்தை நாம் முற்றாக மறுக்கவில்லை எனினும் மத நிறுவனங்களுக்குள் செயல்படும் ஆதிக்கம் குறித்து நாம் கவலைப்படுகிறோம். எந்த வகையிலும் ஆதிக்கம் வேண்டாமென்கிறோம். சமதருமம் என்ற இலக்கை நோக்கி நாம் இயங்குகிறோம். இறந்த காலத்தின் வரலாறு குறித்து நாம் அக்கறையோடு ஆராய்கிறோம். சாதி, மதங்கள், சடங்குகள், கோயில்கள் முதலியவை எப்படித் தோன்றின? சமுதாயத்தின் எத்தகைய தேவைகளை இவை நிறைவேற்றின்? இன்றும் இவை தங்கியிருப்பதன் காரணமென்ன? இப்படியெல்லாம் ஆராய்கிறோம். இத்தகைய ஆய்விற்கு இன்றைய அறிவியல் அணுகுமுறைகள் நம்மைத் தூண்டுகின்றன. இன்று சமூகவியல், உளவியல், மானுடவியல் என்று தொடர்ந்து பல்வேறு ஆய்வு முறைகள் செயல்படுகின்றன. பழைய இலக்கியம் குறித்து ஆய்வு செய்வதற்கு இத்தகைய ஆய்வுமுறைகள் நமக்குப் பயன்படுகின்றன. இறந்த காலம் என்பது எத்தனையோ வடிவங்களில் நமக்குள்ளும்தான் செயல்படுகிறது. எத்தனையோ மரபுகளோடுதான் நாம் வாழ்கிறோம். இவற்றை நாம் புரிந்து கொள்வது என்பது நம்மை நாமே புரிந்து கொள்ளுதலும் ஆகிறது. பழைய இலக்கியங்கள் குறித்த ஆய்வின் நோக்கமும் இதுவாகத்தான் இருக்கமுடியும். காவியங்கள் என்றும் பக்தி இலக்கியங்கள் என்றும் புராணங்கள் என்றும் நாம் பேசும்போது இவற்றை இன்றைய இலக்கியங்களிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதையும் நம்மால் தவிர்க்க இயலாது. இலக்கியத்தின் நோக்கம், இயக்கம், பயன்பாடு என்று எல்லாவகையிலும் நாம் வேறுபட்டிருக்கிறோம். இது குறித்து நம் கவனத்தை இங்கு குவிக்க வேண்டும். 3. இன்றைய வாழ்வில் கடவுள் என்ற கருத்தோ ஆன்மா, சடங்குகள் முதலியனவோ நம் வாழ்வின் மையமாக இல்லை. இப்படி நாம் சொல்லும்பொழுது சிலர் வேறுபடவும் செய்யலாம். இன்னும் பழைய சமூகம் நம்மோடும் நமக்குள்ளும் தங்கியிருப்பதைத்தான் இது உணர்த்துகிறது (இது குறித்து இப்பொழுது நம் கவனத்தைக் குவிக்க வேண்டியதில்லை) “இறைவன் நம்மைப் படைத்தான். படைப்பின் நோக்கம் நமக்குப் புரியவில்லை. இது ஒரு பெரும் கேள்வி. விடை தெரியவில்லை. இறைவனைத் தேடுகிறோம். இறைவனை நமக்குள்ளும் வெளியிலும் தேடுகிறோம். இறைவனைக் காண்பதுதான் வாழ்வின் ஒரே நோக்கம். இறைவனை நமக்குள் செரித்துக் கொள்ள வேண்டும். இறைவன் நமக்குள் வந்து தங்கினால் வாழ்வு நமக்கு வசப்பட்டுவிடும். அப்புறம் துயர்கள் நீங்கிவிடும். நாம் யாருக்கும் அடிமையில்லை. இறைவனே நம் தலைவன். அவனுக்கு அடிமை செய்வதே நம் கடமை”. இப்படிச் சொல்லுவது ஒருவகையில் சமய நம்பிக்கையாளர்களின் கருத்துக்களை ஒரு வடிவில் கருக்கிச் சொல்வது ஆகும். இது போதாது என்பது வெளிப்படை. இறைவனின் இலக்கணம் உயிரின் இலக்கணம் என்று தொடங்கிச் சமய அறிஞர்கள் நிறையச் சொல்லுகிறார்கள். சமயங்களில் பல்வகை. இறைவனை ஒப்புக்கொள்ளும் சமயங்களோடு இறைவனை ஒப்புக் கொள்ளாத சமயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இறைவனின் இலக்கணம் குறித்தும் உயிரின் இலக்கணம் குறித்தும் சமய அறிஞர்களிடத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இறைவனுக்கும் உயிர்களுக்குமிடையிலுள்ள உறவு என்பது குறித்தும் பல்வேறு இலக்கணங்கள் உள்ளன. இறைவன் என்பதோடு ஆன்மாவை மறுப்பவர்களும் உள்ளனர். இந்தியா என்று பேசும்போது வேதமதம் என்றும் சாங்கியம், நியாயம், வைசேடிகம் என்றும் புத்தம், சமணம், சார்வாகம் என்றும் தமிழகம் என்று பேசும் பொழுது சைவம், வைணவம் என்றும் உலகளவில் பேசும்போது கிருத்தவம், இஸ்லாம் என்றும் அண்மைகாலத்திற்கு வரும்போது ஜென் என்றும் தாவோ என்றும் அப்புறம் ஜே.கே. என்றும் ஓசோ என்றும் வேதாத்திரி என்றும் பல படியாகப் பேசவேண்டும். இத்தகைய விவாதங்களும் முடிவில்லாமல் தொடரத்தான் செய்யும். இந்த விவாதங்களைப் பொதுமைப்படுத்தி இப்பொழுது ஏதாவது சொல்ல முடியுமா என்பது நம் முயற்சி. பண்டைய இலக்கியங்களாகிய காவியங்கள், புராணங்கள் முதலியவற்றைப் பற்றி பேசும் பொழுதும் இப்படி ஒரு முயற்சி தேவையாகவும் இருக்கிறது. கூடவே இவை குறித்து நம் காலத்திற்கு ஒத்த புரிதலையும் முன்வைப்பது தேவையாகிறது. 4. தமிழில் உள்ள சில இலக்கியங்களைக் குறிப்பிட்டு, இவைப் பற்றி பேசலாம். இளங்கோவடிகளைச் சமணர் என்று வைத்துக் கொண்டு சிலவற்றை இங்கு சொல்லலாம். சிலம்பில் ஊழ்வினை என்பது மனிதவாழ்வை இயக்குகிறது. கோவலன் கொல்லப்பட்டதற்கு அவனது முற்பிறப்பிலிருந்து ஒரு காரணத்தை இளங்கோ முன்வைக்கிறார். பாண்டியன் நீதி தவறியதற்கு முன்வினை காரணம் என்று மதுராவதி தெய்வம் கூறினாலும் அதை விளக்கவில்லை. இளங்கோ செய்த கதையின்படி கண்ணகி தேவருலகம் செல்கிறாள். கணவனைக் காண்கிறாள். பாண்டியனோடு இருந்த முரண்பாடு தீர்ந்து விட்டது. பாண்டியனுக்கு மகளாகிறாள். வஞ்சி நகரில் கண்ணகிக்குக் கோயில் அமைக்கப்படுகிறது. கண்ணகி வரம் தருகிறாள். இவள் மனிதப்பிறப்பு எனினும் இவளுக்குள் செயல்படும் தெய்வப்பண்பு குறித்து இளங்கோ முன்னும் சொல்லியிருக்கிறார். ஊழ்வினையைக் கோவலனால் வெற்றி கொள்ள முடியவில்லை. கண்ணகி வெற்றி கொள்கிறாள். இனி கண்ணகிக்குப் பிறப்பில்லை. கோவலனுக்குப் பிறப்புண்டா தெரியவில்லை. நெடுஞ்செழியன் அரசியலில் பிழை செய்யாமல் இருந்திருக்க இயலுமா? இயலாது என்றே தோன்றுகிறது. இளங்கோவின் கருத்துப்படி தெய்வம் இருக்கிறது. தெய்வத்தை வழிபட வேண்டும். கவுந்தியடிகள் சமணர். இந்திரன் முதலியவர் இவர்களின் தெய்வங்கள். தெய்வ நிலையோடு வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. பிறப்பு அறுபட வேண்டும். தெய்வத்தின் அருளால் இது நிகழ்வதில்லை. வினைகளிலிருந்து விடுபடும் பொழுதே பிறப்பு அறும். பிறப்பு அறுவதற்கு ஆசைகள் அறவேண்டும். இதற்கு தேவையானது துறவு வாழ்க்கை. சிலப்பதிகாரம் சொல்லும் மனித வாழ்வின் எல்லைகள், உலகியல் வாழ்விற்கு அப்பாலும் விரிவு பெறுகின்றன. என்னதான் அறிவோடு இயங்கினாலும் வினையை நாம் வெல்வது கடினம். வினை என்பதற்கு முற்றுரிமை தந்திருக்கிறார்கள் சமணர்கள். இது என்று தொடங்கியதென்று உறுதியாகச் சொல்லமுடியாது, எல்லோருக்கும் வினையின் முடிவுகாலம் என்றும் பேசமுடியாது. ஒரு சிலர் வினையிலிருந்து தப்ப முடியும். இன்றைய நோக்கில் சிலப்பதிகாரத்தை நம்மால் புரிந்து கற்கமுடியும். பழங்கால நிலைகளில் நீதிநெறி சரியாக வகுக்கப்படவில்லை. பாண்டியனும் மனக்கலவரங்களோடு இருந்தான். மனைவியின் ஊடலை உடனடியாகத் தீர்க்க வேண்டும். திருடு போனதாக பொற்கொல்லன் கூறிய சிலம்பு இப்பொழுது கிடைப்பதற்கான வாய்ப்பு நேர்ந்திருக்கிறது. கோவலன் கையில் சிலம்பிருந்தால் போதும் அவனைக் கொன்றுவிடலாம். இதைக் காவலனே செய்யலாம். கோவலன் நல்லவனா? தீயவனா? என்று அவன் ஆராய வேண்டியதில்லை. கண்ணகி கிளர்ந்தெழுகிறாள். சான்றோரும், கற்புடை மகளிரும் அவளோடு சேர்ந்து கொள்கின்றனர். நீதிநெறிக்கு இடம் தராதது மதுரை நகரம். இதை எரிக்கத்தான் வேண்டும். நாமே தெய்வமாகி நீதியைச் செயல்படுத்த முடியும். கண்ணகி இதைத்தான் செய்கிறாள். வெளிநாட்டிலிருந்து பிழைப்புத் தேடி வந்தவன் கோவலன். அவன் கையில் விலையுயர்ந்த சிலம்பு இருக்க முடியாது. அரசனையே ஏமாற்றி விடுகிறான், பொற்கொல்லன். இப்படித் தந்திரமாகப் பிழைப்பதற்குச் சமூகம் வாய்ப்பு தந்திருக்கிறது. சிலப்பதிகாரம் நம் காலத்திற்கும் ஒத்த கதைதான். பாண்டியன் இறந்தது மாதிரி இன்றைய ஆட்சியாளர்கள் இறக்க மாட்டார்கள். தீ வைப்பதில் தவறில்லை. அரசதிகாரம் இதையெல்லாம் பார்த்துக் கொண்டும் இராது. நீதிநெறி சார்ந்தும் நாம் நெடுந்தொலைவு செல்ல வேண்டும். முன்வினை என்பதை வரலாற்றின் தொடர்ச்சியில் வைத்து இன்று நம்மால் புரிந்து கொள்ள முடியும் ஆதிப்பொதுமைச் சமூத்தில் தனியுடமை இல்லை. அரசதிகாரம் இல்லை. ஏற்றத்தாழ்வோடு கூடிய வர்க்க சமூகம் தான் இத்தகைய அநீதிகளைத் தோற்றுவிக்கிறது, வர்க்கச் சமூகத்தில் இயக்கத்திலிருந்துதான் வினைத்தொடர் ஆரம்பமாகிறது. கோவலன் கொலை செய்யப்பட்டதை அவனது தனி வாழ்வில் இருந்து விளக்க முடியாது. பாண்டியனும் அரசதிகாரம் என்பதன் வரலாற்று தொடர்ச்சி யிலிருப்பவன். அதிகாரத்திலிருப்பவன். தன் சொந்த தேவைகளை அதிகாரத்தின் துணைகொண்டே நிறைவேற்றிக் கொள்ள முடியும். கண்ணகிகள் சாகத்தான் செய்வார்கள். கண்ணகியர் கிளர்த் தெழவும் கூடும். தெய்வம் என்பதன் தோற்றத்தை மனிதனுக்குள்ளிருந்தே விளக்கமுடியும். சமணர்கள் இந்த உண்மையை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். மதுராவதி தெய்வம் கண்ணகியைக் கெஞ்சுகிறது. மதுராவதி தெய்வத்திற்குக் கண்ணகி அருள் புரிகிறாள். கவுந்தியடிகளுக்குள் இல்லாத மனித நேயமும் தெய்வப்பண்பும் கண்ணகிக்குள் இருக்கின்றன. இளங்கோ சமணர்தான் என்றாலும் தமிழ்வாழ்வை மேம்படுத்தியவர். சமணர்கள் தமிழ்வாழ்வின் அறத்தை மேம்படுத்தியவர்கள். தமிழ்ச் சமூகத்தைத் திறனாய்விற்கு உட்படுத்தியவர் இளங்கோ. இப்படியெல்லாம் இன்று நாம் பொருளோடு பேச முடியும். வரலாற்றைப் புரிந்து கொண்டு சமூகத்தேவை என்ற உணர்வோடு இன்று நாம் பேசமுடியும். சிலப்பதிகாரம் இன்றும் நமக்குள் இருக்கிறது, இயங்குகிறது. சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து நாம் படிப்பதற்கும் சிலம்பை நாம் புத்தாக்கம் செய்வதற்கும் இதுதான் காரணம். சிலப்பதிகாரம் இன்றைய நோக்கில் ஒரு அற்புதமான அவல நாடகம். மதுரைக் காண்டத்தோடு கதையை முடித்துக் கொள்ளலாம். இதற்குப் பிறகும் கண்ணகி முதலியவர்களின் வீடுபேறு வரை கதை தொடர்கிறது. முரண்பாடுகள் தீர்ந்து வாழ்க்கை சமநிலை பெறவேண்டும். தமக்குள்ளிருந்த குறை தீர்ந்த நிலையில் மனிதர் தமக்குள் உறவு காண முடியும். வாழ்வைப் பகைமை தீர்மானிக்க முடியாது. இப்படி இயங்குகிறது சிலப்பதிகாரம். இதை இலக்கியத்திற்கான இந்தியப் பண்பாடு என்று அறிஞர் போற்றுகிறார்கள். இளங்கோவிற்குள் இயங்கிய படைப்பியக்கத்தின் பரிமாணங்கள் அளவற்றவை மட்டுமல்ல அற்புதமானவை. இதைப் போன்ற ஒரு காவியம் தமிழில் பிறகு தோன்றவில்லை. 5. இலக்கியம் குறித்த ஆய்வில் படைப்பியக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதன் தேவையை இங்கு மீண்டும் வற்புறுத்திக் கூற விரும்புகிறேன். இலக்கியம் படைத்தவரின் வாழ்நிலை மற்றும் கொள்கைகள் குறித்து படைப்பின் வழியே ஓரளவிற்கேணும் காணமுடியுமென்பது உண்மைதான். படைப்பாளியின் படைப்பு நோக்கை முன்வைத்து, அதை மெய்ப்பிக்கும் முறையில் நீண்டகாலமாக ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. படைப்பாளியின் வர்க்கச் சார்பிலிருந்து படைப்பை மதிப்பிடுவதுகூட ஒரு ஆய்வு முறையாக இங்கு இடம் பெற்றிருக்கிறது. இவை குறித்த ஆய்வு தேவை என்பதை நாம் மறுப்பதற்கில்லை. படைப்பாளிக்குள் புகுந்து அவருக்குள் செயல்படும் படைப்பியக்கம் பற்றிய ஆய்வு என்று சொல்லும் பொழுது படைப்பாளியின் தனிவாழ்வு படைப்பு நோக்கம் வர்க்கச் சார்பு ஆகிய பலவற்றையும் கடந்து வரலாற்றின் முரண் இயக்கத்திற்குள் நாம் நுழைகிறோம். வரலாற்றின் இயக்கத்தோடு படைப்பாளி இணைந்தோ முரண்பட்டோ செயல்படுவதைக் காண்கிறோம். தனிமனிதன் என்பதையும் கடந்து அவனுக்குள் சமூகம் செயல்படுவதைக் காண்கிறோம். சமகாலச் சமுதாயத்தின் அடிப்படையான முரண்கள் அவனுக்குள் வெடித்து மேல் வருவதைக் காண்கிறோம். படைப்பியக்கத்தில் வசப்படும்பொழுது அவன் தன்னிலையைக் கடந்து செல்கிறான். சமுதாயத்தின் கூட்டு மனநிலையின் வசப்பட்டு, அதன் இயக்கத்தோடு ஒன்றி இருந்து எழுதுகிறான் படைக்கிறான். இந்த அடி ஆழத்திற்குள் செல்லும்பொழுது அவன் தன் வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்கிறான். வாசகனுக்குள்ளும் படைப்பியக்கம் கிளர்ச்சி கொள்கிறது. வாசகன் இப்பொழுது வாசிப்பவனாக மட்டும் இல்லை. தனக்குள் உள்ள படைப்பாளியைக் கண்டடைகிறான். இனி அவன் செயலற்றவனாக, இலக்கியத்தை நுகர்பவனாக மட்டும் இருந்துவிட முடியாது. தம் சமகாலத்திற்குத் தேவைப்படும் அறம் எதுவோ அந்த அறத்தின் சார்பில் நின்று பேசுபவனாக செயல்படுபவனாக மாறுகிறான். வரலாற்றுக் காலம் முழுவதும் பணம், அரசுடைமை ஆகியவற்றோடு கூடிய ஆதிக்கத்திற்கு எதிரான போரில் தான், மனிதன் தன்னை மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்கிறான். வாசகனாகத் தொடங்கிய அவன் இப்படித்தான் வரலாற்றிற்குள் தன்னைக் கண்டு கொள்கிறான். தன்னைப் படைத்துக் கொள்கிறான். படைப்பியக்கம் என்பது இத்துணை அளவிற்கு வீக்கடையதாகத்தான் இயங்குகிறது. வாசகன் நுகர்பவனாக மட்டும் இருக்கும்பொழுது ஆதிக்கச் சக்திகளிடம் அகப்பட்டு அதற்குச் சேவைச் செய்பவனாகத்தான் இருக்கிறான். ஆதிக்கச் சக்திகளுக்குத் தான் அடிமைப்பட்டிருப்பதை உணர்பவன்தான் வாசகன் என்ற நிலையிலிருந்து விடுபட்டு தன்னைத் தானே படைத்துக்கொள்ளும் படைப்பாளி ஆகிறான். இலக்கியத்தின் எல்லைக்குள் மட்டும் படைப்பியக்கம் நடைபெறுவதில்லை. சமூகத்தின் அனைத்து களங்களிலும் வீறுடன் செயல்படுவது இந்தப் படைப்பியக்கம். படைப்பியக்கம் நமக்குள் செயல்படும் பொழுதுதான் நாம் இளங்கோவிற்குள்ளும் செல்கிறோம். சாத்தனாருக்குள்ளும் செல்கிறோம். பேரிலக்கியத்தை ஆய்வதற்கான முக்கியமான அணுகுமுறை என்று படைப்பியக்க ஆய்வைத்தான் நாம் முதன்மைப்படுத்துகிறோம். 