[] 1 மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..) [Cover Image] மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..) ஆசிரியர் : செங்கோவி sengoviblog@gmail.com வலைத்தளம் : http://sengovi.blogspot.com வெளியீடு : FreeTamilEbooks.com   மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..) செங்கோவி மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை இந்தப்புதினத்தை மாறுதல்கள் இன்றி , வணிகரீதியற்ற முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். This work is licensed under the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. To view a copy of this license, visit http://creativecommons.org/licenses/by-nc-nd/4.0/deed.en_GB. This book was produced using PressBooks.com. Contents - மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..) - முன்னுரை டான் அசோக் - வாழ்த்துரை கிளிமூக்கு அரக்கன் - ஆசிரியர் உரை - முதல் பாகம் - அத்தியாயம் - 1 - அத்தியாயம் - 2 - அத்தியாயம் - 3 - அத்தியாயம் - 4 - அத்தியாயம் - 5 - அத்தியாயம் - 6 - அத்தியாயம் - 7 - அத்தியாயம் - 8 - அத்தியாயம் - 9 - அத்தியாயம் - 10 - அத்தியாயம் - 11 - அத்தியாயம் - 12 - அத்தியாயம் - 13 - இரண்டாம் பாகம் - அத்தியாயம் - 14 - அத்தியாயம் - 15 - அத்தியாயம் - 16 - அத்தியாயம் - 17 - இறுதி பாகம் - அத்தியாயம் - 18 - அத்தியாயம் - 19 - அத்தியாயம் - 20 - அத்தியாயம் - 21 - அத்தியாயம் - 22 - அத்தியாயம் - 23 - அத்தியாயம் - 24 - அத்தியாயம் - 25 - அத்தியாயம் - 26 - அத்தியாயம் - 27 - அத்தியாயம் - 28 - அத்தியாயம் - 29 - அத்தியாயம் - 30 - அத்தியாயம் - 31 - அத்தியாயம் - 32 - அத்தியாயம் - 33 - அத்தியாயம் - 34 - அத்தியாயம் - 35 - அத்தியாயம் - 36 - அத்தியாயம் - 37 - அத்தியாயம் - 38 - அத்தியாயம் - 39 - அத்தியாயம் - 40 - அத்தியாயம் - 41 - அத்தியாயம் - 42 - அத்தியாயம் - 43 - அத்தியாயம் - 44 - அத்தியாயம் - 45 - அத்தியாயம் - 46 - அத்தியாயம் - 47 - அத்தியாயம் - 48 - அத்தியாயம் - 49 - அத்தியாயம் - 50 - அத்தியாயம் - 51 - அத்தியாயம் - 52 - அத்தியாயம் - 53 - அத்தியாயம் - 54 - அத்தியாயம் - 55 - அத்தியாயம் - 56 - அத்தியாயம் - 57 - அத்தியாயம் - 58 - அத்தியாயம் - 59 - அத்தியாயம் - 60 - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி 2 முன்னுரை டான் அசோக் உண்மைக் கதாப்பாத்திரங்களை வைத்து ‘எதேச்சை’ எழுதும் சம்பவங்களில் உள்ள சுவாரசியத்தை மனிதர்கள் எழுதும் புனைவுகளால் ஒருபோதும் தரமுடியாது. காரணம் உண்மை எப்போதும் பொய்யை விட அதிர்ச்சியளிக்கக் கூடியதாக, ஆச்சரியமூட்டக் கூடியதாக இருப்பதுதான். மிகச்சிறந்த எழுத்தாளர்கள் தாங்கள் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் சராசரி வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்த்து, அதிலுள்ள உண்மைகளை தங்கள் புனைவுகளில் தத்தெடுத்துக் கொள்கிறார்கள். எல்லா புனைவுகளிலும் உண்மை கண்டிப்பாக இருக்கும். சதவிகிதம் வேண்டுமானால் மாறுபடலாம். அதிகமான உண்மைகளைத் தாங்கி வரும் நாவல்களில் எப்போதும் ஒரு பச்சை வாசம் வீசும். படித்து முடித்த பின்னும் சில நாட்களுக்காவது அந்த கதாப்பாத்திரங்களைப் பற்றிய நினைப்பும், அவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்கள் போன்ற கற்பனைகளும் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும். உண்மைகளில் இருக்கும் முகத்தில் அறையும் நிர்வாணம் அவ்வளவு எளிதாக வாசகனை நாவலுக்குள்ளிருந்து தப்பிக்க விடாது. அப்படியானதொரு படைப்புதான் பதிவர் செங்கோவியின் மன்மதன் லீலைகள் மின்நாவலும். மசாலாப்புனைவுகளைப் போல மயிர்க்கூச்செரியும் காட்சிகளும், நெஞ்சைப் படபடக்க வைக்கும் திருப்புமுனைகளும் நாவலில் இல்லையென்றாலும், மலைகள் சூழ்ந்த ஒரு அமைதியான ரயில் பயணத்தில் நமக்கு அருகில் உட்கார்ந்து தன் கதையைச் சொல்லும் அனுபவமிக்க பெரியவரைப் போல கதை சொல்கிறார் செங்கோவி. கதையின் சம்பவங்களுக்கிடையில் அவர் தூவியிருக்கும் தத்துவங்களும், வாழ்க்கையின் நிதர்சனங்களைப் பற்றிய பெருமூச்சுகளும் வாசகனை “ஆமாம்ல…” என மனதிற்குள் முணுமுணுக்க வைப்பவை. கதையின் இடையிடையே வரும் வலிந்து திணிக்கப்படாத நகைச்சுவையும், கதாப்பாத்திரங்களின் எள்ளளவும் மிகையில்லா இயல்பும் கதையோடு நம்மை ஒன்ற வைக்கின்றன. கதாநாயகர்களையும், வில்லன்களையும், வில்லன்களால் பாதிக்கப்பட்டவர்களையும் பெரும்பாலும் நாம் நம் வாழ்க்கைக்கு வெளியே தான் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் எல்லோருமே நமக்கு அருகில், நம் சுற்றத்தில், ஏன் நாமாகவேக் கூட இருக்கிறார்கள் எனப் பச்சைத் தண்ணீரால் முகத்தில் அறைவதைப் போல சொல்கிறது இந்நாவல். காதல், காமம், அன்பு, பரிவு, பெற்றோர் பாசம் என பல ஆயிரம் உறவுகளுக்கு மனித இனம் வார்த்தைகளைக் கண்டுபிடித்துவிட்டாலும் அவ்வுறவுகளுக்கான அர்த்தங்கள் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வேறுவேறாக இருப்பதுதான் வாழ்க்கையின் வினோதம். மன்மத லீலைகளின் கதாப்பாத்திரங்கள் உறவுகளால் பந்தாடப்பட்டவர்கள். எதோ ஒன்றை இழந்ததால் எதோ ஒன்றில் சிக்கிக் கொள்ளும் சராசரி மனிதர்கள். மிக நல்லவர்கள். மிகக் கெட்டவர்கள். நல்லவர்களாக இருக்கத் துடித்து ஏமாந்து போகும் கெட்டவர்கள் என அத்தனை பேரும் இதில் இருக்கிறார்கள். எல்லோரது உணர்வுகளையும் அழகாகத் தொட்டு அனுபவிக்க வைக்கிறது நாவல். நிறைய கதாப்பாத்திரங்கள் இல்லாமல் சம்பவங்களைக் கோர்த்து சுவாரசியமாகக் கதை சொல்லியிருக்கிறார் செங்கோவி. எங்கெங்கு சிரிப்பு வர வேண்டுமோ அங்கே வருகிறது. எங்கெங்கு வருத்தம் வரவேண்டுமோ அங்கே வருத்தம் வருகிறது. அது அது அந்தந்த சம்பவங்களில் படிக்கும் நமக்குள் நடக்கிறது. இதைவிட செங்கோவின் எழுத்துநடை நேர்த்தியை பற்றி வேறென்ன எழுத முடியும்? வாழ்க்கையை வாழ மட்டும் செய்யாமல் அதைப் பாடமாகக் கூர்ந்து பார்க்கும் ஒருவரால்தான் சம்பவங்களை மட்டுமல்லாது அந்த சம்பவங்களின் போது அதில் ஈடுபட்டிருந்த கதாப்பாத்திரங்களின் மனநிலையையும் எழுத முடியும். அந்த வகையில் ஒரு எழுத்தாளராக, கதை சொல்லியாக பதிவர் செங்கோவி ஜெயித்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேல் வழமை போல பதிப்பகத்தார் மூலம் பதிப்பித்திருந்தாலே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்க கூடிய இந்நாவலை மின்புத்தகமாக இணையத்தில் வெளியிட முடிவெடுத்ததற்கு சக பதிவராக, சக எழுத்தாளனாக, இணையம் தான் எழுத்துலகின் எதிர்காலம் என்பதில் நம்பிக்கையுள்ளவனாக செங்கோவிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏதேனும் வேலை இருந்தால் முதலில் அதை முடித்துவிட்டு மின்புத்தகத்தைப் படிக்கத் துவங்குங்கள். படிக்க ஆரம்பித்துவிட்டால் வேலை கெட்டுப் போகக் கூடும்! நன்றி! -டான் அசோக் http://donashok.com/ 3 வாழ்த்துரை கிளிமூக்கு அரக்கன் பெண்கள் மற்றும் காதல் விசயத்தில் ,இலவு காத்த கிளிகள் என தங்களை அடிக்கடி ஆண் சமுதாயம் அழைத்துக் கொண்டாலும், உண்மையில் கிடைத்தப் பழங்களை எல்லாம் கொறித்துப் பார்க்கலாம் என்ற அணில் வகையறாவை சேர்ந்தவர்கள் ஆண்கள். காதலிலும் கன்னிகளை கவர்வதிலும் சோகமே லாபத்தைத் தரக்கூடிய முதலீடு. நட்டத்தைத் தந்தாலும் அடுத்த இலக்கிற்கான முதலீடு. அப்படியான முதலீட்டைக் கொண்டு தொடர்ந்து பெண்களைக் கவரும் ஓர் ஆணை மையமாக வைத்து, உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, எழுத்தாளார் செங்கோவி எழுதி இருக்கும் ஆட்டோ பிச்கன் வகையிலான கதை தான் இந்த நாவல். கட்டுப்பாடற்ற சுதந்திரம், பழைய வலிகளின் மீதான வஞ்சம் இவை எப்படி ஒரு சராசரியான பாசத்திற்கு ஏங்கும் ஆணை மாற்றுகின்றது என்பதை கதையின் ஊடாக பாத்திரமாகவே இருந்து , தன் கதையுடன் சேர்த்து சொல்லுகின்றார் ஆசிரியர் செங்கோவி. படிக்க ஆரம்பித்தால் ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவீர்கள். நாயகன் அல்லது வில்லன், எதுவாகினும் மதனுக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் உங்களுக்கும் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற யோசனையை கண்டிப்பாக இந்தப்புனைவு தரும். தாள் எழுத்தாளர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல , இந்த இணைய எழுத்தாளர்கள் என்பதை மற்றும் ஒருமுறை உறுதிப்படுத்தும் எழுத்து இந்தப் புதினம். செங்கோவிக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கின்றது. வாழ்த்துக்களுடன் கிளிமூக்கு அரக்கன் - http://www.facebook.com/kilimookku 4 ஆசிரியர் உரை இனிய நண்பர்களே, வணக்கம். பள்ளிக்காலம் வரை சிறுவர்களாக வீட்டில் இருந்து படிக்கும் பலருக்கும், கல்லூரிக் காலத்தில் விடுதி வாழ்க்கையில் கிடைக்கும் சுதந்திரம் மிகப்பெரியது. அந்த நேரத்தில் உருவாகும் கேரக்டரே வாழ்நாள் முழுதும் பின்தொடர்கிறது. இந்த கதையில் வரப்போகும் ஆண்-பெண் கதாபாத்திரங்களில் பலரும் இப்போது திருமணம் ஆகி, குழந்தை குட்டி என்று செட்டில் ஆகி இருக்கலாம். எனவே அனைவரது நலன் கருதி, அனைத்துப் பெயர்களும் ஊர்களின் பெயர்களும் மாற்றப்படுகின்றன. தொடரின் எளிமைக்காக, சில நண்பர்கள் ஒரே கேரக்டராகக் காட்டப்படுவர். இதை ஆட்டோஃபிக்சன் வகை என்று வாசகர் கருதினால், மறுப்பில்லை. ஆண்களைவிட பெண்கள் மெல்லிய இதயம் கொண்டவர்கள், அன்புக்கு இரங்குபவர்கள். பெண்களின் பலமான அதுவே, அவர்களின் பலவீனமும்கூட என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அறியாதவர்க்கு இந்த கதை புரிய வைக்கும் இளம்பெண்களுக்கும், பெண்ணைப் பெற்றோருக்கும் இந்தத் தொடர் ஏதோவொரு வகையில் உதவும் என்றே நம்புகிறேன். ஆணின் மனம் செயல்படும் விதம் பற்றியும் ’மாறுவது மனம்’ என்ற பொன்மொழி பற்றியும் உங்களுக்கு நல்ல புரிதலை இந்தத் தொடர் உண்டாக்கலாம். இதில் வரும் சில வார்த்தைகள் பெண்களையும் யோக்கியர்களையும் தர்மசங்கடப்படுத்தினாலும், வாழ்வில் உள்ள அபத்தத்தையும் அபாயத்தையும் நீங்கள் உணர, உள்ளது உள்ளபடியே உங்கள் முன் வைக்கிறேன். சமீபத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் பெண்களின் செயல்பாடு அதிகரித்திருக்கும் சூழலில், இந்த மின்புத்தகத்தின் தேவையும் அதிகரித்திருப்பதாகவே உணர்கிறேன். சட்ட சிக்கல்களைத் தவிர்க்க இந்த டிஸ்க்ளைமரைப் போட்டு, டைரிக்குள் நுழைவோம்: இந்த புத்தகத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனையே! தற்செயலாக யாருடைய வாழ்க்கையுடனும் ஒத்துப்போனால், அதற்கு நாம் பொறுப்பல்ல! என்றும் அன்புடன் செங்கோவி http://sengovi.blogspot.com/ தொடர்புக்கு : sengoviblog@gmail.com [pressbooks.com] முதல் பாகம் அத்தியாயம் - 1 ஜெனிஃபர் அவனை இறுக்கி அணைத்திருந்தாள். வேகமாக வீசிய காற்று கூட அவர்களுக்கிடையே நுழைய முடியவில்லை. அவர்களது பைக் எங்களை வேகமாகக் கடந்தது. நாங்கள் மூவரும் ’ஆ’வென வாய் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த ரோட்டில் சென்று கொண்டிருந்த பலரும் அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள். திரும்பிப் பார்க்காமல் இருக்க, திருப்பரங்குன்றம் ஒன்றும் பெரிய நகரமல்ல. அங்கு உள்ளோருக்குத் தெரியும் நாங்கள் எந்தக் கல்லூரி மாணவர்கள் என! அவன் தர்மா, எங்கள் சீனியர். ஜெனிஃபர் எங்களது காலேஜ் ஜூனியர். செம ஃபிகர் என்று நண்பர்களால் அழைக்கப்படுபவள். நான் அதை ஒத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அவள் சிம்ரன் மாதிரி ஸ்லிம்மாக இருப்பாள். “நாம எப்படா இப்படிப் போறது” என்றேன். “நமக்கு அதெல்லாம் கிடைக்கவே கிடைக்காதுடா! நமக்கு விதிச்சதெல்லாம் இது தான்” என்றவாறு பழனி சுவரைக் காட்டினான். அங்கு ஷகீலாவின் ‘இளமை இதோ! இதோ!’ போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. நான் சிரித்தவாறே சிவாவைப் பார்த்தேன். பார்வையிலேயே அந்தப் படத்துக்குப் போவதென தீர்மானம் நிறைவேறியது. திரும்பி தியேட்டரைப் பார்த்து நடக்க ஆரம்பித்தோம். பழனி “டேய், மதனைக் கூட்டி வந்திடலாமா”- என்று கேட்டான். “அவன் வர மாட்டான்டா. ஒருநாள் சீன் படச் சிடி பார்க்கக் கூப்பிட்டதுக்கே முகத்தைச் சுழிச்சான், அவன் தியேட்டருக்கா வரப் போறான்?” என்றான் சிவா. பேசியபடியே தியேட்டருக்குள் நுழைந்தோம். ஷகீலா படம் வழக்கம் போல் ‘இருக்கு..ஆனா இல்லை’ தான். பழனி தான் கடுப்பாகி விட்டான். “ச்சே, இனிமே இவ படத்துக்கு வரவே கூடாதுடா” என்றான். “போன தடவையும் இதே தான் சொன்னே” என்று நொந்து போன குரலில் சிவா பதில் சொன்னான். “எதுக்கு இப்படி அரைகுறையாக் காட்டணும், இதுக்கு ஒழுங்கா மூடிக்கிட்டே நடிக்கலாமே?” என்றான் பழனி. நான் பொறுமையாக அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்:”அவ என்ன வேணும்னா அரைகுறையாக் காட்டுறா..பாவம், அவ்வளவு தான் மறைக்க முடியுது” இனிமே ஷகீலா படத்துக்கே போவதில்லை என்று வழக்கம்போல் பிரசவ வைராக்கியத்துடன் முடிவு செய்தபடியே ஹாஸ்டலுக்குத் திரும்பினோம். அறைக்குள் நுழைந்து லைட்டைப் போட்டோம். அங்கு மதன் அழுதவாறே அமர்ந்திருந்தான். பழனியும் சிவாவும் அதிர்ந்தனர். அத்தியாயம் - 2 முந்தியது ஏனோ – என்னைச் சுமந்ததால் தானோ – நான் பிந்தியதும் ஏனோ – சித்தம் கலங்கிடத் தானோ? முடிந்தது ஏனோ – வெறுமை புரிந்ததால் தானோ – நான் தொடர்வதும் ஏனோ – உன் அருமை புரிந்திடத் தானோ! நான் அமைதியாக நின்றிருந்தேன். எனக்கு இது புதிதில்லை. மதன் ஏற்கனவே சில முறை அழுவதை நான் பார்த்திருக்கிறேன். காரணம் கேட்டால் அவன் சொல்வது இல்லை. ஒருநாள் என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த வீட்டில் நுழைகையில் முன்னறையில் அவன் அம்மா ஃபோட்டோ, மாலையுடன் வரவேற்றது. நான் அதிர்ச்சியுடன் ஒன்றும் சொல்லாமல் உள்ளே நுழைந்தேன். அவன் அப்பா உள்ளிருந்து வந்து என்னை வரவேற்றார். “நீ தான் செங்கோவியா..நிறையத் தடவை உன்னைப் பத்திச் சொல்லி இருக்கான்..அதான் பார்ப்போம்னு உன்னைக் கூட்டிட்டு வரச் சொன்னேன். வா, உட்கார்” நான் என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைத்தபடியே அமர்ந்தேன். “மதன், நீ கடைக்குப் போய் தம்பிக்கு ஏதாவது கூல்ட்ரிங்ஸ் வாங்கிட்டு வா” என்று அவனை அனுப்பி வைத்தார். மதன் வெளியேறியதும் “மதனுக்கு அம்மா இல்லையா?” என்று தயக்கத்துடன் கேட்டேன். “ஆமாம் தம்பி, அதுக்காகத் தான் உன்னை கூட்டிட்டு வரச் சொன்னேன்” என்றார். நான் குழப்பத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தேன். “மதன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது திடீர்னு அவன் அம்மா ஹார்ட் அட்டாக்ல இறந்துடுச்சு. அஞ்சே நிமிசம் தான்..எல்லாம் முடிஞ்சது. கடந்த ரெண்டு வருசத்துல நான் ஒருவழியா மனசைத் தேத்திக்கிட்டேன். ஆனால் மதன் தான்..” என்றவாறே கண் கலங்கினார். “அவன் கேட்கிற காசெல்லாம் தர்றேன். வேணும்ங்கிற பொருளெல்லாம் வாங்கித் தர்றேன். ஆனாலும் அவனுக்கு இன்னும் அம்மா இறந்த துக்கம் தீரலை. தீராது தான். இருந்தாலும் இனிமே தானே அவன் வாழ்க்கையே ஆரம்பிக்குது. அவன் நிறையப் பேருகூடப் பழகணும், துக்கத்தை மறக்கணும்னு தான் அவனை ஹாஸ்டல்ல சேர்த்தேன். இங்க வரும்போதெல்லாம் உன் பேரைச் சொல்லிக்கிட்டிருப்பான். அதான் உன்னை வரவழைச்சேன். நீ தான் அவனுக்கு ஒத்தாசையா இருக்கணும். அவனைக் கொஞ்சம் பார்த்துக்கிடுவியா?” என்னால் பேச முடியவில்லை. ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு என்ன தர முடியும்? நான் பிறந்த சில நிமிடங்களிலேயே தாயை இழந்தவன். (பிறகு வேறொரு நல்ல உள்ளங்களால் தத்தெடுக்கப் பட்டேன்) தந்தையை இழந்த குடும்பம் பொருளாதாரத்தை இழக்கிறது. தாயை இழந்த குடும்பம் ஆன்மாவை இழக்கிறது. ஊமைக்காயத்தின் வலி போல் வெளித்தெரியாமல், தாயை இழந்த வீட்டில் இருள் இருந்து கொண்டே உள்ளது. எல்லாவித கொண்டாட்டங்களுக்குப் பின்னாலும் வெறுமை சிரித்துக் கொண்டு நிற்கிறது. எனக்கு மதன் மேல் அன்பு பொங்கியது. ”நான் பாத்துக்கிறேன்ப்பா” என்றேன். ”என்னடா? என்னாச்சு? ஏண்டா அழறே?” என்று மதனை பழனியும் சிவாவும் உழுப்பிக் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் சுய நினைவுக்கு வந்தேன். மதன் கண்ணீரைத் துடைக்கத் துடைக்க வழிந்து கொண்டே இருந்தது. “எதுக்குடா அழறே..எங்க கிட்ட சொல்லேண்டா” என்று சிவா அதட்டினான். “பிரவ்வ்வ்” என்றவாறே அழுதான் மதன். “ப்ரவ்னா என்னடா?” என்று பழனி கேட்டான். ”பிரவீணா” என்றான் மதன். நாங்கள் மூவரும் திடுக்கிட்டோம். பிரவீணா எங்கள் காலேஜில் படிக்கும் பெண். செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவள்! அத்தியாயம் - 3 தூரத்தே என்னைப் பார்க்கையில் உன் விழிகள் விரிந்து வரவேற்கும். என் கவிதையினை கேட்கையில் உன் கண்கள் அமைதியாய் அங்கீகரிக்கும். விரல்கள் எதிர்பாராது தீண்டுகையில் உன் கண்கள் வெட்கத்தால் மின்னும். என்னைப் பிடிக்கவில்லையென சொன்னபோது மட்டும் உன் கண்கள் உன்னுடன் ஒத்துழைக்க மறுப்பதேனோ? பிரவீணா அழகானவள். அழகு என்றால் ஜொள்ளு விட வைக்கும் அழகல்ல. அது ஒரு வகையான கம்பீரம் கலந்த அழகு. ஏதோவொரு வகையில் அவளிடமிருந்து தன்னம்பிக்கை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். வெறுமனே ’பிக்அப்-ட்ராப்’ என்று யோசிக்க முடியாத அழகு அது. அந்தப் பெண்ணிடம் மதன் மனதைப் பறி கொடுத்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை தான். “பிரவீணாவா என்னடா சொல்றே?” என்று பழனி கேட்டான். ”ஆமாண்டா, நான் பிரவீணாவை லவ் பண்றேன். ஆனா அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கா, இல்லையாண்ணே தெரியலை. ஆனா என்கூட நல்லா பாசமாப் பழகுறாடா” என்றான் மதன். “அட லூசுப் பயலே, கூடப் படிக்கிறவனாச்சேன்னு அவ நல்லாப் பேசியிருப்பா. அதுக்காக லவ்வுன்னா எப்படிடா?” “அவ என்கிட்ட தான் ரொம்ப க்ளோஸா பழகுறா. என்னை ரொம்பக் கேர் எடுத்துப் பேசுறா. அவளும் எனக்கு இல்லேன்னு ஆயிடுச்சுன்னா, நான் செத்திடுவேன்” மூவரும் அதிர்ந்து போனோம். ”அப்போ, சின்சியராத் தான் லவ் பண்றயா?” என்றேன். “ஆமாடா, எனக்கு அவ இன்னொரு அம்மா மாதிரிடா” என்றவாறு மீண்டும் அழ ஆரம்பித்தான். இந்த காதல் என்ற விஷயம் மிகவும் ஆச்சரியமான ஒன்று தான். எவ்வளவு பெரிய துக்கத்தையும் மறக்கடிக்கிற வல்லமை காலத்திற்கு உண்டு. ஆனால் காலத்தை விடவும் விரைவாக நம்மை மீட்கின்ற விஷயம் காதல். வாழ்க்கையில் கடும் தோல்வியைச் சந்தித்த பலரும் உத்வேகத்துடன் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள காதல் உதவுகிறது. தாயை இழந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த மதனுக்கு, வரப்பிரசாதமாய் இந்தக் காதல் வந்தது. எனக்கும் அது நிம்மதியைத் தந்தது. இந்த விஷயத்தில் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தோம். “சிவா, பிரவீணாவும் நீயும் லேப்ல ஒரே செட் தானே?” என்று கேட்டான் பழனி. “ஆமா” என்று தயங்கியவாறே சொன்னான் சிவா. “டேய், அப்போ இவனையே அவகிட்ட தூது அனுப்பினா என்ன?” ஒரு வாரத்திற்கு முன்பு இது நடந்திருந்தால், நானே இதற்கு ஒத்துக் கொண்டிருப்பேன். ஆனால் இப்போது… கடந்த வாரம் இரவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ எழுப்புவது போல் இருந்தது. கண் விழித்தால், சிவா! “என்னடா?” என்றேன். “நண்பா, எனக்கு அவசரமா ஒன்னுக்கு வருதுடா” என்றான் சிவா! நான் மிரண்டு போய் “அதுக்கு என்னை என்னடா செய்யச் சொல்றே?” என்றேன். “இல்லைடா, மணி பண்ணெண்டு ஆகுது. பாத் ரூம் போகப் பயமா இருக்கு. துணைக்கு வாயேன்” என்றான். எங்கள் ஹாஸ்டலில் பாத்ரூம் எல்லா ரூம்களுக்கும் பொதுவாக, அதே வராண்டாவிலேயே இருக்கும். ஐந்து ரூம் தள்ளிப் போக வேண்டும். பிரச்சினை அது அல்ல. பேய் நடமாட்டம் உள்ளதாக வதந்தி உண்டு. ஹாஸ்டலுக்குப் புதிதாக யார் சேர்ந்தாலும் வாட்ச்மென் அதைச் சொல்லிப் பயமுறுத்துவார்கள். பழனியிடம் வாட்ச்மேன் அதைச் சொன்னபோது, பதிலுக்கு “வர்றது தான் வருது, நல்ல பொம்பளைப் பேயா வரட்டும்!” என்றான். அதன்பிறகு அந்த வாட்ச்மேன் அவனை எங்கு பார்த்தாலும் முறைப்பார். எனவே பயந்த சுபாவம் உள்ள சிவாவை இந்தக் காரியத்தில் இறக்குவது நல்லதல்ல என்று நினைத்தேன். ஆனால் மதன் சிவாவை உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டான்.   அத்தியாயம் - 4 தேவதை உயிர் காற்று வான் மேகம் மழை அன்பு அன்னை அழகு தோழி காதலி தெய்வம் என கண்ணன் புகழ்ந்தான். ஆயினும் ராதை – திருப்தி பெறவில்லை. – நான் உன் பெயர் சொல்லி கண்ணனை அனுப்பினேன். சற்று நேரத்தில் புல்லாங்குழல் ஓசை கேட்டது. – சிவாவும் சாமானியப்பட்ட ஆளில்லை. கழுவுகிற தண்ணீரில் நழுவும் மீன் அவன். மதன் அதன்பிறகு ஒரு மாதமாகத் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை சொல்வான் சிவா. ’இன்னைக்கு அவ மூடே சரி இல்லைடா மாப்ள” “இன்னைக்கு அவ ஃப்ரண்ட்ஸ் கூடவே இருந்தாங்கடா..ஒன்னும் பேச முடியலை” ”இன்னைக்கு அவ ஊருக்குப் போறாடா..”-என சளைக்காமல் சமாளித்துக் கொண்டு வந்தான் சிவா. ஒருநாள் மதன் பொறுமை இழந்தான். “என்னதான்டா நினைச்சுக்கிட்டிருக்கே? எனக்கு ஹெல்ப் பண்ணுவியா? மாட்டியா?” என்று கோபமாகக் கேட்டான். “நான் என்ன செய்யட்டும்? அவசரப்பட்டுப் பேசி காரியம் கெட்டிடக் கூடாதுல்ல” என்று சிவா சமாளித்துக் கொண்டிருக்கும்போது, வேகமாக அறைக்குள் நுழைந்தான் பழனி. ”ஒரு முக்கியமான விசயம் பேசணும், எல்லாரும் உட்காருங்க!” என்றான். பழனி இவ்வளவு சீரியஸாக இருந்து நாங்கள் பார்த்ததில்லை. எனவே என்னவோ ஏதோ என்று பதறிப் போய் உட்கார்ந்தோம். கையில் வைத்திருந்த சிறு புத்தகத்தை விரித்தான். அது மணிமேகலைப் பிரசுரத்தின் புத்தகப் பட்டியல். இப்போது பதிவர்களே வெந்நீர் வைப்பதில் இருந்து கம்ப்யூட்டர் அசெம்ப்ளி வரை எழுதி விடுகிறார்கள். இணையக் காலத்திற்கு முன் அவர்களது பல ‘எப்படி?’ புத்தகங்கள் மிகவும் பாப்புலர். அந்தப் புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தை விரித்துக் காட்டினான். “கொக்கோக முனிவரின் காம சாஸ்திரம் – விலை ரூ.30/-’ என்று போட்டிருந்தது. மதன் கடுப்பாகி விட்டான். ”இதுக்கா உட்காரச் சொன்னே?” என்றான். “ஆமா, இதுவும் வாழ்க்கைக்கு முக்கியமான விசயம் தானடா. இப்போ நீ லவ் பண்றே. எதுக்கு? கல்யாணம் பண்ணத் தானே? கல்யாணம் எதுக்கு? இதுக்குத் தானே? அதனால எங்களை விட நீ தான் இதை முதல்ல படிக்கணும்’ என்றான். “பழனி சொல்றதும் சரிதான்” என்றேன் நான். “இப்போ இதுல ரெண்டு பிரச்சினை” என்றான் பழனி. “என்ன பிரச்சினை?” என்று மதனிடம் இருந்து தப்பிய சந்தோசத்துடன் சிவா கேட்டான். “முதல்ல காசு. 30 ரூபாய்க்கு எங்க போறது?” “மதன் எதுக்கு இருக்கான்? அவன் லவ்வுக்கெல்லாம் நாம ஹெல்ப் பண்றோம். நமக்கு இது பண்ண மாட்டானா?” என்றேன். “கரெக்ட்டு! மதன், நீ காசை எடு. நாங்க மணியார்டர் அனுப்பணும்” என்று பழனி மிரட்டலாகக் கேட்டான். மதன் எதுவும் சொல்லாமல் காசை எடுத்துக் கொடுத்தான். “இப்போ அடுத்த பிரச்சினை. இதை யார் பேருல அனுப்புறது?” இந்தக் கேள்வியைக் கேட்டதும் எல்லாருமே மிரண்டார்கள். ஏனென்றால் எங்கள் ஹாஸ்டலுக்கு வரும் எல்லாக் கடிதங்களும் வார்டன் ரூமிற்குப் போய்விட்டே வரும். பார்சல் என்றால், பெரும்பாலும் பிரித்துப் பார்த்துவிட்டே கொடுப்பார்! எனவே எல்லோரும் பயந்த போது, நான் தைரியமாக “எம்பேர்ல அனுப்புங்கடா! நான் பார்த்துக்கிடுதேன்!” என்றேன். நண்பர்களுக்கு மகிழ்ச்சி. உடனே பழனியும் நானும் போஸ்ட் ஆஃபீஸ் போய், மணியார்டர் அனுப்பினோம். பழனியே உற்சாகமாக எல்லாவற்றையும் நிரப்பி அனுப்பினான். திரும்பி ரூமிற்கு வருகையில் கேட்டான். “எப்படிடா இவ்வளவு தைரியமா ஒத்துக்கிட்டே? வார்டன் பிரிச்சுப் பார்த்துட்டா என்ன பண்ணுவே?” என்றான். “அதை நான் அனுப்பலை சார். என்னைப் பிடிக்காத பாவிப்பய எவனோ அனுப்பி இருக்கான். சந்தேகம்னா நம்ம போஸ்ட் ஆஃபீஸ்ல போய் யார் மணியார்டர் அனுப்பியிருக்காங்கன்னு கையெழுத்தைச் செக் பண்ணுங்கன்னு சொல்லுவேன்!” என்றேன். பழனி அரண்டு போய் நடுரோட்டில் நடக்க மறந்து நின்றான். “வாடா மாப்ளை, வார்டன் என்ன பெரிய இவனா..பாத்துடுவோம்..வா!” என்றேன். அவன் செம கடுப்பாகி என்னை அடிக்க விரட்டினான். வேகமாக ரூமை நோக்கி ஓடினேன் ரூம் வாசலில் கூட்டம் இருந்தது. விலக்கி விட்டு உள்ளே நுழைந்தேன். கையில் பிளேடுடன் மதன் நின்றிருந்தான். எதிரே மிரண்டு போய் சிவா! “ஐ லவ் பிரவீணா” என்று சொல்லியபடியே கையை பிளேடால் அறுத்தான் மதன். ரத்தம் பீறிட்டு அடித்தது. அத்தியாயம் - 5 விழிகளால் என்னுள் காதல் தீ வளர்த்தாய். காதலை வெளிப்படுத்தினால் தவித்துப் புலம்புகிறாய். ஆழ அகழி தோண்டி அதன் நடுவே அரண்மனை கட்டி முதலை வளர்த்தால் மாற்றானை மட்டுமல்லாது மன்னனையும் விழுங்குமடி அது!. பதறிப் போய் நானும் பழனியும் ப்ளேடைப் பிடுங்கிப் போட்டோம். பின்னர் நண்பர்களிடம் பேண்டேஜ் வாங்கி ஒட்டினோம். விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க படாத பாடு பட்டோம். இனியும் இந்த விஷயத்தில் நாம் விளையாட்டாக இருக்கலாகாது என்பதை உணர்ந்தோம். சிவாவிடம் நானும் வற்புறுத்த ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் சிவாவின் வகுப்பில் டூர் செல்வதாக ஏற்பாடு ஆகி இருந்தது. “டேய், அவன் எவ்வளவு சின்சியரா லவ் பண்றான்னு இப்பவாவது தெரியுதா? அந்தப் பொண்ணு கிட்ட நீ பேசு. நாம அவன் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணனும். இது தான் சரியான சமயம். டூரில் அவ நல்ல மூடில் இருக்கும்போதே சொல்லி விடு” என்று நானும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். சிவாவும் சரி, சரி என்று தலையாட்டியவாறு டூருக்குக் கிளம்பினான். பஸ் கிளம்பியதும், பழனி என்னிடம், “மாப்ள, பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்ட் வரை போக வேண்டியிருக்கு. வா” என்று அழைத்துச் சென்றான். அப்போது மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்ட் மதுரையில் கிடையாது. மாடும் தாவணியும் தனித்தனியே இருந்த நேரம்! தென் மாவட்டங்களுக்குச் செல்ல பழங்காநத்தம் தான் பஸ் ஸ்டாண்ட். நாங்கள் போய் இறங்கியதும், பழனி ரிலாக்ஸாக ஒரு ஆப்பிள் ஜூஸ் குடித்தான். அப்போது ஒரு திருநெல்வேலி பஸ் எங்களைக் கடந்தது. அந்த பஸ்ஸை நோக்கி பழனி ஓட ஆரம்பித்தான். பஸ்ஸை நெருங்கிய உடன், கடைசி சீட்டில் இருந்தவரிடம் “இந்த பஸ் திர்நவேலி போகுமா?” என்று சத்தமாகக் கேட்டான். அவரும் “ போகும் தம்பி” என்று அவசரமாகப் பதில் சொன்னார். “சரி, போகட்டும்” என்று சொல்லி விட்டு நின்றுவிட்டான். அந்த கடைசி சீட் ஆசாமி “வாங்க தம்பி…கண்டக்டர், ஆள் வருது..ஆள் வருது” என்று கூவிக் கொண்டிருந்தார். பழனி திரும்பி வந்து ஜூஸ் குடிப்பதைத் தொடர்ந்தான். நான் அரண்டு போனேன்.”என்னடா பண்றே?” “மாப்ளே, இது செம ஜாலியான விளையாட்டுடா. கடைசி சீட்ல எவனாவது மாக்கான் இருந்தான்னு வச்சுக்கோயேன்.இப்படித்தான் ஓடிப் போய் கேட்பேன். நான் என்ன கேட்டேன். ‘பஸ் திர்நவேலி போகுமான்னு’ அவன் போகும்னு சொன்னதோட முடிஞ்சது. என்னை எதுக்கு ஏறச் சொல்றான்..” “அடப்பாவி. மாட்டுனா அடி பின்னிருவாங்கடா” “அப்படில்லாம் மாட்ட மாட்டோம். ஏற்கனவே ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்ல நிறையத் தடவை இதைப் பண்ணி இருக்கேன்” என்று பழனி சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாகர்கோவில் பஸ் எங்களைக் கடந்தது. பழனி ஓட ஆரம்பித்தான். இந்த முறை கடைசி சீட்டில் தடிமனான ஆண்ட்டி! “அக்கா, இந்த பஸ் நாகர்கோவில் போகுமா?” என்று ஓடியவாறே மூச்சிரைக்கக் கேட்டான் பழனி. ஆண்ட்டி கத்த ஆரம்பித்தது.” கண்டக்டர் ஆள் வருது..நிப்பாட்டுங்க..தம்பி போகும் வாங்க..” பெண்களின் குரலுக்குத் தான் இங்கு தனி மதிப்பு உண்டே! பஸ் திடீரென நின்றது. பழனி திரும்பி ஓட ஆரம்பித்தான். நானும் பயந்து போய் ஜூஸ் கடையிலிருந்து வேறு பக்கம் ஓட ஆரம்பித்தேன். மூன்று நாட்கள் கழித்து, சிவா டூர் முடிந்து வந்து சேர்ந்தான். “அவ என்னடா சொன்னா?” என்று மதன் ஆவலாய்க் கேட்டான். “ இல்லைடா, நான் இன்னும் சொல்லலை..சரியான சந்தர்ப்பம்…” என்று சிவா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை எடுத்து உருகிய மெழுகை தன் கை மேல் ஊற்றினான் மதன். தொடர்ந்து மெழுகுவர்த்தியை கைமேல் ஏற்றி அணைத்தான். சிவா பயந்து போனான். ஆனால் என்னை விடவும் கல்லுளிமங்கன் சிவா என்பது டூர் ஃபோட்டோஸ் வந்த போது தெரிந்தது. எல்லா ஃபோட்டோவிலும் பிரவீணாவுக்கு அருகில் நெருங்கி நின்றுகொண்டு, சிரித்துக் கொண்டிருந்தான் சிவா. அவனும் பிரவீணாவை ரூட் விடுகிறானோ என்ற சந்தேகமே அப்போது தான் எங்களுக்கு வந்தது. இன்றுவரை உண்மை தெரியவில்லை. ஆனால் மதன், பிரவீணாவை சிவா தட்டிச் சென்று விட்டதாகவே நினைத்து சிவாவை அடிக்கப் பாய்ந்தான். “வெறும் ஃப்ரண்ட்ஷிப் தான். வேற ஒன்னும் இல்லை. நான் நாளைக்குக் கேட்கிறேன்” என்று சிவா சத்தியம் செய்தான். “நாளைக்கு மட்டும் கேட்கலை..மவனே செத்தே” என்றான் மதன். அடுத்த நாள் லேபில் இருக்கும்போது சிவா பிரவீணாவை நெருங்கினான். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “பிரவீணா, ஃப்ரீயா?” என்றான். ”ஏ, சிவா..நான் உன்னைத் தான் தேடிக்கிட்டு இருந்தேன். உன்கிட்ட ஒன்னு சொல்லணும்..இந்த மதன் உன் ரூம் மேட் தானே? அவன்கிட்ட நான் சொன்னேன்னு ஒன்னு சொல்லணும், சொல்வியா?” “சொல்லு” “இனிமே அவனை என்கிட்டப் பேச வேண்டாம்னு சொல்லு. அதுமட்டுமில்ல, என்னைப் பத்தி யார்கிட்டவும் எதுவும் பேசக்கூடாதுன்னு சொல்லு. இல்லைன்னா, நான் பிரின்சிபால்கிட்ட கம்ப்ளையிண்ட் பண்ண வேண்டி இருக்கும்!” மதன் சொன்ன எதையுமே பிரவீணாவிடம் சொல்லாத சிவா, பிரவீணா சொன்ன இதை மட்டும் தெளிவாக மதனிடம் சொன்னான்! அத்தியாயம் - 6 கடலில் பிறந்த மீன் குஞ்சுக்கு கடலைக் காண ஆசை. தாய் மீனும் தண்ணீரைக் காட்டி இதுவே கடல் என்றது. இது தண்ணீர் கடல் எங்கேயென அடம்பிடித்தது மீன் குஞ்சு. தாய் மீனும் கரையில் நின்ற உன்னைக் காட்டிச் சொன்னது: “அவளைச் சூழ்ந்திருக்கும் அவனது காதலை அவளால் உணரமுடியாதது போல உன்னைச் சூழ்ந்த – கடலை உன்னால் உணரமுடியாது.” பிரவீணா அப்படிச் சொன்னது மதனுக்குத் தெரியும் முன்பே, கல்லூரி முழுதும் பரவியிருந்தது. அதுவும் சிவாவின் கைங்கரியம் தானா என்பது எங்களுக்குப் புரியவில்லை. பிரவீணா மதனின் காதலை ஏற்க மறுத்தது பலருக்கும் ஆச்சரியம் தந்தது. ‘ஒரு பொண்ணை மடக்குறது ரொம்ப ஈஸி. டெய்லி அவ போற பஸ்ல/பாதைல நீயும் பின்னாடியே போகணும். முதல்ல கவனிக்க மாட்டாளுக..தொடர்ந்து போனா, கொஞ்சநாள்ல அவளுகளுக்கு நாம ஃபாலோ பண்றது தெரியும். உடனே கடுப்பாயிருவாளுக. முறைக்குறது, சில நேரங்கள்ல திட்டுறதுன்னு ஏதாவது செய்வாளுக. பயந்திடக்கூடாது. மான ரோஷத்தையெல்லாம் ஓரம் கட்டி வச்சுட்டு, விடாம கண்டினியூ பண்ணனும். அப்புறம் அவளுகளுக்கு ஒரு சலனம் வரும். அது தான் சமயம்..அந்த நேரம் கைல ப்ளேடால கிழிச்சுக்கணும்.. இல்லே, நீ இல்லேன்னா செத்துடுவேன்னு மிரட்டணும்..ச்சே, நமக்காக இப்படி ஒருத்தன் உருகுறானேன்னு அப்போ தான் ஃபீல் பண்ணுவாளுக..அவ்வளவு தான்..ஆளு ஃப்ளாட்!’ – இது தான் ஆண்கள் மத்தியில் தொடர்ந்து ‘தலைமுறை தலைமுறையாக’ சொல்லப்பட்டு வரும் விஷயம். பல பெண்கள் இந்த முறையில் வீழ்த்தப்பட்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். மதன் யாரும் சொல்லாமலேயே அதைச் செய்தான். பிரவீணா அவ்வளவு உறுதியாக நிற்பாள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், நின்றாள். மதனின் காதல், தோல்வி என்பது தெளிவாக டிக்ளேர் செய்யப்பட்டது. வேகமாகச் சைக்கிளில் செல்லும்போது தடுக்கி விழுந்தால், முதலில் நாம் கவனிப்பது ‘யாராவது நம்மைப் பார்த்து விட்டார்களா?’ என்பதையே. யாரும் கவனிக்கவில்லையென்றால், அடுத்த அரைமணி நேரத்தில் அதை நாம் மறந்திருப்போம். யாரோ சில ஆண்கள் பார்த்திருந்தால், சில நாட்களுக்கு அந்த வருத்தம் நீடிக்கும். அதே சமயம், யாராவது ஒரு பெண் பார்த்து விட்டால், வருத்ததில் மூழ்கிப் போவோம். நமது ஈகோ மிக மோசமாக அடிபடும். மதனின் காதல் தோல்வியிலும் அதுவே நடந்தது. யாருக்கும் தெரியாத, சொல்லப்படாத காதல்கள் மேகங்களைப் போல எந்தவொரு சுவடும் இல்லாமல் கலைந்து போகின்றன. ஒரு சிலருக்குத் தெரியவந்த காதல், சில மாதங்களுக்காவது வலியைக் கொடுக்கிறது. கல்லூரி முழுக்கத் தெரிந்த மதனின் காதல், அவனது ஈகோவை மிகவும் பாதித்தது. ஒரு பெண்ணிடம் தோல்வி என்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தான் ஒரு ஹீரோ தான் என்று நிரூபிக்க விரும்பினான். முடியாமல் அழுதான், கோபம் கொண்டான். சிவாவைப் பார்க்கும்போதெல்லாம் அடிக்கப் பாய்ந்தான். ஒருநாள் சிவா ஊருக்குக் கிளம்பியவன், தன் பேக்கை செக் பண்ணிய போது, உள்ளே செக்ஸ் புக் இருந்தது. பதறிப் போய் ‘யார் இதை என் பேக்கில் வைத்தது?” என்றான். பதில் இல்லை. ஆனாலும் எல்லோருகும் தெரிந்தது மதன் தான் அதைச் செய்திருப்பான் என்று. அன்று மட்டும் செக் பண்ணாமல் சென்றிருந்தால், சிவா வீட்டில் நிச்சயம் அவமானப்பட்டிருப்பான். மதனின் நடவடிக்கைகள் எங்களுக்கு கவலையை உண்டாக்கியது. தாயின் பிரிவு, காதலில் தோல்வி என அவனுக்குத் துன்பங்கள் தொடர்ந்தன. அவன் பிரவீணாவை எதுவும் செய்துவிடுவானோ என்று பழனி பயந்தான். ’அப்படியெல்லாம் நடக்காது, மதன் அந்தளவிற்குக் கெட்டவனும் இல்லை, தைரியசாலியும் இல்லை’ என்று சொன்னேன். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பர். முதல் காதலை மறக்கடிக்க, இரண்டாவது காதல் மதனைத் தேடி வந்தது. ஒருநாள் முகமெல்லாம் சிரிப்பாக மதன் வந்தான். “என்னடா?” “டேய், ஜெனிஃபர் என்கிட்ட பேசினாடா” என்றான். “எந்த ஜெனிஃபர்?..நம்ம சீனியர் ஒருத்தன்கூட சுத்துவாளே, அவளா?” “ஆமாடா!” புதிய காதல், பல புது அனுபவங்களை அவனுக்குக் கற்றுத் தர தயாராய் இருந்தது. அத்தியாயம் - 7 காதலியின் கரம் தொட்டால் பரவசம் ஊடுருவுமென்ற கவிஞன் சொல் கேட்டு தேடிவந்து தொட்டேன். யாதொரு உணர்ச்சியும் என்னுள் எழவில்லை. கவிதைக்குப் பொய் அழகென அறிந்தேன். மொட்டை நிலவொளியில் தனித்திருந்த வேளைதனில் தற்செயலாய் கைகள் தீண்ட இதுவரை கண்டிராத பார்வையை உன் கண்கள் வெளிப்படுத்தின. என் உடல் சிலிர்த்து உடலினுள் உயிர் அதிர்ந்தது. ஏதோவொரு இன்ப உணர்ச்சி உச்சிவரை ஏறிற்று. தீண்டலுக்கு கைகள் மட்டுமல்ல கண்களும் தேவையென கவிஞன் சொல்லாதது ஏனோ? அடுத்து வந்த நாட்களிலும் தொடர்ந்து ஜெனிஃபர் மதனுடன் வலிய வந்து பேசினாள். அந்த சீனியர் என்ன ஆனான் என்று எங்களுக்குச் சந்தேகம் வந்தது. அதை அந்த சீனியரிடமே கேட்பதென்று முடிவு செய்தோம். அதற்குச் சரியான ஆள் பழனி தான் என்று எனக்குத் தோன்றியது. ஏனென்றால் பழனியும் அந்த சீனியரும் ராகிங்கால் நெருங்கிய நண்பர்கள் ஆனவர்கள். நாங்கள் முதலாம் ஆண்டு படித்தபோது.. “உன் பேரு என்னடா” “பழனி சார்” “ம்..கெட்ட வார்த்தை பேசுவியா?” “பேச மாட்டேன் சார்” “பேசணும்..புரியுதா..எங்கே 5 கெட்ட வார்த்தை சொல்லு” “5 போதுமா சார்?” “ஏய், என்ன நக்கலா?..5 சொல்லு” ”(பல்லைக் கடிதுக்கொண்டே) ஓ…ல..தூ..கே…தே…” “சொல்லச் சொன்னா, திட்டுறமாதிரியே சொல்றே?” “இல்லை சார்” “ம்..இங்க வா..வந்து என் மடியில் உட்காரு” “வேணாம் சார்” “உட்காருங்கிறேன்ல”. உட்கார்ந்தான். “எந்த ஊரு நீ..இரு இரு..ஏதோ வித்தியாசமா இருக்கே!..தம்பி, இந்த ஜட்டி ஜட்டின்னு ஒன்னு உண்டே..அது தெரியுமா உனக்கு?” “பார்த்திருக்கேன் சார்” “பார்த்திருக்கியா?..எங்க? “ரூம் மேட்ஸ் கொடில காயப்போடும்போது!” “ரூம் மேட்ஸ்ஸா? அப்போ நீ? “சே..சே..எனக்கு அந்த பழக்கமெல்லாம் இல்லை சார்” “என்னடா கெட்ட பழக்கம் மாதிரி சொல்றே.. ச்சீ..தூரப்போ” அதன்பிறகு அதிசயமாக அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆனார்கள்! பழனியிடம் ஜெனிஃபர் விஷயத்தைச் சொன்னபோது, “சீனியர்கிட்ட என்ன கேட்குறது? எனக்கே என்ன நடந்துச்சுன்னு தெரியுமே” என்றான். “என்ன நடந்துச்சு?” என்று மதனும் நானும் ஒரே குரலில் கேட்டோம். “அவன் மேட்டரை முடிச்சுட்டான். கழட்டி விட்டுட்டான்..அவ்வளவு தான்” “நிஜமாவா?” ”அட, ஆமாடா..அவ கிளாஸ்ல டூர் போனப்போ நைஸா இவன்கூட ஒதுங்கிட்டா” என்றான் பழனி. மதனுக்கு இருந்த முக்கியப் பிரச்சினை பிரவீணா காதல் விவகாரத்தில் ஈகோ அடி வாங்கியது. ’எனவே இன்னொரு பெண்ணைக் காதலித்து, கழற்றி விட வேண்டும்‘ என்று தீர்மானம் செய்திருந்தான். கல்லூரியில் உள்ள எல்லோருக்கும் தான் ஒரு மாக்கான் அல்ல என்று நிரூபிக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்தான். ’எல்லோராலும் எப்போதும் பாராட்டப்பட வேண்டும், மற்றவர்களை விட தான் பெரிய ஆள் என்று நிரூபிக்க வேண்டும்’ என்ற வெறி அவனுக்குள் இருப்பதை நான் கண்டுகொண்டேன். அவன் அந்தக் காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்தாலே போதும் என்று நண்பர்கள் அனைவரும் நினைத்தோம். “இப்போ என்ன செய்யப் போறே?” என்று கேட்டேன். “அவளை மடக்கப் போறேன். இவ ஈஸியா மடிஞ்சிடுவா” “அப்புறம்?” “நானும் மேட்டரை முடிச்சுட்டு, கழட்டி விட்டுடுவேன்” “கழட்டி விட்டுடுவல்ல?..அப்புறம் பழையபடி சின்சியர் லவ்வுன்னு கிளம்பிட மாட்டயே?” “ச்சே..ச்சே..அவளைப் போய் லவ் பண்ணுவனாடா?” “அப்போ சரி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மேட்டரை முடி!” என்றேன். மதன் களத்தில் இறங்கினான். அது களமல்ல, புதைகுழி என்று அப்போது தெரியவில்லை. அத்தியாயம் - 8 செவ்வான நிறத்தில் மனம் மயங்குகிறது. குளத்தில் இருமீன்களும் துள்ளி அலைகின்றன. இருபுறம் கனிந்திருக்கும் ஆப்பிள் மீது வெண்பனி வேறு. எங்கே என்கிறாய் – உன் முகத்தில் தானடி இவையனைத்தும்! ”ஜெனிஃபர், நாளைக்கு ஃப்ரீயா?” என்று கேட்டான் மதன். “ஃப்ரீ தான். ஏன்” தயங்கியவாறே பதில் வந்தது. “நாளைக்கு படத்துக்குப் போகலாம்னு பார்த்தேன். அதான்..” என்று பம்மினான் மதன். “ஓ..போகலாமே..என்ன படம்?” என்று ஜெனிஃபர் கேட்டாள். திடீரெனக் கேட்கவும் மதனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சும்மா பிட்டைப் போட்டால், கிளி தானே வந்து சிக்குதே என்று மதன் அசந்து போனான். “ஏதாவது..” என்று மதன் இழுக்கும்போதே “ஓகே” என்று பதில் வந்த்து. மதுரையில் உள்ள அந்தப் பெரிய தியேட்டர் காம்ப்ளக்ஸிற்குப் போனார்கள். ஒரு தெலுங்கு டப்பிங் படத்திற்குத் தான் போகவேண்டுமென ஜெனிஃபர் அடம்பித்தாள். ’என்ன டேஸ்ட்டுடா இது, கர்மம்’ என்று மதன் நொந்த படியே டிக்கெட் வாங்கினான். கலர்ஃபுல்லாக படம் ஆரம்பித்தது. காதலில் இறங்குவதை விடவும் கஷ்டமான காரியம் காமத்தில் இறங்குவது. எல்லாவித நாகரீக முகமூடிகளும் கழறும் இடம் காமம். எனவே முதன்முதலாகக் காமத்தில் இறங்கும்போது உண்டாகும் தயக்கத்தால் தவிக்காதவர் எவருமில்லை. மதனும் தவித்தான். பெண்ணின் அருகாமையும் இருட்டான தியேட்டரும் மனதைச் சீண்டியது. ஆனால் தயக்கத்தைத் தாண்ட முடியவில்லை. ‘ச்சீ என்று விலகிவிட்டால், பளேரென்று கன்னத்தில் அடித்துவிட்டால்..அமைதியாக எழுந்து போய், கல்லூரி நண்பர்களிடம் சொல்லி அவமானப்படுத்தி விட்டால்…’ என்று பலவாறான யோசனையோடு நெளிந்தபடியே அமர்ந்திருந்தான். ஜெனிஃபரிடம் எந்தச் சலனமும் இல்லை. படம் முடிந்து விரக்தியுடன் ரூம் வந்து சேர்ந்தான். நான் கடுப்பாகி “என்னடா நீ, நல்ல சான்ஸை கோட்டை விட்டுட்டு வந்திருக்கே. அதுசரி, வேற படமாடா கிடைக்கலை உங்களுக்கு” என்று கேட்டேன். அதுவரை சும்மா அமர்ந்திருந்த பழனி சிரிக்க ஆரம்பித்தான். “என்னடா இளிப்பு?”என்று மதன் கேட்டான். “அட கூமுட்டைகளா, கூட்டம் இல்லாத தியேட்டருக்குப் போகணும்னு தாண்டா அங்க கூட்டிட்டுப் போயிருக்கா. அவளுக்குத் தெரியாதா அங்க தான் வசதியா இருக்கும்னு. இது புரியாம பேசுறானுக பேச்சு..நீங்கள்லாம் திட்டம் போட்டு கிழிச்ச மாதிரி தான்” என்றான். “அட, ஆமா!” என்று மதன் மலர்ந்தான். அடுத்த வாரமும் தியேட்டருக்குக் கூப்பிட்டான். அவளும் வந்தாள். வழக்கம்போல் தயக்கமும் வந்து சேர்ந்தது. ’தொடவா, வேண்டாமா..சும்மா கை மேல் கை வைப்போமா’ என்று மதன் தீவிர யோசனையோடு திரையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். படத்தில் நடப்பது எதுவும் மனதில் பதியவில்லை. ஜெனிஃபர் அவனைத் திரும்பிப் பார்த்தாள். மதன் திரையை சின்சியராய் வெறித்தான். அவனை நெருங்கி, அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் ஜெனிஃபர். அத்தியாயம் - 9 உன்னை நான் உற்றுப் பார்த்தேன். ஏன் இப்படியென கோபமாய் கேட்டாய். எனக்கு ரோஜாவைப் பிடிக்குமென்றேன். நான் ரோஜாவே சூடுவதில்லை என்றாய். மலரை அல்ல – உன் முகத்தைச் சொன்னேன் என்றேன். வெட்கத்தால் வெள்ளை ரோஜா சிவப்பு ரோஜா ஆனது. மதன் மிதந்தே திரும்பி வந்தான். “டேய், கிஸ் பண்ணிட்டாடா” என்றான். “அடி தூளு..சொல்லு. சொல்லு..என்ன நடந்துச்சு?” என்றேன். டீடெய்லாக மதன் விவரித்தான். “எதுக்கும் தயாரா இருக்குற மாதிரி இருக்காடா..எனக்குத் தான் பயமா இருக்கு” என்றான். “அவளே துணிஞ்சிட்டா…உனக்கென்ன?” என்றேன். கல்லூரியில் கேண்டீனில் சந்திப்பதும், மாலை வெளியில் சந்திப்பதுமாக உல்லாசமாக மதன் பொழுதுபோக்கினான். முத்தம் சாதாரண விஷயம் ஆனது. புதன்கிழமை மதியம் முழுதும் அவளுக்கு என்.