[] 1. Cover 2. Table of contents பொன்னியின் செல்வனில் சொற்பொருள் மாற்றம் - ஆய்வு பொன்னியின் செல்வனில் சொற்பொருள் மாற்றம் - ஆய்வு   கு. திவ்யா   gdivya170997@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/ponniyin_selvanil_sorporul_matram_aaivu மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பொன்னியின் செல்வனில் சொற்பொருள் மாற்றம் - ஆய்வு சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்.) பட்டத்திற்காக அளிக்கப்பெற்ற ஆய்வேடு ஆய்வாளர் கு. திவ்யா, எம்.ஏ., பதிவு எண். MPS 19115 நெறியாளர் முனைவர் இரா. விமலாதேவி, எம்.ஏ.,எம்.ஃபில்.,பி.எச்.டி., தமிழ்த்துறை செல்லம்மாள் மகளிர் கல்லூரி பச்சையப்பன் அறக்கட்டளை கிண்டி, சென்னை - 600 032. ஆகஸ்ட் - 2022 கல்வி நிறுவனச் சான்றிதழ் முனைவர் வீ. மகாலட்சுமி நட்சத்திரம், எம்.காம்.,எம்.ஃபில்.,பி.எச்.டி., கல்லூரி முதல்வர் செல்லம்மாள் மகளிர் கல்லூரி பச்சையப்பன் அறக்கட்டளை, கிண்டி, சென்னை - 600 032 "பொன்னியின் செல்வனில் சொற்பொருள் மாற்றம் - ஆய்வு" என்னும் தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் (எம் ஃபில்) பட்டத்திற்காக அளிக்கப்படும் இவ்வாய்வேடு கு. திவ்யா, எம்.ஏ., அவர்களால் செல்லம்மாள் மகளிர் கல்லூரி தமிழ்த்துறையில் எம். ஃபில். பட்டத்திற்காக அவர் ஆய்வு செய்த காலத்தில் (2019 - 2020) உருவானது என்றும், இவ்வாய்விற்காக இவ்வாய்வாளருக்கு வேறு எந்தப் பட்டமும் இதுவரை அளிக்கப்படவில்லை என்றும் சான்றளிக்கப்படுகிறது. இடம்: சென்னை - 32, தேதி: (முனைவர் ப. விமலா) தமிழ்த்துறைத் தலைவர் (முனைவர் வீ. மகாலட்சுமி நட்சத்திரம்) முதல்வர் செல்லம்மாள் மகளிர் கல்லூரி பச்சையப்பன் அறக்கட்டளை கிண்டி, சென்னை - 600 032.  முனைவர் இரா. விமலாதேவி, எம்.ஏ.,எம்.ஃபில்.,பி.எச்.டி., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை - 600 032. ஆய்வு நெறியாளர் சான்றிதழ் “பொன்னியின் செல்வனில் சொற்பொருள் மாற்றம் – ஆய்வு” என்னும் தலைப்பில் கு.திவ்யா, எம்.ஏ., அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக செல்லம்மாள் மகளிர் கல்லூரி தமிழ்த்துறையில் ஆய்வு செய்த காலத்தில் (2019 - 2020) அவருடைய சொந்த முயற்சியால் என் மேற்பார்வையின் கீழ் உருவானது என்றும் இவ்வாய்வேட்டிற்காக இவருக்கு வேறு எந்தப் பட்டமும் அளிக்கப்படவில்லை என்றும் சான்றளிக்கிறேன். இடம்: சென்னை (முனைவர் இரா. விமலாதேவி) நாள்: நெறியாளர்   ஆய்வாளர் உறுதிமொழி கு. திவ்யா, எம்.ஏ., ஆய்வியல் நிறைஞர், தமிழ்த்துறை, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, கிண்டி, சென்னை - 600 032. “பொன்னியின் செல்வனில் சொற்பொருள் மாற்றம் - ஆய்வு” என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக செய்யப்பட்ட இவ்வாய்வேடு என் சொந்த முயற்சியால் உருவானதேயாகும். இதற்குமுன் வேறு எந்த ஆராய்ச்சி பட்டத்திற்கும் இவ்வாய்வேடு அளிக்கப்படவில்லை என்று உறுதியளிக்கிறேன். (கு. திவ்யா) ஆய்வாளர் இடம்: சென்னை நாள்:   நன்றியுரை “பொன்னியின் செல்வனில் சொற்பொருள் மாற்றம் - ஆய்வு” என்னும் தலைப்பில் ஆய்வு செய்வதற்கு எனக்கு அனுமதியளித்த சென்னைப் பல்கலைக்கழகத்திற்கும், செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் வீ. மகாலட்சுமி நட்சத்திரம் அவர்களுக்கும் என் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆய்வினை செம்மையாக, மேற்கொள்ள உதவிய தமிழ்த்துறை தலைவர் முனைவர் ப. விமலா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆய்வை மேற்கொள்ள எனக்கு வழிகாட்டியாக இருந்து ஆய்வுக்குத் தேவையான நெறிமுறைகளைத் தந்து ஆய்வு ஐயங்களை களைந்து இவ்வாய்வேடு செம்மையாக சமர்ப்பித்திட துணைபுரிந்த இவ்வாய்வின் நெறியாளர் முனைவர் இரா. விமலாதேவி அவர்களுக்கும் என்றும் நன்றியுடையேன். ஆய்வினை செம்மையாக மேற்கொள்ள உதவிய எம் துறை பிற பேராசிரியர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆய்வு மேற்கொள்ள உதவிய சக ஆய்வு மாணவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன். இவ்வாய்வு தலைப்பினை தேர்ந்தெடுக்க உதவிய திரு. டேவிட் ராஜாமணி அவர்களுக்கும், திரு. ரா. சீனிவாசன், கணியம் அறக்கட்டளை அவர்களுக்கும் என் நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன். வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கான கல்வியை எனக்களித்த என் பெற்றோர்களான திரு. குணசேகரன் மற்றும் திருமதி. மகாராணி அவர்களுக்கும், கரம் கோர்த்த நாள் முதல் என் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்து இவ்வாய்வினை முழுமையாக நிறைவு செய்ய உதவிய என் கணவர் திரு க. சுதாகர், அவர்களுக்கும் என் நன்றியைக் கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். இவ்வாய்வினை நிறைவு செய்ய பேருதவி புரிந்த என் தோழி திருமதி. பாத்திமா அவர்களுக்கும், என் தோழர் திரு. சோமசேகர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆய்வுக்காலங்களில் ஆய்வுக்குத் தேவையான நூல்களை வழங்கிய செல்லம்மாள் மகளிர் கல்லூரி நூலகம், தமிழ்த்துறை நூலகம், திருவள்ளுர் மைய நூலகம் ஆகிய நூலகங்களுக்கும், தமிழ் கூறும் நல்லுலகச் சான்றோர்களுக்கும், ஆய்வினை பிரதி செய்து கொடுத்த நகலத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.   சுருக்கக் குறியீட்டு விளக்கம் தொல். மூல. கரு. - தொல்காப்பியம் மூலமும் கருத்துரையும் தொல். சொல். - தொல்காப்பியம், சொல்லதிகாரம் நன். எழு. - நன்னூல், எழுத்ததிகாரம் நன். சொல். - நன்னூல், சொல்லதிகாரம் பக். - பக்கம் நூற். - நூற்பா   முன்னுரை சொல் என்பது ஒரு வலிமை மிகுந்த ஆயுதமாகும். அச்சொல் எல்லா இடங்களிலும் ஒரே வகையான சொல்லாகவோ, ஒரே வகையான பொருள் கொண்டோ உரையாடப்படுவதில்லை. தமிழ் மொழி பேசும் மக்களினுள்ளே வெவ்வேறு வகையான சொல் வழக்குகளை (வட்டார வழக்கு) கொண்ட மக்கள் காணப்படுகின்றனர். அவ்வாறு உரையாடல் மட்டுமின்றி இலக்கியங்களிலும் எவ்வகையான மாற்றங்களை சொல் அடைந்துள்ளது என்பதனை, பல்வேறு அறிஞர்களின் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் சொற்பொருளுக்கென்றே ஒரு தனித்துறையினை உருவாக்கும் அளவிற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அச்சொற்பொருள் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு ஒரே ஒரு இலக்கிய வகையினை தேர்ந்தெடுத்து, அவற்றை மற்ற இலக்கண இலக்கியங்களுடன் ஒப்பிட்டு மாற்றங்களை வகைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு “பொன்னியின் செல்வனில் சொற்பொருள் மாற்றம் - ஆய்வு” என்னும் இத்தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு நோக்கம் சொற்பொருள் மாற்றம் என்ற ஒற்றை நோக்கத்தினை மட்டுமே கொண்டு ஆய்வினில் பயணிக்காமல் சொற்பொருள் பற்றிய சிறிய விளக்கங்களையும், இலக்கணம் இலக்கியம் என்ற இருபெரும் பிரிவுகளுடன் பொன்னியின் செல்வன் நாவலின் சொற்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அகராதியின்படியும், தற்கால பேச்சுவழக்கு பயன்பாட்டு சொற்களின் படியும் ஆராய்வதே இவ்ஆய்வின் நோக்கமாகும். ஆய்வு எல்லை ஆய்வு என்பது கடலைப் போன்றது. அக்கடலின் சிறுதுளியே இவ்வாய்வு எனலாம். பொன்னியின் செல்வன் என்ற நாவல் வரலாற்று நாவல்களுள் சிறப்பு மிக்கது புகழ்பெற்றது. அச்சிறப்பு மிக்க பெரும் நாவலின் சொற்களுள் குறிப்பிட்ட 94 சொற்கள் மட்டுமே நம் ஆய்விற்கு எடுத்தாளப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலினை வாசிக்கும்போது அந்நாவலின் சில சொற்கள் பொருள் அறிய முடியாத வகையில் கதையுடன் பயணிக்கும் தன்மையைக் குறைக்கிறது. அவ்வாறு எளிதில் பொருள் அறிய முடியாத சொற்களையே இவ்வாய்விற்கு பயன்படுத்தியுள்ளோம். ஆய்வேட்டின் அமைப்பு பொன்னியின் செல்வனில் சொற்பொருள் மாற்றம் - ஆய்வு எனும் தலைப்பில் அமைந்த இவ்ஆய்வேடு முன்னுரை முடிவுரை நீங்கலாக மூன்று இயல்களாகப் பகுத்து ஆராயப்பெற்றது. முன்னுரை இயல் ஒன்று - நாவலின் தோற்றமும் பொன்னியின் செல்வன் வரலாறும் இயல் இரண்டு - இலக்கண விதிகளும் சொற்பொருள் மாற்றமும் இயல் மூன்று - இலக்கியச் சான்றுகளும் சொற்பொருள் மாற்றமும் முடிவுரை நாவலின் தோற்றமும் பொன்னியின் செல்வன் வரலாறும் என்னும் முதல் இயல் தொல்காப்பியமும் நாவலின் பிறப்பும், நாவலின் தோற்றம், கட்டமைப்பு, வகைகள், வரலாற்று நாவல்கள், தமிழில் வரலாற்று நாவல்கள், வரலாற்று நாவலாசிரியர்களின் உத்திகள், கல்கியின் எழுத்தாற்றல், கல்கியின் படைப்புகள், வரலாற்று நாவலில் கல்கியின் மொழிநடை, பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பு, கதைச்சுருக்கம், நாவலில் சொல்லே முதன்மை என்னும் குறுந்தலைப்புகளில் ஆய்வதாக அமைகின்றது. இலக்கண விதிகளும் சொற்பொருள் மாற்றமும் என்னும் இரண்டாம் இயல் இலக்கணமும் - மொழியியலும், சொற்பொருளியல் வரையறைகள், சொற்பொருள் மாற்றம், பொருள் உணர்த்தும் தன்மை, பொருள் அமைப்பு, தனிமெய் மொழிமுதல் ஆகாமை, நால்வகைச் சொற்கள், யகரம் மொழிக்கு முதலில் வருதல், பன்னிரு நிலங்கள் எனக் குறிக்கும் பெயர்கள், எட்டுவகை உணர்வுகள், மயங்கொலிச் சொற்கள், மயங்கு பொருள் சொற்கள், திரிசொல், ஆங்கில உச்சரிப்புடைய சொற்கள், அகராதிப் பொருளுடன் பொருந்தாச் சொற்கள், இலக்கணத்திற்கு சொல்லே முதன்மை என்னும் குறுந்தலைப்புகளில் ஆய்வதாக அமைகின்றது. இலக்கியச் சான்றுகளும் சொற்பொருள் மாற்றமும் என்னும் மூன்றாம் இயல் சொல்லும் மாறுபட்ட பொருளும், பொருளே சொல்லாதல், இருவேறு சொல்லும் ஒரே பொருளும், இலக்கியத்திற்கு சொல்லே முதன்மை என்னும் குறுந்தலைப்புகளில் ஆய்வதாக அமைகின்றது. முடிவுரையில் முதல் மூன்று இயல்களில் கண்ட கருத்துக்கள் அனைத்தும் சான்றுகளின் மூலம் நிறுவப்பெற்ற நிலை உணர்த்தப் பெறுகின்றன. துணைநூற்பட்டியல், பின்னிணைப்புகள் இணைக்கப் பெற்றுள்ளன. இவ்ஆய்வு நிலை ஆய்வாளர் நோக்கில் நுண்ணியதாக ஆயப்பெற்றது எனினும், சொற்பொருளின் விளக்கங்கள், இலக்கண இலக்கிய தொடர்புடன் மாற்றங்கள் மற்றும் ஒப்பீட்டின் அடிப்படையில் காணப்படுவது பின்வரும் ஆய்வாளர்களுக்கு ஆய்வு தலைப்பினைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது எனலாம். இயல் - 1 நாவலின் தோற்றமும் பொன்னியின் செல்வன் வரலாறும் மொழியானது காலத்துக்கு காலம் வளர்ச்சி பெறுவதும், அம்மொழியே இலக்கியத்தில் புதுப்புது வடிவம் பெறுவதும் சரித்திரத்தில் காணப்படுகின்ற உண்மையாகும். ஒரு மொழியின் பழமை, ஒரு மொழிப் பேசுபவர்களின் சமுதாய அமைப்பு, மற்ற மொழியினருடன் கொள்ளும் தொடர்பு, வேற்று மொழியினரால் ஏற்படும் மொழி பாதிப்பு - இத்தகைய காரணங்களால் இலக்கியம் புதுப்புது வடிவங்களைப் பெறுகிறது. இந்த மாற்றங்களால் ஏற்கனவே வளர்த்துள்ள மரபுகளிலும் மாற்றங்கள் உண்டாகலாம். தமிழ் இலக்கியங்களான மிகப்பழமையான எட்டுத்தொகை, பத்துப் பாட்டு போன்ற சங்க செய்யுள்களையும், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற காப்பிய வடிங்களையும், தேவாரம், திவ்வியப் பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்களின் பா வகைகளையும், அந்தாதி, கலம்பகம், தூது, பள்ளு, குறவஞ்சி போன்ற பிற்காலத்தில் எழுந்த பிரபந்த வகைகளையும் காணும்போது, காலத்திற்கு காலம் நமது தமிழ் மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அல்லது புதிய வடிவங்கள் பற்பல துறைகளின் வளர்ச்சிக்கு அடிகோலியது எனலாம். படையெடுப்புகளுக்கு பின்னர் ஏற்பட்ட சமணர் பௌத்தர் வருகையாலும், வடமொழி புராணங்கள் மற்றும் இதிகாசங்களின் தோற்றத்தினாலும், தத்துவக் கருத்துகள், இசை போன்ற புதிய இலக்கியங்களின் உந்துதலாலும், தமிழ் இலக்கியம் புதிய புதிய துறைகளையும் அத்துறைகளுக்கு ஏற்ற வடிவத்தையும் உருவாக்கி வளர்த்துக்கொண்டது. இத்தகைய வடிவங்களெல்லாம் கி.பி. 19-ம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை செய்யுள் என்னும் இலக்கிய வகையை உருவாக்கும் முயற்சியிலேயே கையாளப்பட்டன. அதன் பின்னர் ஐரோப்பியர் வருகையால் தமிழகத்திற்கு அச்சுப்பொறி கிடைக்கவும், அந்தச் சாதனம் வசன வடிவில் பல இலக்கிய உருவாக்கத்திற்கு வாய்ப்பளித்தது. அவ்வழியில் தமிழ் இலக்கியத்துக்குப் புதிதாக வந்து சேர்ந்தது நாவல் என்னும் துறை ஆகும். தொல்காப்பியமும் நாவலின் பிறப்பும் உரைநடை போன்ற பல்வேறு இலக்கிய வகைகள் தொல்காப்பியர் காலத்திலேயே இலக்கணங்களில் இடம்பெற்றுள்ளது. அடி எல்லை என்ற வரையறையில்லாத செய்யுட்களை தொல்காப்பியர் தம் நூற்பாவில், “அவை தாம் நூலினான உரையினான, நெடியோடு புணர்ந்த பிசியினான, ஏது நுதலிய முதுமொழியான, மறைமொழி கிளந்த மந்திரத்தான, கூற்றிடை வைத்த குறிப்பினான” (1) என்று கூறுகிறார். அடிவரையறை இல்லாத இலக்கிய வகை ஆறு: நூல், உரை, பிசி (விடுகதை), முதுமொழி (பழமொழி), மந்திரம் (பயனை விளைவிக்கும் சொல்), குறிப்பு மொழி (பேச்சினிடையே வைக்கப்படும் உட்குறிப்பு) என்பன என்று தொல்காப்பிய உரையாசிரியர் விளக்குகிறார். இவ்வகைகளுள் ஒன்றாக வரும் உரையை நான்கு வகையாக்கி, “பாட்டிடை வைத்த குறிப்பினானும், பாவின் றெழுந்த கிளவியானும், பொருள் மரபு இல்லாப் பொய்ம்மொழியானும், பொருளொடு புணர்ந்த நகைமொழியானும், உரைவகை நடையே நான்கெனமொழிப” (2) என்று தொல்காப்பியர் இலக்கணம் வகுத்து கூறியுள்ளார். உரை என்பது ஒரு இலக்கிய வகை எனவும், அவ்வுரையானது ஏழு யாப்பினுள் ஒன்று எனவும் உரையாசியாசிரியர் விளக்குகிறார். பாட்டினிடையே வைக்கப்படும் உரைக்குறிப்புகள், பாக்கள் இன்றி தோன்றும் சொல்வகை, ஒரு பொருள் கருதாது குறிப்பிட்ட பயனெதுவும் கருதாமல் பொழுதுபோக்கிற்காக கூறப்படும் கட்டுக்கதைகள், நகைமொழியோடு நீதி அல்லது வாழ்வியல் நெறியை போதிக்கும் உரைகள் என நான்கு வகைகளை இலக்கண உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவையே நாவல் என்ற இலக்கிய வகைக்கு அடித்தளமிட்டது எனலாம். நாவல் - தோற்றம் இலக்கிய வகைகள் காலந்தோறும் மாறும் பண்பு கொண்டவை. சங்ககாலம் முதல் இன்று வரை பல்வேறு இலக்கிய வளர்ச்சி நிலைகளை தமிழ் இலக்கியத்தின்வழி காண்கிறோம். 18, 19-ம் நூற்றாண்டுகளில் மக்களிடையே ஏற்பட்ட அறிவியல் சிந்தனைகளே நாவல் என்ற இலக்கிய மலர் மணம் வீசக் காரணமாயிற்று. நாவலானது மனித வாழ்க்கையைக் கலைப்படிவமாகவும், சமூக அவலங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் விளங்குகின்றன. சமுதாயச் சிக்கல்களையும் போராட்டங்களையும் வெற்றி தோல்விகளையும் மனித நேயத்துடன் சித்தரிப்பது நாவலின் புதிய உத்திகளில் ஒன்றாகும். சமுதாய வளர்ச்சிப் போக்கை கூர்ந்து நோக்கும் படைப்பாளிகளே சிறந்த நாவல்களைப் படைக்கின்றனர். நாவல் உலகப்பொதுவான இலக்கிய வடிவம் என்ற வகையில் ஆங்கில மொழியின் வழியாக தமிழகத்துள் வந்தது. நாவலின் உருவ அமைப்பானது உரைநடையில் அமைந்ததாகும். தொடக்கத்தில் நாவல்கள் பத்திரிக்கையில் தொடராக வெளியிடப்பட்;டது. இவை உலக நாவல் இலக்கிய வரலாற்றில் காணப்படும் ஒரு பண்பாடாகும். “சப்பானிய மொழியில் ரோசாக்கிசீமாட்டி படைத்த கெஞ்சிக்கதையே உலகின் முதல் நாவல் என்பர்.” (3) கி. பி. 16-ஆம் நூற்றாண்டில் இருந்து நாவல் என்னும் சொல் ஆங்கில மொழியில் வழக்காட்சி பெற்றது. ‘புதுமை’ என்பதாலேயே நாவலை தமிழ்மொழியில் ‘புதினம்’ என்றனர். ‘நவீனம்’ என்றும் குறிப்பிடுவது உண்டு. ‘நாவல்’ என்ற சொல்லுக்கு உரைநடையில் அமைந்த நெடியகதை என்றும், மனித உணர்ச்சிகள் எண்ணங்கள், அவற்றின் செயல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கற்பனைக்கதை என்றும் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். “1841-ஆம் ஆண்டு ரிச்சர்ட்சன் எழுதிய பாமெல்லா என்பதே ஆங்கிலத்தில் முதல் புதினம். எனவே ரிச்சர்ட்சனே ஆங்கில நாவலின் தந்தை என அழைக்கப்படுகிறார் என்று க.நா. சுப்ரமணியம் கூறுகிறார்.”(4) பின்னர் ஆங்கில மொழி இலக்கியங்களுடன் டிக்கன்ஸ் (Dickens), ஸ்காட் (Scott), கோல்ட்ஸ்மித் (Goldsmith), ஜார்ஜ் எலியட் (George Eliot) முதலிய பல ஆங்கில நாவல்கள் ஆங்கிலப் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும பல பாடபுத்தகத்தில் இடம்பெற்றிருந்தன. இதன் காரணமாக ஆங்கில கல்வி பெற்றவர்கள் கட்டாயமாக ஆங்கில நாவல்களை கற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தொடர்பின் காரணமாகவே நாவல் என்னும் துறை தமிழினுள் நுழையக் காரணமாக அமைந்தது எனலாம். ஆங்கிலம் மொழி பயின்ற தமிழ் பேரறிஞர்கள் நாவலின் சிறப்பினை உணர்ந்து தமிழில் இத்துறையினை உருவாக்க முனைந்தனர். ஆரம்பத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் இத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களாக விளங்கியது பேரறிஞர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. “இந்நாவல்துறையானது தமிழகத்தினுள் நுழைவதற்கு முன்பே வங்கமொழியில் முதன் முதலில் பங்கிம் சந்திரர் என்பவரால் துர்க்கோ நந்தினி என்ற பெயரில் நாவலாக எழுதப்பட்டது என்றும், 1865;-இல் வெளிவந்தது என்றும் சொல்லப்படுகிறது.”(5( இதன்பிறகு நாவல் என்னும் இலக்கிய வகையானது தமிழகத்தினுள் நுழைய ஏறத்தாழ 10 ஆண்டு கால இடைவெளி ஏற்பட்டது. “தமிழில் பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களால் 1879-ஆம் ஆண்டு எழுதி பிரசுரிக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.”(6( இந்நாவலே தமிழில் நாவல் துறை உருவாக்கத்திற்கு ஒரு தூண்டுகோல் எனலாம். இதன் பின்னரே பல்வேறு நாவல் வகைகளும் நாவலாசிரியர்களும் தோற்றம் பெற்றனர். பொதுவாக நாவல்கள் வரலாற்று பின்னணியுடைய கற்பனை கதைகளாகவும், சமூகம் சார்ந்த அவலங்களை பின்னணியாக கொண்ட கற்பனை கதைகளாகவும் உருவாக்கப்படுகின்றன. நாவலின் கட்டமைப்பு நெடுக்கதை என்னும் சிறப்பு பெயருடைய நாவலுக்கு இலக்கியத்தினுள் என்றும் தனியிடம் உள்ளது. இத்தகைய நாவலானது நீண்ட கதையினை வாசிக்கும் ஆர்வத்தினை வாசகர்களுக்குத் தூண்டவல்லது. இந்நாவல் பல்வேறு கட்டமைப்புகளை உள்ளடக்கியது. 