6. மணிமேகலை காப்பியத்தின் மையம் என இப்பொழுது ஒன்றைக் குறிப்பிடலாம். கோவலன் கண்ணகி ஆகியவர்களின் முடிவுச் செய்தி அறிந்த மாதவி தான் துறவுக்கோலம் கொள்வதோடு இனி தன் மகள் மணிமேகலையும் பரத்தமை வாழ்விற்கு உரியவளாக இருக்க முடியாது என்று முடிவு செய்கிறாள். இந்த முடிவை மணிமேகலை ஏற்றுக் கொண்டாளா? இல்லையா? என்ற கேள்விக்குச் சாத்தனார் உடனடியாக பதில் தருவதில்லை. சித்ராபதியின் தூண்டுதல் மாதவியிடம் பலிக்கவில்லை. சித்ராபதியின் தூண்டுதல் உதயகுமானை, அவன் நண்பன் எட்டிகுமரன் உதவியோடு செயல்பட வைக்கிறது. மணிமேகலையைக் கைப்பற்ற உதயகுமாரன் முடிவு செய்கிறான். உதய குமரனிடம் எப்படியோ தன் நெஞ்சம் இழந்த நிலையில்தான் மணிமேகலை இருக்கிறாள். உதயகுமரன்பால் தனக்குள் எழும் காம உணர்வு கண்டு மணிமேகலை கலங்குகிறாள். முதல்முறை தப்பிச் செல்கிறாள். வேறு பல நிகழ்ச்சிகள் இடையில் நடந்துவிடுகின்றன. உதயகுமான் மீண்டும் முயற்சி மேற்கொள்ளும் பொழுது எதிர்பாராத முறையில் அவன் கொல்லப்படுகிறான். காப்பியத்தில் இது மிக முக்கியமான கட்டம். மணிமேகலைக்குள் அதுவரை மறைவாக இருந்த காமத்தை மணிமேகலை துறக்கிறாள். வாழ்வியக்கம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு தத்துவங்கள் பலவற்றையும் கற்றுணர்ந்து இறுதியாக பௌத்த துறவியாகிறாள். மாதவியே கூறியபடி கண்ணகிக்கு மகளாகிறாள். இது மனித நாடகம். பரத்தையர் வாழ்வு மாதவியைத் தண்டிக்கிறது. மணிமேகலையை உதயகுமரன் கணிகை எனக் கருதுவதற்கும் இது காரணம். இந்த இழிவைத் துறந்தாகவேண்டும். பரத்தையர் வாழ்வு பவுத்தருக்கு உடன்பாடில்லை. சாத்தனாருக்கும் உடன்பாடாக இல்லை. மணிமேகலை என்ற இளம்பெண்ணின் உள்ளத்தில் காதல் அரும்புவது இயல்பான நிகழ்வுதான். எனினும் இதற்குச் சமூக மரியாதை இல்லை. காமம் தீர்வதற்கு மடைமாற்றம் தேவைப்படுகிறது. வறியவர்களின் துயரம் களைய மணிமேகலை செயல்படுகிறாள். அரசனின் மனைவியால் இன்னலுக்கும் உள்ளாகிறாள். காமம் என்னும் நெருப்பு பற்றி இருக்கிற நகர வாழ்க்கை மணிமேகலைக்கு எந்தச் சமயத்திலும் தீங்கு தரும். ஆகவே நகரத்தை விட்டும் வெளியேறுகிறாள், துறவியாகிறாள். உதயகுமாரன் தான் இளவரசன் என்ற முறையில் யாரையும் வசப்படுத்த முடியுமென்று நம்புகிறான். இளவரசன் தனக்குத் தனியுரிமை உண்டென்று நம்பிச் செயல்படுகிறான். செட்டி மகனும் ஒத்துழைக்கிறான். அரசனுக்கும் தெரியாமல் மணிமேகலையை அழைத்து அவளுக்குத் தீங்கு செய்ய முனைகிறாள் அரசி. சிறையில் அடைக்கிறாள். பட்டினி போட்டு கொல்லப் பார்க்கிறாள். முரடரை அனுப்பி அவளது கற்பை நாசப்படுத்த விரும்புகிறாள். தீங்கு தடுத்துக் கொள்கிறாள் மணிமேகலை. ஆட்சியாளர்கள் அணுகு முறைகளைச் சரியாகத்தான் சொல்லுகிறார் சாத்தனார். இயற்கை இறந்த நிகழ்ச்சிகளை ஒதுக்கிவைத்து மணிமேகலைக் காப்பியத்தைப் படிப்போமானால் இப்படி ஒரு மையம் கண்டு நம்மால் வாசிக்க முடியும் இதுவும் நம் காலத்து கதைதான். பெரிய ஒரு இலட்சியத்திற்காக காமம் முதலியவற்றைத் துறப்பதை நம்மால் புரிந்து கொள்ளவும் முடியும். சங்ககால வாழ்க்கை குறித்து ஒரு திறனாய்வையும் இங்கு வழங்கி இருக்கிறார் சாத்தனார். ஆட்சியமைப்பைக் குறித்தும் சாத்தனார் திறனாய்வு செய்கிறார். வறுமை என்ற கொடிய சிக்கல் சங்ககாலத்தை அடுத்த சமுதாயத்தில் நிலவியது என்பதையும் அதற்கு என்னதான் தீர்வு என்ற முறையிலும் சாத்தனார் சிந்தித்து இருக்கிறார். சங்ககாலம் இப்படி இத்தகைய கொடிய வறுமைக்கு வழி திறந்து வைத்தது என்ற தீவிரமான ஆய்வை நமக்குள் சாத்தனார் தூண்டுகிறார். எதார்த்தம் பற்றி இன்று நாம் கூடுதலாகப் பேசுகிறோம். மணிமேகலை காப்பியத்திற்குள் இடம்பெறும் எதார்த்தம் என்ற நிகழ்வுப் போக்கை இப்படி நாம் தொகுத்துக் கொள்கிறோம். கூடுதலாக இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மணிமேகலை சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுகிறாள். பசிக்கொடுமை காரணமாக கொலை, களவு முதலிய குற்றங்களைச் செய்து சிறைக்குள் அகப்பட்டவர்களின் மனக்கோட்டம் தீர்க்கிறாள் மணிமேகலை. மணிமேகலைக்குள் நாம் கண்டு தொகுத்த நடப்பியல் கூறுகளோடு இயற்கை இறந்த நிகழ்ச்சிகளும் நிறையவே சொல்லப்படுகின்றன. இவற்றை மட்டுமே முதன்மைப்படுத்தி பார்ப்பதென்றால் மணிமேகலைக் காப்பியம் ஒரு புராணமாகிவிடும். காப்பியம் என்பதனுள் மனிதன்தான் மையம். உலகியல் வாழ்க்கைச் சிக்கல்தான் மனிதனை மையப்படுத்துகிற காப்பியத்தின் மையப்பொருள். புராணம் என்பது மனிதன் என்ற மையத்திலிருந்து விலகிச் செயல்படுகிறது. மனிதனை ஓரத்திற்கு ஒதுக்கிவிடுகிறது. கடவுளோ அல்லது மனித ஆற்றல் கடந்த சக்திகளோ மையத்திற்கு வந்து விடுகின்றன. என்னை நம்பு என் அருள் இல்லாமல் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று இச்சக்திகள் சொல்லுகின்றன. வரலாற்றினுள் இவன் பங்கு சிறுத்து விடுகின்றது. மனிதனை நிர்ணயம் செய்வது வரலாற்றில் மனித இயக்கம் அன்று. மனிதனைத் துரும்பாக்கி விடுகின்ற ஆதிக்கச் சக்திகள் எங்கிருந்தோ செயல்படுகின்றன. இந்த ஆதிக்க சக்திகளை அண்டித்தான் மனிதன் உயிர் வாழ முடியும். அடிமைத்தனத்தை இவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். தன் சிந்தனைத் திறன் முதலியவற்றை ஆதிக்க சக்திகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். இந்த சூழல்தான் புராண ஆக்கத்திற்குக் காரணமாகின்றது. சிலப்பதிகாரத்தில் மனிதன் என்ற மையம் உறுதிப்பட்டிருக்கிறது. நாம் இதுவரை வகுத்துரைத்தபடி மணிமேகலை காப்பியத்தினுள்ளும் மனிதன் என்ற மையம் முக்கியத்துவம் பெற்றுள்ளதைப் பார்க்கிறோம். உவவனத்திலிருந்து மணிமேகலா தெய்வம் மணிமேகலையை எடுத்துச் சென்று மணிபல்லவத் தீவில் வைக்கிறது. அங்கு தீவதிலகை என்ற இன்னொரு தெய்வத்தைச் சந்திக்கிறாள் மணிமேகலை. முன்பு ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுத சுரபி’ மணிமேகலை கைக்குக் கிடைக்கிறது. தீவதிலகை கற்றுத்தந்த மந்திரம் சொல்லி வானில் எழுந்து புகார் நகரம் அடைகிறாள் மணிமேகலை. அறவன் அடிகள் கூறியபடி ஆதிரையின் கையில் முதல் பிச்சை பெறுகிறாள் மணிமேகலை. எடுக்க எடுக்க குறைவிலாமல் வரும் உணவை, காணார், கேளார், கால் முடம்பட்டோர் என்று பலருக்கும் தந்து பசி தீர்க்கிறாள் மணிமேகலை. 12 ஆண்டுகள் யானைத்தி என்னும் பசி நோயால் துன்புற்ற காயசண்டிகையின் பசி தீர்க்கிறாள். இப்படித் தொடர்கிறது காப்பியக்கதை. தேவைப்படும் பொழுது மணிமேகலை தன் உருவை மாற்றிக் கொள்கிறாள். புகார் நகரிலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிய பசிக் கொடுமையை இக்காப்பியத்திலிருந்து அறிகிறோம். பசி தீர்க்கும் பணியில் புத்த சமயத்தவர் ஈடுபட்டிருக்க வேண்டும். இதன் காரணமாகத் தான் மணிமேகலை இவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறாள். நன்னெறியில் செல்லும் மணிமேகலைக்குத் தெய்வங்களும் துணை நிற்கின்றன. எடுக்க எடுக்க குறையாமல் எந்த அமுதசுரபியிலிருந்தும் உணவு வராது. இந்த நிகழ்ச்சியை யாரும் நம்ப முடியாது. சாத்தனாருக்குள் செயல்படும் கற்பனை வளத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். சமுதாயத்தில் நிலவும் பாரிய பசிக்கொடுமையைத் தனி மனிதனால் தீர்க்க முடியாது. இந்த கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு தெய்வங்கள் சும்மா இருந்துவிடக் கூடாது. எடுக்க எடுக்க குறைவுபடாத பெரிய பாத்திரம் தேவை. இப்படி இருந்தால் மட்டுமே பசிக்கொடுமையைக் களைய முடியும். சிந்தாதேவி ஆபுத்திரனுக்கு இதன் காரணமாகத்தான் இந்தப் பாத்திரத்தை வழங்கினாள். இந்தப் பாத்திரம்தான் தகுதியுடைய மணிமேகலை கையில் வந்தது. சாத்தனாருக்குள் செயல்படும் கற்பனையை இப்படிச் சமுதாய எதார்த்தச் சூழலில் புரிந்து கொள்கிறோம். சூழலுக்கு எதிர்வினை கற்பனை. கற்பனையின்றி மனிதனால் வாழ முடியாது. மணிமேகலை கதையிலிருந்து அமுதசுரபி என்ற கற்பனையை நம்மால் விலக்கிப் பார்க்க முடியுமா? பசிப்பிணி தீர்க்கும் முறையில் ஒரு பாத்திரம் ஏந்திப் பலரிடமும் உணவு பெற்று மணிமேகலை வறியவர்களுக்கு வழங்கினாள் என்பதாக நாம் அர்த்தப்படுத்த முடியும். குறைந்த அளவிற்கு வறுமை நிலவும் சூழலில் இப்படிச் செய்ய முடியும். எல்லாவிடங்களிலும் பற்றிவரும் நெருப்பைப் போன்ற வறுமைச் சூழலுக்கு இது பொருந்தாது. தவிர மணிமேகலைக் கதையில் தனக்குள்ளிருந்த காமத்தைக் கொன்று இறுதியில் துறவு மேற்கொண்ட மணிமேகலையின் கதைக்குள் வறுமைத் தீர்விற்கான குறைந்த அளவிற்கான முயற்சியை உள்ளடக்கி பார்க்கும் போது அதிக அளவில் கதைக்குள் சிதைவு ஏற்படவில்லை. எனினும் அமுத சுரபி முதலிய இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் மணிமேகலைக் கதையைக் காப்பியமாக்கி உள்ளன. தெய்வங்கள் மணிமேகலையின் வாழ்வில் தம்மை தொடர்புபடுத்திக் கொள்கின்றன. மணிமேகலையைப் புத்த துறவியாக்கும் போக்கிற்குத் தெய்வங்களும் உதவி புரிகின்றன. புத்தன் தெய்வத்தன்மை உடையவன். உலகெங்கிலும் அவனது கருணை செயற்படுகிறது. மணிமேகலை சாதாரண மனிதப்பெண் அல்லள். அவளுக்குள்ளும் தெய்வீகம் செயல்படுகிறது. தன்னைத் தூய்மை செய்து கொண்டவள் மணிமேகலை. மணிமேகலை தனக்கென வாழ விரும்பவில்லை. தன் குலத்தொழிலை அவள் விரும்பாததோடு அதிலிருந்து விடுபடுகிறாள். தனக்குள் எழும் காமத்தின் அருவருப்பை உணர்கிறாள். தன்னை அபகரிக்க வந்தவனுக்குத் தன் நெஞ்சில் இடம் கொடுத்தது எப்படி என்று திகைக்கிறாள். உதயகுமாரன் சாகவில்லை என்றால் மணிமேகலை அவனிடம் அகப்பட்டிருந்தாள் என்றால் ஒரு மனித மாண்பையா மணிமேகலைக்கு அவர் வழங்கியிருப்பான்? அதிகம் சொல்வதென்றால் காமக்கிழத்தியாக அவளை அவன் அடிமை கொண்டிருப்பான். மணிமேகலை ஒரு காப்பியத் தலைவியாக சிறந்திருக்க முடியாது. சமுதாயச் சூழல் இப்படித்தான் அன்று இருந்தது. இதற்கு எதிர்வினைதான் சாத்தனாரின் படைப்பு. புத்த சமயத்திற்கு ஆக்கம் தரும் படைப்பென்பதில் அய்யமில்லை. தமிழர் வாழ்வை மேம்படுத்தும் முயற்சியில் பவுத்தர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதிலும் நமக்கு அய்யமில்லை. மணிமேகலைக் காப்பியத்தில் நிறைய கிளைக்கதைகள் உள்ளன. இப்படிக் கிளைக்கதைகளோடு இயங்குவது காப்பியம். வாழ்வின் பெரும் பரப்பை இத்தகைய கிளைக் கதைகள் மூலம்தான் காப்பியத்திற்குள் கொண்டு வருகிறார் படைப்பாளி. ஆபுத்திரன் கதை தமிழ்ச் சமுதாயத்திற்குச் சாத்தனார் வழங்கிய ஒரு அற்புதமான கொடை. மணிமேகலை காப்பியத்தின் மையத்தோடு ஒத்தியங்கும் பசிப்பிணி தீர்வு என்பதுதான் ஆபுத்திரன் கதைக்குக் கருப்பொருள். நள்ளிரவில் வந்த வணிகர்களின் பசி தீர்க்க சிந்தா தேவியை வேண்டி அமுத சுரபியை ஆபுத்திரன் பெற்றான். இந்திரன் வேண்டி அழைத்த போதிலும் பசி தீர்க்கும் முயற்சியைக் கைவிட்டு தேவருலகம் செல்ல ஆபுத்திரன் விரும்பவில்லை. பிறர் பசி தீர்த்தபின் தான் அமுத சுரபியில் இருந்து உணவெடுத்து தன் பசியைத் தீர்த்துக் கொள்வான் ஆபுத்திரன். மணிபல்லவத் தீவில் தனித்துவிடப்பட்ட நிலையில் தனித்திருந்து உணவு உண்ணாமல் தன் வாழ்வை முடித்துக் கொள்கிறான் ஆபுத்திரன். அவனது விருப்பப்படி மணிமேகலை கைகளில் இந்தப் பாத்திரம் வந்து சேர்ந்தது. கதையின் தொடக்கத்தில் வேள்வி செய்வதற்காக தொழுவத்தில் பார்ப்பனர் அடைத்து வைத்த பசு மாடுகளை ஆபுத்திரன் அவிழ்த்து விட்டு பார்ப்பனரின் அடி உதைக்கு ஆளாகித் தன் ஊரை விட்டு நீங்கிய கதையையும் சேர்த்து பார்த்தால் ஆபுத்திரனின் ஆளுமை நமக்குள் பெரும் வியப்பாய் எழுவதை உணர்ந்து கொள்ள முடியும். பார்ப்பனரின் வேள்வி முறையைப் புத்த சமயத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. தெய்வங்கள் மனிதர்களோடு ஒத்துழைக்க வேண்டும். தெய்வப்பிறவி என்பது புத்த சமயத்தினருக்கு உடன்பாடுதான். எத்தனையோ வகைப் பிறப்புகளில் தெய்வ பிறப்பும் ஒன்று இவர்களிலும் மேம்பட்டவர் கவுதம புத்தர். விருட்சிக முனிவர், சாதுவன், ஆதிரை, காயசண்டிகைக் கதை முதலியவற்றிலும் மணிமேகலைக் காப்பியத்தின் மையக் கருப்பொருளைக் காண முடியும். காப்பியம் என்பதனுள் மனிதன் தான் மையம் என்று சொன்னோம். மனிதன் என்ற மையத்திற்குள் தெய்வங்கள் வந்து போகின்றன. மனிதனின் மேன்மையான செயல்களுக்குத் தெய்வங்கள் ஒத்துழைக்கின்றன. தெய்வம் என்பது கூட மனிதகதிக்குச் சற்று உயர்ந்த கதியாக இருக்கமுடியும். பிறப்பு என்பது முற்றாக அறுபடுவதுதான் விடுதலை. தெய்வப் பிறப்பையும் மனிதன் கடந்து செல்ல வேண்டும். மனிதன் புத்தனாக வேண்டும். உலகியல் வாழ்விற்குள்ளிருந்து இது சாத்தியப்படுகிறது. மண்ணுலகின் துயரங்களை துக்கங்களை நுகர்ந்து பிறகு அவற்றிலிருந்து விடுபட்டு வாழ்வது மனித யாத்திரை. மண்ணுலகில் அல்லாமல் பிறவி அறுவதற்கான வாய்ப்பு வேறிடத்தில் இல்லை. சாதி, சடங்கு முதலியவற்றின் வழியே விடுதலை பெற இயலாது. யாகம் பயன்படாது. தெய்வங்களை நம்பி விடுதலைக்கு வழிதேட இயலாது. தெய்வங்களைக் கடந்து செல்ல வேண்டும். மனித வாழ்வின் எல்லைக்குள் விண்ணுலகம் அடங்கும். பவுத்தர் மற்றும் சமணர்களின் காப்பியக் கோட்பாடு என இப்படிச் சொல்ல முடியும். சிற்றிதழ் வளர்த்த தமிழ் – 1 1. சிற்றிதழ் என்பதற்கான இலக்கணம் அல்லது வரையறைகள் என்ன என்பது பற்றி உறுதியாகச் சொல்ல முடியுமா என்று தோன்றவில்லை. எனினும் சில குறிப்புகளை இங்கு தரலாம். சிற்றிதழ் என்பது பெரும் பத்திரிகைகளுக்கு எதிரான போக்கைக் கொண்டது. சிற்றிதழ்கள் சிறிய அளவில் மட்டுமே வெளியாகின்றன. சுமார் ஐநூறு படிகள் முதற்கொண்டு ஆயிரம் வரை அச்சிடப்படுகின்றன. நேரிடையாக சந்தாதாரர்களை அல்லது நண்பர்களை நம்பி இவை வெளியாகின்றன. பெரும்பாலான சிற்றிதழ் ஒவ்வொன்றும் ஒரு குழுவின் முயற்சியால் நடத்தப்படுகிறது. கருத்தியல் என்ற முறையில் ஒரு குழுவுக்கிடையில் அநேகமாக ஒற்றுமை நிலவுகிறது. பெரும்பாலான இதழ்கள் தனிச்சுற்றுக்கு என்ற முறையில்தான் வெளியாகின்றன. சில இதழ்களேனும் இப்பொழுது பதிவு பெற்று வெளிவருகின்றன. சிற்றிதழ்கள் சில சமயம் சிறப்பிதழ் அல்லது மலர்களை வெளியிடுகின்றன. பக்க எண்ணிக்கையும், விலையும் அதிகரித்து விடும்பொழுது இது சிற்றிதழ்தானா என்ற கேள்வியும் எழுகிறது. விளம்பரங்களை நம்பி வெளிவருவதும் சிற்றிதழ்தானா, என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது. சிற்றிதழ்கள் தாம் அறிவிக்கும் கால இடைவெளிகளில் வருவதில்லை. பொருள் முடை என்பது முக்கியமான