[] []   மாதேவன் மலர்த்தொகை   என். சொக்கன் (nchokkan@gmail.com)    அட்டைப்படப் புகைப்படம் & வடிவமைப்பு: சிவ. கணேசன்  (siva.sgs@gmail.com)    மின்னூலாக்கம் - த.சீனிவாசன் tshrinivasan@gmail.com  மின்னூல் வெளியீடு - FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – Creative Commons Zero – CC0  https://creativecommons.org/share-your-work/public-domain/cc0/ பதிப்புரிமை அற்றது நூலாசிரியர் உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தம் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளார். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை பொருளடக்கம் முன்னுரை 7  அணிந்துரை 8  காப்பு 12  1 13  2 14  3 15  4 16  5 17  6 18  7 19  8 20  9 21  10 22  11 23  12 24  13 25  14 26  15 27  16 28  17 29  18 30  19 31  20 32  21 33  22 34  23 35  24 36  25 37  26 38  27 39  28 40  29 41  30 42  31 43  32 44  33 45  34 46  35 47  36 48  37 49  38 50  39 51  40 52  41 53  42 54  43 55  44 56  45 57  46 58  47 59  48 60  49 61  50 62  51 63  52 64  53 65  54 66  55 67  56 68  57 69  58 70  59 71  60 72  61 73  62 74  63 75  64 76  65 77  66 78  67 79  68 80  69 81  70 82  71 83  72 84  73 85  74 86  75 87  76 88  77 89  78 90  79 91  80 92  81 93  82 94  83 95  84 96  85 97  86 98  87 99  88 100  89 101  90 102  91 103  92 104  93 105  94 106  95 107  96 108  97 109  98 110  99 111  100 112    முன்னுரை   இந்தப் பிரதோஷ நன்னாளில் ‘மாதேவன் மலர்த்தொகை’ என்ற என்னுடைய மின்னூல் வெளியாகிறது. சிவபெருமானைப்பற்றிய நூறு மரபுப்பாக்களின் தொகுப்பு இது. கீழே உள்ள இணைப்பில் இதனை இலவசமாகத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்யலாம். வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள், பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. இப்பாக்களை ஃபேஸ்புக்கில் எழுதிவந்தபோது மிகச்சில நண்பர்களே வாசித்தார்கள், அது எதிர்பார்க்கக்கூடியதுதான், இயன்றவரை எளிமைப்படுத்தி எழுதினாலும் தமிழின் சொல்வளத்தை நாம் தலைமுறைக்குத் தலைமுறை இழந்துகொண்டிருக்கிறோம், எனவே ஒவ்வொரு பாடலிலும் சில சொற்களேனும் புரியாதவையாக இருந்துவிடும், ஆகவே, பாடலை முழுக்க அனுபவிக்க இயலாது. ஆகவே, சில நண்பர்கள் கோரியபடி அருஞ்சொற்பொருளையும் பாடலுடன் தந்தேன், ஆனால் பல நாட்களில் (குறிப்பாக, வெளியூரிலிருந்து செல்பேசிமூலம் பாடல்களைப் பதிவு செய்யும்போது) அது சாத்தியமில்லாமல் போனது. இந்நிலையில், இப்பாடல்களைத் தொகுக்கும் எண்ணம் வந்தபோது, உரையையும் சேர்த்துத் தரலாம் என்று யோசித்தேன், இதனால் இன்னும் சிலர் (முன்பு தயங்கி விலகியவர்கள்) வாசிப்பார்கள் என்ற ஆசைதான். ஆசைபற்றி அறையலுற்றவர்களெல்லாம் கம்பனாகிவிடமுடியாது, எனினும், ஆசைவிடக் கற்றுத்தருபவரைப்பற்றிப் பாட ஆசைப்படுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். என்னாலியன்ற சிறு முயற்சி இது. சரியோ, பிழையோ, இனி இது என்னதில்லை.   என். சொக்கன் நவம்பர் 15, 2017  அணிந்துரை   சிவக்கனியின் சாரமுண்ணும் தாகத்தின் ஈரவுணர்வையே பக்தி என்பர். பல்லாயிரம் ஆண்டுகளாய் சொல்லாயிரம் ஆண்ட அருளாளர்களின் உயிரெழுத்துகள் "சிவம்" எனும் மூன்றெழுத்துகள். அந்த சிவலஹரியில் ஆழும் ஆவலும் அளவிலாக் காதலும் கொண்ட நண்பர் சொக்கன் சிவபெருமானுக்கு சார்த்தியுள்ள பாமாலைகள் இந்தப் பாடல்கள். இலக்கணத்தில் பற்பல அணிகள் உள்ளன .அவற்றில் தலையாயது தற்குறிப்பேற்ற அணி. ஆனால் பக்திக் கவிதையில் அணியிலக்கணத்தைத் தாண்டி பணிவிலக்கணம் பரிமளிக்கும். சிவன் யானையின் தோலை உரித்த காரணத்தை தற்குறிப்பேற்றமாய் கொண்டு பாடும் சொக்கன், உஆனைத்தோல் போலவே தன் உள்ளமும் சிவனுக்குப் பயன்படுமா என்று பரிசீலிக்க மன்றாடுகிறார்.    மதம்பிடித்து ஓடிவந்த மாத்தோலைத் தானுரித்தாய்,  கதகதப்பு தேடினையோ கயிலைமலைக் குளிரினிலே?  இதயமெனக் கல்கொண்ட என்தலையில் மலரடிகள் பதமாக வைத்திடய்யா பாதந்தேய் பாறையென.   இதே சம்பவத்தை உணர்த்தும் இன்னொரு பாடல் இவரின் தொகுப்பில்..   வல்லானைத் தோலுரித்த வள்ளலவன், கடல்தந்த  அல்வண்ணத்(து) ஆலத்தை அருந்தியவன், நால்வருக்குக்  கல்லாலின் கீழ்,ஞானம் கற்பித்தோன், நாற்புலவர்  சொல்லைத்தன் இல்லென்ற சோதியினை வாழ்த்துதுமே!   திரும்பத் திரும்ப பாடி ரசிக்கத்தக்க பாடல். இதில் முதல் வரியைப் பாருங்கள்.   வல்லானைத் தோலுரித்த வள்ளலவன்   இதற்கு, வல்லமை மிக்க யானையைத் தோலுரித்தவன் என்றும் ஒரு பொருள். தன்  வல்லமை பேசித் திரிபவர்களைத் தோலுரிப்பவன் என்றும் ஒரு பொருள்.  பழைய புராணத் தொன்மங்களை புதிய மொழியில் சுகமாக சொல்லும் பாங்கு சொக்கனிடம் உள்ளது. அரியும் அயனும் அடிமுடி தேடியதை இப்படிச் சொல்கிறார் இவர்   உயர்ந்தவர் எவரென உரசிய இருவரும் மயங்கிடச் சுடரொளி மலையென வளர்ந்தவன்,  அயர்ந்தவர் பணிந்ததும் அருள்மழை பொழிந்தவன்,  இயங்கிடும், உறைந்திடும் எதனிலும் இருப்பவன்.    ஒரே சொல் திரும்பத் திரும்ப வந்து வேறுவிதமான பொருள்தரும்படி பாடுகிற முறைமை ஒன்றுண்டு. அந்த உத்தியையும் சொக்கன் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார்.   அம்பலத்துப் பெருமானார் ஆனந்த நடமாட,  அம்பனைய கூர்விழியாள் அதைரசித்துக் களித்திருக்க,  அம்பணையும் திருச்சடையும் அவரோடு சேர்ந்தாட,  அம்பரமன் என்றேத்தி அன்பரெல்லாம் கரங்குவிக்க,    அம்பெடுத்துப் புரமெரித்த அழகுவிரல் முத்திரையும் அம்பலத்தை ஆளுகின்ற அருட்தாளின் அடவுகளும் அம்பு,மதி அவருடனே அபினயிக்கும் பேரெழிலும்  அம்பரமன் நடங்கண்டு அடியோங்கள் உருகுவதும்   ஆனால் ஒரே பாடலில் ஒவ்வோர் அடியிலும் வேறுபொருட்கள் தரும் ஒரே சொல்லைப் பயன்படுத்த முற்பட்டு அந்த முயற்சி முற்றுப் பெறாமல் விட்டு விட்டதுதான் ஏனென்று புரியவில்லை.     நதிச்சடையன் பேர்சொல்ல நதிவிழியில் பாய்வதென்ன,  மதிச்சடையன் புகழ்சொல்ல மதிபெருகி உயர்வதென்ன,  கதிச்சடையன் சீர்சொல்லக் கழல்வேட்கை மலர்வதென்ன,  பதிச்சடையன் ஊர்சொல்லப் பணிந்துமனம் நெகிழ்வதென்ன!   இந்தப் பாடலில் முதலடியி,ல் நதி எனும் சொல் இருமுறையும் ஒரே பொருளில் வருகிறது. இரண்டாம் அடியில் மதி எனும் சொல் இருவேறு பொருள் தருகிறது.   இதனால் உந்தப்பட்டு அடுத்த இரண்டடிகளை என்போக்கில் எழுதிப் பார்த்தேன்   கதிச்சடையன் சீர்கழல்கள் கதியெனவே கிடைத்ததென்ன பதிச்சடையன் திருவடிகள் பதித்தமனம் நெகிழ்வதென்ன   இந்தத் தொகையில் உள்ள பாடல்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது   விண்ணவரும் பல்முனியும் வேண்டுகிற பொன்னுருவன்,  பெண்ணையிடங் கொண்டகுரு, பேதமிலி, ஞானமழை,  மண்சுமந்து பிட்டுவந்த மைக்கழுத்தன், ஆலருந்தி,  வண்டுகளைப் போல்பரமன், வள்ளலடி மொய்த்திடுவம்.    இறைவனின் இணையிலாப் பெருமைகளை உருகி உருகிச் சொல்லிக் காட்டும் சுகமான கவிதை இது. சிவனின் பெருமையில் ஈடுபட்டவர்கள் அந்தத் திருக்கருணையில் திளைக்கும்படி அடுத்தவர்களை ஆற்றுப்படுத்துவது திருவருள் மரபு. இதற்குபல்விதமான முன்னுதாரணங்கள் உண்டு. சொக்கனும் அந்த சீர்மரபில் நின்றிசைக்கும் சீர்மையினைக் காணுங்கள்   தண்ணிலவு, பூமியொடு தகிக்கின்ற சூரியனைப்  பண்ணியவர் யாரெங்கள் பரமனெனப் பேசுங்கள்,  உண்ணுகிற, அருந்துகிற உயர்ந்தபொருள் அத்தனையும்  புண்ணியவர் செய்ததிறம் புவியறியப் பாடுங்கள்.   கண்ணியமும் பல்லுயிர்மேல் கசிகின்ற அன்புகொண்ட தொண்டரென நமையாக்குந் தூயவனைப் போற்றுங்கள்,  கண்ணொன்றை உளத்துக்குள் கட்டமைத்தே இருளகற்றும் வெண்சிகரத் தமர்ந்தகுரு, வேளடிகள் பணியுங்கள்    நண்பர் சொக்கனின் இந்த முயற்சி சிவ அன்பர்களாலும் கவியன்பர்களாலும் பெரிதும் போற்றப்படும் என்பதில் ஐயமில்லை . அவர்க்கென் வாழ்த்துகள்   சக்கரங்கள் ஆளுகின்ற சங்கரனாம் யோகியனை தக்கபடி கொண்டேத்தி தாள்பணிந்து தமிழ்செய்யும் சொக்கனெனும் பேரன்பர் சொல்மாலை தனையுகந்தே மிக்கபல அருள்செய்வான் மீனாட்சி சுந்தரனே   அன்புடன் மரபின் மைந்தன் முத்தையா     காப்பு   நாடுபுகழ் நர்த்தனனின் நற்பெருமை நான்சொல்லக் கோடுடைய பெருஞ்செவியன் குரைகழல்கள் பணிகின்றேன்,  பாடுபொருள் சிறப்பினைப்போல் பாடலுந்தான் சிறந்திடற்குத் தேடுகிறேன் அவனாசி, திறன்தருவாய் எனவேங்கி.    