[] [PicsArt_04-27-12.47.37]  பைனரி உரையாடல் M விக்னேஷ் நூல் :  பைனரி உரையாடல் ஆசிரியர் : .M விக்னேஷ்  மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com  வெளியீடு :FreeTamilEbooks.com உரிமை :Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். 1 முன்னுரை முப்பது வருடத்திற்கு முந்தைய கால கட்டம். கணிப்பொறி வளர்ச்சி பெறா உலகம்.மனித சிந்தனைகளும் , மனிதநேயமும் மேம்பெற்றிருந்த காலமது. உறவுகளும் உணர்வுகளின் நெருக்கங்களும் பின்னிப்பிணைந்த காலமும் கூட… ஆனால் … இன்று முப்பது ஆண்டுகள் கடந்து நிற்கிறோம் என்பதை விட இழந்து நிற்கிறோம் என்பதே நிதர்சன உண்மை. நாம் பெற்றதை விட இழந்ததே அதிகம். இதை உணரா தவறுகள் புரியும் மானிடற்கில்லை இவ்வுலகில் பஞ்சம். இதை உணர்த்தும் பொருட்டு அன்றும் இன்றும் உலக நிகழ்வுகளை நான் அறிந்த கவி வழி வேறுபடுத்துகிறேன் . ” உறவுகள், உலக உணர்வுகள் அறியா வாழும் சராசரி மனிதர்கள் யாவருமே எதிர்கால இயந்திரங்களே என்பதை உணர்த்தும் களமே “   ” பைனரி உரையாடல் “       ஆதி மனிதன்   VS       மின்னணு மனிதன் ஆதி மனிதன் [image]   வளைந்த தேகம் , வளரும் மதியுகம் . நான்கு கால் நடைபயணம் , நாளைய உலகை நோக்கிய பயணம். உயிர் வாழ மேற்கொண்ட தேடல் , புதுஉயிர் படைக்க மேற்கொண்ட எதிர்கால தேடல் . பிறப்பால் வேட்டையாடும் மிருக இனம், பாசத்தால் பகிர்ந்துண்ணும் நல் மனம். விரல் பேசும் சைகை பாஷைகள் , முதல் இனத்தின் மொழியில்லா உரையாடல்கள் – ஆதிமனிதன் …!!! மின்னணு மனிதன் [image]    டார்வின் கோட்பாடுகள் கசந்தது. மின்னணு மாற்றம் வழி மனித வாழ்க்கை நகர்ந்தது. இரு கால்கள் ஊன்றி , நிற்கிறோம் கட்டாந்தரையில் , நம் இரு விரல்களின் ஓட்டங்களோ மென்மையான தொடுதிரையில். தலை குனிந்த குரங்கிலும் ஒரு மனிதன் கண்டோம். இன்று தலைநிமிர்ந்து மனிதனுள் ஒரு குரங்கைக் காண்கிறோம். ஆறாம் அறிவின் ஒப்பற்ற முயற்சி , மனிதனை அழிவினில் ஆட்கொள்ளும் சோதனை முயற்சி . கையில் முளைக்கும் ஆறாம் விரல் , ஆறாம் அறிவை அழிக்கும் வெந்தணல் -மின்னணு மனிதன்.       நாகரீக மனிதன்   VS      நவநாகரீக மனிதன் நாகரீக மனிதன் [image]   பலநூறு வருட பயணங்கள் , மட்டற்ற மாற்றங்களில் மனித இனங்கள் . கல் கொண்டு கடவுள் செய்தான், கடவுளின் பெயரால் மதங்கள் செய்தான் . மதங்களின் பெயரால் இனங்களை செய்தான் , அவ் இனங்களின் வழியால் நல் எண்ணங்களையும் கொய்தான் . உரையாட உருவாக்கிய மொழிகள் , உருவாக்கி போகிறது தனிமனித அடையாளங்கள் . நாளும் ஒரு நாகரீக வளர்ச்சி , யார் காண்பார் ? இதுவே எதிர்கால மனித இனத்தின் வீழ்ச்சி…! நவநாகரீக மனிதன் [image]     மனிதனின் தேடல் படலம் , உருவாக்கிப்போகிறது நவநாகரீக மனிதனை . அறிவியலின் ஒப்பற்ற வளர்ச்சி , மனித இனத்தின் சமநிலைகளின் கிளர்ச்சி. வீசும் தென்றல் காற்றில் காற்றாலை செய்தான் , ஐம்பூதம் கொண்டு மின்சாரம் செய்தான் . மின்சாரம் கொண்டு அலைக்கற்றை செய்தான் , அலைக்கற்றையின் வெளி கண்டு இணைய உலகம் செய்தான் . நாளும் ஒரு கணினி மாற்றங்கள் நாளைய தலைமுறையை நஞ்சாக்கும் நாகரீக மாற்றங்கள்…!!!     பண்டைய மனிதன்                                                              VS   இணைய மனிதன் பண்டைய மனிதன் [image]   கல்கொண்டு மண்கொண்டு அரணமைத்து , கண்கண்ட கடவுளானான் . கால ஓட்டங்களில் கணக்கில்லா தேசங்கள் வென்று , வேங்கை கொடி நாட்டி வேந்தனும் ஆனான் . எதிர்கால சந்ததி தன் புகழ் பாட விட்டுச்சென்றது ஏராளம் , அடுத்த தலைமுறைகள் வாழ அள்ளி இறைத்ததும் தாராளம் . பண்பாடு எனும் பெண் மானம் காக்க , தமிழ்மொழி எனும் சேலை நெய்தான் . நெய்த சேலையில் வீரம் புதைத்து , ஒரு இனத்தின் அடையாளம் ஆனான் – பண்டைய மனிதன் …!!! இணைய மனிதன் [image]   மனித நரம்பியலை மின்னுயிராக்கி மனிதன் வாழ்வியல் வழிமுறைக்கு அடித்தளம் கண்டான் வீட்டு மாடியில் முளைக்கிறது கோபுரங்கள் புதியதாய் தோன்ற தொடங்குகிறது இணைய வழி சாதனங்கள் மனித சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடு இணையம் கொண்டு இதயம் இணைக்கும் சோதனைகளின் வெளிப்பாடு மனிதனும் காலமும் ஒன்றோடு ஒன்று போடும் போட்டி காலமொடு வேகமெடுக்கிறது இணைய வழிச் சேவை புதியதாய் இணையம் பெற்றெடுக்கிறது தேடுபொறி எனும் பிள்ளை , மனித அறிவினை அழிக்கப்பிறந்த எதிர்கால தொல்லை …!!!     