காரணம். பெரும்பாலான சிற்றிதழ்கள் இலக்கியம் சார்ந்தவையாக இருக்கின்றன. தொடர்ச்சியாக பல ஆண்டுகள் வரும் சிற்றிதழ்கள் பெரும்பாலும் இல்லை. எழுதிப் பழகுவதற்காகவும் சிற்றிதழ்கள் நடத்தப்படுகின்றன. புதிய எழுத்தாளர்கள் என்பவர்கள் அநேகமாக கவிதையில் தான் தொடங்குகின்றனர். சிற்றிதழ் என்பதை ஒரு குறிப்பிட்ட மொழி வழங்கும் பிரதேசத்தின் கலாச்சாரத் தளத்தோடு சார்ந்த அறிவியக்கத்தின் ஒரு பகுதி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பெரும்பாலான சிற்றிதழ்கள் இலக்கியம் என்று தான் தொடங்குகிறார்கள். அதன்பிறகு இலக்கியத்திறனாய்வு என்றும், பிறகு கலாச்சாரச் சூழல் என்றும் பேசுகிறார்கள். தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களைப் பொறுத்தவரை, தமிழ்க் கலாச்சார அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இலக்கியம் என்றும் கலாச்சாரம் என்றும் பேசுபவர்கள் பெரும்பாலும் கட்சி அரசியலை விட்டு விலகி நிற்கிறார்கள். அல்லது கட்சி அரசியல் சார்பு தமக்கு இருக்குமெனினும் சிற்றிதழுக்குள் கட்சி அரசியலைக் கொண்டு வருவதில்லை. அரசியல் கட்சிகள் தம் சார்பில் வெளியிடும் இலக்கிய இதழ்களைச் சிற்றிதழ்கள் எனக் கருதுவதில்லை. அன்றியும் கட்சி அரசியலில் தீவிரமுடையவர் சிற்றிதழ்களைத் தம் கருத்தியல் வளர்ச்சிக்குத் தடையானதென்றும் கருதுகிறார்கள். கட்சி அரசியலைக் கைவிட்டவர்கள் சிற்றிதழில் வந்து சேர்கிறார்கள். பெரும்பாலான சிற்றிதழ்கள், பெரும் பத்திரிகைகளினால் மலினப்படுத்தப்படும் வெகுமக்கள் ரசனை என்பதற்கு எதிரான நிலையைத்தான் எடுக்கின்றன. படைப்புத்திறன் அழிந்து வரும் கலாச்சாரச் சூழலைக் கிளறி, ஏதாவது சில வகைகளில் படைப்புத் திறனை மேம்படுத்துவதைச் சிற்றிதழ்கள் குறிப்பாகக் கொண்டுள்ளன. தமிழ்க் கலாச்சாரச் சூழலில் சிக்கல்கள் பற்றிய ஆய்விலும், சிக்கல்களைத் தீர்ப்பது எப்படி என்பதற்கான வழிமுறைகளிலும் சிற்றிதழ்கள் தம் கவனத்தைக் குவிக்கின்றன. 2. தமிழில் சிற்றிதழ் என்ற கருத்தாக்கம் 'எழுத்து' காலத்திலிருந்துதான் முன்வைக்கப்படுகிறது என்று கொள்ளலாம். இதன் பிறகு 'கசடதபற’ இதழிலும் அதன் பிறகு வந்த 'பிரக்ஞை’ யிலும் இக்கருத்தாக்கத்தின் தனித்தன்மை மேலும் புலனாயிற்று என்று சொல்லலாம். யாத்ராவிலும் படிகள் இதழிலும் சிற்றிதழ் பற்றி மேலும் சில தெளிவான வரையறைகள் ஏற்பட்டன. தமிழ்ச் சிற்றிதழ்களில் வரலாறு என்று பார்க்கும்பொழுது ’எழுத்து’ காலத்திற்கு முன்னரும் சென்று தாம் பார்க்க முடியும். 'மணிக்கொடி', சூறாவளி, கலாமோகினி, கிராம ஊழியன், தேனீ, சரஸ்வதி, சாந்தி முதலிய இதழ்களை இன்றைய நோக்கில் நாம் சிற்றிதழ்கள் என்றே மதிப்பிடலாம். ஆனால் அவர்கள் தம் இதழ்களைச் சிற்றிதழ்கள் என சொல்லவில்லை. இதற்கான காரணத்தை வல்லிக்கண்ணன் தன் நூலில் குறிப்பிடுகிறார். மணிக்கொடி போன்றவை ஒவ்வொரு இதழிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட படிகள் வெளியிட்டன. கடைகளில் இவைகள் விற்பனை ஆயின. எனினும் இவை சிற்றிதழ்கள் தான் என்ற கருத்தை வல்லிக்கண்ணன் ஆதரிக்கத்தான் செய்கிறார். காரணம், இந்தச் சிற்றிதழ்கள் அன்றைய கால நிலைகளில் பெரும் பத்திரிகைக்கு எதிரானவை, கட்சி அரசியலை உள்ளே கொண்டு வராதவை. மணிக்கொடியைப் பொருத்தவரை, அன்று நிலவிய விகட மனோபாவத்திற்கு எதிரானது. மணிக்கொடி முதலிய இதழ்கள் தமிழின் மறுமலர்ச்சி என்ற களத்தில் உணர்வுபூர்வமாக உறுதியோடு இயங்கின. மேற்கத்திய சிறுகதை வடிவத்தைத் தமிழில் முழுமையாகவும் சரியாகவும் கொண்டு வரவேண்டும் என்ற ஈடுபாட்டோடு அவர்கள் செயல்பட்டார்கள். அவர்கள் தமிழ் மண்ணில் வேர் கொண்டு இருந்தார்கள் என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். மேற்கத்திய கதை முறையை, திறனாய்வு முறையைத் தமிழ்ச் சூழலுக்குள் கொண்டுவரும் பொழுது தமிழின் நீர்மைக்கேற்றவாறு அவர்கள் செய்தார்கள். மேற்குலகை நகல் செய்வது அவர்களுக்கு உடன்பாடில்லை. பாரதியை முதலாகக் கொண்டு தமிழ் மறுமலர்ச்சிக்கு அவர்கள் முயற்சி செய்தார்கள். அன்று தமிழகச் சூழலில் இருந்த விடுதலை இயக்கமும், பகுத்தறிவு இயக்கமும் இவர்களைப் பாதித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் பெரும்பாலும் இவர்களின் நோக்கம் இலக்கிய இயக்கம். 3. சி.சு.செல்லப்பா அவர்களின் எழுத்துக் காலத்தை இப்பொழுது எடுத்துக் கொள்ளலாம். எழுத்துவின் மூலம் மேற்கத்திய புதுக்கவிதை முறையைத் தமிழில் செல்லப்பா நிலைநிறுத்தினார். அவ்வாறு நிலை நிறுத்துவதற்குத் தமிழ் மூலங்களை அவர் தேடித் தொகுத்தார். எதுகை மோனைகளில் ஓசை ஒழுங்குகளில் மரபு போற்றலில் கவிதை இல்லை என்று சொல்லி கவிதைக்குள் படிமம், தொனிப்பொருள் என்றெல்லாம் அவர் பேசினார். எழுத்து இதழ்களில் எழுதிய பலரும் இப்படி கவிதையின் இலக்கணத்தைத் தொடர்ந்து தெளிவுபடுத்தினார்கள். தமிழுக்கு வந்து சேர்ந்த சிறுகதையின் இலக்கணத்தை ஆராய்ந்தார்கள். கவிதை வழியாகவும் சிறுகதை வழியாகவும் தமிழ் இலக்கியத்திற்குள் எதார்த்தவாதம் மட்டுமல்லாமல் நவீனத்துவமும் இயல்பாகவே வந்து கலந்தது. புதுமைப்பித்தன், க.நா.சு. பிச்சமூர்த்தி, கு.ப.ரா. முதலிய பலரும் தமிழின் நீர்மைக்கு, தமிழ் வளர்ச்சிக்குப் பங்காற்றினார்கள். மேற்கை அப்படியே விழுங்கிக் கொண்டு அவர்கள் வாந்தியெடுக்கவில்லை. இவர்கள் செய்த சோதனை முயற்சிகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. தமிழின் பழைய இலக்கியத்தோடு இவர்களுக்கு உறவு இருந்தது. தமிழ் மரபை, குறிப்பாக சித்தர் மரபை இவர்கள் தமக்குள் வரித்துக் கொண்டார்கள். மத மரபோடு இவர்கள் முற்றாக ஒட்டிச் செல்லவில்லை என்றாலும் மத மரபை அருவெறுக்கத்தக்கதென் இவர்கள் கருதவில்லை. இவர்கள் காலத்தில் பெரியார் மதம் பற்றி கடுமையாகச் சாடிக் கொண்டிருந்தார். இதன் காரணமாகவும், இவர்கள் மத மரபினுள் முற்றாக தம்மை இணைத்துக் கொள்ளவில்லை என்றும் சொல்லலாம் சிறுகதையைப் பொறுத்தவரை இன்று தமிழின் வளர்ச்சி உலகத்தரத்திற்கு இருக்கிறதென்று சிலர் மதிப்பிடுகிறார்கள். இதற்குக் காரணமாய் இருந்தவர்கள், மணிக்கொடிக்காரர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களும், புதுக்கவிதை முயற்சிகளும் புதுக்கவிதை பற்றிய திறனாய்வும், குறைந்த அளவுக்குக் கவிதை என்றால் என்ன என்பது பற்றிய புரிதலை இன்று நாம் பெறுவதற்கும் இவர்கள் காரணம் என்றும் சொல்லலாம். தமிழ்க் கவிதை மரபில் சங்க இலக்கியத்தினுள்ளும், பக்தி இயக்கத்தினுள்ளும் கவிதைகள் செழித்திருந்ததை இவர்கள் கண்டு சொன்னார்கள். இலக்கியத் திறனாய்வு என்று எடுத்துக் கொண்டாலும் மேற்கை இவர்கள் நகல் செய்தார்கள் என்று சொல்ல முடியாது. புதுத்திறனாய்வு என்ற பகுப்பாய்வு முறையைச் செல்லப்பா கையாண்டார். க.நா.சு.வின் மதிப்பீட்டு முறையை மனப்பதிவு முறை என்று சொன்னாலும் பேரிலக்கியங்கள் பலவற்றைப் படித்து சுவைத்த அவரது நுட்பமான அனுபவம் அதற்கு ஆதாரமாக இருந்தது. தமிழ் மரபின் வீரியமிக்க வாரிசு என புதுமைப்பித்தனை நாம் பெருமையோடு சொல்லலாம். மேற்கை அவர் முற்றாக தனக்குள் செரித்துக் கொண்டிருந்தார். தமிழ் வாழ்வின் கடுமையான முரண்கள் அவருக்குள்ளிருந்து அற்புதமான படைப்பாய் வெளிப்பட்டன. தமிழின் மறுமலர்ச்சி என்ற அது நாள் வரை தொடர்ந்து வந்த இயக்கத்தில் தான் சரஸ்வதி விஜயபாஸ்கரனும், சாந்தி தொ.மு.சி. ரகுநாதனும் தம்மைக் கண்டார்கள். மணிக்கொடி முதல் சாந்தி வரையிலான கால அளவில் தமிழின் ஆக்க முயற்சிகளில் ஈடுபட்டிருந்த இவர்களைப் போலவே தமிழ் மரபைப் போற்றிப் பாதுகாக்கும் இன்னொரு இயக்கமும் செயல்பட்டு வந்தது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தொடங்கி மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், திரு.வி.க. என்று இவர்களைக் குறிப்பிடலாம். இவர்களின் நெறி பெரும்பகுதி புலமை நெறி. இவர்களும் தமிழின் ஆக்கத்திற்கு உழைத்தவர்கள். எப்படி என்பது இங்கு நம் ஆய்வுக்கு அவசியமில்லை. 4. ‘எழுத்து’ வுக்கு அடுத்து வந்த காலத்தை இப்பொழுது காண்போம். ‘கசடதபற’ காலம் முதல் மேற்கை நோக்கிய பார்வை அழுத்தம் பெற்றது என்று சொல்லவேண்டும். முன்னையவர்களுக்குள் நவீனத்துவம் இயல்பாக வந்து கலந்து செயல்பட்டது என்றால் இவர்களுக்குள் நவீனத்துவம் தீவிரமாக, அழுத்தமாக, சிலசமயம், ஆரவாரத்தோடு செயல்பட்டது. ‘கசடதபற’ வினரையும் அவர்களை அடுத்து வந்த இன்னும் பலரையும் பெரும்பாலும் நகரச் சார்புடைய படிப்பாளிகள் என்று கொள்வதில் தவறில்லை. கிராமங்களோடு இவர்களுக்கு உறவு இல்லை. கிராமங்களிலிருந்து வந்தபோதிலும் இவர்கள் நாளுக்கு நாள் நகரத்திற்கு உட்பட்டவர்கள். இவர்களுக்கு முன்னைய மத நம்பிக்கை இல்லை. இவர்களில் ஒரு சாரார் மேற்கத்திய இருத்தலியல் பற்றிப் பேசினார்கள். இவர்கள் எழுத்துகளில் இருத்தலியல் பார்வை இடம்பெற்றது. பெரும்பாலும் இவர்களது கவிதைகளில் இருத்தலியல் பார்வை தொடர்ந்து அதிகரித்தது. இவர்களில் பலர் மார்க்சியத்திற்கு எதிர் நிலை எடுத்தவர்கள். மார்க்சிய கட்சி சார்ந்தவர்கள் எதார்த்தவாதம், முற்போக்குவாதம் என்று பெரிதாகப் பேசியபொழுது இவர்கள் எடுத்த எதிர்நிலையை நாம் புரிந்து கொள்ள முடியும். கட்சி அரசியல் நோக்கத்தோடு இலக்கியமும், கலையும், வாழ்க்கையும் சுருக்கப்படும் நிலையில் அதற்கு எதிர்நிலை எடுப்பதும் தவிர்க்க இயலாதது தான் என்பதில் ஐயமில்லை. அசோகமித்திரன், ஞானக்கூத்தன், ந முத்துசாமி என்ற பெரும் படைப்பாளிகள் இவர்களுக்கிடையில் தோன்றி வளர்த்தவர்கள். ’’கோணல்கள்" சிறுகதைத் தொகுதி இவர்களின் படைப்புக்கு நல்ல சான்று. நம் கவனம் இலக்கியத்தில் மட்டும் குவிந்திருக்க முடியாது. நாடகம், ஒவியம், சினிமா என்று நம் கலை உணர்வை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற பார்வையை வெங்கட் சாமிநாதன் முன்வைத்தார். இதற்கேற்ற, முறையில் ‘கசடதபற’ செயல்பட்டது. பிரக்ஞை பல படிகள் முன்சென்றது. ‘யாத்ரா’ மேலும் முன் சென்றது. தமிழ்ச் சிற்றிதழ்களின் பொற்காலம் என்று குறிப்பிடும் அளவுக்கு இந்தப் பத்திரிக்கைகளின் சாதனை இருந்தது. இதே காலத்தில் தான் சிற்றிதழ் இயக்கத்துக்கு இணையான இன்னொரு இயக்கம் ஒவியத்துறையில் நிகழ்ந்தது. இதற்கு சற்று அடுத்த காலத்தில் வடக்கிலிருந்து வந்த நாடக இயக்கமும் தமிழகத்தில் நிலை பெற்றது. இவை மூன்றும் ஒன்றை ஒன்று பாதிக்கக்கூடிய அதே சமயத்தில் இணையான தனி இயக்கங்கள். நவீன நாடக இயக்கத்தில் ஈடுபட்டவர்களும், சிற்றிதழ் இயக்கத்தில் ஈடுபட்டவர்களும் பெரும்பாலும் ஒருவராக இருந்தனர். அதாவது சிற்றிதழ்க்காரர்களே நாடக இயக்கத்தவராகவும், நாடக இயக்கத்தினர் சிற்றிதழ்காரர்களாகவும் இருந்தனர். இலக்கியத்திலும், நாடகத்திலும் சரி, ஓவியத்திலும் சரி, நவீனத்துவம் அற்புதமாக செயல்பட்டது. பெரும்பாலான தமிழ் மக்கள் இவர்களோடு இல்லை. புலமை நெறியினர், பகுத்தறிவாளர்கள் இவர்களோடு இல்லை. பெரும்பகுதியினராக தமிழ்ச் சமூகத்தினுள் இவர்களின் கவை உணர்வும் ஆற்றலும் போய்ச் சேரவில்லை. தமிழ்ச் சூழலின் பாலை நிலம் பற்றி வெங்கட் சாமிநாதன் பேசினார். தமிழ் வரலாற்றில் சில வியத்தகு நிகழ்ச்சிகள் பற்றி பேசினார். வரலாற்றின் தொடர்பிலிருந்து அறுபட்டவை இந்த வியத்தகு நிகழ்ச்சிகள் என்ற முறையில் பேசினார். 5. எழுபதுகளில் தோன்றி வளர்ந்த இப்போக்குகளுக்கு, இணையான ஓரளவுக்கு எதிர் நிலையான இன்னொரு போக்கு பற்றியும், இங்கு நாம் காணவேண்டும். ‘வானம்பாடி’ ’இலக்கிய வெளிவட்டம்’, ‘படிகள்’ பரிமாணம் என்பதனுள் செயல்பட்ட போக்கு இது. இந்தச் சிற்றிதழ்களோடு உறவு கொண்டவர்களில் ஒரு பகுதியினர் மார்க்சியர், மார்க்சியக் கட்சியோடு தாம் கொண்டிருந்த உறவு அறுபட்ட பிறகு இந்த இதழ்களில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் சிலர். சமூகம் அரசியல் பற்றி இவர்கள் தீவிரமான பார்வை கொண்டவர்கள். சமூகவியல் என்ற அறிவியல் களத்திலிருந்து வந்து சேர்ந்தவர்களும் சிலர். தமிழக வரலாற்றின் மீது இவர்களுக்குப் குறிப்பிடத்தக்க அளவு அக்கறை இருந்தது. முன்னைய சிற்றிதழ்க்காரர்களிடமிருந்து இவர்கள் தமிழக கலாச்சாரச் சூழல் பற்றி முனைப்போடு பேசுவதில் இவர்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டினர். தமிழகக் கலாச்சார சூழலில் செயல்படும் வணிகப் பத்திரிகைகள் பற்றி, வணிக சக்திகள் பற்றி, பிற்போக்கான அரசியல் சக்திகள் பற்றி இவர்கள் ஆழ்ந்த அக்கறையோடு பேசினார்கள். இவர்களும் இன்னும் சிலரும் சேர்ந்து ’இலக்கு’ என்ற கலாச்சார இயக்கத்தை மார்க்சியத்தை இவர்கள் விடுவித்தனர். மார்க்சியத்தினுள்ளிருந்து அந்நியமாதல் என்ற கோட்பாட்டை இவர்களில் சிலர் எடுத்து விளக்கினார்கள். மேற்கில் விரிவாக வளர்ந்து தெரிகிற மார்க்சியத்தைத் தமிழில் அறிமுகப்படுத்தினர். அதிகாரப்பூர்வ மார்க்சிய கட்சிகள் மறுத்துக் கொண்டிருந்த சீனாவின் மார்க்சியம் பற்றி இவர்கள் பேசினர். மார்க்சியத்தை இந்திய / தமிழக மரபுகளிலிருந்து வளர்த்தெடுக்க இவர்கள் முனைந்தனர். இவர்களில் இன்னொரு சார்பினர் தமிழக வரலாற்றில் செயல்பட்ட வேளாளர் நாகரிகம் பற்றி பேசினார்கள். வேளாளர் நாகரிகத்திற்கெதிரான தலித் நிலைபாடும் இப்பொழுது தான் முதன்முறையாக இங்கு முன்வைக்கப்பட்டது. இலக்கியம், கலை, படைப்பு ஆகியவற்றில் மார்க்சியத்தின் போதாமையைத் தன்னளவில் தெரிந்து கொண்ட தமிழவன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டார். இலக்கு கலாச்சார இயக்கம் உலகத் தமிழ் மாநாட்டுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் முறையில் சென்னையில் நடத்திய ஒரு கருத்தரங்கை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும். தமிழின் பெயரால், தமிழையும், தமிழ் இயக்கத்தையும் நாசமாக்கும் அழிவுச் சக்திகள் தான் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திக் கொண்டிருந்தன. தமிழின் அழிவுச் சக்திகளான