[] []   ஆசிரியர் -  நிர்மலா ராகவன்  nirurag@gmail.com மின்னூலாக்கம் - தனசேகர் tkdhanasekar@gmail.com அட்டைப்படம் - மனோஜ்  socrates1857@gmail.com மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com    உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். பொருளடக்கம்  மண்ணில்லை பெண் 4  முன்னுரை 5  மானசீகக் காதல் 10  நாற்று 30  கண்ணாடிமுன் 50  போட்டி 69  காந்தியும் தாத்தாவும் 86  அடிபட்டவர் கை அணைக்குமா? 107  மோகம் 120  மாதா -பிதா -குரு 136  புறக்கணிப்பு 153  பாவம், அவள்! 168                       மண்ணில்லை பெண்                        (சிறுகதைத்தொகுப்பு)                                 நிர்மலா ராகவன்  முன்னுரை   உணர்ச்சி வசப்படும்பொது, சிலர் கத்துவார்கள், சிலர் மௌனம் சாதிப்பார்கள். வேறு சிலர், அந்த உணர்ச்சியை ஏற்காது, பொய்யாகச் சிரிப்பார்கள். நானோ, `ஏன் இப்படி?’ என்று யோசிக்க ஆரம்பிப்பேன்.      பிறரது துன்பங்களைப்பற்றிக் கேள்விப்படும்போது, அவை என்னையே தாக்குவதுபோல் ஒரு பிரமை எழ, எழுத்து வடிவில் ஒரு வடிகால், தீர்வு காண முயல்கிறேன். அப்படி எழுதியதுதான் `நாற்று’. இத்தொகுப்பின் தலைப்புக்குக் காரணமாக இருந்தது.        ஒரு திரைப்பட நடிகைமேல் காதல் வயப்பட்டு, அவளுக்குக் கல்யாணம் என்றால், தற்கொலைக்குக்கூடத் துணியும் ரசிகர்களைப்பற்றி படித்திருப்பீர்கள். அதேபோல், ஒரு பெண் எழுத்தாளர்மேல் பைத்தியமாக இருப்பவர்தான் `மானசீகக் காதல்’ கதையின் நாயகன். இத்தகைய ஒருதலைக் காதலுக்கு வயது ஒரு பொருட்டே இல்லை என்பது விசேஷம்.        நாற்பது வயதுக்குமேல் பெண்கள் அழகையும், இளமையையும் இழந்து, அவர்களது கணவன்மார்களின் கேலிக்கும் ஆளாவது சர்வசாதாரணமாக நம்மிடையே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்கள் தாமும் வயதானவர்களாகத்தானே -- அடர்த்தியான தலைமயிரை இழந்து, தொந்தி போட்டு -- ஆகிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப் பார்ப்பது கிடையாது. `கண்ணாடிமுன்’ பத்திரிகையில் வெளியானபோது, பல ஆண்கள், `ஒங்க கதையைப் படிச்சேங்க,’ என்று கூறிவிட்டு, வெட்கம் கலந்த சிரிப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். `மனித மனம் ஏன் இவ்வளவு வக்கிரமாக இருக்கிறது!’ என்று சிரித்தபடியேதான் நானும் இக்கதையை எழுதினேன்.         தம் மனைவியை பிறர் எதிரில் பழித்தால் தாம் உயர்ந்துவிடுவதைப்போல சில (பல?) ஆண்கள் நினைக்கிறார்கள். எல்லாவற்றையும், வாய் திறவாமல், ஏன் ஒரு பெண் ஏற்கிறாள் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். தொண்ணூறு வயதான ஒருவர், தான் பதினாறு வயதாக இருந்தபோது தன் தந்தை அம்மாவை ஓயாது அடித்ததால், அவர் முதுகில் ஏறி, குடுமியைப் பிடித்து உலுக்கி, `இனிமே அம்மாவை அடிக்கமாட்டேன்னு சொல்லு!’ என்று மிரட்டியதையும் வாய்கொள்ளாச் சிரிப்புடன் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின் தாக்கத்தால் `அடிபட்டவர் கை அணைக்குமா?’ கதையை ஆரம்பித்தேன். பாதியில் கதை நின்றுவிட்டது. ஒரு பெண் வதையை எப்படிப் பொறுத்துப்போகிறாள், அவளுக்கு உணர்ச்சியே கிடையாதா  என்பதற்கு விடை கிடைக்கவில்லை. `SLEEP ON IT’  என்று கூறுவார்களே, அதேபோல், கதையின் முடிவு கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு இரவு தூங்கப்போனேன். முடிவு எனக்கே ஆச்சரியத்தை விளைவித்தது. பெண்களுக்கு மிகவும் பிடித்த கதை இது. சில ஆண்களை அதிரவைத்தது (`நான் இவ்வளவு மோசமில்லையே?’).          குறிப்பிட்ட சில தெய்வங்களை வேண்டிக்கொண்டால், வெளிநாடு செல்ல விசா கிடைக்கும் என்று ஆன்மிகப் பத்திரிகைகளில் போடுவார்கள். வெளிநாடு சென்றவர்கள் எல்லாருமே மகிழ்ச்சியுடன் இருப்பதில்லை. கனவு வேறு, நிதர்சனம் வேறு என்று புரிய, கசப்படைகிறார்கள். உதாரணம்: `மோகம்’ கதையில் வரும் முடிவெட்டுத் தொழிலாளி. எல்லாவற்றையும் நானே விளக்கிவிட்டால் எப்படி! நீங்கள் படித்துத்தான் பாருங்களேன்!                                                                                                                                                                                                                                                                                                                                                                  நிர்மலா ராகவன்,                                                         மலேசியா                                                                                                                                           மானசீகக் காதல்   பெரியசாமி தினசரியின் ஞாயிறு பதிப்பைப் பிரித்தார். கொட்டையெழுத்தில் காணப்பட்ட அந்தப் பெயர் அவரை அலைக்கழைத்தது. யார் இந்த டி.எஸ்.விஜயலட்சுமி? நிச்சயம் ஒரு பெண் இவ்வளவு வெளிப்படையாக எழுதமாட்டாள். ஒரு வேளை, அவளுடைய கணவன் எழுதி, பிரச்னை எதிலும் மாட்டிக்கொள்ள விரும்பாத கோழையாக இருந்ததால், மனைவியின் பெயரில் தனது எழுத்துப் படிவங்களை அனுப்பிவிடுகிறானோ? எழுத்துத் துறையில் ஒரு ஜாம்பவான் என்று தன்னைப்பற்றி ஒரு கணிப்பு உண்டு பெரியசாமிக்கு. தான் அறியாத ஓர் எழுத்தாளர் இவ்வளவு பிரபலமாக ஆவதா! வழக்கம்போல, `நானும் ஒரு எழுத்தாளன்!’ என்று சொல்லிக்கொள்ளும் நாலுபேரைப் பார்த்துப் பேசும்போது, `டி.எஸ்.வியைத் தெரியாதா! நமக்கு ரொம்ப வேண்டியவங்களாச்சே!’ என்று பெருமை பேசிக் கொள்ளவாவது அவளுடைய அறிமுகம் வேண்டாமா? சுறுசுறுப்பாக காரியத்தில் இறங்கினார் பெரியசாமி. எப்பவும்போல, கோப்பிக்கடையில் அவர்களுடைய அரட்டை ஆரம்பித்தது. அங்கிருந்த நால்வரில் பெரியசாமி மட்டும்தான் இன்னும் உத்தியோகத்தில் இருந்தார்.  “இப்போ பத்திரிகையில அடிக்கடி எழுதறாங்களே, டி.எஸ்.விஜயலட்சுமின்னு!  அவங்களைத் தெரியுமோ ஒங்களுக்கு?” தன்னை யாராவது கேட்டு அவமானப்படுவதற்குள் முந்திக்கொண்டார் அவர்.   “அவங்களா! ஆம்பளைங்க சொல்லக் கூசறதைக்கூட பச்சை பச்சையா எழுதுவாங்களே!” நமட்டுச் சிரிப்புடன் ஒரு குரல் எழுந்தது.  “நல்லாச் சொன்னீங்க! நாம்பளும்தான் இருபது, முப்பது வருஷமா எழுதிக்கிட்டு இருக்கோம். இப்படியா வித விதமா, ஆண்-பெண் உறவு, கவர்ச்சி, மனக்கிலேசம்னு பிட்டுப் பிட்டு வெச்சோம்?” தொடர்ந்து அந்த எழுத்தாளினியின் அங்க லட்சணங்கள் விமர்சனத்திற்கு உள்ளாயின. அவளுடைய முகம் தோள்வரையே போட்டோவில் காணப்பட்டாலும், அதை ஆதாரமாக வைத்துக்கொண்டே மிகுந்ததை அவரவர் மூளைக்கு எட்டியபடி கற்பனை செய்து வர்ணிக்க ஆரம்பித்தார்கள்.  “போட்டோவைப் பாத்தா, முப்பது வயசுக்குள்ளேதான் இருக்கும்னு தோணுது!” என்றார் ஏகாம்பரம்.  “நீங்க ஒண்ணு! எந்தப் பொண்ணுதான் `எனக்கு வயசாகிடுச்சு’ன்னு ஒத்துக்கும்? அட, நம்ப வீட்டிலேயே பாக்கலியா? நான் சொல்றேன், இது பத்து, பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி எடுத்ததா இருக்கும். பாக்க சுமாரா இருக்கேன்னு அனுப்பி இருக்காங்க!” அடித்துப் பேசினார் சாமி.  டி.எஸ்.வி எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. அது வேறு நம்ப முடியாததாக இருந்தது அந்த நண்பர் குழாத்துக்கு. எண்ணி, இரண்டு கதைகள் எழுதிவிட்டு, அதன்பின் தமது கதைகளைத் தாங்கும் பேறு பெற்ற சிறுகதைத் தொகுப்பை எங்கு போனாலும் எடுத்துக்கொண்டு போய், எதிர்ப்படுபவர்களிடமெல்லாம் தமது பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்ந்தவர்களுக்கு, இப்படி `எழுத்தாள லட்சண’த்திற்கு முரணாக ஒருவர் அமைந்து இருந்தது நம்ப முடியாததாக இருந்தது. தனது வித்தியாசமான போக்காலேயே அந்த ஒருவர் தம்மைத் தட்டிக்கேட்பதுபோல் பயம் உண்டாயிற்று.  `நம் பெயர் நாலுபேருக்குத் தெரியவேண்டும் என்றுதான் எழுதுகிறோம். இதில் அடக்கம் ஒரு கேடா!’ என்ற எரிச்சல் எழுந்தது.  “நான் நினைக்கிறேன், இவங்களுக்கு ஒடம்பிலே ஏதோ குறை இருக்கணும்னு. திக்குவாயாக்கூட இருக்கலாம். அதான் சுயமதிப்பைக் கெடுத்துக்க வேணாம்னு ஒதுங்கியே இருக்காங்க!” சின்னக்கண்ணு தன் அனுமானத்தைத் தெரிவித்தார்.  அதை ஏற்பதுபோல் பெரியசாமி தலையாட்டி ஆமோதித்தார். தன்கூடப் பள்ளியில் படித்த சாங்கின் நினைவு வந்தது அவருக்கு. பிறவியிலேயே ஒரு கால் இன்னொன்றைவிட சற்றுக் குட்டையாக இருந்ததால், விந்திதான் நடக்க முடியும் என்ற பரிதாபகரமான நிலை அவனுக்கு. தன்னையே ஏற்றுக்கொள்ள  முடியாது, அதனால் கிளர்ந்த ஆத்திரத்தில், எந்த ஓட்டப் பந்தயமானாலும் கலந்துகொண்டு, அதில் முதலாவதாக ஜெயிப்பானே!  இப்படி டி.எஸ்.வியிடமும் நிவர்த்தி செய்ய முடியாத ஏதோ குறைபாடு இருக்கிறது. அதையே எண்ணி, ஓயாது மறுகாமல் இருக்கவே இப்படி எழுதுவதை வடிகாலாக வைத்துக்கொண்டிருக்கிறாள் என்று உறுதியாகத் தோன்றிப்போயிற்று. சற்று பச்சாதாபம் ஏற்பட்டது.  அவர்களது விவாதம் தொடர்ந்தது. இவள் ஏன் ஆண்-பெண் உறவைப்பற்றியே எழுதுகிறாள்? அட, ஏதோ உள்ளத்தில் புதைந்து கிடக்கும் கனவுகளை வெளிப்படுத்திக் கொள்கிறாளோ, என்னவோ! அப்படியே இருந்தாலும், எல்லார் கண்ணிலும் பட்டு, அவர்கள் வாயிலும் புகுந்து வரும்படி எப்படித்தான் பிரசுரத்திற்கு அனுப்புகிறாளோ!  “இன்னிவரைக்கும், `ஆம்பளைங்க தப்பு செய்யறாங்க, அவங்களாலேயும் தப்பு செய்ய முடியும்னு ஒருத்தராவது துணிஞ்சு எழுதி இருப்பாங்களா? இது தலையரட்டை!” அவர்களுள் மூத்தவரான ஏகாம்பரம் பொருமினார்.  “புருஷன்காரன் பாடுதான் பாவம்! எப்படித்தான் இதை சகிச்சுக்கிட்டுப் போறானோ!” என்று ஒருவர் தன் பங்குக்குச் சொல்ல, அந்த நண்பர்களின் கவனம் பூராவும் அந்த அப்பாவி ஆண்மேல் திரும்பியது.   ஒரு வேளை, குறை அவனிடம்தானோ? தாம்பத்திய உறவில் தான் எதிர்பார்த்த சுகம் கிடைக்காதுதான் டி.எஸ்.வி அதை எழுத்தில் தேடுகிறாளோ? குறை தன்னிடம் இருக்க, மனைவியைக் கோபிப்பது என்ன நியாயம் என்றுதான் கணவன் அவளை அவள் இஷ்டத்துக்கு விட்டு வைத்திருக்கிறான் என்று முடிவு செய்தார்கள்.  பெரியசாமி அந்த உரையாடலில் கலந்துகொள்ளாது மௌனமாக இருந்தார். அவளைப்பற்றி நண்பர்கள் தோற்றுவித்த இரக்கம் அவரை ஓயாமல் சிந்திக்க வைத்தது. `வேலையிலிருந்து அடுத்த வருடம் கட்டாய ஓய்வு பெறவேண்டுமே!’ என்று அவ்வப்போது தோன்றிய பயமும், குழப்பமும், போதாத குறைக்கு, `உடம்பும் முன்போல இல்லை. கீழே சற்று உட்கார்ந்து எழுந்திருந்தால் தலை சுற்றிப்போகிறது!’ என்று வேறு பல கவலைகளும் அவரை ஆட்டுவித்துக் கொண்டிருந்த நிலையில், ஓயாது தன்னைப்பற்றியே எண்ணிக் கொண்டிராமல், வேறு ஒருவரின் நினைப்பில் மூழ்கி இருப்பது சுகமாக இருந்தது.  தன்னை இவ்வளவு தூரம் ஆட்டுவிக்கும் அந்த டி.எஸ்.வியின் துயரத்தில் தானும் பங்குகொண்டு, அதைக் குறைக்க முடியவில்லையே என்று துக்கம் பீறிட்டது.   அந்த வருத்தம், “ராத்திரிக்கு ஒங்களுக்கு என்ன டிபன் செய்யணும்?” என்று கேட்டுக்கொண்டு வந்த நின்ற பார்வதியின்மேல் ஆத்திரமாக மாறியது.  “நீயும்தான் முப்பது வருஷமா என்னோட குப்பை கொட்டறே! தினமும் என்ன கேள்வி இது! எதையோ பண்ணித்தொலையேன்!” என்று எரிந்து விழுந்தார்.  சற்று விழித்துவிட்டு, அவள் உள்ளே போனாள்.  பார்வதி தோசை வார்த்தால், `எப்பவும் தோசைதானா இந்த இழவு வீட்டில்? தாகத்தாலேயே ஆள் செத்துடணும்னு பாக்கறியா?’ என்பார்.  சரிதான் என்று உப்புமா பண்ணுவாள், மறுநாள்.  `இது என்ன உப்புமா, களிமண்ணிலே கையை விடறமாதிரி! இட்லி, தோசை எதையாவது செய்யறதுக்கென்ன? அரிசி, உளுந்தை ஊறப்போட்டு அரைக்க நேரம் இல்லியோ மகாராணிக்கு? ஒக்காந்து ஒக்காந்து என்னதான் கிழிக்கறே?’ என்று அதற்கும் வசவு விழும்.  அவர் என்ன சொன்னாலும் வாயே திறக்கமாட்டாள் தர்மபத்தினி. பதிபக்தி என்றில்லை. பொதுவாகவே ஆண்களின் மனவக்கிரம் புரிந்துபோனதால், `நமக்குக் கொடுத்துவைத்தது இவ்வளவுதான்!’ என்ற விவேகம்.  சமீப காலமாக கணவர் ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது அவள் அறிந்ததுதான். ஒரு வேளை, தான் அவருக்கு அலுத்துவிட்டோமோ? நான்கு பிள்ளைகள் பெற்று, உரிய காலத்தில் உடலைப் பழைய நிலைக்குக் கொண்டுவர எந்தவித முயற்சிகளும் செய்யாததில், பார்வதி ஒரு நிரந்தர கர்ப்பிணித் தோற்றம் அமைந்தவளாக இருந்தாள். ஓயாமல் வீட்டு வேலை செய்ததில், சற்று கூன்வேறு.  பெரியசாமியும் அப்படியொன்றும் இளமை குன்றாது இருந்துவிடவில்லை. `எனக்கென்ன! வயசானவன்!’ என்று அடிக்கடி கூறிக்கொள்வார். அவ்வார்த்தைகளில் விரக்தி கிடையாது. எல்லாரும் மரியாதையாக, தன் சொற்படி நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் வெளிப்படும்.  மனைவியின் உயிரை வாங்கி, வித விதமாக அவளைச் சமைக்கவைத்துச் சாப்பிட்டதன் விளைவு பருத்த உடலில் தெரிந்தது. அதனால், வயதுக்கு மீறிய தள்ளாமைவேறு.  இதையெல்லாம் நன்றாக உணர்ந்திருந்தாலும், பார்வதிக்கு இப்போது அச்சம் ஏற்பட்டது.  வயதானால் பால்யம் திரும்புமாமே ஆண்களுக்கு? தன் போதாத காலம், யாராவது இளம்பெண்ணைப் பார்த்து மயங்கிவிட்டாரோ? பார்வதி அதிகம் குழம்ப வேண்டியிருக்கவில்லை. பெரியசாமியே ஒருநாள், சாப்பாட்டுக்குப் பிறகு ஆரம்பித்தார்: “இந்தக் கதையெல்லாம் எழுதறாங்களே, டி.எஸ்.விஜயலட்சுமின்னு..,” மேலே என்ன சொல்வது என்று புரியாமல் அவள் முகத்தையே பார்த்த்தார்.  என்றும் இல்லாத வழக்கமாக, தன்னையும் ஒரு பொருட்டாகக் கணவர் மதித்துப் பேசிய உற்சாகத்தில், “அவங்களா! என்னமா எழுதறாங்க! ஆபாசம் இல்லாம, ஆனா, உணர்ச்சிபூர்வமா.. ஆம்பளையோ, பொம்பளையோ, அவங்க மனசிலே இருக்கிறதை என்னமோ தானே பாத்துட்டு வந்தமாதிரி..,” என்று பேசிக்கொண்டே போனாள்.  ஆனால், `உன்னுடைய அபிப்ராயத்தை யார் கேட்டார்கள்?’ என்கிறமாதிரி பொறுமை குன்றிப்போய் அவர் மூக்கைச் சுளிக்கவும், உசிதம்போல் வாயை மூடிக்கொண்டு, அவர் பேசுவதைக் கேட்கத் தயாரானாள்.   “என்னமோ தெரியல. எனக்கு அவங்கமேல ஒரு.. ஒரு..,” என்றவர் சட்டென நிறுத்தினார்.   `காதல்’ என்று சொல்லப்போய், இந்த அறிவுகெட்டது எங்கேயாவது அழுது ஆர்ப்பாட்டம் செய்து, ஊரைக் கூட்டி நியாயம் கேட்கப் போய்விட்டால், தன் கௌரவம் என்ன ஆவது!   “எனக்கும் அவங்க எழுத்துமேல ஒரே இது!” என்று அசடு வழிந்தார்.  நிம்மதியையும் மீறி பார்வதிக்குச் சிரிப்பு வந்தது. என்னமோ, பதின்மூன்று வயதுப் பையன் தன்னைவிட மூன்று மடங்கு வயதான ஆசிரியையைப் பார்த்து அதீத மோகம் கொண்டு, கற்பனை உலகிலேயே சஞ்சரித்து இன்பம் காண்பதுபோல் அல்லவா இந்த `முக்கால்’ கிழவர் நடந்துகொள்கிறார்!  காதல் வயப்பட்ட ஒருவர் தன் மனதில் இருப்பவரைப்பற்றிய  எண்ணங்களை எவருடனாவது பகிர்ந்துகொண்டால்தான் அமைதி கிட்டும் என்ற மனித இயல்புக்கு ஏற்ப, டி.எஸ்.வியைப்பற்றி மனைவியிடமே ஓயாது பேசலானார் பெரியசாமி.  இந்தவரைக்கும் நம்மிடம் பிரியமாக நடந்துகொள்கிறாரே என்று அவளும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்காக பெரியசாமி வெளியூர் போகவேண்டி வந்தது.  “அங்கதான் ஒங்க டி.எஸ்.வி இருக்காங்க இல்ல?” நினைவுபடுத்தினாள் பார்வதி. “பாத்துட்டு வாங்களேன்!” நீண்ட ரயில் பிரயாணம் செய்துகொண்டிருந்தபோது, ` ஒங்க டி.எஸ்.வி’ என்ற வார்த்தைகள் காதில் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்த்தில், அவருக்கு அலுப்பே தெரியவில்லை.   “இவங்கதான் கல்யாணப் பொண்ணோட அக்கா!” கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தமாதிரி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார் பெரியசாமி. “நீ.. நீங்க.. டி.எஸ்.விஜயலட்சுமிதானே?” ஒரு சிறு முறுவலுடன் அவள் அதை ஆமோதித்தாள். அவளைப் பார்த்தால் ஏதேதோ கேட்கவேண்டும் என்று யோசித்து வைத்திருந்ததெல்லாம் மறந்தே போயிற்று. அவளையே பார்த்தபடி நின்றார். “நீ இங்கேயா இருக்கே, விஜி?” என்று கேட்டபடி வந்தான் ஓர் இளைஞன். பெரியசாமியின் கண்களில் இருந்த சொக்கிய பாவனையைக் கவனித்துவிட்டு, “ஓ! ஒனக்கு ஒரு புது விசிறி கிடைச்சிருக்காருன்னு சொல்லு!” என்றான் உற்சாகமாக.  “அங்கிள்! இவர்தான் என் ஹஸ்பண்ட்!” அவள் குரலில் ஒலித்த பெருமையும், உரிமையும் பெரியசாமிக்குள் பொறாமையைத் தூண்டிவிட்டது.   தன்னையும் அறியாமல், ஒரு கணம் அவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டார்.   தொந்தியும், தொப்பையும், வழுக்கைத் தலையுமாக தான் எங்கே, பனியன் விளம்பரத்துக்குப் போஸ் கொடுப்பவன்மாதிரி அகன்ற மார்பும், புஜபலமும், அடர்ந்த முடியும் கொண்ட இவன் எங்கே!  அவனுடைய உயரத்துடன் ஈடுகொடுக்க, சற்று நிமிர்ந்து நிற்க முயற்சித்தார். இடுப்பில் ஏதோ ஓர் எலும்பு இடக்குப் பண்ண, வலியில் முகம் சுளித்த்து.  “நின்னுக்கிட்டே இருக்கீங்களே, அங்கிள்!” என்று பரிதாபப்பட்டவளாய், “டியர்! அங்கிளுக்கு ஒரு நாற்காலி கொண்டுவாங்களேன்!” என்று கணவனைப் பணித்தாள் டி.எஸ்.வி.  “ஒன்னால நிக்க முடியலேன்னு வெளிப்படையா சொல்றது!” கொஞ்சலாக அவளைப் பார்த்துச் சிரித்தபடி, அந்த நிறைமாதக் கர்ப்பிணியின் உத்தரவை நிறைவேற்ற அவன் விரைந்தபோது, பெரியசாமிக்கு ஏதோ புரிந்தமாதிரி இருந்தது.  மனைவியை விரட்டி, விரட்டி, அதனால் பலம் அடைந்துவிட்டதாக தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் ஆண் இல்லை இவன். விட்டுக்கொடுக்க வேண்டிய சமயத்தில் விட்டுக்கொடுத்து, தன் கௌரவத்தையும் இழக்காமல் இருப்பவன். அதனாலேயே மனைவியின் அன்புடன் தோழமையையும் பெற்றிருக்கிறான். அந்த சுதந்திரம்தான் அவளுடைய எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது.  வீடு திரும்பிய கணவரிடம் எடுத்த எடுப்பிலேயே, “டி.எஸ்.வியைப் பாத்தீங்களா? என்று கரிசனத்துடன் விசாரித்தாள் பார்வதி.  அது காதில் விழாதமாதிரி, “நாலு நாளா கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டு, வயிறே கெட்டுப்போச்சு. ஒன் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு! பூண்டு, மிளகு, சீரகம் எல்லாத்தையும் தட்டிப்போட்டு நீ ரசம் வைக்கிறமாதிரி யாரால முடியும்!” என்றார்.  மனக்கண்முன் தோன்றிய `பனியன் அழக’னிடம், `ஒனக்குத்தான் பொண்டாட்டிகிட்டே அருமையா நடந்துக்கத் தெரியுமோ?’ என்று சவால் விட்டார் பெரியசாமி                                                                                                                                   (இதயம், 1993)  நாற்று   நான்கு குறைப் பிரசவங்கள். பின்னர், சோதனைக்குழாய்வழி வயிற்றில் வளர்ந்த கருவும் மூன்றே மாதங்களில் வெளிப்பட்டு விட்டது. `தத்து எடுக்கலாம்,’ என்று அவர் சொன்னதற்கும் அவள் செவி சாய்க்கவில்லை. குழந்தை அவள் உதிரத்தில்தான் உதிக்க வேண்டுமாம். ஒருவரையும் ஏறிட்டுப் பார்க்க விரும்பாது, சுவற்றுப்புறம் திரும்பி விசும்பிக் கொண்டிருந்த ஆசைமனைவியின் முகத்தில் சிரிப்பைக் காண வேண்டுமென்றால், தமிழ்நாட்டுக்கென்ன, உலகின் எந்தக் கோடிக்கானாலும் அழைத்துப் போகலாமே என்ற யோசனை வந்தது அந்தச் செல்வந்தருக்கு. `மனசைத் தளர விடாதேம்மா. இன்னும் ஒரு வழி இருக்கு. இதைப் படிச்சுப் பாரு!’ என்று ஒரு பத்திரிகையில் வந்திருந்த கட்டுரையைக் குறிப்பிட்டுக் காட்டிவிட்டு அப்பால் சென்றார். தாயாக ஆவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோள் என்று எண்ணியிருந்த  அப்பெண்மணி, பல பெண்களின் பேட்டியுடன் வந்திருந்ததை ஒரு கதையாகவே கருதிப் படித்தாள்.      “தே! நீ என்னா சொல்றே? இப்ப தலையைத் தலையை ஆட்டிட்டு, யார் பிள்ளையோ என் வயத்திலே வளர்றதைப் பாக்கிறப்போ, ஒன்னால அதை ஏத்துக்க முடியுமா?” ஆட்டோ ஓட்டிப் போனபோது ஏற்பட்ட விபத்தில் இடுப்புக்குக்கீழ் சுவாதீனம் அற்றுப்போய், காலமெல்லாம் மனைவியின் கையை எதிர்பார்க்க வேண்டும் என்ற நிலை வந்தபோதுகூட ராசப்பா அவ்வளவு குழம்பவில்லை. எதுவும் சொல்லத் தெரியாது, அவளையே பார்த்தான். அவனைக் கணவனாக வரித்த கொடுமை, இப்போது குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு. எந்த இளம்பெண் எப்போது நிர்க்கதியாக நிற்பாள் என்று காத்திருந்தவர்போல, அவர்கள் வாழ்க்கையில் நுழைந்திருக்கிறரே இந்த மனிதர்! இப்படியெல்லாம்கூடவா பணம் சம்பாதிப்பார்கள்! “ஒங்களுக்கென்ன! ஒங்க பேரைச் சொல்ல லட்டுமாதிரி பிள்ளை இருக்கு. எத்தனை பேருக்குக்கி டைக்கும் இந்தப்பாக்கியம்!” என்று நைச்சியமாக ஆரம்பித்த தரகர் பூபதி, “சில பேருக்கு, கல்யாணமாகி பத்து, பதினஞ்சு வருஷமானாலும் பிள்ளை பாக்கியமே இல்லை, பாவம்!” என்று பொய்யாகப் பரிதாபப்பட்டார். பின், அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணுமில்ல!” என்று கொக்கி போட்டார். அவர் மேலும் சொன்னதைக் கேட்டு, நாகம்மாதான் வெகுவாக அதிர்ந்து போனாள். யாருடைய கர்ப்பப்பையிலோ வளரவேண்டிய கருவை அவளுடைய வயிற்றில் விதைப்பார்களாம். அதை முழுமையாக வளரவிட்டு, பெற்றெடுத்து, அதற்கு உயிர் கொடுத்தவர்களிடமே கொடுத்துவிட வேண்டுமாம்! “சும்மா இல்ல. மாசாமாசம் ஆயிரம் ரூபாய் குடுப்பாங்க. பிள்ளை பிறந்ததும், சுளையா இன்னொரு அம்பதாயிரம்!” நைச்சியமாகச் சொன்னார் பூபதி. பணத்தாசைக்கு மசியாதவர் யார் என்று எண்ணித்தான் அவர் அந்த இடத்துக்கு வந்திருந்தார். ஆனால் நாகம்மா வேறு ஒன்றை யோசித்தாள்: `என் வயத்தை வாடகைக்குக் கேக்கறாங்க!’ உடலை விற்றுப் பிழைப்பதுபோல் ஆகிவிடாது? இவளை அதிகம் யோசிக்கவிட்டால் ஆபத்து என்று பூபதி மேலும் தூபம் போட்டார். “இதெல்லாம் முப்பது, நாப்பது வருஷமா அமெரிக்காவில இருக்கிற நடைமுறைதான். இல்லாதவங்களுக்கு இருக்கிறவங்க குடுக்கிற தானம்! அதோட.., நீங்க ஒண்ணும் சும்மா குடுக்கப்போறதில்ல!” தன்னை எதற்குக் குறிவைத்தார் இந்த மனிதர்? வெளிப்படையாகவே கேட்டாள் நாகம்மா. “அது வந்தும்மா..,” சற்று யோசனையில் ஆழ்ந்தார். “பிறக்கப்போற குழந்தைக்கு நீங்க அம்மா இல்லியா? கண்ட கழிசடை எல்லாம் அம்மா ஆகிட முடியுமா? அதான், ஒங்களைமாதிரி.. நல்ல விதமா குடும்பம் நடத்தி, ஒரு பிள்ளையாவது பெத்துக்கிட்டவங்களாப் பாக்கறோம். வயசு.. ஒரு இருபத்தஞ்சிலேருந்து முப்பதுக்குள்ளே இருந்தா, பிரசவத்திலும் குளறுபடி இருக்காது”. இன்னொரு உயிரா! வீட்டிலிருக்கிற மூன்று பேருக்கே அவள் கூலிவேலை செய்து கொண்டு வருகிற சொற்ப வருவாயில் அரை வயிறுகூட நிரம்புவதில்லை. அவளது மன ஒட்டத்தைப் புரிந்துகொண்டவராக, “பேசினதைத் தவிர, ஒங்களுக்கு ஆகிற சாப்பாட்டுச் செலவு, பால், பழம், உடை எல்லாத்துக்கும் தனியா குடுப்பாங்க. நீங்க வேலைக்குப் போக வேணாம்,” என்று மேலும் ஆசை காட்டினார். நாகம்மாவுக்கு ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அழுகைதான் வந்தது. அதைப் பார்க்கப் பொறாதவனாய், முதன்முறையாக ராசப்பா பேசினான்: “யோசிச்சுச் சொல்றோங்க ஐயா!” “ஒங்க இஷ்டம்!” என்றபடி எழுந்தார் பூபதி. வாசலுக்கு வந்தவர், தன்னையும் அறியாது மூக்கைப் பிடித்துக்கொண்டார். ஆறெனப் பெருகி ஓடும் சாக்கடை. அதையே நீச்சல் குளமாகப் பாவித்து, மனமகிழ்ந்து, எம்பி எம்பி குதித்துக்கொண்டிருந்த பன்றிகள். `எப்படித்தான் இந்த நாத்தத்திலே சாப்பிட்டு, தூங்கி, குடும்பம் நடத்தறாங்களோ!’ அருவருப்புடன் உதட்டைச் சுழித்துக்கொண்டார். `இந்த லட்சணத்தில, சுலபமா சம்பாதிக்க வழி காட்டினா, அதுக்கு ஆயிரம் யோசனை!’ இயலாமையில் ஆத்திரம் பிறந்தது அவருக்கு. மீண்டும் ஏதோ நினைத்துக்கொண்டவராய், குடிசையினுள் நுழைந்து, சாணி போட்டு மெழுகியிருந்த தரையில் அமர்ந்தார். “முக்கியமான ஒண்ணைச் சொல்ல மறந்துட்டேனே! இதில தில்லுமுல்லு ஏதுமில்ல. ரெண்டு தரப்புக்கும் வக்கீல் வெச்சு  ஒப்பந்தம் எழுதுவாங்க டாக்டரம்மா. ஒங்களுக்கும், பிள்ளையை வாங்கப்போறவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இருக்கக்கூடாது!” என்று அழுத்திச் சொன்னார். இந்த ஏற்பாட்டால் தனது பொருளாதாரம்  கணிசமாக உயரப்போவதை கற்பனை செய்து மகிழ்ந்தார். ராசப்பாவுக்கும் ஆசை பிறந்தது. கைநிறையப் பணம் கிடைத்தால், தான் இப்படி படுக்கையே கதி என்று இருக்க வேண்டாம். ஒன்றுக்குப் போக, குளிக்க என்று எந்த ஒன்றுக்கும் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டாம். எத்தனை நாட்கள்தான் முகம் சுளிக்காமல் செய்வாள் நாகம்மா! “இன்னும் என்ன யோசனை, நாகு! ஐயா சொல்றதுபோல, இது ஒரு வியாபாரம்னு நெனச்சுக்கயேன்,” என்றான். அடைத்த குரலில் நாகம்மா பூபதியைக் கேட்டாள்: “அந்தப் பிள்ளை எப்படி..?” அவர் நெற்றியில் அடித்துக்கொண்டார். “முக்கியமானதைச் சொல்லாம விட்டுட்டேன், பாருங்க! என்று பெரிதும் நொந்துகொண்டவராக, “இது மத்த பிள்ளைங்களைப்போல இல்ல. அம்மா ஒடம்புக்கு வெளியே உருவாகுது. அப்பாவோட உயிரணு, அம்மாகிட்டேயிருந்து சினைமுட்டை ரெண்டையும் டாக்டரே ஒண்ணா சேர்த்து..,” என்று உற்சாகமாக ஆரம்பித்தவர், இந்தப் பாமரர்களுக்கு விஞ்ஞான ரீதியில் விளக்கம் எதற்கு என்று நிச்சயித்தவராக, “மண்ணிலே விதை போட்டா, செடி முளைக்கிற மாதிரிதான்னு வெச்சுக்குங்களேன். கரு உருவாகிடுச்சுன்னு உறுதி ஆனப்புறம், ஒங்க வயத்தில அதை விதைச்சுடுவாங்க. ஏன்னா, அந்த அம்மா வயத்தில கரு தங்கறதில்லே!” “நாத்து நடறமாதிரி!” என்றாள் நாகம்மா. அவளுடைய முகத்தில் தெளிவு. தான் அறியாத அந்தப் பணக்காரப் பெண்மணியின்மேல் இரக்கம் சுரந்தது. தான் அவளைவிட ஒரு விதத்தில் மேலானவள்! அச்சமயம் பார்த்து, சிறுவன் வேலு தூக்கத்திலிருந்து எழுந்தான். நேராக நடந்து வந்து, தாயின் மடியில் அமர்ந்துகொண்டு, “பசிக்குதும்மா,” என்று முனகினான். இன்னும் கொஞ்ச காலத்துக்காகவாவது அவள் குடும்பத்தினர் வயிறாரச் சாப்பிடுவது அவள் கையில்தான் இருக்கிறது. அதைப்போய் தடுப்பானேன்! பெருமூச்சுடன் அவனை அணைத்து, “ஒனக்குத் தம்பிப்பாப்பா பொறக்கப்போறாண்டா!” என்றாள். மாதங்கள் உருண்டன. தாயின் பருத்திருந்த வயிற்றைத் தொட்டுப்பார்த்தான் வேலு. கரு உருண்டு, இன்னொரு கோடிக்குச் சென்றது. நாகம்மா கனிவுடன் வயிற்றைத் தடவினாள். சுகமான சுமை. யாருடைய உயிராக இருந்தால் என்ன! இப்போதெல்லாம் இந்தப் பிள்ளைக்காகவே அவள் சாப்பிடுகிறாள், தூங்குகிறாள்! இந்தக் குழந்தைக்கு செடிகளைப் பிடிக்கும், இசையில் ஆர்வம் என்று தன் மனதில் எழும் நெகிழ்ச்சியால் புரிந்து போகிறது அவளுக்கு. வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்திலேயே நாளின் பெரும்பகுதியைச் செலவழிக்கிறாள். குழந்தை அதிர்ந்துவிடப்போகிறதே என்ற கரிசனத்துடன், சினிமாப் பாடல்களைத் தவிர்க்கிறாள். மலேசிய வானொலியில் கேட்டிருந்த பழம்பாடல்களையும், பக்திப் பாடல்களையும் வாய் ஓயாது முணுமுணுக்கிறது. ஸ்ருதி, ஸ்வரம் போன்ற வார்த்தைகள் அவளது அகராதியில் கிடையாது. ஏதோ, தனக்குத் தெரிந்தவரை கள்ளக்குரலில் கீச்சுமூச்சென்று பாடுகிறாள். அவள் வயிற்றுக் கருவும் அதில் திளைத்து ஆனந்தப்படுவதாகத்தான் தோன்றுகிறது அவளுக்கு. வேலுவை உண்டாகி இருந்தபோது இப்படி ஆழ்ந்து யோசித்ததாக நினைவில்லை. எதுவுமே கைநழுவிப் போய்விடும் என்ற நிலை வரும்போதுதான் அதன் மீதுள்ள ஆசை அதிகரிக்குமோ என்று யோசிக்க, கலக்கம் பெருகியது. தன்னுடலின் ஒரு பாகமாக பத்து மாதங்கள் இருக்கப்போகும் பிள்ளை. அது ஆணா, பெண்ணா, கறுப்பா, சிவப்பா, தலைமயிர் சுருட்டையா, அடர்த்தியா என்றெல்லாம்கூட அவள் பார்க்கக்கூடாதாம் நாகம்மாவுக்கு அழுகை வந்தது. “அம்மா!” என்று விம்மினாள். “அம்மான்னு இப்போ கத்தக்கூடாது. அப்புறம், குழந்தை ஒன்னை விட்டுவர மனசில்லாம தவிக்கும்!” பிரசவ வலி எடுத்திருந்தவளை தாதி மிரட்டுகிறாள். ``குழந்தைக்கும் தன்னை விட்டுத் தனியாகப் பிரிய மனம் வராதா?’ லேசான திருப்தி நாகம்மாவுக்குள். உடனே, தன் மனம் போன போக்கிற்காகத் தன்மேலேயே கோபம் எழுகிறது. `இது என்கூட இருக்கப்போவது இன்னும் சில நாட்களே!’ என்று தான் உருகியதோடு போகட்டும். அருமையாக வளர்த்த இக்கருவும் துயரப்பட வேண்டாம். வலி தாளாது, கண்களை இறுக மூடி, வாயை மட்டும் கோணுகிறாள். திடீரென ஒரு நிம்மதி, உடல் லேசாகியதுபோல். தொடர்ந்து, பூனைக்குட்டி கத்துவதுபோல ஓர் ஒலி! குழந்தை பிறந்துவிட்டது என்று உணர்ந்தபோதே அச்சமும் அலைக்கழைத்தது. அவசரமாகக் கண்ணைத் திறந்தாள். சமநிலைக்கு வந்திருந்த வயிற்றைத் தன்னிச்சையாகத் தடவினாள். பக்கவாட்டில் கண் போயிற்று. வெறுமை -- அவள் வயிற்றிலும், பக்கத்திலும். நாகம்மா விம்ம ஆரம்பித்தாள். “இப்போ எதுக்கு அழுவறே? மொதல்லேயே எல்லாம் கேட்டுட்டுத்தானே ஒத்துக்கிட்டே? பேசாம தூங்குவியா!” பச்சைப்பிள்ளைக்காரி கண்கலங்கி, அவள் உடம்பு கெட்டுவைத்தால், தனக்கு வேலை அதிகமாகுமே என்ற எரிச்சல் தாதிக்கு. கண்ணை மூடிக்கொண்டாள் நாகம்மா. குழந்தையின் ஈனஸ்வரமான அழுகைக் குரல் இன்னிசையாக அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க, அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்தாள். “என்ன ராசப்பா? சக்கர நாற்காலி வாங்கிட்டாப்பல இருக்கு! சாப்பாட்டுக் கடை வெச்சிருக்கியா? நடக்கட்டும், நடக்கட்டும்,” ஆரவாரமாகப் பேசியபடி வந்தார் தரகர் பூபதி. “ஒன் பெண்டாட்டி எங்கே? கூப்பிடு!” வெந்த இட்லிகளைத் தட்டில் கொட்டிக்கொண்டிருந்த நாகம்மா அவர் குரலைக் கேட்டதும் பாய்ந்து வெளியே வந்தாள். “பிள்ளை எப்படிங்க ஐயா இருக்கு?” “அதுக்கென்ன! பெரிய இடத்துப் பிள்ளை! அதைப் பெத்தவங்க ஒங்களை தெய்வமாத்தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க,” என்று அளந்தார். குரலைக் கனைத்துக்கொண்டு, “அதே மாதிரி இன்னொரு கேசில்ல! இதை நீங்க ஒத்துக்கிட்டா, பெரிய ஹோட்டலே வெச்சுடலாம்,” என்று ஆரம்பித்தார். ராசப்பாவின் முகத்தில் லேசான ஆசை படர்ந்தது. விளங்காத பயலென்று தன்னை இப்போது பழிப்பவர்கள் தான் ஹோட்டல் முதலாளியானால் எப்படி மரியாதை செய்வார்கள் என்று கற்பனை பாய, உடல் நிமிர்ந்தது. சற்றே கெஞ்சலான பார்வையை மனைவியின்மேல் ஓடவிட்டான். யாரும் சற்றும் எதிர்பாராவண்ணம், நாகம்மா தரகர்மேல் பாய்ந்தாள். “ஒங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு, சாமி.  இந்த எடத்தைவிட்டுப் போயிடுங்க. என்னோட வயத்திலே சுமந்து, சுமந்து யாருக்கோ தூக்கிக் குடுக்க என்னால முடியாது. `தம்பிப் பாப்பா எங்கம்மா?’ன்னு எம்பிள்ளை கேக்கறப்போ எல்லாம் நான் துடிக்கிற துடிப்பு ஒங்களைமாதிரி ஆம்பளைங்களுக்கு எங்க புரியப்போகுது!” என்று நேரிடைத் தாக்குதலில் இறங்கினாள். “நாகு!” தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியவரிடம் மரியாதைக் குறைவாகப் பேசுகிறாளே என்ற பதைப்புடன் அவளை அடக்க முயன்ற கணவனின் குரல் அவள் காதில் விழவில்லை. தான்பாட்டில் பேசிக்கொண்டே போனாள். “அன்னிக்கு நாத்துன்னு சொன்னேன். ஆனா, நான் மண்ணில்லே. அது இப்பதான் புரியுது!” என்று விம்மியவள், “ஒரு செடியைப் பிடுங்கி நடறப்போகூட வேரோட கொஞ்சம் தாய்மண்ணையும் சேர்த்துத்தான் எடுப்போம். எனக்கு அந்த கொடுப்பினைகூட இல்லாம போச்சே! பிள்ளை முகத்தைக்கூட பாக்க முடியாத பாவி ஆயிட்டேனே!” என்று பெரிதாக அழ ஆரம்பித்தாள். அவளுடைய ஆத்மாவின் ஓலத்தைப் புரிந்துகொள்ள முடியாது, “ஏதோ குழப்பத்திலே இருக்கீங்கபோல! நான் போயிட்டு, அப்புறமா வரேன்,” என்று எழுந்தார் தரகர். “வராதீங்க. போங்க! பிள்ளை பெத்ததும், மாரிலே பால் கட்டிக்கிட்டு நான் துடிச்ச துடிப்பு ஒங்களுக்குப் புரியுமா?” வெறிபிடித்தவளாகக் கத்தினாள் நாகம்மா. “எங்களுக்கு இனிமே சோத்துக்குப் பஞ்சம் இல்லாம இருக்கலாம். ஆனா, நான் சாகிறவரைக்கும், `என் வயத்திலே சுமந்து பெத்த பிள்ளை எங்கே இருக்கோ, எப்படி இருக்கோ! அதைப் பாக்கக்கூட முடியலியே!’ன்னு என்னோட அடிமனசு குமுறிக்கிட்டே இருக்குமே! ஒங்க பணத்தால அதைச் சமாதானப்படுத்த முடியுமா? ஏன்யா? ஏழைங்கன்னா, பணந்தான் கிடையாது. உணர்ச்சிங்ககூட இருக்காதா?” வார்த்தை குழற முடித்துவிட்டுக் கதறினாள்.   `படிச்சுட்டியா? சென்னைக்குப் போக ரெண்டு டிக்கெட் புக் பண்ணடடுமா, டியர்?’ மனைவியின் முகம் தெளிந்திருக்கிறதே என்ற உவகையுடன் கேட்டார் செல்வந்தர். ‘நாடு விட்டு நாடு போய், வாடகைத் தாயெல்லாம் வேணாங்க. நம்ப மகிழ்ச்சிக்காக இன்னொரு பொண்ணை அழவிடறது நியாயமில்லே. இங்கேயே ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம்!’                                                                      (மலேசிய சுதந்திர தின சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது, 2005)   கண்ணாடிமுன்   `மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!’ குரலில் சற்றும் கோபமில்லாமல்தான் மனைவி அந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தாள்.  ஆனால் அதில் பொதிந்து கிடந்த ஏளனம்! வேண்டும். நன்றாக வேண்டும். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தமாதிரி, ஏற்கெனவே குண்டாக இருந்த மனைவியிடம் அவளுடைய உடலைப்பற்றிக் கிண்டல் செய்வானேன், இப்படி வாங்கிக் கட்டிக்கொள்வானேன்! அவருக்கு எல்லார்மேலேயும் கோபம் வந்தது. `பிறந்த நாள்’ என்று அவரைத் தூக்கிப்போகாத குறையாக வெளியே அழைத்துப்போன அந்த ஐந்து நண்பர்கள்மேல், அவர்களுடன் பார்த்த படத்தின் கதாநாயகிமேல். இன்னும்.., தன்மேலேயே. இந்த சிம்ரன் ஒருத்தி! எதற்காக உடலை இவ்வளவு கச்சிதமாக வைத்திருக்க வேண்டும்? அட, அழகான, ஒல்லியான உடல் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே! அதை இப்படியா வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும், இடுப்பு, தொப்புள் என்று அணு அணுவாக! இவரைப்போன்ற இளிச்சவாயர்கள், `ஆகா! இன்னும்கூட நமக்கு இளமையின் உத்வேகம் இருக்கிறதே!’ என்ற பூரிப்புடன் மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் சேர்ந்து செய்த சதி! இல்லாவிட்டால், முக்காலே முவ்வீசம் கிழவனாகிவிட்ட தனக்கு அந்த இளம்பெண்ணைப் பார்த்து எதற்காக இத்தனை கிறக்கம் ஏற்பட வேண்டும்? பார்த்ததுதான் பார்த்தோமே, அப்போது உண்டான மயக்கத்தை மனசுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கலாம் இல்லையா? படத்தின் பாதிப்பு குறையாமலேயே வீட்டுக்கு வந்தவருக்கு, காலைப் பரத்திக்கொண்டு, குறட்டை விட்டபடி தூங்கிக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்ததும் எரிச்சல் பொங்கியது. `சனியன்! எனக்குப்போய் இப்படி ஒண்ணு வாய்ச்சிருக்கே!’ என்று அவளை மனசுக்குள்ளேயே திட்டி, தன்மேல் பரிதாபப்பட்டுக்கொண்டார். அப்போது கண்விழித்தவள், “வந்துட்டீங்களா?” என்று தூக்கக் கலக்கத்தில் கட்டைக்குரலில்கேட்டது அவரது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. “வராம? தியேட்டரிலேயே படுத்துடுவாங்களா?  இல்ல, இது ஒன் புருஷனோட ஆவின்னு நினைச்சுக்கிட்டியா?” என்று எரிந்து விழுந்தார். அவள் எழுந்து உட்கார்ந்துகொண்டாள். “ரொம்பப் போட்டுட்டீங்களா? பேசாம படுங்க!” என்றாள், மனைவிகளுக்கே உரிய விவேகத்துடன். “யாரு, யாரைடீ போட்டாங்க? புருஷனை மயக்கறமாதிரி ஒடம்பை வெச்சுக்கத் தெரியல, பெரிசா பேச வந்துட்டா!” என்று பொரிந்தவர், “சே! ஏண்டா வீட்டுக்கு வர்றோம்னு இருக்கு. வந்தா, பூரியாட்டம் ஒப்பிப்போன ஒன் மூஞ்சியைப் பாத்துத் தொலைக்க வேண்டியிருக்கு. ஹூம்! சிம்ரனைக் கட்டிக்கப்போறவன் குடுத்து வெச்சவன்!” என்று ஏகமாக உளறினார். அவளுக்கு ஏதோ புரிந்தாற்போலிருந்தது. முகத்தில் மெல்லிய புன்னகை. அப்போதுதான் சொன்னாள், “மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!” அசரீரிபோல், வேளைகெட்ட வேளையில் அவள் குரல் கேட்டவண்ணம் இருந்தது. காலையில் பல் துலக்கிய கையோடு பாத்ரூமில் சவரம் செய்துகொள்ளும்போது, குளித்துவிட்டுத் தலை வாரிக்கொள்ளும்போது, ஏன், காரை ஓட்டிப்போகும் வழியில் ஏதாவதொரு சிவப்பு விளக்கில் நிற்கும்போது முகத்திற்குமேல் இருந்த கண்ணாடியைத் திருப்பி ... இப்படி பல கோணங்களிலும் கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்துக் கொண்டவருக்கு ஒன்று புரிந்தது. மனைவி சிம்ரன்மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், தானும் சினிமா கதாநாயகன்போல் இருக்கவேண்டாமோ? `ரஜினி எவ்வளவு இளமையா இருக்காரு, பாருங்க! அவருக்கும் ஒங்க வயசுதானாம்!’ அண்மையில், `சந்திரமுகி’ பார்த்துக்கொண்டிருந்தபோது மனைவி காதருகே குனிந்து முணுமுணுத்தது நினைவில் எழுந்தது. அவருக்குப் படத்தின் ஆரம்பத்திலேயே சுவாரசியம் போய்விட்டது. `இதையெல்லாம் ஒரு படம்னு பாக்கறாங்களே, அறிவு கெட்டவங்க!’ என்று தமிழ்ப்பட ரசிகர்களை ஒட்டுமொத்தமாக வைதார். மனைவியை மயக்கிய அந்தக் கதாநாயகனை பொறாமையுடன் வெறித்தார்.ஒரு படத்துக்கு ஐம்பது கோடிக்குமேல் சம்பளம் வாங்குபவருக்கு ஆயிரக்கணக்கில் செலவழித்து, வழுக்கைத்தலையை மறைக்க கரிய நிறத்தில் `விக்’ வாங்க முடியும்தான். இத்தாலி நாட்டுக்குப் போய், முகத்திலும், உடம்பிலும் தொங்கும் வேண்டாத சதையை எல்லாம் அறுவைச் சிகிச்சையால் அகற்றிக்கொள்ளவும் முடியும். தனக்கு அதெல்லாம் முடியுமா? கேவலம், மாதச் சம்பளக்காரன்! இந்த லட்சணத்தில், வெளிநாட்டில் படிக்கும் மகனுக்கு வேறு அவ்வப்போது தண்டம் அழ வேண்டியிருக்கிறது. இதெல்லாம் நண்பர்களுக்குத் தெரிகிறதா? “ஒனக்கென்னப்பா! ஒரே மகன்! மகா புத்திசாலி! நீங்க புருஷன், பெண்டாட்டி ரெண்டே பேர் வீட்டிலே! எப்பவும் ஹனிமூன்தான்!” என்று விகாரமாகக் கண்ணைச் சிமிட்டி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வார்கள். ஹனிமூனாவது! அந்த வார்த்தை காதில் விழுந்தாலே, அவருக்குத் தன் கல்யாணம்தான் நினைவுக்கு வந்து பயமுறுத்தும். குப்பன். அதுதான் அவருடைய பெயர். அவரைக் கேட்காமல், அவருக்குப் பிடிக்காத பெயராக வைத்துவிட்டார்கள். ஷ், ஹ் போன்ற வடமொழி எழுத்துக்கள் ஒன்றிரண்டு கலந்து நாகரிகமாக இல்லை தன் பெயர் என்ற பெரிய குறை அவருக்கு. போதாத குறைக்கு, பள்ளியில் ஷாம் என்ற மாணவன் `ஷாம்பு’ ஆக, சம்சூரி என்ற மலாய் மாணவன் `சம்சு’வாக (மட்ட ரக கள்ளைக் குறிக்கும் வார்த்தை), இவரைக் `குப்ப’ என்று அழைத்தார்கள் சகமாணவர்கள். வாத்தியார்களுக்கும் புனைப்பெயர் வைத்துச் சிரித்த காலம் அது. ஆனால், தன் பெயரைச் சுருக்கி அழைத்து, பிறர் சிரிக்கும்போது, அதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு சிரிக்க முடியவில்லை அவரால். அழுகைதான் வந்தது. வயதாக ஆக, தனக்கு வரும் மனைவிக்காவது பெயர் மிக அழகாக இருக்கவேண்டும் என்ற தீர்மானம் அவருக்குள் எழுந்தது. அதனால்தானே, “பொண்ணு பேரு ஜலஜாவாம்,” என்றபடி, மேலே ஏதோ சொல்லவந்த அம்மாவை இடைமறித்து, “இதையே முடிச்சுடுங்க!” என்றார் அவசரமாக? “நீ பாக்க வேணாம்?” என்று அம்மா அதிசயப்பட்டுக் கேட்டபோது, “பரவாயில்லே,” என்று மட்டும்தான் அவரால் சொல்ல முடிந்தது. ஜலஜா! ஆகா! எவ்வளவு அழகான பெயர்! பெயரே இவ்வளவு அழகாக இருந்தால், உருவம் எப்படி இருக்கும்! அடுத்த சில மாதங்கள் இனிமையான கற்பனையில் கழிந்தன. மனைவியின் பெயரிலிருந்த அழகிற்கும், உருவத்திற்கும் கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லை என்று உணர்ந்து அவர் அதிர்ந்தபோது, அவள் கழுத்தில் தாலி ஏறியிருந்தது. “இவ இவ்வளவு குண்டுன்னு ஏம்மா மொதல்லேயே சொல்லலே?” அம்மாவைத் தனியாகப் பார்த்தபோது அழமாட்டாக்குறையாகக் கேட்டார். “நீ எங்கே சொல்லவிட்டே?” என்று பழியை அவன்மேலேயே திருப்பினாள் தாய். “இப்ப அதனால என்ன மோசம்? நளபாகமா சமைக்கிறா. நீயும் குண்டாயிட்டாப் போவுது!” என்று சமாதானப்படுத்தினாள். அப்படியும் அவர் முகம் வாடியிருந்ததைப் பொறுக்காது, “எல்லாப் பொண்ணுங்களும் ஒரு பிள்ளை பெத்ததுக்கு அப்புறம் குண்டாத்தானே போயிடுவாங்க! நான் எப்படி இருந்தேன், தெரியுமா?” என்று ஆரம்பித்தாள். நல்லவேளை, மனைவியின் பிரசவம் கடினமாக இருந்தது. சற்றே இளைத்தாள். இருந்தாலும், ஏமாந்துவிட்ட உணர்ச்சி அவரை அலைக்கழைத்துக்கொண்டே இருந்தது. எதற்காகவாவது அவளை விரட்டுவார். அவரது போக்கால் பாதிக்கப்படாது, எருமை மாட்டின்மேல் பெய்த மழைபோல் அவள் சும்மா இருந்தது அவரை மேலும் ஆத்திரப்படுத்தியது. இன்றோ, பயம் சுத்தமாக விட்டுப்போய், அவரையே பழிக்கிறாள்! எதையோ இழந்துவிட்டது போலிருந்தது. யாருடனும் பேசப் பிடிக்காமல், பத்திரிகைகளில் வரும் தத்துவ போதனைகளைப் படிக்க ஆரம்பித்தார். அப்படியாவது நிம்மதி கிடைக்காது? காவி கட்டிய ஒருவர் இந்த அரிய யோசனையை அளித்திருந்தார்: மனம் உற்சாகமாக இருந்தால், உடலில் இளமை துள்ளி விளையாடும். சிறிது தயக்கத்திற்குப்பின், ஹைபர் மார்க்கெட்டுக்குப் போய், மருக்கொழுந்து வாசனை அடித்த செண்ட் ஒரு குப்பி வாங்கிக்கொண்டார். கல்யாணமான புதிதில் உபயோகித்தது. அதற்குப் பிறகுதான் உல்லாசமே போய்விட்டதே! கணவர் அடிக்கடி கண்ணாடியில் அழகு பார்த்துக்கொள்வதையும், இப்போது செண்ட் உபயோகிப்பதையும் கண்டும் காணாததுபோல் இருந்த ஜலஜா குழம்பினாள். `நாற்பது வயதில் நாய்க்குணம்’ என்பார்களே! அவர் எதிர்பார்த்த அளவுக்கு அந்த செண்ட் வாசனை புத்துணர்ச்சி அளிக்கவில்லை. அடுத்த முறை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டபோது, உப்பும் மிளகும் கலந்தது போன்றிருந்த தலைமயிர் அவர் கண்ணை உறுத்தியது. `என் முடி ரஜினியுடையதைவிட எவ்வளவு அடர்த்தி!’ என்ற பெருமையும் எழாமலில்லை. தனக்கு எதற்கு `விக்’கும், மண்ணாங்கட்டியும்! முடி மட்டும் கொஞ்சம் கறுப்பாக இருந்ததால், இன்னும் பத்து வயது குறைவாகக் காட்டுமே! குளிக்கப்போனவர் ஒரு மணி நேரத்துக்குமேல் ஆகியும் வெளியே வரவில்லையே என்று பயந்த மனைவி தன் பலத்தையெல்லாம் பயன்படுத்தி கதவை உடைக்காத குறையாகத் தட்ட, அசட்டுச் சிரிப்புடன் வெளிப்பட்டார். “இதென்னங்க கண்ராவி!”  சிரிப்பை அடக்க முயற்சித்து, தோற்றவளாகக் கேட்டாள். “அமில மழையிலே நனைச்சுட்டேன்!” என்று -- வெகுவாகக் கறுத்த -- தன் முடிக்கு ஒரு காரணத்தைக் கற்பித்தார். தான் எதிர்பார்த்தபடி, மனைவி தன் புதிய முக அழகில் அப்படி ஒன்றும் மயங்கவில்லையே என்ற வருத்தம் அவருக்குள் எழுந்தது. வேறு எங்காவது கோளாறோ? உடல் பூராவையும் பார்த்துக்கொள்ள முழுநீளக் கண்ணாடி ஒன்றை வாங்கி மாட்டினார். அப்போதுதான் புரிந்தது மனைவியின் எகத்தாளம். நம் வயிறு எப்போது, எப்படி, இப்படி -- எட்டு மாதக் கர்ப்பிணிபோல் -- பருத்தது? முடிச்சாயம் வாங்கிய அதே கடைக்குப் போய் சில மணி நேரங்களைச் செலவிட்டார். வெளியே வரும்போது அவர் கையில் இருந்த பொட்டலத்தில் ஒரு வித இடுப்புப்பட்டி இருந்தது. ஏதோ மருந்து சேர்க்கப்பட்டதாம். வயிற்றைச் சுற்றிச் சுற்றிக் கட்ட வேண்டும். எந்நேரமும் அணிய வேண்டும். சில வாரங்களுக்குள்ளேயே வித்தியாசம் புலப்படும் என்று அங்கிருந்த சீன மாது அடித்துச்சொல்ல, `இந்தப் பானை வயிற்றைக் குறைக்க நூற்றுப் பத்து ரிங்கிட் செலவழிப்பதில் தப்பொன்றும் இல்லை! என்று துணிந்து வாங்கினார். இப்போது நிமிர்ந்துதான் உட்காரவோ, நடக்கவோ முடிந்தது. நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டாலும், எந்நேரமும் வயிறு வெடிப்பதுபோல் இருந்ததால் சாப்பிடும் அளவு கணிசமாகக் குறைந்து போயிற்று. `வயிறு சரியா இல்லியா?’ `சாப்பாடு நல்ல இல்லே?’ என்றெல்லாம் மனைவி ஆதுரத்துடன் கேட்டபோது, மனதுக்குள் கொக்கரித்துக்கொண்டார்: `என்னை மட்டம் தட்டினியே! இன்னும் கொஞ்ச நாளிலே பாரு!’ கொஞ்ச நாளில் தலைசுற்றல்தான் வந்தது. பொறுக்க முடியாது போக, மருத்துவரிடம் போனார்.”எடையை ஒரேயடியாக் குறைக்க ஏதோ செய்யறீங்களா? அதான் ரத்த அழுத்தம் குறைஞ்சுபோய், தலை சுத்துது. சாதாரணமா, லேடீஸ்தான் இப்படிச் செய்வாங்க!” என்று அந்த மனிதர் பிட்டுப் பிட்டு வைத்து, ஒரு மாதிரியாகப் பார்க்க, மானம் போயிற்று குப்பனுக்கு. வீடு திரும்பியதும் முதல் வேலையாக, பெல்டைச் சுற்றி, பழைய துணிகளுக்கடியில் ஒளித்து வைத்தார். அவ்வளவு விலை கொடுத்து வாங்கியதை தூர எறியவும் மனம் இடம் கொடுக்கவில்லை. அன்று அவர் வீடுதிரும்பியபோது, வழக்கத்துக்கு விரோதமாக மனைவி யாரிடமோ பேசிசுக்கொண்டிருந்தது கேட்க, மறைந்திருந்து கேட்டார். “அவர் முந்திமாதிரி என்னைச் சீண்டறது கிடையாது. எப்பவும் ஏக்கமா, எதையோ நினைச்சுக்கிட்டு, சரியா சாப்பிடறதில்ல. வீடெல்லாம் கண்ணாடி வாங்கி மாட்டி அழகு பாத்துக்கிடறது இருக்கே! விடலைப் பசங்க தோத்தானுங்க, போ! ஏதானும் சின்ன வீடு சமாசாரமோன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது. இவரைவிட்டா, இத்தனை வயசுக்குமேல நான் என்னடி பண்ணுவேன்!” மெய்சிலிர்க்க, வந்த வழியே மீண்டும் நடந்தார் குப்பன். மனைவிக்குத் தன்மேல் அன்பு இல்லாமல் இல்லை! ஆணழகராக இருக்கும் ஒருவரைத் திரையில் பார்த்து ரசிக்கலாம். ஆனால், எல்லாரும் வாழ்க்கைத்துணையாக முடியுமா? ஏதோ உறைத்தது. சிம்ரனோடு மனைவியைத் தான் ஒப்பிட்டுப் பேசியது மட்டும் என்ன நியாயம்? அந்த பஞ்சாபி நடிகையால் அப்பள வற்றல் குழம்பும், கத்தரிக்காய் பொரியலும் ஜலஜாவின் கைமணத்தோடு ஆக்கிப்போட முடியுமா? வீட்டுக்குத் திரும்பியவர் கையில் பழைய தினசரியில் சுற்றப்பட்ட மல்லிகைப்பூ. ஒரு பிளாஸ்டிக் பை பிதுங்க ரசமலாய், சூர்யகலா, பால்கோவா, பாதம் ஹல்வா என்று வித விதமான இனிப்பு வகைகள். “எதுக்குங்க! இவ்வளவையும் சாப்பிட்டா, நான் இன்னும் குண்டாயிடுவேன்!” என்று செல்லமாய் சிணுங்கிய மனைவியை ஆசையுடன் பார்த்தார். “நீ இப்படி இருந்தாத்தான் நல்லா இருக்கு. இறுகக் கட்டிக்கிட்டா, எங்கே எலும்பு நொறுங்கிடுமோன்னு பயப்பட வேண்டாம், பாரு!” என்றபடி அவளை நெருங்கினார்.                                                                                                                              (தமிழ் நேசன், 2005)    போட்டி   நிலைகுலைந்துபோய் உட்கார்ந்திருந்தான் சரவணன். ஆயிற்று. இன்னும் சற்று நேரம்தான். கடந்த மூன்று ஆண்டுகளாக அவனுடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய  அங்கமாக இருந்த மல்லிகா அந்த வீட்டை விட்டுப் போய்விடுவாள், நிரந்தரமாக. புதுப்புடவையும், மலர் மாலைகளும் அணிந்து படுத்திருந்தவள் இனி எழவே மாட்டாள் என்ற நினைப்பில் அவன் உடல் குலுங்கியது. வீட்டுக்கு வெளியே இருந்த சுவற்றில் சாய்ந்தபடி, ஒரு காலை நீட்டியும், மற்றொன்றை மடித்தும், உடல் சரிந்தவாறு அவன் அமர்ந்திருந்த நிலையை வைத்தே அந்த அகால மரணத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவன் அவன்தான் என்பதைப் புரிந்துகொண்டவர்களாய், வீட்டுக்குள் நுழைந்தவர்கள் தலையை அளவுக்கு மீறி குனிந்துகொண்டு, `உன்னுடைய துக்கத்தில் பங்கேற்கும் திடம் எங்களுக்கில்லை!’ என்று சொல்லாமல் சொல்லியபடி உள்ளே விரைந்தார்கள். புதிதாக ஒவ்வொருவர் வரும்போதும், பக்கத்து வீட்டுக்காரர் தணிந்த குரலில் கூறிக்கொண்டிருந்தார்: “பிள்ளைபெத்து முப்பது நாள்கூட ஆகலே. மொதல்லேயே ரத்த அழுத்தம் அதிகமா இருந்திருக்கு..!” அவரது குரலோ, அல்லது உள்ளே மல்லிகாவைச் சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் கூட்டத்திலிருந்து அவ்வப்போது எழுந்த ஓலமோ சரவணனின் காதில் விழவில்லை. ஏற்ற்க்கொள்ள முடியாத நிகழ்காலத்தைவிட்டு நழுவி, இனிமையான பழைய நடப்புகளை நாடி மனம் ஓடியது. கல்யாணம் ஆன அன்றே ஒருவரைப்போல் எல்லாரும் சொன்னார்கள், `பிள்ளை, குட்டி, மத்த பிடுங்கல் எல்லாம் இருக்கவே இருக்கிறது, இரண்டு வருஷமாவது ஜாலியாக இருங்கள்,’ என்று. அப்போது தலையாட்டி வைத்தாலும், அதற்காக எந்த முயற்சியும் எடுக்கத் தோன்றவில்லை. எதற்கும் தாயை நாடும் குழந்தையைப்போல கணவருக்கு ஏதோ வகையில் தான் ஓயாது தேவைப்படுகிறோம் என்பதை சீக்கிரமே புரிந்துகொண்டாள் மல்லிகா. பெருமையாக உணர்ந்தாள். தேனிலவு முடிந்து சில நாட்களிலேயே, ஏதோ குற்றம் புரிந்தவள்போல முகத்தை வைத்துக்கொண்டு, “முப்பது நாளுக்குமேல ஆயிடுச்சு!” என்று தெரிவித்தாள். ஒரே சமயத்தில் பல்வேறு உணர்ச்சிகள் சரவணனுக்குள். மணமாகி சில வருடங்கள் கழித்தும் ஒருவனது மனைவி கருத்தரிக்காவிட்டால், அவனது ஆண்மையையே சந்தேகித்து, தமது வார்த்தைகளாலேயே அவனைக் குதறும் ஆண்களின் சுபாவம் அவனுக்குத் தெரியாதா, என்ன! `நல்லவேளை, தப்பினோம்!’