மனித அடிமை   VS   தொழில்நுட்ப அடிமை மனித அடிமை [image]     அரசன் ஆண்ட மானுடம் , அகதி ஆகி போகுது . பிழைக்க வந்த ஒருகூட்டம் , அடிமையாக்கி ஆளுது . உரிமை யாவும் பறித்துவிட்டு , அகதியாய் மாற்றி போகுது . சுதந்திர காற்றை முகர்ந்து பார்க்க , பாதி மூச்சும் தீர்ந்தது. உடலில் ஓடும் உதிரங்கள் நிலத்தில் யாவும் சிதறுது , சிதறி போன குருதியில் புது சுதந்திர நாடும் பிறக்குது …!!! தொழில்நுட்ப அடிமை [image]     வெள்ளையனுக்கு அடிமையாய் வாழ்ந்த மானுடம் , இன்று தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகும் அவலம் . பிறக்கிறது ஜியோ நாகரீகம் , இலவச இணையவழி இணைப்புகளால் தொடுகிறது சிகரம் . மாதக் கடைசி வரை பேணி காத்த மெமரிபைட்டுகள் , இன்று தினமும் கரையும் அழகை காண்கிறோம் . பேஸ்புக் அடிமைகளாய் வாழ்ந்த மனங்கள் – இன்று செயலற்ற செயலிகளுக்கும் அடிமையாய் இருக்கும் மனித இனங்கள் . உயிர்வாழும் எந்திரமாய் உருமாறுகிறோம் , கட்டப்பட்ட இணையவழி சங்கிலிகளில் அடிமையாகிறோம் …!!!     உரிமை சுதந்திரம்   VS   உரிமை பறிப்பு உரிமை சுதந்திரம் [image]   அடிமைத்தனம் அகலும் நேரம் , பிறக்கிறது சுதந்திர தாயகம் . உருவாக்குகிறோம் நமக்கென சட்ட திட்டம் , மேற்கொள்கிறோம் பல எதிர்கால திட்டம் . நல்ல தலைவன் வழிகாட்ட , நன்னிலம் நாளும் வளருது . உழுது உண்ட வேர்வையில் , பிற கண்டங்கள் யாவும் வியக்குது . பண்பாடு , கலாச்சாரம் கைகோர்த்து நடக்குது , எதிர்கால சந்ததிக்கு நல் எதிர்காலம் பிறக்குது …!!! உரிமை பறிப்பு [image]   சிலிக்கானில் வார்க்கா சிந்தனைகள் , கம்பிகள் இல்லா எந்திரனை கருவில் காணும் முயற்சிகள் . படைக்கிறோம் புது ஆண்ட்ராய்ட் இயங்குதளம் , மனித இயக்கங்களை இயங்கவிடா செயல் தளம் . உருவாக்குகிறோம் மலிவு விலை கைபேசிகள் , அவை உருவாக்கிப்போகிறது மலிவான மனிதர்கள் . தனிமனித சுதந்திரம் பறித்துவிட்ட கைபேசிக்கு, போடுகிறோம் தனியுரிமை பூட்டு . வாய்வழி உரையாடல்கள் தவிர்த்திட்டோம் . குறுஞ்செய்தியில் நாளும் புது ஸ்மைலிகள் நாமும் படைத்திட்டோம் …!!!     நாட்டு வளர்ச்சி   VS   நவீன வளர்ச்சி நாட்டு வளர்ச்சி [image]   முன்னோக்கி பயணிக்கிறோம் , வரும் தலைமுறை வாடாமல் வாழ பயணிக்கிறோம் . கலப்பை பிடித்து வளர்க்கிறோம் விவசாயம் , நிதிநிலையில் வளர்ந்து தொடுகிறோம் ஆகாயம் . சுயநலமில்லா தலைவர் கூட்டங்கள் , அதனால் காண்கிறோம் நாளும் ஒரு வளர்ச்சிகள் . புதியதாய் பல ஒப்பந்தங்கள் , எதிர்காலத்தை நோக்கி நம் ஓட்டங்கள் . வலுப்பெறுகிறோம் வணிகத்தில் , விரைவில் வென்று காட்டுகிறோம் விண்- களத்தில்…!!!! நவீன வளர்ச்சி [image]     தொடுகிறோம் இருபத்தியோராம்நூற்றாண்டு , தொழில்நுட்ப புரட்சிகள் வீற்றிருக்கும் ஆண்டு . எங்கும் காண்கிறோம் டிஜிட்டல் மயம் , புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் மாயம் . அரசிகளையும் ஆன்லைனில் அள்ளுகிறோம் , இணையவழி பயன்பாட்டில் முதல் இடம் பெறுகிறோம் . புதிதாய் 5ஜி ஒப்பந்தங்கள் – வருங்காலம் வளமாகுமா ? கேள்விகளுடனே போடப்படும் கையொப்பங்கள் . வளம்பெறுகிறோம் டிஜிட்டல் உலகத்தில் , வீழத் தொடங்குகிறோம் பசுமை களத்தில் …!!!     