1. கதைக்களம்: நாவல் என்னும் அமைப்பானது தனக்கென ஒரு நீண்ட கதைக்களத்தைக் கொண்டது. ஒரு நெடியக் கதையானது, கதை மாந்தர்களையும், தனிமனித சிக்கல்களையும், சமுதாய வாழ்க்கையின் அங்கங்களையும், அவலங்களையும் சித்தரித்துக் காட்டும் நிகழ்விடமாக திகழ்கிறது. இந்நிகழ்விடமானது ஒரு நாவலுக்கு இன்றியமையாத கதையின் களமாக அமைந்துள்ளது. 2. கதைக்கரு: ஒரு படைப்பிற்கு அடித்தளமாக அமைவது மையக்கரு (Theme) ஆகும். அம்மையக்கரு இயற்கையாக அமைவதே நலமாகும். இவ்வமைப்பு நாவல் இலக்கியத்திற்கு பொருந்தும். நாவலின் மையக்கருவானது எத்தகைய பொருளைக் கொண்டும் அமையலாம். இந்த வகைக் மையப்பொருளைக் கொண்டு தான் நாவலானது அமையும் என்று எந்த விதிவிலக்கும் இல்லை. ஒரு கதைக்கருவானது நல்ல கதைப்பின்னல் நிகழ்ச்சிகளையும், பாத்திரப்படைப்புகளையும், அவற்றின் உணர்ச்சிகளையும், உரையாடல், உத்திகள், காட்சிகள், வருணனைகள், எளிய நடை போன்றவற்றை உள்ளடக்கியதாகும். இவ்வாறு புனையப்படும் இலக்கியத்தினுள் தலையாயதாக விளங்குவது நாவல் இலக்கியமாகும். 3. கருப்பொருள்: தனிமனித வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள், வரலாற்று உண்மைகள், சமுதாய பிரச்சினைகள், அன்றாட நிகழ்வுகள், அரசியல் போக்குகள், உளவியல் சிக்கல்கள், தனிமனித வாழ்வியல் கோட்பாடுகள், பெண்ணடிமைத்தனம், தனிமனிதர் வழிபாடு, விளிம்புநிலை வாழ்க்கை, உலகமயமாக்கல் விளைவுகள், சுற்றுச்சூழல் முதலானவை ஒரு நாவலின் கதைக்கு கருப்பொருளாக அமையும். இக்கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டே ஒரு நாவல் எந்த வகையை சார்ந்தது என்பதையும், அவ்வகையைக் கொண்டு மொழிநடையையும் நாவலாசிரியர் உறுதிப்படுத்துகிறார். 4. கதையும், கதைப்பின்னலும் (Plot): கதை என்பது ஒவ்வொரு காலத்தில் நிகழும் நிகழ்ச்சியின் வரிசையாகும். கதைப்பின்னல் என்பது அக்கால நிகழ்ச்சிகளில் காரண-காரியத்திற்கு ஏற்ப விரித்து உரைப்பது ஆகும். கதைக்கு வடிவ அழகைத் தருவது கதைப்பின்னலே ஆகும். கதையில் வரும் நிகழ்ச்சிகள் இயல்பாக அமைவது நல்லது. ஆனால் கதைக்கேற்றவாறு நிகழ்ச்சிகளை விவரித்து கதையினை முழுமையடையச் செய்து வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது நாவலின் போக்காகும். நாவலின் கதைப்பின்னல் இருவகைப்படும். அவையாவன: நெகழ்ச்சிக் கதைப்பின்னல் (Flexible Plot): நெகிழ்ச்சிக் கதைப்பின்னல் என்பது கதையில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாகவோ அல்லது பொருத்தமற்றதாகவோ அமைந்திருக்கும். முதன்மைக்கதை மாந்தர்களாகத் திகழும் தலைவனோ அல்லது தலைவியோ அனைத்து நிகழ்ச்சிகளிலும் மையமாக இருந்து அக்கதையின் மற்றக்கூறுகளையும் ஒருங்கிணைப்பர். இந்த வகை நாவல்களில் பாத்திரப்படைப்பு முக்கிய அங்கமாகத் திகழும். சான்றாக, மு. வரதராசனின் கரித்துண்டு, சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள் போன்ற நாவல்களைக் கொண்டு நெகிழ்ச்சிக் கதைப்பின்னலின் வகையினை எடுத்துரைக்கலாம். செறிவுக் கதைப்பின்னல் (Organic Plot): செறிவுக் கதைப்பின்னல் என்பது கதையில் நிகழ்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று காரண காரியத் தொடர்பு கொண்டதாக அமையும். மேலும் ஒரு நிகழ்ச்சியின் முடிவானது அடுத்த நிகழ்ச்சிக்குத் தொடக்கமாகவோ, காரணமாகவோ அமையப்பெறும். இவ்வாறு அமைந்த நாவல்கள் விறுவிறுப்பாகவும் சுவையானதாகவும் காணப்படும். எனினும் செயற்கைத் தன்மையுடையதாகவும், நம்பகத் தன்மையற்றதாகவும் அமைவதைத் தவிர்க்க இயலாது. வரலாற்று நாவல்களும், துப்பறியும் நாவல்களும் இதற்குச் சான்றாகும். இத்தகுக் கதைப்பின்னல்களுடைய நாவல்களில் ஈர்ப்பு, எதிர்பார்க்கும் நிலை (Suspense), குறிப்பு முரண் (Irony) முதலியன அமைந்து கதையினை முன்னோக்கி நகர்த்தும். ஒரு நாவல் வெற்றியடைய கட்டமைப்பும், மொழிநடையுமே அவசியமானது எனலாம். அத்தகைய மொழிநடையானது நாவலில் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது என்பதை விரிவாகக் காணலாம். நாவலின் வகைகள் நாவலானது அதன் வகைகள் அடிப்படையிலே மொழிநடையை கொண்டு விளங்குகிறது. ஏனெனில் நாவலில் கற்பனையும், சில உண்மைக் கதாபாத்திரங்களையும் கொண்டு கதைக்களமானது இயற்றப்படுவதால் மாறுபட்ட மொழிநடையைக் கொண்டு விளங்குகிறது. நாவலின் ஒவ்வொரு வகையும், ஒவ்வொரு விதமான மொழிநடையினைக் கொண்டுள்ளது என்பது அந்நாவலின் வகையினை விளக்க முற்படும்போது அறியலாம். உளவியல் நாவல்கள்: இருபாலினத்தவரின் உளவியல் சார்ந்த சிக்கல்கள் குறித்த கதையமைப்பினை கொண்ட நாவல்கள் இவையாகும். தி. ஜானகிராமனின் மோக முள், அம்மா வந்தாள், கோவி. மணிசேகரனின் தென்னங்கீற்று, ஜெயகாந்தனின் ரிஷிமூலம் ஆகியவை உளவியல் நாவல் வகையினை சார்ந்தவையாகும். தழுவல் நாவல்கள்: அயல்நாட்டு நாவல்களை தமிழ் மரபு மற்றும் சூழலுக்கேற்ப தழுவி எழுதுவது தழுவல் நாவலாகும். மறைமலையடிகளின் குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி, எஸ். எஸ். மாரிசாமியின் அநாதை ஆனந்தன் போன்றவை தழுவல் நாவல் வகையாகும். அரசியல் நாவல்கள்: நிகழ்கால அரசியல் நடவடிக்கைகளையும் சூழல்களையும் மையமாக வைத்து விருப்பு - வெறுப்பின்றி எழுதப்படுபவை அரசியல் நாவல்கள் ஆகும். நாரண. துரைக்கண்ணனின் சீமான் சுயநலம், நா. பார்த்தசாரதியின் நெஞ்சக்கனல், வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர், பெருமாள் முருகனின் மாதொருபாகன் ஆகியவை அரசியல் நாவல்கள் வகையாகும். மொழிபெயர்ப்பு நாவல்கள்: நாவலின் கதை, சூழல் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இன்றி உள்ளதை உள்ளவாறு மொழிமாற்றம் செய்யப்படுபவை மொழிபெயர்ப்பு நாவல்கள் ஆகும். மாக்ஸிம் கார்க்கியின் தாய், லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும், விக்டம் ஹியூகோவின் ஏழைபடும் பாடு, தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன், தோட்டியின் மகன், காண்டேகர் போன்ற பல புதினங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இச்சிறப்பான பணியில் கா. ஸ்ரீ. ஸ்ரீ., த. நா. சேனாதிபதி, சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழ்நாடன், சுந்தர ராமசாமி முதலானோர் ஈடுபட்டனர். வட்டார நாவல்கள்: வட்டார நாவல்கள் என்பது ஒரு குறிப்பிட்டப் பகுதியைக் களமாகக் கொண்டு, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டி அவர்களின் மொழியைக் கொண்டே எழுதப்படுவதாகும். வட்டார நாவல்கள் எழுதும் வழக்கை வேங்கடரமணி தோற்றுவித்தார். சில வட்டாரப் புதினங்கள் கீழே தரப்பட்டுள்ளன. அவையாவன: சங்கர்ராமின் மண்ணாசை, ஆர். சண்முக சுந்தரத்தின் நாகம்மாள், அறுவடை, பூவை. எஸ். ஆறுமுகம் அவர்களின் தங்கச் சம்பா, சூரியகாந்தனின் மானாவாரி மனிதர்கள், பெருமாள் முருகனின் ஏறுவெயில், சோலை சுந்தரபெருமாள் அவர்களின் செந்நெல், சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை ஆகியன ஆகும். நனவோடை நாவல்கள்: நனவோடை என்பது ஓர் உத்தியாகும். எண்ணவோட்டத்தின் அடிப்படையில் கதைக்கூறுவது இதன் பண்பாகும். க. நா. சு. வின் அசுர கணம், சி. சு. செல்லப்பாவின் ஜீவனாம்சம் முதலியன நனவோடை நாவல்கள் ஆகும். சமுதாய நாவல்கள்: சமுதாய நாவல்கள் என்பது மனித சமுதாயத்தின் வாழ்வியல் சூழலையும் சமூகச் சிக்கல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுபவையாகும். அவற்றுள் சில, 1. கே. எஸ். வெங்கடரமணி அவர்களால் எழுதப்பட்ட முருகன் ஓர் உழவன் (1928), கந்தன் ஒரு தேசபக்தன் (1938) ஆகிய புதினங்கள் கிராம மக்களின் வாழ்க்கை முறையையும், தேசப்பற்றினையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும். 2. ர. சு. நல்லபெருமாள் அவர்கள் எழுதிய கல்லுக்குள் ஈரம் என்னும் நாவல் நாட்டின் விடுதலையில் பெண்களின் ஈடுபாடு குறித்து விவரித்துள்ளது. வரலாற்று நாவல்கள் பண்டைய தமிழர்களின் வரலாற்றினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டனவே வரலாற்று நாவல்கள் ஆகும். ஆனால் வரலாற்று நாவல்கள் முழுமையான வரலாற்றினை கொண்டே எழுதப்படுபவை என்பது முற்றிலும் தவறான சிந்தனை ஆகும். வரலாற்று நாவல்கள் வரலாற்றினையும், அதே சமயம் நாவல்களுக்கே உரிய கதைப்பாங்கையும் கொண்டே இயற்றப்படுகிறது என்பதை, “வரலாற்று நாவல் என்பது ஒரு கலவை இலக்கியம் (Literary Hybrid) என்றும், அது சரியான வரலாறோ அல்லது சரியான கதையிலக்கியமோ ஆகாது என்றும் கதைக்கூறு மிகுந்தால் அது வரலாற்றுத் தன்மையை இழக்கிறது என்றும், வரலாற்று கூறுகள் மிகுந்தால் கதைத்தன்மையை இழந்துவிடுகிறது”(7) என்று மேனாட்டு அறிஞர் விளக்குகிறார். தமிழில் வரலாற்று நாவல்கள் தமிழ் மொழியில் சமூக நாவல்கள் வெளிவந்துள்ள அளவிற்கு வரலாற்று நாவல்கள் வெளிவரவில்லை. தமிழில் எழுந்த முதல் வரலாற்று நாவல் 1895 இல் தி. ந. சரவணமுத்து பிள்ளை எழுதிய மோகனாங்கி ஆகும். அடுத்து வந்த நாவல்கள் மங்கம்மாள் (1902) - எஸ். கூடலிங்கம் பிள்ளை வீரசிங்கன் அல்லது சன்மார்க்க விஜயம் (1905) - சி.வை. சின்னப்பப்பிள்ளை சத்தியவல்லி (1909) - ஆர்.பி. குழந்தைசாமி மேகலாப்பிகை அல்லது காதலும் கடமையும் - பி. சாமிநாத முதலியார் விஜயசீலம் (1916) - சி.வை. சின்னப்பப்பிள்ளை 1925 ஆம் ஆண்டு வடலூர் இராமலிங்க சுவாமிகள் எழுதிய மனுமுறை கண்ட வாசகம், சிறந்த வரலாற்று நாவலாக அமைந்துள்ளது(8( என்பதை நாவல் வகை என்ற நூலின் வழி அறியலாம். இவற்றைத் தொடர்ந்து தமிழில் வரலாற்று நாவல்கள் வெளிவரத் தொடங்கின. “தமிழில் இதுவரை ஏறத்தாழ 250 நாவல்கள், வரலாற்று நாவல்கள் என்ற பெயரில் வெளிவந்திருக்கின்றன.”(9( ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்புவரை வரலாற்று நாவலின் வளர்ச்சியே, தமிழ் இலக்கிய வளர்ச்சியாக இருந்தது என்றும், தற்காலத் தமிழ் இலக்கியம், வரலாற்று நாவல்களால்தான் வளம் பெற்றிருக்கிறது என்கிறார் இரா. தண்டாயுதம்.(10( இவ்வரலாற்று நாவல்களுள் சிறந்த படைப்பாளியாக தன் பெயரை நிலைக்கச் செய்த ஆசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர் கல்கி ஆவார். தமிழில் இதுவரை ஏறத்தாழ 80 நாவலாசிரியர்கள் வரலாற்று நாவல்களை எழுதியுள்ளனர். இவர்களுள் கல்கிக்குப் பின்னால், சிறந்த வரலாற்று நாவல்களை எழுதியிருப்பவர்கள் அகிலன், சாண்டில்யன், நா. பார்த்தசாரதி, கோவி.மணிசேகரன், ஜெகசிற்பியன், ர.சு. நல்லபெருமாள், சோமு ஆகிய எழுவராவர். 1943 ஆம் ஆண்டு கல்கி எழுதிய பார்த்திபன் கனவுக்குப் பிறகு வேகமாக வளர்ந்து வந்த வரலாற்று நாவல்துறை கடந்த பத்தாண்டு காலமாகத் தேக்கமடைந்து விட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள். வரலாற்று நாவலாசிரியர்களின் உத்திகள் ஒரு சிறந்த வரலாற்று நாவலின் வெற்றிக்கு மூன்று அடிப்படைகள் தேவைப்படுகின்றன. 1. வரலாற்று நாவலாசிரியர் தான் எழுதப்புகும் வரலாற்றுக் காலத்தை உணர்வு பூர்வமாக அனுபவிக்க வேண்டும். 2. எண்ணற்ற கதைமாந்தர்களை உலவ விடவேண்டும். சாதாரணமக்கள், உயர்ந்தமக்கள், வினோதமானவர்கள், நாகரிகமற்றவர்கள் எனப் பல்வேறு சமுதாயப் பகுதிகளையும் பிரதிபலிப்பவர்களாக அவர்கள் அமைய வேண்டும். 3. நல்ல கதையமைப்பு இருத்தல் வேண்டும்.(11) இவ்வாறு அமையும் நாவல்கள் ஒரு சிறந்த இலக்கியமாக திகழ்கிறது. ஒரு வரலாற்று நாவலும், நாவலாசிரியரும் எவ்வாறும் அமைய வேண்டும் என்பதை, “வரலாற்று நாவலாசிரியர் சிறந்த வரலாற்று மாணவராகத் திகழ வேண்டும். நாவலில் இடம்பெறும் வரலாற்றுப் பின்னணிக்கு நிலைக்களமான நூல்களை நன்கு படித்திருக்கவேண்டும், கிடைக்கின்ற ஆதாரங்களையும், சிதறிக் கிடக்கும் சான்றுகளையும் ஒன்று திரட்டி, அதன் அடிப்படையில் நிகழ்ச்சிகளைக் கோர்வையாகத் திரட்டிக் கொண்டு, கற்பனை வளத்தோடு கூடிய ஒரு சிறந்த கலைப்படைப்பைத் தருவதுதான் வரலாற்று நாவலாசிரியரின் வேலையாகும்”(12( என்று ஹசன் அவர்கள் குறிப்பிடுகிறார். வரலாற்றைக் கற்றுத் தேர்ந்த அறிவும் நாவலை எழுதும் கற்பனை ஆற்றலும் ஒருங்கே பொருந்தியவர்கள்தாம் வரலாற்று நாவல்களை எழுதும் தகுதியுடையோராகின்றனர். சிறந்த வரலாற்று நாவல்களைப் படைப்பதற்கு நாவலாசிரியர்கள் அடிப்படை ஆதாரங்களைத் திரட்டுவது, களங்களை நேரிலே சென்று காண்பது, ஆராய்ச்சி வல்லுநர்களிடம் கலந்துரையாடுவது, தமது நாவல்களிலே வரைபடம், அடிக்குறிப்பு, துணைநின்ற நூல்களின் பட்டியல் தருவது முதலான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். கல்கி வரலாற்று நாவல் ஆசிரியர்களுக்கு இடையில் வரலாற்று நாவலின் தந்தை என்று போற்றப்படும் அளவிற்கு சிறந்த நாவல் ஆசிரியராக கல்கி உருபெற்றது பொன்னியின் செல்வன் நாவலை புனைந்த பின்னரே ஆகும். “புதிய கருத்துக்களை வெளியிட்டு வாசகர்கள் மனத்தைப் புதிய திசையில் திருப்பி, புதிய யுகத்தைச் உருவாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துடன்தான் கல்கி என்ற பெயரைப் பூண்டேனே தவிர, இதற்கு வேறு எந்த விதமான காரணமும் கிடையாது என்று கல்கியே குறிப்பிடுகின்றார்.”(13) கல்கியின் எழுத்தாற்றல் கல்கியின் எழுத்தாற்றலை விளக்குவது அவசியமானது. ஏனெனில் வரலாற்று நாவல்கள் புனைவதில் கல்கி சிறப்புற்று விளங்குவதற்கு அவரது எழுத்தாற்றலே முக்கிய காரணமாக அமைகிறது. கல்கியின் எழுத்தானது உணர்வுப் பூர்வமாகவும், நூலில் இடம்பெறும் சூழல்கள் நம் அகக்கண் முன்னே தோன்றும் விதத்தில் தம் சொற்களை இயல்பாக பயன்படுத்தியிருப்பது அவரது படைப்புகளின் வழி அறியமுடிகிறது. கல்கி நெடுவரிசை என்னும் வழக்கமான எழுத்துமுறையைக் கொண்டு எழுதினார் என்றும், பேச்சு வடிவத்தை எழுத்து வடிவமாக அணுகும் ஒரு பாணியைப் பின்பற்றி வந்தார் என்றும் அவரது வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம். அக்டோபர் மாதம் 1923 - ஆம் ஆண்டு நவசக்தி பத்திரிக்கையில் துணையாசிரியராக சேர்ந்த காலத்தில் அறிஞரும் கட்டுரையாளருமான திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் (திரு.வி.க.) என்பவரிடமிருந்து பத்திரிக்கையில் எழுதும் எழுத்துமுறையைக் கற்றுக்கொண்டார் என்று அவரது வாழ்க்கை வரலாறு விளக்குகிறது. கல்கியின் கட்டுரைகளானது குடிப்பழக்கம், தீண்டாமை, மூடநம்பிக்கை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை போன்றவற்றை எடுத்துரைக்கிறது எனலாம். கல்கியின் படைப்புகள் சிறுகதை, நாவல், கட்டுரை, திறனாய்வு, பயண நூல்கள், வரலாறுகள் என பலதுறைகளிலும் மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை கல்கி புனைந்துள்ளார். அவற்றுள் வரலாற்று நாவல்களின் வகைகளை மட்டும் இங்கு காணலாம். வரலாற்று நாவல்கள் பார்த்திபன் கனவு (1943), சிவகாமியின் சபதம் (1944), பொன்னியின் செல்வன் (1950). வரலாற்று நாவலில் கல்கியின் மொழிநடை தமிழ் நாவல் மொழிநடை வரலாற்றில் போற்றத்தக்க மறுமலர்ச்சி தந்தவர் கல்கி. இவரது நடையில் ஒரு விதக் கவர்ச்சி இருந்தது. கல்கியின் நடையில் வருணனை, கற்பனை, வரலாற்று நாவலாக மாற்றும் உளப்பாங்குகள், எளிமை முதலியவை கலந்த ஈர்ப்பு நடை அமைந்திருந்தது. வருணனைச் சிறப்பு, பாத்திரப்படைப்பு, உரையாடல் அமைக்கும் திறன், தம் வாசகர்களை கவரும் வகையில் அவர்களோடு உரையாடுவது போன்ற கதையமைப்பு முதலியன இவரது நடைக்கு சிறப்பினைத் தந்தது எனலாம். குறிப்பாக கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் வடமொழி கலந்த சொற்களும், உணர்ச்சி கலந்த சொல்லமைப்புகளும், இலக்கியம் சார்ந்த சொற்களும் பயன்படுத்தப்பட்டு வாசகர் மனதில் நீங்க இடம்பிடிக்க காரணமாக அமைந்தது எனலாம். பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பு 1950 முதல் 1954 ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் பொன்னியின் செல்வன் நாவல்; தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இந்நாவல் வெளியிடப்பட்ட காலத்தில் மக்கள் ஆதரவு கிடைத்த காரணத்தால் தொடர்ந்து பல்வேறுக் காலகட்டங்களில் பொன்னியின் செல்வன் மீண்டும் வார இதழில் வெளியிடப்பட்டது. மேலும் தனி நூலாகவும் வெளியிடப்பட்டு பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இந்நாவலின் கதைக்களமானது கி. பி. 