[]   மனம் துடிக்கும் (கவிதைத் தொகுப்பு)  தம்பலகாமம். த. ஜீவராஜ்   tjeevaraj78@gmail.com      அட்டைப்படம் : த.ஜீவராஜ் - tjeevaraj78@gmail.com  மின்னூலாக்கம் :சீ.ராஜேஸ்வரி - sraji.me@gmail.com    வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை  - Creative Commons Attribution -Non- Commercial ShareAlike     உரிமை –  எல்லாரும் படிக்கலாம், பகிரலாம், விற்பனை கூடாது        என்னுரை []   சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு வலைப்பதிவராக இணையவெளியில் சங்கமித்த அந்த ஆரம்ப காலங்களில் நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து மனம் துடிக்கும் என்ற இந்த மின்னூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.  நான் வாழும் சமூகத்தில் என்னுடைய பணி வரலாற்றைப் பதிவு செய்வதும், வரலாற்று மூலங்களை ஆவணப்படுத்துவதும்தான் என தீர்க்கமானதாக முடிவெடுத்து அதன்படி இயங்கத்தொடங்கிய பல வருடங்களின் பின்னர் எழுதத்தொடங்கிய ஆரம்ப நாட்களை அசைபோட்டுப்பார்க்கும் மகிழ்வான நிகழ்வாக இந்த மின்னூல் வெளிவருகிறது. வலைப்பதிவிலும், சமூக வலைப்பக்கங்களிலும், நேரிலும் தொடர்ந்து உற்சாகமூட்டிவரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.   நட்புடன் ஜீவன். Dr.த.ஜீவராஜ் ( MBBS, MCGP) www.geevanathy.com  tjeevaraj78@gmail.com      காப்புரிமைத் தகவல்   []   இந்த மின்னூல் Creative Commons Attribution-NonCommercial-ShareAlike குறிப்பிடுதல் – இலாப நோக்கமற்ற – அதே மாதிரிப் பகிர்தல்(CC-BY-NC-SA) என்ற பதிப்புரிமையின் (Copyright)  கீழ் பகிரப்படுகிறது.    மூல உரிமங்கள்     Attribution குறிப்பிடுதல் / Attribution (by)  ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, பகிர, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தகுந்த முறையில் அல்லது வேண்டப்பட்ட முறையில் படைப்பாளிகள் குறிப்பிடப்படுதல் வேண்டும். மூல படைப்பாளி மற்றும் மூல படைப்பு கிடைக்கும் இடம் போன்ற தகவல்களை அளித்தே பகிர வேண்டும்.       Non-commercial இலாபநோக்கமற்ற / NonCommercial (nc)  ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இலாப நோக்கமற்ற நோக்கங்களுக்கு மட்டுமே. விற்பனை செய்யக்கூடாது.   Share-alike அதே மாதிரிப் பகிர்தல் / ShareAlike (sa)  வழிபொருட்களை முதன்மை ஆக்கத்துக்குரிய அதே உரிமங்களோடே விநியோகிக்க முடியும்.                                       துடிப்புகள் என்னுரை 3  1. மனம் துடிக்கும் 10  2. உயிர் உருக்கும் நினைவுகள் 12  3. சிரிக்கக் கற்றுக்கொடுத்தவள் 14  4. காதலின் மொழி 16  5. கடவுள் எழுதிய கவிதை 18  6. பொய்கள்... 