எஸ்.எஸ்(நாட்டு நலப்பணித் திட்டம்) பீரியட் தான். நாட்டுக்குச் சேவை செய்வதும், மதனுக்குச் சேவை செய்வதும் ஒன்றுதான் என்ற லட்சியத்துடன் ஒவ்வொரு வாரமும் மதனை வெளியே அழைத்துச் சென்றாள். மதனுக்கு, பாதி வர்ஜினாக அலைவது அவஸ்தையானது. இனியும் பொறுக்காமல் கிளைமாக்ஸை நோக்கி நகர்வதென்று முடிவு செய்தான். அதற்கு என்ன செய்வதென்று விசாரிக்க ஆரம்பித்தோம். அதற்குச் சரியான ஆள் யாரென்று தேடியதில் ரமேஷ் மாட்டினான். ரமேஷ் எங்கள் வகுப்பு தான். நல்ல அனுபவசாலி. மதுரைக்குப் பக்கம் தான் அவன் ஊர். அப்போது ஒரு லேடியை மெயிண்டெயின் பண்ணிக்கொண்டிருந்தான். நண்பர்கள் வட்டாரத்தில் ஹீரோவாகப் பார்க்கப்பட்டான். ஏனென்றால் அந்த லேடி அவங்க ஊர் சப்-இன்ஸ்பெக்டர் பொண்டாட்டி! கல்லூரிக்கே தெரிந்த மதனின் விஷயம் அவனுக்கு தெரிந்திருந்தது. அதனால் கேஷுவலாக அட்வைஸ் செய்ய ஆரம்பித்தான். “நீ ஏன் இன்னும் அவளை விட்டு வச்சிருக்கிறே? அவளுக்கெல்லாம் ஒரு வாரம் போதும்டா” “எங்க போறதுன்னு தெரியலைடா” “கழுதை கெட்டா குட்டிச்சுவரு. கொடைக்கானலுக்குப் போ” “கொடைக்கானலுக்கா?” “ஆமா, மாப்ள. அங்க **** லாட்ஜுக்கு போ. ரூம் போடு. மேட்டரை முடி. அவ்வளவு தான்” “லாட்ஜா? போலீஸ் ரெய்டு வராதா?” பயந்து போய் மதன் கேட்டான். “ரூம் வாடகை ரெண்டு மணி நேரத்துக்கு ரெண்டாயிரம். அது மாமூலுக்கும் சேர்த்துத் தான். தைரியமாப் போ..நான் அப்பவும் ’அவங்களை’ அங்க தான் கூட்டிப் போவேன்” என்றான் ரமேஷ். ஒருவழியாக இடத்தைக் கண்டுபிடித்தாயிற்று. அடுத்த பிரச்சினை அவளை எப்படி அங்கு அழைப்பது? ”கடுப்பாயிட்டான்னா என்னடா செய்ய?..எப்படிடா ஒரு பொண்ணு லாட்ஜுக்கு வர ஒத்துக்கும்?” மீண்டும் ஆலோசனை தொடங்கியது. “நீ முதல்ல கொடைக்கானலுக்குக் கூப்பிடு. அங்க போனப்புறம், மதியம் சாப்பிட்டிட்டு வெளில சுத்தாம கொஞ்ச நேரம் லாட்ஜ்ல ரெஸ்ட் எடுப்போம்னு சொல்லு. ஒத்துக்கிட்டா, மேட்டர் ஓவர். இல்லேன்னா கடைசி வரைக்கும் கிளைமாக்ஸ் இல்லாமலேயே படம் ஓட்டு” என்றேன். மறுநாள் கேண்டீனில் வழக்க்ம்போல் மதன் ஜெனிஃபரைச் சந்தித்தான். பிட்டைப் போடத் தொடங்கினான். “இந்த வருசம் ரொம்ப வெயிலு, இல்லே?” “ஆமாப்பா” “எங்கயாவது காஷ்மீர் மாதிரி ஊருக்குப் போனா சூப்பரா இருக்கும்ல” “நாமெல்லாம் காஷ்மீர் எப்படிப் போறது..நமக்கு விதிச்சது ஊட்டியும் கொடைக்கானலும் தானே” பழம் நழுவியது. “ஆமா, கொடைக்கானல் நமக்கு ரொம்பப் பக்கம்ல?” “ம்” “நாம ஒரு நாளைக்கு, அங்க வேணாப் போலாமா?” பதில் இல்லை. “இல்லே, காலைல போயிட்டு, சாயந்திரம் வந்திரலாம்” “சரி” என்றாள். நழுவிய பழம் பாலில் விழுந்தது. அத்தியாயம் - 10 மயிலுக்கு தோகையும் குயிலுக்கு குரலும் அணிகலனாய் அளித்த – இறைவன் என்னை தனியே அனுப்பினான். எனது அணிகலன் எதுவென கேட்டபோது உனது பெயர் சொல்லி சந்தோசத்தில் ஆழ்த்தினான்! இந்திய சமூகத்தில் ஆண்கள் சந்திக்கின்ற மிகப்பெரிய சவால் கடைக்குப் போய்க் காண்டம் வாங்குவது தான். அதுவும் முதன்முதலாக காண்டம் வாங்குவதென்பது வீர சாகசம் தான். முதலில் அதிகக் கூட்டம் வராத கடையைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆண்டவன் அருளால் அந்தக் கடையில் லேடீஸ் யாரும் வேலை செய்யக் கூடாது. நாம் போய் நிற்கும் நேரம், ஆண்கள்கூட அந்தக் கடைக்கு வந்துவிடக் கூடாது. இவ்வாறு தடை பல தாண்டி, காண்டம் வாங்க வேண்டி இருப்பதால் தானோ என்னவோ இந்திய மக்கள் தொகை எகிறிப் போய்க் கிடக்கிறது. கொடைக்கானல் செல்வதென்று முடிவானதும் மதனும் காண்டம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான். “அவளுக்கு நாம தான் ஃபர்ஸ்டான்னு தெரியலை. தெரிஞ்சாக்கூட தைரியமாக் காண்டம் இல்லாமப் போகலாம். இப்போ பயமா இருக்கு” என்று புலம்பியவாறே மதன் கடைக்குக் கிளம்பிப்போனான். கொஞ்சநேரத்தில் கையில் ஹார்லிக்ஸ் பாட்டிலுடன் வந்து சேர்ந்தான். “ டேய், இது எதுக்குடா?” என்றேன். “அட ஏண்டா நீ வேற..காண்டம் வாங்கத் தான்டா போனேன். நான் போய் அந்த மெடிக்கல்ல நின்னுக்குட்டு, எப்படிக் கேட்கன்னு திகைச்சுக்கிட்டே நின்னனா, அப்போ திடீர்னு ரெண்டு லேடீஸ் வந்துட்டாங்க. மெடிக்கல்காரன் ‘என்ன தம்பி வேணும்’னு நச்சரிச்சிட்டான். அப்புறம் என்ன செய்யற்து, ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் கொடுன்னு வாங்கிக்கிட்டு வந்துட்டேன். இந்தாங்கடா நல்லாச் சாப்புடுங்க” எங்களுக்குச் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகியது. மதன் அடுத்த அட்டெம்ப்ட்டில் வெற்றி பெற்றான். நண்பர்கள் பைக் தந்து உதவ, ஜெனிஃபருடன் கொடைக்கானலுக்கு கடைசிக் கன்னி யாத்திரை கிளம்பினான். “ரூம் போட்டுட்டு வெளில சுத்தலாமா, இல்லே சுத்தீட்டு மதியம் வந்து ரூம் போட்டுக்கலாமா?” ஆர்வத்தை அடக்கியபடி இயல்பாகக் கேட்டான் மதன். “ரூமுக்கு முதல்ல போயிடுவோம். ரிஃப்ரெஷ் பண்ணீட்டு அப்புறம் வெளில போகலாம்” என்றாள் ஜெனிஃபர். பைக்கை அந்த லாட்ஜுக்கு விட்டான். அந்த லாட்ஜில் இருந்த ரிஷப்ஷனிஸ்ட், மிகமிக இயல்பாக அவர்களிடம் பேசினான். புதிய கஸ்டமர் மிரண்டு விடக்கூடாது என்ற அக்கறை அவன் பேச்சில் தெரிந்தது. “ஃபைவ் தவுசண்ட்ஸ் அட்வான்ஸ் கொடுங்க சார். செகண்ட் ஃப்ளோர்ல ரூம் போடறேன். அங்க வியூ நல்லா இருக்கும். எந்தத் தொந்தரவும் இருக்காது சார். பாய், சாருக்கு ரூமைக் காட்டு” அந்த முப்பது தாண்டிய பாய், அவர்களை ரூமிற்கு அழைத்துச் சென்றான். இது மிகவும் சாதாரண விஷயம் என்பது போன்றே அவன் முகம் இருந்தது. லாட்ஜில் உள்ள எல்லோருமே கஸ்டமர்களைக் கண்டுகொள்ளாமல் நடந்து கொள்ளப் பழகி இருந்தார்கள். ரூமைத் திறந்த படியே ”வேற எதுனா வேணும்னா ரிஷப்சனுக்குக் கூப்பிடுங்க சார். 9 டயல் பண்ணாப் போதும்” என்றான். சொல்லிவிட்டு, திரும்பிப் பாராமல் நடந்தான். ரூமிற்குள் ஜெனிஃபருடன் தயங்கியபடியே நின்றான் மதன். “அப்ப்ப்பா, பைக்ல இவ்வளவு தூரம் வந்தது டயர்ட் ஆகிடுச்சு” என்றபடியே அங்கிருந்த பெரிய கட்டிலில் சாய்ந்தாள் ஜெனிஃபர். “ம்..ஆமா, எனக்கும் தான்” என்றான் மதன். குரல் தொண்டையிலிருந்து வராமல் கிணற்றுக்குள்ளிருந்து வந்தது. “மதன்.. ஏன் நிக்கிறே?. உட்கார்… நான் உங்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?” “என்ன?” “என்னைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” மதன் மிரண்டான். “நான்..நான் உன்னைப் பத்தி…ரொம்ப நல்ல பொண்ணு..ரொம்ப அழகு..எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்” தத்துப் பித்தென்று உளறுவது மதனுக்கே தெரிந்தது. “பொய் சொல்லாத..நான் சொல்லட்டா?” மதன் அவளையே பார்த்தபடி பேசாமல் இருந்தான். “நீ என்னை அயிட்டம்ன்னு தானே நினைக்கிறே?” மதன் முகம் பேயறைந்தது போல் ஆகியது. ”சினிமாக்கு வா-ன்னு கூப்பிட்டே, வந்தேன். பார்க்குக்குப் போவோம்னு கூப்பிட்டே, வந்தேன். இப்போ லாட்ஜுக்கே கூட்டி வந்துட்ட! எனக்குத் தெரியும், காலேஜ்ல உன் ஃப்ரண்ட்ஸ்லாம் என்ன பேசிக்கிறாங்கன்னு. அந்த சீனியர்கூட நான் படுத்துட்டேன்னே சொல்றாங்க இல்லே? உண்மையில என்ன நடந்துச்சு தெரியுமா? எங்க கிளாஸ்ல டூர் போன அன்னைக்கு எங்கப்பா ஃபாரின் கிளம்பினார். அதனால அவரை வழியனுப்ப நான் திருவனந்தபுரம் போயிட்டேன். ஆனா அவன், நான் அவன்கூடத் தான் அன்னைக்குப் படுத்தேன்னு ஃப்ரண்ட்ஸ் கிட்டச் சொல்லி இருக்கான். அவனுக்கும் எனக்கும் இடையில ஒன்னுமே இருந்ததில்லைன்னு நான் சொல்லலை. எங்க ரெண்டு பேருக்கு இடையில இன்ஃபாக்சுவேஷன் இருந்துச்சு. அவன் என்மேல உண்மையான அக்கறையோட இருக்கான்னு நான் நினைச்சேன். ஆனால், அவன் ஃப்ரண்ட்ஸ்ங்க கிட்ட என்னைப் பத்திக் கேவலமாப் பேசுறான்னு தெரிஞ்ச அந்த நிமிசமே அவனை நான் தூக்கி எறிஞ்சுட்டேன். அப்புறம் என்கிட்ட வந்து எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். நான் கண்டுக்கலை. அந்தக் கடுப்புல இன்னும் மோசமா என்னைப் பத்தி காலேஜ் முழுக்கப் பேசிகிட்டு இருக்கான்.. இந்த ஆம்பிளைங்க ஏன் இப்படி இருக்கீங்கன்னு எனக்குப் புரியலை மதன். போறபோக்குல ஒரு பொண்ணைப் பத்தி ஏதாவது சொல்லிடுவீங்க. அது உண்மையான்னே உங்களுக்குத் தெரியாது, ஆனா அது பொய்யின்னு நிரூபிக்கறது மட்டும் எங்க பொறுப்பு இல்லையா?” ஜெனிஃபரின் கண்கள் கலங்கி, கண்ணீர் மதனை மறைத்தது. கண்ணீரைத் துடைத்தபடியே தொடர்ந்தாள். ”நான் படிச்சது எல்லாமே ஹாஸ்டல்ல மதன். ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்ல இருந்து இப்போ காலேஜ் வரைக்கும் ஹாஸ்டல் தான். என் அப்பா-அம்மாவே எனக்குக் கெஸ்ட் தான். என்னை வளர்த்தது சிரிக்கவே தெரியாத ஹாஸ்டல் வார்டன்ஸ் தான். அம்மா பாசமோ அப்பா பாசமோ எனக்குக் கிடைச்சதே இல்லை. எல்லா உறவுமே அஃபிஸியலாத் தான் எனக்கு அமைஞ்சது..அதனால தான் காலேஜ் வரவும் அந்த சீனியர் என்னை லவ் பண்றேன்னு சொன்னப்போ நான் ஏத்துக்கிட்டேன். என் மேலயும் அன்பு காட்ட ஒரு ஜீவன்னு எவ்வள்வு சந்தோசமா இருந்தேன் தெரியுமா? ஆனா அவனோட சுயரூபம் தெரிஞ்சப்போ, எனக்கு வாழ்க்கையே வெறுத்திடுச்சு மதன். அப்போ தான் பிரவீணாக்காக நீ கையை அறுத்துக்கிட்டது, அவளை உருகி உருகி காதலிக்கிறதெல்லாம் எனக்குத் தெரிய வந்துச்சு. இவ்வளவு சின்சியரா லவ் பண்ற ஒருத்தன் எனக்குக் கிடைச்சா, எவ்வளவு நல்லா இருக்கும்னு யோசிச்சேன். அதுக்கப்புறம் ஃபிரண்ட்ஸ்கிட்ட உன்னைப் பத்தி விசாரிச்சேன். நீ அம்மா இழந்த சோகத்தை என்கிட்டச் சொன்னாங்க. உனக்குப் புரியுதா மதன்..நீயும் நானும் ஒன்னு. நமக்குத் தேவை அன்பு. அதைத் தான் நானும் நீயும் தப்பான இடத்துல தேடியிருக்கோம். இப்போ ஆண்டவர் அருளால நீ எனக்குக் கிடைச்சிருக்கே. உனக்கு என்ன தேவையோ அதை நான் தருவேன். உனக்கு எது சந்தோசமோ அதை நான் செய்வேன்” என்றபடியே கட்டியிருந்த சேலையின் மாராப்பை விலக்கினாள். ”இதுக்காகத் தானே நீ என் பின்னால வந்தே? எடுத்துக்கோ..அதுக்கு அப்புறமும் உனக்கு என்மேல அன்பிருந்தா, நான் அதிர்ஷ்டசாலி. இல்லே, நான் உனக்கு புளிச்சுப் போயிட்டேன்னா, நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான்னு நினைச்சுக்கிறேன். வா!” குழம்பிய நிலையில் மதன் அவளை எடுத்துக் கொண்டான். அத்தியாயம் - 11 தீராத பசிக்காக தீவிர வேட்டையில் இறங்கும். அனைத்தின் மீதும் அதன் அதிகாரம் வெல்லும். எதிர்ப்பவனின் சிந்தனை செயல்படாமல் முடங்கும் எதிர்க்காதவனின் சக்தி முழுதாக உறிஞ்சப்படும். பசித்திருக்கும் வேளையில் பார்ப்போரை எல்லாம் குதறும். பசியாறிய வேளையில் பசுவெனச் சாதுவாய் இருக்கும். சிங்கம் போன்றது காமம்! மந்திரித்து விட்ட ஆடு போல் வந்து சேர்ந்தான் மதன். “என்னடா முடிஞ்சுதா?” புலன்விசாரணையைத் தொடங்கினேன். “ம்” “என்னடா, இண்டெரெஸ்ட்டே இல்லாமச் சொல்றே? ஊத்திக்கிச்சா?” “இல்லைடா, முடிஞ்சிடுச்சு..அவ என்னை லவ் பண்றாளாம்டா” “அதைத் தானே ஆரம்பத்துல இருந்தே சொல்றா..சரி, மேட்டர் முடிஞ்சிடுச்சில்ல, சீக்கிரம் கழட்டி விடுற வழியைப் பாரு” “ம்” அடுத்த புதன்கிழமையும் லேப்புக்கு வராமல் ஜெனிஃபருடன் எங்கோ போனான் மதன். “இன்னும் ஏண்டா அவ கூடச் சுத்துறே?” “நமக்கு காலேஜ் இன்னும் ஆறு மாசம்தானடா..அதுவரைக்கும் சுத்திக்கிறேண்டா..அப்புறம் யாரு இவளைத் திரும்பிப் பார்க்கப் போறாங்க?” என்றான் மதன். அதை அவன் உண்மையாகச் சொல்லவில்லை என்பது புரிந்தது. தினமும் அவளுடன் வெளியே செல்லத் தொடங்கினான். கண்ணீரும் காமமுமாய் அவர்களின் பொழுது நகர்ந்தது. நான் அவளை விட்டு விலகும்படி அறிவுறுத்துவேன். சரி, சரியென்று சொல்வான். அடுத்த நாளே அவள் கூப்பிட்டவுடன் கிளம்பி விடுவான். காதலும் இல்லாமல் காமமும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாய் அந்த உறவு தொடர்ந்தது. அவள் அழுதாள். அவன் அவளின் கண்ணீர் துடைத்தான். ‘நீ இல்லாமல் எனக்கும் வாழ்வில்லை’ என்று சத்தியம் செய்தான். அவள் சந்தோசத்தில் அவனைக் கட்டிக் கொண்டாள். காமத்தின் வழியே தனது சந்தோசத்தை அவனுக்கும் பகிர்ந்தளித்தாள். “நீங்கள்லாம் வேணும்னே அவளைத் தப்பாப் பேசுறீங்க..அவள் அப்படி இல்லை. அவளே எல்லாத்தையும் சொல்லிட்டா” என்று எங்கள் மீதே பாய்ந்தான். ’இந்த ஆண்கள் ஏன் இப்படிக் குரூரமாய் இருக்கின்றார்கள்? ஏன் இப்படிச் சர்வ சாதாரணமாக ஒரு பெண்ணைப் பற்றி எந்த வித ஆதாரமும் இன்றி வம்பு பேசுகிறார்கள்? தங்கள் வீட்டுப் பெண் என்றால் இப்படிப் பேச நா எழுமா?’ தர்க்கரீதியாக விவாதிக்க முடியாத கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான். அவள் தினமும் ‘நீ இல்லேன்னாச் செத்துடுவேன்’ என்று அழுதாள். அழுது முடித்ததும் காமத்தில் அவனை மூழ்கடித்தாள். என்ன நடக்கிறதென்று புரியாத நிலைக்குப் போனான் மதன். வகுப்பறை நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் கல்லூரி வளாகத்தில் ஒன்றாகவே சுத்தினார்கள். பிரவீணாவின் முன் வெற்றிகரமான ஆண்மகனாய் நின்றான் மதன். கண்டிப்புக்குப் பெயர் போன எங்கள் கல்லூரி விழித்துக் கொண்டது. அவர்களின் வருகைப்பதிவேடுகள் ஆராயப்பட்டன. இருவரும் ஒரே நேரத்தில் வகுப்புகளை கட் அடித்ததை எளிதாகக் கண்டுபிடித்தார்கள். அவர்களின் பெற்றோருக்கு கடிதம் அனுப்பப் பட்டது. “கல்லூரியின் நற்பெயரைக் கெடுக்கும்படி நடந்துகொண்ட உங்கள் மகன்/மகள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? நேரில் வந்து விளக்கம் கொடுக்கவும்” என்றது அக்கடிதம். மதனின் அப்பா வந்திறங்கினார். அவர்களது ஊரில் கௌரமான மனிதர் அவர். சொந்தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பவர். வட்டிக் கொடை வாங்கலும் உண்டு. அப்படி இருந்துவிட்டு என்கொயரிக்காக வந்ததை பெரிய அவமானமாக நினைத்தார். மதனிடம் ஒன்றும் பேசவில்லை. என்னிடம் மட்டுமே பேசினார். “என்னப்பா இது? நீயாவது என்கிட்ட முதல்லயே சொல்லி இருக்கலாமே?” “இல்லேப்பா..சும்மா தான் பழகுறேன்னு சொன்னான்” “இது நல்லாவாப்பா இருக்கு..இப்போ நான் என்ன செய்யணும்? எதுக்கு வரச் சொல்லி இருக்காங்க?” “இனிமே என் பையன் இப்படி நடந்துக்க மாட்டான்னு உறுதி கேட்பாங்க. ஒருவேளை லெட்டர் ஏதாவது எழுதித் தர வேண்டி இருக்கும். அவ்வளவு தான்” “மன்னிப்புக் கடிதமா? இவன் ஊர் மேஞ்சதுக்கு நான் ஒவ்வொருத்தர்கிட்டயும் மன்னிப்புக் கேட்கணுமா?” “அப்ப்டி இல்லைப்பா..சும்மா எழுதிக் கொடுத்தாப் போதும்” ‘யாரு அந்தப் பொண்ணு? என்ன ஜாதி அவ?” “இப்போ இருக்குறது திர்நெவேலி. சொந்த ஊரு வடக்க ஏதோ. அவங்க …ஜாதி” “ஓஹோ..எங்க ஜாதியும் கிடையாதா? ம்” கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்று புரிந்து, எதுவும் பேசாமல் அமைதி ஆனோம். விசாரணை அறையின் வாசலில் காத்திருந்தேன். ஜெனிஃபரின் அம்மாவும் வந்திருந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது. அவர்களது எல்லா ரிகார்டுகளும் அலசப்பட்டன. ’இனிமேல் ஒன்றாகக் கல்லூரி வளாகத்தில் சுற்றினாலோ, வகுப்புக்கு வராமல் போனாலோ கல்லூரியில் இருந்து நீக்கப்படுவர்’ என்ற அறிவிப்புடன் விசாரணை முடிந்தது. வெளியில் வந்ததும் ‘இனிமேலாவது அவனை ஒழுங்கா இருக்கச் சொல்லுப்பா”என்றார். “இருப்பான்பா..என்னடா, நீயே சொல்லு” மதன் பேசாமல் இருந்தான். “ஏன் துரை பேச மாட்டாரோ?” என்றார். “அவ தான் எனக்கு எல்லாம். அவ இல்லேன்னா இந்தப் படிப்பே எனக்குத் தேவை இல்லை.” என்றான் மதன். அதே நேரத்தில் ”அவன் இல்லேன்னா அடுத்த நிமிசமே நான் செத்திடுவேன்” என்று ஜெனிஃபர் தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அத்தியாயம் - 12 என் இரவுத் தோட்டத்தில் கண்ணீர்ப் பாசனத்தில் கவிதைப் பூக்கள் மலர்கின்றன. என் தோட்டமெல்லாம் காதல் வாசம். அள்ளி முகர – உன் வருகை எதிர்பார்க்கும் வாடா மலர்கள் அவை. உன் இரவுத்தோட்டத்தில் மலர்ந்த மலர்களைக் காண வாசல் வந்து பார்க்கின்றேன் – வாசம்கூட வெளிவரா வண்ணம் இறுகத் தாழிட்டிருக்கிறாய். பூக்களின் முகம் காண வாசலில் தவமிருக்கையில் என் இரவுத்தோட்டத்தில் – மீண்டும் பூக்கள் மலர்கின்றன. சந்தோச வானில் பூத்தாலும் சோக பூமியில் பூத்தாலும் காதல் வாசம் மாறாத கவிதைப் பூக்கள் அவை! மதனும் ஜெனிஃபரும் தங்கள் காதலில் உறுதியாக நின்றார்கள். பெற்றோரின் அறிவுரை வேண்டாத விஷயம் ஆயிற்று. உண்மையில் பெற்றோரே வேண்டாத உறவாகினர். ஜெனிஃபரின் வீட்டில் முதலில் இறங்கி வந்தனர். மகள் இவ்வளவு பிடிவாதமாய் இருக்கும்போது, நாம் வேறு என்ன தான் செய்வது?அவர்களின் காதலை ஏற்காவிட்டால், தன்னைப் பிணமாகத் தான் பார்க்க முடியும் என்பதைத் தெளிவாக ஜெனிஃபர் தன் பெற்றோரிடமும் மதனிடமும் சொல்லி விட்டாள். மதனுக்கும் இவ்வுலகம் ஏன் தன் காதலை இப்படிக் கண் மூடித்தனமாக எதிர்க்கின்றது என்பதே புரியவில்லை. காதல் என்பது என்ன? அது ஒருவகையான அன்புப் பரிமாற்றமே. அதில் இந்த உலகத்திற்கு என்ன தான் பிரச்சினை? ஏன் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என அனைவருமே தடை போடுகின்றார்கள்? இந்த சமூகத்தின் மீதே கடுமையான கோபம் வந்தது மதனுக்கு. என்னிடம் திட்டித் தீர்த்தான். இந்தக் காதல் எப்படி ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியும் என்பதால் என்னால் இந்தக் காதலை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. “டேய், நீ என்ன சொல்லி ஆரம்பிச்சே.? மேட்டர் முடியவும் அவளை கழட்டி விட்டுடுவேன்னு சொன்னே. அப்புறம் இருக்குற வரைக்கும் என்ஜாய் பண்ணிக்கிறேன்னு சொன்னே. இப்போ அவ இல்லேன்னா வாழ்க்கையே இல்லேன்னா என்னடா அர்த்தம்?” “அதெல்லாம் உனக்குப் புரியாதுடா. நீயும் காதலிச்சுப் பார். அப்போத் தெரியும் காதலின் வலி என்னன்னு. “ என்று மதனும் சளைக்காமல் சினிமா டயலாக் போன்று பேசினான். இனியும் இப்படியே விட்டால், இவன் படிப்பும் பாழாகி விடும் என்று புரிந்தது. “சரி, இப்போதைக்கு அப்பாகிட்ட முறைச்சுக்காத. முதலில் படிப்பு முடியட்டும். அதுவரைக்கும் பிரின்ஸிபால் சொன்னதைக் கேளு. அப்புறம் நல்ல வேலையில செட்டில் ஆனப்புறம், அப்பா ஒத்துக்கலாம். இப்போதைக்கு அடக்கி வாசி” மதனுக்கும் அது சரியென்றே பட்டது. வார இறுதியில் மட்டும் இருவரும் வெளியே சுற்றுவது என முடிவெடுத்தனர். மதனின் அப்பாவும் அதிக செல்லமும் அதிகக் காசுமே பையனைக் கெடுத்து விட்டதாக எண்ணினார். எனவே தேவையான அளவிற்கு மட்டுமே பணம் கொடுக்க ஆரம்பித்தார். அதை வைத்து கொடைக்கானல் செல்ல முடியாது என்றாகியது. வெளியூர் செல்லும் ஏதாவது ஒரு பஸ்ஸில் ஏறிச் செல்வதும், ‘அரைகுறையாக’ பயணத்தை முடிப்பதுமாக மதனின் கடைசிச் செமஸ்டர் சென்றது. எங்கள் கல்லூரி வாழ்க்கை முடியும் நாளும் வந்தது. உண்மையான உலகம், பல பாடங்களுடன் எங்களுக்காகக் காத்திருந்தது. செமஸ்டர் முடிந்ததும், டிகிரி சர்ட்டிஃபிகேட் வாங்கும் முன்னரே மதன் சென்னை சென்று, வேலை தேடத் துவங்கினான். மதனின் அப்பாவின் மனதும் சற்று இரக்கப் பட்டது. தனக்கு இருப்பதோ ஒரே மகன், அவனது ஆசைக்குக் குறுக்கே தான் நிற்பது சரி தானா? மகனின் காதலா, குடும்ப கௌரவத்திற்காக மகனின் வாழ்க்கையில் தான் விளையாடுவது சரி தானா? என்று யோசிக்கத் தொடங்கினார். அதே நேரத்தில் ஜெனிஃபரின் அம்மாவும் மதனின் அப்பாவை நெருக்கத் தொடங்கினார். “சார், என்கொயரி அது இதுன்னு எங்க பொண்ணு பேரு கெட்டுப் போச்சு. அதுக்குக் காரணம் உங்க பையன் தான். இப்போ நாங்க வேற பையனுக்கு அவளைக் கட்டிக் கொடுக்கலாம். ஆனாலும், பின்னாடி உண்மை தெரிஞ்சா, அவ வாழ்க்கை என்னாகிறது?” என்று ஃபோனில் அடிக்கடி பேசினார். மதனின் அப்பா அவர்களின் காதலுக்கு ஒத்துக் கொள்வதென்று முடிவெடுத்தார். ஆனாலும் விதி வலியது. கடைசி நேரத்தில் என்னை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்று விரும்பினார். அத்தியாயம் - 13 உன் வார்த்தைப்படியே ஒருநாள் நானும் காதல் மறந்திருப்பேன். அந்த நாளில் உன்னைக் கண்டதும் – என் இதழ்கள் புன்னகைக்காது. உன் கண்ணீரைத் துடைக்க என் கைகளும் நீளாது. உன் பெயர் சொல்ல என் நாவும் எழாது. என் உறவுக் கூட்டம் உன்னை விலக்கி என் உடலை எடுப்பார்கள் எரித்துப் புதையூட்ட! “நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்பா. மதன் கேட்கிற மாதிரித் தெரியலை. இதுக்கு மேல அவன்கூடப் போராட எனக்கும் தெம்பில்லை” கசந்த உணர்வுடன் பேச ஆரம்பித்தார் மதனின் அப்பா. “கட்டுனா அந்தப் பொண்ணைத் தான் கட்டுவேங்கிறான். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. மதனுக்கு ஒரு நல்ல சட்டை எடுக்கவே தெரியாது. அப்படி இருக்கும்போது, காலம் பூரா வாழப் போற பொண்டாடியை அவனால சரியா தேர்ந்தெடுக்க முடியுமா? இங்க என் சாதி சனமெல்லாம் ஏதாவது பிரச்சினைன்னா என் வீட்டுக்குத் தான் தேடி வர்றாங்க. நாந்தான் பஞ்சாயத்து பண்ணித் தீர்த்து வைக்கிறேன். நாளைக்கு என் மகன் அடுத்த சாதிப் பொண்ணைக் கட்டிக்கிட்டான்னு தெரிஞ்சா, என்னை மதிப்பாங்களா? அதான் எனக்கு ரொம்ப யோசனையா இருக்கு. நீ தான் அவனுக்கு நெருங்குன தோஸ்த் ஆச்சே..அதான் உன்கிட்ட மதனோட நிலை என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு கூப்பிட்டேன். அந்தப் பொண்ணோட அம்மா வேற உங்க பையனால தான் என் பொண்ணு வாழ்க்கை போச்சுன்னு புலம்புது. அது வேற கஷ்டமா இருக்கு. பெண் பாவம் பொல்லாதது இல்லையா? மதன் அம்மா போனப்புறம் இந்த வீடும் களை இழந்து போச்சு. மதனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சாத்தான் இங்க பழைய நிலைமை திரும்பும். அதனால மதன் விரும்புற பொண்ணையே கட்டி வச்சுடலாமான்னும் யோசனை. என்ன செய்றதுன்னு தெரியலை.” முழுக்க குழம்பிப் போய், மகனின் காதலுடன் போராடத் தெம்பின்றிப் புலம்பினார் மதனின் அப்பா. அம்மாவின் இடத்தில் ஜெனிஃபர் என்பது கேட்கவே நாராசமாய் இருந்தது எனக்கு. “அப்பா, நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. மதன் சும்மா விளையாட்டாத் தான் அந்தப் பொண்ணு கூடப் பேச ஆரம்பிச்சான். அப்புறம் அந்தப் பொண்ணு அவனை விடாமப் பிடிச்சுக்கிச்சு. இப்பவும் அந்தப் பொண்ணு விட்டிடுச்சுன்னா, மதன் கொஞ்ச நாள்ல அவளை மறந்திடுவான்” “இவனை மாதிரியே அந்தப் பொண்ணும் பிடிவாதக்காரியால்ல இருக்கா. இவன் இல்லைன்னா செத்திடுவாளாமே” “இல்லைப்பா..அது வந்து..நான் என்ன சொல்றன்னா நம்ம வீட்டுக்கு வர்ற அளவுக்கு அது நல்ல பொண்ணு இல்லைப்பா” “அப்படீன்னா?” “வந்து..ஏற்கனவே எங்க சீனியர் ஒருத்தன்கூட சுத்துச்சு. அதுக்கு முன்னாடி அவங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பையனோட பழக்கமாகி பிரச்சினை ஆயிடுச்சாம். நல்ல பொண்ணுன்னா நீங்க சொல்றபடி மதனுக்குக் கட்டி வைக்கலாம். ஆனால்…மதன் கட்டுனா எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சிரிப்பாங்க..அதான் நிலைமை” “ம்” மீசையை முறுக்கியபடியே யோசிக்க ஆரம்பித்தார். முகம் கோபத்தில் சிவந்திருந்தது. “அப்போ என்ன தான் செய்யலாங்கிறே?” “அந்தப் பொண்ணு மதனை விட்டு விலகணும். அது நடந்தாப் போதும், மதன் தானாத் திருந்திடுவான்” “அப்படியா” என்ற படியே டெலிஃபோனை எடுத்தார். ஜெனிஃபரின் அம்மாவிற்கு டயல் செய்தார். “ஹலோ, யாரு பேசறது” ஜெனிஃபரின் அம்மாவின் குரல் கேட்டது. “ம், உன் புருசன்” என்றார். “யாருங்க அது, மரியாதையாப் பேசுங்க” ”உனக்கென்னடி மரியாதை. மகளை ஊர் மேய விட்டுட்டுத் திரியிற நாயி. உன் பொண்ணு இப்போ மயக்கி வச்சிருக்காளே மதன். அவனோட அப்பா பேசிறேண்டி” நான் வெலவெலத்துப் போய் உட்கார்ந்திருந்தேன். இவர் இவ்வளவு ஆக்ரோசமாய்ப் பேசுவார் என்று எனக்குத் தெரிந்ததே இல்லை. வசவு தொடர்ந்தது. “நான் யாரு தெரியுமாடி..இங்க வந்து என் பேரைச் சொல்லிக் கேட்டுப்பாருடி.. இங்க என் முன்னாடி நின்னு பேச ஆம்பிளைங்களே பயப்படுவாங்க. பொட்டக்கழுதை, நீ என்னை ஃபோன் பண்ணி மிரட்டுறே, இல்லே. என் மகன் ஆம்பிளைடி..அவன் பொண்ணு பின்னாடி சுத்தத்தான் செய்வான். உன் பிள்ளைக்கு எங்கடி போச்சு அறிவு? ஏற்கனவே பலபேரு கூட ஊர் மேஞ்சவ தானே உன் பொண்ணு..இப்போ அடுத்தவனைப் பார்த்துப் போக வேண்டியது தானே? என்ன ம..க்குடி என் பிள்ளையை விடாமப் பிடிச்சு தொங்குறீங்க..சொத்து கிடைக்கும்னா? இங்க பாரு, நாங்க யாரு, என்ன ஜாதி, எப்படிப் பட்டவங்கன்னு உன் பொண்ணுக்குத் தெரியாம இருக்கலாம். உனக்குமாடி தெரியாது? மதுரையைத் தாண்டிக்க மாட்டா உன் பொண்ணு. கண்டந்துண்டமா வெட்டி எறிஞ்சுடுவோம். பொணம்கூடக் கிடைக்காது, பாத்துக்கோ. எங்க வந்து காட்டுறீங்க உங்க தே…த்தனத்தை? இனி ஒரு தடவை உன் பொண்ணு என் பையன்கூட சுத்துறான்னு தகவல் வந்துச்சு, அதோட உன் பொண்ணை மறந்துடு” ஆவேசமாய்ப் பேசி முடித்து விட்டு ஃபோனை வைத்தார். சிரிப்புடன் என் பக்கம் திரும்பினார். “சொல்லீட்டேன் தம்பி, இனிமே நம்ம பக்கம் வர மாட்டா. நான்கூட பொம்பளைப் பாவம் வந்துடக்கூடாதென்னு தான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். இந்த கழுதைகளுக்கு என்ன மரியாதை சொல்லு” நான் என்ன சொல்ல? ஒன்றும் சொல்லத் தெரியாமல் “ஆமாப்பா” என்றேன். “சரிங்க தம்பி, வாங்க ஏதாவது ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டுட்டு, பஸ் ஏத்தி விடறேன்” யோசனையோடே சாப்பிட்டு விட்டு, நல்லபடியாய் ஊர் வந்து சேர்ந்தேன். அப்போது மதன் சென்னையில் இருந்தான். அடுத்த இரு மாதங்கள் அவனை அப்பா மதுரைப் பக்கம் வர விடவே இல்லை. மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிகச் சான்றிதழ் பெற வருமாறு கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தது. மதன் சந்தோசமானான். சான்றிதழ்களை வாங்கும் சாக்கில் ஜெனிஃபரைப் பார்த்து விடலாம் என்று சந்தோசத்துடன் வந்தான். “செங்கோவி, எப்படிடா இருக்கே? இன்னும் ஏண்டா ஊருலயே இருக்க..சென்னைக்கு வா. நாம சேர்ந்து வேலை தேடலாம்” ரொம்பக் குஷியுடன் பேசினான். ’சென்னை எவ்வளவு பெரிய ஊர் தெரியுமா’ என்பது போன்ற பொது அறிவை மேம்படுத்தும் கேள்விகளைக் கேட்டான். எனக்கு குற்ற உணர்ச்சி உறுத்திக்கொண்டே இருந்தது. கிளம்பும்போது “போலாமாடா?” என்றேன். “என்னடா கேணத்தனமாக் கேட்கிறே? இவ்வளவு தூரம் வந்திட்டு ஜெனிஃபரைப் பார்க்காமல் போனா அவ்வளவு தான். கொன்னே போடுவாள்” என்றான். அப்போது ஒரு பைக் எங்களை நோக்கி வந்தது. ஜெனிஃபரின் கிளாஸ்மேட் அந்தப் பைக்கை ஓட்டி வந்தான். அவன் பின்னால் ஜெனிஃபர் அமர்ந்திருந்தாள். ”ஜெனி” என்று கூப்பிட்டான் மதன். அவள் அவனைப் பார்த்ததும் சலனமே இல்லாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள். ஜெனிஃபர் புதுக் காதலனை இறுக்கி அணைத்திருந்தாள். வேகமாக வீசிய காற்றுகூட அவர்களுக்கிடையே நுழைய முடியவில்லை. அவர்களது பைக் எங்களை வேகமாகக் கடந்தது. மதனுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. மதன் எதுவும் பேசாமல் கோபத்துடன் பஸ் ஏறினான். அதன்பிறகு 4 வருடங்களுக்கு மதனை நான் சந்திக்கவில்லை. இரண்டாம் பாகம் அத்தியாயம் - 14 ”நமக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்காம், நல்ல பய. அவனுக்கு நம்ம கருப்பன் மவளைக் கேட்கலாமாண்ணே?” தயங்கியபடியே என் அப்பாவிடம் கேட்டார் குரங்காட்டிச் சித்தப்பா. சித்தப்பா சிரித்தால் குரங்கு போன்றே இருப்பார் என்பதால் அப்படி ஒரு பெயர். என் அப்பா யோசித்தார். “கருப்பன்கூட நமக்கு போக்குவரத்தே இல்லையேப்பா. செத்த பய நான் சொன்னா கேக்க மாட்டானே” கருப்பன் என்னைப் பெற்ற தந்தை. பிறந்த அன்றே என் அப்பா-அம்மாவால் நான் தத்தெடுக்கப் பட்டேன். என் அப்பா என்னைப் பெற்ற தந்தைக்கு சித்தப்பா.(புரியுதுல்ல?) இரண்டு குடும்பங்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நின்று போயிருந்த நேரம் அது. “நீ ஏண்ணே அங்க போற? நம்ம செங்கோவியை அனுப்புவோம். பய விவரமாப் பேசுவான். இவன்கிட்ட அவனும் ரொம்ப முறைக்க மாட்டான்ல” என்று சித்தப்பா என்னைப் பார்த்தார். “என்னலே, அவன்ட்ட போய்ப் பேசுதியா?” “ம்” என்றேன் என் அப்பாவைப் பார்த்த படியே. அவர் ஒன்றும் சொல்ல வில்லை. தத்துக் கொடுக்கப்பட்ட பின், எனது பிறந்து வீட்டிற்கும் எனக்குமான உறவு மிகவும் அஃபிசியலான ஒன்றாக ஆகியிருந்தது. ஏதாவது உறவினர் வீட்டுத் திருமணத்தில் சந்தித்துக் கொள்வதும், ‘என்னலே, நல்லாருக்கியா’என்று குசலம் விசாரிப்பதுமாக எங்கள் உறவு தொடர்ந்தது. இரண்டு அக்காக்களும் ஒரு அண்ணனும் அங்கு உண்டு. நான் பிறந்த இடம் வசதியான இடம். நிறைய சொத்தும் வசதிகளுமாய் அவர்கள் இருந்தார்கள். என் அப்பா-அம்மா அன்றாடங்காய்ச்சிகள் தான். எனவே அவர்களுக்கு எங்களைப் பார்த்தால் ஒரு இளக்காரம் இருந்தது. என்னிடம் நன்றாகப் பேசினால், சொத்தில் ஒரு பங்கு குறையுமே என்ற கவலையும் இருந்தது. மூத்த அக்காவின் கல்யாணத்திற்குக் கூட ஏனோ தானோவென்ற முறையிலேயே அழைப்பு வந்தது. நான் மட்டுமே அதில் கலந்து கொண்டேன். என்னைப் பெற்றவரின் நடவடிக்கைகள் எதுவும் என் அப்பாவிற்குப் பிடித்தமானதாய் இல்லை. எனவே இருவரும் பேச்சைக் குறைத்துக் கொண்டனர். இதையெல்லாம் யோசித்தபடியே டவுனில் இருக்கும் அவர்களது வீட்டிற்குப் போனேன். ஏற இறங்கப் பார்த்தபடியே வரவேற்றனர். ”குரங்காட்டிச் சித்தப்பாக்கு தெரிஞ்ச பையனுக்குப் பொண்ணு பாக்காங்களாம். அக்காவுக்கு அங்க பேசலாமான்னு கேட்டு வரச் சொன்னாங்க” என்றேன். “நாம ஏம்லே அவங்ககிட்டப் போய்ப் பேசணும்? பலாப்பழத்தைத் தேடித் தாம்லே ஈ வரணும். ஈயைத் தேடி பலாப்பழம் போனா அசிங்கம்ல” என்றார் என்னைப் பெற்றவர். அவரை நான் ஒரு நாளும் அப்பா என்று அழைத்ததில்லை. அதற்கான நடவடிக்கைகளும் அவரிடம் இல்லை. அவ்வாறு அழைப்பது என் அப்பா-அம்மாவை சங்கடப்படுத்தும் என்பதும் ஒரு முக்கியக் காரணம். எனவே உறவு சொல்லி அழைக்காமல் பொதுவாகப் பேசுவதே என் வழக்கம். “நாம ஒன்னும் போய்ப் பேச வேண்டாம். சித்தப்பாவே பேசுவார்” என்றேன். நீண்ட நேர ஆலோசனைக்குப் பின் “சரி, வரச் சொல்” என்றார். குரங்காட்டிச் சித்தப்பா வேகமாகச் செயலில் இறங்கினார். குழைகின்ற விதத்தில் குழைந்து, இறுக்கம் காட்ட வேண்டிய நேரத்தில் இறுக்கமாகிப் பேசுவதில் வல்லவர் சித்தப்பா. பெரும்பாலான திருமணங்கள் அவர் போன்ற இடைப்பட்ட மனிதர்களாலேயே நடத்தப்படுகின்றன. “பொண்ணு தாயில்லாப் பிள்ளைம்மா. உன் பையனுக்கு முடிச்சேன்னு வச்சுக்கோயேன். உன்னையே அம்மா-அம்மான்னு சுத்தி வருவா. சொத்து வேற கிடக்கு. விரசா யோசிச்சு என்னைக்குப் பொண்ணு பாக்க வாரேன்னு சொல்லுத்தா. நல்ல காரியத்தைத் தள்ளிப் போடாம சட்டுப் புட்டுனு முடிச்சிடுவோம்” என்று பையனின் அம்மாவைப் பிடித்து நச்சரித்தார். அவர்களும் ஒரு நல்ல நாளில் பெண் பார்க்க வருவதாய் ஒத்துக் கொண்டார்கள். நாங்கள் சந்தோசமாய் விடை பெற்றோம். எங்களை அனுப்பி விட்டு, பெண்ணின் குடும்பம் பற்றிய விசாரணையில் இறங்கினார்கள். விசாரித்த போது கிடைத்த தகவல்கள் திருப்திகரமாய் இல்லை. ஆனாலும் சித்தப்பாவைச் சமாளிக்க முடியாமல் பெண் பார்க்க வந்து சேர்ந்தார்கள். நமது சமூகத்தில் இருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று இந்தப் பெண் பார்க்கும் படலம். யாரோ ஒரு கும்பல் நடுவீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு, பெண்ணை வரச்சொல் என்பதும், ஏதோ மாடு பிடிக்க வந்தவர்கள் போன்று பெண்ணை உச்சி முதல் உள்ளங்கால் வரை அளந்து பார்ப்பதும், ஒரு சில நிமிடப்பார்வையிலேயே பிடித்துள்ளது-பிடிக்கவில்லை என்று தீர்மானிப்பதும் எந்த வகையில் சரி என்று தோன்றவில்லை. பெண் பார்க்க வரும் விஷயம் அக்கம் பக்கமெல்லாம் பரவி இருந்தது. பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டால், அக்கம் பக்கத்திற்குப் பதில் சொல்லி முடியாதே என்ற பதட்டமும் எனக்கு இருந்தது. குரங்காட்டிச் சித்தப்பா எப்படியும் சம்மதிக்க வைத்து விடுவார் என்ற நம்பிக்கையும் இருந்தது. முதலில் மிக்சரும், ஸ்வீட்டும் கொடுக்கப் பட்டது. சாப்பிட்டவாறே மாப்பிள்ளை-பெண் பற்றிய விவரங்கள் பரிமாறப்பட்டன. “பொண்ணை வரச்சொல்லுங்கப்பா” என்று சித்தப்பா ஒரு அதட்டல் போட்டார். அக்கா வந்தாள். அவளுக்கு என்னைப் பெற்றவரிடம் நேராய் நின்று பேசினாலே நடுங்கும். இப்பொது இத்தனை கூட்டத்திற்கு நடுவே கைகால் உதற வந்து நின்றாள். எல்லாரும் ஒருமுறை அவளை ஏற இறங்கப் பார்த்தனர். “மாப்ளே, பொண்ணை நல்லாப் பாத்துக்கோரும். அப்புறம் சரியாப் பாக்கலேன்னு வெளில வந்து பொலம்பக்கூடாது” என்று சித்தப்பா அபத்தமாய் ஜோக் அடித்தார். அப்போது தான் பச்சரிசி வீட்டிற்குள் நுழைந்தார். அந்தப் பெண்மணியைப் பார்த்ததும் சித்தப்பா அதிர்ச்சி ஆனார். நடு ஹாலிற்கு வந்த பச்சரிசி “ வாங்க, வாங்க. எல்லாரும் எப்போ வந்தீங்க?” என்றார். பச்சரிசி என்னைப் பெற்றவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் அவரின் வைப்பாட்டி! அத்தியாயம் - 15 பச்சரிசியின் உண்மையான பெயர் எங்களுக்குத் தெரியாது. எதனால் அந்தப் பெயர் என்றும் தெரியாது. அண்ணன் – அக்காக்கள் குழந்தையாக இருந்தபோதே சிறு சிறு உதவிகள் செய்ய வீட்டிற்குள் நுழைந்தவர். பிறகு சமையல் பொறுப்பையும் ஏற்று கொஞ்சம் கொஞ்சமாக முழு வீட்டுப் பொறுப்பும் தன் வசம் ஆக்கிக் கொண்டவர். அவருக்கு தனியே ஒரு குடும்பம் உண்டு. அவரது கணவர் ஒரு வியாதியஸ்தர் என்று தகவல். குழந்தைகளும் உண்டு. இது சமூகத்தில் மிகுந்த சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. பச்சரிசி ஹால் நடுவே வந்து நின்று உரிமையாக ‘வாங்க’ என்று சொன்னதும் அனைவரும் அதிர்ந்தனர். உடனே எழுந்தால் மரியாதையாக இருக்காதே என்று கொஞ்சநேரம் சம்பிராதயமாகப் பேசி விட்டு ”வீட்டிற்குப் போய் பேசி விட்டுச் சொல்றோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். பொதுவாக பெண் பார்க்கும் படலத்தின் முடிவில் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்பது பிடிக்கவில்லை என்றே பொருள் கொள்ளப்படும். இங்கும் அப்படியே. சித்தப்பாவும் அவர்களைச் சமாதானப்படுத்த அவர்களுடன் கிளம்பினார். என்னைப் பெற்றவர் எதுவும் நடக்காதது போல் தனது அறைக்குள் போனார். பச்சரிசி சமையல் வேலையை ஆரம்பித்தாள். என் அக்கா அழ ஆரம்பித்தாள். “மூத்தவ கதி தான் எனக்குமா?” என்றவாறே அழுதாள். மூத்த அக்காவிற்கு சில வருடங்கள் முன்பு ஒரு பெரிய குடும்பத்தில் திருமணம் ஆகியிருந்தது. பெரிய குடும்பம் என்றால் ஏறக்குறைய 25 பேர் அங்கு கூட்டுக்குடும்பமாக இருந்தனர். என்னைப் பெற்ற தந்தையின் நடத்தையைப் பெரிதுபடுத்தாது சம்பந்தம் வைத்துக் கொண்டனர். அது ஏன் என்று திருமணத்திற்குப் பிறகுதான் புரிந்தது. என் அக்கா கணவருக்கும் ஒரு பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. முழுக்க அவளது கட்டுப்பாட்டில் இருந்தார். அவருக்குத் தேவை வீட்டில் உள்ள கூட்டத்திற்கு சமைக்க ஒரு ஆளும்,சமூகத்தில் தானும் கல்யாணமான குடும்பஸ்தன் என்ற பேருமே! பிறந்ததில் இருந்தே தன் தந்தையின் அடக்குமுறைக்கும் அதிகாரத்திற்கும் பயந்து அடி வாங்கியே வளர்ந்த என் மூத்த அக்கா, புகுந்த வீட்டிலாவது விடியல் வராதா என்று ஏங்கினாள். கொதிக்கும் எண்ணைக்குப் பயந்து நெருப்பில் விழுந்த கதையாயிற்று. அந்த வீட்டில் உள்ள எல்லோரும் அவள் மீது அதிகாரம் செலுத்தினர். எல்லோரைப் பார்த்தும் பயப்பட ஆரம்பித்தாள். முடிவில் அது வலிப்பு நோயில் கொண்டு விட்டது. ’இஷ்டப்பட்ட பெண்ணுடன் சேர், நினைத்தபடி வாழ்வைக் கொண்டாடு’ என்று நாகரீக போதனைகள் செய்யப்படுகின்றன. ஆண்களின் எல்லாக் கொண்டாட்டமும் விடிவது அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதே. ஆனாலும் நமது சமூகம் நல்ல நடத்தை இல்லாத மனிதனை மதிப்பதில்லை. நல்லவர்களும் அவனை நெருங்குவதில்லை. இங்கும் சொந்தங்கள் நான் பிறந்த வீட்டைக் கை விட்டன. அவர்களுடன் உறவு கொள்வது மரியாதையான செய்கையாக கருதப் படவில்லை. ‘பணம் இருக்கிறது. எனவே யார் தயவும் தேவையில்லை. பச்சரிசியே போதும்’ என்ற மனநிலையுடன் வாழ்வைக் கொண்டாடினார். மனம் ஒரு குரங்கு. எல்லை மீறுவதில் மிகுந்த விருப்பம் உள்ளது அது. ஆனாலும் தன் குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக என்று மனதைக் கட்டுப்படுத்தி வாழ்வோரே இங்கு அதிகம். அவ்வாறு கட்டுப்பாட்டுடன் வாழ்வோர் முன் ஒரு மனிதன் எவ்விதக் கட்டுப்பாட்டிற்கும் அடங்காமல் வாழ்வது கண்ணை உறுத்தியது. அவர்களின் கோபம் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் மீதும் இறங்கியது. நல்லோரும் நல்லோர் போல் நடித்தோரும் ஒதுங்கினர். இவ்வளவு தெளிவான கருத்து ஏதும் என்னிடம் அப்போது இல்லை. எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் எங்களுக்குப் புரியவில்லை. ஏன் சொந்தங்கள் யாரும் அவர்களை அண்டவில்லை, அப்படியே வருவோரையும் ஏன் என்னைப் பெற்றவர் மதிப்பதில்லை என்று எதுவும் புரியவில்லை. ஆனால் தன் வாழ்வும் நாசம் ஆகப் போகிறது என்பதை என் சின்னக்கா உணர்ந்து கொண்டாள். தாயில்லா வீட்டில் தறி கெட்டு ஆடிய தந்தையை கண்டிக்க பலமின்றி அழுதாள். எனக்குக் கோபம் பொங்கியது. “நீ என்னன்னு கேக்க வேண்டியதானே?” என்று அண்ணனைக் கேட்டேன். “நாம கேக்குற மாதிரியா இருக்கு நிலைமை?” என்றான் அண்ணன். நான் பேசுவது என்று முடிவு செய்தேன். ஒரு தந்தையும் மகனும் பேசக்கூடாத விஷயத்தை நாங்கள் பேசிக் கொள்ள வேண்டிய நிலைமை! கடுமையான ஆத்திரத்துடன் அவர் அறை நோக்கிச் சென்றேன்.   அத்தியாயம் - 16 “இங்க என்ன தான் நடக்குது? இப்படி நடந்தா யாரு தான் இந்த வீட்டுப் பக்கம் வருவா?” என்றேன் கோபத்துடன். “இப்போ என்னலே நடந்து போச்சு?” “பச்சரிசி வந்து நடு ஹால்ல நின்னுக்கிட்டு வாங்கன்னு கேட்டா எவன் இங்க சம்பந்தம் வைப்பான்? அவ யாருன்னு கேட்டிருந்தாங்கன்னா நாங்க என்ன பதில் சொல்றது?” அவர் பதில் பேசாமல் அமர்ந்திருந்தார். “இந்த வயசுலயும் நீங்க இப்படி நடந்துக்கிட்டா, நல்ல குடும்பத்து ஆளுக இந்த வீட்டு வாசப்படியை மிதிப்பாங்களா? மூத்தக்கா விஷயத்துல பட்டும் நீங்க திருந்தலேன்னா எப்படி? இவ வாழ்க்கையும் வீணாப் போகணுமா?” எப்போதும் யாரையும் எடுத்தெறிந்து, மதிக்காமல் அதிகாரத்துடன் பேசியே பழக்கப்பட்டவர் அன்று என்னிடம் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தார். அண்ணனும் வாய் திறந்தான். “அவஞ் சொல்றதும் சரி தானே?” “இப்போ நான் என்னதாம்லே செய்யணும்?” என்றார். ”பச்சரிசி இனிமே இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது. அவ்வளவு தான்” என்றேன். நாங்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே பச்சரிசியும் அங்கு வந்தார். “என்னவாம்?” “பசங்களுக்கு நீ இங்க வர்றது பிடிக்கலை. மவளுக்கு வரனும் வராதுங்கிறாங்க” “ஓஹோ..அதனால..என்ன செய்யப் போறீங்க? என்னை வெளில போங்கிறீங்களா? பசங்களைக் கேட்டா என்னைச் சேர்த்துக்கிட்டீங்க? உங்களுக்காக வெளில எவ்வளவு அவமானத்தைத் தாங்கி இருக்கேன்..அவ்வளவு தானா? என் வாழ்க்கை அவ்வளவு தானா?”பச்சரிசி அழ ஆரம்பித்தார். “இல்லைம்மா, பாப்பாக்கு வரன் முடியிற வரைக்காவது..” “வேண்டாம்யா வேண்டாம். எப்போ என்னால உம்புள்ளைங்க வாழ்க்கை கெடுதுன்னு ஆயிடுச்சோ அப்புறம் நான் இங்க இருக்குறது அர்த்தம் இல்லை. நான் கிளம்புறேன். நல்லா இருங்கய்யா..எல்லாரும் நல்லா இருங்க” சட்டென்று திரும்பி, அழுதவாறே வெளியேறினார் பச்சரிசி. அவர் எங்களைப் பரிதாபமாகப் பார்த்தார். “என்னமோப்பா, பல வருசமா என்னைப் பார்த்துக்கிட்டவ. உங்க பேச்சை நம்பி அவளை அனுப்பிட்டேன். தேரை இழுத்து தெருவுல விட்ட கதை ஆயிடாம.” என்றார். “அதெப்படி, அக்காவும் அண்ணனும் விட்டிடுவாங்களா?” என்றேன். ’நானும் அந்த வீட்டுப்பிள்ளை, எனக்கும் அவரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உண்டு’ என்ற எண்ணமே எனக்கு இல்லை. அவருக்கும் அது இல்லை. அண்ணன் சிரித்துக் கொண்டே”ம், பார்த்துக்கலாம்” என்றான். அதைத் தொடர்ந்து, பொறுப்பாக அக்காவிற்கு ஒரு இடத்தில் வரன் பார்த்து, திருமணம் செய்து அனுப்பினார். அந்தத் திருமணத்திற்கான அழைப்பு எங்களுக்கு வரவில்லை. அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்தார். பச்சரிசி போன பின் கடுமையான தனிமையை உணர்ந்தார் அவர். பழைய முறுக்கு குறைந்திருந்தது. பல வருடங்களாக அவரின் அடக்குமுறைக்கு ஆளான அண்ணன், இப்போது தன் முறையை ஆரம்பித்தான். அந்த வீட்டிற்குள் அவரை மதியாது பல செயல்கள் நடந்தேறின. இனி வீட்டு அதிகாரம் தனக்கே என்றான். அவர்கள் தங்கியிருந்த வீடு அப்பத்தாவின் பெயரில் இருந்தது. அவர் சாகும்போது அண்ணன் பெயருக்கு உயில் எழுதி இருந்தார். “ஒரு ஓரமாக அடங்கி இருந்தால் இரு, இல்லையேல் வெளியேறு’ என்று அவருக்குச் சொல்லப்பட்டது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர், தன் பத்தாம் வயது முதலே கொத்துவேலைக்கு சித்தாளாகப் போய், பின்னர் கொத்தனார் ஆகிக் கட்டிய வீடு அது. அம்மா மேல் உள்ள பாசத்தால் அம்மா பெயரில் எழுதி வைத்திருந்தார். பின்னர் பில்டிங் காண்ட்ராக்டர் ஆகிப் பலவீடுகள் கட்டினாலும், அந்த வீடு அவர் கஷ்டப்பட்டு வாழ்ந்தபோது கட்டியவீடு. அது கைவிட்டுப் போனதும், மரியாதை இல்லாத வாழ்வும் அவரை மோசமாகத் தாக்கியது. பச்சரிசி தவிர அவருக்கு யாருடனும் நட்பு இருந்ததில்லை. பச்சரிசி தவிர வேறு சொந்தங்களை அவர் கண்டுகொண்டதில்லை. இப்போது பச்சரிசி எங்கு இருக்கிறார் என்றும் சரியாகத் தெரியவில்லை. தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவர் வேறு ஊருக்குச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். யாரும் இல்லாத நிலையில், தான் வாழ்வது யாருக்காக, இனி நாம் செய்ய வேண்டிய கடமை என்று என்னதான் இருக்கிறது என்று யோசிக்கலானார். அடுத்து தனியாகச் சமைக்க வேண்டிய துர்பாக்கிய நிலையும் வந்து சேர்ந்தது. ஒரே வீட்டிற்குள் இரு சமையல் நடந்தது. தன் ஐம்பதாவது வயதில், அடுப்புக் கூட்டிச் சமைத்தார். வாழ்க்கை என்பது என்ன? தினமும் தின்று விட்டுத் தூங்குவதா? கட்டிய மாளிகையை தினமும் தடவிப் பார்த்துக் கொண்டே இருப்பதா? லைஃப் இஸ் ரிலேசன்ஷிப் என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை. நாம் நம்மைச் சுற்றி உள்ளோருடன் கொண்டுள்ள ரிலேசன், நன்றாக இருக்கும்வரை வாழ்வும் நன்றாக செல்கிறது. சுற்றிலும் வெறுப்பே உமிழப்பட்டால்? சமூக மிருகமான மனிதனுக்கு தனிமையைத் தாங்கும் வலுவில்லை. ‘எனக்குன்னு யாரு இருக்கா? எதுக்காக இப்படி ஒரு வாழ்க்கை?’ என்று தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தனியே தன் அறையில் இருந்த நேரத்தில் வண்டிக்கு வாங்கி வைத்திருந்த பெட்ரோலை தன் மேல் ஊற்றினார். தனக்குத் தானே கொள்ளி வைத்தார். தெருவில் விடப்பட்ட தேர் பற்றி எரிந்தது. அத்தியாயம் - 17 யார் அந்த மன்மதன்? என்ன தான் அவனுக்கு வேண்டும்? ஆயிரம் ஆண்களின் உறவில் வராத சந்தோசத்தை ஏன் ஒரு பெண்ணின் உறவில் வைத்தான்? பெண்கள் இல்லா உலகில் ஆணால் வாழ இயலாதா? பெண்ணிடன் ஆண் தேடுவது தான் என்ன? பெண்கள் மேல் பொங்கும் அன்பை எந்த விதத்தில் உருமாற்றம் செய்வது? ஒரு ஆண் தன் இறுதிக்காலம் வரை ஒரு பெண்ணின் மேல் மட்டுமே அன்பு கொள்வது சரிதானா? ஒருகட்டத்தில் அந்த அன்பானது பிள்ளைகளின் மேலும் பாய வேண்டியது அவசியம் இல்லையா? மகனிடம் தந்தையையும் மகளிடம் தாயையும் காணும் வித்தை எல்லோருக்கும் அமையப் பெறாதா? ஒரு பெண்ணே உலகம் என எண்ணுவது பதின்ம வயது மனநிலை அல்லவா? அதன்பின்னும் ஆணுக்கு வளர்ச்சி இல்லையா? தேங்கி விட்ட குட்டையாய் மனம் சுருங்கிக் கொள்தல் சரி தானா? பச்சரிசியிடம் அவர் கண்டது என்ன? வெறும் காமமா? அது வேறு இடங்களிலும் கிடைக்கும் விஷயம் ஆயிற்றே? அல்லது அன்பா? அதைப் பிள்ளைகளிடம் பகிரவோ பெறவோ தடையாய் இருந்தது என்ன? இங்கு எது சரி? எது தவறு? சரிக்குப் பின்னே தவறும் ஒளிந்திருக்கவில்லையா? தவறுக்குப் பின்னே சரியும் இல்லையா? இரண்டையும் முழுக்கப் பிரித்தறிதல் சாத்தியம் தானா? மகளின் வாழ்வுக்காக ஒரு தந்தை தன் வாழ்வை மாற்றிக் கொள்ளக்கூடாதா? ஒரு பெண்மேல் குவிந்துவிட்ட மனதை வேறு பக்கம் திருப்பிவிட முடியாதா? தனிமையை வெல்ல இங்கு ஆயுதங்கள் கிடையாதா? என்னைப் பெற்றவரின் முடிவுக்கு யார் பொறுப்பு? இதில் நாங்கள் செய்த பிழை தான் என்ன? திருத்திக் கொள்ள முடியாத தவறாக அந்தத் தற்கொலை நடந்தது. அதற்கு நானும் ஒரு காரணம் ஆனேன். அதனால் கடுமையான குற்றவுணர்ச்சிக்கு ஆளானேன். ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு மேல் அந்தக் கொடுமையான நிகழ்வு என்னைத் துன்புறுத்திக் கொண்டே இருந்தது. மெல்ல மெல்ல நான் அதிலிருந்து மீண்டு கொண்டிருந்தபோது, மதன் மூன்றாவது முறையாகக் காதலில் விழுந்து கொண்டிருந்தான். இறுதி பாகம் அத்தியாயம் - 18 ஒரு பெண்ணுக்காக மணிக்கணக்கில் பஸ் ஸ்டாப்பில் காத்துக் கிடப்பது, செக்யூரிடி போல் பின்னாலேயே வீடு வரை போவது, ஹோட்டல் ஹோட்டலாய் கூட்டிப் போய் திங்க வைத்து பில் கட்டுவது போன்ற வேலைகள் எல்லாம் வேஸ்ட் என்ற தெளிவுக்கு மதன் இந்த நான்கு வருடங்களில் வந்திருந்தான். ‘நாம் என்னதான் சின்சியராக லவ் பண்ணினாலும், கடைசியில் கிடைப்பது பல்பு தான்’என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருந்தது மதனுக்கு. பிரவீணாவும் ஜெனிஃபரும் கொடுத்த பல்புகளை நினைவுச்சின்னமாக நெஞ்சில் சுமந்தபடி திரிந்தான். இனிமேலாவது ஒழுங்காய் வேலை பார்த்து லைஃபில் செட்டில் ஆவோம் என்று தீர்மானம் செய்து, ஒரு நல்ல இஞ்சினியராக உருவெடுத்தான். ஆஃபீஸில் அவனுக்கு நல்ல பெயரும் இருந்தது. அடிபட்டுத் தெளிந்தபின், யாரையும் காதலிக்கத் தோன்றவில்லை. இனிமேல் தன் வாழ்வில் காதல் கத்தரிக்காய்க்கெல்லாம் இடமே இல்லை என்று உறுதி எடுத்துக் கொண்டான். அந்த நேரத்தில் தான் அவனது அலுவலகத்தின் அக்கவுண்ட் செக்சனுக்கு வந்து சேர்ந்தாள் ஜமீலா. ’காதல் வருவதற்கான காரணங்கள் பிரபஞ்ச ரகசியத்திற்கு ஈடானவை’ என்றே மதனுக்குத் தோன்றியது. ஜமீலாவைப் பார்த்ததுமே காதல் கொண்டான். ‘ஏற்கனவே பட்டது போதாதா’ என்று உள்மனது எச்சரித்தாலும் ‘இவள் எனக்கெனப் பிறந்தவள்’ என்ற எண்ணம் மேலோங்கியது. ஏற்கனவே பிரவீணாவையும் ஜெனிஃபரையும் அப்படித் தானே நினைத்தோம் என்று அவன் யோசிக்கவில்லை. ’ஜமீலா கேரளத்தைச் சேர்ந்தவள். சென்னையில் உள்ள தன் அண்ணனின் வீட்டில் தங்கியபடி வேலைக்கு வருகின்றாள். பட்டப்படிப்பை முடித்தவள். நல்ல ஆங்கில அறிவு. யாரிடமும் கடிந்து பேசாத மென்மையான சுபாவம்’ என அவளைப் பற்றிய தகவல்களை ஒவ்வொன்றாகத் திரட்டினான். அடிக்கடி அக்கவுண்ட் செக்சன் பக்கம் போவதும், ஜமீலா பேண்ட்ரி(Pantry) பக்கம் போனால் இவனும் ஓடிப்போய் ஒரு காஃபியை எடுத்து நின்றுகொள்வதுமாய் தன் வேலையை ஆரம்பித்தான். ‘கேரளாவில் அரிசி பெருசு பெருசா இருக்குமாமே’ என்பதில் ஆரம்பித்து ’மலையாளப் படங்கள்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும், ரொம்ப யதார்த்தமான வாழ்வைப் பிரதிபலிக்கும் படங்கள்’ என்பது வரை பேசியே அவளைத் தாக்கினான். மலையாள பிட்டுப் படங்களைத் தவிர வேறெதும் அவன் பார்த்ததில்லை என்பது வேறு விஷயம். ஜமீலா மதனை ஒரு நண்பனாக ஏற்றுக்கொண்டாள். எங்கு பார்த்தாலும் புன்னகைப்பதும், பேசுவதும் வழக்கமானது. ஜமீலா சகஜமாகப் பேச ஆரம்பித்து விட்டாதால், அடுத்த ஸ்டெப்புக்கு நகரலாம் என்ற தைரியம் மதனுக்கு வந்தது. ஜாலியாகச் சிரித்துப் பேசும் பெண் என்றால் ஏதாவது எஸ் எம் எஸ் ஜோக் படித்துக்காட்டலாம். இடையிடையே ஏ ஜோக்கை அவிழ்த்து விட்டு ஆழம் பார்க்கலாம். கொஞ்சம் அறிவுஜீவித்தனமாக அட்டாக் செய்ய நினைத்தால் ஓஷோவை துணைக்கு அழைக்கலாம். ‘காமத்தில் ஆண் தேடுவது தான் என்ன?’ என்று புருவம் தூக்கிப் பேசலாம். தொடாமல், பேச்சிலேயே அவளை ஸ்பரிசிக்கலாம். ஆனால் ஜமீலா விஷயத்தில் இது எதுவும் வேலைக்காகாது என்று தெரிந்தது. அவளுக்குள் ஒரு சிறிய பெண்ணியப் போராளி ஒளிந்திருப்பது போல் தோன்றியது. ஆண்களை நம்பாத ஒரு போக்கு அவளிடம் இருந்தது. ஆனாலும் அவளை அவன் விரும்பினான். தனக்கு ஒரு நல்ல துணையாக, தாயாக அவள் இருப்பாள் என்று நம்பினான். ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில் மதனின் குடும்பத்தைப் பற்றிக் கேட்டாள் ஜமீலா. “நான், என் அப்பா அவ்வளவு தான். அவர் ஊருல இருக்காரு. நான் இங்க.” என்றான். “அம்மா?” எவ்வளவு ஜாலியாகப் பேசும் நேரத்திலும் மதனிடம் நாங்கள் அம்மா பற்றிய பேச்சை எடுப்பதில்லை. அம்மா என்றதுமே உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்குவான். அது தெரியாமல், ஜமீலா கேட்டாள். “நான் டென்த் படிக்கும்போது, அம்மா இறந்துட்டாங்க’ என்றான். சொல்லும்போதே கண்ணில் நீர் முட்டியது. “ஓ..ஐ அம் சாரி” என்றாள். “பரவாயில்லை..அதான் இப்போ நீ வந்துட்டயே” என்றான் மதன். ஜமீலா திடுக்கிட்டாள். அத்தியாயம் - 19 ”மதன், என்ன பேசுறீங்க?” என்றாள். உணர்ச்சி வேகத்தில் உளறி விட்டோம் என்று மதனுக்குப் புரிந்தது. “இல்லே ஜமீலா, அம்மா போனப்புறம் என்மேல அன்பு காட்ட யாருமே இல்லை. உன்கூடப் பழகுனப்போ, நீ அந்தக் குறையைத் தீர்த்து வைப்பேன்னு தோணிச்சு. அதான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சேன். என் அம்மாகூட இருக்கும்போது எப்படி செக்யூரா ஃபீல் பண்ணனோ, அதே ஃபீலிங் இப்போ உன்கூடப் பழகும்போதும். என்னைக் கேர் எடுத்துப் பார்த்துப்பேன்னு தோணிச்சு.” நீ அழகாய் இருக்கிறாய், அதனால் காதலிக்கிறேன் என்று சொல்பவர்களை ஜமீலா பார்த்திருக்கிறாள். அறிவுக்காக, பணத்துக்காக காதலிக்கும் ஆண்களையும் அவள் பார்த்ததுண்டு. ஆனால் இருபத்தைந்து வயது ஆண், குழந்தையைப் போல் அழுதுகொண்டே காதலைச் சொன்னபோது கலங்கிப் போனாள். மென்மையான ஆண்களை அவள் தன் வாழ்வில் கண்டதில்லை. ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்றாள். மதனுக்குப் பயமாய் இருந்தது. அவளது அடுத்த நகர்வு என்ன என்று புரியவில்லை. நாளை ஆஃபீஸில் கம்ப்ளைண்ட் செய்வாளோ, அண்ணனைக் கூட்டி வருவாளோ, பேச மாட்டோளோ’ என்று பலவாறு எண்ணித் தவித்தான். இரவு ஆமை வேகத்தில் நகர்ந்து, சித்ரவதை செய்தது. மறுநாள் ஆஃபீஸில் ஜமீலாவைப் போய்ப் பார்த்தான். “சாரி, நான் ஏதும் தப்பாப் பேசிட்டனா?” என்றான் அவள் “சாயந்திரம் மெரீனா போவோம், உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்றாள். சென்னைக்குப் புதிதாக வருபவர் எல்லோரும் சென்று சேரும் இடம் மெரீனா தான். சென்னை வந்துவிட்டு மெரீனாவைப் பார்க்காமல் போவது மிகப்பெரிய பாவமாகவே தமிழகத்தில் பர்க்கப்படும். ஒருவேளை கேரளத்திலும் அப்படித் தானோ? உண்மையில் மெரீனாவை விட பெசண்ட் நகர் பீச் பேசுவதற்குப் பெட்டர். மகாபலிபுரம் பக்கம் ஒதுங்குவது இன்னும் பெட்டர். வள்ளுவர் கோட்டம் பக்கம் மழைக்குக்கூட ஒதுங்கக்கூடாது. அவளை விட்டுவிடுவார்கள். ஆண்மகனுக்குத் தான் அங்கு நாலைந்து ஆப்பு ஏத்திக்கட்டிய லுங்கியுடன் ரெடியாக இருக்கும். ஃப்ரீ தான் தம்பின்னு வேற சொல்வாங்க. மனசுல பெரிய சிஎம்-னு நினைப்பு..ச்சே, காதலி பீச்சுக்கு அழைக்கையில் ஏன் இந்த கர்மாந்திரத்தை எல்லாம் நினைக்கிறோம் என்று தன்னையே திட்டிக் கொண்டான். மாலையில் அவளுடனே மெரீனா சென்று சேர்ந்தான். பலியாடு போல் அவள் பின்னாலேயே சென்றான். பையன்கள் பெண்களுடனும் ஆண்டிகள் அங்கிள்களுடனும் வெயிலில் ‘நிலா காயுது’ரேஞ்சில் செட்டில் ஆகியிருந்தார்கள். நேரம் கிடைக்கையில் இவர்களை வைத்து ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று மதனுக்குத் தோன்றியது. தினமும் ஒரே ஆளுடன் தான் வருகிறார்களா, அனைவருமே காதலர்கள் தானா, ஆண்ட்டிகள் கணவனுடனா இப்படி குசுகுசுவெனப் பேசுகிறார்கள், இவர்கள் கடைசியில் என்ன ஆகிறார்கள் – என்பது பற்றி ஒரு தீஸிஸ் ரெடி பண்ணினால் என்ன என்று மதனுக்குத் தோன்றியது. “அங்கே உட்காரலாமா?” என்றாள் . அங்கே ஒரு ஜோடி படகு மறைவிலிருந்து எழுந்து கிளம்பிக்கொண்டிருந்தது. “சரி” என்றான். அங்கே சென்றவுடன் சந்தேகத்துடன் சுற்றுமுற்றும் நன்றாகப் பார்த்துவிட்டு திருப்தியாகி மதன் உட்கார்ந்தான். ”சரி, சொல்லு” என்றாள். சொல்லா, இவ தானே பேசணும்னு கூட்டி வந்தாள்னு குழம்பியபடியே “என்ன சொல்ல?” என்றான். “ஏதோ சொன்னயே” என்றாள். “ம்….” என்று பம்மினான். “என்னைப் பத்தி என்ன தெரியும் உனக்கு?” என்றாள். “நீ நல்ல பொண்ணு. ரொம்ப சாஃப்ட் நேச்சர். யார்கிட்டயும் கோபப்பட்டுப் பேசவே தெரியாது. எல்லார் மேலயும் அன்பா இருப்பே” “நான் என்னைப் புகழந்து பேசச் சொல்லலை. என்னைப் பத்தி என்ன டீடெய்ல் தெரியும் உனக்கு?” “கேரளா. இங்க அண்ணன் வீட்ல இருந்து வர்றே. அப்புறம் பி.காம்…ம், அவ்வளவு தான்” “அவ்வளவு தானா? இந்த நாலு விஷயம் மட்டும் போதுமா ஒரு பொண்ணு தன்னோட வாழ்க்கைத் துணைன்னு ஏத்துக்க?” “அதுகூட எனக்கு வேண்டாம், உன்னைப் பார்த்தா உடனே..” “போதும்..நான் சொல்லட்டா என்னைப் பத்தி?…..இந்த அண்ணன் என் சொந்த அண்ணன் இல்லை. வீட்டுக்கு ஒரே பொண்ணு. கட்டுப்பாடான இஸ்லாமியக் குடும்பம். அப்புறம்..” “அப்புறம்?” “நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ.” அத்தியாயம் - 20 மதனுக்குப் பேயறைந்தது போல் ஆகியது. அதிர்ச்சிடன் ஜமீலாவையே பார்த்தபடி இருந்தான். அவள் தொடர்ந்தாள். “வீட்ல பார்த்துத் தான் கட்டி வச்சாங்க. கல்யாணம் வரைக்கும் அவனைப் பத்தி ஒன்னும் தெரியலை. அப்புறம் தான் தெரிஞ்சது குடிகாரன்னு. எப்பவும் போதை. வீட்டுக்கே வராம எங்கயாவது விழுந்து கிடப்பான். வீட்டுக்கு வந்தா அடி, உதை. எந்தவொரு வேலைக்கும் போறதில்லை. சொந்த பிஸினஸ்னு சொன்னாங்க. அதை அவன் வாப்பா தான் பார்த்துக்கிட்டு இருந்தாரு. அதனால எங்களுக்கு முன்னாடியே கண்டுபிடிக்க முடியலை. ஒவ்வொரு நாளும் அவன்கூட வாழ்றது நரகமாப் போச்சு. அடி, உதைங்கிறதுல இருந்து சூடு வைக்கறதுன்னு அவன் முன்னேறுனான். என்னால அதைத் தாங்க முடியலை. அப்புறம் என் வாப்பா வீட்டுக்கே நான் வந்துட்டேன்.” அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. துடைத்தபடியே பேச்சைத் தொடர்ந்தாள். “அப்புறம் டைவர்ஸ்க்காக பெரிய போராட்டம். ரெண்டு வீட்லயும் அதுக்கு ஒத்துக்கிட்டாங்க. அவன் அப்பாவும் என் மேல ரொம்பப் பரிதாபப்பட்டாரு. எங்க வீட்டுக்கே என்னைத் தேடி வந்து அவன் ரகளை பண்ண ஆரம்பிச்சான். அதனால தான் என்னை இங்க சென்னைக்கு அனுப்பி வச்சுட்டாங்க. ஆறு மாசம் வீட்ல சும்மா தான் இருந்தேன். அண்ணன் தான் ஏதாவது வேலைக்குப் போ, நாலு பேருகூடப் பழகுனா ஆறுதலா இருக்கும். பழசை மறப்பே’ன்னு சொல்லி அனுப்பி வச்சாரு. இடையில அவன் டைவர்ஸ்க்கு ஒத்துக்கிட்டான். இப்போ டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்கோம்” மதன் கலங்கிப் போனான். உண்மையில் மதனுக்கு கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாது. ஜமீலாவின் கதை அவனை மிகவும் பாதித்தது. பெண் என்றால் ’சைட் அடிக்க, லவ் பண்ண காமத்துக்கு உதவும் சதையால் செய்யப்பட்ட ஒரு வஸ்து’என்பதைத் தாண்டி அவன் சிந்தித்ததில்லை. அவனுக்குத் தெரிந்த பெண்களும் நல்ல வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண்ணை அடிப்பது என்பதே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி எல்லாம் செய்வார்களா..முத்தமிடலாம்..கட்டி அணைக்கலாம்..அதற்குத்தானே பெண்..ஏன் இப்படிக் காட்டு மிராண்டித்தனமாக அவன் நடந்துகொண்டான் என்பதே அவனுக்குப் புரியவில்லை. “நான் பழசையெல்லாம் மறக்கணும்னு தான் இங்க வந்திருக்கேன். லவ்வு..அது இதுன்னு ஒரு ஆம்பிளையோட சுத்தி இன்னொரு தடவை நரகத்தை அனுபவிக்க நான் ரெடியா இல்லை. என்னை விட்டுடு. எனக்கு ஆதரவா ஃப்ரெண்டா பேச முடிஞ்சாப் பேசு. இல்லேன்னா அதுவும் வேண்டாம்…போலாமா? “என்று கேட்டவாறே எழுந்தாள் ஜமீலா. மதனும் ஒன்றும் சொல்லாமல் எழுந்தான். அவளை பஸ் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் பீச்சுக்கே வந்தான். எவ்வளவு கஷ்டம் அந்தப் பொண்ணுக்கு..நாம் ஏதாவது செய்யவேண்டுமே..அவள் சொல்றான்னு ஏன் அவளை விட்டு விலகணும்? நாமே ஏன் அவளைக் கல்யாணம் செய்யக்கூடாது? நமக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கு. நம்ம மேல எந்தப் பொண்ணாவது அன்பா இருக்கான்னு தான் இத்தனை வருசமா அலைஞ்சிருக்கோம்.. ஒருதடவைகூட நாமளும் அவங்ககிட்ட அன்பா இருக்கணுமேன்னு யோசிச்சதில்லை. இப்போ இந்தப் பொண்ணுக்கு அன்பு தேவை. அவளோட வலிக்கு ஆறுதல் தேவை. நம்ம மேலயும் அன்பு காட்ட ஒரு ஆள் தேவை. ரெண்டு பேருக்குமே ஒரே தேவை தான். அப்போ நான் ஏன் ஜமீலாவைக் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது? வாழ்வில் முதல் தடவையாக கல்யாணத்தைப் பற்றி சீரியஸாக யோசிக்க ஆரம்பித்தான் மதன். அத்தியாயம் - 21 இன்னொரு திருமணம் என்பது பற்றிச் சிந்திக்கவே பயமாக இருந்தது ஜமீலவிற்கு. ஏற்கனவே பட்ட காயமே ஆறாத நிலையில் இதில் மீண்டும் தான் இறங்குவது அவசியம் தானா என்று தோன்றியது. ஆனால் இந்தச் சமுதாயத்தில் ஒரு பெண் தனியே வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள். அதை எதிர்கொள்ளும் தைரியமும் அவளிடம் இல்லை. மதன் அவளை விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தான். ‘நான் உன்னைப் பார்த்துக்கொள்வேன். பழசை நினைத்துப் பயப்பட வேண்டாம்’ என்று அவளுக்கு நம்பிக்கை ஊட்டினான். அடி மேல் அடி அடித்தால் அம்மியே நகர்வது போல், ஜமீலாவின் மனதும் சிறிது அசைந்தது. “நான் ஒரு முஸ்லிம். டைவர்ஸி வேறு. உன் வீட்டில் எப்படி ஒத்துக்கொள்வார்கள்? நீயோ இந்து. என் வீட்டில் நிச்சயம் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இந்த விசயத்தை இத்தோடு விட்டு விடுவதே நல்லது” என்றாள் ஜமீலா. “என் அப்பா என் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்க மாட்டார். ஆனால் நீ ஒரு டைவர்ஸிங்கிற விசயத்தை மட்டும் அவர்கிட்ட சொல்ல வேண்டாம். அவர் அந்தக்காலத்து ஆளு. அவர்கிட்ட மட்டும் இல்லை. யார்கிட்டயும் நாம சொல்லிக்க வேண்டாம். ஏன் சொல்லணும்? இது உன்னோட பெர்சனல் விசயம். அதை அடுததவங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நீ உன் வீட்ல பேசு” என்றான். ஆனால் அவன் அப்பாவிடம் விசயத்தைச் சொன்னபோது, அவர் கேட்ட முதல் கேள்வி “பொண்ணு என்ன ஜாதி?”. ”அவ முஸ்லிம்” என்றான். “இங்க சொந்தக்காரங்க மத்தில என்னைத் தலைகுனிய வைக்கணும்னே இதைப் பண்றியா? நம்ம ஜாதிப்பிள்ளைகளே உன் கண்ணுக்குத் தெரியாதா? இதுக்கு ஒருக்காலும் நான் சம்மதிக்க முடியாது.” மதனுக்கு அவர் சம்மதம் தேவையாய் இல்லை. ஒரு இஞ்சினியராக ஐந்திலக்கச் சம்பளம் வாங்குபவனுக்கு அப்பாவின் தேவை என்று ஏதும் இல்லை. எனவே இனியும் இவரிடம் பேசுவது வீண் என்று புரிந்து கொண்டான். ஏற்கனவே ஜமீலாவிற்கு வரன் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். வருகின்ற வரன் எல்லாம் இரண்டாம் தாரமாகவே வந்து கொண்டிருந்தது. சில வரன்களுக்கு குழந்தையும் இருந்தது. ஜமீலா தன் அம்மாவிடம் விசயத்தைச் சொன்னாள். அவருக்கு அது கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தன் மதத்திலேயே வேறு ஒருவனைக் கட்டிகொண்டாலும் இது ஒரு உறுத்தலான விசயமாகவே இருக்கும் என்பதையும் ஜமீலாஎடுத்துச் சொன்னாள். இப்படிச் செய்ய வேண்டாம் என்று அம்மா மன்றாடிக் கேட்டார். தாங்களே வேறு நல்ல மாப்பிள்ளை பார்த்துக் கட்டி வைப்பதாகவும் சொன்னார். மதன் தன்னைப் பற்றிய எல்லா விசயமும் தெரிந்தும் தன்னைக் காதலிப்பதைச் சொன்னாள் ஜமீலா. இனியும் மகள் மனதை மாற்றுவது கஷ்டம் என்பதைப் புரிந்துகொண்ட அந்தத் தாய், ஆதரவும் தர முடியாமல் எதிர்ப்பும் சொல்ல முடியாமல் தவித்தார். மதன் ஜமீலாவிடம் தன் அப்பாவின் கோபத்தைச் சொன்னான். ஜமீலாவும் தன் வீட்டு எதிர்ப்பைச் சொன்னாள். ‘இனி யாரின் ஆதரவும் தேவையில்லை. நம்மை நாம் பார்த்துக் கொள்வோம்’ என்று முடிவு செய்தார்கள். அலுவலக நண்பர்களிடம் விசயத்தைச் சொன்னார்கள். ரிஜிஸ்டர் மேரேஜுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நண்பர்கள் உதவியுடன் தங்கள் இல்வாழ்க்கையில் நுழைந்தார்கள் ஜமீலாவும் மதனும். நண்பர்கள் சூழ மணமாலையுடன் நின்றபோது தான் மதனுக்கு என் ஞாபகம் வந்தது. ‘செங்கோவியும் இங்க இருந்திருக்கலாம்..எங்க போனான்..என்ன செய்றான்னே தெரியலையே..அடுத்து அவனைத் தேடிப் பிடிக்கணும்’ என்று நினைத்துக் கொண்டான். எனது வருகை அவனது வாழ்வை தலைகீழாகப் புரட்டிப் போடப்போவது அவனுக்குத் தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை. பரிதாபத்திற்குரிய அந்தப் பெண்ணிற்கும் தெரியவில்லை. அத்தியாயம் - 22 தனக்காக ஒரு பெண், தன் மீது மட்டுமே அன்பு செலுத்த ஒரு பெண் என்பது மதனுக்கு அளப்பரிய சந்தோசத்தை அளித்தது. பல வருடப் போராட்டம், பல பல்புகள் வாங்கியபின் கிடைத்த ஜமீலா ஒரு பொக்கிஷம் என்பதை மதன் உணர்ந்தான். எத்தனையோ நண்பர்கள் இருந்தும் விலகாத தனிமை, இப்போது அவனை விட்டு நீங்கியது. மோசமான கடந்தகாலத்தைத் தாண்டி வந்த ஜமீலாவிற்கு, இந்த வாழ்க்கை மிகப்பெரிய சந்தோசத்தை அளித்தது. மதனை தன் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டாள். அவனுக்கு என்ன பிடிக்குமோ அதையே உண்டாள், உடுத்தினாள், செய்தாள். திருமணத்தின்போது சந்தோசமாக வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பெண்கள், சில வருடங்களில் தங்கள் மலர்ச்சியைத் தொலைக்கின்றார்கள். அதற்குப் பெரும்பாலும் காரணமாய் இருப்பது சொந்தங்களின் தொல்லையே. காலப்போக்கில் வெள்ளை உள்ளத்துடன் புது வாழ்வைத் துவக்கிய பெண்ணையும் தங்களைப் போல் மாற்றுகின்ற வல்லமை இருவீட்டுப் பெண்களுக்கும் உண்டு. நமது கலாச்சாரத்தின் பெருமைக்குரிய விஷயமான குடும்ப அமைப்பில் உள்ள மிகப்பெரிய குறைபாடு நம்மிடம் இருக்கும் தமிழ்நண்டு மனப்பான்மை. தன்னைவிட நல்ல வாழ்வு வாழ்வோரைச் சகித்துக்கொள்ள சொந்தங்களால் முடிவதில்லை. உள்ளே புகுந்து குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கவும், கெடுக்கவும் அவர்கள் தயங்குவதும் இல்லை. மதனும் ஜமீலாவும் சொந்தபந்தங்களை உதறிவிட்டு வாழ்வைத் தொடங்கியதால், வேறு யாராலும் அவர்களுக்கு தொந்தரவு என்பதே இல்லை என்றாகியது. தங்களைப் பற்றியே சிந்தித்தார்கள், தங்களுக்காகவே வாழ்ந்தார்கள். அடுத்து எப்போது குழந்தை பெற்றுக்கொள்வது, எத்தனை பெற்றுக்கொள்வது, என்ன பெயர் வைக்கலாம், அவர்களை என்ன படிக்க வைக்கலாம்-என்று பல ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டினார்கள். மதன் தன் கல்லூரி நண்பர்களிடம் தான் நல்லதொரு துணையுடன் நலமாய் வாழ்வதைக் காட்ட விரும்பினான். பிரவீணா, ஜெனிஃபர் என தொடர்ந்து நண்பர்கள் முன் தோற்றுப் போனவனுக்கு, இறுதியாகத் தான் வென்றுவிட்ட செய்தியை உரக்கச் சொல்லத்தோன்றியது. தன் நண்பர்களைத் தேடத் துவங்கினான். பழனி சென்னையிலேயே ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை செய்வதை அறிந்துகொண்டான். சிவா ஏதோவொரு ஐரோப்பிய நாட்டில் வேலை செய்வதாகத் தகவல் கிடைத்தது. என்னைப் பற்றித் தான் எந்தச் செய்தியும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. பழனியை தன் வீட்டிற்கு அழைத்தான். “இவந்தான்மா பழனி. காலேஜ் மேட். ஹாஸ்டல்ல ரூம் மேட்” என்று அறிமுகப்படுத்தினான். ”வாங்க” என்று மலர்ந்த முகத்துடன் ஜமீலா வணக்கம் சொன்னாள். அவனுக்காகவே சிக்கன் பிரியாணி தயார் செய்யப்பட்டது. பிரியாணி செய்வதில் ஜமீலா எக்ஸ்பர்ட்டாக இருந்தாள். ஆளை மயக்கும் வாசத்துடன் பிரியாணி பரிமாறப்பட்டது. “என்னடா இது..எல்லாரும் பிரியாணில கறி போடுவாங்க. நீங்க கறிமேல கொஞ்சம் பிரியாணி ரைஸ் தூவித் தர்றீங்க” என்று சொல்லியவாறு சந்தோசமாகச் சாப்பிட்டான் பழனி. கிளம்பும்போது ஜமீலாவிடம் சொன்னான். ‘இவன் காலேஜ் டேஸ்ல பண்ண காரியத்தை எல்லாம் பார்த்துட்டு, இவன் எங்க உருப்படப் போறான்னு தான் நாங்க நினைச்சோம். டிகிரி முடிச்சதே பெரிய விசயம். இப்போ ஒரு நல்ல வேலைல. ஒரு குடும்பஸ்தனா அவனைப் பார்க்கும்போது சந்தோசமா இருக்கு. அவனை நல்லாப் பார்த்துக்கோங்க” என்றான். மதனும் தெரு வரை பழனியிடம் பேசியவாறே வந்தான். “பரவாயில்லைடா மதன்..நல்ல பொண்ணாத்தான் தெரியுது உன் வைய்ஃப். இனிமேலாவது ஒழுங்கா இரு” “டேய், நீ இன்னும் பழைய மதனையே நினைச்சுகிட்டு இருக்கியா..அவளை நான் நல்லாக் கவனிச்சுக்கிறேண்டா. அவளைப் பேர் சொல்லிக்கூடக் கூப்பிடறதில்லை. அம்மான்னு தான் சொல்றேன். தெரியுமா?” என்றான் மதன். “சரிடா..நல்லா இருந்தாச் சந்தோசம் தான்” “செங்கோவி இப்போ எங்கடா இருக்கான்?” “அவனா..கோயம்புத்தூர்ல இருக்கிறதா கடைசியாப் பேசும்போது சொன்னான். அவன் நம்பர் இருக்கு. வேணும்னாப் பேசு” ”குடு..குடு” என்றவாறே நம்பரை வாங்கினான். எங்கள் காலேஜ் மதுரையில் இருந்தாலும், சென்னையின் அடையாளமான அந்த ஒத்தை வார்த்தை எங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. பேச ஆரம்பிக்கும்போது பயபக்தியுடன் ஆத்தாவை நினைப்பது எங்கள் வழக்கம். மதனும், நான் ஃபோனை எடுத்ததும் அப்படியே ஆரம்பித்தான். “……….தா” அப்போது நான் பதிவர் அல்ல. எனவே ஃபோனில் ஒருவர் கெட்டவார்த்தையில் திட்டுவது அதிர்ச்சியாக இருந்தது. “யாருங்க பேசுறீங்க?” என்றேன். “ …தா, நாந்தாண்டா மதன்.” “டேய், எப்படிடா இருக்க. எத்தனை வருசமாச்சு” ”நல்லா இருக்கண்டா. இப்போ எங்க இருக்க? “கோயம்புத்தூர்ல..ஆஃபீஸ்ல” என்றேன். ”ஆஃபீஸ்லயா..ஹா..ஹா..அதான் ஆத்தா சொல்ல முடியலியா..நான் சொல்வனே…..தா..தா..தா..” நான் என் பக்கத்தில் இருந்த மீராவைப் பார்த்தேன். “நான் கொஞ்சம் பெர்சனலாப் பேசணும்..டிராயிங்கை முடிச்சுட்டுக் கூப்பிடறேன். அப்புறம் வாங்க” என்றேன். அந்தப் பெண் கிளம்பியது. “டேய், என்னடா சொன்னே..ஆஃபீஸ்ல இருந்தா சொல்ல முடியாதா? இப்போச் சொல்றேண்டா…..தா..தா..தா….தா..தா..தா….தா..தா..தா….தா..தா..தா….தா..தா..தா.” சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தால், என் சேரின் பின்னே பேயறைந்தாற்போல் மீரா நின்றுகொண்டிருந்தாள். மீரா மிகவும் நல்ல பெண். கொஞ்சம் விளையாட்டுப் புத்தி. நான் என்ன பேசுகிறேன் என்று கவனிக்க முடிவு செய்து, பின்னால் நின்றிருக்கிறாள். நான் இதற்கு எப்படி ரியாக்சன் கொடுப்பது என்று தெரியாமல் ப்ளாங்க்காக முழித்தேன்.   அத்தியாயம் - 23 எந்தவொரு கெட்டவார்த்தையும் பாவகாரியமும் அறியாத பாலகன் என்று நான் கஷ்டப்பட்டு மெயிண்டய்ன் செய்த இமேஜ் பணால் ஆனதுடன், மதனுடனான முதல் கால் முடிவுற்றது. இந்த மாதிரி விஷயங்களில் விளக்கம் சொல்வதை விட, பேக்கு முழி முழித்துவிட்டு, விட்டுவிடுதல் நலம் என்பதால் அப்படியே செய்தேன். அந்தப் பெண் ஆஃபீஸில் யாரிடமும் கம்ப்ளைண்ட் செய்வதாலும் பிரயோஜனம் இல்லை. ஏனென்றால் தவறு அந்தப் பெண்ணுடையது, மேலும் அப்போது நான் என் வேலையை ராஜினாமா செய்திருந்தேன். எனவே நடவடிக்கை என்று ஒன்றும் எடுக்கமுடியாது. எனது பாஸ் உடன் ரொம்ப முட்டிக்கொண்டதால், இனியும் இவங்கூட வேலை செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அடுத்து வேறு வேலையும் கையில் இல்லை. ஆனாலும் ‘ப்ளாட்ஃபார்மில் பிச்சை எடுத்தாலும் எடுப்பேனேயொழிய இவனுக்கு வேலை செய்வதில்லை ‘என்ற தீவிரமான முடிவுக்கு வந்திருந்தேன். அப்போது பேச்சிலர் என்பதால் வேலையை தூக்கி எறிவது பற்றி எந்தக் கவலையும் இல்லை. அடுத்த சிலநாட்களில் ரிலீவ் ஆனபின், வேறுவேலை தேட ஆரம்பித்தேன். இரண்டு மாத அலைச்சலுக்குப் பின் சென்னையில் ஒரு வேலை கிடைத்தது. கோயம்புத்தூரை விட்டுச் செல்வது தான் வருத்தமாக இருந்தது. கோவையின் முதல் சிறப்பு அந்த பாசமிக்க மக்கள் தான். நான் சென்னையை விட்டு அலறி அடித்து ஓடி வந்து, கோவையில் இறங்கியபோது கையில் 3 பெட்டியுடன் பஸ் ஸ்டாப்பில் நின்றேன். ஒரு அரசு பஸ் வந்து நின்றது. நான் ஒரு பெட்டியை படியில் வைத்ததும் கண்டக்டர் அதை வாங்கி உள்ளே வைத்தார். பின் அவரும் இறங்கி என்னுடைய இன்னொரு பெட்டியை எடுத்துக்கொண்டு, “ஏனுங், ஏறுங் போலாம்” என்றார். ஒரு ஊரில் மிகவும் மோசமான டென்சன் பார்ட்டிகள் யாரென்றால், இந்த கண்டக்டர்கள் தான். எனது அனுபவத்தில் நான் கோவை வரும்வரை நல்ல கண்டக்டர்களையே பார்த்ததில்லை. கோவையில் கண்டக்டரே இப்படி என்றால், மக்கள் எவ்வளவு அன்பானவர்கள் என்று புரிந்து போயிற்று. என் சொந்த ஊரைவிட்டு, வேறு எங்காவது செட்டில் ஆகவேண்டும் என்ற நிலை வந்தால், நான் கோயம்புத்தூரையே தேர்ந்தெடுப்பேன். நான் வேலை பார்த்தது நார்த்-இண்டியன் ஹிந்திவாலாக்களிடம் என்பதாலேயே முட்டிக்கொண்டது. கோவையின் ஒரே ஒரு குறை சம்பளம். 2000 ரூபாயே அதிகம் என்று எண்ணும் முதலாளிகளே அங்கு அதிகம். இப்போதும் பெரிய மாற்றம் இல்லைதான். மதனிடம் ஃபோன் செய்து சென்னை வருவதைச் சொன்னேன். அவனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. அப்போது தான் அவனுக்கு அந்த யோசனை வந்தது. ”எப்படியோ சென்னை தான்னு ஆயிடுச்சு. அப்போ நீ ஏன் என் கம்பெனிலயே சேரக்கூடாது? நீ முதல்ல உன் ரெசியூமை எனக்கு அனுப்பு” என்றான். அவன் அப்பொழுது பைப்பிங் எஞ்சினியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தான். மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் முக்கியமான துறை அது. அதில் எப்படி நுழைவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தபோது, மதனால் அந்த வாய்ப்பு வந்தது. அது என் வாழ்க்கையையே மாற்றியது. நண்பர்களின் அருமையை நான் உணர்ந்த நேரம் அது. மறுநாள் மதன் ஃபோன் செய்தான். “..தா, கம்பெனில பேசிட்டேன். ஓகேன்னு சொல்லிட்டாங்க. நீ அடுத்த வாரம் மண்டே இங்க வந்திடு.” என்றான். பழனி தங்க இடம் கொடுக்க, மீண்டும் சென்னைக்கு பயணமானேன். திங்கட்கிழமை மதனின் ஆஃபீஸிலேயே அவனை நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்தேன். “என்னடா இப்படி பன்னி மாதிரி ஊதிட்டே?” என்றேன். “உஷ்..இங்க நாந்தான் சீனியர் எஞ்சினியர். மத்தவங்க முன்னாடி கேவலமாப் பேசாத. வா, என் சீட்டுக்குப் போகலாம்” என்று உள்ளே அழைத்துச் சென்றான். என்னை அவன் சீட்டில் உட்கார வைத்துவிட்டு, கம்பெனி டைரக்டரைப் பார்க்கச் சென்றான். திரும்பி வந்து “மாப்ளே, டைரக்டரு உன்னை இண்டர்வியூ பண்ணனுங்காரு. கூப்பிடுவாங்க. ரெடியா இரு” என்று குண்டைப் போட்டன். “டேய், வேலை ரெடியா இருக்குன்னுதானே சொன்னே? இப்போ இண்டர்வியூங்கிறே?” என்றேன். “அவர் கேட்குறது தெரிஞ்சா பதில் சொல்லு..ரிசல்ட் என்ன ஆனாலும் நான் பேசிக்கிறேன். கவலைப்படாதே” என்றான். எப்படிக் கவலைப்படாமல் இருப்பது? எனக்கு சென்னையில் வேலை கொடுத்த கம்பெனிக்கு சின்சியராக ஃபோன் செய்து “ஐயா, எனக்கு வேறு வேலை கிடைத்துவிட்ட காரணத்தால், என்னால் ஜாயிண்ட் செய்ய முடியாது” என்று சொல்லி இருந்தேன். இப்போது நம்ம நிலைமை ’உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா-ன்னு ஆயிடுமோன்னு பயம் வந்துவிட்டது. “அப்புறம் முக்கியமான விஷயம்..சேலரி ரொம்ப டிமாண்ட் பண்ணாதே. என்ன தர்றாரோ, அதை ஒத்துக்கோ. நீ முதல்ல வேலை கத்துக்கணும். அது தான் முக்கியம். இங்க எனக்கே பதினைஞ்சாயிரம் தான். அதனால உனக்கு மேக்ஸிமம் பத்தாயிரம். ஏழாயிரம், எட்டாயிரம்னாலும் ஒத்துக்கோ” என்று அட்வைஸ் செய்தான் மதன். கொஞ்ச நேரம் கழித்து உள்ளே அழைத்தார்கள். நம்மிடம் உள்ள நல்ல பழக்கம் ஒரு விஷயம் தெரியாது என்றால் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வது.இண்டர்வியூவில் அவர் கேள்வி கேட்கக் கேட்க பெரும்பாலும் நான் ஒத்துக்கொண்டே வந்தேன். கடைசியில் ’சும்மா நொய் நொய்னு கேள்வி கேட்காதய்யா’என்பதை “எனக்கு பைப்பிங் பத்தி ஒன்னும் தெரியாது. சொல்லிக் கொடுத்தா கத்துக்குவேன்”- என்று டீசண்டாகச் சொன்னேன். “சரி, சேலரி என்ன எதிர்பார்க்குறீங்க?” என்றார் டைரக்டர். நண்பனின் அட்வைஸ் ஞாபகத்தில் நிற்க, “கம்பெனி ஸ்டேண்டர்டு என்னவோ அதுப்படி கொடுங்க சார். போதும்” என்றேன். “ஓகே.உங்க எக்ஸ்பீரியன்சுக்கு நீங்க எதிர்பார்க்குறதை எங்களால கொடுக்க முடியாது. இப்போதைக்கு பதினைஞ்சாயிரம் கொடுக்கிறேன். ஒரு வருசம் கழிச்சு உங்களை பெர்மனண்ட் ஆக்கும்போது, சேலரி இன்க்ரீஸ் பண்ணுறேன்” பதினைஞ்சாயிரமா என்று அதிர்ச்சியாகி உட்கார்ந்திருந்தேன். அத்தியாயம் - 24 இண்டர்வியூ முடிந்து வெளியே வந்ததும் மதனிடம் ஓடினேன். “மாப்ளே, செலக்ட் பண்ணீட்டாருடா” என்றேன். “நாந்தான் அப்பவே சொன்னேன்ல. நீ தான் பயந்துட்ட” “ஆமாண்டா..அப்புறம் சேலரி எவ்ளோ தெரியுமா? பதினைஞ்சாயிரம்” என்று 32 பல்லும் தெரிய சிரித்தபடியே கூறினேன். “பத்..பதினைஞ்சாயிரமா? என்னடா சொல்றே?” “ஆமாண்டா..அது பெரிய ஜோக்கு..நீ நல்லவேளை ஒன்னும் கேட்க வேண்டாம்னு சொன்னே. இல்லேன்னா நானும் கேணத்தனமா எட்டாயிரம் கொடுங்கன்னு கேட்டிருப்பேன்.” “ஓ..பதினைஞ்சாயிரம் தர்றேன்னு சொல்லிட்டாரா?” “ஆமாண்டா..அவரு நல்லவரா கேணையராடா?” “ம்..உனக்கு வேலை குடுத்தா நீ இதுவும் கேட்பே..இன்னமும் கேட்பே. உனக்கு பைப்பிங்ல எக்ஸ்பீரியன்ஸ் இல்லேன்னு சொன்னல்ல?” “ஆமாடா.” “அப்படியுமா பதினைஞ்சாயிரம்னு சொன்னாரு? இங்க எக்ஸ்பீரியன்ஸ் பெர்சன் எனக்கே அவ்ளோ தானடா” “அதுக்கு நான் என்னடா செய்ய? சரி, ட்ரீட்டுக்கு எங்க போலாம் சொல்லு” “ட்ரீட்டா..சொல்றேன்..இப்போ லஞ்சுக்கு வீட்டுக்குப் போறேன். வீட்ல கேட்டுட்டுச் சொல்றேன்”. ‘கம்பெனியில் ரொம்ப நாளா இருக்குறவனுக்கு ஒன்னும் செய்யாம விடுறதும், புதுசா வந்தவனுக்கு அள்ளிக் குடுக்குறதும் நிறையக் கம்பெனிகள் பண்றது தான். ஆனால் இந்தக் கம்பெனியும் அப்படித் தானா?’ என பொறுமியவாறே வீடு போய்ச் சேர்ந்தான் மதன். “என்னங்க, உங்க ஃப்ரெண்டுக்கு வேலை என்னாச்சு? செலக்ட் பண்ணீட்டாங்களா?” “ம்..பண்ணிட்டாங்க..பண்ணீட்டாங்க” “அதை ஏன் இவ்வளவு கடுப்பாச் சொல்றீங்க? என்னாச்சு?” “அவனுக்கு சம்பளம் எவ்ளோ ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க தெரியுமா?” “எவ்வளவு?” “பதினைஞ்சாயிரம்” “பதினைஞ்சா? உங்களுக்கே அவ்ளோதானே?” “ம்..அதான் கடுப்பா இருக்கு. எத்தனை நாள் நைட்டெல்லாம் உட்கார்ந்து வேலை செஞ்சிருக்கேன். இவனை எனக்கு ஜூனியராத் தான் எடுத்திருக்காங்க. ஆனா, சம்பளம் மட்டும் எனக்கு ஈகுவலா?” “ஓ..சரி, அதுக்கு ஏன் கடுப்பாகுறீங்க? நம்ம ப்ளான் என்ன?” மதன் பேசாமல் இருந்தான். ஜமீலா தொடர்ந்தாள். “சீக்கிரம் யு.கே.வுக்கு விசா வாங்கிட்டு, ஃபாரின்ல செட்டில் ஆகுறது தானே நம்ம ப்ளான்? உங்களைக் கம்பெனி உடனே ரிலீவ் பண்ணாது. பிரச்சினை பண்ணும். அதனால உங்க அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆள் இருந்தா, அவனைக் கைகாட்டிட்டு நாம கிளம்பிக்கலாம். எவனோ ஒருத்தன் வர்றதுக்கு உங்க ஃப்ரெண்டு வந்தா நல்லதுன்னு தானே வேற வேலை கிடைச்ச ஆளை இங்க கூட்டிட்டு வந்தீங்க. அப்புறம் என்ன?” ”இல்லைம்மா..காலேஜ்ல நான் நல்லாப் படிக்கிற பையன் இல்லே. இவன்லாம் மாங்கு மாங்குன்னு படிப்பான். ஆனா என்ன பிரயோஜனம்? இன்னைக்கு அவனுக்கு வேலை வாங்கித் தர்ற அளவுக்கு நான் இருக்கேன், அதுவும் பைப்பிங்ல. இதெல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ்க்கும் தெரியணும்னு தான் அவனை இங்க வரவைச்சேன். நான் பழைய மதன் இல்லேன்னு எல்லாரும் புரிஞ்சுக்கணும். ஆனா இப்போ இவனுக்கும் என் சேலரின்னா எப்படி? இவனே என்னை மதிக்க மாட்டானே?” “நீங்க தானே சொல்லி இருக்கீங்க? செங்கோவிக்கு யாரும் இல்லே, பாவம். ரொம்பக் கஷ்டம்னு. இல்லாதவங்களுக்கு உதவி செய்றது நல்லது தானே? நாம இங்க இருக்கப் போறது மேக்ஸிமம் ஆறு மாசம் தானே? நம்மகிட்ட உதவி வாங்குனவங்க, நம்மை விட நல்லா இருந்தா, அது நமக்குப் பெருமை தாங்க.” ஜமீலாவின் பேச்சு, மதனின் கோபத்தை ஆற்றியது. “நான் செங்கோவியை ஒன்னும் சொல்லலை. கம்பெனி ஏன் இப்படிப் பண்ணுதுன்னு தான் கோவம்..சரி, நைட்டு ட்ரீட்டுக்கு கூப்பிட்டான். நீயும் வா. போய்ட்டு வருவோம்” ஜமீலாவும் புன்சிரிப்புடன் “சரி” என்றாள். மதன் உடனே அங்கிருந்து ஃபோன் செய்தான். நான் எடுக்காமல் கட் செய்தேன். “ஏன் கட் பண்றான்? சாப்பிட்டுக்கிட்டு இருப்பானோ?” என்று மதன் சொல்லும்போதே அவன் மொபைல் ரிங்கியது. “ஹலோ..டேய், நீயா? ஏண்டா கட் பண்ணே?” “மாப்ளே, கம்பெனில ஜாயிண்ட் பண்ணப்புறமும் நம்ம காசுல ஃபோன் பேசலாமா? அதான் கட் பண்ணிட்டு, ஆஃபீஸ் லேண்ட்லைன்ல இருந்து கூப்புடுதேன்.” “அடப்பாவி, நைட்டு ட்ரீட் சொன்னேல்ல. போவோம். ஜமீலாவும் வர்றா” “ஓ..சரி.சரி. அப்புறம் வரும்போது மறக்காம காசு கொண்டு வந்துடு” “காசா? எதுக்கு?” “ஓட்டல் பில் கட்ட வேண்டாமா? ஏண்டா நானே இப்பதான் வேலைல ஜாயிண்ட் பண்ணி இருக்கேன். காசு எங்கிட்ட எப்படி இருக்கும்?” “இதுக்குப் பேரு ட்ரீட்டாடா?” “அப்புறமா தர்றேன்பா” ஜமீலா இடை மறித்து ”என்ன?” என்றாள். “காசில்லையாம். நான் பில் பே பண்ணனுமாம்” ஜமீலா சிரித்துக்கொண்டே “சரி, அவரை நைட் இங்க சாப்பிட வரச்சொல்லுங்க” என்றாள். அத்தியாயம் - 25 அன்று இரவு மதனின் வீட்டிற்குச் சென்றேன். “வாங்கண்ணா” என்று கதவைத் திறந்த ஜமீலா சொன்னாள். அப்பாவித் தனமான முகமும், கள்ளங்கபடமற்ற சிரிப்புமாக நின்றாள். “மதன் வீடு இதானே?” என்றேன். “ஆமாண்ணா, உள்ள வாங்க” “வந்துட்டானா?” என்றபடியே மதன் ஹாலுக்கு வந்தான். எனக்கு யாரையாவது புதிதாகப் பார்த்தால் பேச்சு வராது, பேக்கு மாதிரி முழிப்பது நம் வழக்கம். அங்கும் அப்படி முழித்தவாறே நின்றிருந்தேன். “உள்ளே வாங்கண்ணா, உட்காருங்க” என்றாள் ஜமீலா. உள்ளே நுழைந்தேன். “டேய் நாதாரி, இன்னைக்கு ட்ரீட்டுல இருந்து நீ தப்பிச்சிருக்கலாம். ஆனா சேலரி வந்ததும் கண்டிப்பா எங்களை வெளில கூட்டிப் போகணும்” என்றான் மதன். “சரிடா” என்று நல்ல பிள்ளையாகச் சொன்னேன். “இவன் இப்படித்தான் ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி முதல்ல இருப்பான். ஹாஸ்டல்ல ஃபர்ஸ்ட் பார்த்தப்போ நானும் இவனை பூச்சின்னு நினைச்சுட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சது..” “சும்மா இருடா” என்றேன். “நம்ம வீட்டுல என்னண்ணா கூச்சம்? சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்றாள். “அவன் ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டிடுவான். எடுத்து வை” என்றான் மதன். பல வருடங்களுக்கு முன் பார்த்தது, இன்னும் இதை ஞாபகம் வைத்திருக்கின்றானே என்று நெகிழ்ச்சியாக இருந்தது. எனக்காக ரெடியான கமகம பிரியாணி பரிமாறப்பட்டது. “பாய் வீட்டுப் பிரியாணின்னாலே தனி டேஸ்ட் தான். அது இங்கயும் நல்லாவே தெரியுது” என்றேன். “ஆமாண்டா..ரம்ஜானப்போ ஹாஸ்டல்ல ஹிசாம் சையது கொண்டு வர்ற பிரியாணிக்கு அடிச்சுக்குவமே..ஹா..ஹா” பேசிச் சிரித்தவாறே சாப்பிட்டு முடித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நானும் சகஜமாகப் பேச ஆரம்பித்து இருந்தேன். ஜமீலாவின் ஊர் பற்றியும் படிப்பு பற்றியும் கேட்டுக்கொண்டேன். பிறகு மதன் தனது யு.கே.பிளானைச் சொன்னான். “விசா அப்ளை பண்ணீட்டேண்டா. இன்னும் ரெண்டு மாசத்துல விசா இண்டர்வியூ வந்திடும். எப்படியும் அடுத்த ரெண்டு மாசத்துல கிளம்பிடுவேன். அதுக்குள்ள கத்துக்கோ.நான் போனப்புறம் டிபார்ட்மெண்ட்டே உன் கைல தான் இருக்கணும்.பார்த்துக்கோ” என்றான். ”சரிடா” என்றேன். கப்பல் கட்டுமானம் பற்றியும் பைப்பிங் டெக்னாலஜி பற்றியும் சில புத்தகங்களைக் கொடுத்தான். வாங்கி விட்டு வெளியேறினேன். உருப்படாமல் போய் விடுவான் என்று நினைத்த நண்பன், நல்ல நிலையில் நல்ல வாழ்க்கைத்துணையுடன் வாழ்வதைப் பார்த்த சந்தோசத்துடன் வீடு திரும்பினேன். ”நீ சாப்பிடும்மா..நான் மெயில் செக் பண்ணிக்கிறேன்” என்றவாறே மதன் பெட் ரூமிற்குள் நுழைந்தான். நெட் கனென்க்ட் செய்ததும் யாஹூ மெசேஞ்சர் தானாக ஓப்பன் ஆகியது. ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தான். அப்போது தான் iamyourjeni ஐடி ஆன்லைனில் இருப்பதைப் பார்த்தான். அது ஜெனிஃபரின் ஐடி. இந்த ஐடியை அவள் யூஸ் பண்ணி பல வருசம் இருக்குமே. இப்போது எங்கே இருக்கிறாள் என்று கேட்போமா? ச்சே..நமக்கெதுக்கு அது? எப்படியோ அந்தச் சாக்கடையில் விழாமல் தப்பித்தாகி விட்டது. இப்போது அவள் எப்படி இருந்தால் என்ன? பேசுவாளா? “கொஞ்சம் பிரியாணி எடுத்து வைக்கிறேன். தூங்கும்போது சாப்பிட்டுக்கோங்க” என்று ஜமீலாவின் குரல் ஹாலிலிருந்து கேட்டது. பக்கென்று ஆகியது மதனுக்கு. “இ..இல்லே..வேண்டாம்” என்றான். சொன்னாலும் கேட்க மாட்டாள் என்று தெரியும். ’இப்படிப்பட்ட மனைவி இருக்கும்போது..’என்று யோசிக்கும்போதே “Hi Madhan ” என்று ஜெனிஃபரிடம் இருந்து மெசேஜ் வந்தது. “How r u? Long time no see” அடுத்த மெசேஜ் இறங்கியது. மதன் ஆடிப் போனான். அத்தியாயம் - 26 “Hi..fine” என்றான். “வாவ்..என்னால் நம்பவே முடியலை. ஜஸ்ட் பிங் பண்ணேன்.” “ஓ” “மதன். எங்கே இருக்கே இப்போ?” “சென்னை..நீ?” “பெங்களூர்” “அங்க ஒர்க் பண்றயா ஜெனி?” “ஆமா வீட்ல..ஹவுஸ் வைஃப்” “கல்யாணம் ஆயிடுச்சா?” “ஆமா.வீட்ல ரொம்ப கட்டாயப்படுத்தி பெரிய ரகளை பண்ணி..ஹும்..அது பெரிய கதை. அப்புறம் சொல்றேன்” ”ஹஸ்பண்ட் என்ன பண்றார்?” “அவன் இங்க ****ல வேலை பார்க்கான்.” “ஓ..பெரிய கம்பெனி ஆச்சே..லைஃப் எப்படிப் போகுது?” “இப்போக் கூட ஆஃபீஸ்ல தான் இருக்கான்…வேஸ்ட்” “அவனா?” “ம்…அப்படியும் சொல்லலாம்..எனக்கு அவனைப் பிடிக்கலை” “ஏன்?” “உன்னால தான்” “என்னாலயா..ஏன்?” “நான் அவனை உங்கூடக் கம்பேர் பண்ணேன்..அதான்” ஜமீலா தட்டைக் கழுவும் சத்தம் கேட்டது. மதனுக்கு கை நடுங்கியது. “ஜெனி, நான் அவசரமா வெளில போறேன்..அப்புறமா வர்றேன்” ”ஹே..வெய்ட்..வெய்ட்..உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” மதன் ஒரு நிமிடம் யோசித்தான். “இல்லை’” என்று டைப் செய்து எண்டரைத் தட்டினான். மெசேஞ்சரில் இருந்து வெளியேறினான். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் அவள் மாறவே இல்லையா? எப்படி இவ்வளவு சகஜமாக அவளால் பேச முடிகிறது? ஜமீலா பிரியாணியுடன் வந்து கொண்டிருந்தாள். ச்சே, இவ எங்கே? அந்தக் கழிசடை எங்கே? இனி அவகூட சாட் கூடப் பண்ணக்கூடாது என்று நினைத்துக் கொண்டான் மதன். அடுத்த நாள் ஆஃபீஸில் எனக்கு ஒரு ஆப்பு ரெடியாகி இருந்தது. முதல் நாள் இண்டர்வியூ நடந்து, அன்றே நான் கடமை உணர்ச்சியுடன் வேலையைத் துவங்கி விட்டாலும் அப்பாயின்மெண்ட் லெட்டர் அடுத்த நாள் தான் தருவோம் என்று சொல்லி இருந்தார்கள். இன்று ஹெச்.ஆர். மேடம் ஃபோனில் அழைத்தார். அவர் பெயர் சுகீலா. பார்ப்பதற்கு ஷகீலா மாதிரியே இருந்ததால் அவர் பெயரின் முதல் எழுத்துடன் ‘சுகீலா’ என்று அங்கு வேலை செய்வோரால் செல்லமாக அழைக்கப்பட்டவர். அவரும் கேரளாவைச் சேர்ந்தவரே. அவர் ரூமிற்குள் நுழைந்தேன். உள்ளே பாபு நின்று கொண்டிருந்தான். பாபு குவாலிட்டி கண்ட்ரோல் எஞ்சினியர். பார்த்தவுடன் சிரித்தான். நானும் சிரித்தபடியே மேடத்தைப் பார்த்தேன். “செங்கோவி, இந்தாங்க உங்க அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர். டிரக்டர் கொடுக்கச் சொன்னார். வெல்கம் டூ அவர் கம்பெனி” என்று சிரித்தார். நான் அப்பாயின்மெண்ட் லெட்டரிலேயே கண்ணாக இருந்ததால், அவர் ‘கம்பெனி’ பற்றி கண்டு கொள்ளவில்லை. அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன். கவரைப் பிரித்தேன். “தங்களை ஒரு வருடம் காண்ட்ராக்ட்டில் பைப்பிங் எஞ்சினியராக எடுப்பதில் கம்பெனி மகிழ்ச்சி கொள்கிறது. காண்ட்ராக்ட் எம்ப்ளாயீ என்பதால் பி.