[] []   மண்டபத்தில் யாரும்  எழுதிக் கொடுக்கவில்லை   பா. ராகவன்   புத்தகங்களைப் பற்றிய ஒரு புத்தகம்       அட்டைப்படம் - வைதேகி   மின்னூலாக்கம் : த. சீனிவாசன் மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com    வெளியிடு : FreeTamilEbooks.com   உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அறிமுகம்                             இதுவரை வெளியாகியுள்ள என்னுடைய புத்தகங்களைப் பற்றிய சிறிய அறிமுகக் குறிப்புகளை மொத்தமாகத் தொகுத்திருக்கிறேன். இது யாருக்கு உதவும் என்று தெரியவில்லை. ஆனால் சரித்திரத்துக்கு ரொம்ப முக்கியம்.   எழுத்தாளன் சுயமாக அச்சுப் புத்தகமும் மின்நூலும் வெளியிட்டுக்கொள்ளக் காலம் கட்டாயப்படுத்தும் சூழலில் அவனது கேட்லாக்கையும் அவனேதான் உருவாக்க வேண்டியுள்ளது. வேறு வழியில்லை. தமிழ்ச் சூழலென்பது சுற்றுச் சூழலினும் மாசுபட்டிருக்கிறது.   இந்தக் குறிப்புகளில் பலவற்றை என் நண்பர்கள் மருதனும் ஹரன் பிரசன்னாவும் எழுதியிருக்கிறார்கள். சிலவற்றை நானே எழுதியிருக்கிறேன். என்னைத் தவிர மற்ற இருவருக்கும் நன்றி. இம்மின்னூல் வடிவத்துக்கான முகப்புப் படத்தை வடிவமைத்துத் தந்தவர் வைதேகி. அவருக்கு என் நன்றி.   மேற்கொண்டு எனது புத்தகங்கள் வெளிவரும்போது இந்தப் புத்தகம் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும்.   பா. ராகவன்       []     10 நாவல்கள் | 5 சிறுகதைத் தொகுப்புகள் | 26 அரசியல் நூல்கள் | 2 வாழ்க்கை வரலாறுகள் | 6 நகைச்சுவை நூல்கள் | 7 சிறுவர் நூல்கள் | 7 பிற நூல்கள்       உள்ளே உள்ளவை                             பொருளடக்கம் அறிமுகம் 4  உள்ளே உள்ளவை 6  நாவல்கள் 8  யதி 9  பூனைக்கதை 10  அலை உறங்கும் கடல் 12  புவியிலோரிடம் 13  மெல்லினம் 14  கொசு 15  அலகிலா விளையாட்டு 16  தூணிலும் இருப்பான் 17  ரெண்டு 18  கால் கிலோ காதல் அரை கிலோ கனவு 19  சிமிழ்க்கடல் 20  சிறுகதைத் தொகுப்புகள் 21  மாலுமி 22  காந்தி சிலைக் கதைகள் 23  அரசியல் 25  டாலர் தேசம் 26  நிலமெல்லாம் ரத்தம் 27  மாயவலை 28  9/11: சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி 29  பாக். ஒரு புதிரின் சரிதம் 30  ஆர்.எஸ்.எஸ்: மதம் மதம் மற்றும் மதம் 31  காஷ்மீர் 32  ஆயில் ரேகை 33  மாவோயிஸ்ட்: அபாயங்களும் பின்னணிகளும் 34  2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு 35  இராக்: ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் 36  ISIS: கொலைகாரன்பேட்டை 37  பிரபாகரன்: வாழ்வும் மரணமும் 38  பிற அரசியல் நூல்கள்: 39  வாழ்க்கை வரலாறு 40  பொலிக பொலிக! 41  யானி: ஒரு கனவின் கதை 42  உணவு / உடல்நலம் 43  சிறுவர் நூல்கள் 45  நகைச்சுவை 47  ரசனை 49  பின்கதைச் சுருக்கம் 50  சுய முன்னேற்றம் 51  சில தகவல்கள் 53  நாவல்கள்   யதி           யதி, நான்கு சன்னியாசிகளின் வாழ்வனுபவங்களின் மூலம், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள அனைத்து விதமான சன்னியாச ஆசிரமங்களிலும் புழங்குவோரின் உலகைத் திறந்து காட்டுகிற நாவல். சன்னியாசிகளைப் பற்றிய இப்படி ஒரு புனைவுப் பிரதி இதுவரை வந்ததில்லை.   நாமறிந்த காவி, நாமறிந்த ஆளுமைகள், நமக்குத் தெரிந்த துறவிகளின் வாழ்வுக்கும் செயலுக்கும் அப்பால் உள்ள, எங்கோ ஓடி ஒளிந்துகொண்ட ஒரு ஜீவநதியின் சத்தியத் தடம் தேடிப் போகும் பயணம். ஆனால் வேறு வழியில்லை. தெரிந்ததைக் கடந்துதான் தெரியாதது நோக்கிச் செல்ல வேண்டும். கண்ணைக் கட்டிக்கொண்டு காற்றில் கத்தி வீசியபடியே நடக்கிற அனுபவம். எழுத்து மட்டுமா, வாழ்வும் அதுவேயல்லவா?   பக்கங்கள்: 924 விலை ரூ. 1000 வெளியீடு: பினாக்கிள் புக்ஸ்   பூனைக்கதை           திரைப்பட உலகத்தைக் குறித்துத் தமிழில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் தொலைக்காட்சித் தொடர்களின் உலகம் இதுவரை பதிவானதில்லை. ‘பூனைக்கதை’ அதைச் செய்கிறது.   திரைப்படம் / தொலைக்காட்சித் தொடர்கள் இரண்டுமே பொதுவாகக் கலைத்துறை என்று அழைக்கப்பட்டாலும் இரண்டின் நடைமுறைகள் வேறு. செயல்பாட்டு விதம் வேறு. பொருளாதாரம் வேறு. புழங்குவோர் மனநிலை முற்றிலும் வேறு. தொலைக்காட்சித் தொடர்களின் உலகில் வாழும் மனிதர்களின் வாழ்வின் ஊடாக, இக்கலை உலகின் கண்ணுக்குத் தென்படாத இடுக்குகளை வெளிச்சமிடுகிறது இந்நாவல்.   இந்தக் கதையை ஒரு பூனை சொல்கிறது. அது இன்று வாழும் பூனையல்ல. என்றும் வாழும் பூனை.   ஔரங்கசீப்பின் கோல்கொண்டா படையெடுப்பின் சமயம், தென் தமிழகத்தில் ஒரு சமஸ்தானத்துக்குள் வசிக்கும் ஆறு கலைஞர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு நிலவறைக்குள் அனுப்பிவைக்கிறார் ஒரு ஜமீந்தார்.  சுல்தான் தமிழகத்துக்குப் படையெடுத்து வந்துவிட்டால் அனைத்துக் கலைகளும் அழிந்து மண்ணோடு மண்ணாகிவிடும் என்கிற அச்சம். பிந்தைய தலைமுறைகளுக்காவது கலைகளின் மிச்சத்தை விட்டுச் செல்ல வேண்டுமென்ற எண்ணத்தில் அந்த ஆறு கலைஞர்களும் இணைந்து ஒரு பெரும் புத்தகத்தை எழுதத் தொடங்குகிறார்கள். எந்தக் காலத்தில் யார் எடுத்து வாசித்தாலும் இம்மண்ணில் உருவாகி, வேர்விட்டு, வளர்ந்த பெரும் கலைகளின் இலக்கணம் விளங்கும்படியான புத்தகம்.   