[] 1. Cover 2. Table of contents மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை   கைலாஷி   muruganandams@rediffmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - மீ. வேல். பிரசன்னா - udpmprasanna@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/malai_naatu_dhivyadesa_yathirai மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: மீ. வேல். பிரசன்னா - udpmprasanna@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Prasanna - udpmprasanna@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/malai_naatu_dhivyadesa_yathirai This Book was produced using LaTeX + Pandoc [] எனையீன்ற தாய் தந்தையரின் திருப்பாதங்களில் சமர்ப்பணம் முகவுரை பரமபதத்தில்   வியூகநிலையில்  அமர்ந்த கோலத்தில் திருமகள், நிலமகள், நீளாதேவிகளுடன், நித்திய சூரிகளும் புடைசூழ  எழுந்தருளிச் சேவை சாதிக்கின்ற அம்மாயனே, பாற்கடலில் பரவாசுதேவனாக  மாயத்துயில் கொண்டுள்ளார், அவரே தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காக்க வைகுந்தத்திலிருந்து இறங்கி பூவுலகிற்கு மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, பலராம, கிருஷ்ண, கல்கி அவதாரங்கள் எடுத்து  விபவரூபமாக  அருள் வழங்குகின்றார். அப்பரம்பொருளே  அந்தர்யாமியாக எல்லா ஜீவராசிகளிலும் விளங்குகின்றார். நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு, ஒரு பெயரும், ஒரு உருவமும் இல்லாத அவரே   அர்ச்சாவதாரமாகப்  பூவுலகில் பல்வேறு தலங்களில் எழுந்தருளிச் சேவைச் சாதிக்கின்றார். இவ்வைந்து நிலைகளுக்கும் உரியவர் அவர் ஒருவரே. திருமகளார் தனிக்கேள்வன் அணிபொழில் சூழ் அரங்கநகரப்பன் இவ்வுலக மக்களை உய்விக்கும் பொருட்டு, “கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும்’ நீர்மையினால் அருள் செய்தான். இத்திருமாலாகிய அவரின் பேரெழிற்பொய்கையுள் ஆழ மூழ்கிக் குளித்துக் களித்து கவி பாடியவர்கள் ஆழ்வார்கள். இவர்களுக்கு அவனே மயர்வற மதிநலம் அருளித் தெள்ளு தமிழில்”திவ்யப்பிரபந்தத்தை" நாம் எல்லோரும் உய்ய அருளச்செய்தார். எனவே இவர்கள் “திவ்யசூரிகள்”, திவ்யமான அர்ச்சாவதார ரூபங்கள், திவ்யாயுதங்களின் அம்சமாக பூமியில் அவதரித்தவர்கள். இவர்கள் மங்கலாசாசனம் செய்தத் திருப்பதிகள் “திவ்யதேசங்கள்” ஆகும். இவை மூன்றும் “திவ்யத்ரயம்” என்றழைக்கப்படுகின்றன. திவ்யம் என்ற பதத்திற்கு தெய்வ சம்பந்தம் உடையது என்று பொருள். எவ்வாறு நாராயண மந்திரம் மூன்று பதங்களாக அமைந்துள்ளதோ அது போல இத்திவ்யப்பிரபந்தங்களுக்கும் மூன்று சிறப்புகள் உள்ளன. அவையாவன பிரமாணம், பிரமேயம் மற்றும் பிரமாதா ஆகும். பிரமாணம் – உண்மை அறிவிற்கு கருவியாயிருப்பது (திவ்யப்பிரபந்தங்கள்). பிரமேயம் – பிரமாணத்தால் அறியப்படும் பொருள் (திவ்யதேசங்கள்). பிரமாதா – உண்மை அறிவுடையோர், திவ்யசூரிகளாகிய ஆழ்வார்கள். இவ்வாறு அனைத்துமே தெய்வ சம்பந்தமான சிறப்பு பெற்றவை. எனவேதான் மணவாள மாமுனிகளும் தமது உபதேசரத்தின மாலையில் ஆழ்வார்கள்வாழி அருளிச்செயல் வாழி தாழ்வாதுமில் குரவர் தாம்வாழி ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம்வாழி செய்யமறை தன்னுடனே சேர்ந்து (உ.மா 3) பொருள்: பொய்கையார் முதலான ஆழ்வார்கள் வாழ்க! அவர்கள் அருளிச்செய்த திவ்யப் பிரபந்தங்கள் வாழ்க! தாழ்வு ஏதும் இல்லாத எம்பெருமானார் முதலான ஆச்சாரியர்கள் (குரவர்) வாழ்க! ஏழுலகங்களும் உய்ய அவ்வாசிரியர்கள் அருளிச்செய்தவைகளும், (ஸ்ரீசூக்திகள்) செம்மையான வேதங்களோடு சேர்ந்து வாழ்க! என்று மங்கலாசாசனம் செய்துள்ளார். எனவே வேதமே திவ்யப்பிரபந்தகளாகின. நம்மாழ்வாரின் நான்கு அருளிச்செயல்கள் நான்கு வேதங்கள் ஆகின. திருமங்கையாழ்வாரின் ஆறு அருளிச்செயல்கள் அதற்கான அங்கங்களாகின. ஆண்டாள் மற்றும் மதுரகவிஆழ்வார் இயற்றியவை தவிர மற்ற நூல்கள் உபாகமங்கள் ஆயின. வேதமே எம்பெருமானின் நிலைக்கு ஏற்ப மாறி வரும் முறையில் தமிழாகித் திவ்யப் பிரபந்தங்களாக அவதரித்தன என்பது சம்பிரதாயம். ஆகையால் ஆழ்வார்களின் அருளிச் செயல்களான திவ்யப்பிரபந்தங்கள் உபய வேதாதங்கள் ஆகும். ஓம் நம:  முதலாயிரம். நாராயணாய : திருமொழி கீதா சரமச் சுலோகம் : இயற்பாக்கள் த்வயம் : திருவாய் மொழி திருப்பல்லாண்டு “ஓம்” என்ற பிரணவத்தின் விரிவு, “கண்ணி நுண் சிறு தாம்பு - நம:”, பெரிய திருமொழி  “நாராயண” என்கிற பரம் பொருளின் விளக்கம். இவ்வாறு முதலாயிரமும்  இரண்டாமாயிரமுமே திருமந்திரம். நம்மாழ்வாரின் திருவாய்மொழியின்  முதல்பத்து : ஸ்ரீமந் இரண்டாம்பத்து : நாராயண மூன்றாம்பத்து : சரணௌ நான்காம்பத்து : சரணம் ஐந்தாம்பத்து : ப்ரபத்யே ஆறாம்பத்து : ஸ்ரீமதே ஏழாம்பத்து : நாராயண எட்டாம்பத்து : நாராயண ஒன்பதாம்பத்து : ஆய பத்தாம்பத்து : நம: அதாவது திருமகளோடு கூடிய நாராயணனின் திருவடிகளை புகலிடமாகப் பற்றுகின்றேன். திருமகளோடு கூடிய நாராயணனுக்கு எல்லா அடிமைகளையும் செய்யப் பெறுவேன் என்னும் நான்காமாயிரமாகிய திருவாய்மொழியே த்வயம்.  சர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ: அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: அதாவது “என்னை அடைவதற்கு அனைத்து நெறிகளையும் விட்டு என் ஒருவனையே சரணமாகப் பற்று. நான் உன்னை, என்னை அடையவிடாமல் தடுக்கும் சர்வ பாபங்களிலிருந்தும் விடுவித்து என்னை அடைய வைப்பேன்”  என்னும் கீதா சரம (இறுதியான) சுலோகம் சரணாகதி என்னும் பிரபத்தியாகும். அதாவது இறைவனையே உபாயமாகக் கொள்வதாகும். மூன்றாமாயிரமாகிய இயற்பாக்களே கீதா சரம சுலோகம். இவ்வாறு ஸ்ரீவைணவத்தின் திருமந்திரம், த்வயம், கீதா சரமசுலோகம், ஆகிய மூன்று மந்திரங்களையும் உள்ளடக்கியத் திவ்யபிரபந்தமாம் அருளிச் செயல் பெற்ற திவ்யதேசங்களை “உகந்தருளிய நிலங்கள்” என்று கூறுவது வைணவ மரபாகும். ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி ஓர் பதின்மூன்றாம் மலைநாடு ஓரிரண்டாம் – சீர்நடுநாடு ஆறோடு ஈரெட்டாம் தொண்டை அவ்வடநாடு ஆறிரண்டு கூறு திருநாடு ஒன்றாக் கொள். என்ற திருப்பதி வகைத் தனியனின்படி கங்கையின் புனிதமான காவிரி பாய்ந்து வளம் பெருக்கும் சோழ நாட்டில் பூலோக வைகுண்டமாம் திருவரங்கம் முதலான 40 திவ்யதேசங்களும், தண்பொருநை எனும் தாமிரபரணி பாயும் பாண்டிநாட்டில் 18 திவ்யதேசங்களும். வேழமுடைத்து மலைநாடு என்ற சிறப்புப் பெற்ற அன்றைய சேரநாடு, இன்றைய கேரளத்தில் 13 திவ்யதேசங்களும், நடுநாட்டில் 2 திவ்யதேசங்களும், திருக்கச்சி அடங்கிய தொண்டைநாட்டில் 2 திவ்யதேசங்களும், தமிழகம் அல்லாத வடநாட்டில் 12 திவ்யதேசங்களும், அமைந்துள்ளன. திருவைகுந்தமாம் திருநாடு ஒன்றாகும் என்பது இப்பாடலின் விளக்கம் ஆகும். ஆக மொத்தம் திவ்யதேசங்கள் மொத்தம் 108 ஆகும். தற்போது 84 திவ்யதேசங்கள் நமது தமிழ்நாட்டிலும், 11 திவ்யதேசங்கள் கேரளத்திலும், 2 திவ்யதேசங்கள் ஆந்திரப்பிரதேசத்திலும், 7 திவ்யதேசங்கள் உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தராகாண்ட் மாநிலங்களிலும், ஓர் திவ்யதேசம் குஜராத்திலும் ஆக 105 திவ்யதேசங்கள் நமது பாரதத்திருநாட்டிலும், ஓர் திவ்யதேசம் நேபாள நாட்டிலும் அமைந்துள்ளன. மண்ணுலகிலுள்ள இந்த 106 திவ்ய தேசங்களை மட்டுமே நாம் பூத உடலுடன் சென்றுச் சேவிக்க முடியும். விண்ணுலகில் உள்ள திருப்பாற்கடலும், ஸ்ரீவைகுண்டமும் அவன் அருளின்றி கிட்டாது என்பர் ஆன்றோர்கள். திருப்பாற்கடல் ஷீராப்திநாதன் – கடல்மகள் நாச்சியார் வீற்றிருக்கும் தலம். திருப்பரமபதம் அல்லது வைகுந்தம் - பரமபதநாதன் - பெரிய பிராட்டியார் உறைந்திருக்கும் இடம். இவை இரண்டும் கடைசி நிலையாகிய வீடு பேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலையை எய்திச் செல்லும் இடமாகும்.  இம்மையில் இந்த 106 திவ்யதேசங்களையும் சேவித்து அவனை சரணடைந்தால் மறுமையில் மற்ற இரண்டையும் சேவித்து பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய முடியும் என்பது ஐதீகம். மேலும் இத்திருத்தலங்கள் நமது கர்மவினைகளைப் போக்கி நித்யசூரிகள் என்னும் அந்தஸ்தைத் தரவல்லவை. நாராயண மந்திரம் எட்டெழுத்துக்கொண்டது. அது போலவே திவ்யதேசங்களும் விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்திரம், நதி, நகரம் என்ற சப்தபுண்ணியம் ஏழினோடு மங்கலாசாசனத்துடன் எட்டாகி திருமந்திரத்தின் ஆற்றலைப் பெற்று உயர்வாக திகழ்கின்றது. இத்திவ்யதேசங்கள் நாமெல்லோரும் உய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ரிஷிகளாலும் மகான்களாலும் ஏற்படுத்தப்பட்டவை. நமது தேசத்தின் ஜீவாதரமான பகுதிகளில் இறை சாந்நித்தியம் ஆகர்ஷண சக்தி உள்ள இடங்களில் இத்திவ்யதேசங்களை அமைத்தனர் அவர்கள். இத்தலங்களுக்கு சென்று புண்ணிய புஷ்கரணியில் நீராடிப் பெருமாளை சேவித்தால் மகத்தான பலன் பெறலாம். எனவே திருவைணவர்கள் தேடித் தேடிச் சென்று “நாடி நாடி நரசிங்கா! நரசிங்கா!” என்று இத்திவ்யதேசங்களை சேவிக்கின்றனர். அடியேனும் இவ்வாறு மலைநாட்டு திவ்யதேசங்களைச் சேவிக்க சென்ற அனுபவங்களை இந்நூலில் காணலாம் அன்பர்களே. ஸ்ரீபெரும்புதூர் ஆலயத்தில் உள்ள திவ்யதேச படங்களில் சில இந்நூலில் இடம் பெற்றுள்ளன அதை வரைந்த ஓவியருக்கு அடியேனது நன்றியை உரித்தாக்குகிறேன். இந்நூலில் எதாவது சொற்குற்றமோ, பொருட்குற்றமோ தென்பட்டால் அதை அடியேனுக்கு தெரிவிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன், அவற்றை சரி செய்ய உதவியாக இருக்கும். வம்மின் தொண்டர்களே யாத்திரையை ஆரம்பிக்கலாம். பாகம் -1 திவ்யதேசங்கள் அத்தியாயம் – 1 மலைநாட்டு திவ்யதேசங்கள் [] மலைநாட்டுத் திவ்யதேசங்கள் பதிமூன்று ஆகும். நீர்வளமும் நிலவளமும், மழைவளமும், குடைவளமும், முடிவளமும் மற்றெல்லா பெருவளங்களையும் தன்னகத்தேக் கொண்டது இம்மலைநாடு, பரசுராமர் தமது பரசை வீசிக் கடலை பின் வாங்கச் செய்து உருவாக்கிய பரசுராம க்ஷேத்திரமாகும் இது என்பது ஐதீகம். எனவே கேரளம் “பார்கவ க்ஷேத்திரம்” என்றும் அழைக்கப்படுகின்றது. தென்மேற்குப் பருவக்காற்றால் பரிபூரணமாக மாரி பொழிந்து எப்போதும் பசுமையாக விளங்கும் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலமான தற்போதைய கேரளம் மற்றும் அதை ஒட்டி அமைந்துள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்திவ்யதேசங்கள் அமைந்துள்ளன. எங்கும் நிறைந்திருக்கிறான் இறைவன். எல்லா இடங்களிலும் நீக்கமறப் பரவியிருக்கிறது இறைச் சக்தி. ஆயினும் கேரளாவுக்கு ஒரு தனிச் சிறப்பும் பெருமையும் உண்டு. மலையும் பசுமையும் சார்ந்த இடம் என்பதால் கிடைத்த கிரீடம் அல்ல அது. விவசாயம் தழைத்துக் கிடக்கிற பூமி என்பதால் உண்டான மகுடம் அல்ல! வேறு எந்த வார்த்தைகளைச் சொல்லியும் பெருமைப்பட்டுக் கொள்ள தேசங்கள் பல இருந்தாலும் கேரளத்துக்குக் கிடைத்திருக்கிற அந்தப் பெருமை அளப்பரியது ஆனந்தமானது. அது “God’s own country” அதாவது “கடவுளின் தன் பிரதேசம்” என்றழைக்கப்படும் பெருமை. தொடர்ச்சியாக பருவமழையும் குளிர்ச்சியான தட்பவெப்பமும் சேர்ந்து மரப்பட்டைகளில் பச்சையாக பாசம் படிந்த மரங்கள் பார்க்குமிடமெல்லாம் நீக்கமற பச்சை ப்சேல் என்று திகழும் பிரதேசம். கேரளத்தை “நினைத்தாலே இனிக்கும்”. இதன் நேந்திரம் பழத்தால் நாவும், நெடிதுயர்ந்த தென்னை, கமுகு, இரப்பர் மரங்களின் பசுமையால் கண்ணும், மலைகள் மற்றும் அவற்றில் வளைந்து ஓடும் ஆறுகள் மற்றும் கடல் நீர் உள்ளே நுழைந்து உருவான நீரோட்டத்தால் மனமும் இனிக்கும். “சேர நாடு வேழமுடைத்து” என்பது பழமொழி அதற்கிணங்க கேரள ஆலயங்களின் ஒரு சிறப்பு அதன் யானைகள்தான், அது போலவே பஞ்சவாத்தியம் எனப்படும் செண்டை மேளமும், கதகளியும், மோகினியாட்டமும், இயற்கை மூலிகை வர்ண ஓவியங்களும், அழகிய மரச்சிற்பங்களும், ஆயிரக்கணக்கான விளக்குகளும் கேரளத்திற்கே உரிய சிறப்புகள். மலையாள நாட்டின் திவ்யதேசங்களை மாவனந்த புரம் வண் பரிசாரம் காவலுள்ள காட்கரை மூழிக்களம் இலகிடு புலியூ ரெழிற் செங்குன்றூர் நலமிகவளித்திடும் நாவாய் வல்லவாழ் மற்றும் வண்வண்டூர் வாட்டாறுடனே வித்துவக்கோடு மேலாங் கடித்தானம் மதிளாறன்விளை மலைநாட்டுப் பதி பதிமூன்று மவைப்பணிந்து போற்றுவோம். என்று மலைநாட்டுத் திருப்பதிகள் பதின்மூன்றையும் இப்பாடல் பட்டியலிடுகின்றது. அதன்படி திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருக்காட்கரை, திருமூழிக்களம், திருப்புலியூர், திருச்செங்குன்றூர், திருநாவாய், திருவித்துவக்கோடு, திருவல்லவாழ், திருவண்வண்டூர், திருவாட்டாறு, திருக்கடித்தானம், திருவாறன்விளை ஆகிய மலையாள திவ்யதேசங்களைச் சேவிக்க மாதவனருள் பெற்றோரே, மால் மயக்குப் பட்டோரே வாருங்கள் அடியேனுடன். இச்சேரநாட்டு திவ்யதேசங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரு தனி சிறப்பு என்னவென்றால் இவை நமது இதிகாசங்கள் இராமாயணம் மற்றும் மஹாபாரதத்துடன் தொடர்புடையவை. நாலம்பலம் என்று அழைக்கப்படும் இராம சகோதரர்களில் ஒருவரான லக்ஷ்மணர் கோவில் கொண்ட தலம் திருமூழிக்களம் ஆகும். மேலும் வித்துவக்கோடு திவ்யதேசத்தில் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் பிரதிஷ்டை செய்த மூர்த்திகள் சேவை சாதிக்கின்றனர். திருச்செங்குன்றூர் சிற்றாற்று இமையவரப்பன் தர்மர் மன அமைதி வேண்டி பிரதிஷ்டை செய்து வழிபட்ட மூர்த்தி ஆவார். குட்டநாட்டு திருப்புலியூர் பெருமாள் பீமன் வழிபட்ட மாயன் ஆவார். திருவாறன்விளை பார்த்தசாரதிப் பெருமாள் அர்ச்சுனன் பிரதிஷ்டை செய்த பெருமாள். திருவண்வண்டூர் நகுலன் பிரதிஷ்டை செய்த பெருமாள். திருக்கடித்தானம் அற்புத நாராயணர் சஹாதேவன் பிரதிஷ்டை செய்த பெருமாள். இவற்றுள் பத்து திவ்யதேசங்களில் பெருமாள் சங்கு, சக்கரம், கதை பத்மம் தாங்கி சதுர்புஜராக ஸ்தாபனா என்ற நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இப்பெருமாள்களை சேவிக்கும் போது குருவாயூரப்பனை சேவிப்பது போலவே உள்ளது. திருவனந்தபுரம் மற்றும் திருவாட்டாறு என்னும் இரு திவ்யதேசங்களில் ஸமஸ்தாபனா என்ற ஆதிசேஷனில் பள்ளி கொண்ட கோலத்திலும், திருவண்பரிசாரத்தில் அஸ்தாபனா என்ற அமர்ந்த கோலத்திலும் சேவைச் சாதிக்கின்றார். ஒரே திவ்யதேசம் திருநாவாயில் மட்டுமே தாயாருக்குத் தனிச் சன்னதி உள்ளது. மற்ற ஆலயங்களில் எல்லாம் தாயார் “அகலகில்லேன் இறையும்” என்று பெருமாளின் திருமார்பிலேயே உறைகின்றாள். நீர் வளம் நிறைந்த பிரதேசம் என்பதாலும், தாமரை மலர்கள் எங்கெங்கு காணினும் மலர்ந்துள்ள பகுதி என்பதாலும் ஆறு திவ்யதேசங்களில் தாயாரின் திருநாமம் இம்மலரைக் கொண்டதாக உள்ளது. அவையாவன திருவண்பரிசாரத்தில் கமலவல்லி நாச்சியார், திருச்செங்குன்றூரில் செங்கமலவல்லி நாச்சியார், திருவித்துவக்கோட்டில் பத்மபாணி நாச்சியார், திருவாறன்விளையில் பத்மாசனி நாச்சியார், திருப்புலியூரில் பொற்கொடி நாச்சியார், திருநாவாயில் மலர்மங்கை நாச்சியார் என்று பெரிய பிராட்டி அருள் பாலிக்கின்றாள். பொதுவாக கேரள ஆலயங்களில் சைவ-வைணவ பேதங்கள் இல்லை, அனைத்து திவ்யதேசங்களிலும் விநாயகர், ஐயப்பன், சிவன் மற்றும் பகவதி சன்னதிகள் அமைந்துள்ளன. அது போலவே சிவாலயங்களில் ஒரு வாரம் பாகவத சப்தாகம் சிறப்பாக நடைபெறுகின்றது. வித்துவக்கோடு திவ்யதேசத்தைத் தவிர மற்ற திவ்யதேசங்கள் எல்லாம் நம்மாழ்வாரால் மங்கலாசாசனம் செய்யப் பெற்றவை. சில திருப்பதிகளை நம்மாழ்வார் நாயகி பாவத்தில் பாடியுள்ளார். வித்துவக்கோட்டம்மானை குலசேகரப் பெருமாள் மங்கலாசாசனம் செய்துள்ளார். திருமங்கையாழ்வார் திருநாவாய், திருமூழிக்களம், திருவல்லவாழ் ஆகிய மூன்று திவ்யதேசங்களை மட்டும் மங்கலாசாசனம் செய்துள்ளார். “காட்டவே கண்ட பாதம்” என்றபடி அவர் காட்டினால் ஒழிய நாம் அவரைக் காண முடியுமா? அதாவது அவர் அருள் இருந்தால் ஒழிய அவரை நம்மால் சேவிக்க இயலாது. பல முறை அடியேனும் முயன்றேன் எப்படியோத் தள்ளிக் கொண்டேச் சென்றது. ஒரு தடவை எல்லா எற்பாடுகளையும் முடித்த பின்பு எதிர்பாராமல் புறப்படுகின்ற சமயத்தில் பயணம் இரத்தானது. அடியோங்களை திவ்யதேச யாத்திரைகளுக்கு அழைத்துச் செல்லும் திருமலைநம்பி இராமனுஜதாசர் சுவாமிகளின் மூலம் அனைத்து மலைநாட்டு திவ்யதேசப் பெருமாளையும் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது அவ்வினிய அனுபவங்கள் மற்றும் அதற்கு பின்னர் பல் வேறு சமயங்களில் பல்வேறு திவ்யதேசங்களைச் மீண்டும் சேவிக்கும் பாக்கியமும் கிட்டியது. அவ்வனுபவங்களின் தொகுப்பே இந்நூல். சென்னையிலிருந்து கிளம்பி கோயமுத்தூர் வழியாக மத்திய கேரளத்தில் நுழைந்து தென்திசை நோக்கி M.C பாதையில் பயணம் செய்து தற்போதைய கேரளாவில் உள்ள பதினொரு திவ்யதேசங்களை சேவித்த பின் நாகர்கோவில் வந்து தமிழ்நாட்டில் உள்ள இரு மலைநாட்டு திவ்யதேசங்களையும் சேவித்து பிறகு திருநெல்வேலி வழியாக மதுரை அடைந்து பாண்டிய நாட்டு திவ்யதேசங்கள் சிலவற்றையும் தரிசனம் செய்து சென்னை திரும்பினோம். வாருங்கள் அன்பர்களே இனி மலைநாட்டுப் திவ்யதேசங்களை ஒவ்வொன்றாக சேவிக்கலாம். திருமலை சுவாமிகளுடன் எப்போதும் யாத்திரை அழைத்துச் செல்லும் ஓட்டுநரும் இருந்ததால் எவ்வித சிரமமும் இல்லாமல் நான்கு நாட்களில் 13 மலைநாட்டு திவ்யதேசங்கள், 3 பாண்டிய நாட்டு திவ்யதேசங்கள், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர், திருவனந்தபுரம் வராஹசுவாமி, நெய்யாற்றங்கரை ஸ்ரீகிருஷ்ணர், வர்க்கலா ஜனார்த்தனர் ஆகிய கேரள விஷ்ணுவாலயங்கள், கொடுங்கல்லூர் பகவதி, சோட்டாணிக்கரை பகவதி ஆலயங்கள், திருவஞ்சிக்களத்து மஹாதேவர் ஆலயம், குலசேகராழ்வாரின் அவதாரஸ்தலம், நம்மாழ்வாரின் தாயார் உடைய நங்கையின் தரிசனம் மற்றும் வானமாமலை ஜீயர் சுவாமிகளின் தரிசனம் மற்றும் ஆசீர்வாதம் என்று அவனருளால் ஒரு பரிபூரண யாத்திரையாக இந்த யாத்திரை அமைந்தது. இரண்டு வேன்கள் மூலம் அடியேன் குடும்பத்தினர், மற்றும் நண்பர்கள் திரு.தனுஷ்கோடி, திரு.மோகன் திரு.கோபால் குடும்பத்தினர், ஆகியோருடன் மொத்தம் 34 அடியார்கள் மலைநாட்டு திவ்யதேச யாத்திரைக்காக மதியம் சென்னையிலிருந்து கிளம்பினோம். தேசியநெடுஞ்சாலை-47ல் செங்கல்பட்டு, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, சேலம், கோயமுத்தூர் புறவழிச்சாலை வழியாக இரவு முழுவதும் பயணம் செய்து கேரளத்திற்குள் நுழைந்து பாலக்காடு, சொரனூர், பட்டாம்பி, குட்டிபுரம் வழியாக அதிகாலை திருநாவாய் திவ்யதேசத்தை அடைந்தோம். இத்திவ்யதேச யாத்திரையை மேற்கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு உதவும் விதமாக ஒவ்வொரு திவ்யதேசத்தின் அருகில் உள்ள தங்கும் வசதி கொண்ட பெரிய நகரத்தைப் பற்றிய விவரங்கள் இதோ. திருநாவாய் மற்றும் திருவித்துவக்கோடு ஆகிய இரு திவ்யதேசங்களுக்கு அருகில் உள்ள பெரிய நகரம் குருவாயூர் மற்றும் திருச்சூர் ஆகும். அது போல திருமூழிக்களம், திருக்காட்கரை ஆகிய இரு திவ்யதேசங்களுக்கு அருகில் உள்ள பெரிய நகரம் எர்ணாகுளம் ஆகும். திருக்கடித்தானம், திருவல்லவாழ், திருப்புலியூர், திருவண்வண்டூர், திருச்செங்குன்றூர், திருவாறன்விளை ஆகிய ஆறு திவ்யதேசங்களுக்கு அருகில் உள்ள பெரிய நகரம் செங்கண்ணூர் ஆகும். திருவாட்டாறு மற்றும் திருவண்பரிசாரத்திற்கு அருகில் உள்ள பெரிய நகரம் நாகர்கோவில். கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து சென்றும் இவ்விரு திவ்யதேசங்களை சேவிக்கலாம். அடியோங்கள் தனி வண்டிகளில் சென்றதால் மூன்று நாட்களில் பதிமூன்று திவ்யதேசங்களுக்கும் செல்ல முடிந்தது என்றாலும், சரியான சமயத்திற்கு செல்ல முடியாத காரணத்தால் அத்தடவை இரண்டு பெருமாள்களை சேவிக்க முடியாமல் போனது எனவே ஒரு நாள் அதிகப்படியாக வைத்துக்கொண்டு செல்வது உத்தமம். இத்திவ்யதேசங்கள் பக்தர்கள், திருவிழாக்களின் நேசர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் ஆர்வலர்கள், கலாரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கின்றன. இத்தலங்களின் ஆன்மீக முக்கியத்துவம், வரலாறு, கட்டிடக்கலை, சடங்குகள் பற்றி அடியேன் படித்த, அறிந்து கொண்ட சில தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் அல்லாது அன்ன புகழ் முடும்பை அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஆசார்யஹிருதயத்தில் அருளியுள்ள இத்தலங்களில் எம்பெருமான் நம்மாழ்வாருக்கு காட்டியருளிய கல்யாண குணங்களைப் பற்றியும் இந்நூலில் படித்து அன்பர்கள் அறிந்து கொள்ளலாம். திவ்யக்கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவர்களின் அஷ்டபிரபந்தம் சொல் நோக்கும், பொருள் நோக்கும், தொடை நோக்கும், நடை நோக்கும் உடைய இலக்கியம் என்ற பெருமை உடையது. அஷ்ட பிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன் என்ற சொல் வழக்கு இதற்கு சான்று. இந்நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி மிக்க சுவையுடைய வெண்பாக்களையும் கூடுதலாகப் படித்து இன்புறலாம் அன்பர்களே. அந்தந்த திவ்யதேசங்களின் பாசுரங்களை சேவிக்க ஏதுவாக அனைத்து மலைநாட்டு திவ்யதேசங்களின் ஆழ்வார்களின் பாசுரங்கள் இந்நூலின் நிறைவாக தொகுத்து சேர்க்கப்பட்டுள்ளது. அத்தியாயம் -2 கேரள அம்பலங்களின் சிறப்பு [] திருமூழிக்களம் மலைநாட்டு திவ்யதேச பெருமாள்களை திவ்யமாக சேவிப்பதற்கு முன்னால் வம்மின் அன்பர்களே கேரளக் கோவில்களின் தனித்தன்மைகளைப் பற்றிக் காணலாம். நமது தமிழ்நாட்டு ஆலயங்களைப் போல கேரள ஆலயங்கள் பிரம்மாண்டம் மற்றும் கலை அம்சம் நிறைந்தவையாக இல்லாவிட்டாலும் இக்கோவில்களில் எளிமையும், ஒழுங்கும், தூய்மையும், நேரம் தவறாமையும், சிரத்தையும் நம்மை அதிசயிக்க வைக்கின்றன. இங்கு திருக்கோவில்கள் “அம்பலம்” என்றழைக்கப்படுகின்றன. இவை நம்முடைய கோவில்களைப் போல பிரம்மாண்டமானவை அல்ல, நெடிதுயர்ந்த இராஜகோபுரங்கள் இல்லை. எளிமையாக இயற்கையுடன் இயைந்தவாறு அமைந்துள்ளன. மலைப்பகுதி என்பதால் கட்டிடங்கள் பொதுவாக மரத்தால் ஆனவை. கூரைகள் எல்லாம் பொதுவாக ஓடு வேய்ந்தவையாகவே உள்ளன. அதிகமாக மழை பெய்யும் பிரதேசம் என்பதால் மழை நீர் வழிந்து ஓடும் படியாக எல்லா அமைப்புகளுமே சாய்ந்த கூரை கொண்டவையாக அமைந்துள்ளதைக் காணலாம். அதுவும் அனைத்தும் தாழ் கூரையாகவே அமைந்துள்ளன. சன்னதிக்குள் நுழையும் போதே தலை குனிந்து பணிவாகவே, எண் சாண் உடம்பைக் குறுக்கி உள்ளே நாம் செல்ல வேண்டும். மரச்சிற்பங்கள், சில ஆலயங்களில் கற்சிற்பங்கள் மற்றும் மூலிகை வர்ண ஓவியங்கள், விளக்குகள், யானைகள், தூய்மை மற்றும் காலம் தவறாமை, ஆகியவை இக்கோவில்களின் தனி சிறப்பு ஆகும் “தேகோ தேவாலயஹ ப்ரோக்தோ ஜீவோ தேவ: சதாசிவ:” அதாவது மனித உடலே ஆலயம் அதில் உள்ள ஆத்மாவே சதாசிவன் என்று குலார்ணவ தந்த்ரம் என்ற நூலில் கூறியுள்ளபடி கேரளக் கோவில்களின் அமைப்பு மனித உடலைப் போல அமைக்கப்படுகின்றது. தேவ தேவியரின் கர்ப்பகிரகம் இங்கு “ஸ்ரீகோவில்” என்று அழைக்கப்படுகின்றது இது சிரசு என்பது ஐதீகம். அதில் தெய்வ மூர்த்தம் ஆயிரம் இதழ் தாமரையாக விளங்குகின்றது. ஸ்ரீகோவில் சதுர வடிவம், அல்லது செவ்வக வடிவம் கொண்டதாக இருந்தால் விமானம் பிரமிட் போல அமைந்துள்ளது, வட்ட வடிவில் ஸ்ரீகோவில் உள்ள ஆலயங்களில், கூம்பு அதாவது தொப்பி போல விமானம் அமைந்துள்ளன. ஒன்பது மலைநாட்டு திவ்யதேசங்களில் இது போன்ற விமானங்களை சேவிக்கலாம். விமானத்தில் பொதுவாக ஓடு வேய்ந்துள்ளனர், சில ஆலயங்களில் தாமிரம், மற்றும் பொன் தகடும் வேய்ந்துள்ளனர் சில ஆலயங்களில் இரண்டடுக்கு மூன்றடுக்கு விமானங்களும் உள்ளன, வெகு சில ஆலயங்களில் நீள் வட்ட ஸ்ரீகோவிலுடன் கஜபிருஷ்ட விமானத்தையும் காணலாம். விமானத்தின் உச்சியில் உள்ள கலசம் “தாழிக்கக்குடம்” என்றழைப்படுகின்றது. பல திவ்யதேசங்களின் கர்ப்பகிரக சுவர்களில் கேரள பாணி ஓவியங்கள் அருமையாக வரையப்பட்டுள்ளன, இன்றும் இயற்கை மூலிகை வர்ணங்களையே இவ்வோவியங்களை வரையப் பயன்படுத்துகின்றனர் என்பது சிறப்பு. சில ஆலயங்களில் கூரையிலிருந்து எழிலாக விளக்குகள் தொங்குகின்றன. கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள படிகள் சோபானம் என்றழைக்கப்படுகின்றன. அவற்றில் பூசை செய்யும் போத்திகள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பல ஆலயங்களில் சோபானத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் அமைத்துள்ளனர். கர்ப்பகிரகத்தை (ஸ்ரீகோவில்) ஒட்டிய உள் பிரகார சுற்று மண்டபம் கர்ப்பகிரகம் எவ்விதம் இருந்தாலும் செவ்வகமாகவே அமைந்துள்ளது. இப்பிரகாரம் “அந்தராளம்”, “பிரதக்ஷிண வட்டம்” அல்லது “பலி வட்டம்” என்றழைக்கப்படுகின்றது. இப்பிரகாரம் திருமுகமாக கருதப்படுகின்றது இச்சுற்றில் ஸ்ரீகோவிலை ஒட்டி கிழக்குத்திக்கில் இந்திரன், அக்னி, பிரம்மா, தெற்குதிக்கில் யமன், சாஸ்தா, நடுவில் ப்ராஹ்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்தமாதர்கள், கணபதி மற்றும் வீரபத்திரர், மேற்குத் திக்கில் நிருதி, வருணன், வாயு, வடக்குதிக்கில் குபேரன், ஈசானன் ஆகிய அஷ்டதிக்பாலகர்கள், மற்றும் சாஸ்தா, அனந்தன், துர்கா, சுப்பிரமணியர், நிர்மால்யதாரி, ஆகியோரை குறிக்கும் பலிக்கற்கள் அமைந்துள்ளன, ஈசானன் பொதுவாக லிங்க ரூபத்தில் அமைந்துள்ளது. பொதுவாக இவை பித்தளை கவசம் பூண்டவைகளாக உள்ளன. சில ஆலயங்களில் சப்தமாதர்களுக்கு மேற்கூரை உள்ளது இது “மாத்ருசாலா” என்றழைக்கப்படுகின்றது. இங்கு உற்சவ பலி பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீகோவிலின் படிகளுக்கு எதிரே உள்ள நான்கு கால் மண்டபம் “நமஸ்கார மண்டபம்” என்றழைக்கப்படுகின்றது. ஆராதனைக்குப் பின்னர் போத்திகள் இதில் ஏறி நமஸ்காரம் செய்கின்றனர். மேலும் வேதஜபம் மற்றும் கலசபூஜை ஆகியவை இம்மண்டபத்தில் நடைபெறுகின்றது எனவே இம்மண்டபம் “கலசமண்டபம்” என்றும் அழைக்கப்படுகின்றது. நமஸ்கார மண்டபத்தின் கூரையும் பிரமிட் வடிவத்தில் உள்ளது, உச்சியில் கலசம் அமைத்துள்ளனர். நான்கு மரத்தூண்களிலும் கூரையின் உட்புறத்தில் அருமையான மரச்சிற்பங்கள் அமைந்துள்ளன. பெரும்பாலான கோவில்களில் இம்மண்டபத்தின் உட்கூரையில் நவகிரகங்களின் சிற்பங்கள் வட்டவடிவில் காணக்கிடைத்தது. இவ்வம்பலங்களில் நவகிரகங்களுக்கு தனி சன்னதி எங்கும் இல்லை. சட்டங்களில் நாகக்குடையுடன் தசாவதார கோலங்களையும் காணலாம். இம்மண்டபம் கழுத்து என்பதாக ஐதீகம். இரண்டாம் பிரகாரம் “நாலம்பலம்” அல்லது “சுற்றம்பலம்” என்றழைக்கப்படுகின்றது. இச்சுற்றும் செவ்வக வடிவமாகவே உள்ளது. இச்சுற்றில் கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள பகுதி மட்டும் மற்ற மூன்று பக்கங்களை விட நீளமாக இருப்பதால் “வலியம்பலம்” என்றழைக்கப்படுகின்றது. நாலம்பலம் கரங்கள் என்பது ஐதீகம். பொதுவாக நடுவில் வலம் வருவதற்கு ஏதுவாக கற்களால் சுற்றுப்பாதை அமைத்துள்ளனர் மற்றபடி மணல் வெளியாகவே உள்ளது. திருமடப்பள்ளி பொதுவாக தென்கிழக்கில் அமைந்துள்ளது. இவர்கள் “தடப்பள்ளி” என்றழைக்கின்றனர். நாலம்பலத்தின் வடகிழக்கு மூலையில் கிணறு அமைந்துள்ளது இதன் தீர்த்தம் திருமஞ்சனத்திற்கும், நைவேத்தியத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றது. நாலம்பத்தின் வெளி சுவற்றில் வரிசை வரிசையாக பித்தளை விளக்குகள் அமைத்துள்ளனர். சில ஆலயங்களில் நாலம்பலத்திற்கு வெளியே தனியாகவும் விளக்கு மாடங்கள் அமைந்துள்ளன. கேரளக் கோவில்களில் மாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான எண்ணெய் விளக்குகளும் ஏற்றப்பட்டு திருக்கோவில்களை சேவிப்பதே ஒரு அருமையான அனுபவம் ஆகும். வலியம்பலத்திற்கு முன்பாக பெரிய பலி பீடம் (வலியப் பலிக்கல்) உள்ளது. பலி பீடத்திற்கு முன்னே கொடிமரம். இரண்டிலும் அஷ்டதிக் பாலகர்கள், அல்லது அஷ்ட லக்ஷ்மிகளின் சிற்பங்களை எழிலாக அமைத்துள்ளனர். கொடி மரம் முதுகெலும்பு என்பது ஐதீகம். பல ஆலயங்களில் நெடிதுயர்ந்த கொடி மரங்கள் தங்கக் கவசம் பூண்டு எழிலாக மின்னுகின்றன. பொதுவாக செப்புத்தகட்டால் மூடப்பட்டவையாகவே கொடி மரங்கள் உள்ளன. சில ஆலயங்களில் பலிக்கல்லை தூண்களுடன் அமைந்த ஒரு மண்டபத்தில் கூரையுடன் அமைத்துள்ளனர் இவ்வமைப்பை பலிக்கல்புரம் என்றழைக்கின்றனர். “சேரநாடு வேழமுடைத்து” என்பது முதுமொழி, அதற்கிணங்க இன்றும் பல்வேறு கேரள ஆலயங்களில் யானைகளை பாராமரிக்கின்றனர். சீவேலி சமயத்திலும், பூர உற்சவத்தின் போதும், ஆறாட்டின் போதும் உற்சவர் திடம்பில் யானையில் எழுந்தருளுகின்றார் என்பது சிறப்பு. எனவே கொடிமரத்திற்கு முன்புறம் ஸ்ரீகோவிலை நோக்கியவாறு “ஆனக்கொட்டில் மண்டபம்” உள்ளது. உற்சவ காலங்களில் யானைகள் இங்கே நிற்கின்றன. மேலும் சோறுண்ணு, துலாபாரம், திருமணம் முதலிய சடங்குகள் இம்மண்டபத்தில் நடைபெறுகின்றன. பொதுவாக கொடிமரத்திற்கு அருகில் கூர்மபீடத்துடன் நெடிதுயர்ந்த பித்தளை விளக்குத் தூண்களைக் காணலாம், இவ்விளக்குகள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. இரண்டாம் பிரகாரம் “பிரதக்ஷிணவட்டம்” என்றழைக்கப்படுகின்றது. இது வயிறு என்பது ஐதீகம். அடுத்த சுற்றில் பெரிய மதிற்சுவர் ஆலயத்தை காக்கின்றது, மதிற்சுவர் கால்கள் என்பது ஐதீகம். மதிற்சுவற்றில் நான்கு திசைகளிலும் பொதுவாக கேரளப்பாணி சாய்ந்த கூரைகள் கொண்ட எளிய நாலம்பல முகடுகள் தோரண வாயில்களாக அமைந்துள்ளன. முன் கோபுரம் சிறிதாக எளிமையாக பொதுவாக கேரள பாணியில் அமைந்துள்ளன. சில ஆலயங்களில் பல அடுக்கு தோரண வாயில்களும் அமைந்துள்ளன. முன் வாயில் கோபுரம் பாதம் என்பதாக ஐதீகம். சில ஆலயங்களில் வெளிசுற்றில் தூண்களில் விளக்கேந்திய பாவைகளை எழிலாக அமைத்துள்ளனர். ஒரே வரிசையில் ஒரே மாதிரியாக அமைந்துள்ள சிலைகளை பார்ப்பதே ஒரு பரவசம். இரண்டாம் சுற்றில் பல்வேறு மரங்கள், நந்தவனங்கள் உள்ளன. விநாயகர், சாஸ்தா, சிவன், பகவதி சந்நிதிகளும் இச்சுற்றில் பொதுவாக அமைந்துள்ளன. சில ஆலயங்களில் சீவேலிபுரம் என்னும் ஒரு சுற்றும் அமைந்துள்ளது. குருவாயூர், சோட்டாணிக்கரை போன்ற புகழ்பெற்ற ஆலயங்களில் யானைகளில் பலி மூர்த்தி உலா வருவதற்கேற்றாற் போல உயரமாகவும், அகலமாகவும் எழிலாகவும் சீவேலிப்புரம் அமைந்துள்ளது. ஆலயங்கள் கற்றளியாக இல்லாமல் மரம் மற்றும் ஓடுகள் கொண்டு இயற்கையை ஒட்டி எளிமையாக அமைக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பு. மதில் சுவர் மட்டும் இங்கு கிட்டும் சிவப்புக்கல் (Laterite) கொண்டு உயரமாக அமைத்துள்ளனர். மதிற்சுவர், சீவேலிபுரம், விளக்கு மாடம், நலம்பலம், அந்தராளம் என்னும் ஐந்து பிரகாரங்கள் ஸ்தூல சரீரத்தின் பஞ்சகோசங்களாகின்றன. தெய்வமூர்த்தமும் ஆறு ஆதாரங்களான ஆதாரசிலா, நிதி கும்பம், பத்மம், கூர்மம், யோகநாளம் மற்றும் நபும்சக சிலா ஆகியவை ஸூஷ்ம சரீரம் ஆகின்றது. இவ்வாறு ஒவ்வொரு திருக்கோயிலும் மனித உடலைப்போல அமைந்துள்ளது. இவர்கள் இப்பஞ்சப் பிரகாரங்களை இவ்வாறு அழைக்கின்றனர் 1. அகத்தே; ஸ்ரீகோவில், பலிவட்டம், 2. நலம்பலம் ; சுற்றம்பலம், 3. மத்யஹார; விளக்கு மாடம், 4. புறத்தே; பலி வட்டம் - சீவேலிபுரம், 5. புறம்- மதில் புதிது புதிதாக நினைத்த இடத்தில் சந்நிதிகளை அமைக்காமல் ஆதி காலத்தில் இருந்ததைப் போலவே அப்படியே பாதுகாக்கின்றனர். எல்லா ஆலயங்களிலும் பொதுவாக நந்தவனங்கள் உள்ளன. மேலும் ஊட்டுப்புரம் என்னும் அன்னக்கூடம், உயர்ந்த கூரையுடன் கூத்தம்பலம் எனப்படும் நாட்டிய மண்டபம் அமைந்துள்ளன. இம்மண்டபத்தில் திருவிழாக் காலங்களில் மோகினியாட்டம், கதகளி, கூடியாட்டம், தெய்யம் ஆகிய நாட்டியங்களும் இசைக் கச்சேரிகளும் நடைபெறுகின்றன. மற்றும் கோவிலுக்கு வெளியே திருக்குளம் எல்லாம் பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் அமைந்துள்ளன. எழிலான சூழ்நிலையில் அமைந்துள்ள திருக்கோவிலை மிகவும் தூய்மையாக பராமரிக்கின்றனர். சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம். நேரம் தவறாமல் சரியாக அனைத்து வழிபாடுகளையும் நடத்துகின்றனர். யாருக்காகவும், எதற்காகவும் பூஜை விதிகளை மாற்றுவதில்லை என்பது பாராட்டுக்குரியது. திருக்கதவை ஆராதனை செய்த பின் அடைத்து விட்டால் எதற்காகவும் பின் திறப்பதில்லை. மலர்கள், நைவேத்யம் மற்றும் எந்த பூஜைப் பொருளையும் கையில் வாங்குவதில்லை, கீழே வைக்க சொல்கின்றனர். யாரும் தங்களைத் தொட்டு விடக்கூடாது என்பதில் போத்திகள் மிகவும் கவனமாக உள்ளனர். எக்கோவிலிலும் கர்ப்பகிரகத்தில் மின் விளக்குகளை பயன்படுத்துவதில்லை. நெய் விளக்குகளையே பயன்படுத்துகின்றனர். கேரளத்திற்கே உரித்தான மூன்று கிளை விளக்குகள் மற்றும் சர விளக்குகளின் ஒளியிலேயே நாம் பெருமாளை திவ்யமாக சேவிக்கலாம். [] பறவைப் பார்வையில் ஒரு கேரள அம்பலம் இவர்கள் சட்டையைச் சட்டை செய்வதில்லை. அம்பலங்களுக்குள் ஆண்கள் மேல் சட்டை, பனியன், கால் சட்டை அணிந்து செல்ல அனுமதி இல்லை, கைலி அணிந்து கொண்டும் செல்ல முடியாது. கரங்களில் மூட்டை முடிச்சுகளை எடுத்துச் செல்லவும் அனுமதிப்பதில்லை வெளியே வைத்து விட்டுதான் செல்ல வேண்டும். பெண்களுக்கும் கேரள பாணி முண்டு அல்லது சேலை அணிவது அவசியம். மிகச் சில ஆலயங்களில் மட்டுமே பெண்கள் சுடிதார் அணிந்து செல்ல அனுமதிக்கின்றனர் சுடிதாரிலும் துப்பட்டா எனப்படும் மேற்துணி அவசியம். இவ்விதி அனைவருக்கும் பொது அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் இவ்விதியை தளர்த்துவதில்லை. அதிகாலை நான்கு மணிக்கே சன்னதி திறந்து விடுகின்றனர். இங்கு ஆராதனைகள் எல்லாம் கேரள முறையில் நடைபெறுகின்றன. ஆராதனை செய்யும் கேரள பிராம்மணர்கள் போத்திகள் என்றும், தலைமை அர்ச்சகர் மேல்சாந்தி என்றும் அவரது உதவியாளர்கள் தந்திரிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் உடம்பில் திருமண் அணிவதில்லை நெற்றியில் சந்தனக் கீற்று மட்டுமே அணிகின்றனர். இக்கோவில்களில் பெருமாள் பிரசாதமாக தீர்த்தமும், சடாரியும் கிடையாது. தமிழ்நாட்டில் பூஜை செய்வது போல் அர்ச்சனைகளை வாயால் உச்சரிப்பது இல்லை. வாய்க்குள்ளேயே மந்திரங்களை சொல்லிக் கொண்டு கையினால் ஆவாஹனம் செய்து கை செய்கையாலேயே பூஜை செய்கின்றனர், பின்னர் வெளியே வந்து அமர்ந்து ஒரு வாழை இலையில் சிறிது சந்தனமும், துளசியும், மலர்களும் பிரசாதமாக வழங்குகின்றனர். சில ஆலயங்களில் சிறிது விபூதியும் சேர்த்து வழங்குகின்றனர். பொதுவாக தட்சிணை தருபவர்களுக்கு இலையில் பிரசாதம் வழங்குகின்றனர் இல்லாவிட்டால் சிறிது சந்தனம் கரங்களில் வழங்குகின்றனர். அதிகமாக எதுவும் பேசுவதில்லை மிகவும் சுத்தமாகவும் நியமத்துடனும் பூஜை செய்கின்றனர். யாரும் வீண் பேச்சு பேசுவதில்லை, எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் இல்லை, சிறப்பு தரிசன கட்டணம் வாங்கிக் கொண்டு பெருமாளின் அருகில் சென்று சேவிக்க வைக்கும் பழக்கம் இல்லை அனைவரையும் சமமாக நடத்துகின்றனர். சில ஆலயங்களில் மட்டுமே நாம் தரும் நைவேத்யங்களை பெருமாளுக்கு படைக்கின்றனர். இங்கு நடத்தப்படும் பூஜைகள் எல்லாம் வழிபாடுகள் என்றழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வழிபாட்டிற்கும் ஒரு கட்டணம் உள்ளது. வெடி வழிபாடு என்று வேட்டுப் போடும் வழிபாடும், தேங்காய் மூடியில் விளக்கிடும் நீராஞ்சன வழிபாடும் புதுமையாக உள்ளன. பொதுவாக ஒரு சில ஆலயங்களை தவிர்த்து அனைத்து ஆலயங்களிலும் அதிக கூட்ட நெரிசலும் வரிசைகளும் இல்லை, எனவே எவ்வளவு சமயம் வேண்டுமென்றாலும் மனப்பூர்வமாக பெருமாளை திவ்யமாக சேவிக்க முடிகின்றது. இனி அனுதினம் நடைபெறும் வழிபாட்டு முறை என்னவென்று காணலாமா? அதிகாலையிலேயே 4 மணிக்கே நடை திறக்கப்படுகின்றது. மேல்சாந்தி நீராடி ஈர உடையுடன் நடை திறக்கின்றார். பின்னர் இறைவனை எழுப்பும் பள்ளியுணர்த்தல், முதல் நாள் அலங்காரத்தில் “நிர்மால்ய தரிசனம்", பின்னர் முந்தைய தின அலங்காரத்தை கலைத்து தைல அபிஷேகம், பல மூலிகைகளினால் தயாரிக்கப்படும் இத்தைலம் பின்னர் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இத்தைலம் நோய் தீர்க்கும் மருந்தாகின்றது. பின்னர் பொடி வாக்கச் சார்த்தல், அபிஷேகம், மலர் நைவேத்யம் (புட்டு/அவல், வெல்லம் மற்றும் கதலி பழம்) கணபதி ஹோமம், பிரசன்ன பூஜை, பல ஆலயங்களில் நிஜ ஸ்வரூபத்தை அபிஷேகத்தின் போது மட்டுமே சேவிக்க முடியும், பின்னர் கவசம் சார்த்துகின்றனர். சூரியோதய காலத்தில் உஷ பூஜை, இப்பூஜையின் போது பெருமாளுக்கு வெண்ணெய், சர்க்கரை, பழம் நைவேத்யம் செய்யப்படுகின்றது. இரண்டாவது பூஜை சுமார் 6 மணிக்கு நடைபெறுகின்றது ”எதிர்த்து பூஜை" (சூரியனை எதிர் கொள்ளுதல்) என்றழைக்கப்படுகின்றது, அதற்கப்புறம் எதிர்த்து சீவேலி, இப்பூஜை சமயத்தில் கணபதி, சாஸ்தா, பகவதி சன்னதிகளிலும் பூஜை நடைபெறுகின்றது காலை 8 மணி முதல் 9 மணிக்குள் “பந்தீரடி பூஜை” (சூரியனின் நிழல் பன்னிரண்டடி விழும் சமயம்), தாரா, பால், இளநீர். பன்னீர் ஆகியவற்றாலும் நவாகம் எனப்படும் ஒன்பது கலசங்களில் உள்ள புனித நீராலும் அபிஷேகம், பஞ்ச கவ்யம், பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் (பல் வேறு கோலங்களில் அலங்காரம் செய்கின்றனர்). உச்சிக்காலத்தில் “உச்சபூஜை", பெருமாளுக்கு நைவேத்யம் சமர்ப்பிக்கப்படுகின்றது, ”உச்ச சீவேலி", சுமார் 11 மணிக்கு நடை அடைத்தல். ஸ்ரீபலி என்பதே மருவி சீவேலி ஆகிவிட்டது. பின்னர் மறுபடியும் மாலை 4 மணிக்கு நடை திறத்தல், தீபாராதணை இச்சமயத்தில் விளக்கு மாடத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் ஏற்றப்படுகின்றன. தீபாராதணை நடக்கும் போது பெருமாளை சேவிப்பதே ஒரு அருமையான அனுபவம் ஆகும். வெகு தூரத்தில் இருந்து கூட பெருமாளை திவ்யமாக இச்சமயத்தில் சேவிக்கலாம். பின்னர் பகவதி சேவை, "அத்தாழ பூஜை“, இப்போது அப்பம், அடை மற்றும் தாம்பூலம் நைவேத்யம் செய்யப்படுகின்றது. ”அத்தாழ சீவேலி", பிறகு திருப்தொடர், அஷ்ட கந்தம் என்னும் எட்டு மணப்பொருள்களால் தொடர்யூட்டப்பட்டு, இரவு 8 மணிக்கு நடை அடைக்கபடுகின்றது. இவ்வாறு ஐந்து கால பூஜைகளும் மூன்று சீவேலிகளும் தினமும் கிரமமாக நடைபெறுகின்றது. சீவேலியின் போது பலி உற்சவரை தலையில் அல்லது கரத்தில் சுமந்து கை விளக்கு, மேள தாளத்துடன் அந்தராளம் சுற்றி வருகின்றனர். மிகவும் வேகமாக நடந்து செல்கின்றனர். சில ஆலயங்களில் யானையிலும் உற்சவ பலி மூர்த்தி “திடம்பில்” எழுந்தருளுவார். இது பலி சமர்ப்பிக்கும் போது பெருமாளே தனது அன்பர்களுக்கு சரியாக பலி கிடைக்கின்றதா? என்று அன்புடன் கவனிப்பது போல உள்ளது. மழை அதிகமாக செய்யும் பிரதேசம் என்பதால் மழை பெய்யும் போது கூட தாழங்குடை பிடித்துக்கொண்டு சீவேலி சமயத்தில் பலி சமர்ப்பிக்கின்றனர். சீவேலி சமயத்தில் ஸ்ரீகோவிலின் கதவு அடைக்கப்படுகின்றது, கொடிமரத்தைத் தாண்டி யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. கற்பூர தீபாரதணைக்கு பிறகு சங்கில் உள்ள தீர்த்ததை பக்தர்களின் மேல் தெளிக்கின்றனர். கோயில் பணியாளர்கள் அனைவரும் தங்கள் பணிகளை செம்மையாக செய்கின்றனர். உற்சவங்களின் போது யானைகள், தாளம் போட வைக்கும் செண்டை மேளம் எனப்படும் பஞ்சவாத்தியங்கள், வர்ணக்குடைகள், சாமரங்கள், வாண வேடிக்கை ஆகியவை கேரளாவின் சிறப்பு ஆகும். வாருங்கள் இனி ஒவ்வொரு திவ்யதேசமாக சேவிப்போம். இத்திவ்யதேசங்கள் எல்லாம் கேரளா முழுவதும் வடக்கில் இருந்து தெற்கு வரை அமைந்துள்ளன, பல திவ்யதேசங்கள் முக்கிய சாலைகளை அடுத்த சிறு கிராமங்கள் என்பதாலும் கார், வேன் போன்ற சொந்த வண்டிகளை அமர்த்திக்கொண்டு செல்வது நல்லது. இவ்வாறு சென்றாலும் அனைத்து திவ்யதேசங்களை மட்டுமே சேவிக்க குறைந்தது மூன்று நாட்களாவது வேண்டும். அடியேனின் அனுபவம் ஆலயங்களின் நடை சார்த்தும் நேரம் சரியாக கடைப்பிடிக்கப்படுவதால் ஒரு நாள் அதிகப்படியாக வைத்துக்கொண்டு பயணம் செல்வது உத்தமம். பேருந்து மூலமாக செல்ல விரும்பினால் அருகில் உள்ள பெரிய ஊர்களில் தங்கிக்கொண்டு பின்னர் பேருந்து மூலம் பயணம் செய்து சேவிக்கலாம் ஆனால் நடை அடைப்பதற்கு முன் சென்று விடவேண்டும். ஒவ்வொரு திவ்யதேசத்திற்கும் அருகில் உள்ள பெரிய ஊர் விவரங்கள் மற்றும் செல்லும் வழியில் உள்ள மற்ற சிறப்பு மிக்க ஆலயங்கள் பற்றிய சிறு குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. அனைத்து மலைநாட்டு திவ்யதேசங்களிலும் யாத்திரிகளுக்கு உதவும் விதமாக அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர். அதில் மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் அத்திவ்யதேசத்தின் மூலவர், இடம், அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் எவ்வளவு தூரம் என்ற விவரங்களை அதில் தந்துள்ளனர். மேலும் கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் அத்திவ்யதேசத்திற்கு சமர்பித்துள்ள ஒரு ஆழ்வார் பாசுரம் மற்றும் த்யான ஸ்லோகம் ஆகிய கல்வெட்டுகளையும் அனைத்து மலைநாட்டு திவ்யதேசங்களிலும் காணலாம். மூன்று நாட்கள், அதிகாலை விஸ்வருப தரிசனம் முதல், இரவு அத்தாழ பூஜை வரை அனைத்து பூஜைகளையும் பெருமாளின் பல் வேறு அலங்காரங்களையும் பல சீவேலிகளையும் பல்வேறு ஆலயங்களில் காணும் ஒரு பாக்கியம் இந்த யாத்திரையின் போது கிட்டியது. அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை ஆலிமா முகிலை வாலி காலனை இந்தளூருறை எந்தை பெம்மானை ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை உள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை ஊரகம் நின்றருள் நீரகத்தடிகளை எவ்வுள் மாயனை தெய்வ நாயகனை ஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை ஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே! ஓதநீர் ஞாலத்துழலும் ஔவியப் பிறப்பில் அழுந்திடுவதே என்று பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் மங்கலாசாசனம் செய்த மாயவன், கண்ணன், மணிவண்ணன், கேசவன், மண்ணும் விண்ணும் தாயவன், கமல நயனன், சரத்தால் இலங்கை தீயவன், குருவாயூர் உறை தூயவன் சேவையை அனுபவிப்போம் வாருங்கள் அன்பர்களே. அத்தியாயம் – 3 திருநாவாய் – நாவா முகுந்தன் [] இம்மையில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கும், மறுமையில் இறைத்தன்மை அடைவதற்கும் வழிகாட்டுவதே வைணவத்தின் அடிப்படை. சரணாகதி தத்துவம் எனும் மிக உயர்ந்த லட்சியத்தை குறிக்கோளாகக் கொண்டது வைணவம். எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொள்வான், நாம் செய்ய வேண்டியது அவனது பாதாரவிந்தங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். அதற்கும் அவன் அருளே துணையாக இருக்கும் எனவே சரணமடைந்து நற்கதி பெறுவதே வைணவத்தின் அடிநாதம் ஆகும். எனவே தான் திருவேங்கடவனும், ஒப்பிலியப்பனும், பார்த்தசாரதியும் தமது திருப்பாதங்களை தமது திருக்கரங்களால் காட்டியவாறு எளிமையின் எல்லை நிலமாக, அர்ச்சாவதாரமாக நமக்கு சேவை சாதித்தருளுகின்றனர். அப்பெருமான் அருள் பாலிக்கும் சேரநாட்டுத் திவ்யதேசங்களில் முதலில் அடியோங்கள் சேவித்த திவ்யதேசம் “திருநாவாய்” ஆகும். சென்னை - கள்ளிக்கோட்டை தொடர்வண்டி மார்க்கத்தில் இத்தலம் அமைந்துள்ளது. மிக அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் திரூர் மற்றும் குட்டிபுரம் ஆகும். திரூரிலிருந்து சுமார் 1கி.மீ தூரத்தில் திருக்கோவில் அமைந்துள்ளது. ஷொரனூர், பொன்னானி, பட்டாம்பி, குருவாயூர், பாலக்காடு ஆகிய ஊர்களில் இருந்தும் குட்டிபுரம் வழியாக பேருந்து மூலம் திருநாவாயை அடையலாம். எப்போதும் அமைதியாக அகண்டு பாயும் தக்ஷிணகங்கை என்னும் பாரதப்புழா ஆற்றங்கரையின் வடகரையில் சுமார் 6000 வருடங்கள் பழமையான இவ்வாலயம் அமைந்துள்ளது. நிலா ஆறு என்றும் அழைக்கப்படும் இவ்வாற்றின் முதன்மையான துணையாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாட்டு எல்லைக்குள் அமைந்துள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி பின் மேற்கு நோக்கி பாலக்காட்டுக் கணவாய் வழியாக பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஊடாகப் பாய்கிறது. திரூர் ஆறு  உட்பட பல ஆறுகள் இடையில் சேர்கின்றன. பரளி என்ற இடத்தில் கண்ணாடிப்புழாவும் கல்ப்பாத்திப்புழாவும் இணைந்து பாரதப்புழா என்ற ஆறாக ஓடுகிறது. தூதப்புழா ஆறு பள்ளிப்புரம் என்ற இடத்தில் பாரதப்புழாவுடன் சேர்கிறது. இந்த ஆறு மேற்கு நோக்கி ஓடி பொன்னானி என்ற இடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. அத்யாத்ம இராமாயணம் என்று இராமகாதையை மலையாளத்தில் முதலில் இயற்றிய எழுத்தச்சன் இவ்வாற்றின் கரையில்தான் அக்காவியத்தை இயற்றினார். அவர் பாரதப்புழையை சோகநாசினி அதாவது துயரங்களை களைபவள் என்று போற்றுகின்றார். மலை நாட்டுத் திருப்பதிகளில் திருநாவாயும், திருவித்துவக்கோடும் இவ்வாற்றின் கரையில் அமைந்துள்ளன. இங்கு பெருமாளை “நாவா முகுந்தன்” என்று அழைக்கின்றனர். அடியோங்கள் அதிகாலை சென்று சேர்ந்த போதே ஜே.. ஜே.. என்று பக்தர்கள் கூட்டம், வெள்ளை முண்டணிந்த ஆண்களும் பெண்களும், தேன் கூட்டில் தேனீக்கள் மிகவும் வேகமாக வந்து கொண்டும் சென்று கொண்டும் இருப்பது போல ஆற்றை நோக்கியும், ஆற்றிலிருந்து திருக்கோவிலை நோக்கியும் சென்று கொண்டிருந்தனர். அதிகாலையிலிருந்தே கோவிலிலிருந்து பக்திப் பாடல்கள் ஒலி பெருக்கி வழியாக வந்து கொண்டிருந்தது. ஆற்றின் தென்கரையில் பெருமாளின் திவ்யதேசமும் மறு கரையில் சிவன் மற்றும் பிரம்மாவிற்கான ஆலயமும் அமைந்துள்ளன. எனவே இத்தலம் “மும்மூர்த்தி தலம்” என்றும் அழைக்கப்படுகின்றது மற்றும் காசிக்கு இணையான தலமாகவும் கருதப்படுகின்றது. ஆகவே பித்ரு பூஜை இத்தலத்தில் மிகவும் விசேஷம். துவாரபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து பஞ்சபாண்டவர்களுடன் சேர்ந்து தம் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. முதன் முதலாக ஜமதக்னி முனிவர் இத்தலத்தில் தர்ப்பணம் செய்தார் என்றும் கூறப்படுகின்றது. அமாவாசை நாட்களில் தலவிருட்சத்தின் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள்.  ஆடி அமாவாசை (கர்க்கடக மாத வாவு) ஆயிரக்கணக்கானோர் இத்தலம் வந்து நீத்தார் கடன் செலுத்துகின்றனர். தை பூசம் தொடங்கி மாசி மகம் ஈறாக 30 நாட்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான புண்ணிய நதிகள் பாரதப்புழையில் சேருவதாக ஐதீகம். அடியோங்கள் அதிகாலை இத்தலத்தை அடைந்தோம் முதலில் நீராட பாரதப்புழைக்கு சென்றோம். அப்போது ஆற்றின் படித்துறையில் வரிசையாக அமர்ந்து பக்தர்கள் பித்ரு தர்ப்பணம் செய்வதை கண்ணுற்றோம். சுமார் 25 படிக்கட்டுகள் உள்ளன அதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர். பெண்கள் கூட தனியாக அமர்ந்து தர்ப்பணம் செய்வதைக் கண்டோம். அவர்கள் முன் உள்ள சிறு வாழை இலையில் அரிசி, எள், சாத உருண்டை, பிரண்டை இலை, பத்ரம், மலர்கள், சிறு பித்தளைக் கிண்ணத்தில் நீர். ஒரே போத்தி மந்திரம் சொல்ல அனைவரும் அவர் கூறிய படி சிரத்தையாக தங்கள் முன்னோர்களுக்கு சிராத்தம் செய்து கொண்டிருந்தனர். தர்ப்பணம் முடிந்த பிறகு பிண்டம், பூ, இலைகளை ஆற்றில் போட்டு குளித்து விட்டு கரையேறி பெருமாளை சேவிக்கின்றனர். அடியோங்களும் புனித பாரதபபுழா ஆற்றில் நீராடி விட்டு நாவாய் முகுந்தனை சேவிக்கச் சென்றோம். அருமையான இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது இத்தலம். சுற்றிலும் பச்சைப் பசேலென வாழை, கமுகு, பலா மரங்கள் செழிப்பாக எழில் காட்டுகின்றது. அதிகாலை ஈரப்பதம் காற்றில் இருந்தது. சூரிய உதய காலம் என்பதால் பொன்னிறமாக சூரியன் வெளிப்போந்து கொண்டிருந்தான். வாருங்கள் நாவாயாக (கப்பல்) நம்மை சம்சார கடலை கடத்துவிக்கும் முகுந்தனைச் சேவிக்கலாம். [] திருநாவாய் ஸ்ரீகோவில் விமானம் முகுந்தன் என்ற பதத்திற்கு பெரியோர்கள் இவ்வாறு பொருள் கூறுவர். மு – என்றால் மோட்சம், கு – என்றால் பூமி, த(ததாதி) – என்றால் கொடுப்பவன். ஆகவே நாவா முகுந்தன் இம்மை பலன்கள் மற்றும் முக்தி ஆகிய இரண்டும் அருள வல்லவன். எனக்கு வேறு புகலில்லை நீயே உனது கருணையினால் மோட்சம் வழங்க வேண்டும் என்று வேண்ட மோட்சம் என்னும் ஸ்ரீவைகுந்ததையும் இவ்வுலகிலே தன்னைக் கொடுத்து அவன் திருவடிகளுக்கு தொண்டு புரிய வைக்கும் சரண்ய முகுந்தன். கேரள பாணியில் அருமையாக உள்ளது முகப்பு மண்டபம், கோவிலின் முன்புறம் ஒரு பெரிய சர விளக்குக் கம்பம் உள்ளது. ஆலய நுழைவாயில் அருகே விசாலமான இரண்டு அரச மரங்கள் உள்ளன. அவைகளிலிருந்து வீசும் தென்றல் சில்லென்று மேனியில் பட திருக்கோவிலுக்குள் பெருமாளை சேவிக்க நுழைந்தோம். இரண்டு பிரகாரங்கள் கேரள பாணி மரச்சிற்பங்களுடன் எழிலாக அமைந்துள்ளது ஆலயம். உட்புற சுவர்களில் காலத்தினால் அழியாத பல அற்புத ஓவியங்களைக் கண்டோம். பிரகாரத்தில் கன்னி மூலையில் ஆதி கணபதி, மஹாலக்ஷ்மித் தாயார் மற்றும் ஐயப்பன் சன்னதிகள் உள்ளன. விமானம் இரண்டடுக்கு பிரமிட் வடிவத்தில் உள்ளது. கூரையை தாங்குகின்றன அழகிய மரச்சிற்பங்கள் இராமாயண, மஹாபாரத கதைகளை இயம்புகின்றன. உள் பிரகாரத்தில் ஒரு தந்திரி அமர்ந்து கொண்டு சந்தனம் வழங்கிக்கொண்டிருந்தார். நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்கலாசாசனம் செய்த இத்திருநாவாய் திவ்யதேசத்தில் மூலவர் : நாவாய் முகுந்தன், நாராயணன், நின்ற கோலம், கிழக்கே திருமுக மண்டலம். தாயார் : மலர் மங்கை நாச்சியார், சிறு தேவி. தவத்தில் அமர்ந்த கோலம். தாயாருக்கு தனி சன்னதி உள்ள ஒரே மலைநாட்டு திவ்யதேசம். விமானம்: வேத விமானம். தீர்த்தம் : செங்கமல சரஸ், பாரதப்புழை பிரத்யக்ஷம் :மஹாலக்ஷ்மி, நவயோகிகள், கஜேந்திரன். இனி இத்தலத்தின் தல புராணங்களைப் பற்றிப் பார்ப்போமா?. ஒரு காலத்தில் இத்தலம் வேத பாடசாலைகள் நிறைந்த இடமாக திகழ்ந்திருக்கின்றது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாமாங்கம் என்ற பெயரில் சேரமான் பெருமாளுடன் அவர் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசர்கள் அனைவரும் கூடி விழா நடத்தியுள்ளனர். முதலில் இவ்வூரின் பெயர் காரணத்திற்கான ஐதீகத்தைக் காணலாம். அயோத்தியின் மாமன்னர் ரிஷபருக்கு, ஒன்பது மைந்தர்கள். அனைவரும் ஞானிகள், எனவே அவர்கள் நவயோகிகள் என்றழைக்கப்பட்டனர். அவர்கள் எப்போதும் தேச சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போது பாக்மதி மற்றும் கண்டகி நதி சங்கமத்தில் இவர்களில் மூத்தவரான கவி என்பவருக்கு ஒரு சாளக்கிராமம் கிட்டியது. அதே சமயம் லோக கல்யாணத்திற்காக இந்த சாளக்கிராமத்தை உரிய தலத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு ஒரு அசரீரி கூறியது. கவியும் பாரத கண்டமெங்கும் சுற்றிய போது பிரம்மா யாகம் செய்த பாரதப்புழையின் வடகரையில் உள்ள இத்தலத்தில் அச்சாளக்கிராமத்தை சமர்பித்துவிட்டு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்து சென்று விட்டார். ஆனால் அச்சாளக்கிராமம் பூமியில் மறைந்து விட்டது. அவருக்கு பின் அவரது இளையவர்கள் ஏழு பேர் சமர்பித்த சாளக்கிராமங்களும் இவ்வாறே மறைந்தது. ஒன்பது சகோதரர்களில் இளையவரான கரபாஜனன் தான் கொண்டு வந்த சாளக்கிராமத்தை உரிய முறையில், அனைத்து ஆகம விதிப்பிரகாரம் முக்தி அளிக்க வல்ல முகுந்தனாக பிரதிஷ்டை செய்தார், பெருமாளும் இங்கு கோயில் கொண்டார். பின்னர் நவயோகிகளும் இங்கு யக்ஞம் செய்து விஷ்ணுவை வழிபட்டனர். ஆகவே இத்தலம் நவயோகி என்றழைக்கப்பட்டு பின்னர் அது மருவி பின்னர் திருநாவாய் என்று ஆகியது. வேறொரு ஐதீகமும் கூறப்படுகின்றது. அந்நவயோகிகள் சத்துவநாதர், சாலோகநாதர், ஆதிநாதர், அருளிநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடயேந்திரநாதர், கோரக்கநாதர், குக்குடநாதர் என்பர். கேரளத்தில் பொதுவாக திருக்கோவிலின் சம்ப்ரோக்ஷணம் நிறைவடைந்த பிறகு ஒரு வாரம் பூட்டி வைப்பது மரபு. முதல் எட்டு யோகிகளும் பிரதிஷ்டை செய்த பெருமாள் ஒரு வாரம் கழித்து திருக்கோவிலை திறந்து பார்த்தபோது காணாமல் போயிருக்குமாம். ஒன்பதாவது யோகி ஒரு வாரம் வரை காத்திருக்காமல் மூன்று நாள் தாண்டிய உடனே திருக்கோவிலை திறந்து பார்த்தபோது பெருமாள் முழங்கால் வரைக்கும் பூமிக்குள் மறைந்து இருந்தாராம். பின்னர் யோகியார் வேண்ட அவ்வாறே இன்றும் சேவை சாதிக்கின்றார். மற்ற எட்டு மூர்த்தங்களும் இன்றும் கீழே உள்ளனர் என்பது ஐதீகம். ஆழ்வார்கள் வைகுந்தன் என்பவன் ஒரு தோணி என்று பாடியபடி நம்மை இச்சம்சார சாகரத்திலிருந்து ஈடேற்றும் நாவாயாக (படகு) எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் நாவா முகுந்தன். [] இனி பக்தர்களுக்கு நெகிழும் பரந்தாமனாக இத்தலத்தில் பெருமாள் சேவை சாதிக்கும் பாங்கைக் காணலாமா? கஜேந்திர மோட்ச கதையை நாம் எல்லோரும் அறிவோமல்லவா?. இந்திரதும்யுனன் என்ற பாண்டிய மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் ஒரு முறை அகத்திய முனிவர் வந்த போது அவரை கவனிக்காமல் பூஜை செய்து கொண்டிருந்தான், அதைக் கண்டு கோபம் கொண்ட முனிவர் என்னை மதிக்காமல் மதம் கொண்டு நடந்த நீ, மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து, அடுத்த பிறவியிலும் பெருமாள் மேல் கொண்ட பக்தி தொடர வேண்டும் என்று வேண்ட, முனிவரும் அவ்வாறே வரம் கொடுத்து மஹாவிஷ்ணுவாலேயே உனக்கு மோட்சமும் கிட்டும் என்று சாப விமோசனமும் அளித்தார். ஹூஹூ என்னும் கந்தர்வன் ஒருவன் பொய்கைக்கு கால் கழுவ வருபவர்களின் காலைப் பற்றி இழுத்து விளையாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒரு சமயம் தேவல முனிவரின் காலை இவ்வாறு இழுத்த போது முனிவர் அவனுக்கு தண்ணீரில் கிடந்து தவிக்கும் முதலையாக ஆகும் சாபம் அளித்தார். அவன் தன் தவறை உணர்ந்து சாப விமோசனம் வேண்ட மஹாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம் பட்டு உனக்கு சாப விமோசனம் ஏற்படும் என்றார். பின்னர் ஒரு சமயம் கஜேந்திரன் பெருமாளுக்கு சமர்ப்பிக்க தாமரை மலரை பறிக்க, இம்முதலை இருந்த தடாகத்திற்கு வர முதலை யானையின் காலைப் பற்றியது. யானை முதலையின் பிடியில் இருந்து தப்பிக்க எத்தனையோ ஆண்டுகள் முயற்சி செய்தது. ஆனாலும் முடியவில்லை, உடனிருந்த சுற்றத்தார்களும் விட்டு விலகி விட்டனர், தன்னுடைய பலமும் குறைந்து வருவதை உணர்ந்த கஜேந்திரன், நிர்க்கதியான நிலையில் பெருமாளை சரணடைந்து “ஆதி மூலமே” என்றலறினான். அந்த ஆபத்பாந்தவன் பெரிய திருவடியில் ஆரோகணித்து வந்து சுதர்சன சக்கரத்தால் முதலையை கொன்று கஜேந்திரனைக் காப்பாற்றினார். இந்த கஜேந்திரனே கன்னி மூலையில் பெருமாளுக்கு வலப்புறத்தில் ஆதி கணேசராக சன்னதி கொண்டதாக ஐதீகம். பின்னர் கஜேந்திரன் தினமும் பாரதப்புழையில் நீராடி தடாகத்தில் தாமரை மலரை பறித்து பெருமாளுக்கு சமர்பித்து வந்தது. அதே தடாகத்தில் இருந்து மஹாலக்ஷ்மியும் தாமரை மலர் பறித்து பெருமாளை ஆராதித்து வந்தார். ஒரு நாள் மஹாலக்ஷ்மி எல்லா தாமரை மலர்களையும் தானே முதலில் பறித்து வந்துவிட மலர் இல்லாமல் தவித்த கஜேந்திரன் பெருமாளிடம் முறையிட பெருமாளும் பக்தனுக்காக நெகிழ்ந்து, மஹாலக்ஷ்மியிடம் தேவி! நீ தனியாக என்னை ஆராதனை செய்யாமல் கஜேந்திரன் ஆராதனையை என்னோடு நீயும் சேர்ந்து ஏற்றுக் கொள்ளேன், எனக்குச் சமமாக உனக்கும் சேர்த்து அவன் வழிபாடு நடத்தட்டுமே’ என்று மகாலக்ஷ்மியை சமாதானம் செய்தார். பிராட்டியும் பெருமாளுக்கு இடப்புறத்தில் தனிச் சன்னதியில் கோவில் கொண்டாள். அதன்படி, இத்தலத்தில் முகுந்தனும், மகாலக்ஷ்மியும் தனித்தனியே சன்னதி கொண்டு, அந்நாளைய கஜேந்திரன் முதல் இப்போது அடியோங்கள் உட்பட அனைவரது பக்தி உபசாரத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள்!. எனவே மலைநாட்டு திவ்யதேசங்களுள் இத்தலத்தில் மட்டும் தாயாருக்குத் தனி சன்னதி உள்ளது. மற்ற மலைநாட்டு திவ்யதேசங்கள் அனைத்திலும் “அகலகில்லேன் இறையும்” என்று எம்பெருமானின் திருமார்பிலேயே உறைகின்றாள் பிராட்டி. இவ்வாறு பக்தர்களே தனக்குப் பிரதானம் என்று பெருமாள் காட்டிய தலமாகும் இத்தலம். தாயார் அமர்ந்த கோலத்தில் இடக்கையை அபய கரமாகவும், வலக்கரத்தை தன் திருவடிகளை காண்பிக்கும் விதமாகவும் எழிலாகச் சேவை சாதிக்கின்றாள். இத்தலத்தை மங்கலாசாசனம் செய்த திருமங்கையாழ்வார் கஜேந்திர மோட்சத்தை தமது ஒரு பாசுரத்தில் பாடியுள்ளார் அப்பாசுரம் தூவாய புள் ஊர்ந்து வந்து துறை வேழம் மூவாமை நல்கி முதலை துணித்தானை தேவாதி தேவனை செங்கமலக்கண்ணானை நாவாய் உளானை நறையூரில் கண்டேனே (பெ.