எஃப், லீவ் போன்ற சலுகைகள் உங்களுக்குக் கிடைக்கப்பட மாட்டாது. ஒரு வருடத்திற்குப் பின் தேவைப்பட்டால் காண்ட்ராக்ட் நீட்டிக்கப் படும்’ என்று இருந்தது. “மதன்ன்ன்ன்ன்ன்” என்று அலறிய படியே ஓடினேன். மதனும் லெட்டரை வாங்கிப் பார்த்தான். “என்னடா இப்படிப் போட்டிருக்காங்க?” என்றான். ”அதைத் தான் நானும் கேட்கேன். ஏண்டா, ஒரு பெர்மனெண்ட் ஜாப் கிடைச்சுச்சு. அதை விட்டுட்டு இங்க வந்தா, காண்ட்ராக் ஜாப்-ஐக் கொடுக்காங்க. நீ உன் டைரக்டர்கிட்டப் பேசு” என்றேன். “இல்லைடா..அவர் சிடுமூஞ்சி. இந்த வேலை கொடுத்ததே அதிசயம். நீ ஏண்டா கவலைப்படுறே. தனியார் கம்பெனில ஏதுடா பெர்மனெண்ட் ஜாப்? அது சும்மா பேருக்குத் தானே? ஒரு வருசம் வேலை பாரு. பைப்பிங் கத்துக்கோ. அப்புறம் எங்கயாவது ஜூட் விட்டுடு.இவங்களே அப்போ உன்னை பெர்மனெண்ட் ஆக்குவாங்க பாரு” என்றான். சிறிது நேர விவாதத்திற்குப் பின் நான் அமைதி ஆனேன். ”சரி, வா..டீ குடிப்போம்” என்று பாண்ட்ரிக்கு கூட்டிப் போனான். அங்கே சுகீலா நின்று கொண்டிருந்தார். கூடவே பாபுவும். “என்ன மதன், உங்க ஃப்ரெண்ட்டுக்கு சந்தோசம் தானே? ஒன்னும் குழப்பம் இல்லையே?” என்றார். “இல்லை மேடம்” என்றான். சுகீலா சிரித்த படியே வெளியேறினார். பாபுவும் கிளம்பினான். “என்னடா பாபு, காலைலயேவா?” என்றான் மதன். சிரிப்பை உதிர்த்து விட்டு நகன்றான் பாபு. “டேய், இவன் குவாலிட்டி எஞ்சினியர்னு தானே சொன்னே?” “ஆமா” “அப்புறம் ஹெச்.ஆர்ல என்ன பண்றான்? “ “அவன் இஞ்சினியரிங்குக்கு மட்டும் குவாலிட்டி பார்க்கலை. சுகீலாவுக்கும் அப்பப்போ குவாலிட்டி செக் பண்ணுவான்” என்றான் மதன். அத்தியாயம் - 27 “ஹெச்.ஆர் மேடத்தையேவா?” என்றேன் “அவ ஹெச்.ஆரே இல்லைடா..ரிசப்சனிஷ்ட்டா வந்தா. பல தலைகளை கவுத்திட்டு, இப்போ ஹெச்.ஆர் ரூம்ல உட்கார்திருக்கா. இவன் பாதி நேரம் அவ பின்னாடியே தான் அலைவான்..நீ உள்ள போனப்போ என்ன பண்ணிக்கிட்டு இருந்தான்?” “பேசிகிட்டு இருந்தான்” “நீ குடுத்து வச்சது அவ்வளவு தான். நாங்கள்லாம் நிறையப் பார்த்திருக்கோம். நீயும் பார்ப்பே” என்றான் மதன். அன்று இரவு நான் எனது ரூமில் இருந்த போது மதன் வந்தான். “செங்கோவி, காய்ச்சல் மாதிரி இருக்கு. வா, மருந்து வாங்கிட்டு வருவோம்” என்று அழைத்தான். அவன் வீட்டிற்கு அடுத்த தெருவிலேயே நாங்கள் தங்கி இருந்த வீடும் இருந்தது. இருவரும் கிளம்பினோம். ரோட்டில் போய்க்கொண்டிருக்கும்போதே சட்டென்று ரெஸ்ட்டாரண்ட் பார் ஒன்றில் நுழைந்தான் மதன். “என்னடா இங்க வந்துட்ட?” ”காய்ச்சல்னு சும்மா சொன்னேன். இல்லேன்னா நீ இங்க வர மாட்டியே. உட்காரு” என்றவாறே புரியாத பெயர்களைச் சொல்லி ஆர்டர் செய்தான். “உனக்கு பெப்ஸியா கோக்கா?” என்றான். “7 அப்” என்றேன். பேச்சு கல்லூரி நாட்களைப் பற்றித் திரும்பியது. “மாப்ளே, நல்லா எஞ்சாய் பண்ணேண்டா காலேஜ் லைஃபை. நீங்க எல்லாம் சின்சியராப் படிச்சது தாண்டா மிச்சம். இப்போப் பாரு,எல்லாரும் ஒரே இடத்துல தான் உட்கார்ந்திருக்கோம்” “ஆமா, ஜெனிஃபர்கூட நல்லாத் தான் எஞ்சாய் பண்ணே” என்றேன். ”ஹா..ஹா..கடைசில எல்லாத்தையும் முடிச்சிட்டு கழட்டியும் விட்டுட்டேன்” என்ரான் மதன். ”ம.., நீ எங்க கழட்டி வி ட்டே..உங்கப்பா அவ அம்மாவை மிரட்டுன மிரட்டுல அவ உன்னை விட்டு ஓடுனா” என்றேன். “என்னடா சொல்றே?” நடந்ததைச் சொன்னேன். அவன் அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தான். “நல்ல காரியம் பண்ணீங்கடா..இல்லேன்னா நானும் அந்தப் புதைகுழில விழுந்திருப்பேன். ஜமீலா மாதிரி ஒரு பொண்ணு எனக்குக் கிடைச்சிருக்குமா?” “ஆமா மதன். உன் யோக்கியதைக்கு அந்தப் பொண்ணு ரொம்ப அதிகம். இனிமேலாவது ஒழுங்கா இருடா” “டேய், நான் அவளை எப்படி வச்சிருக்கேன் தெரியுமா? அவ என்ன கேட்டாலும் வாங்கித் தர்றேன். அவ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கிறேண்டா” “எப்படியோ நல்லா இருந்தாச் சரிதாண்டா மாப்ளே” என்றேன். சரக்கு அத்தனையும் தீர்ந்து போயிருந்தது. பேசியவாறே என்னை என் ரூமில் விட்ட பின், தன் வீடு நோக்கி நடக்கத் துவங்கினான் மதன். ‘அப்போ ஜெனிஃபர் அவளாவே என்னை விட்டுப் போகலையா? இவங்க மிரட்டுனதால தான் என்னை விட்டுப் போனாளா? ஒருவேளை இவங்க குறுக்க வரலேன்னா என்கூடவே இருந்திருப்பாளோ?’ என மதன் யோசிக்க ஆரம்பித்தான். ‘சாட்டில் அவள் ஏன் வந்தாள்? இன்னும் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாளா? என்ன வேண்டும் அவளுக்கு? பிடிக்காம கட்டிக்கிட்டேன்னு சொன்னாளே? அடுத்த முறை சாட்டில் வந்தால் கேட்க வேண்டும், பாவம்’ என்று நினைத்துக் கொண்டான் மதன். அத்தியாயம் - 28 அடுத்த நாள் எழும்போது ஏதோவொரு வித்தியாசத்தை உணர்ந்தான் மதன். காய்ச்சல் போன்று உடம்பு கொதித்தது. மேலே ஹீட்டுக்கு வந்த கொப்புளம் போன்று உடம்பில் ஏதோ இருந்தது. ”ஏம்ம்மா” என்று அடுப்படியில் இருந்த ஜமீலாவை அழைத்தான். “என்ன?” என்று கேட்டுக்கொண்டே வந்தவள் அவனைப் பார்த்ததும் திகைத்தாள். “என்னங்க இது முகமெல்லாம்?” என்றாள். கண்ணாடி பார்த்ததும் புரிந்து போயிற்று ‘அம்மை’ போட்டுள்ளது என! சட்டையைக் கழற்றி செக் பண்ணியதில் உடம்பெல்லாம் அம்மைக் கொப்புளங்கள் இருந்தன. உடனே எனக்கு ஃபோன் செய்தான். “ஓ…, இன்னுமாடா தூங்குறே..இங்க உடனே வா” ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்து நானும் கிளம்பிப் போனேன். மதனைப் பார்த்ததும் விசயம் புரிந்தது. ஆஸ்பத்திரி போக ரெடியாக இருந்தான். “இதுக்கு ஹாஸ்பிடல் போகக்கூடாதுன்னு சொல்வாங்களே?” என்றேன். ”அது உங்க பாட்டி காலத்துல. போய் ஆட்டோ கூட்டி வா” என்றான். ஜமீலா பயந்து போயிருந்தாள். “இதுக்கு ஏங்க பயப்படுறீங்க? இதெல்லாம் ஒன்னுமே இல்லை. மேக்ஸிமம் 10 நாள்ல அதுவா போயிடும். எனக்கு நைன்த் படிக்கும்போது வந்திருக்கு. ஆனா நீங்க அவன் பக்கத்துலயே போகாதீங்க. ஏற்கனவே வந்ததால எனக்கு திரும்ப வராது. எதுன்னாலும் நான் பார்த்துக்கறேன்” என்றேன். ”சரிடா, மருந்தெல்லாம் எடுத்துக்கோ. நான் ஆஃபீஸ் கிளம்புறேன். வேறெதாவது வாங்கிட்டு வரணுமா?” என்றேன். “இல்லைடா” “ஹெச்.ஆர்.மேடத்துகிட்ட சொல்லணுமா?” “அய்யோ..சுகிலான்னு சொல்லுடா.ஹெச்.ஆருக்குன்னு ஒரு மரியாதை இல்லையா? இவளை அப்படிச் சொல்லாத. போய் சுகீலாகிட்டயும் நம்ம மேனேஜர்கிட்டயும் சொல்லிடு. நானும் அப்புறமா கால் பண்றேன்” என்றான். ஆஃபீஸில் மேனேஜரிடம் விசயத்தைச் சொன்னேன். பாம்பைக் கண்டவன் போல் பதறினார். “ஆஃபீஸ் பக்கம் அவரை வர வேண்டாம்னு சொல்லிடுங்க. மூணு தண்ணி ஊத்துனப்புறம் வந்தாப் போதும்” என்றார். கொஞ்ச நேரம் கழித்து சுகீலா ரூமிற்குப் போய்ப் பார்த்தேன். ஆளில்லை. பாபுவிடம் கேட்போம் என்று அவன் சீட்டிற்குப் போனேன். அங்கு அவனும் இல்லை. அருகில் இருந்தவனிடம் கேட்டேன். “பாத் ரூம் போனான்.” யாராவது போனால் நமக்கும் வந்திடுமே. எனவே நானும் பாத்ரூம் பக்கம் போனேன். அது ’சிங்கிள்’ பாத்ரூம் என்பதால் வரட்டும் என வெளியே நின்று கொண்டேன். பாபு கதவைத் திறந்துகொண்டு வந்தான். பார்த்ததும் வழக்கமான புன்னகை. “பாபு, சுகீலா மேடத்தை எங்கே?” என்றேன். தனக்குப் பின்னால் கை காட்டினான். பார்த்தால், சுகீலா அதே பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். பாபு நகர்ந்து சென்றுவிட்டான். நான் பேயறைந்தது போல் ஆனேன். “என்னா செங்கோவி, மதனுக்கு சிக்கன் போக்ஸா? கால் பண்ணார். நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க. ஓஃபீசுக்கு இப்போதைக்கு வர வேண்டாம்” என்று ஹெச்.ஆர்.மிடுக்கு குறையாமல் பேசி விட்டு அகன்றார் சுகீலா. அந்த பாத்ரூமிற்குள் போக மனமில்லாமல் அப்படியே திரும்பினேன். அடுத்த வந்த 10 நாட்களும் மதனின் மனதைப் புரட்டிப் போட்டன. ஜமீலா அன்பை மழையாகப் பொழிந்தாள். குழந்தையைப் பார்ப்பது போன்று அவனைப் பார்த்துக் கொண்டாள். மதன் மெயில் செக் பண்ணியபோது ஜெனிஃபரிடம் இருந்து மெயில் வந்திருப்பதைப் பார்த்தான். “ஹாய் மதன், உங்கூட சாட் பண்ணப்புறம் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா? காட் இஸ் கிரேட். எனக்கு உன்னைப் பார்க்கணும்போல இருக்குப்பா. பெங்களூர் ஒரு தடவை வாயேன். இங்க ரெண்டு மூணு நாள் தங்கற மாதிரி வா. இங்க நிறைய நல்ல ஹோட்டல்ஸ் இருக்கு. நீ எங்காவது தங்கிக்கலாம். நாம மீட் பண்ணுவோம். பகல்ல நான் ஃப்ரீ தான். உன்கூட நிறையப் பேசணும். மதன், I still love you.” மதன் அந்த மெயிலை டெலீட் செய்தான். அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஜமீலாவைப் பார்த்தான். அவள் அருகில் சென்று படுத்தபடியே அவளைக் கொஞ்ச நேரம் பார்த்தபடி இருந்தான். பல வித சிந்தனைகள் மனதிற்குள் ஓடியது. ‘எனக்கு நீ போதும்மா. வேற யாரும் வேண்டாம். எனக்கு எதனாலயோ மோசமா அலைபாயுற மனசை ஆண்டவன் கொடுத்திட்டான். அதைக் கட்டுப்படுத்த நீ என் பக்கத்துல இருந்தாலே போதும். என்னை விட்டு விலகிடாதே ஜமீலா. என்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்து. என்னை ஆயுசுக்கும் நல்லவனா வாழ வை. தாயே..என் தாயே..என்னைக் காப்பாத்து என் தாயே’   அத்தியாயம் - 29 மதனுக்கு அம்மை சரியான இரண்டு நாளில் எனக்கு அம்மை போட்டது. ”ஒரு தடவை வந்தா இன்னொரு தடவை வராதுன்னு சொல்வாங்களே” என்று மதனிடம் புலம்பினேன். “அப்போ போன தடவை உனக்கு சரியா அம்மை போடலையோ என்னவோ..மிச்சம் ஏதாவது இருந்திருக்கும்” என்றான் மதன். ஜமீலா தான் குற்றவுணர்ச்சியில் தவித்தாள். “எங்களால தானே இப்படி ஆச்சு?” என்று வருத்தப்பட்டாள். “அட, இதுல என்னங்க இருக்கு. அப்புறம் இன்னும் 10 நாளைக்கு இந்தப் பக்கம் வராதீங்க. மிச்சம் இருக்குறது நீங்க தான். எதுவா இருந்தாலும் இவன்கிட்ட சொல்லுங்க. போதும்” என்றேன். மதனும் ஆமோதித்தான். ஆனாலும் ஜமீலா கேட்கவில்லை. மூன்று வேளைக்கு சாப்பாடும் அவளே எடுத்து வந்தாள். தனியே வளர்ந்த எனக்கு ‘சகோதர’ உணர்வின் அர்த்ததை புரிய வைத்தாள். மோசமான திட்டுக்களைக் கூடத் தாங்கும் என்னால் அன்பைத் தாங்க முடிவதில்லை. மதனும் ஜமீலாவும் காட்டிய அன்பில் அழுதேன். அவர்கள் இல்லையென்றால் என்னைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை என்பது புரிந்தது. ஜமீலாவும் அதை உணர்ந்தாள். “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்கண்ணே. இப்படியே எத்தனை நாளுக்கு இருப்பீங்க?” என்றாள். நன்றாக இருக்கும்வரை யார் தயவும் தேவையில்லை தான். ஆனால் கஷ்டம் என்று வந்துவிட்டால், தோள்சாய ஒரு ஒரே ஒரு ஆளாவது தேவை என்பதை உணர்ந்தேன். அதில் இருந்த முதல் சிக்கல் வேலை. ஒரு வருடக் காண்ட்ராக்ட் வேலையை நம்பி, யார் பெண் கொடுப்பார்கள்? எனவே ஆறு மாதத்தில் இந்த வேலையை பெர்மனெண்ட் ஆக்குவது அல்லது வேறு வேலைக்குத் தாவுவது என்ற முடிவுக்கு வந்தேன். மதனும் அதை ஒத்துக்கொண்டான். “எப்படியும் அடுத்த மாசம் எனக்கு யு.கே.விசா கிடைச்சிடும். நான் இன்னும் 2 மாசத்துல கிளம்பிடுவேன். நீயும் அப்புறம் வேற வேலை பார்த்துட்டுக் கிளம்பிடு” “சரிடா..தங்கச்சிக்கு பாஸ்போர்ட் எடுத்தாச்சா?” “இல்லைடா..அட்ரஸ் ப்ரூஃப் எல்லாம் அப்பா வீட்டுக்குத் தான் இருக்கு. போலீஸ் வெரிஃபிகேசன் அங்க தான் போகும். என்ன செய்றதுன்னு புரியலை” “நீ ஊருக்குப் போய் அப்பாவைப் பாரு. அவர் கோபக்காரர் தான். ஆனா உன்னைப் பார்த்தா மனசு இளகிடுவாரு. போ” என்றேன். மதன் தயங்கினான். ஜமீலாவும் வற்புறுத்த மதுரை கிளம்பினான். பல நாட்கள் பார்க்காத மகனைப் பார்த்ததும் மதன் அப்பாவால் அழுகையை அடக்க முடியவில்லை. “ஒரு நிமிசத்துல என்னை தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டியேப்பா. உன் மனசு கோணாம வளர்த்ததுக்கு இதான் பதில் மரியாதையாப்பா” என்று கலங்கினார். மதனும் அழுதான். பாசத்தின் முன் ஜாதிப்பற்று மறைந்தது. “மருமவளைக் கூட்டிட்டு வா. இங்க நம்ம சொந்தக்காரங்க முன்னாடி சிம்பிளா இன்னொருக்கா கல்யாணம் நடத்திடுவோம்” என்றார். சொன்னபடியே சொந்த பந்தம் புடைசூழ கல்யாணத்தை நடத்திக்காட்டினார். பாஸ்போர்ட்டும் அப்ளை செய்தார்கள். மருமகளின் நல்ல குணத்தை சீக்கிரமே புரிந்து கொண்டார். “இனிமே என் பையனைப் பத்திக் கவலை இல்லை. என் மருமவ பாத்துப்பா” என்று சொந்தங்களிடம் சொல்லி மகிழ்ந்தார். ஜமீலாவும் ‘அப்பா..அப்பா” என அவர் மேல் பாசத்தைப் பொழிந்தாள். மாமனாருடன் இணைந்த சந்தோசத்தில் இருந்த ஜமீலாவிற்கு, அடுத்த மாதமே தந்தை இறந்த செய்தி வந்து சேர்ந்தது. ஹார்ட் பேசண்டான அவர் மூன்றாவது அட்டாக்கில் இறந்துவிட்டார் என்றார்கள். தகவல் சொன்னவர்களே ‘நீ இங்கு வரவேண்டாம். அது பிரச்சினையை உண்டாக்கும்’ என்றார்கள். எங்களுக்கும் அதுவே சரியென்று தோன்றியது. ஜமீலாவை அவள் அம்மாவுடம் ஃபோனில் பேச வைத்தோம். அது அந்த இரு பெண்களுக்குமே ஆறுதலாக இருந்தது. யு.கே. விசா இண்டர்வியூ டேட் நெருங்கியது. பேங்க் பேலன்ஸில் குறிப்பிட்ட தொகை வைக்க வேண்டும் என்றார்கள். ஜமீலா தன் அக்கவுண்ட்டில் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்த 2 லட்சம் ரூபாயைக் கொடுத்தாள். மீதி வங்கி லோன் மூலம் திரட்டிக் கொண்டு இண்டர்வியூ அட்டெண்ட் செய்தான். யாரும் எதிர்பாராத விதத்தில் அவனது விசா அப்ளிகேசன் ரிஜெக்ட் ஆனது. மதன் இடிந்து போனான். அத்தியாயம் - 30 காதல் தோல்வி உட்பட எல்லாத் தோல்வியிலும் வருத்தத்தின் அளவு அறிந்தோரின் எண்ணிக்கையுடன் நேரடித் தொடர்பு உடையது. மதன் வெளிநாடு செல்வதையும், என்னை அதற்காகவே கம்பெனிக்குக் கொண்டு வந்ததையும் எல்லோரிடமும் சொல்லி இருந்தான். என் கல்லூரி நண்பர்கள் முதல் எங்கள் மேனேஜர் வரை எல்லோரும் அறிந்திருந்தார்கள். அவர்கள் அனைவரின் முகத்திலும் எப்படி விழிப்பது என்ற கவலையில் விழுந்தான். ஜமீலா ஆறுதலாய் இருந்து அவனைத் தேற்றினாள். ஆறுமாதம் கழித்து மீண்டும் முயல்வோம் என்றாள். நானும் எப்பவும் போல் ‘இதெல்லாம் சப்பை மேட்டரு..விடுடா மாப்ளை. அடுத்துப் பார்த்துக்கலாம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அடுத்த சில மாதங்களில் மதன் தெளிந்தான். எனக்கு என் வேலை பற்றிய கவலை அதிகம் ஆனது. ஒரு வருடம் கழித்து பெர்மனண்ட் செய்வார்களா என்று உறுதியாகத் தெரிந்து கொள்ள விரும்பினேன். மதனிடம் கேட்டேன். “நாம போய்க் கேட்டா பெர்மனண்ட் ஆக்குவோம்னு தான் சொல்வாங்க. அப்புறம் ஒரு வருசம் முடியவும் ஏதாவது கதை சொல்வாங்க. இந்த மேட்டர்ல உண்மையான நிலவரம் சுகீலாவுக்கு நல்லாத் தெரியும். அவகிட்ட பாபு கேட்டான்னா உண்மை வெளில வந்திடும். ” என்று சொல்லி பாபுவிடம் அழைத்துப் போனான். பாபுவிடம் எப்போது சென்றாலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கும். இப்போதும் அப்படியே ஆனது. மிகவும் சின்சியராக வேலை செய்துகொண்டிருந்தான். பக்கத்தில் போய் நின்றதும் மதன் ஷாக் ஆனான். ”பன்னிப்பயலே, ஏண்டா ஜிப்பை திறந்து போட்டிருக்கே?” என்றான் மதன். பாபுவும் பதறிப்போய் குனிந்து பார்த்தான். எழுந்து பூட்டியவாறே ”ப்ச்..பார்த்தியா..பூட்டாம விட்டுட்டாங்க பாரு..ச்சே!”என்றான். ”யோகக்காரண்டா நீ” என்று மதன் பாபுவைப் பாராட்டிவிட்டு விஷயத்திற்கு வந்தான். பாபுவுக்கு ஏற்கனவே விஷயம் தெரிந்திருந்தது. “மதன், இந்த புராஜக்ட்டுக்கு டிசைன் ஒர்க் எல்லாம் இன்னும் 3 மாசத்துல முடிஞ்சிடும். அதுக்கப்புறம் டிசைன்ல ஆட்களைக் குறைக்கப் போறாங்க, என்னையும் சேர்த்து. நான் பெர்மனெண்ட் எம்ப்ளாயி. எங்களுக்கே இப்படின்னா, செங்கோவியை எப்படி வச்சிருப்பாங்க? அதனால தான் அவரை காண்ட்ராக்ட்ல எடுத்தது. உங்களுக்கு தெரியும்னு நினைச்சேன்” “எனக்குத் தெரியாது பாபு.” என்றான் மதன். அடுத்த கட்ட நடவடிக்கை மீண்டும் வேலை தேடும் படலம் என்று புரிந்து போனது. நண்பர்களுக்கு தகவல் பறந்தது. எல்லோரும் தெரிந்த இடங்களில் விசாரித்தார்கள். மும்பையில் ஒரு கம்பெனிக்கு ஆள் தேவையென்றும் அட்வெர்டைஸ்மெண்ட் கொடுக்காமலேயே ஆள் எடுப்பது தெரிய வந்தது. ரெசியூம் ரெடி பண்ணி அனுப்பி வைத்தேன். இண்டர்வியூவிற்கு வரச்சொல்லி அழைப்பு வர, மும்பை சென்று அட்டெண்ட் செய்தேன். வேலையும் கிடைத்தது. மதனிடம் சொன்னேன். சந்தோசப்பட்டான். சென்னை திரும்பியதும், ரிசைன் லெட்டர் கொடுத்தேன். கம்பெனி பதறியது. இன்னும் 4 மாதம் நான் இருந்தால் நல்லதே என்று யோசித்தது. ‘ஒரு வருடத்தில் பெர்மனெண்ட் ஆக்குகிறோம்’ என்று என் மேனேஜர் மூலம் தூது விட்டது. நான் அவரிடம் ஒன்றே ஒன்று தான் சொன்னேன். “நாங்க ஐயா பெர்மனெண்ட் பண்ணுங்க, பண்ணுங்கன்னு கெஞ்சுவோம். அப்போல்லாம் பெர்மனெண்ட் ஆக்க மாட்டாங்க. ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் தகவல் சொல்லி போராடி வேற வேலை வாங்கினதும் கூசாம ‘அதே சாலரி தர்றோம், இருந்துக்கோ’ன்னு சொல்வாங்களா? நாளைப்பின்ன நான் யார்கிட்டயாவது வேலைக்கு ரெஃபர் பண்ணச் சொல்லிக் கேட்க முடியுமா?” அவர் நல்லவர். “இவங்க கிடக்காங்க. நீங்க போங்க தம்பி” என்றார். வேலையில் இருந்து ரிலீவ் ஆகி ஊருக்குச் சென்றேன். மும்பை இண்டர்வியூ சென்றபோது வேறொரு தமிழரும் வந்திருந்தார். பேசிக்கொண்டிருக்கையில் மொபைல் நம்பர் பரிமாறிக்கொண்டோம். அவர் திடீரென்று அழைத்தார். “செங்கோவி, டெல்லில ஒரு கம்பெனிக்கு அர்ஜெண்டா ஆள் தேவைப்படுது. புராஜக்ட் கையில இருக்கு. ஆனா ஆள் இல்லாம கதறிக்கிட்டு இருக்காங்க. மும்பையை விட நல்லா இருக்கும். உடனே ரெசியூம் அனுப்புங்க”என்று மெயில் ஐடி தந்தார். அருகில் இருந்த பிரௌசிங் செண்டர் போய் மெயில் அனுப்பி விட்டு வெளியே வந்தேன். மொபைல் ரிங்கியது. “ஹலோ..இஸ் இட் மிஸ்டர் செங்கோவி..பைப்பிங் எஞ்சினியர்?” “எஸ்” “நாங்க டெல்லில இருந்து கூப்பிடறோம். உங்க சிவி பார்த்தோம். யூ ஆர் செலக்ட்டேட்” என்றார் அந்தப் புண்ணியவான். ‘என்னடா இது..பொதுவாக ரெண்டு மணி நேரம் இண்டர்வியூ என்ற பெயரில் டார்ச்சர் செய்து தானே வேலை தருவார்கள்? இதென்ன மன்னார்&மன்னார் கம்பெனியா?” என்று சந்தேகம் வந்தது. அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே போனார். “செங்கோவி, இது பெரிய புராஜக்ட். வேலை அமெரிக்கால. அங்க போறதுல உங்களுக்கு அப்ஜெக்சன் ஏதும் இல்லையே?” அமெரிக்காவா..அப்ஜெக்சனா..என்னாங்கடா பேசுறீங்க..எவனாவது நம்மளை வைச்சு காமெடி கீமெடி பண்றானா?   அத்தியாயம் - 31 மதனுக்கு கால் பண்ணினேன். அவனும் ஒரு சந்தோசமான செய்தியை வைத்திருந்தான். “நீ நாய்மாமன் ஆகப் போறடா” என்றான். ”என்னடா சொல்றே?” என்றேன். “ஜமீலா கன்சீவ் ஆயிருக்காடா” “அப்படியா..அப்போ நீ கிழவன் ஆயிட்டயா…சந்தோசம்டா” என்றேன். பிறகு டெல்லி விஷயத்தைச் சொன்னேன். “அமெரிக்காவா? நல்ல கம்பெனியான்னு விசாரிடா. ஏதாவது டுபாக்கூர் கம்பெனியா இருக்கப்போகுது” என்றான். கம்பெனிப் பெயர் சொன்னேன். ”அந்தக் கம்பெனியா..அய்யர் அங்க தான்டா இருக்கான். ஃபோன் நம்பர் தர்றேன். பேசு” என்றான். அய்யர் என்று அழைப்பட்ட கோபால கிருஷ்ண அய்யங்கார், நான் சென்னைக் கம்பெனிக்கு வரும் முன் இங்கு வேலை பார்த்தவன். எங்களுக்கு ஜூனியர். எனக்கு நேரடித் தொடர்பில்லை என்பதால் தயங்கியவாறே அழைத்தேன். “சின்னக் கம்பெனி பாஸ். புதுசு. ஆனால் கை நிறையக் காசு. வேற ஒன்னும் பிரச்சினை கிடையாது. இவங்களுக்கு சீனா, சிங்கப்பூர்னு பல இடங்கள்ல புராஜக்ட் போயிக்கிட்டு இருக்கு. நீங்களும் வாங்க” என்றான். சந்தோசமாக அந்த வேலைக்கு ஒத்துகொண்டேன். மும்பைக் கம்பெனிக்கு மெயில் அனுப்பி ‘உடனே சேர முடியாது. மூன்று மாதம் டைம் வேண்டும்’ என்றேன். அவர்களும் சரியென்று சொல்ல, அதை ஒரு சேஃப்டிக்கு க்ளோஸ் பண்ணாமல் வைத்துகொண்டேன். நண்பர்களுக்கு விஷயம் பரவியது. எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி “அப்போ, மதன்?” என்பது தான். நெருங்கிய நண்பர்கள் அவனைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். “என்னடா மாப்ளே, நீ வெளிநாடு போறதால கம்பெனியைப் பார்த்துக்க ஆள் வேணும்னு அவனைக் கொண்டு வந்தே. இப்போ அவன் கிளம்பிட்டான். அப்போ கம்பெனியை நீ தான் பார்த்துக்கப்போறியா?” என்றார்கள். கம்பெனியிலும் இந்தப் பேச்சு தொடர்ந்து. “இவர் கிளம்புவாருன்னு பார்த்தா, இவருக்கு ஆப்பு வைச்சிட்டு அவர் கிளம்பிட்டார்” என்று சொல்லிச் சிரித்தார்கள். மதன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானான். நண்பனின் வளர்ச்சியில் கோபம் கொள்ள ஒன்றும் இல்லையென்று தெரிந்தது. ஆனாலும் மற்றவர்கள் பேசுவதைக் கேட்க அவமானமாக இருந்தது. ஜமீலாவும் நேரம் காலம் புரியாமல் “பரவாயில்லைங்க..நம்மால தான் முடியலை. அண்ணனாவது போறாரே” என்றாள். ஜமீலா தன்னை குத்திக்காட்டுவதாக மதன் நினைத்தான். மதனின் மேனேஜரும் “அவர் போனா என்ன மதன்? எனக்கு நீங்க இருக்குறதே போதும்” என்று குத்தினார். என்னைப் பற்றிப் பேசுவதையே வெறுக்கத்தொடங்கினான் மதன். தொடர்ந்து என் மீதும் அந்த வெறுப்பு படிந்தது. “அமெரிக்கா ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது. உலகத்துலயே கேவலமா இங்க்லீஸ் பேசுறது அமெரிக்கன்ஸ் தான். பெட்ரோலுக்காக அவங்க பண்ண அநியாயம் கொஞ்சநஞ்சமா? எத்தனை போர்..” என்று அமெரிக்காவையும் திட்டித் தீர்த்தான். எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியவில்லை. நண்பர்களிடம் விடைபெற்று முதல் விமானப் பயணத்தை அமெரிக்கா செல்வதன் மூலம் துவக்கினேன். என் கல்லூரி நண்பன் பழனிக்கு மதனின் நிலை நன்றாகப் புரிந்தது. என்னை வழியனுப்பி விட்டு மதனிடம் பேசும்போது, மதனின் பிரச்சினையை அவன் புரிந்து கொண்டான். பிறகு சில மாதம் கழித்து என்னிடம் சாட்டில் விஷயத்தைச் சொன்னான் பழனி. “அவன் ரொம்ப டிஸ்டர்ப் ஆயிருக்கான்யா. அவனுக்கும் யூ.கே.ல ஏதாவது வேலை கிடைக்கான்னு பாரு. ஐரோப்பா போகலைன்னா அவன் மெண்டல் ஆயிடுவான் போலிருக்கு” எனக்கு கவலையாய் இருந்தது. சென்னைக் கம்பெனி நண்பர்களிடம் பேசினேன். ஐரோப்பாவில் உள்ள சில கம்பெனிகளின் லிஸ்ட் நண்பர்களால் தேடி எடுக்கப்பட்டு, மதனுக்கு கொடுக்கப்பட்டது. மதன் தீவிரமாய் வேலை தேட ஆரம்பித்தான். நான் தொடர்ந்து அவனிடம் பேசியவாறே இருந்தேன். அவனும் என்னிடம் வழக்கம்போல் பேசியபடியே இருந்தான். ஜமீலா அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மதன் சந்தோசத்தின் உச்சிக்கே போனான். எப்போதும் தன் மகன் சந்தோசமாய் இருக்கவேண்டும் என ‘சந்தோஷ்’ என்று பெயரிட்டான். வெகுநாட்கள் எங்களுடன் தொடர்பற்று இருந்த கல்லூரி நண்பன் சிவா, திடீரென மதனைத் தொடர்பு கொண்டான். மதனை அவனால் மறக்க முடியவில்லை போலும். பிரவீணா மேட்டரில் கட்டி உருளாத குறையாய் சண்டை போட்டவர்கள் ஆயிற்றே. “சிவா, நல்லா இருக்கிறயா..இப்போ எங்கடா இருக்கே?” என்றான் மதன். “யூ.கே.ல” என்றான் சிவா. ”யூ.கேவா? அங்க நீ எப்படிடா போனே?” கம்பெனி தன்னை அங்கு ஒரு புராஜக்ட்டுக்கு அனுப்பியதையும் தொடர்ந்து மேற்படிப்புக்காக தான் அங்கேயே தங்கிவிட்டதையும் சிவா சொன்னான். “அப்புறம் மதன். பெர்சனல் லைப் எப்படி போய்க்கிட்டு இருக்கு?” “ஒரு பையன் இருக்காண்டா. ஒன்னும் பிரச்சினை இல்லை. அப்புறம் யூ.கே.போக என்னென்ன வழில ட்ரை பண்ணலாம். சொல்லு.” தொடர்ந்து ஐரோப்பா செல்ல எளிதான வழிகள் என்னென்ன என்றும் எடுத்துச் சொன்னான். சிவாவின் அறிவுரைகள் மதனுக்கு உதவியாய் இருந்தன. அடுத்த சில மாதங்களில் நார்வேயில் ஒரு வேலையை வாங்கினான் மதன். தன் நெடுநாள் கனவான நார்வே வேலை கிடைத்த சந்தோசத்தில் தலைகால் புரியாமல் ஆடத் துவங்கினான். அத்தியாயம் - 32 நார்வேயின் ஊசிக்குளிர் மதனை செல்லமாய்க் குத்தியபடியே வரவேற்றது. தமிழகம் தாண்டி வெளியே சென்றிராத மதனுக்கு நார்வே சொர்க்கமாய்த் தெரிந்தது. அடுத்த நாளே அலுவலகம் சென்று வேலையில் சேர்ந்தான். மதனை முதலில் ஆச்சரியப்படுத்திய விஷயம் அதிகாரிகளின் மென்மையான நடத்தை. ஜமீந்தார் போன்றே செயல்படும் மேனேஜர்/டைரக்டர்களைப் பார்த்த மதனுக்கு, வெள்ளை பாஸ்களின் கனிவு ஆச்சரியம் கொடுத்தது. பிரயாணம் சௌகர்ய்மாய் இருந்ததா? ’தேவைப்பட்டால் இன்றும் ஓய்வு எடுத்துக்கொள்ளலாமே’ என்பது போன்ற பேச்சுகள் மதனை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. வெள்ளை முகங்கள் நிறைந்த ஆஃபீஸில் நம் இன அடையாளமாம் மாநிறத்துடன் (சில அயோக்கியர்கள் அதைக் கருப்பு என்பார்கள்) ஒரு முகம் மதனை நோக்கி புன்னகைத்தபடியே வந்தது. “ஹாய், ஐ அம் விஸ்வா..நீங்க பைப்பிங்ல இன்னைக்கு ஜாயின் பண்றீங்கன்னு சொன்னாங்க. நான் ஸ்ட்ரக்சுரல்..” என்றது. மதனுக்கு ஒரு நாள் கழித்து தமிழைக் கேட்பது பெரிய சந்தோசத்தை அளித்தது. “வெர்டால்ல உங்க ஃப்ளாட்டுக்குக் கீழே தான் இருக்கேன். நேத்து தூங்குவீங்களேன்னு வரலை” என்று சிரித்தான் விஷ்வா. “ஓ..ரொம்ப நல்லது. எனக்கு இங்க உள்ள ஏரியா பழகற வரைக்கும் உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுவேன்” “ஹா..ஹா…நோ பிராப்ளம்.ஓகே..அப்புறம் பார்ப்போம்” என்று விடை பெற்றான் விஷ்வா. இரண்டு நாட்களில் வெர்டால் மதனுக்கு ஓரளவு பழகியிருந்தது. தினமும் இரவில் ஜமீலாவுடன் பேசினான். ஜமீலாவைவிட மகன் சந்தோஷைப் பிரிந்திருப்பது அதிக கவலையைக் கொடுத்தது. அந்த சாஃப்ட்டான ஸ்பரிசம் நினைவில் இருந்துகொண்டே இருந்தது. சீக்கிரம் அவர்களை அழைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான். மறுநாள் விஸ்வா ஃபோன் செய்தான். “மதன், இன்னைக்கு நைட் வெளில போறேன்..வீக் எண்ட் கொண்டாட்டம்.வர்றீங்களா?” “வீக் எண்ட் கொண்டாட்டமா? அப்படீன்னா?” “ம்..உங்களுக்குப் பிடிக்குமான்னு தெரியலை..ஏதாவது பப்புக்கு போவேன்..சும்மா ரோமிங்..கொஞ்சம் பியர்..ஸ்ட்ரிப் டான்ஸ்..அவ்ளோ தான்” “பியர் ஓகே..ஸ்ட்ரிப் டான்ஸ்ன்னா என்ன?” மதன் வேண்டுமென்றே அப்பாவியாகக் கேட்டான். “நீங்களே வந்து பாருங்க” சொல்லிவிட்டு விஸ்வா சிரித்தான். மதனுக்கு பப்புக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் முன்பே உண்டு. ஆனாலும் தமிழகத்தில் எங்கு பப் இருக்கிறதென்றே அவனுக்குத் தெரியவில்லை. பணமும் மற்றொரு பிரச்சினை. எனவே விஸ்வா அழைத்ததும் ஆர்வம் வந்தது. கூடவே ஜமீலாவின் ஞாபகமும் வந்தது. ’இதில் என்ன தவறு இருக்கிறது..சும்மா போய் பார்த்துவிட்டு வருவது தப்பா? எத்தனையோ படம் பார்க்கிறோம்..அதையே இப்போது நேரில் பார்க்கப்போகிறோம்..அவ்வளவு தானே’ என்று மதன் மனதைத் தேற்றிக்கொண்டான். பல நாட்டுப் பெண்களும் தனியாகவும் ஜோடியாகவும் நடமாடிக்கொண்டிருந்த ஸ்டிக்ல்ஸ்டட் ஹோட்டலைத் தாண்டி விஸ்வா மிகவும் பழக்கப்பட்டவனாக ஒரு பப்புக்குள் நுழைந்தான். மதன் உள்ளே தயங்கியபடியே சென்றான். உள்ளே நுழைந்ததும் ஒரு புதிய கலர்ஃபுல் உலகம் தென்பட்டது. அரைகுறை ஆடைகளுடன் ஆண்களும் பெண்களும் வகைதொகையின்றி ஆடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு நடுவே இருந்த மேடையில் ஒரு பெண் ஜீன்ஸ் டீசர்ட்டுடன் புரியாத பாடலுக்கு இடுப்பை வளைத்து ஆடிக்கொண்டிருந்தாள். அடிக்கடி மேடையின் நடுவே இருந்த கம்பியைப் பிடுங்க முயற்சி செய்வது போல் தெரிந்தது. ஹாலின் ஓரத்தில் உட்கார ரவுண்ட் டேபிளும் இருந்தது. “என்னங்க பண்றா?” “அது தான் ஸ்ட்ரிப் டான்ஸ்..உட்காருங்க..நான் ஏதாவது வாங்கிட்டு வர்றேன்” என்று விஸ்வா அகன்றான். கூட்டத்தில் கரகோசம் கேட்டது. மதன் திரும்பிப்பார்த்தான். அந்த நடன மங்கை டீ-சர்ட்டைக் கழட்டி இருந்தாள். கையில் வைத்து வீசியபடியே டான்ஸ் தொடர்ந்தது. விஸ்வாவை எங்கேயென்று பார்த்தான். யாரோ ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பது புரிந்தது. சிறிது நேரத்தில் விஸ்வா ஒரு கையில் பீருடனும் மற்றொரு கையில் அந்தப் பெண்ணுடனும் வந்து சேர்ந்தான். “மதன், இந்தாங்க..நான் இந்தப் பொண்ணுகூட ஃப்ளாட்டுக்குப் போறேன்..சாரி, கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்திடுங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும்ப்போதே அவள் விஸ்வாவை இழுத்தாள். “ஓகே..கமிங்..கமிங்” என்றபடியே விஸ்வா நகர்ந்தான். மதனுக்கு தனியே அமர்ந்திருக்க நெர்வஸாக இருந்தது. திடீரென கூட்டம் ஆர்ப்பரிக்கவும் மேடையைப் பார்த்தான். அந்த நடன மங்கை ஜீன்ஸையும் கழட்டியிருந்தாள். “ஹவ் இட் இஸ்?” என்று பெண் குரல் கேட்டு மதன் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். சின்னக்கண்ணை இடுக்கிச் சிரித்தபடியே ஒரு பெண் நின்றிருந்தாள். “ஹாய்..ஐ அம் மைலின் ஃப்ரம் வியட்னாம்” என்றாள். “ஹாய்..ஐ அம் மதன்.” “உன்னை இதுக்கு முன்ன இங்க பார்த்ததில்லையே..புதுசா?” “ஆமா” “ம்..மேரீடா?” “இல்லை..அதான் சொன்னேனே புதுசுன்னு!” என்றான் மதன். கூட்டத்தில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அத்தியாயம் - 33 வீட்டுச் சாப்பாடு மட்டுமே சாப்பிடுவது நல்லது தான். ஆனால் வீட்டை விட்டு வெளியே இருப்போர் என்ன செய்வது? பட்டினியா கிடக்க முடியும்? ஹோட்டலில் தானே சாப்பிட்டாக வேண்டும்? அப்படி ஹோட்டலில் சாப்பிடுவதானேலேயே வீட்டுச் சாப்பாட்டை நாம் ஒதுக்கி விட்டதாக ஆகுமா? அது பெரிய பாவமா? இதில் என்ன பெரிய தவறு இருக்கிறது? ஏன் இதைப் பெரிய குற்றமாக நம் சமூகம் எண்ணுகின்றது? மதன் யோசித்தவாறே அமர்ந்திருந்தான். பாத்ரூமில் இருந்து மைலின் வெளியே வந்தாள். மதனைப் பார்த்துச் சிரித்தாள். “திருப்தியா?” என்றாள். மதன் சிரித்தான். “ஓகே..நான் கிளம்புறேன்” என்றபடியே கட்டிலுக்குக் கீழே கிடந்த உள்ளாடைகளை எடுத்து அணியத் தொடங்கினாள். மதன் காமம் கழன்று அவளைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான். “அடுத்து எப்போ?” என்றான். “பார்க்கலாம்..இங்க தானே சுத்திக்கிட்டு இருப்போம்” என்றாள். கொஞ்ச நேரத்தில் கிளம்பிப்போனாள். அவள் போனபின்னும் அவளது பெர்ஃப்யூம் வாசனை ரூமில் மணத்தது. அதனுடனே தூங்கிப்போனான். மறுநாள் ஞாயிறு காலையில் ஜமீலாவுடன் சாட்டில் உட்கார்ந்தான். அப்பா தன்னை நல்லபடியாகக் கவனித்துக்கொள்வதையும், சந்தோஷ் தாத்தாவுடன் ஊர் சுற்றி வருவதையும் சொன்னாள். ”இந்த மாதச் சம்பளம் வரவும் கொஞ்சம் பணம் அனுப்புகிறேன்” என்றான். “அது எதுக்கு? முதல்ல விசா எடுத்து அனுப்புங்க போதும். அப்பாகூடத்தானே இருக்கேன். கையில இருக்கிற காசு போதும்” என்றாள் ஜமீலா. அவளுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் சாட்டில் ஆன்லைனுக்கு வந்தேன். மதன் அவளுடன் பேசிவிட்டு என்னை அழைத்தான். நார்வே வேலையில் செட்டில் ஆனது அவன் மனதை ஆற்றியிருந்தது. வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பின் ‘சீக்கிரம் விசா எடுக்கப்போவதாகவும், அதற்குள் இந்தியா சென்று அவன் மகனை ஒருமுறை பார்த்துவிடும்படி என்னிடம் சொன்னான். எனக்கும் புராஜக்ட் முடிந்துவிடும்போல் தோன்றியது. ‘நிச்சயம் போய்ப் பார்க்கிறேன்’ என்றேன். என்னிடம் பேசி முடித்த பின் ஜெனிஃபரை ஆன்லைனில் பிடித்தான். தான் நார்வே வந்துவிட்டதையும், அதனாலேயே பதில் எதுவும் போட முடியவில்லை என்றும் சொன்னான். ஜெனிஃபர் உருகினாள். ‘நான் உன்னையே நினைச்சுக்கிட்டு இருக்கேன்.நீ இன்னும் என்னை லவ் பண்றயா?’ என்றாள். ‘அதில் என்ன சந்தேகம்?’ என்றான். ‘அப்போ சீக்கிரம் என்னை உன்னுடன் அழைத்துக்கொள்.என்னால் இங்கு இருக்க முடியவில்லை’ என்றாள். ‘உன்னால் அங்கு மட்டுமல்ல, எங்குமே இருக்க முடியாது’ என்று நினைத்துக்கொண்டே ‘ஓகே..நிச்சயம் செய்வேன். காத்திரு’ என்றான். ’அதையும் தாண்டிப் புனிதமான’ காதலுடன் ஜெனிஃபர் காத்திருக்கத் தொடங்கினாள். மாலையில் விஸ்வா வந்தான். “அப்புறம் மைலின் என்ன சொன்னா?” என்றான். மதன் திடுக்கிட்டு “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான். “நீங்களும் அவளும் வர்றதை நைட்டு என் ஃப்ளாட்ல இருந்து பார்த்தேன். ‘என்னடா தனியா விட்டு வந்துட்டமே’ன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். மைலின் ஓகே தானே? நல்லா கம்பெனி குடுத்திருப்பாளே?’ “ம்” ‘ஓகே..போகலாமா?” “எங்கே?” “பப்புக்குத் தான்” ”இன்னைக்குமா?” “ஆமா..இங்கே வீக் எண்டுங்கிறது ரெண்டு நாள் இல்லையா?” “ஓகே..போகலாம்” அதே கல்ர்ஃபுல்..அதே பியர்..ஆனால் வேறு பெண். மைலின் ஒரு லோக்கல் பையனிடம் செட்டில் ஆகியிருந்தாள். பார்த்ததும் புன்னகைத்தாள். மதன் புதிய பெண்ணுடன் வெளியேறினான். அவனுக்கு மட்டுமே அவள் புதியவள் என்பதை நிரூபித்தாள். போலந்து தேசமென்றாள். புரியாத அச்சுப்பிச்சுப் பெயர் ஒன்று சொன்னாள். மதன் கஷ்டப்பட்டு அதை ஞாபகத்தில் வைத்தான். தொடர்ந்து வந்த நாட்களில்/பெண்களில் அந்தப்பெயரும் மறந்தது. நாடுகளை வைத்தே பெண்களை ஞாபகம் வைத்துக்கொள்ள ஆரம்பித்தான். பெண்களைப் பார்த்ததுமே நாட்டின் பெயர் சொல்லும் அளவிற்கு முன்னேறினான். ரஷ்யா, நெதர்லேண்ட், ஃப்ரான்ஸ், மெக்ஸிகோ என உலகத்தையே தன் பெட் ரூமிற்குள் கொண்டு வந்தான். வாரம் இரு நாட்கள் என்பது போதாமல் போனது. பெண்களில்லா இரவு வெறுப்பாய் ஆனது. மதன் தினமும் தனியே பப்புக்குச் செல்ல ஆரம்பித்தான். அந்த பப்பும் சலித்து ஆன்லைனில் பெண்கள் தேடிப் பிடித்தான். க்ரோனேவை(கரன்சி) விட்டெறிந்தால், வேண்டுமென்கிற நிறத்தில் சைஸில் இனத்தில் பெண்கள் கிடைத்தார்கள். மதனுக்கு காமமே பொழுதுபோக்கானது. ஒன்றுக்கு ஒன்று என்ற நேர்க்கணக்கு ஒரு கட்டத்தில் போரடிக்க ஒன்றுக்கு மூன்று என்ற அடுக்கில் உச்சம் தொட்டான். எல்லாப்பக்கமும் பெண்கள் இருந்துகொண்டு, எல்லாப் பகுதியையும் தூண்டி விட்டார்கள். காமத்தில் மதனைப் பறக்க வைத்தார்கள். பணமும் பறந்தது. பலநாட்கள் தொடர்ந்த பல அடுக்கு விளையாட்டு ஒரு கட்டத்தில் போரடிக்க ஆரம்பித்தது. ஏதோவொன்று குறைவதை உணர்ந்தான். இந்தப் பெண்கள் செக்ஸ் டாய்ஸ் போன்று தோன்ற ஆரம்பித்திருந்தார்கள். உடல்களின் இயக்கமும் நரம்புகளின் அதிர்வும் மட்டுமே போதாது என்று தெரிந்தது. ஜெனிஃபருடன் இருந்தபோதும் ஜமீலாவுடன் இருந்தபோதும் கிடைத்த ஏதோவொன்று குறைவதை உணர்ந்தான். அடிப்படையில் மெக்கானிகல் எஞ்சினியரான மதன், இயக்கத்தில் ஏற்படும் ஃப்ரிக்சனைத் தவிர்க்க கூலண்ட்/ஃப்ரிக்சன் ஃப்ளுயிட் தேவை என்று அறிந்தவன். இங்கே மிஸ் ஆகும் கூலண்ட் எது என்று யோசித்தான். அது அன்பு என்பதைச் சீக்கிரமே கண்டுபிடித்தான். சட்டென்று ‘அகத்தே அன்பிலா மாந்தரைத் தழுவிய பாவியாவேன்’ என்பது போன்ற வரி ஞாபகம் வந்தது. அது அகநானூறா புறநானூறா என்று யோசித்தான். தெரியவில்லை, ஆனால் அதன் அர்த்தம் இப்போது நன்றாகவே விளங்கியது. ’அகத்தே அன்பில்லா மாந்தருடன் இணைதல் பிணத்துடன் புணர்வதைப் போன்றது. இனி இந்த இழிசெயலைச் செய்வதில்லை’ என்ற முடிவுக்கு வந்தான். கூடவே இனி நிறையப் பெண்களை காதலிக்க வேண்டும் என்றும், அதன்பிறகே கட்டிலுக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டும் என்றும் உறுதி கொண்டான். அத்தியாயம் - 34 யோஹன்னா! போலந்து நாட்டுத் தந்தைக்கும் நார்வே தாய்க்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட அழகு தேவதை அவள். அதீத தனிமனித சுதந்திரக் கலாச்சாரத்தின் பிரதிநிதிகளான யோஹன்னாவின் தாயும் தந்தையும் ஒருகட்டத்தில் ஒப்பந்தத்தை முறித்து தனியே பிரிந்தனர். யோஹன்னாவிற்கு விவரம் தெரியும்போதே அப்பா அவளுடன் இல்லை. யோஹன்னாவின் அம்மா அந்தப் பிரிவு தந்த சோகத்தை மறக்க குடியில் மூழ்கினாள். யோஹன்னா வேறு வழியின்றி தன் வாழ்வைத் தானே அமைத்துக்கொள்ள படிப்பில் தீவிரமாக இறங்கினாள். ஆர்க்கிடெக்ட்டில் பட்டப்படிப்பு சேர்ந்தாள். கூடவே அம்மாவை குடியில் இருந்து மீட்டு எடுக்கும் போராட்டத்தை நடத்தினாள். அதற்கு விபரீதமான பலன் கிடைத்தது. தொடர்ந்த சிகிச்சையின் பலனாக குடியில் இருந்து மீண்டாள் யோஹன்னாவின் அம்மா. ஆனாலும் கணவனைப் பிரிந்த சோகத்தை தணித்துக்கொள்ள திடீரென்று ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு வந்து நின்றாள். யோஹன்னா அதிர்ச்சியடைந்தாள். பட்டப் படிப்பும் முடிந்துவிட்ட நிலையில் இனியும் தான் அங்கிருப்பது சரியில்லையென்று அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் யோஹன்னா. தாயன்பும் இல்லையென்றாக, அதீத சுதந்திரக் கலாச்சாரத்தின் எச்சில் இலையானாள் யோஹன்னா. வெளியே சின்னஞ்சிறிய அபார்டெண்ட் அறையொன்றை குறைந்த வாடகைக்குப் பிடித்துத் தங்கினாள். அப்போது தான் படிப்பை முடித்திருந்த யோஹன்னாவிற்கு ஒரு இஞ்சினியரிங் கம்பெனியில் ட்ரெய்னியாக வேலை கிடைத்தது. கிடைத்த சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்ட மிகவும் கஷ்டப்பட வேண்டி வந்தது. தனியே தங்கியிருந்த போது தன்னைப்பற்றிய கழிவிரக்கத்திற்கு ஆளானாள் யோஹன்னா. தாயின் திருமணத்தை விட தந்தையின் முகமறியா நிலைமை அவளை வருத்தியது. உலகத்தில் எங்கு இருந்தாலும் பெண் குழந்தைகளுக்கு அப்பா என்றால் தனிப் பிரியம் தான். சிறு வயதில் ஸ்கூலில் படிக்கும்போது, மற்ற பிள்ளைகள் தன் அப்பா பற்றி பல கதைகளைச் சொல்லும்போது யோஹன்னாவிற்கு கஷ்டமாக இருக்கும். வீட்டிற்கு வந்து ‘ஏம்மா, எனக்கு மட்டும் அப்பா இல்லை?” என்று கேட்டு அழுவாள். அவள் அம்மா அதனாலேயே அதிகமாகக் குடிப்பாள். யோஹன்னாவிற்கு உண்மையான பிரச்சினை அவள் பெரிய பெண் ஆன பிறகே தொடங்கியது. அவள் அன்பான உறவுக்காக ஏங்க, சுற்றி இருந்த ஆண்களோ அவளது வாளிப்பான உடலுக்காக ஏங்கினர். ஃப்ரீ செக்ஸ் கலாச்சாரத்தில் தந்தையும் இல்லாத நிலையில் அவள் தன்னைக் காத்துக்கொள்ள மிகவும் போராட வேண்டியிருந்தது. எல்லா நட்புமே செக்ஸை வேண்டியே வருவதை அறிந்து நொந்தாள். தன் தந்தையிடம் கிடைக்காத அன்பைத் தருபவன் எவனோ, அவனுக்கே தன்னைத் தருவதென்று முடிவு செய்தாள். தான் தங்கியிருந்த வெர்டால் ஏரியாவில், தன் அப்பார்ட்மெண்ட்டிற்கு அருகில் இருந்த ரெஸ்ட்டாரண்டில் டின்னர் சாப்பிடுவது யோஹன்னாவின் வழக்கம். கொஞ்ச நாட்களாகவே அதே ஹோட்டலுக்கு புதிதாக ஒருவன் சற்று சோகமான முகத்துடன் வருவதைக் கவனித்தாள். ’அவன் அதிகம் பேசுவதில்லை. தனியே வருகின்றான். என்ன தான் பிரச்சினை அவனுக்கு’ என்ற ஆர்வம் யோஹன்னாவிற்கு வந்தது. யோஹன்னாவின் பரிதாபத்துக்கு ஆளான ஆண் மகன் என் அருமை நண்பன் மதனே. மேட்டர்களிடம் மேட்டர் பண்ணுவதில் ஒரு மேட்டரும் இல்லையென்ற அரிய உண்மையை அறிந்த சோகத்திலேயே மதன் அங்கே அவ்வாறு அமர்ந்திருந்தான். அவனும் கொஞ்ச நாட்களாக யோஹன்னாவை கவனித்தபடியே இருந்தான். அடிப்படையில் தமிழனான மதனுக்கு யோஹன்னாவின் புஷ்டியான தேகம் கடும் கிளர்ச்சியைக் கொடுத்ததில் ஆச்சரியம் இல்லை தான். ’இது மாட்டினால் நல்லா இருக்குமே..இனி எத்தனை நாளைக்கு இப்படி எதையோ தின்ற எதுவோ மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது. டெய்லி இரண்டு, மூன்றுடன் இரண்டு மூன்றைப் பார்த்துவிட்டு, இப்படி திடீரென்று நிறுத்துவதால் ஏதேனும் பின்/முன் விளைவுகள் ஏற்படுமா’ என்று சீரியஸாக யோசித்தபடியே இருந்த மதனின் பக்கத்தில் திடீரென யோஹன்னா வந்து நின்றாள். மதனுக்கு சிந்தனை, மூச்சு எல்லாம் நின்றது. அவ்வளவு அருகில் வெள்ளை தேகத்தைப் பார்த்து பிரமித்துப்போனான். “ஹாய்..நான் இங்க உட்காரலாமா?” என்றாள் யோஹன்னா. “நோ பிராப்ளம்” “நீங்க ஏசியாவா?” “ஆமாம்” “ஏசியால எங்க?’ “இந்தியா” “ஓ..இந்தியா..ஐ நோ…என்கூட சில இண்டியன் ஸ்டூடண்ட்ஸ் படிச்சாங்க..ஐ லைக் இண்டியன் கல்ச்சர் வெரி மச்” என்றாள். ஒரு டொச்சு ஃபிகர் கிடைக்கவே பல நாள் பல போராட்டம் நடத்த வேண்டிய இண்டியன் கல்ச்சரில் லைக் பண்ண என்ன இருக்கு என்று மதன் முழித்தான். “நீங்க உங்க குடும்பத்துக்கு ரொம்ப இம்பார்ட்டன்ஸ் கொடுப்பீங்களாமே.. அப்படியா?” ஆர்வத்துடன் கேட்டாள். மதன் விழித்துக்கொண்டான். தூண்டிலில் எந்தப் புழுவை மாட்டினால், இந்த மீன் சிக்கும் என்று உடனே புரிந்தது. “ஆமாம்..குழந்தைகளுக்காகவே வாழ்நாள் பூரா அட்ஜஸ்ட் பன்ணிக்கிட்டு ஒன்னா வாழ்கிற பெற்றோர் நிறைஞ்ச தேசம் அது. குடும்பம்ங்கிறது எங்கள் வம்சத்தின் நீட்சி. அது பட்டுப்போக நாங்கள் விடுவதில்லை” என்றான். யோஹன்னாவை அந்த வார்த்தைகள் சரியாகத் தாக்கியது. “ஓ..உங்களுக்கும் குடும்பம் இருக்கா?” “ம்” ”ஓ..” “அப்பா மட்டும்!” என்று அவசரமாகச் சொன்னான். “அப்போ அம்மா?” மதனின் கண் கலங்கத் தொடங்கியது. அத்தியாயம் - 35 யோஹன்னா கலவரமானாள். “ஏன்..நான் ஏதாவது தப்பாக் கேட்டுட்டனா?” “இல்லே..என் அம்மா என்னோட 15வது வயசுலயே இறந்துட்டாங்க. அந்த இழப்புல இருந்து மீண்டு வர எனக்கு ரொம்ப நாளாச்சு. இங்க வந்த அப்புறம்தான் கொஞ்சம் மறந்திருந்தேன்” “சாரி” மதன் உடனே எழுந்தான். “ஓகே..நான் கிளம்புறேன்” பில்லுக்கு காசை வைத்துவிட்டு வெளியேறினான். ஒரு மனிதனைக் காயப்படுத்தி விட்டோமோ என்று யோஹன்னா கவலைப்பட்டாள். மதன் அடுத்தடுத்த நாட்களும் அங்கே சென்றான். கொஞ்சம் கொஞ்சமாக அவளைப் பற்றிய விவரங்களை அறிந்துகொண்டான். பாதுகாப்பற்ற பறவை என்று தெரிந்தது. வேட்டையாட வசதியான இடம் என்று முடிவு செய்தான். அந்த வார இறுதியில் ஷாப்பிங் போன மதன், அங்கே ஒரு தமிழ் முகத்தைக் கண்டான். தெரிந்த முகம் போல் தெரிய, நெருங்கினால் அது சிவா! பிரவீணா விவகாரத்தில் அடித்துக்கொண்ட பின், இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நின்று போயிருந்தது. இடையில் சிவா இந்தியா வந்தபோது ஃபோனில் பேசினாலும், அந்த நட்பைத் தொடர்வதில் மதனுக்கு சிறிதும் விருப்பமில்லை. இப்போது என்ன செய்வது, பார்க்காத மாதிரி போய்விடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, சிவா மதனைப் பார்த்து ‘நண்பா” என்று கூவிக்கொண்டே நெருங்கினான். இனி தப்பிக்க வழியில்லை என்று உணர்ந்த மதனும் ‘டேய் சிவா..