பண்பாடு வளர்ச்சி   VS   நவீன பண்பாடு வளர்ச்சி பண்பாடு வளர்ச்சி [image]   தனித்துவம் பெற தன்மானம் காத்தோம் , பண்பாடு காக்க தாய்மொழி காத்தோம் . வீதியெங்கும் திண்ணை பேச்சுக்கள் , கட்டாந்தரையில் பிறக்கிறது புது அரசியல் பேச்சுக்கள் . உரிமைக்காக மதம் இனம் களைந்து ஒன்றானோம் , போராட்டங்கள் பல வென்று அனைவரும் பால் நட்பானோம் . உடலை குளிர்விக்கும் மழைக்காலம் , உள்ளம் குளிர்விக்கும் திருவிழாக்காலம் . நாத்து நட்டு படைத்தோம் எங்கும் பசுமை , கலைகள் பல வளர்த்து புகுத்துகிறோம் நாளும் பண்பாட்டு புதுமை …!!! நவீன பண்பாடு வளர்ச்சி [image]   தனிமொழியாய் சங்கம் வைத்து ,காத்த கலாச்சாரம் . இன்று நவீன மாற்றம் வழி சிதையுண்டு வீழ்கிறது . வீடெங்கிலும் ஹாட் ஸ்பாட் தரவுகள் , விருந்தோம்பலும் ஆயின இன்ப தொந்தரவுகள். அரசியல் வளர்க்கும் ட்விட்டர் கீச்சுகள் , அமேசான் ஆயிலின் அருமைகள் அறிய கூகிள் சர்ச்சுகள் . உடல் குளிர்விக்கும் கோலா பாட்டில்கள் , உள்ளம் குளிர்விக்கும் தீம் பார்க்குகள் . நாற்று நட்ட இடங்களில் நாலடுக்கு கட்டிடங்கள் , நாலுக்கு இரண்டு அடியில் வளர்க்கிறோம் பசுமை தோட்டங்கள் …!!!     பொழுதுபோக்கு வளர்ச்சி   VS   டிஜிட்டல் வழி பொழுதுபோக்கு பொழுதுபோக்கு வளர்ச்சி [image]     உழைத்து வாழும் உழவர் கூட்டம் , பொழுது சாயும் வரை நிலத்தில் போராட்டம் . பொழுது சாய்ந்த பின் மதுவோடு தள்ளாட்டம் , கூத்து நாடகங்களே பொழுதுபோக்கு கொண்டாட்டம் . தொலைக்காட்சி அறிமுகமான நாட்கள் , தெருவுக்கு ஒன்றாக ஒலிக்கும் ஒளியும் ஒலியும் பாட்டுகள் . காதோரம் இசைக்கும் வானொலி இரைச்சல் , சில நேரம் மாசில்லா மாட்டுவண்டியின் கடகடச்சல் . தூங்கவைக்க கிடைக்கும் போதனை கதைகள் , அவிழ்க்கும் விடுகதைகளே என் மழலை கால சாதனைகள் …!!! டிஜிட்டல் வழி பொழுதுபோக்கு [image] உடல் வளைக்காமல் உழைக்கும் வாழ்க்கை , உடலை விட மனதிற்கே சோர்வுகளின் வேட்கை . வளர்ந்துபோன நவநாகரீக உலகம் , பொழுது போக்க ஏதய்யா நேரம் ?. மனச்சோர்வோடு மல்லு கட்டுகிறோம் , மடிக்கணினியோடு கோதாவும் புரிகிறோம் . இலக்கே இல்லா வேலையில் இலக்கைநோக்கி ஓடுகிறோம் , வீட்டுக்கடன் கட்டியே வாழும் நாட்களையும் கரைக்கிறோம் . அபார்ட்மெண்ட்களில் அடைபட்ட ஆடம்பர வாழ்க்கை , கான்கிரீட் கூரையில் நட்சத்திரங்கள் ஒட்டி ரசிக்கும் வாழ்க்கை …!!!   விடுமுறை களித்தல்   VS   விடுமுறை கழித்தல் விடுமுறை களித்தல் [image] வெள்ளி மாலை , வெயில் மங்கும் வேளை , புழுதி பறக்க ஒரு ஓட்டம் -விடுமுறை கொண்டாட்டம் . பொட்டல் காட்டில் பொழுதுகள் கழிகிறது , விளையாட்டு மிகுதியில் சிலநேரம் சட்டையும் கிழிகிறது . மதிய வேலை நாங்கள் சமைக்கும் கூட்டாஞ்சோறு. மனதை மயக்கும் சமபந்தி விருந்து , மாலை வேலை கிட்டிப்புள் , உடல் எரிக்கும் வெயிலில் எறி பந்து . கவலையே இல்லா ஓட்டங்கள் , மழலையை மலரச் செய்யும் அழகிய நினைவுகள் …!!! விடுமுறை கழித்தல் [image]   வாரம் ஆறு நாட்கள் உழைக்கும் மாடர்ன் வர்க்கம் , ஞாயிறு விடுமுறையில் நெடுநேரம் தூக்கமே சொர்க்கம் . தூக்கம் கலைந்திட நடைபோடுகிறோம் மினி மால்கள் . பரபரப்பான வாழ்க்கையை மறக்கச் செய்யும் பட இடைவெளி பாப்கார்ன்கள் . பந்த பாசம் அற்று அலைகிறோம் கடற்கரையில் , மாத கடைசியை உணர்கிறோம் கரை மணல் சுண்டலில் . மங்கும் மாலை ஒளியில் காதல் அரட்டைகள் , கண் பார்க்கா கைகோர்க்கா வாட்ஸப் அரட்டைகள், திரும்புகிறோம் எதார்த்த வாழ்க்கைக்கு , காத்திருக்கிறோம் மற்றொரு ஞாயிற்றுக்கிழமைக்கு …!!!   ஏட்டுக்கல்வி   VS   டிஜிட்டல் கல்வி ஏட்டுக்கல்வி [image]     செம்மண் மூளையில் கல்வி செடி வைத்து , நம் மண் கவிபாட ஏட்டு கல்வி வித்திற்று . நல் வேதம் நாளும் ஓதும் பாட சாலை , கடவுளின் மெய்யுருவாய் வேத ஆசான் . வேதமோடு நல் ஒழுக்கமும் வளரும் நாளும் , சிறு சிறு கண்டிப்புகள் நல்வாழ்க்கையின் உரமாய் மாறும் . ஏட்டுக்கல்வி அறிமுகமாகி ஆட்டிப்படைக்க , இலவச கல்வி அறியாமை நோயை ஆட்டுவிக்க , வளர்கிறது பகுத்தறிவு சித்தனை . எதிர்காலத்தை ஆட்டுவிக்கும் புதிய சிந்தனை …!!! டிஜிட்டல் கல்வி [image]   பால் பல் முலைக்கா வயதில் பள்ளியறை , பால்வாடி வகுப்பறை அப்டேட்களின் கல்வி