தி. 6-8-3) பொருள்: பரிசுத்தமான வாயை உடைய கருடாழ்வாரை வாகனமாகக் கொண்டு மடுவின் கரையிலே வந்து சேர்ந்து கஜேந்திராழ்வான் துன்பம் அடையாதபடி அருள்புரிந்து முதலையை இரு துண்டாக்கி ஒழித்தவனும், நித்திய சூரிகளுக்குத் தலைவனும், செந்தாமரை போன்ற திருக்கண்களை உடையவனும், திருநாவாய் என்னும் திருப்பதியில் உறைபவனுமான எம்பெருமானை நறையூரில் கண்டேன் என்று அதாவது இவ்வாறு ஆனைக்கு அருள் புரிந்த திருநாவாய் எம்பெருமானே தனது ஆச்சாரியன் நறையூர் நின்ற நம்பி என்று பாடுகின்றார். மார்க்கண்டேயனுக்கு சிரஞ்சீவியாக இருக்க வழிகாட்டிய பெருமாளாகவும் நாவாமுகுந்தன் விளங்குகின்றார். பெற்றோர்கள் பெற்ற வரத்தின்படி பதினாறு வயதானவுடன் எமன் மார்க்கண்டன் உயிரைப் பறிக்க வரும் போது மார்க்கண்டேயர் முகுந்தனை சரணமடைய அவரும் ஒரு சிவலிங்கத்தை சிறுவனிடம் அளித்து இச்சிவலிங்கத்தை பூஜை செய் என்று பின் வாசல் வழியாக அனுப்பி பின்னர் அவ்வாசலை மூடிவிட்டாராம். யமன் வெளியே செல்ல முடியாமல் போனதால் மார்க்கண்டன் உயிர் தப்பியது. மார்க்கண்டரை காத்த சிவபெருமான் சிவலிங்கமாக மஹாசிவன் என்ற நாமத்துடன் திருநாவாய்க்கு அருகில் உள்ள திருப்பிரங்கோடு என்ற தலத்தில் அருள்பாலிக்கின்றார். பராங்குச நாயகியாய் தன்னை பாவித்து நம்மாழ்வார்நாவாமுகுந்தனை மங்கலாசாசனம் செய்துள்ளார், அவற்றுள் ஒரு பாடல் மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம் விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய் கண் ஆரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே? (தி.வா 9-8-5) பொருள்: பெரிய பிராட்டிக்கும், பூமிப்பிராட்டிக்கும் நாயகனும், மக்களும், தேவர்களுமாகிய எல்லா உயிர்களுக்கும் நிர்வாகனும், பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற திருநாவாயைக் கண்ணாரக் கண்டு களிப்பது என்றுதானோ அறிகிலேன்!. என்று மங்கலாசாசனம் செய்த திருநாவாய் திருப்பதியில் நாவாய் முகுந்தன், நின்ற திருக்கோலத்தில் சங்கு சக்கரம், கதை, பத்மத்துடன், சதுர்புஜராய், மந்தகாச புன்சிரிப்புடன் சேவை சாதிக்கின்றார். நெய் விளக்கு வெளிச்சத்தில் பக்தவத்சலனை சேவிக்கும் போது அப்படியே மெய் சிலிர்க்கின்றது. பால் பாயசம் இவருக்கு உகந்த நைவேத்யம், நெய் விளக்கும், தாமரை மாலையும் இவருக்கு மிகவும் உகந்தவை என்பதால் பல பக்தர்கள் இவற்றை பெருமாளுக்கு சமர்ப்பிக்கின்றனர். இவரை திருமாலே! நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ! ஆவா! அடியான் இவன் என்று அருளாயே! சரணாகதி செய்தோம். திருநாவாயை நம்மாழ்வார் பத்துப் பாசுரங்களாலும், திருமங்கையாழ்வாரும் இரு பாசுரங்களாலும் மங்கலாசாசனம் செய்துள்ளனர். நம் கலியனின் ஒரு பாசுரத்தை மேலே சேவித்தோம் மற்றொரு பாசுரம் இதோ கம்பமா களிறு அஞ்சிக் கலங்க ஓர் கொம்பு கொண்ட குறை கழல் கூத்தனை கொம்பு உலாம் பொழில் கொட்டியூர்க் கண்டுபோய் நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே. (பெ.தி 10-1-9) பொருள்: கண்டார்க்கு நடுக்கத்தை விளைக்கக் கூடிய பெரிய குவலயாபீடம் என்னும் யானை பயப்பட்டுக் கலங்கி முடியுமாறு அதன் கொம்பை முறித்து எறிந்தவனும், வீரக்கழலை உடையவனும், விசித்திரமான நடை உடையவனும், அன்பர்களால் விரும்பத்தக்கவனுமான எம்பெருமானை சோலைகள் உள்ள திருக்கோட்டியூரிலே சென்று வணங்கித் திருநாவாயில் சேவிப்போம் என்று பாடுகின்றார். 6000 வருடங்கள் பழமையான இவ்வாலயம் திப்பு சுல்தான் காலத்திலும், மாப்பிள்ளைக் கலகங்களின் போதும் சேதமடைந்தது. பின்னர் வருடத்தில் இரு முறை மலையாள மேஷமாதப் பிறப்பன்றும் (சித்திரை) கன்னி மாதப் பிறப்பன்றும் (புரட்டாசி) சூரியனது கதிர்கள் இறைவனின் திருமேனியைத் தழுவும்படி புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. திவ்யமாக பெருமாளை தரிசித்து விட்டு வெளியே கிளம்பியபோது அங்கிருந்த ஆலய பணியாளர்கள் பிரசாதம் சுவீகரித்துக்கொண்டு செல்லுமாறு அன்புடன் அழைத்தார்கள். ஆலயத்திற்கு அருகிலேயே ஊட்டுப்புரா என்னும் அன்னதானக்கூடம் அமைத்துள்ளனர். வருடத்தின் 365 நாளும் வரும் பக்தர்களுக்கு “பிரசாத ஊட்டு” என்னும் அன்னதானம் இலவசமாக வழங்குகின்றனர். காலையில் எங்களுக்கு இட்லி, சாம்பார், சாய் (டீ) பெருமாள் பிரசாதமாக கிடைத்தது. அறுக்கும் வினையாயின ஆகத்தவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு வெறித்தண் மலர்சோலைகள்சூழ் திருநாவாய் குறுக்கும் வகையுண்டு கொலோ? கொடியேற்கே. (தி.வா 9-8-1) பொருள்: எம்பெருமானைத் தங்கள் உள்ளத்திலே நிலை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற கருத்திலே ஒருமைப்பாடுடைய எண்ணத்தையுடைய அடியார்களுக்கு வினை என்று பெயர் பெற்றவை அனைத்தையும் போக்குவான். அப்பெருமான் எழுந்தருளியுள்ள, மணம் பொருந்திய குளிர்ந்த மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநாவாய் என்னும் திருப்பதியைக் கொடியேனாகிய எனக்கு அணுகும் வகை உண்டோ? என்று நம்மாழ்வார், எம்பெருமான் வரக்காணாமையினால் தலைவித் தலைவனது நகரான திருநாவாயிற் செல்ல நினைந்தமை கூறும் முகத்தால், ஆழ்வார் எம்பெருமானை அடைவதில் விரைவை தெரிவிக்கும் இப்பாசுரத்தில் அன்று பாடிய படி இன்றும் மா, பலா, வாழை தோட்டங்கள், மலர்ச்சோலைகள், பாரதப்புழை ஆறு சூழ்ந்திருக்க அருமையாக அமைந்துள்ளது இத்திவ்யதேசம். [] முகப்பு மண்டபம் இத்திவ்யதேசத்திற்கு இராமனுஜர் விஜயம் செய்த போது திருக்கோவில் எங்குள்ளது என்று விசாரித்தபோது அவர்கள் குறுக்க.. குறுக்க.. அதாவது அருகில்தான் உள்ளது என்று பதிலிறுத்தார்களாம். நம்மாழ்வாரின் மேலே சேவித்த பாசுரத்திலும் குறுக்கு என்ற தொடர் வந்துள்ளதை எண்ணி இராமானுஜர் வியந்தாராம். மலைதேச எம்பெருமான்கள் அனைவரும் நம்மாழ்வாருக்கு ஒவ்வொரு கல்யாண குணத்தை காட்டி அருளியதாக நம்பிள்ளையின் சீடரான வடக்கு திருவீதிப்பிள்ளையின் இளைய குமாரரும், பிள்ளை லோகாச்சாரியாரின் இளையவருமான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற ஆச்சாரியர் தமது ஆசார்யஹ்ருதயம் என்ற நூலில் கூறியுள்ளார். நம்மாழ்வார் அருளிச் செய்த திவ்யப்பிரபந்தங்களில் அவருடைய திருவுள்ளக் கருத்துக்களைத் தெளிவாக கூறுவதால் இந்நூலுக்கு ஆசார்யஹ்ருதயம் என்ற திருநாமம். “பிரிந்த துன்பக்கடல் கடத்தும் விஷ்ணு போதாந்ரு சம்ஸயம் நாவாயிலே நிழலெழும்” – மேன்மேலும் ஆள்விட வேண்டும்படி தன்னைப் பிரிகையால் வந்த துக்க சாகரத்தை கடத்தும் விஷ்ணு போதமான எம்பெருமானின் பரம கிருபை திருநாவாயிலே ஊரின் பெயர் கொண்டே அறியக் கிடைக்கும். (நாவாய் என்பதற்கு படகு என்று பொருள்) என்பது ஆச்சாரியர் வாக்கு. இத்திவ்யதேசத்தில் எம்பெருமான் நம்மாழ்வாருக்கு காட்டும் தன்மை “அடியார்களிடம் இருக்கும் மாப்பெரும் கருணையாகும்”. தன்னை சரணடைந்தவர்களை இச்சம்சாரம் என்னும் பெருங்கடலை கடத்துவிக்கும் படகோட்டியாகவும், படகாகவும் எம்பெருமான் இத்திவ்யதேசத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இத்தலத்தின் பெயரில் அவ்வுண்மை அடங்கியுள்ளது. தை மாத மகர சங்கராந்தியும், சித்திரை மாத விஷுக்கனியும் இத்தலத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. விஷுவை ஒட்டி பத்து நாட்கள் இங்கே ஒரு தெய்வீக வைபவம்.  அப்பத்து நாட்களும், ஆலயம் முழுவதும் எண்ணெய் தீப ஒளியில் திருக்கோயிலே ஜகஜ்ஜோதியாகத் திகழுமாம். இத்தலத்தில் விஷுக்கனி காண்போர், தம் வாழ்வில் எல்லா வளங்களையும், சிறப்புகளையும் பெறுவார்கள் என்பது இங்குள்ளோர் நம்பிக்கை. மேலும் ஏகாதசி தினத்தன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி நாவா முகுந்த எகாதசி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருக்கோவிலுக்கு அருகிலேயே ஐயப்பனின் தனி சன்னதியும் அமைந்துள்ளது. சிறிய கிராமம் என்றாலும் தர்ப்பணம் செய்ய வருபவர்கள் தங்குவதற்கு ஏதுவாக இங்கு தேவஸத்தினர் (தேவஸ்தானம்) அறைகள் கட்டியுள்ளனர் எனவே இங்கு தங்கும் வசதியுள்ளது. ஆன்-லைனில் http://thirunavayatemple.org என்ற வலைத் தலத்தின் மூலம் அறைகளை முன் பதிவு செய்து கொள்ள முடியும். அடியோங்கள் சென்ற போது ஒரு மணி நேர வாடகை ரூ 100/-, ஒரு நாள் வாடகை ரூ.500/- ஆக இருந்தது. அடியோங்களை யாத்திரைக்கு அழைத்து சென்ற திருமலை சுவாமிகள் எப்போதும் முதலில் திருவித்துவக்கோடு தலம்தான் செல்வாராம். அங்கு பாரதப்புழையில் குளித்து விட்டு பெருமாள் தரிசனம் செய்துவிட்டு பின்னர் இரண்டாவதாக இங்கு வருவார்களாம். ஆனால் அத்தலத்தில் தங்கும் வசதி எதுவும் இல்லை என்பதால் எங்களை இத்தடவை திருநாவாய் முதலில் அழைத்து வந்தாராம். அதுவும் நன்மையானதாகவே அமைந்தது, மூன்று அறைகள் ஒரு மணி நேர வாடகைக்கு எடுத்தோம், அனைவரும் காலைக் கடன்களை முடிக்கவும், மூட்டை முடிச்சுகளை வைத்து விட்டு பாரதப்புழையில் நீராடிவிட்டுப் பெருமாளைச் சேவிக்கவும் ஏதுவாக இருந்தது. அனுதினமும் அன்னதானம் நடக்கும் இத்தலத்தில் பெருமாளின் பிரசாதம் சுவீகரிக்கும் பாக்கியமும் கிட்டியது. திவ்யக்கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவர்கள் முதலில் அரங்கனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்று இருந்தார், பின்னர் திருமலையப்பன் அருளால் அனைத்து திவ்யதேசங்களிலும் திருமால்தான் உறைகின்றார் என்பதை உணர்ந்து நூற்றெட்டு திருப்பதி அந்தாதி பாடினார். ஒவ்வொரு திவ்யதேசத்தின் அவரது பாடலையும் சேவிப்போம் அன்பர்களே. பறந்து திரிதரினும் பாவியேன் உள்ளம் மறந்தும் பிறிது அறியமாட்டா; சிறந்த திருநாவாய் வாழ்கின்ற தேவனைஅல் லால், என் ஒருநாவாய் வாழ்த்தாது உகந்து. ( நூ.தி 65 ) பொருள்: தீவினையுடைய எனது மனமானது ஒரு நிலையில் நில்லாது விரைந்து அலையும் தன்மையுடையதாயினும், மறந்தும் திருமாலையன்றி மற்றொரு தெய்வத்தை மதியாது; எனது ஒருபடிப்பட்ட நாவானது மேம்பட்ட திருநாவாய் என்னும் திருப்பதியில் நித்திய வாசம் செய்கின்ற திருமாலை அல்லாது மற்றொரு தெய்வத்தை விரும்பித் துதியாது. பிறவி என்னும் பெருங்கடலை கடத்துவிக்கும் நாவாயாக விளங்கும் நாவா முகுந்தனின் “ஸ்ரீநவயோகி க்ஷேத்ரே ரக்தபங்கஜ புஷ்கரணி தடே வேத விமானச்சாயாயாம் பூர்வாபிமுகாய ஸ்ரீமதே பத்மாவதி சமேத ஸ்ரீநாராயண (நாவா முகுந்த) பரப்பரமஹ்மனே நம:” என்ற தியான ஸ்லோகத்தை சேவித்துக்கொண்டே, மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணன் உறையும் தற்போது மிற்றக்கோடு என்று அழைக்கப்படும் திருவித்துவக்கோடு திவ்யதேசத்தை சேவிக்கக் கிளம்பினோம் தொடருங்கள் அன்பர்களே. அத்தியாயம் – 4 திருவித்துவக்கோடு – உய்யவந்த பெருமாள் [] அடுத்து அடியோங்கள் சேவித்த திவ்யதேசம் திருவித்துவக்கோடு ஆகும். பள்ளியில் தமிழ் படித்த அனைவரும் இச்செய்யுளை நிச்சயம் படித்திருப்பர். “வாளால் அறுத்து சுடினும்” என்ற அச்செய்யுள், அடியேன் மனதில் அப்படியே பசுமரத்தாணி போலப் பதிந்துள்ளது. அப்பிறவிப்பிணி அறுக்கும் வைத்தியரைச் சேவிக்கச் செல்கின்றோம் என்று மனதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. வாருங்கள் முதலில் குலசேகராழ்வாரின் அப்பாசுரத்தை சேவிப்போம். வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே. (பெரு. தி 5-4) **பொருள்: “வித்துவக்கோட்டம்மா! வைத்தியர் கத்தியைக் கொண்டு அறுத்தாலும், ஊசியைக் காய்ச்சிச் சூடு போடுதலுமாகிய அறுவை சிகிச்சைகளைச் செய்தாலும், அம்மருத்துவனிடத்து நீங்காத அன்புடைய நோயாளியைப் போல உன் மாயையினால் நீ, நீங்காத துன்பத்தை எனக்கு விளைவித்தாலும், உனது அடியவனான நான் அவ்வடிமைத் திறம் முற்றும் வந்தெய்வதற்காக உன்னுடைய கருணையையே நோக்கியிரா நின்றேன்" என்கிறார் சேரநாட்டு அரசராக இருந்து ஆழ்வாராகிய குலசேகரப்பெருமாள். அனன்ய கதித்வம் எனப்படும், "உன்** சரணல்லால் எனக்கு வேறு சரணில்லை” என்பதை இவரது பாசுரங்கள் உணர்த்துகின்றன. இவ்வாறு எனக்கு வேறு புகலில்லை நீயே உன் கருணையினால் மோட்சம் அளிக்க வேண்டும் என்று நாம் சரணடைய, மோட்சம் என்ற ஸ்ரீவைகுண்டத்தையும் இப்பூவுலகிலேயே தன்னையும் கொடுத்து தனக்கு தொண்டு புரிய வைப்பான் எம்பெருமான். இந்நான்காவது பாசுரத்தில் பரமாத்வான பெருமாளுக்கும், ஜீவாத்மாவான நமக்கும் உள்ள உறவு ஒரு வைத்தியனுக்கும் நோயாளிக்கும் உள்ள உறவு என்று பாடியது போல ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வொரு உறவை பாடியுள்ளார் குலசேகராழ்வார், அவையென்னவென்று சுருக்கமாக பார்க்கலாமா அன்பர்களே. 1. ஒரு தாய்க்கும் அவளது சேய்க்கும் உள்ள உறவு. 2. ஒரு கணவனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள உறவு. 3. ஒரு அரசனுக்கும் அவனது பிரஜைகளுக்கும் உள்ள உறவு. 4. ஒரு மருத்துவருக்கும் நோயாளிக்கும் உள்ள உறவு. 5. கதிரவனுக்கும் தாமரைக்கும் உள்ள உறவு. 6. நடுக்கடலில் பாய்மரக் கப்பலுக்கும் தனிப் பறவைக்கும் உள்ள உறவு. 7. சமுத்திரத்திற்கும் நதிக்கும் உள்ள உறவு. 8. மழை வழங்கும் கருமேகங்களுக்கும் பயிருக்கும் உள்ள உறவு. 9. செல்வந்தனுக்கும் அவனது செல்வத்திற்கும் உள்ள உறவு 10. பலசுருதியாக இவ்வுறவுகள் போல பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் இடையே உள்ள உறவு பிரிக்க முடியாதது என்று பாடுகின்றார் குலசேகராழ்வார். திருநாவாயிலிருந்து தற்போது திருமிற்றக்கோடு என்று அழைக்கப்படும் திருவித்துவக்கோடு தலம் சுமார் 40 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவிஞ்சிக்கோடு என்னும் இன்னொரு பெயரும் இத்தலத்திற்கு உண்டு. திருவித்துவக்கோடு என்றால் அழகிய இடம் என்று பொருள். அடியோங்கள் குட்டிபுரம், மானூர், எடப்பல் வழியாக திருவித்துவக்கோட்டை அடைந்தோம். வழி விசாரிக்கும் போது திருவித்துவக்கோடு என்ற போது யாருக்கும் தெரியவில்லை. திருமிற்றக்கோடு என்று திருத்தி பின் வழி கூறினர். நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 5 கி.மீ உள்ளே தள்ளி உள்ளது இத்தலம். இப்பாதை ஒற்றைப் பாதை ஆனால் இயற்கை எழில் கொஞ்சும் பாதை. கேரளாவிற்கே உரிய நெடிதுயர்ந்த பச்சை மரங்களும், சிவப்புக்கற்களால் கட்டப்பட்ட வீடுகளும், சாய்ந்த ஓடுகள் வேய்ந்த கூரைகளும் தண்ணீர் நிறைந்த குளங்களும் செம்மண் சாலையும் கண்ணுக்கு விருந்து. கோடு என்றால் அழகிய இடம் என்று பொருள். மலை, மலைப் பகுதி, மேட்டு நிலம் என்னும் பொருளில்  கோடு  என்ற சொல் பல ஊர்ப்பெயர்களோடு இணைந்து வழங்கப்படுவதைக் கன்னியாகுமரி மாவட்டத்தில் காணலாம். சகல புவனங்களுக்கும் வித்தாகிய பெருமான் குடி கொண்ட அழகிய இடம் என்று பொருள் கொள்ளலாம். தொடர் வண்டியில் வரும் போது இத்தலமும் சென்னை - ஷொரனூர் கள்ளிக்கோட்டை மார்க்கத்தில் அமைந்துள்ளது. குருவாயூர் அல்லது பட்டாம்பி தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து சிறு பேருந்து அல்லது ஆட்டோ மூலம் பாரதப்புழை ஆற்றைக் கடந்தும் இத்தலத்தை அடையலாம். பேருந்தின் மூலமாக வரும் போது பாலக்காடு குருவாயூர் முதலிய ஊர்களிலிருந்து முதலில் பட்டாம்பி வந்து பின்னர் அங்கிருந்து இத்தலத்தையும் திருநாவாய் தலத்தையும் ஆட்டோ அல்லது பேருந்து மூலம் அடையலாம். ஷொரனூரிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. திருவித்துவக்கோட்டில் தங்கும் வசதிகள் எதுவும் கிடையாது. ஆதி காலத்தில் நான்கு மூர்த்தித் தலமாக இருந்த இவ்வாலயம் பின்னர் ஐந்து மூர்த்தித் தலமானது. பஞ்ச பாண்டவர்களும் விஷ்ணு மூர்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். பரசுராமர் ஸ்தாபித்த 108 சிவாலயங்களில் இத்தலமும் ஒன்று என்னும் சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு. “அஞ்சுமூர்த்தி கோவில்” என்றழைக்கப்படும் இத்தலத்தின் சிறப்புகளைப் பற்றி காணலாம் வாருங்கள் அன்பர்களே. [] சிவபெருமானும் மஹாவிஷ்ணுவும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள தலம். சிவன் சன்னதியும் அர்ச்சுனன் வழிபட்ட பெருமாளும் ஒருவர் பின் ஒருவராக சேவை சாதிக்கின்றனர். சிவன் காசி விஸ்வநாதராக எழுந்தருளி அருள் பாலிப்பதாலும், தக்ஷிண கங்கை எனப்படும் பத்து நதிகள் இணையும் பாரதப்புழை ஆற்றின் கரையில் அமைந்துள்ளதாலும். இங்கும் காசி போல நீத்தார் கடன் செலுத்த உகந்த தலமாக விளங்குகின்றது. தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை விரைகுழுவும் மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட்டம்மானே! அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடுனும் மற்றவள்தன் அருள்நினைந்தே அழுங்குழவி யதுவேபோன் றிருந்தேனே. (பெரு.தி. 5 – 1) பொருள்: நறுமணங்கமழும் மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருவித்துவக்கோட்டில் எழுந்தருளியுள்ள தலைவனே! நீயே எனக்குத் தந்த இத்துன்பத்தை நீயே களைந்திடாவிட்டாலும் உனது திருவடிகளே அன்றி எனக்கு வேறு புகலில்லை; பெற்ற தாயானவள் பெருங்கோபம் கொண்டதனால் தனது குழந்தையை வெறுத்துத் தள்ளினாலும் பின்பும் அத்தாயினுடைய கருணையையே வேண்டிக் கதறி அழுகின்ற இளங்குழந்தையை ஒத்து நின்றேன் என்று பெருமாளிடம் சரணமடைந்த குலசேகரப்பெருமாள் மங்கலாசானம் செய்த திருவித்துவக்கோட்டில் மூலவர் : உய்ய வந்த பெருமாள், அபயப்ரதன், நின்ற கோலம், கிழக்கே திருமுக மண்டலம். தாயார் : வித்துவக்கோட்டுவல்லி, பத்மாசனி நாச்சியார். விமானம்: தத்வ காஞ்சன விமானம். தீர்த்தம் : சக்ர தீர்த்தம். பிரத்யக்ஷம் :அம்பரீசன் மங்கலாசாசனம் : குலசேகரப்பெருமாள். பெருமாள் அபயப்பிரதராகவும் சிவபெருமான் ஆபத்சகாயராகவும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். தலவரலாறு: பல புராணங்களில் இத்தலத்தின் வரலாறு இவ்வாறு பேசப்படுகின்றது. அம்பரீசன் என்ற அரசன் சிறந்த விஷ்ணு பக்தர். தவறாமல் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர். தன் பிரஜைகளையும் அவ்விரதம் அனுஷ்டிக்குமாறு செய்தவர். ஒரு சமயம் இவர் ஏகாதசி விரதம் இருந்த போது இவர் விரதத்தை முடிக்கும் பாரணை சமயத்தில் கோபமுனி துர்வாசர் வந்து தான் தனது காலைக்கடனை முடித்து விட்டு வரும் வரை காத்திருக்குமாறு கூறிவிட்டு சென்றார். அம்பரீசன் தனது விரதத்தை முடிக்க வேண்டி துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதத்தை பூர்த்தி செய்தார். திரும்பி வந்த துர்வாசர் மன்னன் மேல் கோபம் கொண்டு சபிக்க முயல, மன்னன் மஹாவிஷ்ணுவை தியானம் செய்ய பரம கருணா மூர்த்தி பெருமாள் தனது பக்தனைக் காக்க சக்கரத்தாழ்வாரை ஏவினார். சுதர்சனமும் துர்வாசரை துரத்தத் தொடங்கியது. துர்வாசர் எங்கு சென்றாலும் சுதர்சனமும் பின் தொடர்ந்தது, வேறு வழியில்லாமல் முனிவர் ஸ்ரீமந்நாராயணனையே சரணடைய அவரும் அம்பரீசனையே சரண் அடையுமாறு அறிவுறுத்தினார். முனிவரும் அம்பரீசனை சரண் அடைய அவன் வேண்டிக்கொண்டபடி சுதர்சனாழ்வார் திரும்பச்சென்றார். ஒரு தூய பாகவதனின் ஏற்றத்தையும், ஏகாதசி விரதத்தின் பெருமையையும் விளக்கும் ஐதீகம் இது. அம்பரீசன் புத்திரப்பேறு வேண்டி இத்தலத்தில் தவம் செய்தார். அவரை பரிசோதிக்க பெருமாள் இந்திரன் போல வெள்ளை யானையாம் ஐராவதத்தில் வந்து என்ன வரம் வேண்டும் என்று வினவ, அம்பரீசன் நான் ஸ்ரீமந்நாராயணனை குறித்து தவம் செய்கின்றேன். அவர் அநுகிரகத்தால் அவர் தரும் வரத்தைப் பெற்றுக் கொள்வேன். வேறு யார் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ள மாட்டேன். என் மனம் பகவான் திருவடிகளைத் தவிர வேறு எதையும் நினையாது. என் கைகள் அவனையே தொழும், வாக்கு அவன் சரிதத்தையே சொல்லும், காது அவன் கதைகளை மட்டுமே கேட்கும், நாக்கு அவன் அணிந்த துழாயை மட்டுமே அருந்தும். கைகள் அவன் ஆலயத்தையே சீர்படுத்தும், இவ்வுடலால் அவனடியார்களையே வழிபடுவேன். இவ்வயவங்கள் மஹாவிஷ்ணுவிற்கு இவ்வாறு அர்ப்பணம் செய்த நான் பிறரைக் குறித்து தவம் செய்ய மாட்டேன். தாங்கள் சென்று வரலாம் என்று அம்பரீசன் உறுதியாக கூற பெருமாளும் இவருக்கு சங்கு சக்கர தாரியாய் திவ்யமாக சேவை சாதித்தார். அம்பரீசனது வேண்டுகோளுக்கிணங்கி வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்னும் நான்கு வியூக கோலங்களில் இங்கு கோவில் கொண்டார். அம்பரீசன் காட்டியதும் “அனன்ய கதித்வம்” எனப்படும் “உன் சரணல்லால் வேறு சரணில்லை” என்னும் தன்மையாகும். அம்பரீசனின் தவத்திற்கு மகிழ்ந்த பெருமாளின் அருளினால் முதலில் அவருக்கு குமாரத்தி பிறந்தாள், ஸ்ரீமதி எனும் அவளை பெருமாளுக்கே மணையாளாக அளித்தார். பின்னர் அவருக்கு மூன்று மகன்கள் பிறந்தனர் அவர்கள் வளர்ந்தபின் அவர்களிடம் இராச்சியத்தை ஒப்படைத்துவிட்டு அம்பரீசன் மஹாவிஷ்ணுவின் திருவடி அடைந்தார். பின்னர் துவாபர யுகத்தில் பஞ்சபாண்டவர்களின் வனவாசத்தின் போது எம்பெருமான் அவர்கள் கனவில் தோன்றி நீளா நதிக்கரையோரம், அழகும் தெய்வீகமும் நிறைந்த இவ்விடத்தில் தவம் செய்யுமாறு பணித்தார். அவர்களும் தாங்கள் வழிபாடு செய்ய விஷ்ணுவின் சிலைகளை நிறுவினர். முதலில் அர்ஜூனன் மஹாவிஷ்ணுவின் மூர்த்தியை பிரதிஷ்டை செய்தான். அதற்கு வடக்கே தர்மர் ஒரு மூர்த்தியையும் தென் புறத்தில் பீமன் ஒரு மூர்த்தியையும், அதற்கு பின்புறம் (தெற்கே) நகுலன் ஒரு மூர்த்தியை நிறுவி வழிபட, எல்லா மூர்த்திகளும் ஒன்றே என்று சகாதேவன் அதே மூர்த்தியை வழிபாடு செய்தான். வனவாசம் முடியும் வரை அவர்கள் இங்கிருந்து இப்பெருமாள்களை ஆராதித்ததாக ஐதீகம். பின்னர் பல நாள் கழித்து காசி விஸ்வநாதரும் இத்தலம் வந்து சேர்ந்தார். எனவே தற்போது இத்தலம் நான்கு விஷ்ணு மூர்த்திகள், ஒரு சிவ மூர்த்தியுடன் “அஞ்சு மூர்த்தித் தலம்” என்றும் அழைக்கப்படுகின்றது. நான்கு பெருமாள் மூர்த்தங்களும் நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிய திருமுகத்தோடு எழிலாக சேவை சாதிக்கின்றனர். சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரையோடு பெருமாள்களின் அழகே அழகு!  இனி காசி விஸ்வநாதர் இத்தலத்திற்கு வந்து சேர்ந்த வரலாறு. ஒரு சமயம் தென்னாட்டைச் சார்ந்த ஒரு முனிவர் இங்கிருந்து காசி சென்றார். அவர் அங்கேயே தங்கி விட்டார். அவரது தாயாரின் அந்திமக் காலத்தின் போது அவர் திரும்பி வந்தார். வரும் வழியில் அவர் சிவபெருமானையே நினைத்துக் கொண்டு இனியும் கைங்கரியத்தைத் தொடர முடியாமல் போனதே என்ற ஏக்கத்துடன் வந்தார். அவருக்கு தெரியாமல் அவரது தாழங்குடையில் காசி விஸ்வநாதரும் மறைந்து வந்தார். வழியில் நீளா நதியில் நீராடச் சென்ற போது குடையை பலி பீடத்தில் சாய்த்து வைத்து விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அப்பலிபீடம் நான்காக வெடித்து அவ்வெடிப்பிலிருந்து சுயம்புவாக ஒரு சிவலிங்கம் தோன்றியிருப்பதைக் கண்டார். பின்னர் அவ்விடத்தில் சிவனுக்கு ஒரு சன்னதி அமைத்தார். சிவபெருமான் இங்கு நமக்கு வரும் ஆபத்துக்களை எல்லாம் போக்கும் ஆபத்சகாயராக எழுந்தருளியுள்ளார். எனவே இப்போதும் சிவன் சன்னதிக்குள் நுழைந்து பின்னரே பெருமாளை நாம் சேவிக்க முடியும். பொதுவாக கேரளத்தில் லிங்க மூர்த்திக்கு சந்தனக் காப்பின் போது மூன்று கண்கள், மூக்கு மற்றும் ஐந்து இதழ் மலர், வில்வம், மேலிருந்து கீழாக பிறைகள் வைத்து அருமையாக அலங்காரம் செய்கின்றனர் அதை இக்கோவிலிலும் தரிசனம் செய்தோம். அது போலவே இவர்கள் சிவன் சன்னதியை முழுவதுமாக வலம் வருவதில்லை, கோமுகி்யை தாண்டுவதில்லை, அங்கிருந்தே இடமாக திரும்பி வந்து விடுகின்றனர். வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட்டம்மானே எங்குபோ யுய்கேனுன் இணையடியே யலல்லால் எங்கும் போய்க்கரை காணா தெறிகடல் வாய்மீண்டேயும் வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே (பெரு.தி. 5-5) பொருள்: நடுக்கடலில் அகப்பட்டுக்கொண்ட பறவைக்கு அப்போது அங்கு வரும் கப்பலின் கூம்பை விட்டால் அதற்கு வேறு கதியில்லையோ, அது போல எம்பெருமானே உனது திருவடியை புகலிடமாகக் கொண்ட நான் எங்கு போய் உய்வேன். உனது திருவடியே எனக்கு புகலிடம். கப்பலின் கூம்பை நாடிச்செல்லும் நடுக்கடல் பறவை போல இச்சம்சார சாகரத்தில் சிக்கி ஜீவாத்மாவாகிய நான் நின் திருவடியே சரணம் என்று புகாமல் எங்கு செல்வேன், வித்துவக்கோட்டம்மானே! நீயே எனக்கு புகலிடமென்று சரண் புகுகிறார் அரச பதவியை துறந்த குலசேகராழ்வார். வாருங்கள் தாயாகவும், கணவனாகவும், பிறவிப்பிணி தீர்க்கும் மருத்துவனாகவும் விளங்குகின்ற வித்துவக்கோட்டம்மானை சேவிக்கலாம். கேரள கிராமத்தின் இயற்கை அழகை இரசித்துக்கொண்டே சுமார் 4 கி.மீ தூரம் நெடுஞ்சாலையிலிருந்து பயணம் செய்த பின் திருக்கோவில் வளாகம் கண்ணில் பட்டது. கவிழ்த்த தொப்பியை போல கூம்பு வடிவ விமானங்களும், கேரளத்திற்கே உரிய பிரமிட் வடிவ விமானங்களுடன் கூடிய பல சன்னதிகளுடன் திருக்கோவில் வளாகம் அமைந்துள்ளது. கோவிலை நெருங்கியவுடன் பாண்டிய மன்னன் கட்டிய நீண்ட மதில் சுவற்றைக் காணலாம். திருநாவாய் போலவே இவ்வாலயத்தின் முன்புறமும் பெரிய அரச மரம் உள்ளது. வாயிலின் அருகினில் வண்டியை நிறுத்தி பெருமாளை சேவிக்க விரைந்தோம். சிறு கிராமக்கோவில் என்பதால் சீக்கீரமே நடையை அடைத்து விடுகின்றனர், எனவே சீக்கிரம் செல்வது நல்லது. வாயிலின் எதிரே விநாயகர் சன்னதி, தக்ஷிணாமூர்த்தியும் லிங்க ரூபத்தில் உடன் எழுந்தருளியுள்ளார். சதுர வடிவ ஸ்ரீகோவில் முன் மண்டபமும் உள்ளது. முழு முதல் கடவுளையும், ஆதி குருவையும் முதலில் சேவித்தோம். பொதுவாகவே கேரளாவில் சைவ வைணவ பாகுபாடுகள் இல்லை. அனைத்து திவ்யதேசங்களிலும் கணபதி, சிவன், ஐயப்பன், பகவதி(துர்க்கை), நாகர் சன்னதிகள் உள்ளன. அடுத்து நாங்கள் சேவித்தது நகுல சகாதேவர்கள் ஸ்தாபித்த விஷ்ணு மூர்த்தி, அதற்கடுத்து தர்மர் பிரதிஷ்டை செய்த மூர்த்தியை சேவித்தோம். அதற்கடுத்து மையத்தில் சிவன் கோவிலும் அர்ச்சுனன் பிரதிஷ்டை செய்த மூல மூர்த்தியையும் சேவித்தோம், கிழக்கு நோக்கிய சன்னதி முன் வாயிலை அடைத்து வைத்துள்ளனர். இடது பக்க வழியாக உள்ளே செல்ல வேண்டும். நுழைந்தவுடன் பகவதி சன்னதி. போத்தி பகவதியை பூஜித்த புனித சங்கு தீர்த்தத்தை தெளிக்கும் சமயம் உள்ளே நுழையும் பாக்கியம் கிட்டியது. முதலில் காசி விஸ்வநாதரை லிங்க ரூபத்தில் சேவித்தோம். கர்ப்பகிரகத்தின் சுவற்றில் அற்புதமான கேரளபாணி மூலிகை வர்ண ஓவியங்கள் வரைந்துள்ளனர், சிவன் சன்னதியில் தசாவதார காட்சிகள் சைவ வைணவ ஒற்றுமையை குறிக்கின்றன. கூரையைத் தாங்கும் மர உத்தரங்களில் அழகிய மர சிற்பங்கள் செதுக்கி உள்ளனர். பின்னர் சிவன் சன்னதிக்கு பின்னே அமைந்துள்ள அர்ச்சுனன் பிரதிஷ்டை செய்த உய்யவந்த பெருமாளைச் சேவித்தோம். [] விநாயகர் சன்னதி- நகுல சகாதேவர்கள் ஸ்தாபித்த மூர்த்தி பெருமாளின் ஸ்ரீகோவில் சுவற்றிலும் அற்புதமான ஓவியங்கள் வரைந்துள்ளனர் குறிப்பாக அர்ஜுனன் தவம் செய்யும் காட்சி, கிருஷ்ணனின் பால லீலைகளான புள்ளின் வாய் கீண்டல், மாவாய் பிளத்தல், வல்லானை கொன்றல், காளிய நர்த்தனம், பேய்ச்சி முலை உண்ணல், குசேலரின் அவல் உண்ணல், குவாலயாபீடத்தை (வல்லானை) கொல்லல், குருஷேத்திரப் போரில் சதுர் புஜராக சங்கு சக்கரங்களுடன் அர்ச்சுனனுக்கு கீதோபதேசம், உண்ணி கிருஷ்ணன் பசுவிடம் பால் அருந்துதல், தசாவதார கோலங்கள் ஆகிய ஓவியங்கள் மிகவும் அருமை. கூரையைத் தாங்கும் சட்டங்களில் அருமையான மர வேலைப்பாடுகள் கண்ணுக்கும் மனதிற்கும் விருந்து. வித்துவக்கோட்டம்மா, “பூபாரம் வேண்டாம் பாமாலை போதும் என்று வந்த பூபாலன் குலசேகராழ்வார்” மங்கலாசாசனம் செய்த மூலவர் சதுர்புஜங்களுடன் நின்ற கோலத்தில் சேவை சாதித்து அருளுகின்றார். பெருமாளின் முக அழகை தரிசிப்பதே ஒரு ஆனந்தம். ஒரே பிரகாரம், விமானம் கேரளா பாணி பிரமிட் வடிவத்தில் உள்ளது. இக்கோவிலுக்கு இடப்புறத்தில் சிறிது பின்புறமாக பாரதப்புழையின் கரையில் பீமன் பிரதிஷ்டை செய்த பெருமாள் சன்னதி. நான்கு விஷ்ணு மூர்த்திகளும் நின்ற கோலத்திலேயே சேவை சாதிக்கின்றனர். அகண்ட பாரதப்புழை ஆறு அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது. வட்ட வடிவ ஸ்ரீகோவில் தொப்பி வடிவ விமானம், சதுர வடிவ ஸ்ரீகோவில் பிரமிட் வடிவ விமானம், பீமன் ஸ்தாபித்த பெருமாள் சன்னதி சிறிது என ஒவ்வொரு சன்னதியின் கர்ப்பகிரகமும் விமானமும் ஒவ்வொரு விதமாக உள்ளது. விஸ்வநாதர் மற்றும் அர்ச்சுனன் ஸ்தாபித்த மூல மூர்த்தி இருவருக்கும் பொதுவான சுற்றம்பலம் தவிர மற்ற சன்னதிகளுக்கு சுற்றம்பலம் இல்லை. பாரதப்புழை ஆற்றில் இருந்து குளிர்ந்த காற்று வீசுகின்றது. எந்த வித அரவமும் இல்லாமல் ஆழ்வார் மலர்ப்பொழில் என்று பாடியபடி பல மரங்கள் செடிகள் நிறைந்த ஆலய வளாகம் மிகவும் அமைதியாக உள்ளது. அமர்ந்து தியானம் செய்ய அருமையான தலம். தாயாருக்கு தனி சன்னதி இல்லை பெருமாளின் மார்பில் உறைவதாக ஐதீகம். ’காலை 5 மணிக்குக் கோயில் திறந்து 10:30 மணிக்கு சார்த்தப்படுகின்றது. மறுபடியும், பிற்பகல் 5 மணிக்குத் திறந்து இரவு 7:15 மணிக்கு நடை அடைக்கின்றனர். தினம் காலை 3 முறையும் மாலையில் 2 முறையும் பெருமாளுக்கு பூஜை செய்யப்படுகிறது. தினமும் காலையில் சிற்றுண்டியாக உப்புமா சாம்பாரும், மாதம் இரண்டு நாட்கள் அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.   இத்தலத்துப் பெருமாளுக்கு தீபம் ஏற்றி, துளசி அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு! கட்டணம் செலுத்தினால், ரிக் வேத ஸ்லோகங்களைச் சொல்லி பெருமாளை நமக்காகத் துதிக்கின்றார் போத்தி. இதில் பங்கேற்றுப் பிரார்த்தனை செய்தால், திருமணத்தடை நீங்கும்; குழந்தை பாக்கியம் கிட்டும்; வேலை கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சித்திரை மாதம் வருடாந்திரத் திருவிழா, மகா சிவராத்திரி காலத்தில் நான்கு நாள் உற்சவம் மற்றும் வைகாசி மிருகசீரிடம், பெருமாள் பிரதிஷ்டை தினங்கள் இங்கே விசேஷமானவை. அம்பரீஷனுக்குக் காட்சி தந்து, அவனைக் கொல்ல வந்த அரக்கனை வதம் செய்தவர் இத்தலத்து பெருமாள் என்பதால் இவரைத் தேடி வந்து வழிபட, துயரங்கள் தீரும்; நாடி வந்தோரை அபயம் தந்து காப்பாற்றுவார் இந்த அபயப்பிரதப்பெருமாள் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை!’ ஒரு தாயார் தன் குழந்தையை தன் வயிற்றில் சுமக்கும் போது அது அவளுக்கு எண்ணற்ற துன்பத்தைக் கொடுத்தாலும், பிள்ளை பிறந்த பின் தான் அடையப்போகும் இன்பத்தை எண்ணி அவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்கிறாள். அது போலவே பக்தர்களாகிய நமக்கு இறைவன் எவ்வளவு துன்பம் தந்தாலும் அவன் திருவடிப் பேறு தரும் இன்பத்திற்காக நாம் அதை பொறுத்துக் கொண்டு அவனை சரணடைந்தால் மீளா இன்ப வீடாம் வைகுந்தம் அளிப்பது திண்ணம். **வாய்த்த கருமம் இனி மற்று இல்லை; நெஞ்சமே! தோய்த்த தயிர். வெண்ணெய், தொட்டு உண்ட – கூத்தன் வித்துவக்கோடு சேர்ந்தால், பிறவிக் கருவின் துவக்கு ஓடும் காண். (நூ தி. 69) பொருள்: எனது மனமே! தோய்த்த தயிரையும், வெண்ணையையும் களவு செய்து புசித்த திருவிளையாடலை உடைய திருமாலினது திருவிற்றுவக்கோடு என்னும் திருப்பதியை சென்று சேர்ந்த அளவில், பிறப்பிற்கு காரணமான கருவின் சம்பந்தம் நீங்கும், எனவே நாம் செய்ய தொழில் வேறு ஒன்றும் இல்லை என்று திவ்யகவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இத்திருவித்துவக்கோடு திவ்யதேசத்தைப் பற்றிப் பாடியுள்ளார். ஸ்ரீமிற்றக்கோடு க்ஷேத்ரே சக்ர தீர்த்த புஷ்கரிணி தடே. தத்வ காஞ்சன விமானச்சாயாயாம் ஸ்திதாய பூர்வாமிமுகாய, ஸ்ரீமதே பத்மாசனி நாயிகா சமேத ஸ்ரீஅபயப்ரத பரப்ரஹ்மணே நம: என்ற தியான ஸ்லோகத்தை ஜபித்துக்கொண்டே அடுத்து, இவ்விரு ஆலயங்களுக்கும் அருகிலுள்ள கேரளத்தின் மகிமை பெற்ற ஸ்ரீகிருஷ்ண ஸ்தலமான குருவாயூருக்கு புறப்பட்டு சென்றோம். திவ்யதேசங்கள் அல்லாத, அடியோங்கள் தரிசித்த மற்ற ஆலயங்களைப் பற்றிய விவரங்கள் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளன. வாருங்கள் இப்பாகத்தில் அடுத்த திவ்யதேசமான துயர் களையும் திருமூழிக்களத்து லக்ஷ்மணப்பெருமாளை அடுத்து சேவிக்கலாம். அத்தியாயம் – 5 திருமூழிக்களம் – லக்ஷ்மணப்பெருமாள் [] அந்தி சாயும் நேரத்தில் மலைநாட்டு திவ்யதேச தரிசன வரிசையில் அடியோங்கள் தரிசித்த அடுத்த தலம் திருமூழிக்களம் ஆகும். திருவித்துவக்கோட்டிற்கு பிறகு குருவாயூரில் ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் திருவஞ்சிக்களத்தில் குலசேகராழ்வாரை சேவித்த பின் அடுத்த திவ்யதேசமான திருமூழிக்களத்திற்கு பயணம் செய்தோம். இவ்வாலயம் நெடும்பாதையிலிருந்து சிறிது உள்ளே உள்ளதால் வழி விசாரித்துக் கொண்டே செல்ல வேண்டி இருந்தது. எங்களுடன் வந்த ஸ்ரீகுமார் ஐயா அவர்கள் மலையாளம் பேசுவார் என்பதால் மிகவும் உதவியாக இருந்தது. சாலையில் இருந்து கோவிலுக்கு செல்லும் இடத்தில் எழிலான தோரண வாயில் அமைத்துள்ளனர். தோரணவாயிலில் சீதாராமர் இலக்குவனை சேவிக்கலாம். வழியெங்கும் கேரளத்தின் இயற்கை எழிலை மா, பலா, வாழை மரத்தோப்புகளையும், வானத்தை ஒட்டடை அடிக்கும் கொத்துக் கொத்தாக காய்கள் தொங்கும் கமுகு மரங்களையும், தென்னை மரங்களையும் இரப்பர் தோட்டங்களையும், தண்ணீர் நிறைந்த பல குளங்களையும் கண்டு களித்துக் கொண்டே பொழுது சாயுங்கால நேரத்தில் இத்திவ்யதேசத்தை அடைந்தோம். செவ்வந்திப்பொழுதில் பெற்ற அவ்வற்புதத் தரிசனத்தை பகிர்ந்து கொள்ள வம்மின் அன்பர்களே. இத்தலம் எர்ணாகுளத்திற்கு அருகில் உள்ளது. அலுவாயிலிருந்தும், காலடியிலிருந்தும் பேருந்தில் சென்றடையலாம். திருச்சூரிலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஷொரனூர் எர்ணாகுளம் தொடர்வண்டி மார்க்கத்தில் அங்கமாலியில் இறங்கி பின்னர் இத்தலத்தை அடையலாம். தக்கிலமே கேளீர்கள்! தடம் புனல்வாய் இரை தேரும் கொக்கு இனங்காள் குருகு இனங்காள் குளிர்மூழிக்களத்து உறையும் செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத்து இலைப் போலும் திருமேனி அடிகளுக்கே (தி.வா 9-7-3) என்று எம்பெருமானது வடிவழகில் ஈடுபட்ட பராங்குச நாயகியாய் நம்மாழ்வார் பெருமானது வடிவழகையே பற்றுக்கோடாகக் கொண்டு தலைவியாக திருமூழிக்களத்திற்கு பறவைகளை தூது விடும் பாவத்தில் 11 பாசுரங்களால் பல்லாண்டு பாடியுள்ளார். பொருள்: அகன்ற நீர்நிலைகளில் இரை தேடும் கொக்குக் கூட்டங்களே! உடன் உள்ள குருகுகளே! குளிர்ந்த திருமுழிக்களத்திலேயுள்ள எம்பெருமானிடம் சென்று அவன் அழகில் ஆட்பட்டு இழந்துள்ள நாங்கள் அவனுக்கு தகுதியற்றவர்களோ? என்பதை உறுதியாகக் கேளுங்கள். அவ்விறைவனின் திருக்கண், திருக்கரங்கள், திருவடிகள் ஆகியவை செந்தாமரை மலர்ப் போல் அழகுள்ளவை; அவருடைய திருவாய் சிவந்து கனிந்தது. அவர் திருமேனியோ, தாமரையின் இலைபோலப் பசுமை உடையது. இப்படிப்பட்ட அழகனைக் காண எங்களுக்குத் தகுதியில்லையா? என்று வினவ பறவைகளை தூது விடுகிறார் ஆழ்வார்.** எம்பெருமானுக்கு தூது விடப்படுகின்ற பறவைகள், “சேர்ப்பாரை பக்ஷிகளாக்கி ஜ்ஞான கர்மங்களை சிறகென்று குருஸப்ரஹ்மசாரி புத்ர சிஶ்யஸ்தாநே பேசும்” – என்று ஆச்சார்ய ஹ்ருதயத்தில் கூறியுள்ளபடி, பகவானிடம் கொண்டு சேர்க்கும் ஆசார்யர்கள் பறவைகளாகக் கொள்ளப்படுவார்கள்; அவற்றின் சிறகாக சொல்லப்படுபவை ஞானமும், அனுட்டானமும் ஆகும். அவற்றுள் தக்க மரத்தின் தாழ்சிணையேறித் தாய்வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் என்ற நம்மாழ்வாரின் பாசுரப்படி கொக்கானது எவ்வாறு தன் வாயால் தன் குஞ்சுக்கு இரையெடுத்து தருகின்றதே அது போல சிஷ்யர்களுக்கு பகவத் விஷயங்களை உபதேசம் செய்யும் ஸ்ரீகுலசேகரப்பெருமாள் போல்வார்கள் என்று கொள்ளப்படுகின்றது. திருமூழிக்களம் என்று ஆழ்வார்கள் பாடிய இத்தலம் ஒரு காலத்தில் திருமொழிக்களம் என்று அறியப்பட்டிருக்கின்றது. விசுவாமித்திர முனிவரின் மகன் ஹாரீத முனிவர் இங்கு மஹாவிஷ்ணுவை நோக்கித் தவம் செய்ய அவர் தவத்திற்கு மெச்சிப் பெருமாள் தோன்றி, என்ன வரம் வேண்டும்? என்று கேட்க இப்பூவுலகில் உள்ளவர்கள் உய்ய வழி கூற வேண்டும் என்று முனிவர் விண்ணப்பிக்க பெருமாளும் வர்ணாஸ்ரம தர்மம், யோக சாஸ்திரம், திருமந்திரம் ஆகிய ஸ்ரீஸூக்திகளை அதாவது திருமொழிகளை அருளினார், அவற்றை நூலாக எழுதுமாறும் பணித்தார். எனவே இத்தலம் திருமொழிக்களமானது பின்னர் மருவி தற்போது திருமூழிக்களமானது என்கின்றனர். எனவே பெருமாள் வடமொழியில் ஸ்ரீஸூக்திநாதன் என்றழைக்கப்படுகின்றார். சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம் நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும் புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு ( மு.தி 53 ) என்று பொய்கையாழ்வார் பாடியபடி ஸ்ரீவைகுண்டத்தில் நித்ய சூரியாக எம்பெருமானுக்கு கைங்கரியம் செய்யும் ஆதிசேடனே இராமாவதாரத்தின் போது லக்ஷ்மணனாக அவதாரம் எடுத்து சேவையைத் தொடர்ந்தார். குலசேகரரின் ஒரு பாசுரத்தில் “சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே” என்றொரு வரி வரும். ஆனால் சுற்றத்தார் அனைவருமா இராமருடன் காட்டிற்கு சென்றனர்? இல்லையே லக்ஷ்மணன் ஒருவன்தானே உடன் சென்றான். ஆழ்வார் அப்படி பாடியதற்கு காரணம் இலக்குவன் செய்த சேவையின் மேன்மை. உண்ணாமல் உறங்காமல் தனயனுக்கும், சீதா தேவிக்கும் வேண்டிய அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொண்டவன் அவன். விசுவாமித்திரர் இராமனை என்னுடன் அனுப்பு என்று கேட்டபோது உடன் சென்றவன், காட்டிற்கு தான் மட்டும் செல்வேன் என்ற போது தண்ணீரை விட்டு மீன் இருக்கமுடியுமா? என்று கேட்டு உடன் சென்றவன். சித்ரகூடத்தில் அவன் அமைத்த பர்ணசாலையைப் பார்த்து வியந்து இராமரே, தனி ஒருவனாக நீ என்னுடன் வரவில்லை தண்ணீர் பந்தலாக வந்திருக்கிறாய் என்று பாராட்டியுள்ளார். [] இரண்டடுக்கு (சௌந்தர்ய) விமானம் திருக்கோளூர் பெண் பிள்ளை இரகசியத்தில் வரும் "வழி அடிமை செய்தேனோ இலக்குவனைப் போலே! என்ற வாக்கியம் இலக்குவனது சேவையை பாராட்டிச் சொல்லும் விதமாக அமைந்த வாக்கியம் ஆகும். கொடிய கைகேயி வரம் வேண்ட, குலக்குமாரனும் காடுறைய வந்து சித்ரகூடத்தில் பிராட்டியுடனும், இளவல் லக்ஷ்மணனுடனும் தங்கியிருந்தான். அப்போது பரத நம்பி அண்ணனின் பாதம் பணிய வந்தான், பெரும் படை வருவதை கண்டு லக்ஷ்மணன், பரதன் அண்ணன் மேல் படை எடுத்து வந்திருக்கின்றானோ? என்று அவன் மேல் கோபம் கொண்டான். ஆனால் பரதனோ ஸ்ரீராமன் பாதம் பணிந்து பாதுகைகளை பெற்று சென்று நந்தி கிராமத்தில் தங்கி அண்ணனின் பிரதிநிதியாக ஆட்சி செய்தான். இதை திருக்கோளூர் பெண்பிள்ளை " வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே! என்று உரைக்கிறாள். அயோத்திக்குள் கூட பரதன் நுழையவில்லை எல்லையில் உள்ள நந்தி கிராமத்தில் இருந்து கொண்டு இராம பிரானின் பாதுகைகளை சிம்மாசனத்தில் அமர்த்தி தவக் கோலத்தில் ஆட்சி புரிந்தான் பரதன். உண்மையை உணர்ந்தான் இலக்குவன். ஆனாலும் வெளிப்படையாக பரதனிடம் மன்னிப்புக் கேட்காத குறை இலக்குவன் மனதில் இருந்தது, ஒரு சமயம் பரதனும் இலக்குவனும் இத்தலத்திற்கு வந்து வணங்கிய போது ஹாரீத முனிவர் அவனது அக்குறையை கூறினார். இலக்குவனும் அருகில் இருந்த பரதன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். ஆனால், பரதனோ, ’இதில் மன்னிப்புக் கேட்க எதுவுமே இல்லை, இலக்குவா, இராமனின் அத்யந்த தம்பி நீ, இராமனுக்கு எந்த குறையுமின்றி, கானகத்திலேயே அவரை கண்ணிமைக்காமல் காத்தவன் நீ. ஆகவே சித்ரகூடத்தில் என் மீது நீ கோபம் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. உண்மை தெரிந்த பிறகும், என் மீதான உன் சந்தேகம் நீங்காததற்கு உன்னுடைய சிறப்பான இராம பக்தியே காரணம். ஆகவே அதற்காக நீ குற்ற உணர்வு கொள்ளாதே என்று மிகுந்த பெருந்தன்மையுடன் கூறினான். ஆனாலும், தன் குற்றத்துக்குப் பிராயச்சித்தம் செய்ய விரும்பிய இலக்குவன், முனிவர் யோசனைப்படி, இத்தலத்தை, திருமொழிக்களத்தான் கோயிலைப் புதுப்பித்து, பெருமாளை வணங்கி, தன் மனக்குறை நீங்கப் பெற்றான். இப்படி இலக்குவன் புதுப்பித்தத் தலத்தில் உறையும் பெருமாளை எனவே ‘லக்ஷ்மணப் பெருமாள்’ என்று அழைக்கிறார்கள். இராமாயண சகோதரர்கள் நால்வருக்கும் கேரளத்தில் தனித்தனி கோயில் இருந்தாலும், பெருமாள் என்ற பெருமை லக்ஷ்மணனுக்கு மட்டுமே உண்டு. பொன்னானாய் பொழிலேழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான் என்னானாய் என்னானாய் என்னல் அல்லால் என்னறிவேனேழையேன் உலக மேத்தும் தென்னனாய் வடவானாய்குட பாலானாய் குணபால தாயினாய் இமையோர்க் கென்றும் முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தனாய்முதலா னாயே (தி.நெ 10) பொருள்: உலகம் முழுவதும் துதிக்கத்தக்க தென்திருமாலிருஞ்சோலை மலையில் நின்ற யானை போன்றவனே! வடதிருவேங்கடத்தில் நின்ற யானை போன்றவனே! மேற்றிசையில் திருவரங்கத்தில் திருக்கண் வளரும் யானை போன்றவனே! கீழ்த்திசையில் திருக்கண்ணபுரத்தில் மதயானை போன்றவனே! எக்காலத்தும் நித்யசூரிகள் கண்டு அனுபவிக்கும்படி முன் நிற்பவனே! அவதாரத்திற்கு பிற்பட்டவர்கள் வணங்கத்தக்க சோதியாய் திருமூழிக்களத்தில் வாழ்பவனே! உலக முதல்வனே! பொன் போன்றவனே! எழுலகங்களையும் காத்தருள்வதால் வந்த புகழுடையவனே! இகழ்வையே வடிவாக உடைய தொண்டனான அடியேன் என்னுடைய யானையே! என்று சொல்லுவதல்லாது வேறு என்னவென்று சொல்ல அறியேன். என்று திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்கலாசாசனம் செய்த திருநெடுந்தாண்டகப் பாசுரத்தில் இராமனை அவரது பின்னவர்களான பரதன், லக்ஷ்மணன் வணங்கிய செய்தியை நமக்கு கூறுகின்றார். இத்திவ்யதேசத்தில் மூலவர்: லக்ஷ்மணப்பெருமாள், திருமூழிக்களத்தான். தாயார்: மதுரவேணி நாச்சியார் விமானம்: சௌந்தர்ய விமானம். தீர்த்தம்: சங்க தீர்த்தம், சிற்றாறு தீர்த்தம். மங்கலாசாசனம்: நம்மாழ்வார், திருமங்கையாழ்வார். தாயார் ஊர்மிளை இத்தலத்தில் மதுரவேணி நாச்சியாராக சேவை சாதிக்கின்றாள். இவ்வாலயம் சாலக்குடி ஆற்றின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது. ஸ்ரீகோவில் வட்ட வடிவிலும் விமானம் பிரம்மாண்ட துவிதள அதாவது இரண்டடுக்கு கூம்பு வடிவில், தாமிரத் தகடு போர்த்தப் பட்டு எழிலாக அமைந்துள்ளது. இரண்டடுக்கு என்பதால் சுற்று சுவற்றுக்கு மேலாக எழிலாக விமான தொப்பிக்கூரையையும் கலசத்தையும் தரிசிக்கின்றோம். பெருமாள் சதுர்புஜ விஷ்ணுவாகவே நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இடது திருக்கரம் சங்கம் ஏந்தியிருக்க, வலது திருகரத்தில் உள்ள சக்கரம் எந்தக் கணமும் பாயத் தயாராக இருக்கும் பிரயோக சக்கரமாக விளங்குகிறது. தன் பக்தர்களுக்கு ஏதேனும் துயரென்றால் அதை உடனே தீர்த்து வைக்கும் சுறுசுறுப்பை அது உணர்த்துகிறது. வல கீழ் கரத்தில் கதை, கீழ் இடதுகரம் அரவணைக்கும் தோரணையில் திவ்யமாக நின்ற கோலத்தில் ஆறடி உயரத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீகோவிலின் மத்தியில் உயரமாக அருமையாக சேவை சாதிப்பதால் அருமையாக சேவிக்கின்றோம். நமஸ்கார மண்டப விதானத்தில் மரத்தால் அழகாக செதுக்கப்பட்ட அஷ்டதிக் பாலகர்கள் கண்ணுக்கு விருந்து. இரண்டாம் பிரகாரத்தின் உள் சுவர்களில் அருமையான இராமயண ஓவியங்கள் உள. அதில் இராம பட்டாபிஷேக ஓவியம் கண்ணை விட்டு அகல மறுக்கின்றது. முழு இராமாயணமும் இவ்வோவியத்தில் இடம் பெற்றுள்ளது. இன்றும் பழமை மாறாமல் இயற்கை மூலிகை வர்ணங்களையே பயன்படுத்துன்றனர். பெரிய தூண்கள் நிறைந்த தலம். திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் பனியேய்ப்பரங்குன்றின் பவளத்திரளே! முனியே! திருமூழிகளத்து விளக்கே! இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய கனியே! உன்னைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே! (பெ.தி 7-1-7) பொருள்: பனி படர்ந்த இமயமலையில் திருப்பிரிதியில் எழுந்தருளியுள்ள பவளங்கள் திரண்டாற்போல அழகியவனே! அடியாருடைய நன்மைகளைச் சிந்திப்பவனே! திருமூழிக்களமென்னும் திருப்பதியில் விளக்குப் போல விளங்குபவனே! இனிமையானவனே! தொண்டவரான அடியோங்கள் பருகுவதற்கு உரிய இனிய அமுதமானவனே! கனி போன்றவனே! உன்னைச் சேவித்து பிழைத்துக் கொண்டேன் என்றும், பெரிய திருமடலில் என்னை மனங்கவர்ந்த ஈசனை வானவர் தம் முன்னவனை மூழிக்களத்து விளக்கினை……. (பெ.தி.ம 129) பொருள்: நித்திய சூரிகளின் தலைவனாய் திருமூழிக்களத்தில் விளக்குப் போல் சுடர் வாய்ந்து நிற்பவன் என்றும் இப்பெருமாளை ஜோதி வடிவினனாக மங்கலாசாசனம் செய்துள்ளார். [] இராமர் பட்டாபிஷேகம் – கேரளபாணி ஓவியம் பெருமாள் இத்தலத்தில் அறியாமை என்னும் இருளை அகற்றி ஞானம் வழங்கும் பெருமாளாக சேவை சாதிக்கின்றார். தீபம் எவ்வாறு தன்னையும் சுற்றியுள்ளவற்றையும் பிரகாசிக்கின்றதோ அது போல பெருமாள் தன்னையும் தர்ம சாஸ்திரங்களையும் நாம் எல்லோரும் உய்ய இத்திவ்யதேசத்தில் காட்டிக் கொடுத்தார். கணபதி, ஸ்ரீராமர்-சீதை-இலக்குவன், பகவதி, சாஸ்தா, சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தி ரூபமாகவும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். ஸ்ரீகோவிலின் உள் புறத்திலேயே கணபதி சிவலிங்க ரூபத்தில் தக்ஷிணாமூர்த்தி சன்னதி அமைந்துள்ளது. கோசாலா கிருஷ்ணர் சன்னதியும் உள்ளது. கிழக்கு வழியாக நுழைந்து பெருமாளை வணங்கி பிறகு கணபதி, சிவனை வணங்கி மற்ற உபதேவதைகளை வணங்கி இரண்டாவது முறையாக பெருமாளை வணங்க வேண்டும் என்பது நியதி. பெருமாளுக்கு பால் பாயசம் வழிபாடு, கணபதிக்கு அப்பம், பகவதிக்கு மஞ்சள் பொடி, சாஸ்தாவிற்கு நீராஞ்சனம் வழிபாடு மிகவும் சிறப்பு. இப்பெருமாளை வழிபட இதயநோய் உள்ளவர்களுக்கு அந்நோய் நீங்கும், குழந்தை இல்லாத குறை தீரும். வேண்டுபவர்களின் துயர் களைபவர் திருமூழிக்களத்தான். திருவோணத்தன்று ஆராட்டுடன் மேஷ(சித்திரை) மாதம் 15 நாள் திருவிழா நடைபெறுகின்றது. இத்தலத்தில் சிறப்பாக ஸ்ரீஸூக்த அர்ச்சனை, பாக்ய ஸூக்த அர்ச்சனை மற்றும் மந்திர உபதேச அர்ச்சனை நடைபெறுகின்றது. இத்திருக்கோவிலில் இரண்டாம் சுற்றில் விளக்கு மாடம் எழிலாக அமைத்துள்ளனர். ஆயிரக்கணக்கான விளக்குகளை வெகு நேர்த்தியாக உள்ளன. மாலை நேரம் சென்றதால் அத்தீபங்கள் அனைத்தும், சுடர்விட்டு எழிலாக பிரகாசிக்க பெருமாளின் ஆரத்தியும் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. நான்கு வாயில்களிலும் கல் சர விளக்குகள் அமைத்துள்ளனர். இத்தலத்தின் ஒரு சிறப்பு சுற்றம்பலத்தின் கூரைகளை யாழிகள் தாங்கும் எழில் ஆகும், மரத்தால் ஆன இந்த யாழிகளுக்கு நேர்த்தியாக வெள்ளை வர்ணம் பூசியுள்ளனர். ஒரே நேர் கோட்டில் அனைத்து யாழிகளும் அமைந்துள்ள காட்சி கண்ணுக்கு அருமையான விருந்து. இத்தலம் கேரளாவில் அந்தணர்கள் வசிக்கும் 32 கிராமங்களில் ஒன்று. [] கூரையைத் தாங்கும் யாழிகளின் எழிலான தோற்றம் திப்புசுல்தானின் படையெடுப்பின் போது மூலவர் திருமேனி சேதப்பட்டது, இரு திருக்கரங்களும் சேதமடைந்தன காலிலும் விரிசல் உண்டாகியது. எனவே வெள்ளியில் ஒரு கவசம் செய்து அணிவித்த அன்றே, அது திருட்டுப் போய் விட்டதாம். பின்னர் தேவ பிரசன்னம் பார்த்த போது மூலவருக்கு அங்கி தேவையில்லை என்று வந்ததாம். எனவே இன்றும் அவ்வாறே உடைந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். சாலக்குடி ஆறு, கோயிலின் தீர்த்தமாக பெருமையுடன் ஓடுகிறது. ஒழிவின்றி திருமூழிக் களத்துறையும் ஒண்சுடரை ஒழிவில்லா அணிமழலைக் கிளிமொழியாள் அலற்றியசொல் வழுவில்லா வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த அழிவில்லா ஆயிரத்து இப்பத்தும் நோயறுக்குமே (தி.