இங்க என்னடா பண்றெ?” என்றான். “ஒரு தீஸிஸ் பண்றேண்டா. புராஜக்ட்டுக்காக இங்க வந்திருக்கிறேன்..நீ எப்படா இங்க வந்தே?” “நான் வந்து எட்டு மாசம் ஆச்சுடா..” சிவாவுக்கு ஒரு தமிழனை அதுவும் கல்லூரி நண்பனைப் பார்த்த சந்தோசம் தாங்கவில்லை. பழைய பிரவீணா மேட்டரும் பிரவீணாவும் இப்போது அவனுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவும் இல்லை. நண்பர்கள் இருவரும் அருகில் இருந்த ஹோட்டலுக்கு சாப்பிட ஒதுங்கினர். சிவாவிடம் இரண்டு கெட்ட பழக்கங்கள் புதிதாக ஏற்பட்டிருந்தது. முதலாவது அவன் ப்ளாக் எழுத ஆரம்பித்திருந்தான். இரண்டாவது யாரைப்பார்த்தாலும் ‘நான் பதிவர்..இது என் ப்ளாக் அட்ரஸ்’ என்று இம்சை பண்ணிக்கொண்டிருந்தான். மதனிடமும் அதைச் சொன்னான். ”ஓஹோ..என்று சுவாரஸ்யமே இல்லாமல் மதன் கேட்டுக் கொண்டான். சிவா மாதிரிப் பதிவர்களுக்கு இந்த மாதிரி ஓஹோக்கள் வாங்கி அசிங்கப்படுவது புதிதல்ல என்பதால் அதைப் பெரிதாக சிவா எடுத்துக்கொள்ளவில்லை. யோஹன்னா கடந்த பத்து நாட்களில் மதனை ஃப்ரெண்டாக ஏற்றுக் கொண்டிருந்தாள். மொபைல் நம்பர், மெயில் ஐடி, ஃபேஸ்புக் ஐடி அனைத்தும் இருவருக்கும் இடையே பரிமாறப்பட்டிருந்தன. மதன் இனியும் பொறுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தான். ஒரு அழகிய மாலை நேரத்தில் அருகில் இருந்த பீச்சில் வைத்து தன் காதலைச் சொன்னான். “ என் அம்மா போனப்புறம் எனக்குன்னு யாரும் இல்லைன்னு ஆயிடுச்சு. உன்கூட பழகுன இந்த பத்து நாள்ல தான் நான் பழையபடி சந்தோசமா இருக்கேன். உன்கூட இருக்கும்போது என் அம்மாகூட இருக்கிற அதே ஃபீலிங்..நீ எப்பவும் என்கூட இருப்பியா..நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன் “ யோஹன்னா அமைதியாக இருந்தாள்.. என்ன சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவளுக்கு மதனைப் பிடித்திருந்தது. ஆனால் முன்பின் அறியாத, வேறொரு நாட்டைச் சேர்ந்தவனை எப்படி நம்புவது என்று யோசித்தாள். “மதன், உன்னை எனக்கு பத்து நாளாத்தான் தெரியும்..அதுக்குள்ள லவ்வுன்னா…இங்க பாரு, நான் உன்கூட ஃப்ரெண்ட்டாத் தான் பழகுறேன்..நாம அப்படியே இருப்போம்..இந்த மாதிரிப் பேச்சு நமக்குள்ள வேண்டாம்” என்றாள். மதன் கண் கலங்கியபடியே உட்கார்ந்திருந்தான். உள்ளுக்குள் சிரித்தான். எப்போ ஒரு பொண்ணு ஐ லவ் யூ சொல்றவனை அடிச்சு விரட்டாம நாம ஃப்ரெண்டா இருப்போம்னு கதை சொல்றான்னா, ஃபிகரு முக்கால்வாசி மடிஞ்சிருச்சுன்னு தான் அர்த்தம்..இன்னும் கால்வாசி தானே!.’ யோஹன்னா எபிசோடு ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும், மதன் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த நைஜீரியப் பெண்ணிடமும், ஷாப்பிங் மாலில் ஒரு ஃப்ரெஞ்சுப் பெண்ணிடமும் இதே டெக்னிக், இதே வசனங்கள், இதே ஃபீலிங்ஸ் உடன் ட்ரை பண்ணிக் கொண்டிருந்தான். இந்தப் பெண்களுடன் காதலிக்கும்போது பேசுவது தான் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. கண்களெல்லாம் கனவுடன் முகம் நிறைந்த பூரிப்புடன் காதலிக்கும்போது இந்தப் பெண்கள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள்..ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு ஏன் அடியோடு மாறிப்போய் விடுகிறார்கள்..ஜமீலா இப்போது பேச ஆரம்பித்தாலே விசா, விசா என்று உயிரை எடுக்கிறாள். இந்தியாவில் வீணான என் வாலிபப் பருவத்தை இங்கு வந்து ஈடுகட்டுவோம் என்றால் விட மாட்டேங்கிறாளே.. காதலிக்கும்போது உள்ள பெரிய பிரச்சினை செலவு..மாதா மாதம் வாங்குகிற சம்பளம் இவர்களை மெயிண்டெய்ன் செய்யவே சரியாகப் போகிறது..காதலிக்கும்போது காதலன் தாராள பிரபுவாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். கல்யாணத்திற்குப் பிறகு இப்படி இருந்தால், அவர்களே திட்டுகிறார்கள். ஊதாரிக் காதலனும் சிக்கனமான கணவனும் வேண்டும் என்கிறார்கள்.இது என்ன மாதிரியான கண்றாவி லாஜிக் என்றே புரியவில்லை.. இப்போது யோஹன்னாவை இன்னும் ஒரு வாரத்தில் மடக்கி விடலாம் என்று தோன்றியது. அவளுக்கு நம் மீது நம்பிக்கை வர வேண்டும். ’என்ன செய்யலாம்?’ என்று யோசிக்கும்போதே சிவா ஞாபகம் வந்தது. ’கரெக்ட்..சிவாவை யோஹன்னாவிடம் அறிமுகப்படுத்தலாம். கல்லூரிக் காலத்தில் இருந்தே நண்பன் என்று சொல்லலாம்..சிவாவையும் நம்மைப் பற்றி உயர்வாகச் சொல்லுமாறு சொல்லலாம். சொல்வானா?..வேறு வழியில்லை..ஆளும் இல்லை’ உடனே கிளம்பி சிவா வீட்டிற்குச் சென்றான். சிவா எப்போதும்போல் சந்தோசமாக ‘நண்பா’ என்று அலறினான். ‘இவன் இம்சை தாங்கலையே…’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே பதிலுக்கு “மாப்ளே” என்றான் மதன். “என்னடா திடீர்னு வந்து நிக்கிறே..?” “சும்மாடா..நாளைக்கு டின்னருக்கு வெளில போலாமான்னு கேட்க வந்தேன்” “போலாமே..இதுக்கு கால் பண்ணா போதாதா?” “இல்லைடா..அந்த டின்னருக்கு இன்னொரு வி.ஐ.பியும் வர்றாங்க.” “யார்டா அது?” “என் லவ்வர்டா” “லவ்வரா..?” சிவா அதிர்ச்சியுடன் கேட்டான். மதன் சகஜமாக “ஆமாம்..இதுக்கு ஏண்டா அலறுதே?” “டேய்..உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சுன்னு சொன்னேல்ல..பையன்கூட இருக்கான்னு நான் போன தடவை இந்தியா வந்தப்போ சொன்னியேடா” மதன் இதைக் கேட்டதும் அதிர்ந்து போனான். சிவாவிடம் தான் அப்படிப் பேசியதையே மதன் மறந்து போயிருந்தான். அத்தியாயம் - 36 மதன் உடனே அந்த ஷாக்கை உள் வாங்கிக்கொண்டான். தைரியமாக எதிர்த்து நிற்பது என்று முடிவு செய்தான். “நான் எப்படா சொன்னேன்? நாம யூ.கே.விசா பத்தித் தானே பேசுனோம்?” “ஆமாடா..கடைசியா நான் பெர்சனல் லைஃப் எப்படிப் போகுதுன்னு கேட்டப்போ நீ ஒரு பையன்னு சொன்னியே” “மேரேஜ் ஆயிடுச்சு..என் வைஃப் இன்னாரு..இன்ன வேலை..செய்றாங்க..என் பையன் பேரு இது..வயசு இத்தனை-இப்படில்லாம் நான் சொன்னனாக்கும்? கனவு கினவு கண்டயா நீ” “ம்..அப்படிச் சொல்லலை..ஆனா பையன் இருக்கான்னு சொன்னியே” “கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னனா?” “இல்லே.ஆனா” “கல்யாணமே ஆகலைன்னா பையன் எப்படிடா வருவான்..லூசுப் பயலே..ஏன் இப்படி என் வாழ்க்கையோட விளையாடறே” சிவாவுக்கு தன் ஞாபகசக்தி மீது சந்தேகம் வந்தது. “வேற யார்கிட்டயும் பேசுனயா? பாய்க்குத் தான் இப்போ கல்யாணம் ஆகி, குழந்தையும் இருக்கு..அவனையும் என்னையும் போட்டுக் குழப்பிட்டயா?” சிவா குழம்பிப்போனான். ‘இவ்வளவு உறுதியாச் சொல்றான்னா, நம்ம தான் கன்ஃபியூஸ் ஆயிட்டோம் போல’ என்று நினைத்துக்கொண்டான். “சிவா, நான் எவ்வளவு ஆசையா என் ஃப்ரெண்ட்கிட்ட என் லவ்வரை இண்ட்ரடியூஸ் பண்ணுவோம்னு வந்தேன்..நீ என்னடான்னா….” ”சரிடா..சரிடா..” என்று பம்மினான் சிவா. “நல்லவேளைடா..நாளைக்கு அவ முன்னாடி சொல்லாமப் போனியே..” “சரி..சரி..விடு..நான் நாளைக்கு வர்றேன்..ஹா..ஹா..செம ஜோக்குல்ல?” என்றான் சிவா. மதன் அவனைப் பரிதாபமாகப் பார்த்தான். மறுநாள் ஸ்டிக்ல்ஸ்டட் ஹோட்டலில் வைத்து யோஹன்னாவும் சிவாவும் சந்தித்துக்கொண்டார்கள். மதன் அப்பாவியாக அமர்ந்திருந்தான். யாரைப் பார்த்தாலும் முதல் சந்திப்பிலேயே தயக்கமின்றிப் பேசும் சிவா இங்கும் ஆரம்பித்தான். பரஸ்பர அறிமுகங்கள், தன் தீஸிஸ் ஒர்க் என்று பேசிக்கொண்டே போனான். யோஹன்னாவிற்கு அவன் வெளிப்படையாக சரளமாகப் பேசுவது பிடித்திருந்தது. அவள் தன் பெற்றோர் பற்றியும் இப்போது தான் தனித்து இருப்பது பற்றியும் சொன்னாள். சிவாவுக்கு அதைக் கேட்கவும் அந்தப் பெண் மேல் பரிதாபம் பிறந்தது. உடனே அவளுக்கு அண்ணன் கேரக்டரை தானே முன்வந்து மனதிற்குள் ஏற்றுக்கொண்டான். “ மதன் சொன்னான்…ரொம்ப சந்தோசமா இருந்துச்சு..” என்றான் சிவா. “என்ன சொன்னான்?” “நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்னும் சீக்கிரமே மேரேஜ் பண்ணிக்கப்போறீங்கன்னும் சொன்னான்..நீங்க ரெண்டு பேரும் பெர்ஃபெக்ட் ஜோடி” யோஹன்னா மதனைத் திரும்பிப் பார்த்தாள். மதனுக்குத் தெரியும், சிவா இப்படி உளறுவான் என்று. உளறட்டும் என்றே முழுதாக எதையும் சொல்லாமல் கூட்டி வந்திருந்தான். ’இது அடுத்த அட்டாக்..நண்பர்களிடம் கூடச் சொல்கிறானே என்று நம்ப ஆரம்பித்தால் மேட்டர் ஓவர்..ஏன் இப்படி நண்பர்களிடம் சொல்லிக் கேவலப்படுத்துகிறாய்?” என்று துள்ளினால், இன்றோடு இவள் சேப்டர் க்ளோஸ்..இப்போது யோஹன்னா என்ன செய்யப் போகிறாள்?” முகத்தில் எந்த ரியாக்சனும் காட்டாமல் மதன் சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். ‘பண்றதையும் பண்ணிட்டு எப்படி அமுக்கன் மாதிரி இருக்கான்’ என்று யோஹன்னா யோசித்தாள். சிரிப்பு வந்தது. மதனும் சிரித்தான். என்ன நடக்கிறதென்றே தெரியாமல் சிவாவும் சிரித்தான். மதனும் யோஹன்னாவும் அதன்பிறகு காதலர்களாகவே நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். யோஹன்னா ஒரு புத்தகப் புழுவாக இருந்தாள். ரொம்பவும் நீதி, நேர்மை, கற்பென மாரல் மங்கையாக இருந்தாள். மதன் சமயம் பார்த்துக் காத்திருக்க ஆரம்பித்தான். நெருக்கத்தில் யோஹன்னாவைப் பார்ப்பதும், அவ்வாறு பார்த்த பின்னும் அவளை ஏதும் செய்ய முடியாமல் இருப்பதும் மதனுக்கு பேரவஸ்தையாக இருந்தது. காதலில் ஆகச் சிறந்த விஷயமே இந்த தவிப்பு தான் என்று தோன்றியது, கையருகே பெண் இருந்தும், அவளது வாசமே தன்னைத் தூண்டியும் ஏதும் செய்யாமல் இருக்கும் இந்தத் தவிப்பும் நன்றாகவே இருந்தது. தொட்டுவிடலாமா என்று ஆர்வம் பொங்கிய போதெல்லாம் அடக்கிக்கொண்டான். அவள் தன் ஃப்ளாட்டுக்கு டின்னருக்குக் கூப்பிடட்டும் என்று காத்திருந்தான். அங்கே டின்னர் என்றால் கிளைமாக்ஸ் என்றே அர்த்தம்! மதன் பெண்களுக்காக செலவழித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அமெரிக்கர்களும் மதனுக்குப் போட்டியாக வீடு வாங்க செலவழித்துக்கொண்டிருந்தார்கள். கையில் காசு இல்லாவிட்டாலும் கடன் எளிதாகக் கிடைத்தது. ஒன்றுக்கு இரண்டாக ஜிமிக்கி வாங்குவது போல் வீடு வாங்கித் தள்ளினார்கள். கடனைத் திருப்பிச் செலுத்தும்போது தான் பிரச்சினை வந்தது. ‘திருப்பிக் கொடுக்க வக்கில்லை ’என்பதை டீசண்டாக சப் ப்ரைம் இஷ்யூ என்றார்கள். கடன் கொடுத்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அலறின. அதைக் கேட்ட கரடிகள் பங்குச்சந்தையில் பாய்ந்து குதறின. தொழில் நிறுவனங்கள் தங்கள் புராஜக்ட்டை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின. புராஜக்ட் நின்றதும் ஆட்குறைப்பு ஆரம்பமானது. கம்பெனி மதனை அழைத்தது. “தங்கள் சேவையை மெச்சினோம்..இருப்பினும் தங்களைத் தொடர்ந்து இங்கு வைத்துக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறோம்..விசா முடிய இன்னும் 3 மாதம் இருப்பதால் நீங்களும் இந்த நாட்டில் அதுவரை தங்கலாம். விருப்பப்பட்டால் வேறு வேலை தேடிக்கொள்ளலாம். ஆனால் ஃப்ளாட்டை இம்மாத இறுதியில் காலி பண்ணி விடவும். நன்றி. நீங்கள் கிளம்பலாம்” என்று பிங்க் ஸ்லிப்பைக் கையில் கொடுத்தது. பெரிய சேமிப்பு ஏதும் இன்றி மதன் நார்வேயில் நடுரோட்டில் நின்றான்.   அத்தியாயம் - 37 அமெரிக்கா ரணகளமாகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கிருந்த நானும் அய்யரும் சிக்கன் வாங்கி வந்து சமைக்க ரெடி ஆகிக்கொண்டிருந்தோம். சிக்கன் சமைப்பதில் எனக்கு இருந்த பிரச்சினை கறியை நறுக்குவது தான். அந்த பச்சை மாமிச வாசம் பட்டால் சாப்பிட முடியாது. ஏற்கனவே சென்ற முறை கறி நறுக்கி விட்டு, சாப்பிட முடியாமல் அவதிப்பட்டேன். அய்யரே அத்தனை கறியையும் அநியாயமாகத் தின்றான். எனவே இந்த முறை கறி நறுக்குவதை அவன் பொறுப்பில் விட்டு விட்டு, ஹாலில் போய் உட்கார்ந்து கொண்டேன். அய்யர் கறி நறுக்கியபடியே பேசிக்கொண்டிருந்தான். பேச்சு மதனைப் பற்றித் திரும்பியது. “பாஸ், மதன் இப்போ நார்வேல தானே இருக்கார்?” “ஆமா..அவன்கிட்ட சாட் பண்ணி வேற ரொம்ப நாளாயிடுச்சு..” ”அவரை நான் ஆரம்பத்துல என்னவோ நினைச்சேன் பாஸ்..ஆனா உண்மையில் ஹி இஸ் அ கிரேட் பெர்சன்..” ஏன் இப்படிச் சொல்றான்னு யோசித்த படியே அமர்ந்திருந்தேன். அவன் தொடர்ந்தான். “அவர் கல்யாணத்துக்கு நான் தான் சார் சாட்சிக் கையெழுத்து போட்டேன்..அந்த ஃபார்ம்ல டைவர்ஸின்னு பார்க்கவும் ஷாக் ஆகிட்டேன்..அப்புறமாக் கேட்டப்பதான் தெரியும் அந்தப் பொண்ணு ஏற்கனவே டைவர்ஸ் ஆனதுன்னு. இந்தக் காலத்துலயும் இப்படிப் பண்ண பெரிய மனசு வேணும் சார்…”அய்யர் பேசிக்கொண்டே போனான். அவன் பேசிய எதுவும் அதன்பிறகு நான் கவனிக்கவில்லை. அதிர்ச்சியில் உட்கார்ந்திருந்தேன். மதன் ஒரு டைவர்ஸியைக் கல்யாணம் செய்ததில் எனக்கு அதிர்ச்சியில்லை. அதை ஏன் என்னிடம் மறைத்தான்? நான் எவ்வளவு நெருக்கமான நண்பனாக அப்போது இருந்தேன்…வெளியில் சொல்ல முடியாத (இந்தத் தொடரிலும் எழுத முடியாத…) பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டவன் இதை மறைத்திருக்க வேண்டியதில்லையே..எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது…சரி, தன் மனைவியைப் பற்றிய அந்தரங்கத் தகவல் ஏன் வெளியில் தெரிய வேண்டும் என்று மதன் நினைத்திருக்கலாம். அப்படித் தான் இருக்க வேண்டும்.’ என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன். மதனுக்கு வேலை போன விஷயம் அறிந்ததும் யோஹன்னா மதனுக்கு ஆறுதல் சொன்னாள். தங்குவது பற்றிக் கவலைப்படவேண்டாம் என்றும் தன் ஃப்ளாட்டிலேயே தங்கிக்கொள்ளலாம் என்றும் சொன்னாள். மதனுக்கு அவள் அப்படிச் சொன்னது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் பிகு செய்துவிட்டு ஒத்துக்கொண்டான். யோஹன்னாவின் சிங்கிள் ஃப்ளாட்டில் அவர்கள் ஒன்றாக வசிக்க ஆரம்பித்தார்கள். ஏற்கனவே சம்பளம் போதாமல் கஷ்டத்தில் இருந்த யோஹன்னா, மதனுடன் தன் உணவையும் பகிர்ந்து கொண்டாள். மதன் மேல் அவளுக்கு பரிதாபமும் அன்பும் பொங்கியது. ’எவ்வளவு கஷ்டப்பட்டு, வெளிநாட்டில் இருந்து வேலை தேடி இங்கு வந்திருப்பான்..இப்படி ஆகிவிட்டதே..ஏன் நல்லவர்களுக்கே இந்த மாதிரி கஷ்டங்கள் வருகின்றன’ என்று மதனுக்காக கவலைப்பட்டாள். தனக்குத் தெரிந்த நண்பர்களுக்கு மதனின் சிவியை அனுப்பினாள். மதனும் பல இடங்களிலும் வேலைக்கு அலைந்தான். எல்லா இடத்திலும் லே ஆஃப் போய்க்கொண்டிருந்தது. கையில் காசும் குறைந்த போனதால், மதனால் மற்ற ஃபிகர்களை மெயிண்டெய்ன் செய்ய முடியாமல் போனது. யோஹன்னாவைக் கவிழ்ப்பதற்கான முயற்சியைத் தொடர்ந்தான். அவளுக்கு இலக்கியங்கள் மேலும் தத்துவத்தின் மேலும் ஈடுபாடு இருந்தது. ஷெல்லி முதல் சிக்மண்ட் ஃப்ராய்டு வரை படித்திருந்தாள். எனவே மதனும் தன்னை தத்துவ நாட்டம் கொண்டவனாகவும், யோகா, மெடிடேசனில் ஆர்வம் உள்ளவனாகவும் காட்டிக்கொள்ள ஆரம்பித்தான். ஒரு நாள் இரவில் திடீரென உட்கார்ந்து கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தான். இடையில் முழித்துப் பார்த்த யோஹன்னாவிற்கு அது ஆச்சரியமாக இருந்தது. “மதன், என்ன செய்றே?” “மெடிடேசன்..மனசு ரொம்ப சஞ்சலமா இருந்தா, கவலையா இருந்தா நான் மெடிடேசன் செய்வேன்” “ஓ..இப்போ என்ன கவலை? என்ன சஞ்சலம்?” “வேலை கிடைக்கலையேன்னு கவலை” “அப்போ சஞ்சலம்?” “சஞ்சலம்…உன்னை மாதிரி அழகான பொண்ணுகூட சும்மா படுத்துக்கிடந்தா, சஞ்சலம் வராதா?” யோஹன்னாவிற்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. “அப்போ மெடிடேசன் பண்ணா, சஞ்சலம் போயிடுமா?” “போகாது..குறையும்..எங்க புராணத்துல ஒரு கதை உண்டு..விஸ்வாமித்திரர்னு ஒரு முனிவர் தவம் இருந்தார்னும் அவர் தவத்தை மேனகை கலைச்சான்னும் சொல்வாங்க..அப்பேர்ப்பட்ட விஸ்வாமித்திரன் தவமே கலையும்போது என் தவம் கலையாதா?” “நாங்க முன்னாடி வந்து நின்னாலே தவம் கலைஞ்சிடுமா? அப்போ மெடிடேசனே வேஸ்ட்டு தானா?” “சும்மா வந்து நின்னா கலையாது..வேணாம் விடு..நீ தூங்கு..நான் கொஞ்ச நேரம் மெடிடேசன் பண்ணிட்டு வர்றேன்” கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தான்! யோஹன்னா கட்டிலில் இருந்து, தன் இரவுக் கவுனுடன் இறங்கினாள். மெதுவாக அவனை பின் பக்கமாய் நெருங்கி, அவனது இரு தோள்களின் மீதும் தன் கால்களைப் போட்டு, ஏறி உட்கார்ந்தாள். மதன் மல்லாந்து விழுந்தான். அவளும் அவனுடன் விழுந்துவிட்டுச் சிரித்தாள். முகமெல்லாம் குழந்தைத்தனம் மின்னச் சிரித்தாள். மதனும் சிரித்தான். சட்டென்று மதன் கேட்டான். “யோஹன்னா..நம் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்னுன்னு நினைக்கிறேன்..நாம் இதன் ஞாபகார்த்தமாக ஒரு ஃபோட்டோ எடுத்துப்போமா?” யோஹன்னாவும் சந்தோசத்துடன் சரியென்றாள். அவன் கேமிராவை எடுத்து ஆட்டோ மோடில் வைத்தான். “நான் திரும்ப மெடிடேசன்ல உட்கார்றேன். நீ என் தோள் மேல் ஏறு” என்றான். அவள் அப்படியே செய்தாள். அரைகுறை ஆடையுடன் தோளில் ஏறவும், அது ஆபாசமாய் மேலேறியது…கேமிரா கூச்சப்படாமல் அதை க்ளிக்கியது. சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவள் தூங்கியபின், மதன் எழுந்தான். கேமிராவை லேப்டாப்புடன் இணைத்து ஃபோட்டோவை எடுத்தான். தம் யாஹூ மெயிலை ஓப்பன் செய்தான். புது மெயிலை கம்போஸ் செய்தான் ‘This is life..This is the way of living life” என்று டைப் செய்துவிட்டு, அந்த ஃபோட்டோவை அட்டாச் செய்தான். உலகம் முழுதும் இருக்கும் தன் நண்பர்களுக்கு அதை அனுப்பினான். அனைவரையும் அது சென்றடைந்தது. எனக்கும் அது வந்து சேர்ந்தது.     அத்தியாயம் - 38 மதன் தொடர்ந்து வேலை தேடினான். பல கம்பெனிகளுக்கும் ரெசியூம் அனுப்பிக்கொண்டே இருந்தான். ஆனாலும் வேலை தான் கிடைத்த பாடில்லை. வேலை தேடியே இரண்டு மாதம் கடந்திருந்தது. தனக்கு வேலை போன விஷயத்தை தன் நண்பர்களுக்கும் ஜமீலாவிற்கும் அவன் சொல்ல்வேயில்லை. அதை பெரும் மானப்பிரச்சினையாக நினைத்தான். தன் வெற்றி, தோல்விகளில் சரிசமமாகப் பங்கெடுத்துக்கொள்கிறவளே மனைவி. தன் வாழ்வின் சரி பாதியான வாழ்க்கைத் துணையிடம் நடிக்கத் தொடங்குபவன், முடிவில் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான். கடும் தோல்வியிலும், விரக்தியிலும் இருக்கும் மனிதனுக்கு வாழ்க்கைத் துணை தரும் ஆறுதல் அளப்பரியது. அதைப் பற்றிய எந்தப் புரிதலும் இன்றி, மதன் ஜமீலாவிடமே இமேஜை மெயிண்டய்ன் செய்தான். அவளும் விஷயம் தெரியாமல் ‘ஏன் இன்னும் விசா எடுக்கவில்லை’ என்று சண்டையை தொடர்ந்தாள். அது மதனை மேலும் வெறுப்பேற்றியது. ‘என்ன பெண் இவள்…எப்போது பார்த்தாலும் சண்டையிட்டுகொண்டு..’ என்று கோபமாக வந்தது. அவளுடன் பேசுவதைக் குறைத்தான். யோஹன்னா சந்தோசத்தின் உச்சியில் இருந்தாள். தான் எதிர்பார்த்த மாதிரியே தன் மேல் அன்பு பொழிய ஒருவன் கிடைத்திருப்பது அவளை எப்போதும் சந்தோசத்தில் மிதக்க வைத்தது. அதுவும் அவன் தன்னுடனே தங்கியிருக்கின்றான் என்பது மேலும் பூரிப்பைத் தந்தது. தனியே அமர்ந்திருக்கும்போதும் மதனையே நினைத்தாள், சிரித்தாள். அலுவலக நண்பர்கள் வித்தியாசத்தை உணர்ந்தார்கள். மெல்ல என்ன விஷயம் என்று நோண்டினார்கள். யோஹன்னா தன் காதலனைப் பற்றிச் சொன்னாள். நண்பர்களும் சந்தோசத்துடன் அவளை கேலி செய்தார்கள். அன்று மாலையே அவள் வீட்டிற்கு வந்து மதனைச் சந்திப்பதாகச் சொன்னார்கள். யோஹன்னாவும் சரி என்றாள். பதிவர் சிவா அன்று கடும் விரக்தியில் இருந்தான். காரணம், அன்று பதிவு எழுத ஒரு மேட்டரும் சிக்கவில்லை. என்னத்தைத் தான் எழுத என்று கடுப்பாகி, லேப்டாப்பை மூடிவிட்டு, வெளியே கிளம்பினான். பொதுவாக பதிவருக்கு கோபம் வருவது நல்லது. அந்த கோபத்தை ஜெயலலிதா மீதோ கருணாநிதி மீதோ இறக்கினால், நல்ல ஹிட்ஸ் கிடைக்கும். கல்யாணம் ஆகியிருந்தாலாவது மனைவியுடன் சண்டை போட்டு, கோபத்தை கூட்டிக்கொள்ளலாம். கட்டைப் பிரம்மசாரியான சிவாவுக்கு கோபமும் நன்றாக வரவில்லை. எம்ப்டி மைண்டாக வெளியில் சுற்றிய சிவா, தற்செயலாய் மதன் வீட்டுக்கு அருகில் வந்துவிட்டதை அறிந்தான். ‘சரி, இவனையாவது பார்ப்போம்’ என்று உள்ளே நுழைந்தான். மதன் வழக்கம்போல் ‘வந்துட்டாண்டா இம்சை’ என்று நினைத்துக்கொண்டே ‘வாடா சிவா” என்று சிரித்தான். சிவா உள்ளே போய் அமர்ந்து கொண்டு, வேலை விஷயம் என்ன ஆயிற்று என்று விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, யோஹன்னா தன் நண்பர்கள் கூட்டத்துடன் உள்ளே நுழைந்தாள். கூட்டத்தைப் பார்த்து மதன் மிரண்டான். யோஹன்னா மதனிடம் அவர்களை அறிமுகப்படுத்தினாள். “இவங்க என் ஆஃபிஸ் ஃப்ரெண்ட்ஸ்..உன்னை பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க..அதான் கூட்டி வந்தேன்” என்றாள். சிவாவையும் அனைவரிடமும் ‘எனக்கு கிடைத்த இந்திய அண்ணன்’ என்று அறிமுகப்படுத்தினாள். ஏற்கனவே ஃபீலிங்ஸ் பார்ட்டியான சிவா மனதில் ‘என் இனிய வெள்ளைக்காரத் தங்கச்சிக்கு’ என்று ஒரு கவிதைத் தலைப்பு ஓடியது. ‘அப்பாடா பதிவு ஒன்னு சிக்குச்சு’ என்று முகம் மலர்ந்தான். யோஹன்னா மதனுக்கு வேலை போய் விட்டதையும், இன்னும் விசா ஒரு மாதமே இருப்பதையும் சொன்னாள். எல்லோரும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தபோது, யோஹன்னாவின் தோழி ஒருத்தி ‘இது ஒரு பிரச்சினையே அல்ல..மதன் இந்தியா போக வேண்டியதும் இல்லை’ என்றாள். எல்லோரும் ஆச்சரியத்துடன் அவளைத் திரும்பிப் பார்த்தனர். “ரொம்ப சிம்பிள்..இப்போ யோஹன்னா மதனை மேரேஜ் பண்ணிக்கிட்டா, ரெசிடன்ஸி அப்ளை பண்ணிடலாம்..விசா பிராப்ளம் ஓவர்..கண்ணெதிரே தீர்வை வச்சுக்கிட்டு ஏன் எல்லாரும் குழம்புறீங்க?” என்றாள். “கிரேட்” என்று அனைவரும் கத்தினர். யோஹன்னா வெட்கத்தால் சிவந்தாள். மதனுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. இதை அவன் எதிர்பார்க்கவில்லை. மேட்டரை முடித்துவிட்டு நகரவே அவன் யோஹன்னவிடம் வந்தான். ஆனால் இப்படி ஒரு அருமையான வாய்ப்பு இருப்பது அவனுக்கு உறைக்கவே இல்லை. ஜமீலாவை முழுதாக கழட்டிவிடும் எண்ணமும் அவனுக்கு இல்லாததே அதற்குக் காரணம். “என்ன மதன்..என்ன யோசிக்கிறே?” என்று சிவா மதன் திகைத்து நிற்பதைப் பார்த்துக் கேட்டான். “ஒன்னுமில்லை..அப்படியே செஞ்சுடலாம்” என்றான் மதன். அனைவருக்கும் உடனே ஒயின் ஆர்டர் செய்யப்பட்டது. நண்பர்கள் ஜோடி ஜோடியாக நடனமாடிக் களைத்த பின் விடை பெற்றனர். சிவாவும் கிளம்பினான். மதன் ஜமீலாவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். ’இப்போது என்ன செய்வது..இவளைத் திருமணம் செய்துகொண்டு, இங்கேயே செட்டிலானால் எவ்வளவு நன்றாக இருக்கும்..நம் வகுப்பு நண்பர்கள் யாருக்குமே இப்படி ஒரு வாழ்க்கை அமைந்ததில்லையே..எல்லோரிடமும் ‘இப்போது தெரிகிறதா நான் உங்களையெல்லாம் விட உயர்ந்தவன் என்று’ என சவால் விடலாம்.’.. பெரும் குழப்பத்துடன் உட்கார்ந்திருந்த மதனிடம் யோஹன்னா வந்தாள். “என்ன யோசனை?” “நீ இதுவரை என்கிட்ட ஐ லவ் யூன்னு சொல்லவே இல்லை..இப்போ தீடீர்னு டைரக்டா மேரேஜ்னு சொல்லவும் ஷாக்காகிட்டேன்” “நான் வாய் திறந்து சொன்னாத்தான் உனக்குத் தெரியுமா? என்னோட ஒவ்வொரு அசைவுலயும் என் காதல் தெரியவில்லையா?” என்றாள் வெட்கத்துடன். வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான்.   அத்தியாயம் - 39 ”யோஹன்னா…உட்கார்” யோஹன்னா மதனின் அருகில் சோஃபாவில் அமர்ந்தாள். “மதன், நான் உன் அப்பாகூடப் பேசணும்” ’என்னடா இது’ என்று துணுக்குற்ற மதன் “ஏன்?” என்றான். “இது என்ன கேள்வி..நாம கல்யாணம் பண்ணிக்கப்போறோம்..நான் என் அம்மாகிட்ட உன்னைப் பத்தி ஏற்கனவே சொல்லிட்டேன். நீயும் உன் அப்பாகிட்டச் சொல்லு. அவர் கல்யாணத்துக்கு வந்தா நல்லா இருக்கும். டூரிஸ்ட் விசா நான் அரேஞ்ச் பண்றேன்.” “யோஹன்னா..புரியாமப் பேசாத. இந்தியால லவ் மேரேஜுங்கிறது சாதாரண விஷயம் இல்லை. வேற ஜாதி, மதப் பொண்ணுன்னாலே ஒத்துக்க மாட்டாங்க. நீ வேற நாடு..எப்படி அப்பா ஒத்துப்பார்? நாம முதல்ல கல்யாணம் பண்ணிப்போம். அப்புறம் அவருக்கு தகவல் சொல்லிக்கலாம்” யோஹன்னாவுக்கு அதில் உடன்பாடு இல்லை. “இல்லை மதன்..நீ அவர்கிட்ட விஷயத்தை சொல்லிடு. ஒருவேளை அவர் இதுக்கு ஒத்துக்கலேன்னா அப்புறம் நாமா கல்யாணம் பண்ணிக்கலாம். நாமாகவே இப்போ எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.” மதன் இந்த இரவு நேரத்தை விவாதத்தில் கழிக்க விரும்பவில்லை. “ஓகே..நீ சொல்றதும் சரிதான்..நான் அவர்கிட்டப் பேசுறேன். அவரும் கல்யாணத்துக்கு வந்தா நல்லாத் தான் இருக்கும்” யோஹன்னா மகிழ்ந்தாள். “குட் பாய்” என்றாள். “யோஹன்னா, ஏன் என்னைப் பிடிச்சிருக்கு உனக்கு?” “ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கைத்துணையிடம் தன் தந்தையையே தேடுகிறாள்..சிக்மண்ட் ஃப்ராய்டு….படிச்சதில்லையா?” “ம்..இதையே எங்க ஓஷோவும் சொல்லி இருக்காரே..ஒவ்வொரு ஆணும் பெண்களிடம் தேடுவது தன் தாயையேன்னு” “ம்..அப்புறம் என்ன சொன்னார்?” “உண்மையில் காமத்தில் என்ன தான் நிகழ்கிறது? ஆணுக்கு என்ன தான் தேவை? ஆணின் ஆழ்மனதில் இன்னும் கருப்பையில் வாழ்ந்த காலம் படிந்துள்ளதோ? மீண்டும் கருப்பையில் நுழைவதற்கான போராட்டம் தான் காமமா? அப்படியென்றால் அது முடிவற்றதாயிற்றே..காமத்திற்கும் காமத்தினால் வரும் அயர்ச்சிக்கும் அடிப்படை அது தானா?” யோஹன்னாவிற்கு எப்போதும் தத்துவ புத்தகங்களில் நாட்டம் உண்டு. அவள் தொடர்ந்தாள். “பெண் குழந்தைகள் எப்போதும் தந்தை மேலே பிரியம் கொள்கிறார்கள். அழகான பெண்கள் அவலட்சணமான ஆண்களை மணக்கும் காரணம் தான் என்ன..ஒருவேளை தன் தந்தையின் சாயலை அவனிடம் கண்டதாலா? பெண்ணுக்குத் தேவை அண்மை…….எப்போதும் பிரியாமல் கூட இருந்தே அன்பைப் பொழியும் தன்மை” “யோஹன்னா, மனதில் இருக்கும் அன்பை எப்படி வெளிப்படுத்துவது? கவிதை எழுதியா? அப்படி திட்டமிடலுடன் தொடங்கினால் அது வார்த்தை அடுக்கும் விளையாட்டாகி விடாதா? வேறு எப்படி அன்பை வெளிப்படுத்த முடியும்..காமம் வெறும் உடற்பசியா அல்லது மனதில் பெருகும் அன்பைப் பரிமாறும் வழிமுறையா? ஆயிரம் வார்த்தைகள் எழுதினாலும் சொல்ல முடியாத ஆறுதலை ஒரு அரவணைப்பு சொல்லி விடுகிறதே..தொடுதல் வெறும் உடல்களின் தீண்டலா?” சொல்லிவிட்டு மதன் யோஹன்னாவின் கையை மென்மையாகப் பற்றிக் கொண்டான். யோஹன்னா தொடர்ந்தாள். “இல்லை..தொடுதல் மனதில் இருப்பதை அடுத்தவருக்கு கடத்தும் உபகரணம்…அன்பைச் சொல்ல சொற்கள் போதுமா? ஒருகட்டத்தில் சொற்கள் பொருளிழந்து விடுகின்றன..வெறும் எழுத்துக்குவியலாய் மாறிப்போகின்றன” ” அப்படியென்றால் இப்போது நான் என் அன்பை எப்படிச் சொல்ல யோஹன்னா?” யோஹன்னாவின் மனது சிலிர்த்தது. காதோரம் நரம்புகளின் ரீங்காரம் கேட்டது. மதனின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். ”யோஹன்னா..இது வார்த்தைகள் உதிரும் நேரமா? மனதில் இருந்த அன்பு உடலெல்லாம் பரவி நிற்பது தெரிகின்றதா? கை கோர்த்தல் போதுமா? என்னைப் பார் யோஹன்னா….ஏன் கண்களை மூடுகிறாய்.அன்பின் அழுத்தம் தாங்கவில்லையா? யோஹன்னா………”   என் உதட்டில் இருப்பது ஷெல்லியின் வரியா ? உன் உதட்டில் தெரிவது கம்பனின் வரியா ? இரண்டையும் இணைத்து புதுக்கவிதை சமை.   ஃப்ராய்டின் கருத்து கொண்டு வெட்க ஆடை விலக்கு. ஓஷோவின் வழி பற்றி தத்துவ தரிசனம் செய்.   தத்துவத்தின் பாதையில் தொலைந்தோர் அநேகம். எனை விட்டு விடாது இறுகப் பற்று.   சலனமற்ற தன்மையில் சலிப்பே மிஞ்சும். இயங்கு – அதுவே பிரபஞ்ச அடிப்படை இயக்கம் – அதுவே என்றும் சாஸ்வதம்.   அத்தியாயம் - 40 ஜமீலாவுக்கு மதுரை ஓரளவு பழகியிருந்தது. மதனின் அப்பா பேரனை கொஞ்சுவதிலேயே பெரும்பகுதி நேரத்தைக் கழித்தார். கரடுமுரடான சுபாவம் உள்ள அவர் இப்படி பேரனுடன் விளையாடுவது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ‘இதுவரைக்கும் இந்தாளு ஏதாவது பிள்ளையை தூக்கி இருக்காரா..இப்போ பேரன் வரவும் இறக்கி விடமாட்டேங்கிறாரே’ என்று உறவுகள் ஆச்சரியப்பட்டன. ஜமீலாவிற்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தன. அவள் கேட்பது எல்லாம் வாங்கித்தர வேலையாட்களுக்கு மதன் அப்பா சொல்லி வைத்திருந்தார். ஆனாலும் ஜமீலாவிற்கு ’ விசா ஏன் இப்படி லேட் ஆகிறது, மதன் எப்போது தன்னை அழைத்துக்கொள்வான் ‘ என்ற யோசனையே ஓடிக்கொண்டிருந்தது. மகனுக்கும் இடையில் பாஸ்போர்ட் அப்ளை பண்ண முயற்சித்தாள். அதற்கு மதனின் அனுமதி வேண்டும் என்றும், அஃபிடவிட்டில் அவன் கையெழுத்திட்டு அனுப்பவேண்டும் என்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் சொல்லி திருப்பி அனுப்பினார்கள்.மதனிடம் அது பற்றிப் பேசலாம் என்றால் அவனிடம் இருந்து ஒரு வாரமாக ஃபோனே இல்லை. என்ன செய்கிறான் என்றே தெரியவில்லை…. மதனை ஒருவாரமாக யோஹன்னா ’அப்பாவிடம் பேசியாகிவிட்டதா’ என்று நச்சரித்துக்கொண்டிருந்தாள். “மதன், எனக்கும் உன் அப்பாகிட்ட பேசணும்னு ஆசையா இருக்கு. அவர் ஒத்துக்கலேன்னா என்கிட்ட கொடு. நான் பேசுறேன். எனக்கு என் அப்பாவைத் தான் பார்க்க கொடுத்துவைக்கலை. உன் அப்பாவைப் பார்த்தாவது என்னை நான் ஆறுதல் படுத்திக்கறேன். “ மதனுக்கு இந்த விஷயத்தை எப்படி அடுத்து கையாளுவது என்று தெரியவில்லை. ’இவளை மணந்தால் இங்கேயே குடிமகன் ஆகி, நமது லைஃப் ஸ்டைலே மாறி விடும். ஆனால் இவள் அப்பாவிடம் பேசியே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கிறாளே..அப்பாவிடம் எப்படிப் பேச? என்ன சொல்ல முடியும்? எனக்கு வேறு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்றால் ஒத்துக்கொள்வாரா? அதற்கு சான்ஸ் கம்மி தான். ஜமீலாவைக் கைவிடுவதை அவர் ஒத்துக்கொள்ள வாய்ப்பே இல்லையே..என்ன செய்ய’ நாளெல்லாம் யோசனையிலேயே மதன் சுற்றினான். இடையில் யோஹன்னாவின் அம்மா வேலை விஷயமாக ஃப்ரான்ஸ் சென்றிருந்தாள். அங்கிருந்து சாட் பண்ணினாள். மதனிடம் பேச வேண்டும் என்று ஆர்வமாய்ப் பேசினாள். மதனை வெப் கேமில் பார்த்துவிட்டு, நல்ல ஜோடிப்பொருத்தம் என்றாள். “நீங்க உங்க அப்பாகிட்ட பேசிட்டுச் சொல்லுங்க. நான் ஒரு முக்கியமான அஃபிசியல் டூரில் இருக்கேன். நான் திரும்பி வரவும் மேரேஜை வச்சிக்கலாம்..ஆனால் உங்க அப்பா சம்மதம் முக்கியம்னு நான் நினைக்கிறேன்’ என்றாள். மதனும் ‘கண்டிப்பாகப் பேசுகிறேன்..அவர் ஒத்துப்பார்னு நம்புறேன்’ என்றான். விசா முடிவதற்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்த நிலையில், மதன் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தான். ஃபோனை எடுத்து அப்பாவிற்கு கால் செய்தான். “அப்பா” “மதனா..நல்லா இருக்கியாப்பா?’ “ம்…இருக்கேன்ப்பா” “என்னப்பா கம்முன்னு பேசுறே..என்ன ஆச்சு..உடம்பு கிடம்பு சரி இல்லையா?” “ப்ச்..விடுங்கப்பா..நீங்க நல்லா இருக்கீங்கள்ல..எனக்குன்னு இந்த உலகத்துல உண்மையா அன்பு காட்ட இருக்கிறது நீங்க தானே..” ‘என்னப்பா இப்படிப் பேசுறே..என்ன ஆச்சு..எங்க இருக்க? ஆஃபீஸ்லயா?” ‘இல்லைப்பா..ஒரு வாரமா ஆஃபீஸ் போகலை..” “ஏன்..ஏன்..என்ன ஆச்சுய்யா..ஆஃபீஸ்ல ஏதும் பிரச்சினையா?” “ஆஃபீஸ்ல இல்லைப்பா..விடுங்கப்பா..நான் அப்புறம் பேசுறேன்” “என்னய்யா..என்ன ஆச்சு..அப்பாக்கு பதறுதில்ல..என்னன்னு சொல்லு.” “ஏம்ப்பா நான் யார் மேலல்லாம் அன்பு காட்டுறனோ அவங்கள்லாம் என்னை ஏமாத்துறாங்க இல்லே விட்டுட்டுப் போயிடறாங்க?” “இப்போ யாருய்யா உன்னை ஏமாத்துனது?” “வேண்டாம்பா..இங்க எனக்குன்னு யாருமே இல்லை..அது மட்டும் நல்லா தெரியுது..என்..னால பேச முடியலை” “அழறியா? ஆம்பிளை நீ அழற அளவுக்கு என்னய்யா நடந்து போச்சு..அப்பா நான் இருக்கேன்ல..நீ அழறதைப் பார்த்திட்டு சும்மா இருப்பனா? ஏன் யாருமே இல்லேன்னு சொல்றே? நான் இருக்கேன்.ஜமீலா இருக்கா..என் பேரன் இருக்கான்..அப்புறம் என்னய்யா?” “வேணாம்பா..அவளைப் பத்திப் பேசாதீங்க..நான் ஏமாந்துட்டேன்பா” “என்னய்யா சொல்றே..என்ன ஏமாந்துட்ட?” ”அப்பா..அவ என்னை முட்டாளா ஆக்கிட்டாப்பா..என்னை மட்டுமில்ல நம்ம எல்லாரையும் முட்டாளா ஆகிட்டா” மதன் பேசுவதை நிறுத்தி அழத்தொடங்கினான். மறுமுனையில் மதனின் அப்பா உணர்ச்சிவசப்பட்டவராய் நின்றிருந்தார். “என்ன விஷயம்னு சொல்லுய்யா..அப்பா இருக்கேன்ல..இங்க நமக்காக எத்தனை பேரு இருக்காங்க..சொல்லு” “அப்பா..ஜமீலா ஏற்கனவே..” “ஏற்கனவே..என்னப்பா ஏற்கனவே?” “அவ ஏற்கனவே கல்யாணம ஆனவளாம்பா. அவ கேரக்டர் சரி இல்லேன்னு அவ முத புருசன் அவளை டைவர்ஸ் பண்ணிட்டானாம்..என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சிட்டாப்பா..நல்லவ மாதிர் நடிச்சு நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டா” “என்னது..அவ ஏற்கனவே அத்துக்கிட்டு வந்தவளா? என்னப்பா சொல்றே? யாரு உனக்கு இதைச் சொன்னது?” ”அவ கிளாஸ்மேட் பொண்ணு ஒன்னை இங்க பார்த்தேன்பா..அவ தான் எல்லாத்தையும் சொன்னா..அவளுக்காக நான் உங்களைக் கூட தூக்கிப் போட்டேன்..ஆனா அவ இந்த டைவர்ஸ் விஷயத்தைப் பத்தி ஒன்னுமே சொல்லாம என்னை நம்ப வச்சி ஏமாத்திட்டாப்பா..உங்க மனசை கஷ்டப்படுத்துன பாவத்துக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்பா” “டேய்..அவ நம்மளப் பத்தி என்னடா நினைச்சுக்கிட்டு இருக்கா? நாம என்ன சொம்பன்களா..நான் உம்னு ஒரு வார்த்தை சொன்னா வீச்சருவா, வேல்கம்போட ஓடிவர நூறு பேரு இங்க இருக்கான்..என் வீட்லயே அந்த அவிசாரி தன் வேலையைக் காட்டிட்டாளா..அழாத..அழாதய்யா..அப்பா இருக்கேன்ல..நீ ஃபோனை வை..நான் பார்த்துக்கிறேன், நான் பார்த்துக்கறேன்யா அந்த தே..முண்டையை.”   அத்தியாயம் - 41 ஜமீலா தன் குழந்தையுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தாள். மதனின் அப்பா கேட்டைத் திறந்துகொண்டு கோபமாக வருவதைப் பார்த்தாள். அவர் இப்படி ஆக்ரோசமாக வருவது புதிதல்ல. வழக்கமாக ஏதாவது கட்டைப் பஞ்சாயத்து செய்துவிட்டோ, யாரிடமாவது சண்டை போட்டுவிட்டோ வரும்போது, அவர் முகம் இப்படியே இருக்கும். ஜமீலா அவரைப் பார்த்து வாங்கப்பா என்று சொல்வதிலேயே பாதிக்கோபம் போய் விடும். பேரனைப் பார்த்துவிட்டால் மீதிக்கோபமும் போய், குழந்தையாகி விளையாட ஆரம்பித்துவிடுவார். இப்போதும் ஜமீலா “வாங்கப்பா” என்று சொன்னபடியே எழுந்து நின்றாள். ”என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? கேணப்பய மாதிரித் தெரியுதா?” சத்தமாக கடும் கோபத்துடன் மதன் அப்பா அப்படிக்கேட்டதும் ஜமீலா ஆடிப்போனாள். பயத்தில் பேச்சு வராமல் உடல் நடுங்க ஆரம்பித்தது. “எங்க குடும்பம் எப்பேர்ப்பட்ட குடும்பம்னு தெரியுமா? மதன் அம்மாவுக்கு இங்கே எப்படிப்பட்ட மரியாதை இருந்தது தெரியுமா? எல்லாரும் கையெடுத்துக் கும்பிடுற அளவுக்கு உத்தமியான பொம்பளை அவ. ஆனா..ச்சீ..உன்னை மாதிரி கழிசடையை அவ இடத்துல வச்சனேன்னு நினைக்கும்போது எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னை கொன்னுடலாமான்னு தோணுது” “நா..நான் என்னப்பா தப்பு பண்ணேன்?” ஜமீலா கண்ணில் கண்ணீர் வழியக் கேட்டாள். “என்னமா நடிக்கிறே..இப்படி நடிச்சுத்தானே என் பையனை ஏமாத்துன? அழுதா ஏமாந்திடுவோமா? உண்மையைச் சொல்லு..நீ ஏற்கனவே கல்யாணம் ஆனவ தானே? அங்க இருந்து அத்துக்கிட்டு வந்தவ தானே?” ஜமீலா அதிர்ந்து போனாள். இது திடீரென இவருக்கு எப்படித் தெரியும் என்று யோசித்தபடியே “ஆமாப்பா” என்றாள். “ஆமாவா..எவ்வளவு திமிராச் சொல்றே..இத்தனை நாள் இதை மறைச்சு ஏமாத்துன பயம் கொஞ்சமாவது தெரியுதா உனக்கு..உன்னை மாதிரி ஓடுகாலியை வீட்ல கொண்டுவந்து வச்சனே, அது என் தப்பு..மகன் சந்தோசம் தான் முக்கியம்னு எங்க சாதி கௌரவத்தை விட்டு உன்னை குடும்பத்துல சேர்த்தமே அதுக்கு இந்த அவமானம் தேவை தான்.இனி ஒரு நிமிசம் நீ இங்க இருக்கக்கூடாது. எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு அடிச்சே கொன்னுடுவேன். பொட்டச்சியாச்சேன்னு பார்க்கிறேன்..கிளம்பு..இப்பவே கிளம்பு” இனி இவரிடம் பேசிப் புரியவைக்க முடியாது என்று தெரிந்தது. ஜமீலா அழுதபடியே தன் பொருட்களை சூட்கேஸில் எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்தாள். வெளியே தெருவே கூடி இருந்தது. ‘என்ன பிரச்சினை..ஏன் இப்படிச் செய்றீங்க’ என்று அவரைக் கேட்க அங்கே யாருக்கும் தைரியம் இல்லை. வேறு ஜாதி/மதப் பெண் போய் தொலைந்தால் சரி எனும் மனப்பான்மையும் அங்கே இருந்தது. ஜமீலா அத்தனை பேரையும் கடந்து மெயின் ரோட்டிற்கு வந்து பஸ் ஸ்டாப்பில் நின்றாள். எங்கு போவது என்று தெரியவில்லை. பிறந்த வீட்டிற்குப் போக முடியாது. வேறு தோழிகளுடனும் தொடர்பு இல்லை. மதனின் நண்பர்களை தொடர்பு கொள்ளலாமா? அது வீட்டுப்பிரச்சினையை வெளியில் கொண்டுபோனது போல் ஆகிவிடுமே. வந்த பஸ்ஸில் ஏறினாள். “எங்கம்மா போகணும்” என்றார் கண்டக்டர். “எங்க போகுது இந்த பஸ்?” கண்டக்டர் ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே “ மாட்டுத் தாவணி” என்றார். “சரி, அதுக்கே ஒன்னு கொடுங்க” என்று டிக்கெட் வாங்கிக்கொண்டாள். மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்ட் கூட்டத்தில் அவளும் கலந்து அங்கேயே உட்கார்ந்திருந்தாள். அழுத பையனுக்கு பால் வாங்கிக்கொடுத்துவிட்டு, மதனுக்கு ஃபோன் செய்தாள். அவன் எடுக்கவில்லை. திரும்பத் திரும்ப அடித்தபடியே இருந்தாள். எந்த பதிலும் இல்லை. ‘என்ன செய்கிறான்..யார் இவரிடம் சொன்னது..நான் ஆரம்பத்திலேயே மறைக்க வேண்டாம் என்று சொன்னேனே..அவனோட க்ளோஸ் ஃப்ரெண்ட்டான பழனி, செங்கோவிகிட்டக் கூட சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டானே..இனி யார் என்னை நம்புவார்கள்’ என்று யோசித்தபடியே பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்திருந்தாள். எந்தப் பஸ்ஸிலும் ஏறாமல் பல மணி நேரமாக அங்கேயே இருந்ததால், சில ஆண்களும் கடைக்காரர்களும் வினோதமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். ஒருவன் செல்ஃபோனை வெறுமனே காதில் வைத்துக்கொண்டு “சொல்லும்மா..நான் இருக்கேன்ல..எவ்வளவு வேணும்..சொல்லு “ என்றான். ஜமீலா பயந்து போனாள். தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம்கூட ஒரு பெண் தனியே பொது இடத்தில் அமர்ந்திருக்க முடியாது என்பது புரிந்தது. அவள் அங்கிருந்து எழுந்து வேறு பக்கம் நோக்கி நடந்தாள். அங்கே ராஜபாளையம் பஸ் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். லட்சுமியக்கா ஞாபகம் வந்தது. ஜமீலாவின் பிரசவத்தின்போது உதவி செய்ய லட்சுமியக்கா வந்திருந்தார். மதனுக்கு அவர் அக்கா முறை. ராஜபாளையம் அருகே ஏதோ கிராமம் என்று சொன்னார்கள். பிரசவத்திற்குப் பிறகும் ஃபோனில் என்ன செய்யவேண்டும், கூடாது என அறிவுரை சொல்லிக்கொண்டே இருப்பார். தமிழ்நாட்டில் தனக்குத் தெரிந்த ஒரே ஆள் அவர் தான் என்பதால் ஜமீலா ராஜபாளையம் பஸ்ஸில் குழந்தையுடன் ஏறினாள். லட்சுமிக்கு ஃபோன் செய்தாள். “அக்கா, நான் ஜமீலா பேசுறேன்” ”ஜமீலாவா..நல்லாயிருக்கியாம்மா?” “ம்..ஊர்ல தானே இருக்கீங்க?” “ஆமா.ஏன்மா” “இல்லே..நான் ராஜபாளையம் வர்றேன்..அப்படியே உங்களையும் பார்க்கலாம்னு” “இம்புட்டு தூரம் வந்திட்டு, பார்க்காமலா போவே? போனா சும்மா விட்ருவனா? வாம்மா..ராசாளயம் வந்திட்டு போன் பண்ணு..அவரை பஸ் ஸ்டாண்டுக்கு வரச் சொல்றேன்” “சரிக்கா” ஜமீலா ஃபோனை வைத்தாள். ஆனாலும் பயமாகவே இருந்தது. ’மதனின் அப்பாவை எதிர்த்துக்கொண்டு, என்னை வீட்டில் தங்க விடுவார்களா என்று தெரியவில்லை. முதலில் போவோம். இதைத் தவிர வேறு வழியில்லை.’ என்று துணிந்தாள்.   அத்தியாயம் - 42 லட்சுமியக்கா நடந்ததைக் கேட்டு அதிர்ச்சியானாள். ‘ஐயா, அப்படித்தான். கோவம் வந்தா தூக்கி எறிஞ்சுடுவாரு..கோவம் தணிஞ்சா அவரே ஓடி வருவாரு. நீ கவலைப்படாத தாயி. மதன்கிட்ட நான் பேசுறேன். அவன் நல்ல புள்ள..நான் சொன்னாக் கேட்பான். இந்த ஊருல இருக்கிறதெல்லாம் நம்ம சொந்தக்காரங்க தான். நாங்க எல்லாம் இருக்கொம் தாயி. கவலைப்படாத” என்று ஜமீலாவைத் தேற்றினாள். அன்று இரவே மதனுக்கு லட்சுமியக்கா ஃபோன் செய்து விவரத்தைச் சொன்னாள். மதன் ‘அப்படியா..அவருக்கு எப்படித் தெரிஞ்சுச்சு..நான் பேசிக்கிறேன். கவலைப்படாதீங்க’ என்றான். ’ஜமீலா வீட்டை விட்டுபோனது ஒரு வகையில் நிம்மதி. ஆனால் அந்தக் கிராமத்தில் இருப்பது ஆபத்து. அது கட்டுப்பாடான கிராமம். அடிதடிக்கு அஞ்சாத ஜனங்கள். அப்பாவை இப்போதைக்கு எதிர்க்க மாட்டார்கள். ஆனால் மொத்தமாகக் கூடிவிட்டால் சிக்கல் தான். சீக்கிரம் அங்கிருந்தும் வெளியேற்ற வேண்டும். இப்போதைக்கு அங்கு இருக்கட்டும் ‘ என்று முடிவு செய்தான். “அக்கா, நான் இன்னும் கொஞ்சநாள்ல அங்க வந்திருவேன். அப்புறம் ஜமீலாவை என்கூட கூட்டிட்டு வந்துடுவேன். அதுவரைக்கும் பார்த்துக்கிறீங்களா?” என்றான். “சரிய்யா..அது நம்ம வீட்டுப் புள்ள. இங்கயே இருக்கட்டும்..ஜமீலாகிட்டப் பேசுறியா?” என்றாள் அக்கா. ”ஹலோ.ஹலோ” என்றபடியே லைனைக் கட் செய்தான் மதன். மதனின் அப்பா மதியம் சாட்டில் பேசியிருந்தார். அவனைக் கவலைப்பட வேண்டாம் என்றும் ஜமீலாவை விரட்டி விட்டதாகவும் சொன்னார். மதனும் அழுதுகொண்டே கேட்டுக்கொண்டான். அவனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றும்போது சாட்டில் வருவார். எப்படி இண்டர்நெட் கனெக்ட் செய்து, கூகுள் டாக்கில் பேச வேண்டும் என ஜமீலா சொல்லிக் கொடுத்திருந்தாள். அவருக்கு அதில் அளப்பரிய சந்தோசம் உண்டு. ’என் மகன்கிட்ட கம்ப்யூட்டர்ல பேசுறேன் ‘ என்று வெளியில் பெருமையாகச் சொல்லிக்கொள்வார். யோஹன்னா பொறுமையிழந்து போனாள். ”நீ உன் அப்பா ஃபோன் நம்பர் கொடு. நானே பேசுறேன். அவர் சரின்னு சொன்னாலும், சொல்ல்லைன்னாலும் நாம மேரேஜ் பண்ணிக்கப்போறது உறுதி. அப்புறம் ஏன் பயப்படறே?” என்றாள். மதன் ‘சரி, நானே பேசறேன்” என்று அப்பாவிற்குக் கால் செய்தான். “அப்பா..