இந்தக் கதையைச் சொல்லும் பூனையின் மூலம் அந்தப் பெரும் புத்தகம் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு எடுத்து வரப்படுகிறது. மாய யதார்த்த எழுத்தின் வசீகர சாத்தியங்களை முற்றிலும் பயன்படுத்திக்கொள்ளும் இந்நாவல் விவரிக்கும் கலையுலகம் அசலானது. அரிதாரங்கள் அற்றது. இருண்மையின் அடியாழங்களில் பூனையின் கண் பாய்ச்சும் வெளிச்சம் உக்கிரமானது.   மதிப்பீடுகளின் தடமாற்றத்துக்கு எதிராக யுத்தத்துக்கு நிற்கும் பூனை ஒரு கட்டத்தில் நீங்களாகத் தெரிவீர்கள்.   ஆனால் அது நீங்களல்ல. நீங்கள் மட்டுமல்ல.   விலை: ரூ. 350 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   அலை உறங்கும் கடல்           அற்புதங்களும் அவலங்களும் ஒருசேரக் காட்சியளிக்கும் ராமேஸ்வரத்தில் நிகழ்கிறது கதை. பெரிய அளவில் கல்வியோ, தொழில் வாய்ப்புகளோ இல்லாத இத்தீவில் மக்களின் பொருளாதாரம் கோயிலையும் கடலையும் மட்டுமே சார்ந்துள்ளது. ஆகவே, மீன்களும் மந்திரங்களும் மட்டுமே இங்கு விலைபோகும் சரக்குகள்.   இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்த காலத்தில் ராமேஸ்வரத்தில் அகதிகள் வரத்து அதிகரித்தது. ஒரு மாபெரும் துயரத்துக்கு மிக நெருக்கத்தில் இருந்தும் தன் இயல்பில் தடம் புரளாத தீவாக அது இருந்தது. தொன்மங்களின் வசீகரத்தை இருப்பியல் பிடுங்கித் தின்னும் பேரவலம் யுத்த பாதிப்பினும் கோரமாக நிகழ்ந்துகொண்டிருந்தது.   அடையாளச் சிக்கல், அங்கு வந்து சேர்ந்த அகதிகளுக்கு மட்டுமல்ல; அங்கேயே வசிப்பவர்களுக்கும்தான். ஒரு பெரும் அவல சரித்திரத்தின் சாட்சியாக நின்றவர்கள், ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தவும் அவகாசமின்றிப் பிழைப்புக்கான பேயோட்டத்தில் கரைந்து காணாமல் போகிற கதையைச் சொல்கிற நாவல்.   கிண்டில் மின்நூல்: ரூ. 100 கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள 'சிமிழ்க்கடல்' நாவல் தொகுப்பிலும் உள்ளது.   புவியிலோரிடம்           இந்நாவல், வெளிவந்த காலத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இட ஒதுக்கீட்டு அரசியலில் இடையே சிக்கி சின்னாபின்னமான அடையாளமற்ற ஒரு குடும்பத்தின் கதை இது. ‘நான் யார்’ என்னு தேடல் கொண்டவர்கள்; சாதீயக் குறியீடுகள்தான் மனிதனை நிர்மாணிக்கிறதா என்று வினா எழுப்புபவர்கள்; வெளிவேஷம் போட வேண்டுமா என்று எண்ணுபவர்கள்; பரிபூரணம் சுதந்தரத்தை விரும்புகிறவர்கள் யாரானாலும் அவர்களுக்கு இந்நாவல் ஒரு நிலைக்கண்ணாடி.   கிண்டில் மின்நூல்: ரூ. 100 கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள 'சிமிழ்க்கடல்' நாவல் தொகுப்பிலும் உள்ளது.   மெல்லினம்           குழந்தைகளின் விசித்திர உலகத்துக்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிற இந்நாவல், கல்கி வார இதழில் தொடராக வெளிவந்தது. கதையெங்கும் குழந்தைகள்தாம். களமாடுவது அவர்கள்தாம். ஆனால் இது குழந்தைகளுக்கானதல்ல. குழந்தைகளைப் பற்றியதும் அல்ல. குழந்தைகளின் உலகை ஒரு தியானப் பொருளாக்கி, தரிசனமாக இந்நாவல் சுட்டிக்காட்டும் புள்ளியில் நாம் இருப்போம். நாம் இழந்த நமது குழந்தைமை இருக்கும்.   ஒரு நாயையும் ஒரு குரங்கையும் சில பட்டாம்பூச்சிகளையும் இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு மிகவும் நுணுக்கமானதொரு பிரச்னையைக் கையாளும் நாவல் இது.   கிண்டில் மின்நூல்: ரூ. 100 கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள 'சிமிழ்க்கடல்' நாவல் தொகுப்பிலும் உள்ளது.   கொசு           கல்கி வார இதழில் தொடராக வெளிவந்த இந்நாவல், வெளிவந்த காலக்கட்டத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டதன் காரணம், இது பேசுகிற அரசியல். ஐம்பதாண்டுக் காலத்துக்கு மேலாகத் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமான திராவிட அரசியல் கட்சிகளின் உருவையும் உள்ளத்தையும் தொண்டன் ஒருவனின் வாழ்வனுபவங்களின் வாயிலாகக் காட்சிப் படுத்துகிறது கொசு.   இந்நாவலில் சித்திரிக்கப்படும் அரசியல், தன் அனைத்து அரிதாரங்களையும் உதிர்த்து, அபூர்வமான நிர்வாணக் கோலம் ஏந்துகிறது. அதனாலேயே இதன் தகிப்பு தாங்க ஒண்ணாததாக இருக்கிறது.   விலை ரூ. 170 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   அலகிலா விளையாட்டு           இந்நாவலின் மையம் ஒரு தத்துவ முடிச்சாக இருந்தாலும், வாழ்க்கை சார்ந்த ஒரு விசாரணை அதன் அடிப்படையாக இருப்பதை நுணுக்கமான வாசகர்கள் புரிந்துகொள்ள இயலும். நடைமுறை வாழ்வுக்குப் பொருந்தாத தத்துவங்கள் திடீர்ப் பணக்காரன் வீட்டு வரவேற்பரை அலங்கார நூலகம் போலத்தான். தத்துவங்களையல்ல; அவற்றின் காலப்பொருத்தமும் உபயோகமுமே முக்கியம். மனித வாழ்வைக் காட்டிலும் மகத்தான அற்புதம் வேறென்ன உள்ளது?   