19  7. வலிக்கும் வார்த்தைகள் 21  8. கனவுதேசம் 23  9. மழையில் கரையும் இதயம் 24  10. சுதந்திரம் 25  11. கலங்குகின்றோம் கண்பாருங்கள்.. 27  12. பைத்தியக்காரர்கள் 28  13. சிறைவைக்கப்பட்ட வீடு 29  14. மீள்குடியமர்வு 31  15. எழுதப்படாத கடிதம் 33  16. இது இறுதி அழைப்பு 34  17. வலி வந்தவனுக்குத்தான் தெரியும் 36  18. மீளும் நினைவுகள் 38  19. ஆனந்தக் கண்ணீர் 40  20. எல்லாமே முடிந்துபோயிருந்தது 42  1. மனம் துடிக்கும்   நிலவு பிடிக்கும் நிலவெறிக்கும் நாளில் வரும் –உன் நினைவு பிடிக்கும் நினைவுகளில் வந்தொலிக்கும் கொலுசு பிடிக்கும் கொலுசுகளைக் கூட்டிவரும் பாதங்கள் நடந்துபோன பாதைபிடிக்கும்- நீ கடந்துபோன பின்னும் என் சிந்தைவிட்டகலா உன் சிரித்த முகம் பிடிக்கும்   காற்றுக் கலைத்துவிளையாடும் காதோரக் கூந்தல் பிடிக்கும் கதைகள் சொல்லி இடையில் ‘கடி’க்கையில் சிவக்கும் கன்னம் பிடிக்கும்   கவிதைசொன்ன வேளைகளில்-நீ கண்ணிமைக்காதிருந்த கணங்கள் பிடிக்கும் திடீரெனக் கண்டதில் சிந்தை தடுமாறிப்பின் நீ சிரிக்க முன்சிரித்த வளையல் பிடிக்கும்   கைகள் பேசிய மொழி பிடிக்கும் கண்கள் சொல்லிய கவி பிடிக்கும் தென்றல் திருடிவரும் உன் மணம் பிடிக்கும் திருமணம் முடித்திடுவென்று என் மனம் துடிக்கும்.                        2. உயிர் உருக்கும் நினைவுகள்   வருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது   சின்னதாய் உடல்சுட்டாலும் பதறியடித்துப் பண்ணும் காரியங்கள் ஆக்கினைதான் என்றாலும் வருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது   உப்பும், மிளகாயும் ஒன்றாய்ச் சேர்த்து மூன்றுமுறை தலைசுற்றி தூ,தூ எனத்துப்பி அடுப்பினுள் போட்டு அதுவெடிக்கையில் கண்ணூறு கழிந்ததாய் களிகொள்வாள்   வயிற்றுவலி வந்தால் சாமிமுன்னின்று மந்திரம் சொல்லி வலிகொண்ட இடத்தில் திருநீறு தடவி ஆ.. காட்டச்சொல்லி அதற்குள்ளும் தூவி அடுத்தகணமே மாறுமென ஆனந்தங்கொள்வாள்   இப்படிச் சொல்லிக் கொண்டேபோகலாம் சுகப்படுத்தும் வழிமுறைகளை   உயர் கல்விக்காய் நான் ஊர்விட்டகலையில் கொடுத்தனுப்பிய மருந்துப்பட்டியலில் தவறிப்போயிருந்தது தாயன்பொன்றுதான்   ஓடித்திரியும் நாட்களைவிட உடல் ஒத்துழைக்கமறுக்கும் வேளைகளில் உயிர் உருக்கும் அவள் நினைவுகள்                                   3. சிரிக்கக் கற்றுக்கொடுத்தவள்   நீ புன்னகைக்கும் போதெல்லாம் –என்னுள் புதுரெத்தம் பாய்கிறது உண்மையைச் சொல் செவ்விதழ்களை நீ திறந்துகொள்வது சிரிப்பதற்கா? அல்லதெனைச் சிலிர்ப்பூட்டுவதற்கா?   