நாடுகளனைத்தும் புகழும்படி நர்த்தனமாடும் சிவபெருமானின் நற்பெருமையைச் சொல்வதற்காக, தந்தத்தையுடைய, பெரிய செவிகளைக்கொண்ட விநாயகரின் ஒலியெழுப்பும் வீரக்கழல்களை அணிந்த பாதங்களைப் பணிகிறேன்,   இங்கே நான் பாடவந்த பொருள் (சிவபெருமானின் பெருமைகள்) சிறந்தது, அதைப்போல என்னுடைய பாடலும் சிறக்கவேண்டும், அதற்காக விநாயகரின் ஆசிகளை நாடுகிறேன், பாடும் திறனை வழங்குமாறு அவரிடம் ஏங்கிநிற்கிறேன்.    நூல்   1   காட்டிலொரு வேடனிடம் கண்பெற்றாய், மும்மதில்சூழ்  நாட்டினையே துல்லியமாய் நசுக்கிடவோ? ஆங்கொருநாள்  பாட்டெழுதும் புலவனையுன் பணியாளாய் வழக்குரைத்தாய்,  ஏட்டினிலே அவனுன்றன் இன்புகழைப் பாடிடவோ?    பெருமானே, காட்டிலே வேடனான கண்ணப்பரிடம் ஒரு கண்ணைப் பெற்றாயே, எதற்காக?   மூன்று மதில்களால் சூழப்பட்ட நாட்டை(முப்புரங்களை)த் துல்லியமாக அழித்திடத்தானோ?   அன்றொருநாள், பாட்டெழுதும் புலவனாகிய சுந்தரனை உன்னுடைய பணியாளாக அறிவித்து வழக்குரைத்தாயே, எதற்காக?   ஏட்டினிலே சுந்தரன் உன்னுடைய இனிய புகழைப் பாடுவதற்காகத்தானோ?     2   மதம்பிடித்து ஓடிவந்த மாத்தோலைத் தானுரித்தாய்,  கதகதப்பு தேடினையோ கயிலைமலைக் குளிரினிலே?  இதயமெனக் கல்கொண்ட என்தலையில் மலரடிகள் பதமாக வைத்திடய்யா பாதந்தேய் பாறையென.   பெருமானே, மதம் பிடித்து ஓடி வந்த யானையின் தொலை உரித்தாயே, எதற்காக?   கயிலைமலையின் குளிருக்குக் கதகதப்பைத் தேடித்தானோ?   கல்மனம் கொண்ட என்னுடைய தலையிலே உன்னுடைய மலரடிகளைப் பதமாக வைத்திடுவாய், உன்னுடைய பாதங்களைத் தேய்க்கிற பாறையாக என் தலையைக் கருதிக்கொள்வாய்.      3   வல்லானைத் தோலுரித்த வள்ளலவன், கடல்தந்த  அல்வண்ணத்(து) ஆலத்தை அருந்தியவன், நால்வருக்குக்  கல்லாலின் கீழ்,ஞானம் கற்பித்தோன், நாற்புலவர்  சொல்லைத்தன் இல்லென்ற சோதியினை வாழ்த்துதுமே!   வலிய யானையின் தோலை உரித்த வள்ளல், பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த, இருளின் வண்ணம் கொண்ட நஞ்சை அருந்தியவன், கல்லால மரத்தின்கீழ் நான்கு முனிவர்களுக்கு ஞானம் கற்பித்தவன், அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு புலவர்களின் சொல்லையே தன்னுடைய இல்லமாகக் கொண்ட சோதி, அப்பெருமானை வாழ்த்துவோம்.      4   மலைமன்னன் மகள்கொஞ்சும் மாதேவன், முப்புரங்கள்  சிலையின்றிச் சிரிப்பாலே சிதறடித்தோன், அன்பென்னும்  வலைக்குள்ளே தான்சிக்கும் வாளைமீன், வினைக்கடலில்  அலைக்கழியும் சகலருக்கும் அருள்கின்ற தோணியப்பர்!   மலையரசன் மகளாகிய அன்னை கொஞ்சுகிற மாதேவன், முப்புரங்களை வில்லின் துணையின்றிச் சிரிப்பாலே சிதறடித்தவன், அன்பு என்கிற வலைக்குள்ளேமட்டுமே சிக்குகின்ற வாளைமீன், வினைகள் என்னும் கடலிலே அலைக்கழிகின்ற அனைவருக்கும் அருள்புரியும் தோணியப்பர்.      5   ஏறூரும் செல்வன், ஏழைபங் காளன்,  நீறூரும் நெற்றியில் நிலைக்கின்ற தேவன்,  ஆறூரும் சடையன், ஆரூரின் இறைவன்,  வேறூரும் உவப்பன், விழிமூன்றன், பரிவன்.    காளையைத் தன் வாகனமாகக் கொண்ட செல்வன், உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவன், திருநீறு அணிந்த நெற்றியிலே நிலைக்கின்ற தேவன், கங்கை என்னும் நதி பாய்கிற திருச்சடையைக்கொண்டவன், ஆரூரில் எழுந்தருளியிருக்கும் இறைவன், பிற சிவத்தலங்களிலும் மகிழ்ந்து தங்குகிறவன், முக்கண்ணன், அன்பானவன்.      6   பிறையொன்றை அணிந்தோன், பெருந்தேவி தழுவும்  கறைகண்டன், விண்ணோர் கரைகாணாப் பெரியோன்,  மறையாவும் போற்றும் மாதேவன், நெஞ்சில்  நிறைகின்ற அமுதன், நெகிழ்க்கின்ற அருளன்.    திருச்சடையிலே பிறைநிலவை அணிந்தவன், பெருந்தேவியாகிய மலைமகள் தழுவுகின்ற பெருமான், திருக்கழுத்திலே கறையை அணிந்தவன், விண்ணோராலும் முழுக்க அறிய இயலாத பெரியோன், வேதங்கள் அனைத்தும் போற்றுகின்ற மாதேவன், நெஞ்சில் நிறைந்த அமுதாகத் திகழ்பவன், உள்ளத்தை நெகிழச்செய்யுமளவு அருளைப் பொழிகிறவன்.      7   ஐஅம்பு கொண்டுவந்தான் அன்றொருநாள் மன்மதன்,  வைஅம்பு கொண்டுவந்தான் வல்லவனாம் பார்த்தன்,  தைஅம்பு அவையாவும் தளிர்போலத் துவளவும் கைஅம்பு இருந்தென்ன, கடைசியிலே தோற்றார்.    அன்றைக்கு மன்மதன் ஐந்து (மலர்) அம்புகளைக் கொண்டுவந்தான், பின்னர் ஒருநாள், வல்லவனாகிய அர்ஜுனன் கூர்மையான அம்பைக் கொண்டுவந்தான்,   அவர்கள் கொண்டுவந்த அம்புகளெல்லாம் எதிரிகளின் மேனியில் தைக்கக்கூடியவை, ஆனால், அவை சிவபெருமான் முன்னே தளிர்போலத் துவண்டன, ஆகவே, கையில் அம்பு இருந்தும், அவர்கள் தோற்றுப்போனார்கள்.      8   மலரம்பும் இரும்பம்பும் மாதேவன் முன்னே பலங்கெட்டுத் தோற்றிந்தப் படிவீழும் நேரம்,  குலங்காக்கும் மலையம்மை கோலவிழி அம்பால் உலகாளும் உமைவென்றாள், உயர்வன்றோ அன்பு!    மன்மதனின் மலர் அம்பும், அர்ஜுனனின் இரும்பு அம்பும் மாதேவனாகிய சிவபெருமான் முன்னே பலம் கெட்டுத் தோற்றுக் கீழே விழுந்தன,   ஆனால் அதே நேரத்தில், நம் குலங்களைக் காக்கும் மலையம்மையின் அழகிய விழிகள் என்னும் அம்புகள் சிவபெருமானை வென்றன, உலகாளும் உமையம்மை சிவபெருமானைத் தன் அன்பால் வென்றாள்,   மற்ற அனைத்தையும்விட, அன்பல்லவா உயர்வானது!      9   பாய்நதி கொள்சடை, பக்கலில் ஓர்விடை,  காய்விழி நெற்றியில், கைமறி, உடன்எரி,  தூய்மலர்த் திருவடி, துடியிடை அரைமடி,  தோய்கிற வெண்பொடி, தொழுபவர் உய்பிடி.    பாய்கின்ற நதியாகிய கங்கையைக் கொள்ளுகின்ற திருச்சடை, பக்கத்தில் காளை வாகனம், திருநெற்றியிலே கோபத்தைக் காட்டும் நெற்றிக்கண், கையில் மான் குட்டி, நெருப்பு, தூய மலர்களைப்போன்ற திருவடி, உடலில் பாதி, துடி போன்ற இடை (மலைமகள்), திருமேனியெங்கும் திருநீறு தோய்ந்திருக்கிறது, அத்தகைய பெருமானைத் தொழுது பற்றுபவர்கள் உய்வார்கள்.      10   ஆல்நிழல் அமர்வரம், ஆனையும் நல்லுடை,  சேல்விழி மலைமகள் சேர்கிற தோளெழில்,  தோல்புலி அணிபரம், துள்ளிடும் ஓர்நடம்,  சால்புகள் ஒருதிரள் சங்கரத் திருவுரு.   கல்லால நிழலின்கீழ் அமர்கிற வரம், ஆனையின் தோலே நல்ல உடை, மீன்போன்ற கண்களையுடைய மலைமகள் சேரும் அழகிய திருத்தோள்கள், புலித்தோலை அணிகிற உயர்ந்த தன்மை, துள்ளி ஆடும் திருநடனம், சிறப்புகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்த சங்கரரின் திருவுருவம் இது.      11   உயர்ந்தவர் எவரென உரசிய இருவரும் மயங்கிடச் சுடரொளி மலையென வளர்ந்தவன், அயர்ந்தவர் பணிந்ததும் அருள்மழை பொழிந்தவன், இயங்கிடும், உறைந்திடும் எதனிலும் இருப்பவன்.   ஒருமுறை பிரமனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே ‘நம்மில் உயர்ந்தவர் யார்?’ என்கிற கேள்வி எழுந்தது. அப்போது, அவர்கள் இருவரும் மயங்கும்படி சுடரொளி மலையாக வளர்ந்து நின்றார் சிவபெருமான்,   அதைக்கண்டு மயங்கி, அயர்ந்த அவர்கள் இருவரும் பணிந்து வணங்கினார்கள், உடனே அவர்களுக்கு அருள்மழை பொழிந்தார் சிவபெருமான்,   இப்புவியில் இயங்குகிற, உறைந்து நிற்கிற அனைத்திலும் இருப்பவர் அவரே.      12   பனிமலை அமர்ந்தவன், பரவச நடமிடும் தனியொரு சிறப்பினன், தருநிழல் முனிவருக்(கு) இனியன வழங்கினன், இசையொடு தமிழினில் கனிரசக் கவிசொலக் கனிகுவன் மகிழ்ந்தவன்.   பனிமலையில் அமர்ந்தவர், பரவச நடனம் ஆடும் தனிச்சிறப்பைக் கொண்டவர், கல்லால நிழலிலே அமர்ந்த முனிவர்களுக்கு இனிய ஞானத்தை வழங்கினார், இசையோடு கலந்த தமிழ்ப்பாடல்களைப் பழச்சாறுபோல் இனிமையாகப் பாடினால், மகிழ்ந்து கனிபவர்.      13   தொழுதிடும் பத்தரின் துயர்கெடத் தனியொரு மழுவுடன் தாவிடும் மரையதைக் கரங்கொளும் முழுமுதல், மலைமகள் முதல்வியை இடங்கொளும் விழுமிய தேவனின் விரைமலர் அடிபணி   தொழுதிடும் பக்தர்களின் துயரத்தை நீக்குவதற்காக, தனித்துவமான மழு, தாவும் மான்குட்டி ஆகியவற்றைக் கரத்தில் ஏந்திய முழுமுதல் தெய்வம், அனைத்துக்கும் முதல்வியான மலைமகளை இடப்புறத்திலே கொண்ட சிறந்த தேவன், அவருடைய நறுமணம் மிகுந்த, மலர்போன்ற திருவடிகளைப் பணிவோம்.      14   இரண்டொடு மூவரில் இடைவரு இளைஞனைச் சரத்தினில் வென்றவன், சகம்வெலும் கருவியைக் கரத்தினில் தந்தவன், கணம்பல உடன்வரு பரகதி, தூயவள் பருகிடும் பெருநதி.   பஞ்ச பாண்டவர்களிலே நடுவில் உள்ளவனான அர்ஜுனனை விற்போரில் வென்றவன், உலகை வெல்லும் ஆயுதங்களை அவனுக்குத் தந்தவன், சிவகணங்களோடு வருபவன், நமக்கு வீடுபேற்றை அருள்பவன், தூயவளான மலைமகள் பருகுகின்ற சிறந்த நதி.      