[]           மாக்சிம் கார்க்கியின் அரசியல் வெளி ஆர். பட்டாபிராமன்     அட்டைப்படம் : த.சீனிவாசன் - tshrinivasan@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை – Creative Commons Attribution-Non-commercial-No Derivatives 4.0 International License.                                            மாக்சிம் கார்க்கியின் அரசியல் வெளி  (The Political Space of Maxim Gorky )    []          கார்க்கியின் 150 ஆண்டுகள் நினைவாக…        ஆர். பட்டாபிராமன்     R.PATTABIRAMAN                                            பொருளடக்கம் முன்னுரை 4  1 6  2 9  3 13  4 17  5 21  6 25                              முன்னுரை     கலைஇலக்கிய பெருமன்றத்தில் 1980களின் ஆரம்பத்தில் ஆர்வமாக பங்கேற்றபோது மாக்சிம் கார்க்கியின் யான் பெற்ற பயிற்சிகள், யான் பயின்ற பல்கலைகழகங்கள் போன்ற அவரது சரிதையை  திருவாரூர் மார்க்சிஸ்ட் அலுவலக நூலகத்தில் படிக்க முடிந்தது. தாய் நாவலை வாங்கிப் படித்தோம்.  கார்க்கி உலகப் புகழ்வாய்ந்த எழுத்தாளர்- அக்டோபர் புரட்சியை உயர்த்தி பிடித்தவர்- லெனின் ஸ்டாலின் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர் என்கிற பொதுச் செய்திகள் அக்காலத்தில் என் போன்றவர்கள் அறிந்த தகவல்கள்.    சோவியத் உடைவின்போது மெயின்ஸ்டீரீம் பத்திரிகையில் பல கட்டுரைகள் வந்தன. கிரிட்டிக் எனும் பத்திரிகையில் கார்க்கி- லெனின் உரசல்கள் கடிதங்கள் வெளிவந்தன. அதற்கு பின்னர் கார்க்கியின் அரசியல் உலகம் எவ்வாறு கடந்தது என்பதை அறிய ஆர்வம் ஏற்பட்டது.  அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டும் படிப்பினைகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மார்க்சின் 200ஆம் ஆண்டு காலத்தில் இந்தியாவில் காந்தியின் 150ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. அதேபோல் கார்க்கியின் 150ஆம் ஆண்டு கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இச்சூழலில் மாக்சிம் கார்க்கியின் அரசியல் வெளி,  அவரின் பயணப்பாடு குறித்து சில பக்கங்களாவது வரவேண்டும் என்ற உந்துதல் காரணமாக இப்பிரசுரம் எழுதப்பட்டுள்ளது.  Freetamilebooks.com குழுவினர் உதவியால் மின்புத்தகமாக வலையேற்றம் பெற்றுள்ளது.  கார்க்கியின் பிறப்பு, வறுமைச் சூழலில் வளர்ந்தது, இலக்கியவாதியாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட புரட்சிகர குழுக்களுடனான தொடர்பு, 1905 மற்றும் 1917 அக்டோபர்புரட்சிக் காலத்தில் அவரது அரசியல் பார்வைகள்- பங்கேற்பு ஆகியவை மிகச் சுருக்கமாக இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. லெனின் ஸ்டாலின் போன்றவர்களுடன் இக்காலத்தில் ஏற்பட்ட உறவுகள்- உரசல்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. புரட்சிக்கு பின்னர் சோவியத் அரசாங்கம் லெனின் தலைமையில் அமைந்தது. அவர் மறைவிற்குப்பின்னர் ஸ்டாலின் பொறுப்பிற்கு வந்தார். இக்காலத்தில் கார்க்கி எதிர்பார்த்தவைகள்- ஏமாற்றங்கள், மகிழ்ச்சியான தருணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதேபோல் சோவியத் தலைமை கார்க்கியிடம் எதிர்பார்த்து ஏமாந்தவை, கார்க்கியை பயன்படுத்தவேண்டும் என விரும்பி கொண்டாடியவையும் உணர்த்தப்பட்டுள்ளன.  இந்தியாவுடன் கார்க்கிக்கான உறவுகளும் சிறிய அளவு பேசப்பட்டுள்ளது. குறிப்பாக காந்தி கார்க்கியை அறிந்ததும், கார்க்கி காந்தியை அறிய விரும்பியதும் சொல்லப்பட்டுள்ளன. இந்திய விடுதலை குறித்த உற்சாக ஆதரவை அவரிடம் நம்மவர்கள் பெற்றதை நாம் அறியமுடியும். கார்க்கியின் அரசியல் பாதை குறித்த எளிய மிகச் சுருக்கமான அறிமுகம் இளம் தலைமுறைக்கு கிடைக்கும் என்றால் இப்பிரசுரத்தின் நோக்கம் நிறைவேறும். அவரது இலக்கிய உலகத்தை மட்டும் அறிந்தவர்களுக்கு கூட இந்த அறிமுகம் பயனுள்ளதாகவே இருக்கும் என நம்புகிறேன்.             சென்னை               அன்புடன்,  21-10-18       ஆர். பட்டாபிராமன்    1   வேறுபடுவதற்காக இவ்வுலகில் பிறந்தவன் நான் (I have come to this world to disagree ) என்றார் கார்க்கி. அவர் அவ்வப்போது மனசாட்சியின் குரலை வெளிப்படுத்திய கனங்களை பாரபட்சமின்றி உள்வாங்கும் எவராலும் இக்கூற்று எவ்வளவு உண்மையானது என்பதை அறியமுடியும்    கார்க்கி மார்ச் 16, 1868ல் நிஸ்னீ நோவ்கோராட் என்ற பகுதியில் பிறந்தவர். அப்பகுதி விவசாயிகளின் எழுச்சி மற்றும் தொழில் வளங்களை கண்ட பகுதியாக வளர்ந்தது. தாயார் வர்வ்ரா வாசிலெவ்னா கசிரினா சற்று வசதியான  குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் தந்தை அப்போதே நகர டூமா உறுப்பினர். ஆனால் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக  பெஸ்காவ் என்பவருடன் மணமுடித்துக்கொண்டவர். அவர்கள் தங்கள் குழந்தையான மாக்சிம் கார்க்கிக்கு அலெக்சி பெஸ்காவ் என பெயரிட்டனர்.    தொழிலில் திறமையான  தந்தை பெஸ்காவிற்கு ஜாரின் அரசர் குடும்பத்தினரே வரவேற்கும் கலைநுட்ப வேலைகள் வழங்கப்பட்டது. கார்க்கியின் தாத்தா ஜார் படைப்பிரிவில் பணியாற்றியவர். அப்பகுதியில் ஏற்பட்ட காலார நோய் தாக்கி தந்தை பெஸ்காவ் மரணமடைந்தார்.  தாயாரும் காசநோய் தாக்கி மரணித்தார்.     பாட்டியின் அரவணைப்பில் கார்க்கி வளர்ந்தார். அவர்தான் நாட்டுப்புற கதைகளை சொல்வார். தாத்தா தேவாலய விதிகளை சொல்வார். பக்தி பாடல்களை சொல்லித்தருவார். தங்கள் வறுமை காரணமாக பேரன் கார்க்கியை அவரின் 10 வயதிற்கு மேல் அவர்களால் படிக்க அனுப்பமுடியவில்லை. சிறுவன் கார்க்கி தொழில் பழகுனராக அனுப்பப்பட்டார். காலணிகடை ஒன்றில்  வேலைக்கு சேர்ந்தார். பின்னர் சமையற்கலைஞர் ஒருவரிடம் உதவியாளராக இருந்தார். மிகையில் அந்தோனோவ் எனும் அம்மூத்தவர் புத்தகப்பிரியர். பிரஞ்சு நாவல்கள், ருஷ்ய பத்திரிக்கைகள் அவரிடம் இருந்தன கார்க்கி அவற்றை படிக்க வாய்ப்பு கிடைத்தது. பால்சாக் முடித்தவுடன் ருஷ்யாவின் புஷ்கின், துர்கானேவ் தாஸ்தவஸ்கியை அவர் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.     அலெக்சாந்தர் ஜார் கொலை நடந்தபோது கார்க்கிக்கு வயது 13. ஏன் மன்னர் கொலை செய்யப்பட்டார் என வினவிய சிறுவன் கார்க்கிக்கு அது குறித்தெல்லாம் பேசுவதோ விவாதிப்பதோ கூடாது என்கிற பதில் மட்டுமே கிடைத்தது. அந்த இளம் வயதிலேயே  உலகம் நிச்சயமற்று இருக்கிறதே- உண்மையை எங்கு தேடுவது என்கிற வினா அவரை தொந்தரவு செய்தது. 1883ல் அலெக்சாந்தர் ஜாரின் கொலைக்கு காரணமானவர்கள் என 24 பேர் சிறைக்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.    மாணவ நண்பர் ஒருவரின் தூண்டலால் 1884ல் அவர் கசான் பல்கலைக்கு வந்தார்.  ஆனால் அவரால் அங்கு சேரமுடியவில்லை. மனிதன் தன்னை மேம்படுத்திக்கொள்வது சூழலுடன் அவன் நடத்தும் போராட்டங்களின் ஊடாக என்பதை  அங்கு அறிந்தார். மாணவர்கள் சந்திக்கும் இடத்தில் ஜனரஞ்சகவாத இயக்கத்தலைவர் டெரென்கோவ் அறிமுகம் கார்க்கிக்கு கிட்டியது. வெளிப்பார்வைக்கு மளிகைக்கடையாகவும் உள்ளே  அனைத்து இரகசிய அரசியல் வேலைகளின்  கூடாரமாகவும் அச்சந்திப்புகள் நிகழ்ந்தன. தங்களைத்தாண்டி பிற துன்பப்படும் மக்களுக்காக பேசுபவர்களை முதன்முறையாக கார்க்கியால் காணமுடிந்தது. டெரன்கோவ் நூலகத்தில் பல  தடை செய்யப்பட்ட  புரட்சியாளர்களின் எழுத்துக்களை அவரால் படிக்க முடிந்தது    வாழ்க்கைப்போராட்டம் அவரை ரொட்டிக்கடை ஒன்றில் மூன்று ரூபிள் சம்பளத்திற்கு  சேரவைத்தது. நாள் முழுக்க உழைக்கவேண்டிய நிலையில் அவரால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது.  கடும் வேலைச்சுமை  அனுபவங்களை கொண்டுசேர்த்தது.  சக தொழிலாளர்களுடன் உரையாடுகிறார். கிராமப்புற வாழ்நிலைகளை கேட்டறிகிறார்.  ஜனரஞ்சகவாதிகளை எதிர்த்து மார்க்சியவாதி பிளக்கானோவ் போராடிவருகிறார் என அறிந்து அக்கூட்டங்களுக்கு செல்கிறார் கார்க்கி. அங்கு  ஃபெடோசீவ் என்கிற தோழருடனான சந்திப்பில் அவர் மார்க்சிய கொள்கைகளை அறிந்துகொள்கிறார்.  ஆரம்பத்தில் மார்க்சியர்- ஜனரஞ்சகவாதிகள் மோதலில் கார்க்கி பெருமளவு ஆர்வம் காட்டவில்லை. தனது தாயாரின் மரணம், வாழ்க்கைதந்த கசப்பில் அவர் 1887ல் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். பின்னர் மனம்தேறி ஜனரஞ்சக இயக்க தலைவர் ரோமாஸ் என்பவர் கடையில் வேலைக்கு சேர்கிறார். ரோமாஸ் அப்பகுதி விவசாயிகளை திரட்டி நிர்வாகம், போலீசிற்கு எதிராக போராடிவந்தார். சமுகமாற்றம் இல்லாமல் தனிமனித மேம்பாடு சாத்தியமில்லை என்கிற உணர்விற்கு கார்க்கி வந்தடைந்தார். அதே நேரத்தில் எவரோ தலைவர் ஒருவர் சொல்கிறார் என்பதற்காக எதையும் ஏற்கும் மனநிலையும் அவருக்கில்லை. எதார்த்தத்துடன் ஒத்துப்போகிறதா என சரிபார்த்தல் அவசியம் எனக் கருதினார் கார்க்கி அடுத்து 5 ஆண்டுகள் பல்வேறு பகுதிகளில் சுற்றி அலைந்தார். 1892ல்தான் தனது இலக்கிய தாகத்தை அவர் உணரத்துவங்கினார். இரயில்பாதை வேலைகளில் அவருக்கு பல புரட்சிகர நண்பர்கள் கிடைத்தனர்.    லியோ டால்ஸ்டாய் எஸ்டேட்டிற்கு  அங்கு நிலம் பெற்று வாழலாம் என கார்க்கி சென்றார்.  Self perfection  என்பது டால்ஸ்டாய் கோட்பாடாக இருந்துவந்தது. அதை தன் வழியில் புரிந்துகொள்ள கார்க்கி விழைந்தார். முன்னதாக அவர் எழுதிய கவிதை வரி ஒன்று  I have come to this world to disagree  என்பதாக இருந்தது. டால்ஸ்டாயை அப்போது சந்திக்கமுடியாமல் அவரது துணைவியார் சோபியாவைத்தான் பார்க்கமுடிந்தது.     பின்னர் 1889ல் அவர் நிழினி நோவ்கோராட் வந்தார். தன் பழைய நண்பர்கள் அவர்களின் துயரக்கதைகளை கேட்டறிந்தார். அங்கு போலிசாரால் தேடப்பட்டுவந்த செகின் என்பாரின் வட்டத்தில் இணைந்து சோசலிச புத்தகங்கள், கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ ஆகியவற்றை படித்தறிகிறார். செகினிற்கு புரட்சிகர வேலைகளில் உதவியாக இருக்கிறார் என நினைத்து அலெக்சி பெஸ்கோவை அதாவது கார்க்கியை போலிசார் 1889 அக்டோபரில் கைது செய்கின்றனர். முதல் கைது அனுபவம் அவருக்கு கிட்டிவிட்டது.  போதுமான சாட்சியங்கள் நிறுவப்படாமல்  போனதால் அவர் விடுதலை ஆகிறார்.    ஜனரஞ்சக இயக்கத்தின் புகழ் வாய்ந்த எழுத்தாளர் கோரொலெங்கோவை சந்திக்கும் வாய்ப்பு கார்க்கிக்கு கிட்டுகிறது. அவரிடம் தன் எழுத்துக்களின் மீது காட்டமான விமர்சனங்களை எதிர்கொள்கிறார். நிழினியிலிருந்து பிரான்சிற்கு நடந்தே செல்லலாம் என்கிற அவரது முயற்சி தோல்வியில் முடிகிறது.  டிஃப்லிஸ் எனும் பகுதிக்கு வந்து இரயில்வே பெயிண்டர் வேலையில் சேர்கிறார். அரசியல் அகதிகளுடன் சேர்ந்துகொள்கிறார். மாணவர்கள், உழைப்பாளிகள் சந்திப்பதற்கு உகந்த கம்யூன் ஒன்றை நிறுவுகிறார். கார்க்கி கண்காணிக்கப்ட்டு இரு முறை கைது செய்யப்படுகிறார்.  டிஃப்லிஸ் பத்திரிகை ஒன்றில் மாக்சிம் கார்க்கி  என்கிற பெயரில் அவரின் கதை வெளியானது. 1892ல் அவர் திரும்ப நிழினி செல்கிறார். Maxim என்றால் கசப்பு என்பது பொருள்.     1895ல் அவர் சம்ரா கெசட் பத்ரிக்கையாளாராக பணிபுரியத்துவங்கினார். ஆனால் சுரண்டலுக்கு எதிரான எழுத்துக்களை அவர் புனைபெயரில் எழுதவேண்டியிருந்தது. அவ்வாண்டு மார்ச்சில் வெளியான அவரது The song of Falcon உரைநடை கவிதை புரட்சிகர வட்டாரத்தை கவ்விப்பிடித்தது. பணியாற்றிய பத்திரிகையில் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் வெளியேற நேர்ந்தது. பிறகு எகடெரினா பவ்லொவ்னா வல்ஜீனா  என்பாரை கார்க்கி மணம் செய்துகொள்கிறார்.     சமூக போராட்ட கருவியாக இலக்கியம் என்கிற உள்ளுணர்வு முதலில் இருந்தது. பின்னர்  தத்துவரீதியாக அது வலுப்பெறத்துவங்கியது. ருஷ்ய சமூகத்தின் அடித்தட்டு மக்கள்  வாழ்வின் யதார்த்தங்களை தனது படைப்புகளில் அவர் சித்தரிக்கத் துவங்கினார். அவரது நாயகர்கள் எவரிடமும் ஏதும் இறைஞ்சுபவர்களாக இருக்கவேண்டாம் எனக் கார்க்கி கருதினார்.    The Development of Capitalism in Russia என்பதை தனது மூன்றாண்டு கடும் உழைப்பிற்கு பின்னர் லெனின் 1898ல் எழுதிமுடித்திருந்தார். ருஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி குறித்த முரண்பட்ட பார்வைகளை பாபுலிஸ்ட்களும் மார்க்சிஸ்ட்களும் வைத்துக்கொண்டிருந்தனர், சமூக வளர்ச்சியின் தவிர்க்க முடியாத கட்டங்கள் என்பதை பாப்புலிஸ்ட்கள் ஏற்கவில்லை. கார்க்கி அந்நிய முதலீடுகளின் அதிகரிப்பை விமர்சித்தார். கலாச்சர பிற்போக்குத்தனத்தை சாடினார். Nizhegorodskii listok பத்திரிகையில் அவர் 1890களின் துவக்கத்தில் எழுதத்துவங்கினார்.  அரசியல், இலக்கிய சிறு குறிப்புகளை எழுதினார். ருஷ்யாவிற்கு தீர்வை கொணர அறிவுஜீவிகள் தலைமை ஏற்று தொழிலாளர்- விவசாயிகளை வழிநடத்த முன்வரவேண்டும் என்கிற பார்வை அவருக்கு அப்போது இருந்தது.    சோசலிச கருத்துக்களை பிரச்சாரம் செய்தார் என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டு மே 1898- ஆகஸ்ட் 1898வரை சிறையில் வைக்கப்பட்டார். அதே ஆண்டில்தான் புதிய உலகம் என்பதில் வெளிவந்த அவரது கதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்தது. அவர் எழுத்தாளர் என்கிற அந்தஸ்தை பெறத்துவங்கினார். அக்கதை தொகுப்பின் மூலம் கார்க்கி  champion of underdogs  என்கிற அடையாளத்தை பெறுகிறார். அதே ஆண்டில்தான் ருஷ்ய சோசியல் ஜனநாயக தொழிலாளர் அமைப்பு மின்ஸ்க் நகரில் அமையப்பெறுகிறது சோசலியல் ஜனநாயகவாதிகளுடன் மட்டுமல்லாது, வேறு அரசியல் நண்பர்களுடனும் கார்க்கி அப்போது தொடர்பில் இருந்தார்.    நிஸ்னி பகுதியில் சொற்பொழிவுகள், நூலகங்களை உருவாக்குவது, விவாதகுழுக்களை உருவாக்குவது என்பதில் கார்க்கி கவனம் செலுத்திவந்தார். பொதுவாக எழுதுவது, படைப்புகளை வெளியிடுவதற்கான பதிப்பாளர்களை பார்ப்பது என்பதில் கவனம் சென்றது. 1899ல் அவர் பீட்டர்ஸ்பர்க் வந்தபோதுதான் மார்க்சியர்களான பி பி ஸ்டுருவ், துகான் பாரனாவ்ஸ்கி ஆகியோரை சந்திக்கிறார்.  