சில பத்திரிகைக்காரர்களுக்கு எதிராக ’படிகள்’ நண்பர்கள் செய்த கிளர்ச்சியையும் இங்கு குறிப்பிட வேண்டும். இவ்வாறு இயக்கம் நடைபெற்று வந்தபோது மார்க்சியம் சார்ந்த புரட்சிக் குழுக்கள் இலக்கின் செயல்பாட்டுக்கு எதிராக நிலையெடுத்தார்கள். தமிழ்க் கலாச்சார சூழலினுள் அரசியல் நிலைப்பாடு மேற்கொள்வதை இலக்கு அமைப்பினுள் செயல்பட்ட சில இலக்கியவாதிகள் விரும்பவில்லை. கட்சி சார்ந்தவர், தம் குழுவை நோக்கி இலக்கை இழுக்க முயன்றனர். இந்த இழுபாட்டுக்கிடையில் ’இலக்கு’ அமைப்பு தகர்ந்தது. ’இலக்கிய வெளிவட்டம்’, ‘படிகள்’, ‘பரிமாணம் ஆகியவற்றிற்கிடையே சிற்றிதழ் இயக்கம் என்பது தமிழின் கலாச்சாரச் சூழலுக்கு நெருக்கமாக வந்தது என்பதைத்தான் இங்கு அழுத்தமாகக் குறிப்பிடவேண்டும். ’பிரக்ஞை’ தன் இறுதிக்காலத்தில் எடுத்த அரசியல் நிலைப்பாட்டின் இன்னொரு அழுத்தமான தொடர்ச்சியாகவும் இதைக் குறிப்பிடலாம். ‘கசடதபற’, ‘ஞானரதம்’, ‘யாத்ரா’, ‘சொல்லிப்பாவை’ ஆகியவை சிந்தனை, கலையுணர்வு என்று பொதுப்படையாகத்தான் பேசினார்கள். தமிழ்ச் சூழலில் முடங்கியிருந்த சிந்தனையையும் கலை உணர்வையும், முடக்கத்திலிருந்து விடுவிக்கும் நோக்கத்தோடு அவர்கள் பேசினர். அநேகமாக இவர்களின் பார்வை, கலை உணர்வில் உச்சம் கொண்டு உன்னதம், உள்ளொளி என்று சென்றது. வெகுமக்கள் ரசனை என்பதிலிருந்து மிக உயர்த்திக் கொண்டதாக, நுட்பமாக்கிக் கொண்டதாக இவர்கள் பார்வை இருந்தது. கலைத் திரைப்படங்கள், இசை, நவீன ஓவியம் ஆகியவற்றில் கலை நுட்பங்கள் கண்டு இவர்கள் வெகுவாக ரசித்தார்கள். தம் தரத்திற் வராதவர்களை மட்டம் தட்டுவதில் இவர்கள் கொண்ட முனைப்பு அருவருக்கத்தக்கதாகத்தான் இருந்தது. இவர்களுக்குள் செயல்பட்டது ஒரு மேட்டிமைத்தனம். இலக்கு சார்ந்தவர்கள் இந்த மேட்டிமைத் தனத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முயன்றார்கள். தமிழக கலாச்சார சூழல் பற்றிப் பேசியவர்கள் வெகுமக்களின் ரசனைக்குள் அவர்களை மலினப்படுத்தும் நோக்கில் செயல்படும் வணிக அரசியல் சக்திகளைப் பற்றி இவர்கள் கோபம் கொண்டார்கள். தமிழகத்தில் அன்று நிலவிய புரட்சிகர இயக்கங்கள் ஆரோக்கியமான மனநிலையில் இவர்களை அணுகியிருக்கவேண்டும். அப்படி அணுகியிருந்தால் புரட்சி இயக்கத்திற்கு இவர்கள் அணுசரணையாக கருதப்பட்டிருப்பர். மார்க்சிய அரசியலில் ஈடுபாடு குறைந்த நிலையில் தான் தமிழவன் அமைப்பியலுக்குள் பயணம் புறப்பட்டார். அவர் பயணத்தின் தேவை குறித்து நாம் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. 6. எண்பதுகளில் தோன்றிய காலச்சுவடு மீண்டும் அறிவியக்கத்தின் பகுதியாயிற்று. தமிழ்க் கலாச்சாரம் பற்றிய தன் ஆழ்ந்த அக்கறையைச் சுந்தரராமசாமி வெளிப்படுத்தினார். தமிழ்ச் சிந்தனையில் தளத்தை இன்னும் ஆழ்ந்த பரிமாணம் நோக்கி நகர்த்துவதற்கு அவர் முயன்றார். ஆனால் அடுத்து தோன்றிய ‘நிகழ்’, ‘நிறப்பிரிகை’, ‘கல்குதிரை’, ‘சிதைவு’ ஆகிய இதழ்களின் மூலம் தமிழகத்தில் அறிவியக்கம் ஆழ்ந்த பரிமாணங்களைப் பெற்றது. அமைப்பியல், பெண்ணியம், தலித்தியம் ஆகிய சிந்தனைப் போக்குகள் விரிந்த அளவில் முன்வைக்கப்படுகின்றன. இலக்கு கலாச்சார இயக்கம் அறிவியக்கம் என்ற அளவில் சிந்தனைத் தளத்தில் மட்டும் தன் இயக்கத்தை முடக்கிக் கொள்ளாமல் கலாச்சாரம் என்ற செயல் தளத்திற்கு சென்றது. ’இலக்கு’ தொடர்ந்து செயல்படவில்லை. ‘நிறப்பிரிகை’, தான் முன்வைக்கும் கலாச்சார அரசியல் தளத்தில் விரிவான விவாதத்தை, ஊக்குவிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் செயல் தளத்திலும் அடியெடுத்து வைக்கிறது. தலித் மக்களின் போராட்டங்களைப் பேட்டி கண்டு வெளியிடுகிறது. பத்மினி என்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிரான செயல்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. சோசலிச தகர்வுக்கான காரணங்களை ஆராயும் முறையில் கட்டுரை வெளியிடுகிறது. தமிழகச் சூழலில் குடும்பம், கற்பு, மதம் ஆகியவற்றுக்கு அழுத்தம் அதிம். இவற்றை உடைக்கும் முறையில் பெண்ணிய நோக்கில் கட்டுரை வெளியிடுகிறது. தமிழகச் சூழலில் குடும்பம், கற்பு, மதம் ஆகியவற்றுக்கு அழுத்தம் அதிகம். இவற்றை உடைக்கும் முறையில் பெண்ணிய நோக்கில் கட்டுரை வெளியிடுகிறது. தமிழ்நாட்டில் தேசிய இனப்பிரச்சினை இன்று முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது. சிந்தனைத் தளத்திலும் செயல் தளத்திலும் தேசிய இனப் பிரச்சினை குறித்து நிறப்பிரிகை ஆராய்கிறது. பெரியாரியம், அம்பேத்காரியம், ஆகியவற்றின் நோக்கில் தமிழக கலாச்சார சிக்கலை ஆராய்கிறது. மாற்றுக் கலாச்சாரம், எதிர்க் கலாச்சாரம் பற்றிப் பேசுகிறது. பெண்ணியம் எதிர்க் கலாச்சாரம் ஆகிய திசைவழிகளில் ‘சிதைவு’ தன் சிந்தனைத்தளத்தை விரிவுபடுத்திக் கொள்கிறது. நிகழைப் பொறுத்தவரை சோசலிசத்தின் தகர்வு குறித்து ஆழ்ந்த அக்கறை கொள்கிறது. தமிழகத்தில் மார்க்சியம் பற்றிப் பேசும் சிலர் மார்க்சிய வளர்ச்சியின் இன்னொரு விரிந்த களமாகிய மாவோ இயக்கத்தினுள் செல்லவில்லை. மார்க்சியத்திற்கு மாவோவின் நன்கொடை மிக வளமானது. மாவோவின் விரிந்த பரிமாணங்களுக்குள் மார்க்சியம் தன்னைச் செழுமைப்படுத்திக் கொள்ள முடியும். இந்த நோக்கில் விரிவான ஆய்வுரைகளை நிகழ் வெளியிடுகிறது. புதிய காலனியச் சூழலில் நவீன அறிவியலும் தொழில் நுட்பமும் மாபெரும் அழிவுச் சக்தியாக செயல்படுவது பற்றி நிகழ் பெரும் அக்கறை கொள்கிறது. அமைப்பியல்வாதிகள் வழியே பெருகிவரும் அறிவுவாதத்திற்கு எதிரான பார்வையை நிகழ் முன்வைக்கிறது. தலித் இயக்கத்தை வளர்க்கும் நோக்கோடு நிகழ் சில முயற்சிகளைச் செய்கிறது. ‘மீட்சி’, ‘கல்குதிரை’ ஆகியவை மேற்குலகின் கவிதைகளையும் சிறுகதைகளையும் தமிழுக்கு பெருமளவில் கொண்டு வருகின்றன. கவிதை மொழிபெயர்ப்பில் மீட்சியின் பங்கு குறிப்பிடத்தக்கது. தென் அமெரிக்க இலக்கியம் இவர்கள் மூலம்தான் பெருமளவு தமிழில் வெளிவருகிறது. மாந்திரிக எதார்த்தவாதம், விநோதக் கற்பனை, (ஃபேன்டசி) என்ற பெயர்களோடு செயல்படும் படைப்பு முறையைத் தமிழுக்கு இவர்கள் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். கனவும், விருட்சமும் தனக்கான கருத்தியலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. எழுத்து காலத்திலிருந்து வெவ்வேறு அழுத்தங்களோடு தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் புதுக்கவிதை ஆக்க முயற்சிகளுக்காக, ’மீட்சியையும்’, ’விருட்சத்தையும்’ நாம் இங்கு குறிப்பிடலாம். தமிழ்ச் சிறுகதையின் ஆளுமையைத் திரட்டிக் கொள்ளும் முயற்சியில் ‘கனவு’ சில சிறப்பிதழ்களை வெளியிடுகிறது. தமிழ் இலக்கிய பாரம்பரியத்தினுள்ளிருந்து அமைப்பியல் அணுகுமுறையைக் கண்டு தொகுக்கும் முயற்சியில் மேலும் சில கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. புதுக்கவிதையின் புத்தாக்கத்தில் பிரம்மராஜன் குறிப்பிடத்தக்கவர். அமைப்பியல் அணுகுமுறையின் மூலம் நம் காலத்து அரசியலைச் செறிவாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்கு நாகார்ச்சுனனின் கட்டுரைகள் சில ஆதாரங்களாகின்றன. பிறழ் வரிசை என்ற முறையில் சிறுகதை ஆக்க முயற்சிகளில் பலர் முனைந்து ஈடுபட்டிருக்கின்றனர். அமைப்பியல் அணுகுமுறையை விரிவாக அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் ‘ஜே ஜே. சில குறிப்புகள்’, ‘நாளை மற்றுமொரு நாளை’, ஞானக்கூத்தன் கவிதைகள், கலாப்ரியா கவிதைகள், சனங்களின் கதை, எக்சிஸ்டென்ஷியலிசமும், ஃபேன்சி பனியனும் ஆகியவைப்பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 7. தமிழில் சிற்றிதழ்களில் ஒரு சுருக்கமான வரலாற்றை இதுவரை பார்த்தோம். இந்த வரலாற்றில் சில கால கட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டோம். முதற்காலம் இலக்கிய இயக்கம், அடுத்த காலத்தை அறிவியக்கம் என்று குறிப்பிடலாம். இந்த அறிவியக்கம் எல்லாக் கால கட்டங்களிலும் உச்ச அளவில் செயல்படுகிறது. இன்னொரு காலகட்டத்தைக் கலாச்சார இயக்கம், என்று குறிப்பிட்டோம். கலாச்சார இயக்கம் செயல்தளத்திற்கு மாறுவது அவசியம். தமிழகக் கலாச்சாரச் சூழலில் செயல் தளத்தின் தேவை அதிகம். அறிவியக்கம் சிந்தனைத் தளத்திற்குள் தான் வட்டமடித்துக் கொண்டிருக்கும். அறிவியக்கத்தினுள் செயல்படும் சிந்தனையாளர்கள், திறனாய்வு, படைப்பு ஆகிய செயல்களில் தங்களை முடக்கிக் கொள்கிறார்கள். இவர்களில் பலரும் மேற்கிலிருந்து கவிதைகள், கதைகள், கட்டுரைகளென நிறைய இறக்குமதி செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே திறனாய்வாளர்களாக செயல்படுகிறார்கள். தமிழின் ஆக்கத்திற்குத் தாம் செயல்படுவதாக இவர்கள் நம்புகிறார்கள். சிற்றிதழ்களின் வரலாற்றை ஒருவாறு தொகுத்துக் கொண்ட நாம், தமிழின் வளர்ச்சிக்குச் சிற்றிதழ்களின் பங்கு என்ன என்ற கேள்வியை இப்பொழுது மீண்டும் கேட்டுக் கொள்வோம். அதாவது தமிழை வளர்க்க இவர்கள் என்ன செய்தார்கள்? தமிழ் வளர்ச்சி என்பது மொழி வளர்ச்சியை மட்டும் குறிப்பதாக நாம் குறைத்துவிட முடியாது. தமிழ் வளர்ச்சி என்பது தமிழ் மக்களின் வளர்ச்சி, தமிழ் வரலாற்றின் வளர்ச்சி, தமிழ்ச் சிந்தனையின் வளர்ச்சி, தமிழ் மக்களின் கலையுணர்வின் வளர்ச்சி, தமிழ்த் திறனாய்வின் வளர்ச்சி எனப் பல பரிமாணங்களில் பொருள்படும். இவ்வாறு பொருள்படுத்துவதன் மூலம் தான் சிற்றிதழ்களில் பங்களிப்புபற்றி நாம் திறனாய்வு செய்ய முடியும். சிற்றிதழ் வளர்த்த தமிழ் II 1. தமிழில் சிற்றிதழ்களின் கால கட்டங்களை மூன்று என வகைப்படுத்தலாம். மணிக்கொடி தொடங்கி எழுத்து வரையிலான காலம், முதற்காலம் மணிக்கொடி, சூறாவளி, கலா மோகினி, கிராம ஊழியன், தேனீ, சரஸ்வதி, சாந்தி ஆகியவை அன்று சிற்றிதழ்களெனச் சொல்லப்படவில்லை. எனினும் இன்றைய நோக்கில் சில வேறுபாடுகள் இருந்த போதிலும் அவற்றை சிற்றிதழ்கள் எனக் கொள்ளலாம். தமிழின் மறுமலர்ச்சியை நோக்கமாக இவர்கள் கொண்டிருந்தனர். மேற்கை இவர்கள் நகல் செய்யவில்லை. மேற்கை உள்வாங்கிக்கொண்டு தமிழில் நவீன சிறுகதையாக்கத்தைச் செய்தார்கள். கவிதையிலும் திறனாய்விலும் தமிழை இவர்கள் புதுமைப்படுத்த முயற்சி செய்தார்கள். எழுத்து தொடங்கி, 'கசடதபற' 'பிரக்ஞை ' அதன்பிறகு ’இலக்கிய வெளிவட்டம்' 'பரிமாணம்', 'படிகள்’ ஆகியவற்றை உள்ளடக்கிய காலத்தை இரண்டாவது கால கட்டம் எனலாம். முதற்காலத்தில் இலக்கியவியக்கம் இப்பொழுது தொடர்ந்தது எனினும் இலக்கியத்தோடு திரைப்படம், நாடகம், நவீன ஓவியம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய முறையில் தம் பார்வையை இவர்கள் விரித்துக் கொண்டார்கள். கலை உணர்வுக்கு முதன்மை தந்தார்கள். இவையனைத்தும் செயல்படுவதற்கான கலாச்சார சூழல் பற்றி இவர்களில் ஒரு பகுதியினர் ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தினார்கள். கலாச்சாரத்தின் அரசியல் பற்றி இவர்கள் கொண்ட பார்வை குறிப்பிடத்தக்கது. ஒருவகையில் இக்காலத்தைக் கலாச்சார இயக்ககாலம் என்று சொல்லலாம். அடுத்த காலக் கட்டம் எண்பதுகளில் காலச்சுவடு நிகழ், நிறப்பிரிகை, கல்குதிரை. கனவு, விருட்சம், மேலும் ஆகியவற்றை உள்ளடக்கிய காலம், அண்மைக்காலம் ஆகும். தமிழில் படைப்புத் துறையிலும் திறனாய்வுத் துறையிலும் தீவிரமான பார்வைகள் ஆக்கங்கள் எழுச்சி பெறுகிற காலம் என்று இதைச் சொல்லலாம். 2. நமக்கு நெருக்கமாக உள்ளதும் தமிழில் தீவிரமான பார்வைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுமான இந்த அண்மைக்காலத்து சிற்றிதழ்களின் சில கூறுகளைத்தான் இந்தக் கட்டுரையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன். சிற்றிதழ் வளர்த்த தமிழ் என்று சொல்லும்பொழுது இந்தக் குறிப்பிட்ட கால அளவில் மொழி என்ற அளவில் தமிழில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் தான் முதன்மை பெறுவதற்கு உரியது என்றாலும் தமிழின் வளர்ச்சியில் இந்தச் சிற்றிதழ்கள் ஆற்றிய பங்கு என்ற முறையில் கட்டுரைத் தலைப்பிற்குப் பொருள் தருவது பொருத்தம் எனவும் கருதுகிறேன். இம்முறையில் மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பனவற்றோடு தமிழ்ச் சிந்தனை, தமிழில் சிந்தனை, தமிழ்ப் படைப்புகளில் புதியதன் ஆக்கம், தமிழிலக்கியம், சமூகம் ஆகிய ஆய்வில் புதிய அணுகுமுறைகள். இப்படியெல்லாம் இக்கட்டுரையில் சிலவற்றைக் குறிப்பிட இயலும். இக்கால கட்டத்தில் பலவகையான சிற்றிதழ்களிலும் கவிதைகள் சிறுகதைகள் என நிறைய இடம் பெற்றுள்ளன. இப்படைப்புகளைத் தொகுத்து ஆய்வது ஒரு தனி முயற்சியாக அமைவது பொருத்தமாகும். என் கட்டுரையைப் பொறுத்தவரை தமிழிலக்கியப் பார்வையிலும், சமூகப் பார்வையிலும் இச்சிற்றிதழ்கள் மூலம் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி என்பதைத்தான் முதன்மைப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். என் கட்டுரைக்கான வரையறைகள் என இவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். 3. தமிழ் வளர்ச்சி எனச் சிந்திக்கும் பொழுது இக்களத்தில் ஏற்கனவே ஈடுபாடு கொண்டுள்ள வேறு சில இயக்கங்களின் பார்வைகள் பற்றியும் இந்தப் பார்வைகளிலிருந்து இந்தச் சிற்றிதழ்காரர்கள் எவ்வாறு முற்றாக வேறுபடுகிறார்கள் என்பதையும் இங்கு குறிப்பிடலாம் தமிழின் வளர்ச்சி பற்றி கல்வியியலாளர்களின் சாதனைகள் எதுவும் இக்கால அளவில் இல்லை. தமிழின் ஆக்கம் பற்றி சில பத்தாண்டுகள் அதிக அளவில் பேசியவர் தி.மு.க. இயக்கத்தவர். அரசியல் களத்தில் அவர்களுக்கு இன்றுள்ள வாய்ப்புகள் என்பவை ஒருபுறம் இருக்க, தமிழ்வளர்ச்சியைப் பொறுத்தவரை இவர்களின் ஆக்கக் கூறுகள் அனைத்தும் இன்று அமுங்கிப் போய்விட்டன. வெற்றுத் தமிழ் உணர்வு ஒரு காலத்தில் அலங்காரமாக இருந்து இன்று அசிங்கமாக மாறியிருக்கிறது. மேடைத் தோரணங்களுக்கு இன்று மரியாதை இல்லை. இந்த எதிர்ப்பு என்பது இன்று உண்மையாக நடத்தப்படுவதில்லை. தி.