தினமும் எழுந்து சிந்திக்கிறேன் பெண்ணே –உன் சிரிப்புக்குவமைகளை கடைசியில் என்னையே நான் நிந்தித்துக்கொள்கிறேன் வராத வார்த்தைகளுக்காய்   நிட்சயமாய்ச் சொல்வேன் நீதானெனக்குச் சிரிக்கக் கற்றுக்கொடுத்தவள் –என் வாழ்வின் மனஇறுக்கங்களால் தோன்றிய வேதனைகளுக்கு நீ மரண தேவதை   அதுவோர் காலங் கண்ணே எல்லோருக்கும் விடிந்திருக்கும் நான்மட்டும் இருட்டில் நடந்து கொண்டிருப்பேன் உன் புன்னகைப் பொற்கரங்கள் என்னிமைகளைத் தட்டித்திறக்காதவரை   நினைத்துப் பார்க்கிறேன்-நாம் பேசிக்கொண்டதைவிட பிரியமாகச் சிரித்துக்கொண்ட பொழுதுகள் ஏராளம் ஒருவேளை முறைத்துக் கொண்டால்கூட அதுயார் முதலில் சிரித்துக்கொள்வதென்பதற்காகவே இருந்திருக்கும்.   விலகிப் போனபின்னும் நீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும் சேமித்து வைத்திருக்கிறேன் என் சின்ன இதயத்தில் என்றாவதொருநாள் நினைத்து எனக்குள் நானே சிரித்துக் கொள்வதற்காய்.                                   4. காதலின் மொழி   இருவருக்கும் இடையில் கூப்பிடு தூரந்தான் இடைவெளி- இருந்தும் எதுவுமே பேசவில்லை இதுவரையில் நாம்   குரல்நாண்களின் வேலை நிறுத்தத்தால் வெப்பக்காற்று மட்டும் வெளியேறிக் கொண்டிக்கிறது பெருமூச்சாக   சுற்றி நின்றவர் பேசினர் தூரத்தில் குயில் கூவியது வாகனங்கள் இரைந்தன வாலாட்டியபடி வந்த நாய் சும்மா குரைத்துப்போனது இன்னும் எத்தனையோ இரைச்சல்களுக்கு மத்தியில் எந்தவித ஒலியும் எழுப்பத் திரணியற்றவர்களாய் உறைந்திருக்கிறோம் நாம்   நினைத்துப் பார்க்கிறேன் நிறையவே நாம் பேசியிருக்கிறோம் வருந்தியதும் உண்டு சொல்லிய சில வார்த்தைகளுக்கும் சொல்லாமல் போனத்தற்குமாக   இப்போது நமக்கிடையே நிசப்த்தம் நிறைந்திருக்கிறது வார்த்தைகள் வலுவிழந்துபோக இதயம் விழித்துக்கொள்கிறது நிறையவே பகிர்ந்து கொள்ளகிறோம் நீ நினைத்ததும் நான் நினைத்ததும் நாம் நினைத்ததாக   சந்தேகம் வருகிறது அப்படியென்றால் –காதலில் சத்தங்கள் வெறும் சம்பிருதாயந்தானா என்று                                           5. கடவுள் எழுதிய கவிதை   கண்களைமூடிக் கைகளைக் கூப்பியிருந்தான் அவன் இதயம் மட்டும் திறந்திருந்தது எதிரே நிற்கும் எழிலின் இமைகள் திறக்கும் எப்போதென்று   தன்னைத் தியானிப்பவன் கொஞ்சம் தவமும் செய்யட்டுமேயென்று எல்லாம் தெரிந்தும் இறுக்கி மூடியிருந்தாள் இமைகளை அவள்   எதுவுமே தெரியாத சிலையாக இருவருக்கும் முன்னே நான்.                       6. பொய்கள்...   