[] 1. Cover 2. Table of contents பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - 3 பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - 3   அண்ணாதுரை     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/letters_of_peraringar_anna_3 மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பட்டப் பகலில். . . ! ( 3 ) கனவின் தன்மை - மேனாட்டார் கனவுகள் தம்பி! களத்தில் கடும் போரிட்டுக் களைத்துப்போன வீரன், ஆற்றோரத்தில், அந்திசாயும் நேரத்தில், படுத்தபடி, எதிர்ப்புறம் நடமாடிக்கொண்டிருந்த எதிரிநாட்டுப் படையினரைக் கண்டு கலங்கினான், மனம் பாடுபட்டது; ஏதேதோ எண்ணிக் கொண்டான்; விழித்த நிலையிலேயே கனவு காண்கிறான் - என்று குறிப்பிட்டிருந்தேன். அவன் எண்ணம் என்ன என்று அறிய ஆவலாக இருந்திருப்பாய் என்பது தெரியும்; தெரிந்து? என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? சென்ற கிழமை ஓய்வே இல்லை! தரப்படவில்லை!! இப்போது மட்டும் என்னவாம்! உனக்கு மடல் தீட்டிக்கொண்டிருக்கிறேன் - துவக்குகிறேன் - கீழே சித்தாத்தூர், தூசி, உக்கல், வெங்களத்தூர் என்று ஊர்ப் பெயர்களையும், அங்கு செல்லவேண்டிய நேரம் பற்றியும், வடாற்காடு வட்டத் தோழர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். திருமண வீட்டிலே சாப்பாட்டுக்கு எப்போது அழைப்பார்கள் - சாப்பிடாமல் போய்விட்டால் சங்கடப்படுவார்கள் - நேரமோ அதிகமாகிறது - எப்போது அழைப்பார்களோ - என்று எண்ணியபடி, எதிர்வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடி, கலியாண வீட்டையே பார்த்தபடி இருப்பது உண்டல்லவா? அடிகள், அப்படி உட்கார்ந்துகொண்டிருக்கிறார், எதிர்த் திண்ணையில். எனக்கு உள்ள கஷ்டம் தெரியும்; எனவே வற்புறுத்த மனம் இடம் தரவில்லை; ஆனால் தம்பிக்குக் கடிதம் இல்லை என்றால், தவிப்பு ஏற்படுகிறது, அதனையும் கவனித்தாக வேண்டும், அந்த நிலையில் அடிகள்! ஆனால், இந்த நிலை இன்னல் நிரம்பியதாகுமா? கன்னலைத் தின்னும்போதுகூடத்தான், இரத்தம் கசியும்படியான குத்தல் ஏற்பட்டுவிடுகிறது. ஆற்றோரம் இருக்கிறானே, ஆற்றல் மறவன், அவன் நிலை இன்னல் நிரம்பியது. தாயகம் தாக்கப்படுகிறது; துடித்து எழுகிறான்! போரிடு கிறான்; எதிரியிடம் படைபலம் மிகுதி; பலர் மடிந்தனர்; சிலர் சிதறியோடினர்; சிலர் இவன்போல், பதுங்கிக்கொண்டுள்ளனர், நல்ல வாய்ப்பை எதிர்பார்த்தபடி. என்னென்ன எண்ணம் தோன்றும் அந்நிலையில் வீரனுக்கு? "நமக்கேன் இந்த வீண் வேலை! எவன் இந்த நாட்டை ஆண்டால் நமக்கு என்ன? அவனவன் பிழைப்பு அவனவனுடைய உழைப்பைப் பொறுத்து இருக்கிறது! கொடி மரத்திலே, எந்தக் கொடி பறந்தால்தான் நமக்கென்ன? கொலு மண்டபத்திலே எவன் கோலாகலமாகக் கொலுவிருந்தால்தான் நமக்கென்ன? நாமுண்டு, நமது உழைப்பு உண்டு! நாம் பணிந்துவிடுவதுதான் நல்லது. காட்டு மிருகம்போல், பதுங்கிப் பதுங்கி, பயந்து பயந்து, இருப்பதைவிட, தோல்வியை ஒப்புக்கொண்டு, வென்றவன் நாடாளட்டும் என்று இருந்துவிடவேண்டியதுதான்!’’ என்றா எண்ணுவான். அவ்விதம் எண்ணுபவன், வீரனா? வீரமரபினன் ஆவானா? ஒருக்காலும் இல்லை. உறங்கவில்லை! விழித்தபடி கனவு காண்கின்றான். ஒரு கனவு அல்ல; பல; மாறி மாறி!! ஒரு அடவி! அடர்ந்த காடு. எதிரிப்படைப் பிரிவின் தலைவன் முகம் ஒருபுறம்! அதற்குச் சற்றுத் தொலைவிலேயே படைவீரர் தங்க, இருக்க, அமைக்கப்பட்டுள்ள பாசறைகள் - சிறு சிறு அளவில்; தலைவன் முகாமுக்குள் இருந்து சிரிப்பொலி! இசையொலி! கையொலி! வளையொலி! இவன் முகம் சிவக்கிறது! வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மமதையில் மதுவும் மங்கையும் தேடி, மகிழ்ச்சி வெறி கொள்கிறான், இந்த மடையன்!! ஆடிப்பாடிப் பிழைக்கும் எவளையோ இழுத்துவந்து, பொழுது போக்குகிறான்! நம் நாட்டில்!! நமது நாட்டுப் பெண்ணொருத்தி! நமது நாட்டை வீழ்த்தியவனுக்கு. . . செ! எப்படித் தாங்கிக்கொள்வது? "ஆடு என்பான்; அவள் ஆடுவாள்! மறுக்கவா முடியும்! கத்தி கடாரி கரம்கொண்டிருந்த என் போன்றார்களே காடுமேடு பதுங்கி இருக்கும் நிலை! அவள் என்ன செய்வாள், பாவம்! ஆடுவாள்!! இவன் பாடுவான்!’’ "ஆடாதே! நிறுத்து! நமது நாட்டை நாசமாக்கியவன் முன்பு, ஏ! பெண்ணே! ஆடிடுவது தகுமா!! நாட்டுப் பற்றற்றவளே! நமது கோட்டையை அழித்தான், கொலு மண்டபத்தைக் குலைத்தான்! மன்னனைச் சிறையிட்டான்! வீரர்களைக் கொன்று குவித்தான்! அடி, விவரம் கெட்டவளே! அவன் அமர்ந்திருக்கிறானே, வேலைப்பாடு மிகுந்த பட்டு விரிப்பு, அது நம்முடைய அரசியாரின் பொற்கரங்களால் ஆக்கப்பட்டது!! அதன்மீது, அவன் மாற்றான்! மதிகெட்ட மாதே! மதுக்குடம், அதன்மீது அரசியாரின் அருமைக் குமாரர் இருவரும், ஒருவரோடு ஒருவர் மற்போர் நடத்தி, இந்தப் பட்டு விரிப்புமீதுதான், உருளுவார்கள் - அரசியார், கைகொட்டிச் சிரிப்பார்கள்! அந்தப் பட்டு விரிப்புமீது எங்கிருந்தோ வந்தவன், இறுமாப்புடன் இருக்கிறான். இளித்தபடி, அவன் எதிரே நின்று, ஆடுகிறாய்! ஆடாதே! நாட்டின் மானம் போக்காதே! ஆடற்கலை பயின்றாய், இந்த அக்ரமனுக்காக அல்ல!! ஆடாதே! ஓடு! களம் நோக்கிக் கடுகி ஓடு! நமக்காக, நமது நாடு காக்க, மரபு காத்திட, மானம் காத்திட, போரிட்டு மடிந்தனர் உடன்பிறந்த உத்தமர்கள்! பிடிசாம்பலாகிப் போயினர்!! அந்தச் சாம்பற் குவியலின்மீது நின்று ஆடு; நாடு அழிந்ததுபற்றி அழுதுகொண்டே ஆடு! எதிரியின் தலைகளைக் கொய்து, கிழே போட்டுக் காலால் துவைப்பதுபோல ஆடு! கால்கள் ஓயும்வரை ஆடு! கனைத்துக் கீழே விழும் வரையில் ஆடு! ஆடிக்கொண்டே கிட! ஆவிபோகும் வரையில் ஆடியபடி கிட! அங்கு! இடுகாட்டில்! கழுகுகளும் நரிகளும் வட்டமிடும் இடத்தில்! உடலைக் கொத்தும் கழுகு; இவன் நமது உரிமையைக் கொத்தி அழித்துவிட்டவன்! உதிரம் குடிக்கும் நரி; இவன், மது குடிக்கிறான்; நமது நாட்டு மானத்தைக் குடித்து விட்டோம் என்ற மண்டைக்கனம்கொண்ட நிலையில்! இவன்முன் ஆடாதே! ஆடாதே!’’ ஆமாம்! ஆடமாட்டேன்! வெட்டிச் சாய்க்கட்டும். துண்டான கால்கள் துடிக்கட்டும், கரங்கள் துடிக்கட்டும், அந்த நாட்டியத்தைக் காணட்டும்! உயிரோடு இருக்கும் நான், ஆடமாட்டேன்!! இந்த நாடு, என் நாடு! இந்த மண், இந்த நாட்டு மக்களுடைய இரத்தம், வியர்வை, கண்ணீர் பட்டுப்பட்டு மணம் பெற்றுவிட்டது! புனிதமாகிவிட்டது! இதிலே, குழந்தையாகத் தவழ்ந்தேன்; குமரியாக நடந்தேன்; இன்று கூலிக்காரியாக ஆட முனைந்தேன்! நல்ல நேரத்திலே வந்தீர்கள், எனைத் தடுக்க. நான் ஆடப்போவதில்லை! நாட்டைப் பிடித்துவிட்டோம் என்று இறுமாந்து கிடக்கிறான் இவன். இடிபாடுகளையும், பிணங் களையும்தான் காணவேண்டும்; மாளிகைகளையும், அங்கு அடிமை நிலையில் உலவும் ஆடவரையும் பெண்டிரையும் அல்ல. நம்முடையதாக இருக்கும் வரையில்தான் நாடு! மாற்றானிடம் சிக்கினால், நாடாகுமா? காடு! சுடுகாடு!! அங்கம், தங்கம்! - என்றனர்; அழைத்து வா, என்றேன்! இழுத்துவந்து நிறுத்தினார்கள்! என் மடியில் இருக்கத் தக்கவள் தான் என்று எண்ணினேன்! அடி, ஆடிப்பிழைப்பவளே! வலுவிழந்ததால், நாடிழந்தான்! திறமைமிகுதியால் வெற்றி வீரனானேன்! அவன் ஏதோ உளறுகிறான்; அவன் உரைகேட்டு, ஆடுவதை நிறுத்திவிட்டாயே! ஆகுமா இந்த அகந்தை!! மாற்றானின் மண்டையைப் பிளந்த கரங்கள் இவை! மலரணையில், உன் கால்களை வருடத் தயாராக உள்ளன!! பொறிபறக்கும் கண்ணினனாய்ப் போர்க்களத்திலே சுற்றினேன்; வெற்றி பெற்றேன்; காலமெல்லாமா, கரியுடன் கரி போரிடுவதை, கால்கை இழந்தவர்கள் துடிதுடிப்பதைக் கண்டபடி இருப்பது; கண்களுக்குக் கனிவு வேண்டாமா! உன்னைக் கண்டேன்! பாலைவனம் நடந்துசென்று, நெடுந் தொலைவில், பனி நீரோடையைக் கண்டவன்போலானேன்! அள்ளிப் பருகப் போகும்போதே அது கானல் நீராகிடவா வேண்டும்!! அவன் அனுபவமற்றவன். பிழைக்கத்தெரியாத அப்பாவி நாடகம்! பற்றாம்! மரபாம்! மாண்பாம்! பொருளற்ற வார்த்தைகள்! இவன் நாட்டின் இலட்சணம் தெரியாதா, எனக்கு எங்கு பார்த்தாலும் பொட்டல் காடுகள்! எவரும், கடினமாக உழைத்தாக வேண்டும். பொன்விளையும் பூமியோ இது!! அது, எங்கள் நாடு! பொன்! முத்து! பவழம்! வீரம்! வெற்றி! செல்வபுரி!! அங்கு, கொடி பிடிக்கும் வேலையில் அமர்ந்தாலும் நிம்மதியாக வாழலாம். அதை அறியாமல், அவன் உழல்கிறான்; அவன் உளறுவது கேட்டு, நீ ஆடலை நிறுத்திவிட்டாய்!! ஆபத்தைத் தேடிக் கொள்ளாதே! அழிவைக் கூவி அழைக்காதே! உயிரோடு இருக்கிறவரையிலேதான், அழகு, இளமை, துடிப்பு, எல்லாம்! பிறகு பிணம்! காக்கைக்கும் கழுகுக்கும்! மண்ணுக்கும் நரிக்கும்! நான், காக்கை, கழுகு, நரி ஆகியவைகளைவிடக் கேவலமா!! உன் எழிலை நான் ரசிப்பேன் - கழுகும், நரியும், உன் சதையைப் பிய்த்துத் தின்னும். எனக்கு உன் இன்மொழி போதும், சுவைதர! அவை உன் இரத்தத்தை அல்லவா குடிக்கும்!! எனக்கு விருந்தானால், எந்நாளும் உனக்குத் திருநாள்! அவைகளுக்கு விருந்தானால் பிறகு மறுநாள் என்பது உனக்கு ஏது? வாடி. வடிவழகி! வட்டநிலா முகத்தழகி! தொட்டால் போதுமென்று எட்டிநின்று ஏங்கிடும் ஏத்திழையார், எத்தனையோ பேர் களுண்டு. எதனையும் அறியாமல், எனைவிட்டு விலகுகிறாய்!! குறி தவறிப் போகாது களத்திலே மட்டுமல்ல!! ஐயோ!! அடப்பாவி!! இதயத்திலே பாய்ந்து. . . வீரன் வீசிய கட்டாரி மார்பிலே பாய்ந்துவிட்டது; படைத் தலைவன் மார்பிலிருந்து, இரத்தம் குபுகுபுவெனக் கிளம்புகிறது! கீழே சாய்கிறான்! ஆடலழகி ஓடோடி வருகிறாள் வீரனிடம். வீரர்கள் இருவரையும் பிரிக்கிறார்கள். சிறை! தூக்குத் தண்டனை! பலமான பாதுகாப்பு ஏற்பாடு!! தூக்குக் கயிற்றினை எடுத்து முத்தமிட முனைகிறான், மாற்றானை வீழ்த்திய பெருமையுடன் மடிவது மாவீரனுக்குப் பெரும் புகழ் என்ற எண்ணத்துடன். கண்களை ஒருகணம் மூடுகிறான்; அவளைக் காண; மனக் கண்ணால்! திறக்கிறான்! அவளே எதிரே நிற்கிறாள்; முத்தமிடத் துடித்திடும் அதரம் தெரிகிறது!! கனவு - பட்டப் பகலில்! இளைஞன்! எனவே, நாட்டின் நிலை குறித்து உள்ளத்து எழுந்த வேதனையினூடேயும், அவன் ஆடலழகியைக் காண்கிறான். ஆனால், அவளும், ஆதிக்கக்காரனை எதிர்த்து நிற்கும் துணிவுபெற்றவளாகிறாள் - இளைஞனின் நினைப்பு அப்படி! இளைஞன் அல்லாமல் ஒரு முதியவர், நாட்டுக்கு வந்துற்ற கேடுபற்றி உள்ளத்தில் எழும் வேதனை கொண்ட நிலைபெற்றார் என்றால், அவருடைய நினைப்பு - பட்டப்பகலில் அவர் காணும் "கனவு’ ஆடலழகி பற்றியதாக இராது - நாட்டுப் பெருமையுடன் தொடர்புகொண்டதாக இருக்கும். தம்பி! நேற்றுமாலை மடல் எழுதிக்கொண்டிருக்கும் போதே குறிப்பிட்டிருந்தேனல்லவா - வடாற்காடு மாவட்டத் தோழர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று. சென்றுவந்து, பிறகுதான் எழுதுகிறேன். சென்ற ஊர்களிலே ஒரு சிற்றூரின் பெயர் ஐம்படையூர் - இப்போது பெயர், மருவி, கொச்சையாகி விட்டிருக்கிறது; உச்சரிப்பில் சிற்றூர்! அங்கு நான் நமது கழகக் கொடியினை ஏற்றிவைக்கும்போது இரவு மணி பதினொன்று. சிற்றூர் என்றேன், தம்பி! சிறப்பான வரலாறு இருக்கிறது அந்தச் சீரூருக்கு. வடபுலத்து மன்னன் புலிகேசி என்பானை, இங்கிருந்து படை எடுத்துச்சென்று தோற்கடித்து, வாதாபி எனும் நகரை அழித்து, வெற்றிவாகை சூடிய, பல்லவப் பெரும்படைகள் ஐந்து, திரும்புகாலையில், இந்தச் சிற்றூரில் தங்கி இருந்தனவாம்! கூத்தனார் என்பவர், ஐந்து படைகட்கும் இங்கு, தங்கியிருக்க வசதிகளைச் செய்தளித்தாராம். நள்ளிரவில், திராவிட நாடு திராவிடருக்கே! என்ற முழக்க மெழுப்பியபடி, அந்தச் சிற்றூரில், நமது கழகத் தோழர்கள் அணிவகுத்துச் சென்றனர். அந்தச் சிற்றூருடன் இணைந்துள்ள வரலாறுபற்றி அறிந்திருந்த எனக்கு, என்ன நினைப்பு எழுந்திருந்திருக்கும் என்பதை விளக்கவா வேண்டும். சிறுசிறு குடில்கள்! செல்வம் கொழிக்கும் இடமல்ல! சேறும் சகதியும் நிரம்பிய வழிகள்! ஈச்சை, பனை, முட்செடிகள் புஞ்சைக்காடு, வயல், இவை உள்ள நிலை! அங்கு முன்னே இருவர் வழிகாட்ட, பின் இருந்து பதின்மர் தள்ளிவிட, உளைச் சேற்றில் புதைந்திடாமல் உருண்டுசெல்லும், மோட்டாரில், நாங்கள் செல்கிறோம். இந்த வழியிலே, ஐந்துபடைகள், வாகை சூடிய படைகள், வாதாபியை வென்ற படைகள், பவனி வந்தனவாமே! - என்று எண்ணினேன் - என் மனக்கண்முன், கரியும் பரியும், தேரும் திருவும், கட்கமேந்தியோரும் கட்டியம் கூறுவோரும், முரசு கொட்டுவோரும் கவிதை புனைவோரும், கொடிகளும் தோரணங்களும், வடுக்களைக்கொண்ட வீரர்களும் அவர்கள் கொண்டுவந்த பொருட்களும், தெரியவில்லை என்றா எண்ணுகிறாய். மிக நன்றாகத் தெரிந்தன! வெற்றிபெற்ற படைகளை, மக்கள் வரவேற்கும் ஆரவாரம், வாழ்த்தொலி கூடத்தான், செவியிலே வீழ்ந்தது! செல்வதோ, சேறு நிரம்பிய பாதையில், பழையதோர் மோட்டாரில்! நினைப்போ, வெற்றி ஈட்டிய வேற்படையினர் விழாக்கோலம்பூண்டு, அவ்வழி நடந்த வரலாறுமீது!! இடமும் நேரமும், இயல்பும் தொழிலும், பருவமும், மனப்பக்குவமும், நோக்கமும், எங்ஙனம் உளதோ, அதனைப் பொறுத்து, பாரதியார் குறிப்பிட்ட, பட்டப் பகலில் காணும் கனவு இருக்கிறது. அந்தக் கனவும், காண்பவரின் களிப்பு, சிறப்பு, வாய்ப்பு, வல்லமை என்பதுபற்றியதாக இல்லாமல், பொதுநலனுக்கு உகந்ததாக, நாட்டு நிலையினை உயர்த்துவதாக, மக்களுக்கு மாண்பளிப்பதாக இருப்பின் மட்டுமே, அது பாராட்டப்பட வேண்டியதாகிறது. அப்படிப்பட்ட "கனவுகள்’ உலகு திருத்தப் படத்தக்க உணர்வுகளை, வேகத்தை, திறமையைத் தந்தன. கனவுதானே! கண்ணாடிக் கடைக்காரன் கனவு தெரியு மல்லவா என்று கூறிக் கெக்கலிசெய்திடத் தோன்றும், நுனிப்புல் மேய்ந்திடும் போக்கினருக்கு. ஆமாம் தம்பி! அப்படி ஒரு கதை உண்டு, அறிந்திருப்பாய். அல்நாஷர் எனும் பெயரினன்; அங்காடியில் கண்ணாடிக்கடை நடத்திவந்தான்; பகற்போதினிலே உறங்கினான்; கனவு கண்டான். கண்ணாடிக் கடையில் இலாபம் குவிகிறது - குன்றுபோல்! பெரிய இடம்! பெரிய கடை! மலைபோல இலாபம்! மாடமாளிகை! எடுபிடி! பட்டுப் பட்டாடை! வாகனாதிகள்! ஊரே, ஏவலுக்குக் காத்து நிற்கிறது! அரசன் அறிகிறான்! அவன் மகளையே தருகிறான்! அரண்மனையில் வாசம்! அந்தப்புறம்! அம்ச தூளிகா மஞ்சம்! கால்வருடுகிறாள் மன்னன் மகள்! காலை உதறுகிறான், அல்நாஷர் கண்ணாடிச் சாமான்கள் உடைபடுகின்றன! கனவு கலைகிறது! பெருநட்டம் ஏற்பட்டது கண்டு, கனவுகண்ட அல்நாஷர் கதறுகிறான். இது கதை! இதைக்காட்டிப் பகற்கனவு வீண் நட்டம் கொடுக்கும் என்ற பாடம் புகட்ட முனைகிறார்கள். தம்பி! இந்தக் கனவுக்கும், பாரதியார் குறிப்பிட்டாரென்று சொன்னேனே அந்தக் கனவினுக்கும், அடிப்படையில் உள்ள மாறுபாடு, கவனித்தனையா? அல்நாஷர் கண்ட கனவு அவன் உயர்வுபற்றி!! நான் விளக்கிக்கொண்டு வருகிற வகைக் கனவுகள், காண்போருக்குக் களிப்பும் உயர்வும், இலாபமும், சுவையும் தருவன அல்ல; மக்களுக்கு, நாட்டுக்கு, நிலைமை திருந்துதற்கு! மாண்பு! இதிலேதான் இருக்கிறது. இத்தகைய கனவு காண்போர், புத்தம் புதிய உணர்வுகளை மற்றவர் பெறச் செய்கின்றனர். பல்வேறு நாடுகளிலே, பல்வேறு காலங்களிலே, இத்தகு கனவுகள் கண்டனர் பலர்; சிலர் கவிதைகளாக்கினர்; சிலர் கருத்துமிக்க ஏடுகள் தீட்டினர், எதிர்காலம்பற்றி! அப்போ தெல்லாம், அவைகளின் உட்திறம் அறிய இயலாதார், எள்ளி நகையாடினர். "கனவு காண்கிறான்! பகற்கனவு!’’ என்று கேலி செய்தனர். பாலைவனம் சோலைவனமாக வேண்டும்! அங்கு பசுங்கிளிகள் கொஞ்சி விளையாடவேண்டும்! கோலமிகு மயில்கள் ஆடிடவேண்டும்! கோதையுடன் கூடி இசை பயின்றிடவும் வேண்டும்!! - என்று கனவு கண்டோர்கள் பலர். வேதனை தரும் நிலையில், நாடு இருக்கும்போது விம்மிடுவர் சிலர்; சிலர் கொதித்தெழுவர்; சிலர் இந்நிலை மாறி நல்லதோர் நிலை எழாதா என்று ஏக்கமுற்று, எண்ணிப்பார்ப்பர்; அந்த எண்ணத்திலே ஓர் "எழிலுடை எதிர்காலம்’ தெரியும்; அகமும் முகமும் மலரும்; அருங்கவிதையோ, உணர்ச்சியூட்டும் உரைநடையோ உருவெடுக்கும்; உலகுக்கு ஒரு புதிய உணர்வு கிடைக்கும். மக்கள் குறித்தும், நாட்டு ஆட்சிமுறை குறித்தும், இத்தகைய கனவு கண்டவர்கள், எழுதியுள்ள ஏடுகள் பல மேனாடுகளிலே காணக்கிடக்கின்றன! சர் தாமஸ் மூர் என்பவர் யுடோபியா - Utopia என்றோர் நூல் எழுதினார். ஒரு நாடு எங்ஙனம் அரசாளப்படவேண்டும். மக்கள் எவ்விதம் இருக்கவேண்டும், தொழில் முறைகள் எவ்வண்ணம் இருக்கவேண்டும் என்பனபற்றி எல்லாம் அவர் மனதிலே உருவாகிய கருத்துக்களை உள்ளடக்கிய ஏடு அது. யுடோபியா எனப் பெயரிட்டார், அவர் காணவிரும்பிய முறைகள் திகழ்ந்ததாக ஒரு தீவினைக் கற்பனை செய்து. யுடோபியா என்று மூர், தமது கற்பனைத் தீவுக்குப் பெயரிட்டார் - பெயரிலேயே பொருளும் இழைந்திருந்தது. யுடோபியா - Utopia எனும், அந்த ஆங்கிலச் சொல்லுக்கு மூலம், இரண்டு லத்தீன் மொழிச் சொற்கள். ஞன் என்றோர் சொல்; அதற்குப் பொருள், இல்லாத என்பதாகும். பர்க்ஷர்ள் என்பது மற்றோர் சொல்; அதற்குப் பொருள் இடம் என்பதாகும். இந்த இரு லத்தீன் சொற்களையும், ஒரு ஆங்கிலக் கூட்டுச் சொல்லாக்கி, இல்லாத இடம் என்று பொருள் கொண்ட யுடோபியா, மற்ர்ல்ண்ஹ என்று, தமது கற்பனைத் தீவுக்குப் பெயரிட்டார், சர். தாமஸ். மூர். இம்முறையினைத் தொடர்ந்து வேறு பலரும், பல்வேறு கற்பனை நாடுகளை, கற்பனை அரசுகளை, ஏட்டிலிட்டுக் காட்டினர். இவைகள் யாவும், அவர்கள் பட்டப் பகலில் கண்ட கனவுகள்! அவை பலிக்குமா பலிக்காதா என்பது, அவைகளுக் காகப் பாடுபட, எத்துணைபேர் முன்வருவர், அவர்தம் தாங்கும் திறமை எத்தகையது என்பதைப் பொறுத்து இருக்கிறது. ஒருவன் தன் சுகத்துக்காக, தன் இலாபத்துக்காக, தன் உயர்வுக்காகக் காணும் கனவுகள் - அல்நாஷர் கனவுகள் - மற்றவர்களை, முயற்சி எடுத்துக்கொள்ள வைக்காது. கனவு கண்டவர்களே, எண்ணி எண்ணி ஏங்கவேண்டும்; அல்லது முயற்சி செய்து பார்க்கவேண்டும்; அவர்கள் கண்ட கனவு பலித்திட, மற்றவர்கள் பாடுபட முன்வருவர் என்று எதிர் பார்ப்பது பேதமை. பொது நோக்கத்துக்காக, மக்கள் வாழ்வு செம்மை அடைவதற்காகத் தூயநோக்குடன் சிலர் பட்டப் பகலிலே காணும் கனவுகள், பலித்திட, கனவு கண்டவர்கள் மட்டுமல்ல, கூறக் கேட்டவர்கள் முயற்சிக்கலாம்; முயற்சிக்க வேண்டும்; முயற்சித்துள்ளனர்! ஒருவன், தன் நலனுக்காகக் காணும் கனவுபற்றி அல்நாஷர் கண்டானாமே அஃதுபோல - வெளியே எடுத்துரைக்கக்கூடக் கூச்சப்படுவான்! கூச்சத்தை அடக்கிக்கொண்டு கூறினாலும், கேட்போர் கைகொட்டிச் சிரிப்பர், கேலியாக!! பொது நோக்குக்காக, மக்கள் நலனுக்காக, நாட்டு உயர்வுக்காக, கனவு காண்போர், எழுச்சியுடன் அதனை எடுத்துரைப்பர்; மற்றவர்களும் அதனை மகிழ்ச்சியுடன் கேட்பர். கேட்போருக்கு முதலிலே வியப்பும், பிறகு சுவையும் கிடைக்கும்; மெள்ள மெள்ள, அதனைப் பெறவேண்டும் என்ற எண்ணம் எழும் - முயற்சியில் ஈடுபட ஆவல் தோன்றும் - ஈடுபட்ட பிறகு, உறுதி வளரும். எனவேதான், தூய பொதுநோக்குடன் பட்டப்பகலில் கனவு காண்பவர்கள், பிறரைச் சிந்திக்கவும் செயலாற்றவும் செய்து விடுகிறார்கள். தம்பி! ஆற்றோரத்தில் களைத்துப் படுத்திருந்த வீரன் கண்ட "கனவு’ அவனைத் தூக்குமரம் அழைத்துச் சென்றது, அல்லவா? அதனால், என்ன பலன்? அவனுக்காகட்டும், அவன் தன் கனவினை உரைக்கக் கேட்டிடும் மற்றவர்களுக்காகட்டும்? - என்று கேட்பாயேல், கூறுகிறேன். அயலான் நாட்டைப் பிடித்துக் கொண்டான் என்றால், அடங்கிக்கிடப்பது, அடிமையாகிவிடுவது என்பதல்ல, ஒவ்வொருவரும், ஆடிப்பிழைப்பவளானாலும், வாட்போர் வீரனானாலும், ஒவ்வொருவரும், தத்தமக்குக் கிடைக்கும் வாய்ப்புக்குத் தக்கபடி, வல்லமைக்கு ஏற்றவண்ணம், ஆதிக்கக்காரனை எதிர்த்து ஒழித்திட முனையவேண்டும் - அந்த முயற்சியிலே, உயிர்போவதாயினும்! இந்த அரிய பாடம் இருக்கிறதல்லவா, வீரன் கண்ட கனவில்! அதனை அறிவோர், எத்துணை வீர உணர்ச்சிபெற இயலும் என்பதை எண்ணிப்பார், தம்பி! அப்போதுதான், அத்தகைய கனவுகள் காண்பதால், கிடைத்திடத்தக்க பலன்கள் விளங்கும். அடிமையாக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலேயும், விடுதலை பற்றிய கனவுகளைக் கண்டவர்கள், வீரத்தை, தியாக உணர்வை, அவை மூலம், நாட்டு மக்கள் பெற வைத்தனர் - அதனால், அவர்கள் கண்ட கனவுகள் நனவுகளாயின! நிறைவேறின! பலித்தன! எண்ணிடச் சுவை தருகிறது என்பதற்காக மட்டுமே, நினைப்புகளை ஏற்படுத்திக்கொள்வதும், கேட்போருக்கு இனிப்பு அளிக்கிறது என்பதற்காகவே, சுவைபடக் கூறிடுவதும் பலன் தருவதாக அமையாது. சுவை இருக்கவேண்டும், அதேபோது, பெற இயலும் என்ற எண்ணத்தைத் தரவல்லதாகவும், பெற்றாக வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாகவும், பெறுவதற்காக எந்த இழப்பையும் பொருட்படுத்தக்கூடாது என்ற உறுதியையும் தரவல்லதாக, அந்தக் கனவு இருத்தல்வேண்டும். வானவில்லைக் கண்டவன், வியந்து மகிழ்ந்திடுவது, முழுப் பலன் பெறும் செயலாகாது. வானவில்லிலே கண்ட வண்ணங் களை, நினைவிலே கொண்டு, அத்தகைய வண்ணங்களை மற்றப் பொருட்களிலே ஏற்றிடத்தக்க கலவை முறையினை அறிந்திட முயற்சித்து வெற்றிபெற்றால் மட்டுமே, வானவில்லைக் கண்டதால் ஏற்பட்ட வியப்பும், மகிழ்ச்சியும் முழுப் பயன் அளித்தது என்று கூறமுடியும். வீரவரலாற்றுச் சுவடிகளைச் சொல்லழகுக்காக மட்டுமே படிப்போர் வானவில்லைக் கண்டு வியப்போர் போன்றார்! வரலாற்றுச் சுவடிகளிலே கிடைக்கும் வீர உணர்ச்சியை, அடிமைத் தளைகளை உடைத்தெறியும் செயலுக்காகப் பயன் படுத்துவோர், வானவில்லிலே காணப்படும் வண்ணங்களை, கலவை முறையால், ஆடைகளிலும், பிற பொருள்களிலும், ஏற்றி பயன் காண்போர் போன்றார்! ஆகவே, தம்பி! உள்ள நிலைமைகளால் உளம் வெதும்பிச் செயலாற்றவும் சிந்திக்கவும் இயலா நிலை பெற்றுவிடாமல், தன்னலமற்று, பொதுநோக்குடன், நல்ல நிலைமை காண விரும்பி, தூய்மையாளர் கொள்ளும், சுவையும் பயனும் தரத்தக்க கற்பனைதான், பட்டப் பகலிலே காணப்படும் கனவு! கொடுமைக்கு ஆளானோர், குமுறிக் கிடப்போர், அனைவருமே இத்தகைய கனவுகள் கண்டுவிட முடியும் என்று கூறமுடியாது. கொடுமைகளைக் கண்டும் மனம் குலையாமல், நிலைமையைச் செம்மைப்படுத்தி ஆகவேண்டும் என்ற துடிப்புக் கொண்டோர் மட்டுமே, எதிர்காலம்பற்றிய, செம்மைபற்றிய, கனவு காண முடியும்; கண்டனர்; அந்தக் கனவுகள் யாவும் பலித்துமுள்ளன. அதனாலேயே, யார் என்ன செய்யமுடியும்? இவன் நடமாடும் அழிவு அல்லவோ? என்று மக்கள் கண்கசிந்து கரம் பிசைந்து குமுறத்தக்க நிலையினை உண்டாக்கிய கொடுங்கோலர்கள், இறுதியிலே அழிந்தொழிந்து போயினர். அடிமைப் படுகுழியில் வீழ்ந்துவிட்டது நாடு; இனி அது தலை நிமிர்ந்து, தன்மானம் பெற்று, தன்னரசு பெற்று வாழ முடியாது என்று மிகப் பெரும்பாலான மக்கள் எண்ணி மனம் உடைந்து போன நிலையை உண்டாக்கி வைத்த ஆதிக்க அரசுகள், கடைசியிலே, அடியற்ற நெடும்பனையாயின! சிட்டுகள் வல்லூறை எதிர்த்தன! சீமான்களைப் பராரிகள் விரட்டினர்! மாளிகைகள் மண்மேடுகளாயின! குப்பைமேட்டுக்காரன் கோலேந்தியைக் குப்புறத் தள்ளினான்! தம்பி! இவைகளெல்லாம், எங்ஙனம் நடைபெற்றன? யாரோ சிலர் கண்ட கனவுகள், இவர்களை உணர்ச்சிப் பிழம்புகளாக்கிவிட்டன! இறுதி வெற்றி கிட்டும் வரையில், நடைபெறப் போவது குறித்து நாலாறு பேர், கூறி வந்ததைக் கற்பனை என்றும், கவைக்குதவாதது என்றும், காட்டுக் கூச்சலென்றும், பகற் கனவு என்றும்தான் மிகப் பலர் கூறினர். அங்ஙனம் கூறிடுவோர், எவரெவர் என்பது குறித்து எண்ணிப் பார், தம்பி! சுவைமிகு உண்மைகள் பல தெரியும். அசைக்கவே முடியாது! என்று இறுமாந்து கிடக்கும் ஆதிக்கக்காரன், விடுதலைக்கான முயற்சிகள் உருவாகிக்கொண்டு வருவதாக எவரேனும் கூறினால், கண் சிமிட்டுவான், கரம் அசைப்பான், கேலிச் சிரிப்பொலியுடன் பேசுவான்; மனப்பிராந்தி என்பான்! மமதை மதியை மாய்த்துவிட்ட நிலை அது. கற்பனைகள் - கனவுகள் என்பவைகள் பலித்திருக்கின்றன என்ற வரலாறு அறியாதவர்கள், விடுதலை உணர்வு எழுப்பி விடும் கற்பனையைக் கவைக்குதவாத பேச்சு என்று கருதித் துச்சமென்று தள்ளிவிடுவர். விடுதலைக்காகப் பாடுபடுவது நெருப்பாற்றில் நீந்திச் செல்வதுபோன்றதாகும் என்பது தெரிந்து பீதிகொள்வோர், இழப்புகளுக்குத் தயாராக இல்லாதவர்கள், வெல்வெட்டு மெத்தையினர் அல்லது அத்தரத்தினருக்கு வட்டில் ஏந்தி நிற்போர், வெள்ளை வேட்டிகள் அல்லது அதுபோல வெளிச்சம் போட்டுக் கிடப்போர், இவர்களும், விடுதலை உணர்வு எழுப்பி விடும் கற்பனையைக் கனவு என்று கதைப்பர்! கோழைத்தனத்தை மறைத்திட, மேதாவித்தனம் என்று எழுத்துப் பொறிக்கப்பட்ட சல்லாத் துணியால், தம்மை அலங்கரித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு நாட்டிலேயும், விடுதலைக் கிளர்ச்சிக் கட்டத்திலே, இத்தகைய வீணர்கள் இருந்தனர், விடுதலை வீரர்களை இகழ்ந்துகொண்டு, அவர்தம் இலட்சியங்களைப் பழித்துக்கொண்டு எழிலுடைய எதிர்காலம் குறித்து அவர்கள் கூறுவனவற்றை, வெட்டிப் பேச்சு என்று பேசிக்கொண்டு, கட்டி வைத்த குக்கல் கண்டவரைப் பார்த்துக் குலைத்திடும் வாடிக்கை போல இருப்பர். தம்பி! ஆதிக்கக்காரனின் கூர்வாள், அடக்குமுறையின் கொடிய கூரிய பற்கள் என்பவைகள் மட்டுமல்ல, இத்தகை யோரின் இழிமொழிகளையும், விடுதலை விரும்பிகள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டி வருகிறது! ஏற்றுக்கொண்டுள்ளனர். நஞ்சல்லவா கொடுத்தனர் சாக்ரடீசுக்கு! கல்லால் அடித்தல்லவா துரத்தினர், நபிகள் நாயகத்தை! முள்முடி அல்லவா சூட்டினர், ஏசுவுக்கு! அவர்களுக்கே அக்கதி என்றால், தம்பி! மிகச் சாமான்ய மானவர்கள், மிகப் பெரிய இலட்சியத்துக்காகப் பாடுபட முன் வந்தால், ஏசவா ஆட்கள் இருக்கமாட்டார்கள்!! தாங்கிக் கொண்டனர்! தாங்கிக் கொள்வோம்!! கனவுகள் பலிக்கும்; ஏனெனில் அந்தக் கனவுகள், நமக்கு ஒரு மாளிகை, நம்மைச் சுற்றிலும் ஆலமேற்ற விழியினர். நம் எதிரில் பேழைகள். அவைகளிலே அணிபணிகள் என்ற இம்முறையில் அல்ல! நம்மை நோக்கி வாட்கள்! நமது பிடரியில் ஆதிக்கக் காரனின் கரம்! கரமா? பார், தம்பி! எனக்கு ஏற்படும் எண்ணத்தை, கரம் என்கிறேன் - கரத்தாலாவது நெட்டித் தள்ளட்டும் என்று; கரமல்ல, தம்பி! கரம் அல்ல! ஆதிக்கக்காரனின் கால்! நமது உடலில் புண் - கசையடியால் ஏற்பட்டவை! நமது இருப்பிடம், சிறை எனும் இருட்டறை! நமக்குப் படுக்கை, வைக்கோல் தூவப்பட்ட அல்லது அதுவுமற்ற கட்டாந்தரை! நமக்குக் கலயம் மண்ணாலானது! அதிலே உள்ளது புழுத்தது புளித்தது; அழுகல், நாற்றம் நிரப்பியது!! - இவைபோன்ற இன்னல்கள் நம்மை எதிர்நோக்கி இருப்பது தெரிந்தும், நாடு தன்மானம் தழைக்கும் இடமாக, தன்னாட்சிக் கூடமாகத் திகழவேண்டும் என்றல்லவா எண்ணுகிறோம். எத்துணை ஆத்திரம் பிறக்கும், ஆதிக்கக்காரர் களுக்கு, உறுமுகின்றனர்! அந்த உறுமலைக் கேட்டுக் குலைநடுக்கம் கொள்பவர்கள், நம்முடன் எங்ஙனம் இணைந்து இருக்க இயலும். நாடு மீட்டிடும் நற்பணியிலே ஈடுபட்டிருக்கும் நம்முடன் இருக்க, கூடிப் பணியாற்ற இயலாதார், தமது இயலாமையையா வெளியே எடுத்துரைப்பர்!! கூச்சமாக இருக்குமல்லவா? எனவே அவர்கள், நமது எண்ணம் ஈடேறாது, திட்டம் வெற்றி பெறாது, கற்பனை கவைக்குதவாது, கனவு பலிக்காது என்று பேசித் திரிகின்றனர். வேறென்ன செய்வர்! தம்பி! அரவம் கேட்டதும் அச்சம் கொண்டு, தலையை ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வது ஆமை மட்டுமல்ல, சில ஆடவரும் உளர்!! ஆமையாவது, தன்னடக்கத்துடன், தன் நிலைமைபற்றி வாதிடுவதில்லை. வாய்மூடிக் கிடக்கிறது. இவர்கள் ஆமையா! ஆடவர்களல்லரோ! ஆர்ப்பரிக்க வாயும் இருக்கிறதே; ஆர்ப்பரிக்கக்கூட முன்வருகின்றனர்! வாய்! பேசத்தானே!! இதைத்தான் பேசவேண்டும், இப்படித்தான் பேசவேண்டும், பேசுவதிலே பொருத்தம் இருக்கவேண்டும், பொருள் இருக்க வேண்டும் என்றா கவனிக்க முடியும்!! பேச, வாய்! எனவே பேசுகின்றனர்!! தம்பி! இயலாமை காரணமாக, சிலர், இலட்சியத்தை, தூய்மையாளர்களின் எண்ணங்களை, கற்பனைகளை இகழ்ந் திடுவர்; பொருட்படுத்தாதே! இதனை உனக்குக் கூறவே, பட்டப் பகலில் காணும் கனவுபற்றிப், பாட்டுக்கொரு புலவன் பாரதியடா! என்று நாட்டுக்குரியர் கூறிப் பாராட்டிடும் பாரதியாரின் பாடலை நினைவுபடுத்தினேன். மற்றோர் முறை அந்தப் பாடலைப் படித்துப்பார். அன்புள்ள அண்ணாதுரை 24-9-61 குன்றம் பல சென்றிருந்தேன் சிலர் பிரிந்தபின் கழகத்தின் நிலை - காங்கிரசின் போக்கு - தி. மு. க. தேர்தல் தம்பி! சொல்லும்போதே சுவைதரும், "தம்பி’ என்ற இந்தச் சொல்லை ஒரு திங்களாகச் சொல்ல இயலாமற் போய்விட்டதை எண்ணி எண்ணி, இனிப்பூட்டும் அந்தச் சொல்லை, மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லிச் சுவை பெறலாமா என்று தோன்றுகிறது. ஆனால், தம்பி! தவறு என்னுடையது அல்ல. துரைத்தனத்தின் போக்கு, நம்மை ஒரு திங்கள் பிரித்துவைத்தது. ஆண்டுக்கணக்கிலே பிரித்துவைக்கத்தக்க போக்கினைத் துரைத்தனம் மேற்கொண்டிடத் திட்டமிட்டும் இருக்கிறது, அறிவாய். இந்தப் பிரிவு, கடுமையான சட்டம் காரணமாக ஏற்பட்டதல்ல; பத்திரிகைக் காகிதக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக ஏற்பட்டுவிட்டது; இதழுக்கான தாள் கிடைக்க வில்லை, உரிய நேரத்தில்; பலமுறை வேண்டுகோள் விடுத்தும்! பிறகு, நமது நண்பர் தருமலிங்கம் எம். பி. அவர்கள், இதற்கென்றே, டில்லிப் பட்டணம் பறந்துசென்று முறையிட்டு, நெருக்கடி நிலைமையை விளக்கிக்கூறித் தாள் கிடைத்திடச் செய்தார்; இதோ, உன்னிடம் பேசிட முடிகிறது, தம்பி! ஆனால், மடல் தீட்டி மகிழும் வாய்ப்பினைத்தான், நான் ஒரு திங்கள் இழந்து தவித்தேனேயன்றி, தம்பிகளை நித்த நித்தம் காணத் தவறினேனில்லை; தித்திப்பளிக்கும் உரையாடி மகிழ்ச்சிப் பெறாமற் போகவில்லை; காலை, மாலை, நடுப்பகல், நள்ளிரவு தொகுதி மூன்று 619 எனும் கால அளவும் தன்மையும் குறுக்கிடவில்லை, தம்பிகளைக் கண்டு மகிழும் திட்டத்தில். எங்கும் எழில் நிறை முகங்கள்! அன்பொழுகும் பார்வை! புன்னகை! உறுதி! இலட்சியப் பற்று! கொள்கை முழக்கம்! சீரிய பணி! தம்பி! எங்கு சென்றாலும் ஓர் புதிய துடிதுடிப்புத் தென்படுகிறது; புத்தம் புதியதோர் ஆர்வம்! ஒவ்வொருவரும் தத்தமது ஆற்றலைப் பெரும் அளவு மட்டுமல்ல, முழு அளவு காட்டியாகவேண்டும் என்ற நிலையிலே, சுறுசுறுப்புடன் பணியாற்றுகின்றனர். தொட்டுப் பார்ப்பதிலும், கைதட்டி வரவேற்பதிலும், கட்டிப்பிடித்துக்கொள்வதிலும், மாலையிட்டுக் காண்பதிலும், தழதழத்த குரலொலி எழுப்புவதிலும், தங்கநிறக் குழவிகளை என்னிடம் கொண்டுவந்து கொடுத்து இருக்கச் செய்வதிலும், தேர்தல் நிதி அளிப்பதிலும், சேதிகளைத் திரட்டித் தருவதிலும், எத்துணை ஆர்வம், மகிழ்ச்சி, பெருமை கொள்கின்றனர், உடன் பிறந்தார்! இதைக் காணக்காண, மாற்றார் கொள்ளும் மருட்சியும், வேற்றார் காட்டிடும் வியப்புணர்ச்சியும் வளருகிறது, வேக வேகமாக. தாயகத்தின் தன்மானம் காத்திட, மாற்றாரின் முயற்சிகளை முறியடித்திட, களம்புகக் கிளம்பிடும் படையொன்று, வீரநடை போட்டுச் செல்லுங்காலை, வீதிகளின் இருமருங்கிலும், பெண்டிரும், முதியவரும், சிறுமியரும், சிறாரும் கூடி நின்று, கையொலி கிளப்பியும், வாழ்த்தொலி முழங்கியும், பூச்சொரிந்தும் புன்னகை சொரிந்தும், படையினருக்கு வழி அனுப்பு நடத்துவது, கண்டிருக்கிறேன், கண்டிருப்பாய், காட்சிகளாக. பூச்சொரியும்போதே, கண்ணீர் கசியும்! கண்ணீரை விரட்டியபடி களிப்பொளி தோன்றும்! வாழ்த்தொலி எழுப்பும்போதே, வந்திடக்கூடுமே பேராபத்து களத்தில் என்று எண்ணம் எழும். அச்சம் குடையும்; மறுகணமோ, நாடு வாழ்ந்திடும் என்ற உறுதி அச்சந்தனை விரட்டி அடிக்கும். மணமாகித் திங்கள் சிலவே ஆகின்றன! மலர்ச்சோலை உலாவிடவும், மயிலே என்று அவன் அழைக்கக் கேட்டு மகிழ்ந்திடவும், மடியா மலரணையா? விழியா சுடர் ஒளியா? இதழா கனிச்சுளையா? இடையா படர்கொடியா? உடலா பொன் உருவா? என்றெல்லாம் அவன் பேச, விழியால் பதிலளித்து மகிழலாம் என்ற எண்ணம் கொண்ட எழிலரசி, மன்னன் களம் நோக்கிச் செல்லும் காட்சி கண்டு, கையொலியும் எழுப்புகிறாள், கண்ணொளியும் பொழிகிறாள். காதலின்பம் இழக்கிறோம் என்பதையும் உணருகிறாள், பெற்ற இன்பத்தை எண்ணுகிறாள், வெட்கி முகம் சிவக்கிறாள். களத்திலே "அவருக்கு’ ஏதேனும் ஏற்பட்டுவிட்டால்? என்று எண்ணுகிறாள், அச்சத்தால் முகம் வெளுக்கிறது. மறு கணமோ, நாடு வாழ்ந்திடக் கூடி நடந்திடும் தானையினர் எழுப்பிடும் வீர முழக்கம் கேட்கிறாள், எழுச்சி கொள்கிறாள், நாடு மீட்டிடச் செல்கிறான் என் மணவாளன்! என்று பெருமை கொள்கிறாள். தம்பி! எனக்கென்னவோ இப்போதெல்லாம், நமது கூட்டங்களில், ஊர்வலங்களில், காணப்படும் எழுச்சியும், மகிழ்ச்சியும், உணர்ச்சியும், எழுப்பப்படும் முழக்கமும், களம் நோக்கிச் செல்லும் படையினை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் காட்சியைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது! நமது “உடன்பிறந்தார்’ என்பதனால் மட்டும் ஏற்படும் மகிழ்ச்சி அல்ல! நமது”உடன்பிறந்தார்’ உயிரைத் துரும்பென மதித்து, எதையும் இழக்கத் துணிந்து, இழக்கொணாத உரிமை காத்திடச் செல்கிறார் களம் நோக்கி; கரமோ காலோ, உடலிற் சில பாகமோ வெட்டுண்டு போகலாம்! உயிரே பட்டுப் போகலாம்! செல்கிறார் செருமுனை நோக்கி! திரும்புங்காலை வெற்றிக்கொடி பறக்கும்! ஆயின், வீரர்பலர் உயிரிழந்திடுவர் - என்றெல்லாம் எண்ணங்கள் பலப்பல எழும்பித்தான், இந்த உணர்ச்சியைக் கிளப்பிவிட்டுவிட்டிருக்கிறது. ஒளிப்பானேன், மறைப்பானேன், தம்பி! எனக்கே அப்படிப்பட்ட உணர்ச்சிதான் முழுக்க முழுக்க. ஒவ்வொரு நாள் காணும்போதும், ஆசைதீரப் பார்த்திடுவோம், நாளையதினம் துரைத்தனத்தார், பார்க்கவிடுகிறார்களா இல்லையோ! - என்ற எண்ணம். ஒவ்வொரு முறை பேசும்போதும், சொல்லவேண்டியதனைத்தையும் சொல்லிவிடவேண்டும், ஏனெனில், மீண்டும் பேசிடும் வாய்ப்பு எந்த விநாடியும் பறிக்கப் பட்டுவிடலாம் - என்ற எண்ணம். தம்பி! நம்மில் அனைவருமே இந்த நிலையை மிக நன்றாக உணர்ந்துவிட்டிருப்பதனால்தான், கரை புரண்டோடும் எழுச்சிமட்டுமல்ல, இதுவரை காணாத புத்துணர்ச்சி, மன நெகிழ்ச்சி காணுகிறோம். களம் நோக்கி நடக்கிறோம், தம்பி! வாழ்த்தி வழியனுப்புகிறது நாடு! கண் துடைத்துக் கட்டிப்பிடித்து, கன்னம் தொட்டு, சென்றுவா, மகனே! வென்று வா! என்று வீடும் வாழ்த்தி அனுப்புகிறது. நம்மிலே சிலர் பிரிந்ததனால் நாட்டுநிலை அறியாதார் சிலர், நமது முயற்சி முறிந்துவிட்டது, இயக்கம் உடைந்துவிட்டது, உருக்குலைந்த நிலையில் இந்த விடுதலை இயக்கம் ஏதும் செய்ய இயலாததாகி, எடுப்பார் கைப்பிள்ளையாகிவிடும் அல்லது மாற்றார்முன் மண்டியிடும் என்றெல்லாம் எண்ணி, மனப்பால் குடித்தனர். நிலைமையோ அஃதன்று. "களைபோயிற்று, பயிர் தழைத்தது!’ என்று கூறிடுவார் உளர்! அவர்களைக் கடுமையாகக் கண்டித்துத்தான் அடக்கிவருகிறேன் - சொல்வதைத்தான் நான் தடுத்திட முடிகிறதேயன்றி, எண்ணத்தை எங்ஙனம் இல்லாது போக்கிட இயலும். உள்ளபடி அவ்விதம் எண்ணுவோர் பலர் உளர். ஆனால் மிகப் பலரோ, சிலர் நம்மைவிட்டுப் பிரிந்தனர், எனவே அவர்கள் செய்துவந்த பணிகளுக்கு ஈடுசெய்திடும் வண்ணம் நாம் மிகுதியாகப் பணியாற்றவேண்டும்; அதுமட்டுமல்ல, அவர்களின் இன்றையப் போக்கினால் ஏற்படும் இழப்புகளையும் ஈடுகட்டியாகவேண்டும் என்ற எண்ணத்துடன், மிகத்திறம்படப் பணியாற்றுகிறார்கள். மாற்றுக் கட்சியினர் இதை உணருகிறார்களோ இல்லையோ; எல்லாக் கட்சிகளுமே தேர்தல் நோக்குடன் சுறுசுறுப்பாகத்தான் பணியாற்றி வருகின்றன; நம்மைப்போலவே! ஆனால், மற்ற எவர் நடத்தும் இயக்கத்திலும், நமது இயக்க நிகழ்ச்சிகளில் காணப்படும் இந்தப் "பாச உணர்ச்சி’ இருப்பதாகத் தெரிவதில்லை - தெரியக் காணோம் - இருப்பதற்கான அறிகுறியும் இல்லை. எடை போடுவது - எவரெவரிடம் என்னென்ன முறையில் பேசுவது - என்னென்ன வாக்களிப்பது - எவரைச் சிக்க வைக்க என்ன வலை, எவருக்கு என்ன விலை - என்ற இவைபற்றிய எண்ணம்தான் அங்கெல்லாம். கண்டதும் ஓர் முகமலர்ச்சி! பேச்சிலே ஓர் கனிவு! பார்வையிலேயே ஓர் பாசம்! - இவை இங்கன்றி வேறோர் இடத்தில் இல்லை. தம்பி! உணவு விடுதியிலும் சாப்பிடுகிறார்கள்; வீட்டிலேயும் சாப்பிடுகிறோம். வீட்டில் செய்யும் கறி வகைகளைக் காட்டிலும், அதிகமாகவே உணவு விடுதியில் செய்கிறார்கள். வீட்டிலே, இலை போடுவார்கள் - மறதியால், பொத்தல் உள்ளதாகக்கூடப் போட்டுவிடுவார்கள். தெளித்துச் சுத்தம் செய்யத் தண்ணீர் வைக்க மறந்துவிடுவார்கள். செய்த கறி வகையிலே ஒன்றை இலையிட மறந்துபோவதுமுண்டு. இவையாவும் வீட்டில். உணவு விடுதியில் ஒழுங்காக, வைக்கவேண்டியதை வைத்திடவேண்டிய முறைப்படி வைக்கிறார்கள். கறிவகை பலப்பல! எனினும், தம்பி! நீ, கவனித்ததுண்டோ இல்லையோ - விடுதியிலே, கறியும் சோறும் படைத்திடும்போதும், கலந்து நாமதனை உண்டிடும் போதும், உணவு விடுதிக்காரர் காண்பார், கனிவு இருக்காது; கேட்பார் இன்னும் வேண்டுமா என்று; ஆனால் பேச்சில், எழுத்து மிகுதியாக இருக்கும், எண்ணம் இருக்காது; விழி திறந்திருக்கும் வெறிச்சிட்ட பார்வை இருக்கும்; இது முதல் தரமான உணவு விடுதியில், மட்டமான விடுதி எனில், தம்பி! நாம் சாப்பிடச் சாப்பிட, அவன் முகம் கருத்திடும்; நாம் கேட்போம், அவன் படைக்குமுன் நம்மை உற்றுப் பார்ப்பான்; அந்தப் பார்வையிலே பகை இருக்கும், கேள்வியும் இருக்கும்; நாம் உண்டிடுவோம், இவன் தூரநின்று கவளம் அதிகமாக உள்ளே செல்லச் செல்ல, ஐயோ! நமக்குக் கிடைக்கக்கூடிய இலாபம், குறைந்துகொண்டே வருகிறதே என்று எண்ணி ஏக்கங்கொள்வான். உணவு படைத்திடும் பணியாளன் ஒருமுறைக்கு இருமுறை, நமது இலை நோக்கி வந்து நின்று, என்ன தேவை என்று கேட்டிடக் கண்டால், விடுதிக்கு உரிமையாளன், சதி ஏதோ நடக்கிறது! பயல் நம்மைப் பாழாக்குகிறான்! என்றெண்ணி, அந்தப் பணியாளனை முறைத்துப் பார்ப்பான்; கடுமொழியும் புகல்வான். தம்பி! விடுதியில் உணவளிப்பது இலாப நோக்குடன்; நம்மிடம் கொண்ட அக்கறையாலா!! விடுதியில் உண்பவர், அளவு குறைத்துச் சாப்பிடச் சாப்பிட விடுதிக்காரருக்கு மகிழ்ச்சி. அளவும் வகையும் அதிகம் கேட்போரைக் கண்டால் வெறுப்பு. எவரிடமும் கனிவு இருக்கக் காரணமில்லை; ஏனெனில், உண்டுவிட்டுப் போகும் ஓராயிரவரில் இவர் ஒருவர்; ஊர்பேர் தெரிவானேன்; உபசாரங்கள் செய்வானேன்; உள்ளம் மகிழ வைப்பானேன்! இதற்கு முற்றிலும் வேறு அல்லவா, இல்லத்துச் சோறிடும் முறை. நான் கூறியதுபோலத் தம்பி! சோறிடும் முறையிலே குறைபாடுகளும் இருக்கும். சோறுக்கேற்ற அளவு சாறு ஊற்றி யிருக்கமாட்டார்கள்! கலந்து பார்த்ததில் மேலும் கொஞ்சம் சாறு வேண்டும் என்று நமக்குத் தோன்றும்; அதை அறியாது அணங்கு நம் எதிர் நின்று, வளையைச் சரிப்படுத்திக்கொண்டிருக்கக்கூடும். அல்லது வந்து நிற்கும் பிள்ளைக்கு ஊட்டி மகிழ்ந்தபடி மெய்மறந்து இருக்கக்கூடும்; துவக்கத்திலே தம்பி! கோபம்கூட நமக்கு எழக்கூடும் - துளியும் முறைவகை அறியாத மதியிலியாக உள்ளாளே என்று எண்ணத் தோன்றும்; முறைத்துப் பார்ப்போம்; அவள் சிரித்தபடி நிற்பாள்; மகவு சித்தியதனை வழித்தெடுத்து, சுவைமிகு பண்டம் என்று இலையில் இடவும் வருவாள்; தான் சோறிட்ட முறையில் குறை வந்துளது என்பதை அறியாமலேயே. ஆத்திரமா பீறிட்டுக் கிளம்புகிறது. அவள் வீசும் பார்வை, சாறு போதுமானதாக இல்லை என்ற எண்ணத்தையே மாற்றிவிடுமே!! உணவு விடுதியிலென்றால் நிலைமை இதுவா? "நாலு நாழியாகக் காவு காவு என்று, சாம்பார்! சாம்பார் என்று கத்துகிறேன்; மரமாக நிற்கிறாயே.’’ "மரம், மாடு என்று மரியாதை இல்லாமல் பேசாதே ஐயா! உமக்குச் சேறுபோலச் சாம்பார் வேண்டும் என்று நான் கண்டேனா? சாதத்துக்குச் சாம்பார் என்று நான் எண்ணிக்கொண்டேன்; உனக்குச் சாம்பாருக்குச் சாதம் என்று முறை இருப்பது எனக்குத் தெரியுமா?’’ "உளறாதே தெரியுமா?’’ "பெரிய சூரப்புலி! சும்மா இரய்யா. நான் ஒன்றும் நீ வைத்த வேலையாள் அல்ல.’’ இந்த அளவோடு, நான் நிறுத்திக்கொள்கிறேன் - நிலைமை பொதுவாக இந்த அளவோடு நிற்பதில்லை. தம்பி! நான் சுவைத்துச் சாப்பிட, வீட்டிலே மகிழ்ச்சியுடன், கனிவுடன், பெருமையுடன் காண்பர்! விடுதியில்? மருட்சி! அருவருப்பு! வெறுப்பு!! ஏன்? வீட்டில் உள்ளவர்கள், நம்மிடம் பாசம் கொண்டவர்கள்; விடுதிக்காரர் நம்மிடம் இலாபம் பெறுபவர்; இல்லம் அன்பின் இருப்பிடம்; விடுதி? இலாபம் பெறும் இடம்! வீட்டிலே கனிவும், விடுதியிலே கணக்கும் இருப்பதுதானே, எதிர்பார்க்கவேண்டிய முறை. தம்பி! மற்ற மற்றக்கட்சி நிகழ்ச்சிகளுக்கும் நமது கழக நிகழ்ச்சிக்கும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எனக்கு, வீட்டுச் சாப்பாட்டுக்கும் உணவு விடுதிச் சாப்பாட்டுக்கும் இருக்கிற மாறுபாடுதான் நினைவிற்கு வருகிறது. அமைச்சர்களைக் காண வருகிறார்கள் - ஊரூரும், யார்? இவர்களெல்லாம் அமைச்சர்களாகிவிட்டார்களே! இப்படியும் காலம் கெட்டுவிட்டதே!! - என்று எண்ணி உள்ளூரக் குமுறிக் கிடக்கும் கனதனவான்! அருவருப்பை அடக்கிக்கொண்டு அதிர்ஷ்ட வசத்தால் அமைச்சரானார், அவரைப்பிடித்து மருமகனுக்கு ஒரு பெரிய வேலையைத் தேடிக்கொண்டால் போதும் என்ற நினைப்பினர்!! ஏழை எளியவரும் வருகிறார்கள், தவறு தம்பி! தவறு! அழைத்து வரப்படுகிறார்கள்; அமைச்சர் வருவதற்கு ஐந்தாறு மணிக்கு முன்பே அந்த இடத்திலே அதிகாரிகள் நடத்திடும் அமுலையும், சீமான்கள் மோட்டாரில் வந்திறங்கி இடம் பிடிப்பதையும், பார்த்தபடி நிற்கிறார்கள். அமைச்சர்கள் பலப்பலர் வந்தார்கள், அவரவர், தெரிந்ததைச் சொன்னார்கள். ஒருவரும் நம் குறை போக்கவில்லை, ஓட்டாண்டியாகிறோம் நாளுக்கு நாள் என்று நினைத்தபடி. அமைச்சர் வந்துகொண்டே இருக்கிறார் என்பது அறிவிக்கப் படுகிறது, முன்னோடியாக வரும் அதிகாரியால். மோட்டார் மன்னர்கள். உடையைச் சரிப்படுத்திக்கொள்கிறார்கள், அணிபணியை ஒழுங்குபடுத்திக்கொள்கிறார்கள், அதிகாரியை நோக்கிப் பல்லிளிக்கிறார்கள். அதன் பொருள் அவர் அறிவார், யாதெனின், அமைச்சர் அருகே அழைத்துச் செல்வீர், ஐநூறு ரூபாய் தந்தவன் நான், என்பதாகும்; அதிகாரியோ, வரிசையாக நிற்கும் கனதனவான்களைப் பார்க்கிறார், பெருமூச்செறிகிறார். ஏனோவெனில், அவர் அறிவார் எவரெவர் எந்தெந்த விதமான கேடுகள், குற்றங்கள் செய்த பின்னர், சீமான்கள் ஆகினர் எனும் மர்மம்; எனினும் சட்டம் அவர்களைச் சாடவிடாமல் சாமர்த்திய மாகத் தப்பினவர் என்பது புரிந்த அதிகாரி, என்செய்வது என்றெண்ணி ஏங்குகிறார். அவரும் சிரிக்கிறார், இவர்களும் அப்படியே - எவர் சிரிப்புக்கும் காரணம் மகிழ்ச்சி அல்ல; எல்லாம் இடத்துக்கு ஏற்றமுறை. ஏழைக்கு இதுவொன்றும் விளங்கவில்லை. உதடு அசைகிறது யாவருக்கும்; ஒருவருக்கும் உள்ளம் அசைவதாகத் தெரியவில்லை. அமைச்சர் வருகிறார், கும்பிடுகிறார்; குறிப்பாக யாரையும் பார்த்தல்ல; மொத்தமாக; மெத்த அலட்சியத்துடன். அனைவரும் வாயடைத்து நிற்கின்றனர்; அதிகாரிகள் பரபரப்புக் காட்டுகின்றனர். உம்! உம்! - என்று கூறுகிறார் அதிகாரி! மனுக்களைத் தருகின்றனர் ஏழை மக்கள். வாங்குகிறார் அமைச்சர்! அதை வாங்கிக்கொள்கிறார் மற்றோர் அதிகாரி! கோயிலிலே பூவால் அர்ச்சனை செய்ததும், அந்த மலர்கள் தேவருலகு சென்று தேவ தேவன்மீது வீழ்வதாக அல்லவா எண்ணிக்கொள்கிறார்கள்; அது பக்தியினால். இங்கு பாடுபடுவோர், "மனு’வை மந்திரி தொட்ட உடன், குறைகள் தீர்ந்துவிட்டது என்று எண்ணிக்கொள்கிறார்கள்; எண்ணிக்கொள்ளும்படி, அதிகாரியும் சீமானும் போட்டியிட்டுக் கொண்டு சொல்லி வைக்கிறார்கள். அமைச்சர் பேசுகிறார்! செ! என்ன துடுக்குத்தனம், பார், தம்பி! எனக்கு - பேசுகிறார் என்று சொல்கிறேன். அமைச்சர் பேசுவாரா? சொற்பொழிவாற்றுகிறார். தாக்குகிறார்! தகர்க்கிறார்! முகமூடியைக் கிழிக்கிறார்! எச்சரிக்கை விடுக்கிறார்! எதிர்க் கட்சிகளை!! கேட்டிடும் சீமான், எந்த இடத்திலே மட்டும் கைகொட்ட வேண்டும் என்பதை அறிந்து அதன்படி நடக்க, எத்தனை பாடுபடுகிறார் தெரியுமா தம்பி! ஏழைக்கு வியப்பாக இருக்கிறது. நாம்தான், அகவிலையால் வரிச்சுமையால், வறுமையால், பிணியால், அவதிப்படுகிறோம்; கோபம்கூட வரத்தான் செய்கிறது; இவருக்குப் பாபம் எதற்காக இத்தனை ஆத்திரம்! இவரே சொல்கிறார், எதிர்ப்பாளர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள், மிகச் சிலர் என்று; அது உண்மையானால், இவர் எதற்காக, யாரோ உச்சியைப் பிடித்துக் குலுக்கிடுவதுபோல ஆத்திரப்படுகிறார் - என்றெண்ணி வியப்படைகிறான். ஏழைகள் ஈடேற வழி சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறான்! சொற்பொழிவின் இறுதியில், எதிர்க் கட்சிகளை எல்லாம் கொன்று குவித்துத் தம் காலடியில் குவியலாகப் போட்டுக்கொண்டான் பிறகு, அமைச்சர், ஏழை எளியவர்கட்கும், ஈடேற வழி சொல்கிறார். வயிற்றை இறுக்கிக் கட்டுங்கள். வரி கட்டத் தயங்காதீர்கள். கஷ்டம் கஷ்டம் என்று கதறி, காலம் கடத்திட வேண்டாம். பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாய் இருங்கள்; பொழுது விடியும். திட்டம் இரண்டு மூன்று நிறைவேற வேண்டும்; பிறகே கஷ்டம் போகும். காங்கிரசை ஆதரியுங்கள்; கண்டது கேட்டுக் கெட்டுப் போகாதீர்கள். காந்தியின் கட்சி எங்கள் கட்சி; உங்களைக் காப்பாற்றுவது இந்தக் கட்சி! எதிர்த்தால் சும்மா விடமாட்டோம்; எம்மிடம் படைபலம் மிக அதிகம். ஏழை பணக்காரன் என்று பேதம் பேசிப் பாழாகாதீர். இருப்பவனிடம் இருந்தால்தான், இல்லாதவனுக்குத் தருவான். இதுதான் எங்கள் சமதர்மம்! இதை எங்கும் நீங்கள் காணவில்லை. வந்தே மாதரம்! ஜே இந்து! வருகுது தேர்தல்; ஓட்டுக் கொடு! "வந்தே’ - என்று அமைச்சர் துவக்கும்போதே, அதிகாரி, அமைச்சருக்கு வழி அமைக்கும் அலுவலில் ஈடுபடுகிறார்; சீமான்கள் அமைச்சரை நெருங்குகிறார்கள்; இரண்டொருவரிடம் பேசுகிறார் அமைச்சர், பொருளற்றதை; அமைச்சரின் பேச்சுக்குப் பொருள் கண்டுபிடித்துப் பூரிப்படைகிறார் சீமான்; தொழுவத்தி லுள்ளதைப் பார்ப்பதுபோல, தொலைவிலுள்ள ஏழைகளை அமைச்சர் பார்க்கிறார்; தலையைக் கணக்கெடுக்கிறார். அவர்கள் வயிறு காய்வதைக் கவனிக்க மறுக்கிறார். மருமகன் விஷயம்? கவனமிருக்குது! மாட்டுச் சந்தை? கேட்டுப் பார்க்கிறேன்! இங்கா? அங்கா? எங்கு நான் நிற்க? சொல்கிறேன் சீக்கிரம், நல்லபடி அமையும். கழகக்காரர் கொட்டம் அடக்க. . . . . கையாலாகவில்லையோ உம்மால்! கூட்டம் சேருது அமர்க்களமாக. . . . . ஓட்டுச் சேர்க்கும் வழியைப் பாரும். விதைப்பண்ணைக்கு விட்ட நிலத்தின் விலையைக் கொஞ்சம் கூட்டித் தரச் சொல்லி. . . . உத்தரவு விரைவிலே வரும். உம்முடைய பங்கு, தேர்தல் நிதிக்கு உடனே அனுப்பி வைத்திடும், ஆமாம். இப்படிப்பட்ட உரையாடல்கள்! நடந்தபடி! மோட்டாரில் உட்கார்ந்தபடி! மோட்டார் புறப்படுகிறது! ஜே போடப் படுகிறது! தூசி கிளம்புகிறது! சீமான்கள் உடையை உதறிக் கொள்கிறார்கள். ஏழைகள் அதுவும் செய்யவில்லை. கூட்டம் கலைகிறது! பத்திரிகையில் பக்கம் பிறகு நிரம்பி வருகிறது, நிகழ்ச்சி குறித்து. தம்பி! இந்த முறையன்றி, வேறு எந்த முறையிலே நடக்கிறது அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள்! இதிலே பற்றும் பாசமும் காணமுடியாது; பயமும் நயமும் காணப்படும்; ஒட்டும் உறவும் இருக்காது, உசாவல் உராய்தல் இருக்கும்; கண்களில் கனிவு இருக்காது; பார்வையில் பசி நிறைந்திருக்கும். பளபளப்பு மிகுந்திருக்கும்; பரிவு மிகவும் குறைந்திருக்கும். அதிகம் சொல்வானேன், தம்பி! இது உணவு விடுதிச் சாப்பாடு! வீட்டுச் சாப்பாடு அல்ல! உண்டவரும் தந்தவரும் கொடுத்ததையும் கொண்டவையும் கணக்கெடுக்கும் போக்கினரே - உள்ளம் உள்ளத்துடன் உறவாடும் நிலையினர் அல்லர். எனவேதான், அந்த நிகழ்ச்சிகளிலே, ஒரு கலகலப்பு இருப்பதில்லை; களிப்பு மலர்வதில்லை! காகிதப் பூவாக, கல்லுருவமாக இருக்கிறது! தம்பி! நம்முடைய கழக நிகழ்ச்சிகள் அவ்விதமல்லவே! கடல் கடந்து சென்று திரும்பி வந்த தலைமகனை, குடும்பம் வரவேற்றுக் குதூகலித்து உரையாடி, இல்லம்தனில் உள்ள எழிலை எல்லாம் எடுத்துரைத்து, இன்பம் ததும்பும்படி எதை எதையோதான் பேசி மகிழ்ந்து உறவாடும் முறையன்றோ காண்கின்றோம், நம் கழக நிகழ்ச்சிகளில், பொருளற்றதா இந்தப் போக்கு? பயனற்றதா இந்த நிலைமை? கருத்தற்றவரன்றி வேறெவரும் இதனை உணராதிருக்க முடியாது. களிறும் காட்டெருமையும், கடுவனும் கரடியும், கொல்லும் புலியும் பிறவும் உலவும் காடு சூழ குன்று பல சென்று வந்தேன் - பத்து நாட்களுக்கு முன்பு. வளைந்த பாதைகள்! வழுக்கல் பாறைகள்! அடர்ந்த புதர், ஆபத்தான அடவிகள்! இங்கெல்லாம் சென்றிருந்தேன். எழில் காண அல்ல, தம்பி! காடுசூழ் இடமாம் பருகூர் மலையினில் கொடியும் கண்டேன். கன்னடம் பேசும் படுகர் கழகம் நடத்தக் கண்டேன். குளிர்மிகு "குந்தா’தன்னில் கூடிய தோழர்மாட்டு, கொள்கையின் ஆர்வம் கண்டேன், கொள்ளை இன்பம் உண்டேன். கோத்தகிரிக்குச் சென்றேன்; கூடினர் பெரியோர், இளைஞர்; அனைவரும் பேசும் மொழி, அருமைக் கன்னடம்தான், தம்பி! அங்கெலாம் கழகம், ஆமாம்! அவரெலாம் அண்ணா என்றே அன்புடன் அழைக்கக் கேட்டு, அவன் எனக்கு எப்படி அண்ணனாவான்! ஒட்டென்ன உறவு என்ன? ஒரு தாய் வயிற்றிலா உதித்தோம்? என்று கற்றது பேசிக் காழ்ப்பைக் கக்கிடும் போக்கினர்போல், காடுடை இடத்திலுள்ளார் இல்லை. அவரெல்லாம், அன்பினைச் சொரிகின்றார்கள், ஆதரவளிக் கின்றார்கள். நாளையோ மறுநாளோதான் நமது விடுதலைக்கான போரினைத் தொடுக்கவேண்டி நேரிடும் என்ற நெஞ்சினராக உள்ளனர்! கொஞ்சமா, அவர்கள் அன்பு!! கொடுத்தது என்ன அவர்கட்கு, நான்? பெற்றதோ பாசம், நேசம்! இதனை நான் பெற்ற பின்னர், எது இழப்பினுந்தான் என்ன? சுரங்கம் நிரம்பி உளது; பாளங்கள் பறிபோனாலும்! களஞ்சியம் புகுந்து நெல்லைக் களவாடிச் சென்றிட்டாலும்; வளமிகு வயலும் இங்கே வகையாக உளது தம்பி! அல்லியைப் பறித்துச் சென்றார்; அழகு நீரோடை, அரும்புடன் இருக்குதப்பா! அதனை நாம் இழந்தோமில்லை. கழகத்தின் கொள்கை இன்று காடு சூழ் இடங்கள்கூட நுழைந்துளது, தம்பி! உழைப்பு வெற்றி தந்துள்ளது!! கொட்டுதே மாற்றார் நாக்கு! கொடுவாளாகி வெட்டுதே பிரிந்தோர் போக்கு! என்றெல்லாம் எண்ணமிட்டு, ஏக்கம் நான் கொண்டிட்டாலும், எங்கும் நான் காணும் காட்சி மாமருந்தாகி, என்னை, களிப்பூரில் கொண்டு சேர்த்து, காண் என்று கூறக் கேட்டேன். சுற்றுலா வந்தபோது, சிற்றூர்கள், பலவும் கண்டேன் - சிரித்த முல்லை கொல்லையில் காணும் மங்கை, விடுவளோ! பறித்திடாமல்; அதுபோல், போனது சரிதான் அண்ணா, பொருள் என்ன கொண்டுவந்தாய் என்று பொருள்நிறைச் சிரிப்பைக் காட்டிக் கேட்டிடத் தம்பி உண்டே! பொருளாளர்! எனவே பொருளும் சிறிதளவு பெற்றுப் பெரிதும் நான் மகிழ்ச்சியுற்றேன். எங்கும் நான் கண்ட காட்சி, எவர் உள்ளமும் மகிழும் வகையே! கோவை மாவட்டந்தனில், கோபமோ இவர்க்கு என்று எவரும் எண்ணிடும் வகையிலே காணப்படுவர், கொள்கை காப்போர். உடுமலை நாராயணனுடன், பொருள் பெறத்தக்க நல்ல புன்னகை முகத்தில் காட்டிப், பொறுமையை அணியாய்ப் பூட்டித், தொண்டாற்றிடும் இளைஞர் தேவசகாயம் கூடி, எனை அழைத்துச் சென்ற ஊர்களின் எண்ணிக்கை மறந்து போனேன் - எங்கும் நான் கண்ட ஆர்வம் என்றுமே மறப்பேன் அல்லேன். ஆங்கொரு சிற்றூர், தம்பி! உடுமலைப் பகுதி! ஆமாம்! பகலிலே ஊர்வலம்! பரிவு நிழலளிக்க, பாசம் உடனிருக்க, பல்லோர்கள் வந்தார்கள், மேடைநோக்கி, நானிருந்த வண்டி நகர்ந்தது, ஓடவில்லை. ஓடோடி வந்தார் தோழர்! ஒருகணம் அண்ணா! என்றார்! நான் இந்த ஊர்க்கழகத்தின் பொறுப்பாளன், இதனைக் கேளும், "அண்ணனைக் காண ஓடிவருகிறாள் என் துணைவி, அண்ணா! நின்று ஓர்கணம், அன்னாளின் அஞ்சஏற்றுக்கொள்ளும். என்னுடைய துணைவி யாரோ என்று எண்ணிட வேண்டாமண்ணா! சென்னையம்பதியிலுள்ள செல்வி அனந்தநாயகியின் தங்கையே எந்தன் தாரம்!’’ என்று கூறுகின்றார். வந்த மங்கையும் வணக்கம்கூறி, செண்டு கைக்கொடுத்துவிட்டுச் சென்றிடக் கண்டேன் - என்ன இவ்வன்வு வெள்ளம், இத்துணை வேகமாக, எங்கெங்கும் கொழிக்கின்றதே என்று எண்ணிப் பெருமிதம் கொண்டேன், தம்பி! இவ்விதமெல்லாம் இணையில்லா இன்பம், அன்பு, ஈட்டி என்முன்னம் கொட்டி, எடுத்தேகு அண்ணா என்று எண்ணற்றோர் கூறும்போது, பண்டிதர் பதைபதைக்கப் படுகளம் ஆவதெனினும் பார்க்கிறேன் ஒருகை என்று பண்பற்றுப் பேசும் பேச்சு, எனக்கென்ன கலக்கந்தனையா, ஏற்படுத்திட இயலும்? வெறும் கேலிக் கூத்து! பாரெலாம் பஞ்சசீலம் பரவிட வேண்டு மென்று நாநலமிக்க பேச்சுப் பேசிடும் பண்டிதர் நேரு போரில்லை பொறுப்பற்றதோர் போக்கோ செயலோ இல்லை, போற்றிடுகின்றோம் நாட்டை, மீட்டிட உறுதிகொண்டோம், அறநெறி நின்று கூறிடும் நம்மை நோக்கி, உள்நாட்டுப் போரும்கூட மூண்டிடுவதாயின், நான், உமக்கொரு நாடு தாரேன், உறுதி, இது அறிவீர் என்று உரத்தக் குரலெழுப்புகின்றார் - உள்ளத்தில் குழப்பம் மூண்டதாலே! இதனை நான், அன்பு சொரிந்திடும் குழாத்திடை இருந்தகாலை எண்ணிக்கொண்டேன் - மிரட்டிடும் பேச்சைக் கேட்டு மிரண்டிடுவாரோ சிலர் என்று - தம்பி! அதுதான் இல்லை! தம்பிகள் சிலர் போனார்கள். கழகத் தகுதியும் உடனே போச்சு! இங்கு இனிக் கழகம் தன்னைச் சீந்துவார் எவரோ என்று ஏளனம் பேசினாரே, ஏமாளிகளானோர் சில்லோர், பார் நமது திருவிடம் காட்டும் கோலம் புரிந்தது பண்டிதர்க்கு, பகற்கனவு என்றார் பழுக்காப் பான்மையினார் சிலரும், பண்டிதர் உணருகின்றார், பரணியாகித் தரணியெங்கும் பரவிடும், திராவிட நாடு திராவிடருக்கே என்னும் கொள்கை வளர்ந்துள்ள வகையும் அளவும். ஆகவேதான், அவரும் அச்சம் மிகவும் கொண்டு அச்சுறுத்துகின்றார்; அழித்திடுவேன் படையால், அமளிக்கும் தயார் என்கின்றார். காட்டுவது எதனை, இந்தக் காட்டுப் பேச்சு? கண்மூடி இருந்துவிட்டோம்; இயக்கம் இறந்துபடும் தானாக என்றெண்ணி ஏமாந்துபோனோம்; இல்லை! இல்லை! இவ்வியக்கம் எங்கெங்கும் பரவும் போக்கு ஏதேனும் ஆபத்துண்டாக்கும்; எனவே, இதனைப் பலமாகத் தாக்கவேண்டும் என்று எண்ணுகின்றார் பண்டிதர் என்பதன்றோ பொருளாகின்றது, தம்பி! பட்டபாடு வீண்போயிற்றா! இதோ, பண்டிதர் பதைத்து எழுகிறாரே! பகற்கனவு என்றா அவரும் பரிகாசம் பேசிவிட்டு, பாடிக்கொண்டே பழகுவோம்; பருகிக் கொண்டே பாடுவோம் என்று ஆகிவிட்டார்! இல்லை; தம்பி! நான் காடும் மேடும் சுற்றிப் பட்டிதொட்டியில் பேசி, கண்டிடும் காட்சிகள், மொத்தமாய்த் தந்திடும் நிலைமை விளக்கமது நேரு பண்டிதர்க்குத் தெரிந்துவிட்டது; புரிந்துவிட்டது! இனி, இரண்டில் ஒன்றுதான் - நம்மை அடியோடு அழிப்பது அல்லது நமது கொள்கைக்கு மதிப்பளிப்பது! இத்துணை வீரமுழக்கமிட்டவரா, இறங்கிவருவார் என்று கேட்பது புரிகிறது. தம்பி! ஆனால் இதனைக் கேள், ஏறினோர் இறங்கவேண்டும், மேலும் ஏறிட இடமில்லாதபோது! பண்டிதர் போக்கு, பழைமை அறிந்தோர்க்கு பயமூட்டாது! வேகப் பேச்சு, அவருக்கு வெல்லக்கட்டி; கரைந்துபோகும்!! ஆகாதென்பார்! ஆர்ப்பரிப்பார்! அரிமாபோலக் குரல் எழுப்பிடுவார்! எல்லாம், கட்டம் ஒன்று, முடிவல்ல!! கதையை அறிந்திட வழி சொல்லிடுவேன். பாகிஸ்தானை ஜின்னா கேட்டபோது, பதைபதைத்தது கொஞ்சமா? பகை கக்கியது சாமான்யமா? கட்டம் ஒன்று!! கண்டோமே! இறுதியில் நடந்தது என்ன, தம்பி! கராச்சி தலைநகர் ஆயிற்று, காயிதே ஆஜம் வெற்றியுடன் கண்டார். பாகிஸ்தான் கண்டோம்!! உள்நாட்டுப் போர் மூண்டிடட்டும் ஒருபோதும் பாகிஸ்தானுக்கிணங்கேன்; உறுதி! காந்திமேல் ஆணை! என்று கூறினார், அறிவாயா! என்று கேட்டுச் சிரித்தார் ஜின்னாவும். அந்தப் போக்கு இம்மிகூட மாறிடக் காணோம்; அனுபவம் பாடம் தருமாம்; அது இங்கு தென்படக் காணோம். அணுகுண்டு யுகத்தினிலே ஆகுமா பாகிஸ்தான், தனிநாடு? என்று ஆர்ப்பரித்தார் பண்டிதர். கொண்ட கொள்கையை மாற்றிடவோ, கோணல் பாதை புகுந்திடவோ, கோல்கொண்டோர் முன் குதித்தாடிப் பண்டமும் பழமும் பெற்றிடவோ, சிற்றறிவினரா ஜின்னாவும்? சீரழிக்கவா அவர் வந்தார்? பாகிஸ்தான் எம் பிறப்புரிமை; அதனைப் பெற இயலாதேல், கபுர்ஸ்தான் எம் இருப்பிடமாய், ஆகட்டும்; கவலை இல்லை எனக் கர்ஜித்தார்! காங்கிரஸ் குரலை மாற்றிற்று. இந்தியா என்றென்றும் ஒரு நாடாய் இருந்திடச் செய்வதே காங்கிரஸ் திட்டம். எனினும் ஏதோ ஓர் பகுதி, இருந்திட மாட்டேன் இந்தியாவில், எனக்கோர் அரசு தனியாக இருக்க வேண்டும் எனப் பிடிவாதம் பிடிக்குமானால், என் செய்வோம்! தடுத்திட மாட்டோம், உமதிஷ்டம்! தனி நாடாகப் பிரிந்திடு, போ! எனத் தயக்கமின்றி ஒப்புக்கொள்வோம்; தத்துவம் இதுவே அறிவீர் என்றார், தலையே போவதானாலும் தரவேமாட்டேன் பாகிஸ்தான், எனத் தர்பார் பேச்சுப் பேசிய பண்டிதர் நேரு. தம்பி! அது வேறு காலம் என்று கூறுவார் உளர். பிறிதோர் சமயம் அதுபற்றி என் கருத்தைத் தெரிவிக்கிறேன். இப்போது, இது விளக்கமாகிவிட்டதல்லவா! கழக வளர்ச்சி வேகமுடன், காணுமிடம் எங்கும் எழுச்சி, எழுச்சியின் அடிப்படை நெஞ்சநெகிழ்ச்சி, நெகிழ்ச்சிக்குக் காரணம், பாசம், பற்று, பாசம் பற்று இல்லை வேறு எவ்விடமும், அவ்விடமெல்லாம் வெறும் வியாபாரம், கணக்கர் போனால் கடை போகும் என்று கருதிய நிலை இன்றில்லை, காடுசூழ் சிற்றூர் எல்லாம், கழகம் கண்டனர் நம் தோழர், கழக நிலையை அறிந்ததால் கலக்கமடைந்த பண்டிதர், கலக்கப் பார்க்கிறார் நம் மனதை, உள் நாட்டுப் போர் வருமென்று கூறி. ஆனால், தம்பி! உள்நாட்டுப் போர் என்பதெல்லாம் உதட்டுப் போர்தான்! வேறொன்றுமில்லை. எங்கும் பூத்திருக்கும் வண்ண மலர்களை, காம்பு உடையாமல். இதழ் கெடாமல், பக்குவமாகப் பறித்தெடுத்து மாலையாகத் தொடுத்திடுவதுபோல, எங்கணும் காணப்படும் எழுச்சியினைப் பக்குவமாகக் கூட்டுச்சக்தியாக்கி, வருகிற பொதுத்தேர்தலிலே, நம் கழகம் வெற்றிபெற முனைந்து நின்று பணியாற்று. முறிந்து போகும் பண்டிதர் முடுக்கு. தேர்தல் குறித்துத் திட்டமிட்டு, திரட்டிடு பேராதரவு. தெருத்தெருவாகச் சென்றிடலாம், தெரிவித்திடலாம், காங்கிர சாட்சியிலே, விளைந்துவிட்ட கேடுபாடுகளை. ஒன்றா இரண்டா அவை, தம்பி! அடுக்கடுக்காக உள்ளனவே! ஒன்றை எடுத்துக் கொண்டாலே, நன்றாய் விளக்க நாள் ஆகும். உள்ள நாட்கள் மிகக் குறைவு, கொள்ளை வேலை இருக்குதப்பா! வேறு நினைப்புகள் வேண்டாம் இனி, வெற்றிகாண வழி தேடு! உதயசூரியன், நம் சின்னம். ஊரெங்கும் அறிவித்திட, முன் வருவாய். நீயே அறிவாய் என்றாலும், நானும் அறிவேன் என்றுணர்த்த, தம்பி! சில நான் தொகுத்தளிப்பேன். தரமுடன் அதனைப் பயன்படுத்து; துண்டு விளம்பரம் ஆக்கலாம், சுவரொட்டிகளும் ஆக்கலாம், சிந்துகளாக்கிப் பாடிடலாம், செய்முறை, உன்திறம். விட்டுவிட்டேன். கேட்டிடு, கூறிட, கருத்துரையை: சோறு தின்பவர் சோம்பேறி எனச் சொல்லு கிறார் நேரு பண்டிதரும்; "ஓட்டு’ கேட்கும் காங்கிரசார் உண்பது என்ன? கேட்டிடுவீர்! கோட்டை கொத்தளம் கட்டினவர், கோபுரம் பலப்பல எழுப்பினவர், மாடமாளிகை அமைத்தவர்கள் சோறு தின்பவர், நம் இனத்தவர், சோம்பேறிகளோ, அவர்களெலாம்? கண்டவர் மெச்சும் காவியமும், கண்ணைக் கவரும் ஓவியமும் வளம்தரும் தொழில்கள் வகை வகையாய்க் கண்டவர் தமிழர்! சோறுண்டார்! அவர்தமை ஏசும் காங்கிரசை ஆதரிப்பது அறமாமோ? அருந்தமிழ் நாட்டை ஏசுகிறார் ஆளுங் காங்கிரஸ் கட்சியினர். அவர்க்கோ "ஓட்டு!’ ஐயயோ!! "செக்கு’ இழுத்த சிதம்பரனார் வளர்த்த, காங்கிரஸ் இன்று செக்கு தரும் சீமானிடம் பல்லிளிக்குதே! வெட்கம்! வெட்கம்! என்று காலம் காரித்துப்புதே! விலங்கொடித்த வீரர்களே! விம்மிப் பயன் என்ன! வீறுகொண்டெழுந்திடுவீர் மரபு காத்திட! “உதயசூரியன்’ ஒளியை நாடு பெற்றிட! ”ஓட்டு’களை அளித்திடுவீர் புதுவாழ்வு பெற்றிட! காத்திருந்தவன் பார்த்த பெண்ணை நேத்து வந்தவன், கடத்திச் சென்ற கதையைப் போல, காங்கிரசாட்சியில் கஷ்டம் தீரும் என்று ஏழை காத்திருக்கையில், கள்ள மார்க்கட்காரன் வந்து அடித்தான் கொள்ளை!! கையைத் தலையில் வைத்தழுதான் உழைக்கும் ஏழை! உழைத்தலுத்த உத்தமனே! அழுதது போதும்! உதிக்குதுனக்காகவே "உதயசூரியன்’ இன்ப ஒளி பெற்றிட நீ வாராய் என்று அன்புடனே அழைத்திடுது, தி. மு. கழகம். புஞ்சை, நஞ்சை ஆச்சென்றார், புதுப்புதுப் பாசனம் பார் என்றார், விளையுது நெல்லு மலைபோல என விளம்பரம் பலமாய்ச் செய்திட்டார், விளைச்சல் அதிகம் ஆனபின்பு விலைகள் விஷம்போல் ஏறுவதேன்? வீட்டைத் தேடிக் காங்கிரசார் ஓட்டுக் கேட்க வரும்போது விளக்கம் கேட்பீர், தோழர்களே! திருவிடம் விடுதலை பெற்றிடவே தி. மு. கழகம் ஆதரிப்பீர்! “உதயசூரியன்’ உம் சின்னம் உலகு தழைத்திடச் செய்வதுவும் ”உதயசூரியன்’ உணர்ந்திடுவீர்! எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் ஏட்டினில்! இந்தி குட்டக் குனியும் குணக்கேடர்கள் நாட்டினில்! கடன் பட்ட நாடு காவல் இல்லா வீடு விழி இழந்தும் வாழலாம் மொழி அழிந்தால் வாழ்வில்லை. தட்டிக்கேட்க ஆள் வேண்டாமாம் தாள்வேண்டாமாம், கதவுக்கு! உரிமை இழந்த நாடு உயிரற்ற வெறும் கூடு சாக்காடு மேல் என்று புலம்பும் நிலை பூக்காடு எனப்புலவோர் மொழிந்த நாட்டில். சங்கம் கண்டார், முன்னவர்; தென்னவர் பங்கப்படுகிறோம், இன்று; அவர், வழி வழி! வாளும் வேலும், முன்னோர் கரத்தில் தளையும் வளையும் இன்றுளர் கரத்தில்! இனத்துக்குள்ள இயல்பினை எவரே அழிக்கவல்லவர்கள்? அரிசிச் சோறு கூடாதாம்! அறிவிக்கிறார் இப்போது. ஆளக் காங்கிரஸ் வந்திட்டால் அழியும் நெல்வயல் அறிவீரே. கோதுமை விளைவது வடநாட்டில். கோதுமை சாப்பிடத் தூண்டுகிறார். கோதுமை சாப்பிட நாம் முனைந்தால், கோடி கோடி பணம் வடக்குக்கு. ஓட்டுச் சாவடி போகுமுன்பு ஒரு கணம் இதனை யோசிப்பீர்; உழவுத் தொழிலைக் காத்திடவே "உதயசூரியன்’ ஆதரிப்பீர்! அமெரிக்கா தரும் பால் பவுடர் இலவசம், ஏழைக் குழந்தைகட்கு! அதுவும் கள்ளமார்க்கட்டு, வந்து விற்குது! காரணம் யார்? பிச்சை எடுத்தார் பெருமாளு; அதைப் பறித்ததாம் அனுமாரு எனக் கொச்சை மொழியிலே கூறுவரே, இது அதுபோலத்தானே இருக்கு! அமெரிக்கத் தூதர் கண்டிக்கிறார்; ஆளும் காங்கிரஸ் பதில் தருமா? சிங்களம் ஆளும் சீமாட்டி சிரீமாவோ கொடுமையினால் சிறகொடிந்த பறவைகளாய் சித்திரவதைக்கு ஆளாகிச் சீரழிகிறார், நம் நாட்டார். அம்மாவுக்கு மாம்பழம் ஐயா கொடுக்கிறார் பரிவோடு. ஆலாய்ப் பறக்கும் தமிழர்களை, அடித்து நொறுக்குவது அம்மாதான்!! ஐயாவுக்குக் கவலை இல்லை, ஆமாம், அவர் வடநாடு!! வதைபடுவது இலங்கையிலே, வாழ்விழந்த திராவிடராம். திராவிடர் வாழப் பாடுபடும் தி. மு. கழகக் கரம் வலுத்தால், தீரும் துயரம் இலங்கையினில்! இலங்கைத் தமிழர் துயர் துடைக்க, சிங்கத் திராவிடத் தோழர்களே! பொங்கி எழுவீர்; வந்திடுவீர், பொதுத்தேர்தல் வருகுது விரைவினிலே. பொல்லாங்கெல்லாம் அழிந்திடவே, புதுமை வாழ்வு செழித்திவே, போட்டியிடுவீர் உம் ஓட்டுகளை "உதயசூரியன்’ அழைக்கின்றான். இவைகளையும் இவை போன்றவைகளையும் எடுத்துக் கூறி, நாட்டினருக்குக் கருத்து விளக்கமளிக்க நாட்கள் அதிகம் இல்லை, தம்பி! நாட்கள் அதிகம் இல்லை! எவரெவர் எந்த எந்தத் தொகுதி என்பதும் அறிவிக்கப்பட வில்லையே என்பது குறித்துக் கவலைப்படாதே. உன் கடமை "உதயசூரியன்’ வெற்றிக்காகப் பாடுபடுவது. எனவே, தம்பி! உறங்கும் உலகை எழுப்பிவிடும் உதயசூரியன்! உலகு தழைக்க ஒளி தருவது உதயசூரியன்! உழைப்பவர்க்கு உரிய சின்னம் உதயசூரியன்! உமது வாழ்வு மலரச்செய்வது உதயசூரியன்! இருளகற்றி எழிலளிக்கும் உதயசூரியன்! இன அரசு விரும்புவோர்க்கு உதயசூரியன்! திருவிடத்தின் விடுதலைக்காம் உதயசூரியன்! தி. மு. கழக தேர்தல் சின்னம் உதயசூரியன்! ஓட்டுப் போட ஏற்ற சின்னம் உதயசூரியன்! நாட்டினரே! போற்றிடுவீர்! உதயசூரியன்! ஞாயிறு போற்றதும் என்று கூறினாரன்றோ, இந்த ஞாலம் போற்றும் பேரறிஞன், இளங்கோவும்! அந்த ஞாயிறு இல்லாவிட்டால் ஞாலம் ஏது? உயிர்களுக்கெல்லாம் உற்ற தோழன் உதயசூரியன்! அரும்பை மலரச் செய்பவனும் உதயசூரியன்! அனைத்துக்கும் ஒளி ஊட்டுபவன் உதயசூரியன்! அகிலம் ஆளும் வலிமை பெற்றோன் உதயசூரியன்! பொங்கிவிடும் வளத்தைத் தந்திடுபவனும் உதயசூரியன்! இதனை நாடு அறிந்து, நல்லோர் எல்லாம் நம்மவராகி நாட்டின் நலிவு போக்கிடும் பணியில், நமக்காதரவு மிகவும் தந்திடச் செய்திடல், உன் கடன் அறிவாய் தம்பி! மற்றவை தொடர்ந்து தெரிவித்திடுவேன், மரபு காத்திடும் உடன்பிறந்தோனே! அன்புள்ள அண்ணாதுரை 29-10-61 தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது! தேர்தல் நேரம் புகமுடியா இடமெல்லாம் கழகக் கழனிகள் சிதறியவைகளின் தூற்றல் பாணம் பெரியார் காலடியில் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சிக்குக் கர்வபங்கம் தம்பி! உள்ள வலிவு மேற்கொண்டுள்ள வேலைக்குப் போதுமான தாக இல்லையே என்ற கவலை என்னைக் குடைந்த வண்ண மிருக்கிறது - வயது ஆக ஆக இப்படித்தான் எண்ணம் எழும் என்று வாலிப முறுக்குடனுள்ளவர்கள் பேசுவர்; புன்னகை புரிவர்; உண்மையிலேயே செய்து முடித்தாக வேண்டிய எல்லா அலுவல்களையும் செம்மையாகச் செய்திட தேவைப்படும் உடல் வலிவு இல்லை என்று கவலைப்படுகிறேன்; உள்ளம் எதையும் தாங்கிக்கொள்கிறது; ஏசல்களை, இழிமொழிகளை, பழிச்சொற் களை எல்லாவற்றையும்; பழகிப்போய்விட்டது; ஏன் சிலர் அதுபோலப் பேசிவருகிறார்கள் என்பது புரிந்துவிட்டிருப்பதால், வருத்தம் ஏற்படுவதுமில்லை; திடுக்கிட்டுப்போவதுமில்லை. எவெரவர் என்னால், தமது ஆதிக்கம், சுயநலம், சதித்திட்டம், தகர்க்கப்படுகிறது என்று எண்ணிக்கொள்கிறார்களோ, அவர் களெல்லாம் ஆத்திரப்படுவதும், தூற்றித் திரிவதும், எதிர் பார்க்கப்பட வேண்டியதுதானே! அதிலும் இது தேர்தல் நேரம்! நரகல் நடைக்கு ஏகப்பட்ட “கிராக்கி’ அல்லவா!! அதனைக் கொட்டிக்காட்டி,”எடு கட்டணம்’ என்று கேட்டு வாங்கும் காரியத்திலே பலர் ஈடுபடுகிறார்கள். பெரிய பெரிய திட்டங் களைப்பற்றித் தனித்தன்மை வாய்ந்த தத்துவங்களைப்பற்றி, மக்கள் மனத்திலே மூண்டுகிடக்கும் முடை நாற்றமடிக்கும் மதியீனங்கள் பற்றியெல்லாம் பேசி அறிவுத் தெளிவு அளிக்க வேண்டியவர்களெல்லாம், இன்று அவை அத்தனையையும் மூட்டைகட்டித் தூக்கித் தூர வைத்துவிட்டு, தம்பி! உன் அண்ணாவைப்பற்றியே பேசிக்கொண்டிருக்க வேண்டி நேரிட்டு விட்டதே, கவனித்தனையா!! பரிதாபமாகக்கூட இருக்கிற தல்லவா!! அவ்வளவு பெரியவர்களின் இன்றைய அலுவல், உன் அண்ணனைத் தூற்றித் திரிவது என்றாகிவிட்டது. ஏன், தம்பி! விளங்கவில்லையா? உன் ஆற்றல்மிக்க உழைப்பினால் உருவாகி விட்டுள்ள சக்தி, அவர்களின் கண்களை அவ்வளவு உறுத்து கிறது; கருத்தைக் கலக்கிவிட்டிருக்கிறது. இந்தச் சக்தியை, எப்பாடுபட்டேனும், எந்த முறையைக் கையாண்டேனும், எவருடன் கூடிக்கொண்டேனும், அழித்தாகவேண்டும் என்ற எண்ணம், தீயாகி அவர்களின் நெஞ்சினைத் தகிக்கிறது. துவக்கத்திலே அவர்களுக்குக் கூச்சமாக இருந்தது; நமது நிலை என்ன? ஆற்றலென்ன? இந்தப் பயல், பொடியன்! இவனை எதிர்க்கவா, நாம் நமது நிலையைவிட்டுக் கீழே இறங்கிவருவது! செ! கூடாது கூடாது! நமது ஆற்றல், அவனியுளோர் மெச்சிடத் தக்க அருங்கருத்துகளைப் பரப்பிடவன்றோ பயன்படுதல் வேண்டும், இந்த "ஏனோதானோ‘வை தாக்கவா! - என்று எண்ணிக்கொண்டிருந்தனர். நமது அறிவாற்றல், தாக்கும் திறமை, புட்டுப் புட்டுக் காட்டும் வல்லமை, ஓட ஓட விரட்டும் துணிவு, இவை, கைலாயம், வைகுந்தம், இவைகளைக் கதி கலங்கச் செய்ய வேண்டும் - செய்து வருகிறது! - புத்தரும் ஏசுவும் செய்யத் துணியாததை, சாக்ரடீசின் கருத்துக்கு எட்டாததை, நாம் உலகுக்கு எடுத்தளிக்க வல்லமை பெற்றுள்ளோம். நமது வாழ்நாளில், ஜாதியை ஒழிப்போம், மதத்தை அழிப்போம்! மற்றதுகள் ஜாதிபேதத்தை ஒழிப்போம், மத ஊழல்களை அழிப்போம் என்று மட்டுமே பேசுகின்றன; நாம் அப்படி அல்ல; ஜாதியை மதத்தை அடியோடு அழிப்போம்; அதற்கே நமது அறிவாற்றல்! அதற்கே நேரம், நினைப்பு!! - என்றெல்லாம் எண்ணிப் பணியாற்றி வந்தனர். பாவம்! அவர்களெல்லாம் இன்று, தி. மு. கழகத்தின் வளர்ச்சியை அழித்தால் போதும்; பிறவி எடுத்ததன் பயன் அஃதே! என்று, கூச்சத்தைவிட்டுக் கூறிக் கொள்ளத் தலைப்பட்டுவிட்டனர். தி. மு. கழக வளர்ச்சி, அத்துணை வேகமும் வடிவமும் கொண்டுவிட்டது; எங்கும், எதிலும் எப்போதும், தி. மு. கழக வளர்ச்சிதான் தெரிகிறது. எனவே பலர், இன்று, தி. மு. கழகத்தைத் தகர்க்க, என்னைத் தாக்குகிறார்கள். இது எனக்குப் புரிவதால், நான் ஆத்திரமோ, வருத்தமோ அடைவதில்லை! சில வேளைகளில், சிலர், மிகத் தரக்குறைவான முறைகளைக் கையாண்டு தீரவேண்டி வருகிறதே என்று பரிதாபமாகக்கூட இருக்கிறது. "தோடி’ பாடினால் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கலாமா என்று தோன்றும். அவ்வளவு இனிமை அத்துணை தரம் இருக்கும் என்று பல்லோரும் புகழ வாழ்ந்து வந்த இசைவாணன், குரல் கெட்டு, நோய்வாய்ப்பட்டு, ஈளைகட்டி இருமிக்கிடக்கும்போது, என்ன தோன்றும்? தோடி பாடிக் கேட்போரைக் களிப்புக் கடலில் ஆழ்த்தியவரின் நிலை, இன்று இப்படி ஆகிவிட்டதே என்றெண்ணி இரக்கம் காட்டச்செய்யும். வேளைக்கு இரண்டு படி தந்துகொண்டிருந்த பசு, வத்தலாகித் தொத்தலாகி, அடிமாட்டு மந்தையிலே இடம் பெற்றிடக் கண்டால், என்ன தோன்றும்? இடிந்த மாளிகை, இரசம்போன கண்ணாடி, ஊசல் பண்டம், உடைந்த வாள், பிரிந்துபோன கூடை, திரிந்த பால் - இவைகள், ஏளனம் அல்ல, தம்பி! இரக்கத்தை எழுப்பத்தக்க பொருட்கள்! காலத்தாலும் கருத்தற்ற போக்காலும், கயவர் கரம் பட்டதாலும், வகையும் வடிவமும் கெட்டதற்குச் சான்றுகள். தம்பி! இதைக் கவனித்தனையோ, இல்லையோ! குரல்கெட்ட பிறகுதான், கும்பலில் குரலெழுப்பி, கொடுத்ததைக் கொடு என்று கேட்டுப் பெறுவார், இசை வாணனாக இருந்தவர்! முனை உடைந்த பிறகு, வாள் மாற்றானை மாய்க்க அல்ல, மரப்பட்டையைப் பெயர்க்கப் பயன்படுத்தப்படுகிறது. ஊசல் பண்டம், குப்பைமேடு செல்கிறது! அங்கும் அதற்கு ஏகப்பட்ட கிராக்கி! காக்கைகள்! கோழிகள்! பூச்சி புழுக்கள்! குக்கல்! பன்றி! - இவைகளுக்கெல்லாம் பெருவிருந்தன்றோ. ஊசாமல், உள்ளே இருந்தபோது, மனையில் உள்ளோருக்கு விருந்து! ஊசியபிறகு விருந்துதான், வேறு வகையினருக்கு!! அதனால்தான் தம்பி! என்ன ஏமாற்றம் ஏற்பட்டாலும், எதிர்ப்புக்கள் குறுக்கிட்டாலும், சலிப்பு புகுந்து குடைந்தாலும், அவசரம் ஆத்திரத்தை மூட்டினாலும் கொண்ட கொள்கையைக் குலைத்துக்கொள்ளக்கூடாது. உரிய நோக்கத்தை உருக்குலைய விடக்கூடாது, ஊசல் பண்டமாகக் கூடாது, முனை ஒடிந்த வாளாக, திரிந்த பாலாக ஆகக்கூடாது என்று, நான் அடிக்கடி, நமது தோழர்களுக்கு வலியுறுத்திக் கூறி வருகிறேன். ஒவ்வொரு நாளும் நான் இந்த உறுதியுடன் பணியாற்றி, கழகத்துக்கு ஏற்றத்தைத் தேடித்தரும் எண்ணற்ற தோழர்களைக் காணுகிறேன்; மகிழ்ச்சி பெறுகிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கைப் படகை நடாத்திச் செல்வதிலே, எத்துணையோ இன்னல்களைக் காண்கின்றனர்; எனினும், கழக வளர்ச்சிக்காக உழைக்கத் தவறுவதில்லை; கண்ணுங்கருத்துமாகப் பாடுபடு கின்றனர். பட்டி தொட்டி ஒன்றுகூட விட்டுவைக்கவில்லை; எல்லா இடங்களிலும், கழகக் கொள்கை இடம்பெறச் செய்து வருகின்றனர். இதனை நான், தம்பி! விருத்தாசலம், நல்லூர், வளவனூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் இரண்டு நாட்கள் சென்றபோது கண்டு பெருமிதம் கொண்டேன். நம்புகிறார்களோ இல்லையோ, தம்பி! மாலை 7 மணிக்குத் துவங்கிய, சுற்றுப் பயணம், விடியற்காலை 5-30க்கு முடிவுற்றது. இருபது கூட்டங்கள்; சிற்றூர், பேரூர் ஊராட்சிமன்ற வரவேற்புகள்; கிளைக்கழகத் துவக்க விழாக்கள், கொடியேற்று விழா, ஊர்வலக் கோலாகலங்கள், இப்படித் தொடர்ந்து நடைபெற்றது. திட்டக் குடியில் மிகப் பெரிய கூட்டம்! நேரம், இரவு இரண்டு மணி, திட்டக்குடி தவிர, மற்ற இடங்களெல்லாம் சிற்றூர்கள். அரசியலுக்கும் நமக்கும் என்ன தொடர்பு, அது பட்டினங்களி லுள்ள படித்த சிலருக்குப் பொழுதுபோக்கு என்று எண்ணிக் கொண்டிருந்த கிராமத்து மக்களெல்லாம் நள்ளிரவுக்குப் பிறகும், விழித்திருந்து விழாக்கோலம் காட்டி, வரவேற்று வாழ்த்தளித்து, அரசியல் கருத்துக்களை மிக உன்னிப்பாகக் கேட்கிறார்கள். பொருள் விளங்குகிறதா, தம்பி, போகமுடியாத இடம் புக முடியாத இடம்! என்றெல்லாம், ஆளுங்கட்சியினர் கூறிக்கொண் டிருந்தனரே, அந்தக் கிராமப்புறங்கள் இன்று கழகக் கழனிகளாக மாறிக்கொண்டு வருகின்றன. ஊரின் பெரிய குடியின் பேச்சுத் தான், கட்டளை என்று இருந்துவந்த இடங்களிலெல்லாம் இன்று, உலகநிலை, ஊராள் முறை, மக்களாட்சியின் மாண்பு என்பவைகள் பற்றிய தெளிவும், மக்களாட்சியை மாண்புடைய தாக்கியாகவேண்டும் என்ற உறுதிப்பாடும் மிகுந்து காணப்படு கிறது. பதப்படுத்துவதிலும், முறைப்படுத்துவதிலும், நாம் வெற்றி பெற்றோமென்றால், தேர்தலில் நமது கழகம் ஏற்றமிக்கதோர் நிலை பெறும் என்பதிலே ஐயமில்லை. கதிர் முற்றி இருக்கிறது! விளைந்த காட்டுக் குருவிகள் வட்டமிடாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். வழி? விழிப்போடிருப்பதுதான்! கழகத் தோழர்கள் தமக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம், கட்டுச்சோற்று மூட்டையுடன், கிராமம் சென்று, குளத்தங்கரை அமர்ந்து உணவுண்டான பிறகு, களத்துமேடும் கழனிப்பக்கமும், தெருக்கோடியும் சாவடியும், மரத்தடியும் மதகடியும் உலாவி, உரையாடி, கழகப்பணி புரியலாம் - இன்று முதலே! நிலைமை அவ்வளவு பக்குவமாக உளது. நாட்டு நிலை அறிய, கிராமத்து உழைப்பாளிகள் அத்துணை ஆர்வத்தோடு உள்ளனர். இதனைக் கண்டு பெருமிதம் கொண்டு, ஒவ்வோர் இடத்து நிகழ்ச்சியினையும் வேக வேகமாக முடித்துக்கொண்டு, தம்பி! நண்பர்கள் செல்வராஜ், பிச்சமுத்து, கோவிந்தசாமி, மற்றும் கழகக் காவலர்கள் பலருடன், தொழுதூர் சென்றோம். நேரம் என்ன? தம்பி! தொழுதூர் வந்தோம்! பொழுது விடிந்தது!! கோழிகள் கூவின! காக்கைகள் கரைந்தன! புள்ளினம் சிறகடித்துக் கிளம்பின! உழவர்கள், வயல் நோக்கி நடந்தனர்! தாய்மார்கள் கூட்டி மெழுகலாயினர். விளக்கொளி, மங்கலாக! ஒலிபெருக்கி, குரலெழுப்பாமல்! ஊராட்சி மன்றத்தார் உறக்கம் துறந்து, மேடையில்! இந்நிலையில், நாங்கள் அங்குச் சென்றோம். இரவு முழுவதும் எதிர்பார்த்தவண்ணம் இருந்திருக்கின்றனர். விடியும்போதுகூட, விளக்கை அணைத்துவிட்டு, வீடு போய்ப் படுப்போம் என்று அவர்கள் எண்ணவில்லை. எப்படியும் வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தபடி, வரவேற்பு ஏற்பாடு களுடன் இருந்தனர். என்னென்பேன் அவர்களின் உள்ளன்பை, நேரம் ஆக ஆக, ஏமாற்றம் எரிச்சலை அல்லவா மூட்டிவிடும்; இவர்களோ நல்லவர்கள், நமது நிலைமையை நன்கு உணர்ந்தவர்கள், எனவே எரிச்சல் கொள்ளவில்லை, ஏக்கம் கொண்டிருந்தனர். சென்றோம்! ஒலிபெருக்கு மூலம், இசை! அங்கும் இங்கும், மக்கள் நடமாட்டம்! பரபரப்பு! நானே அவர்களிடம், சிறப்பான முறையில் மற்றோர் நாள் நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம் என்று கூறி, ஆறுதலளித்து, பொறுத்தருளும்படி கேட்டுக் கொண்டு, வரவேற்பு இதழைப் பெற்றுக்கொண்டு விடை பெற்றுக்கொண்டேன் - காலை மணி ஆறு, தம்பி! ஆமாம்! அதற்குப் பிறகுதான், உணவு! இரவுச் சாப்பாடும் காலைச் சிற்றுண்டியும் சேர்த்து! நெடுஞ்சாலையில்! மோட்டாரில் இருந்தபடி! தம்பி! இந்த விதமான உணர்ச்சிப் பெருக்கினை, உள்ளன்பினைப் பார்க்கும்போது, ஊரே திரண்டு நம் பக்கம் நிற்கிறது என்று தோன்றுகிறது; தேனென இனிக்கும் எண்ணம் கொள்கிறோம். ஆனால், காங்கிரஸ்காரரோ, வெள்ளித் தோட்டாக்களைக் காட்டுகின்றனர் நம்மை மிரட்ட; காங்கிரசுக்குக் கிடைத்துள்ள புதுப் புது வகையான ஆதரவாளர் களோ, தூற்றல் பாணம் தொடுத்தே நம்மைத் துளைத்து விடுவதாகக் கூறுகின்றனர். சில வேளைகளிலே நமது தோழர் களிலே சிலருக்கு, பணம் போதுமான அளவு இல்லையே, ஏழை எளியவர்களை, கடைசி நேரத்திலே பணம் கொடுத்து படிய வைத்துவிடுவார்களோ என்ற பயமும் பிடித்துக் கொள்கிறது. மக்களின் அரசியல் தெளிவு நாளுக்கு நாள் வளர்ந்தபடி இருக்கிறது என்பதிலேயும், நமது கழகக் கொள்கைக்காக, எதையும் இழக்கும் உறுதியுடன் பணியாற்றுவோரின் தொகையும் வளர்ந்தவண்ணமிருக்கிறது என்பதிலேயும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டால், நம்மிலே எவருக்கும், தேர்தல் முடிவுகள் பற்றியோ, விளைவுகள் குறித்தோ அச்சம் ஏற்படக் காரணம் இல்லை. தேர்தலில் ஈடுபடுவது, ஒரு அரசியல் கட்சியின் தலையாய கடமை. கொள்கைபரப்பவும், கேடான முறைகளைக் கண்டிக்கவும், ஆதிக்கம் கொண்டு இறுமாந்து கிடக்கும் கட்சியின் இடுப்பை முறிக்கவும், மக்களாட்சி முறையினை மாண்புடையதாக்கவும், தேர்தல், ஒரு நல்ல வாய்ப்பினைத் தருகிறது. மேலும், காங்கிரசுக்குப் பல்வேறு வகையான “வலிவுகள்’ இருப்பினும்,”எதிர்ப்பு’ அலட்சியப்படுத்த முடியாத அளவிலும் தரத்திலும் வளர்ந்திருப்பது மிக நன்றாகத் தெரிகிறது; மேலுக்குச் சில காங்கிரஸ் தலைவர்கள், தி. மு. கழகம் பற்றி அலட்சியம் காட்டுவதுபோலப் பேசுகிறார்களேயொழிய, உள்ளூர அவர்கள், அச்சம் பிடித்தலையும் நிலையில்தான், உள்ளனர்; அமைச்சர்களின் சுற்றுப்பயணமும், ஆள் பிடிக்கும் படலமும், பணம் திரட்டும் போக்கும், தூற்றல் பிரசாரமும், கழகத்திலிருந்து சிதறியவைகளைத் தூக்கிவைத்துக்கொள்வதும், துதிபாடுவது மாக உள்ள போக்கும், வேறு எதைக் காட்டுகிறது? எல்லா எதிர்க்கட்சிகளும் கூடிக் கூட்டணி அமைத்தாலும் எங்களை என்ன செய்துவிட முடியும்? என்று வீராவேசமும் பேசுகிறார்கள்; அதேபோது ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள், “கூட்டுச் சேரலாமா?’ என்றும் கேட்கிறார்கள்; கேரளத்தில்,”கூட்டு’ இருப்பதுபற்றி வாய்மூடிக் கிடக்கிறார்கள். தி. மு. கழகத்தார் ஒரு ஐந்து பேர் வெற்றி பெறக்கூடும் என்று "ஆரூடம்’ கணிக்கிறார். அமைச்சர் சுப்பிரமணியம்; ஆனால், அவருடைய ஆரூடம் எவ்வளவு அபத்தமானது என்பது அவருக்கே தெரியுமாதலால், அலைகிறார், திரிகிறார், ஆர்ப்பரிக் கிறார், அறைகூவுகிறார், மிரட்டுகிறார், உருட்டுகிறார், நாள் தவறாமல் ஊரூர் சென்று. ஐந்து பேர்களே வெற்றி பெறக்கூடும் என்று கூறத்தக்க அளவுக்குத்தான், தி. மு. கழக வளர்ச்சி, செல்வாக்கு இருக்கிறது என்றால், இந்த அசகாய சூரர் ஏன் இப்படி அலையவேண்டும்? பழுது என்று கூறிவிட்டுத் தடி எடுத்து ஓடுபவர் பற்றி என்ன எண்ணுவீர்கள்? வெண்ணெய் வெட்ட வாள் தேடுபவரை, என்ன பெயரிட்டழைப்பது? தானாக எதிர்ப்பது மட்டுமல்ல, எத்தனை எத்தனை "இரவல் படை’ தேடிப் பெறுகிறார்கள்; அதற்காக என்னென்ன வற்றை, பாவம், இழக்கிறார்கள் பார்த்தனையா, தம்பி! கம்யூனிஸ்டுகளைக் கண்டால் கள்ளக்கும்பிடுகள் போட்டு, இந்தியாவைத் துண்டாட விரும்புவோருடன் கூட்டா, சேச்சே! இது என்ன அறிவீனம்! - என்று பேசுவது எதற்காக? முடிந்தால், கம்யூனிஸ்டுகளை நம்மீது ஏவிவிட!! கழகத்தை விட்டுப் பிரியும் பேர்வழிகளுக்கு, வரவேற்பு, உபசாரம்! விலகியவர், வீரர், விவேகி!! ஆமாம்! அவருடைய சபலத்தைத் தூண்டிவிட்டு, பேச வைப்பது, ஏசச் சொல்லிக் கேட்டு இன்புறுவது. எல்லாவற்றையும்விட இன்று கரை சேர்க்கவைப்பவர், ஈடேற்ற வந்தவர், வழிபடத்தக்கவர், பெரியார் என்ற நிலை பிறந்திருக்கிறது. ஆயிரம் திட்டட்டும், என்னையும் உன்னையும், பொருட் படுத்த தேவையில்லை; பெரியார், இன்று காங்கிரசைப் பழி வாங்குகிறாரே, அதைப் பார்க்கும்போது தம்பி! உள்ளபடி எனக்கு அளவிட முடியாத களிப்பு. அமைச்சர்கள் ஆலவட்டம் எடுத்துக்கொண்டு வருகிறார்கள், சுற்ற! அர்ச்சிக்கிறார்கள்! காங்கிரஸ் தலைவர்களே கதிநீயே பெரியோய்! கடும்புயல் வீசும் வேளையில் காப்பாற்றிடுவாய்! என்று அலறிக் கூவுகிறார்கள் அடிபணிந்து கிடக்கிறார்கள். நகராட்சிகள் வரவேற்கின்றன! மண்டலக் காங்கிரசு மண்டியிடுகிறது! காங்கிரசு வேட்பாளர்கள் வெண்சாமரம் வீசுகிறார்கள்! பெரியார் இன்று பெற்றுள்ள செல்வாக்கான நிலையில், ஒருநாள், காங்கிரசு தலைவர்கள் பூட்டப்பட்ட "இரதத்தில்’ அவர் உலா வரப்போகிறார் என்று தோன்றுகிறது. முடிசூடா மன்னரே! முத்தமிழின் காவலரே! பேரறி வாளரே! பெம்மானே! பெரியோய்! பிழை பொறுத்திடுக! வழி அமைத்திடுக! என்று போற்றித் திரு அகவல் பாடுகின்றனர். எந்தப் பெரியாரை, நாத்திகர் என்றும், துவேஷ புத்திக்கார ரென்றும், பித்தர் என்றும் நாடு கடத்தப்பட வேண்டியவ ரென்றும், முஸ்லிமின் கைக்கூலி என்றும், வெள்ளையரின் அடிவருடி என்றும், விளங்காத கொள்கையைக் கூறிக் காசு பறிப்போரென்றும், ஏசினரோ, அவரைத் தம்பி! இன்று அதே காங்கிரஸ் தலைவர்கள், புகழ்வதும் போற்றுவதும், பொன்னாடை போர்த்துவதும், போர்க்குணத்தை வாழ்த்து வதும், புனிதரே! பூஜ்யரே! என்று அர்ச்சிப்பதும் காண்கிறோம். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, நாக்குத் தழும்பேற நிந்தித்த காங்கிரசார், இந்த நாலு ஆண்டுகளில், பெரியாரை நத்திப் பிழைத்தால்தான் வாழ்வு உண்டு என்று உணர்ந்து கொண்டு, காலடி வீழ்ந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, காப்பாற்றச் சொல்லிக் கெஞ்சிக் கூத்தாடி நிற்கிறார்கள். கண்கொள்ளாக் காட்சி! பெரியாரின் பேராற்றலுக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு! உள்ளூர எண்ணிச் சிரிக்கிறார் பெரியார், “பயல்களே! பூமிக்கும் ஆகாயத்துக்குமாகத் தாவித் தாவிக் குதித்தீர்களே! என்னை ஒழித்துவிடுவதாக உறுமிக் கிடந்தீர்களே! உலகம் போகிற போக்கு எனக்குத் தெரியாது என்று ஏளனம் பேசினீர்களே! ஊராள வந்துவிட்டதனாலேயே உங்களை யாரும் எதுவும் செய்யமுடியாது என்று இறுமாந்து கிடந்தீர்களே! என்னை இளித்தவாயுடையோன் என்று ஏசினீர்கள்! என் வயதுக்கும் உழைப்புக்கும், ஆற்றலுக்கும் அனுபவத்துக்கும்கூட மதிப்பளிக்க மறுத்தீர்கள்! நான் இந்த நாட்டிலே இருக்கவே தகுதியில்லை என்று வடநாட்டான் நேரு வாய்த்துடுக்குத்தனமாகப் பேசினான்; கைதட்டி வரவேற்றீர்கள்!! கோட்டையிலே கொலுவிருக்கிறோம் என்ற கர்வத்தில், எனக்கு மூட்டை தூக்கிகளாக இருந்தவனெல்லாம், கொக்கரித்தான்! எவன் இருக்கிறான் எதிர்க்க! என்று இறுமாந்து கிடந்தீர்கள்! பார்த்தீர்களா, இப்போது, நான்கூட அல்ல; என் படையிலே ஒரு பிரிவு, தி. மு. கழகம், உங்களைப் பலமாக எதிர்த்து,”பவுசு’ போகும் நிலையை ஏற்படுத்திவிட்டதை!! அதுகளை அடக்க ஒடுக்க முடிகிறதா? பேந்தப் பேந்த விழிக்கிறீர்கள்! பேச வாயில்லை! சட்டியில், மா இல்லை!! என்ன செய்தீர்கள்? கடைசியில், என் காலடி வீழ்ந்தீர்கள்! வேறு கதி? போகட்டும், "அதுகளை விட இதுகள்’ மேல் என்ற முறையிலே உங்களைக் காப்பாற்றித் தொலைக்கிறேன். கெஞ்சுகிறீர்கள்! கொஞ்சு கிறீர்கள்! என்ன வேண்டும்? எது வேண்டும்? என்று சோட சோபசாரம் செய்கிறீர்கள்! உங்களுடைய மந்திரிகளுக்குக் கூடக் கிடைக்காத மரியாதை எனக்குக் கிடைக்கிறது! மந்திரிகளேதான் மண்டியிடுகிறார்களே!! படம் திற என்கிறீர்கள்; பல்லக்குச் சுமக்க வருகிறீர்கள்! பல்லிளித்துக் கிடக்கிறீர்கள், பராக்குக் கூறி நிற்கிறீர்கள்! பழி தீர்த்துக்கொள்ளும் படலம்!! பாடம் புகட்டும் படலம்! இந்த நாடு துளியாவது எதிர்பார்த்ததா? தீப்பொறி பறக்க என்னை ஏசியவர்கள் இன்று தீவட்டி தூக்கிகள் ஆவார்கள் என்று!! பொறி பறக்கப் பேசியவர்கள் இன்று போக்கிட மத்ததுகள் ஆவர் என்று! பெரியார், விவரம் தெரியாதவர் என்று எண்ணிக் கிடந்தீர்களே - புரிகிறதா என் போக்கு! நாற்பது ஆண்டுகளாக, உமது கட்சியை நையப் புடைத்தேன் - உங்க காந்தியை ரோய ரோயப் பேசினேன் - உங்கள் திட்டங்களைக் கண்டித்து வெளுத்து வாங்கினேன் - என்ன நடந்தது இறுதியில்? தாவிக் குதித்தீர்கள்! தாக்கிப் பார்த்தீர்கள்! தர்பாரில் இடம் கிடைத்ததால் என்னைத் தரைமட்டமாக்கிவிடலாம் என்று மனப்பால் குடித்தீர்கள்! ஆனால், என்னை விட்டுத் தனியான வர்கள், கொடுத்தது பலமாகிவிடவே, ஓடோடி வந்தீர்கள் என் காலடி விழ! போகட்டும், அந்தப் பயல்கள் வளரக்கூடாது என்ற எண்ணத்தில், வந்து தொலையுங்கள் என்று, உங்களை ஏற்றுக் கொண்டேன். என்னென்ன இழிமொழி கூறினீர்கள் என்னைப் பற்றி! எத்தனை கூட்டங்களைக் கலைத்தீர்கள்! இப்போது, என் கூட்டத்துக்கு நோட்டீஸ் ஒட்ட, ஏணி தூக்கிகளானீர்கள்!!! மேடையில் துணி விரிப்பது நீங்கள், கொடியைப் பறக்கவிடுவது என் திராவிடக் கழகம்! மாலைகள் கொடுப்பது மண்டலங்கள், எண்ணிப் பார்ப்பது என் கழகம்!! என்ன கதியில் கொண்டுவந்து விட்டேன், உங்களை! ஒரு பஞ்சாயத்துக்கூட என் கழகத்திடம் இல்லை; பார்மெண்டே எங்களிடம் என்று பேசுகிறீர்கள்; இருந்து? பல்லிளிக் கிறீர்களே என்னிடம் வந்து! முதலிலே முடுக்காகச் சற்றுத் தொலைவாகவே இருந்து பார்த்தீர்கள் - காமராஜர் மட்டும் நெருங்கட்டும், நாம் போகக் கூடாது என்று. பிறகு? ஒவ்வொன்றாக, கோணி நாணி, என் எதிரே வந்து நின்று, எங்க பெரியார் என்று தோத்திரம் செய்கிறீர்கள்! தம்பி! இப்படியெல்லாம் எண்ணாமலா இருப்பார் பெரியார்? காங்கிரஸ் தலைவர்களுக்கும் இது தெரியாமலா இருக்கும்? ஆனால், தெரிந்து என்ன செய்ய முடியும்? இன்று காங்கிரசுக்கு வளர்ந்துவிட்டுள்ள எதிர்ப்புணர்ச்சியில், பெரியாரின் எதிர்ப்பும் சேர்ந்துவிட்டால், காங்கிரசின் கதி, அதோகதிதானே! அதனால்தான், பெரியாரின் துணை கிடைத்தது கண்டு, அப்பா! பிழைத்தோம்! என்று ஆறுதல் அடைகிறார்கள். இத்தனைக்கும் இப்போது பெரியார் காங்கிரஸ் கட்சியைச் சிலாக்கியமான கட்சி என்று ஏற்றுக்கொள்கிறாரா? இல்லை! காமராஜர் நல்லவர், வல்லவர், நம்மவர்! - என்கிறார்! காங்கிரசை அல்ல! கதர், மூடத்தனம்தான், இப்போதும்! கைராட்டை? காட்டுமிராண்டிக் கருவி! ஆதாரக்கல்வி? பைத்தியக்காரத்தனம்! காந்தீயம்? முட்டாள்தனம்!! தேசீயம்? பித்தலாட்டம்? தியாகம்? தெகிடுதத்தம்! மதம்? போதை! பார்ப்பனர்? பகைவர்கள்! வடக்கு? முரட்டுப்பேர்வழிகள் உள்ள இடம்! நேரு? அவசரக்காரர், அறிவற்ற பேர்வழி! பெரிய மனுஷன் பிள்ளை! "தம்பி! பெரியார் இக்கருத்துக்களை மாற்றிக்கொள்ளவு மில்லை; மறந்துவிடவுமில்லை; விட்டுவிடவுமில்லை; மாறாக அழுந்தந்திருத்தமாகப் பேசுகிறார். இராமன்? அயோக்கிய சிகாமணிதான்! சீதை? சோரம் போனவள்! தசரதன்? சுத்தக் கோழை! விபீஷனன்? காட்டிக் கொடுத்த துரோகி! இராவணன்? வீரன், திராவிடன்! சுப்பன்? இரண்டு பெண்டாட்டிக்காரன், சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவன். கணபதி? அழுக்கு உருண்டை! பரமசிவன்? சுடுகாட்டுப் பேர்வழி! கிருஷ்ணன்? திருடன், காமுகன்!! தம்பி! இந்தப் பேச்சையும், பெரியார் மாற்றிக்கொள்ள வில்லை. மாறாகப் புட்டுப்புட்டுக் காட்டுகிறார்; புது ஆசையாலே அவரைப் புடைசூழ நிற்கும் காங்கிரசார், காது குடையக் குடைய! முன்பு, இராமாயணத்தை ஒரு வார்த்தை கண்டித்தால், என்ன தாவு தாவுவார்கள் இந்தக் காங்கிரசார்! இப்போது? முகத்தைச் சுளித்துக்கொண்டால்கூட, முடிவில் "ஓட்டு’ போடச் சொல்லாமல் பேச்சை முடித்துவிட்டால் என்ன செய்வதென்று, காது கொடுத்துக் கேட்கிறார்கள்; கழகத் தோழர்கள் கைதட்டும் போது கூடச் சேர்ந்து தட்டுகிறார்கள்; தட்டாவிட்டால், கழகத்தார் கவனித்துவிட்டுப் பெரியாரிடம் சொல்லிவிட, அவர் காமராஜரிடம் சொல்ல, காமராஜர் கடுங்கோபம் கொண்டால் என்ன செய்வது என்ற திகில்! பெரியாரின் கடைக்கண் பார்வைக்காக, காங்கிரஸ் தலைவர்கள், தவமிருக்கும் கோலம் இன்று! நாற்பது ஆண்டுகளாகக் காங்கிரசுக்காகவே பணியாற்றிச் சொத்து இழந்து, சுகம் இழந்து, சிறை சென்று சீரழிந்து கிடக்கும் எந்தக் காங்கிரஸ் தலைவருக்கும், கிடைக்காத மதிப்பு, தரப்படாத உபசாரம், வரவேற்பு பெரியாருக்கு! காரணம்? - பெரியார், தி. மு. கழகத்தைத் தாக்குகிறார்!! அதற்காகக் காங்கிரசார், தங்கள் "தேசிய’ தன்மானத்தையே, அவர் காலடி வைத்துவிடுகிறார்கள். இன்னும் ஒரு அரைமணி நேரம், தி. மு. கழகத்தைத் தாக்குங்கள் என்று வேண்டி நிற்கிறார்கள். தம்பி! பெரியார் தாக்குவதால், மிதித்துத் துவைப்பதால், தி. மு. கழகம் அழிந்துவிடும் என்றால், காங்கிரஸ் கட்சி அல்லவா இதற்கு முன்பே அழிந்து குழைந்து கூழாகிப் போயிருக்க வேண்டும்; அவ்வளவு மிதிமிதித்தாரே பெரியார்! அவ்வளவு தாக்கி இருக்கிறாரே! நம்மைத் தாக்கும் போதாகிலும், ஒரு வேளை இல்லாவிட்டால் மற்றோர் வேளை, “அந்தப் பயல்கள் சின்னப்பயல்கள்; அவர்களை இவ்வளவு அதிகமாகப் பொருட் படுத்தக்கூடாது’’ என்று தோன்றக்கூடும். காங்கிரசை அவர் எதிர்த்தபோதோ, முடுக்கும் முறுக்கும் மிகுந்திருந்த நேரம் - ஒழிக்காமல் ஓயமாட்டேன், உறங்கமாட்டேன் என்று”சபதம்’ கூறிச் சமர் நடத்திய நேரம்! மிதிமிதி என்று மிதித்தும் காங்கிரஸ், அழிந்துவிடவில்லை. இருக்கிறது! காங்கிரசின் அரசியல் நிலைமை இன்று பாதிக்கப்பட்டிருப்பதும், அவருடைய எதிர்ப்பினால் அல்ல; அவர் தேர்தல் காரியத்தை நிறுத்திக் கொண்டு ஆண்டு பல ஆகிவிட்டன; காங்கிரசின் அரசியல் ஆதிக்கத்தைத் தேர்தல் களத்திலே இறங்கி எதிர்த்து, அதனை இளைக்க வைப்பது, களைக்கச் செய்வது, திராவிட முன்னேற்றக் கழகம் - பெரியார் அல்ல! எனவே, பெரியாரின் எதிர்ப்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிக்கும் நோக்குடன்தான் நடத்தப்படுகிறது என்றாலும், உள்ளபடி, அது காங்கிரசின் கர்வபங்கமாகத்தான் ஆகிறது என்பதை, அரசியல் நுண்ணறிவு உள்ள எவரும் உணராமலிருக்க முடியாது. பல காங்கிரஸ் தலைவர்கள் உள்ளூர வெட்கப்படுகிறார்கள்; ஆனால் என்ன செய்வது? ஆசை வெட்கமறியாதல்லவா? திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைவிடாத கட்டுப் பாடான எதிர்ப்புத்தான், தமிழ் நாட்டுக் காங்கிரசை, பெரியாரின் காலடி விழச்செய்தது என்பதை, இருசாராரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றாலும், உண்மை அதுதான் என்பதைக் காங்கிரசார் உணர்ந்துதான் இருக்கிறார்கள். உணர்ந்து? ஊராள ஆசை இருக்கிறதே! பெரியாரின் துணையையும் இழந்து விட்டால் என்ன ஆவது நிலைமை? எனவேதான், முடி நம் தலையில் இருக்க, பெரியாரின் அடிபணிந்தாகவேண்டும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள். தம்பி! நாடெங்கும் உன் உழைப்பினால் கிளம்பியுள்ள புயல், காங்கிரசை, இந்தப் பாதுகாப்புத் தேடிட வைத்தருக்கிறது. காங்கிரசுக்கு இன்று கிடைத்துள்ள பாதுகாவலர்கள், துணைவர்கள், தோழர்கள், காங்கிரசின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல! பெரிய பாதுகாவலராகப் பணிபுரியும் பெரியாரோ, அந்தக் கொள்கைகளையே கோமாளித்தனம் என்று கூறினவர்; கூறி வருகிறவர். காங்கிரஸ் கட்சி வகுப்பு வாதத்தை அடியோடு வெறுக்கிறது; இடமளிக்காது என்று காங்கிரஸ் அறிக்கைகள் கூறுகின்றன. பெரியார், தெளிவாக, ஒளிவு மறைவு இன்றி, நான் காங்கிரசை ஆதரிப்பது ஏன் என்றால், இன்று பார்ப்பனர்கள் காங்கிரசில் முக்கியமானவர்களாக இல்லை; எல்லா இடத்திலும் பார்ப்பனரல்லாதார்தான்! ஆகவேதான் ஆதரிக்கிறேன்!! - என்று பேசுகிறார். மறுக்கும் துணிவு உண்டா! காமராசருக்கு? காங்கிரஸ் தலைவர்களுக்கு? மண்டலங்களுக்கு? அதுதான் கிடையாது! முடியாது! மறுத்தால், பெரியாரின் பேராதரவு கிடைக்காது!! கிடைக்காவிட்டால், காங்கிரசுக்கு ஊராளும் நிலை கிடைக்காது! ஊராளும் நிலை கிடைக்காவிட்டால், பிறகு காங்கிரசில் இன்று உள்ளவர்களிலே நூற்றுக்கு எண்பது பேர், வெளியேறிவிடுவர்!! காங்கிரசின் வீழ்ச்சிக்கு, வேறு எந்த ஆதாரமும் தேடத் தேவையில்லை - பெரியாரின் பாதாரவிந்தத்தில் அதன் தலை பட்டவண்ணம் இருக்கும் காட்சி ஒன்று போதும். மற்றோர் ஆதாரம் - காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு - இன்று அதிலே உள்ளவர்களின், முன்பின் தொடர்புகள், முறைகள், கொள்கைகள், காங்கிரஸ் தலைவர் சஞ்சீவி ரெட்டியாரே கூறுகிறார், கண்டவர்களெல்லாம் காங்கிரசில் சேர்ந்துவிட்டனர் - கதராடை போர்த்துக்கொண்டு, சுயநல வேட்டையாட! அதனால் காங்கிரசின் மாண்பு மங்கிவிட்டது, மதிப்பு மடிந்துவிட்டது’’ என்று. ஏன் சேர்த்துக்கொண்டார்கள், கண்டவர்களை? சஞ்சீவியார், பதில் கூறினாரில்லை! கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள், போலிகள், சுரண்டல்காரர். இவர்களைக் கண்டறிந்து வெளியேற்ற முயற்சி நடந்ததா? இல்லை! ஏன்? ஆள்வேண்டுமே, தேர்தலுக்கு!! எனவே, கண்டவர்களைச் சேர்த்துக்கொண்டாகிலும் தேர்தலில் வெற்றி பெற்று, ஆளுங்கட்சியாக ஆகித் தீர வேண்டும்; இல்லையேல், காங்கிரஸ் மேலும் கரைந்தே போய்விடும் என்று கிலி பிடித்தாட்டுகிறது காங்கிரஸ் மேலிடத்தை. இது காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியைக் காட்டும் மற்றோர் ஆதாரமாகும். இவை எல்லாவற்றையும்விட, பதினான்காண்டுகளுக்குப் பிறகு, ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சி நாட்டைச் சுற்றிப் பார்த்து, தேசிய ஒற்றுமை ஏற்படவில்லையே என்று அறிந்து, வருந்துகிறது; தேசிய ஒருமைப்பாடு மாநாடு நடத்தியும், பிரிவினைச் சக்திகளை ஒடுக்கியும், ஆடல்பாடல் மூலம் ஒற்றுமையைக் காணவும், மொழி, வாழ்க்கை வழி, உடை உணவு மூலம் ஒருமைப்பாடு தேடவும், முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. தேசியத்தின் சின்னம் என்றனர் காங்கிரசை. காங்கிரசாட்சி, தேசிய ஆட்சி என்று தெரிவித்தனர். பதினான்கு ஆண்டுகளுக்குப்பிறகு, தேசிய ஒருமைப்பாடு இல்லை என்று அறிவிக்கிறார்கள். இது வெட்கப்படவேண்டிய தோல்வி என்பதைக் காங்கிரஸ் தலைவர்களிலே சிலரேகூட ஒப்புக்கொள்கிறார்கள். ஆகவே, தம்பி! பெரியாரின் பாதத்தைத் தாங்கிப் பிடித்து ஆதரவு பெற்றால்தான் பதவி பெற முடியும் என்ற பரிதாபத்துக் குரிய நிலையும், காங்கிரசின் மாண்பை, மதிப்பை மடியச் செய்பவர்களைக்கூடச் சேர்த்துக்கொண்டுதான் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற கேவலமும், ஆண்டு அறுபதுக்கு மேலாகப் பாடிய தேசிய கீதமும், பதினான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் தேசிய ஆட்சியும், தேசிய ஒருமைப் பாட்டினை ஏற்படுத்தவில்லை என்று தேசியத் தலைவர்கள் என்ற பட்டம் பெற்றுள்ளவர்களே அறிவித்திருக்கும் வெட்கக் கேடான நிலைமையும், காங்கிரஸ் கட்சி அதனுடைய "உயிர்ப்பை’ இழந்து விட்டது என்பதைக் காட்டுகிறது. பொழுதுவிடியும் நேரத்திலும் தொழுதூரில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டத்தை நடத்த மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றால், இந்த நிலைமையை உணர்ந்துவிட்டிருப்பதுதான், காரணம். தேசிய ஒருமைப்பாடு குறித்துக் கூறவேண்டுமல்லவா - கூறுகிறேன், தம்பி! ஆனால் அதற்குமுன், ஒரு விசித்திரமான பிராணியைக் காட்டுகிறேன், பார்க்கிறாயா? மனக் கண்ணால்தான்! யானை அளவு பெரியது! சிங்கத்துக்குள்ள பிடரி! புபோலப் பாயும் சக்தி! நரிக்கு உள்ள தந்திரபுத்தி! குயிலுக்குள்ள குரலினிமை! மயிலுக்கு உள்ள தோகை, ஆடல்! மாடப்புறாவுக்கு உள்ள குலுக்கு! முயல்போன்ற வேகம்! மீன்போன்று நீந்தும் சக்தி! சிட்டுப்போலப் பறக்கும் ஆற்றல்! கிளி நிறம்!! மறுபடியும் ஒருமுறை படித்து, உருவத்தை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்திப் பார்த்துக்கொண்டிரு; அடுத்த கிழமை, சந்திப்போம். அன்புள்ள அண்ணாதுரை 5-11-1961 #பண பாணம், பஞ்சு பஞ்சாக. . . சட்டசபையில் திராவிட நாடு பற்றி அமைச்சர் கருத்து - தேர்தலில் பண பாணம் தம்பி! நரகல் நடையில் ஏசுவார்கள்! பழிச்சொற்களை வீசுவார்கள்! வழிமடக்கி மிரட்டுவார்கள்! வம்புவல்லடிக்கு வருவார்கள்! வழக்கில் சிக்கவைப்பார்கள்! தோழமையைக் கெடுப்பார்கள்! கலகமூட்டிப் பார்ப்பார்கள்! காவல்துறையை ஏவுவார்கள்! எதையும் துணிந்து செய்வார்கள்! இவ்வளவும், வேகத்துடன் விறுவிறுப்புடன், துணிச்சலுடன், செய்பவர்கள், நிரம்பிய நாடாகிவிட்டது தமிழகம் - தேர்தல் நேரம் நெருங்கி வருகிறதல்லவா, அதனால் இப்படிப்பட்ட, உருட்டல் மிரட்டல் பேர்வழிகள், நரகல்நடை பயின்றவர்கள் ஆகியோருக்கு நிரம்பக் கிராக்கி கிடைக்கும், இப்போதே, அந்த நிலை இங்கும் அங்கும் தெரிகிறது. என்னடா தெரியும் உங்க அண்ணாத்துரைக்கு? என்று கேட்கும் பேச்சாளர்கள், அமைச்சர்களை அருகே வைத்துக் கொண்டே தூற்றுகிறார்கள். குலம், கோத்திரம் தெரியாதா, குணமும் பணமும் தெரியாதா, குட்டுகள் யாவும் வெளிப்பட்டுவிடும், மட்டந் தட்டிவிட்டு மறுவேலை - என்று பேசுபவர்கள், கிளம்பி விட்டார்கள், தூற்றியே நம்மைத் தீர்த்துக்கட்டி விடவேண்டும் என்ற நினைப்புடன். உங்க அண்ணாத்துரை ஒழிந்தான் இத்தோடு! மண்ணைக் கவ்வப்போகிறான்! பார்! பார்! - என்று மீசை முறுக்குவார்கள். அமைச்சர்களே ஆலமரத்தடி ஆரூடக்காரர் நிலைக்குத் தமது தரத்தைக் குறைத்துக்கொள்ளும்போது, வெந்ததைத் தின்று வாயில் வந்ததை உமிழும் உத்தமர்களைப்பற்றிக் கேட்கவா வேண்டும்! திட்டுவதோடு அல்ல, தம்பி! திட்டமிட்டபடி இருக்கிறார்கள். காதைப் பிடித்திழுத்து, தலையில் குட்டி, இவ்வளவுதானா உன் திறமை? என்று கேட்டுக் கண்டிக்கும் எஜமானர்கள் போன்ற நிலையில் உள்ள டில்லித் தேவதைகள், இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்களைக் கண்டிக்கிறார்கள். தி. மு. கழகத்தைத் தீர்த்துக் கட்டப்போகிறீர்களா, இல்லையானால், உங்களைத் தீர்த்துக் கட்டவா என்று மிரட்டுகிறார்கள். ஈவு இரக்கமற்ற முறையில் வேலை வாங்கும் எஜமானன், உழைத்து உருக்குலைந்து கிடக்கும் வேலையாளை ஏசுகிறானல்லவா, மூக்குப் பிடிக்கத் தின்கிறாயல்லவா? வேளைக்குப் படி சோறு கொட்டிக் கொள்கிறாயல்லவா? மரமண்டையாடா உனக்கு? தண்டச் சோறு தின்னவா வந்து சேர்ந்தாய்? என்றெல்லாம். அரசியல் நிலையில், கேள்வி கேட்க, வேலை வாங்க, திருத்த, கண்டிக்க, மடக்க, இடிக்க, தடுக்க, அதிகாரம் பெற்றவர்களாக அல்லவா, டில்லியில் உள்ள மேலவர்கள் - மூலவர்கள் உள்ளனர். அவர்களின் அனுமதி பெற்று, ஆதரவு நாடி, பிழைத்துத் தீரவேண்டிய அரசியல் கழைக்கூத்தாடிகள், பாவம், என்ன செய்வார்கள்? எதிர்த்துப் பேச முடியுமா? ஏனென்று கேட்க முடியுமா? சீட்டுக் கிழிந்துவிடுமே - ஆகவே, காட்டிய வழிநடக்க, நீட்டிய இடத்தில் கையெழுத்திட, குட்டும்போது குனிய, தொட்டிழுக்கும்போது பணியவேண்டி வருகிறது. தி. மு. கழகத்தை அழித்தொழித்துக் காட்டுகிறோம், எம்மை அழித்துவிடாதீர்கள் என்று இறைஞ்சிக் கேட்டுப், படைபலம் பெற்றுத் தேர்தல் களத்திலே நம்மைச் சந்திக்க வருகிறார்கள். இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்கள். நம்மைத் தாக்கினால் மட்டுமே, தென்னகக் காங்கிரஸ் தலைவர்கள் வடக்கத்தித் தலைவர்களின் தாக்குதலிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் நிலைமை. தம்பி! என்னவென்றால், தி. மு. கழகம் குறித்து டில்மேலி டம் கேட்டபோதெல்லாம், தென்னகக் காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் கீர்த்தியும் கித்தாப்பும் கெட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தி. மு. க. பற்றி சிறிய கும்பல் சீந்துவார் இல்லை சிதறிப்போகும் என்றெல்லாம் சொல்லிவைத்திருந்தார்கள். தென்னகக் காங்கிரஸ்காரர் சிலருக்கு, உண்மையாகவே, அகில உலகிலும் தம்மைவிட அறிவாளிகள் இல்லை, தம்மைத் தவிர தியாகத் தீயிலே குளித்தெழுந்த தீரர்கள் இந்தத் தரணியிலேயே வேறு எவரும் இல்லை என்ற எண்ணமும், கழகத் தோழர்கள் ஏதும் அறியாதவர்கள், எத்தர்களின் பிடியிலே சிக்கிக்கொண்ட ஏமாளிகள், வெறிச் செயலில் ஈடுபடுவோர் என்று ஓர் எண்ணமும் இருக்கிறது. பயல்களுக்குப் பண்பே கிடையாது என்று நம்மை ஏசுவதன் மூலம், பண்பின் பெட்டகம் என்ற பட்டப்பெயர் தமக்குப் பாரிலுள்ளோர் கூடித் தந்துவிடுவர் என்று எண்ணிக்கொண்டுள்ளனர். தென்னகத்துக் காங்கிரஸ் தலைவர்கள், தி. மு. க. கவனிக்கப் படவேண்டிய அவசியமே இல்லாத ஒரு சிறு கும்பல் என்று வடக்கே அமைந்துள்ள பேரரசு நடாத்துவோருக்குக் கூறி விட்டனர்; ஆனால், நாளும் கழக நடவடிக்கைகள் புது விறுவிறுப்புடன் நடப்பதும், மக்கள் ஆதரவு பெருகுவதும், கிளர்ச்சிகளில் தி. மு. கழகம் ஈடுபடவேண்டிய நிலையும் தேவையும் ஏற்படும்போது, அதன் வடிவமும் வண்ணமும் வகையாக இருப்பதும், பேரரசினருக்குப் புரிந்துவிட்டது. எனவே, அவர்கள் தி. மு. க. பற்றி நீங்கள் தப்புக் கணக்கு காட்டினீர்கள். தவறான விளக்கம் கொடுத்தீர்கள். வளரவிட்டு விட்டீர்கள். வெறும் வாய்ச்சவடால் அடிக்கிறீர்கள். என்று கூறிக் கண்டிக்கிறார்கள்; ஏன் தி. மு. கழகம் வளருகிறது? சிறு கும்பல் என்றீர்கள்; அது பெரும் இயக்கமாகி இருக்கிறது; சீந்துவார் இல்லை என்றீர்கள், எல்லாத் துறைகளிலும் கழகக் கரம் தெரிகிறது; சிதறிப்போகும் என்றீர்கள், வளர்ந்தவண்ணம் இருக்கிறது; ஏன் இப்படித் தவறான தகவல் கொடுக்காதீர்கள் என்று இடித்துக் கேட்கிறார்கள். பேரரசிலுள்ளோரின் மனப்போக்கை எடுத்துக் காட்டும் முறையிலே, வடநாட்டு "ஏடுகள்’ அடிக்கடி எழுதுகின்றன. தம்பி! சட்டமன்றத்தில் ஒரு முறை, நிதி அமைச்சர் சுப்ரமணியம், திராவிட நாடு கேட்பதைப் பத்து வருடம் தள்ளிப் போடும்படி பேசினாரே, நினைவிலிருக்கிறதல்லவா? அப்போது, பம்பாய் ஆங்கில ஏடொன்று, எடுத்தது பேனா, தொடுத்தது கண்டனம் அமைச்சர்மீது. எப்படி சமரசம் பேசலாம்? பத்து வருஷத் தவணை கேட்கலாமா? கழகத்துக்கு நீ உடந்தையா? கதர் உடையில் கழகமா? இப்படிப்பட்டவர் காங்கிரஸ் அமைச்சராக இருக்கலாமா? அண்ணாத்துரையே பரவாயில்லை, பிரிந்து போகிறேன் என்கிறான். அமைச்சர் வேலை பார்க்கும் காங்கிரஸ்காரர், 10 வருடம் ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டு, அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு, பிறகு நாட்டைப் பிரித்துக்கொள்ளத் திட்டமிடுகிறார். இது மிகமிக ஆபத்து! காங்கிரஸ் அமைச்சரின் பேச்சு கண்டிக்கத் தக்கது என்றெல்லாம் அந்த ஆங்கில ஏடு எழுதிற்று. உணருகிறார்களோ இல்லையோ, பேரரசு நடாத்தும் நிலையில் உள்ள வடநாட்டுத் தலைவர்கள், கழகத்தின்மீது கோபம் கொள்கிறார்கள்; ஆனால் தென்னகத்துக் காங்கிரஸ் தலைவர்கள்மீதோ சந்தேகம் கொள்கிறார்கள். இவர்கள் பதவியில் ஒட்டிக்கொண்டு, பலனைச் சுவைத்துக் கொண்டு இருப்பதால், பல்லிளித்துக்கொண்டுள்ளனர்; உள்ளூர இவர்களுக்கும் கழகக்காரர் போலவேதான், வடநாடு தென்னாடு என்ற பேத உணர்ச்சி இருக்கிறது; இவர்கள், கூடிக் குடி கெடுக்கிறார்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள். இந்தியா ஒன்று என்கிறார்கள் "எமக்கு இவ்வளவு தானா?’’ என்று பங்குச் சண்டை போடுகிறார்கள்! இவர்களை முழுவதும் நம்பிவிடுவதற்கு இல்லை! எந்த நேரத்திலும் இவர்கள் தமது கோலத்தை மாற்றிக்கொள்வார்கள்; கோபம் கக்குவார்கள்! இவர்கள்மீது எப்படியும் ஒரு கண் வைத்தபடிதான் இருக்க வேண்டும் என்று பேரரசினர் எண்ணுகின்றனர். எனவே வடக்கே அமைந்துள்ள பேரரசினை நடாத்திச் செல்பவர்கள், காங்கிரஸ் கட்சியினராக இருப்பினும், தென்னகத் தலைவர்களைச் சந்தேகிக்கிறார்கள். இது தென்னகத் தலைவர்களுக்கும் புரிந்துவிட்டது. எனவே, அந்தச் சந்தேகத்தையும் துடைத்துத் தீரவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே, தென்னகக் காங்கிரஸ் தலைவர்கள், பேரரசு நடாத்தும் பேறுபெற்றோரின் "தாக்கீது’ கண்டு, கடுங்கோபத்தை வரவழைத்துக்கொண்டு, தி. மு. கழகத்தைத் தாக்கிடத் துணிவுகொண்டுவிட்டனர். ஆமடா தம்பி, ஆமாம்! உள்ளதை உள்ளபடி கூறிவிட்டேன்! உண்மையை மறைக்க விரும்பவில்லை. தி. மு. கழகத்தை ஒழிக்க, எல்லாவிதமான வலியினையும் திட்டமிட்டுச் சேர்த்து வைத்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. அச்சமூட்டக் கூறுவதாக எண்ணிக்கொள்ளாதே! ஆனால், அலட்சியத்தாலே, உண்மையை மறைத்து வைப்பது தவறல்லவா? அதனால் கூறினேன். வலிவு கண்டு அஞ்சும் இனம் அல்ல நீ; அறிவேன்; பெருமைப்படுகிறேன்! நான், தென்னகக் காங்கிரசு தலைவர்கள், பேரரசு நடாத்துவோரின் சந்தேகத்தை நீக்கவும், கசப்பைப் போக்கவும், தி. மு. கழகத்தைத் தாக்குவதுதான், தமக்குள்ள ஒரே வழி என்ற முடிவுக்கு வந்து, தளவாடங்களைத் திரட்டி வைத்துக்கொண்டும், துந்துபி முழக்கிக்கொண்டும், தொடை தட்டிக்கொண்டும் கிளம்பும் நிலையைக் காட்டுவது - அச்சம் ஏற்படுத்த அல்ல - தம்பி! உன் உயர்தரமான உழைப்பின் பயனாகக் கழகம் பெற்றுள்ள வளர்ச்சி, அத்துணை பெரிது, அத்துணை வலிவு மிக்கது. எனவேதான் கழகத்தைத் தாக்க, காங்கிரசு அத்துணை திட்டமிட்டுத் தளவாடங்களைத் திரட்டவேண்டி வருகிறது என்பதை உணர்ந்து உவகை பொங்கும் நிலையைக் காணத்தான்! பத்துப்பேருக்கு நடுவே வீற்றிருக்கும் ஒருவன், அணிபணி பூண்டிருப்பினும், நறுமணம் பூசியிருப்பினும், நகைமுகம் காட்டிடினும், ஒருவரும் திரும்பியும் பாராமல், என்ன என்று கேளாமல், அலுவல்களைக் கவனித்துக்கொண்டும், உரையாடி மகிழ்ந்தபடியும் இருந்திடின், கவனிக்கப்படாமலிருப்பவன், மனம் என்ன பாடுபடும்! அங்கு உள்ள சுவரினையும் கதவினையும் விரிப்புதனையும் பிறவற்றையும், காண்போர், எங்ஙனம் அவை குறித்து, நாட்டம் ஏதும் காட்டாதிருப்பரோ, அஃதேபோல, நடுவிலே இடம்பெற்றுள்ள ஒருவனைக் கண்டவர்கள், துளியும் பொருட்படுத்தாது இருப்பின், வெட்கம் பிய்த்துத் தின்னும், வேதனை பீறிட்டு எழுமல்லவா? உருவம் கூடவா தெரியவில்லை! உரையாடக் கூடவா, மனம் இல்லை! அற்பனென்று எண்ணிக் கொண்டனரோ? அனாமதேயம் என்று கருதினரோ? - என்றெல்லாம் எண்ணி ஆயாசப்படுவானல்லவா? பொதுத் தொண்டில் ஈடுபடுவோரின் மனதை வெகுவாகப் புண்படுத்தக்கூடியது, எதிர்ப்பு ஏசல் இழிமொழி பழிச்சொல் இவைகள் அல்ல! அலட்சியப்படுத்தப்படுவதுதான், அவர்களின் மனதை மிகுதியாக வாட்டும்; வேதனை கொட்டும்; மனம் புண்படும். அதிலேயும், மிகத் தேவையான, மிகத் தூய்மையான ஒரு இலட்சியத்துக்காகப் பணிபுரிவோரை, மற்றவர், கவனிக்க மறுத்தால், இலட்சியவாதிகள் இரத்தக் கண்ணீர் வடிப்பர். தம்பி! நமது நிலை அப்படி இல்லை! சில காலம், ஏறெடுத்துப் பார்ப்பதும், யாரடா அவன் என்று கேட்பதும்கூட அளவுக்கதிகமான தகுதியைக் கொடுத்துவிடும் என்று எண்ணிக் கொண்டு, நம்மை அலட்சியப்படுத்தி வந்தனர். அப்போதெல்லாம், தம்பி! உண்மையைக் கூறுகிறேன் நான் குன்றிப்போனேன். நமது கழகத்தாரின் பேச்சு, "ஓசை’ என்ற அளவு கூடவா இல்லை; ஒருவரும் கவனித்ததாகத் தெரியவில்லையே, என்றெண்ணி மெத்தவும் வாடினேன். பிறகுதான் மெள்ளமெள்ள, ஒருவரிருவர், நம் பக்கம் திரும்பி, "என்ன இரைச்சல் இது?’ என்று கேட்கலாயினர்; நான் மகிழ்ச்சி அடைந்தேன். தம்பி! கலம், வழிதவறிக் கடலிலே சென்று கொண்டிருக் கிறது. போய்ச்சேரவேண்டிய இடத்துக்கும், இப்போது கலம் ஊசலாடும் இடத்துக்கும் தொடர்பே தெரியாத நிலை! கரை காண முடியவில்லை! கலம் உள்ளோர், எத்துணை கலக்கமடைவர்! கடலிலேயே அமிழ்ந்து அழியத்தான் போகிறோம் என்று சிலர் அலறித் துடித்தழும் வேளை. கலம் செலுத்துவோன் கருத்தற்றவன், திறமையற்றவன், இவனை நம்பி இந்தக் கலத்திலே ஏறிப் பயணப்பட்டதே அறிவீனம் என்று சிலர் கைபிசைந்துகொள்கின்றனர். ஆற்றல் மிக்கவர் எம் தலைவர்! அவர் அறிவார் எவ்வழியும்! அலறி அழாதே ஆரணங்கே! ஆபத்தின்றிப் போய் வருவேன்! - என்று கூறிக் கண்ணீரைத் துடைத்து, கன்னத்தைத் தடவிக்கொடுத்துவிட்டு, காதலிக்குத் தைரியம் கூறி, விடை பெற்றுக்கொண்டு வந்தவன், கலம் செல்லும் நிலை கண்டு, கண்ணீர் உகுத்தவண்ணம் உள்ளான். கலம் செலுத்தும் தலைவனிடம் கலகலப்பாகப் பேசி வந்தவர், காணவும் கூசுகின்றனர்; காணும்போதே, கண்கள் கேள்விக் குறிகள் ஆகின்றன! கலம்விடு தலைவனோ, கடுங்கோபமும் கொள்கிறான்; நிலைமையை அறிந்து அடக்கிக்கொள்கிறான்! கலத்தின் மேல் தட்டிலே உலவுகிறான்; கலக்கம் நிறைந்த உள்ளத்துடன்; சுற்றும் முற்றும் பார்க்கிறான்; கரை காண முயலுகிறான்! எங்கும் தண்ணீர்! அலைகள் எழும்புகின்றன, மடிகின்றன! நம்பிக்கை அவன் இதயத்தில் எழும்பி மடிந்த நிலைகூடப் போய்விட்டது; இதயமே பாழ் வெளியாகிவிட்டது. புயல் வீசுகிறது! கலம் கட்டுக்கடங்காமல், எப்பக்க மெல்லாமோ இழுத்துச் செல்லப்படுகிறது! கலத்திலுள்ளோர் கூவுகின்றனர்; இருள் கப்பிக்கொள்கிறது; அந்நிலையில் மேல் தட்டிலே உள்ள கலம்விடு தலைவன், உடல்மீது ஏதோ வந்து வீழ்கிறது; என்னவென்று எடுத்துப் பார்த்தால், அரும்பும் மலரும் கலந்து காணப்படும் ஒரு பூங்கொம்பு!! கலம்விடு தலைவன் அதைக் கண்டதும், என்ன நிலை பெறுவான்? களிநடமிடுவான். ஏன்? பூங்கொத்து! ஆமாம்! பெருங்காற்றால், கிளை முறிந்து, அதிலொரு துண்டு, இங்கு அடித்துக்கொண்டு வரப்பட்டு வீழ்ந்துளது!! ஆகவே, எங்கோ, மிக அருகில் கரை இருக்கிறது! "கலங்காதீர்கள்! அழிவு இல்லை! கரை சேரப் போகிறோம்! இதோ பூங்கொத்து! காற்றால் அடித்துக்கொண்டு வரப்பட்ட பூங்கொத்து! பக்கத்திலேயேதான் கரை இருக்கவேண்டும்! கரை மிக நெடுந்தொலைவில் இருப்பின், மரம் ஏது, செடிகொடி ஏது? பூங்கொத்து கண்டோம்; இனிக் கரை காண்போம். காரிருள் நீங்கிவிடும், கரை உள்ள திக்கு விளங்கிவிடும்!’’ - என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுவான்; மற்றவரும் அதன் பொருள் அறிந்து பூரிப்படைவர்! தம்பி! பணியாற்றியபடி நாமிருந்தபோது, எவரும் நம்மைப் பொருட்படுத்தாமலிருந்த நிலை இருந்ததே, அது எனக்கு கரை காணவே முடியாதோ என்ற கலக்கத்துடன், கலம் இருந்த நிலை போன்றுதான் இருந்தது. காற்றால் பறித்தெடுக்கப்பட்டு வந்து வீழ்ந்த பூங்கொத்துப் போலிருந்தது, நம்மைப்பற்றி நெரித்த புருவத்தினர் சிலர் கேமொ ழி பேசியபோது, கரை அருகாமையில்தான், என்று கலம்விடுவோன் எண்ணி மகிழ்ந்ததுபோல, நான் மகிழ்ந்தேன், நம்மை மாற்றார் தூற்றக்கேட்டு. கவனிக்கப்பட்டுவிட்டோம், அலட்சியப்படுத்தப்பட வில்லை. அலட்சியப்படுத்தவில்லை, ஆகவே, நமது முயற்சி பொருளற்றுப் போய்விடவில்லை. முயற்சி பொருளற்றுப் போகவில்லை; ஆகவே, பலன் தராமற் போகப்போவதில்லை. தூற்றுகிறார்கள், ஏனெனில் கவனித்துவிட்டார்கள். எதிர்க்கிறார்கள், ஏனெனில் நமக்கு வலிவு ஏறுவது புரிவதால். தாக்குவார்கள், நம்மைத் தகர்த்தாக வேண்டும் என்ற துடிதுடிப்பால்! தாங்கிக்கொள்வோம், அதற்கேற்ற "உரம்’ நமக்குக் குறிக்கோளில் உள்ள பற்று பெற்றுத் தரும். தாங்கிக்கொண்டால், தாக்குவோருக்குக் களைப்பு மேலிடும். களைப்பு மேலிட்ட நிலையிலும் தாக்குவர்; மேலும் களைத்துப் போவர்! பிறகு? பிறகா? தாக்குதல் வலிவிழக்கும்! நமது வலிவு அவர்க்கு விளங்கும்! வெற்றி நமக்குக் கிடைக்கும். தம்பி! விடுதலை எனும் தூயதான குறிக்கோளுக்காகப் பணியாற்றும் இயக்கம் கொள்ளவேண்டிய இந்த எண்ணம்தான், நமக்கெல்லாம்! ஆகவேதான், நாம் தாங்கிக்கொள்ளும் சக்தியைப் பெறுகிறோம்; இவர்களின் தாக்கும் சக்தி குறைந்து வருகிறது. இம் முறை நடைபெறும் பொதுத் தேர்தல், அவர்கள் தமது தாக்கும் சக்திக்குத் துணைதேடி, அதிகப்படுத்திக்கொண்டு வந்து, தேர்தல் களத்தில் நம்மைத் தாக்க ஏற்பட்டுள்ள வாய்ப்பு. இதைத் தாங்கிக்கொண்டால், தம்பி! இஃது உறுதி, பிறகு அவர்களின் தாக்கும் சக்தி வலிவிழந்து போகும்!! பிறகு வேறு கட்டம் எழக்கூடும்! கண்காணாத் தீவுக்கு எடுத்தேகும் கட்டம்! கட்டி வைத்துச் சுட்டுத்தள்ளும் கட்டம்!! கண்ணைப் பெயர்த்திடும் கட்டம்! இப்போது, தங்களால் திரட்ட முடிந்த தளவாடங்களைக் குவித்துவைத்துக்கொண்டு, தாக்கித் தகர்த்திடுவேன் என்று அறைகூவலை விட்டபடி, காங்கிரஸ் கட்சி தி. மு. கழகத்தை, பொதுத் தேர்தல் எனும் களத்துக்கு அழைக்கும் கட்டம். இதிலே, நமது கழகம், தாங்கும் சக்தியை உலகறிய எடுத்துக் காட்டினால், காங்கிரஸ், தனது தாக்கும் சக்தி வலிவிழந்து விட்டதை உணர்ந்துகொள்ளும். பிறகு வேறு முறைகளைத் தேடிடும்; களத்தின் அமைப்பு வேறு வேறு ஆகிடும்; அது பிறகு! இப்போது எழுப்பப்பட்டுள்ள பிரச்சினை தேர்தல் எனும் களம் நின்று, காங்கிரசுக்கு உள்ள தாக்கும் சக்தியைத் தாங்கிக்கொள்ளும் வலிவு, தி. மு. கழகத்துக்கு உண்டா என்பதாகும். என்ன சொல்கிறாய் தம்பி! தாங்கும் சக்தி இருக்கிறதா? என்ன அண்ணா! இப்படி நீ கேட்டிடவேண்டிய காரணம் என்ன? கடுவழி எனினும் நடந்திடுவேன்! பழிச்சொற்களைப் பொறுத்திடுவேன்! மாடும் மனையும் மறந்திடுவேன்! மலரணை துறப்பேன், மறப்பேன் இல்லம்! கூழோ களியோ, தருவர் அங்கு எனினும், அச்சிறை அஞ்சிடுவேன் அல்லேன்! ஓயாதுழைப்பேன், பலன் கேளேன்! உற்றார் எனினும் பற்றுக் காட்டினும், கொள்கைக் கல்லால் வேறெதற்கும் கட்டுப்பட்டிடேன்! - என்றெல்லாம் சொல்ல எனக்குத் தெரியாதெனினும், செய்து காட்டியவனல்லவோ! என்னைப்போய் தேர்தல் களத்தில், காங்கிரஸ் காட்டிட முனையும் தாக்குதலைத் தாங்கிக்கொள்ளும் வலிவு உனக்கு உண்டா என்று கேட்டிடலாமா? - என்று தம்பி! உன் கண் பேசுகிறது; அதிலே நீர்த்திவலை இருப்பதையும் காண்கிறேன். உன் உறுதியை உணருகிறேன், நான் உறுதி பெறுகிறேன். பச்சிளங் குழந்தைக்கு வந்துற்ற பயமூட்டும் நோயினை நீக்குதற்கு, மருத்துவர் கேட்டிடும் மூலிகை, வேங்கை உலவும் காடதனில், பாம்புப்புற்றுக் கருகினிலே கிடைக்கும் என்று தாய் அறிந்தால், தயக்கம் காட்டி நிற்பாளோ, தடுத்தாலும் போகாதிருப்பாளோ!! அதுபோலத்தானே தம்பி! நாம் நமது இலட்சியத்துக்கு எதிர்ப்புக்காட்டுபவர்கள், இந்தத் தேர்தலை ஓர் வாய்ப்பாக்கிக் கொண்டு நம்மைத் தாக்கும்போது, நிலை குலையாமல், உறுதி தளராமல், தாங்கும் சக்தி நமக்குண்டு, மேற்கொண்டும் பணியாற்றும் வலிவும் நாம் பெற்றுள்ளோம் என்பதை எடுத்துக் காட்டியாக வேண்டும். எனவே தம்பி! தேர்தல் களத்துக்காக, "தளவாடம்’ பலப்பல இலட்சம் உள்ளதுவாம் என்று கேள்விப்பட்டு, நாம், நமது உறுதியைத் தளரவிட முடியுமா - தளர்ந்து போகுமா? கோபமூட்டி நம்மைச் செயலாற்ற இயலாதவர்களாக ஆக்கிடவேண்டும் எனும் நோக்குடன், கேவல மொழிகள் பேசியும், கீழ்த்தரப் பழிகளைச் சுமத்தியும், மாற்று முகாமினரும், அவர்கட்கு "மேய்ப்புத் தேய்ப்பு’ வேலையினைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்களும், அங்குச் சிந்தியதைச் சிதறியதை எடுத்துவந்து சுவைத்திடும் போக்கினரும், அரசியல் பிரசாரம் என்ற பெராலே, நாவால் நாராசத்தை வெளிப்படுத்துவர். கோபத்துக்குத் துளியும் இடம் கொடாதே! பொறுத்துக்கொள்! நீ பொங்கி எழவேண்டியது, போக்கிடமற்றவர்கள் நோக்கம் மறந்து, தம் நாக்கு வலிக்கத் திட்டுகிறார்களே, அதை எண்ணி அல்ல. நாடு உள்ள நிலையைக் கண்டு, தம்பி! உனக்குக் கண்ணீர் பொங்க வேண்டும்! வளம் குறைந்து, வாழ்வுக்கான வகைகள் குன்றி, வாழ்க்கை நடத்தத் தேவைப்படும் வருவாய் தேய்ந்து, தேய்ந்த வருவாய் கொண்டு வயிற்றையேனும் கழுவிக்கொள்ளலாம் என்றெண்ணி, அங்காடி சென்று, பண்டம் பலவற்றின் விலையைக் கேட்டிடின், பற்றி எரியுதே வயிறு என்று பலரும் பதறும்படி விலைகள் யாவும் ஏறிவிட்ட நிலையிலே நாடு இருக்கிறது. நல்லவர்கள்! நம்மவர்கள்! வல்லவர்கள்! வாழவைக்க வந்தவர்கள் - என்றெல்லாம் சாற்றுக்கவிபாடி ஏற்றுக் கொண்டனர் மக்கள், காங்கிரஸ் ஆட்சியினை, ஆண்டு பதினைந்தை எட்டிப் பிடிக்கிறோம். இந்நிலையில் இந்நிலை! என்னென்பது! வடித்த சோறு போதாமல், வயிற்றைப் பிசைந்து வாட்டமுறும் வறியோர் நிலையினை எண்ணிப்பார்! மாற்று ஆடை கிடைக்காமல், மரத்தில் பாதி உடலில் பாதி சுற்றியபடி உலர்த்திடும் மாதர் நிலையை, மனதில் கொண்டு பார்த்திடு! உருகி உடல் கருகி, உள்ளீரல்பற்றிய நோய், உயிரைக் குடிப்பது தெரிந்தும், அதனைப் போக்கிடும் மருந்து வாங்கிடப் போதிய பணம் இல்லாமல், அணையும் விளக்கு என்றறிந்தும், எண்ணெய் இல்லாது ஏக்கமுறும் நிலையை, தம்பி! நினைத்துப் பார். இரத்தம் தோய்ந்த வாயுடனே, கொல்லும் புலி உலாவுகையில், குட்டியை இழந்த தாய்மானும், குப்புற வீழ்ந்து மடிந்துபடும் கொடுமை நிறைந்த காட்சியைப்போல், கொள்ளை இலாபம் அடித்தவர்கள் கோலாகலமாம் வாழ்க்கையிலே, குடிசையில் சுருண்டு படுத்துழலும் ஏழையின் நிலையை எண்ணிப்பார்! திண்டுகள் அடுக்கிச் சாய்ந்துகொண்டு, நோட்டுகள் நெளியும் பெட்டியுடன், சேட்டுகள் கடையில் இருக்கையிலே, மூக்குத்தி அடகு வைத்துவிட்டு, பதிலுக்கு, துடைப்பக்குச்சியைச் சொருகி நிற்கும் அந்த சொக்கி, சுப்பி, இவர்களைப் பார்!! களஞ்சியம் நிரம்பி வழிந்ததனால், மற்றதை மூட்டைகளாய்க் கட்டி, மாட்டுத் தொழுவம்தனில் போட்டு வீட்டுக்குப் போடா, வேலப்பா! எனக் கட்டளையிட்டிடும் கனதனவான்; அவன் கழனி உழுது செல்வம் சேர்த்து, மாளிகைக்கதனைச் சொந்தமாக்கி, மனைக்கு ஓடும் இல்லாமல், கூரைவேய்ந்து குடி இருந்து, குப்பி கொடுத்த சோற்றுருண்டை உள்ளே போக வெங்காயம் தேடி அலைபவன் வேலப்பன்! நாட்டின் நிலைமை இதுதானே - இன்னும் பலப்பல கூறிடவோ! இவைகளை எண்ணி, உன் மனதில், இரக்கம் அன்பு எழல் வேண்டும்; அறநெறி அரசு சென்றிட்டால், அவதி இத்துணை இராதென்ற எண்ணம் மலரும், சிந்தித்தால். அறநெறி அரசு செலவேண்டின், அரசு நடக்கும் போக்கினையும், அறநெறிக்கான முறைதனையும், அனைவரும் அறியச் செய்திட நாம், ஆவன செய்திடவேண்டாமோ? அதற்கு ஏற்ற வாய்ப்புத்தான், அடுத்து வருகிற பொதுத் தேர்தல்! ஆட்சி நடத்தும் காங்கிரசு அரை கோடி அளவு என்கிறார்கள்; ரூபாய்களைக் குவித்துக் கொண்டு, தாக்கும் நோக்குடன் இருப்பதனைக் காணுகிறோம்; எனின், கடமை செய்திட மறந்திடல், அறம் அலவே. நாடு முழுவதும் நம் வீடு! நாட்டிற்குழைத்தல் நம் கடமை! ஆட்சி அமைத்திட அரும் வாய்ப்பு அடுத்து வருகிற பொதுத் தேர்தல். பணத்தாலான கோட்டைக்குள்ளே பதுங்கிக்கொண்டால், பயந்துபோய், நமக்கேன் இந்த வீண்வேலை, நத்திப்பிழைப்போம் என்று கூற, நாமென்ன மரபு அறியா மாக்களோ அல்லது மரக்கட்டைகளோ! இல்லை, தம்பி! நான் அறிவேன்! எடுத்ததை முடித்திடும் ஆற்றல்மிக்க, ஏறுகள் உண்டு நாட்டினிலே! அவர்க்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு! ஏமாறமாட்டார், பணக் குவியல் கண்டு! என்பதனை நான் அறிந்துள்ளேன். எதனையும் தட்டிக் கேட்டிட நாம் இத்துணை வலிவுடன் உள்ளபோதே, ஊர்க்குடி கெடுத்திடும் பேர்களுடன் உறவுகள் கொண்டு, பணம் குவித்து, உழைப்போர் குடியை உருக்குலைந்து ஊராளும் வழிக்கு விலைபேசி, வெற்றிகள் பெற்றிடும் நினைப்புடனே! உலவுது காங்கிரசு மமதையுடன். கூரை குடிசை உம் பக்கம்! கூடகோபுரம், மாடமாளிகை, எம் பக்கம்! யாது செய்யவல்லீர்கள்! எமக்கிருப்பது பண பாணம்! கவசம் இருக்குது தங்கத்தால்! - என்று காட்டாட்சி, நடத்துபவன் போட்டிடும் முறையில் கூச்சலிட்டு, மிரட்டுது நம்மைக் காங்கிரசு! உண்டி குலுக்கி அலைவீர்கள், நாங்கள் "உம்’ என்றால் இலட்சம் உருண்டுவரும்! பஞ்சைகள் நீங்கள், அறிவோமே! பங்களாவாசியை எதிர்க்கப்போமோ? - சீமான்களின் அணைப்பிலே உள்ள காங்கிரஸ் கட்சி கேட்கிறது. இருட்டடிப்பால் தாக்கிடுவேன்! இழிமொழியில் அமிழ்த் திடுவேன்! ஏன் என் பகையைத் தேடுகிறாய், எவரும் என்னிடம் தப்பியதுமில்லை! தகரக்குவளை, நீயப்பா! தகாது உனக்கு தேர்தல் என்று தர்பார் நடத்தும் காங்கிரசு எச்சரிக்கை விடுகிறது. ஆளப்பிறந்தவர் நாங்களன்றோ! அதற்கேற்ற அந்தஸ்து எமக்குண்டப்பா! வீணாய் ஆசை கொண்டலைந்து, விரோதம் தேடி அழியாதே! விடமாட்டோம் உமை நாடாள என்று வீறாப்புப் பேசுது காங்கிரசு. காங்கிரசு போடும் கூச்சலினால், கதிகலங்கிப் போவதற்கா நாங்கள் உமக்குத் துணை நிற்போம், என நாளும் மக்களிடம் கூறி வந்தோம்!! ஆயின், காங்கிரசுக் கட்சிக்கு அன்று 1957-ல் இருந்ததைவிடப் புது ஆற்றல், வந்துளதோ இன்றென ஆராய்ந்தால், மமதை அதிகம் வளர்ந்ததன்றி, தூய்மை வாய்மை நேர்மையுடன் வலிவு வளர்ந்த அறிகுறிகள் எங்கும் காணோம்? கண்டனையோ? கண்டவர் காங்கிரஸ் நுழைந்ததனால், கரையுது மதிப்பு மாண்பென்று, கதறும் சஞ்சீவியார் நிலையும் இதற்குச் சான்று; வேறென்ன? பற்பல தொகுதியில் வேட்பாளர் என வெளிக் கிளம்பிய காங்கிரசார், முன்னாள் எங்கு இருந்தவர்கள்? முறைகள் யாவை அவர் தொழிலில்? மூதறிவு மிக்கவரோ? - நாட்டவர் இதனைக் கேளாரோ? இவர்தான் “ஓட்டு’ கேட்க வரும் உத்தமர் இரத்தினம், காங்கிரசு; இவர்க்கே உங்கள் ஓட்டுகளைக் கொடுத்திட வேண்டும் எனத் தரகர் கேட்டிடும்போது,”ஓட்டு’ உள்ள மக்கள் மனதில், என்ன எழும்? பற்றும் பாசமும் நேசமுமா? இல்லை, தம்பி! அவை அல்ல! திகைப்பு, திகில், வெறுப்புணர்ச்சி! இவர்க்கெலாம் காங்கிரஸ் புகலிடமா! என்று இவர் நல்லது செய்திட்டார்? கொன்றவனைக் கண்டறிந்து, மாலைகள் சூட்டிடச் செல்வானோ, மகளை இழந்து துயரம் உறும் தகப்பன் தரம் மிகக் குறைந்திடினும்!! எத்துணை பணபலம் காட்டிடினும், எத்தருக்கெல்லாம் இடமளித்து, மற்றவர் வாழ்வை மதியாது, தேயவைத்து ஆண்டுவரும், காங்கிரஸ் ஆட்சியை எதிர்க்காமல், காட்டிக் கொடுப்பதோ மக்கள் தமை? போனதெல்லாம் போகட்டும்; பொல்லாங்குகள் இனிப் போகும்; நல்லவை பலவும் நாம் தருவோம் எனச் சொல்லா லாகிலும் வரமளிக்க, காங்கிரஸ் கட்சி முன்வருமா? அதுவும் இல்லையே! விலைகள் குறைக்கச் சொல்லாதீர்! விம்மி விம்மிக் கிடக்காதீர்! விலைகள் குறைய உள்ள வழி, வயிற்றை இறுக்கிக் கட்டுவதே! வேறு முறைகள் கிடையாது! சோறு குறைத்துச் சுகப்படு! வரிகள் வளரும், சொல்லிவிட்டேன்! குறைகள் பேசிக் கிடக்காதீர்! கொடுக்க வேண்டும், புது வரிகள்!! கடன் சுமை ஏறும், குறையாது! கட்டுக்கடக்க முடியாது! தொழில்கள் நடத்த முதலாளி! தோழமை அவருடன் கொண்டுவிட்டோம்! இதுவோ சமதர்மம் எனக்கேட்டு பேசுதல் தீது; சிறை உண்டு! கொள்ளை இலாபம் அடிப்போர்கள் கொட்டம் அடக்கு என்றெல்லாம் கூச்சலிடாதீர், அவரெல்லாம் கதரை அணிந்தார், காணுங்கள்; காங்கிரசானார் கேளுங்கள்! நோயும் நொடியும் போக்கிவிட, மாய மந்திரம் கற்றோமா! பிறப்பார், இறப்பர், அதற்கென்ன? பிரபஞ்ச மர்மம் இதுதானே!! இப்படியல்லவா, தம்பி! காங்கிரஸ் கட்சி, துணிந்து கருத்து அறிவிக்கிறது. இன்று உள்ள நிலையில், ஏழைகள், மறைமுக வரியினால் மிகவும் கொட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பொருளாதார நிபுணர்களெல்லாம் எடுத்துரைக்கிறார்கள். எனினும், மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், 1600 கோடி ரூபாய் வரியாம்! அதிலே பெரும் பகுதி மறைமுக வரியாமே! கேட்டனையா, அக்ரமத்தை!! கேட்பார் இல்லை என்ற துணிவன்றி வேறு என்ன? குலைநோயால் கதறுபவன், தாளம் தவறிப் பாடுகிறான் எனக் கோல்கொண்டு தாக்கிடும் கொடியவன் ஒருவன் இருந்தானெனக் கதையிலும் இல்லை; ஆனால் தம்பி! குமுறி ஏழை அழிகின்றான், அவனைக் காங்கிரஸ் கட்சி பார்த்து, கிளர்ச்சி செய்தால் துப்பாக்கி சுடுவது, கொல்ல அறிந்திடு எனச் சொல்லக் கேட்கிறோம்; என் செய்தோம்? திட்டம் தீட்டினோம் பாரென்றார். கொட்டினர் வரிப் பணம் கோடி கோடி! ஒட்டிய வயிற்றினர் பாடுபட ஒய்யாரச் சீமான்கள் கொழுக்கின்றார். வளருது செல்வம் திட்டத்தால், வகை வகையாக என்று சொன்னார்; வறுமை வாட்டம் போகாமல், வலிவு இழந்து ஏழை மக்கள் கோடி கோடி இருக்கின்றார்! வளர்ந்த செல்வம் ஒளிந்தது எங்கே? தேடச் சொல்லி குழு ஒன்றைத் தேசம் ஆளும் நேரு பிரான், அமைத்து அறிவித்துவிட்டார்; அக்குழு பேச்சு மூச்சுமில்லை!! செல்வம் யாவும் ஒரு சிலரின் கரத்தில் சிக்கிக் கொண்டதென செப்புகிறார் டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் - முன்னாள் நிதி அமைச்சர்! அங்ஙனம் அவர் கூறுவதை, யாரறிவார் எனும் எண்ணமுடன், இங்குள்ள நிதி அமைச்சரவர், சுப்பிரமணிய பெருமானார், சொல்லுகிறார் சொகுசாக, செல்வம் பரவிவிட்டது காண்! செழுமை எங்கும் வழிந்திடுது! ஏழை வாழ்வு மலர்ந்திடுது! எல்லாம் எம்மால் - என்னால்தான்!! - என்று அடித்துப் பேசுகிறார்! அபத்தம் அல்லவோ எனக் கேட்பாய், ஆமாம், ஆனால் அமைச்சர் நிலை, அதற்கும் பயன் படவில்லையெனில், எற்றுக்கந்தப் பதவி என எதிர்த்துக் கேட்பார்; வெகு தீரர்! ஏழை மக்கள் தொகை தொகையாய் ஏங்கிச் சாகும் நிலையில் உள்ளார்! - என்று நாம் கூற வந்தால், ஏடா மூடா! நாடதனை அறிவாயோ நீ, கூறிவிடு! நானா, நீயா, அமைச்சர்? அதை மறந்து பேசுவதழகல்ல!! - என்று கேட்டுவிடத் துணிவுண்டு - ஆற்றலரசர், அவர் தமக்கு, அவனி காலுக்குப் பந்து, அறிவுக்கட்லின் நீர் முழுதும். அவரது வாய்க்கு ஒரு முழுங்கு!! ஆனால் டி. டி. கே. முன்னாள் நிதி அமைச்சர் கூறி விட்டார் நூற்றுக்குத் தொண்ணூற்று ஐந்து பேர், தரித்திர நிலையில் காலந் தள்ளுகிறார்கள்; பணம் ஒரு சிலரிடம் சிக்கிக் கொண்டுவிட்டது என்று. தம்பி! நாட்டு நிலைமை புரிகிறதல்லவா? உனக்குப் புரிகிறது, ஆனால், மற்றவர்க்கு? புரியச்செய்ய வேண்டியது, உனக்கு உள்ள புனிதக் கடமை! அதனை இன்றே துவங்கு. காங்கிரசாட்சியினால் விளைந்த கேடுபாடுகளை விளக்க முன்பு - இரு கிழமைகளுக்கு முன்பு - வெளியிட்டிருந்தேனே! கருத்துரைகள், ஏன் தம்பி! அவைகளைத் துண்டு வெளியீடு களாக்கி, மக்களுக்குத் தந்தனையா? ஆம், எனில், ஏன் எனக்கு ஒன்றுகூட, உள்ளம் களிப்படையும் முறையில் அனுப்பி வைக்கவில்லை? திரைகளிலே தீட்டி, கழகத்திலே தொங்க விட்டிருக்கலாம். செய்தனையோ? தம்பி! காங்கிரசின் பண பாணம், நம்மை ஒன்றும் செய்ய முடியாதவிதமான, "கேடயம்’ அல்லவா, அந்தக் கருத்துரைகளை ஓவியமாக்குவதும், ஊருக்கு அறிவிப்பதும். தம்பி! 1100 கோடி ரூபாய் செலவிலே மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டாகிவிட்டது, தெரியு மல்லவா? ஏது அவ்வளவு பணம்? என்று கேட்கிறாயா? நாடு நாடாகச் சென்று கடன் வாங்கியும், ஓடாகிப் போயுள்ள நிலையிலும் மக்களை விடாமல் வரிகளைப் போட்டும், நோட்டுகளை அச்சடித்துக் குவித்தும், இந்தப் பெருந் தொகையைப் பெற வழிகண்டுள்ளனர். 1100 கோடி! நமக்கு இதிலே - தமிழக துரைத்தனத்தாரின் அளவிடற்கரிய ஆற்றலின் காரணமாகக் கிடைப்பது, எவ்வளவு தெரியுமோ? 291 கோடி!! தமிழகக் காங்கிரஸ் அரசு 400 கோடி கேட்டது. கிடைத்தது 291 கோடிதான்! எவ்வளவு தேவைப்படும் ஒரு திட்டம் தீட்டிக் கணக்குப் போட்டுச் சொல்லுங்கள் என்று, தமிழகக் காங்கிரஸ் அரசு நிபுணர்களைக் கேட்டிட, அவர்கள் பல நாட்கள் பாடுபட்டு, புள்ளி விவரங்களைத் தேடிக் கண்டெடுத்துக் கோர்த்து, திட்டம் தயாரித்து, 600 கோடி வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டனர். பார்த்தவுடனே துரைத்தனத்துக்கு, ஆசையாகத்தான் இருந்தது; ஆனால் உடனே அச்சம் குடைந்தது, அவ்வளவு எங்கே கொடுக்கப்போகிறார்கள் என்ற பயத்தால், 600 கோடியை 400 கோடி என்று குறைத்தார்கள். அந்த 400 கோடியை, டில்லியில் உள்ள பேரரசு 291 கோடியாகக் குறைத்தது! சரி! என்றனர், வேறு? பிடிவாதம் பேசினால், பதவி நிலைக்குமா! பதவி இல்லையெனில், பணக்காரர்களின் கூட்டுறவு கிடைக்குமா? அந்தக் கூட்டுறவு கிடைக்காவிட்டால் பண பாணம் எப்படித் தயாரிக்க முடியும்!! தம்பி! டாட்டா பிர்லா எனும் இரண்டு செல்வவான்களிடம் மட்டும், இன்று உள்ள தொழில்கள் எவ்வளவு தெரியுமா? ஏறக்குறைய 600 கோடி ரூபாய் மூலதனம் போடப்பட்டுள்ள தொழில்! கொழுத்த இலாபம் கிடைக்கிறது! மானைக் கொல்வது வேங்கை! ஆனால், புதரருகே உள்ள நரிக்கும், சிறு சிறு துண்டுகள் உண்டல்லவா? அதுபோல, இந்தக் கோடீஸ்வரர்கள் பெறும் கொள்ளை இலாபத்தில், காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு, தேர்தல் நிதியாகக் கிடைக்கிறது. டாட்டா கம்பெனி முன்பு பெருந்தொகை, காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் நிதியாகக் கொடுத்ததும், வழக்குப் போடப் பட்டதும், அதுபோது நீதிபதிகள் எடுத்துரைத்த அற உரையும் அறிந்திருப்பாய். தம்பி! கான்பூர் எனும் திருத்தலத்துக்கு, இப்படிப்பட்ட முதலாளிமார்களிடம் நன்கொடை பெற, நேரு பண்டிதர் நடத்திய புனிதப் பயணம் பற்றி, இதழ்களில் படித்திருப்பாய். கொள்ளை இலாபம் அடிப்போரிடம் "கைநீட்டுவது’ பஞ்சசீலம் பேசும் பண்டிதருக்கு, ஆறாவது சீலமாகிவிட்டது! அவர் என்ன செய்வார், பாவம், அவரை நம்பித் தேர்தலில் ஈடுபடுவோர் அவரைப் பிய்த்து எடுக்கிறார்கள். பிர்லாவுக்குச் சொந்தமான இந்துஸ்தான் மோட்டார் கம்பெனி மட்டும், இம்முறை, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிதிக்காக, இருபது இலட்சம் கொடுத்தது! பெரிய தொகை? ஆமாம்! ஆனால் கசக்குமா கொடுக்க? காங்கிரஸ் ஆட்சியால் மட்டுந்தானே, தம்பி! சமதர்மம பேசிக் கொண்டே இப்படிப்பட்ட முதலாளிகளை ஆதரிக்க முடியும்! அந்த ஆதரவின் காரணமாக பிர்லாவின் மோட்டார் கம்பெனிக்கு கிடைத்த இலாபம் (160-ல்) எவ்வளவு தெரியுமா 2,85,71,127 ரூபாய்! கொடுக்க மனம்தான் வராதா? கைதான் நீளாதா? டாட்டாவுக்கு? 5 கோடி 77 இலட்சம் இலாபம்! தம்பி! பண பாணம் காங்கிரசிடம் இருக்கிறதே என்று பதறாதே, அந்தப் பண பாணம் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதை நாடு அறிந்திடச் செய்திடு, பிறகு பார், அந்தப் பண பாணத்தை, மக்கள், எத்துணை துச்சமென்று கூறிக் காரித் துப்பிவிடுகிறார்கள் என்பதை. சமதர்மம் பேசுவது, முதலாளிகளை மிரட்ட! எமது குறிப்பறிந்து நடந்துகொள்ளாவிட்டால், சமதர்மத் திட்டப்படி, தொழில்களை நாங்களே நடத்தத் திட்டமிட்டு விடுவோம்; உமது கொட்டம் அடங்கிவிடும் என்று கூற! அதேபோது, முதலாளிகளிம் தொழில்களை விட்டு வைப்பது, இலாபத்தில் பங்குபெற! நாடு வாழ அல்ல! தொழிலாளர் வாழ அல்ல! காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிதிக்காக!! அதாவது, பண பாணம் தயாரித்துப் பொதுமக்களை மிரட்ட. தம்பி! மக்கள் இதனை அறியச்செய் - பார் பிறகு பண பாணம், பஞ்சு பஞ்சாகப் பறந்துபோவதை. டாட்டா பிர்லா கூட்டாளி பாட்டாளிக்குப் பகையாளி! என்பதை எங்கெங்கும் எடுத்துக் கூறு, தம்பி! இன்றே உன் பொழுதுபோக்குச் செலவுக்கென உள்ள சிறு தொகையை, இதற்கு ஒதுக்கி துண்டு வெளியீடுகளைப் பரப்பலாமே!! சாக்கடையில் ஊறியது என்று தெரிந்தால், கரும்புத் துண்டினை எவர் விரும்பிச் சுவைப்பர்? வாட்டம் போக்காக் காங்கிரசு நோட்டம் பார்க்குது ஓட்டுப்பெற பாட்டாளித் தோழர்களே! பட்டது போதும்; விடுபடுவீர்! உழைத்து வாழும் உத்தமரே! உலகம் உமது உணர்வீரே! உடனே வருவீர்! புதுப்பாதை உதயசூரியன் ஒளிதருமே! என்று எடுத்துக் கூறலாமே தம்பி! பேச்சாக, பாட்டாக! துண்டு வெளியீடுகளாக! செய்வாயா தம்பி! நாள் அதிகம் இல்லை. தம்பி! துவக்கத்திலே குறிப்பிட்டேனே, நரகல் நடை இழிமொழி பழிச்சொல் இவைகளை, நம்மை அழித்திட எண்ணுவோர் கூறிடும்போது கோபம் கொள்வதிலே, துளியும் பயன் இல்லை. சொல்லப் போனால், நாம் கோபமடைய வேண்டும், நம் குணம் கெட வேண்டும், பாதை தவற வேண்டும், பண்பு பாழாக வேண்டும், இலட்சியத்தை இழக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் ஆத்திரமூட்டும் பேச்சுக்களைப் பேசுகிறார்கள். அதை அறிந்து, தம்பி! அந்தப் பேச்சுக்கள்பற்றிய கவலையை விட்டொழித்து, நாட்டுக்கு நாம் எடுத்துக் கூறவேண்டியது ஏராளம் இருக்கிறதே, அவைகளை எடுத்துச் சொல்வதற்குப் போதுமான நாட்கள்கூட இல்லையே என்பதை எண்ணி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில், சிறு சிறு பங்கு செலுத்த வேண்டும் என்ற தன்மையில், துண்டு வெளியீடுகள், சுவரொட்டிகள், திரை ஓவியங்கள் என்பன போன்றவைகள் மூலம், காங்கிரஸ் ஆட்சியினால் ஏற்பட்ட கேடுபாடுகளை நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறு. தம்பி! பார்த்துக்கொண்டிருக்கும்போதே, நாட்கள் பறந்தோடிப் போகின்றன! தம்பி! புள்ளினம் இசை எழுப்புகிறது, மெல்லிய இசை! என் அருகே படுத்துறங்கும், கவுன்சிலர் இராசகோபாலுடைய குரட்டைச் சத்தம், சுருதி இல்லாத சங்கீதமாக இருக்கிறது. வளை ஒலி! தொலைவில்! மாதர்கள், இல்லங்களைத் துப்புரவு ஆக்குகிறார்கள். பொழுது விடிகிறது, தம்பி! உதயசூரியன் எழுகிறான்! உலகுக்கு ஒளி கிடைக்க இருக்கிறது! இருள் கலைகிறது!! நாடு ஒளிபெற உதயசூரியன் நமது சின்னம் உதயசூரியன் உழவுக்கும் தொழிலுக்கும் உயிரளிப்பது உதயசூரியன் உலகு செழித்திட உதயசூரியன் உறங்குவோரை எழுப்பிடுவது உதயசூரியன் பசியும் பிணியும் பறக்கடிக்க உதயசூரியன் பாருக்கெல்லாம் ஒரே விளக்கு உதயசூரியன் உதயசூரியன் உமது சின்னம் உதயசூரியன் எழுவது திண்ணம் உலகு புகழும் இளங்கோவடிகள் வாழ்த்தியது உதயசூரியன் உதயசூரியன் கிளம்பிவிட்டால் உண்டோ இருளும் நாட்டில்? வீட்டில்? தம்பி இப்படியெல்லாம், நீ நண்பர்களுடன், இனிய குரலெழுப்பித் தெருக்களிலே பாடிக்கொண்டு செல்வது போலவும், முதியோரும் வாலிபரும், ஆடவரும் ஆரணங்குகளும், முகமலர்ச்சியோடு, இசைகேட்டு மகிழ்வதுபோலவும், ஓர் காட்சி காண்கிறேன். நீ மனம் வைத்தால், நாடு காண முடியாதா, அந்தக் காட்சியை? அன்புள்ள அண்ணாதுரை 19-11-61 முயன்றால் முடியும்! அமைச்சர் கருத்துப்படி காங்கிரஸ் - காங்கிரஸார் கொடுமை - தி. மு. க. வின் தனித்தன்மை தம்பி! காங்கிரஸ் கட்சியில் இன்று உள்ளவர்கள் எப்படிப்பட்ட வர்கள், அவர்களை என்னென்ன பெயரிட்டு அழைக்கலாம் என்பதைக் கூறட்டுமா? நமக்கும் அவர்களுக்கும் கட்சி வேறு என்பதாலே ஏற்படக்கூடிய எரிச்சல் காரணமாக அல்ல; அவர்களின் இயல்பு, நிலைமை, நினைப்பு, செயல் ஆகியவை களைக் கவனித்து, அவைகளுக்கு ஏற்ற பெயர் என்னென்னவாக இருக்க முடியும், என்னென்ன பெயர்கள் பொருத்தமுள்ளதாகவும் பொருள் உள்ளதாகவும் இருக்க முடியும் என்பதைக் கவனித்துக் கூறுகிறேன்; கசப்பு, கோபம் காரணமாக அல்லவே அல்ல. இடந் தேடிகள் பணம் பிடுங்கிகள் பத்தாம்பசலிகள் வகுப்புவாதிகள் சிண்டுபிடித்திழுப்போர் செயலாற்றாதார் கொள்கை அறியாதார் என்ன அண்ணா இது! காங்கிரஸ்காரர்களைக் கடுமையாகத் தாக்கக்கூடாது, கேவலமாகப் பேசக்கூடாது, தூற்றக்கூடாது என்றெல்லாம் எங்களுக்குக் கூறிவிட்டு, நீ! காங்கிரஸ்காரர்களை இவ்வளவு கடுமையாகக் கண்டித்துப் பேசுகிறாயே, இடந்தேடிகள் பணம்பிடுங்கிகள் என்றெல்லாம் கேவலமாகப் பெயரிட்டு அழைக்கிறாயே என்றுதானே, தம்பி, கேட்கிறாய். நியாயமான கேள்வி. விளக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இடந்தேடிகள் பணம்பிடுங்கிகள் என்பவைகள், கடுமையான வார்த்தைகள், கேவலமான சொற்கள், இழிமொழிகள் இல்லை என்று கூறவில்லை. ஆனால் இப்படிக் காங்கிரஸ்காரர்களைத் தூற்றும் நிலைக்கு நான் கீழே இறங்கவில்லை; இறங்கவும் மாட்டேன். இப்படியெல்லாம் பெயரிட்டு அழைக்கத் தக்கவிதமான கண்டனத்தை, கடுமொழியை, காங்கிரசார்மீது நான் வீசவில்லை. வீசியவர், விவரம் தெரியாதவரும் அல்ல; காங்கிரசுக்குப் பகைவரும் அல்ல; எதுவோ கிடைக்குமென்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து எரிச்சல் மூட்டப்பட்டவருமல்ல; நல்ல நிலைமையிலே உள்ளவர்; தரம் உயர்ந்தது; பதவி உயர்வானது; ஆராய்ந்து பொறுப் புணர்ச்சியுடன் பேசக்கூடியவர்; பண்டித ஜவஹர்லால் நேருவின் நேரடியான நிர்வாகத்திலே உள்ள வெளிநாட்டு விவகாரத் துறையிலே பொறுப்பேற்றுள்ளவர்; நேருவுக்குத் துணையாக இருப்பவர்; துணை அமைச்சர்; இலட்சுமி மேனன் அவர்களின் பேச்சிலே இருந்து எடுத்தவைகளே, இடந்தேடிகள் பணம்பிடுங்கிகள் எனும் கருத்துவிளக்க மொழிகள்! நானாவது அவ்வளவு துணிந்து, காங்கிரசாரைத் தூற்றுவதாவது! அம்மையார், காங்கிரஸ் கட்சிதான்; இப்போதும். வீண் தகராறுகளில் தம்மைச் சிக்கவைத்துக்கொள்பவரு மல்ல; எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் இயல்பு உள்ளவருமல்ல. அநேகமாகத் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். அப்படிப்பட்ட இலட்சுமி மேனன் அவர்களுக்குத்தான் என்ன கடுங்கோபமோ தெரியவில்லை, மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார், காங்கிரஸ் கட்சியினரை - நேருவை நீக்கிவிட்டு; பிறரை. காங்கிரசைவிட்டு வெளியேறி வெகுண்டு பேசிய வார்த்தைகளும் அல்ல. இருக்கும் கட்சியிலேயே தானோர் அதி அற்புத மேதை என்ற ஆணவம் பிடித்தலைபவரும் அல்ல அம்மையார். எனினும், காங்கிரஸ்காரர்களைப்பற்றி, காங்கிரசுக்குப் பல ஆண்டுகளாக எதிர்ப்புக் காட்டிவருபவர்கள் கூடச் சொல்லத் துணியாத கண்டனமொழிகளை வீசுகிறார்; காரணங்களும் மிகப் பொருத்தமாகக் காட்டுகிறார். கேட்கும்போதே, காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆத்திரம் பீறிட்டு எழும்; கண்களிலே கனலும் புனலும் ஒருசேரக் கிளம்பும். பிய்த்து எறிந்துவிட வேண்டும் என்று கோபம் உண்டாகும். இடந்தேடிகள் பணம்பிடுங்கிகள் பத்தாம்பசலிகள் என்றெல்லாம் இழிமொழி கூறினவர் மட்டும், காங்கிரசல்லா தாராக இருந்திருப்பின், இந்நேரம், காங்கிரஸ் பெருந் தலைவர்கள், பூமிக்கும் ஆகாயத்துக்குமாகக் குதித்திடுவர்; மந்திரி சுப்ரமணியத்தைப் போன்ற அரைகுடமாக இருப்பின், இதற்குள் "சவால்கள்’ பிறந்திருக்கும். ஆனால், எவ்வளவு வெட்கம், வேதனை, ஆத்திரம் பிறந்தாலும்,பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது; ஏனெனில், கண்டனச் சொற்களைக் கூறினவர், காங்கிரஸ் கட்சியினர், அமைச்சர், நேருவுக்குத் துணை அமைச்சர். எனவே, வாய்பொத்திக் கிடக்கிறார்கள்! வேறு வழி! அம்மையார், ஒளிவு மறைவின்றி, அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்பட மறுத்து, உண்மையை, விளைவு பற்றிய கவலையற்று எடுத்துப் பேசுகிறார்கள். காரணங்களை அழகுற எடுத்துக் காட்டுகிறார்கள். என் செய்வர் காங்கிரஸ் தலைவர்கள் - தொண்டர்கள்! மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கிறார்கள். பொதுத் தேர்தலுக்காகக் காங்கிரஸ் கட்சி, சல்லடம் கட்டிக்கொண்டு, சங்கநாதம் எழுப்பிக்கொண்டு, சந்துமுனைச் சிந்து பாடுவோரில் இருந்து, சந்தைக்கடை தரகு வியாபாரி போலப் பேரம் பேசிக்கொண்டு சோரம் போகத் தயாராக இருக்கும் பேர்வழிகள் வரையில் படைதிரட்டித் தயாராக வைத்துக்கொண்டு, இருக்கும் நேரமல்லவா!! தயாரிக்கப்பட்ட மாலையைக் கழுத்திலிருந்து கணுக்கால் வரையில் தொங்கத்தொங்கப் போட்டுக்கொண்டு, “தேச பக்தர்கள்’ பட்ட கஷ்ட நஷ்டங்களை, சிதம்பரனார் செக்கிழுத்ததை, குமரன் மண்டை உடைந்ததை, கொடிய அடக்குமுறைக்குப் பலியானதைக் காங்கிரஸ் பேச்சாளர்கள் எடுத்துக்கூறி,”அப்படிப் பட்ட காங்கிரஸ் கட்சியின் அபேட்சகர் இவர்’ - என்று அர்ச்சனை செய்வதைக் கேட்டு அகமகிழும் நேரம்! அமைச்சர் வேலை நிச்சயம் கிடைக்குமா, முழு அமைச்சரா, குட்டி அமைச்சரா, ஏதாகிலும் கிடைக்குமா என்று ஆரூடம் பார்க்கும் நேரம்! அவர்களே கேட்டு ஆச்சரியப்படும்படி, துதி பாடகர்கள், கட்டணம் பெற்றுக்கொண்டு, புகழுரைகளைப் பொழியும் நேரம். அப்படிப்பட்ட நேரத்தில், இப்படிப்பட்ட தூற்றல் கணைகளை அம்மையார் தொடுப்பது, தம்பி! பருவ மங்கையின் கழுத்தில் தாலிகட்டப் போகும்போது, மாப்பிள்ளைக்குக் "காக்காய் வலிப்பு’ வருவதுபோலவும், சீனியுடன் பிஸ்தா பருப்பும், குங்குமப் பூவும் போட்டு, காய்ச்சி வெள்ளிப் பாத்திரத்திலே ஊற்றி, காலில் சதங்கை கொஞ்சிட, கண்களில் கனிவு ஒழுகிட, அன்னநடை நடந்துவரும் ஒரு சின்ன இடைக் கிளிமொழியாள் தர, ஒரு முழுங்கு பருகும்போது, பாலில், செத்துக்கிடக்கும் பூச்சி இருப்பது கண்டால் எப்படிக் குமட்டுமோ, அதுபோலவும் அல்லவா இருக்கும். கொண்டாட, புகழ்பாட, கொடிதூக்கிகள் கும்பல் கும்பலாகக் கிளம்பியுள்ள நேரம் பார்த்தா, அமைச்சர் வேலை பார்க்கும், அமைதியான இயல்பு படைத்த திருமதியார் இலட்சுமி மேனன், இப்படிப்பட்ட, அருவருப்புத் தரத்தக்க இழிமொழிகளை வீசுவது!! பரிதாபம்! பரிதாபம்!! மாப்பிள்ளையைக் காணோமே? வழிதவறிவிட்டதோ? என்று கேட்டுப் பதறிநிற்கும் மாமனாரிடம், "பார்த்தேன் உமது மாப்பிள்ளையை! பாதையில்! படுத்து உருண்டு கொண்டிருந்தார் சாக்கடை ஓரத்தில்! கேட்கப்போனால், இது பன்னீர்க்குளம் என்கிறார்!!’’ என்று ஒருவர் சொன்னால், மாமனார் மனம் எப்படிப் பதறும்! அவ்வளவுக்குப் போவானேன், தரமான மாம்பழம் என்று எண்ணி வாங்கிச் சுவைத்திடும்போது, ஒரு பக்கம் புளிப்பாகவும், மற்றோர் பக்கம் வெம்பலாகவும், முழுதும் நாராகவும் இருந்தால், மனம் என்ன பாடுபடும்! அதுபோல, மாலையும் மரியாதையும், மக்கள் ஆதரவும் பெறத்துடிக்கும் நேரத்தில், தியாகிகள்! தீரர்கள்! ஊருக்கு உழைக்கும் உத்தமர்கள்! என்று வாழ்த்துரைகளைப் பெற்று மெய்மறந்து கிடக்கும் வேளையில், இடந்தேடிகள் பணம்பிடுங்கிகள் பத்தாம்பசலிகள் வேடதாரிகள் கபடர்கள் சுயநலப்புலிகள் என்றெல்லாம் பொருள்பட, அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிகப் பொறுப்பான பதவியில் உள்ள அம்மையார், திட்டவட்ட மாகக் கூறிடக் கேட்டால், எப்படி இருக்கும் "அரசியல் அந்தஸ்து’ தேடிக்கொண்டிருக்கும் காங்கிரசாருக்கு! போகட்டும், பொதுமக்கள் மட்டும், பாவம் என்ன நினைப்பார்கள்? பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், காங்கிரசில் உள்ளவர்களைப்பற்றி, உண்மைத் தொண்டர்கள் ஊருக்கு உழைப்பவர்கள் தியாகச் செம்மல்கள் தீரமிக்கவர்கள் என்று பலபலப் புகழக் கேட்டு, இவ்வளவு பேர்கள் புகழ்ந்து பேசுவதால், காங்கிரசில் உள்ளவர்கள், தகுதியுள்ளவர்களாக, தன்னலமற்றவர்களாக, தொண்டாற்றக் கூடியவர்களாகத்தாம் இருப்பார்கள் என்று பொது மக்கள் ஒருகணம் மயங்கும் நேரமாகப் பார்த்து, அம்மையார், சவுக்கடி கொடுக்கிறார்களே, ஆளுக்கேற்ற பேச்சுப் பேசுவோர் அகப்பட்டதைச் சுருட்டுவோர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் கட்சி வளர ஏதும் செய்தறியாதார்! காரியவாதிகள்! என்றெல்லாம்!! மெத்தக் கஷ்டப்பட்டு, பெரும்பொருளும் செலவிட்டுக் காங்கிரசார் பொது மக்களிடம் செல்வாக்குத் தேடும் நேரமாகப் பார்த்து, இந்தக் காலத்துக் காங்கிரசார் கபடர், கசடர் என்று காங்கிரஸ் அமைச்சராகப் பணிபுரியும் பொறுப்புள்ளவர் பேசிடக் கேட்டால், பொது மக்கள் மனமும் படபடவெனத் தானே அடித்துக்கொள்ளும். இவர்களைப் போய், காந்திய வழி வந்தவர்கள், ஊருக்கு உழைக்கவரும் உத்தமர்கள், தன்னலமற்ற பெரியோர்கள், தகுதி யாவும் பெற்றவர்கள் என்று நாம் இதுநாள்வரை எண்ணிக்கொண்டிருந்தோமே, இப்போதல்லவா தெரிகிறது இவர்களின் உண்மை வடிவம் - என்றுதானே எண்ணிக்கொள்வர். அதிலும் இது தேர்தல் நேரம்; எடைபோடும் நாட்கள்; "மாத்து’ கண்டுபிடிக்கும் காலம்! அப்படிப்பட்ட காலத்திலே, மிகக் கேவலமான எண்ணம் கொண்டவர்கள் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இன்று உள்ள காங்கிரசார் என்று இலட்சுமி மேனன் கூறுவது, காதிலே நாராசம் காய்ச்சி ஊற்றுவது போலல்லவா இருக்கும். நாட்டிலே நல்ல திட்டங்கள் வேண்டும், மக்கள் சுகப்பட வேண்டும், வாழ்வு துலங்கவேண்டும், வஞ்சகம் வீழ்ந்துபட வேண்டும், வலியோர் எளியோரை வாட்டி வதைத்திடும் கொடுமை ஒழிக்கப்படவேண்டும், அதற்கு ஏற்றமுறையிலே ஆட்சிமுறை அமையவேண்டும் என்பதற்காக, எதிர்வரிசை நின்று சொந்தத்துக்கு ஒரு சுவையும் பயனும் எதிர்பார்க்காமல், மனதிற்குச் சரியென்று பட்டதை, மரியாதை கலந்த உறுதியுடன் நாம் எடுத்துச் சொல்கிறோமே, தம்பி! என்னென்ன ஏசிப் பேசுகிறார்கள், எவரெவரை விட்டுப் பேசவைக்கிறார்கள், அங்கம் அங்கமாக வர்ணிக்கிறார்கள், பரம்பரைகளை ஆராய்கிறார்கள், பழிச்சொற்களை வீசுகிறார்கள், பற்களை நறநறவெனக் கடிக்கிறார்கள், தாவித்தாவிக் குதிக்கிறார்கள், காங்கிரசார் - தலைவர்கள் வரிசையிலே உள்ளவர்களேகூட பார்க்கிறோம். இதோ அம்மையார், செம்மையாகக் கொடுக்கிறார்களே, சவுக்கடி. வாய் திறக்கிறார்களா! முடியுமா!! எல்லா ரோஷமானமும் ஆத்திரமும் ஆர்ப்பரிப்பும், நம்மை நோக்கித்தான் பாய்கிறதே தவிர, பத்தாம்பசலி என்கிறார், படுமோசம் என்கிறார், சுயநலமிகள் என்கிறார், சுகபோகிகள் என்கிறார், கொள்கை தெரியாதார் என்கிறார், கூடிக் குடிகெடுக்கிறார்கள் என்கிறார் அம்மையார்; ஒரு வார்த்தை, ஒரு கனைப்பு, ஒரு இருமல், தும்மல் கிடையாது! சுருண்டு சுருண்டு கீழேவிழும் அளவுக்குக் கொடுத்திருக்கிறார் அம்மையார்; துடைத்துக் கொண்டு, அதை எங்கே நாம் பார்த்துவிடுகிறோமோ என்று கவலைப்பட்டுத், தழும்புகளை மறைத்துக்கொள்கிறார்களே தவிர, எங்களையா இப்படிக் கேவலமாகப் பேசுவது? எப்படிப் பேசலாம்? எப்படிப் பொறுத்துக்கொள்வோம்? ஏன் பொறுத்துக் கொள்ளவேண்டும்? என்று கேட்கும் துணிவு இருக்கிறதா? எப்படி இருக்க முடியும்? அம்மையார்தான், புட்டுப்புட்டுக் காட்டுகிறார்களே! கிளறினால், மேலும் பல வெளிவந்துவிடுமே என்ற கிலி! எனவேதான் வாயடைத்துக் கிடக்கிறார்கள். இருந்தபோது சாமரம் வீசியவர்கள், விலகி இழிமொழி கக்கினால், அதைச் சிந்தாமல் சிதறாமல் பிடித்துக்கொண்டு வந்து, சந்தைக் கடையிலே கூவிக் கூவி விற்கிறார்களே காங்கிரசார், நம்மைக் கேவலப்படுத்த; இலட்சுமி மேனன் தரும் வார்த்தைகள், நற்சான்றுப் பாத்திரங்கள் என்று கருதுகின்றனரா!! நம்மைவிட்டு விலகியோர், நாடிப்பெற்ற கொள்கையை வெறுத்தோர், பழிசுமத்தி, இழிமொழி பேசி, பகைகக்கித், தங்கள் போக்குக்குச் சமாதானம், விளக்கம் தேடிக்கொள்கிறார்கள். அவர்கள் நம்மைப் பகைத்துக்கொண்டதால் பேசித்தீர வேண்டியது என்ற தரக்குறைவான முறை காரணமாக, கடுமொழி பேசினால், பார்! பார்! போடுபோடென்று போடுகிறான்! கேள்! கேள்! கொடு கொடு என்று கொடுக்கிறான் என்று கூவுகிறார்கள், கூத்தாடுகிறார்கள், இதே காங்கிரஸ்காரர்; கூட இருந்து கொண்டே குட்டுகிறார், குடைகிறார், இடிக்கிறார், உடைக்கிறார், மானத்தைப் பறிக்கிறார், யோக்கியதை கெட்டதை அம்பலமாக்கு கிறார் இலட்சுமி மேனன்; திருடனைத் தேள் கொட்டியது போலல்லவா, திருதிருவென்று விழித்தபடி இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். இலட்சுமி மேனன் சொல்லியது, பொது மக்கள் காதுக்கு எட்டாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்று தந்திர முறையைக் கையாளுகிறார்களே ஒழியப், பொங்கி எழுகிறார்களா? முடியுமா? அச்சம்! இப்படிப் பேசலாமா என்று கேட்க ஆரம்பித்து, அம்மையார், நான் சொல்வதை மறுத்துப்பேச வக்கிருந்தால் பேசுங்கள் என்று கூறிக் "குரங்குப் புண்’ணாக விஷயம் ஆகிவிடப்போகிறது என்ற அச்சம். நல்லவேளை, இந்த அம்மையார், பொதுப்படையாகப் பேசினார்கள்; ஊரும் பேரும் சொல்லி மேலும் மானத்தைப் பறிக்காது விட்டு வைத்திருக் கிறார்களே, அதுவரையிலே இலாபம் என்ற நினைப்பிலே இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தவிர, தரமான, தகுதியான கட்சியே கிடையாது; அதிலே உள்ளவர்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள். ஆளத் தெரிந்தவர்கள்; மற்றவர்களுக்கு ஏதும் தெரியாது, தன்னல மறுப்பும் கிடையாது என்று, மேடையிலே நின்று மார்தட்டிப் பேசுகிறார்கள் காங்கிரசார். அதிலும் எவ்வளவுக்கெவ்வளவு பேசுபவர்களுக்கும் காங்கிரசின் தியாகச் செயல் நிரம்பிய வரலாற்றுக்கும் தொடர்பே இல்லாமலிருக்கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு உரத்த குரலில், உறுதி காட்டி, உருட்டி மிரட்டிப் பேசுகிறார்கள். திடீரென்று கேட்டால், தண்டி என்பது ஊரின் பெயரா, ஆளின் பெரா என்றுகூடச் சந்தேகப்பட்டுக் குழம்பும் காங்கிரஸ் காரர்கள் இருக்கிறார்கள். ரவுலட் சட்டம் தெரியுமா என்று கேட்டுப்பார், தம்பி! புத்தம் புதுக்கதர் ஆடையை! விவரம் தெரியாமல் விழிப்பார்கள்! மகமதலி சவுக்கதலி தெரியுமா? தெரியாது! பாஞ்சாலத்திலே வீர மரபு ஏற்படுத்திய லாலா லஜபதிராய் வாழ்க்கை வரலாறு தெரியுமா? தெரியாது! வேறு என்ன தெரியும்? மந்திரியிடம் பேசிக் காரியத்தைச் சாதித்துக் கொடுக்கக்கூடிய தரகர் யார்? அவருக்கு என்ன தரவேண்டும்? என்பது தெரியும்! எந்தத் தொகுதியில் எந்த ஜாதி மக்கள் அதிகம்? அது தெரியும்! மயக்குவதா மிரட்டுவதா அந்த மக்களை? அது தெரியும்! காங்கிரஸ் நடாத்திய வீரப்போராட்டங்கள், விறுவிறுப்பான சம்பவங்கள், எதுவும் தெரியாது. அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கையே இன்றைய காங்கிரசில் அதிகம்! அந்த எண்ணிக்கை வேகமாக வளர்ந்தும் விட்டது. அதுகண்டுதான், ஒரு நல்ல கட்சி, நாட்டுக்கு விடுதலை பெறப் பாடுபட்ட கட்சி, சபர்மதி முனிவர் என்று சான்றோர் போற்றிய காந்தியார் வளர்த்த கட்சி, இன்று இந்தக் கதிக்கு வந்துவிட்டதே என்று மனம் குமுறி, மனதில் உள்ள பாரத்தைக் குறைத்துக்கொள்வதுபோல, இலட்சுமி மேனன் அவர்கள் அவ்வளவு வெட்டவெளிச்சமாக்கிவிட்டார் உள்ள ஊழல்களை! அது சரி அண்ணா! இலட்சுமி மேனன் எப்போது அப்படிப் பேசினார்கள்? எங்கே பேசினார்கள்? காங்கிரசில் உள்ளவர்கள், என்னைக் குடைந்து எடுப்பார்களே! உங்கள் அண்ணாத்துரை கூறுவது அண்டப்புளுகு என்பார்களே! நான் என்ன பதில் அளிக்க? - என்று கேட்கத் துடிக்கிறாய் - தெரிகிறது தம்பி! கூறுகிறேன், விவரம், தெரிந்துவைத்துக்கொள். பத்து நாட்களுக்கு முன்பு நாகபுரியில் காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. நாகபுரி நகர காங்கிரஸ் குழுத் தலைவர், தலைமையில்! அதிலேதான் அம்மையார், இலட்சுமி மேனன் இன்றைய காங்கிரசாரின் போக்கை அம்பலப்படுத்திக் கடுமையாகக் கண்டித்துப் பேசினார். ஆங்கிலப் பத்திரிகையான "Times of India’’ டைம்ஸ் ஆப் இந்தியாவில் விரிவாகவே வெளியிடப்பட்டிருக்கிறது. அம்மையார் அருளிய மணிவாசகங்களிலே சில கூறவா? "நேரு ஒருவர் மட்டுமே காந்திய வழியைக் கடைப் பிடிக்கிறவர்; மற்றக் காங்கிரசாரில் மிகப் பெரும்பாலோர், காந்திய வழி நடப்பதாக ஆணை யிடுகிறார்கள். ஆனால் அவர்கள், இந்தியாவில் உள்ள பிற்போக்குச் சக்திகளின் பிரதிநிதிகளாகவே உள்ளனர்.’’ கபடர்! காதகர்! - எனும் கடுமொழிகள், அம்மையாரின் இந்தப் பேச்சிலே தொக்கி நிற்கின்றன என்பதைப் புரிந்துகொண்டாயல்லவா? காந்தியத்தின்மீது ஆணையிடுகிறார்கள். பிற்போக்குத்தனத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். மிகப்பெரும்பாலான காங்கிரஸ்காரர். உள்ளொன்றுவைத்துப் புறமொன்று பேசுவதல்லவா, இது; நயவஞ்சகம், வெளிவேடம், ஏய்ப்பது என்றெல்லாம் கூறலா மல்லவா. இந்தக் கருத்தைச் சுருக்கமாக்கிக்காட்ட, நான் தம்பி, அவ்வளவையும் விட்டுவிட்டு, "பத்தாம்பசலி’ என்று மட்டுமே குறித்துக் காட்டினேன். சொல்வதென்றால் இன்னும் நிரம்பச் சொல்லலாம். காந்தியத்தின்மீது ஏன் ஆணையிடுகிறார்கள்? பிறகு ஏன் பிற்போக்குச் சக்திக்குத் துணைநிற்கிறார்கள்? காந்தியத்துக்கு மக்களிடம் நிரம்பச் செல்வாக்கு இருக்கிறது, எனவே, தாங்கள் அதன்வழி நடப்பதாக ஆணையிட்டால் மக்கள் தங்களை நம்புவார்கள், ஆதரவு தருவார்கள்! அதிலே கிடைக்கும் ஆதாயத்தைப் பெறலாம் என்ற எண்ணம். இது சுயநலமல்லவா? மக்களை நம்ப வைத்துக் கழுத்தறுப்பது அல்லவா? வெளிவேஷம் போட்டு மக்களை ஏய்ப்பதல்லவா? நானா கூறுகிறேன்? இலட்சுமி மேனன்! நயவஞ்சகம், வெளிவேஷம் போடுபவர், பத்தாம்பசலிக் கொள்கையுடன் குலவுபவர், ஒருவர் இருவர் அல்ல! அம்மையார் கூறுகிறார், நேரு நீங்கலாக உள்ள காங்கிரஸ்காரர்களில் மிகப் பெரும்பாலானவர்கள், இப்படிப்பட்டவர்கள் என்று. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சிதான், நாடு ஆள நாங்களன்றி வேறு எவருளர்? எவருக்கு உண்டு அந்தத் தகுதி என்று எக்காளமிடுகிறார்கள்; கேட்கப்போனால், சவால் விடுகிறார் சுப்பிரமணியனார்!! மானம் போகக் காணோம் மிகப்பெரும்பாலான காங்கிரஸ் காரர்கள் நயவஞ்சகர்கள் என்ற பொருள்பட அம்மையார் பேசிடக் கேட்டு; நம்மீது பாய்கிறார்கள்!! அம்மையார், காரணம் காட்டாமலிருந்தால், தூற்றித் திரிகிறார்கள் என்றுகூடச் சொல்லிவிடலாம். ஆனால், தக்க காரணம், விளக்கம் அளித்திருக்கிறார்கள். "நீண்ட காலத்துக்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டிய சமுதாய சீர்திருத்தத்துக்கான முற்போக்கான சட்டங்கள், பாராளுமன்றத்திலே கொண்டுவரப்படும் போதெல்லாம் காங்கிரஸ் உறுப்பினர்கள்தான், முன்னால் நின்று அவை களை எதிர்த்து வந்தனர். என் உள்ளம் வெதும்புகிறது’’ எப்படி இருக்கிறது, தம்பி! பத்தாம்பசலிகள் என்று நான் குறிப்பிட்டேனே, தவறா? முற்போக்கான சட்டதிட்டங்கள் வருகிறபோது, காங்கிரசில் இருந்துகொண்டு எதிர்க்கிறார்கள் - நியாயமா? இவர்களா நாடாளத் தகுதிபெற்ற கட்சியினர்! இப்படிப் பட்டவர்களைக் கொண்டுள்ள கட்சியா மக்களை வாழ வைக்கும் கட்சி? என் உள்ளம் வெதும்புகிறது என்று அம்மையார் மட்டுமா, அறிவுத் தெளிவுள்ள, முற்போக்குக் கருத்துள்ள, அனைவரும்தான் கூறவேண்டி இருக்கிறது. ஆனால், இப்படிப் பட்ட நயவஞ்சகர்களில் இருந்தல்லவா "ஆளவந்தார்கள்’ பொறுக்கி எடுக்கப்படுகிறார்கள். அவர்களிலே பலர் கதர் கட்டுகிறார்கள். ஆனால், உள்ளூர வகுப்புவாதக் கட்சிகளான, ஜனசங்கம், இந்துமகா சபை, ஆர். எஸ். எஸ். - போன்றவைகளிடம் அன்பும் அபிமானமும் கொண்டுள்ளனர்; அவை களுக்குக் கட்டுப்படுகின்றனர். கட்டுவது கதர்! கனிவு காட்டுவது காட்டுமுறை விரும்பும் கட்சி களுடன்! கதர் கட்டுவது எதற்கு? ஊராரை மயக்க! மகாத்மாவின் தொண்டர்கள், தூயவர்கள் என்று பிறர் நம்பிக்கொள்ளும்படி செய்ய! ஆனால் உண்மையில்? வகுப்புவாதக் கட்சிகளுடன் குலவுகிறார்கள். தம்பி! கபடர்கள் என்று கூறினேன் - தவறா? பணம்பிடுங்கிகள் என்று நான் குறிப்பிட்டது. பலருக்குச் சற்றுக் கடுமையான மொழி என்று தோன்றக்கூடும். ஆனால், பொருத்தமில்லாமல் கூறிடவில்லை என்பதை அமைச்சரின் மற்றோர் மணிமொழி கேட்டால் புரிந்துகொள்வார்கள். காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ் கமிட்டிகளும் பணத்தை நாடும் போக்கு, வளர்ந்தபடி இருக்கிறது. விடுதலைப் போரிலே வீரத்தியாகம் புரிந்தவர்களைப் புறக்கணித்து விட்டுக் காங்கிரஸ் கமிட்டிகளுக்குப் பணம் கொடுக்கக் கூடியவர்களைக் காங்கிரஸ் கமிட்டிகள் ஆதரிக்கின்றன. இது தேர்தலுக்கு "அபேட்சகர்களை’ப் பொறுக்கினார்களே, அதிலே வெட்டவெளிச்சமாகத் தெரிகிறதல்லவா? தொண்டர்கள், தூயவர்கள், தியாகிகள் இவர்கள் சீந்துவாரற்றுப் போய் விட்டார்கள்; பணம் பந்தியிலே என்று ஆகிவிட்டது என்று அம்மையார் வேதனைப்படுகின்றார்கள். முன்பெல்லாம் ஆக்க வேலைகளிலே ஈடுபடு வார்கள்; இப்போதைய காங்கிரசார் சில்லறைச் சண்டை களிலே மூழ்கிக் கிடக்கின்றனர். நாட்டு முன்னேற்றத்துக் கான திட்டங்களில் அக்கறை காட்டுவதில்லை. காங்கிரஸ் துரைத்தனம், மக்கள் நல்வாழ்வுக்காக என்னென்ன செய்திருக்கிறது என்பதைக் கிராம மக்களுக்கு எடுத்துச் சொல்லும் செயலில் ஈடுபடுவதில்லை. எப்படி ஈடுபட அவர்களுக்கு மனம் வரும்? அவர்கள் அதற்கா சேர்ந்தனர் காங்கிரசில்? காந்தியப் போர்வையில் இருந்து கொண்டு அகப்பட்டதைச் சுருட்டத் திட்டமிடுகிறார்கள்; வெளிவேஷம்; சுயநலம்; நயவஞ்சகம்!! இரண்டு திட்டங்கள்பற்றி, மிகுந்த சிரமப்பட்டுச் செலவிட்டு அச்சடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கச் சொல்லி அனுப்பிவைக்கப்பட்ட கட்டுக் கட்டான புத்தகங்கள், காங்கிரஸ் கமிட்டிகளில் கட்டுக்கூடப் பிரிக்கப்படாமல் கிடந்ததை என் கண்ணால் கண்டேன். தம்பி! இதைவிட வேதனையுடன் எவரும் பேசிட முடியாது. இப்போது எண்ணிப் பார்க்கச் சொல்லு காங்கிரசாரை, நான் குறித்துள்ள "அடைமொழிகள்’ பொருத்தமற்றவைகளா என்று! கோபிக்காமல்! குட்டு வெளிப்பட்டுவிட்டதே என்று ஆத்திரப் படாமல், யோசித்துப் பார்க்கச் சொல்லு. இந்தக் குற்றச் சாட்டுகளைக் கூறுபவர், வேறு கட்சி அல்ல; காங்கிரஸ்! ஏனோதானோ! அல்ல! துணை அமைச்சர்! மகாராஷ்டிரம் சென்றிருந்தார்களாம் அம்மையார்! அங்கு, தகுதியுள்ளவர்களைக் காங்கிரஸ் சார்பில் தேர்தலுக்கு நிறுத்தாமல், கசடர்கள், காதகர்கள், காட்டிக் கொடுப்பவர்கள், நேற்றுவரை காங்கிரசை எதிர்த்தவர்கள் ஆகியோர் தேர்தலுக்குக் காங்கிரஸ் அபேட்சகர்களாக நிறுத்தப்பட இருக்கிறார்களாம். பயங்கரமாக இருக்கிறது என்கிறார் இலட்சுமி மேனன். மகாராஷ்டிரத்தில் மட்டுமல்ல, எங்கும் இதேதான். பணம் இருக்கவேண்டும் நிரம்ப! எப்படிச் சேர்த்த பணமாக இருந்தாலும் சரி! கள்ளமார்க்கட் பணமாக இருந்தால், மிக நல்லது. ஏனெனில், கணக்குக்காட்டவேண்டிய அவசிய மில்லாமல் தேர்தலில் செலவழிக்கலாம். பண்பு இருக்கிறதா? பொதுத்தொண்டாற்றிப் பயிற்சி இருக்கிறதா? சட்டமன்றத்திலே பணிபுரியும் தகுதி இருக்கிறதா? இவைகளைக் கவனிக்கவே இல்லை! பணம் உண்டா! - ஏராளமாக! தாராளமாகச் செலவிடத் தயாரா? அப்படிப்பட்டவர்தான் வேண்டும்? எதற்கு? துறவியாக வாழ்ந்து, தூய்மைக்கும் வாய்மைக்கும் மதிப்பளித்த மகாத்மா வளர்த்த கட்சியைக் காப்பாற்ற! வெட்கக்கேடு இதைவிட வேறு உண்டா? ஆனால், நாட்டிலே இன்று இதைத்தானே காண்கிறோம். ஆங்காங்கு, தேர்தலில் வேட்பாளர்களாகக் காங்கிரசால் நிறுத்திவைக்கப்பட்டிருப்பவர்களின் தகுதி, திறமை, பண்பு, பயிற்சி, முன்னாள் தொடர்பு இவைகளைச் சற்றுப் பார்க்கச் சொல்லேன், தம்பி! தம்பி! பார்க்கச் சொல்லேன் என்று நான் கூறுகிறேனே தவிர, இப்போதே மக்கள் இதைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது, எனக்குத் தெரியாமல் இல்லை. அதுமட்டுமல்ல, உண்மைக் காங்கிரஸ் தொண்டர்கள் உளம் வெதும்பித்தான் கிடக்கிறார்கள். எவரெவர் ஊர்க்குடி கெடுப்பவர்களோ அவர்களெல்லாம் காங்கிரசில் இழுத்துப் போடப்பட்டு, அபேட்சகர் ஆக்கப்பட்டு உலா வருகின்றனர். அவர்களுக்குக் கொடிபிடிக்கும் காலமும் வந்ததே என்று வெட்கித் தலைகுனிகிறார்கள் விவரம் தெரிந்த காங்கிரஸ்காரர்கள். களத்துமேடு கால்படியாவது கிடைக்காதா என்று அலையும் பேர்வழிகள்போல, கதர்போட்டுக்கொண்ட கனவான் கூடச் சென்று "காசு’ பறிக்கலாம் என்று உள்ளவர்களும் உள்ளனர். ஆனால், காங்கிரசில் இழுத்துப்போடப்பட்டுள்ள பணக்காரர் வீட்டு வேலையாட்கள்கூடக் காங்கிரஸ் கட்சியை இன்று மதிக்க மறுக்கிறார்கள் - இவ்வளவு தரம் குறைந்து போய்விட்டதே இந்தக் கட்சி என்று. தம்பி! இதோ ஒரு குடிசை! சற்று உள்ளே செல்வோமா - கற்பனை உலகுதானே! யாரும் நம்மைக் காணமாட்டார்கள், வா; அஞ்சாமல் வருகிறான் பார்! வண்டி ஓட்டும் முனியன்! மிட்டா மாணிக்கத்திடம் வேலை. அவன் மனைவி முத்தம்மா! இருவரும் பேசிக்கொள்கிறார்கள் கேட்போம், சந்தடி செய்யாமல், உற்றுக் கேள்: முனியன் : அய்யா செய்யும் அக்கிரமம் அய்யே! உனக்குத் தெரியாதென்று கேலி என்னைச் செய்தாயே! கேளடி! கேளடி! முத்தம்மா!! நாடு மீட்டவர் நல்லவர்கள் ஆட்சி நடத்தி வருபவர்கள் காங்கிரசார் எனச் சொன்னாயே அந்தக் காங்கிரஸ்காரர் செயலதனை கேளடி முத்து! கேளம்மா நம்ம அய்யா வீடு வந்தார்கள்!! முத்தம்மா: ஊரை ஆளும் உத்தமர்கள் உங்க அய்யாவிடமா வந்தார்கள்? உலகம் புகழ வாழ்பவர்கள் உங்க அய்யாவிடமா வருவார்கள்? நாடு மெச்ச வாழ்பவர்கள் நாடி வருவரோ, அவரிடந்தான்? முனியன்: வந்ததைக் கண்ணால் பார்த்தேண்டி! வாய்பிளக்க நின்றேண்டி! வந்தார் காங்கிரஸ் தலைவரெலாம் வரிசையாகவே மாளிகைக்கு! முத்தம்மா: வந்து? முனியன்: வந்தா? மாலைகள் பலப்பல போட்டாரடி! மண்டியிடக்கூடப் பார்த்தாரடி! மானம் காத்திட வேணுமென்று மனுக்கள் கொடுத்தார் அய்யாவிடம்! காங்கிரஸ் வெற்றி உம்கரத்தில் கருணை காட்ட வேண்டுமென்றார்! முத்தம்மா: உங்க அய்யாவிடமா? அறுந்த விரலுக்கும் சுண்ணாம்பு அய்யே! அவர்தர மாட்டாரே! அடுத்த வீட்டான் வாழ்ந்திட்டால் ஆத்தே! வயிறு எரிவாரே! அய்யா இலட்சணம் ஊரறியும் யார்தான் அவரை நாடிடுவார்! முனியன்: எதையோ சொல்லு முத்தம்மா! எவன் உன் பேச்சை மதிக்கிறான்! அய்யா தேர்தலில் குதிக்கிறார் ஆறேழு இலட்சம் செலவழிக்கிறார்!! முத்தம்மா: இவரா காங்கிரஸ் கட்சியிலே இப்ப தேர்தலில் நிற்கிறார்? கள்ளுக்கடையை நடத்தினவர் இந்தக் கண்ணியவான் அல்லவா? முனியன்: அய்யா சொன்னார் அதைக்கூட, அதனால் பாதகமில்லை யென்று அடித்துப் பேசினார் பெரியவரும், மண்டலக் காங்கிரஸ் தலைவரடி! மந்திரிக்கும் அவர் சொந்தமடி! கதரும் கட்டிப் பழக்கமில்லை கண்ட பயல்களைக் காண்பதில்லை! கண்டிப்பான பேர்வழி நான் என்றும் சொன்னார், எஜமானர். முத்தம்மா: அய்யா சொன்னதைக் கேட்ட பின்பு! முனியன்: மெய்யாத் தாண்டி, எல்லோரும் மேதையின் பேச்சிது என்றார்கள்! முத்தம்மா: ஐய்யே! இது அநியாயம் அடிப்பவர் கொள்ளை பல தொழில் அதை அனைவரும் அறிவார் தெளிவாக அன்பும் அறமும் அவர் அறியார் அழுத கண்ணைத் துடைத்தறியார் எரிந்து விழுவார் எவரிடமும் எவருக் கிவரால் உபகாரம்? சத்திரம் சாவடி கட்டினாரா? சாலைகள் சோலைகள் அமைத்தாரா? சாத்திரம் பலபல கற்றாரா? சான்றோருடன் சேர்ந்துழைத்தாரா? சட்டம் திட்டம் அறிவாரா? சட்டசபையில் நின்று உரைப்பாரா? சஞ்சலம் துடைத்திட வல்லவரா? முனியன்: அதெல்லாம் எனக்குத் தெரியாது! ஆமாம், அவர்க்குப் படிப்பில்லை! ஆன்றோர் பேசும் சொல்லெல்லாம் அவர்க்குக் காதில் ஏறாது. அய்யா உழைக்க மாட்டார்தான்! அதனால் என்ன முத்தம்மா! அனைவரும் கூடி ஒருமுகமாய் உம்மால்தான் இது ஆகுமய்யா உடனே கைஎழுத்திடும் என்றார். முத்தம்மா: இப்படியா காங்கிரஸ் சீரழியுது எப்படித்தான் ஒப்பி மக்கள் ஓட்டளிப்பார்கள்? தப்பிதங்கள் மெத்தவுமே செய்தவராச்சே தருமம் துளிகூடச் செய்தறியாரே! முனியன்: புலம்பிக் கிடடி முத்தம்மா! அய்யா, புதுசா கதரு போட்டாச்சி! போகுது புறப்பட்டுக் கொடிபடையும் போலோ பாரத் மாதாக்கீ ஜே! ஜே! என்று கூவிக்கொண்டு. முத்தம்மா: ஓட்டுக் கேட்கவா போகுது உலக உத்தமர் வளர்த்த படை? முனியன்: அய்யாவுக்கு ஓட்டுபோடச் சொல்லி நேருவும் அனைவரையும் கேட்கிறாரே இன்னும் என்னடி? முத்தம்மா: நேருவா இவருக்கு போடச்சொல்லுறார் நேர்மைக்கும் இவருக்கும் பகையாச்சே! நேத்துவரை, காங்கிரசின் எதிரியாச்சே! முனியன்: இருந்தால் என்ன முத்தம்மா! இதுதான் இப்பத்திக் காங்கிரசு!! முத்தம்மா: “ஓட்டு’ சீட்டுள்ள மக்களெல்லாம் உன்னைப்போல இருந்திடப் போவதில்லை உழைப்புக்கும் உண்மைக்கும் தோல்வி இல்லை பார்! உங்க எஜமானருக்குப் பட்டை நாமம்தான்! ஊர்க்குடி கெடுப்போர்க்கு ஓட்டு இல்லை ஊராளும் காங்கிரசு பேர் சொன்னாலும் உதயசூரியன் சின்னந்தான் உழைப்பின் சின்னம், ஊரறியும். உழைக்கிற மக்கள்”ஓட்டு’ உண்மையாக அதற்கேதான்! ஊர்முழுதும் படைதிரட்டி உங்க எஜமானரை நான் தோற்கடிப்பேன்!! "உதயசூரியன்’ சின்னம் வெற்றிபெற உழைப்பேன்; இது உறுதி அறிந்திடு நீ! முனியன்: மூளை உனக்குத் தானோடி மொத்தமாய் இருக்குது முத்தம்மா! நானும் உண்மை அறிவேண்டி நாடும் தூங்கிக் கொண்டில்லை! நம்மைப்போலப் பாடுபடும் ஏழை மக்கள் எல்லோர்க்கும் ஏற்ற சின்னம் அறிவேண்டி "உதயசூரியன்’ நம் சின்னம் உழைப்போம், வெற்றி பெற்றிடுவோம். தம்பி! நாடெங்கும் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் விழிப்புணர்ச்சியின் விளைவுகளாக அமைந்துள்ள எழுச்சிமிகு நிகழ்ச்சிகளிலே, ஒன்று இது. மக்கள் தெளிவுடன்தான் உள்ளனர் பயம் வேண்டாம்! பணம் படைத்தோர்களைக் காங்கிரஸ் கட்சி எதற்காகப் பிடித்திழுத்துத் தேர்தலிலே நிறுத்துகிறது என்பது, "பாமரர்’ என்று ஆட்சியாளர்களால் ஏளனமாகக் கருதப்படும் மக்களுக்கும், மிக நன்றாகப் புரிந்துதான் இருக்கிறது. எனவே தம்பி, இனி உன் வேலை, ஏற்கனவே, மக்கள் அறிந்திருப்பதை, அடிக்கடி பக்குவமான முறையிலே, கவனப்படுத்தியபடி இருப்பதுதான். ★ தி. மு. க. சட்டசபை சென்று கொள்கை இழக்கவில்லை கோணல் வழி செல்லவில்லை. கோலேந்தும் காங்கிரசின் கோலம் கண்டு மயங்கவில்லை மருளவில்லை நாடு செழித்திடும் திட்டம் நல்லாட்சிக்கான சட்டம் வேண்டுமென வாதாடி ஏழை வாழ வழி தேடி ஏற்ற பொறுப்பை நிறைவேற்றி விருந்து வைபவம் நாடாமல் எதிர்க்கட்சியாய் பணியாற்றி விதவித வடிவம் தேடாமல் நாடு மீட்டிட, கேடு அழித்திட எதிர்ப்புக்கண்டு அஞ்சாமல் ஏளனம் கேட்டுப் பதறாமல் எங்கள் தொண்டு நாட்டுக்குண்டு எதையும் தாங்கும் இதயம் உண்டு தென்னகம் பொன்னகம் ஆகிடவும் தேம்புவோர் நிம்மதி பெற்றிடவும் எல்லோருக்கும் நல்வாழ்வு எங்கும் நீதி நிம்மதி கண்டிட நாளும் போராடி! பணிபுரிவது நாடறியும் அறிவொளி பரப்பி அரசியல் விளக்கி மக்களாட்சியின் மாண்பு காத்திட மீண்டும் அனுமதி வேண்டி நிற்கிறோம். நாட்டினரே நல்லாதரவு தந்திடுவிர் பாதை வழுவாது பணிபுரிவோம் பாட்டாளியின் அரசு அமைப்போம் ஏழையை வாட்டும் விலைவாசி முதுகை முறிக்கும் வரிச்சுமைகள் எதிர்ப்போம் குறைப்போம் உமதருளால்! செல்வம் சிலரிடம் சிக்குவதும் செத்திடும் நிலையில் மிகப்பலரும் உள்ள கொடுமை களைந்திடுவோம்! உறுதி தளரோம்! இது திண்ணம்! இம்முறை செய்திட அலுவல்கள் ஏராளம் - குவிந்திருக்குது. தொண்டுகள் புரிந்திட அனுமதி தந்து எமை வாழ்த்துவீர், தோழர்காள்! திருவிடம் விடுபட! தீமைகள் பொடிபட! தி. மு. க. தொண்டு நாட்டுக்கு என்றும் உண்டு! தம்பி! இதை நாடெங்கும் உள்ளவர்கள் அறிந்திடச் செய். - பார், பிறகு, எங்கெங்கும், ஆதரவு பெருகி வருவது காண்பாய். காங்கிரசாட்சியின் கேடுபாடுகளை மக்கள் அறியாதிருக் கிறார்கள் - பொருளை வாரி இறைத்து ஓட்டுப் பெற்றுவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள், மமதையால் நிலைமையை உணர மறந்துவிட்ட காங்கிரஸ் பெருந்தலைவர்கள். ஆனால், மக்கள் ஏமாளிகளுமல்லர். மனதிலே உள்ளதை அப்படி அப்படியே கொட்டிக்காட்டும் பழக்கமும் அவர்களுக்குத் தெரியாது. நல்ல தீர்ப்பளிக்க அவர்கள் தவறமாட்டார்கள் என்பதை நான், நாடு சுற்றி நித்தநித்தம் கண்டு வருகிறேன். எங்குச் சென்றாலும், மக்கள் முகத்திலே ஒரு ஏக்கம் - வார்த்தைகளிலே துக்கம் - வாழ்விலே தடுமாற்றம் - இவைதான் தென்படுகின்றன. பொறுப்புணர்ச்சியும் பொறுமைக்குணமும் மிகுந்தவர் களாக நம் நாட்டு மக்கள் இருப்பதனால் மட்டுமே, இவ்வளவு அலங்கோலம் நாட்டிலே நெளிந்துகொண்டிருக்கும் நிலையிலேயும், புரட்சி இங்கு வெடித்துக்கொண்டு வெளிக் கிளம்பவில்லை. ஆகவே, நமக்கு ஆபத்து இல்லை என்று எண்ணி இறுமாந்து கிடப்பவர்களின் ஆதிக்கம், பார்த்துக்கொண்டிருக்கும் போதே பேய்க்காற்றால் சாய்க்கப்பட்ட நெடுமரம்போலாகப் போகிறது. நான் காணும் கிராமத்தார்கள், - பெரியவர்களின் முகம், பார்வை, பேச்சு, என்ன கூறுவதாக எனக்குத் தோன்றுகிறது, தெரியுமா, தம்பி! காத்திருந்தேன்! காத்திருந்தேன் காலமெல்லாம் காத்திருந்தேன், கஷ்டமெல்லாம் காங்கிரசால் தீருமென்று காத்திருந்தேன்! வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வரிகளெல்லாம் கொடுத்துவிட்டேன், வாழ்வில் சுகம் வருமென்று ஆவலோடு காத்திருந்தேன்! வருஷம் பதினைந்துமாச்சு வந்த சுகம் ஒன்றுமில்லை வாடுகிறேன் ஓடாகி, மாடாக நான் உழைத்தும்! கள்ளமார்க்கட் கழுகு கண்டேன் அவை கதர்உடை போடக் கண்டேன் கொள்ளை இலாபக்காரர் கூடி, கொடி பிடிக்கும் காட்சி கண்டேன். கரையான் புற்றெடுக்க, கருநாகம் புகுவதுபோல் காந்திமகான் வளர்த்த கட்சி, கபடர் குகை ஆகக் கண்டேன். கள்ளக் கும்பிடுகள் போட்டுக் காங்கிரசார் வந்து நின்று "ஓட்டு’ கேட்கிறார்கள் என்னை ஓட்டாண்டி ஆக்கிவிட்டு! பட்டதெல்லாம் போதுமய்யா படமுடியா தினித்துயரம் பாட்டாளி ஓட்டு இனி உமக்கில்லை போ! போ! என்றேன். பாடுபடும் தோழர்களே! பாங்காக நாம் வாழ, பாடுபடும் தி. மு. க. நம் கட்சி; அதனாலே பரிந்தளிப்போம் ஓட்டுகளை உதயசூரியனுக்கே! ★ ஆனால் அண்ணா! மந்திரிகள் பம்பரம்போலச் சுழன்று வருகிறார்களே, மக்கள் மனது மாறிவிடாதா? மயக்கமொழி பேசுவார்களே - மக்கள் உறுதி குலைந்துவிடாதா? வீடுவீடாக வருகிறார்களே, விவரமறியாத மக்கள் அதை மிகப்பெரிய "தியாகம்’ என்று எண்ணி ஏமாந்துவிடமாட்டார்களா என்றெல்லாம் உனக்குக் கேட்கத் தோன்றும். தம்பி! நானும் அது குறித்துக் கேட்டுப் பார்க்காமல் இல்லை. கண்டால் கலிதீரும் என்று எண்ணும் நிலையிலே மக்கள் இல்லை. உயிரோடு இருக்கிறார்களா, ஓட்டுப் போடவேண்டியவர்களாயிற்றே என்ற நினைப்புடன்தான் அமைச்சர்கள் வருகிறார்கள் - வேறு உருப்படியான உதவிசெய்யும் உள்ளத்துடன் அல்ல என்பதை மக்கள் உணருகிறார்கள். பேசமாட்டார்கள்! அதற்கென்ன ஆகட்டும் என்பார்கள்! ஆனால், அமைச்சர் வந்துபோனால், அல்லல் போய்விடும் என்று அவர்கள் எண்ணவில்லை. ஏன்? மந்திரிகளை வரவேற்று, ஒரு பலனும் இதுவரை காணவில்லையே, அதே மந்திரிகள்தானே வருகிறார்கள். வந்து வந்து போகிறார்கள்! வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி வரி கட்டும் மக்கள், வறுமையிலே வாடுவதைக் கண்ணால் கண்டார்களே தவிர, அதனை நீக்க என்ன வழி செய்தார்கள்? இதுவரை ஒன்றும் இல்லையே. இந்நிலையில், வீடுவீடாக வந்தால் என்ன, கையைப் பிடித்துக் கொண்டு, இது கை அல்ல! என்று கெஞ்சினால் என்ன? பலன்? ஒன்றுமில்லையே! - என்று எண்ணுகிறார்கள். மந்திரி வந்துபோன ஊரில், போய்வருவோம், வா, தம்பி! கற்பனையூர், ஆனால் கருத்தூர்! ★ மாலைகள் போட்டு வரவேற்றோம் மந்திரி ஐயா வந்தபோது! மாரிக்குக் கூடச் செய்யாத மரியாதைகள் செய்திட்டோம். மேளதாளம் பலமாக ஏராளமான பணச் செலவு கரகம் காவடி ஆட்டத்துடன் கவர்ச்சி மிக்க மயிலாட்டம்! மந்திரி மனது மகிழ்ந்துவிட்டால் முந்திரிக் கொடியின் பழம்போல வந்திடும் சுவைதரும் நன்மை என்று சொன்னான் கதருடைக் கந்தப்பன். கஷ்டம் தீரும் என்று எண்ணி கடனும் பட்டுப் பணம் திரட்டிக் "கனம்’ மந்திரிக்கு விருந்து வைத்தோம். வேண்டுவ தென்ன கூறிடுவீர் வேற்றான் என எண்ணற்க ஊருக்குழைக்க நான் வந்தேன் உள்ள குறைகளைக் கூறுமென்றார்! பாலும் பழமும் வேண்டாமய்யா, பட்டுப் பட்டாடை அது வேண்டாம், பழைகால ஏரி இது ஆழம் இல்லை, தூர்ந்ததனால்; ஏரி ஆழமாகிவிட்டால் ஏழைகள் மனது குளிருமய்யா! எட்டுக் கல்லில் ஊரிருக்கு எதற்கும் அங்கு போய்வருவோம் பாதை சரியாய் அமையவில்லை, பள்ளம் மேடு பயங்கரம்; பாதை போட்டுக் கொடுத்துவிட்டால் பாதம் போற்றிக் கிடப்போமய்யா! பள்ளி ஒன்று இருக்குது மரத்தடியில் நடக்குது கட்டிடம் இல்லாக் காரணத்தால் பிள்ளைகளுக்குப் பெருந்தொல்லை! ஓலைக்கொத்தோ, ஓடோ, எதுவோ, கட்டிடமென்று இருந்துவிட்டால் பிள்ளைகள் படிக்கும்; புண்ணியமுண்டு! விளைச்சல் இங்கு அதிகம் இல்லை. மண்ணின் சத்து மிகக் குறைவு. உரம் போட்டால் உயர்வு வரும் உரமோ கேட்டால் கிடைப்பதில்லை. ஒன்றுக்குப் பத்து விலை கொடுத்தால் கிடைக்குது கள்ளச் சந்தையிலே. அவ்வளவு பணம் அதற்கழுதால் கட்டி வருமா, எங்களுக்கு. கருணைவைத்துக் கஷ்டம் போக்கி ஏரும் எருதும் உரமதுவும் மலிவு விலைக்குக் கொடுத்திட்டால் மன்னா! உம்மை வாழ்த்திடுவோம்! நோய்நொடி வந்தால் மருந்துதர வைத்தியசாலை இங்கு இல்லை. வடக்கே எட்டுக்கல் போனால் வைத்தியர் உண்டு; மருந்தில்லை! இந்தக் குறையும் தீர்த்துவைத்தால் ஏழை பிழைப்போம் சாகாமல். ஊரின் கோடி புறம்போக்கு உருதால் நல்ல பலன் கிடைக்கும் உழுபவனுக்குக் கொடுத்திட்டால் ஊருக்கு உணவு கிடைத்துவிடும் ஏழைக்குப் பிழைப்பும் இருந்துவிடும். விதைக்கு நல்ல நெல் இருக்கு வேணுமட்டும் பெறலா மென்றார். நாலைந்து நடை நாங்கள் சென்றோம் நாளை, நாளை என்று சொல்லிவந்தார். கூடை தூக்கி நடந்திருந்தோம். பிறகு ஒருநாள் கொடுத்தார்கள். செம்பாளை நெல்லு பத்துப்படி. கேட்டது சம்பா நெல்லய்யா கிடைத்தது செம்பாளை, என்ன செய்வோம். கடன்பட்டுக் கெட்டுப் போகாதீர் காங்கிரஸ் சர்க்கார் உதவி செய்யும் வட்டி அதிகம் வாங்காது, வா, வா என்றார். சென்று கேட்டோம்; நடந்தது நாற்பது நாளிருக்கும், ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டு, அப்பன் கையெழுத் தெங்கே என்றார் அவர் செத்து வருஷம் அஞ்சாச்சி. அவருடை மகன்தான் நீ என்றால் ஆதாரம் கொண்டுவா, என்றால் ஆத்திரம் வராதா, எஜமானே! அவமானம் ஆகாது, தடுத்திடுங்கள். நல்லவர் நம்மவர் மந்திரியார் உள்ள குறையெலாம் கூறிடுக கோபம் வராது! குணமுள்ளவர்! எனக் கூறினான் கந்தப்பன்; அதனாலே கொட்டினர் குறைகளை மந்திரிமுன். மந்திரி, இவைகளைக் கூறச்சொல்லி அந்த மக்களுக்கு வேலை கொடுத்துவிட்டு, கந்தனை அருகே தான் அழைத்து மிகக்கவனமாய்க் கேட்டது என்னவென்றால், எத்தனை ஓட்டுகள் இங்கிருக்கு? எல்லப்பன் சொன்னால் போடுவரா? என்ன ஜாதி இங்கு அதிகம்? எவர் பேச்சுக்கு மதிப்புண்டு? சொன்னால் சொன்னபடி நடப்பவரா? இல்லை, மிரட்டினால் மட்டுமே படிவரா? எப்படி இவர் குணம் சொல்லப்பா? எல்லாம் எனக்குத் தெரியவேண்டும்! இப்படி மந்திரி கேட்டிட்டார் இதமாய்க் கண்ணன் பதிலளித்தான். உற்ற குறைகளைக் கூறிவிட்டீர், ஊராள்வதிலே உள்ள குறை, மெத்த உண்டு அதை அறிந்திடுவீர்! எல்லாம் செய்து முடித்திடலாம் எம்மால் ஆகும், பயப்படாதீர் காலம் அதற்கு வரவேண்டும் கஷ்டம் பொறுத்திடப் பொறுமை வேண்டும் வயிற்றை இறுக்கிக் கட்டுங்கள் வாய்தா பணத்தைச் செலுத்துங்கள். குறைசொல்லிக் குமுறிக் கிடக்கவேண்டாம் குழந்தைகள் அதிகம் பெறவேண்டாம். ஓட்டுகள் அத்தனையும் சேர்த்து போட்டிடுவீர் காளை மாட்டுக்கு! காளை மாட்டுக்கு ஓட்டளித்தால் பாலும் தேனும் ஓடிவரும்! வந்தேமாதரம்! போய்வருவேன்! வந்துபோனதை மறவாதீர்! கந்தன் கைதட்டிக் காட்டிடவே மக்களும் அதுபோல் செய்திட்டார். காரில் ஏறி அவர் சென்றார் கந்தன் அவர்பின் னோடுசென்றான்; கட்டிய தோரணம் ஆடிற்று கூடிய மக்கள் வீடு சென்றார்! ஏரெடுத்துச் சென்ற சின்னானை எப்படி மந்திரி பேச்சு என்று, பொன்னன் கேட்டான், சிரிக்காமல்! மந்திரிப் பேச்சுப் புரியவில்லை. மக்களுக்கு அவர் வாக்கு அளிக்கவில்லை. குறைகளைச் சொன்னோம் கேட்டுக்கொண்டார் போக்கும் நாளைக் கூறவில்லை - என்றான். போடா! நீ, போக்கிரி பொய் பேசுகின்றாய், போகுமுன்னம் மந்திரியார் சொன்னார், கேட்டாய்! பாலும் தேனும் ஓடிவரு மென்றாரே, மறந்தா போனாய்? என்று கேட்டான் பொன்னன். கேட்டேன்; மறக்கவில்லை சிரிப்பு வந்தது, அடக்கிக்கொண்டேன்; பால் பெருகும் என்றார், உண்மை! அதற்கு காளையையா காட்டுவது செ! சே! என்றான் சின்னான். இருவரும் சிரித்தபடி சென்றனர்! எதிர்ப்புறம் வந்தான் கழகத் தோழன். "உதயசூரியன்’’ சின்னத்துடன் ★ தம்பி இதுதான் நாட்டு நிலை! நாட்டு நிலையை மாற்றி அமைத்திட நம்மால் மட்டுமே ஆகும் என்று நம்பிக்கைகொண்டு, நம்மைத் தமது உற்ற நண்பர்களாக, உயிர்த் தோழர்களாக, உண்மைத் தொண்டர்களாக கருதிக் கை கொடுக்கத் தயாராகக், காடுகரம்பு உழுபவர்கள், கஷ்டப்பட்டுப் பிழைப்பவர்கள், கள்ளங்கபடமற்றவர்கள், காத்திருந்து காங்கிரசாட்சியால் பலன் காணாதவர்கள், மிக ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை அணி திரட்டி ஓட்டுச்சாவடி கொண்டு வந்து சேர்க்கும் காரியத்தை நேர்த்தியான முறையில் செய்திட வேண்டிய பொறுப்பு, தம்பி! உன்னுடையது, மலர்க்குவியல் இருக்கிறது - மணமும் வண்ணமும் மிகுதியாக எடுத்திட வேண்டும். மாலையாகத் தொடுத்திட வேண்டும். வாகை சூடியவர் வழிவழி வந்தவர்க்கு, இது இயலாத காரியமா! மலர்க்குவியல் இருக்கிறது - ஆனால், தானாக மாலையாகி விடாது. மக்களின் நல்லெண்ணம், ஆதரவு, நம் பக்கம் இருக்கிறது. ஆனால் அதனை முறைப்படுத்தி, ஓட்டுச்சாவடியில் அதன் உருவம் தெரியத்தக்க வகை காணவேண்டும். தம்பி! உன்னால் முடியும்! உன்னால் மட்டுமே முடியும்! முயன்றால் முடியும்! அன்புள்ள அண்ணாதுரை 26-11-61 தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன் தேர்தலுக்கு முன் காங்கிரஸின் பலம் - தமிழகத்தில் குறைபாடுகள் - சட்டமன்றத்தில் காங்கிரஸார் தம்பி! தேர்தல் மூன்று மாதங்களுக்குப் பிறகு என்று எண்ணிக்கொள்ளாதே; இதோ இல்லத்தில் இன்னொரிடத்தில் ஏழெட்டுத் தோழர்கள், அடிகள் வீட்டில் பத்துப்பேர், திராவிட நாடு நிலையத்தில் பதின்மர், இதுபோல் நூற்றுக்கணக்கான தோழர்கள், காஞ்சிபுரம் நகரில் வீடுவீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திக்க, வந்து குழுமியுள்ளனர். ஊரெங்கும் தோரணங்கள், கொடிகள், வளைவுகள்! ஒரே நாளில் காஞ்சிபுரம் நகர் முழுவதும் உலாவர ஏற்பாடாகி விட்டது. மெத்தச் சரி அண்ணா? இப்படித்தான், சுறுசுறுப்பாக, முன்கூட்டிக் காரியமாற்றவேண்டும். காஞ்சிபுரம் வழிகாட்டுகிறது. கழகம் விறுவிறுப்புடன் பணியாற்றுகிறது - என்று மகிழ்ச்சி பொங்கப் பொங்கக் கூற எண்ணுகிறாய். ஆனால், தம்பி! நமது தோழர்கள் 1-12-61 காலை, தி. மு. கழகத்துக்கு ஆதரவு தேடக் காஞ்சிபுரம் நகரில் உலாவர ஏற்பாடு ஆகிவிட்டது கண்டு, களிப்பு அதிகம் கொண்டிடாதே - காங்கிரஸ் அபேட்சகருக்கு “ஓட்டு’ கேட்க, உள்துறை அமைச்சர் பக்தவத்சலனார், தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் அளகேசனாருடன் 28-11-61 அன்றே, தெருத்தெருவாக உலா வந்தாகிவிட்டது. அதுமட்டுமல்ல,, 30-11-61 அன்றே, காங்கிரஸ் அபேட்சகர், தம் குழுவினருடன், வீடு வீடாக ஓட்டுக் கேட்க ஆரம்பித்துவிட்டார். எனவே 1-12-61-ல், நமது கழகத்தவர், உலாவருதல் கண்டு,”நாம்தான் தேர்தல் வேலையை மும்முரமாகத் துவக்கிவிட்டோம்’ என்று எண்ணிக்கொள்ளாதே. பொதுவாக, காஞ்சிபுரம் தேர்தல், "பரபரப்பூட்டும்’ கட்டத்தை இப்போதே பெற்றுவிட்டது. தோழர்களும், தொண்டர்களும் நமக்காக! அழைப்பாளர்களும், பிழைப்பாளர்களும் காங்கிரசிடம்! கொடிகள் கட்டுவதும், தோரணங்கள் அமைப்பதும், எந்தக் கட்சியினருக்கும் இயல்பாக ஏற்பட்டுவிடும் அலுவல். ஆனால், இதோ செல்கிறார்கள் நமது தோழர்கள் - இரவு மணி ஒன்றாகிவிட்டது - உற்சாகத்துடன், கொடிகளுடன், ஏறுநடை போடுகிறார்கள்! எவரும் எமக்கு நிகர் இல்லை என்று அவர்களின் கண்கள் எக்காளமிடக் காண்கிறேன். காரணம்? கேட்டால், இடி இடியெனச் சிரிப்பார்கள்! வெற்றி வீரர் களல்லவா அவர்கள்!! கோட்டை பறிபோய்விடும், கொலு மண்டபம் பிறர்கை சென்றுவிடும், மாநகராட்சியிலே மாற்றார் முடிசூட்டிக்கொள்வர் என்றெல்லாம் கிலிகொள்ளத்தக்க பேச்சுகள் கிளம்பி, நமது தோழர்களின் மனதைக் குடைந்த நிலை அறிவாயல்லவா? நீ மட்டுமென்ன, ஆவலெனும் புரவிமீதுதானே அமர்ந்திருந்தாய். வெற்றி நமக்கு! மேயர், நம் கழகத்தவர்! துணைமேயரும், நம்மவர்! - என்ற நிலை ஏற்பட்டுவிட்டதல்லவா? சொல்லவா வேண்டும், நம் தோழர்களின் உற்சாகத்தின் அளவை! நான்தான் மேயர்! நானுந்தான்! நான்மட்டும் என்னவாம்! - என்று கேட்பவர்கள்போல ஒவ்வொருவர் முகத்திலும் ஒரு புதுப் பொலிவு; நடையிலே ஒரு கெம்பீரம்; பேச்சிலே ஒரு வீரக்களை தெரிகிறது. ஒவ்வொரு நாளும் இங்கு கூட்டங்கள் நடக்கின்றன. பெரியார் இரண்டாவது முறையாக வந்துபோனார், மீண்டும் வருவதாகக் கூறிவிட்டு! ஆமாம்; என்னை மறப்பாரா? எவ்வளவு வேலைகள் இருப்பினும், தள்ளாமை மேலிடினும், என்மீது வைத்த கண்ணை வேறுபக்கம் திருப்புவாரா!! இதனை நன்கு அறிந்த காங்கிரஸ்காரர்கள், பெரியாரை எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாகக் கசக்கிப் பிழியவேண்டுமோ, அவ்வளவும் செய்துவிடுவது என்று திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். வேறு எவரும் ஏசக்கூசும் அளவிலும், முறையிலும், பெரியார் என்னை ஏசுகிறாராம்! கூறுகிறார்கள்! மெத்த வருத்தப் படுகிறேன்!! என்னைத் திட்டுகிறாரே, அதனால் எனக்கு ஆதரவு கெட்டுவிடுமே என்ற அச்சத்தினால் அல்ல. கைலையம்பதியானையும், கணபதியையும், வள்ளி மணாளனையும், பவளவண்ணனையும், வால்மீகியுடன் வாதவூராரையும், தவசிகளையும், ரிμ சிரேஷ்டர்களையும், காந்தியாரையும், நேரு குடும்பத்தாரையும், பாபு ராஜேந்திரரையும், கண்டித்துப் பேசும் நிலையிலிருந்து வந்த பெரியார், என்னை ஏசிப்பேசும் நிலைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டாரே; அவர் மூலம், புராணப் புரட்டு, புரோகிதப் புரட்டு, இதிகாசப் புரட்டு, காங்கிரஸ் புரட்டு என்பனவற்றுக்கெல்லாம் எதிர்ப்புரை, மறுப்புரை கேட்டு, மக்கள் தெளிவு பெறும் நிலை எங்கே! இன்று, என்னைப்பற்றி ஏசிப்பேசும் நிலைக்கு அவர் வந்து சேர்ந்து விட்டாரே! அதை எண்ணி நான் துக்கப்படுகிறேன். காந்தியாரின் தத்துவங்களை, தாகூரின் வேதாந்தத்தை, நேருவின் அரசியலை, அலசிக்காட்டி, அவைகளிலே உள்ள அழுக்குகளை, அபத்தங்களை எடுத்து விளக்கிக்கொண்டு வந்தவர், பாவம், இன்று, என்னைப்பற்றி அல்லவா, அலச, ஆராயவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. அவருடைய பொதுத்தொண்டின் அளவு, தரம் இவைகளைக் கவனிக்கும் போது, அவர் இப்போது, எதை எதைப் பேசவேண்டியவர்! உலக நாடுகள் மன்றம்பற்றி! ஊராள்வோர் கூறும் தத்துவம் திட்டம் பற்றி! அறியாமை இருளை அகற்றும் வழிவகைபற்றி! இவைகளைப் பேசவேண்டியவர், இன்று என்னைப்பற்றி, என் பேச்சு, எழுத்து, சொத்து, சுகம், சூது, சூழ்ச்சி இவைபற்றி அல்லவோ ஆராய்ச்சி நடத்துகிறார்! நான்தானா கடைசியில் அவருக்கு அகப்பட்டேன் என்று கேட்கவில்லை, தம்பி! கடைசியில் அவர் என் நிலை அளவுக்கா தமது நிலையைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும்! யாரோ மூட்டிவிட்ட போதனை, பரிதாபம் அவரை இந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. ஏசுகிறார். ஏதேதோ புதிய போதனைகளை உலகுக்கு அளிப்பார் என்று நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவர்! ஏசுகிறார் - என்னென்னவிதமாக எட்டாந்தரக் காங்கிரஸ் பேச்சாளர்கள் பேசுவார்களோ அம்முறையில். இவருக்கா இந்த வேலை? இந்த வேலையையா இவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்? எனக்கு மக்கள் தரும் ஆதரவுதனை அழித்திட, இவர் தேவைப்படுகிறாராமே!! காமராஜரும் சுப்ரமணியமும் போதவில்லை; காட்டுக் கூச்சலிடும் பேச்சாளர் படை போதவில்லை; கத்திக்குத்துக்காரர்கள் போதவில்லை; விபூதிகள், வெடிகுண்டுகள் போதவில்லை; காவி கமண்டலங்கள் போதவில்லை; பெரியாரே தேவைப்படுகிறார்! ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, அவர் ஈட்டி வைத்துள்ள வலிவு - செல்வாக்கு - திறமை - இவை தேவைப்படுகிறது, என்னைச் சமாளிக்க!! தம்பி! பார்த்தாயா, இந்த வேடிக்கையான நிலைமை! வேடிக்கையாக இருக்கிறதே தவிர, இதுதானே உண்மை நிலையாக இருக்கிறது. வானவெளி பறந்த காகரின், காற்றாடிவிடுவது என்றால் எப்படி இருக்கும்!! அப்படி அல்லவா இருக்கிறது, மனிதகுலம் மடைமையிலிருந்து விடுபட வழி என்ன என்ற மகத்தான பணியில் ஈடுபட்டிருந்த பெரியார், அண்ணாத்துரைக்கு "ஓட்டு’ கிடைக்காதிருக்க என்னென்ன வழிகள் என்று பேச வருவது!! உள்ளபடி எனக்குள்ள வருத்தம் - இதை எண்ணித்தான். நமது படை வீரர்களிலே ஒரு "கத்துக்குட்டி’யை ஏவி விட்டாலே போதும், இந்த அண்ணாத்துரையை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துவிடுவான் என்று கூறவேண்டிய, வயதும் அனுபவமும், ஆற்றலும் படைத்தவர், அகில இந்திய காங்கிரசு ஆதிக்க ஒழிப்புக்கே. ஒரு ஜின்னா ஒரு அம்பேத்கார் ஒரு பெரியார் என்றும் பலரும் வியந்து பாராட்டத்தக்க நிலைபெற்றிருந்தவர் அல்லவா பெரியார்!! தங்கப் பேழையிலே தவிடு கொட்டிவைப்பதுபோல, உடைவாளை உருவி உருளைக்கிழங்கு நறுக்குவதுபோல, செங்கோலைக்கொண்டு "சீடை’யை உடைப்பதுபோல, பெரியார், ஆண்டு பலவாகத் தேக்கிவைத்திருக்கும் ஆற்றலை, என் செல்வாக்கை அழிக்கப் பயன்படுத்துவது வேடிக்கை மட்டுமல்ல, வேதனை தருவதுமாகும். எனக்குத் தம்பி! காங்கிரசார்மீது கோபம் எழக் காரணம் பல உண்டு; ஆனால், மிகக் கடுமையான கோபம் எழக் காரணம், அப்படிப்பட்ட பெரியாரை, இப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட வைத்துவிட்டார்களே என்பதுதான். யானையை மார்மீது நிற்கவைத்து, தன் உடல் வலிவு காட்டிய ஒரு ஆணழகன், சில ஆண்டுகளுக்குப் பிறகு, என் மார்புமீது ஒரு மலர்க்கூடையை வைத்து என் வலிவு, திறமை, இதனைக் காட்டுவேன், வந்து பாருங்கள், வாழ்த்துக் கூறுங்கள் என்று - அறிவித்தால், கேட்பவர்களுக்கு எப்படி இருக்கும்! அப்படி அல்லவா இருக்கிறது!! ஏசுவின் வாசகத்திலே இன்ன குறை இருக்கிறது, புத்தர் பொன்மொழியில் இத்தனை மாத்துக் கம்மி, காந்திய தத்துவத்தில் இவ்வளவு கசடு இருக்கிறது, வள்ளுவர் மொழியிலே இவ்வளவு கவைக்குதவாதன உள்ளன என்ற, இத்தனை பெரிய தத்துவமேதையாகத் திகழ்ந்தவர், வாருங்கள்! வாருங்கள்! வந்து சேருங்கள், நான் அண்ணாத் துரையை ஏசப்போகிறேன்! - என்று ஊராரை அழைப்பது!! கூண்டிலிருந்த கிளி பறந்துபோய்விட்டால், கூண்டினைக் காலியாகவேனும் வைத்திருக்கலாமே தவிர, ஏதாவது இருக்கட்டும் என்று ஒரு கோட்டானைப் பிடித்தா அந்தக் கூண்டுக்குள்ளே அடைத்துவைப்பார்கள்!! விரலிலிருந்த வைரமோதிரம் பறிபோய்விட்டால், வெறும் விரலாகவே இருக்கட்டும் என்று விட்டுவைப்பார்களா, ஓட்டாஞ் சல்லியில் துளைபோட்டு, விரலில் மாட்டிக்கொள்வார்களா!! தோட்டத்து மல்லிகை பூத்திடவில்லை என்பதற்காக, எருக்கம்பூவைப் பறித்தா, மல்லிகைக் கொடியிலே ஒட்ட வைப்பார்கள்!! தாம் செய்துகொண்டுவந்த பெருந்தொண்டு, தொடர்ந்து நடத்தப்படுவதற்கு ஏற்ற சூழ்நிலை அமையவில்லை என்பதற்காக, பெரியார், என்னை ஏசும் காரியத்திலா தம்மை ஈடுபடுத்திக் கொள்வது! எத்துணை வேதனை நிரம்பிய நிலை!! தம்பி! பெரியாரைவிட்டு என்னைத் தாக்கச் செய்வதிலே காங்கிரசாருக்கு இரட்டை இலாபம் - ஒன்று, நான் தாக்கப் படுகிறேன் - மற்றொன்று, பெரியாரின் நிலையைத் தாழ்த்தி விடுகிறார்கள்!! ஒருநாள் இல்லாவிட்டால் மற்றோர்நாள், இந்த எண்ணம் அவர் மனதை உறுத்தும்; எவரும் காணாதபோது இரண்டோர் சொட்டுக் கண்ணீர் கசியும்; எப்படிப்பட்ட உயர்ந்தநிலையில் இருந்து, உலகத் தலைவர்கள் வரிசையில் இடம்பெற்றவர் என்ற நிலையில் இருந்து வந்தோம்; இன்று, ஒரு அண்ணாத்துரையை ஏசுவதை, பேச்சின் பொருள் ஆக்கிக்கொள்ளும் நிலையை நாமாகத் தேடிக்கொண்டோமே என்று எண்ணுவார். எப்படித் தம்பி! அந்த எண்ணம் எழாமலிருக்க முடியும்? காங்கிரசார், இந்த முறையைக் கையாள்வதுடன், தமக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டு இல்லை. தேர்தலில் வெற்றிபெற, வேறு "தளவாடங்களை’த் தேடிப் பெற்று, மலைபோலக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள் - என்னை வீழ்த்த. பெரியாரின் பேருரையை மட்டும் நம்பிக்கொண்டு இல்லை. இதுவும் எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. பெரியாரின் பேராற்றலால், தி. மு. கழகத்தை அழித்து விடமுடியும் என்று, காங்கிரஸ் திடமாக நம்பினால், வேறு வேறு வலிவுகளைத் தேடமாட்டார்கள். தி. மு. கழகத்தை அழிக்க, பெரியாரின் பேராற்றல் பயன்படாது என்று உள்ளூர அவர்கள் உணருவதால்தான், வாண்டையார் வடபாதிமங்கலத்தார் நெடும்பலத்தார் கருப்பம்பலத்தார் பாண்டேசுரத்தார் ஓரக்காட்டுப் பேட்டையார் மணலியார் வலிவலத்தார் உக்கடையார் உத்தமபாளையத்தார் செட்டிநாட்டார் சேதுபதியார் மூப்பனார் பழையகோட்டையார் பேட்டையார் போன்ற, செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்பத்தார்களைத் தமது முகாமுக்குள் கொண்டுவந்ததுடன், ஆலை அரசர்கள் பஸ் முதலாளிகள் கள்ளமார்க்கட்காரர் கொள்ளை இலாபமடிப்போர் ஆகியோரையும் சேர்த்துக்கொண்டு, பண பாணம் தயாரிக் கிறார்கள். பெரியாரின் பேச்சு போதாது, தி. மு. கழகத்தை அழிக்க என்று எண்ணுகிறார்கள். நிலை குலைந்தாலும், தி. மு. கழகத்தை அழிக்கும் அளவுக்காகிலும் பெரியாரின் பேராற்றல் இருக்கிறது என்று திருப்தி பெறக்கூடக் காங்கிரஸ்காரர்கள் இடங்கொடுக்க வில்லையே தம்பி! நான் என்ன செய்ய!! பெரியாரின் பேராற்றலைத் துணைகொண்டால், தேர்தலில் பெரிய வெற்றி பெற்றிடலாம் என்ற நம்பிக்கை, காங்கிரசுக்கு இல்லை. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. என் மனதிலே பட்டதைச் சொல்கிறேன். பெரியாரின் பேராற்றல் தேர்தல் வெற்றியை, எப்போதுமே, எந்தக் கட்சிக்கும் தேடிக் கொடுத்தது இல்லை!! ஆமாம், தம்பி! தோற்கும் கட்சிக்குத் தேர்தல் பிரச்சார வேலை செய்து செய்துதான், பெரியாருக்குப் பழக்கம். நாடாண்ட ஜஸ்டிஸ் கட்சி, பெரியாரின் பேராற்றலைத் துணைகொண்டது. காங்கிரசின் பிரசார பலத்தை முறியடிக்கப் பெரியாரைத்தான் ஜஸ்டிஸ் கட்சி மலைபோல நம்பிக்கொண் டிருந்தது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களான சர். ஏ. இராமசாமி முதலியார், பேசுவார் - பேருரைதான் - விவரம் விளக்கம் இருக்கும் - காரணம், கட்டுக்கோப்பு இருக்கும் - ஆனாலும், காங்கிரசாருக்குச் சூடு கொடுக்க, காரசாரமாகப் பேச, "ரோய ரோய’ப் பேச, பெரியார்தான் அழைக்கப்படுவார்! சர். ஏ. இராமசாமி, பேச்சில் பூங்காற்று வீசும்! பூரிப்பு எழும்! பெரியார் பேச்சு, புயலைக் கிளப்பும், மரங்கள் விழும்! சர். ஏ. இராமசாமி இலையைக் காட்டி மரத்தின் தன்மையை விளக்குவார்! பெரியார். மரத்தையே பெயர்த்தெடுத்துக் கொண்டு வந்து கீழே போடுவார்! சர். இராமசாமியின் பேச்சைக் கேட்பவர்கள் கனிவு காட்டுவர். கடுங்கோபம் எழும் காங்கிரசின்மீது, பெரியார் பேசக் கேட்டால்! சம்மட்டி அடி கொடுப்பார், பெரியார்! எல்லாம் சரி! ஆனால் பலன்? பெரியாரின் பேராற்றலைத் துணையாகப் பெற்ற ஜஸ்டிஸ் கட்சி, தேர்தலில் பெற்றிபெற வில்லை - அடியற்ற நெடும்பனையென வீழ்ந்தது. எங்கும் தோல்வி! எல்லோரும் தோற்றனர்! பெரியாரின் "ஜாதகம்’ அப்படி! அவருடைய பேச்சுக்குக் கிடைக்கும் பலன் அவ்விதம்! அன்று பெரியாரின் பேராற்றலைத் துணைகொண்ட ஜஸ்டிஸ் கட்சி, அதற்கு முன்பு பெற்றிருந்த இடத்தை இழந்து, தோற்று ஒழிந்தது; இன்று பெரியாரின் பேராற்றலின் துணை காங்கிரசுக்குக் கிடைக்கிறது!! ஜஸ்டிஸ் கட்சி தோற்றுவிட்டபோது, பெரியார் வருத்தப் பட்டாரா? எவ்வளவோ பெரியவர்கள், நல்லவர்களாயிற்றே, தோற்றுவிட்டார்களே என்று துயரப்பட்டாரா? அதுதான் இல்லை! தொலையட்டும் சனியன்கள்! தெரியும் எனக்கு அப்போதே! மடப்பசங்க ஒழியட்டும்! நாமம் விபூதி போட்டுக்கிட்டு ஊரை ஏய்த்தா, நடக்குமா! தோற்றான்கள். சுயமரியாதையத்த ஆசாமிகள்! என்றுதான் நண்பர்களுடன் பேசினார் மகிழ்ச்சியுடன். அதேதான் காங்கிரசு தோற்கும்போதும். தெரியும் எனக்கு அப்போதே! கதர் கதர்னு கத்தினபோதே தெரியும்! திட்டம் திட்டம்னு உளறினபோதே தெரியும்! என்று சொல்லிவிட்டு, பெரியார் சந்தோஷம் கொண்டாடுவார்! அது அவருடைய சுபாவம், அவருக்குத் தேர்தலில் நம்பிக்கை கிடையாது! மக்களுக்கு ஓட்டு வந்ததிலே, மகிழ்ச்சி கிடையாது! “மாட்டுச் சாணியையும் மூத்திரத்தையும் கலக்கிக் குடிக்கிறவனிடம்”ஓட்டு’ கொடுத்தால், நாடு உருப்படுமா, என்ன? குட்டிச்சுவராத்தான் போகும்’ என்ற எண்ணம் கொண்டவர், அப்படிப்பட்டவரின் "பிரசார பலத்தை’க் கொண்டு, காங்கிரஸ் எப்படித் தேர்தல் வெற்றி தேடிக்கொள்ள முடியும்? என்னைத் திட்டிப் பேசுகிறாரே, அதுதான் மிச்சம்! வேறு உருப்படியான பலன், பெரியார் மூலமாகக் கிடைக்காது; காங்கிரஸ் மூலவர்கள் அதனையும் நன்கு அறிந்துகொண் டிருப்பதால்தான், வேறு வேறு "கருவிகளை’க் கூராக்கியபடி இருக்கிறார்கள். ஆனால், பெரியாரைக்கொண்டு என்னை ஏசிப்பேசத்தான் வைக்கமுடிகிறதே தவிர, காங்கிரஸ் ஆட்சியினால் விளைந்துள்ள கேடுகளை, கேடுகள் அல்ல என்று பேச வைக்க முடிகிறதா? முடியவில்லை! பக்ராநங்கலைப் பாராட்டுங்கள், பாரத ஒற்றுமைபற்றிப் பேசுங்கள், நேருவின் பெருமையைக் காட்டுங்கள். என்றெல்லாம் பெரியாரிடம் சொன்னால், ஒத்துக்கொள் கிறாரா? அதுவும் இல்லை! அண்ணாத்துரையைத் திட்டவா? காமராஜரைப் புகழவா? இந்த இரண்டும் தெரியும்; பிடிக்கும்; பழக்கம்? சிந்திரி, சித்தரன்ஜன், பிம்ப்ரி, பிலாய், இவைபற்றி எல்லாம் பேசச் சொன்னால், மனம் இடம் கொடுக்குமா பெரியாருக்கு!! ஒருக்காலும் இல்லை!! தம்பி, இன்று, பண்டித நேரு ஐரோப்பிய பொதுச் சந்தையிலே மாக்மில்லன் பிரிட்டனைச் சேர்த்தது சரியா தவறா என்பதிலே இருந்து, நீர்வளிக் குண்டுகளை ரμயாவும் அமெரிக்காவும் மாறிமாறி வெடித்தபடி இருப்பதைக் கண்டிப்பது வரையில், காஸ்ட்டிரோவின் ஆட்சி முறையிலிருந்து காங்கோ பிரச்சினை வரையில் பேசுகிறார். அவர் நிலைமை அவ்வளவு நேர்த்தியானதாக ஆகிவிட்டுப் பாருக்கே பஞ்சசீலம் போதிக்கும் நிலையைத் தேடிக்கொண்டார். குருஷேவும் தெகாலும், மாக்மிலனும், அடினாரும், கென்னடியும் நடந்துகொள்ளும் முறை சரியா என்பதுபற்றிக் கருத்துரை வழங்குகிறார் நேரு! இவர், நான் சட்டசபைக்குப் போனது எதற்காக? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். எனக்கே வேதனையாக இருக்கிறது. அமெரிக்கா சென்றிருந்த நேரு பண்டிதர், உலகப் பொதுப் பிரச்சினைகள்பற்றிக் கென்னடியுடன் பேசாமல், உருளைக்கிழங்கு "பொடிமாஸ்’ செய்வது எப்படி? என்பதுபற்றிப் பேசிவிட்டு வந்தால், உலகு அவரைப்பற்றி என்ன நினைக்கும்! கூறும்? பெரியார் என்னைத் திட்டும்போது, அதுபோலத்தான் கேட்பவர்களுக்குத் தோன்றும். ஆண்டு பல ஆகிவிட்டாலும், எனக்கேகூட, நேரு பண்டிதர் குருஷேவுடனும், டிட்டோவுடனும், மாக்மில்லனுடனும், நாசருடனும் பேசுகிறார் என்று கூறும் நிலைபெற்றிருக்கும் நேரத்தில், பெரியார், மண்டலக் காங்கிரஸ் தலைவர் மாரிமுத்து விடமும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஏகாம்பரத்திடமும் பேசிக்கொண்டிருக்கும் நிலையைக் காணும்போது, வருத்தமாகத் தான் இருக்கிறது. நேருவுக்கு நியூயார்க்கில் வரவேற்பு என்கிறார்கள் - பாரிசில் விருந்து என்கிறார்கள் - பெரியாருக்கோ, சாத்தூரில் சால்வை போர்க்கும் விழா, வேலூரில் எடைக்குஎடை காசு தரும் விழா என்கிறார்கள் - நடத்துபவர்களில் நடுநாயகமாக இருப்பவர், காங்கிரஸ்காரர் என்கிறார்கள்! - கேட்கும்போதே கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் என்ன செய்யட்டும் தம்பி! யானைமீது அம்பாரி அமைத்து ஏறிச் செல்கிற ஒருவர், திடீரென்று கீழே குதித்து, நான் உடும்பு பிடிக்கப்போகிறேன் என்று ஓடினால், எப்படி இருக்கும்! அப்படி இருக்கிறது பெரியாரின் இன்றைய நிலை!! இந்த நிலைக்குப் பெரியாரைக் கொண்டுவந்தாகிவிட்டது. இனி, தி. மு. கழகத்தை ஒழிக்கவேண்டிய ஒன்றுதான் பாக்கி என்ற நினைப்பில், இந்தத் தேர்தலை அதற்குப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுப் பணியாற்றுகிறார்கள் காங்கிரசார். ஆசை காட்டினோம் மயங்கவில்லை! அதட்டிப் பேசினோம் அஞ்சவில்லை! அவரும் இவரும் மாறினபோதும் அணுவளவேனும் மாறவில்லை! எதையும் துருவி ஆராய்ந்து ஏழைக்கேற்றது எதுவென்று இடித்துக் கேட்கிறார் எப்போதும். அப்பப்பா! பெருந்தொல்லை! பிளவு ஏற்படும், சிதறிவிடும் கலகம் மூளும், கருகிவிடும் எனக் காத்திருந்தும் பயனில்லை. பட்டிதொட்டிகள் போகின்றார் பலப்பல உண்மை கூறிடவே! வரிகள் போட்டிட முடியவில்லை. வருமே எதிர்ப்பு எனும் பயத்தால்! வறட்டுப் பயல்கள் என்றிருந்தோம் இவர் வகையாய்ப் பணிபல புரிகின்றார்! மக்கள் மனதில் இடம் பெற்று, மாண்புகள் மிகுந்து திகழ்கின்றார்! எத்தனை இலட்சம் ஆனாலும் இவர்களை ஒழித்திட வேண்டுமம்மா! இல்லை என்றால் நமது கதி என்னாகும்? அது அதோகதி! நம்மை நம்பி டாட்டாக்கள் நோட்டு நோட்டாய் தந்துவிட்டார். வீட்டு விளக்கு அணையாமுன் விரும்பும் செயல் செய வழி எது? நாட்டைக் காத்திடத் துடிதுடிக்கும் தி. மு. க.வை நசுக்கிவிட்டால் நாடு நமது வேட்டைக்காடு! நமக்கு ஏது பாரினில் ஈடு! காங்கிரஸ் கருதுகிறது! இதுபோல! இதற்காகத் தம்பி! காங்கிரஸ்காரர்கள் கட்டிவிடும் புகார்கள், இட்டுக் கட்டிடும் பேச்சுக்கள், உலவவிடும் வதந்திகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏற்கனவே தோற்றுப்போன இடங்களிலே, காங்கிரசார் செய்துவரும் பிரசாரம்! தொகுதிகள் சீர்படவேண்டுமானால், காங்கிரசுக்கு ஓட்டுப் போடவேண்டும். காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதிகளிலேதான் வசதிகள் பெருகி உள்ளன. என்கிற முறையிலே இருக்கிறது. இது மேடைப் பேச்சாக அல்ல, திண்ணைப் பேச்சாக நடக்கிறது. மக்கள் இதைக் கேட்டு மிரளுவார்கள் - ஐயய்யோ! நமது தொகுதி பாழாகிவிடுமாமே - காங்கிரசுக்கு ஓட்டுப் போடா விட்டால், என்று பீதி அடைவார்கள். அந்தச் சமயமாகப் பார்த்து, ஓட்டுகளைப் பறித்துக்கொள்ளலாம் என்ற நப்பாசை கொள்கிறது, நாடாளும் காங்கிரஸ் கட்சி. அதிலும், இந்தப் பிரசாரத்தைக் கிராமத்து மக்கள் எளிதாக நம்பிவிடுவார்கள்; நமக்கு எதற்கு அரசியலும் கட்சிகளும்; ஏரி சீர்படவேண்டும், எரு எருது கிடைக்கவேண்டும், உரம் உப்பு கிடைக்கவேண்டும். வீடுவயல் தழைக்கவேண்டும், பாதை பாலம் இருக்கவேண்டும், இவைகளை நாம் அடையாமலிருப்பது காங்கிரசை ஆதரிக்காததால்தானாம், ஏன் நாம், எதிர்க் கட்சிக்கு ஓட்டுப்போட்டு, நமக்கு வரக்கூடியதை இழக்கவேண்டும்; காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டு வசதிகளைப் பெற்றுக்கொள்ள லாம் என்று கிராமத்தார்கள் நினைப்பார்கள் என்று நம்புகிறது காங்கிரஸ் கட்சி. தம்பி! இந்த எண்ணம் தவறு என்பதைக் கிராமத்து மக்களுக்கு மட்டுமல்ல, நகரத்து மக்களுக்கும், நாம் விளக்கியாகவேண்டும். ஒரு விளக்கம் தருகிறேன். அதனை மேலும் விரிவுபடுத்தி நாட்டினருக்கு எடுத்துக் கூறும் பொறுப்பு, உன்னுடையது. "நான் வாழும் பிரதேசம் மலைப்பிரதேசம். அந்த மலைப் பிரதேசம் நாலாயிரம், ஐயாயிரம் அடிக்கு மேல் உள்ளது. அங்கு தேயிலைத் தொழில் சிறந்த தொழிலாக இருக்கிறது, . . . . இரண்டு இலட்சத்துப் பதினையாயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். தொண்ணூற் றையாயிரம் குடும்பங்கள் ஈடுபட்டிருக்கின்றன. 1951-ல் பிளான்டேஷன் ஆக்ட் (தோட்டத் தொழிலாளர்க்கான சட்டம்) வந்திருந்தும், 1955-ல் அதற்கான விதிகளை ஏற்படுத்தியிருந்தும், தொழிலாளர்களுக்கு மிகவும் அடிப்படையாகக் கொடுக்கவேண்டிய சலுகைகளைக்கூடப் பிளான்டேஷன் ஆக்டிலிருந்து (தோட்டத் தொழிலாளர்க்கான சட்டத்திலிருந்து) எக்ஸம்ஷன் (விதி விலக்கு) வாங்கிக் கொண்டு, முதலாளிகள் கொடுக்க மறுக்கிறார்கள். உதாரணமாக! சிறுநீர் கழிக்கும் இடம், கான்டின் (உணவு விடுதி), கல்வி முதலியவற்றில் இருக்கக்கூடிய சாதாரண உரிமைகளைக்கூட வழங்குவது இல்லை என்றால், இது சுதந்திர நாட்டில் சொல்லவும் வெட்கக்கேட்க இருக்கிறது.’’ திரு. பொன்னையன் இதைக் கூறுகிறார். பொன்னும் பொருளும் கொழித்திடும், பாலும் தேனும் பெருகிவரும் என்று வாக்களித்து, மக்களை மயக்கி ஓட்டுப் பெற்று நடத்தும் காங்கிரசாட்சியில்தான், இந்த நிலைமை! "சொல்லவும் வெட்கக்கேடாக இருக்கிறது’ என்று திரு. பொன்னையன் கூறும் நிலைமை. வெட்கக்கேடு மட்டுமல்ல இது, இதிலே ஒரு வேதனையும் இருக்கிறது. திரு. பொன்னையன், காங்கிரஸ் எதிரி அல்ல; கழகம் அல்ல. காங்கிரஸ்காரர். ஆமாம், ஐயா! ஆமாம்! காங்கிரசாட்சி தொழிலாளர்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துவதில்லை என்று கழகத்தோழர்கள் கூறினால், காங்கிரஸ் பேச்சாளர்களுக்கும், காங்கிரஸ் ஆதரவுப் பிரசார குத்தகைதாரர்களுக்கும் கோபம் கோபமாக வருகிறது. மேடையைத் தட்டித் தட்டிப் பேசுகிறார்கள். என்ன தெரியும் இந்த அண்ணாத்துரைக்கு! என்று ஆர்ப்பரிக்கிறார்கள். ஆனால், பாடுபடும் தொழிலாளிக்கு உள்ள கஷ்டம் தீர்க்கப்படவில்லை; காங்கிரசாட்சி இதைக் கவனிக்கவில்லை; சட்டம் இருந்தும், அது சரிவர நிறைவேற்றப்படவில்லை; என்று திரு. பொன்னையன் கூறுகிறார்; அவர் ஒரு காங்கிரஸ்காரர். எம். எல். ஏ. சொல்லவும் வெட்கக்கேடாக இருக்கிறது என்று பேசினாரே திரு. பொன்னையன், காங்கிரஸ், எம். எல். ஏ. எங்கே பேசினார் தெரியுமா? சட்டசபையில் எட்டுக் காங்கிரஸ் மந்திரிகள் கொலுவீற்றிருக்கும் சபையில். கழகத் தோழர்கள், காங்கிரசாட்சியின் கேடுபாடுபற்றிப் பேசினால், காங்கிரஸ் மந்திரிகளுக்கு எவ்வளவு கோபம் வருகிறது!! என்னென்ன ஏசுகிறார்கள்! மிரட்டுகிறார்கள்! சவால் விடுகிறார்கள்! பார்த்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள். காங்கிரசாட்சி தொழிலாளர்கள் வாழ்வைச் சீராக்கவில்லை என்று காங்கிரஸ் எம். எல். ஏ. பொன்னையன் என்பவர் சட்டசபையில் பேசுகிறார் - எட்டு மந்திரிகள் கேட்டுக்கொண் டிருக்கிறார்கள் - ஒருவராவது எழுந்து மறுத்தார்களா? இல்லை!! கழகத்தார்மீது பாய்கிற மந்திரிகள், காங்கிரஸ் எம். எல். ஏ. சீர்கேடுகளை அம்பலப்படுத்தும்போது, பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறார்கள், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல். ஆகவே, இதிலிருந்து மூன்று உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம். ஒன்று: காங்கிரசாட்சியிலே தொழிலாளர் நிலை உயரவில்லை; செம்மைப்படவில்லை என்று கழகம் கூறுவது, மறுக்க முடியாத உண்மை. இரண்டாவது: காங்கிரஸ் எம். எல். ஏ.யே இதைக் கூறுகிறார். சட்டசபையில் மறுத்துப் பேச மந்திரிகளாலும் முடியவில்லை. மூன்றாவதாக: எதிர்க்கட்சி, அதிலும் குறிப்பாகக் கழகம், எந்தத் தொகுதியில் வெற்றிபெறுகிறதோ, அந்தத் தொகுதிக்கு நன்மை கிடைக்காது என்று பேசுகிறார்களே, அது எவ்வளவு தவறு என்பதும் தெரிகிறதல்லவா? அண்ணாத்துரை வெற்றி பெற்றதாக இந்தத் தொகுதி இருக்கிறது; காங்கிரசுக்கு மட்டும் ஓட்டுப் போட்டிருந்தால், என்னென்ன நடக்கும் தெரியுமா? எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? என்று பேசுகிறார்களே ஓட்டுக் கேட்க வரும் காங்கிரஸ் பேச்சாளர்கள். அந்தப் பேச்சு பச்சைப் புளுகு என்பது விளங்குகிறதல்லவா? காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி பற்றித்தான், திரு. பொன்னையன் பேசுகிறார். காங்கிரஸ் எம். எல். ஏ. தன் தொகுதியில் தொழிலாளர் நிலைமை இப்படி இப்படி இருக்கிறது என்று கூறித் தருகிறார். சட்டசபையில், மந்திரிகள் எதிரில் என்றால் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டால், வண்டி வண்டியாக நன்மைகள் வந்துவிடும் என்று பேசுகிறார்களே, இது பச்சைப் புளுகு அல்லவா? தொழிலாளர்களுக்கு வசதி செய்து தருவதற்காகச் சட்டம் இருக்கிறது. முதலாளிகள் அந்த வசதிகளைச் செய்துகொடுக்க முடியாது என்று கூறினால், காங்கிரஸ் சர்க்கார் ஏன் ஒத்துக் கொள்கிறது? தொழிலாளிகளைக் காட்டிக் கொடுக்கலாமா? காட்டிக் கொடுக்கிறதே! திரு. பொன்னையன், சட்டசபையில் பேசியது சட்டசபைக் குறிப்பேட்டில் இருக்கிறது. காங்கிரஸ் எம். எல். ஏ.யே, காங்கிரசாட்சியில், காங்கிரஸ் சர்க்கார், முதலாளிகள் சார்பாக நின்று, தொழிலாளர்களுக்குச் சலுகை செய்யாமல், அவர்களை வெட்கக்கேடான நிலைமையில் வைத்துக்கொண்டிருப்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறாரே, இதைக் கேட்ட பிறகு, என்ன சொல்லுகிறீர்கள்? யோசித்துப் பாருங்கள்! வைத்திய வசதி இல்லாமல் இருப்பவர்கள் தொழிலாளர்கள் மட்டும் அல்ல. பொதுவாகவே, வைத்திய வசதி போதுமான அளவு இல்லை. கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டுகிறோம் என்று கூறுகிறார்கள் காங்கிரஸ் பேச்சாளர்கள். எங்கே போகிறதோ தெரியவில்லை - வைத்திய வசதி கிராமங்களில் இல்லை! இதை எதிர்க்கட்சிக்காரர் கூறும்போது, காங்கிரஸ்காரர்கள் கடுங்கோபம் கொள்கிறார்கள். உள்ளதைச் சொன்னால் எரிச்சல் ஏற்படுகிறது. வேண்டுமென்றே எதிர்க் கட்சிக்காரர்கள் காங்கிரஸ் ஆட்சிமீது குறை கூறுகிறார்கள்; நாங்கள் எல்லா ஏற்பாடு களையும் சீராகத்தான் செய்திருக்கிறோம் என்று பேசுகிறார்கள். சென்னை சட்டசபையில், காங்கிரஸ் எம். எல். ஏ.க்களே, காங்கிரசாட்சியிலே, வைத்திய வசதி சரியான முறையில் இல்லை என்பதை எடுத்துக்காட்டி, வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள். "சாதாரணமாக 500 கைதிகள் உள்ள ஜெயில்களில் கூட இரண்டு டாக்டர்கள் இருக்கிறார்கள். அப்படி யிருக்கும் போது, 5,000, 10,000 ஜனத்தொகை கொண்ட இடங்களில், ஆஸ்பத்திரி இல்லாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.’’ இப்படிச் சட்டசபையில் பேசியிருக்கிறார் என். ஆர். தியாக ராசன் என்ற காங்கிரஸ் எம். எல். ஏ. மந்திரிகள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்; மறுப்புக் கூறவில்லை. ஜெயில்களைவிடக் கிராமங்களின் நிலைமை மோசமாக இருக்கிறது! அதுவும், காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டு, காங்கிரஸ்காரரை எம். எல். ஏ. - யாக அனுப்பிக் கொடுத்த தொகுதியில்! காங்கிரசுக்கு ஓட்டுப்போடாததால்தான், நமது தொகுதிக் கஷ்டம் நீடிக்கிறது, முன்னேற்றம் கிடைக்கவில்லை என்று பேசி, காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டால் கஷ்டம் யாவும் தீர்ந்து போகும் என்று பேசுகிறார்களே சிலர், அந்த வாதம் எவ்வளவு உப்புச்சப்பற்றது என்பது புரிகிறதல்லவா? ஜெயில்களைவிட மோசமான நிலைமையில் உள்ள கிராமங்கள் உள்ள தொகுதி, அண்ணாத்துரை தொகுதி அல்ல, கருணாநிதி தொகுதி அல்ல, கோவிந்தசாமி தொகுதி அல்ல, காங்கிரசை ஆதரித்துத் தீப்பொறி பறக்கப் பேசுவர் என்று கூறப்படும் தேனி எம். எல். ஏ. தியாகராசன் தொகுதியாகும் - காங்கிரஸ் எம். எல். ஏ. - யின் தொகுதி. காங்கிரஸ் தோற்றுப்போன கோபத்தால், சில தொகுதி களில் நன்மை கிடைக்கவில்லை என்கிறார்களே, தேனி தொகுதியில் காங்கிரஸ்தானே வெற்றிபெற்றது! ஏன் அங்கு உள்ள கிராமங்களின் நிலைமை ஜெயில்களைவிட மோசமாக இருக்கிறது? கேட்டுப்பாருங்கள்! பதில் கிடைக்காது. கோபம் தான் கிளம்பும் காங்கிரசாருக்கு. கிராமங்களைக் கவனிக்கச் சொல்லி எந்த எம். எல். ஏ. முறையிட்டாலும், அவர் காங்கிரசுக்கு வெற்றி தேடியவராக இருந்தாலும் சரி, காங்கிரசைத் தோற்கடித்தவராக இருந்தாலும் சரி, அவர் பேச்சைத் துச்சமென்று எண்ணுகிறது இந்தக் காங்கிரஸ் சர்க்கார். காங்கிரசை எதிர்ப்பவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். தேனி தொகுதி எம். எல். ஏ. தியாகராசன், காங்கிரஸ்காரர், அவர் கூறுவது என்ன? என்னுடைய தொகுதியான தேனியில், மேஜர் பஞ்சாயத்து போர்டுள்ள இடத்தில், 25,000 மக்கள் இருந்தாலுங்கூட, பத்து ஆண்டுகளாக முயற்சி செய்தும், அங்கு ஒரு ஆஸ்பத்திரி ஏற்படுத்தப்படவில்லை. இப்படிச் சட்டசபையில் இடித்துப் பேசுகிறார் ஒரு காங்கிரஸ் எம். எல். ஏ. எட்டு மந்திரிகளும் பிடித்துவைத்த பிள்ளையார் போல் பேசாமல் உட்கார்ந்திருக்கிறார்களே ஒழிய, ஒரு வார்த்தை மறுத்துப் பேசவில்லை. முடியவில்லை. பத்து வருஷம் முயற்சி செய்கிறார் ஒரு கிராம ஆஸ்பத்திரிக்கு, ஒரு காங்கிரஸ் எம். எல். ஏ. முடியவில்லை. இந்தக் காங்கிரஸ் எம். எல். ஏ. மதுரை ஜில்லா போர்டு தலைவராகக்கூட இருந்தவர். அப்படிப்பட்டவருக்கே இந்தக் கதி! என்ன தெரிகிறது இதிலிருந்து? காங்கிரஸ் சர்க்கார், யார் முறையிட்டாலும் கவனிப்பதில்லை; கிராமங்களைத் திருத்துவதில்லை என்பதுதான்! விவரம் அறியாதவர்களை ஏமாற்ற, காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டால், எல்லாம் கிடைத்துவிடும் என்று தேர்தல் தரகர்கள் பேசுகிறார்கள். காங்கிரசுக்கு ஓட்டுப்போட்ட தேனி தொகுதியில் ஜெயிலைவிட மோசமாக கிராமநிலை இருக்கிறது; பத்து வருஷமாகக் காங்கிரஸ் எம். எல். ஏ. முயற்சி செய்தும் பலிக்கவில்லை. உண்மை இப்படி இருக்க, காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டால் ஊர் சீர்படும் என்று சிலர் பேசுவதிலே, பொருள் இருக்கிறதா? யோசித்துப் பாருங்கள்! இந்தக் குறைகளைப் போக்கத்தான், சமுதாயநல திட்டம் தீட்டியிருக்கிறோம் என்று பளிச்சென்று பதில் சொல்வார்கள் காங்கிரஸ் பேச்சாளர்கள். எதிர்க்கட்சிக்காரர்கள் குறை சொன்னார்கள்; எங்கள் காங்கிரஸ் பேச்சாளர் பளார்! பளார்! என்று கன்னத்தில் அறைவதுபோலப் பதிலளித்தார் என்று பேசி மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், அந்தச் சமுதாயநலத் திட்டத்தின் இலட்சண மாவது சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம். "கிராமங்களில் தேசிய விஸ்தரிப்புத் திட்டம், சமுதாயநலத் திட்டங்கள் இருக்கக்கூடிய இடங்களில் தன்ழ்ஹப் உண்ள்ல்ங்ய்ள்ஹழ்ண்ங்ள் (கிராம ஆஸ்பத்திரிகள்) அமைக்க ஏற்பாடு செய்துகொண்டு வருகிறோம். ஏற்பாடு செய்கிறோமே தவிர, நடைமுறையில் அவைகள் சரியானபடி நடக்கவில்லை.’’ இப்படிக் கூறுகிறவர், கழகத் தோழர் அல்ல; காங்கிரசைக் குறை கூறுவதே வேலையாகக் கொண்டவர் அல்ல; காங்கிரஸ்காரர் பேச்சு இது; காங்கிரஸ் எம். எல். ஏ. சட்டசபையில் சொன்னது. சமுதாயநலத் திட்டத்தின்கீழ் கட்டப்படும் கிராம ஆஸ்பத்திரிகள் சரியானபடி நடக்கவில்லை. என்று கண்டித்துப் பேசினவர், காங்கிரஸ் எம். எல். ஏ. யான முனுசாமிக் கவுண்டர். கிராம ஆஸ்பத்திரிகள் சரியானபடி நடக்கவில்லை என்று பொதுப்படையாகப் பேசிவிட்டால் போதுமா? விவரம் தர வேண்டாமா? காரணம் காட்டவேண்டாமா? என்று குறுக்குக் கேள்வி கேட்டு, தமது காங்கிரஸ் பக்தியைக் காட்டிக்கொள்ள வேண்டுமென்று சிலருக்கு ஆவலாக இருக்கும். காங்கிரஸ் எம். எல். ஏ. முனுசாமிக் கவுண்டர், காரணமும் காட்டிவிட்டார். நர்சுகள் கிடையாது. டாக்டர் கிடையாது. கம்பவுண்டர்கள் கிடையாது. எப்படி நிலைமை, கவனித்தீர்களா? காங்கிரஸ் ஆட்சியின் இலட்சணம் தெரிகிறதா? கிராமத்தில் ஆஸ்பத்திரிகள் கட்டு கிறார்கள், ஆனால் அங்கு, டாக்டர் இல்லை நர்சு இல்லை கம்பவுண்டர் இல்லை வேறு என்ன இருக்கிறது? கட்டிடம்! போர்ட்! விளம்பரம்! பார்! பார்! ஆஸ்பத்திரி பார்! எத்தனை பெரிய கட்டிடம் பார்! எங்க காங்கிரஸ் கட்டியது பார்! எடு ஓட்டுகளை! கொடு எங்களிடம்! என்று காங்கிரஸ் பேச்சாளர்கள், முழக்கமிட இந்தக் கட்டடங்கள; நோய் போக்க அல்ல! கிராமத்தாரை வாழவைக்க அல்ல! கிராமத்தாரின் நோய்போக்க ஆஸ்பத்திரி கட்டினால், டாக்டர் இல்லை நர்சு இல்லை கம்பவுண்டர் இல்லை. என்றா நிலைமை இருக்கும்!! நிலைமை இப்படி இருக்கிறது. இதை ஒரு காங்கிரஸ் எம். எல். ஏ. - யே சட்டசபையில் இடித்துப்பேசுகிறார் - எட்டு மந்திரிகள் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மாலையிலே பாருங்களேன், மேடை ஏறியதும், இதே மந்திரிகள், மார்தட்டிப் பேசுவதை, ஆளத்தெரிந்தவர்கள் நாங்களே! நாங்கள்தான் ஆளுவோம்! வேறு எவருக்கும் நாட்டை ஆளும் யோக்யதை இல்லை. என்று பேசுகிறார்கள். டாக்டர் இல்லாத நர்சு இல்லாத கம்பவுண்டர் இல்லாத ஆஸ்பத்திரிகளைக் கிராமங்களில் கட்டிவிட்டு, இந்தத் தாவு தாவுகிறார்களே, என்னென்பது! கிராம ஆஸ்பத்திரிக் கட்டிடம் கட்டி முடித்ததும் ஒரு கோலாகலத் திறப்பு விழா நடக்கிறது! முதல் மந்திரி வருகிறார்! முன்னாலே பின்னாலே போலீஸ்! பக்கத்திலே சீமான்! கொடி ஏற்றுகிறார்! வெடி கிளம்புகிறது! மாலை சூட்டுகிறார்கள், வாழ்த்துப் பத்திரம் படிக்கிறார்கள்! மந்திரி கட்டிடத்தைத் திறக்கிறார். போட்டோ எடுக்கிறார்கள்! பாட்டுப் பாடுகிறார்கள்! மந்திரி பேசுகிறார்: காங்கிரஸ் சர்க்கார்தான் கிராமத்தை முன்னேற்றம் அடையச் செய்யும் என்றெல்லாம். ஆனால் ஆஸ்பத்திரியின் நிலைமை என்ன? டாக்டர் இல்லை நர்சு இல்லை கம்பவுண்டர் இல்லை இப்படிச் சொல்பவர் யார்? ஒரு காங்கிரஸ் எம். எல். ஏ. அவர் இன்னமும் விளக்கமாகக்கூடப் பேசியிருக்கிறார். "இன்றைய தினம் ஆஸ்பத்திரியைத் திறந்தார்கள், நாளைய தினம் டாக்டர்கள் இல்லை என்று சொல்லு கிறார்கள் என்ற நிலைமைதான் இருக்கிறது.’’ திராவிட முன்னேற்றக் கழகம் இவ்வளவு பலமாக எதிர்த்துக் கொண்டிருக்கும்போதே, காங்கிரசாட்சியின் போக்கு டாக்டரும், நர்சும், கம்பவுண்டரும் இல்லாத ஆஸ்பத்திரி காட்டுகிற நிலையிலே இருக்கிறது என்றால், இந்த எதிர்ப்பே இல்லை என்றால், நிலைமை இன்னும் எவ்வளவு மோசமாகிவிடும் என்பதை எண்ணிப் பாருங்கள். டாக்டர் இல்லை, நர்சு இல்லை, கம்பவுண்டர் இல்லை என்று ஒரு காங்கிரஸ் எம். எல். ஏ. முனுசாமிக் கவுண்டர் சொன்னார் - மருந்து விஷயம் எப்படி? அதையும் கேளுங்கள். "நம் மாநிலத்தில் 80 சதவிகித மக்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள். ஆனால், இப்போது, நகரங்களில்தான் பெரிய பெரிய ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன. ஆகவே, வைத்திய சுகாதாரத்திற்குக் கிராமங்களில் அதிக பணம் செலவழிக்கப்படவில்லை.’’ அநேக கிராம ஆஸ்பத்திரிகளில் வைத்தியர்களே கிடையாது. மேலும் கிராம ஆஸ்பத்திரிகளில் தகுந்த மருந்து களோ, போதிய மருந்துகளோ கொடுக்கப்படுவதில்லை. இதுபற்றி ஆஸ்பத்திரி வைத்தியர்களிடம் கேட்டால். அவர்கள் ஆஸ்பத்திரியில் மருந்து இல்லை, நாங்கள் என்ன பண்ணுவோம்? என்று சொல்கிறார்கள். ஆஸ்பத்திரியில் ஊசி மருந்து இல்லாத நிலையில், நோயாளிகளுக்கு ஊசி போடவேண்டியிருந்தால், அப்போது வைத்தியர்கள், நீங்கள் 3 ரூபாய் கொடுத்தால் உங்களுக்கு பிரைவேட்டாக (தனியாக) ஊசிபோடுகிறோம் என்று. நோயாளிகளிடம் சொல்கிறார்கள். இந்த நிலைமையை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.’’ டாக்டர் இல்லை! நர்சு இல்லை! கம்பவுண்டர் இல்லை என்று சொன்னார் முனுசாமிக் கவுண்டர், காங்கிரஸ் எம். எல். ஏ. அங்கு மருந்தே இல்லை என்று கூறுகிறார் மற்றொரு காங்கிரஸ் எம். எல். ஏ. எஸ். இராமலிங்கப் படையாச்சி!! காங்கிரஸ் ஆட்சி நல்லபடி காரியங்களைச் செய்யவில்லை என்று கழகத் தோழர்கள் சொன்னால், கண், கோவைப்பழம் போலச் சிவந்துவிடுகிறது, புலிபோலச் சீறுகிறார்கள் காங்கிரஸ் மந்திரிகள், தலைவர்கள்!! டாக்டர் இல்லாத, மருந்து இல்லாத ஆஸ்பத்திரி கட்டுகிற காங்கிரஸ் சர்க்காரை வாழ்த்தவா முடியும்! கண்டிக்காமலிருக்க முடியுமா! எதிர்க்கட்சி கண்டனம் கூறினால், எத்தனை இலட்சம் செலவானாலும், எதிர்க் கட்சியை, கழகத்தை ஒழித்துக்கட்டிவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள். பொது மக்களுக்காக, ஆட்சியில் உள்ள குறைகளை எடுத்துக்காட்ட எதிர்க்கட்சி இல்லை என்றால், ஆட்சி இன்னும் எவ்வளவு மோசமானதாகிவிடும், நாடு மேலும் எவ்வளவு வேகமாக நாசமாகிவிடும் என்பதை எண்ணிப் பாருங்கள். "பல கிராமங்களில் குடி தண்ணீர் வசதி இல்லை. பல கிராமங்களில் குடி தண்ணீர் மிகவும் மோசமான தாக இருக்கிறது. குறிப்பாகத் திருச்சி ஜில்லாவில் உடையார்பாளையம் தாலுகாவில் குடி தண்ணீர் மிகமிக மோசமான தாக இருக்கிறது. அங்கே பூமியை 100 அடி ஆழம் வெட்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. ஆகவே குட்டை குளங்களில் உள்ள குடி தண்ணீரை அங்குள்ள மக்கள் குடித்து வருகிறார்கள்.’’ என்றும் கூறுகிறார் இராமலிங்கப் படையாச்சி. காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதியிலே உள்ள நிலைமை இது! காங்கிரஸ் வெற்றிபெறாத தொகுதிகளில்தான் நிலைமை மோசமாக இருக்கிறது! ஆகவே காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டுத் தொகுதியைச் செம்மையானதாக்கிக் கொள்ளுங்கள் என்று பேசுகிறார்களே, சில பேச்சாளர்! காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதியில் உள்ள நிலைமையைக் காங்கிரஸ் எம். எல். ஏ. யே, காங்கிரஸ் அமைச்சர்கள் முன்னிலையில் எடுத்துக்காட்டிக் கண்டிக்கிறாரே, இதற்கு என்ன பதில் கூறுகிறார்கள்? வெட்கமாக இல்லையா காங்கிரஸ் ஆட்சியின் இலட்சணத்தைக் கண்டித்துக் காங்கிரஸ் எம். எல். ஏ. யே பேசும்போது. ஏன், காங்கிரஸ் எம். எல். ஏ. இராமலிங்கப் படையாச்சி அப்படிப் பேசுகிறார்? காங்கிரசுக்கு ஓட்டுப்போடுங்கள், கஷ்டமெல்லாம் போய்விடும், வசதிகள் கிடைக்கும், வாழ்க்கை மேம்பாடு அடையும் என்றெல்லாம் சொல்லித்தான் அவர் "ஓட்டு’ வாங்கினார். அவர் சொன்னது எதுவும் நடக்கவில்லை. குடிதண்ணீர் வசதிகூடக் கிடைக்கவில்லை. மக்கள் இராமலிங்கப் படையாச்சியை - "ஐயா! காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டால், பாலும் தேனும் கலந்து ஆறாக ஓடும் என்று சொன்னீர்களே! குடிக்கத் தண்ணீர்கூடக் கிடைக்கவில்லையே! இப்படி இருக்கிறதே உங்கள் ஆட்சியின் இலட்சணம்?’’ என்றெல்லாம் கேட்கமாட்டார்களா! அந்த இடி பொறுக்கமாட்டாமல்! அவர், பாவம், சட்டசபையில் பேசுகிறார், மக்கள் படுகிற கஷ்டம் அவ்வளவு இருக்கிறது!! அசுத்தத் தண்ணீரைக் குடிப்பதால் அங்குள்ள மக்களுக்கு நரம்புச் சிலந்தி என்ற வியாதி வருகிறது. அது அங்கே மிகவும் அதிகமாக இருக்கிறது. அங்கே 80 சதவிகித மக்களுக்கு நரம்புச் சிலந்தி வந்திருக்கிறது. அங்குள்ள மக்கள் எல்லோரும் மிகவும் கஷ்டப் படுகிறார்கள். மக்கள் கைகால்களில் கட்டுகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் அது என்ன கட்டு? என்று கேட்டால், நரம்புச் சிலந்திக் கட்டு என்கிறார்கள். பெருவாரியான மக்களுக்கு இந்த வியாதி வந்திருப்ப தால் அங்குள்ள மக்கள் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய கவலையைப் போக்க அரசாங்கம் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.’’ எவ்வளவு பொறுப்பற்ற முறையிலே, காங்கிரஸ் சர்க்கார் நடந்துகொண்டு வருகிறது என்பது புரிகிறதல்லவா? சட்டசபை சென்று, ஒரு காங்கிரஸ் எம். எல். ஏ. வாதாடினால்தான் தொகுதிக்கு நன்மை கிடைக்கும்; எதிர்க் கட்சி வெற்றி பெற்றுப்போனால், தொகுதிக்கு நன்மை கிடைக்காது என்று சொல்கிறார்களே சிலர், இதோ, காங்கிரஸ் எம். எல். ஏ. தான் முறையிடுகிறார், அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று. இதற்கென்ன சொல்கிறார்கள்? குடி தண்ணீர் வசதிகூட இல்லை, காங்கிரஸ்காரர் வெற்றி பெற்ற தொகுதியில்! திருச்சி ஜில்லாவில் மட்டுந்தான் இந்த நிலைமை என்று எண்ணிவிடாதீர்கள். மதுரை மாவட்டத்தில் பழனி தொகுதி இருக்கிறது. அந்தத் தொகுதி எம். எல். ஏ. இலட்சுமிபதி ராஜு - காங்கிரஸ்காரர் - கடுங்கோபம் வரும் காங்கிரசைத் தாக்கினால். . . அவர் பேசுகிறார், கேளுங்கள், தமது தொகுதி நிலைமைபற்றி. "பல இடங்களில் குடி தண்ணீர் வசதி இல்லாமல் அங்குள்ள கிணறுகளிலுள்ள தண்ணீரைக் குடித்துக் கொண்டு பல வியாதிகளால் அங்குள்ள மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நரம்புச் சிலந்தி என்று சொல்லக்கூடிய ஒரு பெரிய வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக் கிறார்கள். அதனால் அவர்கள் படும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு குடும்பத்தைப் பார்த்தால் அதில் நாலைந்து பேர் கட்டுகளைக் கட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் கட்டுகளை அவிழ்த்துப் பார்த்தால், உள்ளே ஒரு சிறிய நரம்பு கம்பிபோல் தெரியும். அதை இழுத்துக் கட்டிக்கொண்டிருப்பார்கள். அதனால் அவர்கள் படும் கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. அதற்கு எண்ணெய் தடவிக் கட்டிக்கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட வியாதிக்குக் காரணம், அங்குள்ள கிணறுகளிலுள்ள தண்ணீரை எடுத்துக் குடித்ததால். அப்படிப்பட்ட வியாதிகளால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.’’ பதினான்கு ஆண்டுகளுக்கு மேலாகக் காங்கிரசாட்சி நடத்தும் கிராமங்களில், குடி தண்ணீர் வசதி இல்லை. நரம்புச் சிலந்திபோன்ற நோய் வாட்டுகிறது. ஆஸ்பத்திரிகளில் டாக்டர் இல்லை, கம்பவுண்டர் இல்லை, மருந்து இல்லை! இவைகளை எடுத்துக்காட்டிக் கண்டித்தாலோ, காங்கிரஸ் தலைவர்களுக்கு பொறுமை இருப்பதில்லை; ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வருகிறது. காங்கிரஸ் எம். எல். ஏ. க்களாலேயே சகித்துக்கொள்ள முடியவில்லை காங்கிரஸ் ஆட்சியின் அவலட்சணங்களை! கிராமங்களிலே, குடி தண்ணீர் வசதியில்லாமல், நரம்புச் சிலந்திபோன்ற கொடிய நோய்களால் பீடிக்கப்பட்டுக் கஷ்டப்படும் மக்கள் யார்? பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். ஆதிதிராவிட சமுதாயத்தினர். இவர்களின் எண்ணிக்கை பல கோடி! இவர்களிடம் தந்திரமாகப் பேசி, "ஓட்டுகளை’ வாங்கிக்கொண்டு, இவர்களைக் காங்கிரசாட்சி இந்தக் கதியிலே வைத்திருக்கிறது. கேட்டால் கோபம் வருகிறது கோலேந்திகளுக்கு! ஒரு கோடி செலவானாலும் சரி, எதிர்க் கட்சிகளை ஒழித்துக்கட்டிவிடுகிறோம் என்கிறார்கள். எதிர்க் கட்சிகளை ஒழித்துக்கட்டுவது, காங்கிரசாட்சியிலே உள்ள குறைபாடுகளைக் கண்டிக்கும் காங்கிரஸ்காரர்களை சட்டசபைக்குப் போக ஒட்டாமல் தடுப்பது என்ற திட்டமிட்டுத் தான் காங்கிரஸ் கட்சியை ஆட்டிப்படைக்கும் பெரியவர்கள் நடந்துகொள்கிறார்கள் ஐயோ! பாவம் நரம்புச் சிலந்தி கொடுமையான வியாதியாயிற்றே, அதனால் அவதிப்படுவர் நமக்கு ஓட்டு அளித்த ஏழை எளியோர்களாயிற்றே, அவர்களைக் காப்பாற்றுவோம் என்று துடித்தெழுந்து காரியமாற்றுகிறதா காங்கிரஸ் அரசு? இல்லை! மாறாக, இதையெல்லாம் அம்பலப் படுத்துகிறவர்களை அழித்துவிடவேண்டும் என்ற ஆத்திரம்தான் அவர்களுக்கு ஏற்படுகிறது. "அரிஜனங்கள் இரண்டு மூன்று மைல்கள் சென்று, தலையில் குடத்தை வைத்துக்கொண்டு போய் தண்ணீர் கொண்டுவர வேண்டியதாக இருக்கிறது. அதனால் அரிஜனங்கள் படும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல.’’ இதனையும் பழனி தொகுதி எம். எல். ஏ.தான் கூறுகிறார். பழனி தொகுதி மக்கள் காங்கிரசுக்கு ஓட்டு போட்டுக் கண்ட பலன் என்ன? நரம்புச் சிலந்தி!! காங்கிரஸ் வெற்றிபெறாத இடங்களிலே, காங்கிரஸ் தலைவர்கள் சென்று, காங்கிரசை வெற்றிபெறச் செய்யாத தாலேயே, இந்தத் தொகுதி சீர்படவில்லை என்று செப்பு கிறார்கள். பழனி தொகுதிக்கு என்ன? காங்கிரஸ் கட்சிக்குத்தானே மக்கள் ஓட்டுகளைத் தந்தனர்? பிறகு எதற்காக, பழனி தொகுதிக்கு இந்தக் கதி? காங்கிரஸ் எம். எல். ஏ. இருக்கும் தொகுதியிலே, இத்தனை அவதி ஏன் காணப்படுகிறது? "கிராமத்திலுள்ள ஒரு தாய் பிரசவிக்கவேண்டு மானால் அவள் தலைநகர ஆஸ்பத்திரிக்கு வர வேண்டியதாக இருக்கிறது. அப்படி வருவதற்குள், அவள் பெரிய மரண வேதனையை அடைய வேண்டியதாக இருக்கிறது.’’ என்று கூறுகிறார் காங்கிரஸ் எம். எல். ஏ. எதிர்க்கட்சிகள், எங்கள் காங்கிரஸ் கட்சியை வேண்டு மென்றே கண்டிக்கின்றன என்று பேசுகிறவர்கள், காங்கிரஸ் எம். எல். ஏ. க்களே கண்டித்துத் தீரவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி, எதிர்க்கட்சிகளையும் ஒழித்துவிட முடியாது. காங்கிரஸ் கட்சியிலேயே, உண்மையை மறைக்க முடியாதவர்கள் இருக்கிறார்களே, அவர்களையும் அழித்துவிட முடியாது. குறைகளைக் கண்டிக்க இவ்வளவு விழிப்புணர்ச்சியுடன் இவ்வளவு பேர் இருக்கும்போதே, இந்த இலட்சணத்தில் இருக்கிறதே காங்கிரஸ் ஆட்சி, எதிர்க்கட்சியும் இல்லாது போனால், மோசமான நிலைமை இன்னுமல்லவா மோசமாகி விடும்!! கிராமத்தார்கள், வைத்திய வசதியில்லாததால், நகரத்துக்கு வருகிறார்கள் - பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு. அங்கு மட்டும், அவர்கள் சீராக நடத்தப்படுகிறார்களா? போதுமான கவனிப்பு இருக்கிறதா? பெரிய ஆஸ்பத்திரிகளிலே மட்டும் நிலைமை, முதல் தரமாக இருக்கிறதா? இல்லை! இல்லை! என்று சொல்பவர் யார்? எதிர்க்கட்சிக்காரர் தானே என்று கேட்பார்கள் காங்கிரஸ்காரர்கள். எதிர்க்கட்சி மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களே சொல்கிறார்கள். "தாராபுரம் டவுனில் ஒரு ஆஸ்பத்திரி இருக்கிறது, சர்க்கார் ஆஸ்பத்திரி என்ற பெயரால். அது 20 வருஷமாக நடந்துவருகிறது. ஆனால், அதைப் பார்த்தால் ஒரு திருவிழாவிற்குச் சத்திரத்தில் கூட்டம் வந்து தங்கியிருப்பது போல் உள்ள நிலையில்தான், அங்கு ஆஸ்பத்திரிகளில் நோயாளி மக்கள் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.’’ என்று சேனாதிபதிக் கவுண்டர் கூறுகிறார். காங்கிரஸ் எம். எல். ஏ. ஆமாம், அவருடைய பேச்சுத்தான் இது - சட்ட சபையில். காங்கிரஸ் எம். எல். ஏ. இலட்சுமிபதி ராஜு, இன்னும் விளக்கமாகக் கூறுகிறார். "ஆஸ்பத்திரிக்கு வந்தால் அங்குள்ள படுக்கைகள் ஒரே அழுக்காக இருக்கின்றன. கிட்டப்போனால் துர்நாற்றம் அடிக்கிறது. யுத்தகாலத்தில் அடிபட்டுக் கீழே விழுந்தவர்களுக்குப் போட்ட படுக்கைகளோ என்றுகூடத் தோன்றுகிறது. அவ்வளவு மோசமான நிலைமையில் இருக்கிறது அங்குள்ள படுக்கைகள்.’’ ஆக மொத்தத்தில் பார்த்தால், கிராமங்களில் வைத்திய வசதி இல்லை; நகரங்களில் உள்ளது போதுமானதாகவும் இல்லை; திருப்திகரமாகவும் இல்லை; நகர பெரிய ஆஸ்பத்திரிகளின் நிர்வாகமும் சரியாக இல்லை. இதனைவிடக் கொடுமை ஒன்றும் இருக்கிறது. சர்க்காரை நடத்தும் எந்தக் கட்சியும் வெட்கித் தலைகுனியவேண்டிய, கொடுமையான நிலைமை. எதிர்க்கட்சியிலுள்ளவர்கள் சொன்னால்கூட, எதிர்ப்பு உணர்ச்சியால் பேசுகிறார்கள் என்று சாக்குப்போக்குச் சொல்லித் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கலாம்; சொந்தக் கட்சியில் உள்ளவரே சொல்லும்போது என்ன செய்வது? என்ன அந்தக் கொடுமை என்பதை காங்கிரஸ் எம். எல். ஏ. இலட்சுமிபதி ராஜு சொல்கிறார். "ஆஸ்பத்திரிகளில்கூட இலஞ்சம் தாண்டவமாடுகிறது; பணம் கொடுத்தால்தான் காரியங்கள் நடைபெறுகின்றன.’’ காங்கிரசாட்சியிலே இப்படிப்பட்ட நிலைமை இருக்கிறது. இவைகளை அன்றாடம் எடுத்துக்கூறி, இடித்துக்காட்டி, குட்டுகளை உடைத்து, ஊழல்களை அம்பலப்படுத்துகிறதே தி. மு. கழகம் என்ற எரிச்சல், காங்கிரஸ் கட்சிக்கு. அதனால் இம்முறை எப்படியாவது தி. மு. கழகத்தைத் தோற்கடித்துவிட வேண்டும்; அப்போதுதான், நிம்மதியாக நமது இஷ்டப்படி ஆட்சியை நடத்திக்கொண்டு போகலாம், கேள்வி இருக்காது, எதிர்ப்பு எழாது, தொல்லை வராது என்று எண்ணமிட்டுத், திட்டமிட்டு வருகிறது காங்கிரஸ் கட்சி. பொது மக்களுக்கு அமையும் சர்க்கார், பொறுப்புணர்ச்சி மறந்து, காட்டுப்போக்கிலே காரியமாற்றி, மக்களின் வாழ்வினைக் குலைக்கும்போது, தடுத்திட, திருத்திட, உள்ள ஒரே கருவி, எதிர்க்கட்சி! அதனை ஒழித்துவிட எண்ணுவது பொது மக்களுக்கு இருக்கும் ஒரே ஒரு பாதுகாப்பையும் போக்கிவிட்டு, கண்மூடி தர்பார் நடத்துவதற்குத்தான். செய்யப்படுகிற காரியங்கள் செம்மையாக இருக்கவேண்டு மானால், எதிர்க்கட்சிமீது எரிந்துவிழுகிற இயல்பும், எதிர்க் கட்சி இருப்பதே நமக்கு இடையூறு என்ற எண்ணமும், ஆளும் கட்சிக்கு ஏற்படக்கூடாது. எதிர்க்கட்சிகள், இன்றுள்ள ஆட்சியிலே நடைபெறும் பல காரியங்களிலே குற்றம் குறை காணுவதும், கண்டிப்பதும், எவ்வளவு தூரம் நியாயமானது என்பது, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே, காங்கிரஸ் எம். எல். ஏ. க்களே, தமது கண்டனத்தைத் தெரிவித்திருப்பதிலிருந்து விளங்கும். மற்றோர் எம். எல். ஏ. இன்றுள்ள ஆட்சியிலே உள்ள முறைகேடு, சீர்கேடு ஆகியவைபற்றிச் சட்டசபையிலே பேசியிருப்பதைப் பார்க்கலாம்; கிராமங்களில் மராமத்து இலாகா சரியானபடி வேலை செய்வது இல்லை. கிராமங்களிலுள்ள ரோடுகள் ரொம்பவும் மோசமான நிலையில் இருக்கின்றன. அங்குள்ள ரோடுகளில் மனிதன்கூட நடந்துபோக முடியாமல் இருக்கிறது. ரோடுகளுக்கு மராமத்து இலாகா சரியானபடி "மெட்டல்கள்’ (கப்பி) போடுவதில்லை. அது எதனால் ஏற்படுகிறது என்றால், ரோடுகளைப் போடுவதற்குக் காண்ட்ராக்டுக்கு விடும் கண்ட்ராக்டர் களிடம்தான் குறைபாடு இருக்கிறது. அவர்கள் அதிகப் படியாக இலஞ்சம் கொடுத்து வருவதால், அவர்கள் சரியாக ரோடுகளைப் போடாமல் விட்டுவிடுகிறார்கள். அதனால் ரோடுகளைப் போடும் வேலையைக் கண்ட்ராக்டர்களுக்கு கொடுக்காமல், அந்த முறையையே எடுத்துவிடவேண்டு மென்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களால்தான் இலஞ்சம் அதிகரிக்கிறது. எந்த டிபார்ட்மெண்டில் (இலாகாவில்) அதிகப்படியான இலஞ்சம் இருக்கிறது என்றால், இப்படிப்பட்ட கண்ட்ராக்டர்கள் இருக்கக் கூடிய மராமத்து ஹைவேஸ் (நெடுஞ்சாலை இலாகா) டிபார்ட்மெண்டில்தான் அப்படி இருக்கிறது. அவர்களால் தான் அரசாங்கத்தின் கோடிக் கணக்கான ரூபாய், கிராமங்களுக்குச் செலவு செய்யப்படாமல் விரயமாகிறது. காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் மனதிலும், இந்த ஆட்சிமுறையிலே காணப்படும் குறைபாடுகள்பற்றி, எவ்வளவு குமுறல் இருக்கிறது என்பது விளக்கமாகத் தெரிகிறது. மற்றொருவர் சட்டசபையில், இதே முறையில், கிராம நிர்வாகம் முதற்கொண்டு ஜில்லா நிர்வாகம் வரையிலும் செக்ரடேரியட் நிர்வாகம் வரையிலும் வேலைகள் ரொம்பவும் தாமதமாக நடந்துவருகிறது. அவைகளைத் துரிதப்படுத்தவேண்டும். அப்படித் துரிதப் படுத்தினாலொழிய, வேலை சரிவர நடைபெறாது. சிறு பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கவேண்டும் என்றாலும், அது சாங்ஷன் ஆவதற்கு அநேக நாட்கள் ஆகிறது. சாங்ஷன் வாங்குவதற்குள் பல சங்கடங்கள் ஏற்படுவதோடு, கால தாமதமும் ஏற்படுகிறது. அதனால் கிராமவாசிகளுக்கு இருக்கும் கஷ்டம் சொல்லி முடியாது என்று பேசியிருக்கிறார். காங்கிரஸ்காரர் வெற்றிபெற்ற தொகுதிகளிலே, காரியங்களை அப்படி அப்படியே முடித்துவிடலாம், சர்க்கார் உத்தரவு விரைவில் எளிதாகக் கிடைக்கும். கழகத்துக்காரன் வெற்றிபெற்ற இடமாக இருந்தால் ஒரு வேலையும் நடக்காது என்று சிலர் பேசுகிறார்கள்; விவரம் தெரியாமல் சிலரும்,வேண்டுமென்றே சிலரும். நிர்வாகம் எவ்வளவு தாமதமாக இருக்கிறது என்று திருமதி சௌந்தரம் இராமச்சந்திரன் பேசியிருப்பதைக் கவனித்துப் பார்ப்பவர்கள், சர்க்காரிலே பிடித்திருக்கிற "நோய்’தான், காலதாமதம் ஏற்படக் காரணமேயொழியக் கட்சிப் பிரச்சினை காரணமல்ல என்பதைத் தெரிந்து கொள்வார்கள். எல்லோராலும் முடிகிறதா இப்படித் தெளிவுபெற; பொருள் என்ன இந்த நிலைமைக்கு என்று புரிந்துகொள்ள முடிவதில்லை. எனவேதான், அவர்களிடம் போய்க் கலகம் மூட்டிப் பார்க்கிறார்கள். காங்கிரஸ் மட்டும் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றால், என்னென்ன வேண்டுமோ அவ்வளவும், கண்மூடிக் கண் திறப்பதற்குள் சாதித்துக்கொள்ளலாம் என்று நாக்கில் தேன் தடவுகிறார்கள். ஓட்டு வாங்குவதற்காக மட்டுமே, வெளியே இப்படிக் காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்கள்; சட்டசபைக்கு உள்ளேயோ, சஞ்சலத்தோடு பேசுகிறார்கள்; காங்கிரசாட்சியின் சீர்கேடுகளை இடித்துக் கூறுகிறார்கள். காங்கிரசின்மீது ஒரு தூசு விழுந்தால் தம் கண்ணில் விழுந்ததுபோலக் கருதிக் குமுறுவார், கிருஷ்ணசாமி நாயுடு எனும் காங்கிரஸ் எம். எல். ஏ. அவராலேயே தாளமுடியாமல், "கிராம அபிவிருத்தி வேலைகளைப் பொறுத்த மட்டில் பொது மக்களுக்கு அதிர்ப்தி வளர்ந்து கொண்டு வருகிறது.’’ என்று மந்திரிகளைப் பார்த்துக் கூறினார், சட்டசபையில், குற்றம் குறைகளை எடுத்துக் காட்டுவதும் கண்டிப்பதும், மந்தமாக உள்ள சர்க்காரின் போக்கை மாற்றும். அதற்காகத்தான் காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் அவ்விதம் பேசுகிறார்கள் என்று சமாதானம் தேடிக்கொள்ளக்கூடும். உண்மையில் குறைகளைக் கூறக்கேட்கும் மந்திரிகள், துடித்தெழுந்து காரியமாற்றி நிலைமைகளைச் சரிசெய்கிறார்களா என்றால், அதுதான் இல்லை. உள்ள குறைகளை, ஊழல்களை, சீர்கேடுகளை, முறைகேடுகளை எடுத்துச் சொன்னபடி இருக்கிறார்கள். மந்திரிகளோ, அவைகளைக் காதில் வாங்குவதாக இல்லை. "நாங்கள் தொகுதியிலே இருக்கும் குறைபாடு களைப் பற்றிக் குறிப்புகள் அனுப்புகிறோம். பல விண்ணப்பங்களை அனுப்புகிறோம். ஆனால் அவை களுக்கெல்லாம் பதில் அனுப்புவதில்லை.’’ என்று சட்டசபையில், காங்கிரஸ் எம். எல். ஏ. ஜி. பி. மாணிக்கம் என்பவர், குறைபட்டுக்கொண்டார். காங்கிரஸ் வெற்றி பெறாத தொகுதிகளிலே இருந்து அனுப்பப்படும் மனுக்களைக் கவனிக்கமாட்டார்கள் என்று சில குறைகுடங்கள் கூறுகின்றன. மாணிக்கம், காங்கிரஸ்காரர். அவர் அனுப்பிய மனுக்களும் விண்ணப்பங்களும். காங்கிரஸ் மந்திரிகளால் கவனிக்கப்படவில்லை என்பதை அவரே எடுத்துக் கூறுகிறாரே, இதற்கென்ன சொல்வது! அண்ணாத்துரை போன்ற காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் அனுப்பும் மனுக்களை, காங்கிரஸ் மந்திரிகள், குப்பைக் கூடைக்குத்தான் அனுப்புவார்கள்; காரியம் நடக்காது என்று தரக்குறைவாக, அரசியல் அநாகரிகப் பேச்சுப் பேசுகிறார்கள் அரைவேக்காடுகள்! காங்கிரஸ் எம். எல். ஏ. அனுப்பிய மனுக்கள் எந்தக் கூடைக்குப் போயின என்பதைச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். "இதில் எங்களுக்குத்தான் கஷ்டம் அதிகமாக இருக்கிறது. என்ன வேலை செய்யவேண்டுமென்று தெரிவதில்லை. போட்ட விண்ணப்பத்திற்குப் பதில் இல்லையென்றால் நாங்கள் என்ன செய்வது.’’ என்று கேட்கிறார், மாணிக்கம், காங்கிரஸ் எம். எல். ஏ. காங்கிரஸ்காரர், எம். எல். ஏ. யாகத் தேர்ந்தெடுக்கப் பட்டால், என்னென்ன நன்மைகளோ கிடைக்கும் என்று பேசுகிறார்களே, என்ன பலன் கண்டார்? மாணிக்கம் எனும் காங்கிரஸ் எம். எல். ஏ. காங்கிரசுக்கு எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கும் எம். எல். ஏ. க்களின் எதிரிலேயே, காங்கிரஸ் அமைச்சர்களின் அலட்சியப் போக்கைக் கண்டிக்கிறார்கள், எங்கள் விண்ணப்பங்களைக் குப்பைக் கூடைக்கு அனுப்பி விடுகிறார்களே என்று பேசி ஆயாசப்படுகிறார்கள். நிர்வாகத்திலே ஒழுங்கு இல்லை, சுறுசுறுப்பு இல்லை, பொறுப்பு இல்லை என்று எதிர்க்கட்சிக்காரர்கள் கூறும்போது, மீசை படபடக்கிறது, கோபம் கொந்தளிக்கிறது, காங்கிரஸ் தலைவர்களுக்கு. அதிலும் கழகத்தார் பேசிவிட்டாலோ, வெந்த புண்ணிலே வேல் சொருகுவதுபோல் இருக்கிறதே என்று கூறுகிறார்கள். இல்லாததையா எதிர்க்கட்சியினர் கூறுகிறார்கள்? வேண்டு மென்றே, பழி சுமத்தவேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் பேசுவதுதான் எதிர்க்கட்சிக்காரர்களின் போக்கு என்று அங்கலாய்த்துக்கொள்ளும் அன்பர்கள், இதற்கு என்ன பதில் கூறுகிறார்கள் என்பது தெரியவேண்டும். "நம்முடைய அரசாங்கத்திலிருந்து இலட்சக்கணக் கான பண உதவி ஏழை விவசாயிகளுக்கும், பிற்பட்ட வகுப்பாளர்களுக்கும் அளிக்கப்படுகிறது. ஆனால் அவற்றை அப்படியே நேரிடையாக விவசாயிகள் பெறமுடியாதபடி இலஞ்சம் நடமாடுகிறது. அதிகாரி களை அணுகி அந்தப் பண உதவி முழுவதையும் பெறுவதற்குள் விவசாயிகள் பாதிப் பணத்தை இழந்துவிடக்கூடிய நிலைமையில் இருக்கிறார்கள்.’’ என்று முதியவர் கோமதி சங்கர தீட்சதர் எனும் காங்கிரசு எம். எல். ஏ. சட்டசபையில் பேசியுள்ளார். இலஞ்சம் நடமாடுகிறது என்று காங்கிரஸ் எம். எல். ஏ. யே கூறுகிறார்! கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் காங்கிரஸ் மந்திரிகள்!! எதிர்க்கட்சிக்காரர்கள் என்னென்ன குறைபாடுகள் இந்த ஆட்சியிலே இருப்பதாகச் சொல்லுகிறார்களோ, அவைகளையே, காங்கிரஸ் எம். எல். ஏ. க்களும் கூறுகிறார்கள். வெட்கம், துக்கம், கோபம், எதுவுமின்றிக் காணப்படுகிறார்கள் மந்திரிமார்! எதிர்க் கட்சிக்காரர் இதுபோலப் பேசினாலோ, ஏசுகிறார்கள். இது எந்தவகையான நியாயமோ தெரியவில்லை. இடையிடையே இரண்டொரு புகழுரைகளை வீசிவிட்டு, கழகத்தைத் தாக்கி நாலு வார்த்தை பேசிவிட்டு, காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் ஆட்சியின் போக்கைக் கண்டிக்கிறார்கள். ஆயிரம் திட்டட்டும், நம்மைக் கைவிட்டுவிடாமல் இருக்கிறார்கள் அல்லவா, நமது கட்சியில் இருக்கிறார்கள் அல்லவா, அது போதும் என்பது மந்திரிகளின் எண்ணம். அதிகமாகக் கண்டித்துப் பேசிவிட்டால், அடுத்த முறை கட்சியின் தயவு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயம், சட்டசபையில் இடம்பெற்ற காங்கிரஸ்காரர்களுக்கு. இரு சாராரும், ஒருவர்மீது ஒருவர் ஓராயிரம் குறைகள் கூறிக்கொண்டே, "குடும்பம்’ நடத்துகிறார்கள். அதிகாரம் காங்கிரசிடம் இருப்பதால் மட்டுமே, பிய்த்துக் கொண்டுவராமல், ஒட்டிக்கொண்டு, கிடைத்ததைச் சுவைத்துக் கொண்டு பலர் இருக்கிறார்கள். அதுபோலவே, பண பலம், ஆள்கட்டு, ஜாதி பலம் போன்றவைகள் உள்ளவர்களை இழுத்துப்போட்டு வைத்தால், அவர்கள் எப்பாடுபட்டாகிலும் "ஓட்டு’ வாங்குவார்கள், கட்சி வெற்றி அடையும், அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்பது காங்கிரஸ் தலைவர்களின் எண்ணம். அதனால்தான், காங்கிரசுக்கு எந்தவிதத்திலும் முன் தொடர்பு இல்லாதவர்கள், ஊர் மக்களுக்கு ஒரு துளி உதவியும் செய்தறியாதவர்கள், சொந்த இலாபத்துக்காகக் காலமெல்லாம் பல தொழில்களிலே ஈடுபட்டு உழல்பவர்கள், இன்று காங்கிரசில் சேர்ந்துகொண்டு, தங்கள் இலாப வேட்டைக்குக் குந்தகம் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள். இந்த இடுக்கித் தாக்குதலில் சிக்கி, ஏழை எளியோர் தொல்லைப்படுகிறார்கள். இந்த இடுக்கி இருக்கிறமட்டும், மக்களாட்சி முறை வெறும் கேலிக்கூத்தாகத்தான் ஆக்கப்பட்டுவிடும். மக்களுக்கு "ஓட்டு’ இருக்கும்; ஆனால், அது அச்சம், தயை, தாட்சணியத்துக்குப் பறிகொடுக்கப்படும் பரிதாபநிலை இருக்கும். காங்கிரஸ்காரர் வெற்றிபெறாத தொகுதிகளில் காரியம் சரிவர நடைபெறாது என்று பயமூட்டுவார்கள் - பயமூட்டுகிறார்கள். காங்கிரஸ் எம். எல். ஏ.-க்களே காங்கிரசாட்சியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிப் பேசியிருப்பதிலிருந்து, காங்கிரஸ் வெற்றிபெற்ற இடங்கள். பொன்பூத்த இடங்களாகி விடவில்லை; அங்கு ஆஸ்பத்திரிகளில், டாக்டர் இல்லை! நர்சு இல்லை! கம்பவுண்டர் இல்லை! மருந்து இல்லை! இலஞ்சம் தாண்டவமாடுகிறது! நிர்வாகம் சுறுசுறுப்பாக இல்லை! என்பது விளக்கமாகத் தெரிகிறது. கிராமங்களையும், பழங்குடி மக்களையும், பாட்டாளி களையும், காங்கிரசாட்சி புறக்கணித்தும், கேவலப்படுத்தியும், கொடுமைப்படுத்தியும் வருகிறது சலுகைகள், வசதிகள், அந்தஸ்துகள், இலாபம் தரும் தொழில்கள் யாவும், முதலாளிகளுக்குத் தரப்படுகின்றன. காங்கிரசுக்கட்சி அது யாருக்காக? கனதனவான், முதலாளிக்காக! என்ற நிலைமைதான் இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களோ, பொது மக்கள் இந்தச் சூது சூழ்ச்சியைத் தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணத்தில், சமதர்மம் பேசுகிறார்கள். இவர்கள் பேசும் சமதர்மத்துக்கும் உண்மையான சமதர்மத்துக்கும் சம்பந்தமே கிடையாது. இவர்களுக்குச் சமதர்மத் திட்டத்தை நிறைவேற்றும் ஆர்வமும் கிடையாது; நம்பிக்கையும் நிச்சயம் இல்லை. காங்கிரசாட்சி ஏற்பட்ட பிறகு - இந்தப் பதினான்கு ஆண்டுகளில் முதலாளிகளின் ஆதிக்கம் மலைபோல வளர்ந் திருக்கிறது. ஆனால், மக்களை மயக்க, ஊர் மெச்ச, உலகம் மெச்ச, உதட்டளவில் சமதர்மம் பேசுகிறார்கள். காட்டிலுள்ள புலிகள் எல்லாம் கடும் தவம் செய்த கதைபோல. காங்கிரஸ் கனவான் பேசுகிறார் கதை கதையாக, சமதர்மம்! ★ தம்பி! இதனை எல்லாம் நாட்டினருக்கு எடுத்துக்கூற வேண்டுமே! நானே ஒவ்வொரு இடத்துக்கும் வந்திருந்து இவைகளைக் கூறமுடியுமா - நேரம்தான் கிடைக்குமா - உடல் நிலைதான் இடம் கொடுக்குமா! எனவேதான், உன் மூலம் ஊராருக்கு இவைகளை அறிவிக்க எண்ணுகிறேன். நாட்கள் அதிகம் இல்லை! கூற வேண்டியவைகளோ அடுக்கடுக்காக!! பெரியாரின் தூற்றலைக் கேட்டோ, காங்கிரசாரின் கபடப் பேச்சினைக் கேட்டோ, பொது மக்கள் ஏமாந்துபோய்விடவில்லை என்பதை, ஊரார் உரையாடல் காட்சிகளைக் கண்டால், உணர்ந்துகொள்வாய். ஒரு காட்சி காட்டட்டுமா? நடந்தது எவ்விடத்தில் என்று தானே கேட்கிறாய்? நாட்டில், ஓரிடத்தில்! இரு தாய்மார்கள்! காங்கிரசுக்காக ஓட்டுக் கேட்டுவிட்டு, "தரகர்’ போனபிறகு, உரையாடுகிறார்கள் பெயர் கேட்கிறாயா? வைத்துக் கொள்ளேன், கன்னி - பொன்னி - என்று. கன்னி: வந்தவர் யார்? பொன்னம்மா? வளைந்து நெளிந்து நின்றாரே! பேச்சில் வெல்லம் கலந்தாரே பேந்தப் பேந்த விழித்தாரே! பொன்னி: வாழவிடாமல் வரி போட்டு வாட்டிய காங்கிரஸ்காரரடி கேட்டுவிட்டேன் துணிவாக “ஓட்டு’ இல்லை,”போ’ என்றேன். கன்னி: காதில் இருந்தது காணோமே காரணம் என்ன? பொன்னம்மா? பொன்னி: காங்கிரசாட்சியில் போட்ட வரி கட்ட, கம்மலை விற்றுவிட்டேன். கன்னி: வீட்டுக்காரர், சௌக்கியமா? வேலை கிடைத்துவிட்டதுவா? பொன்னி: வேதனை கேளடி, பொன்னம்மா! வேலை இல்லை! எனும் பலகை எழுதும் வேலை அவருக்கு! நாள் முழுதும் பாடுபட்டால் கிடைப்பது ஒண்ணரை ரூபாய்தான்! கன்னி: ஏழைகள் வாழச் சுயராஜ்யம் என்று பேசினார் இனிப்பாக, ஏமாந்து போனோம் பொன்னம்மா! வருகுது தேர்தல் விரைவாக வாட்டிய காங்கிரசை ஓட்டிடலாம் ஓட்டுகள் நம்மிடம், பொன்னம்மா! "உதயசூரியன்’ ஒளிவிடவே உழைப்பவர் வாழ்வு தழைத்திடவே பாடுபடுவது, தி. மு. க. பொன்னி: அண்ணன் அதைத்தான் சொல்லுகிறார், இருவண்ணக்கொடியை ஏந்துகிறார், திண்ணம் வெற்றி என்று கூறிநித்தம் வாழ்த்துகிறார். கன்னி: உண்மை அதுதான், பொன்னம்மா! “உதயசூரியன்’ நம் சின்னம் ”ஓட்டுகள்’ அதற்கே, போட்டிடுவோம். தாய்மார்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள். தம்பி! காங்கிரசாட்சி, ஏழை எளியோருக்கு இல்லை என்கிற உண்மையை. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தெளிவைத் திகிலூட்டிப் போக்கிவிட, காங்கிரஸ் பலமான முயற்சியில் ஈடுபடுகிறது. ஆனால் அரிசிப்பானை அரசியல் பேசுகிறது! காங்கிரஸ் சாயம் வெளுத்துப்போகிறது. தாய்மார்கள் அதிக விலைகொடுத்து வாங்கிடும் சேலையின் சாயம் போவது காணும்போதே, தொட்டதற்கெல்லாம் வரி போடுவது கண்டு, அவர்கள் வாட்ட மடைந்துள்ளனர். நாட்டை மீட்டவர்கள் என்கிறார்களே! நல்லவர்கள், நம்மவர்கள், என்கிறார்களே! என்று கனிவுகாட்டி ஓட்டுப் போட்டார்கள் - ஆனால் வீடு வாழவில்லை, வேதனை குறையவில்லை, காண்கிறார்கள். எனவே, காங்கிரசாட்சியை நீடிக்கவிடக்கூடாது என்று எண்ணுகிறார்கள். ஆடவர் பேசுவது, அந்த உறுதியை அதிகப்படுத்துகிறது. ஒரு தாய் வயிற்றில் பிறந்தோமா; ஒட்டு உறவு கொண்டோமா என்று கொட்டும் பேச்சுப் பேசாத, குணமுடையார் இருவர், அண்ணன் - தம்பி முறையுடன் பேசுகின்றனர்; எங்கோ ஓரிடத்தில். பெயரா? வைத்துக்கொள்ளேன், காசி, மாசி என்று. காசி: வளருவது காங்கிரசு ஆட்சியிலே என்ன அண்ணேன்? வகையாக எனக்கதனைச் சொல்லு அண்ணேன்! மாசி: எதை என்று நான் உனக்குக் கூறுவேன், தம்பி! என் இதயம், குமுறுதே, எண்ணிக் கொண்டால்; கள்ள மார்க்கட்டு வளருதப்பா! கனதனவான் இலாபம் பெருகுதப்பா! வரிகள் சரமாரி ஏறுதப்பா! வறுமை பிணிபலவும் ஓங்குதப்பா! பெர்மிட்டு லைசென்சு பெருத்துப்போச்சு! பெற்றுத்தரக் கங்காணிக் கூட்டமாச்சு! ஓட்டுக்குத் தர காசு குவிந்துபோச்சு! உண்மை, அன்பு, அறம், பண்பு இளைத்துப்போச்சு ஆட்சியில் ஆணவம் அதிகமப்பா! அச்சம்கொண்ட மக்கள் தொகை கொஞ்சமல்ல! அடுத்துவரும் தேர்தலிலே காங்கிரஸ் கெலித்தால் அடிமைநிலை, தமிழருக்கு, முற்றுமப்பா!! காசி: ஐயய்யே! அண்ணேன்! இதற்கு என்ன செய்யலாம்? அநியாயம் ஒழிய வழி ஒண்ணுமில்லையா? மாசி: கண்ணான என் தம்பி! வழி இருக்குது! பொன்னான வாய்ப்பும் கிடைத்திருக்குது, பொதுத் தேர்தல் சமயத்தில் பொறுப்பை உணர்ந்து, பொல்லாங்கை ஒழித்திட நாம் எல்லாம்கூடி, போட்டிடலாம் “ஓட்டுகளை’ கழகச் சின்னம் அதற்கே!! திக்கற்றோம் என்றே நாம் தேம்ப வேண்டாம்! தி. மு. க. துணை இருக்கு, பயமே வேண்டாம்! தி. மு. க. சின்னம்தான்,”உதய சூரியன்’ தீமைகளை ஒழித்துக்கட்ட "உதய சூரியன்’ இதைத்தான் தம்பி! நாடு அறிய வேண்டும். ஒவ்வொரு வீடும் அறிய வேண்டும். அதனை அறியச் செய்வதற்காகத்தான், நமது கழகக் காவலர்கள் காஞ்சியில் முகாமிட்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டதால் ஏற்பட்ட களிப்பு, என் களைப்பை யெல்லாம் போக்கி, இவ்வளவு நேரம் எழுத வைத்தது. மணி தெரியுமா, தம்பி! நாலு!! விடியப்போகிறது! உதயசூரியன் எழக் காத்திருக்கிறான்! உனக்கு நான் கூறுகிறேன், ஊராருக்கு, நீ, சொல்லு. அன்புள்ள அண்ணாதுரை 3-12-61 ‘’ஐயா? சோறு!’’ ‘’இதோ! நேரு! பாரு’’ விலகியோர் ஏசல் - உதய சூரியன் தொண்டு தம்பி! தேர்தலைப்பற்றி நித்த நித்தம் பேசிக்கொண்டிருக்கிறீர் களே தவிர, ஆட்சியாளர்களின் போக்கை விளக்கி அரசியல் தெளிவு தர முயற்சித்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர தொகுதியில் வாக்காளர்களைச் சந்திக்கும் வேலையைச் சரியாகச் செய்யவேண்டாமா - மக்களுக்கு அரசியல் தெளிவு தருவது ஒரு முக்கியமான வேலை, கடமை, பணி, நான் மறுக்கவில்லை, ஆனால் அதுமட்டும் போதாதே - அவர் பலதடவை வந்தார், பாவம், பரிதாபமாக இருந்தது, கெஞ்சிக் கேட்டார், சரி என்று சொல்லிவிட்டேன்; நீங்கள் வரவே காணோம்; அதனால்தான் அவருக்குச் சம்மதம் சொல்லிவிட்டேன் என்று கூறிவிடுவது சிலருக்கு வாடிக்கையாயிற்றே; வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும்; காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சுறுசுறுப்பாக வண்டு போலச் சுற்றுகிறார்களாமே! - என்றெல்லாம், கவலையுடன் கேட்டுக்கொண்டிருந்தாய் அல்லவா; உன் கவலை எல்லாம் தீரும் அளவுக்கு, இந்தத் திங்கள் முதல் நாளன்று, கழகக் காவலர்கள் காஞ்சிபுரத்தில் ஒரு வீடுகூடப் பாக்கி விடாமல் சென்று, எனக்காக ஆதரவு திரட்டினார்கள். காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டிருந்தது! கண்டவர்கள் களிப்புக் கடலில் நீந்தினர். எத்துணை கனிவுடன், எவ்வளவு விறுவிறுப்புடன் பணியாற்றினர் நம் தோழர்கள் என்கிறாய். மாலை வேளைகளில், வாதங்களைக் காட்டி, கொள்கை யினை நிலைநாட்டி, அப்பழுக்கற்ற ஆதாரங்களைக் கூறி ஆணித் தரமாகப் பேசிடும் பேச்சாளர்கள், "ஐயா! அண்ணா நிற்கிறார் தேர்தலுக்கு. ஆதரிக்கவேண்டும்! அம்மா! நம்ம அண்ணா நிற்கிறார், ஆதரிக்கவேண்டும்!’’ என்று மெத்த உருக்கமாகக் கேட்டுக்கொண்டனர். இன்றும் காஞ்சியில் உள்ளவர்கள் அதுபற்றிப் பேசிப்பேசி மகிழ்கிறார்கள். காஞ்சிபுரத்தில் 32 வார்டுகள் தம்பி! அத்தனை வார்டு களிலும் ஒரே நாளில், நமது உடன்பிறந்தார்! ஊர் முழுதும் நமது கழகத்தோழர்கள் உலாவந்தபடி வீட்டுக்கு வீடு, நமது தோழர்கள் குறித்தே உரையாடல்! ஒரு வேலையும் செய்யாததுபோலத் தெரிந்தது. ஒரே நாளில் பல நாள் வேலையைச் செய்துகாட்டுகிறார்களே - இவர்களுக்குப் பேசத்தான் தெரியும் என்று இதுவரை எண்ணிக்கொண்டிருந் தோம்; "ஓட்டு’ கேட்கிற வேலையிலும் இவர்கள் இத்துணை ஆர்வத்தோடு சலிப்புத் துளியுமின்றி, சோர்வு இல்லாமல் பணியாற்றக் கூடியவர்கள் என்பது இப்போதல்லவா தெரிகிறது என்று ஊரார் பேசிடக்கேட்டு உள்ளம் மகிழ்ச்சி பொங்கிடும் நிலை பெறுகிறேன். என் நன்றியும் பாராட்டுதலும் அன்று அரும்பணியாற்றிய அனைவருக்கும். தம்பி! எங்கள் ஊர் காங்கிரஸ்காரர்களுக்கு, நான் ஆணவத்தோடு அல்ல, அகமகிழ்ச்சியுடன், கழகம் 1957இல் இருந்ததைவிட இப்போது எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், வீணான எதிர்ப்பு வேலையில் ஈடுபட்டு விட்டிருக்கிறீர்கள். பணத்தையாவது பாழாக்காமல் மிச்சப்படுத்திக்கொள்ளுங்கள், 1957இல் எனக்காக ஓட்டு கேட்க ஒரு கார்ப்பரேஷன் கவுன்சிலர் இல்லை! இன்று மூன்று முன்னாள் மேயர்கள்! இந்நாள் மேயர் - துணை மேயர்! முப்பத்துக்கு மேற்பட்ட மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்! எம்.எல்.ஏ.க்கள் பலர்! நகராட்சி மன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், உறுப்பினர்கள் பலப்பலர் வந்துள்ளனர். இந்த வளர்ச்சியைக் கண்ட பிறகும், ஏன் என்னை எதிர்த்து, காசைக் கரியாக்கிக்கொள்கிறீர்கள். வேண்டாம் வீண் வேலை! என்று எடுத்துச் சொன்னேன். அவர்களோ கேட்பதாக இல்லை. வெறும் ஆர்ப்பாட்டத்தாலே அச்சமூட்டிவிடலாம், பணத்தை இறைத்துப் பரபரப்பு ஏற்படுத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள். தம்பி! இது, இந்தத் தொகுதியில் மட்டுமல்ல, எந்தத் தொகுதியிலும். காங்கிரஸ்காரர்கள் இம்முறை ஒரு தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டு வேலை செய்கிறார்கள். கொடிகள் ஏற்றுவது தோரணங்கள் கட்டுவது கொட்டு முழக்கு அடிப்பது தீப்பொறிப் பேச்சு தெருவெல்லாம் உலா இவைகளை எவ்வளவுக்கெவ்வளவு வேகமாகவும், விமரிசை யாகவும், அதிகமாகவும் செய்து காட்டுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு பொதுமக்கள் மயங்கிவிடுவார்கள் - சபலம் ஏற்படும்! - என்று தவறாக எண்ணுகிறார்கள். பொதுமக்களுக்கு உள்ள எண்ண மெல்லாம், இன்று காங்கிரஸ்கட்சி காட்டுகிற சுறுசுறுப்பு, மக்கள் அவதியைத் துடைக்கவேண்டிய நேரத்திலே காட்டக் காணோமே, அப்போது ஐயாமார்களைப் பேட்டி காணுவதே கூட அல்லவா கடினமாக இருந்தது. இப்போதல்லவா ஓடோடி வருகிறார்கள், உபசாரம் செய்கிறார்கள், உறவு கொண்டாடுகிறார்கள், வாக்குறுதி தருகிறார்கள்! - என்றுதான் பேசிக் கொள்கிறார்கள். நம்மைப்பற்றி அப்படி அல்ல; ஏனெனில், நாம் தேர்தலின்போது தலைகாட்டிவிட்டுப் பிறகு இழுத்துப் போர்த்துக்கொண்டு படுத்துத் தூங்கப் போய்விடும் பேர்வழிகள் அல்லவே! நாம் நிரந்தரப் பணியாளர்கள் - வெறும் ஓட்டு வேட்டைக்காரர்கள் அல்ல. இந்தத் தேர்தல், நாடு மீட்டிடும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் நமக்கு வழியிலே வந்து சேர்ந்த வேலை! இது முடிந்ததும், ஈடுபட்டுள்ள வேலையில் மீண்டும் மும்முரமாக ஈடுபட்டுவிடுவோம். நம்மை நாள்தோறும் பார்த்துக்கொண்டும், பேசுவதைக் கேட்டுக் கொண்டும் இருக்கிற மக்களுக்கு, நாம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது வியப்பைத் தரவுமில்லை; காரணம் விளங்காமலுமில்லை. இதற்கு நேர்மாறாக, காங்கிரஸ் அபேட்சகர்கள் பலர்பற்றி, மக்கள் பேசிக்கொள்வது. இவர் எப்போது காங்கிரஸில் சேர்ந்தார்? இவரை எதற்காகக் காங்கிரஸ் சேர்த்துக்கொண்டது? இவருக்கும் பொது வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? இவர் சட்டமன்றம் சென்று என்ன செய்திடமுடியும்? பயிற்சி உண்டா, நேரம் உண்டா, நினைப்பு உண்டா? பற்று உண்டா? என்ற இம்முறையிலேதான். காங்கிரசின் சார்பிலே அபேட்சகராக நிற்பவர்களிலே பலர், காங்கிரசின் மகத்தான சாதனைகளைக் கூறி, மக்களிடம் ஓட்டுக் கேட்பதில்லை; முடிவதில்லை; புரிவதில்லை; ஏனெனில், மகத்தான சாதனைகளைக் காங்கிரஸ் செயல்படுத்திக்கொண் டிருந்தபோது, இவர்கள், அந்தக் காங்கிரஸ் இருக்கும் பக்கம் கூடத் தலைவைத்துப் படுத்ததில்லை! அவர்கள் பாவம், எங்கே ஜாலியன்வாலாபற்றியும், ரவுலட் சட்டம்பற்றியும், லஜபதிராயின் வீரம்பற்றியும், தில்லையாடி வள்ளியம்மையின் தீரம்பற்றியும் பேசப்போகிறார்கள். அபேட்சகர்கள்கூட இருக்கட்டும், தம்பி! புதை பாணம் போலக் கிளம்புகிறார்களே காங்கிரஸ் பேச்சாளர்கள் அவர்களுக்கு மட்டும் புரிகிறதா, அவையெல்லாம் எப்படிப் புரியும்? காங்கிரஸ் முகாமில் இன்று உள்ள பேச்சாளர்களிலேயே ஏகப்பட்ட "கிராக்கி’ யாருக்கு என்கிறாய்? பழைய காங்கிரஸ் காரருக்கு அல்ல! நம்மிடமிருந்து பிரிந்து போனவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்குத்தான்!! அவர்களைவிட்டு நம்மை ஏசச்சொல்லி கேட்பதிலே ஒரு தனிச்சுவை, காங்கிரசாருக்கு. முத்தமிழ் வித்தகர் சண்டமாருதம் சொற்கொண்டல் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் தந்து, பேச்சாளர்களின் தரத்தை மக்களுக்கு அறிவிப்பார்கள் - முன்பெல்லாம். இப்பொழுது காங்கிரஸ் மேடையில் முதல்தரமான பேச்சாளருக்கு என்ன அடைமொழி என்கிறாய்? தடியடிபட்டவர் தண்டி யாத்திரை போனவர் உப்புக் காய்ச்சியவர் கதர் விற்றவர் கள்ளுக்கடை மறியல் செய்தவர் காந்தி பஜனைக்கூடம் கட்டியவர் என்ற இந்தப் பெயர்கள் அல்லவே அல்ல. தி. மு. க.வை விட்டு விலகியவர்! இதுதான் முதல்தரமான அடைமொழி! ஆமாம், தம்பி! பெருங்காயம் இருந்த பாண்டமல்லவா! தி. மு. கழகத்தை விட்டு விலகியவர்! அந்த மணம்தான் இப்போது நல்ல விலைக்கு விற்கிறது, காங்கிரஸ் வட்டாரத்தில். அவர்களுக்குப் பாவம், இன்னும், பேசுகிற "பாணி’ கூட மாறவில்லை! மகாத்மா என்று சொல்ல வரவில்லை, தடுமாறுகிறார்கள்! கதர் கட்டுங்கள் என்று பேசவரவில்லை; கைத்தறியாளர் பற்றிப் பேசிவிடுகிறார்கள். அரிஜனம் என்று சொல்ல வரவில்லை; ஆதித்திராவிடப் பெருங்குடி மக்கள் என்றுதான் பேச வருகிறது. தேசபக்தர்களே! என்று அழைக்க முடியவில்லை! தோழர்களே என்றுதான் பேச முடிகிறது. வேடிக்கையைக் கேளேன், தம்பி! நம்மைவிட்டுப் பிரிந்த ஒருவர் காங்கிரஸ் மேடைக்குச் சென்றாராம். நிரம்பக் காரசார மாகப் பேசினாராம், நம்மை எதிர்த்து; ஒருவர் சீட்டுக் கொடுத்தாராம், மேடையில் வீற்றிருந்த ஒரு காங்கிரஸ் தலைவர்; அதிலே ஐந்தாண்டு திட்டம் பற்றிப் பேசவும் என்று குறித்திருந் தாராம். படித்ததும், அந்தப் பேச்சாளர், ஐந்தாண்டுத் திட்டம் போடுகிறார்கள், ஐந்தாண்டுத் திட்டம், பஞ்சம் போக்கிட பசி நீக்கிட வறுமை ஒழித்திட வாட்டம் துடைத்திட என்று பேசிக்கொண்டே வந்தாராம்; காங்கிரஸ் தலைவர், அடடா, பத்து வருஷங்களாகிறது திட்டம் அமுலாகி, இதுவரை நாம் யாரும் இவ்வளவு சுவையாக, சூடாகத் திட்டம் பற்றிப் பேசினதில்லை; பார் இந்த தி. மு. க. பேர்வழி, எப்படிப் பேசுகிறான் என்று, பக்கத்தில் இருந்தவரிடம் மெல்லிய குரலில் கூறினாராம். இதற்குள் பேச்சாளர், மளமளவென்று கொட்டிய படி இருக்கிறார். அணைகள், மலைமலையாக! தேக்கங்கள், பிரம்மாண்டமாக! தொழிற்சாலைகள், மிகப்பெரிய அளவில்! ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவிடுகிறார்கள். பக்ரா - நங்கல்! தாமோதர் பள்ளத்தாக்கு! சிந்திரி - சித்தரன்ஜன்! பிலாய் ரூர்கேலா! துர்காபூர் - பொகாரா! என்று பேசிக்கொண்டே போனார். காங்கிரஸ் தலைவருக்கு மிகமிக மகிழ்ச்சி. எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள்; விஞ்ஞானக் கூடங்கள்; மாடமாளிகைகள்! கூடகோபுரங்கள்! என்று சித்தரித்தார். முன்னாள், தி. மு. க; பூரித்துப் போனார். அவரைக் குத்தகைக்கு எடுத்த காங்கிரஸ் தலைவர், பேசிக் கொண்டே, அந்தப் பேச்சாளர், இத்தனை பெரிய வளர்ச்சி இவ்வளவு சீரான வளர்ச்சி, இத்துணை செல்வம், எங்கே? எல்லாம் வடக்கே! என்றாரே! ஒரே கைதட்டல்! ஆரவாரம்! காங்கிரஸ் தலைவர் முகம் வெளுத்துவிட்டது. காங்கிரஸ் அபேட்சகரோ கைபிசைந்துகொண்டாராம். போச்சு! 500 ரூபா பாழாப் பேச்சு! பாவி, வடக்கு - தெற்கு பேசுகிறானே என்று. கூட்டத் தலைவர், சட்டையைப் பிடித்து இழுத்து, பேச்சாளருக்கு "சிமிட்டா’ கொடுக்க, அவர் பாவம், பயந்துபோய், பழைய வாசனை விட்டகுறை தொட்டகுறை என்று கெஞ்சும் குரலில் சமாதானம் சொன்னாராம். தம்பி! இரவல் சரக்கு!! வேறு எப்படி இருக்க முடியும்? எது எப்படியிருப்பினும், எவ்வளவு பணம் செலவிட் டாகிலும், பிரசாரத்தை ஆர்ப்பாட்டமாக நடத்தவேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்கிறார்கள் காங்கிரசார்!! பொதுமக்கள் விவரம் விளக்கம் இல்லாதவர்களா! அவர்களுக்குப் புரிகிறது காரணம்; புன்னகை செய்கிறார்கள்!! மரம் பழுத்ததும் வட்டமிடும் வௌவாலை அவர்கள் பார்த்ததில்லையா - இன்று காங்கிரசிலே புகுந்துள்ளவர்களைப் பற்றி அறிந்துகொள்ள அது போதாதா, தனியாக ஒரு ஏடா படிக்கவேண்டும். மார்கழி மாதம் குடுகுடுப்பைக்காரன், நல்ல காலம் பிறக்குது என்று பாடுவதை அவர்கள் கேட்கவில்லையா - தேர்தலின்போது "வரம்’ கொடுக்கும் காங்கிரசாரின் போக்கைப் புரிந்துகொள்ள, அவர்கள் புதிதாகப் பள்ளிக்கூடமா போக வேண்டும்! பாடுபட வந்திருக்கிறார் தொண்டாற்ற வருகிறார் ஊழியம் புரிய வருகிறார் என்று காங்கிரஸ் அபேட்சகர்பற்றிப் பேச்சாளர் பேசும்போது மக்கள் என்ன எண்ணுகிறார்கள் என்கிறாய், இவரா தொண்டு புரிபவர்? எப்போது வந்ததாம் அந்த எண்ணம்? ஏழையின் தலையைத் தடவுவார்! எதுவும் தனக்கு என்று தேடுவார்! ஏமாளியிடம் தட்டிப்பறித்து ஏப்பம் விடுவார்! இளைத்தவன் சொத்தை ஏலம் எடுப்பார்! குடிசைகள் இருந்தால் பிரித்துப் போடுவார்! கோயிலாக இருந்தாலும் கொண்டுவா, கடப்பாரை என்பார்! இவரா, பொதுத்தொண்டு ஆற்றுபவர்? கட்டிய சத்திரம் எத்தனை? வெட்டிய திருக்குளம் உண்டா? பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தாரா? பசித்தவனுக்குச் சோறு போட்டாரா? பசுவுக்குக்கூட அகத்திக்கீரை தந்திருக்கமாட்டார். இவர் பொதுமக்களுக்கு ஊழியம் செய்யப்போகிறாராம், ஊழியம்!! என்றுதான் எண்ணிக்கொள்கிறார்கள். உள்ளூரச் சிரிப்பு அவர்களுக்கு. மகாத்மாவுக்கு ஜே! என்றும், நேருவுக்கு ஜே! என்றும், இந்தத் தேர்தல் காங்கிரஸ்காரர்கள், திடீர் காங்கிரஸ் காரர்கள் கூவுவது, ஏறக்குறையப் புரட்டாசி மாதத்திலே போடப்படும் “கோவிந்தா’ போல, என்பது பொதுமக்களுக்குத் தெரியாமலில்லை. அவர்களும் ஒரு காரியமாகத்தான், இந்த”கூத்தை’ப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரமாகப் பார்த்தா, சஞ்சீவி ரெட்டியாரும், துணை அமைச்சர் இலட்சுமி மேனன் அவர்களும், கண்டவர்கள் காங்கிரசில் சேர்ந்ததாலே காங்கிரசின் கண்ணியமே பாழாகிவிட்டது. என்று வெளிப்படையாகப் பேசித் தொலைக்கவேண்டும். பொதுமக்கள் இதையும் அறிந்திருக்கிறார்கள்; இன்றுள்ள காங்கிரஸ்காரர்களை, குறிப்பாகக் காங்கிரஸ் அபேட்சகர் களையும் பார்க்கிறார்கள்; அவர்களுக்குச் சிரிப்புத்தான் வருகிறது. மற்ற மற்றக் கட்சிகள் யாவும் அந்தந்தக் கட்சியின் சார்பிலே அபேட்சகர்களை நிற்கவைக்கும்போது, அந்தக் கட்சியின் கொள்கையில் உறுதி படைத்தவர், கொள்கைக்காகப் பாடுபட்டவர், கொள்கையைக் கடைப்பிடித்தபோது ஏற்பட்ட கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக்கொண்டவர், இந்தக் கொள்கைக்காரர் என்று பொது மக்களுக்கு நீண்டகாலமாக அறிமுகமாகி உள்ளவர் இப்படிப்பட்டவர்களைத்தான் நிற்க வைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஒன்றுதானே, யாரிடம் பணம் இருக்கிறது? யாரிடம் ஜாதித் செல்வாக்கு இருக்கிறது? யாரிடம் அடி ஆட்கள் அதிகம்? என்று மட்டும் கவனித்து, கொள்கை அறிந்தவரா, கொள்கை வழி நின்றவரா என்று துளியும் கவனிக்காமல், இவர்தான் காங்கிரஸ் அபேட்சகர் என்று கூச்சமில்லாமல் கூறுகிறார்கள். இது பொதுமக்களுக்குப் புரியவில்லையா? புரிகிறது! இந்த நிலைமையால் காங்கிரசின் புனிதத் தன்மையும் பொலிவும் வலிவும் பாழாகிக்கொண்டு வருகிறது என்பதும் விளக்கமாகிறது. பாலிலே தண்ணீர் கலக்கக் கலக்க, பாலின் தன்மை கெட்டுவிடுகிறது; ஆனால் பார்ப்பதற்கு பால்போல வெளுப் பாகத்தான் தெரிகிறது. அடுப்பின்மீது ஏற்றிக் காய்ச்சும் போதல்லவா அதன் இலட்சணம் தெரியும்! தண்ணீர் ஆவியாகிப் போகும், பால்மட்டும்தான் மிச்சமாகி நிற்கும். அதேதான், காங்கிரசுக்குக் கதியும். தேர்தலில் சரிவு ஏற்பட்டால், தீர்ந்தது, ஒட்டிக்கொண்ட ஒய்யார புருஷர்கள், கண் சிமிட்டிய கனதனவான்கள், சீவிச் சிங்காரித்த சீமான்கள், ஓடோடிப் போய்விடுவார்கள்? காங்கிரசிடம் பற்றுக்கொண்ட, பணிபுரிந்த தொண்டர்கள், தூயவர்கள் மட்டும்தான் மிச்சமாக நிற்பார்கள். காங்கிரஸ் தலைவர் சஞ்சீவ ரெட்டியார், மற்றும் பலர், கண்டவர்கள் காங்கிரசில் சேர்ந்துவிட்டதுபற்றிச் சோகக் குரலிற் பேசுவது கேட்டுப் பொதுமக்கள் சிந்திக்காமல் இல்லை! கண்டகண்ட பேர்வழிகள், கபடநோக்குடன் காங்கிரசிலே நுழைந்தபோது, எப்படி, பழைய காங்கிரசார், தலைவர்கள், உண்மைத் தொண்டர்கள் இடம் கொடுத்தார்கள்! தானாக முளைத்துவிட்ட களையை உழவன் பறித்தெடுத்துவிட்டல்லவா, பயிர் தழைக்கச் செய்கிறான்; இவர்கள் களைகளைத் தாமாகக் கொண்டுவந்து பயிர் நடுவே நடுகிறார்களே; அதுமட்டுமல்ல, புல்பூண்டு, நச்சுக்கொடி இவைகளை நடுவதற்காகப் பயிரைக்கூட அழிக்கிறார்களே, இது என்ன கெடுமதி - என்றுதான் பேசிக் கொள்கிறார்கள். செலவு ஏராளமாகவும் தாராளமாகவும் செய்யக்கூடிய சீமான்களைத் தேர்தலுக்காகச் சேர்த்துக்கொண்டு, பிறகு ஊர்மெச்ச, உயர்ந்த தத்துவம் பேசத்தொடங்கி, கண்டவர்கள் காங்கிரசில் சேர்ந்ததால், காங்கிரசே கெட்டுவிட்டது என்று உபதேசம் செய்கிறார்களே, தம்பி! யாருக்கு இந்த உபதேசம்! ஊரார் இதைத்தான் கேட்கிறார்கள். வேலப்பனும் வீரப்பனும் இதுபற்றிப் பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளேன் - எவ்வளவோ பேர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் - எப்படி இருக்கும் அவர்கள் பேச்சு என்பதைக் கவனித்திருக்கிறாயா! சிறிது கவிதை நடையும் சேர்த்துப்பாரேன். வேலப்பன்: ஆளுங் கட்சியான பிறகு ஐயோ காங்கிரஸ் கட்சியிலே கண்டவர் நுழைந்து கொண்டனரே! கதருடை போட்டுக் கபடமுடன் மாண்பும் மதிப்பும் மடிகிறதே மகாத்மா கண்ட காங்கிரசில். சஞ்சலத்துடன் இதைச் சொல்லுகிறார் சஞ்சீவியார், காங்கிரஸ் தலைவர்! வீரப்பன்: சஞ்சலப் படுவதில், புண்யமில்லை வஞ்சகர் நுழைவைத் தடுத்திடலாம் நடப்பது முற்றிலும் வேறப்பா! நாடுகிறார்! ஓடித் தேடுகிறார் பாடு பாடுபோரை அல்ல! அல்ல! ஊரை அடித்து உலையில் போடும் உத்தமரை! எத்தர்களை!! தேர்தலில் பணத்தைச் செலவுசெய்ய தேடுகிறார், பணமூட்டைகளை! வலையை வீசுது காங்கிரஸ் வஞ்சகர், சூதர், யாவருக்கும். வேலப்பன்: ஆமாம், அதுவும் உண்மைதான்! ஆகாதென்பது உண்மையென்றால் அவர்களைக் காங்கிரஸ் சேர்க்கலாமா? சேர்த்துக் கொண்டவரே, ஒருநாள் கன்றும் பன்றியும் ஒன்றாச்சே எனக் கதறிவிடுவதால் பயனில்லை. வீரப்பன்: காங்கிரசிலுள்ளவர் இலட்சணத்தை காங்கிரஸ் தலைவரே, சொல்-விட்டார். காங்கிரசுக்கா, "ஓட்டு’ இனி? கபடம், சுயநலம், முடிசூடவா? கேட்டிடுவோம். வா, நாட்டினரை. வேலப்பன்: கழகம் அதைத்தான் சொல்கிறது அதன் கரமும் வலுத்தால், நீதிவெல்லும். கபடம் சுயநலம் உடைபட நாம் போட்டிடுவோம் நம் ஓட்டுகளை. "உதய சூரியன்’ சின்னம் அதற்கே! தம்பி! இதுபோலப் பொதுமக்கள் முறையாகப் பேச, சுவையாகப் பாடிட முடியாது; எண்ணுகிறார்கள் நிச்சயமாக. அவர்தம் எண்ணத்திற்கு வண்ணமளித்து, நாட்டிலே பாட்டு மொழியில் எடுத்துரைக்கும் பொறுப்பு உன்னுடையதல்லவா? உனக்கன்றி வேறு எவருக்கு உண்டு அதற்கான திறமை! பதினான்கு ஆண்டு சுயராஜ்யத்துக்குப் பிறகு, முன்னாள் டில்லி நிதி அமைச்சர், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறுகிறார்: 100க்கு 95 மக்கள் பஞ்ச நிலையில்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். என்று. இந்த நிலைமையை ஏற்படுத்திவிட்டு, "ஓட்டும்’ கேட்கிறார்களே, ஓட்டப்படவேண்டியவர்கள். இந்த அரசியல் அக்ரமத்தை உலகில் வேறு எங்கு காணமுடியும்! ஏழை மக்களைப் பார்த்துக் காங்கிரஸ் கட்சி "ஓட்டு’ போடும்படி கேட்கும்போது, அவர்கள் மனம் என்ன வேதனை அடைகிறது என்கிறாய். ஓட்டுக்கேட்குது காங்கிரசு என்னை ஓட்டாண்டியாக்கிவிட்டு என்றல்லவா ஏழை எண்ணுகிறான்; அவனால் எண்ணத்தான் முடியும்; மனதில் உள்ளதை எடுத்துக்கூற முடியுமா? அந்தப் பணி உன்னுடையது! அந்தத் திறமை உன்னிடம் நிரம்ப உண்டு! ஐயா! சோறு! என்று ஏழை கேட்கிறான் காங்கிரசார் பதில், என்ன தருகிறார்கள் இதோ! நேரு பாரு! இவ்வளவுதானே! பார்க்கிறான் நேருவை! கேட்டு மகிழ்கிறான் அவர் ஆற்றிய தொண்டுகளை! ஆனால் அந்த நேரு நடத்தும் காங்கிரசில் இன்று சேர்ந்து ஓட்டுக் கேட்கும் உத்தமர்களின் இலட்சணமும் தெரிகிறதே - வயிறு அல்லவா அவனுக்குப்பற்றி எரிகிறது!! என் கணவனை வெட்டிய கொடுவாள் இது - இதற்கு வெள்ளிக்கிழமைதோறும் நான் பூஜை செய்வேன் என்று எந்த மாதாவது கூறத் துணிவாளா? காங்கிரஸ் பேச்சாளர்கள் துணிந்து கூறுகிறார்களே, இவர்தான் காங்கிரஸ் அபேட்சகர் என்று, வாய்மை, தூய்மை, அறிவுடைமை, அன்புடைமை, அறம், நெறி, தன்னலமற்ற தன்மை, தொண்டு உள்ளம் எனும் எல்லாவற்றையும் சிதைத்துவிட்டவர்களைப் பிடித்திழுத்துக்கொண்டு வந்து. காந்தீய போதகர் சங்கத்தைக் கோட்சே துவக்குவது போலல்லவா இருக்கிறது. காங்கிரசின் கொள்கைளைக் கடுகளவும் மேற்கொள்ளாமல் முற்றிலும் மாறாக நடந்தவர் களைக் காங்கிரஸ் அபேட்சகர்கள் ஆக்குவது. தம்பி! என்னைக் கேட்கிறார்கள், தலைவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு, காங்கிரஸ் தொண்டர்கள், சுதந்திரா கட்சியுடன் கூட்டுச் சேரலாமா? கம்யூனிஸ்டுடன் உறவாடலாமா? என்று. ஊரிலே உள்ள உலுத்தர்களுடன் உறவாடுவதுமட்டுமல்ல, அவர்களுக்காக உலா வந்து உரத்த குரலில் முழக்கமிட்டு, ஓட்டு வாங்கிக் கொடுக்கிறோமே, இது காங்கிரஸ் கட்சியின் கண்ணியத்துக்கு ஏற்றதா, காங்கிரஸ் தொண்டர் என்ற தரத்துக்கு ஏற்றதாகுமா என்று எண்ணிப்பார்க்கிறார்களா? அதுதான் இல்லை! ஏன்? கட்சிக்காக வேலை செய்கிறோம். ஆளுக்காக அல்ல என்ற போலித் தத்துவம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. பால் தருவதுதான் பசு! நாலு காலும் ஒரு வாலும் கொண்டவை அத்தனையும் பசு ஆகுமா! கொள்கைக்காகத்தான் கட்சி! கட்சிக்குள்ளே நுழைந்து விட்டவர்களெல்லாம் கொள்கையாளர் என்று கூறிவிட முடியாதே! எந்த ஊருக்குப் போகவேண்டுமோ அந்த ஊர்ப்பக்கம் போகிற இரயில் ஏற வேண்டுமேயன்றி, எந்த இரயில் பளபளப் பாக இருக்கிறதோ, அதில் ஏறிக்கொண்டு, போய்ச் சேர வேண்டிய ஊருக்குப் போய்ச் சேரவா முடியும்! அதுபோலத்தானே, ஒரு கட்சியை வளர்ச்சி அடையச் செய்யவேண்டுமானால், அதனுடைய கொள்கைக்குச் செல்வாக்குத் தேடவேண்டும், கொள்கையின்படி நடப்பவர் களை மதிக்கவேண்டும், ஆதரிக்கவேண்டுமேயொழிய, யார் அதிகக் கொடிகள் தைத்துக் கொடுப்பார்கள், எவரிடம் அண்டினால் பணம் தண்டலாம் என்றா பார்ப்பது! தம்பி! இவைபற்றிய எண்ணம், காங்கிரஸ் தொண்டர் களுக்கு எழத்தான் செய்கிறது. எனினும், கட்சியில் ஈடுபாடு கொண்டுவிட்டதால், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், மெத்தக் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுடைய எண்ணம் ஈடேறவில்லை. அவர்கள், சுயராஜ்யம் சுயராஜ்யமாக இருக்கும் என்று தான் எதிர்பார்த்து உழைத்தார்கள்; இன்று அவர்கள் கண்ணெதிரே சூதுராஜ்யம் நடக்கிறது; மனம் குமுறுகிறார்கள் என்றாலும், துகில் உரியப்பட்ட நேரத்தில் துரோபதை கதறியது பாண்டவர் செவிகளில் விழாமலா இருந்தது. அர்ஜுனனிடம் வில் அம்பு இல்லையா - பீமனிடம் "கதை இல்லையா’ ஆனால், என்ன செய்ய முடிந்தது? சூதாடித் தோற்றுவிட்டோம் என்று தருமர் கண்கலங்கி உட்கார்ந்துவிட்டார் - மற்றவர்கள் மனம் உடைந்து உட்கார்ந்துவிட்டனர். காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி வெற்றிபெறவேண்டும் என்பதற்காகத் தேர்தல் சூதாட்டமாடி, தங்கள் பழம் பெருமை, தியாக உணர்வு யாவற்றையும், குட்டிக் குபேரர்களிடம் இழந்துவிட்டார்கள்; துகில் உரியப்படுவது போல, காங்கிரஸ் கட்சியைக் கனதனவான்கள் தொட்டிழுக் கிறார்கள் - இவர்களோ, பாவம், பல்லைக்கடித்துக்கொண்டு இருக்கிறார்கள். தம்பி! அவர்களுக்காகவும் சேர்த்துத்தான் நாம் பணியாற்ற வேண்டும். நாம் வீழ்த்த விரும்பும் காங்கிரஸ் கட்சி, உண்மைக் காங்கிரஸ் தொண்டர்களை வீழ்த்திவிட்ட காங்கிரஸ்! நாம் வீழ்த்த விரும்பும் காங்கிரஸ் கட்சி, மகாத்மாவின் காங்கிரசல்ல, மாபாதகம் புரிவோருக்கெல்லாம் இடமளித்துள்ள காங்கிரஸ் கட்சி! அரசியல் ஏடுகள் படித்திட நேரமில்லாவிட்டாலும், கட்சி களில் ஈடுபடக் காலம் இடந்தாராவிட்டாலும், சாதாரண மக்கள் - உழைப்பாளிகள், தாய்மார்கள், பல காரியங்களிலே எத்துணை தெளிவுடன், பகுத்தறிவுடன் நடந்துகொள்கிறார்கள் - அவர் களின் போக்கைக் கண்டுகூடத் தெளிவுபெறலாமே, பாடம் கிடைக்குமே. எதை எதை எங்கெங்கு வைக்கவேண்டும், எதை எதை எப்படி எப்படி உபயோகிக்கவேண்டும், எதை எதை எப்போது எப்போது உபயோகிக்கவேண்டும், என்று மிகச் சாதாரண காரியங்களிலேகூடத் தெளிவுடன் நடந்துகொள்பவர்களை, படித்தும் பக்குவம் பெறாதவர்கள். “பாமரர்’ என்று அழைக் கிறார்கள்; அந்தப்”பாமரர்’ செயல்களிலிருந்து பெறக் கிடைக்கும் பாடத்தின்படி நடந்துகொண்டால்கூடப் போதும், செம்மை யான அரசியல் நடத்தலாம். தேங்காயின் மேல் உள்ள மட்டை ஓடு இவைகளை நீக்கிவிட்டு, உள்ளே உள்ளதை மட்டும்தான் எடுத்துக்கொள்ளுகிறார்கள் - பயன் அறிந்து. மாங்காய்க்கோ, முறை வேறு! மேலே உள்ள தோலையும் எடுத்துவிடுகிறார்கள், உள்ளே காணப்படும் "விதை’யையும் நீக்கி விடுகிறார்கள். மோர் கடைகிறார்கள்; வெண்ணெய் காய்ச்சுகிறார்கள்! வாழை இலையில், சோறு வைத்துச் சாப்பிடுகிறார்கள்; பனை ஓலையில் விசிறி தயாரிக்கிறார்கள்! வேப்பம்பூ எடுத்து "ரசம்’ வைக்கிறார்கள்; பூசுணைப்பூவை அல்ல! இதுவும் பூ அதுவும் பூ! வாழைக்காயை, வேகவைக்கிறார்கள்; பழத்தை பழமாகவே சாப்பிடுகிறார்கள். பால் காய்ச்சும்போது நெருப்பை அடக்கிவைக்கிறார்கள்; பருப்பு வேகவைக்கும்போது விறகை ஏறத்தள்ளுகிறார்கள். கோழியைக் கூடைபோட்டு மூடிவைக்கிறார்கள்; கன்றினைக் கயிறுகொண்டு கட்டிவைக்கிறார்கள்! இவைகள் எல்லாம் மிகச் "சாமான்யமான’ காரியம்; ஆனால் இவைகளில் ஒரு ஒழுங்கு, முறை இருக்கிறதே! பால் பானையை உறியில் வைக்கிறார்கள்; ஊறுகாய் பானையை அவ்விதம் அல்லவே!! எது எது எங்கெங்கு இருக்கவேண்டும் என்பதற்கான முறைகெட விடமாட்டார்களே? உரலில் போட்டுக் குத்தவேண்டியது இது, அம்மியில் வைத்து அரைக்கவேண்டியது இது. இயந்திரத்தில் போட்டு அரைக்கவேண்டியது இது என்று "பாகுபாடு’ இருக்கிறதே; அது கெடாதபடி அல்லவா நடந்துகொள்கிறார்கள். அடுக்களையில் உள்ள தாய்மார், எதை எங்கு வைக்க வேண்டும், எதை எப்படிச் செய்யவேண்டும், எதை எப்போது செய்யவேண்டும் என்று தெரிந்து செயல்படுகிறார்களே, தம்பி! அரசியல் கட்சிகள் இந்த அளவுக்குத் தெளிவுடன், காரிய மாற்றக்கூடாதா? இல்லையே! வருகிற தொல்லையில் பாதி அளவுக்குமேல் இதனால் வருவதுதானே! தேனில் குழைத்துச் சாப்பிடவேண்டியது, பாலில் கலந்து சாப்பிடவேண்டியது, வாயில் போட்டு தண்ணீர் விழுங்கிட வேண்டியது என்று ஒவ்வொரு முறை இருக்கிறதே, தம்பி! அதுபோல எதை எதை எந்தெந்த முறையில் பயன் படுத்துவது என்று அரசியல் கட்சிகள், தெளிவுடன் நடந்து கொள்ளவேண்டாமா? நடந்துகொள்ளக் காணோமே!! சந்தைக் கடையில் இருக்கவேண்டியவர்களைச் சட்ட சபைக்கு அனுப்புவது, கட்சியின் நன்மைக்காக என்று கருதுவது, தாய்மார்களுக்குத் தெரிந்த அளவு தெளிவும் அரசியல் கட்சிப் பணியாளர்களுக்கு, கட்சிப்பற்றுக் காரணமாகத் தெரியாமல் போய் விடுவதால்தான்! அந்தத் தெளிவு இல்லாமல், கட்சிக்காகக் கண்டவர் களுக்குக் கொடிபிடித்துக் கோலோச்சும் இடத்திலே கொண்டுபோய் அவர்களை உட்காரவைத்துவிட்டு, அவர் களால் கட்சிக்கும் கேடு ஏற்பட்டு, நாட்டுக்கும் நாசம் ஏற்படக் கண்டு, பிறகு கண்களைக் கசக்கிக்கொள்வதும், கைபிசைந்து கொள்வதும், காங்கிரஸ் தொண்டர்களின் "கதி’யாகிவிட்டது. இவர்களின் உழைப்பால் ஊராள்வோராக மாறிவிட்ட வர்கள், ஏழைகளை மறந்து, எத்தர்களுடன் கூடி, முத்தனைக் காப்பாற்றாமல் முந்திராவுடன் குலவி, பாடுபடுபவன் கூலி உயர்வு கேட்டால் சுட்டுத் தள்ளும் பாதகர்களுக்குப் பரிவு காட்டும் நிலை பெறுபவர்களைக் கண்டு பதறிப் பதைபதைக்கிறார்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு, ஆளைக் கவனியாமல், எவரெவரை எந்தெந்தக் காரியத்துக்குப் பயன்படுத்தவேண்டும் என்பதையும் எண்ணிப் பார்க்காமல், தாய்மார்கள் மிகச் சாதாரணச் செயல்களில்கூடக் காட்டும் சீரான முறைகளைக் கண்டும் தெளிவுபெறாமல், உட்காரும் மணை சதுரமாக இருக்க வேண்டும்; உருண்டோடும் சக்கரம் வட்ட வடிவமாக இருக்க வேண்டும் என்பதுபோல, எந்தவிதமான காரியத்துக்கு எந்தவிதமாக ஆற்றல் இருக்கவேண்டும் என்பதை அறிந்து, அதற்கேற்றபடிதான் ஓட் அளிக்கவேண்டும் என்று எண்ணிப் பாராமல், "கட்சியைக் கவனி! கட்சியைக் கவனி!’ என்ற பேச்சுக்கு இரையாகித் தகுதி திறமை அற்றவர்களைத் தர்பாருக்கு அனுப்பி விட்டு, அவர்கள் ஆட்சியாலே அடுக்கடுக்காக அல்லல் வரக் கண்டு, ஓட்டுப் போடச்சொன்ன காங்கிரஸ் தொண்டர்களைப் பார்த்து, ஐயா! சோறு! என்று ஏழை கேட்கிறான். என்ன செய்வது? எப்படி ஏழ்மையைத் தீர்ப்பது? ஆளவந்தார் களை எப்படிக் கேட்பது? என்று புரியாமல், திகைத்துப்போகும் காங்கிரஸ் தொண்டர்கள், ஐயா! சோறு! என்று கேட்கும் ஏழையிடம் இதோ! நேரு! பாரு! என்று காட்டிக்கொண்டிருக்கிறார்கள். தம்பி! இந்த நிலைமை யினை நாடறியச் செய்யவே, பொதுத்தேர்தல் வருகிறது. அந்தப் பொறுப்பறிந்து நடந்துகொள்ளும் பொன்னான குணம் படைத்த உனக்கு, இன்னும் சொல்லவாவேண்டும்! செயலாற்று! வெற்றி பெறு!! அன்புள்ள அண்ணாதுரை 10-12-1961 வேலை அதிகம். . . நாட்கள் குறைவு. தமிழக வீரவரலாறு - தி. மு. க.வும், தேர்தலும் தம்பி! சென்றகிழமை உன்னுடன் அளவளாவும் வாய்ப்புப் பெற்றிடஇயலவில்லை; இங்கிருந்து பசியால் விரட்டப்பட்டு, மராட்டிய மண்டலம் சென்று, ஆலைகளிலும் அங்காடிகளிலும் அலுவலகங்களிலும் வேலைசெய்து வாழ்நாட்களை ஓட்டிக் கொண்டுவரும், நம் உடன்பிறந்தார்களைக் காணச் சென்றிருந் தேன். அங்கு நான் கண்ட காட்சிகளையும், ஏற்பட்ட எண்ணங் களையும் எடுத்தெழுத ஏடு போதாது என்பது மட்டுமல்ல, எழுதத் தொடங்கினால் ஏற்படக்கூடிய எண்ணக் குமுறல்கள் உள்ளனவே, அவை என்னையும் வாட்டி வதைக்கும். படித்திட நேரிடும்போது உன் மனதையும் நோகச் செய்திடும், தமிழகத்தின் தாழ்நிலையை உலகுக்கு எடுத்துக்காட்ட, தொழில் வளமற்ற நிலையைப் பாருக்குக் காட்ட, பிழைப்புத் தேடி அலைபவர்கள், பிடி ஆட்களாகின்றவர்கள், பிறந்த நாட்டைத் துறந்தவர்கள் என்ற நிலைக்குத் தமிழ்ப்பெருங்குடி மக்கள் ஆக்கப்பட்டுப் போயுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டப் பல்லாயிரக்கணக் கான பாட்டாளிக் குடும்பங்கள், பாதை ஓரங்களிலே குடில்கள் அமைத்துக்கொண்டு, குப்பைக்கு நடுவே, குளிரால் கொட்டப் பட்டுக் கோலம் மாறி, திசை தவறிய மரக்கலம்போல், சிறகொடிந்த பறவைகள்போல், புழுதிபடிந்த சித்திரம்போல், நரம்பறுந்த யாழ்போல் உள்ளனர். இதைக் காணத்தானா நான்! இந்நிலையில் நம்மவர்கள் இருப்பதைக் காணவா, இப்பாழும் கண்கள்! என்று எண்ணி நெஞ்சு நெக்குருகிற்று. என் செய்வது! தங்கம் விளையும் நாட்டுக்குச் சொந்தக்காரர்கள் - பரணி பாடிய பரம்பரையினர் - தரணி மெச்ச வாழ்ந்தவர்கள் - இன்று ஒரு கவளம் சோற்றுக்கு வழிகாண, காடு மலை, வனம் வனாந்திரம் கடந்து, வடபுலம் சென்று, வாழ்க்கைப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆறு அடுக்கு, எட்டு அடுக்கு மாடி களுக்குப் பக்கத்தில், ஓலைக்கொத்துக் குடிசைகள் - தகரத்தா லான கூரைகள் - அட்டையால் அமைக்கப்பட்ட இருப்பிடங்கள் - அங்கு, சேர சோழ பாண்டிய பரம்பரையினர்!! படைபல நடாத்தி வெற்றிபல பெற்று, வாகைசூடி வாழ்ந்தவர்களின் வழிவழி வந்தவர்கள், இன்று, செல்வம் கொழித்திடும் வடவரின் சீமையிலே, கைகட்டி வாய்பொத்திக் கடினமான வேலைகள் செய்து உழன்று கிடக்கிறார்கள். உடலின் மினுமினுப்பையும் உறுப்புகளின் கவர்ச்சியினையும் எடுத்துக் காட்டிடும், வண்ண ஆடைகளை உடுத்திக்கொண்டு, களிநடமிடும் கண்ணினராய், புன்னகை சிந்திடும் இதழினராய், பொன்னவிர் மேனியர் அங்கு பொலிவுடன் உலா வருகின்றனர் - தலைவிரி கோலமாய் கிடக்கும் நம் தமிழரை, அருவருப்புடன் பார்த்த வண்ணம். ஒரு நாடு தாழ்ந்துகிடக்கிறது, ஒரு அரசு நிலைகுலைந்து இருக்கிறது என்பதற்கு, அந்நாட்டவர் வேற்றிடம் சென்று விம்மிக்கிடக்கும் வேதனைதரும் நிலைபோதும், சான்றளிக்க. வடநாடு வாழ்கிறது, தென்னாடு தேய்கிறது என்று கூறும்போது மூக்குச் சிவந்து விடுகிறது இங்குள்ள அரசியல் தரகர்களுக்கு. பம்பாய், ஆமதாபாத் போன்ற இடங்களில் அமைந்துள்ள வடவரின் வணிகக் கோட்டங்களையும், தொழிலகங்களையும், ஆங்கு கூலிகளாய்க் கிடக்கும் தென்னாட்டவர்களையும், ஒருசேரக் கண்டுவிட்டால்போதும், மறுப்புரைப்போரின் மனமே கூட அனலிடை மெழுகாகும். ஆனால் தம்பி! அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் அவர் களின் அன்புணர்ச்சியை என்னென்பேன்! கண்டதும் அவர்கள் கசிந்துருகி நிற்கிறார்கள் - கட்டித் தழுவியபடி, தழதழத்த குரலிலே, அண்ணா! என்று அவர்கள் என்னை அழைத்தபோது, கண்ணீரை என்னால் அடக்கிக்கொள்ள முடியவே இல்லை!! அந்த ஒரு சொல் உள்ளத்திலிருந்து பீறிட்டுக்கொண்டு கிளம்பிய அந்தச் சொல் - அழைப்பா? திகைப்பா? அலறலா? அழுகையா? அகமகிழ்ச்சியா? என்று என்னால் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. அண்ணா! அருந்தமிழ் நாட்டின் வீர வரலாற்றினை அடுக்கடுக்காகக் கூறுவாயே! காவிரி, தென்பெண்ணை என்றெல்லாம் கனிவுடன் பேசுவாயே! கோட்டை கட்டியோர், கொத்தளம் அமைத்தோர் என்று வீர உரையாற்றுவாயே! போரிலே புலிநிகர் மாந்தர் என்று புகழுரை பொழிவாயே! பிற பிற இடங்களிலே, மக்கள் ஆட்சிமுறை வகுக்காமுன்பே குடிக் கோனாட்சி முறையினைத் திறம்பட நடத்தி, மக்களை வாழ வைத்த இடம், திருஇடம் என்று தித்திப்புப் பேச்சுப் பேசுவாயே! செய்தொழில் பலப்பல! செல்வம் குறைவின்று! என்று சிறப்பினைச் செப்புவாயே!! கார் உலாவும்! சீர் உலாவும்! எங்கும் பசுமை! எங்கணும் செல்வம்! பழமுதிர் சோலைகள்! என்றெல்லாம் நாட்டு நிலையைப் படம்பிடித்துக் காட்டுவாயே! மணிமாடங்களில், கூடங்களில் ஆடல்பாடல் மிகுந்திருக்கும்! வயலோரத்திலே அமைந்த சிற்றூர்களிலே, சின்ன இடை துவள அன்னநடை நடக்கும் செல்வியர் இருப்பர்! செங்கரும்பு செழித்திருக்கும்! வாளை துள்ளும்! மலர் மணம் பரப்பும்! - என்று மகிழ்ச்சி பொங்கிடக் கூறுவாயே!! முத்தமிழின் மாண்பினையும், மூதறிஞர் திறத்தினையும், இலக்கியச் செறிவினையும், புலவர் பெருமக்கள் புவியாளும் மன்னருக்கு அறநெறிகூறி நல்வழிப் படுத்திய மாண்பினையும் எடுத்துரைப்பாயே! அதே நாட்டு மக்கள்தான், நாங்களும்!! ஆனால், எப்படி இருக்கிறோம் பார்த்தனையா? உழைத்து உருக்குலைந்து கிடக்கிறோம். என்னென்ன வேலைகளிலே ஈடுபட்டுக் கிடக்கிறோம். கண்டனையா? கடினமான வேலைகள்! கேவலம் என்று மற்றவர் கருதிடும் வேலைகள்! இவைகளிலே ஈடுபட்டிருக்கிறோம்!! இதைச் காண்கின்றனையே, உன் மனமென்ன கல்லா? இரும்பா? உடன்பிறந்தான் என்கிறாயே, உள்ளம் உருகாமலா இருக்கிறது? எமது நிலையைப் பார்த்தனையே, துக்கம் உன் நெஞ்சைத் துளைத்திடவில்லையா? என்ன சொல்கிறாய்? என்ன எண்ணுகிறாய்? எமது கதி இதுபோலாகக் காரணம் என்ன? இங்குள்ள வடவரும் சிலர் திருவிடம் வந்து தங்கியுள்ளனர்; ஆனால், எதற்கு? எம்மைப்போல் கல் உடைக்கவா? கட்டை வெட்டவா? குப்பை கூட்டவா? கொத்தடிமை வேலை செய்யவா? இல்லையே! "முதலாளி’ வேலை பார்க்க அல்லவா வடவர், திருவிடம் வந்துள்ளனர்!! ஆனால், நாங்கள்? பார்க்கிறீர்களே கண்ணால்! விளக்கவாவேண்டும்? இந்த வேதனை தீர வழியே இல்லையா? எமது நிலையை மாற்றி அமைக்க மனமே இல்லையா? இழிநிலையிலிருந்து விடுபடப் போவதேயில்லையா?- என்றெல்லாம், அந்த ஒரு சொல் - அண்ணா! என்ற அந்தக் கனிவு நிரம்பிய மொழி, என்னைக் கேட்டுக்கேட்டு வாட்டி வதைத்தது, தம்பி! வாட்டி வதைத்தது. என்னை நானே நொந்துகொண்டேன். ஏதும் செய்ய இயலா நிலையில் இருக்கிறோமே - எதையும் உணர, உருக, உரைத்திட முடிகிறது - ஆனால், மாற்றி அமைத்திட , திருத்தம் கண்டிட முடியவில்லையே! பிடி வேறோர் சார்பினரிடமல்லவா சிக்கிக்கொண்டிருக்கிறது, நாமோ, அறிந்ததை உரைத்திட மட்டுமன்றோ வாய்ப்புப்பெற்ற நிலையிலே உள்ளோம்? - என்றெண்ணி மெத்தவும் வாடினேன். காய்ந்த பயிரையுங் காரற்ற வானத்தையும், நீரற்ற வாவியையும் காணும் உழவன் மனம் என்ன பாடுபடும்? என் மனம், அந்நிலை!! என் மன நிலையை உணர்ந்துகொண்ட அந்த மாண்பு மிக்கவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா, தம்பி! என் வாட்டத்தைப் போக்க, அன்பினை வாரி வாரி வழங்கினர். வறுமை நிலைமை! ஆனால், அகமும் முகமும் மலர்ந்த நிலையில் என்னிடம் அளவளாவினர்! அவர்கள் காட்டிய பேரார்வம் என்னை வெட்கமடையச் செய்தது. பட்ட துயரம் போதும், பண்பாடிட வாரீர்! பட்டொளி வீசிப் பறக்கிறது தாயின் மணிக்கொடி, பாடுபடுவோரே, கவலை விடுமின்! காடுமேடு சுற்றியது போதும், தாயகம் அழைக்கிறது வாரீர்! பிழைக்க நெடுந்தூரம் வந்தவர்களே! இனி வாழவழி அமைந்துவிட்டது, வாட்டம் துடைத்திடத் தாயகம் அழைக் கிறது வாரீர்! கடும் வெயில்! கடுமைமிகு குளிர்! - என்றுள்ள இப்புரத்து வாழ்க்கைபோதும், தென்றல் விளையாடும் நாடு, திருவிட நாடு! அதில், திரும்பிப் பார்க்கும் இடந்தோறும் மணம் அளித்திடும் தேன் கூடு! புள்ளி மயில் நடமாடிப் பூவையரிடம் பாடம் கேட்டிடும் காட்சியுடன், புள்ளினம் இசை எழுப்பிப் பூங்காவில் வட்டமிடும் காட்சியுண்டு! கண்டால் கவி பிறக்கும், காவியம் உருவெடுக்கும்! காண வாரீர் தாயகம், கட்டுண்ட நிலை இல்லை! தன்மானம் தழைத்திடவே, தன்னாட்சி செழித்திடவே, தாயகம் தளைகளற்றுத் தகத்தகாயம் காட்டுகின்றது! காண வந்திடுவீர், கஷ்டம் இனி இல்லை, இல்லை!! - என்று எழுச்சிப் பண்பாடி, உடன் பிறந்தார்களைத் தாயகம் அழைத்திடச் சென்றிருந் தால். . . . .! எண்ணும்போதே தலை சுற்றுகிறது! நெஞ்சு விம்முகிறது! ஆனால், நான் சென்றது அந்நிலையிலா? ஆளவந்தார் களாகி விட்டவர்கள், தாயகத்தைத் தேம்ப வைத்துள்ள நிலையினையல்லவா எடுத்துரைக்கச் சென்றிருந்தேன். நோய் தீர்க்கும் மருத்துவனாகவா சென்றேன்? இல்லையே! இல்லையே? நோயால் பீடிக்கப்பட்டுள்ள மக்களிடம் சென்று, இங்கு உள்ள நோயினைப்பற்றி அல்லவா பேசிவிட்டு வந்தேன்! மாதுங்கா, தாராவி, டோம்வில்லை, தாணா, செமூர், மான்காடு எனும் பலப்பல பகுதிகளும், குஜராத் மாநிலத்தி லுள்ள ஆமதாபாத்திலும், சென்றிருந்தபோது, திருவிடத்தின் நிலையால் நிலைகுலைந்து, வாழ்வு அழிக்கப்பட்டு, வறுமையால் கொட்டப்பட்டுத் தீப்பிடித்த இடத்திலிருந்து, கருகிய நிலையில், வேறிடம் பறந்துசெல்லும் பறவைகள்போல, வடபுலம் வந்து கூடியுள்ள மக்களைக் கண்டேன் - துக்கமும் வெட்கமும் என்னைப் பிய்த்துத் தின்றது. எந்த வடபுலத்திலிருந்து, பாங்கர் களும், மண்டிக்கடை நடாத்துவோரும், பவுன் வெள்ளி அங்காடி வைத்திருப்போரும், பல பொருள்களை விற்று இலாபம் ஈட்டும் பெரும் பெரும் வணிகர்களும், திருவிடம் வந்து கொலு வீற்றிருக் கின்றனரோ, அங்கு அல்லவா, ஆண்ட பரம்பரையினர், அடிமை களாக, அலுப்பினைக் கவனியாமல் உழைப்போராக, ஆயிர மாயிரம் சென்றுள்ளனர். அந்தேரி பகுதியில், நம்மவர்கள் இருந்திடும் நிலை கண்டோர், திராவிட நாடு திராவிடருக்கு என்பதை வெறும் அரசியல் இலட்சியமாக அல்ல, வாழ்வின் திறவுகோலாகவே மதிப்பர், போற்றுவர். தம்பி! இங்கு, ஒரு அரசியல் கட்சி, ஏதோ ஓர் ஆகாத திட்டத்தை கட்டிப் பிடித்துக்கொண்டு அழுகிறது என்று, தம்மை மாமேதைகள் என்றெண்ணி மனப்பால் குடிக்கும் சில மமதையாளர் எண்ணிக்கொண்டுள்ளனர். வடபுலம் சென்று, இரக்கம் நிரம்பிய மனதினராய், தமிழர் அங்கு இருக்கும் நிலையினை அறிந்தால், திராவிடநாடு திராவிடர்க்கு எனும் இலட்சியம் வெற்றிபெற, தி. மு. கழகம் விரைவிலே வலிவு பெற்றாகவேண்டும் என்ற பேருண்மையை, சோரம்போய் விட்டவர்களும் பேரம்பேசி அரசியல் நடத்துவோரும் தவிர மற்றவர் அனைவரும் உணர்வர்; ஒப்புக்கொள்வர்; எங்கெங்கும் எடுத்துரைப்பர். ஆமாம், தம்பி! பல்லைக் கடித்துக்கொண்டு, எல்லா இன்னல்களையும் பொறுத்துக்கொண்டிருக்கிறோம். ஒரே ஒரு நம்பிக்கையுடன் - எம்மை எதையும் தாங்கிக்கொள்ளச் செய்வது அந்த நம்பிக்கைதான்! துர்நாற்றமடிக்கும் இடத்தில், நடை பாதையில், மூட்டை சுமப்போராய், வண்டி இழுப்போராய், நரம்பு முறிய எலும்பு நொருங்க, இரத்தம் சுண்ட, உடல் தேயப் பாடுபடும்போது, எனக்கு உயிரூட்டம் தரும்விதமாக உள்ளது அந்த நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை என்ன? எப்படியும் தாயகம் தலைநிமிர்ந்து நிற்கும்! எப்படியும் தாயகம் தழைக்கும்! எப்படியும் கழகம் அந்தச் செயலில் வெற்றிபெறும்! கவனிப்பாரற்றுக் கிடந்த நிலை போயேவிட்டது; கழகம் என்ற சொல் கேட்டவுடன் ஆதிக்கக்காரர் முகம் கடுகடுப்பா கிறது. கழகம், ஒரு பெரிய கேள்விக்குறியாகிவிட்டது! அதன் பேருருவம் காணாதார் இல்லை; அதன் முழக்கம் கேட்டிடாதார் எவரும் இல்லை; அதன் வளர்ச்சியைத் தடுக்க முயன்று தோற்றோரின் தொகையே அதிகம்; அந்தத்தொகை வளர்ந்து கொண்டும் வருகிறது. வெற்றி உறுதியாக! வெற்றி நமக்காக! வெற்றி, வேதனை போக்க! வெற்றி புதுவாழ்வு காண!! - என்றெல்லாம், தம்பி! அங்கு உள்ளவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையின் நடமாடும் பிரதிநிதி நான் என்பதால் தான், அவர்கள் என்னைக் கண்டவுடன், கனிவுடன் "அண்ணா’ என்றழைத்தனர்; கரங்களை எடுத்துத் தம் கண்களில் ஒத்திக் கொண்டனர்; தம்பி என்னென்பேன், அந்தக் கண்களில் முத்து முத்தாகக் கண்ணீர்!! தேர்தலுக்கு எம்மாலான நிதி தருவோம், பெற்றிடுக என்றனர். தேர்தலை, தம்பி! அவர்கள் ஒரு கட்சிக் காரியமாக, நிச்சயமாக எண்ணி, நிதி திரட்டவில்லை. ஒரு கட்சி, பதவி பிடித்திட, தேர்தலிலே ஈடுபடுகிறது என்ற, அந்த முறையிலே அவர்கள் எண்ணவில்லை. நாம் கூடச் சில நேரங்களில், கட்சிக் கண்ணோட்டத்துடன், இந்தத் தேர்தலைக் கவனிக்கிறோம் - வடபுலம் சென்று வாடிக் கிடக்கும் இலட்சக்கணக்கான நம்மவர்களுக்கு, இந்தத் தேர்தல், அரசியல் காரியமாகப் படவில்லை; தமக்கு வாழ்வளிக்க இங்கு எடுத்துக்கொள்ளப்படும் முயற்சியிலே, மிக முக்கியமான கட்டம் என்றுதான் எண்ணுகிறார்கள். அந்த முயற்சியின் வெற்றியிலேதான், தமது எதிர்கால நல்வாழ்வே பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் உணருகிறார்கள். அந்த உணர்ச்சி காரணமாகத்தான், என்னைக் கண்டதும், களிப்பால் மட்டுமல்ல, உள்ளுணர்ச்சியால் அவர்கள் கண்ணீர் வடித்தனர். தேர்தலிலே, அண்ணா! எப்படியும், தி. மு. கழகம் மகத்தான வெற்றி பெற்றாகவேண்டும் என்று அவர்கள் கூறியது, தம்பி! "எப்பாடுபட்டாகிலும், எம்மைக் காத்திட வழி தேடுங்கள்! இன்னும் அதிக நாட்கள் நாங்கள் நலிந்து கிடக்க முடியாது! நட்டாற்றில் விட்டுவிடப்பட்டவர்கள் போலாகிவிட்டோம். நாதியற்றவர்கள் - நாடற்றவர்கள் - என்று எம்மைக் கேசெய்யும் குரல் எமது செவி வழி நுழைந்து நெஞ்சினைத் துளைக்கிறது. சொந்த நாடு சென்றிடவேண்டும்; சோற்றுக்கு வழியற்று இங்கு வந்து தஞ்சம் புகுந்தவர்கள் என்ற இழிமொழி எம்மைச் செந்தேளாய்க் கொட்டுகிறது. விரைவிலே எமக்கு வாழ்வு அளித்தாகவேண்டும்!!’ - என்று அவர்கள் கேட்கிறார்கள். கண்ணீரால் நனைக்கப்பட்ட பணத்தை என் கரம் தந்து அவர்கள் இதைக் கூறினர், தம்பி! நானும் உன் உழைப்பின் மேன்மையிலே, உணர்ச்சியின் மாண்பிலே, அறிவாற்றலிலே நம்பிக்கை வைத்து, நிச்சயமாக இந்தத் தேர்தலில், தி. மு. க. மகத்தான வெற்றி பெறும் என்று வாக்களித்துவிட்டு வந்திருக்கிறேன். வருகிற வழி நெடுக, மனதிலே திகிலும் ஐயப்பாடும் குடைந்தது! உண்மையை மறைப்பானேன், கோவை சிறப்பு மாநாட்டிலே நான் கண்ட கோலாகலக் காட்சியும், கேட்ட வீரமிக்க உரைகளும், கரை புரண்டோடிய உணர்ச்சிப் பெருக்கமும்தான், என் திகிலையும் ஐயப்பாட்டினையும் அகற்றி, வடபுலம் வாடிக்கிடக்கும் நம் உடன் பிறந்தார்களிடம் நான் அளித்துவிட்டு வந்துள்ள வாக்குறுதி - தேர்தலில் தி. மு. க. மகத்தான வெற்றிபெறும் - என்ற வாக்குறுதி, நிச்சயம் நிறைவேறும் என்ற உறுதி ஏற்பட்டது. அந்த உறுதியுடன் தம்பி! இதோ, தஞ்சை கிளம்புகிறேன் - மணி 5 - மாலை அல்ல, விடியற்காலை! வேலைகள் செம்மையாக நடந்தபடி இருக்கின்றனவா தம்பி! வெறும் தேர்தல் அல்ல, பதவிபிடி சண்டை - அல்ல - வாழ்ந்த இனம் வீழ்ந்து கிடக்கிறது. அதனை மீண்டும் எழச் செய்யும் முயற்சி!! வாளும் வேலும்கொண்டு நடாத்தப்படும் விடுதலைப்போரினை, இந்த ஜனநாயக நாட்களில், அறிவு, தெளிவு, உறுதி, உழைப்பு எனும் கருவிகள்கொண்டு, நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதே! ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்! இரக்கம் துளியும் எழாத மனம்! இரத்தக்கரை படிந்த கரம்! இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்! காங்கிரஸ் கட்சி இது!! காப்பாற்றுமோ ஏழை எளியோரை!! ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்! இரக்கம் துளியும் எழாத மனம்! இரத்தக்கரை படிந்த கரம்! இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்! காங்கிரஸ் கட்சி இது!! காப்பாற்றுமோ ஏழை எளியோரை!! தம்பி! இதனை நீ அறிந்திருக்கிறாய்; மற்றவர்களும் இதனை உன்னைப்போல உணர்ந்துவிடுவார்களானால், தேர்தலிலே வெற்றி நிச்சயம் என்பதை விளக்கிடவாவேண்டும். மற்றவர்கள் இதனை அறிந்திடச் செய்திட, விரைந்து பணியாற்று. விறுவிறுப் புடன் பணியாற்று; வெற்றி நமதே! அஞ்சற்க!! மூன்று பெரிய ஆபத்து முன்கூட்டியே சொல்லிவிட்டோம் ஆண்டொன்றுக்கு ஏழை தலையில் விழப்போகுது 1. ஏழுகோடி ரூபாய் புது வரிகள். 2. அரிசிச் சாதம் கூடாதென்று அதிகாரத்தின் துணைகொண்டு கோதுமை திணிக்கப் போகிறார்கள். 