982 ஆம் ஆண்டுக்கு முந்திய சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. இந்நாவல் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 292 அத்தியாயங்களையும், 2300-க்கும் மேற்பட்ட பக்கங்களையும் இந்நாவல் கொண்டுள்ளது. இந்நாவல் வெளியிடப்பட்ட காலத்தில் 71,366 பிரதிகள் விற்பனையானது அன்றைய காலத்தில் பத்திரிக்கை உலகில் இந்தியாவிலேயே இது பெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. இன்றும் கூட இந்நாவல் அனைத்துத் தலைமுறை மக்களிடையேயும் விமர்சன ரீதியாகப் பாராட்டுக்களைப் பெறுகிறது. தமிழ் வரலாற்று நாவல் வகைகளுள் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல்களுக்கு ஒரு முன்னோடியாக அமைந்துள்ளது. இக்கதையின் முடிவுரையில் கல்கி குறிப்பிட்டிருப்பது போல், விக்ரமன் சாண்டில்யன் போன்றவர்கள் தமிழ் வரலாற்றைப் நாவல்களாகக் கொடுக்க முயன்றுள்ளனர். பொன்னியின் செல்வனுக்கு இணையாக இன்று வரை ஒரு நாவலும் சிறப்பாக அமையவில்லை என்ற பரவலான கருத்து நிலவுகிறது. கதைச்சுருக்கம் சோழப் பேரரசர் மரணப்படுக்கையில் இருக்க அவருடன் மூத்த மகள் குந்தவையும் இருக்கிறார். மூத்தமகன் ஆதித்த கரிகாலன் காஞ்சியில் இருக்க இளைய மகன் அருள்மொழி வர்மன் இலங்கையில் போரில் ஈடுபட்டு இருக்கிறார். தந்தை சுந்தர சோழர் தஞ்சை அரண்மனையில் உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்து வடக்கே காஞ்சியில் பகைவர் படை எடுக்காமல் காவல் காத்து வரும் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் தான் கட்டிய பொன் மாளிகையில் தம் பெற்றோரை அழைத்து தங்க சொல்வதற்கு தம் நண்பன் வந்தியத்தேவன் மூலம் தந்தைக்கு தூது அனுப்புகிறான். வழியில் சோழப் பாதுகாவலர் பெரிய பழுவேட்டரையர் தம் சிற்றரரசர் நண்பர்களுடன் சேர்ந்து சோழ ராஜ்யத்திற்கு தன் மருமகன் மதுராந்தகனுக்கு பட்டம் கட்டுவது பற்றி ரகசிய உடன்படிக்கை செய்வதை தெரிந்து கொள்கிறான். மற்றும் தான் கொண்டுவந்த ஓலையை தஞ்சை சென்று சோழச் சக்கரவர்த்தியிடம் ரகசியமாக தெரிவிக்கும் பொருட்டு காவலர்களை தந்திரமாக கையாண்டு மன்னரிடம் கொடுக்கிறான். அதனால் கோட்டை தளபதியின் கோவத்திற்கு ஆளாகிறான். மேலும் சக்கரவர்த்தி திருமகள் குந்தவையை சந்தித்து குறுமன்னர்கள் போட்ட ரகசிய பேச்சுவார்த்தை பற்றி கூறுகிறான். ஆபத்தை உணர்ந்த குந்தவை இலங்கையில் இருக்கும் தம்பியான அருள்மொழி வர்மனை அழைத்து வரும்படி வந்தியத்தேவனுக்கு அவன் மேல் கொண்ட நன்மதிப்பால் ஓலை கொடுத்து அனுப்புகிறாள். வந்தியத்தேவனும் பல இடையூறுகளைக் கடந்து இலங்கையில் அருள்மொழி வர்மனை (இராஜராஜன்) கண்டு அவரிடம் குந்தவை கொடுத்தனுப்பிய ஓலையை கொடுத்து அவரை தஞ்சைக்கு அழைத்துவர முயற்சிக்கிறார். வரும் வழியிலும் பல இன்னல்களை சந்தித்து கோடியக்கரை வருகிறார்கள். அச்சமயம் அருள்மொழிக்கு குளிர் சுரம் வந்துவிடவே அவரை நாகைக்கு அழைத்து சென்று வைத்தியம் பார்க்கிறார்கள். குந்தவையும் நடந்ததை கேள்விபட்டு சோழ நாட்டில் நடக்கும் உட்கட்சி பூசலினால் அருள்மொழியைத் தலைமறைவாக இருக்க சொல்கிறார். இதற்கிடையே வீரபாண்டியன் கொலைக்குப் பழிவாங்க ஆதித்த கரிகாலனை சிற்றரசர்கள் முன்னிலையில் சம்புவரையர் அரண்மனைக்கு அவர் கல்யாணம் விஷயமாக இரகசிய பேச்சு நடத்த கரிகாலனின் முன்னாள் காதலி நந்தினி அழைப்பு விடுகிறாள். இதை கேள்விபட்ட குந்தவை வந்தியத்தேவனை கரிகாலனுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு கடம்பூர் அரண்மணைக்கு அனுப்புகிறார். சென்ற இடத்தில் கரிகாலன் மர்மமான முறையில் கொல்லப்பட்டு பழியானது வந்தியத்தேவன் மீது வருகிறது. இச்சமயம் ஒரு புயலால் அருள்மொழி வர்மன வெளிவர நாட்டு மக்கள் அவரைக் கண்டுகொண்டு நாகையிலிருந்து தஞ்சைக்கு ஊர்வலாமாக யானை மேல் அழைத்து வருகிறார்கள். பிறகு பல்வேறு தடைகளுக்கு அப்பால் வந்தியத்தேவனை கொலை பழியில் இருந்து காப்பாற்ற அருள்மொழி வர்மன் பட்டம் சூட சம்மதம் தெரிவிக்கிறார். பட்டம் சூட்டும் விழாவில் நாட்டின் அரசுடைடைக்கு உரிமையான வாரிசான புதிய மதுராந்தகச் சோழன் என்ற பெயருடைய சேந்தன் அமுதனுக்கு பட்டம் சூட்டி பொன்னியன் செல்வர் தியாக சிகரமாக விளங்கினார். பின்னர் கடல் வாணிபத்திற்கு இடையூறாக உள்ள கடல்கொள்ளையர்களை அழிக்கும் பொருட்டு படைத்திரட்டி சென்று சோழ பேரரசின் மகத்துவத்தை கடல் கடந்த நாடுகளிலும் பரவச் செய்தனர். நாவலில் சொல்லே முதன்மை ஒரு இலக்கியத்தின் வரிகள் நம் உணர்வில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு சொல்லே முதன்மையாக காரணம் எனலாம். ஒரு சொல்லின் பொருள் மாறுபட்டால் அக்கதையின் சூழலும் தம் போக்கினை இழந்துவிடும். வரலாற்று நாவல்களை படைத்து சிறப்புற்ற அரு இராமநாதன், நா. பார்த்தசாரதி, செகசிற்பியன், வேணுகோபால் போன்ற ஆசிரியர்களுள் கல்கி தமிழ் வரலாற்று நாவலின் தந்தை என போற்றப்படும் அளவிற்கு அவரது படைப்புகள் சிறந்த நாவலாக விளங்கியதற்கு எழுத்தின் வலிமையும், சொல்லுமே காரணம் ஆகும். ஒரு சிறந்த சொற்கள் அன்றி ஒரு நாவல் முழுமையடையாது எனலாம். ஒரு நாவலின் வெற்றிக்கு சொல்லும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது. நாவல் மட்டுமன்றி எவ்வகை இலக்கியமானதும் சொல்லினால் மட்டுமே சிறப்புறுகிறது. அச்சொல்லானது இலக்கியம் தோன்றிய காலம் முதல் தற்காலம் வரையிலும் ஒரே மாதிரியான வடிவமைப்பினையும் பொருளையும் கொண்டே பயணிக்கிறது என்பது இல்லை. உதாரணமாக, ஒரு விதையானது விதைக்கப்பட்டதுடன் அதனிடம் மாற்றம் ஏற்படவில்லையானல் அவ்விதை பயனற்றதாகிவிடும். இவ்விதை போலவே இலக்கியச் சொல்லும் தோன்றியக் கால அமைப்பினை மட்டும் கொண்டிருந்தால் மொழியில் வளர்ச்சி உருவாகியிருக்காது. அவ்விதை மரமாவது போலவே, சொல்லும் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை தம்முள் உருவாக்கிக் கொண்டு பல்வேறு துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் பல மொழி தாக்கங்களுக்கு இடையில் தம் சிறப்பினை இழக்காமல் நிலைத்து நிற்பதே மொழியின் வெற்றி ஆகும். அவ்வகையில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் எடுத்தாளப்பட்டுள்ள 94 சொற்கள் பொன்னியின் செல்வன் நாவல் காலத்தால் நிலைத்து நிற்க ஒரு காரணமாக அமைகின்றது எனலாம். சான்றெண் விளக்கம் 1. தொல். மூல. கரு., நூற். - 1421 2. மேற்படி, நூற். - 1429 3. கா.நா. சுப்ரமணியம், முதல் ஐந்து நாவல்கள், பக். - 323 4. மேற்படி, பக். - 323 5. பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி) சோ. சிவபாதசுந்தரம், தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும், வளர்ச்சியும், பக். - 26 6. மேற்படி, பக். - 26 7. சக்தி வரைநூல், திறனாய்வும் தமிழ் இலக்கிய கொள்கைகளும், பக். - 218 8. தா.வே. வீரசாமி, தமிழ் நாவல் வகைகள், பக். - 161 9. N. H. Hudsun, Introduction to the study of literature, p. - 158 10. இரா. தண்டாயுதம்> நாவல் வளம்> பக். - 76 11. கண்ணா, உலக வரலாற்று நாவல்கள், ஆய்வுத்தொகை, பக். - 126 12. ஹசன், முந்நூல் பக். - 180 13. வீரகேசரி இதழில் (23.08.1950)   இயல் - 2 இலக்கண விதிகளும் சொற்பொருள் மாற்றமும் மொழியின் அடிப்படை கூறுகளுள் சொல்லும் ஒரு முக்கிய அங்கமாகும். மொழியின் வரிவடிவமான சொல் அன்றி மொழியின் அமைப்பானது உருவாகியிருக்க வாய்ப்பில்லை எனலாம். அத்தகைய சொல்லானது மொழியினுள் எவ்வாறு வகைமைப்படுத்தப்படுகிறது என்பதை இலக்கணத்தின் வழியும், மொழியியலின் வழியும் இவ்வியலில் ஆராயலாம். இலக்கணமும் மொழியியலும்: “மொழி நாகரிகத்தின் வித்து - எண்ணத்தின் வடிவம்; ஒருவரோடொருவரைப் பிணைக்கும் இணைப்பு - காலத்தைக் கடந்தும் நிலையாக நிற்கின்ற கருத்தோவியம்; - மற்ற உயிர்களிடையே காணப்படாத தனிபெருச் சிறப்பு - பழக்கம் என்ற விளைநிலத்தில் பயிராக்கப்பட்ட பயிர்”(13) என்று மொழியின் சிறப்பை இலக்கணத் தொகை விளக்குகிறது. மொழியின் வரிவடிவ தொடக்கமே இலக்கியம் ஆகும். அந்த இலக்கியங்களை வரையறுப்பதே இலக்கணம் ஆகும். இலக்கியம் அன்றி இலக்கணம் அமைவது இல்லை என்பதை, “இலக்கிய மின்றி இலக்கண மின்றே எள்ளின் றாகில் எண்ணெயு மின்றே எள்ளினின் றெண்ணெ யெடுப்பது போல இலக்கியத்தின் றெடுபடு மிலக்கணம்”(2) என்று பேரகத்தியம் வழி அறிய முடிகிறது. மேலும், “இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலின்”(3) என்ற நன்னூல் வழியும் நாம் அறியலாம். மொழியின் உருவாக்கத்தையும், அதன் அமைப்பையும், வளர்ச்சி நிலையையும் விளக்குவதே மொழியியலின் இன்றியமையாத பணி. மொழியியல் மட்டுமின்றி இலக்கணமும் மொழியின் அமைப்பை விளக்குவதே. இலக்கணம் வேர் எனில் மொழியியல் ஆலமரம் ஆகும். இதன் மூலம் இலக்கணத்தின் வளர்ச்சியே மொழியியல் என்பது புலனாகிறது. மொழியியலானது, இலக்கணத்துடன் பின்னிப்பிணைந்த ஒரு அமைப்பாகும். இலக்கண ஆசிரியர்கள் தம் தாய்மொழியன்றி பிற மொழிகளுக்கு இலக்கணம் எழுத முற்படவில்லை. ஆனால் மொழியியலாளர்கள் மொழியியல் அடிப்படையில் பிற மொழிகளுக்கும் இலக்கணம் எழுத முயல்கின்றனர். இலக்கண ஆசிரியர்கள் இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டே இலக்கணம் வகுத்தனர். ஆனால் மொழியியலார், மொழியினைப் பிறர் அறிந்து கொள்ளவும் மொழியின் அமைப்பை விளக்கவும், பேச்சு மொழியையும், கல்வெட்டு, ஓலைச்சுவடிகள் போன்ற பிற சான்றுகளையும் அடிப்படையாகக் கொண்டு இலக்கணம் வகுக்கின்றனர். இலக்கணம் என்பது தனி மனித சாதனையாகவும், மொழியியல் என்பது கூட்டு முயற்சியாகவும் அமைகிறது. கோட்பாடுகளை அனைத்து மொழிகளுக்கு பொதுவானதாக அமைத்து, எளிமைப்படுத்துவதே மொழியியலின் நோக்கமாகும். அம்மொழியலினுள் பல்வேறு வகையான பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் நம் ஆய்விற்கு சொற்பொருளியல் என்ற வகையே அவசியமானதாகும். அவ்வகையில் பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றுள்ள சொற்களை, இலக்கணத்தோடு பொருந்தி வருவதையும், மாறுபடுவதையும் இவ்வியலின் வழி ஆராயலாம். சொற்பொருளியல் வரையறைகள் சொற்பொருளியலுக்கு பல அறிஞர்களும், பல வரையறைகளை வகுத்துள்ளனர். அவற்றுள் சில: இலக்கணங்களில் குறிப்பிடும் சொல் - பொருள் என்ற வகைமையினை மொழியியலாளர் எவ்வாறு விவரிக்கின்றனர் என்பதை ந. கடிகாசலம் “Semantics என்பதை பொருளியல், பொருண்மையியல், சொற்பொருளியல் என்று பலவாறு தமிழில் குறிக்கப்படுகிறது என்றும், பொருண்மை குறித்து வரலாற்று ஆய்வினை நோக்கும்போது ஹன்ஸ் ஸ்பெர்பர், பிராய்டின் ஆகியோர் தன் கருத்துக்களை அறிமுகப்படுத்தத் தொடங்கிப் புதியதோர் அடித்தளம் அமைக்க முயன்றனர்”(4) என்றும் உரைக்கிறார். சொற்பொருள் என்ற ஒரு சொல்லே எவ்வாறெல்லாம் மாற்றங்களுக்கு உட்பட்டு புதியதோர் சொல்லாக உருவாக்கம் பெற்றுள்ளது என்பதை எச். சித்திரபுத்திரன் கீழ்கண்டவாறு விளக்குகிறார். “சொற்பொருளியல் Semantics என்ற ஆங்கிலச் சொல்லிலிருந்து உருவானது. Semantics எனும் சொல் 1894 இல் வழக்கிற்கு வந்துள்ளது. கிரேக்க மொழியுடன் தொடர்புடைய இச்சொல் Semantique எனும் பிரெஞ்சு மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இச்சொல்லை இன்றைய பொருளில் பயன்படுத்தியவர் ‘பிரயேல்’ எனும் மொழியியல் அறிஞர் ஆவார். அவருடைய Semantics Studies in the Science of Meaning (1990) என்ற நூல் பொருண்மையியல் பற்றிய பல சிந்தனைகளைக் கொண்டுள்ளது. எனவே பிரயேலை பொருண்மையியலின் தந்தை”(5) என எச். சித்திரபுத்திரன் கூறுகிறார். மேலும் சொற்பொருளியலை எவ்வாறெல்லாம் வேறுபடுத்தி பயன்படுத்தலாம் என்பதை பின்வரும் மொழியியலாளரின் வழி அறியலாம். “சசூர் எனும் மொழியியலார் சொற்பொருள் மாற்றம் பற்றிய வரலாற்று முறை ஆய்வுக்கும் அன்றாட வாழ்வியலான குறியீடுகள் சொற்கள், வாக்கியங்கள் ஆய்வுக்கும் இடையிலான வேறுபாட்டை முதலில் கண்டறிந்து வெளிப்படுத்தினார்.”(6) சொல்லின் பொருள் மாற்றங்களை ஏற்கும் பண்பு கொண்டே உருவாக்கமடைகிறது என்பதை ஸ்டெர்னின் என்ற மொழியியலாளர் எழுதிய நூலின் பெயரே நமக்கு விளக்குகிறது. இதனை, “சொற்பொருளின் வரலாற்றைப் பொறுத்தவரை 1931 ஆம் ஆண்டு மிகவும் குறிப்பிடத்தக்க ஆண்டாகும். சொற்பொருளியலில் புதிய போக்குகள் குறித்து பேராசிரியர் ‘ஸ்டெர்ன்’ Meaning and change of Meaning எனும் நூல் சொற்பொருளியலின் அடிப்படைக் கூறுகளை வழங்கியுள்ளது”(7) என்று கடிகாசலம் அவர்கள் குறிப்பிடுகிறார். சொற்பொருளியல் எவ்வகையினை விளக்குகிறது என்பதை, “மொழி வெளிப்பாட்டிற்கும் அது உணர்த்தும் பொருண்மைக்கும் இடையே நிலவும் தொடர்பு குறித்து ஆராய்வது சொற்பொருளியல் என்று ‘கார்னப்’ கூறியுள்ளார்.”(8) இவ்வாறு சொற்பொருளியல் என்ற சொல்லின் உருவாக்கத்திற்கும், அதன் உட்கூறுகளின் தொடக்கத்திற்கும், சொற்பொருள் மாற்றம் என்ற அமைப்பிற்கும் இவ்வரையறைகளே சான்று ஆகும். சொற்பொருள் மாற்றம் இலக்கணத்தின் தொன்மையான நூலாக இன்றும் நமக்கு கிடைக்கப்பெறுவது தொல்காப்பியமாகும். ஆனால் நாம் இன்றுவரையும் தொல்காப்பிய உத்திகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்றால் அது உண்மையன்று. காலமாற்றத்திற்கு ஏற்ப கருத்துக்களும் சூழ்நிலைகளுமே மாறுபாடு அடையும்போது இலக்கணங்களும் மாற்றமடைவது ஆச்சரியமானதல்ல. அவ்வகை தொன்மையான இலக்கணங்களில் புதிய உத்திகளை புகுத்தியவர் பவணந்தி முனிவர் ஆவார். இவரது நூலான நன்னூல் முன்னோர் வழக்குகளை பின்பற்றியும், தற்காலத்திற்கு ஏற்ப மாறுபட்டும் உருவாக்கப்பட்டது. இதனை, ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’(9) என்று தன் நூலின் தொடக்கமாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். மேலும் முன்னோர் வழக்குகளை பின்பற்றுவதை, ‘முன்னோர் நூலின் முடிபொருங்கொத்து பின்னோர் வேண்டும் விகற்பங் கூறி’(10) என்று தம் நூற்பாவின் வழி விளக்கியுள்ளார். இதன்மூலம் இலக்கணங்களிலேயே மாற்றங்கள் நிகழும்போது காலமாற்றத்தில் புதிய துறைகளின் தோற்றமும், ஆராய்ச்சிகளும் உருவாகி வளர்வது இயல்பான ஒன்றாகும். இவ்வரையறைகள் அனைத்தும் ஒரு மொழியின் வடிவத்தினை மட்டுமே விளக்குகிறது. ஆனால் மொழியியல் ஆராய்ச்சிகள் வடிவத்தையும் (Form)> அதன் உட்பொருளான கருத்தையும் (Content) அடிப்படையாக கொண்டது. மொழியியல் வகைகளுள் பல்வேறு காலங்களில் மொழி அடைந்த மாற்றங்களைக் கால முறைப்படி ஆராய்வது வரலாற்று மொழியியல் என்பர். இத்துறையில் தமிழில் முதல் முதலில் வழிகாட்டியவர் பரிதிமாற் கலைஞர் ஆவார். (காலமாற்றம்) தொல்காப்பியம்  நன்னூல் தொல்காப்பியத்திற்கும், நன்னூலிற்கும் உள்ள வேறுபாடானது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றமே என்பதை வரலாற்று ஆய்வுகளின் மூலம் அறிய முடிகிறது. காலமாற்றத்தினால் ஒரு மொழியின் பேச்சு வழக்கு சொற்களும், வரிவடிமான எழுத்துக்களும் மாறுபடுகிறது. இத்தகைய மாற்றங்களை ஆராய்வதே வரலாற்று மொழியியலின் நோக்கமாகும். இவ்வாய்வேட்டின் நோக்கமானது காலத்தால் சொற்களில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்குவதே ஆகும். ஒரு சொல் அனைத்து இடங்களிலும் ஒரே பொருளை தருவதில்லை. காரணம் அதன் சூழ்நிலை வெளிப்பாட்டால் ஏற்படும் மாற்றமே ஆகும். மொழியானது, அதனுள் ஏற்பட்ட மாற்றத்தினால் மட்டுமே வளர்ச்சி நிலைகளை அடைந்தது என்பதை இன்றைய அறிவியல் வளர்ச்சியினால் அறியலாம். தமி;ழ் மொழியினை கண்டோமானால் சங்க கால சொற்களும், வழக்கங்களும் மாற்றமடையாமல் தொடர்ந்திருந்தால் மொழியியல் என்ற துறை தோன்றுவதற்கும், தொழில்நுட்பம் என்ற துறையில் கால் பதிப்பதற்கும் சாத்தியமின்றி இருந்திருக்கும். மொழியியலில், வரலாறு என்ற பிரிவினுள் சொற்களின் மாற்றத்தினை மட்டும் விளக்குவதில்லை. ஒரு சொல் அதன் ஒலி உச்சரிப்பு மாற்றம், சொற்றொடர் மாற்றம், சொற்பொருள் மாற்றம் என்ற பல்வேறு வரலாற்று மாற்றங்களாக நடைபெறுகிறது. […] Listener - கேட்பவர் பேசுபவரிடமிருந்து உருவாகும் ஒலியானது, சொற்றொடராக அமையப்பெற்று, அதன் சொற்பொருள் கேட்பவரைச் சென்றடைவதாகவே ஒரு வாக்கியம் அமைகிறது. இதில் ஒலியின் உருவாக்கம் என்பது ஒலியியல் என்ற தலைப்பின் மூலம் மொழியியல் விளக்குகிறது. அதற்கு அடுத்த நிலையான சொற்றொடர் அமைப்பானது, தொடரியல் என்ற தலைப்பின் மூலமும், சொல்லின் பொருளானது சொற்பொருளியல் அல்லது பொருண்மையியல் மூலமும் மொழியியலில் விவரிக்கப்படுகிறது. இக்கட்டமைப்புகளில் ஒலி உச்சரிப்பில் ஏற்படும் மாற்றமும், சூழ்நிலை காரணமாக சொற்பொருளை புரிந்து கொள்வதில் ஏற்படும் இடர்ப்பாடே பேசுபவருக்கும், கேட்பவருக்கும் இடையே பொருள் மாற்றம் ஏற்பட காரணமாகிறது. இவ்வாய்வின் முதன்மையான வகைமையே சொற்பொருளியல் ஆகும். இச்சொற்பொருளியல் மாற்றத்திற்கான உதாரணத்தை பொன்னியின் செல்வன் நாவலின் சில சொற்கள் கொண்டே விளக்கலாம். வாஞ்சை: “எல்லாரிலும் அதிகமாக அவரிடம் வாஞ்சையுடனிருந்தவள் அவருடைய தமக்கையாகிய குந்தவை.”(11) என்ற நாவலின் வரிகளில் காணப்படும் வாஞ்சை என்ற சொல்லிற்கு ஆசை என்ற பொருளே அகராதியின்படி வழங்கப்படுகிறது. தற்காலத்தில் வாஞ்சை என்ற சொல்லானது வழக்கொழிந்து அதன் அகராதிப் பொருளான ஆசை என்ற பொருளிளேயே வழங்கப்படுகிறது. அமரிக்கை: “எவ்வளவு அடக்கம், அமரிக்கை! அவளுடைய மனந்தான் எத்தனை தூய்மையானது!”(12) என்ற நாவலின் வரிகளில் காணப்படும் அமரிக்கை என்ற சொல்லிற்கு அமைவு என்ற பொருளே அகராதியின்படி வழங்கப்படுகிறது. தற்காலத்தில் அமரிக்கை என்ற சொல்லானது வழக்கொழிந்து அதன் அகராதிப் பொருளில் சிறுமாற்றம் கண்டு அமைதி என்ற பொருளிளே வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் நாவல் என்ற பிரிவுகளை உள்ளடக்கிய இலக்கிய கட்டமைப்பிற்கு இலக்கண விதிகளே முதன்மை காரணியாகும். அத்தகைய இலக்கண விதிகளைக் கொண்டே சொல் மற்றும் பொருள் குறித்த விளக்கத்தையும், சொற்பொருள் மாற்றத்தினையும் அறியலாம். தொல்காப்பியமும் சொல்லும் பொருளும் எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே.(13) எல்லாச் சொல்லுமாகிய பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல் ஆகிய நான்கு வகைச் சொற்களும் பொருள் குறிக்கும் தன்மையுடையவை என்று இளம்பூரணாரின் உரை வழி அறியலாம். சொல் என்பது பெயரைக் கொண்டே அல்லது வினையை அடிப்படையாகக் கொண்டே இடைச்சொற்களும் உரிச்சொற்களும் இணைந்தே உருவாக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது. பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லி னாகும் என்மனார் புலவர்.(14) சொல்லானது இருவகையான தன்மையினைக் கொண்டு விளங்குகிறது என்றும், அவை சொல்லின் பொருளை உணர்த்தும் தன்மை அடிப்படையிலும், சொல்லின் தன்மையையே அடிப்படையாகவும் கொண்டவை என்று இளம்பூரணாரின் உரை வழி அறியலாம். பொருள் உணர்த்தும் தன்மை ஒரு எழுத்தானது தனித்து நின்று ஒரு பொருளை உணர்த்தும் தன்மை கொண்டது. அவையே இரண்டு மூன்று எழுத்துக்கள் இணைந்து சொல் என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது. அவ்வாறு உருவாகும் சொல் தனியாக இருக்கும்பொழுது அவற்றிற்கு பொருளை உணர்த்தும் ஆற்றல் முழுவதும் இல்லை. வெளிப்படையும் குறிப்பும் சொற்கள் சில இடங்களில் வெளிப்படையாக பொருள் உணர்த்தும். சில இடங்களில் குறிப்பு பொருள் உணர்த்தும். சில சொற்கள் பொதுவான பொருளினைப் பெற்று வரும். அவ்வாறு வருமிடங்களில் அமையும் சொல் ஒரு பொது அமைப்பை உணர்த்தினால் அதனை வெளிப்படைப் பொருள் என்பர். சூழ்நிலை மாற்றத்தால் வெளிப்படைப் பொருளை மட்டும் உணர்த்தாமல் வேறு ஒரு பொருளையும் உணர்த்தினால் அதனை குறிப்புப் பொருள் என்பர். அவ்வாறு குறிப்புப் பொருள் வேறு ஒரு பொருளை அளித்தாலும், அது வெளிப்படைப் பொருளோடு தொடர்பு பெற்றே விளங்கும். இதனை, தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே.(15) மேற்கூறப்பட்டபடி பொருளின் தன்மையானது, சொல்லினை மட்டும் விளக்கி தனித்து நிற்பதும், சொல்லின் சூழலை குறிப்புப் பொருளாகத் தோற்றுவிப்பது என இரண்டு கூற்றினையுடையதாக இளம்பூரணாரின் உரை வழி அறியலாம். இதற்கு உதாரணமாக நாவலில் பயன்படுத்திய சொல்லையும், அவற்றின் பொருளையும் கொண்டே விளக்க முற்படுவோம். குந்தகம்: “காரியத்துக்குக் குந்தகம் வரக்கூடாதென்று மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வலுவில் வந்த சண்டைகளைக்கூட வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு நடந்தான்.”