அவர்களுடனான விவாதங்களில்  அவர் திருப்தி அடையவில்லை .அந்த தோழர்கள்  பெரும் ஈகோவுடன் இயங்குகிறார்கள் என்றும் கார்க்கி கருதினார்.  அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில்  வழங்கப்பட்ட புகழுரைகளை கண்டு மயங்காது கண்ணில்லாதவர் மத்தியில் ஒற்றைக்கண் உடையவன் அரசன்தான் என்ற பதிலை ஏற்புரையில் தந்தார்.   அறிவுஜீவிகளை சந்தேகத்துடன் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் அவரிடம் காணப்பட்டது.     யூத இளைஞர்களின் படைப்புகள் வெளிவர துணை நின்றார் கார்க்கி. 1902ல் யூத சிறுவன் ஒருவனை தத்தெடுத்து அவன் கல்வி கற்க உதவினார். யூதர்கள் மீதான தாக்குதல்களை விமர்சித்தார். இக்காலத்தில்தான் அவர் தனது மனிதன் என்கிற மனிதாபிமான படைப்பை கொணர்கிறார். மனிதன்தான் அனைத்தும்.. கடவுளையும் அவனே படைத்தான் . மனிதன் தன் பூரணத்துவத்திற்கான போராட்டங்கள் முற்றுப்பெறுபவை அல்ல- தேவையெல்லாம் சுதந்திர சிந்தனை சூழல்தான் என்று எழுதினார்.    கடவுள், மதம் என்கிற தாக்கங்கள் குறித்து தனது நண்பர்களுடன் கார்க்கி விவாதிக்கிறார். செக்காவிற்கு எழுதிய கடிதம் ஒன்றில்  எனக்கு மக்கள் அறிவிலிகள் என்கிற உணர்வு வருகிறது. அவர்களுக்கு கடவுள் தேவைப்படுகிறது. கடவுள் பார்த்துக்கொள்வார் என எளிய வழிகளையே அவர்கள் தேர்ந்தெடுத்துவிடுகின்றனர். கடவுள் அவசியம் தானா என்கிற கேள்வி முக்கியமானதாக இருக்கிறது. அவர் மற்றொரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில்  நீயே கடவுளாக இருக்கும்போது வேறு எதற்கு என்கிறார். பற்றுறுதி அறிவு அனைத்தும் உன்னிடம் இருக்கிறதே என்றார். அவருக்கு பாயர்பாக் தாக்கம் இருந்திருக்குமா என கார்க்கியின் அரசியல் வாழ்க்கை எழுதிய டோவா யெட்லின்  பதிவிடுகிறார்.  1900களின் துவக்கத்தில் அவரை ஊக்கப்படுத்திவந்த கோரெலெங்கோவிடம் தான் மார்க்சியத்திற்கு நெருங்கிவந்துவிட்டதாக சொல்கிறார் கார்க்கி. பாப்புலிஸ்ட் தலைவர்கள் கேட்டபோது ஆமாம் இஸ்க்ரா படிக்கதுவங்கிவிட்டேன் என்கிறார்.  துயரப்படும் ஜீவன்களின் விடுதலை ஆயுதம் மார்க்சியம் என பி பி அக்செல்ராட் சொன்னது ஏற்கக்கூடியது என்றார் கார்க்கி.     விவசாயிகளை பயன்படுத்திக்கொண்டு பயங்கரவாதத்தில் ஈடுபடும் சோசலிச புரட்சிகர கட்சியை அவர்   ஏற்கவில்லை .  இஸ்க்ரா நண்பர்களுக்கு உதவி என்பதில் ஆர்வமாக  செயல்பட்டார்.  மோப்பம் பிடித்த போலிசார் அவரை கைது செய்கின்றனர். ஏப்ரல் 1901ல் கைதான கார்க்கியின் உடல்நிலை காரணமாக ஒரே மாதத்தில் அவர் விடுவிக்கப்படுகிறார். டால்ஸ்டாய் தலையிட்டு விடுவிக்கப்பட்டார் என்கிற செய்தியும் சொல்லப்படுகிறது. கார்க்கி கைதை கண்டித்து லெனினும் எழுதினார்.     மே 1, 1902 அன்று 5000 தொழிலாளர்களின் பெரும் ஆர்ப்பாட்டம் நிஸ்னி நோவ்கோராட் பகுதியில் நடந்ததை கார்க்கி கண்ணுற்றார். கைதானவர்களை விடுவிக்க நிதி ஆதாரங்களை உருவாக்கினார் . ஆர் எஸ் டி எல் பி கட்சியும் அவரிடம் நிதி உதவியை எதிர்பார்த்தது.  புத்தகங்களுக்கு வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் ராயல்டியை கட்சிக்கு தருவது என்கிற ஒப்புதலை கார்க்கியை  செவஸ்தபோலில் சந்தித்து ஹெல்ப்லாண்ட் என்பவர் பெறுகிறார். ராயல்டியில் 75 சதம் கட்சிக்கு, 25 சதம் கார்க்கியின் தனிப்பட்ட தேவைகளுக்கு என முடிவாகிறது. ஆனால் இத்திட்டம் பெருமளவு வெற்றிப்பெறவில்லை. கார்க்கி தான் ஆண்டிற்கு 5000 ரூபிள்களை கட்சிக்கு தரமுடியும் என்றும் ஆனால் அதில் 4000 ரூபிள்கள் இஸ்க்ராவிற்கு மட்டுமே செலவிடப்படவேண்டும் என்கிற உறுதிமொழியை கோருகிறார். உடன் 400 ரூபிள்களை நன்கொடையாகவும் தருகிறார்.    1902ல் மாஸ்கோ தியேட்டர்குரூப்பை சார்ந்த நடிகை அந்திரீவாவுடன் கார்க்கிக்கு பழக்கம் ஏற்படுகிறது. மாஸ்கோவில் அவர் அவ்வம்மையார் வீட்டில் தங்குவார். அவர்கள் திருமண உறவு குறித்து எதிரும் புதிருமான செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன. 1904ல் அவரது மனைவியான பெஷ்கோவாவை கார்க்கி பிரிந்தாலும் அவர்கள் மத்தியில் கார்க்கியின் மரணம்வரை நல்லுறவு நீடித்ததாக அறியமுடிகிறது.    டெனிட்ஸ்கி என்கிற லோக்கல் கமிட்டி உறுப்பினர் கார்க்கியின் கட்சி உறவுகளை குறித்த பதிவு ஒன்றைத் தந்துள்ளார். ஆவணங்களை இரகசியமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது, நிதி பெற்றுத்தருவது, கட்சி பிரசுரங்கள் வருவதற்கான டெக்னிகல் உதவிகளை செய்தல் என்பன கார்க்கி கட்சிக்கு செய்த பெரும் உதவிகள் என்றார் டெனிட்ஸ்கி.. அவர் நேரிடையாக எப்பொறுப்பிலும் இல்லை. 1903ல் உருவான மென்ஷ்விக், போல்ஷ்விக் பிளவு குறித்து அவரது எழுத்தில் அப்போது பதிவு இல்லை.. 1904ல் அவர் பீட்டர்ஸ்பர்க் சென்று அங்கு புரட்சிகர எழுத்துக்களை வெளிக்கொண்டு செல்வதில் உதவிகரமாக இருந்தார் என டெனிஸ்கி மூலம் அறியமுடிகிறது.    கலை இலக்கியம் என்பது பற்றி கார்க்கி தன் நண்பர் டெலிஷாவ் என்பாருக்கு எழுதிய கடிதத்தில் மனிதன் தன் மீதான நம்பிக்கைகளை மேம்படுத்திக்கொண்டு தன்னை சரியாக கண்டுணர இலக்கியங்கள் உதவவேண்டும் என்றார். இலக்கியம் உண்மையின் பாற்பட்டு நிற்க மனிதனை பயிற்றுவிக்கவேண்டும்.  கீழ்மைக்கு எதிராக மனித மேன்மைகளை கொண்டாடவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.    கார்க்கியின் சிறுகதைகளும் நாவல்களும் வரப்போகும் புயலுக்கு கட்டியங்கூறுகின்றன என்கிற புகழ் அவருக்கு கிடைக்கத் துவங்கியிருந்தது. இம்பீரியல் அறிவியல் அகாதமியில் அவர் உறுப்பினர் என்கிற நிலையை எட்டினார். அப்போது அவருக்கு வயது 34.  அதிகாரத்திற்கு எதிரான கலகக்குரலை எதிரொலிக்கும் அவரால் அங்கு ஒன்றமுடியவில்லை.     நிகோலஸ் ஜார் மன்னருக்கு கார்க்கியின் தேர்வு அதிர்ச்சியை தந்தது. அவர் கல்வி அமைச்சருக்கு இது குறித்த எச்சரிக்கை கடிதம் ஒன்றை மார்ச் 5 1902ல் எழுதினார். அவரை எடுத்துவிட்டு, நிதானபோக்குடைய எவரையாவது போடவேண்டும் என கட்டளையிட்டிருந்தார். கார்க்கி நீக்கப்பட்டதை எதிர்த்து இயக்கங்கள் நடந்தன. கொரெலெங்கோ, செகாவ் விலகினர். டால்ஸ்டாய் தான் உறுப்பினர் இல்லை என்பதால் அது பற்றி எதையும் செய்ய வேண்டியதில்லை எனக்கருதியதாக அறிகிறோம்.    கார்க்கி தனது அசாத்திய திறமைகளை சில தவறான புரிதல்களுடன் வீணடித்துக்கொள்கிறார் என்கிற தாக்குதல் இலக்கிய வட்டத்தில் உருவானது. அவர் நீட்சேயின் செல்வாக்கில் எழுதுகிறார் எனவும் விமர்சிக்கப்பட்டார். நீட்சேயின் செல்வாக்கு என விமர்சிப்பது நியாயமற்றது என்ற விளக்கத்தை கார்க்கி கொடுத்தார். நான் வெகுஜனங்களிலிருந்து வந்தவன். அவர்களுக்காக எழுதுகிறவன் என்ற பதிலடியையும் அவர் தந்தார்.    2 ருஷ்யாவில் ஜனவரி 9 1905ல் பெரும் மக்கள் எழுச்சி புரட்சிகரமாக வெடித்தது. கார்க்கி ருஷ்யா சமுக ஜனநாயக தொழிலாளர் கட்சியுடன் நெருக்கமாக இருந்தார். தனது செல்வந்தர் நண்பர் மொரோசாவ் மூலம் இஸ்க்ராவிற்கு பெரும் நன்கொடை பெற்றுக்கொடுத்தார்,    மென்ஷ்விக்குகள் 1904ல் பெரும்பான்மையுடன் இருந்தனர். லெனின் மத்திய கமிட்டி வேலைகளிலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருந்தார். அவர் பார்வார்ட் எனும் போல்ஷ்விக் பத்திரிகை கொணர முயற்சி எடுத்து வந்தார். ஜெனிவாவில் ஆகஸ்ட் 1904ல் ப்யுரோ ஆப் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் மெஜாரிட்டி என்கிற மத்திய கமிட்டியை அவர்  அமைத்தார். கார்க்கியிடம் நிதி உதவி கேட்டு கடிதப்போக்குவரத்து நடந்ததாக டோவ யெட்லின் பதிவிடுகிறார்.     1904ன் இறுதியில் லிபரல் செம்ஸ்ட்வோ இயக்கத்தாருடன் கார்க்கி இயங்குகிறார். நவம்பர் 20 1904ல் அரசியல் அசெம்பிளி, அரசியல் கைதிகளை விடுவி என்கிற தீர்மானத்தில் கார்க்கி கையெழுத்திடுகிறார். மாலை நடந்த கூட்டத்தில் ஜாரை தூக்கி எறிய வன்முறை அவசியம் எனில் இறங்குவோம் எனவும் பேசுகிறார்.     ஜனவரி 1905ன் துவக்கத்திலேயே எழுச்சிக்கான கூறுகள் வேலைநிறுத்தங்களாக வெளியாயின. கப்பான் பாதிரியார் தலைமையில் புரட்சி வெடித்தது. ஊர்வலத்தை ஒடுக்க அரசாங்க முயற்சிகள் குறித்து லிபரல், இடதுசாரிகள் பங்கேற்ற  ’நமது நாட்கள்’ எடிட்டோரியல் அலுவலகத்திற்கு கார்க்கியும் ஜனவரி 8 அன்று செல்கிறார். அமைச்சர்களை சந்தித்து ராணுவம் அனுப்பாதீர் என்கிற வேண்டுகோளை முன்வைக்க கார்க்கி உள்ளிட்ட தூதுக்குழு சென்றது. ஜாரும் மற்றவர்களும் நிலைமையை நன்கு உணர்ந்துள்ளாதாக பதில் கிடைத்தது. . இரத்தம் சிந்த வைக்கப்பட்டால் அதன் விளவுகள் கடுமையாக இருக்கும் என் கார்க்கி மறுமொழி கொடுத்தார்.     ஜனவரி 9 ஊர்வலம் பற்றி கார்க்கி “ நான் அதை பார்த்தேன், அவர்கள் சுட்டனர். அதில் மூன்றுபேர் அங்கேயே மரணித்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். எந்த அறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கி சூடு நடந்தது” என பதிவிடுகிறார். தலைமை தாங்கிய கப்பான் பாதிரியார் கார்க்கியின் வீட்டில் தங்க வைக்கபட்டார். கப்பான் கடவுள் இல்லை  தேவாலயம் இல்லை ஜாரும் இல்லை என புலம்பினார்.     வன்முறை கொண்ட உலகை வன்முறை மூலம் சரி செய்யவேண்டியுள்ளது என்கிற கடிதத்தை அந்த்ரீவிற்கு கார்க்கி எழுதினார். கார்க்கியின் வீட்டிற்கு பலர் வந்து போகிறார்கள் என்கிற செய்தி அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது.. சதிகார கும்பலில் கார்க்கி உறுப்பினரா என்பதை ஆளுகின்றவர் ஆராயத் துவங்கினர். இளவரசர் ரோமனோவ் ஜனவரி 13 1905ல் கலகத்தை தூண்டிவிட்டவரில் கார்க்கியும் ஒருவர் என குறிப்பிட்டார். விசாரணையின்போது தான் தீவிர சிந்த்னையுள்ளவன், ஆனல் புரட்சி நடந்ததில் தொடர்பு இல்லை என தற்காப்பு வாதங்களை கார்க்கி தெரிவித்தார். அதே போல் நிதி பற்றியும் தனக்கு தெரியாது என்றார். அவரின் கைது பெரும் ஆர்ப்பாட்ட அலைகளை எழுப்பியது.    மாணவர்கள், இலக்கிய அமைப்புகள் கார்க்கியை விடுவி என போராடின. பாரிஸ், பெர்லின் பல்கலைகழகங்கள் ’கார்க்கி உலக மனிதர்’ அவரை விடுவி என குரல் கொடுத்தன. கார்க்கியின் பதிப்பாளர் பியட்னிட்ஸ்கி பத்தாயிரம் ரூபிள் பிணைத்தொகை கட்டி அவரை விடுவித்தார். வெளிவந்த கார்க்கி தான் புரட்சிகரவாதி என்றும் நிலவும் சுரண்டல் எதிர்த்து போராடுவதில் குற்றமற்றவன் எனவும் தெரிவித்தார், ருஷ்ய அறிவுஜீவிகளை விமர்சித்தார். வாழ்வின் அர்த்தம் புரட்சிக்கு சேவகனாக இருப்பது என்றார். மக்களின் விடுதலை தாகத்தை டால்ஸ்டாய் விமர்சிப்பது சரியல்ல. விவசாயி நிலம் ரொட்டியுடன் மட்டும் வாழவிரும்பவில்லை. சுதந்திர இயக்கம், சிந்தனையுடன் கூடிய  வாழ்வும் தேவை என்றார் கார்க்கி. மனிதர்கள் தெருவில் சுடப்பட்டு கொலை செய்யப்படும்போது  நேர்மை நெறி(Moral perfectibility ) என பேசிக்கொண்டிருப்பதை ஏற்க முடியாது என டால்ஸ்டாய்க்கு அவர் பதிலாக கூறினார்.    கார்க்கி போல்ஷ்விக்குகளின் நியாயத்தை ஏற்றார். 1905ல் ஆர் எஸ் டி டபிள்யு கட்சி ஆயுதங்கள் பெற உதவினார். பின்லாந்த் போராளி ஜில்லியாகஸ் என்பார் மூலம் ஜப்பானிய நிதி உதவியுடன் ஆயுதங்கள் பரிமாற்றம் என்பதை முடிவு செய்தனர். கப்பான் பாதிரியை ஜெனிவாவில் லெனின் சந்திக்கிறார். மாஸ்கோவில் ஜூலை 1905 நடந்த அனைத்து விவசாயிகள் மாநாட்டை கார்க்கி புகழ்ந்து பேசுகிறார். டூமாவில் வெகுஜனங்களின் பிரதிநிதிகள் பரவலாக பங்கேற்க வேண்டும் என்றும் அரசியல் சமூக வாழ்வில் விவசாயிகளுக்கு ஏதும் தெரியாது என்று சொல்வது தவறு என்றும் கார்க்கி பேசினார். எந்த புரட்சியும் வெற்றிபெற விவசாயிகள் தொழிலாளர்கள் அறிவுஜீவிகளின் கூட்டு செயல்பாடு அவசியம் என்றார்.     இரகசிய பத்திரிகையாக வந்து கொண்டிருந்த ரபோச்ச்சிக்கு  மூன்றாவது எனப்பொருள்படும் பெயரில் கார்க்கி எழுதிவந்தார் போல்ஷ்விக்குகள் சட்டபூர்வமாக பத்திரிகை நடத்த கார்க்கி பெரும் உதவி செய்தார்.   Novaia Zhizn  எனும்  சட்டபூர்வ பத்திரிகை அக்டோபார் 1905ல் வெளியானது.  ஆனால் அரசாங்கம் டிசம்பரில் அதை மூடியது. பின்னர் கவிஞர் மின்ஸ்கி , அந்த்ரீவா, காட்ஸ்கி, லபார்க், லுனாசார்ஸ்கி, லீக்னெக்ட், லக்சம்பர்க் சந்தித்து பத்திரிகை கொணர்வதற்கு முடிவெடுத்தனர். இதற்கு 15000 ரூபிள்கள் கொடுத்து கார்க்கி உதவினார். நவாயா ஜைசின் கொணரப்பட்டது. லெனினும் கார்க்கியும் பத்திரிகை அலுவலகத்தில் நவம்பர் 27 1905ல் சந்தித்து விவாதித்தனர். மாறுபட்ட கருத்துக்களை அவர்கள் அச்சந்திப்பில் வெளிப்படுத்திக்கொண்டனர். கட்சியல்லாத மின்ஸ்கி ஆசிரியர் குழுவில் கூடாது என்றார் லெனின். கார்க்கி ஏற்கவில்லை. பின்நாட்களில் லெனின் பற்றி கார்க்கி எழுதும்போது தான் அவரை 1907ல் தான் சந்தித்ததாக எழுதுகிறார்.    கார்க்கி அமெரிக்காவிற்கு சென்று நல்லெண்ண அடிப்படையில் ருஷ்ய புரட்சிக்கு தேவையான நிதியை திரட்டமுடியும் என அவருக்கு உணர்த்தப்பட்டது. ஆனால் அவ்வேலையை உடனடியாக அவரால் செய்யமுடியவில்லை. ஆனால் மிக முக்கிய வேலையை அவர் செய்தார் . தாய் நாவலை எழுதினார்.  பின்னர் ருஷ்யா விட்டு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் அவர் 1906ல் அமெரிக்கா சென்றார். துணைவியார் அந்திரீவாவும் உடன் சென்றார். பெர்லின் வழியே அவர் அமெரிக்க சென்றபோது அங்கு  ஜெர்மன் சோசியல் ஜனநாயக கட்சியின் தலைவர்கள் காட்ஸ்கி, பெபல், லீனெக்ட் ஆகியவர்களுடன் உரையாட வாய்ப்பு பெற்றார். பிரான்சில் அடடோலி பிரான்ஸ் உடன் உரையாடமுடிந்தது.     அமெரிக்காவில் ஜாக் லண்டன், மார்க் ட்வெயின், உப்டன் சிங்க்ளர் ஆகியோர் கார்க்கியின் அமெரிக்க பயணம் பயனுள்ளதாக அமைய உதவினர். கார்க்கியை வரவேற்று உரையாட கமிட்டி ஒன்றையும் அமைத்தனர். வரவேற்பு கூட்டத்தில் புகழ் வாய்ந்த எச் ஜி வெல்ஸ், சார்லஸ் பியர்ட், பிராங்ளின் ஜிட்டிங்ஸ் பங்கேற்றனர். கார்க்கியின் பெயர் ருஷ்யா விடுதலையின் அடையாளமாக இருக்கிறது என புகழாரம் சூட்டப்பட்டது. கரிபால்டிக்கு கிடைத்த வரவேற்பை மிஞ்சிவிட்டது என நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.    