வா 9-7-11) பொருள்: ஒளிமயமான பெருமாள் திருமூழிக்களத்தே நீங்காமல் எழுந்தருளி இருக்கின்றான். அவனைப்பிரிந்த நிலையில் விரகதாபத்தால் துன்பப்பட்ட தலைவி பேசும் பேச்சாகக் குருகூர்ச் சடகோபர் பாசுரம் அருளியுள்ளார். இனிய மழலை ததும்பும் கிளியின் பேச்சுப் போல மொழியவல்ல நாயகியின் துன்பக்குரலாக உள்ள குற்றம் அற்ற இப்பத்து பாசுரங்களும் அவர் அருளிய அழிவில்லா ஆயிரத்துள் வருவன. இவற்றைக் கற்பார்க்கு இவை பிரிவுக்குக் காரணமான பிறப்பாகிய நோயினை அறுத்துப் பிரிவில்லாத தேசத்திலே புகும்படி செய்யும் என்று திருமூழிக்களத்தப்பனை ஆழ்வார்களின் பாசுரங்களை இனிமையாக பாடிக்கொண்டு சேவித்தால் தீராத பிறவி நோயும் தீரும் என்று உறுதியாக கூறுகிறார் நம்மாழ்வார். திருவாய்மொழியில் நம்மாழ்வார் நான்கு பாசுரங்களை தூது பாசுரங்களாகப் பாடியுள்ளார். அவற்றில் இத்தலத்தின் பாசுரம் “தமரோட்டை வாஸம் மறப்பித்த சௌந்தர்யத்தை யுணர்த்தும் அர்ச்சை நான்காம் தூதுக்கு விசயம்” – என்றபடி, எம்பெருமான் தன்னை சேர்ந்த சான்றோர்கள் மற்றும் பாகவதர்களின் சேர்க்கையினால் பெருமாள் ஆழ்வாரை மறந்து விட, பிரிவாற்றாமையினால். அவரது வடிவழகை நினைப்பூட்டினால் அவர் வரக்கூடுமென்றெண்ணி செக்கமலர்த்தலர் போலுங் கண் கைகால் செங்கனிவாய் அக்கமலத்திலை போலுந் திருமேனியடிகளுக்கு – தக்கிலமே கேளீர்கள் – என்றும் பூந்துழாய் முடியார்க்கு என்று தொடங்கியும் சௌந்தர்யம் பற்றாக திருமூழிக்களத்தார்க்கு என்று அர்ச்சாவதாரத்திலே, ஆழ்வார் தன்னை நாயகியாக பாவித்து பறவைகளை தூது விடுகின்றார். அதன் பின் எம்பெருமான் தனது சௌந்தர்யத்தையும் லாவண்யத்தையும் காட்டியபடி ஆழ்வாருக்கு சேவை சாதித்தார் என்பார்கள் பெரியோர்கள். இத்திருமூழிக்களத்து எம்பெருமான் நம்மாழ்வாருக்கு “அன்பர்களுக்கு அருளும் மிருதுத் தன்மை” என்னும் கல்யாண குணத்தை காட்டி அருளினான் என்பது ஐதீகம். “மகாத்மாக்கள் விரகம் சகியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்” என்கிறார் ஆச்சார்யஹ்ருதயத்தில் மணவாளப்பெருமாள் நாயனார். பாகவதர்களை கண நேரமும் விட்டு பிரிந்திருக்காமையாகிய சௌகுமார்ய குணம் திருமூழிக்களத்தில் பூர்ணம் என்று அருளியுள்ளார். காண்கின்ற ஐம்பூதங்கட்கும் இரு சுடர்க்கும் சேண்கலந்த இந்திரற்கும், தேவர்க்கும், - மாண்கரிய பாழிக்களத்தாற்கும், பங்கயத்து நான்முகற்கும் – மூழிக்களத்தான் முதல். (நூ தி. 62) பொருள்: கண்ணுக்குப் புலப்படுகின்ற ஐம்பூதங்களுக்கும், சூரிய சந்திரர்களுக்கும், இந்திரனுக்கும் மற்றும் ஏனைய தேவர்களுக்கும்,, விடமுண்டு கருத்த கண்ட ஈசனுக்கும், தாமரை மலரில் வசிக்கின்ற பிரம்மனுக்கும், திருமூழிக்களத்தில் எழுந்தருளியுள்ள திருமாலே மூலகாரணமாவார், என்று திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது 108 திருப்பதி அந்தாதியில் இத்திவ்யதேசத்தைப் பற்றிப் பாடியுள்ளார். இத்திவ்யதேசத்திலும் தங்கும் வசதிகள் கிடையாது, அருகில் உள்ள பெரிய ஊர்களில் தங்க வேண்டும். கோவையில் இருந்து பாலக்காடு வழியாக கேரளாவில் நுழைந்து அதன் அருகில் உள்ள திருநாவாய், திருவித்துவக்கோடு ஆகிய திவ்யதேசங்களை சேவித்துவிட்டு பின் திருச்சூர் அருகில் உள்ள குருவாயூர் சேவித்து தெற்காக பயணம் செய்து திருச்சூருக்கும் எர்ணாகுளத்திற்கும் இடையில் உள்ள திருமூழிக்களத்தை சேவித்து விட்டு “ஸ்ரீஸூக்தி க்ஷேத்ரே சங்க புஷ்கரணி தடே சௌந்தர்ய விமானச்சாயாயம் ஸ்ரீமதே மதுரவாணி நாயிகா சமேத ஸ்ரீஸூக்திநாத பரப்ரஹ்மனே நம:” என்னும் தியான ஸ்லோகத்தை ஜெபித்துக் கொண்டே முதல் நாளின் இரவு நேரத்தில் எர்ணாகுளம் அருகில் உள்ள திருகாட்கரை என்னும் திவ்யதேசத்தை அடைந்தோம். அடுத்து பலியின் கர்வம் தீர்த்து ஓணப்பண்டிகை உருவாக காரணமாக இருந்த திருகாட்கரையப்பனை சேவிக்கலாம் வாருங்கள் அன்பர்களே. அத்தியாயம் – 6 திருகாட்கரை - திருக்காட்கரையப்பன் [] எம்பெருமான் வாமன மூர்த்தியாகவும், த்ரிவிக்ரமனாகவும் சேவை சாதிப்பதால் “வாமன க்ஷேத்திரம்” என்றும் “திரிவிக்ரம மஹா க்ஷேத்திரம்” என்றும் கபில முனிவர் தவம் செய்ததால் “கபில க்ஷேத்திரம்” என்றும் அழைக்கப்படும் திருக்காட்கரை தற்போது திருகாக்கர(ரை) என்று அறியப்படுகின்றது. இத்தலம் ஷொரனூர் – எர்ணாகுளம் இரயில் மார்க்கத்தில் இடைப்பள்ளி என்னும் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் 3கி.மீ அருகில் உள்ளது. ஆலுவா திருச்சூர் மார்க்கத்தில் இரிஞ்ஞாலக்குடாவிலிருந்து சுமார் 12கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. எர்ணா குளத்திற்கு அருகிலும் கொச்சி பல்கலைக் கழகத்திலிருந்து சுமார் 2கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. எனவே ஆலூவாவிலிருந்தும் எர்ணாகுளத்திலிருந்தும் பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். பொதுவாகவே கேரளா என்றால் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது ஓணம் பண்டிகை மற்றும் நேந்திரம் பழம் ஆகும். அவை இரண்டுமே இத்தலத்துடன் தொடர்பு கொண்டவை. கேரளத்தில் மலையாள சிங்க மாதத்தில் (ஆவணி மாதம்) பத்து நாள் மிகவும் சிறப்பாக ஓணம் பண்டிகைக் கொண்டாடப்படுகின்றது. பண்டிகையின் முக்கிய நாள் திருவோண நாள். எம்பெருமானுக்குரிய நட்சத்திரமும் திருவோணம். எனவே பெரியாழ்வாரும் கண்ணனை “திருவோணத்தான் உலகாளும் என்பார்களே” என்றும் " இன்று நீ பிறந்த திருவோணம் நீராட வாராய்" என்றெல்லாம் மங்கலாசாசனம் செய்துள்ளார். அத்திருவோணத்தோடு தொடர்புடையது இவ்வாலயம். ஓணம் மட்டும் அல்ல அது கொண்டாடப்படுவதற்கான, பெருமாளின் தசாவதாரத்தில் அசுரர்கள் கொட்டத்தை அடக்கி தேவர்களின் இந்திர லோகத்தை மீட்டுத்தந்த ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்துடன் தொடர்புடையது இத்திவ்யதேசம். பிரகலாதனின் பேரன் பலிச் சக்கரவர்த்தி, இவர் அசுர அரசர்களிலேயே மிகப்பெரிய, மிக அதிக வலிமை வாய்ந்த அரசர் அவர். அறிவார்ந்த ஞானி, வலிமையானவர், கற்றறிந்தவர், அன்பானவர், சமுதாய நியாயத்தை நிலை நிறுத்தியவர், தர்மத்தின் அடையாளச் சின்னம். பிரகலாதனின் பக்தி இருந்தாலும் குருவுக்கு கட்டுப்பட்ட மாணவனாகவும் அசுர குலத்து பாசமும் கொண்டவனாக திகழ்ந்தான். ஒரு சமயம் விக்ரஜித் எனும் பெரிய யாகத்தை செய்து அதன் விளைவாக பறக்கும் இரதம், வெல்ல முடியாத ஆயுதம் பெற்று தேவர்களையும் வென்று மூவுலகிலும் ஆட்சி புரிந்தான். யாராலும் வெல்ல முடியாத அவன் மகாபலி ஆனான். அவனது அகந்தையை அகற்ற, தேவர்களுக்கு அபயம் அளித்து வாக்களித்தபடி காஸ்யபர், அதிதி தம்பதிகளுக்கு புரட்டாசி மாதம், சுக்கில பட்சம் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தார் வாமன பகவான். 3 அடி உயர வாமனனாக கையில் குடையும் கமண்டலமும் கொண்டு மாவலி இராஜசூய யாகம் செய்து கொண்ட இடத்திற்கு மாணிக்குறளனாக, வாமன மூர்த்தியாக பெருமாள் வந்து மூவடி மண் யாசகம் கேட்டார். வந்திருப்பது யார் என்பதை அறிந்த சுக்கிராச்சாரியார் தானம் தரவேண்டாம் என்று தடுத்தார். தன்னுடைய குருவின் வார்த்தையையும் மீறி மூன்றடி மண்ணை தானம் செய்தான் மகாபலி. பிறகு எம்பெருமான் அம்பரம் மூடுறுத்து ஓங்கி உம்பர் கோமானாக ஓரடியால் வானுலகையும், ஓரடியால் பூவுலகையும் அளந்து மூன்றாவது அடி எங்கே? என்று ஓங்கி உலகளந்த உத்தமனாக, திரிவிக்கிரமனாக நின்று கேட்டார். மகாபலிக்கு எல்லாம் புரிந்து விட்டது. பிரகலாதனுக்காக நரசிம்மமாக வந்த பெருமான் இப்பொழுது வாமனனாக வந்து விஸ்வரூபம் காட்டி தன் முன் தன்னை பலி கேட்கிறார் என்பது புரிந்தது. தன் தலையை மூன்றாவது அடிக்காக அளித்தான் பலிச்சக்கரவர்த்தி. அவன் தலையில் தனது திருவடிகளை பொருத்தி அருள் பாலித்து பாதாளத்திற்குள் அவனை அழுத்தி பாதாளத்திற்கு அரசனாக இருக்கும் படி அனுகிரகத்தார் அசுரனாயினும் உத்தமன் என்பதால் அவனுக்கும் தனது திருவடி தீட்சையை அளித்தார், பிரகலாதனுக்கு அளித்த வரத்தின் படி அவனது வம்சத்தில் வந்த மாவலியை சம்ஹாரம் செய்யாமல் பாதாள லோகத்திற்கு அரசனாக்கினார், தேவ லோகத்தை இந்திரனுக்கு திருப்பி அளித்தார். அப்போது பெருமாளிடம் பலிச்சக்கரவர்த்தி வேண்டிக் கொண்டார். எம்பெருமானும் வருடாவருடம் ஆவணி மாத திருவோண நாளில் தன் நாட்டிற்கு வந்து தன் பிரஜைகள் ஆனந்தமாக வாழ்வதைப் பார்த்து செல்ல அனுமதி அளித்தார். இவ்வாறு பலிச்சக்கரவர்த்திக்கு அனுக்கிரகம் செய்த நாள், அவர் தன் பிரஜைகளைக் காண வரும் நாளே ஓணம் பண்டிகை நாள். ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், தான, தர்மங்கள் செய்தாலும், சேரக்கூடாத இடத்தில் சேர்ந்தால் அழிவு நிச்சயம் என்பதை மகாபலியின் இக்கதை உணர்த்துகின்றது. அடுத்து குருவின் கட்டளையினை மீறுதல் கூடாது மீறினால் ஆழிவு. ஆணவம் ஆசையை கொடுக்கும் அவ்வாசை எல்லை மீறி சென்று கொண்டிருக்கும். பகவானின் திருவடிகளில் சரணடைந்து அதை தலையால் ஏற்றால் ஆணவம் அழிந்து ஞானம் பிறக்கும். மகாபலியின் அகங்காரம் பகவானின் பாதத்தினை தாங்கியதால் உடைந்து அழிந்தது. ஒவ்வொருவன் மனத்திலும் தினமும் நன்மைக்கும் தீமைக்கும் இடையே போராட்டம் நடைபெறுகின்றது. அதில் பல நேரம் ஆணவம், ஆசை போன்றவையே ஆள்கின்றன. அதனால் மனிதன் மிருகமாகின்றான். அசுர குணம் கொண்டு மற்றவரை வதைக்கின்றான். சுக்கிராச்சாரியார் என்பது மனத்தின் மாயை, இந்த மாயை ஆனது மனதின் தீய பக்கத்தை தூண்டி மண், பொன், பெண் என அவனுக்கு வழிகாட்டி அவனை வீழ்த்துகின்றது. எல்லோர் மனத்திலும் சிறிது நல்ல குணம் சிறிதளவு தர்மம் உறங்கிக் கொண்டிருக்கும். அதில் அவன் மாயையினை மீறி, அதாவது வண்டாகி சுக்கிராச்சாரியார் தடுத்த போதும் அதை மீறி வாமனனை நெருங்கிய மகாபலி போல இறைவனை சரணடைந்தால், அந்த சிறிய தர்ம குணம் த்ரிவிக்ரமனாய் நம் மனத்தை ஆக்கிரமிக்கும் அதில் ஆசை, கோபம், காமம், மயக்கம் போன்ற மாயைகள் விலகி மனம் கோயிலாகும், ஆத்மா புனிதமாகும். இவ்வாறு மாயையினை வென்ற மனிதனை ஒவ்வொருவரும் பூக்கோலமிட்டு வரவேற்பார்கள், பொன்னூசலாட்டுவார்கள் இத்தத்துவத்தையே ஓணம் பண்டிகை நமக்கு உணர்த்துகின்றது. மாயையினை வெல்ல மனிதனுக்கு அரச முடி தேவையில்லை அவன் தலையில் சுமக்க வேண்டியது பகவானின் பாதங்களைத்தான் என்று உணர்த்தியது, ஆணவம் ஒழிப்பதே ஞானத்தின் முதற்படி ஆத்மாவின் தெளிவு என்பதை உணர்த்துவதே வாமன அவதாரம். பெருமாள் திரிவிக்ரமனாக சேவை சாதிக்கும் மற்ற திவ்யதேசங்கள் ஓரடியால் உலகை அளந்த சீகாழி விண்ணகரம் (சோழ நாடு), இரண்டாவது அடியால் ஆகாயத்தை அளந்த திருக்கோவலூர் (நடு நாடு), மூன்றாவது அடியால் பலிக்கு அருள் செய்தது திருஊரகம் (தொண்டை நாடு) ஆகும். நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்து புகுந்து என்னை ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிருண்டான் சீர்மல்கு சோலை தென் காட்கரை யென்னப்பன் கார்முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேனே ( தி.வா 9-6-3) பொருள்: செழுமை நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்காட்கரையில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் தனது நீர்மை குணத்தினால் என் நெஞ்சில் வந்து புகுந்து எனக்கு உயிராய் நின்றான் என் உயிரையும் உண்டான். அவ்வஞ்சக்கள்வனின் மாயங்களை நான் அறிகிலேனே என்று நம்மாழ்வார் மங்கலாசாசனம் செய்த இத்திவ்யதேசத்தின் மூலவர் : வாமனர், என்றழைப்படுகின்றார். சங்கு, சக்கரம், கதை, பத்மம் தெற்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் நின்ற கோலம். மாபலிக்கு காட்சி கொடுத்த அதே கோலம். அப்பன் என்றும் மலையாளத்தில் அழைக்கப்படுகின்றார். நம்மாழ்வாரும் காட்கரையப்பன் என்றே மங்கலாசாசனம் செய்துள்ளார். தாயார்: பெருஞ்செல்வநாயகி. வாத்ஸல்ய வல்லி. தீர்த்தம்: கபில தீர்த்தம். விமானம் : புஷ்கல விமானம். பிரத்யக்ஷம்: கபில முனிவர். இத்தலத்தில் ஒணம் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பத்து நாட்கள் உற்சவம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். ஓணத்தன்று கேரளாவிற்கே உரித்தான “ஓண சதய” என்னும் ஓண விருந்தை சாதி மத பேதமில்லாமல் ஆயிரக்கணக்கானோர் பிரசாதமாக உண்டு மகிழ்கின்றனர். அன்றைய தினம் உற்சவ நிறைவான ஆறாட்டு எனப்படும் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றது. கபிலமுனிவர் தவம் செய்த தலம் திருக்காட்கரை. கபிலர் மஹாவிஷ்ணுவின் ஒரு அவதாரமாகவும் கருதப்படுகின்றார். தனது தாயாகிய தேவஹூதிக்கு ஞானத்தை போதித்தவர் இவர். கங்கை இப்பூவுலகில் பாய காரணமாவார். அவ்வரலாறு இதோ, சாகரன் என்னும் அரசன் அஸ்வமேத யாகம் செய்ய குதிரையை அனுப்பினான் அவனுடைய குமாரர்கள் அறுபதினாயிரம் பேர் குதிரையுடன் சென்றனர். இந்திரன் கபடமாக குதிரையை கவர்ந்து சென்று பாதாளத்தில் கபில முனிவர் தவம் செய்து கொண்டிருந்த இடத்தில் கட்டி விட்டு சென்று விட்டான். குதிரையை காணாமல் தேடிய சாகரர்கள் பாதாளத்தில் கபில முனிவரின் அருகில் குதிரையை கண்டனர். முனிவர்தான் குதிரையை கவர்ந்து விட்டார் என்று எண்ணி சாகரர்கள் முனிவரின் நிஷ்டையை கலைத்தனர். எனவே அவர் சாகரர்களை எரித்து சாம்பலாக்க, தன் மூதாதையர்கள் முக்தி அடைய பாகீரதன் தவம் செய்து கங்கையை பூலோகத்திற்கு கொண்டு வந்தான். கபிலர் வேண்டிக் கொண்டதற்கிணங்க அன்று பலி சக்கரவர்த்திக்கு சேவைச் சாதித்த வண்ணம் பெருமாள் இங்கு கோவில் கொண்டதாக ஐதீகம். இத்தலத்தின் தீர்த்தமும் கபில தீர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. இனி நேந்திரம் பழத்துடன் இத்தலத்திற்கு உள்ள தொடர்பு என்ன என்று காணலாமா? ஒரு செல்வந்தன் தன்னுடைய தோட்டத்தில் நிறைய வாழை மரங்களை பயிர் செய்திருந்தார் ஆயினும் அவை எதுவுமே குலை தள்ளவில்லை. எனவே அவர் வாமன மூர்த்தியிடம் நல்ல விளைச்சல் ஏற்பட்டால் பொன் வாழைத்தார் சமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டார். திருமால் பார்வை பட்டதால் அருமையான விளைச்சல் ஏற்பட்டது. பெருமாளிடம் நேர்ந்து கொண்டு விளைந்ததாலும் பெருமாளின் நேத்திர தரிசனம் பெற்று விளைந்ததாலும் அக்கதலிப்பழம் நேந்திரம்பழம் ஆனது. வேண்டிக் கொண்டபடி அவ்விவசாயி ஒரு தங்க வாழைத்தாரை காட்கரையப்பனுக்கு சமர்பித்தார். அப்பொன்வாழைக் குலை ஒரு சமயம் காணாமல் போய்விட மன்னர் பலரையும் விசாரித்து வரும் போது இக்கோவிலில் தவம் செய்து வந்த ஒரு யோகியை தீர விசாரிக்காமல் மிகவும் துன்புறுத்தியதாகவும், அபிஷேக நீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கியதால் என்னவென்று பார்த்த போது இப்பொன் வாழைக்குலை அடைத்து கொண்டதால் இவ்வாறு நடந்தது என்பதை அறிந்து யோகியிடம் மன்னிப்பு கேட்க சென்றார், அதற்குள் அந்த யோகி அவமானம் தாங்காமல் இந்நகரம் தன் செல்வம் அனைத்தையும் இழக்கட்டும் என்று சாபம் கொடுத்து விட்டு தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். நகரமும் தனது செல்வத்தை எல்லாம் இழந்தது. பின்னர் அவர் பிரம்மராக்ஷசனாக மாறி துன்புறுத்தத் தொடங்கினார், அப்பிரம்மராக்ஷசனை அமைதிப்படுத்த ஒரு சிறு சன்னதி அமைத்துள்ளனர். பெருமாளுக்கு நைவேத்யம் செய்த பிரசாதம் பின்னர் இங்கு நைவேத்யம் செய்யப்படுகின்றது. ஒரு யட்சியின் சன்னதியும் அருகில் உள்ளது. வாருங்கள் மாவலியின் அகந்தையை அடக்கி பின்னர் கபில முனிவருக்ககாக இங்கு வந்து கோவில் கொண்ட வாமனமூர்த்தியைச் சேவிக்கலாம். அடியோங்கள் இங்கு சென்று சேர்ந்த போது இரவு நேரம், அத்தாழ சீவேலி நடைபெற்றுக் கொண்டிருந்தது, ஆலயத்தை அடைய சாலையில் இருந்து சிறிது கீழிறங்கி செல்ல வேண்டும். மிகவும் விலாசமாக அமைந்துள்ளது ஆலயம் முதலில் சிவன் சந்நிதி அமைந்துள்ளது. மஹாபலி வழிபட்ட சிவபெருமானாம். மிகப்பெரிய லிங்கத்திருமேனி,  புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு இங்கே பூஜை போட்டு எடுத்துச் செல்வது இப்பகுதி மக்களின் வழக்கமாக இருக்கிறது. நேரம் இல்லாமையால் வெளியிலிருந்தே சேவித்து விட்டு பெருமாள் சந்நிதியை நோக்கி ஓடினோம். சிவன் சன்னதியுடன் பார்வதி, துர்கை, பகவதி, சுப்பிரமணியர், கணபதி சன்னதிகளும் உள்ளன. சிவபெருமானின் ஸ்ரீகோவிலுக்கு எதிரே பலி சக்கரவர்த்தியின் சிம்மாசனம் உள்ளது. பெருமாள் சன்னிதியை அடைந்த நேரமும் பெருமாள் சீவேலிக்காக வெளியே வரும் நேரமும் பொருந்தி வந்தது. போத்திகள் தங்கள் கரங்களில் பெருமாளை சுமந்து கொண்டு மூன்று முறை வலம் வந்தனர். முதல் முறை உடுக்கையுடனும், இரண்டாவது முறை நாதஸ்வர இசையுடனும். மூன்றாம் முறை செண்டை மேளத்துடனும் பெருமாள் வலம் வந்த போது அடியோங்களும் அவரது திவ்யசௌந்தர்யத்தை பருகிக் கொண்டே உடன் வலம் வந்தோம். சீவேலியின் போது போத்திகள் மிகவும் வேகமாக நடந்து செல்கின்றனர். சீவேலிக்காக உற்சவர் வெளியே எழுந்தருளும் போது ஸ்ரீகோவில் கதவு அடைக்கப்படுகின்றது மற்றும் யாரையும் நாலம்பலத்திற்குள் அனுமதிப்பதில்லை. [] மண்டபத்தில் தங்க கவசம் பூண்ட பலி பீடம் இத்தலத்தில் ஒரு வித்தியாசமான அமைப்பைப் பார்த்தோம். பலி பீடம் கொடிமரத்திற்கும் கோவிலுக்கும் இடையில் இருந்தது, பலி பீடத்திற்கு தங்கக்கவசம் சார்த்தியிருந்தனர், பலி பீடம் மேற்கூரையுடன் தூண்களுடன் கூடிய ஒரு மண்டபத்தில் பலிக்கல்புறம் என்னும் அமைப்பில் இருந்தது, படியேறிச்சென்ற பின் மண்டபம் சிறிது கீழே இருந்தது. பெருமாள் சீவேலி முடித்து ஸ்ரீகோவிலின் உள்ளே சென்ற பின்னரே உள்ளே அனுமதித்தனர். ஆரத்தி சேவையும் தீர்த்தப்பிரசாதமும் கிட்டியது. வட்ட வடிவ ஸ்ரீகோவில் தொப்பி போல விமானம், துவார பாலகர்கள் காவல் காக்கின்றனர். சுற்றம்பலத்தில் தீப வரிசை உள்ளது. தாயார் பெருஞ்செல்வ நாயகியாய் அருள் பாலிப்பதால் செல்வம் நிறைந்த ஆலயமாகவே தற்போது விளங்குகின்றது. ஸ்ரீகோவிலின் முகப்பில் இரு பக்கமும் சங்கமும் சக்கரமும் அமைத்துள்ளனர். அவையும் சோபனமும் தங்க கவசம் பூண்டுள்ளன. பெருமாள் நின்ற கோலத்தில் சதுர்புஜராக சங்கம், சக்கரம், பத்மம் கதை தாங்கி வாமன திரிவிக்கிரம பெருமாளாக சேவை சாதிக்கின்றார். ஆலய வளாகத்தில் உள்ளே பிரம்மாண்ட அரச மரம் உள்ளது. மரத்தின் வேர் பிரம்மா, நடுப்பகுதி விஷ்ணு, உச்சியில் சிவன் என்று மும்மூர்த்திகளின் சங்கமமாக இந்த அரசமரம் திகழ்கிறது என்று சொன்னார்கள். மரத்தடியில் மேடைகட்டி, மாடவிளக்கு ஒன்றையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திர நாளன்றும் இந்த மரத்தடியில் பூஜை மேற்கொள்கிறார்கள். அப்போது நாகர் இனத்து ஆதிவாசிகளின் ‘புல்லுவன்’ பாட்டைப் பாடி பூஜையை மேலும் சிறப்பிக்கிறார்கள். இத்தலத்தில் பெருமாள் நம்மாழ்வாரை வரவழைத்து தனது சௌசீல்ய குணத்தை காட்டியருளினார். சௌசீல்யம் என்பது உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களுடன் இரண்டற கலத்தல், தோழமை கொள்ளல் ஆகும். சக்கரவர்த்தித் திருமகன் இராமபிரான் குகனுடனும், சுக்ரீவனுடனும், விபீஷணனுடனும் சகோதரனாக கொண்ட உறவு சௌசீல்யம் ஆகும். இத்தலத்திற்கு ஆழ்வாரை வரவழைத்தார் பெருமாள். ஆழ்வாரும் பெருமாளும் சந்தித்துக்கொண்ட பின் ஆழ்வார் தன்மை பெருமாளுக்கு வந்து விட்டதாம். பெருமாள் ஆழ்வாருக்கு கைங்கரியம் செய்ய துவங்கிவிட்டார் என்பார்கள் பெரியோர்கள். **’போகத்தில் தட்டுமாறும் சீலம் காட்கரையிலே கரையழிக்கும்“** என்பது பிள்ளைப்பெருமாள் நாயனார் அருளியது.”ஆட்கொள்வானொத்து என்னுயிருண்ட மாயன் என்றும் வாரிக்கொண்டுன்னை விழுங்குவன் காணிலென்று ஆர்வுற்ற என்னையொழிய என்னில் முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப்பருகினான், காரொக்கும் காட்கரையப்பன் கடியனே" - என்று நம்மாழ்வார் பாடியபடி அத்தலை இத்தலையாய் சேஷ-சேஷி (ஆண்டான் –அடிமை) பாவம் மாறாடிப் பரிமாறும் சீலகுணம் திருக்காட்கரையில் பெருகுகின்றது என்று தமது ஆச்சார்ய ஹ்ருதயத்தில் குறிப்பிடுகின்றார். மாற்கமும் தாம்தாம்வழிபடும் தெய்வமும் ஏற்க உரைப்பார் சொல் எண்ணாதே, - தோற்குரம்பை நாள்கரையா முன்னமே நல்நெஞ்சே! நாரணன் ஆம் காட்கரையப்பற்கு ஆள் ஆகாய் காண். (நூ.தி 61) பொருள்: மனமே! அவரவர்கள் கைக்கொள்கின்ற வழிகளும், அவரவர்கள் வழிபடுகின்ற தெய்வமும் பொருந்துமாறு பேசுகின்ற வேற்று மதத்தவர் சொல்லை மதியாமல், தோலால் மூடப்பட்ட இவ்வுடல் விழுவதன் முன்னம் திருக்காட்கரை என்னும் திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமந்நாராயணனுக்கு அடிமைப்படுவாயாக என்று திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இத்திவ்யதேசத்தைப் பற்றி பாடியுள்ளார். ஸ்ரீகாட்கர ஸ்ரீமந் நீராத சேது க்ஷேத்ரே கபில புஷ்கரணி தடே புஷ்கல விமானச்சாயாயாம் ஸ்திதாய தக்ஷிணிணாம் முகாய ஸ்ரீமதே வாத்ஸல்யவல்லி நாயிகா சமேத ஸ்ரீகாட்கரஸ்வாமி தேவாதி தேவ பரப்ரஹ்மனே நம:" என்பது இவரது த்யான ஸ்லோகம் ஆகும். இம்மலைநாட்டு திவ்யதேச யாத்திரையின் முதல் நாள் திருநாவாய், திருவித்துவக்கோடு, திருமூழிக்களம், திருக்காட்கரை ஆகிய நான்கு திவ்யதேசங்களை சேவிக்கும் பாக்கியம் சித்தித்தது. பெருமாளை திவ்யமாக சேவித்த பின்னர் சோட்டாணிக்கரைக்கு புறப்பட்டு சென்றோம். அங்கு இரவு தங்கினோம். மறு நாள் எந்தெந்த திவ்யதேசங்களை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது என்று அறிய ஆவலாக உள்ளதா? சிறிது பொறுங்கள் அன்பர்களே உறங்கி விழிக்கின்றோம். அத்தியாயம் – 7 திருக்கடித்தானம் - அற்புத நாராயணன் [] இம்மலைநாட்டு திவ்யதேச யாத்திரையின் இரண்டாம் நாள் கேரளத்தின் வடக்கில் இருந்து தெற்காக செல்லும் Main City Road (MC Road) வழியாக பயணம் செய்து கோட்டயம் கடந்து செங்கண்ணூரை அடைந்தோம். இந்நாள் காலை அடியோங்கள் சேவித்த திவ்யதேசங்கள் அனைத்தும் கோட்டயம் மாவட்டத்தில் செங்கண்ணூருக்கு அருகில் அமைந்துள்ள ஆலயங்கள் ஆகும். பஞ்ச பாண்டவர்கள் ஆராதித்த ஆலயங்கள் இவற்றில் அடங்கும். இவை பஞ்சாலயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அடியோங்கள் முதலில் சேவித்த திவ்யதேசம் திருக்கடித்தானம். வாருங்கள் அன்பர்களே திருக்கடித்தானத்துறை அற்புதனையும் கற்பகத்தையும் சேவிக்கலாம். இந்த அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை அற்புத சக்தி பெறும் அற்புதப் பெருமாள் ஆலயம் திருவல்லா-கோட்டயம் சாலையில் செங்கணச்சேரியிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்களில் சஹாதேவன் ஆராதித்த ஆலயம் ஆகும் இத்தலம். அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பது மேவி இருப்பதென்னெஞ்சகம் நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே. (தி.வா 8-6-10) பொருள்: அற்புதனும், நாராயணனும், அரியும் வாமனனுமான எம்பெருமான் பொருந்தி வீற்றிருப்பது அடியேனுடைய நெஞ்சமாகும். நின்று கொண்டிருப்பது, நல்ல புகழ் நிறைந்த  பிராமணர்களுடைய நான்கு வேதங்களும் நிலைபெற்று  முழங்கிக்கொண்டிருக்கிற, கற்பகச் சோலை சூழ்ந்த திருக்கடித்தானம் என்னும் தலமாகும்,  என்று  நம்மாழ்வார் தமது பாசுரத்தில் இப்பெருமானை  அற்புதன்,  நாரணன், அரி,  வாமனன் என்று மங்கலாசாசனம் செய்துள்ளார். நாரணன் என்பதால் வாத்சலயம் உடையவன், நமது குற்றங்களையும் குணமாகக் கொள்வதால் அற்புதன், அரி அதாவது பகைவர்களை வெல்வதால் அற்புதன், பகைவர்களாவன காம, குரோதம், லோப, மத மாச்சர்யங்கள் முதலியன ஆகும். எல்லாருக்கும் எல்லாவற்றையும் வழங்குபவன். வாமனனாக வந்து மஹாபலியிடம் மூன்றடி நிலம் தா என்று வேண்டியதால் அற்புதன் என்று ஆழ்வார் பாடியுள்ளார் என்று விளக்கம் அளிப்பார்கள் பெரியோர். கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லில் இருந்து வந்ததாகும், மூன்று திவ்யதேசங்கள் இச்சொல்லை கொண்டுள்ளன. அவையாவன பெருமாள் யோகநரசிம்மராக சேவை சாதிக்கும் திருக்கடிகை என்னும் சோளிங்கர், கங்கையின் கரையில் இராமராக சேவை சாதிக்கும் வடநாட்டு திவ்யதேசமான கண்டம் என்னும் கடிநகர் மற்றும் மலைநாட்டு திவ்யதேசமான திருக்கடித்தானம் ஆகும். கடிகை என்ற சொல்லுக்கு ஒரு நாழிகை என்று பொருள், கடிகை தடங்குன்றில் சப்தரிஷிகள் ஒரு கடிகைக் காலம் தவம் செய்து அக்காரக்கனி எம்பெருமான் அருள் பெற்றனர். இங்கு கடித்தானத்தில் சஹாதேவன் ஒரு கடிகை நேரம் ஆராதித்து பெருமாள் அருள் பெற்றார் என்பார்கள். எனவே ஒரு கணப்போதாவது தூய்மையான மனதுடன் பெருமாளை நினைத்து இத்தலங்களில் பிரார்த்தனை செய்ய எடுத்த காரியத்தில் வெற்றியும் மோட்சமும் நிச்சயம். கடி என்றால் நறுமணம் என்ற பொருளும் உண்டு, கற்பக சோலை சூழ்ந்த என்று நம்மாழ்வார் பாடியது போல நறுமணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஸ்தானம் அதாவது இடம் என்பதால் கடித்தானம் ஆனது என்பாரும் உண்டு. தற்போது திருக்கொடித்தானம் என்றழைக்கப்படுகின்றது இன்றும் பச்சைப் பசேலென செடி கொடிகள் நிறைந்த அருமையான சூழலில் ஆலயம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கடிகைகள் என்னும் கல்விச்சாலைகள் நிறைந்திருந்ததனாலும், கடி ஸ்தானம் என்பது கடித்தானம் ஆகிவிட்டது என்றொரு விளக்கமும் உண்டு. இத்தலப்பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஓளியாக மாறி விண்ணில் கலந்து விடுவார் என்பது ஐதீகம். பூதங்கள் ஒரே இரவில் கட்டிய நெடிதுயர்ந்த மதில், நரசிம்மருக்கு தனி சன்னதி மற்றும் இரண்டு கொடி மரங்கள், கோவிலுக்கும் பூமி தீர்த்தத்திற்கும் இடையில் தண்டனை பெற்ற காவலாளி சிலை, என்று எண்ணற்ற அதிசயங்கள் இத்தலத்தில் உள, செல்வர்கள் வாழ் திருக்கடித்தானம் என்று ஆழ்வார் பல்லாண்டு பாடிய ஆலயத்தை சேவிக்கலாம் வாருங்கள் அன்பர்களே. கோயில் கொண்டான் திருக்கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம் கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே (தி.வா. 8-6-5) பொருள்:  ஒவ்வொரு ஆலயத்திலும் தங்கி இருக்கின்ற தெய்வங்கள் அனைத்தும் தொழும்படியாக ஸ்ரீவைகுண்டத்தைக் கோயிலாகக் கொண்ட குடக்கூத்து ஆடிய அம்மான், திருக்கடித்தானத்தைத் தனக்கு கோயிலாகக் கொண்டான்;  திருக்கடித்தானத்துடனே கூட வந்து அடியேனுடைய நெஞ்சினைக் கோயிலாகக் கொண்டான்,  என்று நம்மாழ்வார் மங்கலாசாசனம் செய்த இத்திவ்யதேசத்தின் [] மூலவர் :அற்புத நாராயணர்/ அம்ருத நாராயணர், சதுர்புஜம், நின்ற கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், சஹாதேவன் ஆராதித்தப் பெருமாள் ஆவார். சன்னதியின் பின் பக்கம் மேற்கு நோக்கியத் திருமுக மண்டலத்துடன் நரசிம்மர் சத்ரு சம்ஹார மூர்த்தியாக அருள் பாலிக்கின்றார். சன்னதியில் தெற்கு நோக்கிய விநாயகரையும் லிங்க ரூபத்தில் தக்ஷிணாமூர்த்தியையும் மரச்சாளரம் வழியாகச் சேவிக்கலாம். தாயார்: கற்பகவல்லி. தீர்த்தம் : பூமி தீர்த்தம் விமானம் : புண்யகோடி விமானம் பிரத்யக்ஷம்: ருக்மாங்கதன் மங்கலாசாசனம்: நம்மாழ்வார் மற்றும் சாஸ்தா, சுப்பிரமணியர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. ஒரே இரவில் பூதங்கள் கட்டிய மதில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. நரசிம்மர் உக்ர நரசிம்மராக சேவை சாதிப்பதால் அவருக்கு பால் பாயசம் நைவேத்யம் செய்யப்படுகின்றது, இவருக்கு ஆராதனை நடைபெறும் போது நாராயணீயத்தில் வரும் ஆறு பாடல்கள் (நரசிம்மர் தூணைப் பிளந்து கொண்டு வரும் கோலம்) சேவிக்கப்படுகின்றது. பூமி தீர்த்தம் கோவிலுக்கு எதிராக உள்ளது. தீர்த்தத்திற்கும் கோவிலுக்கும் இடையில் தண்டனை பெற்ற காவலாளியின் சிலை. கேரள பாணி இரண்டடுக்கு முன் கோபுரம். அதன் சுவற்றில் அருமையான ஓவியங்கள்.  திருக்கொடிதானம் மஹாக்ஷேத்திரம் என்று மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளனர். கோயிலினுள் நுழைந்தால் வலப்பக்க மண்டபத்தில் கிருஷ்ணன் பெரிய உருவில் சிலையாக நம்மை வரவேற்கிறார். கொடிமரம், பலிபீடத்தைக் கடந்து உள்ளே சென்று ஸ்ரீகோவிலை (கருவறையை) அடையலாம். வட்ட வடிவ ஸ்ரீகோவில், துவி தளம் அதாவது இரண்டு அடுக்குகளாக அமைந்துள்ளது. இரண்டு அடுக்குகளுக்கும் இடையில் தசாவதார சிற்பங்கள் மிகவும் அருமையாக அமைந்துள்ளன. கூம்பு போல கூரை, கூரைக்கு செப்புத்தகடு வேய்ந்துள்ளனர். மூலவர், விநாயகர், தக்ஷிணாமூர்த்தி மற்றும் நரசிம்மர் சன்னதிகள் கருவறையில் அமைந்துள்ளது ஒரு சிறப்பு. கேரளபாணி சிவதாண்டவம், விநாயகர், சாஸ்தா, யோக நரசிம்மர், இராமர் பட்டாபிஷேகம், மோகினி, மஹிஷாசுரமர்த்தினி, ஸ்ரீவேணுகோபாலன், அனந்தசயனன், அர்ச்சுனன் தவம் ஆகிய 16 அருமையான ஓவியங்கள் கர்ப்பகிரகச் சுற்றுச்சுவரை எழிலாக அலங்கரிக்கின்றன. சோபானத்தின் சுவற்றில் குடைக் கூத்து சிற்பங்கள் உள்ளன. நம்மாழ்வாரும் பெருமாளை குடக்கூத்தனாக பாடியுள்ளார். முன்னொரு காலத்தில் இத்தலத்தில் நடைபெற்ற விழாக்களில் பெண்கள் குடை பிடித்தபடி நடனமாடும் நிகழ்ச்சி இடம் பெற்றது. ‘குடைக் கூத்து’ என்றழைக்கப்பட்ட இந்த நடனத்தை வைத்துதான் ‘குடக் கூத்த அம்மானே’ என்று ஆழ்வார் பெருமாளை ஆராதித்திருக்கிறார் என்றும் சொல்லலாம். இன்னொரு விளக்கம். குடத்தினை சுமந்துகொண்டு கோபியர் செல்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தன்மீதுதான்  கிருஷ்ணனுக்குப் பிரேமை அதிகம் என்று நினைப்பு. அவர்கள் அவ்வாறு கர்வப்படுவதைக் கண்டிக்க விரும்பிய கிருஷ்ணன் அவர்கள் சுமந்து சென்ற குடங்களை பந்துகள் போல மேலெழச் செய்து, தன்னிடம் வரச் செய்து லீலை நிகழ்த்தினான். தன் மீதுதான் கிருஷ்ணனுக்குப் பிரியம் அதிகம் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கோபியர் இப்போது கிருஷ்ணனை மறந்துவிட்டு தத்தமது குடங்களைப் பிடிக்க அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர். வெறும் குடத்துக்காக அப்போதைக்கு கிருஷ்ணனை மறந்துவிட்ட அவர்களது செயலை நகைப்புக்குரியதாக ஆக்கவே கிருஷ்ணன் இப்படி ஒரு லீலையை மேற்கொண்டான். இப்படித் தாவித் தாவி, குடத்துக்காக அவர்களைக் கூத்தாட வைத்த சம்பவத்தைதான் ‘குடக் கூத்தா’க நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். இந்த சம்பவத்தையே நம்மாழ்வார் ’குடக் கூத்த அம்மானே’ என்று வர்ணித்திருக்கிறார் என்றும் கூறுவார்கள். கார்த்திகை பெருவிழா மிகவும் விஷேசமாகக் கொண்டாடப்படுகின்றது.10 நாள் திருவிழாவின் 9ம் நாள் 1008 தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இத்தீபங்கள் மறு நாள் காலை வரை எரிந்து கொண்டிருக்கும், இதை சேவிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். சஹாதேவனின் தாயார் மாத்ரி பாண்டு இராஜாவுடன் இங்கு தங்கி இருந்த போது பாண்டு வைகுண்டம் ஏக, மாத்ரி உடன் கட்டை ஏறுவதை குறிக்கும் வகையில் சொக்கப்பனை இரவில் ஏற்றப்படுகின்றது. இந்நிகழ்ச்சி திருக்கார்த்திகை தினத்தன்று நடந்ததாக ஐதீகம். இவ்விழா "சங்கேதம் என்றழைக்கப்படுகின்றது. அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறும் பெருமாள் கலியுகத்தின் முடிவில் ஓளியாக மாறி விண்ணில் கலந்து விடுவார் என்பதை உணர்த்தும் வகையில் தீபம் ஏற்றப்படுகின்றது என்பாரும் உண்டு. மேலும் நரசிம்மஜெயந்தி, ஜென்மாஷ்டமி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இத்தலத்தின் தல வரலாறு : ருக்மாங்கதன் என்ற சூரிய வம்சத்து மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்த போது ஒரு அற்புதமான நறுமணம் மிக்க பூஞ்சோலை அமைத்து பராமரித்து வந்தான். ஒரு சமயம் நாரதமுனிவர் அவனது அரசவைக்கு விஜயம் செய்தார், அப்போது ருக்மாங்கதன் அவருக்கு ஒரு அரிய மலர்களால் ஆன ஒரு மாலையை அணிவித்தான். அம்மலர்மாலையை அணிந்து கொண்டே தேவ சபைக்கு சென்றார். அதன் வனப்பில் மயங்கிய தேவேந்திரன், இரவில் தேவர்களை அனுப்பி மலர்களை பறித்து வரச்செய்தான். காலையில் மலர்களை காணாமல் அரசன் திகைத்தான். எப்படியாவது மலர்களைப் பறித்து செல்பவர்களை பிடிக்க அரசன் காவலாளிகளை நியமித்தான். தேவர்கள் தங்களின் சக்தியால் காவலாளிகளின் கண்ணில் படாமல் மலர்களை பறித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அரசன் பெருமாளிடம் சென்று வேண்ட, அவரும் கத்திரி பூண்டுகளைக் கொண்டு தீ மூட்டினால் அவர்களை பிடிக்கலாம் என்று உபாயம் கூறினார். தேவர்கள் அப்தொடர்யால் தங்கள் சக்தியை இழந்து பிடிபட்டனர். அவர்களை அரசன் முன்பு நிறுத்திய போது உண்மையை அறிந்த மன்னன் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அவர்களை விடுவித்தான். ஆயினும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட அவர்கள் தங்கள் சக்தியை இழந்தனர், அவர்களால் வானுலகம் செல்ல முடியாமல் போனது. தேவர்களிடம் மன்னன் தாங்கள் இனி எவ்வாறு தேவலோகம் செல்ல முடியும் என்று வினவ, அவர்களும் யாராவது தங்களுடைய ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால் மட்டுமே தாங்கள் திரும்பி செல்ல முடியும் என்று உரைத்தனர். அரசனும் தனது நாட்டில் தேடிய போது ஒரு மூதாட்டி தனது ஏகாதசி பலனைத் தர, தேவர்களும் வானுலகம் சென்றனர். அப்போது பெருமாள் ருக்மாங்கதனுக்கு பிரத்யக்ஷமாகி சேவை சாதித்தார். பின்னர் அரசன் ஏகாதசி விரதத்தின் மேன்மையை உணர்ந்து, அவனும் முறையாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து தன் நாட்டில் உள்ள பிரஜைகள் அனைவரும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று ஆணையிட்டான். இத்தலத்துப் பெருமாளை சகாதேவன் பின்னர் புனர் நிர்மாணம் செய்ததாகவும் கூறப்படுகின்றது. சகாதேவன் இப்பகுதியில் பிரதிஷ்டை செய்ய விக்ரகம் கிடைக்காமல் மனம் வருந்தி அக்னி பிரவேசம் செய்ய முற்பட்டபோது அவ்விடத்தில் பெருமாள் சிலை தோன்றி அவன் துயர் தீர்த்தார். எனவே பெருமாள் அற்புத நாராயணன் என்றழைக்கப்படுகின்றனர் என்றொரு கதையும் வழங்கப்படுகின்றது. இப்பகுதியில் உள்ள மக்கள் சஹாதேவன் கட்டிய கோவில் என்றே அழைக்கின்றனர். [] பூமி தீர்த்தம் வாருங்கள் அற்புத நாராயணரை சேவிக்கலாம். ஆலயத்தை நெருங்கும் போதே பூதங்கள் கட்டிய நெடிதுயர்ந்த (12 அடி) மதில் கண்ணில் படுகின்றது. பாசி படர்ந்து பசுமையாக காட்சி தருகின்றது. திருக்கோவிலுக்கு எதிரிலேயே பூமி தீர்த்தம் என்னும் திருக்குளம் உள்ளது. அதிகாலை இளங்கதிரில் பொன் மயமாக விளங்குகிறது குளத்து நீரும் முன் வாயிலும். இரண்டுக்கும் இடையில் குளத்திற்கு அருகில் ஒரு நடு கல்லின் மேல் ஒரு வானத்தை நோக்கியவாறு படுத்துள்ள மனித கற்சிலையை கண்டோம், அவன் ஒரு கரத்தில் சங்கு உள்ளது. பின்னர் விசாரித்த போது இச்சுவையான கதையைக் கூறினார்கள். செம்பகச்சேரி நாட்டின் அரசர் ஒரு நம்பூதிரி, அவர் தனது நாட்டின் வளத்தையும், அதில் அமைந்துள்ள விஷ்ணு ஆலயத்தையும் பற்றி மிகவும் கர்வம் கொண்டிருந்தார். அவர் திருக்கடித்தானம் அமைந்துள்ள நன்றுலை நாட்டினரை அவமானப்படுத்த வேண்டி ஒரு நாள் இரவு பூசைக்குப்பின் கோவில் நடை அடைத்த பின்னர் காவலாளிக்கு கையூட்டு அளித்து ஆலயத்திற்குள் நுழைந்தார். காவலாளியின் தவறான செய்கையைப் பற்றி அறிந்த நன்றுலை நாட்டு அரசர் அவனது தலையை கொய்ய ஆணையிட்டார். தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதே சமயம் அவனை அவ்வாறு செய்ய தூண்டிய செம்பகச்சேரி அரசனும் உயிரிழந்தான். வரும் காலத்தில் இவ்வாறு நடைபெறக்கூடாது என்பதற்காக அந்த தண்டனை பெற்ற காவலாளியின் சிலையை ஆலயத்தின் முன்னர் அமைத்தார்களாம். பெருமாளை பள்ளியுணர்த்தியபின்னர் அவரை தொந்தரவு செய்வது அமங்கலமானது என்பது கேரளாவில் உள்ள நம்பிக்கை. இதனாலோ என்னவோ, யாராக இருந்தாலும் நடை சார்த்திய பிறகு எந்த கேரள ஆலயத்திலும், எக்காரணத்தைக் கொண்டும் பூஜை நேரம் மட்டுமல்லாமல் இடையில் திறக்கப்படுவதில்லை. ஆலயத்தின் உள்ளே நுழையும் போதே நுழைவாயிலின் இரு பக்கமும் அழகிய மூலிகை வர்ண ஓவியங்களைக் காண்கிறோம். எதிரே நெடிதுயர்ந்த தங்கக் கொடிமரம் பளப்பளவென மின்னுகின்றது. கீழ்ப்பகுதியில் அஷ்ட லக்ஷ்மிகள் எழிலாக சேவைச் சாதிக்கின்றனர். சுமார் 60 அடி உயர கொடி மரத்தை இவ்வளவு மழை பெய்கின்ற ஊரில் எவ்வாறு பள பளவென்று சுத்தமாக வைத்திருக்கின்றார்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. வெளி சுற்றில் வலம் வரும் போது சாஸ்தா, சுப்பிரமணியரை சேவித்தோம், பின் புறம் தனி வாயில் கொடிமரம், பலிபீடம், மண்டபம் எல்லாம் உள்ளது நரசிம்மரை திவ்யமாகச் சேவித்தோம், பின் பகுதியில் மலர் சோலையின் நடுவே ஒரு சிறு செயற்கை குளத்தின் நடுவே குழலூதும் கிருஷ்ணனுக்கு ஒரு சன்னதி அமைத்துள்ளனர், பின்னர் வலத்தை தொடர்ந்தோம். முன் மண்டபம் வழியாக உள்ளே சென்று நமஸ்கார மண்டபத்தில் கருடனை சேவித்து விட்டு, வட்ட வடிவ கருவறையில் சதுர்புஜத்துடன் அற்புத நாராயணரை திவ்யமாக சேவித்தோம். அஞ்சனக்கல் என்னும் கல்லால் ஆனவர் எம்பெருமான். உள் சுற்றில் தெற்கு பக்கத்தில் மர ஜன்னல் வழியாக விநாயகர் மற்றும் தக்ஷிணாமூர்த்தியை சேவித்தோம் பின் பக்கம் நரசிம்மரையும் சேவித்தோம். இத்தலத்தில் பொதுவாக பலிக் கல்லாக பிரதிஷ்டை செய்யப்படும் நிர்மால்ய மூர்த்தியான விஸ்வக்சேனர் விக்கிரகமாக வடக்கில் எழுந்தருளியுள்ளார். கர்ப்பகிரக சுவற்றில் அருமையான ஓவியங்களைக் கண்டு இரசித்தோம். வெளியே வரும் போது அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெரும் பெருமாள் என்று ஒருவர் தமிழில் எழுதிய கட்டுரையை மாட்டியிருந்தார்கள் அதை படித்து இரசித்தோம். ஒருவரிருவர் ஓர் மூவரென நின்று உருவுகரந்து உள்ளுந்தோறும் தித்திப்பான் திருவமர்மார்வன் திருக்கடித்தானத்தை மருவியுறைகின்ற மாயப்பிரானே. (தி.வா 8-6-3) நம்மாழ்வார் ஒருவர் இருவர் ஓர் மூவரென உருப்புகுந்த மூன்று ரூபங்களில் சேவை சாதிக்கும் பெரிய பிராட்டியை தனது மார்பில் கொண்ட திருக்கடித்தானத்துப் அற்புதன் தான் அந்தர்யாமியாக தன் உள்ளத்திலும் எழுந்தருளியுள்ளார் என்று பாடுகின்றார். இவ்வாலயத்தில் வலம் வரும் போது பன்னீர் தெளித்துக்கொண்டே வலம் வரும் வழக்கம் உள்ளது. இத்தலத்தில் பெருமாள் ஆழ்வாருக்கு காட்டிய தன்மை “செய் நன்றி அறிதல்” ஆகும். பெருமாள் தன் நெஞ்சில் வந்து குடி கொள்ள வேண்டும் என்று “ஒரு நாள் காண வாராயோ” என்று ஆழ்வார் வேண்டுகிறார். அதற்காக பெருமாள் திருகடித்தானத்தில் வந்து முதலில் நின்றாராம். பின்னர் ஆழ்வார் இங்கு வந்தபோது அவர் நெஞ்சு நிறையப் புகுந்தாராம். ஆழ்வார் நெஞ்சில் புகுவதற்கு முன் இங்கு நின்றதால் அந்நன்றியை மறக்காமல் இன்றும் இங்கு கோவில் கொண்டுள்ளதாக பெரியோர்கள் கூறுவர். இதை “ஸாத்ய ஹ்ருதிஸ்தனாயும் ஸாதநமொருக்கடுக்கும் க்ருதஜ்ஞதா கந்தம் தாயப்பதியிலே” என்று ஆச்சார்யஹ்ருதயத்தில் கூறியுள்ளது. காணவிரும்புமென்கண் கையும் தொழ விரும்பும் பூணவிரும்புமென்தன் புன்தலைதான் – வாணன் திருக்குஅடித்தான், நத்தான், திகிரியான், தண்டான் திருக்கடித்தானத்தைச் சென்று. (நூ.தி 70 ) பொருள்: வாணாசுரனது மாறுபாட்டை ஒழித்தவனும், சங்கம், சக்கரம், கதை ஏந்தியவனுமாகிய திருக்கடித்தானம் என்னும் திருப்பதியில் எழுந்தருளியுள்ள திருமாலைப் போய் அடைந்து எனது கண்கள் தரிசிப்பதற்கு ஆசை கொள்ளும்; கைகளும் கூப்பி வணங்குவதற்கு விரும்பும்; எனது இழிவான தலையும் அவரது திருவடி மலர்களை சூடிக்கொள்வதற்கு விரும்பும் என்று திவ்யக்கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார். “ஸ்ரீகடிஸ்தான க்ஷேத்ரே ஸ்ரீபூதீர்த்த புஷ்கரணி தடே புண்யகோடி விமானச்சாயாயாம் ஸ்திதாய பூர்வாபிமுகாய ஸ்ரீமதே கல்பகவல்லி சமேத ஸ்ரீஅம்ருத நாராயண(அற்புத நாராயண) பரப்ரஹ்மணே நம:” என்னும் தியான ஸ்லோகத்தை ஜபித்துக்கொண்ட திருக்கடித்தானத்தில் அற்புதனையும் கற்பகத்தையும் திவ்யமாக சேவித்தபின் திருவாழ் மார்பனை தரிசிக்க திருவல்லா கிளம்பினோம். அத்தியாயம் – 8 திருவல்லவாழ் – திருவாழ்மார்பன் [] திருவல்லவாழ் என்று ஆழ்வார்களால் மங்கலாசாசனம் செய்யப்பட்ட பிராட்டியாரின் பெயரால் அழைக்கப்படும் இந்த “வல்லப க்ஷேத்திரம்” தற்போது திருவல்லா என்றழைக்கப்படுகின்றது. இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் கருட புராணம் மற்றும் மத்ஸ்ய புராணத்தில் உள்ளன. திருமங்கையாழ்வார் 11 பாசுரங்களால் பல்லாண்டு பாடிய ஒரே மலைநாட்டு திவ்யதேசம் இது. இத்தலத்துப் பெயரைச் சொன்னாலேயே தவறாது நற்பேறு அளித்திடும் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயம் என்று கூறுகிறார் மங்கை மன்னன். கொச்சி எர்ணாகுளம் இரயில் மார்க்கத்தில் கோட்டயத்தில் இருந்து விரைவு தொடர்வண்டி மூலம் 15 நிமிடத்தில் நாம் திருவல்லா தொடர்வண்டி நிலையத்தை அடையலாம். பெரிய ஊர் என்பதால் இவ்வூரில் தங்கும் வசதிகளும் உள்ளன. திருவல்லா அல்லது கோட்டயத்தில் இருந்து ஆட்டோ அல்லது கார் மூலம் இந்த ஆறு திவ்யதேசங்களையும் சேவிக்க முடியும். ஆலயத்திற்கு செல்லும் போதே திருமலை சுவாமிகள் இத்தலத்து பெருமாள் மிகவும் அழகானவர் என்பதால் 1968 முன்பு வரை பெண்கள் பெருமாளை உள்ளே சென்று சேவிக்க அனுமதிக்கப்படவில்லை என்று பெருமாளின் வைபவத்தைக் கூறினார். திருவாழ் மார்பன், ஸ்ரீவல்லபன், அலங்காரப்பிரான், அலங்காரத் தேவன், கோலப்பிரான் என்று அழைத்து மகிழ்கின்றனர் பக்தர்கள். மற்றொரு மலைநாட்டு திவ்யதேசமான திருவண்பரிசாரத்து எம்பெருமானுக்கும் திருவாழ்மார்பன் என்று திருநாமம். இவ்வளவு அழகான பெருமாள் இங்கு வந்து கோவில் கொண்டதற்கான ஒரு சுவையான கதை உள்ளது அது என்ன என்று அறிந்து கொள்ளலாமா அன்பர்களே?. துவாபர யுகத்தில் விஸ்வகர்மாவால் வடிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் ஆராதித்த இம்மூர்த்தியை பின்னர் அவர் தனது சாரதியான சாத்யகியிடம் அளித்தார். அவர் பின்னர் இம்மூர்த்தியை கருடபகவானிடம் அளித்தார். கருடபகவான் பிறகு இவ்விக்கிரகத்தை நேத்ரவதி ஆற்றில் மறைத்து வைத்தார். சுமார் 3000 ஆண்டுகள் பெருமாள் ஆற்றில் இருந்தார். இக்கலியுகத்தில் பெருமாள் சேரமான் பெருமாள் மனைவி செருந்தேவியின் கனவில் தோன்றித் தான் இருக்கும் இடத்தை குறிப்பால் உணர்த்தினார். பெருமாளை தேடும் பணியில் போத்திகளோடு துளுபிராமணர்களும் இணைந்தனர். இருவருக்குமாக பெருமாள் கிடைத்தார். பின்னர் அவரை இங்கு மணி மாலா ஆற்றின் கரையில் பிரதிஷ்டை செய்தனர். செருந்தேவி பின்னர் கோவிலை கட்டினார். எனவே மற்ற கேரள ஆலயங்கள் போல அல்லாமல் இவ்வாலயத்தில் வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன என்பது சிறப்பு. [] இனி பெருமாளுக்கு திருவாழ் மார்பன் என்னும் திருநாமம் எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் காணலாமா? பல மலைநாட்டு திவ்யதேசங்களின் ஐதீகங்கள் ஏகாதசி விரத மகிமையை பகர்வதைப் போலவே இத்திவ்யதேசத்தின் ஐதீகமும் அமைந்துள்ளது. சங்கரமங்கலத்தம்மை என்றொரு பதிவிரதை தன் கணவனுக்கு பணிவிடைகள் செய்த பின் புஷ்ப தோட்டம் உண்டாக்கி, மலர் மாலைகள் தொடுத்து பெருமாளுக்கு சமர்பித்து வந்தார். அவருக்கு பிள்ளை பேறு இல்லை என்னும் ஒரு பெரிய குறை இருந்தது. பின்னர் இவர் பெரியவர்களிடம் வேண்ட அவர்களும், எவ்வாறு அதிதி ஏகாதசி விரதம் அனுஷ்டித்து பெருமாளையே மகனாக பெற்றாள் அது போலவே நீயும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து வர புத்திர பாக்கியம் கிட்டும் என்று அருளினர். சங்கரமங்கலத்தம்மையும் அவ்வாறே ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க ஆரம்பித்தாள். விரதம் முடித்து பாரணையின் போது ஒரு பிரம்மச்சாரிக்கு உணவு அளித்த பின்னரே உணவு உண்ணும் வழக்கத்தை கொண்டிருந்தார். அதே சமயம் தோலகாசுரன் என்ற அசுரனும் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு துன்பம் விளைவித்து வந்தான். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல அம்மைக்கு அருளவும், அசுரனுக்கு முடிவு கட்டவும் முடிவு செய்த பெருமாள் ஒரு துவாதசி தினத்தன்று ஒரு பிரம்மச்சாரி கோலத்தில் அம்மையின் இல்லத்திற்கு எழுந்தருளினார். அம்மையும் தன் இல்லத்திற்கு வந்த அதிதியை இன்முகத்துடன் வரவேற்று உணவு உண்ணுமாறு வேண்டினாள். அதற்கு அப்பிரம்மச்சாரி தான் போய் முதலில் நீராடி விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். வந்திருப்பது யார் என்று அறியாமல் அம்மையும் அசுரனிடம் கவனமாக இருந்து விரைவில் நீராடி வருமாறு அறிவுரை கூறி அனுப்பினாள். வெளியே சென்ற பெருமாள் தனது சுதர்சன சக்கரத்தினை ஏவினார், சுதர்சனமும் தோலகாசுரனுடைய தலை, கை, கால்களை துண்டித்து பின் ஒரு தீர்த்தத்தில் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு பெருமாளின் திருக்கரத்திற்கு வந்து சேர்ந்தது. பின்னர் பிரம்மச்சாரி சங்கரமங்கலத்தம்மையின் இல்லத்திற்கு எழுந்தருளி தோலகாசுரன் மாண்டான் என்றார். ஆச்சரியத்துடன் பிரம்மச்சாரி யார்? என்று சங்கரமங்கலத்தம்மை உற்று நோக்கினார். வாமன அவதாரத்தில் அகலகில்லேன் இறையுமென்று மார்பில் உறையும் பிராட்டியை மான் தோலால் மறைத்து மாவலியிடம் மூன்றடி மண் யாசகமாக கேட்க வந்தாரோ அது போலவே இன்றும் மான் தோலால் தனது மார்பை பிரம்மச்சாரி மறைத்திருந்தாலும் அத்திருமார்பில் உறையும் பிராட்டியை அம்மை கண்டார். “திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்” என்று பேயாழ்வார் பாடியபடி பெரிய பிராட்டியாரை சேவித்த அம்மை வந்திருப்பது திருவாழ்மார்பனே என்பதை உணர்ந்து அவரைச் சரணடைந்தாள். பிரம்மாச்சாரி பசியுடன் இருப்பாரே என்று ஒரு கமுகு இலையில் உப்பு மாங்காயும் ததியோன்னமும் அளித்தார். பெருமாளும் அவளுக்கு வைகுண்ட பிராப்தி அளித்தார். எனவே பெருமாளும் திருவாழ்மார்பன் என்னும் திருநாமம் பெற்றார். வடமொழியில் ஸ்ரீவல்லபன் என்றழைக்கப்படுகிறார். இன்றும் பெருமாளுக்கு நைவேத்யம் செய்வதற்கு முன்னால் அன்று சங்கரமங்கலத்தம்மை பிரம்மச்சாரியாக வந்த பெருமாளுக்குப் படைத்தது போல ஒரு பிராம்மணருக்கு கமுகு இலையில் உப்பு மாங்காய் ததியோன்னம் படைக்கின்றனர். தோலாசுரனை துண்டாடிய சுதர்சனருக்கும் ஒரு தனிச் சன்னதி உள்ளது. இத்தலத்தின் இன்னொரு சுவையான வரலாறு கண்டாகர்ணன் முக்தி பெற்ற வரலாறு ஆகும். கண்டா கர்ணன் தீவிர சிவ பக்தன், குபேரனின் பரிசாரகன், தன் காதுகளில் சிவநாமத்தை தவிர வேறு எந்தச் சப்தமும் விழக்கூடாது என்பதற்காக காதுகளில் மணியை மாட்டிக்கொண்டு திரிந்தான். வேறு சப்தம் கேட்கும் போது அம்மணியை ஆட்டிக்கொள்வான். அவன் சிவபெருமானிடம் தனக்கு முக்தி வேண்டும் என்று வேண்டிய போது சிவபெருமானும் முக்தியை ஜனார்த்தனனே வழங்க முடியும் எனவே நீ திருவல்லவாழ் சென்று தவம் செய் என்று பணித்தார். அவனும் அவ்வாறே இத்தலம் வந்து தவம் செய்து முக்தியடைந்தான். இன்று பத்ரிநாத் திவ்யதேசத்தில் கண்டாகர்ணன் க்ஷேத்திர பாலனாக விளங்குகின்றான். பத்ரிநாத் யாத்திரை இவனைக் தரிசித்த பின்னரே நிறைவு பெறுகின்றது என்பது ஐதீகம். பத்ரிநாத்திற்கு அருகில் உள்ள மானா கிராமத்தில் கண்டாகர்ணனுக்கென்று தனி ஆலயம் உள்ளது. திருமங்கையாழ்வார் இத்தலத்தை 11 பாசுரங்கள் கொண்ட பதிகத்தால் மங்கலாசாசனம் செய்துள்ளார் என்பது ஒரு சிறப்பு. அதில் ஒரு பாசுரம் உருவின் ஆர்பிறவி சேர் ஊன்பொதி அரம்பு தோல் குரம்பையுள் புக்கு அருவி நோய் செய்து இன்று ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல் திருவின் ஆர வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும் மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே. (பெ.தி 9-7-6)  பொருள்: நெஞ்சே! சூட்சும சரீரத்தோடு கூடியிருந்து பிறந்து, மாமிசத்தைப் பொதிந்து கொண்டு கிடக்கின்ற நரம்பும் தோலுமாகிற குடிசையின் (மனித உடல்) உள்ளே ஐம்பொறிகளானவை புகுந்து துன்புறுத்தி வருத்திக் கொண்டு குடியிருப்பதற்கு நீ பயந்தாய் என்றால், ஞானச்செல்வம் நிறைந்த நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும், ஐந்து அக்னிகளையும், ஐந்து வேள்விகளையும் பொருந்தி இருப்பவர்கள் வாழும் திருவல்லவாழ் என்னும் திருப்பதியை அடைவாயாக என்று பல்லாண்டு பாடிய  இந்த  திருவல்லவாழ் திவ்யதேசத்தின்  மூலவர் : ஸ்ரீவல்லபன், கோலப்பிரான், திருவாழ்மார்பன், திருவல்லபன் தாயார் : செல்வத்திருக்கொழுந்து நாச்சியார், வாஸ்தல்யவல்லி தீர்த்தம்: பம்பை, கண்டா கர்ண தீர்த்தம் (சக்ர தீர்த்தம்) விமானம் : சதுரங்க கோல விமானம். தனி சன்னதி: சுதர்சனாழ்வார் நம்மாழ்வார் பராங்குச நாயகியாக, சேமங்கொள் தென்னகர் திருவல்லாவாழ் திருவாழ்மார்பனிடம் சரணாகதி அடையும் பாவத்தில் இவரை மங்கலாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வார் பெருமாளிடம் சரணாகதி செய்த தலங்களுள் ஒன்று. நாயகி பாவத்தில் பாடப்படுகின்ற பாசுரங்கள் தோழி, தாயார், மகள் என்று மூன்று வகைப்படும். இவற்றில் தோழிப்பாசுரங்கள் - “ஸம்பத்திலுணர்த்தியாகிற ப்ரஜ்ஞாவஸ்தைக்குத் தோழி என்று பேர்” என்றபடி, நாயக நாயகிகளை இணக்கிச் சேர்க்கும் தோழி அவஸ்தை திருமந்திரத்தில் ப்ரணவம் (ஓம்) என்றும், தாய்ப்பாசுரங்கள் – “உபாயத்தில் துணிவாகிற ப்ரஜ்ஞாவஸ்தைக்குத் தாயாரென்று பேர்” என்றபடி, தாயானவள் பெற்று வளர்த்த பெண்பிள்ளை வளர்ந்து தலைவனிடம் செல்ல புறப்படுவதை, குல மரியாதைக்கு தகாது என்று தடுக்கும் தாய் அவஸ்தை உபயாத்யவ்ஸாஸாயம் நம: என்றும். தலைவிப் பாசுரங்கள் – பலந்தில் பதற்றமாகின்ற ப்ரஜ்ஞாவஸ்தைக்கு மகளென்று பேர் – தலை மகள் தலைவனுடைய நற்குணங்களால் ஈர்க்கப்பட்டு குல மரியாதையையும் பாராமல் அவன் கிட்டியல்லாது தரிக்கமாட்டேன் என்று கூறுவதால் மகள் அவஸ்தை நாராயண என்னும் பதமாகின்றது. மூன்றும் சேர்ந்தது திருமந்திரம். பெரிய ஆலயம் மற்ற ஆலயங்களில் இருந்து சிறிது வித்தியாசமாக கோவிலுக்கு முன்னால் வெளியே ஒரு கொடி மரம். “ஸ்ரீவல்லபாய நமஹ” என்ற பெயர்ப் பலகை நம்மை வரவேற்கின்றது. ஒரு முன் மண்டபம், அம்மண்டபத்தை அழகிய ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. தசாவதார ஓவியங்களும், கதகளி சிற்பங்களும் கூரையில் ஆயிரம் இதழ் தாமரை சுதை சிற்பமும் மிகவும் அருமையாக அமைத்துள்ளனர். இத்தலத்தின் சிறப்பு வழிபாடு கதகளி பூஜை ஆகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தினந்தோறும் கதகளி பூஜை செய்கின்றனர். அக்கதகளி ஆட்டம் இம்மண்டபத்தில் நடைபெறுகின்றது. இம்மண்டபத்தின் முகப்பில் திருவாழ்மார்பன் நின்ற கோலத்தில் கருவறையில் சேவை சாதிப்பது போலவே சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.  