15   காமனை எரித்தனை கனற்கண்ணால், அறுமுகன் மாமனை அனுப்பினை மலரடிகள் தேடவே, பூமனைப் புனிதனும் புகழ்முடியைத் தேடினன், ஆமனை நீ,பெரு அத்தனும்நீ என்றனர்.   பெருமானே, உன்னுடைய நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட கனலைக்கொண்டு மன்மதனை எரித்தாய், அறுமுகன் முருகனின் மாமனாகிய திருமாலைப் பூமிக்குள் அனுப்பி உன்னுடைய மலர்த் திருவடிகளைத் தேடச்செய்தாய், பூவை இருப்பிடமாகக் கொண்ட புனிதனாகிய பிரமன் உன்னுடைய புகழ் நிறைந்த திருமுடியைத் தேடினான், பின்னர் இவர்கள் மூவரும், ‘ஆம், எங்கள் தாய் நீ, பெரிய தந்தையும் நீ’ என்று வணங்கினார்கள்.      16   வில்லொடு வந்தஅவ் விசயனுந்தான் தோற்றனன், கல்லன தோளிலே கயிலையினைத் தூக்கிய வல்லவன் தசமுகன் வணங்கியிசை பாடினன், மெல்லியள் கூறனே, மென்னாத்தித் தாரனே.   வில்லோடு வந்த விஜயன்/அர்ஜுனனும் உன்னிடம் தோற்றான், மலைபோன்ற தோள்களிலே கயிலை மலையைத் தூக்கிய வல்லவன் தசமுகன்/ராவணனும் உன்னிடம் தோற்று வணங்கினான், இசைபாடி வாழ்த்தினான்,   மெல்லியளான மலைமகளை இடபாகத்தில் கொண்டவனே, மென்மையான ஆத்திமலரில் தொடுத்த மாலையைச் சூடியவனே, வணங்குகிறோம்.      17   பூசிய வெண்ணீறும், பூண்டநற் பாம்பினமும், பேசிய நல்லறமும், பெய்வளை அருட்கரமும், தீ,சிறு மான்மறியும், தேசுடை கருங்கழுத்தும் கூசிட என்விழிகள் குருதனைக் காண்பதென்றோ?   பெருமானே, என் குருநாதரே, நீ பூசிய திருநீறையும், அணிந்திருக்கும் பாம்பினங்களையும், பேசுகிற நல்லறத்தையும், நெருங்கிய வளையல்களை அணிந்த மலைமகளின் அருட்கரத்தையும், திருக்கையில் ஏந்திய தீ, சிறு மான் குட்டியையும், ஒளிநிறைந்த, கரிய கறையையுடைய திருக்கழுத்தையும் கண்டு என் கண்கள் கூசும் நாள் என்றைக்கோ!      18   அரக்கனை நசுக்கியஅவ் அழகிய திருவிரலும் இரந்திடத் தலையெடுத்த எழிலுடைத் திருக்கரமும் சரவணன் சொலக்கேட்டுச் சரியெனும் திருத்தலையும் வரமெனக் கண்டெளியேன் வணங்கிடும் நாளென்றோ?   பெருமானே, அரக்கனான ராவணனை நசுக்கிய உன்னுடைய அழகிய திருவிரலையும், பிட்சைக்கோலத்தில் மண்டையோட்டை ஏந்தி வந்த அழகு மிகுந்த திருக்கரங்களையும், சரவணன் சொன்ன பாடத்தைக் கேட்டுச் ‘சரி’ என்று அசைந்த திருத்தலையையும் வரமாகக் கண்டு, எளியவனான நான் வணங்கும் நாள் என்றைக்கோ!      19   ஆற்றைச் சடைகொள்,ஐ ஆற்றை இடங்கொள் கூற்றை உதைத்தநல்ல கோனைத் துதிக்க ஏற்றம் வாழ்விலுண்டு, ஏறூர் புனிதன் நீற்றைத் துணைகொள்,போம் நீசப் பிறப்பு   கங்கையைத் திருச்சடையிலே கொண்டவன், திருவையாற்றைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன், கூற்றுவனை உதைத்த நல்ல தலைவன், சிவபெருமான்,   அத்தகைய பெருமானைத் துதித்தால், வாழ்வில் ஏற்றம் உண்டு,   காளையை வாகனமாகக் கொண்ட புனிதனான சிவபெருமானின் திருநீற்றைத் துணையாகக் கொள்ளுங்கள், இழிவான பிறவி நோய் தொலைந்துபோகும்.      20   மாயச் சுழல்சிக்கு மாந்தர் துதிக்க நேயம் உவந்தளிக்கும் நீலக் கழுத்தன், தாயன், தந்தையவன், தையல் கொழுநன், காயச் சிறையறுத்துக் காக்கும் தலைவன்.   மாயச் சுழலாகிய வாழ்க்கையிலே சிக்கிக்கொண்ட மனிதர்கள் சிவபெருமானைத் துதிக்க, அவர் மகிழ்ந்து அவர்கள்மேல் நேசம் வைப்பார், நீலக் கழுத்தர், நமக்குத் தாயாகவும் தந்தையாகவும் திகழ்பவர், மலைமகளின் கணவர், உடல் என்னும் சிறையை அறுத்து(பிறவிநோயைப் போக்கி)க் காக்கும் தலைவர்,     21   அரன்கோயில் முன்னாலே ஆன்றோரின் நல்வரிசை, பரம்பொருளின் தாள்பற்றிப் பனிங்குங்கண் நீர்வரிசை, வரங்கேட்கத் தோன்றாமல் வணங்குகின்ற கைவரிசை, சரஞ்சரமாய்ப் பூவரிசை, சந்தனத்துத் தேன்வரிசை.   சிவபெருமான் கோயில் முன்னே சிறந்த ஆன்றோர்கள் வரிசையில் நிற்கிறார்கள்,   பக்தர்கள் பரம்பொருளாகிய சிவபெருமானின் திருவடிகளைப் பற்றிக் கண்கள் பனிக்க நிற்கிறார்கள்,   இன்னும் சிலர் சிவபெருமானைப் பார்த்தவுடன் வரமேதும் கேட்கத் தோன்றாமல் வணங்கி நெகிழ்கிறார்கள்,   இன்னொருபக்கம் வரிசையாகப் பூமாலைகள், சந்தனம், தேன்குடங்கள்.    இவ்வாறு சிவன் ஆலயத்தின்முன் பல வரிசைகள் உள்ளன.     22   சிவன்பேரைச் சொல்லிமகிழ் சிறுபறவைச் சீர்வரிசை, நவநவமாய்ப் புலவர்செய் நற்பாடல் சீர்வரிசை, அவன்பேரே கொம்பென்று அகமகிழுங் கொடிவரிசை, தவமுனிவர் மாவரிசை, தரையாளும் கோவரிசை.   சிவபெருமான் கோயில் முன்னே அவர் பெயரைச் சொல்லி மகிழும் சிறு பறவைகள் சிறப்பாகப் பறக்கின்றன,   புலவர்கள் சிவனைப்பற்றிப் புதிய புதிய பாடல்களை நன்கு பாடுகிறார்கள், அவற்றில் சீர்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன,   நந்தவனத்தில் வளர்ந்திருக்கும் கொடிகளெல்லாம், ‘சிவன் பெயரே எங்களுக்குப் பற்றுக்கொம்பு’ என்று படர்ந்து நிற்கின்றன, உள்ளே மகிழ்கின்றன.    இன்னொருபக்கம் தவ முனிவர்கள் நீண்ட வரிசையில் நின்று வணங்குகிறார்கள், பூமியை ஆளும் தலைவர்களும் வரிசையில் நின்று துதிக்கிறார்கள்.    இவ்வாறு சிவன் ஆலயத்தின்முன் பல வரிசைகள் உள்ளன.     23   அதிவிரை வுடன்வரு அருநதி சடைமுடி கதியினை, அவன்திருக் கழலினை, அருளினைப் பதிமனம் தனில்தினம், பருவதன் மகளவள் பதியவன் பெயர்சொலப் பரவசம் மிகமிக.   அதிவேகமாக வரும் அரிய நதியாகிய கங்கையைச் சூடிய திருச்சடையைத் திருமுடியாகக் கொண்ட பெருமான், நமக்குக் கதியானவர், அவருடைய கழலணிந்த திருவடிகளை, அவர் தரும் திருவருளைத் தினந்தோறும் மனத்தில் பதிப்போம்,   மலையரசன் மகளாகிய பார்வதியின் கணவன், சிவபெருமானின் பெயரைச் சொல்வோம், பரவசம் மிகும்.      24   மதியதன் சிறுதுளி மகிழ்வுடன் அணிந்தவன் மதிதர அகம்வரும் மலைமகள் மணமகன், கொதிவிடம் அருந்தியிக் குவலயம் அளித்தவன், உதிசுடர் நினைத்திட உருகுவம் நெகநெக   சிறு பிறைநிலவை மகிழ்வோடு அணிந்தவன், நமக்கு நல்ல அறிவைத் தருவதற்காக நமக்குள் வரும் மலைமகள் கணவன், கொதிக்கின்ற (கொடுமையான) நஞ்சை அருந்தி இந்த உலகத்தைக் காத்தவன், உதிக்கின்ற சுடர்போல் பிரகாசமானவன், அப்பெருமானை நினைத்ததும் நம் நெஞ்சம் நெகிழ்ந்துபோய் உருகும்.      25   நன்மைச் சுடருருவம், நல்லோர் சேர்துருவம், புன்மை போக்குகரம், பூதத் தலைச்சிகரம், வன்மை அளிக்கின்றோன், வையம் அளிக்கின்றோன், நன்மைக் கழுத்துடையான், நங்கள் மறைத்திருவோன்.   நன்மையின் திருவுருவமான சுடர்வடிவானவன், நல்லோர் சேரும் இடமானவன், சிறுமையைப் போக்கும் திருக்கரம், பூதகணங்களின் உயர்ந்த தலைவன், வல்லமையைத் தருகிறவன், உலகத்தைக் காக்கிறவன், நல்ல, கறை படிந்த திருக்கழுத்தைக் கொண்டவன், நமக்கு வேதம் என்னும் செல்வத்தை வழங்கியவன்/வேதத்தால் போற்றப்படும் செல்வன்.      26   நடனச் சபைத்தலைவன், நதியைச் சடைகரப்போன், இடத்தே மலைமகளாம், இதழில் மறைமொழியாம், சுடராம் மலையொளியாம், சுரர்க்கும் அரிதாவோன், மிடற்றில் கறைகொண்டான், மேன்மைப் பறைதருவான்.   நடனசபையின் தலைவன், கங்கை நதியைத் திருச்சடையிலே ஒளித்தவன், இடப்புறம் மலைமகள், அவனுடைய திருவாயிலே வேதமொழி, சுடரான ஒளிமலை வடிவமெடுத்தவன், தேவர்களாலும் அறிய இயலாத அரியவன், திருக்கழுத்தில் கறையைக் கொண்டவன், உயர்ந்த பொருட்களைத் தருபவன்.      27   சீதக் கடல்வரு செந்தீயாம் நஞ்சுண்ட வேதப் பொருள்பதம் வேரென்று நாம்பற்ற நாதப் பரம்பொருள், நடராஜன் உளத்திருந்து மீதப் பிறவிகள் மிஞ்சாமல் நறுக்கிடுவன்.   குளிர்ந்த கடலிலே சிவந்த தீயைப்போல் வந்த நஞ்சை உண்ட வேதப்பொருள், அவருடைய திருவடிகளை வேராகக் கருதி நாம் பற்றினால், அந்த நாதப் பரம்பொருள், நடராஜன் நம் உள்ளத்தில் அமர்வார், மீதமுள்ள நம் பிறவிகள் ஒன்றுகூட மிஞ்சாதபடி நறுக்கிடுவார்.      28   ஆனை உரியணி ஆனைக்கா கோன்பேரே தானை எனக்கொளத் தரமுயரும் செயுமெதிலும், மானை இடமென மகிழ்ந்தணைக்கும் மாதேவத் தேனை நுகர்வரம் தித்திக்கும் பெருந்தவமாம்.   யானையின் தோலை அணிந்த பெருமான், திருவானைக்கா நகரிலே எழுந்தருளியிருக்கும் தலைவன், அவருடைய பெயரே நமக்குத் துணை என்று எண்ணுவோம்,   அவ்வாறு எண்ணினால், நாம் செய்பவை அனைத்தும் தரமானபடி அமையும்,   மான்போன்ற மலைமகளை இடப்புறத்திலே மகிழ்வோடு அணைக்கின்ற மாதேவனாகிய தேனை அனுபவிக்கும் வரம் நமக்குக் கிடைத்தால், அதுவே தித்திக்கும் பெரிய தவமாகும்.      