அமெரிக்காவில் இருந்த ருஷ்யா தூதரகம் கார்க்கியின் புரட்சிக்கான நிதி திரட்டும் வேலையை கண்டித்தது. அவரது தனிவாழ்க்கை குறித்து செய்திகளை பரப்பியது.. ஏப்ரல் 1906ல் அந்த்ரீவா அவரின் துணைவியார் அல்ல. அவர் ஒரு நடிகை என்கிற செய்தியை  வேர்ல்ட் என்கிற பத்திரிகை  முதல் பக்கம் வெளியிட்டது. எகடெரினா பெஸ்கோவா கார்க்கி மூலம் பத்திரிக்கை செய்தி அறிந்து அமெரிக்கா போன்ற சுதந்திர சமூகம் இவ்வாறு தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது அதன் மலிவான ரசனையை காட்டுகிறது என்கிற கேபிள் செய்தியை   மே மாதம் அனுப்பினார். அமெரிக்க பத்திரிகைகள் கார்க்கி குறித்து விவாதம் நடத்தியதாக யெட்லின் குறிப்பிடுகிறார். கார்க்கி மீது கல்லெறிவதை கண்டித்து எச் ஜி வெல்ஸ் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால் மார்க் ட்வெயின் சற்று விலகி நின்று பேசினார். வயதான ட்வெயின் போன்றவர்களால் விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளமுடியாது, அவர் பற்றி விமர்சனம் வேண்டாம் என்றார் கார்க்கி.. தனது பயணம் பெரும் வெற்றியை பெறவில்லை- தன்னால் பத்தாயிரம் டாலர் கூட திரட்ட முடியவில்லை என கார்க்கி வருத்தமுற்றார்.    1906 அக்டோபர் மத்தியில் அவர் அங்கிருந்து இத்தாலி சென்றார். அமெரிக்காவில் நிலவும் பொருளாதார வேறுபாடுகள் தனது புரட்சிகர மனப்பாங்கை அதிகரித்துவிட்டது என்றார் கார்க்கி. போக்தனாவ் செல்வாக்கால் அவர் ருஷ்ய ஜனநாயக கட்சியின் இடது பிரிவின் செல்வாக்கிற்கு உட்படலானார்.  1906 அக்டோபரில் அவர் நேப்பிள்ஸ் வருகிறார்.. ருஷ்யாவின் 1905 புரட்சியின் படிப்பினைகளை ஏற்று உழைக்கும் மக்கள் அணிதிரள்வதை வலியுறுத்தி அங்கு பேசிவந்தார். அங்கு அவர்கள் கேப்ரி எனும் தீவில் தங்கினர். கேப்ரி காலம் என்பதாக 1906-13  ஆண்டுகள் அமைந்தன.    அமெரிக்க அனுபவங்கள் தனக்கு மீண்டும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கார்க்கி கவனமாக இருந்தார். 1907ல்  5 வது கட்சி காங்கிரசில் பிளக்கானோவ், லெனின், டிராட்ஸ்கி,  மார்டோவ் போன்ற முக்கிய தலைவர்களை சந்திக்கவும் உடன் உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது. லெனினை அறிமுகப்படுத்தியவுடன் அவர் வந்ததற்கு மகிழ்ச்சி என தெரிவித்ததையும் அவர் தலைவர் என்பது போன்ற தோற்றம் இல்லாமல் மிகச் சாதாரணமாக, இயல்பாக இருந்ததாகவும் கார்க்கி பதிவிடுகிறார். தாய் புத்தகத்தில் லெனின் உணர்ந்த சில குறைகளை சுட்டிக்காட்டியபோது, படைப்பை அவசரமாக முடிக்கவேண்டிய உந்துதலில் தான் இருந்ததாக கார்க்கி மறுமொழி தருகிறார்.  புரட்சிகர நடவடிக்கைகளில் உணர்வற்ற முறையில் தொழிலாளர் பலர் ஈடுபடுகின்றனர். தாய் படைப்பு அவர்களுக்கு உதவும் என லெனின் தனது ஆமோதிப்பை நல்குகிறார்.  ட்ராட்ஸ்கியும் கார்க்கியும் ஒருவரை ஒருவர் பரஸ்பர பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டதுடன் இணைந்து லண்டன் சென்றனர். மார்டோவ் மீது கார்க்கிக்கு மரியாதை இருந்தது. கட்சி காங்கிரசில் நிலவிய வேறுபாடுகள் குறித்த கவலையை வெளிப்படுத்தி மார்டோவ் பேசினார். போல்ஷ்விக்- மென்ஷ்விக் மத்தியில் இணக்கம் ஏற்படவில்லை. இறுதியில் புதிய மத்திய கமிட்டியில் இருசாராரும் இடம்பெற்றனர். தனியாக போல்ஷ்விக்குகள் தங்கள் கமிட்டி ஒன்றையும் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். கார்க்கிக்கு போக்தனாவ் செல்வாக்கும் அவர் குறித்த உயர் மதிப்பீடுகளும் இருந்தது. கருத்துவேறுபாடுகள்  நிறைந்திருந்த காங்கிரசிலிருந்து கார்க்கியால் உற்சாகமாக திரும்பமுடியவில்லை.  லெனினுக்கும் போக்தனாவிற்கும் இடையில் இணக்கம் உண்டாக்க கார்க்கி முயற்சித்தார். அவரால் அதில் வெற்றிபெறமுடியவில்லை. போக்தனாவ் மத்திய கமிட்டியில் இருந்தவர். இலக்கியவாதி மட்டுமல்ல. பொருளாதார சிந்தனையாளர். மருத்துவர், தத்துவவாதியாகவும் இருந்தவர். கேப்ரி பகுதியில் போக்தனாவ், லுனாசார்ஸ்கி, கார்க்கி இணைந்து தொழிலாளர்க்கென கல்வி மய்யம் ஒன்றை அமைத்தனர். லெனினுக்கு இதில் உடன்பாடு இருக்கவில்லை. போக்தனாவின் கருத்தான சட்டத்திற்கு புறம்பான இரகசிய அமைப்பு புரட்சிகர இயக்கத்திற்கு முதன்மையானது என்ற கருத்தில் கார்க்கி உடன்பட்டிருந்தார். லெனினும் பிளக்கானாவும் வேறுபட்டு நின்றாலும் அவர்கள் வரலாற்று விதிவசவாதத்தில் நம்பிக்கையுடன் உடன்பட்டு நிற்பதாக கார்க்கி கருதினார். ஆனால் செயல்பாட்டு தத்துவம் பக்கம் பாக்த்னாவ் நிற்கிறார். எனக்கு உண்மை புலப்படுகிறது என கார்க்கி அப்போது பேசிவந்தார்.    லெனின் தனக்கு கார்க்கி தேவை எனக்கருதினார். பாட்டாளி பத்திரிகையை சுற்றுக்கு கொண்டுசெல்வதில் கார்க்கி முக்கியமானவர் என்பதை லெனின் உணர்ந்தார். அதே நேரத்தில் கார்க்கி எழுதிய தனிமனிதனின் சிதைவு எனப்பொருள்தரும் கட்டுரையை சமய சிந்தனைகள் கலந்திருப்பதால் பிரசுரிக்க லெனின் மறுத்துவிட்டார்.. கடவுளை கட்டுதல் (God Building) என கார்க்கி, போக்தனாவ் போன்றவர் பேசிவந்ததை லெனின் ஏற்கவில்லை. அந்திரீவா கூட கார்க்கியிடம் நாத்திகன் போல பேசுகிறாய், இறை நம்பிக்கையாளன் போல சிந்திக்கிறாய் எனறார். டால்ஸ்டாய்க்கும் இவ்வாறான கருத்து இருந்தது.     கார்க்கிக்கு மதம் பற்றி மார்க்சிய சிந்தனைகளுடன் முழுமையாக ஒத்துப்போக முடியவில்லை. அதே நேரத்தில் மோசஸ், ஏசு, முகமது பெயரிலான மதங்களை தான் ஏற்கவில்லை என பிரஞ்சு பத்திரிகை ஒன்றிற்கு ஏப்ரல் 15 1917ல் பதிலைத் தருகிறார்.. பிரபஞ்சத்துடன் மனிதனை இணைக்கும் விழிப்புணர்வாகவும் மதத்தை அவர் உணரவிரும்பினார். மனிதனின் அகம் சார்ந்த உள்ளார்ந்த உணர்வாக மதத்தை தான் பார்ப்பதாக மெர்க்யூர் டெ பிரான்ஸ் பத்திரிக்கைகு கார்க்கி பேட்டி அளிக்கிறார். கார்க்கியின் படைப்புக்களில் கடவுளை நிர்மாணித்தல் என்பதன் கூறுகள் இருப்பதாக  இலக்கிய விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.     கார்க்கி தனது நண்பர் போஸ்ஸே எனபாருக்கு எழுதும்போது மனிதன் மட்டுமே இருக்கிறான். நீங்களே கடவுளாக இருக்கும்போது வேறு அந்நியமான ஒன்றை பேசுவது ஏன் என்று கேட்டவர்தான். மானுடத்தை வழிபாட்டுக்குரிய ஒன்றாகவும் தெய்வீக முத்திரையை குத்தி மாற்றுகின்றனர் இந்த இலக்கியவாதிகள். அவர்கள் கடவுள் கற்பனை எனத் துவங்கி மானுடத்தை கடவுளாக்க முயல்கின்றனர். கார்க்கி பேசிவரும் சோசலிசத்தின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. அவரின் சிந்தனை வறுமையில் உள்ளது என்கிற கடுமையான விமர்சனம் பிளக்கானோவிடம் இருந்தது. லெனின் நேரிடையாக கார்க்கியை விமர்சிக்காமல் போக்தனோவை விமர்சித்தார்.     கார்க்கியுடன் தொடர்பில்லாமல் லெனின் சில மாதங்கள் இருந்தார். லெனின் எழுதி தன் சகோதரியின் மூலம் வெளியிட விரும்பிய  பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்பதை கார்க்கி ஏற்கமாட்டார் என்பதை  தான் உணர்ந்ததாக வெளியீட்டாளர் பியட்னிஸ்கி மூலம் செய்தி கிடைக்கிறது. 1909ல் கார்க்கி, லுனாசார்ஸ்கி துவங்கிய கல்விக்கூடத்தை லெனின் விரும்பவில்லை. போக்தனோவ், லுனாசார்ஸ்கி போல்ஷ்விக் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். போல்ஷ்விக்குகள் தங்களை விமர்சித்து எழுதிய பின்னரும் தோழர்கள் வருகை நம்பிக்கை அளிப்பதாக கார்க்கி தெரிவித்தார். அதே நேரத்தில் மதக்கொள்கைகளுக்கு தான் எதிராக இருப்பதிலேயே நிறைவடைவதாகவும் கார்க்கி தெரிவித்தார். கல்விக்கூடத்தில் அரசியல் பொருளாதாரம், சோசலிச சிந்தனைகளை பாக்தனோவ், தொழிலாளர் இயக்க வரலாறு என்பதை லூனாசார்ஸ்கி, கட்சி வரலாறு என்பதை லியதாவ், சமயம்- அரசு உறவுகள் டெசஸ்னிட்ஸ்கி, சோவியத் இலக்கிய வரலாறு, இசை கவின்கலைகள் குறித்து கார்க்கியும் வகுப்புகள் எடுத்தனர்..    லெனினுக்கு ஆதரவாக இருந்த சிலர் கட்சி கல்விக்கூடத்திலிருந்து வெளியேறி லெனின், காம்னேவ் போன்றவர்களின் வகுப்புகளில் கற்கத்துவங்கினர். புரட்சியின் முக்கியத்துவத்தை விட்டுவிடாமல், கார்க்கியின் அவசியமும் உணரப்படுவதாக லெனின் தெரிவிக்க துவங்கினார். கார்க்கிக்கு கடிதமும் எழுதினார். கட்சியின் வேறுபாடுகளில் கார்க்கி சிக்கவேண்டியதில்லை என லெனின் கருதினார். கட்சிக் கல்வியில் தோழர்களை கேப்ரி வந்து லெனின் சந்திக்கவேண்டும் என்றும் லெனின் குறித்து உயர் மதிப்பீடுகளை தான் கொண்டிருப்பதாகவும் கார்க்கி லெனினுக்கு எழுதினார். அதேநேரத்தில் தனிநபர் உறவுகளைப் பேணுவதில் லெனினுக்கு போதாமை இருப்பதாக கார்க்கிக்கு கருத்து இருந்தது. லெனின் எவ்வளவு உறுதிப்பாடு கொண்ட மனிதராக இருந்தாலும் தனிநபர்களுடன் உறவுகளை மேம்படுத்தாவிடில் தவறுகள் செய்ய நேரிடும் என கார்க்கி  எச்சரித்தார்.    நவமபர் 20 1909ல் ருஷ்ய காலைப்பத்திரிககை ஒன்றில் கட்சியிலிருந்து கார்க்கி நீக்கம் என்கிற செய்தி வெளியானது. ஆனால் கார்க்கி அதை தவறான செய்தி என மறுத்தார். தொழிலாளி வர்க்கத்திற்காக உலகம் முழுதும் போற்றப்படும் கார்க்கிக்கு இவ்வாறு நேர்ந்துள்ளதா என நண்பர்கள் சந்தேகத்துடன் கவலைகொண்டனர். கார்க்கி இதை சரியாக எதிர்கொள்வார் என நம்பினர். கல்விக்கூடம் மூடப்படவேண்டிய நிலை ஏற்பட்டது.  அதில் பயின்ற சில தோழர்கள் இணைந்து முன்னேறுவோம் என்கிற குழுவை என்கிற ஆரம்பித்தனர்.     கார்க்கி தனது படைப்பு பணிகளில் கவனம் செலுத்தினார். லெனினும் போல்ஷ்விக் வெளியீடு என்பதை முன்வைத்து கேப்ரி வந்தார். இருவாரங்கள் அங்கே தங்கி கார்க்கியுடன் விவாதங்களை மேற்கொண்டார். கட்சி இதழ்களுக்கு லெனின் அவரிடம் நிதி வேண்டினார். கட்சி பத்திரிகைகளுக்கு எழுதவும் கோரினார். அதே நேரத்தில் கட்சி சாராத பத்திரிகையாளர்களுடன் கார்க்கி கொண்டுள்ள தொடர்புகள், மற்றும் பல்வேறு கட்சிகளின் பத்திரிகைகளுக்கு கார்க்கி எழுதி தருவது லெனினால் விமர்சிக்கப்பட்டது.    கார்க்கி பரவலாக ஜனநாயக சக்திகளுடன் தான் மேற்கொள்ளும் உறவுகள் குறித்து தெளிவுபடுத்தியதையும் லெனின் ஏற்கவில்லை. டெமாக்ரசி, ரியலிசம் என்றெல்லாம் சொல்லி என்னை வெறுப்பேற்றாதீர் என  லெனின் கடிந்துகொண்டார். வருத்தமுற்ற லெனின் தலைமையில் நடந்து வந்த கட்சி கல்வி முகாம் ஒன்றிற்கு விடப்பட்ட அழைப்பை கார்க்கி 1911ல் நிராகரிக்கிறார்.    கட்சி ஒற்றுமை என்பதில் ’முன்னேறுவோம் குழுவை’ சேர்த்துக்கொள்வதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்ற லெனின் ஆனால் ’கடவுள் கட்டுதல்’ போன்ற கதைகளை விட்டொழிக்கவேண்டும் என தீர்மானமாக தெரிவித்தார். நட்பு  வேறு  கடமை வேறு என புரிதல் வேண்டும். லுனாசார்ஸ்கி, போக்தனோவ் நினைப்பதைவிட மார்க்சியம் புரிந்துகொள்வதற்கு கடினமானது என்பதை அவர்கள் உணரவேண்டும் என்றார் லெனின்.    பிரேகில் 1912 ஜனவரியில் நடந்த கட்சி மாநாட்டிற்கு கார்க்கி போகவில்லை.  கட்சியின் இரகசிய வேலைகளுக்கு தனது வருகை இடையூறு உண்டாக்கலாம் என சொல்லி  அவர் வரவில்லை. அவரை பங்கேற்க வேண்டியும் நிதி உதவி செய்யக்கோரியும் போல்ஷ்விக் பிரிவினர் கேட்டிருந்தனர். நிதி உதவி செய்வதற்கில்லை என  கார்க்கி தெரிவித்தார்.  ’ஏசியாடிக்’  பாணியில் நாகரீகமற்று குழு சண்டையில் கொள்கை பிரச்சாரங்கள் நசுங்கிப்போவதாக கண்டனம் தெரிவித்தார். அநாகரிகத்தை குறிப்பதற்கு ஏன் ஆசியத்தன்மை என்கிற சொல்லாடலை பயன்படுத்தினார் எனத்தெரியவில்லை.     மாநாட்டிற்கு பின்னர் ஏப்ரல் 1912ல் லெனினால் அதிகாரபூர்வமாக பிராவ்தா பத்திரிகையை கொணரமுடிந்தது. லெனின் தங்கியிருந்த கிராகோ எனும் பகுதிக்கு கார்க்கி வந்து தங்க வேண்டும் என லெனின் விழைந்தார். அங்கு தொழிலாளர்க்கென கல்விக்கூடம் அமைக்கலாம் என்றார். 1913 ஜூனிலும் லெனின் அருகாமை ரிசார்ட்டிற்கு கார்க்கி வரலாம் என மீண்டும் அழைத்தார். கேப்ரி அனுபவம் போன்ற ஒன்றை கல்விக்கூடத்தில் விரிவுரை தந்து பெறலாம் என்றார். கார்க்கி  நேரிடையாக   சென்று சேர்ந்துகொள்ளாமல் கடிதப்போக்குவரத்து மேற்கொண்டார். 1914-18 காலத்தில் இருவரும் அதிகத் தொடர்புகளற்று இருந்ததாக டோவா யெட்லின் தெரிவிக்கிறார்.    கார்க்கி நண்பர்கள் பேசிய கடவுளைக் கட்டுதல் லெனினைப் பொறுத்தவரை சுய ஏமாற்று. தன்னையே சிறுமைப்படுத்திக்கொள்ளும் வேலை. கடவுள் எனும் கருத்தாக்கம் மனிதனை சமுகத்துடன் இணைக்கவில்லை. ஒடுக்குவோரின் தெய்வீக உரிமையுடன்தான் வெகுமக்களை அது இணைக்கிறது என்று கார்க்கிக்கு லெனின் கடுமையான பதிலை தந்துகொண்டிருந்தார். அதை மக்கள் எண்ணம் என்றும், ஜனநாயக அம்சம் என்று பேசுவதும் பயங்கரமானது என்றார் லெனின்.    கார்க்கி நண்பர்களுக்கு இப்புவியில் நாம் செய்யவேண்டிய நற்செயல்களில் கவனம் குவிப்போம் என எழுத துவங்கினார். அதைவிடுத்து  அனார்க்கிசம், நிகிலிசம், காட்டிற்கு செல்தல் என வாழ்விலிருந்து துண்டித்துக்கொள்வது அவசியமில்லை என்றார். நல்லவை பற்றி நிறைய பேசும் நாம் கொஞ்சமாவது நடைமுறையில் அதை செய்வதற்கு முயற்சிப்பதில்லை.. ருஷ்யர்கள் வாழ்க்கையை தத்துவப்படுத்திகொண்டும் கனவிலும் வாழ்கின்றனர் என்று எழுதினார் கார்க்கி. பசாரேவ், பகுனினுக்கு முன்பாக ருஷ்ய விவசாயிகள் நிகிலிசத்தையும் அனார்க்கிசத்தையும் கண்டுபிடித்துவிட்டனர்.     ரோமனாவ் ஜார்களின் ஆட்சி புரட்சிகர சூழலை அதிகப்படுத்திடவே செய்யும் . இலக்கியம் எனபது மனிதன் புரிந்துகொள்வதற்கு துணையாக நிற்பது, அவன்மீது நம்பிக்கையை உருவாக்குவது, உண்மைத்தேடலுக்குரிய அவனது முயற்சியை வலுப்படுத்துவது என்றார் கார்க்கி. எனது வாசகனுக்கு இதெல்லாம் தீங்கு என பட்டியல் தந்து அவனது வாழ்வின் பங்கேற்பை குறைப்பதல்ல எழுத்தாளன் வேலை என கடிதம் ஒன்றில் நண்பருக்கு தெரிவிக்கிறார். மனிதனின் ஆற்றலை மேம்படுத்தி அநீதிகளுக்கு எதிராக போராடும் சக்தியை இலக்கியம் மனிதனுக்கு வழங்கட்டும் என்றார் கார்க்கி. அவநம்பிக்கைக்கு எதிராக அவர் குரல்கொடுத்தார்.    