(16) என்ற நாவலின் வரிகளில் பயன்படுத்திய குந்தகம் என்ற சொல் வெளிப்படையாக பொருள் உணர்த்தாமல் தடை (அகராதி பொருள்) என்ற குறிப்பு பொருளை உணர்த்தி சொற்பொருள் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. சித்திரான்னம்: “ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் புதிய ஆடைகள் அணிந்து, விதவிதமான அலங்காரங்கள் செய்துகொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவ்வந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ் சோறும், சித்தரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பங் குடும்பமாக வந்திருந்தார்கள்.”(17) என்ற நாவலின் வரிகளில் பயன்படுத்திய சித்திரான்னம் என்ற சொல் உணவு என்ற வெளிப்படையான பொருளைக் குறிப்பிட்டிருப்பினும், பலவகைச் சாதம் (அகராதிப் படி) என்ற பொருளில் வழங்கப்பட்டு சொற்பொருள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பொருள் அமைப்பு: சொற்களுக்கான பொருள் அமைப்பு என்பது அவை பெறும் வழக்குப் பொருத்தே அமைகின்றது. ஒரு சொல்லுக்கு இன்ன பொருள் தான் உரியது என்று வெறும் அமைப்பினால் மட்டும் கூறவியலாது. அது பேச்சு வழக்கின் மூலம் அமைவதாகும். இவ்வழக்கை இயல்பு வழக்கு என்றும், தகுதி வழக்கு என்றும் பிரித்துக் காண்பர். “தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரைநிலை யிலவே”(18) என்று தகுதி வழக்கு மற்றும் இயல்பு வழக்கு என இரு நிலைகளை வழங்குகிறது தொல்காப்பியம். அதாவது சொல்ல வந்ததை நேரே கூறாமல் அதன் சிறப்பு கருதி வேறு சொல்லால் குறிப்பாக உணர்த்துவது தகுதி வழக்காகும். இது மங்கலம், இடக்கரடக்கல், குழூஉக்குறி என மூவகைப்படும். ஒன்றை நேரேக் கூறாமல், மறைமுகமாகத் தகுதியுடைய சொல்லால் குறிப்பது இயல்பு வழக்காகும். இது இலக்கணம் உடையது, இலக்கணப் போலி, மரூஉ என மூவகைப்படும். இவை அனைத்துமே இலக்கணத்தில் குறிப்பிடப்படும் வகைமைகள் ஆகும். இவ்வாறு சொல் மாற்றத்தின் நிலைகள் தொல்காப்பியர் காலத்திலேயே தொடங்கப்பெற்று அவை மொழியியல் துறையின் சொற்பொருள் மாற்றமாக உருபெற்றுள்ளது என்று கூறலாம். சொற்பொருள் மாற்றம் என்பது எவ்வகையாயினும் அமையலாம். அத்தகைய மாற்றத்தினை இலக்கணத்தின் விதிகளோடு இயைந்து காலமாற்றத்திற்கு ஏற்ப நாவலின் சொற்கள் எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளது என்பதை இனி விவரிப்போம். தனிமெய் தமிழில் மொழிமுதல் ஆகாமை தமிழ் மொழியின் வளர்ச்சியிலும், உருவாக்கத்திலும் சொல்லானது சில வரையறைகளைக் கொண்டே நூற்றாண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கிறது. மெய்யல்லாத சொற்கள் மற்றும் உயிர் எழுத்துக்களே மொழிக்கு முதலில் அமையும் என்று இலக்கணம் வகுத்துள்ளனர் ஆசிரியர்கள். அவை, உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா.(19) உயிர்மெய் அல்லாத தனிமெய்கள் தமிழில் மொழிக்கு முதலில் வருவதில்லை என நூற்பா வழி அறியலாம். இருப்பினும் தமிழில் பிறமொழி கலப்பிற்கு பிறகு மொழிக்கு முதலில் மெய்கள் கொண்ட சொற்கள் உருவாகி பொருள் உணர்த்தி நிற்கின்றன. கல்கியின் நாவலிலும் இத்தகைய சொல்லினைக் காணமுடிகிறது. “வந்தியத்தேவனுடன் வந்த கடம்பூர் வீரன் பக்கத்திலுள்ள திருப்பனந்தாளுக்குச் சென்று குதிரை சம்பாதித்து வருவதாகச் சொல்லிப் போனான். ஆழ்வார்க்கடியானும் வந்தியத் தேவனும் ஆற்றங்கரையில் அரச மரத்தின் அடியில் உட்கார்ந்தார்கள். அந்த மரத்தின் விசாலமான அடர்ந்த கிளைகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் மதுரமான கலகல த்வனி செய்து கொண்டிருந்தன.”(20) இந்நாவலின் வரிகளில் த்வனி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது. இதன்மூலம் மொழியின் சொல்லானது காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்துள்ளது எனலாம். நால்வகைச் சொற்கள் சொல் என்பது மாற்றடையும் ஒரு அமைப்பாகும். அச்சொற்களை நான்கு வகைப்படுத்தியுள்ளனர் இலக்கண ஆசிரியர்கள். இயற்சொல் திரிச்சொல் திசைச்சொல் வடசொலென்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.(21) என்னும் நூற்பாவின் படி இயற்சொல், திரிச்சொல், திசைச்சொல், வடச்சொல் என நான்கு சொற்களும் செய்யுள் இயற்றுதலுக்கு உரிய சொற்களே என்று தொல்காப்பிய இளம்பூரணம் உரை வழிகாணலாம். இச்சொற்களுள் பொன்னியின் செல்வன் நாவலில் வடமொழி ஒலிக்கலப்பு கொண்ட வடச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை இலக்கணாசிரியர் வழி விளக்கலாம். வடச்சொல் வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.(22) தமிழ் சொற்களுள் வடமொழி சொற்கள் என்ற பிரிவொன்று உண்டு என தொல்காப்பிய இலக்கணம் கூறுகிறது. வடமொழி சொற்கள் தமிழ் வடிவம் பெற்ற தமிழ் சொற்களாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றும், சமஸ்கிருத மொழிக்கே உரிய எழுத்துக்களையும் அவற்றின் ஒலிகளையும் அறவே நீக்கி தமிழ் எழுத்துக்களை கொண்ட தமிழ் சொற்களாக வடிவ மாற்றம் பெற்று, தமிழ் மொழியில் வடசொல்லாக வழங்கப்பட்டு வருகிறது என இலக்கணம் கூறுகிறது. தமிழ் சொல்லாக ஏற்கப்படும் அனைத்து பிறமொழி சொற்களுக்கும் இவற்றை பொது இலக்கணமாக கொள்ளலாம் என தொல்காப்பிய உரையாசிரியர்கள் வழி அறியலாம். இதற்கு மாறாக, பொதுஎழுத் தானும் சிறப்புஎழுத் தானும் ஈர்எழுத் தானும் இயைவன வடசொல்.(23) நன்னூலில் ஆரிய மொழி என்ற வட மொழிக்கும் தமிழ் மொழிக்கும் பொதுவாக உள்ள எழுத்துக்களால் சொல்லானது அமையும் என்று ஒரு விதியிலும், வடமொழிக்கே உரிய சிறப்பு எழுத்துக்களால் சொல்லானது திரிந்து அமையும் என்று இரண்டாவது விதிப்படி உரையாசிரியர் குறிப்பிடுகிறார். இவையன்றி பொதுவாகவும் சிறப்பாகவும் உள்ள எழுத்துக்களால் சொல்லானது அமையும் என மூன்றாவது விதி வழி நன்னூல் உரையாசிரியர் குறிப்பிடுகிறார். பொன்னியின் செல்வன் நாவலில் பல சொற்கள் இந்நூற்பாவிற்கு உதாரணமாக உள்ளன. அவற்றுள் சில ஆஜானுபாகுவான: “அந்தப் படகில் கூரிய பிரகாசமான வேல்களை ஏந்திய ஆஜானுபாகுவான வீரர்கள் பலர் இருந்தார்கள்.”(24) நாவலின் வரிகளை காணும் போது ஆஜானுபாகுவான என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை காணமுடிகிறது. இதற்கான பொருளை அகராதியின் வழி அறியும் போது ஆசானுபாகுவான என்ற சொல்லாகவும் கம்பீரமான என்ற பொருளிலும் அறிய முடிகிறது. நாவலில் வடமொழி எழுத்துக்கள் நேரடியாகவே பயன்படுத்தப்பட்டிருப்பது சொற்பொருள் மாற்றத்தினால் என்பதை இதன் மூலம் அறியலாம். இச்சொல்லன்றி இவ்விதியினை அடிப்படையாகக் கொண்டு நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள பிற சொற்களையும் காணலாம். வஸ்திரம்: “இந்த சமயத்தில் காவி வஸ்திரம் அணிந்த அத்வைத சந்நியாசி தலையிட்டு கூறியதாவது”(25) நாவலின் வரிகளில் காணப்படும் வஸ்திரம் என்ற சொல்லிற்கு அகராதியின் வழி ஆடை, உடை என்ற பொருளில் சொற்கள் விளக்கப்படுவது அறிய முடிகிறது. சமிக்ஞை: “குதிரையை அங்கேயே நிற்கும்படி தட்டிக் கொடுத்துச் சமிக்ஞையால் சொல்லி விட்டுக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு உள்ளே போனான்.”(26) நாவலில் வரிகளில் காணப்படும் சமிக்ஞை என்ற சொல் வடமொழி எழுத்துக்கள் அற்ற தமிழ் சொல்லாகவே கருதப்பட்டாலும், அவை ஒலிவடிவத்தினால் சமிக்ஜை என்ற சொல்லாக உச்சரிப்பில் உணரப்படுகிறது. இவையன்றி தமிழில் சைகை என்ற பொருளையும் கொண்டுள்ளதை அகராதியின் வழி காணும்போது இவை வடச்சொல் எழுத்தாக இவ்வாய்வில் எடுத்தாளப்பட்டுள்ளது. ஸ்திரீகளின்: “எங்கே போய்விட்டாரா? பிருந்தாவனத்துக் கோபிகா ஸ்திரீகளின் சேலைத் தலைப்பில் ஒருவேளை ஒளிந்து கொண்டிருப்பார்! என்றார் சைவர்.”(27) நாவலின் வரிகளில் காணப்படும் ஸ்திரீகளின் என்ற சொல்லிற்கு அகராதியின் வழி பெண்களின் என்ற பொருளில் சொல்லானது விளக்கப்படுகிறது. அஸ்தமிக்கும்: “சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் பிரதான கோட்டை வாசலை அடைந்தான்.”(28) நாவலின் வரிகளில் காணப்படும் அஸ்தமிக்கும் என்ற சொல்லிற்கு அகராதியின் வழி மறையும் என்ற பொருளைச் சொல்லானது கொண்டுள்ளது. ஜனங்கள்: “அவர்களில் சிலர் ஏரிக்கரையில் குத்திறங்கி அங்கே இருந்த ஜனங்களைப் பார்த்துப்,”போங்கள்! போங்கள்!" என்று விரட்டினார்கள்."(29) நாவலின் வரிகளில் காணப்படும் ஜனங்கள் என்ற சொல்லிற்கு அகராதியின் வழி மக்கள் என்ற பொருளில் சொல்லானது விளக்கப்படுகிறது. ஜாமம்: “வந்தியத்தேவன் மனத்தில் பொங்கி எழுந்த நினைவுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு,”குரவைக் கூத்துப் பார்த்துவிட்டு இங்கு வந்து படுத்தது தான் தெரியும். இப்போது தான் எழுந்திருக்கிறேன். அடடா! இவ்வளவு நேரம் ஆகிவிட்டதே! உதித்து ஒரு ஜாமம் இருக்கும் போலிருக்கிறதே! உடனே நான் கிளம்ப வேண்டும். கந்தமாறா! குதிரையை ஆயத்தம் பண்ணும்படி உன் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடு!" என்றான்."(30) நாவலின் வரிகளில் காணப்படும் ஜாமம் என்ற சொல்லிற்கு அகராதியின் வழி நடுஇரவு என்ற பொருளைச் சொல்லானது கொண்டுள்ளது. சிரஸில்: “மகுடாபிஷேகத்துக்குரிய வைதிகச் சடங்குகள் எல்லாம் நடந்தேறின. சோழ குலத்து மன்னர்கள் வழி வழியாகப் பட்டாபிஷேக தினத்தன்று சிரஸில் சூட்டிக் கொள்ளும் மணிமகுடம், மார்பில் அணியும் நவரத்தின மாலை, இடையில் தரிக்கும் உடைவாள், கையில் ஏந்தும் செங்கோல் ஆகியவற்றை ஒரு பெரிய சித்திரத் தாம்பாளத்தில் வைத்துச் சபையில் பெரியவர்கள் முன்னாலெல்லாம் கொண்டு போனார்கள்.”(31) நாவலின் வரிகளில் காணப்படும் சிரஸில் என்ற சொல்லிற்கு அகராதியின் வழி தலையில் என்ற பொருளில் சொல்லானது விளக்கப்படுகிறது. ரோஷம்: "“அதையும் சோதித்துப் பார்த்துவிடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டு குதிரை மீது ஏறப்போன தாண்டவராயன் அதனுடைய வாலை முறுக்கினான். ரோஷமுள்ள அக்குதிரை உடனே பின்னங்கால்களை நாலு தடவை விசிறி உதைத்துவிட்டு ஓட்டம் பிடித்தது."(32) நாவலின் வரிகளில் காணப்படும் ரோஷம் என்ற சொல்லிற்கு அகராதியின் வழி கோபம் என்ற பொருளைச் சொல்லானது கொண்டுள்ளது. பட்டமகிஷி: “எல்லாருக்கும் முதலில் ‘பெரிய பிராட்டி’ என்று நாடு நகரமெல்லாம் போற்றும் செம்பியன் மாதேவி வருகிறார். இவர் மழவரையர் குலப் புதல்வி: சிவஞானச் செல்வாரன கண்டராதித்தரின் பட்டமகிஷி.”(33) நாவலின் வரிகளில் காணப்படும் பட்டமகிஷி என்ற சொல்லிற்கு அகராதியின் வழி பட்டத்தரசி, தலைமையரசி என்ற பொருளில் சொற்கள் விளக்கப்படுவது அறிய முடிகிறது. இச்சொற்களைப் போன்ற பல வடச்சொற்கள் நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட சொற்கள் யாவும் காலமாற்றத்திற்கு ஏற்ப சொற்களாலும் அவை வழங்கும் பொருள் வழியிலும் மாற்றமடைந்துள்ளதை காண முடிகிறது. யகரம் மொழிக்கு முதலில் வருதல் சொல்லிற்கு முதன்மையில் இவ்வகையான எழுத்துக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் என்பதை இலக்கணாசிரியர்கள் வகுத்துள்ளனர். அவை, அ ஆ உ ஊ ஓ ஒள யம்முதல்.(34) அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள என்னும் ஆறு உயிரோடும் யகரமானது மொழிக்கு முதலாக வரும் என நன்னூல் வழி அறியலாம். இவ்விலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு நாவலில் பயன்படுத்தப்பட்ட சில சொற்களை இங்கு காணலாம். யௌவனக் கண்கள்: “வந்தியத்தேவனின் யௌவனக் கண்களுக்கு அந்த ஏரிக்கரையில் நின்ற நங்கைகள் எல்லாரும் அரம்பைகளாகவும் மேனகைகளாகவுமே தோன்றினார்கள்!”(35) என்ற நாவலின் வரிகளுள் யௌவனக் கண்களுக்கு என்ற சொல் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைக் காணும்போது நாவல் என்ற இலக்கியமானது பேச்சு வழக்கு, மொழி கலப்பினை மட்டும் கொண்டிராமல் இலக்கணத்தையும் பின்பற்றியே இயற்றப்பட்டிருப்பதை நம்மால் அறிய முடிகிறது. இத்தகைய இலக்கணம் சார்ந்த சொற்கள் அனைத்துமே அகராதியின் அடிப்படையிலே பொருள் உணரப்படுகிறது. அவ்வகையில் இச்சொல்லிற்கும் இளமையான கண்கள் என்ற பொருள் அகராதியின் வழி அறிய முடிகிறது. இச்சொல்லான்றி மேலும் ஒரு சொல் இவ்வகையை பின்பற்றியே பொருள் கொண்டிருப்பதை கீழ் காணலாம். யௌவனப் பிராயம்: “கந்தமாறன் வந்தியத்தேவனின் கையைப் பிடித்துப் பரபரவென்று இழுத்துக் கொண்டு போனான். அவருடைய கால்கள் தரையில் நில்லாமல் குதித்துக் கொண்டேயிருந்தன. அவனுடைய உள்ளமும் துள்ளிக் குதித்தது. யௌவனப் பிராயத்தில் உண்மையாக உள்ளம் ஒன்றுபட்டு ஒரு நண்பன் கிடைத்தால் அதைக் காட்டிலும் ஒருவனைப் பரவசப்படுத்தக் கூடியது வேறு என்ன உண்டு? காதல் என்பது ஒன்று இருக்கத் தான் இருக்கிறது.”(36) இந்நாவலின் வரிகளில் காணப்படும் யௌவனப் பிராயத்தில் என்ற சொல்லிற்கு இளைய வயது என்ற பொருளை அகராதியின் வழி அறிய முடிகிறது. இவ்வகையான சொற்கள் யாவும் பேச்சு வழக்கு பயன்பாட்டிலிருந்து ஒழிந்து சொல்லின் பொருளே பயன்பாட்டில் நிலைத்து நிற்கிறது. பன்னிரு நிலங்கள் எனக் குறிக்கும் பெயர்கள் மொழி என்ற அமைப்பானாலும் சரி, சொல் என்ற அமைப்பானாலும் சரி அவை ஒரு சமுதாயம் சார்ந்த பரிமாண வளர்ச்சியாகவே உணரப்படுகிறது. ஏனெனில் சமுதாயம் மாற்றம் அடைந்தால் அச்சமுதாயத்தை ஒன்றி வாழும் மக்கள் பேசும் மொழிகளும், மொழியில் பயன்படுத்தப்பட்ட சொல்லும் மாற்றம் அடையும். அச்சமுதாயம் நிலத்தின் அடிப்படையில் பிரிக்கப்;பட்டுள்ளதை இலக்கணம் வழி அறியலாம். செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும் தம்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.(37) இந்நூற்பாவின் படி, செந்தமிழ் நாட்டை சேர்ந்த பன்னிரண்டு நிலங்களையும் அத்திசைச் சொற்களினாலே அறியலாம் என்று தொல்காப்பியர் விளக்கியுள்ளார். ஆனால் அப்பன்னிரண்டு நாடுகளின் பெயர்களை நூற்பாவின் வழி விளக்கவில்லை. பிற்கால உரை ஆசிரியர்கள் அப்பன்னிரண்டு நாடுகளையும் குறிப்பிடுகின்றனர். இவை தம்முடைய குறிப்பு என்று அவை ஒரே மாதிரியான வகையினில் அமைவதில்லை என்றும், பின்வரும் காலங்களில் மாற்றத்திற்கு உட்படும் என்றும் இளம்பூரணார் தம் உரையில் குறிப்பிட்டுள்ளார். இதனையே நன்னூலில் செந்தமிழ் நிலங்களையும், செந்தமிழ் நிலங்கள் அல்லாத பிற நாடுகளையும், நூற்பாவின் வழியும் பழம்பாடல் வழியும் உரையாசிரியர் விளக்குகிறார். அவையாவன, செந்தமிழ் நிலம்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும் தம்குறிப் பினவே திசைச்சொல் என்ப.(38) இந்நூற்பாவின்படி, செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலங்கள் உள்ளன. இந்நிலங்கள் இணைந்த தமிழ்நாட்டை ஒட்டிப் பதினெட்டு மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுள் கொடுந்தமிழ் மொழியும் வடசொற்களுக்கு காரணமாகிய ஆரிய மொழியும் விடுத்த பதினாறு நாடுகளில் வாழ்வோர் பேசும் மொழிகளிலுள்ள சொற்கள் தமிழ்மொழியில் வந்து அதே பொருளில் வழங்குகின்றன என்றும் அவையே திசைச்சொற்கள் என நன்னூல் உரையாசிரியர்கள் விளக்குகின்றனர். தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி பன்றி அருவா அதன்வடக்கு – நன்றாய் சீதம் மலாடு புனல்நாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட்டு எண்.(39) என்னும் பழம்பாடல் வழி அப்பன்னிரண்டு நிலப்பகுதிகளை அறியலாம். தமிழ்நாடு நிலப்பகுதிகள் அல்லாத பிற நிலப்பகுதிகளாவன; சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம்வங்கம் கங்கம் மகதம் கவுடம் கடாரம் கடுங்குசலம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புலி தாம்இவையே.(40) என்னும் பழம்பாடல் வழி அப்பதினேழு நிலப்பகுதிகளை அறியலாம். இந்நிலப்பகுதிகள் யாவும் இலக்கண நூல்களில் உரையாசிரியர்கள் வழியே நூற்பாவுடன் பழம்பாடல் என்ற குறிப்புடன் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு இலக்கணங்களில் வழங்கப்பெறும் நிலப்பகுதிகள் போன்று பொன்னியின் செல்வன் நாவிலும் சில நாடுகளின் பெயர்களை நாவலாசிரியர் கதையில் விளக்கியுள்ளார். அவை, “மாநக்கவாரம், மாபப்பாளம், மாயிருடிங்கம், கடாரம், இலாமூரிதேசம், ஸ்ரீவிசயம், சாவகம், புட்பகம் ஆகிய நாடுகளை அந்த மகாவீரர் வெற்றி கொள்வார். தெற்கே முந்நீர்ப்பழந்தீவு, பன்னீராயிரமும், கைப்பற்றுவார். மேற்கே கேரளம், குடமலை, கொல்லம் ஆகிய நாடுகள் அவருடைய காலடியில் வந்து பணியும், பிறகு வடதிசை நோக்கிப் புறப்படுவார். வேங்கி, கலிங்கம், இரட்டபரடி, சக்கரக்கோட்;டம், அங்கம், வங்கம், கோசலம், விதேகம், கூர்ஜரம், பாஞ்சாலம் என்னும் நாடுகளுக்குப் படையெடுத்துச் செல்வார்.”(41) இந்நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் பெயர்கள் தற்காலத்தில் எவ்வகை நிலப்பகுதியாக வழங்கப்படுகிறது என்பதை கல்வெட்டு விளக்க உரை என்ற நூலின் வழி பின்வருமாறு அறியலாம்.. வ. எண் . நாடுகளின் பெயர் கள் கல்வெட்டு விளக்க உரையின் படி தற்கால பெயர் -------- ------------------- ----------------------------------------------------------------------------------------------- 1. மாநக்கவாரம் நிக்கோபர் தீவு 2. மாபப்பாளம் தாய்லாந்து 3. மாயிருடிங்கம் மலேசியா நடுப்பகுதி 4. கடாரம் மலேசியா தீபகற்பத்தின் தென்பகுதி 5. இலாமூரிதேசம் சுமத்ரா தீவின் வடபகுதி 6. ஸ்ரீவிசயம் சுமாத்திரா பகுதி 7. சாவகம் ஜாவா 8. புட்பகம் மியான்மார் 9. முந்நீர்ப்பழந்தீ வு மாலத்தீவு 10. கேரளம் தமிழகத்திற்கு அருகில் மேற்கு திசையில் உள்ள மாநிலம் 11. குடமலை குடகுமலை பகுதி 12. கொல்லம் திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்தது 13. வேங்கி ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் ஒரு பகுதி 14. கலிங்கம் ஓடிசா 15. இரட்டபரடி பம்பாய் மாகாணத்தின் தென்பகுதி 16. சக்கரக்கோட்டம் மத்திய மாகாணத்திலுள்ள Baster State 17. அங்கம் பீகாரின் ஒரு பகுதி 18. வங்கம் மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் 19. கோசலம் உத்திரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி மாவட்டமாக தற்போது குறிப்பிடுகின்றனர். 