இது அப்படியொரு அற்புதத்துடன் துவந்த யுத்தம் புரியும் தத்துவத்தைப் பற்றிய நாவல். இலக்கியப் பீடம் பரிசும் பாரதிய பாஷா பரிஷத் விருதும் வென்றது.   விலை: ரூ. 180 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   தூணிலும் இருப்பான்           சென்னை, பர்மாபஜார் என்கிற பளபளப்பான உலகின் பின்புறமிருக்கிற கடத்தல் பிரதேசத்தை இந்த நாவல் மிகையின்றிக் காட்சிப்படுத்துகிறது. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத கடத்தல் உலகக் கதை என்பது சற்று விநோதமான விஷயம்தான். எங்கே போகிறோம் என்று சிந்திக்கக் கூட அவகாசமின்றி நாவல் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிற நாயகன், அதே வேகத்தில் நம் பார்வையிலிருந்தும் காணாமல் போவதன் பின்னால் இருக்கிற இருப்பியல் சார்ந்த அபத்தமே இதன் மையம்.   கிண்டில் மின்நூல்: ரூ. 50 கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள 'சிமிழ்க்கடல்' நாவல் தொகுப்பிலும் உள்ளது.   ரெண்டு           ஆண் பெண் உறவின் வெளிப்படுத்தப்படாததொரு பக்கத்தைத் தொட்டுப் பேசுகிற நாவல்.   அவந்திகா - மனோஜ் - விக்டர் என்ற மூன்று பேராசிரியர்களின் வாழ்க்கை ஒரு புள்ளியில் இணைந்து சிறு கோலமாகிறது. அது உலகம் அதுவரை பார்த்தறியாத கோலம். எனவே எழுகிற வினாக்களை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தில் உடல் அரசியலும் உளச் சிக்கல்களும் பேசுபொருளாகின்றன.   சமாளிக்க முடியாத சிக்கல்களின் உலகில் பயணிக்கிற இந்நாவல், தீர்வுகளையல்ல; தேடல்களையே முன்னிலைப்படுத்துகிறது.   விலை: ரூ. 160 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   கால் கிலோ காதல் அரை கிலோ கனவு                                       ஒரு கற்பனைப் பாத்திரம் கூட இல்லாமல் எழுதப்பட்ட கதை அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதில் வருகிற அத்தனை பேருமே நிஜமான மனிதர்கள். அத்தனைப் பெயர்களும் நிஜம். சிலரது பெயரை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுத்தேன். சிலரது குணாதிசயங்களை வேறு சிலருக்கு மாற்றிப் போட்டேன். வேறு சிலரின் அடையாளங்களை சம்பந்தமில்லாத இன்னும் வேறு சிலருக்குப் பொருத்தினேன்.   இந்த விளையாட்டு எனக்கு சுவாரசியமாக இருந்தது. ஒரு கதைக்குள் நானே எனக்காக நிகழ்த்திப் பார்த்த மாறுவேடப் போட்டிபோல.   எல்லாருடைய பால்யங்களும் ரசனைமிக்கவை. நினைத்தால் இன்பமளிப்பவை. சுவாரசியமானவை. அந்த வயதுகளில் சந்திக்க நேர்கிற துக்கங்களுமேகூடப் பின்னாள்களில் நினைத்து வியக்கவோ, சிரிக்கவோ, சிலிர்க்கவோ எதையோ ஒன்றைச் சேமித்து வைக்கத்தான் செய்யும்.   இது என்னுடைய பால்யம். இது எனக்கே எனக்காக எழுதப்பட்ட கதை. என் பிரத்தியேக சந்தோஷம்.   கிண்டில் மின்நூல்: ரூ. 50 கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள 'சிமிழ்க்கடல்' நாவல் தொகுப்பிலும் உள்ளது.   சிமிழ்க்கடல்   எட்டு நாவல்கள் அடங்கிய பெருந்தொகுதி இது. ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்டது.   - அலை உறங்கும் கடல் - அலகிலா விளையாட்டு - புவியிலோரிடம் - ரெண்டு - கொசு - கால் கிலோ காதல் அரை கிலோ கனவு - தூணிலும் இருப்பான் - மெல்லினம்   இந்த எட்டு நாவல்களும் இத்தொகுப்பில்  இடம் பெற்றிருக்கின்றன.   இவற்றுள் அலகிலா விளையாட்டு, புவியிலோரிடம் இரண்டும் நேரடி நாவல்களாக எழுதப்பட்டவை. [ அலகிலா விளையாட்டு பின்பு இலக்கியப் பீடம் இதழில் தொடராக வெளிவந்தது.] ரெண்டு, குங்குமத்தில் வெளிவந்தது. தூணிலும் இருப்பான், தினமலரில். மற்ற மூன்றும் கல்கியில் வெளியானவை.   வாழ்வின் மிக எளிய கணங்களே சாமானியர்களுக்கான கலையாகின்றன. இந்நாவல்கள் அக்கணங்களை சாசுவதப்படுத்தும் முயற்சியாக எழுதப்பட்டவையே. வெளியான காலத்தில் இவை பெருவாரியான வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்டவை. தனித்தனி நூல்களாக  வெளிவந்த இவை, அவ்வப்போது பதிப்பில் இல்லாமல் இருந்திருக்கின்றன. தமிழ்ச் சூழலில் இது ஒரு பிரச்னைதான். வேறு வழியில்லை.   விலை: ரூ. 1000 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   சிறுகதைத் தொகுப்புகள் மாலுமி           இத்தொகுப்பில் உள்ள கதைகள் சிறுகதைகளுக்கான இலக்கணத்தை அப்படியே அடியொற்றி வருகின்றன. அதேசமயம் உள்ளடக்கமும் மொழியும் கதைகளுக்கேற்ப மிகக் கச்சிதமாக மாற்றம் கொள்கின்றன. இயல்பாகவே கதையெங்கும் காணக் கிடைக்கும் மெல்லிய நகைச்சுவை, தன் அளவை விட்டுக் கூடிவிடாமல், கதையோடு இயைந்து வருகின்றது. இந்தப் புன்னகைக்கு இடையில் திடீரென்று நாம் எதிர்கொள்ளும் பூடகமான உச்சம் நம்மைத் திகைக்க வைக்கின்றது. அபாரமான கதைத் தருணங்களை எழுத்தால் வசப்படுத்தியிருக்கும் இக்கதைகள், நம்மை ஆக்கிரமிக்கின்றன. அசர வைக்கின்றன.   11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.   