29   கரங்கூப்ப, உளங்கனிய களிப்போடு மனந்துள்ள, சிரந்தாழ்த்த, மும்மலமும் சேணோட, மதிமலர, சரஞ்சரமா மகிழ்விழிநீர் சலம்போக்கி உவப்பாக்க, நிரந்தரமா இப்பேறு நீர்தருவீர் எனவேண்ட   பெருமான்முன் கரம் கூப்ப, உள்ளம் கனிய, மகிழ்ச்சியோடு மனம் துள்ள, தலை குனிந்து வணங்க, மூன்று மலங்களும் தூரத்தில் ஓட, அறிவு மலர, ஆனந்தக் கண்ணீர் சரம்சரமாகக் கொட்டி, கோபங்களைப் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவர, ‘இந்த வரம் நிரந்தரமாக வேண்டும், அதற்கு நீங்கள் அருளவேண்டும்’ என்று நாம் வேண்டுவோம்.      30   நதிச்சடையன் பேர்சொல்ல நதிவிழியில் பாய்வதென்ன, மதிச்சடையன் புகழ்சொல்ல மதிபெருகி உயர்வதென்ன, கதிச்சடையன் சீர்சொல்லக் கழல்வேட்கை மலர்வதென்ன, பதிச்சடையன் ஊர்சொல்லப் பணிந்துமனம் நெகிழ்வதென்ன!   திருச்சடையிலே கங்கை நதியைக் கொண்ட பெருமானின் பெயர் சொன்னால், விழியிலே நதி (ஆனந்தக் கண்ணீர்) பாய்கிறதே,   திருச்சடையிலே பிறை நிலவைக் கொண்ட பெருமானின் புகழைச் சொன்னால், அறிவு பெருகி உயர்வு தோன்றுகிறதே,   நமக்கெல்லாம் கதியாகத் திகழும் திருச்சடையனின் சிறப்பைச் சொன்னால், அவருடைய கழலணிந்த திருவடிகள்மேல் வேட்கை மலர்கிறதே,   தலைவனாகிய அந்தத் திருச்சடையனின் திருத்தலங்களைச் சொன்னால், மனம் பணிந்து நெகிழ்கிறதே,     31   உமையொரு பாகன், உத்தமன், சோதி அமைதிரு மேனி அற்புதன், அன்பர் தமைக்குறை இன்றித் தாங்குவன், தாளை இமைவிட எண்ணா இருதயம் ஈவன்.   உமையொருபாகன், உத்தமன், சோதி நிறைந்த திருமேனின் அற்புதன், அன்பர்களைக் குறையின்றித் தாங்குவான், அவனுடைய திருவடிகளை இமைப்பொழுதும் விலக எண்ணாத இதயத்தை நமக்குத் தருவான்.      32   கரத்தினில் மான்கொள் காவலன், கங்கைச் சிரத்தினில் கொன்றை சிரிப்பவன், தொண்டர் வரத்தினில் மகிழும் வல்லவன், ஈயும் வரத்தினில் வள்ளல், வான்தொழும் ஒருவன்.   கரத்தினில் மானை ஏந்திய காவலன், கங்கை நதி பாயும் அவனுடைய திருமுடியிலே கொன்றை மலர் சிரிக்கிறது, தொண்டர்களின் வரவை எண்ணி மகிழும் வல்லவன், வரம் அளிப்பதிலே வள்ளல், வானே வணங்கித் தொழும் இணையற்றவன்.      33   அண்ணலவன் சூடுதற்கு ஆத்திமலர் நாம்பறிப்போம், வண்ணமுள பன்மலர்கள் வகைவகையாய்த் தேர்ந்தெடுப்போம், எண்ணமதைத் தெளிவாக்கும் ஏந்திழைகோன் தாள்களிலே தண்கமலம், நல்லல்லித் தங்கமலர் பொழிந்திடுவோம்.   அண்ணலாகிய சிவபெருமான் சூடுவதற்கு ஆத்திமலர்களை நாம் பறிப்போம், இன்னும் பல அழகுமிக்க மலர்களை வகைவகையாகத் தேர்ந்தெடுப்போம், நம்முடைய எண்ணத்தைத் தெளிவாக்கும் பெருமான், அழகிய நகைகளை ஏந்திய மலைமகளின் தலைவன், அவனுடைய திருவடிகளிலே குளிர்ந்த தாமரை, நல்ல அல்லி போன்ற தங்க மலர்களைப் பொழிவோம்.      34   செம்பருத்தி, மல்லிகையும், சிரிப்பொத்த முல்லையுடன் நம்மன்பைக் கோத்திட்டால் நாயகனும் விரும்பிடுவான், இம்மையுடன் மறுமைக்கும் இதஞ்சேர்க்கும் நாதனைநாம் நம்பிமனம் கசிகையிலே நலம்மலரும், உளம்சிறக்கும்.   செம்பருத்தி, மல்லிகை, மலைமகளின் சிரிப்பை ஒத்த முல்லை ஆகியவற்றோடு நம் அன்பையும் கோத்து மாலையாக இடுவோம், அதை நம் நாயகன் விரும்புவான்,   இந்தப் பிறவிக்கும் இதன்பிறகு வரும் மறுமைக்கும் இன்பம் சேர்க்கும் நாதனை நாம் நம்பி மனம் கசிவோம், அதனால் நன்மை மலரும், உள்ளம் சிறக்கும்.      35   ஊண்தேடி மாவின்பின் ஓடிவந்த வேடனவன் ஊன்தோண்டி மாவன்பு உள்ளூற நின்றானே, நாண்கொண்டு உலகாளும் நாயகியும் புடைநிற்க, நான்கொண்டு தாள்போற்றும் நன்னாளும் என்னாளோ?   உணவைத் தேடி விலங்கின்பின்னே ஓடிவந்த வேடனான கண்ணப்பர், உன்னை உணர்ந்தார், தன்னுடைய உடலுக்குள் பெரும் அன்பு ஊற நின்றார்,   உலகாளும் நாயகியான மலைமகள் நாணத்தோடு பக்கத்தில் நிற்க நீ எனக்குத் திருக்காட்சி தரவேண்டும், உன்னுடைய திருவடிகளை நான் பற்றிப் போற்றவேண்டும், அந்த நன்னாள் என்றைக்கோ.      36   ஈண்டியுனை முனி,தேவர் இதயத்தில் நிறுத்துகிறார், ஈன்றவனே நீயென்று இருக்கின்றேன் நாயேனும், மாண்புடனிவ் வுலகமைத்து மயலின்றிக் காத்துநிற்கும் மான்தாங்கி நின்றாயென் மனத்தமரும் நாளென்றோ?   முனிவர்கள், தேவர்கள் உன்னை நெருங்கி இதயத்தில் நிறுத்துகிறார்கள்,   நாய்போன்ற நானோ, என்னைப் பெற்றவன் நீ என எண்ணி வாழ்கிறேன்,   இந்த உலகத்தைச் சிறப்புடன் அமைத்து, மயக்கமின்றிக் காத்துநிற்பவனே, மானேந்தி நிற்கும் இறைவனே, நீ என்னுடைய மனத்தில் அமரும் நாள் என்றைக்கோ.      37   கயிலை மலையாளும் காரணனின் சிரிப்பொன்றே அயிலாம், முப்புரங்கள் அழிந்தனவாம், உள்ளிருந்து உயிரை வாட்டிநமை உலுக்குகின்ற மும்மலத்தை வெயில்காண் என்பிலியாய் வெதுப்புவதும் அச்சிரிப்பு.   கயிலைமலையை ஆளும் காரணன் சிவபெருமான், அவனுடைய சிரிப்பே வேலானது, முப்புரங்கள் அழிந்தன,   நமக்குள் இருந்தபடி நம் உயிரை வாட்டி உலுக்குகின்ற மூன்று மலங்களையும் வெம்மையில் துன்புறுத்துவதும் அதே சிரிப்புதான், முதுகெலும்பில்லாத உயிர்கள் வெயிலில் வருந்துவதுபோல, பெருமானின் சிரிப்பு மும்மலங்களை அழிக்கும்.      38   செருக்கு தலைக்கேறு சிறுமனத்தன் தோள்நெரிய ஒருநல் விரல்வைத்தான் உத்தமக்கோன், உள்ளிருந்து உருட்டி நமையழிக்கும் உயர்ந்தோன்நான் எனுமெண்ணம் உருகிக் கரைந்தோட உதவுவதும் அவ்விரல்தான்.   சிறுமனம் கொண்ட தசமுகனுக்குச் செருக்கேறியது, சிவபெருமானின் மலையைத் தூக்க முயன்றான்,   அப்போது, சிவபெருமான் தன்னுடைய ஒரே ஒரு விரலை நன்றாகத் தரையில் வைத்து அழுத்தினான், உடனே, தசமுகனின் தோள்கள் நெரிபட்டன, அவன் வாடி வருந்தினான்,   அதுபோல, ‘நான் உயர்ந்தவன்’ என்கிற எண்ணம் நமக்குள் இருந்தபடி நம்மை உருட்டி அழிக்கப்பார்க்கிறது, அந்த எண்ணம் உருகிக் கரைந்தோடவேண்டுமென்றால், அதற்கு உதவுவதும் சிவபெருமானின் அந்தத் திருவிரல்தான்.      39   சித்தனை, கொன்றைசேர் சீலனை, தோழமைப் பித்தனை, ஆராப் பெருமனை, இணையிலா ஒத்தனை, உள்நின்(று) உருக்கனை, உயிர்களின் அத்தனை, கரித்தோல் அணிவனைத் தினம்நினை   சித்தன், கொன்றைமலர் அணியும் தூயவன், சுந்தரர்மேல் தோழமை கொண்ட பித்தன், தீராத பெருமையுடையவன், இணையிலா ஒருவன், பக்தர்களின் மனத்தில் நின்று உருக்குபவன், உயிர்களின் தந்தை, யானைத்தோல் அணிபவன், அப்பெருமானைத் தினமும் நினைப்போம்.      40   நடனனை, சடையில் நதியனை, பத்தருக்(கு) உடனனை, சோதி உருவனை, நற்கறை மிடற்றனை, நன்மை மிடுக்கனை, உலகனை இடத்தனை, அருட்தேன் ஈவனைத் தினம்நினை   நடனமாடும் பிரான், திருச்சடையில் கங்கை நதியைக் கொண்டவன், பக்தருக்குத் துணையாக எப்போதும் உடனிருப்பவன், சோதி உருவானவன், நல்ல கறையைக் கொண்ட திருக்கழுத்தைக் கொண்டவன், நன்மையாகிய மிடுக்கைக்கொண்டவன், உலகின் அன்னையாகிய மலைமகளை இடப்பக்கத்தில் கொண்டவன், அருளாகிய தேனைத் தருபவன், அப்பெருமானைத் தினமும் நினைப்போம்.      41   ஆனை முகனவனும் அறுமுகனாம் சரவணனும் மீனை நிகர்த்தவிழி மென்மொழியாள் மலைமகளும் ஊனை உருக்குகின்ற உள்ளன்புத் தூயவரும் வானை நிகர்த்தஅருள் வள்ளலவன் உறவினராம்.   வானைப்போல அருள்மழை பொழிகிற வள்ளல் சிவபெருமான், அவருடைய உறவினர்கள் யார் தெரியுமா?   ஆனைமுகனான விநாயகன், அறுமுகனான சரவணன், மீன்போன்ற திருவிழிகள், மென்மையான சொற்களைக்கொண்ட மலைமகள், உடலை உருக்குமளவு உள்ளே அன்புகொண்ட தூய பக்தர்கள்.      42   நெஞ்சில் அன்புடனே நிலத்துள்ள யாவருக்கும் வஞ்சம் நினைக்காமல் வாழவைப்போர் உள்ளத்தில் கஞ்சன், அவன்தாதை காணாமல் திகைத்தஎங்கள் அஞ்சொல் அச்சனவன் அகமகிழ்வோ(டு) அமர்ந்திருப்பன்.   பிரமனும் அவனுடைய தந்தையாகிய விஷ்ணுவும் சிவபெருமானைத் தேடினார்கள், காணாமல் திகைத்தார்கள்,   அத்தகைய எங்கள் பெருமான், அழகிய சொற்களைப் பேசும் தந்தை, மனம் மகிழ்ந்து அமரும் இடம் எது தெரியுமா?   நெஞ்சிலே அன்பு கொண்டு, நிலத்திலே வாழும் யாருக்கும் வஞ்சம் நினைக்காமல் எல்லாரையும் வாழைவைப்பவர்களின் உள்ளம்தான்!      43   அம்பலத்துப் பெருமானார் ஆனந்த நடமாட, அம்பனைய கூர்விழியாள் அதைரசித்துக் களித்திருக்க, அம்பணையும் திருச்சடையும் அவரோடு சேர்ந்தாட, அம்பரமன் என்றேத்தி அன்பரெல்லாம் கரங்குவிக்க,   அம்பலத்துப் பெருமானாகிய சிவபெருமான் ஆனந்த நடனமாட, அம்பு போன்ற கூரிய விழிகளையுடைய மலைமகள் அதை ரசித்துக் களிக்க, கங்கை நதி சேர்ந்த திருச்சடையும் அவரோடு சேர்ந்து ஆட, ‘உயர்ந்த பரமன்’ என்று அன்பர்களெல்லாம் போற்றிக் கை குவித்து வணங்குகிறார்கள்.      44   அம்பெடுத்துப் புரமெரித்த அழகுவிரல் முத்திரையும் அம்பலத்தை ஆளுகின்ற அருட்தாளின் அடவுகளும் அம்பு,மதி அவருடனே அபினயிக்கும் பேரெழிலும் அம்பரமன் நடங்கண்டு அடியோங்கள் உருகுவதும்   அம்பெடுத்து முப்புரங்களை எரித்த அழகிய விரலிலே முத்திரைகள், அம்பலத்தை ஆளுகிற அருள் நிறைந்த திருவடியிலே அடவுகள், கங்கை நதியும் பிறை நிலவும் அவரோடு சேர்ந்து அபிநயம் பிடிக்கிற பேரெழில், உயர்ந்த அந்தப் பெருமானின் நடனத்தைக் கண்டு, அடியவர்களாகிய நாம் உருகுகிறோம்.      