க. இயக்கத்தவரைப் பொறுத்தவரை, கடவுள் இல்லை, மதம் மூடத்தனம் என்ற பேச்சுகளுக்கு இன்னும் சில பத்தாண்டுகளுக்கேனும் தமிழகச் சூழலில் மரியாதை இருக்கக்கூடும். மதவாத அரசியல் சக்திகள் முற்பட்டு வருகிற இன்றைய சூழலில் தனக்குள் வளர்ச்சி எதுவும் இல்லாத இவர்களின் பகுத்தறிவுப் பார்வையைத் தமிழகம் மறுத்து ஒதுக்கிவிடாது என்பதில் இவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களை வெகுவாக நாசமாக்கிவருகிற பொருளியல் சக்திகள் பற்றி இவர்களுக்குப் பார்வை என்பது அறவே இல்லை. இந்த இயக்கங்கள் பற்றி சிற்றிதழ்காரர்கள் தம் கவனத்தை இப்பொழுது குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்று முறையில் இவர்கள் தந்த ஆக்கங்கள் கூட இன்று மதிக்கப்படுவதில்லை. முற்போக்குவாதிகளைப் பொறுத்தவரை இன்று இவர்களது படைப்பு முயற்சிகள், பெருமளவு குறைந்துவிட்டன. ஓர் அரிய விதிவிலக்கு பொன்னீலனின், ‘புதிய தரிசனங்கள்’. அங்கீகரிக்கப்பட்ட பொது உடைமைக் கட்சிகளைப் பொறுத்தவரை, சோவியத் யூனியன் தகர்வைத் தொடர்ந்து தமிழ்ச் சமூகத்தில் ஆக்கம் குறைந்து வருகிறார்கள். சோசலிசத் தகர்வுக்கான காரணங்கள் என இவர்கள் குறிப்பாக எதையும் முன் வைக்கவில்லை. புரட்சிக் குழுக்களைப் பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் முன்வைத்த பார்வைதான் இன்று உண்மையாகி இருக்கிறது என்பதைத் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். நிகழ், நிறப்பிரிகை, ஆகிய சிற்றிதழ்கள் சோசலிசத் தகர்வு பற்றி, மார்க்சியத்தின் உள்ளுறை ஆற்றல்கள் பற்றி ஆழ்ந்த அக்கறையோடு பேசுகின்றன. மார்க்சியம் தன்னை ஆழத் தோண்டி புதிய பரிமாணங்களின் தன்னை வளர்த்துக் கொள்வது பற்றி இவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். கறாரான விஞ்ஞானப் பார்வை என்ற முறையில் நிறப்பிரிகை விரிவாகப் பேசுகிறது. கறாரான விஞ்ஞானப் பார்வை என்பது அறிவுவாதம் தான் என்கிறது நிகழ். இத்தகைய வேறுபாடுகள் ஆரோக்கியமான விவாதத்திற்குரியவை. 4. இக்காலத்துப் படைப்பு முயற்சிகள் பற்றி இங்கு சுருக்கமாகத் தொகுத்து உரைக்கலாம். தமிழில் நவீனத்துவப் படைப்புக்கள் என்று இப்பொழுது பேசுகிறார்கள். தமிழவனின் 'ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்', 'பறை', 'கர்நாடக முரசு' ஆகிய தொகுப்புக்களில் இடம்பெற்ற சிறுகதைகள், பிரேதாவின் புதிய நாவல், சில்வியாவின் சிறுகதைத் தொகுப்பு, சித்தார்த்தனின் கனவுக்காலம், பிரம்மராஜனின் கவிதைகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. கோணங்கியின் சிறுகதைகளையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். இக்கால அளவில் நான் - லீனியர் மற்றும் ஃபான்டசி சார்ந்த படைப்புகள் என மேற்கிலிருந்து தமிழில் நிறையவே மொழிபெயர்ப்புகள் வெளிவருகின்றன. மீட்சி, கல்குதிரை ஆகியவை இப்போக்கில் முனைப்பு காட்டுகின்றன. பெண்ணிய நோக்கில் குறிப்பிடத்தக்க படைப்புகள் இல்லை. தலித் இலக்கியம் எனச் சொல்லத்தகுந்த சில படைப்புகள் இன்று வெளிவந்திருக்கின்றன. தமிழின் ஆக்கத்திற்கு இப்படைப்புகளின் பங்கு பற்றி விரிவான விவாதத்திற்கு இடமிருக்கிறது. (லீனியர் என்பதை நேர் வரிசை அல்லது நேர்முறை என்றும் நான் - லீனியர் என்பதை பிறழ்வரிசை அல்லது பிறழ் முறை என்றும், அதைப்போலவே ஃபேன்டசி என்பவை வினோதக் கற்பனை என்றும் மொழியாக்கம் செய்வது தற்காலிகமாகவேனும் இக்கட்டுரை அளவுக்குப் பொருந்தும் எனக் கருதுகிறேன். இக்கட்டுரையில் இனி இவ்வகை சொற்களையே பயன்படுத்துகிறேன்) இக்கால அளவில் வெளியான பழமலையின் கவிதைகளையும், விக்கிரமாதித்தியன் கவிதைகளையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லலாம். புதுக்கவிதை தமிழில் ஒரு மரபாக நிலைத்துவிட்ட நிலையில் இவர்கள் இந்த மரபைப் புதுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். புதுமை ஆக்கத்தில் இவர்களை அடுத்து மனுஷ்யபுத்திரன், பா. வெங்கடேசன், எஸ்.எல். நரசிம்மன் போன்று மேலும் சிலரை நாம் குறிப்பிடலாம். இதே அளவில் சிறுகதைத் துறையில் ஜெயமோகனைக் குறிப்பிட வேண்டும் நவீனத்துவம் என்று இனம் காண்பதற்கான அம்சங்கள் குறைவு என்றாலும் பாவண்ணன், சுப்ரபாரதிமணியன் போன்றவர்களையும் குறிப்பிடுவது பொருத்தம். இந்த அம்சங்களோடு கூடிய சிறுகதைகள் என்று தமிழில் நிறையவே வந்து கொண்டிருக்கின்றன. 5. இன்று முற்றிலும் புதியதென அறிவித்துக் கொண்டுள்ள நவினத்துவப் போக்கை ஆய்வதற்கு முன்பு, தமிழ்ப்படைப்புலகிற்குள் மணிக்கொடி காலம் முதலே இயல்பாக வந்து சேர்ந்திருக்கிற நவீனத்துவம் பற்றியும் இங்கு சுருக்கமாகக் குறிப்பிட வேண்டும். புதுமைப்பித்தன் கதைகளில் நவீனத்துவத்தை நாம் கண்டு கொள்ளமுடியும். மெளனியின் கதைகளில் பெரும்பாலானவைகள் நவினத்துவ சார்பானவை, தமிழுக்கு வந்து சேர்ந்த புதுக் கவிதையில் படிமம் தொனிப்பொருள், குறியீடு. மிகையதார்த்தம், அந்நியமாதல் ஆகியவை இடம்பெற்றன. இவை நவீனத்துவத்தின் ஆக்கக் கூறுகள் என்பதில் ஐயமில்லை . இந்தக் கூறுகளைப் பிரமிள், ஞானக்கூத்தன், ஆத்மாநாம் முதலிய கவிஞர்களில் நாம் அழுத்தமாகவே காணமுடியும். நகுலனின் கவிதைகளும், நாவல்களும் இங்கு பேசப்படும் நவீனத்துவம் என்ற படைப்பு முறைக்குள் தான் இயல்பாகப் பொருந்தும். இலக்கியத் திறனாய்விலும், நவீனத்துவத்தின் கூறுகள் முன்பே அமைந்திருக்கின்றன. ஜே.ஜே. சில குறிப்புகள், 'நாளை மற்றுமொரு நாளே' ஆகிய நாவல்களை முற்றான நவீனத்துவ நாவல்கள் என்று சொல்வதைக் காட்டிலும் யதார்த்தவாதத்தின் நீட்சி என்றே கொள்ள முடியும். நவீனத்துவ அம்சங்கள் இந்த நாவல்களில் சற்று கூடுதலாகவே இருக்கின்றன. இந்த அர்த்தத்தில் எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் நாவலையும் இதே வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். சற்றே நம் பார்வையை விரித்துப் பார்க்க முடியுமானால் அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் 'ஒற்றன்’, சா.கந்தசாமியின் 'அவன் ஆனது’ ஆகிய நாவல்களையும் இதே வரிசையில் வைத்துச் சொல்ல முடியும். இத்தகைய பார்வைக்கு அழுத்தம் கொடுத்தால், நவீனத்துவ போக்கை உட்கொண்டதென மேலும் பல படைப்புகளை நாம் காணமுடியும் இப்படி சொல்லும்போது தமிழவனின் ''ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்" முதற்கொண்டு இக்கட்டுரையில் ஒரு பகுதியில் குறிப்பிட்ட படைப்புகளை நிச்சயம் பண்பளவிலான பாய்ச்சலைக் கொண்டவையே என்று இங்கு குறிப்பிடலாம். முதற்காலத்தை நவினத்துவம் என்று கொண்டால் அடுத்த காலத்தை பின் நவீனத்துவம் என்று சொல்வது பொருத்தம்தானா என்ற கேள்வியோடு இங்கு நிறுத்திக் கொள்கிறேன். 6. பிறழ்வகை என்றும் வினோதக் கற்பனை என்றும் தமிழில் இன்று சொல்லப்படுகிற படைப்புகள் தமிழின் ஆக்கத்திற்குரியவை என்பதில் ஐயமில்லை. இவ்வகை ஆக்கம் குறித்து சிந்திக்கும் பொழுது தமிழ் இலக்கியப் பாரம்பரியம் முழுவதையும் இந்த அம்சங்களின் மூலம் ஒரு மீள்பார்வை பார்த்துக் கொள்ள இது வாய்ப்பாகிறது. இப்படி பார்ப்பதற்கான தேவை என்ன என்ற கேள்விக்கு இங்கு பதில் சொல்லவேண்டும். பிறழ்வகை என்றும் வினோதக் கற்பனை என்றும் பெயர் சொல்லப்படுகின்ற இந்தக் கூறுகள் காலங்காலமாகத் தொடரும் இலக்கிய ஆக்கத்தின் சில முக்கிய கூறுகளாகத்தான் இருக்கின்றன. புதியதென தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற இந்தப் பார்வையின் மூலம் பழைய இலக்கியத்தினுள்ளும் புதிய அம்சங்களைக் காணலாம் எனத் தெரிகிறது. இராமகாதையில் வாலி வதை என்பது ராமனின் ஆளுமையை தலைகீழாகப் புரட்டக் கூடியது. ஒரு பொற்கொல்லன் பாண்டியனின் ஆட்சியைத் தலைகீழாகப் புரட்டி விடுகிறான். நந்தனை என்னதான் சேக்கிழார் குளிப்பாட்டி கோவிலுக்குள் அனுமதித்தாலும் நாயன்மார் வரிசையிலிருந்து நந்தன் தன்னை உதறிக் கொள்ளத்தான் செய்கிறான். சங்க இலக்கியம் உயர்ந்தோர் இலக்கியம் என்று புலவர்கள் செய்த வரையறையைக் கலித்தொகை கேள்விக்கு உள்ளாக்கத்தான் செய்தது. இதிலிருந்து இலக்கிய ஆக்கம் பற்றி நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்? இலக்கியம் தனக்குள் முற்றான ஒருமையை அல்லது மையத்தைக் கொண்டதாக இல்லை. ஒருமை என்று இழுத்துக் கட்டினாலும் ஒருமை சிதையத்தான் செய்கிறது. மையத்திலிருந்து விலகிய அம்சங்கள் இலக்கியத்தினுள் இடம் பெறுகின்றன. புலவர் தனக்கென ஒரு கருத்தியலைக் கொண்டிருந்த போதிலும் எந்தக் கருத்தியலினுள்ளும் மாற்றுக் கருத்தியல் எப்படியோ உள் நுழைந்து கலவரம் செய்து கொண்டுதான் இருக்கிறது. பழைய இலக்கியத்தை இன்று இம்முறையில் வாசித்து அதன் உள்ளடக்கத்தைப் பாட்டி, அந்த உள்ளடக்கத்திலிருந்து நமக்கான பொருளை இன்று பெறுகிறோம். தமிழின் பாரம்பரியத்தினுள் ஒரு முக்கிய கூறு. உரை சொல்லும் முறை. இலக்கியத்தை ஒரு வாசகன் தன் காலத்துக்குரியதாக வாசிக்கும் முறைதான் இந்த உரை சொல்லும் முறை. (Hermaneutics) இதைத் தமிழவன் இன்று சிறப்பாகக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியத்தினுள்ளும் அமைப்பியல் அணுகு முறையைக் கண்டெடுத்து வளர்க்க முடியும் என்றும் தமிழவன் சொல்கிறார். வினோதக் கற்பனை என்ற போக்கையும் பழந்தமிழ் இலக்கியத்தினுள் நாம் காணலாம். கலிங்கத்துப் பரணி இதற்கு முக்கியமான சான்று, தமிழ் மரபினுள்ளேயே இத்தகைய அம்சங்கள் உண்டு என்று சொல்லும் பொழுது மீண்டும் புலமைவாதத்தை உயிர்ப்பிக்கும் ஆய்வு என இதைச் சொல்ல முடியுமென நான் கருதவில்லை. பழைய இலக்கியத்தை நம் காலத்துக்கேற்ற முறையில் நாம் வாசிக்கத்தான் வேண்டும். நம் திறனாய்வாளர்களைப் பொறுத்தவரை, பழந்தமிழ் பயிற்சியில்லாதவர்கள் என்று சொன்னால் அவர்கள் மறுக்க மாட்டார்கள் என நம்புகிறேன். மேலும் ஒன்றை இங்கு சொல்லலாம். மேற்கிலிருந்து வந்த புதிய வெளிச்சம் சிலரை மயக்கத்திற்கும் திகைப்புக்கும் உள்ளாக்கியிருக்கிறது. மேற்குலகம் தான் அறிவுலகம். தமிழின் பழங்காலம் இருண்ட காலம் வெங்கட் சாமிநாதன் கூறியது போல இது பாலை நிலம் என்று இவர்களும்தான் கருதுகிறார்கள். மேற்குலகத்திலிருந்து பெற்ற அறிவை இவர்கள் தமக்குள் செரித்துக் கொள்ளவில்லை. தம் மரபிலிருக்கும் வேர்களில் புதிய விளைச்சலை இவர்கள் செய்து கொள்வதில்லை. அன்றியும் தான் கண்டுபிடித்த புதிய பார்வை என்பது இவர்களுக்குள் தன் முனைப்பாக மாறியிருக்கிறது. இந்தத் தன் முனைப்பு, இவர்கள் பார்வையை மறைப்பதால் வெளியில் என்ன நடைபெறுகிறது என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. இவர்களில் இரண்டொருவரேனும் மரபின் மீது புதிய பார்வையைச் செலுத்துகிறார்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது. 7. யதார்த்தவாதம் செத்துவிட்டது என்று இவர்கள் உரக்கப் பேசுகிறார்கள். இப்படிப் பேசும் பொழுது மார்க்சியமும் கேள்விக்குள்ளாகிறது. யதார்த்தவாதம் என்பது பாட்டாளி வர்க்கம் என்ற கருத்தாக்கத்தை ஆதாரமாகக் கொண்டது. இந்த அடிப்படையிலிருந்துதான் யதார்த்தவாதத்தின் பிற அம்சங்களை நாம் அடுக்க முடியும். மார்க்சியம் என்பது இவ்வளவு தான் என்றால் உழவரை அடிப்படையாக வைத்து புரட்சி செய்து தன் நாட்டையும் காலத்தையும் புதியதாக உருமாற்றிய மாவோவை மார்க்சியர் என்று சொல்ல முடியாது. மாவோ மார்க்சியர்தான் என்று சொல்வது சூரியன் தருவது வெளிச்சம்தான் என்பது போன்ற நகைப்புக்கிடமான ஒரு வினோதக் கூற்று உற்பத்தி உறவுகளுக்கு அழுத்தம் கொடுத்து மார்க்சியத்தைப் பெருமளவு புதுப்பித்தவர் மாவோ. இந்தியச் சூழலுக்கு இத்தகைய மார்க்சியம் தான் ஆற்றல் தரும். குடும்பம், தனி உடைமை, அரசு அதிகாரம் ஆகிய எல்லைகளுக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிற யதார்த்தவாதத்தை இன்று சிந்தனையளவிலேனும் உடைக்கத்தான் வேண்டும். முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியம்தான், யதார்த்தவாதம் என்று இறுகிப் போன படைப்பு முறையை ஒப்புக் கொள்ளும். குடும்பம், தனி உடைமை, அரசு அதிகாரம் ஆகியவற்றை முற்றாக தகர்க்க இயலாத சூழல்தான் இன்று வலுப்பெற்று வருகிறது. நவகாலனியம் என்ற புதிய போக்கு தன் போக்கில் இவர்களை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. முதலாளியத்திற்குள்ளேயே செயல்படுகிற அராஜகம் என்ற போக்கு நவகாலனிய சூழலில் உச்ச நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. பின் - நவீனத்துவம் இந்த சூழலைத்தான் தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருக்கிறதா என்ற ஐயம் எழுகிறது. மனிதன் இன்று தனக்குள் பல் துண்டுகளாகச் சிதைந்துவிட்டான். தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான ஒரு 'நான்' என்ற ஆதாரத்துண்டு இன்று இல்லை. இப்படி விவாதிப்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும். வரலாற்றில் எத்தனையோ வகைப்படைப்பு முறைகள் செயல்பட்டன. யதார்த்த வாதத்தோடு மார்க்சியம் தன்னை இறுக்கிக் கொள்ள வேண்டியதில்லை. இன்றைய பொருளியல் சூழலை மாற்றியாக வேண்டிய நிலையில் செயல்படுபவர்கள் யதார்த்த வாதத்தை கைவிட்டு விட முடியாது. யதார்த்த வாதத்துக்குள் அதிகாரம் குவியம், மையம் திரளும் என்பதை மறுப்பதற்கில்லை. இவை இறுக்கம் கொள்கிறபோது உடைக்கத்தான் வேண்டும் இன்று பேசப்படும் நவீனத்துவம் ஆக்க ரீதியாக இந்தச் செயலைத்தான் தன் முனைப்போடு செய்கிறது. மார்க்சியத்தின் இந்த அதிகாரம் இறுக்கம் இப்படி எதிர்நிலையில் தன் முனைப்பைத் தூண்டியிருப்பதாகவும் கருதலாம். நட்பு முரண்பாடு , பகை முரண்பாடாக மாறியிருக்கிற சூழல் இது. நாகார்ச்சுனன், தமிழவன் ஆகியவர்களைப் பற்றித் திறனாய்வு செய்யும்பொழுது, இவர்கள் தமக்குள்ளிருந்து யதார்த்தவார்த்தை முற்றாக வெளியேற்றிக் கொள்ளவில்லை. யதார்த்தவாதத்தின் தளத்தில்தான் இவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்ற முறையில் நோயால் இருதயராஜ் வைத்துள்ள திறனாய்வு இங்கு நம் கவனத்துக்கு உரியது. தனக்குள் மனிதன் சிதைந்து கொண்டிருக்கிறான் என்பது நாளுக்கு நாள் உண்மை ஆகிறது. முன்னைய முறையில் இன்று நாம் இயங்க முடிவதில்லை. ஒழுங்கைக் கைக்கொள்ள முடியவில்லை. இன்று நமக்குள் வரிசைகளும் அடுக்குகளும் தகர்ந்து முறைமாறி பிறழ்ந்து கொண்டிருக்கின்றன. படைப்பு என ஒன்றை மையத்தில் ஆணி அடித்து இழுத்துக் கட்ட வேண்டியதில்லை. அரசும், மதமும் பேசும் ஒழுங்கை இன்று நாம் மதிக்க வேண்டியதில்லை. உடைமைக்காரர் பேசும் ஒழுங்கு நமக்கு ஆபத்தானதுதான். உன்னதம் என்று பேசி ஒருவர் தன்னை இருத்திக் கொள்ள முடியாது. உன்னதத்தை அகழ்ந்தெடுத்து அடியில் பார்த்தால் அசிங்கங்கள் மனிதனை ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதனுக்குள் தேடிப் பார்த்தால் அவனுக்குள் எல்லாக் காலங்களும் முறைபிறழ்ந்து கிடக்கின்றன. செயல்படும்போது மனிதன் ஏதாவது ஒன்றில் தன்னைத் திரட்டிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இந்த முரண் நிலைக்குள்தான் நாம் இன்று இருக்கிறோம். இறந்தவனுக்கு மலர் மாலைகள் அணிவித்து, பறைகள் கொட்டி அலங்கார வண்டியில் எடுத்துச் செல்வது ஒரு வினோதம் தமிழகச் சூழலில் எம்.