[] []       மனம் போல வாழ்வு ஜேம்ஸ் ஆலன் மொழி பெயர்ப்பு வ.உ.சிதம்பரம் பிள்ளை        அட்டைப்படம் – அருண்குமார் - visualsarun@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை  - CC0 / Public Domain              மனம் போல வாழ்வு  வ.உ. சிதம்பரம் பிள்ளை மொழி பெயர்ப்பு  manam pOl vAzvu of V.O. Chidambaram Pillai (Tamil translation of 'As a man Thinketh' of James Allen) In tamil script, unicode/utf-8 format           Acknowledgements:  Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.  © Project Madurai, 1998-2013. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  Details of Project Madurai are available at the website  http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.                                          மனம் போல வாழ்வு வ.உ. சிதம்பரம் பிள்ளை மொழிபெயர்ப்பு   ஜேம்ஸ் ஆலனின் "As a man Thinketh" என்ற நூலை வ.உ.சி. "மனம் போல வாழ்வு " என்று 1909-ல் மொழி பெயர்த்தார்.    பொருளடக்கம் 1. நினைப்பும் ஒழுக்கமும் 5  2. நினைப்பும் நிலைமையும் 7  3. நினைப்பும் சரீரமும் ஆரோக்கியமும் 13  4. நினைப்பும் காரியமும் 15  5. நினைப்பும் காரியசித்தியும் 17  6. மனோதிருஷ்டிகளும் மனோசிருஷ்டிகளும் 19  7. சாந்தி 22                                              1. நினைப்பும் ஒழுக்கமும் 'மனம்' என்பதும் 'நினைப்பு' என்பதும் ஒரே பொருளைக் கொடுக்கும் சொற்கள், ''மனம் போல வாழ்வு'' என்பது, ''மனிதனது நினைப்புக்குத் தக்கவாறு அவனுடைய வாழ்வு அமைகின்றனது' என்பதே. மனிதன் எவ்வாறு நினைக்கிறானோ அவ்வாறே ஆகிறான். மனிதன் எவ்வாறு நினைக்கின்றானா அவ்வாறே அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் நிலைமையும் அமைகின்றன. மனிதன் எதை நினைக்கிறானோ அதே ஆகிறான். அவனது நினைப்புகளின் தொகுதியே அவனுடைய ஒழுக்கம். பூமியில் மண்ணுள் மறைந்து கிடக்கும் வித்தினின்றே மரம் உண்டாகிறது. அதுபோல, மனிதனுடைய அகத்துள் மறைந்து கிடக்கும் நினைப்பினின்றே அவனது ஒவ்வொரு செயலும் உண்டாகின்றது. வித்து இல்லாமல் மரம் உண்டாதல் இல்லை. அதுபோல நினைப்பு இல்லாமல் செயல் உண்டாதல் இல்லை. மனதாரச் செய்கின்ற செயல்களைப் போலவே, தாமேயாகவும் சுபாவமாகவும் நிகழ்கின்ற செயல்களும் நினைப்பினின்றே உண்டாகின்றன. செயல்கள் நினைப்பின் மலர்கள்; இன்பமும் துன்பமும் அதன் கனிகள். இவ்வாறாக மனிதன் தனது சொந்த வேளாண்மையின் தித்திப்பும் கசப்புமுள்ள கனிகளை உண்டு பண்ணிக் கொள்கிறான். மனமெனும் நினைப்பே நமையாகக்கியது; நினைப்பால் நாம் நம் நிலைமையை உற்றனம், ஒருவன் நினைப்புக்குக் கருமறம் பற்றிடின் எருதுபின் உருளைப்போல் வரும் நனி துன்பமே; ஒருவன் நினைப்புத் திருஅறம் பற்றிடின், தன்னிழல் போல மன்னும் இன்பமே. மனிதன் நியதிக்கிரமத்தில் உண்டானவனேயன்றித் தந்திரத்தால் அல்லது மந்திரத்தால் ஆக்கப்பட்டவன் அல்லன். பிரத்தியக்ஷமான ஸ்தூலப் பொருள்கள் அடங்கிய இவ்வுலகத்தின்கண் காரணகாரியங்கள் கிரமமாகவும் நிச்சயமாகவும் நிகழ்தல்போல, பிரத்தியக்ஷமல்லாத நினைப்புலகத்தின் கண்ணும் காரணகாரியங்கள் கிரமமாகவும், நிச்சயமாகவும் நிகழ்கின்றன. மேம்பாடும் தெய்வத்தன்மையும் வாய்ந்த ஒழுக்கம், கடவுளின் கிருபையாலாவது தற்செயலாலாவது உண்டானதன்று; அது நேர்மையான நினைப்புகளை இடைவிடாது நினைத்து வந்ததன் நேரான பயனாகவும், தெய்வத்தன்மை வாய்ந்த நினைப்புகளோடு நெடுங்காலம் விரும்பிப் பழகிவந்த பழக்கத்தின் நேரான காரியமாகவும் உண்டானது. அங்ஙனமே, கீழ்ப்பாடும் மிருகத்தன்மையும் பொருந்திய ஒழுக்கம், கீழ்ப்பாடான நினைப்புகளையும், மிருகத்தன்மை வாய்ந்த நினைப்புகளையும், மனத்தில் இடைவிடாது ஒளித்து வைத்துக்கொண்டிருந்தன் நேரான பயனாக உண்டானதே. மனிதன் ஆவதும் அழிவதும் தன்னாலேதான். நினைப்பாகிய உலைக்களத்தில் சில படைக்கலன்களைச் செய்து அவற்றால், தன்னை அழித்துக் கொள்கிறான்; அவ்வவுலைக்களத்திற்றானே சில கருவிகளைச் செய்து, அவற்றால் வலிமை, மகிழ்ச்சி, அமைதி என்னும் திவ்வியமான அரண்களைத் தனக்குக் கட்டிக் கொள்கிறான். மனிதன் நல்ல நினைப்புகளை கைக்கொண்டு நல்ல வழிகளில் செலுத்துவதனால் தெய்த்தன்மை அடைகிறான். கெட்ட நினைப்புகளைக் கைக்கொண்டு கெட்ட வழிகளில் செலுத்துவதனால் மிருகத்தன்மை அடைகிறான். அதி உயர்வும் அதி தாழ்வுமான இந்த இரண்டுக்கும் இடையிலே உள்ளன மற்றைய ஒழுக்க வேறுபாடுகளெல்லாம் அவைகளை இயற்றும் கருத்தாவும் மனிதனே; ஏவும் கருத்தாவும் மனிதனே. இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அழகிய ஆன்ம தத்துவங்களுள்-மனிதன் நினைப்பின் கர்த்தா; ஒழுக்கத்தைக் கருக்கட்டுகிறவன்; நிலையையும், சுற்றுச்சார்பையும், விதியையும் உண்டாக்கி உருப்படுத்துகிறவன் -என்ற தத்துவத்தைப் போல் சந்தோஷத்தை அளிக்கத் தக்கதும், தெய்வத்தன்மையையும் நம்பிக்கையையும் விளக்கத் தக்கதும் வேறொன்றில்லை. அறிவும் வலியும் அன்புமான ஓர் உயிராகவும், தனது நினைப்புகளுக்குத் தானே கர்த்தனாகவும் இருத்தலால், மனிதன் ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் உரிய திறவுகோலை உடையவனாகவும், விரும்பினபடியே தன்னைச் செய்து கொள்ளத்தக்க கர்த்திருத்துவத்தை உடையவனாகவும் இருக்கிறான். மனிதன் எப்போதும் தலைவனே; அவன் மிகமிகப் பலஹீனமாய்க் கைவிடப்பட்டிருக்கும் நிலைமையிலும் தலைவனே; ஆனால் அப் பலஹீன நிலைமையில் அவன் தனது காரியங்களை ஒழுங்காக நிர்வகிக்காத ஒரு மூடத்தலைவனாகயிருக்கிறான். அவன் எப்பொழுது தன் நிலைமையைப் பற்றிச் சிந்திக்கவும் தன் உயிருக்கு ஆதாரமான ஒழுக்கத்தைப்பற்றி ஆவலுடன் விசாரிக்கவும் தொடங்குகிறானோ, அப்பொழுதே அவன் தனது முயற்சிகளை விவேகத்துடன் செலுத்தி நற்பயன் அடையும் விதத்தில் தனது நினைப்புகளைத் திருத்தும் அறிவுடைய தலைவன் ஆகிறான். அவன் தன் தலைமையை அறிந்துள்ள தலைவன். அங்ஙனம் ஆவதற்கு அவன் தன்னுள் நினைப்பின் நியதிகளைக் கண்டுபிடித்தல் வேண்டும். அவற்றைக் கண்டுபிடித்தற்குரிய சாதனங்கள் தன்முயற்சியும், தன்னைப் பகுத்துப் பார்த்தலும், தன் அநுபவமுமேயாம். சுரங்கத்தின்கண் மிக ஆழமாக அறுத்தலாலும், மிகக் கவனத்தோடு தேடுதலாலும் தங்கமும் வைரமும் கிடைக்கின்றன. மனிதன் தனது ஆன்மாவாகிய சுரங்கத்தின் கண் ஆழ்ந்து தேடுவானாயின், தனது ஆன்மாவைப் பற்றிய ஒவ்வோர் உண்மையினையும் காணல் கூடும். மனிதன் தனது நினைப்புகள் தன்னிடத்தும், பிறரிடத்தும், தனது வாழ்க்கையிடத்தும், நிலைமைகளிடத்தும் உண்டுபண்ணும் காரியங்களைக் கண்டு, பொறுமையான அப்பியாசத்தாலும், விசாரணையாலும், காரண காரியங்களைப் பொருத்திப் பார்த்தும், அறிவும் வலியும் ஞானமுமான தன்னைப்பற்றிய அறிவை அடைவதற்கு மார்க்கமாகப் பிரதிதினமும் நிகழும் ஒவ்வொரு சிறிய சம்பவத்தும் தான் கொள்ளும் அநுபவம் முழுவதையும் உபயோகித்துத் தனது நினைப்புகளை எச்சரிக்கையாகக் காத்துத் தன்வசப்படுத்தித் தக்கவழியில் திருப்புவானாயின், தானே தனது ஒழுக்கத்தை ஆக்குபவன், தானே தனது விதையை விதிப்பவன் என்னும் உண்மைகளை நன்றாக அறிவான். ''தேடுகிறவன் காண்பான்'', ''தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படும்' என்னும் உண்மைகள் இவ்விஷயத்திற்கு மிகப் பொருத்தமானவை. ஏனெனில் பொறுமை, பயிற்சி, விடாமுயற்சி இவற்றால் மாத்திரம் மனிதன் ஞானாலயத்தின் வாயிலுள் பிரவேசித்தல் கூடும்.   ''நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும்-நிலையினும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத் தலையாகச் செய்வானும் தான்'' -------                     2. நினைப்பும் நிலைமையும் ஒரு மனிதனது மனம், விவேகத்துடன் பயிர் செய்யத்தக்க, அல்லது காடாகும்படி விட்டுவிடத்தக்க ஒரு தோட்டத்திற்குச் சமானமாகும். பயிர் செய்தாலும் செய்யாவிடடாலும் தோட்டம் ஏதேனும் ஒரு விளைவைக் கொடுக்கும். அதில் பிரயோசனமுள்ள வித்துக்களை விதையாதபக்ஷத்தில், பிரயோசனமற்ற பூண்டுகளின் வித்துக்கள் ஏராளமாக விழுந்து பல பூண்டுகள் உண்டாகும். ஒரு தோட்டக்காரன் தனது நிலத்திலுள்ள புல்பூண்டுகளை நீக்கித் தனக்கு வேண்டும் கனிகளையும், மலர்களையும் கொடுக்கத்தக்க மரங்களையும், செடிகளையும் அதில் வைத்து வளர்த்தல்போல, மனிதன் தமது மனத்திலுள்ள குற்ற நினைப்புகளும், பயனற்ற நினைப்புகளும், அசுத்த நினைப்புகளுமாகிய புல் பூண்டுகளை நீக்கி, ஆரோக்கியமும், செல்வமும், வலிமையுமாகிய மலர்களையும், இன்பமும், புகழும் முக்தியுமாகிய கனிகளையும் கொடுக்கத்தக்க குற்றமற்ற நினைப்புகளும், பயனுள்ள நினைப்புகளும், சுத்தமான நினைப்புகளுமாகிய செடிகளையும், மரங்களையும் வைத்து வளர்த்துக் கொள்ளலாம். இங்ஙனம் செய்து வருதால், மனிதன் தனது ஆன்மாவினது தோட்டத்தின் எஜமான் என்றும், தனது வாழ்க்கையின் கர்த்தன் என்றும், விரைவிலோ, தாழ்ப்பிலோ தெரிந்து கொள்வான். அன்றியும் அவன் நினைப்பின் நியதிகளைத் தன்னுள் காண்கிறான். நினைப்புச் சக்திகளும், மனோ அம்சங்களும், தனது ஒழுக்கத்தையும் நிலைமையையும் விதியையும் எங்ஙனம் உருப்படுத்துகின்றன என்பதை நாளுக்கு நாள் நன்றாக அறிகின்றான். நினைப்பும் ஒழுக்கமும் ஒன்றே, ஒழுக்கம் புறநிலைமைகள் மூலமாகவும் சுற்றுப் பொருள்கள் மூலமாகவுமே வெளிப்படக் கூடுமாதலால், ஒரு மனிதனது புறநிலைமைகள் அவனுடைய அகநிலைமைகட்கு எப்பொழுதும் ஒத்தேயிருக்கும், இதனால் ஒருகால நிலைமைகள் அவனுடைய எல்லா ஒழுக்கங்களையும் காட்டுமென்று கொள்ளலாகாது. அந் நிலைமைகள் அவனுடைய அபிவிர்த்திக்கு இன்றியமையாதனவாக அவனுடைய முக்கிய நினைப்புகள் சிலவற்றோடு நெருங்கிய சம்பந்தம் உடையனவாயிருக்கும், ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்ம நியதிப்படி தான் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறான். எந்த நினைப்புகளால் தன்னுடைய ஒழுக்கத்தை உண்டாக்கிக் கொண்டானோ, அந்த நினைப்புகளே அவனை அந்த இடத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றன. அவன் வாழ்க்கையில் எதுவும் உண்டாவதில்லை; எல்லாம் ஒருபொழுதும் பிழையாத ஒரு நியதியின் காரியமாகவே நிகழ்கின்றன. இவ்வுண்மை தனது நிலைமைகளில் திருப்தியுடையார்க்கும் திருப்தியில்லார்க்கும் ஒரே விதமாகப் பொருந்தும். மனிதன் வளர்ந்து நாளுக்கு நாள் மேம்படுகின்ற உயிரானதால், மனிதன் கற்றற்கும் மேம்படுதற்குமுரிய நிலையில் இருக்கின்றான். ஒரு நிலைமையால் அவன் பெறலான ஆனம பாடத்தை அவன் கற்றதும், அது நீங்கி வேறு நிலைமைகள் ஏற்படுகின்றன. நான் புறநிலைமைகளுக்கு உட்பட்டவனென்று எவ்வளவு காலம் நம்பிக்கொண்டிருக்கிறானோ, அவ்வளவு காலமும் மனிதன் புறநிலைமைகளால் பீடிக்கப்படுகிறான். ஆனால், தான் சிருஷ்டி செய்யும் ஓர் சக்தியென்றும், நிலைமைகள் உண்டாவதற்குக் காரணமான நிலமும் வித்துக்களுமாகிய அந்தக் காரணத்தைத் தான் அடக்கியாளலாமென்றும் எப்பொழுது அவன் உணர்கின்றானோ, அப்பொழுதே அவன் தன்னை அடக்கி யாளுதலையும், தன்னைப் பரிசுத்தப்படுத்தரையும் சிறிது காலமாவது அப்பியசித்து வந்த ஒவ்வொரு மனிதனும், நினைப்பிலிருந்து நிலைமைகள் வளர்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வான். ஏனெனில், தனது அகநிலைமைகள் எவ்வளவுக்கெவ்வளவு மாறுபட்டனவோ, அவ்வளவுக்கவ்வளவு தனது புறநிலைமைகளும் மாறுபட அவன் கண்டிருப்பான். தனது ஒழுக்கத்திலுள்ள குறைகளை நீக்குவதற்காக உண்மையாக உழைத்து, விரைவாகவும், விளக்கமாகவும் விர்த்தியாகுங் காலையில் மனிதன் ஒன்றன்பின் ஒன்றாகப் பலபல நிலைமைகளை அடைகிறான். ஆன்மா எதனைத் தன்னிடத்து அந்தரங்கமாக ஒளித்து வைத்திருக்கிறதோ, எதனை நேசிக்கிறதோ, எதற்குப் பயன்படுகிறதோ, அதனைக் கவர்கின்றது. அது தனது உயர்ந்த கோரிக்கைகளின் உயர்ந்த ஸ்தானத்திற்கு உயர்கின்றது; அது தனது தாழ்ந்த அவாக்களின் தாழ்ந்த ஸ்தானத்திற்குத் தாழ்கின்றது. அது தனக்கு உரியவற்றைப் பெறுவதற்கு நிலைமைகள் சாதனங்களாகின்றன. மனமாகிய நிலத்தில் விதைத்த, அல்லது விழுந்து முளைக்கும்படி விட்ட, ஒவ்வொரு நினைப்பு வித்தும், விரைவிலோ, தாழ்ப்பிலோ, தனக்குரிய செயலாக மலர்ந்து, பின்னர்த் தனக்குரிய நினைப்பும் நிலைமையுமாகிய கனிகளைத் தருகின்றது. நல்ல நினைப்புகள் நல்ல கனிகளையும், கெட்ட நினைப்புகள் கெட்ட கனிகளையும் தருகின்றன. நிலைமைகளாகிய புறஉலகம் நினைப்பாகிய அக உலகத்திற்குத் தக்கபடி தன்னைத் திருத்திக் கொள்கின்றது. இன்பத்தைத் தரும் புறநிலைமைகளும் முடிவில் ஒருவனுக்கு நன்மை பயக்கும் கருவிகளே. தனது விளைவுகளைத் தானே அறுத்து அடைபவனாதலால், மனிதன் இன்பதுன்பங்களின் மூலமாக அறிவடைகின்றான். தன்னை ஆளும் உள்ளூர்ந்த அவாக்களையும், நல்ல நினைப்புகளையும், கோரிக்கைகளையும் (பரிசுத்தமற்ற பாவனைகளாகிய கொள்ளிவாய்ப் பிசாசையோ, அல்லது பரிசுத்தமான உயர்ந்த முயற்சிகளாகிய இராஜ பாட்டையையோ) பின்பற்றிச் சென்று, முடிவில் அவற்றின் பலன்களைத் தனது புறநிலைமைகளில் அடைகின்றான். வளர்ச்சிக்கும் திருத்தத்திற்குமுரிய நியதிகள் எவ்விடத்திலும் உள்ளன. ஒருவன் கள்ளுக்கடையையோ சிறைச்சாலையையோ அடைதல் ஊழின் அல்லது நிலைமையின் கொடுமையால் அன்று. அவனுடைய ஈன நினைப்புகளும் இழிந்த அவாக்களுமே அவனை அவ்விடங்களில் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. பரிசுத்த மனத்தையுடைய மனிதன் குற்றத்திற்கு ஆளாதல் அவனுக்குப் புறத்திலுள்ள அச் சக்தியின் வலியாலும் அன்று. குற்ற நினைப்பை நெடுங்காலம் தன் மனத்தில் அந்தரங்கமாகப் பரிபாலித்து வந்தான்; நிலைமை அந் நினைப்பின் மொத்த சக்தியையும் வெளிப்படுத்திற்கு. சந்தர்ப்பம் மனிதனை ஆக்குவதில்லை; அ•து அதனை அவனுக்குத் தெரிவிக்கின்றது. பாவ நினைப்புகள் இல்லாமல் ஒருவன் பாவங்களைப் புரிதலும், அதன் பலன்களாகிய துன்பங்களைப் அநுபவித்தலும் இல்லை. அவ்வாறே, புண்ணிய நினைப்புகள் இல்லாமல் ஒருவன் புண்ணியங்களைப் புரிதலும், அவற்றின் பலன்களாகிய இன்பங்களை அனுபவித்தலும் இல்லை. தன் நினைப்புக்குத் தானே எஜமானும் கர்த்தனுமாகையால், தன்னை ஆக்கிக் கொள்பவனும் தானே; தன் நிலைமைகளை ஆக்குபவனும் திருத்துபவனும் தானே. பிறக்கும் பொழுதே ஆன்மா தனக்குரிய இடத்தை அடைகின்றது. அது பூமியில் சஞ்சரிக்கும் காலம் வரையில், தன்னைத் தனக்குக் காட்டுவனவும், தனது சுத்தாசுத்தங்களையும் பலலாபலங்களையும் பிரதிபிம்பித்துக் காட்டுவனவுமாகிய புற நிலைமைகளைக் கவர்கின்றது. மனிதர் தாம் வேண்டுவதைக் கவர்வதில்லை. தமக்கு உரியதையே கவர்கின்றனர். அவருடைய மனோபீஷ்டங்களும், மனோராஜ்யங்களும், பேராசைகளும் தத்தம் ஒவ்வோர் அடியிலும் உலைவடைகின்றன. ஆனால், அவரது உள்ளூர்ந்த நினைப்புக்களும், அவாக்களும், தத்தம் நல்ல அல்லது தீய உணர்வுகளைப் புசித்துத் தளர்கின்றன. நமது இன்ப துன்பங்களையும் ஈயும் தெய்வம் நம்மிடத்திலேயே இருக்கின்றது. அத் தெய்வம் நாமேதான்! மனிதன் தானே கைக்கு விலங்கிட்டுக் கொள்கிறான். நினைப்பும் செயலும் ஊழின் சிறையாளர். அவை தீயனவாயின், தன்னைச் சிறைப்படுத்துகின்றன. விடுதலை செய்யும் தூதரும் அவையே, அவை நல்லனவாயின், தன்னை விடுதலை செய்கின்றன. தாம் விரும்புவனவற்றையும் கோருவனவற்றையும் மனிதன் அடைவதில்லை; நியாயமாகச் சம்பாதிப்பதையே அடைகிறான். அவனுடைய விருப்பங்களும் கோரிக்கைகளும், அவனது நினைப்புகளோடும், செயல்களோடும் ஒத்திருந்தால் மாத்திரமே நிறைவேறுகின்றன. இவ்வுண்மையைக் கொண்டு நோக்குங் காலையில் ''நிலைமைகளோடு பேராடுதல்'' என்பதன் பொருள் யாது? மனிதன் காரணத்தைத் தனது அகத்துள் போஷித்து வைத்துக் கொண்டு காரியத்தோடு தனது புறத்தில் போராடுகிறானென்பதே அதன் பொருள். அக்காரணம், தான் அறிந்து செய்கின்ற ஒரு பாவமாக இருக்கலாம். அல்லது அறியாது கொண்டுள் ஓர் பலஹீன (கெட்ட பழக்க) மாக இருக்கலாம். எதுவாயிருப்பினும் அது தன்னைக் கைக்கொண்டிருப்பவனது முயற்சிகளை முன்னேறவிடாது பின் தள்ளித் தக்க பரிகாரத்திற்காக அலறுகின்றது. மனிதர் தமது நிலைமைகளைக் சீர்படுத்த விரும்புகின்றனர். ஆனால் தம்மைச் சீர்படுத்த விரும்புவதில்லை. ஆதலால், அவர் எப்பொழுதும் கட்டுண்டிருக்கின்றனர். சரீர உழைப்புக்குப் பின்னடையாதவன் தான் கருதிய காரியத்தைத் தவறாமல் செய்து முடிப்பான். இவ்வுண்மை பரலோக சித்திக்கும் ஒக்கும். பொருள் ஈட்டு தலையே நோக்கமாகக் கொண்டிருப்பவனும், தன் நோக்கம் முற்றுப்பெறுவதற்கு மிகுதியாக உழைக்கச் சித்தமாயிருத்தல் வேண்டும். அ•து அவ்வாறாயின், எதற்கும் சலியாததும் சுகதுக்கங்களைச் சமமாகக் கொள்வதுமான ஒரு வாழ்க்கையை அடைய விரும்புகின்றவன் எவ்வளவு அதிகமாக உழைக்கச் சித்தமாயிருத்தல் வேண்டும். இதோ, கொடிய வறுமையுற்ற ஒரு மனிதன் இருக்கிறான். அவன் தனது