கார்க்கி தனது Znanie  வெளியீட்டாளர்களுடன் உள்ளடக்கம் குறித்த கருத்து வேறுபாட்டால் 1912ல் தொடர்புகளை நிறுத்திக்கொண்டார். பெர்லின் சார்ந்த புதிய வெளியீட்டாளர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டார். அவர் தனது கேப்ரி காலத்தை டிசம்பர் 1913ல் முடித்துக்கொண்டார்.    3 எட்டாண்டுகளுக்கு பின்னர் ருஷ்யா திரும்பிய கார்க்கி தன் மக்களின் கல்வி, கலாச்சார மேம்பாட்டில் கவனம் செலுத்த விரும்பினார். அவ்வாறு செயலாற்றுவதை அறிவுஜீவி வர்க்கத்தின் கடமையாக கருதினார்.    உலகயுத்தம், 1917 பிப்ரவரி மற்றும் அக்டோபர்புரட்சி காலத்தில் அவர் தன் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்துவந்தார். 1917 பிப்ரவரி நிகழ்விற்கு பின்னர் Novaia Zhizn புதிய வாழ்க்கை எனும் பத்திரிகையை கொணர்ந்தார். அக்டோபர் புரட்சியின் போதான  போல்ஷ்விக்குகளின்  நிலைப்பாட்டை ஏற்கவில்லை.  புதிய ஆட்சி குறித்தும் விமர்சனபார்வையுடன் இருந்தார்.    1912-14 ஆண்டுகளில் ருஷ்யா ஜார் ஆட்சி பெரும் வேலைநிறுத்தங்களை சந்தித்தது. ஆட்சியாளர்களால் எந்த பிரச்சனையையும் தீர்த்துவைக்க முடியவில்லை. கார்க்கி ருஷ்யாவிற்கு வந்துள்ளார் என்பதை ஜார் போலீஸ் மோப்பம் பிடித்தது. பீட்டர்ஸ்பர்க் அடிக்கடி வந்து செல்கிறார் என்கிற உளவு செய்தியும் சென்றது. கார்க்கி வெளிப்படையாக களம் இறங்கி பணியாற்ற விழைந்தார். புரட்சி தேவை என கருதும் எவரும் இதை தவிர்க்கமுடியாது எனக் கருதினார்.     அரசியல் விழிப்புணர்வு அவசியம் என்பது போலவே  தற்குறிகள் அற்ற ருஷ்யாவும் அவசியம்.  செய்யும் வேலைக்கு மரியாதை, தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களாக மக்களை மாற்றவேண்டும். பின்னடைந்த, வெறுக்கப்படும் ஆசியாவாக நாம் இருக்கிறோம் என்று சொல்லிவந்தார் கார்க்கி. ருஷ்யா அய்ரோப்பா ஆகவேண்டும் என அவர் முழக்கம் வைத்தார். ஆசியவகைபட்ட கொடுங்கோல் ஆட்சியா அல்லது ஜனநாயக வடிவ அரசாங்கமா  எது என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும் என்றார்.    போல்ஷ்விக்குகள் கார்க்கியின் ருஷ்ய வருகைக்கு வாழ்த்து தெரிவித்தனர். டூமாவிலிருந்த பதேவ் எனும் தோழர் கார்க்கியை சந்தித்து வாழ்த்தை தெரிவித்தார். இச்சந்திப்பிற்கு பின்னர் 6000 ரூபிள் நிதியை கார்க்கி புரட்சிகர நடவடிக்கைக்காக என வழங்கினார். போல்ஷ்விக் பத்திரிகை இலக்கிய பக்கத்திற்கு கார்க்கி பொறுப்பாளர் ஆக்கப்பட்டார்.    ருஷ்ய சமுக ஜனநாயக கட்சியில் யுத்தம் பற்றி வேறுபாடுகள் இருந்தன. ஜனநாயக அரசாங்கம் அமையும்வரை யுத்தம்  தொடர்வது என பிளக்கானாவ் தெரிவித்து வந்தார். முதலாளிகள் சந்தை பங்கீட்டிற்கான யுத்தம் என்றார் லெனின். அமைதி உடனடியாக தேவை என்கிற கருத்தை மென்ஷ்விக் தலைவர் மார்டோவ் வெளிப்படுத்தினார். அதே நேரத்தில் நாடுகள் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும் என்றார். கார்க்கி யுத்தத்தை கண்டித்து எழுதினார். ஜெர்மனி எதிர்த்து ருஷ்யா வெல்லமுடியாத சூழலில் நிலங்களை இழக்காமல் சமாதானம் என பேசினார். நண்பர்கள் சிலருடன் லெடோபிஸ் என்கிற அரசியல்- இலக்கிய மாத இதழை துவங்கினார். அதில் லுனாசார்ஸ்கி, பசாராவ், பாக்தனாவ்  போன்றவர் எழுதினர். மென்ஷ்விக்குகளும் எழுதினர்.  . கார்க்கி அரசியலில் பலவீனமானவர் என்று லெனினிடமிருந்து விமர்சனம் எழுந்தது.    லெனினும் தனது கட்டுரைகளை அப்பத்திரிகைக்கு அனுப்பிவந்தார். முன்னதாக அமெரிக்க குறித்த  கட்டுரையை அனுப்பியிருந்தார். கிருப்ஸ்காயா எழுதியிருந்த மக்கள் கல்வியும் ஜனநாயகமும் என்கிற பிரசுரம் கொணரவேண்டியும் எழுதியிருந்தார். அதேபோல் 1916ல் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்பதையும் பிரசுரிப்பதற்காக லெனின் அனுப்பியிருந்தார். அதைப்படித்தவுடன் கார்க்கி அதில் கார்ல் காட்ஸ்கி குறித்து உள்ளவற்றை நீக்குமாறு வேண்டினார். கடும் கோபமுற்ற லெனின் இது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்தார்.  ஏகாதிபத்தியம் குறித்த எனது கையெழுத்து பிரதி பீட்டர்ஸ்பர்க் சென்றுவிட்டது. ஆனால் வெளியீட்டாளர் கார்க்கி. அந்த கன்றுக்குட்டி அதிருப்தி அடைந்துள்ளதாம். ஏன் தெரியுமா.. காட்ஸ்கி பற்றி கடுமையாக இருக்கிறதாம். என்ற வகையில் சாடலாக லெனின் கோபம் வெளியாகியிருந்தது. 1917ல் அப்புத்தகம் வெளியானபோது காட்ஸ்கி பாரா இல்லாமல் வந்ததாக  யெட்லின் தகவல் செல்கிறது.     லெடோபிஸ் இதழில் இரு ஆன்மாக்கள் என்கிற கார்க்கி கட்டுரை இரசனைக்கு உள்ளாகவில்லை. ருஷ்யர்களுக்கு ஆசியா மற்றும் மேற்குலகம் என்கிற இரு ஆன்மாக்கள் இருப்பதாக அதில் சொல்லப்பட்டிருந்தது. கிழக்கின் தாக்கம் உங்களை முன்னேறவிடாது என்கிற கணிப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது. உயிர்ப்பற்றவையாக, பிற்போக்கானதாக  கார்க்கி கிழக்கை பார்த்தார். மேற்கு என்பது அவருக்கு நாகரீகம்  மற்றும் வளர்ச்சியின் குறீயீடாக இருந்தது. ருஷ்யா சீர்திருத்தத்தில் அனைத்து வர்க்கங்களுக்கும் பங்கிருக்கிறது என்கிற கார்க்கியின் கருத்து மார்க்சியர்களால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. ஏப்ரல் 1917ல் ராடிகல் டெமாக்ரடிக் பார்ட்டி என்கிற தீவிர ஜனநாயக கட்சிக்காகவும் அதற்கான பத்திரிகை கொணர்வதெனவும் அவர் பேசினார்.  தோழர் பிளாக்கனாவ்  அவர்களுடன் தீவிர ஜனநாயக கட்சி குறித்து விவாதித்து வந்ததாகவும் அவருக்கும் இசைவு இருப்பதாகவும் கார்க்கி  தெரிவித்தார்.    ருஷ்யாவில் புரட்சிகர சூழல் குறித்து அவரது மகனுக்கு கார்க்கி எழுதினார்.  புரட்சி துவங்கியுள்ளது. நமது வலிமையால் இல்லாவிட்டாலும் அரசாங்கம் பலவீனமாக இருப்பதால் புரட்சி வெற்றிபெறும். நான் சோசியல் டெமாக்ரட் என்றபோதும் சமூகம்  சோசலிச பாணி சீர்திருத்தங்களை ஏற்கும் அளவிற்கு இல்லை என்கிற புரிதலில் இருக்கிறேன் என தெரிவித்து இருந்தார்.    கார்க்கி இல்லத்தில் பிப்ரவரி 1917 புரட்சிக்கு முன்னர் மென்ஷ்விக், போல்ஷ்விக், கெரன்ஸ்கி உள்ளிட்டவர் கூடினர். தலைநகர் நிலைமைகள் குறித்த அரசியல் பேச்சுவார்த்தைகள் நடந்தன. உடனடியாக புரட்சி வரப்போகிறது என்கிற கருத்து அப்போது யாராலும் தெரிவிக்கப்படவில்லை. கார்க்கி மட்டும் அப்படியொரு மனநிலை இருப்பதை பேசினார்.  சுகானோவ் என்பார் பிப்ரவரி புரட்சி குறித்து கார்க்கி உலக மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டால் பயன் அளிக்கும் எனக் கருதி அவரை அணுகினார்.  கார்க்கியோ கலாச்சாரத்துறை மாற்றம் எனப் பேசிவந்தார்.  அவ்வாண்டு மார்ச் 7 அன்று கார்க்கி உரையாற்றினார். பழைய எஜமானர்கள் போய்விட்டனர். நமது மரபுகள் இனி நாடு முழுமைக்கும் சொந்தம். அரண்மணைகள் கலைகூடங்களாகட்டும். அவற்றை காப்பீர். எதையும் அழித்துவிடாதீர். எல்லாம் நமது வரலாற்றை பேசட்டும்..     பின்னர் மார்ச் 17 அன்று அவர் ரொமெயின் ரோலந்திற்கு எழுதிய கடிதத்தில் எங்கள் நாட்டில் விடுதலை பெற்றுள்ளோம். இனி ஏராள திறமைமிக்கவர்கள் உருவாகி மானுட மகத்துவத்தை உயர்த்துவர். இந்த சுதந்திரம் நீடிக்க வேண்டுமே என்கிற கவலையும்  கார்க்கிக்கு இல்லாமல் இல்லை. விவசாயிகளின் அனார்க்கிசம் அவருக்கு இந்தவகை கவலையை ஏற்படுத்தியது. கார்க்கியின் அறிக்கைகளை உரைகளை அறிந்த லெனின் கார்க்கி ஏன் அரசியலில் தலையிடுகிறார். உலக பாட்டாளி இலக்கியத்திற்கு அளப்பரிய பங்கை அவர் செலுத்தமுடியும். அவரது அரசியல் பார்வையை விமர்சிக்கும் போதெல்லாம் தான் மிகச் சாதாரண மார்க்சிஸ்ட் என சிரித்துக்கொண்டே சொல்லிவிடுகிறார் என லெனின் கருத்து தெரிவித்திருந்தார். கார்க்கி அப்போது உலகில் லெனினைவிட நன்கு அறிமுகமாகியிருந்தவராக இருந்தார்.    கார்க்கி அரசியல், புரட்சி, கலாச்சாரம் குறித்து தொடர்ந்து எழுதிவந்தார். ஜூன் 20 1917ல் அவர் தனது இல்லத்தில் ‘ப்ரீ அசோசியேஷன்’ கூட்டம் நடைபெறும் என்றும் கட்சி அற்றவர்கள் அதற்கு வரலாம் என்றார். தன் முரண்பாடுகளை உணர்ந்து கார்க்கி கலாச்சார வளர்ச்சி என்பதுடன் தன் வேலைகளை நிறுத்திகொள்வது எனவும் முடிவெடுக்கப்போவதாக சொல்லி வந்தார்.    லெனின் அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்கிற முழக்கத்துடன் முன்னேறிக்கொண்டிருந்தார். கெரன்ஸ்கி நேரடி பொறுப்பேற்றும் 1917 பிப்ரவரி புரட்சியால் அமைந்த அரசாங்கம் தொழிலாளர்- விவசாயி- வீரர்கள் நன்மதிப்பை, சோவியத்துக்களின் ஆதரவை இழந்தது. ஜூலையில் போல்ஷ்விக்குகள் நடத்திய போராட்டம் வெற்றிபெறவில்லை. லெனின் பின்லாந்த் செல்ல நேர்ந்தது. கோர்னிலாவ் படைத்தளபதியானவுடன் கடும் தாக்குதல் எதிர்பார்க்கப்பட்டது. நிலைமைகள் சாதகமாக வருவதை உணர்ந்து போல்ஷ்விக்குகள் முன்னேறினர். டிராட்ஸ்கி விடுதலை பெற்றார். தோழர் லெனினின் சரியான அரசியல் வழிகாட்டல் அரசாங்கத்தை அக்டோபர் 26ல் பணியவைத்தது. கெரன்ஸ்கி தப்பித்தார். போல்ஸ்விக்குகளின் ஆட்சி லெனின் தலைமையில் உருவானது.     அக்டோபர் 16 அன்று போல்ஷ்விக் கட்சி கமிட்டி புரட்சிக்கு திட்டமிட்டுள்ளது என்பதை அறிந்த கார்க்கி அமைதியாக ஒருவர் இருக்ககூடாது என்கிற கட்டுரையை வெளியிட்டார். போல்ஷ்விக்குகள் லாரிகளில் ஆயுதம் ஏந்தி அணிவகுக்க போகிறார்கள் என்கிற செய்தி வருகிறது. அவர்கள் எங்கும் சுடலாம்.  சில திருடர்கள், கொலைகாரர்கள் புரட்சியை நடத்திவிடலாம். வருகிற வதந்திகளுக்கும் அவதூறுகளுக்கும் பொருத்தமான பதிலை போல்ஷ்விக் மத்திய கமிட்டி தரவேண்டும் என கார்க்கி  வேண்டுகோள் விடுத்தார்.    இதற்கு கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் தொழிலாளர் சாலை எனும் பத்திரிகையில் பதில் தந்தார். நிலப்பிரபுக்கள் விவசாயிகளை விரட்டியபோது அமைதி காத்தவர்கள், முதலாளிகள் கதவடைத்து தொழிலாளர்களை பட்டினி போட்டபோது மெளனியாக இருந்தவர்கள், நாம் புரட்சி நடத்தும்போது அமைதியாக இருக்கமாட்டார்களாம். புரட்சி பெரும் பெயர்களுக்கெல்லாம் அடிபணியாது. பிளாக்கானாவ், குரோபோட்கின், சசூலிச் போன்ற பழம்பெரும் புரட்சியாளர்களை எல்லாம் புரட்சி விட்டுவிட்டது. கார்க்கியும் அவ்வரிசையில் சேர்க்கப்பட்டுவிடுவார் என அஞ்சுகிறோம். புரட்சி செத்தொழிந்தவற்றிற்காக பரிதாபமோ அல்லது புதைத்துக்கொண்டிருக்கும் வேலையோ செய்யாது என்கிற கடுமையான பதில் ஸ்டாலினிடமிருந்து வந்தது.     லெனின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கார்க்கி ஜனநாயகத்தை நோக்கி என்கிற கட்டுரை ஒன்றை எழுதினார். முன்பிருந்த ஆட்சியின் அமைச்சர்கள் கதி என்னவானது, சுதந்திரம், ஜனநாயகம் போன்ற கொள்கைகள் காணாமல் போய்விட்டன என எழுதினார். கண்மூடித்தனமான வெறியர்கள், மனசாட்சியற்ற சாகசக்காரர்கள் சமூக புரட்சிக்கு வேகமாக ஓடுகிறார்கள். லெனின் ஏற்படுத்தியுள்ள அரசாங்கம் பற்றிய எச்சரிக்கையை  தொழிலாளர்களுக்கு அவர் விடுத்தார்.    டிராட்ஸ்கியும், லெனினும் தங்களை சோசலிச நெப்போலியனாக கருதுகின்றனர். ருஷ்யாவை அழிக்கும் வேலையை செய்கின்றனர்.  லெனின் சக்தி வாய்ந்தவர். இருபத்தைந்து ஆண்டுகளாக சோசலிச வெற்றிக்காக முகத்து நின்றவர். சர்வதேச சோசலிச இயக்கத்தின் முக்கிய தலைவர். ஆகவே அவர் தான் சரி என நினைப்பதை  ருஷ்யா மக்கள் மீது கொடுமையான பரிசோதனையாக செய்து வருகிறார். ஆனால் காரணகாரிய அறிவில் அச்சோதனை தோல்வியில் முடியும் என கார்க்கி எழுதினார்.  அநீதி அடக்குமுறைகள் எதிர்த்து இவ்வளவு  போராடிய தொழிலாளர்கள்  பைத்தியக்காரத்தனமான விதிகளுடன் தாங்களே அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர். இப்படிப்பட்ட தொழிலாளர் பிரிவுடன் சேர்ந்து நிற்கமுடியாது. டிராட்ஸ்கியின் வழியில் நிற்க விரும்பாதவர் மீது அடக்குமுறைகளை ஏவி பயமுறுத்துவது அவமானத்திற்குரிய ஒன்றுமட்டுமல்ல, குற்ற செயலுமாகும் என கார்க்கி கடுமையான விமர்சனங்களை எழுதிவந்தார்.    பிராவ்தாவில் கார்க்கி தொழிலாளிவர்க்க நலன் என்பதிலிருந்து விலகி நிற்கிறார் என்ற பதிலடி தரப்பட்டுவந்தது. அவர் வர்க்க எதிரியின் குரலை எதிரொலிக்கிறார் என்றனர். கார்க்கி அவ்வாறு பிராவ்தா பேசுவதில் உண்மையில்லை என்றார். இவர்கள் ருஷ்யாவை அழிவிற்கு இட்டு செல்கின்றனர். அரைகுறை படிப்பறிவு கொண்ட வெகுஜனங்களின் கொடுங்கோன்மை எனும் வெற்றியை அவர்கள் கொண்டாடலாம்.  தனிநபர் உரிமையை நசுக்கும் அக்கொண்டாட்டங்களில் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்றார் கார்க்கி.     கேடட் கட்சியினர் ருஷ்யாவின் விவரம் அறிந்த மக்களைக்கொண்ட கட்சி. ஆயிரக்கணக்கான மக்களின் விருப்பாஅர்வங்களை தன்னகத்தே கொண்ட கட்சி என அரசியல் அசெம்பிளி தேர்தல் என அறிவிப்பு வந்தபோது கார்க்கி எழுதினார். அரசியல் அமைப்பு சட்டப்படியான அரசாங்கம் என்பதை ஜனவரி 1918ல் லெனின் வாய்ப்பில்லாமல் செய்துவிட்டார் என்பதில் கார்க்கி கடுமையான வருத்தம் அடைந்தார். 1905 ஜனவரி 9ல் ஜார் ஆட்சி ராணுவம் ஆயுதமற்ற தொழிலாளர்களை சுட்டுத் தள்ளியது. அதேபோல் ஜனவரி 5 1918 அன்று  புரட்சிகர ஜனநாயக கட்சியினர் அரசியல் அசெம்பிளிக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் பூர்ஷ்வாக்கள் போராடம் என பிராவ்தா உண்மையை மறைத்து எழுதியது. ஆனால் தொழிலாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். நியாமாகவுள்ள மக்கள் கமிசார்கள் புரட்சியின் மூலம் வென்றதை எல்லாம் இழக்கப்போகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளட்டும் என எழுதினார் கார்க்கி. கார்க்கியின் சமுக புரட்சி என கிண்டலடித்து பிராவ்தா பதிலடி தந்தது. புரட்சியின் அழகிய முகத்தை கார்க்கி பார்க்கத்தவறி துரோகியாகிவிட்டார் என்றது பிராவ்தா.    