கீழே “ஓம் ஸ்ரீவல்லபாய நம:” என்று மலையாளத்தில் சுதையினால் அமைத்துள்ளனர். 12அடி மதிள் நான்கு பக்கமும் வாயில்கள் கேரள பாணி எளிமையான கோபுரங்கள், வடக்கு வாயில் எப்போதும் மூடப்பட்டிருக்கின்றது ரிஷபமாதம் (ஆனி) உத்திரத்தன்று மட்டுமே திறக்கப்படுகின்றதாம். அன்றைய தினம் அருகில் உள்ள ஊர்களான காவில், படப்பாடு, ஆலம்துரா ஆகிய மூன்று ஆலயத்தின் தேவிகள் இவ்வாலயத்திற்கு இவ்வடக்கு வாசல் வழியாக எழுந்தருளி பெருமாளின் சீர்களை ஏற்றுக்கொண்டு மறு நாள் திரும்பிச் செல்கின்றனர்.   [] முன் மண்டபத்தைத்தாண்டி உள்ளே நுழைந்ததும் நிமிர்த்தி வைத்த நிலையில் சங்கு ஒன்று சுதைச் சிற்பமாகக் காணப்படுகிறது. அச்சங்கைச் சுற்றி, ‘ஓம் சங்கபதே நம:, ஓம் விஷ்ணுபதே நம:’ என்று மலையாளத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். இப்பகுதியின் முன் மண்டபத்தில் திருமால் அனந்த சயனனாக" எழிலாக சேவைச் சாதிக்கின்றார்.  இடது பக்கம் கலா மண்டபம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது, ஆன்மிகக் கலை நிகழ்ச்சிகள் இந்தப் பெரிய மண்டபத்தில் குறிப்பிட்ட விசேஷ நாட்களில் நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். சுற்றம்பலத்தில் விளக்கு மாடமும் இத்தலத்தில் உள்ளது. இத்தலத்திற்கே சிறப்பானது மூன்றடுக்கு கருட மடம் ஆகும், தனியாக தங்கக் கவசம் பூண்ட கொடிமரமும் தற்போது உள்ளது. கருட கம்பத்தை செருந்தேவி பெருமாள் கனவில் வந்து கூறியபடி முதலில் பிரதிஷ்டை செய்தாராம், அதில் பறக்கும் நிலையில் கருடன் வந்து அமர்ந்ததால் இது கருட கம்பமாக மாறியது. சில காலத்திற்கு பிறகு இக்கம்பம் சாய ஆரம்பித்ததாம் பின்னர் கீழே உள்ள ஆதார மடங்கள் எழுப்பப்பட்டன. கீழ் மட்டத்தில் அருமையான ஒரு கருடனின் ஓவியம் உள்ளது. “பொரு சிறை உவந்து புள் ஏறும்” என்று ஆழ்வார் மங்கலாசாசனம் செய்தபடி, கம்பத்தின் உச்சியில் ஒரு கரத்தை நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டு, ஒரு கரத்தை கீழே வைத்துக்கொண்டு, இரு சிறகுகளையும் விரித்துக் கொண்டு, பெருமாளைத் தோளில் தாங்கிய நிலையில் வானத்தைப் பார்த்து பறக்கத் தயாராக உள்ள கருடனின் சிலை அருமையாக அமைந்துள்ளது. காலை சூரிய ஒளியில் தங்கத்தில் மின்னும் கருடாழ்வாரை சேவிப்பதே ஒரு அருமையான அனுபவம். கருட கம்பத்திற்கு சிறிது முன்னே 60 அடி உயர புதுக் கொடி மரம் உள்ளது, கொடி மரத்திற்கு தங்கக் கவசம் சார்த்தியுள்ளனர், பள பளவென்று அதுவும் மின்னுகின்றது. கொடிமரத்தை அடுத்து மிகப் பெரிய பலிபீடம். அருகே துலாபாரம் காணிக்கைப் பகுதி முன் மண்டபத்தின் அருகே இவ்வாலயத்திற்கு சேவை செய்த ஒரு யானையின் ஆளுயர படத்தை வைத்துள்ளனர். வெளிப்பிரகாரத்தை வலம் வரும் போது பின் பக்கம் யானையை குளிப்பாட்டிக்கொண்டிருந்தனர். மூன்று கற்களை இப்பிரகாரத்தில் காணலாம், ரிஷிகள் பேசிக்கொண்டிருக்கிறனர் என்று கூறினார்கள். வழக்கம் போல் கணபதி, சாஸ்தா, பகவதி சன்னதிகளுடன் வராஹ மூர்த்தி சன்னதிகளுடன், மேற்கூரையில்லாத ‘குறையப்ப சாமி’ அருளும் சன்னதியும் அமைந்துள்ளது. அது என்ன குறையப்ப சாமி? பக்தர்களின் குறைகளை எல்லாம் களையச் சொல்லி திருவாழ்மார்பனுக்கு சிபாரிசு செய்பவராம்!, மற்றும் யக்ஷிகள், வடக்கும் தேவர், தக்ஷிணாமூர்த்தி சன்னதிகளும் உள்ளன. வட்டவடிவ ஸ்ரீகோவில் அதில் பாவை விளக்குகள் எழிலாக தொங்குகின்றன. நமஸ்கார மண்டபத்தின் கூரையின் உள் பக்கத்தில் அருமையாக நவக்கிரங்களின் மரச்சிற்பங்களைக் காணலாம். ஸ்ரீகோவில் உயரமாக அமைந்திருக்கின்றது. பெருமாள் சதுர்புஜங்களுடன் சுமார் 7 அடி உயரத்தில் மேற்திருக்கரங்களில் பிரயோக சக்கரம், சங்கம் தாங்கி கீழ் வலத்திருக்கரத்தில் பத்மம், இடதிருக்கரம் கடி ஹஸ்தமாக, கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்ற கோலத்தில் திருவாழ் மார்பனாக எழிலாக சேவை சாதிக்கின்றார். அருகில் சென்று சேவித்தால் திருமுகத்தையும், தூரத்தில் இருந்து சேவித்தால் திருவடிகளையும் சேவிக்கும் படியான அற்புதமான அமைப்பு. [] கருடகம்பம் மார்கழி திருவாதிரை மற்றும் சித்திரை விஷு அன்று பெருமாளுடைய மார்பு தரிசனம் மிகவும் விசேஷம் அன்றைய தோலாகாசுரனுடன் பெருமாள் போரிட்ட மான் தோலுடன் வேடன் வடிவத்தில் பெருமாளை சேவிக்கலாம். ஸ்ரீகோவிலின் முன்பக்கம் பித்தளைக் கவசம் சார்த்தியுள்ளனர். ஸ்ரீகோவில் வாயிலின் 8 அடி உயரத்தில் ஒரு பக்கம் சங்கமும் ஒரு பக்கம் சக்கரமும் எழிலாக அமைத்துள்ளனர். கருவறைச் சுவற்றில் விஷ்ணுவின் பல கோலங்களும், கிருஷ்ணனின் லீலைகளும் ஓவியங்களாக மிளிர்கின்றன. பூஜையின் ஓர் அங்கமாக மஹாவிஷ்ணுவின் புகழை மேளதாளத்துடன் சிலர் பாடிக்கொண்டிருந்தனர். அடியோங்கள் சென்ற சமயம் பெருமாளின் திருமஞ்சனம் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. ஸ்ரீகோவிலின் பின்புறம் தோலகாசுரனை வீழ்த்திய சுதர்சனாழ்வாருக்கு தனி சன்னதியுள்ளது. இவர் எட்டு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கதை, பத்மம், பாசம், அங்குசம், முசலம், வில் ஏந்தி சேவை சாதிக்கின்றார். இச்சன்னதியில் சந்தனத்துடன் விபூதிப் பிரசாதமும் தருகின்றனர். இச்சுற்றில் விளக்கு ஏந்திய பாவைகள் சிற்பங்களை எழிலாக அமைத்துள்ளனர். ஆறு காலங்களில் முதல் இரண்டு காலங்களில் பிரம்மச்சாரியாகவும், அடுத்த இரண்டு காலங்களில் கிருஹஸ்தராகவும், நிறை இரண்டு காலங்களில் காவி முண்டு துளசி மாலையுடன் சந்நியாசியாகவும் வணங்கப்படுகிறார். வியாசரும், துர்வாசரும் வந்து தங்கி பெருமாளை வழிபட்டிருக்கிறார்கள். இவர்களில் துர்வாசர் பிரதிஷ்டை செய்த மூலவர் திருவாழ்மார்பன் என்கிறார்கள் ஒரு சாரார். இரவு பள்ளியறை பூஜைக்குப் பிறகு இன்றும் துர்வாசர் வந்து பூஜை செய்கின்றார் என்பது ஐதீகம், சங்க நாதம் மேள நாதம் கேட்கின்றதாம். துர்வாசர் பெருமாளுக்கு பன்னிரெண்டாயிரம் வாழைப் பழங்கள் சமர்ப்பித்து வழிபட்டாராம். எனவே ஸ்ரீவல்லபனுக்கு பந்தீராயிரம் என்ற வழிபாடு பக்தர்களால் சிறப்பாக செய்யப்படுகின்றது. அதாவது 12001 வாழைக்காய்களை குலை குலையாக வாங்கி வேள்வி செய்து அவ்வேள்வியில் பழுக்க வைத்து மேளதாளத்துடன் புதுக்கூடைகளில் சுமந்து வந்து பெருமாளுக்கு சமர்ப்பிக்கின்றனர். பாதிப்பழம் நிவேதனம் ஆகும் மீதி பிரசாதமாக விநியோகிக்கப்படுகின்றது. [] மாசி மாதத்தில் பிரம்மோற்சவத்தின் போது ஒன்பதாம் திருநாள் அன்று, தோலகாசுரனை பெருமாள் அன்று சம்ஹாரம் செய்ததை குறிக்கும் வகையில் பள்ளி வேட்டை உற்சவமும், பத்தாம் திருநாள் பூச நட்சத்திரத்தன்று இரத்தம் தோய்ந்த சுதர்சன சக்கரத்தை கழுவும் ஆராட்டு உற்சவமும் மிக சிறப்பாக நடைபெறுகின்றது. பெருமாள் அன்று தாளம் போட வைக்கும் செண்டை மேளத்துடன் திரும்பி வருகி்றார். கழல்வளைபூரிப்பயாம்கண்டு கைத்தொழக்கூடுங்கொலோ? குழலென்னயாழுமென்னக் குளிர்சோலையுள்தேனருந்தி மழலைவரிவண்டுகளிசைபாடும் திருவல்லவாழ் சுழலின் மலிசக்கரப்பெருமானது தொல்லருளே (தி.வா 5-9-9) பொருள்: திருவல்லவாழ் என்னும் திருத்தலத்தில், இளமையான வண்டுகள் குளிர்ந்த  சோலையில் தேனைக் குடித்துக் குழலைப் போலவும் யாழைப் போலவும், இசைக்கின்றன. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற  சுழலின் மலி “சக்கரப்பெருமானுடைய தொல்” அருளால், சுழலுகின்ற வளையல்கள் தங்கும்படியாக நாம் கண்டு தொழுவதற்குக் கூடுமோ?  என்று பராகுங்ச நாயகியாக எம்பெருமானின் கிருபையை வேண்டுகிறார் சரணமடைந்த நம்மாழ்வார்.  எனவே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் "மெலிவிலும் சேமங்கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்" என்று அருளியுள்ளார். ஆழ்வார் பெருமாளை அடைய வேண்டும் என்ற ஏக்கத்தில்; மிகவும் மெலிந்து விட்டதால், ஊருக்குள் வரமுடியாமல் வெளியில் உள்ள சோலையில் இருந்து கொண்டே நாயகி பாவத்தில் பெருமாளிடம் சரணாகதி அடைகின்றார். பெருமாளும் அதை ஏற்றுக்கொண்டு ஆழ்வாருக்கு அருள் பாலிக்கின்றார். ஆகவே பெருமாள் ஆழ்வாருக்கு இத்தலத்தில் காட்டிய கல்யாண குணம் தொல்லருள் என்னும் கிருபையாகும். தந்தைதாய்மக்களே சுற்றமென்றுஉற்றவர்பற்றிநின்ற பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ பழியெனக்கருதினாயேல் அந்தமாய் ஆதியாய் ஆதிக்குமாதியாய் ஆயனாய மைந்தனார் வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவு நெஞ்சே! ((பெ.தி 9-7-1) பொருள்: மனமே! தந்தை என்றும், தாய் என்றும், பிள்ளைகளென்றும், சுற்றங்களென்றும் மற்றும் உறவினர்களென்றும், பற்றிக்கொண்டிருக்கின்ற சம்சார பந்தம் வாய்ந்த வாழ்வை நீ வெறுத்து இந்த வாழ்வு பழியானது என்று நினைப்பாயாகில், பிரளயத்தில் முடிவுக்கு இடமாயும், உற்பத்திக்கு இடமாயும், காரணாவஸ்தையிலுள்ள உயிர்களுக்குத் தலைவனாயும், கோபால கிருஷ்ணனாயும் அவதரித்துள்ளவனான எம்பெருமானுடைய திருவல்லவாழ்  என்னும் திருப்பதியை வாயால் மொழிவதுடன் வலிமையாக நெஞ்சினாலும் பொருந்துவாயாக  என்று  தன்    நெஞ்சுக்கு   அறிவுறுத்தும்   விதமாக  திருமங்கையாழ்வார்  பத்துப்பாடல்கள் கொண்ட ஒரு முழுப்பதிகத்தால் இந்த மலை நாட்டு திவ்விய தேசத்தை மங்கலாசாசனம் செய்துள்ளார் என்பது ஒரு தனி சிறப்பு ஆகும்.   வைணவத்தின் தனி சிறப்பே சரணாகதி தத்துவம்தான் அதை அனைத்து ஆழ்வார்களும் தமது பாசுரங்களில் பாடியுள்ளனர். நம்மாழ்வார் முதலில் நாங்குனேரியில் தெய்வநாயகனிடம் மோட்சம் வேண்டி சரணாகதி செய்கின்றார், அடுத்து திருக்குடந்தையில் ஆராவமுதனிடம் சரணாகதி செய்கின்றார் மூன்றாவதாக திருவல்லவாழில் திருவாழ்மார்பனிடம் சரணாகதி அடைகிறார். எனவே நம்மாழ்வாரின் மோக்ஷ நாட்டில் இது மூன்றாவது தலமாகும். அடுத்து விவபாவதாரமான கிருஷ்ணரிடம் சரணமடைகின்றார். நிறைவாக திருமலையப்பனிடம் “அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா!” என்று தாயாரை முன்னிட்டு சரணமடைய பெருமாள் அவரது சரணாகதியை ஏற்று அருள் பாலிக்கின்றார் என்று பெரியோர்கள் கூறுவர். உகந்தார்க்கு எஞ்ஞான்றும் உளன் ஆய், உகவாது இகந்தார்க்கு எஞ்ஞான்றும் இலன் ஆய் – திகழ்ந்திட்டு, அருஅல்ல, வாழ்உருவம் அல்ல, என நின்றான் திருவல்ல வாழ் உறையும் தே. ( நூ. தி 66 ) பொருள்: திருவல்லவாழ் என்னும் திருப்பதியில் உறைகின்ற திருமால் தன்னை விரும்பும் அடியார்களுக்கு எக்காலத்தும் உள்ளவனாகியும், தன்னை விரும்பாதவர்களுக்கு எக்காலத்தும் இல்லாதவனாகியும், ‘அருவப்பொருளும் ஆகான்; கண்களுக்குப் புலப்படும் உருவப் பொருளும் ஆகான்’ என்று கூறுமாறு இருக்கின்றான் என்று திவ்யக்கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார். "ஸ்ரீவல்லப க்ஷேத்ரே பம்பா நதி தீரே கண்டாகர்ண புஷ்கரணி தடே, சதுரங்க கோல விமானச்சாயாயாம் ஸ்திதாய பூர்வாபிமுகாய ஸ்ரீமதே வாத்ஸல்யவல்லி, ப்ரேமவஸுபல்லவிதவல்லி (செல்வத்திருக்கொழுந்து நாச்சியார்) நாயிக சமேத சுந்தராய (கோலப்பிரான்) ஸ்ரீவல்லபாய பரப்ரஹ்மனே நம: என்ற தியான ஸ்லோகத்தை ஜபித்துக்கொண்டே திருவாழ்மார்பனிடம் சரணாகதி செய்து, பின்னர் நாரதருக்கும் மார்க்கண்டேயருக்கும் அருளிய கமலநாதனையும் கமலவல்லியையும் சேவிக்கத் திருவண்வண்டூர் புறப்பட்டோம். அத்தியாயம் – 9 திருவண்வண்டூர் – பாம்பணையப்பன் [] பஞ்ச பாண்டவர்களில் நகுலன் வழிபட்ட தலம், நாரதருக்கும், மார்க்கண்டேயருக்கும் பெருமாள் பிரத்யக்ஷம். கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையின் வடபால் அமைந்த தலம். எனவே நம்மாழ்வாரும் இத்திருப்பதியை “தேறுநீர் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்” என்று பல்லாண்டு பாடியுள்ளார். பாண்டவர்களில் நகுலன் புனர் நிர்மாணம் செய்து வழிபட்ட ஆலயம் என்பதால் பாண்டவர் ஊர் என்பதே வண்வண்டூர் என்று மருவி இருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது. திருவன் என்ற மலையாளச் சொல் திருமாலைக் குறிக்கின்றது எனவே திருவன்+உண்டு+ஊர் என்பதே திருவண்வண்டூர் ஆகியதாகவும் ஒரு கருத்து உள்ளது. செங்கண்ணூரிலிருந்து வடக்கே 6 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. தற்போது திருவமுண்டூர் என்றழைக்கப்படுகின்றது. எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இரயில் பாதையில் செங்கண்ணூரில் இறங்கி பின்னர் பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். தங்கும் வசதிகள் ஒன்றுமில்லை. திருவல்லாவில் இருந்து வந்தும் சேவிக்கலாம். இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மடவன்னங்காள்  விடலில் வேதவொலி முழங்கும் தண்திருவண்வண்டூர்  கடலின் மேனிப்பிரான் கணணனை நெடுமாலைக் கண்டு உடலம் நைந்து ஒருத்தி உருகுமென்று உணர்த்துமினே ( தி.வா.6-1-4 ) பொருள்: பிரிவு இல்லாத போகத்திலே மூழ்கிச் சேர்ந்து அனுபவிக்கின்ற இளமை பொருந்திய அன்னங்களே! குளிர்ந்த திருவண்வண்டூரில் பிரிதல் இல்லாத வேதத்தின் ஒலியானது  ஒலித்துக் கொண்டிருக்கும்; அங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான் கடல் போன்ற நிறத்தை உடையவன், உபகாரகன்; கண்ணபிரான்; அந்த நெடிய திருமாலைக் கண்டு ஒரு பெண்ணானவள் உடல் நிலைகுலைந்து உருகுகின்றாள் என்று உணர்த்துங்கோள் என்று நம்மாழ்வார்,  புருஷோத்தமான இராமன் ரக்ஷண தைர்யம் அதாவது தன்னை சரணடைந்தவர்களை காக்கும் உறுதி என்னும் தன் குணத்தை மறந்து தன்னை இரட்சிக்க மறந்து விட்டார் என்று பறவைகளையும் வண்டையும் தூது விடும் பாவத்தில் மங்கலாசாசனம் செய்த திருவண்வண்டூரின் மூலவர் - பாம்பணையப்பன், கமலநாதன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம். தாயார் - கமலவல்லி நாச்சியார். தீர்த்தம் - பம்பா தீர்த்தம். விமானம் - வேதாலய விமானம். ப்ரத்யக்ஷம் – நாரதர், மார்க்கண்டேயர். மூலவரின் திருநாமம் பாம்பணையப்பன், என்றாலும் பெருமாள் சதுர் புஜங்களுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பம்பையின் வடபால் அமைந்த ஆலயம் என்பதால் பம்பை அணை என்பதே பாம்பணையாக மருவியிருக்கலாம் என்றொரு கருத்து உண்டு. எனவே இத்தலம் “பம்போத்தர க்ஷேத்திரம்” என்றும் அழைக்கப்படுகின்றது. ஆதி சேஷனின் அரவணைப்புடன் அருள்பாலிப்பவர் என்பதால் இத்திருநாமம் என்பாரும் உண்டு. நம்மாழ்வார் இப்பெருமாளை பக்தர்களை இரட்சிக்க உறுதி கொண்ட புருஷோத்தமனாக, இராமனாக அனுபவிக்கின்றார். இவ்வாலயத்தின் தலவரலாறு: பிரம்மதேவர் சனகாதியர்கள் நால்வரையும் சிருஷ்டியை விருத்தி செய்வதற்காக படைத்தார், அவர்களுக்கு நாரதர் ஞானத்தை போதித்தார் எனவே அவர்கள் தவ வாழ்வை மேற்கொண்டனர், அதனால் பிரம்மதேவன் நாரதர் மேல் கோபம் கொண்டு “நீ எந்த இடத்திலும் நிலையாக இருக்க முடியாது” திரிலோக சஞ்சாரியாகக் கடவது என்று சாபமிட்டார். இதனால் நாரதர் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து, இறுதியில் இத்தலத்திற்கு வந்தார் அப்போது அவருக்கு ஒரு அமைதி கிட்டியது எனவே அவர் இத்தலத்தில் தங்கி நாராயணனை நோக்கி தவம் புரிந்தார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்தார். நாரதர் இரண்டு வரங்களை வேண்டினார். முதலாவது இத்தலத்திலேயே தான் இருக்க வேண்டும், இரண்டாவது தமக்கு தத்துவ ஞானம் உபதேசிப்பதே தொழிலாக வேண்டும்’ என்று வேண்ட, பகவானும் அவ்விரண்டு வரங்களையும் அளித்தார். பின்னர் நாரதர் மகாவிஷ்ணுவே பரதத்துவம் என்று நிறுத்தி, அவரை பூஜிக்கும் முறை, துதி முதலியனவற்றை பெருமாள் அருளியபடி இருபத்தைந்தாயிரம் கிரந்தங்களில் நாரதீய புராணத்தை எழுதியதாக தல புராணம் கூறுகின்றது. இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவரும் தவம் செய்து பிரளயம், ஜகத் சிருஷ்டி ஆகியவற்றை தரிசிக்க வேண்டும் என்று வேண்ட, கரார விந்தேந பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவஶயந்தம் வடஸ்ய பத்ரஸ்ய புடேஶயாநம் பாலம் முகுந்தம் ஸ்மராமி என்றபடி பிரளய காலத்தில் அனைத்து உலகங்களையும் தன் வயிற்றில் அடக்கி ஓர் ஆலிலையில் தனது தாமரைப் போன்ற திருப்பாதவிரலை தாமரைப்போன்ற திருக்கரத்தினால் தாங்கி விரலைச் சுவைத்த வண்ணம் பள்ளி கொள்ளும் அழகை பெருமாளின் திருமேனியில் காணும் பேறு பெற்றார். பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்திற்காக இந்தப் பகுதிக்கு வந்த போது, பாண்டவர்களில் ஒருவனான நகுலன் இங்கிருந்த கோவிலைக் கண்டு, அதனைப் புதுப்பித்து வழிபட்டு வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இந்தக் கோவிலை இங் கிருப்பவர்கள் ‘நகுலன் கோவில்’ என்றே அழைக்கின்றனர். இதேபோல், இத்தலம் அமைந்திருக்கும் பகுதி வண்டுகளும், அவை எழுப்பும் ஒலிகளும் நிறைந்த பகுதியாக இருந்ததால் ‘திருவண்வண்டூர்’ எனப்பெயர் பெற்றது என்றும் சொல்கிறார்கள். [][] ஆலயத்தை நெருங்கியவுடன் அழகிய அலங்கார முகப்பு வாசல் நம்மை வரவேற்கின்றது. உச்சியில்  காளிங்க நர்த்தன கிருஷ்ணன். அதன் கீழே பெருமாள் கருடன் மேல் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி கஜேந்திரனுக்கு மோக்ஷம் அளிக்கும் அருமையான சுதை சிற்பம். இரண்டு பக்கங்களிலும்  நாரதரும், தும்புருவும் இன்னிசை இசைக்கின்றனர். அடுத்து இன்னும் கீழே  ஹயக்ரீவர். இரு பக்கங்களிலும் இரண்டிரண்டு  அவதாரங்கள். மச்சம்,  கூர்மம் ஒரு பக்கமும், நரசிம்மரும், வாமனரும். கீழே கை கூப்பிய நிலையில் கருடனும் அனுமனும், மேலும் துவார பாலகர்களும் உள்ளனர் இவ்வாறு முகப்பு வாசல் அருமையாக உள்ளது.  காளிங்கனின்  உடல் வளைந்து நெளிந்து போய்,  வால் நாரதர் மாடத்துக்கு மேல் எட்டிப் பார்ப்பது அருமையாக உள்ளது. கதவைக் கடந்து அப்பக்கம் போய் முகப்பு வாசலைத் திரும்பிப் பார்த்தால், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணன், வராக அவதாரங்களும்,  கீதோபதேச காட்சி, பிரம்மா, ஐயப்பன் என்று அழகோ அழகு! தூண்களுடன் சிறிதாக இரண்டு திண்ணைகள்  கதவுக்கு இருபுறமும் மிகவும் அருமை. பெரிய கோவில் என்றாலும் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றது. அன்னதான மண்டபத்தில் தினமும் மதிய வேளையில் அன்னதானம் நடைபெறுகின்றது. வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீகிருஷ்ணன் தனிச் சன்னிதியில் அழகாக கொலுவிருக்கிறார். கையில் வெண்ணெயுடன் காட்சி தரும் இப்பாலகிருஷ்ணனை, நவநீத கிருஷ்ணன் என்றழைத்துக் கொண்டாடுகிறார்கள். இச்சன்னிதி அமைந்திருக்கும் மண்டபத்தில், மேலே சிறு சிறு தொட்டில்களும், மணிகளும் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. அடுத்து ஒரு உயரமான பீடத்தில் நாக நாராயணன், நாகராஜன், நாக யக்ஷி ஆகியோர் அருள் பாலிக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய மஞ்சள் பொடி தூவி, பக்தர்கள் தம் பக்தியைத் தெரிவிக்கிறார்கள். அர்ச்சகர், அவர்கள் சார்பில் அர்ச்சனை செய்து, மஞ்சள் பொடியையே பிரசாதமாக தருகிறார்.  வெளிப் பிராகாரத்தில் கணபதிக்கென்று சிறு சன்னதி. அடுத்து கோசாலை கிருஷ்ணர். இவ்விக்கிரகம், இத்தலதீர்த்தத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாம். ஒரு சிறு கிணறாக, கோயிலுக்குப் பின்னால் விளங்குகிறது இத்தீர்த்தம். அருகில் பிரமாண்டமான அரசமரம்  நிழல் தந்து குளிர்விக்கிறது; பிராணவாயு தந்து உயிருக்குப் புத்துணர்வு ஊட்டுகிறது. சற்றுத் தொலைவில் சிவன், சாஸ்தா சந்நதி. தெற்கில் பகவதியின் சன்னதி உள்ளது. [] சுட்டு விளக்குகளுடன் இரண்டடுக்கு விமானம் நமஸ்கார மண்டபத்தில் அருமையாக அனந்த பத்மநாப சுவாமியின் மர சிற்பம் வர்ணத்துடன் அருமையாக உள்ளது. வட்ட வடிவ ஸ்ரீகோவில் இரண்டடுக்கு செப்புக் கவசம் பூண்ட தொப்பி வடிவ விமானம். சுட்டு விளக்குகள் எழிலாக தொங்குகின்றன. மூலவர் சந்நதி மேற்கு நோக்கியுள்ளது. பாம்பணையப்பன் என்று போற்றப்படும் இப்பெருமாள், சிறு உருவில், பள பளவென்று ஜொலிக்கிறார். நின்ற கோலத்தில் சங்கு, சக்ர, பத்ம, கதாபாணியாகச் சேவை சாதிக்கின்றார். அருமையான சந்தனக் காப்பு அலங்காரத்தில் பெருமாளை திவ்யமாக சேவித்தோம். மூலவர் பாம்பணையப்பனைத் தவிர, இங்கே சன்னதி கொண்டிருக்கும் பிற விக்கிரகங்கள் எல்லாமே கோயிலைப் புனரமைக்க நிலத்தைத் தோண்டியபோது கிடைத்தவை என்கிறார்கள்.  இவ்வாலயத்தில் ஒரு பெரிய மண்டபம் கல்யாண மண்டபமாக உள்ளது. மறுநாள் ஒரு திருமணத்திற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இத்தலத்தில் சிம்மம் (ஆவணி) மாதம் வரும் அஷ்டமி நாளில் ஜென்மாஷ்டமியும், தனுர் (மார்கழி) மாதம் வரும் ஏகாதசி நாளில் வைகுண்ட ஏகாதசி நாளும் மிகச் சிறப்புடையதாக இருக்கின்றன. மேலும், இக்கோவிலில் கும்பம் (மாசி) மாதம் வரும் அனுசம் நட்சத்திர நாளில் கொடியேற்றம் செய்து பத்து நாட்கள் நடைபெறும் சிறப்புத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இவ்விழாவின் போது இறைவன் மோகினி அவதாரம் மற்றும் தசாவதார கோலத்தில் அலங்கரிக்கப்பட்டுப் பக்தர்களுக்குக் சேவை சாதிக்கின்றார். ஒருவண்ணம்சென்றுபுக்கு எனக்கொன்றுறைஒண்கிளியே! செருவொண்பூம்பொழில்சூழ் செக்கர்வேலைத் திருவண்வண்டூர் கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால் செருவொண் சக்கரம்சங்கு அடையாளம் திருந்தக்கண்டே ( தி.வா 6-1-7 ) பொருள்:  வடிவழகிலே சிறந்த கிளியே! எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருவண்வண்டூருக்கு நீ செல்லும் போது  வழியிலே நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகுக்கு ஆட்படாமல் செல்ல வேண்டும், செந்நிறம் பொருந்திய  அவ்வூர் கடற்கரைப் பகுதியில் ஒன்றுக்கொன்று  மாறுபட்ட பல நிறப்பூக்களைச் சொரியும் சோலைகள் உண்டு. இத்தகைய திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள பகவானின் அடையாளங்களைக் கேட்டுக்கொள். அவன் கரிய  திருமேனியுடையவன்; சிவந்த வாயும்; திருக்கண்களும், திருக்கரங்களும், திருவடிகளும் உடையவன். போர் செய்யவல்ல  சக்கரம், சங்கு  இவற்றை ஏந்தியவனாகக் காட்சியளிப்பான். இவ்வடையாளங்களின்படியே அவனைக் கண்டு எனக்காக ஒரு வார்த்தை சொல்வாயாக என்று எம்பெருமானைக் கண்டு சொக்கி கிளியை தூதாக அனுப்பும் பாவத்தில் பாடிய நம்மாழ்வாருக்கு அவர் காட்டிய கல்யாண குணம் ரக்ஷண தைர்யம் எனப்படும் காக்கும் உறுதியாகும். எவ்வாறு இராமாவதாரத்தில் தன்னை சரணடைந்தவர்களை காத்தாரோ அதே போல ஆழ்வாரையும் காத்தார் என்பதை “வ்யவஸாயஜ்ஞர் ரக்ஷண தைர்யம் பம்போத்தர தேசஸ்தம்” என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் கூறியுள்ளார். தேவும், உலகும் உயிரும் திரிந்து நிற்கும் யாவும் படைத்த இறை கண்டீர் – பூவில் திருவண்வண் டூர்உறையும் தேவாதிதேவன் மருவண்வண்டு ஊர்துளவமால். ( நூ. தி 67 ) பொருள்: திருவண்வண்டூர் என்னும் திருப்பதியில் நித்திய வாசம் செய்கின்ற தேவர்களுக்கெல்லாம் தேவனான, மணம், வளப்பம் உள்ள, வண்டுகள் மொய்க்கின்ற திருத்துழாய் மாலையை அணிந்த திருமால், தேவர்களையும், உலகங்களையும், விலங்குகளையும், மற்றும் வேறாக நிற்கின்ற அசேதனப் பொருள்கள் அனைத்தையும் படைத்த கடவுளாவான் என்று திவ்யக்கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது தமது நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார். ஸ்ரீவித ப்ரமர க்ஷேத்ரே பாபநாச புஷ்கரணி தடே, வேதாலய விமானச் சாயாயாம் ஸ்திதாய ப்ரதீச்யாபிமுகாய, ஸ்ரீமதே கமலவல்லி நாயிகா சமேத ஸ்ரீபம்பாச்ரயாய(பாம்பணையப்பன்) கமலநாத பரப்ரஹ்மனே நம: என்ற தியான ஸ்லோகத்தை ஜபித்துக்கொண்டே வம்மின் தொண்டர்களே அடுத்து பீமன் புனருத்தாரணம் செய்த “தென்திசைத் திலதம் புரை குட்டநாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப்பிரான்” என்று நம்மாழ்வார் பல்லாண்டு பாடிய பெருமாளை சேவிக்க செல்லலாம். அத்தியாயம் – 10 குட்டநாட்டுத் திருப்புலியூர் – மாயப்பிரான் [] குட்டநாட்டு திருப்புலியூர் என்று ஆழ்வார்களால் மங்கலாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் பீமன் வழிபட்ட தலம் ஆகும். மஹாபாரதப் போரில் துரோணரைக் கொல்ல பீமன் காரணமாக இருந்ததால் அப்பாவம் தீர மஹாவிஷ்ணுவை இங்கு வழிபட்டதாக ஐதீகம். இத்தலம் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ளது, கொல்லம் எர்ணாகுளம் இரயில் பாதையில் செங்கண்ணூரில் இறங்கி பின்னர் பேருந்து மூலம் மேற்காக மன்னார் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ தூரம் பயணம் செய்து இத்தலத்தை அடையலாம். திருப்புலியூர் என்று கேட்டுச் செல்வதைவிட, குட்டநாடு என்று விசாரித்தால் விரைவில் வழி கிடைக்கும். நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வார் தமது சிறிய திருமடலிலும் இத்தலத்தை மங்கலாசாசனம் செய்துள்ளனர். புலியூர் என்று தற்போது அழைக்கின்றனர். 108 திவ்யதேசங்களில் இரண்டு திவ்யதேசங்கள் புலி என்னும் அடைமொழியைக் கொண்டு திகழ்கின்றன. ஒன்று இத்தலம் மற்றையது சோழ நாட்டுத் திருப்பதியான சிறுபுலியூர் ஆகும், சப்த ரிஷிகளைக் காப்பாற்ற இந்திரன் புலி ரூபத்தில் வந்ததால் இத்தலம் திருப்புலியூர் என்று அழைக்கப்படுகின்றது. அக்காலத்தில் செந்தமிழ் கூறும் நல்லுலகம் 1. தென்பாண்டி, 2.குடநாடு, 3.குட்டநாடு, 4.கற்காநாடு, 5.வேணாடு, 6.பூமிநாடு, 7.பன்றிநாடு, 8.அருவாநாடு, 9.அருவாவடதலைநாடு, 10.சீரநாடு, 11.மலைநாடு, 12.புனல்நாடு என்று 12 நாடுகளாக பிரிக்கப்பட்டிருந்தன அவற்றுள் இத்தலம் அமைந்திருக்கும் பகுதி குட்டநாடு என்றிருந்திருக்கவேண்டும் எனவே நம்மாழ்வார் இத்தலத்தை குட்டநாட்டு திருப்புலியூர் என்று மங்கலாசாசனம் செய்துள்ளார். தல வரலாறு: சிபி சக்கரவர்த்தியின் புதல்வன் வ்ருஷாதர்பி. மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தலையில் கனம் ஏற்றிக்கொண்டு அறம் பிறழ்ந்து வாழ்ந்து வந்தான். இவனுக்குப் பாடம் புகட்ட விரும்பிய பரந்தாமன், ஒரு காலகட்டத்தில் இயற்கையின் சீற்றத்தால் கொடிய பஞ்சம் ஏற்பட செய்தார். ஆனால், அப்போதும் தாகத்தைத் தணிக்க, பசியைப் போக்க தனக்கு நீரும், உணவும்தான் வேண்டும்; வெறும் பொன்னும் பொருளும் தாகத்தையோ, பசியையோ தீர்க்காது என்று புரிந்து கொள்ளவில்லை அவன். அச்சமயம் அத்ரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய சப்த ரிஷிகள் தன் நாட்டிற்கு வருகை தந்திருப்பதை அறிந்த அவன், அவர்களிடம், தன் நாட்டின் வறுமையை அவர்கள் ஒழித்தார்களென்றால், அவர்களுக்குப் பெருஞ்செல்வத்தைத் தான் வாரி வழங்குவதாகத் தெரிவித்தான். நாட்டு மக்கள் அனைவரும் பஞ்சத்தில் தவிக்கும் போது அரசனிடம் தானம் பெற விரும்பாத ரிஷிகள், தாங்கள் யாரிடமும் யாசகம் பெற விரும்பியதில்லை; அதனால் யாரும் தானம் தருவதைத் தங்களால் ஏற்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.  அதோடு தாங்கள் செல்வ மிகுந்த வாழ்க்கைக்கு மிகவும் அப்பாற்பட்டவர்கள், தங்களை செல்வத்தால் அடிமைப்படுத்திவிட முடியாது என்றும் கோபித்துச் சொன்னார்கள். அவர்களால் தன் நாட்டில் நிலவும் பஞ்சத்தைப் போக்க முடியும் என்று உறுதியாக நம்பிய மன்னன், அவர்களை எப்படியாவது தன் வழிக்குக் கொண்டு வர குறுக்கு வழியில் சிந்தித்தான். அவர்களுக்கு சில கனிகளை அனுப்பி வைத்தான். அவற்றினூடே சில தங்க நாணயங்களையும் சேர்த்து, மறைத்து அனுப்பி வைத்தான். ஆனால், அவர்களோ தானம் என்ற பெயரில் வழங்கப்படும் எந்தப் பொருளையும் ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை. அதனால் அக்கூடைப் பழங்களையும் அப்படியே திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதோடு, ‘’இப்படி எங்களுக்கு தானமளித்து, எங்கள் தவ ஆற்றலால் உன்னுடைய பஞ்சத்தைப் போக்க வேண்டும் என்று விரும்புவதை விட, நீயே நேரடியாக இறைவனிடம் இறைஞ்சினால், அவர் உன் மீது இரக்கம் கொண்டு, அருள் பொழியக்கூடுமே!’’ என்று அறிவுரையும் சொன்னார்கள். இதைக் கேட்டு வெகுண்டான், வ்ருஷாதர்பி.  மேலும் கோபமும், அவமான பாதிப்பும் அதிகரிக்க, உடனே ஒரு தீய யாகத்தைச் செய்தான். அதில் தோன்றிய கிருதை என்ற ஒரு துர்தேவதையை அம்முனிவர்கள் மீது ஏவினான். ரிஷிகள் உடனே பரந்தாமனை வேண்டினார்கள். இவர்களது நிலையை அறிந்த பரம்பொருள், உடனே இந்திரனிடம், சப்தரிஷிகளை அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்திலிருந்து காக்குமாறு உத்தரவிட்டார். இந்திரனும் புலியாக உருமாறி, துர்தேவதையைச் சிதைத்து வதைத்தான். வ்ருஷாதர்பி திகைத்து நின்றான். அவனிடம், ரிஷிகள், ‘’செல்வம் எல்லாவற்றையும் கொடுத்து விடாது என்பதைப் புரிந்துகொள். இணையற்ற செல்வமான ஸ்ரீமன் நாராயணனை நீ தியானித்திருந்தால், உன் நாட்டில் பஞ்சமே வந்திருக்காது. அப்படி வந்துவிட்ட பின்னும் இறையருளை உணராது, வீம்புப் பிடிவாதத்தால் எங்களையும் விலைக்கு வாங்க நினைத்த உன் ஆணவப் போக்கை மாற்றிக்கொள்’’ என்று அறிவுறுத்தினார்கள்.  அதே சமயம் அவர்கள் முன் காட்சி தந்தார் ஸ்ரீமந்நாராயணன். தமக்கு தரிசனம் அளித்த அப்பரம்பொருளை ‘மாயப்பிரான்’ என்றழைத்துப் போற்றினார்கள். கூடவே, அறியாது பிழை செய்த இம்மன்னவனை மன்னித்து விடுமாறும் கேட்டுக் கொண்டார்கள். அவன் நாட்டில் நிலவிய பஞ்சத்தைப் போக்கி சுபிட்சம் உண்டாக்குமாறும் சிபாரிசு செய்தார்கள். வ்ருஷாதர்பி தன் தவறை உணர்ந்தான். அப்படியே அவர்கள் முன் தண்டனிட்ட அவன், அப்பரம்பொருள் அங்கேயே கோயில் கொண்டு தன்னையும், தன் நாட்டையும் பரிபாலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். ரிஷிகளும் அதை ஆமோதிக்க, மாயப்பிரான் அவ்வாறே அங்கே அர்ச்சாவதாரம் கொண்டார் என்பது ஒரு ஐதீகம். மற்றொரு ஐதீகம் ஒரு சமயம் நாரதர் தனது கலகத்தை கண்ணனின் மனைவிகளிடம் ஆரம்பிக்கலாம் என்று திட்டம் போட்டார். முதலில் ருக்மணி வீட்டுக்குச் சென்றார். அங்கே மனைவிக்குத் தாம்பூலம் மடிச்சுக் கொடுத்துக்கொண்டிருக்கிற கிருஷ்ணரைக் கண்டார். இதைக்கொண்டு ஏழு மனைவிகளின் வீட்டுக்குச் சென்று சொல்லி குழப்பம் ஏற்படுத்தலாம் என்று இராதையின் வீட்டுக்குச் சென்றார். அங்கே இராதைக்காக தன் புல்லாங்குழலில் அழகான இசையை வாசித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணரை கண்டார் இது எப்படி? அங்கே தாம்பூலம் மடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேனே என்ற குழப்பத்தோடு அடுத்து சத்யபாமா வீட்டுப்பக்கம் சென்றார் நாரதர். அங்கே, கணவருக்கு ஆசை ஆசையாக உணவு பரிமாறிக் கொண்டிருந்த பாமாவைக் கண்டார். அங்கிருந்து ஜாம்பவதி இல்லத்திற்கு வந்த நாரதர். அங்கே ஓய்வாகப் படுத்திருக்கும் கிருஷ்ணருக்கு ஜாம்பவதி கால் பிடித்து விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார் இவ்வாறே அனைத்து மனைவியர் இல்லத்திலும் மாயனைக் கண்டு அதிசயித்தார் நாரதர். எனவே இங்கே மூலவருக்கு மாயப்பிரான் என்று திருநாமம். வாருங்கள் சப்த ரிஷிகளைக் காத்து நாரதரிடம் மாயம் செய்த பெருமாளை சேவிக்கலாம்.  ஊர்வளம் கிளர் சோலையும், கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து ஏர்வளம் கிளர் தண் பணைக் குட்ட நாட்டுத் திருப்புலியூர் சீர்வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ் தேவபிரான் பேர்வளம் கிளர்ந்து அன்றிப் பேச்சு இலள் இன்றிப் புனை இழையே (தி.வா.8-9-4) பொருள்: குட்டநாட்டுத் திருப்புலியூரில் சோலைகளும் கரும்பும் செந்நெல்லும் சூழ்ந்து காணப்படுகின்றன. ஏர் வளம் மிகுவதால் நீர்நிலைகள் சூழப்பட்ட மருதநிலச்சிறப்பு இங்கு உண்டு. இவ்வூரில் எழுந்தருளியுள்ள பெருமான் கல்யாண குணங்களிலே சிறந்து விளங்கும்படியாக மூன்று உலகங்களையும் காப்பதற்காக அவற்றைப் பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் காப்பாற்றிய தேவபிரான் அன்றோ! அவனுடைய திருப்பெயர்களை அணிகலன்களாக அணிந்துள்ள இப்பெண் மிகவும் காதல் கிளர்ந்தவளாய்ச் சொல்கின்றாள். அவன் பெயரன்றி வேறு எதனையும் இவள் சொல்வதில்லை. என்று நம்மாழ்வார் தமது மற்றொருவர்க்கடிமையற்றிருக்கும் தன்மையை தோழி மணவிலக்குக்காகத் தாய்மாரோடு கூறும் பாசுரத்தாலே அருளிச் செய்த இத்தலத்தின் பெருமாள்: மாயப்பிரான் தாயார்: பொற்கொடி நாச்சியார். விமானம் : புருஷோத்தம விமானம். தீர்த்தம்: பிரஞ்ஞா ஸரஸ் தீர்த்தம். மங்கலாசாசனம்: நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் [] ஆலய முன்வாயில் ……..சீரார்திரு வேங்கடமே திருக்கோவ லூரே மதிட்கச்சியூரகமே பேரகமே பேராமறுதிருத்தான் வெள்ளறையே வெஃகாவே பேராலிதண்கால் நறையூர் திருப்புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் – கணமங்கை…. ( சி.தி.ம )  என்று எம்பெருமானின் கருத்த திருமேனியைக் காண்பதற்காக பரகால நாயகி, அவன் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களுக்கு மடலூர்ந்து செல்வேன் என்று சிறிய திருமடலில், திருமங்கையாழ்வார் இத்திருப்புலியூரையும் பாடியுள்ளார். மிகவும் உயரத்தில் அமைந்துள்ளது இத்தலம். அற்புதமான நுழைவு வாயில் உச்சியில் ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்ட கோல அழகிய சுதை சிற்பம். அதன் கீழ் இரணியனை தனது மடியில் வைத்து அவன் மார்பை பிளக்கும் உக்ர நரசிம்மர் சிற்பம். இரு புறமும் விநாயகர், சிவன், முருகர், ஐயப்பன் மற்றும் துவாரபாலகர்களின் சுதை சிற்பங்கள். இருபத்தோரு படிகள் ஏறி கோயிலுக்குள் நுழைய வேண்டும். மஹாபாரதப்போரில் துரோணரைக் கொள்ளும் பொருட்டு தர்மர், “அசுவத்தாமன் என்ற யானையை பீமன் கொன்றான்” என்று கூற புத்திர சோகத்தினால் ஸ்தம்பித்து துரோணர் நின்று விட அவரை அதற்காகவே பிறந்த திருஷ்டத்தும்னன் கொன்றதாக வரலாறு. பொய்யே பேசாத தர்மபுத்திரர் அவ்வாறு கூறுவதற்காக கவுரவர் தரப்பில் போரிட்ட இந்திரவர்மன் என்ற அரசனைன் அசுவத்தாமன் என்ற யானையை முதலில் பீமன் கொன்றான். தர்மர் இவ்வாசகத்தைக் கூறும் போது யானை என்பது துரோணரின் காதில் விழாதவாறு மாயக்கண்ணன் பார்த்துக்கொண்டார். இவ்வாறு துரோணரின் மரணத்திற்கு தானும் ஒரு காரணமாக இருந்த பாவம் தீர மாயப்பிரானின் ஆலயத்தை பீமன் புனருத்தாரணம் செய்ததாக ஐதீகம். எனவே ஆலயத்தில் உள்ளே இடது பக்கத்தில் பிரம்மண்ட கதை ஒரு மேடையின் மேல் சாய்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பீமனைப் போலவே, அழகாக பருத்து உயர்ந்த தூண்கள் கொண்ட சுமார் 500 பேர் உட்காரக்கூடிய பிரம்மாண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. நெடிதுயர்ந்த தங்கக் கவசம் பூண்ட கொடி மரம், சூரிய ஒளியில் மின்னுகின்றது. பலி பீடமும் தங்கக் கவசம் பூண்டுள்ளது. வெளிப் பிராகாரச் சுற்றில் ஐயப்பன் தனிச் சன்னதி கொண்டிருக்கிறார்.  அருகே ஒரு பலா மரத்தினடியில் ஆதிசேஷ மஹாவிஷ்ணுவையும், வித்தியாசமாக ஆதிசேஷன் குடைபிடிக்க சிவனையும் தரிசிக்கலாம். சற்றுத் தொலைவில் பெரிய அரசமரம் ஒன்றின் அடியில் மேடை கட்டியிருக்கிறார்கள். பக்கத்தில் மிகப் பெரிய அன்னதானக் கூடம். மற்றொரு பெரிய சன்னதியில் சிவபெருமான் அருள் பாலிக்கின்றார். பொதுவாகவே கேரளத்தில் சிவன் சன்னதியில் கோமுகியை தாண்டி செல்லும் வழக்கம் கிடையாது. இத்தலத்திலும் இவ்வாறே முழு வலம் வருவதில்லை கோமுகியிலிருந்து திரும்பி வந்து விடுகின்றனர். 3200 வருடங்கள் புராதனமானது இக்கோயில் என்கிறார்கள். ஒவ்வொரு தை மாதமும் மகரசங்கராந்தி தினத்தன்று பக்தர்கள் காவடி எடுக்கிறார்கள். பிறகு ஒரு வாரம் கழித்து கொடியேற்றி விழா கொண்டாடுகிறார்கள். நமஸ்கார மண்டபத்தின் தூண்களும் தங்கக் கவசம் பூண்டுள்ளன அவற்றில் தசாவதாரக் கோலங்களை சேவிக்கலாம். ஸ்ரீகோவிலின் வாயிலில் பெரிய துவாரபாலகர்கள் கோரைப்பற்களுடன் தங்க கவசத்தில் மின்னுகின்றனர். மூலக்கருவறை மண்டபத்திற்குள் நுழைய மிகச் சிறிய வழி கொண்டு ஒரு தடுப்பு இருக்கிறது. ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே முதலில் ஒரு காலும், அடுத்து இன்னொரு காலுமாக நுழைத்து உள்ளே செல்ல வேண்டும். ‘ஆடு, மாடுகள் கோயிலுக்குள் நுழைந்து விடாமல் இருப்பதற்காக இவ்வேற்பாடு’ என்றார்கள். கருவறைச் சுற்றில் மிகச் சிறிய சந்நதியில் பகவதியை தரிசிக்கலாம்.  அடுத்து சிறு அளவில் ஒரு யாகசாலை. ஸ்ரீகோவில் வட்டவடிவம், தாமிர கவசம் பூண்ட தொப்பி விமானம், இதன் நான்கு ஆரங்களில் நான்கு சாளரங்கள். ஆனால், அவை எப்போதும் சார்த்தியே இருக்கின்றன. நான்கு திக்குகளிலிருந்தும் வெளியேயிருந்து வரும் பக்தர்கள் கருவறைப் பகுதியை அடைய முடிகின்ற ஒரு அற்புத அமைப்பு. அது போலவே அபிஷேக நீர் வெளியேறும் கோமுகியும் சற்று வித்தியாசமான அமைப்பில் உள்ளது. அது கோமுகமாக இல்லாமல், உள்ளிருந்து வரும் சிறு கால்வாய் சிற்ப வடிவான ஒரு தேவியின் தலை மீது வந்து முடிகிறது. இதிலிருந்து வரும் அபிஷேக நீரை பக்தர்கள் கையில் ஏந்தி தலையில் தெளித்துக் கொள்கிறார்கள். சிலர் நம் தமிழ்நாட்டில் சிலர் நந்தி காதில் வேண்டுகோள் விடுப்பது போல இத்தேவியின் காதருகே போய் தம் வேண்டுகோளை ரகசியமாகச் சொல்லிவிட்டு வருகின்றனர். மூலவர் மாயப்பிரான் நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதை பத்மம் தாங்கி நின்ற கோலத்தில் மாயப்புன்னகையுடன் எழிலாக சேவை சாதிக்கின்றார். முழு சந்தனக்காப்பில் அருமையாக பெருமாளை சேவித்தோம்" பெருமாளின் ஆரத்தி சேவிக்கும் பாக்கியமும் கிட்டியது. [] பீமனின் கதை  கருமாணிக்கமலைமேல் மணித்தடம் தாமரைக்காடுகள் போல். திருமார்வு வாய் கண் கை உந்தி காலுடையாடைகள் செய்ய பிரான் திருமாலெம்மான் செழுநீர் வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர் அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர்! இதற்கென் செய்கேனோ? ( தி.வா 8-9-1) பொருள்: திருமால் ஆகிய எம்பெருமான் தன் திவ்ய அவயவங்களுடன் அழகுடன் தோன்றுகின்றான். கரிய மாணிக்க மலையிலே அழகிய தடாகத்தில் தாமரை மலர்கள் மலர்ந்தன போல அவனுடைய திருமார்பும், வாய், கண்கள், கைகள், நாபி, திருவடிகள், ஆடைகள் ஆகியவை அழகுடன் விளங்குகின்றன. இப்படிப்பட்ட சுந்தரனான பெருமான் குட்டநாட்டில் திருப்புலியூரில் எழுந்தருளியுள்ளான். அவனுடைய திருப்பெயரை அன்றி வேறு எதையும் எங்கள் தலைவி பேசவில்லை. அன்னையரே! இதற்கு என் செய்வேன்? இவ்வாறு திருமார்பு, திருவாய், திருக்கண்கள், திருக்கரங்கள், திருவுந்தி, திருக்கால்கள் அனைத்தும் சிவந்த தாமரைகளாக விளங்க மாயப்பிரான் திருவருளில் பராங்குச நாயகி தோற்றுப் போனாள், அப்பன் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டான் என்று நம்மாழ்வார் கூறுகின்றார். புன்னையம் பொழில் சூழ் திருப்புலியூர், திடவுசும்பிலமரர் நாட்டை மறைக்கும் தண் திருப்புலியூர், குன்ற மாமணி மாட மாளிகை திகழு மணி நெடு மாட நீடு திருப்புலியூர், சுனையினுள் தடந்தாமரை மலரும் தண்புலியூர் - தேவலோகத்தையே மறைக்கும் அளவு பிரமாண்டமான மாடமாளிகைகள் கொண்டிருந்தது திருப்புலியூர் என்றெல்லாம் நம்மாழ்வார் இத்தலத்தை பலவாறு பிரமித்துப் பாடியுள்ளார். திருப்புலியூரில் எழுந்தருளியுள்ள மாயப்பிரானிடம் மீளாத காதல் கொண்ட பராங்குச நாயகி, மாயப்பிரானைத் தவிர வேறு எவருக்கும் தன்னை மணம் செய்து தரக்கூடாது என்று அன்னையிடன் கூறினாள். பராங்குச நாயகிக்கு உள்ள மன உறுதியைத் தோழி புரிந்து கொண்டு அன்னையிடம் தான் ஒன்றும் செய்வதற்கில்லை. நாயகி தேர்ந்தெடுத்த மாயப்பிரான் என்ற மணவாளன் சர்வாங்க சுந்தரனாக உள்ளான். இப்பேர்பட்ட சௌந்தர்யம் உள்ள அரிய வரனை நாயகி தேர்ந்தெடுத்துள்ளாள். அவ்வழகனை திருமணம் செய்து கொள்ளாதே என்று சொல்லி பராங்குச நாயகியை என்னால் தடுக்க முடியவில்லை. அவள் மனதை எப்படி மாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை. அன்றிமற்றோருபாயமென்? இவளந்தண் துழாய் கமழ்தல் குன்ற மாமணி மாடமாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி தென் திசைத் திலதம்பு ரை குட்டநாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே (தி. வா 8-9-10) பொருள்: இப்பெண் திருப்புலியூரில் எழுந்தருளியுள்ள மாயப்பிரானின் திருவருளுக்கு இலக்காகி விட்டாள் என்பது எளிதில் தெரிய வருகிறது. இவள் மேனியிலிருந்து திருத்துழாயின் மணம் எங்கும் வீசுகின்றதே! ஆகவே இவள் திருப்புலியூர் பெருமானை அருளைப் பெற்று விட்டாள் என்பதற்கு வேறு எக்காரணமும் கூறவேண்டியதில்லை. மலை போல உயர்ந்த மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட மாளிகைகள் சூழ்ந்த இவ்வூர் தென்திசைக்கே திலகம் போல விளங்குகிறது. இப்படிப்பட்ட குட்டநாட்டுத் திருப்புலியூரிலுள்ள பெருமானுக்கு இப்பெண் நேர்பட்டு அவன் அருளைப் பெற்றுவிட்டாள் எனவே வேறு ஒரு வரன் தேட வேண்டாம் என்று அன்னைக்குக் கூறும் தோழி பாசுரமாக ஆழ்வார் பாடியுள்ளார். பராங்குச நாயகியாக பெண் தன்மையில் நம்மாழ்வார் பாடிய பல பாசுரங்களில் மூன்று பாசுரங்கள் மட்டுமே தோழிப் பாசுரமாக அமைந்துள்ளன அவையாவன தீர்ப்பாரை என்னும் வண்துவராபதி மன்னன் மேல் பாடிய பாசுரம், தொலைவில்லி மங்கலப் பாசுரம் மற்றும் இத்திருப்புலியூர் பாசுரம் ஆகும். தாய் தடுத்தாலும் நாயகனை சென்று சேர்வேன் என்று எம்பெருமான் மேல் அதீத பிரேமை கொண்ட பாவத்தில் பாடும் பாசுரங்களே தோழிப் பாசுரங்கள் ஆகும். இவருக்கு எம்பெருமான் இத்தலத்தில் காட்டிய கல்யாண குணம் நாயக லட்சணம் ஆகும் என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் கூறியுள்ளார். “அவகாஹித்தாரை அநந்யார்ஹமாக்கும் நாயகலக்ஷணம் வளம் புகழுமூரிலே குட்டமிடும்” அதாவது தனது பக்தியில் மூழ்கியவர்களை மற்றொருவரிடம் ஈடுபாடு கொள்ளாதபடி தனது அவயவ சோபை, ஆபரண சோபை முதலிய லக்ஷணம் குட்டநாட்டு திருப்புலியூரில் பூர்ணாமாயிருக்கும் என்பது ஆச்சார்யார் விளக்கம். முதல்வண்ணம் ஆமே முலைவண்ணம்; முன்னை விதிவண்ணம் நீங்கிவிடுமே – சதுரத் திருப்புலியூர் நின்றான் திருத்தண் துழாயின் மருப்புலி ஊர் தென்றல் வரின்.  (நூ.தி 63)  பொருள்: அழகிய திருப்புலியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள மாயப்பிரானது, குளிர்ந்த திருத்துழாய் மாலையினது நறுமணத்தைப் பொருந்தி வரும் தென்றல் வந்து வீசுமாயின் எனது தனத்தின் பசலை நிறம் மாறி முன்னைய நிறமே வந்து சேரும். முப்பிறவியில் செய்த தீவினையின் பயனாக நேர்ந்த பிறவித்துயரும் அடியோடு விலகி விடும் என்று தலைவி தோழியருக்கு அறத்தொடு நிற்கும் பாசுரமாக திவ்யகவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இத்திவ்ய தேசத்தைப் பற்றி பாடியுள்ளார். இத்தலத்தைப் பற்றி பல சுவையான வரலாறுகள் வழங்கப்படுகின்றன. ஒரு சமயம் நம்பூதிரிகளுக்கும், நாயர்களுக்கும் ஏற்பட்ட கலவரத்தில் ஆலயத்தின் உள்ளே பலர் மாண்டனர் அதனால் பல வருடங்கள் மூடப்பட்டிருந்ததாம். பிறகு ஒரு யோகி வந்து இறந்த ஆத்மாக்களை எல்லாம் சாந்தி செய்த பின் ஆலயம் திறக்கப்பட்டதாம். ஒரு சமயம் ஒரு இல்லத்தில் தலைவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட போது புலியூர் எம்பெருமானை தனது வயிற்று வலி சரியானால் அப்பமும் அடையும் சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டிக் கொண்டாராம். எம்பெருமானின் அருளால் அவரது வயிற்று வலியும் சரியாக பீமன் வயிற்றுக்கு போதுமான அளவு அப்பமும் அடையும் சமர்பித்தாராம். ஆண்டாளும் அழகருக்கு நூறு தடாவில் வெண்ணையும், நூறு தடாவில் அக்கார வடிசலும் சமர்பிக்க வேண்டிக்கொண்டது நினைவுக்கு வருகின்றதா அன்பர்களே. கொல்லம் பகுதியைச் சேர்ந்த குருவர்கள் தங்களை கௌரவர்களின் வழித்தோன்றலாக கருதுவதால் பீமனுக்கு பயந்து இரவு இத்தலத்தில் தங்குவதில்லையாம். இப்பெருமானுக்கு அமுது செய்யப்படும் பிரசாதங்களில் சாத்துச்சாதம் என்னும் பாயசம் மிகவும் சிறப்புப் பெற்றது, எப்போது தயாரித்தாலும் குறைந்த பட்சம் 400 படி அரிசி கொண்டு தயாரிக்கப்படுகின்றது. இவையெல்லாம் இத்தலத்தைப் பற்றி அடியேன் படித்த சில சுவையான வரலாறுகள். ஸ்ரீவ்யாக்ர க்ஷேத்ரே பிராஞ்ஞா சரஸ் புஷ்கரணி தடே, புருஷோத்தம விமானச்சாயாயாம் ஸ்திதாய பூர்வாபிமுகாய ஸ்ரீமதே ஹேமவல்லி (பொற்கொடி நாச்சியார்) ஸமேத ஸ்ரீஆச்சர்ய சக்தியுத ஸ்வாமி (மாயப்பிரான்) பரப்ரஹ்மணே நம: என்ற தியான ஸ்லோகத்துடன் பொற்கொடியையும் மாயப்பிரானையும் திவ்யமாக சேவித்தபின், வம்மின் அன்பர்களே அடுத்து சிற்றாற்று திருச்செங்குன்றூர் இமையவரப்பனை சேவிக்கலாம். அத்தியாயம் – 11 திருசிற்றாற்று திருச்செங்குன்றூர் – இமையவரப்பன் [] அடுத்து அடியோங்கள் சேவிக்கச் சென்ற தலம் திருச்செங்குன்றூர் ஆகும். வழி சரியாக தெரியாமல் சுற்றிக்கொண்டு மீண்டும் திருப்புலியூரையே வந்து சேர்ந்தோம் பின்னர் செங்குன்னூர் என்று சரியாக விசாரித்துக் கொண்டு சென்றடைந்த போது காலை 11 மணி அளவிலேயே நடை சார்த்தியிருந்தது திருக்கோவிலை மட்டும் வலம் வந்து சேவித்துவிட்டு திருவாறன்விளை சென்றோம். பின்னொரு சமயம் பெருமாளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. வாருங்கள் அன்பர்களே திருச்செங்குன்றூர் திவ்யதேசத்தின் சிறப்புகளைக் காணலாம். கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பை நதியின் ஒரு கிளை ஆறான சிற்றாற்றின் கரையில் அமைந்துள்ளது இத்தலம். பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர் பூஜித்த மூர்த்தி இவர் என்பதால், இந்த ஆலயம் ‘தருமர் கோவில்’, ‘தருமச்சேத்திரம்’, ‘தரும அம்பலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது பெருமாள் வலக்கையில் சங்கம் இடக்கையில் சக்கரம் தாங்கிய கோலத்தில் சேவை சாதிக்கின்றார். தற்போது சிற்றாறு என்றே அழைக்கின்றனர். செங்கண்ணூரில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருவல்லாவில் இருந்து ஆரண்முலா என்றழைக்கப்படும் திருவாறன்விளை செல்லும் அனைத்து பேருந்துகளும் இவ்வூர் வழியாக செல்கின்றன. கொல்லம் – எர்ணாகுளம் இரயில் மார்க்கத்தில் உள்ளது. மஹாபாரதப்போரின் பதினைந்தாம் நாள் கவுரவ தரப்பு வீரரான இந்திரவர்மாவோடு பீமன் செய்த போரில் அவனது பட்டத்து யானையான அசுவத்தாமா இறந்து விட்டது. அந்த யானை மிகவும் பலம் வாய்ந்தது. இவ்வுலகத்தைத் தாங்கும் அஷ்டதிக் கஜங்களுக்கு இணையானது. இதைப் பயன்படுத்திக்கொண்டு கண்ணன் தர்மரிடம் அஸ்வத்தாமா இறந்து விட்டதாக, துரோணர் காதில் மட்டும் விழும்படி மெதுவாக சொல்லுங்கள். இதைக் கேட்டு தனது மகன் அஸ்வத்தாமன் இறந்து விட்டதாக கருதி, துரோணர் அதிர்ச்சியடைந்து நிற்பார். அப்போது திருஷ்டத்தும்யுனன் அவரைக் கொல்வான் என்றார். அப்போது தர்மர் சிரித்து கண்ணா! நீ பெரும் கள்வன், பொய் சொல்லி இந்த இராஜ்ஜியம் எனக்கு கிடைப்பதை விட, நான் போரில் தோற்பதையே விரும்புகிறேன் என்றார். கிருஷ்ணா! பொய் சொல்வதால் மனைவி, குழந்தைகள், உறவினர்கள் அன்பு, புகழ், செல்வம், பலம், பிரார்த்தனை, தர்மம் அதனால் சேர்த்த புண்ணியம் அழிந்து போகுமே இது நியாயமா? என்றார். அதற்கு அந்த மாயவன் தர்மரே! நீர் சொல்வது ஏற்கத்தக்கதே, ஆனால் ஒரு பொய் பல உயிர்களை காப்பாற்ற உதவுமானால். தர்மத்தை காப்பாற்ற உதவுமானால் அதைச் சொல்வதில் தவறில்லை. ஒருவருக்கு ஏற்பட்ட ஆபத்தைப் போக்க பொய்யும் உதவுமானால் அது உண்மை என்றே எடுத்துக்கொள்ளப்படும். தர்மத்திற்காக ஒரு பொய் சொல்வதால் நீ செய்த தர்மத்தின் அளவை அதனால் கிடைத்துள்ள புண்ணியத்தின் அளவையும் பார்க்கும் போது இந்தபப் பொய்யால் பாவம் ஒன்றுமில்லை என்றார். கண்ணன் என்னும் மன்னன் சொல்லிவிட்டால் அங்கே மறு கருத்திற்கு எது இடம்? கிருஷ்ணரின் கருத்திற்கு தர்மர் கட்டுப்பட்டார். துரோணரின் தேரின் முன்பு தன் தேரில் போய் நின்றார். அசுவத்தாமா ஹத: குஞ்சரக: அதாவது அஸ்வத்தாமன் இறந்தான் என்பதை அஸ்வத்தாமன் என்பதை பலமாக கூவியும் யானை இறந்து விட்டது என்று மெல்லவும் பொய்யாக கூறினார். அதை கேட்ட துரோணரின் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. தன் மகன் அஸ்வத்தாமன்தான் இறந்தான் என்று எண்ணி வில்லை கீழே வீசி விட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றார். அதற்காகவே காத்திருந்த திருஷ்டத்தும்யுனன் அம்பெய்தி அவரைக் கொன்றான். இவ்வாறு தமது குருநாதர் வீழ்வதற்கு தான் காரணமாக இருந்ததை எண்ணி மனம் வருந்திய தர்மபுத்திரர் மன அமைதி பெற பூஜித்த எம்பெருமான் இச்செங்குன்றூர் சிற்றாற்று இமையவரப்பன் ஆவார். தர்மபுத்திரர் வருவதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் முன்னரே தேவர்கள் இங்கே குழுமியிருந்து பெருமாளை குறித்து தவம் செய்தனர், அவர்களுக்கு சுவாமியாக, அவர்களை உடலாக கொண்டு செயல் புரிபவனாக பெருமாள் சேவை சாதித்ததால் இவருக்கு இமையவரப்பன் என்னும் திருநாமம் ஏற்பட்டது. எங்கள்செல்சார்வு யாமுடையமுதம் இமையவரப்பனென்னப்பன் பொங்குமூவுலகும் படைத்தளித்தழிக்கும் பொருந்துமூவுருவனெம்மருவன் செங்கயலுகளும் தேம்பணை புடைசூழ் திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு அங்கமர்கின்ற ஆதியானல்லால் யாவர் மற்றென்னமர் துணையே? (தி.வா.8-4-2) பொருள்:  என் தலைவனும் தந்தையுமான பகவான் நாங்கள் அடையதற்குரிய  புகலிடமாக உள்ளான். இனிய,  எங்கள் அமுதமும் அவனே. நித்திய சூரிகளுக்கு இறைவனாகவுள்ள அவனே என் இறைவன். மூன்றுலகங்களையும் படைத்துக் காத்து  அழிக்கும் பிரமன், திருமால், சிவன் என்னும் மூவகைப்பட்ட  உருவங்களைக் கொண்டு இருக்கின்றான். என் ஆத்மாவுக்குள் அந்தர்யாமியாக வடிவம் தெரியாதபடி உள்ளவனும் அவனே. இப்படிப்பட்ட என் சுவாமி திருச்செங்குன்றூரில் உள்ளான். கயல்மீன்கள் விளையாடும் நீர் நிலைகள்  பொருந்திய வயல்கள் சூழ்ந்த  அந்தத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றில்  எழுந்தருளியுள்ள அவன்  எல்லாவற்றுக்கும் ஆதியாக உள்ளவன். அவனையல்லால் எனக்கு வேறு  யாரும் துணையில்லை. என்று தேவர்களுக்கு மட்டுமல்ல,  எனக்கும் சுவாமி, என்னுடைய அமுதம், சார்ந்திருக்கக் கூடியவன், பற்றத்தக்கத் திருவடிகளை உடையவன், அனுக்கிரகம் புரிந்தவன்   என்றெல்லாம் நம்மாழ்வார்  மங்கலாசாசனம் செய்த திருசிற்றாற்று  திருச்செங்குன்றூர்  திவ்ய தேசத்தின்  மூலவர்: இமையவரப்பன் தாயார்: செங்கமலவல்லி விமானம்: ஜெகஜ்ஜோதி விமானம் தீர்த்தம்: சிற்றாறு, சங்க தீர்த்தம் பிரத்யக்ஷம் :சிவபெருமான். [] ஆலயம் சாலைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. ஆலயத்தின் முன்னரே சங்க தீர்த்தம் உள்ளது, அதன் அருகில் ஒரு அருமையான தோரண வாயில் நம்மை வரவேற்கின்றது. அதில் திருசிற்றாற்று மஹா விஷ்ணு ஆலயம் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். சாஸ்தா, லக்ஷ்மி, சரஸ்வதி, முருகர் சுதை சிற்பங்கள் தோரண வாயிலை அலங்கரிக்கின்றன. சிறிது தூரம் உள்ளே நடந்து சென்ற பின் ஆலயத்தின் வாசலை அடைகின்றோம். வழியில் வலப்புரத்தில் சங்க தீர்த்தம் அமைந்துள்ளது. இவ்வாலயம் மற்ற ஆலயங்கள் போல செழிப்பாக இல்லை என்று தோன்றியது. எளிமையான தாமிரக்கவசம் பூண்ட கொடிமரம். ஸ்ரீகோவில் வட்டவடிவில் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. இரண்டு தளங்களாக அமைந்துள்ளது. மேல்தளம், கீழ்த்தளத்தை விட சிறிதாக உள்ளது. தொப்பி வடிவ விமானம் உள்ளது. ஒடுதான் வேயப்பட்டுள்ளது. பெருமாள் சதுர்புஜராக நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி, நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் இருக்கிறார். வலதுபுறத்தில் இருக்கும் இரு கரங்களில் ஒன்றில், சங்கமும், மற்றொன்றில் செந்தாமரை மலரும் வைத்திருக்கிறார். இடது புறத்தில் இருக்கும் கரங்களில் ஒன்றில் சக்கரமும், மற்றொன்றில் தரையில் ஊன்றிய கதாயுதத்தை தாங்கிய கோலத்தில் சேவை சாதிக்கின்றார். தாயார், ‘செங்கமலவல்லி’ என்றழைக்கப்படுகிறார்.