20. விதேகம் தற்கால இந்தியாவின் வடக்கு பீகார் - தெற்கு நேபாள எல்லையில் அமைந்திருப்பதாக குறிப்பிடுகின்றனர். 21. கூர்ஜரம் குஜராத் 22. பாஞ்சாலம் தற்கால தெற்கு உத்தராகண்ட் மற்றும் மேற்கு உத்தரப் பிதேசத்தின் பகுதி⁴² இந்நாவலின் வரிகளில் காணப்பட்ட நிலப்பகுதிகளின் பெயர்களும் இலக்கணங்களில் குறிப்பிட்டுள்ள நிலப்பகுதிகளின் பெயர்களும்;; ஓரளவு ஒரே நிலப்பகுதிகளை குறிக்கிறது என்பதையும், அவற்றின் பெயர்கள் மாற்றம் அடைந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது. இந்நாடுகளின் தற்காலப் பெயர்களை அறியும்போது நாவலில் காணப்பட்ட வரிகளில் சொல்லும் - பொருளும் (சொற்பொருள் மாற்றம்) மாற்றமடைந்துள்ளதை அறியமுடிகிறது. எட்டுவகை உணர்வுகள் மொழியில் ஏற்பட்ட மாற்றங்களைப் போன்று நம் உடலில் ஏற்படும் உணர்வுகளையும் காலத்திற்கு காலம் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கிறோம். உடலில் ஏற்படும் உணர்வுகள் ஒன்றே. ஆனால் உணர்வுகளைக் குறிப்பிடும் மக்களின் வாழ்க்கையானது மாற்றம் என்ற பயணத்தை மேற்கொண்டே முன்னோக்கி நகர்வதால் அவற்றைக் குறிப்பிடும் சொற்களில் மாற்றம் நிகழ்கிறது. இதனை நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப.(43) என்று தொல்காப்பியம் விளக்குகிறது. உடலில் ஏற்படும் உணர்வுளை மெய்ப்பாடுகள் என குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். மேற்கண்ட நூற்பாவின்படி, நகைச்சுவை, அழுகைச்சுவை. இளிவரல் சுவை (தனது நிலையில் தாழ்வுபடுதல், மருட்கை சுவை (வியப்பு), அச்சச்சுவை, பெருமிதச்சுவை (வீரம்), வெகுளிச்சுவை (கடுங்கோபம்), உவகைச்சுவை (இன்ப நுகர்ச்சி) என எட்டு வகையான மெய்ப்பாடுகளை இலக்கணம்வழி உரையாசிரியர் விளக்குகிறார். இச்சொற்கள் பிற்காலத்தில் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வேறு சொல்லாக வழங்கப்படுகிறது. இவை பொன்னியின் சொல்வன் நாவலில் “நந்தினியை உதைத்துத் தள்ளிவிட்டு அவளைத் தாண்டிக்கொண்டு சென்று, வாளின் ஒரே வீச்சில் வீர பாண்டியனுடைய தலையை வெட்டி வீழ்த்தினேன். அந்த மூர்க்க பயங்கரச் செயலை இப்போது நினைத்துப் பார்த்தால் எனக்கு வெட்கமாயிருக்கிறது. ஆனால் அச்சமயம் யுத்த வெறியோடு கூடக் குரோத வெறியும் என்னைப் பிடித்திருந்தது. அந்த ஆவேசத்தில் வீரபாண்டியனைக் கொன்று விட்டு அந்த வீட்டின் வாசற்படியைத் தாண்டும் போது நந்தினியை ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். அவளும் என்னைக் கண்கொட்டாமல் பார்த்தாள். அதைப் போன்ற பார்வை இந்தப் பூவுலகில் நான் கண்டதில்லை. அதில் காமக் குரோத லோப மோக மத மாற்சரியம் என்னும் ஆறுவித உணர்ச்சிகளும் அத்தனை நெருப்பு ஜூவாலைகளாகக் கொழுந்து விட்டு எரிந்தன.”(44) என்ற வரிகளாக இடம்பெற்றுள்ளது. இவ்வரிகளுள் ஆறு விதமான உணர்ச்சிகள் இடம்பெற்றுள்ளதாக நாவலாசிரியர் விளக்குகிறார். இவையே மாற்றத்திற்கு முதல் உதாரணம் எனலாம். ஏனெனில் தொல்காப்பியத்தில் குறிப்பிட்டப்படி எட்டு விதமான உணர்வுகளும், நாவலில் ஆறு விதமான உணர்ச்சிகள் இடம் பெற்றிருப்பதும், இரு உணர்ச்சிகள் காலப்போக்கில் ஒரே சொல்லாக மாற்றம் அடைந்திருப்பதை பின்வருமாறு அறியலாம். வ. எண் சொல் இலக்கணச் சொல் -------- -------- --------------- 1. காம விருப்பம் 2. குரோத கோபம் 3. லோப பேராசை 4. மோக திகைப்பு 5. மத மயக்கம் 6. மாற்சர ியம் பொறாமை இவ்ஆறு வித உணர்ச்சிகளின் பொருளை அகராதியின் வழி கண்டோம். இனி இலக்கண உணர்வுகளை குறிப்பிடும் சொல்லையும், நாவலின் உணர்ச்சிகளைக் குறிப்பிடும் சொல்லையும் மேற்கண்ட சொற்பொருளின் அடிப்படையில் ஒப்பிட்டு வழங்கிக் காணலாம். வ. எண் சொல் பொருள் -------- ------- ------------------------------ 1. காம உவகைச்சுவை, நகைச்சுவை 2. குரோத வெகுளிச்சுவை 3. லோப அச்சச்சுவை 4. மோக மருட்கை சுவை, பெருமிதச் சுவை 5. மத அழுகைச்சுவை 6. மாற்ச ரியம் இளிவரல் சுவை இவற்றில் ஆறுவித உணர்ச்சிகளாக குறிப்பிடப்பட்ட சொற்கள் இலக்கணத்தின் பொருளையே வழங்குகின்றன. ஆனால் சொல்லானது மாற்றம் அடைந்திருப்பதை இதன்மூலம் அறியலாம். மயங்கொலி சொற்கள் மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் ஓரளவு ஒரேமாதிரியான ஒலிப்புமுறையினையுடைய இருவேறுபட்ட எழுத்துக்களின் மாற்றமே ஆகும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின்போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரியானது, எது தவறானது போன்ற மயக்கத்தினை ஏற்படுத்துவதால் இதனை மயங்கொலி சொற்கள் என்கிறோம். இவ்வகையான சொற்கள் பொன்னியின் செல்வன் நாவலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒலிப்பு முறையில் ஒரேவிதமான சொல்லாக இருப்பினும் சொற்பொருளினை அகராதியின் வழி காணும்போது அதன் எழுத்து மாற்றத்தினால் அச்சொற்கள் மயங்கொலி சொற்கள் என்பதை அறியமுடிகிறது. அவையாவன, சந்நதம்: “இப்போது மற்ற வாத்தியங்கள் எல்லாம் நின்றுவிட்டன. உடுக்கின் சத்தம் மட்டும் கேட்டது. மேடைக்கு அருகே நின்று பூசாரி ஆவேசமாக உடுக்கு அடித்தான். தேவராளன் உடம்பில் ஒவ்வோர் அணுவும் பதறி ஆடியது.”சந்நதம் வந்துவிட்;டது" என்று சபையில் ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டார்கள்."(45) சந்நதம் என்ற சொல்லை நாவலின் வரிகளின் வழி காணும்போது அதன் பொருளை ஓரளவு அறியமுடிகிறது. இருப்பினும் அகராதியின்படி அச்சொல்லின் பொருளை அறியும்போது சந்நதம் என்ற சொல்லாக அறியமுடியாமல் சன்னதம் என்ற னகர எழுத்தாக காணப்படுகின்ற சொல்லே பொருள் விளக்கப்படுகிறது. மேலும் அச்சொல் அகராதியின்படி ஆவேசம், தெய்வங்கூறல், வீறாப்பு என்று பொருள்வழங்கப்படுகிறது. இவை தற்காலத்தின் சொல்லின் பொருள் மாற்றம் அடிப்படையில் சந்நதம் என்ற சொல் வழக்கொழிந்து அதன் அகராதி பொருளான தெய்வங்கூறல், ஆவேசம் என்ற சொல்லாகவே வழக்கத்தில் காணப்படுகிறது. இவையும் சொற்பொருளில் ஒரு மாற்றம் எனலாம். மயங்கு பொருள் சொற்கள் இதுவரை மயக்கம் தரக்கூடிய ஒலிப்பு முறையை கொண்ட சொற்களை பற்றி அறிந்துள்ளோம். ஆனால் மயக்கம் தரும் பொருளைக் கொண்ட சொற்கள் இலக்கியங்களில் பெருமளவில் காணப்படுவதில்லை. அவ்வகையான சொற்கள் பொன்னியின் செல்வன் நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகை சொற்களை இரு முறைகளில் காணலாம். நாற்றம்: “அடுப்புப் புகையுடன் நெல்லைப் புழுக்கும் மணமும், கம்பு வறுக்கும் மணமும், இறைச்சி வதக்கும் நாற்றமும் கலந்து வந்தன”(46) இந்நாவலில் பயன்படுத்தியுள்ள வரிகளைக் காணும்போது நாற்றம் என்ற சொல் இருவிதமான பொருள் கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. 1. முதலில் நெல்லை அவிப்பதையும், கம்பை வறுப்பதையும் மணமாகவும், இறைச்சி வதக்குவதை நாற்றமாகவும் ஒரு பொருளாக கொள்ளலாம். 2. அவ்வாறு இன்றி நெல்லையும், கம்பையும் மணமாகப் பொருள் கொண்ட ஆசிரியர் இறைச்சியையும் நாற்றம் என்ற சொல்லின் பொருளான மணமாகவே பொருள் கொண்டதாக மற்றொரு விதத்தில் அறியலாம். ஏனெனில் அக்கால மரபுகளில் கள்ளும், ஊணும் விருந்தினர்களுக்கு அளிக்கும் சிறந்த உணவாகவே கருதப்படுகிறது. நாற்றம் என்ற சொல்லினை மணம் என்ற பொருளில் குறிப்பிடும் சான்றினை பின்வருமாறு காணலாம். சான்று: முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு.(47) அரும்பு தோன்றும் போது இருந்த மணத்தைப்போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் குறிப்பு ஒன்று உள்ளது என்பது இதன் பொருளாகும். இதனடிப்படையில் காணும்போது நாற்றம் என்ற சொல்லும் மணம் என்ற பொருளாகவும், துர்நாற்றம் என்ற தற்கால பொருளாகவும் இருவிதங்களில் அமைந்துள்ளது. இவ்விரு பொருளுமே நாவலின் வரிகளுக்கு பொருந்தக்கூடிய வகையில் மயங்கு பொருளாக அமைந்துள்ளது ஒரு வகையாகும். நிலா மதியத்தை: “இந்தப் பல்லக்கின் திரைகள் அந்தப் பேசும் நிலா மதியத்தை ஒரு நொடியில் கபளீகரம் செய்து விட்டனவே!”(48) இந்நாவலின் வரிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள நிலா மதியத்தை என்ற சொல்லை கவனித்தால் நிலவு என்ற சொல்லும் மதி என்ற சொல்லும் இருவேறுபட்ட சொல்லே அன்றி அதன் பொருள் நிலவையே குறிக்கிறது. அவ்வரிகளை உற்றுநோக்கினால் பல்லக்கில் உரையாடும் பெண்ணின் அழகையே நாவலாசிரியர் வருணித்துள்ளார். ஒரே பொருளைத் தரக்கூடிய இரு சொற்கள் அருகருகே அமைந்து மயங்கு பொருளாக மற்றொரு வகையினை நமக்கு எடுத்தியம்புகிறது. மணங்கு: “நல்ல பாடம் கற்பித்தீர்கள்! ஒவ்வொரு பாடமும் ஒரு மணங்கு நிறையிருக்கும். இப்போது நினைத்தாலும் என் முதுகும் மார்பும் வலிக்கின்றன!”(49) இந்நாவலின் வரிகளில் காணப்படும் மணங்கு என்ற சொல்லிற்கு ஆட்டுக்குட்டி, ஓர் நிறை என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. நாவலின் வரிகளைக் காணும்போது மணங்கு என்ற சொல்லிற்கு அகராதியின் பொருளான ஓர் நிறை என்பதே பொருத்தமாக அமைந்துள்ளது எனலாம். இருப்பினும் நிறை பொருளுடைய சொல்லிற்கு அருகிலும் நிறை என்ற சொல்லே மீண்டும் இடம்பெற்று மயங்குப் பொருளாக அமைந்துள்ளது. இவ்வாறு அமைந்துள்ள மூன்றுவிதமான சொற்களும் பொருள் மாற்றம் என்ற அமைப்பினைக் கொண்டே விளங்குகிறது. திரிசொல் இலக்கணத்தின் அடிப்படையில் எளிதில் பொருள் அறிய இயலாத சொற்களை திரிசொல் (Literary Words) என நன்னூல் விளக்குகிறது. ஒருபொருள் குறித்த பலசொல் ஆகியும் பலபொருள் குறித்த ஒருசொல் ஆகியும் அரிதுஉணர் பொருளன திரிசொல் ஆகும்.(50) ஒரு பொருளைத் தரக்கூடிய பல சொற்களாகவும், பலபொருளை உள்ளடக்கிய ஒரு சொல்லாகவும், அவையன்றி கற்றோரால் மட்டுமே அறியக்கூடிய பொருளையுடைய திரிச்சொற்களாவும் வகைப்படுத்தலாம் என்று நன்னூலின் அடிப்படையிலும் உரையாசிரியர் வழி அறியலாம். இவ்விலக்கணத்தின் வழி நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள சில சொற்கள் பல பொருளைத் தரக்கூடிய ஒரு சொல்லாகவும், அச்சொல்லும் கற்றோரால் மட்டுமே பொருள் அறியக்கூடிய வழியிலும் (அகராதியின்படி) பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொற்களை பின்வருமாறு காணலாம். சாயை: “ஏற்கெனவே மரணத்தின் சாயை படர்ந்திருந்த அவருடைய முகத்தில் இப்போது இலேசான புன்னகை தோன்றியது.”(51) மேற்கண்ட நாவலின் வரிகளில் பயன்படுத்தப்பட்ட சாயை என்ற சொல்லை கண்டோம். அச்சொல்லானது அகராதியின்வழி பொருள் அறிய முற்படும்போது நிழல், பிரதிபிம்பம், நாழிகையறியுஞ் சாயை, சாயாக்கிரகம், நிறம், சூரியன் போன்ற பல பொருள்களைக் கொண்டுள்ளது. ஆனால் இப்பொருள்களுள் இருவிதமான பொருளை அந்நாவலின் சாயை என்ற சொல்லிற்கு பொருள் கொள்ளலாம். 1. நிழல் என்ற பொருளை பொருத்தி பார்த்தோமானால் - “ஏற்கெனவே மரணத்தின் நிழல் (சாயை) படர்ந்திருந்த அவருடைய முகத்தில் இப்போது இலேசான புன்னகை தோன்றியது” என்று அமைகிறது. 2. பிரதிபிம்பம் என்ற பொருளை பொருத்தி பார்த்தோமானால் - “ஏற்கெனவே மரணத்தின் பிரதிபிம்பம் (சாயை) படர்ந்திருந்த அவருடைய முகத்தில் இப்போது இலேசான புன்னகை தோன்றியது” என்று அமைகிறது. இவ்வாறு பல பொருள் குறித்த சொற்கள் பல நாவலில் இடம்பெற்றுள்ளது. அவையாவன: ஏனம்: “இடி முழக்கக் குரலில் முழங்கிக் கொண்டு ஏனம் ஒன்று அதன் பெண் இனத்தோட சென்றது.”(52) இந்நாவலின் வரிகளில் காணப்படும் ஏனம் என்ற சொல்லிற்கு ஓலைக்கலம், பாத்திரம், பானை, கருவி, ஆபரணம், அணிகலம், பன்றி, ஆய்த எழுத்தின் சாரியை, பாவம் என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் பன்றி என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அமைந்துள்ளது எனலாம். பேறு: “தங்களைக் கைப் பிடிக்கும் பேறு எந்த வீர ராஜகுமாரனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ? அதைத் தாங்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்!”(53) இந்நாவலின் வரிகளில் காணப்படும் பேறு என்ற சொல்லிற்கு ஆதாயம், வரம், வெகுமதி, பலன், தகுதி, பெறுகை, சந்தானம் என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் தகுதி, வரம் என்ற இரு வேறுபட்ட பொருள்கள் நாவலின் வரிகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது எனலாம். சேவகம்: “தாயே! இவளுடைய குமாரன் நடத்திச் செல்லும் சைன்யங்கள் பொன்னி நதியின் புது வெள்ளத்;தைப் போல் எங்கும் தங்கு தடையின்றிச் செல்லும். ஜயலஷ்மி அவனுக்குக் கைகட்டி நின்று சேவகம் புரிவாள்.”(54) இந்நாவலின் வரிகளில் காணப்படும் சேவகம் என்ற சொல்லிற்கு பேயுள்ளி, (வைத்திய அகராதி), சேவகத் தொழில், வீரம், யானை துயிலிடம் என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் சேவகத் தொழில் என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அமைந்துள்ளது எனலாம். பிசகு: “நான்தான் சிரித்தேன்! பதற வேண்டாம் சம்புவரையரே!” என்றார் பழுவேட்டரையர். பிறகு, “வணங்காமுடியாரே! தாலி கட்டி மணந்த மனைவியை நான் போகுமிடத்துக்கெல்லாம் அழைத்துப் போவது குற்றமா? அவ்விதம் நான் பல இடங்களுக்கு அழைத்துப் போவது உண்மைதான். ஆனால், இராஜரீகக் காரியங்களில் இளையராணியின் யோசனையைக் கேட்கிறேன் என்று சொல்வது மட்டும் பிசகு. அவ்விதம் நான் ஒரு நாளும் செய்வதில்லை…”(55) இந்நாவலின் வரிகளில் காணப்படும் பிசகு என்ற சொல்லிற்கு தவறு, ஒவ்வாமை, விக்கினம், ஆட்சேபம் என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் தவறு என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அமைந்துள்ளது எனலாம். காந்தி: “பழுவூர் இளையராணியின் பால்வடியும் முகத்தில் இளநகை அரும்பியது. அதுகாறும் குவிந்திருந்த தாமரை மொட்டு சிறிது விரிந்து உள்ளே பதித்திருந்த வெண்முத்து வரிசையை இலேசாகப் புலப்படுத்தியது. அந்தப் புன்முறுவலின் காந்தி நமது இளம் வீரனைத் திக்கு முக்காடித் திணறச் செய்தது.”(56) இந்நாவலின் வரிகளில் காணப்படும் காந்தி என்ற சொல்லிற்கு ஒளி, அழகு, கிரணம், உஷ்ணம், காவிக்கல், வைடூரியம், சிலாசத்து என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் ஒளி, அழகு என்ற இரு வேறுபட்ட பொருள்கள் நாவலின் வரிகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது எனலாம். பரிகாசம்: " ‘அந்த மூதாட்டி சொற்படி இறங்கிச் சென்று அவள் தரும் உணவைச் சாப்பிடலாமா?’ என்று ஒருகணம் சிந்தித்தான். ‘அப்படிச் சென்றால் அங்கே நின்ற இளநங்கைமார்கள் பலரும் அவனைச் சூழ்ந்துகொண்ட பரிகசித்துச் சிரிப்பார்கள் என்பது நிச்சயம்.’ "(57) இந்நாவலின் வரிகளில் காணப்படும் பரிகாசம் என்ற சொல்லிற்கு பகிடி, நிந்தனை என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் நிந்தனை என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அமைந்துள்ளது எனலாம். வனப்பு: “இந்த அமுதத் தமிழ்ப் பாடல்களை எங்கேயோ கேட்டிருக்கிறோமல்லவா? ஆம், ‘சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப்பாடல்கள் இவை’ எனினும், இந்தப் பெண்கள் பாடும் போது முன் எப்போதுமில்லாத வனப்பும் கவர்ச்சியும் பெற்று விளங்குகின்றன.”(58) இந்நாவலின் வரிகளில் காணப்படும் வனப்பு என்ற சொல்லிற்கு அழகு, அலங்காரம் என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் அழகு என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அமைந்துள்ளது எனலாம். அசூயை: “இப்போது தங்களில் ஒருத்தியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவைப் பிராட்டி கரையில் இறங்கியதும் அவர்களுடைய கண்களில் ஏமாற்றமும் அசூயையும் தோன்றின.”(59) இந்நாவலின் வரிகளில் காணப்படும் அசூயை என்ற சொல்லிற்கு பொறாமை, அவதூறு என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் பொறாமை என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அமைந்துள்ளது எனலாம். பிரமை: “வேறு எதற்கு? உன்னைப்பற்றிக் கேட்பதற்காகத் தான்! சில மாத காலமாக நீ இப்படிப் பிரமை பிடித்தவள் போலும் உடல் மெலிந்தும் வருகிறாயா? உனக்கு எப்போது பிரமை நீங்கி உடம்பு தேறும் என்று கேட்பதற்காகத்தான்?”(60) இந்நாவலின் வரிகளில் காணப்படும் பிரமை என்ற சொல்லிற்கு கலக்கம், அறியாமை, அறிவினொடுக்கம், பைத்தியம் என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் கலக்கம், பைத்தியம் என்ற இரு வேறுபட்ட பொருள்கள் நாவலின் வரிகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது எனலாம். ஆரூடம்: “உலக விவகாரங்களை அறிந்து அதற்கேற்பவும் ஆரூடம் சொல்லுவார்!”(61) இந்நாவலின் வரிகளில் காணப்படும் ஆரூடம் என்ற சொல்லிற்கு ஏறுதல், நினைத்ததை அறிந்து கூறும் சோதிடம் என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் நினைத்ததை அறிந்து கூறும் சோதிடம் என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அமைந்துள்ளது எனலாம். மையல்: " “அது சாதாரண மயக்கமில்லையாம்: மையல் மயக்கமாம்!” என்றாள் செந்நிரு."(62) இந்நாவலின் வரிகளில் காணப்படும் மையல் என்ற சொல்லிற்கு மயக்கம், மோகம், ஊமத்தஞ்செடி என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் மோகம் என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அமைந்துள்ளது எனலாம். மதுரம்: “அவளுடைய குரலிலேதான் என்ன மதுரம்! இவள் ஓர் அபூர்வமான அழகிதான்.”(63) இந்நாவலின் வரிகளில் காணப்படும் மதுரம் என்ற சொல்லிற்கு இனிமை, நாற்கவியினொன்று, முந்திரிகைக்கொடி, செஞ்சந்தனம், மத்திம இசை, அதிமதுரம் என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் இனிமை என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அமைந்துள்ளது எனலாம். மந்தி: “வியர்ந்து விறுவிறுத்துப் போயிருந்த வந்தியத்தேவன் தன்னை மீறிய கோபத்தினால்,”உன்னைப் போன்ற மந்தியை நான் பார்த்ததேயில்லை!" என்றான்."(64) இந்நாவலின் வரிகளில் காணப்படும் மந்தி என்ற சொல்லிற்கு கருங்குரங்கின் பெண், பெண்முசு, பெண்குரங்கு, வண்டு, குரங்கு என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் குரங்கு என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அமைந்துள்ளது எனலாம். அந்தகாரம்: “நாலாபுறமும் அந்தகாரம் சூழ்ந்து வந்தது.”