இருட்டு வெகுஜனங்களால் ருஷ்யா அறிவாளிவர்க்கம் பயமுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறது என்றார் கார்க்கி. பீட்ட்ர்ஸ்பர்க் பஞ்சம் பற்றி அவர் எழுதினார். கிராமங்களில் பஞ்சம் பரவுவது குறித்து எச்சரித்தார். பிராவ்தா கார்க்கி எழுதிவந்த நொவயா ஜின் நிதி ஆதாரங்கள் குறித்து கேள்வி எழுப்பியது. கார்க்கி பத்திரிகைகாக பெற்ற கடன் விவரங்களை வெளியிட்டார். அதேநேரத்தில் 1901-1917 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கன ரூபிள்களை சமுக ஜனநாயக கட்சிக்கு கொடுத்ததை பற்றியும் குறிப்பிடுகிறார். அவையெல்லாம் என்பணம் மட்டுமல்லவே- சில பூர்ஷ்வாக்களிடம் நன்கொடை பெற்றும் கொடுக்கப்பட்டவைதான் என்றார் கார்க்கி. இஸ்க்ராவிற்கும் அப்படியொரு நன்கொடை பெற்று தந்ததை குறிப்பிடுகிறார்.    நோவாயா ஜின் பற்றி கேள்வி எழுப்பி உங்களை நீங்களே சிறுமைப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்ற பதிலை கார்க்கி தந்தார். லெனின் உட்பட கட்சித்தலைவர்கள் நோவையா ஜின் நிறுத்தப்படவேண்டும் என கருதினர்.  இந்த உரசல்கள் நிறுத்தப்படவேண்டும் என்பதை லெனின் உணர்ந்தார். புரட்சி காலத்தில் அறிவுஜீவிகளின் அவநம்பிக்கைவாதம் ஆபத்தை உருவாக்கும் என்று கருதினார் லெனின். கார்க்கி நம்மவராக இருக்கலாம். அவரே கீழ்மட்டத்தில் இருந்து உயர்ந்தவர். தொழிலாளர்களுடன் நிற்பவர். அவர் நம்மோடு வந்துவிடலாம் என்பதில் சந்தேகம் தேவையில்லை என்ற நம்பிக்கையை லெனின் வெளிப்படுத்தினார்.     ஜூலை 16, 1918ல் நோவையா ஜின் மூடப்பட்டது. முன்னதாக அனைத்து  நியூஸ்பிரிண்ட் அதிகாரமும் போல்ஷ்விக்குகள் வசம் இருப்பதற்கு சட்டம் நவம்பர் 1917ல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.. சோவியத் பிரஸ்கள் மூலம் கார்க்கியால் எதையும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது, லெனின் சொன்னது போன்று நோவையா ஜின் குழுமத்தில் இருந்த அறிவுஜீவிகளின் அவநம்பிக்கைவாதம் குறித்த கேள்வி அவரிடம் வரத்துவங்கியது. போல்ஷ்விக்குகளுடன் தனது சுயத்தை இழக்காமல் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக நண்பர்களிடம் அவர் தெரிவிக்க துவங்குகிறார்.    கலாச்சார வேலைகளில் அறிவுஜீவிகளை ஒன்றிணைக்கும் வேலை என பேசத்துவங்கினார் கார்க்கி.  சில நண்பர்கள் சோவியத் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு என அவர் சொன்னதை ஏற்கவில்லை. கார்க்கியும் ருஷ்ய நன்மைக்காக அவரவர் அளவில் செயல்படுபவர்களை துரோகி என முத்திரை குத்துவது சரியல்ல என  வாதாடினார். 1918 நவம்பரில்  முந்திய முறைமையின் தவறுகளை களைந்து புதிய உலகம் காணும் போராட்டத்தில் பின்தொடர்வீர். சுதந்திரமும் அழகான வாழ்க்கைகாகவும் பின்தொடர்வீர் என்கிற வேண்டுகோளை கார்க்கி விடுத்தார்.    லெனின் படுகொலை முயற்சி அறிந்து, அவர் குணமாகி வரும் வேளையில் கார்க்கி லெனினை சந்திக்கிறார். அவர்கள் நட்பு மீண்டும் மலர அச்சந்திப்பு உதவியது. அறிவு ஜீவிகளின் பங்களிப்பு பற்றி நேர்மறையாக லெனின் எடுத்துக்கொள்ள வேண்டும் என கார்க்கி விழைந்தார் கார்க்கி. தொழிலாளர் அறிவுஜீவிகள் ஒற்றுமை சரிதான். அறிவுஜீவிகள் அவசியம் என்பதை நான் மறுத்ததில்லை என லெனின் கார்க்கியிடம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் எங்களை விரோதியாக பார்க்கிறார்களே.. நாங்கள் இல்லையென்றால் அவர்களும் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் லெனின்.    []                                 லெனின் கார்க்கி சிலை  4 1921ல் கார்க்கி அதிகாரபூர்வமற்ற கலாச்சாரத்துறை அமைச்சர் என்கிற அளவிற்கு உயர்த்தப்பட்டார். உலக இலக்கியங்களை ருஷ்ய மொழியில் பதிப்பிக்க வெளியீட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதன் செயற்குழு உறுப்பினர்களாக கார்க்கியின் சில நண்பர்களால் வரமுடிந்தது. ருஷ்யாவின் செவ்வியல் படைப்புகள் மக்களுக்கு கிடைக்க செய்திடும் வகையில் மலிவு பதிப்புகளை கொணர  நிறுவனம் ஒன்று அமைய கார்க்கி பாடுபட்டார். அந்நிய வர்த்தகம் குறித்த நிபுணர் குழுவில் கார்க்கியின் துணைவியாக வாழ்ந்த அந்த்ரீவா லெனின் அவர்களின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டர்.  விடுதலை மற்றும் கலாச்சாரம் எனும் சொசைட்டியின் சேர்மனாக கார்க்கி நியமிக்கப்பட்டார்.     அறிஞர்களின் நலன் என்பதில் சிறப்பு கவனத்தை கார்க்கி மேற்கொண்டார். KUBU  என்கிற அறிஞர்களின் நல்வாழ்க்கை மேம்பாட்டு கமிட்டி ஒன்றின் மூலம் உரியவர்களுக்கு வேலை, உணவுப்பண்டங்கள் ரேஷன் தட்டுப்பாடு இன்றி கிடைக்கச் செய்தல் ஆகியவற்றிற்கு கார்க்கி உதவினர். போர் கம்யூனிசம் என சொல்லப்பட்ட காலத்தில் இவ்வமைப்பின் மூலம் செயல்பட்டுவந்தார். புரட்சிக்கு பிந்திய இக்காலத்தில் பல்வேறு எழுத்தாளர்களை ஒருங்கிணைப்பதில் வால்யூம் கணக்கில் கடிதம் எழுதினார். கதைகள், நாவல் இலக்கியம் என்பதைவிட கடிதம் எழுதுவதில் முனைப்புடன் இருந்தார்.    செக்கா எனும் இரகசிய போலீஸ் அமைப்பின் சில அத்துமீறல்களை அவர் லெனினிடம் எடுத்துரைக்கும்போது அரசியல் சிலநேரங்களில் மிக மோசமாக அழுக்கு வியாபாரம், அதிலிருந்து கார்க்கி விலகியே இருக்கலாம் என பதிலையே தான் பெற்றதாக கார்க்கி வருத்தப்பட்டார். அதேபோல் நோவையா சிசின் மற்றும் மென்ஷ்விக் இதழ்களை நடத்த அனுமதிக்கலாம் என்கிற கார்க்கியின் 1919 ஜனவரி வேண்டுகோள் ஏற்கப்படவில்லை.    செப்டம்பர் 6 1919ல் லெனினுக்கு தனது வேதனையை மனக்கவலையை உணர்த்தும் கடிதம் ஒன்றை கார்க்கி எழுதினார், நமது அறிவாந்த ஆதாரங்கள் காட்டுமிராண்டித்தனமாக அழிக்கப்படுவதை தடுக்க முடியவில்லை. கேட்டால் இவை அரசியல் போராட்டம் என்கிற வழக்கமான பதிலே தரப்படுகிறது . நம்மோடு இல்லாதவர்கள் நமது எதிரிகள்-நடுநிலையாக சிந்திப்பவர்கள் ஆபத்தானவர்கள் என்கிற நிலை இருப்பதாகவே உணர்கிறேன். நான் கைதாகவும் தயாராகவுள்ளேன். அமைதியாக அழிவை பார்த்துக்கொண்டிருப்பதைவிட அது மேலானது. வெள்ளையர் போலவே சிவப்புக்காரர்களும் மக்களுக்கு பகைவர்களாகிவிட்டனர். வெள்ளையர் என்னை அழிக்கலாம் என்பது எனக்கு எப்போதும் தெரிந்த ஒன்றே. ஆனால் ’ரெட்’டுகள் எனது தோழர்களாக இல்லை. லெனின் இதை புரிந்துகொள்ளவேண்டும் என கார்க்கி தனது வருத்தம் தோய்ந்த விமர்சனத்தை முன்வைத்தார்.    இதே காலத்தில் சில அறிவாளிகள் செக்காவால் துன்பப்பட நேர்ந்ததை கண்ணுறுகிறோம். ருஷ்யாவில் கொஞ்சம்தான் சிறந்த மூளைகள் இருக்கிறது. போக்கிரிகளில் பலர் சாகசக்காரர்களாகிவிட்டனர். புரட்சி பல ஆண்டுகள் நீடிக்க வேண்டும் எனில் அதை தொடர்ந்து  அறிவுபூர்வமாக வழிகாட்ட சக்தி எங்குள்ளது.. விவசாயிகள் மீது நம்பிக்கையில்லை. அவர்கள் தொழிலாளர்க்கும் கலாச்சாரத்திற்கும் பகையாகவே இருக்கின்றனர் என கார்க்கி தனக்கு சரி என தோன்றியதை எழுதினார்.    லெனின் கார்க்கிக்கு கடுமையான எதிர்வினையை தந்தார். தங்கள் எழுத்துக்களை, வந்தடைந்த முடிவுகளை பார்க்கும்போது அழுகிவிட்ட நிலையில் நீங்கள் இருப்பதாக தெரிகிறது. இருளான தெளிவற்ற பதிவுகளை தருகிறீர்கள். மாறியுள்ள சூழலை புரிந்துகொண்டு தங்கள் நடவடிக்கைகளில் தீவிர மாற்றம் கொண்டுவரவில்லையெனில் தங்களுக்கு வாழ்க்கை பொறுக்கமுடியாத ஒன்றாக ஆகிவிடும் என்கிற அறிவுரையை கார்க்கிக்கு லெனின் தந்தார். லெனின் தனது அதிகாரிகளுக்கு கார்க்கி கோரிவருவதை செய்துதரவேண்டும் என பணித்திருந்தார். சிக்கல் இருந்தால் தன்னிடம் எடுத்துவந்து தீர்க்க முயற்சிக்கவேண்டும் என்றும் தெளிவாக அறிவுறுத்தியிருந்தார்.    கார்க்கியின் அவநம்பிக்கை அதிகரித்தது. மேற்கு நாடுகளின் தொழிலாளிவர்க்கத்தை அவர் விமர்சித்தார். அவர்கள் அறிவு வர்க்கத்தினருடன் சேர்ந்து புரட்சிகர மாதிரியை நிறுவாமல் விட்டுவிட்டனர், ருஷ்யாவில் விவசாயிகள் நகரங்களை எடுத்துக்கொண்டுள்ளனர் . தன்னைக் காணவந்த எழுத்தாளர் விடர் செர்ஜிடம் போல்ஷ்விக்குகள் அதிகார போதையில் இருக்கின்றனர் என விமர்சித்தார். எங்கும் கொடுங்கோன்மையை காண்கிறேன் என்றார்,.    அறிவாளிகள், பேராசிரியர் சிலரை கைது செய்தபோது ஜீனோவீவ், கோமிண்டர்ண் மற்றும் செக்கா தலைமையகத்திற்கும் காட்டுமிராண்டித்தன நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என கார்க்கி எழுதினார். அவருக்கு சாதகமான பதில் கிட்டவில்லை. மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் நியாயம் மட்டுமே பதிலாக தெரிவிக்கப்பட்டது.    கிரான்ஸ்டாட் எழுச்சிக்கு ஒருவகையில் ஜீனோவீவ் ஆத்திரமூட்டலும் காரணம் என கார்க்கிக்கு தெரியவந்தது. அப்போராட்டம் ஒடுக்கப்பட்ட முறைகுறித்தும் கார்க்கிக்கு வேறுபாடு இருந்தது. 1921ல் ஜீனோவீவ் கார்க்கி வேறுபாடுகள் அதிகரித்தன. காம்னேவ்  உடனும் கார்க்கி உறவுகள் சீர்கெட்டன. காம்னேவ் துணவியாருக்கும் அந்தீரீவாவிற்கும்  தியேட்டர்கள் நிர்வாகம் தொடர்பாக கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டது. லெனினுக்காக பார்க்கவேண்டியுள்ளது. இல்லையெனில் கார்க்கி எப்போதோ கைதாகியிருக்கவேண்டும் என காம்னேவ் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.    1920ல் லெனினின் 50வது பிறந்தநாளுக்கு கார்க்கி விளாதீமீர் இலியச் லெனின் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதினார்.  அக்கட்டுரை சந்தேகம் நிறைந்த பாராட்டையே முன்வைத்துள்ளது என்கிற கோபம் கட்சி வட்டாரத்தில் உருவானது.  ’தைரியம் கொண்டவர்களின் பைத்தியக்காரத்தனம்’ புரட்சி என்கிற பொருட்பட கார்க்கி எழுதியிருந்தார். அந்த பைத்தியக்காரத்தனம் தனக்கு குற்றமாக தெரிந்தது என்பதையும் தெரிவித்திருந்தார். ஆனால் மக்கள் நேர்மையாகவும், மனசாட்சியுடனும் பணியாற்றுவது என்பதைவிட  வலிகளை தாங்கிக்கொண்டு அமைதியாக வாழக்கற்றுக்கொண்டுள்ளனர். இந்த தைரியசாலிகளின் பைத்தியகாரத்தனத்தை புகழ்ந்து மீண்டும் பாடுகிறேன். இந்த பைத்தியக்காரத்தனத்தில் முதன்மையானவர் லெனின் எனக் அக்கட்டுரை சென்றது.    கட்சியின் பொலிட்ப்யூரோ ஜூலை 31, 1920ல் கூடி கம்யூனிஸ்ட் அகில பத்திரிகையில் வெளிவந்த கார்க்கி கட்டுரைகள் கம்யூனிச கொள்கைக்கு எதிராக இருக்கிறது. இனி இது போன்ற கட்டுரைகளை போடவேண்டாம் என தீர்மானம் இயற்றியது.    1920ல் சோவியத் வந்த பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கார்க்கியை சந்திக்கிறார். டிராட்ஸ்கி, லெனின் இருவரிடமிருந்து கார்க்கி வேறுபட்டவர். மனம் உடைந்து படுக்கையில் இருந்தபோது ரஸ்ஸல் அவரை பார்த்தார். கார்க்கி தனியாக ருஷ்யா அறிவுஜீவிகளின் மரபை, கலைஉணர்வுகளை  காத்திட போராடிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் இறந்துவிடுவாரா என அச்சமாக இருக்கிறது என ரஸ்ஸல் எழுதினார்.    உலகை குலுக்கிய பத்துநாட்கள் என்கிற புகழ்வய்ந்த படைப்பை தந்த அமெரிக்க எழுத்தாளர் ஜான்ரீடு ஜூன் 1918ல் உப்டன் சிங்லேருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். புரட்சிக்கு பின் நடந்த ஒடுக்குமுறைகளை பார்த்து கார்க்கி திகில் அடைந்தார். இரத்தம் சிந்துவதை பார்த்து அவர் அதிர்ந்து போனார். ஆனால் அங்கு இரத்தம் சிந்துதல் என்பது பெருமளவு இல்லை என்பதே உண்மை. அந்தீரீவாவிற்கு புரட்சி ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம் கார்க்கி அச்சீமாட்டியின் செல்வாக்கில் தவறாக சொல்லிக்கொண்டிருக்கிறார்.    எவ்வாறு காலம் தள்ளுகிறீர்கள் என எச் ஜி வெல்ஸ் கேட்ட கடிதத்திற்கு வாழ்க்கை கடினமாக இருக்கிறது. எதையும் எழுதவில்லை என கார்க்கி பதில் தருகிறார்.     1921ல் லெனின் சில தோழர்கள் ஜெர்மனிக்கு மருத்துவ தேவைக்காக அனுப்ப வேண்டிய பட்டியலை ஹெல்த் கமிசாரிடம் கேட்டிருந்தார். அப்பட்டியலில் கார்க்கி பெயர் இடம்பெற லெனின் விழைந்தார். கார்க்கிக்கோ காத்திருக்கும் வேலைகளை அப்படியே விட்டுவிட்டு போக மனமில்லை. சோசலிச பொருளாதார திட்டம் உடனே அமுல்படுத்த இயலாது என்பதை உணர்ந்த லெனின் NEP  என்கிற புதிய பொருளாதார திட்ட அமுலாக்கலில் கவனம் செலுத்தினார்.     அறுவடை விளைச்சல் பஞ்சத்தை போக்கிவிடாது என்பது உணரப்பட்ட நிலையில் நேர்மையான மக்களுக்கு என்கிற வேண்டுகோளை கார்க்கி  அய்ரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு விடுத்தார். டால்ஸ்டாய், தாஸ்தவஸ்கி, மெண்டலிவ், பாவ்லாவ் போன்ற உயர்ந்தார் இருந்து வாழ்ந்த நாட்டிற்கு பெரும் துன்பம் ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவ , உணவு உதவிகளை அறிவார்ந்த வர்க்கம் செய்ய வேண்டும் என்பது அவரது வேண்டுகோள். பல புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்கு தனியாகவும் அவர் கடிதம் எழுதினார். அமெரிக்கன் ரிலிஃப் நிர்வாகம் என்பதன் சார்பில் மில்லியன் ரஷ்ய குழந்தைகளுக்கு ரொட்டி, உடை, மருத்துவ பொருட்கள் அனுப்ப முடியும் என்ற பதில் வந்தது.    ருஷ்ய போல்ஷ்விக் கட்சியின் மத்திய கமிட்டியும் நிவாரண வேலைகளை முறைப்படுத்த காம்னேவ் தலைமையில் குழு அமைத்தது. கார்க்கி மேற்கு நாடுகளுக்கும் ருஷ்ய அரசாங்கத்திற்கும் நிவாரணம் பெறுவதில் பாலமாக செயல்பட்டுவந்தார். கார்க்கிக்கு அக்கமிட்டியின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டது.  ருஷ்ய புரட்சிக்கு பின்னர் பாட்டாளிகளைவிட எண்ணிக்கையில் அதிகம் உள்ள விவசாயிகளின் ஆதிக்கம் அதிகமாகி வருவதாக  கார்க்கி உணர்ந்தார். அதை வெளிப்படையாக தெரிவித்தும் வந்தார். இதனால் நாட்டின்  எதிர்காலம் பயங்கரமாகிவிடும் என அஞ்சினார்.    லெனினோ அய்ரோப்பிய சானிடோரியம் ஒன்றிற்கு கார்க்கி சென்று மருத்துவ சிகிட்சை பெறவேண்டும் என  வேண்டுகோள் விடுத்தார். . லெனின் வலியுறுத்தலையடுத்து கார்க்கி அக்டோபர் 1921ல் ஜெர்மனி செல்கிறார். தான் பொறுப்பேற்று செயல்பட்ட நிறுவனங்கள் நாட்டிற்கு நல்ல சேவை ஆற்றிவருவதாக சுட்டிக்காட்டி, மிக உயர்ந்த  சேமிப்புகள் அழிந்துவிடக்கூடாது என லெனினிடம் வேண்டினார். லெனினுக்கு கார்க்கியின் பயணம் மூலம் பெர்னார்ட் ஷா., வெல்ஸ் ஆகியோரை பயன்படுத்தினால் ருஷ்ய பஞ்சத்திற்கு பெருமளவு நிவாரணங்களை பெறமுடியும் என தோன்றியது.    