நானாகத் துரத்தவில்லை –உன்னால் தூக்கமிழப்பதாய்ச் சொல்லி துயர்கொள்ளவில்லை   வாழ்வும்,சாவும் உன் வாய்ச்சொல்லில்தானென்று உன்னைப் பேச்சிழக்கச் செய்யவில்லை   பிறந்தநாள் வாழ்த்தெழுதி அதைப் பிரித்துப் படிக்கச்சொல்லி-உன்னைநான் நிர்ப்பந்திக்கவில்லை   நீ போகும் பாதைபார்த்து நீண்ண்டநேரம் காவல்காத்து உன் வீடுவரை தொடரவில்லை   நீ கிழித்தெறிந்த காகித்ததை நெஞ்சின்மேல் ஒட்டிக்கொண்டு நித்திரை செய்யவில்லை   நினைவுகளில்,கனவுகளில் நீதானடியென்று கவிதை சொன்னதில்லை   எழுதிமுடித்த பேனாக்கள்- உன் எச்சில்பட்ட முடிந்துபோன ‘ஐஸ்’ கிறீம் குவளைகள் உதறியதில் வீழ்ந்த உன்னுடுப்புப் பொத்தான்களென்று எதையும் நான் சேகரித்ததில்லை நீ பார்க்க வேண்டுமென்று யாருக்கும் பிச்சை போட்டதில்லை நீ சிரிக்க வேண்டுமென்று சில்லறை ஜோக் அடித்ததில்லை நீயாக வந்து பேசியபோதும் நானாக எதையும் சொன்னதில்லை   உனக்குப் பிடிக்குமென்பதற்காய் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டு ஒத்துப்போனதாய்க் காட்டியதில்லை   இப்போது கூட இதையெழுதியது உனக்காக இல்லை.                                       7. வலிக்கும் வார்த்தைகள்     நிறையவே நான் வருந்தியதுண்டு சொல்லிய சில வார்த்தைகளுக்கும் சொல்லாமல் போனதுக்குமாக   இப்போது நினைத்தாலும் நெஞ்சின் ஏதோவோர் மூலையில் வலிக்கிறது என் ‘நா’ கக்கிய தீக்கள் எதிராளியை விட ஏராளம்தரம் என்னையே பொசுக்கிப் போயிருக்கிறது   ஏவமட்டுமே முடிந்த- மீள எடுக்கமுடியாத அம்புகளவை எத்தனையோமுறை நெஞ்சுருகி அழுதாலும் கழுவிடமுடியாத கறைகள்   நிதானக் கடிவாளத்தை நித்தமும் கொண்டுதிரிவதுண்டு நான் இருந்தும் நினைத்திரா வேளைகளில் படம்மெடுத்தாடும் பாம்பாய் –நா விசம்கக்கி விடுகிறது   ஆறுதல் படுத்துவதைவிடுத்து மற்றவர் நெஞ்சை அழித்திடும் ஆயுதமாகவே ஆகிடுமோ என்ற அச்சம் இப்போதொல்லாம் என்னை அயரவே விடுவதில்லை விழிப்புடனே இருக்கிறேன்   வலி வாளினால் மட்டுமல்ல வார்த்தைகளாலும் வருமென்பதால்.                                     8. கனவுதேசம்   நிலவொளியில் நீயும், நானும் சேர்ந்து நடக்கையில் - இது கனவுதேசம் என்றலவோ கருதத் தோன்றுது   பசுந்தறையில் அமர்ந்து நீயும் பாட்டுப்பாடையில் - சுற்றி மரத்தில் இருந்து ரசிக்கிறது குயிலினங்களே   பனி விழும் பாதைதனில் பயணம் செல்கையில் - நீ இறுக்கிப் பிடித்த கைவழியே என்னிதயம் உறையுதே   உரசிச்செல்லும் உந்தன்விழி தீயை மூட்டுதே - அதிலென் உணர்வுங் கொஞ்சம் கள்ளமாக குளிர்காயுதே   புரியவில்லை இந்த சுகம் புதுமையானதே - என்றும் புரிந்து கொண்டு வாழ்ந்துகொண்டால் சொர்க்கமானதே           9. மழையில் கரையும் இதயம்   மழை பொழியும் நாளில் மனம் மகிழ்ச்சி கொள்ளுது மனதிலுள்ள கவலையெல்லாம் மறைந்து போகுது   ஈரம் பட்ட மரங்களெல்லாம் சிலிர்த்து நிக்குது எழில் நிறைந்த பூக்களில் நம் இதயம் தொலையுது   கூடுதிரும்பும் பறவைக் கூட்டம் கோலம் போடுது வானில் சின்ன சின்ன மேகமெல்லாம் சிதறி ஓடுது   இடியிடிக்கும் போது மனம் பதறிப் போகுது இடையில் வரும் மின்னலினால் கண்ணும் கூசுது   குளிர் நிறைந்த காற்று வந்து உடலை வருடுது கொஞ்ச நேரம் நனைந்தாலே உயிரும் கரையுது.             