முறை . லட்சங்கள் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் , லட்சியங்களே இல்லாமல் வளரும் மாணவ செல்வங்கள் . புறம்போக்கு நிலங்களில் அணிவகுத்து நிற்கும் ஆடம்பர கட்டிடங்கள் , பெற்றோரை கவர்ந்திழுக்கும் கண்கவர் வெட்டு பதாகைகள் , கரும்பலகை நாகரீகம் பாடமாய் ஸ்மார்ட் கிளாஸ் வழி காண்கிறோம் , புத்தக புழுவாய் பயின்று படித்த முட்டாளும் ஆகிறோம் . நடக்க தொடங்கும் வயதிலேயே தொடங்கினார்கள் NEET கோச்சிங்கள் -இவையே எதிர்கால மனித எந்திரங்களை உருவாக்கப் போகும் நவீன தொழிற்சாலைகள் …!!!`     கூட்டுக்குடும்பம்   VS   நவீன குடும்பம் கூட்டுக்குடும்பம் [image]   ஒரு கூட்டுக்கிளியாய் சுதந்திர வாழ்க்கை , முந்நூறு சதுரடியில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை . வற்றாத நீரூற்றாய் அள்ளித்தெளிக்கும் பாசம் , சின்ன சின்ன அடிகளில் கொட்டுகிறது தந்தை நேசம் . திருவிழா நாட்களில் தலையணை ஆகும் அத்தை மடி . திருவிழா ராட்டினங்களில் எனை காக்கும் அண்ணன் கைப்பிடி . பண்டிகை நாட்களில் நா ருசிக்கும் பல்சுவை பண்டங்கள் , மறைந்து போன மூதாதையர் பெயர்சொல்லும் காவேரிக்கரையோர பிண்டங்கள் . இரவை இனிமையாக்கும் நிலாச்சோறு , இவையே நல் வாழ்க்கைக்கு துளிர்விக்கும் ஆணிவேரு ….!!!! நவீன குடும்பம் [image] பந்தபாசங்களின் அகராதி அறியா உறவுகள் , பணத்தின் வழி மனத்தை காணும் நவீன உறவுகள் . பிறப்பால் அனைவரும் வளர்ந்தோம் கூட்டுக்குடும்பமாய் , பணத்தின் மணத்தால் சிதறி கிடக்கிறோம் தனிக்குடும்பமாய் . உறவுகளை பலப்படுத்த உருவாக்குகிறோம் வாட்ஸப் குடும்ப குழுக்கள் , அண்ணனின் அன்பை அளவிட ,அள்ளித்தெளிக்கிறோம் ஹார்ட் ஸ்மைலிகள் . பேஸ்புக் செல்பிகளில் வழி தாய்மாமன் முகம் காண்கிறோம் . அடுத்துவரும் தலைமுறைக்கு உறவுகள் பெயரே தெரியா வளர்க்கிறோம் . மறந்துபோன வரலாறாய் தர்பண சாஸ்திரங்கள் , மறைந்துபோன தாத்தாவின் வரலாறு பேசும் ஸ்கைப் வழி உரையாடல்கள் …!!!   உரிமைப்போராட்டங்கள்   VS   சமூக ஊடக போராட்டங்கள் உரிமைப்போராட்டங்கள் [image]   வேற்றுமை களைந்து ஒற்றுமை காண்கிறோம் , எங்கள் முழக்கத்தில் பகைவரின் விழியில் கிலியை காண்கிறோம் . தோட்டாக்களுக்கு அஞ்சாத நெஞ்சமிது , பகை அரசை தோலுரித்து காட்ட தயங்காது . சாதி மத பேதம் கலைக்கிறோம் , ஒரு தாய் குழந்தையாய் முழங்குகிறோம் . பிறப்பால் பாலினம் கலைந்தோம் , தமிழின் வீரப் பால் உண்டு பகைவரின் ஆட்சியையும் கலைத்தோம் . பெண்மையின் மென்மையை காணும் கூறில்லா மானிடமே , பெண்மையின் வீரம் போற்றும் பல புரட்சிகள் கண்டது எங்கள் தமிழ் இனமே …!!! சமூக ஊடக போராட்டங்கள் [image] சந்திக்கிறோம் தினம் ஒரு சமுதாயா சீர்கேடுகள் , சீறி எழுகிறோம் மீம்ஸ் வழிப்போராட்டங்கள் . குருதி கொதிக்க முழங்குகிறோம் கமெண்ட் பாக்ஸில் , வீதி மறந்து வீடுகளில் முடங்கி போகிறோம் போராட்டக் காலங்களில் . சாதி மதம் பேதம் களைந்து ஒன்றானோம் , தலையா ? தளபதியா ?விவாதங்கள் வழி ரெண்டானோம் . ஊடகங்கள் தவிர்க்கும் செய்திகள் பரப்பி வைரல் ஆனோம் , அரசியல் தலைவர்களை சீண்டும் யூடுப் சேனல்களுக்கு சப்ஸ்கைபரும் ஆனோம் . அடங்கி ஒடுங்கி வாழும் அடிமைக்கூட்டங்கள் -செயல்களை செயலிகள் மூலம் அமல்படுத்தும் நவீன அகிம்சை வழி போராட்டங்கள்…!!!!   கற்றோர் வளர்ச்சி   VS   கற்றோர் வீழ்ச்சி கற்றோர் வளர்ச்சி [image]   பகுத்தறிவு என்பதே மூடத்தனம் , படிப்பறிவு என்பதோ மூலதனம் . மேல் படிப்புப்படித்தவன் மேலதிகாரி , மெத்தன படித்தவனோ மேஸ்திரி . கல்லாதவன் கரைவேஷ்டியோட வயல்களத்தில் , கற்றோர் செல்வாக்கோ பயணிக்கிறது புதுக்களத்தில் . கால சுழற்சி கற்றோர்க்குச் செல்வந்தனும் செவிசாய்த்தான் . கற்றல் வழி பொருள் ஈட்டி செல்வந்தனும் ஆனான் . கல்வியின் பற்று பற்றி எரிகிறது , நல் எண்ணமும் நற்சிந்தனையும் நாளும் வளர்கிறது …!!! கற்றோர் வீழ்ச்சி [image] கண்கண்ட கல்வியோ காசாய் மாறிப்போனது , காசாய் போன கல்வியோ இன்று காஸ்ட்லியாய் உலகை ஆளுது . மைல் கல்போல நெடுவெங்கும் பொறியியல் கல்லூரிகள் – கஜினிமுகமது படையெடுப்பாய் அமைந்துபோயின பொறியியலினுள் அரியர் போராட்டங்கள் , பிழைப்பிற்கு எழுதுகிறோம் அரசாங்க தேர்வுகள் , பிழைக்க வழிகாட்டிப்போகிறது பத்தாயிரம் ரூபாயில் பல வேலைகள் . படிப்பிற்கு சம்பந்தமில்லா உத்தியோகங்கள் , ஊமையாய் மனதிற்குள் பல ஆறா ரணங்கள் . மெத்த படித்தவன் அடிமையாய் வாழும் நிலை . அறிவிலி அடியில் அடிமையாகி வாழும் அவல நிலை…!!!   