(65) இந்நாவலின் வரிகளில் காணப்படும் அந்தகாரம் என்ற சொல்லிற்கு இருள், நரகம், மனைவிருள் என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் இருள் என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அமைந்துள்ளது எனலாம். சிகை: " “அடே! நாவிதர் தெருவுக்குச் சென்று ஒரு நாவிதனை அழைத்து வாருங்களடா! கத்தியை நன்றாய்த் தீட்டிக் கொண்டு வரச் சொல்லுங்கள்! இவனுடைய சிகையை ஆணி வேரோடு களைந்தெறியச் சொல்லலாம்!” என்றார் ஒரு பட்டர்."(66) இந்நாவலின் வரிகளில் காணப்படும் சிகை என்ற சொல்லிற்கு குடுமி, தழற்சிகை, மயிற் சூடு, உண்டிச்சிகை என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் குடுமி என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அமைந்துள்ளது எனலாம். அதம்: " “ஐயா! ஐயா! ஒற்றை யானை வருகிறது! மத யானை! மரங்களை முறித்து அதம் செய்துகொண்டு வருகிறது!” என்று கூவினான்."(67) இந்நாவலின் வரிகளில் காணப்படும் அதம் என்ற சொல்லிற்கு தாழ்வு, பள்ளம், பாதாளம், சங்காரம் என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் சங்காரம் என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அமைந்துள்ளது எனலாம். திருணம்: “தனக்கோ மற்றவர்களுக்கோ நேரக்கூடிய அபாயங்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் உயிரைத் திருணமாக மதித்துப் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் நடந்து கொண்டிருக்க முடியுமா?”(68) இந்நாவலின் வரிகளில் காணப்படும் திருணம் என்ற சொல்லிற்கு துரும்பு, புல் என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் துரும்பு என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அமைந்துள்ளது எனலாம். மேற்கண்ட சொற்கள் மற்றும் அகராதியின் படி அவற்றின் பொருளினையும் கண்டோமானால் சொற்பொருள் மாற்றமானது நிகழ்ந்திருப்பதையும், அம்மாற்றம் பொருளே சொல்லாக காலப்போக்கிற்கு ஏற்ப வழங்கப்பட்டு வருவதையும் அறிய முடிகிறது. ஆங்கில உச்சரிப்புடைய சொல் பொதுவாக தற்காலத்தில் ஆங்கில சொற்களை அதன் உச்சரிப்பு மாறாமல் தமிழ் மொழியின் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. நாவல் என்ற ஒரு இலக்கியமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏனெனில் நாவலின் மொழி அமைப்பானது வகைப்பாட்டிற்கு ஏற்ப வட்டாரவழக்கு அடிப்படையில் அமைவது இயல்பானதாகும். ஆனால் வரலாற்று நாவல் மொழிநடையில் இத்தகைய ஆங்கில உச்சரிப்புடைய தமிழ் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது வியப்பிற்குரியதாகும். நாம் ஆய்விற்கு பயன்படுத்தும் பொன்னியின் செல்வன் நாவலிலும் இவ்வகையான சொல் காணப்படுகிறது. பலகணி: “அரண்மனையின் ஒரு கோடியில் இருந்த மேல் மாடத்து அறையில் அவன் இருந்து வந்தான். அதையொட்டி வடவாறு சென்று கொண்டிருந்தது. அங்கே அரண்மணையின் வெளிச்சுவரே தஞ்சைபுரிக் கோட்டையின் வெளிச்சுவராகவும் அமைந்திருந்தது. அந்தப் பலகணி வழியாகக் கீழே குதித்தால் வடவாறு வெள்ளத்தில் குதித்துவிடலாம்.”(69) ஆங்கிலத்தில் Balcony என்று பயன்படுத்தக்கூடிய சொல்லானது மேற்கண்ட நாவலின் வரிகளில் பலகணி என்றே ஆங்கில சொல்லின் தமிழ் உச்சரிப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இதன் பொருளை அகராதியின்வழிக் காணும்போது சாளரம் என்று அறியப்படுகிறது. இதன்படி தமிழ்மொழி மட்டுமின்றி ஆங்கிலத்தோடு தொடர்புடைய சொல்லாகவும் காலத்திற்கு ஏற்ப சொல்லும் பொருளும் மாற்றமடைந்துள்ளதை அறியமுடிகிறது. அகராதிப் பொருளுடன் பொருந்தா சொற்கள் இவ்வாய்வில் இதுவரை நாம் கண்ட சொற்கள் யாவும் அகராதியின் படி பொருள் கொண்டு நாவலிலும் இலக்கணத்திலும் சொற்பொருள் மாற்றம் எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பதைக் கண்டோம். ஆனால் அகராதியின் பொருளுடன் பொருந்தாத சில சொற்களும் நாவலில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சில: பங்கம்: “அவர்களுடைய அழகு, முற்றும் துறந்த முனிவர்களின் தவத்தையும் பங்கம் செய்ததாகக் கேட்டதுண்டு.”(70) இந்நாவலின் வரிகளில் காணப்படும் பங்கம் என்ற சொல்லிற்கு வேறுபாடு, தோல்வி, வெட்கம், முடம், ஈனம், மானபங்கம், அலை, குளம், துண்டு, குழைசேறு, பாவம், புழுத என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் அகராதியின் எவ்வித பொருளும் பொருந்தாமல் தற்காலத்தின் பேச்சு சொல்லான நாசம் என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அறியமுடிகிறது. கொலு: “இராமேசுவரப் பெருந் தீவையடுத்த சிறிய தீவுகளில் ஒன்றில், ஒரு பழமையான மண்டபத்தில், அநிருத்தப் பிரம்மாதிராயர் கொலுவீற்றிருந்தார்.”(71) இந்நாவலின் வரிகளில் காணப்படும் கொலு என்ற சொல்லிற்கு நிமிர்ச்சி, சமுகம், சேவை என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் கொலு என்ற சொல்லிற்கு கொலுமண்டம் என்ற அதே பொருளே சிறு மாற்றம் அடைந்து பொருந்துவதைக் காணலாம். குழுமி: “கோட்டைக்குள்ளே அரண்மனைகளிலும், வெளியில் ஊர்ப்புறங்களிலும் பல கோலாகல நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அவற்றைக் கண்டுகளிக்கப் பெருந்திரளாக மக்கள் குழுமிக் கொண்டிருந்தார்கள்.”(72) இந்நாவலின் வரிகளில் காணப்படும் குழுமி என்ற சொல்லிற்கு மதகு, பாத்திரத்தின் மூக்கு என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் அகராதியின் எவ்வித பொருளும் பொருந்தாமல் தற்காலத்தின் பொருளான கூடிக் (கூட்டம்) என்பதே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. பிச்சி: " “முதலில் உத்தேசித்தபடி மணிமேகலையை இவனுக்கு மணம் செய்து வைக்காமற் போனேனே? அப்படிச் செய்திருந்தால், இன்றைக்கு அவள் இவ்வாறு பிச்சியாகப் போயிருக்க மாட்டாள் அல்லவா?” என்றான் கந்தமாறன்."(73) இந்நாவலின் வரிகளில் காணப்படும் பிச்சி என்ற சொல்லிற்கு ஓர் மல்லிகைச்செடி, சிறு சண்பகம், ஓர் பெண்பேய் என்ற பல பொருள்கள் உள்ளன என்பதை அகராதியின் வழி அறிய முடிகிறது. அவற்றுள் அகராதியின் எவ்வித பொருளும் பொருந்தாமல் தற்காலத்தின் பேச்சு சொல்லான பைத்தியம் என்ற பொருளே நாவலின் வரிகளுக்கு பொருத்தமான பொருளாக அறியமுடிகிறது. இலக்கணத்திற்கு சொல்லே முதன்மை தமிழ்மொழியின் இன்றியமையாத அங்கமான இலக்கணத்தின் கட்டமைப்பு காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை உள்ளடக்கி புதிய இலக்கண வடிவமாக உருவாக்கமடைகிறது. அத்தகைய இலக்கணமும் ஒரு சொல் உருவாகிய அதே வடிவத்தினைக் கொண்டே பயணிக்க வேண்டும் என்ற விதியினை வகுக்கவில்லை. காலம், பிறமொழி கலப்பு, சமுதாய மாற்றம், பல்துறை பெருக்கம் என்ற மாற்றங்களுக்கு ஏற்ப மொழியினையும் அவ்வளர்ச்சி பாதைக்கு முன்னேற்றுவதையே இலக்கணமும் விரும்புகிறது. மாற்றம் என்ற வளர்ச்சியை தம்முள் ஏற்று சிறப்புற்று விளங்கும் தமிழ் இலக்கணத்தினையும், சொல்லானது மாற்றத்திற்கு உட்பட்டாலும் அதன் சிறப்பு இழக்காமல் நிலைத்து நிற்பதும், இவ்வியலின் வழி காணமுடிந்தது. மேலும் சொல்லை ஒரு கருவியாக பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். அச்சொல்லானது சாதாரணமாக மாற்றங்களை ஏற்பதில்லை. சமுதாய வளர்ச்சியே இத்தகைய சொல்லின் மாற்றத்திற்கு அடிப்படை எனலாம்.   சான்றெண் விளக்கம் 1. இலக்கணத்தொகை, எழுத்து - முன்னுரை 2. பேரகத்தியத் திரட்டு மேற்கோள், நூற். - 1 3. நன். சொல். நூற். - 141 4. கடிகாசலம், சொற்பொருட்கோட்பாடுகள், பக். - 24 5. எச். சித்திரபுத்திரன், அகராதியியல் கையேடு, பக். - 35 6. கடிகாசலம், சொற்பொருட்கோட்பாடுகள், பக். - 2 7. மேற்படி, பக். - 2 8. மேற்படி, பக். - 2 9. நன். சொல். நூற். - 462 10. மேற்படி, நூற். - 7 11. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 108 12. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 5, பக். - 656 13. தொல். சொல். நூற். - 152 14. மேற்படி, நூற். - 153 15. மேற்படி, நூற். - 154 16. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 2, பக். - 63 17. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 7 18. தொல். சொல். நூற். - 17 19. தொல். மூல. கரு. நூற். - 60 20. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 84 21. தொல். மூல. கரு. நூற். - 880 22. மேற்படி, நூற். - 884 23. நன். சொல். நூற். - 274 24. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 9 25. மேற்படி, பக். - 14 26. மேற்படி, பக். - 13 27. மேற்படி, பக். - 82 28. மேற்படி, பக். - 144 29. மேற்படி, பக். - 9 30. மேற்படி, பக். - 58 31. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 5, பக். - 609 32. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 20 33. மேற்படி, பக். - 267 34. நன். எழு. நூற். - 104 35. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 9 36. மேற்படி, பக். - 30 37. தொல். மூல. கரு. நூற். - 883 38. நன். சொல். நூற். - 273 39. நன். சொல். பக். - 20 40. மேற்படி, பக். - 21 41. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 2, பக். - 73 42. கல்வெட்டு விளக்க உரையிலிருந்து 43. தொல். மூல. கரு. நூற். - 1197 44. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 347 45. மேற்படி, பக். - 37 46. மேற்படி, பக். - 99 47. திருக்குறள், குறிப்பு அறிவுறுத்தல் அதிகாரம், குறள் - 1274 48. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 143 49. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 2, பக். - 205 50. நன். சொல். நூற். - 272 51. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 5, பக். - 548 52. மேற்படி, பக். - 580 53. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 67 54. மேற்படி, பக். - 75 55. மேற்படி, பக். - 52 56. மேற்படி, பக். - 141 57. மேற்படி, பக். - 9 58. மேற்படி, பக். - 65 59. மேற்படி, பக். - 66 60. மேற்படி, பக். - 67 61. மேற்படி, பக். - 89 62. மேற்படி, பக். - 103 63. மேற்படி, பக். - 155 64. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 2, பக். - 36 65. மேற்படி, பக். - 43 66. மேற்படி, பக். - 65 67. மேற்படி, பக். - 175 68. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 5, பக். - 658 69. மேற்படி, பக். - 535 70. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 144 71. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 2, பக். - 68 72. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 2, பக். - 93 73. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 5, பக். - 656     இயல் - 3 இலக்கியச் சான்றுகளும் சொற்பொருள் மாற்றமும் இலக்கியம் என்ற துறையானது சொல் என்ற கட்டமைப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டு பல்கி பெருகி வளர்ந்துள்ளது எனலாம். காலம் மாற்றம் என்ற சூழ்நிலை மட்டுமின்றி கருத்து மாற்றம் என்ற கொள்கைகளும் இலக்கியங்களுள் புகுத்தப்பட்டுள்ளதால் இலக்கியங்கள் வளர்ச்சியினையும் பல்வேறு மாற்றங்களையும் உள்ளடக்கியுள்ளது. அம்மாற்றங்களை நூல்களின் அடிப்படையில் காணும்போது, சங்க இலக்கியத்திற்கு முன்னரே தொல்காப்பியம் என்ற இலக்கண நூலானது உருவாகி அவற்றை தொடர்ந்தே பல நூல்கள் உருவாக்கமடைந்தது என்பதை சங்க இலக்கிய செய்யுட்களின் எடுத்துக்காட்டின்படி (உரையாசிரியர்களின் கூற்றுப்படி) அறிய முடிகிறது. மேலும் தொல்காப்பியக் காலம் முதல் தற்காலம் வரையிலும் இலக்கியமானது பல்வேறு வளர்ச்சி நிலையினை அடைந்துள்ளது. அவையே இலக்கிய மாற்றம் அல்லது இலக்கிய வளர்ச்சி எனப்படுகிறது. அத்தகைய இலக்கிய வளர்ச்சியை பின்பற்றியே மொழியானது தன் கட்டமைப்பினை (சொல்லினை) மாற்றங்களுக்கு உட்படுத்தி மாற்றியமைத்து பயணிக்கிறது. அம்மாற்றங்களையே சொற்பொருள் மாற்றம் என்கிறோம். ஒரு இலக்கியமானது மற்றொரு இலக்கிய வகையாக வளர்ச்சியடைய பல்வேறு காரணிகளை தம்முள் ஏற்றுக்கொண்டு மாற்றமடைந்து காலத்துடன் பயணிக்கிறது. அவ்வாறு பயணிக்கும் இலக்கியமானது ஒரே வகையான சொல்லின் அமைப்பையோ அல்லது ஒரு பொருளைக் கொண்ட வேறுவகையான சொல்லினையோ கொண்டு தன்நிலையினை மாற்றியமைக்கிறது. முன்னரே கூறியபடி 17-ஆம் நூற்றாண்டு வரை, இலக்கியத்தின் அடிப்படையில் காணும் போது (எழுத்து வழக்கில்) குறிப்பிடத்தக்க அளவிற்குச் சொற்பொருள் மாற்றங்கள் இல்லை. இருப்பினும், மேலைநாட்டினரின் வருகைக்குப் பின்னர், இலக்கிய வரலாற்றில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இலக்கிய வரலாற்றில், மட்டுமின்றி மொழிவரலாற்றிலும் இம்மாற்றத்தை நன்கு உணர முடிந்தது. அச்சு இயந்திரங்களின் வருகையினாலும், உரைநடையின் தோற்றத்தாலும், சங்க இலக்கியம் என்ற பாட்டுடைச் செய்யுளானது, காலத்திற்கு ஏற்ப இலக்கிய வளர்ச்சி பெற்று, மேலைநாட்டு இலக்கிய அமைப்பை பின்பற்றி, நாவல் சிறுகதை போன்ற கதை இலக்கியங்களாக மாற்றமடைந்துள்ளது. அன்று வரை எண்ணிப்பாராத பேச்சுத் தமிழுக்கு, மேலை நாட்டு அறிஞர்களான பெஸ்கி, போப், கால்டுவெல் போன்றோர் முதன்மையான இடத்தைக் கொடுத்தமையால்தான் தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் சொற்பொருளில் ஏற்பட்ட பல மாற்றங்களை உணர முடிந்தது. காலச்சூழல் சமுதாய மாற்றம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப, தற்காலத் தமிழிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றுள் கதை இலக்கியமான நாவல் என்ற இலக்கிய வகையினுள் பொன்னியின் செல்வன் என்ற நாவலில் காணப்படும் சொற்களை இலக்கியத்தில் அச்சொல் எவ்விதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் தற்காலத்தில் அச்சொல்லானது எவ்வாறு மாறுபட்டுள்ளது என்பதையும் இவ்வியலின் வழி ஆராயலாம். சொல்லும் மாறுபட்ட பொருளும் காத தூரம்: “தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காத தூரத்தில் அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது”.(1) இந்நாவலின் வரிகளைக் காணும்போது காத தூரம் என்ற சொல்லின் பொருளானது குறிப்பிட்ட தொலைவுடைய ஒரு இடத்தினைக் (அகராதியின்வழி) குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: ஆறைங் காதம்நம் மகனாட் டும்பர் நாறைங் கூந்தல் நணித்தென(2) என்ற சிலப்பதிகாரப் பாடலின் வழி காணும்போது காதம் என்ற சொல்லானது குறிப்பிட அளவு தொலைவினைக் குறிக்கும் சொல்லாகும். இலக்கியச் சொல்லானது தன் நிலை மாறாது அதே சொல்லுடன் இலக்கிய வளர்ச்சியடைந்த கதை இலக்கியமான நாவலிலும் பயன்படுத்தப்பட்டு அதே பொருளை கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. இருப்பினும் இவ்விரு இலக்கியங்களிலும் பயன்படுத்தப்பட்ட இச்சொல் தற்காலத்தில் வழக்கொழிந்து வேறு சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. தற்காலப்பொருள் - கிலோமீட்டர் அரம்பை: “வந்தியத்தேவனின் யௌவனக் கண்களுக்கு அந்த ஏரிக்கரையில் நின்ற நங்கைகள் எல்லாரும் அரம்பைகளாகவும் மேனகைகளாகவுமே தோன்றினார்கள்!”(3) இந்நாவலின் வரிகளைக் காணும்போது அரம்பை என்ற சொல்லின் பொருளானது தேவலோகத்து மங்கைகளைக் (அகராதியின்வழி) குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: நாடக மயிலோடு ஆடி அரம்பையர் வெறுத்து நீத்த(4) என்ற கம்பராமாயண வரிகளைக் காணும்போது அரம்பை என்ற சொல்லானது தெய்வ மகளிர் என்ற பொருளினைக் (உரையின் வழி) குறிக்கிறது. இரு இலக்கியங்களிலும் ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் வேறு சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது. தற்காலப் பொருள் - அழகிய பெண்கள் தினவு: “எதற்காக ஐயா நீங்கள் சண்டை போடுகிறீர்கள்? வேறு வேலை ஒன்றும் உங்களுக்கு இல்லையா? சண்டைக்குத் தினவு எடுத்தால் ஈழ நாட்டுக்குப் போவதுதானே? அங்கே பெரும் போர் நடந்து கொண்டிருக்கிறதே?” என்றான்.(5) இந்நாவலின் வரிகளைக் காணும்போது தினவு என்ற சொல்லின் பொருளானது அதீத உணர்வைக் (அகராதியின்வழி) குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: இந்துவால் யாக்கை சொறிந்து தீர்வுறு தினவினர்:(6) என்ற கம்பராமாயண வரிகளைக் காணும்போது தினவு என்ற சொல்லானது போர் உணர்வு என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. இரு இலக்கியங்களிலும் ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் வேறு சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது. தற்கால பொருள் - திமிர் கட்டியம்: "“சூராதி சூரர், வீரப்பிரதாபர், மாற பாண்டியன் படையை வீறுகொண்டு தாக்கி வேரோடு அறுத்த வெற்றி வேல் உடையார், இருபத்துநாலு போர்களில் சண்டையிட்டு, அறுபத்து நான்கு விழுப்புண்களைப் பெற்ற திருமேனியர்: சோழநாட்டுத் தனாதிகாரி, தானிய பண்டார நாயகர், திறை விதிக்கும் தேவர், பெரிய பழுவேட்டரையர் விஜயம் செய்கிறார்! பராக்! பராக்! வழி விடுங்கள்!” என்று இடி முழக்கக் குரலில் கட்டியம் கூறுதல் கேட்டது."(7) இந்நாவலின் வரிகளைக் காணும்போது கட்டியம் என்ற சொல்லின் பொருளானது அரசர் முதலியோரின் வருகையின் முன்னறிவிப்பாக அவரைக் குறித்துச் சொல்லும் புகழ்த்தொடர் (அகராதியின்வழி) என்பதை அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: இருடியோர்கள் கட்டியம்பாட(8) என்ற திருப்புகழின் வரிகளைக் காணும்போது கட்டியம் என்ற சொல்லானது அறிவிப்பது என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. இரு இலக்கியங்களிலும் ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் வேறு சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது. தற்கால பொருள் - அறிமுகம் அல்லது அறிமுகவுரை சிங்காதனம்: “ஆனால் இளவரசன் இராஜாதித்யன் பட்டத்துக்கு வராமலும் சந்ததியில்லாமலும் இறந்து விடவே, இவனுடைய இளையசகோதரர் கண்டராதித்த தேவர் தந்தையின் விருப்பத்தின்படி ராஜகேசரி பட்டத்துடன் சிங்காதனம் ஏறினார்.”