45   நதிதழுவும் திருச்சடையா, நளிர்நிலவைச் சூடியவா, உதிகதிரை வெலுஞ்சுடரா, உளத்திருந்து ஆள்கிறவா, பொதிபவங்கள் எரிக்கிறவா, பொறுமையொடு காக்கிறவா, அதிரசமாய் இனிக்கிறவா, அருமருந்தென்(று) ஆகிறவா,   கங்கை நதி தவழும் திருச்சடையைக் கொண்ட பெருமானே, குளிர்ந்த நிலவைச் சூடியவனே, உதிக்கின்ற கதிரை வெல்லும் சுடர்வடிவானவனே, எங்கள் உள்ளத்தில் இருந்து ஆள்கிறவனே, பாவ மூட்டைகளை எரிக்கிறவனே, எங்கள் பிழைகளைப் பொறுத்துக் காக்கிறவனே, அதிரசமாக இனிக்கிறவனே, அரிய மருந்தாக ஆகிறவனே,     46   கழல்தொழுவர் பெருந்தலைவா, கருங்கழுத்துப் பேரெழிலா, அழற்கொழுந்து மலையுருவா, அனைதழுவும் பூஞ்சிரிப்பா, மழகலைமான் ஏந்தியவா, மனத்தமர்ந்து மாசறுப்பா, பழமையுடன் புதுமையவா, பதமலர்கள் ஈகிறவா.   கழலணிந்த திருப்பாதங்களைத் தொழுகிறவர்களின் பெரிய தலைவனே, கரிய திருக்கழுத்தைக் கொண்ட பேரழகனே, தீக்கொழுந்தாகச் சுடர்விடும் மலையுருவம் எடுத்தவனே, அன்னை மலைமகள் தழுவும் பூஞ்சிரிப்பைக் கொண்டவனே, இளம் கலைமானை ஏந்தியவனே, எங்கள் மனங்களில் அமர்ந்து குற்றங்களைப் போக்குகிறவனே, பழமையும் புதுமையும் ஒன்றுசேர்ந்த பெருமானே, உன்னுடைய திருவடி மலர்களை எங்களுக்குத் தருபவனே,     47   தாவுநதி சடையணிந்து தாவுமறி கரத்தணிந்து மேவுகிற பெருமானை மெச்சிடுவம், தாழ்வில்லை, கூவுகிற குயிலினமும் கொம்பனையள் கொழுநன்பேர் பாவுகிற தில்லையினைப் பாடிடுவம், குறையில்லை.   தாவுகின்ற கங்கை நதியைத் திருச்சடையிலே அணிந்து, தாவுகின்ற மான்குட்டியைத் திருக்கரத்திலே அணிந்து திகழும் பெருமானைப் போற்றுவோம், நமக்கு ஒரு தாழ்வும் வராது.    கொம்பைப்போல் மென்மையான மலைமகளின் கணவனான சிவபெருமானின் பெயரைச் சொல்லிக் குயிலினங்களும் போற்றுகிற தில்லைப்பதியைப் பாடுவோம், நமக்கு ஒரு குறையும் வராது.      48   சிட்டர்பலர் அருகிருந்து சீர்போற்ற அகமகிழ்ந்து நட்டமிடும் பெருமானை நாடிடுவம், நட்டமில்லை, இட்டமொடு வண்டினங்கள் இனியபரன் பேர்சொல்லி வட்டமிடு தில்லையினை வாழ்த்திடுவம், கட்டமில்லை.   பெரியோர் பலர் பெருமானின் அருகே இருந்து அவருடைய சிறப்புகளைப் போற்றுகிறார்கள், அதனால் மனம் மகிழ்ந்து நடனமாடுகிறார் அவர், அத்தகைய பெருமானை நாடுவோம், நமக்கு ஒரு நஷ்டமும் வராது.    இனிய பெருமானின் பெயரைச் சொல்லி வண்டுகள் விருப்பத்தோடு வட்டமிடுகிற தில்லைப்பதியை வாழ்த்துவோம், நமக்கு ஒரு கஷ்டமும் வராது.      49   பூந்தராய்ப் பெம்மான், பூங்கொன்றை உவந்தணிவன், ஏந்திழை பாகன், இளமதி,நீர் சூடியவன், நீந்தியே சோர்ந்து நிலைவினையுள் ஆழ்கின்றோர்க்(கு) ஈந்தனன் பாதம், இன்பவெள்ளம் பெருக்கெடுக்க.   பூந்தராய் (சீகாழி) நகரிலே எழுந்தருளியிருக்கும் பெருமான், கொன்றைமலரை மகிழ்ந்து அணிபவன், சிறந்த ஆபரணங்களை ஏந்தியிருக்கும் மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவன், பிறை நிலவு, கங்கை நதியைச் சூடியவன்,   நிலைத்த வினைகள் என்னும் வெள்ளத்திலே நீந்தி நீந்திச் சோர்ந்து மூழ்குகிறவர்களுக்குப் பெருமான் தன்னுடைய திருவடிகளைத் தருகிறான், இன்ப வெள்ளம் பொங்குகிறது.      50   கழுமலத் தலைவன், கமழ்ஆத்தி உவந்தணிவன், மழுவொடு மானை மகிழ்கரத்தில் ஏந்தியவன், வழுவிலே மூழ்கி வாடிநிற்கும் பத்தர்தம் அழுகுரல் கேட்டு ஆதரித்தான் மனம்மலர.   கழுமலம் (சீகாழி) நகரிலே எழுந்தருளியிருக்கும் தலைவன், நறுமணம் கமழ்கிற ஆத்தியை மகிழ்ந்து அணிபவன், மழு, மானை மகிழ்ந்து திருக்கரத்தில் ஏந்தியவன்,   குற்றங்களிலே மூழ்கி, வாடி நிற்கிற பக்தர்களின் அழுகுரலைக் கேட்கிறான் பெருமான், அவர்களுடைய மனத்தை மலரச்செய்து ஆதரிக்கிறான்.      51   நிலவுப் பிறையதனை நீள்முடியில் சூடியிங்கே நிலவு குறைபலவும் நீக்குகின்ற பெருமானைச் சொலற்கு வாயுண்டு, சோதிமிகு தாளுண்டு இலவம் பஞ்சினைப்போல் எம்மனத்துக் கனங்குறைய.   பிறை நிலவை நீண்ட திருமுடியிலே சூடி, இங்கே நிலவுகின்ற பல குறைகளையும் நீக்கும் பெருமானின் பெருமைகளைச் சொல்ல வாய் உண்டு, வணங்குவதற்குச் சோதிவடிவான அவருடைய திருவடிகள் உண்டு, அதன்மூலம், நம் மனத்தின் கனம் குறைந்து இலவம்பஞ்சைப்போல் ஆகும்.      52   ஒருமான் கரத்திருக்க, ஒயில்மானொன்(று) இடத்திருக்கும் பெருமான் பெயர்பாடப் பெறுவரங்கள் கணக்கேது, திருமால், அயன்,தேவர், திசையாளும் வேந்தரெல்லாம் 'ஒருவா' எனப்போற்றும் உத்தமன்தாள் நாம்பணிய.   திருக்கரத்தில் ஒரு மான், இடப்புறத்தில் அழகிய, மான்போன்ற மலைமகளைக் கொண்ட பெருமானின் பெயரைப் பாடினால் கணக்கற்ற வரங்கள் கிடைக்கும்,   திருமால், பிரமன், தேவர்கள், திசையனைத்தையும் ஆளும் வேந்தர்களெல்லாம் ‘தனித்துவமானவனே’ என்று போற்றும் அந்த உத்தமனின் திருவடிகளைப் பணிவோம், வரங்களைப் பெறுவோம்!      53   மாவிலைத் தோரணங்கள், மங்கலப் பூசுகைகள், ஆவினப் பாற்குடங்கள், அழகிய விளக்கொளிகள், தூவிடும் பூவிதழ்கள், துய்யநற் பழவகைகள், மேவிய கறைக்கழுத்தன், மெல்லியள் கோனடிக்கு.   மாவிலைத் தோரணங்கள், மங்கலமான பூசுபொருட்கள், பசுக்கள் தந்த பாலை நிரப்பிய குடங்கள், அழகிய தீபங்கள், தூவிடும் பூவிதழ்கள், தூய்மையான, நல்ல பழவகைகள், இவை அனைத்தும், பொருந்திய கறையைக்கொண்ட திருக்கழுத்தை உடையவன், மெல்லியளான மலைமகளின் தலைவன் திருவடிக்கு.      54   கரங்குவி வணங்குதல்கள், கண்வழி மகிழ்துளிகள், இரங்கிடும் நெகிழ்மனங்கள், இளகிய உளமுடிகள், கரந்தொழி பெரும்பிழைகள், கட்டவி(ழ்) உயிர்ச்சுழல்கள், மரநிழல் மறையுரைத்த மலைமகள் கோனடிக்கு.   கரம் குவித்து வணங்குதல், கண்ணிலிருந்து வழிகிற மகிழ்ச்சிக் கண்ணீர், இரங்கி நெகிழும் மனங்கள், இளகிப்போன மன முடிச்சுகள், மறைந்து தொலையும் பெரிய பிழைகள், கட்டவிழ்ந்து, அழிந்துபோகும் உயிர்ச் சுழற்சி (பிறவி நோய்), இவை அனைத்தும், கல்லால மரத்தின் நிழலிலே வேதங்களை உரைத்த பெருமான், மலைமகளின் தலைவன் திருவடிக்கு.      55   வான்படைத்தாய், வானோக்கி வாழ்ந்திடற்கே மழைபடைத்தாய், கான்படைத்தாய், வயலென்னும் கற்கண்டைத் தான்படைத்தாய், ஊன்படைத்தாய், உயிரென்னும் உனைப்பாடும் பொறிபடைத்தாய், நான்படைத்தாய், அதுவிலக்கி நன்குய்யும் வழிபடைத்தாய்.   பெருமானே, நீ வானைப் படைத்தாய், அந்த வானை நோக்கி வாழ மழையைப் படைத்தாய், காட்டைப் படைத்தாய், வயலென்னும் இனிய கற்கண்டைப் படைத்தாய், உடலைப் படைத்தாய், உனைப் பாடும் இயந்திரமாக உயிரைப் படைத்தாய், ‘நான்’ என்கிற எண்ணத்தைப் படைத்தாய், அதை விலக்கி நன்கு உய்வதற்கான சிவநெறியைப் படைத்தாய்.      56   படிபடைத்தாய், பார்வேந்தர் பதம்பணியும் படிபடைத்தாய், குடிபடைத்தாய், மக்களெல்லாம் கூடிவாழ நகர்படைத்தாய், கொடிபடைத்தாய், வண்ணங்கள் புதியனவாய் மலர்படைத்தாய், மிடிபடைத்தாய், அதுவிலக்கி மிளிர்தற்கே உரம்படைத்தாய்.   பெருமானே, நீ பூமியைப் படைத்தாய், அதனை ஆளும் வேந்தர்கள் உன்னுடைய திருவடிகளைப் பணியும்படி செய்தாய், மக்களைப் படைத்தாய், அவர்கள் கூடி வாழும் இடங்களைப் படைத்தாய், கொடிகளைப் படைத்தாய், புதிய வண்ணங்களுடன் மலர்களைப் படைத்தாய், வறுமையைப் படைத்தாய், அதை விலக்கி மிளிர்வதற்கேற்ற வலிமையைப் படைத்தாய்.      57   கல்லாலின் கீழ்நெற்றிக் கண்ணப்பர் நால்வருக்குச் சொல்லுக்குள் உயர்ந்தவற்றால் சொன்னார்காண் நல்வழிகள், வல்லார்தம் வாய்மொழிந்த வண்ணமிகு வார்த்தைகளை நல்லார்கள் கேட்கின்றார், நாம்கேட்டு உய்வதென்றோ?   கல்லால மரத்தின்கீழ், நெற்றிக்கண்ணை உடைய பெருமானார் நான்கு முனிவர்களுக்கு நல்வழிகளைச் சொன்னார், அந்தச் சொற்கள் அனைத்தும், சொற்களிலேயே மிக உயர்ந்தவை,   வல்லவரான பெருமான் சொன்ன அந்த அழகிய சொற்களை நல்லவர்கள் கேட்கிறார்கள், நாம் கேட்டு உய்வது எப்போது?     58   யாவருக்கும் எட்டாத யானையுரித் தேபாதம் ஆவலினால் தேடவந்தார் அரவணைசேர் ஆலிலையார், ஈவதற்கு எம்மிறைவன் இருக்கின்றான் என்றுணர்ந்து காவலரை மனங்கண்டால் காப்பினிலோர் குறையுண்டோ?   யானையின் தோலை உரித்து அணிந்த பெருமானின் திருவடிகள் எல்லாருக்கும் கிடைத்துவிடாது; எனினும், பாம்புப்படுக்கையில், ஆலிலையில் திருத்துயில் கொள்ளும் திருமால் அப்பெருமானின் திருவடிகளைத் தேட முயன்றார்,   பெருமானை ஏன் தேடிக் காணவேண்டும்? நமக்கு நல்லதைத் தருவதற்கு நம் இறைவன் இருக்கிறான் என்று உணர்ந்து, அவரை மனத்தால் கண்டால் போதும், அவர் நம்மைக் குறையின்றிக் காப்பார்.      