பக்கங்கள் 104 விலை ரூ.140 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   காந்தி சிலைக் கதைகள்           குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு.   நூலின் முன்னுரையில் நாகூர் ரூமி:   இந்தக் கதைகளில் வரும் மனிதர்களுக்கும் மகாத்மா காந்திக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றே ஒன்றுதான். அதுதான் காந்தி கையில் பிடித்திருக்கும் ஊன்று கோல். இறைத்தூதர் மோஸஸ் எனப்படும் மூஸாவுக்கு இறைவன் ஒரு ஊன்றுகோலைக் கொடுத்திருந்தான். அதற்குப் பல அற்புத சக்திகள் உண்டு. அது தேவைப்படும்போது பாம்பாக மாறும்.   இரவில் ஒளிதரும் விளக்காக மாறும். அடிமைகள் விடுதலைபெற செங்கடலைப் பிளந்து வழி ஏற்படுத்தும் கழியாகும். மகாத்மாவின் ஆன்மாவின் கை பிடித்திருந்ததும் அப்படிப்பட்ட ஓர் அற்புத ஊன்றுகோல்தான்.   கோடிக்கணக்கான மக்கள் மனத்திலே விடுதலை உணர்வைப் பற்றவைத்த தீயாக இருந்தது அது. அதுகாறும் இந்த உலகம் காணாத ஒரு புது ஒளியைப் பாய்ச்சியது அது. அடக்குமுறை என்ற இருளை, அதன் ஒளியே பூரணமாக விலக்கியது. அதன் சொடுக்கில் சுதந்தரம் எனும் தென்றல் வீசியது நமது நாட்டில். இவ்வளவையும், இன்னமும் செய்த அந்த ஊன்றுகோல், காந்தி சும்மா கையில் பிடித்திருந்த வாக்கிங் ஸ்டிக் அல்ல.   அப்படிப்பட்ட ஒரு ஊன்றுகோல் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் ஏதாவதொரு கட்டத்தில் தேவைப்படுகிறது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அன்பாக, பாசமாக, காதலாக, பணமாக, புகழாக, அதாக இதாக. ஆனால் ஒரு ஊன்றுகோல் தேவை.   மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகில் நிகழ்ச்சிகள் நடப்பது மட்டும் இக்கதைகளுக்கும் காந்திக்கும் உள்ள சம்பந்தம் அல்ல. இந்த ஊன்றுகோல் எனும் குறியீடுதான் ரொம்ப அழகாக இந்த எட்டு கதைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கதைகளுக்கும் காந்திக்கும் உள்ள நிஜமான சம்பந்தம் அதுதான்.   கிண்டில் மின்நூல்: ரூ. 50 - மூவர் - பறவை யுத்தம் - நிலா வேட்டை   இம்மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் முறையே மதி நிலையம், ராஜேஸ்வரி புத்தக நிலையம், வானதி பதிப்பகம் மூலம் வெளியாயின.  பறவை யுத்தம் தொகுப்பு லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை விருது பெற்றது. இவை மூன்றும் முதல் பதிப்புக்குப் பின்பு மறு பிரசுரம் பெறவில்லை. இன்று அச்சிலும் இல்லை. மூவர் தொகுப்பு கிண்டில் மின்நூலாகக் கிடைக்கிறது.   அரசியல்   டாலர் தேசம்             அமெரிக்காவின் அரசியல் வரலாறு.   யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் குப்பைகளும் ஜனநாயகத்துக்குப் பின்னாலுள்ள சர்வாதிகாரமும் செழுமைக்குப் பின்னாலுள்ள கடன்சுமைகளும் மிக முக்கியமான விஷயங்கள். இந்நூல், அமெரிக்காவின் முழுமையான அரசியல் வரலாற்றை விவரிப்பதினூடாக அத்தேசத்தின் நிஜமுகத்தைக் காட்சிப்படுத்துகிறது.   குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்தது.   விலை: ரூ. 750 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   நிலமெல்லாம் ரத்தம்           இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்றுவரை இது தீர்க்கப்பட முடியாமல் இழுத்துச் செல்வதன் காரணம் என்ன?   பாலஸ்தீன் சுதந்தரத்துக்கான போராட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வீடிழந்து, சொத்திழந்து, சொந்தங்களை இழந்து பல்லாண்டுகளாக அகதிகளாக இன்னமும் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள், பாலஸ்தீன் அரேபியர்கள். வளமையும் செழுமையும் மிக்க மத்தியக்கிழக்கு தேசங்கள் எது ஒன்றுமே ஏன் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை? ஒதுங்க ஓர் இடம் இல்லாமல் உலகெங்கும் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் யூதர்கள். அப்படிப்பட்டவர்கள், தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன் அரேபியர்களை வஞ்சிக்க நினைத்தது எதனால்? ஐ.நா.வின் தீர்மானங்களெல்லாம் பாலஸ்தீன் விஷயத்தில் மட்டும் அற்பாயுளில் இறந்துவிடுவதன் காரணம் என்ன? இஸ்ரேல் யூதர்களுக்கும் பாலஸ்தீன் அரேபியர்களுக்கும் அப்படி என்னதான் பிரச்னை?   பாலஸ்தீன் போராளி இயக்கங்களின் தோற்றம் முதல் இன்றைய செயல்பாடுகள் வரையிலான விரிவான அறிமுகம், இஸ்ரேல் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் பற்றிய துல்லியமான தகவல்கள், இஸ்ரேலிய உளவு அமைப்பான 'மொஸாடின்' செயல்பாடுகள், பாலஸ்தீன் பிரச்னை குறித்த உலக நாடுகளின் கண்ணோட்டம், யாசிர் அரஃபாத்தின் ஆயுதப்போராட்டம், அமைதி முயற்சிகள், அவற்றின் விபரீத விளைவுகள் என்று மிக விரிவான களப் பின்னணியுடன், ஆதாரபூர்வமான அரசியல் சரித்திரமாக குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளிவந்தது.   விலை: ரூ. 650 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   மாயவலை           சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் அனைத்தையும் குறித்த மிக விரிவான அரசியல் - வரலாற்று ஆவணம் இந்நூல். அல் காயிதா, ஹிஸ்புல்லா, ஹமாஸ், தாலிபன், ஜமா இஸ்லாமியா, ஈ.