அக்டோபர் 1921 ல் பெர்லின் வந்த கார்க்கி ஜெர்மனியில் முப்பது மாதங்கள் தங்கினார். ஜீனோவீவ் போன்றவர்களின் தொந்தரவால்தான்  சோவியத்தில் இருக்கமுடியாமல் கார்க்கி கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டுள்ளார் என சில பத்திரிகைகள் செய்திகளை புனைந்தன. ஜெர்மன் பகுதியில் 6 லட்சம் ருஷ்யர்கள் அப்போது வாழ்ந்துகொண்டிருந்தனர். அனைவருக்கும் தெரிந்த பெயராக கார்க்கி விளங்கினார். அவர் பெர்லின் வீட்டிற்கு  ஜார் காலத்து முன்னால் அமைச்சர்கள் சிலர் வந்து பார்த்து சென்றனர். ருஷ்ய கமிசார் யார் வந்தாலும் கார்க்கியை பார்த்து செல்வது வழக்கமானது. பொதுவாக பத்திரிகை பேட்டிகளை கார்க்கி தவிர்த்தார். கார்க்கி ஜெர்மனியிலிருந்து மே 1924ல் இத்தாலி சென்று அங்கு சோரண்டோ எனும் பகுதியில் தங்கலானார்.    லெனின் மாலடோவ் மூலம் கார்க்கிக்கு நிதிஉதவி செய்வதற்கு பிற பொலிட்ப்யூரோ உறுப்பினர்களின் ஒப்புதலை 1921 இறுதியில் கேட்டிருந்தார். அந்தீரிவாவும் பிப்ரவரி 17, 1922ல் லெனினுக்கு கார்க்கியின் உடல்நிலை மோசமாகி வருவதை தெரிவித்து அவரது படைப்புகள் விரைவில் வெளியிடப்படுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டினார்.. ஜெர்மனியில் மருத்து சிகிட்சை  மிக அதிகமாக இருப்பதாகவும் கையில் இருந்த பணம் தீர்ந்து விட்டதையும் அந்தீரீவா தெரிவித்திருந்தார்.  கார்க்கியின் நண்பர் ஒருவர் தரும் தகவலின்படி அவருக்கு சோவியத் அரசாங்க நிதி கிடைக்கவில்லை என்றும் கார்க்கியிடம் கடன்பெற்ற ஒருவரின் மரணத்தில் கார்க்கி 25000 டாலர் பெற்ற தகவல் கிடைக்கிறது.    டிசம்பரில் லெனினுக்கு கார்க்கி எழுதிய கடிதத்தில் புதிய பொருளாதார கொள்கையில் வெறுப்புற்ற சிலர் லெனினை கொல்லலாம் என தகவல் வருவதாகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்தி இருந்தார். ஜார் காலத்தில் இருந்த முட்ட்டாள்களின் எண்ணிக்கையைவிட இப்போது அதிகமாக முட்டாள்கள் இருக்கின்றனர் என கார்க்கி சாடினார்.  பிரான்ஸ், அர்ஜெண்டினா, பிரேசில் ஆகிய பகுதிகளிலிருந்து நிதி மற்றும் கோதுமை வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கார்க்கி லெனினுக்கு எழுதினார்..     ஜூன் 8, 1922ல் சோவியத் அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதம் ஏந்திய பயங்கரவாதம், போல்ஷ்விக் ஆட்சியை வீழ்த்த வெளிநாட்டு ஏஜெண்ட்களுடன் தொடர்பு என்கிற வழக்கு புரட்சிகர சோசலிஸ்ட்கள் மீது துவங்கியது. அவ்வழக்கு 50 நாட்கள் நடந்தது. இவ்வழக்கு குறித்து விமர்சன பார்வையை கார்க்கி வெளிப்படுத்தியது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. அவர் அரசியல் விவரமற்று பேசுவதாக தாக்குதல் கொடுக்கப்பட்டது. பிராவ்தா ஜூலை 22, 1922 கட்டுரை ஒன்று கார்க்கியின் புரிதலை விமர்சித்து எழுதப்பட்டிருந்தது. ருஷ்ய மக்களை குறிப்பாக விவசாயிகளை அனார்க்கிஸ்ட்கள் என கார்க்கி சொல்லிவருவது தவறான புரிதலே என்றது அக்கட்டுரை.  லெனினும் கார்க்கியின் புரிதலை கண்டித்தார்.     வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 34 பேரில் 12 பேர் எஸ் ஆர் எனும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர்கள். 1919 வெள்ளை இயக்கம் கோல்சாக் தலைமையில் எழும்வரை போல்ஷ்விக்குகளை எதிர்த்து எஸ் ஆர் இயக்கத்தினர் போராடிவந்தனர். அவர்கள் கட்டுப்பாட்டில் வோல்கா, சைபீரியா பகுதிகள் பெருமளவு இருந்தன. வழக்கு விசாரணையில் அவர்களுக்கு மரணதண்டனை இருக்காது என புகாரினும் ரடேக்கும் சில வெளிநாட்டு சோசலிஸ்ட்களிடம் கருத்து தெரிவித்திருந்தனர். இது குறித்து பிராவ்தாவில் ஏப்ரல் 11, 1922ல் விளக்கம் ஒன்று தரப்பட்டது. நமது பிரதிநிதிகள் தவறிழைத்துள்ளனர். மரணதண்டனை இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டது தவறு. சோவியத் அரசாங்கம் அகிலத்தின் பிரதிநிதிகளை வழக்கின்போது அனுமதிக்க தயாராக இருக்கிறது என லெனின் பெயரில் அவ்விளக்கம் பிரவ்தாவில் வெளியிடப்பட்டிருந்தது.     சர்வதேச சோசலிஸ்ட் இயக்கத்தின் சார்பில் பெல்ஜியன் லேபர் கட்சி, ஜெர்மன் சுயேட்சை சோசலிஸ்ட் கட்சி, பிரஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த தலைவர்கள் சோசலிஸ்ட் புரட்சியாளர்களுக்கு வாதாட வந்திருந்தனர். மென்ஷ்விக் தலைவர் மார்டோவ் வெளிநாட்டுவாழ் ருஷ்யர்கள் சார்பில் எஸ் ஆர் தோழர்களை காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்தார், கார்க்கியையும்  அவர் அணுகினார். வழக்கில் உள்ளவர்களுக்கு வாதாட ருஷ்ய வழக்கறிஞர்கள் எவரும் கிடைக்காத நிலை இருந்தது. சோவியத்தில் இருந்த பல வெளிநாட்டு வழக்கறிஞர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். இச்சூழலில் சோசலிஸ்ட்களை கொண்டு முயற்சிப்பது என்கிற முடிவை  மார்டோவ் போன்றவர் எடுத்தனர்.     கார்க்கி, அனடோலி பிரான்ஸ் ஆதரவு இருப்பது பயனளிக்கும் என மார்டோவ் கருதினார். அனடோலி பிரான்ஸ் கார்க்கியின் நண்பர் மட்டுமல்ல. ருஷ்ய மக்களின் நண்பருமாக இருந்தார். பஞ்ச நிவாரண நிதிக்காக தனது நோபல் பரிசாக பெற்ற நிதியை வழங்கியவர் அனடோலி. மென்ஷ்விக் தலைவர்கள் வேண்டுகோளுக்கு செவிமடுத்தார் கார்க்கி.    லெனின் சுகவீனமில்லாமல் இருந்த நிலையில் பொறுப்புக்களை கவனித்து வந்த ரைகோவிற்கு கார்க்கி கடிதம் எழுதினார். மரணதண்டனையில் வழக்கு முடித்துவைக்கப்படுமாயின் அது படுகொலையே என்கிற தன் கருத்தை டிராட்ஸ்கி போன்றவர்களிடம் தெரியப்படுத்துவீர் என்கிற கோபம் அவர் கடிதத்தில் வெளிப்பட்டிருந்தது.  அறிவுஜீவிகளை அழித்து ஒழிப்பது ஆரோக்கியமானதல்ல என்கிற தன் கருத்தை தொடர்ந்து கார்க்கி சொல்லிவந்தார்.    அனடோலி பிரான்ஸ் கார்க்கி எழுதிய கடிதத்திற்கு ஜூலை 11, 1922ல் பதில் எழுதியிருந்தார், தான் வழக்கு விசாரணை குறித்து முழுமையாக அறியாவிட்டாலும், அத்தோழர்களும் ருஷ்யா விடுதலைக்கு போராடியவர்கள் என்கிற வகையில் அவர்களது மரனதண்டனை சோவியத் அரசிற்கு கேடு விளவிக்கும் என்பதை ஏற்பதாகவும் , கார்க்கியுடன் சேர்ந்து அப்பீல் செய்வதாகவும் பிரான்ஸ் தெரிவித்தார்.     கிருப்ஸ்காயா மற்றும் ஸ்டாலின் மூலம் மருத்துவ சிகிட்சை பெற்று ஓய்வில் இருந்த லெனினுக்கு வழக்கின் விவரம் ஜூனில் தெரிவிக்கப்பட்டது. ரைகோவ் வழக்கு குறித்து லெனினிடம் ஆகஸ்டில் தெரிவிக்கிறார். கார்க்கி தலையீடு என்பது செப்டம்பரில்தான் லெனினுக்கு தெரிவிக்கப்படுகிறது. லெனின் புகாரினுக்கு கார்க்கி எந்த சூழலில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார், விவாதிக்க முடியுமா என பாருங்கள் என்கிற அறிவுரையை தந்ததாக யெட்லின் பதிவிடுகிறார்.    பிராவ்தா தொடர்ந்து கார்க்கியை விமர்சித்து கட்டுரை, கவிதைகளை வெளியிட்டது. புரட்சிகர சோசலிஸ்ட்களுக்காக கண்ணீர் சிந்தும் கார்க்கி போன்ற நையாண்டி கவிதையை டெமியன் பெட்னி என்பார் எழுதியிருந்தார். கார்க்கியின் நடவடிக்கை புத்திபூர்வமற்றது என்கிற விமர்சனமும் எதிரொலித்தது. கார்ல் ரடேக் கார்க்கியை குட்டிமுதலாளித்துவவாதி என்றும் உதிரி பாட்டாளி பகுதியில் வளர்ந்தவர் என்றும் கார்க்கி அக்டோபர் புரட்சியின் எதிரி என்றும் கடுமையாக தாக்கி கட்டுரை ஒன்றை எழுதினார். ஆகஸ்ட் 7, 1922ல் 12 தோழர்களுக்கு மரணதண்டனை என தீர்ப்பு வந்தாலும் பரவலாக எழுந்த எதிர்ப்புகள் குறித்து சோவியத் தூதரகங்கள் தந்த தகவலால் தண்டனை உடன் நிறைவேற்றப்படவில்லை. ஸ்டாலின் காலத்தில் 1930ல் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.    பெர்லின் மற்றும் பீட்டர்ஸ்பர்க்கை மையமாக வைத்து இலக்கிய அறிவியல் இதழ் ஒன்றை புட்னிக் என்ற பெயரில் துவங்க கார்க்கி முயற்சி எடுத்தார். பின்னர் எபோக்கா என்கிற மென்ஷ்விக் பதிப்பகம் மூலம் பெசடா என்கிற இதழாக அது கொணரப்பட்டது.. ருஷ்யாவிலிருந்து எழுத்தாளர்கள் பயம் காரணமாக அதில் எழுத முன்வரவில்லை பெசெடா ருஷ்யாவிற்கு அனுப்பப்பட கார்க்கி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. லெனின் வாய் பேச முடியாத நிலையில் இருக்கும்போது பிரச்சனையை அவரிடம் எடுத்து செல்லமுடியவில்லை. ஜூன் 1923 துவங்கி மார்ச் 1925 காலத்தில் 7 இதழ்கள் மட்டுமே கொணரமுடிந்தது .    நூலகங்களில் மேற்கின் எழுத்துக்கள் இடம்பெறவேண்டாம் என கிருப்ஸ்காயா முறைப்படுத்துகிறார் என்ற செய்தி கார்க்கியை மேலும் கோபமூட்டியது. ரொமெயின் ரோலந்திற்கு கார்க்கி எழுதிய கடிதத்தில் அந்த மூதாட்டி மேற்கு தத்துவங்கள், சிந்தனையாளர்களை எதிர்புரட்சியாளர்கள் என நினைக்கிறார். சோவியத் குடிமகன் என்பதை விட்டுவிடலாம் எனக்கூட தோன்றுகிறது. மூன்று பெரிய மனிதர்களுக்கு கடிதம் எழுதினேன். வழக்கம்போல்  எப்பதிலும் இல்லை என கார்க்கி வருத்தம் கூடியது.     கார்க்கிக்கு செக்கோஸ்லோவியா செல்வதா இத்தாலி செல்வதா  என்கிற குழ்ப்பம் ஏற்பட்டது. செக்கோஸ்லேவியாவில் தன்னை அனார்க்கிஸ்டாக பார்க்கின்றனரே, இத்தாலியில் அனுமதி பெற முடியுமா போன்ற சங்கடமான நிலையிருப்பதாக கருதினார்.  லெனின் மறைந்தார் என்ற டெலிகிராம் கார்க்கிக்கு கிடைக்கப்பெறுகிறது. இரங்கல் செய்தி எழுதவேண்டும் என நண்பர்கள் மட்டுமல்லாமல், சோவியத் அதிகார தலைமையும்  எதிர்பார்த்தது. அவரால் எழுதப்பட்ட லெனின் குறித்த நினைவுகள் மாஸ்கோவில் தணிக்கைக்கு உள்ளானதாகவும் டிராட்ஸ்கி மிகச் சாதாரண தரத்தில் இருந்தது என மதிப்பிட்டதாகவும் டோவா பதிவிடுகிறார்.    லெனின் மறைவிற்கு ஆறுதல் கூறி ரோலந்த் கார்க்கிக்கு கடிதம் எழுதினார், ட்ராட்ஸ்கி, லெனின் பற்றி கார்க்கி எண்ணங்களை தெரிந்துகொள்ள ரோலந்த் விழைந்தார். பதிலளிக்கும் வகையில் மார்ச் 3, 1924ல் ரோலந்திற்கு கார்க்கி கடிதம் எழுதினார். இருவரையும் அறிந்தவன் என்கிற பெருமிதம் எனக்கு இருக்கிறது. லெனின் மறைவு என்னை தாக்கியுள்ளது. ருஷ்யாவிற்கு பேரிழப்பாகவே அவர் மறைவை பார்க்கவேண்டும். அவருக்கு பக்கவாத நோய் என்பது அரசியல் எதிரிகளின் இட்டுக்கதை என நான் நினைத்திருந்தேன். டிராட்ஸ்கி புத்திசாலி மனிதன். அவரைப்பற்றி அதிகம் தெரியாது. அவர் பழிவாங்கும் தன்மையுடையவர் என அறியப்படுகிறார். டிராட்ஸ்கி படித்தவ்ர், அறிவுஜீவி, தைரியமானவர். அவரால் சிறந்தவற்றை செய்யமுடியும் என நம்புகிறேன் என கார்க்கியின் கடிதம் சென்றது.    ரொமெயின் ரோலந்திற்கு கார்க்கி 1918ல் தனக்கிருந்த மனநிலையை விளக்கி மேலும் எழுதினார்.  நான்  முழுமையான சோவியத் ஆதரவாளன் அல்ல. அன்று நிலவிய சூழலில் விவசாயிகளின், இராணுவவீரர்களின் அராஜகத்தை லெனினால் கட்டுக்குள் கொணர இயலும் என கருதியது உண்மைதான். அதேநேரத்தில் லெனின் செய்த அனைத்தையும் நான் ஏற்கவில்லை. பல ஆண்டுகள் லெனினுடன் சண்டையிட்டவன் நான். ருஷ்ய அறிவாளி வர்க்கத்தை அழித்து ஒடுக்குவதன் மூலம் ருஷ்ய மூளையை அவர் பிடுங்கிவிடுகிறார் என அவரிடத்தில் விளக்கியிருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்திக்கொண்டாலும் தொடர்ந்து ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் வெறுப்பையும் ஏற்படுத்தியது.    5 1925 ஜூன்  சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் ’இலக்கியம்- சகிப்புத்தன்மை’ குறித்த மத்திய கமிட்டி தீர்மானம் கார்க்கிக்கு மகிழ்வை ஏற்படுத்தியது.. கார்க்கியின் நீண்டநாள் தோழர் லூனாசார்ஸ்கி எழுத்தாளர் என்கிற வகையில் கார்க்கியின் மகத்தான பங்களிபை போற்றினாலும், அவரின் புரட்சி குறித்த பார்வையை விமர்சித்திருந்தார். 1925ல் வந்த இந்த விமர்சனத்தில் கார்க்கி புரட்சி குறித்து புத்தகம் எழுதமுடியாமை வருத்தத்திற்குரிய ஒன்று எனவும் குறிப்பிட்டிருந்தார்.     சுக்கோவிஸ்கி என்கிற எழுத்தாளரும் கார்க்கியின் படைப்புக்களை விமர்சித்து எழுதினார். கார்க்கி பெரும் சிந்தனையாளர் இல்லை என்றும் இயல்பூக்க உந்துதலால் ஆக்கங்களை தருபவர் என விமர்சித்திருந்தார். ருஷ்யா மக்களின் மோசமான குணங்களுக்கு ஆசியத்தனமைதான் கேடு எனவும், குணப்படுத்த வேண்டும் என்பதற்கு அய்ரோப்பிய மயத்தையும் கார்க்கி பரிந்துரைக்கிறார். ருஷ்யாவிலேயே அவர் அறிவாளிவர்க்கத்தை மட்டுமே புகழ்கிறார் போன்ற விமர்சனங்களை சுக்காச்கியால் செய்யப்பட்டது. அவருக்கு நகரமும் தெரியாது, கிராமமும் தெரியாது. பெரும்பாலும் முகவரியற்றவராகவே இருக்கிறார் என்கிற தாக்குதலும் வந்தது.    1925ல் சோவியத் பத்திரிகைகளில் கார்க்கி எழுத்துக்கள் இடம்பெறுவதில் தடை ஏதும் இருக்கவில்லை. அவருக்கு ராயல்டியும் சென்றது. அவண்ட் கார்ட் புதிய  இடது சோதனை பத்திரிகைகளில் கார்க்கி குறித்த விமர்சனங்கள் வந்தன. கார்க்கி நேற்றைய மனிதன் என்கிற கடும் தாக்குதல் தரப்பட்டது.. புதிய இடதில் (ஜனவரி 1927ல்) மாயகோவ்ஸ்கி வெளிப்படையான விமர்சனங்களை வைத்தார். சோவியத் என்கிற நிர்மாணத்தில் அனைவரும் உழைத்துக்கொண்டிருக்கும் போது ’எங்கே கார்க்கி நீங்கள்’ என்கிற கேள்விக்கனையை மாயகோவ்ஸ்கி தொடுத்திருந்தார்.    கார்க்கி பலவேறு விமர்சனங்களை பொறுத்துக்கொண்டு தன்னிடம் அணுகிய இளம் சோவியத் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்திக்கொண்டிருந்தார். இளம் எழுத்தாளர்களை சுதந்திரமாக அனுமதிக்கவேண்டும். அவர்களை கசக்கக்கூடாது. மார்க்சியம் பெயரில் கூட அது நடக்கக்கூடாது என்கிற நிலைப்பாட்டில்  கார்க்கி இருந்தார்.     1927ல் சோவியத் புரட்சியின் பத்தாண்டுகள் குறித்து இஸ்வெஸ்டியா இதழில் கார்க்கியின் கட்டுரை வெளியிடப்பட்டது. அவர் சோவியத் குறித்து மேற்குலகம் பரப்பிவரும் தீர்ப்புகளை கடுமையாக விமர்சித்தார். கல்வியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதையும் கீழ்மட்டத்தில் ஜனநாயக பண்புகள் வேறூன்றி வருவதையும் கார்க்கி சுட்டிக்காட்டி புரட்சியின் பெருமிதங்களை பட்டியலிட்டார். புதிய ருஷ்ய மனிதனை காண்பதில், புதிய அரசை கட்டுவதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். தன்னைப்பொறுத்தவரை உணர்ச்சிகளின் வழியே உணர்பவன். காரணகாரியங்களின்படி அறிபவன் அல்லன் எனவும் கார்க்கி குறிப்பிட்டார்.    