புறநிலைமைகளும் வீட்டுச் சௌகரியங்களும் சீர்ப்பட வேண்டுமென்று மிகுந்த விசாரம் கொண்டிருக்கிறான். அவ்வாறிருந்தும், தனக்குக் கூலி போதாதென்ற காரணத்தால், தன் வேலையைச் சரியாகச் செய்யாமல் தனது எஜமானை ஏமாற்ற எத்தனித்தல் நியாயமென்றே எண்ணுகிறான். அத்தகைய மனிதன் உண்மையான செல்வத்திற்கு ஆதாரமான தத்துவங்களின் முதற்பாடமும் அறியாதவன். அவன் தனது வறுமையை ஒழிப்பதற்குத் தகுதியற்றவனாயிருப்பதுமன்றிச் சோம்பலும் வஞ்சகமும் இழிவுமான நினைப்புகளை நினைத்துக்கொண்டும், தனது முந்திய வறுமையினும் மிகக் கொடியதொரு வறுமை தன்பால் வந்து சேரும்படி நடந்து கொண்டிருக்கிறான். இதோ, மிதமிஞ்சிய உணவை உட்கொண்டதனால் உண்டாகி, நீங்காத துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிற ஒரு வியாதிக்கு இரையாகி வருந்துகின்ற ஒரு செல்வவான் இருக்கிறான். அவன் அவ்வியாதியை ஒழிப்பதற்கு அவளவற்ற பணம் செலவு செய்யச் சித்தமாயிருக்கிறான். ஆனால் அவன் மிதமிஞ்சிய உணவை உட்கொள்ளும் ஆசையை விடமாட்டான். தனது இயற்கைக்கும் மாறுபட்ட அரிய உணவுகளை உண்ணவும் வேண்டும். ஆரோக்கியமாக இருக்கவும் வேண்டுமென்பது அவனுடைய விருப்பம். அத்தகைய மனிதன் ஆரோக்கியமாயிருத்தற்கு ஒரு சிறிதும் அருகன் அல்லன். ஆரோக்கிய வாழ்க்கைக்குரிய முதற் பாடத்தையும் இன்னும் கல்லாதவனாதலால். இதோ, கூலியாட்களுக்கு விதித்துள்ள வீதப்படி கூலிகொடாமல் தவிர்ப்பதற்குப் பல கோணலான உபாயங்களைச் செய்து கொண்டும், அதிக இலாபத்தை அடையலெமென்ற எண்ணத்தோடு தன்னிடம் வேலை செய்கிற ஆட்களின் கூலிகளைக் குறைத்துக் கொண்டும் வருகிற எஜமான் ஒருவன் இருக்கிறான். அவன் செல்வவனாவதற்குச் சிறிதும் தகுதியுடையவன் அல்லன். பின்னர் அவன் செல்வமும் புகழும் இல்லாதவனானபோது தன் நிலைமைக்குத் தானே காரணம் என்பதை உணராது, நிலைமைகளைக் குறை கூறுகிறான். தனது நிலமைகளுக்குத் தானே காரணம் என்ற உண்மையையும், தான் புறத்தில் ஒரு நல்ல காரியத்திற்காக முயற்சிக்கின்ற காலையில், தனது அகத்தில் அக்காரியத்திற்குச் சிறிதும் பொருத்தமில்லாத நினைப்புகளுக்கும் அவாக்களுக்கும் தான் அறியாமலே இடங்கொடுத்துத் தனது காரிய சித்தியை இடைவிடாது கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்ற உண்மையையும் விளக்குதற்கு உதாரணங்களாக இம் மூன்றையும் கூறினேன். இவ்வித உதாரணங்கள் எத்தனையோ இன்னும் கூறலாம். ஆயினும், அ•து அவசியமன்று, ஏனெனில், இதனைப் படிப்பவர் துணிவு கொண்டால், தமது மனத்திலும் வாழ்க்கையிலும் நேரிடும் மாறுதல்களுக்கெல்லாம் நினைப்பின் தத்துவங்களே காரணமென்று ஆராய்ந்தறியலாம். இவ்வாறு அறியும் வரையில் வெளி விஷயங்கள் மாத்திரம் விசாரணைக்கு ஆதாரமாக மாட்டா. தனது ஆன்ம நிலைமை முழுவதையும் ஒருவன் அறிந்திருந்த போதிலும், அதனை அவனது வாழ்க்கையின் புறத்தோற்றத்தால் மாத்திரம் மற்றொருவன் அறிய முடியாது. ஏனெனில், நிலைமைகள் சன்னல் பின்னலாகப் பிணைந்தும், நினைப்புகள் ஆழ்ந்து வேரூன்றியும் சுகத்திற்குரிய நிலைமைகளை ஒவ்வொருவனுக்கும் வெவ்வேறாகவும் இருக்கின்றன. ஒரு மனிதன் சில விஷயங்களில் யோக்கியதையுள்ளவனாயிருக்கலாம். அப்படியிருந்தும் அவன் பல கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கலாம். மற்றொரு மனிதன் சில விஷயங்களில் அயோக்கியதையுள்ளவனாயிருக்கலாம்; அப்படியிருந்தும் அவன் மிகுந்த பணதைச் சம்பாதிக்கலாம். ஆனால் முந்திய மனிதன் அவனது குறிப்பிட்ட ஓர் யோக்கியதையினால் கஷ்ட நஷ்டப்படுகிறானென்றும், பிந்திய மனிதன் அவனது குறிப்பிட்ட ஓர் அயோக்கியதைனால் பணக்காரனாகிறானென்றும் மனிதர் வழக்கமாகச் செய்யும் தீர்மானம். ஒரு விஷயத்தில் அயோக்கியனாயிருப்பவன் எல்லா விஷயங்களிலும் அயோக்கியனென்றும், ஒரு விஷயத்தில் யோக்கியனாயிருப்பவன் எல்லா விஷயங்களிலும் யோக்கியனென்றும் மேலெழுந்தவாறு கொள்ளும் அபிப்பிராயத்தின் முடிவாகும். ஆழ்ந்த அறிவையும் விரிந்த அநுபவத்தையும் கொண்டு நோக்குங்கால் அத்தீர்மானம் பிழையென்று காணப்படும். அவ்வயோக்கிய மனிதன் மற்றவனிடத்தில் இல்லாத அதிசயிக்கத்தக்க சில நல்ல ஒழுக்கங்களை உடையவனாகயிருக்கலாம். அவ் யோக்கிய மனிதன் மற்றவனிடத்தில் இல்லாத அருவருக்கத்தக்க சில தீய ஒழுக்கங்களை உடையவனாயிருக்கலாம். யோக்கியன் தனது யோக்கியமான நினைப்புகளுடைய நல்ல பலன்களையும், தனது யோக்கியமான செயல்களுடன் நல்ல பலன்களையும் அடைகின்றான். அவன் தனது தீய ஒழுக்கங்களால் உண்டாகும் துன்பங்களையும் அனுபவிக்கிறான். இதுபோல, அயோக்கியனும் தனது நல்ல ஒழுக்கங்களால் உண்டாகும் இன்பங்களையும் தீய ஒழுக்கங்களால் உண்டாகும் துன்பங்களையும் அடைகிறான். ஒருவன் தனது நல்லொழுக்கத்தினால் துன்பத்தை அடைகிறானென்று நினைத்தல் மனிதரின் வீண் பெருமைக்கு உகந்ததாயிருக்கிறது. ஒருவன் தனது அகத்திலிருந்து ஒவ்வொரு கெட்ட நினைப்பையும் அசங்கிய நினைப்பையும் அசுத்த நினைப்பையும் வேருடன் கல்லித் தனது ஆன்மாவிடத்தினின்று ஒவ்வொரு பாவபலத்தையும் ஒழிக்கிற வரையில், அவன் தனது துன்பங்கள் தனது நல்ல குணங்களின் பலன்களென்றும் தீய குணங்களின் பலன்களல்லவென்றும் அறியவும், சொல்லவும் உரியவன் அல்லன். அவன் அப் பரிபூரண தசையை அடைவதற்கு நெடுங்காலம் முன்னர், அதற்குரிய மார்க்கத்தில் செல்லும் போதே, முற்றிலும் நியாயமானதும், ஆனால் தீமைக்கு நன்மையையும் நன்மைக்குத் தீமையையும் கொடுக்காததுமான பெரிய சட்டத்தின் செயலைத் தனது மனத்திலும் வாழ்க்கையிலும் கண்டுகொள்வான். அவன் இந்த ஞானத்தை அடைந்த பிறகு, தனது பழைய அறியாமையையும், குருட்டுத்தனத்தையும் கண்டு, தனது வாழ்க்கை எப்பொழுதும் நியாயமாக விதிக்கப்பட்டிருந்த தென்றும், தனது பழைய இன்பதுன்ப அனுபவங்களெல்லாம் மலர்ச்சியடையாத, ஆனால் மலர்ந்து கொண்டிருந்த தனது ஆன்மாவின் நியாயமான புறவேலைகளென்றும் நன்கு தெரிந்து கொள்வான். நல்ல நினைப்புகளும் செயல்களும் ஒரு காலத்திலும் கெட்ட பலன்களைக் கொடுக்க மாட்டா. கெட்ட நினைப்புகளும் செயல்களும் ஒரு காலத்திலும் நல்ல பலன்களைக் கொடுக்க மாட்டா. இவ்வுண்மை ''விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளையாது''. ''எட்டியிலே கட்டி மாம்பழம பழுக்காது'' என்னும் உண்மையை ஒத்ததே. ''தினை விதைத்தவன் தினை அறுப்பான்', ''வினை விதைத்தவன் வினையறுப்பான்''. மனிதர் இந்நியதியை ஸ்தூல உலகத்தில் கண்டு அதனை அநுசரித்து நடக்கின்றனர். ஆனால், சூஷ்மமாகிய மனோ உலகத்தின் கண்ணும், ஒழுக்க உலகத்தின்கண்ணும் (அங்கு இந்நியதி எளிதில் உணரத் தக்கதாகவும், மாறுபடாததாகவும் இருந்தும்) இந் நியதியைக் கண்டிலர். ஆதலின், அவர் அதனை அநுசரித்து நடப்பதில்லை. துன்பம் எப்பொழுதும் எவ்வழியிலாவது கொண்ட தப்பான நினைப்பின் காரியமே. அ•து ஒருவன் தன்னோடும் தனது ஜீவ நியதியோடும் ஒத்து நடவாமையை உணர்த்தும் ஓர் அறிகுறி. துன்பத்தால் உண்டாகும் ஒரே பிரயோஜனம், மனிதனிடத்திலுள்ள அப்பிரயோஜனமும் அசுத்தமுமான எல்லாவற்றையும் எரித்தலேயாம். எவன் பரிசுத்தனாயிருக்கிறானோ அவனுக்குத் துன்பமென்பதே கிடையாது. களிம்பு நீங்கியபின் தங்கத்தைப் புடம்போடயாதொரு காரணமும் இல்லை. அதுபோலவே பூரண பரிசுத்தத்தையும், ஞானத்தையும் அடைந்தவன் துன்பமடைய யாதொரு காரணமும் இல்லை. ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கின்ற நிலைமைகள் அவனது மனத்தின் கண்ணுள்ள நேர்மையின்மையின் பலன்கள்; ஒருவனுக்கு இன்பத்தைக் கொடுக்கின்ற நிலைமைகள், அவன் மனத்தின் கண்ணுள்ள நேர்மையின் பலன்கள். நல்ல நினைப்பின் அளவுகருவி இன்பம் அநுபவித்தலே; பொருளுடைமையன்று. கெட்ட நினைப்பின் அளவுகருவி துன்பம் அநுபவித்தலே; பொருளின்மையன்று. ஒருவன் தனவந்தனாகவும், துன்பமே அநுபவிப்பவனாகவும் இருக்கலாம். மற்றொருவன் தரித்திரனாகவும், இன்பமே அனுபவிப்பவனாகவும் இருக்கலாம். தனத்தை விவேகத்தோடு சரியான வழியில் செலவு செய்தால் மாத்திரமே, செல்வமும் இன்பமும் ஒருவனிடத்தில் சேர்ந்திருக்கும். தரித்திரன் தனது தரித்திர நிலைமைகள் அநியாயமாகத் தன்மேல் சுமந்ததப் பட்டவையென்று நினைக்குந் தோறும் துன்பத்தில் ஆழ்ந்து அழுந்துகிறான். சிறிதும் இன்பம் நுகராமையும், மிதமிஞ்சி இன்பம் நுகர்தலும், துர்ப்பாக்கியத்தின் இரண்டு அந்தங்கள். இவ்விரண்டும் இயற்கைக்கு விரோதமானவை. இவை மனத்திடுமாற்றத்தின் பலன்கள். ஒருவன் சந்தோஷமும் ஆரோக்கியமும், செல்வமும் உடையவனாகும் வரையில் அவனுக்குச் சரியான நிலைமை ஏற்படவில்லை என்பது நிச்சயம்; அகமும் பறுமும் அவனும் அவன் சுற்றமும் ஒத்திருப்பதன் நலன்களே சந்தோஷமும், ஆரோக்கியமும், செல்வமும். ஒருவன் தன் நிலைமையைப்பற்றிச் சிணுங்குதலையும் நிந்தித்தலையும் விட்டுத் தனது வாழ்க்கையை விதிக்கும் (காட்சிக்குப் புலப்படாத) நியதியைத் தேடிக் காணத் தொடங்கிற பொழுதுதான் மனிதன் மனிதத் தன்மையை அடைகிறான். அவன் அந்த நியதிக்குத் தக்கபடி தனது மனத்தைத் திருத்திக் கொள்ளும்போது, தனது நிலைமைக்கு மற்றவர் காரணமென்று குற்றம் சாட்டலைவிட்டு, உறுதியும், மேன்மையுமுள்ள நினைப்புகளைக் கொண்டு தன்னை வளர்க்கிறான். தனது நிலைமைகளோடு போராடுதலை விட்டுத் தனது நிலைமைகளைத் தான் விரைவில் அபிவிருத்தி அடைவதற்குத் துணைக்கருவிகளாகவும், தனக்குள் மறைந்து கிடக்கும் சக்திகளையும், திறமைகளையும் கண்டு பிடித்ததற்குச் சாதனங்களாவும் உபயோகித்துக் கொள்ளத் தொடங்கிறான். பிரபஞ்சத்தை ஆளும் தத்துவம் ஒழுங்கேயன்றிக் குழப்பமன்று; வாழ்க்கையின் உயர்நிலை நீதியேயன்றி அநீதி யன்று; உலகத்தில் ஆன்ம அரசாங்கத்தை ஏற்படுத்தி நடத்திவரும் சக்தி தருமமேயன்றி அதருமமன்று. இ•து இங்ஙனமிருப்பதால், பிரபஞ்சம் சரியாயிருக்கிறதென்று காண்பதற்கு மனிதன் தன்னைச் சரியாக்கிக் கொள்ள வேண்டும். தன்னைச் சரியாக்குங் காலையில், அவன் பொருள்களைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் தனது நினைப்புகளை எவ்வாறு மாற்றுகிறானோ, அவ்வாறே அப்பொருள்களும் மற்றவர்களும் தன்னிடத்தில் மாறுதலுறக் காண்பான். இவ்வுண்மைக்குச் சான்று ஒவ்வொரு மனிதனிடத்திலும் உண்டு. கிரமமாக அகத்துள் பார்த்தலாலும், தன்னைப் பகுத்துப் பார்த்தலாலும், அதனை எளிதில் காணக்கூடும். ஒருவன் தனது நினைப்புகளை அடியோடு மாற்றட்டும். உடனே அ•து அவனுடைய வாழ்க்கையின் புற நிலைமைகளில் உண்டுபண்ணும் விரைவான மாறுதல்களைக் கண்டு அவன் ஆச்சரியம் அடைவான். மனிதர் நினைப்பை அந்தரங்கமாக அடக்கி வைத்துக் கொள்ளலாமென்று கருகின்றனர். அது முடியாது. நினைப்பு விரைவில் பழக்கமாகின்றது. பழக்கம் விரைவில் நிலைமையின் உருவை அடைகின்றது. மிருகத்தனமான நினைப்புகள் மதுவுண்டலும், காம நுகாச்சியுமாகிய பழக்கங்களாகின்றன. அப் பழக்கங்கள் வறுமையும் வியாதியுமாகிய நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. பல்வகை அசுத்த நினைப்புகளும் தளர்ச்சியையும், குழப்பத்தையும் கொடுக்கும் பழக்கங்களாகின்றன. அப் பழக்கங்கள் தடுமாற்றமும், தவறுமாகிய நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. பயமும், சந்தேகமும், சஞ்சலமும் பொருந்திய நினைப்புகள் பலஹீனமும், உறுதியின்மையும், துணிவின்மையுமான பழக்கங்களாகின்றன. அப் பழக்கங்கள் தோல்வியும் வறுமையும் அடிமைத்தனமுமாகிய நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. சோம்பலான நினைப்புகள் அசுத்தமும், அயோக்கியமும் பொருந்தய பழக்கங்களாகின்றன. அப்பழக்கங்கள் பிணியும் இறத்தலுமாகிய நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. வெறுப்பும் குற்றங்காண்டலும் பொருந்திய நினைப்புகள் குற்றம் சாட்டுதலும், தாக்குதலுமாகிய பழக்கங்களாகின்றன. அப்பழக்கங்கள் காயமும் உபத்திரவமுமாகிய நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. பலவித சுயநல நினைப்புகளும் சுய லாபத்தை நாடும் பழக்கங்களாகின்றன; அப்பழக்கங்கள் ஏறக்குறையக் கஷ்டங்களை உண்டாக்கும் நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. இவற்றிற்கு மாறாக, பலவகை நல்ல நினைப்புகளும் அன்பு செலுத்துதலும் அருள்புரிதலுமாகிய பழக்கங்களாகின்றன. அப்பழக்கங்கள் மனோகரமும் குதூகலமும் தரும் நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. பரிசுத்த நினைப்புகள் மிதமாக அனுபவித்தலும், தன்மையடக்கியாளுதலுமாகிய பழக்கங்களாகின்றன. அப்பழக்கங்கள் சாந்தமும், சமாதானமும் தரும் நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. தைரியமும், தன்னம்பிக்கையும் துணிவுமான நினைப்புகள் ஆண்மைப் பழக்கங்களாகின்றன. அப்பழக்கங்கள் வெற்றியும், நிறைவும், சுதந்திரமுமாகிய நிலைகளின் உருக்களை அடைகின்றன. ஊக்க நினைப்புகள் சுத்தமும் உழைப்புமாகிய பழக்கங்களாகின்றன. அப்பழக்கங்கள் இன்பத்தைத் தரும் நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. அமைதியும் பொறுத்தலுமாகிய நினைப்புகள் சாந்தமான பழக்கங்களாகின்றன. அப்பழக்கங்கள் காப்பையும் வாழ்வையும் நல்கும் நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. அன்பும் சுயநலிமின்மையுமாகிய நினைப்புகள் பிறருக்காகத் தன்னை மறக்கும் பழக்கங்களாகின்றன. அப்பழக்கங்கள் நிலைவரமான செழிப்பும் செல்வமுமாகிய நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. விடாப்பிடியாகக் கொண்டுள்ள ஒருவகை நினைப்பின் தொடர், அது நல்லதாயினும், கெட்டதாயினும், தனது பலன்களை மனிதனது ஒழுக்கத்திலும் நிலைமைகளிலும் உண்டுபண்ணாமல் போகாது. ஒருவன் அடைய விரும்பும் நிலைமைகளை நேராக அடைய முடியாது; ஆனால் அவற்றை அளிக்கத்தக்க நினைப்புகளைக் கைக்கொண்டு, அவற்றின் மூலமாக அந் நிலைமைகளை நிச்சயமாக ஆக்கியடையலாம். ஒவ்வொரு மனிதனும் மிகுதியாகப் பேணிவருகின்ற நினைப்புகள் நிறைவேறுவதற்குப் பிரகிருதி உதவி புரிகின்றது; அன்றியும், அது நல்ல நினைப்புகளையும், கெட்ட நினைப்புகளையும் விரைவில் வெளிப்படுத்தத்தக்க சந்தர்ப்பங்களையும் உண்டு பண்ணுகிறது. ஒருவன் தனது பாவ நினைப்புகளை விட்டு விடட்டும்; உடனே உலகம் முழுவதும் அவனிடத்துப் பிரியமுடையதாகி அவனுக்கு உதவிபுரிய முன்வரும், ஒருவன் பலஹீனமும், கேவலமுமான தனது நினைப்புகளை விட்டுவிடட்டும், உடனே அவனது உறுதியான நியமனங்களை நிறைவேற்றப் பல பக்கங்களிலும் சந்தர்ப்பங்கள் உற்பவிக்கும். ஒருவன் நல்ல நினைப்புகளை பேணி வரட்டும். துன்பத்தையும் அவமானத்தையும் உண்டாக்கும் கெட்ட விதி அவனைவிட்டுப் போய்விடும். உலகம் பலதிற உருவங்களைக் காட்டும் உனது கண்ணாடி (காலிடாஸ்கோப்) நிமிஷத்துக்கு நிமிஷம் வெவ்வேறு நிறமாகத் தோன்றும். தோற்றங்களெல்லாம் இடைவிடாமல் சலித்துக் கொண்டிருக்கும் உன் நினைப்புகளின் பிரதி பிம்பப் படங்களே.   வெண்பா எந்நிலைமை நீஅடைய எண்ணுவையோ நின்னுள்ளுள் அந்நிலைமை நீஅடைவாய் அப்பொழுதே-தந்நிலைமை தந்ததென்பர் தோல்வியெலாம் சாரமிலார், நின்றுநகும் பந்தமில்ஆன் மாஅவரைப் பார்த்து 1 காலமொடு தேசம் கடந்துநிற்கும் ஆன்மாநின் மூலவிதி யைவென்று முன்செல்லும்-பாலின் நிலைமைகளைக் கீழ்ப்படுத்தி நீள்அடிமை ஆக்கித் தலைமையுறும் பல்லவற்றும் சார்ந்து 2 காண்டற் கரிய கனசக்தி யாயமனம் ஈண்டரிய ஆன்மாவின் இன்மகவாம்-வேண்டும் நிலைபலவும் எய்தஅது நேர்வழியை ஆக்கும் மலைபலவும் ஊடறுத்து மாய்த்து. 3 -------       3. நினைப்பும் சரீரமும் ஆரோக்கியமும் மனம் ஆண்டான்: சரீரம் அடிமை. முன் ஆலோசனையோடாவது தன்னியல்பிலாவது மனம் கொள்கின்ற நினைப்புகளை ஒட்டியே சரீரம் நடக்கின்றது. சட்ட விரோதமான நினைப்புகளை ஒட்டியே சரீரம் நடக்கின்றது. சட்ட விரோதமான நினைப்புகளால் சரீரம் பிணியையும் அழிவையும் விரைவில் அடைகின்றது. நல்ல நினைப்புகளாலும், சந்தோஷ நினைப்புகளாலும், சரீரம் யௌவனத்தையும் அழகையும் பெறுகின்றது. வியாதியும் ஆரோக்கியமும் நிலைமைகளைப் போலவே நினைப்பில் வேரூன்றி யிருக்கின்றன. வியாதி நினைப்புகளை வியாதியுள்ள சரீரம் வெளிப்படுத்தும் அச்ச நினைப்புகள் மனிதனை ஒரு வெடிகுண்டு எவ்வளவு துரிதத்தில் கொல்லுமோ அவ்வளவு துரிதத்தில் கொல்லக் கண்டிருக்கிறோம். அவ்வளவு வேகமாகக் கொல்லவிடடாலும், அவை வெடிகுண்டுபோலவே உண்மையாக அநேக மனிதர்களை இடைவிடாது கொன்று விட்டிருக்கின்றன. வியாதி வருமோ என்று பயப்படுகிறவர்களே வியாதியை அடைகிறவர்கள். மனக்கவலை சரீரம் முழுவதிலும் விரைவில் ஒழுங்கீனத்தை உண்டாக்கி வியாதி வருவதற்கு வழி செய்து வைக்கின்றது. பரிசுத்தமற்ற நினைப்புகளைச் சரீரம் நிறைவேற்றாவிட்டாலும், அவை நரம்புக்கட்டைக் சீக்கிரத்தில் உடைத்துக் கெடுத்துவிடும். பலமும் சுத்தமும் சந்தோஷமும் பொருந்திய நினைப்புகள் சரீரத்துக்கு ஊக்கத்தையும் ஆரோக்கியத்தையும் அழகையும் கொடுக்கின்றன. சரீரம் மெல்லியதும், எப்படி வேண்டினாலும் அப்படி ஆகத்தக்கதுமான ஒரு கருவி. அதில் எந்த நினைப்புகள் வருகின்றனவோ அந்த நினைப்புகளோடு அ•து இணங்கி நடக்கின்றது. பழக்கங்களாகப் பரிணமித்த நினைப்புகள், தமது நல்ல பலன்களையோ, கெட்ட பலன்களையோ சரீரத்தில் உண்டு பண்ணுகின்றன, மனிதர்கள் எவ்வளவுகாலம் அசுத்த நினைப்புகளைக் கொண்டிருக்கிறார்களோ, அவ்வளவு காலமும் அசுத்தமும் விஷமும் கலந்த இரத்தத்தைக் கொண்டிருப்பார்கள். சுத்த ஹிருதயத்திலிருந்து சுத்த வாழ்க்கையும் சுத்த சரீரமும் உண்டாகின்றன. அசுத்த மனத்திலிருந்து அசுத்த வாழ்க்கையும் அசுத்த சரீரமும் உண்டாகின்றன. செய்கை, வாழ்க்கை. நடக்கை என்பவற்றிற்கு நினைப்பே ஊற்று. ஊற்றைச் சுத்தப்படுத்துங்கள். அனைத்தும் சுத்தமாயிருக்கும். தனது நினைப்புகளை மாற்றிக்கொள்ளாத மனிதன் தனது உணர்வுகளை மாற்றிக் கொள்வதால் பயனில்லை. தனது நினைப்புகளைச் சுத்தமாக்கிக் கொண்ட மனிதன் அசுத்த உணவை விரும்பமாட்டான். சுத்த நினைப்புகள் சுத்தமான பழக்கங்களை உண்டு பண்ணுகின்றன. உடம்பைக் கழுவிக் கொள்ளாத மகாத்மா என்போன், மகாத்மா அல்லன். தனது நினைப்புகளைப் பலப்படுத்திச் சுத்தப்படுத்திக் கொண்டவன் பிணியைத் தரும் பூச்சிகளுக்குப் பயப்பட வேண்டிய நிமித்தம் இல்லை. நீங்கள் உங்கள் சரீரங்களைக் காக்க விரும்புவீர்களாயின், உங்கள் மனத்தைக் காப்பீர்களாக; உங்கள் சரீரங்களைப் புதுப்பிக்க விரும்புவீர்களாயின், உங்கள் மனத்தைச் சுத்தப்படுத்துவீர்களாக. பகைமையும், பொறாமையும் ஆசாபங்கமும், ஏக்கமும் பொருந்திய நினைப்புகள் சரீரத்தினின்றும் அதன் ஆரோக்கியத்தையும் அழகையும் பறித்துக்கொள்கின்றன. ஒரு கடுகடுத்த முகம் தற்செயலாக உண்டாவதன்று. அது கடுகடுத்த நினைப்புகளாலேயே உண்டாகின்றது. முகத்தின் அழகைக் கெடுக்கும் திரைகள் மடமையாலும், காமக் குரோதங்களாலும் கர்வத்தாலும் உண்டாகின்றன. தொண்ணூற்றாறு வயதுள்ள ஒரு ஸ்திரீயை யான் அறிவேன். அவளுடைய முகம் பன்னிரண்டு வயதுள்ள ஓர் பாலிகையின் முகத்தைப்போல மாசற்றதாகவும், பிரகாசமுள்ளதகாவும் விளங்குகின்றது. ஒரு யௌவன புருஷனை யான் அறிவேன். அவனுடைய முகம் ஓர் வயோதிகனுடைய முகத்தைப்போல விகாரமாயிருக்கிறது. இவற்றில் ஒன்று பிரகாசமும் இனிமையுமுள்ள மனோவிர்த்தியின் பயனாக உண்டாயிருக்கிறது. மற்றொன்று காமக்குரோதமும் அதிருப்தியுமுடைய மனோவிர்த்தியின் பயனாக உண்டாயிருக்கிறது. அறைகளுக்குள் காற்றும் வெளிச்சமும் ஏராளமாகச் செல்லும்படி விட்டாலன்றி உங்கள் வாசஸ்தலம் இன்பத்தையும் சுகத்தையும் நல்காது. அதுபோல உங்கள் அகத்துள் சந்தோஷமும் நல்லெண்ணமும் சாந்தமுமான நினைப்புகளைத் தாராளமாக விட்டாலன்றி, உங்கள் சரீரம் அரோக்கியமும் உரமும் பெற்றிராது. உங்கள் முகம் பிரகாசமும் அழகும் இனிமையும் பொருந்தியிராது. வயோதிகர்களுடைய முகங்களில் இரக்கத்தால் உண்டான திரைகளும், பலமும், பரிசுத்தமும் பொருந்திய நினைப்பால் உண்டான திரைகளும், காமக் குரோதங்களால் உண்டான திரைகளும் இருக்கின்றன. அவற்றைப் பிரித்து அறியமாட்டாதார் யார்? நல்லொழுக்கத்தில் வாழ்நாளைக் கழித்தவர்களுக்கு விருத்தாப்பிய தசை அஸ்தமிக்கும் சூரியனைப் போன்று, சாந்தமும், சமாதானமும், இனிமையும் பொருந்தியிருக்கும். யான் சில காலத்துக்கு முன்னர் ஒரு தத்துவ ஞானியை அவரது மணரப்படுக்கையில் பார்த்தேன். அவருக்கு வயது முதிர்வைத் தவிர விருத்தாப்பியம் உண்டாகவில்லை. அவர் எவ்வளவு இன்பத்தோடும், சமாதானத்தோடும் வாழ்ந்திருந்தனரோ, அவ்வளவு இன்பத்தோடும் சமாதானத்தோடும் இறந்தனர். சரீரத்தின் வியாதிகளை நீக்குவதற்கு உற்சாக நினைப்புக்குச் சமமான வைத்தியன் இல்லை. கவலையையும் துக்கத்தையும் போக்குவதற்கு நன்மனம் போன்ற நட்பு வேறில்லை. ஒருவன் பகைமையும், இகழ்ச்சியும், சந்தேகமும், பொறாமையும் பொருத்திய நினைப்புகளில் இடைவிடாது வாழ்ந்து கொண்டிருத்தல், தானே உண்டாக்கிக் கொண்ட சிறையறையில் தான் அடைபட்டிருக்கும்படி செய்யும். ஆனால் எல்லாரையும் நல்லவராக நினைத்தலும், எல்லாரோடும் உற்சாகமாயிருத்தலும், எல்லாரிடத்துமுள்ள நன்மைகளைக் கண்டறியப் பொறுமையுடன் முயலுதலுமாகிய சுயநலமற்ற செயல்களே மோக்ஷ வீட்டின் வாயிலாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிராணியிடத்திலும் சமாதான நினைப்புகளைக் கொண்டு வாழ்தல் அந் நினைப்புகளை உடையார்க்கு அளவற்ற அமைதியைக் கொடுக்கும்.   ''அறவி னைக்கும் அரும்பொருள் இன்பொடு பெறுவ தற்கும் பெருங்கல்வி கற்றுயர் விறலி னுக்கும் நல்வீரம் தனக்குஒண் துறவி னுக்கும் துணைமனம் என்பவே'' -------                         4. நினைப்பும் காரியமும் நினைப்பைக் காரியத்துடன் சம்பந்தப்படுத்தினாலொழிய, விவேகமான காரியசித்தி யொன்றையும் அடைதல் முடியாது. பெரும்பாலோர் வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் நினைப்பாகிய படகை அதன்போக்கில் விட்டுவிட்டுகின்றனர். இன்ன காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமென்ற இலட்சியமில்லாதிருத்தல் ஒரு பாவமாகும். தனக்கு அழிவும் ஆபத்தும் வராமலிருக்க விரும்புகிறவன் யாதோர் இலட்சியமின்றி இருத்தல் கூடாது. எவர் தமது வாழ்க்கையில் யாதொரு காரியத்தையும் இலட்சியமாகக் கொள்ளாதிருக்கின்றனரோ, அவர் பலஹீனத்தின் அறிகுறிகளாகிய சில்லரைத் தொந்தரை களுக்கும் எளிதில் இரையாவர். அப்பலஹீனக் குறிகள் மனதாரச் செய்யும் பாவங்களைப் போலவே, (ஆனால், வேறொரு வழியாக) தோல்வியையும், நஷ்டத்தையும், துக்கத்தையும் கொடுக்கும். ஏனெனில், பலத்தை விர்த்தி செய்து கொண்டிருக்கிற பிரபஞ்சத்தில் பலஹீனம் நீடித்து நிற்க முடியாது. ஒருவன் ஒரு நியாயமான காரியத்தைத் தன் உள்ளத்தில் குறிப்பிட்டுக் கொண்டு, அதனைச் செய்து முடிக்க முயற்சி செய்யவேண்டும். அவன் அக்காரியத்தைத் தனது நினைப்புகளைக் கவரும் மத்தியப் பொருளாகக் கொள்ள வேண்டும். அ•து அவனுடைய அக்கால சுபாவத்திற்கு ஏற்றபடி ஒரு வைதிக காரியமாகவோ, லௌகிக காரியமாகவோ இருக்கலாம். ஆனால் அ•து எ•தாயிருப்பினும், அதனிடத்தில் அவனது நினைப்பின் சக்திகளையெல்லாம் உறுதியாக ஒருமுகப்படுத்தல் வேண்டும். அக்காரியத்தைத் தனது பிரதான கடமையாகக் கொண்டு, கணத்தில் அழிந்துபோகும் மனோ விருப்பம், மனோராஜ்ஜியம், மனோபாவனை முதலியவற்றில் தனது நினைப்புகளைத் திரியவிடாமல் அதனைச் செய்து முடித்தற்கு முயலுதல் வேண்டும். இதுதான் தன்னடக்கத்திற்கும் மன ஏகாக்கிரகத்திற்கும் இராஜ பாட்டை. தான் கருதியுள்ள காரியத்தைச் செய்து முடித்தலில் பலமுறை தவறினும் (பலஹீனம் நீங்கிப் பலம் பெறுகிற வரையில் தவறுவது சகசமே) அவன் அடையும் ஒழுக்கத்தின் பலம் அவனுடைய உண்மையான வெற்றியின் அளவையாக இருக்கும். இ•து அவன் எதிர்காலத்தில் பெறும் வலிமைக்கும் வெற்றிக்கும் ஒரு புதிய அடிப்படையாகும். ''உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்; மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து''       -திருக்குறள் ஒரு பெரிய காரியத்தை உட்கொள்ளுவதற்குத் தகுதி இல்லாதவர், தமது கடமையை, அ•து எவ்வளவு சிறயதாகத் தோன்றினாலும், குறைவின்றிச் செய்து முடிப்பதில் தமது நினைப்புகளையெல்லாம் செலுத்த வேண்டும். இவ்வழியாக நினைப்புகளை ஒருமுகப்படுத்தவும், ஊக்கத்தையும் மனவுறுதியையும் வளர்க்கவும் கூடும். இவற்றைச் செய்து முடித்த பின்னர் அவரால் செய்து முடிக்க முடியாத காரியம் ஒன்றுமே இராது. மிக்க பலஹீனமுள்ள ஒருவன், தனது பலஹீனத்தை அறிந்தும், முயற்சியினாலும்அப்பியாசத்தினாலும் மாத்திரம் பலம் விர்த்தியாகும் என்ற உண்மையை நம்பியும், அந்நம்பிக்கையொடு அப்பொழுதே முயற்சி செய்ய ஆரம்பித்து, முயற்சியின்மேல் முயற்சியையும், பொறுமையின் மேல் பொறுமையையும் பலத்தின்மேல் பலத்தையும் சேர்ப்பானாயின், அவன், இடைவிடாது விர்த்தியாகிக் கொண்டே போய், முடிவில் தெய்வ பலத்தையடைவான். சரீரபலம் இல்லாதவன் இடைவிடாமல் பொறுமையுடன் சரீரப்பயிற்சி செய்து தன்னைப் பலசாலியாகச் செய்துகொள்ளுதல் போலப் பலஹீன நினைப்புகளையுடையவன் சரியான நினைப்புகளை நினைக்கப் பழகித் தனது நினைப்புகளைப் பலமுடையவாக்கிக் கொள்ளலாம். இலட்சியமில்லாமையையும் பலஹீனத்தையும் நீக்குதலும், காரியத்தை முன்னிட்டு நினைக்க ஆரம்பித்தலுமாகிய இவ்விரண்டும் தோல்வியைக் காரியசித்திக்குரிய வழிகளில் ஒன்றாகக் கருதுபவருடைய கூட்டத்திலும், சகல நிலைமைகளையும் தமக்குப் பொருந்துமாறு செய்து கொள்பவருடைய கூட்டத்திலும், உறுதியாக நினைத்து