3. தமிழை அழிக்க இந்தி தமிழ் எழுத்தை அழிக்க தேவநாகரி புகுத்திப் பாழ்செய்யத் துடிக்கிறார்கள். மூன்று பெரிய ஆபத்து முன்கூட்டியே சொல்-விட்டோம் ஆபத்துகளைத் தடுத்திட ஆற்றலுள்ளது தி. மு. க. ஓட்டுகள் உதய சூரியனுக்கே! என நாட்டினர் அறிவித்துவிட்டால் ஆபத்து இல்லை நாட்டுக்கும்! அறிவீர்! அறிவீர்! தோழர்களே!! வீடுதோறும், இதனை எடுத்து விளக்கிடவேண்டும். வருவது தெரியாமலுள்ளோர் பலர் உளர்; நாம் அறிந்திருப்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறுவது அரசியல் கடமை; மக்களாட்சியில் ஒவ்வொருவரும் செய்து தீரவேண்டிய பொறுப்பு மிகு பணியாகும். எத்தனை பெரிய ஆபத்துகள், மக்களைத் தாக்க இருக்கின்றன என்பதை நாம் மட்டும் அறிந்தால் போதாது - நாடு அறியவேண்டும் - அதற்கு, உன் நல்லறிவுப் பிரசாரம் நாளும் தேவை. வேலை அதிகம், தம்பி! நாட்கள் மிகமிகக் குறைவு!! ஆகவே, வண்டுபோல் சுற்றிடவேண்டும்; நானோ, என் உடல் வலிவுக்கு ஏற்ற அளவினைவிட, மிக அதிகமாகப் பணியாற்றி வருகிறேன் என்பதை, நன்கு அறிந்துதான் இருக்கிறாய். இரவு 11 மணி வரையில் கூட்டம் - பிறகு திருக்கோவிலூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, செங்கற்பட்டு, மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் நிலைமைகள் குறித்து உரையாடல் - மூன்று மணிக்குத்தான் எழுத வாய்ப்பு - இதோ அ. க. தங்கவேலர் அனுப்பிய மோடார் அழைக்கிறது, தஞ்சைக்குச் செல்கிறேன். எல்லா ஊர்களுக்கும், ஒவ்வொரு இல்லத்துக்கும், நானே சென்று எல்லாவற்றையும் கூறிட இயலாதே - விருப்பம் உண்டு - நேரம் இல்லை! மேலும் நீயிருக்கப் பயம் ஏன்? என்ற துணிவும் உண்டு. எனவே, தம்பி! மூன்று பக்கம் கடல் இங்கே! கப்பற்படை தலைமை வடக்கே! நியாயமா? நியாயம் அல்ல என்கிறது தி. மு. க. நாட்டினரே நல்ல தீர்ப்பு அளியுங்கள்! உதயசூரியன் வெற்றி பெற்றால் புதியவாழ்வு பெற்றிடலாம் புதுப்புதுத் தொழிலும் கண்டிடலாம்! கப்பற்படையின் இருப்பிடமாய் காட்சி தரும் இத்திருவிடமும்! உலகம் மெச்ச நாம் வாழ உதய சூரியன் ஆதரிப்பீர், என்பதனை நாடெங்கும் எடுத்துக்கூறி, நாம், வாழ வழி அமைப்போம், நாடு செழித்திட நல்லாட்சி காண்போம் என்று நம்பிக்கொண்டு, நம்மைக்கண்டதும் நெஞ்சு நெக்குருக நிற்கும், வடபுலம் சென்று வாடிக்கிடக்கும் நம்மவர்கள் மனம் மகிழத் தக்கவிதத்தில், எமது இனம் வீழ்ந்துபட்டுப் போய்விடவில்லை, மரபு அழிந்துவிடவில்லை. மாண்பு கெட்டுவிடவில்லை. இதோ வெற்றி! இதோ திருவிடம்! இதோ நல்லாட்சி! என்று அவர்கள் களிப்புடன் முழக்கமிடத்தக்க வெற்றிகளை, தேர்தல் களத்திலே பெற்றளிக்க, உன் முழு ஆற்றலைத் தந்தாகவேண்டும். வேலை அதிகம்! நாட்கள் குறைவு! மறவாதே!! அன்புள்ள அண்ணாதுரை 24-12-1961 தேனில் தோய்த்த பழம் கதிரவன் விழா சொல் போன தோழர்கள் பல் போன கிழவர்கள் ஈட்டிய செல்வம் எங்குளது? இரு திட்ட வெற்றியினால் கண்ட பலன் என்ன? படபடத்த பேச்சு நம் வளர்ச்சியைப் பாழ்படுத்தும் நா வாணிக நிலை நமக்குத் தேவை அறிவு - துணிவு - பொறை உடைமைகள் தம்பி! செவியில் விழவே இல்லையா நான் கூப்பிடும் குரல்? எப்படியப்பா விழப்போகிறது? இன்ப ஒலி கேட்டுக் கேட்டுச் சொக்கிப் போயல்லவா இருக்கிறாய்! அண்ணன் இந்த நேரத்தில் அழைப்பது காதிலே விழும் என்றுதான் எப்படி எதிர்பார்க்க முடியும்? பொங்கலோ! பொங்கல்! என்ற குரலொலி இசையாகி இன்ப ஒலியாகி உன்னை ஈர்த்து வைத்திருக்கும் வேளை - நான் உன்னை அழைத்து வேறு வேலைகளிலே எங்கே ஈடுபடுத்தி விடப்போகிறேனோ என்ற ஐயப்பாட்டின் காரணமாக ஒரு சமயம், குரலொலி காதில் விழாததுபோலக் காட்டிக்கொள் கிறாயோ என்னவோ, எனக்கென்ன புரிகிறது. ஆனால், நான் உன்னை அழைப்பது, உன் விழாக்கோலத்தைக் கலைத்துவிட்டு வேறு வேலைகளைச் செய்திட உடனே கிளம்பு என்று கூறிட அல்ல. ஒவ்வொரு நாளும் நீ உன் இல்லத்துள்ளாருடன் இன்று போல் மகிழ்ச்சி பொங்கி வழிந்திடும் நிலையிலே இருக்கவேண்டும், பால் பொங்கும் இந்நாள் திருநாள் - எனினும், என்றென்றும் உன் வாழ்வு தேனோடு பால் கலந்த பான்மைபோல இருந்திடவேண்டும் என்று விரும்பி, உனக்கும் இல்லத்தவருக்கும் என் இதயங்கனிந்த நல் வாழ்த்துக்களைத் தந்திடவே அழைத்தேன். மகனே! என்று தாய் அழைக்க, எங்கே அவன்? என்று தந்தை கூப்பிட அண்ணனிடம் கூறுகிறேன் என்று உடன் பிறந்தாள் பேசிட, என்னங்க! என்ற இசையைத் துணைவி எழுப்பிட, எங்கப்பா! இல்லே! எங்கப்பா! என்று நீ பெற்றெடுத்த செல்வங்கள் ஒருவரோடொருவர் விளையாடி, அதன் காரண மாக வம்பு விளைந்து, அப்பா! என்று அழுகுரலைக் கிளப்புவேன் என்று எச்சரிக்கை விடுத்திடும் குரலெழுப்ப, இத்தகு ஒலிகளுக் கிடையிலே உள்ள உனக்கு, என் அழைப்பொலி கேட்கிறதோ இல்லையோ என்று நான் ஐயப்படுவதில் தவறில்லையே! தம்பி! விழாக்கோலம் கொண்டுள்ள இல்லத்தில் எழிலோவியங்களாகத் திகழும் உன் பெற்றோரும் மக்களும் வளம்பல பெற்று, வாழ்வின் இன்பம் கண்டு, பல்லாண்டுகள் வாழ்ந்து நாட்டினை வாழவைப்பார்களாக. நினது இல்லத்தில், தமிழ் தழைக்கட்டும்! நின் ஆற்றல் தமிழைக் காத்திடப் பயன் படட்டும்! நின் வீரம் வளரட்டும்! அவ்வீரம் தாயகத்தின் மாண்பு காத்திடப் பயன்படுத்தப்படவேண்டும்! மரவு மறவாதோனே! மாண்பு மிகுந்திடவேண்டுமென்பதிலே நாட்டம் மிகக்கொண்ட நல்லோய்! வெல்க உன் முயற்சிகள்! பெற்றிடும் வெற்றிகள் மற்றையோர்க்கும் வழங்கத்தக்க பேறுகளை உனக்கு அளிக்கட்டும்! ஏறுநடையுடையோனே! வீரர் வழி வந்தவனே! மாற்றார்க்கஞ்சா மறக்குடிப் பிறந்தோனே! நினது இல்லம் இன்று புதுக் கோலம் கொண்டு பொலிவுடன் உளது! கை சிவக்க இல்லத்துப் பெண்டிர், இட்டடி நோக எடுத்தடி கொப்புளிக்கப் பாடுபட்டு, குப்பை நீக்கிக் கரைகள் போக்கி, வண்ணச் சுண்ணம் அடித்து வகையாய்க் கோலமிட்டு, பசுமை அழகாலே இருப்பிடம் பாங்குபெறத் தோரணம் கட்டி அலங்காரம் கூட்டி யுளார்! அத்தனையும் கண்டதனால் அகமகிழ்வாய் நீ என்று ஆரணங்கு எண்ணிடாமல் இருந்திடுவதுதான் உண்டோ? ஆனால், முத்தழகி முந்தானைதனைக் கொண்டு முகத்தைத் துடைத்திடுவாள், உன் முகமோ எள் வெடிக்கும்! உழைப்பதிக மானாலே உருக்குலைந்து போகுமென உள்ளம்தனில் எண்ணி, ஊரெல்லாம் கூட்டுவயோ! உண்டோ இன்னும் கோலம்? பாரெல்லாம் கூடி நின்று “பதக்கம்’ அளிப்பாரென்று இப்பாடு படுகின்றாயோ! என்றெல்லாம் கேலி மொழிதான் பேசிப் பார்க்கின்றாய். ஆரணங்கு அறியாளா ஆடவர் முறைதன்னை, ஓரப் பார்வையுந்தான் வேறென்ன கூறிடுமோ! உள்ளுக்குள் சிரிக்கின்றாள். உன் போக்குத்தான் கண்டு!! ஊரெல்லாம் விழாக்கோலம் கொண்டிடும் இத்திருநாளில், மனையெல்லாம் மாளிகையாய் மாறிடவே வேண்டாமோ! யார் அதனைச் செயவல்ல”மாயாவி’ அவளல்லால்!! அறியாமல் அருகிருந்து ஆயிரம் பேசுகின்றாய்! அகன்றிடுவாய், அவள் இங்கு அழகளிக்கும் காரியத்தில் ஆர்வம் மிகக் கொண்டுவிட்டாள்! அடுத்த வீட்டு அழகியுடன் போட்டி இட்டாள், அந்தி சாயும் வேளையிலே அல்லிபூத்த ஓடை அருகினிலே!! மான் துள்ளும் என் மனையில், மயிலாடும், பார்த்திடுவாய்! தேன் சிந்தும் செடி கொடிகள் காட்டிடுவேன், கை வண்ணம் கலந்து வெண்பொற் சுண்ணப் பொடியதனால் என்று வேல்விழி விளம்பிவிட்டாள்; துடியிடையாள் தோற்பாளோ! நாம் இருவரும் உலவிடும் இந்நல்லோடை தன்னையும், தவமிருக்கும் குருகினையும், தாய் முகத்தை நோக்கிடும் சேய் விழிபோல் விழியுடைய அணிலும் அது தின்னும் பழக்கொத்தும்; பார்த்திடுவாய், நீரிருக்கும், ஆங்கு நீலம் பூத்திருக்கும், கன்று களைத்து வந்து நீர் பருகும் கண்டிடலாம்! எல்லாம் இக்கரத்தால் எழுதிடுவேன் என் முற்றம், வண்ணம் பல கொண்ட சுண்ணப் பொடிகொண்டு! கண்டு வியந்திடுவாய் காலை மலர்ந்ததுமே என்று கூறித் துவக்கி விட்டாள் எழில்காட்டும் போட்டியினை. அதை எண்ணி ஆரணங்கு, இடை துவளும் என்றறிந்தும், சரிந்த கூந்தலினைச் சரிப்படுத்த மனமுமின்றிச் சிந்து பாடிடும் புலவோன் தனியோர் உலகதனில்தான் உலாவி இருத்தல்போலத் தையல் இருக்கின்றாள் - நீயோ கை காட்டி அழைக்கவில்லை கண் காட்டிப் பார்க் கின்றாய், கனிவுள்ள சொல்கூட்டி அழைக்கின்றாய்! போ! போ! தோற்றாய்! இன்று விழாக்கோலம் வீடெல்லாம் காட்டிடவே அவள் நினைப்பு, நேரம் எல்லாம்! - என்று நான் கூறிடலாம்; நீ கேட்கவா போகின்றாய்! போ! அண்ணா! பொல்லாத கோலமது போட்டிட இவள் முனைவாள், பின்னர் தாள் வலியும் தலை வலியும் தன்னாலே வந்து சேரும், யார் பிறகு அதற்கெல்லாம் அல்லற்படவேண்டிவரும். நான் அண்ணா! அதனால்தான், நாளெல்லாம் கோலமதை நாட்டிலுள்ளார் கேட்டுக்கொண்டது போல் போட்டபடி இருக்க வேண்டாம், வா உள்ளே! என்றழைத்தேன். வம்பு அல்ல, நிச்சயமாய்! - என்று பதிலுரைப்பாய். ஏ! அப்பா! உனக்கென்ன, பதிலளித்து வெற்றி பெற வல்லமைக்கா பஞ்சம்!! ஒன்றினை இன்றெண்ணிப் பார்த்திடுவாய்! வெறும் இலைகளே இருந்த கொடி அரும்பதனைக் காட்டிப் பின் அதுவே மலராகி, மணம் பரப்பிக் காட்டுவதும், தூவியது உட்சென்று, உயிர்பெற்று நிலம் பிளந்து, தாவி அணைத்திடத் தன் தாய் நோக்கிச் சென்றிடும் சேய்போல, மண் பிடிப்பினி லிருந்து விண்தொட்டு விளையாட எண்ணுதல்போல், பயிர் வளர்ந்து கதிர் குலுங்குவதும், தாளாலே நீர் உண்டு சுவை கூட்டித் தலையாலே தந்திடும் தாரணியுள்ளார்க்கு அன்னை போல் விளங்குகின்ற தென்னை ஓங்கி வளருவதும் ஏற்றுக்கு? எவர் பொருட்டு? நாம் வளர்ந்து வருவது வீட்டுக்கு, நாட்டுக்கு; தொண்டாற்ற, துயர் நீக்க; தோழமை பூண்டொழுக, தொல்லுலகம் வளம் பெறவே மிகும் உழைப்பை நல்கிட உரைக்கின்றார், உணர்கின்றோம்; உணராமலேயே கூடப் பலர் உரையாடி இருக்கின்றார். ஏடு பல தன்னில் நாடறிய எழுதி யுள்ளார். எனவே, பொருள் விளக்கம் பெறுகின்றோம். ஆனால், வானத்துக் கருமேகம் மழை முத்தாய் மாறுவதேன்? எவர் பொருட்டு? யார் அழைப்பு? யாது பயன் கருதி? கொடியாடக் கனியாட, செடியாட மலராட, ஆடை விலகியாட வீசிடும் காற்றதுவும், என்ன பயன் கண்டு இவ்வேலை செய்கிறது? கதிர் தந்துகொண்டிருக்கும் பயிர்வளர்ந்து, யாரிடம் பயன் கண்டு மகிழ்கிறது!! பழம் தந்த மரமதுவும் பரிசு என்ன பெறுகிறது! ஒன்றும் காணோம்! சேறாக்கி வைக்கின்றோம். நீர் பெய்து, செடி கொடியும் பயிர் வகையும் இருக்கும் இடம் தன்னில்! ஏனய்யா எனக்கிந்தச் சகதியிடம் எனக் கேட்கும் போக்கினைக் கொள்ளாமல், சேறு தந்த நமக்குச் செந்நெல் மணியதனைப் பயிர் தரக் கண்டோம்; செந்தேன் சுவைகொண்ட பழம் தந்து மரமதுவும் நமைக் கண்டு கூறிடுது, இன்று இது போதும், நாளை வா! மேலும் பெற! என்று. நாமோ? என்செய்கின்றோம்? கொடுத்தது என்ன, கொண்டது என்ன எனும் கணக்கினை மறக்கின்றோம் முற்றும். நமக்குள் ஒருவருக்கொருவர் கொடுப்பது, கொள்வது எனும் முறையில், இந்நிலையா கொள்கின்றோம்! அடேயப்பா! எத்தனை எத்தனை கணக்குகள், காபந்து, வழக்குகள், வல்லடிகள்! ஏமாளியோ நான் ஏழு கொடுத்து ஆறு பெற! என்றெல்லாம் கேட்கின்றோம். தூவிய விதையினுக்கு நாம் என்ன தந்தோம், தம்பி! மண்ணுக்குள் போட்டு மூடிவிட்டோம், மரித்தவரைச் செய்வதுபோல், பின்னர் நீர் தெளித்து வருகின்றோம். விதையோ நமக்குத் தாயன்புக்கு அடுத்தபடி எனத்தக்க உள்ளன்பு தருகிறது! பெறுகிறோம் நாம், ஒரு கணக்கும் பார்க்காமல்! வள்ளல்களிடம்கூடக் கணக்கு வரைவார் உண்டென்னலாம்! அஃதன்றி, கவிதை வாரி வழங்கினர் காண் பொருள் பெற்ற பெரும் புலவர்! இயற்கையோ எந்த ஓர் வள்ளலும் எதிர்த்து நிற்க ஒண்ணாத இயல்பினதாய் இருந்திடுதல் இன்றளவும் காண்கிறோம். பயன் துளியும் கருதாது பாருக்கு இனிமைதனைப் பயக்கும் இயற்கைக்கு, நாம் நன்றி கூறிடவே வந்தது இந்தத் திருநாள். கடன் மெத்தப்பட்டுவிட்ட மாந்தர், ஓர்நாள் கூடி, கதிரவன் தரும் ஒளிக்கும் கதிர்தரும் பயனுக்கும், மண் தந்த மாட்டுக்கும், வந்தனைகள் செய்து, வாழ்த்துப் பல பாடி, உம்முடைய உதவி யினால் உயிர் வாழ்ந்து வருகின்றோம்; உலகு தழைத்திடவே உழைத்திடும் உத்தமர்காள்! வாழி! நீர் வாழி! எமை வாழ்விக்கும் வள்ளல் வாழி! எனப் போற்றுகின்றோம். ஞாயிறு போற்றுதும் என்று நம் இளங்கோ, பாடியது, இயற்கையின் பெருநிதியை நாம் பெற்று வாழ்வதை எடுத்தியம்பத்தான், கதிரவன் ஒளியதால், உயிர் வளருவதால், ஞாயிறு போற்றதும் எனும் மொழிவழிப்படி, பொங்கற் புதுநாள் எனும் திருநாள் கொண்டாடி மகிழ்கிறோம். தம்பி! கதிரவன் ஒளியில் உயிர்ப்புச்சக்தி இருப்பது இன்று பள்ளிப்படிப்பு அதிகம் இல்லாதவரும் அறிந்துள்ள ஒன்றாகும். ஆனால், அதிலே உள்ள விந்தையினைக் கூர்ந்து கவனித்திருக் கிறாயா? கதிரவன் ஒளி, காரிருளை விரட்டுகிறது, "காலை மலர்கிறது’ என்று கூறுவது கவிதா நடைக்காக மட்டுமல்ல, அரும்பு கூம்பிக் கிடத்தல்போலத்தான் இரவுக் காலத்தில் உலகு இருக்கிறது; பகலவன் எழுந்தால் பகல் காண்கிறோம்; அரும்பு இதழ் விரித்திடுதல்போல, உறக்கம் கலைந்து உலகு எழுகிறது, மலர்கிறது. தட்டி எழுப்புதல் மட்டுமின்றி, உயிர்ப்புத் தந்து, காத்து நிற்பது ஞாயிறு. ஆயினும், இதனை அறிவாயே எந்தச் சக்தி உயிர்ப்புத் தருகிறதோ, அதுவே அளவு அதிகமாகப் போயின், கடும் வெயிலாகித் தவிக்கிறது தணலென்றாகிறது, பொரித்துத் தள்ளுகிறது, எரித்துவிடுகிறது, கருக்கிவிடுகிறது, சாம்பலாக்கி விடுகிறது. எனவே, ஆக்கும் சக்தியும் அழிக்கும் சக்தியும் ஒரே இடத்தில் இருக்கிறது; அடைத்து வைக்கப்பட்டுள்ள அந்த “வலிவு’ ஆக்கும் பணியினைச் செம்மையாகச் செய்திட வேண்டு மெனின், அது பயன்படுத்தப்படும்”அளவு’தான் முக்கியம். அளவு அதிகமாயின் அழிவுதான்! இந்த அளவும், எல்லாம் பொருள்கட்கும், எல்லாக் காலத்துக்கும், எல்லா இடங்கட்கும், எல்லா நிலைமைகட்கும் ஒரே விதமாக இருந்திடும் என்றும் எண்ணற்க. இருத்தலும் கூடாது. எனவே, இந்த "அளவு‘க்கு அளவுகோல், எது என்று அறுதியிட்டுக் கூறிட முடியாது. அது மட்டுமல்ல. நமது தேவை களுக்கு ஏற்ற வகையில் அந்த அளவினை நாம் கூட்டக்குறைக்க, முறைப்படுத்த வகைப்படுத்தவும் முடியும் என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. கதிரவன் ஒளிதரும் விளக்கு அல்ல, தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற வகையிலே, மட்டுப்படுத்த அல்லது அதிகப்படுத்த அல்லது இல்லாது செய்திட. கதிரவன் ஒரு ஒளிப் பிழம்பு! இருக்குமிடம் நீண்ட நெடுந்தூரம்! எத்தனை கல் தொலைவு என்று கணக்கினைக் கூறுவது விஞ்ஞானம். நாம் உணருவது இது; ஞாயிறு எவ்வளவு தொலைவிலே உளது என்றால் நாம் அதனுடைய துணைகொண்டு உயிர்ப்புச்சக்தி பெறும் விதமான அளவு தொலைவில் உளது. இல்லையேல் ஒன்று, ஒளியும் வெப்பமும் கிடைக்கப்பெறும் உயிர்ப்பொருள் யாவும் உறைந்து போய்விடும்; அல்லது தீய்ந்து தீர்ந்து போகும். இயற்கை நியதி இரண்டும் ஏற்படாதபடி அமைந்துள்ளது. உறைந்துபோகச்செய்திடவும், கொளுத்திக் கருக்கிவிடவும் முடியும் என்பதனை நாம் உணரக்கூடிய “குறிகள்’ ஒவ்வோர் அளவு அவ்வப்போது நமக்குத் தென்படத்தானே செய்கின்றன. கொளுத்தும் வெயில்! என்கிறோம், கொட்டும் குளிர் என்கிறோம். அவை குறிகள்! எச்சரிக்கைகள்! இயற்கை மூலம் நாம் பெறும் வலிவின் அளவு முறை தவறிப்போனால், என்ன நேரிடும் என்பதனை நாம் அறிந்துகொள்ள, இந்தக்”குறிகள்’ போதுமானவை. "தம்பி! காய்கதிரோன் உள்ளடக்கிக்கொண்டுள்ள வலிவு மட்டுமல்ல, பொதுவாக இயற்கையின் ஆற்றலே இத்திறத்தது தான். தேவைக்கேற்ற, நிலைமைக்குத்தக்க அளவு இருந்தால் மட்டுமே பலன்; அளவு முறை கெட்டால் எல்லாம் பாழ் வெளியே, படுசூரணமே! கண்ணைக் கவர்ந்திடும் வண்ணப் பூக்கள் உதிருவதுபோலக் காட்சிதரும் வாணம், ஒன்று; வீழ்ந்ததும் அதிர்ச்சிகளை வெடிப்புகளை இடிபாட்டைப் பெருந்தீயை மூட்டிவிடும் வெடிகுண்டு மற்றொன்று. முறை கெட்டால், அளவு அதிகமானால் என்ன ஆகும் என்பதனை, இதனின்றும் அறிந்துகொள்ளலாம். இயற்கைக்கு இத்தகைய ஆற்றல் இருப்பினும், அதன் இயல்பு பெரும் அளவு, உயிர் இனத்துக்கு வாழ்வளிக்கும் செம்மைக்குப் பயன்பட்டு வருகிறதேயன்றி, அழிவுக்குப் பயன்பட வில்லை, எவ்வகையாலோ எத்துறையிலோ ஆற்றல் பெற்ற மாந்தர்கூடத் தமக்குள்ள "அழிக்கும் சக்தியை’ இயற்கைபோலப் பொறுப்புடன் அளவுபடுத்தி உபயோகிக்கின்றனரா எனில், இல்லை என்னலாம். உடல்வலிவோ பொருள்வலிவோ சிறிதளவு மிகுதியாக உள்ளதென்றால், அதனைக் காட்டி ஆதிக்கம் பெறவும், பிறரை அழித்திடவும் காட்டும் உணர்ச்சி தடித்துவிடுகிறது; சில வேளை களிலே அது வெறியாகியும் விடுகிறது. செங்கிஸ்கான், தைமூர் என்றழைக்கப்படுவோர், தமக்கு இருந்த தாக்கும் ஆற்றலை அழிவுக்குப் பயன்படுத்தி, வெறி யாட்டமாடித் தரணியை நிலைகுலையச் செய்தனர் என்பர். நம் நாள்களிலே இட்லர் தமக்குக் கிடைத்த ஆற்றலை, வலிவை, ஆதிக்கம் பெற அழிவினை மூட்டிடவே பெரிதும் பயன்படுத்தியதனைக் கண்டோம். பாயாத புலி, பதுங்காத நரி, சீறாத பாம்பு, உறுமாத மிருகம், கொத்தாத கழுகு இல்லை என்பதுபோல வலிவு ஏற்றப் பெற்றவர்கள் வெறிச் செயலில் ஈடுபடாதிருப்பது, நூற்றுக்கு எண்பதுக்கு மேற்பட்ட அளவு இல்லை என்றே கூறலாம். இயற்கையை, மாந்தர் இயல்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எத்துணையோ பாராட்டத் தோன்றுகிறது. அழிக்கும் சக்தியைக் காற்றும் கதிரோனும், மழையும் பெருநதியும், கடலும் நில நடுக்கமும் எரிமலையும் எரிநட்சத்திரமும், மிருகம்போலவோ, மாந்தரில் வெறிகொண்டலைவோர்போலவோ, அவிழ்த்து விட்டிருந்தால், அவனி ஏது? காலம் ஏது? கருப்பொருள் ஏது? எல்லாம் பாழ்வெளியாகிப் போயிருக்கும். இயற்கை, மிகப்பெரும் அளவுக்கு, உயிர்க்கு ஊட்டம் தரவே பயனளித்து வருகிறது; அழிக்கும் தீச்செயலில் ஈடுபட்டுவிடவில்லை. கதிரோனுக்கு விழாக் கொண்டாடும் இந்நாளில் இக்கருத்தினை எண்ணிக்கொள்வது பொருத்தமுடைத்து என்பதனால் இதனைக் கூறினேன். ஆனால், தம்பி! மனிதன் தன் அறிவுத் திறனைக்கொண்டு கூடுமான மட்டும், அழிவு தன்னை அண்டாதபடி தடுத்துக்கொள்ளக் கற்றுக்கொண்டான்; பழகிக் கொண்டான். விஞ்ஞானம் இதற்கான முறைகளை, வாய்ப்பு களைப் புதிது புதிதாகத் தந்தவண்ணம் இருக்கிறது. இத்துடன் மனிதன் தன் வசதிக்கு ஏற்றபடி வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டான்; சுற்றுச் சார்பினைச் சமைத்துக்கொள்கிறான். சுற்றுச்சார்புக்கு ஏற்றபடி இயல்பு, தொழில், தொடர்பு ஆகியவை அமைகின்றன. இன்று திருநாள். இது ஓர் புதிய, இனிய, சுற்றுச்சார்பை இல்லங்களிலே ஏற்படுத்தி வைக்கிறது. புத்தாடை, சுவை உணவு, கலகலப்பு, தோழமை, குதூகலம், நமது இல்லங்களைப் புதுக்கோலம் கொள்ளச் செய்வது காண்கிறோம். நேற்று உண்டு மகிழ்ந்தோம், நாளையும் உண்போம், எனினும், இன்று - விழா நாளன்று - உண்பதும் உரையாடுவதும் தனியானதோர் "சுற்றுச்சார்பு’ காரணமாகத் தனிச்சுவை பெறுகிறது. ஊரெங்கும், அல்லது மிகப் பெரும்பாலான இடங்களிலே விழாக்கோலம் இருப்பது, அவரவர் இல்லத்தில் அமைந்துள்ள விழாக்கோலத்தை அதிகப்படுத்தியும் புதுவிதமாக்கியும் காட்டுகிறது. பல சமயங்களில், சிலருடைய இல்லங்களிலே புத்தாடை, அணிகலன் பெறுவதும், சுவைமிகு பண்டங்கள் உண்பதும், பேசி மகிழ்வதும், இசை கேட்டு இன்புறுவதும் நடைபெற்றிருக்கக் கூடும். ஆனால், சிலருடைய இல்லங்களில் மட்டுமே, சீர் தெரியும், மற்றைய இல்லங்களில் அது அப்போது இராது. எனவே, அவர்கட்கு, மகிழ்ச்சி இருக்கக் காரணம் இல்லை, விழா நாளெனில் அதுபோலன்று. ஊரெல்லாம் கொண்டாடுவர். தத்தமது இல்லத்தில் உள்ளதுபோன்றே மற்றையோர் இல்லங்களிலும், விழாக்கோலம், அளவும் வகையும் மாறுபடும் எனினும், மகிழ்ச்சிக்கான “சூழ்நிலை’ ஓரளவுக்கேனும் இருந்திடும்.”ஊரெல்லாம் வாழ்ந்திடக் கேடொன்றும் இல்லை‘, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பனபோன்ற முதுமொழிகளின் வழி நிகழ்ச்சிகள் அமைந்திருப்பதுபோலத் தோற்றம் அளிக்கிறது விழா நாளின்போது, எனவே, பொது இன்பத்தில் நமது இன்பம் ஒரு பகுதி, எல்லோரும் இன்பம் பெறுகின்றனர், நாம் மட்டும் அல்ல என்று உணர்வு தரும் உவகை விழா நாளுக்கென அமையும் தனிச் சிறப்பாகும்; தேனில் தோய்த்த பழம் புதுத் தித்திப்பு பெறுதல் போல, ஊரெல்லாம் மகிழ்ந்திருக்கும் வேளையிலே நாமும் மகிழ்ந்திருக்கும் வாய்ப்புப் பெற்றோம் எனும் எண்ணம், பொங்கற் புதுநாளில் கிடைக்கப் பெறுகிறோம். தளதளவென்று செடிகொடிகள் இருந்திடுவதே கண்ணுக்கு விருந்தளிக்கத்தான் செய்கிறது. பசுமைக் காட்சி பாங்குடன் தெரியும்போது பார்த்துக்கொண்டிருந்தாலே பட்ட பாடுகூட மறந்து போகுமளவு மனத்துக்கு ஓர் "தெம்பு’ ஏற்படத்தான் செய்கிறது. நீலநிற வானத்தைக் காணும்போது ஓர்வித மகிழ்ச்சி பிறப்பதில்லையா! அதுபோல. பசுமைப் பாங்கு காட்டும் செடிகொடியில் வண்ண மலர்கள் பூத்திடும் காட்சி தெரியுங்காலை, வனப்பு மிகுதியாகிப் புது மகிழ்ச்சி பெறுகிறோம். மலர்க்குவியல் காணக் காட்சிதான் எனினும், செடி கொடியில் அவை பூத்திருக்கும் - தனிக்கவர்ச்சி தெரிகிறது. விழாநாள் மகிழ்ச்சி, செடிகொடியில் அன்றலர்ந்து மணம் பரப்பும் மலர்போன்றது. எனவேதான், அந்த மகிழ்ச்சியிலே தனியானதோர் சுவை பெறுகிறோம். தம்பி! எல்லா இல்லங்களிலும் என்ற சொற்றொடரை நான் மெத்தவும் பயன்படுத்தியுள்ளேன், பொருளை விளக்க, பாடம் காட்ட; எனினும், இன்று நாடுள்ள நிலையில், விழாவும் மகிழ்ச்சியும் எல்லா இல்லங்களிலும் உளது என்று கூறுவது இயலாது; நெஞ்சறிந்து பொய்யுரைக்க எவருமே துணிந்திடார். வறுமை கப்பிக்கொண்டுள்ள நிலை இன்று, வாட்டி வதைக்கிறது. வரிக் கொடுமை ஓர்புறமும், அகவிலை மற்றோர் புறமும், மக்களை இடுக்கித் தாக்குதலுக்காளாக்கி இருக்கிறது. இந்நிலையில் விழாக் கொண்டாட, மகிழ்வெய்தி இருந்திட வாய்ப்புள்ள இல்லங்கள் மிக அதிகம் எனக் கூற இயலாது. ஏதோ சில இடத்தில் இருந்திடும் இன்பச் சூழ்நிலை எல்லா இடங்களிலும் பரவிடத் தக்கதோர் நன்முயற்சியில் ஈடுபடுவது சான்றோர் கடன். இருப்பது இருக்கும், நடப்பன நடக்கும் என்று எண்ணி இருந்து விடுதல் நன்றன்று. எனவேதான், தம்பி! நாம் நமது சக்திக்கு ஏற்ற அளவு என்று மட்டுமல்ல, அதனினும் மீறிய அளவுக்கு எல்லோர்க்கும் எல்லாம் இருந்திடவேண்டுமென்ற குறிக்கோளுக்காகப் பாடுபட்டு வருகிறோம். திராவிடநாடு திராவிடருக்கே என்ற நமது திட்டத்தின் அடிப்படையாக இஃதே அமைந்திருக்கிறது. எல்லார்க்கும் எல்லாம் இருந்திடும் இன்பநிலையைக் காண நாம் மேற்கொள்ளவேண்டிய பணிகள் ஏராளம் என்பதையும், பல்வேறு வகையின என்பதனையும் எண்ணி பார்த்தால் உணருவர். அந்த உணர்வு வருவது, அப்பப்பா! இத்துணை அளவுளதா? இத்தனை வகைகளுளவா? என்று மலைத்துப்போக, மருண்டுபோக, சலிப்படைந்துபோக அல்ல. மேற்கொள்ள வேண்டிய பணி ஏராளம், பலவகையின. எனவே, நாம் நமது நேரத்தை நினைப்பை, அறிவை, ஆற்றலை மிகுதியாக இக் காரியத்தில் ஈடுபடுத்தியாகவேண்டும் என்பதிலே நாட்டம் பெறுவதற்கும், அதிலே விருப்பம் பெறுவதற்கும், அந்தப் பணியுடன் நாம் ஒன்றிப்போய் விடுவதற்காகவும் இதனைக் கூறினேன். என் ஊன்கலந்து உயிர்கலந்து உரைக்கின்றாய் என்று கூறத்தக்க விதமான, நாம் நம்மை இலட்சியத்துக்கு ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். களம்புகு வீரன், எட்டு நாட்கள் வீரம் காட்டினேன், பத்து எதிரிகள்மீது பாய்ந்தேன், இருபது வடுக்கள் ஏற்றேன், இது போதும் என வீடு திரும்பிவிட்டேன் என்று கூறிடான். அவன் சென்றது மாற்றானை வீழ்த்த. அவன் ஆற்றிட வேண்டிய கடமை அது. அக்கடமை, குறிக்கோள் ஆகிவிடுகிறது. அந்தக் குறிக்கோள் ஈடேறும் வரையிலே, அவன் மேற்கொண்ட பணி முடிந்ததாகப் பொருளில்லை. பணியாற்றுவதிலே ஏற்பட்டுவிடும் கடுமை, எதிர்ப்படும் ஆபத்துகள் ஆகியவற்றினால் களைத்தோ, கலங்கியோ போன நிலையில், தொடர்ந்து பணியாற்றும் நிலை குலைந்து போவதுண்டு; தம்மால் இயலவில்லை என்பதைக் கூறிடுவது தகுதிக்குக் குறைவல்ல, உண்மை நிலைமையை மறைப்பது தீது, ஆகாது என்ற உணர்வு உடையவர்கள், தம்மால் பணியாற்ற முடியாது போயிற்று என்பதைக் கூறிடுவர். இவ்வகையினர் மிகச் சிலரே! மிகப்பலருக்கு இத்தகைய இயல்பு ஏற்படாது. தொடர்ந்து பணியாற்றித் தொல்லைகளை ஏற்றுக்கொள்ள இயலாத தமது நிலையை, தோல்வியை எவரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதிலே கருத்து வைத்து, வலிவிழந்ததாலோ கோழைத்தனம் மிகுந்ததாலோ, சபலத்தாலே, தன்னலச் சுவையாலோ பணிபுரிவதை நிறுத்திக்கொள்ள முடிவு செய்து கொண்டு, தம்மை அதற்காக எவரும் இழித்தும் பழித்தும் பேசிட இடம் ஏற்படக்கூடாது என்பதற்காகக் குறிக்கோளையே குறை கூறவும், இழித்துப் பேசவும் கொள்கை வழி தொடர்ந்து நடப்போரை நையாண்டி செய்தும், அவர்மீது வசை உமிழ்ந்தும், தமது தோல்வியைக் கோழைத்தனத்தை மறைத்துக்கொள்ள முனைவர். இக்குணம் கொண்டவர், சிறுநரிக்கு ஒப்பானவர் என்ற கருத்துடன், சிறுகதை எழுதியோர், சிச்சீ! இந்தப் பழம் புளிக்கும்!! - என்று எழுதிக் காட்டினர்; அறிவீர். அஃதேபோல, நம்மிடையேயும், அத்தகையோர் அவ்வப் போது கிளம்பத்தான் செய்கின்றனர். வீரம் கொப்புளிக்கப் பேசிய வாயினால் வீணுரைகளைக் கொட்டுவர்! கொள்கைக் காகவே வாழ்கிறோம், சாவு எமை மிரட்டினும் அஞ்சோம்! என்று பேசி, நாட்டவர் கேட்டு கை தட்டி ஆரவாரம் செய்து, இஃதன்றோ வீரம்! இதுவன்றோ கொள்கைப்பிடிப்பு! என்றெல்லாம் புகழ்பாடக் கேட்டுத் தமது மார்பை நிமிர்த்தி நாநடம் காட்டி மகிழ்ந்தவர்களே, பிறிதோர் நாள், நான் யோசித்துப் பார்த்தேன்! அமைதியாக வீற்றிருந்து யோசித்துப் பார்த்தேன். அறிவுத் தெளிவுடன் யோசித்துப் பார்த்தேன்! என்னென்பேன், தோழர்காள்! கொள்கை உப்புச் சப்பற்றது, உருப்பட முடியாதது என்பதனை உணர்ந்தேன்! கொள்கைக்காக நடப்பதாக எண்ணிக்கொண்டு கோணல்வழி நடந்தேன், மடமையில் உழன்றேன், மாசு நீக்கப்பட்ட மணியானேன் இன்று, என்று பேசி, தொடர்ந்து கொள்கை வழி நிற்போரைத் தாக்கிடவும் முனைவர். அவர்தம் போக்கு, அவரை வந்து பீடித்துக்கொண்ட தன்னலம், பலக்குறைவு, அதனால் ஏற்பட்டது. அவர்தம் பேச்சு, நோய்கொண்ட நிலையில் கிளம்பும் முக்கல் முனகல், விக்கல் விம்மல், படபடப்பு ஆகியவைகளே. இவை நமக்கு அவர்பால் அனுதாபம் ஏற்படுத்தவேண்டுமேயன்றி, ஆத்திரம் மூட்டுதல் அறவே ஆகாது. பல்போன கிழவர் கரும்பினைச் சாறாகத் தந்தாலன்றி, பரிவுடன் ஏற்றுக்கொள்கிறாரா! இல்லையே!! சொல்போன தோழர்கள் அதே நிலையினரே! கொள்கை இழந்தோர் குணமிழந்தோரே! எனினும், அதனைக் காட்டிக் கொள்ள, வெட்கம் குறுக்கிடாதோ! குறுக்கிடவே, எமது வீரம் வற்றிப்போய்விடவில்லை, அறிவாற்றல் அழிந்து படவில்லை, மாறாகப் பன்மடங்கு வளர்ந்துவிட்டது; எமக்குக் கொள்கை பிடிக்கவில்லை, முன்னம் இனித்ததெல்லாம் இன்று கசக்கிறது, முன்பு சுவைத்தன இன்று குமட்டல் தருகின்றன, முன்பு எது வீரம் என்று எண்ணிக்கொண்டிருந்தோமோ, அது இன்று வீம்பு அல்லது வெறி உணர்வு என்று தோன்றுகிறது, என்று கூறித் தமக்கு வந்துற்ற நோயினைப் பிறர் காணாவண்ணம் மறைத்திட முயல்கின்றனர். வேறென்ன! இந்நிலை, தன் நிலை மறைந்திடும்போது ஏற்படுதல், தவிர்த்திட முடியாததாகிவிடுகிறது. மூங்கில், கரும்பைவிடத் தழைத்து ஓங்கி வளரத்தான் செய்கிறது; சுவை தாராது! அதுபோல், கொள்கையற்ற நிலையின் துணைகொண்டு, தமது இடத்தை "உயரமானதாக’ ஆக்கிக்கொண்டு கொள்கையாளர்களைக் காட்டிலும் நாங்கள் உயர்வு பெற்றுவிட்டோம் என்று நினைத்துக்கொள்வதும், கதைத்துக்கொள்வதும், ஓங்கி வளரும் மூங்கில், கரும்பினைப் பழித்திடுதல் போன்றதாகும். தம்பி! பொங்கற் புதுநாளிலே காண்கிறாயே பூசுணையும் இஞ்சியும்! இஞ்சியும் அளவு என்ன? பூசுணையின் அளவு யாது? எதற்கு எது மணம் அளிக்கிறது? விளக்கவா வேண்டும்? கொள்கையுடன் தம்மைப் பிணைத்துக்கொண்டவர்கள், எதிர்ப்பு கண்டு அஞ்சார். ஏமாற்றம் ஏற்படும்போதுகூட மனம் உடைந்து போகார். குத்திப் புடைத்தெடுத்துப் புதுப்பாணை தன்னிலிட்டு, பால் பெய்து சமைக்கிறாரே, பொங்கல், அதற்கான அரிசி, கிடைத்தது, எப்படி? அரிசியாகவேவா? இல்லையே! விதை முளையாகி, முளை வளர்ந்து பயிராகி, பயிருடன் களை முளைத்து, களை பறித்த பின்னனர்த் தழைத்து, பூச்சிகட்கு ஈடுகொடுத்து, பிறகு, கதிர்விட்டு, முற்றி, செந்நெல்லாகிப் பிறகு அரிசி காண்கிறோம். இந்நிலைக்கு இடையில், உழவன் என்னென்ன தொல்லைகளை, ஏமாற்றங்களை, எரிச்சலூட்டும் நிகழ்ச்சிகளைச் சந்தித்தான், சமாளித்தான், அறிவோமே! பயிருடன் களை கண்டகாலை, நிலத்தையும் உழைப்பையுமா நொந்துகொள்கின்றனர்? இல்லையே! மேலும் உழைத்து தம் உழைப்பினை உருக்குலைக்க முளைத்திட்ட களையினை அகற்றுவோம் என்று பாடுபல படுகின்றனர். உழவன், செந்நெல் மணியினை, அடித்தெடுத்துக் களஞ்சியம் தனில் சேர்த்திடும் வரையிலே, தான் மேற்கொண்ட பணியி னின்றும் வழுவிடான்! உழவன் குறிக்கோள், அறுவடை! அந்த அறுவடை காணும்மட்டும் உழைத்தாக வேண்டும்; உழைத்தே தீருகிறான். பயிர் தரமாக இல்லை, ஊட்டம் போதுமான அளவு இல்லை, கதிர் செம்மையாக இல்லை, பதர் மிகுதி, மணி குறைவு, என்று ஏதேனும் கூறிவிட்டு, உழவன், தன் பணியினை விட்டு விடுகின்றானோ? விட்டிருப்பின், இன்று இல்லத்தில் இஞ்சியும் மஞ்சளும், மாபலா வாழையும், மற்றைப் பொருள்களும் எப்படிக் கிடைத்திருக்க முடியும்? எனவே, உழவர் திருநாள் இடையிலே இன்னல் ஏற்படினும், தொடர்ந்து பணியாற்றி, அறுவடை கண்டே தீருவது என்ற உறுதியை உழவர் காட்டினர் என்பதை அறிந்து பாராட்ட வழங்கிட, ஏற்ற நாளாகும். விதை தூவும்போதே அறுவடை காணவேண்டும் எனும் குறிக்கோளினை உழவன் கொண்டான்; இடையில் எது வரினும் அந்தக் குறிக்கோளை அவன் மறந்தானில்லை, அதனினின்றும் வழுவிடவும் இல்லை. அதன் காரணமாகத்தான், பலவித உணவு வகை, பருகுவன, சூடுவன, பூசுவன யாவும் உலகு பெற்றுள்ளது. களை கண்டு கலக்கம் கொண்டு கழனிவிட்டுக் கழனி மாறி விட்டிருந்தால், என்ன கிடைத்திருக்கும்? தோல்வி!! இந்த அரிய கருத்து நிரம்பக் கிடைக்கும் நல்ல நாள், தமிழர் திருநாள். ஏர்கட்டி உழும்போது எட்டு ஊரார் கேட்டு மகிழத்தக்க பாட்டெழுப்பிய உழவன், களை கண்டு கதி கலங்கி, இந்த வயலினிலே இறங்கியதே என் தவறு! என் உழைப்பதனை இதற்கீந்தது பெருந்தவறு! இனி என் உழைப்பு இதற்கு நான் அளித்திடவே போவதில்லை. அம்மட்டோ! இந்த வயலினையே அழித்தொழிப்போன், இது உறுதி என்று இயம்பிடக் கேட்டதுண்டா? இல்லை! ஆனால், தமது தகுதியும் திறமையும் அறியாததாலேயே, தாரணியில் பலப்பலரும் தலைவர்களானார்கள், இனி அவர்க்குக் கிடைத்திட்ட அந்த இடம் நாம் பெறுவோம், நமக்கு அது கிட்டாது என்பது விளங்கிவிட்டால், இடத்தையே அழித்தொழிப்போம் என்று கூறிடுவோர் கண்டு வியப்பு அடைதல் வேண்டாம்; இத்தகைய இயல்பு கொண்டோர், இத்தனை நாள் எந்த விதமாகத்தான் இங்கிருந்தார், கொள்கை முழக்கி வந்தார், குறிக்கோளின் தத்துவத்தை விளக்கி நின்றார் என்று எண்ணித்தான் எவரும் வியப்படைதல்வேண்டும் உனைச்சுற்றி இன்றுள்ள பொருள் பலவும், காடென்றும் மேடென்றும் கட்டாந்தரையென்றும் முன்னம் மாந்தர் ஒதுக்கி விட்டிருந்த நிலம் தந்தவையன்றோ! இன்றோ இன்பம் நாம் துய்ப்பது, இயற்கையை வெல்ல, அதன் ஆற்றல் துணைகொள்ள, எண்ணற்ற மக்கள் எத்தனையோ காலமாக எடுத்துக்கொண்ட முயற்சிகளின் வெற்றியைக் காட்டுகிறது. எனவே, உழைப்பின் மேன்மையை, உலகு கொண்டாட அமைந்தது பொங்கற் புதுநாள். நிலந்தனிலே உழுதிடுவோர், சேறாக்க மிதித்திடுவார், செய் தொழிலுக்கேற்றவண்ணம், வெட்டியும் குத்திக் குடைந்தும், பிளந்தும், குழி பறித்தும், எத்தனையோ செய்திருப்பது, காண் கின்றாய், அல்லவா? எதன் பொருட்டு? பலன் காண! எவர் துய்க்க அந்தப் பலன்? நிலம் அல்ல! பலன் காண மக்கள் உழைத்திடுதல் காண்போர் உழைப்போரை வாழ்த்துகின்றார், உழைப்பின் ஏற்றம் செப்பு கின்றார்; உண்மை; தேவை. ஆயின், வேறொன்று உணர்தல்வேண்டும். பலன் காண உழைக்கின்றான் மனிதன், அவன் காணும் பலன் வழங்கும் நிலமோ பலன் காணாதது மட்டுமல்ல, தன் வலிவு தானிழந்த, பொருளிழந்து போவதுடன், வெட்டுவார் நிற்பதையும் வெறுத் திடாமல், அவர்க்கும் இடம் அளித்திடும் பொறை உண்டே, அம்மம்ம! மிகப் பெரிது!! என் சோறு உண்டவனா என் சொல்லை மீறுவது? நான் அளிக்கும் ஊதியத்தால் உயிர்பிழைக்கும் போக்கின்னா, நாக்கை நீட்டி நின்றான், நானவனுக்கு உயிர் கொடுத்தோன் என்பதனையும் மறந்து? என் வீடு ஏறி நின்று என்னையே ஏசிட, என்னதான் துணிவு உனக்கு? இறங்கு என் இடம் விட்டு என்றெல்லாம் ஊரார் உரையாடல் கேட்கின்றோம். "பொன்னுடன் மணியும், பொன்னுடையானேனும் இஃது இல்லாதானாயின், என்னுடையான்’ என்று எவரும் கூறிடத்தக்க, உண்ணும் பொருள் பலவும், சுவைதரும் கனியதுவும், மணம்தரும் மலர்தானும், தந்துதவும் நிலமதுதான், ஒரு பலனும் காணாதது மட்டுமல்ல, கருவி கரம்கொண்டு தன்னை இம்சிப்போனின் தாள் தங்கி இருப்பதற்கும் இடம் கொடுக்கும், இயல்பு என்னே! சின்னஞ்சிறு பூச்சி, நமதுடலில் ஓரிடத்தில் ஊர்ந்து நமக்குத் தொல்லை தந்திடும்போதினிலே, எவ்விதம் துடிக்கின்றோம். எவ்விதம் தேடுகின்றோம், கண்டெடுத்துப் பூச்சியினைக் கொன்றழிக்கத் துடிதுடித்து, எத்தனைவிதமாகத் தாக்குகிறார், நிலமதனை. எத்துணை பொறுமையுடன் எல்லாம் தாங்கிக் கொண்டு பலன் தந்துதவுகிறது நிலம் என்னும் நேர்மை. உழுதால் உணவளித்து, குடைந்தால் நீரளித்து, ஆழக் குடைந்திட்டால், அரும் பொருள்கள் பல அளித்து, ஏனென்று கேளாமல், எப்பலனும் பெற்றிடாமல் ஈந்திட நான் உள்ளேன் பெற்றிடுவாய்! பிழைத்திடுவாய்! எத்தனை விதமான இன்னலும் இழிவும், நீ என்மீது சுமத்திடினும், எல்லாம் மறந்திடுவேன், பல்பொருளைத் தரமறப்பேன் அல்லேன்! குத்தியவன் குடைந்தவன், வெட்டியவன் இவனன்றோ, இவன் நிற்க இடம் கொடுக்க ஏன் நாம் ஒப்புதல் வேண்டும். பழி தீர்த்துக்கொள்வோம், இவன் நம்மைப் படுத்திய பாடுகளுக்கெல்லாம், என்ற சிறுமதி துளியுமின்றிச் செல்வம் ஈந்திடுவது காண்கின்றோம். அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை. என்றார் வள்ளுவர். பொறையுடைமையில் இஃது தலையாயது என்று கூறுகிறார். நிலம்தரும் பலன்கண்டு மகிழ்ந்து, நன்றி கூறும் இந்நாள், பொறையுடைமையைப் போற்றிடவும்வேண்டும். தம்பி! உன் எதிரே காணப்படும் விளைபொருள் யாவும், விதையாக ஒருபோது இருந்தவை. நிலம் தன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருந்ததனை, எத்துணை பாங்காக வளரச் செய்து நமக்கு அளித்துளது கவனித்தனையா! தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட "விதை’ கவரப்படாமலும், அழிக்கப்பட்டுவிடாமலும் பாதுகாப்பு அளித்து, பிறகு முளைவிட்டபோது, வெளியே சென்றிட இடமளித்து, தான்பெற்ற குழந்தையை உலவ இடம் கொடுத்து, அதேபோது பாதுகாப்புக்காகத் தன் ஆடையால், குழவியை ஒரு குறிப்பிட்ட அளவு இடம் வரையில் மட்டுமே உலவிடத்தக்க விதமாகப் பிணைத்து வைக்கும் தாய்போல, செடியும், கொடியும் பயிரும் தன்னுள் இருந்து வெளிக்கிளம்பிட இடமளித்து, அதேபோது, வேர்களை இறுக்கிப் பிடித்துக்கொள்வதன்மூலம், நெடுவழியும் கெடுவழியும் போய்விடாதபடியும் தடுத்து வைத்திருக்கிறது. இத்தனை பரிவு வழங்கும் நிலத்தைத்தான், பல்வேறு பொருள்களைப் பெற்றுப் பயன் துய்க்கும் மாந்தர், பெயர்க் கிறார்கள், பிளக்கிறார்கள், குடைகிறார்கள். அகழ்வாரை நிலம் தாங்கிக்கொள்கிறது. என்னென்ன உதவிகள் செய்தேன் தெரியுமா இன்னாருக்கு என்று கூறிடத் தோன்றும்போதெல்லாம், தம்பி! நிலம் மாந்தர்க்கு வழங்கிடும் உதவியின் தன்மையை எண்ணி, அடக்க உணர்ச்சி பெறவேண்டும். நிலம் மாந்தர்க்கு வழங்கும் திறத்துடன் மாந்தர் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் உதவிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நமக்கே, வெட்கமாக இருக்கும். என்னிடம் உதவி பெற்றுக்கொண்டு என்னையே இகழ் கிறான் - நான் எப்படி அதனைத் தாங்கிக்கொள்வேன் என்ற எண்ணம் எழும்போதெல்லாம், தம்பி! அகழ்வாரைத் தாங்கிக் கொள்ளும் நிலத்தை எண்ணிப் பொறையுடைமையைப் பூண்டிடல்வேண்டும். இத்தகு நற்கருத்துக்கள் பெற்றிடத்தக்க நாள், இத்தமிழர் திருநாள். நற்கருத்துகள் பலவும் நாம் பெற்றிடலாம் இந்நாளில் - அதுவும் அதற்காக ஏடெடுத்துப் படித்த பிறகு என்றுகூட இல்லை. நம்மைச் சுற்றியுள்ள நிலைமைகளை, நினைப்புகளை, பொருட்குவியலைக் கண்டாலே போதும், நான் சுட்டிக் காட்டிய கருத்துக்கள் உன் நெஞ்சிலே சுரக்கும். அது சரி, அண்ணா! பொங்கற் புதுநாளில் மகிழ்ச்சி பெறலாம், மாண்பு பெறலாம், என்கிறாய், ஒப்புக்கொள்கிறேன் - பொங்கற் புதுநாள், நாடு முழுதுக்கும் மகிழ்ச்சி தரத்தக்க நிலையினில் இன்று இல்லையே, அதனை மாற்றி அமைத்து மனைதொறும் மனைதொறும், மகிழ்ச்சி பொங்கிடத்தக்கதோர் சூழ்நிலையைக் காணவேண்டாமா - அதற்கு யாது செயல் வேண்டும் என்று கேட்கிறாய், புரிகிறது. என் பதிலும் உனக்குத் தெரியும்; நமது அரசு அமைதல்வேண்டும்; அதற்கும் அடிப்படை யாக நமது நாடு நமது ஆகவேண்டும். அந்தக் குறிக்கோளின் அரவணைப்பிலே நாம் இருக்கிறோம். தம்பி! உனக்கும் எனக்கும் இடையே ஏற்பட்டுள்ள "பாசப் பிணைப்பு’க்குக் காரணம் என்ன? நாம் ஏற்றுக்கொண்டு போற்றிவரும் குறிக்கோள் திராவிடநாடு திராவிடர்க்கே எனும் இலட்சியம். எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டுமென்பதற்கே, திராவிட நாடு திராவிடர்க்கே எனும் குறிக்கோள் கொண்டுள்ளோம் என்று கூறுகின்றீர், நோக்கம் சாலச் சிறந்தது, வழி தவறு; எல்லோரும் இன்புற்றிருக்க நாடு தனியாதல்வேண்டும் என்பதில்லை, திட்டமிட்டுப் பணியாற்றி, உற்பத்தியைப் பெருக்கினால், ஊர் தழைக்கும், உற்ற குறைகள் யாவும் நீக்கப் பெற்று எல்லோரும் வாழ்வர் என்ன கூறுகின்றீர் என்று கேட்கின்றனர் காங்கிரசார். தம்பி! அவர்கள் பேச்சினை நாகரிக முள்ளதாக்கி நான் இதுபோல் எடுத்துரைத்தேன். எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடவே, எமது கட்சியினர் திட்டம் தீட்டுகின்றார் - இரண்டு முடிந்தது, மூன்றாவது இன்று நடை பயிலக் காண்கின்றீர். இந்தத் திட்டங்கள், நாட்டு வாட்டம் போக்கிடவும், கேட்டினை நீக்கிடவும், வீட்டினிலே வாழ்வின் ஒளி வந்து பரவிடவும் ஏற்ற வழி காட்டிடவும் காண் என்று பேசுகின்றனர். திட்டமிட்ட சீரமைப்பு என்பதனைத் தி. மு. கழகம் தேவை யற்றது என்று கூறவில்லை. ஆயின், அது காட்டி, உரிமை வாழ்வு மறுத்திடுவது அறமாகாது என்று கூறுகிறது. சோளக் கொல்லைப் பொம்மை காக்கை கடுவனை விரண்டோடச் செய்திடக்கூடும். எனினும், வயலுக்குடையான் வரப்பருகே நின்று காத்து வளம் பெறுதற்கு அது ஈடாகாது. கார் கண்டதும் ஏர்மீது கண்பாயும் உழவனுக்கு. மாரி பெய்திடட்டும் என்னிருந்திட மாட்டான், பொய்த்திடின் என்னாகும் என்றெண்ணி, மார்பு உடையப் பாடுபட்டேனும், காலத்தில் நீர் பாய்ச்சிக் கடமை யாற்றுகிறான். இவை யாவும் தனக்கென உள்ள வயலில்! திட்டங்கள், திருவிடம் அமைந்தால் தீய்ந்துபோய்விடுமோ! இல்லை! திட்டமிட்ட சீரமைப்பு அப்போதும் இருந்திடத்தான் வேண்டும் - எனவே, திட்டம்தனைக் காட்டித் திருவிட விடுதலை வேண்டுவதில்லை என உரைப்போர், பருகிடப் பால் கொடுத்து விட்டப் பசுவினைப் பறிப்போர் போன்றாராவர். திட்டம் இரண்டு முடித்தோம் என்று, வழி நடந்த களைப்பாலே வியர்வையை வழித்தெடுத்துக் கீழே வீசிவிட்டுப் பேசுவார்போல் உரைக்கின்றார் ஆட்சியாளர் - திட்டமிட்டதன் பலன், தேனாகி இனிக்கிறதா அல்லது பலனைத் தேடிக் கண்டறிய ஓர் முயற்சி நடக்கிறதா என்பதனை எண்ணிப் பார்த்தால் போதும், இவர் கூற்று எத்தகையது என்பதனை அறிந்திடலாம். திட்டம் இரண்டு முடித்ததனால் செல்வம் வளர்ந்தது; எனினும், அச்செல்வம் எங்குப்போய் ஒளிந்தது என எவர்க்கும் புரியவில்லை. எனவே, சென்று உசாவுங்கள், செல்வம் எங்கு உளது என்று. இக்கருத்துடன் உரையாற்றி நேரு பெருமகனார், திட்டத்தால் கிடைத்திட்ட செல்வம் சமுதாயமெங்கும் பரவிக் கிடக்கிறதா, அல்லது சிலருடைய கரம் சிக்கிச் சீரழிந்து போகிறதா என்பதனை ஆராய்ந்து அறிந்து கூறத் தனிக்குழுவை அமைத் துள்ளார். இஃது அவர் பொறுப்புணர்வுக்குப் பொன்னான எடுத்துக்காட்டு எனப் புகழ்ந்துரைப்பர், காங்கிரசார். கூறட்டும்; தவறில்லை. அதுபோன்றே, திட்டமிட்டு ஈட்டிய செல்வம் எங்குச் சென்று ஒளிந்துளது என்று தேடிக் கண்டறிய வேண்டிய நிலையாது பாடம் தருகிறது? திட்டமிட்டது, செல்வம் வளரப் பயன்பட்டதுவே அல்லாமல், சீரான வளர்ச்சியை, எல்லோரும் பலன் காணும் முறையினைத் தரவில்லை. கரும்பு கரம் எடுத்து, கேட்போருக்குத் தரமறுத்து, தனியே ஓரிடத்தில் ஒளித்து வைத்துவிட்டவர்கள், தாமும் அஃதுண்ண நேரம் கிடைக்காமல் வேறுவேறு அலுவலிலே ஈடுபட்டுக் காலம் கடந்தபின்னர், கரும்பதனைத் தேடும்பால், கட்டெறும்புக் கூட்டம் அதனை மொய்த்துக் கிடப்பதனைக் காண்பர். இன்று கரும்பு எங்கே? கட்டெறும்புக் கூட்டத்திடம் சிக்கிற்றோ, கண்டறிவீர் என்று பண்டிதர் குழு அமைத்தார்; திட்டத்தின் பலன், மக்கட்கு வந்து சேரவில்லை என்பதற்குச் சான்று இதுபோதும், பலதேடி அலைவானேன்? ஆங்கில அரசு இங்கிருந்து அகன்றபோது, இருப்பாகப் பல வகையில் விட்டுச் சென்ற தொகை 1,179,74,00,000 ரூபாய்கள் என்கின்றார். இவ்வளவும் வீணாகிப்போனதென விம்முகிறார் நிலை அறிந்தோர், நேர்மையாளர். வாழை, உண்பதற்கு, வழித்தெடுத்துக் கூழாக்கி வண்ணத்தாள் ஒட்டுதற்கா? கரும்பு சாறுபெற, அடுப்பிலிட்டு எரிப்பதற்கா? சந்தனம் மார்புக்கு; சாணம்போல் வீடு மெழுகுதற்கா? எதெதனை எம்முறையில் பயன்படுத்திக்கொள்கிறோமோ அதைப் பொறுத்து, அப்பொருளினால் நாம் அடைகின்றோம் முழுப்பலனும்; கூரைக்குக் கழியாக வேய்ந்திடவா, கரும்பு! வேய்ந்திடின் கரும்பினால் காணத்தக்க பலனை நாம் இழந்து, கவைக்குதவாக் காரியத்துக்கு அதனைப் பயன்படுத்திக்கொண்ட தனால் பாழாக்கிவிட்டோம் என்பதன்றோ பொருள். அம்முறையில் வெள்ளையர் விட்டுச் சென்ற கிட்டத்தட்ட 1200 கோடி ரூபாயும், பசையாகிப் பாழ்ப்பட்ட வாழையென, கழியாகிப் பயன் இழந்த கரும்பென, ஆகா வழிகளுக்குச் செலவாகிப் பாழாகிப் போயிற்று. இஃதொன்று போதும் கணக்கறிந்து வாக்களிக்கும் நிலைபெற்ற நாடுகளில், இன்றுள்ள ஆட்சியினை ஏற்கோம் என்று கூறி விரட்டுதற்கு. இரும்பு இதுபோல இல்லாது போயிற்று. இது மட்டுமன்று. நாளுக்கு நாள் வரிகள் ஏறி, தொகை வளர்ந்து கேட்டிடும்போதே "மலைப்பு’ மூட்டிடும் நிலை உளது. சென்ற ஆண்டு டில்லிப்பேரரசு பெற்ற வருவாய் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்; தமிழ்நாடு அரசு, கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய். இதில், பெரும்பகுதி, ஏழை எளியோர்கள், நடுத்தரத்தினர் கொட்டிக் கொடுத்திட்ட, மறைமுக வரியாகும். கலால் வரி, சுங்க வரி என்பவைகள் வளர்ந்துள்ள வகை அறிந்தால், வாய் வீச்சில் வல்லவராம் காங்கிரஸ் பேச்சாளர் கூட, சிந்தை நொந்திடும் நிலை பெறுவார், வெளியே காட்ட மாட்டார். கலால் வரி 1946 - 47 - 43.03 கோடி ரூபாய் 1948 - 49 - 50.65 கோடி ரூபாய் 1950 - 51 - 67.54 கோடி ரூபாய் 1952 - 53 - 83.03 கோடி ரூபாய் 1954 - 55 - 103.65 கோடி ரூபாய் 1955 - 56 - 132.27 கோடி ரூபாய் இவ்விதம் ஏறிக்கொண்டே போகிறது. கணக்கு முழுதும் காட்டிக் கலங்கிடச் செய்வானேன்! பண்டங்கள் செய்கையிலே, கைம்மாறி வருகையிலே, இன்னபிற வழிமூலம் பெறுகின்றார் பெருந்தொகையாய், கலால் வரி. சுங்க வரி 1946 - 47 - 89.22 கோடி 1948 - 49 - 126.16 கோடி 1950 - 51 - 157.15 கோடி 1951 - 53 - 231.69 கோடி இப்படி இந்தத் துறை வரியும் ஏறுமுகம் காண்கின்றோம். பெரும் பொருள் வரிமூலம் பெற்றிடுதல், அரசு நடாத்தத் தேவைப் படுகிறது, வரியின்றி அரசாளல் ஆகாது என்று ஆட்சியாளர் அறைகின்றார்! வரியின்றி அரசாள இயலாது; உண்மை; மறுப்பார் இல்லை; ஆயின், வசதி பெருக்கிட வரியன்றி வேறோர் வகை இல்லை என்பரோ? கூறுவர், வன்னெஞ்சக்காரர். ஆனால், ஏழை முகம் காணும் இரக்க மனமுள்ளோர் இதுபோல் கூறார். வரிக்காகவே வரிந்துகட்டி நின்றிடவும், வல்லடிக்கு வரவும் வலிவு பெற்றுக் காட்டும் பேரரசு, வருவாய்த்துறை அனைத்தும் "பெரும்புள்ளிகள்’ இடம் விட்டுவிட்டு, இருக்கின்றார்; அப்போக்கினை மாற்றி, வருவாய் தரத்தக்க தொழிலெல்லாம் நடத்தி, பொருள் ஈட்டி மக்கள் முதுகெலும்புதனை முரிக்கும் வரிச்சுமையைக் குறைத்திடுதலே அறநெறியாகுமென்பர். மறுத்திடுவார், உண்டா? பெரும் தொகையை வரியாகப் பெற்று, மக்களை வறுமையிலே உழலவிட்டு, வரித்தொகையைச் செலவு செய்யும் வகையேனும், வாட்டம் போக்குவதாய், வளம் காண உதவுவதாய் உளதா? இல்லை என உரைக்கும், இவராட்சிக் காலத்தில் ஏறியபடி உள்ள படைச்செலவுக் கணக்கெடுத்தால். பாதுகாப்பு (இராணுவ)ச் செலவு 1957 - 58 - 279.65 கோடி 1958 - 59 - 278.81 கோடி 1959 - 60 - 280.18 கோடி 1960 - 61 - 310.00 கோடி இந்த நிலையினிலே, பெரும் பொருள் செலவாகி வருகிறது; தொகை வளர்ந்தபடி உளது. தம்பி! பாதுகாப்புத் துறைக்கு இத்துணைப் பெரும் பொருள் செலவிடுவது காந்திய போதனைக்கும், பஞ்சசீல உபதேசத்துக்கும் பொருந்துவதாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, இந்தத் துறைக்குச் செலவாகும் இத்துணை பெரும்பொருளும், போட்ட முதல் மூலம், வருவாய் பெருகிடுவதாக அமையாது. கோழிக்குத் தீனியிடல், முட்டை பெற உதவும், காக்கைக்குத் தீனியிட்டுக் காணும் பலன் உண்டோ? விளைநிலத்துக்கு நீர் பாய்ச்சிடுதல், வேண்டும் பொருள் பெற உதவும், கற்பாறை மீதினிலே நாளெல்லாம் நீர் பாய்ச்சிக் கண்டெடுக்கப்போவதென்ன? இருப்பு இலாதுபோய், மக்கள் இடுப்பு முரிய வரி போட்டுத் திரட்டியதில் பெரும்பகுதி பட்டாளச் செலவுக்காக்கி, வருவாய் பெறும் தொழில் நடாத்தும் வழி அடைத்து விடுவதுடன், தீட்டியுள்ள திட்டங்கள் நடைபெற்றுத் தீர வேண்டும் என்பதற்காக, வெளிநாடுகளிலே பெற்றுள்ள கடன் தொகை (ஈராண்டுக்கு முன்புவரை) 4971 கோடி என்று கணக்களிக்கின்றார், அறிந்தோர். கைபிசைந்தவண்ணம் கூறுகின்றார் 1960-61ஆம் ஆண்டுமட்டும், வாங்கியுள்ள கடனுக்குச் செலுத்தவேண்டிய வட்டித்தொகை, 143 கோடி என்பதாக! இருப்புக் கரைந்தது, வரி வளர்ந்தது! கடன்சுமை ஏறிற்று - இவையாவும் கூடப் பொறுத்துக்கொள்ளலாம் - சுடுமணல் வழி கடந்தால், சோலைபோய்ச் சேர்ந்திடலாம் எனும் உறுதி உண்மை எனில். அஃது உண்டா? இரு பெரும் திட்டங்கள் முடிந்தான பிறகும், சோலை ஏழைக்கில்லை, சுடுமணலே அவனுக்காக என்ற நிலையே நீடித்து இருக்கிறது, நிலைத்து விட்டிருக்கிறது. ஐந்தே அணா நாள்கூலி பெற்று அல்லற்படுவோர் 6 கோடி. நாலணா பெற்று நலிவுற்றுக் கிடப்போர் நாலு கோடி, இரண்டனா பெற்று ஏங்கிக் கிடப்போர் இரண்டு கோடி. என்று இவ்விதமாக, ஆட்சிப் பொறுப்பினரும், ஆராய்ச்சி நிபுணர்களும் அளித்து வரும் கணக்கேடு காட்டுகிறது. என்ன பலன் கண்டோம், இருதிட்ட வெற்றியினால்? எரிச்சல் கொள்ளாது, ஏழையை இகழாது, எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் போக்குக் காட்டாது, எண்ணிப்பார்த்து இதற்கு ஏற்ற விடை அளித்திடும் அன்பர் உண்டோ, தேடிடுவீர்! திட்டம் தெளிவற்று, அக்கறையற்று துளியுமற்று, அடி பணியும் செல்வர்தமை ஆனமட்டும் தூக்கிவிட்டு, ஆட்சி நடத்துகிறார் ஆங்கிலர் என்றுரைத்தோம். அவர் ஆட்சி அகற்றி விட்டோம், ஆளத் தொடங்கி ஆண்டு பதினைந்தாகிறது. இன்று, முதலாளிகள் முகாமில், கேட்பதென்ன குரல்? இன்று அவர் கோட்டை இடித்திட்டோம் எனக் காட்ட முன்வருவாரா? எங்ஙனம் இது இயலும்? கணக்குக் கேளீர். வெள்ளையராட்சி இங்கு இருந்தபோது இலாபம் பெற்றிட முதலாளிகள் தொழில் நடத்த, மூலதனம் போட்டிருந்தார்; தொகை அன்று 700 கோடி எனக் கணக்குண்டு. இன்று முதலாளிகளின் முகாம், அழித்துயாம் ஏழையரை ஏற்றம் பெறச் செய்ய வந்தோம் என முழக்க மெழுப்பி அரசாள்கின்றார், காங்கிரசார். வெள்ளையர் நாட்களிலே முதலாளி மூலதனம் 700 கோடி எனில், இந்தப் பதினைந்து ஆண்டுகளில், இது எந்த அளவு குறைந்துளது? கணக்குக் காட்டுவரா காங்கிரசார்! காட்ட மாட்டார். அவர் காட்டும் கணக்கெல்லாம் உரக்கூடை, பொலிகாளை! இன்று இவர் ஆட்சியிலே முதலாளிமார்கள் தொழில் நடத்தப் போட்டுள்ள மூலதனம் 1900 கோடி ரூபாயாகும். வெள்ளையர் ஆட்சிக் காலத்தைவிட இன்று முதலாளித்துவ முறை ஏறக்குறைய மும்முடங்கு வளர்ந்துளது; கொழுத்துளது. இதற்கோ திட்டம்? ஏழைகளைக் காப்பதற்கே எமது திட்டம் என்றனரே! நிறைவேற்றிக் காட்டினரா? இன்னமும் கேள், தம்பி! இலாபம் தன்னைக் காண முதலாளிகள் நடாத்தும் தொழில்களுக்குச் சலுகைகள், கடன் தொகைகள், சன்மானம் என்பவைகள் இவர்கள் கொடுத்துள்ளார் - கஞ்சிக்குத் தாய் கதற, கைப்பொருளை அதற்குத் தந்திடாமல், ஆவின்பால் வாங்கி அரவுக்கு ஊற்றுவான்போல், வீடில்லை மாடில்லை என்று ஏழை கதறுகையில், இலாபக் கோட்டை கட்டும் முதலாளிகள் மகிழ, காங்கிரஸ் ஆட்சியினர் தந்த தொகை 590 கோடி ரூபாய்! அறம் இதுவா? இலாபம் தரும் தொழிலெல்லாம் ஏன் நடத்தக்கூடாது என்று நாம் அரசு நடத்துவோரைக் கேட்கும்போது என்ன பதில் கூறுகின்றார்? இதற்கெல்லாம் "முதல்’ போடப் பணத்தைச் செலவிட்டுவிட்டால், மற்றப் பல செயல்கள் நடவாதே என்கின்றார். இலாபம் தரும் தொழில் நடத்தப் பணம் இல்லை என்று கூறும் இவர், சுரண்டல் நடாத்தும் அந்தச் சுகபோகிக் கூட்டமாம் முதலாளிமார்களுக்கு அள்ளிக் கொடுத்த தொகை கிட்டத்தட்ட அறுநூறு கோடி ரூபாய்! அந்தப் பெருந்தொகையை முதலாளிகட்கு அளித் திடாமல், இவரே தொழில் நடத்தப் போட்டிருந்தால், இன்று செல்வர்களைக் கொழுத்திடவைக்கும் இலாபம் மக்களுக்கன்றோ கிடைத்திருக்கும்? நடத்துவது மக்களாட்சி என நவில்கின்றார் நேர்த்தியாக! சமதர்மம் மேற்கொண்டோம் என்று சமர்த்தாகப் பேசுகின்றார். சமதர்மம் காணும் முறையா அறுநூறு கோடி ரூபாயை அள்ளி முதலாளிக்கு அளித்திடுவது? அறிவற்றோம் துணிவற்றோம் என்றா நமை எண்ணுகின்றார்; அப்பட்டமான பொய்யை அவிழ்த்துக் கொட்டுகின்றார். ஒரு சேதி கேள் தம்பி! இந்தியத் துணைக்கண்டமதில் இரு குடும்பங்கள் மட்டும், தொழிலுலகில் பெற்றுள்ள ஆதிக்கத்தின் அளவு கூறுகின்றேன். இரு குடும்பங்களிடம் மட்டும் பெருந் தொழில்கள் 400 சிக்கிக் கிடக்கின்றன. இத்தனை தொழில்கள் இரு குடும்பத்திடம் இருந்தால், இவை தம்மில் கிடைத்திடும் இலாபம் அவ்வளவும் இரு குடும்பத்துக்கன்றோ சென்று அடைபட்டுவிடும்? இரு குடும்பம் மட்டும் இத்தனை தொழில் நடத்தி இலாபம் ஈட்டிக் கொண்டால், செல்வம் பரவுவது ஏது? செழுமையை மக்கள் காண்பது எங்ஙனம்? அதனால்தான் ஐந்தணாவும் நாலணாவும், இரண்டே அணாக்களும் நாளெல்லாம் பாடுபட்டுப் பெறுவோர்கள் பலகோடி உளர்! இத்தனை கோடி மக்கள் இடர்ப்பாட்டில் இருக்கையிலே, மொத்தமாய் வளர்ச்சி பெற்றோம் திட்டம் நிறைவேற்றி என்று செப்புவது சரியாமோ? சிந்திக்கச் சொல், தம்பி! சீற்றம் விட்டொழித்து. இரு குடும்பம் தம்மிடம் இறுக்கிப் பிடித்துள்ள பெருந் தொழில்கள் நடாத்தப் போட்டுள்ள மூலதனம், எவ்வளவு தொகை என்பதனைக் கேட்டிடுவாய் - 500 கோடி ரூபாய்! ஆங்கில ஆட்சியது அக்கிரம ஆட்சியாகும்; கொள்ளை அடிப்போரைக் கொழுக்க வைக்கும் கொடிய ஆட்சியாகும் என இடி முழக்கம் எழுப்பினரே! இவராளத் தொடங்கியபின், இந்நிலையில் முதலாளி, கோட்டை அமைத்துக்கொண்டு, கொடிகட்டி ஆள்கின்றான்!! கேட்பார் உண்டா? கேட்பது, நீயும் நானும்! நாட்டவர்க்கும் இது தெரியவேண்டாமோ? தெரிவிப்பாய், தெளிவளிப்பாய். தனிப்பட்டோர் கொழுத்து வாழத் தொழில் நடத்த விட்டுவிடல், ஏன் என்று கேட்டுப்பார் - பதிலா வரும் - செச்சே! பதறிடுவர், பகைத்திடுவர், பழித்திடுவர், பதிலளித்திட முன் வாரார்!! தொழில் நடத்தி இலாபம் குவித்திட, முதலாளிகளுக்கு இடம் கொடுத்திட்டால், அவர் சுரண்டும் தொகையினிலே, காங்கிரஸ் பெருந்தொகை தேர்தல் நிதியாகப் பெற்றிட வழி உளது; அரிமாவின் பின் நடந்தால் சிறுதுண்டு கிடைக்கிறதே, சிறு நரிக்கு, அஃதேபோல்! பிர்லா எனும் பெரிய முதலாளியிடம் உள்ள பல தொழிலிலே ஒன்று, மோட்டார் தொழிலாகும்; இந்துஸ்தான் மோட்டார் என்பது அதன் பெயராகும். இந்த அமைப்பு மட்டும் காங்கிரஸ் தேர்தல் நிதிக்காகக் கொடுத்த தொகை எவ்வளவு? மூர்ச்சையாகிப் போகாதே, தம்பி! பிர்லா தொழிலமைப்புத் தந்த தொகை இருபது இலட்சம்!! இருபது இலட்சம் ரூபாய் நன்கொடையை எளிதாகக் கொடுத்திட, பிர்லாவின் மனம் இடங்கொடுத்தது எதனாலே? காங்கிரஸ் கட்சியது நாடாள்வதாலேதான், தொழில் நடத்திப் பொருள் திரட்டப் பிர்லாவும் பிறரும் வாய்ப்புப் பெறுகின்றார். சுரண்டிக்கொள்ள உரிமை, காங்கிரஸ் அரசு தந்திடும்போது, ஈடுசெய்யவேண்டாமோ? செய்கின்றார்! ஒரு தொழில் அமைப்பு மூலம் மட்டும் இருபது இலட்ச ரூபாய். பெருந்தொகை என்பாய் தம்பி! நமக்கு அது, எண்ணிப் பார்த்திடக்கூட இயலாத தொகை யாகும்; ஆனால், அவர் தந்த தொகையினைப் பிர்லா பெற்ற இலாபத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான், உண்மைநிலை புரியும். பிர்லாவின் மோட்டார் தொழிலில், 1960-ஆம் ஆண்டு கிடைத்துள்ள இலாபம். 2,85,71,127 ஆகும். இத்தனை பெரிய இலாபம் கிடைத்தது எவராலே? எவர் இவர்க்கு இந்தத் தொழிலை நடத்துதற்குத் துணை நிற்கின்றாரோ, அவராலே! அவர் காங்கிரஸ் அரசு நடாத்துபவர்! எனவே, அடித்த கொள்ளையில் ஒரு பகுதியைக் காங்கிரசுக்கு அளிக்கின்றார், செல்வம் பெற்றோர். கூட்டுச்சதி என்பதன்றி வேறென்ன இதற்குப் பெயர்? "ஏழையைக் காட்டிக் கொடுப்பது’ என்பதன்றி, இதற்கென்ன வேறு பெயரிடுவீர்? எத்துணை துணிவிருந்தால் இச்செயலில் ஈடுபட்டு, எமதாட்சிக்கு உள்ள குறிக்கோள், சமதர்மம் என்றும் கூறுவர்! வழிப்பறி நடத்துபவன், "கனம் குறைத்தேன்’ என்பதுபோல், பேசுகின்றார்; கேட்டு மக்கள் திகைக்கின்றார். தேபர் என்பார் உனக்குத் தெரிந்திருக்கும் - ஊரார் மறந்திருப்பார் - ஓராண்டு காங்கிரசுக் கட்சிக்குத் தலைவராய் இவர் இருந்தார். இவர் கணக்கும், நான் கூறும் கருத்தினையே வலியுறுத்திக் காட்டுகிறது. மொத்தமாய்க் கணக்கெடுத்தால், நாட்டில் ஒருவருக்குச் சராசரி வருவாய், 306-ரூபாய்! எனினும், கிராமத்தார் வருமானம் இந்தக் கணக்கு முறைப்படியே பார்த்திடினும், 95-ரூபாய்தான்! ஏன் இந்த அவலநிலை? இன்னும் கிராமத்தில் உள்ளோரே, பெரும்பாலோர். அவரெல்லாம், மிகக் குறைந்த வருவாய்தான் பெறுகின்றார். திட்டமிட்டு என்ன கண்டோம். இந்நிலையில் இருக்கிறது இவர் போடும் திட்டம்! இதைக் காட்டி, "இன்பத் திராவிடத்தை’ ஏன் கேட்டு அலைகின்றீர், நாடு பூங்காவாக நாங்களாக்கிக் காட்டுகின்றோம் என்று நீட்டி முழக்குகின்றார் - அவர் பேச்சை நெட்டுருப்போட்டவர்கள், நாட்டைக் கலக்குகின்றார் நாராச நடை கலந்து. தூற்றிடுவோர் தொகையும் வாகையும் வளர்ந்திடினும், தூய நம் கருத்துத் துவண்டுவிடப்போவதில்லை; ஆர்வம் கொழுந்துவிட்டெரிகிறது. எவர் என்ன ஏசினாலும், எதிர்ப்புப் பல மூட்டிடினும் எடுத்த செயலதனை முடித்திடும் முயற்சிக்கே மூச்சு இருக்கிறதென்ற, உறுதி கொண்டோர் தொகையும் நாளுக்கு நாள் வளர்ந்தபடி உள்ளது காண்! ஆனால், தம்பி! நமது உறுதி உரத்த குரலால், தடித்த சொற்களால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சால், வெளிப் படுத்த நினைப்பது தவறு, தீது; நெடுநாள் நிலைக்காது. "வேகம்’ வேகமாக வளரும்; ஒரு சிறு ஐயப்பாடு, அல்லது அச்சம் அல்லது சலிப்பு அல்லது சபலம் ஏற்பட்டால் போதும், மிக வேகமாக வீழ்ந்துவிடும், அல்லது வேறு திக்குத் தாவும்! எனவே, உறுதிக் கழகு உறுமுதல் என்றோ, வீரத்துக்கழகு காரமாய்ப் பேசுதல் என்றோ, தவறான தத்துவம் கொள்ளக்கூடாது. அவ்விதம் வேகம் - காரம் - சூடு - மிக அதிகம் கலந்து, திராவிட நாடு குறித்துப் பேசியோர், பிறகோர் நாள், நிலைகுலைந்து, நினைப்பு அழிந்து, அடியற்ற நெடும்பனையாகிப் போயினர், கண்டோம். குறிக்கோள் மறுத்திடுவோர் கடுமொழியால் நம்மைத் தாக்கிடினும், தாங்கிக்கொள், தம்பி என நான் கூறிவரும் இயல்புடையோன் - கூறுவதுமட்டுமன்று, நான் தாங்கிகொள் கின்றேன். அந்தோ, இப்போக்கு, நம்மைக் கோழைகளாக்கிவிடும். ஏன் இந்த அண்ணன் இதுபோல் பயம்கொண்டு பேசுகிறான்? தூற்றுவோர்தமைத் துதிபாடி அடக்குவதோ? வெட்டுக்கு வெட்டு என்னும் வீரம் கொள்ளவேண்டாவோ? இன்று மாலை வாரீர், என் முழக்கம் கேட்டிடலாம், நான் சாடும் வேகம் கண்டு, சரியுது பார் எதிர்ப்பெல்லாம், அமைச்சர்களைத் துச்சமென்று அடித்துப் பேசினால்தான், அடங்குவர் மாற்றார்கள்; எழுச்சி கொள்வார் நம் தோழர். இந்த முறைதான் நாம் இனி மேற்கொள்ளவேண்டுமென்று சங்கநாதம் செய்த சிங்கங்கள் இன்று எங்கே? நம்மோடு இல்லை! வேகம், விறுவிறுப்பு போன விதம்தானென்ன? அறிவு மேம்பாட்டால் அமைதி அரசோச்சுது என்றும், நாகரிகம் முற்றியதால் நாவடக்கம் பெற்றோம் என்றும் இன்று அவர் பேசுகின்றார். பணிவும் குழைவுமன்றோ பண்பாகும் என்கின்றார். படபடத்த பேச்சு நம் பாங்கான வளர்ச்சியினைப் பாழாக்கும் என்று "பாடம்’ புகட்டுகின்றார். இந்த மாறுதல், இத்துணை விரைவாக இவர்க்கு வரக் காரணம் என்ன? உள்நோக்கம் நான் அறியேன், எனினும், ஒன்று புரிகிறது, வேகமாகப் பேசினரே, அப்போதே உறுதி இருந்த தில்லை. உரத்த குரல் மட்டுந்தான் அவர் உடைமை! என்று தெரிகிறது. நான் சொன்னேன் அன்றே, அடக்கம் அழுத்தத்தின் விளைவு, ஆர்ப்பரிப்பு அஃதன்று என்று. என் சொல்லை நம்பாமல். எதிரியைத் திக்குமுக்காடச் செய்யும் தீப்பொறிப் பேச்சினைரைத் தீரமிகக்கொண்டவர்கள், மாற்றாரைத் தீர்த்துக் கட்டிவிடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்திருந்தார் ஏமாற்றம் தான் கண்டார். "அரசியலில் ஒதிய மரம்போல் இருக்கும் காமராசரின் தைரியத்தை நாம் அறிவோம். இப்படிப்பட்டவர் களிடத்தில்தான் நாங்கள் பயப்படவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். கோழிக்குஞ்சு மனம் படைத்தவ ரிடத்தில் நாம் அடங்கி நடக்கவேண்டுமென்று எதிர்பார்க் கிறார்கள்.’’ காமராசர் ஒதியமரம்! அவருக்கு இருப்பது கோழிக்குஞ்சு மனம்!! இத்துணைக் கேவலமாய்ப் பேசியவர், இன்று என்ன கோலம் கொண்டுவிட்டார்? நாடறியும்! இவ்வளவு கேவலமாகப் பேசியவர்கள் வேறு பாதை சென்றனர்; அதே வேகம் அங்கேயும்! ஆக அவர்கட்கு உள்ள குணமும் தெரிந்த வித்தையும், வேகம்! மிக வேகம்! மிகமிக வேகம்! - இவ்வளவே என்பது புரிகிறதல்லவா? ஆகவே, தம்பி! காரணமற்ற வேகம்வேண்டாம் - அன்னையைக் கேள், பக்குவமாகப் பண்டம் வெந்துவிட்டது என்றால், கொதிக்கும் சத்தம் குறைந்துவிடும். அதுபோன்றே கொள்கைப்பிடித்தம் நல்ல முறையிலே ஏற்பட்டுவிட்டால், வீணான வேகம் எழாது. சிறிதளவு அழுகிய பழத்தைக் கண்டிருக் கிறாயா - மேலே கசியும். சுவையில் புளிப்பேறிவிட்டது. பக்குவம் கெட்டுவிட்டது என்பது பொருள். கரும்பு, அப்படித் தெரிய வில்லை, பார்த்தனையா, தம்பி! அடக்கமாக இருக்கிறது, எவ்வளவோ சுவையைத் தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு. கொள்கையில் நமக்குப் பிடிப்பு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக, "கனல் கக்குவது, எக்காரணம் கொண்டோ? அக்கொள்கையிலே ஐயப்பாடு ஏற்பட்டுவிட்டால், உடனே காறி உமிழ்வது, இரண்டுமே, மனம் பக்குவப்படாத நிலையைத்தான் காட்டுகிறது. அது கூடாது, தம்பி! நம் நாவிலிருந்து எது வந்தாலும் நாடு ஏற்றுக்கொள்ளும், அல்லது அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய சிலரை நாட்டிலே தேடிப் பிடித்துக்கொள்ளலாம்’, என்ற நினைப்பு எழலாகாது. அது எந்த விதமான "புத்தி’ என்று என்னைக் கேட்காதே, தம்பி! எனக்கு வேறோர் வகையான புத்திபற்றிய குறிப்புத் தெரியும், அதை வேண்டுமானால் கூறுகிறேன். திராவிட நாடு திராவிடருக்கே எனும் நமது குறிக்கோளில் நம்பிக்கை இருப்பதை நாடறியச் செய்யவேண்டும் என்பதுடன், அந்தக் கருத்தை மறுப்போரை நையப் புடைக்கவேண்டும் நாவினால் என்ற நினைப்பு, ஆதிக்கம் செலுத்தி வந்த நேரத்தில், காங்கிரஸ் அமைச்சர்கள், நமது கொள்கையை இழித்தும் பழித்தும் பேசிவரக் கேட்டு நான் வருத்தப்பட்டுக்கொண்டேன். அமைச்சர்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய விதமாகக் கொள்கையை விளக்க நமக்குப் போதுமான திறமை இன்னும் வளரவில்லை போலும் ஒன்று எண்ணிக்கொண்டிருந்திருப்பேனே தவிர, அமைச்சர்களை ஒதியமரம் என்று தடித்த வார்த்தைகொண்டு ஏச மனம் வந்ததில்லை. அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசி என் நாவினையும் அசிங்கப்படுத்திக்கொண்டதில்லை, கேட்ப வர்கள் காதிலே நாராசம் பாயும்படியும் நடந்துகொண்டதில்லை. எனவே, நமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த அமைச்சர்களுக்கு இருக்கும் புத்தி எந்த விதமான புத்தி என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கடுமொழியால் தாக்கினதில்லை. வள்ளுவப் பெருந்தகை கூறினார் அல்லவா, “கனியிருக்கக் காய் கவர்தல் கூடாது’ என்று; அம்மொழிவழி நான் நின்று வந்திருக்கிறேன். ஆனால், இன்று,”திராவிட நாடு’ கொள்கை தீது, ஆகாது என்ற கருத்தினைக் கொண்டுவிட்டவர்கள், “திராவிட நாடு’ ஆதரவாளர்களாக இருந்தகாலை, திராவிட நாடு கூடாது என்று கூறிய அமைச்சர்களின்”புத்தி’ எப்படிப்பட்டது என்பதை வீரதீரம் - காரம் - கலந்து பேசுவதாக எண்ணிக் கொண்டு எடுத்துரைத்தனர். என்ன விதமான புத்தி இருக்கிறது அமைச்சர்களுக்குத் தெரியுமா, தம்பி! தம்பியாக இருந்து கொண்டு பேசிவிட்டுச் சென்றவர்கள், இன்று மறந்துவிட்டிருப் பார்கள்; நான் எப்படி மறக்க முடியும்? அதனால் அதைக் கூறுகிறேன். அமைச்சர்களுக்கு இருப்பது, "திருவோட்டுப் புத்தி’’ விளக்கம் கேட்கிறாயா? அவர்களே தந்தனர். அதனைத் தருகிறேன்: திராவிடம் பிரிந்தால் பொருளாதாரத்துக்கு என்ன செய்வீர்கள் என்று அவர்கள் கேட்டு நம்மைத் திகைக்க வைக்க நினைக்கிறார்கள். பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குப் பொருளாதாரத்தின் அடிப்படை கூடத் தெரியவில்லையே. ஐயகோ! அவர்களின் கதி என்ன கதியோ என்று வருத்தப்படுவதைத் தவிர, அவர்களுக்குப் பதில் சொல்லத் தயாராக இல்லை. இங்குள்ள ஆந்திர - கேரள - கருநாடக - தமிழ் மாநிலங்களிலிருந்து வரிப்பணம் டெல்லிக்குப் போகிறது. இது அவர்களுக்குத் தெரியும். டெல்லியிலிருந்து எவ்வளவு பணம் இங்குத் திரும்புகிறது என்பதும் அவர்களுக்குத் தெரியும். எப்போதாவது சுயமரியாதை உணர்ச்சி பீறிட்டு வரும்போது, அவர்களே டெல்லியைப் பார்த்துக் கேட்கிறார்கள் - பணம் ஒதுக்கிறது குறைவு என்று. அடுத்த கணமே டெல்லிக்குத் தாசராகிவிடுகின்றனர். வாங்கி வாங்கிச் செலவிட்டுப் பழக்கப்பட்டவர்கள், பெருந்தனம் கிடைத்தால் மேலும் வாங்கத்தான் எண்ணு வார்கள். பிச்சை எடுத்துப் பழக்கப்பட்டவன் வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுக்கும் எண்ணத்தை விடமாட்டான். பிச்சைக்காரன் ஒருவனுக்குத் திடீரென்று ஆயிரம் ரூபாய் புதையல் கிடைத்ததாம்; அதைக்கொண்டு அவன் தங்கத்தாலான திருவோடு வாங்கினானாம். ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் அவனுடைய திருவோட்டுப் புத்தி அவனைவிட்டுப் போகவில்லை. அதுபோல இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்களுக்குத் திருவோட்டுப் புத்திதான் இன்னமும் இருக்கிறது. (31-10-59) இவ்வளவு வேகமாகப் பேசியவர்கள் பிறகு என்ன ஆனார்கள்? திராவிட நாடாவது மண்ணாங்கட்டியாவது அதைக் கேட்பவர் களை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்கிறார்கள்; அதைக் கேட்கும் காங்கிரஸ்காரர்கள், தமக்கு, முன்பு கிடைத்த ஒதியமரம் திருவோட்டுப்புத்தி போன்ற அர்ச்சனைகளை மறந்துவிட்டு, அந்த அடியைத் துடைத்துக்கொண்டு, திராவிடநாடு கேட்பவர்களை ஒழித்துக் கட்டுவதாக முழக்கமிடுவோரைக் கட்டித்தழுவி, அப்படிச் சொல்லடா என் சிங்கக்குட்டி! என்று பாராட்டுகிறார்கள். இந்தப் புத்தி என்ன வகையோ, எனக்கென்ன புரிகிறது. தம்பி! வண்டி ஒன்று நாம் வாடகைக்குவிட வைத்திருந் தால், அதிலே, அவ்வப்போது கிடைக்கும் சரக்குகளை ஏற்றிக் கொண்டு போகமாட்டோமா? ஒரு சமயம் அந்த வண்டியிலே கற்பூரம் இருக்கும், பிறிதோர் சமயம் கருவாடு இருக்கும்! கற்பூரம் இருந்த இடத்திலா, கருவாடு என்று யோசித்தால், வண்டிக்கு வாடகை கிடைக்குமா! நா வாணிபம் நடாத்துவோர், இதே போக்கினரே! வேகமாகப் பேசுவேன், தீரமாகத் தாக்கு வேன், எதைப் பேசினாலும் சரி! என்று கூறுகின்றனர். நாம் "திராவிட நாடு’ குறித்துப் பேசுவது, நமது ஆழ்ந்த நம்பிக்கையைக் காட்டுவதாக இருக்கவேண்டுமேயன்றி, நமது நாவினால் எப்படியெல்லாம் சுடமுடியும் என்பதைக் காட்ட அல்ல! எனவே, தம்பி! உனக்குக் கொள்கைப் பிடிப்பும், நம்பிக்கையும், ஆர்வமும் இருக்கட்டும், அதேபோது அதைக் காட்டக் கடுமொழியும் பேசவேண்டும் என்று எண்ணற்க! அதுபோலவே, முன்பு திராவிடநாடு குறிக்கோளை ஆதரித்தவர்கள், இன்று அக்கொள்கையையும் குறிக்கோளைக் கொண்ட கழகத்தை நடத்திச் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்ப வனாக உள்ள என்னையும், முன்பு அமைச்சர்கள்மீது உமிழ்ந்த இழிசொற்களை வீசித் தாக்கினால், கவலை கொள்ளவேண்டாம். கற்பூரம் எடுத்துச் சென்ற வண்டியிலே இப்போது கருவாடு என்று எண்ணிக்கொள்! அது தேவை என்று எண்ணுபவர்கள் அதைத் தாராளமாக வாங்கிக்கொள்ளட்டும், நீங்கள் அதற்குக் குறுக்கே நிற்கவேண்டாம்; கற்பூரம் இருந்ததே, அதை எண்ணிக் கொள்ளுங்கள். கழகத்தையும், அதிலே ஈடுபாடு கொண்டவன் என்பதால் என்னையும், வரைமுறையற்ற போக்கிலே, காங்கிரசார் கடித்துரைத்தபோது, வரிந்து கட்டிக்கொண்டு என் பக்கம் வந்து நின்று, வருபவனெல்லாம் வரட்டும் ஒரு கை பார்த்துவிடுகிறேன் என்று முழக்கமிட்டவர்களிலே சிலர்தானே இன்று, என்னை ஏசுகிறார்கள்; அதனால் என்ன நட்டம்? அன்று ஏசியவர்களுக்கு இன்று ஏசுபவர்கள் தந்த பதில் இருக்கிறதே, அதை ஒரு முறை படித்துப் பார்! உன் கோபம் பஞ்சு பஞ்சாகப் பறந்தே போகும்; அவர்களிடம் இரக்கமே எழும் - இவர்களுக்கென்ன, தமக்குள்ள வேகத்தை, தாக்கும் திறத்தை, எவர் பேரிலாகிலும் வீசிக்கொண்டே இருக்கவேண்டும் எனும் இயல்பா! அன்று அப்படிப் பேசினார்கள்; இன்று இப்படிப் பேசுகிறார்களே! இது என்ன நாக்கு! இது என்ன போக்கு? என்று கேட்கத் தோன்றும். என்னை எவரோ ஏசிவிட்டார்கள்; இன்று என்னை ஏசும் ஒருவருக்குக் கொதிப்பும் கோபமும் பீறிட்டுக்கொண்டு அப்போது வந்தது, எடுத்தார் பேனா, தொடுத்தார் பாடல்! கேட்கிறாயா அந்தப் பாடலை! எட்டுத் திசையிலும் நாம் வளர்ந்தோம் - நமை எத்திப் பிழைப்பவர் சீறுகின்றார் - அண்ணன் சுட்டு விரற்கடை தூக்கிவிட்டால் - அவர் தூளுக்கும் தூளெனக் கூவிடடா! பட்ட வடுக்களைக் காட்டிடடா! - அதிற் பாடும் துணிவினைக் கூறிடடா! - இனித் துட்டர்கள் பின்புறம் தாக்கவந்தால் - அவர் தோளெங்கள் தாளுக்கென் றோதிடடா! வானில் பறப்பது நம்கொடிதான் - மொழி வண்ண மடைந்ததும் நம்வழிதான் - அந்தப் பூனைக ளும்கொஞ்சம் புத்தி யடைந்திடப் போதனை செய்ததும் நம்மவர்தான்! ஆனை நிகர்த்தநம் சேனைபலம் - தனை ஆறறி வுள்ளவர் ஒப்புகின்றார் - உடல் கூனிய காங்கிரஸ் கோமக னார்மட்டும் குக்கல் மதியினைக் காட்டுகின்றார். தாயைப் பிரிந்தவர் சிங்களத்தில் - அண்ணன் தன்னைப் பிரிந்தவர் புட்பகத்தில் - இளஞ் சேயை மனைவியை வீட்டைப் பிரிந்தவர் தேம்பி அழுவது சாவகத்தில்! தூய இவர்கள் பிறந்ததெல்லாம் - வெறும் சோற்றுக்கடா! வெறும் சோற்றுக்கடா! - தெரு நாயி லிழிந்தவர் வாடுகையில் - வட நாட்டவர் எங்கணும் வாழுகிறார். அன்னைத் திராவிடப் பொன்னாடே! - உன் ஆணை! தமிழ்மொழி மீதாணை! மண்ணைப் பிரிந்தவர் மீண்டுமிங்கே - வரும் மார்க்கத்தைக் காண முயன்றிடுவோம்! அன்னையுன் நாட்டைப் பிரித்திடுவோம் - இல்லை ஆவி யழிந்திடக் கண்டிடுவாய்! கண்ணையும் காலையும் வெட்டியபின் - இந்தக் காய மிருந்தென்ன போயிமென்ன? எப்படித் தம்பி! சுவைமிக்கதாக இல்லையா!! ஆம்! என்பாய், நம்மால் இதுபோலப் பாடவரவில்லையே என்றுகூட ஆயாசப் படுவாய். ஆனால், தம்பி! உனக்கு இதுபோலப் பாடத் தெரியா விட்டால் பரவாயில்லை, இப்படியும் பாடிவிட்டு, பிறிதோர்நாள் என்னை இழித்துப் பாடவும் தூய தமிழை, கவிதைத் திறனைப் பயன்படுத்தாது இருந்தால் போதும். எனக்காகக் சொல்ல வில்லை - தமிழுக்காக - கவிதைத்திறனுக்காக - மரபின் மாண்புக்காக! பொங்கற் புதுநாளன்று பொன்னான கருத்துகளை மனத்திலே பதிய வைத்துக்கொண்டு, தென்னகம் பொன்னகம் ஆகவேண்டும், அதனைச் செய்து முடித்திடப் பயன்படாமல், இந்தத் தேசம் இருந்ததொரு இலாபமில்லை, என்ற உறுதியைக் கொண்டிடு! உத்தமனே! உன் உழைப்பால்! ஏற்றம்பெற்ற கழகம் இன்று எத்துணையோ இன்னலையும் இழிமொழியையும் தாங்கிக்கொள்ளவேண்டி இருக்கிறது. எனினும், பாதை வழுவாமல், உறுதி தளராமல் பணி புரிகிறது. பாற்பொங்கல் சமைத்திட உன் பரிவுக்கு உரியாள், பார்த்தனையா, தீய்த்திடும் தீயினைக் கண்டு அஞ்சாமல், வெப்பம் தாங்கிக்கொண்டு, புகை கிளப்பிக் கண்களைக் கெடுத்திட் டாலும் ஈடுகொடுத்துக்கொண்டு, அளவறிந்து, முறையறிந்து, பண்டங்களைச் சமைத்திடும் செயலில் ஈடுபட்டிருக்கிறார். இன்னலை ஏற்றுக்கொண்டு, ஏற்றி இறக்கிய பிறகல்லவா, நீ கூவி மகிழ்கிறாய்; பொங்கலோ! பொங்கல்! என்று. நாடு மீட்டிடும் நற்காரியம் வெற்றிபெற நாமும் தம்பி! அறிவுடைமை, துணிவுடைமை, பொறையுடைமை எனும் பண்பு களைப் பேணி வளர்த்துக்கொள்ளவேண்டும். திருநாளில் திருவிடத்துக்கு விடுதலை பெற்றளிக்கும் ஆர்வம் உன் உள்ளத்தில் பொங்கட்டும்! திருவிட விடுதலைக்கு நாடு பக்குவப்பட்டு இருக்கிறது என்பதனை உலகறியச் செய்யும் முறைகளிலே மிக முக்கியமான ஒன்று, மக்களின் ஆதரவு நமக்கு உண்டு என்பதனை எடுத்துக் காட்டும் வாய்ப்பான பொதுத் தேர்தலில், நாம் நல்ல வெற்றி ஈட்டிக் காட்டுவது. இவ்வாண்டு, பொங்கற் புதுநாள், இந்த எண்ணத்தை உறுதியை அளித்திடல்வேண்டும். நாடு நமது ஆகி, நல்லாட்சி அமைத்து, மக்களுக்கு நல்வாழ்வு பெற்றளிக்க முனைவோமாக! அந்நிலைதான், தேனில் தோய்த்த பழம்போல இனிக்கும். தேன்! பழம்! என்று நான் கூறுகிறேன், நீயோ, தம்பி! உன் பாசம் நிறை பார்வையை, எங்கோ செலுத்துகிறாய்! உம்! விருந்துக்கான அழைப்பைப் பெற்றுவிட்டாய்! விட்ட கணை யைத் தடுத்திடவா இயலும், போ! போ. பொன்னான நாள் இது! பொற்கதிர் பரப்பும் கதிரவனைப் போற்றிடும் திருநாள்! இல்லம் இன்பப் பூங்காவாகும் நன்னாள்! இந்நாளில், எந்நாளும் நாம் இன்புற்றிருக்கும் நிலைகாண அடிகோலும், பொதுத் தேர்தல் வெற்றிக்குக் கழகம் உன்னைத்தான் நம்பி இருக்கிறது. உருட்டல் மிரட்டலையும் காட்டிப் பணம் கொட்டி நமை மாற்றார் மிரட்டும்போதும் மருளாமல் கழகம் தேர்தலில் ஈடுபட்டிருப்பது உன் ஆற்றலைப் பெரிதும் நம்பித்தான், என்பதை மறவாதே! அன்புள்ள அண்ணாதுரை 14-1-1962 அறுவடையும் - அணிவகுப்பும் (1) தேர்தலின் முடிவுகள்- காஞ்சீபுரம் தேர்தல். தம்பி! அறுவடை முடிந்து, கட்டுகளைத் தலைமீது வைத்துக் கொண்டு, ஒற்றையடிப் பாதையிலே, ஒயிலாக நடந்துசெல்லும் காட்சி காணக்காணக் களிப்பூட்டுகிறதல்லவா. காண்போர்க்கு மட்டுமல்ல, கனமான கட்டுகளைச் சுமந்து செல்பவர்களுக்குங் கூடக் களிப்புத்தான். பாரம் தெரியாது, பாதையின் இடர்ப்பாடு பற்றிக் கவலை எழாது. வேலை முடிந்தது. பலனை எடுத்துச் செல்கிறோம் என்ற எண்ணம் செந்தேனாகும். வேறு வேலை களிலே, இத்தனை கனமானதை எப்படித் தூக்கிச் செல்வது என்ற எண்ணம் எழக்கூடும்; அறுவடை செய்து எடுத்துச் செல்லும் கட்டுகளின் கனம் தூக்கக்கூடியதுதானா என்ற எண்ணமே எழாது. பாடுபட்டோம், பலன் கண்டோம். உழுது பயிரிட்டோம். அறுவடையை எடுத்துச் செல்கிறோம் என்ற நினைப்பு, பாரத்தை கவனிக்க விடாது. அதிலும் வயலையும், அதிலே உழைத்திடு வோரையும், விதையையும் அதனின்றும் கிளம்பிய முளையையும் பக்கத்து வயலுடையார் பழித்துப் பேசக்கேட்டு, மனம் பதறிய நிலையும் இருந்திருப்பின், அறுவடை கணிசமான அளவும், தரமான வகையும் கொண்டதாக இருந்திடின், கட்டுகளைச் சுமந்து செல்வோர் கண்கள், முன்பு பழித்துப் பேசினோர் எங்கே என்றல்லவா தேடும்! ஆகாது என்றனையே! ஐயயே என்றனையே! வீண்பாடு என்றனையே! விளையாது என்றனையே! விழலுக்கு நீர் இறைக்கும் வீணன் என்று ஏசினையே! பதரப்பா, விதையல்ல என்று பரிகாசம் பேசினையே! பாரப்பா, கட்டுகளை! பாடுதந்த பலன்களை! அவ்வளவும் மணியப்பா! ஆள்தூக்க ஒண்ணாத கனமப்பா! என்றெல்லாம், பழித்தவர்களைக் கண்டு கூறலாமா என்று தோன்றுமல்லவா!! கூறும் உரிமையும் ஏற்படுகிறதல்லவா!! புல் பூண்டு முளைக்காது, புறம்போக்கு, நந்தம் பாழ் என்று கூறினர், முப்போகம் விளைந்திடும் கழனி உடையோர்கள் எனத் தம்மைக் கருதினவர். பாழ்வெளியேயானாலும், பாடுபட்டால் பலன் உண்டு; பாழ்வெளியும் ஈதல்ல, பாங்கான வயலேதான்; பலகாலும் வளம்காண முயலாது விட்டதனால், பாழ்வெளி போல் தோற்றம் கொண்டதிது என்றுகூறி, கிளறிச் சமனாக்கி, கீழ்மண்ணை மேலாக்கி, வளமூட்ட எருவிட்டு, வகையாக நீர்பாய்ச்சி, வயல் உயிர்பெறச் செய்ததனால், வளமாகப் பயிர் ஏறி, அறுவடைக்கு வழி கண்டார். அவரெல்லாம் கட்டுகளைத் தலைமீது கனம்கூடக் கவனியாமல், கொண்டு செல்லும் போதினிலே, குறைகூறியோர் போக்கை எண்ணிச் சிரித்திடாரோ! ஆனால், அறுவடையைச் சுமந்து செல்பவர்கள், சிரித்திடக் காணோம்! கலகலப்பான பேச்சுமில்லை!! கவலைக் கோடுகள் முகத்தில் காணப்படுகின்றன. உழைத்த அலுப்போ? அதுமட்டும் தான் என்று கூறுவதற்கு இல்லை. வேறு ஏதோ ஓர் எண்ணம், மனதிலே குடைகிறது. கடமையைச் செய்கிறார்கள், கட்டுகளைச் சுமந்து செல்கிறார்கள்; குறுநகை இல்லை, குதூகலம் இல்லை; ஏன்? காரணம் தெரிந்துகொள்ளவேண்டுமா, தம்பி! அதோ, பார்த்தனையா, புங்கமரம்! அதன் நிழலிலே? யாரோ, படுத்துக் கிடக்கிறார்கள். வா! அருகே சென்று பார்ப்போம்! கரத்திலே அரிவாள்! காலிலே வெட்டு! இரத்தம் கசிந்து இருக்கிறது! கட்டுப்போட்டுக்கொண்டிருக்கிறான்! விவரம் தெரிகிறதல்லவா? அவனும் அறுவடையில் ஈடுபட்டான், ஆனால் அரிவாள் வெட்டு காலிலே வீழ்ந்தது. மேலால் வேலையில் மும்முரமாக ஈடுபட முடியவில்லை! கீழே கிடத்தப்பட்டிருக்கிறான். ஏன், காலிலே வெட்டு விழுந்தது? அறுவடை வேலை அறியானோ? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? தம்பி! அதற்கான பதில் தெரிய, அவனுடைய மற்றொரு காலை உற்றுப் பார்! பச்சிலைக்கட்டுத் தெரிகிறதா? கேள், விவரத்தை! பலரும் அறுவடையில் ஈடுபட்டதுபோலத்தான் இவனும் ஈடுபட்டான். வேலை செய்துகொண்டிருக்கும் வேளையில் விஷப்பூச்சி ஒன்று அவன் காலைக் கடித்தது; துடித்தான்; நிலைகுலைந்தது; அரிவாள் வெட்டு காலில் விழுந்தது; மேலால், வேலையில் வெற்றியுடன் ஈடுபட இயலவில்லை. எனவேதான், மற்றவர்போல், அவன் கட்டு எடுத்துக்கொண்டு செல்லவில்லை; புங்க மரத்தடியிலே இருக்கிறான். ஆனால், தம்பி! கட்டு எடுத்துச் செல்பவர்கள் முகத்தில் களிப்பு இல்லை; காலில் வெட்டுப்பட்டுக்கிடப்பவன் களிப்புடன் இருக்கிறான்!! இந்த விசித்திரத்துக்குக் காரணம் புரிகிறதா? தம்பி! கட்டுக் கலம் காணும்; பட்டபாட்டுக்கேற்ற பலன் கிட்டும் என்ற நிலை இருந்திடினும்; ஈட்டிய வெற்றியினை எடுத்துச் செல்பவர்கள், வேலையிலே ஈடுபட்டு வெட்டுப் பெற்றுக்கிடப்பவனைக் காண்கிறார்கள்; கலக்கமும் கவலையும் குடைகிறது. வெட்டுப்பெற்றுக் கிடப்பவனோ, வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்புவோர், வெற்றியை எடுத்துச் சென்றிடும் காட்சியைக் காண்கிறான்; எனவே அவன் மகிழ்ச்சிக் கொள்கிறான். உடன் பணியாற்றியோர் வெற்றியை எடுத்துச் செல்கிறார்கள்; பழித்தோர் வெட்கிடும் விதமாக பலனை எடுத்துச் செல்கிறார்கள்; அறுவடை வேலை அரிய வெற்றியாக அமைந்துவிட்டது; விளையாது என்றார்கள். அறுவடை கிடைத்தது! அதோ கொண்டு செல்கிறார்கள்!! - என்று எண்ணுகிறான்; எண்ணிடும்போதே, காலில் வீழ்ந்த அரிவாள் வெட்டு, அதற்குக் காரணமாக அமைந்த நச்சுப்பூச்சி எனும் எதனையும் மறந்துவிடுகிறான். வலி தெரியவில்லை. வருத்தம் எழவில்லை. வேலை முடிந்தது, வீடு திரும்புகிறார்கள். வெற்றியுடன் என்று எண்ணிப் பெருமகிழ்வு பெறுகிறான். எமது வயலையும் உழவு முறையும் வேலைத் திறனையும் கேவலப் படுத்திப் பேசினரே சிலர், அவர் காணட்டும் அறுவடையை எடுத்துச்செல்லும் அணிவகுப்பை என்று அறைகூவி அழைப்பது போலிருக்கிறது அவன் பார்வை, புன்னகை! யாவர்க்கும் முன்னதாக அறுத்தெடுத்துக் கட்டு ஆக்கித் தலைமீது வைத்து வழி நடந்து காட்டவல்ல தோழன், காலில் வெட்டப்பட்டுக் காரியத்தை முடிக்காமல் இருந்திடும் இந்நிலையைக் காணக் கூடவில்லை, கண் கசிவு நிற்கவில்லை. வேலை ஓடவில்லை, வெற்றிக் களிப்பு இல்லை, வேதனை வேலாகி வாட்டி வதைக்குது. ஐயோ! வீடு நாம் செல்கிறோம் வெற்றிக் கட்டுடனே, உடனிருந்தவன் எங்கே என ஊரார் கேட்டிடின், உரைத்திடுவது எதனை நாம்? உள்ளம் பதைத் திடுதே, வெட்டு அவன் காலில், வேலை முடியவில்லை, கட்டுக் கொண்டுவர இயலவில்லை அவனாலே; களத்துமேட்டருகே இருக்கின்றான் களைப்புடனே என்றன்றோ கூறவேண்டும், எப்படிக் கூறுவது? எண்ணும்போதே எனக்கு வெற்றிக் கட்டுகள் யாவும் வீண் என்று தோன்றிடுதே; அவனும் கட்டெடுத்து அணிவகுப்பிலே நடந்தால், அறுவடை விழாவாகும், அக மகிழ்வுக்கு எல்லையில்லை; இன்று அந்த நிலை இல்லை, என் செய்வோம், ஏங்குகிறோம் என்றெண்ணி நடக்கின்றார், அறுவடையில் வெற்றிபெற்றார். அதனாலேதான் அவர்க்கு மகிழ்ச்சி துளியும் இல்லை. மரத்தடிக் கிடப்போனோ மகிழ்ச்சி யினால் துள்ளுகிறான்; அணிவகுத்து செல்வது பார், அறுவடை யினை எடுத்து; அவர் எந்தன் உடன்பிறந்தார், அவருடன் நானுந்தான், இந்த வயலுக்கு உரியவன்! ஆம்! அவர் கொண்டு செல்லும் அந்த அறுவடை, எமது உடைமை!! கட்டு எந்தன் தலைமீது இல்லை, கவலை இல்லை. கொண்டுசெல்லும் கட்டெல்லாம், என் கட்டு! என்று கூறும் உரிமை எனக்கும் உண்டு! என்று கூறிக் களிப்புடன் இருக்கின்றான், புங்க மரத்தடியில். என்ன தம்பி, யோசனை? எந்த இடத்து வயலைப்பற்றி அண்ணன் இப்படி ஒரு படப்பிடிப்புக் காட்டுகிறான் என்று தானே யோசிக்கிறாய். பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் இப்படி ஒரு காட்சியைப் பார்த்திருக்கிறேன். நான் இப்போது எடுத்துக் காட்டியுள்ளபடி யான எண்ணம், அவர்கள் கொண்டிருந்தனரோ இல்லையோ, நானறியேன், ஆனால், அந்தக் காட்சியைக் கண்டபோது என் மனதிலே இப்படியெல்லாம் தோன்றிற்று. அது பல ஆண்டுகளுக்கு முன்பு! பத்து நாட்களுக்கு முன்பு, பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்ட காட்சி என் மனதிலே கிளறிய எண்ணங்களை, மறுபடியும் நான் கொள்ளத்தக்க நிகழ்ச்சியைச் சந்தித்தேன். அந்த நிகழ்ச்சிதான் என் தோல்வியும். நமது தோழர்களிலே ஐம்பது பேர் பெற்ற வெற்றியும். எனக்கு களிப்பு, வெற்றி அணிவகுப்புக் கண்டு. வெற்றி அணிவகுப்புக்கோ என் நிலைகண்டு வேதனை. அவர்கள் எனக்குக் களிப்பூட்டினர். நானோ அவர்களுக்கு கண் கசியும் நிலையைத்தான் தந்தேன். என் செய்வது தம்பி! நான் என் தம்பிகளிடமிருந்து பெறுவது அதிகம்; நான் அவர்களுக்குக் கொடுப்பது குறைவு! அதிலும் இம்முறை, நான் பெருமைப்படத்தக்க பெரு வெற்றி களைப் பெற்றுக் காட்டி, ஐம்பதின்மர் என்னை மகிழ்வித் தார்கள்; அரசியல் வட்டாரங்கள் பலவற்றையும் நான் பெருமிதம் நிரம்பிய பார்வையுடன் கண்டிட வழிசெய்து கொடுத்தனர்; ஆனால் நானோ, அவர்களும் எண்ணற்ற மற்றவர்களும், கண் கலங்கும் நிலையைத்தான் பெற்றுக் கொடுத்தேன். அதை எண்ணும்போதுதான், நான் வருத்தப்படுகிறேன், வெற்றி பெறவில்லை என்பதனால் அல்ல!! எல்லாக் கிளைகளிலும் மலர் குலுங்கத்தான்வேண்டும் என்பதில்லை, பூத்திருந்தால் போதும். எல்லோருமே வெற்றிபெற்றே தீரவேண்டும் என்பதில்லை. சிலருக்குத் தோல்லி ஏற்படக்கூடும். எதிர்பார்க்கவேண்டியது தான். ஆனால், என்முன் தாம் ஈட்டிய வெற்றிகளைக் கொண்டு வந்து காட்டிடும் எனதரும் தோழர்களுக்கு, நான் எதனையும் தர இயலாது போயினும்; என் தோல்வியின்மூலம் வேதனையை யாவது ஏற்படுத்தித் தராமல் இருந்திடக்கூடாதா என்று எண்ணுகிறேன். இதனை எழுதிக்கொண்டிருக்கும்போது, கீழே செங்கற் பட்டுத் தொகுதியிலே வெற்றிபெற்ற நமது கழகத் தோழர் விசுவநாதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். கவலை நிரம்பிய நிலையில்! வெற்றிபெற்ற இளைஞர்; பணபலம் மிகுந்த ஒருவருடன் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்; ஆயினும் விசாரத் துடன்தான் இருக்கிறார். என்னைக் கண்டதும், என்ன பேசுவது என்று புரியவில்லை; நான் பேசவைத்தேன்; அந்தப் பகுதி ஓட்டுகள் எப்படி, இந்தப் பகுதியில் வாய்ப்பு எப்படி என்று கிளறிக் கிளறிப் பேசவைத்தேன். மகிழ்ந்து உரையாட அவரால் முடியவில்லை. அவருக்கு உள்ள சங்கடத்தைக் கண்ட பிறகு தான், இதனை எழுத வந்தேன். தம்பி! இந்த நிலை, கடந்த ஒரு கிழமையாக இருக்கிறது. இனியும் இதுபோல் இருக்கக்கூடாது என்பதற்காகவே இதனை எழுதுகிறேன். அறுவடை வெற்றியுடன் முடிவுற்றதை எண்ணி அகமகிழ்ச்சி கொள்ளவேண்டிய நேரத்தில், அண்ணன் தோற்றுபோனானே என்பதனையே எண்ணி எண்ணி ஏங்கிக் கிடப்பது சரியல்ல, முறையல்ல, தேவையில்லை, எனக்குப் பிடித்தமானதுமல்ல. நச்சுப்பூச்சி தீண்டியதனால் நிலைகுலைந்து, அரிவாள் காலிலே வீழ்ந்து வெட்டு ஏற்பட்டுவிட்டதால், அறுவடையே கெட்டுவிட்டது என்றா பொருள்! பெற்ற வெற்றிகளை எண்ணிப் பெருமிதம்கொண்டு, மாற்றார் கண்டு கலங்கிடும் விதமான வீரப் புன்னகையுடன் ஏறுநடைபோட்டு, அரிமா நோக்குடன் இருந்திடவேண்டிய வேளையில், என் தோல்வியையும், அதுபோன்றே அதிர்ச்சி தரத்தக்க வேறு பல தோல்விகளையும் எண்ணி ஏங்கிக் கிடப்பது நல்லதுமல்ல, என்னை மகிழச் செய்யும் வழியும் அதுவல்ல. நான் எங்கு இருந்துவிட்டு வருகிறேன் தெரியுமா, தம்பி! அதைச் சொல்கிறேன். பிறகேனும் என் மனப் போக்கின் முழுத் தன்மையை அறிந்துகொண்டு, அமைதிபெறும் முயற்சியில் ஈடுபடவேண்டுகிறேன். அரசியல் உலகு, அற்புதங்கள், உற்பாதங்கள், அதிர்ச்சிகள், ஆக மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள், எக்களிப்புக்கள் எரிச்சலூட்டும் சம்பவங்கள், வெற்றிகள் தோல்விகள் யாவும் நிரம்பிய இடம். எல்லாத் துறைகளும் அவ்விதம்தான், என்பாய். ஒரு மாறுபாடு உண்டு. மற்ற எந்தத் துறையினையும்விட அரசியல் துறையிலே எதிர்பாராத நிகழ்ச்சிகள், ஏமாற்றங்கள், எரிச்சல்கள் நிரம்ப ஏற்படும்; விசித்திரமான உலகு. விசித்திரமானது அரசியல் உலகு என்பதற்கு வேறெந்த எடுத்துக்காட்டும் வேண்டாம். நான் இப்போது எங்கு சென்று விட்டு வந்திருக்கிறேன் என்பதைக் கூறுகிறேன், கேளேன், அது போதும். பெங்களூர், நகரில் ஜெய்நகர் என்ற பகுதியில், ஜெய விலாஸ் என்ற இல்லத்தில் தங்கியிருந்துவிட்டு வருகிறேன்!! வேடிக்கை அல்ல, தம்பி! விசித்திரம், ஆனால் உண்மை! தோல்வி கிடைத்ததும் நான் சென்று தங்கியிருந்த இடம் ஜெயவிலாஸ் - ஜெய்நகர்!! போதுமா விசித்திரம். என்ன செய்துகொண்டிருந்தேன்? பலரும் வந்திருந்து எனக்கு ஆறுதல் கூற, அதைக்கேட்டுத் துயரத்தைத் துடைத்துக் கொண்டு மன அமைதி பெற்றுக்கொண்டிருந்தேன்போலும் என்று எண்ணுகிறாய். அதுதான் இல்லை!! பலருக்கும் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன். வெற்றிபெற்று, வீடுகூட செல்லாமல் என்னோடு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்வதிலும், என்னைப்போலவே காலில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் திருவண்ணாமலைத் தோழர் ப. உ. சண்முகத்துக்கும், வேலூர் சாரதிக்கும் ஆறுதல் கூறுவதிலும் ஈடுபட்டிருந்தேன். அவர்களுக்கு ஆறுதல் எதற்காகக் கூறினேன்? அவர்கள் தமது தோல்வியைப்பற்றித் துக்கம் துளைத்த நிலையில் இருந்ததால் என்கிறாயா? அதுதான் இல்லை! என்பொருட்டு அவர்கள் கொண்டிருந்த வேதனையைத் துடைத்து ஆறுதல் அளித்துக்கொண்டிருந்தேன். பல ஆண்டுகளாகவே எனக்கு, பேசாமலே பல கூறும் பேருருவாக அமைந்திருக்கும் சிற்பக்கலைச் சிறப்புக்கு ஈடற்ற எடுத்துக்காட்டாக விளங்கிடும் கோமடீஸ்வரர் சிலையினைக் காணவேண்டும் என்ற ஆவல் உண்டு. அந்த இடத்துக்கு அருகே கூடச் சென்றிருப்பேன்; காண வாய்ப்பும் ஓய்வும் கிடைத்த தில்லை. அழகிய சிறு குன்றின்மீது அமைந்திருக்கும் பேசாப் பேருருவை இம்முறைதான், கண்குளிரக் காண முடிந்தது. பெங்களூர் நகரிலிருந்து நூறுகல் தொலைவில் உள்ள சீரூர் சிரவணபெலகோலா என்பது. அங்குதான், வெளிநாட்டு விற்பன்னர்களும் கண்டு வியந்திடும் அந்தச் சிற்பம் இருக்கிறது, குன்றின்மீது. அறுபது அடி உயரம் அந்தப் பேருரு! பிறந்த மேனி! திறவாக் கண்கள், எனினும் கனிவு வழிகிறது! நின்ற நிலை! காண்போரை நின்ற நிலையினராக்கிவிடும் கவர்ச்சி!! அந்தப் பேருருவுக்குப் பின்னணியாக, நீலநிற வானம்! தன்னை மறந்த நிலையில் பிறந்த மேனியாய் நிற்கும் அந்தப் பேருரு, மனதினை ஓரிடத்தில் பதியவைத்து, மற்ற எதனையும் எண்ணிடமுடியாத நிலைபெற்று இருக்கும், காட்சி கண்டாரே கருத்தறிவார்; கண்டதனை விளக்கிட இயலாது; உண்மை. காலடியில், புற்றுகள்! செடி கொடிகள்! செடி கொடிகள் கோமடீஸ்வரரின் காலிலும் கரத்திலும் மார்பிலும் படருகின்றன! அசையா நிலை! உணரா நிலை! மனம் ஓரிடத்திலே முழுக்க முழுக்க ஒன்றிவிட்டதனால், செடி கொடி படருவதுபற்றிய உணர்ச்சியே எழவில்லை. செடி கொடிகள் மட்டும் அல்ல, தம்பி! சீறிடும் பாம்புகள்! உடலைச் சுற்றிக்கொண்டுள்ளன! உணர்வு இல்லை! கனிவும் கவர்ச்சியும் மிக்கதோர் நிலையில் பேருரு!! இவ்வளவையும், இதற்கு மேலாகவும், கல்லுரு காட்டி நிற்கிறது. கண்டு கருத்துப் பெறாதார், நடமாடும் கல்லுரு என்றே கூறலாம். உற்று உற்றுப் பார்த்தேன், அப்பேருருவினை! நெருங்கி நின்று பார்த்தேன்! தொலைவிலிருந்து பார்த்தேன். பார்க்கப் பார்க்க மேலும் பார்த்துக்கொண்டிருக்கும் எண்ணம் எழுகிறது. உறுதி ஒன்றில் இலயித்துவிட்டால் வேறு எந்த உணர்வும் தீண்டமுடியாத நிலை பெறும் இயல்பு, பேருரு காட்டிடும் அரும்பெரும் பாடம். ஆமாம், தம்பி! தேர்தலிலே தோல்வி என்றால், நெஞ்சிலே துக்கம் துளைக்கிறது என்கிறோமே, பாம்பு சுருட்டிக்கொள்கிறது உடலில், மனம் ஒன்றினிலே இலயித்துப் போனதால், அரவம் தீண்டுவதுபற்றி உணர்வே இல்லை; கண்ட நான், எண்ணிக்கொண்டேன், அந்த உறுதிவேண்டும் ஒன்றின் மனதைப் பதியவைத்துவிட்டால், வேறு உணர்வுகள் நம்மைத் தீண்டிடும் வலிவற்றுப்போகும்நிலை ஏற்பட வேண்டும் என்று விரும்பினேன். எனக்காக மட்டுமல்ல, தம்பி! உனக்கும் அந்த நிலை, உறுதி, இருந்திட வேண்டும் என்று விரும்பினேன். அந்த எண்ணத்துடன்தான் சிரவணபெலகோலாவை விட்டுத் திரும்பினேன். இங்கே, நீ இன்னமும் என்பொருட்டு ஏங்கிக்கிடப்பது அறியும்போது, என் மனம் எப்படி இருக்கும்? எண்ணிப்பார், தம்பி!! குன்றைவிட்டுக் கீழே வந்தால், ஒரு ஊர்வலம் செல்கிறது; வெற்றி ஊர்வலம்! பிரஜா - சோμயலிஸ்டு கட்சித் தலைவர் ஒருவர், சிவப்பா என்பவர், தேர்தலில் வெற்றிபெற்றதற்காக அந்த ஊர்வலம்!! பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது! பெங்களூர் திரும்பிவந்துகொண்டிருந்தோம், மற்றோர் ஆரவாரமான ஊர்வலம், சுதந்திரக்கட்சியினர் ஒருவர் அந்தானப்பா என்றார்கள், அவருடைய வெற்றி ஊர்வலம். எங்கள் மோட்டார் அதனைக் கடந்து செல்ல இயலவில்லை; சரி, என்று ஊர்வலத்திலேயே சென்றோம்! ஆகவே அண்ணன் வெற்றிபெற்றிருந்தால், ஊர்வலம் நடந்திருக்குமே என்றுகூட நீ ஆயாசப்படத் தேவையில்லை - ஊர்வலமாகச் சென்றேன்! அதுமட்டுந்தான் என்று எண்ணாதே, பெரிதும் கன்னடத் தோழர்களே அதிகம் உள்ள மாவள்ளி எனும் பகுதியில் உள்ள தி. மு. கழகக் கிளையினர், பெங்களூர் லால்பாக் தோட்டத்தில் எங்களுக்கு ஒரு தேனீர் விருந்து அளித்தனர். பார்ப்பவர்களைப் பிரமிக்கவைக்கும் சிவசமுத்திரம் நீர்விழ்ச்சியை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். என்றாலும், மறுபடியும் பார்ப்பதில் எனக்கு விருப்பம். இம்முறையும் கண்டேன். பாறைகளையும் கற்குவியல்களையும் குடைந்து கொண்டும், தழுவிக்கொண்டும், தடுமாறிக்கொண்டும், பல்வேறு பக்கங்களிலும் இருந்து பாய்ந்துவரும், காவிரி, நீர்வீழ்ச்சியாகிடும் இடம், சிவசமுத்திரம், சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். இது பல சிற்றாறுகள் ஒரு பேருருவாகி, இத்தனை பெரிய உருவை நான் தாங்கவல்லேன் அல்லேன் என்று காடும் கற்குவியலும் நிறைந்த மலைமுகடு கூறிட, செல்ல எனக்கா இடமில்லை என்று கூறிச் சினந்து கீழே பாயும் காட்சியே, சிவசமுத்திரம் நீர்விழ்ச்சி, மலைமுகடு முழுவதிலும், இங்கும் அங்குமாகச் சலசலவென ஓடிவரும். இந்தக் காவிரியா, மலை அதிர, காண்போர் மனம் அதிர நீர்வீழ்ச்சியாக உருவெடுத்துளது என்று எவரும் வியப்படைவர். அதனைக் காணும்போதெல்லாம் எனக்கு. சிறுகச்சிறுக மக்களின் உணர்ச்சி பீறிட்டுக் கிளப்பிடின் ஓர்நாள், பெரிய நீர்வீழ்ச்சி போன்றதோர் உருவம் கொள்ளும் என்ற எண்ணம் தோன்றும். இம்முறை அந்த எண்ணம் மிக அழுத்தமாக ஏற்பட்டது. தம்பி! இப்படி நான் சில நாட்கள் கழித்துவிட்டு உன்னுடன் உரையாடி மகிழ, பணியாற்றி மகிழ்ச்சிபெற வந்துள்ளேன். பெற்ற வெற்றிகளின் பொருள் எத்தன்மையது என்பதனை நாடறியச் செய்திடும் நற்பணியிலே, நாம் இனி ஈடுபடுதல்வேண்டும். சிலர் - என்னையும் சேர்த்தே கூறுகிறேன் - தோற்றனர் - அதனால் என்ன? தம்பி. கருணாநிதி கடற்கரைக் கூட்டத்திலே சுட்டிக்காட்டியதுபோல, அந்தத் தோல்வியால் மூண்டிடும் வேதனை, புதிய உறுதியுடன் பணியாற்றி, பழி துடைத்துக்கொள்வோம் என்று சூள் உரைத்துப் பணியாற்றி, இப்போது பெற்ற வெற்றியினைவிட, அளவிலும் வகையிலும் தரம் உள்ளதான வெற்றியைப் பெற்றளிக்கும் ஆற்றலை நமக்குத் தருவதாக அமையவேண்டும். ஐயோ தோற்றுப் போனார்களே! - என்று அழுத கண்ணினராக இருத்தல்கூடாது. ஆஹா! தோற்கடித்தார்களல்லவா? என்ற கோபம் கொப்பளிக்கும் கண்ணினராதல்வேண்டும், வெற்றி ஈட்டித் தருவோம்! வேதனையினின்றும் ஓர் புதிய வலிவு பெறுவோம்! என்று உணர்ச்சி பெறவேண்டும். நம்மிலே சிலருடைய தோல்வி, மற்றவர்களைச் செயலற்றவர்களாக்குவதற்கு அல்ல, நமது செயலிலே செம்மையும், திறமும், பக்குவமும், பண்பும் மிகுந்திடச் செய்வற்கேயாகும் என்பதனை உணர்தல்வேண்டும். உமது தலைவர் என்ன ஆனார்? பார் - என்று மாற்றார் எழுப்பும் ஏளனம் - எரிச்சலை மூட்டினால் மட்டும் பலன் இல்லை, தம்பி! வீழ்த்திவிட்டீர்கள் இம்முறை, இனி என்றென்றும் அதுபோல் நேரிட முடியாத நிலைக்குக் கழகத்தின் வலிவினை வளர்த்துக் காட்டுகிறோம், பாருங்கள் என்று அறைகூவல் எழுப்பவேண்டும். நமக்கு ஏற்பட்டுள்ள தோல்விகளுக்கான காரணங்களை - தனிப்பட்டவர்கள்மீது ஐயுறவு கொள்ளாமல் - விருப்பு வெறுப்புக் காட்டாமல் - நிலைமைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும், எப்படித் திருத்தலாம், முறைப்படுத்தலாம் என்ற நோக்குடன். என்னைத் தோற்கடித்த காஞ்சிபுரம் தொகுதியையேகூட எடுத்துப்பார். தம்பி! நான் இங்கு எவருக்கும், எந்தவிதமான தீங்கும் செய்யவில்லை; என்னால் எவருக்கும் எந்தவிதமான இடர்ப்பாடும் ஏற்பட்டதில்லை. என் பணியிலே மாசு கற்பித்துப் பேசக்கூட அதிகம் பேர் இங்கு இல்லை? எனினும் என்னைப் பெரும்பான்மையினர் ஆதரிக்க மறுத்துவிட்டார்கள். ஏன்? பணம் வெள்ளம்போல் பாய்ந்தது என்கிறார்கள். இருக்கட்டுமே! அதனையும் மீறி அல்லவா, மக்களுக்கு என்னிடம் அன்பு எழவேண்டும். இனி அதே நோக்கத்துடன் அல்லவா, நான் பணியாற்றவேண்டும். முறைகேடுகள். ஒழுங்கீனங்கள், சதிச்செயல்கள், பலப்பல நடைபெற்றன; ஊரறியும் உலகறியும். ஆனால் இவைகளை எல்லாம் முறியடிக்கத் தக்கவிதமாக அல்லவா, என் தொண்டு மக்கள் உள்ளத்தில் என்பால் அன்பு உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அது ஏற்பட வழி என்ன? என்பதுதானே நான் ஆராய வேண்டிய பிரச்சினை, விஷம் என்று தெரிந்தால், அதனை தங்கக் கோப்பையிலே ஊற்றிக்கொடுத்தாலும், பருகிட எவரேனும் இசைவார்களா? இசையமாட்டார்கள். அதுபோலவே, காங்கிரஸ் ஆதிக்கம் ஏற்பட இடம் கொடுப்பது விஷம் குடிப்பதற்குச் சமானம் என்ற உணர்ச்சி மக்களிடம் ஏற்பட்டிருக்குமானால், பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காகக் காங்கிரஸ் ஆதிக்கத் துக்கு இடம் அளிக்கச் சம்மதித்து இருப்பார்களா? ஒருக்காலும் இல்லை. எனவே, மக்களிடம், காங்கிரஸ் ஆதிக்கம் அறவே கூடாது என்ற எண்ணம், இன்னும் அழுத்தமாக ஏற்பட வேண்டும். நமது பிரசாரம் மேலும் செம்மைப்படவேண்டும். என் தொகுதி நிலைமையைக்கொண்டு, பொதுவாகச் சொல்கிறேன்; நாம் இதுவரையில், ஊர் நடுவே உள்ள திடல்கள், ஊர்க் கோடியில் உள்ள திடல்கள், இங்கு மட்டுமே கூட்டங்கள் நடத்தி வந்திருக்கிறோம். நெடுஞ்சாலைகளுக்கு இருமருங்கிலும் உள்ள தெருக்களில் நமது கூட்டங்கள் அதிகமாக நடப்பதில்லை. கூட்டம் அளவில் பெரிதாக இருக்காது. அலங்கார ஏற்பாடுகள் இராது என்ற எண்ணத்தினாலும் திடலில் கூட்டம் நடந்தால், எல்லாத் தெருக்களிலும் இருந்து மக்கள் வந்து கூடுவார்கள் என்ற நினைப்பிலும், ஒவ்வொரு நகரத்திலும் பல பகுதிகளை நாம் கூட்டம் நடத்தாமலே ஒதுக்கி வைத்துவிடுகிறோம். எனவே அங்கு அரசியல் விழிப்புணர்ச்சி, புத்துணர்ச்சி மிகமிகக் குறைவாகி, எப்போதோ எக்காரணத்தாலோ ஏற்பட்டுவிட்ட உணர்ச்சி மட்டுமே இருக்கிறது. நடந்ததைக் கூறுகிறேன். ஒரு நெசவாளியைக் கண்டேன். அவர், "நான் காங்கிரஸில் நீண்ட காலமாக இருப்பவன். ஆகவே நான் எப்படி உங்களுக்காக மாற முடியும்?’’ என்று கேட்டார். கோபமாக அல்ல, வெறுப்பாக அல்ல; இயற்கையாக. மாறமுடியாது என்று கூறுகிறீரே, ஐயா! நீங்கள் பற்றுக் காட்டுகிற, காங்கிரசே, மாறிவிட்டதே - கொள்கையில் குணத்தில்; கண்டவர்கள் கூடிக் காங்கிரசைக் கெடுத்துவிட்டார்களே; கெட்டுப்போன பிறகும், காங்கிரசை நான் ஆதரிக்காமல் இருக்கமுடியாது என்கிறீரே, நியாயமா? என்று கேட்டேன். தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு இது. ஓட்டு வாங்க நான் சாமர்த்தியமாகப் பேசுகிறேன் என்றுதான், அந்த நெசவாளி அந்த நேரத்திலே எண்ணிக்கொண் டிருந்திருப்பாரே தவிர, யோசித்துப் பார்த்திருக்கமாட்டார். தேர்தல் காலத்துப் பேச்சு, நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக மக்கள் கருதமாட்டார்கள். ஆனால், சாதாரண காலத்திலே, இந்த வாதத்தை, எவ்வளவு அழுத்தக்காரர் கேட்டாலும், மனம் அசைந்தே தீரும். அதற்கு நாம், நமது கூட்டங்களை, ஒவ்வொரு நகரத்திலும், எந்தப் பகுதியையும் ஒதுக்காமல், எல்லாப் பகுதி மக்களும் கேட்டுப் பயன்பெறத் தக்கவிதத்திலே நடத்தவேண்டும். காஞ்சிபுரம் நகரில் எனக்கு ஓட்டுகள் குறைவாகக் கிடைத்த பகுதிகள் யாவும், நமது கழகக் கூட்டங்கள் தொடர்ந்து சாதாரண காலத்தில் அதிகமான அளவில் நடத்தப்படாத இடங்கள். இங்கெல்லாம், காங்கிரஸ் கூட்டங்களும், கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டங்களும்தான் பரவலாக நடந்திருக்கின்றன. ஓட்டுகள் கிடைத்துள்ள வகையை ஆராய்ந்து பார்க்கும் போது, சென்ற தேர்தலின்போது கழகத்துக்கு அதிக வாக்குகள் கிடைத்த பல இடங்களில். காங்கிரசுக்கு அதற்கு அடுத்தபடி யாகவும், கம்யூனிஸ்டுக்கு மூன்றாவதாகவும் ஓட்டுகள் கிடைத்தன. இம்முறை காங்கிரசுக்குக் கிடைத்த வாக்குகள், கழகத்துக்குக் கிடைத்ததைவிட அதிகம்; எந்த முறையில் என்றால் முன்பு காங்கிரசுக்கும் கம்யூனிஸ்டுக்கும் தனித்தனியே கிடைத்த வாக்கு களின் "கூட்டு’, இம்முறை காங்கிரசுக்குக் கிடைத்திருக்கிறது. இதெல்லாம் காரணம் அல்ல; பல இலட்சம் செலவிட் டார்கள் - என்று கூறுகிறார்கள். ஒன்று கூறுவேன் நமது கழகத் தோழர்களுக்கு, பணம் பல இலட்சம் செலவிட்டுத்தான் காங்கிரஸ் தோற்கடித்தது என்றால், நாம் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. எத்தனை முறை இதுபோல பல இலட்சங்கள் செலவிட முடியும்? எத்தனை இடங்களில் செலவிட முடியும்? எத்தனை காலத்துக்கு இது நடக்கும்? எனவே, நச்சுப்பூச்சி தீண்டிய கதை போலாகுமே தவிர, நிரந்தரமான பலத்தை ஒரு கட்சிக்குக் கொடுத்துவிடாது. எனவே, நாம் பணத்தைக் கண்டு பயம்கொள்ளத் தேவையில்லை. முறையாக, முன்னேற்பாட்டுடன் வேலை செய்தால், நிச்சய மாகப் பணபலத்தையும் தோற்கடிக்க முடியும். அதற்கு, என்ன செய்யப்போகிறார்கள் என்பதனை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வாய்ப்பும் திறமையும் கொண்ட தோழர்கள், நகரின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கவேண்டும். வதந்திகளுக்கும் செய்திகளுக்கும் வித்தியாசம் தெரிந்த தெளிவுள்ளவர்கள் இந்தத் துறையிலே பணிபுரிந்தால் பணபலத்தை உருக்குலைக்க முடியும். நச்சுப்பூச்சி நாம் ஏமாந்த நேரத்திலேதான் தீண்டும். பணபலமும் அப்படித்தான். பாம்பினைப் பழுதை என்றோ, பழுதையைப் பாம்பு என்றோ கொண்டிடல் கூடாது. திட்ட வட்டமான தகவல் சேகரிப்பு இதற்கு அடிப்படையாகத் தேவை. பணம் பெற்றுக்கொண்டாலும், அதற்காக "சத்தியம்’ செய்தாலும், அது தம்மைக் கட்டுப்படுத்திவிடத் தேவையில்லை என்ற நிலை, சாமான்யர்களுக்கும், குறிப்பாகத் தாய்மார்களுக்கும் சுலபத்தில் ஏற்படாது. காஞ்சிபுரம் தொகுதியில் திருப்பதி ஏழுமலையான் படத்தின்மீது சத்தியம் செய்துகொடுத்ததால், தாய்மார்கள் திகில் கொண்டுவிட்டார்கள் என்று ஊரே பேசுகிறது. இவர்கள் நம்முடைய கூட்டங்களுக்கு வருகிறவர்கள் அல்ல. வந்திருந்தால் இதுபற்றி நாம் பேசியது கேட்டு, தெளிவும் பயமற்ற நிலையும் பெற்றிருக்கக் கூடும். எனவே, இவர்களின் இந்த மனப்பான்மையை மாற்ற நமது கழகத்துக்கு நிரம்பத் தாய்மார்கள், பிரச்சாரப் பணியில் ஈடுபட வேண்டும். நம்மிடம் அந்த அணி சரியாக அமையவில்லை. அமையாததற்குக் காரணம், நமது கழகத்தவர், தமது இல்லத்துத் தாய்மார்களை, இந்தப் பணியில் ஈடுபடுத்தாதது. ஈடுபடுத்த முடியாததற்குக் காரணம், அரசியலை, நம்முடைய கழகத் தோழர்கள்கூட, ஆடவர்களின் அரங்கம் என்றே இன்னமும் எண்ணிக்கொண்டு தாம் மட்டுமே அதிலே ஈடுபடுவதுதான். இதனை நீக்க, இப்போதிருந்தே பாடுபட்டு வெற்றி கிடைக்கவேண்டுமானால், கழகக் கூட்டங்களுக்கு தமது வீட்டுத் தாய்மார்களை, கூடுமான வரையில் அழைத்துக்கொண்டு வரும் பழக்கத்தை, ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அரசியல் கூட்டப் பேச்சுக்கள் தாய்மார்களுக்குப் பிடிக்காது, புரியாது என்று சாக்குப்போக்குக் கூறுவது சரியல்ல; அதிலே பொருளும் இல்லை, பொருத்தமும் இல்லை. ஓட்டுக்குப் பணம் கொடுப்பது எந்த நோக்கத்துடன்? வாங்கினால் என்ன கேடு உண்டாகும் என்பது தாய்மார்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தால், நான் காஞ்சிபுரம் தொகுதியில் தோற்றிருக்கவே முடியாது என்பதை, இந்தத் தொகுதியின் நிலவரம் அறிந்த எவரும் மறுக்கமாட்டார்கள். ஒரு கூடை தவிடு தருகிறேன், ஒரு குண்டுமணி தங்கம் கொடு என்றால் கொடுப்பார்களா? கருத்துக் கெட்டவர்கள் கூடத் தரமாட்டார்கள். ஆனால், பளபளப்பான செயற்கை வைரத்தைக் காட்டி, அது வைரம் என்றுகூறித் தங்க நகைக்கு ஈடாகத் தருவதாகச் சொன்னால், சிலர் ஏமாந்துபோவார்கள்; பலர் சபலம் கொள்வார்கள். பணத்துக்காக ஓட்டு கொடுப்பது, தவிட்டுக்காகத் தங்கம் கொடுப்பதாகும் என்பதைத் தாய்மார்களுக்கு எங்கே எடுத்துச் சொல்ல, உணரச்செய்ய, நம்மிடம் அணி இருந்தது? இல்லை! அது இனி அமைக்கப்பட்டாகவேண்டும். என் நெஞ்சை மெத்தவும் உருக்கியதும், என் தோல்விபற்றி எனக்கு ஓரளவு வேதனை ஏற்பட்டதும், என்னால் அதற்குக் காரணமாக அமைந்ததும், எதுவென்றால், எனக்காக, நகர் முழுவதும் வீடுவீடாகச் சென்று என் துணைவி இராணி ஓட்டுக் கேட்டதுதான், துணையாக அலமேலு அப்பாதுரை அவர்கள், மல்லிகா, எங்கள் ஊர் சரசுவதி வெங்கடேசன், சரசுவதி சிற்சபை, கமலா பாபு, உளுந்தூர்பேட்டை இராஜேஸ்வரி சண்முகம் ஆகியோர் சென்றனர். கழகத்துக்கான ஏற்பாடு வேலைகளும், சிக்கல் நீக்கும் காரியமும், மற்றத் தொகுதி வேலைகளும், என்னை அந்த அளவுக்கு, நகரில் ஓட்டு கேட்க இடம் தரவில்லை. இராணியும் துணையாகச் சிலரும் சென்று ஓட்டு கேட்டதுபோல, பேட்டைக்குப் பேட்டை ஒரு சிறு அணி இருந்திருப்பின், பணம் பலித்திருக்காது. இது என் தொகுதிக்கு மட்டுமல்ல நான் சொல்வது, எல்லா இடங்களுக்கும். சென்ற தடவைகூட இராணி வேலை செய்தது உண்டு! என்றாலும், இம்முறை வெகு உற்சாகத்துடனும், மும்முர மாகவும், முறையாகவும் வேலை செய்ததற்குக் காரணம், சென்ற தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடையில், மகளிர் மன்றக் கூட்டங்கள், கழகக் கூட்டங்கள் ஆகியவைகளிலே பெற்ற கருத்தால் ஏற்பட்ட உணர்ச்சியும், நமது இயக்க ஏடுகளைப் படித்ததால் வந்த உணர்ச்சியும்தான். சென்ற தடவை ஓட்டுக் கேட்டபோது இராணிக்கு இருந்திருக்கக்கூடிய எண்ணம், கணவருக்கு வேலை செய்கிறோம் என்பதுதான்; இம்முறை கழகத்துக்கு வேலை செய்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இராணி இந்த அளவு பணியாற்றப் பெருந் துணையாக இருந்தது, என் அக்காவாகும். அவர்கள்போல், மொத்தத்தில் நகரில் ஒரு 50 பேர், தாய்மார்கள் அணி இருந்திருந்தால், "வெங்கடேசப் பெருமானும் சத்தியமும்’ என்ற பேச்சு வலிவிழந்துபோயிருக்கும். இந்த முறை ஏற்பட்ட இந்தக் குறையைப் போக்கி, அடுத்த தேர்தல் வருவதற்குள் நல்லதோர் தாய்மார்கள் அணிவகுப்பு ஏற்படவேண்டும். இந்தத் தேர்தலில் இருந்த அணிவகுப்பு, இருதரப்புக்கும் எப்படிப்பட்டது என்பதனை அடுத்த கிழமை எடுத்துக் காட்டுகிறேன். அன்புள்ள அண்ணாதுரை 11-3-1962 அறுவடையும் - அணிவகுப்பும் (2) ரிச்சர்டும் ஜெரூசல ஊர்வலமும் - ஐம்பதின்மர் சட்டமன்ற நுழைவு - இந்தித் திணிப்பு. தம்பி! எதிர்ப்புக்கண்டு அஞ்சவில்லை, ஏளனம் கேட்டு எரிச்சல் கொள்ளவில்லை, ஆபத்துக்களைத் துரும்பென மதித்தோம். உயிரைத் துச்சமென்று கருதினோம். வெட்டுப்பட்டோம். குத்துப் பட்டோம். குருதி கொட்டினோம். உறுப்புக்கள் இழந்தோம். உடனிருந்தோர் கொல்லப்பட்டது கண்டோம். இரத்தச் சேற்றினில் புரண்டோம். பிணத்தின்மீது உருண்டோம். சிறகடித்து வரும் பெரும் பறவைகள், பிணமாகிக் கீழே வீழ்ந்து பட்ட நமது தோழர்களின் உடலைக் கொத்திடக் கண்டோம். கண்ணீர் கொப்புளித்தது. சொல்லொணாத கஷ்டங்களைக் கண்டோம். மனம் உடைய இடந்தரவில்லை. போரிட்டோம், போரிட்டோம், புனிதப் போரில் நமக்கே இறுதி வெற்றி என்ற நம்பிக்கையுடன் போரிட்டோம், பலன் இல்லை என்று ஒரு சமயம் தோன்றும். பயம் மற்றோர் சமயம் நெஞ்சைத் துளைக்கும், பெருமூச்செறிவோம், எனினும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் என்று சூளுரைத்துப் போர் புரிந்தோம். பொழுது புலர்ந்தது, பட்டபாடு வீண்போகவில்லை, எடுத்த காரியம் முடித்தோம் என்ற எண்ணம் வெற்றிக் களிப்பூட்டுகிறது. எந்த நோக்கத்துக்காகப் புனிதப்போர் நடாத்தினோமோ, மாடு மனை மறந்து, மக்கள் சுற்றம் துறந்து, வாழ்க்கை இன்பம் இழந்து, கட்டாந்தரையையும், காடுமேடுகளையும் இருப்பிடமாகக் கொண்டு போரில் ஈடுபட்டு நின்றோமோ, அந்த நோக்கம் ஈடேறுகிறது, புனிதத் திருநகர் செல்கிறோம், உத்தமர் திருவடி பட்டதால் உயர்வுபெற்ற திருநகர் செல்கிறோம். அருளாளர் மலரடி பட்டதால் மகிமைபெற்ற மாநகர் செல்கிறோம், இம்மைக்கும் மறுமைக்கும் எவ்வழி நல்வழி காட்டிடுமோ அவ்வழி கண்டுரைத்தவர் கோயிலூர் செல்கிறோம், எந்த நகர்பற்றி எண்ணி எண்ணி ஏங்கிக் கிடந்தோமோ, அந்தப் புனிதபுரி செல்கிறோம். எமது புனிதபுரி எமக்கே சொந்தம், எமக்கு அது இறைவன் இல்லம், கருணைக் கோட்டம், இறவாப் புகழ்பெறு கோயில். ஆங்கு நாங்கள் செல்வது எமது உரிமை. அந்த உரிமையினை எவர் தடுத்திடினும், மடிய நேரிடினும் சரியே, உரிமைப்பெறப் போரிடுவோம், உரிமையை இழந்தார்கள் உதவாக்கரைகள் என்று உலகம் இகழத்தக்க இழிநிலையுடன் உழன்றிடமாட்டோம். கழுகு எமது உடலைக் கொத்தட்டும், கவலையில்லை; "புனிதபுரி எமது’ எனும் முழக்கமிட்டபடியே வெட்டுண்டு வீழ்வோம் என்றெல்லாம் சூளுரைத்து, எந்த நோக்கத்துக்காகச் சமர் நடாத்தினோமோ, அந்த நோக்கம் ஈடேறுகிறது. புனிதபுரி சென்றிடும் உரிமை நம்முடையதாகிறது. இதோ புனிதபுரி செல்கிறோம்! - என்று எண்ணியபடி அந்த அணிவகுப்பு, பெருமிதத்துடன், களிநடமிடுவதுபோல் ஜெருசலம் எனும் புனிதபுரிக்குள் செல்கிறது. நுழைவு வாயிலுக்கு வெளியே நிற்கிறான், உரிமை பெற்றோம் என்ற "எக்களிப்புடனும், புனிதபுரியைக் காணச் செல்கிறோம்’ என்ற பெருமைமிகு உணர்ச்சியுடனும் உள்ளே நுழையும் அணிவகுப்பினைக் கண்டபடி, கண்ணீர் துளிர்க்கும் நிலையுடன், இஃதன்றோ வெற்றி, இவரன்றோ வீரர், இது வன்றோ புனிதப்போர் என்றெல்லாம் எண்ணியபடி, விம்மிடும் நெஞ்சுடன் நிற்கிறான், அணிவகுப்பை நடத்திச்சென்றவன். அணிவகுப்பு புனிதபுரிக்குள் நுழைகிறது. அணிவகுப்பினை நடத்திவந்தோன் அதனைக்கண்டு அகமிக மகிழ்கிறான். புனிதப்போரிலே வெற்றிக் கட்டம் - உரிமை தரப்படுகிறது, கடும் போரிட்டு உரிமையினைப்பெற வீரர் குழாம், புனித நகருக்குள் செல்கிறது; காண்கிறான் காணவேண்டுமென்று நெடுங்காலம் எண்ணிய காட்சியை; வெற்றி வீரர்கள் செல்கிறார்கள் வீரநடையுடன், புனிதபுரிக்குள் என்பதை எண்ணுகிறான்; உடல் புல்லரிக்கிறது; களத்திலே ஏற்பட்ட கஷ்டமத்தனையும் பழத்தை மூடிக்கொண்டிருக்கும் தோல் என்று எண்ணிடத் தோன்றுகிறது; உலகு அறியட்டும், உறுதியுடன் உரிமைப்போர் நடாத்துபவர் வெற்றிபெற்றே தீருவார்கள் என்ற உண்மையை என்று மெள்ளக் கூறிக்கொள்கிறான்; அணிவகுப்பு புனிதபுரிக்குள் செல்கிறது, அதனைக்கண்டு களிப்புடன் நுழைவு வாயிலில் அணிவகுப்பினை நடத்திவந்தவன் நிற்கிறான் - ஆனால் அவன் உள்ளே செல்லவில்லை!! புனிதபுரியாம் ஜெருசலம் நகருக்குள், அணிவகுத்து செல்லலாம் - அந்த உரிமை அவர்கட்கு உண்டு - என்று மாற்றார் கூறினர் - ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, அணிவகுப்புத்தான் செல்லலாம், அதனை நடத்திச் செல்பவன், ஜெருசலம் நகருக்குள் செல்லக்கூடாது - என்று கூறிவிட்டனர். எனவே, அணிவகுப்பு புனிதபுரிக்கு உள்ளே சென்றது; அதனை நடத்திச்சென்ற ரிச்சர்டு, ஜெருசலம் நகர நுழை வாயிலில் நின்றுகொண்டிருந்தான். புனிதப்போர், ஜெருசலம் நகருக்காக, பல ஆண்டுகள் நடைபெற்றது. இஸ்லாமியருக்கும் கிருஸ்தவர்களுக்கும் நடைபெற்ற அந்தப் போருக்கு, வேறு பல காரணங்களும் இடையிடையே வந்து இணைந்துகொண்டன; பல வீரக்காதை களைத் தன்னகத்தேகொண்டதாக அந்தப் புனிதப்போர் வடிவெடுத்தது. அரசுகள் பல இதிலே ஈடுபட்டன. அழிவுபற்றிய கவலையின்றி அஞ்சா நெஞ்சினர் அணி அணியாக, அலை அலையாகக் கிளம்பினர்; உலகமே கிடுகிடுக்கத்தக்க பயங்கரச் சண்டைகள் நடைபெற்றன; முடிகள் உருண்டன, நகர்கள் நாசமாயின, பிணமலை எங்கெங்கும்; அப்படிப்பட்டதோர் புனிதப்போரில், இஸ்லாமியர்களைத் தலைமை வகித்து நடத்திச்சென்ற இணையில்லா வீரனாகச் சாலடீன் எனும் மாமன்னன் விளங்கினான்; கிருஸ்தவர் தரப்பில் கிளர்ந்தெழுந்து வீரப் போரிட்ட மாபெருந் தலைவன் என உலகு புகழ் நிலைபெற்றான் இங்கிலாந்து நாடு ஆண்ட, ரிச்சர்டு என்பான்! அரிமா நெஞ்சு அவனுக்கு என்று சிறப்புப் பெயரிட்டு அழைத்திடத்தக்க முறையில் ஆற்றல் மிக்கோனாக விளங்கினான் ரிச்சர்டு. புனிதப்போரிலே ஒரு கட்டம்தான், ஜெருசலம் நகருக்குள் கிருஸ்தவர்கள் செல்லலாம் என்று சாலடீன் அனுமதி அளித்து, போர் நிறுத்த ஏற்பாட்டுக்கு இசைவு அளித்தது. அந்தப் போர் நிறுத்தக் கட்டத்தின்போதுதான், உரிமை கிடைத்தது என்ற உவகையுடன், புனிதபுரிக்கு உள்ளே, கிருஸ்தவர் களின் அணிவகுப்பு பெருமிதத்துடன் நுழைந்தது. ஆனால், அந்த அணிவகுப்பை நடத்திச்சென்ற ரிச்சர்டு, ஜெருசலம் நகருக்குள் செல்லவில்லை. போர் நிறுத்த ஏற்பாட்டுக்கும், ஜெருசலம் நகருக்குள் கிருஸ்தவர்களின் அணிவகுப்பு நுழைவதற்கும் இசைவு அளித்த சாலடீன் ஒரு நிபந்தனை விதித்திருந்தான் - அந்த நிபந்தனைதான், அணிவகுப்பு மட்டும்தான் ஜெருசலம் நகருக்குள் நுழையலாமே தவிர, அதனை நடத்திவந்த ரிச்சர்டு, புனிதபுரிக்குள்ளே நுழையக் கூடாது என்பதாகும். எனவேதான், அணிவகுப்பு ஜெருசலம் நகருக்குள்ளே நுழைந்தது; நகர நுழைவு வாயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தான், ரிச்சர்டு! உள்ளே நுழைந்தவர்களுக்கு, நுழைவு வாயிலில் ரிச்சர்டு நிறுத்தப்பட்டுவிட்டானே என்ற கவலைதான்; வெளியே நிறுத்தப்பட்டுவிட்டவனுக்கோ, புனிதபுரிக்கு உள்ளே நுழையும் உரிமை அணிவகுப்புக்கு கிடைத்துவிட்டது என்ற களிப்பு. தம்பி! தோற்றுக் கிடக்கும் நேரத்திலேதான் இவனைத் தாக்கி மகிழ்ச்சி பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற சிறுமதி படைத்தவர்கள், இதனைக்கூடத் திரித்துக்கூறி, "பார்! பார்! இவன் தன்னை ரிச்சர்டு எனும் மாவீரனுக்கு இணையாக்கிக் கொள்கிறான்!!’ என்று பேசக்கூடும். என்னை ரிச்சர்டு நிலைக்கு நான் உயர்த்திக்கொள்ள இதனை எழுதவில்லை; இதனைப் படித்துவிட்டு, மாற்றார்களும் தங்களை சாலடீனுடன் ஒப்பிட்டுக்கொண்டுவிட வேண்டாம். அணிவகுப்பு உள்ளே நுழையும் உரிமைபெற்ற நேரத்தில், அதனை நடத்திச்சென்றவன் மட்டும், உள்ளே நுழையக்கூடாது என்று தடுத்து நிறுத்தப்பட்டால், அந்த நிகழ்ச்சி எத்தகைய உள்ள நெகிழ்ச்சியைத் தருமோ, அப்படிப்பட்ட உள்ள நெகிழ்ச்சி, நம்மில் ஐம்பதின்மர் சட்டமன்றம் சென்று அமர்ந்திடும் வேளையில், என்போன்றோர் உடன் செல்ல முடியாமல், வெளியே நிறுத்திவிடப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்ட மட்டுமே, இதனை எழுதினேன். உள்ளத்துக்கு நெகிழ்ச்சியை மட்டுமல்ல, புதியதோர் உறுதியையும் தரத்தக்க, இத்தகைய நிகழ்ச்சிகளை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதனைக் கூறவும், இதனை இங்குக் குறிப்பிடுகிறேன். இதோ நாம் நுழைகிறோம் புனிதபுரிக்குள்! ஆனால் நம்முடன் வந்திருக்கவேண்டியவர்களில் பலர் வரவில்லையே என்ற ஏக்கம், செயலற்ற நிலைக்கு அல்ல, செயலை விறுவிறுப்பு மிக்கது ஆக்கிக்கொள்ளப் பயன்படவேண்டும். அவர்களும் வந்திருந்தால். . . அவர்களும் உடன் இருந்தால் . . . என்ற எண்ணம் எழாமலிருக்காது; நமக்குள் உள்ள குடும்பப் பாசம் அத்தகையது; நமது பொலிவுக்கும் வலிவுக்கும் அஃதே அடிப்படை; எனினும் அந்த எண்ணம், "நாம் மட்டும் வந்து என்ன பலன்?’ என்ற முறையில் வடிவெடுக்க இடம் தரக்கூடாது. நாம் வந்திருக்கிறோம், அவர்கள் வரவில்லை; அவர்களும் வந்திருந் தால் எத்தகைய முறையிலே பணி செம்மையாக இருந் திருக்குமோ, என்ற கவலை எவருக்கும் எழாதபடியான தரத்திலும், அளவிலும், நம்முடைய பணி அமையவேண்டும் என்ற உறுதியுடன், ஒவ்வொருவரும் தத்தமது ஆற்றல் அவ்வளவையும் பயன்படுத்திக் கூட்டுச்சக்தியாக்கிப் பணியினைச் சிறப்புடையதாக்கவேண்டும். நடத்திச்செல்பவனை இழந்தும் ஒரு அணிவகுப்பு பணிபுரிய இயலும் - தமக்குள்ளாகவே நடத்திச்செல்பவரைப் பெறமுடியும்! ஆனால், அணிவகுப்பு இன்றி, நடத்திச்செல்பவன் மட்டும் தட்டுத் தடுமாறி உள்ளே நுழைகிறான் என்று வைத்துக்கொள் தம்பி! எப்படி இருக்கும் அந்தக் காட்சி? கண்றாவியாக இருக்கும்!! நடத்திச்செல்பவனை இழந்த அணிவகுப்பைக் காண்போர், ஆச்சரியப்படுவர்! அணிவகுப்பினை இழந்த நடத்திச்செல்பவனைக் காண்போர், கேலி செய்வர்!! நடத்திச்செல்பவனற்று ஒரு அணிவகுப்பு இருந்துவிடாது நடத்திச்செல்பவர் ஒருவரைக் கண்டுபிடித்துவிடும். அணிவகுப்பினை இழந்த தலைவன், மாயமந்திர வேலைகளால் உடனே மற்றோர் அணிவகுப்பை உண்டாக்கிக் கொள்ளமுடியாது. எனவேதான், தம்பி! அணிவகுப்பு அடையும் வெற்றிதான் மிக முக்கியமே தவிர, நடத்திச் செல்பவன் ஈட்டிடும் வெற்றி அவ்வளவு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல; கோபுரம்தான் முக்கியம், கலசம் அல்ல! கலசமும் இருந்திருந்தால் அழகாகத்தான் இருக்கும்; ஆனால் கோபுரமின்றிக் கலசம் இருந்தால் கேலிக்கூத்தாக அல்லவா இருக்கும். அதுபோலத் தான், என் போலச் சிலர்’ உள்ளே வரமுடியாமற்போனது? இதனை நான், வெறும் மன ஆறுதல் அளிக்கக் கூறுகிறேன் என்று எண்ணிக்கொள்ளாதே. தம்பி! இதற்கு ஊடே இருக்கும் தத்துவத்தை, விளக்கமாக்குவதற்காகவே கூறுகிறேன். காங்கிரசுக் கட்சியினர் கோபுரத்தைத் தகர்க்கத் திட்ட மிட்டனர்; தம்மிடம் கிடைத்த அழிவுக் கணைகளை ஏவினர்; அவர்கள் கண்ட பலன், கலசம் பிய்த்தெளியப்பட்டதுதான்; கோபுரம் அல்ல! ஐம்பது கழகத் தோழர்கள் சட்டமன்றத்தில்! அணிவகுப்பு உள்ளே நுழைந்துவிட்டது! வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு விட்ட என்போன்றார்களைக் காணும்போது, மாற்றார்களுக்கு ஒரு கணம் சிரிப்புப் பொங்குவது இயற்கை; பல இலட்சம் செலவிட்டு அவர்கள் இந்தப் பலனைக்கூடவா சுவைக்கக் கூடாது! - ஆனால் மறுகணமோ, ஐம்பதுபேர்! ஐம்பதுபேர்! நாலில் ஒரு பகுதி!! என்ற எண்ணம் கொட்டுகிறது; துடியாய்த் துடிக்கிறார்கள். இந்த ஐம்பதின்மருடன் பாராளுமன்றத்துக்கு எழுவரையும் சேர்த்து வெற்றிபெறச் செய்த நமது கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், ஜனநாயகம் புதுப் பொருள் பெற்றாகவேண்டும் என்பதற்காக நமக்குத் துணை நின்றவர்கள் ஆகிய அனை வருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். வெற்றி ஈட்டித்தர இயலாதுபோயினும், மற்ற இடங் களிலும் வெற்றி பெற்றாகவேண்டும் என்பதற்காக அரும்பாடு பட்டனர் நமது தோழர்கள், அவர்களுக்கும் என் நன்றி. சொல்லப்போனால், வெற்றிபெற்றிருக்கிற இடத்திலே பணியாற்றிய நமது கழகத்தோழர்களும், ஆதரவாளர்களும், நண்பர்களும், வெற்றிக் களிப்புப்பெற்று, பட்ட கஷ்டம் அத்தனையும் பறந்துபோன நிலையில், ஏறு நடைபோட்டு எக்களிப்புடன் இருக்க முடிகிறது. - அரைத் தெடுத்த சந்தனத்தை மார்பில் அணிந்துகொண்டதுபோன்ற மகிழ்ச்சி இருக்கும்போது, அரைத்தபோது தோன்றிய வலி மறந்தேபோய்விடுகிறது அல்லவா! அதுபோல!! கொஞ்சுகிறாள் பார். கொலுப்பொம்மை யைப்போலக் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு! இன்று. அன்று? அடேயப்பா? என்ன அலறல்! எவ்வளவு அழுகை! வேண்டாமே! வேண்டவே வேண்டாமே! குழந்தையே வேண்டாமே!! என்றெல்லாம் கூச்சலிட்டாள்! இன்று ராஜாவாம் ரோஜாவாம்! கொஞ்சுகிறாள் குழந்தையிடம்! - என்று பொக்கைவாய் மூதாட்டி கேலிபேசுவது உண்டல்லவா, குலக்கொடியைப் பெற்றெடுத்த கோமளத்தைப் பார்த்து. அதுபோல, வெற்றிபெற்ற இடத்திலே, மனதுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, மாற்றார்களைப் பார்க்கிறபோது ஏற்படும் பெருமித உணர்ச்சி போதும், எத்துணை கஷ்டநஷ்டத்தையும் ஈடு செய்துவிடும். எனவே, வெற்றிபெற்ற இடங்களில் பணியாற்றினவர் களுக்குக்கூட அதிகமாகப் பாராட்டும், நன்றியறிதலும் கூறத் தேவையில்லை. பாடுபட்டும் பலன் காணாததால் மனம் உடைந்து, மாற்றார் முன் எப்படி நடப்பது என்று வேதனையுடன் இருக்கிறார்களே. தோற்றுப்போன இடங்களிலே பணியாற்றிய வர்கள் - அவர்களுக்குத்தான் ஆறுதல் கலந்த நன்றியறிதலை அதிகமான அளவு கூறவேண்டும். அவர்கள் பணியாற்றியபோது என்னென்ன இன்ப நினைவுகள் அவர்கள் மனதிலே அலை மோதினவோ! எத்தனை இரவுகள் இன்பக் காட்சிகளைக் கனவாகக் கண்டனரோ! எத்தனை எத்தனை பேர்களிடம் வெற்றி நிச்சயம்! வெற்றி உறுதி!! என்றெல்லாம் பேசிப்பேசி மகிழ்ந்தனரோ! - பரிதாபம் - அத்துணையும் மண்ணாகி, அவர்கள் மனம் எரிமலையாகி, கண்கள், குளமாகி, பேச்சு பெருமூச்சாகி, நடை தளர்ந்து உள்ளனர்; கதிர்விடும் அளவு வளர்ந்த பயிர் திடீரென காய்ந்துபோகக் கண்ட உழவன் மனம் என்ன பாடுபடுமோ? அதுபோல இருக்கும் அவர்கள் மனம். அவர்களுக்குத்தான் தம்பி! நாம் அனைவரும் அதிகமான அளவிலே ஆறுதலும் நன்றியறிதலும் அளிக்க வேண்டும். வெற்றி கிடைத்திருந்தால் வேதனை தானாகப் போய்விட்டிருக்கும். இவர்களுக்கோ, பாடுபட்ட அலுப்புடன் பலன் காணா வேதனையும் சேர்ந்து வாட்டுகிறது; வதைபடுகிறார்கள். வெற்றி கிடைத்த இடத்திலுள்ளவர்கள், வேலையில் மும்முரமாக ஈடுபட்டபோது, குடும்பத்திலே, குதூகலமாகப் பேசி மகிழ்வதை இழந்தனர். என்றாலும், இப்போது, பேசிப் பேசி மகிழலாம். கணக்குப் போட்டுக் காட்டிக் காட்டிக் தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி நான்கு 313 களிப்படையலாம்; என் பேச்சு எப்படி என்று கூறி எக்களிப்புக் கொள்ளலாம்; எனக்கு அப்போதே தெரியும் என்று ஆரூடம் அறிந்தவர்போலப் பேசிச் சிரிக்கலாம்!! ஆனால் தோற்றுப்போன இடத்தில் பணியாற்றியவர்களின் நிலை? வேலை செய்தபோதும் வேதனை, இப்போது அதனைவிட அதிக வேதனை! முன்பு வேலை மிகுதியால் வேளா வேளைக்குச் சரியாகச் சாப்பிடுவதில்லை, தூக்கம் இல்லை, ஓய்வு இல்லை, நிம்மதி இல்லை; இப்போது, வேலை பலன் தராததாலே ஏற்பட்ட வேதனையால், பசியில்லை, தூக்கமில்லை, மன நிம்மதி இல்லை, எவரிடமும் உரையாட விருப்பம் எழவில்லை; காரணமின்றிக் கோபம் வருகிறது; கண்டவர்மீது சந்தேகம் கிளம்புகிறது. எதிலும் ஓர் அருவருப்பு ஏற்படுகிறது; தன்னம்பிக்கைகூடக் குறைகிறது. பாடு பலவும் பட்டுவிட்டு, இந்த நிலையையும் தாங்கிக் கொள்வது என்றால், உள்ளபடி கடினமல்லவா? எனவே, அவர்களே, நமது ஆறுதலையும் நன்றியறிதலையும் பெறும் முதல் உரிமை, முழு உரிமை பெற்றவர்கள். வேலை முறையிலே தவறுகள் இருக்கலாம், போட்ட கணக்குகள் பொய்த்துப் போயிருக்கலாம், நம்பினவர்கள் மோசம் செய்திருக்கலாம், நயவஞ்சகம் இதுவென அறிந்துகொள்ளும் திறமை குறைவாக இருந்திருக்கலாம் - ஆனால் பணியாற்றிய வர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி, பட்ட கஷ்டம், கொண்ட ஆசை, ஏற்படுத்திக்கொண்ட நம்பிக்கை இவைகளை எவர் மறக்க முடியும். எப்படிக் குறைத்து மதிப்பிட முடியும்! எத்துணையோ தொல்லைகளைத் தாங்கிக்கொண்டனர். வசதிக் குறைவுகளுக்கு இடையே உழன்றனர். பகை கக்கினர் பலர்; பொருட்படுத்தவில்லை. பொய் வழக்குகள் தொடுத்தனர்; பொல்லாங்கு மூட்டினர்; காலிகளை ஏவிவிட்டனர்; கத்தி காட்டி மிரட்டினர்; வழிமடக்கி அடித்தனர்; வேலையைப் பறித்தனர்; வீட்டில் கலகம் மூட்டினர்; அம்மம்மா! ஒன்றல்ல இரண்டல்ல, அவர்களைக் கொட்டிய கொடுமைகள், அத்தனையையும் தாங்கிக்கொண்டு, ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, அனைவரிடமும் பணிவாக நடந்து, பணி யாற்றினர் - கழகம் வெற்றிபெறவேண்டும் என்ற ஒரே நோக்கத் துக்காக, எந்தப் பழியையும் இழியையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்ற உறுதியுடன், தியாக உணர்வுடன். அதிலும், தம்பி! காஞ்சீபுரம் தொகுதியிலே, வேளைக்கு ஒரு சேதி வெடித்துவரும்; அந்த ஊர் தலைவர் அவர்களை வண்டியிலே ஏற்றிவிட்டாராம்! இந்த ஊர் மணியக்காரரை இரவு 12 மணிக்கு இலுப்பைத் தோப்பிலே சந்தித்து 200 ரூபாய் கொடுத்துவிட்டார்களாம்! இவருக்கு அவர் கடன் கொடுத்திருக் கிறாராம், ஆகவே, அங்கு கட்டுப்பட்டுப் போய்விட்டாராம்! - என்றெல்லாம் திகில் தரும் செய்திகள் வரும். கேட்ட எவருக்கும் "கை ஓடாது கால் ஓடாது’. மனம் பதை பதைக்கும்; கிளம்பிய சேதிகள் உண்மைதான் என்பதைக் காட்டும் குறிகள் தெரியும்! என் செய்வர், நமக்காகப் பணியாற்றுவோர்! முதலில் தங்களைத் திகிலிலிருந்து விடுவித்துக்கொள்ளவேண்டும், பிறகு பணி! தொடர்ந்து! சோர்வை மறைத்துக்கொண்டு!! "தானிய வியாபாரிகளெல்லாம், கிளம்பிவிட்டார்கள் கிராமம் கிராமமாக!’’ - என்பார் ஒருவர். "தானிய வியாபாரிகள் கிளம்பினால் என்ன?’’ என்று கேட்பார் இன்னொருவர். ஒவ்வொரு கிராமத்திலும் அவர்களுக்குக் கொடுக்கல் வாங்கல் தொடர்பு இருக்கிறதே. அவர்கள் பேச்சுக்குப் பலர் கட்டுப்படுவார்களே! - என்று விளக்கம் அளிப்பார், இன்னொருவர். எனக்கு இதெல்லாம் தோன்றாது. நாம் என்ன கெடுதல் செய்தோம் இவர்களுக்கு? மனதாலும் கெடுதலை எண்ணிய தில்லையே. ஏன் இவர்கள் நம்மை எதிர்த்து வேலை செய்கிறார்கள்! நாம் ஏதாவது இவர்கள் மனம் புண்படும்படி, வெறுப்புக்கொள்ளும்படி நடந்துகொண்டோமா? கிடையாதே! அப்படியிருக்கும்போது, நம்மிடம் இவர்கள் பகை காட்டு வானேன்? புரியவில்லையே! என்று எண்ணிப் பெருமூச் செறிவேன். தானிய வியாபாரிகள் மட்டுமல்ல. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகையான வியாபாரிகளைப்பற்றி, இப்படிச் செய்தி வரும். காரணம் எனக்கு இன்னமும் புரியவில்லை.எதற்காக, இவர்கள் என்மீது இவ்விதமாகப் பகை காட்டினார்கள் என்பதற்கு, என்னை வீழ்த்தி, அவர்கள் அடையப்போகும் பலன்தான் என்ன என்றும் எனக்குப் புரியவில்லை. தம்பி! கிரேக்க நாட்டிலே ஒரு “முறை’ இருந்தது -”முறை’ என்றுகூட அதைக் கூறுவதற்கில்லை, - ஒரு "நடவடிக்கை’ என்று மட்டுமே கூறலாம். ஆங்கிலத்திலே, அதனை Ostracism - ஆஸ்ட்ரசிசம் என்பார்கள். விரட்டி அடிப்பது என்று பொருள் கொள்ளலாம். கெட்டவர்களை அல்ல, தம்பி! வேதனை கலந்த வேடிக்கையைக் கேள், நல்லவர்களை விரட்டி அடிப்பது! நல்லவர்களை விரட்டி அடிப்பது ஏன்? என்றுதானே கேட்கிறாய். நல்லவர்களை வளர விட்டால், பிறகு அவர்கள் மிகமிக அதிகமாக வளர்ந்து விடுவார்கள்; பிறகு அவர்களுக்கு நிகர் யாருமே இல்லை என்று ஆகிவிடும்; பிறகு ஆபத்து உண்டாகுமல்லவா? அதனால், மிக நல்லவர்கள் என்ற நிலைக்கு யாரேனும் வளருகிறார்கள் என்றால், அவர்களை ஊரைவிட்டு விரட்டிவிடவேண்டும் - என்று வாதாடி, விளக்கம் அளித்தனர். அப்படிப்பட்ட நடவடிக்கை கிரேக்க நாட்டிலே நடைபெற்றது. நாட்டுக்கு நாசம் விளைவிக்கக்கூடியவர்களை விரட்டி அடிப்பது என்று துவக்கப்பட்ட நடவடிக்கை, நாளா வட்டத்திலே கெட்டுக் கெட்டு, நல்லவர்களை, செல்வாக்கு மிக்கவர்களை, எல்லோரும் பாராட்டத்தக்கவர்களை, விரட்டி அடித்திடும் முறையாக உருவெடுத்தது. ஆதென்சு நகர அரசியலில் இடம்பெறவும், ஆதிக்கம் செலுத்தவும் விழைவுகொண்டோர், ஊராரின் நன் மதிப்பைப் பெறத்தக்கவராக, நல்லவராக எவரேனும் புகழ்பெறுகிறார் என்றால், ஊரிலே அவர்கள் உள்ளமட்டும் தமக்கு அரசியலில் இடம் கிடைக்காது என்று எண்ணி, அவர்களை விரட்டி அடிக்க முனைந்தனர். இதற்கும் மக்களின் வாக்குரிமை பயன்பட்டது. ஆதென்சு நகர மக்களில் 6000-பேர் கூடி வாக்களித்து விடலாம், இன்னார் ஊரிலே இனி இருக்கக்கூடாது என்று; அந்த வாக்கெடுப்பு முடிந்ததும், அவர் கிரேக்க நாட்டை விட்டுச் சென்றுவிடவேண்டும். கொலை, கொள்ளை, சதி, கற்பழித்தல் போன்ற குற்றங் களைப் புரிந்திருந்தால், வழக்குத் தொடுத்து, விசாரணை நடத்தித் தண்டிக்கலாம். அதற்கான முறைகள், சட்டதிட்டங்கள் இருந்தன. ஆஸ்ட்ரசிசம் எனும் விரட்டி அடிக்கப்படும் முறையில் இன்ன குற்றம் இவன் செய்தான் என்று வழக்கு தொகுப்பது இல்லை. இவன் இங்கு இருக்கவேண்டாம் என்று கூறப்படும். ஏன்? என்று கேட்டால், இவன் ஆபத்தானவன்; இவனால் ஆபத்து வரக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்பதன்றி வேறு பதில் கிடையாது. அரசியல் வட்டாரத்தினருக்கு மட்டுமே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. கி. மு. 508ஆம் ஆண்டில் இதுபோன்ற நடவடிக்கை துவக்கப்பட்டு, பலர் நாடுகடத்தப்பட்டனர். இந்த முறைகேடான நடவடிக்கையின் காரணமாக, நல்லவர் பலர் விரட்டி அடிக்கப் பட்டதால், நாட்டுக்கே நாசம் ஏற்படுவதை மெள்ள மெள்ள உணர்ந்த பிறகு, 517ஆம் ஆண்டிலே இந்த நடவடிக்கையைக் கைவிட்டனர். தெமிஸ்டாக்லிஸ், அரிஸ்டிடிஸ் போன்ற புகழ் மிக்கோர் பலர், இத்தகைய நடவடிக்கையால் ஆதென்சு நகரைவிட்டு விரட்டப்பட்டனர். தம்பி! ஒருவருக்கும் ஒரு கெடுதலும் செய்யாததிருந்த நிலையில், எவரும் அருவருக்கத்தக்க, வெறுக்கத்தக்க எத்தகைய செயலையும் செய்தறியாத என்னை, என் தொகுதி மக்கள் ஆதரிக்கமுடியாது என்று கூறியது அறிந்தபோது, எனக்கு இந்தக் கிரேக்க நாட்டு நடவடிக்கைதான் நினைவிற்கு வந்தது. அப்பப்பா அவன் செய்த அக்ரமத்துக்கு, இந்தத் தண்டனை தான் சரியானது என்றோ, ஒருவனை மதித்தானா, ஒருவரிடம் மரியாதை காட்டி னானா, எத்தனை மண்டைக் கனம் அவனுக்கு, அதனால்தான் மக்கள் அவனை மட்டந்தட்டினார்கள் என்றோ ஊரை மிரட்டிக்கொண்டிருந்தான், உள்ளதெல்லாம் தனக்குத்தான் என்று அள்ளிக்கொண்டிருந்தான், ஆகவேதான் அவனைக் கீழே இறக்கிவிட்டார்கள் என்றோ என்னைத் தோற்கடிக்கவே கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தவர்கள்கூடக் குறை கூறமாட்டார்கள். என்னிடம் இன்ன குறை உளது என்று சுட்டிக்காட்ட முடியாது. ஏறக்குறைய கிரேக்க நாட்டு நடவடிக்கைபோலவே இங்கு நடந்தது என்று கூறலாம். நல்லவன்தான்! எவருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவன்தான்! அதனால்தான், நல்லவன் என்று பெயர் பெற்றுவருகிற ஒருவனை, இப்படியே வளரவிடக்கூடாது என்று எண்ணுகிறோம் என்று, என் தொகுதியில் என்னை எதிர்த்து வேலை செய்தவர்கள் கூறவில்லையே தவிர, அவர்களின் மனதிலே இருந்த எண்ணம் இதுபோன்றதுதான், என்பதிலே ஐயமில்லை. அவன் சட்டசபை சென்றால் நன்றாக வாதாடுவான் - என்று அவர்களிலேயே ஒருவர் கூறுவார். மற்றவரோ, அதற்காக அவனேதான் போகவேண்டுமா? ஒருமுறைதான் போனானே போதாதா? இந்தமுறை வேறு ஒருவர்தான் போகட்டுமே? இவனுக்கே இது பட்டாவா? என்று கேட்பார். இப்படி ஒரு விசித்திரமான மனப்பான்மை வளர்ந்திருப்பது எனக்குப் புரியாமலில்லை. இந்த மனப்பான்மையை, ஆளுங்கட்சியினர், குறிப்பாக அமைச்சர்கள் தக்கவிதத்தில் பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை. தட்டிக்கொடுத்து வேலை வாங்கினார்கள்; தடவிக் கொடுத்துப் பலன் பெற்றார்கள். இது, தேர்தலின்போது மட்டும் கையாளப்பட்ட முறை அல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்ட முறை, நீண்ட காலமாகவே. காஞ்சிபுரம் தொகுதி கடந்த இரண்டு முறைகளும் காங்கிரசை தோற்கடித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு - அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான் - இந்த மனப்புண் அவ்வப்போது எரிச்சலைக் கிளப்பியபடி இருந்து வந்தது. இம்முறையும் காங்கிரசு தோற்றுவிட்டால், இனி என்றென்றும் காஞ்சிபுரம் தொகுதி காங்கிரசுக்குக் கிட்டாது என்ற கிலி ஏற்பட்டுவிட்டது. இதனையும் அமைச்சர்கள் தக்கமுறையில் பயன்படுத்திக் கொண்டார்கள். இம்முறை எவ்வளவு செலவிட்டாலும், என்னை வீழ்த்திக் காங்கிரசுக்கு வெற்றி தேடிவிடவேண்டும் என்பதனைத் திட்ட மிட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாகவே பணியாற்றினர். பழங்குடி மக்களிடம் பழகி, ஒவ்வொரு சேரிக்கும் சென்று மாடு வேண்டுமா, மனைக்கட்டு வேண்டுமா, கடன் வேண்டுமா, வேலை வேண்டுமா என்று கேட்டு, வாக்களித்து, சிறு சிறு சலுகைகள் செய்துகொடுத்து, ஆள் பிடிக்கும் வேலை, எனக்கு எதிராக அவர்களைத் திருப்பிவிடும் வேலை, கழகத்துக்கு எதிர்ப்பு ஏற்படுத்தும் காரியம், தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வந்தது. நாள்தோறும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கழக வேலையாகச் சுற்றிக்கொண்டிருந்தேன், என்றாலும் வாய்ப்புச் சிறிது அளவு கிடைக்கும்போதெல்லாம், தொகுதியில் நான் சென்று பார்த்ததில் இது எனக்குப் புரிந்தது; நமது கழகத் தோழர்களிடம், இதனை அவ்வப்போது எடுத்துக்கூறியும் வைத்தேன். நான் நேரில் விளக்கம் கூறக்கேட்கும்போது பல இடங்களிலே, நிலைமை புரிந்தது. இவர் ஒருவர் இருப்பதனால்தான் இதுவாவது நடக்கிறது. இவருக்குப் பயந்துகொண்டுதான் இது வேண்டுமா, அது வேண்டுமா என்று வந்து வந்து கேட்கிறார்கள். இவர் சட்ட சபையில் நமக்காக வாதாட வாதாடத்தான் மாடு வேண்டுமா, மனைக்கட்டு வேண்டுமா என்று கேட்கிறார்கள். என்று எண்ணியவர்களும், கூறியவர்களும், என் தொகுதியில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், தொடர்ந்து அவர்களிடம் காங்கிரசால் ஏவிவிடப்பட்டவர்கள் கலகம் மூட்டியபடி இருந்தால், அவர்கள் மனதிலே என் பேரில் ஒரு கசப்புணர்ச்சி ஏற்படாதா? ஏற்பட்டுக்கொண்டு வந்தது. எனக்கு அது புரியவும் செய்தது. நமது கழகத் தோழர்களிடம் எடுத்துக் கூறினேன். அவர்கள் அதனை நம்பவில்லை. அவர்களுக்குப் பாவம் என்மீது இருக்கும் பற்றும் பாசமும், மதிப்பும் மரியாதையும். நாட்டுக்காகப் பாடுபடுகிறவர் நாடுமீளப் பாடுபடுகிறவர் இவர்மீதாவது, கசப்பு வளருவதாவது? என்ற எண்ணம் கொள்ளச் செய்தது. அவர்கள் ஒன்றினை மறந்தார்கள்; நான் நாட்டு விடுதலைக்காகப் பணியாற்றுவதனைக் கவனித்து, மற்றப்படி என் மூலமாகத் தமக்கு வேறு எந்தவிதமான உதவிகளும் தேவையில்லை என்று எண்ணத்தக்க நிலையில், தொகுதி மக்கள் இல்லை என்பதனைப் புரிந்துகொள்ளவில்லை. நமது கழகத் தோழர்களுக்கு இருந்துவந்த எண்ணமெல்லாம். ஐந்தாண்டுத் திட்டத்தின் ஊழலைக் கண்டிக்கிறார்; விலை ஏற்றத்தைக் கண்டிக்கிறார்; வரிக்கொடுமையை எதிர்த்துப் போராடுகிறார்; இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்துகிறார். இவ்வளவு அரிய பணியாற்றிவரும் கழகத்தைக் கட்டிக்காத்து வருவதுடன், கலாம் விளைவதைத் தடுத்து நிறுத்தி, நல்ல வளர்ச்சி ஏற்படச் செய்து, இந்திய துணைக்கண்டத்திலேயே, கழகம் என்றால் ஓர் கேள்விக்குறி என்ற நிலைக்குக்கொண்டு வந்திருக்கிறார்; இப்படிப் பாடுபட்டுக்கொண்டு வருகிறவரிடம் நாளுக்குநாள் பற்றும், பாசமும், மதிப்பும், மரியாதையும் அதிகமாக வளருவதுதானே முறை. எனவே, ஆதரவு முன்பு இருந்ததைவிட, இம்முறை எவர் தடுத்தாலும் அதிகமாக இருந்தே தீரும் என்று எண்ணிக்கொண்டனர். இதனை அவர்கள் பல கூட்டங்களில் எடுத்தும் கூறினர். அந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் ஆம்! ஆம்! என்றனர்; ஏன் எனில், அவர்களே அந்தக் கருத்துக்கொண்ட வர்கள். ஆனால் அந்தக் கருத்துகொள்ளாதவர்கள், காங்கிரசால் ஏவிவிடப்பட்டவர்களின் கலகப்பேச்சுக்கு இரையாகி, மனம் குழம்பிப் போயிருந்தவர்கள், அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் அல்ல. கூட்டம் நடந்த இடம், காஞ்சீபுரம்; காங்கிரசால் ஏவிவிடப்பட்டவர்களின் கலகப்பேச்சினால் என்னிடம் கசப்புணர்ச்சிகொண்டவர்கள் இருந்த இடம், கிராமங்கள். இந்த நிலைமையைத்தான் நமது தோழர்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். தடுத்து நிறுத்தவும், திருத்தவும் முடியவில்லை; தேர்தல் நேரத்து வேலை, கடினம் எனினும் இதற்கு அது பயன்படவில்லை. காங்கிரசினால் ஏவிவிடப்பட்டவர்கள், திட்டமிட்டு மெள்ள மெள்ள, கழகத்தின்மீதும், என்மீதும் கசப்புணர்ச்சியை மூட்டிக்கொண்டு வந்ததை, உடனுக்குடன் தடுத்து நிறுத்த, நமது கழகத் தோழர்கள் முயற்சி எடுத்துக்கொண்டிருந்ததால், தேர்தல் நேரத்தில் "ஜுரவேகத்தில்’ வேலை செய்திருக்கத் தேவையே ஏற்பட்டிருக்காது. என் தொகுதியின் நிலைமை மட்டுமல்ல; சென்ற முறை கழகம் வெற்றிபெற்ற எல்லாத் தொகுதிகளிலும் இருந்துவந்த நிலைமையைத்தான், காஞ்சிபுரம் தொகுதியைச் சுட்டிக் காட்டுவதன்மூலம் எடுத்துரைக்கிறேன். செய்யத் தவறிவிட்ட தற்காக, வருத்தம் தெரிவிக்க அல்ல; இனி இவ்விதம் வேலைத் திட்டம் வகுத்துக்கொண்டு பணியாற்றவேண்டும் என்பதனை நினைவூட்ட. தம்பி! இன்று நாடு உள்ள நிலையில், எல்லா மக்களும், தூய அரசியல் தத்துவங்களை மட்டுமே மனதில்கொண்டு, தமது ஆதரவைத் தர முன்வருவார்கள் என்று எண்ணிக்கொள்ளக் கூடாது. நாடு பிரிகிறபோது பிரியட்டும், அதனால் கிடைக்கக்கூடிய நல்லவை அப்போது கிடைக்கட்டும், இப்போது வீட்டு விசாரம் போக வழி என்ன? என்று கேட்பதுதான், நூற்றுக்கு எண்பது பேருடைய இயல்பாக இருக்கும்; இங்குமட்டுமல்ல, ஜனநாயகம் பல நூற்றாண்டுகளாக நடைமுறையாக இருந்துவரும் நாடுகளிலேயேகூட. உடனடியாகக் கிடைக்கும் உதவிகள் கடுகளவு எனினும் பெரிதாகத்தான் தோன்றும். தொடர்ந்து பணியாற்றிப் பெறக் கூடியது, நிலைத்து நிற்கக்கூடிய, நிலையை மாற்றி அமைக்கக் கூடிய பலனாக இருக்கும் என்பதற்காக, உடனடியாகக் கிடைக்கும் பலனை இழந்துவிட, சராசரி மக்கள் முன்வரமாட்டார்கள். அவர்களின் "ஆசாபாசங்களை’ நாம் தம்பி! அலட்சியப்படுத்துவதோ, அவைகளை அவர்கள் பெற வழிகாட்டுவதில் அக்கரையற்று இருப்பதோ, சரியல்ல; முறையுமாகாது. என்ன அண்ணா! செய்யலாம்? ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களால்தான், சிறு சிறு சலுகைகளை, உடனடி உதவி களைச் செய்துதர முடியும்; நாமோ எதிர்க் கட்சியாயிற்றே, என்ன செய்திட முடியும்? எந்த அதிகாரி நமக்காகச் சலுகை காட்டுவார். எப்படி நாம் மக்களுடைய சிறு சிறு தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கமுடியும் என்று கேட்கிறாய்; தெரிகிறது நான் தம்பி! உன்னுடைய இந்தக் கேள்வி, பொருளற்றது என்றும் கூறிவிடவில்லை; பொறுப்பற்றது என்றும் தள்ளிவிடவில்லை. இதனை நான் அறியவில்லை என்றும் எண்ணிவிடாதே. எனக்கே இது தெரியும். காஞ்சிபுரம் நகரில் ஒரு புதிய கூட்டுறவு நெசவுச்சங்கம் அமைக்கவேண்டும் என்று, நமது தோழர்களிலே சிலர் என்னை அணுகினார்கள். நான் தொழில் அமைச்சரைக் கண்டு பேசினேன்; ஒரு முறைக்கு மும்முறை; ஆனால் காரியம் பலிக்கவில்லை. உனக்கே இது என்றால், எங்கள் பாடு இன்னும் கஷ்டம் தானே என்று கேட்கிறாய். உண்மை, தம்பி! ஒப்புக்கொள்கிறேன்; ஆனால் உடனடியாக சலுகைகளை, உதவிகளைப் பெற்றுத் தர முடியாமல் போய்விட்டாலும், மக்களிடம் நிலைமையை விளக்க, சர்க்கார் மூலமாக இல்லாதுபோயினும், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி உதவிகள் பெற்றுத்தர, நாம் முனைந்தது உண்டா, என்பதை எண்ணிப்பார், தம்பி! இல்லை என்பது விளங்கும். கைத்தறித் துணியினைத் தலைமீது சுமந்து விற்றோம் - சர்க்கார் துணையுடன் அல்ல. புயல் அடித்தபோது நிதி திரட்டி உதவி அளித்தோம் - சர்க்கார் கை கொடுத்ததால் அல்ல. மாநாடுகள் நடத்துகிறோம் - மகத்தான கலை நிகழ்ச்சிகள் நடாத்துகிறோம் - சர்க்காரின் ஒத்துழைப்புடன் அல்ல! சொல்லப் போனால், அதிகார வட்டாரம் கொடுக்கும் தொல்லைகளையும் தாங்கிக்கொண்டு. இதுபோல, தொகுதிகளின் நிலைமைக்கான காரியத்தில் நாம் ஈடுபட்டு, ஓரளவு வெற்றி கண்டிருக்க முடியாதா என்பதை எண்ணிப்பார்த்தால், உண்மை விளங்கும். கழகம் உமக்காக என்னென்ன திட்டமிடுகிறது தெரியுமா? கழகத்தார், உமக்காகச் சட்டசபையிலே என்னென்ன கூறியிருக்கிறார்கள், தெரியுமா? கழகத்தவர்கள், உங்கள் சார்பில் அமைச்சர்களை எப்படி எப்படித் தட்டிக் கேட்கிறார்கள் தெரியுமா? என்று, தம்பி! தேர்தல் நேரத்தில் எல்லா இடங்களிலும் ஆர்வத்துடன் பேசுகிறாய்; ஆனால் தேர்தல் சூழ்நிலை இல்லாதபோது, கிராமத்து மக்களுக்குத் தெளிவு அளிக்க, கசப்புணர்ச்சி நீங்க, நடத்திய பிரச்சாரக் கூட்டங்களின் எண்ணிக்கை என்ன? வருத்தப்படுத்தக் கூறவில்லை; என்னையும் சேர்த்துத்தான் கூறுகிறேன். மிகக் குறைவு. தொகுதிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினருக்கு, அந்தத் தொகுதியிலே ஆதரவு வளரவேண்டுமானால், கசப் புணர்ச்சி வளராமல் இருக்கவேண்டுமானால், உறுப்பினர் மட்டுமே அந்தக் காரியத்தைக் கவனித்துக்கொள்ளுவார் என்று இருந்துவிடக்கூடாது; அவர் சார்பில், தொகுதியிலே தொடர்பு வைத்துக்கொண்டு, அவ்வப்போது நல்லுரை வழங்கவும், தெளிவுரை கூறவும், இயன்ற அளவு உதவிகளைத் திரட்டித் தரவும், பணியாற்ற, அந்தத் தொகுதியிலே கழகத்தவர்கொண்ட குழு ஒன்று பணியாற்றித் தீரவேண்டும். தொகுதி உறுப்பினர் தொகுதிப் பணியினைப் பார்த்துக்கொள்ளட்டும் என்று கழகத்தவர் ஏதும் செய்யாது இருந்துவிட்டால், கசப்புணர்ச்சி உறுப்பினர்மீது மட்டுமல்ல, தம்பி! கழகத்தின்மீதும் வளர்ந்து விடும். சென்ற முறை நமது கழகத்தவர் வெற்றிபெற்றிருந்த தொகுதிகள் அவ்வளவிலும், இம்முறை கிட்டாததற்கு இதுவே காரணம் என்று நான் கூறுவதாக, தப்பர்த்தம் செய்து கொள்ளாதே. காஞ்சிபுரம் தொகுதியிலே இது மிக முக்கியமான காரணமாக அமைந்திருந்தது; மற்றத் தொகுதிகளிலே, தோல்விக் கான பல காரணங்களிலே இதுவும் ஒன்று. இதனைப் புரிந்துகொள்ள, அந்தத் தொகுதிகளிலே உள்ள சிற்றூர்களிலே, கழகத் தோழர்கள் எத்தனை இடங்கட்குச் சென்றுவந்தனர், எத்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன என்ற கணக்கெடுத்துப் பார்க்கவேண்டும், தம்பி! கோபிக்காமல், வருத்தப்படாமல். பிற, அடுத்த கிழமை. அன்புள்ள அண்ணாதுரை 18-3-1962 அறுவடையும் - அணிவகுப்பும் (3) தொகுதிகளும் உறுப்பினர்களும் - அணிவகுப்பின் வெற்றி. தம்பி! தொகுதிகளிலே நல்ல தொடர்பினை, தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள் மட்டுமே கொண்டிருக்கவேண்டும் என்று இருந்துவிடாமல், அந்தத் தொகுதியிலே உள்ள கழகத் தோழர் களின் குழு ஒன்று, அத்தகைய தொடர்பினை வைத்துக் கொண்டிருக்கவேண்டும் என்று சென்றகிழமை குறிப்பிட்டிருந்தேன். இது, ஏன் அவ்விதமான தொடர்பு கழகத் தோழர்கள் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்று கேட்கவும், கடிந்துரைக்கவும் எழுதப்பட்டது அல்ல. இனி அவ்விதமான முறையிலே பணி இருக்கவேண்டும் என்பதனை எடுத்துக்காட்டுவதற்காகக் கூறினேன். தொகுதியின் நிலைமைகளை, நெருங்கிய, இடைவிடாத தொடர்புமூலம் நன்கு தெரிந்து வைத்துக்கொள்ளும் குழு அமைந்து, நல்ல முறையிலே வேலை செய்து வந்தால், நாளா வட்டத்தில், இந்தக் குழு அந்தத் தொகுதிக்கு ஏற்ற வேட்பாளர் எவர் என்பதை எடுத்துரைக்கும் தகுதியும் பெற்றுவிடும். அந்தத் தகுதி, மெள்ளமெள்ள உரிமையாகவும் வடிவமெடுக்கக்கூடும். இன்று நமது கழக அமைப்பு, சிற்றூர்க் கிளை, வட்டக் கழகம், மாவட்டக் கழகம் என்று, நிர்வாக அமைப்புகளை அடிப்படையாகக்கொண்டு இருந்து வருகிறது. இதனைக் கூடத்திருத்தி, தொகுதிகளை நமது "வட்டமாக’க் கொள்ள லாமோ என்றுகூட எண்ணம் பிறக்கிறது. அடித்தளமாகச் சிற்றூர்க் கிளைகளும், ஒரு தொகுதியிலே எத்தனை சிற்றூர் பேரூர்க் கிளைகள் உள்ளனவோ அவை இணைக்கப்பட்டு "தொகுதி’ அல்லது வட்டம் அல்லது கோட்டம் என்ற முறையிலே, அமைக்கலாமா என்பதுபற்றி, எண்ணிப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதிலே எழக்கூடிய நல்லவைகளைப்பற்றி மட்டுமேயல்லாமல், கெடுதல்கள் எவை யேனும் உண்டாகக்கூடும் என்று தோன்றினால் எடுத்துரைக்கத் தயங்கவேண்டாம் - கடித வாயிலாக. ஏனெனில், நான் இதுபற்றி எந்த ஒரு முடிவான கருத்துக்கும் வந்துவிடவில்லை; யோசிக்கத் தொடங்கியுள்ளேன். காங்கிரசல்லாதார் வெற்றிபெற்ற இடங்களை வேண்டு மென்றே புறக்கணித்து, பாழ்நிலை ஏற்படுத்தி, அதன்மூலம் கெட்டபெயரைக் காங்கிரசல்லாதாருக்கு ஏற்படுத்தி வைத்து அதனைப் பயன்படுத்தி அடுத்த தேர்தலிலே காங்கிரசு கட்சிக்கு வெற்றிதேடிக்கொள்வது என்பது "தரக்குறைவான’ முறை; மக்களாட்சி முறையைப் பாழ்படச் செய்யும் சூது; மக்கள் இன்னமும் பாமரத் தன்மையிலேயே இருக்கிறார்கள், அவர்களை மிரட்டவும் மயக்கவும் முடியும் என்ற எண்ணம்கொண்டவர்களின் சூழ்ச்சித் திட்டம். இந்த "முறை’ வளருவது, ஆட்சியில் இடம் பிடித்துக் கொள்ளும் எந்த ஒரு கட்சியும், தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வழி செய்து, மக்களாட்சியின் மாண்பினை மாய்த்து விடும். இந்த ஆபத்தான முறையை எதிர்த்து செயலற்றதாக்கி விடவேண்டும். ஆளுங்கட்சி வெற்றிபெறாத தொகுதிகளிலே, எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்று கூறுவது அறியாமையும் அகந்தையும் மட்டுமல்ல, அரசியல் அறமுமாகாது; சட்டமும் அதனைஅனுமதிக்காது. எனவே, ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டுவிடும் கட்சியினர் வெளிப்படையாக அவ்விதம் பேச மாட்டார்கள். சட்டசபையில் பேசும்போதோ, கட்சிக்கு அப்பாற் பட்டவர்கள்போலவும் மக்களுடைய நலன்களுக்காகவே வந்துதித்துள்ளவர்கள்போலவும் பேசுவர். செயலோ முற்றிலும் அருவருக்கத்தக்கதாக இருக்கும். "ஏரி மராமத்து வேலை ஏழாண்டுகளாகச் செய்யப் படவில்லை; இந்த ஆண்டாவது அதனை மேற்கொள்ள வேண்டும்.’’ என்று சட்டசபையிலே கழகத் தோழரோ, காங்கிரசல்லாதவர் எவரேனுமோ கூறும்போது, அமைச்சர்கள் ஆத்திரப்பட்டு, "எங்களைத் தோற்கடித்த தொகுதி அது; அங்கு ஏரிமராமத்து வேலை செய்ய முடியாது’’ என்று பேசமாட்டார்கள். பேசக்கூடாது. பேசினால் மக்களாட்சியின் மாண்பு அறிந்தோர் அனைவரும் கண்டிப்பார்கள். எனவே, அமைச்சர்கள் அவ்விதம் பேசாமல், "கனம் அங்கத்தினர் தமது தொகுதியிடம் அக்கரை காட்டுவது பாராட்டத்தக்கதுதான், என்றாலும், ஏரி மராமத்து வேலை என்ற பிரச்சினையில் உள்ள சகல தகவல்களையும் படித்துத் தெரிந்துகொண்டு, இங்கு அதுபற்றிப் பேசியிருந்தால் பொருத்தமாகவும் இருந்திருக்கும், தக்க பலனும் ஏற்படும்.’’ என்று கூறுவார். தம்பி! புரிகிறதல்லவா? இந்த உறுப்பினர் விவரம் தெரியாமல் பேசுகிறார், படிக்காமல் எதையோ வாய்க்குவந்ததைப் பேசுகிறார் என்று அமைச்சர் கேசெய்கிற ôர். ஏன்? அந்த உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தவர்கள், செச்சே! விவரமறியாத, பொருத்தமாகப் பேசத்தெரியாத ஒருவரை அல்லவா, நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டோம். அதனால்தான், நமது தொகுதி சீர்படவில்லை என்று எண்ணிக்கொள்ளவேண்டுமாம்! எரிச்சல் கொள்ளவேண்டுமாம்!! ஏளனம் செய்யவேண்டும், எதிர்க்கவேண்டும், இனி “ஓட்டுப் போடக்கூடாது’ என்று தீர்மானிக்கவேண்டுமாம்! இதற்காகவே இப்படி,”இடுப்பொடிக்கும் பேச்சுப்’ பேசுவதை வாடிக்கையாக்கிக் கொள்கிறார்கள். அதிலும், ஆளுங்கட்சியிலே எண்ணிக்கை மிக அதிகமாக இருந்துவிட்டால் அமைச்சர் இதுபோன்ற "இடுப்பொடிக்கும்’ பேச்சுப் பேசியதும், ஆளுங்கட்சியினர் ஆரவாரம் செய்வர்; கேலிச் சிரிப்பொலி செய்வர்! செச்சே! நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய உறுப்பினருக்கு, சட்டசபையிலே மரியாதை கிடையாது; கேலிப்பொருளாக இருக்கிறார்! - என்று எண்ணி, அந்தத் தொகுதி மக்கள், தமது உறுப்பினர் குறித்துத் தாழ்வான கருத்தைக் கொள்ளவேண்டும் என்பதற்காகச் செய்யப்படும், "மட்டரகமான’ முயற்சி இது. இதனை, மக்களாட்சியின் மாண்பினைப் போற்றுபவர்களும், அறநெறியில் பற்றுக்கொண்டவர்களும் மேற்கொள்ள மாட்டார்கள்; எதைச் செய்தாவது அரசியல் ஆதிக்கத்தைப் பெறவேண்டும், எந்த முறைகளைக் கையாண்டாகிலும் பெற்றதை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற போக்கினர், இம்முறைகளைக் கையாள்வர். தொகுதி மக்களுக்கு உறுப்பினரிடம் பற்றுக் குறைவு ஏற்பட்டுவிடுவதுகூட இருக்கட்டும், என்ன சொன்னாலும் கவனிக்க மறுக்கிறார்கள். எதைக் கூறினாலும் ஏற்றுக் கொள்வதில்லை. எத்தனைமுறை கேட்டாலும் நன்மை கிடைப்பதில்லை. என்ற நிலையைக் காணும்போது, உறுப்பினருக்கே, மனம் உடைந்து போகிறது. சட்டசபையிலே நாம் இருப்பதனால் என்ன பலன்? என்ற சந்தேகம் அவருக்கே ஏற்பட்டுவிடுகிறது. எதையும் செய்யமுடியாமல், எதற்காகச் சட்டசபையிலே இருப்பது? என்று எண்ணுகிறார். சலிப்பு உணர்ச்சி மேலோங்கிவிடுகிறது. இதற்கு இடையிலே, அமைச்சர்கள் அந்தத் தொகுதிகளிலே "உலா’ வருவார்கள்; தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் களை உடனழைத்துக்கொண்டு அல்ல; அவரால் தோற்கடிக்கப் பட்ட காங்கிரஸ் கட்சிக்காரருடன்!! காங்கிரஸ் ஆட்சியின் அருமை பெருமைகளை அமைச்சர் பேசுவார். தொகுதியின் சீர்கேடான நிலைமைகளையும், இதனைப் போக்கமுடியாமல் சட்டசபையில் வெட்டியாக உட்கார்ந்து விட்டு வரும் உறுப்பினரைக் கண்டித்தும், காங்கிரஸ் "பிரமுகர்கள்’ பேசுவார்கள். அடுத்தமுறை எப்படியும் காங்கிரசுக்கு வெற்றி தேடிக் கொடுத்து, தொகுதியின் சீர்கேடுகளைப் போக்கிக்கொண்டு, சகலவிதமான நன்மைகளையும் பெற்றுக்கொள்ள இப்போதே உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று, ஊரின் "பெரிய புள்ளி’ பேசுவார். அமைச்சர் புன்னகை புரிவார். தம்பி! இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு என்ன எண்ணம் ஏற்படும்? காங்கிரசுக்கு “ஓட்டுப்’ போடாததால்தான் நமது தொகுதியிலே நன்மை கிடைக்கவில்லை; அதனாலேதான், காங்கிரசு அமைச்சர்கள் நமது தொகுதியைக் கவனிக்கவில்லை; நாம் தவறு செய்துவிட்டோம்; அடுத்தமுறை காங்கிரசுக்கு”ஓட்டுப்’ போட்டால்தான், தொகுதி நிலைமை சீர்படும் என்ற முடிவுதானே. இந்த முறையை மெத்தத் திறமையுடன், கழகம் வெற்றி பெற்ற தொகுதிகளில், காங்கிரஸ் தலைவர்கள் கையாண்டனர். ஏரி, மராமத்து வேலைபற்றி நம்ம எம். எல். ஏ. பேசினாராமே. . . . . ஓ! பேசினாரே! "கொல்’லென்று சிரித்தார்களே அவர் பேச்சைக் கேட்டு. . . . . ஏன்? ஏன்? ஏன் சிரித்தார்கள்? சிரிக்காமல் என்ன செய்வார்கள்? ஏதாவது விவரம் தெரிந்து பேசினால்தானே!! அப்படியா. . . ஆசாமி மோசம்தானா. . . .? ஆருடக்காரனைப் போய்க்கேள்! அன்று காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டிருந்தால், இப்படியா நிலைமை இருந்திருக்கும்! ஏரி மராமத்து வேலைக்கு ஏழு ஆயிரம் இருந்தால் போதும். வருஷம் இரண்டு ஆகிறது, இந்த ஆள் சட்டசபைக்குப் போய்! இந்த ஒரு காரியத்தைச் செய்ய முடியவில்லை. எப்படி முடியும்! சாமர்த்தியம் வேண்டாமா? மந்திரிகளை மனம்போன போக்கிலே திட்டிவிட்டு, ஏரி மராமத்து வேலையைக் கவனிக்கச் சொன்னால் அவருக்குத் தான் எப்படி மனம் வரும்? ஏரியாவது குளமாவது என்று இருந்துவிட்டார்! நாம்தானே கஷ்டப்படுகிறோம். இப்படி ஊரிலே "பேச்சு’ கிளம்பும்; கிளப்பி விடப்படும்!! உறுப்பினர்மீது அருவருப்பு வளராமல் இருக்குமா? எந்தக் கட்சிக்கு மக்கள் வாக்களித்திருந்தால், ஆளுங்கட்சி எதுவரினும், கட்சிப் பாகுபாடு பார்க்காமல் எல்லாத் தொகுதி களுக்கும் நல்லவைகளைச் செய்தாகவேண்டும்; அதுதான் சட்டம், அதுதான் அறநெறி என்ற அடிப்படையை எல்லா மக்களுமா அறிந்திருக்கிறார்கள்? எடுத்துக் கூறும்போது, எல்லோருக்குமா புரிந்துவிடுகிறது? புரிந்துகொள்பவர்கள்கூட, ஆமாம்! நமது உறுப்பினர் என்ன செய்வார்? அவர், அவருடைய கடமையைச் செம்மையாகத்தான் செய்திருக்கிறார்; காங்கிரஸ் மந்திரிகள்தான் வேண்டுமென்றே, வஞ்சனை செய்கிறார்கள்; இப்படிப்பட்ட வஞ்சகம் செய்யும் கட்சியை இனி ஒருமுறை ஆட்சியிலே அமரவிடக்கூடாது? அமர்ந்தால், ஜனநாயகத்துக்கே ஆபத்து ஏற்படும் என்ற தெளிவான முடிவுக்கு எங்கே வரமுடிகிறது! நமக்கு எதற்காகத் தத்துவ விசாரம். நமக்கு நல்லது வேண்டும். காங்கிரசுக்கு “ஓட்டு’ப் போட்டால்தான் நல்லது கிடைக்கும் என்று அமைச்சர்களே கூறிவிடுகிறார்கள். அவர்களிடம் போய், இது சரியா, முறையா, அறமா, நெறியா என்றெல்லாம் விவாதம் நடத்தவா முடியும்! நமது காரியத்தைச் சாதித்துக்கொள்ள வழிதேடவேண்டுமே தவிர, அரசியல் தத்துவம்பற்றிப் பேசிக்கொண்டிருப்பது, வீண் வேலை. ஆகவே காங்கிரசுக்கே”ஓட்டு’களைப் போட்டு விடுவோம் என்றுதான், வாழ்க்கைத் தொல்லையிலே ஈடுபட்ட பெரும் பாலோர் எண்ணுவார்கள். இந்த மனப்பான்மையிலே நம்பிக்கை வைத்துத்தான், காங்கிரசுக் கட்சியினர், சென்ற முறை, கழகம் வெற்றிபெற்றத் தொகுதிகளிலே பேசும்போது, மிக உறுதியாகக் கூறிவந்தார்கள். அடுத்தமுறை இங்கு கழகம் வெற்றி பெறாது. என்று திட்டமிட்டு வேலையும் செய்தார்கள்; மிகப் பெரும் அளவு வெற்றியும் பெற்றார்கள். இப்போது கழகம் வெற்றிபெற்றுள்ள 50-இடங்களிலும், மறுபடியும் கழகம் வெற்றிபெற விடமாட்டோம் என்று, இப்போதே பேசுகிறார்கள். அக்ரமம், என்கிறாய்! அரசியல் சூழ்ச்சி என்று கண்டிக்கிறாய்! அதனால் என்ன, தம்பி! அதற்காக, ஆதிக்க வெறி பிடித்தவர்கள், அச்சமோ கூச்சமோ அடையப்போவதில்லை! அப்படியானால், அண்ணா! இந்த ஆபத்திலிருந்து விடுபட, இந்த அநீதியை ஒழித்துக்கட்ட, வழியே கிடையாதா? இப்படியே ஒரு அக்ரமத்தை வளரவிடலாமா? என்றெல்லாம் கேட்கிறாய். தம்பி! வழி இல்லாமற் போகவில்லை. சென்ற முறையே அதனைக் குறிப்பாக நமது தோழர்களிடம் கூறி இருக்கிறேன்; ஆனால் திட்டமிட்டுச் செயலில் ஈடுபடவில்லை சென்றமுறை. இம்முறையும் அதுபோல இருந்துவிடப்போவதில்லை. தொகுதியில் நெருங்கிய தொடர்பினை நமது உறுப்பினர்கள் வைத்துக்கொள்ளவேண்டும். அவருக்குத் துணையாகவும், வழிகாட்டவும், இந்தத் தொடர்பினை ஒரு குழு கவனித்துக்கொள்ளவேண்டும். தொகுதிக்குத் தேவையானவைகளைக் குறித்துச் சட்டமன்றத்திலே எடுத்துரைக்கவேண்டும். எடுத்துரைத்ததுபற்றித் தொகுதியில் அவ்வப்பொழுது உறுப்பினர்களும், குழுவும் விளக்கியபடி இருக்கவேண்டும். முறைப்படி எடுத்துக் கூறியும், காங்கிரசு அரசு தொகுதியின் குறைபாடுகளை நீக்கத் தவறினால், அதனைத் தொகுதி மக்களிடம் எடுத்துக் காட்டவேண்டும். அதற்குப் பிறகும் காங்கிரஸ் அரசு வேண்டுமென்றே தொகுதியைப் புறக்கணித்து, கேடு செய்திட முனைகிறது என்றால், தொகுதியின் உறுப்பினரும், குழுவும், தொகுதியின் குறைபாடுகளை நீக்க, நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்த நேரடி நடவடிக்கை என்பது, அமைதி கெடாதவிதமாகவும், சட்டத்துக்குக் கேடு ஏற்படாத முறையிலும் அமைதல்வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவல கங்கள், அலுவலாளர்கள் முன்பு, மறியல் செய்தேனும், தொகுதியின் குறைபாடுகள் நீங்கிட வழிகாணவேண்டும். அந்தக் காரியத்துக்குப் பொறுப்பாளர், அமைச்சர் இல்லம் அல்லது அலுவலகம் எனும் இடங்களும், "மறியல்’ செய்வதற் கான இடங்களாகிவிடவேண்டும். தொகுதியின் நன்மைக்காக வாதாட மட்டுமல்ல, கிளர்ச்சியில் ஈடுபட, அதற்காகத் தடியடிபட, சிறை புக, கஷ்ட நஷ்டம் ஏற்க, உறுப்பினர்கள் துணிகிறார்கள் என்ற நிலைமை, இனி ஏற்பட்டாகவேண்டும். இந்த முறையின் மூலமாகத்தான், தரக்குறைவான வழிகளால் அரசியல் ஆதிக்கத்தை இழந்துவிடாமல் இருக்கும் போக்கை முறியடித்து, மக்களாட்சி முறையின் மாண்பினைப் பாதுகாத்திட இயலும். நமக்காக, நமது உறுப்பினர் சட்டசபையிலே வாதாடுகிறார் என்று மட்டும், இல்லங்களில் பேச்சு எழுவது போதாது; நமக்காக நமது உறுப்பினர், ஆட்சியாளர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, சிறையில் தள்ளப்பட்டு, வாடிக்கொண்டிருக்கிறார் என்று, உள்ளம் நெகிழ இல்லந்தோறும் பேசிடும் நிலை எழவேண்டும். கழகத்தவர்கள், இனி இதற்குத் தம்மைத் தயாராக்கிக்கொள்ளவேண்டும். சென்றமுறை, நான் நேர்மையான அரசியல் முறையில் ஆட்சிக் கட்சியினருக்கு நம்பிக்கை இருக்கும் என்று எண்ணி, "தண்டலம் முறை’யைக் கடைப்பிடித்துப் பார்த்தேன்; பலன் ஏற்படவில்லை. இம்முறை, நாம் நமது முறையை மாற்றிக்கொண்டாக வேண்டும். தொகுதிகளின் நலன்களுக்காக, தேவைப்படும் போது, கிளர்ச்சிகள் நடத்திட நாம் தயாராகிவிடவேண்டும். நாடாறு மாதம் காடு ஆறுமாதம் என்பார்களே அதுபோல, பாதிக் காலம் சிறைச்சாலை, பாதிக் காலம் சட்டசபை என்று இருந்தாலும் பரவாயில்லை என்று துணிந்துவிடவேண்டும். சட்டசபை முறை, எதற்கு எடுத்தாலும் கிளர்ச்சி செய்துதான் தீரவேண்டும் என்ற நிலை இல்லாதிருக்க, வாதாடி, விளக்கம்கூறி, மக்களுக்கு நலன் தேட, ஏற்பட்டது. ஆனால், ஆளுங்கட்சியினர், இதனை மதிக்க மறுத்தால், இதன்படி நடக்க மறுத்தால், மிச்சம் இருக்கிற ஒரே வழி, கிளர்ச்சிதான்!! சட்டசபைக்கு கழகம் சென்றுவிடுவதாலேயே, மக்களின் நலன், கிடைத்தால் சட்டசபை மூலம் கிடைக்கட்டும், இல்லையென்றால் நாம் ஏதும் செய்வதற்கு இல்லை என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து காலந்தள்ள அல்ல! சட்டசபை முறையினால், மக்களுக்குத் தேவையான நலன்களைப் பெறமுடியவில்லை என்றால், கிளர்ச்சியிலும் ஈடுபடவேண்டும் என்ற எழுச்சி உள்ளத்தைப் பக்குவமாக வைத்துக்கொண்டிருக்கவேண்டியதுதான். கிளர்ச்சிகள் தேவை என்ற நிலை ஏற்படும்போது உறுதிவேண்டும், ஊர்ப்பகைகூடாது! எதற்கும் கலங்காத நெஞ்சம்வேண்டும், அதேபோது ஆத்திரத்துக்குத் துளியும் இடமளித்துவிடாத போக்கு, சிதையாமல் இருக்கவேண்டும். குதிரைகள் வேகமாக ஓடவேண்டும், ஆனால் கடிவாளம் இல்லாமல் அல்ல!! ஆளுங் கட்சியினர் பொதுத்தேர்தலுக்குச் சில திங்களுக்கு முன்னதாக, பதவிகளைவிட்டு விலகிவிட்டிருந்தால், மக்களை அச்சமூட்டியும், ஆசை காட்டியும், ஓட்டுகளைப் பறித்திட வழி இந்த அளவுக்கு ஏற்பட்டிருக்காது. "அதிகாரிகளைப் பயன்படுத்தினோம் என்று தகவல் இருந்தால் காட்டுங்கள்; நடவடிக்கை எடுக்கலாம்’ என்று வாதாடு கிறார்கள், காங்கிரசுத் தலைவர்கள். தகவல்கள், ஆதாரங்கள், சான்றுகள் கிடைக்கமுடியாத படியான சூழ்நிலையேகூட, இவர்கள் பதவியில் இருப்பதால் தான் ஏற்படுகிறது. தேர்தல் காலத்தின் நடிவடிக்கைகளைக் கண்காணிக்கவும், தடுத்திடவும், திருத்திடவும், பரிகாரம் தேடி அளித்திடவும், தனியான ஒரு நிர்வாக அமைப்பு எங்கே இருக்கிறது? எவரிடம் முறையிடுவது? எங்கு நீதி கேட்பது, பெறுவது? அதிகாரத்தைப் பயன்படுத்தும் முறை, அமைச்சரிலிருந்து தொடங்கும்போது, பரிகாரம் தேட, வேறு இடம்? மருந்திலேயே விஷம் கலந்துவிட்ட பிறகு, விஷம் போக்க மருந்துக்கு எங்கே போவது? பெரிய புள்ளிகளை, ஜாதித் தலைவர்களை, பஸ் முதலாளிகளை, வணிகக் கோமான்களை அழைத்துவைத்து அமைச்சர் நிலையினர் பேசும்போது, அடியவர்கள் போன்றார் செய்திடும் சிண்டு முடிந்துவிடும் வேலைப்பற்றி எவரிடம் எடுத்துக்கூறிப் பரிகாரம் காணமுடியும்? தம்பி! காஞ்சிபுரம் தொகுதியிலே தேர்தல் நேரத்திலே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று கூறுகிறேன். நமது நீதிநெறி தவறாத மந்திரிகள் இதற்கு ஆதாரம் காட்டமுடியுமா என்று கேட்பார்கள், நேர்மையானவர்கள், காங்கிரசல்லாதார், இந்த மாநிலத்தவரல்லாதார், பொதுவானவர்கள்கொண்ட ஒரு தனிக்குழு, இரகசியமாக விசாரணை நடத்தினால், இதற்கும் இதுபோன்ற மற்ற பல நிகழ்ச்சிகளுக்கும் மெய்ப்பிக்கும் சான்றுகள் நிச்சயம் கிடைக்கும். நிகழ்ச்சியைக் கூறுகிறேன், கேள், தம்பி! ஒரு சிற்றூர். அதை அடுத்து, சேரி. இடையிலே புறம்போக்கு நிலம்; ஊருக்குப் பொதுவானது. சேரியில் உள்ள மக்களுக்கு இடநெருக்கடி. புதிதாகக் குடிசைகள் அமைத்துக்கொள்ள ஏற்ற இடம் அந்தப் புறம்போக்கு. அதற்காகச் சேரி வாழ்பவர் பலமுறை வேண்டிக் கேட்டுக்கொண்டிருந்தனர். "ஆகட்டும் பார்க்கலாம்’ என்ற பதிலன்றி, வேறு இல்லை. தேர்தல் நெருங்கிற்று; பதினைந்து இருபது நாட்கள் உள்ளன. அதிகாரி கிளம்புகிறார். அதுவரையில் அக்கரை யற்று இருந்தவர், கையில் ஏடெடுத்து, கண்களில் கனிவு காட்டி, சேரி செல்கிறார்; பழங்குடி மக்களிடம் பரிவாகப் பேசுகிறார். பரிதாபமான நிலைமை! இருக்க இடம்கூடக் காணோமே! ஏன் இந்தக் குறையினை உங்கள் எம். எல். ஏ. போக்கவில்லையா என்று கேட்கிறார். அவரிடம் சொன்னோம், உங்களிடம் சொன்னதாகச் சொன்னார் என்று, அவர்கள் சொல்கிறார்கள். மறுக்கவும் இல்லை! ஒப்புக்கொள்ளவும் இல்லை அதிகாரி! போனதுபோகட்டும். இப்போது உங்களுக்கு நல்ல காலம் வருகிறது. கஷ்டம் போய்விடும். அதோ இருக்கிறதே, புறம்போக்கு நிலம்; அவ்வளவும் உங்களுக்குத்தான். மனு எழுதிக் கொடுங்கள் என்கிறார், அதிகாரி. மனு பெறுகிறார்; கையொப்பம் இடுகிறார்கள்; கைகூப்பி நிற்கிறார்கள். இந்த முறையாவது, நன்மை கிடைக்குமா? என்று கேட்கிறார்கள். கிடைக்கும். . . என்று இழுத்தாற்போல் பேசுகிறார் அதிகாரி. பயப்படுகிறார்கள் சேரி வாழ்வோர். புன்னகை காட்டுகிறார் அதிகாரி; சுற்று முற்றும் பார்க்கிறார்; பார்த்துவிட்டு புறம்போக்கு நிலத்தில் மனைக்கட்டு, வீடுகட்டிக்கொள்ள கடன் தொகை எல்லாம் கிடைக்கும், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால்; தேர்தல் வருகிறது, காங்கிரசுக்கு ஓட்டுப்போடுங்கள், மனைக்கட்டு கிடைக்கும் என்கிறார். காங்கிரஸ்காரர் அப்படிச் சொல்லியிருந்திருந்தால், "ஓட்டு’ வாங்கப் பேசுகிறார் என்று எண்ணிக்கொள்வார்கள்; சிலர் கேட்கவும் செய்வார்கள். ஆனால் பேசுபவரோ, அதிகாரி! என்ன சொல்ல முடியும்? வாக்குக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள், அதிகாரிக்கு! அதிகாரி, சேரி வாழ்வோரிடம், காங்கிரசுக்கு ஓட்டுப் போடச் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு, புறம்போக்கு நிலத்தை மனைக்கட்டுகளாக்கித் தருகிற வேலையில் ஈடுபட்டார்போலும் என்றுதானே நினைத்துக்கொள்கிறாய், தம்பி! அவர் பெரிய ஆள்! சேரி ஓட்டுகளைக் காங்கிரசுக்குச் சேர்த்துவிட்டதுபோதும் என்று திருப்தி அடைந்துவிட வில்லை. ஊருக்குப் போனார். ஊர்மக்கள் அதிகாரியை வரவேற்றார்கள். ஊரிலே முக்கியமானவர்களை அருகே அழைத்தார். என்ன ஆட்களய்யா நீங்கள்? விவரம் தெரியாதவர் களாக இருக்கிறீர்களே! - என்றார். ஊர்ப் பெரியவர்களுக்குத் திகைப்பு - என்ன சொல்லு கிறார் என்று விளங்காததால். ஊர்ப் பொதுச் சொத்து புறம்போக்கு. இது தங்களுக்கு வேண்டும் என்று சேரிக்காரர்கள் மனுக் கொடுத்து விட்டார்கள். இதோ மனு! மனைக்கட்டுகள் ஆகிவிடும்; உங்கள் புறம்போக்கு, என்றார். ஐயோ! அது எங்களுக்கு வேண்டுமே; மேய்ச்சல் இடம் அதுதானே, என்று கூறிக் கைபிசைந்துகொண்டார்கள் ஊர்ப் பெரியவர்கள். வாயை மூடிக்கொண்டு கிடந்தால், எப்படி ஐயா காரியம் நடக்கும். புறம்போக்கு எங்களுக்கு தேவை, சேரிக்காரருக்குத் தரக்கூடாது என்று, மறுப்பு மனு தயாரித்துக் கொடுங்கள் என்றார், அதிகாரி. மனு தயாரித்தார்கள், பெற்றுக்கொண்டார் அதிகாரி. புறம்போக்கு ஊருக்கு இருக்கும்படி செய்யவேண்டும் என்று கெஞ்சுகிறார்கள் ஊரார். என்னால் என்னய்யா செய்யமுடியும் - என்று கூறி விட்டு, அதிகாரி மெல்லிய குரலிற் பேசுகிறார்; காங்கிரசுக் கட்சி ஆட்சிக்கு வந்தால்தான், உங்கள் காரியம் நடக்கும். அதனால் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டாகவேண்டும். காங்கிரசுக்கு ஓட்டுப் போடாவிட்டால், புறம்போக்கு சேரிக்குத்தான். சொல்லிவிட்டேன். பிறகு உங்கள் இஷ்டம் என்றார் அதிகாரி. தம்பி! என்ன நடைபெற்றிருக்க முடியும் என்பதை எண்ணிப்பார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! புறம்போக்கு தருகிறேன் என்று சொல்லிச் சேரி மக்களின் ஓட்டு! புறம்போக்கு ஊராருக்கே சொந்தம் என்று செய்து தருகிறேன் என்று கூறி ஊர்மக்கள் ஓட்டு; மொத்தத்தில் 600-ஓட்டுகள் காங்கிரசுக்கு - அதிகாரியின் போக்கினால்!! இதற்கு ஆதாரம் காட்டு என்றால், அதிகாரி ஒப்புக் கொள்வாரா? ஏதுமறியாதவர்போல வருவார், இரண்டு மனுக்களையும் காட்டுவார்; தந்தார்கள், பெற்றுக்கொண்டேன்; ஓட்டு இன்னாருக்குத்தான் போடவேண்டும் என்று நான் சொல்லவே இல்லை என்பார். ஊரார் மட்டும் என்ன செய்யமுடியும்? அதிகாரிக்குக் கோபம் வருமே! ஆகவே அவர்கள் என்போன்றோரிடம் சொல்லு வார்களே தவிர, பிறகு மென்று விழுங்கிவிடுவார்கள். நமக்கேன் அதிகாரிகளின் பொல்லாப்பு என்று. இப்படிப் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன; பல தொகுதிகளில். ஆட்சியில் இருந்துகொண்டு, தேர்தலில் ஈடுபடும் வரையில், இதுபோன்ற அலங்கோலங்கள் இருக்கத்தான் செய்யும். அதனால்தான் தம்பி! பலமுறை நான் கூறினேன், பதவியை விட்டு விலகி, வெறும் காங்கிரசுக்காரராக, தேர்தல் வேலையில் ஈடுபடுங்கள்; மக்கள் உமக்கு அப்போது எந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள் என்பது புரிந்துவிடும் என்று சொன்னேன். தண்ணீரைவிட்டு வெளியே வருகிறதா முதலை! பதவியைவிட்டு விலக மனம் வந்ததா காங்கிரசாருக்கு! பதவியில் இருந்து கொண்டே தேர்தலுக்கு நின்றதால்தான் பெரிய புள்ளிகளின் படைவரிசை துணைபுரிந்தது; அள்ளி அள்ளிப் பணம்கொடுக்க முதலாளிகள் வந்தார்கள்; அதிகாரிகள் வரம்புமீறிச் சென்று காங்கிரசுக்கு வேலை செய்தார்கள். தம்பி! இவ்வளவு இடுக்கண்களையும் சமாளித்துப் பெற்றிருக்கின்றோம், வெற்றிகளை, இந்தத் தேர்தலில். சம்மட்டி இல்லை, பாறையை உடைக்க; கரமே சம்மட்டி என்று, ஓங்கிக் குத்திக் குத்தி, இரத்தம் கசியக் கசியக் குத்திப் பாறையை உடைத்திடுவதுபோல, காங்கிரசு எதேச்சாதிகாரத்தை, எவ்வளவோ வசதிக் குறைவுக்கிடையில், கழக அணிவகுப்பு எதிர்த்துநின்று வெற்றிபெற்றுக் கொடுத்தது. மரத்தின்மீது பாதுகாப்புக்காகப் பரண் அமைத்துக் கொண்டு, சுழல் துப்பாக்கியால் புலியைச் சுட்டுக்கொல்லும் வேட்டை முறையிலே காணப்படும் வீரத்தினைப், பட்டி நோக்கிப் பாய்ந்துவரும் புலியின் வாலைப்பற்றித் தூக்கிக் கரகரவெனச் சுற்றிப் பாறையின்மீது போட்டிருக்கும் வீரத்துடன் ஒப்பிட்டுப் பார்! குண்டடிபட்ட புலி, செத்த பிறகுகூட, குற்றுயிராக இருக்குமோ என்று அஞ்சி, மரத்தைவிட்டுக் கீழே இறங்கப் பயப்படும் "சிகாரி’யுடன், உடலெங்கும் இரத்தக் காயத்துடன் நின்றபடி, பலமான அடிதான், ஆனால் புலி சாகவில்லை; ஓடிப்போய்ப் புதருக்குள் புகுந்துவிட்டது என்று கூறிடும் மாடோட்டும் இளைஞனை ஒப்பிட்டுப் பார்! அஃதேபோல, பலபல இலட்சங்களைக் கொட்டி, பல்வேறு அக்ரம வழிகளைக் கையாண்டு 57 இலட்சம் வாக்கு களைப்பெற்ற காங்கிரசுடன், பணப் பஞ்சத்தால் அடிபட்டு, அதிகார பலத்தால் அடியுண்டு, நெருக்கடிகளிலே சிக்கிய நிலையிலும் 34 இலட்சம் வாக்குகளைப்பெற்ற, நமது கழகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்தான், அறுவடையின் அருமையும் அணிவகுப்பின் பெருமையும் விளங்கும். வாழ்த்துகிறேன் தம்பி! அரும்பெரும் வெற்றியினை இத்தனை வசதிக் குறைவுக்கு இடையிலே பெற்றளித்த அணிவகுப்பினை. தம்பி! நான் அந்த அணிவகுப்பின் பெருமையினை, அறுவடையைக் கண்டு மட்டுமல்ல, மற்றவர்கள் இந்த அறுவடைபற்றி என்னென்ன கூறுகிறார்கள் என்பதைக் கேட்டு, மேலும் விளக்கமாக உணர முடிகிறது. புரியவில்லையே என்பவர்களும், ஆச்சரியம், ஆனால் உண்மை என்பவர்களும், பிரச்சார பலத்தால்பெற்ற வெற்றி என்பவர்களும், எவரெவரோ உதவி செய்ததால்பெற்ற வெற்றி என்று கூறுவோரும், ஐயயோ! இது ஆபத்து என்று அலறுபவர்களும், அடுத்தமுறை என்ன ஆகுமோ என்று அஞ்சுபவர்களும், திக்குக்குத் திக்கு, நாள்தோறும், நாம்பெற்ற வெற்றிபற்றிப் பேசுகிறார்கள். பண்டித நேருவோ, பட்டாளத்தையே காட்டுகிறார்!! அடுத்த கிழமை, அது குறித்து. அன்புள்ள அண்ணாதுரை 25-3-1962 அறுவடையும் - அணிவகுப்பும் (4) வீடு கட்டிய கதை - தி. மு. க. பற்றி அமைச்சர் கருத்துரைகள் - முன்னும் பின்னும். தம்பி! வானவெளியிலே! "வாயுவேக மனோவேகத்திலே’ பயணம் செய்யும் ஏற்பாடு உருவாகிக்கொண்டு வருகிறது என்பதுபற்றி, மெத்த ஆர்வத்தோடு, விளக்கமாக, விவரம் அறிந்த ஒருவர் எடுத்துக் கூறுகிறார் என்று வைத்துக்கொள் - இதனைக் கேட்டு, இதனால் விளையக் கூடிய நன்மைகள் யாவை என்பன பற்றி விவரம் கேட்டறியவும், இது எப்படி நடைபெற முடிகிறது என்று விளக்கம் கேட்டுத் தெளிவுபெறவும் சிலருக்குத் தோன்றும். சிலர் வியப்பிலே மூழ்கி விவரம் விளக்கம் கேட்காமலேயே இருந்துவிடுவர்;சிலர் இதனைப் புரிந்துகொள்ளாமலேயே, என்னமோ சொன்னார்கள் கேட்டோம்; எத்தனையோ பேர் எதை எதையோ சொன்னார்கள் கேட்டோம்; அதுபோல இது ஒன்று என்று இருந்துவிடுவர்; மேற்கொண்டு விவரம் விளக்கம் கேட்டறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம்கூடத் தோன்றாது; வேறு சிலர், வியப்புக்குரியது இதுமட்டும் அல்ல; இதனைவிட வியப்புமிக்கது உண்டு என்று கூறித் தமக்குத் தெரிந்த தகவல்களைக் கூறுவர்; இன்னும் சிலர் இது வியப்புக் குரியதே அல்ல, மிக அற்பமானது என்று கூறிவிடுவர். எது கூறினும், எது நேரிடினும், பலர் பலவிதமான போக்கிலே, தமது கருத்தினைக் கூறுவர்; அவரவர்களின் நினைப்பு, நிலை, தரம், தன்மை ஆகியவைகளைப் பொறுத்து, போக்கு அமையும். ஒரு சிலர், அலாதியான போக்குடன் இருப்பர். எதனைக் குறித்தும் அக்கரையற்றும், எவரைக் குறித்தும் அலட்சியமாகவும் தமது போக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டிக் கொள்வதிலே இச்சையும், துடிப்பும் அவர்களுக்கு மிகுதியாக இருக்கும். வானவெளிப் பயணம்பற்றிப் பலர் பல்வேறுவிதமான கருத்துக் கூறுவர்; இவர்களோ, அலட்சியப் போக்குடன், "வானவெளியில் சுற்றிவிட்டு வரத்தானே ஏற்பாடு செய்கிறார்கள்; அங்கேயே இருந்துவிடுவதற்கு அல்லவே!’’ என்று கேட்டு, வானவெளி சுற்றிவர ஏற்பாடு செய்தது மிகப்பெரிய அதிசயம் அல்ல என்று, விவரம் தெரியாதவர்கள் எண்ணிச் சிரித்திடச் செய்வார்கள். வானவெளிப் பயணம்பற்றித் தகவல்களைத் திரட்டி வந்து ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தவருக்கு, எரிச்சல் ஏற்படும். அதைக் கண்டு, அலட்சியப் போக்கிலே பேசியவர், மகிழ்ச்சி கொள்வார். இப்படிப்பட்டவர்களை, தம்பி! பார்த்திருக்கலாம்; எங்கும் இருக்கிறார்கள்; எதற்கும் இந்தப் போக்கிலே பேசுவார்கள். சந்திரமண்டலம் செல்கிறார்கள் என்று கூறிப் பாரேன், சூரியமண்டலம் போகவில்லையே! என்று கேட்டு, கூறியவரின் ஆர்வத்தைக் கேலிக்குரியதாக்குவார்கள். வியப்புக்குரியவைகள்பற்றியே இவர்கள் போக்கு இவ்விதம் இருக்குமென்றால், சாதாரண நிகழ்ச்சிகள் குறித்து இவர்கள் கொள்ளும் நினைப்புப்பற்றியும், வெளியிடும் கருத்துப்பற்றியும் அதிகம் விளக்கவேண்டுமா! எதைக்கண்டும், கொண்டும் எவரும் மகிழ்ச்சி அடையவோ பெருமைப்படவோ விடமாட்டார்கள். பிறர் மகிழ்ச்சியும் பெருமையும் அடையமுடியாமல் போவதிலேதான், இவர் களுக்கு மகிழ்ச்சி, பெருமை! நல்ல பாலிலே விழுகிறதே ஈ, இரண்டு சொட்டுகளாவது குடித்து மகிழ்கிறதா இல்லை! செத்து மிதக்கிறது!! பால் கெட்டுச் சாக்கடையில் ஊற்றப்படுகிறது. இதனால் ஈக்கு என்ன இலாபம்! பால் சாப்பிட எண்ணியவன் சாப்பிடவில்லை அல்லவா? அதுதான்! இந்த மனப்போக்கிலுள்ளவர்கள், தமக்கென்று ஒருவித மான பலனும் கிடைக்காவிட்டாலும், மற்றவர்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறபோது, பாலில் விழும் ஈபோலாகி, அந்த மகிழ்ச்சியை மாய்க்கவும், பெருமையைக் குலைக்கவும் முற்படுவர். திருமணம், புதுமனை புகுவிழாப்போன்ற நிகழ்ச்சிகளிலே, மகிழ்ச்சி பெறுவோர் பலர் இருப்பர்; அந்த இடங்களிலே, இப்படிப்பட்டவர்கள் சிலர் இருந்துகொண்டு, மற்றவர்களுக்கு எரிச்சலூட்டித் தமக்கு மகிழ்ச்சி தேடிக்கொள்வர். குட்டநோய் கொண்ட ஒருவர், அவர்பால் அனுதாபம் காட்டுபவரிடமே இதுபோல நடந்துகொண்டது, எனக்குத் தெரியும். உங்களைப்போன்ற நல்லவர்களுக்கா இதுபோன்ற கொடிய நோய் வருவது, என்னமோ போங்கள், பார்க்கும்போதே வயிறு பகீர் என்கிறது; துவக்கத்திலேயே கவனித்திருக்க வேண்டும்; தக்க மருந்து எடுத்துக்கொண்டிருக்கவேண்டும்; அப்போது கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள்; இப்போது இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது - என்றெல்லாம் நண்பர், பரிவுடன் பேசி, நோய்கொண்டவருக்கு ஆறுதலளிக்க முற்பட்டார். உடல் மட்டுமல்ல, உள்ளமே நோய்கொண்டவராகிப் போயிருந்த அந்த ஆசாமி, இவ்வளவு பரிவுடன் ஆறுதலளித்த வருக்கு நன்றி கூறவில்லை. மாறாக, ஆறுதல் கூறியவரை உற்றுப் பார்த்துக்கொண்டு, “என் விஷயம் இருக்கட்டும். உனக்கு, நெற்றியிலே என்னமோபோல இருக்கிறதப்பா. சும்மா,”தேமல், படை’ என்று இருந்துவிடாதே.’’ என்று பேசி, ஆறுதல் பேசியவர் அச்சப்படும்படி செய்து விட்டார். இந்தப் போக்குடையோர், ஒருவன் புதுவீடு கட்டி, அதிலே குடிபோவதுபற்றி, என்னென்ன பேசுவார்கள் என்பதை எண்ணிப்பார், தம்பி! வேடிக்கை வேடிக்கையாக இருக்கும்; இப்படிப்பட்டவர்களின் மனப்போக்கு எத்தகையது என்பது விளங்கும். வீடு கட்டிவிட்டானாம் வீடு. ஊரிலே உலகிலே யாருமே கட்டாத விதமான வீடு! பெரிய அரண்மனை கட்டிவிட்டதாக நினைப்பு! தஞ்சாவூர் அரண்மனையே கலனாகிப் போய்விட்டதாம். இவன் கட்டிவிட்ட வீடு காலமெல்லாம் நிலைத்தா இருக்கப்போகிறது? அட! என்ன இதைப்போய் இவ்வளவு பிரதாபப்படுத்திப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், வேறு வேலையில்லாமல். என்னமோ, ஒரு வீடு கட்டிவிட்டான், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிப் பணம் சேர்த்து. . . . . அவ்வளவுதான் உனக்குத் தெரியுமா! அட, பைத்தியக் காரா! சேட்டிடம் வாங்கியிருப்பது, ஐந்து ஆயிரம்! தெரியுமா! பாங்கியிலேகூடப் பத்தோ எட்டோ. . . . ’ கடன் வாங்கித்தானா இந்தப் பகட்டு. . . . . வீட்டிலே ஒரு நகை கிடையாது, எல்லாம் விற்றுத் தீர்த்து விட்டான். . . . . . கிடக்கட்டும், கையிலே உள்ள பணம், நகைவிற்ற பணம், இதனைக்கொண்டு வீடுகட்டிவிட்டால் பரவாயில்லை, கடன் வேறு பட்டிருக்கிறானே. . . . . . அதை எப்படித் தீர்க்கப் போகிறான்? அது கிடக்கட்டும். . . . கடன்பட்டு ஏன் இவ்வளவு பெரிய வீடு கட்டவேண்டும். . . . . ஊர் மெச்சிக்கொள்ளவா? பெரிய புள்ளி என்று எண்ணிக்கொள்வார்கள் - கடன் கொடுத்தவனும் திருப்பித்தரச் சொல்லித் தொல்லை தர மாட்டான் - புதிதாகக் கடன் கேட்டாலும், வீட்டைப் பார்த்து மலைத்துப்போய், தட்டாமல் தயங்காமல் கொடுப்பான் என்ற நப்பாசை காரணமாகத்தான், இவ்வளவு பெரிய வீடு கட்டிக் கொண்டான். . . . . எல்லோருமே பெரிய வீடு, பெரிய வீடு என்று பேசிக் கொண்டு இருக்கிறீர்களே, என்ன பெரிய வீடு இது. . . .? அட, அவன் நிலைக்கு அது பெரிய வீடுதானே. . . . முன்பு அவன் புறாக்கூண்டுபோன்ற வீட்டில்தானே இருந்துவந்தான். . . . இது பெரிது அல்லவா! பார்வைக்குத்தான் பெரிது. . . . . அதிலே போட்டுக் கட்டப் பட்டிருக்கும் சாமான்கள் மட்டம், தெரியுமா? தேக்கு மரமா, கதவு, பலகணி எல்லாம்? மாம்பலகை. . . கள்ளி இப்படிப் பட்டவை. . . ஆமாமாம்! சுவரிலே வெடிப்பு இருக்கிறது. . . . . சுண்ணாம்பு அரைத்த இலட்சணம் அப்படி. . . . . வேகாத செங்கல்லை வைத்துச் சுவரை எழுப்பிவிட்டால், வெடிப்பு இருக்காதா. . . . . ஆனால், ஊரார் பார்க்கிறபோது, கண்ணுக்கப் பெரிய வீடு தெரிகிறதல்லவா. . . . . உடனே ஆசாமி வளமாக இருக்கிறான் என்று எண்ணிக்கொள்கிறார்கள். . . . உள்ளே புகுந்து பார்ப்பவர்களுக்குத்தானே உண்மை தெரியும். . . . கொஞ்ச நாள் போகட்டுமே. . . . . தானாக எல்லா விஷயமும் வெளியே வந்துவிடும், பாரேன். கடன் கொடுத்தவர்கள் வரிசையாக வந்து நிற்பார்கள். . . . வீடு, மூலைக்கு மூலை ஒழுகும், வெடிக்கும். . . . . கலனாகிப் போகும் . . . . பழுது பார்க்கக்கூடப் பணம் கிடைக்காமல் பயல் திண்டாடப்போகிறான். . . . . இப்போது புதுவீடு கட்டிவிட்டோம். . . . . பெரிய வீடு கட்டிவிட்டோம் என்று பூரித்துக்கொண்டிருக்கிறான். . . . . ஊராரும் அவன் கட்டியுள்ள வீட்டைப் பார்த்து, அவனைப் பெரிய புள்ளி என்று எண்ணிக்கொள்கிறார்கள். . . . மரியாதை காட்டுகிறார்கள். . . . . ஆனால் ஒரு விஷயம் நாமே ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்; கடன்பட்டானோ, கைப்பொருளைச் செலவிட் டானோ, தரமான சாமானோ மட்டமானவையோ, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், இவன் இப்படி ஒரு வீடு கட்டுவான் என்று மட்டும் யாரும் எதிர்பார்த்ததில்லை. நாமே நினைத்ததில்லை. அது உண்மைதான்; வீடு கட்டப்போகிறான் என்று செய்தி வந்தபோதுகூட நம்பவில்லை. . . . . நம்பவில்லையா. . . அட, கேலியே செய்தோம். இவனாவது பெரிய வீடு கட்டுவதாவது என்று. . . இருக்கிற வீடே பறிபோகப்போகிறது என்றுகூடத்தான் சொன்னோம். . . . . நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டான். . . . நம்முடைய பேச்சையெல்லாம் பொய்யாக்கிவிட்டான். . . . இது உண்மைதான். . . . அதை எண்ணிக்கொண்டால் நமக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது. கேட்பானல்லவா, என்ன ஐயா! என்னை அவ்வளவு கேபேசினீர்களே. . . . எதுவும் என்னால் ஆகாது என்று ஏசினீர்களே . . . . . இப்போது பார்க்கிறீர்களே பெரிய வீடு. . . . . என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பானல்லவா. . . . .? இவனை நம்பி எவன் பணம் கொடுப்பான் என்றுகூடத் தான் பேசியிருக்கிறேன். . . . . பணத்தைக் கொடுத்து ஏமாந்து போகாதீர்கள் என்று நான் எச்சரிக்கை செய்தேன். . . . பணத்தைக் கொடுக்காதபடி நான் சில இடங்களைத் தடுத்தும் இருக்கிறேன். . . . அப்படி எல்லாம் இருந்தும், பணமும் கிடைத்தது, வீட்டையும் பெரிதாகக் கட்டிக்கொண்டான் என்பதை எண்ணும்போதுதான், வெட்கமும் கோபமும் பீறிட்டுக்கொண்டு வருகிறது. எனக்கும் அப்படித்தான். ஆனால், நாமும், அவனைப் பார்த்து பெரிய வீடு கட்டிவிட்டாய், பரவாயில்லை என்று சொன்னால் பயலுக்குச் சந்தோஷம் அல்லவா ஏற்படும். ஆமாமாம்! துள்ளுவான்! "போடா, மகா பெரிய வீடு கட்டிவிட்டாய் வீடு’ என்று தான் நாம் சொல்லவேண்டும். ஏன், இன்னும்கூடச் சொல்லலாமே, அடா அப்பா! வீடு கட்டிவிட்டால் மட்டும் போதது; பட்ட கடனைத் தீர்க்க வேண்டும் என்று சொல்லலாம். . . . ஆமாய்யா. . . அதுதான் சரி. . . அதுவும், பத்துப்பேர் எதிரில் சொல்லவேண்டும். வீடு நன்றாக அமைந்திருக்கிறது என்று சில பைத்தியங்கள் பேசும்; இவன் பல் இளித்தபடி நிற்பான்; அந்தச் சமயமாகப் பார்த்து இதைச் சொல்லவேண்டும். பயல் திருதிருவென்று விழிப்பான். பாராட்ட வந்தவர் களும் செச்சே! இவ்வளவுதானா விஷயம், கடன் பட்டுத்தான் கட்டினானா இந்த வீட்டை என்று பேசிக்கொள்வார்கள். "பழைய கடனுக்குப் புதிய வீடு ஏலம் போடப்பட்டது என்று பத்திரிகைத் தலைப்புப் பார்த்தேன், நீ பார்த்தாயோ’ என்று, நான் கேட்கப்போகிறேன், அந்தப் பயல், சந்தனம் கொடுத்து, வெற்றிலைப் பாக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று எனக்கு உபசாரம் செய்வானல்லவா, அப்போது!! சரி அண்ணா! புதுமனை புகுவிழாபற்றியும், பிறர் மகிழ்ச்சி கண்டு பொறாதார் போக்குப்பற்றியும், இப்போது எதற்காக இவ்வளவு கூறுகிறாய்; அறுவடையும் அணிவகுப்பும் கண்டு, அதன் பொருள்பற்றி விளக்கம் அறியும் வேளையில் என்று கேட்கிறாய்; தம்பி! காரணமாகத்தான் இதனைக் கூறுகிறேன்; பிறர் வாழக்கண்டு மனம்பொறாத போக்கினரின் பேச்சிப் போலவே, நமது கழகம்பெற்றுள்ள வெற்றிகண்டு, காங்கிரஸ் வட்டாரத்தினர் மனம் வெதும்பி, நாம் நமது வெற்றியால் ஏற்படும் மகிழ்ச்சியைச் சுவைக்க முடியாதபடி செய்துவிட, என்ன செய்யலாம், என்ன சொல்லலாம் என்று துடியாய்த் துடித்துக் கிடக்கிறார்களே, அந்தப் போக்கு எப்படிப்பட்டது என்பதை விளக்குவதற்காகத்தான், இதனைச் சிறிதளவு விவரமாக்கினேன். திராவிட முன்னேற்றக் கழகம், 34 இலட்சம் மக்களின் நல்லெண்ணத்தைப்பெறும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒடுக்கிவிட்டோம், பிளந்துவிட்டோம், செயலற்றதாக்கிவிட்டோம், எனவே தேர்தலிலே ஈடுபடக்கூட அதற்குப் போதுமான வலிவு கிடையாது. தேர்தல் வேலையின் பாரமே கழகத்தை மேலும் முறித்துவிடும், தகர்த்துவிடும் என்று அவர்கள் நம்பிக் கிடந்தனர். அதனாலேதான், கழகம் வெற்றிபெற்றது கண்டு, அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிர்ச்சி காரணமாக அலறுகிறார்கள். அலறுவதுடன், நான் துவக்கத்திலே காட்டியுள்ளபடி, நாம் பெறக்கூடிய மகிழ்ச்சியையாவது, எரிச்சலூட்டும் பேச்சுப் பேசி மாய்க்கலாம் என்று முனைகிறார்கள். பணபலம், பத்திரிகை பலம், பதவி பலம், ஆதிக்கக்காரர் பலம் ஆகியவைகளை நிரம்பப்பெற்று, அவைகளைத் தக்க விதத்தில் தருணமறிந்து பயன்படுத்தினால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும். அத்தகைய "பலம்’ கழகத்திடம் ஏது? எங்கிருந்து கிடைக்கும்? ஆகவே தேர்தலிலே வெற்றி கிட்டப் போவதில்லை என்று காங்கிரசின் பெருந்தலைவர்கள் நம்பினார்கள்; மற்றவர்களை நம்பும்படி செய்தார்கள். இந்தத் தேர்தலிலே தி. மு. க. எப்படி. . . .? என்று "அகில இந்திய’ காங்கிரசுத் தலைவர்கள் கேட்டபோதெல்லாம் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் குறும்புப் புன்னகையுடன். "தி. மு. கழகமா? அது தேர்தல் வரையிலே இருந்தால் தானே. . . . . அதற்குள்ளாகவே தி. மு. க. தீர்ந்துவிடுமே! அங்கு இப்போது ஒரே குழப்பம், குளறுபடி, குத்து, வெட்டு. . . . .’’ என்று மகிழ்ச்சி பொங்கப் பொங்கக் கூறிவந்தனர். "கட்சிக்கு உள்ளே பூசல்கள் எழுவது எங்கும் உண்டல்லவா?’’ என்று கேட்டவர்களுக்குக்கூட, இவர்கள். இந்தக் கழகத்திலே ஏற்பட்டுவிட்ட குழப்பம் சாதாரணமானதல்ல. கழகத்தின் தூண்களே சாய்கின்றன! தூண்கள் சாய்ந்த பிறகு, கட்டிடம் நிலைக்குமா? என்று கூறிக் கைகொட்டிச் சிரித்தனர், குழப்பம் செய்கிறவர்கள் உள்ளபடி, கழகத்திலே மிக வலிவு உள்ளவர்களா? என்று கேட்ட கேள்விக்கு இவர்கள், ஆமாம்! உள்ளபடி கழகத்துக்கு ஓரளவு வலிவு, செல்வாக்கு, வளர்ச்சி இருப்பதே இவர்களாலேதான். இவர்கள் இல்லை என்றால் கழகமே கலகலத்துப் போகும். இவர்கள் இப்போது, கழகப் போக்குச் சரியில்லை, கொள்கை நியாயமில்லை, திட்டம் தவறானது, தீதானது என்று வெளிப் படையாகப் பேசவும், கழகப் போக்கை எதிர்க்கவும் முற்பட்டு விட்டார்கள். என்று இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்தனர். அதுகேட்டு, "அகில இந்திய’ காங்கிரசுத் தலைவர்கள் அகமகிழ்ந்ததுடன் இருந்துவிட்டனர்; எண்ணிப் பார்க்கவில்லை; ஆய்ந்து பார்க்கவில்லை. ஆய்ந்து பார்த்திருப்பார்களானால், ஒரு இடத்திலே மிக முக்கியமானவர்கள், தூண்கள், வலிவும் வளர்ச்சியும் தருகிறவர்கள் இருப்பார்களானால், அவர்கள், அந்த இடம் கெட்டுவிட்டது என்று கூறுவதிலே பொருள் இல்லை; கெட்டுவிட்டது என்று கூறி அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறத் தேவையில்லை; யாரார் இடத்தைக் கெடுத்துவிடுகிறார்களோ அவர்களை இந்தத் தூண்போன்றவர்கள் விரட்டியிருக்கவேண்டும்; அது முடியவில்லை என்பதிலிருந்து, இவர்கள் தூண்களும் அல்ல; தூய்மையாளரும் அல்ல; வல்லமை மிக்கோரும் அல்ல; வளர்ச்சிக்குப் பொறுப்பாளியும் அல்ல; என்பதனைப் புரிந்து கொண்டிருக்க முடியும். ஆனால், அகில இந்திய நிலையினருக்கு, தமது "தளபதிகளிடம்’ அவ்வளவு நம்பிக்கை! முதுகைத் தட்டிக்கொடுத்தனர்! முதல் மந்திரிகள், மந்திரிகள் என்ற நிலையினர் கூறும் போது, எப்படி நம்பிக்கை ஏற்படாமலிருக்கும். அவர்களின் பேச்சுக்குப் பொருளும் வலிவும் ஏற்றிவைக்கும் விதமாக, “ஏடுகள்’ கழகத்திலே தலைதூக்கிய”எதிர்ப்பாளர் களை‘த் தமது “செல்லப்பிள்ளைகள்’ ஆக்கிக்கொண்டு, அவர் களின் பேச்சிலே பேரறிவையும், போக்கிலே பெருந்தன்மை யையும், கனைப்பிலே இடிமுழக்கத்தையும், கண் வீச்சிலே மின்னலையும் கண்டனர்!! பத்தி பத்தியாக”புகழ்’ கொட்டினர்; அவசர அவசரமாக ஆரூடம் கணித்தனர். இதனை நம்பி, அகில இந்தியத் தலைவர்கள் மெத்தவும் ஏமாந்துபோயினர்! தம்பி! நமது கழகத்துக்குள்ளே ஏற்பட்ட கலாம், காங்கிரசுப் பெரும் தலைவர்களுக்கு, இனிக் கழகம் தலை தூக்காது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதிலே ஆச்சரியமில்லை. ஏனெனில், நம்மிலேயே பலருக்கு அந்தப் பீதி இருந்தது. என்னைப் பொறுத்தமட்டில் எதிர்ப்பாளர்களாகி, நம்மை விட்டுச் சென்றுவிட்டார்களே, அவர்களின் அளவிடற்கரிய ஆற்றலால், நாம் அழிக்கப்பட்டுப் போய்விடுவோம்; அவர்கள் தமது கோபப் பார்வையாலேயே நம்மைச் சுட்டுச் சாம்பலாக்கி விடுவார்கள் என்ற கவலை எழுந்ததே இல்லை; எனக்கிருந்தது எல்லாம், மன உளைச்சல். பாசப்பிணைப்பினாலே ஏற்பட்ட உணர்ச்சிகள் என் கண்களைக் குளமாக்கின, கருத்தைக் குழப்பின, செயலற்றவனாகிவிட்டேன். நல்ல வேளையாக, எனக்கிருந்த அந்த மன உளைச்சலைப் போக்கும் விதமாக, விலகியவர்கள் தாங்கள் எவ்வளவு பெருந் தலைவர்கள் என்பதை மட்டுமல்ல, நான் எவ்வளவு அற்பன், இலாயக்கற்றவன் என்பதுபற்றிய தமது எண்ணங்களைப் பேச்சாலும், எழுத்தாலும் எடுத்துச் சொல்லி ஏசி ஏசி, என் மனதிலே அலைமோதிக்கொண்டிருந்த பாச உணர்ச்சி அவ்வளவையும் உலர்ந்துபோகச் செய்தனர். அதனால், நான், வறண்ட கண்ணினனானேன், குழப்பம் நீங்கப்பட்ட மனதின னானேன், செயலற்ற நிலை நீங்கிக் கடமையைச் செய்வோனானேன்! அவர்கள் இந்த அளவுக்கு வேகமாகவும், கடுமை யாகவும், கேவலமாகவும், முன்தொடர்புபற்றிய நினைப்புக்கே இடமில்லாத முறையில் இழிவாகவும், பேசியும் எழுதியும் இராவிட்டால், நான் நெடுங்காலம் பாச உணர்ச்சி காரணமாகக் குழம்பிய மனதினனாகத்தான் இருந்திருப்பேன்; செயலாற்றும் நினைப்பு நசித்துக்கூடப் போயிருக்கும்; மாறிவிட்டவர்களின் கருத்துக்கள் நியாயமானவைகள்தானோ என்ற ஐயப்பாடுகூட உள்ளத்திலே புகுந்து குடைந்திருக்கும். ஆனால், இவை எதற்கும் இடம் இல்லாத முறையில், எடுத்த எடுப்பிலேயே, என்னைக் காண்பதே களிப்பு என்று ஒருமணி நேரத்துக்கு முன்புவரை பேசியதை மறந்து, என் உருவிலிருந்து உரைவரையில், கொள்கையிலிருந்து கூட்டுத் தோழர்கள்வரை, இழிவாகப் பேசி, ஓ! இவர்கள் ஏதோ புதிய கொள்கை கூறவில்லை; மூண்டு கிடக்கும் பகையைக் கக்குகிறார்கள்; தூண்டி விட்டபடி தாக்குகிறார்கள். என்பதனை நான் உணரச்செய்தனர்; அதனாலேயே நான் இவ்வளவு விரைவிலே குழப்ப நிலையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள முடிந்தது. காங்கிரசுப் பெருந்தலைவர்களோ தங்களுக்குத் தரப்பட்ட கணக்குகளைச் சரியானவை என்று நம்பி, இனி, தி. மு. கழகம் நிலைக்காது; அதனை நிலைக்குலையச் செய்ய, அதனிடம் நீண்ட காலமாக இருந்துவந்த நெடியவர்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்; அதன் காரணமாகக் கழகம் கலகலத்துவிடப் போகிறது என்று நம்பிக்கொண்டனர். இங்குள்ளவர்களும், மெத்த நம்பிக்கையுடன் கழகத்தின் கர்த்தா பெரியார்; அவரே தி. மு. கழகத்தை அழிக்கத் துடிக்கிறார். கழகத்தின் கருவூலம் வெளியேறி விட்டது; எனவே, கழகத்துக்கு எதிர்காலம் இல்லை. என்று திட்டவட்டமாகப் பேசி வந்தனர். கழகம், இயக்கம், கட்சி என்றால், அதிலே, யாரார், கடுமை யான பேச்சுகளில் வல்லவர்கள் என்று தம்மைக் காட்டிக் கொள்கிறார்களோ, அவர்களாலேயே அது இயங்கி வருகிறது என்று ஆராய்ச்சியில்லாதவர்கள் எண்ணிக்கொள்வது இயல்பு. நம்மைவிட்டுப் பிரிந்தவர்கள் இங்கு இருந்தபோது, இலட்சியம் அவர்களுக்கு இனிப்பு அளித்ததால், அந்த இலட்சியத்தை எதிர்த்தவர்களை என்னென்ன விதமான கடுமொழியால் தாக்கினர் என்பதை நாடு அறியும், நமது இலட்சியத்தின் பகைவர்கள் நன்கு அறிவார்கள் அல்லவா? இடிமுழக்கமிடுவோர் மாறிவிட்டது கண்டதும், முன்னாலே வாங்கிய அடிகளால் ஏற்பட்ட தழும்புகளைத் தடவிப் பார்த்துப் பார்த்து, இப்படி நம்மைத் தாக்கியவர்கள் இப்போது நம்மைத் தாக்கப்போவதில்லை; தம்மைத் தாக்கப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இருந்துவிட்டுவந்த இடத்தைத் தாக்கப்போகி றார்கள்; கண்குளிரக் காணலாம் என்று எண்ணி, விலகியவர் களை வரவேற்று, ஆலம்சுற்றி, பொட்டிட்டுச், சேரிடமறிந்து சேர்ந்தோய் வாழி என்று வாழ்த்தி, திருஷ்டி கழித்து, வரவேற்றுத் திருவிழா நடத்தினர். தம்பி! அவர்கள் அடைந்த மகிழ்ச்சியின் தன்மையையும் அளவையும் வேகத்தையும் என்னாலே உணரமுடிகிறது. எந்த இலட்சியத்தை உலகமே எதிர்ப்பினும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று இடிமுழக்கம்போன்ற நிலையில் எடுத்துக் கூறிவந்தார்களோ, அந்த இலட்சியத்தை வாழ்த்திய வர்களே, ஒருநாள் அது தீது, ஆகாது என்று பேசி, அந்த இலட்சிய ஒழிப்புத்தான் இப்போது எமது இலட்சியம் என்று பேசிடக் கேட்டால், நெடுங்காலமாகவே அந்த இலட்சியத் துக்கு வலிவு வளர வளரத் தமது ஆதிக்கத்துக்கு அழிவு என்பதனை உணர்ந்து எதிர்த்து வந்தவர்களுக்கு, அளவிட முடியாத அகமகிழ்ச்சி பொங்காதா! பொங்கியதுடன் இல்லை; புதிய நம்பிக்கையே பிறந்தது; அந்த நம்பிக்கையினால்தான், அவர்கள், "கழகம் இந்தத் தேர்தலிலே ஈடுபட்டு அடியோடு அழிந்துபோகும்’ என்று பேசினர்; மேலிடத்தவருக்கும் அந்த நம்பிக்கையைத் திடமாக்கினர், தம்பி! இப்போது கூர்ந்து பார், தேர்தல் களத்தை. ஒருபுறத்தில் கழகம் பிளந்துவிட்டது. கலகலத்துக் கிடக் கிறது; தாக்கும் சக்தியும் தாங்கும் சக்தியும் இல்லை; சலித்துப் போய், களைத்துப்போய், பீதியுடன் தள்ளாடிக்கொண்டு வருகிறது; இதனை ஒரு தட்டுத்தட்டினால் கீழே வீழ்ந்துவிடும். பிறகு எழுந்திருக்கவே முடியாது என்ற நம்பிக்கை வேகத்துடன், எல்லாவிதமானப் போர்க் கருவிகளையும் ஏராளமான அளவு குவித்துவைத்துக்கொண்டு, ஆடுநர், பாடுநர், எடுபிடிகள் உடன்வர, காங்கிரசுக் கட்சியின் அணிவகுப்பு! மற்றோர்புறம், களத்தின் தன்மையைக் கண்டறியவேண்டிய நேரத்தில், கலாம் விளைவிப்போரை அடக்கித் தீரவேண்டிய வேலையில் ஈடுபட்டிருந்துவிட்டதால், ஆர அமர ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல், போதுமான படைக்கலன் இல்லாமல், "கூட இருந்தோர் குடிகெடுத்தனரே, குலவி மகிழ்ந்தோர் குத்திக் குடையத் துணிந்தனரே, கோட்டைக் காவலர்களாக இருக்க வேண்டியவர்கள் காட்டிக்கொடுப்போர்களாகிவிட்டனரே, ஏற்றி ஏற்றித் தொழுதவர்கள் ஏசித் தூற்றித் திரிகின்றனரே, என்ன செய்வது, எப்படித் தாங்கிக்கொள்வது’ என்ற கலக்கமும் கவலையும் குடையும் நிலையில், மாற்றாரின் படைவரிசையிலே பளபளப்பான படைக்கலன்கள் இருக்கக் கண்டு, போதுமான படைக்கலன்களைத் தேடிக்கொள்ளக்கூட நேரம் கிடைக்க வில்லையே என்று ஏக்கம்கொண்ட நிலையிலே, நமது கழக அணிவகுப்பு. பாய்ந்தோடிப் பதுங்கிக்கொள்ள, அடர்ந்த ஒரு புதர் ஒரு பக்கத்தில்; இரத்தவாடையுடன் கூடிய வாயைத் திறந்தபடி உறுமிக்கொண்டு தாக்கவரும் வேங்கை ஒரு புறம்; எதிர்ப்புறத்தில் வழுக்குப் பாறைமீது காலை மிகக் கஷ்டப்பட்டு ஊன்றிக் கொண்டு, காம்பு ஒடிந்த வேல் கரத்தினில் ஏந்திக்கொண்டு, தாக்கத் தயாராக நிற்கும் துணிவுமிக்க இளைஞன்! தம்பி! தேர்தல் களத்திலே நாம் பெற்றுள்ள வெற்றி மிகப் பெரிது என்பதால் அல்ல, மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையிலே பெற்ற வெற்றி என்பதனாலேயே, அந்த வெற்றியின் அருமையும் பெருமையும் தரத்தில் மேலானது என்று, கெடுமதியற்றோர் அனைவருமே பாராட்டுகின்றனர். எரிச்சலூட்டி இன்பம் காணும் போக்கினர் தவிர, மற்றவர்கள், இரு அணிவகுப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, நாம் பெற்ற வெற்றி தரமிக்கது என்று தீர்ப்பளிக்கின்றனர். வெற்றியாம் வெற்றி, என்ன பெரிய வெற்றி இது என்று வேகமாக பேசத் துவங்கியவர்கள்கூட, தமிழ்நாடு காங்கிரஸ் குழுவாக அமர்ந்தபோது, பொதுத் தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள வெற்றி, கவனித்துத் தீரவேண்டிய பிரச்சினையாகி விட்டது. என்று கருத்து வெளியிட்டுள்ளனர். நாம் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை ஒரு ஆளுங் கட்சியை மிரட்டக்கூடியது அல்ல, என்பதைத் தம்பி! நினைவிலே கொள்ளவேண்டும். இப்போதும் 139 அவர்கள்; நாம் 50. ஆமாம்! சட்டசபையிலே நமது கோரிக்கைகளைக் காலில் போட்டு மிதித்துத் துவைத்துவிடத்தக்க வலிவு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மிதிக்க எண்ணம் பிறக்கும்போது, முன்பு 15 பேர்களாக இருக்கும்போது காலின்கீழ் போட்டு மிதித்துத் துவைத்தோம், அழிந்துவிடவில்லையே, மாறாக பதினைந்தாக இருந்தவர்கள் ஐம்பதாக அல்லவா வளர்ந்துவிட்டனர். இம்முறையும் சென்ற முறைபோலவே எண்ணிக்கை பலம் ஊட்டிவிடும் செருக்கினால் இந்த ஐம்பதின்மரை நசுக்கினால், அதன் விளைவாக, அடுத்த தேர்தலிலே நிலைமை என்ன ஆகுமோ. . . என்ற அச்சம் அவர்கள் மனதிலே எழத்தான் செய்யும். அடுத்த தேர்தலா? அடுத்த தேர்தலில், அடியோடு அழித்துவிடப்போகிறோம், தீனாமூனாக்களை என்று சில்லறைகள் சினமிகுந்து பேசக்கூடும்; பெரியவர்களுக்கு அந்த நினைப்பு எழாது; அவர்கள் முன்புகொண்ட எண்ணமும் நடைபெற்ற நிகழ்ச்சியும் நினைவிலே நிச்சயம் இருக்கும். உள்ளபடி தம்பி! இந்தத் தேர்தலிலே நமது கழகம் அடியோடு அழிந்துபோகும் என்றுதான் காங்கிரஸ் தலைவர்கள் நம்பினார்கள், நாட்டுமக்களிடம் உறுதியுடன் எடுத்துக் கூறினார்கள். ஆளுங்கட்சியின் அடிபணியச் செல்வவான்கள் திரண்டு நிற்பதையும், பத்திரிகைகள் பலம் தேடித்தருவதையும், பெரியார் பக்கத்துணையாக இருப்பதையும், கழகத்தைவிட்டு விலகியோர் பகை கக்கி வருவதையும் பார்த்தபோது, இந்தத் தேர்தலிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தீர்த்துக்கட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை, அமைச்சர்களுக்கு ஏற்படத்தானே செய்யும். பொதுமக்களிடம் பேசும்போதும், பத்திரிகை நிருபர் களிடம் விளக்கம் அளிக்கும்போதும், அமைச்சர்கள், கழகம் ஒழிந்துவிடும், நாலுபேர் வருவார்களோ ஐந்துபேர் வருவார் களோ என்பதே சந்தேகம் என்று, மிக்க உறுதியுடன், தெம்புடன், கூறிவந்தனர். பொதுத் தேர்தலிலே பிரசாரம் களைகட்டுவதற்காகப் பேசப்பட்டது இது என்றுகூடச் சொல்வதற்கு இல்லை. மதுரையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலேயே, பண்டித நேருவும், வேறு சிலரும், திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தடை செய்யும் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாமா என்பதுபற்றிக் கேட்டபோது, இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்கள், நேரு பண்டிதருக்கு உறுதி அளித்தார்கள். "திராவிட முன்னேற்றக் கழகத்தை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். பொதுத் தேர்தல் வருகிறது. அதிலே திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலை எடுக்க ஒட்டாமல் அழித்து விடுகிறோம்.’’ காமராஜரும் சுப்ரமணியமும் வெளியிட்ட கருத்து; தந்த வாக்குறுதி; எடுத்துக்கொண்ட சூளுரை; விடுத்த அறைகூவல், இது. இவர்களின் பேச்சை நம்பித்தான், பிப்ரவரி 22ல்கூட டாக்டர் சுப்பராயன், சென்னையில் பேசுகையில், திட்ட வட்டமாக, "இந்தத் தேர்தலில் தி. மு. க.வினருக்கு சட்டசபையில் இப்போதுள்ள இடம்கூடக் கிடைக்காது.’’ என்று தெரிவித்தார். நாற்பது ஆண்டுக்கால அனுபவம் அவருக்கு; வேகமாகப் பேசுவதை விரும்பும் இயல்பும்கொண்டவர் அல்ல. எனினும் அவருக்குத் தரப்பட்ட தகவல், அவரை இந்த அளவு உறுதியாகப் பேசச்செய்தது. காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகளும், இதே கருத்தினை உறுதியாகத் தெரிவித்தன. 16-2-62ல், காங்கிரஸ் ஆதரவு ஏடு, தலையங்கம் மூலம், கடந்த இரண்டு தேர்தல்களின்போது இருந்ததைக் காட்டிலும், இப்போது காங்கிரஸ்மீது மக்கள் அன்பும் அபிமானமும் அதிகரித்திருப்பதைக் காண்கிறோம். ஆகையால் இந்தத் தடவை மிகப் பெரும்பாலான வாக்காளர்கள் காங்கிரசுக்கே ஆதரவளிப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை - என்று கருத்தைப் பரப்பிற்று. எதனையும் விளக்கமாக்கிப் பேசுபவர் அல்லவா, சுப்ரமணியனார்!! அவர் கூறியது இது: இன்று தமிழ்நாட்டில் காங்கிரசுக்குச் சாதகமான சூழ்நிலை, அசைக்கமுடியாத உறுதியான ஆதரவு, பெரு மளவுக்கு இருக்கிறது. பெருமளவு - அதிக இடம் - அதிக ஆதரவு என்று பொதுப் படையாகத்தான் பேசிவந்தார்கள்போலும் என்று எண்ணிக் கொள்கிறாயா, தம்பி! புள்ளிவிவரப் புலிகளல்லவா, திட்ட வட்டம் இல்லாமலா பேசுவார்கள். ஜனவரித்திங்கள் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த சுப்ரமணியனார் தெளிவாகத் தெரிவித்தார். இப்போது சட்டசபையில் காங்கிரசுக்குள்ள ஸ்தானங் களைவிட 15 ஸ்தானங்கள் அதிகமாகக் கிடைப்பது உறுதி என்று இப்போதைய சுற்றுப் பயணத்தில் அறிந்து கொண்டேன். என்று நிதிமதி இருதுறைகளையும் நிர்வகித்து வந்தவர் கூறினார். மக்களிடம் நேரிடையாகப் பழகும் முதலமைச்சர் காமராஜர், பத்திரிகை நிருபர்களிடம், தமிழ்நாடு சட்டசபையில் தற்பொழுதுள்ள உள்ள ஸ்தானங்களைவிட அடுத்த தேர்தலில் முப்பது ஸ்தானங்கள் அதிகமாகக் கிடைக்கும். என்று கூறியிருக்கிறார். தம்பி! அவர்களெல்லாம் போட்ட கணக்குப் பொய்த்துப் போகும்படி செய்துவிட்ட பெருமை, நமது கழக அணி வகுப்பினையே சேரும். எனவேதான், கவலைப்படுகிறோம் - கலக்கமடைகிறோம் - கவனித்தாகவேண்டும் - என்று காங்கிரசுப் பெருந்தலைவர்கள் இப்போது பேசவேண்டி வந்திருக்கிறது. பிரச்சார முறைகளைச் செம்மைப்படுத்தினால், அடுத்த முறை, கழகத்தை ஒழித்துவிடலாம் என்று சிலரும், பிரச்சாரம் செய்யவிடாமல் கழகத்தைத் தடுத்துவிட்டால், அடுத்தமுறை கழகத்தை ஒடித்துவிடலாம் என்று சிலரும் பேசுகிறார்கள். வழக்குகளைத் தொடுத்து வாட்டிடலாம் என்று ஒருபுறம் நினைப்பு நெளிகிறது, நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். வழக்கமான சிண்டு முடிந்துவிடும் வேலையில் ஈடுபடலாம் என்று சிலர் முனைகிறார்கள். இழித்தும் பழித்தும் பேசியும், எழுதியும், மக்கள் முன்னால் கழகத்தவர்களைக் கேவலப்படுத்திக் காட்டலாம் என்று, எப்போதும்போல முயற்சி நடைபெற்றபடி இருக்கிறது. காங்கிரஸ்காரர்களும், காங்கிரஸ் ஏடுகளும், கழகத்தை எதிர்த்துப் பேசினாலும், எழுதினாலும், பொதுமக்கள், அவ்வளவு அதிகமான கவனம் செலுத்தமாட்டார்கள், கட்சி மாச்சரியத்தால் தாக்குகிறார்கள் என்று எண்ணிக்கொள் வார்கள். எனவே காங்கிரசுக்கு எதிர்க்கட்சிகள் என்ற பட்டயம் வைத்துக் கொண்டுள்ள கட்சியினரைக்கொண்டு, கழகத்தைக் கேவலப்படுத்தச் செய்வதுதான் அதிகப் பயன்தரும் என்று ஓர் சாகசச் சதித்திட்டமும் தீட்டப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது.. இவ்வளவும், தம்பி! நமது கழக அணிவகுப்பின் அருந் திறனின் பயனாக, நாம் ஈட்டிய அறுவடையின் அருமையினைக் கண்டதாலே, ஆட்சியினருக்கு ஏற்பட்டுவிட்ட அச்சம் காரணமாக!! நம்மை அலட்சியப்படுத்திய காலம், மலை ஏறிவிட்டது! நம்மை அழித்துவிடமுடியும் என்று கொண்டிருந்த நம்பிக்கை நசித்துப்போய்விட்டது. நமக்குள் உட்குழப்பம் மூட்டிவிட்டுக் கலகலக்கச் செய்யலாம் என்ற எண்ணம் தகர்ந்துவிட்டது, பெருமளவு. அடியோடு அல்ல!! நம்மை உலகின் கண்களில் படாமல் செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகள் முறிந்துபோய்விட்டன. நம்மை, மிகச்சிறிய கும்பல், கவனிக்கப்படத் தக்கதல்ல என்று நேரு பண்டிதரிடம் கூறிவைத்த பேச்சு, பொய்யுரை என்பதை நேரு பண்டிதரே உணர்ந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. இவைகள் எல்லாவற்றினையும்விட, சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் வேகமான முறையில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று இடம் பெறும் திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சிப் பொறுப்பிலே இடம் கிடைக்குமா என்று ஆவலுடன் காத்துக்கொண்டும், கணக்குப் போட்டுக் கொண்டும் இருக்கும் வெறும் அரசியல் கட்சி அல்ல; மற்ற எந்த அரசியல் கட்சியும் நினைத்துப் பார்க்காத ஒரு விடுதலைக் குறிக்கோளுக்காகப் பணியாற்றும் இயக்கம், திராவிடநாடு திராவிடருக்கே என்று கூறும் இயக்கம் என்பதனை, உலகு அறிந்துகொண்டதுதான், அணிவகுப்பு ஈட்டியுள்ள பெருமிதமான அறுவடையின் அருமையான தன்மையாகும். தம்பி! நாம் யார்? என்று புரியும்படி, இந்த வெற்றி செய்திருக்கிறது. நாம் எவரெவரால் எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறோம் என்பது விளக்கமாக்கப்பட்டுவிட்டது. நாம் எத்தனை எத்தனை விபத்துக்களைச் சமாளித்திருக் கிறோம் என்பதும், உலகு அறிந்துகொண்டுவிட்டது. இனி நாம், அறிவிக்கவேண்டியது, இந்த அணிவகுப்பு, ஆட்சியில் இடம் கேட்கும் வெறும் அரசியல் கட்சி அல்ல, அரசு அமைக்க விரும்பும் விடுதலை இயக்கம், திராவிடம் காணத் துடிக்கும் விடுதலை இயக்கம், எனும் பேருண்மையை. இதனை நாம் எடுத்துக்கூற, சட்டசபையும் பாராளு மன்றமும் உள்ளன, போதும் என்று இருந்துவிடுவாயோ - தம்பி! தம்பி! இதனை நாம் அந்த இடங்களிலே இருந்து எடுத்துச் சொல்லும் வாய்ப்பு, இப்போது ஓரளவுதான் கிடைத்திருக்கிறது. முழு அளவு கிடைத்துவிடுகிறது, நாமே பெரும்பான்மை யான இடங்களையும் பெறுகிற நிலை வருகிறது என்று வைத்துக்கொள். தொடர்ந்து, ஆர்வத்துடன், முறையாக நாம் பணியாற்றி னால், அந்த முழு அளவு, அடுத்த தேர்தலில் நாம் பெற்றிடலாம் - ஐயம் வேண்டாம். மக்கள் தீர்ப்பு, நாட்டு விடுதலைக்குக் கிடைத்துவிட்டது என்று, திருவிடத்தைப் பிணைத்து வைத்துக்கொண்டுள்ள பேரரசு உணர்ந்து மதித்து விடுதலை அளித்திடின், நன்றி கூறுவோம், நல்லெண்ணத்தை எந்நாளும் மறவோம், நானில முழுவதிலும் இவர்கள்போல் நமக்குற்ற நண்பர்கள் வேறு எவரும் இலர் என்று வாழ்த்துவோம். ஆனால், அஃதின்றி, இந்த வெற்றிகள் போதா, சட்ட சபையிலும் பாராளுமன்றத்திலும் இடம்பெற்று இலட்சிய முழக்கம் எழுப்பினால் போதாது, வாலிபரை வயோதிக ராக்கிடும் இருட்டறை போன்றுள்ள சிறையில் அடைபட்ட நிலையில், கண்காணாத் தீவினில் கரைதெரியாக் கடலைப் பார்த்தபடி கைதியாக இருந்திடும் நிலையில், தூக்கு மேடையில் நின்றபடி, இந்த இலட்சியத்தை, திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை எழுப்பவல்லாயோ என்று, பேரரசு நடாத்துவோர் கேட்டிடின், ஆம்! ஆம்! ஆருயிரைப் பலியிடவும் அஞ்சாது நிற்கிறோம்! தாயின் கரத்தில் பூட்டப் பட்டுள்ள தளைகள் பொடிபட, எமது உடல் ஆவியற்ற கூடாயினும் பரவாயில்லை. இன்னுயிரை எடுத்துக் கொள்ளுங்கள், இன்பத் திராவிடத்தைக் கொடுங்கள்! என்று கேட்டிடும், நெஞ்சினராதல் வேண்டும். இனிமேலா, அண்ணா! என்று கேட்டு, என்னை வெட்கப் படச் செய்துவிடுகிறாய், தம்பி! இன்னுயிரை எடுத்துக்கொள்! இன்பத் திராவிடம் கொடுத்திடு! - என்பதுதானே, நமது அணிவகுப்பின் பரணி, என்று கேட்கிறாய், ஆம்! தம்பி! ஆமாம்? மறந்தேனில்லை! நினைவு படுத்தினேன்!! அன்புள்ள அண்ணாதுரை 1-4-1962 சூடும் சுவையும் (1) இராஜ்ய சபையின் பேச்சிற்குப் பிறர் கருத்து பிரிவினைபற்றிய குழப்பம் தம்பி! வகை வகையான வண்ண மலர்கள் மணம் பரப்பும் பொழில்; பூங்காற்று வருடி இன்பம் வழங்கும் வேளை. புள்ளினம் இசை அளிக்கிறது. அதனினும் சுவைமிகு பாகுமொழி செவியில் விழுகிறது. பார்க்கிறான். இதற்குமுன் பார்த்தறியா வனப்புமிகு பாவையை! அமருக! என்கிறாள் அணங்கு, விழியால் விருந்திட்டு. அஃது ஓர் பளிங்கு மண்டபம். அவன் ஓர் இளைஞன் - போர் வீரன். தங்கள் தீரத்தை மெச்சாதார் இல்லை - இங்கு. . . உறுதி தளராத உள்ளம் என்று உரைத்திடக் கேட்டு உவகைகொண்டேன் - பலர் உரைத்தனர். சீறி எழும் படைகளைச் சின்னாபின்னமாக்கத்தக்க போர்த்திறன் உண்டு, எனினும், காலமறிந்து காரியமாற்ற வேண்டும் என்று தாங்கள் நடந்துகொண்ட போக்கினைக் கண்டு, வியந்து பாராட்டாதார் இல்லை. எதற்கும் அஞ்சமாட்டார் - ஆனால், என் மகனே! என்று பெற்றவள் உருக்கமுடன் பேசும்போது, நிலைகுலையத்தான் செய்யும் என்று கூறினர், சிலர்! தங்கள் தரமும் திறமும் அறியாதார்! பகைவர் வீசிடும் வாளுக்கு எவ்விதம் அஞ்சாது இருப்பீரோ, அதுபோன்ற உமது தாயின் தழதழத்த குரல் கேட்டும், கண்ணீர் கண்டும் தளராது நின்றீரோ, அதனை என்ன கூறிப் பாராட்டுவது. மங்கை பேசுகிறாள் - இளைஞன் இன்பத்தில் மிதக்கிறான். வேறோர் புறத்திலே, அவன் வாழ்ந்திட அமைந்ததோர் மாளிகையில், வேலைப்பாடு மிகுந்த இருக்கைகளை வரிசைப் படுத்துவதிலும், மற்றப் பல ஆடம்பரக் கோலங்களை அமைப் பதிலும், எடுபிடிகள் மும்முரமாக இருந்தனர். பொன்னிழை மின்னிடும்அங்கி, வைரமணிகள் பதித்த வாளுறை! அவனுக்கு. கருமுகில் நிறம் கொண்டதும், மின்னல் வேகத்தில் பாயத் தக்கதுமான புரவி - அவனுக்கு. பன்னீர் பெய்கிறார்கள் அவன் குளித்திட. செயற்கை ஓடையில்! பழச்சாறு நிரப்பிய கோப்பைகளை ஏந்திச் செல்கிறார்கள். பக்குவமறிந்த பணிப் பெண்கள் - அவன் குற்றேவல் கேட்டு நடந்திடும் குமரிகள்!! பல ஆயிரம் வராகன்கள் பேழையில்! அவ்விதமான பேழைகள் பலப்பல! அன்பரே! ஆருயிர் நண்பரே! - என்று அழைக்கிறார், இளவரசர். இவரில்லாவிட்டால் உமக்கு ஏது இந்த வெற்றி? என்று கேட்டுக் கெக்கலி செய்கிறாள் இளவரசி!! ஓவியர் இரவு பகலென்று பாராமல் வேலை செய்கிறார் - நமது நண்பரின் வடிவத்தைத் தீட்டி, தமது கலைக்கூடத்தை அழகுபடுத்த என்கிறார் இளவரசர். சிலை அல்லவோ, சமைக்க வேண்டும் இவருக்கு! ஓவியம் போதாதே!! - என்கிறாள் இளவரசி. இவர்க்கு ஏற்ற எழிலோவியம் உண்டு, இங்கு, அறிவாயோ? என்று கேட்கிறான் இளவரசன்; மின்னலிடையாள்!! - தெரியுமே முன்பே என்று குறுநகையுடன் கூறுகிறாள் இளவரசி. இவ்வளவு விரைவில், இத்துணை எளிதாக, வெற்றி கிடைக்கும் என்று நான் எண்ணினதே இல்லை. கோட்டை வலியுள்ளதல்லவோ! படைக்கலன்களும் நிரம்ப, அவர்களிடம்! முற்றுகை நீண்டுகொண்டே போகும் என்ற கலக்கம் எமக்கெல்லாம். . . நேரடித் தாக்குதலில், நாம் சிக்கிக்கொண்டிருந்தால், நிரம்ப அழிவு நேரிட்டிருக்கும். . . நல்ல வேளையாக எதிர்பாராத வகையிலே உதவி கிடைத்தது. சாதாரண உதவியா!! கோட்டையைத் தாக்கித் தகர்த்திட வேண்டிய அவசியமே எழவில்லையே. . . தட்டினோம்! திறக்கப்பட்டது! கொட்டினோம் வெற்றி முரசு! படையின் தளபதிகள் பேசி மகிழ்கிறார்கள் இதுபோல. பன்னீர் தெளிக்கிறாள் பாவை, இங்கிதமறிந்த முறையில் அன்றோர் நாள், அடவி வழி நுழைந்து மாற்றாரைத் தாக்கப் புரவிமீது சென்றபோது, சேற்றாற்றிலே பாய்ந்ததால், சட்டை எல்லாம் சேறு மயமாகிவிட்டது - அந்த நினைவு வந்தது வீரனுக்கு. பலநாள் அந்தச் சேறுபட்ட சட்டையைப் பார்த்துப் பார்த்து அவன் பூரித்ததுண்டு - வெற்றி விருது என்று மகிழ்ந்ததுண்டு. அன்று சேறு இன்று பன்னீர்!! அன்று மாற்றாரைத் தாக்கச் சென்றபோது, சேறு, இன்று? "நமது மண்டலத்துக்கு மகத்தான சேவை செய்த மணிமுடிக்கு மருதூர் மிட்டாவைப் பரிசாகத் தருகிறோம்’’ என்று மன்னர் அவையிலே அறிவித்து, அதைத் தொடர்ந்து வரவேற்பு விழா நடத்துகிறார் - விழாவிலே ஒரு பகுதிதான் - பன்னீர் தெளித்து, பாவை பளிங்கு மண்டபம் அழைத்துச் சென்று பாடலாலும் ஆடலாலும் சுவையூட்டுவது. காட்டாற்றுச் சேறு முன்பு! கட்டழகி தெளித்திடும் பன்னீர் இப்போது!! பன்னீர் தெளித்திடும்போது அவனுக்குக் காட்டாற்றுச் சேறு நினைவிற்கு வருகிறது. களிப்பு உலருகிறது - கண்களில் நீர் துளிர்க்கிறது. காட்டாற்றுச் சேறு!! - என்று அவன் முன்பு, பலரிடம் காட்டிக் காட்டிக் களிப்படைந்தான். கட்டழகி பன்னீர் தெளிக்கிறாள் - எவரேனும் கண்டுவிடுவரோ என்று எண்ணிக் கலங்குவதுபோல இருக்கிறது அவன் பார்வை. இரக்கமற்றவர்கள் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறார்கள், வைக்கோற்புல் பரப்பப்பட்டிருந்த கட்டாந்தரையில் - உடலெங்கும் புண் அவனுக்கு - உடை கந்தல் - கீழே வீழ்கிறான் - புல்லில் மறைந்திருந்த பாம்பு சீறுகிறது - பாய்ந்து செல்கிறது - கைகொட்டிச் சிரிக்கிறார்கள் கொடியவர்கள். ஒருபுறம் நச்சரவம் - மற்றோர்புறம் அதனினும் கொடியவர்கள். வாட்போரில் வல்லவனாம் - வாகை பல சூடியவனாம்! வீரக் கழல் அணிந்தவனாம்!! ஏடா! நீதானே அது! கொட்டிலில் புகுந்துள்ள நீயோ, கொற்றம் ஆண்டவன்!! கொலு மண்ட பத்திலே கோலமயிலாள் ஆட, குயிலால் பாட, மிக்க கெம்பீர மாக வீற்றிருப்பாயாமே! கேள்விப்பட்டதுண்டு! இன்று? உனக்கேற்ற இடம்! நாட்டியமாட நாகம்!! வெற்றி அல்லது வீரமரணம் என்று முழக்கமிடுவானாம். . . இப்போது என்ன கூறி முழக்கமிடுவான்! கூவு. கூர்வாளை நம்பிக்கெட்டவனே! உரக்கக் கூவு!. . .வேழப் படையை முன்னே அனுப்பு! வேற்படையைப் பின்னோடு அனுப்பு! வெற்றிமுரசு எடுத்துச் செல்க!! - என்றெல்லாம் கூவு!! கற்கோட்டையைத் துளைத்திட எவராலும் முடியாது என்று எண்ணிக்கொண்டான், ஏமாளி. திறந்துவிட ஆள் இருக்கும்போது எந்த முட்டாள் கோட்டையைத் துளைத்திட நேரத்தைச் செலவிடுவான்? தட்டினோம்! திறக்கப்பட்டது!! வெட்டி வீழ்த்துவோம் என்று வீராப்புப் பேசிக்கொண்டிருந்தான். விழா நடத்துவோமா, வீழ்ந்தவனுக்கு. . . . ஆமாம், நடத்த வேண்டும். . . ஆடை எப்படி இருக்கவேண்டும். . . இவன் நம்பிக் கிடந்த வேழப்படை சிதறி ஓடியபோது, கீழே வீழ்ந்துவிட்ட முகபடாம், இவனுக்கு ஆடை. . . ஒடிந்த தந்தங்களைத் தலையிலே வைத்துக் கட்டிடலாம் - முடி! மணி மகுடம்!! குதிரைக்குப் போடுவானே “கொள்ளு’ அது ஒரு வேளை; யானைக்குப் போடுவானே”தழை’ அது ஒருவேளை - இப்படி மாறிமாறி, விருந்து. உடலெங்கும் வடு; உலராத நிலையில். உள்ளமோ உலைக் கூடம்போல. நாடாண்டவன், மாற்றானிடம் பணியாதவன், போர்த்திறமை மிக்கவன். கூடஇருந்து குழி பறிப்போர் இருக்கக் கூடும் என்று துளியும் எதிர்பார்த்தவன் அல்ல. வெஞ்சமரில் வீழ்ந்தானில்லை; வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டான்!! வாட்டி வதைக்கிறார்கள்!! பொன்னிறமேனி புழுதி படிந்து கிடக்கிறது. காலிலும் கரங்களிலும் தளைகள் பூட்டப்பட்டிருக்கின்றன. சிறைக்கூடக் காவலை மேற்கொண்ட சிற்றறிவுள்ள கொடியவர்கள், அவன் உண்ண வேகாச் சோற்றினை மண்பாண்டத்திலிட்டு, நாற்றமடிக்கும் சேற்று நீரை மண்குவளையில் ஊற்றி, எதிரே வைக்கிறார்கள். ஒரு கணம் கண்களை மூடுகிறான். என்னென்ன எண்ணுகிறானோ!! அரண்மனையில் அவன் நடத்திய விருந்துகளை எண்ணிக்கொள்கிறானோ? இல்லை! இல்லை! கோட்டையைத் தாக்கித் தகர்த்திடவில்லை! தட்டி னார்கள்! திறக்கப்பட்டது!! சமர் செய்து வீழ்த்தினார்களில்லை, சதிசெய்து சாய்த்தனர்!! புல்லில் மறைந்திருந்த பாம்புபோல, புல்லன் இருந்து காட்டிக்கொடுத்துவிட்டான்; கோட்டை பிடிபட்டது; கொற்றம் அழிந்தது. - இதனைத்தான் எண்ணிக் கலக்கமடைகிறான். உடலிலே உள்ள வடு ஒவ்வொன்றும் ஒவ்வோர் வீரச் செயலுக்குச் சான்று! அதனை எண்ணிக் கொள் கிறான், கண்களிலே களிப்பொளி!! கட்டழகி பன்னீர் தெளித்திடும்போது, கலக்கம் அடை கிறான் ஒருவன், பளிங்கு மண்டபத்தில். காதகர் கடுமொழி வீசிடும்போது, உடலிலே உள்ள புகழ்க் குறி கண்டு பூரிக்கிறான், வஞ்சகத்தால் வளைக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டுக் கிடக்கும் கொற்றவன். கொற்றவன் கொடுமை கண்டும் பெருமிதம் குன்றாது இருக்கக் காரணம், அவன் நெறி தவறாததால் - வீரம் குன்றாததால். கோலமயிலாள் கடை இடை காட்டிப் பன்னீர் தெளித்த போதும், களிப்படையாது, பளிங்கு மண்டபத்து வீரன் கலக்கம் கொண்டிடக் காரணம், அவன் காட்டிக்கொடுத்த கயவன். அந்த நினைப்பு அவன் நெஞ்சினைச் சுட்டெரிக்கிறது - அதனால், என்ன அண்ணா, இது. நெடுந்தொலைவு போய்வந்திருக் கிறாய், நீண்ட நாட்களுக்குப் பிறகு மடல் தீட்டுகிறாய் - சென்ற இடத்துச் சிறப்புகள், செய்த காரியத்தின் அளவு, தரம், கண்ட நண்பர்கள், கூறிய விஷயங்கள், தென்பட்ட குறிகள், இவைபற்றி யெல்லாம் நிரம்பக் கூறப் போகிறாய், கேட்டுச் சுவையும் பயனும் பெறலாம் என்று ஆவலுடன் இருக்கிற எம்மிடம், பளிங்கு மண்டபம், பன்னீர் தெளிக்கும் பாவை, சிறைக்கூடம், சீறி வரும் நாகம், கொடியவர் கொற்றவனைப் படுத்திடும் பாடு, இவை பற்றியெல்லாம் கூறத் தொடங்கிவிட்டாய்; தில்லி பற்றிய செய்தி களைக் கூறவேண்டிய வேளையில் - என்றுதானே கேட்கிறாய் - அவசரப்படாதே, தம்பி! தில்லி போகவேண்டுமென்றால், உடனேவா! நெடுந்தொலைவு அல்லவா? போகலாம்! இப்போது இந்த இருவரை மீண்டும், மனக்கண்முன் கொண்டு வா. சிறையில் அடைபட்ட சித்தம் கலங்கா மன்னன். காட்டிக் கொடுத்ததால் கட்டழகி தெளித்திடும் பன்னீரைப் பரிசுபெற்ற கயவன். இந்த இருவர், இரு வெவ்வேறு நிலைமைகளை விளக்கும் நோக்குடன்தான், உன் முன் காட்டப்பட்டுள்ளனர். இந்த இருவரில், எவருடன் உறவாட, உரிமை கொண்டாட, உடனிருக்க, இசைவு தருவாய்! கேட்கவாவேண்டும். காட்டிக் கொடுப்போனிடம் கூடிக் குலாவிடும் கெடுமதி எப்படி உனக்கு ஏற்பட முடியும்!! காட்டாற்றுச் சேறு, கட்டழகி வீசிடும் பன்னீரிலும் மாண் புடையது என்பதனை உணர்ந்த மரபினனல்லவா, நீ! இதோ, இன்னும் இருவர், இவர்களையும் பார், தம்பி! பயனற்ற வேலை என்று நினைத்துவிடாதே - வெறும் படம் அல்ல, பாடம் புகட்டும் படம், மறவாதே. மதிமிகு பெரியீர்! மாண்புடைய நண்பரீர்! குறிப்பறிந்து நடந்திடும் குணாளரே! வருக! வாழ்க!! உமது புகழ் புவி எங்கும் பரவிடத்தக்கதான, பாமாலை தொடுத்திடுவோம். என் நாடு! என் இனம்! என் பித்து நீக்கிய பெம்மானே, வருக! வாழ்க!! நம்பி வந்தவர்க்குக் கை கொடுக்கும் நல்லறிவாளரே, வருக! வாழ்க!! நாட்டுப்பற்று என்பது போதை, அதனை நாம் உட்கொள்ளல் தீது என்று உணர்ந்து, சொல்லால் அல்ல செயலால் விளக்கிய வித்தகரே, வாழ்க! வருக!! வலுத்தவனிடம் மற்றவன் எதிர்த்து நிற்பது அழிவுக்கு வழிகோலும், அஃது ஆகாது! பணிவது, இணைவது, பாங்கான முறை! பாரிலே, பங்கரங்களை ஒழித்திடும் முறை இதுவே! - என்று கூறிச் சிற்றரசாகக் கிடந்தோர் இடத்தைப், பேரரசிடம் ஒப்படைத்துச் சிறப்பான சேவை செய்த செம்மலே வருக!! தங்கள் பேச்சிலே, அறிவு மணம் கமழ்கிறது. தங்கள் போக்கிலே, இராஜ தந்திரம் மிளிர்கிறது. தங்கள் பார்வையிலே வேதாந்தம் சொட்டுகிறது. வேறோர் நாட்டுக்காரர் என்று இருப்பினும், எமது நாட்டினை இருப்பிட மாகக்கொண்டவரே, வருக! வாழ்க!! எந்நாடுதான் எனக்கு ஏற்புடைய நாடாகும் என்ற தத்துவம் பொடிபடத் தாக்கிய மாவீரனே, வாழ்க! எந்த நாட்டிலே, இன்பம் கிடைக்குமோ, வளம் நிரம்பக் காணப்படுமோ, அந்நாடே எந்நாடு!! என்ற அரிய அரசியல் தத்துவத்தை அவனிக்கே அளித்த ஆசானே! வருக!! தம்பி! இந்த நிலையில் அரச அவையிலே புகழாரம் சூட்டப்பட்டுக் காணப்படுகிறான் ஒருவன். இதோ மற்றொருவன். அவனைச் சூழ்ந்துகொண்டு, கூவுகிறார்கள், கொக்கரிக்கிறார்கள்; விளையாட்டுச் சிறுவர்கள் கற்களை வீசுகிறார்கள். முரட்டுப் பெரியவர்கள், காலைத் தட்டிக் கீழே உருட்டுகிறார்கள். கடுமொழி வீசுகிறார்கள், கண்டவர்கள். பிடி! அடி உதை! வெட்டு! குத்து! கொல்லு! காரித் துப்புங்கள் முகத்தில்! காதைப் பிடித்துத் திருகுங்கள்! கண்ணைத் தோண்டிப் போடுங்கள்! கையை ஒடித்து விரட்டுங்கள்! இவ்விதமான இழிமொழிகளைக் கேட்டுக்கொண்டு இருக்கிறான் இவன். முன்னவன், நாட்டைக் காட்டிக்கொடுத்துப் புகழாரம் சுமக்கிறான். இரண்டாமவன், நாட்டுக்காக உழைத்ததற்காக இழி மொழியைப் பரிசாகப் பெறுகிறான். இந்த இருவரில், நாம் போற்றத்தக்கவர், புல்லர்களின் பொல்லாங்கு மொழிக்குப் பயந்துகொண்டு, நாட்டுக்கு உழைப்பதை விட்டுவிட மறுக்கும் மாண்புடைய வீரனல்லவா? சரி, அண்ணா! இப்போது எதற்காக, இந்த விஷயமெல் லாம்? என்றுதானே கேட்கிறாய், தம்பி நான் தில்லிக்குப் பயண மானபோது, இவைபோன்ற எத்தனையோ காட்சிகளை மனக் கண்ணால் கண்டேன். என்னென்னவோ வகையான எண்ணங்கள். அவைகளிலே ஒரு சிலவற்றைத்தான் மீண்டும் நினைவிற்குக் கொண்டுவர முடிகிறது. எங்களை ஏற்றிச்சென்ற விமானம், எத்தனை எத்தனையோ விதமான மேகக் குவியல்களைத் தொட்டும் தொடாமலும், சென்றுகொண்டிருந்தது. என் மனதிலே பல்வேறு விதமான எண்ணங்கள், அலை அலையாகக் கிளம்பின. இரவு பன்னிரண்டு விமானம் தில்லி நோக்கிப் பறக்கிறது - என் மனமோ உன்னைப் பிரிய மறுக்கிறது. கண்களை மூடியபடி, ஆனால் உறங்காமல், என் பக்கத்தில், தருமலிங்கம் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்திலே ஓர் விதமான களை - வெற்றிக்களை என்றே கருதுகிறேன் - தெரிந்தது. காரணத் தோடுதான். என்ன காரணம் தெரியுமோ? நான் தில்லிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது இருக்கிறதே, அது தோழர் தரும லிங்கத்தின் வெற்றிகளிலே ஒன்று. இதமாகப் பேசிப்பேசி என்னை "இராஜ்யசபை’ செல்வதற்கு இசையும்படி செய்வதிலே அவர் வெற்றி பெற்றார். பார்! முடியாது முடியாது என்று சொன்னவரை, அழைத்துக்கொண்டு போகிறோம், தில்லிக்கு என்ற எண்ணம்போலும் அவருக்கு. அந்தக் களைதான் முகத்தில்! என்னை அவர் தில்லிக்கு அழைத்துச் செல்வதிலே வெற்றி கண்டுவிட்டார் எனினும், என் மனதிலே, ஐயப்பாடு இருந்தது. செல்வதால் பயன் உண்டா? செய்யத்தக்கனவற்றுக்கு வாய்ப்புக் கிடைக்குமோ? அல்லது அங்குபோய்ச் செயலற்றுக் கிடக்க வேண்டிவருமோ என்ற எண்ணம் மனதைக் குடைந்தபடி இருந்தது. பேசினான் எதை எதையோ. முதல் தடவை என்பதால் சும்மா விட்டார்கள். பேசிவிட்டு ஓடிவந்துவிட்டான். பேச்சுக்குப் பலத்த எதிர்ப்பு. எல்லோரும் எதிர்த்தனர்; தாக்கினர். பேச்சுக்குப் பலன் கிடைக்கவில்லை. திராவிடநாடு பிரிவினையைப் பிய்த்து எறிந்துவிட்டனர். என்றெல்லாம், பலரும் பேசிவருவதையும் எழுதி வருவதையும் பார்த்த பிறகுதான், தம்பி! தருமலிங்கம் என்னைத் தில்லிக்கு அழைத்துக்கொண்டு போனது பயனற்றுப் போக வில்லை, சுவை கிடைக்காமலும் போகவில்லை என்று உணர்ந்து, மகிழ்ச்சியுற்றேன். தில்லிக்குச் சென்று பேசச் சந்தர்ப்பம் கிடைக்காது திரும்ப நேரிட்டால், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது கிடக்கட்டும், என் மனமே மெத்த வேதனைக்காளாகும். பேச வாய்ப்புகிடைத்து, பேசியான பிறகு, அந்தப் பேச்சு கவனிப்பாரற்று, பத்தோடு பதினொன்று ஆக்கப்பட்டு, என்ன பேசினான்? என்று ஒருவர் கேட்க, ஏதோ பேசினான்? என்று அலட்சியமான பதில் கிடைத்து, அந்தப் பேச்சுப்பற்றி, ஒரு விதமான பரபரப்பு எதிரொலி இல்லாமற்போனால், எனக்கு மிகுந்த ஏமாற்றமும், திகைப்பும் ஏற்பட்டுவிடும். என் இயல்புதான் உனக்கு நன்றாகத் தெரியுமே, தம்பி! அங்கு செல்லும் என்னை இங்கிருந்து வாழ்த்தும் நல்லவர்களோ, பாரேன் தில்லிக்குப் போனதும். சிந்துவார் உண்டா அங்கே. கும்பலிலே கோவிந்தா ஆகவேண்டியதுதான். தில்லியில்போய் இங்கு பேசுவதுபோலப் பேசிக்கொண் டிருக்க முடியுமா? அது எப்பேற்பட்ட இடம்? எவ்வளவு பெரியவர்களெல்லாம் அங்கே இருக்கிறார்கள்! ஜாம்பவான்கள் இருக்கிற இடம். அந்த இடத்தைப் பார்த்ததும், பேச்சா வரும்! குளறிவிடுவான் பாருங்கள். இங்கே மேடைக்கு மேடை கத்துகிறானே, திராவிடநாடு திராவிடநாடு என்று எங்கே, தில்லியிலேபோய்ப் பேசச்சொல்லு, பார்ப்போம்! கப்சிப்! வாயைத் திறக்கமுடியாது. சுற்றிவரலாம். சுகம் அனுபவிக்க லாம். கடைவீதிபோய்ச் சாமான் வாங்கலாம் - வேறே என்ன செய்யமுடியும்! தில்லியிலேபோய்ப் பேசினால்கூட இந்தப் பேச்சை யார் கவனிக்கப்போகிறார்கள். கிணற்றிலே கல்விழுந்த மாதிரிதான். ஒருவரும் பொருட்படுத்தமாட்டார்கள். தம்பி! இப்படி எல்லாம், பரந்த அனுபவம் காரணமாகவும், சொந்த அனுபவம் காரணமாகவும், என்பால் உள்ள நிரம்பிய அன்பு காரணமாகவும், பலர் நல்லுரை கூறித்தானே அனுப்பி வைத்தார்கள்! அதுபோல ஆகிவிட்டிருந்தால், இந்நேரம், நாநர்த்தனம் நாராசமேடையிலே நள்ளிரவு வரையிலும் நடந்திருக்குமே. ஆனால், தம்பி! என் மனம் சோர்வு சலிப்பு அடையாத விதமாக நிலைமைகள் வடிவமெடுத்துள்ளன. இராஜ்யசபையிலே நான் பேசிய பேச்சு இன்று, அன்று எழும்பிய ஓசை என்ற அளவில் இல்லை. கடந்த ஒரு திங்களாக மாற்றுக்கட்சிப் பேச்சாளர்களுக்கு அது சுவைமிகு தீனியாகி வருகிறது. கிருஸ்துமஸ் தீவில் அமெரிக்கா அழிவுக் கருவியை பரீட்சை பார்த்ததையும், ஜபருல்லாகான் - கிருஷ்ணமேனன் காஷ்மீர் குறித்து நடாத்திய ஐ. நா. சபை விவாதத்தையும் மொரார்ஜிதேசாயின், புதிய வரிகளின் விளைவுகளைப்பற்றியும் T. T. கிருஷ்ணமாச்சாரியார் துறவறத்தைத் துறப்பதுபற்றியும் பேசிக்கொண்டிருக்கவேண்டிய நேரத்தில், ஒவ்வொரு நாளும் மாற்றுக் கட்சிகளின் மேடையில், கேட்கப்படும் ஒரே பிரச்சினை. இராஜ்ய சபையிலே பேசியபோது. . . என்பதுதான் இன்னும் ஓயவில்லை. ஓய்ந்துவிட்டால், எனக்கே மனநிம்மதி இருக்காது. ஏசிக்கொண்டிருப்பவர்கள், தங்கள் மன எரிச்சலைப் போக்கிக்கொள்ள இதுதான் வழி என்று நினைக்கிறார்கள். அப்படிதான் தோன்றும். இயல்பு அது. சொறி பிடித்தவனுக்கு எப்படி கீறிக்கொள்ளக் கீறிக்கொள்ள, நிம்மதியாக இருப்பது போலத் தெரிந்து, பிறகு எரிச்சல் அதிகமாகுமோ, அதுபோலத் தான் அதிலும் பொச்சரிப்புக்கொண்ட மனமாகிவிட்டால், அடே அப்பா, குரங்குப் புண் கதைதான். விடாமல் தாக்கவேண்டும், ஒவ்வொரு நாளும் தாக்க வேண்டும், தடித்த வார்த்தைகளை உமிழவேண்டும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசவேண்டும், எல்லாம் எனக்குத் தெரியும் என்ற “போஸ்’ கொடுத்துப் பேசவேண்டும், என்ற முறையில்”இராஜ்யசபை‘ப் பேச்சைப்பற்றி - இவர்கள் இங்கு பேசப்பேச, பொதுமக்கள் மனநிலை என்ன ஆகிறது தெரியுமா, தம்பி! ஒரு நாள் அவன் பேசினான், எல்லோரும் கூடிக்கொண்டு ஓயாமல் அதுபற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்களே, காரணம் என்ன? அந்த ஒருநாள் பேச்சு, இவ்வளவு பேர்களையும், உலுக்கி விட்டிருக்கிறதுபோலும், குலுக்கிவிட்டிருக்கிறதுபோலும். இல்லையென்றால், இதற்காக இவர்கள் இவ்வளவு "மல்லு’ கட்டிக்கொண்டு மாரடிப்பானேன் என்றுதான் பொதுமக்கள் கருதுகிறார்கள். அதிலும், இன்று எரிச்சலால் இழிமொழி பேசும் பேர்வழிகள், இந்தத் திருத்தொண்டினை இப்போதுதான் முதல் முறையாகச் செய்கிறார்கள் என்றாலாவது, கேட்பவர்களுக்குத் திகைப்பு ஏற்படும் - இதென்ன எல்லோரும் எதிர்த்துப் பேசுகிறார்களே என்று. இது இவர்கள் நமக்குப் படைக்கும் நித்திய நைவேத்தியம்! - எனவே இப்போது ஏசிப் பேசுகிறவர்கள், இப்போது இதை வைத்துக்கொண்டு ஏசுகிறார்கள் - வழக்கமான வேலை - செய்து தீரவேண்டிய வேலை!! என்று எண்ணுகிறார்கள். அணுகுண்டு வெடித்தார்களாம் என்று முதல்தடவை கேள்விப்பட்டபோது, உலகில் பலநாள், அதுபற்றியேதானே பேசிக்கொண்டிருந்தார்கள் - அவரவர்களின் மனப்பக்குவம், விருப்பு வெறுப்பு ஆகியவற்றுக்கு ஏற்ற முறையில். உலகைச் சுற்றும் செயற்கை கோள் கிளம்பிற்று - எல்லோரும் அதுபற்றியே விடாமல் பேசலாயினர். நாய்க்குட்டியை வானவெளிக்கு அனுப்பினர் - எல்லோரும் அதுபற்றியே பேசலாயினர். மனிதர்களே வானவெளிப் பயணம் செய்தனர் - எங்கும் எவரும் அதுபற்றியே பேசலாயினர். ஆதரித்தோ எதிர்த்தோ, விளங்கிக்கொண்டோ விளங்கிக் கொள்ளாமலோ, இவைபற்றியே அனைவரும் பேசினர் அல்லவா. அதுபோல, மே முதல்நாள் இராஜ்யசபையில் நான் பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி தரத்தக்க, அலசிப் பார்க்கத்தக்க, தாக்கித் தீர்க்கத்தக்க, விளக்கிக் காட்டத் தக்க பிரச்சினையாக்கப்பட்டுவிட்டிருக்கிறதே, இதனைவிடச் சான்று வேறு வேண்டுமா, நாம் கேட்கும் “திராவிடநாடு’ கொள்கையின் பெருமையினை விளக்க. நன்றி கூறிக் கொள்கிறேன், மாற்றார்களின் மகத்தான தொண்டு தரும் பயனுக்காக. நான், உள்ளபடி, இவ்வளவு”கவனிப்பு’ என் பேச்சுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. புதிய அரசியல் தத்துவப் பிரசவ வேதனையைக்கூட மறந்துவிட்டு, என் பேச்சிலே உள்ள எழுத்துக்கள், புள்ளிகள், வளைவுகள் ஆகியவற்றை ஆராய்ந்து அதன்மூலம் கிடைத்த "கண்டுபிடிப்பு’ காணீர் என்று, மக்களிடம் காட்டுவோரும்; எஃகுத் தொழிற் சாலை சேலத்தில் எப்போது துவக்கப்படும் என்ற பேச்சு, தமது இலாகா என்றாலும், அதனைக்கூட இரண்டாவது வரிசைக்கு விட்டுவிட்டு, என் பேச்சுப்பற்றிய தமது ஆழ்ந்த கருத்துரையை அள்ளித்தந்து, எம்மால் எளிதாக முடியக்கூடியது இது, எஃகுத் தொழிற்கூடம் அல்ல, என்பதனை கூறாமற் கூறுவோரும், புதுவரி எதிர்ப்பு, விலைவாசிக் குறைப்புப் போன்றவைகளைக் கவனிக்காதது ஏன் என்று மக்கள் தம்மைப் பார்த்துக் கேட்காதபடி பாதுகாப்புத் தேடிக்கொள்ளச் சிறந்தவழி, என் பேச்சுப்பற்றி ஏசிப்பேசுவதுதான் என்ற யூகமுடன் பேசிக் கிடப்போரும், ஆமாம் தம்பி! இப்படிப்பட்ட வகையினர் அடைந்துள்ள அதிர்ச்சியைக் காணும்போதுதான், பரவா யில்லை, இராஜ்ய சபை சென்று பேசியது, நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது - பிரச்சினைக்குச் சூடும் ஏறுகிறது சுவையும் கூடுகிறது என்ற எண்ணம் உறுதிப்பட்டது. "திராவிடநாடு’ திட்டம் குறித்து நாம் பேசத் தொடங்கியதி லிருந்து இதுவரை, இந்த அளவு ஒரே நேரத்தில், இந்திய துணைக் கண்டத்திலுள்ள எல்லா இதழ்களும், இங்குள்ள எல்லா மாற்றுக் கட்சியினரும், ஒருசேர, திராவிடநாடு பிரச்சினை குறித்து எழுத, பேச, ஆராய, அலச, தாக்க, முன்வந்தது இல்லை என்பதை எண்ணும்போது, பிரச்சினை எத்தனை பெரிய அளவு ஒரேநாளில் வளர்ந்துவிட்டது என்பது புரிகிறது; மனம் களிநடமிடுகிறது. இந்து மெயில் சுதேசமித்திரன் எக்ஸ்பிரஸ் தினமணி டைம்ஸ் ஆப் இந்தியா ஸ்டேட்மென் இந்துஸ்தான் டைம்ஸ் போ, தம்பி! எத்தனையென்று பெயர்களைச் சொல்வது, எல்லா இதழ்களிலும், "திராவிடநாடு’தானே! கண்டனம், கிண்டல், படம், தலையங்கம், கேள்வி, இப்படிப் பலப்பல. நானறிந்த வரையில் சமீபகாலத்தில், இத்தனை பெரிய பரபரப்பு, வேறு எந்தப் பிரச்சினைக்கும் கிடைத்ததில்லை. ஆயிரம் தூற்றட்டும் தம்பி! அவர்கள், நமது பிரச்சினையை இந்த அளவு, வடிவம்கொள்ளத் துணை புரிந்ததற்கு, நன்றி கூறத்தான்வேண்டும். ஆழ்ந்த நம்பிக்கையுடனும், தூய நோக்குடனும், நாம் ஆற்றிவரும் பணி, ஆபாசப்பேச்சு, இழிமொழி, பழிச்சொல், தாக்குதல் ஆகியவைகளால் பாழ்படாது - அலட்சியப் படுத்தி னால்தான், பாழ்பட்டுவிடும். நமக்கு அந்தப் பயம் எழவிடாமல் செய்துள்ளவர்கள் மாற்றார்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டாலும், தம்மையும் அறியாமல் நமக்கு உற்ற நண்பர்களாகின்றனர். நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன். நான் திராவிடன் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். திராவிடக் கலாசாரம் தனித்தன்மை வாய்ந்தது. உலகுக்கு அந்தக் கலாசாரத்தை எமது பங்காகத் தர விழைகிறோம். பிரிவினை கேட்கும் நாங்கள் மற்றவர்களைப் பகைக்கவில்லை. திராவிடநாடு பிரிவினையால் பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட பயங்கர விளைவுகள் ஏற்பட்டுவிடாது. தம்பி! இந்தக் கருத்துக்களை எடுத்துக்கூறும் முதல் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நான் என் வாழ்நாளிலே கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன். அங்கு அவ்விதம் பேசியது மிகப்பெரிய, அதிர்ச்சி தரத்தக்கது என்பதால்தான், ஒரு திங்களுக்கு மேலாக ஒவ்வொரு அரசியல்வாதியும் இதுகுறித்தே பேசிக்கொண்டுள்ளனர். திராவிடநாடு குறித்து நான் அங்கு பேசினேன் என்றால், அந்தப் பிரச்சினை குறித்து ஒரு விவாதம் இராஜ்யசபையில் ஏற்பாடாயிற்று என்று பொருள் அல்ல. குடிஅரசுத் தலைவர், தமது உரையிலே, நாட்டு நிலை, ஆட்சி நிலை, மக்களாட்சி முறையின் நிலைமை, தேசிய ஒற்றுமைப் பிரச்சினை, சமதர்மம் போன்றவைபற்றித் தமது கருத்தினைத் தெரிவித்திருந்தார்; அதையொட்டி உறுப்பினர்கள் தமது கருத்துக்களை எடுத்துக்கூறும் கட்டம் அது. குடிஅரசுத் தலைவர் உரையிலே, நான் கண்ட மூன்று அடிப்படைப் பிரச்சினைகள், மக்களாட்சி முறை சமதர்ம திட்டம் தேசிய ஒற்றுமை என்பனவாகும். இம்மூன்று பிரச்சினைகள் குறித்தும், என் கருத்துக்களை எடுத்துக் கூறுவதே, என் பேச்சின் அமைப்பாக்கிக்கொண்டேன். குடிஅரசுத் தலைவர் தமது உரையில் தேசிய ஒற்றுமை குறித்துப் பேசியிராவிட்டால், நான், திராவிடநாடு பிரச்சினை பற்றி வலிந்து இணைத்துத்தான் பேசியிருக்க நேரிட்டிருக்கும். பொருத்தம்தானா என்று பலர் கேட்க நேரிட்டிருக்கும். எனக்கும், வேண்டுமென்றே புகுத்திப் பேசுவது, வலிந்து இணைத்துப் பேசுவது பிடிப்பதில்லை. ஆனால் குடிஅரசுத் தலைவர், தேசிய ஒற்றுமைபற்றிக் குறிப்பிட்டிருந்ததால், அவர் கருதும் தேசியத்தைப்பற்றியும், நாம் கோரும் திராவிடப் பிரிவினை பற்றியும் எடுத்துக்கூறப் பொருத்தம் கிடைத்தது. இந்த வாய்ப்பு, நான் இரயில்வே வரவு செலவு திட்டம் குறித்தோ, நீர்ப்பாசனம் பற்றியோ, எஃகுத் தொழிற்சாலை பற்றியோ பேச முற்பட்டிருந்தால் கிடைக்காது. அந்த நேரங்களில், தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது பற்றிப் பேசலாம், ஓரவஞ்சனை ஆகாது என்பதுபற்றிப் பேசலாம், அதனுடைய தொடர்ச்சியாக வலிய இழுத்துவந்து ஒட்ட வைத்துக்கொள்வதுபோல, இப்படியெல்லாம் செய்தால், நாங்கள் பிரிந்துபோய் விடுவோம். இப்படியெல்லாம் செய்வதால்தான் நாங்கள் பிரிவினை கேட்கிறோம். நாங்கள் பிரிந்து தனியாக இருந்தால் இந்தச் சங்கடமும் சிக்கலும் எமக்கு ஏற்படாது. என்று இந்த முறையிலே; சற்றுச் சுற்றிவளைத்துப் பேசவேண்டி ஏற்பட்டிருக்கும். நல்லவேளையாகக் குடிஅரசுத் தலைவர் தமது உரையிலே, "தேசியம்’பற்றிப் பேசினார் - எனவே, திராவிடம்பற்றி எடுத்துரைக்க எனக்குப் பொருத்தமான வாய்ப்புக் கிடைத்தது. வேறு ஏதேனும் துறைபற்றிய பிரச்சினைமீது பேசும்போது வலியத் திராவிடநாடு பிரிவினைபற்றிப் பேசினால், பொருத்த மற்ற பேச்சு என்று அவைத் தலைவரேகூடத் தடுத்து நிறுத்திவிட முடியும். இவைகளை எண்ணிப் பார்த்துத்தான், முதலில் இம்முறை பேசத் தேவையில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த நான், குடிஅரசுத் தலைவர் உரைமீது பேசினால்தான், பொருத்தமான முறையில், திராவிடநாடுபற்றிப் பேச வசதியாக இருக்கும் என்று முடிவுசெய்து, பேசும் வாய்ப்புக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். மே முதல் நாள் காலை பேசும் வாய்ப்புத் தரப்பட்டிருக் கிறது என்று எனக்கு அறிவிக்கப்பட்டது. முன்னாள் இரவு, மாடியில் வெட்டவெளியில் படுத்தபடி, நாம் எங்கிருந்து புறப்பட்டு எங்கு வந்திருக்கிறோம், எங்கெங் கெல்லாம் பேசியிருக்கிறோம், நாளை எங்கு பேசப்போகிறோம், இங்கு திராவிடநாடுபற்றிப் பேசும் வாய்ப்புப் பெறும் அளவு கழகம் பதின்மூன்றே ஆண்டுகளிலே வளர்ந்திருக்கிறதல்லவா? என்றெல்லாம், எண்ணியபடி படுத்துக்கிடந்தேன். மேஜைமீது பல புத்தகங்கள், விளக்கொளி பளிச்சென்று; ஆனால் படிக்கக்கூடத் தோன்றவில்லை, நினைத்து நினைத்து மகிழத்தான் தோன்றிற்று. இத்தனை வளர்ச்சிக்கும் காரணமாக உள்ள நீயோ, நெடுந் தொலைவில். நான் சாம்ராஜ்யங்களின் சவக்குழிகள் நிரம்பிய புதுதில்லை நகரில். காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தின் அடித்தளம் என்று கூறத்தக்க பாரத ஒற்றுமை எனும் ஏற்பாட்டுக்கு எதிர்ப்பானது என்று கருதுவோரால், மிகப் பலமாகத் தாக்கப் பட்டுவரும், நாட்டுப் பிரிவினைபற்றி, நாளை அரசு அவையில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது குறித்த எண்ணத்தை அணைத்த படி உறங்கலானேன். வடக்கு வீதியில் 116ஆம் எண் உள்ள கட்டிட மாடியில் நான் படுத்திருக்கிறேன். எதிர்ப்புற வரிசையில் மனோகரனும், இராஜாராமும், சிவசங்கரனும், செழியனும், தெற்கு வீதியில், ஆரூர் முத்து, கடலூர் இராமபத்திரன். வடக்கு வீதி 116ஆம் எண் கட்டிடம். தருமலிங்கத்தின் வீடு. இரவு நெடுநேரமாகியும் புழுக்கம் குறையவில்லை. தில்வெயிலின் கொடுமையைவிட, அதன் தொடர்பாகவும் விளைவாகவும் கிளம்பும் வறட்சி உண்டே, அது எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. தமிழகத்தைவிட்டுக் கிளம்பிப் பதினைந்து நாட்களுக்கு மேலாகிவிட்டன - என் எண்ணம் அவ்வளவும் தமிழகத்திலே நமது கழகப்பணி எந்த நிலையில் இருக்கிறதோ என்பதுபற்றியேதான். தொடர்ந்து பதினைந்து நாட்கள் (சிறையில் கிடக்கும் போது தவிர) இயக்கப்பணிக்காகத் தோழர்களிடம் தொடர்பு கொள்ளும் காரியமாற்றாது இருந்து பழக்கம் இல்லை; பிடிக்கவும் இல்லை. தம்பி கருணாநிதிக்கு எழுதிய கடிதத்திலே இதைக் குறிப்பிட்டிருந்தேன். பேசும் வாய்ப்பு கிடைத்தால் பேசிவிட்டு உடனே ஊர் திரும்புகிறேன் என்று எழுதினேன். அதுபோலவே, மே முதல் நாள் பேசியானதும் புறப்படத் திட்டமிட்டுக் கருணாநிதிக்குத் தெரிவித்தேன் - மூன்றாம் தேதி கூட்ட ஏற்பாடும் தில்லியிலிருந்தபடியே செய்யப்பட்டது - ஆறாம் நாள் மதுரை, ஏழாம் நாள் திருப்பத்தூர் நிகழ்ச்சிகள், தில்லி போகுமுன்பே ஏற்பாடு செய்யப்பட்டவைகள். இவை பற்றிய எண்ணம் எனக்கு மேலோங்கியபடி இருந்தது. ஆனால் இரயிலில் இடம் கிடைக்கவில்லை; விமானத்திலும் நாலாம் தேதி வரையில் இடம் கிடையாது என்று ஆகிவிட்டது; முதல் நாள் இரவு விமானத்திலேதான் இடம் கிடைக்கும் என்ற செய்தி விமான நிலையத்தார் அனுப்பினர். அதுவும், வருவதாக இருப்பவர்களில் எவரேனும் வரவில்லை என்றால்! இந்த என் சங்கடத்தைக் கண்ட, கம்யூனிஸ்ட் நண்பர் இராமமூர்த்தி தனக்கென்று முதல்நாள் இரவு விமானத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், தான் இரயிலில் போகப் போவதால், அந்த இடத்தை எனக்குத் தரலாம் என்று விமான நிலையத்தாருக்குக் கடிதம் கொடுப்பதாகவும் தெரிவித்துக் கடிதமும் கொடுத்தார். நான் இராஜ்ய சபையில் பேசும்போது, அந்தக் கடிதம் என் சட்டைப் பையில் இருந்தது. மக்கள் சபையாகட்டும் இராஜ்ய சபையாகட்டும், அல்லது சட்டசபைகளாகட்டும், வழக்கு மன்றங்கள் அல்ல. அங்கு பலரும் வழக்கினை எடுத்துரைப்பதுபோலத் தத்தமக்குச் சரியென்றுபட்ட கருத்துகளை ஒழுங்கு முறைப்படி எடுத்துக் கூறுவர். ஆனால் வாதங்களைக் கேட்டு இருதரப்புக் கருத்துக்களையும் கேட்டுத் தீர்ப்பு அளிக்க ஒருவர் அங்கு கிடையாது. தீர்ப்பு என்று எதையாவது கூறுவது என்றால், ஓட்டெடுப் பிணைத்தான் குறிப்பிடலாம்; அந்த ஓட்டெடுப்பு, கட்சிகளின் எண்ணிக்கை பலத்தைப் பொறுத்தது என்பது அரசியல் அரிச்சுவடி - விளக்கத் தேவையில்லை. மக்கள் சபையில் நமக்கு 7 ஓட்டுகள். இராஜ்ய சபையிலே ஒன்று!! ஏன் இதனைக் கூறுகிறேன் என்றால், சிலர் இங்கு, நான் ஏதோ தில்லிக்கு வழக்காடச் சென்று, வழக்காடி, என் வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல், வழக்குத் தோற்றுவிட்டதுபோல ஒரு பேச்சுப் பேசுகிறார்களே, அது எவ்வளவு பொருளற்றது என்பதை எடுத்துக் காட்டத்தான். சட்டமன்றங்களிலே எடுத்துப் பேசும் போக்கு, அளிக்கப் படும் ஆதாரம், காட்டப்படும் காரணம், இவைகளால், சட்டமன்றத்திலே மட்டுமல்லாமல், பொது மக்களிடம் எத்தகைய எண்ணம் ஏற்படுகிறது என்பதுதான் முக்கியமானது. எந்தச் சட்டமன்றத்திலும் அநேகமாக, ஆளுங்கட்சி கொண்டுள்ள கருத்துக்கு மாறான கருத்தினையோ, மேற் கொண்டுள்ள திட்டத்துக்கு மாறான திட்டத்தையோ, எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடித் தனித்திறமை காட்டி எதிர்த்துப் பேசினாலும், ஓட்டு எடுப்பு நடக்கும்போது தீர்ப்பு ஆளுங்கட்சிக்குச் சாதகமாகத்தான் அமையும்; ஆளுங்கட்சிக்கு மாறாகத் தீர்ப்புக் கிடைத்தால், அநேகமாக ஆட்சி மாறவேண்டி நேரிடும். ஒவ்வொரு சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் ஆளுங் கட்சிக்கு எதிர்ப்பான முறையில் வாதிடும்போது, நிச்சயம் தீர்ப்புத் தமக்குச் சாதகமாகக் கிடைக்காது என்று முன்கூட்டியே தெரிந்துதான் பேசுகின்றன; நடவடிக்கைகளிலே கலந்து கொள்கின்றன. இதுதான் முறை என்பது தெரிந்திருக்கும்போது, அண்ணாதுரையின் பேச்சு ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஏகப்பட்ட எதிர்ப்புக் கிளம்பிற்று, கோரிக்கை நிராகரிக்கப் பட்டுவிட்டது, வழக்காடித் தோற்றுப்போனான் என்றெல்லாம் சிலர் பேசுவதும், எழுதுவதும், அவர்தம், சிறுமதியைக் காட்டுகிறது என்று கூறுவதற்கில்லை. அவர்களிலே பலர் மெத்தப் படித்தவர்கள்; ஆனால், மக்கள் அப்பாவிகள் என்று அவர்கள் எண்ணிக்கொள்வதாலேயே, அவ்விதம் பேசுகிறார்கள், அவர்தம் போக்குக்கு அதுதான் காரணம். தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் இராஜ்யசபை நடவடிக்கைகளிலே, ஒரு நிகழ்ச்சியாக, என் பேச்சை அவர்கள் கொள்ளாமல், திராவிடநாடு உண்டா இல்லையா, இரண்டில் ஒன்று கூறிவிடுங்கள் என்று கேட்பதற்காகக் கூட்டப்பட்ட, தனி அவையில், நான் கடைசி முறையாகப் பேசிவிட்டுக் காரியம் பலிக்கவில்லை என்று கைபிசைந்துகொண்டும் கண்களைக் கசக்கிக்கொண்டும் வீடு திரும்பிவிட்டதுபோலச் சித்தரித்துக் காட்டி, இராஜ்ய சபையிலே எழுப்பப்பட்ட பிரச்சினை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள தமது கட்சித் தோழர்களுக்கு, மிட்டாய் தந்து பார்க்கிறார்கள். நடைபெற்றது, குடிஅரசுத் தலைவர் உரைமீது விவாதம். அதிலே நான் என் கருத்தினைக் கூறினேன், திராவிடநாடு பிரிவினை ஏற்பட்டால்தான் உண்மையான தேசியம் நிலைக்கும் என்று எடுத்துரைத்தேன் - அவையினர் கேட்டனர் - அவர் களிலே நான் தவிர மற்றவர்கள் நாட்டுப் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத கட்சியினர் - எனவே என் பேச்சை மறுத்துப் பேசித் தமது கட்சிக் கொள்கைகளை விளக்கினர். பிரிவினை கிடையாது பிரிவினை கேட்க இவன் யார்? பிரிவினைப் பேச்சு ஆபத்தானது. பிரிவினைப் பேச்சு சட்டவிரோதமானது. பிரிவினை பேசுவதைச் சட்டவிரோதமாக்கவேண்டும். என்று இப்படியெல்லாம் பேசினார்கள். இவர்களில் ஒருவர்கூட, ஏற்கெனவே இந்தக் கருத்தைக் கொள்ளாமல், இப்படியா அப்படியா என்று இருந்து வருபவர்கள் அல்ல. நாடறிந்தவர்கள் - நமது கொள்கையை மறுப்பவர்கள். அவர்கள் என்ன பதில் அளிப்பார்கள் என்பது அவர்கள் உள்ள கட்சிகள் கொண்டுள்ள கொள்கைகளிலிருந்தே விளக்கமாகிறது. எவருக்கும், எல்லாம் அகில இந்தியக் கட்சிகள்! நிலைமை இது. இங்கு சிலர் பேசிக்கொள்வதோ, அண்ணாதுரை பேச்சை நிராகரித்துவிட்டனர் என்பது! திராவிடநாடு தருக! என்று நான் கேட்டதும், அனைவரும் எழுந்திருந்து, தந்தோம்! தந்தோம்! என்று கூறிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தா நான் பேசினேன்! - அவ்வளவு ஏமாளியா நான்!! இராஜ்யசபை அமைந்த நாள்தொட்டு, அங்கு திராவிட நாடு பிரிவினைப் பிரச்சினை எழுப்பட்டதில்லை. நாம் எழுப்பு வோம். நானிலம், இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதனை உணரட்டும், என்பதல்லவா என் நோக்கம். அதிலே தோல்வி கண்டுவிட்டோமா? இல்லையே!! நாடே கொதிக்கிறதே! நாள் தோறும் மேடை அதிரப் பேசுகிறார்களே!! நான் எதிர்பார்த்தது எதுவோ, அது, நான் கிடைக்கும் என்று கணக்கிட்டதைவிட அதிக அளவிலேயே கிடைத்து விட்டது. என் பேச்சுக்குப் பிறகு இராஜ்யசபையிலே நடைபெற்ற விவாதம், குடிஅரசுத் தலைவர் உரைமீது நடப்பதாகத் தோன்ற வில்லை; அண்ணாதுரை பேச்சுமீது எழுப்பிய விவாதமாகத் தோன்றலாயிற்று என்று இந்து இதழ் எழுதிற்று. இருட்டடிப்புக்கு ஆளாகிக் கிடந்த பிரச்சினை இன்று எங்கும் கவனிக்கப்படும் பிரச்சினையாகிவிட்டது. வெட்டவெளியிலே பேசப்படும் பிரச்சினை சட்ட சபைக்கும் வந்துவிட்டதா? என்று முன்பு அங்கலாய்த்துக் கொண்டவர்கள் சட்டசபையில் பேசப்பட்டுவந்த பிரச்சினை இராஜ்யசபைக்கும் வந்துவிட்டதே என்று எண்ணுகிறார்கள் - ஏக்கத்துடன் - எரிச்சலுடன். அதுவும் எப்போது? இந்தப் பொதுத்தேர்தலிலே, கழகம் அழிந்துபோகும், நாதியற்றுப் போய்விடும், பிறகு பிரிவினைச் சக்தியை ஒழிக்கத் தனிமுயற்சி எடுக்கவேண்டிய தேவையே இராது என்று பண்டித நேருவுக்கு, மதுரையில் காமராசர் வாக்குறுதி தந்த பிறகு. திராவிட முன்னேற்றக் கழகமே ஒழிந்துவிடும் - ஒழித்துக் கட்டப்போகிறோம் என்று முழக்கமிட்டார் தமிழக முதலமைச்சர். அதற்குப் பிறகு, திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கம் இராஜ்யசபையிலே எழுப்பப்பட்டிருக்கிறது. பொருள் விளங்குகிறதா, தம்பி? காங்கிரசாருக்கு நன்றாக விளங்குகிறது. அதனால்தான் ஆத்திரம் பொங்கி வழிகிறது. பணபலமோ, பத்திரிகை பலமோ அற்ற ஒரு கட்சி தேசியத் தாட்கள் அவ்வளவும் தாக்கியபடி உள்ளன அந்தக் கட்சியை. அந்தக் கட்சியின் தலைவர்களை, கூத்தாடிகள் கூவிக் கிடப்போர் கூலிகள் - காலிகள் பணக்காரனுக்கு கையாட்கள் பார்ப்பனருக்குத் தாசர்கள் பகற்கொள்ளைக்காரர்கள் - பண்பற்றவர்கள் அப்பாவிகள் - அக்ரமம் செய்வோர் ஒன்றை ஒன்று அடித்துக்கொள்ளும் பேர்வழிகள் என்று கேட்கக் கூசிடும் இழிமொழிகளால் தாக்கியபடி இருக் கிறோம். வாழ்த்தி வணங்கினவர்களைக்கொண்டே வசைபாட வைத்திருக்கிறோம். கூடிக் குலாவினவர்களே குழிபறிக்கக் கண்டோம். "அண்ணா ஒரு தனி ஆள் அல்ல, அவர் ஒரு அமைப்பு’ என்று அர்ச்சித்து ஆலவட்டம் சுற்றி ஆரத்தி எடுத்தவர்களே, அவனுக்கு அரசியலே தெரியாதே, முதுகெலும்பே கிடையாதே என்றெல்லாம் ஏசிடும் நிலை ஏற்பட்டது. கழகம் கலகலத்தது, வீரனும் விவேகியும், தீரனும், சூரனும் கழகத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று ஓராண்டுக் காலத்துக்கு மேலாகச் செய்திகள் கிளம்பியவண்ணம் இருந்தன. இப்படி இடிபட்டபடி இருந்துவந்த கழகம், எப்படி ஐயா! திராவிடநாடு பற்றிய முழக்கத்தை இராஜ்யசபையில் எழுப்பும் அளவுக்கு வளர்ந்துவிட முடிந்தது என்ற கேள்வி பிறக்கும்போது, நமது கழகம் அழிந்துபோகும் என்று ஆரூடம் கணித்தவர்கள் முகத்தில், அசடு வழியாமலா இருக்கும்; ஆர்ப்பரித்துத் தமது எரிச்சலைக் காட்டிக்கொள்ளாமலா இருப்பார்கள். வால்ட் டிசனியின் கருத்தமைத்த சில கார்ட்டூன் படங் களிலே பார்க்கலாம் தம்பி, "கோழியைக் கொன்று தின்றிட நரி கிளம்பும்; தந்திரம், வஞ்சகம் நரிக்கு நிரம்ப அல்லவா? கோழி சிக்கிக்கொண்டது என்று நாம் நினைக்கும் விதமான நிலைமை ஏற்பட்டுவிடும், ஆனால் திடீரென்று கோழிக்காக வைத்த பொறியிலே நரி சிக்கிக்கொள்ளும், கோழி தன் குஞ்சுகளுடன் கெம்பீரமாகச் செல்லும்.’ காங்கிரசும் கழகத்தை ஒழித்துக்கட்ட, ஓயாமல் திட்ட மிட்டுத் திட்டமிட்டு, கழகம் அழிந்துபோய்விடும் என்று பலரும் எண்ணும் நிலை பிறந்தது. பிறகோ நிலைமாறி, கழகத்தின் செல்வாக்கு வளர்ந்து, காங்கிரசின் முகம் கருத்து விட்ட காட்சி காண்கிறோம். மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசும் முறையிலே, காங்கிரஸ் தலைவர்கள் பேசிக்கொள்ளலாமே தவிர, எந்தக் கழகத்தை ஒழிக்கக் காங்கிரஸ் கடுமையாக வேலை செய்ததோ, அந்தக் கழகத்தின் முழக்கம் கல்லறை மைதானத்தில் தொடங்கி, இப்போது ஏகாதிபத்தியங்களில் கல்லறைகள் நிரம்பிக் கிடக்கும் தில்லியில் அரசு அவையில் எழுப்பப்பட்டாகிவிட்டது. இது துடுக்குத்தனம் - தேசத் துரோகம் - இதற்கு என்ன தண்டனை தெரியுமா? என்று உருட்டி மிரட்டிப் பேசிப்பார்க் கிறார்கள், ஊராள்கிறோம் என்ற துணிவால், அவர்கட் கெல்லாம் நான் ஒன்று கூறிக்கொள்வேன், தம்பி! விடுதலைக் காகப் போரிடக்கிளம்பும் எவரும் - போரிடக்கிளம்புவேன் என்று முழக்கமிடும் போலிகள் அல்ல - வாய்க்கரிசி போட்டுக் கொண்டுதான், அந்தக் காரியத்தில் ஈடுபடுகிறார்கள். எனவே, என்ன நடக்கும் தெரியுமா? என்று மிரட்டுவதிலே பொருள் இல்லை. முத்துக்குளிப்போனிடம் சென்று ஐயோ! தண்ணீருக்குள் இறங்கினால், நீர் கோர்த்துக்கொள்ளுமே, காய்ச்சல் வருமே என்று கூறும் அப்பாவிபோலவும், வேட்டைக்குக் கிளம்புவோ னிடம் சென்று, "அடவிக்கா செல்கிறாய், முள் தைக்குமே காலில்’ என்று பேசிடும் பேதைபோலவும், விடுதலைப்பெறப் பாடுபடுவது என்ற உறுதி கொண்டுவிட்டவர்களிடம், தண்டனை என்ன தரப்படும் தெரியுமா என்றா இந்த மேதைகள் பேசுவது? திடுக்கிட்டுப்போன நிலையில், பாவம், அவர்கள் சூடாகப் பேசுகிறார்கள். அந்தச் சூடு சுவையும் தருகிறது - நமக்கு - ஏனெனில் நமது வளர்ச்சியை மாற்றார்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பது அவர்களின் சூடான பேச்சினால் விளக்கமாக்கப் படுகிறதல்லவா, அதனால். அன்புள்ள அண்ணாதுரை 27-5-1962 சூடும் சுவையும் (2) தில்லியில் மாற்றார் காட்டிய அன்பு - திராவிட நாடு பற்றி மாற்றார். தம்பி! விமானம் சென்றுகொண்டிருந்தபோது, எனக்கு ஒரு எண்ணம், நாட்டுப் பிரிவினை கேட்பவன் என்ற காரணம் காட்டி, என்னைத் தில்லியில் வெறுப்புடன் அனைவரும் நடத்து வார்களோ என்னவோ என்று. கனல் கக்கும் பார்வை, கடுகடுப் பான பேச்சு, ஆணவம் நெளியும் போக்கு இவைகளால் என்னைத் தாக்குவார்கள் என்று எண்ணிக்கொண்டு, அத்தகைய நிலைக்கு உட்பட என்னை நான் தயாராக்கிக்கொண்டேன். தில்லி மக்கள் சபையில் ஐந்நூற்றுக்கு மேற்பட்டவர் உள்ளனர். நமது கழகத்தவர், எழுவர். தில்லி இராஜ்யசபையில் இருநூற்று அறுபதுக்கு மேற்பட்டவர் உறுப்பினர் - கழகத்துக்காக நான் ஒருவன். எதையேனும் நான் அந்த அவையில் கொண்டு சென்றால், ஆதரிக்கிறேன் என்றுகூற, துணைத்தோழர், கழகத்தவர் இல்லை. மிகப்பெரிய எண்ணிக்கை வலிவுள்ள கட்சி அரணளிக்க அமர்ந்துகொண்டு, ஆணவம் கக்கும் "மாவீரர்கள்’ விரல்விட்டு எண்ணத்தக்க எண்ணிக்கையுள்ள முகாமில் இருக்க நேரிட்டால், எத்துணை வீரமும் நெஞ்சுரமும் காட்டுவர் என்பது எனக்குத் தெரியும் - நெருங்கிப்பழகி அவர்களின் இயல்பினை மிக நன்றாக அறிந்திருக்கிறேன். "நாங்களென்ன விவரமறியாதவர்களா, வம்பிலே போய் மாட்டிக்கொள்ள. குறைவான எண்ணிக்கையுள்ளதாக ஒரு கட்சி இருக்கும்போது, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலே ஒரு கட்சி நிற்கும்போது, எப்புறமிருந்தும் ஏசலும் தூற்றலும், தாக்குதலும் கிளம்பிவந்து மேலே வீழ்கிறபோது, நாங்கள் ஏன், அந்த இடர்ப்பாடுமிக்க இடத்தில் இருக்கப்போகிறோம் என்று பேசுவார்கள் - புத்திசாலிகள் அவர்கள் - கீழே வீழ்ந்த பழத்தைப் பொறுக்கி எடுத்து, மண்ணை நீக்கி வாயில்போட்டுக் குதப்பிச் சுவைபெறுபவர்கள் - அல்லது, வளையில் பதுங்கிக்கொண் டிருந்துவிட்டு, ஆள் அரவம் இல்லா வேளை பார்த்து வெளியே வந்து, முற்றிய கதிரைக் கடித்துத் தின்னும் காட்டெலிகள் - புரிகிறது.’’ தம்பி! நமது கழகத்திலே இன்று இடம்பெற்றுப் பணியாற்றுவது, பெருங்காற்றடித்து மரங்கள் வேருடன் கீழே வீழும் வேளையில், இருட்டாகிப் போனதன் காரணமாகத் தொலைவிலே காணப்படுவது கற்குவியலா காட்டு எருமையா என்று சரியாகத் தெரியாத நிலையில், பேய்க்காற்றடிப்பதால் கிளம்பிடும் ஓசை, காற்றொலியா அல்லது காட்டுமிருகத்தின் உறுமலா என்று விளங்காத நிலையில், தனியனாக ஒருவன், மூலிகை தேடிச்செல்வதற்கு ஒப்பாகும். இன்று காங்கிரஸ் கட்சியில் இடம்பெற்று, இன்பம் பெற்று இறுமாந்து கிடப்பவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் களுக்குமேல், அக்கட்சி, கடும்போரினை முடித்துக்கொண்டு காடு கடந்து நாடு ஆளும் நிலைபெற்ற பிறகு, வந்து புகுந்தவர்கள். புகுந்த இடத்துக்கு உள்ள வனப்பும் வலிவும் கண்டதால் ஏற்பட்ட உணர்ச்சி, அவர்களின் கூனினை நிமிர்த்திற்று, குளறலைக் கர்ஜனையாக்கிற்று! வீரம் பேசுகிறார்கள்!! காங்கிரஸ் கட்சி காடுமேடு சுற்றிக் கருக்கலில் சிக்கி, கண்டவர்களால் தாக்கப்பட்டு வடுபல கொண்டதாக இருந்த நாட்களிலே, இவர்கள், வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசிக்கொண்டிருந்தவர்கள். நடக்கிற காரியமா இதெல்லாம். பைத்தியக்காரத்தனமான போக்கு. சுட்டால் சுருண்டு கீழே வீழ்வார்கள், பிணமாக. தடி தூக்கினால், தலைதெறிக்க ஓடுவார்கள். வெள்ளைக்காரன் விட்டுவிட்டுப் போவதற்கா, இவ்வளவு கோட்டைகளைக் கட்டிக் கொடிமரத்தை நாட்டி, கொலுமண்டபம் அமைத்துக்கொண்டிருக்கிறான்! அவனவனுக்குத் தகுந்த வேலையைச் செய்து கொண்டு வயிற்றைக் கழுவிக்கொண்டு, காலத்தைக் கடத்துவதை விட்டுவிட்டு, வந்தேமாதரமாம் சுய ராஜ்யமாம், வறட்டுக் கூச்சல் போட்டுக் கெட்டுத் தொலைகிறார்கள். எத்தனை நாளைக்கு இந்தக் கூச்சல்? வெள்ளைக் காரன், போனால் போகட்டும் என்று சும்மா இருக்கிற வரையில். முறைத்துப் பார்த்தானானால், இதுகள் பயத்தால் வெடவெடத்துப் போய்விடுமே. இவ்விதமாகவெல்லாம் திண்ணைப்பேச்சு நடத்திக்கொண் டிருந்தவர்களெல்லாம், காங்கிரஸ் நாடாளும் கட்சியான உடனே அதிலே நுழைந்துகொண்டு, திலகருக்குத் தோழர்களாக இருந்தவர்கள்போலவும், சபர்மதி ஆசிரமத்துக்கு அடித்தளம் நாட்டியவர்கள்போலவும், லாலா லஜபதிராய் பாஞ்சாலத்தில் துப்பாக்கியை எதிர்த்து நின்றபோது பக்கத்தில் இருந்து அவருக்குத் தைரியம் கூறியவர்கள்போலவும், சிதம்பரனார் செக்கிழுத்தபோது சிறையிலே இக்கொடுமையை எதிர்த்துப் புரட்சி நடாத்தி அந்தமான் துரத்தப்பட்டவர்கள்போலவும், கொடி காத்த குமரனுக்கு வீரத்தை ஊட்டிய ஆசான்கள் போலவும், தில்லையாடி வள்ளியம்மைக்குத் "தேசபக்தி’ பாடத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள்போலவும், அல்லவா தேசியம் - காந்தியம் - பாரதியம் பேசுகிறார்கள். பேசுவதுகூட அல்ல தம்பி! காங்கிரசின் போக்கைக் கண்டிப்பவர்களைக் கண்டால், அடே அப்பா, இவர்களுக்குக் கொப்பளிக்கும் கோபமும், பீறிட்டு எழும் வீராவேசமும், பொங்கிடும் நாராசமும் கண்டால், கைகொட்டிச் சிரிக்கத்தான் தோன்றுகிறது. எவனோ கஷ்டப்பட்டுக் கடும்போரிட்டு, ஆபத்துகளில் சிக்கி, அடவியில் உலவிக் கிடந்த புலியை அடித்துக்கொன்ற பிறகு, எப்படியோ, அந்த புலித்தோலின்மீது அமர்ந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் காரணமாகவே ஊரை மிரட்டு கிறானே போலிச் சாது, அதுபோலல்லவா இருக்கிறது இன்று, காங்கிரசில் புகுந்துகொண்டு வீராவேசம் பேசும் பெரும் பாலோரின் போக்கு. நமது நிலை! தம்பி முற்றிலும் மாறானது. ஆட்சி மன்றங் களில் எண்ணிக்கை பலம் எனும் அரணைத் துணைகொண்டு நாம் இல்லை. நமது கழகம், நாடாளும் நிலையில் உள்ளது அல்ல. காடு மேல் என்று கூறத்தக்க விதமான போக்குடையோர் பலர் தாக்கிடும் நிலையில் உள்ளது. நம் கழகம் ஐந்நூறு பேர்களுக்கு இடையிலே ஏழு! இருநூற்று அறுபது பேர்களுக்கு இடையிலே ஒருவன்! - என்ற எண்ணிக்கை நிலையை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது. பலருக்கு, இந்த நிலை ஒன்று போதும், பேச்சடைத்துப்போகும், கண்களிலே மிரட்சி ஏற்படும், கைகால் நடுக்குறும். எண்ணிக்கை நிலையுடன் வேறொன்றும் இருக்கிறது. காங்கிரசிலே உண்மையான தொண்டாற்றியவர்கள் இன்று அங்கு அதிகம் இல்லை. உண்மையாக விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, எதிர்ப்புகளைத் தாங்கியவர்களுக்கு, வேறோர் விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடுவோரிடம், தம்மையும் அறியாமல், மதிப்பு ஏற்படும். இன்று காங்கிரசில் உள்ளவர் களிலே பெரும்பாலோருக்கு, விடுதலைக் கிளர்ச்சியில் பங்கேற்ற அனுபவம் கிடையாது - ஆகவே அவர்களுக்கு நாம் நடாத்தும் விடுதலைக் கிளர்ச்சியினை மதிப்பிடத் தெரியவில்லை. தெரியாத தால், திக்குக்கு ஒருவர் கிளம்பித் தீப்பொறி கிளப்புகிறார்கள். இந்தத் திங்கள் நான் வேதாரண்யம் சென்றிருந்தேன் - காங்கிரஸ்காரர்கள் நினைவிலே வைத்துக்கொண்டிருக்கிறார் களோ இல்லையோ, நானறியேன் - எனக்கு அங்குச் சென்றதும், மறைந்த சர்தார் வேதரத்தினம் அவர்களின் நினைவு வந்தது. சட்டசபையிலே நான், காங்கிரஸ் ஆட்சியின் போக்கைக் கண்டித்துப் பேசும்போது, அவருடைய முகம் அகநிலையைக் காட்டும் - கண்டிருக்கிறேன் - புதிதாகக் காங்கிரசில் சேர்ந்து கொண்டிருப்பவர்களின் முகத்தையும் நான் கவனித்திருக்கிறேன். பழைய, தொண்டாற்றிய, துயர் அனுபவித்த காங்கிரஸ் காரர்களின் முகத்திலே, கோபத்தைவிட, ஒருவிதமான திகைப்புத் தான் அதிகம் காணப்படும்; பேச்சில் வெறுப்பை விட உருக்கம் தான் அதிகம் தெரியும்; போக்கிலே ஆணவத்தைவிட அணைத்துச் செல்லவேண்டுமே என்ற கவலைதான் அதிகம் இருந்திடும். காரணம் இருக்கிறது, இதற்கு. இவர்கள், கட்டிக் காத்தவர்கள் காங்கிரஸ் கட்சியை, கடும் போரிட்டவர்கள் வெள்ளையரை எதிர்த்து, தழும்புகள் பெற்றவர்கள் விடுதலைக் கிளர்ச்சியின்போது; தன்னலம் மறந்தவர்கள் தொண்டாற்று கையில்; இன்னல் பல கண்டு இறுதியில் வெற்றி ஈட்டியவர்கள்; எனவே அவர்களுக்கு, தமது வெற்றிச் சின்னமான காங்கிரஸ் ஆட்சி கண்டிக்கப்படும்போது, திகைப்பு ஏற்படுகிறது எப்படிப் பட்ட மகத்தான அமைப்பு காங்கிரஸ்; எப்படிப்பட்ட தியாகி களும் தீரர்களும் இந்தக் காங்கிரசுக்காகத் தொண்டாற்றி இருக்கிறார்கள்; அதனை எல்லாம் மறந்து இன்று காங்கிர சாட்சியைக் கண்டிக்கிறார்களே, எதிர்க்கிறார்களே, என்ன காலம் இது! ஈதென்ன போக்கு! உச்சிமேல் வைத்துப் போற்றிவந்தோம் காங்கிரசை; இன்று அதனை உலுத்தர்களுக்கு வாழ்வளிக்கும் கூடம் என்று கூறுகிறார்களே; ஏன் இன்று இவ்வளவு எதிர்ப்பு காங்கிரசுக்கு ஏற்பட்டுவிட்டது என்று எண்ணித் திகைக்கிறார்கள்; வேண்டாமப்பா, காங்கிரசை நீ அறியமாட்டாய், அது வீரக்காப்பியம், தியாகப் பரம்பரை கிளர்ச்சிக் கூடம், விடுதலைப் பேரணி, அதனைத் தாக்காதே தகர்த்திடாதே என்று உருக்கத் துடன் பேசுகின்றனர்; பெற்றவர்களுக்கே தெரியும் அந்தப் பிள்ளையின் அருமை என்பார்களே அதுபோல. வந்து நுழைந்துகொண்டதுகள் உள்ளனவே, இதுகளுக்கு அந்தப் பழைய வரலாறே தெரியாது, சரியாக! காடுசுற்றிக் கடும் போரிட்ட கட்டம் புரியாது. எனவே, திகைப்பும் உருக்கமும் எழாது; கோபம்தான் கிளம்பும், ஏன், தெரியுமோ, தம்பி! மலைபோல நம்பிக்கொண்டிருக்கிறோம் காங்கிரஸ் கட்சியை; மக்களைக் கட்டுப்படுத்தி வைத்திடத் தக்கதோர் கருவியாக இது கிடைத்திருக்கிறது; இதனை ஏணியாகக்கொண்டு உயர ஏறி உறியில் உள்ளதை வழித்தெடுத்துத் தின்ன முடிகிறது. இதனைப் போய் இந்தப் "பாவிகள்’ கெடுக்கப் பார்க்கிறார்களே; என்ற எண்ணம் தோன்றுகிறது; எரிச்சல் பிறக்கிறது. கோபம் பொங்கு கிறது, கடுமொழி உமிழ்கிறார்கள். இன்று, ஆட்சிமன்றங்கள் பலவற்றிலும், காங்கிரஸ் கட்சியின் சார்பிலே வெற்றிபெற்று அமர்ந்திருப்பவர்களிலே பெரும்பாலோர், நான் குறிப்பிடும், இரண்டாவது வகையினர்! எரிச்சல்கொள்வோர். காங்கிரஸ் கவிழ்ந்துவிட்டால், தங்கள் "காலம் முடிந்துவிடும்’ என்ற அச்சம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது; அதனால் ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறது. தம்பி! குதிரைமீது செல்பவனையும் காண்கிறாய்; பொய்க்கால் குதிரை ஆட்டக்காரனையும் காண்கிறாய். உண்மையான குதிரை அத்தனை ஆட்டமா ஆடுகிறது; அத்தனைவிதமாகவா தாவுகிறது, தாண்டுகிறது, வளைகிறது, நெளிகிறது, சுற்றுகிறது, சுழல்கிறது; இல்லையல்லவா? இன்று காங்கிரசிலே பொய்க்கால் குதிரைகள்தான் அதிக அளவில்!! அதற்கேற்றபடியான "ஆட்டம்’ காண்கிறோம். இந்தப் "புகுந்துகொண்டதுகள்’ கக்கும் பகைதான் இன்று மிகப்பெரிய புகைச்சலைக் கிளப்பிவிட்டிருக்கிறது. இந்நிலையில், நான் தில்லி சென்றதால், வெறுப்புடன் நடத்தப்படுவேன், அல்லது பேச வாய்ப்புப்பெற இயலாநிலை ஏற்பட்டுவிடும் என்றுதான் எண்ணிக்கொண்டேன். தில்லி, பாராளுமன்றத்தில் நான் கண்ட சூழ்நிலை, நான் எதிர்பார்த்தபடி இல்லை. பலரும், பரிவுடன் நடந்துகொண்டனர். “வாய்யா, வா, வா! தெரியுமா சமாசாரம் - ஹைதராபாத் திலே, ஒனக்குக் கொண்டாந்த மாலையை எல்லாம் ஒங்க ஆளுங்க என் கழுத்திலே போட்டாங்க - நீ வரலேன்னு சொன்னதும். ஆமாய்யா, நெறைய மாலைங்க. . . உங்க ஆளுங்க . . . .’’ என்று முன்னாள் அமைச்சர் மாணிக்கவேலர் கூறினார் குழைவுடன். முன்னாள் அமைச்சர் அவினாசியார், ரொம்பச் சந்தோஷம் எனக்கு என்றார். முன்னாள் அமைச்சர் மாதவ மேனன், என்னா அண்ணாதுரை, தெரியலையா என்னை என்று கேட்டு மகிழ்ந்தார். அமைச்சர் சுப்பிரமணியம், இங்கு மேடைப் பேச்சின்போது, கட்சிக்காரர் மகிழ அடித்துப்பேசும் வக்கீலாகிறார்; அங்கு என்னிடம் மெத்த அன்பாகத்தான் பேசினார். பழகினார். யார் அவன் பிரிவினை கேட்கிறவன்? அவன்”மூஞ்சியைப் பார்க்கவேண்டுமே’ என்று பண்டித நேரு கேட்டார் என்று இங்கு பேசினாராம் - பத்திரிகையில் பார்த்தேன்; என்னால் நம்பமுடியவில்லை, அங்கு என்னிடம் அத்துணை பரிவுடன் பழகுபவர் இவரேதானா என்று! என்னைப்பற்றி ஏளனமாகவும் இழிவாகவும் பேசினால்தான், தன் கட்சியில் "சபாஷ்’ பட்டம் கிடைக்கிறது என்பதால் அவ்விதம் பேசுகிறார் போலும். பேசி ஆசையைத் தீர்த்துக்கொள்ளட்டும். நான் ஏளனம் இழிமொழிக் கேட்டுத் துவண்டுவிடுபவனல்ல; அதிலும் பேசுபவர்கள் ஏன் அவ்விதம் பேசுகிறார்கள் என்பது நன்றாகப் புரிகிறபோது, எனக்கு வருத்தமோ கோபமோகூட எழாது. "இவ்வளவு நேரம் இடி இடித்ததல்லவா! இதோ இப்போது மழை பெய்கிறது’’ என்று, தலையைத் துவட்டிக்கொண்டே கூறினாராம் சாக்ரடீஸ். நடந்தது என்ன தெரியுமா, தம்பி! ஒரு குடம் தண்ணீரை வேண்டுமென்றே சாக்ரடீசின் தலையில் கொட்டினாள். யார் அந்தத் தூர்த்தை? என்று கோபத்துடன் கேட்டுவிடாதே; உலகம் மெச்சும் வித்தகராம் சாக்ரடீசின் தலையிலே வேண்டுமென்றே போக்கிரித்தனமாகத் தண்ணீரைக் கொட்டியவர் வேறு யாரும் அல்ல; அவருடைய மனைவி! ஆமாம்! அவ்வளவு நல்ல மாது!! வழக்கப்படி, நண்பருடன் சாக்ரடீஸ், வீட்டு வாயிற்படி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். பல பொருள்பற்றி, ஆழ்ந்த கருத்துக்களை எளிய இனிய முறையிலே விளக்கியபடி. அவர் பேச்சைக்கேட்டு, நண்பர் சொக்கிப்போனார். உள்ளே ஒரே கூச்சல், குளறல், அலறல்! சாக்ரடீசின் மனைவி, இப்படி வேலைவெட்டி இல்லாமல் பொழுதை ஓட்டிக்கொண்டு, கண்டவனிடம் கண்டதைப் பேசிக்கொண்டு கிடக்கிறாரே. செ, இவரும் ஒரு மனிதரா! இவரைக் கட்டித்தொலைத்தார்களே என் தலையில் - என்றெல்லாம், அர்ச்சனை செய்கிறார், உள்ளே இருந்தபடி உரத்த குரலில், நண்பன் இதுகேட்டுத் திகைக்கிறான். சாக்ரடீசுக்கும் பேச்சுக் காதில் விழுகிறது. நண்பன் திகைப்பது புரிகிறது. ஆனால் ஒரு துளியும் பரபரப்பு அடைய வில்லை, கோபம் எழவில்லை, பேச்சின் போக்குக்கூட மாற வில்லை. மனைவியின் தூற்றலைப் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டே இருக்கிறார் - உரத்த குரலில் - இடி இடிப்பது போல. எவ்வளவு திட்டினாலும் பொருட்படுத்தவில்லையே என்ற ஆத்திரம், அம்மைக்கு. குடம் நிறையத் தண்ணீர் எடுத்து, உள்ளே இருந்து சரேலென வெளியே வந்து, சாக்ரடீசின் தலையிலே கொட்டிவிட்டுச் சென்றாள், தன் ஆத்திரத்தைக் காட்ட. நண்பன் திடுக்கிட்டுப் போனான். அப்போதுதான் சாக்ரடீஸ் சொன்னார், இவ்வளவு நேரம் இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது. என்று, சாக்ரடீசுக்கு வந்து வாய்த்தவள் அப்படி. அதற்காக, அவர் தமது அறிவுப் பிரசாரப் பணியை நிறுத்திவிட்டு, அம்மையை நல்வழிப்படுத்தும் காரியத்தைக் கவனித்துவிட்டுப் பிறகு மற்றக் காரியம் என்று இருந்துவிட்டாரா? அல்லது நாடே கொண் டாடும் நிலை நமக்கு; நம்மை இவ்விதமாக நடத்துபவளை நையப் புடைத்திடவேண்டாமா என்று கோபப்பட்டாரா? இல்லை! "நம்மிடம் உலகு எதிர்பார்ப்பது அறிவுப்பணி; அதனை நாம் நடத்திச்செல்வோம்.’’ என்று இருந்துவந்தார். நாடும் உலகும் அவருடைய நற்பணிக்கு மதிப்பளித்ததே யன்றி, அவருடைய துணைவியாக வந்துற்றவளின் பேச்சைக் கேட்டு அவரை மதிப்பிடவில்லை. பொதுப்பணியாற்றிடுவோருக்கு இந்த மனப்பக்குவம் ஏற்படவேண்டும். அதனை நான் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். நாம் தேடிப் பெற்றுக்கொள்ளவேண்டிய, பழுது படாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய, கருவூலம் இது. வள்ளுவர், கடுமொழி பேசுவோரை மட்டுமல்ல, கேடு செய்பவர்களைக்கூடப் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்றார்; சகித்துக்கொள்வது மட்டுமல்ல, அவர்களே வெட்கித் தலை குனியும்படி நாம் நடந்துகொள்ளவேண்டும் என்கிறார். இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். என்பது திருக்குறள். நான் கூடுமானவரையில், அந்நன்னெறியிற் செல்ல முயல்கிறேன். தமது கட்சிக்காரர் கைதட்டி மகிழவேண்டும் என்பதற்காக என்னைப்பற்றி இழிவாக அமைச்சர் சுப்ரமணியம் போன்றார் பேசினால், எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது, அவர்களிடம் காணக் கிடைக்கும் சிறப்பு இயல்புகளைப் பாராட்ட நான் தவறமாட்டேன். பகை உணர்ச்சியை வருவித்துக்கொண்டு, பண்பு இழந்துவிட நான் ஒருப்படமாட்டேன். அமைச்சர் சுப்ரமணியம், தமது கட்சிக்காரர் மனமகிழ, தரக்குறைவுமிக்க பேச்சுப் பேசியதால், நான் கோபமுற்று, அவர் அன்று, நான் இராஜ்ய சபைக்குள்ளே நுழைந்தபோது, முன்வரிசையில் உட்கார்ந் திருந்தவர் எழுந்துவந்து கைகுலுக்கி வரவேற்று, "பண்பு’ காட்டினாரே, அதனை மறந்துவிட முடியுமா! அவரால் அப்படியும் நடந்துகொள்ள முடிகிறது; இப்படியும் பேசவருகிறது என்றுதான் எண்ணிக்கொள்கிறேன். அதுமட்டுமல்ல! அப்படிப் பண்புடன் நடந்துகொள் பவரைக் கட்சி நிலைமை, இப்படியும் பேசவைக்கிறது என்று எண்ணிக் கழிவிரக்கப்படுகிறேன். அவருடைய கட்சிக்காரர் களிடையே அவர் இன்று ஓர் "சந்தேகத்துக்குரியவர்!’ அவருடைய பத்தினித்தனம் சந்தேகிக்கப்படுகிறது. காமராஜரை விட்டு நெடுந்தூரம் பிரிந்து சென்றுவிட்டார், - தில்லிக்கும் சென்னைக்கும் இடையே உள்ள தொலைவை மட்டும் நான் குறிப்பிடவில்லை; நேருவுக்கு மிக நெருங்கியவராகிவிட்டார்! தில்லியில் பெறவேண்டியவைகளை இனிக் காமராஜர், சுப்ரமணியத்தின் தயவால்தான் பெறவேண்டும் என்ற நிலை, இன்று. இது, காமராஜருக்குச் சுவையூட்டும் நிலை அல்ல. தில்லியில் இருந்துகொண்டு, தமிழக அரசியலில் தமக்குள்ள இடத்தையும் இழந்துவிடக்கூடாது என்ற எண்ணத் தால் உந்தப்பட்டு, அமைச்சர் சுப்ரமணியம், காமராஜருக்கு எதிர்ப்புக்குழு உருவாக ஊக்கமூட்டினார் என்று வதந்தி பலமாக இருக்கிறது. அங்கே இருந்துகொண்டு என்ன செய்ய முடியும்? என்று காமராசர் ஆதவாளர்களும் அங்கே போய்விட்டால் என்ன? அவருக்காக இங்கு நாங்கள் இருக்கிறோம் என்று சுப்பிரமணியத்தின் ஆதரவாளர்களும், மிகத் தாராள மாகப் பேசிக்கொள்கிறார்களாம். கருத்து வேற்றுமைகள் எழுந்தன; பேசப்பட்டன; ஆனால் பிளவு இல்லை - என்று சுப்ரமணியம் கூறுகிறார். இந்த அளவு கூறும் துணிச்சல் இவருக்கு ஏற்பட்டதற்குக் காரணமே, தில்லியில் பெரிய வேலை கிடைத்ததுதானே!! - என்று காமராசர் ஆதரவாளர் பேசிக்கொள்கின்றனர். இந்த "வாடை’ வீசும் நேரத்தில், இங்கு வந்த அமைச்சர் சுப்ரமணியம் என்னைத் தாக்கிப் பேசுவதன்மூலம், தனது அறிவாற்றலை, வீரதீரத்தை மட்டுமல்ல, தமது (கட்சி) பத்தினித்தனத்தை மெய்ப்பித்துக்காட்ட ஒரு வாய்ப்புத் தேடிக் கொண்டார்போலும். "அண்ணாதுரைக்குத் தைரியம் கிடையாது’’ என்று அமைச்சர் கூறினாராம். "அதனால்தான் பேசிவிட்டு ஓடிவந்துவிட்டான்’’ என்று செப்பினாராம். "இரயிலில் போனால் என்ன ஆகுமோ என்று பயந்துகொண்டு விமானம் ஏறிச்சென்றுவிட்டான்’’ என்று தெரிவித்தாராம். பரிதாபம், இந்தப் பேச்சுக்கூட புதிய பாணி அல்ல! பழைய கஞ்சி. ஏற்கனவே இங்கு கூவி விற்கப்பட்டுக் குப்பைக்குச் சென்றுவிட்டது. நான் பயந்தவன் - கோழை - என்று கூறிய அமைச்சர் சுப்ரமணியம், அவ்விதம் கூறத்தக்க அளவு, தமது வீரதீரத்தைக் காட்டினவர் அல்லவே நாட்டவருக்கு என்று கூற நினைக்கிறாய், தம்பி! உனக்கு அவராற்றிய வீரதீரச் செயல் தெரியாது; அவருடைய அஞ்சாநெஞ்சம் உனக்குப் புரியவில்லை. படை பலவரினும், தடைபல நேரிடினும், மன்னன், முன்வைத்த காலைப் பின்வைக்கமாட்டார்; வீரம் கொப்பளிக்கும். ஒருமுறை அவர் அயர்ந்து தூங்கும் வேளையில், கூரிய வாட்கள் அவர் உடலில் நாலாபக்கமும் பாய்ந்தன. அவரிடமோ, வாள் இல்லை. அஞ்சினாரா? தூ! தூ! அவரா? அஞ்சுபவரா? ஓங்கி அறைந்தார், இரு கரங் களாலும். அவருடைய கையிலே அறைபட்டு, வாள் கொண்டு குத்துவதுபோன்றவிதமாக அவரை வெகு பாடுபடுத்திக்கொண்டிருந்த கொசுக்கள் பல செத்தன? உள்ளங்கையிலே, வெற்றியின் சின்னங்களைக் கண்டார்! இப்படிப்பட்ட "வீரம்’ அவர் நடத்திக்காட்டாமலா இருந் திருப்பார்! இருக்கும், தம்பி! நமக்குத் தெரியவில்லையே தவிர, அவர், ஏதேதோ வீரதீரச் செயல்களைச் செய்திருக்கிறார், அதனால்தான் நான் பயந்துகொண்டு ஓடிவந்துவிட்டேன் என்று கூறுகிறார். வீரர்களுக்குப் பயங்காளிகளைக் கண்டால் பிடிக்காதல்லவா? உப்புச் சத்தியாக்கிரக காலத்தில், எல்லோரும் கடலோரத்தில் உப்புக் காய்ச்சிட, இவர் தமது வீரதீரத்தை உலகு உணரவேண்டும் என்பதற்காக, அலைகளுக்குப் பயந்தோர் கரையில் கிடக்கட்டும், நான் அஞ்சாநெஞ்சன்! கடல் நடுவே சென்று, கொண்டுவருவேன் உப்பு என்று உள்ளே இறங்கிச் சென்று திரும்பி வந்தவராக இருக்கக் கூடும். யார் கண்டார்கள்! இப்படி ஏதாவது வீரச்செயல் செய்திருந்திராவிட்டால், எனக்குத் தைரியம் இல்லை என்பதைக் கண்டுபிடித்துக் கூறிக் கேலி பேசிட மனம் வந்திருக்காதல்லவா? எல்லோரும் மகாத்மாவின் தலைமை காரணமாகக் காங்கிரஸ் இயக்கம் வீரதீரமாகப் போராடியதால் சுயராஜ்யம் கிடைத்தது என்று எண்ணிக்கொள்கிறோம். உண்மை அதுவாக இருக்காது போலத் தோன்றுகிறது! ஒருவருக்கும் கூறாமல், ஒருநாள், இவர் போயிருக்கிறார் இலண்டன் பட்டினம் - எவர்? - அஞ்சா நெஞ்சர் அமைச்சர் சுப்பிரமணியம்! சென்று, சர்ச்சில் வீட்டுக் கதவைத் தட்டி இருக்கிறார் பலமாக. யார் அது? நான்தான், அஞ்சாநெஞ்சன். புரியவில்லையே. பயப்படாதவன்! தைரியசா-! பெயர்? சுப்ரமணியம். தமிழரா? இல்லை - இந்தியர்! இந்த வேளையிலே இங்கு. . . . . எந்த வேளையாக இருந்தால் என்ன? எந்த இடமாக இருந்தால் என்ன? பிரிட்டிஷ் சாம்ராஜ்ய முதலமைச்சராக இருக்கலாம் நீர். அதற்காக, நானா அஞ்சுபவன்? இந்த உரையாடலுக்குப் பிறகு சர்ச்சில், தள்ளாடி நடந்து வந்து கதவு திறந்துபார்க்க, அங்கு வீரமே வடிவெடுத்ததுபோல இவர் நிற்கக்கண்டு, அலறிப்புடைத்து அழுது, என்னை ஒன்றும் செய்து விடாதீர், நீர் சொல்கிறபடி கேட்கிறேன் என்று பணிந்து கூற. "பயப்படாதே! நான் சொல்கிறபடி செய்; உயிர் போகாது. உடனே சுயராஜ்யம் கொடு;’ என்று இவர் கூற, அவர் உடனே “தந்தேன் சுயராஜ்யம்’ என்று எழுதிக்கொடுக்க, அதனை எடுத்துக்கொண்டு இங்குவந்து,”செ! இவ்வளவு காலமாக இந்த மகாத்மாவும், ஜவஹரும், படேலும் ஆஜாதும் “சுயராஜ்யம் சுயராஜ்யம்’ என்று கூவிக்கிடந்தனர்; இப்போது அதனை அவர்கள் பெற்றுத்தரவில்லை; நாம்தான், நமது அஞ்சாநெஞ்சு காட்டிப் பெற்றுவந்திருக்கிறோம் என்று தெரிந்தால், உலகிலே அவர்களுக்கெல்லாம் உள்ள மதிப்புக் கெட்டுவிடுமே’ என்று எண்ணிப் பரிதாபப்பட்டு, சம்பவத்தை ஒருவருக்கும் கூறாமல், சர்ச்சிலுக்கே மறுபடியும் தொலைபேசி மூலம் பேசி, சுயராஜ்யம் காந்தியார் மூலம் கிடைத்ததுபோன்ற நிலைமையை ஏற்படுத்தி இருந்திருக்கிறார். அவ்வளவு வீரதீரச் செயலாற்றியவராக இருந்திருக்கிற காரணத்தால்தான், நான்”திராவிடநாடு’ கேட்டுவிட்டுப் பயந்துகொண்டு ஓடிவந்து விட்டது, அவருக்குப் பிடிக்கவில்லை; பேசுகிறார், எனக்குத் தைரியம் கிடையாது என்று. தம்பி! எனக்குத் தைரியம் இருக்கிறதா இல்லையா என்பது கிடக்கட்டும்; இவர் தமது அஞ்சாநெஞ்சினைக் காட்டிட ஆற்றிய அருஞ்செயல்கள் உண்டோ என்பதுகூடக் கிடக்கட்டும்; பயப்பட்டுக்கொண்டு ஓடிவந்துவிட்டேன் என்று பேசுகிறாரே "எதற்கு? யாரிடம்?’ என்பதை விளக்கும்படி கேட்கமாட்டார். தில்லியில் உள்ளவர்களைப்பற்றி அமைச்சர் சுப்ரமணியம் கொண்டுள்ள கருத்து இதுதானா? கொடியவர்கள் - என்பது தானா? "நத்திப் பிழைக்கவேண்டும், அல்லது நடுங்கி ஓடவேண்டும் - இரண்டில் ஒன்று - வேறு வழி கிடையாது, அங்கு இருந்து வாழ வேண்டுமானால்’ என்பதுதான் அமைச்சரின் கருத்தா? என்ன கருத்துடன் அவர் பேசினார் என்பதை விளக்காத காரணம் என்ன? சொல்வதைச் சொல்லிவைப்போம், கேட்பவர் களில் அவரவருக்குத் தோன்றிய விதத்தில் அவரவர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும் என்று எண்ணுகிறாரா? திராவிடநாடு கொள்கைபற்றி, நான், இங்கு சட்ட சபையில் பேசினேன் - இவர்கள் கூறும் பதில்களைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். ஒரு ஆபத்தும் எனக்கும் நேரிடவில்லை - என் கொள்கைக்கும் ஒரு ஊறும் நேரிடவில்லை - மாறாகப் பல்லைக் கடித்துக்கொண்டு, பத்து வருஷத்துக்குப் பிரிவினைபற்றிப் பேசாதீர்கள் என்று இதே அமைச்சர் என்னைக் கேட்டுக்கொண்டார். திராவிடநாடுபற்றி இங்குப் பேசியபோது ஒரு ஆபத்தும் நேரிடாது, ஆனால் தில்லியில் பேசினால் சும்மாவிட மாட்டார்கள் என்ற பாவனையில் பேசுகிறாரே, என்ன பொருள்? என்ன செய்துவிடுவார்கள் என்று கருதுகிறார்? அல்லதுஎன்ன செய்வதாகச் செய்து வைத்திருந்த ஏற்பாடு, நான் ஓடிவந்துவிட்டதால் கெட்டுவிட்டது என்று கருதுகிறார். அப்படி ஏதாவது ஏற்பாடு இருந்தது அமைச்சருக்குத் தெரிந்து, நான் அதிலே சிக்காமல் தப்பித்துக்கொண்டுவிட்டேன் என்பதனால் வருத்தமோ ஏமாற்றமோ ஏற்பட்டு, இவ்வாறு அவர் பேசியிருக்கிறார் என்றால், அவருக்கு நான் பணிவன்போடு கூறிக் கொள்கிறேன், நான் கடைசிமுறையாக அல்ல, முதன்முறையாகத் தான் தில்லி வந்து திரும்பினேன் - மீண்டும் வருகிறேன் - ஏதாகிலும் ஏற்பாடு செய்வதானால் தாராளமாகச் செய்து, காரியத்தை முடித்துக்கொள்ளுங்கள். திராவிடநாடு பெறுவதிலே கிடைக்கக்கூடிய மகிழ்ச்சிக்கு அடுத்தபடியாக எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் தரக்கூடியது, அந்த முயற்சியில் ஈடுபட்டதற்காக, கொடியவர்களின் குத்துக்கும் வெட்டுக்கும் பலியாவதுதான். அது எத்துணை விரைவாக நேரிட்டாலும், பரவாயில்லை. நான் இருந்து பேசிக்கொண்டிருக்கவேண்டிய வற்றை, எனக்கு இழைக்கப்படும் கொடுமைபற்றி எண்ணிக் குமுறும் மனமும், கொந்தளிக்கும் கண்ணீரும் செய்து முடிக்கும். அமைச்சர் எண்ணிப்பார்த்துப் பேசியிருக்கமாட்டார் - ஏளனம் செய்யவேண்டும் என்று நினைத்து வாயில் வந்ததைப் பேசிவிட்டிருக்கிறார். இராஜ்யசபையில், திராவிடநாடு பிரச்சினைபற்றி விவாதித்து முடிவுகட்டவேண்டும், உடனே வா! - என்று அழைப்புக் கொடுத்து வரவழைத்துப் பலரும் கூடியது போலவும், நான் என்வரையில் பேச்சை முடித்துக் கொண்டு, மற்றவர்கள் என்ன கூறி முடிவு எடுக்கிறார்கள் என்பதனைக் கேட்காமல், ஊர்திரும்பி விட்டேன் என்பதுபோலவும், அமைச்சர் பேசுவது அவசரத்தால் ஏற்பட்டுவிட்ட அறியாமை. இருந்திருக்கலாம் - இருந்திருக்கவேண்டும் - முறை அதுதான் - பண்பு அதுதான் - என்ற அளவுக்குச் சரி - அந்த யோசனையை நான் வரவேற்கிறேன், ஆனால் அப்படி இருக்கமுடியாமல் போகும் நிலைமைக்காக, "தைரியமில்லை, இருந்தால் தெரிந் திருக்கும்’ என்றுதான் பேசுவதா? இதற்குப் பெயர், முறையா? பண்பா? அல்லது மிரட்டலா? நான் அங்கு பேசிவிட்டு வந்து விட்டதற்கான காரணம், விளக்கம் இருக்கட்டும், ஒன்று கேட்கிறேன் அமைச்சரை, அங்கும் சரி, மக்கள் சபையிலும் சரி, பேசிடும் உறுப்பினர் அனைவரும், தமது பேச்சுப்பற்றி மற்றவர்கள் என்ன கருத்துத் தெரிவிக்கிறார்கள், அல்லது சபைக் கட்சியின் தலைவர் என்ன பதில் தருகிறார் என்று இருந்து கேட்டுகொண்டுதான் இருக்கிறார்களா? நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும். இராஜ்யசபை - மக்கள் சபை, இரண்டு இடங்களிலும் குடிஅரசுத் தலைவரின் உரைமீது நடைபெற்ற விவாதத்தின் போது பேசியவர்கள் எவரெவர், அவர்கள் அனைவரும் அந்த விவாத முடிவின்போது, நேரு பதில் அளிக்கும்போது, அவையில் இருந்து தீரவேண்டும் என்பதற்காக, இருந்தனரா? விளக்கமாக இதனை எடுத்துக்காட்டுவார்களா? எத்தனையோ உறுப்பினர்கள், தமது கருத்தினைத் தெரிவித்துவிட்டு, வேறு அலுவல்களைக் கவனிக்கச் சென்று விட்டனர் - பதிலுரை அளிக்கப்பட்டபோது, அவையில் இருந்ததில்லை. அவர்களெல்லாம் போகலாம் - நீ - போகலாமா? என்று கேட்பதானால், நான், அந்த - நீ - என்பதற்கான முக்கியத் துவத்தை அறிய விரும்புகிறேன். மற்றதெல்லாம் பேசிவிட்டுச் சென்றுவிடலாம்; ஆனால் திராவிடநாடு பேசிவிட்டு, சென்றுவிடலாமா? என்றால், அது "திராவிடநாடு’ பிரச்சினையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாகிறதா என்று அறியவிரும்புகிறேன். பாவி, அங்கு போயும் துவக்கிவிட்டானே திராவிடநாடு பேச்சினை என்று அங்கலாய்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு ஆறுதல் கூறிவைப்போம் என்ற முறையில், எதையோ பேசி விட்டார் - இதற்கு நான் என்ன பதில் கூறுகிறேன் என்று தெரிந்துகொள்ளப் பயந்து ஓடிவிட்டார், பதவிப் பாதுகாப்புள்ள தில்லிக்கு - குடும்பத்துடன் என்றல்லவா நான் கூறவேண்டும், அவருடைய பாணியிலே நான் பேசுவதானால், குடிஅரசுத் தலைவர் உரைமீது இராஜ்யசபையில் பேசிய வர்கள் பலர் - அவர்களில் பலர், பதிலுரை கூறப்படும்போது அவையில் இல்லை; அப்படி அங்கு இல்லாதவர்களிலே நானும் ஒருவன். ஆனால், நான் அங்கு இல்லாததைத்தான், எரிச்சல் கொண்டவர் அனைவரும் எடுத்து வைத்துக்கொண்டு ஏளனம் செய்து பேசுகிறார்கள். நோக்கம் என்ன தெரியுமல்லவா? இராஜ்யசபையில் அனைவரும் கவனிக்கத்தக்க விதமாகத் திராவிடநாடு கொள்கைபற்றிய பேச்சுப் பேசப்பட்டது, நமது கழகத்தவர் உள்ளங்களிலே, மகிழ்ச்சியும் எழுச்சியும் பெரும் அளவுக்கு ஏற்படுத்திவிட்டதல்லவா; நமது கழகத்திலே இன்னமும் ஈடுபாடுகொள்ளாதவர்களும்கூட, இதுபற்றி, வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த குரலிற் பேசலாயினரல்லவா, அது பொறுக்கவில்லை. அந்த மகிழ்ச்சி, உற்சாகத்தை இவர்கள் அனுபவிப்பதா, அதைக் கண்டு நாம் வாளா இருப்பதா என்ற எண்ணம்; உடனே ஏதாவது பேசி எரிச்சலூட்டிவிடவேண்டும் என்பது அவர்கள் கையாண்ட முறை. நான் அங்கு பேசாது இருந்துவிட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்; என்ன கூறுவார்கள் தெரியுமல்லவா? இதற்கு எதற்கு அங்கு போனான்? பேசமுடியவில்லை என்றால், அங்கு ஒட்டிக்கொண் டிருப்பானேன். உதறித் தள்ளிவிட்டு வரவேண்டியதுதானே! பேச வாய்ப்புக் கிடைக்கும்வரையில், அந்த வாசற் படியிலேயே விழுந்துகிடக்கவேண்டுமேதவிர, ஊர் ஏன் திரும்புகிறான்? என்ன சாதனையைக் காட்ட? தம்பி! இந்த "ரகமாக’ப் பேசி இருப்பார்கள் - நம்மைப்பற்றிப் பேசுவதையே தொழிலாகவும் கலையாகவும் ஆக்கிக்கொண்ட வர்கள். பேசிவிட்டுத் திரும்பிவராமல், அங்கேயே இருந்து மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டு இருந்துவிட்டு வருகிறேன் என்று வைத்துக் கொள்ளேன். அப்போது மட்டும் என்ன? இவர்கள் வாய்க்கு மென்றிட ஒன்றும் கிடைக்காது என்றா எண்ணுகிறாய். பேசினானே, உடனே வந்துவிடக்கூடாதா? விவரம் தெரியாதவன், அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். இவன் பேச்சுக்காக ஆளாளுக்கு மெடல் கொடுப்பார்கள் என்று எண்ணிக் கொண்டான்போலும். செம்மையாகக் கொடுத்தார்கள், ஒவ்வொருவரும். எல்லாவற்றையும் வாங்கித் தோளில் போட்டுக்கொண்டு, உட்கார்ந்திருந்தான். ஒரு வார்த்தை மறுத்தானா? முடியுமா? குறுக்கிட்டுப் பேசினானா? அந்தத் தைரியம் வருமா? இப்படிப் பேசித் தமது அற்பத்தனத்தை காட்டிக்கொண்டிருந்திருக்கமுடியும். மற்றவர் பேசும்போது நான், மறுத்துப்பேச, குறுக்கிட, விளக்கம்கூற, பதிலுரைக்க முற்பட்டிருப்பின், இவர்கள் வாயடைத்துப்போவர் என்று எண்ணுகிறாயா, தம்பி! அதுதான் இல்லை. கைவிட்டு எடுக்கும் அளவு கிடைக்கா விட்டால், சுறண்டி எடுத்துத் தின்பவர்கள் உண்டல்லவா? அதுபோல, அப்போதும் இவர்கள் பேச விஷயம் கிடைக்காது என்று எண்ணாதே. பாரீர் இவன் பண்பற்ற போக்கை. பாராளுமன்ற முறை அறியாது நடந்துகொண்டான். இவன் பேசினான் - சபை கேட்டுக்கொண்டது - இவன் பேச்சில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி மற்றவர்கள் பேசும்போது, இவன் குறுக்கிடுவதா? மறுத்துப் பேசுவதா? பாராளுமன்றப் பண்பாட்டைப் பாழ்படுத்துவதா? சந்துமுனையில் இருக்கிறவனைப் பிடித்துப் பாராளுமன்றம் அனுப்பினால் வேறு என்ன காணமுடியும்? இப்படிப்பட்ட காலித்தனத்தைத்தான். இப்படிப் பேசிச் சுவைபெறமுடியும். நான் என்ன செய்கிறேன், எதை எப்படிச் செய்கிறேன் என்பதில் ஏற்படும் கருத்து வேறுபாடா காரணம், இவர்கள் என்னை எதிர்த்துப் பேசுவதற்கு. ஊரறியுமே உண்மைக் காரணத்தை; நான் ஏன் இன்னமும் இருக்கிறேன். நான் எப்படி எண்ணற்றவர்களின் அன்பினைப் பெறலாம், என்பதல்லவா, என்னை இவர்கள் இழிமொழியால் தாக்குவதற்குக் காரணம். ஆகவே, நான் எவ்விதம் பேசினாலும், எவ்விதம் நடந்து கொண்டாலும், இவர்கள் தமது குரோதத்தைக் கக்கியபடிதான் இருப்பார்கள். இந்த இயல்புகொண்டவர்கள் நிரம்ப உளர் என்பது எனக்கு நன்கு தெரிவதால்தான், நான் அவர்கள் ஏசிப் பேசுவது கேட்டு, எரிச்சல் அடைவதில்லை. காங்கிரசில் உள்ள பலர், பிரசார மேடை ஏறும்போது தான், நம்மையும் நமது கொள்கைகளையும் தாக்கிப் பேசு கிறார்கள் - அதிலும் இழிமொழியில் - காரணம் காட்டி அல்ல. நான், இராஜ்யசபையில் பேசியபோது, எனக்கு எதிர்ப் புறமாக, மாடியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகேசன் அமர்ந்திருக்கக் கண்டேன். ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அதற்கு முன்பே, தில்லியில் இரண்டொருமுறை அவருடன் பழகவும் உரையாடவும் வாய்ப்பு ஏற்பட்டதால், அவர் என் பேச்சைக் கேட்க வருவார் என்று எதிர்பார்த்திருந்தேன். இங்கு அவரிடம் பேச வாய்ப்பு ஏற்பட்டதில்லை. இரண்டொரு திருமணங்களிலே சந்தித்ததோடு சரி. மற்றப்படி ஒவ்வொரு மாலையும், நானும் அவரும் கீரியும் பாம்பும்போலத்தானே! தில்லியில்தான், கலகலப்பாகப் பேசினோம். அவரை அழைத்துக் கொண்டுவந்து, என் பக்கம் அமரச் செய்தவரே, அமைச்சர் சுப்ரமணியம்தான். மக்கள் சபை கூடுமிடத்தும், இராஜ்யசபை கூடும் இடத்துக்கும் நடுவே, ஒரு மையமண்டபம் இருக்கிறது. அங்கு, உறுப்பினர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள உரையாட வருகிறார்கள். நாங்கள் ஒருபுறம் உட்கார்ந்திருந்தோம். அதற்கு எதிர்ப்புறத்திலே, சற்றுத்தொலைவிலே, அமைச்சராகிவிட்ட சுப்ரமணியமும், அமைச்சராகவேண்டிய அழகேசனும் இருந்தனர். சிறிது நேரத்துக்கெல்லாம் இருவரும் நான் இருக்கும் இடமாக வந்தனர்; என்னைக் கண்டதும், அமைச்சர், அழகேச னாரைக் காட்டி, "அழகேசன்!’’ என்று அறிமுகம் செய்யும் முறையிலே கூறினார். மூவரும் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு ஒவ்வொருமுறை சந்திக்கும் போதெல்லாம், தில்லி எப்படி இருக்கிறது? இருங்கள், நல்லது. வீடு கிடைத்துவிட்டதா? நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். என்று இருவரும் கூறுவார்கள். தமிழ்ச் சங்கத்திலே தரப்பட்ட வரவேற்பின்போதுகூட, நானும் அழகேசன் அவர்களும் பக்கம் பக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தோம் - அதனை ஒரு வியப்பான காட்சியாகப் பலரும் அங்குகூடக் கருதினர். அமைச்சர் பக்தவத்சலனாரின் திருமகன் தில்லியில் வேலையில் இருப்பதுகூட, எனக்கு அங்கு போன பிறகுதான் தெரியும் - அதுவும் அழகேசன் கூறியதால். இப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டதால், நான் பேசிய அன்று அவர் வருவார் என்று நினைத்தேன்; வந்திருந்தார். நான் பேசியானதும், அவை கலைந்தது; மீண்டும் பிற்பகல் இரண்டுமணிக்குக்கூட, நான், விமான டிக்கட் விஷயமாக அலுவலகம் சென்று விசாரிக்கப்போய், அங்கு ஓர் இருக்கையில் அமர்ந்தேன் - பேசி அரைமணி நேரமாகிவிட்ட - அழகேசன் வந்தார், கை குலுக்கினார். என் பக்கத்தில் அமர்ந்தார் - அன்று இரவு சென்னை செல்வதுபற்றிக் கூறினேன் - நான் சொல்லி இருக்கிறேன், நிச்சயம் இடம் கிடைக்கும் என்று கூறினார். அப்போது, மக்கள்சபை உறுப்பினர் பாண்டேசுரம் கோவிந்தசாமி (நாயுடு) வந்தார். வந்திருந்தீர்களல்லவா பேச்சைக் கேட்க. இல்லை. . . வேறு வேலையாக இருந்துவிட்டேன். நான் போயிருந்தேன். நன்றாகப் பேசினார். எல்லாவற்றையும் பேசினார். திராவிடநாடு கொடு என்றெல்லாம் கேட்டுவிட்டார். இப்படி அழகேசனார் அவரிடம் கூறினார். நானாகப் பேச்சை மாற்றினேன். ஏன் இவைகளைக் கூறுகிறேன் என்றால், கேட்கும்போது கடுகடுப்பு ஏற்படுவதில்லை. கட்சிக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போதும், கட்சி மேடை ஏறிப் பேசும்போதும்தான் கோபம், வெறுப்பு எல்லாம் கொந்தளிக்கிறது என்பதைக் கூறத்தான். கூடப் பழகுவது, அன்பு காட்டுவது, உதவிசெய்வது, பாராட்டுவது என்பது வேறு, கொள்கைக்காகப் போராடுவது முற்றிலும் வேறு தேன்போல இனிக்கும் எங்கள் பேச்சு, மற்றச் சமயங்களில். ஆனால் கொள்கை விஷயம் வருகிறபோது தேளாகக் கொட்டுவோம். இப்படிக் காங்கிரஸ் தலைவர்கள் கூறுவது முறை; நான் அதனைக் குறை கூறவில்லை. நாலு தடவை நட்புடன் பழகிவிட்டால், அவரவர் தத்தமது கொள்கைளை விட்டுவிட வேண்டும் என்று நான் கூறமாட்டேன்; எதிர்பார்க்கவும் மாட்டேன். ஆனால் ஒருவருக்கொருவர் பழகிய பிறகேனும், அவரவர் தத்தமது கருத்துகளை, கொள்கைகளை, உறுதியுடன், ஆனால் அதேபோது இழிமொழி, பழிச்சொல், ஏளனம் இன்றி எடுத்துக்கூறும் "பண்பு’ வளரவேண்டாமா? பண்புடன் பேசித் தமது கொள்கைக்கு வலிவு தேடிட முடியாது என்று எண்ணுபவர்களைப்பற்றியோ, அவர்களின் கொள்கைகளைப் பற்றியோ உலகம் என்ன மதிப்பீடு தரும். . .? இவைகளை எண்ணிப் பார்க்காமல், அமைச்சர் தமது கட்சியிலே உள்ளவர் களுக்கு மகிழ்ச்சிதரவேண்டும் என்ற ஒரே நோக்குடன் பேசிவிட்டார். நாலடி உயரம் ஏறிக்கொண்டு நாப்பறை கொட்டினாலே, நல்லியல்பு நசித்தே போகவேண்டுமா? மற்றச் சமயத்திலே எண்ணுவது பேசுவது மறந்துபோகவே வேண்டுமா? தில்லியில் ஒருநாள் ஒரு விருந்துக்குச் சென்றிருந்தோம். இதிலே அமைச்சர் சுப்ரமணியமும் அழகேசனாரும் இல்லை. அதனை முன்கூட்டியே கூறிவிடுகிறேன் - ஏனெனில் இனிக் கூறப்போவதை அவர்களுடன் இணைத்துப் பார்க்காதீர்கள் என்று கேட்டுக்கொள்ள. பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், பத்திரிகைத் துறையினர், வியாபாரிகள் கலந்துகொண்டனர். ஒரு பிரபல காங்கிரஸ் தலைவர் - சுதந்திரத்துக்குப் பிறகு கதர் போட்டவர் அல்ல - நீண்டகாலத்துக் காங்கிரஸ்காரர், என்னை உடன் வைத்துக்கொண்டு, பலருக்கு என்னை ஆர்வத் துடன் அறிமுகப்படுத்தியபடி, அரசியல் நிலைமைகளை பேசிக் கொண்டிருந்தார், சற்று உரத்த குரலில், பத்துப்பேருக்குப் புரிகிறபடி. திராவிடநாடு கேட்கிறான். கேட்கட்டும். கேளுங்கள். நன்றாகக் கேளுங்கள். ஏன் பிரிந்துபோகவேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று எவனாவது கேட்டால், திருப்பிக் கேளுங்கள், ஒன்றாக இருந்து நாங்கள் என்ன பலனைக் கண்டோம்? பெரிய தொழிற்சாலை உண்டா, இரயில்பாதை உண்டா, இரும்புத் தொழிற்சாலை உண்டா? என்ன கிடைத்தது? எதற்காக ஒன்றாக இருக்கவேண்டும் என்று கேளுங்கள். என்று என்னைப்பார்த்துக் கூறிவிட்டு, சூழ இருந்த காங்கிரஸ் பிரமுகர்களைப் பார்த்தபடி, சிலோன் விஷயத்தைப் பாருங்கள். அங்கு நமக்கு எவ்வளவு கொடுமைகள் செய்கிறார்கள், பதறுகிறார் களா? அதற்காகப் பரிகாரம் தேடுகிறார்களா? இல்லையே. அதுவே தென்னாப்பிரிக்காவில் ஒன்று நடந்துவிட்டால் எவ்வளவு ஆத்திரம் காட்டுகிறார்கள். ஏன்? அங்கே வடநாட்டுக்காரன், சிலோனில் இருப்பவன் தென்னாட்டுக் காரன், அதுதான் வித்தியாசம். என்று, எனக்கே தூக்கிவாரிப் போடும்படி பேசிக்கொண்டே இருந்தார். நானாகத்தான், வேறு பக்கமாகப் பார்வையையும் பேச்சையும் திருப்பிவிட்டேன். காங்கிரஸ் தலைவர்களிலே பலர் - தென்னாட்டுக்காரர்கள் - தனியாக வெளியிடும் கருத்து. திராவிடநாடு பிரிவினைக் கொள்கைக்கு முற்றிலும் எதிர்ப்பானது அல்ல. அந்தக் கொள்கைக்கு ஆதாரம் பலவற்றை எடுத்துக்கூடக் கூறுகிறார்கள். கட்சிப் பிரசார மேடைமீது ஏறிய உடனே, எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டி வருகிறது. அப்போது, "பாரதம்’ பற்றிய புகழுரைதான். இந்த அண்ணாதுரைக்கு என்ன தெரியும், என்ற ஏளனம்தான். தம்பி! நான் யோசித்துப் பார்த்த அளவில், "வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது, தென்னாடு புறக்கணிக்கப்படுகிறது’’ என்று உணர்ந்தும், உரைத்தும், வாதாடியும், போராடியும் வருகிற அளவுக்கு இசைவு தருகிற காங்கிரஸ் தலைவர்கள்கூட, வடநாட்டுடன் இணைந்திருந்து, ஒத்துழைத்துத் தென் னாட்டுக்குச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் காங்கிரஸ் கட்சி எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தியபோது, ஜஸ்டிஸ் கட்சியினர், வெள்ளை அரசுடன் ஒத்துழைத்து நாட்டுக்கு நன்மைகளைத் தேடிக்கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டார்களே, அதுபோல. மற்றோர்விதமான காங்கிரசார், தென்னாட்டவர், தி. மு. கழகம், பிரிவினை பேசப் பேசத்தான், நமக்கு நல்ல "கிராக்கி’ ஏற்படும்; தென்னாட்டுக்காரர்களைத் திரட்டி அந்தப் படையைக் கொண்டு பிரிவினைக்காரரை அழிக்கத் திட்டமிடுவார்கள், அப்போதுதான், நமக்கெல்லாம், தளபதிகள் நிலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். பொறுத்திருக்கவேண்டும், பொங்கி எழக்கூடாது என்போரும், காலம் வரும், கோலத்தை அதுவரையில் காட்டக் கூடாது என்போரும், உள்ளூரப் பாரத ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டு இல்லை. வடநாடு சென்று பல்வேறு துறைகளிலே பணியாற்றி வருபவர் களில் மிகப் பலருக்கு, வடநாட்டு ஆதிக்கம் வளருவது பற்றிய கவலையும், எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கலக்கமும் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் வலுவடைவதும், பிரிவினைக் கொள்கைக்குச் செல்வாக்குக் கிடைப்பதும், அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது, மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அவர்கள் ஆயிரம், இரண்டாயிரம், சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அல்ல. பிழைக்க வந்தவர்கள், வாட்ட வருத்தம் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள். தம்பி! கரோல்பாக் எனும் பகுதியில், கழகம் அமைத்து, எங்களை அழைத்துச் சென்று பாராட்டுவிழா நடத்தினார்கள். யார்? மாளிகை வாசிகள் அல்ல! அவர்கள், கண்டும் காணாதது போல் இருந்துவிடுகிறார்கள். பெரிய பெரிய அதிகாரிகள் அல்ல, அவர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள், சிலர் சுயநலத்துக்கு ஆட்பட்டுக் கிடக்கிறார்கள். எங்களை அழைத்துச் சென்றவர்கள் கூலிவேலை செய்பவர்கள், மூட்டை தூக்கிகள், வண்டி இழுப்பவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள், பாத்திரம் துலக்குபவர்கள் - சின்னாளப்பட்டி, இராசிபுரம் போன்ற இடங் களிலிருந்து, பிழைக்க வந்தவர்கள். அவர்கள் குடி இருக்கும் இடம், சுடுகாடாக இருந்த இடம். இவர்களுக்கு இங்கு ஏழுபேர் வந்திருப்பதே, மாட மாளிகை கட்டிக்கொண்டதுபோலத் தோன்றிவிட்டது. இங்குக் கேட்பதுபோல, "வாழ்க!’ முழக்கம் எழுப்பி வரவேற்றனர். இவர் போன்றவர்கள் வெளிப்படையாக முழக்கமிடுகிறார்கள். அலுவலகங்களிலே உள்ளவர்கள், மனதிலே அந்த எண்ணத்தை வைத்துக்கொண்டு குமுறுகிறார்கள், வதைபடுகிறார்கள். வடக்கும் தெற்கும் வெவ்வேறுதான் என்பதனை வாழ்க்கையின் பல கோணங்களிலிருந்தும் அவர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வேற்றிடத்தில், வெளிநாட்டில் வந்து சிக்கிக்கொண்டு கிடக்கிறோம், விடுதலை என்று கிடைக்குமோ, வீடு என்று திரும்பிச் செல்லமுடிகிறதோ என்ற ஏக்கம், அவர்களைத் துளைக்கிறது. நாலாயிரம் ஐயாயிரம் சம்பளம் வாங்கும் அமைச்சர் களுக்கு உள்ள "பாரதீய’ உணர்ச்சியைவிட, வெறும் உறுப்பினர்களுக்குக் குறைவாகத்தான் இருக்கிறது. கட்சி வேகம் காரணமாகத்தான், அவர்கள் பிரிவினையைப் பலமாக மறுத்துப் பேசுகிறார்கள் - நம்பிக்கையாலோ, உள் உணர்ச்சியாலோ அல்ல. பிரிவினைக் கொள்கை வலுவடைகிறதா என்று பார்த்து விட்டுப் பிறகு சேரலாம் என்று எண்ணியபடி வேலி ஓரத்தில் உள்ளவர்களும், நிரம்ப இருக்கிறார்கள். அன்புள்ள அண்ணாதுரை 3-6-1962 சூடும் சுவையும் (3) திராவிடநாடு பிரச்சினை - அரசினர் போக்கு - தி. மு. க.மீது கணை தம்பி! சூடும் சுவையும் நிரம்பிய திராவிடநாடு பிரச்சினை குறித்துக் காங்கிரஸ் வட்டாரத்திலே கவனிப்பவர்கள், பல வகையினர்; ஒவ்வொரு வகையினர் ஒவ்வொரு முனையிலிருந்து பிரச்சினையைக் கவனிக்கிறார்கள் என்பதனைச் சென்றகிழமை எடுத்துக் காட்டியிருந்தேனே, நினைவிலிருக்கிறதல்லவா? ஒரே அடியாக அவர்கள் அனைவரும் நமது பிரச்சினைக்கு ஆதரவு தர முன்வரக் காணோமே என்று நான் கவலைப்படவுமில்லை, கலக்கமடையவுமில்லை. ஆர அமர யோசிக்காமல், உணர்ச்சி யால் மட்டும் உந்தப்பட்டு நம்முடன் உறவாடிவிட்டு, செச்சே! இப்போதல்லவா புரிகிறது, இது பொருளற்ற பிரச்சினை என்பது என்று கூறி ஓடிவிடுபவர்களைவிடப், பிரச்சினை புரிகிறவரையில் தயக்கம் காட்டுபவர்கள், தெளிவு ஏற்படுகிறவரையில் கேள்வி கேட்பவர்கள், விளக்கம் கிடைக்கிறவரையில் இசைவுதர மறுப்பவர்கள், ஆயிரம்மடங்கு மேல். குரலை உயர்த்தி உயர்த்திப் பேசினவர்கள், இன்னும் என்ன இவர்களிடம் பேச்சு! இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டியதுதான்! - என்று பரணி பாடினவர்கள், கொள்கையிலே உண்மையான பிடிப்பு இல்லாததால், எத்துணை வேகமாக வெளியேறிவிட்டார்கள் என்பதைத்தான் பார்த்துவிட்டாயே! ஆகவே, தயக்கம் காட்டுபவர்கள் மேல், தகதகவென ஆடிவிட்டு ஓடிவிடுபவர் களைவிட!! எனவே, காங்கிரஸ் வட்டாரத்திலே, நமது பிரச்சினைக்கு உடனடி ஆதரவு கிடைக்கவில்லையே என்பது எனக்குக் கலக்கத்தைத் தரவில்லை. “நைடதம்’’ எழுதிய அதிவீரராமபாண்டியனுடைய அண்ணியார், நூலின் தரம் எப்படி என்று கேட்கப்பட்டபோது சொன்னார்களாம், வேட்டை நாய் வீடு திரும்புவதுபோல இருக்கிறது என்று. வேட்டைக்குக் கிளம்பும்போது, வேகம் மிகுதியாக இருக்கும்; வெற்றி கிட்டினும் கிட்டாமற்போயினும், அலுத்து, களைத்து, சோர்ந்து வீடு திரும்பும் அல்லவா? அதுபோல,”நைடதம்’’ எனும் நூல் முற்பகுதி மிக வேகமாக இருக்கிறது. பிற்பகுதியில் வேகம் இல்லை, மந்தமாக இருக்கிறது என்பதைக் கூறவே வேட்டை நாய் உவமையினைப் புலமைமிக்க அம்மையார் கூறினார். விடுதலை இயக்கத்தில் ஈடுபடுவோர்களும், தம்பி! தங்களிடம் உள்ள, திரட்டிக் காட்டக்கூடிய வேகம் அவ்வள வையும், துவக்கத்திலேயே கொட்டிக் காட்டிவிட்டு, நின்று நிதானமாக, நீண்ட காலம் நெருக்கடிகளை ஏற்று, தொண்டாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறபோது, வேகம் குன்றிப்போய், சோர்வு தட்டிப்போகும் நிலை அடைவார்களானால், அவர் களால் விடுதலை இயக்கத்துக்குப் பலன் இல்லை. ஆர்வம் மெள்ள மெள்ள வரலாம், தவறில்லை; தயக்கம் இருக்கலாம், தவறில்லை; வேகம் குறைவாக இருக்கலாம், தவறில்லை; ஆனால், தொண்டாற்றும் திறம் நீடித்து இருக்கவேண்டும், வெற்றி ஈட்டிடும்வரையில் தொண்டாற்றவேண்டும்; பொறுப்புணர்ச்சி இருக்கவேண்டும். காகிதக் கப்பல், நொடியிலே தயாராகிவிடுகிறது. கொளுத்தி வைக்கும் "மத்தாப்பு’ பளிச்சிட்டுக் காட்டுகிறது. விடுதலை இயக்கத்தில் தொண்டாற்ற, வேகம் வெடித்துக் கொண்டு வருவதுமட்டும் போதாது, காட்டுத்தீ போலன்றி, வீட்டு விளக்கு நிதானமாக, சீராக ஒளிவிட்டு இருளை அகற்றுவது போல, தொண்டு புரிதல்வேண்டும். ஓட்டப் பந்தயக்காரர்களிலே சிலர், துவக்கத்திலேயே குடல் தெரிக்க ஓட ஆரம்பித்து, பாதிப் பந்தயத்தின்போது, அதுவரை, வலிவை இழக்காமல் அதேபோது ஒரே அடியாகப் பின்தங்கிவிடாமல், ஒரு சீராக ஓடி வருபவர் வேகத்தை அதிக மாக்கிக்கொள்ளக் கண்டு, அந்த வேகத்துடன் போட்டியிடத் தக்க நிலையின்றி, களைத்துப்போவதனைக் கண்டிருக்கலாம்; விடுதலை இயக்கத்திலும், துவக்கத்திலே மிகுதியான வேகம் காட்டுவது இடையிலே கெடுதலை ஏற்படுத்துவதைக் கண்டிக் கிறோம். எனவே, காங்கிரசிலே உள்ளவர்கள், வேகமாக நம்முடன் வந்து சேர்ந்துவிடவில்லையே என்ற வருத்தம் எனக்கு எழவில்லை. அவர்கள் அனைவரும் சிந்திக்கிறார்கள் நமது பிரச்சினையைப்பற்றி, அது எனக்கு, இப்போதைக்குப் போதுமானதாகத் தெரிகிறது. ஏசட்டும். எதிர்க்கட்டும். பழி பேசட்டும். பகை கொட்டட்டும். ஆர்ப்பரிக்கட்டும். எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்யட்டும், பரவாயில்லை; அவைகளிலிருந்து தப்பிப் பிழைத்தால்தான் விடுதலை இயக்கம் என்பதற்கே மாண்பு ஏற்படும்; ஏளனமும் எதிர்ப்பும் அழிந்து விடுமானால், உண்மையான விடுதலை உணர்வு உண்டாக வில்லை என்று பொருள். எனவே, நமது விடுதலை உணர்வுக்கு எத்துணை வலிவு இருக்கிறது என்பதே, அதனிடம் காணப்படும், தாங்கிக்கொள்ளும் சக்தியின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. எனவேதான், காங்கிரஸ் வட்டாரத்தினர் நம்மைத் தாக்கும் போது எனக்கு எரிச்சல் ஏற்படுவதில்லை; அதுமட்டும் அல்ல; அவர்கள் நம்மைத் தாக்கத் தாக்கத்தான், நமது பிரச்சினையை அவர்கள் மிகக் கூர்மையாகக் கவனித்திருக்கிறார்கள், நமது பிச்சினை அவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது என்பது புரிகிறது; அதிலே ஒரு மகிழ்ச்சியும் பிறக்கிறது. காங்கிரசார்களிலே ஒரு சாரார், ஒரே அடியாகப் பிரிந்துபோய்விடுகிறோம் என்று கூறக்கூடாது. கோபம் கிளம்பும், எதிர்ப்பு ஏற்படும். ஆகவே, மெள்ள மெள்ளப் பக்குவமாக, "எங்களுக்கு அதிகாரம் அதிகம்வேண்டும், சலுகைகள் தரப்பட வேண்டும், பொருளாதார வளர்ச்சிக்கு வழி செய்தளிக்க வேண்டும்.’’ என்று பேசிக் காரியத்தைச் சாதித்துக்கொள்ள வேண்டும். ஒரே அடியாகப் பிரிந்துபோகவேண்டும் என்று கூறி வடநாட்டாரின் கோபத்துக்கு ஆளாகிவிடக்கூடாது; பல காரியங்கள் கெட்டுவிடும். என்று சொல்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்களிலே தகுதிமிக்க ஒருவர், என்னிடமேகூட இப்படிக் கூறினார். காலமறிந்து காரியமாற்றவேண்டும் என்பது இவர்தம் கொள்கை. இன்று மத்திய சர்க்காரிடம் குவிந்துகிடக்கும் அதிகாரத் தையும், வடநாட்டுத் தலைவர்களிடம் உள்ள செல்வாக்கினையும் கண்டு, திகைத்துப்போய்க் கிடைக்கும் நிலையில், இவ்வளவு வல்லமையுள்ள வடநாட்டுத் தலைவர்களுடன் முட்டி மோதிக் கொள்வது ஆபத்தாக முடியுமே, என்ற அச்சம் இவர்களை இவ்விதம் நினைத்திட வைக்கிறது. அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பதனை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவது, அச்சம் பிடித்தாட்டும் நிலை, மனதில் உள்ளதை எடுத்துக்கூறக்கூட அச்சம்! இது மெள்ள மெள்ள, மிக நல்லவர்களைக்கூட, உள்ளொன்றுவைத்துப் புறமொன்று பேசவைக்கிறது. கீழ்மட்டத்தில் இப்போக்குக் காணப்பட்டால், நயவஞ்சகம் என்று கூறிவிடுகிறோம்; மேல் மட்டத்திலே இப்போக்கு இருக்கும்போது, அவ்விதம் கூறாமல், இராஜதந்திரம் என்று கூறிவிடுகிறோம். ஒரு நாள், சென்னை சட்டசபையிலே, இரும்புத் தொழிற்சாலை இங்கு அமைக்கப்படவேண்டும் என்பதற்காக வாதாடினேன். அமைச்சர்கள் வழக்கம்போல் மறுத்துப் பேசினர்; காங்கிரஸ் உறுப்பினர்கள், கட்சிப் பற்றுக் காரணமாக என்னைக் கண்டித்தனர். கவைக்குதவாப் பேச்சு. கண்மூடித்தனம். கருத்தற்ற போக்கு. இப்படிப் பல அர்ச்சனைகள்!! பிற்பகல்; நண்பர் சிலருடன் ஒரு அமைச்சரைக் காணச் சென்றேன், அலுவலகத்தில், பொதுப் பிரச்சினை சம்பந்தமாக - அவரை ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி - அழைத்திட சிறிதளவு தயக்கம் எனக்கு; காலையிலே, சட்டசபையிலே, மிகக் கண்டிப்பாக, அமைச்சர்களுக்குப் பிடிக்காத விஷயமாகப் பேசினோமே, அமைச்சர் அதற்காகக் கோபமாக இருப்பாரோ என்னவோ என்ற எண்ணம் எனக்கு. ஆனால் அமைச்சர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். நிலையை நான் காணவில்லை, மாறாக, மலர்ந்தமுகத்துடன் வரவேற்றார்; வரவேற்றதுடன், காலையிலே, அவர் என்னைக் மறுத்துப்பேச நேரிட்டதற்காக வருந்தினார். நீங்கள் பேசுகிறீர்கள் தாராளமாக; உரிமையுடன். எங்களுக்கு அந்த நிலை இல்லை. ஆனால் எங்கள் உள்ளத்திலே, அந்த எண்ணமெல்லாம் இல்லை என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். எங்களுக்கு எல்லாம் தெரிந்து தான் இருக்கிறது. ஆனால் நாங்கள் உங்களைப்போலவே பேசுவதற்கு இல்லை. எங்கள் நிலை அப்படி. என்று கூறினார். திராவிட முன்னேற்றக் கழகம் வலிவுடன் இருப்பதுதான் நல்லது. அப்போதுதான் தமது குரலுக்கு டில்லியில் ஓரளவு மதிப்பு ஏற்படும் என்பது இவர்களின் உள்நோக்கம். தி. மு. கழகம் இந்த முறையில் எதிர்ப்புக் காட்டியபடி இருக்கவேண்டும். நாம், வடநாடு - தென்னாடு என்ற பேதம் கூடாது என்று பேசியபடி, ஒத்துழைப்புத் தந்து கூடிக் குலவி, கூடுமானவரையில், நமது நாட்டுக்குத் தேவையான சலுகை களைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது, இவர்களின் திட்டம். கிட்டத்தட்ட இவர்களின் போக்கு, வெள்ளையர் காலத்திலே இங்கு ஜஸ்டிஸ் கட்சியினர் கொண்டிருந்த போக்குப் போன்றது. காங்கிரஸ் இயக்கம் வெள்ளை ஏகாதிபத்தியத்தை மிகப் பலமாகத் தாக்கியும், மறியல், சட்டமறுப்பு, வரிகொடா இயக்கம்போன்ற கிளர்ச்சிகளை நடத்தியும் வந்தபோது, இவ்விதம் எதிர்ப்பது பலன் தராது, எதிர்க்க எதிர்க்க வெள்ளையர் களுக்கு நம்மீது வெறுப்புத்தான் வளரும், வெறுப்பு வளர்ந்தால், நாட்டைச் சீராக்கும் முயற்சியே செய்யமாட்டார்கள். எக்கேடோ கெட்டுப்போகட்டும் நமக்கென்ன, சுரண்டின வரையில் இலாபம் என்ற போக்கிலே இருந்து விடுவார்கள்; எனவே நாம் பிரிட்டிஷாருடன் ஒத்துழைத்து, அரசாங்க நிர்வாகத்திலே பங்கேற்று, பக்குவமாக நடந்து, படிப்படியாக அதிகாரத்தைப் பெற்று, வலிவும் பொலிவும்பெற்று, சுயராஜ்யத்துக்குத் தகுதி உள்ளவர்களாகிவிடவேண்டும் என்று கூறினர். பலர் இதே நோக்குடன் நடந்துகொண்டனர். அன்று ஜஸ்டிஸ் கட்சி மேற்கொண்ட முறைபோன்ற தாகவே, இன்று தமிழகக் காங்கிரசார் மேற்கொண்டுள்ள போக்குக் காணப்படுகிறது. குலாம்கள் அடிமைகள் பதவிப் பித்தர்கள் தாசர்கள் பூட்ஸ் துடைப்பவர்கள் வால் பிடிப்பவர்கள் என்றெல்லாம், அந்த நாட்களில் ஒத்துழைத்து உரிமைபெற வேண்டும் என்று கூறிய ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைக் கண்டித்தனர், காங்கிரஸ் தலைவர்கள். அதேபோல, இன்று அதேவிதமான போக்குடன் நடந்து கொள்ளும் தமிழகக் காங்கிரசாரை, திராவிட விடுதலை இயக்கத்தினர் கண்டிக்கவேண்டும் என்பதற்காக இதனைக் கூறவில்லை. காங்கிரசிலே ஒருவகையினருடைய போக்கு எவ்விதம் இருக்கிறது என்பதை விளக்கவே இதனைக் கூறினேன். ஒத்துழைத்து உரிமைபெறவேண்டும் - உறவாடி உயர்வு பெறவேண்டும் - பக்குவமாகப்பேசி காரியமாற்றிடவேண்டும் - என்ற போக்குடைய காங்கிரஸ் நண்பர் ஒருவர், முதலிலே, துணிவைப் பாராட்டுகிறேன் வெளிப்படையாகப் பேசவேண்டியதுதான் என்றெல்லாம் பாராட்டினார். ஆனால் அவர் சென்ற கிழமை என்னிடம் வந்து, மிகக் கவலையுடன் என்ன இருந்தாலும் இராஜ்யசபையிலே நீங்கள் இவ்வளவு பச்சையாக, திராவிடநாடு பற்றிப் பேசியிருக்கக் கூடாது. . . . என்று சொன்னது கேட்டு நான் திடுக்கிட்டுப் போகவில்லை, காரணம் எனக்குப் புரிந்ததால். அவரே மேற்கொண்டு விளக்கம் அளித்தார். தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று புகார் கிளப்பினாலே, அங்கு கொதிப்படைந்து, வடக்கு - தெற்கு என்று பேதம் காட்டிப் பேசுவது அற்பத்தனம், அக்ரமம். இதை அனுமதிக்கமாட்டோம் என்று ஆர்ப்பரிப்பார்கள். மத்திய சர்க்காருக்கு அதிகாரம் மிக அதிகம் இராஜ்ய சர்க்கார், கேவலம், நகராட்சிபோல ஆக்கப்பட் டிருக்கிறது. எங்கள் மந்திரிகள் எதற்கும் டில்லிக்குக் காவடி தூக்கிக்கொண்டு வரவேண்டி இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும்; இராஜ்யங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்படவேண்டும் என்று வாதாடினாலே, வடக்கே உள்ளவர்களுக்கு ஆத்திரம் பிறக்கும், ஆஹா! நேரு சர்க்காரையா குறை கூறுகிறாய் என்று பதிலடி கொடுப்பார்கள். இந்தி மொழியைத் திணிக்காதீர்கள், தாய்மொழி அழிந்துவிடும். மொழி ஆதிக்கம் நல்லது அல்ல, தென்னகம் அதனை எதிர்த்தே தீரும். இந்தி ஏகாதி பத்தியத்தை சகித்துக்கொள்ளமாட்டார்கள், எமது மக்கள் என்று பேசினால்போதும், தீமிதித்தவர்போலாகி வட நாட்டுத் தலைவர்கள் பகை கக்குவர். அப்படிப்பட்ட இடத்துக்குப் போய், நீ ஒரே அடியாக. நான் திராவிடன் - எங்கள் நாடு திராவிடநாடு - எங்கள் பண்பாடு தனியானது - நாங்கள் தனியாக வாழ்ந்திட விரும்புகிறோம் - தனிநாடு தேவை - தனி அரசு தேவை என்று பேசிவிட்டாய். இது கேட்டு அவர்கள் எப்படிச் சும்மா இருக்க முடியும்? ஆத்திரம் அவர்களுக்கு; “இவ்வளவு பெரிய எண்ணிக்கை பலத்துடன் நாம் இருக்கிறோம்; ஈடு எதிர்ப்பற்ற நிலையிலே அரசோச்சு கிறோம்; நம் எதிரில், இந்தத் தி. மு. கழகத்தான் வந்து நின்றுகொண்டு, துளியும் அச்சமின்றி, நமது அதிகாரத் தைத் துச்சமென்று எண்ணிக்கொண்டு, இதுவரையில் இங்கு ஒருவரும் பேசாததைத் துணிச்சலாகப் பேசுகிறான்; நாமென்ன மரக்கட்டைகளா? நம்மை வம்புக்கு இழுப்பது போல, அறைகூவி அழைப்பதுபோல, ஒரு ஆள் வந்து பேசுவதா? அதை நாம் அனுமதிப்பதா? ஜின்னாவுக்குப் பிறகு - நாட்டுப் பிரிவினைபற்றி, தில்லியில் அரச அவையிலே பேச்சுக் கிளப்பப்பட்டிருக்கிறதே! இதை எப்படி நாம் பொறுத்துக்கொள்ள முடியும்? விடக் கூடாது. அனுமதிக்கக்கூடாது. அழித்துவிடவேண்டும்’ என்றெல்லாம்தானே அவர்களுக்குத் தோன்றும். கோபம் கொதிக்காதா? அந்தக் கோபத்தின் காரணமாக, அவர்கள் எதையும் செய்யலாமே. அதிகாரம் அவர்களிடம் அவ்வளவு இருக்கிறதே, நாடு அவர்களிடம். படை அவர்கள் சொல் கேட்க. இவைகளைப்பற்றி எண்ணிப் பார்க்காமல், நீ பேசிவிட்டு வந்துவிட்டாய். பார் இப்போது அதனால் ஏற்படும் விளைவுகளை. உனக்கும் உன் கழகத்துக்கும்தானே கெடுதல் இதனால். நடமாடவிட மாட்டார்களே இனிமேல். பக்குவமாகப் பேசிவிட்டு வந்திருந்தாலாவது,”பொருளாதார வளர்ச்சிவேண்டும், மேலும் சிறிது அதிகாரம்வேண்டும், மொழி உரிமை வேண்டும்’ என்று வற்புறுத்திக்கொண்டு வரலாம்; இப்போது இழுத்துக்கொண்டுபோய்ச் சிறையிலே தள்ளி விடுவார்கள்போலிருக்கிறதே; கழகமே தடைசெய்யப் படுமாமே! இந்த விபரீதம் ஏற்படக் காரணம் உன்னுடைய பேச்சுத்தானே! அப்படியா பேசுவது, ஒரே அடியாக. திராவிடன், திராவிடநாடு, தனிநாடு என்றெல்லாம் ரொம்ப ஆசைப்பட்டுவிட்டாய். ஆர்வத்தை அடக்கிக் கொள்ளத் தெரியவில்லை. இவ்விதமாக அந்த நண்பர் பேசிவிட்டு, மேஜைமீது ஒரு நாளிதழை வீசி எறிந்தார். தி. மு. க. மீது நடவடிக்கை எடுப்பது உறுதி! தமிழக அமைச்சருக்கு டில்லி அவசர அழைப்பு மதுரை, ஜூன் 1 திராவிடநாடு பிரிவினையை வலியுறுத்திக்கொண்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது நடவடிக்கை எடுப்பது முடிவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. தமிழக முதல் அமைச்சர் திரு. கே. காமராசர் நாளை புதுடில்லியில் நடைபெறும் தேசிய ஒருமைப்பாடு மாநாட்டில் கலந்துகொள்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது எந்தவித நடவடிக்கை எடுப்பது என்பதைபற்றி அம்மாநாட்டில் வெளியிடுவார். பிரிவினையை வலியுறுத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்போவது உறுதியாகிவிட்டது. ★ காங்கிரஸ் நண்பர், நாளிதழில் காணப்பட்ட செய்தியால், பதறிப்போய்ப் பேசினார். எல்லா இதழ்களுமே, இதுபோலச் செய்திகளை வெளியிட்டிருந்தன. ஊரெங்கும் இதே பேச்சுத் தான். இவ்வளவு கூறுவானேன், தம்பி! நானே, சென்றகிழமை அரசியல் இருந்த நிலைமைகளைக் கண்டபோது, இந்த கிழமை உனக்கு மடல் தீட்ட இயலுமா என்பதுபற்றி ஐயப்பாடு கொண்டிருந்தேன். மங்களம் பாடப்போகிறார்கள், தெரியுமா! மாட்டிக்கொண்டார்கள் பயல்கள், வசமாக! கண்மண் தெரியாமல் ஆடினார்களே, இனி, கப்சிப் வாயைத் திறக்கக்கூடாது, தெரியுமா. . . . ஒழிந்துபோகட்டுமய்யா, ஊரிலே ஒரே அமளி இதுகளால். . . . . நம்மை யார் என்ன செய்ய முடியும் என்று மண்டைக் கர்வம், இதுகளுக்கு. சட்டம் எத்தனை நாளைக்குத்தான் சகித்துக் கொள்ளும், இப்போது, கொட்டப்போகிறது; பயல்கள் இனிப் பெட்டிப் பாம்புதான். கழகத்தைத் தடை செய்துவிடத்தான் போகிறார்கள். பிரிவினைப் பேச்சுப் பேசினால், பிடித்துப்போடு வார்கள் சிறையில், ஐந்து வருஷம் ஆறு வருஷம். நாட்டைப் பிரிக்கச் சொல்வது இராஜத் துவேஷக் குற்றம் இனி; தெரியுமா? இராஜத்துவேஷக் குற்றத்துக்கு என்ன தண்டனை தெரியுமா? நாடு கடத்தலாம்! ஆயுள் தண்டனை தரலாம்! சுட்டுக் கொல்லலாம், பலாத்காரம் தலைதூக்கினால். முடிந்ததா இதுகளோட கதை ஒழியட்டும்! அவன் கெட்டிக்காரன்யா, இப்படி வரப்போவது தெரிந்துதான். சாமர்த்தியமாக இதுகளைவிட்டுப் போயேவிட்டான். . . பிரிவினைகூடாது என்று பேசவும் ஆரம்பிச்சாச்சி. . . தம்பி! ஊரார் உரையாடல் இவைபோல; தெரியுமே உனக்கு. கணக்கே போட ஆரம்பித்தார்கள், அவசரக்காரர்கள் - எவ்வளவு பேர் பிடிபடுவார்கள் என்பதுபற்றி. கழகத் தோழர்களுக்குள் பேச்சே இது குறித்துத்தான் - நமக்கு எப்போது அழைப்பு வரும் என்பது பற்றி, ஆர்வத்துடன். நாடு பிரியும் பேச்சு இவர்கள் பேசினால், மற்றவர்களுக்கு என்னவாம்? இவர்கள் மக்களிடம் பேசட்டுமே, நாடு பிரியக் கூடாது என்று. அதை விட்டுவிட்டு, நாட்டுப் பிரிவினைபற்றிய பேச்சேகூடாதே - சட்டவிரோதம் - தடை போடுவோம் - என்றா மிரட்டுவது? இதுதான் சுயராஜ்யமா? இதுதான் பேச்சு உரிமையா? நாட்டுப் பிரிவினைபற்றி தி. மு. கழகம் பேசப்பேச அதைக் கேட்டு, மக்கள் மனம் கெட்டுப்போகிறதாம், பிரிவினை மனப் பான்மை வளருகிறதாம், பிளவு சக்தி வளருகிறதாம்; அதனால் தான் பிரிவினைப்பற்றிப் பேசக்கூடாது, அதற்காக ஒரு கழகம் இருக்கக்கூடாது என்று தடைசெய்யப் போகிறார்கள்; சட்டம் போடப் போகிறார்கள். தி. மு. க. நாட்டுப் பிரிவினைப்பற்றிப் பேசினால், ஆட்சியிலே இருக்கிற காங்கிரசார் நாட்டு ஒற்றுமைபற்றிப் பேசட்டும்; அவர்கள் பேச்சை மக்கள் கேட்கிறார்களா இல்லையா என்று பார்ப்பதுதானே! ஏன் அதிலே காங்கிர சாருக்கு நம்பிக்கையும் தைரியமும் இல்லை. சட்டத்தைத் துணைக்கு அழைத்து, தடை போடுவது என்றால், இவர்கள், தங்களைக் கையாலாகாதவர்கள் என்று உலகுக்கு அறிவித்து விட்டதாகத்தானே பொருள் ஏற்படும். இவ்விதமாகப் பேசத் தலைப்பட்டனர் பலர், தமிழகமெங்கணும். தம்பி! நான் கண்டு பெருமிதம்கொண்டேன் - மாநாட்டுக்கு நான் குறிப்பிட்டானதும், கழகத் தோழர்கள் அதற்குச் செல்வதற்கான வழிவகை பற்றிப் பேசிக்கொண்டுப் புறப்பட முயற்சி எடுத்துக்கொள்ளும் ஆர்வத்தோடும் இருப்பார் களே - அதுபோன்ற எழுச்சியுடன், நமது தோழர்கள் தடை வரும் மீறிடவேண்டும்; சிறை என்பார்கள், சரி என்று செப்பிட வேண்டும் என்று பேசி மகிழ்ந்திருந்ததை. இதற்கு முன்பும் பலமுறை தடைபோடப்படும் - கழகம் கலைக்கப்படும் - என்ற பேச்சுக் கிளம்பியதுண்டு. என்றாலும், இம்முறை, திட்டவட்டமான அறிவிப்பு என்ற விதமாக, இந்தப் பிரச்சினை கிளம்பிற்று, இதழ்களிலும், வானொலியிலும், தேசிய ஒருமைப்பாடு மாநாடு கூடுவதே தி. மு. கழகத்தைத் தடை செய்யத்தான் என்று அறிவிக்கப்பட்டது. எனக்கு அப்போதே தெரியும். என்று கூறித் தலை அசைத்தனர், அரசியல் அனுபவத்தைச் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி பேசிடும் அருங்கலைவாணர்கள். பதினைந்து ஐம்பதாகிவிட்டதே என்று பயந்தீர்களே! ஐம்பது நூறு ஆகுமோ நூற்று ஐம்பது ஆகுமோ என்று எண்ணி ஆயாசப்பட்டீர்களே, பார்த்தீர்களா? பலூன் வெடிக்கப் போகிறதே, தெரியுமா? என்று பேசிக் கேலி செய்தனர், நமது வளர்ச்சி கண்டு மனம் பொறாதார். இங்கும் சரி, அல்லது தில்லி வட்டாரத்திலேயும் சரி, ஒரு காங்கிரஸ் தலைவர்கூட, "அப்படி ஒன்றும் இல்லை, தடை போடப்போவது இல்லை’ என்று அறிவிக்கவில்லை. ஊரெங்கும் ஒரே கொதிப்பு. என்றைக்காவது ஓர் நாள் இது வந்துதீரவேண்டிய நிலைமை - எதிர்பார்க்காமலிருப்பவன் ஏமாளி - ஆனால் சதா அதனையே எதிர்பார்த்துக் குழம்பிக்கிடப்பவன், கோழை! நாம், நாமாக ஏற்றுக்கொண்டுள்ள இலட்சியத்துக்காக, என்ன விதமான கஷ்ட நஷ்டம் ஏற்கவும் உறுதிகொண்டால்தான், ஊரிலே பெரிய புள்ளிகள் என்றும், அரசியலிலே "ஜாம்ப வான்கள்’ என்றும், அகிலம் சுற்றிய அறிவாளர் என்றும், ஆட்டிப்படைத்திடும் ஆற்றல்மிக்கோன் என்றும் விருதுகள் பல பெற்றவர்கள், நம்முடன் இல்லை, நம் பிரச்சினையை ஆதரிக்க முன்வரவில்லை என்று மிக நன்றாகத் தெரிந்திருந்தும், உள்ள இதழ்கள் அவ்வளவும், நம்மைக் கண்டிப்பதைக் கடமையாகவும், தூற்றுவதைத் தொண்டு ஆகவும், கேலி செய்வதைக் கலை யாகவும்கொண்டு இயங்கி வருகின்றன என்பதை அறிந்திருந்தும், நமது இரத்தம் சிந்தப்பட்டால், கண்ணீர் சிந்தவாவது இவர்கள் முன்வருவார்களா என்பதுபற்றிய கவலையுமற்று, நாம் ஏற்றுக்கொண்டிருக்கிற இலட்சியத்தின் பளுவை நாம்தான் தாங்கியாகவேண்டும்; ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு நாம்தான் ஈடுகொடுத்தாகவேண்டும், இலட்சக்கணக்கானவர்களோ, ஆயிரக் கணக்கிலோ அல்லது நூற்றுக்கணக்கிலோ, எந்த அளவில் நம்முடன் பயணம் நடாத்துபவர் கிடைக்கின்றனரோ, அது பற்றியும் கவலைகொள்ளாமல், நம்மை நாம் ஒரு இலட்சியத்துக்கு ஒப்படைத்துவிட்டோம் என்ற உணர்வுடன் பணியாற்றி வருகிறோம். பேச்சால், எழுத்தால், பணியாற்ற இயலாத நிலை ஏற்பட்டால், அடக்குமுறைகொண்டு நாம் தாக்கப்பட்டால், நமது செந்நீரும் நமக்காகச் சிந்தப்படும் கண்ணீரும், நமது பேச்சு, எழுத்து ஆகியவற்றினைவிட வல்லமைமிக்கதாகி, இலட்சிய வெற்றிக்கு வழிகோலும் என்ற திடமான நம்பிக்கையுடன் இருந்து வருகிறோம். உள்ளபடி சொல்கிறேன் தம்பி! நமது கழகத்தைத் தடை செய்யப் போகிறார்கள் என்று பேச்சுக் கிளம்பியபோது எனக்குத் திகிலோ, கோபமோ எழவில்லை. விடுதலை இயக்கத்திலே காண வேண்டிய பல கட்டங்களிலே மிகமுக்கியமான, எழுச்சிமிக்க கட்டத்தைக் காணப்போகிறோம் என்ற தெம்பும், இராஜ்ய சபையிலே பேசினோம் அது பத்தோடு பதினொன்றாகி விடாமல், பரபரப்புக்குரியதாக மட்டுமல்ல, ஆளுங்கட்சியினர் ஆர்ப்பரித்து எழுந்து அடக்குமுறையை அவிழ்த்துவிட்டாக வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியது ஆகிவிடுகிறது என்பதிலே பெருமிதமும்கொண்டேன். ஒழித்துக்கட்டிவிடப்போகிறோம், இந்தப் பொதுத் தேர்தலில் என்று காங்கிரஸ் கட்சி தி. மு. கழகத்தை மிரட்டிற்று. பொதுமக்களோ 34 இலட்சம் வாக்குகளைக் கொடுத்து 50 சட்டமன்ற இடங்களையும், 7 பாராளுமன்ற இடங்களையும் தந்தனர். பாராளுமன்றத்திலே, தி. மு. கழகத்தார் நாட்டுப் பிரிவினைபற்றிப் பேசலாயினர். அதனால் பெருத்த பரபரப்பு ஏற்பட்டது. இனி தி. மு. கழகப் பிரச்சாரத்தை மறுத்துப்பேசி வெற்றி பெறமுடியாது என்ற திகில்கொண்ட காங்கிரஸ் கட்சி, தி. மு. கழகத்தைச் சட்டவிரோதமானது என்று தடைசெய்து, தி. மு. கழகத் தோழர்களைச் சிறையில் அடைத்தது. இப்படி, நம்முடைய பிள்ளைகள் வரலாறு படிக்கத்தானே வேண்டிவரும் - இந்தக் கட்டம் இல்லையேல், விடுதலை பெறுவது ஏது? எனவேதான், இந்தக் கட்டம் இவ்வளவு விரைவாக வருகிறதே என்பதனை எண்ணி நான் மகிழ்ச்சியுற்றேன். ஆனால், தி. மு. கழகம் இருப்பதனால்தான், ஒரு நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தாரில் எழுவருக்கு தில்லி மந்திரி சபையிலே இடம் கிடைத்தது, மேலும் பலசலுகைகள் கிடைக்க வழி இருக்கிறது என்பதனால் உற்சாகம்கொண்ட காங்கிரஸ் நண்பர், கழகம் தடைசெய்யப்பட்டால் நட்டம் கழகத்துக்கு அல்ல, தமிழகக் காங்கிரசுக்குத்தான் என்பதனை உணர்ந்து, "ஐயோ! தடைசெய்யப் போகிறார்களாமே! ஏன் அவ்வளவு சூடாகப் பேசினீர்?’ என்று என்னைக் கேட்டார்! சூடு சுவையும் தருகிறது என்பது நமக்குத் தெரிந்த அளவுக்கு அவருக்குத் தெரியாததல்லவா? வேலையற்றதுகள் வெட்டிப்பேச்சுக்காரர்கள் தீய சக்திகள் ஒருசிறு கும்பல் என்று, மிகப்பெரிய ஆணவத்தைத் துணைகொண்டு, காங்கிரஸ் தலைவர்களும், அவர்களின் தயவை நாடிப் பிழைத்துக் கிடக்கும் பேர்வழிகளும், நம்மைப்பற்றிப் பேசுவது வாடிக்கை. உங்க அண்ணாதுரைக்கு, அரசியல் தெரியுமா? என்று ஒருவர் கேட்பார்! படித்தால்மட்டும் போதுமா? என்று இன்னொருவர் கேட்பார். வரலாறு தெரியுமா, பூகோளம் தெரியுமா, இலக்கியம் தெரியுமா, இலக்கணம் தெரியுமா? என்று கேட்பார் மற்றொருவர். கலை தெரியுமா? என்று கதைப்பார் ஒருவர்; கதை எழுதிப் பிழைப்பவர்கள் என்று குத்திக்காட்டுவார் இன்னொருவர். தியாகம் செய்திட முடியுமா? என்று கடாவுவார் ஒருவர், தீரம் உண்டா வீரம் உண்டா என்று தீப்பொறி கிளப்புவார் இன்னொருவர். இப்படிப்பட்டவர்களெல்லாம் அரசியலில் இருக்க லாமா என்று இடித்துக் கேட்பார் ஒருவர்; இதுகளின் பேச்சை யார் மதிக்கிறார்கள் என்று வியப்பு வெளியிடு வோர் வேறொருவர். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைப்பதுபோல, ஒருவர் கேட்பார், இங்கே நாலுபேர் பேசித் திரிகிறார்களே தவிர, ஆந்திரத்திலே, கேரளத்திலே, கர்னாடகத்திலே, ஒரு ஆள் உண்டா இதுகளை ஆதரிக்க என்று கேட்பார். இவர் திங்கட்கிழமை திருவனந்தபுரத்தில் பேசிவிட்டுச் செவ்வாய்க்கிழமை காகிநாடா, புதன்கிழமை பெல்காம், வியாழக்கிழமை விசாகப்பட்டினம், வெள்ளிக் கிழமை கள்ளிக்கோட்டை, சனிக்கிழமை சாத்தூர், ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் என்று இந்தப்படி சுழல் வேக சூறாவளிப் பயணம் நடத்தி, அறிவை வாரி வழங்கிக் கொண்டு இருப்பவர்போன்ற "தொனி’ கிளப்பி. தம்பி! இவ்வளவுதான் இவர்கள் நமது கழகத்தைப்பற்றிக் கொண்டுள்ள மதிப்பீடு. எனினும் கவனித்தனையா, இந்நிலை தான் நமது கழகத்தது என்று, “இத்தனை பெரியவர்கள்’ சொன்ன பிறகும், கழகம் அகில இந்திய அரசியலிலே ஒரு கேள்விக் குறியாகிவிட்டது! இந்திய துணைக்கண்டத்தில் உள்ள இதழ்கள் யாவும், அலசிக் காட்டிடவேண்டியதோர் பிரச்சினையாகி விட்டது. ஆளுங்கட்சி மட்டுமேயன்றி, நாட்டில் உள்ள கட்சிகள் பலவும் ஆராயவேண்டிய பிரச்சினையாகிவிட்டது. அது மட்டுமா? கழகம் வளராதிருக்க, பிரிவினைப் பேச்சு வளராம லிருக்க என்ன செய்யலாம்? தேசிய ஒருமைப்பாடு எப்படி ஏற்படுத்துவது? என்பதனை ஆய்ந்தறிந்து வழிவகை காண அகில இந்திய அடிப்படையிலே ஒரு பெரிய முயற்சி செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. முப்பத்து ஏழு பேர் களாமே, ஆய்ந்தறிந்து வழிமுறை கூற, தேசிய ஒருமைப்பாடு மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்த பேரறிவாளர்கள்!! அவ்வளவு”மூளைபலம்’ - "கூட்டுபலம்’ - தேவைப்படுகிறது, வெட்டிப் பேச்சுக்காரர்களாமே கழகத்தார், அவர்களின் போக்கினால் ஏற்பட்டுவிட்ட விளைவுகளைச் சமாளிக்க, வேடிக்கையாக இருக்கிறதல்லவா? மதுரையிலே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றபோதாகிலும், முதலமைச்சர் காமராசர் சற்று முடுக்காக, "தி. மு. கழகம்பற்றி நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். அதை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்’’ என்று பேசினார். இம்முறை, கழகத்தைத் தடைசெய்யப்போகிறது இந்தியப் பேரரசு என்றதும், பழைய முடுக்கு இருக்கும் இடம் தெரியவில்லை. தில்லி சென்றார், உத்தரவு என்ன என்று கேட்டு அதன்படி நடந்திட. கசப்பாலும் குரோதத்தாலும் பொறாமையாலும் பொச்சரிப்பாலும், சிலருக்கு இயல்பாகிவிட்ட இழிகுணத் தாலும், தி. மு. கழகத்தைப்பற்றி மிகக்கேவலமாகப் பேசுகின்றனர் என்றாலும், இன்றைய அரசியலில், கவனித்துத் தீரவேண்டிய, சிக்கல்மிக்க, சங்கடம் மிகுந்த, பெரிய பிரச்சினையாகிவிட்டிருக் கிறது தி. மு. கழகம் என்ற பேருண்மையை, எவரும் மறைத்திட முடியாது, தம்பி! இப்படிப்பட்ட ஒரு பிரச்சினையை உருவாக்கியதிலே, உனக்கும் எனக்கும் ஓரளவு பங்கு இருக்கிறது என்பது எண்ணி மகிழத்தக்கது, உரிமையுடன் பெருமிதம் கொள்ளத்தக்கதாகும். ஒன்று கூறுகிறேன், தம்பி! ஒரு சிலர் கருதுகிறார்கள், தி. மு. கழகத்தார் தெளிவாகப் பேசுவார்கள் தீரமாக நடக்க மாட்டார்கள் என்று. மக்களின் மனதில் பதியும்படியாகப் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவார்கள், ஆனால், உடலிலே தியாகத் தழும்பு ஏற்கத் துணியமாட்டார்கள். கண்டனக் கூட்டம் நடத்துவார்கள், காரிருள்கொண்ட சிறையில் அடைபட்டுக் கிடக்கமாட்டார்கள் என்று சிலர் கருதுகிறார்கள். இவர்கள் பிறக்கும்போதே வீரவாளுடன் பிறந்ததுபோலவும் நாம் கைவளையுடன் பிறந்ததுபோலவும் எண்ணிக்கொண்டு பேசுகின்றனர். பகை உணர்ச்சி காரணமாக இவர்கள் இதுபோலப் பேசுகின்றனர் என்றாலும், தம்பி இந்தத் தவறான எண்ணம் தகர்ந்துபோகத் தக்கதோர் நிலை விரைவில் ஏற்படவேண்டும் என்று, நான் மெத்தவும் விரும்புகிறேன். ஏளனம் பேசும் இவர்கட்காக அல்ல, ஏத்தித் தொழுதனவெல்லாம் ஏளனம் பேசும்போது கேட்டுச் சிரிப்பதல்லால், வேறு ஏதும் தோன்றவில்லை - நான் கூறுவது இத்திறத்தினர் பொருட்டல்ல. நாம், திராவிடநாடு தனிநாடு ஆதல்வேண்டும் என்பதற்காக, எந்த விலையும் கொடுக்க, எதனையும் இழக்க, எத்தகைய கஷ்ட நஷ்டமும் ஏற்கச் சித்தமாகிவிட்டோம் என்பதனை, உலகு உணரவேண்டும்! அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட இருக்கிறது என்று கேள்விப்பட்டபோது, நான் மகிழ்ச்சியால் துள்ளிக் கொண்டிருந்தேன். நமது நோக்கத்தின் தூய்மையை, கொள்கையில் உள்ள உறுதியை, மாற்றாரும் உணரத்தக்க விதத்தில், நாம், அடக்குமுறையை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது என்று எண்ணினேன். நாம் பேசுவதைக் கேசெய் திடலாம் - நம்மை அடக்குமுறை தாக்கிடும்போது, நமது குருதி கொட்டப்படுவது கண்டேனும், நமது கொள்கையை ஏற்றுக்கொள்ளக்கூடவேண்டாம், நமது உள்ளத் தூய்மையை, உறுதியை உணர்ந்துகொள்வார்களல்லவா, அது போதும் என்று, நான் எண்ணிக்கொண்டிருந்தேன். தியாகத்துக்குத் தயாராக இருக்கிறோம், இருக்கிறோம் என்று எத்தனைமுறை முழக்கமிட்டு என்ன பலன்? நம்மிலே பலர் அடக்குமுறையின் கோரப் பற்களுக்கு இடையிலே சிக்கிப் பிய்த்தெறியப்படுவதை, நம்மை நம்ப மறுக்கும் நல்லவர்கள் கண்குளிரக் காணவேண்டும். நாடு கடத்தினார்கள். நையப் புடைத்தார்கள். பத்தாண்டு சிறைத் தண்டனை. சுட்டுக் கொல்ல உத்தரவு. என்பன போன்றவைகள், நம்மை அடக்க, அச்சத்தால் பீடிக்கப் பட்ட ஆட்சி மேற்கொண்டு தீரவேண்டிய முறைகளாகும். நறுக்கி எடுத்து, கொதிக்கும் நீரில் வேகவைத்து, சுவை கூட்டியான பிறகே, பச்சைக் காய்கறி பண்ட மாகிறது, உண்டு மகிழ. மரண வாயிலில் போய்ப் போய் வந்தபிறகே, தாய் பிள்ளைப்பேறு காண்கிறாள். கீழ்மண் மேலாக உழுது கிளறியபிறகே, போட்டது முளைக்கிறது. கடைந்தால்தான் மோரிலிருந்து வெண்ணெய் கிடைக்கிறது. விடுதலை மட்டும் என்ன, வாய்ப்பந்தலிட்டு, வார்த்தைக் கொடி படரச்செய்து, பறித்தெடுத்திடும் காயோ? இல்லை, தம்பி, இல்லை. நாடு விடுபட நானிலமதனில் கொட்டப்பட்ட இரத்தம், வெள்ளம் என்னலாம். கொய்தனர் தலையினை! கொளுத்தினர் உயிருடன்! இடித்தனர் மனைகளை! ஒடித்தனர் கரங்களை! பறித்தனர் கண்களை! - என்றெல்லாம் படிக்கிறோம், நாடு மீட்ட வீரர் நடாத்திய கிளர்ச்சிக் காதைகளில். ஏடா! மூடா! நாடாவேண்டும், உனக்கு? நத்திப் பிழைத்துக் கிடந்திடவேண்டியவன், பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் என்று பிதற்றித் திரிகிறாயாமே! கற்றது அது. அதனால், வல்லமை மிக்க எமது ஆட்சியை மாற்றிடவில்லையோ? என்று கேட்டிடும் மமதையாளன் முன் மண்டியிட மறுத்து, வெட்டுண்டு கீழே சாய்ந்த வீரர் எத்தனை பேர்!! தாயகத்தின் தளைகளை நொறுக்கிடவேண்டும் என்றா கூறினான் இத்தருக்கன்? நொறுக்கிடு இவன் மண்டையை!! நாய் நரி பொறுக்கித் தின்னட்டும் பிணத்தை!! - என்று கொக்கரித்த கொடுங்கோலர்களின் வாளுக்குப் பலியானோர் எத்தனை எத்தனையோ பேர்கள். "எனக்கென்று ஓர் வீடு உண்டு - இன்றோ அது வெறும் மண்மேடு! காதலித்துனை மணந்தாள் கட்டழகி - அவள் கண்ட துண்டமாக்கப்பட்டாள், கற்பினை இழந்திட மறுத்ததால். ஒரே மகன்! ஓயாச் சிரிப்புக்காரன்! யானையின் காலிலிட்டுக் கொன்றனர் அவனை - என் மகன் என்பதால் - என் மொழி பேசியதால். இவைகளை எண்ணும்போது, நெஞ்சு வெடித்து விடும்போலிருக்கிறது. ஆனால், எனக்கென்று ஒரு நாடு உண்டு - அதிலே ஆதிக்கம் செலுத்துவது வேற்று நாட்டான் - அதை நீக்க வகையற்றுக் கிடக்கிக்கிறேன் நெடுந்தொலைவில், இதனை எண்ணிடும்போதுதான் வேதனையும் வெட்கமும் வேலாகி இதயத்தில் பாய்கிறது. வீடற்றுக் கிடக்கலாம், நாடற்றுக் கிடப்பதா? சாவே, வா!’’ - என்று கத்தும் கடல் நடுவே தீவினிலே சிறையினிலே கதறிய வீரர்களின் தொகை குறைவோ? தம்பி! வரலாற்று ஏடுகளைக்கூட விடு, பிறகு பார்த்திடு வோம். கொடிகாத்த குமரன் அடிபட்டு மாண்டது அறியாயோ? செக்கிழுத்த சிதம்பரனார், வேறு நாடோ? இவை தமை அறிந்துள்ள நாம், உள்ளத் தூய்மையுடன் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு இலட்சியத்துக்காக, எப்போது காணிக்கை செலுத்துவது, எவ்விதமான காணிக்கை? விடுதலை அதனைப் பொறுத்துத்தான் இருக்கிறது. "காணிக்கை’ செலுத்தும் காலம் வந்துவிட்டது என்று காத்துக்கிடந்த நமது எண்ணத்திலே, மண்ணை அள்ளிப் போட்டுவிட்டனர், நம்மைத் தடைசெய்யக் கூடிய தகுதி மிக்கோர், ஏனோ? விளங்கவில்லை. பொதுத்தேர்தல் முடிந்தது, காங்கிரஸ் போட்ட கணக்குப் பொய்த்துப்போய்விட்டது. ஐம்பதின்மர் சட்டசபையில் - எழுவர் பாராளுமன்றத்தில். இராஜ்யசபையில் பேசும் வாய்ப்பு, முதல் பேச்சு முழு மூச்சுடன் எதிர்ப்பு. அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கழகத் தோழர்கள் இரத்தக் காணிக்கை செலுத்தினர். . . . இம்முறையில் மின்னல் வேகத்தில், சூடும் சுவையும் மிக்க நடவடிக்கைகள் தொடரும் என்று எதிர்பார்த்துக் கிடந்தேன். என்னையும் உன்னையும் ஏமாற்றிவிட்டனர், நம்மீது கணை தொடுக்கக்கூடியோர். காரணம் என்ன? கூறுவார் காணோம். "இன்னின்ன காரணங்களுக்காக, தி. மு. கழகம் தடை செய்யப்படுகிறது; தடை மீறினால் இன்னின்ன விதமான தண்டனைகள் தரப்படும்’ என்று சூடும் சுவையும் மிக்க செய்தி வெளியிடப்படும் என்று எண்ணிக்கொண்டிருந்தோம் - இன்னின்னார் தலைமையிலே இன்னின்ன கமிட்டி அமைக்கப்படுகிறது; இன்னின்ன விதமான வேலைகளைக் கமிட்டிகள் மேற்கொள்ளும் என்ற உப்புச் சப்பற்ற செய்தியே தரப்பட்டிருக்கிறது. காங்கிரசை அறைகூவிக் களம் வரச்சொல்லி அழைத்த வரும், தடைமீறி உள்ளே நுழைந்தால், சிறைதான் காந்தியாருக்கு என்று அறிவித்தவரும், திருவிதாங்கூர் பாரதத்தில் பிணைபட்டு இருக்கப்போவதில்லை தனி நாடு ஆகிவிடுகிறது என்று "பிரகடனம்’ செய்தவருமான, சர். சி. பி. இராமசாமி ஐயர், பிரிவினை சக்திகளைக் கவனித்துத் தேசிய ஒருமைப்பாடு ஏற்பட வழிகூற அழைக்கப்பட்டிருக்கிறார். துகில் உரித்த துச்சாதன னுடன், துரோபதை செல்கிறாள் கடைவீதி, புதுச்சேலை வாங்க!! விந்தைமிகு இந்தச் செய்திபற்றி அடுத்த கிழமை. அன்புள்ள அண்ணாதுரை 10-6-1962 சூடும் சுவையும் (4) சி. பி.யைப் பழிவாங்கியது - ஏக இந்தியா வாதம் - திராவிடம் பிரிதல் தம்பி! விந்தையான செய்தி இது என்று குறிப்பிட்டிருந்தேன், சென்ற கிழமை; கவனமிருக்குமே. ஏன் விந்தையான செய்தி என்கிறேன் என்றால், தம்பி! தேசிய ஒருமைப்பாடு உண்டாக்க திருவிதாங்கூர் மட்டுமே தனி நாடாகி, தனி அரசு நடாத்த முடியும் என்று முழக்கமிட்டு, ஏற்பாடுகளில் ஈடுபட்ட சி. பி. தானா, இந்தக் காரியத்துக்கு அமர்த்தப்படவேண்டும் என்று எவரும் எண்ணத்தான் செய்வார்கள். நிலைமைக்கு, அவரவர்கள் தத்தமது திறமைக்கு ஏற்ப விளக்கம், காரணம் காட்டுவார்கள்! நிரம்ப!! ஆனால், காங்கிரஸ் வட்டாரமேகூட, உள்ளபடி அதிர்ச்சி அடைந்திருக்கிறது, சி. பி. தலைமையில் குழு அமைக்கப் பட்டது கண்டு. சி. பி. இராமசாமி ஐயர், கோபாலசாமி ஐயங்கார்போல, வெள்ளைக்காரன் இருந்த வரையில் அவனிடம் “சேவகம்’ பார்த்துவிட்டு, சுயராஜ்யம் வந்ததும், அதிலே”சேவகம்’ பார்க்க வந்தவரல்ல. எஜமானர்கள் மாறினாலும், ஊழியர் ஊழியரே என்ற தத்துவத்தைத் தடியாகக்கொண்டு மேலிடம் நடந்தவர் அல்ல, சி. பி. வேண்டாம் இனிப் பதவி என்று கூறிவிட்டு, வேதாந்த விசாரணையில் ஈடுபட்டவர் அல்ல; ஓய்வுபெற்றாலும், அவ்வப்பொழுது, நேருபிரானுக்குத் துதிபாடியபடி இருந்தால், ஏதாகிலும் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் "நாமாவளி’ பாடிடும் போக்கினருமல்ல, சி. பி. எனக்கு ஏன்; இன்னமும் ஏன்? என்று உரத்த குரலில் கேட்டுக்கொண்டே, மெல்லியக்குரலில், "என்ன இலாகா? என்ன அந்தஸ்து?’ என்று கேட்கும் பசி நிறைந்தவரும் அல்ல, சி. பி. மகன், தில்லியில் மந்திரியாக வீற்றிருப்பதைக் காண்பவர். விடுதலை இயக்கத்தில் துவக்க காலத்தில் ஈடுபட்டு, அன்னி பெசண்டு அம்மையாரின் அரசியல் அரவணைப்பிலே வளர்ந்து, நிர்வாகத் துறையில் நுழைந்து, நெரித்த புருவத்தையும், நேர்த்தி யான அறிவாற்றலையும் ஒருங்கே இணைத்து அரசோச்சியவர். காங்கிரசை நந்திப் பிழைத்தாகவேண்டிய நிலையில்லை. அவர் ஏன் அழைக்கப்பட்டார்? இந்தப் பதினைந்து ஆண்டுகளாக உங்கள் தலைவர் களுக்குத் தெரியாததை சி. பி. தெரிந்து கூறி, உமது தலைவர் களால் இதுநாள் வரையில் சாதிக்கமுடியாதுபோன தேசிய ஒருமைப்பாட்டினை, சி. பி. சாதிக்கப்போகிறார் என்றா அவரிடம் இந்தக் காரியத்தை ஒப்படைத்தீர்கள்? என்று கேட்கும்போது, காங்கிரசாருக்கு வேதனையாகவும் வெட்கமாகவும்தான் இருக்கிறது. தேசிய ஒருமைப்பாடு கிடைத்திடக் காலமெல்லாம் உங்கள் போக்கை வன்மையாகக் கண்டித்துக்கொண்டிருந்த சி. பி. தானா அகப்பட்டார்! அவர் பிரிட்டிஷ் ஆட்சி முறையிலே இணைந்து இருந்தவராயிற்றே - கோஷன் பிரபுவைத் தலைவராகக்கொண்ட எனது சர்க்கார் என்று தர்பார்மொழி பேசியவராயிற்றே - கிளர்ச்சிகளை ஒடுக்க மிகக் கண்டிப்பான அடக்குமுறையை அவிழ்த்துவிட்டவராயிற்றே, பொதுமக்கள் இயக்கத் தொடர் பற்று, பதவியிலே பலகாலம் ஈடுபட்டுக் கிடந்தவராயிற்றே, அவரா, இந்தக் காரியத்துக்கு ஏற்றவர்? என்று கேட்கும்போது, காங்கிரசாருக்கு வருத்தமாகத்தான் இருக்கும். உள்ளபடி சி. பி. என்னதான் எண்ணிக்கொள்வார். சதா கிளர்ச்சியிலேயே காலத்தைக் கடத்திவிட்ட காங்கிரசாருக்கு, பிரச்சினையை எப்படித் தீர்த்து வைப்பது என்று புரியவில்லை. முழக்கம் எழுப்பத் தெரியும், மூலை பாயத் தெரியும், சட்டம் மீறத் தெரியும். சத்யாக்கிரகம் தெரியும். இராஜதந்திரப் போக்குத் தெரியாதே! பதினைந்து ஆண்டுகளாக எதை எதையோ செய்து பார்த்தார்கள், தேசிய ஒருமைப்பாடு காண பலிக்கவில்லை; நாளுக்குநாள் பிரிவினை கேட்கும் கழகம் வளரக் கண்டனர், என்ன செய்வதென்று புரியவில்லை; திகைத்துப்போய், ஐயனே! அபயம்! இந்த ஆபத்திலிருந்து எம்மைக் காப்பாற்றி அருளவேண்டும்! - என்று அழைத்து அஞ்சலி செய்தனர் - ஆயிரத்தெட்டுத் தவறுகள் செய்தவர்கள் என்றாலும், கெஞ்சிக் கூத்தாடும்போது என்ன செய்வது? "சரி’ என்று சம்மதம் கொடுத்தேன், பதினைந்து வருடம் அரசாண்ட பிறகு, இவர்களின் அரசு சாதிக்க முடியாமற்போனதை நான் சாதித்துக் கொடுக்க வேண்டி இருக்கிறது. எனக்கு ஆணவம் என்று ஆயிரம் தடவை ஆர்ப்பரித்தவர்கள், இந்தக் காங்கிரசார். வெள்ளையனுக்குக் குலாம் என்று ஏசினார்கள். பதவிப் பித்தம் என் தலைக்கு ஏறி விட்டது என்று பரிகாசம் செய்தார்கள். நாட்டுக்குத் துரோகி என்று தாக்கினார்கள். மக்களின் உரிமைக் குரலை அடக்கிடும் மாபாவி என்று சபித்தனர். அடக்குமுறையை அவிழ்த்து விட்டவன் - டயர் போன்றவன் - என்றெல்லாம் கண்டித்தார்கள். சுயராஜ்யத்துக்காகக் காங்கிரஸ் பாடுபட்டபோது சுகவாசம் அனுபவித்துக்கொண்டிருந்த துரோகி என்று தூற்றினர். மக்களின் மனதை அறிந்துகொள்ளத் தெரியாத மமதையாளன் என்றனர். பத்தாம்பசலி என்றனர். தியாகத்தின் மதிப்பு அறியாதவன், தேசப் பிதாவாம் மகாத்மாவையே மிரட்டியவன் என்றெல்லாம் ஏசினார்கள்! அப்படிப்பட்டவர்கள், சுயராஜ்யத்துக் காகப் பாடுபட்டுத் தியாகத் தழும்பேறிய பல காங்கிரஸ்காரர்கள் இருக்க, அவர்களையெல்லாம் விட்டுவிட்டுத் தேசிய ஒருமைப் பாடு எனும் சிக்கல்மிக்க காரியத்தைச் சாதிக்க, என்னைத் துணைக்கு அழைக்கிறார்கள். ஏகாதிபத்தியக் கொலுப் பொம்மை என்று என்னைக் கேலி பேசினார்கள், இன்று என்னிடம், தேசிய ஒருமைப்பாடு எனும் அடிப்படைத் துறை ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இத்தனைக்கும் நான் காங்கிரஸ் ஆட்சியாளர் களை, இந்திரனே! சந்திரனே! என்று அர்ச்சிப்பதுமில்லை. என் சுயமரியாதையை இழக்கச் சம்மதித்ததும் இல்லை. இவர்களைப் பற்றி நான் கொண்டுள்ள கருத்தை, ஒளித்து வைத்ததுமில்லை; கண்டித்துப் பேசி இருக்கிறேன். என்றாலும், என்னைதான் அழைக்கிறார்கள். காலமெல்லாம் என்னைக் கண்டித்த வர்கள், கடைசியில் என்னைக் கைகூப்பி அழைக்கிறார்கள். பிரச்சினையைத் தீர்த்துவைக்கத் திறமைவேண்டாமா, தெளிவுவேண்டாமா, ஆராய்ச்சிவேண்டாமா, ஆற்றல் வேண்டாமா? இது என்ன, உப்புக் காய்ச்சுகிற வேலைபோல எளிதானதா? அல்லது துணியைக் கொளுத்துகிற காரியமா? இரட்டை, தக்ளியா? இதற்குத் தேவை, தெளிவு, துணிவு; இதனை அவர்கள் எங்கே பெற்றிருக்கிறார்கள்? என்னை இவர்கள் ஏசியதை எண்ணும்போது எரிச்சலாகத்தான் இருக்கிறது. என்றாலும், ஆண்டு பதினைந்தாகியும் இவர்களால் தீர்க்கப்பட முடியாத பிரச்சினையைத் தீர்க்கவல்லவன் நானே என்பதை உலகுக்கு இவர்களே அறிவிக்கிறார்களே, அது போதும், இவர்களுக்கு ஏற்றத் தண்டனை! தூற்றினவர்கள் துதிபாடகர் களாவது சாதாரண சம்பவமா? சகலரும் சிந்திக்கக்கூடியதா!! வரலாற்றிலே பொறிப்பார்களல்லவா, எந்தச் சி. பி. யைக் காங்சிரசார் மிகவும் கேவலமாகக் கண்டித்து வந்தார்களோ, அதே சி. பி.யை தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிகாட்டச் சொல்லிக் கேட்கவேண்டி நேரிட்டது. தன்னை இழிமொழியால் ஏசின காங்கிரஸ்மீது பழிதீர்த்துக் கொள்வதுபோல, எந்தக் காங்கிரஸ் அவர்மீது பழி சுமத்திற்றோ, அதே காங்கிரசுக்குத் துணைபுரிய சி. பி. முன் வந்தது, வரலாற்றிலே பொறிக்கத்தக்க வியப்பான நிகழ்ச்சி என்றல்லவா, பிற்காலச் சந்ததி பேசும். அது போதும்! வஞ்சம் தீர்த்துக்கொண்டேன். நான் அன்றுபோலவே தான் இருக்கிறேன் - வளைவு, நெளிவு, குழைவு, கும்பிடு கிடையாது. எனினும், அவர்களாகவே அழைத்து வழிகாட்டச் சொல்கிறார்கள். வாழ்க்கையிலே நான் பெற்ற எல்லா வெற்றிகளைக் காட்டிலும், இதனை நான் மகத்தானதாகக் கருதுகிறேன் - இவ்விதமாக வெல்லாம் சி. பி. இராமசாமி ஐயர் நினைத்தால், தவறில்லையே! இவ்வளவு இடம்கொடுத்து விட்டார்களே காங்கிரஸ்சார். ஏன்? இதனை எண்ணி எரிச்சல்கொள்கிறார்கள் காங்சிரசிலுள்ளோர். காங்கிரஸ், காடு சுற்றியபோது கண்ணெடுத்தும் பாராது இருந்தவர்களுக்கெல்லாம் மந்திரிப் பதவி கொடுத்தார்கள் நமது தலைவர்கள்; சகித்துக்கொண்டோம்; தேசிய ஒருமைப்பாடு எனும் அடிப்படைக் காரியத்தை, நமது தேசியத்தையும், அதற்காக உழைத்தவர்களையும் மிகத் துச்சமாக மதித்துப் பேசியவரிடம், எதிர்த்தவரிடம் ஒப்படைக்கிறார்களே, அதனை எப்படிச் சகித்துக்கொள்ளமுடியும் - என்று நினைத்து வருத்தப் படுகிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள். சி. பி.யை இழுத்துப்போட்டது, நமக்கு இழிவாகாது; அலசிப் பார்த்தால் அது சி. பி.க்குத்தான் இழிவு. ஏனெனில், அவர் இந்திய அரசிலே திருவாங்கூர் சேரமுடியாது, தனி அரசு ஆகிவிட்டது என்று ஆணவத்துடன் அறிவித்தவர். அப்படிப் பட்டவரே, இப்போது இந்தியாவில் பிரிவினைகூடாது, அது பெரும் தீது என்று பேசி, அதன்படி காரியமாற்றப்போகிறார் என்றால், அவர் அல்லவா சரணடைந்தார் என்று பொருள்? பிரிவினை பேசினவரைக்கொண்டே, பிரிவினை உணர்ச்சியை ஒழிக்கச் சொல்கிறோம். மாபெரும் சாதனை அல்லவா அது. “ஐயா! சி. பி.! திருவிதாங்கூர் தனி அரசு ஆகிவிட்டது என்று பேசி, இந்திய தேசியத்துக்கு வேட்டு வைக்கப் பார்த்தீரே! இப்போது, பிரிவினைக் கொள்கையை ஒழித்துக்கட்டும் வேலையை, நீரே அல்லவா செய்யவேண்டி வந்தது! துளியாவது எதிர்பார்த்திருப்பீரா? வரலாறு என்ன எழுதிக்காட்டும்? எந்தச் சி. பி. திருவிதாங்கூர் பிரிந்து தனிநாடு ஆகிவிடும் என்று முழக்கமிட்டாரோ, அதே சி. பி. திராவிடம் தனிநாடு ஆகவேண்டும் என்று கேட்பவர்களிடம் மன்றாட, வாதாட நியமிக்கப்பட்டார். பிரிவினையை விட்டுவிடுக என்று கேட்டுக்கொண்டார். திருவிதாங்கூர் தனிநாடு ஆகப் பேராடிய வீரரை அப்போது முறியடித்தது மட்டுமல்ல, பல ஆண்டு களுக்கு பிறகு, அவரே பிரிவினைக் கொள்கையை அடக்கும் தளபதியாக நியமிக்கப்பட்டார். மகாராஜா சம்பளம் கொடுத்த போது, தனிநாடு கேட்கும் தளபதிவேலை பார்த்தார். நேரு அழைத்தபோது தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழி வகுக்கும்”உத்யோகம்’ பார்த்தார். சி. பி.யைச் சரியான முறையிலே பழிவாங்கிவிட்டார் நேரு’ இப்படிக் காங்கிரசார் வாதாடித் தமக்கு ஏற்பட்டுள்ள எரிச்சலைப் போக்கிக்கொள்ளக் கூடும். இரு தரப்பிலே, எவர் வாதமாயினும், அது கேலிக் கூத்தாகவே, நடுநிலையாளர்கட்குத் தோன்றும். தம்பி! காங்கிரசுக்கோ அல்லது சி. பி.க்கோ, முன்பு கொண்டிருந்த போக்கு நினைவிற்கு வருமானால், இப்போது ஏற்பட்டுள்ள "கூட்டு’, எவ்வளவு கேலிக்குரியது என்பது சுரீலெனப்படும். அவர்கள் கிடக்கட்டும், தம்பி! நீ தெரிந்துகொள், மறந்து போயிருப்பவர்களுக்கும் எடுத்துச் சொல்லு, தேசிய ஒருமைப் பாடு காணக் குழுத்தலைவர் ஆகியுள்ள சி. பி. முன்பு பூண்டிருந்த கோலத்தையும், முழக்கிய வீராவேசத்தையும் நாம் திராவிடம் தனிநாடாகத் திகழவேண்டும், தனி அரசு நடாத்தவேண்டும் என்கிறோம், இன்று தனி அரசு நடாத்தும் எத்தனையோ நாடுகளைவிடத் திராவிடம் அளவில் பெரிது, வளம் மிகுதியாகக் கொண்டது, மக்கட்தொகை எட்டுக் கோடிக்கு அதிகம். சி. பி. திருவிதாங்கூர் சமஸ்தானம் மட்டும் தனி நாடாக, தனி அரசாக இருக்கமுடியும், இருக்கவேண்டும், இருக்கப் போகிறது என்று அறிவித்தவர்! அறிவிப்பா? பிரகடனம்!! திருவிதாங்கூர் சமஸ்தானத்து மக்கட்தொகை எவ்வளவு? 65 இலட்சம்; வருவாய் எவ்வளவு 9 கோடி ரூபாய். இதற்குத் தனி அரசு உரிமை கேட்டவர், சி. பி. நிலைமை அவருக்குத் துணைசெய்யவில்லை; எனவே, கடைசியில், திருவிதாங்கூர் இந்தியப் பேரரசிலே இணைந்தது. அது, வீராவேசமாகப் பேசியவர் காரியமாற்றமுடியாமல் தடுமாறிப்போனார் என்பதனை எடுத்துக் காட்டுகிறது. அவர் மனம் மாறியதையோ, திருவாங்கூர் தனிநாடாக வாழமுடியாது என்ற உண்மையை உணர்ந்துகொண்டு தமது போக்கை மாற்றிக் கொண்டதையோ, காட்டுவதாக இல்லை. ஏனெனில், திருவிதாங்கூர் தனிநாடு ஆகவேண்டும் என்பதற்காக அவர் சொன்ன காரணங்களை, காட்டிய ஆதாரங்களை, சொத்தை சோடை, சத்தற்றது, பொருளற்றது என்று அவர் பிறகு அறிவிக்க வில்லை. நிலைமை சாதகமாக இல்லை. எனவே போக்கை மாற்றிக் கொண்டார். நிலையான போக்கிலிருக்க, அவருக்கு வாய்ப்பும் இல்லை. ஏனெனில், திருவாங்கூருக்கு அவர் திவான் வேலை பார்க்கப் போனவர். அவருடைய போக்கு எக்காரணத்தாலோ மாறிவிட்டது - அதுபற்றி நமக்குக் கவலை இல்லை. நாம் கவனிக்கவேண்டியது, திருவாங்கூர் தனி அரசு நடாத்தமுடியும், நடாத்தவேண்டும் என்பதற்கு சி. பி. என்னென்ன கூறினார் என்பதனை, ஏனெனில், அந்தக் காரணங்களைக் காட்டிலும் பல மடங்கு பொருத்தமும், பொருளும், வலிவும், வரலாற்றுச் சிறப்பும்கொண்ட காரணங்கள் காட்டி, நாம் திராவிடம் கேட்கிறோம். தம்பி! இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்காக உழைக்க ஒத்துக்கொண்ட சி. பி. திவான் வேலைபார்த்தபோது, திருவாங்கூர் தனிநாடு ஆகவேண்டும் என்பதற்காகக் கூறிய வற்றையும், அப்போது நடைபெற்ற வாதங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறாய் - தெரிகிறது. சரி! வா! தம்பி! "பக்திவிலாசம்’ செல்வோம். தம்பி! பக்திவிலாசம் என்பது திவான் கொலுவிருக்க, திருவிதாங்கூரிலே அமைந்துள்ள மாளிகை. மேனாட்டார் கேட்டு இன்புறும் ஆங்கிலப் புலமையுடன், பண்டிதர்கள் கேட்டுப் பரமானந்தம் அடையத்தக்க சமஸ்கிருத பாண்டித்யமும், சுயராஜ்யம் கேட்கும் "பாஷை‘யிலே பயிற்சியும், ஏகாதிபத்திய முறைகளிலே நிபுணத்துவமும்கொண்டு, எதனையும் துருவி ஆராயத்தக்க கூர்த்த மதியும், அகன்ற அழகிய விழிகளும், கவ்வும் பார்வையும், கனிவு துணிவு எனும் இரண்டினையும் தேவைப் படும்போது எடுத்துக் காட்டவல்ல அதரமும்கொண்ட இராஜதந்திரி, இராஜ வம்சத்துக்கு இரட்சகராகவும் இரமணிய மான குணங்களால் உப்பிரிகைகளைச் சொக்கவைக்கக் கூடியவர் என்ற புகழாரம் சூட்டப்பெற்றவரும், கலை வல்லுநர்கள் வியந்து கூறிடும் நிலை பெற்றவருமான, திவான் சர். சி. பி. இராமசாமி ஐயர் அழைக்கிறார், "பக்திவிலாசம்’ வருக! எமது திட்டம் பற்றிய விளக்கம் கூறுகிறோம் - என்று. சென்று பார்ப்போம். தில்லியிலே, தம்பி! திடீர் மாறுதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலம். இந்தியாவுக்குச் சுயராஜ்யம் தந்துவிட வெள்ளையர் காத்திருக்கும் வேளை, ஜனாப் ஜின்னாவின் ஒவ்வொரு அசைவுக்கும் பேச்சுக்கும், புன்னகைக்கும் பெரு மூச்சுக்கும், புருவ நெரிப்புக்கும் பொருள் என்ன என்று காந்தியார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆராய்ச்சி செய்திடும் வேளை. சுயராஜ்யம் நிச்சயம் - ஆனால் இராஜ்யங்கள் இரண்டு - ஒன்று அல்ல, என்பது இலைமறை காயாக இருந்த வேளை. சர். சி. பி. இந்தியா இந்தியாவாகவே இருக்கவேண்டும் - பாகிஸ்தான் ஏற்படக்கூடாது - இந்தியா துண்டாடப்படக் கூடாது - என்று அறிவித்துவிட்டு, அது நடைபெறப் போவதில்லை, பாகிஸ்தான் அமையப்போகிறது என்பதனையும் உணர்ந்துகொண்டுவிட்ட சமயம். பாகிஸ்தான் அமைகிறது என்ற உடனே, சர். சி. பி. பாகிஸ்தான் அமைப்பை எதிர்க்க அல்ல, "பக்திவிலாசம்’ வரும்படி அனைவரையும் அழைப்பது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்துவிடுவதால் மிச்சம் உள்ள இந்தியாவில் திருவிதாங்கூர் இணைய மறுக்கிறது என்று அறிவிக்க அழைக்கிறார். நானே பேசிக்கொண்டிருக்கிறேனே - இராஜதந்திரி பேசுகிறார் - திவான் திருவாய் மலர்ந்து அருளு கிறார், கேண்மின்!! சீமாட்டிகளே! சீமான்களே! மதிப்புமிக்க பத்திரிகை நிருபர்களே! திருவிதாங்கூர் தேசபக்தர்களே! வருக! திருவிதாங்கூர் தனிநாடாகி, தனி அரசு நடாத்த மகாராஜா முடிவு செய்துவிட்டார். அதனை விளக்கவே அழைத் துள்ளேன். ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி அகலுகிறது. சுயராஜ்யம் அளிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி அகன்றதும், இதுவரை அந்த ஆட்சியிலே இணைந்திருந்த திருவிதாங்கூர் சமஸ்தானம், பூரண விடுதலை பெறுகிறது. தனிநாடு ஆகிறது தனி அரசு நடத்த இருக்கிறது. சுதந்திர திருவிதாங்கூர், இந்தியாவுடன் நேசத்தொடர்பு கொண்டு, தனி அரசு மேற்கொண்டு, நடாத்திவரும், பொருளா தார, பண்பாட்டு அடிப்படையிலும் மற்றப் பல காரணங் களாலும் திருவிதாங்கூர், தனிநாடாகித் தனி அரசு நடாத்துவது தான் நடைமுறைக்கு ஏற்ற இலாபகரமான வழியாகும். இதற்கு எந்தவிதமான மறுப்பும் இருக்கக் காரணமில்லை; நியாயமில்லை. செல்வாக்குள்ள சில வட்டாரத்திலே இந்தத் திட்டம் வெறுக்கப் பட்டாலும், இந்தத் தனி அரசுத் திட்டம் உங்கள் மேலான ஆதரவைப்பெறத் தகுதி வாய்ந்தது என்பதை, திருவிதாங்கூர் மக்களுக்கு, உத்யோகம் வகிப்பவர்கள் உத்யோகப் பற்றற்றவர்கள் ஆகியோர் அனைவரும் நான் கூறுவதுடன், சுதந்திர திருவிதாங்கூர் இலட்சித்துக்காகப் பாடுபடும்படியாகவும், ஒத்துழைக்கும்படியாகவும், அன்புடன் அழைக்கிறேன். சந்தேகம் கொண்டவர்களுக்குத் தெளிவு அளித்து மனமாற்றம் ஏற்படுத்தும் பணியில் உத்யோகஸ்தர்கள் ஈடுபட வேண்டும். திருவிதாங்கூர் தனி அரசு நடத்துவது கூடாது என்ற கருத்துக்கொண்டவர்கள், பதவிகளை இராஜிநாமாச் செய்து விட்டு வெளியேறிவிடவேண்டும். திருவிதாங்கூர் மக்களின் அப்பழுக்கற்ற தேசபக்தியின் பேரால், திருவிதாங்கூரின் கீர்த்திமிக்க வரலாற்றுச் சிறப்பின் பேரால், ஒளிவிடும் திருவிதாங்கூர் பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றின் பேரால், உங்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், சுதந்திர திருவாங்கூர் அமையும் பணியில் ஆர்வத் துடன் ஈடுபட முன் வாரீர். தனிநாடாகி, தனி அரசு நடத்தி, உரிமையும் பெருமையும் வேண்டுமா, அல்லது பிளவுபட்ட இந்தியாவிலே பிணைக்கப் பட்டு, அமிழ்ந்துபோய், இந்தியாவில் ஒரு எடுபிடியாக இருக்கப் போகிறீர்களா என்பதை, ஒருவருக்கொருவர் கலந்து பேசி முடிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். எந்த நிலைமையையும் சமாளிக்கவும், தேவைப்படும் எந்த நடவடிக்கை எடுத்துக்கொள்ளவும், மகாராஜா உறுதி பூண்டு விட்டார். திருவிதாங்கூர் தனிநாடு ஆகத் தகுதி இல்லையா? தனிநாடு களாக உள்ளவற்றுடனோ, அல்லது பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள மாகாணங்களுடனோ, ஜனத்தொகை, வருவாய், வளம் ஆகிய அம்சங்களில் திருவிதாங்கூர் எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்த்து, முடிவுக்கு வாருங்கள். நேபாளம் சயாம் நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடன் திருவிதாங்கூரை ஒப்பிட்டுப் பாருங்கள். தனிநாடாக இருக்கும் தகுதி திருவிதாங்கூருக்கு இல்லையா, சொல்லுங்கள். இங்கு 65 இலட்சம் மக்கள் இருக்கிறார்கள்; ஆண்டு வருமானம் நமது அரசுக்கு ஒன்பது கோடி ரூபாய். அந்த நிலையில், தனி அரசு நடாத்த இயலும். திருவிதாங்கூர் விரும்புவது என்ன? பாரதப் பண்பாடு போன்றதுபோலவே காணப்படினும், திருவிதாங்கூருக்கு என்று அமைந்துள்ள பண்பாடு, தனித்தன்மை வாய்ந்தது தனியானது. அந்தப் பண்பாட்டின் வழியின்படி, இலட்சியங்களின்படி திருவிதாங்கூர் தனி அரசை நடத்திச்செல்ல உரிமைவேண்டும். மேலும் கூறுகிறேன், இந்தியா பிளவுபடுவதால் ஏற்படக் கூடிய வேதனைகளிலிருந்து, தென்னிந்தியாவைக் காப்பாற்றும் இரட்சகனாக திருவிதாங்கூர் விளங்கப்போகிறது. திருவிதாங்கூர் எப்போதுமே, சர்வதேச அரங்கிலே ஒரு தனி அந்தஸ்துப்பெற்று வந்திருக்கிறது. திருவிதாங்கூரை யாரும் வெற்றிகொண்டதில்லை. அதற்கு மாறாகக் கடற்படை வலிவுள்ள டச்சுக்காரரை கொளச்சல் போரிலே, திருவிதாங்கூர் தோற்கடித்து, ஐரோப்பிய நாட்டவரைத் தோற்கடித்த ஒரே இந்தியநாடு என்ற கீர்த்திபெற்றிருக்கிறது. இவைகளை எண்ணிப்பாருங்கள் - வரலாறு, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள். இத்தகைய திருவிதாங்கூர், சுதந்திரம் அடையவேண்டும் என்ற இலட்சியத்தைப் போற்றாதார் இருக்கமுடியுமா! முன்பு, சுதந்திரத்தைக் காத்துக்கொண்டிருக்கிறது திருவிதாங்கூர். தேவைப்பட்டால் எதிர்காலத்திலும், திருவிதாங்கூர் தன் சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்ளும். நான் திருவாங்கூர்க்காரனாக இல்லையே என்று வருத்தப் படுகிறேன். எனினும், திருவிதாங்கூர் தனிநாடு ஆவதற்கான நிலைமை உருவாவதைக் காண அனைவரும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தம்பி! 1947ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 11ஆம் நாள் பக்தி விலாசத்தில், திவான் சி. பி. பேசியுள்ள ஆங்கில விளக்க உரையின் சுருக்கம் மேலே காணப்படுவது. எப்படி சி. பி.? கப்பலின் மேற் தட்டிலே கெம்பீரமாக நின்றுகொண்டு, பீரங்கி களை இன்னின்ன முறையிலே அமையுங்கள் என்று உத்தரவிட்டு, திருவிதாங்கூர் கப்பற்படைக்குத் தலைமை வகித்து நடத்திச் செல்லும் கடற்படைத் தளபதிபோலத் தெரிகிறாரல்லவா! அவர் இப்போது, நம்மை அழைத்துக் கேட்கப்போகிறாராம், திராவிடம் தனிநாடு ஆகவேண்டும் என்று கேட்கலாமா? சரியா? முறையா? என்று. 1947 ஜூன் மாதம் திருவிதாங்கூர் தனிநாடு ஆகவேண்டும் என வீர உரை! 1962 ஜூன் மாதத்தில் அவருக்குப் புதிய அலுவர்; - பிரிவினை கூடாது என்று உபதேசம் செய்ய!! கூரிய கத்தியால் பழமும் நறுக்கலாம், கழுத்தையும் அறுக்கலாம். விளக்கொளிகொண்டு திருக்குறளும் படிக்கலாம் திருட்டுக் கணக்கும் எழுதலாம். அறிவைக்கொண்டு சிலர் எதையும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள் போலும்!! தம்பி! திருவிதாங்கூரை விடுவிக்கும் வீரர், டச்சுக்காரரை கொளச்சல் யுத்தத்திலே திருவிதாங்கூர் தோற்கடித்ததை எடுத்துக் காட்டி, தோள் தட்டுங்கள்! முரசு கொட்டுங்கள்! துந்துபி முழங்குங்கள்! வாளை உருவுங்கள்! என்று முழக்கமிட்டார். இப்போது அவருக்கு இடப்பட்ட வேலை, கங்கை கொண்டான் கடாரம் வென்றான் கலிங்கம் கொண்டான் என்றெல்லாம் புகழாரம் சூட்டிக்கொண்டுள்ள நாம், கோரி யிடமும், கஜினியிடமும், தைமூரிடமும், செங்கிஸ்கானிடமும் தோற்ற வடவரிடம், பிணைக்கப்பட்டு இருப்பதுதான் பேரறிவு என்று எடுத்துக் கூற! "பக்தி விலாச’த்தில் பரணி! பண்டிதர் சகவாசத்தால், முகாரி பாடப்போகிறார் போலும், போகாதே! போகாதே! என் மக்களா! பொல்லாது பொல்லாது பிரிவினைதான்!! - என்று சுருதி தவறாமல் பாடுவார் போல இருக்கிறது. ஆண்டவனே! ஆண்டவனே! அறிவையும் கொடுத்து, அதனை எப்படியும் வளைத்துக்கொள்ளும் துணிவையும் கொடுத்தாயே! இது தகுமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? சர். சி. பி.யின் இந்தத் திட்டம்பற்றித் தெரிந்ததும், மகாத்மா பதறிப்போனார். மறுநாள் மாலையே வழக்கமாக நடாத்தும் வழி பாட்டுக் கூட்டத்தில், இதனைக் கண்டித்துப் பேசினார். கோடிக்கணக்கான மக்களால் கண்கண்ட கடவுள் எனக் கொண்டாடப்படும் மகாத்மாவே இந்தத் திட்டத்தைக் கண்டித்துவிட்டாரே, இனி எப்படி அதனை வலியுறுத்துவது என்று சி. பி. சஞ்சலமடைந்தாரா? அவரா! துளிகூட இல்லை உடனே ஒரு தந்தி கொடுத்தார் மகாத்மாவுக்கு! எவரும், பல நூற்றாண்டுகளாகத் திருவிதாங்கூரை வெற்றிகொண்டதில்லை. சுதந்திர பாரம்பரியம் அதற்கு உண்டு. அதே சுதந்திரத்தைத் திருவிதாங்கூர் மீண்டும் பெற்று விளங்க முடியும். சுதந்திரத் திருவிதாங்கூரில் மக்களுக்கு உரிமை வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. வயதுவந்தவர்கள் அனைவருக்கும் "ஓட்டு உரிமை’ வழங்கப்போகிறோம். திருவிதாங்கூரில் எண்ணற்ற பொதுமக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். இதனைத் தங்களுடைய அடுத்த வழிபாட்டுக் கூட்டத்தில் எடுத்துக் கூறவும். இப்படித் துணிவுடன் தந்தி அனுப்பினவர்தான் சர். சி. பி. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கு ஏகப்பட்ட சீற்றம். சர். சி. பி.யின் சுதந்திர திருவிதாங்கூர் திட்டத்தை வன்மையாகக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிற்று. ஆனால், அதேபோது, தவிர்க்கமுடியாத காரணங்களால், பாகிஸ்தான் பிரிவினைக்கு இணங்குவதாகவும் தீர்மானம் போடப்பட்டது. மகாத்மாவின் கண்டனம், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் சீற்றம் எனும் எதுவும் சி. பி.யின் உறுதியைக் குலைக்கவில்லை. தமது திட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வேலையில் வெகு மும்முரமாக ஈடுபட்டார். பல பிரமுகர்களைக் கொண்டு ஆதரவு அறிக்கைகள் வெளியிடச் செய்தார். தொன்றுதொட்டுச் சுதந்திர நாடாகவே திரு விதாங்கூர் இருந்துவந்திருக்கிறது. எதிர்காலத்திலும் அவ்விதமாகவே இருக்கவேண்டும். டச்சுக்காரர்போன்றவர் களாலேயே திருவாங்கூரைத் தோற்கடிக்க முடியவில்லை. வெள்ளைக்காரர்கள்கூடத் திருவாங்கூருடன் ஒப்பந்தம் செய்துகொண்டவர்தாம். திருவிதாங்கூரின் சுதந்திரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டுக்குத் துரோகிகள். ஏராளமான வளங்கள் உள்ள திருவிதாங்கூர் ஏன் சுதந்திரநாடாக இருக்கக்கூடாது? என்று கத்தோலிக்க சமூகத்தின் செல்வாக்குள்ள தலைவ ரொருவர் அறிக்கை வெளியிட்டு, சர். சி. பி.யின் திட்டத்தை ஆதரித்தார். தம்பி! மூலைக்கு மூலை எதிர்ப்புகள்! சளைக்கவில்லை சர். சி. பி. அரசியல் சட்டப் பிரச்சினைகள் ஆராயப்பட்டன - நுண்ணறிவு மிக்க வாதங்கள் நடைபெற்றன. வெள்ளையர் ஆட்சி அகன்ற உடன், "சமஸ்தானங்கள்’ விடுதலைபெற்றுவிடுகிறனவா, இல்லையா? அவை எவருக்குக் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்ற பிரச்சினை, கீர்த்திமிக்க வழக்கறிஞர்களின் பொழுதுபோக்காகிவிட்டது. ஒருபுறத்தில் அல்லாடியும், கோபாலசாமி ஐயங்காரும் கச்சையை வரிந்துகட்டிக்கொண்டு நின்றார்கள், சமஸ்தானங் களுக்குச் சுதந்திரம் இல்லை என்று விளக்க, ஆதாரங்கள் ஏராளம். சர். சி. பி. சட்ட ஆதாரங்களைச் சளைக்காமல் எடுத்து வீசினார். பெதிக்லாரன்சு சொல்லி இருப்பதைக் கவனியுங்கள்; கிரிப்ஸ் பேசியிருப்பதன் பொருளைப் பாருங்கள் என்று கூறினார். தமது வாதங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்றுகூடக் காத்துக்கொண்டில்லை. விரைவாகத் திட்டமிட்டபடி செயல்படலானார். மீண்டும் பத்திரிகை நிருபர் களை வரவழைத்து, திருவிதாங்கூருக்குத் தனி அரசு நடாத்தும் உரிமை இருக்கிறது. அதற்கான முடிவு எடுக்கப்பட்டாகிவிட்டது. முடிவு மாற்றிக்கொள்ளப்படக்கூடியது அல்ல. என்று அறிவித்தார். இரண்டொரு நாட்களிலே வேறோர் அறிவிப்புத் தொடர்ந்தது. ஜனாப் ஜின்னாவிடம் நேரிலே நடத்திய பேச்சு வார்த்தைகளின்படியும், கடிதப் போக்குவரத்தின்படியும் பாகிஸ்தான் திருவிதாங்கூர் பிரதிநிதி ஒருவரை ஏற்றுக் கொள்ளச் சம்மதம் அளித்துள்ளது. அதன்படி, முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்துவந்த கான்பகதூர் கரீம்கான் பாகிஸ்தானில் திருவிதாங்கூர் பிரதிநிதியாகப் பணிபுரிய நியமிக்கப்பட்டிருக்கிறார். திருவிதாங்கூர் சுதந்திரநாடு ஆகிவிட்டால் என்னென்ன செய்யவேண்டுமோ அவைகளை, முறைப்படி திவான் செய்யத் தலைப்பட்டுவிட்டார்! பாகிஸ்தானத்துக்கு ஒரு பிரதிநிதியை நியமித்ததுபோலவே, இந்தியாவில் இருக்கவும் ஒரு பிரதிநிதியை நியமித்தார். இவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. நேரு போன்றார்களுக்கு சீற்றம் கட்டுக்கடங்கவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்யமே பணிகிறது, இந்தச் சுண்டைக் காய் அளவுள்ள திருவாங்கூர் தலைவிரித்து ஆடுவதா! இதனை ஒடுக்கியே தீரவேண்டும் என்று ஆர்ப்பரித்தனர். தக்க சமயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க முடிவுசெய்து விட்டோம் என்று காங்கிரஸ் அறிவித்தது. எப்போது? சி. பி. நடவடிக்கைகளை எடுத்துக்கொண்ட பிறகு!! சர். சி. பி. இதனைக் கேட்டுக் கலக்கமடையவில்லை. நடவடிக்கையா எடுக்கப்போகிறீர்கள்? என்ன நடவடிக்கை? பொருளாதார நெருக்கடி உண்டாக்க எண்ணமா? முடியாதே! திருவாங்கூருக்குத் தேவைப்படும் உணவுப்பொருள் அனுப்பமுடியாது என்று கூறுவீர்கள். பரவாயில்லை. இந்தியாவிலே உணவுப்பொருள் உற்பத்தி, தேவைக்கு அதிகமாக இல்லை. தெரியும். பற்றாக்குறை!! உணவுப்பொருள் தர வேறு இடம் இருக்கிறது. பெற்றுக்கொள்ள முடியும். ஏற்பாடாகிவிட்டது. திருவாங்கூரின் விலைப்பொருள்களான தேயிலை, இரப்பர், மிளகு, கிராம்பு, கனிப்பொருள் ஆகியவற்றை இந்தியா வாங்காது என்பீர்களா? சொல்லுங்கள்! நட்ட மில்லை! இவைகளுக்கு வேறு மார்க்கெட் இருக்கிறது. இடைக்காலத்திலே சிறிது நெருக்கடி ஏற்படலாம்; நஷ்டம் ஏற்படலாம். ஆனால், பொருளாதாரத் துறையிலே போர் நடத்துவதைப் பிரிட்டனும் ஐ. நா. சபையும் பார்த்துக் கொண்டு வாளா இருக்கா! இப்படிப்பட்ட கருத்தமைந்த, காரசாரமிக்க பதிலடி கொடுத்தார்; பதறவில்லை; பயப்படவில்லை. தம்பி! மறந்துவிடாதே, சர். சி. பி. தனி அரசு உரிமைக் கேட்டுக் கிளர்ந்தெழுந்தது, மொத்தக் கேரளத்துக்குக்கூட அல்ல; அதிலே ஒரு துண்டான, திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு!! தனி அரசு நடத்தமுடியுமா என்று கேட்டவர்களுக்கு, கொளச்சல் களத்தைக் காட்டினார். பிழைக்க முடியுமா என்று கேட்டவர்களுக்கு, தோட்டங் களைக் காட்டினார். தோட்டா உண்டா என்று கேட்டவர்களுக்கு, சுதந்திரத் திருவிதாங்கூருக்காக எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட மகாராஜா உறுதியாக இருக்கிறார் என்று போர்க் குரலே எழுப்பிக் காட்டினார். அவர்தான் இப்போது திராவிடம் தனி அரசு கேட்கக் கூடாது என்று தடுத்துக் கூறும் வேலையில் அமர்த்தப்படுகிறார். விந்தையாக இல்லையா!! சுயராஜ்ய இந்தியாவில் சேர மறுக்கும் சமஸ்தானங்களை, விரோதிகளாகவே பாவித்து, அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுப்போம் என்று நேரு பண்டிதர் கூறினார். ஏ! அப்பா! எத்தனை பெரிய மிரட்டல்! ஐக்கியநாடுகள் சபையிலே சேர மறுக்கும் நாடுகள்கூட உள்ளன; அவைகளைக் கூட இப்படி, ஐ. நா. சபை மிரட்டவில்லையே!! - என்று சி. பி. ஏளனம் பேசினார். பாகிஸ்தான் அமைந்தாலும், எல்லைப்புற முஸ்லீம்கள் - பட்டாணியர் - தனியாக இருக்க விரும்புகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது; காங்கிரஸ் அந்தப் பக்தூனிஸ்தான் திட்டத்தை ஆதரித்தது. சி. பி. உடனே தந்தி கொடுத்தார். பக்தூனிஸ்தானை ஆதரிக்கிறீர்கள் - திருவாங்கூர் தனிநாடு ஆவதை எதிர்க்கிறீர்களே, இது என்ன நியாயம்? - என்று காங்கிரஸைக் கேட்டார். பக்தூனிஸ்தான் கேட்கும் எல்லைப்புற மக்கள் 50 இலட்சம்; திருவாங்கூர் மக்கள் தொகை அதைக் காட்டிலும் அதிகம். திருவாங்கூரின் ஆண்டு வருவாய் ஒன்பது கோடி ரூபாய் - எல்லையின் நிலைமையோ, வருவாய் போதாமல், ஆண்டொன்றுக்கு இரண்டரைக் கோடி ரூபாய், மான்யம் பெறுகிறது, மத்திய சர்க்காரிடம். அதற்குத் தனிநாட்டு நிலை! திருவாங்கூர் அடிமையாக இருப்பதா? - இவ்விதமாகவெல்லாம் இடித்துக் கேட்டார். பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் - வெளி நாடுகளிடம் உதவி கேட்கிறார் - இந்திய அரசுக்கே வேட்டு வைக்கிறார் என்றெல்லாம் காங்கிரஸ், சர். சி. பி.யைக் கண்டிக்கலாயிற்று. சர். சி. பி. இராமசாமி ஐயர், எதற்கும் கலங்கவில்லை. திருவாங்கூரிலேயே பலமான எதிர்ப்பு மூண்டது சமாளிப்பேன் என்று கூறினார். மீண்டும் நிருபர் மாநாடு நடத்தினார் - ஜூன் 25ல் நகர மண்டபத்தில். அதிலே, விளக்கமாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்தார், திருவாங்கூரின் தனி அரசு திட்டம்பற்றி. திருவிதாங்கூர் சிறிய நாடு அல்ல. அதனைப் பட்டினிபோட்டுப் பணியவைக்கலாம் என்று கருதினால், தன்மானமுள்ள நாட்டுப்பற்றுமிக்க, திருவாங்கூர்க் குடிமகன் ஒவ்வொருவரும் என்ன முடிவு செய்வார் என்பதிலே எனக்கு ஐயமில்லை. உலகிலே ஆத்மார்த்தத் துறையின் ஒப்பற்ற தலைவராக விளங்கவேண்டிய மகாத்மா, ஒரு கட்சியின் ஆதரவாளர் என்ற நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்கிறார். வழிபாட்டுக் கூட்டத்திலே அரசியல் பேசுவது பொருத்தமற்றது. இப்படி விளக்கங்களை வாரி வீசலானார். பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் என்று சொன்னதும், ஊரே கொதிக்கும், சி. பி. திணறிப்போவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் எண்ணிக் கொண்டனர். சர். சி. பி. ஒளிக்கவுமில்லை. மன்னிப்பு கேட்கவுமில்லை, விவரம் தரத் தயக்கம் காட்டவுமில்லை, தனக்கும் ஜின்னாவுக்கும் நடைபெற்ற தந்திப் போக்குவரத்தை வெளியிட்டார், நிலைமையைத் தெளிவாக்க. ஜனாப் ஜின்னாவுக்கு, சி. பி. அனுப்பியிருந்த தந்தியில், பாகிஸ்தான் நீடூழி காலம் நல்வாழ்வு வாழவேண்டும் என்று வாழ்த்தினார். நான் பாகிஸ்தான் இயக்கத்தையும், இந்தியா பிளவு படுவதையும் பலமாகக் கண்டித்திருக்கிறேன். ஆனால், தாங்கள் தங்கள் கொள்கையிலே தளராத நம்பிக்கை கொண்டு, விடாப்பிடியாகவும் தீரமாகவும் உழைத்து, தங்கள் இலட்சியத்திலே வெற்றிபெற்றுவிட்டதால், இனி, அதுபற்றி ஏதும் கூறுவது தேவை இல்லை. நான் தங்களுடைய ஒத்துழைப்பையும், பாகிஸ்தானின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். நான் ஒத்துழைக்கச் சித்தமாக இருக்கிறேன். அதுபோலவே, இந்தியாவுடனும் ஒத்துழைக்க விரும்புகிறேன். இரு அரசுகளிலும் திருவிதாங்கூர் தன் பிரதிநிதிகளை அனுப்பிவைக்க முடிவெடுத்து இருக்கிறது. நம் இரு நாடுகளுக்கும் பொதுவானதும் நன்மை தரத்தக்கதுமான வாணிபத் தொடர்புகள் சம்பந்தமான பிரச்சினைகளைக் கலந்து பேசி முடிவெடுக்க, திருவாங்கூர் பிரதிநிதி பணிபுரிவார். இந்தத் தந்தி மூலம், சர். சி. பி. பாகிஸ்தானுடைய உறவைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டார். அதற்குக் காரணமும் கூறினார் நிருபர்களிடம். திருவாங்கூர் தனிநாடு ஆகிவிட்டால், உணவுப்பொருள் அனுப்பமாட்டோம் என்று இந்தியாவில் உள்ள சிலர் மிரட்டிப் பார்க்கிறார்கள். அந்த மிரட்டலைப் பொருளற்றதாக்கத்தான், உணவுப்பொருள் தரக்கூடிய பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டேன். பாகிஸ்தானி லுள்ள சிந்து, பலுஜிஸ்தான் பகுதியிலிருந்து அரிசி கிடைக்கும். அதுவும் கராச்சித் துறைமுகத்திலிருந்து நேரே எமது துறைமுகத்துக்கு வரும். அதுபோலவே, மத்திய கிழக்கு நாடு களுக்குத் தேவைப்படும் எமது நாட்டுப் பொருள்களை, கராச்சித் துறைமுகம் மூலம் அனுப்பிவைப்போம். பாகிஸ்தானுடன் செய்துகொண்ட உறவும் உடன்பாடும், திருவாங்கூரை மிரட்ட முடியாது என்பதை எடுத்துக் காட்டுவதற்கே - என்று கூறினார். ஜனாப் ஜின்னா, வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து, திருவாங்கூர் நல்வாழ்வு பெற்றுத் திகழவேண்டும் என்று வாழ்த்தி, உறவு மேற்கொள்வதை வரவேற்று, பதில் தந்தியும் அனுப்பினார். பாகிஸ்தானுடனா ஒப்பந்தம்? ஜனாப் ஜின்னாவுடனா உறவு? என்று கேட்டவர்கட்கு, திவான் சி. பி. பதில் கூறினார். ஏன் பதறுகிறீர்கள்? என்ன தவறு? கொடுமை பல புரிந்தது ஜப்பான், யுத்தத்தின்போது - அந்த ஜப்பானுடன் காங்கிரஸ் கைகுலுக்கி நட்புப் பாராட்டும்போது, நான் ஜின்னாவுடன் நட்புக்கொண்டால் என்ன தவறு? அது எப்படி அக்ரமம் ஆகமுடியும்? பல இலட்சக்கணக்கான கெஜம் மில் துணியை ஜப்பானிலிருந்து வாங்கிக்கொள்ள, காங்கிரஸ் ஒப்புக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, திருவாங்கூர் பாகிஸ்தானுடன் வியாபார ஒப்பந்தம் செய்துகொள்வது கண்டு பதறுவானேன்? இரு நாடுகளும் கடலால் சூழப்பட்டவை. தொடர்பு கொள்வது எளிது, தேவை, இரு நாடுகளுக்கும் இலாபகரமானது. இவைகளுக்கெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் தமது எரிச்சலைக் காட்டிக்கொண்டார்களே தவிர, தக்க சமாதானம், மறுப்புரை தர இயலவில்லை. தமக்குக் கிடைத்த இராணுவ வலிவைக் காட்டுவது தவிர, அவர்களிடம் வேறு தரமான வாதங்கள் இல்லை. கடைசியில் வலுத்தவன் வென்றான் என்றுதான் கதை முடிந்ததே தவிர, சி. பி. தமது வாதத்தில் தோற்றார் என்று கூறுவதற்கில்லை. மே திங்கள் 17ஆம் நாள் மீண்டும் "பக்தி விலாசம்’, சி.பி.யின் முழக்கத்தைக் கேட்டது. திருவாங்கூர், தனது வருவாய்க்குப் பெரிதும் ஏற்றுமதி இறக்குமதி வரிகளையும் வருமான வரியையும் நம்பிக்கொண்டிருக்கிறது. இந்தியப் பேரரசு எனும் திட்டத்தின்படி திருவாங்கூர் இந்தியாவில் இணைக்கப் பட்டுவிட்டால், இந்த வருவாய் இனங்கள், மத்திய சர்க்காருக்குச் சொந்தமாகும்; அதிலே ஒரு பகுதியைத்தான் திருவாங்கூர் பெறமுடியும். எனவே, திருவாங்கூர் இந்தியாவிலே இணைவது, நட்டமாக முடியும். இந்தியா - பாகிஸ்தான் எனும் இரு அரசுகளுடனும், திருவாங்கூர் உறவுகொண்டு வாழவேண்டிய நிலைமையில் இருக்கிறது. எனவே, எந்த அரசிலும் அது இணைந்துவிட முடியாது. இந்திய பூபாகத்திலேயே மற்ற எந்தப் பகுதி யையும்விட, தனி அரசு நடத்தும் தகுதி, திருவாங்கூருக்கே மிக அதிகமாக இருக்கிறது. இந்தச் சுதந்திர உரிமையைத் திருவாங்கூர் இழந்து விடச் சம்மதிக்காது. தம்பி! இவ்வளவு விளக்கமாக, தனி அரசுக்கு வாதாடியவர் சர். சி. பி. இவர், இன்று திராவிடம் தனி அரசு நடத்தக்கூடாது என்று பேச அழைக்கப்பட்டிருக்கிறார். விந்தைமிக்க நிகழ்ச்சி அல்லவா? திராவிடம் தனி நாடாக இருக்கக்கூடாது என்று இவர் எந்த நியாயத்தின் பேரில் எடுத்துக் காட்டுவார்! திறமை இருக்கலாம்; நிரம்ப. ஆனால் நேர்மையான வாதமாக இருக்க முடியுமா! என்ன செய்யலாம்? நான்கூடத்தான் முயற்சித்துப் பார்த்தேன் - முடியவில்லை - விட்டுவிட்டேன் - அதனால்தான் உங்களுக்குச் சொல்கிறேன், விட்டுவிடுங்கள் - என்று சர். சி. பி. கூறுவாரானால், தம்பி! ஐயா தங்கள் திட்டம் அரண்மனையில் உதித்தது. எங்கள் திட்டம் மக்கள் மன்றத்தில் மலர்ந்தது! தாங்கள் மக்களின் கருத்தறிந்து செயல்படவில்லை; அதிகார பலத்தை மட்டும் நம்பினீர்கள்; நாங்கள் மக்களின் கருத்தறிந்து அவர்களின் துணையை நம்பி இந்த தொண்டாற்றி வருகிறோம். உங்களுக்கும் காங்கிரசுக்கும் ஏற்பட்ட விவாதம்; தாக்கும் சக்தியை அடிப்படையாகக்கொண்டது. எங்களுடையது, தாங்கும் சக்தியை அடிப்படையாகக் கொண்டது. மக்களின் துணைக்கு உள்ள வலிவு மகத்தானது - அதனை மிரட்டலாம், தாக்கலாம். தகர்த்துவிட முடியாது என்று பதில் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். காந்தீய நெறியிலே காங்கிரஸ் அரசு நடந்துகொள்ளு மானால், எத்தனை கசப்பானதாக அவர்களுக்கு ஒரு திட்டம் தோன்றினாலும், மக்கள் அந்தத் திட்டத்திற்கு ஆதரவு தருகிறார்கள் என்றால், அந்த ஆதரவை அழிக்க அடக்கு முறையை வீசக் கூசும். அதுபோலவே, நமக்கு நம்முடைய திட்டத்திலே தூய்மை நிறைந்த நம்பிக்கை இருக்குமானால், எத்தகைய விலை கொடுக்கவும் நாம் தயாராக இருக்கவேண்டும். காங்கிரஸ் அரசுக்கு உள்ள தாக்கும் சக்தியை எடுத்துக் காட்டி சர். சி. பி. வாதாடுவாரானால், தம்பி, நாம் காந்திய நெறி வெல்லும் என்பதனைத்தான் எடுத்துக் கூறவேண்டும். காந்தியாரைவிட வன்மையாகப் பாகிஸ்தான் திட்டத்தைக் கண்டித்தவர்கள் இல்லை. முஸ்லீம்களைத் தனி இனம் என்று ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றார்; என்ன நேரிடுவ தாயினும், இந்தியா பிளக்கப்படுவதைச் சகித்துக்கொள்ள முடியாது என்றார். வீம்புக்காக அல்ல; உள்ளத் தூய்மையுடன். எனினும், நிலைமை வளர, வளர, அவர் பாகிஸ்தானுக்கு இணங்கவேண்டி நேரிட்டது. அதனைக் குறித்துக் காந்தியாரிடம் கேட்கப்பட்டபோது, "இந்தியா பிரிக்கப்படக்கூடாது என்று நான் சொன்னபோது, மக்களின் விருப்பத்தைத்தான் எடுத் துரைத்தேன். ஆனால், இப்போது மிகப் பெரும்பாலான மக்களுடைய கருத்து, நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவாக இருப்பதைக் காண்கிறேன். இந்த நிலைமையில், மக்களை வற்புறுத்தி என் கருத்தை அவர்களிடம் திணிக்க நான் விரும்பவில்லை.’’ என்ற பதிலுரையைத் தமது வழிபாட்டுக் கூட்டத்தில், ஜூன் 9ஆம் நாள் படித்துக் காட்டினார். காந்தியம் கருகிப்போய்விடவில்லை என்ற நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறோம். நாளுக்கு நாள், நமது கருத்துக்கு ஆதரவு வளரக் காண்கிறோம். மக்கள் திரண்டு நின்று ஆதரவு தந்தாலும், நாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டோம் என்று முழக்கமிட்டு, அடக்கு முறையை அவிழ்த்துவிட்டால், அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகிவிட வேண்டியதுதான். நமது வேண்டுகோளும் விளக்கம் பெற்றுத்தர முடியாத வெற்றியை, நாம் கொட்டும் இரத்தம்தான் பெற்றுத்தரும் என்ற நிலைபிறக்குமானால், அதனை பெறற்கரிய பேறு எனக் கொள்ளவேண்டும். அலட்சியப்படுத்தத் தக்கது - அர்த்தமற்றது - என்று ஒரு வேளையும், ஆபத்தானது - அடக்கித் தீரவேண்டியது என்று மற்றோர் வேளையும், மாறிமாறி, பேரரசு நடாத்துவோர் பேசிடக் கேட்கிறோம். சிந்தனை குழம்பி இருப்பதற்கு எடுத்துக் காட்டு - புரிகிறதல்லவா? பிரிவினை கேட்பவர்களை விட்டுவைக்கக்கூடாது, வளர விடக்கூடாது - என்று பேசுவோரும் உளர் - வீணாக உருட்டி மிரட்டி அந்த இயக்கத்தை ஒடுக்க நினைப்பது தவறு - ஏன் பிரிவினைக் கிளர்ச்சி தோன்றியது, எப்படி வளருகிறது என்பதனை ஆராயவேண்டும் - பரிகாரம் தேடவேண்டும் என்று அறிவுரை கூறுவோரும் உளர். தம்பி! இப்போதே, மிக முக்கியமான முனைகளிலிருந்து மூன்று அடிப்படைக் கருத்துகள் எடுத்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. கழகத்தைத் தடுப்பது - கழகப் பிரசாரத்துக்கு எதிர்ப் பிரசாரம் செய்வது - கூட்டணி அமைத்துக் கழகத்தைத் தாக்குவது - என்ற யோசனைகளைச் சிலர் வெளியிட்டிருக் கிறார்களே, அதனைக் கூறவில்லை. 1. இந்தி ஆதிக்கம் கூடாது. 2. மத்திய சர்க்காரிடம் அதிகாரம் குவிந்து கிடக்கக் கூடாது. 3. பொருளாதார வளர்ச்சி ஒருசீராக அமைய வேண்டும் - ஒரு பக்கம் வளமும், மற்றோர் பக்கம் வறட்சியும் இருக்கும் நிலை மாறுபட்டாகவேண்டும். இந்த மூன்று அடிப்படைக் காரியங்களைச் செய்திட முனைய வேண்டும் என்று எடுத்துக்கூறி, இவைகளைச் செய்தால் கழகம் சரிந்துவிடும் என்று யோசனை கூறுகிறார்கள். கழகத்தைக் காட்டிக் காரியத்தைச் சாதித்துக்கொள்ளச் சிலர் இந்த முறையை மேற்கொண்டால், நமக்கு நஷ்டமும் இல்லை, கஷ்டமும் இல்லை, நாம் அதற்குக் குறுக்கே நிற்கப் போவதுமில்லை. ஆனால், இவைகளை செய்தளிப்பதால், விடுதலை ஆர்வம் மங்கிவிடும், மடிந்துவிடும் என்று எதிர்பார்ப்பது, எத்துணை பெரிய ஏமாளித்தனம் என்பதனைக் காலம் எடுத்துக் காட்டும். ஒவ்வொரு முறை சலுகைகள் சில்லறை உரிமைகள் தருகிற போதும் வெள்ளைக்காரன், இனி சுயராஜ்யக் கிளர்ச்சி செத்து விடும் என்ற நம்பிக்கையுடன்தான் இருந்தான். ஆனால் இந்தச் சலுகைகள் பெறப்பெற நாட்டுமக்கள், சலுகை தந்த வெள்ளைக்காரனைப் பாராட்டவில்லை; காங்கிரசின் எதிர்ப்பினால்தான் இவை கிடைத்தன என்று உணர்ந்து காங்கிரசைப் பாராட்டத் தலைப்பட்டனர்; வேகம் குறைய வில்லை, திசை மாறவில்லை, இலட்சியத்தை அடைந்தே தீருவது என்ற உறுதி தளரவில்லை. அதே நிலைதான் இப்போதும். ஆனால், தம்பி! அன்று தம்மைத் தியாகம் செய்துகொள்ள எண்ணற்றவர்கள் வீறுகொண்டெழுந்து விடுதலைக் கிளர்ச்சியிலே எப்படி ஈடுபட்டார்களோ, அஃதே போல நம்மிலே பலரும் தியாகத் தீயில் குளித்திடத் தயாராகவேண்டும். இப்போதைக்கு ஒன்றும் இல்லை - என்கிறார்கள் காங்கிரஸ் அரசு நடத்துவோர். ஆனால், எப்போதும் எதுவும் நேரிடாது என்று இருந்துவிடவேண்டாம், தம்பி! எப்போது வேண்டுமானாலும், என்னவிதமான அடக்குமுறை வேண்டு மானலும் வெடித்துக்கொண்டு வரக்கூடும். நம்முடைய நிலை, எப்போது அந்த அழைப்பு வருவதாக இருப்பினும், ஏற்றுக் கொள்ளும் துணிவுடன் இருப்பதுதான். "எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம்; எனவே போர் உடையுடன் இருந்து வாருங்கள்’’ என்று ஒருமுறை நேரு பெருமகனார் கூறினார். அது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மட்டும் கூறிய வாசகம் என்று கருதாதே, தம்பி! அது விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடும் அனைவருக்கும் பொருத்தமான அறிவுரையாகும்!! நாம் ஒரு இலட்சியத்துக்காகப் பாடுபட முனையும்போது விளைவுகளைத் தாங்கிக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். அடக்குமுறை சூடாகத்தான் இருக்கும், ஆனால் அதை ஒரு இலட்சியத்துக்காக ஏற்றுக்கொள்வதிலே, தனிச் சுவை இருக்கிறது. தடக்கை நீட்டி இங்கொருவர் தருக வென்னார் விடுதலையை! உடனே உணர்ந்து வதைத்தோரும் வழங்கிவிட்ட சான்றில்லை! அடலே! புயலே! எரிமலையே! ஆர்க்க வருதல், உரிமையாம் கடலாய் ஆற்றல் தோள் புனைவாய் கண்ணாய் வளர்ப்பாய் விடுதலைத் தீ. அன்புள்ள அண்ணாதுரை 17-6-1962 சூடும் சுவையும் (5) உரிமை உணர்வு அமைச்சரின் ஏக இந்தியா வாதம் தி. மு. க. ஆதரவாளர்கள் தம்பி! எல்லோரும் ஓர் இனம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு கூடிவாழ்ந்தால் கோடி இன்பம் வேற்றுமையில் ஒற்றுமை பாரத சமுதாயம் இமயம் முதல் குமரி வரை சுவைமிக்க சொற்றொடர்கள் இவை என்பதனைப் பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். கேட்கும்போதே தித்திப்புக் காண்பர், நினைக்கும்போதே சொக்கிப்போவர் என்ற நம்பிக்கையுடனேயே இந்தச் சொற்றொடர்களைக் கூறுகின்றனர். நான் இவைகளைச் சொற்றொடர்கள் என்று கூறுகிறேன் - இவைகளைப் பேசுவோர் அவ்விதம் கூறுவதைக்கூட கண்டிப்பார்கள் “ஏ! அறிவிலி! இவை சொற்றொடர்களா? வெறும் பதங்களின், கூட்டா? எழுத்து களின் கோர்வையா? கேவலம் ஓசையா? அல்ல! அல்ல! இவை இலட்சியங்கள்! மறுக்கொணாத உண்மைகள்! மாண்பளிக்கும்தத்துவங்கள்! வாழ வைக்கும் வழிவகை! கருத்துக் கருவூலம்! இழக்கொணாத செல்வம்! ஏற்புடைய கொள்கை!! நாட்டுப் பற்றுமிக்கோர் அளித்துள்ள பேரொளி! வெறும் வார்த்தைகள் அல்ல’’ என்று கோபம் கொந்தளிக்கும் நிலையில் செப்புகின்றனர் - அறைகின்றனர்! நம்பிக்கை, எழுச்சி, ஆர்வம் ஆகியவைமட்டும் அல்ல, அது மறுக்கப்பட்டுவிட்டால் என்னென்ன கேடுகள், ஆபத்துக்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவர்களை அவ்விதம் பேசச் செய்கிறது. மலடி வயிற்று மகன்போலே, ஒரு புதையல் எடுத்த தனம்போலவே, அவர்கள்”ஏக இந்தியா’ “பாரத சமுதாயம்’ எனும் எண்ணத்தைக் கருதுகிறார்கள். எனவே தான், அந்த எண்ணம்பற்றித் தயக்கம்காட்டினால், ஐயப்பாடு கூறினால், மறுப்பு உரைத்தால் அவர்களுக்கு அடக்கமுடியாத ஆத்திரம் பிறக்கிறது; ஆர்ப்பரிப்புத் தன்னாலே கிளம்பிவிடுகிறது. மேலும், இந்த எண்ணம் ஏற்பாடு ஆகவிடமாட்டேன், ஏனெனில் அது எம்மைப் பொறுத்தவரையில்”ஆகாவழி’ என்று துணிந்து கூறித் தொடர்ந்து வலியுறுத்தி, பேராதரவு திரட்டி, பெருங் கிளர்ச்சி நடாத்தி, ஜனாப் ஜின்னா முன்பு வெற்றிபெற்று "பாகிஸ்தான்’ அமைத்துக்கொண்டார் அல்லவா? அந்த நினைவுவேறு வருகிறது. உடனே உள்ளம் உலைக்கூடமாகிறது, கனல் கக்குகிறார்கள். சுவைமிக்க எண்ணத்தையும், அதன்படி அமையும் ஏற்பாட்டினையும் மேற்கொண்டு, அனைவரும் மகிழ்ந்திடச் செய்து பாராட்டுதலைப் பெறுவதை விட்டுவிட்டுச், சுடுசொற் களால் அந்தச் சுவைமிகு இலட்சியத்தை மறுத்துப் பேசி, மற்றவர்களின் கோபத்தைக் கிளறி, பகையை எழுப்பிவிடுவது எற்றுக்கு? நாமும் நாலுபேருடன் சேர்ந்து, ஏகஇந்தியா, இமய முதல் குமரிவரை, பாரத சமுதாயம் என்று கூறிவிடலாமே, எதற்காக வீணாக விரோதச் சூழ்நிலையை உருவாக்குவது என்றுதான், எவருக்கும் முதலில் தோன்றும். இங்குமட்டும் அல்ல, எங்கும். இப்போதுமட்டுமல்ல, எப்போதும். ஏனெனில், சுவைக்க கருத்துகளிலே நாட்ட செல்வதும், சிக்கலற்ற நிலையை விரும்புவதும், உள்ளத்தைக்கொண்டு திருப்தி அடைவதும், கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளத் துணிவற்றவர்கள் அனைவருக்கும் உள்ள இயல்பு. வாயிற் போட்டதும், கரும்புத்துண்டு கற்கண்டு ஆகிவிடக் கூடாதா, மென்று, குதப்பிச் சாறு எடுக்கவேண்டி இருக்கிறதே எத்துணை சிரமமான வேலை என்று எண்ணுபவர்கள், இந்த வகையினர். பருத்தியாகக் காய்ப்பதற்குப் பதிலாகத் துணியாகவே கரத்துக்கு எட்டும் தூரத்தில் காய்த்திறுக்கக் கூடாதா, என்று நினைப்பவர்கள் இவ்வகையினர். ஆனார், எந்த விலையுயர்ந்த பொருளும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை - வெட்டி எடுத்தாக வேண்டும் தங்கத்தை - மூழ்கி எடுத்தாகவேண்டும் முத்துக் குவியலை - அரைத்து எடுத்தாகவேண்டும், நறுமணமிக்க சந்தனத்தை - உழுது, விதைத்து, நீர்பாய்ச்சிக் களை எடுத்து, அறுத்து எடுத்தாகவேண்டும் செந்நெல்லை. உரிய, உயர்ந்த, பயன்மிகு கருத்துகளைப்பெறுவது, இவை களைவிடக் கடினமான செயல். உரிமை உணர்ச்சிபெறுவதும், உரிமைக்காகக் கிளர்ச்சி நடாத்துவதும், வெற்றிபெறுவதும், மிகக் கடினமான வேலை. பலருக்கு அதனால்தான், அப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட மனமும் துணிவும் வருவதில்லை; எனவே அவர்கள் உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய முயலுகிறார்கள். கைக்கு எட்டும் ஏதேனும் ஓர் சுவைமிகு கருத்தினை மேற்கொண்டு விடுகின்றனர். சுவைமிகு கருத்தெனக்கொண்டது பிறிதோர் நாள் கசப் பளிப்பினும், பயன் தருவதாக இல்லாது காணப்படினும், வேறோர் கருத்தைத் தேடிப்பெறுவதைக் காட்டிலும், உள்ளது உவர்ப்பு எனினும், அதுவும் ஓர் சுவையே என்று கருதிக் கொள்ளத் தலைப்படுகின்றனர். இம்முறையிலேதான் இன்று பலரும், ஏக இந்தியா, பாரத சமுதாயம், இமயமுதல் குமரிவரை என்பவைகளைப் பற்றிக்கொண்டு இருக்கிறார்களேயன்றி, முழு திருப்தியுடன் அல்ல, மனதார நம்பியும் அல்ல. இது போதும். இதுதான் உள்ளது. இதைவிட வேறு ஏது? வேறு தேடிட முடியுமா? இதைவிடப் பயனுடையது பெறுவது கடினம். கடினமாகப் பாடுபட முடியுமா? முடிந்திடினும் வெற்றி கிட்டும் என்பது என்ன உறுதி? எனும் இவ்விதமான உரையாடல் நிரம்ப; ஏக இந்தியா எனும் ஏற்பாட்டினை ஏற்றுக்கொண்டுள்ளவர்களிடையே, நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. பூரிப்புடன், பெருமிதத்துடன், நம்பிக்கையுடன், இந்த இலட்சியத்தை அவர்கள் மேற்கொண்டில்லை. என்ன செய்யலாம், இவ்வளவுதான்! - என்ற மனக்குறையுடன்தான் உள்ளனர். பொருளற்று, முழுச் சுவையற்று, தக்க பயனற்று உளதே “ஏக இந்தியா’ எனும் ஏற்பாடு என்று ஓரோர் வேளை தோன்றிடும் போதும், விளக்கில்லாவிடத்து விண்மீன் ஒளியின் துணை கொண்டு நடத்தல் போலவும், குளிர் நீக்கப் போர்வை யில்லாத போது கையதுகொண்டு மெய்யது போர்த்துக் கொள்ளல் போலவும், சுவையும் பயனும் மிக்கதான வேறோர் ஏற்பாட் டினைத் தேடிப்பெறும் துணிவு இல்லாதபோது, உள்ளது போதும் என்று திருப்தியை வரவழைத்துக் கொள்கின்றனர். மன வறட்சி வெளியே தெரிந்துவிடுமோ என்ற வெட்க உணர்ச்சியால் அலைக்கழிக்கப்பட்ட நிலையில், சுவையிருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு விடுகின்றனர். இல்லையெனில், தம்பி! அடிக்கடி”ஏக இந்தியாவில்.’ எனக்கா உனக்கா? என்னுடையது உன்னுடையது? என் இயல்பு தெரியுமா, உன் வரலாறு தெரியாதா? என்னை வாடவிட்டு உனக்கு வாழ்வா, நீ வாழ நான் வதைபடுவதா? என் மக்களுக்கு வேலையில்லை உனக்கு இங்கு விருந்தா? - என்பனபோன்ற பேச்சுக்களும், கோபதாபங்களும், கொந்தளிப்புகளும், கிளர்ச்சிகளும், வெடித்துக்கொண்டு கிளம்புமா? எண்ணிப் பார்க்கச் சொல்லு, ஏகஇந்தியா பேசுவோர்களை. நான் இதனைக் கேட்டேன், தில்லியில் பேசும் வாய்ப்புக் கிட்டியபோது, பம்பாய் எனக்கு என்று மராட்டியர் கிளர்ச்சி நடாத்தியபோது, ஏக இந்தியா எனும் இலட்சியத்தை அந்த அளவிலே மராட்டியர் மறுத்திடவில்லையா? குஜராத் மாநில அமைப்புக்காக குஜராத்தியர் குமுறி எழுந்தனரே, அந்த அளவிலே அவர்கள் ஏகஇந்தியா எனும் ஏற்பாட்டை எதிர்த்தனர் என்று பொருளல்லவா? இவ்விதம் நான் கேட்டது. கொதிப்பை உண்டாக்கியதை நான் உணருகிறேன். ஆனால் கேட்போர் மனம் குளிரப்பேச, கதாகாலட்சேபம் நடத்தவேண்டுமே. அதற்கா நான்? கூடி வாழ்வோம் என்று சொன்னாலே, வடக்கே உள்ளவர் களின் மனம் எவ்வளவு குளிருகிறது என்பதையும் நான் பார்த்தேன். என் பேச்சிலே ஒரு கட்டத்தின்போது. உங்கள் அனைவருடனும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று விரும்பத் தோன்றுகிறது. என்று நான் குறிப்பிட்டேன் - கேட்டுக்கொண்டிருந்தவர்களின் முகம் மலர்ந்தது, ஆர்வம் காட்டினர். ஆனால் நான் கூறிய அடுத்த கருத்து அவர்களின் களிப்பினைக் கருக்கிவிட்டது. விருப்பம் என்பது ஒன்று; இருக்கும் உண்மை நிலைமையோ முற்றிலும் வேறானது. என்று நான் கூறினதும், செச்சே இவன் பாரதம் பேசவில்லை, திராவிடம் கேட்கிறான் என்று அவர்களுக்குப் புரிந்தது, களிப்பு உவர்த்தது. தம்பி! நாம் திராவிடம் கேட்கிறோம், பாரதம் எனும் ஏற்பாடு, சுவையும் பயனும் தாராது என்று நம்பிக்கையுடன். நமது எண்ணங்களைத் தாராளமாக வெளியிடுகிறோம். நமது எண்ணம் ஈடேற நம்மால் இயன்ற அளவு முயற்சிகள் செய்கிறோம். எனவே நமது நெஞ்சிலே பாரம் இல்லை. குமுறலை வெளியே தெரியவிடாதபடி அடக்கி வைத்துக்கொண்டு இருக்கும் தொல்லை நமக்கு இல்லை. ஆனால் எண்ணற்றவர்கள், குமுறலை வெளியே கொட்டிக்காட்ட முடியாதநிலையில், மனதிலேயே அடக்கி வைத்துக்கொண்டு, மெத்த வேதனைப் படுகிறார்கள். அவ்விதமான நிலையினர், வடக்கே நிரம்ப இருக்கிறார்கள் - வடக்கு வாழ்கிறது. தெற்குத் தேய்கிறது என்பது அவர்களுக்குப் புரிகிறது, ஆனால் வெளியே சொல்ல முடியுமா? வேலைப்பளு தாங்கமுடியவில்லை. என்று மேலதிகாரி நண்பரிடம் கூறும்போது, மாடுபோல் உழைக்கும் "குமாஸ்தாவுக்கு’ பொய்! பொய்! பச்சைப் பொய்! பதினொரு மணிக்கு வந்தார், படம் நிரம்பிய பத்திரிகை படித்தார், சாய்வு நாற்காலியில் படுத்தார், நாலுமணிக்கு எழுந்து, காப்பி! காப்பி! என்று கூச்சலிட்டார்!! இதுதான் அவருடைய வேலைப்பளு என்று கூறமுடிகிறதா? அதுதான் உண்மை! ஆனால் கூறமுடிகிறதா? பொய் பேசுபவரோ, மேலதிகாரி! உண்மையை உரைத்திட முடியாமல் திணறுபவனோ பாடுபடும் சிப்பந்தி!! அதுபோல, வடநாட்டிலே பிழைக்கச் சென்றுள்ள ஏராள மானவர்கள், தாம் உணர்ந்ததை உரைத்திட முடியாமல் குமுறுகின்றனர். உண்மையைக் கூறினால் பிழைப்பிலே மண்விழுமே என்ற அச்சம். அவர்களென்ன, தம்பி! டி. டி. கிருஷ்ணமாச்சாரிகளா, பதவி தேடிவரும் என்று பிகுவுடன் இருந்திட!! இங்கே வாழ, தக்க வழியின்றி அங்கு சென்று வதைபட்டுக் கொண்டிருப்பவர்கள். அத்தகைய மனப்போக்கினர், வடக்கே எல்லாத்துறைகளிலும் உள்ளனர்; பட்டாளம் முதற்கொண்டு பாரம் தூக்கிப் பிழைக்கும் துறைவரையில், அவர்களுக்கு ஏகஇந்தியா என்பது சுமந்து தீரவேண்டிய ஒரு ஏற்பாடாகத்தான் இருக்கிறதே தவிர, சுவையும் பயனும் ஒரு பொருளுள்ள, ஏற்புடைய திட்டமாகத் தோன்றவில்லை. இந்த மனப்போக்கைப் புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சி எனக்கு வாய்ப்பளித்தது. தில்லியிலே, பல்வேறு துறைகளிலே பணியாற்றிடும் தமிழர்கள் ஓர் அமைப்பு ஏற்படுத்திச் செம்மையாக நடத்திக் கொண்டு வருகின்றனர், தமிழ்ச்சங்கம் என்ற பெயரில். அங்கு ஒருமாலை எங்களை அழைத்திருந்தனர் - பாராட்ட. வழக்கமான நிகழ்ச்சியாம். நான் மண்டபத்தில் நுழைந்தபோது, ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஏற்கனவே பலர் மேடைமீது அமர்ந்திருந்தனர். நான் சென்று உட்கார்ந்ததும், இரயில்வேத் துறையில் அமைச்சராக உள்ள சேலம் இராமசாமி அவர்கள் என்னைப் பார்த்து, பாரப்பா! நீ வந்தபோதுதான் இவ்வளவு கரகோஷம் நாங்கள் வந்தபோதெல்லாம் இல்லை. உனக்குத்தான் என்று கூறினார். உபசாரமொழி கூறியவருக்கு நன்றி கூறினேன். ஆனால் அவரோ என்னிடம் சொன்னதோடு விடவில்லை. அவர் பேசும்போது இதனைக் குறிப்பிட்டுப் பேசினார் - சற்றுச் சாமார்த்தியமாக! "நாங்களெல்லாம் வந்தபோது, கைதட்டி வரவேற்க வில்லை. ஆனால் அண்ணாதுரை வந்தபோது மட்டும் ஏகப்பட்ட கைதட்டலோடு வரவேற்றீர்கள்’’ என்று கூறினார். அதைக்கேட்டு மறுபடியும் மண்டபத்தி லிருந்தோர் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். எனக்குச் சிறிதளவு சங்கடமாகத் தென்பட்டது. இதுபற்றி அமைச்சர் குறிப் பிடாமலே பேசியிருக்கலாமே என்று எண்ணிக்கொண்டேன். அவருடைய பேச்சின் துவக்கம், அவர் மிகப் பக்குவமாகப் பேசப் போகிறார் என்றே என்னை எண்ணிக்கொள்ள வைத்தது, ஏனெனில், சிறிதளவு கெம்பீரமாக அமைச்சர் இராமசாமி, இங்கு அரசியல் பேசத் தேவையில்லை என்று தெரிவித் தார். ஆகவே, அவர் அரசியல் பற்றிப் பேசமாட்டார் என்று கருதிக்கொண்டிருந்தேன். என்னைப்பற்றி அவர் பேசவே எனக்கு ஐயம் எழுந்தது. அமைச்சர் அந்த அளவோடு நிறுத்திக்கொள்ள வில்லை. தில்லித் தமிழ்ச்சங்கத்தார் என்னை ஆர்வத்தோடு வரவேற்றார்கள் என்பதை, மகிழ்ச்சிதர, அல்லது உபசாரத்துக்காக அவர் கூறவில்லை என்பதை எடுத்துக்காட்டினார்; சாமர்த்திய மாக அதனை "பிரசார’த்துக்குத் திருப்பிக்கொண்டார். யாருக்கும் இல்லாமல் அண்ணாதுரைக்கு மட்டும் இவ்வளவு கைதட்டி வரவேற்புக் கொடுத்தீர்களே, ஏன் தெரியுமா? காரணம் இருக்கிறது. இப்படி வரவேற்புக் கொடுத்து அண்ணா! வாருங்கள்! எங்களை எல்லாம் பாருங்கள்! இந்தியாவைப் பிரிக்காதீர்கள்! எல்லோரும் ஒன்றாக வாழலாம். பிரிவினை வேண்டாம்! என்று அவருக்கு நீங்கள் இந்த வரவேற்பின் மூலம் தெரிவிக்கிறீர்கள். அமைச்சர் இவ்விதம் பேசக்கேட்டு நான் சற்று வியப்படைந்தேன். பரவாயில்லையே, நம்மைப் பாராட்டுவதுபோல ஆரம்பித்து, நமது கொள்கையைத் தாக்க, இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்கிறாரே, கெட்டிக்காரர்தான் என்று எண்ணிக் கொண்டேன். தம்பி! நாடு பிரிவினைகூடாது, இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும், அதற்காகவே வரவேற்றார்கள் என்று சாமர்த்தியமாக அமைச்சர் பேசிய உடன், அங்கு கூடியிருந்தோர், ஏகஇந்தியா வேண்டும், பிரிவினைகூடாது என்ற கருத்துடையவர்களாக இருப்பின், எத்துணை எழுச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்து, அமைச்சரின் கருத்தினை ஆதரித்திருக்கவேண்டும். அதனை எதிர்ப்பார்த்துத்தானே அமைச்சர் அவ்விதம் பேசினார். அங்கு கூடியுள்ளவர்கள் ஏகஇந்தியா வேண்டும் என்பதிலே திட நம்பிக்கையும் பிரிவினை விஷயத்திலே வெறுப்பும் கொண்ட வர்கள் என்பதை, அவர்களின் ஆரவாரத்தின் மூலம் நான் தெரிந்துகொண்டு, வெட்கப்பட்டு, செச்சே! பிரிவினைக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கும்போது நாம் ஏன் அதனைக் கூற வேண்டும் என்று உணர்ந்து வெட்கப்பட்டுத் திருந்திவிட வேண்டும், அல்லது குழம்பிப்போகவேண்டும் என்றுதானே அமைச்சர் எதிர்பார்த்து, அவ்விதம் பேசினார். ஆனால் நடந்தது என்ன தெரியுமோ, தம்பி! நானே திடுக்கிட்டுப் போனேன். ஏகஇந்தியா எனும் கருத்துக்கு ஆதரவு திரட்ட அமைச்சர் அவ்விதம் பேசியதும், ஒருவர் கைதட்டவேண்டுமே! அதுதான் இல்லை! குண்டூசி கீழே விழுந்தால்கூட சத்தம் கேட்கும் - அவ்வளவு அமைதி. அவ்வளவு "ஆதரவு’ அமைச்சரின் பேச்சுக்கு. ஒரு அமைச்சர் சிரமப்பட்டுச் சாமர்த்தியமாகப் பேசி என்னை மடக்க எடுத்துக்கொண்ட முயற்சிக்காக, ஒரு நாலு பேராவது கைதட்டக்கூடாதா என்று எண்ணி நானே பரிதாபப்பட்டேன் என்றால், அமைச்சரின் போக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைத் தம்பி! எண்ணிப் பார்த்துக்கொள்ளேன். தம்பி! அமைச்சர் நையாண்டி பேசி, பிரிவினையைத் தாக்கியதை நாங்கள் ஒப்பவில்லை, விரும்பவில்லை, என்பதை அந்த அமைதி மிக விளக்கமாக எடுத்துக்காட்டிற்று. அதுவும் போதாது என்று கருதியோ என்னவோ, இரண்டொருவர் அரசியல் கூடாது! என்று உரத்த குரலில் கூறினர். துவக்கத்திலே அமைச்சர் சொன்னாரல்லவா அரசியல் பேசக்கூடாது என்று; அந்த உபதேசத்தை மக்கள் உபதேசி யாருக்கே உபதேசித்தனர். மேற்கொண்டு அமைச்சர், ஏகஇந்தியா பற்றியோ பிரிவினைபற்றியோ பேசவில்லை, அரசியலே பேசவில்லை, அதிகம் பேசவில்லை, இரண்டொரு விநாடிகளிலே அவர் பேச்சும் முற்றுப்பெற்றது. இந்த நிகழ்ச்சி, வடக்கே உள்ள நமது மக்கள் ஏகஇந்தியா எனும் ஏற்பாட்டிலே சொக்கிப்போய்விடவில்லை, பிரிவினையை வெறுத்திடவில்லை என்பதை விளக்கமாக்கிற்று. ஆனால் அவர்கள் ஈடுபட்டிருக்கும் அலுவல், அவர்களை உள்ளத்தைத் திறந்து பேசவைக்கவில்லை. ஒரு சிறிய நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு உன் அண்ணன் ஏதேதோ வலியப் பொருள் வரவழைத்துக் காட்டுகிறான் என்று கூறுவார்கள், நமது வழிக்கு வர மறுக்கும் நண்பர்கள். இது போதாது, வெளிப்படையாக, விளக்கமாக, வடக்கு - தெற்கு பற்றி உங்களைப்போலக் கண்டித்தும் குமுறியும் பேசுகிறார்களா, இங்கிருந்து வடக்கே போய் வாழ்கின்றவர்கள் என்றுகூடக் கேட்பார்கள். தம்பி! பேசுகிறார்கள் என்று நான் சொன்னால், ஆதாரம் என்ன? சான்று உண்டா? என்று குடைவார்கள். இருக்கிறது, தம்பி! பேச்சுக்கூட அல்ல, எழுத்தே இருக்கிறது, வடக்கே சென்று தங்கியுள்ள நம்மவர்களின் எண்ணத்தை எடுத்துக்காட்டும் விதமாக. இதோ, அது. அன்புள்ள அக்கா, வணக்கம் பல. முன்பின் அறியாத நான் தங்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டதற்கு, சமீபத்தில் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ‘The Statesman’ தினத்தாளில், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிய அபத்தமான குற்றச்சாட்டே காரணமாகும். வடநாட்டில் வாழும் எங்களுக்கு வடவரது தொல்லைகள் பரிபூரணமாகத் தெரியும். தென்னாட்டில் வாழும் தமிழர்களுக்கு வடவர் தமிழர்மீது செலுத்தும் ஆதிக்கம் புரிய நியாயமில்லை. என் வாழ்நாட்களில் பெரும் பகுதி வடநாட்டில்தான் கழித்திருக்கிறேன். கல்யாணமாகாது தந்தையுடன் இருந்த நாட்களில் டில்லி, கராச்சி, பம்பாய், நாகபுரி ஆகிய நகரங்களில் இருந்திருக்கிறேன். . . . . இப்போதும் நான் மணமாகிய ஒன்பது ஆண்டுகளையும் வடக்கேயே கழித்து இருக்கிறேன். ஜரியா, கல்கத்தா, ராஞ்சி, தற்போது இருக்கும் ஜாகராகண்டு எல்லாம் வடநாடுதானே! சுதந்திர இந்தியாவில் நாங்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. என் கணவரும் ஒரு பெரிய பதவி வகிக்கும் ஆபிசர்தான். சர்க்கார் துறையிலும் இவர் வேலையில் இருந்தார். இப்போது தனியார் துறையில் இருக்கிறார். சர்க்கார் துறையில் தமிழர்கள் வடவரால் எவ்வளவு இழிவாக நடத்தப்படுகின்றனர் என்பதைச் சொல்லாமல் இருப்பதே மேல். தனியார் துறையில் அவ்வளவு துன்பங்கள் இல்லை. என்றாலும், சக ஊழியர்களான வடவர்கள் சமயம் வாய்த்த போதெல்லாம் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தவறுவதில்லை. . . . . . தென்னாட்டில் எப்படியோ தெரியாது, வடநாட்டில் வாழும் தமிழர்கள் வெளியில் பகிரங்கமாகக் கூறாவிட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமனதோடு ஆதரிக் கிறார்கள்; முன்னேற்றக் கழகம் 50 ஸ்தானங்களைப் பற்றியது முக்கியமாக எங்களுக்குச் சொல்லமுடியாத மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் தமிழர்கள் இன்று வடக்கில் வாழ்கிறார்களேயன்றி, வடவர்மேல் உள்ள மோகத்தால் அல்ல அக்கா! குழந்தைகளுக்கு நாங்கள் இந்தி கற்பிப்பதற்குக் காரணம் அந்த மொழியின்மீதுள்ள மோகத்தால் அல்ல; வேறு வழியில்லாததனால்தான். தம்பி! வடக்கே இருக்கும் தமிழ்ப் பெண்மணி, இராணிக்கு அனுப்பியிருந்த கடிதத்திலே, சில பகுதிகள் மேலே வெளியிடப் பட்டவை. நன்றாகப் படித்தவர், அவரசப்பட்டு முடிவு எடுக்கும் இயல்பு இருக்கக் காரணமில்லை. . . பார்க்கிறாயல்லவா, மனக் குமுறல் இருக்கும் விதத்தை. இப்படி, எண்ணி எண்ணிக் குமுறிக் கிடப்பவர்கள் நிரம்ப அங்கு. கழகத்துக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பு இல்லை - கருத்து அந்த அளவு பரவிப் பதிந்து விட்டிருக்கிறது. கல்கத்தா ஆங்கில இதழில், கழகத்தைக் கண்டித்து எழுதப்பட்டது கண்டு மனம் குமுறி, இப்பெண்மணி உடனே, சுடச்சுட நான் ஒரு மறுப்புரை அந்த இதழுக்கு எழுதி அனுப்பவேண்டும் என்பதற்காக, இராணிக்குக் கடிதம் அனுப்பி னார்கள் என்றால், எவ்வளவு அக்கறையும் ஆதரவும் காட்டி யிருக்கிறார்கள் கழகத்திடம் என்பது புரிகிறதல்லவா? நான் தில்புற ப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இக்கடிதம் கிடைத்தது. தில்லியில் ஏற்பட்டுப்போன அலுவல் காரணமாக நான் கல்கத்தா இதழுக்கு மறுப்பு எழுத முடியவில்லை. ஆனால், பார் தம்பி! கடமை உணர்ச்சியை; நான் எழுதத் தவறிவிட்டேன், ஆனால் ஒரு வாரத்துக்குப் பிறகு பார்க்கிறேன், அந்தப் பெண்மணியே, மறுப்பு எழுதி, ஆங்கில இதழிலே வெளிவந்தது. ஒருபுறம் எனக்கு வெட்கம், மற்றோர் புறம் மெத்த மகிழ்ச்சி, நெடுந்தொலைவிலே இருப்பினும் கொள்கைக்காக வாதாடும் அக்கறை இருப்பது கண்டு மகிழ்ச்சியுற்றேன். தம்பி! ஏக இந்தியா என்பது போலி, பொருளற்றது, சுவையற்றது, பயனும் இல்லை என்ற உணர்ச்சி உள்ளவர்கள் ஏராளம்; ஆனால் அதனை வெளியே எடுத்துக் கூறும் நிலை, எல்லோருக்கும் இல்லையே!! எத்தனையோவிதமான நிலைமைக் கோளாறுகள் - நெருக்கடிகள் - இடப்பாடுகள். திராவிடம் தனித்தன்மை வாய்ந்தது, தனி அரசு நடாத்த முடியும் நடாத்தவேண்டும் என்ற எண்ணம்கொண்டவர்கள், திராவிட முன்னேற்றக் கழத்திற்குள்ளே மட்டும்தான் இருக் கிறார்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள், காங்கிரசார். மிகப் பெரிய தவறு. அவ்விதமான நம்பிக்கையும் விருப்பமும் கொண்டவர்கள் தி. மு. கழகத்துக்கு வெளியேயும் இருக்கிறார்கள் - பலப்பலர். இந்த உண்மை, தி. மு. கழகத்துக்குப் புதிய உற்சாகத்தையும் வலிவையும் தந்துவருகிறது. அன்புள்ள அண்ணாதுரை 24-6-1962 இராஜ்ய சபையில் இம்முறை. . .(1) இராஜ்யசபையில் இம்முறை டில்லி இராஜ்யசபையில் திராவிடநாடு பிரச்சினை தம்பி! தில்லிக்கு மறுபடியும் சென்றிருந்தேன் - திரும்பியும் வந்திருக்கிறேன் - மீண்டும் ஆகஸ்டு திங்களில் செல்ல இருக்கிறேன். இது ஒரு பெரிய செய்தியா? என்று கேட்பார்கள், காங்கிரஸ் வட்டாரத்தினர். நிச்சயமாகப் பெரிய செய்தி அல்ல - முக்கியமான செய்திகூட அல்ல; ஆனால் காங்கிரசில் ஈடுபட்டு அமைச்சர் வேலை பார்க்க அழைக்கப்பட்ட அஞ்சா நெஞ்சுடையவர், தம்மைத்தவிர மற்ற யாவரும் நோன்ஜான்கள் என்று எண்ணிக்கொண்டு நான் தில்லியில் பேசிவிட்டு உடனே திரும்பிவிட்டேன் - இரயிலில் வந்தால் என்ன ஆகுமோ என்று பயந்துகொண்டு விமானம் ஏறி வந்துவிட்டேன் என்று பேசி, நான் தில்லி சென்று வருவதையே, மேடையிலே ஆராய்ச்சி செய்து காட்டித் தீரவேண்டிய ஒரு செய்தியாக்கிவிட்டாரே, நான் என்ன செய்ய!! அதனால்தான், நான் மறுமுறையும் தில்சென்றே ன் - பேசினேன் - அமைச்சரின் பதிலுரை கேட்டேன் - மற்ற உறுப்பினர்கள் பேசக் கேட்டேன் - மேலும் இரண்டோர் நாள் அங்கு இருந்தேன் - திரும்பி வந்திருக்கிறேன் - இரயிலில் - யாரும் எந்தவிதமான ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை - இழி மொழி பேசவில்லை - எரிச்சல் காட்டவில்லை. அமைச்சர்தம்மிடம் ஏராளமாகவும் தாராளமாகவும் கைவசம் உள்ள சரக்கான, குத்தல் பேச்சைக் கொட்டிக் கடைவிரித்துக் காட்டினாரே, அதுபோல், அங்கு ஒருவரும் காட்டவுமில்லை, கொட்டவுமில்லை என்ற செய்தியைத் தெரிவிக்கவேண்டி நேரிடுகிறது. வேகவேகமாக முன்னேறி, நேரு பெருமானுக்குப் பக்கத்திலே இடம் பெற்றுக்கொண்டுள்ள இரும்பு மந்திரியார் பேச்சைக் கேட்டு, எங்கே உனக்கேகூட ஏதேனும் ஐயப்பாடு ஏற்பட்டுவிடுகிறதோ என்ற எண்ணத்திலே, இதனை விளக்கினேன். இல்லையெனில், அன்றாடம் தில்லி சென்று வருகிற ஆயிரத்தோடு நான் ஒருவன்தான்! அண்ணாதுரையின் திராவிடநாடு வாதத்துக்குப் பலமான எதிர்ப்பு! சீறிவிழுந்தனர்! சின்னாபின்னமாக்கினர்!! என்றெல் லாம் ஏடுகள் எழுதி இருந்தன. அந்தப் புயலைத் தொடர்ந்து மாமேதைகள் பலர் கூடினர், பிரிவினைக் கிளர்ச்சி ஒடுக்கப்படவும், தேசிய ஒற்றுமை ஏற்படவும் வழிவகை காண. எனவே தில்லியில், பாராளு மன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும், அலுவலகங்களில் அங்காடியிலும் இதுகுறித்தே பேச்சு இருக்கும், கொதிப்பு இருக்கும், கோபமாகப் பார்ப்பார்கள், எதிர்ப்புக் காட்டுவார்கள் என்றெல்லாம் பலரும் எண்ணிக்கொண்டிருந்தனர் - என்னிடம் சொல்லக்கூடச் செய்தனர். ஆனால் அங்கு அவ்விதமான நிலைமையே இல்லை. முன்பு இருந்தது போலவே, பழக, பேச, நட்புக் கொண்டிட முனைந்தபடிதான் உள்ளனர்? எப்போது உங்கள் இடிமுழக்கம்? இன்று உண்டா? - என்று கேட்டபடி இருந்தனர், பல நண்பர்கள், இராஜ்யசபை உறுப்பினர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் பாராளுமன்றத்தில் செயலாற்றுவதாலும், தமிழ்நாட்டிலே அதற்குச் செல்வாக்கு மிகுதியும் இருப்பதாலேயும்தான், இம்முறை, தில்லி மந்திரி சபையில் 7 தமிழ்நாட்டவருக்கு இடம் கிடைத்தது; இதை மறுக்க முடியாது என்று, அங்கு சர்வ சாதாரணமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்று, நமது நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். எப்படி இதனை நம்புவது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன் - ஒருவிதமான தயக்கம். ஒருநாள், நான் தருமலிங்கத்துடன் மனோகரன், இராஜாராம், முத்து, செழியன்ஆகியோர் உடன்வர, பாராளுமன்றத்திலே மாடியிலே அமைந் துள்ள சாப்பாட்டு விடுதி செல்ல, மின்சாரத் தூக்கி அறை சென்றோம். அங்கு என் தயக்கம் போகும்படி, ஒரு காங்கிரஸ் நண்பர், தென்னாட்டவர், பார்லிமெண்டரி காரியதரிசியாக உள்ளவர், தழதழத்த குரலில் எங்களைப் பார்த்து, நீங்கள் தான் எங்கள் பாதுகாவலர் நாங்கள் அதனை மறக்கமாட்டோம். என்று சொன்னார். முகத்துக்கு இச்சையாக எங்களிடம் பேசவேண்டிய நிலை எவருக்கும் இல்லை அல்லவா? எனவே, ஆளுங்கட்சியில் உள்ளவரும், அதிகாரத்தில் இருப்பவருமான அந்த நண்பர், வேண்டுமென்றே, மேலுக்கு, போலியாக எம்மிடம் அவ்விதம் பேசியிருக்கமாட்டார் அல்லவா! உள்ளத்தில் பட்டதை உரைத்தார் என்பது அவருடைய பேச்சு இருந்த பாணியினாலும், அவர் காட்டிய கனிவினாலும் விளக்கமாகத் தெரிந்தது. நமது நண்பர்களிடம், ஒருநாள், இலாக்கா இல்லாத மந்திரி, T.T. கிருஷ்ணமாச்சாரியார் அரைமணி நேரம் அளவளாவிக் கொண்டிருந்ததாகக் கூறினார்கள். தமிழ்நாட்டு நிலை குறித்து மிகுந்த அக்கரை காட்டிப் பேசிக்கொண்டிருந்தாராம் - பாராளுமன்ற மைய மண்டபத்தில். சென்றமுறை, குடிஅரசுத் தலைவர் உரைமீது விவாதம் - எனவே பொதுப் பிரச்சினைகள் குறித்துப் பேச நல்ல வாய்ப்புக் கிடைத்தது - திராவிடநாடுபற்றி ஓரளவு பேச முடிந்தது. இம்முறை, வரி விதிப்பு மசோதாமீதுதான் பேசும் நிலை ஏற்பட்டது. இதிலே, வேண்டுமென்றே திராவிடநாடு பிரச்சினையைச் சொருகிப் பேசவேண்டி நேரிடுமோ என்னவோ என்று ஒரு கவலை இருந்தது. ஆனால் அந்தக் கவலையைப் போக்கும் விதமாக ஒரு உறுப்பினர் - வடாற்காடு மாவட்டத்தவர் - திராவிடநாடு குறித்துக் கண்டனம் தெரிவித்துப் பேசினார் - எனவே, அதைச் சுட்டிக்காட்டி, நானும் சில வார்த்தைகள் பேசும் பொருத்தம் ஏற்பட்டது. நான் அவ்விதம் பொருத்தம் பார்த்துப் பேசுவதற்கு முன்பாகவே, கம்யூனிஸ்டு நண்பர் பூபேஷ் குப்தா அவர்கள், என் பேச்சில் குறுக்கிட்டு, திராவிட பிரிவினையைக் கைவிட்டு விடுங்கள் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்; எனவே திட்டவட்டமாக, திராவிடநாடு இலட்சியம் குறித்துப் பேசும் வாய்ப்பு மிகப் பொருத்தமாகக் கிடைத்தது. நான் இந்தியாவிலிருந்து திராவிடநாடு பிரிந்தாக வேண்டும் என்ற கொள்கையைக்கொண்ட கட்சியினன் என்பதைக் கூற இடம் தானாக ஏற்பட்டது. எரிகுண்டு வீசினாலும் இழிமொழி பேசினாலும் என்னை நான் மேற்கொண்டுள்ள புனிதப் பணியிலிருந்து தடுத்துவிடமுடியாது. என்று, தம்பி! உன் ஆற்றலிலே அளவிடற்கரிய நம்பிக்கை வைத்து, அந்த அவையிலே கூறிவிட்டு வந்திருக்கிறேன். இந்தப் பிரச்சினையிலே பேரப் பேச்சுக்கு இடம் இல்லை. சலுகைகள் தருவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டிவிடலாம் என்று எண்ணாதீர்கள். என்றெல்லாம் கூறிவிட்டு வந்திருக்கிறேன். துண்டு துண்டாகக் கூறுவானேன் தம்பி, மாநிலங்கள் அவையிலே நான் பேசியதைத் தமிழாக்கித் தந்திருக்கிறேன். விழிப்புற்ற திராவிடத்தின் வீரத் திருமகனே! உன் உள்ளத் திலே கொந்தளித்துக்கொண்டுள்ள எண்ணம்யாவற்றையும் எடுத்துக்கூற நேரம் கிடைக்கவில்லை - இந்த அளவு பேசுவதற்கே, அவையின் துணைத்தலைவர் அவர்கள், இரண்டு மூன்று முறை, நேரம் அதிகமாகிவிட்டதைச் சுட்டிக்காட்ட நேரிட்டுவிட்டது. விழிப்புற்ற, விடுதலை ஆர்வம்கொண்ட ஒரு இனத்தின் எண்ணத்தை, எடுத்துக்கூற நாட்கள் பலவும் போதாதே - பேசத் தரப்படும் சில நிமிடங்களிலே எப்படி எல்லாவற்றையும் எடுத்துரைக்க முடியும். ஆனால், பேசும் வாய்ப்பு மேலும் கிடைக்கும் அல்லவா, பையப்பைய, நமது கருத்துகளை எடுத்து கூற இயலும். இந்தத் திங்கள் இருபதாம் நாள் பகல் 12-30 மணிக்குமேல் பேசினேன். துணைத் தலைவர் திருமதி வயலட் ஆல்வா தலைமை வகித்தார்கள். நிதி அமைச்சர் மெரார்ஜி தேசாய் அவையிலிருந்தார். அமைச்சர் அழகேசன் இருந்திடக் கண்டேன். அமைச்சர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரும் இருந்திருக்கிறார். நமது தோழர்களும், தமிழ்நாட்டுக் காங்கிரஸ் லோக்சபை உறுப்பினர்கள் பலரும் பார்வையாளர் இடத்தில் வீற்றிருந்தனர். பத்திரிகைகள் யாவும் அந்தப் பேச்சிலே, சில இடங்களைக் கோடிட்டுக் காட்டியிருந்தன என்றாலும், முழுப் பேச்சையும் ஒரு சேரப் படித்தால்தான், பொருள் பலன் உள்ள முறையில் கிடைக்கும் என்பதால், இங்கு முழுப் பேச்சையும் தந்திருக்கிறேன் - தம்பி! படித்து மகிழமட்டுமல்ல - அதுகுறித்துப் பேச, உன் யோசனைகளை உருவாக்கிக்கொள்ள - எனக்கு உன் எண்ணத்தை எடுத்துக் கூற. இராஜ்ய சபையில் பேசியது துணைத் தலைவர் அவர்களே, வரி மசோதா (லோக்சபை) மற்றோர் சபையிலே விவாதிக்கப்பட்டது; இப்போது இந்த அவையில் விவாதிக்கப் பட்டு வருகிறது - இப்புறமும் எதிர்ப்புறமும் உள்ள உறுப்பி னர்கள் எடுத்துக்கூறிய நல்ல பல யோசனைகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். மக்களுக்கு இந்த முறையிலே வரி விதிக்கப்படுவது ஒருவருக்கும் திருப்தி அளிக்கவில்லை என்பது விவாதத்தைக் கேட்டதிலிருந்து தெரிகிறது. புதிய வரிகளுக்கான காரணங்கள் என்ன காட்டப்படினும், இந்த அவையிலுள்ளவர்களிலே எந்தப் பகுதியினரும் சரி, வெளியே உள்ள பொதுமக்களில் எந்தப் பிரிவினரும் சரி, புதிய வரிச்சுமையைத் தாங்கத் தயாராக இல்லை. மேலும் மத்திய துறைத்தனத்தாரின் இந்தப் புதிய வரிச்சுமைக்கு முன்பு இரயில்வே அமைச்சு வரி விதித்திருக்கிறது. இதைத் துரத்திக் கொண்டு இராஜ்ய சர்க்கார்களும் புதிய வரிகளைப் போடப் போகிறார்கள். எனவே, வரி மசோதாவைப் பார்க்கும்போது, உடனே ஏற்படுகிற எண்ணம் என்னவென்றால், தற்போதுள்ள சர்க்கார், தங்களின் தோல்விகளால் திகைத்துப்போய், பொது மக்களை தேவையற்ற பளுவைச் சுமக்கும்படி கேட்கிறது என்பதுதான். தற்போதுள்ள சர்க்கார், தனது தோல்விகளுக்கும், தனது செய்கையாலும் செய்யத் தவறியவையாலும் ஏற்பட்ட கேடுகளுக்கும் சமாதான விளக்கம் தர இயலவில்லை; ஒன்றுதான் கூறமுடிகிறது, திட்டம் நிறைவேற்றப்படவேண்டி இருப்பதால் ஒவ்வொரு பளுவையும் மக்கள் சுமக்கவேண்டும் என்பதுதான். இவர்களின் திட்டத்தின் தன்மை என்ன, திட்டம் சமதர்ம அடிப்படையில் இருக்கப்போகிறதா அல்லது வேறுவிதமாகவா என்று ஆய்வாளர்கள் கேட்டால், இவர்கள், "நாங்கள் மிகநல்லவர்கள், இங்கொரு துண்டும் அங்கொரு துண்டுமாக எடுத்து, அவைகளை ஒன்றாகக் கலந்து, ஒரு கலப்புப் பொருளாதார திட்டம் தயாரிக்கிறோம்’ என்கிறார்கள். துணைத் தலைவர் அவர்களே! கலப்படம் ஒரு குற்றம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள், நிதிமந்திரி, கலப்படக் குற்றத்தைக் கோபத்துடன் கண்டித்துப் பேசினார் லோக்சபையிலே. கலப்படம் செய்யும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தால், அவர்களைச் சவுக்காலடிப்பது மட்டுமல்லாமல். . . மொரார்ஜி தேசாய் :- நான் அதைச் சொல்லவில்லை. அவர்களைச் சவுக்காலடிக்கவேண்டுமென்று ஒரு யோசனை கூறப்பட்டது. சி. என். ஏ .:- ஆகவே, நிதிமந்திரி அவர்களைத் தண்டிக்கவும் இஷ்டப்படவில்லை! என்றாலும், கலப்படம் ஒரு குற்றம்; பொருளாதார தத்துவக் கலப்படம் எத்தகைய குற்றம் என்றால், அதற்கான வினையை, இக்கால மக்கள் மட்டு மல்லாமல் வருங்கால மக்களும் அனுபவித்தாகவேண்டும், அத்தகைய குற்றம். எனவே, இன்றைய சர்க்கார், பொருளாதார தத்துவ அடிப்படை யிலே, தமது கொள்கையை வகுத்துக்கொள்ளவேண்டுமென விரும்புகிறேன். ஆனால் அவர்கள் எந்தப் பொருளாதார தத்துவத்துக்கும் புதிய வியாக்யானம் வேண்டும் என்கிறார்கள். அவர்களுக்குச் சாதகமாக இருக்கும்போது பழைய வியாக் யானத்தை எடுத்துக்கொள்கிறார்கள். சாதகமாக இல்லாத போது, நாங்கள் தத்துவத்திலே மூழ்கிவிடுபவர்கள் அல்ல; நாங்கள் செயல்முறையில் நாட்டம் உள்ளவர்கள் என்று கூறிவிடுகிறார்கள். தொல்லை அவ்வளவும் எதனால் ஏற்படுகிறது என்றால், இந்தச் சர்க்காருக்கு ஒரு தத்துவம் இல்லை; பொருளாதார இலட்சியம் இல்லை; நாட்டிலே பணியாற்றுகிற ஒவ்வொரு அரசியல் கட்சியிலிருந்தும் புகழ்தரும் இலட்சியங் களைக் களவாடிக்கொள்ள விரும்புகிறார்கள். பொது உடைமைக் கட்சியிடமிருந்து, சுதந்திரக் கட்சியிடமிருந்து, மற்ற எல்லா அரசியல் கட்சிகளிடமிருந்து, கருத்துக்களைக் களவாடிக் கொள்ள விரும்புகிறார்கள். இங்கு வேறு எந்த அரசியல் கட்சியும் இருக்கத் தேவையில்லை. ஏனெனில், நாங்கள் சமதர்மவாதி களாகவும் இருக்கிறோம், முதலாளித்துவ வாதிகளாகவும் இருக்கிறோம், எம்மிடம் கூட்டுப் பொருளாதாரத்துவம் இருக்கிறது என்கிறார்கள். எனவே, இன்றைய சர்க்காருடையகொள்கையின் அடிப்படையில் காணப்படும் பொருளாதார தத்துவம் பற்றிய திட்டவட்டமான விளக்கம் தரப்படுமானால், மற்றக் கட்சிகள் தமக்குரிய தத்துவங்களை எடுத்துவைக்க முடியும். கனம் பூபேஷ் குப்தா, எடுத்துக் காட்டினார். காங்கிரசில் இரண்டு கோஷ்டிகள் உள்ளன, ஒரு கோஷ்டி வலதுசாரி பக்கம் வலிக்கிறது, மற்றொரு கோஷ்டி இடப்பக்கம் இழுக்கிறது என்றும்; கம்யூனிஸ்டுகட்சி வலதுசாரிக் கோஷ்டியை வெளியேற்ற, (காங்கிரசில் உள்ள) இடதுசாரிக் கோஷ்டிக்கு உதவிசெய்யும் என்று திட்டவட்டமாகக் கூறினார். துரதிர்ஷ்ட வசமாக, பூபேஷ் குப்தா அவர்கள், இன்றைய நிதி அமைச்சரை வலதுசாரிக் கோஷ்டியில் சேர்த்துப் பேசினார்; வெளியேற்றப் படவேண்டிய கோஷ்டியில். வரிவிதிப்புக் கொள்கையின்கீழ் எத்தகைய தத்துவம் காணப்படினும், நேர்முக வரி, மறைமுக வரி இவைகளிலே செய்யப்பட்டுள்ள மாறுதலால், மொத்தத்தில் 71.7 கோடி ரூபாய் ஒரு முழு வருடத்தில் வருவாய் கிடைக்கிறது, இதுவே 45.5 கோடி ரூபாய் மறைமுக வரியாகவும் 27.2 கோடி நேர்முக வரியாகவும் பெறப்பட இருக்கிறது. இந்த ஏற்பாடுகளால், வருவாய் வர இருக்கிறது என்று, துன்பம் கண்டும் துணுக்குறாத முறையிலே, ஒருவிதமாக மகிழ்ச்சியுடன் நிதி அமைச்சர் கூறுகிறார். தாங்க முடியாத வரியைச் செலுத்தும்படி கேட்கும்போது, வற்புறுத்தப் படும்போது, மக்கள் அடைகிற உணர்ச்சிகளை அவர் உணர வில்லை. வேதாந்திபோலப் பேசுகிறார், பணம் படைத்தோர், மேலும் மேலும் அதிக அளவு வரி செலுத்தவேண்டும், ஏழைகள், இவைமூலம் முன்னேற்றத்தை அதிகமாகப் பெறவேண்டும், இது எமது சமதர்ம அரசுக் கொள்கையின் ஒரு பகுதியாகும் என்கிறார். இந்த இரண்டு அம்சங்களையும் நிதி அமைச்சர் மெய்ப்பித்துக் காட்டவேண்டுமென்று பெரிதும் விரும்புகிறேன். பணக்காரர் வரிப்பளுவின் அதிகமான பாகத்தை ஏற்றுக் கொள்ளும் முறையிலும், அதன் பலன்களை ஏழைகள் அதிக அளவில் பெறும் தன்மையிலுமா, நிதி அமைச்சர் தமது வரிக் கொள்கையை வகுத்துக்கொண்டிருக்கிறார்? மந்திரி சபையின் மற்றோர் உறுப்பினர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் கூறியுள்ள ஒரு கருத்தை - அதனைக் கண்டனம் என்றே கூறலாம் - எடுத்துரைக்க விரும்புகிறேன். இந்திய சர்க்கார் கையாண்டு வருகிற வருவாய் வரிவிதிப்புப் கொள்கை காரணமாக, ரூபாயின் மதிப்புக் குறைந்து கொண்டு வருகிறது, நூற்றுக்கு தொண்ணூற்று ஐந்து மக்கள் இழுத்துப் பறித்துக்கொண்டு வாழும் நிலையிலும்,அதற்கும் மட்டமாகவும் இருக்கிறார்கள். அதிகமான செல்வம் குறிப்பிட்ட சிலரிடம் போய் முடங்கிக்கொள்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். இப்புறத்தில் உள்ள உறுப்பினர்கள் ரூபாயின் மதிப்புக் கீழே விழுந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால், முழுத் தகவல்களும் தெரியாது இவர்களுக்கு என்று சொட்டு சொல்லிவிடுவார்கள், ஆனால் நான், இலாக்கா இல்லாத மந்திரி, தில்லியைவிட்டு வெளியேறுகிறேன், ஏனெனில், இங்கு வேங்கைகள் உலாவுகின்றன என்று கூறிவிட்டுச் சென்ற, கனம். டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் கருத்தை எடுத்துக் கூறினேன். வேங்கையைத் துரத்தி அடித்துவிட்டார்கள் என்று நம்புகிறேன், அல்லது கெட்டிக்கப்பட்ட துப்பாக்கியுடன் அவர் மீண்டும் இங்கு வந்திருக்கக்கூடும். எது எப்படி இருப்பினும், ரூபாயின் மதிப்புக் குறைந்துகொண்டு வருகிறது என்று பொறுப்புமிக்க பதவியில் உள்ள பொறுப்புமிக்க டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறியுள்ளார். பொறுப்புமிக்கவர் என்று எதனால் கூறுகிறேன் என்றால், அவரிடம் எந்த இலாகாவும் ஒப்படைக்கப்படவில்லை; எனவே, எல்லா இலாகாவும் அவருடையதே என்பதனால், ரூபாயின் மதிப்பு வீழ்ந்திருப்பதற்கு, யார் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். . . .? எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்களா? ஆளுங்கட்சி உறுப்பினர்கள், திட்டங்களை உருவாக்கும்போது, மரியாதைக்குக்கூட எங்களைக் கலந்தாலோசிப்பதில்லை. செல்வ வான்களின் பணத்தையும் ஏழைகளின் ஓட்டுகளையும் அதிகாரக் குரலிற் கேட்டுப்பெறும் அரசியல் கட்சியினால் நடத்தப்பட்டு வரும் தேசிய சர்க்கார் 15 ஆண்டுகள் இருந்தும், ரூபாயின் மதிப்பு வீழ்ந்து வருகிறது, 100க்கு 95 மக்கள் இழுத்துப் பறித்துக்கொண்டு கிடக்கிறார்கள் என்பதனை, டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் எடுத்துக் காட்டும் நிலைமை இருக்கிறது. இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் முற்றுப்பெற்று மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் நடுவிலே இருக்கும் இந்த நிலையில், மந்திரி சபை உறுப்பினராக உள்ளவரின் கண்டனம் இப்படி இருக்கிறது. 100-க்கு 95 பேர் இழுத்துப் பறித்துக்கொண்டுள்ள இந்த நேரம்தானா, மக்களுக்கு வரிபோடுவதற்கு ஏற்ற நேரம்? அதிலும் மறைமுக வரிகள்! மற்றும் ஒரு புள்ளி விவரம் - சர்க்கார் அமைத்த தேசிய ஆய்வுக்குழு கூறியிருப்பது. 270 இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கெல்லாம் ஒரு மணி நேரம்தான் வேலை கிடைக்கிறது; 200 இலட்சம் மக்களுக்கு இரண்டு மணி நேரம், 450 இலட்சம் மக்களுக்கு 4 மணி நேரம், வேலை கிடைக்கிறது. மற்ற நேரத்தில் வேலை இல்லை. கோடி கோடியாகப் பணத்தைச் செலவழிக்கிறோம் -மக்களிடமிருந்துபெற்ற பணம் - கடனாகவும் உதவித் தொகை யாகவும் வெளியே இருந்து பெற்ற பணம் - பதினைந்து வருடச் சுயராஜ்யத்துக்குப் பிறகு, பன்னிரண்டு வருடத் திட்ட வேலைக்குப் பிறகு, 270 இலட்சம் மக்களுக்கு, ஒரு நாளைக்கு ஒரே ஒரு மணி நேரம்தான் வேலை கிடைக்கிறது. திட்டங்களுக் காக மக்களைக் கசக்கிப் பிழிந்த பிறகு, திட்டங்களுக்காக இவ்வளவு தொகை செலவிட்டான பிறகு, இந்த நிலை இருக்கக் காரணம் என்ன? என்ன விளக்கம் இதற்கு? மற்றோர் நிலைமை என்னவென்றால், நமது வெளிநாட்டு இருப்புக் கரைந்துவிட்டது. ஏற்றுமதி விழுந்துவிட்டது. வெளி நாடுகள் தரக்கூடிய உதவித்தொகையில் வெட்டு விழும்போல் தெரிகிறது, மறைமுக வரிகள் வளர்ந்தபடி உள்ளன, விலைகள் ஏறியபடி உள்ளன. நேர்முக வரியைச் செலுத்தாமல் நழுவி விடுகிறார்கள். கருப்புப் பணம் பெருகிக்கொண்டு வருகிறது. 118 கோடி ரூபாய் வருமான வரி நிலுவை இருப்பதாகக் கூறப் படுகிறது. ஏன் இவ்வளவு பெரிய தொகை வசூலிக்கப்படாமல் இருக்கிறது என்று நிதி அமைச்சரைக் கேட்கிறேன். திட்டங் களுக்காக வரி செலுத்தியாகவேண்டும் என்று, மக்களிடம் எந்தத் துணிச்சலில் வருகிறார்? 118 கோடி ரூபாய் வருமான வரி நிலுவை இருக்கிறதே, அவர்களிடம் காட்டுவதுதானே கண்டிப்பு, இந்த 118 கோடி ரூபாயில் ஒரு பாதியையாவது, இவர் அக்கரை எடுத்துக்கொண்டு, கண்டிப்பான முறைகளைக் கையாண்டு வசூலித்திருப்பாரானால், மக்களுக்கு வரி போடவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காதே! ஆனால் அவர் துண்டு விழுவதைச் சரிக்கட்ட வரிபோடுபவரல்ல, பாதுஷாபோலக் கூறுகிறாரே, 71 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப்போகிறது என்று. அவருக்கு வரி வசூலிக்கும் கலெக்டர் மனப்பான்மை இருக்கிறதேயன்றி, இந்தப் பெரிய துணைக்கண்டத்து வளர்ச்சியைக் காணவிரும்பும் அதிகாரியின் மனப்பான்மை இல்லை. அதனால்தான், எனது நண்பர் பூபேஷ் குப்தா, இவர்களின் பொருளாதார திட்டங்களின் அடிப்படையில் உள்ள அரசியல் தத்துவம் என்ன என்று அறிந்துகொள்ள விரும்பினார். எனவே, நான் சாட்ட விரும்பும் முதல் குற்றச் சாட்டு, இதுவே; உங்களிடம் எந்தத் திட்டவட்டமான அரசியல் தத்துவமும் இல்லாததால், நீங்கள் குருட்டாம் போக்கிலே, நாட்டை முட்டுச்சந்துகளிலே இழுத்துக்கொண்டு செல்கிறீர்கள்! ஆகவே இந்த வரிவிதிப்புகளால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்றுகூடத் தெரிய முடியவில்லை. வரியும், வரிஅதிகரிப்பதும், சுபீட்சத்தின் அறிகுறி என்று அவர்கள் பேசிக் கொண்டு போகிறார்கள். சுபீட்சத்தின் அறிகுறி என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் யாருடைய சுபீட்சம் என்பதற்குப் பதில் அளித்தீர்களா? மக்களின் எந்தச் சாராரின் சுபீட்சம்? அதற்குப் பதில் அளிக்கப்படவில்லை. எனவே மறைமுக வரிகளை, குறிப்பாக அடிப்படையில் மிகத்தேவைப்படும் பண்டங்களின்மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை, வரி மசோதா, லோக்சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தபோதிலும், நீக்கிவிட வேண்டும். நிதி அமைச்சர் வேதாந்த மனப்பான்மைகொண்டவர் என்று புகழப்படுகிறார் - ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கண்டனங் களை அவர் கணக்கிலெடுத்துக்கொண்டிருப்பாரானால், ஒருவரும் இந்தப் புதிய வரிகளை ஆதரிக்கவில்லை என்பதை அறிந்துகொள்ளமுடியும். கட்சி கொடுத்த கொறடாவினால் ஓட்டுகள் சாதகமாகக் கிடைத்தன - கட்டுப்பாட்டுக்குப் பணிந்து ஆதரவு அளித்தனர். எனவே அவர் இந்த வரிகளை விதிக்க தர்மம் இடம் தரவில்லை. எனவே அவர், அவருடைய ஆளுங் கட்சி உறுப்பினர்களே சொல்லியுள்ள கண்டனத்திற்கு மதிப்பளிப்பாரானால், அவர் இந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, எந்த வேதாந்தத்தை அவர் மணந்து கொண்டிருப்பதாகக் கூறப் படுகிறதோ, அதற்கேகூட பெரிய மதிப்பு அளித்தவராகத் திகழ்வார். துணைத்தலைவர் அவர்களே! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்நாட்டிலே, விசித்திரமான, எங்கும் காணாத விந்தையான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜனநாயகம்பற்றிச் சிறிதளவு கூற விரும்புகிறேன். இப்புறத்தில் உள்ள உறுப்பினர்கள் போலவே, கோபதாபமாகத்தான், இரு சபைகளிலும் உள்ள ஆளுங்கட்சி உறுப்பினர்கள், புதிய வரி ஏற்பாடுகளைக் கண்டித்துப் பேசினர். ஆனால் வெளியே சென்றாலோ, இன்றைய சர்க்காரை அவர்கள் ஆதரித்துத் தீரவேண்டி இருக்கிறது; கொறடா கொடுக்கப்படுகிறது; அதனால் சர்க்காருக்குச் சாதகமாக “ஓட்’ அளிக்கிறார்கள். இந்த மாதம், விரைவில், கம்யூனிஸ்டு கட்சி, ஜனசங்கம், சுதந்திரக் கட்சி, நான் எந்தக் கட்சியில் இருப்பதைப் பெருமையானதாகக் கருது கிறேனோ அந்தக் கட்சியும், நாங்கள் எல்லோரும் தனித்தனியாக, வரிப்பளுவைக் கண்டித்து, கண்டனக் கூட்டங்கள் நடத்த இருக்கிறோம். மக்களிடம் சென்று, இந்த வரிவிதிப்பு நடைமுறைக்கு ஏற்றதல்ல, ஏற்கனவே வறுமையால் வதைபடும் மக்களை இந்த வரிகள் மேலும் வாட்டி எடுக்கும் என்று நாங்கள் பேசும்போது, இதே காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆளுங்கட்சிஉறுப்பினர்கள்தான், முன்வந்து, சர்க்காரைப் பாதுகாக்க ஆதரவுப் பிரசாரம் செய்யப்போகிறார்கள். ஆனால், மக்கள் உங்கள் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று எண்ணாதீர்கள். சர்க்காரை ஆதரிக்க, இந்தச் சபைக்கு வெளியே என்ன பேசப்படுகிறது என்பதை மட்டுமல்ல. சபையிலே என்ன சொல்லப்படுகிறது என்பதையும் அவர்கள் படிக்கிறார்கள். எனவேதான், ஆளுங்கட்சி உறுப்பினர்கள், நிதி அமைச்சர் விதித்துள்ள மறைமுக வரிகளைச் சரியான முறையிலும், துணிவுடனும், கண்டித்ததுபற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். நிதி அமைச்சர், திரும்பிப் பார்த்து, ஆனால் எனக்குப் பணம் வேண்டுமே! என்று கேட்கக்கூடும். பணம் பெற நான் கூறக்கூடிய வழிகளிலே ஒன்று, வருமான வரி நிலுவையை வசூலிப்பது. ஏமாற்றுபவர்களைக் கண்டுபிடியுங்கள், நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடையுங்கள்! என் நண்பர் பூபேஷ் குப்தா சொன்னவற்றை எல்லாம் நான் மறுபடியும் கூறத் தேவையில்லை - உங்களால் ஜீரணிக்க முடியாமற் போகக்கூடும் - ஆனால், இப்போது உள்ள அமைப்பு முறையின்படியே கூடப் பல்வேறு இலாக்காக்களிலே சிக்கனம் ஏற்படுத்தினால், நிர்வாக அமைப்பு களிலே உள்ள சந்து பொந்துகளை அடைத்து சீர்படுத்தினால், நிர்வாகத்தை நடத்திச் செல்லத் தேவைப்படும் பணமும் கிடைக்கும், திட்டத்தை நடத்திச்செல்லக்கூடப் பணம் கிடைக்கும். ஆனால், எப்போது இந்தப் பகுதியில் உள்ள நாங்கள், நிர்வாக அமைப்பு முறைகேடாக இருக்கிறது, இலஞ்ச ஊழல், பதவி தருவதில் சலுகை போன்றவைகள் உள்ளன என்று எடுத்துச் சொன்னாலும், மந்திரிசபை உறுப்பினர்கள்”நிரூபித்துக் காட்டு’ என்று அறைகிறார்கள். ஹைதராபாத் சிக்கனக் குழு, இலஞ்சப் புகாரை மெய்ப்பித்துக் காட்டுவது கடினம் என்று அடிக்கடி கூறப் படுகிறது. அதனாலேயே, புகார் எழுகிறபோதெல்லாம், விசாரணை நடத்த துளிகூடத் தயக்கம் காட்டக்கூடாது என்று ஏற்படுகிறது - என்று குறிப்பிட்டிருக்கிறது. என்றாலும், இன்றைய சர்க்கார் மேற்கொண்டுள்ள போக்கு எப்படி இருக்கிறது? முந்திரா ஊழல் நடவடிக்கையின்போது, குற்றம் செய்தவர் என்று காட்டப்பட்ட - இந்திய சர்க்கார் அதிகாரி ஒருவர் - ஐ. ங. படேல் என்பவர், நர்மதா பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார். பத்திரிகையில் பார்த்தேன். தற்காலிகப் பதவிதான். அந்தச் சபையில் இதுகுறித்துக் கேள்வி கேட்கப்பட்ட போது, பிரதம மந்திரி எழுந்திருந்து. . . . . பூபேஷ் குப்தா:- இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, அவருக்கு பத்ம விபூஷன் பட்டம் கொடுப்பார்கள். . . .! சி. என். ஏ.:- என், மந்திரிசபையிலேயே இடம் கிடைக்கக் கூடும். லோக்சபையில் கேள்வி கேட்கப்பட்டபோது பிரதம மந்திரி எழுந்திருந்து தனக்கு அதுகுறித்துத் தெரியாது என்று பதில் அளித்தார். அவர் அவ்விதம் சொன்னது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில், அவர் ஆமாம், யார் நியமிக்கப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும் - என் ஒப்புதலும் அதற்கு உண்டு என்றுகூறி இருந்திருப்பாரானால், நான் திடுக்கிட்டுப் போயிருப்பேன். நல்ல வேளையாக, எனக்கு அது தெரியாது என்று அவர் பதில் அளித்தார். இராஜ்ய சர்க்காருக்கும் மத்திய சர்க்காருக்கும் உள்ள தொடர்பு இப்படித்தான் இருக்கிறது. நாடெங்கிலுமிருந்து அறிவாளர்களைத் திரட்டிக் கொண்டு வந்து, தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழி காட்டுங்கள் என்று கேட்கிறீர்கள். முதலில் உங்கள் சர்க்கார்களிலே ஒருமைப்பாடு ஏற்படுத்துங்கள்! ஏன் அவர் வேலைக்கு அமர்த்தப்பட்டார், எப்படி அமர்த்தப்பட்டார் என்பது எனக்குத் தெரியாது என்று கூறுகிற ஒரு பிரதம மந்திரி இருக்கிறார். இதுபற்றிப் படிக்கும்போது, மக்களுடைய தீர்ப்பு என்னவாக இருக்கும்? முந்திரா ஊழல் பிரச்சினையில், இந்த அதிகாரி பிணைக்கப்பட்டிருந்தார் என்பது மக்களுக்குத் தெரியும். அப்படிப்பட்டவர் பசையுள்ள ஒரு வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார் என்று பத்திரிகைகளில் படித்தால், மக்கள் என்ன சொல்லுவார்கள்? உங்களுடைய சமதர்மப் பேச்சு, சமதர்ம தத்துவம் கிடக்கட்டும், (இந்த நியமனம்பற்றி) மக்கள் என்ன பேசுவார்கள்? அதனால்தான், நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும் என்கிறேன்; ஓட்டை களை அடைக்க வேண்டுமென்றால், உண்மையான, நிரந்தரமான மாறுதல் நிர்வாக அமைப்பில் ஏற்பட்டாக வேண்டும். நிர்வாகத்தில் என்ன சீரமைப்புச் செய்யவேண்டும் என்பது பற்றி ஆய்வுரை கூற அமைக்கப்பட்ட, கோர்வாலா தமது அறிக்கையில், வருமான வரிமுறைபற்றிக் குறிப்பிடுகையில், இது போலக் கூறியுள்ளார். "வருமான வரித்துறையைப் பொறுத்தவரையில், பொதுமக்கள் முறையிடுவது என்னவென்றால், சாமான்யர் களை, காரணமின்றித் தொல்லைப்படுத்துகிறார்கள், ஆனால் பல இலட்சக்கணக்கில் வரிகொடுக்காமல் ஏமாற்றித் திரிபவர்கள் தப்பித்துக்கொண்டு விடுகிறார்கள் என்பதுதான். வருமானவரி விசாரணைக் குழுவினால் சரியான எந்தப் பலனையும் பெற்றளிக்கமுடியவில்லை. துளிகூடக் கவலையின்றி, மிகத் துணிகரமாக, வரி ஏமாற்றும் பேர்வழிகள், தங்கள் நடவடிக்கைகளை நடத்திக் கொண்டு போகிறார்கள். இதைக் காணும்போது, மிகுதியும் செல்வாக்குள்ள செல்வவான்களுடன் மோதிக் கொள்ள நேரிடும்போது, இந்தச் சர்க்காரின் கையாலாகாத் தனம்தான் தெரிகிறது, என்ற நம்பிக்கை மிகப் பரவலாக இருக்கிறது. கையாலாகாத்தனம் என்பது வார்த்தை. நான் அவ்வளவு கடுமை யான வார்த்தையைக் கூற ஒருமுறைக்கு இருமுறை யோசித்து இருப்பேன். ஆனால், பொது நிர்வாக சீரமைப்புக்கான வழி கூறும்படி சர்க்காராலேயே அமைக்கப்பட்ட காரணத்தால், கோர்வாலா அவர்கள் சர்க்காரின் கையாலாகாத் தன்மை என்று கூறுகிறார். உங்கள் சர்க்கார் கையாலாகாதது என்று கோர்வாலா கூறியிருக்கும்போது, கோடிகோடியாகப் பணம் தரும்படி நீங்கள் எந்த யோக்கியதையின்பேரில் கேட்கிறீர்கள் என்று மந்திரி சபையினரைக் கேட்கலாமல்லவா? எனவே, நிர்வாக அமைப்பிலே இன்னும் சற்று உயிர்ப்புச்சக்தி, செயலாற்றும் திறன் ஏற்படவேண்டும் என்று விரும்புகிறேன். இதோ மற்றோர் கண்டனம்; இது வர்த்தகத்துறை அமைச்சுப் பற்றியது. பெரிய வணிக முதலாளிகளின் விருப்பத்துக்கு இசைவு தருவதிலே வணிகத்துறை அமைச்சு மிகவும் கெட்டபெயர் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது; வேங்கைகள் உலவுகின்றன என்று டி. டி. கிருஷ்ணமாச்சாரி சொன்னது, ஒருவேளை இதை எண்ணித்தான் போலும். வேங்கைகள் வெளியே உலவுகின்றன என்ற முடிவுக்கு அவர் எப்படி வந்தார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிய வில்லை; துணிந்து யூகமாகச் சொல்வதானால், வர்த்தகத் துறை அமைச்சராக அவரே முன்பு இருந்ததால், அவருக்கு அப்படிப்பட்ட விசித்திரமான அனுபவம் ஏற்பட்டிருக்கக்கூடும்; எது எப்படி இருப்பினும், வணிகக் கோமான்களுக்கு லைசென்சுகள் வழங்குவதிலே, வணிகத்துறை அமைச்சு கெட்டபெயர் எடுத்திருக்கிறது. இவைகளெல்லாம் திருத்தப்பட்டால், எனக்கு முன்பு பேசியவர் குறிப்பிட்ட மக்களின் ஆர்வமான ஆதரவு, திட்டத்துக்குக் கிடைக்கக்கூடும். ஆனால், வரிகள் ஏறிக் கொண்டே போவதையும், விலைகள் ஏறிக்கொண்டிருப்பதையும், வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு பெரிது பெரிதாக வளர்ந்து கொண்டு போவதையும், வாழ்க்கைத் தேவைகளைக் கூட, இன்றுள்ள அரசாங்க அமைப்பினால் தர இயலாதநிலை இருப்பதையும் காணும்போது, திட்டங்களில் ஆர்வம்காட்ட மக்கள் முன்வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? சர்க்காருடைய வரிவிதிப்புக் கொள்கையிலே இந்த அம்சம் சரி, அந்த அம்சம் சரி என்று ஆதரித்துச் சிலர் கூறுகிறார்கள். இந்தியாவிலிருந்து திராவிடநாடு பிரியவேண்டும் என்று வற்புறுத்தும் கட்சியைச் சேர்ந்தவன் நான் என்றாலும், நீங்கள், தொழில் வளர்ச்சிக்காகத் திட்டமிட்ட முறை இருக்கிறதே, அது இந்தத் துணைக்கண்டத்திலே பெறக்கூடிய முழு அளவு செல்வ வளர்ச்சியைப் பெறத்தக்கவிதமாக இல்லை என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பொருளாதாரச் செயல்முறைகள் ஒரு சீராக அமையவில்லை, தொழில் வளர்ச்சித் திட்டங்கள் ஒரு சீராக அமையவில்லை. மிகுந்தகால தாமதத்துக்குப் பிறகுதான். . . . பூபேஷ் குப்தா:- திராவிட நாட்டை விட்டுவிடுங்கள், இந்தியக் குடிஅரசில் ஒரு பகுதியாக இருந்து. தமிழ்நாடு, அதிக தொழில் திட்டங்கள் பெற நாம் ஒன்றுபட்டுப் போராடு வோம். அந்த ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வோம் - அந்த ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்கிறீரா? சி. என். ஏ.:- என்னுடன் இருக்கவேண்டுமென, ஆவலாக இருப்பதற்காக, நான் பூபேஷ்குப்தாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். ஆனால், எனது இலட்சியத்தை விட்டுக் கொடுத்துவிட்டு அவரைக் கூட்டாளியாக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. நீண்டகால தாமதத்துக்குப் பிறகுதான், சர்க்கார், தமது தொழில்வளர்ச்சித் திட்டம் ஒரு சீரானதாக இல்லை என்பதை உணர்ந்துகொண்டார்கள். இப்போது அவர்கள் ஒரு பொருளா தாரப் பிரச்சினை பேசுகிறார்கள் - அதன் அடியில் பல அரசியல் தத்துவங்கள் உள்ளன - அதுபற்றிப் பேசுபவர்கள், அந்தத் தத்துவங்களின் பொருளை, முழுவதும் வெளியே காட்டிப் பேசுவதில்லை. பிரதேச பொருளாதாரச் சீரமைப்பு என்பதுபற்றிப் பேசுகிறார்கள். சில பிரதேசங்கள் பொருளாதாரத்தில் மிகுதியான வளர்ச்சி அடைந்துள்ளன. சில பகுதிகள் முன்னேற்றம் அடையவில்லை. எனவே, தொழில் வளர்ச்சியைப் பொறுத்தமட்டில், நாட்டிலே புறக்கணிக்கப்பட்டுப்போன பகுதிகளில் விசேஷ கவனம் செலுத்துவது இனி இந்திய சர்க்காரின் கொள்கையாக இருக்கும் என்கிறார்கள். ஆகவே, திட்டமிட்டுக்கொண்டிருந்த இந்த 12 ஆண்டுகளும் நீங்கள் தவறான முறையிலே திட்டமிட்டுக்கொண்டு இருந்தீர்கள், ஒரு சீரான பொருளாதார வளர்ச்சித் திட்டம் போடாமலிருந் திருக்கிறீர்கள். முன்பொருநாள், திருமதி. தேவகி கோபிதாஸ், வளர்ச்சித் திட்டங்களிலே கேரளம் எப்படிப் புறக்கணிக்கப்பட்டுவரப் படுகிறது என்பதனைத் தெளிவாக எடுத்துக் கூறிக்கொண்டு வந்தபோது, திட்டம் தீட்டப்படும்போது, கேரளத்தின் தனித் தன்மைகள், தனியான இயல்புகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, பரிகாரம் தேடவேண்டும், இல்லையேல், இந்திய யூனியன் வளர்ச்சிக்கு அது ஒரு முள்போல் இருக்கும், இந்திய யூனியன் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறினார். இந்தக் கருத்துரை, இந்தியா ஒன்று, பிரிக்கப்படக்கூடாதது என்ற நம்பிக்கை கொண்டவரிடமிருந்து வெளிவருகிறது. கேரளத்தின் தனித்தன்மைகள், தனிஇயல்புகள் ஆகியவற்றைக் கவனிக்கா விட்டால், கேரளம் முள்போல இருக்கும் என்கிறார். P.A. சாலமன்:- காங்கிரசுக்குள்ளேகூட திராவிட கழக ஆட்கள் இருக்கிறார்கள். சி. என். ஏ. :- காங்கிரசிலே, திராவிட கழக மனப்பான்மை கொண்டவர்கள் இருக்கக்கூடும். ஆனால் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன். . . P.A. சாலமன்:- நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தான் குறிப்பிடுகின்றேன். . . . துணைத்தலைவர்:- மேலும், எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்? சி. என். ஏ. :- மேலும் ஒரு ஐந்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். திருமதி அவர்களே! இந்திய யூனியனுக்கு ஒரு முள்ளாக இருக்கும் என்று அம்மையார் குறிப்பிட்ட தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். துணைத்தலைவர் அவர்களே! இதில் கவனம் செலுத்தும்படி, தங்கள் மூலமாக பூபேஷ் குப்தா அவர்களைக் கேட்டுக்கொள் கிறேன். அம்மையார் இந்திய யூனியனுடைய வளர்ச்சிக்கு ஒரு முள்போலிருக்கும் என்று கூறுகிறார்கள். முட்களை என்ன செய்கிறோம்? வெளியே எடுத்து விடுகிறோம்! அதுதான் நாம் செய்வது. அரசியல் அமைப்பிலாயினும் சரி, உடலில் ஆகிலும் சரி, முள் இருப்பின், அந்த முள்ளை வெளியே எடுத்து விடுகிறோம். பூபேஷ் குப்தா:- என்ன சொன்னீர்கள்? நான் கவனிக்க வில்லை. . . . சி. என். ஏ. :- உம்முடன் இதுபற்றி விவாதித்துக்கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை, பிறகு விவாதிக்கலாம். எனவே, திருமதி அவர்களே! இந்திய ஒருமைப்பாட்டிலே நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பினும், தாம் வாழும் பகுதியில் தொழில்துறையிலே கட்டுப்பாடான வளர்ச்சி ஏற்பட வில்லை என்றால், இந்திய ஒருமைப்பாடு எனும் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகக் கருதுவதற்கில்லை என்று எண்ணு கிறார்கள். பூபேஷ் குப்தா:- தமிழ்நாட்டிலே உள்ள ஜனநாயக இயக்கத்தை உங்கள் பிரிவினை இயக்கம் வலிவற்றதாக்கிவிடும் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாட்டுக் கோரிக்கையையும் அது கெடுத்துவிடும். நீங்கள் விரும்புவதும் கிடைக்காது - அதனை நாங்கள் விரும்பவில்லை - அந்தப் பகுதிக்கு தொழில் வளர்ச்சியும் ஏற்படாது. துணைத்தலைவர்:- நீங்கள் பேசி முடியுங்கள். சி. என். ஏ. :- பூபேஷ் குப்தாவின் ஆலோசனைக்கு நான் மிகுந்த கவனம் செலுத்துகிறேன். எவ்வளவுக்கெவ்வளவு ஜனநாயக முறையில் இருக்கமுடியுமோ அப்படி இருக்க முயற்சிக் கிறோம். ஆனால், அதேபோல் நடந்துகொள்ளும் என்று நான் கம்யூனிஸ்டு கட்சியிடம் எதிர்பார்க்கவில்லை. பூபேஷ் குப்தா:- நாங்கள் முழுக்க முழுக்க ஜனநாயக வாதிகள். உங்கள் யோசûனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். நல்ல யோசனை யாரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்வதிலே தவறில்லை. ஆனால், என் யோசனையை ஏற்றுக்கொண்டு, திராவிடநாடு முழக்கத்தை, இந்தியாவிலிருந்து பிரிவது என்ற கோஷத்தை விட்டுவிடுவாரா? துணைத்தலைவர் அவர்களே! நான் அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். துணைத்தலைவர்:- காலம் மிகவும் குறைவாக இருக்கிறது. தயவுசெய்து முடித்துக்கொள்ளுங்கள். மொரார்ஜி தேசாய்:- அடிக்கடி எழுந்திருந்து, மற்றவர்களின் நேரத்தை பூபேஷ் குப்தா எடுத்துக்கொள்கிறார். அவர் தமது நேரத்தைச் செலவிட்டுவிட்டார். ஏன் அடிக்கடி எழுந்து நிற்கிறார். பூபேஷ் குப்தா:- தி. மு. க. ஸ்லோகங்களில் அவருக்கு மிகுதியாக அனுதாபம் இருப்பதுபோல் தெரிகிறது. சி. என். ஏ. :- துணைத்தலைவர் அவர்களே! நேரம் போதவில்லை. இல்லையென்றால், இதுபற்றி விவாதித்துக்கொண்டே போகலாம், ஆனால் பிரச்சினைகளை இம்மாதிரியான முறையில் தீர்த்துவிட முடியும் என்று நான் கருதவில்லை, பிரதேச ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதுபற்றி, எல்லா அரசியல் காட்சியினரிடமும் மனக்குறை உண்மையிலேயே இருக்கிறது என்பதை விளக்கிக்காட்ட முற்படுகிறேன். இதனை நான் எடுத்துக்காட்டுவது, பிரிவினைக்கு ஆக அல்ல. ஒரு சீரான பொருளாதார வளர்ச்சி இல்லாததால், நாட்டிலே மொத்தத்தில் கிடைக்கக்கூடிய செல்வ வளர்ச்சி கிடைக்கவில்லை என்பதை எடுத்துக்காட்ட இதனைக் கூறுகிறேன். அதுதான் என்னுடைய குறி. பிரிவினைக்காக வேறு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவை பற்றிப் பேசிப் பேச்சை வேறு திசை கொண்டுசெல்ல விரும்பவில்லை. ஒரு அங்கத்தினர் அப்படித் திசை தவறிச் சென்று, என்னை சிலோன்போய்ப் பிரசாரம் செய்யும்படி கூட விந்தையாகக் கூறி இருக்கிறார்! அவருக்கு என்னிடம் அதிகமான பற்றும் பாசமும் இருக்கிறதா, அல்லது சிலோன் நாட்டிடம் பற்றும் பாசமும் இருக்கிறதா என்று தெரியவில்லை. எப்படி இருப்பினும் அவர், தாம் ஒரு திராவிடர் என்பதை ஒப்புக்கொண்டார். நான் பேச்சின் திசையைத் திருப்பிவிடப்போவதில்லை. ஆனால் திட்ட வட்டமாக ஒன்று கூறுவேன். எரிகுண்டு, இழிமொழி எதுவும் என்னை ஏற்றுக்கொண்டுள்ள புனிதப்பணியி லிருந்து தடுத்து நிறுத்தப்போவதில்லை. அதுகுறித்துப் பேரப்பேச்சுக்கு இடமே இல்லை. எனவே நான் பேச்சின் திசையைத் திருப்பப்போவதில்லை. பிரதேச ஏற்றத்தாழ்வுப் பிரச்சினைக்கு வருவோம். பிரதேச ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதற்கு, பொருளாதாரக் கண்ணோட் டத்தின்படி ஒரு சுவையான தகவல் தருகிறேன். வருமானவரி நிலுவைகளைப்பற்றிக் குறிப்பிட்டேன். இராஜ்யவாரியாக அல்லது வட்டாரவாரியாக அந்தத் தகவல் தரப்பட்டிருக்கிறது. பம்பாய் நகரம் (1) பம்பாய் நகரம் (2) மத்திய பம்பாய் சேர்ந்து 36 கோடி ரூபாய் நிலுவை; மேற்குவங்கம், கல்கத்தா நகரம் உட்பட, 43 கோடி ரூபாய் நிலுவை! எனவே மிகப் பெருந்தொகை நிலுவையாக உள்ள அந்த இரண்டு பிரதேசங்களின்பேரிலும், நிதி அமைச்சர் தமது துப்பாக்கியைத் திருப்பவேண்டும். பூபேஷ் குப்தா:- மேற்கு வங்கத்தில் பெரிய முதலாளிகள் இருக்கிறார்கள். சாந்தி பிரசாத் ஜெயின் என்பவர், சமீபத்தில் 60 இலட்ச ரூபாய் விலையில் ஒரு வீடு வாங்கினார். சி. என். ஏ. :- மேற்கு வங்கத்தில் உள்ள முதலில், பெரும் பகுதி வெளி இடத்திலிருந்து வந்தது. பொருளாதார ஏற்றத் தாழ்வு, இராஜ்யத்துக்கு இராஜ்யம் உள்ள விவசாயத்துறை வருமானப் புள்ளிவிவரத்தைப் பார்த்தால்கூடப் புரியும். 1958-59ஆம் ஆண்டில், சென்னையில் எங்களுக்கு 343.3 கோடி ரூபாய் கிடைத்துள்ளன. உத்தர பிரதேசத்துக்கு 1,146 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 427 கோடி ரூபாயும் கிடைத்துள்ளன. உத்தர பிரதேசமோ மேற்கு வங்கமோ வளம் கொழிக்கும் செல்வ பூமியாவதை நான் குறைகூறவில்லை. ஆனால், திட்டங்களை நிறைவேற்றி யதில், முறைகேடான, சீரற்ற பொருளாதார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமலிருந்திருந்தால், விவசாயத்துறையில், உத்தரப் பிரசேத்தைவிட மிக அதிகமான வருவாய் நாங்கள் பெற்றிருக்கமுடியும். இப்போதுகூட எங்களுக்கு ஒரு பக்ரா - நங்கல் இல்லை, சிறிய நீர்ப்பாசன திட்டங்களும் அதிகம் இல்லை. என்றாலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலே தான், ஏக்கர் ஒன்றுக்கு அதிகமான விளைச்சல் ஆகிறது. எஸ். சென்னாரெட்டி:- உங்களுக்குக் குந்தா திட்டம் இருக்கிறது. சி. என். ஏ. :- அது பாசனத்துக்காக இருப்பதைவிட மின்சார உற்பத்திக்காகத்தான் பெரிதும் இருக்கிறது. அத்தகைய உதவிகளின்றி, எமது விவசாய உற்பத்தி வளர்ச்சி அடைந் திருக்கிறது. அப்படிப்பட்ட கடுமையாக உழைக்கத்தக்க, புத்தி கூர்மையுள்ள, விஷயங்களை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் பக்குவம் உள்ள உழவர்கள் இங்கு இருக்கும் போது, விவசாயத்துறைக்கான திட்டம் தீட்டியபோது, தெற்குப் பகுதிமீது பார்வை சென்றிருக்க வேண்டாமா? தெற்கே, மீன்பிடித் தொழிலை வளர்ச்சி அடையச் செய்திருக்கலாம். போக்கு வரத்துச் சாதனத்துறையிலே வளர்ச்சி கண்டிருக்கலாம். . . எத்தனையோ உள்ளன செய்வதற்கு. எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்பு களைப் பயன்படுத்தத் தவறிவிட்டது மட்டுமல்லாமல், பிரச்சினையை எடுத்தாலே, பிரச்சினையைத் தள்ளிப்போட முற்பட்டார்கள். அப்படிப்பட்ட பிரச்சினைகளை எழுப்பிய போது, எங்கு மூலப்பொருள்கள் கிடக்கின்றனவோ, அங்குதான் தொழில்திட்டம் அமைக்கமுடியும்; அதுதான் கண்டிப்பான பொருளாதார தத்துவம் என்று கூறிக்கொண்டு வந்தார்கள். ஆனால், இப்போதுதான், இனிப்பிரதேச ஏற்றத் தாழ்வினை ஒழித்தாகவேண்டும் என்ற கொள்கைளை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். சபையினர் அறிந்துகொள் வதற்காக, ஒன்று கூறுகிறேன். இதுபோன்றதோர் பிரச்சினை இத்தாலியில் எழுந்தது. வட இத்தாலியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தெற்கு இத்தாலி தொழில் வளர்ச்சியில் மிகவும் பிற்போக்காக இருந்தது. இத்தாலிய சர்க்கார் அறிவுத்தெளிவும், துணிவும்மிக்க நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டார்கள். தெற்கு இத்தாலிக்கு எனத் தனியான திட்டங்கள் வகுத்தார்கள். இத்தாலியின் தெற்குப்பாகத்தை வளமாக்க, உதவித்தொகை, கடனுதவி ஆகிய சலுகைகளை வழங்கினார்கள். நான் உங்களை வசீகரமான பாதைவழியே அழைத்துச் செல்வதாக எண்ணாதீர்கள். அவ்வழியே சென்று, திரும்பிப்பார்த்து, நாங்கள் இத்தாலி கையாண்ட முறைகளை முன்மாதிரி யாகக்கொள்கிறோம் என்று கூறப் பார்க்காதீர்கள். நீங்கள் அந்த முறையைப் பின்பற்றக்கூடும். அந்த முறையைப் பின்பற்றவேண்டாம் என்று நான் உங்களுக்குக் கூறவில்லை. பின்பற்றி நடவுங்கள். ஆனால், அதனால் சமாதான மாகி, எனது அரசியல் கட்சி தனது அரசியல் தத்துவத்தை விட்டுக்கொடுத்துவிடும் என்று நான் உத்தரவாதம் தரமுடியாது. தரத் தேவையில்லை. தரமாட்டேன். அதனுடைய தத்துவம் பேரப்பேச்சு, சலுகைகள் பெறுவது போன்றவைகளிலிருந்து முற்றிலும் வேறானது. தெற்குப் பகுதியின் பொருளாதாரத்தைச் சரியானபடி கவனித்திருந்தால், இந்நேரம், செல்வம் மிகுதியாக உற்பத்தி செய்திருக்கமுடியும் என்பதை மட்டுமே நான் சுட்டிக் காட்டுகிறேன். உலகிலேயே மிகச் சிறந்ததோர் கடலோரம் தெற்கே இருப்பது. துறைமுகங்கள் நிரம்ப! பயன்பட்டுக்கொண்டு வருபவை, பயன்படாமலிருப்பவை உள்ளன. என் மதிப்புமிக்க நண்பர் தாயாபாய் படேல் கோபத்துக்கு வரமாட்டார் என்று நம்புகிறேன். அவருக்குக் கண்டாலா துறைமுகம் கிடைத்து விட்டது, எமக்கோ இன்னமும் தூத்துக்குடி துறைமுகம் அமைக்கப்பட்டாகவில்லை. வணிகர் சங்கக் கூட்டத்தில் பேசும்போது, எங்கள் இராஜ்ய தொழில் மந்திரி, இரண்டு நாட்களுக்கு முன்பு திட்டங்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டால் போதாது, இந்திய சர்க்கார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் காரியத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். எனவே, பொருளாதாரச் சீரமைப்பு நாடெங்கும் ஏற்பட்டிருக்குமானால், குறிப்பாகப் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் தெற்குப் பகுதியில் ஏற்பட்டிருக்கு மானால், வரி செலுத்தும்படி அமுல் செய்யும்போது, அவ்வளவு கடினமாகத் தோன்றாமல் இருந்திருக்கும். நான் இந்தப் பிரச்சினையில், வரி செலுத்தும் முறைபற்றி மட்டுமே இப்போது கூறுகிறேன். தன் பிரதேசத்துக்காகக்கூட அல்ல, வேறு பிரதேச வளர்ச்சிக்காக, தன்மீது வரி சுமத்தப்படுகிறது என்று தெற்கு உணருகிறது. உணருவதால், வரிக்கொடுமை இரட்டிப்பு மடங்காகத் தெரிகிறது. எனவே நிதி அமைச்சருக்கும், அவர் மூலம் மற்ற அமைச்சர்களுக்கும், எனது வேண்டுகோள் என்னவென்றால், செல்வ வளர்ச்சி அதிகப்படவும், வரிவிதிப்பு குறையவும் ஏற்ற விதமாகத் தென்னகத்தைப் பொருளாதாரத் துறையில் எப்படித் திருத்தி அமைப்பது, சீர்படுத்துவது என்பதுபற்றி வழி காணவேண்டும் என்பதாகும். ஆளுங் கட்சியினர் மற்றோர் தவறான கருத்து ஏற்படச் செய்து வருகின்றனர். இப்போது இலாபத்தைப் பங்கிடுவதுபற்றி, பிரித்துக் கொடுப்பதுபற்றிப் பேசாதீர்கள். உற்பத்தியைப் பெருக்குங்கள், உற்பத்தியைப் பெருக்குவது உமது கடமை. எனவே, மேலும் மேலும் உற்பத்தியைப் பெருக்குங்கள். பகிர்ந்து கொள்வதுபற்றி இப்போது பேசாதீர்கள். ஏனெனில் பகிர்ந்து கொள்வது என்பது, உற்பத்தி முடிந்த பிறகுதான் இயலும் என்று பேசுகிறார்கள். பொருளாதார பாடப் புத்தகங்களிலேதான், முதல் அத்தியாயம் உற்பத்தி, இரண்டாவது அத்தியாயம் விநியோகம் என்று இருக்கும் என்பதைக் கூற விரும்புகிறேன். ஆனால் நடைமுறையிலே, உற்பத்தி செய்துகொண்டிருக்கும் போதே விநியோகமும் நடந்துகொண்டுதானிருக்கும். உற்பத்தி செய்துமுடித்துவிட்டு, எல்லாவற்றையும் குவியலாக ஒரு இடத்தில் கொட்டிவைத்தான பிறகு, ஒரு நல்ல நாளில், இனி விநியோகிக்கலாம் என்று நாம் கூறுவதற்கில்லை. பொருளாதார நடவடிக்கைகள் அந்த முறையிலே செயல்பட்டுக்கொண்டில்லை. பொருளாதார பாடப் புத்தகங்கள் எழுத மட்டுமே அது முறையாகக்கொள்ளப்படுகிறது. எனவே, ஆளுங் கட்சியினர் அத்தகைய சொத்தைக் காரணத்தைக் காட்டக்கூடாது. இந்தப் புறத்திலுள்ள நாங்கள், உற்பத்தி செய்யப்படுவது, சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று கூறுகிறோம். பண்டங்கள் சரியான முறையிலே விநியோகமாயிருந்தால், செல்வம் சரியானபடி பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தால், நமது நாட்டில், இவ்வளவு வறுமை இருந்திருக்கிறது. வறுமை எந்த அளவு இருக்கிறது என்றால், அனாதைகளாக உள்ள முதியவர் களுக்கு எங்கள் இராஜ்யத்தில் உதவித்தொகை தரப்படவேண்டி ஏற்பட்டிருக்கிறது. எனது இராஜ்ய சர்க்கார் அப்படி ஒரு ஏற்பாடு மேற்கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றாலும், அது எங்கள் பகுதியிலே உள்ள தரித்திரத்தைக் காட்டும் குறியாக இருப்பதனையும் கூறுவேண்டி இருக்கிறது. இத்துணை செல்வம் உற்பத்தி செய்யப்பட்ட பிறகும் இவ்வளவு வறுமை இருக்கக் காரணம் என்ன? காரணம் என்னவென்றால், பகிர்ந்தளிக்கும் பிரச்சினைமீது சரியான முறையில் அக்கறை செலுத்தப்படவில்லை. ஆகவேதான், செல்வம் வளருகிறது; புதிய புதிய காடிலாக் கார்களும், புதிய புதிய மாளிகைகளும், புதிய புதிய தொழிலகங்களும் காண்கிறோம். சர்க்காருக்கே தேவைப்படும் அளவு சிமிட்டி கிடைக்காதபோது, தனிப்பட்ட கண்ட்ராக்டர்களுக்கு எவ்வளவு அளவுக்கு வேண்டுமானாலும் சிமிட்டி கிடைப்பது தமக்குத் தூக்கிவாரிப் போடுவதாக இருக்கிறது எனப் பிரதம மந்திரி பேசியதாக அன்றோர் நாள் பத்திரிகையில் பார்த்தேன். கள்ள மார்க்கட். கருப்புப் பணம் - என்ற இரண்டு வார்த்தைகள் புழக்கத்திலிருக்கிறதே, இந்த நிலை இந்தத் தேசிய சர்க்காருக்கு அவமானகரமானது என்று கூற விரும்புகிறேன் - அவமானகரம் என்ற பதம், மிகக் கடினமானதோ என்னவோ எனக்குத் தெரியவில்லை. இந்தப் பதங்களை மிகச் சாதாரணமாக நாம் உபயோகப்படுத்துகிறோம். எந்தப் பண்டத்தைப்பற்றியாவது பேச்சு எழும்போது, அங்காடியில் என்ன விலை? கள்ள மார்க்கட்டில் என்ன விலை? என்று கேட்கிறோம். இரும்புச் சாமான் கள்ளமார்க்கட்டில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது நமக்கு மிக நன்றாகத் தெரியும் என்று மந்திரிசபையினர் ஒருவர் பேசியதாகப் பத்திரிகையிலே பார்த்தேன் - திடுக்கிட்டுப் போனேன். சொன்னவர் இப்போதுள்ள இரும்புமந்திரி அல்ல. எனவே, கள்ள மார்க்கட் இருப்பது சர்க்காருக்குத் தெரியும், கள்ளமார்க்கட் எப்படி நடத்தப்படுகிறது என்பதும் தெரியும். ஆனால் அந்தக் கள்ளமார்க்கட்காரர் மீது நடவடிக்கை எடுத்துக் கூண்டில்கொண்டுவந்து நிறுத்தினால், தேர்தல்களில் தீர்த்துக்கட்டிவிடுவார்கள் என்பதும் சர்க்காருக்குத் தெரிகிறது. ஆகவேதான் கள்ள மார்க்கட் கொட்டம் அடிக்க விடப்பட்டிருக்கிறது. கள்ள மார்க்கட் இருக்கும்போது, கருப்புப் பணம் உண்டாகிறது. இந்தக் கருப்புப் பணத்தைத் தொழிலுக்கு முதலாகப்போட முடிவதில்லை. தனிப்பட்ட ஒரு அமைப்புக்குத் தொழிலிலே இலாபம். வெளிப்படையாகக் கிடைத்தால், அந்தப் பணத்தை வேறு வியாபாரத்தில் கொண்டுவந்து போடலாம். ஆனால், கணக்கிலே காட்டப்பட முடியாத கருப்புப் பணம் கிடைக்குமானால், அதனைத் தொழிலிலே கொண்டுபோய்ப் போடமுடியாது. ஆகவே, அந்தப் பணம் டம்பாச்சாரி வாழ்வுக்குச் செலவாகிறது, இத்தகைய டம்பாச்சாரிப் போக்கைத் தடுக்கவேண்டும் என்றுதான் அந்த நிதி மந்திரி, செலவு வரி விதித்தார். ஆனால், இன்றுள்ள நிதி மந்திரி, டம்பாச்சாரி செலவு மட்டுப்பட்டுவிட்டது என்பதாலோ, அல்லது டம்பாச்சாரிப் போக்கு நல்லது என்பதாலோ செலவு வரியை எடுத்து விட்டார். அதனால் அதிகமான வருவாய் கிடைக்காமல் இருந்திருக்கலாம். 77 இலட்ச ரூபாய்தான் கிடைத்ததாகத் தெரிகிறது - பத்திரிகைச் செய்திகளிலிருந்து. ஆனால் தொகை எந்த அளவாக இருப்பினும், அந்த வரிக்கு அடிப்படையாக அமைந்திருந்த சமுதாயக் கருத்து முக்கியமானது - எனினும் அந்த வரியை இவர் நீக்கிவிட்டார். அதற்கு மாறாக, கிரசின், தீப்பெட்டி, புகையிலை இவைகள்மீது உள்ள வரிகளை மேலும் மேலும் அதிகமாக்கி இருக்கிறார், அன்று நிதி அமைச்சர், லோக்சபையிலே. . . . . துணைத்தலைவர்:- ஐந்து நிமிடம் வேண்டுமெனக் கேட்டீர்கள் - ஆனால் பத்து நிமிடங்களுக்குமேல் எடுத்துக்கொண்டு விட்டீர்கள். சி. என். ஏ. :- இன்னும் ஒரு இரண்டு நிமிடங்களில் முடித்து விடுகிறேன். துணைத்தலைவர்:- தயவுசெய்து முடித்துவிடுங்கள், ஏனெனில் குறுகிய கால அளவே இருக்கிறது. சி. என். ஏ. :- அன்று லோக்சபையில் நிதி அமைச்சர் ஒரு தீப்பெட்டியை எடுத்துக்காட்டி, இதோ வத்திப்பெட்டி, இதனை நியாயமான விலைக்கு வாங்கி இருக்கிறேன் என்று கூறினார். இப்போது போய் வாங்கும்படி நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது வத்திப்பெட்டியின் விலையும் ஏறிவிட்டது. மற்ற சாமான்களின் விலையும் ஏறிவிட்டது. ஏனெனில் கான்யூட் மன்னனைப் போல, நிதி அமைச்சர் விலைகள் ஏறாது என்று கூறினார் என்றாலும், கான்யூட் முன்னர் கடல் அலை ஓய்ந்து விடவில்லை; விலைகளும் நிதி மந்திரியாரின் பேச்சினால் ஏறாமல் நின்றுவிடவில்லை. எந்தெந்தச் சமயத்தில் வரி போடப் படுகிறதோ, அப்போதெல்லாம் விலைகள் ஏறிவிடத்தான் செய்யும். விலைவாசி ஏற்றத்தை இந்தச் சர்க்கார் கட்டுப்படுத்த முடிந்தாலாகிலும், புதிய வரிகளுக்கு அதனைக் காரணமாகக் காட்ட முடியாவிட்டாலும், மறைமுகவரி போடப்படுவதற்கு மன்னிக்கும்படி கேட்டுக் கொள்ள வசதியாகவாவது இருந்திருக்கும். எனவே, இந்த வரி மசோதா, ஒரு கசக்கிப் பிழியும் திட்டமாகும். கம்பளி நெய்வதற்காக, ஆடுகளின் ரோமத்தை வெட்டி எடுக்கிறீர்கள்; புரிகிறது. ஆனால் நீங்கள் மக்களைக் கசக்கிப் பிழிகிறீர்கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிகிறீர்கள்; திட்டத்தின் பெயரால் ஏழைகளைக் கசக்கிப் பிழிகிறீர்கள். அதனால், மக்கள், திட்டத்தையே மிரட்சியுடன் பார்க்கச் செய்து விட்டீர்கள். மக்கள் திட்டம்வேண்டும் என்கிறார்கள். ஆனால், திட்டம் காரணமாகத்தான் இந்த வரிகளெல்லாம் போட வேண்டி இருக்கிறது என்று நீங்கள் கூறும்போது, மக்கள் வரிகளை மட்டும் கண்டிக்கவில்லை, திட்டத்தின் அவசியம் பற்றியே சந்தேகப்படத் தொடங்கு கிறார்கள். எனவே, ஒரு விதத்தில் எந்தத் திட்டத்துக்கு நீங்கள் கட்டுப்பட்டிருக்கிறீர்களோ, அதே திட்ட ஏற்பாட்டையே நீங்கள் குலைத்துவிடவும் செய்கிறீர்கள். வாதங்கள், இடையிடையே புள்ளி விவரங்களை வைத்து அடைத்த மறுப்புரைகள் ஆகியவற்றை நீட்டி முழக்க வேண்டாம்; வறுமையில் நெளியும் மக்கள், அவர்கள் படும்பாடு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவைகளைக் கருத்தில் கொள்ளுங்கள் என்று நிதி அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன். வரி செலுத்தக்கூடிய சக்தியின் கடைசிக் கட்டம் வந்தாகி விட்டது. எனவே மறைமுக வரிகளை, அதிலும் அத்தியாவசியப் பண்டங்களின்மீது விதிக்கப்பட்டுள்ள மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, வேறு இடத்திலிருந்து பணம் தேடிக்கொள்ள முற்படுங்கள். இந்த வரிகள் எல்லாம் நீக்கப்பட்டுவிட்டாலும் அவருக்கு நிரம்ப வருவாய் கிடைக்க இருக்கிறது என்று உறுதி கூறுகிறேன். ஏனெனில், எப்போது வரவு செலவு திட்டத்தைக் கொடுத்தாலும், வருவாய் வரக்கூடியது என்று தரப்படும் புள்ளியைக் குறைவாகவே தருவது வாடிக்கை; பிறகு சபையிலே மந்திரவாதி போல் எழுந்து நின்று நான் 23 கோடிதான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் 32 கோடி கிடைத்தது என்று பேசுவார். ஆகவே இத்தகைய மறைமுக வரிகளுக்கு அவசியம் இல்லை; மக்களைக் கசக்கிப் பிழிய வேண்டியதில்லை என்று கூறுகிறேன். ★ தம்பி! இன்னும் என்னென்னவெல்லாமோ சொல்லவேண்டு மென்று நினைத்தேன். நேரம் இல்லை. சரி! அடுத்தடுத்து அவைகளை உன்னிடம் கூறி, என் கடமையை நிறைவேற்றி களிப்புத் தேடிக்கொள்கிறேன். கடமையாற்றுவதிலே தன்னிகரற்ற தீரம் காட்டிடும், தம்பி! 30ந்தேதிதான் முழக்கம் எழுப்பப்போகிறாயே, விலை ஏற்றம், வரிப்பளு இவைகளைக் கண்டித்து, சட்டமன்றத்துக்கு எதிரே, கோட்டைக்கு எதிரே அணிவகுப்பு! கடலலையின் ஒலிக்கும், உன் முழக்கத்துக்கும் கடும்போட்டி! பார்ப்போம், ஆளவந்தார்கள் மனம் மாறுகிறதா என்று. அன்புள்ள அண்ணாதுரை 1-7-1962 ஞாயிறு போற்றுதும்! நாட்டுக்கும் ஆபத்து - எல்லை காப்பதில் இராணுவம் - எதிர்க்கும் போரணியில் நாம் - பண்டைய போர்க்கருவிகளும் களக்காட்சிகளும் - தமிழ்மொழி காப்புப் பிரச்சினை - அரசியல் துறையில் மக்களாட்சியே எழுஞாயிறு! இல்லாத் தமிழகம் இயற்கை பொருள்கள் தரும் - மனித மிருகங்கள் விளக்கங்கள் தம்பி! என்ன? பொங்கலோ பொங்கல் எனும் மகிழ்ச்சிக் குரலொலி எழுச்சியூட்டத்தக்க முறையிலே கேட்டிடக் காணோம். ஆண்டுக்கோர் நாள் ஈண்டு எழும் அந்த இன்னிசை யைக் காணோமே! மாறாக, பொங்கலா? பொங்கல்! என்ற ஒகேட்கிற து. என் செவி பழுதானதால் ஏற்பட்ட விளைவா, அல்லது உன் மொழியிலேயே ஏற்பட்டிருக்கிறதா இந்த மாற்றம்? உன் விழியிலும், வழக்கமான விழா நாள் களிப்பொலி காணோம்; உருவமே தூசு படிந்த மாமணிபோன்று காணப்படுகிறது. புதுப் பொலிவு காட்டிடுவாய், போக்கிடுவாய், கவலையெலாம், முன்பெலாம். இப்போது கவலையை வெகு பாடுபட்டு மறைக்கப் பார்த்திடும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறாய் என்று எண்ணிடத் தோன்றுகிறதே. . . . என் நினைப்புத்தான் தவறா, அல்லது உன் நிலைதான் அதுபோலிருக்கிறதா? இயற்கையாக இன்முகம் காட்டிடுவாய், இந்நாள், பொன்னாள் அண்ணா இன்று! புகழ் மணம் கமழ்ந்திடு நிலையில் முன்னோர் வாழ்ந்தனர் என்ற நினைப்பு நெஞ்சுக்குத் தேனாகி நம்மைக் களிப்பிக்கும் திருநாள்! உழைப்பின் பெருமைக்கு ஈடு வேறெதும் இல்லை என்பதனை உணரும் நன்னாள்! - என்றெல்லாம் பேசிக் கொள்வோமே, முன்பு. இன்று? கோலம் இருக்கிறது விழா நாள் என்பதற்கு அடையாளமாக. ஆனால், உள்ளபடி விழாவுக்கான மகிழ்ச்சியும் காணோம், மகிழ்ச்சி பெறவேண்டும் என்ற விழைவும் மிகக் குறைந்து காணப்படுகிறது. ஏன்? காரணம் என்ன? இதழ் விரியா மலர்போல, இசை பயிலாக் குயில்போல, வளைந்தோடா அருவிபோல, சுவை தாராக் கன்னல்போல, துள்ளிடாத மான் கன்றுபோலக் காணப்படுகிறாய் - விழாக்கோலம் காண வருகிறேன் வினாக்கள் விட வைக்கிறாய்! மனைமாட்சி காண வருகிறேன், மதுரமொழி கேட்க வருகிறேன், இல்லத்தரசி தரு செல்லக் குழவியுடன் குலவிப் பாலும் பழச்சாறும் பாகும் பருப்பும் பக்குவமாய்ச் சமைத்த சோறும் பிறவும் உண்டு சொகுசாகத் தான் இருப்பாய், செக்கச் சிவந்திருக்கும் கன்னத்தாள் என் அத்தான்! என்று அழைத்திடுவாள் ஏன் என்று கேட்டபடி இருந்த இடமதனில் இருந்திடாமல் நீ பறந்திடுவாய் விருந்து பெற! இத்தனை கேள்விகளை இவ்வளவு வேகமுடன் தொடுத் திட்டால் என் செய்வேன்! சற்று பொறுமையுடன் சாற்றிடுவீர் உம் எண்ணம்! என்றே அம் மயில்கூற, வெட்கித் தலையதனை வேறுபக்கம் நீ திருப்ப, வேல் விழியாள் விடுத்திடுமோர் கெக்கலியை நான் கேட்டு, வேண்டும்! இது வேண்டும்! இன்னும் அதிகம் வேண்டும்! என்றெல்லாம் வேடிக்கை எழுப்பிடுவேன் - இது வாடிக்கை. ஆனால், இவ்வாண்டு - அழகு நிலாக் கண்டும் அல்லி மலராமல் இருப்பதுண்டோ! - பொங்கற் புதுநாள் வந்துற்றதென்றாலும், மென் காற்றில் அசைந்தாடும் பூங்கொடி அருகிருந்தும் எங்கு உள்ளோம் என்பதுவும் எந்நாள் இந்நாள் என்பதுவும் அறவே மறந்த நிலை கொண்டதுபோல் இருக்கின்றாய், பொங்கற் புதுநாளப்பா! பொன்னாள் நமக்கெல் லாம்! போக்கு பல காட்டிவிடும் புரட்டர்க்கு வாழ்வளிக்கும் புராண நாள் அல்ல, ஞாயிறு போற்றுதும்! எனும் நன்னெறி நடப்பவர் நாம் என்பதனை உலகறியக் கொண்டாடும் உயர் தனிச் சிறப்புள்ள உவகை பெறுநாள்! இந்நாளில் இவ்விதம் இருந்திட வேண்டுமென ஒருவர் மற்றவர்க்கு உரைத்திடவும் தேவையில்லை. அவரவரும் தத்தமது அன்பகத்தில் அகமகிழ்ந்து விழா நடத்திப் புனலாடி அணிந்திட்ட புத்தாடை அழகளிக்கப் பூங்காவிலாடிடும் புள்ளினமாய்த் திகழ்ந்து, பாங்காக மற்றவர்க்கும் பரிந்தளிப்பர் விழாச் சிறப்பை; பண்பு அது. வீடெல்லாம் நாட்டியுள்ளார் விழாக்கோலம், காண்கின்றேன்; என்றாலும் நரம்பிருந்தும் நாதம் எழுப்பாத யாழாக உள்ளதுவே! ஆம், தம்பி! மறுத்திடாதே, அறுத்திடுது உன் நெஞ்சை ஆழமாக ஓர் கவலை; ஒப்புக்கொள்; தவறில்லை; உள்ளத்தில் உள்ளதனை ஒருவர்க்கொருவர் கூறிக்கொளல் நன்று; கவலைதனைப் போக்கிடும் ஓர் மாமருந்தும் அஃதாகும். ஆகவே, அன்பால் எனை வென்ற அருமைத் திருநாட! உற்ற குறை யாதுனக்கு. உரைத்திடுவாய் - அகற்றிட வல்லோன் யான் என்னும் அகந்தை கொண்டல்ல உன்னை நான் கேட்டிடுதல்; கொட்டாமல் உள்ளத்தில் கவலை பல குவித்திடல் நன்றல்ல, குமுறல் கேடன்றோ? எனவேதான், உரையாடி நாம் நமது உள்ளமதில் இடம் கொண்ட கவலை எலாம் போக்க வழி காண்போம், வா, தம்பி! ஒன்றல்ல என் கவலை, பல உண்டு கூறுதற்கு - கூறத் தயக்கமில்லை, "கூறிடு அண்ணா! நீ! கொட்டும் குளிர் தாங்கிக் கொடியோர் பகை தாங்கி, எல்லையிலே உள்ளாரே உடன் பிறந்தார், உயிர் கொடுத்து உரிமைதனைக் காத்திடும் உயர் குணத்தார்; அவர்க்கு அங்கு இன்னல்! கன்னல் சுவைபெற, இங்கு நாமா? ஓங்கி வளர்ந்துள்ள மாமலையின் அருகிருந்து மாற்றார் நுழையாமல், மானம் அழியாமல் காத்து நிற்கின்றார்; கடும் போர் எதிர்பார்த்து; நாம் இங்கு முக்கனிச் சுவை தேடல் முறை யாமோ, நெறியாமோ! என்னென்ன இடுக்கண்கள் கண்டிடுவர் அவர் அங்கு. நமக்கிங்கு விழாவும் ஒரு கேடா, வீணாட்டம் போடுவதா? மாடுமனை மறந்து மறவர்கள் போயுள்ளார், மாற்றரை எதிர்த்தடிக்க; நாம் இங்கு மகிழ்ந்திருத்தல் சரியாமோ?’’ தம்பி! அதுதானே, உன் கவலை? அந்தக் கவலை உனை வாட்டுகிறது. நான் அறிவேன்; அறிந்ததுடன் அகமகிழ்ந்தேன்; ஆம், தம்பி! மகிழ்ச்சிதான்; பெருமையும் கொண்டிட்டேன். வீடுதனிலேயே விரும்பும் இன்பமெலாம் உண்டு எனக்கொண்டு, நாட்டு நிலை மறப்போர் நாட்டிலுள்ள காட்டினர்காண்! நாடு வாழ்ந்திடவே, வீடுகளில் நாம் உள்ளோம்; நாடு நாடாக, நாடு நமதாக இருப்பதனால்தான் தம்பி! வீடு வீடாக, வீடு விருந்தளிக்க விளங்கி வருகிறது. கேடொன்று நாட்டுக்கு வந்திட்டால், வீடெல்லாம் வீழத்தான்வேண்டி வரும், படகுதனில் ஓட்டை விழின், மூழ்கிடுவர், பிணமாவர்; வீடெல்லாம், நாடு காக்க வீறுகொள்வோர் இருந்து வரும் பாசறைதான், ஐயமென்ன! நாட்டின் நிலை மறப்போர், நாமல்ல, மறவரல்ல. வீட்டிலே இருக்கின்றோம், நாடு மறந்தல்ல! நாட்டின்மீது நாட்டம் காட்டிடும் பகைக் கூட்டத்தை ஓட்டிடச் சென்றிருக்கும் உடன் பிறந்தார் தமைமறந்து, உயிர் பிழைத்துக்கொண்டுவிட்டோம் உயிர் கொடுக்கும் படை அமைத்து என்றெண்ணும் உலுத்தர் அல நாம் யாரும்! களம் சென்றார் நம் தோழர். அவர் கால் பட்ட மண் மணக்கும்; மாண்பறிவோம்; அழைப்பு வரப் பெற்றால், அவரவர்க்கியன்றதனைச் செய்திடுவோம், அட்டியிலை! ஆனால், உருட்டி மிரட்டி வரும் ஊர் அழிப்போர் கண்களுக்கு, நாடு நடுங்கிற்று, வீடெல்லாம் பேச்சு மூச்சில்லை, சிரிப்பில்லை சீர் இல்லை, செய்தொழிலும் நடக்கவில்லை, எல்லோரும் ஏக்கத்தால் தாக்குண்டு, என்ன நேரிடுமோ என பேசிப் பீதி மிகக்கொண்டு பாதி உயிராயினர்காண்! எல்லையில் நாம் வந்து எக்காளமிட்டவுடன், அச்சம் மிகக்கொண்டு அம்மக்கள், கிடக்கின்றார். மங்கையரும் பூச்சூடார், மருட்சி மிக அதிகம். ஆடவர், நீராடார், நிலவாடார், உரையாடார், - ஒவ்வோர் கணமும் இறுதி வரும் உறுதி என எண்ணிச் சாகின்றார்! நாட்டிலே, பாட்டு இல்லை! பாதி வெற்றி இப்போதே நாம் பெற்றோம் - பயம் ஊட்டிச் சாகடித்தோம் அவர் களிப்பை!! என்று பேசிடவும் ஏளனங்கள் வீசிடவுமான ஓர் நிலை இங்கு இருந்திடுதல் ஆகாது; அது தீது. அங்ஙன மாயின், அக்கறை துளியுமற்று அகத்தில் பொறுப்பற்று, ஆவது ஆகட்டும், அனுபவிப்போம் உள்ளமட்டும், எனும் போக்கா, ஏற்புடைத்து? எனக் கேட்பர்; நீ அல்ல, தம்பி! கேட்கப் பிறந்து விட்டோம், கேட்டிடுவோம், வாட்டிடுவோம்! என்றே எண்ணிடும் எதிர்ப்பாளர் உண்டன்றோ; அவர் கேட்பர். பொறுப்பற்ற போக்கல்ல; அகத்தில் அக்கறை கொளல்வேண்டும். ஆனால், முகம் வெளுத்துப் போவானேன்! உறுதியுடன் போரிடுவோம் எதிரியுடன்; என்றாலும் போருக்கு நாமே போய்ப் பொறுப்பேற்றும் நிலைக்கு முன்பே, நடுக்கமுற்றோம் என்று பலர் நையாண்டி செயும் முறையில், நெய்யிழந்த கூந்தலினர்போலாகி, நிற்பதுவா தேவை! அந்நிலைதான், மாற்றார்க்கு இறுமாப்புப் பெற்றளிக்கும். அழிவு வருகிறது என்றஞ்சி அம்மக்கள் இப்போதே சாகின்றார் என்றுரைப்பர்; ஆதலாலே, விழா நடாத்த விருப்பமது குறைந்திருக்கும் நிலையிலேயும், மாற்றார் கண்டு மருளாமல், வெற்றி எமதே என்ற வீரம் நெஞ்சில்கொண்டு, விழாவும் மறவாமல் நடாத்துகிறார் இம்மக்கள். ஓஹோஹோ! நாம் நினைத்தபடி அல்ல! நமை விரட்டும் வலிவெல்லாம் கூட்டி வைத்துள்ளார் இம்மக்கள், அதனால்தான், குலை நடுக்கம் எமக்கில்லை. நிலை தடுமாறவில்லை முன்பு நடந்த விழா இன்றும் முறுவலுடன் இனிதே நடக்கும் எனக் கூறி நமை எச்சரித்துக் காட்டுகின்றார், என்று உணர்ந்திடுவர் எதிர்த்து வரும் மாற்றார்கள். ஆகவேதான் தம்பி! ஆண்டுக்கோர் நாளாக அமைந்த இத்திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்திடுதல், குற்றமல என்று கொண்டோம். நாட்டுக்கு ஆபத்து நேரிட்டுவிடும்போது, நடுக்கம் கூடாது; அது மட்டுமல்ல; மாற்றாரை நாம் ஒன்றும், அண்டம் அழிக்கவல்ல அசகாயச் சூரரெனக் கொள்ளவில்லை, அவர் பெற்ற சில வெற்றி, வெற்றியல! அதுகொண்டு அவர் தமது ஆற்றல் மிகப்பெரிது என்றெண்ணி அகம்பாவம் கொளல் வேண்டாம்; ஆள் துடிக்கக் கொட்டும் தேள், ஆற்றலிலே ஆளைவிடப் பெரிதல்ல, அவன் காலணியால் கூழாகும்! - என்பதறிந்துள்ளோம். எனவே, இறுதி வெற்றி நமதே எனும் நம்பிக்கைகொண்டுள்ளோம் முழு அளவு! அந்நிலையில், விசாரம் கொளப்போமோ? விழாவினைக் கொண்டாடாமல் விட்டுவிடத்தான் போமோ? - என்பதனால்தான் தம்பி! இவ்வாண்டும் வழக்கம்போல், மங்காத புகழ் படைத்த சிங்கம் நிகர் நம் முன்னோர், அளித்த பெருமைமிகு பண்பாட்டு வழி நின்று பொங்கற் புதுநாளைப் போற்றுகிறோம்; அறிவிப்பாய்!! தம்பி! இந்நாள், வாழும் நாளெல்லாம் வீணாளே, பாழ் நாளே! வையகமே நிலைக்காது! மெய்யகமாம் மேலகம் போய், நிலையும் நினைப்புமற்று நிம்மதியாய் வாழ்ந்திவே இறந்துபட வேண்டும் இன்றே; இப்போதே. - என்று இறைஞ்சுவதற்காக அல்ல. அதற்கான நாட்கள் அநேகம் உள! நமக்கன்று!! திறந்தார் காண் திருக்கதவு, தீர்ந்ததுகாண் உம் வாழ்வு, செத்திடுவீர், வாழ்ந்திடலாம்! - என்று செப்பும் நாளுண்டு - அதற்குச் சிவனே ஏற்றவர் காண் என்றுரைத்து போட்டி நாள் காட்டுவார்போல், வேறோர் நாள் உரைப்பர், அறிவாய் நீ யாகம் செய்திடுவீர், சாலோகம் சென்றிடுவீர்! என்று கூறும் நாளல்ல. பொங்கற் புதுநாள் அஃது அல்ல. நாடு சிறந்திடவும், நம் வாழ்வு சிறந்திடவும், ஆட்சி முறைதன்னில், அரசு அமைப்பதனில், தொழில் அமைப்பில், திட்டத்தில், கல்வித்துறைதன்னில், இன்ன பிறவற்றில் என்னென்ன மாற்றங்கள் வேண்டுமெனக் கூறி, இந் நிலையை யாம் அடைய, எமக்கென்று ஓர் அரசு அமைத்தளிக்க ஒப்பிடுவீர், திராவிட நாடதனைத் திராவிடர் ஆண்டுவர ஏற்ற முறைதன்னில் ஏற்பாடு செய்தளிப்பீர் என்று கேட்டு வருகின்ற கழகத்தார், தேர்ந்தெடுத்துக் கொண்டாடும் தேனின் இனிமை தரும், தெளிவளிக்கும் நாளாகும். ஆகையினால், மாற்றாரை வீழ்த்திடத் தீட்டிடும் திட்டம்தனக்கு தட்டாமல் தயங்காமல், ஆவிதனைக்கூட அளித்து ஆதரவு தர முனைந்து நிற்கின்ற, முன்னேற்றக் கழகத்தார், மூதறிஞர் போற்றிய பொங்கற் புதுநாளை விழாவாக்கி மகிழ்கின்றார். நாட்டுக்கு வந்துற்ற ஆபத்தை நீக்கிடும் ஓர் திட்டத்துக்கு ஆக்கம் தரும், மேலும் உற்சாகம், ஊக்கம், உறுதிபெற, விழா, உணர்வளிக்கும், தம்பி! இது விளக்கம் தர மட்டும் தொடுத்திடும் சொல்மாலை அல்ல; உண்மை. கார்கண்டு களிகொண்டு கழனி செழிக்குமென ஊர் வாழ உழைத்திடும் நல்உழவன் உரைக்கின்றான் - உண்மை - ஆனால், களியாட்டம் காட்டிக் காசுபெற விழையும் கூத்தர், கார் கண்டால் கலங்கிப்போய், கை பிசைந்து நிற்கின்றார். மாமழையும், சிற்சிலர்க்குக் கசப்பளிக்கக் காண்கின்றோம், அஃதேபோல், நம் கழகம் மேற்கொண்ட நற்போக்குதனைக் கண்டு, எல்லோரும் பாராட்டி, ஏற்புடைய செயலென்று வியந்துரைத்தும், சிற்சிலருக்குக் கசப்பு உளது; நாமறிவோம்; அவர்க்கெல்லாம் இது உரைப்போம், "யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றனர் தமிழர், கொற்றம் தனித்தான் அந்நாளில். உலகழிக்க ஒருபோதும் ஒப்பார்கள். உலகு மெச்ச வாழ்ந்தோர் வழிவந்தோர். இன்று முளைத்துள்ள எதிர்ப்புதனை முறியடிக்க மட்டும், புதுப்போக்கு நாம் கொண்டோம் என்று எண்ணல் சரியல்ல; என்றென்றும் எதிரிகளின் கொட்டம் அடக்கிடவும், எதிர்ப்பை முரித்திடவும், ஏற்ற விதமான போக்கும், நோக்கும் கொள்வோம், அதற்கேற்ற முறைபற்றி அறிவாளர் ஆய்வாளர் எடுத்துரைக்கும் கருத்து களைத் துச்சமெனக் கூறும் நச்சு நினைப்பினர் அல்ல நாம், அதுபோன்றே, வந்துள்ள போர் தன்னால், எழுந்துள்ள புது நிலையும், புது நினைப்பும், ஆராய்ந்து பார்த்திடவும், அன்புரை நடத்திடவும் அறநெறியில் நிற்பவர்கள் முனைவார்கள் என எண்ணுகிறோம். அறவோர் வழிகாட்டட்டும் என்று அதனை விடுக்கின்றோம். அண்ணா! அதுபோல, நாமிருந்தோம், அருவருக்கத் தக்கபடி சிலர் போக்குக் காட்டுகின்றார் நமக்கெதிராய், காண்கிலையோ என்கின்றாய். காண்கின்றேன்! குன்மமொடு குடல்வாதம், குட்டம் குமுட்டலெனும் பல்வேறு நோய் கொண்டோம் பாரிலுண்டு, பண்டுமுதல்! சொறி சிரங்கு கொண்ட உடல் காண்கின்றோம்; அவர்போல எமக்கும் ஆகவேண்டுமென எண்ணப்போமா! அஃதே போல, உள்ளம் சிலருக்கு, நோய்க்கூடு, என் செய்ய. மாமருந்து அறிந்துரைக்க நேரமில்லை, மாமலை ஏறுதல்போல், வேலையுளது, அதில் ஈடுபட்டிருக்கின்றோம் - நாட்டுக்கு வந்துள்ள ஆபத்தை எதிர்த்து அழித்திடத் திரண்டு நிற்கும் வீரப்போரணியில் நாம் உள்ளோம், கடமை உணர்ச்சி யுடன். இந்நிலையில், கருத்து வேற்றுமை எழத்தக்க பேச்சதனில் கலந்துகொள்வதில்லை என்ற "விரதம்’ பூண்டுள்ளோம். அதனைக் கலைத்திடவும் குலைத்திடவும் முயற்சி சிலர் மேற்கொண்டபோதினிலும், நாம் நமது உறுதி தளராமல், நெறியிற் பிறழாமல், நேர்மையுடன் கடமையினைச் செய்தபடி இருப்போம். மஞ்சளும் இஞ்சியும், பிஞ்சாகக் கத்தரியும் அவரையும் காண்கின்றேன் உன் மனையில், மாவும் பலாவும் வாழையுடன் இருந்திடும் ஐயமில்லை. ஈங்கு இதுபோல இருந்திடும் நிலைமை, இன்று ஏங்கித் தவிக்கும் நிலையுள்ளார்க்கெல்லாம் கிட்ட வேண்டும்; நம் ஆட்சி, நல்லாட்சி, புதுமை நிறை ஆட்சி, புரட்சி ஆட்சி என்று பல்வேறு பெயரிட்டுக் கூறுகின்றார்; நோக்கம் இஃதன்றி வேறென்ன இருந்திடும். இயற்கை வளம் உண்டு. செய்பொருளை நேர்த்தியுடன் ஆக்கித்தர உழைக்கும் திண்தோளர், வகை காட்டும் நுண்ணறி வினார், மிக உண்டு, எனினும், இங்கு, காய்க்காத மாவாக, கறக்காத பசுவாக, வாழ்வுகொண்டோர் தொகையே மிகுந் திருத்தல் காண்கின்றோம். இன்றுள்ள இந்த நிலை பண்டு இங்கு இருந்ததில்லை என்றுணர, இலக்கியமே சான்றளிக்கக் காண்கின்றோம். எழுத்தறிவே பல நாடு, பெற்றிராத காலத்தே, தமிழில் உதித் தெழுந்த மொழிகளால் வெவ்வேறான ஆந்திரமும் கேரளமும் கருநாடமும், அழகு தமிழகமாக இருந்தகாலை, இலக்கியச் சிறப்பினை ஓர் அணியாய்க்கொண்டு திகழ்ந்திருந்ததென்றால் பொருளும் என்ன? வாழ்க்கையிலே வளம் நிரம்பி, மக்கள் மன வளமும் நிரம்பப்பெற்று இருந்தார். ஆங்கு புலவர் குழாம் அரசோச்சி அரசர்க்கெல்லாம் அறவழியைக் காட்டித் துணை நின்றதெனும், உண்மையன்றோ விளங்குகிறது. எனவே திட்டமிட்டுச் செயலாற்றி, இயற்கை வளத் தினையே தக்கபடி பயன்படுத்திடுவோமேல், செல்வம் வளரும் என்பதும், அதற்கேற்ற கருப்பொருள் உண்டு இங்கு நிரம்ப என்பதும் புலப்படுகிறதன்றோ? வளரும் செல்வம் ஏதோ ஓரிடம் சென்று முடக்கிக் கொண்டுவிடாமல் இருக்க, துணிவும் தெளிவும், விரைவும் அறிவும்கொண்ட முறையில் பணியாற்றிடும் நல் அரசு முறை வேண்டும். இவ்விரண்டும் கிடைக்கப்பெற்று இருந்ததால், முன்பு இங்கு, எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் இருந்தது - அக் காலத்திருந்த அண்டை அயல் நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது. போர்க்காலமானதால், இன்று ஓரளவு, போர்க்கருவிகள் பற்றிப் பொதுமக்கள் படித்தறிந்துகொள்ளவும், கேட்டுத் தெரிந்துகொள்ளவும் வாய்ப்புப் பெற்றுள்ளனர். ஆனால், அவர் களிலே பெரும்பாலோர்கூட, பிற நாடுகள் “வில் அம்பு’ மட்டுமே கொண்டிருந்த நாட்களிலேயே, இங்கு (அக்காலத்துக்குப்) புதுமுறைப் போர்க்கருவிகள் இருந்தன என்பதனை அறியார்கள். புலவர்பெருமக்கள் அவை குறித்து எடுத்துரைக்கும்போது நம் மக்களிலே மிகப்பலருக்கு, நம்பமுடியவில்லை. காரணம் தெரியுமே, தம்பி! பண்டையப் போர்க்கருவிகள்பற்றிப் புலவர்கள் பேசும்போது, புராணீகர்கள் அதனைவிட விந்தை மிகுந்த”ஆயுதங்கள்’பற்றி, சுவை சொட்டச் சொட்டப் பேசுகிறார்கள் - கேட்கும் மக்கள் அவை முற்றிலும் கற்பனை, புலவர் கூறுவதோ முற்றிலும் உண்மை என்பதை உணர முடிவதில்லை. படிக்க எளிதான முறையில் புராணக் கதைகள் உள்ளன - எனவே, மக்கள் அவைகளையே அதிகமாகப் படித்துப் படித்து அந்தக் கற்பனைகளிலே மனத்தைப் பறிகொடுத்துவிடுகிறார்கள். தமிழர்கள், அந்த நாட்களிலே நால்வகைப் படைகளைக் கொண்டிருந்தது மட்டும் அல்ல, கடலரண் காட்டரண் மலையரண் மதிலரண் எனும் பாதுகாப்புகளையும் பெற்றிருந்தனர். போர்முறை களிலேயும் புதுக்கருத்துகள் கொண்டதனால், அற்றை நாளில் தமிழர் பெற்ற வெற்றிகள், இன்றும் எண்ணி வியக்கத்தக்கனவாக உள்ளன. நெடுந்தொலைவு படையுடன் சென்று போரிட்டு வெற்றிபெற்ற வீரக்காதைகள் பலப்பல. போரிலே வெற்றி காண வீரம், அடிப்படை என்பது மறுக்கொணாத உண்மை என்றாலும், போர்க்கருவிகளின் தன்மையும் மிகவும் முக்கிய மானது என்பதை ஆய்ந்தறிந்து உணர்ந்திருந்ததால், பிற நாட்டாரிடம் இல்லாத பல்வேறு வகையான போர்க்கருவிகளைக் கொண்டிருந்தனர். வளைவிற் பொறி தள்ளிவெட்டி கருவிரலூகம் களிற்றுப்பொறி கல்லுமிழ் கவண் விழுங்கும் பாம்பு கல்லிடு கூடை கழுகுப்பொறி இடங்கணி புலிப்பொறி தூண்டில் குடப்பாம்பு ஆண்டலையடுப்பு சகடப்பொறி கவை தகர்ப்பொறி கழு அரிநூற்பொறி புதை குருவித்தலை ஐயவித்துலாம் பிண்டிபாலம் கைப்பெயர் ஊசி தோமரம் எரிசிரல் நாராசம் பன்றி சுழல்படை பனை சிறுசவளம் எழு பெருஞ்சவளம் மழு தாமணி சீப்பு முசுண்டி கணையம் முசலம் சதக்களி தம்பி! இத்தனை விதமான, புதுமுறைப் போர்க்கருவிகள் இருந்தன, இத்துடன், தமிழரிடம், தனியாக வீரர் தமதாற்றலை விளக்கப் போர்வாளும் கேடயமும் ஈட்டியும் உண்டு. தமிழரை எதிர்த்த மாற்றார்களிடமும் பிற நாட்டவரிடமும் வேல், வில், அம்பு, சிறுவாள், கொடுவாள், அரிவாள், ஈர்வாள், உடைவாள், கைவாள், கோடரி, ஈட்டி, குறுந்தடி என்பனமட்டுமே இருந்த நாட்களில். இன்று விஞ்ஞான அறிவுப் பெருக்கத்தின் காரணமாகக் கிடைக்கப்பெற்றுள்ள போர்க்கருவிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழர் பெற்றிருந்தவை, மிக மிகச் சாதாரணம்; இப்போதைக்குப் பயன் தருவன அல்ல. அந்தப் போர்க்கருவி களை ஏந்திக்கொண்டு, களம் சென்றால், இன்று கைகொட்டிச் சிரிப்பர், மறுக்கவில்லை. ஆனால், இவை என்று இருந்தன - இவை தமிழரிடம் இருந்த நாட்களில் மற்ற நாட்டவரிடம் இருந்தன யாவை என்பதனை ஒப்பிடும்போதுதான் சிறப்பு விளங்கும். களமே சென்று பார்ப்போம், வா, தம்பி! அதோ பார்த்தனையா; பகைக் கூட்டத்தார் உடைவாளை உருவிக்கொண்டு பாய்ந்து வருகின்றனர் தமிழரைத் தாக்க! தமிழர்களும் உடைவாளை உருவிக்கொண்டு போரிடப் போகிறார்கள் என்று எண்ணுகிறாய்; இரு பிரிவினிடமும் உடைவாள் இருப்பினும், வாள் வீச்சு முறையின் நேர்த்தி யாலேயும், களத்திலே காட்டிடும் துணிவாலும், போரிடும்போது எழும் துரிதத் தன்மையாலும், தமிழரே வெற்றிபெறப் போகின்றனர் என்று நினைக்கிறாய் - தவறல்ல! இயலும். ஆனால் இதோ கவனி. . . பாய்ந்துவருகிற பகைப்படைமீது, மழை பொழிவதுபோல அம்புகள் பாய்கின்றன - அலறித்துடிப்பதைப் பார்! இவ்வளவு அம்புகளை விடவேண்டுமானால் ஒரு பெரும் படை களத்திலே எதிர்ப்புறம் நிற்கவேண்டுமே, தெரிகிறதா? இல்லை அங்ஙனமெனின் எப்படி இது முடிகிறது? தம்பி! புராண கால நாடாக இருப்பின், இவ்வளவு அம்பு களும், மகாராஜா செய்த "மகா யாக பலனாக, பிரசன்னமான பரமேஸ்வரன் தந்த வரத்தின் பயனாக, அந்தரத்திலிருந்து அஸ்திரங்கள் சரமாரியாகக் கிளம்பி சத்ருவைத் துவம்சம் செய்கின்றன’ என்று கூறுவர்; நம்புவர். ஆனால், இது தமிழகக் களம்; தமிழ்வீரர்கள் போரிடு கின்றனர்; அவர்கள் கடவுளர்க்கு இத்தனை தொல்லை தருவதில்லை! உற்றுக் கவனித்தால் தெரியும், தம்பி! அவ்வளவு அம்பு களும், தமிழர்களின் கோட்டையிலிருந்து கிளம்புகின்றன. கோட்டை மதிற்சுவரின்மீது நின்றுகொண்டல்லவா, இதனைச் செய்யமுடியும்? ஆமாம், என்கிறாய்; ஆனால், கோட்டை மதிற் சுவரிலே ஒருவரும் இல்லையே! விந்தைதான் என்கிறாய்! விந்தை விளக்கப்படுகிறது பாரேன். நிறைய அம்புகளைக் கோத்துவிட்டால், தானே வளைந்து மிக வேகமாக எதிரிகள்மீது பாயும் முறை கொண்டது, வளைவிற் பொறி! அந்தப் பொறிதான் இந்தப் போடு போடுகிறது! வளைவிற்பொறி ஒன்று செய்து முடிக்கும் செயலைச் செய்திடப் பலப்பல வீரர்கள் வேண்டும். இந்தப் போர்க்கருவி இருப்பதனால், சிறிய அளவுள்ள படை, கோட்டைக்குள் இருந்துகொண்டே, தாக்க வரும் பகைப் படையைச் சிதைத்திட முடிகிறது. துணிச்சல் மிக்க அப்பகைவர்களிலே சிலர், அம்புக்குத் தப்பிவிடுவதுடன், கோட்டை நோக்கிப் பாய்கிறார்கள்; மதில் மீது ஏறுகிறார்கள் - அடடா! உள்ளே குதித்துவிட்டால். . . . . .!! பார்த்தனையா, தம்பி! எத்தனை பெரிய கருங்கற்கள் வீசப் படுகின்றன, பகைவர்மீது! மதிலிலே ஏறினவர்களின் கதியைப் பார்த்தனையா? உருண்டை வடிவமான கருங்கற்கள் மேலே விழுந்ததால் மண்டை நசுக்குண்டு, கீழே விழுகிறார்கள் - அசையக் காணோம் - எங்ஙனம் அசைய முடியும்! பிணமாயினர்!! அது சரி, இத்தனை பெரிய உருண்டையான கருங்கற்களைத் தூக்கி எறிய முடியாதே, ஆட்களால்? என்று கேட்கின்றாய், ஆமாம், முடியாது! ஆனால், ஆட்களா தூக்கி வீசினார்கள் அந்தக் கற்களை!! இல்லை, தம்பி, இல்லை. அவ்வளவும் கல்லுமிழ் கவண் - கல்லிடுகூடை - இடங்கணி - இந்தப் பொறிகள் செய்த வேலையன்றோ!! பகைவர் பீதி அடையாம லிருக்க முடியுமா? அகழியிலேயே குதித்துவிட்டான் - அசகாய சூரன்போல் இருக்கிறது! ஆனால், அதோ! ஏன் அலறுகிறான்? மேலே போகிறான்! மேலே தூக்கிச் செல்லப்படுகிறான். தூண்டில் போடப்பட்டிருக்கிறது! தூண்டில் தண்ணீரிலேயே இருந்திருக் கிறது, அவன் அறிவானா அதனை? அகப்பட்டுக்கொண்டான், மீன் தூண்டிலிற் சிக்குவதுபோல்! தம்பி! களத்திலே இருக்கும் படைமீது, வேகமாகப் பறந்துவரும் வெடி விமானங்கள் தாக்கி, படையை நாசமாக்கும் என்று இன்று படிக்கிறோமல்லவா? படையுடன் படை போரிட்டால், வீரம் காட்டலாம். விண்ணேறி வரும் விமானம், மின்னல் தாக்குதல் நடத்தும்போது, திருப்பித் தாக்க முடியுமா? துரத்திக்கொண்டு போய் அடித்து நொறுக்க முடியுமா? முடியாது. தம்பி! அதோ பார், மேலே சேவல்கள்! சேவல்களா இத்தனை உயரமாகப் பறக்கின்றன என்று கேட்கிறாய்; இந்தச் சேவல்கள் பறந்திட இயலும், உயிர்ச்சேவல்கள் அல்லவே! பகைவரின் உயிர் குடிக்கும் சேவல் பொறி! எப்படி உயிர் குடிக் கிறது என்பதனைக் கவனித்துப் பார்! மேலே பறந்து, வேகமாகக் கீழே பாய்கிறது, பகைவன் தலைமீது உட்காருகிறது, மீண்டும் கிளம்புகிறது, பகைவனுடைய தலையைக் காணோம்! ஆமாம்! தம்பி! சேவல், அவனுடைய தலையை வெட்டி வீழ்த்திவிட்டது. இந்த வேலை செய்யவல்ல பொறி, சேவல் வடிவத்தில்; அதன் பெயர்தான் ஆண்டலையடுப்பு. ஓஹோ! எரிசிரல் தன் வேலையைச் செய்கிறது; அதனால் தான், பகைப்படை சிதறி ஓடுகிறது, அலறியபடி. புரியவில்லையா, தம்பி! பதறி ஓடும் பகைவர்களின் கண்களைப் பறவைகள் கொத்திக்கொண்டு போய்விட்டன. தெரிகிறதா, மீன்கொத்திப் பறவை! பொறி, உயிர்ப்பறவை அல்ல! அந்தப் பொறியின் வேலை இதுதான். மேலே கிளம்பும், பகைவன் எதிரே பாய்ந்து வரும். கண்களைக் கொத்தும்; உடனே மீண்டும் மேலே போய்விடும், எவர் கரத்துக்கும் சிக்காமல் மீன்கொத்திப் பறவை வடிவத்தில் உள்ள இந்தப் பொறியின் பெயர்தான் எரிசிரல். அதோ மதிலின்மீது அமைக்கப்பட்டுள்ளது குரங்கு போன்ற பொறி; பெயர் கருவிரலூகம். வேலை? நெருங்கி வருபவர்களைப் பிடித்துக் கட்டிக்கொள்ளும் - உயிர்போன பிறகுதான் பிடி தளரும் - பிணம் கீழே விழும். இதே விதமான அழிப்பு வேலைக்காகத்தான், பன்றி நிற்கிறது! கிட்டே வருபவர்களைக் கிழித்தெறிந்துபோடும் பொறி அது. வையகம் வாழ்ந்திட வழங்குவோம் எதனையும் என்று கூறிடுவர், நேச நோக்குக்கொண்டோர்க்கு; பகை எனிலோ, உரிமை பறித்திட எவரேனும் கிளம்பிடினோ, இழிமொழி புகன்றிட எவரேனும் துணிகுவரேல், முழக்கம் எழுப்புவர்: ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்! நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்! வாளுடை முனையிலும் வயந்திகழா சூ-னும் ஆளுடைக் கால்கள் அடியினும் தேர்களின் உருளையி னிடையினும் மாற்றவர் தலைகள் உருளையிற் கண்டு நெஞ்சு உவப்புற வம்மின்! என்று அழைப்பு விடுப்பர்; அடலேறுகள் அணி திரண்டெழுவர், போரிட, வாகை சூடிட! போதும், தம்பி! களக்காட்சி! மேலும் காண விரும்பினால் பதிற்றுப்பத்து, தகடூர் யாத்திரை இவற்றைப் படித்திடவேண்டும் பன்மொழிப்புலவர் அப்பாதுரையார் தந்துள்ள "தென்னாட்டுப் போர்க்களங்கள்’’ எனும் ஏடு, படித்திடுவோர், அடலேறெனத் தமிழர் வாழ்ந்து பெற்ற வெற்றிகள்பற்றிய வீரக் காதையை அறிவர். "காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி, வேங்கை நாடும், கங்கை பாடியும் தடிகை பாடியும், நுளம்ப பாடியும் குடமலை நாடும், கொல்லமும், க-ங்கமும், முரண்தொழில் சிங்களர் ஈழ மண்டலமும், இரட்ட பாடி ஏழரை இலக்கமும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் கொண்டு’’ வெற்றிப் பெருவீரனாக, இராஜேந்திர சோழன் விளங்கினான் என்பது வரலாறு. மன்னர்கள், மாமன்னர்கள் காலத்துக் கருத்துக்கள், குடியாட்சிக் காலத்துக்கு ஒவ்வுமோ? ஒவ்வா என்பதற்கு விளக்கமும் வேண்டுமோ! எனினும், பன்னிப்பன்னி அந்த நாட் சிறப்பினை எடுத்துக் கூறிடல், சுவைதரும் எனினும் பயனும் உண்டோ என்று கேட்போர் சிலர் உளர். அந்நாள் சிறப்பினை இந்நாள் கூறிடல், அன்றிருந்ததனைத்தும் இன்றும் இருந்திடல் வேண்டும் என்பதற்கன்று; அஃது முறையுமாகாது. எனினும், அந்தச் சிறப்புதனை எடுத்துரைப்பதனால் நாம் பெற்றிருந்த ஏற்றமிகு நல்வாழ்வும், அஃது அமையத் துணைநின்ற நல் அரசும், அந்த அரசு கொண்ட அன்புமுறை அறநெறியும் என்றும், எந்நாடும், காலத்துக்கேற்ற வடிவம்தனைப் பெற்று, ஞாலம் உள்ளளவும் இருந்திடலாம் எனும் உண்மை, ஊரறியச் செய்வதற்கே; வீண் பேச்சுக்காக அல்ல. பொங்கற் புதுநாளில் விழா நடாத்தி விருந்துண்டு, களைத்துத் துயில் கொண்டால் போதாதோ, என்பாயோ; என் தம்பி! எவரேனும் அதுபோலக் கூறிவரின் கூறிடு நீ, பாற் பொங்கல், பாகுப் பொங்கல், பருப்புள்ள சுவைப் பொங்கல் மட்டுமல்ல நம் நோக்கம், களிப்புப் பொங்கலிது, கருத்துப் பொங்கலிது என்பதனை. இதனால்தானே, எந்த விழாவினுக்கும் நாம் காட்டாப் பெரு விழைவு இந்த விழாவினுக்கு நாம் காட்டி மகிழ்கின்றோம். "வண்ணமலர் தாமரைக்கு நிகராய், வேறோர் வாசமலர் நாம்வாழும் நாட்டில் இல்லை. கண்ணைப்போல் சிறப்பான உறுப்பே இல்லை கடல்போலும் ஆழமுள்ள பள்ளம் இல்லை. வண்ணங்கள்பலபாடி, வார்த்தை யாடி வரிவண்டு மொய்ப்பதுபோல் ஒன்று கூடிக் கொண்டாடும் விழாக்களிலே தைமா தத்தில் குதிக்கின்ற பொங்கலைப்போல் பொன்னாளில்லை.’’ என்று இனிய கவி அளிக்கும் சுரதா தீட்டியுள்ளார். பொன்னாளே பொங்கற் புதுநாள், ஐயமில்லை!! எத்துணை இருளையும் ஓட்டிடவல்லோன், எழு ஞாயிறு எனும் செம்மல், வாழ்வு வழங்கிடும் பான்மைக்கு வணக்கமும், உண்டி கொடுத்து உயிர் கொடுத்துதவும் உழவர்தம் செயலுக்கு நன்றியும், கூறிட இந்நாள், திருநாளாகும், பொன்னாள் இஃது என்றதுடன், கூறிய இஃதும், கேளாய்: "சோலைதனில் உதிர்கின்ற பூவைப் போன்று சோர்ந்தபடி உறங்கிக்கொண் டிருந்த நம்மைக் காலையிலே எழுப்பிவிட்ட சேவ லுக்கும்; கனிகொடுத்த மரங்களுக்கும், பசுக்க ளுக்கும் நீலமணிக் கடலுக்கும், கதிரோ னுக்கும் நெல்லுக்கும், கரும்புக்கும், நிலங்க ளுக்கும் மூலபலம் குறையாமல் இருக்கும் கொத்து முத்தமிழால் நம்வாழ்த்தை வணங்கு வோமே!’’ இத்துணைச் சிறப்புடன் இலங்கிடும் திருநாளில், நம்முடன் பிறந்தவர். மறவர், நாம் வாழ, மனையினில் தங்கி நல் மகிழ்ச்சி பெறும் நிலையின்றி, களத்திலே நிற்கின்றார், கண்போன்ற உரிமைக்கு "இமை’யானார்! அது கண்டு, நாமும் நாடாளும் பொறுப்பேற்றோர் பொறுப்பற்றோர் போலாகி நாடு கெடும் செயலதனில் ஈடுபடாது தடுக்கும் நோக்குடனே எதிர்ப்பு, மறுப்பு இவற்றுடனே, கிளர்ச்சிகளையும் நடாத்தி வந்தோம், ஆட்சி பயனளிக்க. அவை யாவும் இதுபோது மக்களிடை கசப்புணர்ச்சி ஊட்டிவிடும், கட்டுப்பாட்டுடனே காரியமாற்றுகின்ற நிலை குலையும். அதுகண்டு, மாற்றார் மனமகிழ்வர், நாட்டுக்குக் கேடு செய்வர் என்று உள்ளூர நாம் உணர்ந்து, ஒதுக்கிவிட்டோம் அவைதம்மை. நெருக்கமானோம் ஆளும் பொறுப்பேற்றார் தம்மோடு, கூடிப் பணிபுரிந்து வருகின்றோம். கொற்றம் ஆள்பவர்கள் இன்னொருவர், பிறகொருவர் என்று நிலை பிறக்கும் நெறியதுதான், குடியாட்சி. கொற்றம், நடாத்துபவர், ஒவ்வோர் கொடிக்குடையோர், நாடறியும். எந்தக் கொடியுடையோர் கொற்றம் நடத்தி வர, உரிமை பெற்றனரோ, அவர் ஆணை வழி நடக்கும் அரசு - எனினும், அக் கொடி யுடையார் கொடியோரானால், மக்கள் தமக்காக வாதாட, மமதை கொண்டோர் மண் கவ்வ, கொற்றம் மக்கள் உயிர் குடிக்கும் கொடுமையாகிவிடாமல், தடுத்து நிறுத்திடவே, மற்றக் கட்சியினர் விழிப்புடனே இருந்திடுவர். ஒரு கொடிக்கு உடையார்கள் உணர்வதுண்டு, தாழ்வதுண்டு; அவரிடம் போய் "கொற்றம்’ இருந்திடினும், அதன் வலிவு மிகப் பெரிது. கொற்றம்தனை விடவே நாடு மிகப் பெரிது. நாட்டுக்கே ஆபத்து என்ற நிலை வெடித்ததுமே, கொற்றத்தின் எதிர்காலம் என்னவெனப் பேசுதற்கோ, எவர் பெறுவர் அடுத்த முறை, கொற்றம் நடாத்திடும் ஓர் உரிமை எனப் பேசி வருவதற்கோ நேரமில்லை, நேர்மையல்ல அப்போக்கு. எனவே, நாமும், நாடு நனிபெரிது நம் கட்சிக்கான நடவடிக்கை நிறுத்தியேனும், நாடு காத்திடும் நல்ல தொண்டருக்குத் துணையாவோம் என்று துடித்தெழுந்தோம், துணை நின்றோம். துணையாக உள்ளவர்கள் தோழர்களே ஆவதற்கு, இணையில்லாப் பெருநோக்கம் கொளல்வேண்டும் ஆள்வோர்கள்; கொண்டாரில்லை; குறை இது என்றுரைத்து குறுக்குச் சால் ஓட்டிட நாம் முனையமாட்டோம், நமது பணி, நாடு காக்க, நாடாள்வோர் போக்கினை மாற்றிடுவதன்று; இன்று. விழாவினைக் கொண்டாட ஏற்ற நிலைதானே என்று விழிதனிலே நீர் தேக்கி நின்ற தம்பி! விளக்கம் இது; உணர்ந் திடுவாய்; உதிர்த்திடுவாய் புன்னகையை, என்றும்போல. சிரிப்பு என்பதன்மீது நினைப்பு சென்றதுமே, "இடுக்கண் வருங்கால் நகுக!’ என்று ஈடற்ற பெரும்புலவர், நானிலத்துள் ளார்க்கே வழிகாட்ட வல்லாராம் வள்ளுவப் பெருந்தகையார் செப்பியது சிந்தையினில் சேர்த்திடுது. இயற்கையே சிரித்தபடி இருக்கின்ற திருநாடு, நம் நாடு; நெருப்புக் கக்கும் எரிமலைகள் இல்லை இங்கு, இன்னல் கண்டு நடுக்கமில்லை, இல்லை இங்கு நிலநடுக்கம்; எல்லாம் சீராய் அமைந்துளது; புன்னகையைப் பூண்ட தளிர்மேனியாள்போல் பூமியது இருக்கக் காண்பாய். எங்கும் சிரிப்பொலிதான்! எங்கும் மகிழ்ச்சி மயம்! பாளையே தென்னை காட்டும் பாங்கான சிரிப்புமாகும்! பற்பல சிரிப்புப் பற்றிப் படித்த ஓர் பாட்டை (மதி ஒளி என்பாருடையது) உன் பார்வைக்கு வைக்கும் எண்ணம் அடக்கிட இயலவில்லை; ஆகவே அதைக் கேளாய்: "மொட்டுமுதல் இதழ்விரித்து முல்லை சிரித்ததாம்! - அதில் மொண்டுமொண்டு தேன்குடித்து வண்டு சிரித்ததாம்! சொட்டுச்சொட்டு மழைத்துளியைச் சொந்தம் என்றதாம் - அந்தச் சொந்தம்கொண்ட இந்தமண்ணும் துவண்டு நின்றதாம்! நீல வானில் வந்தநிலவு நீந்திச் சிரித்ததாம்! - அதை நின்றுபார்த்து விண்ணின் மீனும் நெகிழ்ந்து சிரித்ததாம்! பாலை அள்ளித் தெளித்ததனால் பாரும் சிரித்ததாம்! - இதைப் பார்த்து மகிழ்ந்து சோற்றை யுண்டு பிள்ளை சிரித்ததாம். வளமிக்க நாடு, திறமிக்க உழைப்பு, பொறுப்புணர்ந்த ஆட்சி, அறமறிந்த சான்றோர், அஞ்சா நெஞ்சுடைப் புலவோர், விளைபொருளின் மிகுதி, செய்பொருளின் நேர்த்தி, வாணிபத் திறம் யாவும் மிகுந்திருந்த நாட்கள் - புன்னகை பூத்தபடிதானே இருந்திருக்கும். கவிஞர் முடியரசன் - அன்று இங்கு இருந்துவந்த வாணிப வளம்பற்றி அழகுபடக் கூறியுள்ளார்: "முத்திருக்கும் தண்கடலில் முத்தெ டுத்து முகில்முட்டும் மலையகத்துச் சந்த னத்தின் எத்திசையும் மணக்கின்ற மரமெ டுத்து மிளகெடுத்து மயில்தோகை இறகெ டுத்துப் பத்திபத்தி யாய்க்கலங்கள் விற்கச் சென்ற’’ அருமையினைக் காட்டியுள்ளார். அத்தகைய எழில் உள்ள தமிழகம் தமிழ்மொழி அழிந்துபடாதிருந்தால் மட்டுமே காண இயலும். தமிழ்மொழி பாதுகாப்புப் பிரச்சினையில் காட்டிய அளவு அக்கறை வேறெந்தப் பிரச்சினையிலும் தொடர்ந்தும், வேகத் துடனும், உள்ளக் கொதிப்போடும் கட்சிக் கட்டுகளைக் கடந்திடும் போக்குடனும், தமிழர்கள் காட்டியதில்லை. எத்தனையோ பிரச்சினைகள் சிற்சில கட்சிகட்கே உரித்தானவை என்ற நிலை காண்கிறோம். தமிழ்மொழிபற்றிய பிரச்சினை ஒன்றே, நாட்டுப் பிரச்சினை எனும் மேலிடம் பெற முடிந்தது. ஏனோவெனில், தமிழ்மொழி காக்கப்படுவதனைப் பொறுத்தே, தமிழரில் பல்வேறு கட்சியினரும் தத்தமது கொள்கை வெற்றி பெற, இன்றில்லாவிட்டால் ஓர்நாள் வாய்ப்புக் கிடைக்கமுடியும் என்பதிலே உள்ள அழுத்தமான நம்பிக்கையேயாகும். ஆட்சியாளர்கட்கு அறிவு கொளுத்த அவ்வப்போது கிளர்ச்சிகள் நடாத்துகின்றன, பல்வேறு அரசியல் கட்சிகள்; ஆனால், ஒரு கட்சி துவக்கிடும் கிளர்ச்சியில் மற்றக் கட்சிகள் பெரிதம் பங்கேற்பதில்லை; பகை காட்டாமலும் இருப்பதில்லை. ஆனால், தமிழ்மொழி குறித்த பிரச்சினையிலே மட்டும் கட்சி களைக் கடந்ததோர் ஒன்றுபட்ட உணர்ச்சி மேலெழுந்திடக் காண்கிறோம். காரணம் இஃதே! தமிழர்க்குத் தமிழ்மொழி, அவர் விரும்பும் ஓர் தனிச்சிறப்புள்ள வாழ்க்கை முறைக்கு வழிகாட்டி நிற்கிறது - எண்ணத்தை வெளியிடும் வெறும் கருவியாக மட்டும் இல்லை. கிளர்ச்சிகள் பலவும், நெஞ்சத்து அடிவாரத்தில் ஆழப் பதிந்துள்ள அடிப்படைக் கொள்கைக்கு உடனடியான வெற்றியைத் தந்திடுவதில்லை - பெரும்பாலும், ஆனால், அவை யாவும் நாட்டு மக்களை, கிளர்ச்சி நடத்துவோர் காட்டிடும் அடிப்படைக் கொள்கையிடம் ஈர்த்திடும் வெற்றியை - மறைமுக வெற்றியைப் பெற்றளிக்கிறது. மேய்ச்சல் வரி எதிர்ப்புக் கிளர்ச்சி, உப்பு வரி ஒழிப்புக் கிளர்ச்சி, மேனாட்டுப் பொருள் ஒழிப்புக் கிளர்ச்சி, மது ஒழிப்புக் கிளர்ச்சி, வரிகொடா இயக்கம், சட்ட மறுப்புக் கிளர்ச்சி, ஒத்துழையாமைக் கிளர்ச்சி, ஆங்கிப் படிப்பு அகற்றும் கிளர்ச்சி என்பனபோன்ற கிளர்ச்சிகள், நடத்தப்பட்டவர்களால், நடத்தப் பட்ட நேரத்தில், உடனடி வெற்றி பெறும் என்று வாக்களிக்கப் பட்டதென்றாலும், கிடைத்தது உடனடி வெற்றி அல்ல; இத்தனை கிளர்ச்சிகளும், கிளர்ச்சி நடத்தியோர் கொண்டிருந்த அடிப்படை நோக்கத்துக்கு - நாட்டு விடுதலைக்கு - வழி கோலின - மக்களை அதற்குத் தக்க பக்குவ நிலை பெறச் செய்தன. ஆனால், எந்த ஒரு கிளர்ச்சிக்கான காரணத்துக்காகவும், தொடர்ந்து, விடாமூச்சாக, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முறையில் கிளர்ச்சிகளை நடத்தினார் இல்லை. எடுத்துக்காட்டுக்குக் கூறுவதென்றால், அந்நியத் துணி எரிப்புக் கிளர்ச்சி அந்நியத் துணி அறவே தடுக்கப்பட்டுவிடும் வரையில், தொடர்ந்து நடந்துவரவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டம் சென்ற பின்னர், தாம் விரும்பும் அடிப்படைக் கொள்கை வெற்றிக்கான ஆக்கமும் ஊக்கமும் கிடைத்திருக்கின்றன என்று தெரிந்த பிறகு, கிளர்ச்சியை நிறுத்திக்கொண்டனர். பிரச்சினை வடிவிலேயும் கிளர்ச்சி வடிவிலேயும் தமிழ்ப் பெருங்குடி மக்களிடம் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாகவும், விறுவிறுப்புடன் கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும், இருந்து வருவது, தமிழ்மொழிபற்றிய பிரச்சினையேயாகும். இதிலே, வேறு எதிலும் கிடைத்திடாத அளவிலும் முறையிலும் நேரடியான பலன்கள் கிடைத்துள்ளன. இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கிய கொடுமை யையும் கண்டோம்; இது மடமை என்று கூறித் தமிழர் எதிர்த்து நின்று கிளர்ச்சி நடத்தியதும் கண்டோம். இன்று? கொட்டு முழக்குடனும், கொடி கோலமுடனும், எனைத் தடுக்க எவருக்கும் ஆற்றல் இல்லை, உரிமை இல்லை! என்ற ஆர்ப்பரிப்புடன் படை எடுத்து வந்த இந்திமொழி, அடங்கி ஒடுங்கி ஒருபுறம் ஒதுங்கி நின்று, வெள்ளாட்டியாகி நான் வேலை பல செய்யவல்லேன்! என்று நயந்து பேசி, நுழைவிடம்பெறக் காண்கிறோம். அரசியல் சட்டத்தில் கண்டுள்ளபடி ஈராண்டு முடிந்ததும் இந்தியே எல்லாம், இந்தியே எங்கும், ஆங்கிலம் ஆட்சி மொழி யாக நீடித்து நிற்க இயலாது. இதுகண்டு வெகுண்டு, மனம் குமுறி, கட்சிகளை, முன்பின் தொடர்புகளை, நிலைகளை, நினைப்புகளை எல்லாம் கடந்து, தமிழகத் தலைவரெல்லாம் ஒன்றுகூடி, ஒரு பெரும் முயற்சி செய்ததாலே, அரசியல் சட்டத்தில் தக்கதோர் திருத்தம் செய்து, இந்தி ஆதிக்கம் தடுத்திட, வழி கிடைத்துள்ளது. பகைவன் உள்ளே நுழைந்ததும் கொள்கை வேறுபாடு மறந்து ஒன்று திரண்டு வாரீர், பகை முடிப்போம்! பழி துடைப்போம்! என்று பண்டித ஜவஹர்லால் நேரு, கனிவுரை யாற்றினார் - அத்துடன், ஓர் அறிக்கை மூலம், இந்தி திணிக்கப்பட மாட்டாது. ஆங்கிலம் நீடித்து வரும். இந்தியினைத் தாய்மொழியாகக் கொண்டிராத மக்கள், எவ்வளவு காலத்துக்கு ஆங்கில மொழி இருத்தல்வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவ்வளவு காலம் ஆங்கில மொழி இருக்கும் என உறுதி அளிக்கிறேன் என்று தெளிவளித்தார், தேன் பெய்தார். இதுபோல, வேறெந்தக் கிளர்ச்சிக்கும் நேரடி வெற்றி உருப்படியாகக் கிடைத்ததில்லை. எனினும், இதுவும்கூட நிலைத்து நிற்கும் வெற்றி எனக் கொள்வதற்கில்லை, மாயமானாகிப் போகலாம். எதற்கும் விழிப்புணர்ச்சியுடன் இருத்தல்வேண்டும் என்ற நிலை தமிழரிடம் காண்கிறோம். இன்று இந்திமொழி ஆதிக்கம் செயக்கண்டு, திரண் டெழுந்து நின்றுள்ள தமிழர், பின்னர் ஓர் நாள் அயர்ந்துவிடக் கூடும், அணி கலையக்கூடும், அதுபோது, இது தக்க சமயம் என, ஆதிக்கம்தனைச் செலுத்த இந்தி அம்பாரி மீதமர்ந்து வரக்கூடும். இன்னும் ஓர் ஈராண்டில் இந்த நிலை வந்திடாதபடி தடுக்க, அரசியல் சட்டத்தைத் திருத்திடவும் ஒருப்படுகின்றனர், தமிழரிடை இதுபற்றி மலர்ந்து காணப்படும், பெருமை மிகு எழுச்சி காரணமாக, சில ஆண்டுகள் கழித்து, தமிழர் சிந்தை திரிந்து, செயல் மறந்துபோவரேல், அரசியல் சட்டத்திலே புகுத்தப்படும் திருத்தம் நீக்கப்பட்டுவிடக்கூடும். அரசியல் சட்டம், திருத்தப்படக்கூடியது. எனவே, எதையும் நீக்கவும் எதனையும் நுழைக்கவும், குறைக்கவும் வாய்ப்பு உளது. எனவே, என்றென்றும், எந்நிலையிலும், தமிழ்மொழிக்கு ஊறு நேரிடா வழி காணவேண்டும், எனும் எண்ணம் எழுகிறது. தமிழ் மொழிக்குக் கேடு செய்திடும் நிலையில் ஓரிடம் இருத்தல் எற்றுக்கு என்ற கேள்வி எழுகிறது! அரசியலில் மிகப் பெரிய அடிப்படைப் பிரச்சினை பிறந்துவிடுகிறது. இந்த விந்தைமிகு உண்மையினை உணர்ந்தனையா, தம்பி! அரசியல் கட்சிகள் தமக்கு ஆளும் வாய்ப்பு கிடைத்திடக் கிளர்ச்சிகள் நடத்துகின்றன; அறிகின்றோம்; ஆனால், தமிழ் மொழி பாதுகாப்புக்கான உணர்ச்சியும், அந்த உணர்ச்சியின் காரணமாக எழும் கிளர்ச்சியும், ஒரு புதிய அரசியல் கருத்தையும், அந்தக் கருத்து வெற்றி பெறுதற்காக ஓர் அமைப்பையும் பிறப்பிக்கச் செய்திருக்கிறது! தம்பி! சந்தன மரம், பயிரிட்டு வளர்க்கப்படுவதல்ல. காட்டிடைக் கவினுற விளங்கிடும் மணம்தரு சந்தன மரங்களி லிருந்து உதிர்ந்திடும் விதைகளைப் பறவைகள் ஏந்திச் சென்று தூவிடும் இடங்கள்தன்னில் செடிகள் முளைத்து, செழுமையாய் வளர்ந்து, புலவோர் பாடி மகிழ்ந்திடும் தென்றலெனும் பெண்ணாள் பெற்றிட மணமளிக்கும் சந்தன மரமாகிறது! அஃதேபோன்றே, ஏற்புடையதாக மட்டுமல்ல, உயிர்ப்புச் சக்தியுள்ளதாகவும் ஓர் கருத்து இருக்குமானால், அக்கருத்துக் காக ஆயிரம் அமைப்புகள் ஏற்பட்டுவிடும், அழிக்கப்பட்டது போக மற்றது கருத்தைத் தாங்கி நிற்கும், எல்லாம் அழிந்து போயினும், எங்கோ ஓரிடத்தில், ஏதோ ஓர் பறவை, எப்போதோ தூவிய விதை முளைவிட்டுச் செடியாகி நிற்கும். தமிழ்மொழி, வித்து முளைத்திடும் செடி கொடியும், மலர்ந்திடும் பூக்களும், குலுங்கிடும் கனிகளும், பலப்பல. எனவேதான் தம்பி! வித்து அழியாது பாதுகாக்கும் கடமையினைத் தமிழர் என்றென்றும் செய்திட முனைந்தபடி உள்ளனர். சந்தனத்தருவிலுள்ள நறுமணம் எடுத்துப் புதுமணம் பெற்றிடப் பல பொருள் உண்டு, கண்டோம்; ஆனால், எம்மணம் பூசி மற்றோர் தருவினைச் சந்தனத் தருவாக்கிக்கொள்ள இயலும்? மணம் தரச் சந்தனமும், சுவைதர மாவும், வலிவளிக்கத் தேக்கும், வண்ணப் பூக்கள் அளிக்கச் செடி கொடியும், நெல்லளிக்கப் பயிரும், காய்கறி அளிக்கச் சிலவும் உண்டு! ஒன்றை மற்றொன்று ஆக்கல், இயலாத ஒன்று ஆகும்! ஒன்று தருவதை மற்றொன்று தர இயலாது - இயற்கை அது. விருப்பம் எழலாம் அதுபோல! விந்தை புரிந்திட எண்ணம் கூட முளைத்திடும், சிற்சிலர்க்கு! மரம் குலுக்கி நெல் உதிர்க்கச் செய்வோம்! பயிர் பறித்துச் சந்தன மணம்பெற்று மகிழ்வோம்! தேக்கினில் வண்ணப்பூவும், மாவினில் வாழை பலாவும் பெற்றிட விந்தை முறை காண்போம் என்று பேசலாம்; மகிழ்ச்சிபெற! ஆனால் இயற்கையை அடியோடு மாற்றிட இயலாதன்றோ? எனவேதான், தமிழ் தந்திடுவன, பிறமொழி தந்திடா! தமிழர் கொண்டிடும் பண்பு, பிறரிடம் புகுத்தலாம், பூத்திடாது! எனவேதான், தனித்தன்மைகொண்டோர் நாங்கள் எனக் கூறுகின்றோம். எரிபொருள் ஆகத்தக்க தருக்களே, யாவும்; ஆனால், நறுமணம் தரவல்லது சந்தனம் ஒன்றே ஆகும்; அஃதேபோலப் பயன்தர மொழிகள் உண்டு, மணம்பெறத் தமிழே வேண்டும் என்கின்றோம். பிறமொழி ஆதிக்கத்தால், பொருளாதாரத் தாழ்நிலையால், எதையும் உரிமையுடன் செய்திடும் அரசியல் உரிமை பெறாதாராய் இருக்குமட்டும், தமிழர் கண்ட மணம்கமழ் உயர் தனிப்பண்பு தன்னை உலகுக்கு ஈந்து, உலகிலே குவிந்துள்ள கருத்துச் செல்வத்தை மேலும் பெருக்கிடும் சீரிய செயலில் பெற்றி கிடைத்திடாது. எனவேதான், மொழி வளர்ச்சி என்பதுடன் அரசியல் விழிப்புணர்ச்சியும் கலந்து, தி. மு. கழகமாக வடிவமெடுத்திருக்கிறது. மக்களாட்சி முறையே, மக்களின் வாழ்வுக்கு இன்ப ஒளி அளிக்கவல்லது என்பதனால், அம் முறையைப் போற்றுகிறது. அரசியல் கருத்து வளர்ச்சிபற்றிய வரலாற்றினைப் பார்த்தால், தம்பி! இந்த மக்களாட்சி முறை ஏற்பட எத்தனை பாடுபடவேண்டிய இருந்தது, கொடுத்த பலி எத்துணை என்பது விளங்கும். எனினும், எழு ஞாயிறு எனக் கிளம்பிற்று மக்களாட்சி, ஆந்தைகள் அலறி ஓட, வௌவால்கள் பறந்து பதுங்க!! பாம்பெது பழுதெது, கனி எது காய் எது, தளிர் எது சருகு எது, மேடும்பள்ளமும் எவை எவை, தொழிலிடம் எது, ஆங்கு செல்லப் பாதை எது - எனும் பொருளின் பாங்கறியும் திறன் மக்கட்கு அளிப்பது ஒளியாகும் - பேரொளிப் பிழம்பே ஞாயிறு! ஞாயிறு! இல்லையேல் ஞாலம் இல்லை! பொருளின் பாங்கினை நாம் உணர்ந்திட ஒளி அளிக்க வல்லது ஞாயிறு, எனினும், பொருளின் அமைப்பினைத் திருத்திடவோ, பாங்கினைக் கூட்டிடவோ நாமே பணியாற்ற வேண்டும். மலைமுகடு மாறாது, மடுவு மேடாகாது, மலராது சருகுதானும். ஞாயிற்றின் ஒளியினாலே! இவை இவை இன்ன விதம் என்பதனை எடுத்துக்காட்டும்; அவற்றினின்றும் பயன் பெறப் பணியாற்றிடவேண்டும், மாந்தர் கூட்டம்! அரசியல் துறைக்கு, மக்களாட்சி என்பது எழுஞாயிறு எனலாம். நாடுள்ள நிலைதன்னை நாம் அறிந்துகொள்ள வழிகாட்டி நிற்பது, மக்களாட்சி முறைதான். ஞாயிறு கண்டதும் தாமரை மலரும் என்பர்; மக்களாட்சி முறை வென்றதும், மக்களிடை மகிழ்ச்சி மலரும். கதிரவன் ஒளியில் துணைகொண்டு, அவரவர் தத்தமக் கென்றுள்ள அலுவல்களில் ஈடுபட்டுப் பயன்பெறுதல்போன்றே, மக்களாட்சி முறை அளிக்கும் வாய்ப்பினைத் தக்கபடி இயங்கச் செய்து, நாட்டுக்குப் பொதுவான செம்மை கிடைத்திட செய்தல் வேண்டும். ஞாயிறு எழுந்ததும், ஏர் தன்னாலே நடக்காது, சக்கரம் தானாகச் சுழலாது; இயக்குவிப்போன் சுறுசுறுப்பு அதற்குத் தேவை, அதற்கான உயிரூட்டம் தருபவன் கதிரோன். "பொலபொல எனஇருள் புலரும் வேளை கலகல வெனக் கரைந்தன புட்கள் கொண்டையை அசைத்துக் கூவின சேவல் தண்டையை இசைத்துத் தளிருடல் குலுக்கி மெல்லிடை துவள வெண்குடம் ஏந்தி அல்லியங் குளத்தினை அடைந்தனர் மடந்தையர்.’’ அமரன் என்பாரின் கவிதையில் ஒரு பகுதி இது. புரட்சிக் கவிஞர் முன்பு பாடினாரல்லவா? காலை மலர்ந்தது மாந்தரெலாம் கண்மலர்ந் தேநட மாடுகின்றார் என்று; அந்த நடமாடத்தின் ஒரு பகுதி காண்கின்றோம்; ஆனால், அல்லிக் குளத்தருகே ஆரணங்கைக் கண்டதனால், எல்லாம் உள்ளதுகாண் என்றிருத்தல் முறையாமோ! இல்லை; எனவே, தொழில் நடக்கிறது. "வயல்புறம் நோக்கி மாண்புடை உழவர் செயல்திறம் காட்டச் சென்றனர் ஏருடன் நிலாத்திகழ் மேனி நெடுநடை ஏறுகள் விலாப்புறம் அசைவுற விரைந்தன செருக்குடன்’’ எனவே, கதிரவன் கிளம்புவது ஒளியூட்டி உயிரும் எழிலும் ஊட்டமட்டும் அல்ல, கமலத்தைச் சிரிக்க வைத்து, கன்னியரைப் போட்டியிட வைத்திட மட்டுமல்ல, தொழில் நடத்தப் புறப்படுவீர்! என்று அறிவுறுத்த, ஆணையிடவுமாகும். மக்களாட்சி எனும் முறையும், இருட்டறையாக வைக்கப் பட்டுள்ள அரசியல் துறைக்கு ஒளியூட்டி, உயிரூட்டி, எழிலூட்டி, அம்மட்டோடு நின்றுவிடுவது அல்ல. பொறுப் புணர்ந்து செயல்படுமின்! என்று ஆணையும் பிறப்பிக்கின்றது. இதனை உணர்ந்திடவும் இவ்விழா, பயன்படட்டும். ஒளிதரும் ஞாயிறு வெப்பம் மிகுதியாகக் கக்கிடும் போக்கும் உண்டு. அஃதேபோல மக்களாட்சியிலேயும், உரிமை மறுத்தல், உருட்டி மிரட்டுதல்போன்ற ஆகாச் செயல்களும் முளைப்பதுண்டு! அவையாவும் களைகள் - பயிர் அல்ல! காலமறிந்து களைகளை நீக்கிடல்வேண்டும்; நீக்குங்காலை களையினைப் பறித்தெடுத்திடும் வேகம் தன்னில், பயிர் அழித்திடக்கூடாது. மக்களாட்சியிலும் சிலபல கேடுகளும் கொடுமைகளும் ஏற்பட்டுவிடுகின்றன என்றாலும், அவைகளை நீக்கிடும் உரிமையும் போக்கிடும் வாய்ப்பும் மக்கட்குக் கிடைக்கிறது. எனவே இன்று நடைபெறும் போர், உரிமையின் மாண்பதனை நாம் உணர்ந்து போற்றுகிறோம், எந்த வலிவாலும் இதனை வீழ்த்திடுதல்கூடாது என்ற உண்மையினை, உலகறியச் செய்கின்றோம் என்பதற்கும் சேர்த்துத்தான். பற்பல நாட்டு வரலாறுகளிலே, மமதை மிக்க மன்னர்கள் பற்றிப் படிக்கிறோம். கொலையைக் கூசாது செய்து, கொடி வழியை அறுத்தெறிந்து விட்டுக் குறுக்கு வழி நுழைந்து கொற்றம் கைப்பற்றினோர். காமக் களியாட்டத்துக்கெனவே நாட்டிலுள்ள கன்னியர் உளர் என்ற கேடு நிறை கருத்துடன் இருந்திடும் போக்கினர், எனப் பல படித்திருக்கிறோம். முறையும் தெளியும் தொடர்பும் மிக்கதான வரலாறு தொகுத்தளிக்கப்படவில்லை என்றாலும், கிடைத்துள்ளனவற்றைக் கொண்டு பார்த்திடும்போது, தமிழகத்துக் கோனாட்சிக் காலத்திலே, மன்னர்கள் மக்களை மருட்டியும், மாண்புகளை மாய்த்தும் வாழ்ந்தனர் என்பதற்கான அறிகுறிகளே இல்லை. அரபு நாட்டுப் பெருமன்னர்கள்போல், அழகிகளையே மலரணையாக்கிக்கொண்டு, உருண்டு கிடந்த பெருமன்னர்கள் இங்கு இருந்ததில்லை. வேறு பல நாடுகளிலே இருந்ததுபோல, மக்களின் சொத்து யாவும் மன்னனின் மகிழ்ச்சிக்காக என்று கூறி மக்களைக் கசக்கிப் பிழிந்து, பெரும்பணம் திரட்டி, பளிங்காலானா நீரோடை கொண்டதும் பொன் முலாம் பூசப்பட்ட மாடங்கள் கொண்டது மான அரண்மனைகளை எழுப்பிக்கொண்டு, மதோன்மத்தர் களாக, வாழ்க்கை நடாத்திய மன்னர்கள் இங்கு இருந்ததில்லை. ரோமானிய மன்னர்களின் கோலாகல வாழ்க்கை பற்றிய குறிப்புகளைக் காணும்போது, இப்படியும் மக்கள் கொடுமையைத் தாங்கிக்கொண்டிருந்தனரா என்று கேட்கத் தோன்றும். கட்டழகி கண்டு களித்திடக் கட்டிளங் காளையை முதலைக்கு இரையாக்கி, அவன் உடலை முதலை பிய்த்தெறியும் போது, பழச்சுளையைப் பெயர்த்தெடுத்து, அவள் அதரம் சேர்ப்பிப்பதும், முதலையினால் கிழித்தெளியப்படுவோனுடைய குருதி குபுகுபுவெனக் கிளம்பிச் செயற்கை ஓடை செந்நிறமாகிடும் வேளை, இரத்தச் சிவப்பான போதைப் பானத்தைத் தங்கக் குவளையில் பெய்து, தளிர்மேனியாளுக்குத் தருவதுமான இன்ப விளையாட்டில் ஈடுபட்டிருந்த சில ரோமானிய மாமன்னர்கள் போன்று இங்கு ஒருவரும் இருந்ததில்லை. மக்களிடம் குருட்டறிவு இருக்கும்படியான ஏற்பாட்டி னைத் திறமையுடன் செய்து வைத்துக்கொண்ட, அம் மன்னர்கள், தம்மை "வழிபடத் தக்கவர்கள்’ என்ற நிலைக்கு உயர்த்திக்கொண்டு, பிறர் கேட்டாலே கூசத்தக்க தீச்செயல்களை நிரம்பச் செய்து வந்தனர். "தங்கள் மருமகன், பெற்ற வெற்றி மகத்தானது, மாமன்னா! மக்கள் அவரைக் காணவும் கோலாகல விழா நடத்தவும் துடித்தபடி உள்ளனர். . .’’ "அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனரா மக்கள்! சென்ற ஆண்டு நான் பன்னீர்க் குளத்துக்குச் சென்றேனே குளித்திட, அப்போது திரண்டு வந்ததைவிடவா அதிக மக்கள் திரண்டு வந்தனர். . . அவனைக் காண!’’ "ஆமாம்! மிகப் பெரிய கூட்டம். . .’’ "தளபதி எங்கே?’’ "வரவேற்பு ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றிருக் கிறார்.’’ "அவனும், அப்படியா! உம்! சரி! துணைத் தளபதி எங்கே?’’ "அவர் எங்கு இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. . . ஆனால் இன்று அவர், அழகு மிகப் படைத்த ஒரு தெருப்பாடகியைக் கண்டு சொக்கிப்போய் உடனே அவளைச் சீமாட்டியாக்கி, சல்லாபம் நடத்துதற்கு என்றே அவர் புதிதாகக் கட்டிமுடித்த, உல்லாசக் கூடம் அழைத்துச் சென்றார். . . அங்குதான் இப்போது அவர். . .’’ “அவன் எப்போதும், வாழத் தெரிந்தவன். ஆனால், ஆயிரம் களியாட்டம் நடத்தினாலும்,”ராஜபக்தி’ மட்டும் எப்போதும் மிகுதி அவனுக்கு. அவனை உடனே கண்டு தலைநகரின் தலைவாயிலில் என் மருமகன் நுழைந்ததும், சிறைப்படுத்தி, காட்டுக் கோட்டையில் அடைக்கச் சொல்லு. தளபதி குறுக்கிட்டால், இவனே தளபதி! நீ அக்கணமே துணைத் தளபதி!! என் மருமகன் செய்த குற்றம், எதிரி நாட்டவரிடமிருந்து ஏராளமான பொன் பெற்றுக்கொண்டது. ஆதாரம், உளவர் தந்துள்ள அறிக்கை. புறப்படு! போகும் வழியிலே, உளவர் தலைவரைக் கண்டு, பெரும்பொருளை எதிரிநாட்டவரிடம் என் மருமகன் பெற்றதற்கான ஆதாரம் தயாரித்துக் கொண்டுவரச் சொல்லு. . .’’ "தங்கள் மகள். . .’’ "எனக்குத்தான் நீண்ட காலமாகவே சந்தேகம் உண்டே அவள் என் மகள்தானா என்பதில். . .’’ இப்படிப்பட்ட உரையாடல், அந்த நாட்களில், மன்ன ராட்சியிலே நடைபெறும். தமிழகத்தில் இதுபோன்ற மனித மிருகங்கள் இருந்ததில்லை. இந்த மண்ணிலே அத்தகைய நச்சுச் செடிகள் முளைப்பதில்லை. கொடுங்கோலர்கள் மிகுந்திருந்த நாட்களிலேயே, இங்கு இருந்துவந்த கோனாட்சியையே, குடிக்கோனாட்சியாக்கி வைத்தவர் தமிழர் என்றால், குடியாட்சி முறை ஏற்புடையது, எங்கும் நிலவிடவேண்டியது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் இந்நாட்களிலே, மக்களாட்சி முறையினை மாண்புள்ளதாக்கும் பொறுப்பேற்கத்தக்கவர்கள் தமிழர் என்று கூறுவதிலே தவறில்லையே. தமிழர் நெறி, கூடி வாழ்தல், கேடு செய்தல் அல்ல. தமிழர் முறை, கருத்தறிந்து காரியமாற்றுதல், கத்தி முனையில் கட்டளை பிறப்பிப்பது அல்ல. தூய்மை நிறைந்த மக்களாட்சிமுறை, தேவைப்படும்போது, பொது நோக்கத்துக்குத்தான் கட்டுப்படுமேயன்றி, கட்சிக் கொடி களுக்கு அன்று. அங்ஙனமாயின் கட்சிகள் பலப்பல ஏன், தனித்தனிக்கொடிகள் ஏன் என்று கேட்கப்படுகிறது. இது எரிகிற வீட்டிலிருந்து எடுத்தவரையில் இலாபம் என்ற போக்கே யன்றி, வேறில்லை. ஒரு பொது நோக்கத்துக்காகப் பாடுபடும் மாண்பு, மக்களாட்சிக்கு உண்டு என்பதாலேயே எல்லாவற்றையுமே கூட்டிக் கலக்கி ஓருருவாக்கி பேருருவாக்கிவிட எண்ணுவது பேதைமை மட்டுமல்ல, கேடு விளைவிக்கும். மலர்களை உதிர்த்து இதழ்கள் குவித்திடலாம் - இதழ் களைக் குவித்து, புதிய பூக்களை மலரச்செய்திட முடியாது. மலர்களைத் தொடுத்து மாலைகளாக்கலாம் - செடிகள் மாலை மாலையாகவே ஏன் தந்துவிடக்கூடாது என்று எண்ணுவது, வேடிக்கை நினைப்பன்றி வேறில்லை. தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டச் சொன்னார் சான்றோர்; தனித்தனி கனிகளே கூடாது என்றார் இல்லை. நமக்குச் சில வேளைகளிலே ஆவல் ஏற்படும்; விந்தையான எண்ணங்களெல்லாம் எழும். வாழைப்பழம்போல உரித்திட எளிதான தோல்கொண்ட தாகவும், பிசின் இல்லாத முறையில் பலாப்பழச் சுவைகொண்ட சுளைகள் கொண்டதாகவும், அதுபோட்டுக் குதப்பத்தக்கதாக இல்லாமல், மென்று தின்னத்தக்கதாகவும், அந்த அருங்கனியும் ஏறிப்பறித்திடவேண்டிய உயரமுள்ள மரங்களில் இல்லாமற் படரும் கொடியிலேயே இருந்திடவும்வேண்டும்; அக்கொடியும் விதையிட்ட மறு திங்கள் கனி தந்திடவேண்டும், கனி தந்த களைப்பினாலே மடிந்திடவும்கூடாது, நீண்ட காலம் கனி தந்தபடி இருக்கவேண்டும்; தானாகவே முளைகள் கிளம்பிட வேண்டும்; மழையும் பனிநீரும்கொண்டே பிழைத்திருக்க வேண்டும், என்றெல்லாம் எண்ணிக்கொள்ளலாம் - விந்தை நினைப்பிலே ஒரு தனிச்சுவை உண்டல்லவா! தம்பி! இயற்கையின் முறையினை உணர்ந்திடும் நாளாகவும் பொங்கற் புதுநாளைக் கொண்டிடுதல்வேண்டும் - இஞ்சியும், மஞ்சளும், அவரையும் துவரையும், அரிசியும் பிறவும் உள்ளனவே, இவை பேசுவது கேட்கிறதா! ஒவ்வொன்றும் தன் "கதை’யைச் சொல்லப்போனால், காவியங்கள் தலை கவிழும் வெட்கத்தாலே - அவ்விதம், புறப்படு படலம், பகை காண் படலம், காப்புப் படலம் எனப் பல உள, அவை ஒவ்வொன்றுக்கும். மிக அதிகமான அளவு மக்கள்பற்றி அறிந்துகொள்ளவே, நேரத்தையும் நினைப்பையும் செலவிட்டுவிட்டதால், இந்தப் "படைப்புகள்’ கொண்டுள்ள சிந்தை அள்ளும் கதையினை நாம் அறிந்துகொள்ள முயலுவதில்லை. எல்லாம் நெல் எனினும், ஒவ்வோர் வகைக்கு ஒவ்வோர் காலம் தேவைப்படுகிறது. குறுவைக்குப் போதுமான நாட்கள் கிச்சிலிச் சம்பாவுக்குக் காணாது! ஒருவகை நெற்பயிர் நீந்தியபடி இருக்க விரும்புகிறது, வேறு சில வகைக்கு நீர் தெளித்துவிட்டால் போதும் திருப்தி அடைந்துவிடுகிறது, சிலவகை ஏற்றுக் கொள்ளும் உரத்தை வேறு சில வகையான நெற்பயிர் ஏற்றுக் கொள்வதில்லை. நாம், நெடுங்காலமாக, இவருக்கு எந்தப் பண்டம் பிடிக்கும், அவருக்கு என்ன பானம் தேவை என்பது பற்றியே பேசி வருகிறோம், நம்மை வாழ வைக்கும் “படைப்புக’ ளான இப்பயிர் வகைகளின், விருப்பு வெறுப்புப்பற்றி அறிய முனைந்தோமில்லை. ஏன்? வயலருகே சென்றவர்கள் நம்மில் அநேகர் அல்ல! செல்லும் சிலரும்”அறுவடை’ காணச் செல்லும் ஆர்வத்தை மற்றபோது காட்டுவதும் இல்லை. ஒவ்வோர் விளைபொருளும் ஒவ்வோர் வாழ்க்கை முறை கொண்டுள்ளது. அறிந்துகொள்ளும் முயற்சி சுவையளிக்கும். ஆனால், நாமோ, அவைகளினால் கிடைக்கும் பயனைப் பெறவும், அதற்கான பக்குவம் காணவும் முயல்கிறோம், அதற்காகத் துணிந்து எதனையும் செய்கிறோம், நாம் பிழைக்க. எத்துணை உயரத்தில், எவ்வளவு பாதுகாப்பு அமைத்துக் கொண்டு, தென்னை இளநீர்க் காயைக்கொண்டிருக்கிறது! விடுகிறோமோ? நம்மாலே முடியாது போயினும் பிறரைக் கொண்டேனும் பறித்துவரச் செய்து, மேலே உள்ளதைச் சீவி எடுத்துவிட்டு, அதற்கு அடுத்து உள்ளதை உரித்து எடுத்து விட்டு, அதற்கும் பிறகு உள்ள ஓட்டினை உடைத்து உள்ளே இருக்கும் இளநீர் பருகி இன்புறுகிறோம். மதில்சுவரின் மீதேறிச் சென்று, உள்ளே நுழைந்து, பெட்டியைக் களவாடி, அதன் பூட்டினை நீக்கித் திறந்து உள்ளே உள்ள பொருளைக் கண்டு களித்து எடுத்தேகும் களவாடுவோனைப் பற்றி, நாம் என்ன எண்ணுகிறோமோ, அதுபோலத் தான் நம்மைப்பற்றி, தென்னை எண்ணுகிறதோ என்னவோ! இந்தப் படைப்புகளிலே தம்பி! சில பிஞ்சிலே மட்டும் சுவைதரும், சில கனிந்த பிறகே பயன் அளிக்கும், சிலவற்றை உதிர்த்தெடுக்கவேண்டும், சிலவற்றைப் பறித்தெடுக்கவேண்டும், இவை நாம் அவைகளைப் பயன்படுத்தும் முறைகள். அது போன்றே, இவை வாழ, வளர. ஒவ்வொன்றுக்கென அமைந்திருக்கும் வெவ்வேறு முறைகள் பற்றி அறிந்திடும்போதுதான், இயற்கை எனும் பல்கலைக் கழகத்திலே நாம் கற்றுணர வேண்டிய பாடங்கள் பல உள; கற்றோம் இல்லை; என்ற தெளிவு பிறக்கும். இத்தனை வகையான வாழ்க்கை முறை மேற்கொண்டு, இத்தனை விதமான வடிவங்களைக்கொண்டு, இப்பொருள் இருப்பானேன்; எல்லாம் உண்ணும் பொருட்களன்றோ, ஏன் இவை இத்தனை வகை வகையாய் இருப்பதனைத் தவிர்த்து, இவற்றின் சுவை யாவும் பயன் யாவும் நன்றாகக் கூட்டி, ஓருருவாகி விளைந்து நமை மகிழ்விக்கக்கூடாது! - என்ற எண்ணம் கொண்டால், என்ன பலன்? அந்த எண்ணத்தை மிக அதிகமாக்க, வலியுறுத்தத் தொடங்கினால் “நல்ல மனிதன்! நன்றாகத்தான் இருந்தான்! எப்படியோ இப்படி ஆகிப் போனான்!’’ என்று கூறுவாரேயன்றி,”இவனோர் விற்பன்னர்! வேறு வேறாய் உள்ள பொருள் அத்தனையும் ஒரு பொருளாகிடவேண்டுமென்று விழை கின்றான்’’ என்று கொண்டாட மாட்டார்கள். இயற்கை விளைவிக்கும் படைப்புகள் போன்றே, எண்ண மெனும் கழனியிலும் எத்தனையோ விளைகின்றன! அவற்றின் பயன் யாவும் கண்டறிந்து எடுத்துச் சுவை பெறல், அறிவுடைமை. கருத்துக்கள் பல மலர்வது, பல பண்டங்களை இயற்கை தருவதுபோன்றதாகும். அவை வெவ்வேறு முறைகள் கொண்டனவாய் இருப்பினும், முடிவில் ஒரு பயனே பெறுகின்றோம். அந்தப் பயன்பெறும் முறையிலே தான் செம்மை தேவை; படைப்பின் முறையில் அல்ல! தம்பி! இயற்கையோடு அளவளாவ, நமக்கெல்லாம் நேரமுமில்லை, நினைப்புமில்லை, நகர வாழ்க்கையும் நாகரிகப் போக்கும் இயற்கையின் கோலத்தையே மாற்றிடச் செய்து விட்டன. பழந்தமிழர் அதுபோல் இருந்திடவில்லை; புலவர்களின் கண்கள் இயற்கையைத் துருவித் துருவி ஆராய்ந்தன; சங்ககாலப் பாக்களில், எத்தனை பூக்களைப்பற்றிய செய்தி அறிகிறோம், அன்று அவர் ஆக்கிய கவிதைகளினால், காவும் கனியும், கரியும் கடுவனும், அருவியும் அளிவண்டும், இன்றும் நமக்குத் தெரிகின்றன. மாத்தின் இளந்தளிர் வருட வார்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயல் கண்டனர்; கவி சுரந்தது. நீர் வளமிக்க வயலோரம் உள்ள மாமரத்தின் தளிர் தடவிக் கொடுக்க, நாரை இனிது உறங்குகிறதாம்! கழனிக் கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து பழன யாமை பசுவெயில் கொள்ளும். பாங்கினைப் பார்க்கிறார் புலவர். நன்செய் நிலத்தில் விளைந்துள்ள கரும்பின் வழி ஏறிக் காலை இளவெயிலில் ஆமை காய்கிறதாம். இரவெல்லாம், பாவம், நீர் நிரம்பிய இடத்திலிருந்ததால், உடலுக்கு வெப்பம் தேவைப்படுகிறது; இளவெயிலில் காய்கிறது, ஆமை! தம்பி! கவனித்தனையா, புலவர் தந்துள்ள கருத்துள்ள பதம் ஒன்றை - காலை வெயில் என்று கூறினால் இல்லை - வெயிலில் என்று சொன்னாரில்லை - பசு வெயில் என்கிறார் - செல்லமாக! ஆமை, வெயிலிலேயே நீண்டநேரம் இருக்கப் போவ தில்லை - ஏன்? என்கிறாயா, தம்பி! புலவர் கூறுகிறாரே புரியவில்லையா? எங்கே கூறினார் அதுபோல என்கிறாயா? அப்பொருள், அவர் கூறியதிலே தொக்கி இருக்கிறது. கரும்பின் மீது ஏறி அல்லவா ஆமை பசு வெயில் கொள்கிறது! கரும்பின்மீது எப்படி ஆமை அதிக நேரம் இருந்திட இயலும். உழவன், அப்பக்கம் வந்துவிடுவானன்றோ! மாந்தளிர் தடவிக்கொடுக்கத் துயில்கொள்ளும் நாரை! கரும்பினில் ஏறிப் பசுவெயில்கொள்ளும் ஆமை! உறங்கும்நிலை! விழித்து நடமாடி உடலுக்கு வெப்பம் பெறும் நிலை. நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம் அடுப்பு அமர்எக்கர் அம்சிறை உலரும்! உப்பங்கழியிலே மீன் தேடி உண்ட அன்னம், அடும்பங் கொடி படர்ந்திருக்கும் மணல்மேட்டில் ஏறித் தன் சிறகை உலர்த்திக் கொள்கிறது. ஏறக்குறைய நீராடிவிட்டு வந்து உடலை உலர்த்திக் கொள்வதுபோன்றது. இதுபோல், இயற்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தால், எழில் கண்டு இன்புற மட்டுமல்ல, பயன் பெற்றிடவும், இயற்கையின் பொருள் விளக்கிக்கொள்ளவும் முடிந்தது, பழந்தமிழர்களால். கருணானந்தம் தந்துள்ள கவிதை காட்டுதல்போல், "உலகம் வியக்க நிலவிய புகழும், கழகம் வளர்த்த பழந்தமிழ் மொழியும் அறநெறி பரப்பும் குறள்முறை தழுவிப் பிறரைப் பணியாத் திறலும் படைத்த தன்னேர் இல்லாத் தமிழக உழவர் பொன்னேர் பூட்டிச் செந்நெல் விளைத்தே ஆண்டின் பயனை அடைந்திடும் பெருநாள்; தூண்டிடும் உவகையில் துள்ளிடுந் திருநாள்!’’ பொங்கற் புதுநாள் என்பதால், இந்நாளில் மகிழ்வுபெற்று, என்றென்றும் இம்மகிழ்வு, அனைவர்க்கும் கிடைத்திடத்தக்க நிலைபெற வழிகண்டு, அதற்காகப் பாடுபட உறுதிகொண்டிட வேண்டுகிறேன். களத்திலுள்ளார் காட்டும் வீரமும் ஆற்றல், அருந்திறனும், சாக்காடுபோவதேனும் கலங்கோம் என்று "சங்கநாதம்’ செய்குவதும், புறநானூற்றுக் காட்சிகளை, நினைவிற்குக் கொண்டுவந்து சேர்க்கும் வீரக் காப்பியமாய் விளங்கிவரும் அச்செயலில், இங்கிருந்து களம் சென்ற தமிழ் மறவர் ஈடுபட்டு, என் தமிழர், அவர் தீரர்! எதிர்ப்புகட்கு அஞ்சாத வீரர்! என்று நாம் கூறி மகிழ்ந்திடவே நடந்து வருகின்றார். எந்தக் குறையுமின்றி, எதிர்ப்பை முறியடித்து, சிங்கத் தமிழரெலாம் பொங்கல் திருநாளை, இவ்வாண்டு இல்லையெனினும், அடுத்த ஆண்டேனும், இல்லம்தனில் இருந்து இன்மொழியாளுடன் குலவி, செல்வக் குழைந்தைகட்கு முத்தமீந்து மகிழ்ந்திருக்கும் நிலை எழவேண்டும். தம்பி! உன்னோடு உரையாடி நீண்ட பல நாட்களாகி விட்டன - நிகழ்ச்சிகள் ஆயிரத்தெட்டு உருண்டோடிவிட்டன - எனவே, ஏதேதோ கூறவேண்டுமென்று ஆவல் எழுகிறது, எனினும், எல்லாவற்றினையும் ஓர் மடலில் அடைத்திடுவது கூடாது என்ற உணர்வு மேலும் பல கூறிடவிடவில்லை. விழா நாள் மகிழ்ச்சிபெறும் நாள்; இன்று பிரச்சினைகள் பலவற்றிலே உன்னை ஈடுபடுத்துவதும் முறையாகாது. எனவே, வாழ்க நீ. இல்லத்துள்ளோர், இன்பம் துய்த்து வாழ்க என வாழ்த்துகிறேன். கருப்பஞ்சாறும் அதனினும் இனிய சொற் கற்கண்டும் கிடைத்திடும் இந்நாளில், நான் தந்திடும் வாழ்த்தினையும் ஏற்றுக் கொள்வாய் - இது உன் மகிழ்ச்சிக்கு மணம் கூட்ட! என் இதயத்தை உனக்குக் காட்ட!! அன்புள்ள அண்ணாதுரை 14.1.1963 இராஜ்ய சபையில். . .(2) பிரிவினைத் தடைச் சட்ட மசோதா பற்றிய மாநிலங்களவைப் பேச்சு போர் ஆதரவு முயற்சிக்கு ஒத்துழைப்பு அரசியல் நேசத் தொடர்பு வேறு - தேர்தல் நேசத் தொடர்பு வேறு - இலட்சியம் என்பது வேறு. தேசிய ஒருமைப்பாட்டுக்குழு எங்களைக் கலக்காதது ஏன்? அரசுரிமை என்றால் என்ன? ஓரரசு முறையை எதிர்க்கும் ஈட்டிமுனை தி. மு. க. மனமாற்றம் ஏற்படுத்த முயலுக! தம்பி! பழக்கடைக்குச் செல்பவன், முழம் என்ன விலை என்று கேட்க மாட்டான்; துணிக்கடை சென்று படி என்ன விலை என்று கேட்கமாட்டான்; சராசரி அறிவுள்ளவன்! ஆடை அணி அணிந்துகொண்டு ஆற்றிலே இறங்குபவன், சேற்றினை எடுத்துச் சந்தனமாகப் பூசிக்கொள்பவனுக்கு, அண்ணன், வேறென்ன! திருக்குறள் படிப்பவன் பெரிய திருவடியின் வாலின் நீளம் எவ்வளவு என்பதனை அறிய, அந்த நூலைத் துருவித் துருவிப் பார்த்திடுவானா? தென்னை ஏறித் தேன் கதலி தேடுபவன் உண்டா? உன் அண்ணனுக்கு, என்ன அளவற்ற ஆற்றலோ! அகிலத்தில் எவருக்கும் இல்லாத அறிவாற்றல் கொண்டவனோ, என்று எவரேனும் கேட்டிடும்போது, தம்பி, இதனை எண்ணிக் கொள், எனக்குத் தெரிந்தது குறைவு, ஆனால், அதிலே தெளிவு மிகுதியும் இருக்கவேண்டும் என்பதிலே நான் நிரம்ப அக்கறை கொண்டவன்; ஆர்வம் உள்ளவன்; எதையும் செய்திட வல்லேன் என்ற இறுமாப்புக்கொள்பவன் அல்ல; எதை எப்படிச் செய்தால் என்ன என்று அக்கறையற்று நடப்பவன் அல்ல. பழக்கடை செல்வேன், முழம் என்ன விலை என்று கேட்க மாட்டேன். துணிக்கடை போனால், படி எட்டணாவா என்று கேட்டு, ஏமாளியாக மாட்டேன். தேன் கதலி தேடித் தென்னை ஏறமாட்டேன். எதை எதை எங்கெங்குப் பெறமுடியும் என்று தெளிவுடன் பணியாற்றுவேன். புதுடில்லி சென்றிருந்தேன், கம்பளிப் போர்வைக்குள்தான் இருந்தேன் - கொட்டும் குளிர் அங்கு - இப்போது. அதே டில்லியில் முன்பு சென்றிருந்தபோது சட்டைகூடப் போட முடியவில்லை - அவ்வளவு வெப்பம்! அண்ணாதுரை அடியோடு மாறிவிட்டான் - ஒரே கம்பளி மயம் இப்போது - என்று யாராவது பேசினால் - நகைச்சுவைக் காக என்று கருதிக்கொண்டு பேசினால்கூட - கருத்தற்றவன் என்றுதான் பேசுபவர்பற்றி அறிவுலகம் கூறும். நான் அறிந்த உலகத்திலே இதற்குத்தான் அபாரமான மதிப்பு என்று எவரேனும் சொல்ல முனைந்தால், "சபாஷ் தம்பி! வெளுத்து வாங்கு!’’ என்று கூறிவிட்டு, வேறு வேலை பார்ப்பவன் நான். சென்ற பொதுக்குழுவின்போது நான் விளக்கிக் காட்டியதுபோல, தி. மு. கழகத்துக்கு மிகப் பெரிய - அது தோன்றிய நாளிலிருந்து ஏற்படாத விதமான - நெருக்கடி ஏற்படுத்த, நாசமாக்க, பலத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. திராவிடநாடு கேட்பது - அரசியல் சட்டத்துக்கு விரோத மானது என்று ஏற்படுத்த, அரசியல் சட்டம் திருத்தப்படுகிறது. இது, அரசியல் சட்டத்துக்கு ஏற்படும் பதினாறாவது திருத்தம். ஆங்கில மொழி நீடித்திருக்கச் செய்வதற்காக, ஒரு திருத்தம் அரசியல் சட்டத்தில் செய்யப்பட இருந்தது; பண்டித நேரு உறுதி அளித்திருந்தார்; ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் கசப்புணர்ச்சி ஏற்படக்கூடாது என்பதனால், கருத்து வேறுபாட்டுணர்ச்சியைக் கிளப்பத்தக்க, பிரச்சினையைப் புகுத்தவேண்டாம் என்ற காரணம் காட்டி, வந்திருக்கவேண்டிய திருத்தத்தை நிறுத்தி வைத்துவிட்டார்கள். ஆனால், பேச்சு உரிமையைப் பறிக்கும் 16ஆம் திருத்தம், பல கருத்து வேற்றுமைகளைக் கிளறிவிடத்தக்கது என்று தெரிந்திருந்தும், கொண்டுவந்துவிட்டனர். அந்தப் பிரச்சினைபற்றி இராஜ்ய சபையில் நான் பேசியதைத் தமிழாக்கித் தந்துள்ளேன். அதிலே, பழம், டஜன் என்ன விலை என்ற முறைதான் இருக்கும், முழம் என்ன விலை என்று இருக்காது! அப்படியா கேட்பது - கூடை என்ன விலை என்றல்லவா கேட்டிருக்கவேண்டும் என்று கூறுபவர் இருப்பர் - உலகிலே பலர் பலவிதம்! கூடை என்ன? அம்பாரம் என்ன விலை என்று கூடக் கேட்கட்டும்; நான் தடுக்கவில்லை! ஆனால், பழக்கடை சென்று, முழம் என்ன விலை என்று கேட்கவேண்டும் என்று மட்டும் சொல்லாதிருந்தால் போதும் - சொல்பவர்கள் சரியாகத் தான் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படும். தம்பி! பேச்சைப் படித்துப்பார்!! பேச்சுரிமைக்காக வாதாடி இருக்கிறேன். இராஜ்யங்களுக்கும், இன்றைய அரசியல் சட்ட திட்டத்தின்படியே, அரசுரிமை (நர்ஸ்ங்ழ்ங்ண்ஞ்ய்ற்ஹ்) உண்டு என்று எடுத்துக்காட்டி இருக்கிறேன். பிரசாரத்தைப் பிரசாரத் தால்தான் எதிர்க்கவேண்டும் - சட்டத்தின் பாதுகாப்புத் தேடிக் கொண்டு அல்ல என்று எடுத்துச் சொல்லி இருக்கிறேன். பிரிவினை கேட்கும் பேச்சு உரிமைக்காகப் பேசியிருக்கிறேன்! பலே! பலே! அகப்பட்டுக்கொண்டான் உங்கள் அண்ணாத்துரை! பார்த்தீர்களா, பிரிவினைக்கான பேச்சு உரிமைதான் கேட்டிருக்கிறான், பிரிவினை அல்ல!! - என்று பேசுவதை, வெறுங் குரலொலி - வெறுங் குரலொலி அல்ல - வெறுப்புக்கொண்டவரின் குரலொலி என்று கருதிக் கொள்கிறேன். இராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதம், பேச்சு உரிமை தரும் அரசியல் சட்டதிட்ட விதியைத் திருத்துவதற்கான மசோதாபற்றி! பழக்கடை! முழம் என்ன விலை என்று கேட்கவில்லை!! என்ன பேசினேன் என்பதை, நீயே படித்துப்பார், தம்பி! ஆனால் ஒரு நிபந்தனை. சர்க்காரின் இந்தப் போக்குப்பற்றிக் கோபம் கொந்தளித்தாலும், நீக்கிக்கொள்ளவேண்டும் - கசப்புணர்ச்சி மேலிட்டாலும் போக்கிக்கொள்ளவேண்டும்; இதை விவாதப்பிரச்சினையாக்கி, பொதுமக்களிடம் சென்று முறையிடத் தேவை இல்லை. கொழும்பு மாநாட்டு ஏற்பாடு, என்பது, அடியோடு போர் நீங்கிவிட்ட நிலையல்ல; சமாதானம் நிலைத்துவிட்டது என்றும் பொருள் அல்ல - ஆகவே, உன் தூய்மைமீது நம்பிக்கை வைத்து, நான் கொடுத்துள்ள வாக்குறுதி, காப்பாற்றப்பட்டாகவேண்டும் - சமாதானம் நிலைநாட்டப் படுகிற வரையில், நாம் சச்சரவு மனப்பான்மை ஒரு துளியும் கொள்ளக்கூடாது; நமது ஆதரவு அன்றுபோல் இன்றும் உண்டு - சீனனை விரட்ட. இந்த உறுதியைத் துளியும் குறைத்துக்கொள்ளாமல், பிரச்சினையைக் கவனித்துப் புரிந்துகொள். வம்புக்கு இழுப்பதுபோல, கிளறிவிடுபவர்கள் கேட் பார்கள் - என்ன செய்யப் போகிறீர்கள்? என்று. இப்போது நாங்கள் போர் ஆதரவு முயற்சிக்கு எமது ஒத்துழைப்பைத் தந்து வருகிறோம்! போர்க்கோலம் நீக்கப்பட்டு, அமைதியும், மகிழ்ச்சியும் அரசோச்சும் காலம் ஏற்படுகிற வரையில், எமக்குள்ள பணி அதுதான் என்று கூறுங்கள்! (பிரிவினைத் தடைச்சட்ட மசோதாபற்றிய விவாதம் 25-1-63இல் இராச்சிய சபையில் நடைபெற்றபோது, அதன் அவசியமற்ற தன்மையை விளக்கி ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இங்குத் தரப்படுகிறது) சி. என். ஏ. : சமரசம் பேசுவதற்காகச் சீன ஆக்கிரமிப்பாளருடன் மேஜைமுன் அமர நமது விருப்பத்தையும் சம்மதத்தையும் தெரிவித்தான உடனே, எதிரியை அல்ல, ஒரு இலட்சியத்துக் காகப் பணியாற்றுபவனை அழிக்க, சர்க்காருக்கு ஒரு புதிய சட்ட ஆயுதத்தைத் தருவதற்காக, அரசியல் சட்டத்துக்கும் கொண்டு வரப்படும் ஒரு திருத்தம்பற்றி நாம் இன்று விவாதித்துக்கொண் டிருப்பது வேதனையுள்ள விசித்திரம்போலும்! மன்றத்தின் இரண்டு தரப்புகளிலிருந்தும் கூறப்பட்ட பல கருத்துரைகளை நான் மிகுந்த அக்கறையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். சட்டத்தைத் துணைகொண்டு அடக்கிவிட நீங்கள் முயலும் அந்த இலட்சிய எண்ணத்தைப் புகுத்தியவன் என்ற முறையில், என் நோக்கத்தை மீண்டும் விளக்க அல்ல, ஆனால் எமது கோரிகைக் குறித்து ஏற்பட்டுள்ள சில தப்பர்த்தங் களைப் போக்க, அந்த இலட்சியம்பற்றிய விளக்கத்தையும் வரலாற்றையும் எடுத்துக்கூற விரும்புகிறேன். கனம் உறுப்பினர் ஒருவர் பிசோ கேட்டதைக் கண்டு அல்லது அதைத் தொடர்ந்து திராவிடஸ்தான் கேட்கப்படுகிறது என்று கூறினார். உண்மை, அதற்கு வெகு தூரத்தில் இருக்கிறது. சுதந்திரம் வந்தபிறகு இப்படிப்பட்ட பிரிவினை உணர்ச்சிகள் கிளம்பின என்று மற்றோர் உறுப்பினர் கூறினார். இது உண்மைக்கு நெருங்கி வருவதாகும்; ஆனால், உண்மை இது அல்ல. தி. மு. கழகம் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அமைப்பு. திராவிடர் கழகம், சுதந்திரத்துக்கு மிக நீண்ட காலத்துக்கு முன்பே இருந்து வந்திருக்கிறது. எதிர்கால அரசியல் முறை அமைப்புப் பற்றிச் சர்ச்சைகள், பிரச்சினைகள், கொள்கைகள் எழுந்தபோது, திராவிடர் கழகம் - அந்த அமைப்பின் பொதுச்செயலாளனாக நான் இருந்திருக்கிறேன் - தென்னகத்துக்கு, ஒரு அரசியல் ஏற்பாடுபற்றித் திட்டம் அறிவித்தது. அதனுடைய தொடர்பாகத் தான், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வளர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் அந்த இலட்சியத்தை எடுத்து விளக்கிக் கொண்டு வருகிறது. எனவே, இது ஆளுங்கட்சியின் செயல்கள் அல்லது செயலாற்றாத தன்மை ஆகியவைகளைப் பொறுத்த தாக அமையவில்லை. நாட்டின் வேறு இடங்களிலே இது போன்ற அல்லது இதைவிடப் பயங்கரமான எந்தப் பிரச்சினைகளுக்கும் இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. பிரச்சினையின்மீது பாய்வதற்கு முன்பு, கனம் உறுப்பினர்கள், பிரச்சினையை அலசியாவது பார்க்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். இரண்டாவதாக, ஒரு ஆக்கிரமிப்பாளனைச் சந்தித்துச் சமரசம் பேசச் சம்மதத்தைத் தெரிவித்த சீக்கிரத்தில், பெருமை மிக்க நாட்டு மக்கள் என்ற முறையில், எங்கள் பிரசாரத்தைத் தடைபோட்டு நிறுத்துவதற்கு முன்பு, எங்களைப் புரிந்துகொள்ள வாவது முயலக்கூடாதா, என்பதைச் சுட்டிக் காட்ட விரும்பு கிறேன். நாங்கள் என்ன அவ்வளவு தாழ்ந்து போய்விட்டவர்களா, அரசியல் அரங்கத்திலே எங்களைத் தீண்டப்படாதவர்கள்போல நடத்துவதற்கு! எங்கள் கோரிக்கை மிக முக்கியமானதல்லவா - நீங்கள் எங்கள் மனத்தைத் திருப்திப்படுத்தவும், மக்கள் ஒத்துக் கொள்ளக்கூடிய முறையை மேற்கொள்ளவும் முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டாமா? காரணகாரிய விளக்கங்களைக் கேட்க ஒருப்படாதவர்களா நாங்கள்? அந்த முயற்சி செய்து பார்த்தீர் களா? இந்த மன்றத்தில் இதுதான் என் முறையீடு. கட்சித் தொடர்புகள்பற்றிய கவலையின்றி, இந்த மன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இந்த அம்சம்பற்றித் தங்கள் சீரிய கவனத்தைச் செலுத்தவேண்டுகிறேன் - எங்களைக் கலந்து பேசிக் கருத்தறிந்தார்களா? - பிரச்சினையை அலசிப் பார்க்க, ஆளுங்கட்சி சிரமம் எடுத்துக்கொண்டதா? நான் ஆளுங்கட்சி என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், எதிர்க்கட்சிகள் பலவும் பிரச்சினையை அலசிப் பார்க்க முயற்சி எடுத்துக்கொண்டன. அதனால், இன்று காலையில், ஒரு உறுப்பினர், இந்தப் பிரச்சினையில் கம்யூனிஸ்டு கட்சி எங்களுடன் நேசத் தொடர்பு கொண்டிருந்தது என்று சொன்னார். எங்கள் கொள்கையை ஒப்புக்கொள்ளவேண்டுமென்று, நாங்கள் கேட்டபோது, முடியாது என்று கம்யூனிஸ்டு கட்சி கூறியது - பெருமைப்படத் தக்க விதத்தில் துணிவுடன் கூறிற்று. இலட்சியங்களுக்கும், தேர்தல் தொடர்புகள், உடன்பாடுகள் ஆகியவற்றுக்கும் சம்பந்தம் இல்லை. எனவே, நாங்கள் கம்யூனிஸ்டு கட்சியையோ, வேறு கட்சிகளையோ கொள்கை அடிப்படை வைத்து அல்ல, அரசியல் நேசத் தொடர்புகள் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அணுகி இருந்திருக்கின்றோம். இப்போது கூட, இன்றுகூட, சென்னை மேயர் தேர்தல் சம்பந்தமாக, சென்னைக் காங்கிரஸ் கட்சியும் தி. மு. கழகமும் ஒரு ஏற்பாட்டில் இணைந்து உள்ளன. இந்த மன்றம் இதை அறிய அக்கறை காட்டும் என்று எண்ணுகிறேன். எனவே, அரசியல் நேசத் தொடர்பு என்பது ஒரு விஷயம், தேர்தல் நேசத் தொடர்பு என்பது மற்றொன்று; இலட்சியம், முற்றிலும் வேறான விஷயமாகும். கோபார்கடே (மராட்டா): அப்படியானால், காங்கிரசே, பிளந்து போவதை ஆதரிக்கிறது! சி. என். ஏ. : அதனால்தான் சொல்லுகிறேன், தேர்தல் நேசத் தொடர்பு என்றால் இலட்சித்தை இழந்துவிட்டதாகப் பொருள் இல்லை, என்று. தன் இலட்சியத்தைக் காத்திடும் வலிவு சென்னைக் காங்கிரசுக்கு இருக்கிறது. காங்கிரஸ் இலட்சியத்திலே சென்னை முதலமைச்சருக்கு வலிவான நம்பிக்கை இருக்கிறது. நமது விவாதங்களில் சென்னைக் காங்கிரஸ்பற்றியோ, முதலமைச்சர் பற்றியோ தப்பான வியாக்கியானங்கள் கொள்வதை நான் விரும்பவில்லை. தம்முடைய இலட்சியங்களை விட்டுக்கொடுக் காமலேயே, தேர்தல் நேசத்தொடர்புகள் கொள்ளமுடியும் என்பதைக் குறிப்பிடவே இதைச் சொல்கிறேன். ஆனால், நான் இலட்சியத்தை உணரவேண்டும், அலசிப் பார்க்கவேண்டும், ஆய்ந்து பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்போது இந்த மசோதா, இந்தியாவுடைய அரசுரிமை யையும் பிரதேச ஒற்றுமையையும் பாதுகாக்க, நிலைநிறுத்தக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்த அரசுரிமைக்கு என்ன ஆபத்து வந்திருக்கிறது - எனக்குத் தெரியாது - எனக்குத் தெரிவிக்கவும் இல்லை. ஒருசமயம் சட்ட மந்திரி - புதிய சட்டம் ஏதாவது தயாரித்துக்கொண்டிருப்பார்போலிருக்கிறது, அதனால் தான் சபையில் இல்லை - அவர் இங்கு இருந்திருப்பாரானால், திரும்பிப்பார்த்துச் சொல்லுவார்; நாட்டிலே பிளவுச் சக்திகள் உள்ளனவே, அறியாயா? இந்தக் காரியத்துக்காகவே தேசிய ஒருமைப்பாடு கமிட்டி அமைத்தோமே, அறியாயா? தேசிய ஒருமைப்பாடு கமிட்டி கூறிய யோசனைகளை ஒட்டியே நடவடிக்கை எடுத்திருக்கிறோம், தெரியாதா என்றெல்லாம் கேட்டிருப்பார். துணைத்தலைவர் அவர்களே! தேசிய ஒருமைப் பாட்டுக் கமிட்டி திறமைமிக்க டாக்டர் சர். சி. பி. இராமசாமி ஐயர் தலைமையில் அமைக்கப்பட்டதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். - இந்தியாவின் வல்லமையுடையது அல்லது அரசுரிமை, பிரதேச ஒற்றுமை என்பனவற்றில் திடமான நம்பிக்கையுடன் பரிந்து போரிடத்தக்க வீரர்! எந்த அளவு நம்பிக்கைகொண்ட வீரர் என்றால், திருவிதாங்கூர் திவான் என்ற முறையில், திருவாங்கூர் தனி சுதந்திர நாடு ஆகிவிட்டதாகப் பிரகடனம் செய்தவர்! பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக அறிவித்தவர்!! இன்று காங்கிரசின் அதிர்ஷ்டம், அவர் கூட்டுச்சேராக் கொள்கையினர்! எனவே, அவரை நீங்கள், கமிட்டித்தலைவர் ஆக்கிக்கொண்டீர்கள். இந்தக் கமிட்டி எவ்விதம் பணியாற்றிற்று என்பதை அலசிப் பார்க்கும்படி, இந்த மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன். தேசிய ஒருமைப்பாட்டினை எப்படி ஏற்படுத்துவது என்பதற்கான வழி கூறும்படி, இந்தக் கமிட்டி பணிக்கப்பட்டது - பிரிவினைப் பிரசாரத்தை ஒடுக்கிவிடமட்டும் அல்ல. தேசிய ஒருமைப் பாட்டை ஏற்படுத்தச் சிறந்த வழி என்ன என்பதனைக் கண்டறியும் வேலை அதற்குத் தரப்பட்டது; ஆக்க வேலைக்காக அது தந்த யோசனைகள் யாவை? ஆக்க வேலைக்கான திட்டங்கள் யாவை? தேசிய ஒருமைப்பாடு கமிட்டியுடைய யோசனைகளிலிருந்து பிறந்துள்ள, தடைச்சட்டம் தவிர. துணைத் தலைவர் அவர்களே! தேசிய ஒருமைப்பாடு கமிட்டி, இந்தியா முழுவதும் உலா வந்தது - எங்கள் மாநிலத்துக்கும் வரவேண்டு மென்ற மரியாதை காட்டிற்று. பல்வேறு அரசியல் கருத்தினர் களைக் கண்டு கருத்தறிந்தது; ஆனால் தி. மு. கழகத்தினரைப் பார்க்க இயலவில்லை. ஏனெனில் அதற்கிடையில், எங்களுக்கு எங்கள் மாநில அரசு, வேலூர் மத்திய சிறையிலே அறைகள் கொடுத்துவிட்டது! எங்களைச் சந்திக்காததற்கு, கமிட்டி கூறிய காரணம் இதுதான். ஆனால், அப்போது தேசிய ஒருமைப் பாட்டுக் கமிட்டி, எங்கள் நோக்கத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம்கொண்டிருந்தால், தொடர்புகொள்ளவேண்டுமென்று விரும்பி இருந்தால், எங்கள் அமைப்பு செயலாளர் என். வி. நடராசன் ஜெயிலுக்கு வெளியேதான் இருந்தார்; மனோகரன் எம். பி., வெளியில்தான் இருந்தார்; இராசாராம் எம். பி., வெளியில் இருந்தார்; இவர்களில் யாராவது ஒருவரைக் கண்டிருக்க முடியும். டாக்டர் இராமசாமி ஐயர் ஜெயிலுக்கு வந்து எங்களைப் பார்த்திருக்கவேண்டும் என்று நான் கூறமாட்டேன் - மற்றவர்களை ஜெயிலுக்கு அனுப்பி அனுபவம் பெற்றவர் அவர்; ஜெயிலுக்கு அவர் போனதில்லை! - ஆகவே, அவர் நெடுந்தொலைவு கடந்து ஜெயிலுக்கு வந்து எங்களைப் பார்க்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சாமானியர்கள். அப்படிப்பட்ட பெரியவர்களைக்கொண்ட கமிட்டி அத்தகைய தாராளத்தனம் காட்டியிருக்கவேண்டும் என விரும்பவில்லை, ஆனால், வெளியே இருந்த சிலருடன் தொடர்புகொள்ளச் சிரமம் எடுத்துக்கொண்டிருக்கலாம்! மன்றத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் - ஒரு கணம் எங்கள் கோரிக்கையின் பயங்கரத் தன்மை -அதன் ஆபத்தான விளைவுகள் - ஆகியவைபற்றி மறந்துவிடுங்கள் - தயவுசெய்து இதற்குப் பதில் கூறுங்கள் - எனக்கு வார்த்தைகள்கூட வேண்டாம் - இலேசான புன்னகை - மகிழ்ச்சியுடன் கண் சிமிட்டல் - நேசப் பான்மையுடன் தலையை அசைத்தல், இவைபோதும் - சாதாரண மரியாதைக்காக, மக்களாட்சி முறையின் நாகரிகத் தன்மைக்காகவாவது எங்கள் கட்சியினருடன், இந்தக் கமிட்டி தொடர்புகொண்டிருக்க வேண்டாவா! இல்லை! அவர்கள் அதைச் செய்யவில்லை! ஆனால், அவர்கள் ஒரு அறிக்கை தந்தனர். இந்த மசோதாவின் விளக்கத்திலும் நோக்கத்திலும், தேசிய ஒருமைப்பாட்டுக் கமிட்டியின் யோசனையை முற்றிலும் ஒட்டியே மசோதா வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, மசோதாவின் பிறப்பே, முற்றிலும் மக்களாட்சி முறைக்கு மாறானது. இந்தக் கருத்தை உங்கள் முன் வைக்கவே, உமது பொறுமையைப் பாதிக்கும் தொல்லையைத் தர நேரிட்டது. நான், மற்றொரு விஷயத்துக்கு வருகிறேன் திராவிடஸ்தான் கோரிக்கை ஆபத்தானது என்கிறார்கள் - தவறாக! ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் பலர். சில மாதங்களுக்கு முன்புகூட, சில வாரங் களுக்கு முன்புவரைகூட, நாங்கள் என்ன கேட்கிறோம் என்பது தங்களுக்குப் புரியவே இல்லை என்று கூறிக்கொண்டு வந்துள்ளனர். அவர்கள் புரிந்துகொள்ளவில்லை! ஆனால், இது ஆபத்துத் தரத்தக்கது என்று மட்டும் புரிந்திருக்கிறது! இது எப்படிப் பகுத்தறிவாகும்? தத்துவ சாஸ்திர அறிவாகும்? அரசிய லாகும்? எனக்குப் புரியவில்லை! இந்த மன்றத்திலேயோ, அந்த மன்றத்திலேயோ - எனக்குத் திட்டவட்டமாகத் தெரியவில்லை, உள்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார், கட்டுக்கு அடங்காது போனால், குறிப்பிட்ட எல்லையை மீறிப்போனால், பிரிவினை சம்பந்தமான எல்லாப் பிரசாரமும் ஒடுக்கப்படும் என்று. ஒருவரும் அதற்கு விளக்கம் அளிக்கும்படி கேட்கவில்லை - ஏனெனில், சட்டத்தை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, வன்முறைச் செயலில் ஈடுபட்டாலோ, பிரிவினைப் பிரசாரம் தடுக்கப்பட்டுவிடும் என்று எண்ணிக்கொண்டார்கள். இது சில மாதங்களுக்கு முன்பு, உள்துறை அமைச்சர் பேசியது. இந்த இடைக் காலத்திலே என்ன நேரிட்டுவிட்டது? நாங்கள் என்ன மண்டை ஓடுகளையும் தலைகளையும் வேட்டையாடிப் பெறுபவர்கள் ஆகிவிட்டோமா? ஏதாவது சட்டத்தை மீறிய நடவடிக்கைகளிலே ஈடுபட்டுவிட்டோமா? இல்லை! மாறாக, சீன ஆக்கிரமிப்பு ஏற்பட்ட உடன் தங்கு தடையற்ற, உள் உணர்ச்சியுடன் கூடிய ஒத்துழைப்பைத் தந்தோம், போர் ஆதரவு முயற்சிக்கு. சட்ட மந்திரி இப்போது இங்கு இல்லாததுபற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். . . ஒரு உறுப்பினர்: அவருடைய துணை மந்திரி இங்கு இருக்கிறார். சி. என். ஏ. : ஏனெனில், எங்கள் கட்சியின் தலைவர், அந்த மன்றத்தில் இதே கருத்தைப்பற்றிக் கூறியபோது, சட்ட மந்திரி எழுந்து நின்றார் - புன்னகையுடன் அல்ல - கடுமையான பார்வையுடன் - கரங்களைக் கெம்பீரமாக அசைத்தபடி சொன்னார், அதெல்லாம் இந்திய பாதுகாப்புச் சட்டத்தினால் ஏற்பட்ட நிலைமை! என்று. சட்டமந்திரி என்ற நிலையில், சட்டத்துக்குக் கர்த்தா என்ற முறையில், சட்டத்துக்கு உள்ள வீரியம்பற்றித் தூக்கி பேசும் உரிமை பெற்றவர் அவர்; ஆனால், சட்டத்தின் சக்தியைப் பெரிதாக்கிப் பேசும் ஆர்வத்தில், அவர் தமது மனத்திலிருந்து, சாதாரண மரியாதை காட்டும் உணர்ச்சியைத் துரத்தி அடித்துவிட்டார்! தி. மு. கழகத்துக்கு, சட்ட மந்திரி, நல்வார்த்தை கூறிச் சிபாரிசு செய்யவேண்டும் என்று நான் விரும்பவில்லை. மக்களுடைய நல்லாதரவு நிரம்ப நாங்கள் பெற்றிருக்கிறோம், சட்ட மந்திரியின் நல்லுணர்வு சிபார்சு ஒன்றும் அதனை மேலும் வலுவுள்ள தாக்கிவிட முடியாது! மற்றும் ஒன்று கூறுகிறேன். சட்டத்தின் சக்தியை உயர்த்திக் காட்டவேண்டும் என்ற ஆர்வத்தில், அவர் மற்றோரு முக்கிய மான விஷயத்தை மறந்துவிட்டார். இன்று காணப்படும் ஒருமித்த நோக்கம், தேசிய ஆர்வம் எல்லாம், இந்திய முதல் அமைச்ச ருடைய திறமையாலும், அவர் கொண்டுள்ள மேலான எண்ணங் களாலும், ஏற்பட்டவை. சட்டங்களைவிட வலிவு மிக்கது, அது. சட்டங்கள், தடுக்க, திருத்த, உள்ளவை. இதைச் செய்யாதே! அதைச் செய்யாதே! என்று கூறுகிறது சட்டம். கட்சித் தொடர்பு களைக் கடந்து, பல இலட்சக்கணக்கான மக்களின் மனத்தைத் தன் வயப்படுத்தும் முதலமைச்சரின் திறமைக்கு உள்ளதுபோன்ற வலிவு சட்டத்துக்குக் கிடையாது. சட்டத்தின் வலிவை வலியுறுத்திக் காட்டும் ஆர்வத்தில், சட்டமந்திரி, எதற்காகப் பிரதம மந்திரியின் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட்டு விட்டார் என்று எனக்குப் புரியவில்லை! இன்று காணப்படும் கூடிப் பணியாற்றும் ஆர்வம் பண்டித ஜவஹர்லால் நேருவின், வசீகரிக்கும் தன்மையாலும், ஜனநாயகப் பண்பாட்டு உணர்ச்சி யாலும் விளைந்திருக்கிறது என்பதையாவது அவர் சொல்லி யிருக்கலாம். மந்திரி சபைக்குள்ளே என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. வெளியார் எவராவது, சட்ட மந்திரியின் உரையைப் படித்தால், என்ன எண்ணம் ஏற்படும்? நாட்டிலே அமைதி இருக்கிறது! எதனால்? இந்திய பாதுகாப்புச் சட்டத்தி னால்!! இல்லையானால், அனைவரும், தேச விரோதிகளாவர், தேசபக்தி அற்றவர்களாவர், தொல்லை கிளம்பியிருக்கும்! இப்படி எண்ணுவர். அடித்துப் பேச முற்படும்போது, அளவு பொருத்தம் பார்த்துப் பேசும்படி சட்ட மந்திரியை வேண்டிக் கொள்கிறேன். அது நிற்க, இந்திய பாதுகாப்புச் சட்டம், ஒரு நாட்டு மக்களுடைய இதயங்களுக்குப் பாதுகாவலனாக இருக்க முடியாது. ஒரு நாட்டு மக்களுக்குச் சிறைக்காவலனாக மட்டுமே இருக்க முடியும் எனவே, போர் ஆதரவு முயற்சிக்கு, தங்கு தடையற்ற உதவி தர தி. மு. க. முன்வந்தது என்றால், நான் அதற்காகச் சர்க்காரிடமிருந்து நன்னடத்தைச் சீட்டுப் பெற எதிர்பார்க்கவில்லை. பதிலுக்கு நல்லெண்ணம் அளிக்கப்பட வேண்டும் என்றுகூட விரும்பவில்லை. ஆனால், எதற்காக இதை எடுத்துக் கூறுகிறேன் என்றால், இதிலிருந்து ஒரு இயற்கையான எண்ணம், தானாக எழுந்துள்ள ஒரு உள் உணர்ச்சி, உங்களுக்குப் புலப்படவில்லையா? அந்த உணர்ச்சி காலத்தால் இயற்கையாக வளரச்செய்திட வேண்டாமா? இந்த மசோதா? அதற்கான உரமா? இது அந்த உணர்ச்சியை அழிக்கக்கூடியது, எரிச்ச லூட்டுவது. ஏன் இந்த உள் உணர்ச்சி, இயற்கையான முழு வளர்ச்சி பெற்று, பூத்திடச் செய்யக்கூடாது? இந்த மசோதாவுக்கு என்ன அவசரம் வந்தது? ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்? அதுதான் நான் குறிப்பாகக் கேட்பது. இதை உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான், போர் ஆதரவு முயற்சிக்கு நாங்கள் ஆதரவு அளித்ததைக் குறிப்பிட்டேன். நான் முன்பு சொன்னபடி, நாங்கள் சாமான்யர்கள், ஆனால், 34 இலட்சம் வாக்காளர்களின் பிரதிநிதிகள்! எந்த 50 இலட்சம் வாக்காளர்கள் எங்கள் இராஜ்யத்தில் காங்கிரசை ஆளும் கட்சி ஆக்கியிருக்கிறார் களோ, அங்கு, ஐம்பது இலட்சத்துக்கும் முப்பது இலட்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறித்து நான் அதிகம் வாதாடத் தேவையில்லை என்று நம்புகிறேன். இந்த மன்றத்தின் முன் உறுதி கூறுகிறேன் - எங்கள் முன்னேற்றத்துக்கு அழிவு தேடாதிருந் தால், சட்டத் துணையுடன் அடக்கி அழிக்கும் முறைகளைக் கொண்டுவராதிருந்தால், நாங்கள்தான் சென்னையில், அடுத்து வரப்போகும் ஆளுங்கட்சி - உறுதி அளிக்கிறேன். மத்திய அமைச்சரவையினராம், கனம் சி. சுப்பிரமணியம், தமது கோவைப் பேச்சிலே, அன்பழைப்பை விடுத்திருக்கிறார் - "பிரிவினையை விட்டுவிடுங்கள்; நீங்கள் மந்திரிசபை அமைப்பதை நான் வரவேற்கிறேன்’’ என்று. அப்படிப்பட்ட ஒரு கட்சிக்குத் தான், நீங்கள் சாதாரண மரியாதை உணர்ச்சி காட்ட ஜனநாயக நாகரிக உணர்ச்சிகாட்ட மறுத்திருக்கிறீர்கள் - தேசிய ஒருமைப் பாட்டுக் கமிட்டி முன்பு எங்கள் நோக்கத்தை எடுத்துரைக்கும் வாய்ப்பு அளிக்கவுமில்லை, எங்களை உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக்கிக்கொள்ளவுமில்லை. கம்யூனிஸ்டு கட்சித் தலைவர், என் மதிப்புமிக்க நண்பர், புபேஷ் குப்தா ஒரு யோசனை கூறினார் - அவர்களை (தி. மு. க. வை) எதிர்த்துப் பிரசாரம் செய்ய ஏன், எல்லா ஜனநாயக சக்திகளும், தேசிய சக்திகளும் ஒன்றுபடக்கூடாது என்று கேட்டார். நான் அதை வரவேற்கிறேன். மக்கள் என் கருத்தை ஏற்றுக்கொள்கிறார்களா, உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதைக் கண்டறிய விரும்புகிறேன். ஏன் அப்படிப்பட்ட தீரமிக்க போட்டியிலிருந்து ஓடிவிடுகிறீர்கள்? புபேஷ் குப்தாவை, இதையும் கவனிக்கும்படி கேட்டுக் கொள்வேன், எங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்வதற்கு முன்பு, எங்களுக்கு மனமாற்றம் ஏற்படுத்த முயற்சி எடுத்துக்கொள்வது நல்ல அரசியல் முறை அல்லவா? புபேஷ் குப்தா: அதுதான் நான் சொன்னது. நான் முயல்கிறேன். சி. என். ஏ. : புபேஷ் குப்தாவுக்கு என் நன்றி ஆனால், எங்கள் மனத்தை மாற்ற அவர் மேற்கொண்டுள்ள முறை பலனளிக்கவில்லையோ, அல்லது அவர் விரும்புகிற அளவு, அது செய்யப்படவில்லையோ, என்னவோ தெரியவில்லை - பலன் காணோம். ஆனால், இந்த மன்றத்தைக் கேட்டுக்கொள்வேன் - எல்லாக் கட்சி உறுப்பினர் களையும்கொண்ட கலந்தாலோசிக்கும் கமிட்டி அமைத்து எம்முடன் விவாதிக்கவேண்டும் என்று சர்க்காருக்கு யோசனை கூறுங்கள். தவறு எம்மிடம் என்றால் திருத்துங்கள். உங்களிடம் தக்க காரணம் காட்ட இருந்தால் எங்கள் மனத்தை மாற்றுங்கள். அதை விட்டுவிட்டு, எங்களை வற்புறுத்துகிறீர்கள்! சட்ட விற்பன்னர்கள் நிரம்பியுள்ள இந்த மன்றத்தில் நான் விளக்கத் தேவையில்லை, சட்டத்தைக்கொண்டு வற்புறுத்துவது, கடை கெட்ட வாதிடும் முறையாகும்! பொதுமக்களின் கருத்து எனும் சந்தையில், இரண்டு கருத்துகள் போட்டியிடுகின்றன என்றால், அதிலே ஒரு கருத்துக்குத் தடை போடுகிறீர்கள் என்றால், ஒரு கருத்துக்குப் பின்பலமாக சட்டத்தை நிறுத்துகிறீர்கள் என்றால் கருத்துப்போர் நடத்துவதிலிருந்து நழுவி விடுகிறீர்கள் என்றுதான் பொருள்படும். திருச்செங்கோடு இடைத்தேர்தல் காலம் வரையில், எங்கள் இராஜ்ய காங்கிரசார், வெளியிட்டுக் கொண்டிருந்த கருத்து என்ன? அவர்கள் சொன்னார்கள் - இந்த மன்றத்தில்கூட அது திரும்பவும் கூறப்பட்டது - என் நண்பர் புபேஷ் குப்தா சொன்னார் - நான் தன்னந்தனியன், ஒரே ஒருவன் என்றார்! பசி நிறைந்த பார்வை, எனக்கு என்றார்! என் பசி போக்கும் உணவு அளிக்கவில்லை, இவர்கள்!! நான் தனியன் என்று அவர் சொன்னார். மற்றொரு உறுப்பினர், எங்களுக்கு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவைகளில் பிடிப்பு இல்லை என்று பேசினார். அந்த உடன் பிறப்பாளர் இராஜ்யங்களி லுள்ளவர்களின் மனத்தை மாற்றிவிட்டதாகவோ, மகிழ்ச்சி தரத்தக்க அளவுள்ள ஆதரவைப் பெற்றுவிட்டதாகவோ, நான் எப்போதும் பாத்யதை கொண்டாடியது இல்லை. நான் குறிப்பிடுவது, நான் இந்த விஷயத்தைக் குறிப்பிடும்போது, அந்த மொழிவாரி இராஜ்யங்களிலும், அதே உணர்ச்சி ஏற்படும் என்பதுதான். நான் என்ன எண்ணுகிறேனோ அதனை அப்படியே, வால்டேரில், ஹைதராபாத்தில், மைசூரில் அல்லது திருவனந்தபுரத்தில் எண்ணுகிறார்கள் என்று நான் உரிமை கொண்டாடியதில்லை. நான் இந்த இடங்களுக்கெல்லாம் செல்லவுமில்லை. ஹைதராபாத்தில் நான் ஒரு கூட்டத்திலும் பேசியதுமில்லை. பேச, மைசூருக்கு நான் சென்றதில்லை. அங்கெல்லாம் என்னைப் போக ஏன் அனுமதிக்கக்கூடாது - என்னோடு நீங்களும் ஏன் வரக்கூடாது. நான், போட்டிப் பந்தய உணர்ச்சியுடன் ஒரு யோசனைகூடக் கூறுகிறேன். எல்லாக் கட்சியினரும்கொண்ட, கலந்தாலோசிக்கும் கமிட்டி அமைப் போம் - எல்லோருமாக நாடு சுற்றி வருவோம் - நாட்டுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிவோமாக! மனம் மாறும்படி செய்யுங்கள். பிறகு, நான் கேட்பது, நினைத்துக்கூடப் பார்க்கத் தகாதது என்று சொல்லுங்கள். ஆனால், இந்த மசோதாவைக் கொண்டுவராதீர்கள் - கொண்டுவந்து வைத்துக்கொண்டு, இந்த மசோதாபற்றி என்ன செய்யப்போகிறாய் என்று கேட்காதீர்கள். என் நண்பர் புபேஷ் குப்தா சொன்னார், நாங்கள் தலைமறைவாகி விடுவோம் என்று. நாங்கள் எப்போதும், வெளியில் உலவு பவர்கள்! தலைமறைவாகிவிட உபதேசம் இல்லை. ஆனால், மனம் வெதும்பிய அதிருப்தி மறைவிடம் செல்லும். புபேஷ் குப்தா : அதுதான் நான் சொன்னது. சி. என். ஏ. : மனம் வெதும்பிய அதிருப்தி நிலை, மறைவிடம் செல்லும்; அதனை எந்தச் சட்ட முயற்சியும் ஒன்றும் செய்துவிட முடியாது. பல இலட்சக்கணக்கான மக்களின் மனத்திலே கிடக்கும் அதிருப்தியைத் தாக்கி ஒழிக்கும் முறையை, அரசியல் தத்துவ முறை இன்னும் கண்டுபிடித்ததில்லை. எனவே, இந்தச் சட்ட முயற்சியினால், உண்மையான, மனம் வெதும்பும், அதிருப்தியை நீங்கள் மறைவிடத்துக்குத் துரத்துகிறீர்கள். நான் குறிப்பிட விரும்பும் மற்றோர் விஷயம் இருக்கிறது. எங்கள் கோரிக்கை, வல்லமையுடைமைக்கு, அரசுரிமைக்கு ஆபத்து விளைவிக்கிறது என்று எதனால் கருதுகிறீர்கள்? எப்படி? இதற்குப் பதில் அளிக்குமுன்பு அரசுரிமை என்றால் என்ன என்பதுபற்றி நாம் தெளிவுகொள்ளவேண்டும். அரசுரிமை என்று கூறுகிறோமே, என்ன எண்ணிக்கொண்டு அதுபோலக் கூறுகிறோம்? அரசியல் சட்டத்தின் பாயிரத்தில் சொல்லப்பட் டிருக்கிறது, அரசியல் அரசுரிமை மக்களிடம் இருக்கிறது என்று. சட்டபடி உள்ள வல்லமையுடைமை அல்லது அரசுரிமை கூட்டாட்சியின் மத்திய அமைப்பிலும், கூட்டாட்சியில் அமையும் இராஜ்ய அரசு அமைப்பிலும், பிரித்துத் தரப்பட்டிருக் கிறது. ஏன், எங்கள் திட்டத்தை, அரசுரிமைபெற்ற இராஜ்ய அமைப்புகள், மேலும் பலன் தரத்தக்க அரசுரிமை பெறுவதற் கான முயற்சி என்று நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது! அந்த முறையிலே கருதினால் என்ன! திராவிடஸ்தான் கேட்ட உடனே அரசுரிமையின் வேர் வெட்டப்படுகிறது என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? அரசுரிமை முழுவதும் ஒரு குறிப்பிட்ட அமைப்பிலே மட்டும் இல்லையே. கூட்டாட்சி முறையல்லவா கொண்டிருக்கிறோம். பல அரசியல் தத்துவவாதிகள் சுட்டிக் காட்டியுள்ளபடி, இந்தியா மிகப்பெரிய அளவுள்ளது; சொல்லப் போனால், அதனை ஒரு துணைக்கண்டம் என்றே வர்ணித்திருக் கிறார்கள்; பல்வேறு விதமான மனப்பான்மைகள், பல்வேறான பாரம்பரிய உணர்ச்சிகள் - வரலாறு வெவ்வேறு வகையினதாக- இருப்பதனால்தான் இங்கு இருப்புக்கூடுபோன்ற ஓரரசு முறை இருக்க முடியாது என்பதால், அரசியல் சட்ட திட்டம் வகுத்தவர்கள் ஓரரசு முறை அமைக்காமல், கூட்டாட்சி முறை அமைத்தனர். எனக்குள்ள குறை என்னவென்றால் - அதற்கு ஆதரவாக, பிரஜா சோμயலிஸ்டு உறுப்பினர் குருபாத சுவாமியும் மற்றவர்களும் கூறியுள்ளனர் - இந்தப் பதின்மூன்று ஆண்டுகளாகக் கூட்டாட்சி முறையை நடத்திவந்தவிதம், இராஜ்யங்களின் மனம் முறியும்படியாக அமைந்துவிட்டது என்பதாகும் அவர்கள் உணருகிறார்கள் - அவர்கள் என் பக்கம் துணை நிற்காமல் இருக்கலாம் - வேக வேகமாக இராஜ்யங்கள் மானியம்பெறுகிற மன்றங்களாக ஆகிக்கொண்டு வருகின்றன என்று உணருகிறார்கள். தாம், பின்னணிக்குத் தள்ளப்பட்டுப் போனதாக அவர்களுக்கு ஒரு உணர்வு இருக்கிறது; எனவே, அதிகாரம் அதிகம் பெறவேண்டும் என்ற எண்ணம் இயல்பாக எழுகிறது. இத்துடன், பிரதேச வளர்ச்சியிலே வேற்றுமையும் இணைகிறது; மொழிப் பிரச்சினைபற்றிய சிக்கலும் சேருகிறது; அந்நிலையில், என்போன்றவர்களுக்கு, ஏமாற்றம் ஏற்படுவதும், பிரிவினைபற்றி எண்ணுவதும், இயற்கைக்கு மாறானதென்று கருதுகிறீர்களா? எங்களைச் சந்திக்க, பாதி வழி வாருங்கள், வந்து சொல்லுங்கள், இதுவரையில்தான் செல்லலாம், இதற்குமேல் போகக்கூடாது என்று கூறுங்கள். ஆனால், பாதி வழி வந்து எம்மிடம் அதுபோலக் கூறும்போது, எங்களால் அல்ல, இராஜ்யங்களுக்குக் குந்தகம் விளையும்படியான முறையில், அரசியல் சட்டதிட்டத்தை நடத்திச்சென்றதால் உண்டாகி விட்டிருக்கிற, சிக்கல்களுக்குத் தகுந்த சமாதானம் சொல்ல வேண்டும். நிலக்கரிச் சுரங்க சம்பந்தமாக, மேற்குவங்காள சர்க்காரும் மத்திய சர்க்காரும், சுப்ரீம் கோர்ட்டுக்குப் போக வேண்டி ஏற்படவில்லையா? சட்ட மந்திரி, மேற்கு வங்காளத்தி லிருந்து வந்திருக்கிறார். வங்காளிகள் முழுத் திருப்தி அடைந் துள்ளனரா? அவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்ற முறையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். என் நண்பர் புபேஷ் குப்தா, கம்யூனிஸ்டு கொள்கை யினராக இல்லாதிருந்திருப்பின், மேற்கு வங்க உரிமைக்காக வாதாடுவதில் முதல்வராக இருந்திருப்பார். வங்காளிகளிடம் உள்ள தேசிய உணர்ச்சிக்கு நான் தலை வணங்குகிறேன். புபேஷ் குப்தா: இங்கு நான் உரிமைக்காகப் போராடினேன். டாக்டர் பி. சி. ராய் அவர்கள் அதை அறிந்திருக்கிறார். சி. என். ஏ. : ஆனால், போரிலே தோல்லி ஏற்பட்டுவிட்டது. வருந்து கிறேன். நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், இராஜ்யங்கள் மேலும்மேலும் மனம் உடைந்த நிலைக்குச் செல்கின்றன; அரசியல் சட்டதிட்டத்தைத் திரும்ப ஆராய வேண்டும், அரசியல் சட்டதிட்டம்பற்றிய புதிய மதிப்பீடு பெறவேண்டும் என்று மத்திய சர்க்கார் நினைக்கவேண்டும் என்ற கோரிக்கையை (இராஜ்யங்கள்) வலியுறுத்துகின்றன. இதிலே, என் கருத்துக்கு நினைத்தபொழுது மந்திரிசபையிலிருந்து வெளியேறவும், மீண்டும் நுழையவும் சக்திபெற்ற ஒரு பிரமுகரின் ஆதரவு இருக்கிறது - பொருளாதார - பாதுகாப்புத்துறை இணைப்பு மந்திரி, கனம் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரைக் குறிப்பிடுகிறேன். மறைந்த பெரியவர், பெரோஸ்காந்தியின் பெயரால் புதுடில்லியில் அமைந்துள்ள ஒரு மன்றத்தில், 1962, செப்டம்பர் 8-ல் பேசும்போது, அவர், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் சட்டதிட்டத்தைப்பற்றிப் பரிசீலனை நடத்த வேண்டும் என்ற விதியைப் புகுத்தத் தவறிவிட்டது குறித்துப் பேசினார் - அரசியல் சட்டதிட்டம் தீட்டியவர்களில் ஒருவர் என்ற முறையில். அதுமட்டுமல்ல, இதற்காகப் பொதுமக்களின் கருத்துத் திரண்டெழவேண்டும் என்றும் குறிப்பிட்டார். பொது மக்களின் கருத்துகளைப் பாதுகாப்பவர்களில் ஒருவன் என்று என்னைக் கருதி என்னோடு வாருங்கள், இராஜ்யங்களின் மனப் பான்மை என்ன என்பதைக் கண்டறியலாம். ஆளுங்கட்சியைச் சேர்ந்த எந்த உறுப்பினருக்கும், தொல்லையை வருவிக்க நான் விரும்பவில்லை, யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் சொல்லுகிறேன், சென்னையில் ஆளுங்கட்சியில் உள்ளவர் களிலே பலர், இந்தியா ஒன்று, பிரிக்கப்பட முடியாதது என்று ஆணையிட்டுச் சொல்லக்கூடும், இந்தியாவின் அரசுரிமைமீதும் பிரதேச ஒற்றுமையின்மீதும் ஆணையிடக்கூடும். ஆனால், அவர்களின் ஏற்பாடுகளில் ஒன்று உதாசீனப்படுத்தப்பட்டால், அவர்கள் குறிப்பிடும் திட்டங்களிலே ஏதாவதொன்று எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால் அவர்களுக்குத் தேவையான தொகை அவர்களுக்கென ஒதுக்கப்படவில்லை என்றால், அப்போதெல்லாம் அவர்கள் என்னைப்பற்றிய நினைவு பெறுகிறார்கள்! இதனால்தான் அண்ணாதுரை பிரிவினை கேட்கிறான் - என்கிறார்கள். சேலத்துக்கு எஃகு ஆலை இல்லை என்று மறுத்துவிடுங்கள்; அங்கு நான் கிளம்புகிறேன்! தூத்துக்குடி அபிவிருத்தி கிடையாது என்று மறுத்துப்பாருங்கள்; தி. மு. க. அங்கு தோன்றுகிறது! எனவே, கூட்டாட்சி முறையை ஓரரசு முறையாக்கும் முயற்சிக்குக் கிளம்பியுள்ள எதிர்ப்பின் ஈட்டிமுனை, தி. மு. க. என்று கொள்ளவேண்டும். பாராளு மன்றத்தின் பெரியவர்கள் நீங்கள்! ஏன் இந்தப் பிரச்சினையைக் காட்டுக்கு அழைத்துச் செல்கிறீர்கள்? அரசியல் அரங்கிலே மேலான இடத்துக்கு, பிரச்சினையை உயர்த்துங்கள்; கூட்டாட்சியை உண்மையான கூட்டாட்சி ஆக்குங்கள். சில உறுப்பினர்கள் திரும்பி என்னைக் கேட்பார்கள், ஆனால், நீ, பிரிவினைபற்றி அல்லவா பேசிவருகிறாய் என்று நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது அது என்றார் புபேஷ் குப்தா. மற்றவர்கள் அறிந்திராவிட்டாலுங்கூட சோவியத் அரசியல் சட்டதிட்டம் புபேஷ் குப்தாவுக்குத் தெரிந்திருக்கவேண்டும். பிரிந்துபோகும் உரிமையை அது அளிக்கிறது; ஆனால், அதனால் அரசுரிமைக்கு ஆபத்து வந்துவிட்டது என்று குய்யோ முறையோ என்று கூச்சலிட்டுக்கொண்டில்லை. புபேஷ் குப்தா, சோவியத் யூனியனிலிருந்து கெட்டவைகளைத்தான் கொள்கிறார் போலும், நல்லவைகள் அல்ல. பிரிவினை கேட்டதுமே அரசுரிமைக்கு ஆபத்து வரும் என்பது இல்லை என்று அவருக்கு நான் கூற விரும்புகிறேன். அது மட்டும் அல்ல. எங்கள் பிரிவினைப் பிரசாரம், அரசுரிமைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்று வைத்துக் கொண்டே பார்த்தால், சர்க்காரை நடத்திச் செல்லும் ஒரு ஜனநாயகக் கட்சி என்ன செய்ய முயலவேண்டும்? அது மக்களிடம் சென்றிருக்கவேண்டாமா? அரசுரிமை மக்களிடம் இருக்கிறது என்று கூறவில்லையா? மக்கள்தான் அரசியல் சட்ட திட்டத்தை ஏற்படுத்தினார்கள். அரசியல் உரிமைகளின் பிறப்பிட மான, மக்களிடம்தான், நீங்கள் சென்று முறையிடவேண்டும். நான் நம்பிக்கையுடன் மக்களை அணுகிச் செல்கிறேன். பொது மக்களுக்கு விஷய விளக்கம் அளித்து என்னை எதிர்த்துப் பிரசாரம் செய்யும் திறமை, ஆற்றல் எமக்கு உண்டு என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அவர்களின் சர்க்காருக்குக் கூறக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் உரிமையை ஏன் விட்டுக்கொடுத்து விடுகிறீர்கள்? ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலும், பொதுத்தொண்டாற்றும் பொறுப்புமிக்கவர் என்று முறையிலும், நீங்கள் சர்க்காருக்கு "எங்களுக்கும் பொது மக்களுக்கும் இடையிலே, குறுக்கே நிற்கவேண்டாம். அண்ணாதுரை பிரிவினைக்கான பிரசாரம் நடத்துகிறான் என்றால், அதன் ஆபத்தான தன்மையை நாங்கள் நன்றாக உணர்ந்திருக்கிறோம். நாங்கள் மக்களைச் சந்தித்து, அந்தப் பிரசாரத்தின் விஷம் நிறைந்த தன்மையை, மக்கள் உணரும்படி செய்வோம்’’ என்று யோசனை கூறவேண்டும். ஜனநாயகவாதி என்ற முறையில் சாமான்யர்களுக்கு ஓரளவு மதிப்பளிக்கவேண்டும் என்று இந்த மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன். சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிடமுடியும் என்று நினைக்காதீர்கள். சாமான்யன் நிரம்பப் படித்தவனாக இல்லா திருக்கலாம் - சிறப்பாகச் சட்ட அறிவு பெறாதவனாக இருக்கலாம் - ஆனால், வளமான பொது அறிவு பெற்றிருக் கிறான், வெண்ணெய் எது, சுண்ணாம்பு எது என்ற வித்தியாசம் கண்டறிய அவனுக்குத் தெரியும். நீங்கள் இந்த மசோதாவைக் கொண்டுவருகிறீர்கள் என்றால், நாட்டு மக்கள் அவ்வளவு பேர்களுடைய பொது அறிவுத் திறனிலும் நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள் என்று ஆகும்! பிரச்சினையை ஏன் பொதுமக்களுக்கு விட்டுவிடக்கூடாது? நானும் விரல்விட்டு எண்ணக்கூடிய என் கட்சியினர் சிலரும் சேர்ந்துகொண்டு பொதுமக்களை ஏய்த்துவிட முடியும், தவறான வழியில் அழைத்துச் செல்ல முடியும் என்று கருதாதீர்கள். சட்ட மந்திரி, மற்றோர் மன்றத்தில், பள்ளிச் சிறார்களை மட்டும் மகிழ வைக்கும் ஒரு காரணம் காட்டினார். . . . கனம். ராமி ரெட்டி: தவறான முறை செல்லும் தத்துவ வாதம். சி. என். ஏ. : என்னுடையதா? கனம். ராமி ரெட்டி: உம்முடைய தத்துவ வாதம் தவறான வழி அழைத்துச் செல்லக் கூடியது. . . கனம். அக்பர் அலிகான்: இந்தியாவின் வரலாற்றில் வகுப்புவாத உணர்ச்சிகள் எந்த முறையிலே வேலை செய்தன, வகுப்புவாத உணர்ச்சியாலும் வகுப்புவாதத்தின் பேரால் வெளியிடப்பட்ட முறையீடுகளாலும் மக்கள் எப்படி வசப்படுத்தப்பட்டு இழுத்துச் செல்லப் பட்டார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும் என்று நான் அண்ணாதுரையைக் கேட்டுக்கொள்கிறேன். கனம். சந்தோஷ்குமார் பாசு: இந்த விஷயத்தை நேர்த்தியான முறையிலே எடுத்துப் பேசிக்கொண்டு வருகிற அண்ணாதுரையை நான் மற்றும் ஓர் கேள்வி கேட்க விரும்புகிறேன். மத்திய சர்க்காருக்கு அளவு கடந்த அதிகாரம் இருக்கிறது, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்ற கூச்சல் கிளம்பிய பிறகுதான், பாகிஸ்தானுக் கான கூச்சல் கிளப்பப்பட்டது என்பது உண்மையல்லவா? சி. என். ஏ. : துணைத்தலைவர் அவர்களே! நான் சொல்லவேண்டி யவைகளை விளக்கியான பிறகு, தாங்கள் அருள் கூர்ந்து, எனக்கு மேலும் பேசச் சிறிது நேரம் தந்தால் இதற்கு பதில் அளிக்க முயல்கிறேன். துணைத்தலைவர்: இன்னும் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளலாம். சி. என். ஏ. : அரசுரிமை மக்களிடம் இருக்கிற வரையில், எந்தப் பிரச்சினைக்கும் தீர்ப்பளிக்கவேண்டிய தகுதிமிக்க அதிகாரம் படைத்தவர்கள் மக்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்தபடி, கூட்டாட்சி அமைப்பு முறை ஒரு குறிப்பிட்ட அளவு கெடுக்கப்பட்டுப்போயிருக்கிற காரணத்தினால், ஓரரசு முறைக்குச் சென்றுகொண்டிருப்பதனால், பிரிவினைக்கான கோரிக்கையை, மற்ற இராஜ்ஜியங்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியுடன் சேர்த்துப் பார்த்துக் கவனிக்கவேண்டும் என்று கூறுகிறேன். எங்கள் பிரசாரம் ஆபத்தானது என்று வைத்துக் கொண்டு பார்ப்பதானாலும்கூட, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எங்களை எதிர்ப்பிரசாரத்தால் சமாளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிக்கொண்டிருந்தேன். அவர்கள் இந்தத் தமது உரிமை விட்டுக்கொடுப்பதாக இருந்தாலும், இந்த உரிமை யையும் சர்க்காருக்கு, நிர்வாகத் துறையினருக்கு விட்டுவிடுவதாக இருந்தாலும், எங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்து சமாளிக்க, அடிப்படை உரிமைகளைக் குறைக்கவேண்டியது அவசியந்தானா என்பதுபற்றி யோசித்துப் பார்க்கும்படி, இந்த மன்றத்து உறுப்பினர்களை வேண்டிக் கேட்டுக்கொள்வேன். இந்த மன்றம் அதுபற்றி யோசிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அடிப்படை உரிமைகள் கட்டுக்கடங்கக்கூடாதவை அல்ல என்பதை நான் தெரிந்திருக்கிறேன், நன்றாக அறிந்திருக்கிறேன் - கட்டு திட்டங்கள் உள்ளன. . . . . . கனம். அக்பல் அலிகான்: மிக உண்மை. சி. என். ஏ. : பார்லிமெண்டுக்கு, அந்த உரிமைகளைக் கட்டுப்படுத்த எல்லாவித அதிகாரமும் உண்டு. இவை எளிதாக உணர்ந்து கொள்ளத்தக்க விஷயங்கள். இவைகளைப் புரிந்துகொள்ள அதிகச் சிரமப்படவேண்டியதில்லை. ஆனால், முக்கியத்துவம் வாய்ந்தவை கட்டுதிட்டங்கள் அல்ல, உரிமைகள்தாம் என்பதைப் புரிந்துகொள்ளச் சிறிதளவு சிரமம் எடுத்துக்கொள்ளவேண்டும்! ஆகவேதான், நமது அரசியல் சட்டதிட்டத்தில் மிகத் தெளி வாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள், உரிமைகளுக்கு விதிக்கப்படும் கட்டுதிட்டங்கள், தக்க காரணங்களுக்காக இருக்கவேண்டும் என்று. இந்தக் கட்டுதிட்டத்துக்குத் தக்க காரணம் இல்லை என்பது என் பணிவான முறையீடாகும் - தக்க காரணம் இல்லை என்றால், முதலாவதாக, நீங்கள் பிரச்சினையை அலசிப் பார்க்க வில்லை, இரண்டாவதாக, எங்களைப் புரிந்துகொள்ள முயல வில்லை, மூன்றாவதாக நீங்கள் எமக்கு மாற்றுத் திட்டங்களைத் தரவில்லை, நாலாவதாக மக்களை நீங்கள் நம்பிக்கைக்கு உரியவர் களாகக் கொள்ளவில்லை! சட்டத்துறை முறைப்படி இல்லா திருக்கக்கூடும், ஆனால், அரசியல்துறை முறைப்படி, நீங்கள் புகுத்தும் கட்டுத்திட்டத்துக்குப் போதுமான காரணம் இல்லை. அடிப்படை உரிமைகளைப்பற்றிப் பேசும்போது, சட்ட மந்திரி அந்த மன்றத்தில் வேடிக்கையான ஒரு வாதம் செய்தார் என்பதுபற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அடிப்படை உரிமை களை முழுவதும் அப்படியே பயன்படுத்துவதாக இருந்தால், அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்தியே சிலர், சீனர்களையே வரவேற்றிருப்பார்கள் என்று கூறினார். ஆளுங்கட்சியினர், குறிப்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளக்கூடிய சில உணர்ச்சிகளையும் அவர் சேர்த்துக்கொண்டு பேசினார். நான் அதுபற்றிக் கவலைகொள்ளத் தேவை இல்லை. ஆனால், சட்ட மந்திரியாகட்டும், வேறெந்த மந்திரிதானாகட்டும், பொருள் களை அறிந்து தீர்ப்பளிக்கும் திறமை பொதுமக்களுக்கு உண்டு என்பதை ஏன் குறைத்து மதிப்பிடவேண்டும்? - இதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மேடைமீதேறி எவராவது, "நாங்கள் சீனர்களை வரவேற்கிறோம்’ என்று பேசினால், மக்கள் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்? இல்லை! நமது மக்கள், அரசியல் சட்டதிட்டத்தின் பகுதிகளும் விதிகளும் கற்றறியாது இருக்கலாம். ஆனால், நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளும் திறம் இருக்கிறது. அதனால்தான், விடுதலைப் போராட்டத்துக்கான அழைப்பு வந்ததும், வலிவுமிக்க ஏகாதிபத்தியம் புகுத்திய அடிமைத்தனம் அவ்வளவு இருந்தபோதிலும், மக்கள் முன்னணியில் வந்து நிற்கத் தயாராக இருந்தனர்! பொது மக்களிடம் உள்ள நம்பிக்கையைக் குறைத்துக்கொள்ளாதீர்கள். அடிப்படை உரிமைகளைப் பொறுத்தவரையில், அந்த மன்றத்தில், சட்ட மந்திரி பேசியது, உண்மைக்கு வெகுதூரம் அப்பாற்பட்டது மட்டுமல்ல, ஆழ்ந்த யோசனைகொண்டது மல்ல. ஆனால், நான் சொல்லிக்கொண்டு வந்ததுபோல, கட்டு திட்டங்களைப் புகுத்தலாம். பார்லிமெண்டுக்கு, கட்டுத்திட்டம் புகுத்தும் அதிகாரம் இருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுதிட்டங் களெல்லாம், கட்டுதிட்டங்கள் போட்டே ஆகவேண்டும் என்று வலியுறுத்திக் காட்டத்தக்க அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டுள்ளனவா என்பதைக் கவனித்தே போடப்படவேண்டும். மோதிலால் நேரு கமிட்டியில் என்று நினைக்கிறேன், 1928இல் பண்டித ஜவஹர்லால் நேரு சொன்னார், மிகத் தெளிவாக; நாம் நமது அடிப்படை உரிமைகளைப் பெறவேண்டும் என்பது மட்டு மல்ல, அந்த அடிப்படை உரிமைகளை எந்த நிலைமை காரண மாகவும் நீக்கிவிடமாட்டோம் என்று நமது மக்களுக்கு உறுதி அளிக்கவேண்டும் என்று கூறினார். என் வார்த்தைகளை நன்கு கவனியுங்கள், துணைத்தலைவர் அவர்களே! தங்கள் மூலமாக, மன்றத்து உறுப்பினர்களையும் இந்த வார்த்தைகளை நன்கு கவனித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன் - எந்த நிலைமை காரணமாகவும்! அதற்குப் பிறகு நாம் வலிவற்றவர்கள் ஆகி விட்டிருக்கக்கூடும், அதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்தக் கட்டுதிட்டம் விதிக்கவேண்டிய அளவுக்கு ஏதேனும் அசாதாரண நிலைமையாவது எழும்பி இருக்கிறதா? இல்லை. இப்போது தி. மு. க. சட்ட எல்லைகளை மீறாமல் இருந்திருக்கலாம், ஆனால், விஷமம் செய்யும் தன்மை, ஆபத்து விளைவிக்கும் தன்மை இருக்கிறது, அந்தத் தன்மையை இரும்புக் கரம்கொண்டு ஒழித்துக் கட்டியாகவேண்டும் என்று வாதங்கள் எடுத்துக் கூறப்பட்டன. இந்தத் தன்மை என்ற வார்த்தைபற்றிச் சட்ட விற்பன்னர்கள் தரும் இடம் என்ன, கொள்ளும் பொருள் என்ன என்பதுபற்றி எல்லாம் பேச எனக்கு நேரம் இல்லை என்று கருதுகிறேன். ஆனால், இதனைக் கூறுவேன் - மிகச்சிறந்த சட்ட விற்பன்னர்களில் ஒருவர், ஜஸ்டிஸ் பதஞ்சலி சாஸ்திரி, கூறியிருக் கிறார்: சில விஷக் கிளைகள் தழைத்து வளரக்கூட விட்டு வைக்க லாம், அவைகளை எடுத்துப்போடும் முயற்சியில் தருவையே வெட்டி வீழ்த்தி, உயிர்புச் சக்தியையே நாசமாக்குவதைவிட! - என்று அடிப்படை உரிமைகள்பற்றியும், அதற்குப் போடப்படும் கட்டுதிட்டம்பற்றியும் எடுத்துக் கூறப்பட்ட நீதிமானின் கருத்து களிலே அது ஒன்றாகும். அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் பலப்பல இருக்கின்றன. நாம் அவைகளுக்குக் கட்டுப் பட வேண்டியதில்லை, ஆனால் ஜனநாயக நாடுகளில், கருத்து முற்போக்கு, தாராளத் தன்மை எவ்விதம் உள்ளது என்பதை அவை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு காலத்தில், நியூயார்க்கில் என்று கருதுகிறேன், ஆசிரியர்களாக விரும்புபவர்கள், அரசியல் சட்டதிட்டத்துக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் “பக்தி விசுவாசம்’ காட்டும் ஆணை எடுத்துக்கொண்டாகவேண்டும் என்று ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டபோது, நியூயார்க் கவர்னர் அத்தகைய முறையில் அடிப்படை உரிமையைக் கட்டுப் படுத்திக் குறைப்பது தேவையற்றது என்று கூறி, சட்டத்தைத் தடுத்துவிட்டார். ஆசிரியர் கடமை, பாடம் போதிப்பது, அவருடைய நம்பிக்கைகளை, உணர்ச்சிகளை எடுத்துக்காட்டுவது அல்ல என்று அவர் வாதிட்டார். மற்ற ஜனநாயக நாடுகளிலே, வளர்க்கப்பட்டுள்ள, முற்போக்கான தாரளத் தன்மையுள்ள பாரம்பரியத்தைப் பின்பற்றவேண்டும், அதற்கு ஏற்பவாவது நமது சிந்தனைகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும். அதற்குப் பதிலாக,”எங்களுக்கு அழித்துவிடும் வலிவு இருக்கிறது, எந்த எதிர்க்கட்சியையும் அழிக்கும் வலிவு! இன்று, தி. மு. க.; நாளைக்கு கம்யூனிஸ்டு கட்சி; மறுநாள் ஜனசங்கம் - என்று கூறுவதானால், நான் கூறுகிறேன், உங்களிடம் அதிகாரம் இருக்கிறது, செய்து கொள்ளுங்கள்! ஆனால், சட்டத்தின்மூலம் அடக்குமுறை நடத்தி, வலிவும் ஆதிக்கமும் தேடிக்கொண்ட எந்த சர்க்காரும் எங்குச் சென்றன, விளைவு என்ன என்பதை நினைவில் கொள்ளுங்கள்; நான் கவனப்படுத்தத் தேவையில்லை. இன்றுகூடப் பார்த்தோம், மன்றத்தின் இந்தப் பகுதியிலே, புபேஷ் குப்தா, தி. மு. கழகத்தை மட்டுமல்ல, ஜனசங்கத்தையும் எதிர்த்துச் சமாளிக்கவேண்டும், அது வகுப்புவாத அமைப்பு என்று அவர் கருதுவதால், - என்றார். பிரஜா சோμயலிஸ்டுகள், தி. மு. கழகத்தைவிட அதிக ஆபத்தானது கம்யூனிஸ்டு கட்சி என்று கூறினர். எனவே, நாம் வசதியாகக் கிடைத்துவிடுகிறோம் - எதிர்க்கட்சிகளாக உள்ள நாம் - கனம். யாஜி: இந்தியாவில் பிரிவினை வேண்டும் என்று வாதிடுகிற எந்தக் கட்சிக்கும் பொருந்தக்கூடியது அது - அது கம்யூனிஸ்டு கட்சியாக இருந்தாலும் சரி, தி. மு. கழகமானாலும் சரி. புபேஷ் குப்தா: அவர்தான், திரு. யாஜி! துணைத்தலைவர் அவர்களே நாம் எல்லோரும் சேர்ந்து யாரையாவது எதிர்த்துச் சமாளிக்க வேண்டும் என்றால், அது திரு. யாஜியைத்தான். கனம். எ. கே. சென் (சட்ட மந்திரி): துணைத்தலைவர் அவர்களே! நான் இந்த அமைதி இந்திய பாதுகாப்புச் சட்டவிதிகளால் ஏற்பட்டது என்று சொன்னதாகச் சொல்லப்பட்டது, நான் அப்படிச் சொல்லவில்லை. ஓரளவுக்கு, அப்படி, என்று தான் சொன்னேன். தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்காகத்தான், அந்த விதிகள் ஏற்பட்டுள்ளன. நான் தி. மு. கழகத்துக்காக என்றோ மற்ற யாருக்காகவேனும் என்றோ சொல்லவில்லை. ஓரளவுக்கு, இந்தியப் பாதுகாப்புச் சட்டம் இந்த அமைதிக்குக் காரணம் என்று சொன்னேன் இதில் என்ன தவறு? சி. என். ஏ. : நான் எதைக் குறை கூறினேன் என்றால், அவ்விதமான கருத்துரை, பரிவு காட்டும் உணர்ச்சியல்ல என்பதுபற்றித்தான் நான் குறை கூறினேன். எ. கே. சென்: குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விரும்புபவர்கள் இருக்கிறார்கள்; தவறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள்; நாம் அதனைக் காணாமல் கண்களை மூடிக் கொள்ள முடியுமா? ஆனால், கனம் உறுப்பினர் அதனைத் தமது தலைக்குப் பொருந்தும் குல்லாய் என்று கொள்ளத் தேவையில்லை. நான் அவரையோ, அவருடைய கட்சியையோ குறிப்பிட வில்லை. துணைத்தலைவர்: அண்ணாதுரை! நீங்கள் மேலாகப் பேசுங்கள். இப்போது விளக்கம் ஏற்பட்டுவிட்டது என்று நம்புகிறேன். சி. என். ஏ. : ஆளுங்கட்சி பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் போக்கிலே சுவை கொள்ளும்படி செய்துவிட்டால், இன்று அது தி. மு. கழகத்தைக் குறியாகக்கொண்டிருக்கலாம், ஆனால், நாளை மற்றக் கட்சிகளின்மீதும் குறி பார்க்கப்படும் என்பதை மறுக்க உத்தரவாதம் என்ன இருக்கிறது? அதற்காக ஆளுங்கட்சி வாதாடத் தேவையில்லை; நாமே அதற்கான விதமாக வாதாடிக் கொள்கிறோம்; கம்யூனிஸ்டுகளை ஒடுக்கவேண்டுமென பிரஜா சோμயலிஸ்டு வாதாடுகிறது, ஜனசங்கத்தை ஒடுக்கவேண்டு மென கம்யூனிஸ்டு கட்சி வாதிடுகிறது! இது அதிகப்பட அதிகப்பட ஆளுங்கட்சிக்குக் கொண்டாட்டந்தான்; எனவே, மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன் - அடிப்படை உரிமைகளைக் குறைக்கும் பிரச்சினை என்ற முறையில் இதனைக் கவனித்துப் பார்க்கவேண்டும். ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எங்கள் பிரசாரத்தைத் திடமாக எதிர்த்துப் பிரசாரம் செய்யத் தங்களால் முடியும் என்பதையாவது எடுத்துச்சொல்லட்டும். எங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்து சமாளிக்க முன்வரட்டும், எங்களுக்கு மன மாற்றம் ஏற்படுத்த முயற்சி எடுத்துக்கொள்ள முன்வரட்டும் - அந்தக் காரணத்துக்காக, இந்த மசோதாவை, முழுவதும் அவர்கள் எதிர்க்கவேண்டும். ஏனெனில், என் இந்த மசோதாவை ஒத்துக்கொள்வதாக, மற்றோர் நண்பர் குருபாதசாமி இதன் மொத்த நோக்கத்தை ஒத்துக்கொள்வதாகச் சொன்னார். . . புபேஷ் குப்தா: மொத்தமான அரசியல் நோக்கம். . . சி. என். ஏ. : அதன் பொருள் என்னவென்றால், இவர்கள் உரிமைக்குப் போடப்படும் கட்டுதிட்டங்களின் விளைவுகள்பற்றி உணரு கிறார்கள் என்பதுதான். எனவே இப்படிப்பட்ட சட்டத்தின் விளைவுகள்பற்றி - அது எந்தக் கட்சியின்மீது ஏவப்படுகிறதோ அதுபற்றி அல்ல - கருதிப்பார்க்கக் கேட்டுக்கொள்கிறேன். தங்களிடத்திலேயும் மக்களிடத்திலேயும், ஆளுங்கட்சி யினருக்கு நம்பிக்கை இருக்குமானால், ஜனநாயக சமூகத்தில், எண்ண, எடுத்துரைக்க இருக்கும் உரிமை குறைக்கப்படக்கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. "மிக முக்கியமான விஷயங்களில், உண்மையைக் கண்டறிவதும், அதனை எடுத்துரைப்பதும், சமூகத்துக்கும் சர்க்காருக்கும் உள்ள மிக முக்கியமான நோக்கமாகும். தங்கு தடையற்ற விதமாக விவாதித்துப் பேசும் முறை மூலமாகவே, இது சாத்தியமாகும். பாகியாட் கூறுகிறபடி, ஏதாவதொரு பக்கத்தில் வன்முறை துணையாக்கப் படுகிறதோ அப்போது, அது உண்மையின் பக்கம் துணை நிற்கிறதா, பொய்யின் பக்கம் துணை நிற்கிறதா என்பது அறுதியிட்டுக் கூற முடியாததாகிவிடுகிறது. கருத்துப் போரில், உண்மை இயற்கையாகப் பெறவேண்டிய சாதகங் களை எல்லாம் இழந்துவிடுகிறது.’’ வன்முறை மூலம் அமைதியை ஏற்படுத்தாதீர்கள், இதய மொழி பேசி நட்புறவு எழச் செய்யுங்கள் என்று சர்க்காரைக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, அடிப்படை உரிமைகளின் சார்பில் நிற்கும்படி ஆளுங்கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன் - பொது மக்களுக்குக் கருத்து விளக்கம் அளிக்க உங்களுக்கு உள்ள உரிமையை நிலைநிறுத்திக்கொள்ளுங்கள் - கருத்து வேற்றுமைகளை எடுத்துரைக்கும் உரிமை, எண்ணும் உரிமை இல்லாது செய்திடச் சட்டத்தின் துணையைத் தேடு வதற்குப் பதிலாக! கடைசியாக, எனக்குத் தவறான வழியில் செல்லும் தத்துவ சாஸ்திர முறை இருப்பதாக, ராமி ரெட்டி அவர்கள் சொன்னார்களே. . . . . ராமி ரெட்டி: தவறான வழிக்கு அழைத்துச் செல்லும் வாதமுறை. சி. என். ஏ. : எந்த உறுப்பினரும், தவறான வழி அழைத்துச் செல்வதற்கு இணங்கிவிடக்கூடாது! யாரையும் தவறான வழியில் அழைத்துச் செல்லும் திறமை எனக்கு இல்லை. ஒருவேளை, என்னுடைய தத்துவ சாஸ்திர முறையே தவறானது என்று சொல்லுகிறாரோ என்று நினைத்தேன் - ஏனெனில், அந்த முறை அப்பழுக்கற்றதாக, எனக்கு இருக்கவேண்டும் என்பதிலே நான் மெத்தக் கவலை கொள்பவன். நான் மற்றவர்களைத் தவறான வழியில் அழைத்துச் செல்பவன் என்று கூறப்பட்ட புகாருக்கு, நான் சொல்ல விரும்புவது, மக்களைத் தவறான வழியில் இழுத்துச் செல்லும் வலிவுமிக்கவன் அல்ல நான்! சாரோகி: துணைத்தலைவர் அவர்களே! கனம் அங்கத்தினர், அவருடைய இராஜ்ய மக்களைத் தவறான வழியில் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறார். அதனால்தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. ஒருவர்: மக்களைத் தவறான வழியில் கொண்டுசெல்வீர்கள் - என்பதுதான், உள்ள பயம். அக்பர் அலிகான்: வகுப்புவாத காரணங்கள் பற்றி. . . . . துணைத்தலைவர்: சரி, அண்ணாதுரை, தயவுசெய்து பேச்சை முடித்து விடுங்கள். நீங்கள் இராஜ்ய மக்களைத் தவறான வழியில் அழைத்துச் செல்வதாகவும், அதற்காகத்தான் இந்தச் சட்டம் தேவைப்படுகிறது என்றும் சொன்னார். சாரோகி: மக்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் தூண்டி விட்டுவிடுகிறீர்கள், அவர்கள் அதற்கேற்ப ஆடுகிறார்கள். அதற்காகத்தான் இந்த மசோதா சட்டமாக்கப்படுகிறது. துணைத்தலைவர்: அவர்களும் ஆடிவிட நேரிடுமோ என்று அவர்கள் அஞ்சு கிறார்கள். சி. என். ஏ. : துணைத்தலைவர் அவர்களே! இந்த அறிவிப்பு, சென்னை காங்கிரசாருக்கு உள்ள திறமையை, ஆற்றலைக் குறைத்து மதிப்பிடுவதாகிறது. சந்தோஷ்குமார் பாசு: என் நண்பர் சொன்னார், வன்முறை வலிவை உபயோகிக் காதீர்கள் என்றார். இந்தச் சட்டம், வன்முறை வலிவைப் புகுத்தும், உங்கள் கொள்கையைத் திணிக்காதபடி செய்ய. ஆனால், தி. மு. க. வன்முறை வலிவை அறவே நீக்கிவிட்டதா? அல்லது அந்தப் போக்கினருடன் தொடர்பற்று இருக்கிறதா? நீங்கள் எப்போதும், வன்முறை வலிவை நீக்கியிருந்திருக் கிறீர்களா? சி. என். ஏ. : நிச்சயமாக! பலமுறை நாங்கள் அறிவித்திருக்கிறோம், நாங்கள் சட்டதிட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்ளும் கட்சியினர் என்று. பாசு: இரயில்வே ஸ்டேஷன்களையும் - பெயர்ப்பலகைகளையும் கொளுத்தியிருந்தாலும்கூட. . . . சி. என். ஏ. : ஸ்டேஷன்களை அல்ல, அரசியல் சட்டத்தை! என் மதிப்பு மிக்க நண்பர், திராவிடர் கழக நடவடிக்கைகளை, திராவிட முன்னேற்றக் கழக நடவடிக்கைகள் என்று தப்பாகக் கருதிக் கொள்கிறார். தொல்லை இதுதான். மன்றத்துக்கு இதனை நான் கூறுகிறேன், இந்த மசோதாவினால், நீங்கள், தி. மு. கழகத்தைத் தேர்தலில் ஈடுபட ஒட்டாமல் தடுத்துவிடலாம். ஆனால், திராவிடர் கழகம் தேர்தலுக்கு நிற்கும் கட்சி அல்ல; ஆகவே, இந்தச் சட்டம் அவர்களைப் பாதிக்கப்போவதில்லை. பாசு: எங்களுக்குள்ள கவலை, தி. க. வா, தி. மு. கா. வா என்பதல்ல. சட்டம்பற்றித்தான் நாங்கள் கருதுகிறோம் - அது எல்லோருக்கும் பிரயோகிக்கப்படக்கூடியது. வாஜ்பாய்: ஆனால், தி. க. காங்கிரசுக்குக் கூட்டாளி என்று நம்புகிறேன். சி. என். ஏ. : அதுபற்றி யோசிக்கவேண்டியது, காங்கிரஸ் கட்சி. என் குறிப்பு இதுதான், துணைத்தலைவர் அவர்களே! ஆளுங்கட்சி உறுப்பினர்களை வேண்டுகிறேன், சர்க்காருக்குச் சொல்லுங்கள், இந்த மசோதா தேவையற்றது, ஜனநாயகத்துக்கு விரோதமானது, அடிப்படை உரிமையை வெட்டி வீழ்த்துவது என்பதை, - நான் அரசியல் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமை பற்றிச் சொல்லவில்லை - காங்கிரசாருக்கு உள்ள அடிப்படை உரிமை பற்றிச் சொல்லுகிறேன். இந்தப் பிரச்சினையிலே அவர்கள் பங்குபெற்றவராக இல்லை. அவர்களை விலகி நிற்கும்படி சொல்லப்பட்டுவிடுகிறது. இந்த மசோதா சொல்லுகிறது, “அண்ணாதுரையை எதிர்த்துச் சமாளித்தாகவேண்டும்; நீங்கள் அதிலே தோற்றுப்போய்விட்டீர்கள். எனவே, நான் வருகிறேன் - வரவிடுங்கள்!’’ என்று சொல்லுகிறது! நான் மெத்த மதிப்பு வைத்திருக்கிறேன் சென்னைக் காங்கிரசாரிடம். ஆனால் இது சென்னைக் காங்கிரசாரின் திறமையிலும் ஆற்றலிலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றுவதுபோன்ற மசோதா. நான் மதிக்கிறேன். நீங்கள் அவர்களுடைய முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் அதுதான் தொல்லை. எதிர்த்துப் பிரசாரம் செய்து சமாளிக்கும் திறமை அவர்களுக்கு இல்லை என்று நீங்கள் நினைப்பதாகத் தெரிகிறது. வருந்தத்தக்க நிலைமை இதுதான். ஆகவேதான் ஆளுங்கட்சி உறுப்பினர்களை வேண்டு கிறேன், சர்க்காருக்குச் சொல்லுங்கள்,”நாங்கள் இருக்கிறோம், வீரமிக்க திடகாத்திரர்கள்! பிளவுப் போக்குகளை எதிர்த்துப் போராட! அண்ணாதுரையைக் கவனித்துக்கொள்கிறோம். எங்களை விடுங்கள்! அவன் நோஞ்சான்! ஒரு பார்வை போதும், அழுத்தமான ஒரு வார்த்தை போதும், அந்தப் பயலை பொசுக்கித்தள்ள’’ - என்று சொல்லுங்கள். உங்கள் கட்சிக்கும், உங்கள் சர்க்காருக்கும் இதுபோலச் சொல்லி, இந்த மசோதாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் இல்லை யென்றால், இது சட்டப் புத்தகத்தில் ஏறிவிட்டால், இப்போது மட்டுமல்ல, என்றைக்கும் கருதுவர், இந்தியாவிலே ஒரு நிலைமை ஏற்பட்டது, அப்போது ஒரு சிறு கட்சியினரைச் சமாளிக்க - அல்லது, என் நண்பர் புபேஷ் குப்தாவின் வார்த்தைகளைப் பயன்படுத்துவதானால், ஒரு தன்னந்தனி ஆளைச் சமாளிக்க - இந்திய அரசியல் சட்டத்துக்கே ஒரு திருத்தம் கொண்டு வரவேண்டி நேரிட்டது என்பர். புபேஷ் குப்தா: இல்லை, இல்லை, நான் அதைச் சொல்லவில்லை. அக்பர் அலிகான்: அண்ணாதுரைக்கு நான் உறுதியாகச் சொல்வேன் - ஒரு தனி ஆளுக்காகவோ, ஒரு தனிக் கட்சிக்காகவோ, இது கொண்டு வரப்படுவதல்ல. பிரிவினைத் தன்மைகள் எங்கு இருந்தாலும், பஞ்சாபில், சென்னையில், நாட்டிலே வேறு எந்தப் பகுதியி லிருந்தாலும் அதனை எதிர்த்துத்தான் இந்த மசோதா - அதுவும் கடந்த 30 ஆண்டுகளாக உள்ள வகுப்புவாதத் தன்மைகள், வகுப்புவாத உணர்ச்சிகள் இவைகளையும் கவனத்தில் வைத்துச் செய்யப்படுவது. புபேஷ் குப்தா: துணைத் தலைவர் அவர்களே! நான் அவரை, தனி ஆள், ஒண்டி ஆள் என்று சொல்லவில்லை. சி. என். ஏ. : நான் அவருடைய சொற்களை நன்றியுடன் பெற்றுக் கொண்டேன், கண்டித்து அல்ல. கனம் அக்பர் அலிகான் சொன்னதுபற்றிக் கூறுகிறேன் - அவர் தமது வாதத்தைக் கூறும் போது அவருக்கு இருந்த தயக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது - நான் இதைச் சொல்வேன், இந்த மசோதா தி. மு. க. மீது மட்டுமல்ல, மற்றும் சிலர்மீதும் குறி பார்த்துத்தான் வருகிறது. நான் எந்தக் கட்சியில் இருக்கிறேனோ, அது சம்பந்தப் பட்ட மட்டில் நான் கருத்துச் செலுத்துகிறேன். வேறு பிரதிநிதிகள் இருந்தால், அவர்களும் இதுபோலப் பேசியிருப் பார்கள். ஆனால், சுயநலத்துக்காக இத்தகைய இலட்சியத்தை மூழ்கடித்துக்கொண்டவர்கள் இருப்பார்களானால், அவர்கள் பற்றி நான் கருதத் தேவையில்லை. தி. மு. கழகத்தின் நோக்கத்தை எடுத்துக்காட்டுவதுதான் என் நோக்கம். வேறு பலர்மீதும் குறி பார்க்கக்கூடும். ஆனால், நாளிதழ்கள், கிழமை இதழ்களை நீங்கள் பார்ப்பீர்களானால், அரசியல் மேடைப் பேச்சுகளைக் கேட்கச் சென்றால், அவர்கள் "கேடு கெட்ட தி. மு. க.’’ பற்றித்தான் சுட்டிக் காட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம். ஆகவே, தி. மு. கழகத்தைச் சுட்டிக்காட்டுவதனால், கூறப்படும் குற்றச்சாட்டுகளில் சிலவற்றுக்கு நான் பதிலளித்தேன். கடைசியாக, மசோதாவைக் கொண்டுவந்தவரை ஜனநாயகத்தின் பேரால், அரசியல் நாகரிக உணர்ச்சியின் பேரால் கேட்டுக்கொள்கிறேன், தீமையை விலக்கிக் கொள்ளும் திறமை மக்களுக்கு உண்டு என்பதிலே தளராத நம்பிக்கைகொண்டு, இந்த மசோதாவை விட்டுவிடுங்கள். அதற்கு இசைவு தர, இயல வில்லையானால், நெருக்கடி நேரத்தை எண்ணி, இதை ஒத்திப்போடவாவது செய்யும்படி அவரைக் கேட்டுக்கொள் கிறேன் - ஏனெனில், கருத்து வேற்றுமைகளுள்ள பிரச்சினை களைப் பின்னணியில் வைத்திருக்கவேண்டும். அவைபற்றி இப்போது பேசிக்கொண்டிருப்பது கூடாது. இந்த மசோதா கொண்டுவருபவர், இந்த வேண்டுகோளையும் ஏற்றுக்கொள்ள, இயலவில்லை என்றால், துணைத்தலைவர் அவர்களே! ஆளுங் கட்சியுடைய, முறைகள், நடவடிக்கை, மசோதா, இவற்றினுக்கு என் கண்டன எதிர்ப்பைப் பதிவு செய்திட அனுமதி கொடுங்கள். அன்புள்ள அண்ணாதுரை 3-2-1963 நீண்ட இடைவெளிக்குப் பிறகு!….. இடையில் கடிதம் எழுதாமைக்குக் காரணம் ஜோரேசுக்கு "வண்டி‘யே “சர்க்கார் மாளிகை’ - எனக்குக்”காஞ்சி’யே "திராவிடநாடு’ இந்தி எதிர்ப்புக்கு மக்கள் பாராட்டு துதி பாடிக் கிடந்தவர்களின் தூற்றலைப் பொருட்படுத்தாதே! மூட்டி விடுவோன் - கேட்டு மருள்வோன் - மன்றத்தான் - தெளிவளிப்பான் - உரையாடல்கள் கழகம் புயலுக்குத் தப்பி வளைந்திடும் நாணல் ஆங்கிலமே ஆட்சிமொழி ஆகவேண்டும் என்பார் கருத்துரைகள் இந்தி ஆதிக்கத்தைக் கண்டித்தவர்களின் கனிவுரைகள் தம்பி! நீண்ட பல நாட்களுக்குப் பிறகு - நாட்களா? - பல திங்களுக்குப் பிறகு மடல் மூலம் உன்னுடன் அளவளாவி மகிழும் வாய்ப்பினைப் பெறுகிறேன். என் இதயத்துக்குப் பெரிதும் வேதனை தந்த இடைவெளி. குற்றம் உன்மீது துளியும் இல்லை. என் நிலை விளைவித்ததே இந்த இடைவெளி. கிழமைதோறும் நாட்டு நடப்புகளைக் காண்பதால் என் உள்ளத்தில் எழும் எண்ணங்களை உன்னிடம் எடுத்துக்கூறி, உன் இசைவு எத்தகைய செயல் முறைக்குக் கிடைக்கும் என்பதனைக் கண்டறியும் சுவைமிக்க சீரிய முயற்சியாக "தம்பிக்குக் கடிதம்’ எனும் இப்பகுதியைத் துவக்கினேன் - வளர்ந்தது - களிப்புமிகக்கொண்டேன் - உன் மகிழ்ச்சியையும் நான் அறிவேன். ஆனால். . .? - ஆனால் என்ன அண்ணா! நான் இதழ் பெற மறுத்தேனா? இன்முகம் காட்டத் தவறினேனா? ஒரு கிழமை மடல் வரத் தவறினாலும், ஏன் வரவில்லை? ஏன் வரவில்லை? என்று ஆவலுடன் கேட்காதிருந்தேனா? ஆனால் என்ற ஆபத்தான வார்த்தையைப் போடுகிறாயே! என்மீதா தவறு இருக்கிறது? - என்று, தம்பி! கேட்கத் துடிக்கிறாய், உணர்கிறேன்; ஆனால், அந்தக் கேள்வியுடன் கோபத்தை அல்ல, கனிவினைத் தான் கலந்து தருகிறாய் - என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஓராயிரம் தொல்லைகள் நிரம்பிய பணியினைக் குறித்து உனக்கே தெரியுமே. கடுமையான பணியாற்றுவதற்கு இடையிலேயும், உனக்கு மடல் எழுதவும், கதை, கட்டுரை, உரையாடல் போன்ற வடிவங்களில் என் எண்ணங்களை வெளியிடவும் நான் தயங்கினதுமில்லை - அஃது எனக்குப் பளுவான வேலையாகவும் தோன்றினதில்லை - சொல்லப்போனால், மனத்திலே ஏற்பட்டு விடும் சுமையும், அதனாலேற்படும் சோர்வும், உனக்காக எழுதும்போது பெருமளவு குறைந்துபோவதுடன், புதிய தெம்பும் பிறந்திடுகிறது - ஆகவே இடையில், இதழ் நிறுத்தப்பட்டதற்குக் காரணம், எனக்கு எழுத நேரமும் நினைப்பும் கிடைக்கவில்லை என்பதுமல்ல, எழுதுவதால் களைப்பும் இளைப்பும் ஏற்பட்டு விட்டது என்பதுமல்ல. இதழ் நடத்தும் நிர்வாகப் பொறுப்பினைப் பார்த்துக்கொள்ள, முட்டுப்பாடின்றி நடத்திச் செல்ல எனக்கு நேரம் கிடைக்காததும், அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுமே, திராவிட நாடு இதழ் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். எனக்கு மட்டுமே தொல்லை தந்த நிலைமைகளைப்பற்றித் தம்பி! உன்னிடம் சொல்லி, உன் மனதுக்குச் சங்கடத்தை உண்டாக்க விரும்பவில்லை; பல்வேறு காரணங்களால், “திராவிட நாடு’ நிறுத்தப்பட்டது; பல திங்களாகிவிட்டதால்,”திராவிட நாடு’ என்ற பெயருடன் இதழ் நடத்தத் துரைத்தனம் அளித்திருந்த அனுமதி காலாவதி யாகிவிட்டது. மீண்டும் அதே பெயருடன் இதழ் நடத்தத் துரைத்தனத்தாரை அணுகும் முயற்சி நடைபெற்றவண்ணம் இருக்கிறது - நண்பர் செழியன் ங. ட. அதற்காவன செய்வதாகக் கூறியுள்ளார் - என்றாலும், அதற்கான “உத்தரவு’ கிடைத்திட எத்தனை காலமாகுமோ, யார் கண்டார்கள்! துரைத்தனத் தாருக்குத் தான் என்மீது அளவுகடந்த அன்பாயிற்றே!! அறிவாயே!! அதனால், நான் சிறையில் இருந்தபோது, என் இளையமகன் இளங்கோவன்,”காஞ்சி’ எனும் பெயரில் கிழமை இதழ் “இலக்கிய இதழ்’ நடத்த - பெற்றிருந்த அனுமதியைப் பயன்படுத்தி, என் பணியினைத் தொடர்ந்திட முனைகின்றேன்.”திராவிட நாடு’ இதழ் நடத்தத் துரைத்தன அனுமதி கிடைத்ததும், அந்தப் பெயருடன் இதழ் வெளிவரும் - “காஞ்சி’ இலக்கிய இதழாகிவிடும். இந்த நல்ல நம்பிக்கையுடன் நான் முன்பு”திராவிட நாடு‘, இதழில் தந்து வந்தவைகளை இனி, "காஞ்சி’ இதழ் மூலம் தர உன் இசைவு கிடைத்திடும் என்று எதிர்பார்த்து, பணியினைத் துவக்குகிறேன். தம்பி! எப்போதோ படித்த ஒரு வரலாற்றுத் துணுக்கு நினைவிற்கு வருகிறது. தென் அமெரிக்க பூபாகத்தில் மெக்சிகோ நாட்டில் விடுதலைப்போர் நடாத்திய “ஜோரேஸ்’ எனும் மாவீரன், தலைநகர் இழந்து, அரசாங்க அலுவலகம் இழந்து, குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு வண்டியிலேறி, காட்டுப்பகுதிக்குச் செல்கிறான்; உடன் இருந்த தோழர்கள் கேட்கிறார்கள்,”சர்க்கார் மாளிகை பறிபோய்விட்டதே, இனி சர்க்காரை எங்கிருந்து நாம் நடத்துவது?’’ என்று; ஜோரேஸ், பதிலுரைத்தான், “நாம் இருக்கும் இடம்தான் சர்க்கார் மாளிகை! முன்பு கற்களால் கட்டப்பட்ட மாளிகையிலிருந்துகொண்டு சர்க்காரை நடத்திவந்தோம்; அது மீண்டும் நம் கைவசமாகும் வரை இந்த”வண்டி‘தான் சர்க்கார் மாளிகை!’’ என்று. கோபித்துக்கொள்ளப் போகிறார்கள் தம்பி! பார்! பார்! இந்த அண்ணாத்துரை எத்தனை ஆணவத்துடன் தன்னை ஜோரேசுடன் ஒப்பிட்டுக்கொள்கிறான் என்று. நான் கூறியதிலே எனக்கும் ஜோரேசுக்கும் அல்ல; அந்த மாவீரன் சர்க்கார் மாளிகையாக, வண்டியைப் பயன்படுத்திக்கொண்டது வரையிலே மட்டுமே உவமை என்று கூறி, அவர்களின் கோபத்தைக் குறைத்துக்கொள்ளச் சொல்லிவிடு - தம்பி! ஜோரேஸ், வண்டியைச் சர்க்கார் மாளிகையாக்கிக்கொண்டதுபோல, நான், நிலைமை காரணமாக, காஞ்சி இதழை "திராவிட நாடு’ இதழாகப் பயன்படுத்திக்கொள்கிறேன். இரவு ஒரு மணிக்கு விழுப்புரம் கூட்டத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினேன் - அதற்குப் பிறகும் தூக்கம் பிடிக்கவில்லை - மூன்று நாட்களாக, திருச்சி - பெரம்பலூர் - விழுப்புரம் ஆகிய இடங்களில், இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டு, சிறை சென்று திரும்பிய தோழர்களை வாழ்த்தி வரவேற்கும் விழாக்களில் கலந்து கொண்டதால் கிடைத்த உற்சாகம் என்னைத் தூங்கவிட வில்லை. எத்துணை ஆர்வத்துடன் இருக்கின்றனர் சிறை சென்று வந்துள்ள நம் தோழர்கள், மக்களின் அன்பு எத்தகைய மன நெகிழ்ச்சியைத் தருகிறது! சிற்றூர்களிலே எல்லாம் கூடக் காண்கிறேன் ஒரு புது எழுச்சி, மகிழ்ச்சி. பல மிகக்கொண்ட ஒரு ஆட்சி, பிடிவாத உணர்ச்சியுடன் இந்தி ஆதிக்கத்தைப் புகுத்தும்போது, இன்னமும் போதுமான அளவு இதழ்களின் நல்லாதரவைப் பெற முடியாத நிலையிலே உள்ள நமது கழகம், துணிந்து நின்று அந்த ஆதிக்கத்தை எதிர்ப்பது கண்டு, மக்கள் மனதாரப் பாராட்டுகிறார்கள். இவர்களின் எதிர்ப்பும் இல்லை என்றால். . .! என்று எண்ணிப் பெருமூச்செறிபவர்களும், இவர்களின் எதிர்ப்பினால் அல்லவா, இந்தி ஆதிக்கக் காரர்கள், கருப்பஞ்சாற்றிலே குழைத்துத் தருகிறார்கள் கடுவிஷத்தை என்று கூறுபவர்களும், இவர்களின் எதிர்ப்புக் கண்டும், சர்க்கார் தன் போக்கை மாற்றிக்கொள்ள மறுக்கிறதே என்று கூறி ஆயாசப்படுபவர்களும், பாவம், இளைஞர்கள்! இன்பவாழ்வில் ஈடுபடவேண்டிய வயதினர்! சிறைக்கொடுமைக்குத் தம்மைத்தாமே ஆளாக்கிக் கொண்டார்கள்; அவர்கள் சிறையிலே மேற்கொண்ட இன்னல்களை ஒரு நொடியிலே மறந்துவிடத் தக்கவிதத்தில், நமது இதயத்திலிருந்து எழுந்திடும் அன்பினைச் சொரிவோம் என்ற உணர்ச்சி கொள்பவர்களும், நாட்டு மொழி, பாட்டு மொழி, வீட்டு மொழி என்றெல்லாம் பிறர் பேசுகிறார்கள், விரிவுரையாற்றுகிறார்கள், போற்றுகிறார்கள், புகழாரம் சூட்டுகிறார்கள், எனினும் வேற்றுமொழி வேங்கை எனப் புகுவதுகண்டு விரட்டிட முன் வருகிறார்களில்லை. இந்த இளைஞர்களோ, எமது மொழியை அழித்திடவும், எமது வாழ்க்கை நிலையினைக் கெடுத்திடவும் வந்திடும் இந்தியினை எத்தனை இன்னல்கள் எமைத் தாக்கிடக் கிளம்பிடினும், எதிர்த்தே நிற்போம் என்று சூளுரைத்துச் செயல் படுகின்றனரே; இத்தகையார் "இரண்டாங்கட்டிலும்’ இன்பத் தமிழ் அழிப்பார் கூடத்திலும் இருந்திடும் நிலை உளதே; இந்தக் கொடுமையினை மாற்றிடும் நன்னாளே, பொன்னாள், அது எந்நாள், எந்நாள்? என்று ஆவலுடன் கேட்ட வண்ணமுள்ளனர் பல்லாயிரவர். தம்பி! சிறை சென்று திரும்பிடும் தோழர்களில் பலருக்கு உடல் நலிவு இருந்திடக் காண்கிறேன் - நானே அப்படித்தான் - ஆனால் உள்ளப்பாங்கோ! நாம் தூய்மையான, தேவையான, நியாயமான ஒரு அறப்போரில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற எழுச்சிமிகு எண்ணத்தை உள்ளம் ஏந்திக்கொண்டிருக்கக் காண்கிறேன் - பெருமிதம் கொள்கிறேன். சிறையிலே உடல்நலக் குறைவு ஏதேனும் ஏற்பட்டதோ? - என்று கேட்கிறேன், விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் அவர்களை - அவர் இளைஞர் அல்ல - அவர் கூறுகிறார், “அதெல்லாம் இல்லை இருந்தாலும் பரவாயில்லை’’ - என்று கூறும்போது முகத்திலே புதியதோர் பொலிவு மலரக் காண்கிறேன். மருத்துவமனையில் கிடத்தப்பட்டிருந்த அன்பில் தர்மலிங்கம் - இன்றும் முழு அளவு நலம் பெற்றுவிட்டார் என்று கூறுவதற்கில்லை - அவரைக் கேட்கிறேன் என்ன? என்று,”ஒன்றுமில்லை! நன்றாக இருக்கிறேன்’’ என்கிறார்; வழக்கமாக அவர் பார்வையிலே ஒரு மிரட்சி தெரியும், இப்போது ஒரு புது விதக் கனிவே பிறந்திருக்கிறது சிறைச்சாலை அறச்சாலையாகி விட்டிருக்கிறது, தம்பி! அங்குச் சென்று திரும்பியவர்கள் செந்தமிழ்க்குத் தீமை வந்த காலை நாம் நம்மாலான செயலினைச் செய்தோம் என்ற உணர்ச்சி பொங்கிடும் நிலை பெற்றுள்ளனர் அறப்போர் வெற்றி ஈட்டித் தருகிறது என்பதற்கு இதனைச் சிறந்ததோர் சான்றாக நான் கொள்கிறேன். சிறைக்கஞ்சா உள்ளமும், சிறைக் கொடுமைகளைக் கண்ட பிறகும் சலிப்புப் பெறாத மனமும் ஏற்பட்டுக்கொண்டு வருவது, கழகத்திற்குக் கிடைத்திடும் புதியதோர் கருவூலமென்பேன். இத்தகைய அறப்போர் வீரர்தம் மனப்போக்கு பற்றியே ஆங்கிலக் கவிஞரொருவர், கருங்கற் சுவரும் காவற் கூடமாகுமோ இரும்புக் கம்பியும் பெருஞ் சிறையாகுமோ தூய்மை மனத்தன் விடுதலை வீரன் புகும் சிறைச்சாலை தானும் அறச்சாலை ஆகுமே. என்று கூறினார். இத்தகைய மனப்பான்மையின் மாண்பினை அறிந்துகொள்ள இயலாதார் கடாவுகின்றனர், "போராட்டமா! எப்போது வெற்றிபெறும்’’ என்பதாக. காகிதத்தால் பூ செய்து, அதற்குக் கவர்ச்சிமிகு வண்ணம் பூசி, சிறிதளவு நறுமணமும் தடவி, அங்காடிக்குக் கூடை கூடையாகக் கொண்டு செல்வது எளிது - நேரமும் அதிகம் பிடிக்காது. ஆனால் அதனை எவர் கொள்வர்? எதற்கு அது பயன்படும்? காகித மலர்க்குவியல் கடை நிரம்ப வைத்திருக் கின்றேன், காணவாரீர்! பெற்றுச் செல்வீர்! பெருமகிழ்வு கொள்வீர்! என்று கூவிக்கூவி விற்றாலும், அந்த இடத்தைப் பூக்கடை என்று எவரும் கூறிடார். எளிதாகச் செய்திடக்கூடியது காகிதமலர் - மல்லியும், முல்லையும், மருக்கொழுந்தும் பிறவும் எளிதிலே கிடைத்திடத்தக்க முறை இல்லை. பாத்தி எடுத்து, பண்படுத்தி, பதியம் வைத்து, பலநாள் பாடுபட்ட பிறகே, மலர் கிடைத்திடும். கரத்திலே முள் தைக்கும், காலிலே கல் தாக்கும், கோடையின் கொடுமை, மாரியின் மருட்டுத் தன்மை என்பவைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும், மணமிகு முல்லை பெற; கிடைத்திடின் மணம் இனிமை தரும், கிடைக்கு முன்பு பொறுமையுடன் வேலை செய்தாக வேண்டும். நாம் மேற்கொண்டுள்ள செயல், காகிதப்பூ செய்திடுவது போன்றது அல்ல; முல்லை பூத்திடும் பூங்கா அமைப்பது போன்றதாகும். பல்வேறு வகையான வலிவினைத் தேக்கி வைத்துக்கொண்டு, துரைத்தனத்தார், இந்தி ஆதிக்கத்தைப் புகுத்துகின்றனர்; அதனை எதிர்க்கும் நம்மிடம், தூய்மையும், நேர்மையும், அஞ்சாமையும், துவளாமையும், அவசரப்படாத தன்மையும், நம்பிக்கையும் படைக்கலன்களாக உள்ளன. இந்த இரு தரப்புக்கும் இடையில் எழும் "போராட்டம்’, முள்ளு முனையிலே மூன்று குளம் வெட்டிடும் மாயத்தைத் துணைகொண்டது அல்ல; பிடி சாபம்! என்று சபித்திடும் தபோபலத்தைத் துணைக் கொண்டதும் அல்ல. தொடர்ந்து பணியாற்றுவது, துவளாமல் கிளர்ச்சி நடத்துவது, பொறுப்புடன் அறப்போர் நடாத்துவது எனும் முறையில் அமைந்திருப்பது. வெள்ளியன்று விதை தூவி செவ்வாயன்று அறுவடை செய்திடும் விதமாக ஒரு விசித்திர வெற்றியை இதிலே, ஏமாளிகளன்றிப் பிறர் எதிர்பார்க்க மாட்டார்கள். காலம் வரவேண்டும்; காலம் கனிய வேண்டும்; காலத்தைக் கனிந்திடச் செய்ய வேண்டும், வெற்றியை ஈட்டிட. தம்பி! நமது தோழர்களின் தியாக உணர்வு, காலத்தைக் கனிந்திடச் செய்யும் என்பதிலே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது; நான் சிறைமீண்டு, கலந்துகொண்ட விழாக்கள் என் நம்பிக்கையை மேலும் வலுவுள்ளதாக்கி இருக்கிறது. ஒரு இயக்கம், எதிர்ப்பைத் தாங்கிக்கொள்ள, சில காலத்திற்கெல்லாம் பயிற்சி பெற்றுவிடும், பக்குவம் பெற்றுவிடும். ஆனால், ஏளனத்தைத் தாங்கிக்கொள்ளும் மனப்போக்கு எளிதில் வளராது; அதிலும் எதையேனும் மென்று தின்றபடி காலத்தைக் கொன்று கிடப்பவர்கள், இடம் தமதாக ஏதேதோ செய்து பார்த்துக் கிட்டாது போகும்போது எட்டடுக்கு மாடியிலே பெட்டி தூக்கும் வேலையேனும் பெற்று, மேலிடம் சென்று விட்டேன் என்று நாநடம்புரிபவர்கள், ஏளனமொழியினை எடுத்து வீசிடும்போது, கனகமணிக் கட்டி-லே படுத்துத் துயிலும் காதற் கிழத்தியையும் அவள் ஈன்ற கனியையும் விட்டுப் பிரிந்து, காரிருளில் கானகம் சென்று, ஊர் அழிக்கப் புறப்பட்ட கடும் புலியை வேட்டையாடச் சென்றிடும் வீரன்போல, இனிக்க இனிக்கப்பேசி, இல்லமதில் இருந்திட வாய்ப்பும் வசதியும் நிரம்பப் பெற்றிருந்தும், கடுஞ்சிறை ஏகியேனும் கன்னித் தமிழ் காத்திடுவோம் என்று கடமை உணர்ச்சியுடன் பணியாற்றி வருபவரை ஏளனம் பல பேசிடும்போது, தாங்கிக்கொள்வ தென்பது மிகமிகக் கடினம் - ஆனால், தாங்கிக்கொண்டாலன்றி அந்த இயக்கம் தணலில் தங்கம்போலாவது முடியாது - ஆகவே, தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் என்று நான் கூறியபோது கேட்டுக் கொதித்தவரும் கோபம் கொப்பளிக்கும் நிலை பெற்றவரும் உண்டு - என்றாலும், என்னிடம் அவரெலாம் கொண்டுள்ள உள்ளன்பு காரணமாக, என்ன செய்வது! சொல்கிறான் அண்ணன்! சோற்றுத் துருத்திகளின் சொல்லம்பைத் தாங்கிக்கொள்வோம்! என்று முடிவெடுத்து, தாங்கிக்கொள்ளும் உரம்பெற்றுவிட்டனர். நமது கழகம் இந்தக் கட்டம் சென்றிருப்பதனை நான் மிகமிக முக்கியமானதாகக் கொள்கிறேன். ஏளன மொழி எரிச்சலூட்டும் - எரிச்சல் நம்மைச் சுடுசொல் வீசிடுவோராக்கிவிடும் - சுடுசொல் வீசிடினோ, நாம், சோர்வகல மது அருந்திட முனைவோன் இறுதியில் தானே மதுக்குடமாகிடுதல்போல, சுடுசொல் விசிட முனைந்துவிட்டால், தெளிவு, கனிவு, அறம், அன்பு, நெறி, நேர்மை யாவும் பட்டுப்போய்விடும். குறிக்கோள் கெட்டுப் போய்விடும், நாடு நம்மைக் கைவிட்டுவிட்டு, இவனும் காட்டானாகத்தான் இருக்கிறான்! ஆந்தை அலறுவதை ஆயிரமுறை கேட்டிடினும் குயில் தன் குரலோசையை மாற்றிக்கொள்கிறதா! எவரெவரோ ஏளனமொழியில் பேசுகிறார், ஏசுகிறார் என்பதற்காக, இவர்கள் வெகுண்டு அதே முறையை, அதே மொழியை மேற்கொள்வதா? மேற்கொள்கிறார்கள் எனின், இவர்கள் அவர்கள் போன்றார் என்பதன்றி வேறென்ன கூறமுடியும் என்று தீர்ப்பளித்திடும். நமது தோழர்கள் இந்தத் தெளிவு பெற்றதால், தூற்றுவோர் தூற்றட்டும், அதிலும் இவர்கள் துதிபாடிக்கிடந்தவர்கள் இன்று தூற்றித் திரிகிறார்கள், இதனை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை, அவர்கள் நாப்பறை கொட்டட்டும், நாம் நமது யாழொலியைக் கெடுத்துக் கொள்ளலாகாது என்ற உறுதி பெற்றுவிட்டனர். எதிர்ப்பு, ஏளனம் எனும் இரு கூராயுதங்களும் முனை மழுங்கிப் போய்விட்டதனை, தம்பி! நாமே காண்கின்றோம்; களிப்பும் கொள்கின்றோம். சிலர், தமது முறை பலன் தரவில்லை என்பதனை அறிந்தும், வேறு முறை அறியாத காரணத்தால், பொய்த்துப்போன முறையையே மேற்கொண்டுள்ளனர் - இன்னமும். மக்கள் விரும்பவில்லை, கொள்ள மறுக்கின்றனர் என்பதை அறிந்த பின்பும் காஞ்சிரம், தன்னிடம் சுவை கூட்டிக் கொள்ள முடிகிறதோ! ஆனால், எனக்குத் தம்பி! நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. தமது நடையும் முறையும் பலன் தாராததனை உணர்ந்து ஓர் நாள் வெட்கித் தலைகுனிந்து தமது நெஞ்சத்துக்குத் தாமே வேண்டுகோள் விடுத்துக்கொள்ளப் போகின்றனர், இன்று வாய் வலிக்க வம்பு பேசிடுவோர். அவர்கள் அந்நிலை பெறினும் பெறாது போயினும், ஏளனத்தையும் ஏசலையும் தாங்கிக்கொள்ளும் மனநிலை நமக்குக் கிடைத்திருப்பதை நாம் மாற்றிக்கொள்ளலாகாது - புள்ளிமான் காட்டுப்பன்றியின் உறுமலைப் பெறாது - எந்நாளும். எரிச்சலூட்டும் ஏளனம் பலனற்றது கண்டவர்கள், இட்டுக் கட்டுவதும், ஒட்டி உருவாக்குவதும், பலன் தருமென்று கருதி, அந்த "வித்தை’யையும் செய்து காட்டுகின்றனர் - அதிலும் அவர்கள் காண்பது தோல்வியே. போராட்டம் வலிவிழந்துவிட்டது, பொலிவிழந்து விட்டது, போற்றுவார் இல்லை, துணை நிற்பார் இல்லை, பிசுபிசுத்துவிட்டது, மதமதத்துவிட்டது என்றெல்லாம் பேசிப் பார்க்கின்றனர். இந்தியை எதிர்த்து இத்தனை வீராவேசமாகப் பேசுகிறார்களே இந்த வாய்ச்சொல் வீரர்கள்! கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு களம்புகாமல், கவாத்து பழகுவதும், அணிவகுப்பு நடாத்துவதும், கருத்தறிவதும் என்ற முறையில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்களே, கவைக்குதவாதார்! கண்டீரே! காளையர்காள்! கடுங்கோபம் எழவில்லையோ உமக்கு! வழி காட்டத் தெரியாதவர்களை நம்பி நாசமாகிறீர்களே! போர்! போர்! என்று முழக்கமிடுங்கள்; புறப்படு! புறப்படு! என்று எக்காளமிடுங்கள்! புறப்படாவிட்டால், வெளியேறுங்கள்! வீரர்கள் நிரம்ப உள்ள கோட்டம் வாருங்கள்! என்றெல்லாம் வீரம் பேசினவர்களை நாடு பார்த்தது; நாம் போரிடமாட்டோம், நமக்கு இல்லை அதற்கான நாடி முறுக்கு என்று சிலராவது நம்புவார்களா என்று மோப்பம் பிடித்துக் கிடந்தவர்களையும் நாம் அறிவோம்! இன்றோ நாம் போரில் ஈடுபட்டிருக்கிறோம் இந்தி ஆதிக்கத்தால் ஏற்படும் பொல்லாங்கினை எதிர்த்து; துந்துபி முழக்கினோர், கொம்பு ஊதினோர், என்ன செய்கின்றனர்? எதற்காக இந்தப் போராட்டம் - தேவை இல்லை - பொருள் இல்லை - என்று பேசுகின்றனர்!! நாடு நகைத்திடாதிருக்க முடியுமா? நாட்டிலுள்ளோரில் சிலருக்கேனும் தோன்றாதா, "வீரப்பா! வீரப்பா! வெட்டிப் பேச்சு ஏனப்பா! இந்தி எதிர்ப்பு பொது அப்பா! சந்து நின்று நீ சொன்னதப்பா!! கொளுத்துகிறார் கழகத்தார்! இந்தி ஆதிக்கத்தைக் கொளுத்தி வீரம் நிலைநாட்டப்பா! தூற்றித் திரிவது போதுமப்பா, தொடுத்திடப்பா இந்தி எதிர்ப்புப் போர்!!’’ என்று கேட்க. ஆனால் யாரும் கேட்கவில்லை - ஏனென்கிறாயோ தம்பி - கேட்பதே நேரக்கேடு என்று கருதுகிறார்கள்! அறப்போரில் ஈடுபடுகிறார்கள் ஆர்வமிக்கோர்; நிலைமை காரணமாக அறப்போரில் ஈடுபட இயலாதவர்கள் ஆதரவு தருகின்றனர்; சிறைசென்று திரும்பிடும் செம்மல்களை வாழ்த்தி வரவேற்கிறார்கள்; கழுத்தை நெரித்துக் கொன்று போடும் துணிவு இந்த நெஞ்சத்துக்கும், வலிவு இந்தக் கரங்களுக்கும் உண்டு என்று முழக்கமிட்டவர்கள் இந்தி ஆதிக்கம் புகுத்திடுவோரின் காற்சிலம்பின் ஓசைபற்றிப் பாடுகின்றனர், ஒய்யாரம்பற்றிப் பேசுகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகம் அமைதியான அரசியலில் ஈடுபட்டிருக்கும்போது, வீரதீரம் அற்றது இந்தக் கழகம், வெட்டிப் பேச்சுப் பேசிக்கொண்டிருக்கிறது என்று கூறுவதும், காலமறிந்து கடமை உணர்ந்து, கஷ்ட நஷ்டம் ஏற்கும் துணிவுடன் கிளர்ச்சி நடாத்திடக் கிளம்பிடும்போது, எதற்கு வீண் ஆரவாரம்! எதற்கு இந்த அமளி! போராட்டத்திற்குப் பொருள் இல்லை! என்று பேசுவதும், மயக்க மொழி கேட்டு மெய்யென நம்பிக்கொள்பவர்களிடம் சென்று கழகத்தின் கொள்கை, செயல்முறை, கிளர்ச்சி ஆகியவைபற்றி ஐயப்பாடுகளை மூட்டி விடுவதுமான காரியத்தைத் தமது "அபாரமான’ திறமையைத் துணைகொண்டு அமைச்சர்கள் செய்து பார்க்கிறார்கள். போர் என்கிறார்களே, எங்கே நடக்கிறது, போர்! வெற்றி என்கிறார்களே, எங்கே தெரிகிறது அந்த வெற்றி! எல்லாம் பொய்யுரை! கற்பனை! மனப்பிராந்தி - என்று பேசிப் பார்க்கின்றனர். காலமறிந்து, நிலைமை புரிந்து, தன்வலி மாற்றார் வலி சீர்தூக்கிப் பார்த்து, கழகம் தன் செயல் முறைகளை வகுத்துக் கொள்கிறது. வரிசைப்படுத்திக்கொள்கிறது, நிலைத்து நின்று பணிபுரிய, எவ்வப்போது என்னென்ன விதமான முறைகளை மேற்கொள்ளவேண்டுமென்று, திட்டமிட்டுப் பணியாற்றி வருகிறது இந்த முறை காரணமாக, மாற்றார் வெட்டிடும் படுகுழியில் வீழ்ந்து அழிந்துபடாமல், சூது வலையில் சிக்கிடாமல். முன்பின், வலம், இடம், மேல் கீழ், தன்வலி, துணைவலி, காலம் நிலைமை என்பவைகளைக் கணக்கெடுத்து, எதனை எப்போது எவ்விதம் எவரெவர் செய்து முடிப்பது என்று திட்டம் வகுத்துக்கொண்டு செயலாற்றுகிறது. இதனைத் திரித்துக் கூறியும் வருகின்றனர், மக்கள் தெளிவு பெறமாட்டார்கள் என்ற தப்பு எண்ணத்தில். பொய்! பொய்! முழுப்பொய்! கலப்படமற்ற பொய் - என்று உரத்த குரலிலே கூவினான் - கோபம் அல்ல - கோபம் கொண்டவன்போல! "மூட்டி விடுவான்!’’ எது பொய்? என்ன பொய்? என்று சிறிது அச்சத்துடன் கேட்டான், கேட்டு மருள்வான். என்ன சொன்னான் உன்னுடைய மன்றத்தான்? என்று கேட்டான் மூட்டிவிடுவான்; திருக்குளத்தில் செந்தாமரை மலர்ந்து இருக்கிறது, அழகாக! என்று சொன்னானல்லவா? என்றான். ஆமாம்! அப்படித்தான் சொல்லக் கேட்டேன் என்றான் கேட்டு மருள்வான்; ஏமாந்து போனாய்! ஏமாற்றிவிட்டான்! ஏமாளி யானாய்!! என்று அடுக்கினான் மூட்டிவிடுவான். எப்படி? எதிலே ஏமாந்து போனேன்? என்று கேட்டான், கேட்டு மருள்வான். திருக்குளத்துத் தாமரை இதழ் விரித்து அழகாக இருக்கிறது என்று கூறி உன்னை ஏமாற்றினானே, மன்றத்தான், அதைத்தான் கூறினேன்; கேள் அவனை, இப்போது; தாமரை மலர் இதழ் விரித்து இருக்கிறதா என்று கேள். அவனைக் கேட்பானேன், வா, என்னோடு, திருக்குளம் செல்வோம்; காட்டுகிறேன், நீயே பார்! தாமரை இதழ் விரித்து இல்லை!! வந்து பார்! என்றான் மூட்டி விடுவோன், கேட்டுமருள்வோன் கிளம்பினான், திருக்குளம் நோக்கி சிறு விளக்கொன்று தேவை - இருட்டு அல்லவா? என்று கவனப்படுத்தினான் மூட்டிவிடுவோன் - விளக்குடன் இருவரும் கிளம்பினர், திருக்குளத்தருகே சென்றதும் மூட்டிவிடுவோன், சுட்டிக்காட்டி, பார் நன்றாக! எங்கே, இதழ் விரித்த தாமரை இருப்பதாகச் சொன்னானே உன்னை ஏமாளியாக்க; எங்கே விரிந்த தாமரை? என்று இடித்துக் கேட்டான். விரிந்த தாமரை இல்லை - குவிந்த தாமரையே தெரிந்தது. கேட்டுமருள்வோனுக்கு மெத்த வருத்தம் ஏற்பட்டது. ஏன், மன்றத்தான், தாமரை அழகாக விரிந்து மலர்ந்து காட்சி தருகிறது என்று நம்மிடம் கதை கதையாகச் சொல்ல வேண்டும்! சே! இது ஏன் இந்தச் சூதுப் பேச்சு - இதை நம்பி, நாம் பலரிடம், செந்தாமரை விரிந்து மலர்ந்து அழகாகத் திருக்குளத்திலே இருக்கிறது என்று கூறி வைத்தோமே, இப்போது, நாமல்லவா ஏமாளியானோம் - என்று எண்ணி மனம் வெதும்பினான். இனியாகிலும் உணர்ந்துகொள், மன்றத்தான் பேசுவது பொய் என்பதை! - என்று கூறிவிட்டுப் புன்னகை செய்தான் மூட்டிவிடுவோன், எது அப்பா, பொய்? என்று கேட்டபடி வந்தான், தெளிவளிப்பான். திருக்குளத்தில், செந்தாமரை இதழ்விரித்து, அழகாக மலர்ந்து இருக்கிறது என்று பொய் பேசி என்னை ஏய்த்து வந்தான் மன்றத்தான். இங்கு வந்து பார்க்கிறேன், தாமரை குவிந்து கிடக்கிறது. மலர்ந்து, இதழ் விரித்து இல்லை - என்று கோபமும் துக்கமும் கொண்ட நிலையில், பேசினான் கேட்டுமருள்வோன். தெளிவளிப்பான் கூறினான், கேட்டுமருள்வோனே! இது இரவுக்காலமல்லவா? இரவுக்காலத்திலே, தாமரை குவிந்துதானே இருக்கும். உதயசூரியன் ஒளிபட்ட உடன்தானே, தாமரை மலரும். தாமரை மலர்ந்திருக்கிறது என்று மன்றத்தான் சொன்னது பொய்யுரை அல்ல. காலையில், தாமரை மலரும், அதைக்கண்டு சொன்னான்! நீயோ, இரவு வந்து காண்கிறாய், மூட்டிவிடுவோன் பேச்சினைக் கேட்டுக்கொண்டு. காலையிலே வந்து பார், மலர்ந்த தாமரை காண்பாய் - தாமரை இதழ் விரித்திடக் காலைக் கதிரவன் ஒளி வேண்டும் - அஃது இல்லாதபோது, தாமரை குவிந்துதான் காணப்படும். குவிந்து காணப்படுவது, காலத்தின் தன்மைக்கு ஏற்ப, தாமரை விளங்கும் என்ற உண்மையைக் காட்டுவதாகும். இரவுக் காலத்தில் குவிந்த நிலையில் உள்ளதால், தாமரை, மலருவது இல்லை, இதழ்விரிப்பது இல்லை, என்றா முடிவு கட்டுவது!! மன்றத்தான் சொன்னது பொய்யல்ல. உதயசூரியன் ஒளிபட்டதும் தாமரை இதழ்விரிக்கும். காலம் வர வேண்டும்! காரிருளில் விரிந்த தாமரை தேடாதே, கலகப் பேச்சுக் கேட்டு மனம் மருளாதே!! - என்றான். மூட்டிவிடுவோன் சென்றுவிட்டான். காலை மலர்ந்தது. கமலமும் மலர்ந்தது. கேட்டு மருள்வோன் அதனைக் கண்டான் - கண்டதால் தெளிவு பெற்றான். கமலம் மட்டுமல்ல, கருத்தும் அப்படித்தான். உரிய காலம் வரும்போது மலரும். சில காலத்தில் குவிந்த தாமரைபோலிருக்கும், உணர்ந்துகொள், என்றான் தெளிவளிப்போன். அதுபோலத் தம்பி! கழகம் காலமறிந்து காரியமாற்றுகிறது. அத்தகைய சீரிய முறைப்படி வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருவதே, இந்தி எதிர்ப்பு அறப்போர். காலமும் முறையும் அறிந்து, மாற்றார் மூட்டிவிடுவதற்கு இரையாகாமல், கழகம் எனும் அமைப்புக்கும் ஊறுநேரிடாமல் பாதுகாத்தபடி நடத்தப்பட்டு வருகிறது இந்தி எதிர்ப்பு அறப்போர். மூட்டிவிடுவோன் காட்டிடும் வழி நடந்தால், கழகம் படுகுழியில் வீழ்ந்துபடும்; வீழ்ந்துபட்டதும், சேற்றுக் குழியில் வீழ்ந்த யானையைச் செந்நாய்க் கூட்டம் கடித்துத் தின்பதுபோல, கழகத் தோழர்களை, காட்டிக் கொடுப்போரும் மூட்டிவிடுவோரும் காரச் சரக்கினரும் ஈரமற்ற நெஞ்சினரும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கி இருப்பர் அல்லது தமக்குக் குற்றேவல் புரியும் சிற்றாட்களாக்கிக் கொண்டிருப்பர். இதனை அறிந்ததால்தால் கழகத்தை நடத்திச் செல்வோர், காலத்துக்கு ஏற்றபடி முறையினை மாற்றிக் கொண்டனர் - அது குறித்துக் கடாவினோர், கதைத்தோர், என்னாயினர்!! களம் நிற்கின்றனரோ? இலையே!! கதர் அணிந்து கொண்டுவிட்டனர். இவர்கள்தான் நமக்குத் தூபமிட்டவர்கள். "விடாதே! தொடுத்திடு போர்! உடைத்திடு தடைச் சட்டத்தை!’’ என்றெல்லாம். எதற்கு? கழகம் எனும் அமைப்பு அழிந்துபடும் என்ற நினைப்பில். கழகம் அழிந்துபடுவதால் என்ன ஆதாயம்? கழகம் பெற்று இருக்கும் எதிர்க்கட்சி எனும் ஏற்றமிகு பீடத்தில் தாம் அமர்ந்துகொள்ளலாம் என்ற நப்பாசையில். கழகம் மேற்கொண்ட வேலைத் திட்டம் இந்த ஆசையில் மண் விழச் செய்துவிடவே, மூட்டிவிடுவோர் இனி எதிர்க்கட்சி என்ற ஏற்றம் பெறமுடியாது என்று உணர்ந்து ஆளுங்கட்சியின் ஒளியைப் பெற்றுக்கொள்ளச் சென்றுவிட்டனர். முன்பு கொண்டிருந்த எண்ணங்கள், வெளியிட்ட ஆசைகள், கண்ட இன்பக்கனவுகள் யாவும் பொய்யாய், கற்பனையாய், கனவாய்ப் புகைந்தே போய்விடக் காண்கிறோம். கழகமோ, புயலுக்குத் தப்பிட வளைந்திடும் நாணல்போல, நிலைமைக்கேற்ற முறை வகுத்துக்கொண்டு, நிலைத்து நிற்கிறது. எனவே, தம்பி! நாம் நடத்தி வரும் இந்தி எதிர்ப்பு அறப்போர் குறித்து அமைச்சர்களும் அவர்களின் அணைப்பிலே அகமகிழ்ச்சி பெறுவோரும் எதைக் கூறிக்கொண்டிருப்பினும் நாம் பொருட்படுத்தத் தேவையில்லை - நாம் மேற்கொண்டுள்ள காரியத்தில் நமக்கு அழுத்தமான, தூய்மைமிக்க நம்பிக்கை இருந்தால். அந்த நம்பிக்கை இருப்பதனால்தான், நாடு மெச்சிடும் விதமான அறப்போரினைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறோம். மொழிக்காக ஒரு கிளர்ச்சியா, போராட்டமா! செச்சே! என்ன மதியீனம்! வாழவழி என்ன என்பதற்குப் போராடுவார்களா, என்மொழி உன்மொழி என்று சண்டை போட்டுக்கொள்வார்களா என்று பேசுகிறார் காமராஜர். மொழிப் பிரச்சினை அவருக்கு அவ்வளவு சாமான்ய மானதாக, உப்புச்சப்பு அற்றதாகத் தோன்றுமானால், நாட்டு மக்களிடையே மனக்கொதிப்பையும் கசப்பையும் மூட்டிவிடும் மொழிப் பிரச்சினைபற்றி ஏன் வீணாகப் பிடிவாதம் காட்டுகிறீர்கள் - ஆங்கிலந்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே - தமிழைத்தான் ஆட்சிமொழி ஆக்குங்களேன் என்று இந்தி ஆதிக்கத்தைப் புகுத்துவதில் முனைந்து நிற்கும் லால்பகதூர் களிடம் எடுத்துச் சொல்லுவதுதானே! சொல்லிப் பார்க்கட்டும் - அப்போது தெரியும் காமராஜர் கண்காட்டும் வழியிலே காங்கிரஸ் செல்கிறது என்ற பேச்சு எத்தகைய இனிப்புப் பூச்சுள்ளது என்பது. காமராஜர் கருதுவதுபோல, இப்போது எல்லோரும் கூடி ஒன்றுபட்டு நின்று கவனம் செலுத்தித் தீர்த்துவைக்கவேண்டிய பிரச்சினை, சோற்றுப் பிரச்சினைதான் என்றால், லால்பகதூர் இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதிலே இத்தனை தீவிரமும் பிடிவாதமும் காட்டுவானேன்? இந்தி முக்கியமான பிரச்சினை அல்ல என்று காமராஜரும், இந்தி இரண்டு தலைமுறை கழித்துத்தான் வரும் என்று டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரும், பேசுகிறார்கள் - நம்மை மயக்க - உணர்ச்சியை வேறு பக்கம் திருப்பிவிட! ஆனால், ஒவ்வொரு நாளும் ஒரு புது உத்தரவு கிளம்புகிறது டில்லியிலிருந்து, இந்தியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும், வேகத்தை அதிகப்படுத்தவும். தூங்கு, ஒரு பயமும் இல்லை. பூனை நடமாடும் சத்தம், வேறொன்றுமில்லை என்று மாளிகையின் காவலாளி கூறி, மற்றவர்கள் விழிப்புடன் இருப்பதைத் தடுத்து விடுகிறான் என்றால், சூது சூழ்ச்சி அற்ற முறையிலே காவலாளி அவ்விதம் செய்திருந்தால் அவனை ஏமாளி என்போம்; தெரிந்தே வீட்டாரை ஏய்க்க அவ்விதம் கூறியிருந்தால், திருடனுக்கு உடந்தை என்போம். இந்திப் பிரச்சினை ஒரு அவசர அவசியப் பிரச்சினை அல்ல என்று பேசுவோரும், இந்தி இரண்டு தலைமுறைக் காலம் வரையில் வராது என்று கூறுவோரும், இந்த இரண்டு வகையில் எந்த வகையினர் என்று கூற இயலவில்லை, தம்பி! ஆனால், எந்த வகையினராக இருப்பினும், நாட்டுக்கு அவர்களின் போக்கு ஆபத்தினையும் கேட்டினையும் மூட்டிவிடுகிறது என்பதிலே அறிவாளர் எவருக்கும் ஐயப்பாடு இருக்க முடியாது. பொன்னிழந்து விட்டால் வேறு பொருள் விளைக்கலாகும்; நாளும் உண்ணும் சோறிழந்தால் வேறு உணவு தேடலாகும்; மொழிக் கண்ணிழந்து விட்டால், வாழ்வுக் காட்சி காண்பதேது? பின்னர் மண்ணின் வாழ்வெதற்கு? இதனின் மடிதல் மேலதன்றோ? இவ்விதம் கேட்கிறார் கவிஞரொருவர் - இலங்கைத் தீவினிலிருந்து. கவிஞர்தானே! அப்படித்தான் கேட்பார் என்று கூறுவார்களோ ஒருவேளை, சரி, தம்பி! கற்பனைச் செல்வம் தரும் கவிஞரின் பேச்சுடன், வேறொன்றும் காட்டுவோம். இவர் அரசியல் தத்துவம் போதிக்கும் பேராசிரியர், பெயர் பி. கே. எஸ். ராஜா. 1963-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் எட்டாம் நாள், கருத்தரங்கம் ஒன்றில் பேசினார். சோற்றுப் பிரச்சினையா, மொழிப் பிரச்சினையா என்று கேட்கிறாரே காமராஜர், அவர் காணட்டும், பேராசிரியரின் கருத்தினை. இந்நாட்டில் உள்ள மக்களிடையே பேசப்படுகிற மொழிகளில், இந்தி சிறுபான்மையோர் மொழியாகும். பெரும்பான்மையான மக்கள் இந்தி பேசாத பகுதியைச் சார்ந்தவர்கள். ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும். இந்தியைக் கட்டாயமாகத் திணிப்பதால் இந்தி பேசும் மக்கள் நியாயமற்ற வகையில் முன்னணியில் நலம் பெறுவர். முதலாவதாக, தேசிய மொழியின்றி இந்தியா ஒரு நாடாக விளங்குவதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆட்சியைப் பொறுத்தமட்டில் ஆங்கிலமே நீடிக்க வேண்டும். ஆங்கில மொழியின் நுழைவால்தான் இந்தியத் தேசியம் உருவெடுத்தது. இதன் பயனாகவே இந்தியத் தேசியக் காங்கிரசும் தோன்றியது. கேட்டாயா, கேட்டாயா! ஆங்கிலம், ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுமாமே. நாட்டுப்பற்று இருந்தால் ஒரு அன்னிய மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று இந்தப் பேராசிரியர் பேசுவாரா? ஒரு தேச பக்தனுக்கு, காங்கிரஸ்காரருக்கு இப்படிப்பட்ட கெடுமதி இருக்குமா! ஆங்கிலம் படித்து அதனால் பிழைப்பு நடத்தும் பேர்வழி இவர்; இத்தகையவர் பேச்சை மதிக்கப்போமா, கேட்கப் போமா, பேசலாமா என்றெல்லாம் வெகுண்டெழுந்து கூறுவர் - உண்மைக் காங்கிரசார் அல்ல - ஒட்டிக்கொள்பவைகள். போகட்டும், நமக்கேன் தகராறு - ஒரு காங்கிரசாரின் கருத்து, அதிலும் ஆங்கிலம் பற்றியுள்ள கருத்தினைத்தான் கூறுவோமே. ஆங்கிலத்தின் இடத்தை இந்தி வகிக்க வேண்டுமாம்! இதிலே எனக்கு நம்பிக்கை இல்லை. ஆங்கிலம் இந்த நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு காங்கிரசுக்காரர், மனம் துணிந்து, மரபு மறந்து, ஆங்கிலம் இந்நாட்டுத் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறினார். ஏ! அண்ணாத்துரை, ஏன் இப்படி ஒரு அண்டப்புளுகு பேசி எமது இதயத்தில் வேதனை மூட்டுகிறாய், நம்மை அடிமைப்படுத்திய ஆங்கில மொழியா, தேசிய மொழி! ஏகாதிபத்திய மொழியா, எமது தேசிய மொழிகளிலே ஒன்று! இப்படியும் கூற ஒரு காங்கிரசுக்காரரின் நாக்கு வளைகிறதா! ஐயகோ! என்ன நாக்கய்யா அது! என் செவியில், ஜனகணமனவும் வந்தேமாதரமும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக என்ற முழக்கமும் விழுந்து விழுந்து, புனிதத் தேனைச் சொரிந்தது - அந்தச் செவியிலா இந்தச் செந்தேள் நுழைய வேண்டும்! என்னே கொடுமை! என்ன அநீதி! ஆங்கிலம் நமது தேசிய மொழிகளிலே ஒன்றாக்கப்பட வேண்டும் என்று சொன்னவர், காங்கிரசில் உறுப்பினராக இருக்கலாம் - புதிதாகப் புகுந்தவராக - பதவிப் பசை தேடி வந்தவராக - இருக்கலாம் - ஆனால் நிச்சயமாக அவர் உண்மையான காங்கிரசுக்காரராக, ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய வீரராக இருக்கவே முடியாது. அது யாரோ ஒரு போலி! ஒரு இடந்தேடி! ஒட்டுச்சரக்கு! - என்றெல்லாம் ஆத்திரம் பொங்கிவழிய, காங்கிரஸ் நண்பர் கூறக்கூடும் அவருடைய ஐயப்பாட்டினையும் போக்கிவிடுவது நல்லதல்லவா, தம்பி! ஆங்கிலம் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று பேசியவர், புதியவருமல்ல, புசிக்க ஏதேனும் கிடைக்கும் என்பதற்காக நேற்றுப்புகுந்தவருமல்ல - உண்மைக் காங்கிரஸ் காரர் - முன்னணியினர் - மூலவர்களிலே ஒருவர் - நாடாளும் நற்பேறுகொண்டவர், பம்பாய் மாநில முதலமைச்சர் சாவன்! ஆம், தம்பி! இப்போது மத்திய சர்க்காரில் பாதுகாப்பு அமைச்சராக உள்ள அதே சாவன்தான் - நாகபுரியில் பேசினார் மூன்றாண்டுகளுக்கு முன்பு - 19-8-61 இதழ் பார்த்தால் புரியும். அவருடைய அந்தக் கருத்தினைப் பாராட்டியும் வரவேற்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை வெளியிட்டது. ஆங்கிலத்தை அந்நிய மொழியாகக் கருதினால் அது அவலமாக முடியும் என்பதை சாவன் வற்புறுத்தி அறுதியிட்டுக் கூறியுள்ளார். உண்மையில் ஆங்கிலம் ஓர் அனைத்துலக மொழி; அறிவு வள மொழி என்பதாக. தம்பி! நாம் அதுபோலக்கூட ஆங்கிலத்துக்கு மேம்பாடான இடமளிக்க வேண்டும் என்று வாதாடவில்லை - அதற்காகப் போராடவில்லை; நமது தாய்மொழியாம் தமிழ் மொழியையும் ஆட்சிமொழியாகக் கொள்ளுங்கள். அந்தக் காலம் வருகிற வரையில், வேறோர் பகுதி மக்களின் தாய்மொழியான இந்தியை இந்தியாவின் ஒரே ஆட்சி மொழி என்றாக்கி எம்மை இழிவு படுத்தாதீர், இன்னல் விளைவிக்காதீர் இழிமக்களாக்காதீர் என்று கேட்டே போராட்டம் நடத்துகிறோம். சாவன் போன்ற உண்மையான காங்கிரஸ்காரரின் வார்த்தைக்கு மதிப்பு தரப்பட்டதா? இல்லை! ஒரு காங்கிரஸ் தலைவருக்கே ஆங்கிலத்தை இழக்கக் கூடாது என்ற எண்ணம் இந்த அளவுக்கு இருக்கிறதே என்பது பற்றி இந்தி ஆதிக்கக்காரர்கள் துளியாவது அக்கறை காட்டினரா? இல்லை! இல்லை!! மனத்துக்குள்ளாக - சாவன் ஒரு மராட்டியர் - காங்கிரஸ் காரராக இருந்தபோதிலும், அவருக்கு மராட்டியர் என்ற உணர்ச்சிதான் மேலோங்கி இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள். இங்கே சிலர்தான் இந்தியை எதிர்க்கிறார்களே தவிர, ஆயிரக்கணக்கான தென்னாட்டவர் இந்தி படித்துக்கொண்டு வடக்கே வந்திருந்து வாழ்கிறார்கள் - அவர்களுக்கு இந்திமீது வெறுப்பு இல்லை - அவர்கள் இந்தியை எதிர்ப்பதில்லை என்று கூறி, இந்த நிலையை இந்திக்கு நிரம்ப ஆதரவு இருப்பதற்கு அடையாளம் - சான்று என்று பேசுவோர் உளர். இந்த வாதம் எத்தனை சொத்தையானது என்பதனை எடுத்துக்காட்டி உடைத்தெறிந்திருக்கிறார் ஒருவர் - அவரும் காங்கிரஸ்காரர் - மராட்டியப் பகுதியினர் சங்கர்ராவ் தேவ் என்பார். தெற்கே இருந்து வடக்கே மக்கள் வருகிறார்கள் - இந்தி மொழிமீது உள்ள ஆசை காரணமாகவும் அல்ல, அந்த இந்தி மொழி மூலம் பெறக்கூடிய கலாச்சாரத்திற்காகவும் அல்ல; அவர்கள் வருவது பிழைப்புத் தேடி. சோற்றுக்காக வருகிறார்கள்! சோற்றுக்காகத்தான் மக்கள் சச்சரவிட்டுக்கொள்கிறார்கள். இன்று இந்தியை மக்கள் மதிக்கவேண்டி வருகிறது என்றால், அது மற்ற மொழிகளைவிட மேலானது என்பதற்காக அல்ல, இந்தி படித்தால் பிழைக்க வேலை கிடைக்கும் என்பதால்தான். நீங்கள் இந்தியை உங்கள் பிரதேச மொழியாகவும் கொண்டிருக்கிறீர்கள். அதேபோது மத்திய ஆட்சி மொழியாகவுமாக்கிக்கொள்கிறீர்கள். இது உங்களுக்கு ஒரு ஆதிக்க உயர்வைத் தருகிறது. ஒன்றை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்; ஒருவன் எவ்வளவுதான் இந்தியையோ வேறு மொழியையோ கற்றுக் கொண்டாலும், அது அவனுடைய தாய்மொழியாக இருந்தாலொழிய, ஒவ்வொரு நாளிலும் இருபத்து நான்கு மணி நேரமும் அவன் பயன்படுத்தும் மொழியாக இருந்தாலொழிய, அவன் துரைத்தன அலுவலகங்களில் மேலிடம், உயரிடம் பெறமுடியாது; மற்ற வேலைத் துறைகளிலும் கூடத்தான். காமராஜர் மிக்க விருப்பத்துடன் கிளப்புகிறாரே சோற்றுப் பிரச்சினை, அது மொழிப் பிரச்சினையோடு எப்படிப் பிணைந்திருக்கிறது என்பதை சங்கர்ராவ் தேவ் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டினார். அவருடைய பேச்சை மதித்து ஏற்றுக்கொண்டார்களா? அவர்களா! ஆதிக்க நோக்கம் கொண்டவர்கள் அறிவுரை கேட்டு அதன்படி நடந்து கொள்வார்களா!! இந்தியை ஆட்சிமொழியாக்குகிறார்கள் என்ற காரணம் காட்டி, நாட்டிலே ஒரு பகுதியின்மீது மற்றோர் பகுதிக்குக் கசப்பு ஏற்படும்படி செய்கிறார்கள் என்று ஒருமைப்பாட்டு உரை நிகழ்த்துவோர் குற்றம் சுமத்துகிறார்கள். சரியாகவோ தவறாகவோ, இந்தி புகுத்துவதற்காக நீங்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது, இந்தி பேசாத பகுதி மக்களிடையே ஒரு உணர்ச்சியை மூட்டி விட்டிருக்கிறது; அதாவது இந்தியாவின் கூட்டுக் கலாச்சாரத்துறையில், மற்ற வலிவுள்ள மொழிகள் செல்வாக்குப் பெறுவதைத் தடுக்கவே இந்திக்காக இப்படிச் சண்டைபோடுகிறீர்கள் என்ற உணர்ச்சி. ஐயா! தெற்கே உள்ள இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி பலம் வாய்ந்ததாக இருக்கிறது. ஒரு பகுதிக்கு மட்டுமே சொந்தமான மொழியை (இந்தியை) நீங்கள் தேசிய மொழி என்ற அளவுக்கு அந்தஸ்து தருவதுதான், இந்தி பேசும் மக்களுக்கும் இந்தி பேசாத மக்களுக்கும் இடையே கசப்பை மூட்டி விட்டிருக்கிறது. இவ்வளவு வெளிப்படையாகப் பேசியவரும், காங்கிரஸ் கட்சியினர்தான். கொலுவிருக்கக் காங்கிரஸ் கிளம்பியபொழுது இடம் தேடிக்கொண்டவர் அல்ல - சுயராஜ்யக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, சண்ட மாருதம்போல் சுற்றிப் பிரசாரம் செய்து சிறைக் கோட்டமும் சென்றவர் - ஆந்திரநாட்டு மாதர் திலகம் - துர்க்காபாய் அம்மையார். குறுகிய மனப்பான்மை கொண்டவருமல்ல - மராட்டியத்துத் தேஷ்முக்கைக் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர். அந்த அம்மையாரின் எச்சரிக்கையையாவது, இந்தி ஆதிக்கக்காரர்கள் பொருட்படுத்தினரா? இல்லை! கடந்த மூன்று வாரத்து நடவடிக்கைகளாலும், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த என் நண்பர்கள் மேற்கொள்ளும் போக்கினாலும் என் உள்ளத்தில் மூண்டு வளர்ந்துள்ள பயத்தை, உள்ளது உள்ளபடி நான் எடுத்துக் கூறாவிட்டால், என் மனச்சாட்சிக்கும், ஆண்டவனுக்கும், என் மாபெருந் தலைவர் மகாத்மா காந்திக்கும் உண்மையாக நடந்து கொண்டவனாக மாட்டேன். இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்புவரை, அதிகார வர்க்கம் பிரிட்டிஷாரிடம் இருந்து, லண்டன் நகரத்தில், பெரிய உத்தியோகங்களுக்கான பரிட்சைகள் நடத்தப்பட்டு வந்த நிலையின்போது, எங்களுக்குச் சந்தேகமும் பயமும் மனத்திலே குடிகொண்டன. வெள்ளையனே உத்தியோக மண்டலத்தில் ஆதிக்கம் வகித்து வந்தான் இப்போது உயர் பதவிகளுக்கான பரிட்சை டில்லியில் நடத்தப்படுவதால், இந்தி பேசும் பகுதிகளான உத்தரப்பிரதேசம் மத்தியப் பிரதேசம் ஆகிய இடத்தவர் உத்தியோக மண்டலத்தில் ஆதிக்கம் பெறப்போகிறார்கள். ஏன் உத்தரப்பிரதேசத்து மத்தியப்பிரதேசத்துக் காரர்கள் இவ்வளவு சகிப்புத்தன்மையற்றவர்களாக இருக்கிறார்கள்? நாங்களும் மனிதர்களே! உயர்தரமான தேசிய இலட்சியங்கள் எப்படி எங்கள் எண்ணங்களை உருவாக்கு கின்றனவோ அதுபோலவேதான் பிழைப்பு நடத்துவதும் வேலை பெறுவதும் எங்கள் உள்ளத்தைப் பாதிக்கின்றன. (இந்தியை ஆட்சிமொழியாக்கி விடுவதானால்) ஒரிசா, அசாம், வங்காளம், தென் மாநிலங்கள் ஆகிய இடங்களைக் காட்டிலும் உத்தரப்பிரதேசத்துக்கும் மத்தியப் பிரதேசத்துக்கும் கூடுதலான சலுகைகள், வாய்ப்பு வசதிகள் ஏற்பட்டுவிடுவதைத் தடுக்க என்ன திட்டம் தீட்டப் போகிறீர்கள் - சொல்லுங்கள். இவ்விதம் "அச்சம் தயைதாட்சணியமின்றிக்’ கேட்டவர் ஒரிசாவைச் சார்ந்த தாஸ் என்பவர் - புகழ்மிக்க காங்கிரஸ் தலைவர். அவருடைய பேச்சுக்கு ஏதேனும் பலன் கிடைத்ததா? இந்தி ஆதிக்கக்காரர்கள் தமது போக்கை மாற்றிக்கொள்ள ஒருப்பட்டனரா? இல்லை! இல்லை! அவருடைய வார்த்தையையும் துச்சமென்று தள்ளிவிட்டு, இந்திதான் ஆட்சிமொழி என்று அரசியல் சட்டத்தில் எழுதிவிட்டனர். தாஸ், சங்கர்ராவ், துர்க்காபாய் போலக் காரசாரமாக, ஒளிவு மறைவின்றிப் பேசினால், இந்தி ஆதிக்கக்காரர் கோபம் கொண்டு தமது போக்கை மாற்றிக்கொள்ள மறுப்பார்கள் - இதமாக - விநயமாக - கனிவாக - நேசப்பான்மையுடன் - அடக்க ஒடுக்கமாக - நல்ல வாதத் திறமையுடன் பேசினால், அவர்களின் போக்கு மாறிடக்கூடும் என்ற எண்ணம்போலும், இன்று பாராளுமன்றத் துணைத்தலைவராக உள்ள S.V. கிருஷ்ணமூர்த்தி ராவ் அவர்களுக்கு; அவர் மிகக் கனிவாகப் பேசினார். ஐயா! நான் இந்தியைக் கற்றுக்கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டேன். என் சொந்த மொழியான கன்னடத்தில், சில இந்திப் புத்தகங்களைக்கூட மொழி பெயர்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு இந்தி மொழி மிகக் கடினமானதாக இருக்கிறது. அதனால்தான் இந்தச் சபையில் இந்தியில் பேசும் துணிவு வரவில்லை. இந்தி பேசும் மக்களுடைய மொழியை, அதன் இலக்கண இலக்கியக் கட்டுக்கோப்புடன் எங்களால் பிடித்துக்கொள்ள முடியவில்லை. காலம் பிடிக்கிறது. நான் ஒரு அறைகூவல் விடுக்கிறேன். இங்குள்ள கோவிந்ததாஸ் அவர்களோ, தாண்டன் அவர்களோ, தமிழர்கள் மத்தியில் போய் இருந்துகொண்டு தமிழ் பேசக் கற்றுக்கொள்ளட்டும். அதற்கு அவர்களுக்கு எவ்வளவு காலம் பிடிக்கிறதோ, அவ்வளவு காலம் தேவை, தென்னகத்தில் இந்தியைப் புகுத்துவதற்கு. இவ்வளவு சாந்தத்துடன், சமரசநோக்குடன் பேசினாரே கன்னடக் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராவ், இதையாவது, பாவம்! நம்முடைய கட்சிக்காரர்! இந்தி கற்றுக் கொள்வதிலே உள்ள கஷ்டத்தை அனுபவித்துக் கூறுகிறார். அவர் கூறிடும் வாதம் நியாயமாகத்தான் இருக்கிறது; நாம் இந்தியைத் தென்னகத்துக்கும் சேர்த்து ஆட்சிமொழி என்றாக்குவது அநீதியாகத்தான் இருக்கும் என்ற உணர்வும் தெளிவும் பெற்றனரா, இந்தி ஆதிக்கக்காரர்கள். அவர்களா! அவர்கள்தான், யார் எதிர்த்தாலும், எதிர்ப்புகளை முறியடித்துவிட்டு இந்தி ஏகாதிபத்தியத்தை நிலை நாட்டியாக வேண்டும் என்று துணிந்துவிட்டவர்களாயிற்றே! கேட்பார்களா கிருஷ்ணமூர்த்தி ராவ் அவர்களின் பேச்சை! கேட்கவில்லை! தம்பி! இந்தி ஆதிக்கத்தைக் கண்டித்து அறிவுரை, தெளிவுரை, கனிவுரை, எச்சரிக்கை தந்தவர்களின் பட்டியல் மிகமிகப் பெரிது; சிலவற்றை மட்டுமே எடுத்தளித்திருக்கிறேன். இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் முனைந்தபோதே அறிவாளர் பலர் இதுபோலக் கண்டித்தனர், முயற்சியைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர், முடியவில்லை. அதற்குப் பிறகும் தொடர்ந்து பேரறிவாளர் பலர், இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதைக் கண்டித்த வண்ணம் உள்ளனர். நானறிந்த வரையில், எந்த ஜனநாயக நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்கு இத்தனை பரவலான முறையிலும் தொடர்ந்தும் கண்டனமும் எதிர்ப்பும் இருந்து அத்தனையும், வேண்டுகோள், முறையீடு, வாதம், விளக்கம், கண்டனம் எனும் எந்த வடிவினதாயினும் அலட்சியப்படுத்திவிட்டு, ஒரு சர்க்கார் தன் போக்கிலே பிடிவாதமாக இதுபோல இருந்ததில்லை. இந்தி ஆதிக்க விஷயத்திலே காங்கிரஸ் துரைத்தனம் காட்டிவரும் பிடிவாதம் ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கி வைத்திருக்கிறது. உங்களைப் பேச அனுமதித்திருக்கிறார்களே என்பதும், வெளியே விட்டு வைத்திருக்கிறார்களே என்று கூறுவதும், சுட்டுத் தள்ளாமல் இருக்கிறார்களே என்று கூறுவதும், ஆட்சி நடத்தும் வாய்ப்பினைப் பெற்றதனால் ஏற்பட்டுள்ள ஆணவமன்றி, அறிவுடைமை என்று எவரும் கூற முற்படமாட்டார்கள். நெரித்த புருவம், உருட்டு விழி, மிரட்டும் பேச்சு, நெடுநாட்களுக்கு நிலைத்து இருப்பதில்லை. தம்பி! பலருக்கும் புரியும்படி இதனை எடுத்துக் கூறிடக் கேட்டுக்கொள்கிறேன். இந்தி ஆதிக்கப் பிரச்சினையிலிருந்து, இன்று நமக்கு அமைந்துள்ள அரசு, அறிவாளர்களை எவ்வளவு அலட்சியப்படுத்தி வருகிறது. மக்களின் முறையீட்டினைக் கேட்டும் எத்துணை மமதையுடன் நடந்துகொள்கிறது என்பது புரிகிறதல்லவா! இவ்விதமான ஓர் ஆட்சி முறையையும், அது கடைப்பிடிக்கும் மொழி ஆதிக்கத் திட்டத்தையும் துணிவுடன் எதிர்த்து நிற்பதிலே நாம் பெருமை கொள்கிறோம். பலர் அடக்கப்பட்டுப் போய்விட்டனர். சிலர் அடைக்கலப் பொருளாகிவிட்டனர். வேறு சிலர் "அமங்கல’ நிலை பெற்று விட்டனர். நமது கழகமோ, எத்துணைக் கொடுமைகள் தாக்கிடினும், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பது என்ற உறுதி தளராமல், தொடர்ந்து அறப்போர் நடாத்தி வருகிறது. மக்கள் விரைவில் தமது மனத்திலுள்ளதை வெளிப் படையாக எடுத்துக் கூறிடும் இயல்பினைப் பெறுவதில்லை. எத்தனையோ விதமான அச்சுறுத்தல் அவர்களுக்கு. துரைத்தனத்தைப் பகைத்துக்கொண்டால், தொழில் கெடும். வேலை போய்விடும், குடும்பம் சிதறுண்டு போய்விடும், கொடுமைக்கு ஆளாகவேண்டிவரும் என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலை. இந்தியோ சிந்தியோ, விருப்பமோ கட்டாயமோ, மெள்ள மெள்ளவோ வேகவேகமாகவோ, எப்படியோ வரட்டும், எதுவோ ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கட்டும், நாம் மாடு மனைபெற்று, மனைவி மக்களுடன் நிம்மதியாக வாழ்ந்திட வழி தேடிக்கொள்வோம் என்று பலர் எண்ணுகின்றனர். காரணம், அவர்கள் காண்கின்றனர், கொடி தூக்கியும் கோல் சுழற்றியும், காங்கிரசாட்சியின் கடைக்கண் பார்வையின் பயனாக, இலட்சாதிபதியாவதை! அவன் ஏறும் மோட்டாரின் மெருகு குலையாதிருப்பதையும், இவன் "ஜாண்’ வயிற்றுக்காக உடல் கருத்திட இளைத்திட உழைத்து கிருமிக் கூடாவதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஆளவந்தாரின் அடிவருடினால் என்னென்ன ஆதாயம் கிடைக்கிறது என்பது புரிகிறது; புரியவே, நாம் ஏன் பொல்லாப்பைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று ஒதுங்கிடவும், இணங்கிடவும், வணங்கிடவுமான நிலையினைப் பெறுகின்றனர். ஒருபுறம் அச்சம் - மற்றோர்புறம் ஆளவந்தாரின் நேசத்தால் கிடைக்கக்கூடிய சுவைபற்றிய எண்ணம் கிளப்பிவிடும் ஆசை - இந்த இரண்டிலிருந்தும் தப்பி, தட்டிக் கேட்க யார் உளர் என்று தர்பார் மொழி பேசிடும் ஆட்சியினரை (இந்தி எதிர்ப்பு அறப்போர்) எதிர்த்து நிற்கும் துணிவும், கடமை உணர்வும் இந்த அளவுக்கு இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி மட்டுமல்ல, மக்களாட்சி முறை மடிந்துபோகாது, மாண்புள்ளதாக்கிட முடியும். அந்த முறையை என்ற நல்ல நம்பிக்கையேகூட ஏற்படுகிறது. ஒவ்வோர் விழாவும் இந்த அரிய பாடத்தைத்தான் எனக்கு அளித்து வருகிறது; உனக்கும் அதேவிதமான நிலை என்று எண்ணுகிறேன். தமிழுக்கு ஒரு ஆபத்தும் இல்லை. அம்மொழி ஒருபோதும் அழியாது, அது இலக்கியத்தின் மூலம் இறவா வரம் பெற்று விட்டது என்று பேசுவதும், பேச்சினைக் கேட்பதும் இனிப்பளிக்கலாம். கவிதைகளை எடுத்துக்காட்டி, உவமை நயமதை உரைத்து, கருப்பஞ்சாற்றினிலும் இனித்திடும் இன்மொழியாம் எமது தமிழ் மொழிக்கு, எவரே இழுக்குத் தேடவல்லார்! தென்றலின் இனிமை, திங்களின் குளிர்ச்சி தேனின் சுவை, கடலின் அலையோசை, அருவியின் மழலை, குழவியின் இசை, இயற்கை எழில் - எவரேனும் இந்த இயல்பினைக் கெடுத்திட இயலுமோ!! அஃதேபோல, தமிழின் மாண்பினை மடிந்திடச் செய்திடல் எவராலும் இயலாது என்று பேசலாம் - வீரம் குழைத்து. ஆனால், தம்பி! இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றாகிவிட்டால், இன்பத் தமிழ் பொலிவிழந்து போற்றுவாரிழந்து, வலிவிழந்து வளம் இழந்து, என்றோ தீட்டிய ஓவியமாய், எப்போதோ கேட்ட கீதமாய், கனவினில் கண்ட கனியாய்ப் போய்விடும் - வீணுரை அல்ல இது - வேண்டுமென்றே பயமூட்டக் கூறுவதுமல்ல; அரசுக் கட்டிலிலே இந்தி என்று ஆகிவிட்டால், முரசு முழங்கிய தமிழகத்தின் அள்ள அள்ளக் குறையாத சொத்தாக இருந்துவரும் செந்தமிழ், கண்ணகிபோல் கண்ணீர் உகுத்து, கடந்த காலத்தை எண்ணி ஏக்கமுற்று, கசிந்து உருகிப்போய்விடும். ஒன்று புரிந்துகொள்ளச் சொல்லு தம்பி! முதற் கட்டம், இந்தி மத்திய சர்க்காரின் ஆட்சி மொழியாவது; அடுத்த கட்டம்? விளக்கவா வேண்டும்! மத்தியில் ஒன்று, மாநிலத்தில் வேறொன்று என்று இருப்பதனால் ஏற்படும் இன்னல் குறித்துச் சிலபல கூறிவிட்டு, மத்திய சர்க்காருக்கு ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட இந்தியே மாநிலத்திலும் ஆட்சி மொழியாக இருப்பதுதான் வசதி, முறை என்று வாதிட்டு, அதுபோன்றே செய்தும் விடுவர். நமது அமைச்சர்கள் வாளாயிருப்பரோ? என்று கேட்பர், காங்கிரசை நம்பி உள்ளோர்! வேறு என் செய்வர்? வளைவர், நெளிவர், பணிவர், பிறகு ஆதரவாளராகிவிடுவர். பார்க்கிறோமே ஒவ்வொன்றிலும், வேளாண் பெருங்குடி மகன், வேறெவரும் பெறாத அளவு பதவி அனுபவம் பெற்ற பெரியவர் பக்தவத்சலனார். இந்தியில் பரிட்சை எழுதத் தேவையில்லை என்றார் ஓர் நாள்; காரணம் காட்டினார், மறுக்கொணாததாக; பிறகோ லால்பகதூர் அப்படியா? என்றார், இவர் ஆமென்றார், அவர் ஏன் என்று கேட்டார், இவர் காரணம் கூறினார், அவர் கனைத்தார் இவர் கலங்கினார், பரீட்சை இல்லாவிட்டால் படித்திட மனம் வராதே என்றார், அது உண்மைதான் என்றார் இவர், ஆகவே, என்று ஆரம்பித்தார் லால்பகதூர், இதோ பரிட்சை வைக்கிறேன் என்று முடித்தாரே முதலமைச்சர். இவர் போன்றார், இந்திதான் இங்கும் ஆட்சி மொழியாதல் முறை என்று டில்லியினர் கூறினால், தாயின் மேல் ஆணை! தாய்த் தமிழைத் தாழவிடேன்! என்றா முழக்கமெழுப்புவர், டில்லியாரின் தாக்கீதினைத் தலைமீது வைத்துக்கொண்டு, இதுவே தகுந்த முறை என்று ஒப்பம் கூறுவர்; கண் கசிந்திடும் தமிழரைப் பார்த்தோ, "ஏன் அழுகிறீர்கள்? ஆட்சி மொழியாக இந்தி இருந்தால் என்ன? தமிழ் தாழ்வடையுமோ? அகம் என்ன, புறம் என்ன, எட்டுத்தொகை என்ன, பத்துப்பாட்டென்ன, இவைகளைப் படித்திடலாகாது என்று தடுத்திட இயலுமோ! இன்பத் தமிழ், கேவலம் அரசாங்க அலுவலிலே இருக்காதே தவிர, வீட்டிலிருக்கும், அங்காடியில் இருக்கும், மன்றத்திலிருக்கும், மாதரின் நெஞ்சமிருக்கும், மழலையரின் மொழியில் இருக்கும், என் உள்ளத்திருக்கும் உன்னிடமும் இருக்கும், ஆகவே தமிழ் மகனே! கவலைகொள்ளற்க!’’ என்று கூறிடுவர், தமிழின் இனிமையினை அறிந்தவனே யானும் என்று கூறி, அதனை மெய்ப்பிக்க, திருவே என்செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற் ஜோதிமிக்க உருவே என்உறவே என் ஊனே ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளேநின்ற கருவே என் கற்பகமே கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய், காவாய் அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம் ஆவடுதண் துறையுறையும் அமர ரேறே என்று பாடிடக்கூடும். பக்கம் நின்று சிலர், என்னே தமிழ்ப்பற்று! என்னே தமிழினிமை! என்று பேசி மகிழ்விக்கக்கூடும். இப்போதேகூடச் சிலர் இதுபோல், தமிழின் இனிமை, பெருமை, தொன்மை, மென்மை, வளம் வனப்புப்பற்றி கேட்போர் நெஞ்சு நெக்குருகப் பேசி, இந்தி ஆதிக்கத்தால் தமிழுக்கு ஆபத்து ஏற்படாது என்று வாதாடுகின்றனர். மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! என்றெல்லாம் கொஞ்சுமொழி பேசிய கோவலன்தான் பின்னர், கண்களில் கொப்பளிக்கும் நீரும், காலிற் சிலம்பும் கொண்ட நிலையினளாக்கினான் கண்ணகியை. . . மையல் வேறோர் மாதிடம் கொண்டதால். எனவே, தம்பி! இவர் போன்றாரின், புகழுரையால் மட்டும் தமிழுக்கும் தமிழர் நல்வாழ்வுக்கும் வர இருக்கும் ஆபத்தினைத் தடுத்திட முடியாது - நாம் மேற்கொள்ளும் அறப்போரின் பலனாக எழும் தியாக உணர்வே தீந்தமிழைக் காத்திடவல்லது. அத்தகைய தொண்டாற்றும் தூயமணியே! உனைக் காண்பதிலும், உன்னுடன் அளவளாவுவதிலும் நான் பெறும் மகிழ்ச்சி, என்னை அந்தத் தொண்டினைத் தொடர்ந்து நடாத்திடத் துணை செய்கிறது. வாழ்க நின் ஆர்வம்! வளர்க உன் தியாக எண்ணம்! வெல்க தமிழ்! அன்புள்ள அண்ணாதுரை 26-7-1964 இதயத்தில் பூத்த மலர் சட்ட மேம்பாடு பற்றிய சில பொதுக் கருத்துக்கள் சட்டத்தைத் துச்சமென எண்ணுபவர்களின் கூற்றுகளும் அவற்றின் விளக்கங்களும் இந்தி எதிர்ப்பு அறப்போரும் சிறைச் செலவும் தம்பி! ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு - அதற்கான பேச்சு எழுந்து வளர்ந்துகொண்டு வருகிறபோது - எவ்வளவு வேண்டுமானாலும் அந்தச் சட்டம் வேண்டாம் - கூடாது - தீது என்று வாதாடலாம், மறுத்துரைக்கலாம், எதிர்ப்புச் செய்யலாம். ஆனால் இவைகளை மீறி ஒரு சட்டம் இயற்றப்பட்டுவிட்டால், பிறகுகூட அதை எதிர்த்துப் பேசிக் கருத்து வேற்றுமையைக் கூறலாம். ஆனால், மீறுவது மட்டும் கூடாது. மீறுவது சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் பாங்கினைச் சமுதாயம் கொண்டு ஒழுகவேண்டும் என்று உள்ள நிலையைக் கெடுத்து விடும். அது கெட்டுப் போய்விட்டால் பிறகு சமூகக் கட்டுக் கோப்பைச் சிதையாதபடி பாதுகாத்து வரும் சக்தி பாழ்பட்டு விடும். அந்தச் சக்தி பாழ்பட்டுவிட்டால் பிறகு நாட்டிலே காட்டுமுறை ஏற்பட்டுவிடும் என்று வாதாடுபவர்கள் இருக்கிறார்கள். அதிகாரம் ஊட்டிவிடும் ஆணவத்தின் காரணமாக, பலர் குளறிக்கொட்டியிருப்பதனை மிக மிக நாகரிக நடையுள்ளதாக்கி, அவர்களின் தூற்றலையும் ஒரு தத்துவ விளக்கம் போன்றதாக்கி நான் தந்திருக்கிறேன் - மேலே. படு! படு! சட்டத்தை மீறினால் சும்மா விடுவார்களா! எதிர்த்தால் பிடித்திழுத்துக் கொண்டுபோய் கொட்டடியில் தள்ளுகிறார்கள். பேச்சு என்ன இதுகளிடம்! கூப்பிடு போலீசை! கொண்டுபோகச் சொல்லு சிறைக்கூடம். நாங்கள் யார் என்று தெரிந்துகொள்ளாமல், எமக்கு உள்ள அதிகாரம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளாமல் எங்களையா எதிர்க்கிறாய்? என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்! இவ்விதமாகப் பேசுபவர்கள், சட்டத்தை மீறினால் சங்கடப் படவேண்டி நேரிடும் என்பதை எடுத்துக் காட்டுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். சட்டத்தை மீறும்போது, சட்டத்தின் பாதுகாவலரின் பிடியில் சிக்குவோம் என்பதும், கொட்டப் படுவோம் என்பதும் எவருக்கும் தெரியும். எனவே அதனை நினைவுபடுத்துவதாகக் கூறிக்கொண்டு நிந்தித்துக்கிடப்போர் தமது நீண்ட நாவினுக்கு அதிக வேலை கொடுத்து அலுத்துப் போகத் தேவையில்லை. சட்டம் சமுதாயக் கட்டுக்கோப்புக்கு இன்றியமையாதது என்ற அரிச்சுவடி போதிக்கத் தேவையில்லை, அதுபற்றிய பொது அறிவு சமூகத்தில் பரவலாக ஏற்பட்டுவிட்டிருக்கும் இந்த நாட்களில். சட்டத்தைக் குறித்த தன்மைகளை எந்த அளவுக்கு அறிந்திருக்கிறேன் என்பதை எடுத்துக்காட்ட அல்ல, என்னை நிந்திக்கும்போதுகூட, பொதுத் தத்துவ விளக்கத்தை உள்ளடக்கிப் பேசட்டும் என்பதற்காகவும், அவர்கள் எத்தனை இழிமொழி பேசித் தமது இயல்பினையும், தம்மிடம் உள்ள சரக்கின் தன்மையினையும் எடுத்துக் காட்டியபடி இருந்தாலும், சேற்றுக் குட்டையிலிருந்தும் சில கெண்டைகளைத் தேடிப் பெறுவது போல, அவர்களின் ஆபாசப் பேச்சிலிருந்தும், கிளறி எடுக்கத் தக்கவைகளை நான் பெற முயற்சித்திருக்கிறேன் என்பதைக் காட்டிடவும், சட்டம் பற்றிய சில பொதுக் கருத்துக்களைத் தெரிவிக்கிறேன். சட்டம், ஆட்சி செய்கிறது சட்டம்! சட்டம் எல்லோருக்கும் பொதுவானது! சட்டம், எவரையும் கட்டுப்படுத்தக்கூடியது! சட்டம், வளையாது, நெளியாது; வல்லவனைக் கண்டு ஒளிந்துகொள்ளாது; இளைத்தவன்மீது காரணமற்றுப் பாயாது. சட்டத்தின் கண்முன்பு அனைவரும் ஒன்றுதான்! சட்டம், சமுதாய ஒழுங்கைக் காத்து வருகிறது. சட்டம், சமுதாயம் சின்னாபின்னமாகாதபடி பார்த்துக் கொள்கிறது. சட்டம், நாட்டிலே காட்டுமுறை புகாதபடி தடுத்து நிறுத்துகிறது. சட்டம் மக்கள் ஒருவருக்கொருவர் கூடி வாழ்வதிலேதான் பெருமையும் சுவையும் பயனும் பண்பும் இருக்கிறது என்ற பேருண்மையை நிலைநாட்டத் துணை புரிகிறது, சட்டம், உயிர் உடைமை, உரிமை, அமைதி ஆகியவை களுக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக்கொள்ள விழிப்புடன் இருக்கிறது. சட்டம், கோபதாபம், விருப்பு வெறுப்பு, வெறி போன்ற உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, தகாத செயலில் ஈடுபட்டு, சமூகத்துக்கு எவரும் ஊனம் விளைவித்துவிடாதபடி தடுத்துக் கொண்டிருக்கிறது. சட்டம், மக்களுக்குள்ளாக ஏற்படக்கூடிய தொடர்பையும், மக்களுக்கும் அரசுக்கும் ஏற்படும் தொடர்பையும், மாண்புடைய தாக இருக்கச் செய்யும் பெரு முயற்சியில் ஈடுபடுகிறது. சட்டத்தின் கண்கள் கூர்மையானவை! சட்டத்திற்கு நெடிய கரங்கள்! சட்டம், கண்ணீர் கண்டு கடமையை மறந்துவிடாது; மயக்குமொழி கேட்டு, வழிதவறிச் செல்லாது. சட்டம், தன்முன் நிற்பது யார்? நண்பனா? பகைவனா? உற்றார் உறவினனா? உதவி செய்தவனா? ஊரிலே பெரிய புள்ளியா? ஊறு விளைவிக்கக்கூடியவனா? என்ற இவைபற்றி எண்ணித் தடுமாற்றம் கொள்ளாது. செய்தது என்ன? எப்படிச் செய்தான்? யார் சான்று? எத்தகைய குற்றம்? குற்றமற்றவனாக இருக்கக்கூடும் என்று ஐயப்பாடு எழவாகிலும் இடம் இருக்கிறதா? எனும் இவைபற்றித்தான் எண்ணிப் பார்த்து முடிவு செய்யும். கலம் நேர்வழி செல்ல உதவும் கருவிபோல, சமுதாயம் ஒழுங்காக இருந்துவரத் துணையாக நிற்பது சட்டம். சட்டத்தை மதிக்காமல் சமுதாயத்தில் இடம் பெற்று இருந்திட இயலாது; அனுமதி கிடையாது. சட்டம், அவரவருடைய விருப்பத்திற்கேற்ற வடிவம் கொள்ளாது - வடிவம், இவ்விதம் இருக்க வேண்டும் என்று உரியவர்கள் கூடி முடிவு செய்தான பிறகு மீண்டும் உரியவர்களே கூடி மாற்றினாலொழிய அமைந்துவிட்ட வடிவம், அனைவரும் ஏற்றுக்கொண்டாக வேண்டியதாகிவிடும். தத்தமக்கு விருப்பமான முறையில், வாழ்க்கை நடத்தவும், அத்தகைய வாழ்க்கை நடத்துவதற்குத் தேவைப்படுபவைகளைத் தத்தமது இயல்புக்குத் தக்க முறையிலே தேடிப் பெறவும் அவ்விதம் தேடிப் பெற்றவைகளை வேறு எவரும் பறித்துக் கொள்ளாது பார்த்துக்கொள்ளவும், தடுத்திடவும் தேவைப்படும் பாதுகாப்புப் பெற்று, வாழ்ந்துவர ஏற்பட்ட அமைப்பே, சமுதாயம் என்றாகிறது. தனித்தனி விருப்புக்கு ஏற்றபடி அமையும் வாழ்க்கையும், அந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப்படும் முறையும், மற்ற எவருடைய வாழ்க்கைக்கோ, வாழ்க்கை அமைவதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கோ, கேடு மூட்டாததாக அமைந்தாக வேண்டும். அப்போது தான், சமுதாயம் சாயாமல், சரிந்துபோகாமல் இருக்க முடியும். ஆகவே, பொதுவாக அனைவரும் வாழ வேண்டும், அதற்குக் குந்தகம் ஏற்படாத முறையில், நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டு ஒழுக வேண்டும் என்பதே சமுதாய நெறி - அறவழியாகிறது. அதனைக் கட்டிக் காத்து வருவதே, சட்டம். எனவே சட்டம், அறவழியை அழியாது பாதுகாத்துத் தருகிறது. ஆகவே, அறம் நிலைக்க, சட்டம் அச்சாணியாகிறது. அந்த அச்சாணியின் ஒழுங்குக்கும் நேர்த்திக்கும், வலிவுக்கும் ஏற்பத்தான் சமுதாயத்தின் தரம் அமையும். சமுதாயத்தின் தரம் உயர உயர அங்குக் காணப்படும் சட்டத்தின் நேர்த்தியும் மேன்மைமிக்கதாகும். சட்டத்தின்படி ஒழுகி வருவதன் மூலம் ஏற்படும் வலிவும் பொலிவும், சமுதாயத்தின் தரத்தை உயர்த்துகிறது; ஆகவே சட்டம், சமுதாயத்தை உருவாக்கி, பாதுகாத்து, வளரச்செய்து, அதனுடைய தரத்தையும் உயர்த்துகிறது. எந்த அளவுக்கு, ஒரு சமுதாயத்தின் தரம் உயர முடியும் என்று எண்ணிப்பார்த்த பேரறிவாளர்கள் கூறியிருப்பது, மேலெழுந்தவாரியாகக் கவனிப்பவர்களுக்கு விந்தையாகக்கூடத் தோன்றும். சட்டங்களே தேவை இல்லாத அளவுக்குச் சமுதாயத்தின் தரம் உயர்ந்துவிட்டது என்ற நிலை பிறந்திட வேண்டும் என்கிறார்கள் அந்தப் பேரறிவாளர்கள். தரம் உயர்ந்துவிட்ட சமுதாயத்துக்குச் சட்டங்கள் தேவையில்லை! தரம் கெட்டுவிட்ட சமுதாய நிலையிலும் சட்டங்கள் தேவை இல்லை! ஏனெனில், தரம் கெட்டுவிட்ட சமுதாயத்தில், சட்டங்கள் சரிந்துபோய்விடும்! இது வியப்புக்குரிய செய்தி என்று மட்டும் கருதுவது போதாது; மிக உயர்ந்த நிலையிலும் சட்டம் தேவைப்படாது, மிகக் கேவலமாகிவிட்ட நிலையில் சட்டம் தேவை இல்லை என்பது நகைச்சுவைப் பேச்சும் அல்ல. இனி மருந்து எதற்கு? என்று நோய் முற்றிப்போய் ஆள் தேறமாட்டான் என்று தெரிந்துவிட்டபோதும் கூறுகிறார்கள்; நோய் நீங்கிப்போய், ஆள் நல்ல உடற்கட்டுடன் விளங்கும் போதும் கூறுகிறார்கள். இரண்டும் ஒன்று என்றா பொருள்? இல்லை! அஃதே போலத்தான், சட்டங்களின் அருமை பெருமையை உணர்ந்து, பயனை அறிந்து அதன்படி ஒழுக வேண்டும் என்ற நினைப்போ நிலையோ அற்ற மக்கள் கூட்டத்துக்குச் சட்டத் தொகுப்பு தேவையில்லை; அதுபோன்றே அழுக்காறு, அவா, வெகுளி எனும் கேடுகள் அறவே நீக்கப்பட்டு, அறநெறியினைத் தமது இயல்பாக்கிக்கொண்டுவிட்ட மக்களுக்கும் சட்டம் தேவை இல்லை. ஆனால், இன்றைய உலகு, இந்த இரு நிலைகளைக் கொண்டதாக அமைந்து இல்லை. சட்டத்தின் பிடியில் தங்களை ஒப்படைக்க மறுக்கும் காட்டுப் போக்கினரும் அதிகம் இல்லை, அறநெறியினைத் தமது இயல்பாக்கிக்கொண்ட முழு மனிதர்கள் கொண்டதாகவும் சமுதாயம் இல்லை. நிதான புத்தியுடன் இருக்கும்போது எவை எவைகளைத் தகாதன, தீதானவை, கேவலமானவை, கேடு பயப்பவை என்று உணருகிறார்களோ, அதே செயல்களை, அழுக்காறு, அவா, வெகுளி எனும் உணர்ச்சிகளின் பிடியிலே சிக்கி விடும்போது செய்திடும் போக்கினர் நிரம்ப உள்ள நிலையிலேயே சமுதாயம் இருக்கிறது.   ஆமாம், செய்தேன்! செய்தேன், அதனால் என்ன? செய்தேன்! நீ யார் கேட்க? செய்தேன்! என்ன செய்துவிடுவாய்! செய்தேன்! செய்வேன்! இவ்விதம் ஆர்ப்பரித்திடும் நிலையினின்றும் மெள்ள மெள்ள விடுபட்டு, தீய செயல்களைச் செய்துவிட்ட பிறகு, தவறு என உணர்ந்து, வருத்தப்படுவது, பயப்படுவது, வெட்கப்படுவது, மறைக்கப் பார்ப்பது, மறுத்துப் பார்ப்பது, மறக்கப் பார்ப்பது என்ற நிலைக்கு, மனிதர்கள் செல்வதற்கே பலப்பல நூறு நூற்றாண்டுகளாயின!! கொன்று குவித்தேன்! வெட்டி வீழ்த்தினேன்! துண்டு துண்டாக்கினேன்! என்று பகைவர்களை எதிர்த்திடும் போர்ச் சூழ்நிலையில், பேச்சு எழுகிறது; கேட்போர், பதறுவதில்லை, மாறாக பாராட்டுகிறார்கள். கொளுத்திவிட்டேன்! கொள்ளை அடித்தேன்! மானபங்கப்படுத்தினேன்! என்று கூறுவதைவிட, போர்க்காலத்தில், கூச்சமின்றிக் கேட்டுக் கொள்ளும் மனநிலை ஏற்படுகிறது, ஆனால், இந்த மனநிலை, உள்ளத்திலே மூண்டுவிடும் வெப்பம் குறையக் குறைய மாறத் தொடங்கி, பகை மடிந்த பிறகு, மடிந்துபோகிறது. புதிய கருத்துகள், புதிய முறைகள், புதிய ஏற்பாடுகள் மிகுதியாக உள்ள இந்நாட்களிலேயும், ஒவ்வொரு பெரும் போருக்குப் பிறகும், கொடுமைகளையும் அழிவுச் செயலையும் வெறுத்தும் கண்டித்தும், மனிதத்தன்மையின் மேம்பாட்டினை வலியுறுத்தியும், பல ஏடுகள் வெளியிடப்படுகின்றன; போர் இனிக் கூடாது, போரற்ற உலகு காண வேண்டும், போர் எழாத சூழ்நிலை அமைக்க வேண்டும், அழிவுக் கருவிகளை அழித்திட வேண்டும், கலந்து பேசிக் கேடு களைய வேண்டும், கூடி வாழ்ந்திட முறை காண வேண்டும் என்ற பேருண்மைகள் வலியுறுத்தப் படுகின்றன. அவ்விதமான பேருண்மைகளை வலியுறுத்துவோர்களைப் பேரறிவாளர் என்று போற்றிடச் சமுதாயம் முன்வருகிறது. பெரும் போரில் ஈடுபட்டுப் பகைவர்களை அழித்திடப் பல்வேறு கொடுமைகளையும் கூசாது செய்தவர்களேகூட, போர் முடிந்த பிறகு, போர் கொடுமையானது, போர் கூடாது, அழிவு தடுக்கப்படத்தான் வேண்டும், அமைதியான உலகே ஆனந்த உலகு என்று உணர்ந்து பேசுகின்றனர். போரில் ஈடுபட்டவர்களுக்கே போர் கூடாது என்பதிலே உண்மையான எண்ணம் ஏற்படும் என்று அறிவாளர் கூறியிருப்பது, இந்தப் போக்கை அறிந்ததால்தான். போர் முடிந்த பிறகு மன மாறுதல் ஏற்படுவது போலவே, தனிப்பட்ட முறையிலே எழும் பகை காரணமாக ஒருவன், தீயசெயலைச் செய்துவிட்ட பிறகு, அவன் உள்ளத்திலே பகை உணர்ச்சி மடியத் தொடங்கும்போது, அவனுக்கே, தன்னுடைய செயலைக் குறித்து, ஒரு அருவருப்பும் அச்சமும் எழுகிறது. பொதுவாகப் பார்க்கும்போது, கொடுமை செய்வதில், இயற்கையான களிப்பும், பெருமிதமும் கொண்டிடும் காட்டுக் குணம், இன்று பெருமளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கிறது என்று கூறலாம். காட்டுக்குணம் என்று கூறும்போது, அதிலேயும் இருவகை இருப்பதை உணரலாம்; ஒன்று, பாய்ந்து தாக்கும் கொடுமை; மற்றது, பதுங்கி மாய்க்கும் கயமை! இன்று, இரண்டாவது வகைக் காட்டுக் குணமே, அதிகமாகக் காணப்படுகிறது. காரணம், தாக்கும் வலிவு குறைந்திருக்கிறது என்பதுடன், தாக்குதலை வெறுப்பார்கள், எதிர்ப்பார்கள், தடுப்பார்கள் என்ற அச்சம் மேலிட்டு விட்டிருக்கிறது; எனவேதான், பதுங்கிடவும், தாக்கிய பிறகு ஒளிந்திடவும், கேட்கும்போது மறுத்திடவும், பிடிபடும்போது தப்பித்துக்கொள்ளவும் கொடுமை செய்தவன், இந்நாட்களில் முயலுகிறான். இந்தப் போக்கு ஏற்படச் சமுதாய அமைப்பும், அதன் விளைவாக ஏற்பட்ட சட்டமும், அந்தச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்திடும் திறத்துடன் ஒரு அரசும் காரணமாயின. எனவே, சட்டம், மனிதனுடைய மனத்திலேயும் போக்கிலேயும், குறிப்பிடத்தக்க ஒரு மாறுதலை ஏற்படுத்தத் துணைபுரிந்திருக்கிறது; கொல்லும் புலிக்குக் கூண்டாக இருப்பது மட்டுமன்றி, புலியின் இரத்த வெறிப் போக்கை ஓரளவு மாற்றியும் இருக்கிறது என்று கூறலாம். தனிப்பட்டவர்களுக்குள் ஏற்பட்டுவிடும் பகையானாலும், இரு நாடுகளுக்குள் மூண்டுவிடும் பகையானாலும், பகைகொண்ட அந்த இரு தரப்பினரின் வலிவுக்கு ஏற்றபடி, வெற்றி தோல்வி அமைகிறது. சட்டத்திற்கு உட்பட்ட ஒரு சமுதாயத்தில், ஒருவன், வேறு ஒருவனைக் கொடுமை செய்யும்போது, கொடுமைக்கு ஆளானவன் பக்கம் சமுதாயம் முழுவதும் துணை நிற்கிறது என்று பொருள்படும். கொடுமை செய்தவன், தனியாக்கப்பட்டுவிடுகிறான்! கொடுமைக்கு ஆளானவன் சார்பாகச் சமுதாயம் எழுகிறது; சட்டம் முழக்கம் எழுப்புகிறது; அரசு துணை நிற்கிறது. கொடுமை செய்தவன் வலிவுமிக்கவனாக இருக்கலாம்; கொடுமைக்கு ஆளானவன், வலிவற்றவனாக இருக்கலாம். அந்த இருவருக்குள் மூண்டுவிட்ட பகையில், சமுதாயம் சட்டத்தின் துணையுடன், தலையிடாதிருக்குமானால், வலிவற்றவனை வலிவுள்ளவன் வதைத்திடுவான், வலிவற்றவன் அழிக்கப்பட்டுப் போய்விடுவான். ஆனால் சட்டத்திற்குத் தன்னைத்தானே உட்படுத்திக்கொண்ட சமுதாய அமைப்புமுறை இருக்கிற காரணத்தால், அந்த வலிவற்றவனுக்குத் துணையாகச் சமுதாயமே நிற்கிறது; ஒருவன் எத்துணை வலிவுமிக்கவனாக இருப்பினும், அவனுடைய வலிவு, சமுதாயத்தின் கூட்டுவலிவின் முன்பு எம்மாத்திரம்? எனவே, அவன், தன் வலிவினைக் காட்டிட இயலாது! அவன் செய்த கொடுமைக்கேற்ற தண்டனை தரப் படுகிறது; கொடுமை செய்தவன், தன் சொந்த வலிவினைக் காட்டித் தப்பித்துக்கொள்ள முடியாது போகிறது. எனவே, சட்டம், வலியோர் சிலர் எளியோர் தமை வதை புரியும் கொடுமையைத் தடுத்திடும் வலிவுமிக்க ஓர் ஏற்பாடாகி விளங்கி வருகிறது. இவ்வளவும், இதற்கு மேலும் கூறலாம், சட்டத்தின் பொருள், பொறுப்பு, பொருத்தம் ஆகியவைபற்றி! இவைகளை உள்ளடக்கித்தான், சட்டம் ஆள்கிறது என்று கூறுகிறார்கள். சட்டம், தனிப்பட்ட எவரையும்விட வலிவு மிக்கது, எவர் சார்பிலும் நின்றுவிடாமல், வலியோர் எளியோரை வதைக்காதபடி பார்த்துக்கொள்கிறது என்று கூறுகிறார்கள் சட்டத்துக்கு அடங்கி நடப்பது - கேவலப்போக்கு என்றோ, கோழைத்தனம் என்றோ கூறுபவர் எவரும் இரார்; ஏனெனில், சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு. எனவே, அந்தச் சமுதாயத்திலே உள்ள ஒவ்வொரு தனி மனிதருக்கும் தன்னுடைய இசைவின் பேரில் அமைந்துள்ள ஏற்பாடே சட்டம் என்று கூறிக்கொள்ள, பெருமைப்பட, உரிமை இருக்கிறது சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது என்பது, தானும் சேர்ந்து சமைத்துக்கொண்டுள்ள ஒரு சமுதாய ஏற்பாட்டுக்கு, சமுதாய நலனைக் கருதி, உடன்பட்டு ஒழுகி வருவது என்ற பொருள் தருவதால், அது தவறு ஆகாது என்பது மட்டுமல்லாமல், அது தலையாய கடமை என்ற எண்ணம் எழுகிறது. சட்டம் அவ்விதம்; நாம் என்ன செய்யலாம்? சட்டத்திற்கு மாறாக நான் ஏதும் செய்வதற்கு இல்லை என்று கூறிடுவோர், ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் அல்லது ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையில், தமது விருப்பு வெறுப்பு எப்படி இருப்பினும், அந்த விருப்புவெறுப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டேனும், சமுதாய ஏற்பாட்டுக்கு ஒத்தபடிதான் நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் தெரிவிக்கிறார்கள். நாம் என்ன செய்யலாம்? சட்டம் அப்படி! இப்படியும் ஒரு சட்டமா? இதற்கும் சட்டம் வந்துவிட்டது! எடுத்ததற்கெல்லாம் சட்டமா? சட்டம் என்றாலும் அதிலே பொருத்தம், பொருள் இருக்க வேண்டாமா? ஆரஅமர யோசிச்சிச் சட்டம் போடணும். இவருடைய சட்டமப்பா இது! எத்தனையோ சட்டத்திலே இது ஒன்று. ஏன், போட்டுவிடேன் சட்டம் இதற்கும்? சட்டம் போடுவதா பெரிய கஷ்டம்? அவருக்கென்ன, நினைத்தா போடுவாரு ஒரு சட்டம்! சட்டம் வருகிறதாம்பா! தெரிந்துகொள்! சட்டம் போடப்போறாராமே பெரிய சட்ட நிபுணரு! சட்டம் போட இவனுக்கு என்ன தகுதி இருக்குது? புரிந்துகொண்டா போடறாங்க சட்டம்? யாரைக்கேட்டுப் போட்டாங்க இந்தச் சட்டம்? இவனோட சட்டத்தை எவன் மதித்து நடப்பான்? இதுக்கும் பேரு சட்டந்தானாம்! இந்தச் சட்டம் நிலைக்குமா? இவனோடு தீர்ந்தது இந்தச் சட்டம்! சட்டம் போட்டுவிட்டா பிரச்சினை தீர்ந்துபோச்சா? எத்தனையோ சட்டத்தைப் பார்த்தாச்சி; விட்டுத் தள்ளு! இந்தச் சட்டம் தொலையணும்; நாடு உருப்பட வேணும்! இங்கேதான்யா இப்படிப்பட்ட சட்டமெல்லாம்! இப்படிப்பட்ட சட்டம் போட்டவனெல்லாம் என்ன ஆனான்னு தெரியாதா? நியாயந்தானாய்யா இந்தச் சட்டம்? கொஞ்சமாவது ஈவு இரக்கமிருந்தா, இப்படி ஒரு சட்டம் போடுவானா? யார் என்ன செய்ய முடியும் என்கிற ஆணவத்திலே போடற சட்டம்! சட்டம் போட்டுவிட்டா எல்லோரும் பெட்டிப் பாம்பாகி விடுவாங்கன்னு நினைப்பு! கண்ணுமண்ணு தெரியாம கொண்டாடினோம்; போடறான் சட்டம்! சட்டத்தைத்தானே காட்டுகிறே! காட்டு! சட்டப்படிதானே நடக்குது சகலமும், தெரியுமே! ஆட்டுக்குப் போடுது சட்டம் ஓநாய்க் கூட்டம்! வலுத்தவன்கிட்டப் போகுதா இந்தச் சட்டம்? ஏழை வாழவா இருக்குது இந்தச் சட்டம்? இல்லாதவனை மிரட்டத்தான்யா சட்டம்! நல்லதுக்குப் போடமாட்டாங்க ஒரு சட்டம்! சட்டம் ஒழுங்காகத்தான் இருக்குது! இருந்து? சட்டம் இருக்குதா? ஆமாம் ஏட்டிலேதானே!! ஏன்யா, சட்டம் சட்டம்னு பேசி வயிற்றெரிச்சலைக் கிளப்பறே! போய்யா, நீயும் உன்னோட சட்டமும். என்னய்யா செய்துவிடும் உன்னோட சட்டம்? ஆமாம்! மீறப்போறேன் உன் சட்டத்தை! செய்ய முடிந்ததைச் செய்துகொள்ளு, போ! சட்டம் சட்டம்னு பயந்து சாகச் சொல்றயா? உயிரைத்தானேய்யா பறிச்சிக்கும் உன் சட்டம்? செய்யட்டும்!! கிளம்புங்க, நமக்காகச் சட்டமா? சட்டத்துக்காக நாமா? என்பதை ஒருகை பார்த்தேவிடுவோம்! தம்பி! முற்பகுதியில், சட்டத்தின் மேம்பாடுபற்றிக் கூறியிருப்பதற்கும், பிற்பகுதியில், சட்டத்தைத் துச்சமென்று கருதும் மனப்போக்கு எழத்தக்கவிதமாக எழுதியிருப்பதற்கும் பொருத்தம் காணோமே - சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு என்பதற்கான அழுத்தமான காரணங்களைக் காட்டிவிட்டு, சட்டத்தைக் கேலி செய்தும் கேவலப்படுத்தியும், மீறத்தக்கது ஒழித்திடவேண்டியது என்ற முறையிலும் எழுதியிருப்பது முறையாகத் தெரியவில்லையே என்று எவருக்கும் கேட்கத் தோன்றும். பொருத்தமற்றதை, முறையற்றதை எழுதும் பழக்கம் எனக்கும் இல்லை என்பதை நீ நன்கு அறிந்திருக்கிறாய் - எனவே, ஏன் நான் இவ்விதம் எழுதினேன் என்று எண்ணிப் பார்த்தால் உண்மை விளங்கும். சட்டம், சமுதாய ஏற்பாடாக, கட்டுக்கோப்பு, கண்ணியம், ஒழுங்கு, நீதி, நியாயம், நேர்மை ஆகியவற்றினைப் பாதுகாத்திடத் தக்கதாக அறநெறி மேற்கொள்வதாக அமைந்திருக்குமானால், அப்படிப்பட்ட சட்டத்தை அனைவரும் வரவேற்றுப் போற்றி அதன் கட்டுக்கு அடங்கிச் சமூக மேம்பாடு எழில்பெற ஒழுக வேண்டும் - ஒழுகி வருகின்றனர் மிகமிகப் பெரும்பாலோர். ஆனால் சட்டம், தான்தோன்றித்தனமாக, ஆணவப் போக்குடன், ஆய்ந்து பார்க்காமல், ஆதிக்க வெறிகொண்டு, அக்கிரமத்துக்குத் துணையாக, அநீதியைக் கொலுவேற்ற இயற்றப்படுமானால், சட்டம் மதிப்பற்றுப்போகும், துச்சமென்று எண்ணுவர், எதிர்த்திட முனைவர் - எதிர்த்துள்ளனர் - எதிர்த்து நிற்பர். சட்டம் நோய் தீர்க்கும் மருந்து என்று கொள்வோமானால், அம்மருந்து முறைப்படி செய்யப்பட்டதாக, அத்துறை வல்லுநரின் ஒப்பம் பெற்றதாக, நோய்தீர்க்க வல்லதாக அமைந்திருக்க வேண்டும். அங்ஙனம் தயாரிக்கப்பட்டதாக இருப்பின் கசப்பு, குமட்டல், எரிச்சல் ஏற்படினும் சகித்துக்கொண்டு, நோய்போக அம்மருந்து உட்கொள்வர். பொருள்வகை, செய்முறை அறியாது, கண்மூடித்தனமாக, விளக்கமற்ற நிலையில் விரைவு அதிகம் காட்டி, தயாரித்த மருந்து எனின் அதனை உட்கொள்ளார் - உட்கொள்பவர்க்கு நோயினும் கேடான நிலையே ஏற்பட்டுவிடும். சட்டத்தை மீறலாம் என்ற நினைப்பும், மீறவேண்டும் என்ற துடிப்பும், மீறத்தக்க துணிவும் மக்கள் - அல்லது குறிப்பிடத்தக்க பகுதியினர் கொள்ளத்தக்கவிதமான கோணற் சட்டத்தை இயற்றிவிட்டு, சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு, அதனை மீறலாகாது என்று பேசிப் பயன் இல்லை. அவ்விதம் செய்யப்பட்ட சட்டங்கள் நிலைத்திருப்பது மில்லை. எனவேதான், சமூகத்தில், விவரம் அறியாமல், விளக்கம் பெறாமல், ஆர அமர யோசியாமல், தீது பயக்கத்தக்க, தன்மானம் அழிக்கத்தக்க, உரிமையை உருக்குலையச் செய்யத்தக்க, வலியோர்க்குத் துணை நிற்கத்தக்க விதமான சட்டங்களை எதிர்த்து நிற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன - நடைபெற்றுக்கொண்டு வருகின்றன; நடைபெற்றுத்தீரும். சட்டம் இயற்றுவது என்பது எத்தனை பொறுப்பான காரியம் என்பதை உணர்ந்து, தூய நோக்கத்துடன் இயற்றிட வேண்டும். சட்டம் இயற்றும் அதிகாரம் எம்மிடம் சிக்கிவிட்டது, இனி எமது விருப்பத்தின்படி சட்டங்களை இயற்றுவோம் என்ற போக்கு அறவே கூடாது. அதனைச் சமூகம் தாங்கிக்கொள்ளாது. தேவை அறிந்து, சூழ்நிலை தெரிந்து, அனுபவ அறிவையும் அறிவாளர் கருத்தையும் பெற்று, மக்களுக்குப் பெரும்பாதகம் விளைவிக்காத விதமான முறை கண்டறிந்து, சட்டங்கள் இயற்றப்படவேண்டும்; அத்தகைய சட்டங்களை மதித்து நடப்பர் - நடந்து கொள்கின்றனர். கனிதரும் மரமாகத்தக்க செடி, தோட்டத்தில் பயிரிடு பவர்களே, அந்தச் செடி, வீட்டுச் சுவரின் இடுக்கிலே தன்னாலே முளைத்துவிட்டால், கல்லி எடுக்கிறார்கள். வேரினைக் கருக்கிடவும் செய்கிறார்கள். மக்களின் நல்வாழ்வுக்காக இந்தச் சட்டம் பிறந்திருக்கிறது என்ற நம்பிக்கை எழத்தக்க முறையில் சட்டம் இயற்ற வேண்டும் - மீறினால் என்ன ஆகுமோ என்ற கிலி மக்கள் மனத்திலே எழும். ஆகவே, அவர்கள் தண்டனைக்குப் பயந்து அடங்கிக்கிடப்பர் என்று மட்டும் எண்ணிக்கொண்டு, சட்டத்தை இயற்றிவிடுவது, முழு அளவு பலனை நிச்சயம் தாராது. இதை விளக்கிடும் நிகழ்ச்சிகள் வரலாற்று ஏடுகளிலே நிரம்ப இருக்கின்றன. சட்டத்தை மீறலாமா என்று கேட்கிறார்களே சிலர், அவர்களுக்குக் கூறிடத் தயங்காதே, தம்பி! தேவையான, நியாயமான சட்டங்களை நாங்கள் மதிக்கிறோம். சட்டத்தின் கட்டுக்கு அடங்கி நடந்துகொள்கிறோம். ஆனால், எம்மை இழி மக்களாக்கிவிடத்தக்க கேடு விளைவிக்கும் சட்டம் இயற்றப் பட்டால், அதனை மதித்திட முடியாது, மீறித்தான் நடப்போம், அதற்காக அளிக்கப்படும் தண்டனையை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வோம் என்பதனை - தெளிவாக - திட்டவட்டமாக என்று. எல்லாச் சட்டத்திலும் மேலானது, உயிரானது, புனிதமானது, அரசியல் அமைப்புச் சட்டம் என்கிறார்கள். அதனைவிட மேலானது, புனிதமானது, நல்வாழ்வுக்கான மக்களின் அடிப்படை உரிமை. அந்த உரிமையைப் பறித்திடும் சூதுமதியுடன், சூழ்ச்சித் திறத்துடன், ஒரு ஏற்பாடு செய்துகொண்டு, அதற்குச் சட்டத்தைக் கருவியாக்கிக்கொண்டால், அந்தச் சட்டத்தை எப்படி மதித்திட முடியும், எவர் மதிப்பர், ஏன் மதித்திட வேண்டும். இந்த எண்ணத்துடனேயே, இந்த எண்ணம் தரும் தெளிவையும் துணிவையும் துணைகொண்டே, இந்தி எதிர்ப்பு அறப்போர் நடாத்தப்பட்டு வருகிறது. இது சட்டத்தை மீறுவதாகும் என்கிறார்கள் துரைத்தனத்தில் இடம்பிடித்துக் கொண்டவர்கள்; அல்ல! அல்ல! எத்தகைய தீதான, தேவையற்ற, சட்டத்தை இந்தத் துரைத்தனம் எம்மைச் சுமக்கச் சொல்கிறது பாருங்கள் என்று உலகோர்க்கு உணர்த்த நடத்தப்படும் அறப்போர் இது என்கிறோம் நாம். தம்பி! சட்டம் பொருத்தம் பொருளற்றதாகவும், உரிமைக்குக் கேடு விளைவிப்பதாகவும் இருந்திடும்போது, மக்கள் சட்டம்பற்றி என்னென்ன பேசிக்கொள்வார்கள் என்பது குறித்து நான் குறிப்பிட்டுள்ள பகுதியை மறுபடியும் ஒரு முறை படித்துப் பார். ஒவ்வொரு பேச்சும் ஒரு மன நிலையைக் காட்டிடும். நாம் என்ன செய்யலாம், சட்டம் அப்படி! - என்ற பேச்சிலே, ஒரு ஏக்கம் தொனிக்கிறதல்லவா? இந்த ஏற்பாடு கெடுதல் மூட்டுகிறது, தெரிகிறது; ஆனாலும் சட்டம் இதுபோலச் செய்துவிட்டார்களே, என்ன செய்வது என்ற ஏக்கம் இப்படியும் ஒரு சட்டமா? கோபமும் வெறுப்பும் கலந்திருக்கிறது, இந்தக் கேள்வியில். இதற்கும் சட்டம் வந்துவிட்டதா? என்று கேட்கும் போதும், எடுத்ததற்கெல்லாம் சட்டமா? என்று வினவிடும் போதும், ஒரு துரைத்தனம் கண்டதற்கெல்லாம் சட்டம் போட்டு, மக்களை அதிக அளவுக்குக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது, அந்தத் துரைத்தனத்துக்கு "அமுல்’ செய்வதிலேயே அளவற்ற சுவை இருக்கிறது என்ற கருத்து கலந்து வெளிவருகிறது. பொருளும் பொருத்தமுமற்ற முறையிலே சட்டம் இயற்றும்போது, மக்கள் வெறுப்படைந்து பேசுகிறார்கள், சட்டம் என்றால் அதிலே பொருத்தம் பொருள் இருக்கவேண்டாமா என்று. ஆர அமர யோசித்துச் சட்டம் போட வேண்டும் என்ற பேச்சு எப்போது எழுகிறது! ஒரு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து எடுத்துரைத்துச் சட்டம் இயற்ற, நேர்மாறானது விளைவது காணும்போது இப்பேச்சு எழுகிறது. இவருடைய சட்டமப்பா இது? - என்று கூறும்போது, சட்டம் இயற்றுபவர்கள்மீது தமக்குள்ள அலட்சியத்தை வெளியிடுகிறார்கள். ஆணவக்காரன் அல்லது அசடன் - இவன் சட்டம் இதுபோலத்தான் இருக்கும் என்ற பொருள்பட. எத்தனையோ சட்டத்திலே இது ஒன்று. அடுக்கடுக்காகச் சட்டங்களைக் குவித்துவைத்திருக்கிறார்கள் தேவையற்று என்பதைக் குறிக்க இதுபோலக் கூறுகிறார்கள். ஏன், போட்டுவிடேன் சட்டம் இதற்கும்? - என்று கேட்பவர், அதிகாரத்திலிருப்பவர், எந்த நியாயம் கேட்டாலும் உரிமை கேட்டாலும் அதை அடக்கிட சட்டத்தைக் கருவியாக்கிக் கொள்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அத்துடன், அதிகாரத்திலிருப்பவரிடம் மதிப்பு மங்கி வருகிறது என்பதையும் காட்டுகிறார். தம்பி, இப்படியே விளக்கம்பெற, ஒவ்வொரு பேச்சையும் படித்துப் படித்துக் கருத்தினை ஆராய்ந்தால், திகைப்பு, வியப்பு, ஏக்கம், வெறுப்பு, அலட்சியம், கோபம், எதிர்ப்பு, துணிவு எனும் ஒவ்வோர் வகையான உணர்ச்சியும் இந்தப் பேச்சுக்களிலே உள்ளடங்கி இருப்பதை அறிந்துகொள்ளலாம். பொறுத்துப் பார்த்துப் பார்த்து, முறையிட்டால் மாற்றப்படும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து, எரிச்சல் மூட்டப்பட்டு இறுதியில் என்ன நடந்தாலும் நடக்கட்டும் எதிர்த்தே தீருவது என்ற துணிவு பிறந்து, அந்தக் கட்டத்தின் போதுதான். தலையா போகும்? மீறத்தான் போகிறேன், மீறுவோம் கிளம்புங்கள்! என்பனபோன்ற பேச்சுக்கள் எழுகின்றன; செயலும் நிகழ்கிறது. இந்த நிலைக்கு மக்களைத் துரத்தக்கூடியதாக, சட்டம் இயற்றக்கூடாது. இந்த நெறியை ஆட்சியினர் மறந்து, கண்மூடித்தனமாகச் சட்டம் இயற்றினால், அந்தச் சட்டம் ஏட்டில் இருக்கும், நாட்டிலுள்ள நல்லோர் துணிந்து அதனை மதிக்க மறுப்பர். நாம் நடத்திவரும் இந்தி எதிர்ப்பு அறப்போர் இந்த நிலையையே எடுத்துக் காட்டுகிறது; எனவே சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு என்ற மேலான கோட்பாட்டை மதித்து ஒழுகும் நமது கழகத்தவர், ஆகாத, தீதான, தேவையற்ற, பொருளற்ற, வேண்டுமென்றே பூட்டப்படுகிற, உரிமை பறிக்கிற சட்டத்தை எதிர்த்து சிறை செல்வதை, ஒரு தீமையை எதிர்த்து நிற்கும் அறம் என்று உளமார நம்பி நடந்துகொள்கிறார்கள். அந்தச் சீரிய செயல், சட்டம் இயற்றுபவர்கள் எத்தகைய நெறி நிற்க வேண்டும் என்பதனை அவர்களே, மெல்ல மெல்ல ஆனால், நிச்சயமாக உணர்ந்திட வழி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன். இத்தகைய நல்ல நோக்கத்துடன் நடத்தப்படும் அறப்போரில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதிலே நான் பெருமைப்படுகிறேன்; அந்தப் பெருமிதத்தில், எனக்கு! எனக்கு! என்று கேட்டுத் தம்பிகள் பங்கு பெற்றுக்கொள்வது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது. அந்தப் பெருமையில் தமக்குரிய "பங்கினை’ப் பெற முனைந்து, நாவலர் நெடுஞ்செழியன் சிறை சென்றிருக்கிறார். என் வாழ்த்துக்களை அவருக்கும், கோவை மாவட்டச் செயலாளர் உடுமலை நாராயணன் மற்றும் பல நண்பர்கட்கும் வழங்கி மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் மட்டுந்தானா அண்ணா! என்று கேட்டிடமாட்டாய் என்று எண்ணுகிறேன், தம்பி! ஏனெனில் நீ அறிவாய், அன்பு ததும் ஒரு தூய இதயத்திலிருந்து நான் கொய்து அளிப்பது அந்த வாழ்த்து! அந்த மலரின் மணமும் மாண்பும் நீ அறிந்திருக்கிறாய்!! அன்புள்ள அண்ணாதுரை 2-8-1964 அவர் படும் அல்லல் காமராஜரின் கருத்தைக் குடையும் கழகம் கழகம் ஆளும் கட்சியாகிவிடும் என்பதால் காமராஜருக்கு மனக் குமட்டல் பொதுமக்களின் ஆணைக்கு முன்னால் எந்த ஆர்ப்பரிப்பும் நில்லாது; நிலைக்காது! பதினேழு ஆண்டு கடந்தும் தீராத சோற்றுப் பிரச்சினை நல்லவரிடம் பொல்லாத வியாதி தம்பி! பைத்தியக்காரர்கள்! பகற்கனவு காண்பவர்கள்! பெரிய இடத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் “பட்டங்கள்’ இவை! எவ்வளவு உயரத்திலே தூக்கிக்கொண்டு போய் என்னை உட்கார வைத்தாலும், எத்தனை பலமான குரலிலே பல்லாண்டு பாடினாலும், எத்தனை விதவிதமானவர் களைக் கொண்டுவந்து நிறுத்தி என் பல்லக்கைத் தூக்கச் சொன்னாலும், இந்தப் பாரதம் மட்டுமல்ல, பாரே புகழ்கிறது என்று பாமாலை சூட்டினாலும் என் எண்ணம் மட்டும் திரும்பத் திரும்ப”அவர்கள்’ பற்றியேதான் செல்கிறது, “அவர்களை’ப் பற்றிப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!”அவர்களை’ப் பற்றிப் பேசினாலொழிய என் நா சுவை பெறுவதில்லை. நீங்கள் ஏதேதோ கேட்கிறீர்கள், லாவோஸ் பிரச்சினை என்கிறீர்கள் காஷ்மீர் நிலைமை என்கிறீர்கள் பாகிஸ்தான் நிலைமை என்கிறீர்கள் ஏதேதோ கேட்கிறீர்கள். ஆனால், என் மனம் ஒரே ஒரு விஷயத்திலேதான், நானே எவ்வளவு தடுத்துப் பார்த்தாலும், கட்டுப்படுத்த முயன்றாலும், திரும்பத் திரும்பச் சென்று தாவுகிறது - அந்தப் பயல்களைப்பற்றித்தான் எண்ணுகிறேன், எண்ணுகிறேன், எண்ணியபடி இருக்கிறேன். யாராரையோ எப்படி எப்படியோ மண்டியிடச் செய்துவிட்டேன், கூட்டாளி களாக்கிக்கொண்டேன் - ஆனால், இந்தப் பயல்களோ. . . . .!! இவ்விதமான கவலைமிகு எண்ணம் கொண்டுள்ள காமராஜர் நமக்கு இந்தக் கிழமை வழங்கியுள்ள பட்டங்கள், பைத்தியக்காரர்கள் பகற்பனவு காண்பவர்கள் என்பனவாகும். காமராஜர், அகில இந்தியக் காங்கிரசுக்குத் தலைவராகி விட்டார், இனி அவருடைய நேரமும் நினைப்பும், "அனைத்திந்திய, அதிதீவிர, அதிஅவசரப் பிரச்சினைகளிலேயே பாயும் பதியும், இணையும் பிணையும், மற்ற மற்றச் சில்லறைகளைச் சின்னவர் களிடம் விட்டுவிடப்போகிறார், மக்களே, ஒழுங்காக இருங்கள்! மக்களே, ஒன்றுபட்டு இருங்கள்! மக்களே, உங்களை வாழ்த்துகிறேன். மக்களே, உங்கள் வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன். நாடு முழுவதும் நன்றாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்பன போன்ற உபதேசங்களை அருளியபடி இருந்திடப் போகிறார், அந்த உயர்ந்த நிலைக்கு அவர் சென்றுவிட்டார்!! - என்று காங்கிரஸ் வட்டாரத்தினர் பேசிக்கொண்டனர். தம்பி! நான்கூடக் கொஞ்சம் அந்தப் பேச்சைக் கேட்டு மயங்கினேன் - இப்போது தெரிகிறது, அவர் எத்தனை அடுக்குள்ள மாடி சென்றாலும், அரசோச்சினாலும், அவருடைய கண்களுக்குத் தெரிவது, கண்களை உறுத்துவது, தி. மு. க. என்ற பேருண்மை! அது அவருடைய இயல்பை அல்ல, தி. மு. க. வின் நிலையைக் காட்டுகிறது. எவர் எந்நிலை பெற்றிடினும், அவர் அரசியலில், சந்தித்துத் தீரவேண்டிய சக்தி, சமாளித்தாக வேண்டிய பிரச்சினை, பதிலளித்துத் தீரவேண்டும் என்று கேட்டு நிற்கும் கேள்விக்குறி, தி. மு. க.! ஆமாம், தம்பி! அதனால்தான், அவ்வளவு மேலான பதவிபெற்று, பராக்குக் கூறுவோர் படைபெற்று, “சாந்துப் பொட்டுத் தளதளக்க சந்தனப்பொட்டு மணமணக்க’ என்று சிந்து பாடுவார்களே, அதுபோன்ற நிலையினைப் பெற்று”தர்பார்’ நடத்தினாலும் அவருடைய நினைப்பு, நம்மைப்பற்றி, அவருடைய பேச்சு நம்மைப்பற்றி! எங்கு சென்றாலும், எத்தனை உயர்வு பெற்றாலும், என்ன அதிகாரம் கிடைத்தாலும், எவ்விதமான அமுல் நடத்தினாலும், எவரெவர் வாழ்த்தினாலும், வழிபட்டு நின்றாலும், என்னை மறக்க இயலாது உம்மால்! எட்டி எட்டிச் சென்றாலும் உமது மனத்தைத் தொட்டிழுக்கும் நான் எழுப்பிடும் கேள்வி! என்று கூறுவது போல, நமது கழகம் காமராஜரின் கருத்தைக் குடைந்தபடி இருக்கிறது. குடைச்சலே, தம்பி! மகா பொல்லாத நோய்! அதிலும் மனக் குடைச்சல் இருக்கிறதே, ஏ! அப்பா! தொல்லை நிரம்பியது, துளைத்தெடுக்கும், படாத பாடு படுத்திவிடும். அந்தக் குடைச்சல் காரணமாக அவர் நம்மை, பைத்தியக்காரர்கள் பகற்கனவு காண்பவர்கள் என்று முச்சங்கத்தினரும் ஒருங்கே கூடி நின்று, தமிழ் மொழிக்கே அணியெனத்தகும் சொற்களாம் இவை தமைச் சொரிந்த வித்தகரே! வாழ்க! வாழ்க! வளர்க நும் செந்நாப் புலமை! என்று கூறிடுவர் என்று கொலு மண்டபத்துக் கோலேந்திகளும், குழலூதிகளும் கூறிக் குதூக-த்திடத்தக்க முறையில், நம்மை ஏசியிருக்கிறார். ஏசக்கேட்டால், அண்ணா! எரிச்சலல்லவா ஏற்படும்? நீ மகிழ்ச்சி காட்டுகிறாயே என்றுதானே தம்பி! கேட்கிறாய். கேட்கத்தான் செய்வாய்! ஒன்று மறந்துவிடுகிறாயே, தம்பி! எத்தனை முறை நினைவுபடுத்தினாலும். எனக்கு இத்தகைய பேச்சுகளைக் கேட்டு எரிச்சல் வருவது இல்லையே!! ஏன் இப்படிப் பேசுகிறார்கள்? எந்த நிலையில் இப்படிப் பேசுவார்கள்? என்று இந்தவிதமாக அல்லவா என் எண்ணம் செல்கிறது. அவ்வளவு பெரியவர், அத்தனை மகத்தான நிலையில் இருந்துகொண்டு, "கனம்கள்’ கைகட்டி நிற்க, கனவான்கள் வாய்பொத்திக்கிடக்க, கொலுவீற்றிருக்கும் நிலையில், நம்மைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார், நம்மைக் குறித்துத் தான் பேசமுற்படுகிறார் என்றால், நாம் தம்பி! அவருடைய கவனத்தை ஈர்க்கத்தக்க வல்லமையுடன் இருக்கிறோம் என்பது விளக்கமாகிறதல்லவா!! என் மகிழ்ச்சிக்குக் காரணம் அது; பொருத்தமானதா அல்லவா என்பதை எண்ணிப் பார்த்திடு, தம்பி! புரியும், உனக்கும் மகிழ்ச்சி பூத்திடும். இப்போதும் தம்பி! நாட்டிலே, பல கட்சிகள் உள்ளன காங்கிரசை எதிர்த்திட. காமராஜரின் கவனம் அந்தக் கட்சிகளின் மீதா செல்கிறது! “கம்யூனிஸ்டு கட்சி - அசல் - விலைவாசி உயர்வைக் கண்டிக்கப் போராட்டம் - போர் ஆட்டம் அல்ல - நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது! ஒரு வார்த்தை அதுபற்றி! உஹும்!! (இதுவரையில்) நினைப்பு வந்தால்தானே? சம்யுக்த சோஷியலிஸ்டுகள் கட்சி (பழைய பிரஜர் சோஷியலிஸ்டு கட்சி) கிளர்ச்சி நடத்தியிருக்கிறது. ஒரு பேச்சு அதுபற்றி? கிடையாது! மேடை ஏறினால்”மன்னாதி மன்னா!’’ என்று பாடிடுவோர் புடை சூழ்ந்திருக்கும் வேளையில், காமராஜர் பேசும் பொருள் என்ன? தி. மு. கழகம் பற்றி! அவ்வளவு வேலை செய்கிறது, அந்த நினைப்பு! சிற்றரசர்கள் கப்பம் கட்டுகிறார்கள்! பட்டத்தரசிகள் புன்னகை புரிகிறார்கள். ஆடலழகிகள் ஆடுகிறார்கள், குயிலிகள் பாடுகிறார்கள். இருந்தும், பட்டத்தரசனின் முகத்தில் மட்டும் மகிழ்ச்சி இல்லை சோர்ந்து காணப்படுகிறான்; என்ன? என்ன? என்று ஆயிரம் கண்கள் கேட்கின்றன! ஒரே பெருமூச்சுத்தான் பதில்!! இந்நிலை என்றால், காரணம் என்ன? மன்னன், மணி மண்டபத்தில் காணும் காட்சி மகோன்னதமானது என்றாலும் அவனுக்கு மருத்துவம் பலப்பல நடாத்தியும் குமட்டல் போகவில்லை என்றால், மன்னன் மனம், மணி மகுடம், சிங்காதனம். சிற்றரசர் பணிவு, சிங்காரிகளின் நெளிவு இவற்றிலா செல்லும்; கோலாகலம் இவ்வளவு இருந்து என்ன பலன், இந்தக் "குமட்டல் நோய்’ என்னைவிட்டுப் போகவில்லையே என்று எண்ணுகிறான்: இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, மருந்துக்குக் கட்டுப்படாமல் போய்விடுமானால். . . . .! அந்த மன்னனுக்கு மலரிலே நெடியும், தேனிலே கசப்பும், தென்றலிலே வெப்பமும் இருப்பதாக அல்லவா தோன்றும்? மனம் படாதபாடு படத்தான் செய்யும். அதுபோல, ஆயிரவர் ஆரத்தி எடுக்க, பல்லாயிரவர் பராக்குக்கூற, பட்டத்தரசரெனக் கொலு இருப்பினும், காமராஜரின் மனம் என்ன எண்ணுகிறது? இத்தனை அலங்காரம், ஆடம்பரம், இருந்து என்ன பயன்? அந்தப் பயல்கள், பதினைந்திலிருந்து ஐம்பதாகிவிட்டார்களே! பிளவு, இனி அழிவு என்று கணக்கிட்டோம், வளர்ந்துவிட்டார்களே! சென்னை மாநகராட்சியை மறுபடியும் கைப்பற்றிவிட்டார்களே, பல நகராட்சிகளைக் கைப்பற்றி இருக்கிறார்களே! இதே பதவி தேடும் வேலையோடு இருந்து தொலைக்காமல் சளைக்காமல் அறப் போராட்டமும் நடத்தியபடி இருக்கிறார்களே! இவ்வளவுக்கும் இந்தப் பொதுமக்கள் ஆதரவு தருகிறார்களே! தலை காய்ந்தது களெல்லாம் கூடிக்கொண்டு, நமது "தர்பாரை’ எதிர்க்கின்ற கொடுமையைக் காணவேண்டி இருக்கிறதே. இந்த இலட்சணத்தில், நாம் அளவு கடந்த செல்வாக்குப் பெற்ற அகில இந்தியத் தலைவராகிவிட்டோம் என்று புகழ்கிறார்கள். சே! சே! சே! என்ன இது! என்ன இது! - என்று எண்ணுகிறார்; ஒரு கசப்பு, குமட்டல் ஏற்படுகிறது!! பைத்தியக்காரர்கள். பகற்கனவு காண்பவர்கள் என்று ஏசுகிறார் - மனக்கசப்புக் காரணமாக, குமட்டலின் விளைவாக. குமட்டல், தம்பி! கெட்ட வியாதி! உடற்கூறு அறிந்தவர்கள் அதன் இயல்புபற்றிக் கூறுகிறார்கள். இதைச் சாப்பிடுங்கள் குமட்டல் போய்விடும்! தேனில் குழைத்துச் சாப்பிடுங்கள், கசப்புத் தெரியாது!! என்று பக்குவம் சொல்கிறார்கள்! இங்கு நான் குறிப்பிட்டிருப்பது வாயில் ஏற்படும் குமட்டல் அல்ல; மனத்திலே ஏற்படும் குமட்டல்!! இதற்கு மருந்து எளிதிலே கிடைக்காது. நமது கழக வளர்ச்சி இந்த மனக் குமட்டலை மூட்டி விட்டிருக்கிறது - பலருக்கு! துரும்பாக இளைத்துப் போனவர்களும், மேனி கருத்துப்போனவர்களும் உண்டு, இதனால். இருப்பதை இழந்திட மனம் இல்லாத நிலையும், இருப்பது போய்விடுமோ என்ற பீதியும், அவன் பெற்றுவிடுவானோ இவன் பெற்றுவிடுவானோ என்ற அச்சமும், இது போய்விட்டால் என்ன செய்வது என்ற ஆயாசமும் அற்ப சொற்பமானவன், யோக்கியதை அற்றவன் என்று நாம் யாரைக் கருதிக் கொண்டிருந்து வந்தோமோ அவர்கள் அல்லவா நல்ல நிலை பெற்றுவிடுவார்கள்போலத் தெரிகிறது என்ற எண்ணமும் ஏற்படும்போது, மனக் குமட்டல் ஏற்படும். அந்தப் பயலா போகிறான் மோட்டாரில்? ஆமாம், அவரேதான்! அத்தனை, பெரிய மோட்டாரிலா? எவன் இவனை ஏற்றிக்கொண்டு போகிறான்? மோட்டாரே அவருடையதுதான்! மோட்டார். . . அவனுடையதா? படாடோபத்தைப் பாரேன்! பயல் எங்கே கடன் வாங்கி இந்தக் கார் வாங்கினான்? அவர் ஏன் கடன் வாங்கப் போகிறார்? அவரே பலருக்குக் கடன் தருகிறார். இவனா? கடன் தருகிறானா? ஏது? இவனுக்கு ஏது இத்தனை பணம்? இப்படிக் கேட்டுவிட்டு, மனக் குமட்டல் கொள்பவர்களைக் காண்கிறோம், ஊரில், சில இடத்தில். அந்தக் குமட்டல்காரர், பிறகு தம்முடைய செவர்லேயில் ஏறிக்கொண்டு, கடற்கரை சென்றால் குளிர்ச்சியா காண முடியும்? நண்பரின் திருமணம் காணச்சென்று அங்கு சுந்தராம்பாள் அம்மையார், கேட்போரின் மனம் உருகும்படி "வெண்ணீறு அணிந்ததென்ன?’ என்று பாடிடும்போது இவர் செவியில் என்ன விழும்? மோட்டார் இவனுக்கென்ன? என்ற வார்த்தைகள்!! சாதாரண வாழ்க்கையில் உள்ளவர்களுக்கே ஏற்படக் கூடாது மனக் குமட்டல் - அது நல்ல இயல்பு அல்ல - உள்ளதையும் உருக்குலையச் செய்துவிடும், அதிலும் அரசியல் வாழ்க்கையிலே துளியும் குமட்டல் ஏற்பட்டுவிடக்கூடாது - நல்ல நினைப்பே எழாது, நல்ல பேச்சே வராது. திராவிட முன்னேற்றக் கழகம் வளருகிறது - மகிழ்ச்சியுடன் பெருமிதத்துடன் கூறுகிறோம். ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு எவை எவை துணை செய்யுமோ, அந்த வசதிகளைப் பெற்றில்லாமலேயே, பொது மக்களின் அன்பு நிறை அரவணைப்பின் காரணமாகவே வளருகிறது. இந்தக் கழகத்தை, எதிர்க்காதவர் இல்லை, எதிர்க்காத நாளில்லை. இந்தக் கழகத்தின்மீது வீசப்பட்ட வசை மொழிகளைத் திரட்டினால், புராணங்களைவிடப் பெரும் அளவு உள்ள பெரும் ஏடாக்கலாம், எனினும், கழகம் வளர்ந்து வருகிறது. வளர்ந்தால் என்ன! வளரக் கண்டு, மனக் குமட்டல் ஏற்படுவானேன்! காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை, திட்டங்களைக் கழகம் எதிர்க்கிறது என்பதாலா? ஆம் என்றால், இதே செயலைச் செய்திடும் பல கட்சிகளின் மீது ஏற்படாத கோபம், கசப்பு, கழகத்தின்மீது ஏற்படக் காரணம்? மனக் குமட்டல் அளவுக்கு நிலைமை முற்றிவிடக் காரணம்? கழகம் வளருகிறது எதிர்ப்புக்கிடையில் என்பது மட்டுமல்ல, பரவலாக ஒரு எண்ணம், நாட்டு மக்களிடம் ஒரு பேச்சு எழுந்துவிட்டிருக்கிறது, அடுத்த முறை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையக்கூடும் என்பதாக. காங்கிரசை எதிர்த்து நிற்கும் வேறு எந்தக் கட்சியையும் பற்றி இந்தப் பேச்சு எழவில்லை. தி. மு. கழகம் பற்றியே இந்தப் பேச்சு பரவலாக எழுந்திருக்கிறது. இது எதிர்க் கட்சி மட்டுமல்ல, ஆளுங் கட்சியாக வரக்கூடிய வகையில் வளரும் கட்சி என்ற எண்ணம் காங்கிரஸ் பெருந்தலைவர்களுக்கே ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அந்த எண்ணம் காரணமாகவே, மனக் குமட்டல் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அந்த குமட்டலின் காரணமாகவே, பைத்தியக்காரர்கள். பகற்கனவு காண்பவர்கள். என்று ஏசிப் பேசியிருக்கிறார் அகில இந்திய காங்கிரசின் தலைவர். தம்பி! அடுத்த பொதுத் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பதும், எத்தகைய ஆட்சி அமைய வேண்டும் என்பதும், பொதுமக்களின் கரத்தில் இருக்கிறது, இந்நாட்டின் மன்னர்கள், நாளை அவர்களின் விருப்பத்தின்படி ஒரு அரசு அமைத்துக் கொள்வார்கள். அந்த உரிமை அவர்களுக்கு. அதுதான் ஜனநாயகம் எனப்படுவது. இந்நிலையில், தி. மு. கழகம் ஆட்சிக்கு வந்துவிடப் போகிறதாமே என்று மனக் குமட்டல் கொள்வதால் என்ன பலன்? பொதுமக்கள் விரும்பித் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிப் பொறுப்பிலே அமர்த்துவார்களானால், அது எப்படிக் குறையுடையதாகும்? ஆட்சியை யாரிடம் ஒப்படைப்பது என்ற உரிமை படைத்தவர் களல்லவா பொது மக்கள்? மனக் குமட்டல் கொள்வது எதற்கு? ஒருவர் பேசியிருக்கிறார் எண்ணிப் பத்து நாள் நடக்குமா, கழக ஆட்சி! என்று, இன்னொருவர் ஒரு படி மேலே சென்று கூறுகிறார். "பத்தே நாளில், கழக ஆட்சியைக் கவிழ்த்துக் காட்டுவோம்’’ என்று. உயர்ந்த நிலையிலுள்ள ஒரு காங்கிரஸ் தலைவரிடம் நமது கழகத் தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தக் காங்கிரஸ் தலைவர் கூறினாராம், "நீங்கள் ஆட்சியைக் கைப்பற்றினாலும், நாங்கள் நொடியில் அதைக் கவிழ்த்து விடுவோம்’’ என்பதாக. இவை நடைபெறுகின்றன என்றே வைத்துக்கொள்வோம். - எல்லாம் பொதுமக்கள் அனுமதி கொடுத்தால்தானே! - யாருக்கு இதனால் நட்டம்? கழகத்துக்கா? இம்மி அளவும் இல்லை!! கழகம், பொதுமக்கள் விரும்பி, அதற்கு எந்த நிலையை அளித்தாலும், எந்தச் செயலைச் செய்திடப் பணித்தாலும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றிருக்கிறது. தம்பி! இந்தப் பேச்சுகளிலிருந்து நமக்கு இப்போதிருந்தே, காங்கிரஸ் கட்சி தி. மு. க. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது என்பது குறித்துச் சிந்திக்கத் தொடங்கியிருப்பதிலிருந்தே, காங்கிரசுக்கே ஒரு பலமான எண்ணம் கழகம் ஆளுங் கட்சியாகி விடும் என்ற எண்ணம் வலுத்துக்கொண்டு வருகிறது என்பது புரிகிறதல்லவா! அந்த எண்ணம் காரணமாகவே மனக் குமட்டல். அதிகாரத்தைப் பெற்றவர்களுக்கு, அதை இழந்திட மனமும் வராது - இழந்துவிடச் செய்யும் ஆற்றல் எவருக்கும் இல்லை என்ற எண்ணமே தடித்து இருக்கும். ஆனால் அந்த எண்ணத்தைக் கண்டு, பொது மக்கள் தமது போக்கை மாற்றிக்கொள்ளவும் மாட்டார்கள், உரிமையை இழந்துவிடவும் மாட்டார்கள். கோபமில்லாத பழைய காங்கிரஸ்காரர் யாரையாவது பார்த்தால் இதைக் கேள், தம்பி! தி. மு. கழகம் ஆட்சிக்கு வந்தால் என்னய்யா என்று? அவருக்கே கூடக் கொஞ்சம் சங்கடம் கலந்த கோபம் முதலில் கிளம்பும் - காங்கிரசின் சேவைபற்றி விளக்குவார் - மரியாதையுடன் அதைக் கேட்டுவிட்ட பிறகு - ஐயா! அந்தக் காங்கிரசா இப்போது இருக்கும் காங்கிரசு? என்று கேள் - சாந்தம் ஏற்படும் - பிறகு மறுபடியும் கேள், தி. மு. கழகம் ஆட்சிக்கு வந்தால் என்ன தவறு? ஏன் வரக்கூடாது? வரக்கூடாது என்று உங்கள் தலைவர்கள் சிலர் பேசுகிறார்களே, அது ஏன்? மனக் குமட்டல் கொள்கிறார்களே சரியா? என்று கேட்டுப்பார். நாட்டை ஆள நீயா? உனக்கா அந்த அந்தஸ்து!! நீ யார்? உன் யோக்யதை என்ன? உன்னிடமா நாடு ஆளும் பொறுப்பை ஒப்புவிப்பார்கள்? நாடு ஆள்வது சாதாரண காரியமா! திறமை வேண்டாமா? தகுதி வேண்டாமா? உனக்கு ஏது அவை? இப்படிப் பேசுவர் - பேசுகின்றனர் - சிலர். இவர்கள், நடைபெறுவது ஜனநாயகம் என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள். ஜனநாயகத்தில், நாடாளும் நிலை, பொதுமக்களின் ஆதரவைப் பொறுத்திருக்கிறது, பொதுமக்கள் பார்த்து, ஒரு கட்சியை ஆட்சிப் பொறுப்பிலே இருந்திடச் சொன்னால், அந்த ஆணை ஒன்றே அந்தக் கட்சிக்கு, ஆட்சி நடாத்தும் தகுதி, திறமை, வலிமை யாவற்றையும் தன்னாலே பெற்றுத் தருகிறது! மோட்டாரில் ஏறிக்கொள்பவன், குடல்தெறிக்க ஓடத் தேவையில்லை - உட்கார்ந்த நிலையிலுள்ள அவனை, மோட்டார் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் வேகமாக அழைத்துச் சென்று சேர்க்கிறது. பொதுமக்களின் "உத்தரவு’ எனும் விசைதான், ஆட்சிப் பொறுப்பில் அமரும் எந்தக் கட்சிக்கும் தகுதி, திறமை அளிக்கிறது. அந்தப் பொதுமக்களின் உத்தரவு கிடைத்து தி. மு. கழகம் ஆட்சிக்கு வருமானால், தவறு என்ன? என்று விளக்கமாகக் கேட்டுப்பார், தம்பி! நல்ல காங்கிரஸ்காரராக இருந்தால், பொதுமக்கள் பார்த்து கழகத்துக்கு அந்த நிலையை உண்டாக்கினால், அந்தத் தீர்ப்பை ஒத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று தெரிவிப்பார், இந்த “விடுவோமோ?’’க்காரர்களைப்பற்றிக் கவலை வேண்டாம்! பொதுமக்களின்”ஆணை’க்கு முன்பு எந்த ஆர்ப்பரிப்பும் நில்லாது, நிலைக்காது. இவ்வளவு தெளிவாக இது தெரியும்போது மனக் குமட்டல் ஏன் ஏற்படுகிறது என்கிறாயா, தம்பி! காரணம் என்ன தெரியுமா? பெரிய நிலைக்குச் சென்றுவிட்டதும், தன்னாலே ஒரு எண்ணம், பலருக்கு வந்துவிடுகிறது - நம்மால்தான் முடியும் - நம்மால் மட்டுந்தான் முடியும் - நம்மாலன்றி வேறெவராலும் முடியாது - நம்மைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? - என்ற எண்ணம். இந்த எண்ணம், ஒருவிதமான எதேச்சாதிகார மனப் போக்கை வளரச் செய்துவிடும் - அதன் விளைவு - உலகிலேயே தன்னைவிடத் தகுதியும் திறமையும் படைத்தவர்கள் ஒருவரும் இல்லை என்ற நினைப்பு - அந்த நினைப்பு தடித்திடத் தடித்திட, வேறு எவரோ இருக்கிறார்களாம் தகுதியுடன் என்ற பேச்சு கேட்டதும் ஒரு ஏளனம், பிறகு கோபம், பிறகு திகைப்பு, திகில்! இறுதியில் கசப்பு, குமட்டல்!! ஏற்பட்டுவிடுகிறது. நாமே எதற்கும்! நாமே என்றென்றும்! நாமே எவரையும் விட! - என்ற மனப்போக்கு, அரசியலில் முறை எதுவாக இருப்பினும், சர்வாதிகாரத்தை மூட்டிவிடும். முடிமன்னனுமில்லை, படையுடையோன் ஆட்சியும் இல்லை, இது மக்கள் ஆட்சி என்று விருது கூறியபடியே, ஆட்சியில் அமர்ந்துவிட்ட கட்சி, "ஒரே கட்சி’ ஆட்சியை அமைத்து, இதுவே உண்மையான ஜனநாயகம் என்று பேசுவது அறிவாயல்லவா? எகிப்திலே நாசர்! மற்றவர்கள் பற்றி நினைவுப் படுத்திக்கொள்வதா, கடினம்? பத்து நாட்களுக்கு முன்பு, கெனியா நாட்டு முதலமைச்சராகியுள்ள ஜோமோ கெனியாடா கூறிவிட்டார், கெனியாவில் ஒரே கட்சி ஆட்சி முறை ஏற்படுத்த எண்ணுகிறேன் என்று. கானா நாட்டில், நிக்ருமா! இவர்களுக்கெல்லாம் என்ன எண்ணம்? நாமே சகல தகுதியும் திறமையும் பெற்றிருக்கிறோம். நம்மை விட்டால் வேறு எவரும் இல்லை. இதே முறையில் காங்கிரஸ் தலைவர்களின் போக்கு செல்கிறது என்பதைக் காட்டுவதுதான், எதிர்க்கட்சி என்றாலே ஒரு எரிச்சல் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்துவிடும் என்றாலே மனக் குமட்டல் ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலைமை. தம்பி! நான் இதைக் கண்டுதான் வருத்தம் கொள்கிறேன் - காமராஜர் இரண்டு வார்த்தை நம்மை ஏசிவிடுவது பற்றி அல்ல. ஜனநாயக சோஷியலிஸ வாரம் கொண்டாடிவிட்டு, எதிர்க் கட்சியாவது ஆட்சிக்கு வருவதாவது! பைத்தியக்காரர்கள் பேசுகிறார்கள்! பகற் கனவு காணுகிறார்கள்! என்று ஏசுவது, ஜனநாயக முறையைப் புரிந்துகொள்ளாமலே, அதற்காக ஒரு விழாக் கொண்டாடிய கேலி நிரம்பிய குற்றமாகிவிடுகிறது. இவனுக்கென்ன யோக்கியதை! அவனுக்கு என்ன தகுதி? - என்று ஒரு கட்சி மற்றொரு கட்சியைக் குறித்துக் கேலி பேசுவது முறையுமல்ல - அந்தப் பேச்சு பலனும் அளிக்காது. பொதுமக்கள், தேர்தலின்போது யோசிக்கவேண்டிய விஷயமிது! வேறு எவரும் ஆட்சிக்கு வரத் தேவையில்லாத முறையில், பொதுமக்கள் கொண்டாடத்தக்க விதத்தில், ஒரு குறையுமின்றி மக்களை, இன்று உள்ள ஆட்சி வைத்திருக்கிறதா - தகுதி திறமை குறித்து இவ்வளவு பேசுகிறதே என்று பார்த்தால், ஆண்டு பதினேழான பிறகும், இன்றும் முக்கியமான பிரச்சினையாக இருப்பது சோற்றுப் பிரச்சினைதான்! என்று காமராஜரே சொல்லுவதிலிருந்து, 17 ஆண்டுகளாக இந்த ஆட்சி நடந்தும், மக்கள் இன்னமும் சோற்றுக்கே திண்டாடுகிறார்கள் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் உள்ள ஒரு ஆட்சி, எம்மைத் தவிர ஆட்சி நடத்தும் தகுதியும் திறமையும் பெற்றவர்கள் யார் என்றா கேட்பது? உற்பத்தி பெருகினாலும் விலை குறையவில்லை, உணவுப் பண்டங்களைப் பதுக்கி வைக்கும் கொடுமை ஒழிக்கப்படவில்லை. வெளிநாட்டானிடம் "சோறு’ கேட்கும் பஞ்சநிலை போகவில்லை. ஏறிக்கொண்டேபோகும் விலைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பேச்சு மட்டும் இருக்கிறது, "மூச்சுவிடாதே! முடி என் தலையில்! அது கீழே இறங்காது!!’’ என்று. எந்தப் பிரச்சினையை இவர்கள், எவரும் கண்டு வியக்கத் தக்க முறையிலே தீர்த்துவிட்டார்கள், எம்மைக் காட்டிலும் தகுதி படைத்தவனும் இருக்கிறானா நாடு ஆள!! - என்று ஆர்ப்பரிக்க. தம்பி! உண்மை இதுதான். 17 ஆண்டுகளாகியும், சோற்றுப் பிரச்சினையைக்கூடத் தீர்க்க முடியாத ஒரு ஆட்சியை, மக்கள் எப்படி ஆதரிப்பார்கள்? அந்த மக்களிடம், கழகம் கொண்டுள்ள நேசத் தொடர்பு நாளுக்கு நாள் வளருகிறதே. எதிர்காலம் எப்படியோ என்ற எண்ணம் தோன்றுகிறது; தோன்றும்போது மனக் குமட்டல் ஏற்படுகிறது; அதுதான் காரணம், பைத்தியக்காரர்கள். பகற்கனவு காண்பவர்கள் என்று நம்மை ஏசுவதற்கு. இந்த முறையிலே, தம்பி! பார்த்திடுவாயானால், அந்த ஏசல் கேட்டு எரிச்சல் ஏற்படாது. நமது கழக வளர்ச்சி கண்டு, அதனைக் குலைத்திட எடுத்துக்கொண்ட முயற்சிகள் முறிந்து போகக் கண்டு, மனக் குமட்டல் கொண்டு, காங்கிரஸ் பெருந்தலைவர்கள் உள்ளனர் என்ற உண்மை புரியும்; புரிந்திடும்போது மேலும் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் பணியாற்றிக் கழகத்தை வலிவும் பொலிவும் மிகுந்ததாக்குவோம்; பொதுமக்கள் காணட்டும் நமது சீரிய பணிகளை! பொதுமக்களின் ஆணை கேட்டு நடந்திடுவோம்!! என்ற உறுதி பிறந்திடும். உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலவில்லை காங்கிரஸ் கட்சியினால் என்பதைப் பொதுமக்கள் பெரும் அளவு புரிந்துகொண்டுவிட்டிருக்கிறார்கள். புரிய வைப்பவர்கள் இந்தக் கழகத்தாரல்லவா என்ற எண்ணம் ஏற்படும்போது மனக் குமட்டல் அதிகமாகிறது. அதன் காரணமாக, நம்மைப் பைத்தியக்காரர்கள், பகற்கனவு காண்பவர்கள் என்று காமராஜர் ஏசி இருக்கிறார். நல்லவர்! பொல்லாத வியாதி! என்று கூறுவதன்றி, வேறென்ன கூற முடியும், தம்பி! அவர் படும் அல்லல் கண்டு உள்ளபடி பரிதாபப்படுகிறேன். அன்புள்ள அண்ணாதுரை 9-8-1964 பன்னீர் தெளித்தாலும். . . ஓ. என்ரியின் கதை கொடுமையிலும் கொடுமை உணவுப் பொருள்களின் விலை ஏற்றம் விலைவாசி ஏற்றத்துக்குக் கறுப்புப் பணமே மூல காரணம் உணவுத்துறையின் மோச நிலைக்கு முழுப்பொறுப்பு காங்கிரஸ் ஆட்சியே! தம்பி! ஒரு சீமானின் மகனைப் பற்றிய கதை கூறப்போகிறேன் - ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி அறிந்து, உள்ளம் உருகி, தக்கதோர் பரிகாரம் தேடித் தந்திட வேண்டும் என்ற உள்ளத் துடிப்புக் கொண்ட வாலிபன் பற்றிய கதை. தகப்பனார் திரட்டிய திரண்ட செல்வத்துக்கு அதிபதியான இந்த மகன், அவருடைய கல்லறையில் கண்ணீர் உகுத்தான்; சொத்தின் அளவுபற்றிக் குடும்ப வழக்கறிஞர் கூறிய விவரம் கேட்டு, வியப்பல்ல, அதிர்ச்சியே அடைந்தான்; மொத்தத்தில் 2,000,000 டாலர்களை வைத்துவிட்டுச் சென்றார் அந்தச் சீமான். ரொட்டிக்குத் தேவைப்படும் கோதுமை வியாபாரத்திலே குவித்ததே அவ்வளவு செல்வமும்; கோதுமை வியாபாரம் என்றால், பெரிய பெரிய கிடங்குகளைப் பல இடத்திலே அமைத்துக்கொண்டு, கோதுமையை மூட்டை மூட்டையாக அடைத்து வைத்துக்கொண்டு பலருக்கும் விற்பனை செய்தது என்பதல்ல பொருள். கோதுமை விளைந்து அறுவடையாகிச் சந்தைக்கு வந்து விலையாகு முன்பே, வயலில் கோதுமைக் கதிர்கள் காற்றினால் அசைந்தாடிக் கொண்டிருக்கும்போதே, இன்ன விலைக்கு, இத்தனை அளவு கோதுமையை, இன்ன மாதத்தில் வாங்கிக்கொள்கிறேன் அல்லது விற்கிறேன் என்று "பேரம்’ பேசி வைத்துக்கொண்டு, அதிலே இலாபம் சம்பாதிக்கும் முறை. ஏழை எளியோருக்குத் தேவை ரொட்டிதானே! தேவை மட்டுமா? அதுதானே அவர்களால் பெறமுடியும்; மற்ற மற்ற உயர்ந்த விலையுள்ள உணவுப் பண்டங்களை அவர்கள் எங்கே வாங்கப் போகிறார்கள்? என்ன விலை ஏறினாலும், விலை ஏற்றம் எத்தனை தாறுமாறாக இருப்பினும், ரொட்டி வாங்கித்தானே ஆகவேண்டும். போகப் பொருளாக இருப்பின், விலை ஏறிவிட்டது என்று தெரிகிறபோது வாங்காமல் இருந்துவிடலாம்! இது வயிற்றுக்குத் தேவையான பொருள் - ஏழைகள் பெற்றே தீரவேண்டிய ஒரே பொருள்; எனவே, அநியாய விலையாக இருக்கிறதே என்று அழுகுர-ற் கூறிக்கொண்டாகிலும் வாங்கித் தீரவேண்டிய பொருள். இந்தப் பொருளை, இலாபவேட்டைப் பொருளாக்கினான் சீமான்; ரொட்டியின் விலை ஏறிற்று; சீமானுக்குச் செல்வம் குவிந்தது; ஏழைகள் கைபிசைந்துகொண்டனர்; அந்த ஏழைகளுக்காக ரொட்டிக் கிடங்கு - ரொட்டிக் கடை நடத்திய நடுத்தர வகுப்பினர் நொடித்துப் போயினர். சீமானோ சில ஆண்டுகளில் பெரும் பொருள் குவித்துக்கொண்டான்; களவாடி அல்ல, கள்ளக் கையொப்பமிட்டு அல்ல; புரட்டு புனைசுருட்டால் அல்ல, வியாபார மூலம்! கஷ்டப்பட்டுச் சேர்த்தான் இத்தனை செல்வம் என்றோ, அதிர்ஷ்ட தேவதை அணைத்துக்கொண்டாள். அவன் சீமானானான் என்றோ தானே எவரும் கூறுவர். உலக வாடிக்கை வேறாகவா இருக்கிறது? மகன், திரண்ட செல்வத்தையும் பெற்றான், அந்தச் செல்வம் எப்படித் திரட்டப்பட்டது என்ற உண்மையையும் அறிந்து கொண்டான். அவன் மனம் என்னவோ போலாகிவிட்டது, ஆயிரமாயிரம் ஏழை எளியோர்களின் வயிற்றில் அடித்தல்லவா அப்பா இவ்வளவு பணம் சேர்த்தார். அந்தப் பணத்துக்கல்லவா நாம் அதிபதியானோம். ஐயோ! பாவமே! எத்தனை எத்தனை ஏழைகள், அப்பாவின் வியாபார முறை காரணமாக கோதுமை விலை ஏறிவிட்டதால், குமுறினரோ, கலங்கினரோ, கதறினரோ, துடித்தனரோ, துவண்டனரோ! அவர்களின் கண்ணீர் அல்லவா, என் கரத்தில் விளையாடும் காசுகளாகிவிட்டன. இது அநீதி! இது இரக்கமற்ற செயல்! ஏழை இம்சிக்கப்பட்டிருக்கிறான், அதன் விளைவாகக் கிடைத்த பணம் என்னிடம் குவிந்திருக்கிறது. நான் இதயமுள்ளவன்! ஏழைக்கு இரக்கம் காட்டும் எண்ணம் கொண்டவன்! என்னால் கூடுமான மட்டும், ஏழைகளுக்கு இதம் செய்வேன்; அப்பாவின் பேராசையால் அலைக்கழிக்கப் பட்டவர்களை நான் கை தூக்கிவிடுவேன்; என்னிடம் உள்ள செல்வத்தைக்கொண்டு இந்தத் திருத்தொண்டு புரிவேன் என்று தீர்மானித்தான். பள்ளியில் அவனுடன் படித்த ஒரு நண்பன், பொருளாதாரக் கருத்துக்களையும் சமுதாயத் திருத்தத் தத்துவங்களையும் நன்றாக அறிந்திருந்தான். கல்லூரியில் அவன் பயிலச் செல்லவில்லை; தகப்பனாரின் நகைக் கடையில் வேலை தேடிக்கொண்டான்; கடிகாரம் பழுது பார்த்துத் தரும் நுட்பமான தொழிலிலும் பழகிக் கொண்டிருந்தான். அவனைத் தேடி வந்தான், சித்தம் உருகிய நிலையினனான சீமான் மகன். விவரம் கூறினான். "ரொட்டிக்காக அந்த ஏழைகள் அதிகமாகக் கொடுத்த பணத்தை அவர்களிடம் திருப்பித் தர விரும்புகிறேன். உள்ளம் கொதிக்கிறது உண்மை அறிந்த பிறகு. ஏழையிடம் அநியாயமாகப் பறித்ததைத் திருப்பித் தந்தால்தான் என் மனம் நிம்மதியாகும். இதை எப்படிச் செய்யலாம்; ஒரு யோசனை சொல்லு’’ என்று கேட்டான் சீமான் மகன். இலட்சியங்களைக் கற்றிருந்த அவன் நண்பன், தீப்பொறி பறக்கும் கண்ணினனானான்; ஏற இறங்கப் பார்த்தான். சீமான் மகனின் கரத்தை இழுத்துப்பிடித்துக்கொண்டு கூறினான். "ஏழைக்கு இதம் செய்ய எண்ணுகிறாயா? அது உன்னால் முடியாது. உன்போல அநியாய வழிகளிலே பணம் திரட்டும் பேர்வழிகளுக்கு என்ன தண்டனை தரப்படுகிறது தெரியுமா! நீங்களாக உண்மையை உணர்ந்து, உள்ளம் உருகி, அநீதியைத் துடைத்து இதம் செய்ய வேண்டும் என்று நல்லெண்ணத் துடிப்புக் கொண்டாலும், இதம் செய்யும் ஆற்றலற்றுப்போனவர்களாகி விடுகிறீர்கள். உன் நோக்கம் சிறந்தது. ஆனால், வஞ்சிக்கப்பட்ட, இம்சிக்கப்பட்ட ஏழைக்கு இதம் செய்ய உன்னால் முடியாது; காலம் கடந்துவிட்டது; விஷயம் முற்றிவிட்டது; ஏழையின் வாழ்வு பாழ்பட்டுவிட்டது; உன்னால் விளக்கேற்ற முடியாது’’ என்றான். சீமான் மகன், "இம்சிக்கப்பட்ட ஏழைகள் அனைவரையும் தேடிக் கண்டுபிடித்து, ஒவ்வொருவருக்கும் இதம் செய்திட முடியாதுதான். ஆனால், என்னால் இயன்ற மட்டும், என்னிடம் உள்ள செல்வத்தை இதற்குப் பயன்படுத்துவேன்’’ என்றான். அந்த நண்பன், அக்கறையற்ற குரலில், "எத்தனையோ தர்ம ஸ்தாபனங்கள் உள்ளனவே, உன் பணத்தைப் பெற’’ என்றான். சீமான் மகனோ, "கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் கதை அல்லவோ அது. வேண்டாம். நான் ரொட்டி வாங்கிக் கஷ்டநஷ்டப்பட்டவர்களுக்கே உதவி செய்ய விரும்புகிறேன்’’ என்றான். “கோதுமையை உன் தகப்பனார் மடக்கிப் போட்டு விலை ஏற்றத்தை மூட்டிவிட்டாரே அதன் காரணமாக, ஏழைகள் உணவு பெறுவதிலே, ஏற்பட்ட நஷ்டத் தொகையைத் திருப்பித்தர, எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா?’’ என்று கேட்டான்.”எனக்குத் தெரியாது. ஆனால் என்னிடம் உள்ள பணம் 2,000,000 டாலர்கள்’’ என்றான் சீமான் மகன். "கோடி டாலர்கள் இருந்தாலும் போதாதப்பா, கொடுமைக்கு ஆளான மக்களுக்கு இதம் செய்ய; நியாயம் வழங்க. அநியாய வழியில் திரட்டப்படும் பணத்தால் முளைத்திடும் ஆயிரத்தெட்டுக் கேடுகளை நீ என்ன அறிவாய்!! ஏழையிடம் கசக்கிப் பிழிந்து வாங்கப்பட்ட ஒரு காசு, ஓராயிரம் தொல்லையை ஏழைக்குத் தருகிறது. உன்னால் முடியாது, தந்தையின் வாணிப முறையின் காரணமாகக் கொடுமைக்கு ஆளான ஒருவருக்குக்கூட இதம் செய்ய’’ என்றுரைத்தான். சீமான் மகனுக்குப் புரியவுமில்லை; இந்தப் பேச்சு பொருளுள்ளதாகவும் தெரியவில்லை. “முடியும் நண்பா! முணுமுணுக்காமல், விவரம் கூறு.’’ என்று கேட்டான்,”கூறவா! கூறுகிறேன் கேளப்பா, கருணாகரா! அதோ அடுத்த தெருவில் ஒருவன் ரொட்டிக் கடை வைத்திருந்தான்; எனக்குத் தெரியும். பரம ஏழைகள் அந்தக் கடையில் ரொட்டி வாங்குபவர்கள். விலையைத்தான் ஏற்றிவிட்டாரே உன் தகப்பனார்; இவன் ரொட்டியின் விலையை ஏற்றினான்; ஏழைகளால் அந்த விலை கொடுத்து வாங்க முடியவில்லை, கடை தூங்கிற்று; அவன் கடையில் போட்டிருந்த ஆயிரம் டாலர் அடியோடு நஷ்டமாயிற்று. அவனிடம் இருந்த மொத்த ஆஸ்தியே அதுதான். அவ்வளவும் போய்விட்டது’’ என்றான். அழுத்தந்திருத்தமாகப் பேசலானான் சீமான் மகன், “அப்படிச் சொல்லு விவரத்தை! வா! உடனே போய், அந்த கடைக்காரன் இழந்த ஆயிரம் டாலரைத் திருப்பிக் கொடுத்து அவனுக்கு ஒரு புதிய ரொட்டிக் கடையும் வைத்துக் கொடுக்கலாம்’’ என்றான்.”எழுதப்பா, செக்! ஆயிரம் டாலருக்கு மட்டுமல்ல; அவன் நஷ்டமடைந்ததால் ஏற்பட்ட விபரீத விளைவுகளின் காரணமாக ஏற்பட்ட நஷ்டங்கள் எல்லாவற்றுக்கும், செக் எழுதிக் கொடு! ஐம்பதாயிரம் டாலர் செக் ஒன்று கொடு! ஏனென்கிறாயா? கடை திவாலாயிற்றா, அவன் அதன் காரணமாகக் குழம்பினான், பித்துப் பிடித்துவிட்டது, அவன் இருந்துவந்த இடத்தைவிட்டு அவனை வெளியேறச் சொன்னார்கள், அவன் அந்தக் கட்டடத்துக்குத் தீயிட்டான். ஐம்பதாயிரம் டாலர் பாழ்! அவனோ பித்தர்விடுதியில் அடைபட்டான், செத்தும் போனான். அடுத்த செக் பத்தாயிரம் டாலருக்கு. ஏனா? அவன் மகன், தகப்பனை இழந்ததால் தறுதலையானான்; கெட்டலைந்தான்; அவன்மீது ஒரு கொலைக் குற்றம்; மூன்று ஆண்டுகள் வழக்கு; அதற்கான செலவு நீதித்துறைக்கு, பத்தாயிரம் டாலர். அதையும் நீதானே கொடுக்க வேண்டும்; கொடு.’’ "சர்க்காருக்கான செலவு இருக்கட்டும்; நமது உதவி தேவையில்லை சர்க்காருக்கு; ரொட்டிக் கடைக்கு ஏற்பட்ட நஷ்டம் வரையில் கொடுத்திடலாம், முடியும்’’ என்றான் சீமான் மகன். “விலை ஏற்றத்தை மூட்டிவிட்டதனால் ஏற்பட்ட விபரீத விளைவுகளில், இன்னொன்று பாக்கி இருக்கிறதே! காட்டுகிறேன் வா!’’ என்று கூறி அந்த நண்பன் சீமான் மகனை அழைத்துக் கொண்டு, ஒரு முட்டுச் சந்திலிருந்த ஒரு நிலையத்துக்குள் சென்று, அங்கு, சட்டை தைத்துக்கொண்டிருந்த இளமங்கையைக் காட்டினான். அவள் ஒரு புன்னகை உதிர்த்தாள்.”இன்று நாலு டாலர் கிடைக்கும் எனக்கு’’ என்றாள் அந்தப் பெண். நண்பன், சீமான் மகனை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோதுமை விலை ஏறிவிட்டதே; அந்த விலை ஏற்றத்தை மூட்டியவரின் மகன் இந்த இளைஞன். தன் தகப்பனாரின் செயலால் சீரழிக்கப்பட்டவர்களுக்கு ஏதாகிலும் இதம் செய்ய வேண்டுமென விரும்பி வந்திருக்கிறார்’’ என்றான். அந்தப் பெண்ணின் புன்னகை மடிந்தது; முகம் கடுகடுத்தது; எழுந்தாள், சீமான் மகனை நோக்கி வெளியோ போ! என்று கூவவில்லை, கையால் குறி காட்டியபடி நின்றாள். தம்பி! கதையை இந்த அளவுடன் நிறுத்திவிட எண்ணுகிறேன். ஏனெனில், என் நோக்கம், இரு இளைஞர்கள், ஒரு மங்கை, இவர்கட்கு இடையிலே ஏற்பட்ட தொடர்பு பற்றிய விவரம் கூறுவது அல்ல. உணவுப் பண்டங்களின் விலை ஏற்றம், சீமான்களின் வாணிப முறையின் விளைவு என்பதைக் காட்டவும், அந்த விலை ஏற்றத்தால் தாக்கப்படும் ஏழைகளுக்கு ஏற்படும் இன்னல், அதிக விலை கொடுத்ததால் ஏற்பட்ட பண நஷ்டம் மட்டுமல்ல விபரீதமான பல விளைவுகள் ஏற்பட்டுவிடுகின்றன என்பதையும் எடுத்துக்காட்டவே இந்தக் கதையைக் கூறினேன். கதையும் என் கற்பனையில் உதித்தது அல்ல. அல்லற்படுவோர் களின் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டத்தக்க விதமான சிறு கதைகளைத் தீட்டிய வித்தகர் ஓ. என்ரியின் கற்பனை; நான் அதிலிருந்து கருத்தினை எடுத்து என் வழியில் எழுதித் தந்திருக்கிறேள். ஓ. என்ரி, சிறுகதை தீட்டுவதிலே வல்லவர் மட்டுமல்ல; அதிலே விந்தை பல இழைத்தளிப்பவர், இந்தக் கதையிலும், விலைவாசி விஷம்போல் ஏறுவதால் - ஏற்றிவிடப்படுவதால் - விளையும் விபரீதம்பற்றிக் கூறிவிட்டு, ஒரு விந்தையை இழைத்திருக்கிறார். இரக்க மனம் படைத்த சீமான் மகன், இலட்சியம் அறிந்த ஒரு வா-பன், கொடுமை கொட்டியதால் கொதிப்படைந்த ஒரு குமரி! இந்த மூன்று பேர்களை வைத்துக் கொண்டு, உணவுப் பொருளின் விலையை, இலாபவேட்டை நோக்கம்கொண்ட வணிகர்கள் விஷம்போல ஏற்றிவிட்டு விடுவதனால், ஏற்படும் விளைவுகளை, நாம் உணரவும் உருகவும் செய்துவிடுகிறார். பிறகு? பிறகு? என்ன செய்தான் அந்தச் சீமான் மகன்? அந்தக் குமரி? என்று கேட்கிறாய். ஆவலாகத்தான் இருக்கும், அறிகிறேன், ஓ. என்ரியின் முறை என்ன தெரியுமா, தம்பி! சிறு கதையின் கடைசி இரண்டொரு வரிகளில், யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் அளித்து முடிப்பார்! அந்த இரண்டொரு வரிகளில், ஒரு பெரிய தத்துவமே கிடைத்திடும். சே! இந்த ஏழைகளுக்கே ஆணவம் அதிகம்! - என்று வெகுண்டுரைத்து விட்டுச் சென்றான் சீமான் மகன் என்று முடித்திடலாம், கதையை. இலட்சியமறிந்த இளைஞன், சீமான் மகனின் கண்கள் தளும்பக்கண்டு, "பாவம்! இவன் நல்லவன். இதயம் கொண்டவன். இவனை வெறுக்கக்கூடாது. தகப்பனார் செய்துவிட்டுப்போன கொடுமையை எண்ணி இவன் உள்ளம் உருகிக்கிடக்கிறான்’’ என்று பரிந்து பேசினான்; மூவரும் நண்பர்களாயினர் என்று கதையை முடித்திருக்கலாம். "என்ன காரியம் செய்துவிட்டோம். உதவி செய்ய வந்த உத்தமனை உதாசீனம் செய்துவிட்டோமே! அவன் உள்ளம் என்ன பாடுபட்டிருக்குமோ?’’ என்று எண்ணிய பெண், அவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள் என்று முடித்திருக்கலாம். பலவிதமான முடிவுகள். தம்பி! உனக்கும் எனக்கும் தோன்றும். ஆனால் விந்தையான - உலக நடை முறையை விளக்கிடத்தக்க - முடிவு என்னவாக இருக்க முடியும் என்பதைக் கண்டறிந்து கூறிடும் திறன் ஓ. என்ரிக்குத்தான் உண்டு. இந்தக் கதையின் மூலம் என்ன தெரிவிக்க விரும்புகிறார் ஓ. என்ரி? சீமான் மகனின் மனமும் திருந்திவிடும்; இம்சை செய்யப் பட்டவர்களுக்கு இதம் செய்திடுவான் என்ற கருணை பற்றிய விளக்கமளிக்க அல்ல அவர் விரும்பியது. ஏழைக்கு இழைக்கப்படும் இன்னலுக்கு. இன்னல் இழைத்தவர்களே பிறகோர் நாள் இதம் செய்திட விரும்பி முன்வந்தாலும், நொந்துபோன ஏழையின் வாழ்வை, இரக்கம், கருணை, உதவி மூலம் மலரச் செய்திட முடியாது. கசங்கிய மலர், மீண்டும் தண்ணீருக்குப் பதில் பன்னீர் தெளித்தாலும், எழில் பெற முடிகிறதா? அதுபோலத்தான். இந்தக் கருத்தை விளக்கவே அவர் கதை புனைந்தளிக்கிறார். இரக்கம், பரிவு, பாசம் இவை தனிப்பட்டவர்களின் உள்ளங்களில் எழக்கூடும், நத்தையிலும் முத்துக் கிடைப்பது போல! ஆனால், ஏழை நொந்த வாழ்வு பெறுவது, ஒரு கொடிய முறை காரணமாக. அந்த முறையை, தனி ஒருவனின் இரக்கம், பரிவு, தானம், தருமம் போன்றவைகளால் போக்கிடவோ, அந்த முறை காரணமாக ஏற்பட்டுவிடும் விபரீதங்களை நீக்கிடவோ முடியாது. இதைக் கூறும் துணிவே, பலருக்கு ஏற்படாது. ஓ. என்ரி இதனைக் கூறுவது மட்டுமல்ல, ஒரு சீமானின் மகன், ஏழையிடம் இரக்கம் காட்டும் பயணத்தைத் துவக்கினால், அந்தப் பயணம், எதிலே போய் முடியும், நடக்கக் கூடியது எதுவாக இருக்க முடியும் என்பதை, நகைச்சுவையுடன், ஆனால், அதேபோது இரண்டு சொட்டுக் கண்ணீரும் கிளம்பிடத்தக்கதானதாகக் கூறுவார். சரி! கதையை முழுவதும் கூறத்தான் வேண்டும்; கூறிவிடுகிறேன், தம்பி! கூறவேண்டியது அதிகமுமில்லை. எங்கே நிறுத்தினேன் கதையை? ஆமாம்! அவள் கோபத்துடன், சீமான் மகனை வெளியேற்றுகிறாள்; அந்தக் கட்டத்தில்தான் நிறுத்தினான். அடுத்த கட்டம் என்ன தெரியுமா, தம்பி? இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அந்தக் கட்டம். இலட்சியமறிந்த நண்பன் இருக்கிறானே, அவனைக் காண்கிறோம். ஒரு பெரிய ரொட்டிக் கடை முதலாளியின் "தங்க பிரேம்’ போட்ட மூக்குக் கண்ணாடியைச் சரிபார்த்து, எடுத்துக் கொண்டு போகிறான், கொடுத்திட, ஒரு உரையாடல் அவன் காதில் விழுகிறது. "என்ன விலை, ரொட்டி,’’ "பத்துப் பணம்.’’ "பத்துப் பணமா? விலை அதிகம். எட்டுப் பணத்துக்கு வேறு இடத்தில் கிடைக்கிறதே!’’ திரும்பிப் பார்க்கிறான், குரலொ- கேட்டு. அதே பெண்; சட்டை தைத்துக்கொண்டிருந்தாளே, விலை ஏற்றத்தால் நாசமாகிப் போனானே சிறு ரொட்டிக் கடைக்காரன் அவன் மகள்; உதவி செய்ய வந்த சீமான் மகனை வெறித்து விரட்டினாளே அதே பெண்! "ஐயா! நலமாக இருக்கிறீர்களா?’’ - அவள் கேட்கிறாள். "இருக்கிறேன். போய்னீ!’’ என்கிறான் இலட்சிய மறிந்தவன். போய்னீ என்பது கன்னியின் பெயர். "நான் இப்போது திருமதி கின் சால்விங்! எனக்கும் கின்சால்விங்குக்கும் போன மாதம் திருமணமாகிவிட்டது.’’ என்கிறாள் அவள். கின் சால்விங் என்பது யாருடைய பெயர் தெரியுமா தம்பி! சீமான் மகன் பெயர்!! கதை அவ்வளவுடன் நின்றுவிடுகிறது! கருத்து என்னென்ன மலருகிறது எண்ணிப் பார், தம்பி! ஓ. என்ரியின் விந்தைமிகு திறமையைக் கூறிடவே கதை முழுவதும் சொல்லி வைத்தேன் - நான் இதிலே உன்னை மீண்டும் மீண்டும் கருத்தில் கொள்ளும்படிக் கேட்டுக்கொள்வது, விலை ஏற்றங்களில் உணவுப் பொருளின் விலை ஏற்றத்தைப் போன்ற கொடுமைமிக்கது வேறு எதுவும் இல்லை. விலை ஏற்றம் என்பது பெருத்த இலாபத்தை மிகக் குறைந்த நாட்களில் கொள்ளைபோலப் பெற வேண்டுமென்று திட்டமிட்டு, வாணிபத் துறையினர் செய்திடும் சதி. உணவுப் பொருள் விலை ஏற்றத்தின் காரணமாக அவதிப்படும் ஏழைகளின் வாழ்வு நொந்துபோகும் கொடுமையை நீக்கிட, இன்மொழி, இதமளித்தல், பரிவு காட்டுதல் எனும் முறைகள் பயன்படாது. விலைவாசி ஏற்றத்தினால் ஏற்படுவது, ஏழைக்குப் பொருள் நஷ்டம் மட்டுமல்ல, பல்வேறு விபரீத விளைவுகள் ஏற்பட்டுவிடுகின்றன. இந்தக் கருத்துக்களை உணர்ந்திடச் செய்வதற்கே, இந்தக் கதையைக் கூறினேன். உணவுப் பொருள்களின் விலை ஏறிவிட்டது; ஏறிக் கொண்டே இருக்கிறது என்பதைக் காங்கிரஸ் அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது! கைப்புண்ணுக்குக் கண்ணாடியா! என்று கேட்கத் தோன்றும் என்ன செய்வது, தம்பி! இந்த உண்மையை ஒப்புக் கொள்ளும் மனம், இப்போதுதானே வந்திருக்கிறது, காங்கிரஸ் அரசுக்கு. ஆண்டு இரண்டாகிறது நமது கழகத்தவர், விலைவாசி ஏற்றக் கொடுமையைக் கண்டு குமுறி எழுந்து, முறையிட்டுப் பலன் காணாததால், கிளர்ச்சி நடத்தி, சர்க்காரின் கண்களைத் திறந்திட முயன்ற நிகழ்ச்சி. வேலூர் சிறையிலே நான் அடைபட்டுக் கிடந்தேன், உள்ளம் வெதும்பிய நிலையில். உணவுப் பொருளின் விலை விஷம்போல ஏறிவிட்டது, ஏழையின் வாழ்வில் இம்சை அதிகமாகிறது. என்ற உண்மையை ஒப்புக்கொள்ளக்கூட இந்த ஆளவந்தார் களுக்கு மனம் இல்லையே! இது என்ன ஆட்சி!! என்று எண்ணி மெத்த வருத்தப்பட்டேன். நமது தோழர்கள் பல ஆயிரவர் சிறையிலே வாடிக் கிடந்தனர்; உள்ளே எத்துணையோ கொடுமைகள்; வெளியே எத்தனை எத்தனையோ ஏச்சுப் பேச்சுகள்; எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டோம். இரு தோழர்களையும் பறிகொடுத்தோம்; இதயத்திலே தழும்பு பெற்றோம். உணவு விலையா ஏறி இருக்கிறது? ஏறினால் என்ன கேடு வந்துவிட்டது? பணம்தான் புரளுகிறதே தாராளமாக; விலை ஏறினால் என்ன? கூலிதான் கிடைக்கிறதே ஏராளமாக, விலை ஏறினால் என்ன கஷ்டம்? அரிசி விலையைக் குறைக்க ஹரி ஹர பிரமாவினாலும் முடியாது. விவசாயி தலையில் கை வைத்தால்தான் அரிசி விலையைக் குறைக்கலாம். வளருகிற பொருளாதாரத்தில் விலை ஏறத்தான் செய்யும், இவை ஆளவந்தார்கள் அன்று உதிர்த்த பொன்மொழிகளிலே சில! ஒருவர் மிகத் துணிச்சலுடன் அடித்துப் பேசினார், விலை ஏறி இருப்பது நாட்டின் சுபீட்சத்தைக் காட்டுகிறது என்று. ஒருவரும், விலைவாசி, விஷம்போல ஏறி இருப்பதை இறக்கத்தான் வேண்டும் என்று கூறவில்லை; விலைவாசி ஏறி இருப்பது இயற்கை, நியாயம், தவறு இல்லை, தீது அல்ல என்று வாதாடினார்கள், நினைவிலிருக்கிறதல்லவா, தம்பி! அப்படியே விலை ஏறி இருந்தாலும், அதைக் குறைக்க, கிளர்ச்சியா வழி? என்று கேட்டவர்களும், அப்படியே கிளர்ச்சி செய்வதானாலும், கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நின்றுகொண்டு விலை குறைய வேண்டும் என்று கூச்சலிடுவதா பயனுள்ள கிளர்ச்சி என்று கேட்டவர்களும், அதுதான் கிளர்ச்சி என்று வைத்துக்கொண்டாலும், அதனை ஒழுங்கான முறையில், பலாத்காரமின்றிச் செய்திடும் திறமை இருக்கிறதா என்று கடாவினோரும், கிளர்ச்சி ஆபாசமாகப் போய்விட்டதற்குக் காரணம் நான் கூறுகிறேன், கேண்மின்! தலைமை, அவ்வளவு மோசமானது!! திறமையற்றது!! என்று குரலெழுப்பினோரும், சட்டசபையில் பேசிடாமல் சந்து முனை சென்று கத்துவதா? இதுவா கிளர்ச்சி? என்று அரசியல் பாடம் போதிக்க முன்வந்தவர்களும், ஏ! அப்பா! எத்தனை எத்தனை பேர்!! இவர்களை ஜாமீன் கேஸ் போட்டு, உள்ளே தள்ளி வைக்க வேண்டும் என்று முழக்கமெழுப்பினோரும், இவர்கள் சிறுபிள்ளைத்தனமாக ஒரு கிளர்ச்சி நடத்திக் கிளர்ச்சிக்கு இருந்து வந்த மதிப்பையே பாழாக்கிவிட்டார்களே! இனி எந்தக் கிளர்ச்சியும் செய்யவே முடியாத நிலையாகி விட்டதே! என் செய்வது! என்று சோக கீதம் பாடிக் காட்டியவர்களும், வீணான கிளர்ச்சி செய்தார்கள்; அதை அடக்கப் பணம் செலவாயிற்று; அந்தப் பணம் இருந்தால் பத்துப் பள்ளிக்கூடம் கட்டியிருக்கலாம் என்று பொருளாதாரப் பேரறிவைப் பொழிந்தவர்களும், உற்பத்தி பெருகுவது ஒன்றுதான் விலைகளைக் குறைத்திடச் செய்யும் ஒரே வழி, நல் வழி, எம் வழி! என்று அகில உலக அறிவைத் தம்மிடம் ஏகபோகமாக வைத்துக்கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டு எக்காளமிட்டவர்களும், இருக்கிறார்கள், தம்பி! இங்கேயேதான் இருக்கிறார்கள் - இளித்தவாயர்களாகிவிட்டோம் என்று ஒப்புக்கொள்ள மனமின்றி, அன்று என்னென்ன பேசினார்களோ அவ்வளவையும் விழுங்கிவிட்டு இன்று, விலைவாசி ஏறிவிட்டது, ஒப்புக்கொள்கிறோம். விலைவாசி கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஒப்புக் கொள்கிறோம் என்று விநயமாகப் பேசி வருகிறார்கள். நமது கிளர்ச்சியை மதிக்க மறுத்தார்கள்; இன்று அவர்களின் முன்னாள் முடுக்கு மாய்ந்தது; உண்மையை ஒப்புக்கொண்டு தீரவேண்டிய நிலை பிறந்தது. இதற்காக ஒரு கிளர்ச்சியா? என்று கேட்டபடி இடி முழக்கங்கள், இன்று கிளர்ச்சி நடத்த முனைந்துவிட்டோம் என்று முழக்குகின்றனர், கலெக்டர் அலுவலகத்தின் முன்பா, கிளர்ச்சி! சேச்சே! விலை குறைக்க அவருக்கு என்ன அதிகாரம்? என்று விவரம் பேசிய வித்தகர்கள் இன்று கலெக்டர் அலுவலகங்களின் முன்புதான் நிற்கப்போகிறார்கள் - முழக்கம் எழுப்பிட! சேர்ந்து கிளர்ச்சி நடாத்துவோம், வாரீர்! என்று ஒரு சாரார் அழைக்கக்கூடச் செய்கிறார்கள். நம்மைத்தான் தம்பி! நம்மைத்தான்! காலங்கடந்தாகிலும் இந்தக் கருத்து எழுந்ததுபற்றி எண்ணிடும்போது, சிறையிலே அன்றுபட்ட அல்லல்பற்றிய நினைப்பு மறந்தே போகிறது, விதைத்தது வீண் போகவில்லை என்ற மகிழ்ச்சி பெறுகிறோம். கிளர்ச்சி நடத்தத் தெரியாத "தலைவர்கள்’ கொண்டதாமே, தி. மு. க. . . . ! இன்னும், மற்றவர்கள் கிளர்ச்சி துவக்கவில்லை, திட்டமிட்டபடி! இதற்குள், கடைகள் சூறையாடப்பட்டன, கருப்புக்கொடி ஆர்பாட்டம் நடைபெற்றது. கல்வீச்சும் பதிலுக்குத் துப்பாக்கி வேட்டும் நடைபெற்றுவிட்டன. கிளர்ச்சிக்காரர்களிலும் சிலர் மாண்டனர்; போலீசிலும் சேதம்!! கிளர்ச்சியின் இலக்கணம் பற்றியும், தலைவர்களின் தன்மை பற்றியும், பெருங்குரல் கொடுத்த பெம்மான்கள் அது கண்டு ஒரு வார்த்தை? கிடையாதே! இதோபதேசம்? இல்லை! அறிவுரை? வக்கு இல்லை! வாயடைத்துக் கிடக்கிறார்கள். ஒவ்வொருவருடைய வாயும், நம்மைப்பற்றிப் பேசும் போதுதான், வல்லமை பெறுகிறது; மற்ற நேரத்தில்? என்ன இனிப்புப் பண்டத்தைக் கொள்கின்றனரோ புரியவில்லை; கப்சிப்! போகட்டும், நம்மைப் பொல்லாங்கு சொன்னதால் நமக்கொன்றும் கஷ்டமும் இல்லை, நஷ்டமும் இல்லை. இன்று கதையில் வரும் சீமான் மகன்போல, இளகிய மனமும், இரக்கப் பேச்சும் காட்டுகிறார்களே, அது ஒருவித மகிழ்ச்சியைத் தரத்தான் செய்கிறது. உணவுப் பண்டங்களின் விலை ஏறிவிட்டிருப்பதற்குக் காரணம், உற்பத்திக் குறைவு அல்ல; உற்பத்தியான பொருளைச் சீராக விநியோகிக்கும் முறை இல்லாததே என்று நாம் முன்பு சொன்னோம், நையாண்டி செய்தனர் நாட்டின் நாயகர்கள். இன்று, அதையே, ஒரு கண்டுபிடிப்புபோல எடுத்துக் கூறுகிறார்கள்; பொதுமக்கள் நினைவாற்றலற்றவர்கள் என்ற எண்ணத்தில். பொதுமக்கள் ஆளவந்தார்களைத் திருப்பிக் கேட்க முடியாதவர்கள்; ஒப்புக்கொள்வோம். ஆனால், தமக்குள் பேசிக் கொள்ளாமலா இருக்கிறார்கள்; நேற்றுவரை இந்த நேர்மையாளர்கள், விலை ஏற்றத்துக்குக் காரணம் உற்பத்தி போதாது என்றார்கள்; இன்று உற்பத்தியில் குறைவில்லை, விநியோகத்தில் கோளாறு என்கிறார்களே; இவர்களுக்கென்ன, நாளைக்கு ஒரு நாக்கா? வேளைக்கு ஒரு பேச்சா என்று. விலைவாசி ஏறவில்லை; ஏற்றிவிட்டிருக்கிறார்கள் என்றோம். புவிமெச்சும் பொருளாதாரப் போதகாசிரியர் எனத் தம்மைக் கருதிக்கொண்டு, வளரும் பொருளாதாரம் இது, பணப்பெருக்கம் ஏற்பட்டிருக்கிறது; அந்நிலையில் விலைவாசி ஏறுவது தவிர்க்க முடியாதது என்று பேசினர். இன்று? நந்தா பேசுகிறார், "திட்டமிட்ட அபிவிருத்தித் துறையில் விலைவாசிகள் ஏற்றம் தவிர்க்க முடியாதது என்பதை நான் ஒப்புக்கொள்ள முடியாது.’’ என்பதாக. ஆமாம் என்று ஆளவந்தார்கள் அனைவருமே சொல்கிறார்கள். கள்ள மார்க்கெட் - கொள்ளை இலாபம் - கறுப்புப் பணம் என்று முன்பு நாம் சொன்னபோது, அபாண்டம் வீண் புரளி பழிச்சொல் என்று பேசினர், நமது வாய் அடக்க. இன்று? கள்ளப் பணம் எவ்வளவு நடமாடுகிறது எனத் திட்டவட்டமான மதிப்பீடு ஏதும் என்னிடம் இல்லை. ஆனால், பல நூறு கோடி ரூபாய்கள் இருக்கும் என்பது நிச்சயம். சமீபத்தில் விலைவாசிகள் விஷம்போல விறுவிறுவென்று ஏறியதற்கு இந்தத் திருட்டுப் பணம்தான் மூல காரணம். குல்ஜாரிலால் நந்தா கூறுவது! குறை கூறும் குப்பன் பேச்சல்ல!! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாம் கூறினபோது, குமட்டல் எடுத்தது காங்கிரசாருக்கு; இப்போது நந்தா பேசுகிறார், முன்பு நாராசமாகப்பட்டது இன்று நற்பாசுரமாகத் தோன்றுகிறது!! இப்போதேனும் ஆளவந்தார்கள், பிடிவாதப் போக்கை விட்டுவிட்டு, பிரச்சினையைக் கவனிக்க முன் வந்தது கண்டு மகிழ்கிறேன். தம்பி! விலைவாசி குறைய, துரைத்தனம் மேற்கொள்ளும் தகுதியான எல்லா திட்டங்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கும் என்ற கருத்தினை நண்பர் மனோகரன், டில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சியின் குழுக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறார். நாம் இப்போது கவனிக்க வேண்டியது, காங்கிரஸ் கட்சியினரின் முன்னாள் நினைப்புகள், பேச்சுகளை அல்ல; மக்களின் அல்லலை மேலும் வளர விடாதபடி தடுத்திட விலைவாசியைக் குறைத்திட வழி கண்டாக வேண்டும் என்பதிலேதான் அக்கறை செலுத்தவேண்டும். அதற்காக, நெருக்கடி நேரத்தில் நாலுபேர் கூடிப் பேசி விடுவது போதாது என்பதையும், விலைவாசி பிரச்சினையைக் கவனிக்க ஒரு நிரந்தர அமைப்பு வேண்டும், அதிலே, எல்லாக் கட்சிகளும் இடம் பெறவேண்டும் என்பதனையும் நான் தெரிவித்தேன்; அரசினர் அந்தக் கருத்தினை ஏற்றுக்கொண்டது அறிந்து மகிழ்கிறேன் இதற்காக, என்னென்ன முறைகளைத் துரைத்தனம் மேற்கொள்ளப் போகிறது என்பது விளக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்புமிக்க ஒத்துழைப்பு அளிக்கும். ஆனால், பரிகாரம் எது என்றாலும், இதமளிக்கும் திட்டம் யாதாக இருப்பினும், விலைவாசி ஏற்றம் காரணமாக, ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் பட்ட அவதியின் காரணமாக, ஏற்பட்டு விட்ட விபரீத விளைவுகளை நீக்கிட இந்த ஆட்சியினரால் முடியாது. கதையில் வரும் சீமான் மகன்போல, இளகிய மனம் காட்டலாம், சிறு கடைக்காரன் பித்தனாகிச் செத்துப்போனான்? அவன் பிழைத்தா எழப்போகிறான்? ஆயிரமாயிரம் குடும்பங்கள், அல்லலைத் தொடர்ந்து அனுபவித்து, வளைந்த வாழ்வினராகிப் போயினர். இதற்குக் காரணமாக இருந்த போக்கும், அந்தப் போக்கினைக் கொண்டியங்கிய காங்கிரஸ் ஆட்சியையும், பொது மக்கள் மன்னிப்பார்கள் என்று நான் எண்ணவில்லை. உணவுத் துறையில் ஏற்பட்டுவிட்டுள்ள மோசமான நிலைமைக்கு, முழுப் பொறுப்பு ஏற்றாக வேண்டியவர்கள் காங்கிரசில் ஆள வந்தார்களே!! இன்று பரிகாரம் தேடித் தருகிறோம் என்று பேசிவிடுவது, "பழைய பாவத்தை’த் துடைத்துவிடாது! அது போக்க முடியாத கறை! உங்கள் ஆட்சியில்தானே, உணவு விலை விஷம்போல ஏறிற்று. பண வீக்கத்தால் பல கேடுகள் விளைந்தன. கள்ள மார்க்கெட் வளர்ந்தது. கருப்புப் பணம் நெளிந்தது. கொள்ளை இலாபம் குவிந்தது. கெய்ரோன்கள் கொழுத்தனர். என்று பொதுமக்கள் கேட்டிடத் தவறமாட்டார்கள்! இத்தனை இன்னலை இழைத்துவிட்டு, "எம்மைவிடத் திறமையாக ஆளவும் ஆட்கள் உளரோ!’ என்று வேறு பேசுவது கரும்புத் தோட்டம் எதற்கு? காஞ்சிரங்காயினும் இனிக்குமோ கரும்பு? என்று கேட்பது போன்றதாகும். அன்புள்ள அண்ணாதுரை 16-8-1964 நச்சரவு வளர்க்கின்றார் பாஞ்சாலத்தில், இராஜஸ்தானத்தில், கேரளாவில், பீகாரில், மைசூரில் - எங்கும் ஊழல் மயம் கடுங்கோபம் காமராஜருக்கு வருவதற்குக் காரணம், களத்தில் நிற்பவர் நாம் என்பதே நந்தாவின் கைவிளக்கு சதாசர் சமிதி சந்தானம் கமிட்டியின் கருத்துக்கள் பிரதம நீதிபதி மகாஜன் காங்கிரஸ் கட்சிக்குக் கூறியுள்ள புத்திமதிகள் தம்பி! காணீர் கண்குளிர காந்திமகான் சீடர் இவர்! தியாகத் தீயினிலே குளித்தெழுந்து வந்திட்டார்! தொண்டு செய்வதன்றிக் கொண்டவிரதம் வேறில்லை பண்டிருந்த பாரதத்தைக் கண்டிடவே உழைக்கின்றார்! காட்சிக்கு எளியரிவர் கடுஞ்சொல்தனை அறியார்! ஏழை எளியோர்க்கு ஏற்றமது அளித்திடுவார்! உழைப்பதற்கே உருவெடுத்தார் ஊதியம் பெறுதற்கல்ல! தொடமாட்டார் பொன்பொருளைக் கொளமாட்டார் மனமாசு! பாடுபடும் ஏழைதுயர் பார்த்துப் பதறுகிறார்! மாடுமனை மக்கள் பெற்று மகிழவழி கண்டிடுவார்! பாலையெலாம் சோலையாகிப் பைங்கிளிகள் பாடிடவே செந்நெல் மணிக்குவியல் சேர்த்திடுவார் நாட்டினுக்கு! உழைப்பை உறிஞ்சிவரும் உலுத்தரை ஒழித்திடுவார்! மாளிகையின் சீற்றம்கண்டு மன்னர் அஞ்சிடமாட்டார்! எப்பாடுபட்டேனும் இங்கு இல்லாமை போக்கிடுவேன்! இதற்கன்றோ இன்னல்பல ஏற்றோம் பல ஆண்டு! நாட்டினை வாழவைக்க நல் உறுதி கொண்டுவிட்டோம்! வீட்டை மறந்துவிட்டோம்; பாட்டை வகுத்துவிட்டோம்! நாட்டினுக்கு நற்செய்தி நவின்றதுடன் நில்லாமல் நாளும் உழைக்கின்றார் நாம்வாழ, ஆளவந்தார்! பாசுரம் இதுபோலப் பலப்பல பாடி, பல்லாண்டு கூறி, வரவேற்றனர் மக்கள் காங்கிரஸ் அமைச்சர்களை, விடுதலை விழா முடித்து அவர்கள் நாடாளத் தொடங்கியதும் தன்னலம் இந்தத் தியாகிகட்கு இருக்க முடியாது; மகாத்மாவின் ஒளியிலே இருந்து இருந்து இவர்கள், எவர்க்கும் எழக்கூடிய சுயநலத்தைச் சுட்டெரித்துவிட்டார்கள்; பரங்கி மூட்டிய அடக்குமுறைத் தீயிலே வீழ்ந்து வீழ்ந்து இவர்கள் புடம்போட்ட தங்கமாகி விட்டனர்; இவர்கள் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து கோலாகல வாழ்கை நடாத்தி வந்த குட்டிக் கோமான்களின் வழிவழி வந்தவரல்ல; குண்டுக்கும் தடியடிக்கும், சிறைக்கும் கொடுமைக்கும் தம்மைத்தாமே ப-யிட்டுக்கொள்ளத் துணிந்த தூயவர்கள்; ஏழையுடன் ஏழையாய் இருந்து வந்தவர்கள்; ஏரடிக்கும் சிறுகோ-ன் மதிப்பை அறிந்தவர்கள்; பசியும் பட்டினியும் கண்டவர்கள்; கோடி கோடியாகக் கொட்டிக் காட்டினாலும் நேர் வழியினின்றும் இம்மியும் வழுவமாட்டார்கள்; இவர்களின் கரத்திலே ஆட்சிப்பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. எனவே, ஆடுவோமே! பள்ளுப்பாடுவோமே!! என்று கொண்டாடினார்கள். மாளிகைகளிலே மந்தகாச வாழ்வு நடாத்திக்கொண்டு, மக்களின் குரலுக்குச் செவிகொடுக்காமல் மதோன்மத்தர்களாக இருந்துகொண்டு, தன் செல்வத்தைப் பெருக்கிக்கொள்ளவே அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அண்ணன் தம்பிகளும், மாமன், மைத்துனரும், அடிவருடி நிற்போரும் ஆனந்த வாழ்வு பெற வழி அமைத்துக் கொடுத்துவிட்டு, இலஞ்ச இலாவணத்தில் புரண்டுகொண்டு, ஊழலாட்சி நடாத்திக் கொண்டு வந்தனரே, உலுத்தர்கள், அவர்கள் அல்ல இப்போது ஊராள வந்திருப்பவர்கள்; இவர்கள் உத்தமர்கள், சத்திய சந்தர்கள் ஊர்வாழத் தாம் உழைக்கும் உயர்ந்தோர் என்றெல்லாம் பேசினர்; போற்றினர்; அஞ்சலி செய்து அகமிக மகிழ்ந்தனர். காங்கிரஸ் அமைச்சர்கள் தவறு செய்யக்கூடியவர்களாக இருக்க முடியும் என்று எண்ணுவதே இழுக்கு; பாபம்; தேசபக்தியின் தூய்மையை உணர்ந்திட முடியாத உன்மத்தர்களின் போக்கு என்றெல்லாம் இடித்துரைத்தனர், ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாக! ஆளவந்தார்களும், அடக்க ஒடுக்கம் காட்டினர், அன்பு சொட்டப் பேசினர், மக்களுடன் பழகினர், அவர் மனக் குறையாதென உசாவினர், தன்னலமற்ற தொண்டாற்ற முனைந்தனர், தழைத்திடும் அறம் இனி, செழித்திடும் மக்கள் வாழ்வு, கொழித்திடும் செல்வம் எங்கும் என்று பலரும் கருதினர்; அந்தி வானத்தின் செந்நிறம் சொக்க வைத்திடுவது போன்றதோர் நிலை இருந்தது; பிறகோ? இருள்! காரிருள்! இருளைத் துணைக்கொண்டவர் செய்திடும் செயல் பலப் பல!! தெரியும்! தெரியும் தேச பக்தன் வேடமிட்டு நீர் நடாத்தும் தில்லு முல்லுகள்!! தன்னலமற்ற தியாகியோ! யாரறியார் நீவிர் அடித்த கொள்ளையை! குவித்த பணத்தின் அளவை!! ஊழல்! இலஞ்சம்! ஓரவஞ்சனை! பழிவாங்குதல்! இவை உமது முறை! கள்ளமார்க்கெட் நடத்துவோர் உமக்கு நண்பர்கள்! வீடு கட்டிக்கொண்டீர் மாளிகைபோல! விலைக்கு எடுத்துக்கொண்டீர் சர்க்கார் உடைமையை மலிவாக! உற்றார் உறவினருக்கு வழிகாட்டிவிட்டீர், கொள்ளை அடிக்க. தெரியும்! தெரியும்! உம் தில்லுமுல்லுகள்! இவ்விதம், கொதித்தெழுந்து பேசுகிறார்கள் இன்று காங்கிரஸ் அமைச்சர்களைப்பற்றி, பல்வேறு இடங்களில், பலப்பலர். வெட்டவெளிக் கூட்டங்களில் மட்டும் அல்ல; சட்டமன்றங்களில்!! காங்கிரஸ் அமைச்சர்களையா இப்படி ஏசுகிறீர்கள்? என்று கேட்பவர்களுக்கு, இடித்துரைப்பார் பதிலளிக்கிறார்கள்; காங்கிரசால் அமைச்சரானவர்களைக் கண்டிக்கிறோம், நாட்டு மக்கள் சார்பில்; நல்லாட்சி வேண்டும் என்பதற்காக; வீட்டு நெருப்பு என்பதற்காக அதில் வீழ்ந்து புரண்டிடுவார் உண்டோ? என்று கேட்கின்றனர். ஆதாரமற்ற புகார்கள். அரசியல் எதிரிகளின் அங்கலாய்ப்பு விஷமிகள் கட்டிவிடும் வீண் புரளி வேற்று நாட்டானிடம் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளின் தூற்றல் பேச்சு. இவ்விதமாக, பெருந்தலைவர்கள், கண்டனத்திற்கு இலக்கான காங்கிரஸ் அமைச்சர்கள் சார்பிலே வாதாடினர்; திரையிட்டுப் பார்த்தனர்; பூசிமெழுகிப் பார்த்தனர்; பலன் இல்லை; கண்டனக் கணைகள் சரமாரியாகக் கிளம்பின, துளைத்தன; புனுகுபூசினர் புண்ணின் நாற்றம் போகவில்லை; புரையோடிப்போன பிறகு, கெய்ரான் இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள்; எங்கோ ஓரிடத்தில் எம்மையும் அறியாமல், முளைத்துவிட்டிருந்த களை இது; கழனி முழுதும் அதுவே என்று எண்ணாதீர்கள், மற்ற இடங்களிலே உள்ளவை, கரும்பு, செந்நெல், கனிவகை, மணி என்று பேசி, ஆத்திரமே-ட்டு எழும் மக்களைச் சமாதானப் படுத்திட முயலுகின்றனர். இன்னமும், கெய்ரான் காங்கிரஸ்காரரே! இதனை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை; இப்படிப்பட்டவர் இவர் என்று உயர்நீதி மன்றத்து முதல்வரொருவர் அறுதியிட்டுக் கூறியான பிறகும், கெய்ரான் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறார். கெய்ரான் திரட்டிய பெருநிதி அவரிடமேதான் இருக்கிறது. கெய்ரானின் ஆதரவாளர் காங்கிரசில்தான் உள்ளனர். கெய்ரானின் ஆதரவாளர் சட்டமன்றத்திலும் உள்ளனர். என்னென்ன காரணம் காட்டினாலும், எத்தனை சமாதானம் சொன்னாலும், எவரெவரைச் சான்றளிக்க வைத்தாலும், குற்றம் குற்றமே என்று தாஸ் அவர்கள் துணிந்து, நேர்மையுடன் தீர்ப்பளித்துவிட்டார்கள். இதற்குப் பிறகு, கெய்ரான் முதலமைச்சர் பதவியிலிருந்து வெளியேறினாரே தவிர, காங்கிரசை விட்டு அல்ல, பொது வாழ்க்கையை விட்டும் அல்ல. அவர் இப்போதும் பாஞ்சாலத்துக் காங்கிரசில், குறிப்பிடத்தக்க பெரிய புள்ளி! அவர் மட்டும் அல்ல, அவர் எந்தத் தவறும் செய்தவரல்ல, அவர்மீது கூறப்படுவன யாவும் வீணான பழி, அரசியல் பகைவர்களின் கோள் என்றெல்லாம் தாஸ் அவர்களிடம் சாட்சி சொன்னவர்களிலே பலர் சட்டமன்ற உறுப்பினர்கள்; அவர்கள் காங்கிரசிலேதான் உள்ளனர்; உயர்தர அதிகாரிகள் பலர்; அவர்கள் இப்போதும் அதிகாரிகளாகத்தான் இருக்கின்றனர், கெய்ரான் ஒருவர்தான் விலகினார்; அவருடைய "தர்பாருக்கு’த் துணைநின்றவர்கள், ஆட்சியில் பங்குதாரர்கள், பரிந்து பேசியோர், நீதிபதி நேர்மையானது என்று ஏற்றுக்கொள்ள இயலாத பொய்க் காரணம் பல காட்டி அவரைக் காப்பாற்றிட முனைந்தோர் அனைவரும், காங்கிரசிலும் இருக்கிறார்கள், சர்க்காரிலும் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஊழலும் இலஞ்ச இலாவணமும் ஒழிக்கப்பட்டு விடுவதற்கான முழு நடவடிக்கையைக் காங்கிரஸ் அமைப்பு எடுத்துக்கொண்டாகி விட்டது என்றா பொருள்? நேர்மை உள்ளம் கொண்டவர்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும். தம்பி! கெய்ரான் விஷயமாக தாஸ் கமிஷன் அறிக்கை வெறிவந்ததே, இது முதலாவது என்றும் எண்ணிவிடாதே. இதற்கு முன்பு வேறோர் காங்கிரஸ் தலைவரின் பேரில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக் குழு அமைக்கப்பட்டது; அறிக்கை கொடுத்தார் விவியன் போஸ்; அந்தக் காங்கிரஸ் தலைவர் பேரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமுள்ளவை என்பதாக. என்ன நடந்தது? அந்தக் காங்கிரஸ் தலைவர் அவர் வகித்திருந்த பதவியினின்றும் விலகிக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டார்! ஆனால், காங்கிரசில் இருக்கிறார்; நீக்கப்படவில்லை! அதற்கும் முன்னால் அடிபட்ட முந்திரா விவகாரத்தை மறந்துவிட்டிருக்கமாட்டாய். அந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தி, அந்த நிகழ்ச்சியிலே டி. டி. கிருஷ்ணமாச்சாரியாருக்கு இருந்த தொடர்பு குறித்துக் கருத்து தெரிவிக்கையில், டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் வாதம், பேச்சு, ஒப்புக்கொள்ளத் தக்கதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. என்ன நடந்தது அதன் விளைவாக? டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், தாமாகப் பதவி துறந்தார். இன்று டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் இந்தியாவின் நிதி மந்திரியாகக் கொலுவீற்றிருக்கிறார். முந்திரா விவகாரம் பற்றி விசாரணை நடத்திய சக்ளா இந்தியாவின் கல்வி மந்திரியாக வீற்றிருக்கிறார். சக்ளாவை விடப் பெரிய அந்தஸ்து, அமைச்சர் அவையில் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாருக்கு! என்ன பாடம் இதிலிருந்து தெரிகிறது என்று நேர்மை பட்டுப்போகாத பழைய காங்கிரஸ் காரரைப் பார்த்துக் கேள், தம்பி! பெருமூச்சுதான் பதிலாகக் கிடைக்கும். எம்முடைய ஆட்சியிலாவது ஊழல் நடப்பதாவது! என்று எக்காளமிட்டு வந்தார்கள். ஒவ்வொன்றாக வெடித்துக்கொண்டு வெளியே வருகிறது. இதனைக் கண்டுபிடிக்க ஒரு குழுவே அமைக்கப்படவேண்டி நேரிட்டுவிட்டது. பாஞ்சாலத்தோடு நின்றுவிடவில்லை, "பாரத புத்திரர்’ என்ற பட்டயம் பெற்றுக்கொண்டு பகற்கொள்ளை அடிப்பவர்களின் கதை; படலம் படலமாக வெளிவந்தபடி இருக்கிறது! ஜெய்பூரில், ராஜஸ்தானத்து முதலமைச்சர் மாகன்லால் சுகாடியா என்பவர்மீது பாய்ந்து, தனக்கும் தன் உறவினர்களுக்கும் இலாபம் தேடிக் கொள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தினார் என்று பலர் பேசியுள்ளனர். தாஸ் கமிஷன்போல ஒன்று அமைத்து, முதலமைச்சர்மீது குறிப்பிடும் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சோஷியலிஸ்டு கட்சியினர் உம்ராவ் சிங் என்பவர், உதயபூரில் தவறான முறையில் முதலமைச்சர் நிலத்தைப் பெற்று, அதில் இரண்டு இலட்ச ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள வீடு கட்டிக்கொண்டார், பாங்கியில், பல இலட்சம் ரூபாய் சேர்த்து வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டிப் பேசியிருக்கிறார். தவறு! தவறு! இரண்டு இலட்ச ரூபாய் பெறுமானம் உள்ளது அல்ல. என் வீடு. ஒரு இலட்சம்கூடப் பொறாது. யாரேனும் ஒரு இலட்ச ரூபாய் கொடுப்பதாக இருந்தால், வீட்டையும் நிலத்தையும் தந்துவிட நான் தயார்! என்று முதலமைச்சர் சுகாடியா முழக்கமிடுகிறார். அதைக் கேட்டு மற்றவர்கள் வாயடைத்துப் போய்விடவில்லை. "சம்மதம்! எல்லா எதிர்க்கட்சியினரின் சார்பிலும் நான் முதலமைச்சரின் அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டாகிலும் கடன் வாங்கியாவது, சுகாடியா கேட்ட ஒரு இலட்சத்துக்குமேல் ஒரு ஆயிரம் ரூபாய் சேர்த்துத் தருகிறோம். வீட்டை விற்கத் தயாரா?’’ என்று ஒரு உறுப்பினர் கேட்கிறார். சுகாடியா பதில் ஏதும் சொன்னதாகத் தெரியவில்லை. இந்த ஆண்டு இத்தனை இலட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை விளைநிலமாக்கினோம், இந்த ஆண்டு இத்தனை விதமாக புதிய தொழிற்சாலை களைத் துவக்கி இத்தனை இலட்சம் பேருக்கு வேலை கொடுத்தோம், இந்த ஆண்டு கள்ளமார்க்கெட் செய்பவர்களைக் கண்டுபிடித்து, அடக்கி, விலைகளை இந்த அளவுக்குக் குறைந்திடச் செய்திருக்கிறோம், இந்த ஆண்டு இத்தனை மருத்துவ மனைகள் அமைத்து, இன்னின்ன வியாதிகளினால் ஏற்படும் கேடுகளைக் குறைத்திட முயன்றிருக்கிறோம் என்றெல்லாம் பேசவேண்டிய இடத்திலே, தம்பி! என்ன பேச்சு நடைபெற்றிருக்கிறது, பார்த்தனையா!! முதலமைச்சர் அக்கிரம வழியிலே பணம் திரட்டினார், அரண்மனைபோன்ற வீடு கட்டினார் - என்பது பேச்சு!! இவர்கள், காங்கிரஸ் அமைச்சர்கள்! இந்த இலட்சணமான ஆட்சியைக் கண்டு, மார்தட்டிக்கொள்ளவும், மற்ற எந்தக் கட்சியும் ஆட்சி செய்திடும் ஆற்றல் பெற்றது அல்ல என்று மமதை பேசவும், நாக்கு நீளுகிறது பெருந் தலைவர்களுக்கு, மக்களுக்கு எதுவுமே புரியாது என்று அவர்கள் ஒரு தப்புக்கணக்குப் போடும் காரணத்தால். தம்பி! வீடு கட்டிய விந்தையுடன் முடிந்துவிடவில்லை, ராஜஸ்தானத்து ரசாபாசம். கம்யூனிஸ்டு கட்சியினரான இரண்டு உறுப்பினர்கள், பதுக்கல்காரர்கள், திருட்டுச் சரக்கு விற்பவர்கள், கள்ள மார்க்கட் நடத்துபவர்கள், கொள்ளை இலாபம் அடிப்பவர்கள். . . இவர்களுக்கு முதலமைச்சர் சுகாடியா, தாமே முன்னின்று பாதுகாப்பு அளித்து வருகிறார். என்று குற்றம் சாட்டினார்கள். குல்ஜாரிலால் நந்தா, சாதுக்களைப் படை திரட்டி, சென்று சேகரிப்பீர் செய்திகளை! என்று அனுப்புகிறாராம்! ஏன்? இதோ சட்டமன்றத்தில், இரு உறுப்பினர்கள், வெளிப்படையாக, விளைவுபற்றி அஞ்சாது, வீரத்துடன் பேசியிருக்கிறார்களே, அவர்களை அழைத்து முழுத் தகவல் தரச் சொல்வதுதானே! அதன்பேரில் விசாரணை தொடங்குவதுதானே! செயல்பட முனைவதுதானே! செய்தாரா? செய்வாரா? செய்யமாட்டார்! நந்தா செய்யக்கூடியதெல்லாம், அந்த இரண்டு கம்யூனிஸ்டு உறுப்பினர்களை, இவர்கள் பாதுகாப்புக்கு ஆபத்தை மூட்டுகிறார்கள் என்று கூறி, சிறையில் போட்டடைப்பதுதான். சுகாடியா சிரித்தபடி, நம் சுகானுபவத்தைக் கெடுத்திடத் துணிந்தவர்கள் தொலைவார்கள் என்றெண்ணி உதயபுரி மாளிகையில் உல்லாசமாக இருந்திடுவார். தம்பி! கெய்ரான், சுகாடியா போன்ற, குற்றச்சாட்டுக்கு இலக்காகி உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் ஆள முற்பட்டபோது, அவர்களை வாழ்த்தவில்லையா, வரவேற்கவில்லையா, அவர்கள் நாட்டுப்பற்று, தன்னல மறுப்பு, அறிவாற்றல், பண்பு ஆகியவை பற்றிப் பல படப் பேசவில்லையா, காங்கிரசை நடத்திடும் கர்த்தாக்கள். நிரம்பப் பேசினார்கள்! இன்று! சட்டசபையில் சரமாரியாகக் கிடைக்கிறது சவுக்கடி!! ஒரு துளி ஐயப்பாடு கிளம்பினாலும், விழித்தெழுந்து, விசாரணை நடத்தி, தவறு இருந்தால் கண்டறிந்து, கேடு களைந்து, கேட்டினுக்குக் காரணமாக இருந்தவர்களைப் பதவியில் இருந்து மட்டுமல்லாமல், கட்சியிலிருந்தே நீக்கிவிடவேண்டியது முறையாக இருக்க, மூலைக்கு மூலை பேசப்பட்டு, நாறி, அழுகி, தானாக நாற்றமடிக்கிற வரையில், குற்றத்தைக் கண்டுபிடிக்கும் வேலை, களை எடுக்கும் வேலை நடைபெறுகிறதா! கிடையாது!! மாறாக, "கபர்தார்’ குற்றம் கூறாதே! உன் குலையை அறுத்தெடுத்து மாலையாக்கிக்கொள்வேன் என்று கூரைமீதேறிக் கூவுகின்றனர். இந்த மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல், துணிந்து நின்று, குற்றம் குற்றமே என்று கூறத்தக்கவர்கள் எத்தனை பேர் கிடைக்க முடியும்? மிகச் சொற்பம். கேரளத்து முதலமைச்சர் சங்கர்மீது குற்றச்சாட்டுகளைத் தொகுத்தெடுத்துக்கொண்டு, காங்கிரஸ் தலைவர்கள் டில்லிக்குச் சென்றனர் என்றோர் செய்தி சென்ற கிழமை வெளிவந்தது. கேரளத்துக்கு எத்தனை முறை எத்தனை பெரிய பெரிய காங்கிரஸ் தலைவர்கள் சென்று வந்தனர் - சேதி அறிய - பிளவு போக்க - அமைதி காக்க - ஒன்றுபடுத்த - ஒழுங்குபடுத்த!! தொட்டால் பட்டமரம் துளிர்க்குமாமே அந்தக் காமராஜரும் போய்வந்தார்; இன்றைய “பாரதப் பிரதமர்’ லால்பகதூர் சென்று வந்தார், கண்டு வந்தார், நிலைமை சரியாகிவிடும் என்று செப்பிவிட்டு வந்தார்; மொரார்ஜி தேசாய் போய்வந்தார்; காங்கிரசின் ஒரு செயலாளர் சாதிக் அ- என்பார் போய்விட்டு வந்து,”வெளியே சொன்னால் வெட்கக்கேடு; அப்படி இருக்கிறது கேரளத்தில் காங்கிரஸ் நிலைமை’’ என்று தெரிவித்தார். இப்போது பட்டியலே தயாரித்துக்கொண்டு, டில்லிப் பட்டணமே சென்று, முதலமைச்சர் சங்கர்மீது இன்னின்ன குற்றச்சாட்டுகள் உள்ளன என்று கூறுகிறார்கள். மாலை வேளையில் மேடை ஏறியதும் எத்தனை பெரிய முழக்கம், இந்த நாட்டை ஆள நாங்களன்றி வேறு யார்? எவருக்கு உளது அந்த யோக்கியதை? என்று!! நாறுகிறது, நாட்டிலே பல பகுதிகளில்; நாக்கு மட்டும் நீளுகிறது, நம்மைவிட்டால் வேறு நாதி இல்லை இந்த மக்களுக்கு என்ற போக்கில். ஒன்றன்பின் ஒன்றாக இத்தனை ஊழல்கள் வெளி வருகின்றன என்பதைக் காட்ட மட்டும் அல்ல, தம்பி! மக்களிடம் எவர் எவர்களைப் பற்றி இந்திரன் என்றும், சந்திரன் என்றும், காங்கிரஸ் தலைவர்களால் புகழ்பாடி வைக்கப்படுகிறதோ, அவர்களெல்லாம். என்ன கதியாகிறார்கள், அவர்களைப்பற்றிய முழு உண்மை ஆராய்ந்து அறியப்படும்போது என்னென்ன விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகின்றன, அவைகள் எத்துணை மோசமானவைகளாக இருக்கின்றன என்பதையும் விளக்கிடத் தான் கூறுகிறேன். மாசிலாமணிகள் நாங்கள் என்று மார்தட்டிப் பேசுகிறார்களே, காங்கிரஸ் ஆட்சியாளர்கள்பற்றி. இந்த மணிகள் எத்தனை மோசம் என்பது விளக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகளே வேண்டாம் என்று பேசுகிறாரே காமராஜர், சிலரை அழைத்துக்கொண்டும், சிலரை இழுத்துக் கொண்டும், சிலரை ஒழித்துவிடத் திட்டமிட்டுக்கொண்டும் வருகிறாரே, காரணம் புரிகிறதா? எதிர்க்கட்சிகள் மும்முரமாகப் பணியாற்றி வந்தால் காங்கிரசிலுள்ள கெய்ரான்கள், சுகாடியாக்கள், சங்கர்கள் ஆகியோர் பற்றி எவரேனும் எப்போதேனும் ஏதேனும் விஷயத்தை அம்பலப்படுத்திவிடுவார்கள்; பொதுமக்கள் ஆத்திரம் கொள்வார்கள்; பொதுத்தேர்தலில் விரட்டி அடிப்பார்கள் என்ற கிலி! தம்பி! பீகாரில் இதுபோலவே புகார்! மைசூரில், நிஜலிங்கப்பாமீது குற்றச்சாட்டு. இந்த நிலையில் காங்கிரசாட்சி இருக்கும்போது, கண்டபடி பேசிக்கொண்டிருப்பதும், எதிர்க் கட்சிகளைக் கேவலமாக ஏசுவதும், சரியா, முறையா? என்பதை நடுநிலையாளர் எண்ணிப் பார்த்திட வேண்டும். பொதுமக்களிடம் இத்தனைப் பெரிய அளவிலும், இவ்வளவு நெருக்கமான முறையிலும் திராவிட முன்னேற்றக் கழகம் நேசத் தொடர்பு வைத்துக்கொண்டிருப்பதன் காரணமாக, இங்கு ஆளவந்தார்கள் வெகு விழிப்புடன் இருக்கவேண்டி வருகிறது. துளி சந்தேகம் எழுந்தாலும், விடமாட்டார்கள் கழகத்தார்! ஒரு நடவடிக்கையி லேனும் அழுக்குத் தெரியுமானால் அம்பலப்படுத்திவிடுவார்கள்! மிக விழிப்பாக இருக்க வேண்டும்; அப்பழுக்கற்ற முறையில் நடந்தாக வேண்டும்; இல்லையென்றால் துளைத்தெடுத்து விடுவார்கள் என்ற அச்ச உணர்ச்சி, இங்குள்ள காங்கிரஸ் ஆளவந்தார்களுக்கு நிரம்ப இருக்கிறது. இதனை நான் கூறுவதற்குக் காரணம் நமக்கு நாமே பெருமிதம் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல, ஜனநாயகத்தில், ஒரு ஆட்சி நேர்மையாக இருக்கவேண்டுமானால், ஆட்சியில் உள்ளவர்கள், நாம் எதைச் செய்தால் எதிர்க்கட்சியினர் எந்த விதமாக நம்மை எதிர்த்துத் தொலைத்துவிட முனைவார்களோ என்ற அச்சம் கொண்ட நிலையில் இருந்தாக வேண்டும். அந்த நிலையற்றுப் போகுமானால் பிறகு ஆளவந்தார்கள் சொல்வ தெல்லாம் சட்டம்தான், காட்டுவதெல்லாம் வழிதான்! மாற, மீற மக்கள் முயன்றாலும் முடியாது எனவே தம்பி! ஜனநாயகம் வெற்றிபெற, விழிப்புடனும் விறுவிறுப்புடனும் பணியாற்றத்தக்க அளவும் ஆற்றலும், நிலையும் பெற்ற ஒரு எதிர்க்கட்சி இருந்தாக வேண்டும். அந்த நிலை, திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றிருக்கிறது. ஓங்கி வளர்ந்ததெல்லாம் ஒடிந்து வீழ்ந்து விட்டன; ஓங்காரக் கூச்சலிட்டதுகள், ஒய்யாரக் கொண்டைக்குப் பூவுமுண்டு, ஒயிலாளின் காலுக்குத் தண்டை உண்டு என்று பாடிக்கொண்டு பாங்கி வேலை பார்க்கச் சென்றுவிட்டன, களத்தில் நிற்பவர் நாம் . . . கடுங்கோபம் காமராஜருக்கு வருவதற்குக் காரணம் அதுவே. பெரிய இடத்திலே மட்டுமன்றி, எல்லா மட்டங்களிலும் இலஞ்ச இலாவணம் - ஊழல் - நெளிகிறது என்ற பேச்சு எழுந்த போது கோபம் கொப்பளித்தது காங்கிரசின் கர்த்தாக்களுக்கு, மறுத்தனர், மிரட்டினர், மழுப்பினர், இறுதியாக ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுத்தாலொழிய, பொதுமக்கள் மனத்திலே மூண்டுவிட்டுள்ள அருவருப்பை நீக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். இந்தச் சமயத்தில், வேறோர் காலமாக இருப்பின் முனிபுங்கவர் ஆகியிருப்பார் என்று பலர் கருதத்தக்க முறையிலே பேசியும் உபதேசம் செய்துகொண்டும் உள்ள உள்துறை அமைச்சர் நந்தா புறப்பட்டார். இந்தியா முழுவதும் உள்ள போலீஸ் படை அவருடய கட்டளைக்குக் காத்துக் கிடக்கிறது. பரவலாக நாடெங்கும் அமைந்துள்ள காங்கிரஸ் கமிட்டிகள் உள்ளன. ஜெயப்பிரகாஷ் நாராயணன் இருக்கிறார், கட்சிகள் வேண்டாம் கிராம அரசுகள் போதும் என்று கூறிக்கொண்டு; அவருடைய ஆதரவாளர்கள் அணியும் ஒன்று இருக்கிறது வினோபா இருக்கிறார், அவருடைய சர்வோதய இயக்கம் இருக்கிறது. இத்தனை அமைப்புகளும் நந்தாவுக்குப் போதுமானதாக, ஆற்றல் கொண்டவையாகத் தோன்றவில்லை; என்ன காரணத்தினாலோ இந்த அமைப்புக்கள், இலஞ்ச ஒழிப்பு வேலையைச் செய்திட முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்படவில்லை. அத்தகைய நம்பிக்கையே இல்லாமல் அவர் எதற்காகப் போலீஸ் படையை நடாத்திச் செல்லும் பொறுப்பில் இருக்கிறார் என்பதும் புரியவில்லை. ஒளிமிகு மின்சார விளக்கு கைவசம் இருக்க, அதைக் கொண்டு செல்லாமல் மின்மினி களைப் பிடித்துக் கரத்தில் வைத்துக்கொண்டு அவை விட்டு விட்டுச் சிந்தும் ஒளியின் துணைகொண்டு இருட்டறையில் கருப்புப் பணத்தைத் தேடுகிறார் - கனம். நந்தா!! இதற்காக அவர் சாதுக்களைக் கூட்டிவைத்துப் பேசினார். சதாசர் சமிதி என்றோர் அமைப்பை நிறுவி, குற்றம் குறைகூற விரும்புவோர், வருக! என்று அழைத்தார். இரண்டே ஆண்டுகளில் இலஞ்சப் பேயை விரட்டுவேன், இல்லையேல் நான் பதவியை விட்டு விலகிப்போவேன் என்று நந்தா சபதம் எடுத்துக்கொண்டார். ஆகவே, இரண்டு ஆண்டு களுக்குள் இலஞ்சத்தை ஒழித்ததாகக் காட்டியாக வேண்டும். ஒரு புதிய அமைப்பு மூலம் இந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினால், அந்த அமைப்பும் அவருடைய ஆதீனத்துக்குக் கட்டுப்பட்டதாக இருந்தால், இரண்டாம் ஆண்டு முடிகிற நேரமாகப் பார்த்து, இலஞ்சம் வெகுவாகக் குறைந்துவிட்டது, கொடுப் பவர்களுக்கும் குலைநடுக்கம் கண்டுவிட்டது; வாங்குபவர் களுக்கும் கிலி பிடித்துவிட்டது. எடுத்த சபதத்தை நந்தா நிறைவேற்றி விட்டார்! இலஞ்சப் பேய் ஒழிந்துவிட்டது என்பதாக நாட்டுக்கு அறிவித்துவிட வழி இருக்கிறது. இதற்காகவே நந்தா திட்டமிட்டு இவ்விதம் செய்தார் என்று நான் கூறவில்லை. இவ்விதம் எண்ண இடமளிக்கிறது அவருடைய வேலை முறை என்று கூறுகிறேன். வங்கக் காங்கிரஸ் தலைவர் அட்டுல்யாகோஷுக்கு இது கட்டோடு பிடிக்கவில்லை. வேறு பல காங்கிரஸ்காரர்களுக்கும் இது பிடிக்கவில்லை. வெளிப்படையாகவே இவர்கள் பேசினர்; வெகுண் டெழுந்தார் நந்தா; சமிதியைக் குறைகூறுகிறவர்களைக் கண்டிக்கலானார். வங்கத் தலைவர் வாளாயிருக்கவில்லை; காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், இதுபற்றி விவாதிக்க வேண்டுமென்று கேட்கிறார். நந்தா கூறுகிறார், நானாக இந்தச் சமிதியை ஆரம்பிக்கவில்லை, காங்கிரஸ் தலைவர் காமராஜரின் சம்மதம் பெற்றுத்தான் ஆரம்பித்தேன் என்று. காமராஜரோ, சமிதிபற்றி எதுவுமே பேசத் தேவை இல்லை செயற்குழுவில் என்று கூறிவிட்டார். சதாசர் சமிதி அல்லது குழு இலஞ்சப் பிரச்சினையை, மிக எளிதாக, மிக விரைவாக, கடினமான எந்த முறைகளுமின்றியே தீர்த்துவிட முடியும் என்று நம்பிடும் பரிதாபத்தை "இந்து’ பத்திரிகை எடுத்துக்காட்டியிருக்கிறது. நாற்பத்து ஐந்தே நாட்களில் "சதாசர்’ தன்னிடம் கொடுக்கப் பட்ட புகார்களைத் தொகுத்து, தரம் பிரித்து, பரிசீ-த்து, முடிவுகள் எடுத்து கருத்தையும் கூறிவிட்டது! அந்தக் கருத்து என்னவென்றால், புகார்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது; புகார்களில் பெரும்பாலானவை ஆதாரமற்றவை என்பதாகும். இதன்படி பார்த்தால், இலஞ்சம் தாண்டவ மாடுவதாகச் சொல்வது தவறு என்று ஏற்படும். “இந்து’ இதழ் இந்த முறையையும் விரும்பவில்லை. இந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொருத்தமான காரணங்களையும்”இந்து’ காட்டியிருக்கிறது. சர்க்காரால் அமைக்கப்பட்ட சந்தானம் கமிட்டி, முறைப்படி, ஆராய்ந்து பார்த்து, நிர்வாகத் துறையில் மேல் மட்டத்திலிருந்து அடி மட்டங்கள் வரையில் இலஞ்ச ஊழல் இருக்கிறது என்று கூறி இருக்கிறது. மத்திய சர்க்கார் அமைத்த தனிப் போலீஸ் பிரிவு 1963-ம் ஆண்டு 4,857 புகார்களைப் பெற்றுப் பரிசீ-க்கவேண்டி வந்தது. 1957லில் 2,733 புகார்கள்! 1963லில் 4,857 என்று வளர்ந்து காட்டுகிறது. புகார்களில் அற்பமானவை, ஆதாரமற்றவை என்று தள்ளிவிடத் தக்கவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்தக் காரணங்களைக் காட்டி "இந்து’ நந்தாவின் கைவிளக்கு பயனில்லை என்பதை விளக்குகிறது. எத்தனை சமாதானம் கூறினாலும், காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும் இலஞ்சமும் வளர்ந்துவிட்டிருக்கிறது என்பதை மறைக்க முடியாது - மறுக்க முடியாது - பெரியவர்கள் மழுப்பிக் கொண்டிருக்கலாம். நிர்வாகத்திலே நெளியும் ஊழலும் இலஞ்சமும் இந்த விதம் இருக்கிறது - கருப்பஞ்சாறு பருகாதே போதை ஏறும், நிலை தடுமாறும் என்று "காச்சினது’ குடித்துவிட்டுப் பேசுவது என்பார்களே அதுபோல, இத்தனை ஊழலை வைத்துக் கொண்டே பெரிய தலைவர்கள் பேசுகிறார்கள், நாட்டை ஆளும் யோக்யதை எமக்கன்றி வேறு எவருக்கும் இல்லை என்று. .இலஞ்ச ஊழலை ஒழிக்கவேண்டுமல்லவா? துணிந்து நான் கூறுவதைச் செய்வீர்களா? முதலில், காங்கிரசின் மேல் மட்டத்தைத் துப்புரவாக்குங்கள். முடியுமா? துணிந்து செய்வீர்களா? நன்கொடை, இனாம் என்ற எந்தப் பெயராலும் தொழிலதிபர்கள், வணிகர்கள், முதலாளிகள், தொழிற்சாலை நடத்துபவர், சர்க்கரை வியாபாரிகள், டாட்டாக்கள், பிர்லாக்கள், சிங்கேனியாக்கள் போன்றாரிடம் தேர்தல் நிதி வசூ-க்க மாட்டோம் என்று ஆளுங்கட்சி திட்டவட்டமாக அறிவித்துவிட வேண்டும். இப்படிப்பட்டவர்களிடம் இருந்து வாங்கப்படும் பணம் பிரம்மாண்டமான அளவுள்ளது. இந்தப் பணம் அமைச்சர்களையும் காங்கிரஸ் அரசியல்வாதிகளையும் "ஒμ’ படுத்தவும், வியாபார சம்பந்தமாக எந்தவிதக் குறுக்கீடுகள் செய்யாமல் இருப்பதற்காகவும் தரப்படுகிறது. இந்தப் பணம், தாங்களே மனமுவந்து, தர்ம நியாயத்துக்காகவோ, தேச பக்தி காரணமாகவோ தரப்படுகிறது என்று ஒருவரும் நம்புவதில்லை. இந்தப் பணம் ஒருவிதமான இலஞ்சம்தான். பர்மிட், லைசென்சு, கோட்டா பெறுவதற்காகத் தரப்படுகிறது. ஆளுங்கட்சி துணிந்து தன்மீது உள்ள இந்தக் கறையைத் துடைத்துக்கொள்ளட்டும். பிறகு நாட்டிலே ஒரு பரிசுத்தம் ஏற்படும். நன்கொடை திரட்டுவதை நிறுத்துவதோடு, காங்கிரஸ் தலைவர்களுக்கு, ஆயிரக்கணக்கில், இலட்சக் கணக்கான ரூபாய் நோட்டுகளை மாலையாகக் கட்டிப் போடுகிறார்களே, அதை நிறுத்திவிட வேண்டும். இப்படி "நோட்டு மாலை’ போடுபவர்கள், பஸ் முதலாளிகள் அல்லது மற்ற முதலாளிகள். எதற்காகப் போடுகிறார்கள்? இந்தப் பொதுஜனத் தலைவர்களிடம் கொண்ட அன்பினால் அல்ல! ஏற்கெனவே பெற்ற சலுகைக்காக அல்லது இனிச் சலுகை பெறவேண்டும் என்பதற்காகப் போடுகிறார்கள். க்ஷேமநல சர்க்காரில், மந்திரிகளிடம், சலுகைகள் காட்டுவதற்கான அதிகாரம் மிகப் பெரிய அளவில் இருக்கிறது. இலஞ்ச ஊழலுக்கு ஆணிவேர் இதிலே தான் இருக்கிறது. வணிகர்களுக்கு, தொழிலதிபர்களுக்கு, ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர்களுக்குத் தேவைப்படும் லைசென்சு, பெர்மிட், கோட்டா ஆகியவைகள் வழங்கும் அதிகாரத்தை மந்திரிகளிடமிருந்து எடுத்துவிட வேண்டும்! அந்த அதிகாரத்தை அரசியல் கட்சிகளைச் சேராத, சுயேச்சையாக உள்ளவர்கள், தொழில் நிபுணர்கள் ஆகியோர் கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அத்தகைய குழுவில் எந்த மந்திரியும் உறுப்பினராக இருக்கக்கூடாது. அமைச்சர்களும் அதிகாரிகளும், இலஞ்ச ஊழலில் ஈடுபட்டிருப்பவர்கள், சமூக விரோதிகளாகிய கெட்ட பெயரெடுத்தவர்களுடன் குலவக்கூடாது; அவர்கள் நடத்தும் விருந்துகளில் கலந்துகொள்ளக்கூடாது. காண்ட்ராக்டர்கள், பெரிய வியாபாரிகள், பெரும் பணம் படைத்தவர்கள், பெரிய மோட்டார்கள் உடையவர்கள் இவர்கள் நடத்தும் பான விருந்து விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றில் கலந்துகொள்ளாமல் தம்மைத் தாமே தடுத்துக்கொள்வது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், அப்படிப்பட்டவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் பகிஷ்கரிப்பது சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தி வைக்கும். சர்க்கார் மாளிகை விழாக்களில் இப்போது நடப்பதுபோல கண்டவர்களை அழைக்கக்கூடாது; இப்படிப்பட்டவர்களை அத்தகைய விழாக்களுக்கு அழைக்கக்கூடாது. என்ன அண்ணா இது! ஒரே அடியாகக் காங்கிரஸ் மந்திரிகளை, எந்த அதிகாரம் அவர்களுக்கு ஜொலிப்பையும் - மிதமிஞ்சிய மதிப்பையும் தருகிறதோ அதை விட்டுவிடச் சொல்லுகிறாயே! எந்த முதலாளிகளின் நன்கொடை கொண்டு தேர்தலில் வெற்றி பெறுகிறார்களோ அந்தப் பணத்துக்கும் உலை வைக்கிறாயே! இது நடக்கக்கூடிய காரியமா? உன் பேச்சைக் கேட்பார்களா? என்றுதானே தம்பி! கேட்கிறாய்? தம்பி! அவ்வளவு பெரியவர்கள் இப்படி இப்படி நடந்தாக வேண்டும் என்று என்னால் சொல்ல முடியுமா! ஏழை சொல் அம்பலம் ஏறுமா!! எனக்கும் புரிகிறது உனக்கும் தெரிகிறது, காங்கிரஸ் அரசியல் - தேர்தல் காரியம் - எப்படி நடத்தப்பட்டு வருகிறது என்று. ஆனால், முதலாளிகளிடம் பணம் வாங்காதே! பெர்மிட் கோட்டா லைசென்சு வழங்கும் அதிகாரத்தை விட்டுவிடு! என்று சொன்னால், கேட்பார்களா!! நான் அல்ல தம்பி! இத்தகைய யோசனைகளைத் துணிந்து கூறியது. இந்தியாவின் பிரதம நீதிபதியாக இருந்தவர், மேகர்சந்த் மகாஜன் என்பவர் கூறியுள்ளது அது. நேர்மை உணர்ச்சியுடன் அஞ்சாமையும் இணைந்திருப்பவர்கள் மட்டுமே, ஆளவந்தார்கள் புருவத்தை நெரித்து, முணுமுணுத்து, பழிவாங்கத் திட்டமிடக்கூடும் என்று தெரிந்திருந்தும், உண்மையை உரைத்திடுவோம். ஊராள்வோர் கோபித்தால் கோபித்துக்கொண்டு போகட்டும், ஊரார் நிலைமையை உணர்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே இதுபோலப் பேசமுடியும் இலஞ்ச ஊழலுக்கு மூலகாரணமே உங்களிடம் இருக்கிறது. உங்களுக்கும் முதலாளிக்கும் உள்ள கொடுக்கல் - வாங்கலே, எல்லாவித ஊழலையும் உற்பத்தி செய்கிறது. இவ்விதம் துணிந்து, உண்மையைச் சொன்னவர், மகாஜன். நம் அனைவருக்கும் தெரிந்ததைத்தான் அவர் சொல்லி யிருக்கிறார்; ஆனால், நாம் சொல்லும்போது கட்சிமாச்சரியத்தால் பேசுகிறோம் என்று பொதுமக்கள் எண்ணிக் கொள்ளக்கூடும்; அல்லது பொதுமக்களிடம் ஆளவந்தார்கள் அதுபோலச் சொல்லிவிடக்கூடும். மகாஜன் ஒரு கட்சிக்காரர் அல்ல, அரசியல்வாதி அல்ல; காங்கிரஸ் அமைச்சர்கள்பற்றிக் கண்டித்துப் பேசி, அதன் மூலம் "பெயர்’ பெற்று, ஓட்டுவேட்டை ஆட நினைக்கிறவர் அல்ல. நாடு சீர்ப்பட, நிர்வாகம் தூய்மைப்பட, என்ன செய்தாக வேண்டும் என்பதுபற்றி ஆர அமர எண்ணிப்பார்த்து, விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் இருந்து பிரச்சினையை அலசிப்பார்த்து, இதனைக் கூறுகிறார். பொறுப்புமிக்க இடத்தில் இருந்தவர், பொச்சரிப்புக்கொண்ட பதவி தேடி அல்ல. ஒரு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளிடமிருந்து "இடித்துரை’ கேட்பது சகஜம்; ஆனால், பிரதம நீதிபதி எனும் மிக உன்னதமான நிலையில் இருந்தவர் - மனம் நொந்து - ஆளுங்கட்சிக்கு துணிந்து புத்திமதி கூறுவது என்றால், உள்ளபடி அது வியந்து கவனிக்கத் தக்கதாகும். எல்லை கடந்துவிட்டது, இனி நமக்கென்ன என்று நம் போன்றவர்கள் இருந்துவிடக்கூடாது, மக்களுக்கு உண்மை நிலைமையை உணர்த்தியாக வேண்டும் என்ற அக்கறையுடன் அவர் ஆளுங்கட்சியை இத்தனை பச்சையாகக் கண்டித்துள்ளார். டாட்டாக்கள், பிர்லாக்கள், சிங்கேனியாக்கள் போன்றாரிடம் பணம் பெறுவது ஒருவிதத்தில் இலஞ்சமே! என்று கூறியிருக்கிறார். எதிர்க்கட்சிகள், காங்கிரசுக்கும் முதலாளிகளுக்கும் உள்ள "பந்த பாசத்தை’ எடுத்துக்காட்டிடும்போது, கவனிக்க மறுத்திடும் போக்கினர்கூட, எந்தவிதமான அரசியல், கட்சி நோக்குமற்ற முன்னாள் பிரதம நீதிபதி, நொந்த மனத்துடன், துணிந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் போக்கை அம்பலப்படுத்தி, அந்தப் போக்கைப் போக்கிக்கொள்ளாமல், சமிதி வைத்து இலஞ்சப் பேயை ஒழிப்பேன் என்று நந்தா கூறுவது வெறும் கேலிக் கூத்தாகிப் போகும் என்று கூறியுள்ளதை அலட்சியப் படுத்த மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். தம்பி! அவர் எடுத்துரைத்தவைகளைப் பொதுமக்கள் அறியும்படிச் செய்திட வேண்டிய பொறுப்பு உன்னுடையது. உன்னால் முடியும். தேர்தலில் வெற்றிபெறப் பெரும் பணத்தை முதலாளி களிடம் பெற்றுக்கொண்டால், பணம் கொடுத்த முதலாளிகள், ஒன்றுக்குப் பத்தாக, கொள்ளை இலாபமடித்திடாமல் வேறு என்ன செய்வார்கள்! கொள்ளை இலாபம் பெற, குறுக்குவழி சென்றாகவேண்டி வருகிறது. குறுக்குவழி செல்லும்போது, சட்டம் குறுக்கிட்டாலும், அதிகாரிகள் தடுத்திட்டாலும், காங்கிரஸ் அமைச்சர்களின் நண்பர்கள் என்ற "கவசம்’ இவர்களுக்கு எந்தவிதமான தொல்லையும் ஆபத்தும் வரவிடாமல் பாதுகாப்பு அளிக்கிறது. இலஞ்சமும் ஊழலும் வளராமலிருக்க முடியுமா? பிரதம நீதிபதியாக இருந்தவரே காங்கிரஸ் ஆட்சியினரின் குட்டுகளை இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்குகிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர்களோ முடுக்குடன் பேசுகிறார்கள், எம்மைக் குறைகூற என்ன இருக்கிறது? எவருக்கு இருக்கிறது அந்தத் தகுதி என்று. தகுதிமிக்கவரும், வேதனை தாளாமல், மனத்திலுள்ளதைக் கொட்டிவிட்டார். இனியேனும் காங்கிரஸ் தலைவர்கள், சிறிதளவு அடக்க உணர்ச்சி காட்டுவார்களா? இவர் ஒரு சமயம் காங்கிரசுக்குப் பகைவரோ, பிடிக்காதோ காங்கிரஸ் தலைவர்களை என்று எவரும் எண்ணத் தேவை யில்லை. தம்பி! அவருடைய கட்டுரையில் துவக்கத்திலேயே, நேரு பண்டிதரையும் இன்றைய காங்கிரஸ் தலைவர் காமராஜரையும் பாராட்டியிருக்கிறார். ஆகவே, அவருடைய பலத்த கண்டனத்துக்குக் காரணம், வெறுப்பு அல்ல, பொச்சரிப்பு அல்ல, கட்சி மாச்சரியம் அல்ல, பதவி பிடிக்கும் நோக்கம் அல்ல, உள்ளத்தில் தோன்றியதை அச்சம் தயை தாட்சணியமின்றிக் கூறியிருக்கிறார். என்னென்ன இன்னலை ஏற்றுக்கொள்கிறார்கள் இந்தத் தூயவர்கள் என்று நாட்டின் நல்லவர்கள், காங்சிரசாரைப் பாராட்டிய காலத்தோடு, என்னென்ன ஊழல் இவர்கள் ஆட்சியில், பதவி பெற என்னென்ன தந்திரம் செய்கிறார்கள், எவரெவரிடமிருந்து எத்தனை எத்தனை பணம் பெறுகிறார்கள், பெற்ற பணத்துக்காக என்னென்ன சலுகைகளைக் காட்டுகிறார்கள் முதலாளிகளுக்கு, சலுகைகளைப் பெற்றுக்கொண்டு அந்த முதலாளிகள் என்னென்ன விதமான முந்திரா வேலைகளைச் செய்கிறார்கள், ஊழலை வளரச் செய்துவிட்டு, சொந்த நலனைப் பெருக்கிக் கொண்டு சொகுசாக வாழ்கிறார்களே, இந்தக் காங்கிரஸ்காரர்கள் என்று பரவலாக எங்கும் பேசப்படும் இந்தக் காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சே! நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாமா என்று தோன்றும் நல்ல காங்கிரஸ்காரர் அனைவருக்கும். ஆனால், தம்பி! அவர்கள், நாட்டுக்கு உண்மையை எடுத்துச் சொல்லும் நம்முடைய நாவினை அல்லவா வெட்டிவிடத் திட்டமிடுகிறார்கள். எனக்கு ஒரு மகிழ்ச்சி தம்பி! காங்கிரசார் கையாளும் கேடான முறைகளை, அரசியல்வாதிகள் கண்டிப்பதுடன் முடிந்துவிடவில்லை, அரசியலுக்கு அப்பாற்பட்ட அறிவாளரும் கண்டிக்க முன்வந்துவிட்டார்கள்; அவர்கள் பேச்சு, மக்களிடையே தெளிவை நிச்சயம் உண்டாக்கும். நாம் இதுகாறும் கூறிக்கொண்டு வந்தவைகளை, நாட்டிலே மிகத் தூய்மையான துறையில் மிகப்பெரிய நிலையிலே இருந்து வந்தவரும் கூறுகிறார், நம்மைவிடத் திட்டவட்டமாக என்பதைக் காணும்போது, நாம் நடாத்தி வரும் பணி நியாயமானது, தேவையானது, தூய்மையானது என்பதிலே மேலும் நம்பிக்கை வளரத்தான் செய்கிறது. எனவே நமது பணி தொடர்ந்து நடைபெற ஆர்வம் அதிகமாகிறது. காந்திமகான் சீடர் இவர் கனதனவான்களுடன் கூடி, நாடு ஆளும் ஆசையினால் நச்சரவை வளர்க்கின்றார், அரவு அது தீண்டுவதால் துடிக்கின்றார் ஏழையரும், துயர் துடைத்துத் தூய்மை காணத் தொடர்ந்து நடத்திடுவோம் நமது பணி. என்று கூறிடத் தோன்றுகிறது. உனக்கு என்ன தோன்றுகிறது, தம்பி! அன்புள்ள அண்ணாதுரை 23-8-1964 என்னை வாழவிடு! விலைகளைக் கட்டுப்படுத்து! இரட்சா பந்தன நாளில் இலால்பகதூரிடம் தாய்க்குலம் விடுத்த வேண்டுகோள். செஸ்டர் பவுல் கூற்றின் பொருள். ஐந்தாண்டுத் திட்டங்கள் பயன் தராமைக்குக் காரணங்கள் விஷச் சக்கரச் சுழற்சி. தம்பி! தாய்க்குலத்தின் தனித்திறமையிலே எனக்கு எப்போதுமே தளராத நம்பிக்கை உண்டு; அந்த நம்பிக்கை மேலும் வளரத்தக்க விதத்திலே ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது; மன நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தத்தக்க நிகழ்ச்சி அது. இந்தக் கிழமை, வடக்கே உள்ளவர்கள் ஒரு நோன்பு கொண்டாடுகின்றனர்; அதனை ரட்சாபந்தன தினம் என்கிறார்கள் - நோன்பிருந்து கங்கணம் கட்டிக்கொள்வது. இந்தத் திருநாளைக் கொண்டாடும் தாய்மார்கள், டில்லிப் பட்டணத்தில் லால் பகதூர் அவர்களைக் கண்டு தமது வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் கூறிவிட்டு, அங்கு உள்ள முறைப்படி ஒரு ரட்சையை - நோன்புக் கயிறு - அவருடைய கரத்தில் கட்டினார்கள், மரியாதை செலுத்தவும் அன்பு தெரிவிக்கவும் மேற் கொள்ளப்படும் இந்த நிகழ்ச்சியை, தாய்மார்கள் மெத்த அறிவுக் கூர்மையுடன், இன்று நாட்டின் நாயகர் எதனை மேற்கொள்ள வேண்டும் உடனடியாக என்பதனைச் சுட்டிக் காட்டிட ஒரு நல்வாய்ப்பாக்கிக்கொண்டு, “அண்ணா! இந்தத் திருநாளில் எமக்கொரு பரிசு தரவேண்டும்’’ என்று கேட்டனராம்;”என்ன வேண்டுமம்மா?’’ என்று கேட்ட லால்பகதூரிடம் அந்தத் தாய்மார்கள், எமது குடும்பங்களுக்கு அடிப்படையாகத் தேவைப்படும் வசதிகளைச் செவ்வனே செய்து கொடுக்க, உணவு, உடை, கல்வி ஆகியவற்றைப் பெற்று வாழ்வினை நடாத்த, தாங்கள் உடனடியாக ஒன்று செய்ய வேண்டும்; என்னவெனில், பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். கள்ளச் சந்தையை ஒடுக்க வேண்டும். கலப்படத்தைப் போக்க வேண்டும். என்று கூறினராம்! குற்றுயிராகக் கிடக்கும் கணவன் பிழைத்தெழ வேண்டும் என்பதற்காக, கசியும் கண்களுடன் மருத்துவரின் தாள் தொட்டுக் கும்பிட்டபடிக் கேட்பதுண்டல்லவா, “எனக்கு மாங்கல்யப் பிச்சை தாருங்கள்’’ என்று, அதுபோலவும், பெற்றெடுத்த குழந்தைக்குப் பேராபத்து ஏற்பட்டது கண்டு, மருத்துவரிடம் சென்று,”என் குலவிளக்கு அணையாதிருக்க வழி கூறுங்கள்.’’ "என் குலக்கொடி பட்டுப்போகாதிருக்க ஒரு மார்க்கம் காட்டுங்கள்’’ என்று கெஞ்சி நின்றிடும் முறையிலும், இந்தத் தாய்மார்கள், எமது குடும்பம் சிதையாதிருக்க, எமக்கு வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைத்திடச் செய்யுங்கள் என்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள லால்பகதூரிடம் கேட்டு நின்றனர். லால்பகதூர் ஏழைக்குடியில் பிறந்தவர், வாழ்க்கை இன்னல்களை நன்கு உணர்ந்தவர். வாழ்க்கை இன்னல்களை ஏற்றுக்கொள்ளும் துணிவற்று, குடும்பம் என்பதே பெரியதோர் சுமை, இதனைத் தாங்கிட நம்மால் ஆகாது என்று ஒதுங்கி விடாமல், ஒண்டிக்கட்டையுமாகிவிடாமல் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும், அதனை நடத்தி வருபவர். எனவே அவருக்கு, ஏழை, நடுத்தர வகுப்பினர் ஆகியோரின் இன்னல்கள் பற்றி நன்கு தெரிந்திருக்க நியாயம் இருக்கிறது. எனவே, "அண்ணா! எமக்கு உணவு, உடை இவைகளேனும் கிடைத்திடச் செய்திடுவீர்!’’ என்று அந்தத் தாய்மார்கள் கேட்டு நின்றது கண்டபோது அவருடைய கண்களில் நீர் துளித்திருக்கும், மாடுமனை கேட்கவில்லை. ஆடை அணி கேட்கவில்லை. ஆடம்பரப் பொருள் கேட்கவில்லை. உணவு - உடை - குடும்பம் நடாத்திச் செல்ல வழி, இவைகளையே கேட்டனர் அந்த மாதர்கள். அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் - நாலாவது ஐந்தாண்டுத் திட்டம் - இருபத்து இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவிடப் போகிறார்கள் சர்க்கார் - நாட்டை வளப்படுத்த. செல்வம் கொழித்திடும் நிலை காண! தெரியுமா, தம்பி! 