வேறு பக்கத்திலிருந்தும் கார்க்கிக்கு தாக்குதல் வந்தது. அவர் ’ வி அய் பி’ போல் நடந்துகொள்கிறார். மனதில் பட்டதை துணிச்சலாக பேசிய கார்க்கி இப்போது எங்கே.. டால்ஸ்டாய் இருந்தால்  தைரியமாக பேசியிருப்பார். இதயம் சொல்வதை பேசு கார்க்கி  போன்ற விமர்சனங்களை அவர் எதிர்கொண்டார். 1925களில் கார்க்கியின் துணைவியார் பெஷ்கோவ்ஸ்கி தங்கள் மகன் மாக்சிம் சோவியத்தில் நிலைப்பெற்று வாழவிரும்பினார். கார்க்கிக்கு தயக்கம் இருந்தது. மகன் விரும்பினால் செல்லட்டும் எனக் கருதினார் என குறிப்பிட்டார். கார்க்கிக்கும் மேற்கிலிருந்து வரும் ராயல்டி குறையத்துவங்கியது. அன்றிருந்த சூழலில் கார்க்கி அமைத்துக்கொண்ட வாழ்க்கை முறைக்கு அவருக்கு ஆண்டிற்கு பத்தாயிரம் டாலராவது தேவைப்பட்டது.    1921-28 வெளிநாடுகளில் இருந்த காலத்தில் எனது பல்கலைக்கழகம் என்கிற வாழ்க்கை குறிப்பையும், பல்வேறு சிறுகதைகளையும் அவர் எழுதினார்.  அர்டமானோவ் வியாபாரம், கிளிம் சாம்கின் நாவலையும் எழுதினார். 1927ல் சோரெண்டோவில் கார்க்கியின் அன்றாட வாழ்க்கை எப்படிப்போனது என்பதை அவரை பார்க்க சென்ற கவிஞர் நிகோலய் அசீவ் பதிவு செய்துள்ளார்.     கார்க்கியின் குடும்பம் தவிர குறைந்தது 15 நபர்களாவது இரவு உணவில் சேர்வார்கள். உணவு முடிந்தவுடன் ஆடல் பாடல் நிகழ்வுகள் நடக்கும். கார்க்கி புகைத்து தள்ளுவார். பொதுவாக காலை 9 மணிமுதல் கார்க்கியின் வேலைநேரம் துவங்கிவிடும்.  மதிய உணவு 2 மணிக்குத்தான் பொதுவாக எடுத்துக்கொள்வார். மதிய நேரத்தை அவர் கடித பரிமாற்றங்களுக்கு உகந்த நேரமாக பயன்படுத்திக்கொள்வார். தனது மகன்  மோட்டார் சைக்கிள், காரில் வேகமாக செல்வது குறித்து கவலையுடன் பேசுவார். கார்க்கிக்கு தனது மொழிபெயர்ப்பாளர் திருமதி மெளராவுடன் காதல் இருந்தது. அவர் தனது கணவர் பென்கண்டார்ப் மற்றும் குழந்தைகளை பார்க்க போய்விட்டால் கார்க்கி எழுத்துகளுக்கு தேவைப்படும் மொழிபெயர்ப்பு பணி பாதிக்கப்படும். இந்நேரங்களில் கார்க்கி வருத்தப்படுவார். கார்க்கி அப்பெண்மணியை அதிகாரபூர்வமாக திருமணம் செய்துகொள்ளவில்லை. மெளரா பற்றி ஏராள செய்திகள் இருந்தன. அவர் பிரிட்டிஷ் ஏஜெண்ட், ஜினோவீவால் கார்க்கியை கண்காணிக்க அனுப்பப்பட்டவர். எச் ஜி வெல்சை நன்கு அறிந்தவர் போன்றவை சில தகவல்கள் ”    கார்க்கியின் முப்பதாண்டுகள் இலக்கிய பணியையும் அவரின் 60ஆம் ஆண்டுகள் கொண்டாட்டத்தையும் நடத்தலாம் என ஸ்டாலினிடமிருந்து அழைப்பு வந்தது. கார்க்கியின் நண்பர் பட்பெர்க் சோவியத் அதிகாரத்துடன் நட்புவேலியை சரிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்திவந்தார். 1928ல் ஸ்டாலின்  உச்சத்தலைவர் நிலை ஏற்பட்டிருந்தது. ட்ராட்ஸ்கி புகலிட மனிதரானார். ஜினோவீவ் தொல்லையும் இனியில்லை. கார்க்கியை பொறுத்தவரை எதிராளிகளை ஒழித்து அப்புறப்படுத்துவதை ஏற்கவில்லை. அதேநேரத்தில் கட்சிக்கும் அறிவுஜீவிகளுக்கும் இணக்கம் ஏற்படவேண்டிய அவசியத்தை வற்புறுத்தி வந்தார். தான் அமைதியாக தாய்நாட்டில் வரவேற்கப்பட்டால் போதுமானது. மெடல் அவார்ட் போன்ற ஆராவார அறிவிப்புகள் ஏதுமில்லாமல் இருக்கட்டும் என்கிற விழைவை கார்க்கி தெரிவித்தார்.     முன்னதாக கம்யூனிஸ்ட் யூத் லீக் என்கிற இளைஞர் அமைப்பிற்கு கார்க்கியின் படைப்புக்களை பரவலாக்குவதற்கான கடமை கொடுக்கப்பட்டிருந்தது. கார்க்கியின் 60ஆம் வயதிற்கான வாழ்த்தையும் அவரின் 35 ஆண்டுகால படைப்புப்பணியையும் பாராட்டி மக்கள் கமிசார் கவுன்சில் தீர்மானம் போட்டது. புரட்சிக்கும் உழைக்கும் மக்களுக்கும் சோவியத் சோசலிஸ்ட் குடியரசு கட்டுமானத்திற்கும் கார்க்கியின் பங்கை பாராட்டுகிறோம் என தீர்மானம் சென்றது.    1920களில் யுத்த கமிசார் பொறுப்பில் இருந்த மோரஸ் உடன் கார்க்கி கூட்டுப்பண்ணைகளை பார்வையிட சென்றபோது அவருக்கு கிடைத்த வரவேற்பை அவர் மிக எச்சரிக்கை உணர்வுடனேயே எதிர்கொண்டார். சோசலிச அமுலாக்கம் கடினமான முறைகளாக இருக்கிறது என தெரிவித்தார். கூட்டுறவு பண்ணைகள் கட்டாயப்படுத்தி நிறுவப்படுதல் கூடாது என்கிற கருத்தையும் உரையாடல்களில் தெரிவித்தார்.. கார்க்கி பல இடங்களில் வெளிப்படையாக ஆதரித்து பேசினார் என மோரஸ் குறிப்பிடுகிறார்.    பிரிஷ்வின் என்கிற எழுத்தாளர் தன் குறிப்பில் கார்க்கிக்கு மக்கள் கூடி தாமாக வரவேற்பை தந்தார்கள் என்பதைவிட அரசாங்க ஏற்பாட்டில் அவ்வரவேற்புகள் இருந்தன என்கிறார். ஆமாம் நேற்றுவரை இத்தாலி பாசிஸ்ட் கார்க்கி, இன்று ருஷ்யன் கம்யூனிஸ்ட் கார்க்கி என ஒரு தொழிலாளி தனது கருத்தை தெரிவித்ததாக பிரிஸ்வின் குறிப்பு சொல்கிறது.    மாஸ்கோவில் பல கூட்டங்களில் கார்க்கி பங்கேற்க துவங்கினார். லெனின் சகோதரி தலைமைதாங்கிய தொழிலாளர் கூட்டம் ஒன்றில் கார்க்கி உரையாற்றினார்.. அக்கூட்டத்தில் கட்சியில் சேர அழைப்பு வந்தால் மகிழ்வுடன் ஏற்பேன் என்றார். அதே நேரத்தில் கட்சியுடன் நெருக்கமாகவும்  partisan போன்றும்  இருந்தால் கட்சிக்குத்தான் அதிக பலன்கிட்டும் என்றார். கம்யூன்கள் சிலவற்றை நேரிடையாக சென்று பார்த்த கார்க்கி அவற்றின் செயல்பாடுகளை உற்சாகப்படுத்தி வந்துள்ளார்.    கார்க்கி கட்சியில் இருந்தாரா இல்லையா என்பது குறித்து வேறு கருத்துக்கள் வெளியாயின. சோவியத்திலிருந்து வெளியேறிய வாலேரி தார்சிஸ் கார்க்கி கட்சி கார்டு வைத்திருக்கவில்லை. அவர் கட்சி உறுப்பினராக இருந்ததில்லை என தெரிவித்திருந்தார். ஆனால் மாஸ்கோவில் கார்க்கி குறித்த ஆய்வாளர் கூட்டம் 1989ல் நடந்தபோது கார்க்கி 1905லேயே கட்சியில் சேர்ந்திருந்தார். 1917ல் அவர் புதுப்பிக்கவில்லை. தொடர்ந்து சேரவும் இல்லை என்கிற கருத்து பதிவானது.     தனது சொந்த ஊர் தொழிலாளர் மத்தியில் அவர் பேசும்போது தான் கட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உழைபவர்களாகிய உங்களுக்கு கட்சிதான் எல்லாம். அதுதான் உங்கள் பலம். உங்களின் வழிகாட்டி எனப்பேசியதாகவும் யெட்லின் பதிவு செய்துள்ளார்.  1928-36 ஆண்டுகளில் கார்க்கியின் ஊரைச் சேர்ந்த ஜென்ரிக் யகோடா- கார்க்கி இடையிலான கடிதங்கள் பல முக்கிய அம்சங்களில் கார்க்கியின் நிலைப்பாட்டை சொல்வதாக டோவா யெட்லின் குறிப்பிடுகிறார்    1928 ஜூலை பத்திரிகை குறிப்பின்படி கார்க்கியின் படைப்புக்களுக்கான உரிமையை அவர்  Gosizdat  என்பதற்கு 3.62 லட்சம் டாலருக்கு விற்றதாக  கோல்மேன் என்பவர் தெரிவித்தார். மாஸ்கோவிலிருந்து மீண்டும் அவர் அக்டோபர் 12, 1928ல் இத்தாலி சென்றார். அங்கிருந்த 4 மாதங்களில் லெனினை வசைபாடியும் லெனினுடைய உளவாளிதான் கார்க்கி- ஒற்று வேலை பார்ப்பவர் எனவும் ஏராள கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. அதே போல் பத்திரிகைகளில் ஸ்டாலினுடைய அதிகாரபூர்வ ரிஜிஸ்ட்ரார் ஆகிவிட்டார் கார்க்கி போன்ற விமர்சனங்களும் வந்தன.     கார்க்கி வழக்கம்போல் சொரெண்டோவில் நண்பர்களுடன்  இருக்கத்துவங்கினர். ரொமெயின் ரோலந்த், எச் ஜி வெல்ஸ்  ஆகியோருடன் தொடர்பில் இருந்தார். மாஸ்கோவிற்கு தனது மகன் மருமகள் சகிதம் மே 26 1929ல் செல்கிறார். அப்போது கார்க்கியின் புகழும் கூடியது ஸ்டாலின் குறித்தும் சோவியத் ஆட்சி குறித்தும் கார்க்கியின் புகழாரங்களும் அதிகமாயின. அவ்வாண்டு அக்டோபரில் இத்தாலி திரும்பிய கார்க்கி  மீண்டும் மாஸ்கோவிற்கு 1931 மே மாதம்தான் வருகிறார்.     இவ்வாண்டுகளில் வலது போக்கினர் என கருதப்பட்ட புகாரின் ரைகோவ் உள்ளிட்டோர் மீது தாக்குதல் எழுகிறது. 1929 ல் நடந்த 16வது கட்சி காங்கிரஸ் தொழில்மயம், கூட்டுப்பண்ணைகள் ஆகியவற்றை தீவிரப்படுத்த வழிகாட்டியது. காலினின் மாலடோவ் தலைமைக்குழுவிற்கு கொணரப்படுகின்றனர்.  அய்ந்தாண்டு திட்ட செயல்பாட்டில் குறைநேர்ந்தால் எவரால் என காரணம் அறியப்பட்டு  அவர்களுக்கு மரணதண்டனைவரை நிலைமை சென்றது. முன்னால் மென்ஷ்விக்குகள் சிலரும்,  உயர்ந்த பொறுப்பில் இருந்த டெக்னோகிராட்ஸ் சிலரும் இவ்வாறு சுடப்பட்ட செய்தியை யெட்லின் குறிப்பிடுகிறார்.     முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்களில் சிலர் நெருக்கடிக்கு உள்ளாயினர். மார்க்ஸ் எங்கெல்ஸ் கழகத்தின் ரியாஸ்னாவ், காஸ்பிளான் சார்ந்த பேராசிரியர் க்ரோமேன், பொருளாதாரவாதி சுக்கானாவ், ஜின்ஸ்பர்க் வேறுபடுகிறவர்கள்  என சுட்டிக்காட்டப்பட்டனர். மாறுபட்டவர்களில் சிலர் 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை பெற்றனர்.   இராணுவ நிபுணத்துவம் பெற்றவர்கள் என அறியப்பட்டவர்கள்கூட தப்பமுடியவில்லை. குலாக் லேபர் கேம்ப்ஸ் என்பது நிறுவனமயப்படுத்தப்பட்டது.     சீர்குலைவாளர்கள் குறித்து கார்க்கி படைப்பு ஒன்றை தரவேண்டும் என ஸ்டாலின் விழைந்தார். யகோடா விவரங்களை கார்க்கிக்கு கொண்டு சேர்ப்பவராக செயல்பட்டார். ஸ்டாலினின் ஆமாம் சாமி (எஸ் மேன்) ஆகிவிட்டாரா கார்க்கி என்கிற விமர்சனங்கள் எழுந்தன.     1933 ஜனவரியில் ரைய்கோவ் கட்சியில் எழுப்பிய சில பிரச்சனைகளில் கார்க்கிக்கு உடன்பாடு இருந்தது. அவர் போல்ஷ்விக் தைரியத்தை காட்டியிருக்கிறார் என கார்க்கி கருதினார். கட்சி நிலையிலிருந்து விலகல்கள் தொடர்ந்தால் ரைகோவ் மீது நடவடிக்கை என தலைமை எச்சரித்தது. சோவியத்தில் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி என பிரஞ்சு பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டதை அடுத்து ரோலந்த் கார்க்கிக்கு உண்மை என்ன என கேட்டிருந்தார். உணவு, வீடு பற்றாக்குறை இருப்பது உண்மைதான். ஆனால் விவசாயிகள் ஒத்துழைக்க மறுப்பதும் காரணமாகவுள்ளது என ஜனவரி 30 1933ல் கார்க்கி பதில் எழுதியிருந்தார்.    கார்க்கி வீடு எப்போதும் மனிதர்கள் சூழ சுறுசுறுப்பாக இருந்தது. தனது மகன்  மருமகள் குழந்தைகளுடன் இருந்தார். ஆனால் 1934ல் நேர்ந்த மகன் மாக்சிம் மரணம் அவரைத் தாக்கியது. கார்க்கியின் கடித போக்குவரத்தை மாக்சிம்தான் ஒழுங்கமைத்து வந்தார். இயற்கையின் மீதான பெரும் ஆர்வலராக மகன் இருந்தார். மகனின் மறைவால் அவர் தன் சிரிப்பை இழந்தார் என மருமகள் நினைவுக்குறிப்பு சொல்கிறது.    சோவியத் எழுத்தாளர் காங்கிரஸ் முதல்முறையாக 1934ல் கூட்டப்பட்டது. ஆகஸ்டில் கார்க்கி தன் உரையை ஸ்டாலினுக்கு அனுப்பி ஒப்புதல் கோரினார். ஜாட்னாவ் துவக்கவுரை நிகழ்த்தினார். கலைஞர்களுக்கு மறுகல்வி, கலைகளை மறுவார்ப்பு செய்தல் என்பதெல்லாம் பேசப்பட்டது. சோசலிச எதார்த்தவாதம் என்பது முன்மொழியப்பட்டது. நமது கதாநாயகர்களை நமது இலக்கியங்கள் எவ்வாறு உருவாக்கவேண்டும் என்பதும் பேசப்பட்டது.    கார்க்கி உலக இலக்கியம் எனும் இடத்தில் பூர்ஷ்வா இலக்கிய உலகிற்கு மாற்றாக சோவியத் இலக்கியம் என பேசினார். தனிநபரின் படைப்புத்திறனை நாம் சுருக்கிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையையும் கார்க்கி தந்தார். அதை வளர்த்தெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்ற கார்க்கியின் உரை ஏமாற்றமாக இருந்ததாக அங்கு விமர்சனம் எழுந்தது.    1934 டிசம்பரில் பொலிட்ப்யுரோ உறுப்பினரும் மிக முக்கிய லெனின்கிராட் பகுதிக்கு தலைவருமாக இருந்த கிராவ் கொலையுண்ட செய்தி கார்க்கிக்கு வருத்தம் ஏற்படுத்தியது. கிரோவ் சிறந்த நிர்வாகி என்றவகையில் ஸ்டாலினுக்கு போட்டியாளர் எனப் பேசப்பட்டு வந்தவர். கிராவ் சோவியத் வெளிநாட்டுக்கொள்கை உருவாக்கத்தில் பங்களிப்பு செய்தவர் என்கிற பெருமிதம் கார்க்கியிடம் இருந்தது. பிராவ்தாவிற்கு அவர் அனுப்பிய இரங்கல் செய்தியில் அற்புதமான தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வில்லத்தனத்தால் மட்டுமல்ல, நமது  விழிப்பற்ற அஜாக்கிரதையாலும்தான் எதிரி வெல்கிறான் என அதில் தெரிவித்திருந்தார்.    தனிநபர் பயங்கரவாதத்தை கண்டித்து ஸ்டாலின் சொல்லியும் பிராவ்தாவிற்கு கட்டுரை தராத கார்க்கி குறித்து 1935ல் விமர்சனம் வந்தது. தனிநபர் பயங்கரவாதம் மட்டுமல்ல, அரசு பயங்கரவாதமும் கண்டிக்ககூடியதே என கார்க்கி தன்னை தற்காத்துக்கொண்டார். ஸ்டாலின் சந்திப்புகள் அவருக்கு குறையத்துவங்கின.    1935ல் பாரிசில் நடைபெற இருந்த சர்வதேச கலாச்சார மாநாடு ஒன்றிற்கு கார்க்கி அழைக்கப்பட்டிருந்தார் கார்க்கிக்கு பாரிஸ் செல்ல அனுமதி கிடைத்தும் அவர் உடல்நிலை காரணமாக செல்லவில்லை என்கிற செய்தி வெளியிடப்பட்டது. தனது வாழ்த்து செய்தியை கார்க்கி அனுப்பினார்.  ஜூன் 1935ல் தனது துணைவியார் மரியா பாவ்லானாவுடன் ரோலந்த் ருஷ்யா வந்து ஒருமாதகாலம் இருந்தார். கார்க்கியின் கண்களில் அன்பும் சோகமும் ததும்பி இருந்ததாக ரோலந்த் பதிவு செய்துள்ளார். ரோலந்தின் துணைவியார் ரஷ்ய மொழி அறிந்தவர் என்பதால் அவர் உதவியுடன் கருத்து பரிமாற்றம் நடந்தது. ருஷ்ய மக்களின் வறுமை நிலையை கண்ணுற்ற ரோலந்த் கார்க்கி மட்டும் எப்படி சுகவாழ்க்கையை மேற்கொண்டுள்ளார் என்கிற ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். ஸ்டாலினுடன் ரோலந்திற்கு நடந்த விருந்து பெரும் பகட்டு நிறைந்ததாக இருந்தது. களைப்படைய வைத்தது என்கிற உணர்வு ரோலந்திடம் ஏற்பட்டது. ஸ்டாலின் கார்க்கி உரையடல்களும் வேடிக்கைத்தனமாக தனக்கு பட்டது என ரோலந்த் சொல்கிறார். கார்க்கி இயல்பிற்கு மாறாக நடக்கவேண்டிய சூழலில் இருப்பதாக ரோலந்த் உணர்ந்தார். அரசியலில் பலம் வாய்ந்தவர்கள் பற்றி ஏதும் சொல்லமுடியாதவராக அவர் காணப்பட்டார் எனக் கருதினார். 1936 மார்ச்சில் அந்த்ரே மால்ரக்ஸ் சோவியத் வந்தபோது அவரும் கார்க்கியை சந்தித்தார். மனித உரிமைகள் குறித்த மால்ரக்ஸ் கவலைகளை தெரிவித்தார் அவை குறித்து கார்க்கி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.     ஜூன்18ல் 1936ல்   கார்க்கி மறைந்தார் . ஜூன் 19 அன்று பிராவ்தா அவர் மறைவு செய்தியை வெளியிட்டது.. அன்றே அவருக்கான இறுதிசடங்கும் நடத்தப்பட்டது. கிரெம்ளினில் அவரது ஆஸ்தி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.  