டி.ஏ., கொலம்பிய போதைக் கடத்தல் நெட் ஒர்க், ஓம் ஷின்ரிக்கியோ, லஷ்கர் ஏ தொய்பா உள்ளிட்ட அனைத்து இயக்கங்களைப் பற்றியும் விரிவான அறிமுகத்தை இந்நூல் தருகிறது.   தீவிரவாத இயக்கங்கள் எவ்வாறு தலையெடுக்கின்றன? அவற்றை ஏன் தடுக்கவும் ஒழிக்கவும் முடிவதில்லை? இவை மக்களிடம் எவ்வாறு செல்வாக்குப் பெறுகின்றன? இவர்களுக்கு ஆள்பலம், பணபலம் எவ்வாறு சேருகிறது? இந்த இயக்கங்களின் நெட் ஒர்க் எப்படி செயல்படுகிறது? பேரழிவுச் சம்பவங்களை எப்படி திட்டமிடுகிறார்கள்? தீவிரவாதச் செயல்களுக்கு மதம் எவ்வாறு ஒரு முக்கியக் கருவியாகப் பயன்படுகிறது?   எதையும் விடாமல் மிக நுணுக்கமாக அலசி ஆராயும் இந்தப் புத்தகம் தமிழில் நிகழ்த்தப்பட்ட ஒரு அசுர சாகசம். ஒட்டுமொத்தத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றிய ஒரே பெரிய ஆவணம் ஆங்கிலம் உள்பட வேறெந்த மொழியிலும் இதுவரை வெளிவந்ததில்லை.   குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளிவந்தது.   இப்பெரும் நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு இயக்கத்தைப் பற்றிய பகுதிகளும் தனித்தனி சிறு நூல்களாகவும் வெளிவந்துள்ளன.   விலை ரூ. 1000 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   9/11: சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி           செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீதும், ராணுவத் தலைமையகமான பெண்டகள் மீதும் அல் காயிதா தீவிரவாதிகள் விமானத் தாக்குதல் நடத்தினார்கள். இருபத்தியோராம் நூற்றாண்டில் உலகம் எத்தனை அதிநவீன தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டிய சம்பவம் அது.   இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார் யார்? எப்படி இத்தனை பெரிய தாக்குதலைத் திட்ட மிட்டார்கள்? எத்தனை மில்லியன் டாலர்கள் இதற்குச் செலவழித்தார்கள்? குறி பிசகாமல் அடிக்க என்னென்ன பயிற்சிகள் மேற்கொண்டார்கள்? கிட்டதட்டட ஒரு வருட காலத்துக்கும் மேலாக அமெரிக்காவிலேயே மையம் கொண்டு, அமெரிக்க உளவுத்துறையின் கழுகுக் கண்களை எப்படி ஏமாற்றினார்கள்?   அல் காயிதாவின் உலகளாவிய நெட் ஒர்க், அமெரிக்க உளவுத்துறை, பாதுகாப்புத்துறை, குடியேற்றம் மற்றும் குடியுரிமை வழங்கும் துறைகளின் பிரச்னைகள், அதிகாரவர்க்கத்தில் உள்ள அகங்காரப் பிரச்னைகள் எனப் பல அம்சங்களை மிக விரிவாக அலசி ஆராயும் செப்டம்பர் 11 விசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் இது.   விலை: ரூ. 230 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   பாக். ஒரு புதிரின் சரிதம்           பாகிஸ்தானின் அரசியல் வரலாறு. ஜின்னா முதல் நவாஸ் ஷெரீஃப், பர்வேஸ் முஷாரஃப், பேனசிர் புட்டோ வரையிலான ஆட்சியாளர்களின் காலங்களில் பாகிஸ்தான் என்ற தேசம் தனது அடையாளத்தை எத்தனை மோசமான விதங்களில் வெளிப்படுத்தி வந்திருக்கிறது என்பதை விரிவான ஆதாரங்களின் அடிப்படையில் விவரிக்கும் நூல்.   குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்தது   விலை: ரூ. 100 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   ஆர்.எஸ்.எஸ்: மதம் மதம் மற்றும் மதம்           இந்தியப் பிரிவினைக்குச் சற்று முன்னர் தொடங்கி, இன்றுவரை எங்கெல்லாம் ஹிந்துக்களுக்குப் பிரச்னை வருகிறதோ, அங்கெல்லாம் களத்தில் நிற்பது ஆர்.எஸ்.எஸ். தேசமெங்கும் எத்தனையோ பல மதக்கலவரங்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வந்திருக்கிறது. அப்பழுக்கற்ற தேசியவாத இயக்கம் என்று அதன் ஆதரவாளர்களும், சந்தேகமில்லாமல் மதவாத இயக்கம் என்று எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்கள். எது உண்மை?   சுதந்தர இந்தியாவின் மிகப்பெரிய கலவர காண்டத்தை பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் மூலம் தொடங்கிவைத்தது ஆர்.எஸ்.எஸ். மும்பை தொடங்கி கோத்ரா வரை நீண்ட அவலங்களின் சரித்திரம் அழியக்கூடியதல்ல. இயற்கைப் பேரழிவுச் சம்பவங்களானாலும் சரி. பங்களாதேஷ் யுத்தம், கார்கில் யுத்தம் போன்ற தருணங்களானாலும் சரி. நிவாரணப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான் முதலில் களத்தில் நின்றிருக்கிறார்கள்.   எனில், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இரண்டு முகமா? இல்லை. இருபது முகங்கள் என்று எடுத்துக்காட்டுகிறது இந்நூல்.   விலை ரூ. 130 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   காஷ்மீர்           காஷ்மீர் என்றால் இயற்கை. காஷ்மீர் என்றால் அழகு. காஷ்மீர் என்றால் துப்பாக்கி. காஷ்மீர் என்றால் குண்டுவெடிப்பு. ரத்தம். கலவரம். ஊரடங்கு. 1948 முதல்  இன்றுவரை பதற்றம் குறையாத பகுதியாக இருக்கிறது காஷ்மீர். ஏன்? பாகிஸ்தான் தான் காரணமா? வேறு எந்தக் காரணமும் இல்லையா? தமிழில் முதல் முறையாக, காஷ்மீர் பிரச்னையின் அடி ஆழம் வரை அலசிப் பிழிந்து எடுத்துக் காட்டுகிறது இந்தப் புத்தகம்.   