இளையோர் சமூகம்   VS        மாடர்ன் இளையோர் சமூகம் இளையோர் சமூகம் [image]   கட்டுக் கடங்கா காளை கூட்டம் , நல்ல கருத்துக்களை காதில் வாங்கா கூட்டம் . குடும்பச்சுமை சுமக்கும் கூட்டம் , சின்ன சின்ன குறும்புகள் செய்யும் வெகுளி கூட்டம் . திருவிழாக்கள் ஒலிக்கும் வாணவெடி , சீண்டிப்போன அந்நொடி அடிதடி . பழந்தமிழரின் கட்டுக்கடங்கா வீரம் , சீறி வரும் காளையை நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும் உரம் . கள்ளிக்காட்டு பூக்கள் சொல்லும் கலகலப்பான காதல் கதை , புழுதி காட்டு புதைமணல் சொல்லும் எம் இளையோர் வீரப்படை …!!! மாடர்ன் இளையோர் சமூகம் [image]   தலை முடி முன் முளைக்கும் இடிதாங்கிகள் , சிகையை மேம்படுத்தும் வண்ண நிறங்கள் . கர்ணனின் கவசகுண்டலம் போல கைபேசிகள் , வீட்டுச்சுமை அறியாமல் அடம்பிடித்து வாங்கும் 500 சிசி பைக்குகள் , கல்லூரி வாசலிலே முளைத்து விடுகிறது கண்டதும் காதல் . மீசை முடி முளைப்பதற்குள் ஆட்கொள்கிறது போதைப்பழக்கங்கள் . தீயவர் சகவாசங்களில் வீணாகும் வாழ்க்கை , பிடிக்கும் புகையிலையில் கரைகிறது மீதி வாழ்க்கை . நாகரீக மாற்றம் என்று நகர்ந்து செல்கிறோம் , நரக வாழ்க்கையின் ஆரம்பம் என்பதை பட்டு புரிந்து கொள்கிறோம் ….!!!     மண் மாறாக் காதல்   VS      மனம் மாறும் காதல் மண் மாறாக் காதல் [image]   அச்சம் கொண்டே ஆள் மனம் தொலைக்கும் காதல் , நகம் கடித்து மணலில் கோலம் போடும் நாணக் காதல் . குளத்தங் கரையிலும் கோயில் படியிலும் வளர்த்த காதல் , குளிர் பனி நிலவில் இதயம் தொலைக்கும் காதல் . ஊர் அறியா ஊமையாய் இமை பேசி நடந்த காதல், ஊரறிந்த பின் ஊர்த்தாண்டி ஓட்டம் கொண்டு வாழும் காதல் . சாதி மதம் கடந்து கைகோர்க்கும் காதல் , கருவேலங்காட்டு முட்கள் தேய்க்கும் வலிகளும் நிறைந்தது காதல் . ஊர்வாய் மூட பல மனங்களை புதைத்த காதல் -உயிர் விட்டொழியும் இறுதி மூச்சு காற்றில் ஒன்றிணைந்து போகும் காதல் மண் மணம் மாறாக் காதல் …!!! மனம் மாறும் காதல் [image]   கண்பார்த்து கதை பேசி வளர்த்த காதல் , இன்றோ பணம் பார்த்து பழகி பார்த்து மறக்கும் காதல் . இரவு நேரம் வாய்மூடா வாய்ஸ் கால்கள் , காலை நேரம் கண்களுக்கு விருந்தளிக்கும் வீடியோ கால்கள் . பெண்ணின் அழகின் பிடியில் அடிமையாய் வாழும் ஆண்கள் , ஆணின் பணப்பின்புலன் வழிநாடி அடைக்கலமாகும் பெண்கள் . காரணங்கள் பல தேடி கழட்டி விடும் காதல் , கழட்டிவிட்ட அந்நொடியில் உருவாகும் புது காதல் . மனம் நினைத்த ஒருவனை மறக்காது பழங்காதல் , மணம் முடிக்கும் முன்னரே மறந்து போகும் இக்காலக்காதல் – மாடர்ன் காதல் …!!!       பணத்தேவைகள்   VS   பணத்தாசைகள் பணத்தேவைகள் [image]       பண்டமாற்று முறையின் பரிணாமம் , வெற்றுக்காகிதம் பணமாய் உருமாறும் . பொருளாதார புள்ளிகளின் விளையாட்டு , பணமதிப்பின் எண்கணித விளையாட்டு . பைசாக்களில் வாழ்கிறோம் பகட்டான வாழ்க்கை , ரூபாய்களில் காண்கிறோம் பணக்கார வாழ்க்கை . ஐம்பது ரூபாயில் ஆடம்பர அணிகலன்கள் , ஐநூறு ரூபாயில் ஆடம்பர கல்யாணங்கள் . மனிதன் பணத்தை அடக்கியாண்ட பொற்காலம் , ஆடம்பர ஆசைகளை மனிதன் அடக்கியாண்டதும் இக்காலமே …! பணத்தாசைகள் [image]   ஆசைகளின் தீவிர வளர்ச்சி , மனித மனங்களில் பணத்தாசையின் வளர்ச்சி . உருவாக்கினோம் வெறும் வெற்றுக்காகிதம் -அவையே இன்று உலகை ஆளும் இணையில்லா மந்திரம் . அதிகாரத்தின் ஆதிக்கம். பணப்பதுக்கலில் பிரதிபலிக்கும் . லஞ்சம் ஊழலின் ஆதிக்கம் கறுப்பு பண முதலைகளுக்கு வழிவகுக்கும் . விண்ணைத் தொடுகிறது விலைவாசி உயர்வு , விழிபிதுங்கிப் போகிறது விவசாயியின் அன்றாட நிகழ்வு . உழைத்துப் பெறுகிறோம் மாதச்சம்பளம் , வீடு சேரு முன்கரைகிறது வேர்வையுடன் சம்பளம் …!!!     