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஒரு புதிய பிறவிக்குத் தான் உயிர் கொடுத்தது பெரும் சாதனையாகவும் பட்டது. கூடவே பயமும் எழுந்தது. `தன்னில் ஒரு பாகமாக இருந்தது’ என்று மனைவி அந்தக் குழந்தையைக் கணவனைவிட அதிகமாக நேசிக்கத் தொடங்கிவிட்டால்? வருடத்துக்கொரு பிள்ளை பெற்ற அவனது தாயார் தனது நேரம், அன்பு எல்லாவற்றையும் கைக்குழந்தையைக் கவனிப்பதிலேயே செலவிட்டபோது, தன்னை அவள் வெறுத்து ஒதுக்கிவிட்டதுபோல ஏங்கித் தவித்தது அவ்வளவு எளிதில் மறக்குமா! சிறுவனாக இருந்தபோது முளைவிட்ட அந்த ஏக்கம்தான் இன்று பெரிதாகி, மனைவியை அப்படிப் பிடித்து வைத்துக்கொள்ளச் செய்கிறது என்பதை அவனும் அறிந்துதான் இருந்தான். இருந்தாலும், தன் போக்கை மாற்றிக்கொள்ள முடியவில்லை. மனைவியின் வயிற்றில் வளர்ந்த தன் வாரிசைத் தடவிப் பார்த்துப் பூரித்த அதே வேளையில், “குழந்தை பிறந்துட்டா, என்னைக் கவனிக்க ஒனக்கு எங்கே நேரம் இருக்கப்போகுது!” என்று விளையாட்டாகச் சொல்வதுபோல அதன் ஆதங்கத்தை வெளியிடுவான். குழந்தையை ஒரு தனி உருவாகக் கண்டபின்பும், போட்டி மனப்பான்மை என்னவோ குறையவில்லை. தன்னைக் கண்டதுமே பிஞ்சுமகன் பொக்கை வாயைத் திறந்து சிரித்தபோதும், பின்னர் தளர்நடையுடன் வந்து காலைக் கட்டிக்கொண்டபோதும், தாற்காலிகமாக பொறாமை மறந்து, அவனைக் கொஞ்சி மகிழ்ந்தான். ஆனால், குழந்தை வாசுவை மனைவியின் மடியில் காணும்போதோ, இல்லை, அவள் நெஞ்சிலேயே அவன் படுத்துறங்கும்போதோ, தன் உடமையை வேறு ஓர் ஆண் -- அவன் மகனாகவே இருந்தால்தான் என்ன? -- பறித்துக் கொண்டுவிட்டதைப் போன்ற பயமும், அதனாலேயே பலகீனமும் எழும். இந்நிலையில் மீண்டும் கருவுற்ற மல்லிகாவின் படுதான் திண்டாட்டமாகப் போயிற்று. சிறுவனாகவே இன்னும் தன்னைப் பாவித்துக்கொண்டு ஓயாது தன் கவனத்தை நாடும் கணவன், சுயமாக எதையும் செய்துகொள்ளும் பிராயத்தை அடையாத குழந்தை, இவர்களுடன் -- எப்போதும்போல வேலை செய்யவோ, சாப்பிடவோ, இல்லை, தூங்கக்கூட முடியாமல் அலைக்கழைக்கும் -- வயிற்றுக்கரு  இவர்களுக்கு எல்லாம் அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை. தன் கையாலாகாத்தனத்தை சிறுவன் வாசுவை அடித்து, அதனால் சற்றே நிம்மதி தேடிக்கொள்ளப் பார்த்தாள். அம்மா அடித்ததையும், தான் அழுததையும் உடனுக்குடனே மறந்து, குழந்தைகளுக்கே உரிய குதூகலத்துடன் வாசு பாட ஆரம்பித்துவிடும்போது, `என் இயலாமைக்காக இந்தக் கள்ளமில்லாக் குழந்தையை அடிக்கிறேனே!’ என்று கழிவிரக்கம் பிறக்கும் மல்லிகாவுக்கு. தனக்குள் ஒரு முடிவு எடுத்தவளாய், “இந்தத் தடவை எனக்கு ரொம்ப பலகீனமா இருக்கு. இப்பவே அம்மா வீட்டுக்குப் போயிடறேனே!” என்று கணவனிடம் கேட்டாள், கெஞ்சலாக. சரவணனுக்கு ஆத்திரம் பெருகியது. `தன் சுகம்தான் பெரிது இவளுக்கு! தாங்குவதற்கு அம்மா இருக்கிறார்கள் என்ற பெருமை வேறு! என்னைப்பற்றித் துளியாவது அக்கறை இருந்தால், இவள் எப்படிப் பேசுவாளா? நான் எப்படிப்போனால் இவளுக்கென்ன!’ அவனுடைய எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ளாமல், “நான் போயிட்டா, ஒங்களுக்குச் சிரமமா இருக்காதில்ல?” என்று அப்பாவித்தனமாக அவள் கேட்டபோது, “நான் என்ன, சின்னப்பையனா?” என்று அலட்டிக்கொண்டான். “தினமும் ராத்திரி சாப்பிட அங்கே வந்துடுங்க, என்ன? ஒங்களைப் பாக்காட்டி பிள்ளை ஏங்கிப்போயிடுவான்!” என்று அவள் அழைப்பு விடுத்தபோது, அவனுடைய ஆத்திரம் அதிகரித்தது. `எனக்காக வாங்க,” என்று அழைத்தால், குறைந்துபோய்விடுவாளோ என்று கறுவிக்கொண்டான். ஓரிரு வாரங்கள் போனதும், நிலைமை உறைத்தது சரவணனுக்கு. பிரசவத்துக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்குமேல் இருக்கிறதா! இரவின் நிசப்தத்தில், எங்கோ பெண்பூனை ஒன்று கத்தி, தன் எதிர்ப்பையோ, ஆமோதிப்பையோ வெளியிட்டபோது, அவனுடைய தனிமை இன்னும் பயங்கரமாகத் தெரிந்தது. தான் அனாதரவாகப் போய்விட்டோமே என்று துக்கம் பெருகியது. இவ்வளவு வருடங்களாகத் தனியாகத்தானே இருந்தோம்? மூன்றே வருடங்களில் மனைவிதான் நம்மை எவ்வளவு தூரம் அடிமைப்படுத்தி, வலுவிழக்கச் செய்துவிட்டாள் என்ற அர்த்தமற்ற கோபமும் எழுந்தது. ஒரு வழியாக, குழந்தை பிறந்தது. நாட்களை எண்ணிக்கொண்டிருந்த சரவணன் அதற்கு மேலும் பொறுக்க முடியாதவனாக, “நீ இல்லாம எனக்குப் பைத்தியம் பிடிச்சமாதிரி இருக்கு, மல்லி. நம்ப வீட்டுக்கே வந்துடேன். நீ ஒரு வேலை செய்ய வேணாம். நான் ஒரு மாசம் லீவு எடுத்திட்டு இருக்கேன்!” என்று கெஞ்சினான். அதைக் கேட்டுக்கொண்டே வந்த மாமியார், “இப்பவேவா? பிள்ளை பெத்து ரெண்டு வாரம்தான் ஆகுது. பத்தியம் வேற..,” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தபோது, சரவணனுக்கு அளவில்லாத கோபம் வந்தது. “என் பெண்டாட்டி! என் பிள்ளைங்க! அவங்களைப் பாத்துக்க எனக்கும் தெரியும்!” என்று கத்தினான். மாமியார் அடங்கிவிட்டாள். மகள் புறப்படும்போது, அவள் காதுடன் வாய் வைத்து, “மூணு மாசமாவது..,” என்று முணுமுணுக்க மட்டும்தான் அவளால் முடிந்தது. முதல் வாரம், சரவணன் மனைவிக்கு ராஜோபசாரம் செய்தான். அவளுக்கே அவனைப் பார்த்துப் பரிதாபம் ஏற்படும் வகையில், கைக்குழந்தையைக் குளிப்பாட்ட வெந்நீர் விளாவி, மல்லிகா அயர்ந்து தூங்குகையில் இதன் ஈர உடைகளை மாற்றி, இவ்வளவுக்கும் மேலாக, வாசுவையும் கவனித்து... இந்த மாதிரி ஒரு கணவனை அடைய தான் என்ன தவம் பண்ணியிருக்கிறோமோ என்று நெகிழ்ந்தாள் மல்லிகா. ஒரு நாள், “குழந்தையை எதுக்கு ஒன் பக்கத்திலேயே போட்டிருக்கே? தொட்டில்லே விட்டுடேன்!” என்ற கணவனின் கரிசனம் முதலில் புரியாவிட்டாலும், அக்கண்களிலிருந்த குறும்பை, அழைப்பை, ரசிக்க முடியாது, தன் பார்வையைத் திருப்பிக்கொண்டாள். “வேணாம்!” ஆணித்தரமான அந்த ஒரே வார்த்தையில் எத்தனையோ அர்த்தங்கள் ஒலித்தன. மேலே எதுவும் பேசாது, தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு அப்பால் நகர்ந்தான் சரவணன். போகிற போக்கில், எதிரில் நின்றிருந்த மூத்தவனைத் தூக்கிக்கொண்டு, “வாடா! நமக்கு யார் இருக்காங்க?” என்று பெருமூச்சுடன், சுயபச்சாதாபத்தை வெளிப்படுத்தியபடி போனான். அடுத்த சில நாட்களில், எதுவுமே நடக்காததுபோல அவன் தனது உபசரிப்பை அதிகரித்துக்கொள்ள, மல்லிகா தடுமாறிப்போனாள். எவ்வளவு அன்புடன் என்னைக் கவனித்துக் கொள்கிறார்! பிரதிபலனாக நான் என்ன செய்கிறேன்! கேவலம், சதையும், ரத்தமும் கொண்ட உடம்பு! அதுவும், அவருக்கு உரிமையானதுதான். இதை நான் எப்படி மறுக்கலாம்? “வேணுமானா.., இங்கேயே படுத்துக்குங்க,” என்று ஓர் இரவுப்பொழுதில் அழைப்பு விடுத்தாள். இப்போது அவன் பிணங்கிக்கொண்டான். “எதுக்கு வம்பு? தூக்கத்திலே கை, கால் மேலே பட்டு, `எங்கேயாவது’ கொண்டு விட்டுடும்!” அப்போது, சொல்லிவைத்தாற்போல குழந்தை அழ, மல்லிகா அதை அணைத்துப் பாலூட்டத் துவங்கினாள். அவனையும் அறியாது, சரவணனுக்குள் போட்டி மனப்பான்மை மீண்டும் தலைதூக்கியது: `என்னைத் தவிர எல்லாரும் என் மனைவியுடன் உறவாடுகிறார்கள்!’ அதன்பின் அதிகமாக யோசனை செய்யவில்லை அவன். மனம் ஆனந்தக் கூத்தாட,  “சரி, போ!” என்று, ஏதோ பெரியமனது பண்ணுவதுபோல் பாவனை செய்தபடி, தன் தலையணையை எடுத்துக்கொண்டு வந்தான். `பிள்ளைப்பேறு என்பது இயற்கை. அந்தக் காலத்தில் சீனப்பெண்களெல்லாம் பிள்ளைபெற்று, ஒரு மணிக்குள் உழவு வேலையில் மீண்டும்  இறங்கி விடுவார்களாமே! எல்லாம் மனதில்தான் இருக்கிறது!’ என்று பலவாறாகத் தனக்குள் எண்ணமிட்ட மல்லிகா, தன் பலகீனத்தை மறைத்தாள். வீட்டு வேலைகளுடன், கணவனது உடற்பசிக்கும் ஈடு கொடுத்தாள். அதீதமான உதிரப்போக்கையும் அலட்சியம் செய்தாள். அன்று காலை எட்டு மணியாகியும் மல்லிகா எழுந்திருக்காதபோது, அவளைத் தட்டி எழுப்ப வந்தான் சரவணன். அவள் இனி எழுந்திருக்கவே மாட்டாள் என்று திட்டவட்டமாகப் புரிந்தபோது, முதலில் எழுந்தது அதிர்ச்சியா, குற்ற உணர்வா என்றெல்லாம் அலசும் நிலையில் அவன் இருக்கவில்லை. நல்லவேளை, நடந்ததெல்லாம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்ற் பெருமூச்சு விட்டான். தெரிந்துவிட்டால் தூற்ற மாட்டார்கள்? எத்தனையோ பேர் செய்வதுபோல, இதற்காகவே காத்திருக்கும் பெண்களிடம் போயிருக்கலாம். வீட்டு வாசலில் நீண்ட, கறுப்பு நிற `வேன்’ வந்து நின்றது. உள்ளே அழுகைக்குரல் பலத்தது. “பெண்டாட்டி பிள்ளைங்கன்னா உசிரு இவருக்கு! ஆபீசுக்குக்கூட லீவு போட்டுட்டு, அவங்களை எல்லாம் என்னமா கவனிச்சாருங்கறீங்க! இந்தப் பாவிப்பொண்ணுக்கு குடுத்து வைக்கலியே!” யாரோ அரற்றிக்கொண்டிருந்தார்கள். நடந்தது விளங்காது, நிறைய பேர் தங்கள் வீட்டுக்கு வந்திருக்கும் மகிழ்ச்சியில், சிறுவன் வாசு பாட ஆரம்பித்தான், கட்டைக் குரலில்.                                                                                                                                         (நண்பன்,1993) காந்தியும் தாத்தாவும்   “முந்தி நம்ப சாதிக்காரங்களை மத்தவங்க ஒதுக்கி வெச்சிருந்தாங்களாம். எங்கே, ஊரில. அதாண்டா, ஈண்டியாவில. அப்போ, காந்திதான், `மனுசங்க யாரும் மட்டமில்ல, எல்லாரும் கடவுளோட குழந்தைங்கதான்’னு சொல்லி, நாம்ப செய்யற வேலையைக்கூட அவரு செஞ்சாராம். அவரு மகாத்மாடா. அதான் அவர் பேரை ஒனக்கு வெச்சேன்!” தொட்டியிலிருந்த தண்ணியை மொண்டு குளித்துவிட்டு, இடுப்பில் துவாலையுடன் கண்ணாடிக்கு முன்னால் நின்று தன் உடல் வனப்பை ரசித்துக்கொண்டிருந்த காந்திக்கு தாத்தாவின் குரல் கேட்டது. தினமும் கேட்டதுதான். முகத்தைச் சுளித்தான். ஐந்து வயதாக இருந்தபோது, சஞ்சிக்கூலியான (JANJI - மலாய் மொழியில், சத்தியம். அதுவே, `காண்ட்ராக்ட்’ என்பதன் தமிழ்ச்சொல்லாக சஞ்சியென மறுவிற்று). தன் தந்தையின் கைவிரலைப் பற்றிக்கொண்டு `ஊரிலிருந்து’ அன்றைய மலாயாவுக்கு வந்த தாத்தா, தோட்டப்புற தமிழ்ப்பள்ளியில் `அஞ்சு கிளாஸ்’வரை படித்தவர். இளவட்டங்களைப்போல மலாய் மொழி கலக்காமல், சுத்தமான தமிழ் பேசுவார். `ஒங்கப்பன் ஒழுங்கில்ல. அதான் ஒங்கம்மா பெத்துப் போட்டுட்டுப் போனதும், ஒன்னய நானே வெச்சுக்கிட்டேன்!’ என்று அடிக்கடி சொல்வார். இதையெல்லாம்கூட `வயசான தோஷம்’ என்று அலட்சியப்படுத்தலாம். ஆனால், அவர் சொன்னதில் காந்தியால் தாங்கமுடியாதது, `நீயும் காந்திமாதிரி இருக்கணும்டா. பொய்யே பேசக்கூடாது’ என்பதுதான். பெயர் வைத்துவிட்டால் மட்டும் ஆயிற்றா? மேல்நாட்டில் படித்துப் பட்டம் பெற்ற காந்தி எங்கே, இந்தக் கேடுகெட்ட குப்பத்தில் வாழும் தான் எங்கே! `உயர உயரப் பறந்தாலும்’ என்ற் ஏதோ சொல்வாரே, தாத்தா! அந்தக் கதையாகத்தானே இருக்கிறது! வலுக்கட்டாயமாக அந்த காந்தியை ஒதுக்கிவிட்டு, தன் முகபிம்பத்தில் கவனத்தைச் செலுத்தினான். ஓரிரு பருக்கள் இருந்த கன்னத்தில் எச்சிலைத் தடவினான். “காந்தி, டேய்!” தாத்தாவின் குரல் வாசலிலிருந்து கேட்டது. அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், கண்ணாடியின் பின்னால் கைவிட்டுப் பார்த்துவிட்டு, திருப்தியுடன் தலையை ஆட்டிக்கொண்டான் காந்தி. `ரெண்டாயிரம் கொடுப்பாங்களாமே! கொஞ்சம் சேர்ந்ததும், மொதல் வேலையா தாத்தாவை ஊருக்கு அனுப்பி வைக்கணும். பளனி, மதுரை எல்லாம் போய், சந்தோசமா சாமி தரிசனம் பண்ணிட்டு நிதானமாத் திரும்பி வாங்கன்னு!’ அந்த நினைப்பிலேயே சுதந்திரம் வந்துவிட்டதுபோன்ற நிறைவு ஏற்பட்டது. `கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!’ என்று தானே எழுந்ததது பாட்டு. தாத்தாவின் நினைவு தொடர்ந்தது. `கல்யாணம் கட்ட ஒருவாட்டி ஊருக்குப் போனேன். கப்பல்லே. அதோட சரி. வர்ற பத்தாவது மாசம் திரும்பிப் போலாம்னு இருக்கேன்!’ வருடம் தவறாமல் இதையே நம்பிக்கையோடு சொல்வார். `பத்தாவது மாசம்’ வந்துவிட்டால், `நாலாவது மாசம்’ என்று அதை மாற்றிக்கொள்வார், அலுக்காமல். ஆனால், ஒவ்வொரு தேர்தலின்போதும் ஓட்டுப் போடப்போகும் முதல் ஆள் அவராகத்தான் இருப்பார். புரியாது, அவன் ஒருமுறை கேட்டேவிட்டான். `ஊரு, ஊருங்கறீங்க! இங்க யாரு பதவிக்கு வந்தா என்ன, வராட்டி என்ன? எதுக்கு இப்படி ஓட்டுப்போடணும்னு ஓடறீங்க?’ வெகுண்டெழுந்தார் தாத்தா. `என்னடா அப்படிக் கேட்டுப்பிட்டே? நாம்ப இருக்கிற எடத்துக்கு உண்மையா இருக்க வேணாம்? இந்த மண்ணிலதான் பிள்ளைகுட்டி பெத்து, நாயா ஒளைச்சு அவங்களைக் காப்பாத்தி, இந்த வீட்டைக் கட்டிப்போட்டு..!’ “டேய் காந்தி!” குரல் சற்று அருகிலிருந்து மீண்டும் கேட்க, “என்ன தாத்தா?” என்று சலிப்புடன் குரல் கொடுத்தபடி, ஆறங்குல மரச்சீப்பை கையில் எடுத்துக்கொண்டான் காந்தி. பதினேழு நிமிடங்கள். தினசரிக் கணக்கு. அவனுடைய ஒவ்வொரு வயதுக்கும் ஒரு நிமிடம். தலை வாரி முடிய இன்னும் நான்கு நிமிடங்கள். “எனக்கு இந்த நேசனைக் கொஞ்சம் படிச்சுச் சொல்லுடா. கண்ணே தெரிய மாட்டுது!” காந்தி பல்லைக் கடித்துக்கொண்டான். மலாய் பள்ளிக்கூடத்தில் படித்த தன்னை டியூஷன் வகுப்புக்கு அனுப்பியாவது தமிழ் கற்றுக்கொள்ள வைத்தது இதற்குத்தானா என்ற எரிச்சல் பிறந்தது. தமிழ் கற்ற நேரத்தில் கணக்கில் கவனம் செலுத்தியிருந்தால், பாசாகித் தொலைத்திருக்கலாம். `இன்னொரு வருசம் படியேண்டா!’ என்று தாத்தா வற்புறுத்தியபோது மறுத்துவிட்டான். அக்கம்பக்கத்தில் யார் எட்டாவதைத் தாண்டி இருக்கிறார்கள்? “காந்தி..!” `அன்னாடம் பேப்பர் படிக்காட்டி என்ன! தினமும் சண்டை, கொலை, கற்பழிப்பு, அவ்ளோதான்! போரிங்! பரிச்சை எளுதக்கூட நான் இவ்வளவு படிச்சதில்ல!’ தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான். இதையெல்லாம் தாத்தாவிடம் சொல்லித் தப்பிக்க முடியாது. அவர் பேசப் பிடித்துக்கொண்டால் அவ்வளவுதான். சில சமயம், அரைகுறை ஆடைகளில் கவர்ச்சிகரமாகப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்த நடிகைகளைப் பார்த்துவிட்டு, `சினிமா பக்கம் படிக்கட்டுமா, தாத்தா?’ என்று இவனே துணிந்து கேட்டாலும்,`இப்பல்லாம் என்னடா சினிமா? அந்தக் காலத்தில பாகவதர் பாடுவாரு, பாரு!’ என்றபடி, `கிஸ்னா, முகுந்தா,’ என்று பாடவும் ஆரம்பித்துவிடுவார். ஒரு வரி பாடுவதற்குள் இருமல் ஆரம்பித்துவிடும். பாட்டை நிறுத்திவிட்டுப் பேச்சைத் தொடர்வார்: `காந்தி! ஒன்கிட்டே சொல்லி இருக்கேனோ? நான் ஒன் வயசா இருக்கிறப்போ பாட்டு படிச்சபடி, மேடை நாடகத்திலே எல்லாம் நடிச்சிருக்கேன்!’   `ஒன் வயசா’ என்று அவர் ஆரம்பிக்கும்போதே, அடுத்து வரும் வார்த்தைகளை அவன் ஒலியில்லாமல், கூடவே உச்சரிப்பான். அந்த அளவுக்கு அவ்வார்த்தைகள் அவனுக்கு மனப்பாடம் ஆகியிருந்தன. முகத்தில் அலட்சியச் சிரிப்பு தெளிவாகத் தெரியும். நடிகர் என்றால் பணக்காரராக இருக்க வேண்டாமோ? தெருமுனையில் அழுகைச்சத்தம். எந்த ஒழுங்குமுறையும் இல்லாது, அவரவர் அவசரத்துக்குக் கட்டிக்கொண்டிருந்த குடியிருப்பு ஆதலால், `குடிசை’ என்றும் சொல்ல முடியாமல், `வீடு’ என்றும் மனதாரச் சொல்ல முடியாது, நவக்கிரகங்கள்போல் வெவ்வேறு திசையை நோக்கியிருந்தன அந்த புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த உறைவிடங்கள். ஓரத்திலிருந்த சில வீடுகளை முதல்நாள்தான் டிராக்டர் வைத்து இடித்துத் தள்ளியிருந்தார்கள். எப்போதும் காணப்படும் ஆளுயர குப்பைமேடு, பலகைகளும், உலோகத் தகடுகளும் சேர, மேலும் உயர்ந்து இருந்தது. தெருநாய்கள் ஆரவாரமாக விளையாடிக்கொண்டும், சண்டை பிடித்துக்கொண்டும் இருந்தன. வீட்டை இழந்து, தமது சொற்ப உடைமைகளுடன் பெண்கள் அழுதபடி நிற்க, அவர்களைப் பார்த்து சிறுகுழந்தைகளும் அழுதுகொண்டிருந்தனர். ஆண்கள் கண்ணில் நிராசை -- இந்தமாதிரி சுதந்திரமான இடத்தில் இனிமேல் தங்கமுடியுமா என்ற விரக்தியில். `நானும் இப்படி ஒண்ணுமில்லாம நிக்கற நெலமை வரக்கூடாது!’ “காந்தி! இன்னுமா தலைசீவி முடியல? முடி எல்லாம் கொட்டிடப்போகுதுடா!” பலமுறை கேட்டிருந்த தாத்தாவின் நகைச்சுவையை ரசிக்க முடியாது, தரையில் கிடந்த பாய்மேல் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த ஜீன்சையும், டி.ஷர்ட்டையும் அணிந்துகொண்டான். தீபாவளியை முன்னிட்டு, கோலாலம்பூர் `செமுவா ஹௌஸ்’ (SEMUA HOUSE -- எல்லோருடைய வீடு) கட்டிடத்தின் பக்கத்தில் பிரத்தியேகமாகக் கடைகள் போடப்பட்டபோது, வெளியில் தொங்கிக் கொண்டிருந்த அந்தச் சட்டை எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கத் தவறவில்லை. அதன் இரு பக்கங்களிலும் குறுந்தாடியுடன் ஒசாமா பின் லாடன் -- ஈராக் போர் மூள காரணமாக இருந்தவர். நமட்டுச் சிரிப்புடன் பலரும் நகர, `இதைப் போட்டா, நம்பளையும் பாப்பாங்கல்ல!’ என்ற நப்பாசையுடன் அவன் வாங்கியது. “டேய்! கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்ல?” “நான் வெளியே போகணும்!” என்று முணுமுணுப்பாகப் பதிலளித்தவன், ஒரே பாய்ச்சலில் வெளியே நடந்தான். அவசரத்தில், தாழ்வான கூரையின் அலுமினியத் தகடு நெற்றியில் இடித்தது. அதனால் உண்டான வலியும், `பாத்துப் போயேண்டா!’ என்ற தாத்தாவின் கரிசனம் ஏற்படுத்திய ஆத்திரமும் அவன் பைக்கை உதைத்த விதத்தில் தெரிந்தது. அதற்கு அவன் அவசரம் புரியவில்லை. நிறைய உதை வாங்கியது. `இது வேற! சனியனை `ஸம்பால’ (SAMPAH  - குப்பை, மலாயில்) கடாசிட்டு, சீக்கிரம் புதுசு ஒண்ணு வாங்கணும். பளபளான்னு இருக்கும்!’ என்று சொல்லிக்கொண்டவனுக்கு, செல்வநாதனைப்போல் தானும் கார் வாங்கும் நாள் தூரத்தில் இல்லை என்ற எண்ணமே சற்று ஆறுதலைக் கொடுத்தது. செல்வநாதன் -- பதினான்கு வயதில், சிகரெட்டுப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்த குரு. `இதுக்கெல்லாம் பணமில்லியே!’ என்று இவன் தயங்கியபோது, `ஸ்கூலுக்குப் போக பஸ் எதுக்குடா ஒனக்கு? நடந்து போவியா! அந்தக் காசை நல்லா, ஜாலியா செலவழிக்கலாமில்ல?’ என்று ஞானம் வழங்கியவன். அவன் இன்று புதிய ப்ரோட்டான் வீரா காடி வைத்திருக்கிறான். கழுத்தில் கெட்டியான தங்கச் சங்கிலி. எட்டு பவுன் இருக்கும். ஒரு காதில் ரஜினி வளையம். “இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா காந்தி இந்த நாத்தம் பிடிச்ச கம்பதிலேயே (KAMPUNG -- கிராமம்) இருப்பே? வீட்டுக்கு ஜன்னலுமில்ல, காத்துமில்ல. என்னிக்காவது ஒரு நாள் எல்லாத்தையும் இடிச்சுட்டுப் போயிடுவாங்க!” என்று செல்வநாதன் சில மாதங்களுக்குமுன், தற்செயலாகச் சந்திப்பதுபோல் சந்தித்து,  ஆரம்பித்தபோது, “பதிலுக்கு அவங்க அபார்ட்மெண்ட் தர மாட்டாங்க?” என்று அப்பாவித்தனமாக வினவினான் காந்தி. “பெரிய அபார்ட்மெண்ட்!” நண்பன் பழிப்புக் காட்டினான். “பத்தடுக்கு மாடி, தெரியுமா? புறாக்கூண்டு மாதிரி, ஒவ்வொண்ணிலேயும் நாலு வீடுங்க. ஒரே ரூம்புதான். லிஃப்ட் எப்பவுமே ரோஸா (ROSAK -- பழுது) ஆகிடும். இப்ப மாதிரி, தண்ணிக்காசு, விளக்குக்காசு குடுக்காம இருக்கமுடியுமா? நீ லோரி கிளீனரா வாங்கற சம்பளம் அதுக்கே சரியாப் போயிடும்!” `இவனுக்குத்தான் எவ்வளவு சமாசாரங்கள் தெரிந்திருக்கிறது!’ என்ற பிரமிப்பையும் மீறி, தாத்தாவைபோல் லோரி டிரைவராக ஆனாலும், தன் தரித்திரம் தொலையாது என்ற உண்மை புரிய, காந்தியின் முகம் தொங்கிப்போயிற்று. அதை எதிர்பார்த்திருந்த நண்பன் வேப்பிலை அடித்தான். “நீ வர்றியா, சொல்லு. எங்க பெரிய மண்டகிட்ட கூட்டிட்டுப்போறேன். பியாசாவா (BIASA --வழக்கமாக), அவர் யாரையும் கண்டுக்க மாட்டாரு. ஆனா, `இப்பிடி, நம்ப பையன் ஒருத்தன் கஸ்டத்தில இருக்கான். நல்ல பையன், மண்ட. சொன்ன பேச்சு கேப்பான்’னு நான் எடுத்துச் சொன்னதுமே, `பாவம், கூட்டிட்டு வாடா. நம்பளோட சேத்துக்கலாம்’னு சொல்லிட்டாரு!”  “தமிழாளா?” “அட,நீ ஒத்தன்! தமிழவங்க `விதி, விதி’ ன்னு பொலம்பிக்கிட்டு, கஸ்டத்திலேயே காலத்தைக் கடத்திடுவாங்க. இவரு சீனரு!” யோசித்தபடியே வீடு திரும்பிய காந்தி, செல்வநாதன் குறுகிய காலத்திலேயே பெரிய பணக்காரன் ஆனதுபற்றி தாத்தாவிடம் வியப்புடன் தெரிவித்தான். “எனக்கென்னமோ, அவன் குறுக்கு வழியில போறான்னுதான் படுது!” என்ற தாத்தா, “எப்பவும் நம்பளைவிடக் கீள இருக்கிறவங்களைத்தான் பாக்கணும். அப்பத்தான் அந்த பத்துமலை முருகன் நம்பளை எவ்வளவு நல்லா வெச்சிருக்காருன்னு வெளங்கும்,” என்று தத்துவம் பேசினார். குண்டும் குழியுமாகப் பெயர்ந்த மண்தரையில் சிமெண்டு பூசி, சுவர் என்ற பெயரில் மரப்பலகைகள் வைத்த இடத்தில் காலம் தள்ளிவிட்டு, தான் ஏதோ பெரிய அதிர்ஷ்டசாலி என்பதுபோல் தாத்தா பேசியபோது, காந்திக்கு எரிச்சல்தான் எழுந்தது. அவர்கள் வீட்டு வாசலில் நின்று பார்த்தால், உலகத்திலேயே உயரமான இரட்டைக் கோபுரங்கள் தெரியும். இன்னொரு பக்கம் செல்வம் கொழிக்கும் மலைநாட்டின் மிகப் பெரிய பேரங்காடியான `மெகா மால்’. இவையெல்லாம் எப்படி தாத்தா கண்ணில் மட்டும் படாமல் போயின? `தாத்தா கனவிலேயே சந்தோசமாயிடறவரு!’ என்று முகத்தைச் சுழித்துக்கொண்டான். தானும் அவரைமாதிரி ஆகிவிடக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டது அப்போதுதான். நடுராத்திரி. ஏதோ ரகளை. வழக்கமாக, அக்கபக்கத்தில் எவனாவது குடிகாரன் மனைவியை அடிப்பதுபோல் இல்லாமல், வித்தியாசமாக இருந்தது. காந்தி எழுந்து வந்தான். வீட்டுக்குள் போலீஸ்காரர்கள்! ஒருவர் கையில் அவன் கண்ணாடிக்குப்பின் ஒளித்து வைத்திருந்த பார்சல்! “யாரிது?” காந்தியைக் காட்டிக் கேட்டார் ஒருவர். “என் பேரப்பிள்ளைதாங்க. சின்னப்பையன்! அவனுக்கு ஒண்ணும் தெரியாதுங்க”. “இதில நிறைய டாடா (DADAH -- போதைப்பொருள்) வெச்சிருக்கீங்க. எங்கேயிருந்து வந்திச்சு?” “எனக்குத் தெரியாதுங்க, பாஸ். இல்லாட்டி, `யாராவது சாமான் ஏதாச்சும் ஒங்ககிட்ட குடுத்தாங்களா?’ன்னு நீங்க கேட்டப்போ, நானே இதைக் காட்டி இருப்பேங்களா?” தாத்தா கூறிக்கொண்டிருந்தார். “என் கூட்டாளியோட மகன் -- அசலூர்க்காரன் -- `கிளப்புக்குப் போறேன், மாமா. நாளைக்கு வெள்ளனே வந்து இதை எடுத்துக்ககிட்டுப் போறேன்! அப்படின்னான். இதுக்குள்ளே என்ன இருக்குன்னு அவனும் சொல்லல. நானும் கேக்கல”.  “ரெண்டு கிலோ இருக்கும்! என்னமோ கதை அளக்கறீங்களே!” “நம்பிக்கைத் துரோகம் செய்துட்டானுங்க, பாவி!” தாத்தாவின் குரலில் அழுகை. காந்தி இருந்த பக்கம் அவர் திரும்பவே இல்லை. “தாத்தா..!” தயக்கத்துடன் அழைத்தான் பேரன். இப்படியெல்லாம் ஆகும் என்று செல்வநாதன் ஏன் எச்சரிக்கவில்லை? இப்போது என்ன செய்வது? கண்டிப்பான குரலில், “ராங்கி பண்ணாதே, காந்தி. பெரியவங்க பேசறப்போ, குறுக்கே பேசக் கூடாதுன்னு ஒனக்கு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்?” என்றார் தாத்தா, அவன் பக்கம் திரும்பாமலேயே. அதிகாரிகளிடம், “என் பேரப்பிள்ளைங்க!” மீண்டும் சொன்னார். “பேருதான் காந்தி. வெளங்காத பய. படிப்பும் ஏறல,” என்றுவிட்டு, “நான் வெள்ளக்காரன் காலத்திலேயே அஞ்சு கிளாஸ் படிச்சவன்!” என்றும் தப்பாமல் சொன்னார். தாத்தாவின் தற்பெருமையைக் காதில் வாங்காது, “வயசான காலத்திலே நீங்க இப்படி ஒரு காரியம் செய்திருக்க வேண்டாம். ஒரு கிலோ டாடா வெச்சிருந்தாலே மரண தண்டனை. தெரியுமில்ல?” என்று மேலும் அதட்டினார் அதிகாரி. மரண தண்டனையா! அதிர்ந்தான் காந்தி. தாத்தா தொணதொணப்புதான். எப்படியும் சில வருடங்களில் சாகப்போகிறவரும்கூட. ஆனால், பேராசை பிடித்துத் தான் செய்த காரியத்துக்காக சட்டம் அவரைத் தூக்கிலிடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தால், தான் என்ன மனிதனோடு சேர்த்தி? `காந்தி பொய்யே சொல்ல மாட்டாராம். அதான் அவர் பேரை ஒனக்கு வெச்சேன். நீயும் அவர்மாதிரி..!’ தாத்தா மட்டும் இப்போது பொய் சொல்லலாமோ என்று குழந்தைத்தனமான கோபம்தான் முதலில் எழுந்தது காந்திக்கு. சட்டென விளங்கியது அவனுக்கு. தன்னைக் காப்பாற்ற, மரண தண்டனைக்கும் துணிந்துவிட்டார்! தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு வர அதிக நேரம் பிடிக்கவில்லை காந்திக்கு. “ஸார்! தாத்தாவுக்கும், இந்தப் பார்சலுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல,” என்று திடமாக ஆரம்பித்தான். ஆழ்ந்த வருத்தத்தையும் மீறி, தாத்தாவின் முகத்தில் சிறு நகையின் ரேகை படர்ந்தது. பேரனுக்குக் காரணப்பெயரைத்தான் வைத்திருக்கிறோம் என்ற பெருமிதத்தின் வெளிப்பாடு அது.                                                (தமிழ் நேசன் பவுன் பரிசுப்போட்டியில் பரிசு பெற்றது, 2004) அடிபட்டவர் கை அணைக்குமா?   பிரபா எங்கடா? இன்னுமா வரலே?” அலட்சியமாகப் பதிலளித்தான் மகன். “ரெண்டு பஸ் மாத்தி வர கொஞ்சம் முந்திப் பிந்திதான் ஆகும். அதான் சமைச்சு வெச்சுட்டுப் போயிருக்கா, இல்லே?” கிழவருக்கு என்னமோபோல் இருந்தது. ஏதோ கரிசனத்தில் கேட்டதாகத்தான் அவர் நினைத்தார். ஆனால், `தன் பெண்டாட்டியை அப்பா என்ன குறை சொல்வது?’ என்ற எரிச்சலுடன் இவன் வக்காலத்து வாங்குகிறானே! ஐந்து மணிக்கு வேலை முடிகிறது. இப்படியா ஒருத்தி வீட்டு நினைப்பே இல்லாது, ஏழரை மணிக்குமேல் ஆகியும், ஊர் சுற்றிக்கொண்டிருப்பாள்! ஒரு குடும்பப் பெண் சந்தியா காலத்தில் குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டாம்? பின் எப்படி லட்சுமி வீட்டுக்குள் நுழைவாள்? சே! தன்னோடு வாழ்ந்த நாற்பத்து ஐந்து வருடத் தாம்பத்தியத்தில் என்றாவது இப்படி ஒரு அநியாயம் பண்ணியிருப்பாளா அன்னம்மா? பாவம், ஒரே ஒரு தடவைதான் சின்னத் தப்புப் பண்ணிவிட்டாள்! அந்த நிகழ்ச்சியின் ஞாபகம் இப்போது சற்று பெருமையாகவும், இனம் புரியாத தாபத்தையும் உண்டாக்கியது. அண்ணி முறுக்கு பிழிய வரச் சொன்னாங்க. மத்தியானம் திரும்பி வந்துடுவேங்க. போகட்டுமா?” காலையிலேயே அவருடைய உத்தரவைப் பெற்றுத்தான் சென்றிருந்தாள் அன்னம்மா. சாயந்திரம் இவர் வந்தபோது, அவள் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்று தெரிந்ததும் ஆத்திரம் பீறிட்டது. மத்தியானம் வந்துவிடுவதாகத்தானே சொல்லிப் போனாள்? அது என்ன, அண்ணன் வீட்டில் சீராடல் வேண்டிக் கிடக்கிறது, வேலை முடிந்து வீடு திரும்பும் கணவருக்குத் தண்ணி கலக்கிக் கொடுக்க வேண்டுமே என்ற அக்கறைகூட இல்லாமல்! ஏதோ அனாதரவாக விடப்பட்டதுபோல பயம், கலக்கம். ஒவ்வொரு முறை சுவர்க்கடிகாரத்தில் கண் பதிந்தபோதும், இவருடைய வெப்பம் அதிகரித்தது. ஒரு வழியாக, எட்டு மணிக்கு வாடகைக்காரில் வந்து இறங்கினாள் மனைவி. “எவனோடடி சுத்திட்டு வர்றே?” தெருக்கதவை மறைத்தபடி இவர். எதிர்பாராத அதிர்ச்சியில் அவளுக்கு வாயடைத்துப்போயிற்று. எண்ணெய்ப் புகை பொறுக்க முடியாது, வாந்தியும், மயக்கமுமாக இருந்ததை எங்கே சொல்லவிட்டார்! இரவு முழுவதும், வார்த்தைகளாலேயே குதறி எடுத்தார். அவள் எந்தவித எதிர்ப்பும் காட்டாது, எல்லா அவமானங்களையும் ஏற்றது அவருக்குத் திருப்தியாக இருந்தது. இதுபோல பல சம்பவங்கள். பிரபா வரபோதே பசியோட வருவா, பாவம்! எல்லாத்தையும் சுட வைக்கணும்,” என்றபடி, உள்ளே போனான் பாலு. கிழவர் உதட்டைச் சுழித்துக்கொண்டார். அடுப்பின்மேல் சீனிச்சட்டியை (வாணலி) வைத்தவன், பேச்சுக்குரல் கேட்டு, காஸ் அடுப்பைச் சிறியதாக எரியவிட்டு, அவசரமாக வெளியே வந்தான். அவன் பயந்தபடியே, “ஏம்மா? மழையும் சாரலுமா இருக்கில்ல? ஏதாவது கனமான புடவையைக் கட்டிட்டுப் போயிருக்கக் கூடாது?” என்றவாறு மருமகளை வரவேற்றுக் கொண்டிருந்தார் கிழவர். `இப்படி உடல் தெரிய நைலக்ஸ் புடவை கட்டிக்கொண்டு, அதிலும், தலைப்பை ஒற்றையாக விட்டுக்கொண்டு இருக்கிறாயே! எல்லாத் தடியன்களுடைய பார்வையும் ஒரே மாதிரி இருக்குமா?’ என்று மனதுக்குள் அவர் திட்டிக்கொண்டது அவளுக்கா புரியாது! எதுவும் பேசாது, மாமனாரை முழுவதாக ஏறிட்டுப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, உள்ளே போக யத்தனித்தாள். கணவனைக் கண்டதும், அவளது புன்னகை விரிந்தது. “சாப்பாட்டைச் சுட வைச்சுட்டீங்களா? அப்பாடி! பசி கொல்லுது,” என்றபடி சாப்பாட்டு மேசைமுன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள். கிழவரின் உணர்ச்சிகள் கொந்தளித்தன. ஆண்பிள்ளையாய் லட்சணமாய், தான் அவனுடைய அம்மாவை `வைக்க வேண்டிய இடத்தில்’ வைத்திருந்ததைப் பார்த்து வளர்ந்திருந்த பிள்ளை! இன்று பெண்டாட்டிக்குக் குடை பிடிக்கிறான்! இந்தக் காலத்துப் பயலுகளே மோசம்! வெட்கம் கெட்டவனுங்க! கிழவரின் கைகள் இறுகி, வலித்தன. அப்பா! சாப்பிட வர்றீங்களா?” ஏதோ, இப்போதாவது அப்பா ஞாபகம் வந்ததே! எந்தக் காலத்தில் அவர் சாப்பிடுமுன் அவர் மனைவி சாப்பிட்டு இருக்கிறாள்! கல்யாணத்தன்று மட்டும், `சம்பிரதாயம்’ என்ற பெயரில், இருவரையும் ஒன்றாக உட்காரச் சொல்லி, சாப்பிட வைத்தார்கள். ஹூம்! காலம்தான் எவ்வளவு கெட்டுவிட்டது!  இன்று, இந்த சின்னப்பெண் முதலில் உட்கார்ந்துகொண்டு, அதிகாரமாய் சாப்பிடுகிறது, வீட்டுக்குப் பெரியவன் நான் -- ஒரு ஆண்பிள்ளை -- பசியோடு இருப்பேனே என்கிற பயமோ, மரியாதையோ கொஞ்சமும் இல்லாமல்! வேண்டாவெறுப்புடன் உள்ளே போனவருக்கு, கையை மட்டும் கழுவிவிட்டு பிரபா சாப்பிட்டுக்கொண்டிருந்தது கண்ணை உறுத்தியது. அடக்க மாட்டாது, “ஏம்மா, பிரபா! வெளியில அலைஞ்சுட்டு வந்தது கசகசன்னு இல்லே? குளிச்சிருக்கலாமே!” என்று அவளைக் கேட்டபோது, தன்மேலேயே கோபம் எழுந்தது. கேவலம், ஒரு பெண்ணுக்கு மரியாதை கொடுத்துப் பேசவேண்டி வந்துவிட்டதே என்று குன்றிப்போனர். பட்டென்று அவள் புத்தியில் உறைக்கிறமாதிரி, `பொம்பளையா, லட்சணமா, வீட்டுக்கு வந்ததும் புருஷனையும், மாமனாரையும் கவனிச்சுக்கறதை விட்டுட்டு, இப்படி ஊர் சுத்திட்டு, அதிலும் வெக்கமில்லாம, கட்டின புருஷனையே வீட்டு வேலை செய்ய விட்டுட்டு, என்னமோ மகாராணிமாதிரி சாப்பிட ஒக்காந்துட்டியே! எழுந்திருடி, சரிதான்!’ என்று பொரியத் துடித்தார். ஆனால், `மகன்’ என்ற பெயரில் யமன் அல்லவோ அவருக்கு வாய்த்திருந்தான்! கல்யாணம் ஆவதற்கு முன்பே அவருக்கு வாய்ப்பூட்டு போட்டிருந்தான்: `நீங்க ஒங்க காலத்தையே நெனைச்சுக்கிட்டு, வர்றவளையும் விரட்டிக்கிட்டு இருக்காதீங்க. எனக்குப் பிடிக்காது!' சிறு வயதிலேயே முரடன் அவன். அன்னம்மா சாம்பாரில் அதிகமாக உப்பு போட்டுவிட்ட குற்றத்துக்காக அவளை அடிக்க இவர் கையை ஓங்க, பதினாறு வயதுப் பையனாக இருந்த அவன், ஓங்கிய கையை இறுகப் பிடித்துக்கொண்டு, `அம்மாமேல இன்னொரு தடவை ஒங்க கை பட்டுச்சோ.., அதை வெட்டி எறிஞ்சுடுவேன், ஆமாம்!’ என்று உறுமியவன் ஆயிற்றே! வயதான காலத்தில், வருவாயோ, வேறு போக்கிடமோ இல்லாத நிலையில், இவனைப் பகைத்துக்கொண்டால், யாருக்கு நஷ்டம்? தலையை அளவுக்கு மீறி குனிந்தபடி சாப்பிடுவதாகப் பாவனை செய்தாலும், அந்தத் தம்பதியரிடையே உண்டான சங்கேதக் குறிப்புகளும், கண் சிமிட்டலும் அவருக்குத் தெரியாமல் போகவில்லை. தன் தாம்பத்தியத்தில் மட்டும் ஏன் இப்படி -- நினைத்து, நினைத்து ஆனந்தப்படும்படி -- எதுவுமே நிகழவில்லை? அன்னம்மா ஏன் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒத்துழைக்கவில்லை? மற்ற எல்லா விதத்திலும் அனுசரித்துப்போனாளே? `உங்களால் என் உணர்ச்சிகளைக் கிளற முடியாது!’ என்ற வீம்பு பிடித்தவள்போல், மரக்கட்டையாய் படுக்கையில் கிடந்த மனைவி அவருடைய  ஆண்மைக்கே சவால் விடுவது போலிருந்தது. அவளுடைய  அப்போக்கு பொறுக்காதுதானே நொந்த மனதுக்கு ஆறுதல் தேடி, கண்ட பெண்களை நாடிப் போனார்! அப்பெண்களும் அவரது ஸ்பரிசத்துக்காக ஏங்கிக் காத்திருந்ததுபோல் நடந்துகொண்டது தான் அள்ளிக் கொடுத்த காசுக்குரிய நடிப்பாக இருக்கும் என்று அவர் நம்பத் தயாராக இல்லை. இதமாகத்தான் இருந்தது. தனக்கு மனைவியாக வாய்த்தது பெண் ஜன்மமே இல்லை என்று குமுறினார். அவள்மேல் விளைந்த இளக்காரமும், அது தோற்றுவித்த பலாத்காரமும் மேலும் வலுப்பட்டன. கை கழுவியபடியே பிரபா திரும்பினாள். “இன்னிக்கு ஒரு வேடிக்கை,” என்று கணவனிடம் ஆரம்பித்தாள். “எங்கூட வேலை செய்யற ஜெயா இல்லே, அவ வீட்டுக்குப் போன் பண்ணினா -- பிள்ளைகூட பேச. அதுக்கு மூணு வயசு. அம்மாகூட பேசமாட்டேன்னு அது அடம் பிடிக்க, இவ திரும்பத் திரும்ப போன் போட்டுக் கெஞ்ச..!” பிரபாவுக்குச் சிரிப்பு பொங்கி வந்தது. அதிஷ்யமா இருக்கே!” வாயில் போட்டிருந்த கவளத்தை விழுங்காமலே அவளுடைய கதையில் ஆர்வம் காட்டினான் பாலு. ஆமா!” நொடித்தாள். “கண்டிப்பு என்கிற பேரிலே இவ ஓயாம அந்தப் பையனை அடிப்பாளாம்.அதை எங்க எல்லார்கிட்டேயும் தினமும் பெருமையா சொல்லிக்கறது இருக்கே! இப்ப இவளுக்கு வேணும்கிறபோது, `ஓடி வந்து என் கழுத்தைக் கட்டிக்க’ன்னா?” கிழவருக்குச் சட்டென்று புரையேறியது. இந்தச் சின்ன விஷயம் ஏன் தனக்குப் புரியாமல் போய்விட்டது? பெற்ற குழந்தையாக இருந்தால் என்ன, கட்டிய மனைவியாக இருந்தால்தான் என்ன, அன்பை நாம் முதலில் கொடுத்தால்தானே அதைத் திரும்பப் பெறமுடியும்! மனைவியின் போக்கை நிர்ணயித்ததே தான்தான் என்று புரிந்தபோது, அந்த வேதனை அவ்வயோதிகர் முகத்தில் படர்ந்தது. அடிவயிற்றிலிருந்து இரும ஆரம்பித்தார். மெதுவாச் சாப்பிடுங்க, மாமா,” என்றாள் பிரபா கனிவுடன். “சாப்பிடறபோது நான் பேசியிருக்கக்கூடாது!”                                                                                                 (நயனம், 1993, மின்னூல் தொகுப்பு) மோகம்   அப்போதுதான் விசா வந்திருந்தது. அமெரிக்காவில் படிக்கப்போகிறோம்! கண்ணனுக்குப் பூரிப்பு தாங்கவில்லை. கூடவே ஓர் உறுத்தல். மேற்படிப்புக்காகப் பல வருடங்கள் பிரிந்து போகும் மகனுக்காக, தமிழ், இந்திப் படங்களில் வருவதுபோல, அவனுடைய பெற்றோர் விமான நிலையத்துக்கு வந்து மாலை அணிவித்து வழி அனுப்பாவிட்டால் போகிறது, இப்படி முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளாமலாவது இருக்கலாமே என்ற அலுப்பும் கோபமும் அவனை அலைக்கழைத்தன. அவனுடைய அதிர்ஷ்டத்தை புகழ்ந்து பேசுவதைப்போல நடித்தாலும், தெரிந்தவர்களெல்லாம் உள்ளூரப் பொறாமைப்படுவது அவனுக்குப் புரிந்துதான் இருந்தது. அப்பாவுக்கு மட்டும் ஏன் இந்தப் பெருமை புரிய மாட்டேன் என்கிறது? இன்றா, நேற்றா? அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கண்டுவந்த கனவு அது. ஐந்து வயதாக இருந்தபோது, அவர் உறையாற்றவிருந்த விழா ஒன்றுக்குக் கண்ணனையும் அழைத்துப் போயிருந்தார் அப்பா. `நீ பெரியவன் ஆனதும், அப்பாமாதிரி தமிழ் பேசுவியா?’ என்று யாரோ விளையாட்டாய் கேட்டபோது, `நான் அமெரிக்கனாப் போகப்போறேன்!’ என்றான் திட்டவட்டமாக. கேட்டவர் அதிர்ந்து, சுப்பையாவிடம் அதைத் தெரிவித்தபோது, `அவனுக்கு என்ன தெரியும்! சின்னப்பிள்ளை! மேக் டோனால்ட்ஸில ஐஸ்க்ரீம், டி.வியில மிக்கி மௌஸ்னு வளர்ற பையன் இல்லியா?’ என்று மகனுக்கு வக்காலத்து வாங்கினார். அடுத்த ஆண்டே கண்ணனை தனியார் பள்ளியில் சேர்த்தார். “எதுக்குடா? அங்க தமிழ்கூட இல்ல!” என்று ஆட்சேபித்த அவரது தந்தையிடம், “தமிழ்தானே!” என்றார் அலட்சியமாக. “நான் சொல்லிக் குடுத்துட்டுப்போறேன்!” “நம்ப வசதிக்கு..,” என்று மனைவியும் இழுத்தாள். “அரசாங்கப் பள்ளியிலே இலவசமா படிக்கிறதை விட்டுட்டு!” “இருக்கிறது ஒரு மகன்! இவனுக்கு இல்லாம, வேற யாருக்கு செலவழிக்கப்போறோம்! என்னைச் சாயந்திரம் ஒரு இடத்திலே வேலை செய்ய கூப்பிட்டிருக்காங்க. எல்லாம் முடியும். சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்காதே!” என்று அவள் வாயை அடைத்தார். பதினேழு வயதானபோது, “அப்பா! நான் அமெரிக்கா போய் படிக்கலாம்னு இருக்கேன். எங்க டீச்சருங்க அழுத்திச் சொல்றாங்க, எனக்கு அங்க நல்ல எதிர்காலம் இருக்குன்னு!” என்று, அதை நினைத்துப் பார்க்கும்போதே ஏற்பட்ட பெருமையை மறைத்துக்கொண்டு, ஏதோ பேச்சுவாக்கில் சொல்வதுபோல் தெரிவித்தான். தந்தை அடைந்த அதிர்ச்சியைக் கவனிக்கும் மனநிலையில் அவன் இருக்கவில்லை. “ஒங்களுக்கு என்னை அங்கே அனுப்பற செலவு மட்டும்தான்!” “சம்பளம்?” “படிச்சு முடிச்சு, வேலை கிடைச்சதும், நானே மெதுவா அடைச்சுடுவேன், சம்பளத்துக்காக பட்ட கடனை!” சுப்பையா குமைந்தார். பல்கலைக்கழகமே இல்லாத நாடா இது? அது என்ன, அப்படி ஒரு அயல்நாட்டு மோகம்? பணம்தானே இந்தக் காலத்து இளைஞர்களுக்குப் பெரிதாகப் போய்விட்டது! உறவு, பாசம், நன்றிக்கடன் எல்லாம் வெறும் வாய்வார்த்தைகள்தாம். வயதான காலத்தில் தான் தந்தையைப் பராமரிக்கிறோமே! ஆனால், தன் மகன் திரும்பியாவது வருவானா?       அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருந்தான் மாதவன். “ஹை அங்கிள்!” என்று அட்டகாசமாக அழைத்தபடி வந்தவனை இன்னார் என்று புரிந்துகொள்ளவே அவருக்குச் சில நிமிடங்கள் பிடித்தன. அண்ணன் மகன்! தலைமுடியை ஓரடி நீளத்திற்கு வளர்த்து, ரப்பர் பாண்ட் போட்டுக் கட்டி, குதிரை வாலாகத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தான். அது பரங்கி நிறத்திலிருந்தது. ஒரு காதில் வளையம். சட்டைப் பாக்கெட்டிலிருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது சிகரெட் பாக்கெட். இங்கு, மலாயா பல்கலைக்கழகத்தில் படிக்கும்வரை, சாதாரணமாக, எல்லாப் பையன்களையும் போலத்தானே இருந்தான்! சில வருடங்கள் அயல்நாட்டுக்குப் போய்வந்ததும், என்ன கேடு வந்துவிட்டது! இதை வெளிப்படையாகக் கேட்கலாமோ? நாக்கைப் பிடுங்கிக்கொள்கிறாப்போல் அவன் பதிலடி கொடுத்தால்? ஏற்கெனவே, சிறுவயதிலிருந்து `சித்தப்பா,’ என்று அழைத்தவன் `அங்கிள்!’ என்கிறான், ஸ்டைலாக! `எதற்கு வம்பு!’ என்று சுப்பையா மௌனம் சாதிக்க, “படிப்பெல்லாம் முடிஞ்சுடுச்சா, மாதவா?” என்று கேட்டான், புதிய குரல் கேட்டு உள்ளேயிருந்து வந்த கண்ணன். “எனக்குப் படிப்பிலே இண்டரெஸ்ட் போயிடுச்சுடா,” என்று சாவதானமாகச் சொன்னவனை அதிர்ச்சியுடன் பார்த்தார் சுப்பையா. “மாஸ்டர்ஸ் பண்ணினேனா! கதறிக்கிட்டு, `டாக்டரேட் பண்ணுடா’ன்னாங்க அங்க. அதுக்குள்ள எனக்குப் பாட்டில ஆர்வம் அதிகமாயிடுச்சு. ஒரு குரூப்பில சேர்ந்து பாடிக்கிட்டிருந்தேன். அப்புறம், ஆராய்ச்சியாவது, மண்ணாவது! அங்கே நிரந்தரமா தங்க முடியாதுங்கிற நிலை. நல்லதாப்போச்சு. திரும்பி வந்துட்டேன்!” என்று ஒரே மூச்சில் கூறி முடித்தவனிடம், “என்னடா இது!” என்று மட்டும்தான் கேட்க முடிந்தது சுப்பையாவால். “போங்க அங்கிள்! ஊரா அது! `சாப்பிட வெளியே கூட்டிட்டுப் போனேன் என் மகளை. இன்னும் தன் பங்குக் காசை அவ குடுக்கலே’ன்னு எங்கிட்ட அலுத்துக்கறாரு எங்க பக்கத்து வீட்டுக்கார வெள்ளைக்காரரு. பொண்ணு பேரம் பேசுதாம், `அதுக்குப் பதிலா, ஒங்க தோட்டத்தில புல் வெட்டறேன்’னு! சீ!” என்று பழித்தான். “ஒங்களுக்குத்தான் தெரியுமே! எனக்குப் பாட்டுதான் உயிர், ஒலகம் எல்லாம். இது அப்பாவுக்குப் புரியுதா! `இவ்வளவு செலவழிச்சு ஒன்னைப் படிக்க வெச்சேனேடா’ன்னு கண்டபடி கத்தறாரு. அதான் அவர் முகத்திலேகூட முழிக்கப் பிடிக்காம, இங்க வந்துட்டேன்!” தோள்களைக் குலுக்கினான். பிறருக்குத் தன்னால் விளையும் பாதிப்பைச் சற்றும் பொருட்படுத்தாது, இப்படி -- தான், தன் சுகம் என்று -- வாழ எங்கு கற்றுக்கொண்டான் இவன்? `இவனுக்கென்ன, இருபத்தியாறு வயது இருக்குமா?’ என்று சுப்பையாவின் யோசனை போயிற்று. இன்னமும் கையில் வேலை என்று எதுவும் கிடையாது. அப்பாவின் பணத்தில் `துன்பம்’ என்றால் என்னவென்றே அறியாமல் வளர்ந்தவன். இப்போது யாரை மொட்டை அடிக்கலாம் என்று இங்கு வந்திருக்கிறான்! `விடுங்க!’ என்பதுபோல் கையை வீசீய மாதவன், “கண்ணன்! தலையை மொட்டையா வெட்டிக்கலாம்னு இருக்கேன்! இந்த ஹேர் ஸ்டைல் அலுத்திடுச்சு. ஒனக்குத் தெரிஞ்ச நல்ல சலூன் இருந்தா, கூட்டிட்டுப் போடா,” என்றபடி எழுந்தான். அப்படித்தான் பழனிச்சாமியைச் சந்தித்தார்கள் இருவரும். சிறியதாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது அந்த முடிவெட்டும் கடை. கடையில் வேறு யாரும் இருக்கவில்லை. நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பழனிச்சாமி, `தமிழாளுங்க!’ என்று பரவசமானார். “நான் திருச்சியிலேருந்து வந்தேங்க,” என்று வலியத் தெரிவித்தார். “எப்போ?” மரியாதைக்காகக் கேட்டுவைத்தான் கண்ணன். “அது ஆச்சு, ஒண்ணரை வருஷம்! மூணு வருஷ காண்ட்ராக்ட். எப்போ திரும்பிப் போவோம்னு இருக்கு,” என்று தாபத்துடன் சொன்னவரை சற்றே ஆச்சரியத்துடன் பார்த்தான் கண்ணன். “இங்கே நல்லா பணம் பண்ணலாமே?” “அதெல்லாம் சும்மா, தம்பி. இங்க காலையில ஒன்பதுக்குக் கடை திறந்தா, ராத்திரி பதினோரு மணிவரைக்கும் ஆளுங்க வந்துக்கிட்டே இருப்பாங்க. ஒரு ரிங்கிட்டுக்குப் பன்னிரண்டு ரூபாய்னு சொன்னா, கேக்க பிரமிப்பா இருக்குதான். எனக்குக் கிடைக்கிற சம்பளம் எட்டு நூறு ரிங்கிட்!”. அவசரமாக மனக்கணக்குப் போட்டுப்பார்த்தான் கண்ணன். “கடையைக் கண்ட நேரத்தில மூடாம, ஒழுங்கா வேலை செஞ்சா, இந்த பணத்தை `ஊரிலேயே’ பாக்கலாம்!” என்றவர், சிறிது நேரம் மௌனமாக வேலையில் ஈடுபட்டார். “இங்க இவ்வளவு வேலையோட நானே சமைச்சுச் சாப்பிட வேண்டியிருக்கு. அனாதைமாதிரி இருக்கேன். அங்க வேளாவேளைக்கு எனக்குப் பிடிச்சதா ஆக்கிப்போட மனைவி. அதோட.., பிள்ளைங்களுக்கு ஒரு தலைவலி, காய்ச்சல்னா அவ தனியா கெடந்து திண்டாடணும்!” மாதவனுக்கும் சுவாரசியம் பிறந்தது. “அக்கம்பக்கத்தில உதவ மாட்டாங்களா?” “நீங்க ஒண்ணு! நான் என்னமோ கடல் தாண்டிவந்து, இங்க இருக்கிற பணத்தையெல்லாம் மூட்டை கட்டிட்டு வரப்போறேன்னு அவங்கவங்க வயத்தெரிச்சல் பட்டுக்கிட்டு இருக்காங்க. இங்க படற பாட்டை யார்கிட்ட சொல்றது!” கசந்து பேசினார். “அட, சொன்னாத்தான் நம்பப்போறாங்களா!” இளைஞர்கள் இருவரும் பேசாதிருந்தார்கள். “மலேயாவைச் சுத்திப் பாக்கணும்னு ஆசை. அதான் வந்தேன். ஆனா, ஊர் சுத்திப் பாக்க எங்க நேரம்? காசு செலவழிஞ்சுடுமேன்னு பயம். கைநிறைய சம்பாரிச்சு, சொந்தத்தில பெரிய கடை வைக்கலாம்னு கனவு கண்டேன். எல்லாம் வெறும் பிரமை!” ஏக்கப் பெருமூச்சு விட்டார். “சினிமாவிலதான் அதெல்லாம் நடக்கும்!” என்றான் மாதவன், அலட்சியமாக. “நான் வந்தப்போ, என் கடைசி மகனுக்கு ஒரு வயசு. திரும்பிப் போறப்போ, அவனுக்கு என்னை அடையாளம் தெரியுமோ, என்னமோ!” அவர் சொல்லச் சொல்ல, கண்ணனுக்கு அவனுடைய எதிர்காலம் பிரம்மாண்டமாக எதிரில் வந்து பயமுறுத்தியது. ஏற்கெனவே தன் படிப்புச் செலவை ஈடுக்கட்டுவதற்காக உடலை வருத்திக்கொண்டு நேரம், காலம் பார்க்காது வேலைபார்த்ததில் அப்பாவுக்கு நெஞ்சுவலி. அருமை மகனுடைய பிரிவை அவரால் தாங்க முடியுமா? ஒரு வேளை, அப்பாவின் உயிர் போய்விட்டால், தான் வரமுடியுமா, கொள்ளி போட? அமெரிக்கா பணக்கார நாடாக இருக்கலாம். அதனால் இவனுக்கு என்ன வந்தது? மாணவன் என்ற முறையில், இவனை வசதி குறைந்த ஹாஸ்டலில்தான் தங்க வைப்பார்கள். கைக்காசுக்கு பிறரது எச்சில் தட்டுகளைக் கழுவ வேண்டி வரலாம். `படிக்கிற பையன்! ஒனக்கு எதுக்கு வீட்டு வேலையெல்லாம். நீ நல்லாப் படிச்சு முன்னுக்கு வா!’ என்று, அம்மா போர்த்திப் போர்த்தி வளர்த்தார்களே! பிழைப்பு தேடி, சிறுவயதிலேயே அயல்நாட்டிலிருந்து தனியாகக் கப்பலேறி மலாயா வந்த தாத்தா அடிக்கடி சொல்வது காதில்  கேட்டது. `முதலைக்குத் தண்ணீரிலேதான் பலம். நாம்ப பிறந்த மண்ணைவிட்டு இன்னொரு நாட்டுக்குப் போனா, அந்த கலாசார அதிர்ச்சியே நம்பளை பலகீனமாக்கிடும். நடை, உடை, பாவனை எல்லாத்தையும் புதிய மண்ணுக்கு ஏத்தாப்போல மாத்தி அமைச்சுக்கிட்டா பொழைச்சோம்!’ பல ஆண்டுகள் கழிந்ததும், மீண்டும் தன் உடன்பிறப்புகளைப் பார்க்கப் போனபோது, சொந்த நாட்டிலேயே அந்நியனாகப்போன அவலத்தையும் தாத்தா குரலுடையச் சொல்லியிருக்கிறாரே! பழனிச்சாமி என்னவோ கேட்டார். “என்னங்க?” “நீங்ககூட பெரிய படிப்பு படிக்க அமெரிக்கா போகப்போறதா அப்பா சொல்லிக்கிட்டிருந்தாங்களே!” “யோசிக்கணும்!” என்றான் கண்ணன். சில கனவுகள் கனவாகவே இருக்கும்வரைதான் சுவை.                     (மலேசியாவில், தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கம் நடத்திய போட்டியில் பரிசு  பெற்றது, 2005)   மாதா -பிதா -குரு   “டீச்சர்! ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லலாமா?”   மூன்றாவது படிவத்திலிருக்கும் பதினைந்து வயதுப் பெண் அவள். இடைவேளையில் சாப்பிடுவதைவிட முக்கியமான விஷயம் என்னவாக இருக்கமுடியும்? கடிபட்ட ரொட்டி மீண்டும் டப்பர்வேர் டப்பாவில் அடைக்கப்பட்டது.  உமா நிமிர்ந்தாள். “என்ன சரோஜா?” மாணவியுடன் ஆசிரியர்களின் பொது அறைக்கு வெளியே வந்தாள். சுவற்றை ஒட்டியபடி இன்னொரு பெண். கண்களில் கலக்கம். மெல்ல ஆரம்பித்தாள் சரோஜா. “யாராவது நமக்கு கெட்டது பண்ணினா, ஒடனே எதிர்க்கணும்னு டீச்சர் சொன்னீங்களே?” பாடத்துடன், சற்று பொது அறிவையும் மாணவிகளுக்குப் புகட்டும் நோக்கத்துடன், தான் படித்ததையும், அவைகளுக்குத் தொடர்பான உண்மை சம்பவங்களையும் அவர்களிடம் பகிர்ந்துகொள்வது உமாவின் வழக்கம். ஒரு மலேசிய தமிழ் பத்திரிகையில் வந்திருந்த கேள்வி:  `ஏன் கணவன்மார்கள் மனைவியை அடிக்கிறார்கள்?’ அதற்கு பத்திரிகை ஆசிரியரின் பதில்: `எல்லா கணவன்மார்களும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மனைவியை அடித்துத்தான் இருப்பார்கள்!’ அந்த பட்டுக்கொள்ளாத பதிலால் உந்தப்பட்டவளாய், பெண்களுக்கான ஆதரவு மையத்திற்குப் போனாள் உமா. `இருபத்தி ஏழு வருஷமா ஒங்க வீட்டுக்காரரை எப்படிப் பொறுத்துப்போனீங்க? ஒடம்பிலே இருக்கிற எலும்பு, பல் எல்லாத்தையும் இப்படி அடிச்சு நொறுக்கியிருக்காரு!’ `அவரு திருந்திடுவாருங்கிற நம்பிக்கையில பொறுமையா இருந்தேங்க!’ உமா திடுக்கிட்டுப் போனாள். அந்த ஐம்பது வயதுப் பெண்மணி கடைப்பிடித்தது பொறுமையில்லை, முட்டாள்தனம் என்று மறுநாள் போதித்தாள், வகுப்பில். “ஒருத்தர் நம்மை துன்புறுத்தறபோது உடனுக்குடனே எதிர்ப்புத் தெரிவிக்காம போனா, நம்ப தன்னம்பிக்கையைக் குறைச்சு, தப்பு நம்பமேலதான்னு நம்ப வெச்சுடுவாங்க!” பெண்கள் சீறி எழுந்தார்கள், தம் வருங்காலக் கணவன்மார்கள் அப்படி நடந்தால், தாம் எப்படியெல்லாம் எதிர்ப்போம் என்று. `பாடத்தைத் தவிர வேறு எதுபற்றிப் பேசினாலும், நல்லா கவனிப்பாங்க!’ என்று அப்போது மனத்துக்குள் உமா சிரித்துக்கொண்டாள். “டீச்சர்! இங்க பாருங்க!” உமா சற்றும் எதிர்பாராவிதமாக, தன் தோழியின் தொளதொள சட்டையின் கழுத்துப் பகுதியை சற்றே இறக்கிக் காட்டினாள் சரோஜா. அதிர்ச்சியுடன் மூச்சை இழுத்துக்கொண்டாள் ஆசிரியை. முதுகில் வரி வரியான கறுநீலக் கோடுகள். “நான் சிகரெட் பிடிக்கிறது எங்கப்பாவுக்குத் தெரியும். எங்க பாட்டியே பிடிக்கறாங்க,” என்றாள் நோர்லைலி, மெள்ள. “ஆனா, பள்ளிக்கூடத்திலிருந்து லெட்டர் போட்டிருந்தாங்களா! அதைப் பாத்துட்டு..,” பெருகிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். “எங்கப்பா.. என்னோட ஸாரோங்  (பாவாடை), பாஜூ (BAJU -- சட்டை) எல்லாத்தையும் கழட்டச் சொல்லிட்டு, பெல்டால அடிச்சார்!” என்றாள் மலாய் மொழியில். அவள் குரலில் குழப்பம். பிற சமயங்களில் கண்டுகொள்ளாதிருந்தவர், மற்றவர் தவறு என்று குற்றம் சாட்டியதும், ஏன் ஆத்திரப்பட வேண்டும்? உமாவுக்குப் பசி மறந்தது. பெற்ற தந்தையே `ஒழுக்கம்’ என்ற பெயரில் மகளை வதைத்தால், நாளைக்குக் கணவனும் அப்படியே நடந்துகொள்ளும்பொது, அதை எதிர்க்கத் தெம்பில்லாது, `எல்லா ஆண்களும் இப்படித்தான்!’ என்ற சமாதானத்துடன், அதை ஏற்கும் அபாயம் இருக்கிறதே! ஒரு முடிவுக்கு வந்தவளாய், “குரு பெசார் (GURU BESAR - தலைமை ஆசிரியை)கிட்ட ரிபோர்ட் பண்ணலாம், வா. அவங்க போலீசில சொல்வாங்க!” என்றாள். நோர்லைலி பதறிப்போனாள். “வேண்டாம், டீச்சர். அப்பா பாவம்!” பெண்களின் இந்த இரக்க குணமே அவர்களைச் சிலர் கொடுமைப்படுத்த காரணமாகி விடுகிறதோ என்று யோசித்த உமா, “இன்னொரு தடவை இப்படி நடந்தா, சும்மா இருக்காதே!” என்று எச்சரித்தாள். “பள்ளி விதிமுறைகள் தெரியாதா ஒனக்கு? எதுக்கு இங்க சிகரெட் பிடிச்சுட்டு மாட்டிக்கறே?” என்றவளின் கண்களில் சிரிப்பு. தான் சொல்வதால் மட்டுமே ஒரு பெண் தன் பழக்கத்தை விடமாட்டாள் என்ற விவேகம். ”அதையெல்லாம் வெளியே வெச்சுக்க,”  என்று சொல்லி அனுப்பினாள். அப்பெண்களும் சிரித்துவிட்டுப் போனார்கள். அன்றெல்லாம் அந்த நிகழ்ச்சி மனதைவிட்டு அகலவில்லை. இரவு சாப்பிடும்போது, நோர்லைலியைப்பற்றி விவரித்தாள். “பாட்டி சிகரெட் பிடிச்சா, அது அவங்க கலாசாரம், உமா. நீ எதுக்கு வீண்வம்பிலே மாட்டிக்கறே? ஸ்கூலுக்குப் போனோமா, சம்பளம் வாங்கினோமான்னு இரு. இல்லாட்டி, `ரேஸிஸ்ட்’னு குத்தம் சாட்டுவாங்க!” என்று அறிவுரை வழங்கினார் தந்தை. அடுத்த மாதம் பள்ளி வளாகத்துக்குள் அவள் காரிலிருந்து இறங்கும்போதே, “டீச்சர்! இங்கேயே கொஞ்சம் பேசலாமா?” என்று கெஞ்சும் குரலில் கேட்டுவிட்டு, அவளுடைய ஆமோதிப்புக்குக் காத்திராது, பேசிக்கொண்டே போனாள் சரோஜா. உமா அதிர்ந்தாள். ஐம்பத்து இரண்டு வயதாகி, தன் குழந்தைகளுக்கும் மணமுடித்துவிட்ட ஆசிரியர்! அவர் அப்பெண்ணின் வகுப்பு மாணவியரை பள்ளி வாசகசாலைக்கு அழைத்துச் சென்று, ஒரே இடத்தில் அசையாது அமரும்படி சொன்னாராம். இவளைமட்டும் ஒரு மறைவான இடத்துக்கு அழைத்துப்போய், கண்ட இடங்களில்..! `இந்தப் பெண்ணுக்கு வயதுக்கு மீறிய வளர்த்தி!’ என்று அப்போதுதான் கவனித்தாள் உமா. கோபம் வந்தது, அந்த ஆசிரியர்மேல், இந்த கையாலாகாத பெண்மேல். “எங்கிட்ட எதுக்காக வந்து சொல்றே? நீதான் புகார் குடுக்கணும்!” “அப்புறம் அவர் என்னை ஃபெயிலாக்கிட்டா? முந்தியெல்லாம் அவர் இப்படி நடந்துக்கிட்டதில்ல, டீச்சர். நான் ஒருவாட்டி.. முட்டாள்தனமா,”  என்று அவள் தொடர்ந்தது கூறியதை ஒருவித உணர்ச்சியும் முகத்தில் காட்டாது உமா கேட்டுக்கொண்டிருந்தாள். “ஏன் முன்னே பின்னே தெரியாதவனோட போனே?” “எனக்கு ஃப்ரெண்ட்ஸே இல்லே, டீச்சர். அம்மாவும் என்னை எங்கேயும் கூட்டிட்டுப் போகமாட்டாங்க. ஏசிக்கிட்டே இருப்பாங்க. நான் மக்கு, கறுப்பு! என் தங்கச்சிதான் -- அவ அழகா இருப்பா --  அவளைத்தான் எல்லா இடத்துக்கும் கூட்டிப் போவாங்க!” குரலில் ஏக்கம், அழுகை. “அதான் ஒருவாட்டி தனியா மெகா மாலுக்குப் போனேன். அவன் `ஒனக்கு ஃப்ரெண்ட் வேணுமா?’ன்னு கேட்டானா!” தலையில் அடித்துக்கொண்டாள். “காசு கொண்டான்னு அடிச்சான். எங்கத்தைகிட்ட ஃபோன் பண்ணிச் சொல்லிட்டுப் போனேன். அப்பா வாசல்லேயே நின்னுக்கிட்டு இருந்தாரு!” சிரித்தாள். உமா மூச்சை இழுத்துக்கொண்டாள்.  இப்படியும் அப்பாவியாக ஒரு பெண் இருக்குமா! “பள்ளிக்கூடத்துக்கு ஒரு வாரம் ஏன் வரலேன்னு டிசிப்ளின் டீச்சர் கூப்பிட்டு விசாரிச்சாங்க”. “எங்கே?” “ஸ்டாஃப் ரூமில (ஆசிரியர்களின் பொது அறை)”. உமாவுக்குத் தவறு எங்கே நிகழ்ந்தது என்று புரிந்தது. அந்தரங்க விவகாரம் பகிரங்கமாகிவிட்டது. “அதுக்கப்புறம் எங்கம்மா எங்கூட பேசறதே இல்லே, டீச்சர்! எங்கேயாவது ஓடிப் போயிடலாமான்னு இருக்கு. ஆனா, பயம்..மா இருக்கு!” நோர்லைலிக்கு அப்பா. இந்தப் பெண்ணுக்கு அம்மா, ஆசிரியர். இவர்கள் எல்லாருமே ஆதரவாக இருக்க வேண்டியவர்கள். ஆனால், நடப்பதோ..! “அந்த ஆசிரியர் செய்யறது தப்பு, சரோஜா. அதை எங்கிட்ட சொல்லிட்டே. நானும் ஒண்ணும் பண்ணாம இருந்தா, அது அதைவிடப் பெரிய தப்பு! வா!” எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, மாணவியை வகுப்புக்குப் போகச் சொன்னாள் தலைமை ஆசிரியை, புவான் ரோஸ்மா. “இந்தப் பொண்ணுக்குப்போய் பரிஞ்சுக்கிட்டு வர்றீங்களே! இது ரெண்டு மாசம் முந்தி, வீட்டைவிட்டு ஓடி, போலீஸ் கேஸ் ஆயிடுச்சு, தெரியுமா? இந்த வயசிலேயே கிடந்து அலையுது. இப்போ, நல்ல பிள்ளைமாதிரி டீச்சரைப்பத்தி ஒங்ககிட்ட வந்து சொல்லுதாக்கும்! அவரு எவ்வளவு பெரிய மனுஷன்! அப்படியெல்லாம் நடப்பாரா?” அந்தப் பெரிய மனிதர் மூன்று முறை பதவி குறைப்பு கண்டவர் என்று உமாவுக்குத் தெரியும். “விடுங்க! நம்ப வீட்டுப் பொண்ணுங்களாவது ஒழுங்கா இருக்காங்களேன்னு சந்தோஷப்பட்டுக்குங்க!” என்று அப்பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டினாள் புவான் ரோஸ்மா. அவளது பள்ளியில் ஒழுக்கம் குறைந்த மாணவிகள், அல்லது ஆசிரியர்கள் அப்பள்ளியில் இருக்கிறார்கள் என்று வெளியே தெரிந்தால், அவளுடைய பதவியே ஆட்டம் கண்டுவிடும் என்ற பயமோ? `பெண்களுக்கு எதிரி பெண்களேதான்!’ கசப்புடன் வெளியே நடந்தாள் உமா. பிற ஆசிரியைகளிடம் நடந்ததைச் சொல்ல முடியாது. `இந்தப் பெண்களுக்கு இதுதானே பிடிக்கும்!’ என்பார்கள். அப்பாவிடம் தன் மனப்பாரத்தைக் கொட்ட வேண்டும் என்ற துடிப்பு வந்தது. “கடவுளே!” பெருமூச்சு விட்டார் தந்தை. “வேலியே பயிரை மேயறதுபோல.., சே! இப்படியும் ஒரு ஆசிரியர் இருப்பாரா! வீட்டிலே பெரியவங்ககிட்டே சொல்லணும் அந்தப் பொண்ணு. அப்பா, அம்மான்னு எதுக்கு இருக்காங்க?” என்று கோபப்பட்டார், தான் பார்த்தே இராத பெண்மேல். “அப்பா ஜெயில்லே இருக்காராம். அம்மாவுக்கோ படிப்பறிவு இல்லே!” என்றாள் உமா, விரக்தியுடன். சற்று யோசித்துவிட்டு, அப்பா தலையைப் பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டார். “ஒலகத்திலே நடக்கிற அநியாயத்தை எல்லாம் ஒன் ஒருத்தியால தட்டிக் கேக்க முடியாது. விடு!” அப்பா சொல்வது உண்மைதான். தன்னால் முடிந்ததைச் செய்துவிட்டோம் என்று நிம்மதி அடைய வேண்டியதுதான். நல்ல சாப்பாடு, புத்தகங்கள், டி.வி என்று பொழுதைப் போக்க எவ்வளவு இல்லை?  ஆனாலும், மனம் என்னவோ அமைதியாக இல்லை. இரண்டு மாதங்கள் கடந்தபின், ஒரு சனிக்கிழமை. பள்ளி விடுமுறை. உமா தன் தந்தையுடன் சைனீஸ் ரெஸ்டராண்டில் பகலுணவு சாப்பிட்டுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தாள். “அந்தப் பொண்ணு அப்புறம் என்னம்மா ஆச்சு? அந்தக் கேடுகெட்ட வாத்தி..?” அப்பா யாரையும் அவ்வளவு மரியாதைக் குறைவாகப் பேசி உமா கேட்டதில்லை. தன்னைப்போல் அவனும் ஓர் ஆண் என்ற நினைப்பிலேயே அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டிருக்க வேண்டும். பற்களைக் கடித்துக்கொண்டாள் உமா. அந்த ` கேடுகெட்ட வாத்தி’ பள்ளிக்கூட விழாக்களுக்கு நன்கொடை வாரி வாரி வழங்கி, தன்னை யாராலும் அசைக்க முடியாத ஒரு நிலையை தற்காத்துக் கொண்டிருந்தானே! “அந்தப் பொண்ணு இப்பல்லாம் ஸ்கூலுக்கு வர்றதில்லப்பா,” என்று வருத்தத்துடன் கூறியவளின் குரல் திடீரென்று உயர்ந்தது. “அட! அவளுக்கு நூறு ஆயுசு! அதோ, பஸ் ஸ்டாப்பில நிக்கறா, பாருங்க! அந்தப் பொண்ணுதான்!” “யாரு, குட்டைப் பாவாடை போட்டுக்கிட்டு..?” அப்போதுதான் சரோஜாவின் உடையலங்காரத்தைக் கவனித்தாள் உமா. தினமும் கணுக்கால்வரை தொங்கும் ஸாரோங்கையே அணிந்து வருபவள்! இது என்ன புதுக்கோலம்! சரோஜாவின் கரிய முகத்தில் சுண்ணாம்பு பூசியதுபோல பௌடர் பூச்சு, அகன்ற உதடுகளை மேலும் அகலமாக, கவர்ச்சியாகக் காட்டும் விதத்தில் குருதிநிற உதட்டுச் சாயம்! கையில் சிகரெட் புகைந்துகொண்டிருந்தது. அவளுக்கு மிக நெருக்கமாக நின்று, உரிமையுடன் தோளில் கைபோட்டுக் கொண்டிருந்தான் நடுத்தர வயதினன் ஒருவன். அவள் அவன்மேல் விழாத குறை. சற்று பொறுத்து, “ஏம்பா?” என்ற கேட்ட மகளைப் பார்த்துப் பரிதாபம் கொண்டார் தந்தை. “தெரியாத்தனமா ஒரு தடவை தப்பு செஞ்சுட்டா. அதையே பிடிச்சுக்கிட்டு, அவ கெட்டவதான்னு மத்தவங்க அவளை நம்ப வைக்கறாங்க, பாவம்!” தன்னை நம்பி வந்தவளுக்கு எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று உமாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. “மாதா, பிதா, குரு -- தெய்வம்னு தப்பா சொல்லி வெச்சுட்டாங்க, இல்லப்பா?” என்று பொருமினாள்.                                                                                                                                 (தமிழ் நேசன், 2008) புறக்கணிப்பு   “அம்மா! நான் ஸ்கூலுக்குப் போகமாட்டேன். டீச்சர் திட்டறாங்க -- முட்டாள்னு!” பொங்கிவரும் அழுகையை அவன் காணாவண்ணம் தாய் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். `நீ பள்ளிக்கூடத்துக்குப் போயே ஒரு வருடமாகிறதுடா, கண்ணா. உன்னைத் திட்டியாவது திருத்த எண்ணினாங்க -- நீ பின்தங்கியிருப்பதன் உண்மைக் காரணம் புரியாததால!’ `சீனிவாஸ் நார்மல் இல்லன்னு தோணுது. அவன் வயசையொத்த மத்த பசங்க சுலபமா செய்யறதை எவ்வளவு முயற்சி பண்ணினாலும், அவனால செய்ய முடியல”. தன்போக்கில் சொன்ன ஆசிரியை, `எதுக்கும் ஒரு மனோதத்துவ டாக்டரிடம் கூட்டிட்டுப் போங்க!’ என்றாள், முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு. “நம்ப பிள்ளையைப்பத்தி ஒருத்தர் கன்னாபின்னான்னு பேசியிருக்காங்க. நீ அதைக் கேட்டுட்டு சும்மா வந்துட்டியா?” என்று குதித்தான் மனோகரன். “மான நஷ்ட வழக்கு போடணும்!” ஆனால், ஒரு பாடத்தில்கூட தேர்ச்சி பெற முடியாதது மட்டுமில்லாது, சீனு  தினமும் வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்து விடுவதாகப் புகார் வந்ததும், வேறுவழியின்றி மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். சிறுவனிடம் பலவிதப் படங்களைக் காட்டியும், சில கணக்குகளைப் போடச் சொல்லியும் பரீட்சித்த டாக்டர் தயாநிதி, “எட்டு வயசுப் பையனுக்கு இதையெல்லாம் குடுத்தா, 100 வாங்குவான்..!” அவர் முடிப்பதற்குள் அலட்சியமாகக் குறுக்கிட்டான் மனோகரன். “எத்தனை பேர் டாக்டர் நூத்துக்கு நூறு மார்க் வாங்குவாங்க!” “இது மார்க்கில்ல. அறிவுத்திறனை சோதிக்கற ஒரு எண். இவனுக்கு 68தான் இருக்கு! செய்ய முடியாததைச் செய்யச் சொல்லி வற்புறுத்தினா, பயமும், குழப்பமும்தான் அதிகமாகும்”. வெளியே வந்ததும், மனைவிமேல் பாய்ந்தான் மனோகரன். “ஒங்க பெரியம்மா ரெண்டு வருஷம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே இருந்தாங்கன்னு சொல்லாம மறைச்சுட்டீங்க. இப்போ, இப்படி ஒரு பைத்தியக்காரப் பிள்ளைக்கு அப்பனா இருக்கணும்னு என் விதி!” “அங்கே மட்டும் என்ன வாழுதாம்! ஒங்க மாமா தெருவிலே போற வர்றவங்கமேலே எல்லாம் கல்லை விட்டெறிஞ்சாருன்னு, காலிலே சங்கிலி கட்டி, ரூமிலே பூட்டி வெச்சிருந்தது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சீங்களோ?” வார்த்தைகள் தடித்துக்கொண்டே போயின. சீனு அழ ஆரம்பித்தான். தன் பொருட்டுதான் அப்பா, அம்மா இருவரும் வாக்குவாதம் செய்கிறர்கள் என்றவரையில் அவனுக்குப் புரிந்தது. அப்போதிலிருந்து நிலைமை மாறியது. `எங்கள் ஒரே மகன்!’ அவன் வெட்கி ஓடும்போதெல்லாம், இழுத்துவந்து நண்பர்களுக்கு அறிமுகம் செய்த நிலை மாறியது. யாராவது வீட்டுக்கு வந்தால், பிறர் காணத் தகாதவன்போல் அவனை ஒளித்து வைத்தது ஏன்? தனக்குப் புரியாத புத்தகங்களைப் படிக்கச்சொல்லி கஷ்டப்படுத்திய தந்தையோ, சிறு, சிறு வேலை செய்ய ஏவிய தாயோ முன்போல் ஏன் தன்னை நடத்தவில்லை என்ற குழப்பம் ஏற்பட்டது. சில முறை கிளப்பில் நீச்சலடிக்கும்போதோ, டென்னிஸ் விளையாடும்போதோ அந்த டாக்டரைச் சந்திக்க நேர்ந்தது. “ஒங்க மகனை அழைச்சிட்டு வரல?” என்று அவர் கேட்டபோது, தன்னை ஏளனம் செய்வதாகத்தான் பட்டது மனோகரனுக்கு. “சீனுவுக்கு என்ன புரியப்போகுது! மத்தவங்க அவனை மேலேயும் கீழேயும் பாக்கிறப்போ, அவமானமா இல்ல இருக்கு!” மனத்தின் வெறுமை குரலின் வரட்சியில். ஏதோ சொல்லவந்த டாக்டர், தன்னை அடக்கிக்கொண்டு, அப்பால் சென்றுவிட்டார். வீட்டு வாசலிலிருந்த அழைப்பு மணி ஒலித்தது. இந்த மத்தியான வேளையில் யாராக இருக்கும் என்ற யோசனையுடன் கதவைத் திறந்த மனோகரன், உபசாரமாக, “வாங்க டாக்டர்! ஏது, அதிசயமா வீடு தேடி வந்திருக்கீங்க!” என்று ஆரவாரமாக வரவேற்றபோதிலும், `இவர் ஏன் இங்கு வந்து தொலைந்தார்?’ என்ற ஆயாசமும், கசப்பும்தான் உள்ளத்தில் எழுந்தன. “நம்ப பையன் சீனு எங்கே?” உற்சாகமாகக் கேட்டார். `இவரிடம் நான் எதற்கு பயப்பட வேண்டும்?’ என்ற ஒரு வீறாப்புடன், “அவன் எப்பவும் மாடியிலேயேதான் இருப்பான். வர்றவங்களுக்கெல்லாம் காட்டி பெருமைப்பட அப்படி என்ன இருக்கு அவங்கிட்டே?’ என்றான், சவால் விடுவதுபோல். டாக்டர் மனம் தளரவில்லை. அவருக்குப் புரியாதா, ஒரு புண்பட்ட இதயத்தின் ஓலம்! “அவனைப் பாக்க டாக்டர் மாமா வந்திருக்காருன்னு சொல்லி அழைச்சுக்கிட்டு வாங்க,” என்றார் விடாப்பிடியாக தன் எதிரில் வந்து, ஒடுங்கி நின்ற சிறுவனை பார்த்ததுமே நெகிழ்ந்துபோனார் தயாநிதி. எவ்வளவு சீர்குலைந்து போய்விட்டான், பாவம்! “இந்தா சீனு! சாக்லேட் டப்பா! ஒனக்காகத்தான் வாங்கிட்டு வந்தேன்!” அவரிடமிருந்து அதைப் பிடுங்காத குறையாகப் பெற்றுக்கொண்டான் பையன். இவ்வளவுக்குப்பின், “ஒக்காருங்க, டாக்டர்!”  என்று உபசரிப்பதைவிட வேறு வழி தெரியவிலை மனோகரனுக்கு. “வாடா தம்பி!” சீனுவை அணைத்தபடி அமர்ந்து, சிறிது நேரம் அரசியல், விலைவாசி என்று பொதுவாகப் பேசிவிட்டு, விடைபெற்றுக்கொண்டார் அவர். மேலும் சில முறை தயாநிதி வந்துபோனார். ஆதரவு காட்ட யாருமின்றி, பெற்றோரும் புறக்கணித்துவிட்ட நிலையில் அவருடைய பரிவுக்கும், அன்புக்கும் அவன் அடிமையானதில் என்ன ஆச்சரியம்? அதுவே மனோகரனின் பொறாமையைக் கிளப்பிவிட, “அந்த டாக்டர் எதையோ மனசிலே வெச்சுக்கிட்டு, இங்கேயே சுத்திச் சுத்தி வர்றார். நீயும், `மாமா, மாமா’ன்னு இளிச்சுக்கிட்டுப் போறியே! அந்த சாக்லேட்டும், விளையாட்டு சாமானும் நான் வாங்கித் தரமாட்டேனா?” என்று கத்தியவன், “இனிமே யாராவது வீட்டுக்கு வந்தா, மாடியை விட்டு கீழே வந்தா, தெரியும் சேதி!” என்று முதுகில் அடித்தான். “அம்மா! அம்மா!” என்று சீனு அலறி அழுதது, வெளியில் போயிருந்த தாய்க்குக் கேட்காதது தகப்பனுக்குச் சாதகமாகப் போயிற்று. அடுத்த நாள், தயாநிதி வந்தார், “என் ஃப்ரெண்ட் எங்கே?” என்று புன்னகையுடன் கேட்டபடி. “அவன் மாடியிலேயே இருக்கட்டும், டாக்டர்!” என்றான் மனோகரன், திடமாக. முதலில் அயர்ந்தவர், “ஒங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும். வெளியே போகலாமா?”  என்றார், மிருதுவாக. என்னதான் சொல்லிவிடப் போகிறார் என்று விறைப்புடன் அவரருகே காரில் அமர்ந்தான் மனோகரன். “எல்லாரும் கூடியவரை  நல்லா இருக்கணும்னுதான் நான் இந்த தொழிலுக்கு வந்தேன். சீனுவை நான் வெறும் பேஷண்டா நினைக்கல,” என்றவர், “நான் அன்பா பழகினபோது, எவ்வளவு கலகலப்பா ஆனான், பாத்தீங்களா? அதைப் பாத்து, நீங்களும் மாறிடுவீங்கன்னு எதிர்பாத்தேன்!” தழுதழுத்த குரலை அவர் சரிப்படுத்திக்கொள்ளவில்லை.   