சரித்திரம் முழுதும் ரத்தம். சகிக்க முடியாதபெரும் தலைவலி. நூற்றுக்கணக்கான தீவிரவாதச் செயல்பாடுகள். குண்டுவெடிப்புகள். உயிர்ப்பலி. ‘நாங்கள் இந்தியர்கள் இல்லை, பாகிஸ்தானிகளும் இல்லை; காஷ்மீரிகள்’ என்னும் கோஷம். பிரிவினைப் போராட்டங்கள். காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான்வசமும் இருக்கிறது. அந்தப் பகுதிகளில் ஏன் இந்தக் கோஷங்களும் போராட்டமும் இல்லை?   எத்தனை யுத்தங்கள், சமரசங்கள், பேச்சுவார்த்தைகள், நல்லெண்ண முயற்சிகள்! இன்றுவரை காஷ்மீரில் உள்ள இமயம் பனி மலையாக அல்ல; எரிமலையாகவே இருக்கிறது. காஷ்மீர் என்பது உண்மையிலேயே தீர்க்க முடியாத பிரச்னைதானா?   அலசி ஆராய்கிறது இந்நூல்.   விலை: ரூ. 200 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   ஆயில் ரேகை           மூன்றாம் உலக யுத்தம் என்று ஒன்று வருமானால் நிச்சயம் அதற்குக் காரணம் பெட்ரோலாகத்தான் இருக்கும்!   ஏன் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது பெட்ரோல்? யார் ஏற்றுகிறார்கள்? நாளுக்கு நாள் ஏறிக்குதிக்கும் விலை, ஊருக்கு ஒரு விலையாக இருப்பது ஏன்? பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் தேசங்களின் கூட்டமைப்பு என்ன செய்கிறது? எங்கு வருகிறார்கள் இடைத்தரகர்கள்? எப்படி இந்தத் துறையை ஆட்டிப்படைக்கிறார்கள்? பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் தேசங்களின்மீது அமெரிக்கா குறிவைப்பதன் அரசியல் பொருளாதாரப் பின்னணிகள் என்னென்ன?   மத்தியக் கிழக்கு தேசங்கள் அனைத்தும் அமெரிக்காவின் காலனிகளாகிவிடுமா? மாற்று எரிபொருள் சாத்தியங்கள் என்னென்ன? பெட்ரோலை இன்னும் எத்தனை காலத்துக்கு நம்ப முடியும்? எண்ணெய்க்காக உலகம் அடித்துக்கொண்டு சாகும்போது நாம் தப்பிப் பிழைக்க என்ன வழி?   நமக்கு மிக நெருக்கமாக நின்று அச்சுறுத்தும் ஒரு சர்வதேசப் பிரச்னையின் அனைத்துப் பரிமாணங்களையும் எளிதாகப் புரிந்துகொள்ளுங்கள்!   விலை: ரூ. 200 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்       மாவோயிஸ்ட்: அபாயங்களும் பின்னணிகளும்           நக்ஸல்பாரியில் தொடங்கிய ஒரு சிறு தீப்பொறி தேசம் முழுவதும் பரவிப் படர்ந்த வரலாறைக் கண்முன் நிறுத்துகிறது இந்நூல். மாவோயிஸ்டுகளின் உலகை, அதன் சமூக, அரசியல் பின்னணியோடு பேசுகிறது.   அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படும் இயக்கங்கள் ஏராளம் என்றாலும் இந்திய தேசத்தின்மீது பட்டவர்த்தனமாகப் போர்ப் பிரகடனம் செய்யும் துணிச்சல் மாவோயிஸ்டுகளுக்கு மட்டுமே உண்டு. இந்தியாவின் ஆகப்பெரும் முதல் அச்சுறுத்தல் என்று மாவோயிஸ்டுகளை வருணிக்கிறது இந்திய அரசு. இந்தியாவின் முதன்மையான விரோதி என்று அரசாங்கத்தை அழைக்கிறார்கள் மாவோயிஸ்டுகள். அரசு நிர்வாகம் எங்கெல்லாம் முடங்கியிருக்கிறதோ, எங்கெல்லாம் வளர்ச்சியின்மை பரவியிருக்கிறதோ, எங்கெல்லாம் சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறதோ அங்கெல்லாம் மாவோயிஸ்டுகள் ஊடுருவி அப்பகுதிகளை விடுவிக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட பகுதிகளை அவர்களே ஆள்கிறார்கள். ஆந்திரா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், பிகார், ஒரிஸ்ஸா என்று பல பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பெற்றுள்ள மக்கள் ஆதரவு மிகப் பெரிது. அதே சமயம், மாவோயிஸ்டுகள் மேற்கொள்ளும் யுத்தத்தில் சிக்கி உயிர் துறப்பவர்களும் இதே மக்கள்தாம் என்னும் போது அவர்கள் சித்தாந்தமும் நோக்கமும் கேள்விக்குள்ளாகிறது. இடது சாரி சித்தாந்தத்தால் உந்தப்பட்டு செயலாற்றும் இயக்கம் எனில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இருப்பது ஏன்? அதைவிட விந்தை, மாவோயிஸ்டுகளின் போர், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எதிரானது என்பதுதான்.   மாவோயிஸ்டுகளைக் குறித்த விரிவான அறிமுகத்தைத் தருகிற நூல் இது.   விலை: ரூ. 150 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு           2011ம் ஆண்டு மத்தியக் கிழக்கு தேசங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த மக்கள் புரட்சிகளின் அடிப்படைக் காரணங்களையும் கள நிலவரத்தையும் விவரிக்கிறது இந்நூல். துனிஷியாவில் தொடங்கிய புரட்சி மெல்ல மெல்ல மத்தியக் கிழக்கு முழுதும் பரவி, உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தது. பல்லாண்டுக்கால ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு பெரும் மக்கள் சமூகம் கிளர்ந்து எழுந்ததன் அரசியல், சமூகக் காரணங்களை அந்தப் பிராந்தியங்களின் வரலாற்றுப் பின்புலத்தில் விரிவாக ஆராய்கிறது இந்நூல்.   விலை ரூ. 