ஜி.ஆர். என்பது ஒரு பெரிய வினோதம். நம் திருமண முறைகள், சடங்குகள் வினோதமானவை. காதல் என்பது கூட ஒரு வினோதம். அதாவது யதார்த்தத்திற்குள் வாழ்க்கைச் சூழலுக்குள் இயல்பாக எழும் வினோதங்கள் இவை. இவை வினோதக் கற்பனைகள் (magical realism) குழந்தை சிறு வீடு கட்டுவது ஒரு வினோதக் கற்பனை. விளையாட்டுகள், கேளிக்கைகள், வினோதக் கற்பனைகள். கனவு ஒரு வினோதக் கற்பனை. இந்த வினோதக் கற்பனைகள் மூலம் விளையாட்டுகள் மூலம் நம்மை நாமே விடுவித்து கொள்கிறோம். இந்தக் கொண்டாட்டங்கள் மூலம் நமக்குள் சுதந்திர வெளியை விரிவுபடுத்திக் கொள்கிறோம். கலையின் மூலம் நாம் பெறுவது இந்த சுதந்திரம் மேற்கிலிருந்தும், தென் அமெரிக்க நாடுகளிலிருந்தும் நமக்கு வந்து சேரும் மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தை, நம்மை இளகி கிளறி புதுப்பித்துக் கொள்ள முடியும் மொழி பெயர்ப்புகளை நிறைய செய்து தள்ளி அதற்குக் காரணம் கேட்கும் பொழுது, காரணம் காண்பது வாசகன் பொறுப்பு என்று சொல்லி தப்பித்துக் கொள்ளமுடியாது. கவிதைக் களத்தில் வந்து குவியும் மொழிபெயர்ப்புகள். சில சமயம் நம் படைப்பு திறனை அழித்துவிடவும் கூடும். 8. தமிழகத்தில் கசடதபற காலத்திலிருந்தே நவீன ஓவியங்கள் இலக்கியவாதிகளுக்கு அறிமுகமாகியுள்ளன. நவீன நாடகம் இன்று தமிழகச் சூழலில் பரவலாக எழுச்சி பெற்று நிலைத்திருக்கிறது. நவீனத்துவம் என்ற போக்கு இவ்விரு களங்களிலும் தம் வெற்றியை நிலைநாட்டிக் கொள்கின்றன என்று சொல்லலாம். நவீனத்துவம் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள சில நவீன ஓவியங்களையோ சில நவீன நாடகங்களையோ பார்த்து உள்வாங்கிக் கொள்வதன் மூலம் திடீரென நிகழும் ஒரு தரிசனம் போல நவீனத்துவம் பற்றிய புரிதலைப் பெற்றுக் கொள்ளமுடியும். இங்கு அக்கினி ஏவுகணைப்பற்றியும், போபால் வெடிப்பு பற்றியும் இதே தரத்தில் நாம் நாகார்ச்சுனனின் கட்டுரையையும் நாம் மதிப்பிட்டுச் சொல்லலாம். கலாச்சாரத்தின் அரசியலை நாம் உள்வாங்கிக் கொள்ளும் முறையில் நிறப்பிரிகையின் கட்டுரைகளும் இங்கு குறிப்பிடத்தக்கவை. பெண்ணியம் பற்றி கட்டுரைகளும் இங்கு குறிப்பிடத்தக்கவை. பெண்ணியம் ஓர் இயக்கம் என்ற முறையில் அதன் விரிவான அம்சங்களோடு தமிழகச் சூழலில் இன்றும் செயல்படவில்லை. பெண்ணியப் பார்வையிலிருந்து எழுதப்பட்டு வெளியாகியுள்ள சில இலக்கிய விமரிசனங்கள் தார்த்தவாத தளத்திலிருந்து விலகியதாக இல்லை. பெண்ணியப் பார்வையில் மதம், வரலாறு, விஞ்ஞானம், மொழி முதலியனவும் சீரிய திறனாய்வுக்கு உட்படுத்த முடியும். பெண்ணியம் என்பது இறுதியில் பெண்ணுக்குரிய பார்வையும் அல்ல. மனிதர்களுக்கிடையிலான உறவை, இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையிலான உறவை, முற்றிலும் புதிய அடிப்படையில் மாற்றி அமைக்கும் உள்ளாற்றலைக் கொண்டது. சமூக தளத்தில் பெண்களின் உரிமைக்குப் போராட்டங்கள் மிக முக்கியமானவை. கல்வி, வேலைவாய்ப்பு, பெரிய பதவிகள், ஆகியவற்றில் இடம் பெறுவதன் மூலமும் ஆணாதிக்க சமூகத்தின் பகுதியாகப் பெண்கள் தம்மை மாற்றிக் கொள்கிற விபத்து இன்று நேர்ந்திருக்கிறது. காவல் துறையில் சேரும் பெண்கள் இப்படி ஆணாதிக்கத்தைத் தான் உள்வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு பேருந்து ஓட்டுநராக ஒரு பெண் இடம்பெறுவது கொண்டாடத்தக்க ஒரு அரிய நிகழ்ச்சிதான். ஆணுக்கு நிகர் பெண் என்பதை நிரூபணப்படுத்தும் செயல்முறை இது. இந்தத் தொடக்கம் வரவேற்கத்தக்கது தான். சிற்றிதழ்களின் மூலம் தலித்தியப்பார்வை இப்பொழுது அதிக அளவு முன் வைக்கப்படுகிறது. பெண்ணியம் போலவே தலித்தியமும் முதன்மையான இயக்கச் செயற்பாடு. இதற்கு அணுசரணையான முறையில் நடைபெறுவதுதான் கருத்தியல் தளத்திலான விவாதங்கள். நம் சமூகத்தில் பார்ப்பனியம் என்பது உள் உறைந்து கிடக்கிறது, செயல்படுகிறது. சாதியம் என்பதைப் பார்ப்பனீயம் என்று சிலர் அர்த்தப்படுத்துகிறார்கள். எல்லாவற்றிலுள்ளும் ஒவ்வொன்றின் தனித்தன்மையை அழித்து சாரம் காண்பது அல்லது ஒருமை காண்பது பார்ப்பனியம் என்றும் கருதப்படுகிறது. நான் மேல், நிகழ் என்பது பார்ப்பனீயம் நான் புனிதன் நீ அசுத்தமானவன் என்பது பார்ப்பனீயம். பார்ப்பனீயம் பற்றிய புரிதல் இன்னும் ஆழப்படவேண்டும். தலித்தியம் என்பது இறுதியில் மனிதர்கள் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான உறுதியான போர்முறை. எந்த ஒரு புதிய கோட்பாடும் தொடக்கத்தில் தன்னை முழுமையானதாகத்தான் காணும் எந்த ஒரு தனிக் கருத்தியலும் சமூகத்தில் அனைத்து அம்சங்களையும் உட்கொண்டதாக இருப்பதில்லை. தலித்தியமும் இத்தகையதுதான். எனினும் தமிழ் நிலத்தில் தலித்தியத்தின் பரவல், தமக்குள் அழுக்குகளைக் சேர்த்துக்கொண்ட மனிதர்களின் விடுதலைக்குப் பயன்படும். ஏற்கனவே கூறியபடி பெண்ணியம், தலித்தியம் மற்றும் அமைப்பியல் பார்வைகள் இன்றைய சிற்றிதழ் மூலமாகத்தான் வெளிப்படுகின்றன. 9. இறுதியாக மொழி என்ற வகையில் தமிழின் ஆக்கத்திற்கு சிற்றிதழ்காரர்கள் செய்தது என்ன என்று கேட்டுக் கொள்ளலாம். மொழியைத் திறம்படவும் நுட்பமாகவும் கையாளப் பழகுவதன் மூலம் தமிழ் மொழியின் ஆற்றலை இவர்கள் மேம்படுத்த முடியும். தமிழில் நுட்பங்கள் கூடும்பொழுதுதான் பார்வையில் தெளிவு பரவலாகும். கூடியவரை அலங்காரமான நடையை இவர்கள் தவிர்த்துக் கொள்கிறார்கள். தமிழுக்கு முற்றான புதிய கருத்துக்களைத் தமிழுக்குள் கொண்டு வரும் போக்கில், புதிய கலைச்சொற்களை உருவாக்கித் தருகிறார்கள். சில சமயங்களில் அருவெறுப்பு ஊட்டத்தக்க முறையில் ஆங்கிலச் சொற்களை இங்கு கொண்டு வந்து கொட்டுகிறார்கள். தனித்தமிழ் முயற்சியைச் சிலர் எள்ளி நகையாடுகிறார்கள். தமிழின் ஆற்றலை மேம்படுத்துவதற்குத் தனித்தமிழ் முயற்சி அல்லது தமிழாக்க முயற்சி பெரிதும் பயன்படும். தமிழில் இவர்கள் பயன்படுத்தும் கலைச்சொற்கள் சில சமயம் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன. ஓரிடத்தில் அமர்ந்து கலைச் சொற்களில் ஒரு சீர்மையை இவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இயலுமானால் அமைப்பியல், பெண்ணியம் ஆகியவற்றை விளக்கும் முறையில் ஒரு கலைச்சொல் அகர வரிசையை இவர்கள் தயாரிக்கலாம். நிறைய மொழியாக்கங்களைக் கொண்டு தருகிற போதே, தொடர்ந்து செய்ய வேண்டிய முயற்சி இது. தமிழை நம்பி இன்னும் தமிழ்ச் சூழலில் உள்ள முடக்கங்களிலிருந்து மக்களை விடுவிப்பது என்ற அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தச் சிற்றிதழ் சார்ந்த இளைஞர்கள் நம் வணக்கத்துக்குரியவர்கள், வாழ்த்துதலுக்குரியவர்கள். “ரஷ்யப் புரட்சி: இலக்கிய சாட்சியம்” - நூல் ஆய்வு 1. எஸ்.வி. ஆரின் அரசியல் வாழ்க்கையோடு மிக நெருக்கமான உறவுடையது இந்த நூல். கட்சிக்குள் அவர் ஸ்டாலினிஸ்டாகவும் இருந்து சில அனுபவங்களைப் பெற்ற காலத்திலேயே, அவரைவிட பெரிய ஸ்டாலினிஸ்டுகளால் பாதிக்கப்பட்டு, அனுபவங்களைச் செழுமையான முறையில் கற்றார். இந்தக் கல்வி என்பது அவரது இளமைக்கால கிராமம், குடும்பம், அவர் எப்பொழுதும் போற்றும் மனித உறவு, அவர் கற்ற இலக்கியம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டது. 2. எஸ்.வி.ஆரின் அந்நியமாதலுக்கும், எக்ஸிஸ்டென்சியலிசத்திற்கும் இந்த நூலுக்கும் உள்ள இன்றியமையாத தொடர்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அநேகமாக இந்த மூன்று நூல்களுக்குள்ளும் ஒரே இழைதான் ஒடுகிறது. 3. ஸ்டாலினியத்தைப் போற்றுவதிலும் விமர்சனம் செய்வதிலும் எஸ்.வி. ஆர். கொண்டிருந்த தீவிரம் அருமையானது. ஸ்டாலின் பற்றி அவர் பலரது பார்வையின் மூலம் நிறையக் கற்றிருக்கிறார். இறுதியாக இப்பொழுது லெனினிலிருந்து ஸ்டாலின் எடுத்துக் கொண்ட, ஸ்டாலினியத்திற்கான கூறுகளைப் பற்றியும் பேசுகிறார். “திறந்த மனப்பான்மை மூலம் தெரியவந்துள்ளன”. புதிய உண்மைகளையும் சேர்த்துக் கொள்கிறார். ஸ்டாலினைக் கடிந்து கொள்வதும் போற்றுவதும் ஆகிய போக்கு இந்த நூலிலும் முற்றாகத் தீர்ந்தபாடில்லை. எஸ்.வி.ஆர். கூறுகிறபடி ஸ்டாலினைப் பற்றிய பிரச்னை இன்னும் நெடுங்காலத்திற்குத் தொடர்ந்து கிளம்பும். 4. ஸ்டாலினை விமர்சனம் செய்பவர்கள், மாவோவைப் பெரிதும் பயன்படுத்திக் கொள்வர். இந்த வசதியை எஸ்.வி. ஆர். இப்பொழுது ஏற்கவில்லை. மாவோ பற்றி அவர் முன்னர் கொண்டிருந்தவை மயக்கங்கள் என்பது போல இப்பொழுது அவர் கருதலாம் அல்லது நூலின் தேவைக்குப் புறம்பானதென்று அவர் ஒதுக்கியிருக்கலாம். 5. ரஷ்யாவில், ஸ்டாலின் காலத்திலும் அதன் பின்னர் இன்றுவரையிலும் நடைபெறுவது சோசலிசம்தானா என்பதற்கு எஸ்.வி. ஆர் உறுதியான விடை கூறவில்லை. அரசு அதிகார வர்க்க கடமை என்பதற்கு அவர் அழுத்தம் கொடுக்கலாம் போலத் தெரிகிறது. இன்றைய ரஷ்யாவைப்பற்றி டிராஸ்கி முதற்கொண்டு பலரும் கூறியுள்ள வர்ணனைகள் சிந்தனைக்குரியவை என்று அவர் கூறி முடிப்பதாகத் தோன்றுகிறது. 6. நூலின் தொடக்கத்தில் எங்கல்சின் மேற்கோளை அவர் வைத்திருப்பதிலிருந்தும் இடையில் அதேபோல இன்னொரு மேற்கோளைத் தருவதிலிருந்தும் ஒன்றை நாம் புரிந்து கொள்ளமுடியும் சமூகத்தில் நிலவும் வர்க்கம் முதலிய சூழலுக்கேற்றபடி தான் வரலாறு அடுத்த கட்டத்திற்கு நகரும். வரலாற்று இயக்கத்திலுள்ள கட்சியின் தலைவர்கள் தாம் கனவு காணும் சோசலிசத்தையோ புரட்சியையோ அதே வடிவத்தில் கொண்டுவர இயலாது. பல சமயங்களில் தம் விருப்பத்திற்கு மாறான அமைப்பு தோன்ற முடியும். இப்படித்தான் ரஷ்யாவிலும் புரட்சியின் விளைவாக சோசலிசம் உருவாகவில்லை என்று எஸ். வி. ஆர். கருதுவார் போலத் தோன்றுகிறது. 7. எனினும் இன்றுவரை ரஷ்யப் புரட்சி தொடர்கிறது என்று அவர் சொல்வதிலிருந்தும் லெனினுக்கு நிகராகக் கோர்பச்சேவை அவர் மதிப்பிடுவதிலிருந்தும் லெனின் வகுத்த பொருளாதாரக் கொள்கையையும் புகாரின் பொருளாதாரக் கொள்கையையும் சமப்படுத்திப் பேசுவதிலிருந்தும் இன்று கோர்பச்சேவ் செய்யும் மாறுதல்களை எஸ். வி. ஆர். வரவேற்பதிலிருந்தும் மேலும் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். வரலாற்றில் இடதும் வலதுமாகச் செல்லும் பாதை வழியாகத்தான் சோசலிசம் நோக்கி நடையிட இயலும். ஆகவே ரஷ்யா சோசலிசப் பாதையிலிருந்து முற்றாக விலகிவிடவில்லை. 8. லெனின் இறுதிக் காலத்தில் எழுதிய சில கட்டுரைகளிலிருந்து, கூட்டுறவுகளை ஏற்படுத்துவதுதான் சோசலிசத்திற்கான பாதை என்று நாம் புரிந்து கொள்ள முடியுமானால், கூட்டுப்பண்ணை முறை சோசலிசத்திற்கானது அல்ல என்பதையும் கண்டு கொள்ளமுடியும். அன்றியும் புதிய பொருளாதாரக் கொள்கை என்பது சோசலிசத்திலிருந்து பின்வாங்குவதல்ல, சோசலிசத்தை நோக்கிய நெறிதான் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். அன்றியும் தொழில் துறையில் கூட்டுறவுகளின் தேவையைக் காலங்கடந்தாவது ஏற்கமுடியும். கனரகத் தொழிலும் கூட்டுப் பண்ணை முறையும் நிச்சயம் பொருளாதாரத்திலும் அரசியலிலும் கடுமையான திரிபுகளையும் ஏற்படுத்தும். கனரகத் தொழில் என்பது முதலாளியத்தின் முகம்தான் இத்தகைய உற்பத்தி முறை அதிகார வர்க்கத்திற்கு வழி வகுக்கும். எஸ்.வி.ஆர். தடுமாறுவதாகத் தோன்றும். சில இடங்களிலிருந்து இப்படி நம்மைத் தெளிவுபடுத்திக் கொள்ள இயலும். மேலும் ஒன்று, நவீன அறிவியல் தொழில் நுட்பம் பற்றி எஸ். வி. ஆர். இப்போக்கை ஏற்றும் இதிலிருந்து விலகியும் எழுதுவது இன்னுமொரு தடுமாற்றம். 9. எஸ்.வி.ஆர். நூல் இன்று எழுதப்பட்டுள்ள காலத்தை வைத்துப் பார்க்கும்பொழுது யாரோடெல்லாம் அவர் இன்று விவாதிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். தமிழ்நாட்டில் உள்ள ‘ஸாடனோவ்’ களோடு அவர் விடாப்பிடியாகப் போரிடுகிறார். லெனினின் நிழலுக்கடியில் மறைந்திருந்து ஸ்டாலினியம் பேசும் பலரோடு போரிடுகிறார். மார்க்சியத்திற்குள்ளிருந்து வெளியேற்றப்பட்ட அல்லது மார்க்சியத்திற்குள் அனுமதிக்கப்படாத அறவியல் நிலைப்பாட்டின் பலத்திலிருந்து எஸ்.வி.ஆர் பேசுகிறார். இந்த நூலை முக்கியப்படுத்துவது அறவியல் நிலைப்பாட்டில் எஸ். வி. ஆர். கொண்டுள்ள அழுத்தம். 10. எஸ். வி. ஆர். இந்த நூலை உருவாக்குவதற்குச் சிலருடைய நூல்களை அல்லது பார்வையைத் தன் பார்வைக்கான வலுவான ஆதாரமாக்கியுள்ளார். ஸாமியாடின் நூல், ஐசக் பாட்சர் ஆகிய இரண்டு நூல்களைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். 