அச்சமின்றித் தொடங்கித் திறமையாகச் செய்து தங்கள் காரியத்தை முடிப்பவருடைய கூட்டத்திலும் பிரவேசிக்கச் செய்யும். ஒருவன் தான் செய்து முடிக்க வேண்டிய காரியத்தைத் தீர்மானித்துக் கொண்ட பின்னர், அதனைச் செய்து முடித்தற்குரிய நேர்வழியை மனத்தில் குறித்துக் கொண்டு, இப்படி அப்படிப் பிறழாமல், அவ்வழியில் செல்ல வேண்டும், ஐயங்களையும் அச்சங்களையும் கண்டிப்பாக நீக்கிவிட வேண்டும். அவை நேர்வழியைக் கெடுத்துக் கோணலாக்கி, முயற்சியைப் பயனற்றதாகவும் பிரயோஜனமற்றதாகவும் செய்கின்றவை. ஐயமும் அச்சமும் பொருந்திய நினைப்புகள் ஒரு காலத்தும் ஒன்றையும் செய்து முடித்ததுமில்லை. செய்து முடிக்கப் போவதுமில்லை. அவை எப்பொழுதும் தோல்வியையே அடையச் செய்யும். ஐயமும் அச்சமும் வந்து சேர்ந்தவுடனே உறுதியான நினைப்பும் ஊக்கமும், ஆற்றலும் காரியமும் அழிந்து போகின்றன. ஒரு காரியத்தைச் செய்ய எழும் விருப்பம், நாம் அதனைச் செய்து முடித்தல் கூடும் என்ற அறிவினால் உண்டாகின்றது. ஐயமும், அச்சமும் அறிவின் பெரிய விரோதிகள். அவற்றை அழிக்காது, அவற்றிற்கு இடம் கொடுத்துவிட்டால், அவை தான் செல்லும் வழியில் அடிதோறும் தன்னைத் தடுத்துக் கொண்டிருக்கும். ஐயத்தையும் அச்சத்தையும் வென்றவனுக்குத் தோல்வியென்பதே கிடையாது. அவனது ஒவ்வொரு நினைப்பும் மிகுந்த வலிமையைக் கொண்டிருக்கிறது. அவன் சகல கஷ்டங்களையும் தைரியத்தோடு எதிர்த்து விவேகத்தோடு ஜயிக்கின்றான். அவனது காரியங்களாகிய செடிகள் தக்க பருவத்தில் நடப்பட்டிருக்கின்றன. அவை மலர்ந்து வெம்பி யுதிராத கனிகளைத் தருகின்றன. காரியத்தோடு நிர்ப்பயமாகச் சேர்க்கப்பட்ட நினைப்பு சிருஷ்டி செய்யும் சக்தியாகின்றது. எவன் இதனை அறிகிறானோ, அவன் அசைந்து கொண்டிருக்கிற நினைப்புகளும் ஓடிக்கொண்டிருக்கிற உணர்ச்சிகளும் சேர்ந்துள்ள ஒரு வெறும் சுமையாயிராது, மேன்மையும், பலமுமுள்ளவனாவான். எவன் இதனைச் செய்கிறானோ அவன் தனது மனோசக்திகளை விவேகத்தோடும் அறிவோடும் கையாள்கிறவனாகின்றான்.   ''நல்ல செய்து நரரை யுயர்த்தவும் அல்ல செய்தங் களற்றிடை யாழ்ப்பவும் வல்ல திந்த மனமல தையனே இல்லை யென்ன இயம்பும் மறையெலாம்''                     5. நினைப்பும் காரியசித்தியும் ஒரு மனிதன் செய்து முடிப்பனவும், செய்து முடிக்கத் தவறுவனவும், அவனது நினைப்புகளின் நேரான பலன்கள். சமநிலை இழத்தலே சர்வநாசம் எனக் கொள்ளத் தக்கவாறு, நியாயமாக நடத்தப்படும் பிரபஞ்சத்தில், அவனவன் செய்கைக்கு அவனவன் பொறுப்பாளி. ஒருவனது பலஹீனமும் பலமும், சுத்தமும் அசுத்தமும், அவனுக்குச் சொந்தமானவை. அவை அவனால் உண்டானவை. மற்றொருவனால் உண்டானவையல்ல. ஆகவே, அவற்றை மாற்றக்கூடியவன் அவனே; மற்றொருவன் அல்லன். அவனது நிலையும் அவன் தேடிக்கொண்டதே; மற்றொருவன் தேடியதன்று. அவனது துன்பமும் இன்பமும் அவன் அகத்திலிருந்தே வெளிவந்தவை. அவன் எங்ஙனம் நினைக்கிறானோ, அங்ஙனமே இருக்கிறான். அவன் எங்ஙனம் நினைத்து வருகிறானோ, அங்ஙனமே இருந்து வருகிறான். ஒரு பலஹீனன் ஒரு பலவானிடத்தில் உதவி பெற விரும்பினாலன்றி பலவான் அவனுக்கு உதவிசெய்தல் முடியாது. அப்படி உதவி செய்தாலும், பலஹீனம் தானாகவே பலவானாதல் வேண்டும். அவன் மற்றொருவனிடத்தில் கண்டு அதிசயிக்கும் பலத்தைத் தன் சொந்த முயற்சியால் அடையவேண்டும். தன்னிலையைத் தானே மாற்றிக் கொள்ளலாமேயன்றி வேறெவனும் மாற்ற முடியாது. ''ஒருவன் ஹிம்சிக்கிறவனாயிருக்கிறபடியால் அநேகர் அடிமைகளாயிருக்கின்றனர். நாம் ஹிம்சிக்கிறவனை வெறுப்போம்'' என்று மனிதர் நினைப்பதும் சொல்வதும் வழக்கம். ஆனாலும், தற்காலத்தில் சிலர் (இவர் தொகை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது) இந்தக் கொள்கையை மாற்றி, ''அநேக ஜனங்கள் அடிமைகளாயிருப்பதால் ஒருவன் ஹிம்சிக்கிறவனாயிருக்கிறான். நாம் அவ்வடிமைகளை இகழ்வோம்'' என்கிற கொள்கையை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையை நோக்குமிடத்தில் ஹிம்சிப்பவனும் அடிமையும் மடமையில் ஒத்துழைக்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் துன்பப்படுத்துவதாகத் தோன்றினும் அவர்கள் உண்மையில் தம்மைத் தாமே துன்பப்படுத்திக் கொள்கின்றனர். ஹிம்சிக்கப்பட்டவனது பலஹீனத்திலும் ஹிம்சித்தவனது துர்வினியோகமான சக்தியிலும், விதியின் செயலை ஒரு பூரண அறிவு காண்கின்றது. இவ்விரண்டு நிலைமைகளாலும் உண்டாகிற துன்பத்தைப் பார்த்து பூரண அன்பு ஒன்றன்மீதும் குற்றங் காண்பதில்லை. ஹிம்சிக்கிறவன் ஹிம்சிக்கப்படுகிறவன் ஆகிய இருவரையும் ஒரு பூரண அருள் மார்போடு அணைத்துக் கொள்கின்றது. பலஹீனத்தை ஜயிற்து, சுயநல நினைப்புக்களெல்லாவற்றையும் ஒழித்துவிட்டவன் ஹிம்சிக்கிறவனையாவது ஹிம்சிக்கப்படுகிறவனையாவது சேர்ந்தவன் அல்லன்; அவன் சுயாதீனன். ஒருவன் தனது நினைப்புகளை மேம்படுத்துவதால் மாத்திரமே உயர்வும் வெற்றியும் காரியசித்தியும் பெறுதல் கூடும். தனது நினைப்புகளை மேம்படுத்தாவிட்டால் அவன் பலஹீனமும் கீழ்மையும் தரித்திரமும் உற்றேயிருப்பான். லௌகிக காரியங்களிலும் ஒரு மனிதன் சித்திபெறுவதற்குமுன் தனது நினைப்புகளைச் சிற்றின்பஇச்சைகளில் அமிழ்த்தாமல் உயர்த்தல் வேண்டும். அவன் காரியசித்தி பெறுவதற்குத் தனது சிற்றின்ப இச்சைகளையும் சுயநலத்தையும் பூரணமாக ஒழித்தல் வேண்டா; அதில் ஒரு பாகமாவது ஒழித்தல் வேண்டும். சிற்றின்பஇச்சையே முதன்மையான நினைப்பாகக் கொண்டுள்ள ஒரு மனிதன் தெளிவாக நினைப்பதும் ஒழுங்காகக் காரியங்களை ஆலோசிப்பதும் முடியா; அவன், தன்னுள் மறைந்து கிடைக்கும் சக்திகளைக் கண்டறிந்து பூர்த்தி செய்ய முடியாமல், தான் எடுத்த எந்த வேலையிலும் தவறுவான். தனது நினைப்புகளை ஆண்மையுடன் அடக்கியாளத் தொடங்காததால், அவன் தனது காரியாதிகளைச் செய்து முடிக்கவும், அதிகப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவும் தக்க நிலைமையில் இல்லை. அவன் சுயாதீனமாக ஒன்று செய்யவும், சார்வில்லாமல் தனியாக நிற்கவும் தகுதியற்றவன். அவன் கொள்கிற நினைப்புகளே அவனுடைய சக்திக் குறைவிற்குக் காரணம். அபிவிர்த்தியாவது காரியசித்தியாவது கஷ்டப்பட்டாலன்றி உண்டாகாது. ஒருவன் தனது குழப்பமான சிற்றின்ப நினைப்புகளை ஒழித்துத் தனது ஆலோசனையை வளர்ப்பதிலும், தனது தீர்மானத்தையும் சுயநம்பிக்கையையும் பலப்படுத்துவதிலும் எவ்வளவுக்குத் தன் மனத்தைச் செலுத்துகிறானோ, அவ்வளவுக்கு லௌகிக காரியசித்தி உண்டாகும். அவன் தனது நினைப்புகளை எவ்வளவு அதிகமாக மேம்படுத்துகிறானோ, அவ்வளவு அதிகமாக ஆண்மையும் நேர்மையும் ஒழுக்கமும் உள்ளவனாகி அவன் மேம்படுகிறதும் தவிர, அவனது காரியங்களும் அதிக இன்பம் தருவனவாய் நீடித்து நிற்கின்றன. பிரபஞ்சம் பேராசைகளுக்கும் அயோக்கியனுக்கும் பாவஞ்செய்கிறவனுக்கும் அநுகூலம் செய்வதுபோல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும், உண்மையில் அவ்வாறு செய்வதில்லை. அது யோக்கியனுக்கும் பெருந்தகையாளனுக்கும் புண்ணியஞ் செய்கிறவனுக்கும் உதவி செய்கிறது. முற்காலத்துப் பெரிய ஆசிரியர் எல்லோரும் இவ்விஷயத்தை வெவ்வேறு வார்த்தைகளால் வெளியிட்டிருக்கின்றனர். இதனை அறிந்து கொள்ளவும், மற்றவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத்திக் காட்டவும் வேண்டினால், ஒருவன் நாளுக்கு நாள் தனது ஒழுக்கத்தை மென்மேலும் விர்த்தி செய்ய இடைவிடாது முயலவேண்டும். ஞானத்தை அடைவதற்காவது, அல்லது பிரகிருதியிலும் வாழ்க்கையிலுமுள்ள அழகுகளையும் உண்மைகளையும் கண்டறிவதற்காவது சமர்ப்பிக்கப்பட்ட நினைப்பின் பலனாக விவேகசித்திகள் உண்டாகின்றன. அத்தகைய சித்திகள் சில சமயங்களில் வீண்பெருமையோடும் பேராசையோடும் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஆனால், அவை அக்குணங்களிலிருந்து உண்டானவையல்ல, அவை சுயநலமற்ற சுத்த நினைப்புகளினின்றும், நெடுங்கால அரிய முயற்சிகளினின்றும் இயல்பாயுண்டானவை. ஆண்மசித்திகள் பரிசுத்தமான கோரிக்கைகளின் பலன்கள். எவன் இடைவிடாமல் உயர்ந்த நினைப்புகளையும் சிறந்த நினைப்புகளையும் நன்கு கொண்டு வாழ்கிறானோ, எவன் பரநயமும் பரிசுத்தமுள்ள பலவற்றிலும் நினைப்பைச் செலுத்திகிறானோ, அவன் சூரியன் உச்சம் அடைவதும் சந்திரன் பூரண வடிவை அடைவதும் எவ்வளவு நிச்சயமாக அவ்வளவு நிச்சயமாக ஞானத்தையும் ஒழுக்க மேம்பாட்டையும் அடைவான். செல்வாக்கும் இன்பமுமுள்ள ஸ்தானத்திற்கு உயர்வான். எவ்வகையான