59   உலகாளும் அருளாளன், ஒருபாகம் உமையாளன், சலத்தோடு மதியோடும் சடைநாதன், விடையேறி, தலந்தோறும் பணிவார்க்குத் தழைக்கின்ற சுகந்தந்து நலந்தந்து நடனங்கள் நவில்கின்ற குருநாதன்.   உலகை ஆளும் அருளாளர், உமையம்மையை ஒரு பக்கத்தில் கொண்டவர், கங்கை ஆறும் பிறை நிலவும் தங்குகிற திருச்சடையைக் கொண்ட நாதர், காளையில் ஏறுகிறவர், சிவத்தலங்கள் ஒவ்வொன்றிலும் பணிகிறவர்களுக்குச் சுகம் தழைக்கச் செய்து, நலங்களைத் தந்து நடனம் புரிகின்ற குருநாதர்.      60   கழல்வீரன், அடியார்தம் கரமாலை நிரைசூழும் அழலேந்தி, புகழேந்தி, அகக்கோயில் உவக்கின்ற மழமானைக் கரமேந்தி, மலைமானை இடத்தேந்தி, முழவாளர் இசைகேட்டு முதுநட்டம் பயில்நாதன்.   கழல் அணிந்த திருப்பாதங்களைக் கொண்ட வீரர், அடியவர்களின் குவிந்த கரங்கள் என்கிற மாலைகள் வரிசையாகச் சூழ்ந்து நிற்க, நெருப்பை ஏந்தி ஆடுபவர், புகழை ஏந்தியவர், பக்தர்களின் மனம் என்கிற கோயிலிலே விரும்பித் தங்குகிறவர், இளம் மானைக் கரத்தில் ஏந்தியவர், மலைமகளாகிய மானை இடப்புறம் ஏந்தியவர், முழவு ஒலியைக் கேட்டுப் பழமையான நடனத்தைச் செய்யும் நாதர்.      61   பசுபதிக்கு நிகர்தெய்வம் பாரினிலே இலையென்பார் சிசுவாகி, பிணி,மூப்புச் சிறுமைகளை இனிபாரார், அசுவினியார் முதலார்போல் அரன்பேரைச் சொலிவாழ்த்தி விசுவாசத் துடனென்றும் விண்ணகத்தில் நிலைத்திருப்பார்.   பசுபதிக்கு நிகரான தெய்வம் பாரினில் இல்லை என்று சொல்கிறவர்கள் இன்னொருமுறை குழந்தையாகப் பிறந்து, நோய்கள், முதுமை போன்ற சிறுமைகளைப் பார்க்கமாட்டார்கள் (அவர்களுக்கு இன்னொரு பிறவி இல்லை), அசுவினி போன்ற விண்மீன்களைப்போல் அவர்கள் சிவபெருமானின் பெயரைச் சொல்லி வாழ்த்தியபடி விசுவாசத்துடன் விண்ணில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.      62   விடையேறிக்(கு) இணைதெய்வம் வேறாரென்(று) உருகுகின்றார் அடையார்காண் பிறப்பென்னும் அருந்துயரம் இன்னொருகால், சடைதன்னில் பொன்னிறமும் சலத்தோடு பிறைதவழும் உடையார்தன் திருவடியில் ஒருதுளியாய் நிலைத்திடுவார்.   காளை வாகனத்திலே ஏறும் சிவபெருமானுக்கு இணையான தெய்வம் இன்னொருவர் யார் என்று எண்ணி உருகுகிறவர்கள், பிறப்பு என்கிற அருந்துயரை இன்னொருமுறை அடையமாட்டார்கள் (அவர்களுக்கு இன்னொரு பிறவி இல்லை), பொன்னிறத் திருச்சடையும், அதிலே கங்கையாறும் பிறை நிலவும் தவழ்கிற பெருமான், நம்மையெல்லாம் அடிமைகளாகக் கொண்ட சிவபெருமானின் திருவடியிலே ஒரு துளியாக என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.      63   பொங்குநதி, இன்பமதி, பொன்னிறத்து மின்னுசடை, அங்கிகரம், அக்குவடம், ஆலுமிழும் பல்லரவு, மங்கையிடம், புன்முறுவல், மத்தளமும் சொக்குநடம், செங்கமலம் ஒத்தஅடி, சிந்தனையில் தங்குகுணம்.   பொங்கும் கங்கையாறு, இன்பம் தரும் நிலவு, பொன்னிறத்தில் மின்னும் திருச்சடை, தீ ஏந்திய திருக்கரம், ருத்ராட்ச மாலை, விஷத்தை உமிழ்கிற பல்லைக்கொண்ட பாம்பு, இடப்புறம் மலைமகள், புன்முறுவல், மத்தளமும் சொக்கும்படி நடனம், செந்தாமரையைப்போன்ற திருவடிகள், சிந்தனையில் தங்கும் திருக்குணங்கள்.      64   ஆத்திமலர், மான்,மழுவு, ஆனையுரி, மைக்கழுத்து காத்தருளு பூசுபொடி, கண்ணொழுகு வான்கருணை, கூத்தருளு தேனடிகள், கொஞ்சுதமிழ் கேட்குசெவி. நாத்தழும்பு ஆக்குதற்கு நன்கமைந்த கோடிபெயர்.   திருமுடியிலே ஆத்தி மலர், திருக்கரத்திலே மான், மழு, போர்த்திய ஆனைத்தோல், கறை கொண்ட திருக்கழுத்து, பக்தர்களைக் காத்து அருளுகின்ற பூசும் பொடி (திருநீறு), கண்ணிலிருந்து பொங்குகின்ற உயர்ந்த கருணை, நடனத்தை அருளும் தேன்போன்ற திருவடிகள், சிறந்த தமிழைக் கேட்கும் திருச்செவி, நாக்கைத் தழும்பாக்கிக்கொள்வதற்காக நன்கு அமைந்த கோடி திருப்பெயர்கள்.      65   எப்பரிசை ஆரார்க்கு எவ்விதத்தில் தரவேணும் அப்பனவன் அறிந்திடுவான், ஆரவனை அறிந்தவர்கள்? இப்படியில் உள்ளவுயிர் இத்தனையும் எத்தனையும் செப்பமொடு காத்தழித்துச் செய்வதுவும் அவனன்றோ.   எப்போது யாருக்கு எந்தப் பரிசைத் தரவேண்டும், அதை எப்படித் தரவேண்டும் என்றெல்லாம் அப்பனான சிவபெருமான் அறிவான், அவனை அறிந்தவர்கள் யார்? (யாருமில்லை.)    இந்தப் பூமியிலே உள்ள இத்தனை உயிர்களையும், இனி வரப்போகும் அத்தனை உயிர்களையும் சிறப்போடு காத்து, அழித்து, உருவாக்குவது அவனல்லவா!      66   அன்புதனைத் தினம்பொழியும் அரியமனம் கொடுக்கின்றான், பின்னதனை மறக்கவைத்துப் பெரியவிதம் சிரிக்கின்றான், இன்னலினை உளத்துணர்ந்தால் இனியபெரும் வழிகாட்டிப் பொன்னுருவன் பிழைபொறுத்துப் பொலங்கழல்கள் ஈகின்றான்.   பெருமான், தினமும் அன்பைப் பொழியும் அரிய மனத்தைக் கொடுக்கின்றான், பிறகு, அதனை மறக்கவைத்துப் பெரிதாகச் சிரிக்கின்றான். இதனால் வரும் இன்னலை உள்ளத்தால் உணர்ந்தால், இனிய, பெரிய வழியைக் காட்டுகிறான், பிழையைப் பொறுத்து ஆதரிக்கின்றான், அந்தப் பொன்னுருவன் தன்னுடைய பொற்கழல்கள் அணிந்த திருவடிகளை நமக்குத் தருகின்றான்.      67   வட்டமிட்டு வண்டுமொய்க்க வற்றிடாமல் தேன்சுரக்கும் இட்டமான மாலைசூடி எங்களன்னை பக்கநிற்க உட்சுரக்கும் அன்புவெள்ளம் உலகனைத்தும் மூழ்கடிக்க நட்டமாடும் எம்பிரானை நாம்வணங்க நன்மைகூடும்.   தேன் வற்றாமல் சுரக்கிற மலர்களிலே வண்டுகள் வட்டமிட்டு மொய்க்கின்றன, அத்தகைய மலர்களைக் கோத்துக் கட்டிய மாலையை விரும்பிச் சூடியவன் பெருமான், எங்கள் அன்னை, மலைமகள் அவனருகே நிற்கிறாள், பெருமானுக்குள் சுரக்கும் அன்புவெள்ளம் உலகனைத்தையும் மூழ்கடிக்கிறது, அவ்வாறு நடனமாடும் எங்கள் பிரானை வணங்கினால் நன்மை கூடும்.      68   ஆற்றுநீரும் துண்டமதியும் அழகுமானும் மழுவுங்கண்டு போற்றிநெஞ்சம் பாடிநெகிழப் பூசையுள்ளில் நித்தநிகழ நாற்றுகாற்றில் குனிதல்போல நன்குபணியும் போதுநாதர் வீற்றிருப்பர் நம்மனத்தில், வேறுவரமும் வேண்டலேது.   பெருமானின் திருமுடியிலே கங்கையாற்று நீரையும், நிலாத் துண்டத்தையும், அவரது திருக்கரங்களில் அழகிய மானையும் மழுவையும் கண்டு போற்றுகிறோம், நெஞ்சம் அவருடைய புகழைப் பாடி நெகிழ்கிறது, உள்ளே ஒவ்வொரு கணமும் அவருக்குப் பூசை செய்கிறோம், காற்றிலே நாற்று குனிவதைப்போல நன்கு பணிகிறோம், அவ்வாறு பணியும்போது, நாதர் நம் மனத்தில் வீற்றிருப்பார், அவரிடம் வேறு வரங்கள் எவற்றையும் கேட்கத் தோன்றாது.      69   மாதவங்க ளாகுபெயர், மன்னவருஞ் சொல்லுபெயர், ஓதஇனி தானபெயர், உண்மையுரு வானபெயர், ஆதரித்துத் தாங்குபெயர், அன்புமழை யூறுபெயர், நாதரவர் நல்லபெயர், நான்மறைகள் ஓதுபெயர்.   சிறந்த தவங்களாகத் திகழும் திருப்பெயர், மன்னவர்களும் சொல்லும் திருப்பெயர், ஓதுவதற்கு இனிய திருப்பெயர், உண்மையுருவாகத் திகழும் திருப்பெயர், எல்லாரையும் ஆதரித்துத் தாங்கும் திருப்பெயர், அன்புமழை ஊறுகின்ற திருப்பெயர், நாதரான சிவபெருமானின் நல்ல திருப்பெயர், நான்மறைகளும் ஓதுகின்ற திருப்பெயர்.      70   தேடுபவர்க் கெட்டுபெயர், தெளிவுதனைச் சுட்டுபெயர், காடுநட மாடுபெயர், கண்ணப்பர் சூடுபெயர், தோடுசெவி கொண்டபெயர், தொல்லுலகும் கண்டபெயர், ஈடுஇணை யற்றபெயர், எவ்வுயிர்க்கு முற்றபெயர்.   தேடுபவர்களுக்கு எட்டும் திருப்பெயர், தெளிவைச் சுட்டிக்காட்டும் திருப்பெயர், காட்டிலே நடனமாடும் பெருமானின் திருப்பெயர், கண்ணப்பர் சூடுகின்ற திருப்பெயர், திருச்செவியிலே தோடணிந்த பெருமானின் திருப்பெயர், பழைய உலகிலும் திகழ்ந்த திருப்பெயர், ஈடு, இணையற்ற திருப்பெயர், எல்லா உயிர்களுக்கும் ஏற்ற திருப்பெயர்.      71   அண்டமொடு பல்லுலகம் அதிரநட மாடுகிற புண்ணியரின் தாள்பணிய, பூதொடுத்து மாலையிட, அண்ணலவர் காட்டுகிற அன்புவழி மீதுசெல நண்ணிடுவம் ஆலயத்தை, நற்கதியின் வாயிலது.   அண்டமும் பல உலகங்களும் அதிரும்படி நடனமாடுகிற புண்ணியரின் திருவடிகளைப் பணிவோம், பூக்களைத் தொடுத்து மாலையாக்கி அவருக்கு இடுவோம், அண்ணல் காட்டுகின்ற அன்புவழியில் செல்வோம், அதற்காக ஆலயத்தை நெருங்குவோம், அதுவே நல்ல கதிக்கான வாயில்.      72   விண்ணவரும் பல்முனியும் வேண்டுகிற பொன்னுருவன், பெண்ணையிடங் கொண்டகுரு, பேதமிலி, ஞானமழை, மண்சுமந்து பிட்டுவந்த மைக்கழுத்தன் ஆலருந்தி, வண்டுகளைப் போல்பரமன், வள்ளலடி மொய்த்திடுவம்.   