10. சுதந்திரம்   விழிபிதுங்கி இருக்கிறேன் என் எண்ணங்களை எழுத்துருவாக்கும் வழி தெரியாது   சந்தங்கள், அர்த்தங்கள் தவிர்த்து நிறைய யோசிக்கவேண்டி இருக்கிறது   எழுதத் தொடங்கும் ஒவ்வொரு கணமும் ஆயிரம் கண்கள் - என் எழுத்தை வெறித்துப் பார்ப்பதாய் ஓர் பிரமை   எப்படி வரும்? ஈட்டிகளுக்கு நடுவில் இயல்பான கவிதை   நாட்டு நடப்புகளை எழுதத் தொடங்கையில் வரண்டு கொள்கிறது – நா   நெஞ்சில் பொறுத்திருக்கிறது எழுதி முடித்ததும் இருப்பேனா? என்ற பயம்   பக்கங்கள் நிரப்புவது தவிர்த்து என்ன சாதித்துவிட முடியும் இருப்பதை எழுதாமல்   வெறுத்துப் போய் எழுந்து சென்றேன் முடிந்திருந்தது பூசை பூட்டிய கோயிலுக்குள் பிள்ளையார்   சலித்துப் போய் விசாரித்ததில் திறந்திருந்தால் திருடர் பயம் என்றார்கள்   கடவுளே என்று எட்ட நின்று கும்பிடுகையில் கைதாகி இருக்கும் ஒருவரிடம் - என் ஆன்ம விடுதலைக்காய் வேண்டுவது போல் இருக்கிறது.   எழுத்துக்கு மட்டுமல்ல – என்னைப் பொறுத்தமட்டில் எல்லாவற்றுக்கும் தேவைப்படுவது போல் இருக்கிறது சுதந்திரம்.                               11. கலங்குகின்றோம் கண்பாருங்கள்..     இனிதே களிக்கும் முதுமைக் காலம் இழந்து தவிக்கும் எங்கள் நிலை கடைசி வரைக்கும் புரியுதில்லை கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளை   பேரர்களைப் பிரிந்து வாழும் வாழ்வுமது பிடிக்கவில்லை வீட்டைப் பிரிந்து முதியோர் இல்ல வாழ்க்கையது ருசிக்கவில்லை   திட்டக்கூட மனசு வரலை தேடிப்போக வழியுமில்லை பட்ட துன்பம் நினைவில் வந்து படுத்தும் பாடு கொஞ்சமில்லை   எட்ட நின்று பார்த்தால் போதும் ஏந்திழையாள் கெஞ்சுகின்றாள் பேசுதலே சிறுமையென்று பெற்ற பிள்ளை கலங்குகின்றான்   இத்தனைக்கும் செய்த பாவம் என்னவென்று புரியவில்லை பித்தனைப்போல் பிதற்றுகின்றேன் பேச்சிழந்து தவிக்கின்றேன்.   இச்சகத்தில் உள்ள இன்பம் -எமக் அத்தனையும் தேவையில்லை கடைசி நேர வாழ்க்கைக்காக கலங்குகின்றோம் கண்பாருங்கள் 12. பைத்தியக்காரர்கள்   கனவெல்லாம் எரிந்து சாம்பலாகிப்போன நாளொன்றில் தெருவில் தனித்திருந்து சிரித்துக் கொண்டிருந்தேன்   கடந்து போனவர்கள் பைத்தியம் என்றார்கள் தூரத்தில் போய்நின்று கல்லெறிந்தார்கள்   கூட்டமாய் நின்று -என் குலவரலாறு பேசினார்கள் ஏளனமாய்ப் பார்த்து எதுவும் பேசாமல் போனவர்களும் உண்டு   விதி சதி செய்து வீதிக்கு வந்த பின் வழிப்போக்கர் வாதங்களால் வாழ்க்கைக்கு என்ன பயன்   ம்....