நான் மதன் பேசுறேன்பா” “நான் வீட்ல தான் இருக்கேன். கம்ப்யூட்டருக்கு வா. பேசுவோம்” என்றார். மதனும் வேறுவழியின்றி சாட்டுக்குப் போனான். “சொல்லுப்பா..இப்பவாவது தெளிவாயிட்டயா?” என்றார். “ம்..இப்போ என் ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸும் என் வீட்டுக்கு வந்திருக்காங்கப்பா எனக்கு ஆறுதல் சொல்ல” “அப்படியா..நல்லதுப்பா” யோஹன்னா “நான் பேசுறேன்” என்று சொல்லியபடியே வெப்கேம் முன் வந்தாள். “மதனு, யாருப்பா இது?” “கூட வேலை செய்ற பொண்ணுப்பா” “ஓ..நல்லாயிருக்கியாம்மா?” என்றார். யோஹன்னா மதனைப் பார்த்தாள். மதனின் அப்பாவுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது, மதன் கொஞ்சம் நிம்மதியோடு “ஹவ் ஆர் யூ”ன்னு கேட்கிறார் என்றான். “ஓ..ஐ அம் ஃபைன்..Madhan told lot abt u..it’s a gift to get such a lovable dad” என்றாள். ”இந்தப் பொண்ணு என்னப்பா கேட்குது” என்று அயல்நாட்டு ஆங்கிலம் புரியாமல் கேட்டார். மதன் அதனை தமிழ்ப்படுத்திச் சொன்னான். யோஹன்னா தொடர்ந்தாள். “We are in love for long time. It’s time to move forward in life. we wld like to have your blessing for our marriage. Madhan has lot of respect on you. He is hesitating to inform you about this” மதன் அதை அழகாக, தன் வசதிக்கேற்றபடி மொழிபெயர்த்தான். “அந்தப் பொண்ணு என்ன சொல்லுதுன்னா, நான் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். ஆனாலும் மேரேஜ் விஷயத்துல உங்க மனசைக் கஷ்டப்படுத்துனதால தான் இந்த நிலைமை. பெரியவங்க ஆசிர்வாதம் கல்யாணத்துக்கு அவசியம் தேவை-ன்னு சொல்லுதுப்பா” என்றார். ஃபாரினில் இப்படி ஒரு பெண்ணா என்று அவர் மகிழ்ந்தார். “மதனைப் பார்த்துக்கோம்மா. டேக் கேர் மை சன்” என்றார். “Oh Sure. I know that he is longing for love.I will take care of him. You dont worry” என்றாள் யோஹன்னா. “தேங்க்ஸ்” என்று வெப் கேமில் சிரித்தார் மதன் அப்பா. யோஹன்னாவும் வெட்கத்துடன் “Thanks” என்றாள். மதன் இதை இப்படியே கட் செய்வது நல்லது என்று முடிவு செய்தான். “அப்பா, நீங்க இங்க ஒரு தடவை வாங்களேன். சும்மா சுத்திப்பார்க்க?” என்றான். “இல்லைப்பா..நமக்கு அதெல்லாம் விருப்பமில்லை. நீ நல்லா இருந்தாச் சரி” என்றார். மதன் யோஹன்னாவிடம் ’அவர் நம் கல்யாணத்திற்கு வரமுடியாது’ என்கிறார் என்று சொன்னான். “ஓகே..அப்போ நாம மேரேஜ் முடிச்சுட்டு இந்தியா போவோம்” என்றாள். மதன் “சரிப்பா..பார்ப்போம்” என்று கட் செய்தான். மகன் முகம் கவலை குறைந்து தெளிவாய் இருப்பதைப் பார்த்த சந்தோசத்தில் அவரும் விடை பெற்றார். திருமணம் செய்வது என்று இறங்கவும் பல சிக்கல்கள் இருப்பது தெரியவந்தது. யோஹன்னா அம்மா தான் ஃப்ரான்சில் இருப்பதால் உடனே வர முடியாதென்றும், ஒரு மாதம் கழித்து தான் வந்தவுடன் மேரேஜ் வைத்துக்கொள்ளும்படியும் சொன்னாள். மதனுக்கு விசா அவ்வளவு நாள் இல்லை. எனவே முதலில் எங்கேஜ்மெண்ட் முடிப்பது என்றும், மதன் இந்தியா செல்லவும் விசிட்டிங் விசா உடனே எடுத்து, அழைத்துக்கொள்வது என்றும் முடிவு செய்தார்கள். மதன் ஃபாரினர் என்பதால் அங்குள்ள ரெஜிஸ்ட்ரார் ஆஃபீசில் முதலிலேயே எங்கேஜ்மெண்ட் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அது நம் ஊர் ஆஃபீஸ் போல் அல்ல, அத்தனையும் இன்டர்னெட் மூலமாக போலீஸ், கோர்ட் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலங்களும் கனெக்ட் ஆகியிருக்கும். அங்கே போய் எங்கேஜ்மெண்ட் செய்தால், ஃபாரினரின் பேங்க் அக்கவுண்ட், பாஸ்போர்ட் நம்பர், இந்த எங்கேஜ்மெண்ட் உள்ளிட்ட எல்லா விஷயங்களும் அனைத்து இடங்களிலும் அப்டேட் ஆகிவிடும். அதில் கேட்கப்பட்ட முக்கியக் கேள்வி ‘நீங்கள் ஏற்கனவே திருமணம் ஆனவரா?’ என்பது. மதன் இல்லையென்று டிக் செய்தான். அது குற்றம். சட்டப்படி தண்டிக்கபட வேண்டிய குற்றம். மேலும், மனம் திருந்தினாலும் அதன்பிறகு ஜமீலாவுக்கும், குழந்தைக்கும் விசா எடுக்கும் வாய்ப்பு அத்தோடு முடிந்து போனது. பதிவர் சிவா சாட்சியாக, அந்த நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறியது!   அத்தியாயம் - 43 பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசரும்……. பதிவர் சிவா தலையை உலுப்பிக்கொண்டான். ஏன் இந்த வரி இன்று அடிக்கடி ஞாபகம் வருகிறது? என்ன பாடல் இது? பொதுவாக ஏதாவது நல்ல பாடல் கேட்டுவிட்டால், அன்று முழுக்க அந்தப் பாடல் விடாது துரத்தும். இளையராஜாவின் ‘யமுனை ஆற்றிலே’ இரண்டு நிமிடப் பாடல் தான். ஒரு தடவை கேட்டுவிட்டால், அதுவே ஓடிக்கொண்டிருக்கும். இன்று காலையில் இருந்து இந்த வரி ஓடிக்கொண்டே இருக்கிறது..ஆஃபீஸ் வந்தும் விடவில்லை. யார் பிரம்ம ராட்சசர்? ஏன் பெண்களை பின்தொடர்கிறார்கள்? கொஞ்ச நேர யோசிப்பில் அது கந்த சஷ்டிக் கவசம் என்று புரிந்தது. இந்த வரி எங்கே வரும்? இதன் முந்தைய, பிந்தைய வரிகள் என்ன? மெதுவாக மனதிற்குள் கவசம் சொல்லிப் பார்த்தான். அந்த வரிகள் சிக்கவில்லை.. பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசரும்.. சிவாவுக்கு சிரிப்பு வந்தது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் பேய்க்குப் பயந்து தினமும் படித்தது ஞாபகம் வந்தது. ’சமீபத்தில் ஏதும் படிக்கவில்லையே.பெண்களைத் தொடரும்..’ தலையை உதறிவிட்டு, ஃபேஸ்புக் ஓப்பன் செய்தான். மதன் ஆன்லைனில் இருந்தான். “என்ன நண்பா ..கடலையா? உனக்குத் தான் வேலையில்லை..அவளையாவது வேலை செய்ய விடு” என்று மெசேஜினான். ”ஓடிப் போயிரு..டோண்ட் டிஸ்டர்ப்” என்றான் மதன். உண்மையில் மதன் அப்போது அவனும் யோஹன்னாவும் அந்தரங்கமாய் இருந்த போது எடுத்த ஃபோட்டோக்களையும் வீடியோவையும் தன் லேப்டாப்பில் ஒரு ஃபோல்டர்உருவாக்கி, அங்கே சேமித்துக்கொண்டிருந்தான். ”அப்போ கடலை உண்மை தானா..ஹா..ஹா” என்றபடி சிவா யோஹன்னாவுக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினான். அவள் உடனே அக்செப்ட் செய்தாள். “ஹாய் அண்ணா” என்று மெசேஜ் வந்தது. “அண்ணா?..இந்த வார்த்தை எப்படித் தெரியும்?” “மதன்கிட்ட கேட்டேன்..ஐ லைக் இட்” “ஐ டூ..அப்புறம் மதன் என்ன சொல்றான்?” “ம்..எல்லாமே..ஐ அம் வெரி லக்கி..அவன் எதையும் என்கிட்ட மறைக்கறதில்லை தெரியுமா? ..ஜமீலா மேட்டரைக்கூட!” “ஜமீலாவா? யார் அது?” “உனக்குத் தெரியாதா..இந்தியால மதன்கூட லிவிங் டுகெதரா இருந்துச்சே அந்தப் பொண்ணு” சிவா குழம்பிப்போய் ஸ்கிரீனையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். மதன் “டேய், என்ன பண்றே?” என்று மெஜேஜ் போட்டான். ’ஏன் இவன் திரும்ப வர்றான்’னு யோசிச்சபடியே “யோஹன்னாகூட சாட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்று பதில் போட்டான். “ஓத்…அவகூட என்னடா சாட்? எதுக்கு அவளுக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்புனே? அவகூடப் பேசணும்னா நான் இருக்கும்போது பேசு. போதும். பிரவீணா மேட்டர்ல பண்ண மாதிரி பண்ணுவோம்னு நினைச்சே மவனே தொலைச்சுடுவேன்” என்றான் மதன். சிவாவுக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ‘இவன் தானே வலிய யோஹன்னாவிடம் முதலில் அழைத்துச் சென்றான்? இவன்தானே இப்போது எங்கேஜ்மெண்ட்டுக்கும் வா என்று அழைத்தான்? ஏன் இப்போது இப்படிப் பேசுகிறான்? அதுவும் அந்தப் பெண்ணை நான் எவ்வளவு மரியாதையாக நினைக்கின்றேன்? இவ்வளவு கேவலமாப் பேசுறானே’ என தொடர்ந்து குழம்பினான். இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை குளோஸ் செய்துவிட்டு , எழுந்தான். ஃபேஸ் வாஷ் செய்ய வேண்டும் போல் இருந்தது. யாரோ முகத்தில் உமிழ்ந்துவிட்டது போல் வலித்தது. வாஷ்பேசின் போய் முகத்தைக் கழுவினான். பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசரும்…. என்ன இது..மீண்டும் அதே வரி..என்ன நடக்கிறது? மதன் என்னைச் சந்தேகப்படுகிறானா? பேண்ட்ரி போய் காஃபி எடுத்தான். ’பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசரும்.. இல்லை மதன் யோஹன்னாவுடன் நான் பேசுவதைப் பார்த்து பயப்படுகிறான். ஜமீலா..ஜமீலா யார்? இந்தியாவில் ஏது லிவ்விங் டுகெதர்? அப்படியென்றால் அவனுக்கு கல்யாணம் ஆனதாக நான் சந்தேகப்பட்டது சரியா? யாரைக் கேட்கலாம்? பழனியை? செங்கோவியை? அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசரும்.. அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட…. ஹா..அடுத்த வரி இது தான்..இது தான்.. அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட….’   அத்தியாயம் - 44 சிவா எங்களைத் தேடத் தொடங்கினான். அதில் பிரச்சினை என்னவென்றால், சிவாவும் என்னைப் போலவே நண்பர்களைப் பேணுவதில் எக்ஸ்பெர்ட்! ஒரு இடம் விட்டு நகர்ந்தால், அதன்பிறகு அவர்களுடனான தொடர்பு அத்தோடு முடிந்து போகும். சோம்பேறித்தனமே காரணம். ‘கழுத்தை இறுக்கும்’ நட்பை நாங்கள் எப்போதுமே விரும்பியதில்லை. வந்ததை வரவில் வைப்போம்..போனதைச் செலவில் வைப்போம் என எளிதாகவே எடுத்துக்கொள்ளும் ரகம் நாங்கள். என்னுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் ஐந்து பேருமே அந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான். ’நண்பேண்டா..நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேண்டா’ என்று நாங்கள் உணர்ச்சிவசப் பட்டதேயில்லை. அத்தகைய இறுக்கும் நட்பை நாங்கள் எப்போதும் விரும்பியதும் இல்லை. ஆறு மாதங்கள் வரை பேசாமல் இருந்துவிட்டுப் பேசினால், ஏதோ நேற்றுப் பேசிய பேச்சின் தொடர்ச்சி போல ‘சொல்லுடா…’ என்று கேஷுவலாக ஆரம்பிப்போம். ‘மாப்ளே, ஒரு டாகுமெண்ட் ஃப்ரெண்ட்கிட்ட கொடுத்து விட்டிருக்கேன்..ஏர்போர்ட் போய் வாங்கிட்டு, அதை என் வீட்டு அட்ரஸ்க்கு கொரியர் பண்ணிடு” என்றால் உடனே ஏர்போர்ட்டுக்கு ஓடுவோம். ’ஏண்டா இத்தனை நாளாப் பேசலை’ என்பது போன்ற சிணுங்கல்களுக்கு இங்கு இடம் இல்லை. தேவைப்படும்போது கேள், பேசத் தோன்றும்போது பேசு. நீண்டநாள் பிரிந்திருந்தாலும், நல்ல உள்ளங்களின் கற்பும் கெடுவதில்லை, நட்பும் கெடுவதில்லை! இந்த மாதிரி பற்றற்ற சாமியார்த்தனமான நட்பே இப்போது சிவாவுக்கு வில்லனாகப் போயிற்று. சிவா எங்கள் நட்பு வட்டத்துள் இருந்த நண்பன் இல்லை. காலேஜ் முடிந்தபின் நாங்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. பல இடங்களில் கேட்டும் அவனுக்கு எனது லேட்டஸ்ட் மெயில் ஐடி கிடைக்கவில்லை. இடையில் நான் நான்கைந்து முறை மெயில் ஐடியை மாற்றியிருந்தேன். (அதற்குக் காரணம் நான் நான்கைந்து ஃபிகர்களை கழட்டி விட்டது தான் என்று நீங்கள் நினைத்தால் ரொம்ப தப்பு பாஸ்!) இதில் வேடிக்கை என்னவென்றால் நான் சிவாவின் பதிவுகளை அப்போது தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். சிவா தன் சொந்தப் பெயரிலேயே எழுதியதால் எனக்கு அவர் யார் என்று தெரிந்தது. ‘ச்சார்..ச்சூப்பரா எழுதுறீங்க ச்சார்” என்று வேறு பெயரில் பின்னூட்டம் போட்டுக்கொண்டிருந்தேன். அவரும் கெத்தாக ‘மிக்க நன்றி நண்பரே’ என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தார். இந்தக் கூத்து ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும்போதே, மதன் வருங்காலத்தில் என்னவெல்லாம் பிரச்சினை வரும் என்று யோசித்து தினமும் ஒன்றாக கதை சொல்லிக் கொண்டிருந்தான். ”எனக்கு உண்மையான ஃப்ரெண்ட்ஸ்ன்னு யாரும் இல்லை. எல்லாருமே ஏமாத்துக்காரனுக. இப்படித்தான் செங்கோவின்னு ஒருத்தன்..வேலையில்லாம நாயா அலைஞ்சுக்கிட்டிருந்தான். நான் தான் சென்னைல வேலை வாங்கிக் கொடுத்தேன். அப்புறம் என்ன பண்ணான் தெரியுமா? எங்க பாஸ்க்கு சொம்படிச்சு, என்னைவிட அதிக சேலரி, புரமோசன் வாங்கிட்டான்.” “இந்த சிவா இருக்கானே, இவனுக்கு யாருமே நல்லா இருந்தாப் பிடிக்காது. ஏதாவது சொல்லி கெடுக்கிறதே குறியா இருப்பான். இருந்தாலும் நம்மகிட்ட அப்படிப் பண்ண மாட்டானு நினைக்கேன். நம்ம மேல அன்பாத் தானே இருக்கான்” “நான் ஃபாரின் வந்திருக்கிறதே இந்தியால இருக்கிற என் கிளாஸ் மேட்ஸ்க்கு வயித்தெரிச்சலா இருக்கு. என்னடா சான்ஸ் கிடைக்கும், இதைக் கெடுக்கன்னு தான் அலையறாங்க. அதான் நான் எவன்கிட்டயும் டச்சே வச்சுக்கிறதில்லை” யோஹன்னாவிற்கு சிவாவை மட்டுமே தெரியும் என்பதால் மற்ற எல்லாக் கதைகளையும் கேட்டுக்கொண்டாள். சிவாவைப் பற்றிப் பேசும்போது மட்டும் ‘அவர் அப்படின்னு நான் நினைக்கலை’ என்றாள். மதனுக்கு விசா முடிந்து கிளம்பும் நாள் வந்தது. அப்பாவிற்குப் போன் பண்ணி தான் ஒரு மாத லீவில் வருவதாகச் சொன்னான். ஜமீலாவிற்கும் ஃபோன் செய்தான். ஒன்றும் கவலைப் பட வேண்டாம் என்றும் தான் வந்து எல்லாவற்றையும் சரி செய்வதாகவும் சொன்னான். ஜமீலா அழுதாள், அதைத் தவிர வேறொன்றும் பேச அவளால் முடியவில்லை. மதன் இந்தியா வந்திறங்கினான். மதுரை சென்று அப்பாவைப் பார்த்தான். அவர் இவனுக்கு ஆறுதல் சொன்னார். “ஒன்னும் கவலைப் படாதப்பா..அந்த கண்…-ஐ அடிச்சுத் துரத்தியாச்சு. அப்பா இருக்கிறவரை எதுக்கும் பயப்படாத” என்றார். “அப்பா, அவ இன்னும் நம்ம கிராமத்துல தான் இருக்கா, தெரியுமா?” “ம்..எல்லாம் அந்த லட்சுமி பண்ற வேலை..அங்க நமக்கு வேண்டாத குரூப்பும் இருக்கு. அதான் உள்ள இறங்கி அடிக்க யோசிக்கேன். நீ கண்டுக்காத..எத்தனை நாளைக்கு வச்சுக் காப்பாத்துவாங்கன்னு பார்ப்போம்” ”இல்லைப்பா..அது நல்லதில்லை..திடீர்னு போலீசுக்குப் போய் கேஸ்ன்னு ஆயிடுச்சுன்னா, நான் ஃபாரினுக்குப் போகமுடியாமக் கூட ஆயிடலாம். நான் அவகிட்டப் பேசி, அவ அம்மா வீட்ல போய் விட்டுடுறேன். ஏதாவது செட்டில்மெண்ட்டுக்குக் கேட்டா, நானே கொடுத்திடறேன். இதுல முரட்டுத்தனமா இறங்க வேண்டாம்” “நீ சொல்றதும் சரி தான்..சீக்கிரம் அந்தக் கழுதையை இங்க இருந்து விரட்டிட்டு வா” என்று மகனை ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். மதன் ராஜபாளையம் போய் இறங்கினான். ஜமீலாவால் அழுவதைத் தவிர வேறொன்றும் பேச முடியவில்லை. அவனை ஃபாரின் அனுப்பும்போது தான் இருந்த நிலையை நினைத்துப் பார்த்தாள். இப்போது யார் யாரோ வந்து பார்த்து பரிதாபப்பட்டு பேசும் நிலையில் இருப்பதை நினைக்கும்போது, அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “சரி, விடு. அவருக்கு கிறுக்கு பிடிச்சுப் போச்சு. நாம இப்போ நம்ம வாழ்க்கையைப் பார்ப்போம். அவரைக் கேட்டா நான் உன்னைக் கட்டிக்கிட்டேன், இப்போ அவர் பேச்சைக் கேட்டு உன்னை விரட்ட? யார் இதை அவர்கிட்டச் சொன்னாங்கன்னு தான் தெரியலை. அய்யர்க்குத் தெரியும். ஆனா அவனுக்கு அப்பாவைத் தெரியாதே..அய்யர்கூட செங்கோவி இருக்கான். அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோ? அவனுக்கும் அப்பா ஃபோன் நம்பர் தெரியாதே..” “யாரா இருந்தாலும் சரி, அவன் நல்லாவே இருக்க மாட்டான். நான் அவங்களுக்கு என்ன கெடுதல் பண்ணேன்?” என்றாள் ஜமீலா. “அடுத்தவங்களைப் பத்தி பேசுறதை விடு. நாம இங்கே இப்படி சொந்தக்காரங்க வீட்ல இருக்கிறது சரி கிடையாது. நாம எங்கயாவது போய் வீடு எடுத்துத் தங்குவோம்” “சரி..சென்னை போயிடலாம்” “வேண்டாம்மா..தமிழ்நாட்டுல எங்கே இருந்தாலும் அப்பா நம்மை நிம்மதியா இருக்க விடமாட்டாரு. நேத்தே அவளைப் பார்க்கப்போனா தூக்குல தொங்கிடுவேன்னு மிரட்டுனாரு. என்னைக்கு ஒரு கைப்பிள்ளைக்காரியை வீட்டைவிட்டு விரட்டுனாரோ, அன்னிக்கே அவர் மேல இருந்த மரியாதை போச்சு. இனி இது தான் என் குடும்பம். நீ..நான்..நம்ம மகன்..அதனால நாம கேரளா போயிடலாம்” சொந்த மண்ணிற்கே திரும்புவதை நினைத்து ஜமீலா சந்தோசப்பட்டாள். “நிஜமாவா?” “ஆமா..திருச்சுர்ல சில எஞ்சினியரிங் கம்பெனி இருக்கு. அங்க ஏதாவது வேலை தேடிக்கலாம். அதனால அங்க போவோம்.” “திருச்சூரா? அங்க தான் என் தாய்மாமா இருக்கார். என் மேல அவருக்கு அதிக பாசம்..இப்போ பேசுவாரான்னு தெரியலை..” ’இது என்னடா புது வில்லன்..வேறு ஊர் சொல்லியிருக்கலாமோ’ என்று மதன் யோசித்தான். அத்தியாயம் - 45 நமது சமூகத்தில் தந்தைக்கு அடுத்த இடம் தாய்மாமனுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா நல்ல, கெட்ட காரியங்களிலும் தாய்மாமனுக்கு உள்ள முக்கியத்துவம் வேறு உறவுகளுக்குக் கிடையாது. அதற்குக் காரணம் தன் சகோதரி நன்றாக இருக்கவேண்டும் என்றே எந்தவொரு மனிதனும் நினைப்பான் என்ற நம்பிக்கை. அதை தாய்வழிச் சமூக சிந்தனைகளின் தொடர்ச்சி எனலாம். சில நேரங்களில் அந்த நம்பிக்கை பொய்த்துப்போனாலும், பெரும்பாலும் தாய்மாமன்கள் தன் ’மருமக்கமாரிடம்’ காட்டும் பிரியம் அலாதியானது. ஜமீலாவின் தாய்மாமன் முகமது சையது இத்தனை நாள் கழித்து ஜமீலா ஃபோன் செய்யவும் பாசத்தில் கலங்கிப் போனார். அவள் திருச்சூர் வந்து செட்டில் ஆகிறாள் என்று தெரியவும் தானே வீடு பார்த்து, எல்லா ஏற்பாடும் செய்வதாகச் சொன்னார். சையது சொன்னபடியே எல்லா உதவிகளையும் செய்தார். வேறு மார்க்கத்தில் திருமணம் செய்ததால் உறவுகள் இன்னும் கோபமாய் இருப்பதகாவும், கொஞ்சநாளைக்கு யாரிடமும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் சொன்னார். மதனிடம் மிகவும் மரியாதையாகப் பேசினார். மதன் வேலை தேடுவதாய்ச் சொல்லிக்கொண்டு, சும்மா வெளியே சுற்றினான். வீட்டில் நெட் கனெக்சன் கொடுத்து, யோஹன்னாவிற்கு காதலுடன் மெயில் அனுப்பினான். அவளும் உருகி உருகி மெயில் அனுப்பிக்கொண்டிருந்தாள். மதனை உலுக்கிய ஒரே விஷயம் மகனின் பிஞ்சுக் கைகளின் தொடுதல் தான். அந்தக் குழந்தை ஏதோவொரு விதத்தில் இவர் முக்கியமானவர் என்று தெரிந்துகொண்டது. அவனுடன் அன்பாக ஒட்டிக்கொண்டது. தூங்கிக்கொண்டிருப்பவனின் மேல் ஏறி விளையாடியது. அப்படியே அவன் மேல் படுத்து அதுவும் தூங்கியது. இதெல்லாம் ஜமீலாவின் மனக்காயத்தை ஆற்றியது. அந்தக் குழந்தையின் விளையாட்டை ஃபோட்டோ எடுத்தாள். மதன் எழுந்ததும் அவனிடம் காட்டினாள். மதனுக்கு மனது நெகிழ்ந்தது. தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம்..தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது..என்று யோசித்தபடியே மதன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான். “ஃபாரின்ல பீட்சா, பர்கர்னு சாப்பிட்டுப் பழகியிருப்பீங்க. நான் வேற சோறும் சப்பாத்தியுமா போட்டுக்கிட்டிருக்கேன். இன்னிக்கு நைட் வெளில போய் சாப்பிட்டு வாங்க” என்றாள் ஜமீலா. “ஹோட்டல் சாப்பாடா..அதெல்லாம்..வேண்டாம் “என்றான். “ஏன் நீங்க ஹோட்டல்ல சாப்பிட்டதே இல்லையா? வீட்ல நீங்க விரும்புறது கிடைக்கலேன்னா ஹோட்டலுக்குப் போறதுல தப்பு ஒன்னும் இல்லை.நீ போய்ட்டு வா” என்றாள் ஜமீலா. மதனுக்கு சில மாதங்கள் முன்பு இதே ஹோட்டல் உதாரணத்தை யோசித்தது நினைவுக்கு வந்த்து. இதைச் சொல்லித் தானே நாம் ஆடத் துவங்கினோம்..இப்போது அந்த ஆட்டம் எங்கே என்னைக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறதென்றே தெரியவில்லையே..பெர்மனண்ட் ரெசிடென்சி முதலில் கிடைக்கட்டும்..பிறகு பார்த்துக்கொள்ளலாம் ஜமீலா மேட்டரை என்று தானே நினைத்தோம்’யோசித்தபடியே மதன் உட்கார்ந்திருந்தான். ஜமீலா “இந்த ஃபோட்டோவை உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு அனுப்புவோமா? அழகா இருக்குல்ல?” என்றாள். “ஆமாம்” என்றபடியே மதன் குழப்பத்துடன் அந்த ஃபோட்டோக்களை தன் மெயிலில் அட்டாச் செய்தான். ஜூனியர்.மதன் என்று சப்ஜெக்ட் போட்டு எல்லாருக்கும் அனுப்பினான். மதனுக்கு ஏதோவொன்று தவறாகப் போவது தெரிந்தது..ஆனாலும் என்னவென்று புரியவில்லை. காமம் என்பது சுழித்துக் கொண்டு ஓடும் காட்டாறு. அதில் விளையாட்டாய், வகைதொகையின்றி இறங்கிய எல்லாரையுமே அது புரட்டிப்போட்டு விடுகிறது. காமம் எப்போதும் தனிமனித இச்சை மட்டுமே அல்ல. அப்படியே இங்கு சொல்லப்படுகிறது. ‘இது உன் வாழ்க்கை..கொண்டாடு..கூத்தாடு’ என்றே நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் காமம் எப்போதும் பல உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாகவே உள்ளது. காமத்தில் இறங்கி ஒருவன் செய்யும் தவறு, இங்கு பல மனங்களைக் காயப்படுத்திவிடுகிறது. சுற்றியுள்ள பல குடும்பங்களை அது சீரழித்துவிடுகிறது. பலநேரங்களில் அது திருத்திக்கொள்ள முடியாத தவறாகப் போய்விடுகிறது. காமத்தைப் பற்றிப் புரியாமல் இறங்கியவனை சமூகம் அதனாலேயே கடுமையாக அவமானப்படுத்துகிறது. அது சமூக ஒழுங்கை சீர்குலைத்து விடுமென்று பயப்படுகிறது. மதன் தெரிந்தும், தெரியாமலும் பல தவறுகளைச் செய்துகொண்டே போனான். அப்போது நானும் அய்யரும் அமெரிக்கா வைத்த ஆப்புடன் டெல்லி ஆஃபீசிற்கு வந்து சேர்ந்திருந்தோம். மதனின் மெயில் பார்த்து சந்தோசப்பட்டோம். ‘மருமகன் சூப்பரா இருக்கான் ‘என்று பதில் அனுப்பினேன். ‘மருமகனை இன்னும் நேரில் வந்து பார்க்காதவனை தாய்மாமனா ஏத்துக்க நாங்க தயாரா இல்லை’ என்று மதன் பதில் அனுப்பினான். அதே நாளில் எனக்கொரு ஃபோன் வந்தது. “செங்கோவி, நான் பாலா பேசுறேன்” “பாலாவா..எந்த பாலா?” “என்னப்பா இப்படிக் கேட்கிறே? என்னை ஞாபகம் இல்லையா? நாந்தான் பாலா” எனக்கு கடுப்பாகிவிட்டது. “இங்க பாருங்க..எனக்கு ஸ்கூல்ல படிக்கும்போதே 2 பாலாவைத் தெரியும். காலேஜ்ல இன்னும் ரெண்டு பாலா படிச்சாங்க. கோயம்புத்தூர்ல ஒரு பாலா கூட வேலை பார்த்தான். ஹாலிவுட் பாலான்னு ஒருத்தர் வேற நெட்ல எழுதுறாரு..டைரக்டர் பாலா, ரைட்டர் பாலகுமாரன்னு எனக்கு எக்கச்சக்க பாலாவைத் தெரியும். அதனால மொட்டையா பாலான்னு சொல்லாம நீங்க எந்த பாலான்னு சொல்லுங்க” “என்னடா இப்படிப் பேசுறே..நான் எத்தனை வருசம் கழிச்சு உன் ஃபோன் நம்பரை கஷ்டப்பட்டு தேடி வாங்கிக் கூப்புடுறேன்..நீங்கள்லாம் பெரிய ஆளுக..எஞ்சினியரு..என்னையெலாம் ஞாபகம் இருக்குமா?” ‘அய்யோ ராமா..’டயலாக் தான் எனக்கு ஞாபகம் வந்தது. “நான் என்னய்யா செய்ய..பாலமுருகன்னு பேர் வச்சாலும், பாலச்சந்தர்னு பேர் வச்சாலும், பாலசுப்பிரமணின்னு பேர்வச்சாலும் சரி, நீங்களா பாலான்னு சுருக்கிக்கிடுறீங்க. இதுல என்னைத் தெரியலியான்னா என்னய்யா அர்த்தம்? யாருய்யா நீ?” “செங்கோவி, நாந்தான்யா பாலா..(அடிங்..)..ஸ்கூல்ல படிச்சனே..கோவில்பட்டி..இப்போ ஆர்மில இருக்கன்யா” “அட கூவை…நீதானா..ஆர்மி பாலான்னு சொல்ல வேண்டியது தானே?” “உனக்கு நான் ஆர்மீல சேர்ந்தது தெரியுமா? “ “தெரியுண்டா..எப்படி இருக்கே? என்ன திடீர்னு?” “நல்லா இருக்கேண்டா..உனக்கு மதன்னு யாரையும் தெரியுமா?” “மறுபடியும் மொட்டையாச் சொல்றே, பார்த்தியா?” “சரி..சரி..உன்கூட மதுரை காலேஜ்ல எஞ்சினியர்ங்ல மதன்னு யாரும் படிச்சாங்களா?” “ஆமா..நம்ம பையன் தான்..நமக்கு க்ளோஸ் பிரண்டு..அவனை எப்படி உனக்குத் தெரியும்?” “அவன் நல்ல பையனா?” “ஆமாண்டா..என் ஃப்ரெண்டுங்கிறேன்..அப்புறமும் நொல்ல பையனாங்கிற?” “என் தங்கச்சிக்கு வரன் வந்திருக்குடா..இப்போ நார்வேல இருக்காரா அவரு?” “வரனா? என்னடா சொல்றே?” “ஆமா, ஜாதகம் வந்துச்சு..எல்லாப் பொருத்தமும் இருக்கு..நகைகூடப் பிரச்சினை இல்லை, உங்க பொண்ணு..உங்க இஷ்டம்னு சொல்லிட்டாங்க..காலேஜ் பேரைக் கேட்கவும் உன் ஞாபகம் வந்துச்சு..அதான் உன் ஊருக்குப் போய் நம்பர் வாங்கினேன். நீயே நல்ல பையன்னு சொல்றேன்னா..” “டேய்..இரு..இரு..அவன் நல்ல பையன் தான்..அவனுக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கே?” “என்னடா சொல்றே?” “ஏதோ குழப்பம் நடந்திருக்கு..அவன் லவ் மேரேஜ் பண்ணான்..முதல்ல அவன் அப்பா ஒத்துக்கலை..இப்போ அந்தப் பொண்ணும் மதுரைல தானே இருக்கு..அவன் இன்னைக்குக் கூட தன் பையன் ஃபோட்டோவை மெயில்ல அனுப்பி இருக்காண்டா.” “ஓஹோ..அப்போ அவனுக்குத் தெரியாமத் தான் இது நடக்கும்கிறயா? கரெக்டாச் சொல்லுப்பா..அவனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுல்ல?” “யார் உன்கிட்ட வரன் கொண்டு வந்தாங்களோ, அவங்ககிட்டயே ஜமீலா யாருன்னு கேளு..ஓடிடுவாங்க…இல்லேன்னா சிம்பிளா நான் செங்கோவி ஃப்ரெண்டுன்னு சொல்லு போதும்” “சரி, இனிமே அவங்களை நான் பார்த்துக்கறேன்.” அவன் ஃபோனை வைத்தபிறகு, எனக்குக் குழப்பமாக இருந்தது. மெயிலில் இருந்த மதன் நம்பரை எடுத்து கால் செய்தேன். “ஹலோ, யார் பேசுறது?’ என்றான் மதன். “ஓ…., என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே?” “டேய் செங்கோவி…நல்லா இருக்கியா? இந்தியா வந்துட்டயா?” “ஆமா..என்ன நடக்குது அங்க?” “என்ன நடக்கு? ஒன்னும் நடக்கலை..ஏன்?” “என் ஸ்கூல்மேட் ஃபோன் பண்ணான். உன் ஜாதகம் வந்திருக்காம், அவன் தங்கச்சிக்கு. என்னைக் கூப்பிட்டுக் கேட்டாங்க..அவனுக்குக் கல்யாணம் ஆகி, குழந்தையே இருக்குன்னு சொன்னேன்..கடுப்பாகிட்டாங்க.” “ஜாதகமா? என் ஜாதகத்தை நானே பார்த்ததில்லையே…” “அது எனக்கும் தெரியும்..அதான் கேட்கேன், என்ன நடக்குது?” “இப்போ நான் கேரளா வந்துட்டேண்டா. அப்பாக்கும் ஜமீலாக்கும் ஒத்துக்கலை. அவருக்கு வயசாயிடுச்சா, மறை கழண்டிடுச்சு..அவர் தான் இது மாதிரி ஏதாவது லூசுத்தனமாப் பண்றாருன்னு நினைக்கேன்..நான் பேசிக்கிறேன்..தங்கச்சி இருக்கு..பேசறியா?” “குடு..ரொம்ப நாளாச்சு” “அண்ணா..நல்லா இருக்கீங்களா? இந்தியா எப்பண்ணா வந்தீங்க? என் நம்பர் உங்ககிட்ட இல்லையா? “ என்றும் மாறாத அதே அன்புடன் ஜமீலா பேசிக்கொண்டே போனாள்.     அத்தியாயம் - 46 நம்மைப் பற்றிய ஞாபகங்களை நாம் அறியாமலேயே நம்மைச் சுற்றி விதைத்துக்கொண்டே இருக்கின்றோம். பிரிவின்போது அது வளர்ந்து விஸ்வரூபமெடுக்கின்றது பூக்களாகவோ, முட்களாகவோ! யோஹன்னாவால் மதனைப் பிரிந்து இருக்க முடியவில்லை. அவன் இந்தியா போன இரண்டாவது நாளே, அவனுக்கு விசிட்டிங் விசா அப்ளை செய்து, விடாது ஃபாலோ செய்து, அதை வாங்கினாள். மதனுக்கும் அதை இன்று மெயிலில் அனுப்பியிருந்தாள். அவனுடன் வாழ்ந்த அதே அறையில் அவன் இல்லாமல் இருப்பது பெரும் கொடுமையாக இருந்தது. அங்கிருந்த ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு நினைவுகளைக் கிளறின. இன்னும் இந்தியாவில் மொபைல் சிம் வாங்கவில்லையாம். இப்போது தான் அப்ளை செய்திருக்கிறானாம். அது எப்போது வந்து, நான் எப்போது பேச..என்று நொந்துகொண்டாள். மெயிலில் மட்டுமே பேசிக்கொள்வது எப்படிப் போதும்..சாட்டிற்கும் வர மாட்டேனென்கிறான். ஆண்கள் கல் நெஞ்சக்காரர்கள் தான். நாம் தான் இப்படிக் கிடந்து தவிக்கின்றோம்..ஏன் ஒரு கல் நெஞ்சக்காரனுக்காக தவிக்க வேண்டும்..யோஹன்னாவிற்கு சிரிப்பு வந்தது..அப்போ இது தான் காதலா? அவன் திரும்பி வந்தால் பேசக்கூடாது. கிட்டயே விடக்கூடாது. என்னை ஒரு மாசம் புலம்ப வைத்தாய் அல்லவா…நீயும் புலம்பு..அழு..ம்ஹும்..முடியவே முடியாது..ராஸ்கல். அப்படி இருப்பேனா..சந்தேகம் தான்..அவனைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடுமே..இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் சிரிக்கின்றோம்..இதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்..எல்லாம் அந்த லூசுப்பையனால் வந்தது. என்னையும் லூசாக்கி விட்டான். இப்படி தனியே அரை மயக்கத்தில் புலம்ப வைத்துவிட்டானே..அவன் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? இந்தியாவில் எங்கெ இருப்பான்? ஏதோ ஊர் சொன்னானே..பிக் டெம்பிள்..ம்..மத்ரை..அங்க தான் இருக்கணும்..அங்கே வேறென்ன ஸ்பெஷல்? தூங்கா நகரம்னு சொன்னானே..என்னை மாதிரியே அதுவும் முழிச்சுக்கிட்டிருக்குமா? ஒருவேளை மத்ரையும் யாரையோ லவ் பண்ணுதோ? தூங்க முடியாமல் காதல் அவஸ்தையில் அதுவும் தவிக்கிறதோ? பாவம்.. அங்கே வேறு என்ன ஸ்பெஷல்? ம்..கூகுள் எதுக்கு இருக்கு? அதுகிட்டக் கேட்போம். யோஹன்னா எழுந்து, தன் லேப்டாப்பை ஆன் செய்தாள். கூகுளிடம் போனாள். “Madrai, India” என்று டைப் செய்தாள். கூகுள் ‘Madurai’-ஐ ரெகமண்ட் செய்தது. அங்கே வந்த வெப்சைட்களை ஒவ்வொன்றாகப் படித்தபடியே இருந்தாள். ஒரு கட்டத்தில் போரடித்தது. இந்த கூகுளிடம் இதே போல் மதனையும் எங்கேயென்று எனக்குத் தேடிக்கொடுத்தால் எப்படி இருக்கும்? ‘Madhan, Madurai, India’ என்று போட்டாள். என்னென்னவோ தகவல்கள் வந்தன. அசுவாரஸ்யமாய் பார்த்துக்கொண்டே வந்தவள் கண்ணில் மதன் பெயர் கொண்ட ஒரு யாஹூ மெயில் குரூப் கண்ணில் பட்டது. அது ஏதோ மதுரையில் உள்ள காலேஜ் மாணவர்களின் குரூப் என்று தெரிந்தது. க்ளிக் செய்து உள்ளே போனாள். அது மதனின் காலேஜ் தான் என்பது புரிந்தது. அப்படியென்றால், மதனும் இங்கே இருப்பானா என்று ஆர்வத்துடன் தேடினாள். அந்தப் பக்கத்தின் கடைசி மெயிலாக ‘Re:Jr.Madhan’ இருந்தது. அதை க்ளிக் செய்தாள். அங்கே புரியாத எழுத்துக்களில் ஏதோ எழுதியிருந்தது. அனுப்பிய மெயில் ஐடியைப் பார்த்தாள். அது மதனின் யாஹு ஐடி தான். அனுப்பிய தேதி பார்த்தாள். நேற்றுத் தான் அனுப்பி இருக்கிறாள். யோஹன்னாவிற்கு பதட்டமாக இருந்தது. ‘இது என்ன? ஜூனியர் மதன் என்றால், மகனா? மதனுக்கு மகனா?’ அதற்கு முந்தைய மெயிலை தேடி எடுத்தாள். மதன் தன் குழந்தையுடன் விளையாடும், தூங்கும் ஃபோட்டோக்கள் இருந்தன. யோஹன்னாவிற்கு ஒரு நிமிடம் இதயமே நின்று போனது. என்ன இது? மதனுக்குக் குழந்தையா? மதன் கல்யாணம் ஆனவனா? துரோகத்தின் வலி தாங்காமல் கதற வேண்டும் போல் இருந்தது. கண்ணீர் திரண்டு வந்து அந்த ஃபோட்டோக்களை மறைத்தது. இந்த உறவும் பொய்யா? எனக்கு எந்த உறவுமே உண்மையாய் அமையப்போவதில்லையா? நான் அப்படி என்ன பாவம் செய்தேன் ஆண்டவரே. எத்தனை பேச்சு, அதில் எவ்வளவு அன்பு..எல்லாம் பொய்யா? இதனால்தான் ஃபோன் நம்பர் தர மறுக்கிறானா? இதனால் தான் சாட்டிலும் வருவதில்லையா? அழுத படியே பலவாறு யோசித்தாள். ஒரு கட்டத்தில் யோசிப்பும் நின்று, அழுகையே மிஞ்சியது. மதனுக்கு அவன் அப்பா பெண் தேடுவதைப் பற்றிக் கேள்விப்பட்டதும் ஜமீலா பயந்து போனாள். “எனக்குன்னு இந்த உலகத்துல இருக்கிறது நீங்க தானே? நீங்க இல்லேன்னா இனி நான் எங்க போக முடியும்? என்னை எங்க வீட்ல ,ஊர்ல மனுஷியா மதிப்பாங்களா? எனக்குப் பயமா இருக்குங்க..” என்று அழுதாள். மதனுக்கு திடீரென்று அந்த ஐடியா வந்தது. “ஜமீலா, நாம இந்தியால இருந்தா அப்பா இப்படித் தான் தொல்லை பண்ணுவாரு. நாம எங்கேயாவது வெளிநாடு போயிடலாம்” “அதைத் தானே நான் பல தடவை உங்கிட்டக் கேட்டேன்” “ஜமீலா..நீ வருத்தப்படுவியேன்னு நான் உன்கிட்ட பல விஷயத்தை மறைச்சுட்டேன். நான் போன கம்பெனி நல்ல கம்பெனி கிடையாது. முதல் மூணு மாசம் சம்பளம் கொடுத்தாங்க. அத்தோட சரி..அப்புறம் ரிசசன்னு சொல்லி சம்பளம் இல்லாமலேயே வேலை பார்த்தேன். திடீர்னு மூணுமாசம் முன்ன வேலையை விட்டே தூக்கிட்டாங்க. அப்புறம் போன மூணு மாசமா வேலை தேடுனேன். கடைசியா ஒரு வேலை கிடைச்சுச்சு. ஆனால் பழையபடி இந்தியால விசா பிராசசிங் எல்லாம் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. நான் இந்தியா வந்தப்புறம் தான் விசா மெயில்ல வந்துச்சு. திரும்ப போன தடவை மாதிரியே நிறைய செலவாகும். அப்பவே 2 லட்சம் ஆயிடுச்சு. ஆனா இவங்க ஃபேமிலி விசாவே தர்றோம்னு சொல்றாங்க. நான் அப்பாகிட்ட காசு வாங்கிக்கலாம்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு..அதனால தான் இங்கயே ஏதாவது வேலை பார்ப்போம்னு முடிவு பண்ணேன். இப்போ என்ன செய்யன்னு எனக்கே தெரியலை” ஜமீலாவிற்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. “கொஞ்ச நாள் இந்தியால இருப்போம். காசு கொஞ்சம் சேர்த்துட்டு, அப்புறம் ஃபாரின் போகலாம்” என்றாள். மதனும் அதற்கு ஒத்துக்கொண்டான். மறுநாள் ஜமீலாவின் தாய்மாமன் அவர்களைப் பார்க்க வந்தார். பேசிக்கொண்டிருக்கும்போது மதன் அடுத்து என்ன செய்யப்போகின்றான் என்று கேட்டார். மதன் அதே கதையைச் சும்மா சொன்னான். அதற்கு அவர் “வாய்ப்பு வரும்போது பயன்படுத்திக்கணும். இப்போ கையில இருக்கிற விசாவை விட்டுட்டு, புதுசா இங்க இருந்து வேலை தேடப்போறீங்களா? அது எவ்வளவு கஷ்டம்?” “இப்போ அவ்வளவு பணத்துக்கு எங்கே மாமா போக?” என்று கேட்டாள் ஜமீலா. “நான் தர்றேன்மா. நீ அங்க போய்ட்டு, நல்லபடியா செட்டில் ஆகிட்டு, திரும்பக் கொடு” என்றார் அந்த நல்ல மனிதர். அத்தியாயம் - 47 மதன் மும்பை சென்று இறங்கினான். எங்களது நண்பர் ஒருவரின் அறையில் தங்கினான். ‘என்ன விஷயம்’ என்று நண்பர் கேட்க, ஃபாரின் போகப் போவதாகவும் விசா ஸ்டாம்பிங் செய்ய வந்திருப்பதாகவும் சொன்னான். மதனுக்கு நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது. யோஹன்னா விசிட்டிங் விசா எடுத்து அனுப்பி இரண்டு நாட்கள் ஆகியிருந்தும், அதை என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான். திடீரென ஜமீலாவின் மாமா மூன்று லட்சம் தரவும் ஆடிப்போனான். அடுத்து ஜமீலாவும் ‘இன்னும் ஏன் யோசிக்கிறீங்க? கம்பெனி விசா இருக்குன்னு சொன்னீங்கள்ல..அதுவும் ஃபேமிலிக்கே இருக்குன்னு சொன்னீங்கள்ல. சீக்கிரம் விசா பிராசசிங் பண்ணுங்க. நாம கிளம்புவோம். எனக்கு இங்க இருக்கிறது சரியாவே படலை’ என்று சொல்லி, மிகவும் வற்புறுத்தி மும்பை அனுப்பினாள். இப்போது கையில் விசிட்டிங் விசாவுடன் மூன்று லட்சம் செலவுக்குப் பணம். அடுத்து என்ன செய்வது..இப்போது விசா பிராசசிங் பண்ணு என்றே ஜமீலாவும் சொல்கிறாள், ஜமீலா மாமாவும் சொல்கிறார், யோஹன்னாவும் சொல்கிறாள். எல்லோரும் சொல்லும்போது, நமக்கென்ன..முதலில் ஃபாரின் போவோம்..பெர்மனண்ட் ரெசிடென்சி வாங்குவோம்..பிறகு பார்த்துக் கொள்ளலாம்.. மதன் அங்கு ஒரு ஏஜெண்ட்டைப் பிடித்து, விசா ஸ்டாம்பிங் பண்ணித் தரும்படி கேட்டுக்கொண்டான். அவர்களும் மூன்றே நாளில் முடித்துக்கொடுத்தார்கள். டிக்கெட் உடனே கிடைக்கவில்லை. இரண்டு நாள் கழித்தே இருந்தது. மதன் அந்த டிக்கெட்டை வாங்கி விட்டு, காத்திருக்கத் தொடங்கினான். மதன் வந்தவுடன் ஃபாரின் கிளம்ப வேண்டியிருக்கும் என்பதால், ஜமீலா தேவையான பொருட்களை பேக் பண்ணத் தொடங்கினாள். யோஹன்னா மனம் நொந்த நிலையில் ஆத்திரத்துடன் காத்திருந்தாள். பதிவர் சிவாவிடம் எதுவும் சொல்லாமல், மதன் பற்றியும் அவன் காலேஜ் ஃப்ரண்ட்ஸ் பற்றியும் கேட்டுக்கொண்டிருந்தாள்சிவா வேறு டிபார்ட்மென்ட் படித்ததால், யாஹூ குரூப்பில் அவன் இல்லை. ஜூனியர் மதன் மெயில் அவனுக்கு வரவில்லை. . சிவாவும் மதனின் நெருங்கிய நண்பனாக என்னைச் சொல்லிக்கொண்டிருந்தான். ’தான் மெயிலில் பார்த்தபடியே, மதனுக்கு குழந்தை உண்டா..அல்லது தான் தான் தவறாக புரிந்து கொண்டோமா..சிவா பொறாமை பிடித்தவன் என்று வேறு மதன் சொன்னானே..இவனிடம் ஃபோட்டோ மேட்டரைக் கேட்டால் உண்மையைச் சொல்வானா?’ என்று யோஹன்னா குழம்பியபடியே சிவாவிடம் நேரடியாக எதுவும் கேட்காமல் சுற்றி வளைத்துக்கொண்டிருந்தாள். சிவா எங்கெங்கோ விசாரித்ததில் ’மதனுக்குக் கல்யாணம் ஆனது உண்மை என்றும், அது செங்கோவிக்கு நன்றாகத் தெரியும்’ என்றும் அறிந்து கொண்டான். ’ ஆனால் இந்தச் செங்கோவி எங்கு போய்த் தொலைந்தான் என்று தெரியவில்லையே..இங்கே ஒரு பெண்ணின் வாழ்க்கை அல்லவா பாழாய்ப் போய்க்கொண்டிருக்கிறது..ஏதாவது ஒரு ஆதாரம் இல்லாமல் இந்தப் பெண்களிடம் பேச முடியாதே’ என்று தனியே புலம்பிக்கொண்டிருந்தான் சிவா. ——————- ஜெயபாலிற்கு எரிச்சலாக இருந்தது. ’அவனுக்கு எரிச்சலாய் இருப்பது அதிசயம் அல்ல. அவன் சாதாரணமாய் இருப்பதே அதிசயம் ’என்று நினைத்த படியே அவன் அப்பா மீண்டும் கேட்டார். “சொல்லுப்பா..ஏன் கணக்கு டேலி ஆக மாட்டேங்குது?” “பார்த்துட்டுச் சொல்றேன்” “பார்த்திட்டா?..எப்போ…எப்போ சார் பார்ப்பீங்க? ஒரு பிஸினஸ் பண்றவனுக்கு கணக்கு எப்பவும் விரல் நுனில இருக்க வேண்டாமா?” “இப்போ இல்லை..என்ன செய்யணும்கிறீங்க?” ஜெயபால் குரலை உயர்த்தவும், அவன் அம்மா உள்ளே புகுந்தாள். “ஜெயா, அப்பா உன் நல்லதுக்குத் தானேப்பா கேட்காரு..ஏங்க அவன் சொல்லுவான்..விடுங்க” “ம்..அவன் இன்னிக்கு இப்படி கெட்டுக் குட்டிச்சுவராப் போனதுக்கு காரணமே நீ கொடுத்த செல்லம் தான். லட்சக்கணக்குல என் பி.எஃப்.காசு போட்டு, ஏஜென்ஸி வச்சுக் கொடுத்திருக்கேன். அதுக்கு நான் கணக்குக் கேட்டா, கோவம் வருது சாருக்கு..வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்வாங்க..அதுக்கு நல்ல உதாரணமா வந்து வாச்சிருக்கான் இவன்..” அவர்கள் பேசுவதைக் கேட்டபடி தன் ரூமிற்குள் அமர்ந்திருந்த ஜெயபாலின் தம்பி, இதுவே தான் செல்ல சரியான நேரம் என்று நினைத்தபடி எழுந்தான். தன் காலேஜ் பேக்கை எடுத்தபடி, அமைதியாக ஹாலுக்கு வந்தான். “அம்மா..அப்பா..நான் காலேஜ் போய்ட்டு வர்றேன்” என்றான். அவன் எதிர்பார்த்தபடியே அவன் அப்பா ஆரம்பித்தார். “பாரு..இது பிள்ளை.. உன்னை மாதிரி டென் த் கோட் அடிச்சு என் மானத்தை வாங்காம எப்படி ஒழுக்கமா படிச்சு காலேஜ் போறான், பாரு. உன்னால என்கூட வேலை செய்ற வாத்திக முன்னாடி தலைகுனிஞ்சு எத்தனை தடவை நின்னிருப்பேன். எப்போ இவன் காலேஜ் சேர்ந்தானோ, அன்னிக்குத் தான் நான் தலைநிமிர்ந்து எங்க ஸ்கூல்ல நடக்க ஆரம்பிச்சேன்” ஜெயபாலின் தம்பிக்கு சந்தோசமாக இருந்தது. எப்போதும் கேட்கும் வசனம் தான். சில வார்த்தைகள் மாறலாம், ஆனால் அதே பாயிண்ட். ‘அப்பாவை தலைநிமிர்ந்து நடக்க வைத்த மகன்’ என்பதைக் கேட்கவே சந்தோசமாய் இருந்தது.இதற்காகவாவது கேம்பஸில் செலக்ட் ஆகவேண்டும் என்று நினைத்தபடி காலேஜ் கிளம்பினான். அப்பா தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார். “ உன்கூட மதுரை ஸ்கூல்ல படிச்ச எல்லாப் பசங்களும் இன்னிக்கு எஞ்சினியர், டாக்டர்னு ஆகி ஃபாரின் போய்ட்டாங்க. அவங்களைப் பார்த்தாவது திருந்த வேண்டாமா நீ? பிஸினஸை நல்லா நடத்தி, முன்னேற வேண்டாமா?” அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜெயபால் வெளியேறினான். கோபத்தை பைக்கின் மேல் காட்ட உதைக்க வீறிட்டபடி, அது நகர்ந்தது. ஜெயபால் மதனுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவன். மதன் படித்து எஞ்சினியர் ஆகி, வெளிநாடும் பறந்துவிட, ஜெயபால் மதுரையில் ஏதோதோ பிஸினஸ் செய்து தோற்று, இப்போது டிவி, ஃப்ரிட்ஜ் போன்ற வீட்டுத்தேவைப் பொருட்களை விற்கும் ஏஜென்ஸியை நடத்திக்கொண்டிருந்தான். அடிக்கடி இப்படி அப்பா அவமானப்படுத்துவதை நினைத்துக்கொண்டே கடுப்புடன் பைக்கை விரட்டியபடியே பழங்கானத்தம் சிக்னல் வந்து நின்றான். மேலும் சிலரும் சிக்னலுக்காக காத்திருந்தனர். ஒரு பெண் ஸ்கூட்டியில் வந்து ஜெயபாலின் பின்னால் நின்றாள். பிறகு கொஞ்சம் பின்னே நகர்ந்து, ஜெயபாலுக்கு அடுத்திருந்த கேப்பில் கொஞ்சம் கொஞ்சமாக வண்டியை நுழைத்தாள். அவள் வண்டியில் பின்பகுதி ஜெயபால் பைக் மீது லேசாக உரசியது. உடனே வண்டியை பின்னிழுத்து விட்டு “சாரி சார்” என்றாள். ஜெயபால் கடுப்புடன் திரும்பிப் பார்த்தான். அவள் “ஆஃபீஸ்க்கு லேட் ஆகிடுச்சு..அதான்” என்றாள். “நீ மட்டும் தான் ஆஃபீஸ் போறே..நாங்கள்லாம் சிரைக்கப் போறமா?” என்று கத்தினான் ஜெயபால். அந்தப் பெண் பயந்து போனாள். அதுவும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள். எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். அதே நேரத்தில் பூனை ஒன்று நான்கு குட்டிகளுடன் சிக்னல் ஏரியாவிற்குள் நுழைந்தது. இந்த பிஸியான நேரத்தில், இது எங்கிருந்து ஏன் வந்தது என்று எல்லாரும் திகைத்தனர். அந்த தாய்ப் பூனை இவர்களது பகுதியைக் கடக்கும்போது க்ரீன் சிக்னல் விழுந்தது. முன்னால் நின்றோர் எப்படிப் போவதென யோசித்தபடியே நின்றனர். பின்னால் இருந்தவர்கள் விஷயம் புரியாமல், ஹாரன பலமாக அடிக்கத்தொடங்கினர். பூனையும் குட்டிகளும் மிரண்டன. ஜெயபால் க்ளட்சைப் பிடித்தான். கியரைப் போட்டான். எதுபற்றியும் கவலையின்றி கடுப்புடன் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான். அவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது. பக்கத்தில் இருந்த பெண் ’ஐயோ’ என்று அலறினாள். முன்னால் நின்ற பலரும் கண்ணை மூடிக்கொண்டனர்.   அத்தியாயம் - 48 ஜெயபால் வண்டியை தன் கடை முன் நிறுத்தினான். “நாராசு…..நாராசு” என்றான். கடைக்குள்ளிருந்து நாகராஜ் ஓடி வந்தான். “என்ன மச்சான்?” “அப்புறமா வண்டி வீலைக் கழுவிடு..” “சரி..ரிம்மெல்லாம் ரத்தமா இருக்கு?” “ஆமாண்டா..என்னத்து மேலயோ ஏத்திட்டேன்” “ஏன், இன்னிக்கும் மாமா படிப்பின் மகத்துவம் பத்தி பாடம் எடுத்தாரா?” என்றபடி சிரித்தான் நாகராஜ். அவன் ஜெயபாலின் அத்தை மகன். ஜெயபால் கடையிலேயே வேலை செய்பவன். ஜெயபால் பற்றி நன்கு அறிந்தவன். ஜெயபால் யாரிடமாவது சிரித்துப் பேசுகிறான் என்றால், அது நாகராஜிடம் மட்டும் தான். இருவரும் பேசியபடியே கடைக்குள் நுழைந்தனர். “மாமா என்ன சொல்றாங்க?” “என்ன சொல்லப்போறாரு..எனக்கு விவரம் தெரிஞ்சப்போ ஆரம்பிச்ச அதே பல்லவி.படிக்கலேன்னா நாசமாப் போவே..படிச்சவன் மட்டும் தான் நல்லா இருப்பான்..லொட்டு லொசுக்குன்னு..ஏண்டா இப்போ நினைச்சா யார்கிட்டயும் கேட்காம நான் போய் சினிப்ரியால உட்கார்ந்துக்குவேன். படிச்சுட்டு ஆஃபீஸ்ல இருக்கிறவன் அப்படி வந்திடமுடியுமா? அடிமைப் பிழைப்பு. எப்பவும் எவனுக்காவது சொம்படிச்சுக்கிட்டுத் திரியறானுக. நம்மால அது முடியுமாடா? “ “கரெக்ட் மச்சான்..இப்போத் தான் படிச்சவன் லட்சணம் தெரிஞ்சு நம்ம ஏரியாவே சிரிக்குதே” “என்ன லட்சணம்டா?” “உன் ஃப்ரெண்டு மதன் மேட்டர் தெரியாதா மச்சான்? தெரியும்னுல்ல நினைச்சேன்” ”எது? எவளையோ கூட்டிட்டு வந்து நின்னானே அதுவா? ஹா…ஹா..வெட்டிப்பய..நம்ம சாதியைவே கேவலப்படுத்திட்டானே..இதெல்லாம் எங்கப்பா கண்ணுக்குத் தெரியாது. நம்மளைத் தான் குறை சொல்வாரு” “மச்சான், இப்போ என்னாச்சுன்னு தெரியாதா? அவளை அடிச்சு விரட்டிட்டாங்க” “என்னடா சொல்றே?” “ஆமா மச்சான்..இதுக்குத் தான் அப்பப்போ எங்க வீட்டுப்பக்கமும் வரணும்..