தேவர்களும் பல முனிவர்களும் வேண்டுகிற பொன்னுருப் பெருமான், மலைமகளை இடத்தில் கொண்ட குரு, எவ்வுயிர்மீதும் பேதம் காட்டாதவன், ஞானமழை, மண்ணைச் சுமந்து, பிட்டை விரும்பி உண்டவன், நஞ்சை உண்டு திருக்கழுத்தில் கறை கொண்டவன், அத்தகைய பரமன், வள்ளலின் திருவடிகளில் வண்டுகளைப்போல் மொய்த்திடுவோம்.      73   இப்புவிகள் தோன்றுமுன்னே இருந்தவனும், பின்னாளில் அப்புவிகள் ஊழிகொள்ளும் அப்பொழுதில் இருப்பவனும் ஒப்புசொல ஒருவரிலான், உலகதிர நடம்புரிவான், செப்புமொழி மானவளைச் செம்பகுதி எனக்கொண்டான்.   இந்த உலகங்கள் தோன்றுமுன்பே இருந்தவன், பின்னாளில் அவற்றை ஊழிக்காலம் அழிக்கும்போதும் இருக்கப்போகிறவன், தனக்கு இணையாகச் சொல்ல ஒருவரும் இல்லாதபடி தனித்துவமானவன், உலகம் அதிரும்படி நடனம் புரிகிறவன், இனிய சொற்களைப் பேசும் மான்போன்ற மலைமகளைத் தன் உடலின் சிறந்த பகுதியாகக் கொண்டவன்.      74   மலை,காடு, வயல்,பாலை, மாக்கடலென் றெப்புறமும் அலைவீசிப் பல்வளங்கள் அற்புதமாய்ச் சேர்வதெல்லாம் மலையரசன் நன்மகளை மணக்கின்ற மாதேவன், சிலையின்றி முப்புரங்கள் சிதைத்தருளுங் கோன்வரமாம்.   மலை, காடு, வயல், பாலை, சிறந்த கடல் போன்ற பகுதிகளிலெல்லாம் பல வளங்கள் அலையலையாக, அற்புதமாகச் சேர்வது எதனால்?   மலையரசனின் நல்ல மகளாகிய பார்வதியை மணக்கும் மாதேவன், வில்லின்றி முப்புரங்களைச் சிதைத்து உலகுக்கு அருள்செய்த தலைவனின் வரத்தால்.      75   தண்ணிலவு, பூமியொடு தகிக்கின்ற சூரியனைப் பண்ணியவர் யாரெங்கள் பரமனெனப் பேசுங்கள், உண்ணுகிற, அருந்துகிற உயர்ந்தபொருள் அத்தனையும் புண்ணியவர் செய்ததிறம் புவியறியப் பாடுங்கள்.   குளிர்ந்த நிலவு, பூமி, தகிக்கின்ற சூரியனையெல்லாம் செய்தவர் யார்?   எங்கள் பரமன்தான்; இதனை உரக்கப் பேசுங்கள்.    நாம் உண்ணுகிற, அருந்துகிற சிறந்த பொருட்கள் அனைத்தையும் அந்தப் புண்ணியர்தான் செய்தார். அவருடைய திறத்தைப் பூமி அறியும்படி பாடுங்கள்.      76   கண்ணியமும் பல்லுயிர்மேல் கசிகின்ற அன்புகொண்ட தொண்டரென நமையாக்குந் தூயவனைப் போற்றுங்கள், கண்ணொன்றை உளத்துக்குள் கட்டமைத்தே இருளகற்றும் வெண்சிகரத் தமர்ந்தகுரு, வேளடிகள் பணியுங்கள்.   கண்ணியமும், பல உயிர்களின்மேல் கசிகின்ற அன்பும் கொண்டவர் சிவபெருமான், அவருடைய தொண்டராக நம்மை ஆக்கும் தூயவர், அவரைப் போற்றுங்கள்.    நம் உள்ளத்துக்குள் ஒரு கண்ணைக் கட்டமைத்து, உள்ளத்து இருளை அகற்றுகிற பெருமான், வெண்சிகரத்திலே அமர்ந்த குருநாதர், தலைவர், அவருடைய திருவடிகளில் பணியுங்கள்.      77   வார்குழலி, தேன்மொழியை வாஞ்சையொடு தன்னுடலின் ஓர்பகுதி என்றணைக்கும் ஒளிநிறைந்த செஞ்சடையர், சார்ந்துவரும் பத்தருக்குச் சாதனைகள் தருபவரைப் பார்த்தவுடன் வேர்த்துவிழி பரவசமும் ஆகுவமோ!   நீண்ட கூந்தலைக் கொண்டவள், தேன்போன்ற சொற்களைப் பேசுகிறவள், மலைமகள்,   அத்தகைய மலைமகளை அன்போடு தன் உடலின் ஒரு பகுதியாக அணைத்துக்கொள்ளும் பெருமான், ஒளி நிறைந்த, சிவந்த திருச்சடையைக் கொண்டவர், தன்னைச் சார்ந்து வருகின்ற பக்தர்களுக்குச் சாதனை செய்யும் திறனைத் தருபவர்,   நாம் அவரைப் பார்ப்போமோ, அவ்வாறு பார்த்தவுடன் நம்முடைய விழிகள் வேர்த்து ஆனந்தக் கண்ணீர் பொழியப் பரவசமாகி நிற்போமோ!      78   ஊர்விடையும், தார்,நிலவும், உவந்தணிந்த புலியுரியும் கார்முகிலைப் போல்கருத்த கழுத்தழகும், சோதிதனில் சீர்மிகுந்த கலன்களெனச் சீறுபல பாம்புகளும் பார்த்தழுது தாள்பணிந்து பக்குவமும் ஆகுவமோ!   பெருமான் ஊர்ந்துவரும் காளையையும், அவர் அணிந்திருக்கும் மாலை, பிறை நிலவையும், அவர் மகிழ்ந்து அணிந்திருக்கிற புலித்தோலையும், கருத்த மேகத்தைப்போல் கருத்திருக்கும் திருக்கழுத்தின் அழகையும், சோதிவடிவான அவருடைய திருமேனியிலே சிறந்த அணிகலன்களைப்போல் சீறுகின்ற பல பாம்புகளையும் நாம் பார்ப்போமோ, அவ்வாறு பார்த்து, அழுது, அவருடைய திருவடிகளில் பணிந்து பக்குவமாவோமோ!      79   கள்ளமனம் உள்ளவர்தம் கையிலகப் படுவதிலை, உள்ளமதில் நல்லுணர்ச்சி உள்ளவரை விடுவதிலை, அள்ளமிகு அருட்குவியல், அனைத்துயிரின் தஞ்சநிலை, வள்ளலவன் பெயர்சொலவும் வாழ்வினிக்கும், கைப்பதிலை.   கள்ளமனம் உள்ளவர்களுக்குப் பெருமான் அகப்படுவதில்லை, உள்ளத்தில் நல்லுணர்வு கொண்டவர்களை அவர் எப்போதும் விடுவதில்லை,   அள்ள அள்ளப் பெருகும் அருட்குவியல் அவர், அனைத்து உயிர்களும் தஞ்சமடையும் இடம், அந்த வள்ளலின் பெயரைச் சொன்னால் வாழ்வு இனிக்கும், கசக்காது.      80   மழுவேந்தி பிறவியெனும் மயக்கநிலை அறுக்கிறவன், புழுவனைய புல்லருக்கும் புனிதவழி காட்டுபவன், ஒழுக்கமொடு வாழ்பவர்தம் உள்ளமதை ஆள்கிறவன், பழுத்தமனம் கேட்பவரைப் பக்குவங்கள் செய்கிறவன்.   மழுவேந்திய பெருமான், பிறவி என்கிற மயக்கநிலையை அறுக்கின்றார், புழுவுக்குச் சமமான புல்லருக்கும் புனித வழியைக் காட்டுகிறார், ஒழுக்கத்துடன் வாழ்பவர்களின் உள்ளத்தை ஆள்கின்றார், மனம் பழுக்கவேண்டும் (முதிர்ச்சியடையவேண்டும்) என்று கேட்பவரைப் பக்குவமாக்குகின்றார்.      81   பன்னூல்கள் சொல்கின்ற பன்னூறு தத்துவங்கள் அன்றாடம் பின்பற்ற ஆரால்தான் ஆவதுண்டு? முன்னோர்கள் வழிகண்டார், முக்கண்ணன் வழிநின்றார், நன்னீறு பூசித்தான் நதியணியைப் பூசித்தார்.   பல நூல்களும் சொல்கின்ற பல நூறு தத்துவங்களைத் தினந்தோறும் பின்பற்ற யாரால் முடியும்?   ஆகவே, நம் முன்னோர்கள் ஒரு வழி கண்டார், முக்கண்ணன் சிவபெருமானின் வழி நின்றார், நல்ல திருநீறு பூசிக்கொண்டார், நதியை அணிந்த பெருமானை வழிபட்டார்.      82   எப்போது எதுவேண்டும், எதுவேண்டா மென்றென்றவ் அப்போது உரைக்கின்ற அருந்துணைவர் ஆருண்டு? முப்போதும் உடன்வருநம் முன்தோன்றி தாள்பணிய, தப்பேது, எல்லாமும் தகைவோடு அமையுங்காண்.   எப்போது எது வேண்டும், எது வேண்டாம் என்றெல்லாம் அவ்வப்போது சொல்கின்ற அரிய துணைவர் யார்?   எப்பொழுதிலும் நம்மோடு வருகின்றவர், அனைத்துக்கும் முன்பு தோன்றிய நம் தலைவர், அவருடைய திருவடிகளைப் பணிவோம், அதன்பிறகு, நம் வாழ்வில் தவறென்பதே இல்லை, அனைத்தும் சிறப்பாக அமையும்.      83   அத்திமுகன் அத்தனவன் அழகுமலர்த் திருவடிகள் பத்தியொடு பற்றுபவர் பற்றுபிற பறந்தொழியும் சத்தியொடு வந்துதினம் சத்தியர்க்குத் தெம்புதரும் நித்தியனை நின்மலனை நிசிநடனைத் தொழுதிடுவம்   ஆனைமுகனின் தந்தை, சிவபெருமானின் அழகு மலர்த் திருவடிகளைப் பக்தியோடு பற்றுபவர்களுடைய மற்ற பற்றுகள் பறந்தோடும்,   தினந்தோறும் சக்தியுடன் தோன்றி, உண்மையைப் பின்பற்றுவோருக்குத் தெம்பூட்டும் பெருமான், என்றும் நிலைத்திருப்பவர், குற்றமற்றவர், நடுநிசியில் நடனமாடுபவர், அவரைத் தொழுவோம்.      84   கத்தியழு(ம்) அசுரனுக்குக் கத்திதரு தத்துவனைச் சித்தமதில் வைக்கவரு சிறப்புகளை உரைப்பதெவர்? பித்தனவன் பாதங்களில் பித்துகொளப் பிறவியறும், வித்தகனின் எண்ணமதை வித்திடுவம் மனவயலில்.   அசுரனாகிய ராவணன் மலையின்கீழ் அகப்பட்டுக் கத்தி அழ, அவனுக்குச் சந்திரஹாசம் எனும் வாளைத் தந்த தத்துவன், சிவபெருமானைச் சிந்திப்போம், அதன்மூலம் வரும் சிறப்புகளை யாரால் சொல்ல இயலும்?   பித்தனாகிய பெருமானின் பாதங்களில் பித்துவைத்தால் பிறவிநோய் அறுந்துபோகும், அந்த வித்தகனின் எண்ணத்தை மன வயலில் ஊன்றுவோம்.      85   கண்ணுக்குள் கருத்துக்குள் கைமெய்செய் தொண்டுக்குள் அண்மைக்குள் தொலைவுக்குள் அன்புக்குள் பண்புக்குள் உண்மைக்குள் பொய்மைக்குள் உளத்துக்குள் அறிவுக்குள் பெண்பாதிப் பெம்மானார் பேரன்போ(டு) இருக்கின்றார்.   கண்ணில், கருத்தில், கையும் உடலும் செய்கிற தொண்டில், அருகில், தொலைவில், அன்பில், பண்பில், உண்மையில், பொய்மையில், உள்ளத்தில், அறிவில்... இப்படி எங்கும் பேரன்போடு நிறைந்திருப்பவர், மலைமகளைப் பாதி உடலாகக் கொண்ட பெருமானார்.      86   வாக்குக்குள் சிந்தைக்குள் வழமைக்குள் புதுமைக்குள் ஆக்கைக்குள் அருவத்துள் அறிந்தவற்றுள் அறியாவுள் ஊக்கத்துள் ஐயத்துள் உவகைக்குள் தெளிவுக்குள் நீக்கமற நிறைந்துள்ளார் நிலாத்துண்ட எழிற்சடையார்.   சொல்லில், சிந்தனையில், வழக்கமானவற்றில், புதுமையானவற்றில், உடலில், அருவத்தில், அறிந்தவற்றில், அறியாதவற்றில், மன ஊக்கத்தில், ஐயத்தில், மகிழ்ச்சியில், தெளிவில்... இப்படி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர், பிறை நிலவைச் சூடிய அழகிய திருச்சடையைக் கொண்ட சிவபெருமான்.      