ம்.. யாருக்கும் புரிவதில்லை யாமறியோம், எல்லாம் உண்மை ஒரு பொல்லாப்புமில்லை எப்பவோ முடிந்த காரியம்.           13. சிறைவைக்கப்பட்ட வீடு   நேற்றுப்போல் இருக்கிறது நீண்டுவளர்ந்த தென்னைகள் நின்றணிசெய்த  பாதைவழியே தொடங்கிய –எம் நெடுந்தூரப் பயணம்.   உயிர்பிரிதல் பற்றிய உறுத்தலில் ஊர்பற்றிய உணர்வலைகள் ஒருவரிடமும் இல்லை அப்போது இப்போதுதான், எஞ்சியவர்களில் மிஞ்சியவர் இதயங்களில் ஊர்,உடைந்துபோன வீடு, இழந்து போன உறவுகள், அவர்தம் நினைவுகள் என்றெல்லாம் ஏக்கமாய்.   ஒன்றிரண்டாய் குடிவந்து ஊருக்கும் உயிர் வந்து ஒருவருடமாகிறது  நாங்கள் மட்டும் நடைப்பிணமாய் நண்பர்கள் வீட்டில்   நாள்தோறும் எதிர்பார்ப்பு நனைந்து போகிறது கண்ணீரில் பேச்சுக்கள், பேச்சுக்கான பேச்சுக்கள், அறிக்கைகள்,ஆர்ப்பாட்டம்,வாக்குறுதிகள் சமாதானத்துக்கான யுத்தம் என்றனைத்துக்கும் அப்பால் சிறைவைக்கப்பட்டிக்கிறது என் வீடு எப்போது உடையும் உயர் பாதுகாப்பு வலயம்.                                                                  14. மீள்குடியமர்வு   சொல்லிலடங்காத சோகங்களின் தொகுப்பு   பட்டவர் அன்றி மற்றவர் புரிந்திடா உணர்ச்சிகளின் குவியல்   கூரைபிளந்து வானம் பார்த்திருக்கும் வீடு   செடிகொடி வளர்ந்து காடாய்க் கிடக்கும் வளவு   குதுகலத்தோடு வாழ்ந்த குடிதனின் நிலைகண்டு குளமாகும் கண்கள்   அடியெடுத்துவைக்கையில் அன்னியப்படும் பயிர் நிலங்கள்   சிறப்பாய் வாழ்ந்த நாட்கள் சிந்தையில் வட்டமிட்டிட   சின்னதில் செய்திட்ட குறும்பினைச் சொல்லிடும் சுவர்கள்   இருப்புக்கும் இழப்புக்குமிடையில் அல்லல்ப்படும் மனம்   சிரிப்பும், அழுகையும் சேர்ந்தேவரும் - ஆம் மீள்குடியமர்வென்பது எங்களுக்கு   மரணிப்புக்கு முன்னால் கிடைக்கும் மறுபிறப்பு.                                         15. எழுதப்படாத கடிதம்   எப்போதாவது தோன்றும் இதயத்தைப் பிழிந்து எடுத்த சாற்றில் -உனக்கு என் உணர்வுகளை எழுதவேண்டும் ஒருதரமாவது என்று   கடதாசி, இடையில் நிக்காத எழுதுகோல், எவரும் குழப்பாத அதிகாலை நேரம், எழுதியதும் உள்ளுக்குள் அழுத்தி ஒட்டிக்கொள்ள அஞ்சல்,முத்திரை, அனைத்துமே தயார்   எல்லாம் இருந்தும் எதுவுமே இயலவில்லை நெஞ்சுக்குள் வலி கண்களுக்குள் நீர் கைகள் விறைத்துப்போய்- சுவரை வெறித்துப்பார்த்தபடி கதிரையில் நான்.                       