11. இன்று சோசலிசத்தில் பன்மை பற்றி பேசுவதைப் பார்க்கும்பொழுது, இத்தகைய பன்மைப் போக்குகள் மூலம்தான் மக்கள் மத்தியில் ஜனநாயகம் பாவும் என்று தொடங்கி பலவற்றைக் கூறலாம். புரட்சிக்கு முன்னும் பின்னரும் ரஷ்ய சமூகத்தில் பரவலாக இருந்த பல அரசியல் போக்குகளை, கட்சிகளை விட்டுவைத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இவற்றை அழித்ததன் மூலம் மக்களின் ஆக்கத்திறன்கள் சேர்ந்தழிந்தன. இதுபோலத்தான் பலவகையான கலை இலக்கியப் போக்குகளும் தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும். (இவற்றை அனுமதித்திருக்க வேண்டும் என்று சொல்வதுகூட கேவலம்) எந்த சமூகத்திலும் மனித உரிமைகள் மாதிரி இவற்றுக்கும் வாழ்வுரிமை உண்டு. 1928 வாக்கில் எல்லா கலை இலக்கியப் போக்குகளையும் இறுதியில் அரசு அல்லது கட்சி தீர்மானித்துத் தரவேண்டும் என்ற போக்கு மிகப்பெரும் திரிபு. கோளாறு. இரண்டு பூனைகள் சண்டையிட்டு இறுதியில் குரங்கு கையில் அதிகாரத்தை ஒப்படைத்த மாதிரி இது பெரும் தவறு. அரசு என்பது குரங்குதான். அதற்கு அதிக பங்கு வேண்டும். 12. வரலாற்றுக்கும் இலக்கியத்திற்கும் இடையில் உள்ளது எத்தகைய உறவு? வரலாறு இலக்கியத்திற்குள் எப்படி பதிகிறது? அல்லது இலக்கியம் வரலாற்றை உருவாக்குவதில் பங்கு பெறுகிறதா? புரட்சிக்கும் இலக்கியத்திற்கும் என்ன உறவு? இப்படி சில கடுமையான பிரச்னைகள் உள்ளன. இவை பற்றி ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கிக் கொண்டு எஸ். வி. ஆர். நூலைத் தொடங்கியிருக்க வேண்டும். கீதா அவர்கள் முன்னுரையில் இப்பிரச்சனை தெளிவுறவில்லை . எஸ். வி. ஆர். நடுக்கடலில் துணிவாகத் தான் இறங்கியிருக்கிறார். எந்தச் சமயத்தில் எந்த விபத்தும் நேர்ந்துவிடலாம். நூலினுள் அங்கங்கே ஒட்டாதபடி பல துண்டுகள் சிதறியிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆரோக்கியமாக பயணத்தை முடித்துக் கொள்வது எப்படி என்று தெரியவில்லை. 13. எந்த ஒரு இலக்கியமும் அது வாழும் சமூகத்தோடும், வரலாற்றோடும் நெடுங்கால உறவுடையது. உறவுகள் அறுபட்ட போதிலும் பின்னர் பக்குவமாகத் தொகுத்துக் கொள்கிறோம். ரஷ்ய இலக்கியத்தோடும் அதன் நெடுங்கால வரலாற்றோடும் உறவுடையது. ரஷ்யர்கள் கவிதைகள் என்றால் பித்துப்பிடித்து அலைகின்றனர். அவர்களின் கவிதைகள் எளிமையானவை. இயற்கையிலும் மனிதர் உறவிலும் ஊறியவை. இவர்களின் நாவல் படைப்புகள் உயர்ந்த சிகரங்கள். ரஷ்யர்களின் சமய உணர்வு ஆழமானது. வரலாற்றில் எத்தகைய இராவணர்கள் தோன்றி கண்டதுண்டமாக வெட்டினாலும் மறுபடியும் இவர்கள் வரலாற்றிலிருந்தும் இயற்கையிலிருந்தும் சமயத்திலிருந்தும் தம்மை உயிர்ப்பித்துக் கொள்கிறார்கள். பெலின்ஸ்கி போன்றவர்கள் யதார்த்தப் போக்கில் இரஷ்ய இலக்கியத்தை நன்றாக உழவு செய்துள்ளார்கள். புஷ்கின் போன்றவர்கள் மிகப்பெரும் இலட்சியங்களை இந்த மண்ணில் விதைத்துள்ளார்கள். இந்த மண்ணின் வரலாற்றை மேலும் பல அம்சங்களில் தொகுத்துக் கொள்ள வேண்டும். 19, 20 ஆம் நூற்றாண்டு இடி முழக்கத்திலும், மழையிலும் இந்த மண் புதிய விளைச்சல் காணுகிறது. இந்த மண்ணிலிருந்துதான் உருவவியல் முதலிய பலபோக்குகளும் கலைஞர்களும் தோன்றுகிறார்கள். புரட்சி என்ற இடி நேரடியாக இறங்குவது ஒருவகை. தொலைதூரத்தில் இடிப்பது இன்னொரு வகை. இலக்கியத்திற்குள் புரட்சி நேரடியாக இறங்கும். மறைமுகமாகவும் தாக்கும். இந்தச் சமூகத்தின் கலைஞர்கள் எல்லோருக்குமே வாழவும், படைக்கவும், புரட்சியைத் தமக்குரிய முறையில் ஏற்கவும் மறுக்கவும் உரிமை உண்டு. இந்த அடிப்படை உரிமையை நாம் ஏற்றுக் கொள்ள முடியும். அலெக்ஸாண்டர் பிளாக் முதலிய பல கலைஞர்களையும் எஸ்.வி.ஆர். ஏற்கிறார். (சிலரை ஒரு பாதி ஏற்று மறுபாதி மறுக்கிறார்) வழக்கமான வறட்டு மார்க்சியத்திலிருந்து எஸ்.வி. ஆர். பல அம்சங்களில் வேறுபட்டிருப்பதால் பிளாக் போன்ற கலைஞர்களை மீண்டும் வாழ வைக்கிறார். அன்னா அக்மதோவ், மரியா பாஸ்டர்நாக் போன்றவர்கள், எஸ்.வி.ஆரின் அன்பைப் பெற்ற பாக்கியசாலிகள். மாயாகோவ்ஸ்கிக்குச் சார்பாக போர்க்கொடி தூக்கும் ஆவேசம், குளம்படிச் சத்தம் விடாப்பிடியாக காதில் ஒலிக்கிறது. யெஸினின் என்ன பாவம் செய்தார்? அவர் கிராமியச் சார்பு எத்தனை உன்னதமானது, சோசலிசம் கிராமத்தை அழிக்கத்தானே செய்யும்? இந்த முரண்பாடு ஒரு நல்ல மனிதனை நாசமாக்கத்தானே செய்யும்? சல்செனிட்சென் சோசலிசத்தை மறுப்பது பற்றி தரும் விவரங்கள் மிகச்சிறப்பானவை. 14. எதார்த்தவாதத்திற்கெதிராக சிம்பலிசம் தோன்றுவது ஒரு நியாயம். யதார்த்தம் உடலைக் கவனிக்கும்போது சிம்பலிசம் ஆன்மாவைத் தேடுகிறது. உடல் போதாத நிலையில் ஆன்மாவைத் தேடுகிறது. இதுவும் போதாது என்பதும் உண்மை . ஃபியூச்சரிசம், கன்ஸ்ட்ர க்டிவிசம் போன்ற போக்குகள் தொழில் நாகரிகத்தை கலைத் துறைக்குள் செலுத்தும் போக்கு. சமயமும் சில குறிகள் மூலம் இலக்கியத்திற்குள் வரும். கட்சிக்காரர்களும் இலக்கியத்தைக் கைப்பற்றிக் கொள்ள முயல்வர். ஒவ்வொரு போக்குக்கும் அதற்கான நியாயம் உண்டு. இவை அனைத்தும் முரண்படுவதன் மூலமே சில ஆக்கமும் பெறும். அரசு அதிகாரம் தீமையானது. கலைக்கு என்றும் பகையானது. இப்படியெல்லாம் தொடர்ந்து யோசிக்கும்பொழுது ஒரு உண்மை புலப்படுகிறது. முற்காலத்துக் கலைஞர்கள் சமூகத்தோடு முழுமையான உறவில் இருந்தவர்கள். அவர்கள் படைக்கும் கல்வி, கலைகள் மூலம் சமூகத்தின் வளமான வாழ்க்கையோடு இணைந்தவர்கள். அந்தச் சமூகத்தில் நீ உழைக்காமல் சாப்பிடுகிறாய் என்று யாரும் சொல்ல முடியாது. தொழில் நாகரிகத்திற்குப் பிறகு இந்த அம்சம் நாசமாயிற்று. செல்வத்தையும் அதிகாரத்தையும் சம்பாதிப்பவனே உழைப்பவன் என்ற கருத்து ஏற்பட்டது. சமூகத்திலும் வேலைப் பிரிவினைகள் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தபோது சமூகத்தோடு கலைஞன் கொண்ட ஐக்கியம் சிதைந்து, தன் உயிர் வாழ்வுக்காக சமூகத்தின் அங்கீகாரத்தையும், பரிசினையும் அல்லது பிச்சையினையும் எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டது. கலைஞன் அதிகாரமற்றவன் ஆனான். இவன் சமூகத்தின் உயிர் வாழ்வுக்குத் தேவையில்லாத கலை என்ற அதிகாரத்தைப் படைப்பவனாகக் கருதப்பட்டான். ரஷ்யாவில் 1920களிலும் பின்னரும் கலைஞனுக்கு நேர்ந்த துர்பாக்கியம் இத்தகையது. எல்லா அதிகாரங்களும் தனக்கே என்று அரசு தன்னை வலுப்படுத்திக் கொண்டபோது, இந்தப் பொய்யைப் பல கலைஞர்களும் ஏற்றுக்கொண்டு, சிங்கத்தின் வாயில் தம் தலையைக் கொடுத்தனர். கலைஞனுக்குள்ளிருந்த சமூக முரண்பாடு அவனை வேதனைகளுக்குள்ளாக்கிற்று. மாபெரும் அரசியல்வாதிகளுக்கு நிகராக கலைகளைப் படைத்தவர்கள் கட்சியின் காலடியில் மிதிக்கப்பட்டார்கள். கட்சிக்காரனைத் தூசு எனக் கருதி மேயர் - ஹோல்டு போன்றவர்கள் உயிரைக் கொடுத்தார்கள். யெஸினின் முதலிய பல கலைஞர்களின் தற்கொலையும், அரசு அதிகாரத்தின் முகத்தில் வீசியெறியப்பட்ட செருப்புகள். அவர்கள் இறந்த பின்னர் அரசு அதிகாரத்திற்கெதிராக இன்னும் போராடுகிறார்கள். இத்தகைய பார்வையிலிருந்து எஸ்.வி.ஆர். பெரிதும் வேறுபடவில்லை . சில இடங்களில் வேறுபடுவது நம் விமர்சனத்துக்குள்ளாகிறது. இத்தகைய கலைஞர்களைத் தண்டிப்பதன் மூலம் அரசு அதிகாரம் மக்களைத் தண்டிக்கிறது. வாழ்வைத் தண்டிக்கிறது. 15. எஸ்.வி.ஆர். நூலைப் படிக்கும்போது எல்லா வாசகர்களுக்குள்ளும் ஒரு பேராசை எழும். எஸ். வி. ஆர். குறிப்பிட்டுள்ள முக்கியமான கலை இலக்கியவாதிகளையாவது முழுமையாகப் படிக்கவேண்டும். நூலின் இறுதியில் பொருளகராதி என்று கொடுக்கப்பட்டிருந்தால் அவர் குறிப்பிடும் முக்கியமான கலைஞர்களை எண்ணிச் சொல்ல முடியும். குறைந்தது ஐம்பது பேர்களாவது தேறலாம். சில அற்புதமான கலைஞர்களை இரண்டொரு பத்திகளில் முடித்துவிடக்கூடிய விபத்துக்கள் நிறைய நேர்ந்துள்ளன. எல்லோரையும் மீண்டும் முழு அளவில் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒன்று, எஸ்.வி.ஆர்., பிளாக், யெஸினின் மாயாகாவ்ஸ்கி ஆகியவர்களின் சில முக்கியக் கவிதைகளை மொழிபெயர்த்து முன்னுரையோடு வெளியிடத் திட்டமிட்டிருந்தார். இந்நூலில் இடம் பெற்றுள்ள அன்னா அக்மதோவா அத்தியாயத்தைவிட எஸ்.வி.ஆர். வெளியிட்ட அன்னா அக்மதோவா நூல் வெகு சிறப்பானது. இதேபோல அந்த ஐம்பது பேர்களைப் பற்றி தனித்தனி நூல்கள் தமிழில் வெளிவர வேண்டும். எப்பொழுது வரும்? யார் மூலம் வரும்? தமிழ் வளரவில்லை யென்று இதனால்தான் இப்படிப் பலமுறை சொல்ல வேண்டியிருக்கும். எஸ்.வி.ஆர். நூல் பற்றித் திறனாய்வாக மேலும் சில குறிப்புக்களைத் தரலாம். 1. மனிதன் தன்னளவில் கலைஞன் என்று தொடங்கினால் தான் மனிதனது படைப்புத் திறனையும் இதன் பகுதியாகிய கலையையும் வாழ்க்கைக்குள் இதன் உள்ளார்ந்த இயக்கத்தையும் புரிந்து கொள்ள இயலும். பொருளியலுக்கும் கலைக்கும் உள்ள தொடர்பு என்ற முறையில் ஆராய்ச்சியைத் தொடங்கினால் இறுதிவரை கலையை ஒரு ஒட்டாகவோ ஒரு அலங்காரமாகவோ தாம் பார்க்க முடியும். இத்தகைய ஆய்வில் பொருளியல் தான் வலிமை மிக்கது என்றும் வாழ்வை ஆக்கக் கூடியதென்றும் கலை என்பது உடன் நிகழ்ச்சி என்றும் அழகு என்றும் அர்த்தப்படும். இதன் தொடர்ச்சியாகத்தான் பொருளியல் சக்தியோடு நெருக்கமான உறவுடைய தொழிலாளர் கட்சியும், தம் அரசு கலைஞர்களைக் கீழ்நோக்கிப் பார்க்கும் நிலை ஏற்படுகிறது. உணவு உற்பத்தி, வாழ்க்கைச் சாதன உற்பத்தி முதன்மை என்றும் இவற்றை உற்பத்தி செய்பவர் தர; கலைஞர்கள் அனுபவிக்கிறார்கள் என்றும் உற்பத்தியில் கலைஞர்களுக்கு ஈடுபாடில்லை என்றும் கருத்து ஏற்படுகிறது. பொருளுற்பத்திக்கு முதன்மை தருவது சோசலிசம். கலைப்படைப்பைச் சோசலிசக் கண்ணோட்டத்துடன் தான் புரிந்து கொள்ள முடியும். முதலாளிய சமூகக் கண்ணோட்டத்தை உள்வாங்கிக் கொண்ட கட்சிக்காரர்கள் கலைப் படைப்பைப் புரிந்து கொள்ளாதது இதனால்தான். மனிதர்களை உற்பத்தி செய்யும் இன்றியமையாத செயல்பாட்டில் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பழைய வரலாற்றை, பழைய கலாச்சாரத்தை, வளமான மனித உறவுகளின் தேவையைச் சமகாலத்தவர்களுக்குக் கொண்டுவந்து சேர்க்கும் ஆற்றல் மிக்க தொடர் வரிசையில் கலைஞர்கள் முக்கியமாக உள்ளனர். பெற்றோர், ஆசிரியர் ஆகியவர்களும் இந்த வரிசையில்தான் உள்ளனர். படைப்பு என்பது பொருட்படைப்பும், வாழ்வின் அர்த்தங்களைப் படைப்பதும், நிகழ்காலப் பிரச்சனைகளால் கவனத்துக் குள்ளாகியிருக்கும் பிரபஞ்சத்தின் ஒருமையை மீண்டும் தேடுவதும், உருவாக்கித் தருவதும் ஆகும். பழைய சமூகங்களில் கலைஞர்களின் பெருமை அதிகம். காரணம் பிரபஞ்சத்தை, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் மனிதர்கள் தம்மை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டனர். மதங்கள் எனவும் தத்துவங்கள் எனவும் உருவாக்கி வைத்ததன் மூலம் வாழ்வுக்கு அர்த்தம் தேடும் தீவிர முயற்சி குறைந்திருக்கிறது. பழைய அர்த்தமே போதும் என்ற முறையில் ஆதிக்கம் உள்ளே வந்து விடுகிறது. புதிய அர்த்தங்கள் தேவைப்பட்டாலும், இந்த அர்த்தங்களைத் தேடும் முயற்சிக்கு சமூக ஒத்துழைப்பு இல்லை. உடைமைச் சமூகம் செல்வக் குவிப்பாலும் அதிகாரத்தாலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும்போது வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் கலைஞரது முயற்சி செல்வத்தையும் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கும். அர்த்தம் தேடும் முயற்சி தீவிரப்பட்டால் செல்வமும் அதிகாரமும் தகர்க்கப்படும். ஆகவே மதங்களும் தத்துவங்களும் உடைமைச் சமூகங்களில் சமூக இயக்கத்திற்கு ஒத்துச் செல்வனவாக இல்லாமல் பின்னடைந்து அல்லது பிற்போக்காக இருப்பனவாக வைத்துக் கொள்ளப்படும். சோசலிசம் ஒரு தத்துவம். உடைமைச் சமூகம் இயன்றவரை சோசலிசத்தையும் தனக்குரியதாக மாற்றிக் கொள்ளும். இந்தச் சூழலில்தான் கலை கீழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது. 2. கலைஞர்களின் வாழ்க்கையின் நேசம், இசை, ஓவியம், இலக்கியம், இயற்கையின் அழகில் ஈடுபாடு ஆகியவற்றில் வெளிப்படுகிறது. இயற்கையில் ஈடுபாடு என்பது நுணுக்கமாக ஆராய்ந்து சென்றால் இயற்கையின் பரந்த வெளியில் தன் மனத்தை விரித்துக் கொள்ளுதல், மலைகளின் உயர்வில் மகிழ்தல், பறவையின் சுதந்தரமான ஆடல், பாடல் இவைகளில் ஈடுபாடு கொள்ளுதல் அப்புறம் இவற்றில் மனத்தைப் பறிகொடுத்து பரவசமடைந்து மனக்கவலைகள் மறந்து வாழ்வதற்கான புத்துணர்ச்சியை, புதிய அர்த்தங்களைப் பெறுதல், அதற்கு மேலும் இயற்கையோடு ஒன்றிணைந்து சுதந்திரமும் நேசமும்தான் வாழ்க்கை என்ற அர்த்தத்தில் இணைதல் - இயற்கையின் ஈடுபாட்டில் இத்தகைய அம்சங்கள் உள்ளன. கூட்டுமனம் (Collective Consciousness) என்று சொல்லும் மனநிலையை இம்மாதிரி சமயங்களில் தான் கலைஞன் பெறுகிறான். கலைஞன் பெற்ற சமூக அனுபவங்கள் அனைத்தும் புதிய அர்த்தங்களில் செறிவு பெறுவது இந்த மனநிலையில்தான். சமயங்கள், புராணங்கள் முதலியனவெல்லாம் இந்த மனநிலையின் ஆழத்திலிருந்து தான் வெளியில் தோற்றம் பெறுகின்றன. இது தியானம் என்று சொல்லப்படும் மனநிலை. உச்ச நிலையில் தீவிரமாக இயங்கும் மனநிலை. கிராமிய இசையில் எல்லோர்க்கும் - நகரங்களில் வாழ்பவர்களுக்கும் கூட - இலயிப்பு ஏற்படுவது நாம் புரிந்து கொள்ளத்தக்கது. Elemental Force என்று நாம் குறிப்பிடும் ஆற்றல் இந்த மனநிலைக்குள் இயங்குகிறது. மனம் தன்னை முற்றாகப் புரட்டிக் கொள்ளும் நிலை. தரிசனங்களை எட்டிப் பிடிக்கும் நிலை. சாவும் வாழ்வும் ஒன்றான நிலை. அழிவை ஆக்கமாக்கிக் கொள்ளும் மனநிலை. அறத்தின் அடிப்படையில் வாழ்க்கையை மாற்றிப் பார்க்கும் நிலைமை. இவற்றையெல்லாம் ஆக்கும் முறையில் கலைஞனுக்குச் சில முன் அனுபவங்கள் தேவை. இந்த முன் அனுபவங்களுக்கு ஒத்த வகையில் அவனுக்கு மனஎழுச்சி ஏற்படும். அழகு என்றோ அறம் என்றோ கடவுள் என்றோ அவனுக்கான காட்சிகள் வடிவம் பெறும். 