காரியசித்தியும், முயற்சியும் முடிவும், நினைப்பின் மகுடமுமாகும். தன்னடக்கம், துணிவு, தூய்மை, நடுவுநிலைமை, நன்றாகச் செலுத்தப்பட்ட நினைப்பு இவற்றின் உதவியால் மனிதன் உயர்கிறான். சிற்றின்ப இச்சை, சோம்பல், அசுத்தம், அநீதி, மனக்குழப்பம் என்பனவற்றால் மனிதன் தாழ்கிறான். ஒரு மனிதன் இவ்வுலகத்தில் மிகவுயர்ந்த ஸ்தானத்திற்கும், ஆன்ம உலகத்தில் மிகவுயர்ந்த பதவிகளுக்கும் உயரலாம். பின்னர் அகங்காரமும், சுயநலமும், அயோக்கியதையும் பொருந்திய நினைப்புகளுக்கு இடம் கொடுத்துப் பலஹீனத்திற்கும் தரித்திரத்திற்கும் தாழலாம். நியாயமான நினைப்பால் பெற்ற வெற்றிகளை எச்சரிக்கையோடு போற்றிக் காக்கவேண்டும். வெற்றி பெறுகிற சமயத்தில் அங்ஙனம் செய்யாமல் அனேகர் மறுபடியும் தோல்வியுறுகின்றனர். தொழிலுலகம், புத்தியுலகம், ஆன்மவுலகம் இவற்றில் எதிலானாலும் பெறுகின்ற சித்திகள், குறித்த வழிகளில் சரியாகச் செலுத்தப்பட்ட நினைப்பின் நேரான பலன்கள். அவையெல்லாம் ஒரே விதியால் ஆளப்படுகின்றன. அவையெல்லாம் ஒரே தன்மையனவாயிருக்கின்றன. வித்தியாசமெல்லாம் அடையும் பொருளில் உள்ள வித்தியாசமே. சிறிய சித்தி பெற விரும்புகிறவன் சிறிது கஷ்டப்படவேண்டும். பெரிய சித்தி பெற விரும்புகிறவன் பெரிது கஷ்டப்படவேண்டும். மிக உன்னதமான நிலையை அடைய விரும்புகிறவன் மிகமிக கஷ்டப்படவேண்டும்.       6. மனோதிருஷ்டிகளும் மனோசிருஷ்டிகளும் மனோதிருஷ்டியுடையார் உலகத்தின் இரக்ஷகர் ஆவர். மனோதிருஷ்டியாவது, விழித்துக்கொண்டு பல நல்ல காரியங்களை நினைப்பிற் கண்டுகொண்டிருத்தல். ஸ்தூல உலகம் சூக்ஷ்ம உலகத்தை ஆதாரமாகக் கொண்டிருத்தல் போன்று, மனிதர் பாவங்களையும் இழிவான செயல்களையும் செய்யும்போதும், கஷ்டங்களை அநுபவிக்கும் போதும், தம்மைச் சேர்ந்த மனோ திருஷ்டியாளரது அழகிய மனோதிருஷ்டிகளால் போஷிக்கப்படுகின்றனர். மனித சமூகம் தனது மனோ திருஷ்டியாளரை மறுத்தல் முடியாது. அவருடைய மனோ சிருஷ்டிகள் மங்கிப் போகவும், அழிந்து போகவும் விடுதல் முடியாது. அ•து அம்மனோ சிருஷ்டிகளில் வாழ்கின்றது. அவை ஒரு காலத்தில் பிரத்தியக்ஷத்தில் காணவும், அறியவும் தக்க உண்மைகள் என்று அ•து அறியும். நூலாசிரியரும், சில்பிகளும், சித்திரகாரரும், பாவலரும், தீர்க்கதரிசிகளும், ஞானிகளுமே மறு உலகத்தைக் கட்டுகிறவர்கள். மோக்ஷ உலகத்தை நிருமிப்பவர்கள். அவர்கள் வாழ்ந்திருந்ததனாலேயே இவ்வுலகம் செவ்வி பெற்றிருக்கின்றது. அவர்கள் இல்லாத பக்ஷத்தில் உழைத்து வருந்தும் மனித சமூகம் அழிந்து போயிருக்கும். எவன் தன் ஹிருதயத்தில் ஓர் உயர்ந்த மனோ சிருஷ்டியை, ஓர் அழகிய மனோ திருஷ்டியைப் பேணி வருகிறானோ அவன், அதனை ஒரு காலத்தில் பிரத்தியக்ஷத்தில் காண்பான். கொலம்பஸ் என்பவர் வேறோர் உலகக் காட்சியைத் தம் மனத்தில் பேணி வந்தார். அவர் அதனைக் கண்டுபிடித்தார். கோப்பர் நிக்கஸ் என்பவர் பல உலகங்களுடைய காட்சியையும் ஒரு பெரிய பிரபஞ்சத்தினுடைய காட்சியையும் தம் மனத்தில் ஓம்பி வந்தார். அவர் அவற்றை கண்டார். புத்தர் மாசற்ற அழகும் பூரண சாந்தியுமுள்ள ஒரு மோக்ஷ உலகத்தின் காட்சியைத் தமது மனத்தில் பார்த்து வந்தார். அவர் அதனுள் பிரவேகித்தார். உங்கள் மனோ திருஷ்டிகளைப் பேணுங்கள். உங்கள் மனோ திருஷ்டிகளை ஓம்புங்கள். உங்கள் ஹிருதயத்தில் உண்டாகின்ற அழகையும், உங்கள் தூய நினைப்புகளை அலங்கரிக்கும் அன்பையும் பரிபாலியுங்கள்; ஏனெனில், எல்லா இன்ப நிலைமைகளும், எல்லா மோக்ஷ சாதனங்களும் அவற்றினின்று வெளிப்பட்டு வளரா நிற்கும். நீங்கள் அவற்றை உண்மையாகப் போற்றி வருவீர்களாயின், அவற்றாலே முடிவில் உங்கள் உலகத்தை நிருமித்துக் கொள்ளலாம். அவாவுதல் அடைதற்கே, கோருதல் பெறுதற்கே. மனிதனது மிக இழிந்த அவாக்கள் முற்றும் நிறைவேறுவனவாயிருக்க, அவனது மிக உயர்ந்த விருப்பங்கள் ஆதரிப்பில்லாது பலன்களைத் தராமல் வீண்போதலுண்டா? நியதி அத்தகைய நிகழ்ச்சிக்கு இடங்கொடாது. அத்தகைய நிலைமை ஒரு பொழுதும் நேராது. ''அழுத பிள்ளை பால் குடிக்கும்''. உங்கள் மனத்தில் உயர்ந்த காட்சிகளைக் காணுங்கள். நீங்கள் காணும் காட்சிகள் போலவே ஆவீர்கள். இப்போது நீங்கள் காணும் காட்சியே இனி நீங்கள் பெறும் பேற்றுக்கு அறிகுறி. உங்கள் மனோ சிருஷ்டியே நீங்கள் முடிவில் அடையும் பதவிக்கு முற்குறி. எப்படிப்பட்ட பெரிய பேறும் முதலில் சில காலம் ஒரு மனோ திருஷ்டியாகத்தான் இருந்தது. ஆலமரம் வித்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றது. பறவை முட்டைக்குள் காத்துக் கொண்டிருக்கின்றது. ஆன்மாவின் மிக மேலான மனோ திருஷ்டியில் விழிப்புண்டாக்கும் ஒரு தேவதூதன் நடமாடுகிறான். அப்பிரத்தியக்ஷமான மனோ திருஷ்டிகள் பிரத்தியக்ஷ சித்திகளின் வித்துகள். உங்கள் நிலைமைகள் பொருத்தமில்லாதனவாய் இருக்கலாம். ஆனால், நீங்கள் ஒரு மனோபாவத்தைக் கொண்டு அதனை அடைவதற்கு முயன்றால் அந்நிலைமைகள் நீடித்து இருக்கமாட்டா. நீங்கள் அகத்தில் நடந்து கொண்டு புறத்தில் நின்று கொண்டிருக்க முடியுமா? ஆரோக்கியமற்ற ஒரு தொழிற்சாலையில் நெடுநேரம் வேலை செய்து, வித்தியாப்பியாசம் இல்லாமல், ஆசார உபசாரங்கள் அறியாமல் வறுமையாலும் உழைப்பாலும் மிக வருந்தும் பாலியன் ஒருவன் இதோ இருக்கிறான். அவன் அந்நிலைமையில் இருக்கும்போதே மேலான நிலைமைகளைத் தனது மனத்தில் கண்டு வருகிறான். அவன் அறிவு, நாகரிகம், அருள், அழகு முதலியவற்றைப் பற்றி நினைக்கிறான். ஒருவித வாழ்க்கையை மனத்தில் சிருஷ்டிசெய்து மனோரதம் செய்கிறான். அதிகச் சுதந்திரமும் மேலான நோக்கமும் பொருந்திய காட்சி அவனைப் பற்றிக் கொண்டிருக்கிறது. அவன் ஆத்திரம் அவனைச் செயலின்கண் தூண்டுகிறது. அவனுக்கு ஒழிவான சிறிய காலத்தையும் மீதியான அற்பப் பொருளையும் கொண்டு, வெளிப்படாமல் மறைந்து கிடந்த தன் சக்திகளை விர்த்தி செய்து வருகிறான். அத்தொழிற்சாலைக்கு அவனுக்குப் பொருந்தாத விதத்தில் அவன் மனோநிலை வெகுவிரைவில் மாறி வருகின்றது. அத்தொழிற்சாலை அவன் மனோநிலைக்கு மாறாகிவிட்டமையால், அது அவனுக்கு வேண்டாத உடைபோல அவனைவிட்டு நீங்கி விடுகின்றது. அவன் மனோநிலைக்கேற்ற சந்தர்ப்பங்கள் வாய்த்த அளவில் அவன் அச்சாலையை விட்டு ஸ்திரமாக வெளி வந்துவிடுகிறான். அப்பாலியன் சில வருஷங்களுக்குப் பின் நல்ல முழு மனிதனாயிருப்பதைக் காண்கிறோம். அவன் மனத்தின் சில சக்திகளைத் தன் வசப்படுத்தி அவற்றை நிகரற்ற வல்லமையோடும் உபயோகிக்க நாம் பார்க்கிறோம். இப்பொழுது பார தூரமான காரியங்களுக்கு அவன் சூத்திரதாரியாயிருக்கிறான். இதோ பாருங்கள்! அவன் நாவசைந்தால் நாடசைகிறது அவன் ஏதோ சொல்லுகிறான். அவ்வளவிலே எத்தனையோ பேருடைய வாழ்க்கைகள் மாறுதல் அடைகின்றன. அவன் என்ன சொல்லுகிறானென்று ஆண்களும் பெண்களும் அவாவோடு கேட்கிறார்கள் தங்கள் ஒழுக்கங்களைச் சீர்திருத்துகிறார்கள். மத்தியமாயுள்ள சூரியனை ஆதாரமாகக் கொண்டு பல கோளங்கள் சுற்றி வருவதுபோல, அவனை ஆதாரமாகக் கொண்டு எண்ணில்லாத மனிதர்களுடைய விதிகள் சுற்றி வருகின்றன. அவனுக்குப் பாலியத்தில் தோன்றிய மனோ திருஷ்டி இப்பொழுது பிரத்தியக்ஷ அநுபவமாக இருக்கிறது. அவன் தனது மனோ சிருஷ்டியோடு ஐக்கியமாகியிருக்கிறான். இதனை வாசிக்கிற பாலியர்களே! நீங்களும் உங்கள் ஹிருதயத்தில் காணும் காட்சி (சோம்பல் விருப்பம் அன்று) உயர்ந்ததாயிருப்பினும், தாழ்ந்ததாயிருப்பினும், அல்லது அவ்விரண்டினும் கலப்பாயிருப்பினும், அதனைப் பிரத்தியக்ஷத்தில் அநுபவிப்பீர்கள். ஏனெனில், 'நீங்கள் எதனை அந்தரங்கத்தில் அதிகமாக நேசிக்கிறீர்களோ அது தன்னிடமாக உங்களை இழுக்கின்றது. உங்கள் சொந்த நினைப்புகளின் நேரான பலன்களே நீங்கள் கைகாணும் பலன்கள். நீங்கள் எதனைத் தேடுகிறீர்களோ அதனைப் பெறுவீர்கள். அதற்கு அதிகமாகவுங் கிடையாது. குறைவாகவுங் கிடையாது. உங்கள் தற்கால நிலைமை எதுவாயினுஞ் சரி. உங்கள் நினைப்புகளும், உங்கள் மனோ திருஷ்டிகளும் உங்கள் மனோ சிருஷ்டிகளும் உயர்ந்தால், நீங்களும் உய்வீர்கள்; அவை தாழ்ந்தால் நீங்களும் தாழ்வீர்கள். அவை எவ்விதம் இருக்கின்றனவோ, அவ்விதமே நீங்கள் இருப்பீர்கள். உங்களை ஆளும் அவா சிறயதாயின், நீங்களும் அதற்கேற்பச் சிறியரே ஆவீர்கள்; உங்களை ஆளும் கோரிக்கை பெரிதாயின், நீங்கள் அதற்கேற்றபடி பெரியவர்கள் ஆவீர்கள். ஸ்டாண்டன் கிர்க்காம் டேவிஸ் என்பவர் அலங்கரித்துச் சொல்லியபடி, ''நீங்கள் கணக்கராய்க் கணக்குகள் எழுதிக் கொண்டிருக்கலாம். திடீரென