16. இது இறுதி அழைப்பு   உன்நினைவலைகள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டதில் என் நெஞ்சுக்குள் தீப்பிடித்துக்கொண்டது   எதற்காகவோ வந்த இனக்கலவரத்தில் எரிந்துபோன எங்கள் வீடுபோல் இப்போதெல்லாம் என் இதயவறைச் சுவர்கள் கரியவறைகளாகவே காட்சியளிக்கின்றன   அன்பே உன் கண்களென்ன அமெரிக்காவின் ஆயுதக்கப்பலா? ஒரு நொடி நீ உற்றுப்பார்த்ததில் ஓராயிரம் ஏவுகணைகள் என் இதயத்தில்   கொஞ்சும் மொழியும் குழிவிழும் கன்னத்தோடு வரும் குறுநகையும் உன் குங்கும இதழ்களில் இருந்து இடம் பெயர்கையில் நான் என்னையறியாமலேயே அனைத்திலும் இருந்து அன்னியப்பட்டு 'அகதி'யாய்ப் போகிறேன்   உன் ஒவ்வொரு அசைவுகளுமெனை உருக்குலைய வைக்கின்றன இந்த கொடுமை தாங்காதுதானே கோயிலுக்குள் தஞ்சமானேன் அங்கும் நீ குண்டெறிவாய் எனநான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை இப்போதுபார் என் இதயத்துக் கூரைபிளந்து உள்ளுக்குள் குற்றுயிராய் உன்னைப்பற்றிய நினைவுகள்   என்னுள்ளத்தைப் பொறுத்தமட்டில் வனிதையே – நீ வந்தேறு குடிதான் - நான் இலங்கைத் தமிழர் போல் இங்கேயே இருந்தவன் என்னபயனின்று நீ – ஆளும் அரசி நான் அனாதரவான அடிமை   சுயநிர்ணய உரிமைகொடு அல்லதென்னைச் சும்மாவாவது இருக்கவிடு   இல்லையெனில்   இறுதியாய்க் கேட்கிறேன் புறப்பட்டுவா - இருவருமோர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வோம் இல்லறமெனும் இறமைக்குள்     17. வலி வந்தவனுக்குத்தான் தெரியும்   முறிந்து போனதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுதானே முறையென்றாய் எனக்கென்னவோ அது முட்டாள்த்தனமாய்ப் படுகிறது   முடிந்ததும் மூடிவைப்பதற்கு – என் காதலொன்றும் கற்றல்களுக்கு மட்டுமான புத்தகமல்ல அகராதி அடிக்கடி திறந்து – என் அகவாழ்வின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ளுமிடம்   அது என் கனவுகளின் திறவுகோல் கவிதைகளின் உற்பத்தித்தானம் என் வாழ்வில் விரல்விட்டெண்ணக்கூடியதாய் விடிந்திருந்த பொழுதுகள்   அது அடுத்தவர்களால் புரிந்துகொள்ளமுடியாத சோகங்களின் தொகுப்பு ஆன்மாவின் அழுகையால் மட்டுமே ஆறுதல்படுத்தக் கூடிய வாழ்வியல் துன்பம்   தொலைந்து போனதற்காய் துயர்கொள்ளல் உடைந்துபோனதற்காய் உருக்குலைதல் எல்லாம் - உலக விலைகொள் பொருட்களுக்கு மட்டுமான விதிகளல்ல விலைபேசமுடியாத இதயத்தின் தொலைவுகளுக்கும் இதுபொருந்தும்   மன்னித்துக்கொள் என்னால் மரணத்திலும் - அவளை மறக்கமுடியாது உனக்குப் புதிராக இருக்கும்   வலி வந்தவனுக்குத்தான் தெரியும் வார்த்தைகளால் புரியவைக்கலாம் என்பது பொய்                   18. மீளும் நினைவுகள்     எப்போதும் போலவே சந்திப்புக்கள் சத்தத்தோடும் பிரிவுகள் மௌனத்தோடும் அரங்கேறிப்போனதன்றும்   யன்னலுக்கு வெளியே யுத்தத்தின் கோரம் பேரூந்துள் நம்மிடையே உணர்வுகளில் ஈரம்   சொல்ல நினைத்தவைகள் இதயத்தின் ஏதாவோர் மூலையில் எழமுடியாத ஆழத்தில் எப்படியோ சிக்கிக்கொள்ள பொறுக்கியெடுத்த சில வார்த்தைகளே போதுமாய் இருந்தது அப்போதுநாம் பேசிக்கொள்ள   பேசுபொருட்களெல்லாம் பெறப்பட்டவைகளாக நம்மைப் பொறுத்தமட்டில் பெறுமதியற்றவைகளாக இருக்க பேசவேண்டிய வார்த்தைகள் காற்றாகி கடைசியில் {பெரு} மூச்சாகி பேச்சின் இடையிடையே வந்து போனது.   