நீ காசு உள்ளவன்…” “டேய், விஷயத்தைச் சொல்லு..என்ன ஆச்சு?” “அந்தப் பொண்ணு ஒரு லோலாம்..ஏற்கனவே பலபேரோட பழக்கமாம். இது தெரியாம நம்மாளு இழுத்துக்கிட்டு வந்துட்டாரு. இப்போ மேட்டர் தெரிஞ்சு அடிச்சு விரட்டிட்டாங்க” “மதன் இங்க தானடா இருக்கான்..ஒருநாள் பார்த்தனே” “ஆமா, இருந்தான்..இப்போ ஆளைக் காணோம். ஃபாரின் போய்ட்டான்னு சொல்றாங்க. அவன் அப்பா இப்போ பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்கார்” ஜெயபாலிற்கு சந்தோசமாக இருந்தது. அப்பாவிடம் இரவு இதுபற்றிப் பேச வேண்டும். ‘பாருய்யா படிச்சவன் லட்சணத்தை..நாங்க எப்பவாவது குடும்ப கௌரவம் கெடுற மாதிரி நடந்திருக்கிறோமா?’ என்று கேட்க வேண்டும். “இப்போ அவ எங்கடா இருக்கா?” “யாரு? மதன் பொண்டாட்டியா?” “ஆமா” “தெரியலை மச்சான்..ராசபாளையம் லச்சுமி மதினி வீட்டுல இருக்குன்னு சொன்னாங்க” “அவளைத் தேடிப் பிடிக்கணுமே..லச்சுமியக்காகிட்ட நான் பேசுறேன்..அவ நம்பர் இருந்தா வாங்கணும்” “எதுக்கு மச்சான்?” “ஆறுதல் சொல்லத்தான்” என்று சொல்லிவிட்டு ஜெயபால் சிரித்தான். ’இரண்டு நாட்களாக யோஹன்னாவிடம் இருந்து மெயில் இல்லை. கோபம் போல் தெரிகிறது.ஃபோன் நம்பர் கேட்டாள், தரவில்லை. சாட்டுக்குக் கூப்பிட்டாள். அதுவும் முடியவில்லை. ஜமீலாவை வைத்துக்கொண்டு எப்படி சாட் பண்ண? இப்போது பேசலாம் என்று மெசேஜ் அனுப்பினால், பதிலே இல்லை. ஒருவேளை அம்மாவைப் பார்க்க ஃப்ரான்ஸ் போய்விட்டாளா?’ யோசித்தபடியே ஏர்போர்ட்டில் உட்கார்ந்திருந்தான் மதன். ’இன்னும் கொஞ்ச நேரத்தில் ஃபளைட் ஏறிவிடலாம். யோஹன்னா அங்கு இல்லாவிட்டாலும் வீட்டுச் சாவி ஒன்று நம்மிடமும் இருக்கிறது. அதனால் பிரச்சினை இல்லை. அவள் எங்கு போயிருப்பாள் அல்லது கோபம் தானா?’ என்று மதன் நினைக்கும்போதே ஃப்ளைட்டில் போர்டிங் ஆரம்பிப்பதாய் அறிவித்தார்கள். மதன் கிளம்பினான். “யோஹன்னா, என்ன ஆச்சு? ஏன் ஒருவாரமா டல்லாவே இருக்கிறே? எதுவும் பிரச்சினையா? நாங்களும் மதன் இல்லாததால தான் இப்படி இருக்கிறேன்னு நினைச்சோம். ஆனா சம்திங் ராங்னு தோணுது. சொல்லு” யோஹன்னாவிடம் ஆறுதலாய் அவள் அலுவலகத் தோழி ஏஞ்சலின் கேட்டாள். யோஹன்னாவிற்கும் யாரிடமாவது சொல்ல வேண்டும்போல் தோன்றியது. யோசித்து யோசித்து மூளையே குழம்பிவிடும்போல் தெரிந்தது. யோஹன்னா அவளிடம் நடந்ததை, நடந்து கொண்டிருப்பதைச் சொன்னாள். “ஜூனியர் மதன்னா போட்டிருந்துச்சு? அப்படீன்னா அது மதன் குழந்தையா?” “தெரியலை..யார்கிட்டயும் கேட்கலை. கேட்கவும் பயமா இருக்கு, ஆமான்னு சொல்லிடிவாங்களோன்னு பயமா இருக்கு. கேட்காம இருக்கவும் முடியலை. என்ன செய்ய?” “முட்டாளா நீ? ஒருத்தன் மேல அதுவும் கட்டிக்கப்போறவன் மேல டவுட்டுன்னா, தீர விசாரிச்சுடணும். இப்போ மதன் எங்கே?” “இந்நேரம் இங்க வந்திருப்பான். வீட்டிற்கு போயிருக்கணும்” “அப்புறம் நீ இங்கே வந்துட்டே?” “எனக்கு குழப்பமா இருந்துச்சு. பயமாவும் இருந்துச்சு. அதான் கிளம்பி வந்துட்டேன்.” யோஹன்னா சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் மொபைல்ஃபோன் அடித்தது. “மதன் கால் பண்றான்” என்றாள் யோஹன்னா. “என்கிட்ட கொடு. அந்த ஃபோட்டோஸ் எங்கே இருக்கு?” “என் டெஸ்க் டாப்ல” “ஓகே “ என்றபடி காலை அட்டெண்ட் செய்தாள் ஏஞ்சலின். “ஹாய்” என்றாள். “ஹா..ய்..யார் இது?” “ஏஞ்சலின்” “ஓ..ஹாய் ஏஞ்சலின்..ஹை டூ யு டூ?” “மதன், இப்போ எங்கே இருக்கிறே?” “ஃப்ளாட்ல தான்” “ஓகே, அப்போ யோஹன்னாவோட லேப்டாப்பை ஆன் பண்ணு” “ஏன்” “பண்ணு” ஏதோ பிரச்சினை என்று மதனுக்குப் புரிந்தது. லேப்டாப்பை ஆன் செய்தான். டெஸ்க்டாப்பில் ஜூனியர் மதன் என்று ஒரு ஃபோல்டர் இருந்தது. அதை ஓப்பன் செய்தான். அவன் மெயிலில் அனுப்பிய ஃபோட்டோக்கள் வந்தன. மதன் அதிர்ச்சியானான். “மதன் “ “….” “மதன், ஓப்பன் பண்ணிட்டியா?” “ஆங்..பண்ணிட்டேன்.: “அங்கே ஃபோட்டோஸ் இருக்கிறதா?” “ம்..” “சொல்லு, இதுக்கு என்ன அர்த்தம்?” மதனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இது எப்படி இங்கே வந்தது? யார் அனுப்பி இருப்பார்கள்? யோஹன்னாவிற்குத் தெரிந்த ஒரே ஆள் சிவா தான். அவனுக்கு இது எப்படிக் கிடைத்திருக்கும்? “மதன்..சொல்லு..அந்தக் குழந்தை யாரோடது?” “யோஹன்னா எங்கே? அவகிட்ட ஃபோனைக்கொடு. எல்லாத்தையும் நான் சொல்றேன்” சொல்லிக்கொண்டே என்ன சொல்லலாம் என்று யோசித்தான். “அவ உன்கிட்டப் பேச ரெடியா இல்லை மதன்.” “ஏஞ்சலின், நான் ஒரு பொண்ணுகூட லிவிங் டுகெதரா முன்னாடி இருந்தேன். யோஹன்னாக்கும் தெரியுமே. அவளோட குழந்தை தான் அது” “அப்போ ஏன் ஜூனியர் மதன்னு போட்டு மெயில் அனுப்பினே?” “ஹே..ஜஸ்ட் ஃபார் ஃபன்..சும்மா “ “மதன், ஏமாத்தணும்னு எப்பவும் நினைக்காதே. இங்க ஏமாத்திட்டு நீ தப்பிக்கவே முடியாது. எங்க ஆஃபீஸ்ல எல்லாரும் உன்மேல கொலைவெறில இருக்காங்க. வந்தாங்கன்னா, அடிச்சு போலீஸ்ல ஒப்படைச்சிருவாங்க..உன்னோட திங்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, வெளில போயிடு. ஈவ்னிங் யோஹன்னாவோட நாங்களும் வருவோம். நீ அங்கே இருந்தால், உடனே போலீசைக் கூப்பிட்டிடுவோம்..ஓடிடு..கெட் அவுட் இம்மீடியேட்லி” அத்தியாயம் - 49 சொல்லிவிட்டு ஃபோனை வைத்தாள் ஏஞ்சலின். “என்ன நீ, திடீர்னு அவனை வெளியே போன்னு சொல்லிட்டே? அவன் எங்கே போவான்? உண்மை என்னன்னு இன்னும் கொஞ்சம் பொறுமையா கேட்டிருக்கலாமே?” என்றாள் யோஹன்னா. “யோஹன்னா, ஏன் இப்படி மடத்தனமாப் பேசறே? அந்த மெயில் பத்திக்கேட்டா உளறுகிறான்” “ஒருவேளை அது அவன் குழந்தை இல்லேன்னா? ஒருவேளை அவன் நல்லவன்னா?” “அது கன்ஃபார்ம் ஆகட்டும். அப்புறம் பார்த்துக்கலாம். அதுக்காக அவனை இங்கே கூட வச்சிருக்க முடியுமா?” யோஹன்னாவிற்கு வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மதன் இப்போது எங்கே போவான் என்று யோசிக்க ஆரம்பித்தாள். மதன் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கினான். ஜமீலா கொடுத்த மூன்று லட்சம் அவனுக்கு தெம்பைக் கொடுத்தது. சீக்கிரம் ஏதாவது அப்பார்ட்மெண்ட்டில் ஃப்ளாட் பார்த்துப் போக வேண்டும் என்று முடிவு செய்தான். அந்த மெயில் எப்படி ஜமீலாவிற்குக் கிடைத்தது என்பது புதிராக இருந்தது. ’சிவாவைக் கேட்க வேண்டும். அவன் வேலையாகத் தான் இருக்கும்’ என்று முடிவு செய்தவனாய், சிவாவிற்கு கால் செய்தான். “டேய், என்னடா பண்ணிக்கிட்டு இருக்கிறே?” “மதன்…வந்தாச்சா? ஆஃபீஸ்ல தாண்டா இருக்கிறேன்…புராஜக்ட் முடியற ஸ்டேஜ்..அதான் கொஞ்சம் பிஸி..அப்புறம் பேசவா?” “ஒ..நான் ஊருல இல்லாதப்போ உன் வேலையைக் காட்டிட்டு, இப்போ பிஸின்னு ஃபிலிம் காட்டுறியா?” “வேலையா..என்ன வேலை..நான் என்னடா பண்ணேன்?” “உனக்கு அந்த மெயில் எப்படிக் கிடைச்சுச்சு, சொல்லு?..அதை என்ன ..க்கு யோஹன்னாக்கு அனுப்புனே?” “மெயிலா? எந்த மெயில்டா? நான் எதையும் அனுப்பலியே..இங்க பாரு மதன், நீ வரவர ரொம்ப ஓவராப் போறே..இனியும் இப்படி பேசிக்கிட்டிருந்தா, அப்புறம் நானும் திருப்பி அடிக்க வேண்டியிருக்கும். பிரவீணா மேட்டர்ல இருந்து உனக்கு கல்யாணம் ஆன மேட்டர்வரை எல்லாம் எனக்குத் தெரியும். ஆனாலும் இப்போவரைக்கும் நான் யோஹன்னாக்குச் சொல்லலை. அது தெரிஞ்சு போலீசுக்குப் போனா என்ன ஆகும், தெரியும்ல?” போலீஸ் என்றதும் மதன் அடங்கினான். “செய்டா..செய்..எனக்குன்னு ஒரு நேரம் வரும். அப்போ காட்டுறேன் நான் யாருன்னு” சொல்லிவிட்டு மதன் ஃபோனை வைத்தான். யோஹன்னா ’உண்மையைத் தெரிந்துகொண்டாளா..அது என்ன மெயில்’ என்று அறிந்துகொள்ள சிவாவிற்கு ஆர்வமாய் இருந்தது. யோஹன்னாவிற்கு கால் செய்தான். “யோஹன்னா..ஃப்ரீயா?” “ஓ..ஃப்ரீ தான்..” “மதன் கால் பண்ணான்…” சிவா ஆரம்பிக்கவும் யோஹன்னா இடைமறித்தாள். “மதனா? இப்போ எங்கே இருக்கான்?” “தெரியலை..எங்கேன்னு சொல்லலை” யோஹன்னாவிற்கு ஏனோ வருத்தமாக இருந்தது. “நீங்க கேட்கலியா? உங்க ரூமுக்கு வரலியா?” “இல்லை, என்ன பிரச்சினை? ஏதோ மெயில்னு சொல்றான். நாந்தான் உங்களுக்கு அனுப்பிட்டேன்னு சொல்றான்” “அண்ணா, நான் ரொம்ப குழம்பிப் போய் இருக்கேன். மதனுக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகிடுச்சா? குழந்தை இருக்கா? எனக்கு மதன் அனுப்புன ஒரு மெயில் கிடைச்சுச்சு..அதில் ஜூனியர் மதன்னு சப்ஜெக்ட் போட்டு, ஒரு குழந்தையோட ஃபோட்டோஸ் அனுப்பியிருக்கான் “ சிவாவுக்கு தன் சந்தேகம் உறுதியானது. “யோஹன்னா, எனக்கும் அந்த சந்தேகம் ரொம்ப நாளா உண்டு. நான் கொஞ்சநாள் முன்ன இந்தியா போனப்போ, ஒரு தடவை ஃபோன்ல பேசுனப்போ தனக்கு குழந்தை இருக்குன்னு சொன்னான். இப்போ கேட்டப்போ இல்லவேயில்லைன்னு சாதிச்சுட்டான். நானும் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட விசாரிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறேன். விசாரிச்ச வரைக்கும் எல்லாரும் ‘ஆமா’ன்னு தான் சொல்றாங்க” யோஹன்னாவுக்கு அதைக் கேட்கவும் அதிர்ச்சியாக இருந்தது. “ உறுதியா உங்களுக்குத் தெரியுமா?” “இல்லை, நான் மதனோட ஃப்ரெண்ட்ஸ் சிலபேரை தேடிக்கிட்டு இருக்கேன். பிடிக்க முடியலை. அந்த மெயிலை எனக்கு அனுப்ப முடியுமா?” “சரி “என்றாள் யோஹன்னா. ஆனாலும் அவளுக்கு சிவாவை நம்பலாமா என்று யோசனையாக இருந்தது. ஜமீலா மதனின் ஃபோன் நம்பருக்கு நூறு தடவையாவது கால் செய்திருப்பாள். ஸ்விட்ச்ட் ஆஃப் என்றே பதில் வந்தது. ’ என்ன ஆச்சு..ஏன் இப்படி வருகிறது? சார்ஜ் இல்லையென்றாலும் ரெண்டு நாளாகவா பேட்டரியை சார்ஜ் போடாமல் இருப்பான்? ஒருவேளை..ஒருவேளை அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ ‘ அதை நினைக்கவே பயமாக இருந்தது. ‘அப்படி இருக்காது..அவனுக்கு ஒன்றும் ஆகாது’ என்று நினைக்கும்போதே அழுகை வந்தது. அவள் மாமாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னார். அவரும் பதறினார். ‘எந்த ஏரியாவில் தங்கினான்? யாருடன் தங்கினான்? அவர்கள் ஃபோன் நம்பர் இருக்கிறதா?’ என்று அவர் கேட்ட எந்தக் கேள்விக்கும் ஜமீலாவிடம் பதில் இல்லை. அடுத்து யாரிடம் கேட்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அவள் மொபைல் ஃபோன் ரிங்கியது. ’ புது நம்பராய் இருக்கிறதே ‘ என்று யோசித்தபடியே எடுத்தாள். “ஹலோ” “வணக்கம்ங்க. என் பேரு ஜெயபால். மதனோட ஸ்கூல்ல ஒன்னாப் படிச்சவன். உங்க கல்யாணத்துக்கூட வந்திருக்கேன். ஞாபகம் இருக்குங்களா?” ”இல்லையே, என்ன விஷயம் சொல்லுங்க” “எல்லா விஷயமும் கேள்விப்பட்டேன். கொஞ்சநாளா நான் ஊருல இல்லை. நான் இருந்திருந்தா, இப்படி நடக்க விட்டிருக்க மாட்டேன்.” ஜமீலாவிற்கு அவன் என்ன பேசுகிறான் என்றே புரியவில்லை. தான் இப்போது கேரளாவில் மதனுடன் தங்கியபின் ஒரு பிரச்சினையும் இல்லையே..நேற்றில் இருந்து தானே மதனைக் காணவில்லை. “நீங்க என்ன சொல்றீங்க?” “என்னை யாரோன்னு நினைக்காதம்மா. என்னை உன் அண்ணனா நினைச்சுக்கோ. மதன் ஏன் இப்படிப் பண்ணான்னு எனக்கு இன்னும் புரியலை. தன்னை நம்பி வந்த பெண்ணை இப்படி தவிக்க விட்டுட்டு, ஃபாரினுக்கு ஓடிட்டானே?” ஜமீலாவுக்கு அதைக் கேட்டதும் தலையே சுற்றுவது போல் இருந்தது. “என்ன சொல்றீங்க? அவர் மும்பைக்குத் தானே போயிருக்கார்?” “மும்பைக்கா? அட, என்னம்மா நீ..இங்கே மதுரை ஃபுல்லா தெரிஞ்ச விஷயம் உங்களுக்குத் தெரியாதா? அவன் எப்பவோ பறந்துட்டான்….” அவன் சொல்லிக்கொண்டே போக, ஜமீலாவால் அதை நம்பவே முடியவில்லை. “இல்லை, அப்படி இருக்காது..அவன் அப்படிச் செய்யமாட்டான் “ என்றாள். “அப்படியா? அப்போ மதன் எங்கே? சொல்லும்மா” ஜமீலாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனாலும் ‘அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை ‘ என்பது தெரிந்ததும் நிம்மதியாகவும் இருந்தது. அதே நேரம் ஏன் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் ஓடினான் என்று குழப்பமாகவும் பயமாகவும் இருந்தது. “அவனை எப்படிப் பிடிக்கறதுன்னு நீ கவலைப்படாதம்மா. உலகம் இப்போ ரொம்பச் சின்னது. அண்ணன் நான் அவனைப் பிடிச்சுக் கொண்டாரேன், பாரு” என்றான் ஜெயபால். அத்தியாயம் - 50 மதன் தொடர்ந்து யோஹன்னாவிற்கு கால் செய்துகொண்டே இருந்தான். அவள் எடுக்காமல் தவிர்த்துக்கொண்டேயிருந்தாள். ஒருவாரப் போராட்டத்திற்குப் பின், ஒரு நாள் யோஹன்னா ஃபோனை எடுத்தாள். “மதன், ஏன் இப்படிப் பண்றே? “ என்றாள். “அதையே தான் நானும் கேட்கிறேன். ஏன் இப்படிப் பண்றே? என்ன நடந்துச்சுன்னு ஒரு விளக்கம்கூடக் கேட்க மாட்டியா? அவ்வளவு தானா உன் காதல்? இந்தளவிற்கு நம்பிக்கை இல்லாமலா என்னுடன் எங்கேஜ்மெண்ட் வரை வந்தாய்?” “இனிமே கேட்க என்ன இருக்கு? நான் மனசளவில் ரொம்ப நொந்துபோயிருக்கேன் மதன். ப்ளீஸ், போதும். விட்டுடு” “யோஹன்னா, முன்னாடி ஒன்னா லிவிங் டுகெதர்னு வாழ்ந்ததால, சும்மா அவங்களைப் பார்க்கப்போனேன். அவளுக்கு இப்போ வேற ஆள்கூட கல்யாணம் ஆயிடுச்சு. அவங்க கேட்டுக்கிட்டதால் அங்க ஒருநாள் தங்கினேன். அவ்ளோ தான். அப்போ சும்மா விளையாட்டுக்கு எடுத்தது அந்த ஃபோட்டோ. என் ஃப்ரெண்ட்ஸ் எப்பவும் அந்த குழந்தையை ஜூனியர்.மதன்னு கிண்டல் பண்ணுவாங்க. அதனால தான் நானும் கிண்டலா அப்படி அனுப்பினேன். தப்புப் பண்ணவன் எங்கேஜ்மெண்ட் முடிச்சப்புறமும் இவ்வளவு தைரியமா இப்படி மெயில் அனுப்புவேனா? யோசி, யோஹன்னா” யோஹன்னா குழம்பிப்போனாள். மதன் தாக்குதலைத் தொடர்ந்தான். “எனக்கு இங்கே யாரைத் தெரியும்? இப்போது யாரை நம்பி நான் வந்தேன்? உன் ஒருத்தியை நம்பித்தானே நான் வந்தேன். என்னோட அப்பா, உறவுகள், ஊர், நாடு எல்லாத்தையும் விட்டுட்டு,உன் பின்னால வந்ததுக்கு இது தான் பலனா?” “மதன், எனக்கு குழப்பமா இருக்கு. நான் கொஞ்சம் யோசிக்கணும். அப்புறமா நானே கூப்பிடறேன். பை”. மதன் சிரித்தான். ’இப்படியே தொடர்ந்தால், நிச்சயம் அவள் நம்பிவிடுவாள். விடக்கூடாது ‘ என்று முடிவு செய்தான். மறுநாளே கையில் ரோஜாப் பூங்கொத்துடன் அவள் தெருவில் போய் நின்றான். அவள் ஆஃபீஸ் கிளம்பிவந்தபோது “யோஹன்னா, ஐ லவ் யூ” என்று கத்தியபடியே மண்டியிட்டான். கைகளை விரித்து வானத்தைப் பார்த்து “ஐ லவ் யோஹன்னா” என்று கத்தினான். தெருவில் போன அனைவரும் திரும்பிப் பார்த்தனர். மதனைக் கடந்து சென்ற ஒரு லேடி “குட் ஒர்க்..ஆல் தி பெஸ்ட்” என்றாள். யோஹன்னா மதனை விட்டு விலகி நடந்தாள். ஆஃபீஸ் வந்தபின்னும் யோஹன்னாவிற்கு படபடப்பாக இருந்தது. ‘இது பொய்யா? இந்தக் காதலா பொய்?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள். உடனே பதிவர் சிவாவிற்கு ஃபோன் செய்தாள். இன்று நடந்ததையும், நேற்று அவன் ஃபோனில் பேசியதையும் சொன்னாள். சிவா மதனது சேட்டைகளை கல்லூரிக்காலம் முதல் பார்த்தவன் என்பதால், மதனின் திட்டத்தைப் புரிந்து கொண்டான். “யோஹன்னா, அவன் அப்படித்தான் நடிப்பான். ஏமாந்துவிடாதே. அந்த மெயிலை எனக்கு அனுப்பச் சொன்னேனே..அனுப்பினாயா?” என்றான் “இல்லை..உனக்கு செங்கோவின்னு யாரையாவது தெரியுமா?” என்றாள். “தெரியுமே..ஏற்கனவே நான் உன்கிட்ட சொன்னமாதிரி ஞாபகம். அவன் எனக்கும் மதனுக்கும் க்ளோஸ் ஃப்ரெண்ட். இப்போ என்கூட காண்டாக்ட் இல்லை. மதன் கூட இருக்கு. அவன் மெயில் ஐடியைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன். ஏன் கேட்கிறே?” “மதனோட ஜூனியர்.மதன் -மெயிலுக்கு செங்கோவி ரிப்ளை பண்ணியிருக்கான்” “ஓ..நான் சொன்னேன் பார்த்தாயா..உடனே அந்த மெயில் ஐடியை அனுப்பு. நான் அவனை உன்கூட பேச வைக்கிறேன். அப்புறம் எல்லா உண்மையும் உனக்குத் தெரியும்” யோஹன்னா அரைமனதுடன் அந்த மெயிலை அனுப்பினாள். சிவா உடனே எனக்கு ஒரு மெயில் அனுப்பினான். எடுத்தவுடனே இதைப் பற்றிப் பேசினால், நன்றாக இருக்காது என்பதால்… “ஹாய் செங்கோவி, எப்படி இருக்கே? இது சிவா. ஞாபகம் இருக்கா? காலேஜ்..ஃபர்ஸ்ட் இயர்..ஹாஸ்டல்..ரூம் மேட். எனக்கு இப்போ தான் உன் மெயில் ஐடி ஒரு ஃப்ரெண்ட் மூலமா கிடைச்சது. உன்னோட ஃபோன் நம்பர் எனக்கு அனுப்பு. ஒரு முக்கியமான விஷயம் பேசணும். –சிவா” என்று மெயிலில் எழுதியிருந்தான். அதே நேரத்தில் யோஹன்னாவிற்கு மதன் முன்பு சிவா பற்றியும் செங்கோவி பற்றியும் சொன்னது ஞாபகம் வந்தது. உடனே சிவாவிற்குக் கூப்பிட்டாள். “சிவா, நான் குழப்பத்தில் இருக்கிறேன்..அதனால் கேட்கிறேன். மதன் முன்னாடி என்கிட்டப் பேசும்போது ‘சிவா பொறாமை பிடிச்சவன்..செங்கோவியும் நல்ல ஃப்ரெண்ட் கிடையாதுன்னு சொல்லியிருந்தான். ஒருவேளை அது உண்மையா இருந்தா? ஏதாவது கடுப்பில் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து மதனைப் பத்தி, என்கிட்ட தப்புத்தப்பாச் சொல்லிட்டா?…எனக்கு என்ன பேசுறேன்னு தெரியலை..ஆனா இப்படியெல்லாம் தோணுது “ சிவாவுக்கு பயங்கரக் கோபம் வந்தது. “உன்னை மாதிரி ஒரு முட்டாளை நான் பார்த்ததே இல்லை. இங்க பார், எனக்கு அப்படி ஒன்னும் உனக்கு உதவி செய்யணும்னு அவசியம் இல்லை. பாவம், ஒரு பொண்ணு வாழ்க்கை பாழாகுதேன்னு வந்தா, இஷ்டத்துக்கு பேசறே. ஓகே, மதன் ரொம்ப நல்லவன். அவனையே கட்டிக்கோ. இனிமே நான் இது பத்திப் பேசலை. பை.” என்று ஃபோனை வைத்தான். அப்போது நான் சென்னைக்கு வந்திருந்தேன். நண்பரின் அறையில் தங்கியிருந்தேன். அன்று நண்பரும் ஆஃபீஸ் போய்விட, நெட்டில் பதிவுகளையெல்லாம் படித்தபடியே உட்கார்ந்திருந்தேன். பொதுவாக இரண்டு, மூன்று நாள் சேர்த்துவைத்தே, மெயில் பார்ப்பது என் வழக்கம். ஃப்ரெண்ட்ஸ் வட்டம் சிறியதென்பதால், அது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அன்றும் அதே போன்று அசுவாரஸ்யமாய் மெயில் பாக்ஸை திறந்தேன். சிவாவிடம் இருந்து’ ஹாய்’ என ஒரு மெயில் வந்திருந்தது. அதற்குக்கீழே ‘மதனானந்தா” என்ற சப்ஜெக்ட்டுடன் ஜெயபாலிடம் இருந்து மெயில் வந்திருந்தது. ஜெயபால் யார் என்று யோசித்தபடியே சப்ஜெக்ட் இழுத்ததால், அந்த மெயிலை ஓப்பன் செய்தேன். “நண்பர்களே, நான் ஜெயபால். மதனின் பள்ளிக்கால நண்பன். உங்களில் சிலர் என்னை அறிந்திருக்கலாம். நம் எல்லோருக்கும் இப்போது நித்யானந்தாவை தெரிந்திருக்கும். அதேபோன்று பல நித்யானந்தாக்கள் இங்கே நம்மிடையே இருக்கின்றார்கள். உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள ஒரு நித்யானந்தா பற்றி உங்களுக்கு தெரியப்படுத்தவே இந்த மெயில். அது வேறு யாருமில்லை, நம் மதன் தான். மதன் கல்லூரியிலேயே தன் காதல் லீலைகளை ஆரம்பித்துவிட்டதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நீங்களும் பார்த்திருக்கலாம். ஆனால் இப்போது நம் சாமியார் மதனானந்தா ஏமாற்றியிருப்பது ஜமீலா என்ற கேரளத்துப் பெண்ணை. அவளுக்கு ஒரு வயதில் பிள்ளையைக் கொடுத்துவிட்டு, கழற்றிவிட்டுவிட்டார் மதனானந்தா. அவர் இப்பொது ஃபாரினில் சொகுசு வாழ்க்கையில். ஆனால் அந்தப் பெண்? கேரளாவில் சாப்பாட்டிற்கே வழியின்றி, கைக்குழந்தையுடன் தவித்து வருகிறாள். குழந்தையைக் கவனிக்கக்கூட முடியாமல், இப்போது ஒரு சின்ன ஆஃபீஸிற்கு வேலைக்கு போய்க்கொண்டிருக்க்கிறாள். அங்கே வாங்கும் சம்பளம் குழந்தைக்கு நல்ல உணவையோ, உடையையோ வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு இல்லை. மதன் இப்போது ஃபாரினில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆனால், இங்கே அந்தப் பெண் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுகொண்டிருக்கிறாள். அந்தப் பெண் முதலில் இங்கே மதுரையில் தான் மதன் அப்பாவுடன் இருந்தாள். அப்புறம் மதன் என்ன சொன்னாரோ, அவளை அடித்துவிரட்டிவிட்டார்கள். இது தான் மதனானந்தாவின் லட்சணம். இப்படி ஒரு நண்பன் நமக்குத் தேவை தானா? – ஜெயபால் அந்த மெயிலைப் பார்த்ததும் அதிர்ச்சியானேன். அது யாருக்கு அனுப்பப்படிருக்கிறதென்று பார்த்தேன். மதனில் ஆரம்பித்து, 100க்கும் மேற்பட்ட ஆட்களுக்கு அது அனுப்பப்பட்டிருந்தது.   அத்தியாயம் - 51 நான் ஜெயபாலை ஒருமுறை பார்த்திருக்கிறேன். மதனுடன் மதுரைக்குள் சுற்றிய போது, அவனைப் பார்த்தோம். அலட்டலான ஆசாமி என்பது பார்த்தவுடனே தெரிந்தது. ‘நீங்கள்லாம் என்னத்த படிச்சு..என்னத்த கிழிச்சு ‘ என்பதாகவே அவன் பேச்சு இருந்தது. முதல் சந்திப்பிலேயே கடுப்பைக் கிளப்பினான். எனவே அவன் மெயிலை என்னால் அப்படியே நம்ப முடியவில்லை. நண்பர்கள் எனக்கு தொடர்ந்து ஃபோன் செய்து, அது உண்மையா என்று கேட்க ஆரம்பித்தார்கள். நானும் முந்தைய ஆஃபீஸ் நண்பர்களிடம் பேசியபோது, ‘மதனுக்கு யாரோ ஃபாரின் ஃபிகர் செட் ஆகிடுச்சு. அங்கே போய்விட்டான்’ என்பதாகவே சொன்னார்கள். என்னால் அதை நம்பவும் முடியவில்லை. ஜமீலா ஃபோன் நம்பர் என்னிடம் இருந்தது. ஆனால் ஜெயபால் பேச்சை நம்பி எப்படிக் கேட்பது என்று தயக்கமாக இருந்தது. மதனின் பதில் மெயிலுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். மதனும் அனைவருக்கும் சேர்த்தே பதில் போட்டான்: ஹலோ ஜெயபால், நீ ஏன் இப்படி கேவலமான நிலைமையில இருக்கிறே, தெரியுமா? ஏன்னா நீ இன்னும் உன் கேரக்டரை மாத்திக்காததால் தான். உண்மை என்னன்னு தெரியாம உன் ஓட்டையை ஓப்பன் பண்ணாதே. ஸ்கூல் டேஸ்ல இருந்து இப்படியே தான் பண்ணிக்கிட்டு வர்றே..என்னோட பெர்சனல் லைஃப் பத்திப் பேச நீ யார்டா? மாமா வேலையா பார்க்கறே? என்னைப் பத்திப் பேசுறயே, உன் யோக்கியதை என்னடா? நீ ஒரு *** பொண்ணை லவ் பண்றேன்னு சொல்லிட்டு அவளை மேட்டர் முடிக்கலே? அது தெரிஞ்சு, அந்தப் பொண்ணோட வீட்ல உன்னை ஆள் வைச்சு அடிக்கலே? அதையெல்லாம் வெளில சொல்லாம பைக்ல இருந்து கீழ விழுந்துட்டதா பொய் சொன்னவன் தானே நீ? அதைவிடு, அந்த மெட்ராஸ் ஆன்ண்டி கதை? அவ புருசனுக்குத் தெரியாம அவ வீட்டுக்கு நீ அடிக்கடி போனவன் தானே நீ? உன் தொல்லை தாங்காம அவ புருசன் அவளைக்கூட்டிக்கிட்டு, திருச்சி போனான்ல? அப்பக்கூட விடாம அங்க போயும் ஜல்சா பண்ணவன் தானடா நீ? என்னைப் பத்திப் பேச என்ன யோக்யதைடா உனக்கு இருக்கு? என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடியே உன்னைப்பத்தி நிறைய சொல்லியிருக்காங்க. அதை அப்போ நம்பலை. இப்போ நம்பறேன். இனிமேலாவது என் பெர்சனல் லைஃப்ல குறுக்கிடாம இரு. இல்லேன்னா, அதோட பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். – மதன் ஜெயபாலின் மெயிலை விட, மதனின் மெயிலே எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு வார்த்தைகூட நான் அப்படிச் செய்யவில்லை என்றோ, அதற்குரிய விளக்கங்களோ அதில் இல்லை. ’ஆம்..அப்படித்தான்’ என்பதாகவே அந்த மெயில் இருந்தது. மதன் – ஜமீலா கல்யாணத்தில் சாட்சிக் கையெழுத்துப் போட்ட அய்யருக்கும் அந்த மெயில்கள் போயிருந்தன. அதைப் பார்த்துவிட்டு, எனக்குக் கூப்பிட்டான். “என்ன பாஸ் இது..என்ன நடக்குது? இதெல்லாம் உண்மையா? அந்தப் பொண்ணு எவ்வளவு நல்லவங்க? அவங்க கையால நாங்க எத்தனை தடவை சாப்பிட்டிருக்கோம்? ஒருதடவை நம்மூர்ல பந்த் அன்னிக்கு சாப்பிட ஹோட்டலே இல்லாம தவிச்சப்போ, அந்தப் பொண்ணு தான் வீட்டுக்கு வரச்சொல்லுங்கன்னு மதன்கிட்ட சொல்லி, 20 பேருக்கு மொத்தமா சமைச்சுப்போட்டுச்சு. அதைப் போய்…என்னால நம்பவே முடியலை..நீங்க என்னன்னு கேளுங்க பாஸ்..அவர் உங்ககிட்ட தான் ஒழுங்கா பேசுவார்..நானும் மெயில் அனுப்புறேன்..நீங்க முதல்ல கேளுங்க” என்றான். அதற்கு முன் ஜமீலாவிடம் பேசுவது நல்லது என்று தோன்றியது. ஜமீலாவிற்குக் கால் செய்தேன். மறுமுனையில் ஃபோன் எடுத்ததும் எனக்குக்கேட்டது குழந்தையின் அழுகை தான். “அண்ணா, பத்து நிமிசம் கழிச்சு கூப்பிடறீங்களா? கம்பெனில இருந்து இப்போத்தான் வந்தேன் “ என்றாள். “சரி “ என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தேன். பத்து நிமிடத்தில் அவளே கூப்பிட்டாள். “சொல்லுங்கண்ண்ணா..” “இல்லே, சும்மா தான் கூப்பிட்டேன்..” என்று இழுத்தேன். “அப்புறம் உங்க ஃப்ரெண்ட் மதன் எப்படி இருக்கார்?” “என்ன இப்படிக் கேட்கிறீங்க? மதன் இப்போ எங்கே?” “யாருக்குத் தெரியும்ணா?” “இன்னிக்கு ஒரு மெயில் வேற வந்திருந்துச்சு, ஜெயபால்னு ஒருத்தர்கிட்டேயிருந்து” “ஜெயபால் அண்ணனா..சொன்னார், மெயில் அனுப்பிக் கேட்கப்போறேன்னு” “என்ன ஆச்சு?” “மதன் மாதிரி ஆளை நம்பி வந்தா, என்ன ஆகும்? நான் பண்ண தப்புக்கு நான் அனுபவிக்கணும் இல்லையா?” “என்ன இப்படில்லாம் பேசறீங்க..அவன் அப்படில்லாம் போக மாட்டான். நான் பேசறேன். வேலைக்கா போறீங்க?” “ஆமாண்ணா. இப்போத் தான் ரெண்டு நாளா. இங்க என் மாமா தான் சப்போர்ட்டா இருந்தார். அவரும் இப்போ இங்கே வர்றதில்லை. மூணு லட்சம் காசை ஏமாதிட்டமாம்..என்னென்னவோ பேசறாங்க..நடக்கட்டும்னு இருக்கேன்” “மூணு லட்சமா?” “ம்..மதன் விசா செலவுக்கு வேணும்னு கேட்டான். வாங்கிக்கொடுத்தேன். ஓடிப்போய்ட்டான். இப்போ அதை நான்தானே அடைக்கணும்” “அவன் நம்பர் ஏதாவது இருக்கா?” “எங்க இருக்கான்னே தெரியலையே..” “இன்னிக்கு மெயில் போட்டிருக்கான். நான் கேட்கறேன் அவன்கிட்ட. அவன் எப்படில்லாம் உங்ககிட்ட பாசமா இருந்தான்னு எனக்குத் தெரியும். அவன் அப்படில்லாம் விட்டுட்டுப் போக மாட்டான். எங்க போனாலும் வந்திடுவான். அவன் எப்பவும் இப்படித்தான்…ஆனா நல்லவன், வந்திடுவான்” ஜமீலா அழ ஆரம்பித்தாள். “வருவானா?” “நிச்சயமா..நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஷாக் ஆகித்தான் இருக்கோம்..நாங்க பேசறோம்” “அண்ணா, வெளில தான் நான் அப்படிப் பேசறேண்ணா..எனக்கு உண்மையில் பயம்மா இருக்குண்ணா..இங்க எல்லாரும் ஒரு மாதிரியாப் பார்க்காங்க..மதன் வந்திருவானா? எப்படியாவது அவனை என்கூட பேசச்சொல்லுங்கண்ணா. நான் சொன்னா அவன் கேட்பான். குழந்தையை விட்டுட்டு ஒரு ஆட்டோமொபைல் ஷாப்ல வேலைக்குப் போறேன். பகல்ல குழந்தையை ஹவுஸ் ஓனர் தான் பார்த்துக்கறாங்க. என்னால நிம்மதியா வேலையும் பார்க்கமுடியலை..கொஞ்சம் நல்லாப் பேசுனா, உடனே தப்பா நினைச்சுக்கிட்டு என்னென்னவோ சாடைமாடையா பேசறாங்க..நல்லாப் பேசலைன்னா ஒழுங்கா வேலை செய்யலைன்னு சொல்றாங்க. வேலைக்குப் போகலைன்னா சாப்பாட்டுக்கு வழியில்லை..காலைல குழந்தையை அமுத்திட்டுப் போனா, திரும்ப நைட்டு தான் வர்றேன். அதனால சிலநேரம்……….” இருவரும் அழுதோம். அத்தியாயம் - 52 மதன் எப்படியோ ஜெயபாலின் மொபைல் நம்பரைத் தேடிப் பிடித்தான். ஜெயபாலிற்கு ஃபோன் செய்து ‘ஏண்டா இப்படி மெயில் அனுப்பினே’ என்று காதால் கேட்க முடியாத அளவிற்கு திட்டினான். “நான் என்னடா மாப்ள செய்ய..உன் ஒய்ஃப் தான் சொல்லிச்சு. நீ விட்டுட்டு ஓடிட்டே. ஏமாதிட்டே. கஷ்டப்படுறேன்’னு! எனக்கும் பாவமா இருந்துச்சு. அதான் உனக்கு மெயில் போட்டேன்” “ஓ..அவ இப்படி ஒவ்வொருத்தன்கிட்டயா என்னைப் பத்திச் சொல்றாளா? “ “ஆமாம் மாப்ள..நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அதுகிட்ட பேசுறாங்க. அதுவும் சொல்லுது.” ”சரி, இனிமே அவகூடப் பேசாதே. என் பெர்சனல் மேட்டர்ல தலையிடாதே. இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்” சொல்லிவிட்டு மதன் கடுப்புடன் ஃபோனை வைத்தான். அடுத்த நாள் காலையில் ஜெயபால் ரத்தக்கண்ணீர் வடித்தபடி ஒரு மெயில் போட்டிருந்தான் : ஃப்ரெண்ட்ஸ், நம்ம பசங்க யாராவது கெட்டுப்போனா, நமக்கு எப்படி இருக்கும்? நமக்கு பிடிச்ச பையன்னா, நாம மனசு கஷ்டப்படுவோம் இல்லையா? அப்படித்தான் மதனுக்காக ஃபீல் பண்ணி ,அந்த மெயிலை நான் போட்டேன். அவனை திருத்தணும்னு தான் நான் அப்படி மெயில் போட்டேன். ஆனா அவன் என்னைப் பத்திக் கேவலமா மெயில் போடறான். என்னோட போன மெயிலை படிச்சுட்டு, மதன் எனக்கு கால் பண்ணான். என் நம்பர் யார் கொடுத்தீங்கன்னு தெரியலை. ரொம்ப மோசமா என்னைத் திட்டினான். என் ஃபேமிலியை ரொம்ப கேவலமா பேசுனான். என்னால் சாகறவரைக்கும் அதை மறக்க முடியாது. மதன் அப்படிப் பேசுவான்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. மதன், நீ கடைசியா சாரி கேட்டுக்கிட்டாலும் , அது உன் கேரக்டர் என்னன்னு காட்டிடுச்சு. உன் மனசுல அந்த மாதிரி எண்ணம் இருக்கப்போய்த்தானே அப்படில்லாம் பேசுன? நீ எப்படி என் ஃபேமிலி பத்தி அப்படில்லாம் சொல்லலாம்? நீ அப்படிப் பேசுனது தப்பு. நான் இனிமே உன் லைஃப்ல குறுக்க வர மாட்டேன். ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான். அவனுக்கு நீ ஒருநாள் பதில் சொல்லியே ஆகணும். இனிமே உன் ஒய்ஃபுக்கு சப்போர்ட்டா நான் யார்கிட்டயும் பேச மாட்டேன். இப்போ இல்லாட்டியும் ஒரு நாள் என்னை நீ புரிஞ்சுப்பே. உன் முன்னாள் நண்பன், ஜெயபால். இந்தக் கலவரத்தில் சிவாவின் மெயிலுக்கு பதில் போட மறந்துபோனேன். எனவே இரண்டு வரியில் நலம் விசாரிப்புடன், என் மொபைல் நம்பரைப் போட்டு பதில் அனுப்பினேன். ஆனால் சிவா யோஹன்னாவால் மனம் வெறுத்த நிலையில், அந்த மெயிலுக்கு எந்த பதிலும் போடவில்லை. மதன் மேல் அப்போதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. அவன் ஏதோ விளையாட்டாகச் செய்துகொண்டிருப்பான், நிச்சயம் சொன்னால் திருந்திவிடுவான் என்றே நம்பினேன். கல்லூரி நாட்களில் மதன் எல்லை மீறும்போதெல்லாம் நான் சுட்டிக்காட்ட வேண்டும் என்று விரும்பினான். நான் சொல்வதை அவனால் ஃபாலோ பண்ண முடியாவிட்டாலும், நான் தொடர்ந்து அவனை கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைத்தான். எங்களுக்குள் எவ்வித ஒளிவுமறைவும் இல்லாத நாட்கள் அவை. அவனின் மனசாட்சியாகவே என்னை வைத்திருந்தான். எனவே இப்போதும் அதே உரிமையுடன் அவனுக்கு ஒரு மெயில் அனுப்பினேன் : அன்பு மதன், என்னடா ஆச்சு?..என்ன நடக்குது?…முதல்ல ஜெயபால் மெயிலை பார்த்தப்போ நான் நம்பலை..அப்புறம் உன் reply அது உண்மைதான்னு சொல்றமாதிரி இருந்துச்சு…எதுவா இருந்தாலும் நீ பண்றது தப்புடா.. லைப்ல புருஷன் பொண்டாட்டிக்கு இடையில பிரச்சினை வர்றது சகஜம்டா…அதுக்காக பிரியறதுன்னா, உலகத்துல யாருமே சந்தோசமா இருக்க முடியாது… நான் விசாரிச்சவரைக்கும், தங்கச்சி கொச்சின்லதான் இருக்குது…சாப்பாட்டுக்கு வழியில்லாம இப்போ ஏதோ ஆபீஸ்க்கு வேலைக்கு போகுது..அதுவரைக்கும் குழந்தையை யாரோ பார்த்துக்கிருதாங்க…இதெல்லாம் நல்லாவாடா இருக்கு?..ஜமீலாவுக்காக இல்லேன்னாலும் உன் குழந்தைக்காகவாவது நீ மனசு மாறனும்.. இதைக் கேட்கிற உரிமை எனக்கு இன்னும் இருக்குன்னு நம்புறேன்..என்னைவிட உனக்கு கல்யாணம் பண்ணிவச்ச cc-ல இருக்கிற நம்ம பிரெண்ட்சுக்கு இருக்கு…நீ arranged marriage பண்ணி, இப்படி நடந்துக்கிட்டா உன்னை சும்மா விட்டிருவாங்களா?..இப்போ அந்தப் பொண்ணுக்கு யாரும் இல்லேன்னு நினைச்சுக்கிட்டு தானே இப்படி பண்றே..சொந்தக்காரங்க யாரோ சொன்னப்பவும் உன் மேலே போலீஸ் கம்ப்ளைன்ட் வராம உன் wife தாண்டா தடுத்துக்கிட்டு இருக்கு.. நம்ம அம்மா இறந்தப்போ, அப்பா வேற கல்யாணம் பண்ணிக்கலை..எதுக்கு?..தன் குழந்தைங்க நல்ல இருக்கணும்னு தானே…அப்புறம் நீ மட்டும் ஏன் இப்படி இருக்கே?..உன் குழந்தை மத்தவங்களை விட நல்லா இருக்க வேண்டாமா?.. நீயாத்தான் அந்த பொண்ணுகிட்டே propose பண்ணே..உன்னை நம்பி அந்தப் பொண்ணும் வீட்டை விட்டும் வந்திருச்சு…குழந்தையும் ஆயிருச்சு…இனிமே இப்படி பண்றது பாவம்டா..நீ இப்போ இந்தியா வராட்டியும், கொஞ்சம் பணமாவது அதுக்கு அனுப்பு…மத்ததை நீ இங்க வரும்போது நாம பேசித் தீர்த்துக்கலாம்.. நீ காலேஜ்ல என்ன தப்பு பண்ணினாலும் உனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கேன்..இப்பவும் நம்ம பசங்க என்கிட்டே கேட்கிறாங்க..என்னால சப்போர்ட் பண்ண முடியலை… நீயும் உன் குடும்பமும் ஒன்னு சேரனும்கிறதுதான் எங்க எல்லாரோட ஆசையும்.. கடைசியா ஒன்னு சொல்றேன்…நீ இந்த விசயத்தில எது பண்றதாயிருந்தாலும், அம்மா இப்போ இருந்தா உனக்கு என்ன சொல்வாங்களோ அதை மட்டும் பண்ணு..It will solve everything..அம்மா சந்தோசப் படுறமாதிரி நடந்துக்கோ… If possible, call me or give me your no. – செங்கோவி எனது மெயிலைத் தொடர்ந்து அய்யரும் ஒரு மெயில் போட்டான். மதன், இந்த விஷயத்தில் தலையிட எனக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆனால், நமது நட்பும் அதற்கான மரியாதையும் இன்னும் தங்களிடம் இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். எங்கள் அனைவரிலும், தங்கலுடன் நீண்டகால நட்பும், தங்கள் குடும்பத்தினருடன் பரிச்சயமும் கொண்டவர் செங்கோவி என்பதை நாங்கள் அறிவொம். இந்த கடிதத்தை வேறு யார் அனுப்பியிருந்தாலும் அதை நாங்கள் spam என்று சொல்லி delete செய்திருப்போம். ஆனால் செங்கோவியிடமிருந்து வந்துள்ளதால் இது எங்கள் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அவர் சொல்வதை நாங்கள் நம்பினாலும், தங்கள் எதிர் வாதத்தை கேட்க நாங்கள் ஆவலுடன் உள்ளோம். இதையெல்லாம் கேட்க நீ யார்? என்று கேட்டால், என்னிடம் பதில் இல்லை. ஆனால், தங்கள் பதிவு திருமணத்தில் கையொப்பமிட்ட சாட்சி நான் என்கிற உரிமையில் கேட்கிறேன். தயவு செய்து இதற்கு ஒரு பதில் சொல்லுங்கள். சில மாதங்களுக்கு முன் தங்களிடமிருந்து எனக்கு வந்த மின்னஞ்சலில் தாங்கள் Spain-ல் இருப்பதாக சொன்னீர்கள். ஆனால் அந்த மின்னஞ்சலின் originating IP address தாங்கள் நார்வேயில் இருப்பதாக காட்டியது. இதை நான் யாரிடமும் சொல்லவில்லை. கூட்டி கழித்து பார்க்கும்போது, இது எல்லாம் ஒரு premeditated plan ஆக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. மறுபுரம், தங்கள் மனைவி, “எல்லருமாக சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டார்கள்” என்று போலீசாரிடம் குற்றபதிவு செய்தால், கையொப்பமிட்ட நானும் (accomplice in conspiracy to commit crime) சிறைச்சாலை செல்வது உறுதி. ஆனால் எனக்கு ஞாபகத்திற்கு வருவது ஒரு விஷயம் தான். தங்கள் பதிவு திருமணத்தின்போது, பெண்ணின் விண்ணப்பத்தில், அவர் ஒரு divorcee என்பதை கண்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். அன்றிரவு நான் அதைப்பற்றி தங்களிடம் கேட்டபோது, அந்த பெண் பாலிய விவாஹ கொடுமைக்கு உட்பட்டவள், அவளது கொடுமைக்கார கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டாள் என்றும் சொன்னீர்கள். அந்த பெண்ணுக்கு மறு வாழ்வு கொடுத்த உங்களை நினைத்து மெய் சிலிர்த்தேன். அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்ட நீங்கள் இப்படிப்பட்ட காரியத்தை செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன். இங்ஙனம், உங்க அய்யர் மதனிடம் இருந்து நல்ல பதிலை எதிர்பார்த்து, நாங்கள் காத்திருந்தோம்.     அத்தியாயம் - 53 மனித மனம் செயல்படும் விதம் விசித்திரமானது. எப்போது எப்படி அது திரும்பும் என்பதே புரிவதில்லை. ஏதாவதொரு சிறு காரணம் கிடைத்தாலும் அதைப் பிடித்துகொண்டு, கீழான நிலைக்கு இறங்க, மனித மனம் தயங்குவதேயில்லை. ஒரு சொல், ஒரே ஒரு சொல்லைப் பிடித்துக்கொண்டு, வெட்டிக்கொண்டு வீழ்ந்த குடும்பங்களை நான் அறிவேன். அதே சொல்லும், அதன் மீதான வெறுப்பும் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு, சண்டை என்பது வம்சப் பகையாக தொடர்வதைக் கண்டிருக்கிறேன். ஒரே ஒரு சொல் போதும், நம்மை காட்டுமிராண்டிகளாய் மாற்றிவிட என்பதே பலரின் நிலைமை. சொல்லில் வாழும் மனிதர்கள், சொல்லிற்காய் சாகும் மனிதர்கள் நாம். நம்முடைய நடவடிக்கைகள் எதற்காவது உடனடி ரியாக்சனாய் ஆகிவிட்டாலே, அதனிடம் நாம் தோற்றுவிட்டதாகவே அர்த்தம். அதுவே நம்மை வீழ்த்திவிடும். கடுமையான எதிர்கருத்தையோ, சொல்லையோ சொல்லிவிட்டால், உடனே அதே தரத்திற்கு இறங்கி சண்டையிடுபவர்களே இங்கே அதிகம். அது நம்மை தூண்டுவதற்காகவே சொல்லப்படும் சொல் என்பதுகூட நமக்கு அப்போது புரிவதில்லை. குடும்பப் பகையின் காரணமாக ஒருவரை வெட்டிக் கொன்று விட்டு, 10 வருடங்கள் வரை ஜெயிலில் கழித்துவிட்டு, வந்தபின்னர் ‘அவன்தான் கூறுகெட்ட தனமா ஏதோ சொல்லிட்டான். அதுக்கு நானும் இப்படிப் பண்ணிட்டனே..எனக்காவது 10 வருச வாழ்க்கை தான் போச்சு. அவனுக்கு மொத்த வாழ்க்கையும் போச்சே’ என்று புலம்பிய மனிதரை நேரில் கண்டிருக்கிறேன். நாமும் நமது நடவடிக்கைகளும் பிறராலேயே இங்கு பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகின்றன. எப்போதும் எதற்கேனும், யாருக்கேனும் எதிர்வினையாகவே நமது செயல்பாடுகள் அமைகின்றன. நமக்குப் பிடிக்காத ஒருவன் ஒரு விஷயத்தை ஆதரித்துவிட்டால், உடனே அதனை வெறுக்கின்றோம். கூட்டம் சேர்த்து கூக்குரலிடுகின்றோம். எங்காவது அடிபடும்வரை நிதானம் என்பதை நாம் கற்றுக்கொள்வதே இல்லை. நம்முடைய சிந்தனையும் செயல்பாடுகளும் நம்முடைய கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டுமேயொழிய, எதற்கும் எதிர்வினையாக ஆகிவிடக்கூடாது. அவ்வாறு செய்துகொண்டே போனால், வாழ்வது நம் வாழ்வாகவும் இருக்காது, நல்ல வாழ்வாகவும் இருக்காது. ஜெயபால் இந்த விஷயத்தில் இறங்கியபோதே எனக்கு உறுத்தியது. திருமண பந்தத்தில் வரும் பிரச்சினையில் பெண்ணின் நிலை என்பது எப்போதும் முள்மேல் விழுந்த சேலை தான். அதைக் கையாளுவதற்கான பொறுமையோ, நிதானமோ ஜெயபாலிற்கு நிச்சயம் கிடையாது. தடால் புடால் என்று இறங்கக்கூடிய விஷயம் அல்ல இது. சமாதானமும் சமரசமும் செய்வது சாதாரண விஷயம் அல்ல. சில நேரங்களில் கோபத்தில் இருதரப்பிலும் வார்த்தைகள் வந்துவிழும். இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வது ஒருநாளும் சமரசத்தை உண்டாக்கிவிடாது. அவ்வாறு அப்படியே சொல்லப்படும் வார்த்தைகள், அவர்களின் கோபத்தை அதிகரிக்கவே செய்யும். அவர்கள் உடனே அதற்கு எதிர்வினையாற்றுவார்கள். பலரின் சிந்தனை/செயல் எல்லாம் எதற்காவது எதிர்வினையாகவே உருவாகின்றன. எப்போதும் பிறரால் பாராட்டப்பட வேண்டும், மற்றவரை விட நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் கொண்ட, அதே எண்ணத்தை அடுத்தவர் மேல் திணிப்பதில் பிரியம் கொண்ட மதனுக்கு, ஜெயபாலின் மெயில் பெருத்த மனக்காயத்தை உண்டாக்கியது. அதைத் தொடர்ந்து அவன் ஜமீலா பற்றி சொல்லிய விஷயங்களும் அவனை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றது. தொடர்ந்து வந்த எனது/அய்யரின் மெயில்களும் கோபத்தின் உச்சிக்கே அவனைக் கொண்டு சென்றது. ஜமீலா அவனை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்திவிட்டதாகவே நினைத்தான். உடனே எதிர்வினையாற்றத் தொடங்கினான். ஏற்கனவே மனதை தன் பிடியில் வைத்துப் பழக்கமேயில்லாத மதன், இப்போது வார்த்தைகளின் மீதும் பிடி இழந்தான். நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மதனின் பதில் மெயில் வந்து சேர்ந்தது. படபடப்புடன் பிரித்து படித்தேன் : டியர் ஃப்ரெண்ட்ஸ், முதலில் அனைவருக்கும் நன்றி. உங்களுக்கு என்னைக் கேள்வி கேட்க முழு உரிமையும் இருக்கிறது. நான் பண்ண ஒரே தப்பு, உங்ககிட்ட இருந்து பல உண்மைகளை மறைச்சிட்டது தான். நான் ஏன் மறைச்சேன்னா ஜமீலா பேர் கெட்டுப்போகக்கூடாதுன்னு தான். நான் யாரையும் ஏமாத்தலை. செங்கோவி, உனக்கு ஜெனிஃபர் மேட்டர் நல்லாவே தெரியும். அவள் மோசமான பெண்ணா இருந்தும் நான் அவளைக் கட்டிக்க ரெடியாயிருந்தேன். ஏன்? ஏன்னா அவளை நான்………… நாம யாரையும் ஏமாத்தக்கூடாதுன்னு நினைக்கிறவன் நான். அதனால தான் அவளை கழட்டிவிட நான் விரும்பலை. ஆனால் செங்கோவி, உன்னால தான் அவகிட்ட இருந்து தப்பிச்சேன். அதுக்கு நன்றி. ஆனால் துரதிர்ஷ்டவசமா நான் ஜமீலாவை கல்யாணம் பண்ணப்போ நீ என் பக்கத்துல இல்லை. அய்யர், அன்னைக்கு நீ மட்டும் ஷாக் ஆகலை. அவ டைவர்சின்னு எனக்கும் அப்போத் தான் தெரியும். தெரிஞ்சு நானும் ஷாக் ஆகிட்டேன். இருந்தாலும் விட்டுக்கொடுக்காம நான் பேசினேன். அதை பெரிய விஷயமா நான் எடுத்துக்கலை. நான் நினைச்சேன் அவளைக் கட்டிக்கிட்டவன் தான் தப்பான ஆள்னு. ஆனால் உண்மை தலைகீழா இருந்துச்சு. என் அப்பா அவளை எப்படில்லாம் பார்த்துக்கிட்டாரு தெரியுமா..ஆனால் அவ எங்கப்பாவை ஒருநாளும் மதிச்சதில்லை. நான் இதுக்கு மேலயும் அவளைப் பத்தி எதுவும் சொல்ல விரும்பலை. செங்கோவி, அம்மா இருந்தா என்ன செய்வியோ அதைப் பண்ணுன்னு நீ சொல்றதை நான் ஒத்துக்கறேன். முதல்ல அம்மா இருந்திருந்தா, இந்த மாதிரிப் பெண்ணைக் கட்டிக்க அவங்க ஒத்துக்கிட்டிருக்கவே மாட்டாங்க. செங்கோவி, பொறுமையா இரு. அவகூட எந்த காண்டாக்ட்டும் வச்சுக்க வேண்டாம். எல்லாரும் இந்தப் பிரச்சினையை இதோட விடுங்க. இன்னொரு முக்கியமான விஷயம்…அந்தக் குழந்தை எனக்குப் பிறந்தது இல்லை. இதை அவளே ஒத்துக்கிட்டா. அது வேற எவனுக்கோ பிறந்த குழந்தை. என்னோட குழந்தைன்னா, நான் அதுக்கு செலவுக்கு பணம் அனுப்பறது நியாயம். ஆனால் யாருக்கோ பிறந்ததுக்கு நான் ஏன் பணம் கொடுக்கணும்? என்றும் அன்புடன் மதன். எனது வாழ்க்கையின் மோசமான தருணங்களில் ஒன்றாக அது அமைந்தது. யார் வீட்டிற்கு வந்தாலும் , முகப் சுளிக்காமல் சோறாக்கி பசியாற்றிய அந்தப் பெண்ணை, எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைத்திடாத அந்தப் பெண்ணை இவ்வளவு மோசமாக மதன் சொல்வான் என்று கனவிலும் நாங்கள் நினைக்கவில்லை. மதன் எங்களைத் தவிர்த்து வேறு சில ஆஃபீஸ் நண்பர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தான். அவர்கள் நெதர்லேண்ட் போன்ற இடங்களில் இருந்தார்கள். மதனின் எண்ண ஓட்டத்தை அறிய அவர்களிடமும் நான் தொடர்பு கொண்டிருந்தேன். அவர்கள் சொன்ன பதில் ‘அவனுக்கு இங்கே யோஹன்னா என்ற பெண்ணுடன் எங்கேஜ்மெண்ட் முடிந்துவிட்டது. அவன் ஃபாரினர் ஆகும் கனவில் இருக்கின்றான். இனி அவனுக்கு ஜமீலாவோ இந்தியாவோ ஒரு பொருட்டே அல்ல’. எனக்கு கோபம் வந்தது. அய்யர் இன்னும் குதித்தான். “எப்படிங்க அந்தப் பொண்ணைப் போய் இப்படிச் சொல்றான்? நாம ஒன்னுமே செய்ய முடியாதா? கண்ணு முன்னாடி ஒருத்தன் ஒரு பொண்ணை ஏமாத்தி குழந்தையைவும் கொடுத்திட்டு ஓடறான். நாம வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கிறதா?” என்றான். அத்தியாயம் - 54 ஒருவருடன் நட்பாய் இருக்க, நண்பனாய் ஏற்றுக்கொள்ள, அவன் மனிதனாய் இருக்க வேண்டியது அவசியம். மனிதத் தரத்தில் இருந்து கீழிறங்கிய பின் மதனிடன் நட்பு பாராட்டுவதில் அர்த்தம் இல்லை என்றானது. கோபத்தில் இருக்கும்போது, அதிகம் வார்த்தை விடக்கூடாது என்பதால், அவனுக்கு சுருக்கமாக ஒரு பதிலை அனுப்பினேன் : மதன், இவ்வளவு கீழ்த்தரமான விளக்கத்தை உன்கிட்டயிருந்து எதிர்பார்க்கலை…ரொம்ப வருத்தமா இருக்கு… நீ எழுதின எல்லாத்திலயும் நான் கேள்வி கேட்க முடியும்…அதுக்கு நீ இன்னும் கேவலமா ஏதாவது சொல்வே…எப்போ நீ இந்த அளவுக்கு இறங்கீட்டயோ, இனிமே உன்கூட பேசுறது வேஸ்ட். இனிமே எதைப்பற்றியும் உன்கிட்ட பேசுறதை பெரிய தவறுன்னு நினைக்கிறேன். – செங்கோவி நல்லவேளையாக நான் அனுப்பிய மெயிலில் ஜெயபால் ஐடி இல்லாததால், மதனின் பதில் ஜெயபாலிற்கு தெரியவில்லை. அதை நினைத்து கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. இதில் என்ன செய்வது என்று யோசிக்கையில் தங்கவேல் அண்ணன் ஞாபகம் வந்தார். அவர் தமிழ்நாட்டின் உயர்ந்த அலுவலகத்தில், முக்கியப் பொறுப்பில் இருப்பவர். நான் சென்னையில் வேலை தேடித் திரிந்த நாட்களில், எனக்கு பல உதவிகளைப் புரிந்தவர். இந்த விஷயத்தை அவரிடம் எடுத்துச் செல்வது நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். அவரிடம் உள்ள ஒரே பிரச்சினை சிபாரிசு என்று போனால் விரட்டி விட்டுவிடுவார். “உனக்கு ஏதாவது வேணும்னா கேளு..