ஒரு நாள் எழுந்து, உங்கள் மனோ சிருஷ்டிகளுக்குத் தடையாக நெடுங்காலம் தோன்றிக்கொண்டிருந்த உங்கள் அறையை விட்டு வெளியே செல்வீர்கள்; அவ்விடத்தில் உங்கள் உபந்தியாசத்தைக் கேட்பதற்குச் சித்தமாயிருக்கும் அநேகரைக் காண்பீர்கள்; இன்னமும் உங்கள் காதில் எழுதுகோலும் உங்கள் விரல்களில் மைக்கறையும் இருக்கலாம். உங்கள் மனத்தின் ஆவேச ஞானத்தைத் தாரையாகப் பொழிவீர்கள். நீங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் ஆடு மேய்க்கும் சத்தத்தோடும் திறந்த வாயோடும் நகரத்துக்குச் செல்ல, உங்கள் ஆவேசம் உங்களை ஒரு சித்திரக்காரனிடம் தள்ளிக்கொண்டு போகலாம். சில நாள் கழிந்தபின் சித்திரக்காரன் உங்களைப் பார்த்து; 'நான் இனிமேல் உங்களுக்குக் கற்பிக்க வேண்டுவது ஒன்றுமில்லை' என்று கூறலாம். சமீபகாலத்தில் ஆடுகளை ஓட்டிக் கொண்டிருந்த பொழுது பெருங்காரியங்களை மனோரசித்துக் கொண்டிருந்த நீங்கள், இப்பொழுது சித்திரக்காரராகி விட்டீர்கள். கம்மியத் தொழில் செய்து கொண்டிருந்த நீங்கள் இவ்வுலகத்தைச் சீர்திருத்துமாறு உங்கள் வாளையும் இழைப்புளியையும் ஒழித்து விடுவீர்கள். ஆலோசனையில்லாதவர்களும் பாமரர்களும் சோம்பர்களும் உண்மைகளைக் கவனியாமல், அவைகளின் வெளிப்படையான காரியங்களை மாத்திரம் பார்த்து யோகமென்றும், அதிர்ஷ்டமென்றும், தற்செயலென்றும் பேசி கொள்வதுண்டு. ஒருவன் பணக்காரனாகிறதைப் பார்த்து; 'இவன் எவ்வளவு அதிர்ஷடசாலி'' என்கின்றனர். மற்றொருவன் புத்திசாலியாயிருக்கிறதைப் பார்த்து 'இவனுக்கு எவ்வளவு நல்ல பாக்கியம் கிடைத்திருக்கிறது'' என்று வியத்துரைக்கின்றனர். வேறொருவனது துறவொழுக்கத்தையும் விரிந்த செல்வாக்கையும் பார்த்து, 'இவனுக்கு ஒவ்வொரு வழியிலும் எப்படித் தற்செயலாக உதவிகள் வருகின்றன'' என்கின்றனர். இவர் தமது அநுபவங்களைப் பெறுவதற்கு விருப்பத்தோடு பட்டிருக்கிற கஷ்டங்களையும் அடைந்திருக்கிற தோல்விகளையும், செய்திருக்கிற போராட்டங்களையும் அவர் பார்க்கின்றிலர். இவர் ஹிருதயத்தின் காட்சியைப் பிரத்தியக்ஷத்தில் கொண்டு வருவதற்கும், இவருடைய மார்க்கங்களில் கடக்க முடியாதனவாகத் தோன்றிய இடையூறுகளை நீக்குவதற்கும் இவர் செய்திருக்கிற தியாகங்களையும், துணிகரமான முயற்சிகளையும், இவர் கொண்டிருந்த கொள்கைகளையும் பற்றி அவர்கள் ஒன்றும் அறியார்கள். இவர் பட்ட கஷ்டங்களையும் அறியாது, இவரது ஞானத்தையும் சாந்தியையும் மாத்திரம் பார்த்து, அதற்குக் காரணம் ''அதிருஷ்டம்!'' என்று கூறுகின்றார்கள்; இவரது நீடிய கஷ்டமான யாத்திரையைப் பாராது, இவர் சேர்ந்திருக்கும் இடத்தை மாத்திரம் பார்த்து, அதனை ''நல்லயோகம்' என்று சொல்லுகின்றார்கள். இவர் செய்த முயற்சிகளைக் கவனியாது, இவர் பெற்றுள்ள பலனை மாத்திரம் அதனைத் 'தற்செயல்' என்கிறார்கள். மனிதரது சகல காரியங்களிலும் முயற்சிகளும் உண்டு. பலன்களும் உண்டு. முயற்சி எவ்வளவோ, பலனும் அவ்வளவே. காலமென்றாவது, அதிர்ஷ்டமென்றாவது, ஒன்று இல்லை. சாமர்த்தியங்களும், சக்திகளும் உலகவுடைமைகளும், அறிவுடைமைகளும், மோக்ஷவுடைமைகளும் முயற்சியின் பலன்கள்; அவை முற்றுப்பெற்ற நினைப்புகள் செய்து முடித்த காரியங்கள் அநுபவித்த மனோ திருஷ்டிகள். உங்கள் மனத்தில் நீங்கள் போற்றிவரும் திருஷ்டியோ உங்கள் ஹிருதயத்தில் நீங்கள் உன்னதமாக வைத்திருக்கும் சிருஷ்டியோ, உங்கள் வாழ்க்கையை ஆக்கிக்கொள்வதற்குக் கருவியாகும். அதுவே நீங்கள் ஆவீர்கள். ----                                        7. சாந்தி சாந்தி, ஞானத்தின் அழகிய ஆபரணங்களில் ஒன்று. அது தன்னை (உடம்பையும் நினைப்பையும்) அடக்கியாளுதலிலே பொறுமையுடன் நீண்ட காலம் செய்த முயற்சியின் பலன், அதன் உடைமை முதிர்ந்த அநுபவத்தையும் நினைப்பின் செயல்களையும் நியதிகளையும் நன்குணர்ந்த அறிவையும் காட்டும் ஒரு குறி. தான் நினைப்பிலிருந்து பரிணமித்த ஒரு பிராணியென்று மனிதன் எவ்வளவாக அறிகிறானோ; அவ்வளவாக அமைதியாக அடைகிறான். ஏனெனில், நினைப்பின் காரியமாகவே பிறரும் உண்டாயிருக்கின்றனரென்று அறிவதற்கு அவ்வறிவு ஏதுவாகின்றது. அவன் சரியாக அறியுந் தன்மையை வளர்த்துக் காரணாகரிய நியதியால் காரியா காரியங்களின் உட்சம்பந்தங்களை மேலும்மேலும் தெளிவாகக் காண்பதனால், வீணில் அலப்புவதும், கோபிப்பதும், கவலைப்படுத்தும், துக்கிப்பதும் இல்லாமல், நிலையாய், நிதானமாய்ச் சாந்தமாயிருக்கிறான். அமைதியுள்ள மனிதன், தன்னை அடக்கியாளக் கற்றுக் கொண்டபடியால், மற்றவர்களோடு இணங்கி நடக்கும் வழியை அறிகிறான். அவர்களும் அவனது ஞானாதிக்கத்தை மதித்து, அவனிடமிருந்து சில கற்கலாமென்றும், அவன்மீது நம்பிக்கை வைக்கலாமென்றும் உணர்கிறார்கள். ஒருவன் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக அமைதியுள்ளவனாகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய காரிய சித்தியும், செல்வாக்கும், நன்மை செய்யும் சக்தியும் அதிகரிக்கின்றன. ஒரு சாதாரண வியாபாரியும், அடக்கத்தையும் அமைதியையும் விர்த்தி செய்து வந்தால், அவனுடைய வியாபாரம் விர்த்தியாவதைக் காண்பான். ஏனெனில், மிகவும் அமைதியான ஒழுக்கமுள்ளவனிடத்தில் கொடுக்கல் வாங்கல் செய்யவே ஜனங்கள் பிரியப்படுவார்கள். திடமும் அமைதியுமுள்ள மனிதனிடத்தில் எல்லோரும் எப்பொழுதும் அன்பும் மதிப்பும் பாராட்டுவார்கள். அவன் பாலைவனத்தில் நிழல் தரும் ஒரு மரத்தை ஒத்தவன். அமைதியான மனத்தையும், இனிமையான வாழ்க்கையும், நிதானமான வாழ்க்கையையும் விரும்பாதவர் எவர்? இந்நற்குணங்கள் வாய்ந்தவர்களுக்கு மழை பெய்தாலும் வெயில் காய்ந்தாலும், வேறு எவ்விதமாறுதல் உண்டானாலும் ஒன்றுமில்லை. ஏனெனில், அவர்களிடத்தில் இனிமையும் நிதானமும் சாந்தமும் எக்காலத்துமுண்டு. நாம் சாந்தி யென்று சொல்லும் ஒழுக்கமானது கல்வியின் கடைசிப் பாடமாகும். அதுவே வாழ்க்கையின் மலரும், ஆன்மாவின் கனியும் ஆகும். அது ஞானத்தைப் போல் அருமையானது. தங்கத்தினும்-ஆம், பத்தரை மாற்றுத் தங்கத்தினும்-அதிகமாக விரும்பத்தக்கது. உண்மைக் கடலில் எதற்கும் சலிக்காமல் வாழும் நிதான வாழ்க்கையொடு வெறும் தனார்ச்சிதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் தனார்ச்சிதம் எவ்வளவு அற்பமாய்த் தோன்றுகிறது? ''நாம் தினந்தோறும் காண்கின்ற மனிதரில் எத்தனை பேர் தமது அருமையான உயிர்களை வருத்துகின்றனர்? எத்தனை பேர் கடுகடுத்த முகமும் வெடுவெடுத்த பேச்சும் கொண்டு இனிமையும் அழகையும் கெடுக்கின்றனர்? எத்தனை பேர் சமாதானத்தை அழித்துப் பகைமையை ஆக்குகின்றனர்? எத்தனை பேர் நிதானமான ஒழுக்கத்தை விடுத்து நீங்காத துன்பத்தை அடைகின்றனர்? தன்னை அடக்கியாளும் சக்தி இல்லாமல் தமது வாழ்நாள்களை வீணாக்கித் தமது இன்பங்களைக் கெடுத்துக் கொள்வோர் உலகில் பெரும்பாலரல்லரோ என்பது ஒரு வினா. சான்றாண்மைக்குரிய சிறப்பியல்பான அழகிய சமாதானத்தோடு வாழ்பவர் மிகச் சிலரல்லரோ. இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே விதமாகக் கொள்ளும் சமநிலையான மனத்தையுடையவர் மிகச் சிலரல்லரோ?'' ஆம்! மனித சமூகம் அடைக்கியாள முடியாத காமக்குரோதங்களால் அலைப்புறுகின்றது. அடக்க முடியாத துக்கத்தால் கதறுகின்றது. கவலையாலும் ஐயத்தாலும் கதறுகின்றது. தனது நினைப்புகளை அடக்கிப் பரிசுத்தப்படுத்திய ஞானியே ஆன்மாவை அலைக்கழிக்கும் புயல்களையும் காற்றுகளையும் தனக்குப் கீழ்ப்படியச் செய்கிறான். புயல் காற்றில் அடிப்பட்டவையாக நின்ற ஆன்மாக்களே! நீங்கள் எவ்விடத்தில் இருப்பினும், நீங்கள் எத்தகைய நிலைமைகளில் வாழினும், இதனைத் தெரிந்து கொள்ளுங்கள்-வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் ஆனந்தகரமான தீவுகள் சிரித்துக் கொண்டிருக்கின்றன. உங்கள் மனோ சிருஷ்டியான அழகிய கரை உங்கள் வரவிற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. நினைப்பாகிய சுக்கானை உங்கள் அறிவாகிய கைகளால் தளராமல் பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஜீவனாகிய ஓடத்தில் அதனை நடத்தும் ஆன்மாவாகிய மாலுமி படுத்திருக்கிறான்; அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான். அவனை எழுப்புங்கள். தன்னடக்கமே வலிமை; சரியான நினைப்பே ஆண்மை; அமைதியே ஆற்றல். உங்கள் ஹிருதயத்தைப் பார்த்து, ''கவலைகொள்ளாதே, சாந்தியா யிரு'' என்று சொல்லுங்கள்.             []