கோவில் வளாகத்தில் கோசால கிருஷ்ணன், தருமசாஸ்தா ஆகியோருக்கும் தனிச்சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தலவிருட்சமாக ஆலமரம் இருக்கிறது. ஒரே பிரகாரம் ஆனால் விலாசமாக உள்ளது. பிரகாரத்தில் வர்ணம் பூசப்பட்ட தீபங்கள் அகல் விளக்குகள் போல வரிசை வரிசையாக அமைந்துள்ள காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இனி இத்தலத்தைப் பற்றிய ஒரு வரலாறு, கஷ்யப முனிவரின் இரு புதல்வர்களான சூரன், பத்மன் இருவரும் சிவபெருமானைக் குறித்து கடும் தவம் செய்தனர். சிவபெருமானும் தவத்திற்கு இரங்கி என்ன வரம் வேண்டும் என்று வினவ, இருவரும் ஒன்றாகி பெரும் பலம் வாய்ந்தவனாக வேண்டும், மும்மூர்த்திகளாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது என்று கேட்டனர். சிவபெருமானும் அவ்வாறே வரம் அளித்தார். இருவரும் ஒன்றாகி சூரபத்மன் என்று மிக பலசாலி ஆயினர். தேவலோகத்தைக் கைப்பற்றி இந்திரனை துரத்தி விட்டு அவனது மகன் ஜெயந்தனையும் மற்ற தேவர்களையும் சிறையில் அடைத்து பல கொடுமைகள் புரிந்தனர். சிவபெருமானும் இத்தலத்தில் பெருமாளை வணங்க, பெருமாளும் பிரத்யக்ஷமாகி, மும்மூர்த்திகளால் சூரபத்மனை கொல்ல முடியாது, தங்கள் புதல்வன் முருகனைக் கொண்டு அவனை அழிக்கலாம், வேலால் அவனை இரண்டாக பிளக்க, வேல் அவனது சக்தி அனைத்தையும் விலக்கி விடும் என்று சூரபத்மனை அழிக்க உபாயம் கூறினார். [] ஸ்ரீகோவில் சூரபத்மன் மாயப்போர் புரிந்தான் முருகனும் அம்மாயங்கள் அனைத்தையும் அழிக்க இறுதியில் மாமரமாக நின்றான், முருகனும் தனது வேலால் அம்மரத்தை இரண்டாக பிளந்து அசுரர்களின் ஆணவத்தை அழிக்க அவர்கள் ஞானம் பெற்றனர். எவ்வாறு தன்னுடன் போரிட்ட கருடனை திருமால் தனது வாகனமாகவும், கொடியாகவும் கொண்டாரோ அது போல தங்களுடன் போர் புரிந்த நாங்கள் தங்களுக்கு கீழும், மேலும் இருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்ட முருகப்பெருமான் அவர்களை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் கொண்டார். இத்தலத்தில் பெருமாள் ஆழ்வாருக்கு காட்டிய கல்யாண குணம் சௌர்யம் ஆகும். “மஹா மதிகள் அச்சங்கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும்” என்று பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் குறிப்பிடுகின்றார். எம்பெருமான் தனது சௌர்யம், வீர்யம், பராக்கிரமம் ஆகியவற்றை மேலே குறிப்பிட்ட குவலாயபீட நிரசனம் முதல், கம்ச வதம் ஈறான செயல்களின் மூலம் பெருமாள் இத்தலத்தில் காண்பிக்கிறார், அதாவது தான் சூரன் – யாரையும் எதிர்த்து ஜெயிக்கக்கூடிய சக்தி உடையவன், வீரன் –எதிரியின் சைன்னியத்தின் உள்ளே நுழைய வல்லவன், சௌர்யம் – எதிரியின் படைகளை பயப்படாமல் சின்னா பின்னம் செய்யக்கூடியவன், பாராக்கிரமம் – இவையனைத்தையும் கலங்காமல் செய்து முடிப்பவன் என்பதை காட்டி அருளினான். எதற்காக என்றால் தமக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்து பல்லாண்டு பாடிய பெரியாழ்வார், கிருஷ்ணனுக்கு ஏதும் ஆகி விடக்கூடாது என்று பயந்த விதுரர் போன்ற மஹாமதிகள் அச்சம் விலகுவதற்காக என்று பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் கூறுகின்றார். வார்கடாவருவி யானை மாமலையின் மருப்பிணைக்கு வடிறுத்துருட்டி ஊர்கொள்திண்பாகனுயிர் செகுத்து அரங்கின் மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல் போர்கடாவரசர் புறக்கிடமாடமீமிசைக் கஞ்சனைத்தகர்த்த சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருசிற்றாறு எங்கள் செல்சார்வே. (தி.வா 8-4-1) பொருள்: கண்ணபிரானாக அவதாரம் செய்த எம்பெருமான் குவலயாபீடம் என்ற யானையைத் தள்ளிக் கொன்றான்; மதநீர் அருவி போல் கொட்டவும் மலை போல நின்ற அந்த யானையின் தந்தங்களாகிற இரு சிகரங்களையும் கண்ணன் முறித்துப் போட்டான். அதனைக் கீழே தள்ளிய பிறகு அதன் பாகனையும் கொன்றான். கம்சனின் அறையில் இருந்த சாணுர, முஷ்டிக மல்லர்களையும் அவன் கொன்று தீர்த்தான். சுற்றிலும் இருந்த மஞ்சத்தின் மேலே நின்ற அரசர்களை முதுகு காட்டி ஓடும்படி விரட்டினான். முடிவில் அவன் உயர்ந்த மாடத்தின் மீதிருந்த தன் மாமனான கம்சனைக் கொன்று தகர்த்தான். இப்படிப்பட்ட வீரத்தின் சீர்மை பெற்ற இளையவனான கண்ணபிரான், திருச்செங்குன்றூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளான். அங்கேயுள்ள திருச்சிற்றாறே நாங்கள் அடைவதற்கு ஏற்ற புகலிடம் ஆகும்.   நம்மாழ்வார் கண்ணன் ஆயர்ப்பாடியிலிருந்து மதுரா எழுந்தருளி குவலயாபீடம் என்னும் யானையின் கொம்பொசித்து அதை நிரசனம் செய்து, அதன் பாகன், முஷ்டிக, சாணுர மல்லர்களைக் கொன்று, எதிர்த்து வந்த அரசர்களை வென்று, தருக்கில்லானாகி தான் தீங்கு நினைத்து கருத்தைப் பிழைத்த கஞ்சன் வயிற்றில் நெருப்பென நின்ற நெடுமாலின் பராக்கிரத்தை ஆழ்வார் இத்தலத்தில் சேவித்தார். திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறதனுள் கண்ட அத்திருவடியென்னும் திருச்செய்யகமலக்கண்ணும் செவ்வாயும் செய்யடியும் செய்யகையும் திருச்செய்ய கமலவுந்தியும் செய்யகமல மார்பும் செய்யவுடையும் திருச்செய்யமுடியுமாரமும் படையும் திகழ என் சிந்தையுளானே (தி.வா 8-4-7) பொருள்: திருச்செங்குன்றூர் சிற்றாற்றில் நான் கண்டு வணங்கிய என் சுவாமி எப்பொழுதும் என் நெஞ்சிலே சேவை சாதிக்கின்றான். சிவந்த தாமரைக் கண்கள், சிவந்த திருவாய், சிவந்த திருவடிகள், சிவந்த கரங்கள், சிவந்த கொழ்ப்புழ்த் தாமரை, திருமகள் வாழும் சிவந்த மார்பு, சிவந்த ஆடை, சிவந்த திருமுடி, ஆரம், திவ்யாயுதங்கள் யாவும் கொண்டபெருமான் மறக்கமுடியாதபடி என் நெஞ்சில் புகுந்தான் என்று இமையவரப்பர் எழிலாக தமது சிந்தையில் உள்ளார் என்று ஆழ்வார் பாடியுள்ளார். நம்மாழ்வார் தமது பாசுரங்கள் மூவாயிரம் வேதியர்கள் முறையாக தீ வளர்த்து இமையவரப்பனை வணங்கியதை தன் பாசுரங்களில் மனக்கொள்சீர் மூவாயிரவர் வண்சிவனுமயனுந்தானுமொப்பார் வாழ்…. அமர்ந்தசீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனி தேவர் வாழ்வு ….. நல்லநான்மறையோர் வேள்வியுள்மடுத்த நறும்தொடர் விசும்பொளி மறைக்கும் … என்று பாடுகின்றார். இனி இத்திவ்யதேசத்தை திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் எப்படிப் பாடியுள்ளார் என்று காணலாம். வரவேண்டும் கண்டாய் மதிகலங்கி விக்குள் பொரவே உயிர்மாயும் போழ்து – பரமேட்டி! செங்குன்றூர் மாலே! சிறைப்பறவை மேல்கனகப் பைங்குன்று ஊர் கார்போல் பறந்து. ( நூ. தி 64) பொருள்: பரமபதத்தில் வீற்றிருப்பவனே! திருச்செங்குன்றூர் என்னும் திருப்பதியில்  எழுந்தருளியிருக்கின்ற திருமாலே! எனது அறிவு ஒடுங்கி விக்கலானது துன்பம் செய்ய  உயிர் போகும் அக்காலத்தில் அழகிய சிறகுகளையுடைய சுபர்ணன் மீது, பசும் பொன் மயமான மலையின் மீது ஏறி வருகின்ற காளமேகம் போல, விரைந்து எழுந்தருளிச் சேவை சாதிக்க வேண்டும் என்று நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இந்த திவ்ய தேச எம்பெருமானிடம் வேண்டுகின்றார். மீனம் (பங்குனி) மாதம் ஹஸ்தம் நட்சத்திர நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கி, திருவோணம் நட்சத்திர நாளில் ’ஆறாட்டு’டன் நிறைவடையும் பிரம்மோற்சவம் பத்து நாட்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதே போன்று, சிங்கம் (ஆவணி) மாதம் அஷ்டமி ரோகிணி நாளில் தொடங்கிப் பத்து நாட்கள் வரை தசாவதாரப் பெருவிழாவும் நடைபெறுகிறது. இந்நாட்களில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் சந்தனத்தால் உருவாக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இவ்விழா நாட்களில் சாக்கியார் கூத்து, கொடியாட்டம் உள்ளிட்ட மலையாள மரபு வழி நடனங்கள் இடம் பெறுகின்றன. இது தவிர தனுசு (மார்கழி) மாதம் ஏழு நாட்கள் பாகவத உபன்யாசம், மேடம் (சித்திரை) மாதம் வரும் அஷ்டமி ரோகிணி நாள், தனு (மார்கழி) மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி நாள் போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதேபோல், மகரவிளக்கு மண்டல பூஜை நாட்களிலும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தான் செய்த தவறான செயல்களை நினைத்து மனம் வருந்துபவர்கள், மனக் குழப்பமுடையவர்கள் மற்றும் மன அமைதி வேண்டுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு மன ஆறுதலையும், மன அமைதியையும் பெறலாம். இவை தவிர, பயம் நீங்குதல், நோய்களில் இருந்து விடுபடுதல், நல்ல உடல்நலம் பெறுதல், தடைகள் நீக்கம் போன்றவைகளுக்கும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில் பக்தர்களுக்குப் பால் பாயசம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. ஸ்ரீசெங்குன்னூர் க்ஷேத்ரே, சிற்றாறு நதி தீரே, சங்க தீர்த்த புஷ்கரணி தடே, ஜெகஜ்ஜோதி விமானச் சாயாயாம் ஸ்திதாய, ஸ்ரீமதே செங்கமலவல்லி நாயிகா ஸமேத தேவாதிதேவ ஸ்வாமி (இமையவரப்பன்) பரப்ரஹ்மணே நம: என்று சரணாகதி செய்துவிட்டு வம்மின் தொண்டர்களே, சேவித்தாலே ஆனந்தம் அளிக்கும் ஆரண்முலாவின் பார்த்தசாரதிப் பெருமாளை சேவிக்கச் செல்லலாம். அத்தியாயம் – 12 திருவாறன்விளை – பார்த்தசாரதி [] சேரநாட்டுத் திருப்பதி யாத்திரையின் இரண்டாம் நாள் காலை தரிசனத்தின் நிறைத்தலமாக நம்மாழ்வார் திருவாறன்விளை என்று மங்கலாசாசனம் செய்த தற்போது ஆரண்முளா என்று அழைக்கப்படும் திவ்யதேசத்தை அடைந்தோம். பெருமாள் இங்கு பார்த்தன் வழிபட்ட பார்த்தசாரதிப் பெருமாளாய் சதுர்புஜராய் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மிகவும் பிரம்மாண்டமான ஆலயம். நான்கு புறங்களிலும் அற்புதமான பல அடுக்கு கேரளபாணி கோபுரங்கள், தங்கக் கவசம் பூண்ட நெடிய கொடிமரம், விசாலமான பிரகாரம், பெரிய மண்டபங்களுடன் எழிலாக விளங்குகின்றது இவ்வாலயம். செங்கண்ணூரிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. கேரளத்தின் அனைத்து பெரிய ஊர்களில் இருந்தும் இத்தலத்திற்கு பேருந்துகள் உள்ளன. மலைநாட்டுத் திருப்பதிகளில் பக்தர்களின் மனங்கவர்ந்த தலங்களில் இதுவும் ஒன்று. பம்பையாறு இத்தலத்தின் வடக்கு வாசலை தொட்டுக் கொண்டு ஓடுகின்றது. மஹாபாரதப்போரில் சல்லியன் உதவி செய்ய மாட்டேன் என்று சென்ற பிறகு கர்ணனின் தேர் சக்கரம் பூமியில் புதைந்த போது அதனைத் தோள் கொடுத்து எடுத்து நிறுத்தி மீண்டும் போர் புரிய நினைத்த கர்ணன் தேர் சக்கரத்தைத் தூக்க முயன்ற போது அர்ஜுனன் அம்பெய்து கர்ணனைக் கொன்றான். இவ்வாறு நிராயதபாணியாய் நின்ற கர்ணனைக் கொன்ற பாவம் தீர அர்ச்சுனன் இங்கு பார்த்தசாரதிப் பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். ஒரு சமயம் மது, கைடபர் என்ற அசுரர்கள் வேதங்களை அபகரித்துக் கொண்டு சென்று விட, பிரம்மன் திருமாலை துதித்து நின்றார், திருமாலும் அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத்தந்தார். அப்போது பிரம்மா, வாமன அவதாரத்தில் பெருமாளை தரிசிக்க வேண்டுமென வேண்ட அது போன்றே எம்பெருமான் காட்சி கொடுத்தார் என ஒரு வரலாறும் உண்டு எனவே எம்பெருமானுக்கு திருக்குறளப்பன் என்ற ஒரு திருநாமமும் உண்டு. திருக்குறளப்பன் என்பது குள்ளத்தோற்றமுடைய வாமன மூர்த்தியை குறிக்கின்றது. வேத வியாசர் தவம் செய்த தலம். அவர் உருவாக்கிய தீர்த்தமும் உள்ளது. மஹாபாரதப் போரின் மூன்றாம் நாள் பீஷ்மப் பிதாமகரின் ஆக்ரோஷத்தைக் குறைக்க, ஆயுதத்தை கையில் எடுக்க மாட்டேன் என்று வாக்களித்த கிருஷ்ண பரமாத்மா தன் ஆழிப்படையை கையில் ஏந்தி பீஷ்மரை நோக்கி பாய்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார் என்றொரு ஐதீகமும் உண்டு. இத்தலத்தில் ஸ்ரீசபரிமலை ஐயப்ப சுவாமியின் அணிகலன்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மண்டல பூஜையின் போது ஊர்வலமாக சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்படுகிறது. நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது. இனி இத்தலம் ஆரண்முளா என்று அழைக்கப்படுவதன் காரணம் பற்றிக் காணலாமா? அன்பர்களே. ஆதி காலத்தில் இப்பெருமாள் அடர்ந்த வனம் சூழ்ந்த நிலக்கல் என்ற தலத்தில் இருந்தார் அவர் இத்தலத்திற்கு வர வேண்டி ஒரு பிரம்மச்சாரி வேடத்தில் வாமனர் போல கையில் தாழம் குடையுடன் வந்து படகுக்காரர்களிடம் தன்னை ஆற்றில் அழைத்துச் செல்லுமாறு கூறினார். அவர்களும் ஆறு மூங்கில்களால் ஒரு தெப்பம் உருவாக்கி பம்பையாற்றில் அப்பிரம்மச்சாரியை அழைத்து வந்தனர். இடையில் இடைஆரண்முளா என்ற இடத்தில் பிரம்மச்சாரி இறங்கி தன்னுடைய சாயுங்காலக் கடமைகளை செய்தாராம். பின்னர் இரவில் இங்கு வந்து சேர்ந்தார். அப்போது இவ்விடம் பள்ளமாக இருந்ததாம் பெருமாளும் அங்கிருந்த இராட்சசனிடம் இவ்விடத்தை மேடாக்குமாறு பணிக்க ஒரிரவில் கோவில் உருவானது. இன்றும் ஒரு சிறு குன்றின் மேல் உயரத்தில் கோவில் அமைந்துள்ளது 18 படிகள் ஏறிச் சென்றேப் பெருமாளை தரிசிக்க முடியும். பின்னர் நிலக்கல் நாராயணன் இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். முளா – என்றால் மலையாளத்தில் மூங்கில் எனவே ஆறு மூங்கில்கள் கொண்ட தெப்பத்தில் பெருமாள் இத்தலம் வந்ததால் ஆரண்முளா என்று இத்தலத்திற்கு பெயர் அமைந்தது. எவ்விடத்தில் அத்தெப்பம் தங்கியதோ அவ்விடம் ஒரு மூங்கில் காடாக மாறியது. இன்றும் மக மாதத்தில் உற்சவத்தின் போது அங்கிருந்து கொண்டுவரப்பட்ட மூங்கிலில் கொடியேற்றுகின்றனர். இத்தலத்தில் ஓணத்தின் போதுநடைபெறும் படகுப்போட்டி மிகவும் சிறப்புப் பெற்றது. அதுவும் இப்பெருமாளின் ஒரு லீலையே அது என்ன என்று காணலாமா அன்பர்களே? மாங்காட்டு நம்பூதிரிகள் குடும்பம் ஓணத்தன்று ஒரு அதிதிக்கு போஜனம் செய்து வைத்த பிறகே தாங்கள் உண்ணும் ஒரு சம்பிரதாயத்தை கடைப்பிடித்தனர். ஒரு ஓணத்தன்று எந்த அதிதியும் வரவில்லை. அவர்கள் பெருமாளிடம் வேண்ட, பெருமாளே ஒரு இளம் பிரம்மச்சாரியாக அவர்கள் இல்லம் வந்து அவர்களின் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டார். அவர்களும் பிரம்மச்சாரியிடம் வருடா வருடம் தாங்களே வந்து எங்கள் விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விண்ணப்பிக்க பிரம்மச்சாரியும் சரி என்று கூறி சென்றார். பின்னர் அவர்கள் கனவில் தோன்றி தான் யார் என்பதை உணர்த்தி, வருடா வருடம் தன்னால் வரமுடியாது என்பதால் அவர்கள் உணவுப்பொருட்களை எல்லாம் ஆரண்முளா கொண்டு வந்து தனக்கு விருந்தளிக்குமாறு ஆணையிட்டார். மாங்காடு நம்பூதிரியும் படகில் விருந்துக்கு வேண்டிய பொருட்களை கொண்டு வந்து விருந்தளித்து வரும் போது இவர்கள் மேல் அசூயை கொண்ட சிலர் பாம்புப் படகில் வந்து இவர்கள் செய்யும் சேவையை தடுக்க முயன்றனர். சில கிராமத்தினர் தமது படகில் இவர்களுக்கு துணையாக சேர்ந்தனர், இரு குழுவினருக்கும் இடையில் போட்டி நடந்தது, பெருமாளின் அருளால் மாங்காட்டு நம்பூதிரிகள் அவர்களை வென்று தமது சேவையை தொடர்ந்தனர். அதுவே இன்றைய தினம் வருடா வருடம் ஓணத்தின் போது இத்தலத்தில் படகுப்போட்டியாக கொண்டாடப்படுகின்றது. பங்குனி மாதத்தில் இத்தலத்தின் அருகில் உள்ள புன்னத்தோட்டு பகவதி பம்பா நதியில் ஆறாட்டு கண்டருள எழுந்தருளும் போது பார்த்தசாரதி சுவாமியும் கருட வாகனத்தில் உடன் சேவை சாதித்து அருளுகின்றார். மார்கழி மாதத்தில் காண்டவ வனத்தை ஸ்ரீகிருஷ்ணர் அக்னிக்கு இரை ஆக்கியதை குறிக்கும் வகையில் ஒரு உற்சவம் கொண்டாடப்படுகின்றது. சன்னதி தெருவில் ஒரு காடு உருவாக்கப்பட்டு அன்றைய தினம் தீயிடப்படுகின்றது. [] இத்தலத்தில் சேவை புரிந்த ஒரு யானையைப் பற்றி குறிப்பிடவேண்டும், அருகில் உள்ள ஒரு மாதாகோவிலின் மணியோசை பெருமாளுக்கு இடையூறாக இருக்குமென்று எண்ணிய யானை மணியை பறித்துக்கொண்டு வந்து பெருமாளுக்கு சமர்ப்பித்து விட்டதாம் அன்று முதல் மாதாகோவிலில் மணியடிப்பதில்லையாம். அந்த யானை இறைவன் திருவடி அடைந்து விட்ட பின் அதன் தொடர்ப்படத்தை இவ்வாலயத்தில் வைத்துள்ளனர். ஆகுங்கொல்? ஐயமொன்றின்றி அகலிடம் முற்றவும் ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பனமர்ந்துறையும் மாந்திகழ் கொடி மாடங்கள் நீடுமதிள் திருவாறன் விளைமாகந்தநீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ? (தி.வா 7-10-2)  பொருள்: எம்பெருமான் அகன்ற உலகம் முழுவதையும் தன் இரண்டு திருவடிகளால் அளந்தான். இப்படி அளந்தவிட முடியுமா என்று சிறிதும் சந்தேகம் இல்லாமல், அழகிய குள்ளவடிவமான வாமனனான அவன் வந்து அதிசயமாகப் பேருருவம் எடுத்து நிமிர்ந்தான். இப்படிப்பட்ட திருக்குறளப்பன் எழுந்தருளியுள்ள திருத்தலம் திருவாறன்விளை ஆகும். இவ்வூரில் வானத்தைத் தொடுகின்ற கொடிகள் காணப்படும் மாடங்கள் உண்டு; இத்திருப்பதிக்கு சென்று நான் பகவானை மணம் மிகுந்த தண்ணீர் தூவி வலம் வந்து கைகளால் வணங்கி வழிபடும் வாய்ப்பு எனக்குக் கைகூடுமோ? என்று இன்பக்கவி பாடுவித்த எம்பெருமானை ஆழ்வார் திருவாறன்விளையில் சென்று அடிமை செய்யக்கருதும் பாவனையில் நம்மாழ்வார் மங்கலாசாசனம் செய்த இத்தலத்தின் மூலவர்: பார்த்தசாரதி, திருக்குறளப்பன் (ஆழ்வார் மங்கலாசாசனம் செய்த நாமம்) தாயார்: பத்மாசினி நாச்சியார் விமானம் : வாமன விமானம் தீர்த்தம்: வேத வியாச தீர்த்தம், பம்பா ஆறு பிரத்யக்ஷம்: பிரம்மா, வேத வியாசர் வாருங்கள் இவ்வளவு சிறப்புக்கள் பெற்ற பெருமாளை சேவிக்கலாம். நான்கு பக்கமும் கேரளப்பாணி பல அடுக்குகளுடன் கோபுரங்களையுடைய மிகவும் **பரந்து விரிந்த ஆலயம் உயரத்தில் அமைந்துள்ளது. 18 படிகளை ஏறிச்சென்று ஆலயத்தை அடைய முடியும். கோபுரத்தை தாண்டியவுடன் உயரமான தூண்களைக் கொண்ட கூரை வேய்ந்த மண்டபம் அதை அடுத்து தங்கக் கவசம் பூண்ட பலிபீடம் மற்றும் நெடிதுயர்ந்த கொடிமரம். அருகிலே துலாபாரம். மஞ்சாடி வழிபாடு எனப்படும் வன்னிமரக்காய்களை கொடி மரத்தின் மேல் வீசும் பிரார்த்தனை இத்தலத்தின் சிறப்பான வழிபாடு ஆகும். கொடிமரம் அருகே ஒரு பெரிய கங்காளத்தில் வன்னிக் காய்களை குவித்து வைத்திருக்கின்றனர் இத்தலத்தில் உள்ள வன்னி மரத்திலிருந்து உதிர்ந்த காய்கள் இவையாகும். அர்ஜுனன் ஆயுதங்களை மறைத்து வைத்த வன்னி மரத்திலிருந்து வந்ததால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட காலத்தில் வன்னிமரத்துக் காய்களை தலையைச் சுற்றி எறிந்தால் அர்ஜுனன் அம்பினால் எதிரிகளின் அம்பு சிதைவது போல், நோய் சிதையும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. எனவே தெய்வ ப்ரிதீக்காகவும், தீராத வியாதி தீரவும் 10 ரூபாய்க்கு அச்சிவப்பும் கருப்பும் கலந்த காய்களை வாங்கிக் கொடிமரத்தின் மேல் வீசி வழிபடுகின்றனர். அடியோங்கள் சென்ற போது உச்சிக்கால சீவேலி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பலிபேரரை தலையிலே சுமந்து கொண்டு போத்திகள் வேகமாக வலம் வந்து கொண்டிருந்தனர் அடியோங்களும் பெருமாளுடன் பிரகாரம் சுற்றி வந்தோம். தொப்பிக்கூரையுடன் ஸ்ரீகோவில் வட்ட வடிவில் உள்ளது. முகமண்டபத்தில் அருமையான லக்ஷ்மி விநாயகர், சுதர்சனர், அனந்தபத்மநாப சுவாமி சிற்பகள் உள்ளன. பின் புறத்திலும் துவாரபாலகர்களை அமைத்துள்ளனர். அடுத்து நடைதிறந்த பின் உள்ளே சென்றோம். நமஸ்கார மண்டபத்தில் மலர் மாலை அலங்காரத்துடன் அமர்ந்திருந்த கருட பகவானை சேவித்தோம். இம்மண்டபத்தின் கூரையில் உள்ள நவக்கிரக சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டியிருந்தனர் எனவே மிகவும் அழகாக தெரிந்தது. சரியான சமயத்தில் அங்கிருந்தோம். அபிஷேக தீர்த்தம் சுவீகரிக்கும் பாக்கியம் கிட்டியது. ஆரத்தி காட்டி தீபங்களை மெலிதாக்கி சுவாமியின் நடை அடைக்கும் அழகை இத்தலத்தில் சேவித்தோம். [] நமஸ்கார மண்டபத்தின் உட்கூரையில் உள்ள நவக்கிரக சிற்பங்கள் வாய்க்குங்கொல்? நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல்சூழ் திருவாறன்விளை வாய்க்கும் பெரும் புகழ்மூவுலகீசன் வடமதுரை பிறந்த வாய்க்கும் மணிநிறக்கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே (தி.வா 7-10-4) பொருள்: திருவாறன்விளைத் திருத்தலத்தில் கரும்புகளும் பெரிய செந்நெற் பயிர்களும் தழைத்து வளர்ந்துள்ள வயல்கள் சூழ்ந்துள்ளன திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை அங்கு போகாமலே, இங்கு இருந்து கொண்டே மனத்தால் எல்லாக் காலங்களிலும் எண்ணி வழிபடக்கூடுமோ? அப்பெருமான் நிறைந்த புகழுடைய மூன்றுலகங்களுக்கும் தலைவன் அன்றோ! அவனே வடமதுரையில், வந்து அவதரித்த நீலமணி போலும் நிறம் கொண்ட ஸ்ரீகண்ணபிரான் ஆவான். அவனுடைய தாமரைத் திருவடிகளைத் திருவாறன்விளை செல்லாமலேயே இங்கிருந்து கொண்டே நினைத்து வழிபடக்கூடுமோ? என்று நம்மாழ்வார் மங்கலாசாசனம் செய்த, நின்ற கோலத்தில் சதுர்புஜராக சேவை சாதிக்கும் பெருமாளை, பார்த்தசாரதியை, திருக்குறளப்பனை கோவிந்தனை, மதுசூதனை, கோளரியை சந்தனக் காப்பில் சிந்தையால் சொல்லினால், செய்கையால் அருமையாக சேவித்தபின், பிரசாதம் சுவீகரிக்கும் பாக்கியம் கிட்டியது அனைவருக்கும் அள்ளி அள்ளி பால் பாயசம் மற்றும் சாதம் இலையில் வைத்து அனைவருக்கும் தாராளமாக வழங்கினர். அதனால்தானோ என்னவோ அதிகமாக வயதானவர்கள் இக்கோவிலில் இருந்தனர். வடக்கு பிரகாரத்தில் பலராமருக்கு தனி சன்னதி உள்ளது இச்சன்னதி ஆனால் பூமி மட்டத்தில் இருந்து கீழே அமைந்துள்ளது. ஒரு சமயம், கிருஷ்ணரும், பலராமரும் இப்பகுதிக்கு விஜயம் செய்ததாகவும், அப்போது கிருஷ்ணர், பலராமரிடம், ‘அண்ணா, நீங்கள் இங்கேயே தங்கி, இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் வழங்குவீர்களாக’  என்று கேட்டுக் கொண்டதாகவும், அதனாலேயே இங்கே பலராமர் அர்ச்சாவதாரம் கொண்டதாகவும் ஐதீகம். அருகில் மிகப்பெரிய ஊட்டுப்புரா 57 படிகள் இறங்கி சென்றால் பம்பையாற்றை அடையலாம். இத்தலத்தில் பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்டிய கல்யாண குணம் ஆனந்த விருத்தி ஆகும். ஆழ்வார் இத்தலத்திற்கு வந்த பெருமாள் இவரை அழைத்து திருவாய்மொழியை விண்ணப்பிக்க வேண்டி, தாயாருடன் செவி மடுத்தாராம். இராமாயணத்தில் லவகுசர்கள் இராமாயணம் விண்ணப்பித்த போது அப்போது தாயார் அருகில் இருக்கவில்லை, அது போலவே மஹாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கீதை மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் உபதேசித்த போதும் தாயார் அருகில் இருக்கவில்லை ஆனால் ஆழ்வார் திருவாறன்விளையிலே திருவாய்மொழி விண்ணப்பித்த போது தாயாருடன் பெருமாள் ஆனந்தமாக செவி மடுத்தார் இதனால் ஆழ்வார் மிகவும் ஆனந்தமடைந்தார். “ஆனந்த பிரணவ சித்தம் பரத்வ விமூகமாக்கும் விருத்தி நீணகரிலே” என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் இதைக் குறிப்பிடுகின்றார். தன் பக்கல் ப்ரவணரானவர்களது சித்தத்தை “சித்தை மற்றொன்றின் திறத்தல்லாத் தன்மை” என்று பரமபதத்தின் பேர் செல்லுகையும் அஹஸ்யமாம்படி பரத்வத்தில் விமுககமாக பண்ணும் ஆனந்தப் பெருக்கம் திருவாறன்விளையிலே வியக்தம். இன்பம்பயக்க எழில்மலர்மாதரும்தாம் இவ்வேழுலகை இன்பம்பயக்க இனிதுடன் விற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் அன்புற்றமர்ந்துறைகின்ற அணிபொழில் சூழ்திருவாறன்விளை அன்புற்றமர்ந்து வலஞ்செய்து கைதொழும்நாள்களு மாகுங்கொலோ? (தி.வா 7-10-1)  பொருள்: எங்கள் பெருமானாகிய இறைவன் அழகுமிகுந்த தாமரைப்பூவில் அமரும் பெரிய பிராட்டியாருடன் மகிழ்ச்சி உண்டாகும்படியாக எழுஉலகங்களையும் காப்பாற்றுகிறான். அவன் மிகுந்த அன்புடன் அழகான சோலைகள் சூழ்ந்த திருவாறன்விளை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளான். நான் அங்கு சென்று அன்பு நிரம்பிய நெஞ்சுடன் அவனை வலம் வந்து கைகளால் என்று தொழுவேன்? என்ற ஆழ்வார் வைகுண்டம் வேண்டாம் மலர் மங்கை தன்னுடன் பெருமாள் அன்புடன் அமர்ந்திருக்கின்ற திருவாறன்விளையிலே கைங்கர்யம் வேண்டும் என்று வேண்டுகின்றார். ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பதை விட ஆனந்தமாக இத்தலத்தில் பெருமாள் எழுந்தருளியுள்ளார். எனவே இத்தலத்தில் பெருமாளை சேவித்தால் ஆனந்தம் ஆனந்தம், ஆனந்தமே. சென்று புனல்மூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும், வென்று புலன் அடக்கி விட்டாலும் – இன் தமிழால் மாறன் விளைத்த மறை ஒதார்க்கு இல்லையே ஆறன்விளைத் திருமால் அன்பு. தீர்த்த யாத்திரையாகச் சென்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி செய்வதற்கு உரிய தவங்களை செய்தாலும், ஐம்பொறிகளை வென்று அடக்கினாலும், நம்மாழ்வார் செவிக்கினிய தமிழ்ப்பாட்டாகச் செய்தருளிய வேதத்தை ஓதியுணராதவர்க்கு, திருவாறன்விளை என்னும் திருப்பதியில் எழுந்தருளியுள்ள எம்பெருமானது திருவருள் உண்டாகாது என்று பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் இத்தலத்தைப்பற்றி பாடுகின்றார். ஆரண்முளா கண்ணாடிகள் புகழ் பெற்றவை. இவை மற்ற கண்ணாடிகள் போல அல்லாமல் முழுவதும் உலோகத்தால் ஆனவை. எனவே இவை மங்கலப் பொருட்களாக கருதப்படுகின்றன. குறிப்பாக மலையாள வருடப் பிறப்பான விஷுக்கனியன்று இக்கண்ணாடிகளில் விஷுக்கனி காணும் வழக்கம் உள்ளது. பலர் இக்கண்ணாடிகளை வாங்கினோம். இவ்வாறாக மலைநாட்டு யாத்திரையின் இரண்டாம் நாள் காலை தரிசனம் அருமையாக முடிந்தது ஆறு திவ்யதேசங்களில் திருச்செங்குன்றூர் தவிர அனைத்து பெருமாள்களையும் திவ்யமாக சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. 13 மலைநாட்டு திருப்பதிகளில் பத்தை இதுவரை சேவித்தோம். இப்பத்து திவ்யதேசங்களிலும் பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதித்தார், திருநாவாய் தவிர மற்ற ஒன்பது தலங்களிலும் வட்ட வடிவ ஸ்ரீகோவிலும் தொப்பி விமானமுமாகவே அமைந்திருந்தது. ஸ்ரீஆரண்விளா க்ஷேத்ரே பம்பா வேத வியாஸ புஷ்கரணி தடே வாமன விமானச் சாயாயாம் ஸ்திதாய பூர்வாபிமுகாய ஸ்ரீமதே பத்மாசனி நாயிகா ஸமேத வாமன (திருக்குறளப்ப) பரப்ரஹ்மணே நம: என்று தியானித்துக்கொண்டே, திருவனந்தபுரம் நோக்கி எம்.சி சாலை வழியாக புறப்பட்டோம். வழியில் வர்க்கலா என்ற தலத்தில் ஜனார்த்தன சுவாமியை சேவித்தோம். முந்தைய நாள் சேவித்த திவ்ய தேசங்கள் மற்றும் இன்று காலையில் சேவித்த திவ்யதேசங்கள் அனைத்தும் மத்திய கேரளாவில் அமைந்துள்ளன. திருவனந்தபுரமும் மற்ற இரண்டு திவ்யதேசங்களும் கேரளத்தின் தென் கோடியில் அமைந்துள்ளன. எனவே பயணம் நீண்டதாக இருந்தது. அதுவும் கொளுத்தும் வெயிலில் பயணம் சிறிது சிரமமாகவே இருந்தது. இடையில் வர்க்கலாவில் ஜனார்த்தன சுவாமியை சேவித்தோம். மாலை சுமார் 7 மணியளவில் திருவனந்தபுரத்தை அடைந்தோம். வம்மின் அன்பர்களே அடுத்து அனந்த பத்மநாப சுவாமியை சேவிக்கலாம். அத்தியாயம் – 13 ##திருவனந்தபுரம் - அனந்தபத்மநாபசுவாமி [] தற்போது திருப்பதியை விட செல்வம் மிகுந்த ஆலயம் என்று பெயர் பெற்ற ஆலயத்தை அடுத்து சேவிக்கலாம் வாருங்கள் அன்பர்களே. கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் என்று அழைக்கப்படும், கெடுமிடராயவெல்லாம் கேசவாயென்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின்தமர்களும் குறுககில்லார் விடமுடையரவில் பள்ளிவிரும்பினான் சுரும்பலற்றும் தடமுடைவயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே (தி. வா.10-2-1) பொருள்: கேசவா என்று ஒரு முறை கூற அனைத்துத் துன்பங்களும் அழியும்; எப்பொழுதும் கொடிய செயல்களையே புரியும் யமதூதர்களும் அணுக மாட்டார்கள்; ஆதலால் நஞ்சு பொருந்திய  ஆதிசேஷ சயனத்தில் அரிதுயில் கொள்கின்ற எம்பெருமானுடைய  வண்டுகள் ஒலிக்கின்ற தடாகங்களையுடைய வயல்கள் சூழ்ந்த திருவனந்தபுரம் என்னும் நகரத்தை இன்றே அடைவோம், என்று நம்மாழ்வார் மங்கலாசாசனம் செய்த அனந்தபுர நகரினில் அடியோங்கள் புகுந்த போது மாலை  நேரம் என்பதால் போக்குவரத்து அதிகமாகவே இருந்தது. மெதுவாகவே பயணம் செய்ய முடிந்தது. ஆலயத்தை அடைந்த போது இரவு 8 மணியாகிவிட்டது. ஆலயத்தினுள்ளும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பெருமாளை சேவிப்பதற்கான  வரிசையில் சென்று  நின்றோம். வாருங்கள் அன்பர்களே இத்தலத்தின் சிறப்புகளையும், பெருமாள் இங்கு வந்த வரலாற்றைப் பற்றியும் முதலில்  காணலாம்.  மலைநாட்டு திவ்யதேசங்களில் பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கும் தலங்கள் இரண்டில் ஒன்று திருவனந்தபுரம். அனந்தன் மேல் நெடியோனாக மூன்று வாசல் வழியாக திருவடி, நாபி, திருமுடி சேவிக்கும் விதமாக பெருமாள் சேவை சாதிக்கின்றார். மற்றொரு திருத்தலம் திருவாட்டாறு ஆகும். இவ்விரண்டு தலங்களிலும் மூலவர்களின் திருமேனி சாளக்கிரமத்துடன் கடுசர்க்கரை யோகத்தால் ஆனவை. உபய நாச்சியார் மண்டியிட்ட கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். தமிழகத் தலங்களைப் போல உபய நாச்சியார்களுடன் உற்சவர் சேவை சாதித்தருளுகின்றார். அவர் தினமும் புறப்பாடு கண்டருளுவதில்லை, பலி பேரர் சீவேலியின் போது எழுந்தருளுகின்றார். ஒத்தக்கல் மண்டபம் என்னும் பிரம்மாண்ட ஒரே கல்லால் ஆன மண்டபத்தில் ஏறி சென்று பெருமாளை மிக அருகில் சென்று நாம் சேவிக்க முடியும். ஸ்ரீகோவிலில் மின்விளக்குகள் கிடையாது என்பதால் பெருமாளை அருகில் இன்று விளக்கொளியில் சேவிப்பதே ஒரு தனி அனுபவம். திருவடியில் மனிதர்களும், நாபிப்பகுதியில் தேவர்களும், திருமுடிப்பகுதியில் நித்திய சூரிகளுமாக சேவிப்பதால் தான் அனைவருக்கும் சமம் என்பதை உணர்த்துவதைப் போல் பெருமாள் சேவைச் சாதிக்கின்றார். இரண்டு தலங்களிலும் துலா(ஐப்பசி), மீனம்(பங்குனி) மாதங்களில் திருவிழா நடைபெறுகின்றது. இரண்டு ஆலயங்களும் திருவிதாங்கூர் அரசர்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. திராவிடக்கலை மற்றும் கேரளக்கலை இரண்டும் கலந்து இவ்விரண்டு கோவில்களும் கட்டப்பட்டுள்ளன. எனவே சீவேலி பிரகாரத்தில் அருமையான சிற்பங்களைக் கொண்ட கற்தூண்களால் ஆன பிரகாரம் உள்ளது. [] ஒரு கோட்டைக்குள் அமைந்துள்ளது ஆலயம். இத்தலத்தில் சிறப்பாக இராஜகோபுரம் திராவிட பாணியில், 100 அடி உயர 7 நிலைகளுடன் ஒரு படகுபோல அமைந்துள்ளது, இரவு நேரத்தில் மின் விளக்குகள் பிரகாசிக்க எதிரே உள்ள குளத்தில் இதன் பிரதிபிம்பத்துடன் இராஜகோபுரத்தை சேவிப்பதே ஒரு தனி அனுபவம். இவ்வாலயத்தில் இரண்டு கொடி மரங்கள் உள்ளன. தங்கக்கவசம் பூண்ட 80 அடி உயர கொடி மரம் அனந்த பத்மநாப சுவாமிக்கு எதிரிலும் அடுத்த வெள்ளிக் கவசம் பூண்ட கொடி மரம் கிருஷ்ணருக்கு எதிரிலும் அமைந்துள்ளது. மாலை சீவேலியின் போது முதலில் அனந்த பத்மநாப சுவாமியும் அடுத்து யோக நரசிம்மரும் பிரதட்சிணம் வருகின்றனர். பெருமாளை தரிசிக்க வரிசையில் நின்று கொண்டிருந்த அடியோங்களுக்கு சீவேலியை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. இனி தலவரலாறு. திவாகர முனிவர் முக்தியடைய வேண்டும் என்பதற்காக பாற்கடல் நாதனைக் குறித்து கடும் தவம் செய்து வந்தார். அவருக்கு அருள திருவுள்ளம் கொண்ட பெருமாள் திவாகர முனிவரிடம் ஒரு அழகிய இரண்டு வயது பிள்ளையாக வந்து சேர்ந்தார். பிள்ளையின் அழகில் மயங்கிய முனி வேண்டிக் கொள்ள குழந்தையும் தன்னை கோபித்துக் கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவருடன் இருந்து வந்தார், குழந்தை மலர்களைக் களைவது, சாளக்கிராமங்களை இடம் மாற்றி வைப்பது போன்ற பல விதமான சேட்டைகளையெல்லாம் செய்து வந்தாலும் முனிவர் கோபம் கொள்ளாமல் இருந்து வந்தார். ஒரு சமயம் முனிவர் பூஜிக்கும் சாளக்கிராம மூர்த்தியையே குழந்தை வாயில் போட்டுக் கொள்ள ஆத்திரமடைந்த முனிவர் குழந்தையை கோபித்துக் கொள்ள, குழந்தையும் அங்கிருந்து மறைந்தது, தன் கையில் சிக்காமல் எங்கேயோ சென்று விட்டக் குழந்தையைத் தேடி அலைந்த திவாகர முனி, ஒரு புலைச்சி அழுது கொண்டிருந்த தன் குழந்தையை, அழாதே இல்லாவிட்டால் உன்னை அனந்தன் காட்டில் தூக்கி எறிந்து விடுவேன் என்று மிரட்டிக்கொண்டிருந்ததைக் செவி மடுத்தார். அவருக்கு ஒரு பொறி தட்டியது அக்குழந்தையும் தன்னை அனந்தன் காட்டில் காணலாம் என்று கூறியுள்ளதை நினைவு கூர்ந்து, அப்பெண்ணிடம் அனந்தன் காட்டிற்கான வழியை விசாரித்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். அவருக்கு அப்பிஞ்சுக்கால்களில் அணிந்திருந்த கொலுசின் ஒசை கேட்டது. ஆவலுடன் முனிவர் காட்டை நெருங்கியபோது அங்கிருந்த ஒரு இலுப்ப மரம் கீழே விழுந்து அதில் மூன்று யோஜனை தூரத்திற்கு அனந்தன் மேல் பள்ளி கொண்ட கோலத்தில், ஸர்வாங்க சுந்தரனாக, மஹாலக்ஷ்மி, வனமாலை, கௌஸ்துப விராஜிதனாக மந்தகாசமான புன்னகையுடன் பேரெழிலுடன் அனந்தன் மேல் பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் சேவை சாதித்தருளினார். திருமுடி திருவல்லாற்றிலும் திருவடி திருப்படபுரத்திலும், பிரம்மனுடன் கூடிய நாபி அனந்தன் காட்டிலும் உள்ளவாறு பிரம்மாண்டமாக சேவை சாதித்தார் பெருமாள். அனந்தன் என்றால் எல்லை இல்லாதவன் என்றும் ஒரு பொருள். கால தேச வர்த்தமானங்களுக்குள் அடக்க முடியாதவர். அவ்வாறே முனிக்கு எம்பெருமான் சேவை சாதித்தார். அதே சமயம் சிவபெருமான் உமையம்மை திருக்கல்யாணத்தின் போது வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது அதை சமன் படுத்த அகத்தியரை தென் திசை செல்லுமாறுப் பணித்தார் சிவபெருமான், அப்போது அகத்தியர் தானும் திருக்கல்யாணத்தை தரிசிக்க விழைகின்றேன் என்றார். உமக்கு நாமே வந்து திருக்கல்யாண தரிசனம் அளிக்கின்றோம் என்றருளினார் பரமன். அகத்தியரும் விந்திய மலையின் செருக்கை அடக்கி தென் திசை வந்து அனந்தன் காட்டில் தவம் செய்யலானார். உடன் மஹேந்திர பர்வதம், த்ரிகூட மலை, மலையாசலம் மற்றும் தாமிரபரணி நதியும் அங்கு தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கும் பெருமாள் இவ்வாறு அருளினார். அகத்தியருக்கு முக்தி அளித்தார், மலைய பர்வதத்திற்கு உனக்கு எந்த குறைவும் வராது, மகேந்திர பர்வதத்திற்கு பரசுராமனாக அவதாரம் செய்யும் போது உன்னிடம் வசிப்பேன், அனுமன் முதலியோர் உன்னிடம் வாழ்வார்கள், த்ரிகூட பர்வதமே கஜேந்திரனுக்கு மோட்சம் அளிக்க உன்னிடம் வருவேன், தாமிரபரணியே உன்னுடைய கரையில் ஐந்து நம்பி ரூபம் கொண்டு குடி கொள்வேன். மேலும் ஒன்பது தலங்களில் வந்தமர்ந்து அருள் புரிவேன் என்று அவர்கள் அனைவருக்கும் வரமருளினார். பின்னர் இவ்வளவு பிரம்மாண்ட திருமேனியுடன் இருந்தால் திருவாராதனம் செய்வது கடினம் எனவே குறுக்கிக் கொள்ள வேண்டும் என்று திவாகர முனிவர் விண்ணப்பிக்க மூன்று தண்டம் அளவிற்கு அதாவது 18 அடிக்கு தன்னை குறுக்கிக்கொண்டார். தன்னை வைகாசன முறைப்படி பூஜிக்குமாறும் பணித்தார். முனிவரும் ஒரு தேங்காய் சிரட்டையில் அரிசிக் கஞ்சியும் உப்பு மாங்காயும் நிவேதனம் செய்தார். இன்றும் இதே வழக்கம் தொடருகின்றது. இன்று பொன் தேங்காயில் நிவேதனம் செய்யப்படுகின்றது. இவ்வாறே வில்வமங்களம் சுவாமிகளுடனும் பெருமாள் சிறு பிள்ளையாக வந்து லீலை செய்தார் என்றும் ஒரு ஐதீகம் உள்ளது. மூன்றாவது ஐதீகம் இந்த அனந்தன் காட்டில் ஒரு புலைய தம்பதியர் வசித்து வந்தனர். ஒரு சமயம் காட்டில் அழுது கொண்டிருந்த ஒரு பச்சிளம் குழந்தையைக் கண்டு அப்புலைச்சி தன் முலைப் பால் ஊட்டி விட்டாள். இது தொடர்ந்தது. ஒரு நாள் அவள் அக்குழந்தைக்கு ஐந்து தலை நாகம் குடைப்பிடிக்கும் ஒரு தெய்வீக காட்சியைக் கண்டாள். அதை பின்னர் அந்நாட்டு அரசனுக்கு தெரிவிக்க அவரும் வந்து பெருமாள் அங்கு உள்ள உண்மையை உணர்ந்து திருக்கோவிலைக் கட்டினார். ஆதிகாலத்தில் பெருமாள் திருமேனி இலுப்பை மரத்தால் ஆனதாக இருந்தது. 1686ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் அத்திருமேனி சேதமடைந்தது. பின்னர் பெருமாளின் ஆணைப்படி நேபாளத்தில் சாளக்கிராம க்ஷேத்திரத்தில் இருந்து 12000 சாளக்கிராமங்களை யானைகளில் ஏற்றிக் கொண்டு வந்தனர். அவற்றில் ஒரு பாதியை உபயோகப்படுத்தி கடுசக்கரை யோகம் என்னும் முறையில் இன்று நாம் சேவிக்கின்ற அனந்தபத்மநாப சுவாமி திருமேனி உருவாக்கப்பட்டது. மீதமுள்ள சாளக்கிராமங்கள் இன்னும் ஒரு முறை தேவைப்படும் என்று பெருமாள் கூறியவாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாம். 1750 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசர் ராஜா மார்த்தாண்ட வர்மா, தான் அரசன் அல்ல, சுவாமிக்கு உடைய சொத்து; எதுவும் நம்முடையதல்ல; அனைத்துமே அவனுடைய சொத்து என்று உணர்ந்து தனது அரசை இக்கோயிலின் இறைவனான பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக ஸ்ரீ அனந்த பத்மநாபருக்கு பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் “பத்மநாபதாசர்” என்று அழைக்கப்பட்டனர்.  இதனால் பத்மநாபசாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது.  ஆங்கிலேயர்கள்  ஆட்சிக் காலத்துப் படைத்துறை மரபுகளின்படி பத்மநாபசாமிக்கு,  ஆட்சியாளர்கள் 21 குண்டுகள் மூலம் மரியாதை செய்யும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய இராணுவமும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தது. இத்தேசத்திற்கு பெருமாள்தான் அரசர் என்பதால்தான் கேரளா, கடவுளின் தனது பிரதேசம் அதாவது ஆங்கிலத்தில் God’s own country என்றழைக்கப்படுகின்றது தினமும் காலையில் அரசருக்கென்று தனி தரிசன நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஏதாவது காரணத்தினால் அரசர் வரமுடியாமல் போனால் அபராதம் விதிக்கப்படுகின்றது. மூலவர் ஹேம கூடவிமானத்தின் கீழ் வீற்றிருக்கிறார். கோயிலின் தென்புறம் பிரகாரத்தில் யோக நரசிம்மரும், சந்நிதிக்கு முன்னால் அனுமனும் சந்நிதிக்குப் பின்னால் திருவம்பாடி கிருஷ்ணனும் காட்சி தருகின்றனர். கிருஷ்ணர் பார்த்தசாரதியாக வலது திருக்கரத்தில் சாட்டையுடன் இடது திருக்கரத்தில் சங்கத்துடன் தொடையின் வைத்த கோலத்தில் எழிலாக சேவை சாதிக்கின்றார். லக்ஷ்மி வராஹர் சன்னதியும், ஸ்ரீநிவாஸர் சன்னதியும் தெற்குப் பக்கத்தில் உள்ளன. மிகவும் விலாசமான ஆலயம், சீவேலிப் பிரகாரத்தின் யாளித் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள பாவை விளக்கு சிற்பங்கள் மொத்தம் 370 உள்ளன. ஆனால் ஒன்று போல மற்றது இல்லை. தலை அலங்காரம், அணிந்துள்ள ஆபரணங்கள், உடையலங்காரம், விளக்கைப் பிடித்துள்ள தோரணை, ஒயிலாக காலை வைத்துள்ள அழகு என்று ஒவ்வொரு பாவை சிற்பத்தையும் ஒவ்வொரு விதமாக செதுக்கியுள்ளனர் என்பது சிறப்பு. பெருமாளை நோக்கியவாறு நெடிதுயர்ந்த கருடன் சிலையும், அனுமன் சிலையும் அற்புதமாக உள்ளன. அனுமனுக்கு வெண்ணைக்காப்பு சிறப்பு. அனுமன் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும், எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை. என்பது ஒரு அற்புதம். அருமையான கற்சிற்பங்கள் நிறைந்த விசாலமான ஆலயம். நரசிம்மர் சன்னதி திறந்திருக்கும் போது அவரது உக்கிரத்தைக் குறைக்க இராமாயணம் பாராயணம் செய்யப்படுகின்றது. புண்ணியஞ்செய்து நல்லபுனலொடுமலர்கள்தூவி எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பறுக்கும் அப்பால் திண்ணம் நாமறியச்சொன்னோம் செறிபொழிலனந்தபுரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார் ( தி.வா 10-2-5) பொருள்:  பக்தியோடு தண்ணீரையும் மலர்களையும் கொண்டு அருசித்து எம்பெருமானுடைய திருநாமங்களை நினையுங்கள்; அவ்வாறு நினைத்தால், அந்நினைவு இறப்பினை நீக்கும்; அதற்கு மேல், சோலைகள் சூழ்ந்த திருவனந்தபுரத்தில், எழுந்தருளி இருக்கின்ற பெரியோனுடைய  திருவடித்தாமரைகளைச் சேர்கின்றவர்கள் நித்தியசூரிகள் ஆவர்; எல்லாரும் அறியும்படியாக  நாம் அறுதியிட்டுச் சொன்னோம்   என்று நம்மாழ்வார் மங்கலாசாசனம் செய்த அனந்தபுரத்து திவ்யதேசத்தின்  மூலவர்: அனந்தபத்மநாப சுவாமி, புஜங்க சயனம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். பெருமாளை மூன்று வாசல் வழியாக சேவிக்க வேண்டும். தாயார்: ஸ்ரீஹரிலக்ஷ்மி நாச்சியார் தீர்த்தம்: மத்ஸ்ய, பத்ம, வராஹ தீர்த்தங்கள். விமானம்: ஹேமகூட விமானம். பிரத்யக்ஷம்: சிவன், இந்திரன், சந்திரன். மங்கலாசாசனம்: நம்மாழ்வார் ஆலயத்தில் கூட்டம் அதிகமாகவே இருந்தது, வரிசையில் சென்று நின்றோம். அத்தாழ சீவேலி ஆரம்பமானது தீப்பந்தம், பதாகைகள், கொம்பு, மேளம் முழங்க முதலில் அனந்தபத்மநாப சுவாமி பிரகார வலம் வந்தார் அடுத்து யோக நரசிம்மர் வலம் வந்தார். சீவேலி நிறைவு பெற்ற பின், சேவை ஆரம்பமானது, ஒரு வாயிலில் பாதம், ஒன்றில் உந்தி, பிறிதில் மணிமுடி என்று மூன்று பகுதிகளாக கருவறையை நிறைத்து மல்லாந்து மகாயோக நிலையில் அனந்த சயனராக எழிலாக சேவை சாதிக்கின்றார் பெருமாள், இருளிலும் பளபளக்கும் அருமையான கன்னங்கரிய திருமேனி, நாசியின் கூர்மையையும், புன்னகை இல்லையா உண்டா என்று தெரியார உதடுகளும் குவிந்து மூடிய திருவிழிகளையும் சேவிப்பதே ஒரு பேரானநதம். கருவறையில் மண்டியிட்ட கோலத்தில் உபய நாச்சியார்கள், திவாகர ரிஷி, கௌண்டில்ய ரிஷி, வில்வ மங்களம் சுவாமிகள் முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, சிவன் ஆகியோருடன் பெருமாள் ஆனந்தமாக புஜங்க சயனத்தில் சேவை சாதிக்கின்றார். பெருமாளின் நாபியிலிருந்து தோன்றிய குழந்தையான பிரம்மன் மழலையில், மற்றும் சிவன், முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோர் எப்போது பெருமாளின் பெருமையை கூறிக்கொண்டிருக்கின்றனர் என்று மணவாள மாமுனிகள் மங்கலாசாசனம் செய்துள்ளார். திருவரங்கத்தில் அரையர் சேவையை சேவித்துக்கொண்டிருந்த ஆளவந்தார் நம்மாழ்வாரின் இத்திவ்ய ப்பாசுரத்தை அரையர் சேவிக்கும் போது அனந்தபுரநகர் புகுதும் இன்றே என்றவுடன் அதை பெருமாளின் வாக்காக எடுத்துக்கொண்டு உடனே புற்ப்பட்டு வந்து அனந்த பத்மநாப சுவாமியை சேவித்தார் என்பது ஒரு குரு பரம்பரை செய்தி. அடியோங்களுக்கு ஏகாந்த சேவை மட்டுமே கிட்டியது அருகில் சென்று சேவிக்கும் பாக்கியம் கிட்டவில்லை. திருமுடி மற்றும் லிங்க ரூபத்தில் சிவனை முதல் வாயில் வழியாகவும் இரண்டாவது வாயில் வழியாக நாபிக்கமலத்தையும், பிரம்மனையும், மற்றும் உபய நாச்சியார்களுடன் உற்சவரையும், மூன்றாவது வாயில் வழியாக திருவடியையும் சேவித்தோம். ஆக்கல், காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில் முதல்வனிடம் சரணாகதி செய்தோம். முக்காலமும் உணர்த்தும் மூவர்க்கும் முதல்வனை திவ்யமாக சேவித்தோம். நம்மாழ்வாரின் பாசுரம் சேவித்துக்கொண்டே பிரகார வலம் வந்தோம். இத்தலத்தில் ஐப்பசி மற்றும் பங்குனியில் பெருவிழாவின் போது கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. ஒன்பதாம் திருநாள் பள்ளி வேட்டையும், பத்தாம் திருநாள் ஆறாட்டும் மிகவும் விசேஷம். பள்ளி வேட்டையின் போது பெருமாள் துஷ்ட நிக்ரஹத்திற்காக வேட்டைக்கு எழுந்தருளுகின்றார். தற்போது பெருமாளின் சார்பாக மன்னர் வில் அம்புடன் செல்கின்றார் தேங்காயை அம்பெறிந்து வீழ்த்துகின்றார். பத்தாம் திருநாள் ஆறாட்டின் போது மலர் அலங்காரத்துடன் கருட வாகனத்தில் அனந்தபத்மநாப சுவாமி, நரசிம்மர், ஸ்ரீஅம்பாடி கிருஷ்ணர் மூவரின் சீவேலி மூர்த்திகள் திடம்பில் யானையில் எழுந்தருளுகின்றனர். இராஜா வாளுடன் முன்னே செல்கின்றார். திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக பெருமாள் சங்கு முகம் கடற்கரைக்கு எழுந்தருளுகின்றார் என்பதனால் சர்வதேச விமான நிலையம் அன்று மூடப்படுகின்றது. கடற்கரையில் சீவேலி மூர்த்திகள் மூவருகுக்கும் அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. பின்னர் மூவரும் கடலில் தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். தீர்த்தவாரிக்குப் பின்னர் தீப்பந்தங்களுடன் பெருமாள்கள் திரும்பி வருவதுடன் திருவிழா நிறைவடைகின்றது. ஸ்ரீபத்மநாபர் கோவிலில் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா ஒன்பது நாள் நீடிக்கும் நவராத்திரி பண்டிகையாகும். பத்மனாப சுவாமி கோவிலுக்கு முன்னே விளங்கும் குதிரை மாளிகை அரண்மனைக்கு சரஸ்வதி தேவி, துர்க்கை அம்மன் மற்றும் இறைவன் முருகரின் விக்ரகங்கள் ஊர்வலமாக, மேள தாளத்துடன் பக்தர்களால் கொண்டு வரப்படுகின்றன. இந்த உற்சவம் 9 நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விழாவின் பொழுது, புகழ் பெற்ற சுவாதி இசை விழாவும் சேர்ந்து நடத்தப்படுகிறது. இக்கோவிலில் பத்ர தீப உற்சவம் என்னும் இலட்சதீபத் திருவிழா ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது, அன்று நூறாயிரம் விளக்குகள் (அல்லது ஒரு லட்சம்) எண்ணை விளக்குகள் கோவிலைச் சுற்றி ஏற்றப்படுகிறது. இந்தத் திருவிழா மிகவும் தனிப்பட்டதாகும். இந்தத் திருவிழாவிற்கு முன்னால், துதிகளை சொல்லி இறைவனை வேண்டிக் கொள்வது மற்றும் ஐம்பத்தாறு நாட்களுக்கு நான்கு வேதங்களையும் ஏழு முறை பாராயணம் செய்கின்றனர். இத்தலத்தில் பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்டிய கல்யாண குணம் ஸாம்யம் ஆகும். “ஸஸைந்ய புத்ர சிஷ்ய ஸாத்யஸித்த பூஸுரார்ச்சனத்துக்கு முகநாபி பாதங்களை த்வார த்ரயத்தாலே காட்டும் ஸாம்யம் அநந்த சயனத்திலே வ்யக்தம்”. அதாவது அனைவரும் சமம். திருவடியில் மனிதர்களும், நாபிப் பகுதியில் பிரம்மாவும் தேவர்களும், திருமுடிப்பகுதியில் சேனை முதலியார் முதலான நித்ய சூரிகளும் சேவிக்கும் விதமாக மூன்று வாசல் வழியாக சேவை சாதிக்கின்றார் பெருமாள் என்று கூறுகிறார் ஆச்சார்யர். கோளார், பொறி ஐந்தும் குன்றி உடலம் பழுத்து மாளா முன், நெஞ்சே! வணங்குதியால் – கேளார் சினந்தபுரம் சுட்டான், திசைமுகத்தான், போற்றும் அனந்தபுரம் சேர்ந்தான் அடி. (நூ.தி 59) பொருள்: மனமே! ஐம்பொறிகளும் அடங்கி, உடல் தளர்ச்சியடைந்து, இறப்பதற்கு முன்னே, திரிபுரங்களை எரித்த சிவபெருமானும், நான்முகனும் துதித்து வணங்கும்  திருவனந்தபுரத்தில் பள்ளி கொண்டிருக்கும் பத்பநாபனுடைய திருவடிகளை வணங்குவாயாக.  என்று திவ்யக்கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இந்த திவ்ய தேசத்தைப் பற்றி பாடியுள்ளார். இவ்வாறு இரண்டு நாட்களில் 11 திவ்யதேசங்களை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. அடியோங்களுடன் யாத்திரை வந்த ஸ்ரீகுமார் அவர்கள் இல்லத்தில் அன்றிரவு தங்கினோம். இம்மலைநாட்டு திவ்யதேச யாத்திரையின் மூன்றாம் நாள் அதிகாலையில் திருவனந்தபுரத்தில் உள்ள வராக சுவாமியை சேவித்தோம் பின்னர் திருவாட்டாறு செல்லும் வழியில் நெய்யாற்றங்கரை ஸ்ரீகிருஷ்ணரை சேவித்தோம். அடுத்து திருவாட்டாற்றில் ஆதி கேசவனை சேவித்தோம். வராஹ சுவாமி, மற்றும் நெய்யாற்றங்கரை ஸ்ரீகிருஷ்ணர் ஆலயங்களைப் பற்றிய குறிப்புகள் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ளன, ஸ்ரீஅனந்தபுர க்ஷேத்ரே மத்ஸ்ய வராஹ பத்ம புஷ்கரணி தடே ஹேமகூட விமானச்சாயாயாம் ஸ்திதாய அனந்தசயனாய பூர்வாபிமுகாய ஸ்ரீமதே ஹரிலக்ஷ்மி நாயிகா ஸமேத ஸ்ரீஅனந்தபத்மநாப பரப்ரஹ்மணே நம: என்ற தியான ஸ்லோகத்தை ஜெபித்துக்கொண்டே வம்மின் அன்பர்களே பத்மநாப சுவாமிக்கும் மூத்தவரான அருள் பெறுவாரடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவானமைகின்றான் அது நமது விதி வகையே இருள் தருமாஞாலத்துள் இனிப்பிறவியான் வேண்டேன் மருளொழி நீ மடநெஞ்சே! வாட்டாற்றானடிவணங்கே. (தி.