சுற்றுச்சூழல்   VS    நவீன சூழல் சுற்றுச்சூழல் [image]     கடகட வென கடக்கும் மாட்டு வண்டி , குபுகுபு வென போகும் கூட்ஸு வண்டி . பசும் புல் மேய்ந்திடும் புற் சாலை , செம்மண் புழுதி படர்ந்திடும் ஒத்தையடிச்சாலை . கடல் வழி கலந்திடும் பாய்மரக்கப்பல் , கடல் எல்லைவரை நுழைந்திடும் மிதவைப்படகுகள் . மண் வளம் காக்க வளர்த்தோம் மண்புழுக்கள் , இயற்கை உரங்களில் அள்ளினோம் நல்மகசூல்கள் . புகை இல்லா புவிவாழ்க்கை , புன்னகையில் ஏந்துகிறோம் பசுமை வேட்கை …!!! நவீன சூழல் [image]   கட்டுக்கடங்கா மக்கள்தொகை உயர்வு , மனித தேவைகளின் இன்றியமையா உயர்வு . நகரெங்கும் வாகன போக்குவரத்துகள் , மூச்சு திணற வைக்கும் மாசு புகைகள் . நில தேவைக்கு காடுகள் அழித்துவிட்டோம் , வெயில் கொடுமையில் விடுபட குளிரூட்டி பொருத்திவிட்டோம் . நிலத்தடி நீரும் நில மணலும் சுரண்டிவிட்டோம் , எதிர்கால சந்ததிக்கு உயிர்கொள்ளி உணவும் படைத்துவிட்டோம் . விவசாய நிலங்களில் மீத்தேன் எடுக்கவும் துணிந்துவிட்டோம் , உணவிற்கு பதில் மாத்திரைகள் உண்ணவும் பழகிவிட்டோம் …!!!     மங்கல மங்கை   VS    நவ நாகரீக பதுமை மங்கள மங்கை [image] மனம் மயக்கும் மடிசார் சேலை , நெஞ்சோடு உரசி தொங்கும் மாங்காய் மாலை . வெளிர் நெற்றியில் முழு நிலவாய் பொட்டு , கால்விரல் மிஞ்சிகளில் பிறக்கிறது புது மெட்டு . கைப்பிடிக்கும் வட்ட சூரியனாய் கண்ணாடி வளையல்கள் , வெள்ளியருவியை வார்த்தெடுத்து வரைந்த வெள்ளிகொலுசுகள் . வகுடெடுத்த நெற்றியை அலங்கரிக்கும் சொருகுப்பூ , விரல் இசைக்கு உயிர்தரும் வட்டப்பூ . செவிகானம் பாடும் காதணிகள் , மங்கையை பதுமையாக்கும் மங்கல அணிகலன்கள் ….!!!! நவ நாகரீக பதுமை [image]   மல்லுவேட்டி மடிச்சுக் கட்டிய காலம் போச்சு – கரைவேஷ்டி இடுப்புல நிற்கா தலைமுறைக்கு ஒட்டிக்கிற வேஷ்டியும் வந்தாச்சு . கழுத்து நிறைய நகையைப்போட்ட பொண்ணுங்களும் காணாமப்போச்சு , தலைவிரி கூந்தல் வெறும்கையுமாய் கிராமத்து பொண்ணும் மாடர்ன் ஆச்சு . நெத்திப்பொட்டும் வைக்கவும் , நேரெடுத்து சீவவும் நேரம் இல்லாம போச்சு . மஞ்சள் பூசிய முகத்துக்கு அள்ளி தெளிக்கும் அழகு சாதன பொருள்களும் வந்தாச்சு . மாராப்பு ஒதுங்கா மானம் காக்கும் மடிசாரும் மாயமாச்சு , மாராப்பே இல்லா மினி ஸ்கர்ட்டே நவ நாகரீகமாச்சு . நாகரீகம் என்ற பெயரில் கலாச்சாரம் சீரழிஞ்சாச்சு , சீரழிஞ்ச கலாச்சாரத்தில் பெண்பாதுகாப்பும் கேள்விக்குறியாச்சு ????…!!!     மரபு வழி   VS         பரிணாம மரபு வழி மரபு வழி [image] தொன்று தொட்ட நாகரீகம் , தொன்மை மாறா பெட்டக கருவூலம் . அச்சங்கள் துறந்து நாணங்கள் பயின்றோம் , அறிவியல் விதியினுள் முன்னோர்களின் அறிவுச் சிந்தையும் கண்டோம் . மண் பார்த்து நடந்த கலாச்சாரம் , பெண் இன புரிதலை உணர்த்தும் கலாச்சாரம் . குலதெய்வ வழிபாடுகளும் தர்பண சாஸ்திரங்களும் – முன்னோர் வழி, நிகழ் ஒளி இன்பம் காண வித்திட்ட வழி . பாட்டன் விட்டுச்சென்றது வெறும் கட்டுக்கதையும் அல்ல . எதிர்கால உலகம் படைத்திட என்பதை இவ்வுலகம் உணர்கிறது மெல்ல,…!!!! பரிணாம மரபு வழி [image]   விண்தொடும் அறிவியல் பரிணாமங்கள் , மாற்றம் காணும் மரபணு மாற்றங்கள் . தரமில்லா உணவுகளால் அழிக்கிறோம் இயற்கை முறைகள் , உருவாக்குகிறோம் சோதனை குழாய் குழந்தைகள் . மறக்கிறோம் மரபு வழிகள் , தேடல் புரிகிறோம் நவீன நாகரீக வழிகள் . அடம்பிடிக்கும் குழந்தை கைகளில் தவழ்கிறது ஐபாட்கள் , அறிவுரை எடுத்துரைக்க பொறுமை இல்லா நவீன தகப்பன்கள் . வேலைப்பளுவில் கண்டிக்கும் ஆங்கிரி பேர்ட் அம்மாக்கள் , தலைமுறையே அறியா வளரும் குட்டி சின் சேன்கள் …!!!     