150 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   இராக்: ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம்           இராக்கின் முன்னாள் அதிபர் சதாம்ஹுசைனின் இந்த வாழ்க்கை வரலாறு, ஒரு வகையில் நவீன இராக்கின் அரசியல் வரலாறும்கூட. 24 வருடங்கள் அந்த தேசத்தின் தலைவிதியைத் தீர்மானித்தவர் அவர். தாய் வயிற்றில் சிசுவாக உருவான நாள் தொடங்கி, சதாம் மரணத்தின் சொந்தக்காரர். இரான் யுத்தம், குவைத் போர், வளைகுடாப் போர் என்று சதாமின் வாழ்வில் ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு அட்சரமும் ரத்தத்தால் எழுதப்பட்டவை. தனது அரசியல் கனவுகளுக்காக இராக்கியர்களையே அவ்வப்போது பலி கொடுக்கத் தயங்காத மனிதாபிமானமற்ற சர்வாதிகாரி.   மறுபுறம், சிதைந்து கிடந்த இராக்கை மறுகட்டுமானம் செய்த ஓர் அற்புத சக்தியாகவும் சதாமைப் பார்க்க முடியும். கட்டாயக் கல்வி, கிராமப்புற வேலை வாய்ப்புகள், மதச்சார்பற்ற ஆட்சி நிர்வாகம் என்று தன்னை நினைவுகூர,பல நல்ல காரியங்களும் செய்தவர்.   சதாம் ஹுசைன் என்கிற ஆளுமையின் முழுப்பரிமாணத்தையும் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். சதாமுக்குப் பிந்தைய இராக்கில் தொடரும் அவலங்களையும் அதற்கான காரணங்களையும் கூட இந்நூல் விவாதிக்கிறது.   கிண்டில் பதிப்பு: ரூ. 150 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   ISIS: கொலைகாரன்பேட்டை           அல் காயிதாவுக்குப் பிறகு சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது, ஜ.எஸ் என்கிற தீவிரவாத அமைப்பின் தோற்றமும் செயல்பாடுகளும். எந்தவித சித்தாந்தப் பின்னணியும் பெரிதாக இல்லாத இந்த இயக்கம், மத்தியக் கிழக்கில், குறிப்பாக இராக்கிலும் சிரியாவிலும் அப்பாவி மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்துவருகிறது. இராக்கில் மட்டுமே ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்களின் கோர மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறது. எண்ணிலடங்கா அப்பாவிப் பொதுமக்கள் சொந்த மண்ணில் வாழ வழியின்றி சிரியாவைவிட்டு இன்று இடம் பெயர்ந்துகொண்டிருப்பதில் ஜ.எஸ்ஸின் பங்கு பெரிது. சிரியா உள்நாட்டு யுத்தத்தில் ஜஎஸ் ஒரு மிக முக்கியக் கண்ணி.   சுமார் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள். கோடி கோடியாகக் கொட்டும் பணம். உலகு தழுவிய நெட் ஒர்க் பலம். சந்தேகமின்றி ஜ.எஸ்.இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல்.   ஐ.எஸ். அமைப்பின் இந்த திகிலூட்டும் வளர்ச்சி மற்றும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ள மத்தியக் கிழக்கு தேசங்களின் ஜாதி அரசியல் மற்றும் எண்ணெய் அரசியலின் வேர்வரை வெளியே இழுத்து விளக்குகிறது இந்நூல்.   விலை: ரூ. 140 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   பிரபாகரன்: வாழ்வும் மரணமும்           பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் - இப்போது இல்லை. ஆயிரக்கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை‘மாவீரர் மரணம்’ என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று ஈழத் தமிழர் உலகமே கண்ணீர் சிந்தியது. அவரது இறப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கச் சிலர் இருந்தார்கள்.   எப்படி இந்த மனிதர் இத்தனை லட்சம் பேரை பாதித்தார்? ஒரு தீவிரவாதியாகவும் சமூக விரோதியாகவும் கொலைகளில் மட்டுமே நாட்டம் கொண்டிருந்தவராகவும் இருந்தால், அவரது மரணம் இப்படியா அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கும்? இப்படியா தமிழினத்தைக் கதறவைத்திருக்கும்?   பிரபாகரன் என்னும் ஆளுமையை, அது உருவான விதத்தை, அதன் தாக்கத்தை, விளைவுகளைச் சற்றும் நடுநிலை பிசகாமல் அலசி ஆராய்கிறது இந்நூல்.   விலை: ரூ. 200 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   பிற அரசியல் நூல்கள்:   * ஹிட்லர் * பர்வேஸ் முஷரஃப் * ஐ.எஸ்.ஐ: நிழல் அரசின் நிஜ முகம் * கலவரகாலக் குறிப்புகள் * ஆடிப்பாரு மங்காத்தா * பொன்னான வாக்கு * ஓப்பன் டிக்கெட்   இவற்றுள் ஹிட்லர் தவிர மற்றவை இப்போது அச்சில் இல்லை.   மாயவலையில் இடம்பெற்றுள்ள பின்வரும் தீவிரவாத இயக்கங்களைக் குறித்த பகுதிகள் தனித்தனி நூல்களாகவும் வெளியாகியுள்ளன.   - அல் காயிதா: பயங்கரத்தின் முகவரி - ஹிஸ்புல்லா: பயங்கரத்தின் முகவரி - தாலிபன் - ஈ.டி.ஏ: அன்புடையீர், நாங்கள் அபாயகரமானவர்கள் - ஓம் ஷின்ரிக்கியோ - ஜமா இஸ்லாமியா - கொலம்பிய போதை மாபியா         வாழ்க்கை வரலாறு   பொலிக பொலிக!           ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு. தினமலர் நாளிதழில் தினசரித் தொடராக வெளிவந்தது.   