87   பெம்மானின் தாள்பற்றிப் பிறவியெனும் பெருங்குற்றம் நம்மருகே வாராமல் நலியும்நாள் என்றைக்கோ, அம்மானை இடங்கொண்ட அம்மானை நாம்போற்றிச் செம்மாந்து மனம்நெகிழ்ந்து சிரிக்கும்நாள் என்றைக்கோ!   பெம்மானின் திருவடிகளைப் பற்றி, அதன்மூலம், பிறவி என்கிற பெரிய குற்றம் நம்மருகே வராமல் நலிந்துபோகும் நாள் என்றைக்கோ!    மலைமகளாகிய அந்த மானைத் தன் இடப்புறத்தில் கொண்ட அம்மானை நாம் போற்றி, செம்மாந்து நின்று, மனம் நெகிழ்ந்து சிரிக்கின்ற நாள் என்றைக்கோ!      88   வல்லானைத் தோலுரித்த வல்லானை நாம்கண்டு நல்லோர்கள் பணிபாதம் நாடும்நாள் என்றைக்கோ, செல்லாத வழிகளெல்லாம் சிறுமைதான் என்றுணர்ந்து கல்லாலார் சொன்னவழி கற்கும்நாள் என்றைக்கோ!   வலிய யானையின் தோலை உரித்த வல்லவனை நாம் காணும் நாள், நல்லோர்கள் பணிகின்ற அவருடைய திருவடிகளை நாடும் நாள் என்றைக்கோ!    நல்லவர்கள் செல்லாத வழிகளெல்லாம் சிறுமையானவை என்பதை நாம் உணர்ந்து, கல்லாலின்கீழ் ஞானம் உரைத்த சிவபெருமான் சொன்ன வழியைக் கற்கும் நாள் என்றைக்கோ!      89   பிறைசூடும் செஞ்சடையான், பெண்ணிடத்தே நேசமுளான், மறைவாணர் புகழ்தேவன், மலைவில்லாய் வளைவீரன், கறைமிடற்றுப் பேரழகன், கழல்கொஞ்சும் நடைநாதன், உறைகின்றான் மனத்துள்ளே, ஒருதுன்பம் நமக்கேது?   பிறை நிலவைச் சூடிய சிவந்த திருச்சடையைக் கொண்டவர், மலைமகள்மீது நேசம் கொண்டவர், வேதத்திலே வல்லவர்கள் புகழ்கின்ற தேவர், மலையை வில்லாக வளைக்கின்ற வீரர், திருக்கழுத்திலே கறையைக் கொண்ட பேரழகர், வீரக் கழல் கொஞ்சுகிற நடையைக் கொண்ட நாதர் நம் மனத்தில் தங்கியுள்ளார், நமக்குத் துன்பங்கள் ஏது?     90   மழுவேந்தும் எழிற்கையன், மாதேவி அணைமெய்யன், குழுத்தேவர் பணிபாதன், குவலயத்தை அளிவேதன், விழுப்பொருளாய்த் திகழ்கோமான், விளக்கோடு வழிசெய்வான் முழுதாக மனத்துள்ளான், மொய்க்காது நமைத்துயரம்.   மழுவை ஏந்தும் அழகிய கையைக்கொண்டவர், மாதேவி மலைமகள் அணைக்கின்ற திருமேனியைக்கொண்டவர், தேவர்கள் குழுவாக வந்து வணங்குகிற திருப்பாதங்களைக்கொண்டவர், உலகத்தைக் காக்கும் வேதவுருவானவர், சிறந்த உண்மையாகத் திகழும் தலைவர், பாதை அமைத்து, அதில் நடக்க வெளிச்சத்துக்காக விளக்கும் தருபவர் நம் மனத்தில் முழுமையாக இருக்கிறார், துயரங்கள் நம்மை நெருங்காது.      91   முத்தனைய முறுவலொடு முத்திதரும் மூப்பிலான் சத்தியொடு ஆடுகையில் சகமுழுதும் ஆடுது, இத்தினமும் எத்தினமும் இந்நடனம் கண்டிட மத்தமணி அத்தனவன் மலர்ப்பதங்கள் பற்றுவம்.   முத்துப்போன்ற புன்முறுவலோடு நமக்கு முக்தியைத் தரும் பெருமான், மூப்பில்லாத இளைஞரான சிவபெருமான் சக்தியோடு ஆடுகையில், இந்த உலகம் மொத்தமும் ஆடுகிறது.    இன்றைக்கும் என்றைக்கும் இந்த நடனத்தைக் கண்டிடவேண்டும், அதற்கு, ஊமத்த மலரை அணிகிற நம் தந்தையின் மலர்த் திருவடிகளைப் பற்றுவோம்.      92   பொன்னனைய மேனிதனில் பொடியணியும் நாயகன் அன்னமவள் கூடநடம் ஆடுமெழில் அற்புதம், இன்னமிது வேண்டுமென இதயமது ஏங்கிட, தன்னுவமை ஆகிறவன் தந்திடுவன் அவ்வரம்.   பொன்போன்ற திருமேனியில் திருநீற்றை அணியும் நாயகன், அன்னமாகிய மலைமகளுடன் நடனமாடும் அழகு, அற்புதமானது.    இந்த நடனத்தை இன்னும் காணவேண்டும் என்று இதயம் ஏங்குகிறது, தனக்குத் தான்மட்டுமே உவமையாகக்கூடிய சிவபெருமான் அவ்வரத்தை நமக்கு அருள்வான்.      93   ஆலமது பொங்கிவர, அமரரவர் நடுங்கிவிழ, சீலமிகு சுந்தரனும் சிரித்தபடி அதையருந்த, வாலறிவன் மங்கையவள் வந்தவனின் மிடறுதொட, ஆலமுது ஆகிவிட, அதிசயித்துத் தேவர்தொழ.   பாற்கடலில் நஞ்சு பொங்கிவந்தது, அதைக்கண்டு அமரர்கள் நடுங்கி விழுந்தார்கள்,   சிறப்பு மிகுந்த சுந்தரனோ சிரித்தபடி அதை அருந்தினான், தூய, அறிவு வடிவான அப்பெருமானின் மங்கை (மலைமகள்) அருகே வந்து பெருமானின் திருக்கழுத்தைத் தொட்டார்,   உடனே, நஞ்சு அமுதானது. அதைக்கண்டு தேவர்கள் அதிசயப்பட்டுத் தொழுதார்கள்.      94   தேவியவள் திருக்கரங்கள் தீண்டியதும் ஆலமது நாவினிலப் புண்ணியனின் நற்பெயரைச் சொல்லிதினம் பாவினிலப் பெம்மானின் பண்புகளைப் பாடி,மலர் தூவிமகிழ் பத்தரெனத் தூவடிவம் கொண்டதென்ன!   பெருமான் நஞ்சை உண்டபோது, தேவி அவருடைய திருக்கழுத்தைத் தொட்டாள், மறுகணம் என்ன ஆனது தெரியுமா?   புண்ணியரான சிவபெருமானின் நல்ல திருப்பெயரைத் தினந்தோறும் நாவால் சொல்லி, பாடல்களிலே அந்தப் பெம்மானின் பண்புகளைப் பாடி, மலர் தூவி மகிழ்கிற பக்தர்களைப்போல் அந்த நஞ்சு தூய வடிவம் கொண்டது, அமுதாக மாறிவிட்டது, இது என்ன அதிசயம்!      95   கண்ணுக்கும் கருத்துக்கும் கவின்சேர்க்கும் அணிகலன், உண்கிறவை, உன்னுபவை உள்ளிருக்கும் நற்பொருள், எண்ணத்தில், இயக்கத்தில் இயைந்துள்ள உயர்நிலை, தண்ணாத்தி சூடியநம் தையலனை பாகனாம்.   கண்ணுக்கும் கருத்துக்கும் அழகு சேர்க்கும் அணிகலன், உண்கிறவை, சிந்திக்கிறவை என அனைத்தினுள்ளும் இருக்கும் நல்ல பொருள், எண்ணத்தில், செயலில் இயைந்துள்ள உயர்ந்த நிலை, இவை அனைத்தும், குளிர்ந்த ஆத்தி மலரைச் சூடிய நம் பெருமான், மலைமகளைத் தன் உடலின் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான்.      96   மெய்,சிந்தை செல்லுவழி மிடற்றாலன் சொல்வழி, பொய்யில்லாப் பேச்செல்லாம் பொன்மேனி நல்வழி, செய்பணிகள் சிறத்தலெங்கள் செஞ்சடையான் தெள்வழி, உய்வழியிங்(கு) ஒருவழிதான், உமைநாதன் தொல்வழி.   உடலும் சிந்தனையும் செல்லும் வழி, திருக்கழுத்திலே நஞ்சை நிறுத்திய பெருமான் சொல்லும் வழி,   பொய்யில்லாத பேச்சு, பொன்போன்ற திருமேனி கொண்ட பெருமான் சொல்லும் நல்ல வழி,   செய்யும் பணிகள் சிறப்பது எதனால்? சிவந்த திருச்சடை கொண்ட பெருமான் காட்டும் தெளிவான வழியால்,   உய்வதற்கான ஒரே வழி, உமையம்மையின் நாதன் காட்டும் தொன்மையான வழிதான்.      97   கழலணிந்த திருவடியும், கருணைபொழி திருக்கண்ணும், சுழன்றாடும் திருமுடியும், சுரர்போற்றும் திருக்கரமும், பழம்புரங்கள் தீர்த்ததுபோல் பழவினைதீர் முறுவலதும் தொழுதெழுநாள் ஒவ்வொன்றும் துரும்பனெனைத் தூய்தாக்கும்.   வீரக் கழல் அணிந்த பெருமானின் திருவடி, கருணையைப் பொழிகிற அவருடைய திருக்கண்கள், சுழன்றாடும் அவருடைய திருமுடி, தேவர்கள் போற்றும் அவருடைய திருக்கரங்கள், பழைய முப்புரங்களை அழித்ததுபோல நம் பழைய வினைகளைத் தீர்க்கும் அவருடைய திருமுறுவல்... இவையனைத்தையும் தினந்தோறும் தொழுது எழுவேன், துரும்பைப்போன்ற சிறியவனான என்னை இந்தப் பிரார்த்தனை தூய்மையாக்கும்.      98   உரியணிந்த திருவரையும், உடுக்கேந்தும் திருக்கரமும், அரிமலைந்த திருவடியும், அயன்திகைத்த திருமுடியும், பரிவனிரு விழிபறிக்கப் பதறியவுன் திருவுளமும், உரிமையிலேன் இவன்காண உதவினையே, பெருமனத்தோய்!   புலித்தோல் அணிந்த பெருமானின் திரு இடுப்பு, உடுக்கை ஏந்துகிற அவருடைய திருக்கரம், விஷ்ணு தேடி மலைத்துப்போன அவருடைய திருவடி, பிரமன் தேடி திகைத்துப்போன அவருடைய திருமுடி, அன்புள்ள கண்ணப்பர் தன்னுடைய இரு விழிகளையும் பறிக்க முனைந்தபோது பதறிச்சென்று தடுத்த அவருடைய திருவுள்ளம்... இவற்றையெல்லாம் காணும் உரிமை எனக்கில்லை, ஆனாலும், பெருமனத்தோடு எனக்கு உதவினாயே, உன்னுடைய திருக்காட்சியைக் காட்டினாயே, பெருமானே!      99   புலனைந்தும் ஆள்கின்ற பொலிவில்லா நிலன்நாங்கள், நிலவு,நதி முடிசூடும் நின்மலனோ அதுகருதான், பொலங்கழல்கள் சத்தமிடப் புகுகின்றான் மனத்துள்ளில், நலம்பெருக்கிப் பிழைபோக்கி நடுகின்றான் அன்புவிதை.   ஐம்புலன்களால் ஆளப்படுகின்ற பொலிவில்லாத நிலம்தான் நாங்கள்,   ஆனால், பிறை நிலவையும் கங்கையாற்றையும் சூடிய பெருமான், குற்றமற்ற சிவபெருமான் அவ்வாறு எண்ணி எங்களைக் கைவிடவில்லை, தன்னுடைய பொற்கழல்கள் சத்தமிட எங்கள் மனத்துக்குள் புகுகின்றான், நலனைப் பெருக்கி, பிழையை நீக்கி, அன்பை விதையாக நடுகின்றான்.      100   வாழ்க்கையதன் இழுப்பேற்று வாதைக்குள் விழுகின்றோம், ஆழ்கடலுள் பொங்குவிடம் அதையுண்ட அண்ணலெங்கள் தாழ்குணங்கள் தான்பொறுத்துத் தவறுகளை அறநீக்க, மூழ்குகிறோம் அவளருளில், முக்கண்ணன் தாள்நிழலில்.   வாழ்க்கை எங்களை எந்தத் திசையில் இழுக்கிறதோ அந்தத் திசையில் நாங்கள் செல்கிறோம், சிரமப்படுகிறோம்,   ஆழ்கடலில் பொங்கிய நஞ்சை உண்ட அண்ணல் எங்களுடைய தாழ்ந்த குணங்களைப் பொறுத்துக்கொண்டான், தவறுகளை முழுக்க நீக்கினான், ஆகவே, நாங்கள் அப்பெருமானின் அருளில் மூழ்குகிறோம், முக்கண் பெருமானின் திருவடி நிழலில் வாழ்கிறோம்.    (நிறைந்தது)