மனித நேயம்   VS      நவீன நயம் மனித நேயம் [image] கொடை வள்ளல் வழிவந்த கொடைநாடு , வறியவரை வாழ வைக்கும் வளம் மிகுந்த நாடு . வீதியெங்கும் திண்ணை கட்டிய வீடுகள் , வயோதிகரை அரவணைக்கும் வீட்டுக்கூரைகள் . ஊரெங்கும் பரவிக்கிடக்கும் தர்மம் சத்திரங்கள் , ஊர் பெயர் அறியாதவரையும் பசியாறவைக்கும் அட்ஷய பாத்திரங்கள் . ஒருபுறம் சொத்துக்கள் வாரி இறைக்கும் வள்ளல்கள் , மறுபுறம் கட்டுகிறார்கள் காலம்போற்றும் கற்கோயில்கள் . வானில் மாரிபொழிந்து மண் வாசம் வீசுகிறது , மண்ணில் குளிர்காற்றோடு மனித ஈரமும் மனத்தை குளிர்விக்கிறது…! நவீன நயம் [image]   கருணை உள்ளங்களை, விரல் விட்டு எண்ணும் காலம் , கடவுளையும் காசுகொடுத்து காணும் பொல்லாத காலம் . மனிதநேயம் மறந்து போகும் மனமற்ற மனிதர்கள் , பிறருக்கு மனமுவந்து உதவாத சுயநல மனிதர்கள் . பேஸ்புக் பக்கங்களில் கொட்டுகிறோம் கரிசனங்கள் , அடிபட்டவரை அரவணைக்க செய்கிறோம் பல ஷேர்கள் . வலக்கை கொடுப்பதை இடக்கை அறியா பண்பையும் மறந்திட்டோம் , லைக்குகள் பல வாங்க பலதானங்கள் நாமும் புரிந்திட்டோம் . அறம் செய்யா தினம் அழியும் இவ்வுலகமே , நல்லறம் செய்ய இனி நீயும் பழகணுமே ….!!!     அரசியல் களம்   VS     அரசியல் போர்க்களம் அரசியல் களம் [image]   வேந்தர் ஆட்சி விடைபெற்ற காலம் , சுயேட்சை ஆர்வலர்களுக்கு தலைவர் கோலம் . சுயநலமில்லா ஆட்சி முறை , மக்கள் நலம் பேணிக்காக்கும் ஆட்சி முறை . வயிறு வாடா கல்வி பயில சத்துணவுத்திட்டம் , விவசாயம் மண் காக்க நதிநீர் திட்டம் . பெண்பால் வளர்ச்சி காண புது சட்ட திட்டம் , லஞ்சமும் ஊழலும் இல்லா புரட்சி சட்டம் , வளர்ச்சியை நோக்கிய பயணங்கள் , வருங்கால வல்லரசே நம் இலக்குகள் …!!! அரசியல் போர்க்களம் [image]     நல்ல தலைவர்களை தரையில் தேடிய காலம் போனது, நாட்டை ஆளும் தலைவர்களை திரையில் தேடும் நிலையானது . ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஓட்டு வேட்டை , தேர்தலுக்கு பின் நடக்கிறது சாமானியர்களின் உரிமை வேட்டை . மாற்றம் வேண்டி காத்திருக்கிறோம் . மத்திய மாநில அரசிடம் கையேந்தி காத்திருக்கிறோம் . முளைக்கிறது நாளும் ஒரு அரசியல் கட்சிகள் , உருவாகுகிறார்கள் எண்ணிக்கையில் வாக்காளர்களை மிஞ்சும் தலைவர்கள் , தலைவர்கள் திரட்டுகிறார்கள் ட்விட்டர் கீச்சுகள் வழி ஆதரவுகள் . ஆதரவு தந்த மக்கள் ஆகிறோம் உள்நாட்டு அகதிகள் ….!!!     ஆன்மீக களம்   VS       ஆசாமிகள் களம் ஆன்மீக களம் [image]   கல் கொண்டு சிற்பம் வடித்த நாடு , சிற்பம் கொண்டு கலை நுணுக்கங்களை வளர்த்த நாடு . வேதம் நான்கில் வேற்றுமை கலைகிறது , வேதாந்த சித்தாந்தங்களில் இறை வெளி மனம் உணர்கிறது . அறவழியில் அன்பை நாடினோம் , ஆத்ம நெறிகளில் பரம்பொருள் தேடினோம் . நல்வாழ்க்கைக்கு இணைந்தோம் குடும்ப உறவு , உலக நன்மைக்கு மேற்கொண்டோம் துறவு . அன்பின் வழி ஆண்டவரோடு இணைகிறோம் , அறங்கள் பல செய்து இஜ்ஜென்மம் முடிக்கிறோம் …!!! ஆன்மீக களம் [image]   செதுக்கிய சிற்பங்களுள் கடவுள் கண்ட மானிடம் , இன்று வாழும் பல ஆசாமிகளை கடவுளாக்கும் மூடர் கூடம் . தெருவுக்கு ஒன்றாய் முளைக்கும் ஆஷ்ரமங்கள் , சந்துக்கு ஒன்றாய் உருவாகும் போலிச்சாமியார்கள் . ஆசைகள் துறந்து பற்றற்று வாழ்க்கை போதிக்கும் சித்தர்கள் , அத்தனைக்கும் ஆசைப்பட்டு ஆட்டுவிக்கும் போலி பித்தர்கள் . செல்வ சீமானுக்கு அருகில் காட்சிதரும் கடவுள் விக்ரகம் , ஏழை எளியோனுக்கு மங்கிய ஒளியாய் கடவுள் அனுகிரகம் . தூணிலும் துரும்பிலும் கடவுளை தேடி களைப்படைந்தோம் , கடவு(உ)ள் என்பதன் பொருளை நாமும் அறிய மறந்தோம் …!!!     