இறுதிவரை நம் இதயத்துண்ர்வுகள் பற்றி எச்சரிக்கையாகவே இருந்தோம் விடைபெறும் வரை விதி நம் ‘நா’ விற்கு விலங்கிட்டிருந்தது   இப்போது கிடைத்தாலும் ஏறிப்பார்க்கிறேன் அந்த வழிப் பேரூந்தில் மணமுறிவு பெற்ற நம்மை மூன்றுமணிநேரம் ஒருமித்து உட்காரவைத்த கர்வத்தோடு உருக்குலையாமல் இருக்கும் அதன் இருக்கைகளை ஒருதரம்…                                         19. ஆனந்தக் கண்ணீர்   இது என் இறுதிக்கட்டம் வாழ்க்கைப் பயணத்திற்கு வரவிருக்கும் முற்றுப்புள்ளி ஆட்டங்கள் அடங்கி ஆறடிக்குள் அடைக்கலமாகும் முன் ஆண்டவன் தந்த அரிய சில நிமிடங்கள்   கணவனுக்காக கண்ணீர் விட்டாள் மனைவி தகப்பனுக்காக அழுதன பிள்ளைகள் உறவுக்காக ஒருகூட்டம் உருகியது கடனுக்காகவும், இன்னபிறவுக்குமாக யார்யாரோ அழுதார்கள்   எனக்குத் ‘திக்’ என்றது என் எழுபது வருட வாழ்வில் எனக்காக அழ எவரையும் சேகரிக்காமல் போனேனெ என்று   எட்டடி தள்ளி மெல்லிய விசும்பல் விழி ஊன்றிப்பார்த்தேன் என்வரவுப் பணத்தில் ஏதோவோர் சிறுதொகையால் வளர்ந்த ஏழைச்சிறுவன் இன்று எஞ்சினியராய்   இப்போது எனக்குள் நானே அழுதுகொண்டேன் ஆனந்தமாக                                                             20.  எல்லாமே முடிந்துபோயிருந்தது     எல்லாமே முடிந்து போயிருந்தது   ஊர்த்தொடக்கமே உதிரத்தால் உறைந்திருக்க வாழ்விழந்த மக்களது மரண ஓலம் வழியெல்லாம் ஒலித்துக்கொண்டேயிருந்தது   நீண்டு வளர்ந்த எத்தனையோ தென்னைகள் ஏற்றிருந்தன ‘செல்’ விழுப்புண்களை - இருந்து இலக்கின்றி விழுந்தவையெல்லாம் எதையாவது அழித்திருந்தன.   ‘மாலா’ அக்காவின் மண்வீட்டுக் கூரைபிளந்து கொழுவி இருந்த ‘தொட்டில்க் குஞ்சு’ தரையில் சிதறியிருந்தது அவசோகமாற்ற யாருக்கும் திரணியில்ல   கண்ணன் மாமா விமலன் அத்தான் பக்கத்து வீட்டுப் பரிமளம் புரிசன் இன்னும் எத்தனையோ இளசுகளெல்லாம் - கிராமத்தெல்லையிலேயே எமலோகம் அனுப்பப்பட்டிருக்கிறார்கள் பிணங்கள்கூட இன்னும் வயலில்தானாம்   சசி அக்கா குண்டு மாமி குஞ்சி மகள் என்று நீண்ட வரிசைக்கப்பால் என் கிராமமும் சேர்ந்து கற்பிளந்து போயிருந்தது.   பாதைகளில் ‘ரயர்’ குவியல் வீடுகளில் இரத்தக்கறைகள் வயல்வெளியில் பிணக்குவியல் இன்னும் எல்லாம் அப்படியே இருக்கிறது.   சிற்றூர் பிரளயத்தில் நாங்கள் மட்டுமல்ல கோணேசரும் தப்பவில்லை கோயிலெல்லாம் குண்டுதுளைத்து குற்றுயிராய் இருந்தது   எங்கோ ஏதோவோர் சண்டை நடந்ததற்காய் இங்குநாங்கள் சாம்பலாக்கப்பட்டிருக்கிறோம்.