(9) இந்நாவலின் வரிகளைக் காணும்போது சிங்காதனம் என்ற சொல்லின் பொருளானது அரியணை (அகராதியின்வழி) குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: தண்டுஞ் சிவிகையுஞ் சிங்காதனமுந் தமிழ்க்களித்த கண்டன்(10) என்ற தனிப்பாடற்றிரட்டின் வரிகளைக் காணும்போது சிங்காதனம் என்ற சொல்லானது அரியணை என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. இரு இலக்கியங்களிலும் ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் வேறு சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது. தற்கால பொருள் - இருக்கை (முதல்வர் போன்று மாநிலத்தின் அல்லது நாட்டின் முதற்குடிமகனின் பதவியின் அடிப்படையில் அமர்த்தப்படும் இடம்) வாவி: “பசும்பயிர் வயல்களும், இஞ்சி மஞ்சள் கொல்லைகளும், கரும்பு வாழைத் தோட்டங்களும், தென்னைக் கமுகுத் தோப்புகளும், வாவிகளும், ஓடைகளும், குளங்களும், வாய்க்கால்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தன.”(11) இந்நாவலின் வரிகளைக் காணும்போது வாவி என்ற சொல்லின் பொருளானது நீர்நிலைகளைக் (அகராதியின்வழி) குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: வாவியுறை நீரும் வடநிழலும் பாவகமும்(12) என்ற நீதிவெண்பாவின் வரிகளைக் காணும்போது வாவி என்ற சொல்லானது குளம் என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. இரு இலக்கியங்களிலும் ஓரே பொருளான நீர்நிலையைக் குறிக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் வேறு சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது. தற்கால பொருள் - ஆறு, ஏரி இலச்சினை: “பல்லக்கை மூடியிருந்த வெளித்திரையில் பனை மரத்தின் இலச்சினைச் சித்திரம் காணப்பட்டது! ஆஹா! கடம்பூரிலிருந்து வருகிற பல்லக்குத்தான் இது!”(13) இந்நாவலின் வரிகளைக் காணும்போது இலச்சினை என்ற சொல்லின் பொருளானது முத்திரையைக் (அகராதியின்வழி) குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: புன்புலவ ழியடைத்த ரக்கிலச்சி னைசெய்து,(14) என்ற திருச்சந்தத்தின் வரிகளைக் காணும்போது இலச்சினை என்ற சொல்லானது முத்திரை என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. இரு இலக்கியங்களிலும் ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் வேறு சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது. தற்கால பொருள் - அடையாளம் அல்லது முத்திரை மயன்: “அதிசய சக்தி வாய்ந்த மந்திரவாதியான மயன் புதிதாக நிர்மாணித்த நகரம் இது. இந்தப் புதிய நகருக்குள் பிரவேசிக்கும்போதே ஒரு புதிய உற்சாகம் பிறந்தது:”(15) இந்நாவலின் வரிகளைக் காணும்போது மயன் என்ற சொல்லின் பொருளானது தச்சன் (அகராதியின்வழி) குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: மயன் விதித்தன்ன மணிக்கா லமளிமிசை(16) என்ற சிலப்பதிகாரத்தின் வரிகளைக் காணும்போது மயன் என்ற சொல்லானது தெய்வ தச்சன் என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. இரு இலக்கியங்களிலும் ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் வேறு சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது. தற்கால பொருள் - சிற்பி பதிதன்: “சொல்லுகிறேன் திருமலை! இனிமேல் நம்முடைய உறவெல்லாம் கோயிலுக்கு வெளியே இருக்கட்டும். நீ பதிதன். சிவ நிந்தனை செய்யும் சமயப் பிரஷ்டன்: இந்தச் சிவாலயத்திற்குள் நீ அடி எடுத்து வையாதே!”(17) இந்நாவலின் வரிகளைக் காணும்போது பதிதன் என்ற சொல்லின் பொருளானது வர்ணாசிரமக் கொள்கைகளை மீறி சமய நிந்தனைச் செய்பவரைக் (அகராதியின்வழி) குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: பூத்தவள் பதிதன் இழிஞனை அழத்தைப் புத்தரைத் திகிரிமேற் பொறித்த, மூர்த்தியைத் தீண்டல் காண்டலும் விலக்கே(18) என்ற காஞ்சிபுராணம் வரிகளைக் காணும்போது பதிதன் என்ற சொல்லானது ஒழுக்கமில்லாதவன் என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. இரு இலக்கியங்களிலும் வேறு பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் வேறு சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது. தற்கால பொருள் - சமய சார்பாளன் (மதவாதி) புளகாங்கிதம்: "“ரொம்ப நல்லது. படகிலேறிக் கொஞ்ச தூரம் ஓடையில் போய்விட்டு வரலாம். வாருங்கள்! இவருடைய கதையை முழுவதும் நான் கேட்க வேண்டும்!” என்றாள். வல்லவரையன் புளகாங்கிதம் அடைந்தான்."(19) இந்நாவலின் வரிகளைக் காணும்போது புளகாங்கிதம் என்ற சொல்லின் பொருளானது பெருமகிழ்ச்சியைக் (அகராதியின்வழி) குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: நெடிய நேரம் உடல்மயிர்க்கால் புளகாங்கிதம் பெருகி(20) என்ற கண்ணப்பநாயனார் புராணத்தின் வரிகளைக் காணும்போது புளகாங்கிதம் என்ற சொல்லானது பரவசம் என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. இரு இலக்கியங்களிலும் வேறு பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் எவ்வகை சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது என்பதைக் காணலாம். தற்கால பொருள் - பெருமை முகமன்: “பெண்ணரசிகள் இருவரையும் கண்டதும் அவர்கள் முகமலர்ந்து கைகூப்பி நின்று முகமன் செலுத்தினார்கள்.”(21) இந்நாவலின் வரிகளைக் காணும்போது முகமன் என்ற சொல்லின் பொருளானது உபசாரம் (அகராதியின்வழி) குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: முகிழ்நகைக் கிளவி முகமன் கூறி(22) என்ற உதயண குமார காவியத்தின் வரிகளைக் காணும்போது முகமன் என்ற சொல்லானது என்ற உபசாரம் பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. இரு இலக்கியங்களிலும் ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் வேறு சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது. தற்கால பொருள் - வரவேற்பு மாற்சரியம்: “அவளும் என்னைக் கண்கொட்டாமல் பார்த்தாள். அதைப் போன்ற பார்வை இந்தப் பூவுலகில் நான் கண்டதில்லை. அதில் காமக் குரோத லோப மோக மத மாற்சரியம் என்னும் ஆறுவித உணர்ச்சிகளும் அத்தனை நெருப்பு ஜீவாலைகளாகக் கொழுந்து விட்டு எரிந்தன.”(23) இந்நாவலின் வரிகளைக் காணும்போது மாற்சரியம் என்ற சொல்லின் பொருளானது மனதின் மாறுபட்ட உணர்வைக் (அகராதியின்வழி) குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: பாபமே புரியும் லோபமே வருமோ பயனில்மாற் சரியம்வந் திடுமோ(24) என்ற திருவருட்பாவின் வரிகளைக் காணும்போது மாற்சரியம் என்ற சொல்லானது மாறுபட்ட உணர்வு என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. இரு இலக்கியங்களிலும் ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் வேறு சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது. தற்கால பொருள் - பொறாமை இறையிலி: "“நமது திருமகளார் குந்தவைப் பிராட்டிக்கு நாம் சர்வமானியமாகக் கொடுத்திரு;நத நல்லூர் மங்கலம் கிராமத்தின் வருமானம் முழுவதையும் இளைய பிராட்டியார் தஞ்சைப் புறம்பாடி ஆதுர சாலைக்கு அளிக்க உவந்திருப்பதால், அந்த ஊர் நன்செய் நிலங்கள் யாவற்றையும் ‘இறையிலி’ நிலமாகச் செய்திருக்கிறோம்” என்று அந்த ஓலையில் சக்கரவர்த்தி தெரியப் படுத்தியிருந்தார்."(25) இந்நாவலின் வரிகளைக் காணும்போது இறையிலி என்ற சொல்லின் பொருளானது வரி நீக்கப்பட்ட நிலம் (அகராதியின்வழி) என்பதை குறிக்கிறது. இலக்கியச்சான்று: அடிசில்வைகல் ஆயிரம் அறப்புறமும் ஆயிரம்(26) என்ற சீவகசிந்தாமணியின் வரிகளில் காணப்படும் அறப்புறமும் என்ற சொல்லின் பொருளே அறத்திற்குவிட்ட இறையிலி நிலங்களும் என்ற பொருளில் நூலின் உரைவழி அறியமுடிகிறது. ஒரு இலக்கியத்தில் காணப்படும் இறையிலி என்ற சொல் வேறு இலக்கியத்தில் பொருளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சொல்லானது தற்காலத்தில் வேறு சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது. தற்கால பொருள் - கோயில் நத்தம் பொருளே சொல்லாதல் பூமாரி: “இரு கரைகளிலும் வளர்ந்திருந்த புன்னை மரங்களும், கடம்ப மரங்களும், முத்து மலர்களையும், இரத்தினப் பூக்களையும் வாரிச் சொரிந்த அருமையை எவ்விதம் வர்ணிப்பது? தேவர்கள் பொழியும் பூமாரியும் இதற்கு இணையாகுமா?”(27) இந்நாவலின் வரிகளைக் காணும்போது பூமாரி என்ற சொல்லின் பொருளானது பூ மழையைக் (அகராதியின்வழி) குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: மிகைஅணங்கு மெய்ந்நிறீஇ மீளிமறவர் புகை அணங்கப் பூமாரி சிந்தி(28) என்ற புறப்பொருள் வெண்பாமாலையின் வரிகளைக் காணும்போது பூமாரி என்ற சொல்லானது பூ மழை என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. இரு இலக்கியங்களிலும் ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் வேறு சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது. தற்கால பொருள் - பூ மழை ஆக்ஞை: “சக்கரவர்த்தியின் ஆக்ஞையின்படி நடப்பது உங்கள் கடமை”(29) இந்நாவலின் வரிகளைக் காணும்போது ஆக்ஞை என்ற சொல்லின் பொருளானது ஆணை (அகராதியின்வழி) குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: கோவேனாவிழ ஆக்ஞையேபுரி(30) என்ற நூற்றெட்டுத் திருப்புகழின் வரிகளைக் காணும்போது ஆக்ஞை என்ற சொல்லானது ஆணை என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. இரு இலக்கியங்களிலும் ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் பொருளே சொல்லாக மாற்றமடைந்து பயன்பாட்டில் வழங்கப்படுகிறது எனலாம். தற்கால பொருள் - ஆணை புரவி: “இளவரசர் மதுராந்தகத் தேவர் வெள்ளைப் புரவியின் மேல் ஏறி உட்காரத்தெரியாமல் உட்கார்ந்து தவித்துக்கொண்டு வந்துசேர்ந்தார்.”(31) இந்நாவலின் வரிகளைக் காணும்போது புரவி என்ற சொல்லின் பொருளானது குதிரையைக் (அகராதியின்வழி) குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி பணைநிலைப் புரவியின் அணைமுற் பிணிக்கும்(32) என்ற பட்டினப்பாலையின் வரிகளைக் காணும்போது புரவி என்ற சொல்லானது குதிரை என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் பொருளே சொல்லாக மாற்றமடைந்து பயன்பாட்டில் வழங்கப்படுகிறது எனலாம். தற்கால பொருள் - குதிரை கொண்டல்: “மத்த கஜத்தின் மேல் அந்த வீரர் வீற்றிருந்த காட்சி, ஒரு மாமலைச் சிகரத்தின்மீது கரிய கொண்டல் ஒன்று தங்கியதுபோல் இருந்தது.”(33) இந்நாவலின் வரிகளைக் காணும்போது கொண்டல் என்ற சொல்லானது மேகம் (அகராதியின்வழி) என்ற பொருளினைக் குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: கொண்டல் வண்ணா! குடத்கூத்தா! வினையேன் கண்ணா! கண்ணா என்(34) என்ற திருவாய்மொழியின் வரிகளைக் காணும்போது கொண்டல் என்ற சொல்லானது மேகம் என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் பொருளே சொல்லாக மாற்றமடைந்து பயன்பாட்டில் வழங்கப்படுகிறது எனலாம். தற்கால பொருள் - மேகம் வலிவு: “போரில் அடைந்த ஒவ்வொரு வெற்றியும் இவர்களுடைய தோள்களுக்கு மேலும் வலிவு அளித்தன.”(35) இந்நாவலின் வரிகளைக் காணும்போது வலிவு என்ற சொல்லின் பொருளானது வலிமை (அகராதியின்வழி) என்பதைக் குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: வலிவும் மெலிவும் சமனுமாக(36) என்ற பொருநராற்றுப்படையின் வரிகளைக் காணும்போது வலிவு என்ற சொல்லானது வன்மை என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் பொருளே சொல்லாக மாற்றமடைந்து பயன்பாட்டில் வழங்கப்படுகிறது எனலாம். தற்கால பொருள் - வலிமை தயவு: “பொன்னியின் செல்வரின் தயவினால் அவன் பேரில் கரிகாலரைக் கொன்ற குற்றத்தைச் சுமத்தாமலும், அதற்காகத் தண்டனை அளிக்காமலும் ஒரு வேளை விட்டு விடுவார்கள்.”(37) இந்நாவலின் வரிகளைக் காணும்போது தயவு என்ற சொல்லின் பொருளானது அருளினால் (அகராதியின்வழி)என்பதைக் குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: ஈசர் திருச் சந்நிதியில் ஏந்திழையார் தம்மிலொடு தாசிமேல் வைத்தேன் தயவு நான் - நேசமாய் இந்தசங்கத் தேதிரிந்தென் இன்பரச வல்லி இடத்துத்(38) என்ற கூளப்ப நாயக்கன் விறலிவிடுதூதின் வரிகளைக் காணும்போது தயவு என்ற சொல்லானது அன்பு அல்லது பக்தி என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் பொருளே சொல்லாக மாற்றமடைந்து பயன்பாட்டில் வழங்கப்படுகிறது எனலாம். தற்கால பொருள் - அருள், அன்பு, பக்தி வசை: “நீர் ரொம்பவும் பொல்லாதவர், அதோடு நன்றியும் இல்லாதவர், ஈழ நாட்டுப் போர்ப் படைக்கு உம்மைத் தளபதி ஆக்கியதற்கு இன்னும் நன்றி கூடச் செலுத்தவில்லை. என்னைச் சஞ்சல புத்தியுள்ளவன் என்று வசை கூறுகிறீர்!”(39) இந்நாவலின் வரிகளைக் காணும்போது வசை என்ற சொல்லின் பொருளானது பழி (அகராதியின்வழி) என்பதைக் குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை(40) என்ற புறநானூற்றின் வரிகளைக் காணும்போது வசை என்ற சொல்லானது பழி என்ற பொருளினை எதிர்மறைத் தன்மையுடன் (உரைவழி) குறிக்கிறது. ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் பொருளே சொல்லாக மாற்றமடைந்து பயன்பாட்டில் வழங்கப்படுகிறது எனலாம். தற்கால பொருள் - பழிப்பு ஓரி: “இந்தக் காடுகளில் நரியும் சிறுத்தையும் சேர்ந்து வேட்டைக்குப் போகும், சிறுத்தை அங்கங்கே பதுங்கிக் கொண்டிருக்கும். நரி அங்கமிங்கும் ஓடி இரை தேடும். மனிதனையோ மான் முதலிய சாதுமிருகத்தையோ, கண்டால் ஒற்றைக்குரலில் ஊளையிடும். உடனே சிறுத்தை பாய்ந்து வந்து விழுந்து கொல்லும். இப்படிச் சிறுத்தைக்கு ஒற்றன் வேலைசெய்யும் நரிக்கு ‘ஓரி’ என்று பெயர்…”(41) இந்நாவலின் வரிகளைக் காணும்போது ஓரி என்ற சொல்லின் பொருளானது நரியைக் (அகராதியின்வழி) குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: அழல்வா யோரி அஞ்சுவரக் கதிப்பவும்(42) என்ற பட்டினப்பாலையின் வரிகளைக் காணும்போது ஓரி என்ற சொல்லானது நரி என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. ஓரே பொருளினைக் கொண்டு விளக்கும் இச்சொல்லானது தற்காலத்தில் பொருளே சொல்லாக மாற்றமடைந்து பயன்பாட்டில் வழங்கப்படுகிறது எனலாம். தற்கால பொருள் - நரி மேலும் ஓரி என்ற சொல்லானது கடையெழு வள்ளல்களுள் ஒருவரின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவேறு சொல்லும் ஒரே பொருளும் உன்மத்தம் - பித்து: “சிறுத்தையை அடித்துக் கொன்ற காரியத்தைப் பற்றி எவ்வளவு சர்வசாதாரணமாகக் கூறினாள்? இவ்வளவுடன் சில சமயம் உன்மத்தம் பிடித்தவள் மாதிரி நடந்து கொள்கிறாளே, அது ஏன்?”(43) இந்நாவலின் வரிகளைக் காணும்போது உன்மத்தம் என்ற சொல்லானது வெறி (அகராதியின்வழி) என்ற பொருளினைக் குறிக்கிறது. “அடடா! பாடலும், பண்ணும், பாவமும் எப்படிக் கலந்து இழைந்து குழைந்து இவர்களுடைய குரலிலிருந்து அமுத வெள்ளமாகப் பொழிகின்றன! பாட்டாவது, பண்ணாவது, கானமாவது, இசையாவது! அதெல்லாம் ஒன்றுமில்லை. இது ஏதோ மாயக்கலை! பாடுகிறவர்கள், கேட்பவர்கள் எல்லாரையும் பித்துப் பிடிக்கச் செய்யும் மந்திர வித்தை!”(44) இந்நாவலின் வரிகளைக் காணும்போது பித்து என்ற சொல்லின் பொருளானது பைத்தியம் (அகராதியின்வழி) என்பதைக் குறிப்பதாக அறியமுடிகிறது. இலக்கியச்சான்று: ஓதும் சடையாட உன்மத்த முற்றாடப் பாதி மதியாடப் பாரண்ட மீதாட(45) என்ற திருமந்திரத்தின் வரிகளைக் காணும்போது உன்மத்தம் என்ற சொல்லானது பைத்தியம் அல்லது வெறி என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. இலக்கியச்சான்று: பித்துறு முலக முய்யப் பெருகிய கருணை யோடும் உத்தமச் சூழனாடி யொளிர்மணிக் கோயில் கொண்டான்(46) என்ற தணிகைப்புராணத்தின் வரிகளைக் காணும்போது பித்து என்ற சொல்லானது பேரருள் அல்லது மிக்க ஈடுபாடு என்ற பொருளினைக்(உரைவழி) குறிக்கிறது. இவ்விரு சொற்களையும் நாவலின் வழி காணும்போது சொல்லானது அவை வழங்கப்படும் இடத்திற்கு ஏற்ப சிற்சில மாற்றதத்தினைக் கொண்டுள்ளதே அன்றி அவை தற்காலத்தில் ஒரே வகையான பொருளினையே வழங்குகிறது. தற்கால பொருள் - பைத்தியம், அறியாமை, வெறி தற்கால பொருளின் அடிப்படையில் அவ்விரு சொற்களுக்குமே பைத்தியம் என்ற பொருளானது தற்கால சொல்லாகவே வழங்கப்பட்டு மாற்றடைந்துள்ளதை அறியமுடிகிறது. இலக்கியத்திற்கு சொல்லே முதன்மை சொல் - பொருள் மாற்றம் என்பது பல்வேறு நிலைகளைக் கொண்டது. சொல் பல்வேறு நிலைகளுக்கு பயணிக்கிறது. உருவாக்கப்பட்ட அமைப்பினுடனோ அல்லது சிற்சில மாற்றங்களுடனோ, அனைத்தையும் தம்முள் ஏற்று நிலைத்து நிற்கும் வழியினை மட்டுமே உருவாக்கிக் கொள்கிறது. உதாரணமாக இவ்வியலில் நாம் ஆராய்ந்த அனைத்து சொற்களிலும் சொல் உருவாக்கத்தின் அடிப்படையில் ஒரு கட்டமைப்பினையும், அவை வளர்ச்சி என்ற மாற்றத்திற்கு ஏற்ப பொருளே சொல்லாக மாற்றமடைந்த நிலையினையும் காண முடிந்தது. சொற்பொருள் மாற்றம் என்பது உருவாக்கப்பட்ட சொல்லிற்கும் மாற்றமடைந்த சொல்லிற்கும் எவ்வித தொடர்பும் அற்றது என்ற கருத்து தவறானதாகும். ஒரு உருவாக்கப்பட்ட சொல்லிற்கும் மாற்றமடைந்த சொல்லிற்கு சங்கிலித் தொடர்பு உண்டு. மாற்றம் என்பது வழங்கப்பட்ட சொல் வேறு பொருளினைக் கொண்டே, அல்லது அச்சொல்லின் பொருளே சொல்லாக மாற்றமடைந்தோ காணப்படுகிறது எனலாம்.   சான்றெண் விளக்கம்: 1. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 5 2. சிலப்பதிகாரம், புகார் காண்டம், நாடுகாண் காதை, பாடல் - 3 3. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 9 4. கம்பராமாயனம், பாலகாண்டம், வரைகாட்சிப்படலம், பாடல் - 855 5. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 16 6. கம்பராமாயணம், மூலபலவதைப் படலம், பாடல் - 9445 7. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 18 8. திருப்புகழ், பாடல் - 730 9. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 189 10. தனிப்பாடற்றிரட்டு, பாகம் 2, பாடல் - 127 11. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 98 12. நீதிவெண்கா, பாடல் - 43 13. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 139 14. பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், பாடல் எண் - 827 15. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 162 16. சிலப்பதிகாரம், மனையறம்படுத்த காதை, பாடல் - 12 17. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 293 18. காஞ்சிபுராணம், ஒழுக்கப்படலம், பாடல் - 46 19. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 308 20. கண்ணப்பநாயனார் புராணம், பாடல் - 755 21. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 312 22. உதயண குமார காவியம், தேவியைப் பிரித்தது, பாடல்வரி - 185 23. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 347 24. திருவருட்பா, பாடல்வரி - 3447 25. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 2, பக். - 123 26. சீவகசிந்தாமணி, நாமகள் இலம்பகம், பாடல்வரி - 16 27. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 63 28. புறப்பொருள் வெண்பாமாலை, பொதுவியல், கற்காண்டல் பாடல் - 247 29. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 2, பக். - 74 30. நூற்றெட்டுத் திருப்புகழ் - 25 31. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 2, பக். - 121 32. பட்டினப்பாலை, பாடல்வரி - 30-31 33. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 18 34. திருவாய்மொழி, பாசுரம் - 3612 35. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 322 36. பொருநராற்றுப்படை, பாடல்வரி - 55 37. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 5, பக். - 534 38. கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூது, பாடல்வரி - 106 39. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 5, பக். - 556 40. புறநானூறு, பாடல் - 10 41. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 2, பக். - 175 42. பட்டினப்பாலை, பாடல்வரி - 257 43. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 2, பக். - 42 44. கல்கி, பொன்னியின் செல்வன், பாகம் - 1, பக். - 65 45. திருமந்திரம், ஒன்பதாம் தந்திரம் - 2751 46. தணிகைப்புராணம், வீராட்டகாசப் படலம், பாடல்வரி - 76-77   முடிவுரை கதை இலக்கியமான நாவலின் வகைகளைக் காணும்போது அவையே ஒரு மொழிநடைக்கு சிறந்த உதாரணம் ஆகும். ஏனெனில் நாவல் இலக்கியத்தின் வகைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கருத்தையோ அடிப்படையாக கொண்ட கதை அமைப்பினையோ அல்லது குறிப்பிட்ட மொழி பேசும் மக்களின் வாழ்க்கையினை எடுத்துரைக்கும் கலைவடிவமாகவே காணப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே ஒரு நாவல் தன் கதைக்களத்தினையும், மொழிநடையினையும் கொண்டிருக்கிறது எனலாம். ஒரு வரலாற்று நாவலுக்கு தேவையான உத்திகளான உணர்வுப் பூர்வமான கதையமைப்பினை கொண்டிருப்பதன் அவசியத்தை நாவலாசிரியர்களின் உத்திகளின் மூலம் அறிய முடிந்தது. வரலாற்று நாவலினுள் பயணிக்கத் தொடங்கும் போதே கல்கியின் எழுத்தாற்றலானது நம் அகக்கண்முன் காட்சிகளாக பிரதிபலிக்கும் வண்ணம் எழுத்தினை செதுக்கியிருப்பது பொன்னியின் செல்வன் நாவலின் வரிகளே நமக்கு பறைசாற்றுகின்றன. இலக்கியத்தினை மெருக்கேற்ற உருவாக்கப்பட்ட இலக்கணத்தைக் கொண்டே நாவலின் வரையறைகளானது விளக்கப்பட்டுள்ளது. ஆய்விற்கு முதன்மையான கருதுக்கோளாக கருதப்படும் சொற்பொருள் மாற்றம் பற்றிய வரையறைகள் ஆங்காங்கே விவரிக்கிப்பட்டுள்ளன. சொற்பொருள் மாற்றம் என்பது கேட்பவரிடமிருந்து (Speaker) பெறுபவர் (Listener) வரை ஒலி, உச்சரிப்பு போன்ற காரணிகளால் மாற்றத்திற்கு உட்படலாம். அவ்வாறு அன்றி காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழலாம். பொன்னியின் செல்வன் நாவலின் சொற்கள் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் பொருளினை உணர்த்தி நிற்பது விளக்கப்பட்டுள்ளது. மெய்யெழுத்துக்கள் மொழிக்கு முதலில் அமையாது என்ற இலக்கணத்தின் வரையறைக்கு மாறாக மெய்யெழுத்தை முதலாக கொண்ட சொல் நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ளது சொற்பொருள் மாற்றத்திற்கான முதல் உதாரணம் எனலாம். இயல், திரி, திசை, வட என்னும் நால்வகைச் சொற்களுள் வடமொழி எழுத்துக்களைக் கொண்ட சொற்கள் நாவலில் இடம்பெற்றுள்ளது உதாரணமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இலக்கண வரையறைகளுக்கு உட்பட்டு யகரத்தின் இலக்கணத்தினை முதன்மையாக கொண்ட சொற்கள் நாவலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. பன்னிரு நிலங்களைக் குறிக்கும் பெயர்களும் அவை காலமாற்றத்திற்கு ஏற்ப தற்காலத்தில் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதும் கல்வெட்டு உரையின் அடிப்படையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. எட்டு வகையான மெய்ப்பாடுகள் யாவும் இலக்கணத்தின் அடிப்படையிலும், தற்கால சொற்களுக்கு ஏற்பவும் அட்டவணைப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. மயங்கொலி சொற்களின் அடிப்படையில் நாவலில் சில சொற்களும், மயக்கம் தரக்கூடிய பொருளினையுடைய சில சொற்களும் எடுத்தாளப்பட்டுள்ளது. ஒரு சொல்லிற்கு ஒரு பொருள் இருப்பது இயல்பு ஆகும். ஆனால் ஒரு சொல்லிற்கு பல பொருள்கள் இருப்பது திரிச்சொல் என்ற பெயரில் இலக்கணத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஒரு சொல்லிற்கு பல பொருட்கள் உள்ள நாவலின் சொற்கள் பல விளக்கப்பட்டுள்ளது. ஆங்கிலக் கலப்புடைய தமிழ் சொற்களும் நாவலில் எடுத்தாளப்பட்டுள்ளன. அகராதியின் பொருளுடன் பொருந்தாத சொற்களும் நாவலில் இடம்பெற்றுள்ளன. சொல்லும் மாறுபட்ட தற்காலப் பொருளுடைய சொற்கள் சில நாவலில் எடுத்தாளப்பட்டு அவை இலக்கிய சான்றுகளுடன் ஒப்பிட்டு நோக்கி தற்கால பொருளானது வழங்கப்பட்டுள்ளது. அகராதியின்படி குறிப்பிடப்பட்ட சொல்லின் பொருளே சில சொற்களுக்கு தற்கால பொருளாகவும் சொல்லாகவும் மாற்றமடைந்திருப்பது இலக்கியச் சான்றுகளுடன் ஒப்பிட்டு விளக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலின் சொற்களுள் இரு சொற்கள் ஒரே விதமான பொருள் உணர்த்தும் தன்மையிலும் அப்பொருளே தற்காலப் பொருளாக வழக்கத்தில் காணப்படுவதும் இலக்கியச் சான்றுகளுடன் ஒப்பிட்டு நோக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இனிவரும் ஆய்வாளர்கள் இந்நாவல் போன்று பிற வரலாற்று நாவல்களையும், வட்டார இலக்கியங்களையும், மொழி பெயர்ப்பு இலக்கியங்களில் உள்ள சொற்களை ஒப்பிட்டு, சொற்பொருள் மாற்றம் குறித்த ஆய்வினை மேற்கொள்ளலாம். துணைநூற்பட்டியல் முதன்மை நூல்கள்: 1. கல்கி, பொன்னியின் செல்வன் நாவல் முழுவதும், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், முதற்பதிப்பு - அக்டோபர் 2006, சென்னை - 17, துணைமை நூல்கள்: 1. தமிழண்ணல், தொல்காப்பியம் மூலமும் கருத்துரையும், மீனாட்சி புத்தக நிலையம், முதற்பதிப்பு - ஏப்ரல் 2008, மதுரை - 625 001, 2. தொல்காப்பியம் இளம்பூரணம், சொல்லதிகாரம், முல்லை நிலையம், முதற்பதிப்பு - 2003 சென்னை - 17, 3. பவணந்திமுனிவர், நன்னூல் - எழுத்ததிகாரம், காண்டிகை உரை, கதிர் பதிப்பகம், திருவையாறு, 4. பவணந்திமுனிவர், நன்னூல் - சொல்லதிகாரம், காண்டிகை உரை, கதிர் பதிப்பகம், திருவையாறு, 5. பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாதசுந்தரம், தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும், வளர்ச்சியும், பாரி நிலையம், முதற்பதிப்பு - 2016, சென்னை - 108, 6. சில்லையூர் செல்வராசன், ஈழத்தில் தமிழ்நாவல் வளர்ச்சி, அருள் நிலையம், சௌந்தரா பிரிண்டர்ஸ், முதற்பதிப்பு - 1967, சென்னை - 17, 7. மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதமி, முப்பத்தி இரண்டாம் பதிப்பு - 2016, புது தில்லி - 110 001, 8. ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை, கதிர்பதிப்பகம், முதற்பதிப்பு - டிசம்பர் 2012, திருவையாறு - 613 204, 9. பத்துப்பாட்டு மூலமும் உரையும், உரை டாக்டர் கதிர் முருகு, சாரதா பதிப்பகம், முதற்பதிப்பு - 2009, சென்னை - 14, 10. சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், உரை ந. மு. வேங்கடசாமி நாட்டார், முல்லை நிலையம், முதற்பதிப்பு - 2003, சென்னை - 17, 11. கம்பநாட்டாழ்வார், கம்பராமாயணம், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், பதிப்பு - 1991, சென்னை, 12. அருணகிரிநாதர், திருப்புகழ், மிமோர்யல் அச்சுக்கூடம், முதல் பாகம் - 1909, சென்னப்பட்டணம், 13. சந்திரசேகர கவிராஜ பண்டிதர், தனிப்பாடற்றிரட்டு (உரையுடன்) இரண்டாம் பாகம் - 1902, vithiya Ratthinakaram Pre, Madras, 14. திருத்தக்கதேவர், சீவகசிந்தாமணி, பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், இரண்டாம் பதிப்பு - 1907, சென்னை, 15. இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் அரும்பதவுரை, கமர்ஷியல் அச்சுக்கூடம், இரண்டாம் பதிப்பு - 1920, சென்னை, 16. சிவஞான சுவாமிகள், காஞ்சிபுராணம், கலாரத்நாகர அச்சுக்கூடம், பதிப்பு - 1910, சென்னை, 17. சேக்கிழார் சுவாமிகள், பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் இரண்டாம் தொகுதி, செஞ்சுடல் அச்சகம், பதிப்பு - 2017, கோவை - 23, 18. திரு. பொ. வெ. சோமசுந்தரனார் உரையும், உதயணகுமார காவியம், செய்யுளம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், இரண்டாம் பதிப்பு - 1972, சென்னை - 01, 19. திருமூலநாயனார், திருமந்திரம், மதராஸ்ரிப்பன் அச்சியந்திரசாலை, மதராஸ், 20. திருவாய்மொழி, (எட்டாம் பத்து, ஐந்தாம் திருமொழி), ஸ்ரீவராகி பிரிண்டர்ஸ், பதிப்பகத்தார், விற்பனையாளர், பதிப்பு - 2000, சென்னை - 18 21. திருவருட் பிரகாச வள்ளலார், திருவருட்பா, வடஆர்க்காடு மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், வெளியீடு - ஜனவரி 1969, வேலூர், 22. நூற்றெட்டுத் திருப்புகழ், மின்னிய தொகுப்பு, இங்கர்சால், 23. கச்சியப்ப முனிவர், தணிகைப்புராணம், The Scottish Pre, Madras. 24. சுப்பிரதீபக் கவிராயர், கூளப்ப நாயக்கன் விறலிவிடுதூது, கல்வி விளக்க அச்சுக்கூடம், சென்னை 25. ஸ்ரீ திருமழிசைபிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம், Sri. N. Rajagopalan, ‘Sri. Nidhi’, 12 (Old #19) 1(st( Floor, First cro street, customs colont, Besant Nagar, First Edition - 2003, Chennai - 600 090, 26. நீதிவெண்பா, இயக்குநர், சரசுவதி மகால், முதற்பதிப்பு - 2002, தஞ்சாவூர் - 613 009, 27. புறநானூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், முதற்பதிப்பு - டிசம்பர் 2010, சென்னை - 14, 28. முனைவர் ந. கடிகாசலம், சொற்பொருட்கோட்பாடுகள், பகவதி பதிப்பகம், சென்னை, 29. திருக்குறள் தெளிவுரை, டாக்டர் மு. வரதராசனார், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட்., முதற்பதிப்பு - மே 1949, சென்னை - 18, 30. பவாநந்தம் பிள்ளை, தற்கால தமிழ்ச்சொல்லகராதி, அமுத நிலையம், முதற்பதிப்பு - 1912, சென்னை - 14, 31. கல்வெட்டு விளக்க உரை, பொதிகைப் பதிப்பகம், முதற்பதிப்பு - பிப்ரவரி 1949, கடலூர். பின்னிணைப்பு பொன்னியின் செல்வன் நாவலிலிருந்து ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சொற்கள்: 1. வாஞ்சை 2. அமரிக்கை 3. குந்தகம் 4. சித்திரான்னம் 5. த்வனி 6. ஆஜானுபாகுவான 7. வஸ்திரம் 8. சமிக்ஞை 9. ஸ்திரீகளின் 10. அஸ்தமிக்கும் 11. ஜனங்கள் 12. ஜாமம் 13. சிரஸில் 14. ரோஷம் 15. பட்டமகிஷி 16. யௌவனக் கண்கள் 17. யௌவனப் பிராயம் 18. மாநக்கவாரம் 19. மாபப்பாளம் 20. மாயிருடிங்கம் 21. கடாரம் 22. இலாமூரிதேசம் 23. ஸ்ரீவிசயம் 24. சாவகம் 25. புட்பகம் 26. முந்நீர்பழந்தீவு 27. கேரளம் 28. குடகுமலை 29. கொல்லம் 30. வேங்கி 31. கலிங்கம் 32. இரட்டபரடி 33. சக்கரக்கோட்டம் 34. அங்கம் 35. வங்கம் 36. கோசலம் 37. விதேகம் 38. கூர்ஜரம் 39. பாஞ்சாலம் 40. காம 41. குரோத 42. லோப 43. மோக 44. மத 45. மாற்சரியம் 46. சந்நதம் 47. நாற்றம் 48. நிலா மதியத்தை 49. மணங்கு 50. சாயை 51. ஏனம் 52. பேறு 53. சேவகம் 54. பிசகு 55. காந்தி 56. பரிகாசம் 57. வனப்பு 58. அசூயை 59. பிரமை 60. ஆரூடம் 61. மையல் 62. மதுரம் 63. மந்தி 64. அந்தகாரம் 65. சிகை 66. அதம் 67. திருணம் 68. பலகணி 69. பங்கம் 70. கொலு 71. குழுமி 72. பிச்சி 73. காத தூரம் 74. அரம்பை 75. தினவு 76. கட்டியம் 77. சிங்காதனம் 78. வாவி 79. இலச்சினை 80. மயன் 81. பதிதன் 82. புளகாங்கிதம் 83. முகமன் 84. இறையிலி 85. பூமாரி 86. ஆக்ஞை 87. புரவி 88. கொண்டல் 89. வலிவு 90. தயவு 91. வசை 92. ஓரி 93. உன்மத்தம் 94. பித்து கதைமாந்தர்கள்: [] ஆசிரியர் குறிப்பு: கல்கியின் இயற்பெயர் இராமசாமி கிருஷ்ணமூர்த்தி (1899-1954). இவர் செப்டம்பர் 09, 1899-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புத்தமங்கலம் (தற்போது மணல்மேடு) என்னும் கிராமத்தில் பிறந்தார். தனது கிராமத்தில் ஆரம்ப காலக் கல்விக்குப் பிறகு அவர் திருச்சியிலுள்ள தேசிய கல்லூரிப் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதை விட்டுவிட்டு சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார். 1922 ஆம் ஆண்டில் திருச்சி சிறையில் பன்னிரண்டு மாத சிறைவாசம் அனுபவித்தார். அங்கு அவர் மற்றொரு இளம் அரசியல் கைதியான டி. சதாசிவத்தை சந்தித்தார். அவருடன் பழகிய பின்னர் தனது வாழ்நாள் நண்பராகவும் கூட்டாளியாகவும் மாறினார். விடுதலையானதும் அவர் காங்கிரஸ் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். அங்கு அவர் இந்திய தேசிய காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்த சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) உடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் கிருஷ்ணமூர்த்தி அவரை தனது வழிகாட்டியாக எண்ணி வாழ்நாள் முழுவதும் ஒரு தலைசிறந்த மனிதராக வணங்கி வந்தார். சென்னைக்குக் குடிபெயர்ந்த கிருஷ்ணமூர்த்தி அக்டோபர் 1923-இல் தேசியவாதத்திற்காக அரும்பணியாற்றிய பத்திரிகையான நவசக்தியில் அதன் துணை ஆசிரியராக சேர்ந்தார். அறிஞரும் கட்டுரையாளருமான திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் (திரு.வி.க.) என்பவரிடமிருந்து பத்திரிக்கையில் எழுதும் எழுத்துமுறையை அவர் கற்றுக்கொண்டார். கிருஷ்ணமூர்த்தி நெடுவரிசை என்னும் வழக்கமான எழுத்துமுறைக் கொண்டு எழுதினார். பேசும் வடிவத்தை எழுத்து வடிவமாக அணுகும் ஒரு பாணியை பின்பற்றி வந்தார். வருமானம் போதுமானதாக இல்லாததால் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நவசக்தியை விட்டு விலகி 1931-ஆம் ஆண்டின் இறுதியில் எஸ். எஸ். வாசனின், ஆனந்த விகடனில் ஆசிரியராக சேர்ந்தார். தலையங்கங்களை எழுதுவதோடு மட்டுமல்லாமல் சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகளையும் வழங்கினார். இரண்டு ஆண்டுகளில் கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனை தமிழில் மிகப்பெரிய இதழாக மாற்றினார். அவர் “கல்கி” என்ற புனைப் பெயரில் எழுதி வந்தார். அப்பெயர் மிகவும் பிரபலமடைந்தது. அதன்பிறகு கிருஷ்ணமூர்த்தி “கல்கி” பெயராலே அறியப்பட்டார். 1941-ஆம் ஆண்டு கல்கி ஆனந்த விகடனிலிருந்து விலகி, அந்த ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில் டி. சதாசிவத்தின் உதவியுடன் புதிய பத்திரிக்கையை தொடங்கினார். கல்கி என்ற தன் புனைப்பெயர் ஏற்கனவே அறியப்பட்டதால் அப்பெயரையே புதிய பத்திரிக்கைக்குப் பெயராகக் கொடுத்தார். கிருஷ்ணமூர்த்தியின் கல்கி என்ற பத்திரிக்கையின் வெற்றியானது 1944-இல் இது வார இதழாக்கப்பட்டது. கல்கி தனது கட்டுரையின் மூலம் குடிப்பழக்கம், தீண்டாமை, மூடநம்பிக்கைகள், பெண்கண் மீதான ஒடுக்குமுறை போன்றவற்றை எடுத்துரைத்தார். அத்துடன் கல்கி இதழில் கழித்த பதின்மூன்று ஆண்டுகளும்; தன் படைப்புத் திறனைச் சிறந்த முறையில் வெளிப்படுத்தினார். அவரது அற்புதமான இலக்கிய வெளியீட்டில் 120-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 15-க்கும் மேற்பட்ட நாவல்கள், பல்வேறு பாடங்களில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் பற்றிய எண்ணற்ற மதிப்புரைகள் இருந்தன. அவரது பெரும்பாலான சிறுகதைகள், தொடர் நாவல்கள் மற்றும் வரலாற்றுப் புதினங்கள் ஆகியவை தலைச்சிறந்த படைப்புகளாக விளங்கின. கல்கி பெற்ற விருதுகள்: கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பிறந்த தினமான செப்டம்பர் 9 ஆம் தேதி 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் கல்கியின் நினைவாக நினைவுத் தபால்தலை வெளியிடப்பட்டது. கல்கி அவர்களுக்கு 1953-ஆம் ஆண்டு இந்திய நுண்கலைக் கழகத்தின் (Indian Fine art Society) சார்பில் சங்கீத கலா சிகாமணி விருது வழங்கப்பட்டது. 1956-ஆம் ஆண்டு ‘அலையோசை’ நாவலிற்காகத் தமிழக அரசின் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. கல்கியின் படைப்புகள்: நாவல்கள் அலை ஓசை (1950), அபலையின் கண்ணீர் (1947), மோகினித்தீவு (1950), பொய்மான் கரடு (1951), மகுடபதி(1942), கள்வனின் காதலி (1939). சிறுகதைகள் சாரதையின் தந்திரம், மாடத்தேவன் சுனை, ஒற்றை ரோஜா ஜமீன்தார்மகன், பாங்கர் விநாயகராவ், காரிருளில் ஒரு மின்னல், திருவழுந்தூர் சிவக்கொழுந்து, விணை பவானி, மயில் விழி மான். நாடகம் பாங்கர் விநாயகராவ் (இப்பெயருடைய சிறுகதைத் தொகுதியின் முதல் படைப்பு மட்டும் நாடகம்). கட்டுரைகள் ஏட்டிக்குப் போட்டி, கண் கொள்ளாக் காட்சி, திருமகளும் கலைமகளும், ஓ மாம்பழமே. திறனாய்வு தர்மம் குறையுமா?, இசை விருந்து, கலைச்செல்வம், குமரியும் குன்றமும், நம் தந்தையர் செய்த விந்தைகள். பயண நூல்கள் இலங்கையில் ஒரு வாரம், இலங்கைப் பயணம். வரலாறுகள் நாட்டுக்கொரு புதல்வர், பாரதியார் பிறந்தார், தாகூர் தரிசனம், மகாத்மாவும் மகாகவியும், யார் இந்த மனிதர்கள்?, தெய்வ தரிசனம். சுயவரலாறு மூன்று மாதக் கடுங்காவல். அலை ஓசை என்னும் சமூகநாவலையும் அவர் தமது சிறந்த படைப்பாகக் கருதினார். அந்நாவலுக்கு சாகித்ய அகாடமி 1956 இல் பரிசு வழங்கி சிறப்பித்தது. கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account