சம்பிரதாயம்   VS          மாடர்ன் சம்பிரதாயம் சம்பிரதாயம் [image]     கடவுள் மார்க்க போதனைகள் , மத சம்பிரதாயச் சாதனைகள் . பண்பாட்டை வளர்க்க மேற்கொண்ட யுக்தி , நாகரீக நயமாய் கையாண்ட யுக்தி . பூப்பெய்திய பெண்ணுக்கு தாய்மாமன் சீதனம் , குலம் தழைக்க பேறுபெற்றவளுக்கு தாய்வீட்டுச் சீதனம் . இருமனம் இணைக்கும் மங்கள தாலிகள் , குடும்ப உறவு இனிக்க மேற்கொள்வோம் மங்கள விரதங்கள் . மோட்சத்திற்கு வழிவகுத்தோம் ஆயிரம் சடங்குகள் , பண்பாடுபோற்ற ஆணிவேராய் ஊன்றி போயின சாஸ்திர சம்பிரதாயங்கள் . மாடர்ன் சம்பிரதாயங்கள் [image] மாடர்ன் நாகரீக அப்டேட்கள் , மயக்கும் மாடர்ன் சம்பிரதாயங்கள் . மனம் இணையா திருமணங்களையும் அழகாக்கும் போட்டோ ஷூட்கள் , மணப்பெண்ணை அடையாளம் தெரியாமல் மாற்றும் மேக்கப் கிட்கள் . விலைவாசி உயர்வால் தோன்றின வரவேற்பு நிகழ்வுகள் , தபால் கவர் வழி வந்த மொய்களும் உருமாறினஇ-மொய்கள் . மெல்ல குறைந்து வரும் சீர்ச்சடங்குகள் , காதல் ஆதிக்கத்தால் குலைந்துபோகும் உறவுமுறைத் திருமணங்கள் . உடல் மெலிய மேற்கொள்கிறோம் டயட்கள் உடல் ஒத்துழைக்காமல் மயங்கி விழும் மங்கள விரதங்கள் …!!!     வளம்   VS     நவீன வளம் வளம் [image]   குறைவிலா மண் வளம் , மட்டற்ற மேகங்களில் மாரி பெய்யும் . நஞ்சில்லா நன் செய் நிலங்கள் , விளைந்து போகும் நல் விளைச்சல்கள் . மாசில்லா உரங்கள் வரமாகும் இயற்கை கழிவுகள் , வளர்கிறது வளங்கள் திடமாய் நாளும் . தண்ணீர் பஞ்சம் போகும் அணைகள் , மண்வளம் காக்கும் மண்புழுக்கள் . வேப்பங்காற்றும் மருந்தானது , நல் உணவே நன் மருந்தாகுது …!!!! நவீன வளம் [image]   காட்டை அளித்து கட்டிடங்கள் கட்டி , காற்று வாங்க குளிரூட்டிமாட்டி . நிலத்தடி மணலையும் சுரண்டி வீசினோம் , நிலமண் செழிக்க தண்ணீர் நாடினோம் . ரசாயன உணவுகள் பல உண்டு ஆயுள் குறைத்தோம் , இயற்கை உணவுகள் உண்பவரை எண்ணி நகைத்தோம், குடிநீரையும் அயல்நாட்டு வணிகத்துக்கு அள்ளி இறைத்தோம் , குடிநீர் பஞ்சத்தில் நாளும் செத்து பிழைத்தோம் . கடவுள் படைத்த உலகை கொன்று காசு பார்க்கும் மானிடா , பசித்த வயிற்றுக்கு சோறு போதும் என்பதை என்று உணர்வாய் எம்மானிடா ? …!!!!     தொழில்நுட்ப உரையாடல்   VS      பைனரி உரையாடல் தொழில்நுட்ப உரையாடல் [image]   மாற்றங்களின் அணிவகுப்பு , கண்ணார காண்கிறோம் தொழில்நுட்பங்களின் பிறப்பு . மனித வேலையை எளிமையாக்க வந்த கண்டுபிடிப்புகள் , மனித சுழற்சியே மாற்றி போகும் கண்டுபிடிப்புகள் , தொடங்குகிறது அலைபேசி வசதிகள் , தொலைவை தொலைக்கும் அற்புத வசதிகள் , அயல்நாட்டு வணிகத்தின் ஆதிக்கம் , புது புது இயந்திரங்களின் ஆதிக்கம் . எதிர்காலம் அறியா மாற்றம் இது . எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் மாற்றம் இது …!!! பைனரி உரையாடல் [image]   கண்டதொழில்நுட்பங்கள் காட்சிப்பொருளாய் , சிந்திக்க இயலா மனித மூளைகளும் ஆயின வருங்கால காட்சிப்பொருளாய் . மனித தேவைக்கு கண்ட கண்டுபிடிப்புகள் , நம்மை அடிமையாக்கி வாழும் அவலங்கள் . உணர்வுகளை உருக்குலைக்கும் சமூக செயலிகள் , பந்தம் பாசம் அற்று வாழும் நடுத்தர மனிதர்கள் . வளர்ச்சிபெறும் செயற்கை நுண்ணறிவு , வீழ்ச்சிகாணும் மனிதனின் ஆறறிவு . உருப்படா செயலிகள் வழி உரையாடல்கள் , உதடுகள் அசையா பேசும் எதிர்கால எந்திர மனிதன் உரையாடல்கள்   "பைனரி உரையாடல்கள்"…!!! 1 ஆசிரியர் குறிப்பு நான் விக்னேஷ் .M . முதுநிலை பொறியியல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன் . தனிமனித அடையாளம் உருவாக்கும் நோக்கத்தோடும், இக்காலத்திற்கேற்ப எளிய வரிகள் கொண்ட கவிதைகள் படைக்கும் நோக்கத்தோடும் மின்னணு புத்தகங்களை Amazon Kindle Direct Publishing வழி படைத்து வருகிறேன் .மேலும் என் படைப்புகளை freetamilebooks.com தளத்திலும் பதிவிட்டு வருகிறேன் . தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன் தொடர்புகொள்ள : தொலைபேசிஎண் :9444452564 மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com வலைத்தளம் : amazon.com/author/mvignesh