முன்னுரையில் அரவிந்தன் நீலகண்டன்:   இந்நூல் அனைவருக்குமானது என்றாலும், அடி தப்பினால் அதள பாதாளம் என்கிற ஆபத்தான பாதையைக் கொண்டது. ராமானுஜர் வாழ்ந்த காலக்கட்டத்தில் பல தரிசனங்கள், சமயங்கள், வைதிக சமயங்களே கூட, ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன. இன்று அத்தகைய மோதல்கள் இல்லை. சாதாரணமாக  ஹிந்து சமய மக்கள் எல்லா தரிசனங்களையும் சமயங்களையும் வேற்றுமைகளைக் களைந்து சமன்வயப்படுத்தி ஏற்றுக்கொண்டு விட்டார்கள்தான். ஆனால் பழைய வரலாற்றை எழுதும்போது சில நுண்ணுணர்வுகள் புண்பட்டுவிடக் கூடும். பாரா அத்தகைய பிரச்சனைகளை அசாத்தியத் திறமையுடனும் – ஆனால், ராமானுஜ சம்பிரதாயத்துக்கு எவ்வித சமரச பங்கமும் ஏற்படாமல் கடந்திருக்கிறார்.   விலை ரூ. 200 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   யானி: ஒரு கனவின் கதை           உலகம் கொண்டாடும் இசை மேதை யானியைக் குறித்துத் தமிழில் வெளியாகியுள்ள ஒரே நூல் இது.   மேற்கத்திய க்ளாசிக்கல் இசை மரபில் மொஸார்ட்டைத் தொடர்ந்து வந்த மாபெரும் வம்சத்தில், யானிக்குப் பிறகு, அந்தளவு சாதித்தவர்களாக இன்று யாருமில்லை. பாரம்பரிய இசையின் அழகு சிதையாமல் காலத்துக்கேற்ற வடிவில் அவர் வழங்கிய இசைக்கோவைகள் அவரே சொன்னதுபோல, காற்றில் அவர் செதுக்கிவைத்த காதல் கிறுக்கல்கள்.   இசை அவருக்கு உணவோ, உறவோ அல்ல. அவருக்கு அது ஒரு கனவு. தீராக்கனவு. உறக்கத்தில் அல்ல; தியானத்தில் வருகிற கனவு. ஒரு சமுத்திரமாகப் பரவி அலையடிக்கும் அந்தக் கனவில் அவர் தன்னை நீச்சலடிக்கும் வீரனாகக் கூடக் கருதுவதில்லை. அவரே சொல்லியிருக்கிறார்:   ‘நான் ஒரு நீச்சல் சாம்பியன். நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. இசைக்கடலில் என்னால் கரையோரம் நின்று தூண்டில் போட மட்டுமே இன்றுவரை முடிந்திருக்கிறது!’   கடலளவு பரந்த அவரது அந்தக் கனவின் சரிதம் இந்நூல்.   வெளியீடு: கிழக்கு பதிப்பகம்       உணவு / உடல்நலம்   - உணவின் வரலாறு - ருசியியல் - வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள் - இளைப்பது சுலபம்   உணவின் வரலாறு, குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்தது. ருசியியல், தி இந்து நாளிதழில் வெளியானது. இளைப்பது சுலபம், குங்குமத்தில்.   இந்நான்கு புத்தகங்களும் உணவையும் அதன் சரித்திரத்தையும் ருசியையும் ஆரோக்கியத்தையும் குறித்துப் பேசுபவை. கிடைக்கிற அனைத்தையும் உண்டு களிக்கும் இயல்பில் இருந்து, உண்கிற அனைத்திலும் உறைந்திருக்கும் கார்போஹைடிரேட் - கொழுப்பு - ப்ரோட்டீன் சதவீதத்தை அறிந்து தெளிந்தது வரை உணவு சார்ந்த ஆசிரியரின் நீண்ட நெடிய தேடலை, கண்டடைந்த உண்மைகளை இந்நூல்களில் காணலாம்.   வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   சிறுவர் நூல்கள்   - அமெரிக்க சுதந்தரப் போர் - இஸ்லாம் - மொசார்ட் - இரண்டாம் உலகப் போர் - மகாவீரர் - புதையல் தீவு [நெடுங்கதை] - ஐஸ் க்ரீம் பூதம் [நெடுங்கதை] - சூ மந்திரக்காளி [நெடுங்கதை]   மேற்கண்டவற்றுள் கட்டுரை நூல்களைக் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கதைப் புத்தகங்கள் இலவச மின்நூல்களாகக் கிடைக்கின்றன.   நகைச்சுவை   - அன்சைஸ் - குற்றியலுலகம் [ட்விட்டர் குறிப்புகள் 1] - இங்க்கி பிங்க்கி பாங்க்கி - சந்துவெளி நாகரிகம் [ட்விட்டர் குறிப்புகள் 2] - நகையலங்காரம் - 143: குறுவரிக் களம் [ட்விட்டர் குறிப்புகளின் தொகுப்பு மின்நூல்] - பதினான்காம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள் [ஃபேஸ்புக் குறிப்புகளின் தொகுப்பு மின்நூல்] - 154 கிலோபைட்     மேற்கண்ட நூல்களின் அச்சுப் பதிப்பு எதுவும் தற்போது இல்லை. கிண்டில் மின் நுல்கள் உள்ளன.   ரசனை   பின்கதைச் சுருக்கம்           பதினேழு நாவல்கள்; அவற்றின் வழியே நாவலாசிரியர்களைக் குறித்த அறிமுகம் என்கிற அமைப்பில் கல்கி வார இதழில் வெளியான தொடர் இது. தமிழ் நாவல், பிற மொழி நாவல், உள்ளூர் எழுத்தாளர், உலக எழுத்தாளர் என்ற பேதங்கள் பாராமல், முற்றிலும் ஆசிரியரின் சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் இவை. வெளிவந்த காலம் தொடங்கி இன்றுவரை வாசகர்களால் விரும்பி வாசிக்கப்படும் புத்தகமாக இது உள்ளது.   விலை ரூ. 50 வெளியீடு: கிழக்கு பதிப்பகம்   சுய முன்னேற்றம்         - 24 கேரட் : சாதனைப் பெண்களின் வெற்றி சரித்திரம் - மூன்றெழுத்து: புகழோடு வாழுங்கள்! - எக்ஸலண்ட்: செய்யும் எதிலும் உன்னதம்   இம்மூன்று நூல்களும் கிழக்கு பதிப்பக வெளியீடுகள்.   சில தகவல்கள்           பா. ராகவனின் புத்தகங்களைத் தற்போது கிழக்கு பதிப்பகம் தொடர்ந்து வெளியிடுகிறது.  ஒரு சில புத்தகங்களைத் தவிர, பெரும்பாலானவற்றைக் கிழக்கில் பெறலாம்.   முகவரி:   Kizhakku Pathippagam 177/103, First Floor, Ambal's Building, Lloyds Road, Royapettah, Chennai - 600 014. Ph: +91-44-4200-9603   Buy online: https://www.nhm.in/shop/home.php    Kindle Editions: http://www.amazon.com/author/writerpara    Pa Raghavan's Home Page: http://www.writerpara.com  Para @ Facebook: www.facebook.com/raghavan.pa  Para @ Twitter: http://twitter.com/writerpara  Para @ wikipedia: https://goo.gl/cPAJQt    Author's Email: writerpara@gmail.com