3. புரட்சிக்கும் இலக்கியத்திற்கும் என்ன உறவு? சமூகத்தில் மலைகளென துன்பங்களும் கொடுமைகளும் பெருகிய நிலையில், இனியும் பொறுக்க முடியாது என்ற நிலை பரவலாக ஏற்படும் பொழுது, இனியும் பொறுத்திருந்தால் முற்றாக நாம் அழிந்து விடுவோம் என்பதால் உயிரை இழந்தாவது நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும் என்பதால் நமக்குள் உள்ள ஆற்றல் முழுவதையும் திரட்டிக் கொண்டு, காலம்காலமாக நம்மை அழுத்திக் கொண்டிருக்கும் சுமைகளை முற்றாக புரட்டுதல் புரட்சி. அப்படியானால் தீவிரமான இலக்கியத் தேடல் என்பது புரட்சிகரமான செயல்தான். புதிய அர்த்தத்தில் வாழ்க்கையை மறு உருவாக்கம் செய்வது இலக்கியத்தின் நோக்கம். வாழ்க்கையில் இழந்துவிட்ட ஒருமையை, அர்த்தத்தை அழகை பெற முயற்சிப்பது இலக்கியம். புரட்சியை உருவாக்கும் சக்திகள் முழுமையாகத் திரளாதபோது இத்தகைய சக்தியை மனத்திற்குள்ளிருந்து தேடித் தொகுப்பது இலக்கியம். கலைஞனது பல்வேறு வகைத் தேடல்களில் புரட்சி முழுமையாக உருவம் பெறவில்லையென்றாலும், அவனது தேடல்களுக்குள் அங்கங்கே இயங்கும், புரட்சி. இப்படி இயங்குவது ஒரு சமூக இயக்கம். கலைஞனின் மனத்தின் மேற்பரப்பில் சுயநலங்களும், காமமும், மயக்கங்களும், குப்பைகளும் சேர்ந்திருக்கலாம். தன்னைத் தேடிச் செல்லும் தீவிரத்தின்போது இவற்றையெல்லாம் தொடர்ந்து வாரி வெளியில் கொட்டிக் கொண்டே இருப்பானென்றால், ஏதாவது ஒரு சமயத்தில் வாழ்வின் நிதர்சனத்தின் முன், புரட்சியின் முன் அவன் நேர் நிற்பதைக் காண்பான். புரட்சியெனத் திரளும் இயக்கம், சமூகத்தில் முழுமையான இயக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். அரசியல் அல்லது பொருளியலில் ஆதிக்கம் பெறுவது புரட்சி என்ற முறையில் புரட்சி நடைபெறுமானால் உண்மையான கலைஞனுக்கும் புரட்சிகர இயக்கத்துக்கும் இடையில் உறவு சிதையும். சமயம் புரட்சிக்கு எதிரானதல்ல. நிறுவனங்கள் புரட்சிக்கு எதிரானவை. கிராமங்களை அழிப்பது புரட்சியல்ல. கிராமத்தின் அழகை சமூகத்தின் விரிந்த பரப்பில் உருவாக்குவது புரட்சி. புரட்சி இயக்கம் அறத்தை மதிக்காத பொழுது அறவியலை முனைப்பாகக் கொண்டிருக்கும் ஒரு தத்துவவாதிக்கும் கலைஞனுக்கும் புரட்சியோடு உறவு முறியும். “காற்றில் கலந்த பேரோசை” - நூல் ஆய்வு 1. கட்டுரைகளிலிருந்து இலக்கியம் குறித்து சில அடிப்படையான சிந்தனைகளைப் பெறுகிறோம். ஒரு படைப்பு என்பது வாழ்வின் பிரதிபலிப்பாகாது. கண்ணீர் கதையாக மட்டும் இருந்துவிட முடியாது. ஒரு மனிதனின் அனுபவம் அதே வடிவில் இலக்கியத்தில் பிரதிபலிக்கிறது என்றால், பிரதிபலிப்பைக் காட்டிலும் வாழ்வின் சாரம் - கலைஞனின் பார்வை படைப்பில் இடம் பெற வேண்டும். ஒரு மனிதனின் அனுபவம் என்பது காலத்தோடு, சமூக வாழ்வோடு உறவு கொண்டது. ஆகவே படைப்பின் வழி, கலைஞன் காலத்தைத் தொட வேண்டும். வாழ்வின் சாரத்திற்குள் கலைஞனின் பயணம் தொடரும் போது தனக்கான ஒரு உலகத்தைப் படைப்பில் தருகிறான். படைப்பின் இந்தக் கூறு மிக முக்கியமானது. வாழ்வில் சமத்துவம் நிலவ வேண்டும். சாதி, மதம், தேசம் என்ற குறுகிய வரையறைகளுக்குள் கலைஞன் தன்னை அடைத்துக் கொள்ள இயலாது. இப்படிச் செய்வது அரசியல். இடதுசாரிகளும், தமிழ் கலாச்சாரவாதிகளும் இப்படி இலக்கியத்தை அரசியலாக மாற்றியிருக்கிறார்கள். உடனடி ஆதாயத்துக்காக, பரிசுகள், விருதுகள், பத்திரிக்கை புகழுக்காக இப்படி செய்கிறார்கள். கலைக்கு நேர்ந்திருக்கிற அவமானம் இது. பாரதி மனிதனுக்குள் இருக்கும் தெய்வத்தையும், புதுமைப்பித்தன் மிருகத்தையும் முதன்மைப்படுத்தினர். இரண்டு நிலைகளும் தேவையானவை. மெளனி தனது உலகிலிருந்து மண்ணுலகை வெளியேற்றினார். இசையைக் கொண்டு தன் உலகை நிறைத்தார். மரணம் அவரை இப்படித் துரத்தியது. பஷீர் வாழ்வின் அவலங்கள் அனைத்தையும் சிரிக்கச் சிரிக்கப் பேசினார். அவமானத்துக்கு உள்ளாகிற வாழ்க்கை என்று அவர் எதையும் இலக்கியத்திலிருந்து ஒதுக்கி வைக்கவில்லை. இப்படி சு.ரா. இவர்களை விளக்குகிறார். க.நா.சு. இலக்கியத்திலேயே முழுக் கவனம் செலுத்தினார். சமூக வாழ்வு சீர்குலைந்திருப்பதைத் தன் கவனத்தில் கொள்ளவில்லை. தமிழ் வாழ்வின் அவலம் குறித்து க.நா.சு.வைப் போலவே சாமிநாதனும் கவலை கொள்கிறார். தமிழ் வாழ்வு ஏன் இப்படி சீர்குலைந்தது என்பது பற்றி சாமிநாதன் ஆராயவில்லை. வரலாற்றுக் காலம் முழுவதும் தமிழ் வாழ்வைப் பாலைவனம் என்கிறார் சாமிநாதன். அப்படி இருக்க முடியாது என்கிறார் சு.ரா. இலக்கியம் என்பதைக் கலாச்சார ஆய்வோடு நிறுத்திக் கொள்ள இயலாது. வாழ்வின் எல்லாக் களங்களையும் உள்ளடக்கி ஆராய வேண்டும். இந்தியச் சரித்திரமும் சரிவுகளைச் சந்தித்துள்ளது. தமிழ் வாழ்வின் சரிவுசில தனிக் குணங்களைக் கொண்டது. இப்படி பேசுகிறார் சு.ரா. அதாவது இலக்கியம் குறித்து பேசும்போது படைப்பு இயக்கம் குறித்து ஆழமாகச் சொல்கிறார். இது அகத்தை ஆராயும் முறை. அதேசமயம் புறத்தினுள்ளும் பயணம் செய்கிறார். இடதுசாரிகள் மற்றும் தமிழ் கலாச்சாரவாதிகள் குறித்து சொல்வது இதன்பால்படும். தமிழ்க் கல்வி, சாகித்ய அகாடமி பரிசுத் தேர்வு குறித்து சொல்வதும் இவ்வகை. ஜெயலலிதா பற்றிய இவரது கட்டுரை நீட்சி பெறுமானால் தமிழ் அரசியல்வாதிகள் பலரையும் உள்ளடக்கும். இதன் மூலம் வரலாற்றாய்வுக்குள் செல்வது நிகழும். க. நா.க.வோ, சாமிநாதனோ சு.ரா.வோ இதைச் செய்வதில்லை. பாரதி புதுமைப்பித்தன் சாமிநாதன் பற்றிய இவரது கட்டுரைகள் வழியே தற்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றை சரிப்படுத்திக் கொள்வதற்கான விவரங்களும், விமர்சனங்களும் இடம் பெறுகின்றன. இவற்றைக் கவனமாக நாம் தொகுக்க வேண்டும். சிறுகதைகள் குறித்த கட்டுரையும் இத்தகையது. 2. மார்க்சிய வட்டத்திற்குள்ளிருக்கும் இடதுசாரிகளைச் சமயம் வாய்க்கும்போதெல்லாம் சு.ரா. விமர்சனம் செய்கிறார். அரசியலை இவர்கள் முதன்மைப்படுத்துகிறவர்கள். இதன் காரணமாக அரசியலையும் இவர்கள் கெடுத்தார்கள். வர்க்கப் போராட்டம் என்ற வாய்ச் சொல்லோடு இந்த அரசியல் முடிவடைகிறது. வர்க்கப் போராட்டங்களின் வழியே வர்க்கங்களைக் கடந்து செல்வது மார்க்சியம். மார்க்சியத்தின் மெய்யியல்தான் இத்தகைய பார்வையைத் தரும். இயற்கையோடும், சமூகத்தோடும், தன்னோடும், அந்நியமான நிலை நீங்கி, ஒன்றுபடும் இயக்கம் குறித்தது இந்த மெய்யியல். மனிதர்களின் மன ஆழத்தில் என்றும் நீரோட்டமாக ஓடுவது இந்தக் குணம். ஆதிப் பொதுமைச் சமூகம் மனிதனுக்குள் இன்றும் தங்கியிருக்கிறது. இதை மீண்டும் பொருளியல் மற்றும் அரசியல் வடிவில் நிலைநிறுத்துவது மார்க்சியம். இந்த மெய்யியல் மனிதனுக்குள் அடிமனத்தில் உறைந்திருப்பது. அரசியலுக்கு அதாவது அதிகார அரசியலுக்கு இடம் தரும் மார்க்சியருக்கு இத்தகைய மெய்யியல் பார்வை இல்லை. சு.ரா. இடதுசாரிகளை இம்முறையில் ஆராயவில்லை. மார்க்சியத்தின் மெய்யியல் என்பது சு.ரா.வின் பார்வையோடு ஒத்து இயங்கக் கூடியது. வாழ்வின் சாரம் என்றும் சமத்துவம் என்றும் சு.ரா. பேசும் பொழுது இந்த மெய்யியலை நெருங்குகிறார். ஆழ்மனம் பற்றி, சு.ரா. அதிகம் பேசவில்லை. எனினும் கூராவுக்குள் ஆழ்மன இயக்கத்தை நாம் புரிந்து கொள்கிறோம். 3. தமிழ் வாழ்வின் சரிவு குறித்து சு.ரா., க. நா.சு. முதலியவர்கள் ஆராயவில்லை. தமிழ்க் கலாச்சாரவாதிகள், அரசியல்வாதிகளோடு ஒத்தியங்குவதைக் குறிப்பிடுகிறார். தமிழ்ப் பண்டிதர்களின் சாதிய அரசியலைக் குறிப்பிடுகிறார். சாதிய அரசியல் என்று ஆராயத் தொடங்கினால் வேறு எவ்வளவோ நிலைகளுக்குள் செல்ல முடியும் என்கிறார். இன்று நிலவும் சந்தைப் பொருளாதாரம், நுகர்வு வெறி முதலியவற்றையும் குறிப்பிடுகிறார். பெரியார், அண்ணாத்துரை குறித்து வெளிப்படையாக இவர் எதுவும் சொல்லவில்லை. காந்தியைப் புறக்கணித்த சக்தி குறித்துச் சொல்லுகிறார். இயந்திரங்களின் ஆதிக்கம் குறித்தும் க கூறுகிறார். சற்றுத் தள்ளிப்போய் ஆங்கிலேயர் நமக்குச் செய்த அழிவுகள் குறித்து சு.ரா. சொல்லமுடியும். தமிழ்நாட்டுக்குள் நேர்ந்த படையெடுப்பையும், ஆரியம் ஆதிக்கம் பெற்ற வரலாற்றைக் குறித்தும் சொல்ல முடியும். தமிழ்க் கல்வியின் சீர்குலைவு, தமிழ்த் திரைப்படங்கள் தமிழ்மக்களை மயக்கியது குறித்தும், தமிழ்ப் பத்திரிகை ஆதிக்கம் குறித்தும் சொல்கிறார். தமிழ் சமூகத்தில் வணிக சக்திகளின் பெருக்கம் குறித்து இன்னும் அதிகம் சொல்ல வேண்டும். தமிழ் மக்களின் படைப்புத் திறன் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது குறித்துச் சொல்லமுடியும். இலக்கிய ஆய்வு என்று மேற்கொண்டால் இப்படி எல்லாம் பலதிசைப் பயணம் மேற்கொள்ளத்தான் வேண்டும். இவற்றிற்கு இடையிலும் அங்கங்கே தமிழ் வாழ்வின் துளிர்ப்புகளும் இருக்கின்றன. வாழ்வின் நெருக்கடிகளோடு மனிதன் மோதத்தான் செய்கிறான். ஒதுங்கியிருக்கும் போது அவனது படைப்புத்திறன் அழிகிறது. மோதும்போது படைப்புத் திறன் அதிகரிக்கிறது. தமிழ்ச் சூழலுக்குள்ளிருந்து பாரதியும், புதுமைப்பித்தனும் இப்படித்தான் வெளிப்பட்டிருக்க முடியும் தமிழ் வாழ்வின் அரசியல் சூழலிலிருந்து க.நா.சு. ஒதுங்கித்தான் இருந்தார். சாமிநாதனும் இப்படித்தான். சு.ரா. அங்கங்கே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு ஒதுங்கிவிடுகிறார். தமிழ் வாழ்வைச் சீர்குலைக்கும் சக்திகளின் எதிர் முகத்தில் சு.ரா. நிற்பதில்லை. 4. டொரண்டோ, லண்டன் ஆகிய இடங்களில் ஈழத் தமிழர்களின் சிக்கல்கள் குறித்து அறிந்து கொண்ட நிலையில் அமைப்பு குறித்து சு.ரா. பேசுகிறார். சாகித்ய அகாடமியைக் கண்டித்துப் பேசுகிறார். கல்லூரிகளில் தமிழ்க் கல்வி குறித்து சாடுகிறார். சிற்றிதழ் இயக்கத்துடன் உறவுடையவர் சு.ரா. இலக்கு கலாச்சார இயக்கத்தில் இருந்தவர் சு.ரா. இன்றைய தமிழ்ச் சூழலில் எவ்வகை இயக்கமும் சிதைவதற்கான காரணிகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில், சு.ரா.வை உள்ளடக்கிய இயக்கம் ஒன்று குறித்து நாம் சிந்திப்பதில் தவறில்லை. தற்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றைச் சு.ரா. மேலும் நிறைவு செய்ய முடியும். படைப்பியக்கம் குறித்து மேலும் ஆராய முடியும். இன்னும் எவ்வளவோ செய்வதற்கு இடம் இருக்கிறது. 5. தற்கால தமிழ் இலக்கிய உலகில் புதிய அணுகுமுறைகள் அறிமுகமாகி வருகின்றன. மார்க்சியம் மட்டுமல்லாமல் தலித்தியம், பெண்ணியம், நவீனத்துவம், பின் - நவீனத்துவம் எனப் பல்வேறு அணுகுமுறைகள் இன்று பேசப்படுகின்றன. இவை குறித்து நேரிடையான விமர்சனங்களைச் சு.ரா. முன்வைக்கவில்லை. தலித் இலக்கியம் குறித்த அவரது கட்டுரை வளமானது என்பதில் ஐயமில்லை. மேற்கிலிருந்து வரும் கருத்துக்களை, மொழியாக்கம் செய்து, கலைச்சொற்கள் ஆக்குவதன் மூலம் தமிழ் வாழ்வையோ, தமிழ்ப் படைப்பையோ, அணுகமுடியா தென்கிறார். தமிழின் படைப்பு அனுபவத்திலிருந்து கலைச் சொற்கள் படைக்க வேண்டும் என்கிறார். ஒப்பியல் இலக்கிய ஆக்கத்தைக் குறை சொல்கிறார். படைப்பாளியின் வாழ்க்கைச் சூழல் குறித்து அறிவில்லாமல் மூல பாடத்தை வாசகன் அறியமுடியாது என்கிறார். வாசிப்பு என்ற புதிய போக்கை அவர் ஏற்கவில்லை. படைப்புக்கு வெளியில் நின்று படைப்பை மதிப்பீடு செய்வதைக் கா.ரா. மறுக்கிறார். இலக்கிய ஆக்கங்கள் குறிப்பிட்ட சமூகச் சூழலுக்கு எதிர் வினையாக எழுகின்றன. இந்தச் சமூகச் சூழலை ஆராய்கிற மார்க்சிய வரையறைகள் போதுமானவை அல்ல. பல சமயங்களில் இவை குரூரமானவை. மார்க்சிய ஆய்வை இப்படிக் குறுக்கியவர்கள், அதிகார அரசியலை முதன்மைப்படுத்துகிற மார்க்சியர். தட்டையாகிவிட்ட சூழலில்தான் எதார்த்தவாதம் மறுக்கப்படுகிறது என்கிறார். மனித அனுபவங்களைத் தொடர்ந்து தேடிச் செல்லும்போது தட்டை வகையான இலக்கியம் சாத்தியம் இல்லை என்பது உண்மைதான். முதலாளிய எல்லைகளை தகர்ப்பதன் மூலம் நவீனத்துவத்திற்குள் எதார்த்தத்தை வெளிப்படுத்த இயலும். இதைப் போலவேதான், உன்னதம், மேல், கீழ் என்பனவற்றை, சு.ரா. மறுக்கவும் செய்கிறார். அதனால் பின் நவீனத்துவப் பார்வைக்குள் இவருக்கு இயக்கம் இல்லை. இலக்கியத்தின் புனிதம் இன்னும் இவரை கவர்ந்திருக்கிறது. கலையின் வழியே விடுதலை, சுதந்திரம் என்றெல்லாம் சு.ரா. பேசத்தான் செய்கிறார். இலக்கியத்தைக் கதையாடலாக மாற்றும்போது விடுதலை கூடுகிறது நமக்கு. விமர்சனமும் ஒரு கலைதான் என்றால் எந்த இலக்கியத்தையும் அதன் உள்முகத்தில் நுழைந்து, அதன் உள் கட்டமைப்பைத் தகர்த்து மாற்றியமைப்பதன் மூலம் அதற்குள்ளிருந்தே நாம் புதிய வெளிச்சங்களைப் பெறமுடியும். வரலாறு குறித்து மட்டுமல்லாமல், மெய்யியல் குறித்தும் சு.ரா. கண்டுகொள்வதில்லை. கலை, இலக்கியங்களை இன்று ஒரு தமிழ் மாணவன் வாசிப்பதன் தேவை குறித்து சு.ரா. எதுவும் சொல்லவில்லை. மெளனியின் தனி உலகம் எத்தகைய சமூகக் காரணத்தால் உண்டானது என்பது குறித்து அவர் சொல்லவில்லை. பாரதி, புதுமைப்பித்தன் குறித்த அவரது பார்வைகள் ஆழமானவை. க. நா. சு.வை அவர் காப்பாற்றி வைக்கிறார். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:  தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?  யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?  உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?  அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?  ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை?  இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?  நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?  குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY  கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.