செஞ்சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி நிகழ்வில் ஸ்டாலின் உட்பட  8 லட்சம்பேர் பங்கேற்றனர். பிரஞ்சு எழுத்தாளர் அந்த்ரே ஜிடெ கார்க்கியின் இறுதிசடங்கில் கலந்துகொண்டார். முடிவுறா கூட்டம் எங்கும் ஆனால் அமைதியாக எல்லோரும்.. கார்க்கி இவர்களுக்கு நண்பரா சகோதரனா குழந்தைகள் முகம் கூட  வருத்தமும் வாட்டமுமாய்  என்கிற பதிவைத் அந்த்ரே தந்தார்.     கார்க்கி மறைந்தபோது பெர்னார்ட் ஷா  அக்டோபர் புரட்சி ஏற்படுத்திய தொழிலாளி வர்க்கத்தின் கடந்தகாலம் கார்க்கி என்பதை மறக்கமுடியாது என்றார். அவர் உலகத் தொழிலாளர்க்கும் நேசத்திற்குரியவர் எனவும் பேசினார்.  []                                      கார்க்கி   ஸ்டாலின்  6   வாழ்வின் உண்மையான குரல் நான். அழுந்திகிடக்கும் மனிதர்களின் கூக்குரல். அவர்களின் துன்பங்களைக் காணவும் அதை சாட்சியமாக்கவும் நிற்பவன் நான் என்றார் கார்க்கி. ஏற்கனவே பலவற்றை சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கு ’அமைதி பேசாதீர்’ என்பதெல்லாம் பயங்கரமானதாக இருக்கும். ஆனால் பேசவே தொடங்காதவர்க்கு அது மிகவும் எளிமையானது என கதைப்பாத்திரம் ஒன்றின் மூலம் சொல்வார் கார்க்கி.    தான் எப்படி எழுதக் கற்றுக் கொண்டேன் என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு நூலை எழுதியிருக்கிறார்  கார்க்கி. அதில் அவர் அனுபவத்தை சொல்கிறார்.    “வாழ்க்கையின் போக்கைப் பற்றிய எனது “கருத்துக்கள்” மெல்ல மெல்லத்தான், கஷ்டத்தோடுதான் உருவாகின. எனது நாடோடி வாழ்க்கை, நான் முறையான கல்வியறவு பெறாத குறை. சுய முயற்சியாகக் கற்றுக் கொள்ள நேரமில்லாது போன குறை  காரணமாக இருக்கலாம்.     எழுத்தாளரின் கடமை என அவர் பேசியபோது ”மனிதர்களுக்குப் பிடித்தமான அற்ப விஷயங்களில் ஈடுபடுத்துவதற்கு உற்சாகப்படுத்துபவர்கள் என்றைக்கும் இருந்துவருவது போலவே, தம்மைச் சூழ்ந்துள்ள வாழ்வின் மோசமான அம்சங்களை, இழிந்த அம்சங்களை, எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த கலகக்காரர்களும் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமானதே என்றார்.     அதேபோல் வர்க்கம் சார்ந்து நிற்றல் என்பதும் கடமை என அவர் பேசினார். ”தான் சார்ந்த வர்க்கத்தையும்  நாட்டையும் பாதிக்கிற அனைத்தும் குறித்தும் நுண்மையாக வாங்கிக் கொள்பவனே கலைஞன். தனது வர்க்கத்தின், தனது நாட்டின், காது, கண், இதயம் எல்லாமே அவன். அவனது குரல் அவன் காலத்திய குரலாகும். முடிந்தவரைக்கும் சகலத்தையும் அவன் அறிந்திருக்க வேண்டியது ஒரு எழுத்தாளனின் கடமை. வரலாற்றைப் பற்றிய புரிதலும் அவசியம்” என கார்க்கி கருதினார். கலகக்காரன் நிமிர்கிறான் எனில் அவனை உற்சாகப்படுத்தும் வேலையும் எழுத்தாளனுடையது என கார்க்கி கருதினார்.    சிறுகதை, நாடகம் நாவல் என 1892லிருந்து இலக்கிய உலகில் நுழைந்த கார்க்கியின் பெயரை 1906ல் வெளியான தாய் நாவல் பல்வேறு நாடுகளுக்கும் எடுத்து சென்றது. “கலாசாரம் என்பது மனிதனின் சிருஷ்டி உழைப்புத்தான்; உழைப்புத்தான் இன்றும் நாளையும் அதன் அடிப்படை. மனிதகுலம் இவ்வுலகில் எப்படியெல்லாம் உழைத்தது, உலகின் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்தியது என்பதைக் கூறுகிற கதைதான் உலகின் பேரதிசயமான கதையாகும்” என்பார் கார்க்கி    நான் எவ்வாறு எழுதக் கற்றுகொண்டேன்’, ’எழுத்தின் வேலைபாடு குறித்து’, ’மனித ஆளுமையின் சிதைவுகள்’, ’சோசலிச எதார்த்தவாதம்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற கட்டுரைகளை எழுதினார். ’எனது குழந்தைபருவம்’, ’யான் பெற்ற பயிற்சிகள்’, ’யான் பயின்ற பல்கலைக்கழகங்கள்’ உள்ளிட்ட சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார். தாய்’, ’மூவர்’, ’அர்த்தமோனவ்’, ’வாழ்வின் அலைகள்’ உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட நாவல்களையும், ’வாசகன்’, ’முதல்காதல்’, ’கவிஞன்’, ’மனிதன் பிறந்தான்’ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். 'கன்னிப் பெண்ணும் மரணமும்' என்பது உள்ளிட்ட பல கவிதைகளை எழுதியுள்ளார்.    கார்க்கியின் இந்திய தொடர்புகள் குறித்தும் அவர் இந்திய எழுத்தாளர்களுக்கு எப்படிப்பட்ட ஈர்ப்பு சக்தியாக இருந்தார் என்பது குறித்தும் பல்கலை ஆய்வுகள் வந்துள்ளன.    இலக்கிய படைப்புகள் சர்வதேச தன்மை கொண்டவை அவை மானுட உளம் பற்றி பேசுகின்றன என கார்க்கி கருதுவார். எனது படைப்புகளை ருஷ்யன் மட்டுமல்ல பிரஞ்சுக்காரரும் இந்தியனும் இங்கிலீஸ்காரரும் உள்வாங்கமுடியும் என்பார். அவர் தனது புத்தக அலமாரியில் ராமாயணம், மகாத்மாவின் சத்திய சோதனை, தாகூரின் படைப்புக்களை மட்டுமல்லாது இந்திய தத்துவம் குறித்த புத்தகங்களையும் கொண்டிருந்தார். அவர் உலக இலக்கியம் குறித்த வெளியீட்டு நிறுவனம் என 1919ல் பேசியபோது இந்திய படைப்புக்களையும் உள்ளடக்கி எனப் பேசினார். கீழைத்தேய ஆய்வுகள் உருவாகிட காரணமாகவும் இருந்தார். இந்தியவியல் நாட்டம் என்பதில் கார்க்கிக்கு பங்களிப்பு இருக்கிறது.  1912ல் இந்திய விடுதலை இயக்கம் வளர்ந்து வருவதை குறித்து  நம்பிக்கையை கார்க்கி வெளிப்படுத்தினார். இந்தியர்கள் தங்கள் சமுக அரசியல் பிரச்சனைகளை தாங்களே நிர்வகிக்கும் திறன்கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியை கங்கையில் வீசுவார்கள்  என எழுதினார்.  Sovrimennik ல் சாவர்க்கார் மீது பிரிட்டிஷ் எடுத்த அடக்குமுறையை கடுங்காவல் தண்டனையை கார்க்கி கண்டிக்க தவறவில்லை.  முப்பது கோடி மக்கள் பிரிட்டிஷாரின் அடிமையாக இருக்கவேண்டும் என்பது கடவுளின் முன்கூட்டிய விதியல்ல எனவும் கார்க்கி குறிப்பிட்டார்.     இந்திய போராளிகளுடன் கார்க்கி கடித தொடர்பு வைத்திருந்தார் . கிருஷ்ணவர்மாவிற்கு இந்திய நிலைமைகள் குறித்து ருஷ்யன் ரிவ்யூவிற்கு கட்டுரை எழுத கார்க்கி வேண்டுகோள் விடுத்தார். கிருஷ்ண வர்மா லண்டனில் இந்திய ஹவுஸ் மூலம் இந்திய இளைஞர்களின் ஈர்ப்பாக பாதுகாப்பாக இருந்தவர். சாவர்க்கர் அங்கு தங்கியிருந்தார். காந்தி தனது லண்டன் பயணத்தில் அந்த வீட்டில்தான் அகிம்சை குறித்து சாவர்க்கர் உள்ளிட்டோருடன் விவாதித்தார்.    இந்திய விடுதலை போராட்டத்தின் வரலாற்று பின்னணியை தக்க ஆதாரத்துடன் தாங்கள் கட்டுரையாக தருவதை விரும்புகிறோம். மக்கள் பிரிவினர் ஒருவருக்கொருவர் அறிந்துகொள்வதற்கும், நியாயத்தின்பாற்பட்டு தாகத்துடன் வெவ்வேறு தளங்களில் போராடிக்கொண்டிருப்பவர்கள் ஒன்றுபடவும் எழுத்து பரிமாற்றங்கள் பலனளிக்கும். இன்றுள்ள ருஷ்ய மக்கள் இந்தியாவின் விடுதலைப் போரைப்பற்றி என்ன நினக்கிறார்கள் என்பதை தாங்கள் அறிவீர்கள் என்பது கிருஷ்ணவர்மாவிர்கு எழுதிய கடித வாசகமாக இருந்தது.     மேடம் காமா அவர்களுக்கும் கார்க்கி கடிதம் எழுதினார். இந்திய பெண்களின் நிலைமைகள் குறித்து ருஷ்யாவின் பத்திரிக்கைகளுக்கு தாங்கள் கட்டுரை எழுதமுடியுமா என கார்க்கி காமாவிடம் வினவியிருந்தார். கங்கையின்  மைந்தர்கள் பற்றி ருஷ்ய ஜனநாயகவாதிகள் அறிய ஆவலாக இருக்கிறோம் என அவர் தெரிவித்திருந்தார்.     காந்தி குறித்து கார்க்கி அறியவிரும்பினார். பத்திரிகைகளில் வருகின்ற செய்தி மட்டும் போதவில்லை. அவரை சரியாக தெரிந்துகொள்ள விழைகிறேன். மூலமான அவரது எழுத்துக்களை பார்க்க விரும்புகிறேன் என அவர் தனது நண்பர் ரொமெய்ன் ரோலந்திற்கு 1923ல் கடிதம் எழுதினார். கான்வர்சேசன் என்கிற பத்திரிகையில் ரோலந்து  காந்தி குறித்து எழுதிய கட்டுரைகள் வெளிவந்தன. ஆனால் கார்க்கி குறித்து காந்தி 1905 ருஷ்யபுரட்சியின் போதே அறிந்திருந்தார்.    புகழ்வாய்ந்த இந்தியர்களில் காந்திதான் கார்க்கி குறித்து முதலில் கவனம் செலுத்தியவர். 1905லேயே அவர் மனித உரிமைகளுக்கான மகத்தான போராளி என வர்ணித்திருந்தார். தென்னாப்பிரிக்காவில் அவர் கொணர்ந்த இந்தியன் ஒபீனியனில் கார்க்கி குறித்த சித்திரம் ஒன்றை அவர் தந்திருந்தார்.  “ சமீபத்தில் ஏற்பட்ட எழுச்சியில் கார்க்கி முக்கிய பங்கு ஆற்றியவர். 1892ல் அவரது முதல் புத்தகம் வெளியானது. தொடர்ந்து படைப்புகளை தந்துவருகிறார். கொடுங்கோன்மைக்கு  எதிராக மக்களை எழச்செய்வது என்கிற ஒற்றை நோக்கத்துடன் செயல்பட்டு வருபவர் கார்க்கி. பணம் சம்பாதிப்பது அவர் நோக்கமல்ல. மக்கள் தொண்டிற்காக அவர் சிறைப்பட்டார்.  அய்ரோப்பாவில் கார்க்கியைப் போல மனித உரிமைக்கு நிற்கும் எழுத்தாளர் எவருமில்லை என காந்தி எழுதினார்.    அனைத்து எழுத்தாளர் மாநாடு  1934ல் நடைபெற்றது. சோசலிச எதார்த்தவாதம் பற்றி அம்முதல் மாநாட்டில் கார்க்கி விளக்கம் தந்தார். "Socialist realism proclaims that life is action, creativity, whose aim is the unfettered development of man's most valuable individual abilities for his victory over the force of nature, for his health and longevity, or the great happiness of living on earth which he, in conformity with constant growth of his requirements, wished to cultivate as a magnificent habitation of a mankind united in one family.”   அடுத்த மாநாட்டில் சீனா இந்திய எழுத்தாளர்கள் பங்கேற்பு இருக்கும் என நம்புவதாக உரையாற்றினார்.     இந்தியாவின் நாட்டுப்புற பாடல்கள் குறித்து உயர் மதிப்பீட்டை அவர் தந்தார்  " Indian Folk poetry was born in very ancient times, its many coloured silken threads were spread through out the length and breadth of the Earth and they covered it with a wonderfully beautiful carpets of words".   சோவியத்தின் இந்திய இயலாளர் விஷ்னேவ்ஸ்காயா கார்க்கி குறித்து சொல்லும்போது அவரின் புத்தமதம் குறித்த விமர்சன பார்வையை குறிப்பிடுகிறார். கீழைத்தேயம் ஏன் அவநம்பிக்கையின் தாயகமாக இருக்கிறது என்கிற கேள்வி கார்க்கியிடம் இருந்தது.    கார்க்கி மறைவை ஒட்டி நினைவாஞ்சலி கூட்டம் பம்பாயில் ஆகஸ்ட் 16 1936ல் ஏற்பாடு செய்யப்படுகிறது. சரோஜினி நாயுடு அவர்கள் பங்கேற்று புகழஞ்சலி செய்தார். கோடானுகோடி மக்களுக்கு ஈர்ப்பை தந்தவர் கார்க்கி. அவர் நியாயத்திற்காகவும் விடுதலைக்காகவும் நின்றவர். போராடினால் விடுவிக்கப்படுவாய் என எடுத்துரைத்தவர் கார்க்கி என்று சரோஜினி குறிப்பிட்டார். கார்க்கி மறைந்தபோது பிரேம் சந்த் தனது மனைவியிடம் இதயம் வெடித்துவிடும் போல் இருக்கிறது எனச் சொல்லி வருந்தினார். அவர் இடத்திற்கு யாருமில்லை. அவர் துளசிதாசர் போல் கொண்டாடபடவேண்டியவர் என்றார்.    அவரின் தாய் நாவல் 1925ல் முதலில் வங்கமொழிபெயர்ப்பைக் கண்டது. 1930களில் இந்தி, தமிழ் மொழிபெயர்ப்பையும் தெலுங்கில் 1934லும் மலையாளத்தில் சற்று தாமதமாக 1945லும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. மராத்தி, உருது ஆக்கங்களும் விடுதலைக்கு முன்பாகவே வந்தன..     மலையாள உலகில் கேசவ் தேவ், கே கே நாயர் போன்றவர்க்கு கார்க்கி 1930களுக்கு முன்பாகவே அறிமுகமாயிருந்தார். தெலிச்சேரி பெர்ன்மென் கல்லூரி நூலகத்தில் தாயின் ஆங்கில மொழிபெயர்ப்பை மாணவர்கள் அப்போதே படிக்க முடிந்தது. கார்க்கி குறித்து கேசவ் தேவ் மலையாள பத்திரிகைகளில் எழுதினார். தொடர்ந்த மலையாள எழுத்துக்கள் மூலம் கார்க்கியின் எழுத்தாளுமையும் அரசியல் கூர்மையும் கேரளாவில் பரவலாக சென்றது.    சந்திப்பு என்கிற சிறுகதை தொகுப்பு ஒன்றை தோழர் தொ மு சி ரகுநாதன் 1951ல் கொணர்ந்தார். அதன் முன்னுரையில் கார்க்கியை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் நசுக்கப்பட்ட மக்கள் குலத்தின் மத்தியிலேயே பிறந்து, அந்த நரக வாழ்வைத் தாமும் அனுபவித்து அதற்கு விடுதலை காணும் இயக்க சக்தியோடு தோளோடு தோள் நின்று போராடிய வீரன் மாக்சிம் கார்க்கி.  அசுத்தமும் அசூயையும் புகுந்து பாழடையாத மனித இதயம் நசுக்கப்படும் மக்களிடம்தான் இருக்கிறது என்பதையும், அந்த மனித சுரண்டல் என்னும் பளுவிலிருந்து விடுதலை பெறச் செய்ய, அந்த இதயத்தின் மீது படர்ந்துள்ள சாம்பலை விசிறி அகற்றி அதைக் கனன்றெரியச் செய்ய விடுதலைப் பாதையில் அவர்களை எப்படிக்கொண்டு செலுத்த வேண்டும் என்பதையும் கூறி வழிகாட்டும் மணி விளக்கே கார்க்கியின் சிருஷ்டிகள் என்றுஎழுதியுள்ளார் ரகுநாதன்.    பீஷ்ம சகானி குறிப்பிடும்போது பிரிட்டிஷார் ஆட்சியின் சந்தேகங்களால் கார்க்கியின் படைப்புக்களை சிலோன் மூலம் பெற்று அறிந்ததாக குறிப்பிடுகிறார். முல்க்ராஜ் ஆனந்தும் கார்க்கி புத்தகங்களை நாங்கள் இரகசியமாக இரவில்தான் படிப்போம் என்றார். அவர் புதிய கொள்கைகளை புதிய படைப்பிலக்கியத்தை புதியவகைப்பட்ட மானுடநேயத்தை கொணர்ந்தார் என்றார் முல்க்ராஜ். அலி சர்தார் ஜாப்ரி தகவலின்படி அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை துவங்கி செயல்பட முல்க்ராஜ் போன்றவர்க்கு கார்க்கிதான் அறிவுரை நல்கினார் என்று அறியமுடியும்.    மனிதன் கம்பீரமானவன் மகத்தானவன் என முழங்கியவர் கார்க்கி. மனிதனைவிட புனிதமானது என எனக்கு ஏதுமில்லை என்றவர். மனிதனுக்கு அப்பாற்பட்டு என்னிடத்தில் வேறு எந்த எண்ணமும் இல்லை என்றவர். Only Man exists, everything else is the work of his hand and brain! Human kind!--It's magnificent! It sounds so proud! Man! Man    ட்ராட்ஸ்கிக்கு கார்க்கி புரட்சியின் ஏவுகணையாகத் தெரிந்தார். கார்க்கி மறைந்தபோது ஷெண்டாலின்ஸ்கி என்பார் நாவல் முடிந்தது, நாயகன் முடிந்தார், எழுத்தாளர் முடிந்தார் என குறிப்பிட்டார்.         Reference:  Tovah Yedlin   Maxim Gorky A political Biography  THE RECEPTION OF GORKY'S WORKS IN INDIA- By K. GOVINDAN NAIR Marxist.tncpim.org  Maxim Gorky His life and writings Emile Joseph Dillon      []       ஆசிரியரின் பிற நூல்கள்    1. மார்க்சிய தடங்கள்  2. ரோசாலக்ஸம்பர்க்  3. போராளிகளின் குரல்  4. பகவத்கீதை பன்முகக் குரல்கள்  5. Trade Justice in Telecom  6. Selected Ides of O.P Gupta  7. ஹெகல் துவங்கி..    www.pattabiwrites.in  pattabieight@gmail.com  Ph: 9443865366