வா 10-6-1) பொருள்: பெருமானின் அருளைப் பெறுவதற்குப் பாத்திரமாக உள்ள பாகவத சீலர்களுக்கு  அடியேன் அடிமைப் பட்டு இருப்பதால், சக்கரத்தை ஏந்தியுள்ள எம்பெருமான் எனக்கு அருள் செய்யத் தானே வருவதாகப் பொருந்தியுள்ளான். அப்படி அவன் அருள் செய்வது  நாம் விதித்தபடியே ஆகும். அவன் கருத்தை அறிந்த அடியேன் இனி ஒரு நாளும் அஞ்ஞானத்தை உண்டாக்கும் பெரிய இந்த உலகத்திலே பிறவியை விரும்பமாட்டேன். அறியாமை பொருந்திய மனமே! நீ மயக்கம் நீக்கு; திருவாட்டாற்றில் எழுந்தருளியுள்ள எம்பெருமானுடைய திருவடிகளை வணங்கி அவன் வசப்பட்டு செல்வாயாக,  என்று  நம்மாழ்வார் மங்கலாசாசனம் செய்த, அருளை வாரி வழங்குகின்ற  ஆழியான் திருவாட்டாறு ஆதி கேசவனை சேவிக்கலாம். அத்தியாயம் – 14 திருவாட்டாறு ஆதி கேசவன் [] திருவனந்தபுரத்திற்கும் முற்பட்ட ஆலயம் என்பதால் “ஆதிஅனந்தசயனம்” என்றும், சேரநாட்டில் அமைந்துள்ளதாலும் திருவரங்கத்தைப் போல சுற்றிக்கொண்டு ஆறு ஒடுவதாலும் “சேர ஸ்ரீரங்கம்” என்றும். வட்டமாக ஆறுகள் ஓடுவதால்" வட்டாறு என்பது மருவி “திருவாட்டாறு” என்றும் அழைக்கப்படுகின்றது இத்தலம். திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்திலும், நாகர்கோவிலிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. மார்த்தாண்டத்திலிருந்தும், தொடுவெட்டியிலிருந்தும் நகர்ப்பேருந்துகள் உள்ளன. மலைநாட்டு திவ்யதேசமாக கருதப்படும் இத்தலமும், திருவண்பரிசாரமும் தற்போதைய தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளன. ஆதிகாலத்தில் திருவிதாங்கூர் இராச்சியத்தின் தலைநகரமாக கன்னியாகுமரி விளங்கியது பின்னரே திருவனந்தபுரம் தலைநகரமாகியது. மலைநாட்டு திவ்யதேசம் என்பதால் ஆராதனைகள் இன்றும் கேரளப்பாணியிலேயே நடைபெறுகின்றது. தமிழ்ச்சங்க இலக்கியமான புறநானூற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. மேலே திருவனந்தபுரத்திற்கும் திருவாட்டாற்றுக்கும் உள்ள சில ஒற்றுமைகளைப் பற்றிப் பார்த்தோம் வாருங்கள் இனி அவற்றின் இடையே உள்ள சில வேற்றுமைகளைப் பற்றிக் காணலாம். ஆதி கேசவர் அனந்த பத்மநாப சுவாமிக்கு மூத்தவர் என்பதால் இவரது நாபியில் கமலமும் இல்லை அதில் தோன்றிய பிரம்மனும் இல்லை. கேசவர் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சயனம் கொண்டுள்ளார். பத்மநாபரோ கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது போல உள்ளது. பொதுவாக பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிக்கும் ஆலயங்களில் பெருமாளின் திருவடி சேவிக்கும் பக்தர்களின் வலப்புறமும், ஆதிசேஷனும் திருமுடியும் இடப்புறமும் இருக்கும். திருவாட்டாறு மற்றும் திருக்கச்சியின் திருவெஃகாவில் அரி துயில் கொண்டுள்ள “சொன்ன வண்ணம் செய்த பெருமாள்” ஆகிய இருவர் மட்டுமே மாறு சயனமாக சேவை சாதிக்கின்றனர். அதனால் இத்தலத்தில் பெருமாளின் இடது திருக்கர சேவை கிட்டுகின்றது. ஆதி கேசவர் 22 அடி நீளம், 16108 சாளக்கிராமங்களால் ஆன திருமேனி, இங்கு பெருமாளின் திருவடி அருகில் சிவலிங்கம் உள்ளது. அனந்தபத்மநாபரோ 18 அடி நீளம் 1200 சாளக்கிராமங்களால் ஆன திருமேனி, சிவலிங்கம் பெருமாளின் திருமுகப்பகுதியில் உள்ளது. ஒத்தக்கல் மண்டபங்களும் பெருமாளின் அளவிற்கேற்ப மாறுபடுகின்றன. திருவாட்டாற்றில் ஒரு கொடிமரம் மட்டுமே உள்ளது. திருவாட்டாறு மலை மாடக்கோவில் அமைப்பில் 55 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வாருங்கள் இனி கேசி என்னும் அசுரன் மேல் பெருமாள் இத்தலத்தில் பள்ளி கொண்ட திருவிளையாடலைக் காணலாம். அனந்த சயனத்திற்கு தென் கிழக்கே பொன்பிரளை என்ற தலத்தில் பிரம்மா ஒரு யாகம் நடத்தினார். பிரசன்னரான பெருமாள் அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று வினவினார். பிரம்மாவும், பெருமாளே தாங்கள் இராமாவதாரத்தில் காகாசுரனுடைய கண்ணைக் கிளறிய காகாக்ஷசைலம் என்னும் மலையினிடத்தில் தவம் செய்யும் முனிவர்களை கேசி என்னும் அசுரன் துன்புறுத்துகின்றான், அவன் என்னுடைய கேசத்திலிருந்து தோன்றியவன், அவன் என்னிடம் சாகா வரம் பெற்றுள்ளான், மேலும் அவனது இரத்தம் ஒரு துளி கீழே சிந்தினாலும் அது தன்னைப்போல உருமாற வேண்டும் என்றும் வரம் பெற்றுள்ளான். தேவரீர்தான் அவனை வென்று முனிவர்களை அவன் கொடுமையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று விண்ணப்பித்தார். பெருமாள் அங்கு சென்று அவனுடன் மல்யுத்தம் செய்யும் போது கேசியை கீழே தள்ளி, அனந்தனை அழைத்து அசுரன் வெளியே வராதபடி அவனை வளைத்துக் கொள் என்று அருள அனந்தனும் அவ்வாறே செய்தான் கேசன் மேலே வரமுடியாதபடி பெருமாள் அனந்தன் மேல் சயனித்துக் கொண்டார். இதைக்கண்ட கேசியின் பத்தினி ஆஸுரி என்பவள் கங்கையை துணைக்கு அழைத்தாள், கங்கை தாமிரபரணியுடன் பெருமாளை கீழே தள்ளி அசுரனை விடுவிக்க ஆவேசமாக பாய்ந்தாள், தன் பர்த்தாவைக் காப்பாற்ற பூமாதேவியானவள் அவ்விடத்தை உடனே மேடாக்கி விட்டாள், ஒன்றும் செய்ய முடியாத நதிகள் தமது ஆணவத்திற்காக வருந்தி பெருமாளை வணங்கி வட்டமிட்டு ஓடின. இன்றும் அவ்வாறே பரளி ஆறு கோதை ஆறு என்ற பெயரில் இரு நதிகளும் பெருமாளை வட்டமாக சுற்றி ஓடிக்கொண்டிருக்கின்றன. எனவே இத்தலத்திற்கு திருவாட்டாறு என்னும் திருநாமம் வழங்குகின்றது.. மேலும் அசுரன் தப்பிக்காமல் இருக்க தன்னை சுற்றி பன்னிரண்டு இடங்களில் உருத்திரர்களை நிறுத்தினார், அவை இப்போது சிவாலயங்களாக விளங்குகின்றன. இவ்வாறு கேசி முழுதும் அடைபட்டான், அவன் பெற்ற சாகாவரமும் வீணானது. பெருமாள் அதே சயன கோலத்தில் இன்றும் நமக்கு சேவை சாதிக்கின்றார். ஒவ்வொரு வருடமும் சிவராத்திரியன்று பக்தர்கள் இப்பன்னிரண்டு சிவாலயங்களுக்கும் கோபாலா கோவிந்தா என்று ஜபித்துக்கொண்டே ஓடி வந்து ஆதிகேசவரின் சன்னதியில் உள்ள சிவலிங்கத்தை தரிசித்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர். கங்கையும் தாமிரபரணியும் வேண்டிக் கொண்டதற்கிணங்க வருடத்தில் ஒரு முறை பங்குனி திருவிழாவின் நிறை நாள் ஆறாட்டின் போது ஆதி கேசவப் பெருமாள், பரளி ஆறு கோதை ஆறும் கடலுடன் சங்கமிக்கும் மூவாத்து முகம் என்றும் தோதை பிரளி என்றும் வழங்கப்படும் இடத்திற்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி ஆறாட்டு கண்டருளுகின்றார். இன்னொரு விதமாகவும் இப்புராணம் கூறப்படுகின்றது. பிரம்மா யாகம் செய்யும் போது மஹாவிஷ்ணுவை மதியாது செய்ததால் சரசுவதி தேவி இவரது நாக்கைப்பிரளச் செய்ததால் யாகத்திலிருந்து கேசன் மற்றும் கேசி என்னும் அரக்கர் தோன்றினர். இருவரும் பிரம்மதேவரை குறித்து கடும் தவம் செய்து சாகா வரம் பெற்றனர். இதில் கேசனை பெருமாள் அவனுடன் போர் செய்யும் போது அவனை மகேந்திர மலை மேல் வீசினார், பெருமாள் சங்கை முழங்க அனந்தன் அவனைச் சுற்றிக் கொண்டான், அவன் வெளியே வராதபடி இன்றளவும் அனந்தன் மேல் சயனம் செய்கின்றார். கேசி தன் தோழி கோதையுடன் ஆறாக ஒடி வந்து தன் சகோதரனை விடுவிக்க முயலும் போது பூமாதேவி அவ்விடத்தை உயர்வாக்கினாள். இரண்டு நதிகளும் சாபம் பெற்றன பின் பெருமாளின் அருளினால் ஆணவம் நீங்கி சாப விமோசனம் பெற்று இன்றளவும் பெருமாளை வட்டமாகச் சுற்றிக் கொண்டு ஓடுகின்றனர். திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண்வாட்டாறு புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம் கெடுத்தான் இகழ்வின்றி என்னெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே (தி.வா 10-6-9) பொருள்: பெருமான் தம் விளங்குகின்ற திருமார்பில் பெரிய பிராட்டியாரோடும் விளங்குகின்ற திருமால் சேர்ந்து வசிக்கின்ற இடம் குளிர்ந்த திருவாட்டாறு எனும் திருத்தலமாகும். நிலைத்த புகழையுடைய கருடனை வாகனமாக உடையவன் அவன்; போர் செய்கின்ற அரக்கர் குலத்தினை அழித்தவன் அவன்; அவன் வெறுப்பு இல்லாமல் எப்பொழுதும் என் மனத்தில் பிரியாமல் இருக்கின்றார்; என்று திருமார்பில் திருமங்கை, வாகனமாக கருடாழ்வார், அசுரர்களை அழித்தவர் என்று சகல சிறப்புகளையும் பெற்ற பெருமாள் சேர்ந்த இடம் திருவாட்டாறு என்று** நம்மாழ்வார் மங்கலாசாசனம் செய்த திருவாட்டாற்றில் மூலவர்: ஆதி கேசவப்பெருமாள், புஜங்க சயனம் (மாறு சயனம்), மேற்கு நோக்கிய திருமுகமண்டலம், மூன்று வாசல் வழியாகவே சேவிக்க முடியும். தாயார் : மரகதவல்லி நாச்சியார். தீர்த்தம்: கடல்வாய், வாட்டாறு, இராம தீர்த்தம். விமானம்: அஷ்டாங்க விமானம் பிரத்யக்ஷம்: பரசுராமர், சந்திரன். மங்கலாசாசனம்: நம்மாழ்வார் கற்சிற்பங்கள்,மரச்சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள் என்று ஒரு அருமையான கலைக்கோவிலாக விளங்கும் இக்கோவிலின் அழகை இரசிக்கலாம் வாருங்கள் அன்பர்களே. முதல் தடவை அதிகாலையில் சென்றதால் முதலில் ஆலயத்திற்கு பின் புறம் சென்று வாட்டாற்றில் நீராடினோம். பூமாதேவி உயர்த்தியதால் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது, தரை மட்டத்தில் இருந்து 5 மீட்டர் உயரம் எனவே 18 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். ஆலயத்தின் பின்புறம் கதகளி மண்டபம் உள்ளது. கோயிலின் பிரமாண்டமும், கோயிலை சுற்றி மூன்று புறமும் ஓடும் ஆறும் இவ்வாலயத்தின் தனி சிறப்பு ஆகும். கருவறை மேற்கு பார்த்து அமைந்துள்ளது. ஆதிகேசவனின் சிரசு தெற்கே, பாதம் வடக்கே என அமைந்துள்ளது. பரளியாறு சிரசில் இருந்து பாதம் வழி ஓடி கோதையாற்றில் கலக்கிறது. ஒரு வருடம் சபரிமலை யாத்திரையின் போது ஓரிரவு கதகளி மண்டபத்தில் உறங்கினோம். அதிகாலை எழுந்து கூட்டம் இல்லாத நேரத்தில் ஆலயம் முழுவதையும் எந்த அவசரமும் இல்லாமல் அங்குலம் அங்குலமாக சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. சீவேலி மண்டபத்தின் இரு புறத்தூண்களில் எத்தனை எத்தனை கற்சிற்பங்கள், பொதுவாக சிலபஞ்சிகள் என்று மலையாளத்தில் அழைக்கப்படும் கை விளக்கேந்திய காரிகைகள்தான் மேலோட்டமாக கண்ணில்படும் ஆனால் ஒவ்வொரு தூணிலும் மூன்றடுக்காக சிற்பங்கள் அமைந்துள்ளன, சைவ வைணவ பேதம் இல்லாமல் அனைத்து தெய்வங்களின் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. சிற்பிகளுக்கு யோகத்தின் மேல் அதிக ஈடுபாடு போல தெரிகின்றது, குண்டலினி சக்தியை குறிக்கும் பிணையல் நாகங்களும், மலை மேல் தியானத்தில் ஆழ்ந்துள்ள முனிவர்களும் அதிக அளவில் காணக் கிடைக்கின்றனர். இப்பாவைகளின் கரங்களிலுள்ள விளக்குகளில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் ஐந்து மணி நேரம் இடை விடாமல் எரியுமாம். ஒவ்வொரு தூணிலும் ஒரு சிலபஞ்சி ஆனால் ஒருத்தி போல் இன்னொருத்தி இல்லை. தலை அலங்காரம், முக பாவம், கண்கள், அணிந்துள்ள அணிகலன்கள், ஆடை அணிந்துள்ள விதம், கையில் விளக்கை ஏந்தியுள்ள எழில், காலை வைத்துள்ள ஒயில், நிற்கின்ற தோரணை என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளது, இறைவன் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக மேல் குடிப்பெண்களும், கீழ்க்குடிப் பெண்களும் இச்சிலபஞ்சிகளில் அமைத்துள்ளனர். கம்பீரமான தோற்றம், உடல் வாகுள்ள சிற்பங்களில் விரல் நகங்கள், ஆடைகளின் மடிப்புகள், அணிகலன்களின் நுண்ணிய வேலைப்பாடு, முகங்களில் தெரியும் உணர்ச்சிகள் என்று தத்ரூபமாக பார்ப்பவர்களை சிலிர்க்க வைக்கின்ற இச்சிற்பங்கள். [] சுற்றம்பலம் முக மண்டபத்தின் முன்பக்கக் கதவில் அருமையான மரசிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக இடது திருக்கரத்தை நீட்டிக்கொண்டு அனந்தன் மேல் துயில் கொண்டுள்ள மூலவரின் சிற்பம் அப்படியே கண்ணை விட்டு அகல மறுக்கின்றது. கொடி மரம் அமைந்துள்ள உதய மார்த்தாண்ட மண்டபத்தில் ஆறு அற்புத ஆள் உயர சிற்பங்கள் அனைத்தும் கொள்ளை அழகு. இவை மிகவும் நுட்பமானவை மட்டும் அல்ல அபூர்வமானவை கூட பெருமாளின் அழகில் சொக்கி நிற்கும் கிளி வாகன இரதியும், கரும்பு வில், மலர்க்கணையுடன் மன்மதனும் மனதை சொக்க வைக்கின்றனர், நந்தி மத்தளம் வாசிக்க ஊர்த்துவத்தாண்டவர் நடனமாட, அவரைக் கண்டு திகைத்து காளி நிற்கின்றாள், கோபால கிருஷ்ணரின் வேணு கானத்தை அனுபவித்த ஆவினங்கள் அப்படியே தன்னை மறந்து கிடக்கின்றன, மேலும் திருக்கரத்தில் சிலை அம்பு பரசு தாங்கிய பரசுராமர், அர்ஜுனன் மற்றும் கர்ணன், அனுமன், துவார பாலகர்கள், யாழிகள் என்று சிற்பங்கள் அனைத்தும் காணக் காண தெவிட்டாத அற்புத கலை பொக்கிஷங்கள்! எழிலார்ந்தவை! ஐயகோ என்ன அழகு! அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நான்கு புறமும் கேரளபாணி நாலம்பல முகடுகள். விரிந்த சுற்று பிரகாரம். இவ்வாலயம் சென்றால் சிறிது நேரம் அங்கே தங்கி இவ்வழகை எல்லாம் தரிசித்து வாருங்கள். விமானத்தில் ஐந்து கலசங்கள், செம்பு வேயப்பட்ட கூரை, அருமையான மரச்சிற்பங்கள் மற்றும் மூலிகை ஓவியங்கள் என எழிலாக அமைந்துள்ளது. அடியோங்கள் சென்ற சமயம் உபய நாச்சியார்களுடன் உற்சவருக்கு ஒத்தக்கல் மண்டபத்தில் திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது. ஒன்பது வெள்ளிக்குடங்களின் மந்திர தீர்த்தம், பால், தயிர், தேன், சந்தனம் என்று அருமையாக திருமஞ்சனம் நடைபெற்றது. பிரயோக சக்கரத்துடன் உற்சவர் அருள் பாலிக்கின்றார். மூலவர் பெருமாளின் நாபிப்பகுதி சேவை மட்டுமே அப்போது கிட்டியது. இங்கும் பெருமாளை மூன்று வாசல் வழியாகத்தான் சேவிக்கமுடியும். காலை 8:30 மணிக்கு மேல்தான் முழு சேவையாம். பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போது ஒத்தக்கல் மண்டபம் முழுவதும் பெருமாளின் திருமேனியாக கருதப்படுவதால் சேவார்த்திகள் யாரும் அதை தொடாமல் பார்த்துக் கொள்கின்றனர். புரட்டாசி மாதத்தில் 3 முதல் 9 நாள் வரை மாலை மூலவரின் திருமேனியைச் சூரியக்கதிர்கள் தழுவுகின்றன. [][] மரசிற்பங்கள் நிறைந்த இரண்டடுக்கு விமானம் மூன்று சுற்றுக்கள் கொண்ட ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட கோலத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றார். மாற்று சயன கோலம் இடது திருக்கரத்தை கீழே தொங்கவிட்டிருக்கின்றார். வலது திருக்கரத்தை மேலே தூக்கிய சின் முத்திரை தாங்கிய கோலம். பிரம்மாவைப் படைப்பதற்கும் முன்பு கோவில் கொண்டதால் நாபியில் பத்மமும் இல்லை அதில் பிரம்மனும் இல்லை. புஜங்க சயனத்தில் உலோகம் போல் வழவழப்பான கரிய திருமேனியுடன் மூன்று வாயில் வழியாக சேவை சாதிக்கின்றார். கருவறையில் உபயநாச்சியார்கள் மண்டியிட்டு பெருமானை வணங்கும் கோலத்தில் எழுந்தருளியுள்ளனர். காதலேஹ முனிவரும் எழுந்தருளியுள்ளனர். சுவற்றில் கேசன், கேசி, சூரிய சந்திரர்கள், கருடன் பஞ்சாயுதங்கள் மற்றும் தேவர்களை சேவிக்கலாம். மேலும் தர்மசாஸ்தாவிற்கும், குழலூதும் கோலத்தில் வேம்பாடி கிருஷ்ணருக்கும் பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது. திருவாட்டாறு கிராமத்தின் உள்ளே சிறப்பாக கருடனுக்கு ஒரு தனிக்கோவில் உள்ளது. ஆறாட்டிற்காக பெருமாள் எழுந்தருளும் போது இக்கோவிலுக்கு வந்து கருடனுக்கு அருளிச்செல்கின்றார். வாருங்கள் இனி இத்தலத்தைப் பற்றிய பல சுவையான வரலாறுகளைக் காணலாம் அன்பர்களே. மூலவருடன் கருவறையில் உபய நாச்சியார்களுடன் காதலேஹ மஹாமுனியும் எழுந்தருளி உள்ளார். சோமாயாஜி என்பவர் புத்திரப்பேறு வேண்டி இத்தலத்தில் யாகம் செய்து வழிபட்டார். அவருக்கு ஒரு மகன் பிறந்தான். பிள்ளையையும் பக்தியுடன் வளர்த்தார். ஒரு சமயம் சுசிவிரதன் என்ற தேவன் பரிகாசமாக அப்பிள்ளையிடம் உன் தாய், தந்தை யார் என்று கேட்க, பிள்ளை திகைத்து அருகில் இருந்த வாழை மரத்தைக் காட்டி இதுதான் என்று கூற, பிள்ளையைக் காக்க பெருமாள் கதலி(வாழை) மரத்தில் இருந்து தோன்றி அப்பிள்ளைக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தையும் உபதேசித்து தன் அருகிலேயே இறுத்திக் கொண்டார். எனவே விமானமும் அஷ்டாக்ஷர விமானம் என்றழைக்கப்படுகின்றது. மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன் கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல் மைந்நின்ற வரை போலும் திருவுருவ வாட்டாற்றாற்கு எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே? (தி.வா 10-6-8) பொருள்: பெருமானின் திருமேனி முழுவதும் மணக்கும் திருத்துழாய் வாசனை அவன் திருமுடியிலும் விளங்குகின்றது. நினைக்கின்ற இடத்திற்குச் சென்று போரிட்டு மீண்டும் வந்து திருக்கரத்திலே தங்கும் சக்கரத்தினையுடைய அப்பெருமான் கடல்நீரின் நிறத்தைப் போன்ற மை மாறாத மலையைப் போல உள்ளவன். இவன் திருவாட்டாற்றில் எழுந்தருளியுள்ளான். அப்பெருமான் என் நெஞ்சில் நிலை பெற்று நிற்க நான் அவனுக்கு என்ன நன்மை செய்து விட்டேன்? அவனுக்கு நான் எதுவும் செய்தேன் அல்லேன். அவன் அருளே அருள்! என்று நம்மாழ்வார் பல்லாண்டு பாடியுள்ள ஆதிகேசவப்பெருமாள் பல அரசர்களுக்கு அருள் புரிந்துள்ளார் அவற்றை இனி காணலாம். வஞ்சி அரசர்களுக்கு எதிராக முகலாயர்கள் படையெடுத்தபோது உமையம்மை என்ற இராணி கோட்டயம் கேரள ராஜாவை உதவ வேண்ட அவரும் படை கொண்டு வந்த போது, முகலாயப்படைகளைப் பார்த்து பயந்து ஆதி கேசவப் பெருமாளை சரணடைந்து 16 பாடல்கள் கொண்ட படை சங்கீர்த்தனம் என்னும் “ஆதிகேசவஸ்த்வம்” என்ற கீர்த்தனையைப் பாட. பெருமாளின் அருளினால் எங்கிருந்தோ தேனீக்கள் திரண்டு வந்து முகலாயப் படைகளை தாக்கியது, அதில் முகலாய தளபதி மரணமடைய, பீதியில் முகலாயப்படை பின் வாங்கி ஓடியது, அவர்களை கேரளராஜா வென்று அவர்களின் 300 குதிரைகளையும் கைப்பற்றி தனது குதிரைப்படையை உருவாக்கினார் என்பது வரலாறு. இன்றும் தினமும் மாலை படைச் சங்கீர்த்தனம் பெருமாள் முன் சேவிக்கப்படுகின்றது. திருவனந்தபுரம் திருக்கோவிலை புனரமைத்த இராஜா மார்த்தாண்ட வர்மா ஒரு சமயம் எதிரிகளிடமிருந்து தப்பிக்க மாறு வேடத்தில் அலைந்து கொண்டிருந்த போது, திருவாட்டாற்றில் ஒரு மூதாட்டி பசி தாகத்தால் வாடியிருந்த இவருக்கு அரிசிக்கஞ்சியும் உப்பு மாங்காயும் அளித்து பசியாற்றினாள், ஆதிகேசவர் அருளால் அரசனும் எதிரிகளை வென்று திருவிதாங்கூர் இராச்சியத்தை மீட்ட போது, அதே அரிசிக்கஞ்சியும், உப்பு மாங்காயும் பெருமாளுக்கு நிவேதனம் ஆக வேண்டும் என்றும் அம்மூதாட்டியின் சந்ததியினருக்கு திருக்கோவிலில் முன்னுரிமையும் அளித்து ஆணையிட்டார். இன்றும் ஆறாட்டு விழாவின் போது அரசனின் பிரதிநிதி ஆறாட்டு சமயத்தில் வந்து வாளை கொடிமரத்தின் அடியில் வைத்து சரணடைந்து உற்சவத்தில் கலந்து கொள்கின்றார். அரசன் நியமித்த ஒரு தச்சன் ஓண வில் செய்து பெருமாளுக்கு சமர்ப்பிக்கின்றார். ஒரு சமயம் ஆற்காட்டு நவாப் படையெடுத்து வந்த போது உற்சவரை கவர்ந்து சென்று தன்னுடைய கஜானாவில் எறிந்து விட்டான். உற்சவரை எப்படி கீழே போட்டாலும் தானாக மேலே வந்து கொண்டிருந்தது. அதே சமயம் அவனது இராணிக்கு தீர்க்க முடியாத ஒரு வியாதி பற்றிக்கொண்டது. பெருமாள் அர்ச்சகர் கனவில் தோன்றி நவாப்பிடம் சென்று உற்சவரைத் திருப்பித் தந்தால் இராணியின் வியாதி விலகும் என்று கூறப் பணித்தார். நவாபும் உற்சவரை திரும்பக் கொண்டு வந்து திருக்கோவிலில் சேர்க்க இராணியின் நோயும் விலகியது. நன்றிக்கடனாக நவாப் பெருமாளுக்கு தங்கக்கிரீடமும், வெள்ளி தட்டும் உபயமாக அளித்தான். தீர்த்தவாரி தினத்தன்று “திருவளா பூஜை” (அல்லா பூஜை) நடத்தினான். அன்றைய தினம் பெருமாளுக்கு அவல், பொரி, சாதம் நிவேதனம் செய்யப்படுகின்றது. வம்மின் தொண்டர்களே திரை குழல் கடல் புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன வரை குழுவு மணிமாட வாட்டாற்றான், வானேற வழி தந்த வாட்டாற்றான், வன்னெஞ்சத்திரணியனை மார்விடந்த வாட்டாற்றான், மலை மாடத்தரவணை மேல் வாட்டாற்றான், வளம்மிக்க வாட்டாற்றான் என்று மங்கலாசாசனம் செய்த நம்மாழ்வாருக்கு பெருமாள் இத்தலத்தில் காட்டிய கல்யாண குணம் என்ன என்று காணலாம். அடியார் கேட்டபடி கேட்கின்ற குணத்தை எம்பெருமான் ஆழ்வாருக்கு காட்டி அருளினார். இதை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் " மோக்ஷதரநத்தில் பிரணத பாரதந்த்ர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும்" என்று கூறுகின்றார். மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் என்றும் “அருள் பெறுவாரடியாரில் ஆழியானருள் தருவானமைகின்றான்” என்று ஆழ்வாரே கூறியபடி பெருமாள் நம்மாழ்வாருக்கு உடலுடனே வைகுந்தம் அளிக்க விழையும் போது ஆழ்வார் உடலுடன் வைகுந்தம் செல்ல விரும்பாததால் அவரது அவாவிற்கிணங்கி உடல் இல்லாமல் வைகுந்தப் பேறளிக்கின்றார். இவ்வாறு அடியார்கள் சொன்ன வண்ணம் செய்யும் பெருமாள் என்னும் குணத்தை காட்டுகிறார் ஆதிகேசவர் இத்தலத்தில். வாருங்கள் அன்பர்களே இனி திவ்யக்கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இத்திவ்யதேசத்தைப் பற்றி எவ்வாறு பாடியுள்ளார் என்று காணலாம். மாலைமுடி நீத்து மலர்ப்பொன் அடிநோவப் பாலைவனம்புகுந்தாய் பண்டுஎன்று – சாலவும்நான் கேட்டால் துயிலேன்காண் கேசவனே பாம்பணை மேல் வாட்டாற்றுக் கண்துயில்கொள் வாய் (நூ.தி 68) பொருள்: கேசவன் என்னும் திருநாமத்தை உடையவனே! ‘மாலையையும் முடியையும் நீத்து, (சிற்றவையின் சொற்படி) தாமரை மலர் போன்ற அழகிய திருவடிகள் வருந்தும்படி கொடுங்காட்டில் நடந்து சென்றாய்’ என்று கேட்டால், அடியேன் அடியோடு கண்துயில் கொள்ளேன்; நீயோ திருவாட்டாறு என்னும் திருத்தலத்தில் பாம்பணையில் மீது கவலையின்றிக் கண்ணுறங்குகின்றாய்! என்று அங்கலாய்க்கின்றார். ஸ்ரீ வர்துல நதிபுர சாகர நிமக்நாய க்ஷேத்ரே ராம புஷ்கரணி தடே அஷ்டாங்க விமானச் சாயாயாம் ஸ்திதாய அனந்தசயனாய பக்ஷிமமுகாய ஸ்ரீமதே மரகதவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீஆதிகேசவ பரப்ரஹ்மணே நம: என்ற தியான ஸ்லோகத்தை ஜபித்துக்கொண்டே வைகுந்த வாழ்வளிக்கும் ஆதி கேசவரிடம் சரணமடைந்து, வாருங்கள் அன்பர்களே யாத்திரையின் நிறைவாக திருப்பதிசாரம் என்று தற்போது அழைக்கப்படும் திருவண்பரிசாரத்தில் திருவாழ்மார்பனை சேவிக்க செல்லலாம். அத்தியாயம் – 15 திருவண்பரிசாரம் – திருவாழ்மார்பன் [] மலைநாட்டு திவ்யதேச யாத்திரையின் நிறைவாக திருப்பதிசாரம் என்று தற்போது அழைக்கப்படும் திருவண்பரிசாரத்தை அடைந்தோம். இத்திவ்யதேசம் மலைநாட்டு திவ்யதேசம் ஆனாலும் திருவாட்டாறு போல தமிழகத்தில் தற்போது அமைந்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் நாகர்கோவிலிலிருந்து சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடதுபுறமாக திரும்பி 2 கிலோ மீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். வயல்களும், தோட்டங்களும் சூழ்ந்த பழையாற்றங்கரையில் கோவில் அமைந்துள்ளது. இத்திவ்யதேசம். நாகர்கோவிலிலிருந்து இத்தலத்தை சுலபமாக பேருந்து மூலம் சென்றடையலாம். வாருங்கள் அன்பர்களே இத்தலத்தின் சில சிறப்புகளைப் பற்றி காணலாம். வண் என்றால் வளத்தைக் குறிப்பது வழங்குவதையும் குறிக்கும்.. நம்மாழ்வாரை நமக்கு கொடுத்ததனால் இத்தலத்திற்கு இச்சிறப்பு அடைமொழி. மலைநாட்டு திவ்யதேசங்களில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிப்பது இத்தலத்தில் மட்டுமே. நம்மாழ்வார் என்னும் அமுதத்தை நமக்களித்த அமுதம் உடைய நங்கையாரின் அவதாரத்தலம் இத்தலம். விபீஷணாழ்வாருக்கு பட்டாபிஷேக கோலத்தை காட்டியருளிய தலம். குலசேகராழ்வார் திருப்பணிகள் செய்த தலம், பரமபதித்த தலம். நம்மாழ்வார் இத்தலத்தை ஒரு பாசுரத்தால் மட்டுமே மங்கலாசாசனம் செய்துள்ளார். ஆலயத்திற்கு எதிரிலேயே சோம லக்ஷ்மி தீர்த்தம் அமைந்துள்ளது. இனி பெருமாளுக்கு திருவாழ் மார்பன் என்னும் திருநாமம் ஏன் வந்தது என்று காணலாமா அன்பர்களே. பெருமாள் தன் பக்தனான பிரகலாதன் சொன்ன சொல்லை நிரூபிக்க நரசிம்ம அவதாரம் எடுத்த போது அவரது உக்ரத்தைக் கண்டு தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் அனைவரும் நடுங்கினர். தாயார் கூட பெருமாளை நெருங்க அஞ்சினாள். பிரகலாதனால் மட்டுமே பெருமாளை சாந்தப்படுத்த முடிந்தது. எனவே தாயார் இத்தலம் வந்து லக்ஷ்மி தீர்த்தக்கரையில் தவம் செய்தாள். பின்னர் இங்கு பெருமாள் எழுந்தருள தாயார் தனது இருப்பிடமான பெருமாளின் மார்பில் அமர்ந்தாள். எனவே பெருமாள் “திருவாழ்மார்பன்” என்றழைக்கப்படுகின்றார். அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் என்று ஆழ்வார்களும் மங்கலாசாசனம் செய்து மகிழ்கின்றனர். இராவணனை வென்று, சீதையை மீட்டு இலங்கையைத் தன் வசப்படுத்திய ஸ்ரீராமருக்கு, அயோத்தியில் பட்டாபிஷேகம். அதனைக் காண வந்தவர்களுக்கெல்லாம் பரிசுப் பொருட்களை வாரி வழங்கினார் இராமர். அவ்வகையில், இராவணனின் இளவல் விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ஸ்ரீரங்க விமானத்தைத் பரிசாகக் கொடுத்தார் ஸ்ரீராமர். சூரிய குலச் சொத்து அன்புப் பரிசாகக் கை மாறியது. அதனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினான் விபீஷணன். அப்படியே தன் நாடு நோக்கிக் கிளம்பினான். ஆகாய மார்க்கமாகச் சென்ற அவன் சோமலட்சுமி தீர்த்தத்தில் நீராடி இராமபிரானின் முடிசூட்டு விழாவைத் தனக்கு மீண்டும் ஒரு முறை காட்சி தந்தருள வேண்டி திருவாழ்மார்பனை வழிபட்டார். அதற்கிணங்கி பெருமாள் பட்டாபிஷேக கோலத்தை மீண்டும் காட்டியருளிய தலம். எப்போதும் இராம காதையை செவி மடுக்க விரும்பும் அனுமனுக்கு, அகத்திய முனிவர் இராமாயணத்தை கூறிய தலம் என்றும் கூறுவர். ஒரு சமயம் குலசேகர மன்னரின் வெள்ளை நிற குதிரை காணாமல் போயிற்று. மன்னரும் காவலரும் பல இடங்களிலும் தேடினர். அது சோம தீர்த்தக் கரையில் புல் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டு அவ்விடத்திற்குத் "திருவெண்பரிசாரம்’ எனப் பெயரிட்டதாகவும் அதுவே மருவி திருவண்பரிசாரம் என்றாகியது என்றொரு வரலாறும் உண்டு. எனவே கொல்லி காவலன், கூடல் நாயகன், கோழி வேந்தன், குலசேகராழ்வார் இங்கு தங்கி இவ்வாலயத்தை புனருத்தாரணம் செய்து 40 அடி உயரமுள்ள கொடிமரத்தை நிறுவினார். பின்னர் இங்கேயே பரமபதித்தார். தற்போது தங்கத்தகடு வேயப்பட்டு தங்கமுலாம் பூசிய கருடனின் உருவம் உச்சியில் பொறிக்கப்பட்ட கொடிமரம் எழிலாக மஹாமண்டபத்தில் அமைந்துள்ளது. இன்றைய சுசீந்திரம் ஒரு காலத்தில் ஞானாரண்யம் என்று அழைக்கப்பட்டிருந்தது. அத்திரி, வசிஷ்டர், காசியபர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர், ஜமதக்னி, கௌதமர் ஆகிய சப்தரிஷிகள் இங்கு தவமிருந்தனர். இறைவன் அவர்களுக்கு சிவ வடிவில் அங்கு தரிசனம் அளித்து அருளினார். முனிவர்கள் திருமால் வடிவில் பெருமானைக் காண விரும்பினர். அதற்காக சோமதீர்த்தம் என்னும் இத்தலத்தில் தவம் செய்தனர். அப்போது திருமால் சேவை சாதித்த கோலமே இன்று நாம் சேவிக்கும் கோலம் ஆகும். இதனால் திருமால் சப்தரிஷிகள் சூழ பிரசன்ன மூர்த்தியாக இருந்து அருள் புரிகின்றார். இவருக்கு வலப்புறம் உள்ள சன்னதியில் இராமர் விபீஷணாழ்வாருக்கு அளித்த பட்டாபிஷேக கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அவருடன் அகத்தியர் அனுமன், விபீஷணாழ்வான், குலசேகராழ்வார் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். இத்திவ்ய தேசத்தின் மூலவர்: திருவாழ்மார்பன், திருகுறளப்பன் தாயார் : கமலவல்லி நாச்சியார். விமானம்: இந்திர கல்யாண விமானம் தீர்த்தம்: லக்ஷ்மி தீர்த்தம் என்னும் சோம தீர்த்தம் பிரத்யக்ஷம்: சப்தரிஷிகள். லக்ஷ்மி, கருடன். மங்கலாசாசனம்: நம்மாழ்வார் மூலவர் சுமார் ஒன்பது அடி உயரம், கடுகுசக்கரை யோகம் என்னும் கடுகு வெல்லம் ஆகியவற்றால் ஆனவர் என்பதால் திருமஞ்சனம் கிடையாது. வெள்ளி அங்கி சார்த்தி பஞ்சகவ்யம் தெளிப்பது மட்டுமே உண்டு. கருவறையில் திருவாழ்மார்மன் 9 அடி உயரத்தில் வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு நான்கு கரத்துடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அருள்புரிகிறார். பின் கைகள் சங்கு, சக்கரம் ஏந்தியிருக்க, முன் வலத்திருக்கரம் அபயமாகவும் இடத்திருக்கரத்தை தொடையில் வைத்த வண்ணம், கழுத்தில் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட பதக்கத்துடன் திருவாழ்மார்பனாக எழிலாக சேவை சாதிக்கின்றார். அத்திரி, வசிஷ்டர், காசியபர், பரத்வாசர், விசுவாமித்திரர், ஜமதக்னி, கவுதமர் ஆகிய சப்த ரிஷிகள் புடைப்புச் சிற்பங்களாக புடைசூழ வீற்றிருக்கின்றார் பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவிகளுடன் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். நம்மாழ்வார் அவதாரம் செய்தது இத்தலத்தில்தான். நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கை இத்தலத்தை சேர்ந்தவர், அவருக்கும் ஆழ்வார் திருநகரி பொன்காரிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வெகு காலம் பிள்ளைப்பேறு இல்லாமல் இருக்க தமது குல தெய்வமான வண்ணமழகிய நம்பி வடிவழகிய நம்பி திருக்குறுங்குடி நம்பியிடம் பிரார்த்திக்க, யார் போல பிள்ளை வேண்டும் என்று பெருமாள் வினவ, உம்மைப் போல பிள்ளை வேண்டும் என்று வேண்ட, நாமே வந்து உமக்கு மகவாகப் பிறப்போம் என்று அருளியபடி நம்மாழ்வாராக திருவவதாரம் செய்தார் என்பது ஐதீகம். ஆனால் பிறந்தது முதல் எந்த இயக்கமும் இல்லாமல் பெற்றோருக்குப் பெருந்தவிப்பைத் தந்தார். குழந்தை நம்மாழ்வாரை தூக்கிக் கொண்டு அவரது பெற்றோர் குருகூரில் உள்ள ஆதிநாதன் சன்னிதியில் விட்டனர். அந்தக் குழந்தை மெல்ல நகர்ந்து, நகர்ந்து அருகில் இருந்த ஒரு புளிய மரப்பொந்தினுள் சென்று அமர்ந்து கொண்டது. இப்படி அவர் பதினாறு ஆண்டுகள் வாசம் செய்தார். மதுரகவியாழ்வார் இக்கோவிலுக்கு வந்தார். நம்மாழ்வார் மிகப்பெரிய மகான் என்று அடையாளம் கண்டு கொண்டு அவரை தனது குருவாக ஏற்றுக்கொண்டார். மதுரகவியாழ்வார் எந்தப்பெருமாளையும் பாடாமல் தன் குருநாதரைப்பற்றி மட்டுமே பாடல்கள் இயற்றியுள்ளார். பல்வேறு திவ்ய தேசங்களில் கோவில் கொண்டிருந்த பெருமாள்கள் எல்லோரும் நம்மாழ்வாரிடம் வந்து தன்னைப் பற்றி பாடல் இயற்றுமாறு கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறார்கள். ஆனாலும், திருவண் பரிசாரம் என்ற தன் தாயாரின் பிறந்த ஊரில் கோவில் கொண்டிருக்கும் திருவாழ்மார்பன் இவர் மீது ஏதோ வருத்தம் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால்தான் யாராவது அந்தப் பெருமாளிடம் என்னைப் பற்றிச் சொல்ல மாட்டீர்களா என்று ஏக்கமாகக் கேட்கிறார்.அதன் பிரதிபலிப்பாக எழுந்த பாசுரம். வருவார் செல்வார் வண்பரிசாரத்திருந்த என் திருவாழ்மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்? உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒரு பாடுழ்வான் ஓரடியானு முளனென்றே (தி.வா 8-3-7) என்று நம்மாழ்வார் ஒரே பாசுரத்தினால் மங்கலாசாசனம் செய்துள்ளார். பொருள்: திருவண்பரிசாரத்திற்கும் ஆழ்வார் திருநகரிக்குமாக போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருப்பவர்களே திருவண்பரிசாரத்தில் எழுந்தருளியுள்ள திருவாழ்மார்பன் எம்பெருமானிடம், தேவரீருடைய சங்க சக்கரங்களை சுமந்து கொண்டு தங்களின் ஒரு பக்கம் வர மேன்மையுடைய அடியவன் ஒருவன் உள்ளான் என்று கூறுங்கள் என்று பாடுகின்றார். என் திருவாழ்மார்பன் – அதாவது ஆழ்வாருடைய பெருமாள், என் திரு+வாழ் மார்பன் – அதாவது ஆழ்வாருடைய தாயாராகிய, அனைவருக்கும் தாயாராகிய அலர் மேல் மங்கை, அகலகில்லேன் இறையும் என்று எப்போதும் உறைகின்ற மார்பன் என்றும் இரு விதமாகப் பொருள் கொள்ளலாம். ஒருபாடுழல்வான் – அதாவது ஒரு பக்கம் என்று எதற்காக ஆழ்வார் பாடியுள்ளார் என்பதற்கு பெருமாளை பிரியாமல் லக்ஷ்மணன் வில்லைத் தாங்கி ஒரு பக்கம் வந்து கொண்டிருப்பதால், மற்றொரு பக்கம் தான் பெருமாளின் சங்க சக்கரங்களை தாங்கி வர விழைகின்றார் ஆழ்வார் என்று ஆச்சார்யர்கள் இப்பாசுரத்திற்கு விளக்கம் தருவர். ஆலயத்தின் பின்புறம் திருத்தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. நம்மாழ்வார் குழந்தையாக தவழ்ந்து செல்வது போன்ற அழகிய சிலை உள்ளது ஆலயத்தின் முகப்பில் இராமர், அமர்ந்த கோலப்பெருமாள், நம்மாழ்வார் சுதை சிற்பங்கள் அருமையாக அமைத்துள்ளனர். கருவறையைச் சுற்றிய கர்ணகூடு ஆரம்பகால சோழர்பாணி என்கின்றனர். இத்திருக்கோவிலின் முன்வாயிலை அடுத்து இருக்கும் கிழக்குப் பிரகாரத்தை மகாமண்டபம் என்பர். கொலு மண்டபம் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கிழக்குப் பிரகாரத் தூண்களில் தசாவதார சிற்பங்கள் அருமை. மேலும் சைவ வைணவ பேதம் இல்லாமல் அனைத்து தெய்வ சிற்பங்களும் உள்ளன. கிழக்கு வரிசைத்தூண் ஒன்றில் நம்மாழ்வார் சிற்பம் உள்ளது. தூண்களில் விளக்கு எந்திய பாவைகளின் சிற்பமும் உள்ளது. ஆலயம் கேரள பாணியில் இல்லாமல் முழுதும் திராவிட பாணியில் உள்ளது. இந்திர கல்யாண விமானமும் திராவிட பாணியில் உள்ளது. நமஸ்கார மண்டபத்தின் வடபுறம் விஷ்வசேனர், நடராஜர், நம்மாழ்வார் ஆகியோர் பரிவார தெய்வங்களாக சிறு சன்னதிகளில் உள்ளனர். விஷ்வசேனர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரம் ஏந்தி விஷ்ணுவின் அம்சமாக உள்ளார். இது நின்ற கோல கல்படிவம். மூலவருக்கு அணிவித்த மாலையை விஷ்வசேனருக்கு அணிவித்தல் என்ற நடைமுறை இக்கோவிலில் இல்லை. விஷ்வசேனர் சன்னதியை அடுத்து விழாக்கால படிமங்கள் இருக்கும் சன்னதி உள்ளது. இதில் உமா மகேஸ்வரர், நடராஜர், சிவகாமி, காரைக்கால் அம்மையார், சாஸ்தா ஆகியோரின் செப்பு படிமங்கள் உள்ளன. அடுத்து நம்மாழ்வார் இருக்கிறார். இடது கை மடியிலும், வலது கை சின் முத்திரையுடன் பத்மாசனம் இட்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். நமஸ்கார மண்டபத்தின் தென்மேற்கில் ராமர், லெட்சுமணர், சீதை ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அருகே விபீஷனர், அகத்தியர், குலசேகர ஆழ்வார் உள்ளனர். அதன் எதிரே கருடாழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது. திருவாழ்மார்பன் ஆலயம் கேரள மன்னர்கள் காலத்திலும் சோம லட்சுமி தீர்த்தத்தின் படிக்கட்டுகள் மதுரை திருமலை நாயக்கர் காலத்திலும் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர். தொழுநோயால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னன் நோய் தீர மனமுருகி திருவாழ் மார்பனை வேண்ட, நோய் நீங்கியது என்றும் இதனால் மனமகிழ்ந்து இறைவனுக்குத் தங்க கிரீடத்தைக் காணிக்கையாகச் செலுத்தினாராம். சோமலட்சுமி தீர்த்தம் ஒரு பெரிய குளம், அதன் கரையில் ஒரு சின்ன மண்டபம் கருங்கல் இருக்கையும் கட்டை சுவற்றுடன் ஆலயத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் நடைபெறும் சித்திரை மாத ஆறாட்டுத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகின்றது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் விழா ஆரம்பமாகின்றது. ஒன்பதாம் திருநாள் தேரோட்டத்தில் பெருமாள் தேரில் வலம் வருகின்றார். இத்தேரை மூலம் திருநாள் இராஜா பெருமாளுக்கு தனக்கு குழந்தை பாக்கியம் அருளியதற்காக பெருமாளுக்கு சமர்பித்தாராம். ஆவணி மாதம் ஓணம் திருநாளன்று இரவு சுவாமிக்கு ஊஞ்சல் சேவை நடைபெறுகின்றது. விஜய தசமியில் திருவாழ்மார்பனின் தங்கையான திருப்பதி நங்கை வெள்ளைக் குதிரை வாகனத்தில் அம்பெய்யச் செல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் குலசேகர ஆழ்வார் பரமபதித்த ஆடி ஸ்வாதி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகின்றது. இராஜா மார்த்தாண்டவர்மா எதிரிகளிடமிருந்து தப்பிக்க அலைந்த போது இவரையும் வணங்கியுள்ளார். பின்னர் எதிரிகளை வென்று அரசனான பின் தனது நட்சத்திரமான அனுஷம் திருநாளை விழாவாக கொண்டாடினார். இக்கோவிலில் நடைபெறும் கருட சேவை விசேஷமானது. புரட்டாசி சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு கருடசேவை நடைபெறுகிறது. முதல் 3 சனிக்கிழமைகளில் சிறிய கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வருவார். நிறை சனிக்கிழமை அன்று பெரிய வெள்ளிக்கருட சேவையில் சுவாமி எழுந்தருளுகிறார். பின்னர் மேள, தாளம் முழங்க கோவிலை சுற்றி வருவார். மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியும் விசேஷமானது. அன்று அதிகாலை கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி பரமபதவாசல் வழியாக எழுந்தருளுவார். சுவாமிக்கு வழிபாடு நைவேத்யங்களில் அரவணை, பால்பாயாசம், பொங்கல், புளியோதரை, அப்பம் குறிப்பிடத்தக்கவை. பஞ்சகவ்ய தீர்த்தம் பூஜைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற துலாபார நேர்ச்சை செலுத்துகிறார்கள். நிஷ்டான பூஜை வழிபாட்டிலும் பங்கேற்கிறார்கள். திருப்பதிக்கு நேர்ந்தால் திருப்பதிசாரத்தில் செலுத்தலாம். திருப்பதிசாரத்தில் நேர்ந்தால் திருப்பதியில் செலுத்த முடியாது என்பது ஐதீகம். அடியோங்கள் சென்ற சமயம் திருக்கோவிலின் திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தன எனவே எப்போதும் காலை 10:30 மணியளவில் அடைக்கப்பட வேண்டிய நடை 9:30 மணிக்கே அடைக்கப்பட்டிருந்தது. முன் மண்டபத்தில் உள்ள கற்தூண்களையும் சிற்பங்களையும் மணலை வீசி (Sand Blasting) சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இம்மணலால் சுத்தம் செய்யும் முறை அதிக சேதத்தை விளைவிக்கும் என்றாலும் பல ஆலயங்களில் இன்னும் இதை கடைப்பிடிக்கின்றனர் என்று வருத்தமாக இருந்தது. எனவே பெருமாளை சேவிக்க முடியவில்லை. லக்ஷ்மி தீர்த்தத்தில் நீராடிவிட்டு நம்மாழ்வாரின் திருத்தாயார் சன்னதிக்கு சென்று வணங்கினோம். பின்னொரு சமயம் இத்திவ்யதேசத்திற்கு சென்ற போது மிகவும் அழகாக வார்னிஷ் பூச்சுடன் தூண்களும், சிற்பங்களும் விளங்குவதை கண்டு களித்தோம் பெருமாளையும் திவ்யமாக சேவித்தோம். அன்று சீவேலி சேவிக்கும் பாக்கியமும் கிட்டியது. மஹா மண்டபத்தில் பிரம்மாண்ட தூண்கள். அவற்றில் அற்புத சிற்பங்கள் வரிசையாக கை விளக்கேந்திய பாவைகள் இத்திவ்யதேசத்திலும் காணப்பெற்றோம். நம்மாழ்வாருக்கு இத்தலத்தில் பெருமாள் காட்டிய கல்யாண குணம் சௌகுமார்யம் என்னும் மென்மை ஆகும். எப்போதும் பெருமாள் சங்கு சக்கரங்களை சுமந்து கொண்டிருப்பதால் எம்பெருமானின் மென்மையான திருமேனி வாடி விடும், அவரது கரங்கள் வலிக்கும் என்று வருந்தி ஆழ்வார் சங்கு சக்கரங்களை தான் சுமந்து கொண்டு ஒரு பக்கம் வருவதாக பல்லாண்டு பாடுகிறார். இதை அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய் ஹ்ருதயத்தில் "ச்ரமமனஞ் சூழும் சௌகுமார்ய ப்ரகாசம் ஆய்ச்சேரியிலே (தாயார் உடைய நங்கையின் ஊரிலே)" என்று கூறுகிறார். நித்ய சூரிகள் சேவை செய்ய பரமபதத்தில் வீற்றிருக்கும் பெருமாள், சம்சாரிகளின் துக்கத்தைப் போக்கும் பொருட்டு இவ்வுலகத்தில் சௌகுமார்ய ப்ரகாசமான கொண்டு வந்து அவதரித்தார் என்று கூறுகின்றார். இத்தலத்தில் எம்பெருமான் காட்டிய மென்மை திருமேனியின் மென்மை ஆகும். திருமொழிக்களத்தில் காட்டிய மென்மை அடியாரை விட்டுப் பிரிந்தால் மனம் தாங்காது என்னும் மார்த்வம் என்கின்ற மனத்தின் மென்மையாகும். அடியும் குளிர்ந்தாள் அறிவும் குலைந்தாள் முடிகின்றாள்; மூச்சு அடங்கும் முன்னே கடிது ஓடி பெண்பரிசு ஆர் அங்குப் பிறப்பித்து மீளுவார் வண்பரிசா ரம்சிறந்த மாற்கு? (நூ தி 60) தலைவியின் கால்களும் குளிரப்பெற்று, அறிவும் அழியப் பெற்று, மரணமடையும் தறுவாயில் இருக்கின்றாள்; இவளது சுவாசம் அடங்குவதற்கு முன், திருவண்பரிசாரம் சென்று திருவாழ்மார்பரிடம் இப்பெண்ணின் தன்மையை விளங்கும்படி தெரிவித்து திரும்பி வல்லவர் யாவர்? என்று பிரிவாற்றாது வருந்தும் தலைவியின் நிலை கண்ட செவிலி இரங்கும் பாசுரமாக திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இத்திவ்யதேசத்தைப் பற்றி பாடியுள்ளார். ஸ்ரீபதிசார க்ஷேத்ரே சோமலக்ஷ்மி தீர்த்த தடே இந்த்ரகல்யாண விமானச் சாயாயாம்  ஸ்திதாய  ஸ்ரீகமலவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீநிவாச(திருவாழ்மார்பன்) பரப்ரஹ்மணே நம:  என்பது இவரது தியான ஸ்லோகம் ஆகும். இவ்வாறு மலர்மகளை தன் மார்பில் கொண்ட மாதவன் அருளால் இரண்டரை நாளில் 13 மலை நாட்டு திவ்யதேச யாத்திரை நிறைவு பெற்றது. 11 தலங்களில் பெருமாளின் திவ்ய தரிசனம் கிட்டியது. அதில் ஒன்று ஏகாந்த சேவையாக அமைந்தது. எனவே ஒரு அதிகப்படி நாள் வைத்துக்கொண்டு யாத்திரை செல்வது உத்தமமானது. பின்னர் ஸ்வயம்வக்த தலமும், அடியோங்களை யாத்திரை அழைத்துச் சென்ற திருமலை இராமானுஜதாச சுவாமிகளின் ஆச்சாரியர் வானமாமலை ஜீயர் வசிக்கும் தோத்தாத்திரி என்றழைக்கப்படும் நாங்குநேரி சென்று வானமாமலைப் பெருமாளை சேவித்தோம். ஆச்சாரியன் ஆசி பெற்றோம். பின்னர் மதுரை நகரை அடைந்து கூடலழகரை சேவித்தோம். அன்றிரவு திருமோகூரில் காளமேகப்பெருமாளையும், சுதர்சனாழ்வாரையும் சேவித்து யாத்திரையை சுபமாக நிறைவு செய்தோம். அன்றிரவு முழுவதும் பயணம் செய்து அதிகாலை சென்னை திரும்பினோம். இவ்வாறு மூன்று நாட்களில் 13 மலைநாட்டு திவ்யதேசங்கள், மூன்று பாண்டிய நாட்டு திவ்யதேசங்கள், குருவாயூர், வர்கலா ஜனார்த்தன சுவாமி திருவனந்தபுரம் வராகசுவாமி, நெய்யாற்றங்கரை கிருஷ்ணர், குலசேகராழ்வார், நம்மாழ்வார் அவதார ஸ்தலங்கள், ஜீயரின் ஆசி என்று அருமையான யாத்திரையாக அவனருளால் அமைந்தது. இம்மலைநாட்டு திவ்யதேச யாத்திரை செல்லும் போது அடியோங்கள் சேவித்த மற்ற சில தலங்களைப் பற்றிய விவரங்கள் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளன, அன்பர்களுக்கு அவை உபயோகமாக இருக்கும் என்பதால் அவை பின்பகுதியில் தரப்பட்டுள்ளன. பாகம் -2 புண்ணியத்தலங்கள் அத்தியாயம் – 16 குருவாயூரப்பன் தரிசனம் [] இப்பாகத்தில் அடியோங்கள் இம்மலைநாட்டு திவ்யதேச யாத்திரையின் போது சேவித்த மற்றும் சேவிக்க வேண்டிய சில ஆலயங்களை பற்றி அன்பர்களுக்கு உதவும் விதத்தில் இணைக்கப்பட்டுள்ளன. முதல் நாள் காலை திருநாவாய் மற்றும் திருவித்துவக்கோடு திவ்ய தேசங்களை சேவித்த பின் அடியோங்கள் சென்ற அபிமான ஸ்தலம் குருவாயூர். இத்திருத்தலத்தின் சிறப்பை அனைவரும் நன்றாக அறிவர் என்பதால் இங்கு விரிவாக கூறவில்லை. நாள் ஒன்றுக்கு இங்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பெரிய கோயில் ஆகும். குருவாயூரப்பன் ஆலய வரலாறு மிகவும் பழைமை வாய்ந்தது. நாரத புராணத்தில் இக்கோவிலின் வரலாறும், தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன. தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. துவாரகையில் ஸ்ரீகிருஷ்ணரே வழிபட்ட இவ்விக்கிரகத்தை, தனது அவதார காலம் முடிந்து வைகுண்டம் திரும்பும் போது உத்தவரிடம் கொடுத்து ஒரு புனிதமான இடத்தில் பிரதிஷ்டை செய்யக் கூறினார். துவாரகையை கடல் கொண்டபின் குருவும் வாயுவும் இணைந்து பரசுராமரின் வழிகாட்டுதலின் படி இங்கு பிரதிஷ்டை செய்தனர். எனவே இத்தலம் குருவாயூர் என்றழைக்கப்படுகின்றது. அப்போது ருத்ர தீர்த்தத்தின் இக்கரையில் இருந்த சிவபெருமானும் பார்வதியும் பெருமாளுக்கு இத்தலத்தை கொடுத்துவிட்டு மறு கரையில் உள்ள மம்மியூருக்கு சென்று விட்டனராம். ஆகவே குருவாயூர் யாத்திரை வருபவர்கள் மம்மியூர் சென்று சிவனை தரிசித்தாலே யாத்திரை முழுமையடையும் என்பது நம்பிக்கை. தற்போது பகவதி சன்னதியை சுற்றி வரும் போதே மம்மியூர் உள்ள வடப்பக்கம் திரும்பி நின்று வழிபாடு செய்கின்றனர் பக்தர்கள். பெருமாள் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சதுர்புஜராக நின்ற கோலத்தில் பால ரூபத்தில் சேவை சாதிக்கின்றார், மேலிரண்டு திருக்கரங்களில் சங்கு மற்றும் சக்கரமும், கீழிரண்டு திருக்கரங்களில் கதையும், தாமரையும் கொண்டு துளசி, முத்துமாலைகள் கழுத்தில் தவழ, கிரீடம், மகரகுண்டலம், கேயூரம், கங்கணம், உதரபந்தனம் அணிந்து, வலப்பக்க மார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் மருவும், வைஜயந்தி மாலையும், கௌஸ்துப மணியும் இலங்க எழிலாக சேவை சாதிக்கின்றார் குருவாயூரப்பன். மிகவும் புனிதமானது எனக்கருதப்படும் பாதாள அஞ்சனம் எனும் கல்லில் மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது. இம்மலைநாட்டு திவ்யதேச யாத்திரையில் சதுர்புஜத்துடன் நின்ற கோலத்தில் பல பெருமாள்களை சேவித்த போது குருவாயூரப்பனை சேவித்தது போலவே இருந்தது. குருவாயூரப்பனுக்கு சார்த்தும் அம்மயிற்பீலி கிரீடமும், மலர் அலங்காரம் மற்றும் மயிற்பீலி விசிறி அலங்காரமும் எப்போதும் நம் கண்ணில் நிற்கின்றன. குருவாயூரப்பனை சேவிக்கும் போது குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா உன் கோவில் வாசலிலே தினமும் திருநாள் தானப்பா…. உலகம் என்னும் தேரினையே ஓடச்செய்யும் சாரதியே காலம் என்னும் சக்கரமே உன் கையில் சுழலும் அற்புதமே எங்கும் உந்தன் திருநாமம் எதிலும் நீயே ஆதாரம் உன் சங்கின் ஒலியே சங்கீதம் சரணம் சரணம் உன்பாதம் என்ற பாடல் வரிகள் நம் காதில் ரீங்காரமிடுகின்றதல்லவா? கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் குருவாயூரப்பனிடம் நாமும் சரணமடைவோம். கிழக்கு வாசல், மேற்கு வாசல் என்று இரண்டு பிரதான வழிகள் இருந்தாலும், கிழக்கு நோக்கிய வாசல் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், தங்கத் தகடுகள் வேயப்பட்ட 33.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பத்தின் இருபுறமும் உயரமான தீபஸ்தம்பங்கள் கண்களைக் கவர்கின்றது. இதன் வட்ட அடுக்குகளில் விளக்குகள் ஏற்றப்படும் போது காணக் கண் கொள்ளா காட்சியாகும். ஸ்ரீகோவிலின் சாய்ந்த கூரைகளில் தங்க ஓடுகள் மின்னுகின்றன. சுவர்களில் அருமையான இயற்கை ஓவியங்கள் இன்றும் புதிதாக காட்சி தருகின்றன, கருவறையைச் சுற்றி வெளிச்சுவர்களில் மரச் சட்டங்களில் சுமார் 3,000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாலை நேரத்தில் இவற்றில் தீபம் ஏற்றப்பட்டு இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் போது மனத்தில் பரவசம் ஏற்படுகிறது. தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவந் தானே தமருகந்தது எப்பேர்மற் றப்பேர் – தமருகந்தது எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே அவ்வண்ணம் ஆழியா னாம் (மு.தி 44) என்று பொய்கையாழ்வார் பாடியபடி அவரவர்களுக்கு தகுந்தபடி சேவை சாதிக்கின்றார் குருவாயூரப்பன். ஞானிகளான மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி, பக்த சிரோன்மணி வாசுதேவன் நம்பூதிரி போன்றோர் குருவாயூரப்பனை மஹாவிஷ்ணுவாக வழிபட்டனர். பூந்தானம், வில்வமங்களம் சுவாமிகள், மானதேவன், குரூர் அம்மையார் ஆகியோர் பாலகிருஷ்ணனாக வழிபட்டனர். ஆயினும் குருவாயூரப்பனை ஒரு குழந்தையாக பாவித்து, இங்கு வழிபடும் பக்தர்களே அதிகம்!. உண்ணி கண்ணன், உண்ணி கிருஷ்ணன், பால கிருஷ்ணன், ஸ்ரீ கிருஷ்ணன், குருவாயூரப்பன் என்றெல்லாம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வத்தை பலவாறு அழைத்து மகிழ்கின்றனர் பக்தர்கள். அதிகாலையில் ஸ்ரீகுருவாயூரப்பனின் விஸ்வ ரூப தரிசனம் காண இங்கு கூடும் பக்தர்களின் கூட்டம் சொல்லி மாளாது. குழந்தை கிருஷ்ணனை எந்த வேளையில் தரிசித்தாலும், அதிகாலையில் தரிசிப்பது கூடுதல் ஆனந்தம்! இரவு மூன்றாம் யாமம் முடிந்ததும் மூன்று மணிக்கு நாதஸ்வர இன்னிசை ஒலிக்க, சங்கு முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர். அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு ‘நிர்மால்ய தரிசனம்’ என்று பெயர். நிர்மால்ய தரிசனத்தின் போது குருவாயூரப்பனுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக்காப்பு, ஆடை, ஆபரணங்கள், மாலைகள் இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகக் களைவர். விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் தைலாபிஷேகம் நடைபெறும். தைலாபிஷேகத்துக்குப் பின் அத்தெய்வத் திருமேனியை வாகைத் தூளால் தேய்ப்பர். இதற்கு ‘வாகைசார்த்து’ என்று பெயர். அடுத்து சங்காபிஷேகம் நடைபெறும். அப்போது புருஷஸூக்தம் சேவிக்கப்படுகின்றது. இதன் இறுதியில் தங்கக் கலசத்தில் உள்ள தூய நீரால் திருமஞ்சனம் நடை பெறுகின்றது. இந்த அபிஷேகம் முடிந்த பின் நெல்பொரி, கதளிப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியம் செய்கின்றனர் .அப்போது உண்ணிக் கிருஷ்ணனாகத் தோற்றம் அளிப்பார் குருவாயூரப்பன். இதன் பின் ஆரம்பமாகும் காலை நேர உஷத்பூஜை நடைபெறுகின்றது. இப்பூஜையின் போது நெய்ப்பாயசமும், அன்னமும் பிரதான நைவேத்தியம். இது முடிந்து நடைதிறக்கும் போது பகவான் திருமுடியில் மயிற்பீலி, நெற்றியில் திலகம், இடையில் பொன் அரைஞாண், திருக்கரங்களில் ஓடக்குழல், மஞ்சள்பட்டு ஆகிய ஆபரண அலங்காரங்களுடன் அற்புதமாக தரிசனம் தருவார். குருவாயூரப்பனுக்கு சாயங்காலம் (சந்தியாகாலம்) மட்டும் தீபாராதனை செய்கிறார்கள். ஏழடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத் திரிவிளக்கு என்று பல தீபங்கள் ஏற்றி ஆராதனை செய்து, கடைசியில் கற்பூர ஆரத்தி நடக்கும். சுற்றம்பல அனைத்து விளக்குகளும் மங்கலமாக எரிய பெருமாளின் ஆரத்தி சேவிப்பதே ஒரு ஆனந்தம். மங்கள ஆரத்தியின் போது முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்து குருவாயூரப்பனை வணங்குவதாக ஐதீகம். இதற்கு அன்னமும், சர்க்கரை, பாயசமும் ஆகியவை நைவேத்தியம். ஸ்ரீகுருவாயூரப்பனுக்குப் பிடித்த நைவேத்தியம், பால்பாயசம், நெய்பாயசம், சர்க்கரை பாயசம், அப்பம், திரிமதுரம், மற்றும் பழவகைகள். தினமும் ஐந்து பூசைகளும் மூன்று சீவேலிகளும் நடைபெறுகின்றது. இரவு நடைபெறும் அத்தாழ சீவேலி மிகவும் சிறப்பாக மூன்று யானைகளுடன் நடைபெறுகின்றது நாதஸ்வர இசையுடன் மூன்று முறை சுற்றி வருகிறார் உற்சவ மூர்த்தி. அஷ்ட கந்த தொடர்யிட்டு நடையை அடைப்பதை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆலயத்தின் மதிற்சுவரை ஒட்டியே நாராயண தீர்த்தம் அமைந்துள்ளது. துலாபார நேர்ச்சைக் கடன் இக்கோவிலில் மிகவும் பிரசித்தம். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப தங்கம், வெள்ளி, சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை எடைக்கு எடை செலுத்துகிறார்கள். அது போல் குழந்தைகளுக்கு அன்னப்பிரசனம் என்னும் முதல் அன்னம் ஊட்டும் நிகழ்ச்சி இங்கே சிறப்பு. குழந்தைகளுக்கு முதன் முதலாக இங்கே அன்னம் ஊட்டினால் வாழ்நாள் முழுதும் அக்குழந்தைக்கு ருசியான உணவு கிடைக்கும் என்றும், உணவுக்குப் பஞ்சம் வராது என்பதும், நோய் நொடிகள் எதுவும் வராது என்பதும் நம்பிக்கை. எனவே, தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இங்கே அன்னம் ஊட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. குருவாயூர் என்றவுடன் நாராயணீயத்தை பற்றிக் கூறாமல் இருக்க முடியாது. தனது குரு வாத நோயால் துன்பப்படுகிறார் என்று அதைத்தான் வாங்கிக் கொண்ட நாராயண பட்டத்திரி, குருவாயூரப்பன் சந்நிதிக்கு முன் அமர்ந்து நின்று தினம் நாராயணீயத்தின் பத்து ஸ்லோகங்கள் வீதம் நூறு நாட்கள் பாடினார். ஆயிரம் ஸ்லோகங்கள் பாடியதும் வாத நோய் நீங்கிவிட்டது. நாராயணீயத்தின் முதல் ஸ்லோகத்திலேயே பட்டத்திரி “குருபவன புரே ஹந்தபாக்யம் ஜனானாம்” அதாவது ஏ! குருவாயூரப்பா உன்னை அனுதினமும் அதிகாலை நிர்மால்ய தரிசனம் துவங்கி இரவு நடை அடைக்கும் வரை பல் வேறு அலங்காரத்தில் உன்னை தரிசனம் செய்யும் பக்தர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்று பட்டத்திரி பாடுகின்றார். குருவாயூர் கிருஷ்ணனை முன்னிலைப்படுத்தி பாகவதத்தின் சாரத்தை சம்ஸ்கிருதத்தில் பக்தி சொட்டச் சொட்ட நாராயண பட்டத்ரி பாடினார். பட்டத்ரி ஸ்ரீநாராயணீயம் சொல்லச் சொல்ல… அந்த குருவாயூரப்பன் ‘ஆமாம் ஆமாம்’ என்று தலை அசைத்து அவற்றை ஏற்று ஆனந்தமாகக் கேட்டு ரசித்ததாகத் தன் உபன்யாசத்தில் கூறுவார் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர். கர்நாடக இசை வித்துவான் செம்பை வைத்தியநாத பாகவதர், சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீட்சிதர் ஆகியோர் குருவாயூரப்பனின் அருள் பெற்ற பரம பக்தர்கள் ஆவார்கள். கல்யாண ரூபாய கலௌ ஜனானாம் கல்யாண தாத்ரே கருணா ஸுதாப்தே கம்ப்வாதி திவ்யாயுத ஸத்கராய வாதாலயாதீஸ நமோ நமஸ்தே பொருள்: நன்மையை அருளும் மங்கள(கல்யாண) ரூபத்தில், திருக்கரங்களில் சங்கு போன்ற திவ்யாயுதங்களை ஏந்தியவரும், கலியுகத்தில் பக்தர்களுக்கு வற்றாத நல்வளங்களை வழங்குபவரும், கருணா அமிர்தத்தின் சாகரமானவரும் (சமுத்திரம்) ஆன குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்ற திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன் என்று பாடி வணங்குகின்றனர் பக்தர்கள். குருவாயூர் கோவில் யானைகள் என்றாலே ஒரு தனி சிறப்பு. குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள புன்னத்தூர் கோட்டாவில் தேவஸம் போர்டுக்குச் சொந்தமான யானைகள் கொட்டாரம்அமைந்துள்ளது. குருவாயூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்த யானைகள் கொட்டாரத்துக்கும் வந்து பார்த்து மகிழ்கிறார்கள்.  