கார் ஒரு பூங்காவின் அருகே நின்றது. வெளியே வீசிய தென்றல் மனோகரனது மனப்புயலை சற்றே நிதானப்படுத்தியது. “நானும் என் மனைவியும் படிச்சவங்க, ஆரோக்கியமானவங்க. எங்களுக்கு ஏன் இப்படி..?” கேட்டேவிட்டான். “வியாதிக்கும், சாவுக்கும் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசம் ஏது, மனோகரன்? கருவுற்ற முதல் மூணு மாசத்துக்குள்ளே ஒரு தாய்க்கு அம்மை வார்த்தா, குழந்தையின் மூளை வளர்ச்சி தடைப்படலாம். இல்லே,  ஏதோ காரணத்தால, அவங்க மூளைக்குப் போற பிராணவாயு தடைப்படறபோது..,” என்று அவர் தனது வைத்திய அறிவை வெளிக்காட்டிக் கொண்டபோது, “எது எப்படியோ! சீனு இப்படி ஆக காரணம் நீ, நான்னு சண்டை பிடிச்சுக்கப்போய், சுமுகமான உறவே அத்துப் போயிடுச்சு,” என்றான் மனோகரன், கசப்புடன். “அவமானப்படவோ, குத்த உணர்ச்சியால அவதிப்படவோ இதில என்ன இருக்கு! எந்த மனுஷன்தான் முழுமையா இருக்கான்! உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம் -- மாஜி அமெரிக்க ஜனாதிபதி கென்னடி குடும்பத்திலகூட இப்படி ஒருத்தர்!” மனோகரன் உதட்டை இறுக்கிக்கொண்டான். யாருக்கு வேண்டும் இந்தக் கதையெல்லாம்! “ஏழைப் பிள்ளைங்க எவ்வளவோபேர் முன்னுக்கு வர்றாங்களே! அவங்களுக்குப் பணம் இல்லாம இருக்கலாம். ஆனா, குடும்பத்தில அன்பும், பக்கபலமும் தாராளமா கிடைக்குது”. “டாக்டர்! சீனு மெதுவாப் படிக்கட்டும். என்னிக்காவது அவன் மத்த பிள்ளைங்களைப்போல ஆனா போதும்!” அவனது அறியாமையைக் கண்டு, பரிதாபமாக இருந்தது தயாநிதிக்கு. `நடக்காது’ என்பதுபோல் தலையைப் பக்கவாட்டில் ஆட்டினார். சற்றுமுன் துளிர்த்த நம்பிக்கை கருக, மெதுவாகக் கேட்டான் மனோகரன்: “என்னை என்னதான் செய்யச் சொல்றீங்க, டாக்டர்?” “இப்போ இருக்கிறபடியே சீனுவை ஏத்துக்குங்க. புத்திசாலியோ, இல்லையோ, அவன் ஒங்க மகன்! ஒங்க அன்பிலே வளர வேண்டிய மொட்டு. ஒங்க பராமுகமும், குத்த உணர்ச்சியும் அவன் நிலைமையை இன்னும் மோசமாக்கிடும். அப்படி விட்டுடாதீங்க, ப்ளீஸ்!” மனோகரன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். இவருக்கென்ன! அறிவுரை கூறிவிட்டுப் போய்விடுவார்! அனுபவித்தால் தெரியும். “இப்போ சீனுவோட மூளை வளர்ச்சி ஒரு அஞ்சு வயசுப் பையனோடதுமாதிரி. விளையாட்டிலும், வேடிக்கையிலும்தான் மனம் போகும். அவன் மகிழ்ச்சியா இருக்கிறதுதான் முக்கியம். படிப்பெல்லாம் இரண்டாம்பட்சம்தான்!” மனோகரன் அதிர்ந்தான். தன்னையே நம்பி இந்த உலகிற்கு வந்த ஒரு குழந்தை தன் புறக்கணிப்பால் உலகத்தின் ஏளனத்துக்கும், பரிதாபத்திற்கும் ஆளாகும் கொடுமை ஒரு கணம் அவன் மனக்கண்ணில் தோன்றியது. மறு கணம், பிறவியிலேயே பேசும், கேட்கும், காணும் திறன்கள் எதுவுமே இல்லாது, பித்துப்பிடித்தவள் போலிருந்த ஹெலன் கெல்லர் தன் ஆசிரியையின் அன்பான வழிகாட்டலால் பார் புகழும் ஆற்றல் பெற்றவளாக விளங்கிய சரிதம் அவ்விடத்தை வியாபித்துக்கொண்டது. தான் போகப்போகும் பாதை இவை இரண்டில் எது? ஒரு புதிய தீர்மானத்துடன், தெளிவாகப் பேசினான் மனோகரன்: “நம்ப வீட்டுக்கு வாங்களேன், டாக்டர். சீனுவோட சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டுட்டு, அப்படியே அவனையும் அழைச்சுக்கிட்டு வெளியே போகலாம். ஒங்களைப் பாத்தா சந்தோஷப்படுவான்!”                                                                                                     (தமிழ் நேசன்) பாவம், அவள்!   “பக்கத்து வீட்டுத் தம்பியோட கூட்டாளியாம். டவுன் வாழ்க்கை அலுத்திடுச்சுன்னு இங்க வந்தவரு, நம்ப மதுரம் கோலம் போடறப்போ பாத்திருக்காரு. சாடைமாடையா விசாரிச்சாராம்!” பெரியண்ணன் அப்பாவிடம் கூறிக்கொண்டிருந்தார். கையும் காலும் செயலிழந்து படுக்கையோடு கிடந்த அப்பா ஏதோ குழறினார். “அவர் அங்க பெரிய டாக்டராமில்ல!” அண்ணா தொடர்ந்தார். “ஒரு தடவை கல்யாணம் கட்டி, எதனாலேயோ முறிஞ்சுபோச்சாம்!” அருகிலேயே மேசையை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்த மதுரம் தன்னைப்பற்றித்தான் பேசுகிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாதவளாய் இருந்தாள். அழகு, படிப்பு, அந்தஸ்து எதிலுமே சிறந்து விளங்காதிருந்தவளைத் துணிந்து மணக்க எவரும் முன்வராத நிலையில், தொலைகாட்சியில் வரும் திரைப்படங்களிலும், நடிகையரின் வாழ்க்கை வரலாற்றிலும் ஒன்றி, வாழ்வில் சுவை காண முயன்றிருந்தவள் அவள். `அத்தே! கல்யாணமானா நீங்க எங்களை விட்டுப் போயிட மாட்டீங்களே?’ அண்ணன் பெற்ற ஆறு குழந்தைகளில் ஏதாவது ஒன்று கேட்கும்போதுதான் தன் நிலை உரைக்கும். `அது ஆகறப்போ பாத்துக்கலாம்!’ என்று அசுவாரசியமாய் சொன்னாலும், தன் பால்யத் தோழிகள் இரண்டாவது, மூன்றாவது பிரசவத்துக்குத் தாய்வீடு வரும்போது, தான் மட்டும் பிறர் குழந்தைகளைச் சீராட்டுவது உறுத்தும். இந்தவரைக்கும், ஒருவர் வலிய வந்து, இவளைக்கூடக் கேட்கிறாரே என்று வீட்டில் இருந்த எல்லாருமே நிம்மதி அடைந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. திருமணப் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து கழுத்தில் தாலி ஏறும்வரை நடந்தது எல்லாமே நம்ப முடியாத கனவுபோல் வேகமாக நடந்து முடிந்தது. “தேனிலவுக்கு எங்க போகப்போறீங்க?”  நாகரிகமானவர்களின் பழக்கவழக்கங்கள் தனக்கும் தெரியும் என்ற காட்டிக்கொள்ள அண்ணா கேட்டார், அசட்டுச் சிரிப்புடன். பார்வையை எங்கோ பதித்தபடி, “அங்கே என் சொந்த கிளினிக்கை இன்னொருத்தர் பாத்துக்கிட்டு இருக்காரு. நான் சீக்கிரமா போகணும்,” என்று நாசுக்காக தன் மறுப்பைத் தெரிவித்தான் மோகன். கணவனுடைய பதிலை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த மதுரத்துக்கு ஏமாற்றமாக இருந்தது. இவர் ஏன் புதிதாகக் கல்யாணமானவராய் லட்சணமாய் துடிப்பும் துள்ளலுமாக இல்லை? சட்டென்று ஒன்று உறைத்தது. இவருக்கு இது ஒன்றும் முதல் அனுபவம் இல்லையே, கனவுகளும், எதிர்பார்ப்புகளுமாக புதுமனைவியுடன் கழிக்கப்போகும் ஒவ்வொரு வினாடியையும் ரசிக்க! தான்தான் எப்படி ஏமாந்துவிட்டோம் என்று சில நாட்களிலேயே குமைந்துபோனாள் மதுரம். `அதிர்ஷ்டக்காரி! பிடிச்சாலும் பிடிச்சே, புளியங்கொம்பா இல்ல பிடிச்சிருக்கே!’ என்று பாராட்டுவதுபோல உறவினர்கள் பொருமித் தீர்த்தார்களே! இப்போது பார்க்க வேண்டும் தன் மணவாழ்க்கையின் அவலத்தை! கணவராக வாய்த்தவர் குறைந்த பட்சம், கையைப் பிடிக்கக்கூடாதா காப்பிக்கோப்பையுடன் அவள் அருகில் செல்லும்போது? அப்புறம்.. வேறு என்னென்ன செய்வார் ஒரு புது மாப்பிள்ளை? அவளால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஆனால், யாரும் மோகனைப்போல் `காப்பியை இப்படி வெச்சுட்டுப் போ!’ என்று உணர்ச்சி அறவே அற்ற குரலில் சொல்ல மாட்டார்கள். பட்டுப்புடவை சரசரக்க, பின்னலில் சூடிய மல்லிகை மணம் வீச, மனைவி அருகே நிற்பதைப் பொருட்படுத்தாது ஏதோ கனமான புத்தகத்தில் அழ்ந்திருக்க மாட்டார்கள். இவரை எப்படி தன் வழிக்குக் கொண்டுவருவது? `ஓர் ஆடவனின் மனத்தில் இடம் பிடிக்கச் சுருக்குவழி அவன் வயிற்றின்மூலம்தான்!’ என்று நம்பித்தானே பெண்களுக்குச் சமைக்கவும், குழந்தைகளைப் பேணவும் தெரிந்தால் போதும் என்று வைத்திருந்தார்கள்! அதை இப்போது மந்திரமாக எடுத்துக்கொண்டு, தன் திறமையைக் கொட்டிச் சமைத்தாள், ஒரு நாள். “எதுக்கு இவ்வளவு தினுசு? எனக்கு சிம்பிளா சாப்பிட்டுத்தான் பழக்கம்”. இரண்டே வரிகளில் அவளுடைய மனக்கோட்டையைத் தகர்த்தான். பொங்கிய அழுகையில், தானும் சாப்பிடாது, எல்லாவற்றையும் வெளியே கொட்டினாள் மதுரம். பசித்திருந்தபோது நிதர்சனம் இன்னும் பயங்கரமாகத் தெரிந்தது. அயர்ந்து தூங்குகையில், வீட்டின் கீழ்ப்பகுதியில் இருந்த மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைக்க, குழந்தையின் அழுகையைக் கேட்ட தாய்போல் உடனே கண்விழித்து, ஓடுவான் மோகன். அது என்ன கிளினிக் வேண்டியிருக்கிறது இருபத்து நாலு மணி நேரமும்? `மற்ற எதையும் விட, ஆண்களுக்குத் தம் உத்தியோகத்தில்தான் ஈடுபாடு -- முப்பதிலிருந்து நாற்பத்து ஐந்து வயதுவரை!’ என்பதெல்லாம் பிற ஆண்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். அவளிடமிருந்து விலகியிருக்கத்தான் வேலையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறான் கணவன் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை அவளுக்கு. அவர்மேல் என்ன தவறு? ஏதோ வேகத்தில் இப்படி ஒரு வகையிலும் பொருத்தம் இல்லாதவளைக் கல்யாணம் செய்துகொண்டு விட்டோமே, காலமெல்லாம் இவளோடு தள்ளியாக வேண்டுமே என்ற மலைப்பு தோன்றியிருப்பது நியாயம்தானே! ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் இணைந்து வாழ்ந்தவர்! இன்னும் அவளை மறக்க முடியாதுதான் தன்னிடமிருந்து இப்படி விலகி விலகிப் போகிறாரோ? முகம் தெரியாத தன் சக்களத்தியை நினைக்கும்போதே ஏதேதோ எண்ணங்கள் மேலெழுந்தன. இளமை மாறாதபோதே இவரை மணந்தவள். கண்டிப்பாக பொருத்தமானவளாகத்தான் இருந்திருப்பாள். பின் ஏன் அவர்கள் காதல் பொய்த்துவிட்டது? இவர் இப்படி சன்னியாசிமாதிரி இருக்கிறாரே என்று அவள்தான் விலகிப்போய், உற்சாகம் நிறைந்ததாக வேறு ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டு விட்டாளோ? யாரைக் கேட்பது அவளைப்பற்றி? எதுவும் புரியாமல், தனக்குள்ளேயே கலங்கிக்கொண்டிருந்தாள் மதுரம். அவளுடைய மனச்சோர்வை உணர்ந்தோ என்னவோ, “நாளைக்கு கெந்திங் மலைக்குப் போகலாம். இந்த வெயிலுக்கு அங்க போனா, நல்லா குளுகுளுன்னு இருக்கும். திரும்பி வந்து வேலை செய்ய தெம்பா இருக்கும்!” என்றான் மோகன். முகத்தில் சிரிப்பில்லை. அவன் என்று சிரித்தான்! `வேலை மும்முரத்தில் இருந்தவரை நாம் போய் என்னென்னவோ நினைத்துவிட்டோமே! பிரியமில்லாமலா இப்போது இந்த உல்லாசப் பயணம்!’ என்று மதுரம் தன்னையே திட்டிக்கொண்டாள். மலேசிய நாட்டின் சுற்றுலாத்தளங்களுள் மிகப் பிரபலமான ஒன்றான கெந்திங் மலையைப் பார்த்ததும், ஒரு மைல் விஸ்தீரணம்கூட இல்லாத சிற்றூர் ஒன்றில் பிறந்து, வெளியுலகமே அறியாது வளர்ந்திருந்தவளின் விழிகள் விரிந்தன. இந்த இடத்தைப்பற்றி அண்ணன் குழந்தைகளிடம் கதை கதையாக என்னவெல்லாம் சொல்வது என்று மனத்துக்குள் ஒத்திகை பார்க்க ஆரம்பித்தாள். மேற்பகுதியில் காசினோ அமைந்திருந்த ஒரு பெரிய ஹோட்டலின் முதல் மாடியில் ஒரு ரெஸ்டராண்டு. அதற்குள் நுழையப் போனார்கள் இருவரும். மதுரத்திற்கு சொர்க்கலோகம் இப்படித்தானா இருக்கும் என்ற பிரமிப்பு தோன்றியதில், கணவனுடைய முகமாற்றத்தைக் கவனிக்கவில்லை. “இங்க வேண்டாம், வா. வேற இடத்துக்குப் போகலாம்!” மோகன் வாசற்புறம் நோக்கி விரைந்தபோது, அவளுக்கு எதுவும் புரியவில்லை. இருப்பினும், தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றுதானே இவர் வேலையைக்கூட மறந்து இங்கு அழைத்து வந்திருக்கிறார் என்ற நினைவே தைரியத்தை அளிக்க, `இங்க எவ்வளவு ஜோரா இருக்கு! நான் இந்தமாதிரி இடத்துக்கு எல்லாம் வந்ததே இல்லீங்க,” என்று கெஞ்சினாள். ஏதோ சொல்ல வாயெடுத்தவன், “சரி,” என்று உள்ளே வந்து உட்கார்ந்துகொண்டான். முதன்முறை திருவிழா பார்க்கும் குழந்தையைப்போல ஆர்வத்துடன், தலையை பல திசைகளிலும் திருப்பி, அங்கிருந்த பொருட்கள், மனிதர்கள் எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்தாள் மதுரம். `அட! அங்க ஒக்காந்து சிரிச்சுச் சிரிச்சு பேசிக்கிட்டிருக்கிறது ரதி தேவி இல்ல!’ நாட்டின் பிரபல பாடகி. பாட்டுத்திறனைவிட அவளுடைய உடைகள் பிரமாதமாக இருக்கும். சில உள்ளூர் படங்களில்கூட அவள் நடித்திருப்பதாக ஞாபகம். மதுரம் விழிகள் விரிய பார்த்துக்கொண்டே இருக்கையில், அவர்களை நோக்கி வந்தாள் அந்த ரதி தேவி. மோகனை நெருங்கி, “ஹலோ, டாக்டர்! ஏது, நீங்ககூட ஒங்க உயிருக்குயிரான வேலையை விட்டுப் பிரிஞ்சு, இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க!” என்று விசாரித்தபோது, அவள் குரலிலிருந்த கேலி மதுரத்திற்குப் புரியவில்லை. பெருமையாக இருந்தது. கணவன் பக்கம் திரும்பினாள், புன்சிரிப்புடன். `சே! இவர் என்ன, இப்படி ஒரு உம்மணாமூஞ்சியாக இருக்கிறாரே!’ “ஹலோ!” என்று அவன் முகமன் கூறியதுகூட வேண்டாவெறுப்பாகச் செய்ததுபோல இருந்தது. அப்போதுதான் அவன் பக்கத்திலிருந்தவளைக் கவனித்ததுபோல் பாசாங்கு செய்தாள் ரதி தேவி. “தேவலியே! ரொம்பத்தான் மாறியிருக்கீங்க! இப்போ பெண்களோட அருமை புரிஞ்சுபோச்சா?” சிரித்தாள். விறைப்பாக, அறிமுகப்படலம் நடந்தது. “இது என் மனைவி மதுரம்!” ரதி தேவி சிறிது அதிர்ந்து, உடனே அதை மறைக்க முயன்றதாகப் பட்டது மதுரத்திற்கு. ஏன் அப்படி? இவருடைய முன்னாள் காதலியோ? மதுரத்தை நேருக்கு நேர் பார்த்து, “நீ எந்த ஊரும்மா?” என்று அவள் கேட்கையில், குழைவான அக்குரலில் ஏளனமே மிகுந்திருந்தது மதுரத்திற்கும் புரிந்தது. தான் அவளைப்போல் கருஞ்சிவப்பான உதட்டுச் சாயமும், நெற்றிகொள்ளாத சாந்துத் திலகமும், தலையைவிடப் பெரிதான கொண்டையுமாக இல்லாது, ஒரு சிறு குங்குமப் பொட்டு, ஒற்றைப் பின்னல் அலங்காரங்களுடன் இருந்தது பெரிய குறையாக இருந்தது மதுரத்திற்கு. தன் முகம் மட்டும் ஏன் இப்படி எப்பவுமே எண்ணை வடிகிறது? எதிரிலிருந்தவளின் வளை மட்டுமின்றி, கால் செருப்புகூட புடவையின் சிவப்பு நிறம்! மதுரத்தின் மன உளைச்சலில் அவள் கேட்ட கேள்வி மறந்தே போயிற்று. “என்ன டாக்டர் ஸார்! இவங்ககிட்ட நம்ப ரெண்டுபேர் பத்தியும் நீங்க ஒண்ணுமே சொல்லலியா?” கொஞ்சலும், உரிமையுமாக ரதி தேவி சாடியபோது, அதற்கு மேலும் பொறுக்க முடியாதவனாய் எழுந்தான் மோகன். “போகலாம்,” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, யாருடைய பதிலுக்கும் காத்திராது, வேகமாக வெளியேறினான், சாப்பிடவும் மறந்து. “வரேங்க. ஒங்களைப் பாத்தது ரொம்ப சந்தோஷம்!” அந்த அழகியிடம் அவசரமாக விடைபெற்றுக்கொண்டு, ஓட்டமும், நடையுமாக அவனைப் பின்தொடர்ந்தாள் மதுரம். வீடு திரும்பும் வழியில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை இருவரும். அந்த பிரம்மாண்டமான வீட்டுக்குள் மீண்டும் நுழைந்தபோது, `எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டாங்க!’ என்று மதுரத்தின் மனம் அழுதது. பிறந்தகத்தில் ஓயாத பேச்சும், சிரிப்புமாக எளிய உணவைப் பகிர்ந்துகொள்ளும்போது கிடைத்த மகிழ்ச்சி இப்போது எங்கே? கணவனை நினைத்தாலே பயமாக இருந்தது. அண்ணனைப்போல உரக்க  நாலு வார்த்தை திட்டினாலாவது அவர் மனத்தில் இருப்பது புரியும். எதையோ எண்ணி, எப்போதும் துக்கப்படுபவர்போல் இருப்பவரை எப்படி நெருங்குவது? `எல்லாம் என்னால்தான்!’ ரதி தேவியைப்போன்ற பேரழகும், புகழும் வாய்ந்த பெண்களுடன் பரிச்சயம் உள்ளவருக்குத் தான் எந்த மூலை! நிறைய யோசித்து, ஒரு முடிவுக்கு வந்தாள் மதுரம். இவருடைய நிம்மதி என்னால் கெடக்கூடாது. அதனால் என்ன அவப்பெயர் வந்தாலும், கணவருடைய நன்மைதான் முக்கியம். “நான் எங்க வீட்டுக்கே போயிடலாம்னு இருக்கேன்!” இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு ஏதோ படித்துக்கொண்டிருந்தவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். ”என்னது?” மீண்டும் கூறினாள். அவன் முகத்தில் அப்போது கண்டது -- வருத்தமா, பயமா? காரணம் தெரியாமலேயே மதுரத்துக்குள் கனிவு சுரந்தது. “நீயும் என்னை விட்டுட்டுப் போகப்போறியா?” என்று கேட்டவன், வளர்ந்த ஆண்மகனாகப் படவில்லை. அதே கேள்வியைப் பலமுறை அவளைக் கேட்டிருந்த குழந்தைகளில் ஒருவனாகத்தான் தோன்றியது. மடியிலிருந்த புத்தகம் கீழே விழுந்ததைக்கூடக் கவனிக்காது, சட்டென எழுந்து எதிரே நின்றிருந்த அவள் கரத்தைப் பற்றிக்கொண்டான் மோகன். “நீ எப்பவுமே எங்கூட இருக்கணும், மதுரம்!” குரல் அழுகையாக வந்தது. “இருப்பியா?” “உங்களுக்கு என்ன ஆயிடுச்சு? எனக்கும்தான் ஒங்களைவிட்டா, வேற யார் இருக்காங்க?” என்றபடி, கணவனை ஆதரவுடன் அணைத்தாள் மதுரம். அவளுடைய பரிவில் முங்கி, “இப்போ ரதின்னு பேரு வெச்சிட்டிருக்காளே, அவதான் என் முதல் மனைவி!” என்றபடி, ஆரம்பித்தான் மோகன். அவன் வேலை மும்முரத்தில் இருந்தபோது, `கலை’ என்ற பெயரில் அவன் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, நம்பிய அவனுக்கே துரோகம் செய்தபோது, அவன் தட்டிக்கேட்க, `சுதந்திரம் வேண்டும்’ என்று அவள் விவாகரத்து கோரியது -- எல்லாவற்றையும் அவன் கடகடவென்று ஒப்பித்து முடித்ததும், மதுரம் யோசனையில் ஆழ்ந்தாள். சற்று பொறுத்து, “பாவங்க அவங்க! தான் தொலைச்சது எவ்வளவு பெரிசுன்னு என்னை ஒங்களோட சேர்த்துப் பாத்தப்போதான் புரிஞ்சிருக்கு. என்னதான் நாலு ஆம்பளைங்களோட சகவாசம் இருந்தாலும், அவங்க எல்லாம் என்ன, நிரந்தரமா? வயசு ஏறிக்கிட்டே போறப்போ, `நாளைக்கு யாரு நமக்கு ஆதரவு?’ன்னு பயம் வந்திருக்கு!” என்று தன் சக்களத்தியின் ஆங்காரப் போக்குக்கு நியாயம் கற்பித்தாள். “பாவம்!” என்று மீண்டும் பரிதாபப்பட்டாள். `இப்படியும் ஒரு பெருந்தன்மையா!’ ஒரு புது மதிப்புடன் மனைவியை ஏறிட்டான் மோகன்.                                                                                                                       (மயில் - மலேசியா, 1993)