உனக்குத் தெரிஞ்சவன்..தெரிஞ்சவனுக்குத் தெரிஞ்சவன்னு இறங்கினால் முடிவே இல்லாமப் போயிடும் “ என்பது வழக்கமாக அவர் சொல்லும் டயலாக். இருந்தாலும் வேறு வழியின்றி அவரைப் பார்ப்பது என்று முடிவு செய்தேன். பாதுகாப்பு சோதனைகள், விசாரணைகளைத் தாண்டி அவரது அலுவலகத்திற்குள் நுழைந்தேன். ப்யூன் புதியவராய் இருந்தார். “யார் தம்பி நீங்க? சாரை எதுக்காகப் பார்க்கணும்?” “அவர் தம்பி தான் நான். செங்கோவி வந்திருக்கேன்னு சொல்லுங்க. போதும். நீங்க புதுசா?” “ஆமா. இருங்க. அவர் ***கூட பேசிக்கிட்டு இருக்கார். அவர் வெளில வரவும் சொல்றேன்” “ஓகே” என்றபடி உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் *** வெளியே வந்தார். அவர் ஒரு ஆளுங்கட்சியைச் சேர்ந்த சினிமா நடிகர். ஏதோ பஞ்சாயத்துக்காக வந்திருப்பார் போல் தெரிந்தது. நான் அண்ணனின் அறைக்குள் நுழைந்தேன். “வாப்பா..வாப்பா. எப்படி இருக்கே?” “நல்லா இருக்கேண்ணே.” “குவைத் விசா பிராசசிங் எல்லாம் எப்படிப் போகுது?” “மூணு மாசம் ஆகும்னு சொல்லியிருக்காங்க. இடையில் ஒரு சின்ன பிரச்சினை..அதான்….” “உனக்குப் பிரச்சினையா? சொல்லு பார்ப்போம்” சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். அவர் யோசித்தபடியே உட்கார்ந்திருந்தார். “அண்ணே, இது வெறும் சிபாரிசுன்னு நினைக்க வேண்டாம். ஒரு பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சினை. நான் சும்மா உங்ககிட்ட வருவனா?” “இல்லைப்பா…இதுல நான் என்ன செய்யணும்?” “மதன் இந்தியா வரும்போது, போலீஸ்மூலமா கொஞ்சம் மிரட்டலாமா? ஒரு பொண்ணை ஏமாத்திட்டு ஓடறது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை, பதில் சொல்லியே ஆகணும்னு அவனுக்கு புரிய வைக்கலாமே..ஒருவேளை அவன் தப்பை உணர்ந்துட்டான்னா, நல்லது தானே?” “இன்னுமா அவனை நீ நம்பறே?” “ஏதோ வேகத்துல, கோபத்துல பண்ற மாதிரி தான் எனக்குத் தோணுது. அந்தப் பொண்ணும் பாவம் இல்லையா? அவன் இல்லாம அது என்ன செய்யும்?” “சரி, அவன் வரும்போது மிரட்டிப் பார்க்கலாம். மதுரை தானே சொன்னே?” “ஆமா” “ம்..மதுரைக்கு டிஎஸ்பி நம்மாளு தான். சொல்லிக்கலாம். ஆனால் அந்தப் பொண்ணு ஒரு கம்ப்ளண்ட் தரணும்.” “கம்ப்ளைண்ட் இல்லாம பண்ண முடியாதா?” “கம்ப்ளைண்ட் இருந்தாத் தான் நமக்கு சேஃப்ட்டி. இது மாதிரி குடும்ப விஷயத்துல பஞ்சாயத்து பண்ணப்போனா, எந்த நிமிசமும் அவங்க சேர்ந்துப்பாங்க. அப்புறம் நம்மை வம்புல மாட்டிடுவாங்க. நிறைய பட்டிருக்கோம்ப்பா” “சரி. நான் பேசிப் பார்க்கிறேன்” அன்று இரவே ஜமீலாவிடம் பேசினேன். சும்மா ஒரு கம்ளைண்ட் கொடுக்கலாமா என்று கேட்டுப் பார்த்தேன். “என்னண்ணா, நீங்களும் இப்படியே சொல்றீங்க? இங்க மாமாவும் அதைத் தான் சொல்றாங்க. ஜெயபால் அண்ணாவும் அதையே சொல்றாரு.போலிஸ்க்கு எல்லாம் போக நான் ரெடியா இல்லைண்ணா. டெய்லி வேலைக்குப் போனாத்தான் சாப்பாடுங்கிற நிலைமைல நான் இருக்கேன்..போலீஸ், கேசுன்னு அலைய என்னால முடியாது” “சும்மா, ஒரே ஒரு கம்ப்ளைண்ட் மட்டும் கொடுத்து வைக்கலாம். தெரிஞ்ச ஆள் இருக்கு.” “இல்லைண்ணா..வேண்டாம். அவன் எப்படியும் திரும்பி வருவான். எனக்குத் தெரியும்.” “நான் வேணா மதன் அப்பாகிட்டப் பேசட்டுமா? அவர் நம்பர் இருக்கா?” “அய்யோ..வேண்டாம். ஜெயபால் அண்ணன் பேசினதுக்கே ரொம்ப அசிங்கமா கேட்டாராம். என் மகனை விட அவன் ஃப்ரெண்ட்ஸ்களுக்குத் தான் ஜமீலா மேல அக்கறை அதிகமா இருக்கு. எல்லாரையும் மயக்கி வச்சிருக்காளா அந்த சாகசக்காரின்னு இன்னும் என்னென்னவோ சொல்லியிருக்கார்.” சொல்லும்போது ஜமீலாவின் குரல் தழுதழுத்தது. எனக்கு அந்தப் பெண்ணை நினைத்து பரிதாபமாக இருந்தது. ஃபோனை வைத்தேன். ஜமீலா ஃபோனை வைத்ததும் ஜெயபால் கூப்பிட்டான். “சொல்லுங்கண்ணா” “என்னம்மா, போலீஸ்க்கு போலாமான்னு கேட்டேன்..வேண்டாம்னு சொன்னே. திரும்ப யோசிச்சியா?” “அதுல யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு..அதெல்லாம் வேண்டாம். இப்போத் தான் செங்கோவியண்ணன் பேசுனாரு. அவர்கிட்டயும் அதே தான் சொன்னேன். போலீஸ்க்கு போற அளவிற்கு எனக்குத் தைரியம் இல்லைண்ணா” “செங்கோவியா? அவனும் பேசுவானா?” “ஆமா” “போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுப்போம்னு சொன்னானா?” “ஆமா” “பார்த்தியாம்மா..எல்லாரும் அதே தான் சொல்றோம். நீ தான் கேட்க மாட்டேங்கிறே” “வேண்டாம்ணா..கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்போம்” ஜமீலாவுடன் பேசி முடித்த உடனே, ஜெயபால் மதனுக்கு மிஸ்டு கால் கொடுத்தான்.   அத்தியாயம் - 55 ஜெயபாலை மதன் உடனே கூப்பிட்டான். “என்னடா?” என்றான் மதன். “ம.., அன்னைக்கு என்னமோ நான் மட்டும் தான் உனக்கு எதிரா வேலை செய்றதாவும், மத்த ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் உனக்கு சப்போர்ட்டா இருக்கற மாதிரியும் சொன்னே..இப்போ உன்கூடப் படிச்சவங்களே உன்னை உள்ள வைக்க வழி பண்ணிக்கிட்டிருக்காங்க, தெரியுமா?” “யாரைச் சொல்றே? என்ன பண்றாங்க?” “செங்கோவி…..உன் மேல போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கலாம்னு ஜமீலாகிட்ட சொல்லியிருக்கான். ஜமீலா மாமாவும் அதையே சொல்றார். நாந்தான் பொறுமையா இரும்மான்னு அவகிட்ட சொல்லிக்கிட்டிருக்கேன் தெரியுமா?” “ஓ…செங்கோவியும் இதுல இறங்கியிருக்கானா?” “ஆமா, நீ என்னை மட்டும் மிரட்டுனல்ல..இப்போ அங்க நொ..பார்ப்போம்” ஆனால் மதன் என்னை மிரட்டவில்லை. மதன் – ஜெனிஃபர் ஃபோட்டோ என்னிடம் இருந்தது. மதன் – ஜமீலா கல்யாணத்தில் மதன் அப்பாவும் இருக்கும் ஃபோட்டோ என்னிடம் இருந்தது. நான் மதன் – ஜமீலாவுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவும் இருந்தது. ஆரம்ப காலத்தில் ஜமீலாவை கல்யாணம் செய்ததில் ஆரம்பித்து அவள் கன்சீவ் ஆனதுவரை உடனுக்குடன் எனக்குத் தெரிவித்து மதன் அனுப்பிய மெயில்கள் பத்திரமாக என்னிடம் இருந்தன. எனவே மதன் பொதுவாக நண்பர்களுக்கு ஒரு மெயில் அனுப்பினான் : ஃப்ரெண்ட்ஸ், என்னோட பெர்சனல் லைஃப்ல சிலர் தேவையில்லாத பிரச்சினையை கிளப்புற மாதிரி தெரியுது. முதல்ல ஜமீலா அவளாவே எல்லாத்தையும் பண்றதா நினைச்சேன். ஆனால் இப்போத் தான் தெரியுது யாரோ சிலரோட சப்போர்ட்டோட தான் எனக்கு எதிரா சில வேலைகளை அவ பண்ணிக்கிட்டிருக்கா. ஏன் இப்படி என் வாழ்க்கையில விளையாடுறாங்கன்னு தெரியலை. நான் யாரோ ஒருத்தரை குறிப்பிட்டுச் சொல்லலை. பொதுவாச் சொல்றேன். அனானிமஸ் மெயில்/ஃபோன் பண்றதையும் மத்த வேலைகளையும் உடனே நிறுத்துங்க. உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். இந்த மெயிலுக்கு யாரும் எந்த பதிலும் போட வேண்டாம். – மதன் பதிவர் சிவா ஃபேஸ்புக்கில் புதிதாய் வந்திருந்த ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்களை பெருந்தன்மையுடன் அக்செப்ட் பண்ணிக்கொண்டிருந்தான். அதில் ஜான்சன்_ஜான்சன் என்றொரு ரிக்வெஸ்ட் இருந்தது. என்னடா இது, பேபி சோப் மாதிரி என்று நினைத்துக்கொண்டே, அதை அக்செப்ட் பண்ணிவிட்டு யாரென்று பார்த்தான். யாரோ இந்தியன் என்பது தெரிந்தது. அவனது ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட் முழுக்க பெண்களே நிரம்பி வழிந்தார்கள். மச்சக்காரன் என்று நினைத்துக்கொண்டே என்ன மெசேஜ் போட்டிருக்கிறான் என்று பார்த்தான். ஒரு அருமையான காதல் வசனம் இருந்தது. அதைப் பார்த்த சிவா ஷாக்கானான். ஏனென்றால், அது சிவா தன் பதிவில் எழுதிய டயலாக் அது. நம் வாசகராய் இருப்பாரோ என்ற டவுட்டுடன் இன்னும் கொஞ்சம் தேடிப் பார்த்தபோது அது மதன் தான் என்று தெரிந்து போனது. சிவாவுக்கு பயங்கரக் கோபம் வந்தது. ’யோஹன்னாவை அநியாயமாக ஏமாற்றியது மட்டுமில்லாமல், இந்த வேலை வேறு செய்கிறானா? இனி இதுபோல் எத்தனை பெண்களை ஏமாற்றப்போகிறானோ’ என்று நினைத்துக்கொண்டான். அப்போது யோஹன்னாவிடம் இருந்து ஃபோன் கால் வந்தது. ரொம்ப நாட்களாகவே அவளிடம் சிவா பேசவில்லை. கடைசியாக கோபத்துடன் கட் செய்தது ஞாபகம் வந்தது. பாவம், நல்ல பெண் என்று நினைத்துக்கொண்டே ஃபோனை எடுத்தான். “ஹாய் சிவா” “ஹாய்” என்று குரலில் நட்பே இல்லாமல் சொன்னான். “சாரி..நான் அன்னைக்கு ஏதேதோ பேசிட்டேன்.மதன் விஷயத்துல என்னால இன்னும் ஒரு முடிவும் எடுக்க முடியலை. அவன் நல்லவனா இருப்பானோன்னும் தோணுது.கெட்டவன்னா இப்போ வேற பொண்ணைத் தேடிப் போயிருப்பான்ல? ஏன் இன்னும் என்னையே சுத்தி வர்றான்?” “ம்…நான் ஒரு ஃபேஸ்புக் லின்க் அனுப்புறேன். பாரு..” “நெட்ல தான் இருக்கேன்” “அனுப்பிட்டேன்” “இது யாரு?” “நீயே சொல்லு. அது யாருன்னு?” யோஹன்னா அதில் போட்டிருந்த மெசேஜ்களைப் படித்தாள். அது மதன் என்று உடனே தெரிந்தது. ”அதே வேர்ட்ஸ்..அதே ஸ்டைல்….மதன்” என்றாள். “அப்புறம், என்ன பண்ணலாம்?” இறுக்கத்துடனே கேட்டான் சிவா. “புரியுது, நான் ஒரு முட்டாளா இருக்கேன்னு எனக்கே தெரியுது. அவனுக்கு கல்யாணம் ஆனது உண்மை தானா? உங்க ஃப்ரெண்ட் கிட்டப் பேசுனீங்களா?” “அவன் மெயில் போட்டிருந்தான். நான் பதில் போடலை. உங்க விவகாரத்தில் எதுக்கு நான் தேவையில்லாம தலையிடணும்?” “சாரி…இப்போ எனக்காக அவர்கிட்ட நீங்க பேச முடியுமா? இவ்வளவுக்கு அப்புறமும் மதனை என்னால தூக்கியெறிய முடியலைன்னா, அவன் எவ்வளவு தூரம் என்கிட்ட அன்பாப் பழகியிருப்பான்னு யோசிச்சுப்பாருங்க. அது பொய்யின்னு என்னால நம்ப முடியலை. ஏதாவது வலுவான ஆதாரம் வேணும்னு நினைக்கிறேன். அப்போத்தான் என்னால முழுசா அவனை மறக்க முடியும்.ப்ளீஸ், என்னைப் புரிஞ்சிக்கோங்க.” ”சரி..நான் செங்கோவிகிட்டப் பேசுறேன்” அத்தியாயம் - 56 ஜமீலா மதன்மேல் சும்மாகூட புகார் கொடுக்க முன்வராதது எனக்கும் என் நண்பர்களுக்கும் பெரும் சலிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விஷயத்தில் இதற்கு மேல் என்ன செய்வதென்று புரியாமல், வெறுப்பாக இருந்தது. அதே நேரத்தில் எனக்கு குவைத் விசாவும் சீக்கிரமாகவே வந்துவிட, அந்த வேலைகளில் மூழ்கினேன். எனது மொபைல் ஃபோன் ரிங்கியது. நம்பர் இல்லாமல் கால் வந்ததைப் பார்த்ததும் மதனாக இருக்குமோ என்று நினைத்தபடியே, எடுத்தேன். “ஹலோ” “செங்கோவி……..தி இஸ் சிவா” “ஹே..சிவா. எப்படி இருக்கே? நாம பேசி ரொம்ப வருசம் ஆச்சுல்ல?” “ஆமா..ஏறக்குறைய 10 வருசம்..அப்புறம் வேலையெல்லாம் எப்படிப் போகுது?” “ம்..இப்போ குவைத்ல ஒரு வேலை கிடைச்சிருக்கு. ஒரு மாசத்துக்குள்ள கிளம்பிடுவேன்” “ஓகே..” “அப்புறம் பதிவு எழுதறதெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு?” “பதிவா?…ஓ, உனக்குத் தெரியுமா?” “ஆமா, நல்லா எழுதறீங்க. அப்பப்போ கமெண்ட்டும் போட்டிருக்கேன், வேற பேர்ல” “என்ன நண்பா, இதெல்லாம் முன்னாடியே சொல்ல வேண்டாமா?” “ரொம்ப நல்லா எழுதறீங்க. காலேஜ் டேஸ்ல இருந்த அதே இலக்கிய ஆர்வம், இன்னும் தொடருது போல” “ஆமா..நண்பா, நான் ஒரு முக்கியமான விஷயத்துக்காகத் தான் கூப்பிட்டேன்” “என்ன?” “மதனும் நீங்களும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே..இன்னமும் அப்படித்தானா?” “இல்லைய்யா..இப்போ எங்களுக்குள்ள எந்த காண்டாக்ட்டும் இல்லை.” சிவாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ’கொஞ்சம் மாசம் முன்னே தானே மதனுக்கு மெயில் அனுப்பியிருந்தான்’ என்று யோசித்தபடியே “அப்படியா?” என்றான். “ஆமா..அதை விடு. அப்புறம் ஹிட்ஸ் எல்லாம் எப்படி வருது?” “நான் நல்ல பதிவர்ப்பா..அது மாதிரி ஆபாசமாப் பேசாத..ப்லாக்கை விடு. மதனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” “சிவா, நான் அந்த விஷயம் பத்தி பேசவே வேண்டாம்னு இருக்கேன். ஃப்ரெண்ட்ஸ்ங்ககிட்டக் கூட நான் மதன் பத்திப் பேசறதில்லை. விடு” “ஏன், நீங்க ஈருடல், ஓருயிர் ஆச்சே? என்னாச்சு?” “அவன் நடவடிக்கை எதுவும் பிடிக்கலை..அதான் விலகிட்டேன்” ’இனியும் இவனிடம் இப்படிப் பேசினால் வேலைக்கு ஆகாது’ என்று யோசித்த சிவா, நேரடியாக விஷயத்திற்கு வந்தான். “செங்கோவி, நான் ஏன் உன்னை இப்போ தேடிப் பிடிச்சேன்னு சொல்றேன், கேளு. இங்கே யோஹன்னான்னு ஒரு பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு. அந்தப் பொண்ணுகூட மதன் பழகியிருக்கான். லவ் ஆகி, இப்போ எங்கேஜ்மெண்ட்டும் முடிஞ்சிருச்சு. இப்போ அதுக்கு ஒரு டவுட், மதனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்குமோன்னு. நான் ஒரு வருசம் முன்னாடி, சென்னை வந்திருந்தப்போ, மதன்கூடப் பேசினேன். ‘ஒரு பையன் இருக்கான்’னு சொன்னான். இப்போ இல்லவேயில்லைங்கிறான். இது ஒரு பெண்ணோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட மேட்டர்..அதனால தான் கேட்கிறேன். மதனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா, அவனுக்கு குழந்தை இருக்கா?” நான் சுருக்கமாக நடந்ததைச் சொன்னேன். “அவன் யாரோ ஒரு ஃபாரின் பொண்ணுகூட பழகுறான்னு கேள்விப்பட்டேன். அது இந்தப் பொண்ணு தானா?” “ஆமா, பாவம் அந்தப் பொண்ணு..தலைவன் ஏகப்பட்ட டயலாக்ஸ் விட்ருப்பான் போல..அது அவனை ரொம்ப நம்புது” “ஓ..ஃபாரின்காரி தானே..கட்டிப்பா” “ச்சே ச்சே, அப்படி இல்லை, இது ரொம்ப நல்ல பொண்ணு. அது நம்பற மாதிரி ஏதாவது ஃப்ரூஃப் வேணும். ஜமீலா ஃபோன் நம்பர் இருக்கா? அவங்க ரெண்டு பேரும் பேசிக்கட்டும்” ”ஜமீலாகிட்டக் கேட்காம அது நம்பர் தர முடியாது சிவா” “ஓகே, அப்போ வேற ஏதாவது..அவங்க மேரேஜ் ஃபோட்டோ ஏதாவது இருக்கா?” “நான் ஜமீலாகிட்டப் பேசிட்டுச் சொல்றேன்” “இப்போப் பேசறியா? நான் கொஞ்சம் நேரம் கழிச்சுப் பேசறேன்” “ஓகே” சிவா அடிப்படையில் நீதி-நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பையன் என்பதால், அவன் பேச்சை முழுதும் தட்ட முடியவில்லை. எனவே ஜமீலாவிடம் விஷயத்தைச் சொன்னேன். “அவகூடப் பேச எனக்கு என்ன இருக்குண்ணா? “ “ உங்க மெயில் ஐடி வேணாத் தரட்டுமா?” ஜமீலா கொஞ்ச நேர விவாதத்திற்குப் பின், அதற்கு ஒத்துக்கொண்டாள். சிவாவிடம் ஜமீலாவின் மெயில் ஐடியைக் கொடுத்து, யோஹன்னாவை காண்டாக்ட் பண்ணச் சொன்னேன். “ரொம்ப தேங்க்ஸ் செங்கோவி..இது மூலமா ஒரு பொண்ணு வாழ்க்கையை காப்பாத்தற” என்றான் சிவா. “சிவா, அதைச் செய்றது நீ தான். யாரோ ஃபாரின் பொண்ணு, எக்கேடும் கெடட்டும்னு இல்லாம இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறியே..மதனுக்கு இதெல்லாம் தெரிஞ்சா, உனக்கு என்னாகும்னு எனக்குக் கவலையா இருக்கு” “அவன் இங்க வசமாச் சிக்கியிருக்கான். நான் பேச்சுலர்னு கோர்ட்லயே சொல்லியிருக்கான். இப்போ யோஹன்னா கம்ப்ளைண்ட் கொடுத்தா, அவ்ளோ தான்” ”ஓகே..நீ இவ்ளோதூரம் சொல்றதைப் பார்க்கும்போது, அந்தப் பொண்ணு நல்ல பொண்ணாத்தான் இருக்கும்போலத் தெரியுது. நாங்க தான் அந்த ஃபோட்டோவைப் பார்த்துட்டு, தப்பா நினைச்சுட்டோம்” “எந்த ஃபோட்டோ?” “ஏதோ யோகாசனம் செய்ற மாதிரி ஒரு ஃபோட்டோ..இந்தப் பொண்ணாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்” சிவாவுக்கு அதைக் கேட்க வருத்தமாக இருந்தது. “நண்பா, இங்கே அந்தப்பொண்ணு அவன்மேல அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கு. அவன் என்னடானன பெர்சனலா எடுத்த ஃபோட்டொவையெல்லாம் அனுப்புனானா? அதை எனக்கு அனுப்ப முடியுமா?” “சரி, அனுப்புறேன்” என்னிடம் இருந்த அந்த ஃபோட்டோ மெயிலையும், ஜமீலா ஐடியையும், ஜெயபால்-நான் – மதன் அனுப்பிய மெயில்களை சிவாவுக்கு அனுப்பி வைத்தேன். சிவா அவற்றை யோஹன்னாவிற்கு அனுப்பினான். தானும் மதனும் பெட்ரூமில் எடுத்த ஃபோட்டோ, இப்படி பலரால் பார்க்கப்பட்டிருப்பதை அறிந்து பயங்கர அதிர்ச்சியானாள் யோஹன்னா. அத்தியாயம் - 57 யோஹன்னா அந்த ஃபோட்டோ எடுத்தபோது, தான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம் என்று நினைத்துப்பார்த்தாள். ’இதை தனது ஃப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் அனுப்புகிறான் என்றால் அவன் எவ்வளவு மோசமான ஆளாக இருக்கவேண்டும்? அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள்?’ யோசிக்கவே கஷ்டமாக இருந்தது யோஹன்னாவிற்கு. சிவாவை ஃபோனில் கூப்பிட்டாள். “அண்ணா, என்ன இது? ஏன் இப்படிப் பண்ணியிருக்கான்? உங்க ஃப்ரெண்ட் என்ன சொன்னாரு இதைப் பத்தி?” “பொதுவாகவே இண்டியன்ஸ்க்கு ஃபாரின் பொண்ணுன்னா தப்பான பொண்ணுன்னு நினைப்பு உண்டு. அதுல இந்த மாதிரி ஃபோட்டோ வேற போனா என்ன நினைப்பாங்க? யாரோ கால் கேர்ல்னு நினைச்சிருக்காங்க. இப்போத் தான் செங்கோவிகிட்ட சொன்னேன், நீ ரொம்ப நல்ல பொண்ணுன்னு. ஆனா அவன் 100 பேருக்கு மேல இதை அனுப்பி வச்சிருக்கானே?” “ம்..அந்தப் பொண்ணு பேர் என்ன?” “ஜமீலா..எனக்கு செங்கோவி சில மெயில்ஸ் ஃபார்வர்டு பண்ணியிருக்கான். ஆனால் எல்லாமே தமிழ்ல இருக்கு. அந்தப் பொண்ணு இப்போ கைக்குழந்தையோட கேரளால கஷ்டப்படுது. இவன் என்னடான்னா இங்க உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாலியா செட்டில் ஆகிடலாம்னு அலையறான். இப்பவாவது உனக்கு மதன் பத்திப் புரியுதா?” “ஆமா..நான்தான் முட்டாளா இருந்திருக்கேன். இந்த விஷயத்துல உங்க உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன். நீங்க இந்தளவுக்கு எனக்கு ஹெல்ப் பண்றது மதனுக்குத் தெரிஞ்சா, அவனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வரலாம். அதை நினைச்சாத்தான்…” “அதை நான் பார்த்துக்கறேன். கண் முன்னாடி ஒரு பொண்ணோட லைஃப் கெட்டுப்போறதைப் பார்த்திட்டு இருக்க முடியுமா? நீ என்னை நிறையத் தடவை அண்ணான்னு கூப்பிட்டிருக்கே. அதுக்காகவாவது நான் இதைச் செய்யணும்” “தேங்க்ஸ் அண்ணா..அந்தப் பொண்ணு ஜமீலாக்கு நான் ஒரு மெயில் அனுப்பலாம்னு நினைக்கிறேன். சாரி கேட்டு…” “ம்..அனுப்பு. அது தான் நல்லது. அப்போ தான் அந்தப்பொண்ணுக்கும் உன்னைப் பத்தித் தெரியும்.” யோஹன்னா சொன்னபடியே ஜமீலாவிற்கு ஒரு மெயில் விளக்கமாக எழுதி அனுப்பினாள். ஹலோ ஜமீலா, என் பெயர் யோஹன்னா… உண்மையில் எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை. சிவாகிட்ட உன்னை காண்டாக்ட் பண்ணனும்னு கேட்டேன். சிவாவும் நிறைய ஹெல்ப் பண்ணார்..சில விஷயங்களை தெளிவாக்கிக்கிறது எல்லோருக்குமே நல்லதுங்கிறதால தான் இந்த மெயிலை அனுப்புறேன். இந்நேரம் உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கலாம்..2009ல் மதன் என்கூட பழக ஆரம்பிச்சதுல இருந்து எங்கேஜ்மெண்ட் ஆனது வரைக்கும்.. மதன் அனுப்புன ஜூனியர்.மதன் மெயில் பார்த்தப்பவே எனக்கு டவுட் வந்திடுச்சு. ஆனாலும் என்னால அவனை உதற முடியலை. ஏன்னா மதன் அப்படிச் செய்வான்னு நான் நம்பலை. நீயும் அதே நிலைல தான் இருப்பேன்னு நினைக்கிறேன். உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் நிறைய கலாச்சார வேறுபாடு இருக்குது. ஆனாலும் தாய்மையும், பெற்றோர்-குழந்தைக்கு இடையிலான உணர்ச்சிகளும் யுனிவெர்சல்னு நம்புறேன். என்னோட அப்பாவை நான் பார்த்ததில்லை. ரொம்ப சின்ன வயசுலேயே அம்மாவை விட்டுப் பிரிஞ்சுட்டார். அப்பா இல்லாம ஒரு குழந்தை வளர்றதோட வலி எனக்குத் தெரியும். இப்போ நானே மதன் தன் குழந்தையைப் பிரியக் காரணம் ஆயிட்டேன்னு நினைக்கும்போது…எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை, அழறேன். அழுது தான் அந்த வேதனையை தணிச்சுக்கிறேன். மதன் வாழ்க்கையில் இனிமே நான் வர மாட்டேன். மதன்கிட்ட நான் பேசுறேன். அவன் திருந்தி, உன் குழந்தைக்கு ஒரு நல்ல அப்பாவா வருவான்னு நம்புறேன். எனக்கு உங்க ஊர் சட்டங்களைப் பத்தித் தெரியலை. ஆனால், மதன் திருந்தி வரலேன்னா, அவன் மேல போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடு. அவன் உன்னை மிரட்டுனா, என்கிட்டச் சொல்லு. அவன் பேச்சுலர்னு இங்க பொய் சொல்லியிருக்கான். நான் ஒரே ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்தாப்போதும், அவன் உள்ளே இருப்பான். அதனால அவன்கிட்ட முதல்ல சாஃப்ட்டா போவோம். அவன் திருந்த வாய்ப்பு கொடுப்போம். வேறெதும் உதவின்னாலும் தயங்காமக் கேளுங்க. உன் வாழ்க்கை கெட, தெரிந்தோ தெரியாமலோ நானும் காரணம் ஆயிட்டேன். அதுக்காக என்னை மன்னிச்சுடு. அன்புடன் யோஹன்னா அதற்கு ஜமீலாவும் பதில் அனுப்பினாள் : யோஹன்னா, பெற்றோர் பேச்சைக் கேளாமல், எந்தவித பாதுகாப்பு பற்றியும் யோசிக்காமல் உணர்ச்சி வேகத்துல எடுத்த முடிவுக்குத் தான், நான் இப்போ அனுபவிக்கிறேன். இதில் நீ மன்னிப்புக் கேட்க ஒன்னும் இல்லை. ஏறக்குறைய நீயும் என் நிலையில் இருப்பவள் தானே? நான் கடவுளை நம்புபவள். கடவுள்கிட்டயே எல்லாப் பொறுப்பையும் நான் இப்போ ஒப்படைக்கிறேன். நம்மை விட எல்லாம் தெரிஞ்சவர் அவர். நான் பண்ண பாவத்துக்கு இதெல்லாம் அனுபவின்னு சொன்னாருன்னா, அனுபவிச்சுட்டுப் போறேன். இப்போதிருக்கும் நிலையில் போலீஸ், கோர்ட் என்று அலைய என்னால் முடியாது.மேலும், என்னால மதனை அப்படிக் கஷ்டப்படுத்தவும் முடியாது. அவன் திருந்தி, வரட்டும், வருவான்னு நம்புறேன். எங்களோட கல்யாண ஃபோட்டோஸ், சென்னை-மதுரைல எடுத்த சில ஃபோட்டோஸ் அட்டாச் பண்ணியிருக்கேன். பார்த்துக்கொள்ளவும். அன்புடன் ஜமீலா. யோஹன்னாவுக்கு ஜமீலாவின் பதிலைப் படித்தபின், மிகவும் வருத்தமாக இருந்தது. மதனிடம் ஜமீலாவுக்காகப் பேசுவதென்றும், அவன் எதற்கும் ஒத்துவரவில்லையென்றால் போலீஸ்க்குப் போவதாக அவனை மிரட்டுவதென்றும் முடிவு செய்தாள். அவனுக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பினாள் : மதன், நாளை இரவு என் ஃப்ளாட்டில் சந்திப்போம். சரியாக 7 மணிக்கு வந்து விடு. மதன் சந்தோசத்தில் துள்ளிக்குதித்தான்.   அத்தியாயம் - 58 மதன் உற்சாகத்துடன் யோஹன்னாவைப் பார்க்கக் கிளம்பினான். யோஹன்னா எடுத்துக் கொடுத்திருந்த ட்ரெஸையே அணிந்துகொண்டான். மொபைல் அழைத்தது. யோஹன்னாவோ என்று ஆர்வமாக எடுத்தான். ஜெயபால்! ‘இவன் ஒரு இம்சை..நேரங்காலம் தெரியாம..முதல்ல இவனைக் கட் பண்ணனும்’ என்று நினைத்தபடியே ஃபோனை எடுத்தான். ”அப்புறம்..மதன் எப்படி இருக்கே?” “என்ன விஷயம் சொல்லு” “சும்மா தாண்டா” “சும்மால்லாம் ஃபோன் பண்ணாதே. நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்” “சரி..சரி..ஒன்னுமில்லை, எல்லாரும் ‘என்னடா உன் ஃப்ரெண்ட் இப்படிப் பண்ணிட்டான், பாவம் இல்லியான்னு கேட்கறாங்க. எனக்கும் நீ ஏன் ஜமீலாகிட்ட திரும்பி வரக்கூடாதுன்னு ..” “டேய் ஓ… என்னை டென்சன் ஆக்கணும்னே ஃபோன் பண்றியா..ஜமீலா சேப்டர் ஓவர்..இனிமே அவளைப் பத்தி பேசறதுக்கு எதுவும் இல்லை..” “என்னடா இப்படிப் பேசறே..அந்த குழந்தைக்காகவாவது…” “டேய், குழந்தையே என்னுது இல்லேங்கிறேன். சும்மா, குழந்தை..குழந்தைன்னுக்கிட்டு…” “என்னடா சொல்றே? குழந்தை உன்னுது இல்லியா? உனக்குப் பொறக்கிலியா?” “ம்..ஆமா.ஃபோனை வை” “அப்போ அது யாருக்குப் பொறந்துச்சுடா?” “அதை ஜமீலாகிட்டப் போய்க் கேளு” யோஹன்னா படபடப்புடன் மதனுக்காக காத்திருந்தாள். என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என பலமுறை மனசுக்குள் ஒத்திகை பார்த்திருந்தாள்.’ நாம் ஏன் இப்படி நெர்வசாய் இருக்கிறோம்? அவன் ஒரு ஏமாத்துக்காரன்னு தெரிஞ்சுபோச்சு. அப்புறம் ஏன் இப்படி இன்னும் டென்சன்..ஏன் அவன் மனசு கோணாம விஷயத்தைச் சொல்லணும்னு நினைக்கிறோம்’..யோசிக்க யோசிக்க அவளுக்கே சலிப்பாக இருந்தது. காலிங் பெல் அடித்தது. ’அவன் தான்..வந்துட்டான்..’ என்று முணுமுணுத்தபடியே கதவைத் திறந்தாள். மதன் கையில் ரோஜாப் பூங்கொத்துடன் நின்றான். ப்ளூ ஜீன்ஸ், ப்ளைன் சர்ட் என ‘அதே மதன்’. யோஹன்னா பார்த்தபடியே நின்றாள். “ஹாய் யோஹன்னா” “ஆங்..ஹாய்..கம்..கம் இன்சைடு” மதன் உள்ளே வந்து கதவைச் சாத்தினான். ”இன்னும் என்னை ஞாபகம் வச்சிருந்து, அழைச்சதுக்கு ரொம்ப நன்றி” என்றான். “மதன், உன்கூட கொஞ்சம் பேசணும். அதான் வரச் சொன்னேன். ஜமீலா பத்தி..உன் குழந்தை பத்தி..” “யோஹன்னா, நான் ஏற்கனவே சொல்லிட்டேன்..அது..” “மதன், இதுக்கு மேலயும் நமக்கிடையில பொய் வேண்டாம். நான் ஜமீலாகிட்டப் பேசுனேன்” “என்ன?” “ஆமா..நாங்க பேசினோம். எனக்கு எல்லாம் தெரியும். இனியும் பொய் சொல்லாதே. உன்னோட கல்யாண ஃபோட்டோஸ்கூட என்கிட்ட இருக்கு. பார்க்கறியா?” யோஹன்னா தன் லேப்டாப்பில் இருந்த ஃபோட்டோக்களை ஓப்பன் செய்தாள். ரிஜிஸ்ட்டர் மேரேஜ் செய்தபோது எடுத்த ஃபோட்டோக்களும், மதுரையில் திரும்ப அப்பா தலைமையில் எடுத்த ஃபோட்டோக்களும் ஒப்பன் ஆகின. மதன் பேசாமல் நின்றான். “மதன், நான் என் அப்பா பத்தி உன்கிட்ட எவ்வளவோ சொல்லியிருக்கேன். அப்பா இல்லாம அம்மா, என்னைக் கஷ்டப்பட்டு வளர்ததையும், குடிக்கு அடிமையானதையும்கூட உன்கிட்டச் சொல்லியிருக்கேன். இப்போ நாம ரெண்டு பேரும் சேர்ந்து, ஜமீலாவை என் அம்மா நிலைமைல தானே நிறுத்தியிருக்கோம்? இது தப்பு மதன்..இந்தத் தப்பை நாம செய்யவே கூடாது. எனக்குத் தெரியும், நீ எவ்வளவு அன்பானவன்னு. என்மேல நீ காட்டுன அன்பை நான் மறக்கவே மாட்டேன். ஆனால் நம்ம அன்புக்கு மரியாதை, நாம நேர்மையாக இருக்கும்போது தான் கிடைக்கும் மதன். நேர்மையற்ற அன்பு, வெறும் நடிப்பு, சுயநலம் தான்.” “யோஹன்னா, ஐ ஸ்டில் லவ் யூ” “ஓகே, ஆனா எப்போ நீ ஜமீலா பத்தின உண்மையை மறைச்சியோ, அப்பவே உன் காதல் அர்த்தமில்லாததா ஆகிடுச்சு. இனியும் நான் ஏமாறுவேன்னு நினைக்க வேண்டாம். சாரி டூ சே த வேர்ட்ஸ்..ஆமா, நீ என்னை ஏமாத்தினேங்கிறது தான் நிஜம். இதை இத்தோட நிறுத்திக்கலாம் மதன். நாம இந்த நிமிசத்தோட பிரிஞ்சிடலாம். நான் உன் வாழ்க்கைல குறுக்க வந்ததால் தானே ஜமீலாவை, உன் குழந்தையை மறந்தே. இனி உன் லைஃப்ல நான் இல்லை, என்னோட லைஃப்லயும் நீ இல்லை. இதை உன்கிட்ட நேராச் சொல்ற தைரியம், இத்தனை நாளா எனக்கு இல்லை. இப்போ வந்திருக்குன்னா…நம்ம காதல் முறிஞ்சிடுச்சுங்கிறதுக்கு அது தான் சாட்சி.” “யோஹன்னா..நீ அவசரப்படுறே..” “இல்லை..இன்னொரு பெண்ணோட வாழ்க்கையைக் கெடுத்து வர்ற வாழ்க்கை, எனக்கு வேண்டாம். நான் அவ்வளவு சீப்பானவ இல்லை. ஜமீலா பாவம். உன்னை நம்பி பெத்தவங்கள்ல இருந்து எல்லாரையும் தூக்கியெறிஞ்சுட்டு வந்தவ. திரும்பிப் போ மதன். அவ உனக்காக இன்னும் காத்திக்கிட்டிருக்கா. அவகிட்டத் திரும்பிப்போ.” “ஜமீலா பத்திப் பேச வேண்டாம். நான் சொல்றதைக் கேளு..நான் ஏன் அப்படிப் பண்ணேன்னா…” “வேண்டாம் மதன்..இதுவரை நீ எனக்குச் சொன்ன கதைகளே போதும். இனியும் இதனால எந்தப் பிரயோஜனமும் இல்லை.” “யோஹன்னா நான் சொல்றதைக் கேளு. ஜமீலா மோசமான பொண்ணு. அந்தக் குழந்த்…” “ஸ்டாப் இட் மதன்..என்னால இந்த மாதிரிப் பேச்சை கேட்கக்கூட முடியலை. நீ எப்படித் தயங்காம இப்படிப் பேசறே?..நீ ஜமீலாகிட்ட திரும்பிப்போகணும். அது ஒன்னு தான் உனக்கிருக்கிற ஒரே வழி. இல்லேன்னா..” ”இல்லேன்னா?” ” நீ கோர்ட் அஃபிடவிட்ல பேச்சுலர்னு போட்டது ஞாபகம் இருக்கா? நீ கல்யாணம் ஆனவன்னு நான் சொன்னா, நீ ஜெயில்ல தான் இருக்கணும்..தெரியும் இல்லையா?..மதன், நான் அந்த அளவுக்குப் போகணும்னு நினைக்கலை. நீ கிளம்பு. இந்தியாவுக்குக் கிளம்பு” மதன் சிரித்தான். “ஜமீலா, எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்கிறது என்னோட பெர்சனல் மேட்டர். அதை ஏன் நான் வெளில சொல்லணும்? நான் உன்னோட பெர்சனல் மேட்டரையே வெளில சொல்றதில்லையே?” “என்னது என்னோட பெர்சனல் மேட்டர்?” “நாம பெட்ரூம்ல எடுத்துக்கிட்ட ஃபோட்டோ, வீடியோல்லாம் ஞாபகம் இருக்கா? அதை அப்பப்போ அழிச்சுடச் சொன்னே. நான் அதை அழிக்கலை. என் லேப்டாப்ல பத்திரமா வச்சுப் பார்த்துக்கிட்டிருக்கேன். நான் நினைச்சா, அதை ஏதாவது பலான வெப்சைட்ல போட முடியும். ஆனா போடலை. ஏன்? உன்னோட பெர்சனல் மேட்டரை வெளில தெரியப்படுத்தறது நாகரீகம் இல்லேன்னு தான். அதே டீசன்சியைத் தான், பதிலுக்கு உன்கிட்டயும் எதிர்பார்க்கிறேன்.” “யூ…யூ சீப்…கெட் லாஸ்ட்..கெட் லாஸ்ட் ஐ சே” “நன்றி.” மதன் வெளியேறினான். ’இனிமே நமக்கு நார்வே-ங்கிறது இல்லை. சீக்கிரம் வெளியேறிடணும். எல்லாத் திட்டமும் போச்சு. இனி உடனே வேறெங்கயாவது வேலை தேடணும்.’ மதன் யோசித்தபடியே ஸ்டிக்ல்ஸ்டட் ஹோட்டலைக் கடந்து பப் ஏரியாப் பக்கம் நடந்தான். ரோட்டோரம் நின்றுகொண்டிருந்த ஒரு பெண், மப்பில் தள்ளாடியபடியே, மதனை நெருங்கினாள். “ஹே..ஏசியன் பேபி..லாங் டைம் நோ சீ “ மதனுக்கு அவளை ஞாபகம் இல்லை. எப்போதாவது அழைத்து வந்திருப்போம் என்று நினைத்தபடியே அவளைக் கண்டுகொள்ளாமல் கடந்தான். அவள் பின்னாலேயே வந்தாள். “ஐம் ஃப்ரீ மேன்..கம் ஆன்” மதன் வேகமாக நடக்க ஆரம்பித்தான். ’எல்லாத் திட்டமும் பாழாயிடுச்சே..யோஹன்னாகூட மேரேஜ், பெர்மனெண்ட் ரெசிடென்சின்னு எவ்வளவு ப்ளான் வச்சிருந்தோம். இனி என்ன செய்ய..’ யோசித்தபடியே நடந்தான் மதன். பின்னால் அந்தப் பெண் ஏதோ உளறியபடியே வந்துகொண்டிருந்தாள். இன்னொரு பெண் பப்பின் அருகே நின்று கொண்டிருந்தாள். மதனை ஒருத்தி பின் தொடர்வதைப் பார்த்துவிட்டு, மதனை மறித்தபடி எதிரே வந்து நின்றாள். பின்னால் வந்தவளிடம் ‘எனி பிராப்ளம்?” என்றாள். “ஒரே ஒரு பிராப்ளம் தான்..இந்த ஜெண்டில்மேன் என்னைக் கண்டுக்க மாட்டேங்கிறாரு?” புதிதாய் வந்தவள் சிரித்தாள். “ஏன் மேன், அவள் வேண்டாமா?” மதன் பதில் சொல்லாமல் நின்றான். “அப்போ நான்?” என்றாள். மதன் விரக்தியாய்ச் சிரித்தான். “இப்போ…?” என்ற படி தன் ஜெர்கினை விலக்கினாள். “ஓகே, போகலாம் “ என்றான் மதன். “நானா?” “இல்லை, நீங்க ரெண்டு பேருமே!” அத்தியாயம் - 59 எனக்கு குவைத் விசா வந்திருந்தது. எனவே குவைத் கிளம்புவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கினேன். பர்ச்சேஸ் வேலைகள் மும்முரமாக நடந்தன. நண்பர்களுக்கு ஃபோன் செய்து ஃபாரின் கிளம்புவதைச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஜமீலாவுக்கும் சொல்வதற்காக ஃபோன் செய்தேன். “ஹலோ..அண்ணா எப்படி இருக்கீங்க?” “நல்லா இருக்கேங்க..மருமகன் எப்படி இருக்கான்?” “நல்லா இருக்கான்.” “எனக்கு குவைத்ல வேலை கிடைச்சிருக்கு. அடுத்த வாரம் கிளம்பறேன்.” “ஓ..சந்தோசம்ணா. “ “வேற எதுவும்னா மெயில் அனுப்புங்க. அப்புறம் இந்த ஒரு வாரத்துக்குள்ள முடிஞ்சா கேரளா வர்றேன்” “வேண்டாம்னா..நீங்க போய்ட்டு வாங்க. மெயில் அனுப்புங்க. போதும்” “இல்லெ, மருமகனை வேற நான் பார்த்ததில்லை இல்லையா..நான் ஒருநாள் வர்றேன்” “அண்ணா, நான் சொல்றது உங்களுக்குப் புரியலியா..இப்போ எல்லாமே மாறிப்போச்சுண்ணா..நான் இங்க தனியா இருக்கேன்..மாமாகூட இங்கே வர்றதில்லை. வீட்ல, தெருவுல, ஆஃபீஸ்லன்னு எல்லா இடத்துலயும் என்னை வித்தியாசமாத் தான் பார்க்கிறாங்க. இந்த நிலைமைல நீங்களோ, வேற யாருமோ இங்க வந்துட்டுப் போறது நல்லாயிருக்குமா? உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னா..திடீர்னு மதன் ஆஃபீஸ்ல இருந்து கால் பண்ணி ‘என் ஃப்ரெண்ட்ஸ் ஐஞ்சு பேர் வீட்டுக்கு மதியம் வருவாங்க. லஞ்ச் ரெடி பண்ணும்பான். நானும் பண்ணுவேன். அப்படி எத்தனையோ நாள், எத்தனையோ பேருக்கு நான் என் கையால சாப்பாடு போட்டிருக்கேன். ஆனா இப்போ என் நிலைமையைப் பாருங்க..” “இதெல்லாம் டெம்ப்ரவரி தானே..மதன் திரும்ப வந்துட்டா எல்லாப் பிரச்சினையும் சால்வ் ஆகிடும் “ “அண்ணா..நீங்க என்னைப் பத்தி என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க?” “என்னன்னா?..புரியலை” “ஜெயபால் அண்ணன் ’மதன் சொன்னான்’னு ஒன்னு சொன்னாரு..உண்மையா?” “என்ன சொன்னான்?” ஜமீலா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். ஏதோ சொல்ல கஷ்டப்படுவது போல் இருந்தது. “சொல்லுங்க. என்ன ஆச்சு?” “என் குழந்தைக்கு தகப்பன் அவன் இல்லேன்னு சொன்னானாமே? உண்மையான்னா?” ”அவனுக்கு இப்போ புத்தி பேதலிச்சுப் போச்சு. அதான் இப்படி..” “அப்போ சொன்னது உண்மையா?…..இதெல்லாம் தெரிஞ்சுமா நீங்க சமாதானம் பண்ணப் பார்க்கிறீங்க? நான் என் அம்மா அப்பாவைக்கூட நம்பாம, இவன்கூட வந்தனே, எதுக்கு? இப்படி ஒரு வார்த்தையைக் கேட்கவா? அவனை நான் எப்படியெல்லாம் பார்த்துக்கிட்டேன். அவனுக்கு உடம்பு சரியில்லாதப்போ, அம்மை போட்டப்போ எல்லாம் எவ்வளவு அக்கறையா, இன்னொரு தாயா இருந்து நான் பார்த்துக்கிட்டேன். அவனே சொல்வானே ‘அம்மா மாதிரி’ன்னு. எல்லாமே…எல்லாமே இப்படி ஒரு பேச்சை கேட்கத் தானா? அந்தக் குழந்தை அவனுக்குப் பிறக்கலேன்னா, வேற யாருக்குப் பொறந்ததுன்னு சொல்றான்? நான் வேற யார்கிட்டயோ மோசம் போனேன்னா சொல்றான்? ” ஜமீலாவின் குரல் கம்மியது. சிறிது நேரம் அழுதாள். “நீங்க….நீங்க எப்படீன்னா நான் இனியும் அவன்கூட வாழ்வேன்னு நினைக்கிறீங்க? இவ்ளோ மோசமா தன் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட என்னைப் பத்திப் பேசற ஒருத்தனுக்கு சோறு வடிச்சுக்கொட்டி, எல்லா சுகமும் கொடுத்து, தாயா, தாதியா இருக்க இனியும் என்னால முடியுமா? நான் இத்தனை நாள் போராடுனதே என் குழந்தைக்காகத் தான். ஆனா எப்போ அந்தக் குழந்தையைவே அவன் குழந்தை இல்லேன்னு சொல்லிட்டானோ, இனியும் அவன்கூட நான் வாழணும்னு என்ன அவசியம்? அப்போ, நீங்க ஆம்பிளைங்க என்ன வேணா செய்வீங்க. எவகூட வேணா போவீங்க. நாங்க எல்லாத்தையும் பொறுத்துக்கணும். நீங்க என்ன சொன்னாலும் நாங்க கேட்டுக்கணும். அப்படி இருந்தா பூமாதேவி, கற்புக்கரசின்னு பாராட்டுவீங்க. அப்படித் தானே? சுயமரியாதைங்கிறது எங்களுக்கும் இருக்குண்ணா. மானம்ங்கிறது எல்லாருக்கும் ஒன்னு தானே?” நான் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். “இப்போ அவன் இல்லேன்னா என்ன ஆகும்? சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவோம், அவ்ளோ தானே..சோத்துக்காக அந்த மாதிரி ஒருத்தன்கூட வாழறதும் ஒன்னு தான். விபச்சாரியாப் போறதும் ஒன்னு தான். நானும் படிச்சிருக்கேன்..என்னாலயும் ஏதோ ஒரு வேலைக்குப் போக முடியும். இதை விட நல்ல வேலைக்கு ட்ரை பண்ணிப் போறேன்..இல்லே பட்டினி கிடந்து சாகறோம். ஆனால் ஒருநாளும்…ஒரு நாளும் அவன்கூட நான் வாழ மாட்டேன்…இனியும் அவனைப் பத்திப் பேச ஒன்னுமே இல்லை. நீங்க குவைத் கிளம்புங்க. பார்ப்போம்.” ஃபோனை கட் செய்தாள் ஜமீலா   அத்தியாயம் - 60 ‘மதனின் நடவடிக்கைகள் நண்பர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தன. அவன் சென்னையில் ஜமீலாவுடன் வாழ்ந்த வாழ்வைப் பார்த்தவர்கள் யாருமே, அவன் இந்த அளவுக்கு மனம் மாறுவான் என்று நம்பவில்லை. உண்மையில் மனிதனின் மனது எவ்வளவு பலவீனமானது, அபாயகரமானது என்பதை மதன் மூலம் அறிந்தோம். மனதளவில் இந்த சம்பங்களால் ஏற்பட்ட பாதிப்பு என்னவென்றால், சக மனிதர்மேல் நாங்கள் நம்பிக்கை இழந்தது தான். ஒருவன் ஒரு பெண்ணிடம் ‘நான் சாகும்வரை உன்னை கண்கலங்காது வைத்துக் காப்பாற்றுவேன்’ என்று சொன்னால், நண்பேண்டா என்று உதவி செய்ய இறங்கிய பலரும் அதன்பின் யோசிக்க ஆரம்பித்தார்கள். மனித வாழ்வின் அடிப்படையே சகமனிதர் மீதான நம்பிக்கை தான். மதன் அந்த நம்பிக்கையை தகர்த்தான். பிறரை மட்டுமல்லாது தன்னையே ஒருவன் நம்ப முடியாத நிலைமையை அவன் உண்டாக்கினான். மதனுடன் மிக நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த அனைவருமே இந்தப் பாதிப்பை அடைந்தோம். மதனுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்றே புரியவில்லை, உண்மையில் அவனுக்கு வாழ்க்கையே இல்லை.’ – வேகமாய் டைப் பண்ணிக்கொண்டிருந்த செங்கோவி, அருகில் நிழலாட திரும்பிப் பார்த்தான். அவன் மனைவி தங்கமணி நின்றுகொண்டிருந்தாள். “என்ன?” என்றான். “லீலையா?” என்றாள். “ஆமா..கிளைமாக்ஸ்” தங்கமணி அருகில் அமர்ந்தாள். “கிளைமாக்ஸ் என்ன?” “ஒன்னுமேயில்லை” “நல்ல கிளைமாக்ஸ்!..சிவாண்ணன் மெயில் போட்டிருந்தார், பார்த்தீங்களா?” செங்கோவிக்கும் அவன் மனைவிக்கும் ஒரே பெர்சனல் மெயில் ஐடி. மதனின் ஆட்டத்தால் பயந்துபோன செங்கோவி, கல்யாணம் ஆனதுமே செய்த முதல் வேலை தனது பெர்சனல் மெயில் ஐடி பாஸ்வேர்டை தங்கமணியிடம் கொடுத்தது தான். ’ஒளிவுமறைவற்ற பந்தம்’ என்று ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி, தங்கமணியிடம் சரண்டர் ஆகியிருந்தான். ‘அவளன்றி அணுவும் அசையாது’ என்ற கொள்கையில் தீவிரமாய் இருந்தான். “பார்க்கலியே..மதியம் அனுப்பினானா?..என்னவாம்?” “யோஹன்னா இப்போ மதனை கம்ப்ளீட்டா மறந்துட்டாளாம். இப்போ ஒரு பிரிட்டிஷ் பையன்கூட நட்பு மலர்ந்திருக்காம். அவன் புரபோஸ் பண்ணிட்டான். இவ தான் பழைய காதல் தந்த பயத்துல யோசிச்சுக்கிட்டே இருக்காளாம். இப்போ சிவாண்ணன் தான் அவங்களை சேர்த்து வைக்கிறதுல பிஸியாம்” “நல்ல வேலை” “ஏன் இப்படிச் சொல்றீங்க..உங்களால ஜமீலா லைஃபை காப்பாத்த முடிஞ்சதா? ஆனால் சிவா யோஹன்னா லைஃபை காப்பாத்திட்டார், இல்லையா? ஹி இஸ் எ ஜெம்.” ம்..அது உண்மை தான்.” “மதன் என்ன ஆனார்?” “தெரியலைம்மா. கடைசியா போலந்துல சிலர் பார்த்திருக்காங்க, பொண்ணுங்க கூடத் தான்..!” “ஜெனிஃபர் என்ன ஆனா? இந்த தொடரைப் படிச்ச சிலர் மெயில்ல வேற கேட்டிருந்தாங்களே?” “ஆமா. ஜெனிஃபர்க்கு ரசிகர் மன்றமே இருக்கும்போல..உண்மையில் அது என்ன ஆச்சுன்னே தெரியலை. இன்னும் பெங்களூர்ல இருக்கிறதாத் தான் நினைக்கேன்” “இப்படி ஒன்னையுமே சொல்லாம கிளைமாக்ஸ்ன்னா என்ன அர்த்தம்?” “சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சுல்ல?” “ஒரு கதைன்னா தெளிவான முடிவு வேணாமா? கெட்டவன் அழிஞ்சான்..நல்லவங்க நல்லாயிருந்தாங்கன்னு” “கதைன்னா கண்டிப்பா அது தான் முடிவு. ஆனால் இது கதை இல்லையே..நாம அப்படி நடக்கும்னு நினைக்கிறோம்.ஆனால் நிஜத்தில் அப்படி நடக்குதா? நம்ம வாழ்க்கையை நாம தான் ஜாக்ரதையா வாழ்ந்துக்க வேண்டியிருக்கு..இந்த தொடருக்கு கிளைமாக்ஸ் மூணு பேரால கொடுக்க முடியும்.. ஒன்னு, சிவா. இப்பவும் மதன் என்னென்ன பேருல ஃபேஸ்புக், கூகுள்+ல நடமாடுறான், இப்போ எங்கே இருக்கான்னு தொடர்ந்து வாட்ச் பண்றது அவன் தான். மதன் இந்தியா வந்தாத் தான் கிளைமாக்ஸே. அதை சிவா தான் கண்காணிச்சு சொல்லணும். இரண்டாவது, ஆண்டவன். சினிமால லேட்டா வர்ற போலீஸ் மாதிரி லேட்டாவே தீர்ப்பு சொல்ற ஆண்டவன் இதுக்கும் நல்ல முடிவு சொல்லலாம். மூணாவது, இதைப் படிக்கிறவங்க. இனி என்ன செய்யலாம்னு அவங்களும் சொல்லலாம். “ “கூட இருந்த இவரே ஒன்னும் கிழிக்கலியாம்..அவங்க என்ன செய்வாங்க?” “சரி, அதை விடு. ஜமீலாகிட்டப் பேசினியா?” “ம்..ரெண்டு மூணு நாள் இருக்கும்..பேசி. “ “என்ன சொல்றாங்க? எப்படி இருக்காங்க?” “ஓகே..முன்னைக்கு இப்போப் பரவாயில்லை. சந்தோஷ்க்கு மூணு வயசு ஆயிடுச்சில்லையா..இப்போ தான் ‘அப்பா எங்கே?’ன்னு கேட்கிறானாம். ஜமீலா அதுக்கு “அப்பா ஃபாரின்ல இருக்கார்..வந்திடுவார்’னு சமாளிக்கிறாங்க. இப்போ ஓரளவு நல்ல வேலைல செட்டில் ஆகியிருக்காங்க. ஜமீலா அம்மா தன்னோட வந்து இருக்கும்படி சொல்றாங்களாம். ஜமீலாக்கு அதுல விருப்பம் இல்லை. ஏன்னா சொந்தக்காரங்க சந்தோஷ்கிட்ட ஏதாவது தப்பா சொல்லிடக்கூடாதேன்னு பயப்படுறாங்க.” “அதுவும் சரி தான். அவன் கொஞ்சம் பெரியவன் ஆனப்புறம் போய்க்கலாம்.” “ஆமா. மதன் இந்தியா வந்தா. போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.” “நல்லது..இப்பவாவது இந்த முடிவுக்கு வந்தாங்களே..சிவாகிட்டச் சொல்லணும்” “அவருக்குத் தெரிஞ்சிருக்கலாம். ஏன்னா யோஹன்னா கூடவும் ஜமீலா காண்டாக்ட்ல தான் இருக்காங்க” “ஓ..இருக்கலாம்” “சரி, இப்போ கிளைமாக்ஸ்ன்னு என்ன சொல்லப்போறீங்க? மதனுக்கு என்ன முடிவு?” “அவன் நல்லா ஃபாரின் பொண்ணுங்களோட எஞ்சாய் பண்ணிக்கிட்டிருக்கான். இதான் முடிவு. நல்லாயிருக்கா?” “சகிக்கலை..உண்மைச் சம்பவம்ங்கிறதை விடுங்க. இதை ஒரு கதையா நினைச்சுப் படிக்கிறவங்களுக்கு ஏதாவது ஒரு கிளைமாக்ஸ் சொல்ல வேண்டாமா? உங்களுக்கு எப்பவுமே மதன் மேல ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. அதான், சும்மா எழுதக்கூட மாட்டேங்கிறீங்க” “இதை கதையா நினைக்கிறவங்களுக்குத் தேவையான கிளைமாக்ஸை இரண்டாம் பாகத்திலேயே எழுதிட்டேன். மதன் இப்போ என்னெல்லாம் பண்ணானோ, ஏறக்குறைய எல்லாத்தையும் என்னைப் பெத்தவர் பண்ணிட்டார். அதனால தானோ என்னவோ, மதனை ஓரளவுக்கு மேல என்னால வெறுக்க முடியலை. மதனுக்கான முடிவு என்னன்னா……அவருக்கு என்ன நடந்துச்சோ, அதுவே இவனுக்கும்! ரத்தம் சூடா இருக்கிறவரை தான் இந்த ஆட்டமெல்லாம். அதுக்கு அப்புறம்…………..?” (முற்றும்)   1 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/