அடியோங்கள் இந்த யாத்திரையின் போது குருவாயூரப்பனை வேணு கோபாலனாக திவ்யமாக சேவித்தோம். பின்னர் மதிய உணவை குருவாயூரிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து திருஅஞ்சைக்களம் அருகில் உள்ள குலசேகராழ்வாரின் அவதார ஸ்தலத்தை சேவிக்கப் புறப்பட்டு சென்றோம். ஆனால் செல்லும் வழியில் உள்ள சில புகழ் பெற்ற ஆலயங்களை தரிசித்தோம் , அத்தலங்களைப்பற்றி முதலில் காணலாம் அன்பர்களே. அத்தியாயம் – 17 கொடுங்கல்லூர் பகவதி ஆலயம் [] மலைநாட்டு திவ்யதேச யாத்திரையின் முதல்நாள் காலை திருநாவாய், திருவித்துவக்கோடு ஆகிய திவ்யதேசங்களை சேவித்தபின் அடியோங்கள்  குருவாயூரில் உன்னிக் கிருஷ்ணனை சேவித்தோம் அங்கிருந்து  திருவஞ்சிக்களத்தில் உள்ள குலசேகராழ்வார் அவதாரத்தலத்திற்கு புறப்பட்டோம்,  செல்லும் வழியில் கொடுங்கல்லூரை கடந்த  போது அங்கு அப்போது பரணித் திருவிழா நடந்து கொண்டிருந்தது. கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டிருந்தது. ஆலயத்தை சுற்றிலும் உள்ள பெரிய பெரிய மரங்களில் வண்ண வண்ண கொடிகள் அசைந்து எங்களை அம்மனை தரிசிக்க வாருங்கள் வாருங்கள் என்றழைத்தன எனவே வண்டியை நிறுத்தி கொடுங்கல்லூர் பகவதியை தரிசிக்க சென்றோம். சக்தி வழிபாடு என்பது ஆதிகாலம் தொட்டே இருந்து வந்துள்ளது. அம்மன், அம்பாள் என்று சைவர்களும், தாயார், நாச்சியார், பிராட்டி என்று வைணவர்களும் வழிபடும் அன்னையை கேரளத்தில் பகவதி என்று வழிபடுகின்றனர். கேரளத்தில் அமைந்துள்ள சிறப்புப் பெற்ற பகவதி ஆலயங்களுள் ஒன்று இக்கொடுங்கல்லூர் பகவதி ஆலயம். ஆதி காலத்தில் இத்துறைமுக நகரம் கொடுங்கோளூர் என்ற பெயரில் சேர மன்னர்களின் தலைநகரமாக திகழ்ந்திருக்கின்றது. யவனர்களுடன் கடல் வணிகமும் நடந்திருக்கின்றது. இந்நகரத்தில் அமைந்துள்ளது குரும்ப பகவதி காவு என்றழைக்கப்படும் கொடுங்கல்லூர் பகவதி அம்மன் ஆலயம். காவு என்றால் சோலை. ஆனால் தற்போது கோவிலை சுற்றியுள்ள பெரிய மைதானத்தில் சில பெரிய மரங்கள் மட்டுமே மிஞ்சியுள்ளன. அம்பாள் பத்ரகாளி அல்லது மஹா காளியாக வணங்கப்படுகிறாள். கேரளத்தின் 64 காளி ஆலயங்களுள் ஒன்று . ஆதி காலத்தில் பரசுராமர் கடலிலிருந்து இந்த பரசுராம க்ஷேத்திரத்தை உருவாக்கியபின் தாருகன் என்ற அசுரனை வதம் செய்ய சிவபெருமானை வேண்டினார். அவரது சக்தியான பார்வதிதேவி பத்ரகாளியாக ஆவிர்பவித்து தாருகனை வதம் செய்தார். பின் பரசுராமர் அத்தேவியை இங்கு பிரதிஷ்டை செய்தார் என்பது ஒரு ஐதீகம். மதுரையில் பாண்டியன் அரண்மணையில் தேரா மன்னா! என்று வழக்குரைத்து தன் கணவன் கோவலன் சிலம்பைத் திருடிய குற்றவாளி அல்ல என்று நிரூபித்து மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகிக்காக சேரன் செங்குட்டுவன் அமைத்த ஆலயமே இவ்வாலயம் என்பாரும் உண்டு. அதே உக்கிரத்துடன் அம்மன் அமர்ந்திருக்கின்றாள் என்பர். அம்மை இங்கே அஷ்டபுஜ பத்ரகாளியாக அசுரனின் சிரம், வாள், சிலம்பு, திரிசூலம், பாசம், நாகம், மணி, அக்ஷய பாத்திரம் தாங்கி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். அம்மன் 7 அடி உயரத்தில் பலா மரத்தில் ஆன மூர்த்தம் என்பதால் தங்க கவசம் அணிவித்துள்ளனர். அம்மை வடக்கு நோக்கிய திருமுகத்துடன் அருள் பாலிக்கின்றாள். மேலும் தங்க நகைகளால் அம்மனுக்கு அற்புதமாக அலங்காரம் செய்துள்ளனர். அம்மனின் காலடியில் சிவலிங்க ரூபம் உள்ளது. அம்மனுக்கு இடப்புறம் பிராம்ஹி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டா ஆகிய சப்த மாதர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ஆகவே ஆலயம் நீளவாக்கில் அமைந்துள்ளது.. இவ்வகையாக பிரதிஷ்டை செய்வது ருருஜுத்வதானம் என்றழைக்கப்படுகின்றது. ஆதிசங்கர பகவத்பாதாள் அம்மன் முன் சக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளதாக ஐதீகம். மேலும் கணபதி, சிவன் மற்றும் பைரவர் சந்நதிகளும் உள்ளன. இவ்வாலயத்தில் சிவபெருமானுக்கும் தனி சன்னதி உள்ளது தனி வாயில் முகப்பு மண்டபம் ஆகியவையும் உள்ளன ஆனால் கதவம் அடைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் விஸ்வநாதராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஆதி காலத்தில் சிவாலயமாக இருந்திருக்கலாம் பின் பகவதி வந்து சேர்ந்தாள் என்பாரும் உண்டு. மிகப்பெரிய மைதானத்தின் மையத்தில் கோவில் அமைந்துள்ளது. மற்ற ஆலயங்கள் போலல்லாமல் ஒரே ஒரு உள் சுற்று மட்டுமே உள்ளவாறு கோவில் அமைந்துள்ளது. கொடிமரமும் கிடையாது. உள்ளே நுழையும் போதே அம்மே சரணம் என்ற வாசகம் நம்மை வரவேற்கின்றது. ஆலயத்தின் முகப்பில் ஒரு பிரம்மாண்டமான கூர்ம தீபம் அமைத்துள்ளனர். அடியோங்கள் சென்ற சமயம் திருவிழா காலம் என்பதால் மைதானம் முழுவதும் கடைகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. பலர் நெல், மஞ்சள், மிளகு, மற்றும் விவசாய விளை பொருட்கள், தென்னங்குருத்து, மட்டைத் தேங்காய்கள் மற்றும் சிவப்பு துணிகளை ஏந்தி கூட்டம் கூட்டமாக வந்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திவிட்டு சென்றனர். கோவில் முழுவதும் மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூவியிருந்தனர். [] சிவன் சன்னதி கதவு இத்தலத்தில் மலையாள மீன மாதம் (பங்குனி மாதம்) நடைபெறும் திருவிழா சிறப்பு வாய்ந்தது. விழாவின் நிறை மூன்று நாட்கள் காவு தீண்டல் என்று வித்தியாசமாக கொண்டாடப்படுகின்றது. அக்காலத்தில் கீழ் சாதியினர் கோவிலுக்குள் சென்று வழிபட முடியாத நிலையை மாற்றி முதன்முதலில் அவர்களும் ஆலயத்தினுள் சென்று வழிபட அனுமதித்ததை கொண்டாடும் வகையில் இந்த காவு தீண்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது என்பாரும் உண்டு. கொடுங்கல்லூர் அரசர் வந்து ஆல மரத்தடியில் நின்று குடையை உயர்த்தியவுடன் காவு தீண்டல் நிகழ்ச்சி தொடங்குகின்றது. சிவப்பு ஆடை, கையில் வளைந்த வாள், கையில் சிலம்பு, இடையில் அரை மணி காலில் சலங்கை அணிந்த வெளிச்சப்பாடுகள் என்றழைக்கப்படும் குறி சொல்பவர்கள் மருளுடன் கோவிலை சுற்றி வருகின்றனர், அப்போது தெரிப்பாட்டு என்றும் பரணிப்பாட்டு என்றழைக்கப்படும் பாடல்களை பாடுகின்றனர், மஞ்சள் தூள், மிளகு, சேவல்கள் ஆகியவற்றை கோவிலுக்குள் வீசுகின்றனர். சிலர் வாளினால் தங்கள் தலையில் வெட்டிக்கொண்டு இரத்தம் சொட்ட சொட்ட வலம் வருகின்றனர். இவ்வாறு மூன்று முறை கோவிலை சுற்றி வந்த பின் அரசரை விழுந்து வணங்கிவிட்டு திரும்பிச் செல்கின்றனர். ஆதி காலத்தில் பலி கொடுத்திருக்கின்றனர் தற்போது அதற்கு பதிலாக சிவப்பு ஆடையை சமர்ப்பிக்கின்றனர். இதற்குப்பின் ஆலயம் சுத்தம் செய்வதற்காக ஒரு வாரம் அடைக்கப்படுகின்றது. க்ஷேத்ரபாலகர் என்று பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. வெடி வழிபாடு இக்கோவிலின் சிறந்த வழிபாடு ஆகும். மதியம் உச்சப்பூஜைக்குப் பின் அனைவருக்கும் பாயசம் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. கொடுங்கல்லூர் பகவதியை திவ்யமாக தரிசித்த பின் குலசேகராழ்வார் ஆலயம் நோக்கிப் புறப்பட்டோம். நடுவில் திருஅஞ்சைக்களம் (ஸ்ரீவஞ்சிக்குளம்) என்னும் திருக்கோவில் கண்ணில் பட்டது எம்பிரான் தோழர் சுந்தர மூர்த்தி நாயனாரும், அவரின் தோழர் சேரமான் பெருமாளும் திருக்கயிலாயம் இங்கிருந்து சென்றார்கள் என்ற சிறப்புடைய தலம். வம்மின் தொண்டர்களே திருஅஞ்சைக்களத்தப்பரையும் தரிசிக்கலாம். அத்தியாயம் – 18 திருஅஞ்சைக்களம் மஹாதேவர் ஆலயம் [] ஸ்ரீகோவில் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் இந்த திருவஞ்சிக்குளம் மஹாதேவ சுவாமி கோவில் ஆகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையான ஆலயம். தலைக்கு தலைமாலை அணிந்ததென்னே சடைமேற்கங்கைவெள்ளம் தரித்த தென்னே அலைக்கும் புலித்தோல் கொண்டுஅசைத்ததென்னே அதன் மேற் கதநாகங் கச்சு ஆர்த்ததென்னே மலைக்கு நிகர் ஒப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு அலைக்கும் கடல் அங்கரை மேல் மகோதை அணியார்பொழில் அஞ்சைக்களத்தப்பரே. மலைக்கு நிகராகிய தன்மையினால் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள் வலம்புரி சங்குகளைப் பற்றி ஈர்த்து வந்து எறிந்து முழங்கி மோதுகின்ற கடலினது அழகிய கரையில் மகோதை எனும் நகரத்தின்கண் அமைந்துள்ள எழிற் சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் எனும் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள என் தந்தையே சிவபெருமானே! நீர் தலைக்கு அணிகலனாக தலைமாலையை அணிந்தது ஏன்? விரிசடையின் மேல் கங்கை ஆற்றை தாங்கியது ஏன்? கொல்லும் தன்மையுடைய புலியினது தோலை அரையில் உடுத்தது ஏன்? அவ்வுதையின் மேல் சினத்தையுடைய பாம்பைக் கச்சாக கட்டியது ஏன்? என்று வண்தொண்டர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தலம். தேவாரப்பாடல் பெற்ற ஒரே மலைநாட்டு திருத்தலம். பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர சிவனை வழிபட்ட தலம். கொடுங்கல்லூரிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம். ஆலயத்தின் மேற்கு வாயில் தேசிய நெடுஞ்சாலை-17ல் அமைந்துள்ளது. எம்பிரான் தோழர் சுந்தரரின் தோழரான “கழறிற்றறிவார் நாயனார்” என்றழைக்கப்படும் சேரமான் பெருமாள் நாயனார் வழிபட்ட தலம் இத்தலம். இனி சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றைப் பற்றிக்காணலாம். மகோதை என்றும் கொடுங்கோளுர் என்றும் அழைக்கப்பட்ட இத்தலத்தில் சேரர் மரபில் தோன்றிய பெருமாக்கோதையார் என்பார் திருஅஞ்சைக்களத்தில் சிவத்தொண்டு புரிந்துவந்தார். அப்போது அங்கு ஆட்சி செய்து வந்த “செங்கோற் பொறையன்” என்னும் அரசன் நாட்டைத் துறந்து தவம் செய்து சிவபெருமானின் திருவடிகளை அடையும் பொருட்டு காட்டை அடைந்தார். அறிவு மிக்க அமைச்சர் பெருமக்கள் ஆராய்ந்து இனி பெருமாக்கோதையாரே சேரமானாக அரசு செய்ய வேண்டும் எனத் தெளிந்தார்கள். திருஅஞ்சைக்களம் அடைந்து நாயனாரை அவ்வாறே வேண்டினார்கள். நாயனார் இறைவன் திருவுள்ளம் அறிந்து வருவேன் என உரைத்து இறைனிடம் விண்ணப்பித்தார். அஞ்சைகளத்தப்பர் “நீ அரசு பதவியேற்று உயிர்கள் வாழும் வண்ணம் நல்லாட்சி செய்வாயாக! எல்லா உயிர்களும் பேசுவனவற்றை அறியும் ஆற்றல் உனக்கு அளித்தோம்” என அருளினார். இதனால் அவருக்கு “கழறிற்றறிவார்” என்ற பெயர் தோன்றியது. மகுடாபிஷேகம் ஆன சேரமான் பெருமான் யானை மீது நகர் வலம் வந்தார். அப்பொழுது துணி வெளுப்பவன் ஒருவன் மீது உவர் மண் காய்ந்து அவன் உடல் முழுவதும் திருநீறு அணிந்தவர் போல் தோன்றினான். அவனை முழுநீறு பூசிய முனிவராகக் கண்டச் சேரமான் யானையை விட்டு இறங்கி அவனை வணங்கினார். வணங்கியவுடன் அவ்வண்ணான் மனம் கலங்கி, “அரசே! என்னை யார் என்று எண்ணினீர்கள். அடியேன் அடி வண்ணான்” என்றான். நாயனாரும் “அடியேன் அடிச்சேரன் .நீங்கள் வருந்தாமல் செல்லுங்கள்” என்றார். சேரமான் பெருமானின் அடியார் பக்தியைக் கண்ட அனைவரும் அதிசயத்தார்கள். எனவே இவரை வண்ணானைக் கும்பிட்டார் என்று போற்றுகின்றனர். சேரமான் பெருமான் தாம் நாள் தோறும் செய்யும் பூசையின் முடிவில் நடராஜப் பெருமானின் சிலம்பு ஓசையைக் கேட்கும் பேறு பெற்றவர். ஒரு நாள் சிலம்போசை பூசை முடிவில் கேட்கப் பெறவில்லை. நாயனார் மிக வருந்தி உயிர்விடத் துணிந்தார். பெருமான் சிலம்போசை கேட்பித்தார். “ஐயனே! முன்பு நான் கேளாமற் போனதற்கு காரணம் என்னவோ” என நாயனார் இறைவனிடம் முறையிட்டார். [] அப்பலவாணர் “அன்பனே வருந்தற்க! கனகசபையில் நம் முன்னே சுந்தரன் வழிபட்டு செந்தமிழால் எம்மைப் பாடினான். அது கேட்டு அதன் சுவையில் ஈடுபட்டதால் உன் பூசையில் சிலம்பிசைக்க தாமதித்தோம்” எனக்கூறினார். சேரமான் பெருமான் சுந்தரர் பெருமையை உணர்ந்து பொன்னி நாட்டை நோக்கிப் புறப்பட்டார். சிதம்பரத்தில் வந்து கனகசபையில் அம்பலவாணரை வழிபட்டார். அவரைப் போற்றி பொன் வண்ண திருவந்தாதி பாடினார். பிறகு திருவாரூர் சென்று தம்மை எதிர் கொண்டு வரவேற்கும் சுந்தரரை வணங்கி பின் தியாகராசரையும் வணங்கினார். சேரமான் பெருமானோடு நட்பு கொண்ட சுந்தரரை அடியார்கள் “சேரமான் தோழர்” என்றும் அழைக்கலானார்கள். சேரமான் பெருமான் திருவாரூர் பெருமான் மீது ஒரு மும்மணிக் கோவை பாடினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமான் பொருட்டு இருமுறை திருஅஞ்சைக்களம் வந்துள்ளார். முதல்முறை சேரமானுடன் சுந்தரர் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழ நாடு, கொங்கு நாடுகளில் உள்ளத் தலங்களை வழிபட்டு பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கல்லூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடியும் தமிழகத்தலங்களுக்கு திரும்பி வந்து பதிகம் பாடினார். இரண்டாம் முறை சேரநாடு வந்த சில நாட்களில் சுந்தரர் திருக்கயிலை சென்று இனி இறைவனோடு இருக்க வேண்டும் என விரும்பினார். தலைக்கு தலை மாலை" என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப் பதிகம் இதுதான். இறைவனும் ஐராவளம் என்னும் நான்கு தந்தங்களைக் கொண்ட தன்னுடைய வாகனமான வெள்ளை யானையையும், இந்திரன், மஹாவிஷ்ணு, நான்முகன் ஆகியோரையும், மற்ற தேவர்களையும் சுந்தரரை திருக்கயிலாயம் அழைத்து வர அனுப்பினார். இறைவனின் பட்டத்து யானையில் சுந்தரர் கயிலைக்குப் புறப்பட்டார். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர்.  உடனே சேரமான் பெருமான் திருவைந்தெழுத்தை தம் குதிரையின் காதில் ஓத, குதிரை யோக சக்தி பெற்று பறக்கத் தொடங்கியது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் செல்லும் யானையை மூன்று முறை வலம் வந்து சுந்தரருக்கு முன் திருக்கயிலையை அடைந்தது. சுந்தரர் இறைவனின் மாப்பெரும் கருணையை நினைத்து வானில் செல்லும் போது " தானெனை முன் படைத்தான்" என்னும் நொடித்தான் மலை’ பதிகத்தைப் பாடினார். இறைவனின் உத்தரவுப்படி வருண பகவான் இப்பதிகத்தை திருவஞ்சிக்குளம் மஹாதேவர் ஆலயத்தில் சேர்பித்தார். திருக்கயிலையில் இறைவன் சந்நிதிக்கு சுந்தரர் சென்ற பின் இறைவனிடம் தன் தோழர் சேரமான் பெருமாளையும் திருக்கயிலாயத்தில் அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். இவ்வாறு நட்புக்கு ஒரு இலக்கணமாக திகழ்ந்தார் எம்பிரான் தோழர். இறைவனும் அனுமதி அளித்தார், சேரமான் பெருமான் இறைவன் முன் வந்து வணங்கினார். அங்கு அப்பொழுது ஆசு கவியாக ஓர் உலா ஒன்று இறைவன் மீதுப் பாடினார். இப்பதிகம் திருக்கயிலாய உலா என்று சிறப்புப் பெற்றது. தமிழ்க் காப்பியங்களில் உலா ஒன்று முதன் முதலாகப் பாடியவர் சேரமான் பெருமான் நாயனார் ஆவார். பின் இருவரையும் தனது தொண்டர் கணங்களில் இணைத்துக் கொண்டார் சிவபெருமான் தனது பூலோக அவதார நோக்கம் நிறைவேறிய பின் சுந்தரரும், அவரின் தோழர் சேரமான் பெருமாளும் திருக்கயிலாயம் சென்றது இத்தலத்தில் இருந்துதான். கோயிலுக்கு எதிரே ஒரு மேடை உள்ளது அம்மேடைக்கு யானை வந்த மேடை என்று பெயர். மேலும் இவர்களுடன் அன்றைய தினம் திருக்கயிலையில் கமலினி மற்றும் அநிந்தினி என்னும் பார்வதி தேவியின் சேடிகளாக இருந்து பூலோகத்தில் பரவை மற்றும் சங்கிலியாக பிறந்து சுந்தரரை மணந்த பெண்கள் இருவரும், பெருமிழலைக் குறும்பரும் திருக்கயிலாயம் சென்றனர். விநாயகர் பூஜை செய்து கொண்டிருந்த ஔவையாரும் விநாயகர் அகவல் பாடிய பின், விநாயகர் இவர்களுக்கெல்லாம் முன்பாக தன் தும்பிக்கையினால் தூக்கி ஔவையாரை திருக்கயிலாயத்தில் வைத்தார் என்றொரு கதையும் உண்டு. இந்நிகழ்வைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி அன்று சுந்தரர் திருக்கயிலை செல்லும் விழாவினை கோவை சேக்கிழார் திருக்கூட்டத்தார் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். இவர்கள் ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இவ்வொரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது. விழாவின் முதல் நாள் இரவன்று கொடுங்கல்லூர் பகவதியம்மன் ஆலயத்திலுள்ள சுந்தரர், சேரமானின் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை செய்து, யானை மற்றும் குதிரை வாகனத்தில் அமர வைத்து மேள தாளங்களுடன் அஞ்சைக்களத்திற்கு ஊர்வலமாக அழைத்து வருவர். மறுநாள் காலை சுந்தர மூர்த்தி நாயனாருக்கு கோலாகலமான குருபூஜை விழா நடைபெறுகின்றது. மேலும் அன்றைய தினம் திருஅஞ்சைக்குளத்திலுள்ள அத்தனை உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெறுகின்றது. வம்மின் தொண்டர்களே இவ்வளவு சிறப்புகள் பெற்ற ஆலயத்தை தரிசனம் செய்யலாம். மற்ற கேரள ஆலயங்களைவிட பிரம்மாண்டமாக மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது திருஅஞ்சைக்களம் ஆலயம். கேரள சிற்பக்கலை அம்சத்தை ஒட்டிக் கட்டப்பட்ட ஆலயம். தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிழக்கு கோபுரம் மூன்று அடுக்குகள் கொண்டது.  மேற்கு திசையில் வாயில் இருந்தாலும் அங்கு கோபுரம் கிடையாது. கிழக்கு கோபுரத்தைக் கடந்தால் நாம் காண்பது பலிபீடம், அடுத்து உயரமான துவஜஸ்தம்பம் பல அடுக்குகளைக் கொண்ட அதன் உச்சியில் நந்தி சிலை உள்ளது. கருவறை நிலப்படிமானம் கருங்கற்களால் கட்டப்பெற்று, மர விட்டங்கள் முகட்டைத் தாங்கி உள்ளன. மேல் முகடு செப்புத் தகட்டினால் வேயப்பட்டிருக்கிறது. இவ்வளவு சிறப்புகள் பெற்ற சுந்தரர் பாடிய இத்தலத்தின் மூலவர்: மஹாதேவர், அஞ்சைகளத்தீஸ்வரர் அம்பாள் : உமையம்மை தல விருட்சம்: சரக்கொன்றை தீர்த்தம்: சிவகங்கை தீர்த்தம். பதிகம்: சுந்தரர். சிவபெருமான் லிங்க வடிவில் அம்மையுடன் சதாசிவ மூர்த்தமாக ஆனந்தமாக அருள் பாலிக்கின்றார். ஈசன், மகாதேவன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். மூலவர் சுயம்பு லிங்கம்.  கேரளாவில் முக்கண்கள் கொண்டு அலங்கரிப்பது போல் தங்கத்தில் ஐயனுக்கு அருமையான அலங்காரம். இவர் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801ல் பிரதிஷ்டை செய்ததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. ஸ்ரீகோவிலில் இடது பக்கம் கலைமகள் சமேத நான்முகனும், வலது பக்கம் திருமகள் சமேத விஷ்ணுவும் வீற்றிருப்பது மிகவும் விசேஷமானது.  தீர்த்தக் கிணறு கருவறை அருகேயே உள்ளது. இங்குள்ள தீர்த்தம்தான் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. [] சுந்தரர் கயிலை செல்லும் காட்சி முதல் சுற்றில் தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள்.  அதன் முன் உள்ள மண்டபத்தில் சுந்தரர் பாடிய இத்தலப்பதிகங்களை கல்வெட்டுகளாகப் பதித்துள்ளனர். கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் கணபதி, சுப்பிரமணியர், துர்கா பகவதி, தட்சிணாமூர்த்தி, சக்தி பஞ்சாட்சரி, ஐயப்பன், நந்திகேஸ்வரர், கங்கை, நாக ராஜா, நாக யட்சி, அனுமன் ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னனதிகளில் அருள் பாலிக்கிறார்கள். மற்றும் சந்தியா வேளைக்கல் சிவன், ஈசன் தளபதியான பிரிங்கீரடி, பள்ளியறை சிவன், நடுவெளி நாதர், வெளிநாதர் என்று பல சிவலிங்க சன்னதிகள் உள்ளன. நடராஜப் பெருமானுக்கு தனி சன்னதியும் உள்ளது. பஞ்சலோக மூர்த்தம் ஐயனின் திருவடியின் கீழே “திருவஞ்சைக் களத்து சபாபதி” என்று எழுதப்பட்டுள்ளது. நமஸ்கார மண்டபத்தில் நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கிழக்கு ராஜகோபுர நுழைவாயில் அடித்தளத்தில் யானை மீதமர்ந்த சுந்தரர் கோலமும், குதிரை மீதமர்ந்த சேரமான் கோலமும் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. பக்கக்கற்சுவற்றில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வது போலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தின் நமஸ்கார மண்டபம் 16 தூண்களுடன் இரண்டடுக்கு (துவி தள)  கூரைகளுடனும் அருமையான மரச் சிற்பங்களுடனும் அமைந்துள்ளது இத்தலத்தின் ஒரு தனி சிறப்பு. இத்தலத்தின் தல விருட்சம் சரக்கொன்றை மரம். கேரள ஆலயத்தில் தல மரத்தை மூலஸ்தானம் என்று அழைத்து சிறப்பாக வணங்குகின்றனர். ஆதி காலத்தில் சிவலிங்கத்திருமேனி இம்மரங்களின் அடியில்தான் இருந்துள்ளது. பின்னர் ஆலயங்கள் விரிவடைந்த போது தனி ஸ்ரீகோவில்களில் இறைவனின் திருமேனியை பிரதிஷ்டை செய்து வழிபடும் வழக்கும் ஏற்பட்டது. தற்போது மூலஸ்தானமான கொன்றை மரம் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. இதனடியில் கொன்னகோல் சிவன் சன்னதி அமைந்துள்ளது. அருகில் ஊட்டுப்புரா என்னும் அன்னதானக்கூடம் ஒரு முறை இவ்வாலயத்தில் பிரசாதம் சுவீகரிக்கும் பாக்கியம் கிட்டியது. ஊட்டுப்புரத்தில் இருந்து ஸ்ரீகோவில் விமானத்தை நன்றாக சேவிக்கலாம். துவி தளமாக மேல் தளத்தில் சற்று வித்தியாசமாக நான்கு பக்கமும் சிறு புடைப்புகளுடன் நுணுக்கமான சிற்பங்களுடன் அமைந்துள்ளது ஒரு சிறப்பு. சேரமான் பெருமாள் நாயனாருக்கும் தில்லை சிதம்பரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதால், இத்தலத்தை மேலைச் சிதம்பரம் என்றும் கூறுவர். மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி 8 நாள் உற்சவமாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இத்திருவிழாவின் போது யானையோட்டமும் நடைபெறுகின்றது. அமாவாசையன்று ஆறாட்டு வைபவம். இத்தலத்தில் மாலை வேளையில் நடைபெறும் தம்பதி பூஜை சிறப்பானது கேரளாவிலேயே பள்ளியறை பூஜை நடக்கும் ஒரே தலம் இதுவாகும் இப்பூஜையை தரிசனம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும், பிரிந்த தம்பதியினர் ஒன்றாக சேர்வார்கள், கணவன் மனைவி ஒற்றுமை பெருகும் என்பது ஐதீகம். அதுவும் பௌர்ணமியன்று செய்யும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் இப்பூஜைக்கு முன்பதிவு நடைபெறுகின்றது. மற்ற கேரள ஆலயங்கள் போலவே இக்கோவிலிலும் வெடி வழிபாடு நடைபெறுகின்றது. சிவபெருமானை ஆராதித்த ஒரு சேர அரசன் வழிபட்ட ஆலயத்தை தரிசனம் செய்த பின், திருமாலை வழிபட்ட இன்னொரு சேர அரசரான குலசேகராழ்வார் ஆலயத்திற்கு சென்றோம். அத்தியாயம் – 19 குலசேகராழ்வார் அவதாரத்தலம் திருவஞ்சிகளம் [] அடுத்து நாம் தரிசிக்க இருக்கின்ற தலம் தொண்ட ரடிப்பொடியார் தோன்றியவூர் தொல்புகழ்சேர் மண்டங் குடியென்பர் மண்ணுலகில்- எண்டிசையும் ஏத்துங் குலசேகர னூரென வுரைப்பர் வாய்த்த திருவஞ்சிக் களம் - என்று மணவாள மாமுனிகள் தமது உபதேசரத்தின மாலையில் பாடிய திருவஞ்சிக்களம் ஆகும். பன்னிரு ஆழ்வார்களிலே பெருமாள் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் குலசேகராழ்வார். பெருமாள் என்று வைணவ சமயத்தில் குறிக்கப்படும் இராமபிரானின்பால் உணர்ச்சி உந்திய அன்புப்பேராறு  பூண்டமையின் இவரை “குலசேகரப்பெருமாள்” என்று சிறப்பாக வழங்கலாயினர். இவர் இயற்றிய பாசுரங்கள் “பெருமாள் திருமொழி” என்றே அழைக்கப்படுகின்றன. பெருமாளின் கௌஸ்துபத்தின் அம்சமாக அவதரித்தவர். கலி பிறந்த 28ம் ஆண்டு மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் சேர நாட்டில் திருடவிரதன் என்ற அரசனுக்கு மகனாக அவதரித்தார். தனது மகளான சேரகுலவல்லியை அரங்கனுக்கு மணம் முடித்து கொடுத்ததனால் பெரியாழ்வார் போல இவரும் பெருமாளுக்கு மாமனார் முறை ஆகிறார். செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா! நின் கோவில் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே! (பெரு.தி 4-9) என்று ஏங்கியதால் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கர்ப்பகிரகத்தின் வாசற்படி “குலசேகராழ்வார் படி” என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது. இராமனிடத்தில் மிகுந்த பக்தி கொண்ட குலசேகராழ்வார் தன்னை கோசலையாக பாவித்து தாலாட்டு பாடியவர். திருவரங்கத்தில் தொண்டர்களின் பாததூளி தன் சென்னியில் மேல் விளங்கட்டும் என்று ஏங்கியவர். சேர அரசராக இருந்தும் இராம பக்தியில் அதிகம் திளைத்து இராமாயண காவியம் கேட்டுக்கொண்டு அரச காரியங்களில் அதிக நாட்டம் கொள்ளாமல் இருந்த அரசரை மாற்ற, மந்திரிகள் திருவைணவர்கள் பெருமாளின் நகைகளை திருடி விட்டனர் என்று கூற, “திருமாலடியார்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்று நிரூபிக்க விஷப்பாம்பு உள்ள குடத்தில் கை விட்டு நிரூபித்தவர். மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே! தென்னிலங்கைக்கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர் கன்னிநன்மாமதிள்சூழ் கணபுரத்தென்கருமணியே! என்னுடையவின்னமுதே! இராகவனே! தாலேலோ! (பெரு.தி 8-1) என்று சக்கரவர்த்தித் திருமகனுக்கு தாலாட்டுப் பாடியவர். ஸ்ரீராமாயண சுருக்கத்தை ஒரு பாசுரத்தில் பாடியவர். மலைநாட்டு திவ்யதேசமான திருவித்துவக்கோட்டை மங்கலாசாசனம் செய்தவர். வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் மேல் தீராக்காதல் கொண்ட நோயாளன் போல் நீ எவ்வளவு துன்பம் கொடுத்தாலும் உனதடியை விடமாட்டேன், “உன் சரணல்லால் வேறு சரணில்லை” என்று வாழ்ந்தவர். திருவண்பரிசாரத்தில் திருப்பணிகள் செய்து அங்கு பரமபதித்தவர்.  இவர் திருவரங்கம், திருமலை, திருவித்துவக்கோடு, திருக்கண்ணபுரம், அயோத்தி, கோகுலம் மற்றும் திருச்சித்திரக்கூடம்(சிதம்பரம்) ஆகிய திவ்ய தேசங்களை மங்கலாசாசனம் செய்துள்ளார். இவரின் அவதார தலமான திருவஞ்சிக்களத்தில் இவருக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது இவ்விடம் குலசேகரபுரம் (T.K.S Puram) என்று அழைக்கப்படுகிறது. கல்யாண ஸ்ரீநிவாசரும், மஹாலக்ஷ்மித்தாயாரும் இத்தலத்தில் அருள் பாலிக்கின்றனர். கேரளாவில் வித்தியாசமாக நமது திராவிடபாணி முன் இராஜ கோபுரம் மற்றும் விமானத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. சுதர்சனர், நரசிம்மர், மற்றும் நாதமுனிகள், ஆளவந்தார், இராமானுஜர், வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் சன்னதிகளும் உள்ளன. குலசேகராழ்வாரின் சன்னதியில் அவர் ஆராதனை செய்த சீதா, இராமபெருமான் விக்கிரகத்தை திவ்யமாக சேவித்தோம். திருவல்லிக்கேணியின் ஒரு பட்டர் இங்கு ஆராதனை செய்து கொண்டிருந்தார். அர்ச்சனை செய்து, பாசுரங்கள், வாழி திருநாமங்கள் கூறி, திவ்யமாக கற்பூர ஆரத்தி காண்பித்து, தீர்த்தம், சடாரி, துளசி கற்கண்டு பிரசாதம் அளித்து அருமையாக சேவை செய்து வைத்தார். [] அருமையாக கீதோபதேச காட்சியை சுதை சிற்பமாக அமைத்துள்ளனர். கேரளாவில் அமைந்திருந்தாலும் தமிழக ஆகமவிதிப்படி பூசைகள் நடைபெறுகின்றன. மாசி புனர்பூசத்தில் இவர் திருவவதாரம் செய்ததால், மாதம் தோறும் புனர்பூசத்தன்று குலசேகராழ்வாருக்கு சிறப்பு ஆராதனை செய்யப்படுகின்றது. வேளுக்குடி உ.வே கிருஷ்ணன் சுவாமிகள் இவ்வாலயம் கட்ட பெருமுயற்சிகள் எடுத்துக் கொண்டார் என்று திருமலை சுவாமிகள் கூறினார். திருவஞ்சிக்களத்திலிருந்து திவ்யதேசமான திருமூழிக்களத்திற்கு புறப்பட்டோம். அத்தியாயம் – 20 நாலம்பலம் திருப்பிரயார் இராமசாமி ஆலயம் [] திருமூழிக்களம் திவ்யதேசத்தை சேவித்த போது அத்தலம் இராம சகோதரர்களுக்குள் இலட்சுமணனுக்குரிய ஆலயம் என்று கூறினார்கள். மேலும் கேரளத்தில் நான்கு சகோதரர்களுக்குமாக நான்கு தலங்கள் உள்ளன அவை நாலம்பலம் என்றழைக்கப்படுகின்றன என்றும் தெரிந்து கொண்டோம். அடியோங்கள் இந்த யாத்திரையில் நாலம்பலங்களில் திவ்யதேசமான திருமூழிக்களத்தை மே சேவித்தோம். பின்னர் ஒரு சமயம் கேரளா சென்ற போது இராமரையும் மற்ற சகோதரர்களையும் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. விரும்பும் அன்பர்கள் இராமாயண சகோதரர்கள் நால்வர் எழுந்தருளியுள்ள நாலம்பலத்தையும் சேவிக்கலாம் என்ற எண்ணத்தில் அவ்வாலயங்களைப்பற்றிய சிறு குறிப்புகள் இந்நூலில் இடம் பெறுகின்றன. குருவாயூரிலிருந்து தெற்கே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (NH-17). இராமர், பரதன், லக்ஷ்மணன், சத்ருகனன் ஆகிய சகோதரர்கள் நால்வருக்குமான ஆலயங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு நான்கு கோவில்கள் கேரளத்தில் உள்ளதற்கான ஐதீகம். விஷ்ணு பக்தரான வக்கேகைமால் என்பவர் கூடல் மாணிக்கம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்தார். இவரது கனவில் வந்த பெருமாள் கடற்கரையில் ஒரு புதையல் உள்ளது என்று கூறி அழைத்து சென்றார். அவர் காட்டிய இடத்தில் நான்கு அற்புத சிலைகள் ஒன்று போலவே இருந்தது. துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பூமிக்கு வந்த போது பூஜித்த மூர்த்தங்களான அச்சிலைகள் தசரத புத்திரர்களின் சிலைகள் ஆகும். அவர்களை அவர் திரிபரையார், இரிஞ்ஞாலக்குடா, திருமொழிக்களம், பாயம்மால் ஆகிய நான்கு தலங்களில் பிரதிஷ்டை செய்தார். அவை “நாலம்பலம்” என்றழைக்கப்படுகின்றன. திருச்சூர் திருப்பிரயாரில் இராமர் ஆலயம் – எர்ணாகுளம் குருவாயூர் தேசிய நெடுஞ்சாலையில் குருவாயூரில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இரிஞ்ஞாலக்குடாவில் பரதர் ஆலயம் - திருச்சூர் கொடுங்கல்லூர் சாலையில் திருச்சூரில் இருந்து சுமார் 22 கி.மீ உள்ளது. திருமூழிக்களத்தில் லக்ஷ்மணன் ஆலயம் ஆலுவாய்க்கும் மாளுக்கும் இடையில் உள்ளது. இத்தலம் ஒரு திவ்யதேசம் ஆகும். பாயம்மாலில் சத்ருகனர் ஆலயம் இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. இராம சகோதரர்கள் நால்வரையும் தரிசித்தால் தர்மநெறியில் பொருள் தேடி, நல்வழியில் இன்பம் அனுபவித்து இறுதியில் மோட்சமும் அடையலாம் என்பது ஐதீகம். நான்கு சகோதர்களும் நான்கு வேத ரூபமாக அருள் பாலிக்கின்றனர் என்பது ஐதீகம். நமது தமிழகத்தைப் போலவே கேரளாவில் கர்க்கடக மாதம் (ஆடிமாதம்) ஆன்மீக மாதமாகக் கருதப்படுகின்றது. மேலும் இவர்களுக்கு அது மழைக்காலம் என்பதால் மிகவும் சிரமமான மாதம் ஆகும். எனவே இதனை இராமாயண மாதம் என்றும் அழைக்கின்றனர். வீடுகளில் மாலை நேரம் இராமாயணம் பாராயணம் செய்கின்றனர். அம்மன் கோவில்களைப் போல இராம, பரத, இலக்ஷ்மண, சத்ருகனர் ஆலயங்களில் ஆடிமாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இம்மாதத்தில் இந்நான்கு கோவில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வதை “நாலம்பலம் தொழல்” என்கின்றனர். திரிப்பிரயாற்றில் நிர்மால்ய தரிசனத்தையும், இரிஞாலக்குடாவில் உஷத் கால பூஜையையும், திருமூழிக்களத்தில் உச்சிக்கால பூஜையையும், பாயம்மல்லில் அத்தாழ பூஜையையும் சேவிக்க வைகுண்டப்பேறு பெறுவர் என்பது ஐதீகம். எனவே பல பக்தர்கள் ஆடி மாதத்தில் ஒரே நாளில் நடந்தே சென்று இந்நான்கு ஆலயங்களிலும் தரிசனம் செய்கின்றனர். குருவாயூரில் இருந்து தெற்கே செல்லும் போது சுமார் 25 கி.மீ தூரத்திலேயே நெடுஞ்சாலைக்கு மிக அருகில் திரிப்பிரயார் இராமர் ஆலயம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இவ்வாலயத்தை மூன்று பக்கமும் ஆறு சூழ்ந்திருந்ததாம் (திரி-மூன்று, புற-பக்கம், ஆறு- நதி) எனவே திரிப்புறஆறு என்பதே திரிப்பிரயார் என்று மருவியது என்பர். நெடுஞ்சாலையில் இருந்து உள்ளே சென்றவுடனே அலங்கார வளைவு நம்மை வரவேற்கின்றது. ஆலய கோபுரம் கேரளப்பாணியில் அமைந்துள்ளது அருமையான இராமபட்டாபிஷேக ஓவியங்கள் கோபுர சுவற்றில் உள்ளன அவற்றை இரசித்துக்கொண்டே ஆலயத்தை வலம் வருகின்றோம். சுற்றம்பலத்தில் வடக்குப்புறம் கோசாலா கிருஷ்ணருக்கு தனி சந்நிதி உள்ளது. பல பக்தர்கள் அங்கு அமர்ந்து பஜனை செய்து கொண்டிருந்தனர். கர்ப்பகிரகத்திற்கு எதிரே திருப்பிரயாறு ஓடுகின்றது பார்க்க பார்க்க அருமையான காட்சி. ஆற்றின் மறு கரையில் தென்னை மரங்கள் காற்றில் அசைந்தாட, தென்னங்குலைகள் ஏராளமாக காய்த்துத் தொங்க நுப்பும் நுரையுமாக தீவ்ரா என்றும் அழைக்கப்படும் திரிப்பிரயாறு ஓடிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதே ஒரு பரவசம். ஆற்றுக்கு சென்று நீராட கோவிலிலிருந்து படிகள் அமைத்துள்ளனர். இவ்வாற்றில் உள்ள மீன்களுக்கு உணவிடுவது சிறப்பாக “மீனூட்டு” அழைக்கப்படுகின்றது. மூலவர் இராமபிரான் திரிப்பிரயாரப்பன் என்றும் திரிப்பிரயார் தேவர் என்றும் அழைக்கப்படுகின்றார். சதுர்புஜ விஷ்ணு திருக்கோலத்தில் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கோதண்டம், அக்ஷமாலையுடன் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார் இராமபிரான். திருமார்பில் ஸ்ரீவஸ்தமும் கௌஸ்துபமும் அலங்கரிக்கின்றன. கரன் என்ற அரக்கனை வென்ற கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றாராம். திருக்கரத்தில் வில் உள்ளதாலும், கருடன் இல்லாததாலும் இராமபிரானாக வழிபடுகின்றனர். திருக்கரங்களில் அக்ஷமாலை இருப்பதால் பிரம்மாவின் அம்சமாகவும், மேலும் தெற்கு நோக்கி லிங்க ரூபத்தில் தக்ஷிணாமூர்த்தியும் எழுந்தருளியிருப்பதால் இவர் மும்மூர்த்தி ரூபராகவும் வணங்கப்படுகிறார். ஸ்ரீகோவில் வட்டவடிவிலும் விமானம் கூம்பு வடிவிலும் அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்தின் சுவற்றில் அற்புதமான இராமாயண காட்சிகள் ஓவியமாக வரைந்துள்ளனர். கன்னி மூலையில் கணபதி சன்னதி அமைந்துள்ளது. இக்கோவிலின் நமஸ்கார மண்டபத்தில் இன்றும் ஹனுமன் அரூபமாக எழுந்தருளியுள்ளதாக ஐதீகம். அன்று பிராட்டியை தேடச்சென்ற மாருதி திரும்பி வந்த அன்னையைக் காணாதச் சோகத்தில் இருந்த இராமபிரானிடம் “திருஷ்ட சீத (கண்டேன் சீதையை)” என்று கூறினாராம். சிரஞ்சீவியாக இன்றும் இம்மண்டபத்தில் இருந்து கண்டேன் சீதையை என்று கூறிக் கொண்டிருக்கிறாராம். எனவே இவ்வாலயத்தில் ஹனுமனுக்கு தனி சன்னதிக் கிடையாது. மண்டபத்தில் இராமயணத்துடன் தொடர்புடைய நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய 24 மரச்சிற்பங்கள் கொள்ளை அழகு. தெற்கு பிரகாரத்தில் ஐயப்பன் சன்னதி அமைந்துள்ளது. அழகே உருவாக சாஸ்தா பால உருவில் கையில் பால் கிண்ணத்துடன் அருள் பாலிக்கின்றார். இவ்வாலயம் அற்புதமான ஓவியங்கள், நுணுக்கமான வேலைப்பாடுடைய மரச்சிற்பங்கள் என்று ஒரு கலைக்கூடமாகவே விளங்குகின்றது. விருச்சிக மாத (கார்த்திகை) சுக்லபக்ஷ ஏகாதசி மற்றும் மீன மாத(பங்குனி) பூரம் மற்றும் கன்னி மாத திருவோண இராமர் சிற எனப்படும் சேதுபந்தனம் ஆகியவை இவ்வாலயத்தின் முக்கிய உற்சவங்கள் ஆகும். ஓணம் பண்டிகையின் போது ஆற்றில் படகு போட்டிகளும் நடைபெறுகின்றது. பல கேரளக் கோவில்கள் போல இக்கோவிலிலும் வெடி வழிபாடு சிறப்பு. வாருங்கள் இனி பரதனை தரிசிக்கச் செல்வோம். இரிஞ்ஞாலக்குடா பரதன் ஆலயம் [] துளசிதாசர் தமது “ஹனுமான் சாலீசா” என்ற ஸ்துதியில் ஸ்ரீராமர் அனுமனை ரகுபதி கீனீ பஹுத் படாயீ தும் மம ப்ரிய பரத சம பாயீ பொருள்: “அனுமனே நீயும் பரதன் போன்று எனக்கு ஒரு பிரியமான சகோதரன் என்று போற்றினார்” என்று பாடுகின்றார். அது போலவே இராஜகோபாலாச்சாரியார் தமது “சக்கரவர்த்தி திருமகன்” என்ற இராமாயண நூலில் பரதனை தியானிப்பவர்களுக்கு ஞானமும் பக்தியும் தானே பெருகும் என்று கூறுகின்றார். சகோதர பாசத்திற்கும், தன்னலமின்மைக்கும், பொறுமைக்கும் சிறந்த இலக்கணமாக திகழ்பவன் பரதன். பதினான்கு ஆண்டுகள் நந்தி கிராமத்தில் இராமனை எதிர்பார்த்து காத்திருந்த கோலத்தில் பரதன் இக்கூடல் மாணிக்கம் என்ற ஆலயத்தில் சேவை சாதிக்கின்றார். பரதனுக்கு நமது பாரத தேசத்தில் உள்ள தனிக்கோவில்கள் சிலவற்றில் இதுவும் ஒன்று என்பது ஒரு தனி சிறப்பு. அது மட்டுமல்ல இன்னும் பல சிறப்புகளும் உள்ளன அவை என்னவென்று காணலாமா அன்பர்களே. பரதன் தவக்கோலத்தில் இருப்பதால் பூஜையின் போது வாசனைத் திரவியங்கள் சேர்ப்பதில்லை. தீபாராதனை வழிபாடும் கிடையாது. இவரே பரப்பிரம்மாக விளங்குவதால் கணேசர் உட்பட வேறு எந்த உபதெய்வமும் இக்கோவிலில் கிடையாது. தாமரை மலர், துளசி, மற்றும் தெச்சி பூக்கள் மட்டுமே பூஜைக்கு பயன்படுத்துகின்றனர். வேறு எந்த மலரும் சார்த்துவதில்லை. இவ்வாலயத்தில் உள்ள துளசி செடிகளில் விதைகள் தோன்றுவதில்லையாம். பொதுவாக கேரளாவில் எல்லா ஆலயங்களிலும் ஐந்து வேளை பூஜைகள் நடைபெறும் ஆனால் இக்கோவிலில் மூன்று வேளை பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றது. உஷத் பூஜை மற்றும் பந்தீரடி பூஜைகள் நடைபெறுவதில்லை. அது போலவே அனுதின சீவேலியும் நடைபெறுவதில்லை. சித்திரை உற்சவத்தின் போது மட்டுமே சுவாமி வெளியே வருவார். ஐப்பசி மாதம் திருவோணத்தன்று புத்தரிசி நைவேத்தியம் உண்டு. புதிதாக அறுவடையான அரிசி உணவு நிவேதிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மறுநாள் முக்குடி என்ற பிரசித்தி பெற்ற வயிற்று வலியை போக்கும் பிரசாதமும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பிரசாதம் பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினர் இரகசியம் காத்து தயாரிக்கிறார்கள். இவ்வாலயத்தில் கத்திரிக்காய் சிறப்பு நைவேத்தியம் என்று பல சிறப்புகள் உள்ளன. இவ்வாலயத்தை அடைய தொடர்வண்டி மூலம் வருபவர்கள் இரிஞ்ஞாலக்குடா தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி பின்னர் ஆட்டோ அல்லது பேருந்து மூலம் 9 கி.மீ தூரத்தில் உள்ள கோவிலை அடையலாம். இத்திருக்கோவில் கொடுங்கல்லூரிலிருந்து திருச்சூர் செல்லும் பாதையில் திருச்சூரிலிருந்து சுமார் 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட பரதன் ஆலயம் “கூடல் மாணிக்கம் ஆலயம்” என்றும் அழைக்கப்படுகின்றது. இனி இத்தலத்தின் புராணத்தை பற்றிப் பார்ப்போமா? ஆதி காலத்தில் அடர்ந்த வனமாக இருந்த இவ்விடத்தில் குலிப்பிணி என்ற மஹரிஷியின் தலைமையில் பல ரிஷிகள் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்திற்கு மெச்சி மஹா விஷ்ணு அவர்களுக்கு பிரத்யக்ஷமாகி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.அவர்களும் தாங்கள் இங்கேயே கோவில் கொள்ள வேண்டும் என்று கேட்க அவ்வாறே வரம் அளித்தார். பின்னர் முனிவர்கள் கங்கையை வேண்ட அவள் அங்கு தோன்றினாள். அவ்வெள்ளத்தில் மூழ்கி முனிவர்கள் அனைவரும் பரமபதம் அடைந்தனர். இன்றும் கோவிலின் உள்ளே உள்ள குலிப்பிணி தீர்த்தத்தில் கங்கை இருப்பதாக ஐதீகம். இக்குளத்தின் நீரே பெருமாளுக்கு நைவேத்தியத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. பூஜை செய்யும் நம்பூதிரிகள் மட்டுமே இக்குளத்தில் நீராடுகின்றனர். ஆதிகாலத்தில் சாலக்குடி ஆறும், குருமலி ஆறும் சங்கமம் ஆகும் கூடுதுறையில் இக்கோவில் அமைந்திருந்ததால் கூடல் மாணிக்கம் என்றழைக்கப்படுகின்றது என்பது ஒரு ஐதீகம். இரு சால் கூடல் என்பதே இரிஞ்ஞாலகுடா ஆனது என்பர். மற்றொறு ஐதீகம். ஒரு சமயம் பெருமாளின் சிரசிலிருந்து ஒரு அற்புத ஓளி தோன்றியது அப்போதைய காயங்குளம் அரசனிடம் இருந்த அற்புத விலை மதிப்பற்ற மாணிக்கத்தின் ஒளியை இவ்வொளியுடன் ஒப்பிட கொண்டுவந்த போது அம்மாணிக்கம் பெருமாளின் திருமேனியில் மறைந்து விட்டது எனவே கூடல் மாணிக்கம் ஆயிற்று என்பர். மூன்றாவது ஐதீகம் ஒரு சமயம் தலிப்பரம்பா என்ற ஊரின் ஒரு முதியவர் பல் வேறு ஆலயங்களின் சான்னியத்தை ஒரு சங்கில் ஏற்று தன் ஊரில் உள்ள மூர்த்திக்கு மாற்ற ஆலயம் ஆலயமாக சென்று வரும் போது இவ்வாலயத்தை அடைந்தார். அப்போது அவர் கையில் இருந்து அச்சங்கு கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்து அதில் இருந்த தெய்வ சக்திகள் அனைத்தும் இப்பெருமாளில் இணைந்ததால் இவர் கூடல் மாணிக்கம் என்றழைக்கப்படுகின்றார். கேரளப்பாணியில் மூன்று பக்கமும் வாயில்களுடன் பிரம்மாண்டமாக இவ்வாலயம் அமைந்துள்ளது. கிழக்கு கோபுரத்தின் சுவர்களில் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஆலயம் முழுவதும் ஓவியங்களும், அற்புத கற்சிலைகளும், மரச்சிலைகளும் நிறைந்திருக்கின்றன. ஸ்ரீகோவில் வட்ட வடிவில் உள்ளது. விமானம் சிறப்பாக இரண்டடுக்கு கூம்பு வடிவத்தில் உள்ளது. விமானத்திற்கு தாமிர தகடு சார்த்தியுள்ளனர். கலசம் ஆறு அடி உயரம் ஆலயத்தை சுற்றி நான்கு திருக்குளங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் புனிதமான குலிப்பிணி தீர்த்தம் கோவில் வளாகத்திற்குள் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தெற்கு பிரகாரத்தில் பெரிய கூத்தம்பலமும் உள்ளது. [] இத்தலத்தில் பரதன் சதுர்புஜ விஷ்ணுவாகவே சேவை சாதிக்கின்றார். நின்ற தவத்திருக்கோலம், சதுர்புஜங்கள், வலமேற்கரம் தண்டம், கீழ்க்கரம் அக்ஷமாலை, இடமேற்கரம் சக்கரம். கீழ்க்கரம் சங்கம். தீபவழிபாடு, அவல் பாயச வழிபாடு, வெடிவழிபாடு, புஷ்பாஞ்சலி வழிபாடு பிரபலம். 14 வருடங்கள் கழித்து எப்போது இராமன் திரும்பி வருவார் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கோலம். வனவாசம் முடித்து இராமன் திரும்பி வந்த போது அன்று பரதன் முகம் எவ்வளவு மலர்ச்சியாக இருந்ததோ அவ்வளவு மலர்ச்சியாக பரதன் இன்றும் அருள் பாலிக்கின்றார் என்பது ஐதீகம். பெருமாளுக்கு சங்கமேஸ்வரர் என்றொரு நாமமும் உண்டு. 101 தாமரை மலர்களுக்கு அதிகமாக எண்ணிக்கையில் 12 அடி நீளமான தாமரை மலர் மாலை பெருமாளுக்கு சார்த்தினால், தடைகள் எல்லாம் விலகும் நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும் என்பது இங்குள்ளவர்கள் நம்பிக்கை. மேலும் தீராத வயிற்று வலியை நீக்கும் தன்வந்திரிப் பெருமாளாகவும் இவர் விளங்குகிறார். தீராத வயிற்று வலியால் ஒரு பக்தர் அவதிப்பட்டு வந்தார் அவர் கனவில் தோன்றிப் பெருமாள் அவரது தோட்டத்தில் விளைந்த 101 கத்திரிக்காய்களை நைவேத்யமாக சமர்பிக்குமாறு வேண்டினார். அதற்குப்பின் அவரது வயிற்று வலி மாயமாக மறைந்தது. இது போல பல பக்தர்களின் நோயை தீர்த்து வைத்துள்ளார் பரதப்பெருமாள். பதினான்கு வருடம் கழித்து இராமன் வர தாமதமானபோது வந்து நந்திகிராமத்தில் காத்திருந்த பரதன் தீ மூட்டி அதில் இறங்க தயாரான போது விரைந்து வந்து இராமபிரான், இராவணனை வென்று வாகை சூடி, பிராட்டியுடன் திரும்பி வருகிறார் என்று கூறிய ஹனுமன் தடப்பள்ளியில் (மடப்பள்ளி) இன்றும் அரூபமாக வசிப்பதாக நம்புகின்றனர். மேட மாதம் (சித்திரை) பூரம் தொடங்கி திருவோணம் முடிய பெருவிழா மிகவும் சிறப்பாகவும் வேத தந்திரீக முறை வழுவாமலும் நடைபெறுகின்றது. கேரளாவின் மற்ற கோவில்களை விட இங்கு நடக்கும் திருவிழா மிகவும் வித்தியாசமானது. தினமும் காலையும், மாலையும் 17 யானைகளோடு சுவாமி எழுந்தருளுவார். அதைக் காணக் கண் கோடி வேண்டும். பவனியின் போது நூற்றுக்கணக்கான வாத்தியக்கலைஞர்கள் பாங்கேற்கின்றனர். தன்னலமின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு பரதன் ஆவான். பொதுவாக அனைவரும் தாங்கள் செய்த தவறையே இல்லை என்றுதான் சொல்வர்கள் .ஆனால் தான் செய்யாத தப்பையே செய்ததாக ஒப்புக்கொண்ட உயர்ந்தவன் பரதன். ஸ்ரீராமர் கானகம் சென்ற பின் பரதனும் சத்ருகனனும் பேசிக்கொண்டிருந்த போது பரதன் கூறுகின்றான். சத்ருகனா இவ்வாறு நடந்ததற்கு தாயார் கைகேயியோ, தந்தை தசரதரோ, அண்ணன் இராமனோ காரணம் அல்ல நான்தான் காரணம், எனக்காகத் தானே தாயார் இராச்சியம் வேண்டுமென்று வரம் கேட்டார் என்று பெரும் பழியை சுமந்த பெருந்தன்மையாளன் பரதன். இதைப் போலவே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள் தனது திருப்பாவையில் எல்லே இளங்கிளியே பாசுரத்தில் “நானே தானாயிடுக” என்று தான் செய்யாத தவறை ஒத்துக் கொள்கிறாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இருக்கவேண்டிய ஒரு முக்கியமான லட்சணம் இதுவாகும் எனவேதான் ஆண்டாளின் இப்பாசுரம் திருப்பாவை பாசுரம் என்னும் சிறப்புப் பெற்றது. அனைவரும் இவ்வாறு இருந்தால் எந்தவிதமான சண்டை சச்சரவும் இராதே. நாலம்பல வரிசையில் மூன்றாவது தலமும், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்கலாசாசனம் திவ்யதேசமும் பெருமாள் லக்ஷ்மணராகவும் சேவை சாதிக்கும் திருமூழிக்களத்தின் சிறப்புகளைப் முதல் பாகத்தில் கண்டோம் எனவே அடுத்து சத்ருகனன் சேவை சாதிக்கும் பாயம்மல் தலத்தைப் பற்றிக் காணலாம் அன்பர்களே. பாயம்மல் சத்ருக்னன் ஆலயம் நாலம்பலம் வரிசையில் நிறைவாக அமைந்த ஆலயம் பாயம்மல் சத்ருக்னன் ஆலயம். இத்தலம் பரதனின் ஆலயம் அமைந்துள்ள இரிஞ்ஞாலக்குடாவிலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. லக்ஷ்மணன், சத்ருக்னன் இருவரும் இரட்டையர் தசரதரின் மூன்றாவது மனைவி சுமித்ரைக்கு பிறந்தவர்கள். லக்ஷ்மணன் எவ்வாறு இராமருக்கு தொண்டு செய்தாரோ அது போல பரதனுக்கு தொண்டு செய்த தொண்டனுக்கு தொண்டன் சத்ருகனன். பரதன் நந்தி கிராமத்தில் ஸ்ரீராமர் வருகைக்காக காத்திருந்த போது இராச்சியத்தை பரிபாலனம் செய்தவர் இவர். சத்ருக்னன் என்றால் சத்ருக்களை வெல்பவன் என்று பொருள். இராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பின் லவணாசுரனை வென்றவர். இவருக்கான கோவில் பாயம்மலில் உள்ளது. சிறிய கோவில்தான். மற்ற கோவில்கள் போலில்லாமல் ஸ்ரீகோவில் செவ்வக வடிவில் உள்ளது. அதற்கு தகுந்தாற்போல பிரமிட் வடிவ விமானம். நின்ற கோலத்தில் சதுர்புஜ விஷ்ணுவாகவே இவரும் சேவை சாதிக்கின்றார். ஆனால் மூர்த்தி சிறியது ஆனால் கீர்த்தி பெரியது .மேற்திருக்கரங்களில் சக்கரம், சங்கம், கீழ்க்கரங்களில் பத்மம் கதை தாங்கி சேவை சாதிக்கின்றார். சத்ருக்னன் ஆலயத்தில், அவர் மட்டுமே இருக்கிறார். தெற்குப் பார்த்து கணபதி சந்நிதியும், முக மண்டபத்தில் அனுமன் சந்நிதியும் உள்ளது.  மது என்ற அரக்கன் சிவனைக் குறித்து தவம் செய்து ஒரு சூலம் பெற்றான். உனக்கும், உன் மகன் லவணனுக்கும் எதிரிகளை ஒழிக்க இது உதவும் என்று கொடுத்தார். லவணனின் காலத்துக்குப் பிறகு சூலம் என்னிடம் வந்துவிடும் என்று சிவபெருமான் கூறிவிட்டு, மறைந்து விட்டார் மது நல்லவனாயிருந்தான். மகன் நேர் எதிர். துஷ்டனான லவணனை அழிக்க ராமர் சத்ருக்னனிடம் சொல்கிறார். அண்ணலின் ஆணை கேட்டு அதை நிறைவேற்றத் தயாராக, கோப வடிவத்தில் நிற்கிறார் சத்ருக்னர்.  சுதர்சன புஷ்பாஞ்சலி, சக்கர சமர்ப்பணம் இவை இரண்டும் இங்கே முக்கிய வழிபாடுகள்.  சித்திரை மாதம் மிருகசீரிட தினம் பிரதிஷ்டை தினம். வாய்ப்புக் கிட்டுபவர்கள் நான்கு தலங்களையும் சென்று சேவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். வாருங்கள் இனி மலைநாட்டு திவ்யதேச யாத்திரையில் அடுத்து எந்த ஆலயத்தை தரிசித்தோம் என்று காணலாம். அத்தியாயம் – 21 சோட்டாணிக்கரை பகவதி தரிசனம் [] மலைநாட்டு திவ்யதேச யாத்திரையின் முதல் நாள் இரவு காட்கரையப்பனை சேவித்த பின் சோட்டாணிக்கரை வந்தடைந்தோம். அடியோங்கள் இரவு சோட்டாணிக்கரை ஆலயம் சென்ற போது மேல் பகவதிக் காவு திருக்கதவம் அடைக்கப்பட்டிருந்தது. கீழ் பகவதிக் காவில் குருதி பூஜை நடந்து கொண்டிருந்தது. நீரில் மஞ்சளையும் குங்குமத்தையும் கரைத்து அந்தச் செந்நிற நீரில் செய்யப்படுவதே குருதி பூஜை. இந்தத் தீர்த்தத்தைத் தெளித்தால் துர்தேவதைகள் விலகி ஓடும் என்பது ஐதீகம். ஒரு காலத்தில் இங்கு உயிர்ப் பலியும் இரத்த பூஜையும் நடந்துள்ளன. காலம் மாறிவிட்டாலும் பழைய பழக்க வழக்கங்களின் நினைவாகவே இன்றும் குருதி பூஜை நடக்கிறது. குருதி பூஜை முடிந்ததும் இந்தச் சிவப்பு நிற தீர்த்தத்தையே பிரசாதமாகத் தருகிறார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் தூரத்தில் இருந்தே தரிசித்து விட்டு கோவிலுக்கு அருகிலேயே உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறைகள் எடுத்து தங்கினோம். அதிகாலை 4 மணிக்கே நடை திறந்து விடும் பகவதியை தரிசித்து விட்டு வந்து விடுங்கள் 5 மணிக்கு கிளம்பினால்தான் மறு நாள் காலை தரிசிக்க வேண்டிய திவ்யதேசங்களை எல்லாம் தரிசிக்க இயலும் என்று சுவாமிகள் கூறினார். எனவே அடியோங்கள் உறங்கச் சென்றோம். இரண்டாம் நாள் அதிகாலையிலேயே எழுந்து சோட்டாணிக்கரை பகவதியை தரிசித்தோம். கேரளத்தில் உள்ள பகவதி ஆலயங்களில் கல்வி செல்வம் வீரம் அருளும் சோட்டாணிக்கரை பகவதி ஆலயம் முதன்மையானது என்று கூறலாம். இத்தலத்தில் இராஜராஜேஸ்வரியான பகவதி மூன்று வேளைகளில் ஒவ்வொரு முப்பெரும் தேவியாராக சேவை சாதிக்கின்றாள் என்பது சிறப்பு. இத்தலத்தில் பகவதி காலை வெண்ணிற ஆடையில் சரஸ்வதியாகவும், உச்சிவேளையில் சிவப்பு ஆடையில் லட்சுமியாகவும், மாலையில் நீலநிற ஆடையில் துர்கையாகவும் அருள் பாலித்தருளுகின்றாள். தேவியின் வலது பக்கம் மகாவிஷ்ணு இருப்பதால் நாராயணி என்றும் லக்ஷ்மி நாராயணா என்றும் அழைக்கப்படுகின்றாள். "அம்மே நாராயணா, தேவி நாராயணா, லட்சுமி நாராயணா, பத்ரே நாராயணா",  என்றே அன்பர்கள் அன்னையை போற்றி வணங்குகின்றனர். பொதுவாக தெய்வங்கள் அனைத்தும் இடது திருக்கரத்தை பாதத்தில் காட்டி வலது திருக்கரத்தால் அருள் பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள பகவதி எல்லாவித பாவத்திலிருந்தும் காப்பவள் என்பதால் வலது திருகரத்தை பாதத்தில் காட்டி, இடது திருக்கரத்தினால் அருள்பாலிக்கின்றாள். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் எல்லாவித பிரசனைகளையும் குறிப்பாக மன நோய், பில்லி சூனியம் முதலான இடர்பாடுகளை தீர்க்கும் அன்னையாக இத்தலத்தில் அருள் பாலிக்கின்றாள். இனி அன்னை இத்தலத்திற்கு வந்த வரலாற்றைப் பற்றிப் பார்ப்போமா? ஒரு காலத்தில் இந்த சோட்டாணிக்கரைப்பகுதி பெரும் காடாக விளங்கியது. அதில் வசித்து வந்த ஆதிவாசிகளின் தலைவன் கண்ணப்பன் என்பவன் மஹா கொடூரனாக விளங்கினான். அவன் பக்கத்து கிராமத்தில் உள்ள பசுக்களைத் திருடிக்கொண்டு வந்து அவற்றைக் கொன்று இறைச்சி ஆக்கி தன் நண்பர்களுடன் புசித்து வந்தான். ஒரு நாள் ஒரு கன்றை அவன் அவ்வாறு கொல்ல முயன்ற போது அது கட்டறுத்து கொண்டு காட்டுக்குள் ஓடி விட்டது. மறு நாள் அதே கன்றை தன் அன்பு மகளுடன் அவன் கண்டான், அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது அரிவாளால் அக்கன்றை கொல்ல முயன்றான். அவன் மகள் கன்றைக் கொல்ல வேண்டாம் என்று மகள் குறுக்கிட்டாள். மகள் மேல் இருந்த பாசத்தினால் அவனும் அக்கன்றைக் கொல்லாமல் விட்டுவிட்டான். மறு நாள் அவனின் மகள் இறந்து கிடந்தாள். சோகத்தில் அழுந்திக்கிடந்த அவன் கனவில் ஒரு நாள் அக்கன்று தோன்றியது. நான் சாட்சாத் ஜகதம்பா, நாளை முதல் உன் தொழுவத்தில் சிலையாக இருப்பேன், அருகில் மஹா விஷ்ணுவின் சிலை இருக்கும் என்றாள். அதே போலே மறு நாள் அம்மன் மற்றும் மஹா விஷ்ணுவின் சிலைகளை கண்ட அவன் அச்சிலைகளை பூசித்து வந்தான். அவனது இறப்பிற்கு பிறகு அக்கிராமத்தினர் அவ்விடத்தை விட்டு வேறு இடம் சென்று விட்டனர். கண்ணப்பன் தொழுவத்தில் புதர் மண்டி விட்டது. ஒரு நாள் ஒரு பெண் புல் வெட்டிக்கொண்டிருந்த போது ஒரு கல்லிருந்து இரத்தம் வடிய ஆரம்பித்தது. இதனால் பதட்டம் அடைந்த அப்பெண் பிரசித்தி பெற்ற எடாட்டு நம்பூதிரியிடம் விஷயத்தைக்கூற அவரும் தன் யோக சக்தியினால் அச்சிலையில் அம்மன் சக்தி இருப்பதை உணர்ந்து விளக்கேற்றி பூஜை நடத்தினார். அதற்குப்பின் அப்பகுதி மக்கள் தினமும் வந்து வழிபாடு நடத்தினர். அவ்வம்மனே இன்றும் சோட்டாணிக்கரை அம்மனாக அருள் பாலிக்கின்றாள் இன்றும் அதிகாலை நிர்மால்ய தரிசனத்தின் போது அன்னையை ருத்ராக்ஷ கல்லாக தரிசனம் செய்யலாம். அடியோங்களுக்கும் அன்னை இந்த யாத்திரையின் போது தன் நிஜ சொரூப தரிசனத்தையே அருளினாள். இத்தலத்திற்கான மற்றொரு புராணக்கதையும் உண்டு. காலடியில் அவதரித்து பாரத தேசமெங்கும் பயணித்து சரஸ்வதி தேவியின் அருளால் அத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தி சனாதான தர்மத்திற்கு புத்துயிரூட்டிய ஜகத்குரு ஆதி சங்கர பகவத் பாதாள் மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரியை கேரளத்திற்கு கொண்டு வர விரும்பினார். அதற்காக தவமும் இருந்தார். சங்கரரின் தவத்திற்கு மகிழ்ந்த அன்னை அவர் முன் தோன்றினாள். சங்கரரும் தனது வேண்டுகோளை அன்னையிடன் சமர்பித்தார். அன்னை ஒரு நிபந்தனையுடன் அவர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாள். அம்பாள், மகனே! நீ முன்னால் நடந்து செல்ல வேண்டும், உன் பின்னால் நான் நடந்து வருகின்றேன். எதற்காகவும் நீ திரும்பிப் பார்க்கக்கூடாது. அவ்வாறு திரும்பிப் பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன் என்று மொழிந்தாள். அதற்கு கட்டுப்பட்ட அன்னையும் கால் சிலம்பு கலீர் கலீர் என்று ஒலிக்க நடந்து வந்தாள். ஆதி சங்கரரும் பல நாட்கள் இரவு பகல் பாராமல் நடந்து கொண்டிருந்தார். அன்னையும் அவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். ஒரு நாள் அன்னையின் சிலம்பொலி கேட்கவில்லை. ஐயம் கொண்ட சங்கரர் அம்மனின் நிபந்தனையை மறந்து பின்னே திரும்பி பார்த்து விட்டார். அங்கே சர்வாபரண பூஷிதையாக சர்வாபரணங்களுடன் மந்தகாச புன்னகையுடனும் அன்னை சங்கரருக்கு தரிசனம் தந்தாள். மகனே! நிபந்தனையை மறந்து விட்டாயா? என்றாள். சங்கரர் அம்மையே தங்களின் கொலுசு சப்தம் கேட்காததால் பின் தங்கி விட்டீர்களோ என்று திரும்பிப் பார்த்தேன் மன்னிக்க வேண்டும் என்றார். அன்னை மகனே! நான் இந்த கொல்லூரிலேயே மூகாம்பிகையாக கோவில் கொள்ளப் போகிறேன் என்றாள். சங்கரர் பின்னும் அன்னையிடம் அம்மா கேரள தேசத்திற்கு எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார். அதற்கு அன்னை இதுவும் கேரள பூமிதான், கோகர்ணம் முதல் கன்னியாகுமரி வரை கேரளம் என்றாள். அம்மையின் திருமொழி சங்கரருக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆலப்புழைக்கு அருகே உள்ள வேந்த நாட்டிற்கு அன்னை எழுந்தருள வேண்டும், தன் தவத்தை வீணாக்கி விடக்கூடாது என்று மன்றாடி வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்று அன்னையும், சங்கரா, தினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் நான் சோட்டாணிக்கரை ஆலயத்தில் இருப்பேன் என்று அன்னை வாக்களித்தாள். சங்கரர் தன் நாட்டிற்கு திரும்பி வந்தார். அன்னை தனது வாக்குறுதிப்படி சங்கரரோடு ஜோதி ருபத்தில் வந்து கலந்து விட்டாள். அன்னையின் தரிசனம் கண்ட சங்கரர் ஆனந்தமடைந்தார். இவ்வாறு அம்மன் ஜோதியான கரை இன்று சோட்டாணிக்கரையாக விளங்குகின்றது. எனவே தினமும் காலை 7 மணி வரை அம்மை சோற்றாணிக்கரை ஆலயத்தில் வெண் பட்டு உடுத்திய கோலத்தில் சரஸ்வதியாக அருள் பாலிக்கின்றாள். இதற்குப் பிறகே அன்னை கொல்லூருக்கு செல்கின்றாள் என்பது ஐதீகம். இது வரை நாம் கண்டது மேல்காவு பகவதி மகிமை. இனி கீழ்காவு பகவதியின் புராணத்தைப் பற்றிக் காணலாமா அன்பர்களே. வில்வமங்களம் சுவாமிகள் ஒரு அழகிய பெண்ணைக் கண்டார். அவள் அவரை துரத்திக் கொண்டே ஓடத்தொடங்கினாள் வில்வமங்களம் சுவாமிகள் அவளிடமிருந்து தப்பிக்க வேகமாக ஓடினார் பகவதியின் திருக்குளத்திற்கு அருகில் வந்த போது இராஜராஜேஸ்வரி பத்ரகாளியாக ஆவிர்பவித்து அப்பெண்ணை கொன்றாள். அவள் ஒரு யட்சி என்றும் வில்வமங்களம் சுவாமிகளை கொல்ல வந்தாள். என்பதும் அன்னை தன்னை காப்பாற்றினாள் என்பதும் சுவாமிகளுக்கு புரிந்தது. பின்னர் சோட்டாணிக்கரை பகவதி தனது சௌந்தர்ய ரூபத்தை வில்வமங்களம் சுவாமிக்கு காட்டி அருளினாள். எனவே அன்னையை கீழ்காவு பகவதியாக – பத்ரகாளியாக வில்வமங்களம் சுவாமிகள் பிரதிஷ்டை செய்தார். பெண்கள் தங்கள் குறை தீர பெரிய ஆணிகளை அடிக்கும் பலா மரம் கீழ்காவு பகவதிக்கு வலப்பக்கம் உள்ளது. தினமும் கீழ்க்காவு பகவதி சன்னதியில் குருதி பூஜை நடைபெறுகின்றது. கீழ்க்காவு அம்மையைப் பார்க்கப் போகையில் வழியில் குளத்தின் வடக்கே பிரம்ம ராட்சசன் சன்னிதியைக் காணலாம். சன்னிதி என்றால் சுற்றுச் சுவர், கூரை எதுவும் இருக்காது. திறந்தவெளியில் நான்கு கற்களைப் (வனதுர்க்கை, சாஸ்தா, பத்ரகாளி, ராட்சசன்) பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அந்தக் கற்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரமும் ஏற்றுகிறார்கள். சோட்டாணிக்கரை கோயிலில் உபதேவதைகளுக்குப் பூஜை கிடையாது, நைவேத்தியம் மட்டுமே. மூலஸ்தானத்தில் நைவேத்தியம் முடித்து மீதி பிரசாதம் இங்கு படைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் முக்கிய பண்டிகை மகம் தொழல் ஆகும். மாசி மகத்தன்று அன்று வில்வமங்களம் சுவாமிகளுக்கு எவ்வாறு அன்னை சர்வலங்கார பூஷிதையாக தரிசனம் நல்கினாளே அதே போல இன்றும் தனது பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தந்து அருளுகின்றாள். இன்றைய தினம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்கின்றனர். உற்சவ அம்மனும் யானையில் பவனி வந்து அருள் பாலிக்கின்றாள். ஆயிரக்கணக்கில் குறிப்பாக பெண்கள் அன்றைய தினம் பகவதியை வந்து தரிசனம் செய்து அருள் பெற்று தங்கள் குறைகள் நீங்கப்பெறுகின்றனர். மேலும் கணபதி சிவன், சாஸ்தா, நாகர்கள் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் நுழை வாயில்கள் உள்ளன. ஸ்ரீகோவிலின் சுவற்றில் வெள்ளியால் அம்மனின் லீலைகள் அனைத்தும் சிற்பமாக அமைத்துள்ளது புதுமையாக உள்ளது. சீவேலிப் பிரகாரம் யானைகள் செல்லும் அளவிற்கு உயரமாகவும் விலாசமாகவும் உள்ளது. நாகர் மேடை வடக்குப் பக்கம் உள்ளது. சிவன் சன்னதியில் லிங்க வடிவில் சிவபெருமான் அருள் பாலிக்கின்றார். தெற்குப் பகுதியில் அம்மனை தரிசித்து விட்டு வெளி வரும் வாயிலும் பிரசாதம் வழங்கும் பகுதியும் அமைந்துள்ளன. அம்மையை நிர்மால்ய கோலத்தில் அபிஷேகத்துடன் தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. சிவன் சன்னதியிலும் அபிஷேகம் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. அன்னயின் அற்புத தரிசனத்திற்குப் பின் செங்கண்ணூர் நோக்கிப் புறப்பட்டோம். அத்தியாயம் – 22 வர்க்கலா ஜனார்த்தன சுவாமி ஆலயம் [] சேரநாட்டு திவ்யதேச யாத்திரையின் இரண்டாம் நாள் காலை செங்கண்ணூரரைச் சுற்றியுள்ள ஆறு திவ்யதேசங்களை சேவித்த பின் மதியம் கேரளத்தின் தென்பகுதியில் உள்ள திருவனந்தபுரம் நோக்கிப் புறப்பட்டோம். எம்.சி சாலையில் பயணித்தோம். சற்று நீண்ட பயணம்தான் வழியில் திருவனந்தபுரத்திற்கு சுமார் 50 கி.மீ முன்பாக உள்ள வர்க்கலா என்ற அரபிக் கடற்கரையோர கிராமத்தில் ஜனார்த்தனசுவாமியை சேவித்தோம். வர்க்கலா இயற்கை எழிலும் இறையருளும் சேர்ந்த தலம். அமைதியான ஒரு சிறு கிராமம். அருமையான கடற்கரை உள்ளதால் வெளி நாட்டினர் பலர் இக்கிராமத்தை நாடி வருகின்றனர். இக்கடற்கரையின் ஒரு சொட்டு நீர் மேனியில் பட்டாலும் அது ஆன்மாவையும், பாவங்களையும் கழுவி நிர்மூலமாக்கி விடும் என்பதால் பாபநாசம் கடற்கரை என்றும் அழைக்கப்படுகின்றது. பெருமாள் பித்ரு மோக்ஷகன் என்பதால் தக்ஷிண காசி என்றழைக்கப்படும் இத்தலத்தின் கடற்கரை முழுவதும் நீர்த்தார் கடன் கொடுப்போரைக் காண முடிந்தது, கற்கடக மாதம் அதாவது ஆடி மாதம் அமாவாசை அன்று இக்கடற்கரையில் பிண்ட தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம் என்றார்கள். பலராமர் தனது குமரி யாத்திரையின் போது இங்கு வழிபட்டதாக மஹாபராதம் பகர்கின்றது. ஜனார்த்தனபுரம் என்றும், உதயமார்த்தாண்டபுரம் என்றும் இவ்வூர் அறியப்படுகின்றது முதலில் கடற்கரைக்கு சென்று கால்களை நனைத்துக்கொண்டு ஆலயம் நோக்கி வந்தோம். தலவரலாறு: ஒரு சமயம் நாரதர் வீணா கானம் செய்து கொண்டே செல்லும் போது அவ்விசையில் மயங்கிய மஹாவிஷ்ணு அவரைத் தொடர்ந்து செல்கின்றார். சஞ்சாரித்து கொண்டே நாரதர் பிரம்மலோகத்திற்கு செல்கின்றார் நாராயணரும் அவரை பின் தொடர்கின்றார். பெருமாளைக் கண்ட பிரம்மதேவர் எழுந்து தொழுகின்றார், உடனே திருமால் மறைந்து விடுகிறார். அப்போது அருகே இருந்த பிரஜாபதிகள், தன் புத்திரனான நாரதரைப் பார்த்து பிரம்மதேவர் தொழுகிறார் என்றெண்ணி நகைக்கின்றனர். பிரம்மா அவர்களை பூலோகத்தில் பிறந்து துன்பப்பட சாபம் அளித்தார். அவர்களும் பூலோகத்தில் தவம் செய்ய சிறந்த இடம் எது என்று வினவ நாரதரும் தனது உத்தரீயத்தை (வல்கலம்) எடுத்து வீசினார் அது விழுந்த இடம் வர்கலா என்று இப்போது அறியப்படுகின்றது. பிரஜாபதிகள் இத்தலத்தில் தவம் செய்து பின்னர் சாப விமோசனம் பெற்றனர். 500 ஆண்டுகள் பழமையானது இந்த ஜனார்த்தன சுவாமி ஆலயம். ஒரு சிறு மலையின் மேல் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு எதிரே விஷ்ணு உருவாக்கிய சக்கர தீர்த்தம் உள்ளது. அருகில் ஓர் ஐயப்ப சுவாமி ஆலயம் உள்ளது. நெடு நெடுவென்று அமைந்துள்ல 50 படிகள் மேலேறிச்சென்று ஆலயத்தை அடைந்தோம். இரண்டு அடுக்குகள் கொண்ட கேரளப்பாணி அலங்கார வளைவு அடியோங்களை வரவேற்றது. பாண்டிய மன்னன் கட்டியதாம், மன்னன் தனது பிரம்மஹத்தி தோஷம் தீர புனித யாத்திரை வந்த போது இத்தலத்தில் அவனுக்கு நிம்மதி ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு முனிவர் அதற்குக் காரணம் கடலில் மூழ்கி உள்ள பரந்தாமன் விக்கிரகம் என்றார். கனவில் பெருமாளும் வந்து வழிகாட்ட மறுநாள் விக்கிரகத்தை மீட்டெடுத்து பிரதிஷ்டை செய்து கோவிலைக் கட்டினாராம். அரசனது ப் கிருஷ்ணபிரேமி சுவாமிகள் இப்பெருமாளை மங்கலாசாசனம் செய்துள்ளார். ஜோஷிர்மட் திவ்யதேசத்தில் குறிப்பிடுவதைப் போலவே இத்தலத்திலும் பெருமாளின் வலது கரம் திரும்பிக்கொண்டு வருகிறதாம். கீழ் நோக்கிய வலது திருக்கரம் தற்போது மேல் நோக்கி திரும்பி விட்டது. முழுவதுமாக தீர்த்தம் அருந்துவது போல வரும்போது உலகம் அழியும் என்று கூறுகின்றனர். முதலில் நாக லிங்க மரத்தடியில் சிவன் சன்னதி, இலிங்க வடிவில் அருள் பாலிக்கின்றார் சிவபெருமான். அற்புத சிற்பங்கள் ஆலயத்தில் நிறைந்துள்ளன. நடராஜர், காளி, பிக்ஷாடணர், அம்பாள், மோகினி, வேணு கோபாலர், ரதி மன்மதன், திருவடிகளான் கருடன், அனுமன் என்று அற்புதமான சிற்பங்கள் ஆலயம் முழுவதும் கொள்ளை அழகு. அடுத்து உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கும் ஜனார்த்தன சுவாமி சன்னதி பெருமாளை திவ்யமாக சேவித்தோம். வட்ட வடிவ ஸ்ரீகோவில் தொப்பி விமானம் அருமையாக சுத்தமாக இருந்தது ஆலயம். கோகுலாஷ்டமியன்று சிறப்பாக பெருமாளுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகின்றதாம். மீனம் மாதம்(பங்குனி) உத்திரத்தன்று கடலுக்கு எழுந்தருளி ஆராட்டு கண்டருளுகிறார். ஆராட்டு உற்சவம் பத்து நாள் உற்சவமாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. கணபதி மற்றும் சாஸ்தாவிற்கு தனி சன்னதிகள் உள்ளன. முடியாதவர்கள் ஏறி வர தனிப்பாதை உள்ளது. தெற்குப்பக்கம் வாகனங்கள் மேலே வரவும் வசதியுள்ளது. ஆலயத்தில் ஒரு டச்சுக்கப்பலின் இரண்டு மணிகள் உள்ளன. அக்கப்பல் இத்தலத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது மூழ்க ஆரம்பித்ததாம், ஆனால் எவ்வித உயிரிழப்பும் இல்லாமல் அனைவரும் தப்பித்ததால் அக்கப்பலின் மீகாமன் இம்மணிகளை ஜனார்த்தன சுவாமிக்கு சமர்ப்பித்தாராம். கடற்கரையை ஒட்டியே மலை அமைந்துள்ளது என்பதால் வீர விளையாட்டுகள் நடக்கும் கேந்திரமாகவும், ஆயுர்வேத சிகிச்சை கேந்திரமாகவும் வர்கலா விளங்குகிறது. ஜனார்த்தன சுவாமியை சேவித்தபின் திருவனந்தபுரம் நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். அத்தியாயம் – 23 திருவனந்தபுரம் வராஹ சுவாமி ஆலயம் திருவனந்தபுரத்தில் முதல் நாள் இரவு அனந்தபத்மநாப சுவாமியை தரிசித்த பின் அடியோங்களுடன் யாத்திரை மேற்கொண்ட திரு. ஸ்ரீகுமார் அவர்களின் ஒரு இல்லம் அங்கு இருந்ததால் அதில் தங்கினோம். அதிகாலை 4 மணிக்கே எழுந்து அவர் இல்லத்தின் அருகில் உள்ள வராஹ சுவாமி ஆலயம் சென்றோம். ஆலயம் அமைந்துள்ள தெருவில் நுழையும் போதே பிரம்மாண்டமான சுதையால் ஆன கருடபகவான் அடியோங்களை வரவேற்றார். ஆலயத்தில் இருந்து நாராயணீயத்தின் பாடல்கள் செவிகளில் வந்து தேனாக பாய்ந்தன. இது சமயம் தவறாமல் பூஜை நடைபெறுவதை உணர்த்தியது. சுமார் 2000 வருடங்கள் பழமையான ஆலயம் என்றார் ஸ்ரீகுமார் அவர்கள். வட்ட வடிவ ஸ்ரீகோவிலில் லக்ஷ்மி வராஹராக பெருமாள் அருள் பாலிக்கின்றார். ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு விளக்குகள் எல்லாம் ஏற்றப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது, அருமையாக சேவித்தோம். நமஸ்கார மண்டபத்தில் நில விளக்குகள் ஓளிர்ந்து கொண்டிருந்தன. கருடனும் சேவை சாதித்தான். முக்கிய சன்னதி தவிர கணபதி, சிவன் சன்னதிகளும் உள்ளன. ஒரு பிரம்ம்மாண்டமான ஆலமரத்தின் அடியில் நாகப்பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பெருமாளின் அதிகாலை திருமஞ்சனத்தை சேவித்த ஆனந்தத்தில் திருவாட்டற்றில் அருள் வழங்கும் ஆதி கேசவனை சேவிக்கப்புறப்பட்டோம். வழியில் நெய்யாற்றங்கரை என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரை சேவித்து விட்டு செல்லலாம் என்று ஸ்ரீகுமார் அவர்கள் கூறியதால் பெரும் பாதையையிலிருந்து இடப்புறம் திரும்பி நெய்யாற்றங்கரையை அடைந்தோம். அங்கு அடியோங்களுக்கு எவ்வளவு அருமையான சேவை கிடைத்தது என்பதை காணாலாமா அன்பர்களே?. அத்தியாயம் – 24 நெய்யாற்றங்கரை ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் [] திருவனந்தபுரம் மாவட்டத்தின் குருவாயூர் என்று அழைக்கப்படும் இந்நெய்யாற்றங்கரை ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தில் இரண்டு கரங்களிலும் வெண்ணையை வைத்துக்கொண்டு உண்ணி கிருஷ்ணராக பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவ்வாலயம் திருவனந்தபுரத்திற்கு தெற்கே 20 கி.மீ, நாகர்கோவிலிலிருந்து 46 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி திருவனந்தபுரம் தொடர்வண்டித் தடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் அம்மாச்சிப் பலவு (தாய்வழிப் பாட்டி பலா மரம்) சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மனை எதிர்த்து எட்டு வீட்டில் பிள்ளைமார் சதி செய்த போது ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணரின் அருளால் மார்த்தாண்டவர்மன் இப்பலாமரத்தின் பொந்தில் ஒளிந்து கொண்டு அவர்களிடமிருந்து தப்பித்தார் என்பது வரலாறு. எனவே இம்மரத்தை வணங்க ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதீகம். மார்த்தாண்டவர்மன் பின்னர் இக்கோவிலை அப்பலாமரத்தின் அருகில் கட்டினார் என்கிறார்கள். அனந்த பத்மநாப சுவாமி ஆலயத்தை புனருத்தாரணம் செய்தவர் இவரே. நுழைவாயிலில் அருமையான கீதோபதேச சுதை சிற்பம், நடைப்பந்தல், சில படிகள் இறங்கினால் தங்கக்கொடி மரம். பலிக்கல், நமஸ்கார மண்டபம், ஸ்ரீகோவில் சதுர வடிவம் பிரமிட் போன்ற கூரை. அடியோங்கள் சென்ற போது வருடாந்திர மீன மாத திருவிழா நடந்து கொண்டிருந்தது என்பதால் வாழை, கமுகு, மாவிலை தோரணங்கள், செவ்விளநீர், பாக்குக் கொத்துகளுடன் ஆலயம் பொலிவுடன் விளங்கியது. பளபளக்கும் தங்கக் கொடி மரத்தில் இருந்த அஷ்ட திக் பாலகர்களுக்கு நேர்த்தியாக வஸ்திரம் சார்த்தியிருந்தனர். அற்புதமான அலங்காரத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களுடன் விரித்த தலைமுடியுடனும், இரண்டு கரங்களிலும் வெண்ணையை ஏந்திக்கொண்டு நின்ற கோலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சேவை சாதித்தார். அற்புதமாக திருவடி சேவை கிட்டியது. இவருக்கு சந்தனக் காப்பு, மாவுபொடி காப்பு சிறப்பாக செய்யப்படுகின்றது. பால் பாயசம் சிறப்பு நெய்வேத்யம் ஆகும், ஸ்ரீ கிருஷ்ணரின் கையில் வெண்ணெய் வைத்து வணங்குவது இத்தலத்தின் சிறப்பு வழிபாடாகும். ஆலயத்தில் சாஸ்தா, கணபதி, நாகர், பகவதி சன்னதிகளும் உள்ளன. பகவதி சன்னதி மாதத்தின் முதல் வெள்ளியன்று மட்டுமே திறக்கப்படுகின்றது. வெள்ளி கருட வாகனம் மற்றும் அனுமந்த வாகனம், முதல் நாள் இரவு பெருமாள் வலம் வந்த புஷ்பபல்லக்கு ஆகியவற்றை சேவித்தோம். வேட்டைக்கு ஒரு மகன், சாஸ்தா, நடராஜர், இராமர் பட்டாபிஷேகம், நரசிம்மர், மஹாலட்சுமி, கிராத மூர்த்தி, ஆகிய ஓவியங்கள் மிகவும் அருமை. வில்வமங்களம் சுவாமிகள் நெய்யால் யாகம் செய்த போது ஸ்ரீகிருஷ்ண பகவான் திருக்கரங்களால் வாங்குவதைப் பார்த்தார் என்கிறார்கள். இவ்வாறு அருமையாக ஸ்ரீ கிருஷ்ணரை சேவித்தபின் கரியகாவிளை தாண்டி திருவாட்டாற்றை அடைந்தோம். பின்னர் திருவாட்டாறு, திருவண்பரிசாரம் சேவித்து நாங்குநேரி வந்து வானமாமலைப்பெருமாளை சேவித்த பின் திருமலை சுவாமிகளின் ஆச்சாரியர் வானமாமலை ஜீயரின் ஆசி பெற்றோம். பின்னர் மதுரையடைந்து கூடலழகரை சேவித்தோம். யாத்திரையின் நிறைவாக திருமோகூர் திவ்யதேசத்தை சேவித்து சென்னை திரும்பினோம். இவ்வாறாக இந்த யாத்திரை மிகவும் சிறப்பாக அமைந்தது. இனி ஆழ்வார்களின் அருளிச்செயல்கள். பாகம் - 3 ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் அடியார்கள் திவ்யதேச எம்பெருமான்களை சேவிக்கும் போது சேவிக்க ஏதுவாக அத்திவ்யதேசங்களுக்குரிய பாசுரங்கள் இப்பாகத்தில் தரப்பட்டுள்ளன. 1.திருநாவாய் - பெரிய திருமொழி தூவாய புள்ளூர்ந்து வந்துதுறை வேழம் மூவாமை நல்கிமுதலைதுணித்தானை தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை நாவாயுளானை நரையூரில் கண்டேனே. (பெ.தி 6-8-3) கம்பமாகளிறு அஞ்சிக்கலங்க ஓர் கொம்புகொண்ட குரைகழல் கூத்தனை கொம்புலாம் பொழில் கோட்டியூர்க்கண்டுபோய் நம்பனைச்சென்று காண்டும் நாவாயுளே. (பெ.தி 10-1-9) திருவாய்மொழி 9-8 எம்பெருமான் வரக்காணாமையாலே தலைவி தலைவனது நகரான திருநாவாயிற் செல்ல நினைந்தமை கூறும் முகத்தால் நம்மாழ்வார் எம்பெருமானை அடைவதில் விரைவை தெரிவித்தல் அறுக்கும்வினையாயின ஆகத்தவனை நிறுத்தும்மனத்து ஒன்றிய சிந்தினையினார்க்கு வெறித்தண்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் குறுக்கும்வகையுண்டு கொலோ? கொடியேற்கே (1) கொடியேரிடைக் கோகனத்தவள் கேள்வன் வடிவேல் தடங்கண் மடப்பின்னைமணாளண் நெடியானுறைசோலைகள்சூழ் திருநாவாய் அடியேனணுகப்பெறுநாள் எவைகொலோ? (2) எவைகொல்அணுகப்பெறுநாள்? என்றுஎப்போதும் கவையில் மனமின்றிக் கண்ணீர்கள்கலுழ்வன் நவையில்திருநாரணன் சேர்திருநாவாய் அவையுள்புகலாவது ஓர்நாளாறியேனே (3) நாளேலறியேன் எனக்குள்ளன நானும் மீளாவடிமைப்பணி செய்யப்புகுந்தேன் நீளார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் வாயேய்தடங்கண் மடப்பின்னைமணாளா! (4) மணாளன்மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்துயிர்தேவர்க்கெல்லாம் விண்ணாளன்விரும்பியுறையும் திருநாவாய் கண்ணாரக்களிக்கின்றது இங்குஎன்றுகொல்கண்டே? (5) கண்டேகளிக்கின்றது இங்குஎன்றுகொல்? கண்கள் தொண்டேயுனக்காய் ஒழிந்தேன் துரிசின்றி வண்டார்மலர்சோலைகள்சூழ் திருநாவாய் கொண்டேயுறைகின்ற எங்கோவலர்கோவே! (6) கோவாகிய மாவலியை நிலங்கொண்டாய்! தேவாசுரம்செற்றவனே! திருமாலே! நாவாயுறைகின்ற என் நாரண நம்பீ! ஆவா! அடியான் இவனென்று அருளாயே. (7) அருளாதொழிவாய் அருள்செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக்கீழ்ப்புகவைப்பாய் மருளேயின்றி உன்னை என்னெஞ்சத்திருத்தும் தெருளேதரு தென்திருநாவாயென்தேவே! (8) தேவர்முனிவர்க்குஎன்றும்காண்டற்கரியன் மூவர்முதல்வன் ஒருமூவுலகாளி தேவன்விரும்பியுறையும் திருநாவாய் யாவரணுகப்பெறுவார்? இனியந்தோ? (9) அந்தோ! அணுகப்பெறுநாள்என்று எப்போதும் சிந்தைகலங்கித் திருமாலென்றழைப்பன் கொந்தார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் வந்தேயுறைகின்ற எம்மாமணிவண்ணா! (10) வண்ணம்மணிமாட நல்நாவாயுள்ளானை திண்ணம்மதிள் தென்குருகூர்ச்சடகோபன் பண்ணார்தமிழ் ஆயிரத்துஇப்பத்தும்வல்லார் மண்ணாண்டு மணங்கமழ்வர் மல்லிகையே (11) 2. திருவித்துவக்கோடு- பெருமாள் திருமொழி - 5 வழியும் வாசலும் அவனே மருந்தும் விருந்தும் அவனே வேறு கதியில்லை என்று விற்றுவக்கோட்டம்மானிடம் குலசேகர ஆழ்வார் தெரிவித்தல் தருதுயரம்தடாயேல் உன்சரணல்லால்சரணில்லை விரைகுழுவுமலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட்டம்மானே! அரிசினத்தாலீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைந்தேயழும் குழவியதுவேபோன்றிருந்தேனே (1) கண்டாரிகழ்வனவே காதலன்தான் செய்திடினும் கொண்டானையல்லால் அறியாக்குலமகள்போல் விண்தோய்மதிள்புடைசூழ் விற்றுவக்கோட்டம்மா! நீ கொண்டாளாயாகிலும் உன்குரைகழலேகூறுவனே.(2) மீள்நோக்கும்நீள்வயல்சூழ் விற்றுவக்கோட்டம்மா! என் பால்நோக்காயாகிலும் உன்பற்றல்லால்பற்றிலேன் தான்நோக்காது எத்துயரம்செய்திடினும் தார்வேந்தன் கோல்நோக்கிவாழும் குடிபோன்றிருந்தேனே.(3) வாளாலறுத்துச்சுடினும் மருத்துவன்பால் மாளாகாதல் நோயாளன்போல் மாயத்தால் மீளாத்துயர்தரினும் விற்றுவக்கோட்டம்மா! நீ ஆளாவுனதருளே பார்ப்பேனடியேனே.(4) வெங்கண்திண்களிறடர்த்தாய்! விற்றுவக்கோட்டம்மானே! எங்குபோயுய்கேன்? உன்னிணையடியேயடையல்லால் எங்கும்போய்கரைகாணாது எறிகடல்வாய்மீண்டேயும் வங்கத்தின்கூம்பேறும் மாப்பறவைபோன்றேனே.(5) செந்தழலேவந்து அழலைச்செய்திடினும் செங்கமலம் அந்தரஞ்சேர்வெங்கதிரோற்கல்லால் அலராவால் வெந்துயர்வீட்டாவிடினும் விற்றுவக்கோட்டம்மா! உன் அந்தமில்சீர்க்கல்லால் அகங்குழையமாட்டேனே(6) எத்தனையும் வான்மறந்தகாலத்தும் பைங்கூழ்கள் மைத்தெழுந்தமாமுகிலே பார்த்திருக்கும்மற்றவைபோல் மெய்த்துயர்வீட்டாவிடினும் விற்றுவக்கோட்டம்மா! என் சித்தமிகவுன்பாலே வைப்பனடியேனே.(7) தொக்கிலங்கியாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே புக்கன்றிப்புறம்நிற்கமாட்டாத மற்றவைபோல் மிக்கிலங்குமுகில்நிறத்தாய்! விற்றுவக்கோட்டம்மா! உன் புக்கிலங்குசீரல்லால் புக்கிலன்காண்புண்ணியனே!(8) நின்னையேதான் வேண்டி நீள்செல்வம்வேண்டாதான் தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால் மின்னையேசேர்திகிரி விற்றுவக்கோட்டம்மா! நின்னையேதான்வேண்டி நிற்பனடியேனே. (9) விற்றுவக்கோட்டம்மா! நீ வேண்டாயேயாயிடினும் மற்றாரும்பற்றிலேனென்று அவனைத்தாள்நயந்த கொற்றவேல்தானைக் குலசேகரன்சொன்ன நற்றமிழ்பத்தும்வல்லார் நண்ணார்நரகமே (10) 3. திருமூழிக்களம் – பெரிய திருமொழி பனியேய்பரங்குன்றின் பவளத்திரளே! முனியே! திருமூழிக்களத்துவிளக்கே! இனியாய தொண்டரோம் பருகுஇன்னமுதாய கனியே! உன்னைக்கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே. (பெ. தி 7-1-7) ------------------------------------------------------------------------ திருநெடுந்தாண்டகம் பொன்னானாய்! பொழிலேழும்காவல்பூண்ட புகழானாய்! இகழ்வாயதொண்டனேன்நான் என்னானாய்! என்னானாய்! என்னல்லால் என்னறிவேனேழையேன்? உலகமேத்தும் தென்னனாய்! வடவானாய்! குடபாலானாய்! குணபாலமதயானாய்! இமையோர்க்கென்றும் முன்னானாய்! பின்னானார்வணங்கும்சோதி! திருமூழிக்களத்தனாய்! முதலானாயே! (தி.நெ) பெரிய திருமடல் என்னை மனங்கவர்ந்த ஈசனை வானவர் தம் முன்னவனை மூழிக்களத்து விளக்கினை (பெ.தி.ம 129) திருவாய்மொழி 9-7 எம்பெருமானது வடிவழகே பற்றாகத் தலைவி திருமூழிக்களத்தே பறவைகளை தூதுவிடுவதாகக் கூறும் பாசுரம் எங்கானலகங்கழிவாய் இரைதேர்ந்திங்கினிதமரும் செங்கால்மடநாராய்! திருமூழிக்களத்துறையும் கொங்கார்பூந்துழாய்முடி எங்குடக்கூத்தர்க்கு என் தூதாய் நுங்கால்கள்என்தலைமேல் கெழுமீரோநுமரோடே. (1) நுமரோடும்பிரியாதே நீரும்நும்சேவலுமாய் அமர்காதற்குருகி னங்காள்! அணிமூழிக்களத்துறையும் எமராலும்பழிப்புண்டு இங்குஎன்? தம்மாலிழிப்புண்டு தமரோடங்குறைவார்க்குத் தக்கிலமே? கேளிரே.(2) தக்கிலமே? கேளீர்கள் தடம்புனல்வாயிரைதேரும் கொக்கினங்காள்! குருகினங்காள்! குளிர்மூழிக்களத்துறையும் செக்கமலத்தலர்போலும் கண்கைகால்செங்கனிவாய் அக்கமலத்திலைபோலும் திருமேனியடிகளுக்கே. (3) திருமேனியடிகளுக்கு தீவினையேன்விடுதூதாய் திருமூழிக்களமென்னும் செழுநகர்வாயணிமுகில்காள்! திருமேனியவட்கருளீர் என்றக்கால் உம்மைத்தன் திருமேனியொளியகற்றித் தெளிவிசும்புகடியுமே? (4) தெளிவிசும்புகடிதோடித் தீவளைத்துமின்னிலகும் ஓளிமுகில்காள்! திருமூழிக்களத்துறையும்மொண்சுடர்க்கு தெளிவிசும்பு திருநாடாத் தீவினையேன்மனத்துறையும் துளிவார்கட்குழலார்க்கு என்தூதுரைத்தல் செப்புமினே. (5) என்தூதுரைத்தல் செப்புமின்கள் தூமொழிவாய் வண்டினங்காள்! போதிரைத்துமதுநுகரும் பொழில்மூழிக்களத்துறையும் மாதரைத்தம்மார்வகத்தே வைத்தார்க்கு, என்வாய் மாற்றம் தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர்வளையும்கலையுமே(6) சுடர்வளையும்கலையும் கொண்டு அருவினையேன்தோள் துறந்த படர்புகழான் திருமூழிக்களத்துறையும்பங்கயக்கண் சுடர்பவளவாயனைக்கண்டு ஒருநாளோர்தூய்மாற்றம் படர்பொழில்வாய்க்குருகினங்காள்! எனக்கொன்று பணியீரே. (7) எனக்கொன்று பணியீர்கள் இரும்பொழில்வாயிரை தேர்ந்து மனக்கின்பம்படமேவும் வண்டினங்காள்! தும்பிகாள்! கனக்கொள்திண்மதிள்புடைசூழ் திருமூழிக்களத்துறையும் புனக்கொள் காயாமேனிப் பூந்துழாய் முடியார்க்கே(8) பூந்துழாய் முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு ஏந்துநீரிளங்குருகே! திருமூழிக்களத்தாருக்கு ஏந்துபூண்முலைபயந்து என்னிணைமலர்க்கண்நீர்ததும்ப தாம்தம்மைகொண்டகல்தல் தகவன்றென்றுரையீரே.(9) தகவன்றென்றுரையீர்கள் தடம்புனல்வாயிரைதேர்ந்து மிகவின்பம்படமேவும் மென்னடைஅன்னங்காள்! மிகமேனிமெலிவெய்தி மேகலையும்ஈடழிந்து என் அகமேனியொழியாமே .திருமூழிக்களத்தார்க்கே.(10) ஒழிவின்றிதிருமூழிக்களத்துறையும் ஒண்சுடரை ஒழிவில்லாவணிமழலைக் கிளிமொழியாளலற்றியசொல் வழுவில்லாவண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த அழிவில்லாவாயிரத்து இப்பத்தும்நோயறுக்குமே. (11) 4.திருக்காட்கரை – திருவாய்மொழி 9-6 ஆழ்வார் எம்பருமானது சீரை இன்னாப்புடன் கூறியருளுதல் உருகுமால்நெஞ்சம் உயிரின்பரமன்றி பெருகுமால்வேட்கையும் என்செய்கென்தொண்டனேன்? தெருவெல்லாம்காவிகமழ் திருக்காட்கரை மருவியமாயன்தன் மாயம்நினைதொறே. (1) நினைதொறும்சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் வினைகொள்சீர்பாடிலும் வேமெனதாருயிர் சுனைகொள்பூஞ்சோலைத் தென்காட்கரையென்னப்பா! நினைகிலேன்நான் உனக்குஆட்செய்யும்நீர்மையே. (2) நீர்மையால்நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்து என்னை ஈர்மைசெய்து என்னுயிராய் என்னுயிருண்டான் சீர்மல்குசோலைத் தென்காட்கரையென்னப்பன் கார்முகில்வண்ணன்தன் கள்வமறிகிலேன்(3) அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும்நிற்க நெறிமையால்தானும் அவற்றுள்நிற்கும்பிரான் வெறிகமழ்சோலைத் தென்காட்கரையென்னப்பன் சிறியவென்னாருயிருண்ட திருவருளே. (4) திருவருள்செய்பவன்போல என்னுள்புகுந்து உருவமுமாருயிரும் உடனேயுண்டான் திருவளர்சோலைத் தென்காட்கரையென்னப்பன் கருவளர்மேனி நங்கண்ணன்கள்வங்களே(5) என்கண்ணன்கள்வம் எனக்குச்செம்மாய்நிற்கும் அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது புன்கண்மையெய்திப் புலம்பியிராப்பகல் என்கண்ணனென்று அவன்காட்கரையேத்துமே(6) காட்கரையேத்தும் அதனுள் கண்ணா! என்னும் வேட்கைநோய்கூர நினைந்துகரைந்துருகும் ஆட்கொள்வானொத்து என்னுயிராண்டமாயனால் கோட்குறைப்பட்டது என்னாருயிர்கோளுண்டே(7) கோளுண்டான்றிவந்து என்னுயிர்தானுண்டான் நாளுநாள்வந்து என்னைமுற்றவும்தானுண்டான் காளநீர்மேகத் தென்காட்கரையென்னப்பற்கு ஆளன்றேபட்டது என்னாருயிர்பட்டதே(8) ஆருயிர்பட்டது எனதுயிர்பட்டது? பேரிதழ்த்தாமரைக்கண் கனிவாயது ஓர் காரெழில்மேகத் தென்காட்கரைக்கோயில்கொள் சீரெழில்நால்தடந்தோள் தெய்வவாரிக்கே(9) வாரிக்கொண்டு உன்னைவிழுங்குவன்காணிலென்று ஆர்வுற்ற என்னையொழிய என்னின்முன்னம் பாரித்து தானென்னை முற்றப்பருகினான் காரொக்கும் காட்கரையப்பன்கடியனே.(10) கடியனாய்க் கஞ்சனைக்கொன்றபிரான்தன்னை கொடிமதிள்தென்குருகூர்ச் சடகோபன்சொல்’ வடிவமையாயிரத்து இப்பத்தினால் சன்மம் முடிவெய்தி நாசங்கண்டீர்களெங்கானலே. (11) 5. திருக்கடித்தானம் – திருவாய்மொழி 8-6 ஆழ்வாரது பெருவிடாய்தீரக் கலக்கக் கருதித் திருமால் திருக்கடித்தானத்தில் காட்சி தர, தரித்தமை கூறல் எல்லியும்காலையும் தன்னைநினைந்தெழ நல்லவருள்கள் நமக்கேதந்தருள்செய்வான் அல்லியந்தண்ணந்துழாய்முடி அப்பனூர் செல்வர்கள்வாழ் திருக்கடித்தானமே(1) திருக்கடித்தானமும் என்னுடைச்சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளேஉறையும்பிரான்கண்டீர் செருக்கடுத்து அன்றுதிகைத்தவரக்கரை உருக்கெட வாளிபொழிந்தஒருவனே (2) ஒருவரிருவர் ஓர்மூவரெனநின்று உருவுகரந்து உள்ளுந்தோறும் தித்திப்பான் திருவமர்மார்வன் திருக்கடித்தானத்தை மருவியுறைகின்ற மாயப்பிரானே. (3) மாயப்பிரான் எனவல்வினைமாய்ந்தற நேசத்தினால் நெஞ்சம்நாடுகுடிகொண்டான் தேசத்தமரர் திருக்கடித்தானத்தை வாசப்பொழில் மன்னுகோயில்கொண்டானே (4) கோயில்கொண்டான் தன்திருக்கடித்தானத்தை கோயில்கொண்டான் அதனோடுமென்னெஞ்சகம் கோயில்கொள் தெய்வமெல்லாம்தொழ வைகுந்தம் கோயில்கொண்ட குடகூத்தவம்மானே (5) கூத்தவம்மான் கொடியேனிடர்முற்றவும் மாய்த்தவம்மான் மதுசூதவம்மானுறை பூத்தபொழில் தண்திருக்கடித்தானத்தை ஏத்தநில்லா குறிக்கொண்மினிடரே. (6) கொண்மின்இடர்கெட உள்ளத்துக்கோவிந்தன் மண்விண்முழுதும் அளந்தஒண்தாமரை மண்ணவர்தாம்தொழ வானவர்தாம்வந்து நண்ணுகடித்தானநகரே (7) தானநகர்கள் தலைச்சிறந்தெங்கும் வானிந்நிலம்கடல் முற்றும்எம்மாயற்கே ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக்கடித் தானநகரும் தனதாயப்பதியே (8) தாயப்பதிகள் தலைசிறந்தெங்கெங்கும் மாயத்தினால் மன்னிவீற்றிருந்தானுறை தேசத்தமரர் திருக்கடித்தானத்துள் ஆயர்க்கதிபதி அற்புதன்தானே. (9) அற்புதன்நாராயணன் அரிவாமனன் நிற்பதுமேவி இருப்பதென்னெஞ்சகம் நற்புகழ்வேதியர் நான்மறைநின்றதிர் கற்பகச்சோலைத் திருக்கடித்தானமே. (10) சோலைத்திருக்கடித்தானத்து உறைதிரு மாலை மதிள்குருகூர்ச் சடகோபன்சொல் பாலோடமுதன்ன ஆயிரத்துஇப்பத்தும் மேலைவைகுந்தத்து இருத்தும்வியந்தே. (11) 6.திருவல்லவாழ் – பெரிய திருமொழி 9-8 தந்தைதாய்மக்களே சுற்றமென்றுஉற்றவர்பற்றிநின்ற பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ பழியெனக்கருதினாயேல் அந்தமாய் ஆதியாய் ஆதிக்குமாதியாய் ஆயனாய மைந்தனார் வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவு நெஞ்சே! (1) மின்னுமாவல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடைநுடங்கும் அன்னமென்னடையினார் கலவியை அருவருத்தஞ்சினாயேல் துன்னுமாமணிமுடிப்பஞவர்க்காகி முன்தூதுசென்ற மன்னனார் வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவு நெஞ்சே! (2) பூணுலாமென்முலைப்பாவைமார் பொய்யினைமெய்யிதென்று பேணுவார் பேசும் அப்பேச்சை நீபிழையெனக்கருதினாயேல் நீணிலாவெண்குடைவாணனார் வேள்வியில் மண்ணிரந்த மாணியார் வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவு நெஞ்சே! (3) பண்ணுலாமென்மொழிப்பாவைமார் பணைமுலையணைதும்நாமென்று எண்ணுவாரெண்ணமதொழித்து நீபிழைத்துய்யக்கருதினாயேல் விண்ணுளார்விண்ணின்மீதியன்ற வேங்கடத்துள்ளார் வளங்கொள்முந்நீர் வண்ணனார் வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவு நெஞ்சே! (4) மஞ்சுதோய்வெண்குடைமன்னராய் வாரணம்சூழ வாழ்ந்தார் துஞ்சினாரென்பதோர்சொல்லைநீ துயரெனக்கருதினாயேல் நஞ்சுதோய்கொங்கைமேல் அங்கை வாய் வைத்து அவள் நாளையுண்ட மைந்தனார் வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவு நெஞ்சே! (5) உருவினார்பிறவிசேர் ஊன்பொதிநரம்புதோற்குரம்பையுள்புக்கு அருவிநோய்செய்துநின்று ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல் திருவினார்வேதம்நான்கு ஐந்துதீவேள்வியோடுஅங்கமாறும் மருவினார் வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவு நெஞ்சே!(6) நோயெலாம்பெய்த்தோராக்கையை மெய்யெனக்கொண்டு வாளா பேயர்தாம் பேசும் அப்பேச்சை நீ பிழையெனக்கருதினாயேல் தீயுலாவெங்கதிர்த்திங்களாய் மங்குல்வானாகிநின்ற மாயனார் வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவு நெஞ்சே!(7) மஞ்சுசேர்வானெரி நீர்நிலம்காலிவை மயங்கிநின்ற அஞ்சுசேராக்கையை அரணமன்றென்றுயக் கருதினாயேல் சந்துசேர்மென்முலைப் பொன்மலர்ப்பாவையும்தாமும் நாளும் வந்துசேர் வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவு நெஞ்சே!(8) வெள்ளியார் பிண்டியார் போதியாரென்றிவர் ஓதுகின்ற கள்ளநூல் தன்னையும் கருமமன்றென்றுயக்கருதினாயேல் தெள்ளியார் கைதொழும் தேவனார் மாமுநீரமுதுதந்த வள்ளலார் வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவு நெஞ்சே!(9) மறைவலார்குறைவிலாருரையுமூர் வல்லவாழடிகள்தம்மை சிறைகுலாவண்டறைசோலைசூழ் கோலநீளாலிநாடன் கறையுலாவேல்வல்ல கலியன் வாயொலியிவை கற்றுவல்லார் இறைவராய் இருநிலம்காவல்பூண்டு இன்பம்நன்கெய்துவாரே. (10) திருவாய்மொழி 5-9 திருவல்லவாழ்செல்ல ஒருப்பட்ட தலைவி களைத்து புறச்சோலையில் விழுந்து தடுக்குந் தோழியரை நல்வார்த்தை கூறி “அத்திருவல்லவாழ்ப் பிரானை என்று அடைவேன்?” என்று கூறும் பாசுரம். மானேய்நோக்குநல்லீர்! வைகலும்வினையேன்மெலிய வானார்வண்கமுகும் மதுமல்லிகைகமழும் தேனார்சோலைகள்சூழ் திருவல்லவாழுறையும் கோனாரை அடியேன் அடிகூடுவதுஎன்று கொலோ?(1) என்றுகொல்? தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந்தென் செய்தீரோ? பொன்திகழ்புன்னைமகிழ் புதுமாதவிமீதணவி தென்றல்மணங்கமழும் திருவல்லவாழ்நகருள் நின்றபிரான் அடிநீறு அடியோம்கொண்டுசூடுவதே.(2) சூடுமலர்குழலீர்! துயராட்டியேனைமெலிய பாடுநல்வேதவொலி பரவைத்திரைபோல்முழங்க மாடுயர்ந்தோமப்தொடர்கமழும் தண்திருவல்லவாழ் நீடுறைகின்றபிரான் கழல்காண்டுங்கொல் நிச்சலுமே(3) நிச்சலும்தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந்தென் செய்தீரோ? பச்சிலைநீள்கமுகும் பலவும்தெங்கும்வாழைகளும் மச்சணிமாடங்கள்மீதணவும் தண்திருவல்லவாழ் நச்சரவினணைமேல் நம்பிரானதுநன்னலமே. (4) நன்னலத்தோழிமீர்காள்! நல்லஅந்தணர்வேள்விப்தொடர் மைந்நலங்கொண்டுயர்விண்மறைக்கும் தண்திருவல்லவாழ் கன்னலங்கட்டிதன்னைக் கனியைஇன்னமுதந்தன்னை என்னலங்கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே?(5) காண்பதுதெஞ்ஞான்றுகொலோ? வினையேன்கனிவாய் மடவீர்! பாண்குரல்வண்டினொடு பசுந்தென்றலுமாகியெங்கும் சேண்சினையோங்குமரச் செழுங்கானல்திருவல்லவாழ் மாண்குறள்கோலப்பிரான் மலர்த்தாமரைப்பாதங்களே.(6) பாதங்கள்மேலணி பூத்தொழக்கூடுங்கொல்? பாவை நல்லீர்! ஓதநெடுந்தடத்துள் உயர்தாமரைசெங்கழுநீர் மாதர்கள்வாண்முகமும் கண்ணுமேந்தும்திருவல்லவாழ் நாதனிஞ்ஞாலமுண்ட நம்பிரான்தன்னைநாள்தொறுமே.(7) நாள்தொறும்வீடின்றியே தொழக்கூடுங்கொல்? நல்நுதலீர்! ஆடுறுதீங்கரும்பும் விளைசெந்நெலுமாகியெங்கும் மாடுறுபூந்தடஞ்சேர் வயல்சூழ்தண்திருவல்லவாழ் நீடுறைகின்றபிரான் நிலந்தாவியநீள்கழலே. (8) கழல்வளைபூரிப்பயாம்கண்டு கைத்தொழக்கூடுங்கொலோ? குழலென்னயாழுமென்னக் குளிர்சோலையுள்தேனருந்தி மழலைவரிவண்டுகளிசைபாடும் திருவல்லவாழ் சுழலின்மலிசக்கரப்பெருமானது தொல்லருளே. (9) தொல்லருள்நல்வினையால்சொலக்கூடுங்கொல்? தோழிமீர்காள்! தொல்லருள்மண்ணும்விண்ணும் தொழநின்றதிருநகரம் நல்லருளாயிரவர் நலனேந்துந்திருவல்லவாழ் நல்லருள் நம்பெருமான் நாராயணன்நாமங்களே. (10) நாமங்கலாயிரமுடைய நம்பெருமானடிமேல் சேமங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த நாமங்கலாயிரத்துள் இவைபத்தும்திருவல்லவாழ் சேமங்கொள்தென்னகர்மேல் செப்புவார்சிறந்தார் பிறந்தே. (11) 7. திருவண்வண்டூர் - திருவாய்மொழி 6-1 தலைவி திருவண்வண்டூரிலே சக்கரவர்த்தித் திருமகனை நோக்கிப் பறவைகளை தூதுவிட்டதை அருளிச்செய்தல் வைகல்பூங்கழிவாய் வந்துமேயுங்குருகினங்காள்! செய்கொள்செந்நெலுயர் திருவண்வண்டூருறையும் கைகொள்சக்கரத்து என்கனிவாய்ப்பெருமானைக்கண்டு கைகள்கூப்பிச்சொல்லீர் வினையாட்டியேன்காதன்மையே. (1) காதல்மென்பெடையோடு உடன்மேயுங்கருநாராய்! வேதவேள்வியொலிமுழங்கும் தண்வண்வண்டூர் நாதன்ஞாலமெல்லாமுண்ட நம்பெருமானைக்கண்டு பாதம்கைதொழுதுபணியீர் அடியேன்திறமே. (2) திறங்களாகியெங்கும் செய்களூடுழல்புள்ளினங்காள்! சிறந்தசெல்வம்மல்கு திருவண்வண்டூருறையும் கறங்குசக்கரக்கைக் கனிவாய்ப்பெருமானைக்கண்டு இறங்கிநீர்தொழுதுபணியீர் அடியேனிடரே. (3) இடரில்போகம்மூழ்கி இணைந்தாடும்மடவன்னங்காள்! விடலில்வேதவொலிமுழங்கும் தண்வண்வண்டூர் கடலின்மேனிப்பிரான் கண்ணனைநெடுமாலைக்கண்டு உடலம்நைந்தொருத்தி உருகுமென்றுஉணர்த்துமினே(4). உணர்த்தலூடணர்ந்து உடன்மேயும்மடவன்னங்காள் திணர்த்தவண்டல்கள்மேல் சங்குசேரும்திருவண்வண்டூர் புணர்த்தபூந்தண்துழாய்முடி நம்பெருமானைக்கண்டு புணர்த்தகையினராய் அடியேனுக்கும்போற்றுமினே. (5) போற்றியானிரந்தேன் புன்னைமேலுறைபூங்குயில்காள்! சேற்றில்வாளைதுள்ளும் திருவண்வண்டூருறையும் ஆற்றலாழியங்கை அமரர்பெருமானைக்கண்டு மாற்றங்கண்டருளீர் மையல்தீர்வதொருவண்ணமே.(6) ஒருவண்ணம்சென்றுபுக்கு எனக்கொன்றுறைஒண்கிளியே! செருவொண்பூம்பொழில்சூழ் செக்கர்வேலைத் திருவண்வண்டூர் கருவண்ணம்செய்யவாய் செய்யகண்செய்யகை செய்யகால் செருவொண் சக்கரம்சங்கு அடையாளம்திருந்தக்கண்டே.(7) திருந்தக்கண்டெனக்கொன்றுரையாய் ஒண்சிறுபூவாய்! செருந்திஞாழல்மகிழ் புன்னைசூழ்தண்திருவண்வண்டூர் பெருந்தண்தாமரைக்கண் பெருநீள்முடிநால்தடந்தோள் கருந்திண்மாமுகில்போல் திருமேனியடிகளையே.. (8) அடிகள்கைதொழுது அலர்மேலசையுமன்னங்காள்! விடிவைசங்கொலிக்கும் திருவண்வண்டூருறையும் கடியமாயன்தன்னைக் கண்ணனைநெடுமாலைக்கண்டு கொடியவல்வினையேன் திறம்கூறுமின்வேறுகொண்டே. (9) வேறுகொண்டும்மையானிரந்தேன் வெறிவண்டினங்காள்! தேறுநீர்ப்பம்பை வடபாலைத்திருவண்வண்டூர் மாறில்போரக்கன் மதிள்நீறெழச்செற்றுகந்த ஏறுசேகவனார்க்கு என்னையும்உள்ளென்மின்களே. (10) மின்கொள்சேர்புரிநூல்குறளாய் அகல்ஞாலம் கொண்ட வன்கள்வனடிமேல் குருகூர்ச்சடகோபன்சொன்ன பண்கொளாயிரத்துள் இவைபத்தும் திருவண்வண்டூர்க்கு இன்கொள்பாடல்வல்லார் மதனர்மின்னிடையவர்க்கே. (11) 8. திருப்புலியூர் - திருவாய்மொழி 9-8 ஆழ்வார் தமது மற்றொருவர்க்கடிமையற்றிருக்கும் தன்மையை, தோழி மணவிலக்குக்காகத் தாய்மாரோடு கூறும் பாசுரத்தாலே அருளிச்செய்தல். கருமாணிக்கமலைமேல் மணித்தடம் தாமரைக் காடுகள்போல். திருமார்வுவாய்கண்கை உந்திகாலுடையாடைகள்செய்ய பிரான் திருமாலெம்மான்செழுநீர்வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர் அருமாயன்பேரன்றிப்பேச்சிலள் அன்னைமீர்! இதற்கென்செய்கேனோ?(1) அன்னைமீர்! இதற்கென்செய்கேன்? அணிமேருவின் மீதுலவும் துன்னுசூழ்சுடர்ஞாயிறும் அன்றியும்பல்சுடர்களும்போல் மின்னுநீள்முடியராம் பல்கலன்தானுடையெம்பெருமான் புன்னையம்பொழில்சூழ் திருப்புலியூர் புகழுமிவளே. (2) புகழுமிவள்நின்றிராப்பகல் பொருநீர்க்கடல்தீப்பட்டு எங்கும் திகழுமெரியொடுசெல்வதொப்பச் செழுங்கதிராழிமுதல் புகழும்பொருபடையேந்திப் போர்புக்கசுரரைப்பொன்று வித்தான் திகழுமணிநெடுமாடநீடு திருப்புலியூர்வளமே.(3) ஊர்வளங்கிளர்சோலையும் கரும்பும்பெருஞ்செந்நெலும் சூழ்ந்து ஏர்வளங்கிளர்தண்பணைக் குட்டநாட்டுத்திருப்புலியூர் சீர்வளங்கிளர்மூவுலகுண்டுமிழ் தேவபிரான் பேர்வளங்கிளர்ந்தன்றிப்பேச்சிலள் இன்றுஇப்புனை யிழையே.(4) புனையிழைகளணிவும் ஆடையுடையும்புதுக்கணிப்பும் நினையும்நீர்மையதன்றுஇவட்குஇது நின்றுநினைக்கப்புக்கால் சுனையினுள்தடந்தாமரை மலரும்தண்புலியூர் முனைவன்மூவுலகாளி அப்பன் திருவருள்மூழ்கினளே.(5) திருவருள்மூழ்கிவைகலும் செழுநீர்நிறக்கண்ணபிரான் திருவருள்களும்சேர்ந்தமைக்கு அடையாளம்திருந்தவுள திருவருளருளால் அவன்சென்றுசேர்தண்திருப்புலியூர் திருவருள்கமுகொண்பழத்தது மெல்லியல்செவ்விதழே.(6) மெல்லிலைச்செல்வவண்கொடிபுல்க வீங்கிளந்தாள் கமுகின் மல்லிகைமடல்வாழைஈன்கனிசூழ்ந்து மணங்கமழ்ந்து புல்லிலைத்தெங்கினூடு காலுலவும்தண்திருப்புலியூர் மல்லலஞ்செல்வக்கண்ணன் தாளடைந்தாள் இம்மடவரலே.(7) மடவரலன்னைமீர்கட்கு என்சொல்லிச்சொல்லுகேன்? மல்லைச்செல்வ வடமொழிமறைவாணர் வேள்வியுள்நெய்யழல்வான் தொடர்போய் திடவிசும்பிலமரர்நாட்டைமறைக்கும் தண்திருப்புலியூர் படவரைவணையான்தன்நாமமல்லால் பரவாளிவளே.(8) பரவாளிவள்நின்றிராப்பகல் பனிநீர்நிறக்கண்ணபிரான் விரவாரிசைமறைவேதியரொலி வேலையின்நின்றொலிப்ப கரவார்தடந்தொறும்தாமரைக்கயம் தீவிகைநின்றலரும் புரவார்கழனிகள்சூழ் திருப்புலியூர்ப்புகழன்றிமற்றே.(9) அன்றிமற்றோருபாயமென்? இவளந்தண்துழாய்கமழ்தல் குன்றமாமணிமாடமாளிகைக் கோலக்குழாங்கள்மல்கி தென்திசைத்திலதம்புரை குட்டநாட்டுத்திருப்புலியூர் நின்றமாயப்பிரான்திருவருளாம் இவள்நேர்பட்டதே.(10) நேர்பட்டநிறைமூவுலகுக்கும்நாயகன்தன்னடிமை நேர்பட்டதொண்டர்தொண்டர்தொண்டர் தொண்டன் சடகோபன் சொல் நேர்பட்டதமிழ்மாலை ஆயிரத்துள் இவைபத்தும் நேர்பட்டாரவர் நேர்பட்டார் நெடுமாற்கடிமை செய்யவே.(11) 9.திருவாறன்விளை - திருவாய்மொழி 7-10 இன்பக்கவி பாடுவித்த எம்பெருமானை ஆழ்வார் திருவாறன்விளையிற் சென்று கண்டு அடிமை செய்யக் கருதுதல் இன்பம்பயக்க எழில்மலர்மாதரும்தானும் இவ்வேழுலகை இன்பம்பயக்கஇனிதுடன்வீற்றிருந்து ஆள்கின்றஎங்கள்பிரான் அன்புற்றமர்ந்துறைகின்ற அணிபொழில்சூழ்திருவாறன்விளை அன்புற்றமர்ந்துவலஞ்செய்து கைதொழும்நாள்களு மாகுங்கொலோ? (1) ஆகுங்கொல்? ஐயமொன்றின்றி அகலிடம்முற்றவும் ஈரடியே ஆகும்பரிசுநிமிர்ந்த திருக்குறளப்பனமர்ந்துறையும் மாந்திகழ்கொடிமாடங்கள்நீடு மதிள்திருவாறன்விளை மாகந்தநீர்கொண்டுதூவிவலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ? (2) கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனைமதுசூதனைக்கோளரியை ஆடும்பறவைமிசைக்கண்டு கைதொழுதன்றி யவனுறையும் பாடும் பெரும்புகழ்நான்மறை வேள்வியைந்து ஆறங்கம் பன்னினர்வாழ் நீடுபொழில்திருவாறன்விளைதொழ வாய்க்குங்கொல்? நிச்சலுமே. (3) வாய்க்குங்கொல்? நிச்சலும்எப்பொழுதும்மனத்துஈங்கு நினைக்கப்பெற வாய்க்குங்கரும்பும்பெருஞ்செந்நெலும் வயல்சூழ் திருவாறன்விளை வாய்க்கும்பெரும்புகழ்மூவுலகீசன் வடமதுரைப்பிறந்த வாய்க்கும்மணிநிறக்கண்ணபிரான்தன் மலரடிப் போதுகளே. (4) மலரடிப்போதுகள் என்னெஞ்ச்சத்தெப்பொழுதும் இருத்தி வணங்க பலரடியார்முன்பருளிய பாம்பணையப்பனமர்ந்துறையும் மலரின்மணிநெடுமாடங்கள்நீடு மதிள்திருவாறன்விளை உலகமலிபுகழ்பாட நம்மேல்வினையொன்றும்நில்லா கெடுமே. (5) ஒன்றுநில்லாகெடும்முற்றவும்தீவினை உள்ளித்தொழுமின் தொண்டீர்! அன்றங்கமர்வென்று உருப்பிணிநங்கை அணிநெடுந்தோள் புணர்ந்தான் என்றுமெப்போதுமென்னெஞ்சம்துதிப்ப உள்ளே யிருக்கின்றபிரான் நின்றவணி திருவாறன்விளையென்னும் நீள்நகரமதுவே. (6) நீணகரமதுவேமலர்ச்சோலைகள்சூழ் திருவாறன்விளை நீணகரத்துறைகின்றபிரான் நெடுமால்கண்ணன் விண்ணவர்கோன் வாணபுரம்புக்குமுக்கட்பிரானைத்தொலைய வெம்போர்கள்செய்து வாணனையாயிரந்தோள்துணித்தான்சரணன்றி மற்றொன்றிலமே. (7) அன்றிமன்றொன்றிலம்நின்சரணேயென்று அகலிரும் பொய்கையின்வாய் நின்றுதன்நீள்கழலேத்திய ஆனையின்நெஞ்சிடர்தீர்த்தபிரான் சென்றங்கினிதுறைகின்ற செழும்பொழில்சூழ்திருவாறன்விளை ஒன்றிவலஞ்செய்யவொன்றுமோ? தீவினையுள்ளத்தின் சார்வல்லவே. (8) தீவினையுள்ளத்தின் சார்வல்லவாகித் தெளிவிசும் பேறலுற்றாள் நாவினுள்ளும்உள்ளத்துள்ளும் அமைந்ததொழிலினுள்ளும் நவின்று யாவரும்வந்துவணங்கும்பொழில் திருவாறன்விளையதனை மேவிவலஞ்செய்துகைத்தொழக்கூடுங்கொல்? என்னும் என்சிந்தனையே. (9) சிந்தைமற்றொன்றின் திறத்ததல்லாத்தன்மை தேவபிரானறியும் சிந்தையினால் செய்வதானறியாதன மாயங்களொன்றுமில்லை சிந்தையினால்சொல்லினால்செய்கையால் நிலத்தேவர்குழு வணங்கும் சிந்தைமகிழ்திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின்னே (10) தீர்த்தனுக்கற்றபின் மற்றோர்சரணில்லையென் றெண்ணி தீர்த்தனுக்கே தீர்த்தமனத்தனனாகிச் செழுங்குருகூர்சடகோபன் சொன்ன தீர்த்தங்களாயிரத்துள் இவைபத்தும்வல்லார்களை தேவர்வைகல் தீர்த்தங்களேயென்றுபூசித்துநல்கியுரைப்பார் தம் தேவியர்க்கே. (11) 10. திருச்செங்குன்றூர் - திருவாய்மொழி 8-4 எம்பெருமான் தனது வலிமையையும் பரிவரின் திரட்சியையும் காட்ட, ஆழ்வார் திருச்செங்குன்றூரிற் கண்டு மகிழ்தல். வார்கடாவருவியானைமாமலையின் மருப்பிணைக்குவடிறுத்துருட்டி ஊர்கொள்திண்பாகனுயிர்செகுத்து அரங்கின்மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல் போர்கடாவரசர் புறக்கிட மாடமீமிசைக்கஞ்சனைத்தகர்த்த சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருசிற்றாறுஎங்கள்செல்சார்வே. (1) எங்கள்செல்சார்வுயாமுடையமுதம் இமையவரப்பனென்னப்பன் பொங்குமூவுலகும்படைத்தளித்தழிக்கும் பொருந்துமூவுருவனெம்மருவன் செங்கயலுகளும்தேம்பணைபுடைசூழ் திருச்செங்குன்றூர்த்திருச்சிற்றாறு அங்கமர்கின்ற ஆதியானல்லால் யாவர்மற்றென்னமர்துணையே? (2) என்னமர்பெருமான் இமையவர்பெருமான் இருநிலமிடந்தஎம்பெருமான் முன்னைவல்வினைகள் முழுதுடன்மாள என்னையாள்கின்றஎம்பெருமான் தென்திசைக்கணிகொள்திருச்செங்குன்றுரில் திருச்சிற்றாறங்கரைமீபால் நின்றஎம்பெருமான் அடியல்லால்சரண் நினைப்பிலும் பிறிதில்லையெனக்கே (3) பிறிதில்லையெனக்குப்பெரியமூவுலகும் நிறையப் பேருருவமாய் நிமிர்ந்த குறியமாணெம்மான் குரைகடல்கடைந்த கோலமாணிக்கம் என்னம்மான் செறிகுலைவாழைகமுகுதெங்கணிசூழ் திருச்செங்குன்றூர்த்திருச்சிற்றாறு அறிய மெய்ம்மையேநின்ற எம்பெருமான் அடியிணையல்லதோரரணே (4) அல்லதோரரணும் அவனில்வேறில்லை அதுபொருளாகிலும் அவனை யல்லதென்னாவியமர்ந்தணைகில்லாது ஆதலால் அவனுறைகின்ற நல்லநான்மறையோர் வேள்வியுள்மடுத்த நறும்தொடர்விசும்பொளிமறைக்கும் நல்லநீள்மாடத்திருச்செங்குன்றூரில் திருசிற்றாறுஎனக்குநல்லரணே (5) எனக்கு நல்லரணை எனதாருயிரை இமையவர்தந்தைதாய்தன்னை தனக்கும்தன்தன்மையறிவரியானைத் தடங்கடற்பள்ளியம்மானை மனக்கொள்சீர்மூவாயிரவர் வண்சிவனுமயனுந்தானுமொப்பார்வாழ் கனக்கொள்திண்மாடத் திருச்செங்குன்றூர்த்திருச்சிற்றாறதனுள் கண்டேனே. (6) திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறதனுள் கண்ட அத்திருவடியென்றும் திருச்செய்யகமலக்கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்யகையும் திருச்செய்யகமலவுந்தியும் செய்யகமலமார்பும் செய்யவுடையும் திருச்செய்யமுடியுமாரமும் படையும் திகழஎன்சிந்தையுளானே (7) திகழவென்சிந்தையுள்ளிருந்தானைச் செழுநிலத்தேவர்நான்மறையோர் திசைகைகூப்பியேத்தும் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரையானை புகர்கொள்வானவர்கள்புகலிடந்தன்னை அசுரர்வன்கையர்வெங்கூற்றை புகழுமாறறியேன்பொருந்துமூவுலகும் படைப்பொடுகெடுப்புக்காப்பவனே. (8) படைப்பொடுகெடுப்புக்காப்பவன் பிரமபரம்பரன்சிவப்பிரானவனே இடைப்புக்கோருருவுமொழிவில்லைஅவனே புகழ்வில்லையாவையும்தானே கொடைபெரும்புகழாரினையர்தன்னானார் கூறியவிச்சையோடொழுக்கம் நடைப்பலியியற்கைத்திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறமர்ந்தநாதனே (9) அமர்ந்தநாதனைஅவரவராகி அவர்க்கருளருளுமம்மானை அமர்ந்ததண்பழனத்திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறங்கரையானை அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர்வாழ்வு அமர்ந்தமாயோனைமுக்கண்ணம்மானை நான்முகனையமர்ந்தேனே. (10) தேனைநன்பாலைக்கன்னலையமுதைத் திருந்துலகுண்டவம்மானை வானநான்முகனைமலர்ந்தண்கொப்பூழ் மலர்மிசைப்படைத்தமாயோனை கோனைவண்குருகூர்வண் சடகோபன் சொன்னஆயிரத்துள்இப்பத்தும் வானின்மீதேற்றியருள்செய்துமுடிக்கும் பிறவிமாமாயக்கூத்தினையே (11) திருவனந்தபுரம் – திருவாய்மொழி 10-2 திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற்போலப் பணி செய்யலாமென்று அறிவுறுத்துதல் கெடுமிடராயவெல்லாம் கேசவாயென்ன நாளும் கொடுவினைசெய்யும் கூற்றின்தமர்களும்குறுககில்லார் விடமுடையரவில் பள்ளிவிரும்பினான்சுரும்பலற்றும் தடமுடைவயல் அனந்தபுரநகர்புகுதும்இன்றே. (1) இன்றுபோய்ப்புகுதிராகில் எழுமையும் ஏதம்சாரா குன்றுநேர்மாடமாடே குருந்துசேர்செருந்திபுன்னை மன்றலர்பொழில் அனந்தபுரநகர்மாயன்நாமம் ஒன்றுமோராயிரமாம் உள்ளுவார்க்குஉம்பரூரே. (2) ஊரும்புட்கொடியுமஃதே உலகெல்லாமுண்டுமிழ்ந்தான் சேருந்தண்ணனந்தபுரம் சிக்கெனப்புகுதிராகில் தீரும்நோய்வினையெல்லாம் திண்ணம்நாம்அறியச் சொன்னோம் பேருமோராயிரத்துள் ஒன்றுநீர்பேசிமினே. (3) பேசுமின்கூசமின்றிப் பெரியநீர்வேலைசூழ்ந்து வாசகமேகமழும் சோலை வயலணியனந்தபுரம் நேசஞ்செய்துறைகின்றானை நெறிமையால்மலர்கள்தூவி பூசனைசெய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே! (4) புண்ணியஞ்செய்து நல்லபுனலொடுமலர்கள்தூவி எண்ணுமின்எந்தைநாமம் இப்பிறப்பறுக்கும்அப்பால் திண்ணம்நாமறியச்சொன்னோம் செறிபொழிலனந்தபுரத்து அண்ணலார்கமலபாதம் அணுகுவார்அமரராவார் (5) அமரராய்த்திரிகின்றார்கட்கு ஆதிசேரனந்தபுரத்து அமரர்கோனார்ச்சிக்கின்று அங்ககப்பணிசெய்வர் விண்ணோர் நமர்களோ! சொல்லக்கேண்மின் நாமும்போய்நணுக வேண்டும் குமரனார்தாதைதுன்பம்துடைத்த கோவிந்தனாரே. (6) துடைத்தகோவிந்தனாரே உலகுயிர்தேவும்மற்றும் படைத்தஎம்பரமமூர்த்தி பாம்பணைப்பள்ளிகொண்டான் மடைத்தலைவாளைபாயும் வயலணியனந்தபுரம் கடைத்தலைசீய்க்கப்பெற்றால் கடுவினைகளையலாமே (7) கடுவினைகளையலாகும் காமனைப்பயந்தகாளை இடவகைகொண்டதென்பர் எழிலணியனந்தபுரம் படமுடையரவில் பள்ளிபயின்றவன்பாதம்காண நடமினோநமர்களுள்ளீர்! நாமுமக்கறியச்சொன்னோம். (8) நாமுமக்கறியச்சொன்ன நாள்களும்நணியவான சேமநன்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம் தூமநல்விரைமலர்கள் துவளறஆய்ந்துகொண்டு வாமனனடிக்கென்றேத்த மாய்ந்தறும்வினைகள்தாமே. (9) மாய்ந்தறும்வினைகள்தாமே மாதவா! என்ன நாளும் ஏய்ந்தபொன்மதிள் அனந்தபுரநகரெந்தைக்கென்று சாந்தொடுவிளக்கம்தூபம் தாமரைமலர்கள்நல்ல ஆய்ந்துகொண்டேத்தவல்லார் அந்தமில்புகழினாரே. (10) அந்தமிழ்புகழ் அனந்தபுரநகராதிதன்னை கொந்தலர்பொழில் குருகூர்மாறன்சொல்லாயிரத்துள் ஐந்தினோடைந்தும்வல்லார் அணைவர்போயமருலகில் பைந்தொடிமடந்தையர்தம் வேய்மருதோளிணையே. (11) திருவாட்டாறு – திருவாய்மொழி 10-6 ஆழ்வார் தமக்குப் பேறளிக்குமாறு சமயம் பார்த்திருந்த எம்பெருமானது பேரருளைப் பற்றித் தமது நெஞ்சுடன் பாராட்டிக் கூறுதல். அருள்பெறுவாரடியார்தம் அடியனேற்கு ஆழியான் அருள்தருவானமைகின்றான் அதுநமதுவிதிவகையே இருள்தருமாஞாலத்துள் இனிப்பிறவியான்வேண்டேன் மருளொழிநீமடநெஞ்சே! வாட்டாற்றானடிவணங்கே. (1) வாட்டாற்றானடிவணங்கி மாஞாலப்பிறப்பறுப்பான் கேட்டாயேமடநெஞ்சே! கேசவனெம்பெருமானை பாட்டாயபலபாடிப் பழவினைகள்பற்றறுத்து நாட்டோடியல்வொழிந்து நாரணனைநண்ணினமே. (2) நண்ணினம்நாராயணனை நாமங்கள்பலசொல்லி மண்ணுலகில்வளம்மிக்க வாட்டாற்றான்வந்துஇன்று விண்ணுலகம்தருவானாய் விரைகின்றான்விதிவகையே எண்ணினவாறாகா இக்கருமங்கள்என்னெஞ்சே! (3) என்னெஞ்சத்துள்ளிருந்து இங்கிருந்தமிழ்நூலிவை மொழிந்து வன்னெஞ்சத்திரணியனை மார்விடந்தவாட்டாற்றான் மன்னஞ்சப்பாரதத்துப் பாண்டவர்க்காகப்படை தொட்டான் நல்நெஞ்சே! நம்பெருமான் நமக்கருள்தான்செய்வானே. (4) வானேறவழிதந்த வாட்டாற்றான்பணிவகையே நானேறப்பெறுகின்றேன் நரகத்தைநகுநெஞ்சே! தேனேறுமலர்த்துவளம் திகழ்பாதன் செழும்பறவை தானேறித் திரிவானதாளிணை என்தலைமேலே. (5) தலைமேலதாளிணைகள் தாமரைக்கணென்னம்மான் நிலைபேரான்என்னெஞ்சத்து எப்பொழுதும்எம்பெருமான் மலைமாடத்தரவணைமேல் வாட்டாற்றான் மதம்மிக்க கொலையானைமருப்பொசித்தான் குரைகழல்கள் குறுகினமே. (6) குரைகழல்கள் குறுகினம் நம்கோவிந்தன் குடிகொண்டான் திரைகுழல்கடல்புடைசூழ் தென்னாட்டுத்திலதமன்ன வரைகுழுவுமணிமாட வாட்டாற்றான்மலரடிமேல் விரைகுழுவுநறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே (7) மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறுதிருமுடியன் கைந்நின்றசக்கரத்தன் கருதுமிடம்பொருது புனல் மைந்நின்றவரைபோலும் திருவுருவவாட்டாற்றாற்கு எந்நன்றிசெய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே? (8) திகழ்கின்றதிருமார்பில் திருமங்கைதன்னோடும் திகழ்கின்றதிருமாலார் சேர்விடம்தண்வாட்டாறு புகழ்கின்றபுள்ளூர்தி போரரக்கர்குலம்கெடுத்தான் இகழ்வின்றிஎன்னெஞ்சத்து எப்பொழுதும்பிரியானே (9) பிரியாதாட்செய்யென்று பிறப்பறுத்தாளறக் கொண்டான் அரியாகி இரணியனை ஆகங்கீண்டானன்று பெரியார்க்காட்பட்டக்கால் பெறாதபயன்பெறுமாறு வரிவாள்வாயரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே (10) காட்டித்தன்கனைகழல்கள் கடுநரகம்புகலொழித்த வாட்டாற்றெம்பெருமானை வளங்குருகூர்ச்சடகோபன் பாட்டாயதமிழ்மாலை ஆயிரத்துள்இப்பத்தும் கேட்டு ஆரார்வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே. (11) 13. திருவண்பரிசாரம் – திருவாய்மொழி 8-3-7 வருவார்செல்வார் வண்பரிசாரத்திருந்த என் திருவாழ்மார்வற்கு என்திறம்சொல்லார்செய்வதென்? உருவார்சக்கரம் சங்குசுமந்துஇங்குஉம்மோடு ஒருபாடுழ்வான் ஓரடியானுமுளனென்றே. சுருக்கம்: உ.மா : உபதேசரத்தின மாலை பெ.தி. : பெரிய திருமொழி. பெ.தி.ம : பெரிய திருமடல் சி.தி.ம : சிறிய திருமடல் தி.வா : திருவாய்மொழி. பெரு. தி : பெருமாள் திருமொழி. தி.நெ : திருநெடுந்தாண்டகம். மு.தி : முதல் திருவந்தாதி நூ.தி : நூற்றெட்டுத் திருப்பதி திருவந்தாதி. சுபம் FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.