22,000 கோடி ரூபாய். இந்த நிலையின்போது, அந்தத் தாய்மார்கள் கேட்டிருப்பது, உணவு, உடை இவையே. என்ன அதன் பொருள்? ஆண்டு பதினேழு ஆகியும், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களைக் காட்டிய பிறகும், எல்லோருக்கும் உணவு கிடைத்துவிட்டது, உடை இருக்கிறது, உறையுள் இருக்கிறது என்று கூறிடத்தக்க நிலை நாட்டிலே இல்லை. இதனை மறந்த ஒரு தலைவர் இருக்கிறார். அவர் அரசோச்சும் நிலைபெற்றும் இருக்கிறார், அவரிடம் சென்று முறையிடுவோம் என்று தோன்றிற்று அந்தத் தாய்மார்களுக்கு என்பதன்றோ பொருள். பாலுந்தேனும் கலந்தோடும்! சுயராஜ்யம் சுகராஜ்யமாக இருக்கும்! தனியொருவனுக்கு உணவில்லை எனும் முறை ஒழிந்திடும்! என்றெல்லாம் காங்கிரசார் எழுப்பிய முழக்கமதைச் செவிமடுத்திருப்பாரன்றோ, இந்தத் தாய்மார்கள். அஃதேபோல் நடந்திடும், நாடு சீர்படும், வாழ்வு வளம்பெறும் என்று எதிர் பார்த்திருக்கிறார்கள். அவசரப்படேல்! என்றனர், ஆமென்றனர் தாய்மார்கள், வித்திடுகிறோம் என்றனர் ஆட்சியினர், முளை காணத் துடித்தனர் தாய்மார்கள்; கதிர் ஒருமுழம் காணீர்! என்றனர் நாட்டின் காவலர், களிநடமிடுவோம் என்றனர் மாதர்கள்; பசிப்பிணி ஒழிந்திடும், வறுமை ஒழிந்திடும் என்று கருதினர். ஆனால் மேலும் மேலும் அறுவடை நடந்தது; நிரம்பி நிரம்பி வழிந்தது களஞ்சியம், ஏழை எளியோர் குடிலில் அல்ல, எத்தர்கள் கட்டிய சூதுக் கோட்டைகளில். வயலின் பசுமை, தொழிலின் மாண்பு என்பவை பொன்னாகிப் பொருளாகிப் பருகுவனவாகிப் பூசுவனவாகி உடுப்பனவாகி உல்லாசமுமாகி, உப்பரிகை வாழ்வோரிடம் சென்று சிறைப்பட்டிடவே, ஏழையர் வறியராயினர், ஏக்கமே அவர்கள் கண்டு பெற்றது. இந்நிலை இவராட்சியின்போது ஏற்பட்டுவிட்டதனை எத்தனை பக்குவமாகச் சுட்டிக்காட்டுகின்றனர் தாய்மார்கள், எமக்கொரு வரம்தாரும்! உயிர் இருந்திட வழி கூறும்!! என்று. எவரும் மலைத்து நிற்பர் இந்நாட்டில் இந்தப் பதினேழு ஆண்டுகளாகக் கொட்டப்பட்ட பணத்தின் அளவினை அறிந்திடும்போது - எனினும், அத்தனையும் தமக்குப் பயன்படாமல் எங்கெங்கோ சென்றுவிட்டதை உணரும்போது, உள்ளம் நொந்திடத்தானே செய்யும்? அந்நிலை பெற்றவரெனின் அரிவையர், இடித்துரைப்போர் பலர் உளர், நாம் இவர் இதயம் தொட்டிடும் இனிய முறையில் நாடு உள்ள நிலையைக் கூறுவோம் என்று கருதி - மெல்லியலாரன்றோ மாதர் - நோன்புக் கயிறு கட்டிவிட்டு, லால்பகதூரிடம் கேட்டிருக்கிறார்கள், விலைகளைக் கட்டுப்படுத்துக கள்ளச் சந்தையை ஒழித்திடுக கலப்படத்தை ஒழித்திடுக! என்று. ஆண்டு பதினேழு ஆகியும் இந்த மூன்று அடிப்படை களையும் செய்திடக் காணோமே, நாங்கள் எங்ஙனம் குடும்பம் நடாத்துவது? உண்ணும் பொருளில் மண் கலந்து உள்ளதை மறைத்து விலை ஏற்றி, அளப்பதில் நிறுப்பதில் அநியாயம் செய்து எமை அலைக்கழிக்கின்றார் அறமறியார். அரசு முறை அறிந்தவரே! ஏழையின் துயர் ஈதெனத் தெரிந்தவரே! விலைகளைக் கட்டுப்படுத்தி, கள்ளச் சந்தையை அழித்து, கலப்படத்தை ஒழித்து எமைக் காத்திடுவீர் என்று கேட்டனர் அக் காரிகையர். பக்ராநங்கல் பாரீர்! தாமோதர் திட்டம் காணீர்! சித்தரஞ்சனின் சிறப்பறிவீர்! பிலாய் ரூர்கேலா பெருமை காணீர்!! என்றெல்லாம் சொல்லிச் சொல்லிப் பதினேழாண்டுகள் ஓட்டியாகிவிட்டது, இனியும் ஒட்டிய வயிற்றினருக்கு இந்தப் பட்டியல் அளித்திடுதல் புண்ணிலே புளித்ததைத் தெளித்திடுவது போன்ற செயலாகும். எமக்கு வாழ வழி செய்து காட்டுங்கள்! இந்த நன்னாளில் எமது வேண்டுகோள் இதுவே! உணவு! உடை! பிள்ளை குட்டிகள் பிழைத்திருந்து படித்திட வசதி! இவை போதும், இவற்றினை எமக்கு அளித்திடுக! - என்று கேட்டுள்ளனர். இம்மட்டோடு விட்டார்களில்லை மாதர்கள். லால்பகதூரின் கரத்திலே அவர்கள், உடன்பிறப்பாளர் எனும் பரிவுணர்ச்சியுடன் கட்டிய "ரட்சை’ இருக்கிறதே, அது புதுவிதமானதாம்! அந்த ரட்சையில் ஒரு குழந்தையின் படம் பொறிக்கப்பட்டிருக்கிறதாம்! அந்தப் படத்திலே என்னை வாழவிடு! விலைகளைக் கட்டுப்படுத்து என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாம்! நிச்சயமாக லால்பகதூரின் நெஞ்சம் நெகிழ்ந்துதான் இருக்கும். படிப்போருக்கே நெகிழ்கிறதே. முதலாளிகள் கேட்கிறார்கள் லால்பகதூரை; புதிய புதிய யந்திரங்கள் வாங்கிட அன்னியச் செலாவணி உரிமை கொடுங்கள் என்று. தொழிலதிபர்கள் கேட்கின்றனர், எமக்குக் கடன் கொடுங்கள், வட்டியின்றி அல்லது மிகக் குறைந்த விகிதத்தில் என்று. குழந்தை கேட்கிறது, என்னை வாழவிடு! விலைகளைக் கட்டுப்படுத்து!! என்று. புதிய மாளிகை கட்ட இரும்புக் கம்பங்களும் "டன் டன்னாகச்’ சிமிட்டியும் தருக, உடனே - என்று கேட்டிடும் பணம் படைத்தான்கள் உளர் - லால் பகதூர் கண்டதுண்டு, சென்ற ஆண்டு கிடைத்ததைவிட இவ்வாண்டு கிடைத்த இலாபம் குறைவாக இருக்கிறது; இந்த நஷ்டத்தால் மெத்தக் கஷ்டப்படும் எமக்கு, வரியில் சலுகை செய்தளியுங்கள்; நாங்கள் செல்வத்தைப் பெருக்கிடும் சேவையில் ஈடுபட்டு இருப்பவர்கள் என்று கேட்டிடும் சீமான்கள் உள்ளனர்; லால்பகதூர் பார்த்திருக்கிறார். ஒரு பச்சிளங் குழந்தை என்னை வாழவிடு! விலையைக் கட்டுப்படுத்து!! என்று கேட்டிடும் காட்சியை அவர் கண்டதில்லை; காண்கிறார்; காணச் செய்தனர் தாய்மார்கள். எத்தனை உள்ளம் உருக்கும் நிகழ்ச்சி இது. ஆட்சிப் பொறுப்பில் உள்ளோர், காணக் கூசிடத் தக்கதோர் நிலை நாட்டிலே நெளிகிறது என்பதைக் காட்டிடவன்றோ, குழந்தையின் படம் பதித்த "ரட்சை’யைக் கட்டினார்கள் தாய்மார்கள். விலைவாசி விஷமென ஏறியபடி இருப்பது, எத்தகைய விபரீதமானது, என்னென்ன கொடுமைகளுக்கு வழி செய்திடக் கூடியது என்பதனை விளக்கிட, அஃது எதிர்காலத்தையே ஆபத்தானதாக்கத்தக்கது என்பதனை எடுத்துக்காட்ட, ஒரு குழந்தை, நான் வாழவேண்டும், நான் வாழவேண்டுமானால் என்னை வளரச் செய்திட என் குடும்பம் வழி பெறவேண்டும், அந்த வழி கிடைக்கவேண்டுமானால், விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றெல்லாம் கூறிடுவதுபோல, என்னை வாழவிடு விலைகளைக் கட்டுப்படுத்து என்று கேட்டுக்கொள்வதாக வாசகத்தைப் பொறித் தளித்துள்ளனர். கட்டி முடித்த தொழிற்கூடங்கள், அமைத்தாகிவிட்ட தேக்கங்கள், உருண்டு ஒலி கிளப்பும் யந்திரச் சாலைகள் எனும் இவைகளைப் படம் போட்டுக் காட்டித்தான் என்ன பலன், இந்தக் குழந்தையின் படம் கண்வழிச் செல்லாமலேயே எவர் நெஞ்சிலும் சென்று பதிந்துவிடுகிறதே! உள்ளத்தை உருக்கி விடுகிறதே!! தாயைத்தான் தேடுகிறேன் என்று புலம்பிடும் குழவியைக் காட்டிலும், உள்ளத்தை உருகச் செய்திடக்கூடிய காட்சி இருந்திட முடியாது என்று இது நாள்வரை நான் எண்ணிக் கொண்டிருந்தேன், தம்பி! இந்தக் காட்சி இருக்கிறதே - படமாக மட்டுமே உளது எனினும் - அதனையும் மிஞ்சுவதாக உளது. நான் பிழைப்பதும் மடிவதும், ஆட்சிப் பொறுப்பின் முதல்வரே! உமது கரத்தில் இருக்கிறது. என்ன செய்து என்னை வாழ வைத்திடுவது என்று எண்ணி வாட்டம் கொள்ளவேண்டாம், நானே சொல்கிறேன் தக்க வழிதனை; விலைகளைக் கட்டுப்படுத்துங்கள், நான் பிழைத்துக்கொள்வேன் என்றன்றோ குழந்தை கூறுவதாகத் தெரிகிறது "ரட்சை’யில் பொறித்துள்ள வாசகத்தைப் பொருள் பிரித்துப் பார்த்திடும்போது. எந்த ஒரு ஆட்சியும் இந்த நிலை வந்துளது என்பதனைக் கண்டு கண் கசியாதிருந்திட முடியாது. அதிலும் குடும்பம் நடாத்தி, ஆங்குக் குமுறலும் கொதிப்பும், பசித் தீயினால் பதைப்பும், பிணிக் கொடுமையால் வேதனையும் கிளம்பிடுவதைக் கண்டு மனக் கலக்கம் கொண்ட பழக்கம் பெற்றுள்ள எவருக்கும் கண் கசிந்திடாதிருந்திட முடியாது. இல்லை! இல்லை! மிகைப்படுத்திக் கூறுகிறார்கள்; உணவு நிலைமை அப்படியொன்றும் மோசமாக இல்லை, விலைகள் ஓரளவு ஏறி இருக்கிறது என்றாலும், பெரிய நெருக்கடி ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்று இங்கு நாட்டின் நாயகர்கள் பேசுகின்றனர் - எதிர்ப்புக் குரலையும் ஏக்கப் பேச்சினையும் மறுத்திடவும் மறைத்திடவும். இலண்டனில் உள்ள இதழ் - இந்திய சர்க்காரிடம் ஆதரவு காட்டும் இதழ் - எழுதுகிறது. சீனப்படையெடுப்பின்போது எத்தகைய நெருக்கடி நிலை இருந்ததோ, அதுபோன்றதோர் நெருக்கடி நிலைமை உணவு முனையிலே இன்று இந்தியாவில் ஏற்பட்டு விட்டிருக்கிறது என்று. இதனையும் லால்பகதூரின் அரசு மறுத்திடும்; ஆனால், வார்த்தைகள் மறுப்புரைக்குமே தவிர, இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதனைக் காட்டுகின்றன? நெருக்கடி நிலை இல்லாமலா, கோதுமை! கோதுமை! மேலும் மேலும் கோதுமை! அரிசி! அரிசி! மேலும் சிறிதளவு அரிசி! என்ற "கோஷமிட்டபடி’ இந்தியத் தூதரக அலுவலர்களும் துரைத்தன மேலதிகாரிகளும் பல்வேறு நாடுகள் சென்றபடி உள்ளனர். கேட்டோம், தருகிறார்கள்! வருகிறது உணவுப் பண்டம் கப்பல் கப்பலாக! என்று துரைத்தனம் அறிவிப்பது எதற்காக? அச்சம் கொள்ளாதீர், கவலை காட்டாதீர் என்று கேட்டுக்கொள்ளவன்றோ. உணவு உற்பத்தி பெருகி வருகிறது! விளைச்சலின் தரம் மிகுந்திருக்கிறது என்று முன்பு பேசிய பேச்செல்லாம் பொய்த்துப் போச்சே. எத்தனை காலத்துக்கு உணவுப் பொருளுக்காக வெளிநாட்டை நம்பிக்கிடப்பது - வேதனையாக இருக்கிறது - வெட்கமாகக்கூட இருக்கிறது - இனி அந்தப் பழக்கத்தை விட்டொழிக்கத் திட்டமிட்டுவிட்டோம் - வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருளை வாங்கமாட்டோம் என்று முழக்கிய உறுதி மொழிகள் உயிரற்றனவாகிவிட்டனவே. இப்போது அமெரிக்கா அனுப்புகிறது; பாகிஸ்தான் விற்றிருக்கிறது; தாய்லாந்துக்கு ஆட்கள் போகிறார்கள் அரிசி வாங்க என்று செய்திகளைச் சர்க்காரே தந்தபடி உள்ளனர். ஒரு பெரிய பஞ்சம், பெருவெள்ளம் அல்லது மழையே பொய்யாத நிலை, நிலநடுக்கம் எனும் ஏதேனும் ஓர் இயற்கைக் கோளாறு ஏற்பட்டு, ஒரு நாடு சோற்றுக்குத் திண்டாடும்போதும், பெரும்போரிலே சிக்கி வயல்களின் பசுமை காய்ந்து போய்விடும் போதும் வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களைக் கேட்டுப் பெறுவது முறை, நியாயம். ஆனால், அவ்விதமான இயற்கைக் கேடுகளோ, மூட்டிவிடப்பட்ட போரோ ஏதுமின்றியே, நாம், உணவுப் பொருளுக்காக, அமெரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து எனும் பல நாடுகளிடம் தஞ்சம் அடைகிறபோது, உதவி பெறுகிறபோது, இங்கு இந்த நிலைமை ஏற்படக் காரணமாக இருந்த அரசிடம் மதிப்பா பிறந்திடும்? அனுப்புகிறார்கள் உணவுப்பொருள். . . ஆனால், அவைகளை அனுப்பும்போது எத்தகைய கேலிப் புன்னகை எழுந்ததோ யார் கண்டார்கள்! அமெரிக்கத் தூதுவர் செஸ்டர் பவுல்ஸ் கூறுகிறார், "இப்போது நாங்கள் அனுப்பத் திட்டமிட்டிருப்பது நாற்பது இலட்சம் டன் கோதுமை, 300,000 டன் அரிசி. இதுவரை நாங்கள் அனுப்பியிருப்பது 230 இலட்சம் டன் உணவுப் பொருள்’’ என்கிறார். படிக்கும்போது இந்தச் செய்தி பாகெனவா இனிக்கும்? இன்று நேற்றல்ல, நெடுநாட்களாக உங்களுக்கு நாங்கள் உணவுப் பொருளை அனுப்பியபடி இருக்கிறோம் என்று சுட்டிக் காட்டுவது - குத்தலுக்காக அல்ல என்றே வைத்துக்கொள்வோம் - பொருளற்றதா? இப்படி உணவுப்பண்டத்துக்கே திண்டாடுகிறீர்களே! இத்தனைக்கும் விவசாய நாடு என்கிறீர்கள், கிராமங்களே முதுகெலும்பு என்கிறீர்கள், புதிய தேக்கங்கள் கட்டியிருக்கிறீர்கள், அணைகள் பலபல என்று பட்டியல் காட்டுகிறீர்கள், நவீன விஞ்ஞான முறை எனப் பேசுகிறீர்கள், ஜப்பானிய முறை என்கிறீர்கள், சத்து உரம் என்கிறீர்கள், மின்சார இறைப்பு என்கிறீர்கள், சமுதாய நலத் திட்டமென்கிறீர்கள், கூட்டுறவு என்கிறீர்கள், நிலச்சீர்திருத்தச் சட்டம் என்கிறீர்கள், பொறுக்கு விதை, பொலிகாளை, எருக்குழி, மண் அரிப்புத் தடுப்பு என்று பலப்பல பேசுகிறீர்கள், என்றாலும் இந்த ஆண்டுகளில் நாங்கள் டன்களை உங்களுக்கு அனுப்பி இருக்கிறோமே, என்ன ஆயிற்று உங்கள் திட்டங்கள்? என்ன கதியாகிவிட்டது கொட்டிய ஆயிரமாயிரம் கோடிகள் - என்றெல்லாம் செஸ்டர் பவுல்ஸ் கேட்கிறார் என்றல்லவா பொருள்! சுதந்திர தின விழாவன்று கிடைத்திடும் பொற்பதக்கமா இது? பொறுப்பிலுள்ளவர்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும், போய்ச் சேர்ந்ததுகள் அல்ல! தம்பி! அமெரிக்கத் தூதர் சொல்கிறார், எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம் உணவுப் பொருள். எம்மிடம் தயாராக இருக்கிறது. ஏற்றிச் செல்லும் கப்பல்களும் உள்ளன, தேவைக்கு அதிகமாகவே. ஆனால் நாங்கள் ஏற்றி அனுப்பும் பொருளை இறக்கி எடுத்திட முடியவில்லையே இந்திய சர்க்காரால், நாங்கள் என்ன செய்ய என்று கேட்கிறார். ஆமாம் என்கிறார்கள் லால்பகதூர்கள்; அப்படியானால். . . . . என்று கேட்கிறார் செஸ்டர் பவுல்ஸ். துறைமுகத்தில் பண்டங்களை இறக்க. . . . என்று இழுத்துப் பேசுகிறது இந்தியப் பேரரசு. அதற்கான வழிமுறை கூற, உடனிருந்து உதவ நிபுணர்களையும் அமெரிக்காவிலிருந்து தருவிக்கிறேன் என்று கூறுகிறார் செஸ்டர் பவுல்ஸ். தம்பி! ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன் - அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள் இங்கு வருவதை நான் குறை கூறவில்லை - அதுவும் இல்லையென்றால் உணவு நெருக்கடி பேராபத்தை மூட்டிவிடும். இந்நிலையில், உணவுப் பொருளை இனாமாகவோ, கடனுக்கோ, பண்ட மாற்றுக்கோ பணம் பெற்றுக்கொண்டோ கொடுத்துதவுவோர் பலப்பல இலட்சக்கணக்கானவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறவர்கள் ஆகிறார்கள் - அனைவரின் நன்றிக்கும் உரித்தானவர்களாகிறார்கள்; இதனை நான் மறந்திடவுமில்லை, மறுத்திடவுமில்லை; ஆனால், 17 ஆண்டு ஆட்சி நடாத்திய பிறகு. இந்த நிலையைத்தானா நாடு பெற வேண்டும், காங்கிரசின் மூலம் என்று கேட்கிறேன். தம்பி! ரேவுத் துறையிலே மூட்டைகளை எப்படி, விரைவாக, இலகுவாக இறக்குவது என்பதற்கு அமெரிக்க நிபுணர்கள் வருகிறார்கள் என்று கூறினேனல்லவா! வருகிற நிபுணர்கள் இந்தத் துறைக்காக மட்டுமல்ல, என்னென்ன துறைகளுக்கு, நிபுணர்கள் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்தபடி இருக்கிறார்கள், சொல்லவா! கேலிக்காக அல்ல, நாடும், அதற்கு அமைந்துள்ள ஆட்சி முறையும் இருக்கிற இலட்சணத்தைத் தெரிந்துகொள்ளச் செய்வதற்காக. விவசாயிகளுக்குக் கட்டுபடியாகக்கூடிய விலையைக் கண்டறிந்து நிர்ணயம் செய்ய அமெரிக்காவிலிருந்து ஒரு நிபுணர் குழு வருகிறது; தாங்களாக அல்ல; சர்க்காரின் விசேஷ அழைப்பின் பேரில். மண் வளம் பெருக்க, பாசன முறையைத் தரமானதாக்க, வடிகால் பிரச்சினையை விளக்கிட, ஒரு நிபுணர் குழு - அமெரிக்காவிலிருந்து; பயிர் கெடுக்கும் பூச்சிகளை அழித்திட, பூச்சி மருந்தை விமான மூலம் தெளித்திட, முறைகூற, உடனிருந்து உதவி செய்ய ஒரு அமெரிக்க நிபுணர் குழு வருகிறது. புதிய பண்ணைகள் அமைத்திடத் திட்டம் தயாரிக்க ஒரு குழு. இங்கு நிறைவேற்றப்பட்ட நிலச் சீர்திருத்த சட்டத்தின் பலன்களைக் கண்டறிய ஒரு குழு. தம்பி! எனக்கே சலிப்பாக இருக்கிறது, முழுப் பட்டியலைக் கூற. ஒன்றை மட்டும் கூறிவிடுகிறேன் - பொருளும் திட்டமும், நிபுணர்களும் மட்டும் அல்ல, ஆயிரம் பொலிகாளைகள் கூட வருகின்றன அமெரிக்காவிலிருந்து. உணவு முனையில் இதுவரை துரைத்தனம் மேற்கொண்ட முறைகளும் திட்டங்களும் எந்த அளவு பலனற்று, பாழ்பட்டுப் போயிருந்தால், இந்த அளவுக்கு அமெரிக்க உதவி நமக்குத் தேவைப்பட்டிருக்கும் என்பதை மட்டும், எதற்கெடுத்தாலும் எரிச்சல் கொள்பவர்களை விட்டுவிட்டு, "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’ என்ற பண்பறிந்தவர்களிடம் மட்டுமாவது கேட்டுப்பார். திட்டமிடுகிறார்கள், தெளிவில்லை; ஆயிரமாயிரம் கோடிகளை அள்ளி வீசுகிறார்கள், ஓரவஞ்சனை நடக்கிறது, ஒழுங்கீனம் இருக்கிறது, ஊழல் மலிந்திருக்கிறது என்று நம்மைப் போன்றவர்கள் கூறியபோதெல்லாம், காங்கிரஸ் துரைமார்கள், கனைத்தனர், கண் சிமிட்டினர், காகிதத்தில் எழுதப்பட்டிருந்த புள்ளி விவரங்களைப் படித்துக்காட்டினர், நமக்குப் பொருளாதார அறிவு போதுமான அளவுக்கு இல்லை என்று நையாண்டி செய்தனர் - நினைவிலிருக்கிறதல்லவா? இப்போது காங்கிரஸ் அரசில், மேல் மட்டத்திலேயே ஆராய்ச்சி நடத்துகிறார்கள், திட்டங்கள் ஏன் போதுமான பலன் தரவில்லை என்பதுபற்றி, காங்கிரஸ் தலைவர்களிலே சிலர், திட்டம் தீட்டியதிலே தவறு இல்லை, அதை நிறைவேற்றிய முறையிலேதான் கோளாறு வந்துவிட்டது என்கின்றனர். திட்டக் குழுவின் துணைத் தலைவரான அசோக் மேத்தாவோ, இல்லை! இல்லை! நிறைவேற்றிய முறைகளிலே மட்டுமல்ல, திட்டங்களிலேயே கோளாறு இருக்கிறது என்று கூறுகிறார். தொழில் மந்திரியாக உள்ள சஞ்சீவய்யா, "திட்டங்களினால் ஏன் தக்க பலன் கிடைக்கவில்லை என்பதைக் கண்டறிய வேண்டும். நாம் இதுவரை, திட்டங்கள் வெற்றிபெற, பணம் வேண்டும், மூலப்பொருள் வேண்டும் என்பது பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருந்துவிட்டோம்; ஏமாந்துவிட்டோம்; திட்டங்கள் வெற்றிபெற மக்களிடம் இலட்சிய ஆர்வம் எழ வேண்டும் - வயலில் உழைப்பவன், தொழிற்சாலையில் வேலை செய்பவன் எனும் எவருக்கும் திட்டம் வெற்றிபெற நான் பாடுபடுவேன், திட்டத்துக்காக நான் உழைத்தால், எனக்கு இன்னின்னது கிடைத்தாலும் என் வாழ்க்கை வளமாகும் என்ற நம்பிக்கை எழவேண்டும், அவ்விதமான ஆர்வம் வேண்டும். அவ்விதமான ஆர்வம் எழத்தக்க விதமாகத் திட்டங்களின் விளைவுகள் இருந்திட வேண்டும். அது இல்லாததால்தான், திட்டங்கள் மூலமாகக் கிடைக்கவேண்டிய பலன் கிடைக்க வில்லை’’ என்று பேசுகிறார். திட்ட அமைச்சராக இருந்த நந்தா அவர்களோ, திட்டத்திலே தவறு இல்லை. முறைகளிலே குறை இல்லை, சத்தியம் கெட்டுவிட்டது. இதோ அழைக்கிறேன் சாதுக்களை, அவர்கள் அதர்மத்தை அழித்தொழித்துத் தர்மத்தை நிலை நாட்டுவர் என்று உபதேசிக்கிறார். லால்பகதூர், நிலைமைகளைக் கவனித்த பிறகு, சரி சரி, பெரிய பெரிய தொழில்களிலே போய்ச் சிக்கிக்கொள்ள வேண்டாம்; இனி, திட்டத்தில் உடனடியான பலன் தரத்தக்க, மக்களின் அன்றாடத் தேவைப் பொருள்களைப் பெற்றுத் தரத்தக்கவைகளிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார். திட்டத்துக்காகவோ பெரும் பொருள் செலவாகிவிட்டது; வெளிநாடுகளில் பெரிய அளவு கடன் வாங்கியாகிவிட்டது; மக்கள் மீது தாங்க முடியாது வரிச் சுமையை ஏற்றியாகிவிட்டது; விளம்பரமோ அமோகமாகச் செய்தாகிவிட்டது; விழாக்களோ ஆடம்பரமாக! கடைசியில் உட்கார்ந்து பேசுகிறார்கள் ஒவ்வொருவராக, முடிவிலே நாட்டுக்குத் தெரிவிக்கிறார்கள், திட்டம் போதுமான, எதிர்பார்த்த பலன் தரவில்லை, எனவே, இனித் திட்டமிடுவதிலும், திட்டத்தை நிறைவேற்றுவதிலும் ஒரு மாற்றம் செய்யப்போகிறோம் என்று. திட்டங்களின் மூலமாகக் கிடைக்கவேண்டியவைகள் கிடைக்காது போன நிலையில் வெறும் பணம் மட்டும் தண்ணீர் பட்ட பாடு என்பார்களே, அதுபோலப் புரள ஆரம்பித்ததால், விலைகள் ஏறின. விசாரம் வளர்ந்தது; விலைகள் ஏறவே கூ- உயர்ந்தது; கூ- உயரக் கண்டதும் விலையை மீண்டும் ஏற்றினர்; விலை மேலும் ஏறவே கூ- உயர்வு மீண்டும் தேவைப்பட்டது; இவ்விதம் ஒரு விஷச் சக்கரம் சுழல்கிறது. அதன் கொடிய பற்களிலே நாடு சிக்கிச் சங்கடப்படுகிறது. பணப் புழக்கம் அதிகமாகி உள்ள அளவுக்குப் பண்டங்களின் உற்பத்தி அளவும் வளர்ந்தால் நிலைமையில் நெருக்கடி ஏற்படாது; பசு தின்னும் தீனி அளவுக்காவது பால் கிடைக்கவேண்டுமே! அவ்விதமின்றி தீனிக்குப் பசுவாக இருந்து, பாலுக்காகச் செல்லும்போது, பசு காளையாகிவிட்டால் நிலைமை எப்படி இருக்கும்! அந்த நிலை இப்போது. தம்பி! திட்டங்களுக்காகக் கொட்டிக் கொடுத்தாயிற்று; அதற்காக அவிழ்த்துக் கொட்டப்பட்ட பணம் ஊரெங்கும் உருள்கிறது. ஆனால், அந்த அளவுக்கு பண்டங்கள் பெருகவில்லை திட்டத்தின்படி. எனவே பண வீக்கம்; பண வீக்கத்தால் விலை ஏற்றம்; விலை ஏற்றத்தால் பணத்தின் மதிப்பு சரிந்துவிட்டது! திட்டக் கமிஷனில் உள்ள பொருளாதார நிபுணர் அகர்வால், "ரூபாயின் மதிப்பு கட்டுப்படியாகவில்லை’ என்கிறார். "ரூபாயின் மதிப்பு வீழ்ந்துவிட்டது என்றால், என்ன பொருள்? விலைவாசி ஆறு மடங்கு அதிகமாகி விட்டது என்று பொருள். இந்த ஏற்றம் மக்கள் தாங்கக் கூடியதல்ல.’ இதனையும் பொருளாதார நிபுணர் அகர்வால் விளக்கியுள்ளார். இந்த நிலையில், தம்பி! தாய்மார்கள், லால்பகதூரிடம் வேண்டுகோள் விடுத்ததிலே தவறென்ன இருக்க முடியும்? வாழவிடு விலையைக் குறை! என்பதுதான் இன்று நாடெங்கும் எழுந்துள்ள முழக்கம். ஆனால், எல்லா முழக்கங்களையும்விட, லால்பகதூரின் உள்ளத்தைத் தைக்கத்தக்கதாக, எவர் நெஞ்சையும் நெகிழ்ந்திடச் செய்யத்தக்கதாக அமைந்துவிட்டது, தாய்மார்கள், லால்பகதூருக்குத தந்த "ரட்சை’யில் குழந்தையின் உருவத்தைப் பொறித்து, அதிலேயே, என்னை வாழவிடு! விலைகளைக் கட்டுப்படுத்து!! என்றும் பொறித்திருப்பது. பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு, நாட்டின் ஆளவந்தார்க்கு, இத்தகைய ஒரு வேண்டுகோள் தரப்படுகிறது. அந்த நிலைக்கு ஆட்சியிலுள்ளோர், நாட்டினைக் கொண்டுவந்துவிட்டனர். ஆனால், காமராஜர் கூறுகிறார், "எம்மையன்றி எவருளார் ஆள!’ என்று!! என்ன செய்வது, தம்பி! சிரிப்பதா அழுவதா! தெரியவில்லையே! அன்புள்ள அண்ணாதுரை 30-8-1964 நாலும் நாலும் விலைகள் ஏறிவிட்டதற்குக் கூறப்படும் காரணங்கள் "குழப்பக் கல்லூரி’யில் நேர்மாறான கருத்துகள் நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் நிலை ஜனநாயக சோஷியலிசம்: இருபதாம் நூற்றாண்டின் இணையிலா மோசடி! தம்பி! நாலும் நாலும் ஏழு என்று ஒரு மாணவனும், ஒன்பது என்று மற்றோர் மாணவனும் கூறினால், அவர்கள் தலையில் குட்டி, காதைக் கிள்ளி, இப்படிப்பட்ட மரமண்டைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் நிலை பிறந்ததே என்று ஆசிரியர் ஆயாசப்படுவார்; பெற்றோர்களோ, எத்தனை கட்டைப் புத்தியாக இருப்பினும் ஆசிரியர் தமது பிள்ளைகளுக்கு அறிவு பிறந்திடச் செய்வார் என்று நம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால், நாலும் நாலும் ஏழு என்று ஒரு ஆசிரியரும், இல்லை இல்லை ஒன்பது என்று மற்றோர் ஆசிரியரும், வேறோருவர் நாலும் நாலும் ஏழா ஒன்பதா என்று தீர்மானிப்பதற்கு முன்பு "நாலு’ என்றால் எத்தனை என்பதைக் கண்டாக வேண்டும் என்றும் கூறிடும் ஒரு பள்ளிக்கூடம் இருந்தால் என்ன செய்வர் பெற்றோர்? என்ன கதி ஆவர் மாணவர்? எதை வேண்டுமானாலும் சொல்லிவைக்கலாம் என்று உங்கள் அண்ணாதுரை இப்படிச் சொல்கிறானே, நாலும் நாலும் எட்டு என்பதைக்கூட சொல்லிக் கொடுக்கத் தெரியாத ஆசிரியரும் இருப்பாரா! பொருத்தம் இருக்கிறதா அவன் பேச்சில் - பொருள் இருக்கிறதா அவன் தரும் உதாரணத்தில் என்றெல்லாம், நம்மைப் பிடிக்காதவர்கள் கூறத் துடித்திடுவர்; சொல்லிவிடு தம்பி! அவர்கட்கு; அவர்கள் சல்லடம் கட்டு முன்பே! அப்படி ஒரு பள்ளிக்கூடம் இல்லை! ஆனால் அப்படி ஒரு பள்ளிக்கூடம் இருந்தால் எவ்வளவு வேதனை நிரம்பிய விசித்திரம் தெரியுமோ, அது தெரிகிறது ஆளுங்கட்சியான காங்கிரசில் ஒரே பிரச்சினை பற்றி வெவ்வேறு தலைவர்கள் வெளியிடும் மாறுபாடான கருத்துக்களைக் கவனிக்கும்போது. எடுத்துக்காட்டுக்கு ஒன்று கூறுகிறேன். இன்று விலைகள் ஏறிவிட்டதற்குக் காரணம் உற்பத்திக் குறைவுதான். என்கிறார் ஒரு காங்கிரஸ் தலைவர்! பெரிய தலைவர்தான்!! வணிகர்களின் இலாபவேட்டையால் ஏழைகள் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்று வீரமாகப் பேசிய உணவு அமைச்சர் சுப்பிரமணியமே, நிரந்தரமான பரிகாரம் உணவுப் பொருள் உற்பத்தி அதிகமாவதிலேயே இருக்கிறது. என்று பேசுகிறார் - பேசத் தலைப்பட்டிருக்கிறார். சே! சே! சே! விலைகள் ஏறிக்கொண்டிருப்பது உற்பத்தி பெருகாததாலா? யார் சொல்வது அப்படி! பைத்தியக்காரத்தனமான பேச்சு! உற்பத்தி பெருகி இருக்கிறது, சந்தேகமே இல்லை. ஆனால் உற்பத்தியான உணவுப் பொருள் சந்தைக்கு வருவதிலே, வேண்டுமென்றே தாமதம், விநியோக முறையில் குறை ஏற்பட்டுவிடுகிறது - ஏற்படுத்தி விடுகிறார்கள் பண முதலைகள் என்று பேசுகிறார் மற்றொருவர். இவரும் பெரிய காங்கிரஸ் தலைவர் - கிருஷ்ணமேனன், தம்பி! ஒரு காலத்தில் "நேருவின் வாரிசு’ என்று கொண்டாடப்பட்டு வந்தவர் - அவர் பதவி இழந்ததும் இங்கேகூட இழுத்த இழுப்புக்குச் சென்றிடும் இயல்பினர் சிலர், விருந்து வைத்து விழா நடாத்தி, இனி எமது வேலை, மீண்டும் இவரைப் பதவியில் ஏற்றி உட்காரவைத்துப் பக்கம் நின்று பார்த்துப் பரவசம் பெறுவதே! என்றுகூடப் பேசி வந்தார்களே, நினைவிலிருக்கிறதா! அதே கிருஷ்ணமேனன்தான்! அடித்துப் பேசுகிறார், உற்பத்தி குறையவில்லை, விநியோக முறையிலேதான் கோளாறு என்று. இத்தனை இடர்ப்பாட்டுக்கும் மூல காரணம் என்ன? அதனைக் கண்டறியாது ஏதேதோ பரிகார முறை தேடிப் பயன் என்ன? இப்போது எழுந்துள்ள பிரச்சினை, உற்பத்திக்கும் விநியோகத்துக்கும் இடையே மூண்டுவிட்ட தகராறு அல்ல. கள்ளச் சந்தை, பதுக்கல் இவைகளால் ஏற்பட்டுவிட்டதல்ல, இந்தக் கேடு. ஜனத்தொகை பெருகிவிட்டது, கட்டுக்கு அடங்கவில்லை; இப்போது மூண்டுவிட்டுள்ள போட்டி உணவு உற்பத்திக்கும் மக்கள் உற்பத்திக்கும் இடையிலே! உணர்க! உணர்க! இந்த இரு உற்பத்திகளும் ஒன்றை ஒன்று மல்லுக்கு இழுக்கின்றன. மக்கள் உற்பத்தி வளர்ந்தபடி இருக்கிறது. நெருக்கடி அதனால்தான்! விலை ஏற்றம் அதனால்தான்!! இவ்விதம் உருக்கமும் புள்ளி விவரமும் கலந்த உரையாற்றுகிறார் காங்கிரசில் உள்ள தலைவரொருவர், கனைத்துக்கொண்டு கண் சிமிட்டிக்கொண்டு எழுந்திருக்கிறார் இன்னோர் காங்கிரஸ் தலைவர், "குடும்பக் கட்டுப்பாடு - கருத்தடை - இதுவா பரிகாரம் இன்றைய நெருக்கடிக்கு, மதியீனம்! மதியீனம்! சோறு போட வழி தெரியாததற்காக, மக்களைக் கொன்றுவிடத் திட்டமிடுகிறீர்களா! கொலை பாதகமல்லவா! குழந்தைகள் பிறவாமல் தடுத்திட வேண்டும் என்று திட்டமிடுகிறீர்களே, ஆண்டுக்கு ஆண்டு குழந்தைகள் பிறக்காவிட்டால், இந்த நாடு கிழவர்கள் நாடாகிவிடுமே! பிறகு? எல்லோரும் மந்திரிகளாகிவிட வேண்டியதுதான்!’ என்று ஏளனம் செய்கிறார் - இடித்துரைக்கிறார் - கருத்தடைத் திட்டம் கூடாது என்கிறார், காங்கிரசின் பெருந்தலைவர்களிலே ஒருவர் கிருஷ்ணமேனன். சகல ரோக நிவாரணியைக் கையிலே வைத்துக் கொண்டு, பயன்படுத்தத் தெரியாமல் விழிக்கிறீர்களே! இத்தனை இன்னலும் மூட்டியவர் எவர்? தனிப்பட்ட முதலாளிகள், அவர்களைத் தலையில் தட்டி உட்கார வைத்திடாமல், சமதர்மத்தை அமுல் நடத்தாமல் கடப் பாரையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் சாப்பிடுவது போல, முதலாளித்துவத்தைக் கட்டி அணைத்துக்கொண்டு, களைத்துவிட்டோம், இளைத்துவிட்டோம் என்று கை பிசைந்துகொள்கிறீர்களே. உடனே, சோஷியலிசத்தை நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள்! பிறகு, பாருங்கள், எல்லாத் தொல்லைகளும் பஞ்சு பஞ்சாகிப் பறந்திடும். இவ்விதம் எழுச்சியுடன் பேசுகிறார் இந்தியப் பேரரசின் அமைச்சராக இருந்து விலகிய மாளவியா எனும் மாபெருந் தலைவர் - காங்கிரஸ் தலைவர்!! எழுந்திருக்கிறார் மற்றோர் காங்கிரஸ் தலைவர், ஒரு முறை சூழ இருப்போரைப் பார்க்கிறார். எதற்கும் தலையாட்டித் தலையாட்டி எல்லாக் காரியத்தையும் கெடுத்துக்கொண்டோம். மனத்தில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பேச வேண்டும். பேசுகிறேன். சோஷியலிசம் சர்வரோக நிவாரணி அல்ல! சோஷியலிசத்தினால் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. தவறு! தவறு!! இவ்விதம் பேசியவரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரே - மைசூரில் முதலமைச்சராக இருந்தவர், அனுமந்தய்யா என்பவர். துரிதமான, துணிவுமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ஒருவர். ஆர அமர யோசித்து, விளைவுகள் என்னென்ன நேரிடக்கூடும் என்று பார்த்து, மெள்ள மெள்ளத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் இன்னொருவர். இப்போதைய நெருக்கடி போக்கிட உடனடியாக அதிக அளவு உணவுப் பொருள் வெளிநாடுகளிடமிருந்து வரவழைத்தாக வேண்டும் என்று கூறுகிறார் ஒருவர். வரவழைக்கிறோம். வருகிறது. அமெரிக்காவிலிருந்தும், தாய்லாந்து, கம்போடியா ஆகிய இடங்களிலிருந்தும். பாகிஸ்தானிலிருந்துகூட வருகிறது என்கிறார் லால்பகதூர். அவமானம்! அவமானம்! இவ்வளவு ஆண்டு சுயராஜ்யத்துக்குப் பிறகுமா சோற்றுக்காக வெளி நாட்டானிடம் பிச்சை எடுப்பது? கேவலம்! கேவலம்! அதிலும் பாகிஸ்தானிடமிருந்து உணவுப் பொருள் பெறுகிறோம் என்று கூறுவது கேட்டு வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன் என்று பேசுகிறார், காட்கில் எனும் பழம் பெரும் காங்கிரஸ் தலைவர். சர்க்காரே உணவு தானிய வாணிபத்தை மேற்கொள்ள வேண்டும், அப்போதுதான் கொள்ளை இலாபமடிப்போரின் கொட்டத்தை அடக்க முடியும் என்று ஒருவரும் சர்க்கார் உணவு தானிய வாணிபத்தை மேற்கொள்ளக்கூடாது, வகையாகச் செய்திட முடியாது, நெருக்கடி அதிகமாகிவிடும் என்று மற்றொருவரும் நேர்மாறாகப் பேசுகின்றனர். இருவரில் எவரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்ற நோக்கம் காட்டி, வணிகர்களை அடியோடு ஒழித்துக் கட்ட அல்ல, சர்க்கார் உணவு தானிய வாணிபத் துறையில் ஈடுபடுவது - ஈடுபடப்போவது முழு அளவில் அல்ல - ஒரு அளவுக்குத்தான் - வணிகரும் இருப்பர் - சர்க்காரும் வணிகர் வேலை பார்க்கும் - இது கொள்ளை இலாபத்தைத் தடுக்க - வாணிப முறையைச் செம்மைப்படுத்த - சீர்குலைக்க அல்ல என்று கனம் சுப்பிரமணியம் கூறுகிறார். உரங்கள் விவசாயிகளுக்குக் கிடைத்திட வழி செய்யுங்கள் என்று கேட்கிறார் ஒருவர். கடலைப் பிண்ணாக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலே 45 கோடி கிடைத்ததாமே சென்ற ஆண்டு, அதனை இந்த ஆண்டு அதிகமாக்க வழி செய்க என்கிறார் வேறொருவர். சதாசர் சமிதி மூலம் ஊழலையும் இலஞ்சத்தையும் ஒழித்துக் கட்ட முடியும் - கட்டப்போகிறேன் - கட்டிக்கொண்டு வருகிறேன் என்று பேசுகிறார் நந்தா. சதாசர் சமிதியா! அதிலே இலஞ்சப் பேர்வழிகள் நுழைந்து கொண்டுள்ளனராமே! போலீஸ்படை இருக்க எதற்காக இந்தக் காவிப்படை என்று கடுங்கோபத்துடன் கேட்கிறார், வங்கநாட்டுக் காங்கிரஸ் தலைவர் (அடுத்து அகில இந்தியக் காங்கிரசின் தலைவராகப் போகிறவராம்) அடுல்யா கோஷ். காமராஜ் திட்டம் கவைக்குதவாது என்கிறார் ஒருவர், அதுதான் கைகண்ட மருந்து என்கிறார் மற்றொருவர். தம்பி! இப்போது யோசித்துப் பார்க்கச் சொல்லு, நாலும் நாலும் ஏழு என்று ஒரு ஆசிரியரும், ஒன்பது என்று மற்றொருவரும், கூட்டுவது பிறகு பார்ப்போம், முதலில் நாலு என்றால் என்ன? எவ்வளவு அதைத் தீர்மானிப்போம் என்று வேறொருவரும் பேசிடும் பள்ளிக்கூடம்போல இருக்கிறதல்லவா!! தம்பி, அத்தனை பெரியவர்கள் கூடிப் பேசிய இடத்தைப் பள்ளிக்கூடம் என்று சொல்வதா என்று கோபித்துக்கொள்ள எவரேனும் கிளம்பினால், நமக்கேன் வீண்பகை - பள்ளிக்கூடம் என்பதை மாற்றி அவர்களுடைய நிலையின் உணர்வுக்கு ஏற்ற வேறு பெயரளித்துவிடுவோம் - கல்லூரி என்று கூறுவோமே - குழப்பக் கல்லூரி என்று பெயரிடுவோம். அட பைத்தியக்காரா! இதைப்போய்க் குழப்பம் என்கிறாயே! இதுதான் கருத்துப் பரிமாறிக்கொள்ளுதல்! இதுதான் ஜனநாயகம்! பேச்சு உரிமை! எவரும் தமது மனத்துக்குச் சரியென்றுபட்டதை அச்சம், தயை, தாட்சணியமின்றி எடுத்துக் கூறிடும் உரிமை இது வழக்கப்படுவது எமது ஸ்தாபனமாம் காங்கிரசிலேதான்! இதன் அருமை பெருமையைத் தெரிந்துகொள்ள இயலாமல், இதனைக் குழப்பம் என்று பேசுகிறாய், குறை இது என்று ஏசுகிறாய்! ஒரு ஜனநாயக அமைப்பிலே இதுதான் அழகு! என்று கூற முற்படுவர். தெரியும். ஆனால், தம்பி! நாலும் நாலும் எட்டு என்பது போன்ற அடிப்படையிலே ஆளுக்கொரு பேச்சுப் பேசுவது, ஜனநாயக மாகாது - கருத்துக் குழப்பத்தைத்தான் காட்டும்; கொள்கைக் குழப்பத்தைத்தான் காட்டும். இன்று காங்கிரசிலே திட்டவட்டமான கருத்துக் கொண்டு எல்லோரும் ஈடுபட்டு இல்லை. பண பலம், பதவிபலம், விளம்பர பலம் மிகுதியாக உள்ளது என்ற காரணத்தால், அதிலே புகுந்து கொண்டு அதிகாரம் பெறலாம், ஆதாயம் பெறலாம் என்ற நோக்கத்துடன் எவரெவரோ சேர்ந்துவிட்டனர் - ஒரே கட்சி என்று ஒப்புக்குக் கூறிக்கொள்கின்றனரேயொழிய - அடிப்படைப் பிரச்சினைகளிலேயே வெவ்வேறு கருத்துக்களை, முரண்பாடான கருத்துக்களைக் கொண்டவர்கள் - ஒட்ட முடியாதவர்கள் - வெட்டிக்கொண்டு போகவேண்டியவர்கள் - உள்ளனர். உற்பத்தியாளர்களின் சார்பில் பேசுகிறேன் என்று நிலத் திமிங்கலங்களுக்காக வாதிடுபவர்களும் உள்ளனர் காங்கிரசில்; விநியோகமுறை செப்பனிடப்பட வேண்டும் என்ற சமதர்மக் கருத்தினரும் உள்ளனர் அதே காங்கிரசில். முரண்பாடுகளை மூடி மறைத்து வைத்துக்கொண்டு எவரெவருக்கு எந்தெந்தச் சமயத்தில், எந்தெந்த இடத்தில் வாய்ப்புக் கிடைக்கிறதோ, ஆங்கு தமது கருத்தினைச் செயல்படுத்திப் பயன் பெறுகின்றார். எனவேதான் தாமதம், தெளிவின்மை, துணிவின்மை திரித்திடுதல் எனும் கேடுகள் காங்கிரஸ் மேற்கொள்ளும் திட்டங்களிலும், இயற்றும் சட்டங்களிலும் நெளிகின்றன. இத்தனை முரண்பாடுகளையும் கவனித்து, எந்தக் கரத்தினரையும் இழந்திட மனமில்லாததால், அவரவரும் என் கருத்தும் இதிலே இருக்கிறது, என் நோக்கமும் இதிலே ஈடேறுகிறது என்று மகிழ்ச்சி கொண்டிடத்தக்கவிதமாக, கலப்படமான முறையிலே சட்டம் ஏட்டிலே ஏறுகிறது - பெருந் தாமதத்துக்குப் பிறகு. சட்டம் - திட்டவட்டமற்று, தெளிவற்று அமைந்து விடுகிறது. வழக்கு மன்றத்திற்குப் பெருவிருந்து கிடைக்கிறது. சட்டம் செயல்படத் தொடங்கும்போது மேலும் இடர்ப்பாடுகள் எழுகின்றன - திரித்துவிட வழி கிடைப்பதால், சட்டத்தினால் கிடைத்திடவேண்டிய முழுப் பலனும் கிடைத்திடுவதில்லை. ஏட்டிலே முற்போக்கான சட்டம் இருந்தும் நாட்டிலே அதற்கேற்ற பலன் கிடைக்காமலிருப்பது இதனால்தான். பொதுப்படையாகப் பேசினால் சிலருக்குப் புரிவது கடினம் என்றால், தம்பி! காங்கிரஸ் அரசு இயற்றியுள்ள நிலச் சீர்திருத்தச் சட்டத்தையே, எடுத்துக்காட்டாகக் கொண்டு, நான் கூறியிருப்பது எத்தனை பொருத்தமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். நிலச் சீர்திருத்தச் சட்டம் என்பது, தம்பி! சமதர்மப் பொருளாதாரத் திட்டத்துக்கு அடிப்படையாக அமைவது. ஆயினும், காங்கிரஸ் அரசு இந்தச் சட்டத்தை, சமதர்மப் பொருளாதார அடிப்படை என்று கூறிடக்கூட அச்சப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அச்சத்திற்குக் காரணமும் இல்லாமற் போகவில்லை. பல ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு அதிபர்களான பட்டக்காரர்கள், பாளையக்காரர்கள், இராமநாதபுரம் ராஜா, செட்டிநாட்டு ராஜா, வாண்டையார், வலிவலத்தார், நெடும் பலத்தார், மூப்பனார், செய்யூரார், சூணாம்பேட்டையார், இலஞ்சியார், சங்கரண்டாம் பாளையத்தார், கடவூரார், காட்டுப் புத்தூரார், ஒரக்காட்டார், பாண்டேசுரத்தார், வேட்டவலத்தார் எனும் இன்னோரன்ன பிற நிலப் பிரபுக்களைக் காங்கிரசில் நடுநாயகங்களாக வைத்துக்கொண்டு, சமதர்ம அடிப்படையான நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வருகிறோம் என்று கூற எப்படித் துணிவு பிறந்திட முடியும்? நெடுங்காலம் நிலச் சீர்திருத்தத்தை, நடைமுறைக்கு ஏற்றதல்ல, தேவையற்றது, பலன் கிடைக்காது என்று கூறி எதிர்த்து வந்தனர் நிலப் பிரபுக்களின் மனம் மகிழ. ஆனால் எதிர்க் கட்சிகள், இந்தப் பிரச்சினையை வைத்துக்கொண்டு வளரவும் கிளர்ச்சி நடத்தவும் முற்படக் கண்டு, மக்களை இனியும் அடக்கி வைத்திருக்க முடியாது என உணர்ந்து, நிலப் பிரபுக்களிடம் நிலைமைகளை எடுத்துக் காட்டி, இன்னின்ன முறைகளால், நீங்கள் உமது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம், அதற்கெல்லாம் இடம் வைத்துச் சட்டம் இயற்றிவிடுகிறோம் என்று கூறிச் சம்மதம் பெற்று, உச்ச வரம்புச் சட்டம் இயற்றப்பட்டது. தம்பி! உழுபவனுக்கே நிலம் என்ற முழக்கம், ஆட்சியி லிருந்த காங்கிரசை மிரட்டும் அளவுக்கு ஓங்கி வளரும் நிலை கண்டு, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது; உள்ளூரச் சமதர்ம நோக்கம் கொண்டு அல்ல. எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது, இன்று "ஜனநாயக சோஷியலிசம்’ பேசும் இதே காமராஜர், நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, நிலச் சீர்திருத்தத்தையே எதிர்த்துப் பேசியது. உழுபவனுக்கு நிலமாம் உழுபவனுக்கு நிலம்! இருப்பவனுக்கு வீடு! ஏறுபவனுக்கு ரயில்! இப்படிக் கேலி பேசினவர்தான் காமராஜர். இறுதிவரையில் எதிர்த்துப் பார்த்து, எவ்வளவு தாமதம் ஏற்படுத்தலாமோ அவ்வளவும் செய்து பார்த்து, கடைசியில், ஏராளமான விதி விலக்குகள் வைத்து, இந்த நிலச் சீர்திருத்தச் சட்டத்தைச் செய்தனர். இந்த விதி விலக்குகளைக் காரணமாகக் கொண்டு, நிலப் பிரபுக்கள், தமது ஆதீனத்திலிருந்த நிலத்தைப் பிரித்துப் பிரித்து பல்வேறு காரியங்களுக்காக என்ற பெயரால் - கோயில் கட்டளை என்பதிலிருந்து கல்லூரி நடத்துவது என்பது வரையில் பல பெயரால் - எழுதிவைத்துவிட்டு, சட்டத்தால் தங்கள் ஆதிக்கம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாதபடி தம்மைப் பாதுகாத்துக்கொண்டனர் - காங்கிரஸ் அரசின் துணை கொண்டு, சட்டம் ஒரு கேலிக் கூத்தாக்கப்பட்டுப் போயிற்று. எவரொருவரிடமும் இவ்வளவுக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது என்ற ஒரு சட்டம் அமுலுக்கு வந்திடுவதால், ஏற்படக் கூடிய புரட்சிகர மாறுதல், இங்கே ஏற்படாமல் போனதற்குக் காரணம் இதுவே. மீண்டும் அந்தச் சட்டத்தின் ஓட்டைகளை அடைத்திடவும், உருப்படியான பலன் கிடைக்கத்தக்க விதமாகச் செயல்படுத்தவும், விதிவிலக்குகளை நீக்கிடவும், போலி ஏற்பாடுகளை உடைத்திடவும், முற்போக்காளர் ஆட்சியில் அமர்ந்து எங்கே செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே, இத்தனை பக்குவமாக நமது நலனைப் பாதுகாத்து வரும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் நீடித்து இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், நிலப்பிரபுக்கள் காங்கிரசில் இடம் பிடித்துக் கொண்டு, ஊட்டம் கொடுத்துக்கொண்டு வருகின்றனர். நிலச்சீர்திருத்தச் சட்டம் பயனற்றுப் போய்விட்டது என்பதனைக் காங்கிரஸ் அரசின் அழைப்பின் பேரில் இங்கு வந்து நிலைமைகளைக் கண்டறிந்த அமெரிக்க ஆய்வாளர்களே கூறிவிட்டனர். சட்டம் ஓட்டைகள் நிரம்பியதாக இருக்கிறது. சட்டத்தைச் செம்மையான முறையில் செயல்படுத்தவில்லை. செம்மையாகச் செயல்படுத்த வேண்டும் என்ற ஆர்வமே இல்லை. அவ்விதமான சட்டம் ஒன்று இருக்கிறது என்ற நினைப்பே அற்றவர்களாக அதிகாரிகள் உள்ளனர். இவ்விதம் அந்த ஆய்வாளர்கள் கூறிவிட்டனர். சட்டம் செய்து விட்டோம், நாங்கள் சமதர்மிகள் அல்லவோ! என்று காங்கிரஸ் அரசினர் கூறுவதும், சட்டத்தை ஏற்றுக்கொண்டுவிட்டோம், நாங்கள் மட்டும் என்ன, சமதர்மிகள் அல்லவா!! என்று நிலப்பிரபுக்கள் பேசுவதும், சமதர்மம் பூத்துவிட்டது, அதன் மணம் என் நாசியிலே புகுந்துவிட்டது, ஓடோடிச் சென்று அந்த மலரினைப் பறித்துச் சூடிக்கொள்வேன், ஆடுவேன், பாடுவேன், எவரேனும் ஏனென்று கேட்டால் சாடுவேன் என்று கூறிச் சிலர் காங்கிரசுக்குள் ஓடுவதும் இப்போது புரிகிறதல்லவா? தம்பி! இப்போதும் நாட்டிலே உள்ள மொத்த நிலத்தில் பாதி அளவு, நூற்றுக்குப் பத்துப்பேர் என்று சொல்லக் கூடியவர்களான பிரபுக்களிடம்தான். இது நான் தயாரித்த கணக்கு அல்ல; ஆய்வாளர்கள் அளித்தது. சமூகத்தில் மேல் மட்டத்தில் உள்ள குட்டிக் குபேரர்களிடம் மொத்த நிலத்திலே ஐந்திலே ஒரு பாகம் சிக்கிக்கொண்டிருக்கிறது. இந்த நிலை, ஜமீன்களை ஒழித்துவிட்டோம், நிலத்துக்கு உச்சவரம்பு கட்டிவிட்டோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளப் பயன்படும் சட்டங்கள் இயற்றிய பிறகு!! இதுபோலத்தான், தயக்கம், தடுமாற்றம், தாமதம் ஆகிய கட்டங்களைத் தாண்டி, பணம் படைத்தோரின் மனம் நோகாதபடியும், ஆதிக்கம் கெடாதபடியும், சலுகை சரியாத படியும் பாதுகாப்புத் தேடிக் கொடுத்து, ஒப்புக்கு ஒரு ஓட்டைச் சட்டத்தைச் செய்துவிட்டு, ஒய்யாரமாக முழக்கமிடுகிறார்கள், சமதர்மம்! ஜனநாயக சோஷியலிசம்!! என்று. அதனைப் பட்டக்காரரும் பாளையக்காரரும் ஒப்புக்கொள்வது மட்டுமல்ல, மேலும் உரத்த குரலில் முழக்கமிடுகிறார்கள், ஜனநாயக சோஷியலிசம் என்று. பெரும் பெரும் நிலப்பிரபுக்களும், கோடீஸ்வரர்களான தொழிலதிபர்களும், வெளிநாட்டு முதலாளிகளுடன் கூட்டாகப் பெருந்தொழில் நடத்துபவர்களும், காங்கிரசில் கூடி நின்று, ஜனநாயக சோஷியலிசம் பேசுவது, இருபதாம் நூற்றாண்டின் இணையிலாத அரசியல் மோசடி என்று நான் சொன்னால், கடுமையாகக் கூறிவிட்டேன் என்று யாரும் எண்ணிக் கோபிக்கக் கூடாது - எத்தனையோ வார்த்தைகளை, கடுமை என்பதற்காக வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு, கடைசியாக நான் பயன் படுத்தியிருப்பது மோசடி என்ற வார்த்தை. அதைவிட நாகரிகமான வேறு வார்த்தை கிடைக்கவில்லை, இந்த நிலைமையை விளக்க. எனக்கு எவரையும் புண்படுத்த விருப்பம் ஏற்படுவதில்லை - திருடனைக்கூட நான் நடுநிசி உழைப்பாளி என்று கூறத் தயார். ஆனால் இந்த நிலைமையை விளக்க "மோசடி’ என்ற பதத்தைக்கூட உபயோகிக்காவிட்டால், உண்மையைத் துளியும் விளக்கிட முடியாது. இந்த அரசியல் மோசடி நடத்தப்படவேண்டியதற்காகவே, முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள், காங்கிரஸ் முகாமில் இருக்கிறார்கள் - ஒவ்வொரு அடிப்படைப் பிரச்சினையின்போதும், முரண்பாடு நெளிகிறது. முடிவிலோ, எவருக்கு எந்த நேரத்தில் வலிவு மிகுந்திருக்கிறதோ அவர் பக்கம் அனைவரும் நிற்கின்றனர்; எந்த நேரம் பார்த்துக் கவிழ்த்து விடலாம் என்ற நினைப்புடன். எனவே, கருத்து வேறுபாடும், அதனைத் தாராளமாக வெளியிடுவதும் எமது ஜனநாயகத்தின் மாண்பு என்று மார்தட்டிக் கூறுபவர்கள் கிளம்பும்போது, இதனை நினைவிலே கொண்டிட வேண்டுகிறேன். இனித் தம்பி! இத்தகைய அடிப்படை விஷயத்திலேயே அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் ஆளுக்கு ஒருவிதமாக, முரண்பட்டுப் பேசுகிறார்களே, இதனை ஜனநாயகப் பண்பு என்று கூறுபவர்களைக் கேட்டுப் பாரேன், இந்த அளவுக்கு வேண்டாம், மிகச் சாதாரணமான அளவுக்கு, - இப்படிப்பட்ட அடிப்படைப் பிரச்சினையில் அல்ல, மிகச் சாதாரணப் பிரச்சினையில் - வேறு கட்சிகளில், தலைவர்கள் வெவ்வேறு கருத்துக்களைப் பேசினால், இந்தக் கண்ணியவான்கள் என்னென்ன கூறுகிறார்கள் - எதெதற்கு முடிச்சுப் போடுகிறார்கள்! கொஞ்சம் யோசித்துப் பார்க்கச் சொல்லேன்!! வேலூரில் மாநாடு நடத்தலாம் என்று நண்பர் நடராஜனும், போளூரில் நடத்தலாம் என்று சுப்பிரமணியமும் கூறுவதாக வைத்துக்கொள் தம்பி! இந்தப் பெரிய கட்சியில் உள்ளவர்களுக்கு எவ்வளவு "சின்னப் புத்தி’ வந்துவிடுகிறது - நடராஜன் - சுப்பிரமணியம் லடாய்! மாநாடு நடத்துவதில் தகராறு! பிளவு! பிளவு! குழப்பம்! குளறல்!! ஏ! அப்பா! கொட்டை எழுத்துக் கோமான்களும், நெட்டுருப் பேச்சாளரும், நெரித்த புருவத்தினரும் என்னென்ன பேசுவார்கள்! பேசினர்!! இதோ, தம்பி! உணவுப் பிரச்சினையிலே இருந்து ஊழல் பிரச்சினை வரை, சதாசர் சமிதிப் பிரச்சினையிலே இருந்து சமுதாய நலத் திட்டம் வரையில், கருத்தடைப் பிரச்சினையிலே இருந்து காவல் படைப் பிரச்சினை வரையில், இத்தனை முரண்பாடு பேசப்படுகிறதே, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில், ஒரு வார்த்தை பேசச் சொல்லு, பார்ப்போம்! என்னய்யா வேடிக்கை இது, நாலும் நாலும் ஏழு என்கிறார் ஒருவர், ஒன்பது என்கிறார் மற்றொருவர், இந்த இலட்சணத்தில் இருக்கிறதே உங்கள் கட்சிக் கோட்டைக்குள்ளே பிளவு, தகராறு, பேதம் என்று - சே! சே! இது பிளவும் அல்ல, பேதமும் அல்ல - இதுதான் உண்மையான ஜனநாயகம் என்று கூறுவர்! கூறுவரா? முழக்கமே எழுப்புவர்! வேறொரிடத்திலே உள்ள ஒரு காங்கிரஸ் முகாமிலே, தம்பி! இந்த ஜனநாயகத்தை மேலும் சற்று விறுவிறுப்பாக நடத்திக் காட்டினராம்! அந்த ஜனநாயகத்தின் அருமை பெருமையை உணர முடியாத ஒரு காங்கிரஸ் தலைவர். என்மீது பாய்ந்து சட்டையைப் பிடித்திழுத்து அடித்தார் என்று மற்றோர் காங்கிரஸ் தலைவர்மீது புகார் செய்திருக்கிறார். இப்படி பலாத்காரம் - வன்முறை - நடக்கலாமா என்று கேட்டுப் பார் தம்பி! உடனே பதில் பளிச்சென்று கிடைக்கும் "இது வன்முறையா! சே! சே! இது அன்புப் பெருக்கு!’’ என்று. பத்திரிகைகளில் விவரம் கொடுத்திருக்கிறார் - அகில இந்தியக் காங்கிரஸ் தலைவரிடமும் புகார் தரப்பட்டிருக்கிறதாம் - கமிட்டிக் கூட்டத்திலே நடைபெற்ற "காங்கிரஸ் ஜனநாயகம்’ பற்றி. "அடித்துப் பேசினார்’ என்று எழுதுவதுண்டல்லவா? ஒரிசாவில் நடைபெற்ற கமிட்டிக் கூட்டத்தில், ஒருவர் பேசினார் - இன்னொருவர் அடித்தார்!! தம்பி! ஒரு புதிய "கதாநாயகரை’ கண்டெடுத்து, பொட்டிட்டுப் பூ முடித்துக்கொண்டு வந்து காட்டினார்கள் மக்களிடம். இதோ பாருங்கள் இந்த நாயகனை! கட்டுடல் காணுங்கள், கண்ணொளி பாருங்கள். இவர் இளைஞர்! ஏறுநடை! எதற்கும் அஞ்சா உள்ளம்! ஆபத்துகள் இவருக்குப் பூச்செண்டு! ஆற்றல் இவருக்கு அபாரமாக உண்டு! எதிரிகளை முறியடிப்பதில் இவருக்கு இவரே இணை, வீழ்ந்துகிடந்த காங்கிரசை நிமிர்த்திவிட்டார்! விரட்டி விரட்டி அடித்து வெற்றிகொண்டார், காங்கிரசை எதிர்த்தோரை. பொருளாதாரப் பிரச்சினைகள் இவருக்குக் கற்கண்டு. தொழில் நிபுணர்! நாட்டுக்குத் தோன்றாத் துணைவர். வாதிடுவதில் வல்லவர்! வரிந்து கட்டிப் போரிடுவதில் திறமை மிக்கவர். நேரு பண்டிதரே இவரிடம் யோசனைகள் கேட்கிறார்; அத்தனை நுண்ணறிவு இவருக்கு. டில்லி அரசாங்கப் பணிமனையில் இவருக்கென்று ஒரு தனி இடம் உண்டு! அங்கு இவர் விருப்பம்போல் செல்வர், உணர்ந்ததை உரைப்பார், அதனைத் துரைத்தனம் ஏற்றுக்கொள்ளும். இவ்விதமாகவெல்லாம், அர்ச்சனைகள் செய்து அரங்கமேற்றினர்; அவரும் ஆடினார் வேகமாக, காங்கிரசின் எதிரிகளைச் சாடினார் மும்முரமாக, காமராஜர் புகழையும் பாடிக் காட்டினார், கழகத்தை ஒடுக்கிட வழியும் கூறினார், அமெரிக்கா சென்றார், "பாரதம்’ உய்ந்திடும் வழி கண்டறிய. தேர்தல் களம் நின்றார், வென்றார், முதலமைச்சர் ஆனார்! ஒரிசாவின் பட்நாயக் தம்பி, நினைவிற்கு வருகிறதா! அவர்மீதுதான் புகார் கிளம்பியிருக்கிறது; "அடிதடி ஜனநாயகம்’ நடத்தினார் என்று. ஒவ்வொன்றுக்கும் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு புது "வியாக்யானம்’ கொடுக்கிறார்களே, இவர் என்ன வியாக்யானம் தருவாரோ, யார் கண்டார்கள்! சீனப் பகைவன் தாக்கினால், என் நண்பரால் தடுத்துக்கொள்ள முடிகிறதா, தாங்கிக்கொள்ள முடிகிறதா என்று பரீட்சை பார்க்கவே பாய்ந்தேன், அடி விழுந்திருக்கும் போலிருக்கிறது அவசரத்தில். இதனை நான் தாக்கினதாக நண்பர் எண்ணிக்கொண்டார்; இது தாக்குதல் அல்ல; தேசியப் பாதுகாப்புத் துறைக்கான பயிற்சி!! இப்படி ஒரு விளக்கம் கொடுப்பாரோ என்னவோ யார் கண்டார்கள்!! இவ்விதமாகவெல்லாம், தம்பி! அந்த இடத்து விவகாரம் இருந்துகொண்டு வருகிறது. ஆனால் பேச்சு மட்டும் இருக்கிறது, எம்மை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் ஆட்சி நடத்த என்று. நாலும் நாலும் ஏழா ஒன்பதா என்று விவாதிப்பது போன்ற நிலையிலும் “அடிதடி ஜனநாயக’ முறையிலும் இருந்து கொண்டே. பேச்சு மட்டும் இத்தனை சத்தத்துடன் இருக்கிறது. இரவல் நகைக்கே இத்தனை குலுக்கென்றால் சொந்தத்தில் நகை என்றால் சுருண்டு விழுவாள்போல இருக்கிறது என்று பேசிக் கொள்வார்கள், கொச்சையாக - அவ்விதம் இருக்கிறது இவர்கள் விவசாரம். ஆனால் தம்பி! அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். நீயும் நானும், மாறி மாறி இவர்களால்”கைது’ செய்யப்படுகிறோம்; சிறையில் தள்ளப்படுகிறோம்!! தெரிந்துகொள்! அன்புள்ள அண்ணாதுரை 6-9-1964 புதிய படை புறப்படுகிறது! நந்தாவின் சாதுக்கள் படை நயனதாராவின் கேலியும் கிண்டலும் சாது சன்னியாசிகள் பற்றிய மீராபென்னின் கருத்துக்கள் தம்பி! பகைவர்கள் படை எடுத்துப் புயலெனப் புகுந்திட முனையும்போது, நாட்டைக் காத்திடவும் பகையை முறியடித்திடவும் வகுக்கப்படும் போர் முறைகளில் வல்லவர்கள், எந்தப் படையை எந்த முறையில் எந்த நேரத்தில் எவ்விதமான போரிட எங்கு அனுப்பிவைப்பது என்பது குறித்து எடுத்திடும் முடிவினைப் பொருத்தே வெற்றியா தோல்வியா என்பது இருக்கிறது. படைகள் போரிடத்தான் உள்ளன; எந்தப் படையிலும் பயிற்சி பெற்ற போர் வீரர்களே உள்ளனர்; அதிலே எவருக்கும் ஐயம் இல்லை. ஆனால் பெற்றிடும் பயிற்சியில், வகையும் தரமும் உண்டு. எந்தப் படையினரும் எதிர்த்துப் போரிடுவதிலே அஞ்சாது நின்றிடவும் ஆபத்தைத் துச்சமென்று எண்ணிடவும் இயல்பும் பயிற்சியும் பெற்றுள்ளனர். ஆனால், படையில் ஒவ்வோர் பிரிவினருக்கென்று ஒவ்வோர் விதமான பயிற்சி தரப்படுகிறது. ஒவ்வோர் விதமான போர் முறைக்கும் அதற்குத் தக்கதான பயிற்சி இருக்கிறது. கோட்டை கொத்தளங்களைத் தாக்குவது, கோட்டை கொத்தளங்களைத் தாக்குதலிலிருந்து காத்திடுவது எனும் இருவேறு செயலிலும், தீரம் வீரம் நிரம்பத் தேவை; ஆனால், இருவேறு செயல்களிலே ஒவ்வொன்றுக்கென்று ஒவ்வோர் முறை உளது; அந்த முறையில் பயிற்சி பெற்றார்க்கே அந்தத் துறையும் பணியும் தந்திடுதல் வேண்டும், முழுப் பயன்பெற. வாள்வீச்சிலும் பழக்கம் உண்டு எனினும், இவன் வேல் எறிவதிலே தன்னிகரற்றவன் எனின், அன்னானை அதற்கே அனுப்பி வைத்தால் வெற்றி ஈட்டிட வழி செய்ததாகும். வாட்போர் அறியானோ இவ்வீரன்! அறிந்துள்ளான்! எனவே, வாட்போர்ப் படையிலே சேர்ந்து போரிடட்டும் என்று கட்டளையிடலாம்; அவனும் வாளினைச் சுழற்றிப் போரிடலாம்; ஆனால், அவன் வேல் எறிவதனால் கிடைத்திடும் பலன் கிடைத்திடாது. அன்பும் அறமும் நிலவிட வேண்டும், பண்பு மிகுந்திட வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவரே, வள்ளுவர். எனினும், அறம் அழிப்போரும் பண்பு கெட்டோரும், அமைதி குலைப்போரும், ஆகா வழி நடப்போரும் உள்ளனரே; அவர்களால் அமளி மூட்டப்பட்டுவிடுமானால், அறவுரை கூறிடல் பயனளிக்காதே; எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றன்றோ இன்னல் விளைவித்தவர்களை அடக்கிட இயலும் என்பதனை எண்ணிப் பார்த்திட மறுத்தாரில்லை; மாறாக, அது குறித்து எண்ணி எண்ணிப் பார்த்து ஏற்புடைய கருத்துக்கள் பலவற்றைக் கூறியுள்ளார். அந்தக் கருத்துக்களைக் காணும்போது, என்னே இந்த வள்ளுவர்? வாலறிவன் நற்றாள் தொழுவது பற்றித்தான் கூறினார், அதிலே வல்லவர் என்று எண்ணிக் கொண்டோம்; இதோ போர் முறை குறித்து இத்துணை நுண்ணறிவு கொண்டு வழிகாட்டுகின்றாரே, போர்க்களம் பல கண்டவரோ! என்று எண்ணிடுவோம், வியந்திடுவோம். அஃது அவருடைய தனிச் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்னவன் இதனை முடித்திட வல்லவன் என்பதனைக் கண்டறிந்து, அதனை அவனிடம் விடல் - என்பதனை எல்லாத் துறைகளுக்கும் ஏற்றதெனக் கூறி வைத்தார்; அஃது போர்முனைத் துறைக்கும் பொருந்தும்; எனினும் போர்முறை குறித்தே ஆய்வுரை பல கூறியுள்ளார். இருக்கட்டும் அண்ணா! இப்போது எதற்காகப் போர்முறை பற்றிப் பேசுகிறாய் - நாம் நடாத்தி வருவதோ அறப்போர் - நம்மை எதிர்ப்போர் நடத்திடுவதோ அக்கப்போர் - நீ கூறிடத் தொடங்கியதோ களம் நின்று போரிடும் முறை பற்றி; எதற்காக? என்று கேட்கின்றாய்! கேட்பது மட்டுமா தம்பி! அண்ணன்தான் பயந்தவன் ஆயிற்றே. பாரேன் போர்முறை பற்றி இத்தனை பேசிடும் வேடிக்கையை என்றெண்ணி உள்ளூரச் சிரித்திடவும் செய்கின்றாய்! அறியேனா!! தம்பீ! இன்று எனக்குப் போர் - போர் முறை - படை - படை வகை - பயிற்சி - பயிற்சிக்கேற்ற படைவகை - என்பன பற்றிய எண்ணம் பிறந்தது. மலாசியாவைத் தாக்கிடச் சுகர்ணோ முனைகிறார் என்றோர் பக்கம் செய்தி! வியட்நாமில் அமளி - குழப்பம் - என்றோர் செய்தி! அமெரிக்கக் குடியரசுத் தலைவராவதற்காகத் துடித்திடும் கோல்ட்வாட்டர் என்பவர், பொதுவுடைமை நாடுகளுடன் போரிட்டாக வேண்டும் என்று வெறிப் பேச்சுக் கிளப்பிடும் செய்தி! இப்படிப் பல பார்த்ததால் எனக்கும் போர் பற்றிய எண்ணம் பிறந்ததுபோலும் என்று எண்ணிக்கொண்டிருப்பாய். என் எண்ணம் இந்தச் செய்திகளைக் கண்டதனால் எழுந்ததுமல்ல. வேறென்ன என்கிறாயோ! புதியதோர் படை புறப்படுகிறது - வாளேந்திப் போரிட அல்ல - புனிதப் போர் புரிய! அதுபற்றிப் படித்தேன் - அருமையான ஓர் ஆய்வுரையும் இதுகுறித்து வெளிவந்திருந்தது. பார்த்தேன்; பார்த்திடவே, போர் பற்றிய பொதுவான எண்ணம் எழுந்தது. தம்பி, பெருமழையால் ஏரி குளம் குட்டைகள் நிரம்பி எங்கும் சேறும் சகதியுமாகிவிட்டால், தவளைக் கூட்டத்துக்குக் கொண்டாட்டமல்லவா! கேட்போர் காதினைத் துளைத்திடத் தக்க கூச்சல் எழுப்பும், தூக்கத்தைக் கெடுக்கும், ஒரு குற்றமும் நாம் செய்தோமில்லை, இந்தத் தவளைகள் நமக்கு இத்தனை தொல்லை கொடுத்திடத் துணிந்தனவே? எத்தனை பெரிய சத்தம்! ஓயாத கூச்சல்! காதைத் துளைத்திடும் சத்தம்! என்ன எண்ணிக்கொண்டன இந்தத் தவளைகள்! கூச்சலிடுவதிலே நம்மை மிஞ்சுவார் எவரும் இல்லை என்று எண்ணிக்கொண்டு, மண்டைக்கனம் கொண்டுவிட்டனவோ! வலிய வம்புக்கு இழுக்கின்றனவே! விடக்கூடாது இந்தத் தவளைகளை!! என்று எண்ணி, ஒரு படை திரட்டிக்கொண்டு கிளம்பி, தவளைகள் கூச்சலிடும் குளம், குட்டை ஓரம் நின்று நாமும் கூச்சலிடுவோம், உரத்த குரலில் ஓயாமல்! நமது குரலொ- தமது குரலொ-யைவிடப் பயங்கரமான அளவு உளது என்பதனை, இந்தப் புத்திகெட்ட தவளைகள் உணரட்டும்; உணர்ந்து வெட்கத்தால் வாயடைத்துப் போகட்டும் என்று கூறிக் கொண்டு, அதனையே போர்முறையாக்கிக்கொண்டு, "கூவும்படை’ யாகிக் கூச்சல் கிளப்பிடுவார் உண்டோ!! இல்லை! ஆளுக்கொரு கல்வீசித் தவளைகளைக் கொன்று போடுவோம் என்று கிளம்பிடுவார் உண்டோ! இல்லை என்பாய், பொதுவாக, அதுபோல் செய்திட ஒரு திட்டம் போட்டுக்கொள்வார் இல்லை. ஆனால், பிரான்சு நாட்டிலே இவ்விதமான வேலைத் திட்டம் இருந்தது, புரட்சிக்கு முன்பு. ஆமாம், தம்பி! வேடிக்கை அல்ல நான் கூறுவது; வரலாற்றிலிருந்து எடுத்தளிக்கும் துணுக்கு, சீமான்கள் கொட்டமடித்துக்கொண்டிருந்த நாட்கள்! சாவு வரவில்லையே! சர்வேசா! என்று ஏழைகள் அழுது கிடந்த காலம். தவளைகள் கூச்சல் கிளப்புவதால் சீமானின் தூக்கம் கெடுமல்லவா? சீமானின் தூக்கம் கெட்டால், உடம்பு என்னாவது! அவன் உடம்பு போனால் நாட்டின் உயிர் எப்படி இருக்கும்!! இவ்விதமான எண்ணம் அரசியல் கருத்தாக இருந்துவந்த காலமது. அப்போது இரவுக் காலங்களில், சீமான் பஞ்சணையில் படுத்திடுவான்; காடு கழனியாக்குபவர்கள், கல்லும் தடியும் கொண்டு தவளைகளைத் தாக்கியபடி இருப்பராம், இரவெல்லாம்; கூச்சலிடும் தவளைகளைக் கொல்வராம். இது, சீமானின் தூக்கத்துக்கான பாதுகாப்புப் படை! என்ன தருவார் சீமான்? என்றா கேட்கிறாய்! கொல்லாமல் விட்டுவைத்திருக்கிறாரே, போதாதா!! செருக்குமிக்க சீமான்கள் காலத்துப் படைபோன்றதோர் படை இதுபோது எங்கேனும் அமைந்துளதோ, அதுபற்றியோ அண்ணா! நீ கூறுவது என்று கேட்கிறாய். இல்லை, தம்பி! இல்லை! நான் குறிப்பிடும் படை, சீமான் அமைத்தது அல்ல; சீமான்களுக்காகவும் அல்ல! ஏழைகளுக்கு இதம் செய்ய ஏழை பங்காளர் அமைத்த படை!! எது அது என்கிறாய். பொறு. கூறுகிறேன்; கூறுமுன் வேறோர் படை ஒன்று காட்டுகிறேன். தஞ்சைத் தரணி! அதனை வடபுலத்து முஸ்லீம் மன்னர் படை தாக்க வருகிறது; பாய்ந்து வருகிறது, பெரும்படை - போரிடுவதிலே ஆற்றல் மிகக் கொண்ட படை. தஞ்சை மன்னன் கைகட்டி வாய்பொத்தி இருப்பானோ! நாடு காத்திடும் கடமை உணர்ச்சியற்றவனோ மன்னன்!! கை ஒலி எழுப்பினான், எதிர்வந்து நின்றனர் ஏவலர். கட்டளையிட்டான். கடுகிச் சென்றனர் நிறைவேற்ற. படையொன்று கிளம்பிற்று; பறித்திட, ஒடித்திட, குவித்திட, வீசிட, பரப்பிட! எதிரிகளைக் கண்டதுண்டமாக்கி வீசிட, அவர்களின் படைக்கலன்களைப் பறித்திட, வாட்களை ஒடித்திட, தஞ்சை மன்னனின் கட்டளை பெற்ற படை முனைந்தது என்று எண்ணுகின்றாய். தம்பி! ஒடித்தனர் பறித்தனர், வீசினர்!! ஆனால், எதிரிப் படையினரை அல்ல - பகைவர்களை அல்ல. காடென வளர்ந்திருந்த துளசிச் செடிகளை!! ஏன்? என்கிறாய். மறுகணம் எண்ணிக்கொள்கிறாய், எதிரி அறியாவண்ணம் பாய்ந்து சென்று தாக்கிடப் புது வழி அமைக்கின்றனர் போலும், அதற்கே காடழித்துப் பாதை போடுகின்றனர் என்றெண்ணிக் கொள்கின்றாய். அது அல்ல நடந்தது. துளசிச் செடிகளைப் பறித்தெடுத்துச் சென்று எதிரிப்படை நுழையும் பாதையிலே வீசிடுக! பரப்பிடுக! துளசியைக் காலால் மிதித்துக்கொண்டு வருவது "மகா பாபம்!’ இதனை உணர்ந்து பகைப்படை வந்தவழியே திரும்பிப் போய்விடும்!! இது மன்னன் கட்டளை - போர் முறை. இதனை நான் வரலாற்றுச் செய்தி என்று கொண்டிடவு மில்லை கூறிடவுமில்லை. அந்த நாள் நிலையினைக் காட்டிடக் கட்டிவிடப்பட்ட கதை என்றே கொள்கின்றேன்; ஆனால், கருத்தேயற்றது இது என்று தள்ளிடமாட்டேன் - ஏமாளி மன்னன் இதுபோல், பொருளற்ற போர் முறையை மேற்கொள்வான் என்ற கருத்தினைத் தருவது இந்தக் கதை. துளசிச் செடி, இந்து மார்க்க வைதீகர்கட்கு, மகிமை வாய்ந்தது; புண்யம் பெற்றுத்தருவது. கண்களில் ஒத்திக் கொள்வதும், தலையில் சூடிக்கொள்வதும் நீருடன் கலந்து பயபக்தியுடன் உட்கொள்வதும், இந்து மார்க்கத்திற்கு ஏற்பட்டது. துளசி மாலையாமே மகாவிஷ்ணுவுக்கு!! துளசியை மிதித்துவிட்டால் போதும், பாவம் ஏழெழு ஜென்மத்துக்கும் விடாது! சாஸ்திரத்தைக் கூறினேன், தம்பி! சாஸ்திரத்தை!! இப்படி உள்ள ஒரு சாஸ்திரம் பொருள் உள்ளது, தேவைப் படுவது என்று வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும் தம்பி! இந்து மார்க்கத்து வைதீகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த நம்பிக்கையை, முஸ்லீம் படை மதிக்குமா, ஏற்றுக்கொள்ளுமா என்று அந்த மன்னன் எண்ணிடவில்லை. வீசு துளசியை! விரண்டோடுவர் பகைவர்!! என்று கட்டளையிட்டார். பச்சைப் பசேலென ஏதோ தெரிவது கண்டு, பகைவர்களின் குதிரைப்படை மேலும் வேகமாகப் பாய்ந்ததாம், அந்த மன்னனின் ஆட்சி வீழ்ந்ததாம், சொல்கிறார்கள். எதிரிப் படையை விரட்ட வழியிலே துளசியை வீசினது போல, இப்போது நாட்டிலே தலைவிரித்தாடும் அக்கிரமத்தை ஒழிக்க, அநீதியைத் தொலைக்க, ஒரு புதுப்படை புறப்பட் டிருக்கிறது. எது அந்தப் படை? எவர் திரட்டியது? எங்கு உளது? என்று கேட்கிறாயோ, தம்பி! முதலில் எங்கு உளது? எது அந்தப் படை? என்பதற்குப் பதில் கூறிவிடுகிறேன். "காஞ்சி’ இதழின் அட்டைப் படத்தை ஒரு முறை பார்! பார்த்தனையா? என்ன காண்கிறாய்? சாதுக்களை அல்லவா!! அந்தப் படைதான் தம்பி, புதிதாகக் கிளம்பியுள்ள படை! நந்தா திரட்டி அனுப்பியுள்ள படை!! ஊழல், ஒழுங்கீனம், இலஞ்சம், கொள்ளை இலாபம், கள்ளச்சந்தை, புரட்டு புனைசுருட்டு எனும் சமூகக் கொடுமைகளை எதிர்த்தொழித்திடுக என்று கட்டளையிட்டு. நந்தா இந்த சாதுக்கள் படையினைத் திரட்டி அனுப்பி வைக்கிறார். உள்துறை அமைச்சர் இந்த நந்தா நல்லெண்ணம் மிகக் கொண்டவர், நாணயமானவர் என்கிறார்கள். சமூகக் கேடுகளைக் களைந்தாக வேண்டும் என்ற உறுதி கொண்டவர்; சூள் உரைத்துச் சுறுசுறுப்பாகப் பணியாற்ற முனைந்திருக்கிறார். அதற்காக அவரை எவரும் பாராட்டுவர். நோக்கம் நேர்த்தியானது! ஆனால், முறை? துளசி அல்லவா கொட்டச் சொல்கிறார் பகைவர் நுழையும் பாதையில்! சட்டம், போலீஸ் ஆகியவைகளின் கண்களில் மண்ணைத் தூவிடும் கைதேர்ந்தவர்களைக் கண்டறிந்திட. காவி கட்டிய ஜெபமாலைகளை அல்லவா ஏவுகிறார். வேண்டும் வேண்டும் பெரும் பொருள் வேண்டும்! பிறர் பொருள் எனினும் பிழையிலை, வேண்டும்! உழைத்திடாமலே பொருள் குவித்திட உண்டு பல வழி, அனைத்தையும் அறிவோம்! என்று கூறிடும் கொடியவர்களை அடக்க. பணம் ஆட்கொல்லி! பாபச் சின்னம்! வாழ்வு மாயை! ஓர் வஞ்சக வலை! உலகு மாயை, அழியத் தக்கது, அழியாதது ஒன்று உண்டு, அது அங்கே! நிர்மலமான ஆகாயத்தை நோக்கு, நீசத்தனமிக்க உலகை நம்பாதே!! என்ற உபதேசம் பெற்றும் கொடுத்தும், கட்டற்று, கவலையற்று, காசு பணம் வேண்டும் என்ற அவசியமற்று, காலைக் கட்டிக்கொண்டு அழும் மனைவியும், காகூவெனக் கூவி அழும் குழந்தைகளும், கடன்பட்ட நெஞ்சமும் கொண்டிடாத காவிக் கோமான்கள்தானா கிடைத்தார்கள்! துளசி வீசுகிறாரே நந்தா, பகைவன் நுழையும் பாதையில்!! சாதுக்களைக் கண்டதும் காலில் வீழ்ந்திட, கன்னத்தில் போட்டுக்கொள்ள, வரம் கேட்டிட, சமாராதனை நடத்திட, இன்றும் இங்கு நிரம்பப்பேர் உள்ளனர் - இல்லை என்று கூறிடவில்லை. அதிலும் வடக்கே உள்ள சாதுக்கள் ஒரு படை அளவு உள்ளனர் - படை வீரர் போன்ற கட்டுடலும் இருக்கிறது; பார்த்துமிருக்கிறேன். தம்பி! ஹரித்துவாரத்தில் பார்த்தேன், அழகிய கங்கைக்கரை ஓரம் முழுவதும், அரண்மனைகளோ என்று வியந்திடத்தக்கதான மடங்கள் - சாதுக்களுக்கு. எத்தனை சாதுக்கள் எத்தனை நாட்களுக்கு, என்னென்ன கேட்டாலும் தந்திட, வழிபட்டிட, அங்கு ஏற்பாடுகளைச் செய்துவைத்துள்ளனர் சீமான்கள், சிற்றரசர்கள், வணிகக் கோமான்கள், வாழ்வுக்கலை வல்லவர்கள்! மாலை வேளையில், இந்தச் சாதுக்கள், ஒரு கவலையுமற்று - (இந்த உலகம்பற்றிய கவலை) உலவுகிறார்கள். ஒரு சமயம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய கவலை மேலுலகம் பற்றியதாக இருக்கலாம் - மேலுலகில் இங்கு உள்ளதுபோன்ற ஏற்பாடுகள் உண்டோ இல்லையோ என்ற கவலை. கோதுமையும், நெய்யும், சர்க்கரையும் பருப்பும், பாலும் பழமும் கிடைக்கிறது ஒவ்வொரு வேளையும். பரமனைப்பற்றிய தியானத்தில் ஈடுபடுகிறார்கள். ஏன் முடியாது!! பசிப்புலி அடக்கப் பட்டதும், புண்ணியம் பற்றிய நினைப்பு சுரக்கிறது. சாதுக்கள் போல "சம்சாரிகள்’ இருக்க முடிகிறதா! பாலுக்குச் சர்க்கரை கூட அல்ல, கூழுக்கு உப்பு போதுமான அளவு இல்லையே என்ற கவலை குடையும்போது, சாதுவாக இருக்க முடிவதில்லை, சாமான்யர்களால் - கோபம் தாபம், குமுறல் கொதிப்பு, பகை பயம், அடிமைத்தனம் அக்கிரம நினைப்பு எல்லாம் குடிபுகுந்து விடுகின்றன - போக்கிரியாகிறான், திருடனாகிறான், வெறியனாகிறான், வெகுண்டெழுகிறான், சாதுவாக இருக்க முடிவதில்லை. சாதுவின் வாழ்க்கை நிம்மதியாக இருப்பதற்கான பொறுப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதால், சாது சாதுவாக இருந்திட முடிகிறது. வாழ்ந்திட வழி அமைத்துக் கொடுத்திட வேறு சிலர் பொறுப்பேற்றுக் கொள்வதனால், இவர்கள், வாழ்வு என்றால் என்ன? அது உண்மையா, மாயையா? இவ்வுலக வாழ்வு நித்தியமா அநித்யமா? என்பன பற்றிச் சிந்திக்கவும் - சிரவணம் செய்யவும் முடிகிறது. இந்த நிலையிலேயும், சாதுக்கள் சாதுத்தன்மையை விட்டு வெகுதூரம் விலகி, காமக்குரோத மதமாச்சரியங்களால் ஆட்டுவிக்கப்படும் வெறித்தன்மை கொண்டுவிடுவது பற்றிய செய்திகளும் அடிக்கடி வெளிவருகின்றன. பெரியசாமிக்கு விஷம் கொடுத்த சின்னசாமி, பீடத்தைப் பெயர்த்தெடுத்த சாமி, பெண்ணைக் கடத்திச் சென்ற சாமி, மண்ணில் பொன்னை மறைத்த சாமி, மரக்கறி உணவை மறுத்த சாமி, கரியைப் பொன்னாய் ஆக்கும் சாமி, காளியை ஏவல் கொள்ளும் சாமி, காட்டு மாளிகை கட்டிடும் சாமி, கன்னியர் கலங்கிட நடந்திடும் சாமி, கோர்ட்டு வாசலில் இருந்திடும் சாமி, கொடுத்ததை மறைத்திடும் குட்டிச் சாமி, கிருமிக்கூடாய் ஆகிடும் சாமி என்று எத்தனை எத்தனையோ வகையினர் உளர். வடக்கே நடைபெறும் கும்பமேளாக்களின்போது, தம்பி! இந்தச் சாதுக்கூட்டம் கோலாகலமாகப் பவனி வருவதுண்டு. பல்லக்கில் ஏறிடும் சாமி, குதிரை ஏறிடும் சாமி, யானைமீது அம்பாரி அமைத்து அதிலே பவனி வந்திடும் சாமி, உடலை மறைத்திட உடை தேடாது, உள்ளது காண்க என உலவிடும் சாமி, முகாம் அமைத்து முழங்கிடும் சாமி, யாகம் வளர்த்திடும் பெரிய சாமி இவ்விதம் பலர் அரசோச்சுகின்றனர், அந்தக் கும்பமேளாக்களில். உடை அணியா உருவங்களைத் தெரிசிக்க, விழுந்தடித்துக்கொண்டு செல்லும் இலட்சக்கணக்கான பக்தர்களில் சிலர், இடிபட்டு மிதிபட்டுச் செத்தனர் என்றும் செய்தி வந்திருக்கிறது. உள்ளதில் கெட்டது எதுவோ அது மட்டுமே உன் கண்களில் படுகிறது; உண்மைச் சாதுக்களே இல்லையோ என்று என்னைக் கேட்பர், தம்பி! நான் சொல்லக்கூடியது இதுவே. உண்மைச் சாதுக்கள் மிக மிகக் குறைவு, உடையார் சாதுக்களாக உள்ளோரே மிக அதிகம்; உண்மைச் சாதுவைக் கண்டறிவதும் கடினம் என்று குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்ற கிழமைதான் பேசியிருக்கிறார் - திருத்தணியில் என்று நினைக்கிறேன். உண்மைச் சாதுவைக் கண்டுபிடிக்கிறோம் என்றே வைத்துக்கொள். அவர்கள், நந்தா கூறிடும் வேலைகளையா மிக முக்கியமானது எனக் கருதுவர். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பின் தன்மை, மகிமை ஆகியவற்றிலே மனத்தைச் செலுத்திக்கொண்டு இருக்கும் சாதுக்களிடம் நந்தா, நியாய விலைக்கும் அநியாய விலைக்கும் உள்ள தாரதம்மியத்தைப்பற்றியும், சந்தைக்கும் கள்ளச்சந்தைக்கும் உள்ள தொடர்பு பற்றியும் ஆராய்ந்தறிந்து நல்வழி காட்டுக! என்று கூறினால் என் சொல்வர்! "பாலகா! உலக மாயை எனும் இருளில் சிக்கிச் சீரழிகிறாய்! சந்தை என்கிறாய்! கள்ளச் சந்தை என்கிறாய்! பொருள் என்கிறாய்! விலை என்கிறாய்! இந்த உலகமே சந்தை! கள்ளச் சந்தை! மாயச்சந்தை! பரம்பொருளன்றி மற்றவை பொருளே அல்ல! இதனை அறிந்திட நீ தரவேண்டிய விலை நிராசை! போ! போக போகாதிகளில் ஈடுபடும் சுபாவத்தை மாற்று! இந்திரியச் சேட்டைகளை அடக்கு! இகத்தை மற! பரத்தைத் தேடு! ஓம் தத்சத்!’ என்று கூறுவரேயன்றி, ஒயிலூர் கடைத் தெருவில் ஒன்பதாம் நம்பர் கடையில் அறுபது மூட்டை சீனியை ஒளித்துவைத்திருக்கிறான் கங்காதரன் என்ற தகவலைச் சேகரித்துக்கொண்டு வந்து தருவார்களா! உண்மைச் சாது இந்த உலக விவகாரத்தில் தன்னைச் சிக்க வைத்துக்கொள்ளமாட்டார். சிக்கவைத்துக்கொண்டு சீர் செய்வேன் என்று செப்பிடும் சாது உண்மைச் சாதுவாக இருந்திட இயலாது. என்றாலும், குல்ஜாரிலால் நந்தா மெத்த நம்புகிறார், சாதுக்கள் படை திரண்டால் சகல கேடுகளும் ஒழிந்திடும் என்று அவ்வளவு நம்பிக்கை துளசியின் மகிமையில்! வீசுகிறார் பகைவன் நுழைந்திடும் பாதையில். தம்பி! உங்கள் அண்ணாதுரைக்குச் சாது சன்னியாசிகள் என்றாலே பிடிக்காது, அதனால் இதுபோலக் கூறுகிறான் என்பர் சிலர். நான் கூறியிருப்பதைவிட வேகமாக, வெளிப்படையாக, சாதுக்களைப் படைதிரட்டும் ஏற்பாட்டினைக் கண்டித்துச் சிந்தனையைத் தூண்டிச் செம்மைப்படுத்தத் தக்க சீரிய முறையில் இந்தக் கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில், நயனதாரா சாகால் என்பார் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். திருமதி விஜயலட்சுமி பண்டிட் திருமகளார் ஒருவருக்கு நயனதாரா என்று பெயர்; கட்டுரையாளர் அவர்கள்தான் என்று எண்ணுகிறேன். துணிவும் தெளிவும் துள்ளுகிறது நயனதாராவின் கட்டுரையில்! இடித்துரைக்க ஏளனத்தையே கருவியாக்கிக் கொண்டுள்ளார். இலட்சிய மணமும் கமழ்கிறது கட்டுரையில்; புத்துலகம் காணவேண்டும் என்ற துடிப்பு பளிச்சிடுகிறது. எந்த நவயுக உலகில் ஓரிடம் பெற நாம் போராடிக்கொண்டு வந்தோமோ, அந்த உலகு வேகமாக, வண்ணம் மிகக்கொண்டதாக மாறிக்கொண்டிருக்கிறது - ஜெட்விமான வேகத்தில் செல்கிறது. வேறெந்தக் காலத்தைக் காட்டிலும் நன்மை மிக அதிகமாக அறைகூவி அழைத்திடும் இந்தக் காலத்தில், உலக கிருகத்தில், விஞ்ஞானம் புரட்சியை - ஏற்படுத்தியபடி இருக்கிறது; இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆகிக்கொண்டு வருகின்றனர், எங்கெங்கும் உள்ள மக்கள் - ஆனால், நாம் அல்ல! நாம் மீண்டும், பழைய கட்டைவண்டிக் காலம் போதுமென்ற நினைப்புக்கொண்டு, கர்நாடக யுகத்தை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கி விட்டோம் - பின்னோக்கி!! மூடு பனி விலகுகிறது தற்காலிகமாகத் தேசிய அரங்கிலே புதிய நட்சத்திரமாக, சாது வந்துள்ளார், காண்பீராக!! துவக்கமே தம்பி! துணிவு துள்ளும்விதமாக அமைந்துவிடுகிறது. கட்டைவண்டிக் காலம் பின்னோக்கிப் பயணம் கர்நாடக யுகம் என்று இடித்துரைக்கிறார், நயனதாரா. கடுமையான கோடை வெப்பத்தைத் தணித்திடும் பூங்காற்றுப்போல, ஒதிய மரங்களுக்கு மத்தியில் ஓர் சந்தனத் தருபோல, ஓட்டை ஒடிசல்களுக்கு மத்தியில் கிடந்திடும் ஓர் நல்முத்துப்போல, பழமை, பண்டைப் பெருமை, பரதேசிகளின் பரிபாலனம் என்பனபற்றி எல்லாம் பெரிய இடத்துள்ளார் பேசிடும் இந்த நாட்களில், உலகம் விஞ்ஞானத்தின் உன்னதத் தன்மையினைத் துணைகொண்டு வேகமாக, முன்னேற்றப் பாதையிலே செல்கிறதே, உதவாக்கரைகளே பெற்றதையும் இழந்துவிடும் பேதைமைபோல, அடைந்துள்ள ஓரளவு முன்னேற்றத்தையும் இகழ்ந்துவிட்டுப் பின்னோக்கிச் செல்கிறீர்களே! கட்டை வண்டிக் காலத்தின்மீது மீண்டும் மோகமா? என்று கேட்கிறார். கோபம் பொத்துக்கொண்டுதான் வரும், பழமை விரும்பிகளுக்கு. அதிலும் இடித்துரைப்பது என்போன்றவன் எனில், எரிதழலாகுவர். ஆனால், கட்டுரை யாளரோ, நானல்ல. பின்னோக்கி நடத்திடும் இந்தப் பயணத்தில் ஒரு கட்டம் சென்றிடுவோம் - நமது நிர்வாகத் துறைகளிலே சாதுக்கள் வேலைக்கு அமரும் கட்டம்! நமது வெளிநாடுகள் குறித்த விவகாரத்துறையிலும்!! என்று கூறிக் கேலி செய்கிறார் நயனதாரா. போகிற போக்கைப் பார்த்தால் இவ்விதந்தான் இருக்கிறது என்பதைச் சிலரேனும் உணர முடிகிறது. பற்றற்றவர்கள் சாதுக்கள், இவர்களைப் பரிபாலனத் துறையில் ஈடுபடுத்தினால், ஊழல், ஒழுங்கீனம், இலஞ்சம் போன்றவைகள் நெளியாது என்றும் எண்ணிடத் தோன்றும். ஊழலையும் ஒழுங்கீனத்தையும் இலஞ்சத்தையும் முறைகேட்டினையும் கண்டறிந்து ஒழித்திட வல்லவர்கள் சாதுக்களே என்ற எண்ணம், வளர வளர ஊழலைச் செய்திடுவோர் எவர்? சம்சாரிகள்! ஏன்? அவர்கள் ஆசைக்கு ஆட்பட்டவர்கள்! ஆசைக்கு ஆட்பட்டவர்கள் வேலைகளில் உள்ள மட்டும், ஊழல் இருக்கத்தான் செய்யும். எனவே, ஆசைகளைத் துறந்த சாதுக்களை, சர்க்கார் அதிகாரி களாக்கிடுவோம் - ஊழல் ஏற்பட வழியே எழாது என்ற எண்ணம் உருவாகிடத்தான் செய்யும். எங்கும் எவரும் இதுபோல எண்ணிடமாட்டார்கள் என்றுரைப்பர் தம்பி! இதுபோல எண்ணியது மட்டுமல்ல, இதற்கொப்பான ஒரு ஏற்பாட்டையே மேற்கொண்டார் இங்கிலாந்து நாட்டில் கிராம்வெல் எனும் பட்டமற்ற மன்னன் - பாதுகாவலன். பொருளாசை கொண்டோர் புனிதப் பணியாற்றிட மாட்டார்கள் - புனிதப் பணியாற்றி வரும் பாதிரிமார்களைக் கொண்டே ஆட்சி முறை கண்டிடல் வேண்டும், அவர்களே அறநெறி அறிந்துரைப்பர், அப்போதுதான் அறநெறி வழுவாத நிலை ஆட்சியிலும் சமூகத்திலும் இருக்கும் என்று திடமாக நம்பிய கிராம்வெல், பாராளுமன்றத்தைத் திருத்தி அமைத்தார் - பாதிரிமார் பார்-மென்ட் என்றே பெயரிடப்பட்டது அதற்கு; வரலாறு. எனவே, சாதுக்களைச் சர்க்கார் நடத்திட அழைப்பாரோ! என்று கட்டுரையாளர் கேலிக்காக இதுபோல் கூறுகிறாரே என்று ஐயம் கொள்ளவேண்டாம். தங்கு தடையின்றி, கேட்பார் மேய்ப்பாரின்றி, இந்தப் பின்னோக்கிச் செல்லும் பயணம் மேற்கொள்ளப்படுமானால், கட்டுரையாளர் குறிப்பிடும் கட்டம் பிறந்திடக்கூடும். கிராம்வெல் செய்தே பார்த்தார். நடந்தது என்னவெனில், ஆட்சி மன்றத்தில் அமர்ந்ததும், பற்றற்ற பாதிரிமார்கள் தத்தமது விருப்பு வெறுப்பினைக் காட்டிடவும் அதற்காக வாதிடவும், போரிடவும் முனைந்து, பாராளுமன்றத்தைப் படுகளமாக்கிவிட, கிராம்வெல் கலக்கமும் துக்கமும் கொண்டு, அந்தப் பார்லிமெண்டையே கலைத்துவிட்டு, புனிதப் பணியாற்றிடப் பழையபடி ஆலயம் சென்றிடுக என்று அவர்கட்குக் கூறி அனுப்பிவிட்டார், உளவறியும் படை, போலீஸ் படை, கட்சித் தொண்டர் படை ஆகியவைகளால் சாதிக்க முடியாத செயலைச் செய்திடச் சாதுக்கள் படையினால் முடியும் என்று நம்பிடும் நந்தா, அதே சாதுக்களால் மட்டுமே ஒழுங்கான, ஊழலற்ற ஆட்சி நடத்த முடியும் என்ற நம்பிக்கையும் கொள்ள ஏன் தயங்கப்போகிறார்? அதனால்தான் கட்டுரையாளர் கூறினார், இனி, சர்க்காரின் நிர்வாக அலுவலகங்களில், - வெளிவிவகாரத் துறையிலும் - சாதுக்களே நியமிக்கப்படும் காலக்கட்டம் பிறந்திடக்கூடும் என்று. மாஸ்கோவிலும், வாஷிங்டனிலும், ஆசியப் பகுதியில் உள்ள சில முக்கியமான தூதராலயங்களிலும், சாதுக்களே கொலுவிருக்கக்கூடும் - எதிர்காலத்தில் - பழமையை நோக்கி நடந்திடும் எதிர்காலத்தில்! என்று கூறியிருக்கிறார் கட்டுரையாளர். முற்போக்காளர்கள், இதனை ஏளன மொழி என்பர்; ஆட்சிப் பொறுப்பில் உள்ளார் இதனை எரிச்சல் மூட்டும் பேச்சு என்பர்; கேலி செய்து அறிவு புகட்டும் நேர்த்தியான முறையிலே அமைந்த பேச்சு இது என்று நான் கருதுகிறேன். சாதுக்கள் இவ்விதம் சகல துறைகளையும் நிர்வகிக்கக் கிளம்பிடும் போக்கை வகுத்திட முற்படுவது பிற்போக்குத்தனம் என்று கண்டித்திடும் இக்கட்டுரையாளர், இன்று சகல துறைகளிலும் நடைபெற்றுக்கொண்டுள்ள நிர்வாக முறை சிறந்ததாக இருக்கிறது என்று கூறவில்லை - அதிலே காணப்படும் தவற்றையும் கண்டிக்கிறார் - கேலி மொழியால். சாதுக்களை வெளிநாடுகளில் தூதராலயங்களில் நியமிப்பது நல்லதுகூட என்கிறார். இதென்ன, சாதுக்களை நியமிக்கலாம் என்று பரிந்துரைப்பதுபோல் தோற்றமளிக்கிறதே இந்தப் பேச்சு என்று எண்ணி ஆயாசப்படுவீர்கள். ஆனால், இன்றுள்ள நிலையைக் கேலி செய்யவே இதுபோல் கூறுகிறார். இன்று தூதராலய அதிபர் தூங்கி விழுகிறாரல்லவா, தாம் அளித்திடும் விருந்துகளின்போது, அதனைவிட மேலாக இருக்குமல்லவா, சாது, அதிபர் ஆனால்! ஆசியப் பகுதியிலே வேலை பார்க்கச் சொன்னால் மறுத்துவிடுகிறார் அல்லவா, தூதராலய அலுவலர்; மனைவி, பாரிஸ் அல்லது ரோம் நகரில் வாழ்ந்திடவே விரும்புகிறார் என்ற காரணத்துக்காக, அதைவிட மேல்தான், சாது தூதராலய அலுவலராகிவிடுவது. சாதுவுக்குக் குடும்பம் இல்லை, எனவே, சுக வாழ்வுபற்றிய நினைவு எழக் காரணமில்லை. விருந்தளிக்கமாட்டார்; வாழ்க்கைச் சுவையால் வசீகரிக்கப்பட்டு வீழ்ந்திடமாட்டார். ஏனெனில், வாழ்வே மாயம்! என்பதல்லவா, சாதுவின் சித்தாந்தம்!! கடுங்குளிர் தாக்கிடும் இடங்களில் மட்டுமே சாது அதற்குத்தக்க உடை அணிந்திடுவார்; பருவமாற்றத்தின் விளைவுகளையும் கட்டுப்படுத்திவிடுவாரேல், உடைச் செலவும் இல்லை! சர்க்கார் பணம் விரயமாகாது. நிர்வாகத் துறையில் சாது இடம்பெற்று விடுவாரானால், மகத்தான மாறுதல் ஏற்படுத்திவிடுவார் - நாட்டவர் அனைவரும் சமாதி நிலை அடைவர்! விழித்தெழுந்திடும்போது, செத்துக்கிடப்போம் அல்லது நாம் சமாதி நிலையில் இருந்தபோது நாட்டைப் பிடித்துக்கொண்ட வேற்றவரின் கா-ன் கீழ் சிக்கிக் கிடப்போம். இருப்பினும், சாது மனப்போக்கின் காரணமாக இதனைப் பொருட்படுத்தமாட்டோம்; நடப்பது நிசமல்ல, நமக்கல்ல என்று எண்ணிக் கொள்வோம். இவ்விதமாகத் தம்பி! இன்றுள்ள நிலையையும், எதை நோக்கி நாம் இழுத்துச் செல்லப்படுகிறோமோ அந்த நிலையையும், மாறிமாறித் தாக்குகிறார்; முரட்டுத்தனமான தாக்குதல் அல்ல; மிக நேர்த்தியான முறையில்; உயர்தரமான நையாண்டி நடையில். உணவுப் பிரச்சினை குறித்துக் காங்கிரஸ் மேற்கொள்ளும் நடவடிக்கை சரியானதாக, பலன்தரத்தக்கதாக இல்லை என்ற கருத்தினையும் கட்டுரையாளர் விளக்கிவிட்டு, அதன் தொடர்பாக, சாதுக்கள் பற்றிய நையாண்டியை மேலும் தருகிறார். உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த நேரம், சாதுக்களை நாம் நாடிடப் பொருத்தமான நேரமே! உணவு நெருக்கடி போக்கிட உற்பத்தியைப் பெருக்குவது, இறக்குமதி செய்வதுகூடத் தேவைப்படாதல்லவா! (உபவாசம் இருந்திட) உணவு தேவை இல்லை என்று கூறிடத்தக்க நினைப்பு அருளுவர் சாதுக்கள்!! சாதுக்களை நாடி அவர் துணையுடன் துரைத்தனம் நடத்த முனைந்துவிட்டோமானால் உலகில் நமது நாட்டுக்குத் தரப்பட்டுள்ள இடம் என்ன என்பதுபற்றியோ, காமன்வெல்த் மாநாட்டிலே நாம் பின் வரிசையில் தள்ளப்பட்டுக்கிடந்திட நேரிட்டதுபற்றியோ, உலக நாடுகளிலே நமக்கு உற்ற நண்பர்களாக அதிகம் பேர் இல்லை என்பதுபற்றியோ ஆப்பிரிக்க பூபாகத்தில் சீனா பாசவலை வீசுவதுபற்றியோ, காஷ்மீர் குறித்துத் தான் கொண்டுள்ள போக்கே நியாயமானது என உலகினை நம்பவைத்திடப் பாகிஸ்தான் எல்லாவிதமான முயற்சி களிலும் ஈடுபடுவதுபற்றியோ நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்! உலகம் உண்மை என்று எண்ணுபவர்கள் இவைபற்றி எண்ணிக் கவலைப்படட்டும். (சாதுக்களால் நடத்திச் செல்லப்படும் நிலைபெற்ற) நமக்கு உலகம் வெறும் புகை! மாயம்! உலகை மறந்திடுவோம். உலக விஷயம் குறித்து எண்ணிக் காலத்தை வீணாக்குவானேன்!! இவ்விதம் கிண்டல் செய்கிறார் நயனதாரா! சாதுக்கள் ஒரு நாட்டின் அரசினை நடத்திச்செல்ல இடமளித்தால் மக்கள் என்ன கதி பெறுவர் என்பதனை எடுத்துரைக்கிறார். உலகம் மாயை, வாழ்வு அநித்யம் என்ற நம்பிக்கையும், உண்டு உலவிட வேண்டும் என்று எண்ணாமல் உபதேசம் கேட்டுச் சமாதிநிலை அடைய வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட சமூகமாக்கப்பட்டுவிடுவோம், சாதுக்களைத் துரைத்தனம் நடத்தச் சொன்னால் என்பதனை எடுத்துரைக்கிறார். பிறகு சாதுக்கள் உண்மையாகவே நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்ல தொண்டாற்ற விரும்பினால், அதற்கு ஏற்ற இடம், நிர்வாகத்துறை அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். என்னென்ன செய்யலாம் இந்தச் சாதுக்கள் என்பது பற்றியும் கூறுகிறார். இந்து மார்க்கத்தில் மூண்டுவிட்டுள்ள அழுக்குக் குட்டைகளை ஒழித்திடப் புனிதப் போர் தொடுக்கட்டும், திருக்கோயில்களிலே ஊழல் ஆட்சி நடத்தும் பூஜாரிகளின் புரட்டுகளை அம்பலப்படுத்தட்டும். மார்க்கத்தைத் தவறான வழியிலே நடத்திச் செல்வதை, வறுமை, அறியாமை ஆகியவற்றின் பிடியிலே சிக்கியுள்ள மக்களைச் சுரண்டிடும் கொடுமையைக் கொதித்தெழுந்து எதிர்த்திடட்டும், தீண்டாமையை எதிர்த்துப் போரிடட்டும்! தம்பி! இந்த அளவுக்குத் துணிந்து நீயோ நானோ கூறினால், எத்தனை ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வரும், பழமை விரும்பி களுக்கு, எண்ணிப்பார்! மதத்திலே ஊழல்கள் நெளிகின்றன, போக்குவார் இல்லை; சுரண்டல் நடக்கிறது, தடுப்பார் இல்லை; மூடத்தனம் மூடுபனியாகக் கிடக்கிறது, அறிவு ஒளி அளித்திடுவார் இல்லை. சாதுக்கள் இந்த நிலையை மாற்றிடப் புனிதப்போர் புரிந்திட வேண்டும்; அதற்கு ஏற்றவர்கள் அவர்கள் என்ற கருத்துடன் கட்டுரையாளர் எழுதுகிறார். மதத்துறையைவிட்டு வெளியே வேறு துறைகளிலும் சாதுக்கள் ஈடுபட விருப்பம் கொண்டால், நமது நகரங்களிலே உள்ள குப்பை, கூளம் அழுக்கு அனாசாரம் ஆகியவற்றைப் போக்கிடும் பணியினை மேற்கொள்ளட்டும் என்கிறார். சாதுக்களுக்கும் கோபம் வரும், மார்க்கக் காவலர்க்கும் மன உளைச்சல் ஏற்படும்; என்ன அக்கிரமம் குப்பை கூளங்களை அகற்றிடும் வேலையையா செய்யச் சொல்கிறீர், மன அழுக்கைப் போக்கிட அவதரித்துள்ள மகான்களை என்று வெகுண்டுரைப்பர். என்ன செய்வது, கட்டுரையாளர் இவர்களின் கடும் கோபத்தைப் பொருட்படுத்துபவராகத் தெரியவில்லை, தயக்கம் தடுமாற்ற மின்றி, அச்சம் கூச்சமின்றிக் கூறுகிறார். வீதிகளிலே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த, சுவர்களிலே ஒட்டப்பட்டுக் கிடக்கும் ஆபாசச் சுவரொட்டிகளைக் கிழித்தெறிய, வீதியிலே திரிந்துகொண்டிருக்கும் நாய்களை விரட்ட, ஊருக்கு நல்ல குடி தண்ணீர் கிடைத்திடும் வழி தேட, இந்தப் பணிகளில் ஈடுபட முன் வரட்டும் சாதுக்கள் என்று கூறுகிறார். நாடும் சமூகமும் நல்ல நிலைபெற, எதிர்காலம் ஒளி மிக்கதாக இருந்திட, விஞ்ஞானத்தின் துணைகொண்டு, இன்னலைக்கண்டு அஞ்சாத மனப்பான்மையுடன் பணியாற்றி முன்னேற்றம் காணவேண்டுமேயன்றி, சாது சன்னியாசிக் கூட்டத்திடம் கைகட்டி வாய்பொத்தி நின்று, காட்டுமிராண்டிக் காலத்தை நோக்கிப் பின்னோக்கிச் சென்றிடக் கூடாது; நேரு பண்டிதர் நமக்கு அளித்துச் சென்ற அறிவுரை அதுவே; அவர் காட்டிய வழி நடப்போம்; மக்கள் காண அவர் உரைத்த இலட்சியங்களைக் காட்டுவோம். முன்னேற்றப் பாதையிலே நாம் நடைபோட நமக்கெல்லாம் துணிவு அளித்த நேருவின் உருவத்தை மக்கள் காணட்டும், கர்நாடகக் காலத்துக்கு நம்மைத் தள்ளிச் செல்லும் சாதுக்களின் உருவத்தை அல்ல - என்று மிக உருக்கமாகக் கூறுகிறார். நந்தாவின் உள்ளம் நொந்துபடும் - சாதுக்கள் கோபித்துக்கொள்வர் என்றாலும் உள்ளத்தில் பட்டதை உரைத்திடுவேன் என்கிறார் கட்டுரையாளர். தம்பி! சாது சன்யாசிகளைப் படைதிரட்டி, நாட்டிலே நெளியும் கேடுகளை ஒழித்திடப் போரிடும்படி நந்தா கூறுவது கேட்டு, முற்போக்காளர் அனைவரும் நயனதாரா வெளியிட்டது போன்ற கருத்தினையே பெறுவர், கவைக்குதவாத திட்டமாக இருக்கிறதே உள்துறை அமைச்சர் தீட்டியது என்று எண்ணிக் கவலை கொள்வர். தம்பி! எத்தகைய படையிடம் எத்தகைய போர் வகையைத் தந்திட வேண்டும் என்றறிந்து அவ்விதம் செய்தால் மட்டுமே, வெற்றி பெற்றிட முடியும் என்று கூறினேன் - நந்தா திரட்டிடும் சாதுக்கள் படை ஊழல் இலஞ்ச ஒழிப்புக்கு ஏற்றது அல்ல என்பதனை விளக்கிக் காட்டியுள்ளார் நயனதாரா. சிற்சில காலத்தில் சிற்சிலருக்கு, கேடு களைந்திட வேண்டும் என்பதிலே ஆர்வம் எழுகிறது, செயல்பட முனைகின்றனர். ஆனால், அவர்கள் மேற்கொள்ளும் முறையும், திரட்டிடும் படையும் பயனற்றதாகிவிடுவதால் வெற்றி கிடைப்பதில்லை. இத்தாலி நாட்டிலே ஓர் காலத்தில், சமூகம் முழுவதும் கேடுகள் மிகுந்திருந்தன. ஒழுக்கம் அழிக்கப்பட்டுக் கிடந்தது. இதனைக் கண்டார், வேதனை மிகக் கொண்டார், இந்த நிலையினை மாற்றியாக வேண்டும் எனத் துடித்தார், செயலில் ஈடுபட்டார் ஒரு சிலர். அவருடைய ஆர்வம் போற்றிடத்தக்கது - ஐயமில்லை. அவருடைய அறிவுரையை மறுப்பார் எவரும் இருந்திட முடியாது. அருளாளர் என்றும் அவரைக் கொண்டாடினர். பெயர் சவனரோலா. பொய்யும் புரட்டும் ஒழிந்திட, அநீதியும் அக்கிரமமும் அழிந்துபட, புனிதப்போர் தொடுத்தார் சவனரோலா! படை திரட்டினார் அப்புனிதப் போருக்காக. படை எது தெரியுமா? தம்பி! சன்மார்க்கத்தை மதித்திடும் ஆர்வமிக்க தொண்டர் படை. போர் முறை? கருப்புடை அணிந்து வலம் வருவர், புனிதப்போர் நடாத்திடும் படையினர் நகரத் தெருக்களில் - வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு, தலைமயிரைப் பிய்த்துக் கொண்டு கதறியபடி. தர்மம் அழிகிறதே தடுப்பார் இல்லையோ! அக்ரமம் நெளிகிறதே அழிப்பார் இல்லையோ! நீதி சாய்கிறதே, கேட்பார் இல்லையோ! என்றெல்லாம் புலம்பியபடி வலம் வருவராம். வெற்றி கிட்டியதா என்றுதானே கேட்க விரும்புகிறாய் தம்பி! எப்படிக் கிட்டும்! அக்கிரமக்காரன்தான் கண்ணீர் கண்டு கலங்கமாட்டானே! இதயம் இருந்தால்தானே, இளக! உள்ளம் உறங்காதிருந்தால்தானே, உருக!! சவனரோலாவின் படை, பார்ப்போருக்கு இரக்க உணர்ச்சியை மட்டும் தந்திட உதவிற்று. சமூகக் கேடுகள் ஒழிந்துபட உதவவில்லை. நந்தா உருகுகிறார், உள்ளம் துடிக்கிறது, ஊழல் மலிந்து கிடப்பது கண்டு; ஆனால், அதனை ஒழித்திட அவர் மேற்கொள்ளும் முறை, எனக்குத் தம்பி! துளசியைப் பகைவன் நுழையும் வழியிலே வீசி வைத்த மன்னனையும், மாபாவி களைத் திருத்த மாரடித்தழுதிடும் படையைத் திரட்டிய சவனரோலாவையுந்தான் நினைவிற்குக் கொண்டு வருகிறது. நான் கூற எண்ணிய கருத்துக்களை நயனதாரா என்பவர், எனக்கு ஏற்படக்கூடியதைவிட அதிகத் துணிவுடனும் தெளிவுடனும் எடுத்துரைத்தார் - நான் அதனை எடுத்துரைத்தேன். சாதுக்களை, தம்பி! நந்தா மனிதப் பிறவியிலிருந்து மாறுபட்டவர்கள் என்று எண்ணுகிறாரோ அல்லது மேம்பட்டவர்கள் என்று கருதுகிறாரோ எனக்குத் தெரியவில்லை. சாதுக்களின் இயல்பும் நடவடிக்கையும், நிலையும் நினைப்பும் எப்படி உளது என்பதைக் கண்டறிந்து உண்மையை உணர்ந்திடத்தக்க விதமாக, நந்தாவுக்கு சாதுக் கூட்டத்திடம் எத்தனை எத்தனை ஆண்டுகளாக நெருங்கிய நேசமிகு தொடர்பு உளதோ அதனையும் நானறியேன். ஆனால் ஆண்டு பல, சாது சன்னியாசிகளிடம் நெருங்கிய தொடர்புகொண்டு, தூய்மையைத் தேடிய, ஒருவர் - சாதுக்கள் குறித்துக் கண்டறிந்து கூறினதுபற்றி முன்னம் நான் படித்திருக்கிறேன். சாது சன்னியாசிகள் என்றாலே கட்டோடு பிடிக்காதவரின் கருத்து அல்ல. மதம் பொய், பூஜாரிகள் புரட்டர்கள் என்று எண்ணிடும் வழி தவறியவர்களின் வார்த்தை அல்ல. சீலம் பெறவேண்டும், அதனைப் பெற்றிட ஏற்ற இடம் சாது சன்யாசிகளின் சன்மார்க்கக் கூடங்களே என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, அவர்களிடம் பயபக்தியுடன் நடந்துகொண்டு வந்தவரின், கண்டுபிடிப்பு, நான் குறிப்பிடுவது. குப்பை கூளங்களைக் கிளறி இந்த நாட்டு மதத்தை இழிவுபடுத்த வேண்டும் புனிதத் தன்மையைப் பாழாக்க வேண்டும் என்ற கெடுமதி கொண்டவரின் கலகப் பேச்சல்ல - இந்து மார்க்கத்தைத் தழுவிக்கொண்டு எல்லையிலாப் பரம் பொருளைக் கண்டிட ஏங்கித் தவித்திட்ட ஓர் அம்மையாரின் மனக் குமுறல் நான் குறிப்பிடுவது. அமெரிக்க நாட்டிலிருந்து இங்கு வந்த மேயோ அல்ல - பிரிட்டிஷ் நாட்டிலிருந்து இங்கு வந்து, இந்த நாட்டைத் தாயகமாக்கிக் கொண்டு, பேரையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொண்ட ஓர் மாதரசியின் கண்டன உரை. போன மாதக் கப்பலில் வந்து இறங்கிப் பத்து நாள் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு, சீமை திரும்பிச் சென்று அரைகுறை அறிவினைக் காட்டிக்கொள்ளும் அவசரப் புத்திக்காரரின் அகம்பாவப் பேச்சு அல்ல. மீராபென் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு, "இந்தியக் கோலத்தை‘ப் பெற்றுக் கொண்டு, மகாத்மா காந்தியின் “சிஷ்யை’ ஆகி, அவருடைய ஆசிரமத்தில் இடம்பெற்று,”ஆத்ம சக்தி’யின் அருமையினை உணர்ந்து, அதற்கேற்றபடி தமது வாழ்க்கையினை ஒழுங்குபடுத்திக்கொண்ட உத்தமி என்று காங்கிரசின் பெருந்தலைவர்கள் கொண்டாடி வந்த அம்மையாரின் கொதித்த உள்ளத்தில் இருந்து கிளம்பிய சொற்கள். சாது சன்னியாசிகளிடம் சர்வேசனைக் கண்டறியும் "பரம இரகசியம்’ இருக்கிறது, அவர்களின் உபதேசம் கேட்டு உயர்ந்திடலாம் என்று மீராபென், சாதுக்களைக் கண்டு வழிபடலானார். திருத்தலங்கள் பலவற்றிலே இருந்து வந்த சாதுக்களைத் தரிசித்தார் - ஜென்ம சாபல்யம் ஆகவேண்டும் என்பதற்காக. ஆனால் என்ன கண்டறிந்து கொண்டார்? அவரே கூறட்டும், தம்பி! "1947-ம் ஆண்டிலிருந்து 1950-ம் ஆண்டுவரை, ரிμன்கசத்ஞக்ஒ அருகிலுள்ள பசுலோக் எனும் இடத்தில் இருந்து வந்தபோது, சாதுக்கள் பிரச்சினையிலே உள்ள அசங்கியம் அவ்வளவையும் கண்டறியவேண்டி வந்தது. என் காதுக்கு எட்டிய விஷயங்களைக் கேட்டு நான் திடுக்கிடலானேன். தீர விசாரித்தறிவது என் கடமை என்று உணர்ந்தேன். நான் அதுபற்றி விசாரிக்க விசாரிக்க மேலும் மேலும் அதிகமான அக்கிரமம், கொடுமைகள் நெளிவதைக் கண்டேன். சூதாட்டம், குடி, கூத்தி, கொலை இவைகளிலே மூழ்கிக்கிடந்தனர் சாதுக்கள். புனித வான்களின் தலம் என்று மக்களால் நம்பப்படும் ரிμன்கஸ் அரக்கர்களின் இருப்பிடம் என்பதை அறிந்து கொண்டேன்.’’ தம்பி! சாதுக்களைப்பற்றி, சாந்தமுனிவர் என்று சான்றோர் கொண்டாடிய காந்தியாரிடம் சிஷ்யையாக இருந்த மீராபென் கூறியது இது. பத்திரிகைகளில் அறிக்கையே வெளிவந்தது. இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் இது குறித்து எழுதிற்று, மீராபென் கூறுவதுபோலவே நிலைமை இருக்கிறது என்று. அந்த இதழின் ஆசிரியர் மகாத்மாவின் மைந்தர் - தேவதாஸ் காந்தி. பூலோக மாயையிலிருந்து விடுபட்டு, சாலோக சாமீப சாயுச்யப் பதவி பெற்றிட, அநித்ய வாழ்வை அகற்றிக்கொண்டு நித்திய வாழ்வு பெற, நிலையில்லா இன்பத்தை உதறிவிட்டுப் பேரின்பம் பெற, மருள் மூட்டிடும் பொருளை எறிந்துவிட்டுப் பரம்பொருளைக் கண்டிட வழி கூறிடும் மகான்கள், காவி கட்டிய இந்தச் சாதுக்கள் என்று நம்பிச் சென்றார் மீராபென் அம்மையார்; சாதுக்களின் தலைமைப் பீடமோ என்று எவரும் எண்ணிடத்தக்க ரிμன்கசத்ஞக்ஒ, அங்கு அம்மையார் கண்டது, சூதாட்டம் கற்பைச் சூறையாடல் கொலை குடிவெறி தம்பி! ஆண்டு பலவற்றுக்கு முன்பு நான் எழுதிய "வேலைக்காரி’யில் கொலைக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளக் கொடியவன் ஒருவன் சாது வேடமிட்டுக்கொண்டு ஆசிரமம் நடத்தி அங்கு அழகிகளை மலராகக் கொண்டு காமவேளுக்குப் பூஜை செய்து வந்தான்; அவனை உண்மைச் சாது என நம்பிக்கிடந்த ஒரு வாலிபன், யோகியாக வேடமணிந்து கிடந்தவன் போகி என்பதைக் கண்டறிந்து குமுறி, கொதித்தெழுந்து, கண்டனச் சொற்களை வீசினான் என்று எழுதியபோது, எத்தனை எத்தனை கண்டனம் என்மீது! எத்துணை எரிச்சல் கொண்டனர் பழமை விரும்பிகள். மீராபென் கூறிடும் நிலைமைக்கு என்ன பதில் கூறுவர்! பத்து ஆண்டுகள் பொறுத்துப் பார்த்தேன். சாதுக்கள் உலகம் தன்னைத்தானே திருத்திக்கொள்ளும் என்று, அதற்கான நேர்மைமிக்க முயற்சி எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்த்துக் கிடந்தேன். ஆண்டு பல கழித்து நான் ரிμன்கஸ் செல்கிறேன் - காண்பது என்ன? அவ்விடம் முன்பு போலவே பாபக்கூடமாக இருந்திடக் கண்டேன். பதறிப் போனேன். காவி உடையைக் காணவே சகிக்கவில்லை. சாதுக்களின் "கோட்டம்’ எத்துணை தீமைகளின் பிறப்பிடமாக இருப்பிடமாக இருந்து வருகிறது என்பதனை எடுத்துக் காட்டியதுடன் விடவில்லை மீராபென்; இத்தகைய சாதுக்களை அரசு ஆதரிப்பது அக்கிரமம் என்பதையும் கூறினார். புனித ஸ்தலங்கள் என்பவைகளிலே புனிதவான்கள் என்று உலவிக்கொண்டுள்ள சாதுக்களைத் திருத்தி நல்வழிப்படுத்திடவேண்டிய அவசரப் பிரச்சினையைக் கவனியாமல், சர்க்கார் இந்தச் சாதுக்களை உற்சாகப்படுத்தி ஆதரவு காட்டுவது தவறு என்பது என் கருத்து. இந்தக் கண்டனத்துக்குப் பிறகேனும் நிலைமை திருந்தியதா என்றால், இல்லை. இதற்குப் பிறகும் கும்பமேளாக்களிலே உடையற்று உலா வருகிறார்கள் இந்தச் சாதுக்கள். அவர்களுக்குள்ளே அமளி மூள்கிறது! அருவருக்கத்தக்க தீயசெயல்களில் ஈடுபட்டனர் என்று சிலர் பிடிபடுகின்றனர்; தண்டனை பெறுகின்றனர். மற்றவர்களோ மகேசன் அருளால் நாம் பிடிபடவில்லை! என்று எண்ணி, பூஜா மாடத்தில் கோலாகல வாழ்வு நடாத்தியபடி உள்ளனர். ஒழுக்கக் கேட்டினை ஒழித்திடச் சாதுக்களைப் படை திரட்டி அனுப்புவதற்கு முன்பு நந்தா, சாதுக்களிடம் நெளிந்திடும் ஒழுக்கக் கேட்டினைப் போக்கிட வழி என்ன கண்டார், வெற்றி எந்த அளவு பெற்றார்! கரிக்கட்டையைக் கொண்டு உடலழுக்கைப் போக்கிட முனைகின்றாரே!! முறையா? பாதையிலே காவி உடையினன் வரக் கண்டால், புரட்டன் வருகிறான் என்று மக்கள் உடனடியாக உணர்ந்து உரைக்கின்றனர். கண்மூடித்தனமாகச் சாதுக்களை வழிபட்டு வந்த, சாமான்யர்களுக்குக்கூட, சாதுக்கள்பற்றிச் சந்தேகங்கள் எழும்பிவிட்டன என்று எழுதுகிறார் மீராபென்; நந்தா மட்டும் துளியும் சந்தேகப்படவில்லை, சஞ்சலப்படவில்லை, சாதுக்கள் படை திரட்டிப் புனிதப் போர் நடத்தி வெற்றி காணலாம் என்று எண்ணுகிறார்! இந்தப் படை கொண்டு எந்தப் புனிதத்தைக் காண்பாரோ நானறியேன்; ஒன்று மட்டும் புரிகிறது தம்பி! நந்தா உலவிடும் காங்கிரஸ் வட்டாரத்திலேயே, நகைத்துப் பேசிடும் விஷயமாகி விட்டது இவர் சாதுக்களைப் படை திரட்டிடும் செயல். என்றாலும் அவர் அமைச்சர் - படை அமைக்கிறார். துளசியை வீசினானாமே மன்னன்! தடுத்திட முடிந்ததா, கேட்டிடும் துணிவு பிறந்ததா! எனவேதான், தம்பி! நந்தாவின் இந்த முயற்சியைத் துணிவுடன் கண்டித்து எழுதிய நயனதாராவின் கட்டுரையைக் கண்டு, வியந்து பாராட்டினேன் - உன்னிடமும் கூறினேன். அன்புள்ள அண்ணாதுரை 13-9-1964 கைதி எண் 6342 கைது செய்தார்கள். . . தம்பி! பாரிஸ், இலண்டன், வர்μங்டன், டோக்கியோ இப்படிப்பட்ட எழில் நகர்களில், ஐம்பது அடுக்கு மாடிக் கட்டடத்தில், மினுமினுப்பும் வழவழப்பும் உள்ள மெத்தையில் அமர்ந்தபடி, தான் கண்ட காட்சிகளையும் கோலங்களையும், உரையாடிய நண்பர்கள் குறித்தும், களிப்புப்பெற்ற கலைக் கூடங்கள் பற்றியும், வாங்கி வைத்துள்ள பொருள்பற்றியும், வருவதற்கான நாள்பற்றியும், தம்பிக்கு எழுதும் அண்ணன்மார்கள் உண்டு. உனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறேனே! குறைந்த பட்சம் பினாங்கு, சிங்கப்பூர், கொழும்பு, ஜகார்தா போன்ற இடங்களுக்குச் சென்று அங்கிருந்தாவது கடிதம் எழுத முடிகிறதா? உனக்குக் கிடைத்த அண்ணன் அப்படி! என்ன செய்வது!! சிறையிலிருந்து கொண்டு எழுதுகிறேன். சிறைதானே என்று அலட்சியமாகவும் எண்ணிவிடாதே, தம்பி! மாடிக் கட்டிடம்! தனி அறை!! கட்டுக்காவல் சூழ!! கம்பிகள் பதித்த கதவு! காற்றைத் தடுத்திடும் அமைப்பு! இலேசான இடமல்ல!! மாடிக் கட்டிடம் - 5-ம் நம்பர் அறை - மணிகூட அடிக்கிறது 9 - நவம்பர் 25. தொலைவிலே உள்ள பொது இடத்துக் கடிகாரமணி! "கடிகாரங்கள்’ என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் தொட்டும் தொடர்ந்து இரண்டு மூன்று கடிகாரங்களின் மணியோசை கேட்கிறது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தொகுதி ஐந்து 147 இசை நயத்துடன். இந்த இசையை விரட்டும் அளவுக்கு, மின்சார இரயில் வண்டிகள் கிளப்பும் ஓசை!! சென்னை நகரத்து மையத்தில்தானே இருக்கிறேன். நகரத்தையும் நகர மக்களையும் பார்க்க முடியாதே தவிர, நகரம் எழுப்பிடும் நாதத்தைக் கேட்க முடிகிறது - அதிலும் இரவு நேரத்தில் தெளிவாக மின்சார ரயில் கிளப்பும் ஒலி காதிலே விழும்போதெல்லாம், ஒவ்வொரு விதமான பொருளுள்ள சொற்றொடர் நினைவிற்கு வருவதுபோல, ஒரு மனமயக்கம்! சிறுவயதுக்காரருக்கு மட்டுந்தான் அப்படி ஒரு மயக்கம் ஏற்படும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன் - வயது ஆனவர்களுக்குந்தான் ஏற்படுகிறது. 5-ம் நம்பர் அறை, எனக்கு ஏற்கெனவே பழக்கமான இடம்; ஆமாம் தம்பி! இங்கு நான் இப்போது மூன்றாவது முறையாகத் தங்கி இருக்கிறேன். முன்பு தங்கியிருந்தபோது, இந்த மாடிக் கட்டிடம் முழுவதும், நமது கழகத் தோழர்கள் நிரம்பி இருந்தனர். பூட்டிவிட்ட பிறகு, அவரவர்கள் தத்தமது அறையிலிருந்தபடியே பேசிக்கொள்வதுண்டு. இம்முறை, நான் மட்டும்தான் இங்கு - நமது தோழர்களை, சிறையில் வேறோர் பகுதியில் வைத்து விட்டார்கள். என்னுடன் இருப்பவர்கள் இருவர் - ஒரு முஸ்லீம் பெரியவர் - மற்றொருவர் செட்டி நாட்டுக்காரர். இருவரும், அமைதி விரும்புபவர் - என்பால் அன்பு கொண்டவர்கள், அரசியல்பற்றி அதிகமாகப் பேசுபவர்கள் அல்ல - விஷயம் தெரியாதவர்களுமல்ல. சிறையிலே தம்பி, ஒருவன் எவ்வளவு காலம் நம்மோடு இருக்கப் போகிறவன் என்பதைப் பொறுத்தே பெரிதும் பழக்கம் ஏற்படும். சிறைபாஷையிலே, "தள்டா! அவன் போயிடுவான் பத்து நாள்லே! நம்ம கதையைச் சொல்லு, கிடக்கணுமே அடுத்த ஆடிவரைக்கும்’’ என்று கூறுவார்கள். என் "கதை’ இருக்கிறதே, இது எப்படி இருக்கும் என்று எனக்கே தெரியவில்லை! மற்றவர்களுக்கு எப்படித் தெரிய முடியும்!! எத்தனை நாட்களோ! மாதங்களோ! ஆண்டுகளோ! இழுத்துக்கொண்டு வந்தார்கள், பூட்டி வைத்திருக்கிறார்கள். எதற்காக கொண்டு வந்தார்கள் என்று சட்டசபையிலே பேசப் படுகிறது. படித்துப் பார்க்கிறேன் - எனக்குச் சொன்னவர் எவரும் இல்லை. “எதற்காகக் கைது செய்கிறார்கள் என்பதைக் கூறவேண்டும்’ என்று என் நண்பர் வழக்கறிஞர் நாராயணசாமி, உயர்நீதி மன்றத்தில் வாதாடுகிறார். நான் எங்கே போய் வாதாடுவது? நில் என்றார்கள், நின்றேன்! ஏறு என்றார்கள்; ஏறினேன்! இரு என்றார்கள் இருக்கிறேன். இன்று எத்தனை நாள்? 16-ம் தேதி பிடித்தார்கள்! பார்த்தாயா தம்பி! எனக்கே, போலீஸ்”பாஷை’ வந்துவிட்டது - பிடித்தார்கள்!! அந்த அகராதி, எளிதாகப் பழக்கத்துக்கு வந்துவிடுகிறது. சிலர் என்னைக் கேட்டார்கள் - இங்கு அல்ல - சைதாப்பேட்டை சப் ஜெயிலில் - மரியாதையாக - “அய்யா பேர்லே என்ன கேஸ் போட்டிருக்காங்க?’’ என்று. என்ன பதில் சொல்வது?”இன்னும் ஒண்ணும் போடல்லே’ என்றேன். "கேஸ் போடாத முன்னயே, ஜெயிலா!!’ - என்றார்கள். இப்போதும் எனக்குத் தெரியவில்லை - என் பேரில் வழக்கு உண்டா, இல்லையா என்பது. (நவம்பர் - 26லில் புரிந்தது) நவம்பர் 17ல் சென்னை அறிவகத்திலிருந்து கிளம்பி, திருவல்லிக்கேணி கடற்கரைப் பக்கம் சென்று, அரசியல் சட்டத்தின் மொழிப்பிரிவைக் கொளுத்துவது என்பது நான் மேற்கொண்ட திட்டம். நவம்பர் 17 காலை 9 மணி சுமாருக்கு, நான் திருவல்லிக்கேணிப் பக்கம் சென்றேன் என்றால், திடுக்கிட்டுப் போவாயல்லவா - ஆனால் உண்மையாகவே, சென்றேன். நடந்து அல்ல? விலையுயர்ந்த மோட்டாரில்! தனியாக அல்ல; போலீஸ் துணைக் கமிஷனர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். சிறுதூறல்! என்னை, போலீஸ் கொட்டடியிலிருந்து, அந்த அதிகாரி அழைத்துக்கொண்டு போகிறார் திருவல்லிக்கேணி கடற்கரைப் பாதையாக, கமிஷனர் அலுவலகத்துக்கு, என்னையுமறியாமல் சிரிப்பு வந்துவிட்டது. "அவசரப்பட்டு நீங்கள் நடவடிக்கை எடுத்துவிட்டீர்கள், ஐயா! மழை பெய்வதைப் பார்த்தால், என் வேலையை மழையே கெடுத்துவிட்டிருக்கும்போல இருக்கிறதே -’’ என்றேன். "இந்த இடத்தில் அல்லவா, இன்று மாலை அறப்போர் துவக்கம் நடைபெற்றிருக்க வேண்டும். தடுத்துவிட்டார்களே’’ என்று எண்ணினேன். ஏக்கமாகத்தான் இருந்தது. 16-ம் தேதி காலை, காஞ்சிபுரத்திலிருந்து, நான், தோழர்கள் பார்த்தசாரதி - பொன்னுவேல் - சுந்தரம் - வெங்கா - ஆகியோருடன், திருச்சி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக ஜீப்பில் கிளம்பினேன், சென்னைக்கு. 13-ம் தேதியிலிருந்தே காஞ்சிபுரத்தில், பல விதமான வதந்திகள்; வந்துகொண்டிருக்கிறார்கள்; வந்துவிட்டார்கள் - பிடிக்கப்போகிறார்கள் - வீட்டிலேயே சிறைவைக்கப் போகிறார்கள் - என்றெல்லாம். சென்னையில் கழகத் தோழர்களைக் கைது செய்தது இந்த வதந்திகளுக்கு அதிக வலிவு கொடுத்தது. காஞ்சிபுரத்தில், நண்பர்கள், நாலைந்து நாட்களாகவே பரிதாபம் கலந்த முறையில் என்மீது பார்வையைச் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். சரி! இங்கு இருந்துகொண்டு வதந்திகளைப் பெற்றுக்கொண்டிருப்பானேன் - சென்னைக்கே செல்வோம் என்று 16-ம் தேதி காலை கிளம்பினேன். ஆனால், என்னைப் பொறுத்தமட்டில், அன்று கைது செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. 17-ம் தேதி, நிகழ்ச்சியின் போதுதான் "பிடிப்பார்கள்’ என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஜீப், பூவிருந்தவல்லி தாண்டிய உடனே, எதிர்ப்புறம் இருந்து வருகிற மோட்டார்கள், வேகத்தைக் குறைத்துக் கொண்டு, என்னைப் பார்க்க ஆர்வம் காட்டத் தொடங்கின. எனக்கு "வாடை’ புரிந்தது. வேகமாக வந்துகொண்டிருந்த "லாரி’யை நிறுத்தினார், டிரைவர் பதைபதைப்புடன், "அண்ணே! வளையம் போட்டுகிட்டு இருக்காங்க, அமிஞ்சிகரை கிட்டே’’ என்றார். "போனால் சிக்கிக்கொள்வானே, போலீஸ் தயாராக இருப்பது இவனுக்குத் தெரியாதே, நாமாவது முன்கூட்டிச் சொல்லிவைப்போம்’ என்ற எண்ணம், அந்த நல்ல மனம் கொண்டவருக்கு. "பரவாயில்லை. நடப்பது நடக்கட்டும்.’’ என்று நான் பதில் கூறிவிட்டுக் கிளம்பினேன் - எதிர்ப்புறமிருந்து வருகிற லாரிகள் - மோட்டார்கள் எல்லாமே இந்தப் "போலீஸ் வளையம்’’ பற்றிக் கூறின. ஒரு ஆர்வமுள்ள லாரிக்காரர், என் மனம் மகிழும்படி சொன்னார். "கவலைப்படாதே அண்ணா! நாங்கள் இருக்கிறோம் வெளியே’’ என்று. கொடி ஏறிவிட்டது. இனி திருவிழா நடக்கப்போகிறது என்று தெரிந்துவிட்டது. நாவலரும், கருணாநிதியும், நண்பர்களும் மோட்டாரில் வந்தார்கள், சென்னையிலிருந்து வழியிலேயே என்னைப் பார்க்க. விவரமாகக் கூறினார்கள், அமைந்தகரை போலீஸ் நிலையத்தருகே, என்னைக் கைது செய்யத் தயாராக இருப்பதாக! கேட்டுக்கொண்டு கிளம்பினேன். காஞ்சிபுரத்திலிருந்து, அ. க. தங்கவேலார் தமது மோட்டாரில் வந்துகொண்டிருந்தார். அதிலே, என் மகன் இளங்கோவனுடைய மாமனார், பேரளம் குஞ்சிதபாதம் அவர்களும், நண்பர் இராசகோபாலும் வந்துகொண்டிருந்தனர். அமைந்தகரை போலீஸ் நிலையத்தருகே, போலீஸ் வான்கள்! சைக்கிள்கள்! இரும்புத் தொப்பிப் போலீசார்! அடே அப்பா! ஏழெட்டுக் கொள்ளைகளை நடத்திப் பிடிபடாத ஒருவனைப் பிடிக்க எடுத்துக்கொள்ளப்படும் "முஸ்தீப்புகள்’ போல!! என்ன வீண் சிரமம்!! அமைந்தகரை போலீஸ் அதிகாரி, பாதையின் நடுவே நின்றார். நில்! என்று கைகாட்டினார்; ஜீப் நின்றது. முன் பக்கம் உட்கார்ந்திருந்த என் அருகே வந்தார். "என்ன? நான் தேவையா?’’ என்று கேட்டேன். "ஆமாம்’’ என்றார், சிரித்த முகத்துடன். "நான் மட்டுமா? என்னோடு உள்ள நால்வரும் சேர்த்தா?’’ என்று கேட்டேன். “ஐவரும்!’’ - என்றார்.”ஐவர் அணி’ என்று சொல்லி இருந்திருந்தால் அகமகிழ்ச்சி கொண்டிருந்திருப்பேன். கீழே இறங்கினேன் - எதிரே தயாராக இருந்த போலீஸ் வானில் ஏறிக்கொள்ள ஒரு விநாடி யோசித்துவிட்டு, போலீஸ் அதிகாரி “ஏன்! ஜீப்பிலேயே போகலாமே, அருகேதான்’’ என்றார். சரி, என்றேன். என்னுடன் ஜீப்பில் ஏறுவதா கூடாதா என்று அவருக்கு ஐயப்பாடு.”ஏறலாமா? ஏறிக்கொள்வதிலே தவறு இல்லையே’’ என்றெல்லாம் கேட்டார் - குழப்பத்துடன் அவ்வளவு அச்சம் ஏற்பட்டுவிடுகிறது, அதிகாரிகளுக்கு. கழகத் தோழர்களிடம் எந்தக் காரணத்துக்காகத் தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டி நேரிட்டாலும், அதை வைத்துக் கொண்டு எந்தக் காங்கிரஸ்காரர் என்ன கலகமூட்டி என்ன தீங்கு தேடிவிடுவாரோ, என்ற அச்சம்! ஆட்சியில் உள்ளவர்கள் நேர்மையாகத்தான் நடந்துகொள்வார்கள்; வீணான கலகப் பேச்சுக்குக் காது கொடுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை இப்போது அதிகாரிகளுக்கு இல்லை. நல்ல தமிழில் ஒரு அதிகாரி பேசினாலே அவர்மீது ஐயப்பாடு ஏற்பட்டுவிடுகிற காலமல்லவா இது! அதனால்தான் போலீஸ் அதிகாரி என் பக்கத்தில் உட்கார அச்சப்பட்டார். "பரவாயில்லை! தவறு இல்லை!’ என்று நான் பல முறை கூறிய பிறகே, வண்டியில் ஏறினார். போலீஸ் நிலையம் சென்று ஜீப் நின்றது; உள்ளே இரும்புத் தொப்பிக்காரர் ஏராளம். ஐவரும் உள்ளே சென்று ஒரு பலகைமீது அமர்ந்தோம். அங்கு இருந்த இரும்புத் தொப்பிக்காரர், எங்களைப் பார்த்துக்கொண்டு, நின்றிருந்தனர் - ஒருவரும் பேசவில்லை. எனக்கே என்னமோபோல இருந்தது. ஏதாவது பேசிவைப்போம் என்ற எண்ணத்தில், “நீங்களெல்லாம் ரொம்ப நேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறீர்களா?’’ என்று கேட்டேன். வேடிக்கையான பேச்சு என்றுதான் இதனை யாரும் கருதிக் கொள்வார்கள். ஆனால் பாவம், அந்தப் போலீஸ்காரர்கள், அதற்குக்கூடப் பதில் கூறவில்லை. கூச்சம், அச்சம்! அருவருப்பும் அல்ல, கோபமும் அல்ல என்பதை அவர்களின் பார்வை விளக்கிக்கொண்டிருந்தது; அவர்கள் பேசாமல் நின்றது, இன்றைய ஆட்சியில், யாராருக்கு அச்சம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டிற்று. இதைக் கண்டு நான் வியப்புற்றேன். ஆனால் அடுத்த கணம், வேறோர் வியப்புக் கிளம்பிற்று. என்னுடைய பேரளத்துச் சம்பந்தியை உள்ளே அழைத்துக்கொண்டு வந்தார்கள். அவரும், எங்களோடு வந்தவர், எனவே கைது செய்யப்படவேண்டியவர் என்ற கருத்தில். பேரளத்தார் எனக்குச் சம்பந்தியாகி மூன்று மாதம்தான் ஆகிறது! என்னோடு சேர்ந்ததற்காக, அவருக்கும் போலீஸ் கொட்டடியிலே நுழைவு! எனக்கு வியப்பாகவும் இருந்தது, வருத்தமாகக்கூட இருந்தது. என்னென்ன எண்ணிக் கொள்கிறாரோ என்றுவேறு, மனதிலே கொந்தளிப்பு. அதிகாரி யிடம் விளக்கம் கூறினேன் - அவர் என் உறவினர் - வெளியூர் - கழகத்தாரும் அல்ல; கிளர்ச்சிக்காகவும் வரவில்லை என்றேன். அதிகாரி,”எனக்கு அதெல்லாம் தெரியாது, எங்களுக்குக் காஞ்சிபுரத்திலிருந்து இரண்டு மோட்டார்களில் கழகத்தார் வருகிறார்கள் என்று தகவல் கிடைத்தது. அதிலே ஒரு மோட்டாரில் இவர்! எனவே இவரும், கைதுதான், கமிஷனரிடம் விளக்கம் கூறி விடுவித்துக்கொள்ளுங்கள்’’ என்றார். அவ்வளவுதான் அவர் கூறமுடியும் நமக்கு உள்ள நிர்வாக முறை, அவ்வளவுக்குத்தான் இடம் அளிக்கிறது. ஏராளமான பொருட் செலவிலே, துப்பறியும் துறை, தகவல் சேகரிக்கும் துறை பணிபுரிகிறது. கழகத் தோழர்கள் எவரெவர்? எவரெவர் கிளர்ச்சியில் ஈடுபடப்போகிறவர்கள்? எப்போ என்பது அத்தனையும் துரைத்தனம் நன்கு அறியும். நாமும் எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிவிக்கிறோம், என்றாலும், போலீஸ் துறையினருக்கென்று அமைந்துவிட்டுள்ள வேலை முறை, உறவினராயினும் விடாதே, உடன்வந்தவர் என்றால், கிளர்ச்சிக்காரராகத்தான் இருப்பார்! என்று கட்டளை பிறப்பிக்கிறது. அதன்படி காரியம் நடக்கிறது. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, கமிஷனர் அலுவலகத்திலேதான், பேரளத்தாருக்கு “விடுதலை’ கிடைத்தது. எனக்குச் சம்பந்தி ஆனதற்குக் கிடைத்த சன்மானமா இது என்று எண்ணி எங்கே சங்கடப்படுகிறாரோ என்று நான் எண்ணிக்கொண்டேன். ஆனால், அவர், வருத்தமோ கலக்கமோ கொள்ளவில்லை. அதைக் கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி. பிறகு சைதாப்பேட்டை சப்-ஜெயிலுக்கும் வந்திருந்தார். அப்போது எனக்கு ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது. மெத்தச் சிரமப்பட்டு, சிரிப்பை அடக்கிக் கொண்டேன். காஞ்சிபுரத்திலேயே என்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்று வதந்தி உலவியபோது என்னுடைய இளைய மருமகள், பேரளத்தாரின் மகள், விஜயா, என் மனைவியிடம்,”மாமி! முதலமைச்சர் பக்தவத்சலம் எங்கள் குடும்பத்துக்கு ரொம்பத் தெரிந்தவர், வேண்டியவர். நான் போய் கேட்கட்டுமா அவரை, ஏன் என் மாமனாரைக் கைது செய்ய எண்ணுகிறீர் என்று’’ எனக் கூறியதாக, ராணி என்னிடம் சொன்ன நினைவு வந்தது. என்னைக் கைது செய்யவேண்டாமென்று முதலமைச்சர் பக்தவத்சலத்திடம் சிபார்சு செய்ய விரும்பிய விஜயாவுக்கு, பாபம், தன்னுடைய தகப்பனாரையே பக்தவத்சலத்தின் அரசாங்கம் இந்தப்பாடு படுத்திவிட்டதைக் கேள்விப்பட்டபோது, முகம் எப்படியாகி இருந்திருக்கும்! நான்தான் உள்ளே இருந்தேனே, பார்க்க முடியவில்லை; ஆனால் யூகித்துக்கொள்ள முடிகிறதல்லவா! பெரிய கொள்ளைக்காரர்கள், புரட்சிக்காரர்கள், சர்க்காரைக் கவிழ்ப்பவர்கள், இப்படிப்பட்டவர்கள் பிடிபட்டால், அவர்களை, ஒரே இடத்தில், சிறை வைப்பது இல்லை. பிரித்துப் பிரித்து, தனித்தனியாகச் சிறை வைப்பார்கள். இது போலீஸ் முறை. வழக்குகளுக்குத் தேவையான துப்புகள் பெறவும், சாட்சிகள் சிதையாமல் பார்த்துக்கொள்ளவும், இந்த முறை புகுத்தப்பட்டிருக்க வேண்டும். நாங்கள் ஐவர்தானே கிடைத்தோம் - எனவே, அந்த முறையை, மெத்தச் சிரமப்பட்டு, எங்கள் விஷயத்தில், உயர்தரப் போலீஸ் அதிகாரிகள் கையாண்டனர். "கேலிக் கூத்தல்லவா’ என்பீர்கள், நடந்ததே!! பொன்னுவேல், பட்டப் படிப்புப் பெற்ற இளைஞர்; பொறுப்புமிக்க குடும்பத்தினர். அவர்மீது, கலகம், அடிதடி முதலிய எந்தவிதமான புகாரும் சுமத்தப்பட்டதுகூட இல்லை. என்னோடு, விலைவாசிக் குறைப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, வேலூர் சிறையில் இருந்தவர்! வெங்கா என்ற இளைஞர், நிலபுலத்துக்கு உரியவர், அமைதியானவர், அச்சிறுபாக்கத்தை அடுத்த சீதாபுரம் என்ற சிற்றூரில், மதிப்பான குடும்பத்தில் பிறந்தவர்; பார்த்தாலே புரிந்துவிடும் படபடப்பான நடவடிக்கையில்கூட அவர் ஈடுபடமாட்டார் - ஈடுபடக்கூடியவர் அல்ல என்பது. பார்த்தசாரதி - தாத்தாவானவர் - கழகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர் - கழக வரலாறு தொகுத்து அளித்தவர் - வில்லிவாக்கத்தில் வீடும் வாசலும் உடையவர் - பொறுப்பற்ற செயலில் ஈடுபடக்கூடியவர் அல்ல. சுந்தரம் - சென்னையில், தையற்கலையில் சிறப்பிடம் பெற்று விளங்குபவர் - தையற்கலைபற்றி பல நூல்களை வெளியிட்டு, புகழ் ஈட்டியவர். எப்போதும் இதழோரத்தில் ஓர் புன்னகை தவழும்; அவர்மீது எந்தவிதமான கலகம், அடிதடி போன்ற வழக்குகளும் கட்டிவிடப்பட்டதுகூட இல்லை. என்னை, நான் விளக்கத் தேவை இல்லை; அமைதியான அரசியலை நாடுபவன்! இந்த ஐந்து பேர்களை, வெடிகுண்டு தயாரித்தவர்கள், விடிவதற்குள் எட்டு ஊர்களைக் கொளுத்தத் திட்டமிட்டவர்கள், அரிவாள் தீட்டினவர்கள், அடித்து விரட்டுபவர்கள் போன்றவர்களை நடத்துவதுபோல், ஒன்றாகக் கைது செய்து ஒவ்வொருவரை ஒவ்வொரு பக்கமாக இழுத்துக்கொண்டு போயா, கொட்டடியில் போட்டு அடைப்பது! தேவைதானா? முறைதானா? நான் அடையாறு போலீஸ் கொட்டடியில்; பொன்னேரியில் சுந்தரம்; பூவிருந்தவல்லியில் பொன்னுவேல், காஞ்சிபுரத்தில் பார்த்தசாரதி; செங்கற்பட்டில் வெங்கா! அவ்வளவு சர்வஜாக்ரதையாக, வேலை செய்கிறதாம் போலீஸ் இலாகா!! நாங்கள் ஐவரும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டால், என்ன விபரீதம் ஏற்பட்டுவிடும்? உடனே கூடிப் பேசி, 17-ம் தேதி எப்படித் தப்பித்துக்கொண்டு வெளியே சென்று, சட்டத்தைக் கொளுத்துவது என்று திட்டம் தீட்டிச் செயல்பட்டு விடுவோமா? அல்லது, எங்கள் ஐவரையும் ஒருசேர ஒரு இடத்தில் கண்டால், கண்டவர்கள், கண்களில் கனல்கக்கக் கிளம்பி, கலாம் விளைவித்து, சர்க்காருக்குத் தொல்லை கொடுத்துவிடுவார்களா? என்ன எண்ணிக்கொண்டு, என்ன காரணத்துக்காக, இந்த ஐவரையும், பிரித்துப் பிரித்துத் தனி இடத்தில் காவலில் வைக்கவேண்டும்!! தெரிந்தால் தெரிவியுங்கள்; எனக்கு இதிலே தெளிவோ, திட்டமோ இருப்பதாகத் தெரியவில்லை. என்னைப் பிறகு அடைத்து வைத்த சைதாப்பேட்டை சப்ஜெயிலில் கள்ளநோட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர், ஒரே இடத்தில்தான் இருந்தார்கள்! அத்தகைய விவகாரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைவிட "ஜாக்ரதை’யான ஏற்பாடுகள், வெளிப்படையாக, இன்ன காரியத்தை, இன்ன இடத்தில், இந்த நேரத்தில், செய்யப் போகிறோம் என்று முன் கூட்டியே தெரிவித்துவிட்டு, ஒரு அறப்போர் நடத்த முன்வந்த எங்கள் விஷயத்திலா கையாள்வது! ஒரு காரணம், அவசியம், பொருள், பொருத்தம், இருக்கவேண்டாமா! இப்படி இயங்குகிறது ஒரு அரசு. இந்தவிதமாக நடத்தப்படுகிறார்கள், பொது வாழ்க்கையில் பணி புரிபவர்கள் - அதிலும் சுயராஜ்ய காலத்தில்! அந்தந்த ஊர் போலீஸ் அல்லது சிறைக் கொட்டடியில் உள்ளவர்கள், என்ன எண்ணிக்கொள்வார்கள், என்ன பேசிக் கொள்வார்கள், இப்படி தனித்தனியே, கொண்டு வந்து அடைத்ததுபற்றி? "பெரிய பக்காத் திருடன்போல இருக்கிறது, அதனால்தான் இவனை இவனுடைய கூட்டாளிகளிடமிருந்து பிரித்துத் தனியாகக் கொண்டுவந்து அடைத்திருக்கிறார்கள்’ என்று பேசிக்கொள்வார்கள். இதிலே, போலீசுத் துறைக்குக் கிடைக்கும் கீர்த்தி என்னவோ, இலாபம் என்னவோ, சுவை என்னவோ, எனக்குப் புரியவில்லை! அடையாறு போலீஸ் கொட்டடி போய்ச் சேருகிற வரையில், எனக்கு எங்கே போகிறோம் என்பது தெரியாது அதிகாரியை நான் கேட்கவுமில்லை. இரண்டு நாள் கழித்துத்தான், மற்ற நால்வர் சென்ற இடங்களும் எனக்குத் தெரிய வந்தன. அடையாறு போலீஸ் கொட்டடியும் எனக்கு முன்பே பழக்கமான இடம்தான் - 1957லில் ஒரு இரவு, நமது நண்பர்களுடன் அடைக்கப்பட்டிருந்தேன். என்னை அழைத்துக் கொண்டுவந்த துணைக் கமிஷனர் உத்தரவிட்டார், எனக்குச் சாப்பாடு கொண்டுவரச் சொல்லி. சாப்பாடு முடிகிறவரையில், மிக இயற்கையாகவே அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு துணைக் கமிஷனர் சென்றுவிட்டார். போலீஸ் நிலைய அதிகாரிகள், மெல்லிய குரலில் "லாக்-அப்’ என்றார்கள், பகல் 1 மணிக்கு! கைதி! லாக்-அப்பில்தானே போட்டாகவேண்டும். அதுதானே அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிமுறை! கைதி என்றால் எல்லோரும் ஒன்று! அதிலே தராதரம் பார்க்கத் தேவையில்லையா! அரசியல் கிளர்ச்சி காரணமாகக் கைது செய்யப்பட்ட ஒருவரை, அறையிலே போட்டுப் பூட்டி வைக்கா விட்டால் தப்பித்துக்கொண்டு ஓடியா போய்விடுவார் - என்றெல்லாம் கேட்டார்கள்! பொதுமக்களின் பேச்சா இன்று ஆளுகிறது! சட்டம், ஆள்கிறது, சட்டம்! அந்தச் சட்டம் சொல்கிறது, கைதியை லாக்-அப்பில் வை! - என்று, அதன்படி நடந்தாகவேண்டும் அதிகாரிகள். அதிகாரிகள் கண்களிலே ததும்பிய பாசம், பயம், திகைப்பு எல்லாம் எனக்குப் புரிந்தது. எத்தனையோ போலீஸ் கொட்டடிகள் இருக்க இங்குதானா இவனை அழைத்துக் கொண்டுவரவேண்டும் - நமக்குச் சங்கடமாக இருக்கிறதே என்றுதான் அவர்கள் எண்ணிக்கொள்வார்கள். அவர்கள் சிறிதளவு அன்பு காட்ட எண்ணினால், தீர்ந்தது, யார் என்ன கோள் மூட்டிவிடுவானோ, தலைக்கு என்ன தீம்பு வந்துவிடுமோ என்ற பயம் அவர்களைப் பிய்த்துத் தின்கிறது. "லாக்-அப்’ செய்யப்பட்டேன்! கடப்பைப் கற்கள் பரப்பப்பட்ட சிறிய கொட்டடி போலீஸ் நிலையமே 1957லில் நான் பார்த்த அதே நிலையில்தான் இருக்கிறது - இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் அதைத் தீண்டியதாகத் தெரிய வில்லை. ஒழுக்கல்! இட நெருக்கடி! லாக்-அப்பில், கீழே விரித்துக்கொள்ள என்ன கிடைக்கும்? ஒரு பழைய விரிப்பு! அதுவும், பாவம், யாரோ கான்ஸ்டபிளுடையதாக இருக்கும். நான் கொண்டுபோயிருந்த சால்வை தலையணை ஆயிற்று. பிற்பகல் நாலு மணிக்குத்தான் விழித்துக்கொண்டேன். பிடிபடுவதற்கு முன்பு நாலைந்து இரவுகள் எனக்குச் சரியான தூக்கம் கிடையாது. எனவே, இடத்தின் இடர்ப்பாடுபற்றிய கவலையற்றுத் தூங்கிவிட்டேன். போலீஸ் அதிகாரிகள், என்ன எண்ணிக்கொண்டார்களோ தெரியவில்லை. பயலுக்குப் பழக்கம்! என்று எண்ணிக் கொண்டார்களோ - பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டார்களோ - இவனுக்கு ஏன் இந்த வேலை, இவன் படித்த படிப்புக்கு ஒழுங்காக எங்காவது வேலைக்குப் போயிருந்தால், இப்போது ரிடயராகி, பென்ஷன் கேட்டிருக்கலாம்; இப்படி லாக்-அப்பில் கிடக்கிறானே என்று பரிதாபப்பட்டார்களோ தெரியாது. தம்பி! நமக்கு இருப்பதைவிட இத்தகைய அதிகாரிகளுக்குச் சங்கடம் அதிகம் - அதனை உணர்ந்திருக்கிறாயோ இல்லையோ, தெரியவில்லை. பொதுவாகவே, ஏற்பட்டுவிடும் உணர்ச்சிகளைப் பேச்சினால், வெளியே கொட்டிவிட்டால்தான், மனதுக்கு ஒரு நிம்மதி - பெரிய பாரத்தைக் கீழே இறக்கிவிட்டபோது ஏற்படும் நிம்மதி - உண்டாகும். உணர்ச்சிகளை வார்த்தைகளாக்கி வெளியே காட்ட முடியாமல், மனதுக்குள்ளேயே போட்டு அடைத்து வைத்திருந்தால், மனம், சுமையினாலே பாதிக்கப் பட்டுவிடும். வேதனை அதிகமாகிவிடும். நாம் நமது உணர்ச்சிகளைப் பேசி வெளிப்படுத்துகிறோம் - பாரம் குறைகிறது - மனதுக்குச் சுமை இல்லை. இந்த அதிகாரிகள் என்ன செய்வார்கள்? நெஞ்சில் இருப்பதை நாவுக்குக் கொண்டுவர முடியாது தத்தளிக்கிறார்கள். என்னை மட்டுமா அவர்கள் “லாக்-அப்’ செய்தார்கள்? தங்களுக்கு இயற்கையாகத் தோன்றக்கூடிய பரிவு, பச்சாதாப உணர்ச்சி, எல்லாவற்றையும் சேர்த்துத்தான்”லாக்-அப்’ செய்து விடுகிறார்கள்!! இவ்விதமே செய்து செய்து, சில காலத்திற்குப் பிறகு அத்தகையவர்கள், உணர்ச்சிகள் எளிதிலே எழ முடியாத "மனம்’ பெற்றுவிடுகின்றனர். போலீஸ் அதிகாரிகள், “பிடிபட்ட’வர்கள், தங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள், ஆணைக்கு அடங்க மறுத்தவர்கள், வம்புதும்பு பேசுபவர்கள் என்று வகையினராக இருந்தாலாவது, கோபம்கொண்டு, அமுல் நடத்த வசதி ஏற்படும்.”பயல் பத்து நாட்களாகச் சிக்காமல் ஏமாற்றிக்கொண்டிருந்தான்; பிடிக்கச் சென்ற காஸ்டபிளுடைய கையைக் கடித்துவிட்டான்; எவனும் தனக்கு நிகர் இல்லை என்ற விதமாகப் பேசுகிறான்’’ - என்று கூறி, கோபத்தைக் காட்டலாம். என் போன்றாரிடம், அவர்களுக்குக் கோபம் ஏற்பட ஒரு காரணமும் கிடையாதே! ஆகவே, கோப உணர்ச்சி எழ வழி இல்லை; பரிவு பச்சாதாப உணர்ச்சியை வெளிப்படுத்த முடிவதில்லை. மெத்தத் தத்தளிக்கிறார்கள். சிறிதளவு ஏமாந்தால் மேலே பாய்ந்து பிய்த்து எறிந்துவிடும் கொடிய புலி, சிறுத்தை, சிங்கம் ஆகியவற்றைக் கூண்டிலே நிறுத்தி வைத்து, சர்க்கஸ்காரர் கையிலே சவுக்கும் துப்பாக்கியும் வைத்துக்கொண்டு மிரட்டுவதையும், அந்த மிருகங்கள் உறுமுவதையும் உடனடியாக அடங்க மறுப்பதையும், இரண்டொரு அடிகள் விழுந்த பிறகே அடங்குவதையும் பார்க்கும்போது, காட்சி களிப்பளிப்பதாகக்கூட இருக்கிறது. ஆனால் அதே சர்க்கஸ்காரர், அதே கூண்டிலே, ஆடு, முயல், அணில், இவைகளைக் கொண்டுவந்து நிறுத்தி, சவுக்கும் துப்பாக்கியும் கரத்தில் வைத்துக்கொண்டு மிரட்டினால், பார்ப்பதற்கு எப்படி இருக்கும்! அரசியல் பிரச்சினைகள் காரணமாகக் கிளர்ச்சிகளை மேற்கொள்பவர்களை, இன்று போலீஸ் துறையினரிடம் ஒப்படைப்பது, எனக்கு ஆடு, முயல், அணில் போன்றவைகளைச் சிறுத்தை, புலி, சிங்கம் ஆகியவற்றை அடக்கி ஆளும் வேலைதெரிந்த சர்க்கஸ்காரரிடம் ஒப்படைப்பது போன்ற வேடிக்கையாகவே தோன்றுகிறது. அன்புள்ள அண்ணாதுரை 20-9-1964 கடமை நினைவுகள். . . தம்பி! ஒரு புறத்தில், "திறந்த சிறை’த் திட்டம் அமுலாக்கப்பட்டு நல்ல வெற்றி கொடுத்துக்கொண்டு வருவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அதேபோது வேறோர் புறத்திலே, தங்கள் மனதுக்குச் சரியென்று பட்ட கொள்கைக்காகக் கிளர்ச்சியில் ஈடுபடும் பொதுவாழ்க்கைத் துறையினருக்கு, போலீஸ் கொட்டடியிலும், சிறைக்கூடத்திலும் பழைய முறையிலே நடத்தப்படும் போக்கு இருந்து வருகிறது. போலீஸ் என்றால் கண்டிப்பு என்றுதான் பொருள். சட்டத்தைக் காத்திட அவர்கள் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகள்பற்றி நாம் வருத்தப்பட்டுக்கொள்வதோ கோபித்துக்கொள்வதோ கூடாது, முறையாகாது என்று ஒரு முறை, இன்றைய முதலமைச்சர் பக்தவத்சலனார், சட்டசபையிலே பேசியதை நான் கேட்டிருக்கிறேன். தம்முடைய அனுபவத்தையே கூடச் சொன்னார் : “ஒரு முறை சத்தியாக்கிரகக் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது என்னை ஒரு போலீஸ் அதிகாரி அடித்தார்; தடியால் அடித்தார்; கையிலே அடித்தார்; கையிலே அடிபட்டது; வலிதான், பொறுத்துக்கொண்டேன்; அடித்தவரிடம் கோபித்துக்கொள்ளவில்லை. நான் மந்திரியான பிறகுகூட, அவரைப் பார்த்தேன்; கோபித்துக்கொள்ளவில்லை’’ என்று பேசினார். நான்கூட போலீஸ் அதிகாரிகளிடம் கோபம் கொள்ளவில்லை கோபம் கொள்ளச் சொல்லவும் இல்லை. நான் கேட்பதெல்லாம், வெள்ளைக்கார ஆட்சியின்போது இருந்து வந்த”தர்பார்’ முறைகளை மாற்றக்கூடாதா? மாற்றவேண்டிய பொறுப்பு பக்தவத்சலனார்களுக்கு இல்லையா என்பதுதான். அதே முறை! அதே அமுல்! அதே தர்பார்; - என்றால், இவர்கள் ஆட்சிக்கு வந்ததால், ஆள் மாறிற்றே தவிர முறை மாறவில்லை என்றுதானே ஏற்படுகிறது. இது புகழ்தரும் நிலையா? என்றுதான் கேட்கிறேன். லாக்-அப்பில் என்னைத் தள்ளிவிட்ட பிறகு, போலீஸ் அதிகாரிகளும் இதுபோல எண்ணாதிருக்க முடியுமா; தம்பி! நீயும் நானும், நமக்குத் தோன்றுவதை வெளியே கூறுகிறோம்; அவர்களுக்கு அந்த உரிமையும் இல்லையே! இங்குதான் இதழில் படித்தேன், ஒரு போலீஸ்காரர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணியினர் ஒருவருடைய தாயார் இறந்துபோனதற்கு அனுதாபக் கடிதம் எழுதியதற்காக, வேலைக்கே ஆபத்து வந்தது பற்றியும், சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று அந்தத் தோழர் முறையிட்டு நீதிபெற்றதையும்பற்றிய தகவலை! இந்த நிலையில் நாட்டு ஆட்சி இருக்கும்போது, நெஞ்சில் எழுவது நாவுக்கு வருமா! சில கடமைகளைத்தான் அவர்களால் செய்ய முடிகிறது. அந்தக் கடமை உணர்ச்சியுடன், மாலையில் எனக்குச் சிற்றுண்டியும் காப்பியும் தருவித்தார்கள், நான் அதற்குள் அதிகாரிகள் உட்காரும் பெஞ்சு நாற்காலி ஆகியவற்றிலே அமரும் நிலையிலிருந்து லாக்-அப் ஆகும் நிலைக்குச் சென்றுவிட்டவன்! ஆகவே, சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு கொட்டடிக்குச் சென்றேன். "உட்கார்ந்துதான் சாப்பிடுங்களேன்!’’ என்று ஒரு குரல் கேட்டது. அதிகாரிதான்! அந்த ஒரு வாக்கியத்தில், மனித உள்ளம் சில நிலைமைகள் காரணமாக அடையும் வேதனை முழுவதும் தோய்ந்து இருந்தது. இரவு மறுபடியும் லாக்-அப்! நான் எடுத்துச் சென்றிருந்த புத்தகத்தில் ஒன்றைக் கேட்டு வாங்கி, கம்பிகளின் இடுக்கு வழியாக வந்த ஒளியின் துணைகொண்டு படித்துக் கொண்டிருந்தேன். இடம், போலீஸ் கொட்டடி! நிலை, லாக்-அப்! படித்த புத்தகமோ கிரேக்க நாட்டில் வாழ்ந்து வந்த கீர்த்திமிக்கவர்களைப்பற்றி புளூடார்ச்சி என்பார் எழுதிய, சுவையும் எழுச்சியும் தரவல்ல ஏடு. துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர், கொட்டடிக்கு வெளியே காவல்? பனிரெண்டு மணிக்குமேல் தூங்கிவிட்டேன் - பிறகு, மேலே பன்னீர் தெளிப்பதுபோல, தூற்றல் விழவே, விடிவதற்குள் விழித்துக்கொண்டேன். நான் படுத்திருந்த இடத்தைச் சுற்றி மழைத் தண்ணீர் சிதறிக் கிடந்தது. கொட்டடி அவ்வளவு ஒழுக்கல். போலீஸ் அதிகாரிகள் தயாராக நிற்கக் கண்டேன். வெளியே கொண்டுவரப்பட்டேன்; காப்பி தரப்பட்டது; துணைக் கமிஷனர் வந்திருந்தார்; என்னை அழைத்துக்கொண்டு கிளம்பினார், கமிஷனர் அலுவலகத்துக்கு. 17-ம் தேதி காலை, திருவல்லிக்கேணி கடற்கரை பக்கமாகச் சென்றேன் என்றேனே, இந்தப் பயணம்தான்! புறப்படுவதற்கு முன்பு, துணைக் கமிஷனர், பத்திரிகையில் வெளிவந்த கழக அறிக்கைப்பற்றி என்னிடம் கூறினார்; பேப்பரில் பார்த்திருப்பீர்களே! - என்றார். இல்லை - பேப்பர் பார்க்க வில்லை என்று நான் கூறவில்லை. அவரே, அதை யூகித்துக் கொண்டு, போலீஸ் அதிகாரிகளைப் பார்த்து, “ஏன் அவருக்கு, பேப்பர் தரவில்லையா?’’ என்று கேட்டார். இல்லை! என்றார்கள் அவர்கள். விதி இல்லையே - என்று கூறுவதாகவே அவர்களின் பேச்சு உணர்த்திற்று. அதைக் கேட்டு, துணைக் கமிஷனர்,”செச்சே! என்னப்பா! இப்படியெல்லாமா நடந்துகொள்வது? பேப்பர் கொடுத்தால் என்ன? இவர் என்ன, கொள்ளை வழக்கில் ஈடுபட்டவரா! வம்புவல்லடியில் சிக்கினவரா!’’ என்றெல்லாம் பேசினாரா, என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? அப்படி ஒன்றும் அவர் கேட்கவில்லை. மேலதிகாரி கேள்வி கேட்டார்; உட்பட்ட அதிகாரிகள் பதில் அளித்தார்கள். ஒழுங்காக நடந்து கொண்டார்கள் என்ற திருப்தி அவருக்கு ஏற்பட்டது. பேப்பர் கொடுக்கவில்லையா? என்று கேட்டாரே மேலதிகாரி, அந்த அரை விநாடி இதயம் பேசுகிறது; பிறகு, அதிகாரி ஆகிவிட்டார். வழியிலேதான் சொன்னார்; "உங்கள் சம்பந்தியை விடுதலை செய்துவிட்டோம்’’ என்று. கமிஷனர் அலுவலகத்தில் நடைபெறவேண்டிய சட்டச் சடங்குகள் முடிந்து, என்னைச் சைதாப்பேட்டை சப்ஜெயிலில் கொண்டு போய்ச் சேர்த்தார். அங்க அடையாளங்கள், உடைமை இவைபற்றிய குறிப்புகள் எழுதிக்கொள்ளப்பட்டன; மூக்கின்மீது ஒரு மச்சம், இடதுகை தோள்பட்டைச் சமீபம் ஒரு மச்சம். வயது-55, உயரம் பற்றி விவாதம் வந்தது. சுவரிலேயே குறிபோட்டிருந்தார்கள் - 5.3! என்று கணக்கு காட்டிற்று. இவ்வளவும் பொதுவாழ்க்கைத் துறையினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தேவைதானா? அடையாறு போலீஸ் கொட்டடிக்கும், சைதைச் சிறைக்கும், என்வரையில் உடனடியாகக் கிடைத்த "முன்னேற்றம்’ - இரண்டு கம்பளிகள் சைதையில் தரப்பட்டன. ஒன்று விரிப்பு, மற்றொன்று போர்வை அல்லது தலைக்கு! இதிலே என்ன சுகம் கண்டாய் அண்ணா என்று கேட்கத் தோன்றும்! அந்தச் சுகம், ஒரு இரவு போலீஸ் கொட்டடியில் அடைபட்டுக் கிடந்தவர் களுக்கு மட்டுந்தான் புரியும், தம்பி! வெறும் வார்த்தைகளால் விளக்க இயலாது. 1938லில் இந்தி எதிர்ப்பின்போதும் இப்படித்தான் நமது தோழர்களை எல்லாம் சென்னைச் சிறையில் போட்டுவிட்டு, என்னை மட்டும் இதே சைதைச் சிறையில் கொண்டுவந்து வைத்திருந்தார்கள், இப்போது நினைத்துக்கொண்டாலும் எனக்குச் சிரிப்பு வருகிறது - தொத்தா என்னை அங்கு வந்து பார்த்ததும், அங்கு ஜெயிலராக இருந்த முஸ்லீமிடம், என் உடல்நிலைபற்றிச் சொல்லி, குளிக்க வெந்நீர் போட்டுக் கொடுக்கச் சொன்னதும், அந்த “அனுபவசாலி’”இங்கு எப்போதும் வெந்நீர்தான் குளிப்பதற்கு!!’ என்று பதில் அளித்ததும். இப்போது தொத்தாவின் உடல்நிலை எழுந்து நடமாடக்கூடியதாக இல்லை; பழையபடி இருந்திருந்தால், இந்நேரம் ஏழெட்டு முறையாவது வந்து பார்த்திருப்பார்கள். இந்த வயதில் நான் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்து பரிவுடன் பணிவிடை செய்யவேண்டியது முறை. ஆனால், நான் மேற்கொண்டுவிட்ட கடமை, ஒரு மகன் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையை நான் செய்ய முடியாமலாக்கிவிட்டது. இதைத் தொத்தாவும், அம்மாவும் உணர்ந்துவிட்டனர் என்பது என் உள்ளத்தில் எழும் சங்கடத்தைப் பாதியாக்கிவிடுகிறது. இருந்தாலும், அவ்வப்போது மனம் உறுத்தியபடியும் இருக்கத்தான் செய்கிறது. என் பொது வாழ்க்கைத் துறை என்னுடைய இயல்புகளையே அடியோடு மாற்றிவிட்டது என்பதை அவர்கள் இருவரும் மிக நன்றாக அறிவார்கள். தொத்தாவாகிலும், பேசித் தன் உணர்ச்சிகளைக் கொட்டி விடுவதன் மூலம், மனதை அழுத்திக்கொண்டிருக்கும் வேதனையை ஓரளவுக்குக் குறைத்துக்கொள்வார்கள். அம்மா அப்படி அல்ல; மனதிலேயே வேதனையைத் தாங்கித் தாங்கித் தத்தளிக்கும் நிலை எல்லாம் புரிகிறது. ஆனால் நான் மேற்கொண்டுள்ள கடமைக்காக, இந்த வேதனையை அவர்களும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் என்ற நிலை நிலைத்து விட்டது. இதிலிருந்து இனி விடுதலை ஏது! மற்றத் தடவைகளைவிட, இம்முறை தொத்தா, மனதிலே இயற்கையாக ஏற்படக்கூடிய சங்கடத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, மிகக் கலகலப்பாக இருந்து என்னை காஞ்சிபுரத்திலிருந்து வழி அனுப்பி வைத்தது, என் உள்ளத்துக்குப் புதியதோர் எழுச்சியைத் தெம்பைக் கொடுத்தது. நல்ல காரியத்துக்காகப் பணியாற்றுகிறான் மகன் என்ற பெருமிதம், அவர்களின் கண்ணொளியிலே கண்டேன். என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிவிட்டவர்கள் முதுமையால் நலிவுற்று இருக்கும் நாட்களில் நான் இங்கு வந்திருக்கிறேன். என் துணைவி ராணி, இம்முறை சிறையிலே என்னை வந்து பார்த்தபோது, கண்களில் நீர் துளிர்த்தது கண்டு மிகவும் சங்கடப்பட்டேன். வயதான இருவருக்கும், தைரியம் கூறிக்கொண்டிருக்கும் பொறுப்பு உனக்கு, நீயே இப்படி இருக்கலாமா? என்று கேட்க விரும்பினேன் - ஆனால், நான் மனைவி மக்களுடன், பேசிக்கொண்டிருக்க அனுமதி கிடைத்ததே தவிர, எங்களுடன், இரண்டு சிறை "சூப்பரிண்டுகள்‘, ஒரு ஜெயிலர், மற்றோர் அதிகாரி, இவ்வளவு பேர்கள் இருந்தார்கள். என் மூத்த மருமகப் பெண் சரோஜா இத்தகைய இடம்பற்றி, புத்தகத்தில்தான் படித்திருக்க முடியும் - எனக்கு மருமகப் பெண்ணாக வந்த பலன் - சிறையையும் வந்து பார்த்தாகிவிட்டது. மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பரிமளமும், அச்சகப் பொறுப்பையும் பரிமளம் பதிப்பக வேலையையும் கவனித்துக்கொள்ளும் இளங்கோவனும், உடன் வந்தனர். ஒவ்வொரு நாளும், நண்பர்கள் வருகின்றனர் - ஆனால் வழக்கு முடிந்து தண்டனை என்று ஆகிவிட்ட பிறகு, இப்படி அடிக்கடி வர முடியாது - பத்து நாட்களுக்கு ஒரு முறைதான் பார்க்க முடியும். அந்தப் பழக்கம் கவனத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, ராணி, என்னை உடனடியாகச் சைதாப்பேட்டை சிறையில் வந்து பார்க்க விரும்பியபோது, "வேண்டாம் ஒரு வாரம் போகட்டும்’’ என்று சொல்லி அனுப்பினேன். பல சொல்லிப் பயன் என்ன! பொது வாழ்க்கைத் துறையில் முழுக்க முழுக்க என்னை ஒப்படைத்துவிட்டேன் என்பதை உணர்ந்து அதற்குத் தகுந்தபடி என் குடும்பத்தினர் தங்களுடைய நினைப்புகளைச் செப்பனிட்டுக்கொள்ள வேண்டியதுதான்! வேறு முறை இல்லை! சைதைச் சிறைக்கு நான் வந்து சேர்ந்ததும், நண்பர் இராகவானந்தத்தின் மூலம், பல வசதிகளைப் பெற முடிந்தது. என்னுடைய தலைமையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கலப்புத் திருமணம் செய்துகொண்ட ராமச்சந்திரன் எனும் தோழர், ரயில்வே துறையில் பணியாற்றி வருபவர், சைதையிலிருந்து கொண்டு என்னுடைய தேவைகளைக் கவனித்துக்கொண்டார். சைதைச் சிறையில் நான் இருப்பதை அறிந்துகொண்ட கருணாநிதி, நாவலர், அன்பில் ஆகியோர் அங்கு வந்தபோதுதான், காஞ்சிபுரத்திலிருந்து நான் புறப்பட்டபோது வேறு வண்டியில் கிளம்பி வந்துகொண்டிருந்த நண்பர்கள் நடராஜன் - கோவிந்தசாமி ஆகியோரும் “பிடிபட்டார்கள்’ - சென்னைச் சிறையில் அடைபட்டார்கள் என்ற செய்தி தெரிய வந்தது. மூலைக்கு மூலை வலைவீசி, ஊருக்கு ஊர் திட்டமிட்டு, கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு வருகிற செய்தி கேள்விப் பட்டேன். இவ்வளவு”மதிப்பு’ அளிக்கமாட்டார்கள், தி.மு.க. கிளர்ச்சி தன்னாலே மங்கிவிடச் செய்வார்கள், என்று பேசிக்கொண்ட அரசியல் அப்பாவிகளை எண்ணிச் சிரித்துக்கொண்டேன். தம்பி! அறப்போர் துவக்கமே செய்யப்படவில்லை; அதற்குள் தமிழகத்தில் 2000 கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையிலிருந்து நெல்லை வரை, சேலத்திலிருந்து செங்குன்றம் வரை, கைது செய்யும் படலம்! பெரிய நகரம் மட்டுமல்ல, சிற்றூர்களிலும்! கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஒரு முறை நீயே தயாரித்துப் படித்துப்பார், தம்பி! கழகம் எவ்வளவு உயிரோட்டம் உள்ள அமைப்பாக இருக்கிறது என்பது புரியும்; உன் உழைப்பின் பலன் வீண்போகவில்லை என்பது விளங்கும். எத்தனை வழக்கறிஞர்கள்! எத்தனை பட்டதாரிகள்! பஞ்சாயத்துத் தலைவர்கள்! நகராட்சி மன்றத் தலைவர்! சட்டமன்ற உறுப்பினர்கள்! கண்ணியமான வாழ்க்கை நடத்துபவர்கள்! கிராமத்தில் பெரிய குடும்பத்தினர்! மளமளவென்று நாலு நாட்களில் 2000! இத்தனைக்கும், இந்தப் பட்டியலில் நாவலரும், கருணாநிதியும், மதியும், மனோகரனும், அன்பழகனும், ராஜாராமும், செழியனும், தருமலிங்கமும், சண்முகமும், இப்படிப் பலர் இடம்பெறவில்லை. "முதல் ரவுண்டு’ என்பார்களே அதிலேயே 2000! கழகம் கலகலத்துவிட்டது, பொலபொலவென உதிர்ந்துகொண்டிருக்கிறது என்று ஓசை கிளப்பிக் கொண்டி ருப்பவர்கள், திகைத்துப் போகக்கூடிய தொகை அல்லவா இது! திட்டமிட்டு நடத்தப்பட்ட அறப்போரில் ஈடுபட்ட மொத்தப் பேர்களின் எண்ணிக்கை அல்ல? சர்க்கார் பார்த்து, ஊருக்கு நாலு பேர்களையாவது பிடித்துப் பார்ப்போம், ஒரு பீதி ஏற்படுகிறதா என்ற முறையில் பிடித்தபோது தொகை 2000!! எவ்வளவு வலிவு குறைந்த சர்க்காராக இருந்தாலும், எத்துணை வலிவுடன் நடத்தப்படும் கிளர்ச்சியையும் தடுத்துவிட முடியும் - முடிகிறது. இத்தகைய முறையில், கிளர்ச்சி நடத்தப்படும் என்று முன்கூட்டியே, அறிவித்துவிட்டால், முன்கூட்டியே எவரெவர் ஈடுபடுவார்கள் என்று தகவல் கிடைக்கிறதோ, எவரெவர் ஈடுபடக்கூடும் என்று யூகித்தறிய முடிகிறதோ, அவர்களை முன்கூட்டியே பிடித்து அடைத்துவிட்டால்; கிளர்ச்சி நடைபெறாதபடி பார்த்துக்கொள்ளலாம் - சர்க்கார் அதைத்தான் செய்கிறது. செய்வது மட்டுமல்ல, சர்க்காரை நடத்தும் பொறுப்பை மேற்கொண்டுள்ள கட்சியின் தலைவர்களிலே சிலர் - அறிவுக்கரசர்கள் - ஏளனம்கூடச் செய்கிறார்கள்; கிளர்ச்சி நடைபெறவில்லை!! - என்று. கிளர்ச்சி நடைபெற்றிருந்தால் எவ்வளவு பேர்களைப் பிடிக்கவேண்டி இருந்திருக்குமோ அதனைவிட அதிக எண்ணிக்கையுள்ளவர்களைப் பிடித்து அடைத்துவிட்டு, கிளர்ச்சி நடக்கவில்லை என்று பேசுவது, கேலிப் பேச்சிலேகூட, மிக மிக மட்டரகம்! ஆனால் என்ன செய்வது? மிக உயர்ந்த இடத்துக்குச் சென்ற பிறகுகூட, சிலருக்கு இத்தகைய மட்டரகப் பேச்சுத்தான் பேசமுடிகிறது! தங்கக் கலயத்திலே ஊற்றி வைத்தாலும், கள் பொங்கி வழிந்து நாற்றம் வீசத்தானே செய்யும்? ஒரு கட்சி நடத்தத் திட்டமிடும் கிளர்ச்சி, தோல்வியாகி விட்டது என்று எப்போது கூறலாம் என்றால், அந்தக் கட்சி, கிளர்ச்சிக்கான திட்டத்தை அறிவித்து அழைக்கும்போது, அந்தக் கிளர்ச்சியிலே ஈடுபட ஒருவரும் முன்வரவில்லை என்ற நிலை ஏற்படும்போது. இங்கு நாம் கண்டது என்ன? கிளர்ச்சியின் துவக்கம் தொட்டிலில் இருக்கும்போதே, 2000 - கழகத் தோழர்கள் சிறைக்குள் தள்ளப்பட்ட விந்தையை! இந்தத் திருவிளை யாடலையும் செய்துவிட்டு, தி.மு.க. கிளர்ச்சிக்கு ஆதரவே இல்லை, அனுதாபமே இல்லை, கிளர்ச்சி நடக்கவே இல்லை! என்று வேறு திருவாய் மலர்ந்தருளுகிறார்கள்! மூலைக்கு மூலை மிரண்டோடி 2000 - பேர்களைச் சிறையிலே போட்டு அடைத்துவிட்டது மட்டுமா! சிறையிலே அவர்களைப் போட்டுவிட்டு, காமராஜர் ஊரூருக்கும் சென்று, கழகத்தவர்களை, கோழைகள் சூதாடிகள் நாடோடிகள் என்றெல்லாம் அர்ச்சிக்கும் கைங்கரியத்தையும் வேகமாக நடத்தக் காண்கிறோம் (பத்திரிகைகளில் பார்த்தேன்). கணவனை, மகனை, அப்பனை, அண்ணன் தம்பியை, மைத்துனன் மாமனை, உறவினனை, சிறையில் தள்ளிவிட்டார்களே என்று வயிறு எரிந்துகிடக்கும் தாய்மார்கள் காதுக்கு இவர் பேச்சு நாராசமாகத்தான் இருந்திருக்கும். இப்படியும் ஈவு இரக்கமற்ற ஒரு சுபாவமா! என்று கேட்டுக் கண்ணீர் சிந்தியிருப்பார்கள். ஆனால், இது ஜனநாயகக் காலம். ஆகவே அவர் இந்த அளவோடு இருக்கிறார். நாக்கை அறு! கை கட்டை விரலை வெட்டு! உயிரோடு போட்டுப் புதைத்துவிடு! என்றெல்லாம் ஆதிக்கக் காரர்கள் ஆர்ப்பரித்த காலம் ஒன்று இருந்தது. மகனைக் குத்திக் கொல்லச்செய்து, அந்தக் கோரத்தைத் தாய்க்குக் காட்டுவது! குழந்தையைத் தூக்கி எறிந்து சாகடித்து, அதைக் கண்டு பெற்றவள் மாரடித்து அழுவதைக் காண்பது! இப்படிப்பட்ட காட்டுமிராண்டி முறைகள் இருந்தன! இப்போது ஜனநாயகக் காலமாக இருப்பதால், சிறையிலும் தள்ளிவிட்டு, சீரழிவாகவும் ஏசிப் பேசுவதோடு இருந்துவிடுகிறார்கள். இதெல்லாம் நல்லதற்கு அல்ல என்றும், இந்த வாழ்வு எத்தனை நாளைக்கு என்றும், இந்த இலட்சணத்துக்கு ஓட்டு வேறு வேண்டுமாம் என்றும், எத்தனை எத்தனை தாய்மார்கள் சபித்தனரோ, எத்தனை பெரியவர்கள் மனம் நொந்து பேசினார்களோ? யார் கண்டார்கள்! இவைகளை எல்லாம், ஆளவந்தார்கள் துச்சமென்று மதிப்பவர்கள் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தம்பி! இப்படிப்பட்ட அக்ரமத்தை அழித்திடும் அதிகாரம் பெற்றவர்கள் பொதுமக்கள் - வேட்டு முறையால் அல்ல; ஓட்டு முறையினால். அந்தப் பேருண்மையைக்கூட மறந்துவிடுகிறார்கள். ஆளவந்தார்கள். "கிளர்ச்சி நடத்தி இவர்கள் கண்ட பலன் என்ன?’ என்று கேலிபேசும் கண்ணியவான்கள், இதை உணர வேண்டும். கிளர்ச்சிகள், ஆளவந்தார்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டும் காலக் கண்ணாடிகள்! "கிளர்ச்சிகள் வீண்போகா’ என்பதில் தொக்கியுள்ள பொருள் நிரம்பிய தத்துவம் இதுவே. தம்பி! சைதைச் சிறையிலேயும், சென்னைச் சிறையிலும், நான் இவைபற்றி எண்ணியபடி இருந்தேன். ஒவ்வொரு நாளும் என்னை வந்து பார்த்துவிட்டுச் சென்ற நண்பர்கள், அவர் பிடிபட்டார்! இவர் பிடிபட்டார்! என்ற செய்திகளையே கொண்டுவந்தனர். கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் கிளர்ச்சி நடைபெற்றால் எழும்பி இருக்கக்கூடிய பரபரப்பு, ஒரே கிழமையில் ஏற்பட்டுவிட்டது, அதிதீவிர அறிவுக் கூர்மையுடன் ஆளவந்தார்கள் திட்டமிட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதனால், இந்தக் கிளர்ச்சிகளை எல்லாம் கண்டு நாங்களா பயப்படுவோம்! என்று ஆளுங்கட்சியைச் சார்ந்த ஒருவர் பேசியதைப் பத்திரிகையில் படித்த இரு கைதிகள் சைதைச் சிறையில் பேசிக்கொண்டனர்; கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. தீனா மூனா காரனுங்களைக் கண்டு நாங்க பயப்பட மாட்டோம் என்று பேசி இருக்கிறார் ஒரு காங்கிரஸ் மந்திரி. அடே அப்பா! இதிலே என்ன அதிசயம். தீனா மூனாக்காரனுக்கிட்டவா, போலீசும், பட்டாளமும் ஜெயிலும் கஜானாவும் இருக்குது, கண்டு பயப்பட! எல்லா அதிகாரமும் இப்ப காங்கிரசுக்காரர்கிட்ட இருக்குது. பின்னே, தைரியமாகத்தான் இருப்பாங்க. ஏன் பயப்படப் போறாங்க. அதைத்தான் சொல்றாங்க, நாங்க பயப்படலே…..ன்னு. அட யார்டா இவன் அறிவுகெட்டவனா இருக்கறே. இத்தனை போலீசு பட்டாளம் கோர்ட் ஜெயிலு எல்லாம் இந்தக் காங்கிரசுகிட்ட இருக்கிறது தெரிஞ்சிருந்தும், தீனாமூனாகாரரு, பயப்படாம கிளர்ச்சி செய்கிறாங்க; அது அதிசயமே தவிர, ஆட்சி செய்கிறவங்க பயப்பட வில்லைன்னு பேசிக்கொள்வது பெரிய அதிசயமாப் பேசவந்துட்டான், அநியாயம்! கைதிகள் பேச்சைத்தானா கூறுகிறீர் என்று கேட்கிறாயோ, தம்பி! வேறு, எதை நான் கூறமுடியும் - கைதிகள் பேசுவதைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன், “கனம்கள்’ பேசுவதைக் கேட்கக்கூடிய இடமா இது!! சிறையிலே இருக்கும் கைதிகளுக்குக்கூடப் புரிகிற மிகச் சாதாரண உண்மை, கனம்களாகிவிட்டவர்களுக்குப் புரியவில்லையே, ஏன்! ஒருவேளை, கனம்களாகிவிட்டதாலோ!! தெரியவில்லை, ஆனால் பேசுகிறார்கள், நாங்கள் கிளர்ச்சிகளைக் கண்டு பயப்படவில்லை என்று. இத்தனைக்கும், இந்தக் கிளர்ச்சி கட்டுக்கு அடங்கியதாக, திட்டமிடப்பட்டது; இதனால் சமுதாயத்துக்குச் சங்கடமோ சஞ்சலமோ ஏற்படாது; இது நவம்பர் கிளர்ச்சி; இவர்கள் நடத்திய ஆகஸ்ட்டு அல்ல! இருந்தும், இதை ஒடுக்க ஏன் இவ்வளவு பதைபதைப்பு, துடிதுடிப்பு!”இவ்வளவுதானா நீங்கள்? இந்தியை எதிர்த்து ஒரு கிளர்ச்சி நடத்தப்படுகிறது, தடுக்கத் திறமை இல்லையா?’’ என்று கேட்டுவிடுவார்களே, டில்லியில்! அந்தப் பயம் உச்சியைப் பிடித்துக் குலுக்குகிறது. தடைச் சட்டத்தை மீறாததால், கழகமே கலகலத்துப்போய்விட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தீர்கள் - இப்போது கழகம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடத்தத் திட்டம் போட்டிருக்கிறது என்கிறீர்கள் - கலகலத்துப்போனது உண்மையானால் அந்தக் கழகத்தினால் ஒரு கிளர்ச்சி நடத்த முடியுமா? ஆதரவு இல்லாமலா ஒரு கிளர்ச்சிக்குக் கழகம் திட்டமிடும்? உங்கள் பேச்சை, நடவடிக்கைகள் மெய்ப்பிக்கவில்லையே; தவறான தகவல்களைக் கொடுத்து நிலைமையை மறைக்கிறீர்களே! - என்றெல்லாம் டில்லி மத்திய சர்க்கார் கேட்டுவிடுமே - அந்தக் கிலி! தமிழகக் காங்கிரசு அரசு மேற்கொண்டுவிட்ட "கெடுபிடி’ நடிவடிக்கைக்குக் காரணம் இதுதான், தம்பி! எங்கே, அந்தப்பய? எங்கே? கோபமாகக் கூவுகிறான் கணவன். ஏன் இப்படிப் பதைக்கிறீங்க? பையன், என்ன செய்து விட்டான்? - பதறிக் கேட்கிறாள் மனைவி. என்ன செய்தானா? அடியே! என் தலைக்குத் தீம்பு தேடிட்டான். என் பிழைப்பிலே மண்ணைப் போட்டுட்டான் - ஆத்திரத்துடன் பேசுகிறான் கணவன். என்னத்தைச் செய்துட்டான் சொல்லித் தொலையுங்களேன் - மனைவி கேட்கிறாள். குரலைச் சற்றுத் தாழ்த்தி, கணவன் கூறுகிறான்; அவனோட அம்மாதானேடி நீ? உனக்கு வேற எப்படி இருக்கும் புத்தி. தெருவிலே யார், தெரியுதா? எஜமானரு! ஏன் நிற்கறாரு தெரியுதா? அவரோட அருமையான நாயை இந்தப்பய, நம்மவண்டி, உன்னோட பிள்ளை என்ன செய்தான் தெரியுமா? அவனைக் கடிக்க வந்துதாம், அதுக்காக, கல்லாலே அடிச்சிருக்கான். எஜமானரு பதைக்கிறாரு, பதறுறாரு, கொண்டாடா அந்தப் பயலை, உன்னாலே அடக்க முடியாவிட்டா நான் முதுகுத் தோலை உரிச்சிப் போடறேன்னு கொதிக்கிறாரு. நல்லா இருக்குங்க நியாயம்! நாயி கடிக்க வந்தது, கல்லைத் தூக்கிப்போட்டான். அது பெரிய தப்பா? நாயி கடிக்கலாமா? இவரு வூட்டு நாயி, நம்ம மகனைவிட ஒசத்தியா - மனைவி கேட்கிறாள், கோபத்துடன். கணவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஓங்கிக் கொடுக்கிறான் முதுகில். . . கன்னத்தில். ஐயோ! அப்பாடா! அம்மாடி! என்ற அலறல் . எஜமானர், மீசையை முறுக்கியபடி, வீட்டைவிட்டு வெளியே செல்கிறார், தமது மாளிகைக்கு - வெற்றிக் களிப்புடன். அது வெறிநாய் - எல்லோரையுந்தான் கடிக்க வருது - என்று ஊரிலே பலர் பேசிக்கொள்கிறார்கள். கதை என்கிறாயா தம்பி! கட்டப்பட்டது, கருத்துக்காக. இரண்டு முறை படித்துப்பார். தமிழக அரசு மேற்கொள்ளும் போக்குக்கான காரணம் விளங்கும். இவைப்பற்றி எல்லாம் பேசும் வாய்ப்பு எனக்குச் சைதைச் சிறையிலும் கிட்டவில்லை. இன்றுவரை (நவம்பர் 27) சென்னைச் சிறையிலும் கிட்டவில்லை. விலைவாசிக் குறைப்புக்கான கிளர்ச்சியின்போது, வேலூர் சிறையில் இருந்தபோது, நமது தோழர்கள் அனைவரும், சிறையிலே ஒரு தனிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பகலில் கழகத் தோழர்கள் பலரிடம், பல்வேறு பிரச்சினைகள்பற்றிப் பேசிட வாய்ப்புக் கிடைத்தது. இரவுகளிலேயும், என்னோடு தோழர்கள் பொன்னுவேலும் ராஜகோபாலும் ஒரே அறையில் இருந்தனர். இரவு நெடுநேரம் வரை பேசிக்கொண்டிருப்போம். எனக்கு வலப்புறத்து அறையிலே, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் - இடப்புற அறையில் சட்டமன்ற உறுப்பினர் முல்லை வடிவேல்! பாராளுமன்ற உறுப்பினர், எல்லாப் பழைய சினிமாப் பாடல்களையும், உரத்த குரலில் பாடுவார். . . பாட்டு என்று அவர் எண்ணிக்கொண்டு ஓசை கிளப்புவார் - பாகவதர் பாடல்களை!! கேட்டுக்கொண்டிருப்பேன். வடிவேலுவின் இசையோ, உள்ளபடி உருக்கமாக இருக்கும் - ஒவ்வொரு பாட்டையும் அவர் எனக்காக அல்ல - பிரிந்துள்ள சோகத்தைத் தெரிவிக்கவேண்டியவர்களுக்குத் தெரிவிக்கும் கருத்துடன் - பாடுவார். முறைப்படி பயிற்சி பெற்றால், எல்லோருமே கேட்டு இன்புறத்தக்கதாகவே அவருக்கு மெல்லிசை வரக்கூடும். ஆனால் சிறை தந்த இசைதான் அது என்று பிறகு அறிந்துகொண்டேன். இப்போதுகூட காதிலே ஒலிப்பதுபோலவே இருக்கிறது, திருவண்ணாமலை சண்முகத்தின் வெண்கலச்சிரிப்பொலியும், வேலூர் சாரதியின் வெடிச்சிரிப்பும், திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் தங்கவேலுவின் கூச்சம் கலந்த புன்னகையும், வானூர் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணனின் போலீஸ் நடையும், போளூர் சுப்பிரமணியத்தின் சிரிக்கும் கண்களும்! எல்லாம் விருந்தாக இருந்தன, வேலூர் சிறையில். இங்கு இதுவரையில் (நவம்பர் 27) தொடர்புகொள்ள, தோழமையுடன் அரசியல் பிரச்சினைகள்பற்றி பேச வாய்ப்பே இல்லை. சைதாப்பேட்டையில் இருக்கும் வரையில் இந்தச் சங்கடம் இருக்கும், சென்னை சென்றுவிட்டால், நம்முடைய தோழர்களுக்கு மத்தியில் இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என்னை சென்னைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்போகிறார்கள் என்ற சேதியை அன்பில் தர்மலிங்கம் சொன்னபோது, களிப்பூர் செல்லப்போகிறோம் என்று நிச்சயித்துக்கொண்டேன். அன்று என்னைக் காண வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஜெயிலருடன் வந்து பேசிக்கொண்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரியைப் பார்த்து, நாணிக் கோணிக் கிடந்தார். நான் அறிமுகம் செய்து வைத்தபோதுதான், விஷயம் புரிந்தது. நண்பர் பாலகிருஷ்ணன் எட்-கான்ஸ்டபிளாக இருந்தபோது. அந்தப் பகுதியில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர் ஜெயிலருடன் பேசிக்கொண்டிருந்தவர். இருவரும் சிறிது நேரம் “அந்த பழைய’ நாட்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதுகூட எனக்கு, அந்த அதிகாரி என்பொருட்டுத்தான் அங்கு வந்திருக்கிறார் என்பது தெரியாது. சிறிது நேரத்திற்கெல்லாம் துணைக் கமிஷனர் வந்து சேர்ந்தபோதுதான், விவரம் புரிந்தது. அவரும் போலீஸ் அதிகாரியும், என்னை அழைத்துச் சென்று, சென்னை மத்திய சிறைச்சாலை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். நான் வருவது தெரிந்து, அங்கு வந்திருந்த நமது நண்பர்கள் எவரும், என் அருகே அனுமதிக்கப்படவில்லை. உள்ளே சென்றேன், மெத்த மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன். ஏனெனில், நண்பர்கள் நடராசனும், கோவிந்தசாமியும், சிற்றரசும், கலியாண சுந்தரமும், அ. பொ. அரசும், செல்வராசும், ஆசைத்தம்பியும் மற்றும் பலரும் உள்ளே இருக்கிறார்கள். கச்சேரி பாஷையில் சொல்வதானால், பெரிய ஜமா! கண்டதும் களிப்படைவார்கள், களிப்புப் பெறலாம் என்று எண்ணினேன். ஆனால் என்னை சிறையின் முன் பகுதியில் உள்ள மாடிக் கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றனர், கொஞ்சம் சோர்வு தட்டிற்று என்றாலும், அதற்கு இடையிலும் ஒரு சிறு நம்பிக்கை. ஒரு சமயம், நமது தோழர்களில் சிலரையாகிலும் இங்குக் காணலாம் என்ற நம்பிக்கை, நான் அங்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, மணி 7-க்கு மேலாகிவிட்டது. படி ஏறும்போதே,”அண்ணாவா! அண்ணா’ என்ற அன்புக் குரல் கேட்கும் என்று எதிர்பார்த்தேன் - ஒரு அழைப்பும் இல்லை. உள்ள அறைகள் நாலு, அதிலே இரண்டு அறைகளிலே வேறு யாரோ காணப்பட்டார்கள். ஐந்தாம் நம்பர் அறையில் என்னை விட்டுவிட்டு, ஒரு துண்டு ரொட்டியும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் கொடுத்துவிட்டு, பூட்டிக்கொண்டு போய் விட்டார்கள். எனக்குப் பெருத்த ஏமாற்றம் மனச்சங்கடம். சைதாப்பேட்டைபோலவேதான் சென்னையிலும் நான் "தனியன்’ ஆக இருந்து தீரவேண்டி நேரிட்டுவிட்டது, உள்ளபடி வேதனையாக இருந்தது. தனியனாக இருப்பது எனக்கு வேதனை தரும் என்று அறிந்துதானோ என்னவோ இந்த ஏற்பாடு! யார் கண்டார்கள்! உடன் இருப்பவர்கள் யார் எனத் தெரியவில்லை; இரண்டு நாட்கள் கழித்து அவர்களும் சொன்னார்கள்; பொழுது விடிந்து ஒரு வார்டர் சொல்லுகிறவரையில், தங்களுக்கும் புதிதாக வந்திருப்பது யார் என்பது தெரியாது என்று. ஆனால் காலையில் நான் எழுந்த உடனே, இருவரும் இன்முகத்தோடு வந்தனர். எங்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்ததிலே மெத்த மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்கள். அது முதல், என்னைத் தங்கள் "விருந்தினன்’ போலவே அன்புடன் நடத்தி வருகிறார்கள். உணவு, உரையாடல் ஆகிய எதிலேயும் எனக்குக் குறை ஏற்படாதபடி பார்த்துக்கொள்கிறார்கள். இருந்தாலும் உள்ளே உள்ள நமது நண்பர்களைக் காணமுடியவில்லையே, பேச முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை வாட்டியபடி இருந்தது. குறிப்பாகக் காஞ்சி கலியாண சுந்தரத்தின் பேச்சைக் கேட்கவேண்டும் என்று ஒரு ஆவல்! வேறு யாரிடம் பேசுவதைக் காட்டிலும், என்னிடம் பேசும்போதுதான், கலியாணத்துக்குத் துணிவும் தாராளமும் நிரம்ப வரும். என்னிடம் அளவற்ற அன்பு - அதுபோலவேதான் எனக்கும். வேறு எவரிடம் கேட்கமுடியாத சில கருத்துக்களை, சில பாணிகளைக் கலியாணத்திடம் கேட்க முடியும். சைதையிலிருந்து புறப்பட்டபோது எண்ணிக்கொண்டேதான் வந்தேன் - நம்மைப் பார்த்த உடன் கலியாணம், "வா! வா! வந்து சேர்ந்தாயா!’’ என்று அழைக்க, "ஆமாம்! உன்னை ஏன் அழைத்துக்கொண்டு வந்தார்கள்?’’ என்று நான் கேட்க, "அழைத்துக்கொண்டு வந்தார்களா! இது மாமியார் வீடா! தீபாவளி வரிசை வைத்து அழைத்து வந்தார்களா! இழுத்துக் கொண்டு வந்தார்கள்’’ என்று கலியாணம் சொல்ல, "ஏன் இப்படி இவ்வளவு பேர்களைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள்’’ என்று நான் ஐயத்துடன் கேட்க, "பின்னே, நீ செய்கிற வேலைக்கு எங்களைச் சும்மாவா விட்டுவைப்பார்கள்’’ என்று கலியாணம் குத்த, "உனக்கு வேண்டியதுதான்!’’ என்று நான் கேலி செய்ய. "எவனெவனோ இருக்கறான், அவனை எல்லாம் பிடித்துக் கொண்டு வரல்லே. ரொம்ப காரியமா, என்னை இழுத்துக் கொண்டு வந்துவிட்டானுங்க’’ என்று எரிச்சலோடு சொல்ல, வேடிக்கையாகப் பொழுதுபோகும் என்று எண்ணிக் கொண்டு வந்தேன். ஆனால் எனக்குக் கிடைத்ததோ, தனிமை! கழகத் தோழர்களின் தொடர்பும் தோழமையும் அற்ற நிலை. உள்ளபடி சிறைவாசம்!! என்ன செய்ய! நான் வந்திருப்பது கேள்விப்பட்டு அவர்களும் உள்ளே அல்லற்பட்டிருக்கிறார்கள். அமைப்புச் செயலாளருக்கு அளிக்கப்படவேண்டிய மரியாதை, ஜெயிலிலும் இருக்கும் என்ற நினைப்புடன், நடராசன் கேட்டிருக்கிறார் சிறை அதிகாரியை; எங்களை அண்ணா இருக்கும் இடத்தில் கொண்டுபோக வேண்டும் என்று. இங்கு இருக்கிறாரே, சிறை அதிகாரி, அவர், இல்லை என்று கூறுவதே இல்லை. ஒரு அழகான புன்னகை! அதற்குப் பொருள், என் முறைப்படிதான் காரியம் இருக்கும்; அதை மாற்றச் சொல்லிக் கேட்டுப் பயன் இல்லை - என்பதுதான். வெளியிலிருந்து வருபவர்களைச் சில நிமிடநேரம் பார்த்துப் பேசுவதுபோலவே, சிறை அதிகாரியின் அனுமதி பெற்று, நடராசனையும் தோழர் கோவிந்தசாமியையும், ஒரு நாள் பார்த்துப் பேசினேன் - அதிகாரிகள் உடன் இருந்தனர். அவர்கள் வெளியே போகிறவரையில் இதே நிலைதான். வெளியே சென்றுவிட்டு, மறுபடியும் என்னைப் பார்க்க, நடராசன், கோவிந்தசாமி, அரசு, செல்வராசு, ஆசைத்தம்பி வந்திருந்தனர் - சத்தியவாணிமுத்துவும் உள்ளே இருந்தபோது பார்க்க, பேச, கிடைக்காத வாய்ப்பு, அவர்கள் விடுதலை பெற்ற பிறகுதான் எனக்கு ஓரளவு கிடைத்தது. இதே முறைதான் நீடிக்குமா, சில நாட்களுக்குப் பிறகு ஏதாவது மாறுதல் ஏற்படுமா என்று தெரியவில்லை. சென்னைச் சிறையில், ஒவ்வொரு நாளும், கருணாநிதியும் நாவலரும் வருகிறார்கள் - இரண்டொரு நிமிடங்கள் பேசுகிறோம். நானே, விரைவில் அவர்களை அனுப்பி விடுகிறேன் - ஏனெனில் சூழ உட்கார்ந்திருக்கும் அதிகாரிகள் நாங்கள் அதிகநேரம் பேசிக்கொண்டிருப்பதைத் தொல்லையாகக் கருதிவிடுவார்களோ என்பதுதான், மேலும் அரசியல் பிரச்சினைகளைப் பேசக்கூடாது; கழகத்திலே மேற்கொண்டு இன்னின்னது நடத்தப்பட வேண்டும் என்று சொல்லக்கூடாது; எதைப் பேசவேண்டுமோ, எதைப் பேசினால் சுவையும் பயனும் எங்களுக்கு ஏற்படுமோ அவைகளைப் பேசக்கூடாது! மாற்றப்பட முடியாத விதிமுறையல்லவா அது!! ஆக இரண்டொரு நிமிடங்களிலேயே பேச்சு முடிந்துவிடுகிறது. எப்படி? பரவாயில்லை. தனியாகவா? இல்லை; இரண்டு பேர் இருக்கிறார்கள். யார் அந்த இருவர்? வேறு வழக்கிலே வந்தவர்கள். சாப்பாடு எப்படி? பரவாயில்லை, குறையில்லை. அங்கேயே சமைக்கிறார்கள். ஏதாவது கொண்டு வரவா? புத்தகங்கள் கொடுத்தனுப்புங்கள். நம்ம பத்திரிகைகள் வருகின்றனவா? நம்ம பத்திரிகைகளா? கிடையாது. வராது. மற்றப் பத்திரிகைகள் அனுப்பலாம். வீட்டுக்கு என்ன சேதி? வந்திருந்தார்கள்! வரச்சொல்லுங்கள். இவ்வளவுதானே பேச முடிகிறது! இதையே பின்னிப் பின்னி எவ்வளவு பேச முடியும். ஆகவே விரைவாகவே அனுப்பி விடுகிறேன். இங்கு முதல் முறையாக, பரிமளம் சரோஜாவுடன், ராணியையும் மகன் இளங்கோவனையும் அழைத்து வந்தபோதுகூட, அதிக நேரம் பேசிக்கொண்டிருக்க இயலவில்லை. இரண்டாவது முறையாக ராணி வந்தபோது, டி. வி. நாராயணசாமியும் அவர் துணைவியார் பாப்பாவும் உடன் வந்தனர் - என்ன எண்ணிக்கொண்டார்களோ, மிக விரைவாகவே பேச்சை முடித்துக்கொண்டு எழுந்துவிட்டேன். அதிகாரிகள் காவல் காத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலை, மெத்தச் சங்கடத்தைத் தருகிறது. அதனால் நான் அதிக நேரம் பேச முடிவதில்லை. வழக்கறிஞர் நாராயணசாமியிடம், சட்ட சம்பந்தமாக நிறையப் பேச முடிகிறது. சட்டத்தின் பல்வேறு காவல் அலுவலர்களிலே சேர்ந்தவர்கள்தானே சிறை அதிகாரிகள். ஆகவே, சட்டம்பற்றிப் பேசுவது, அவர்களுக்குத் "தகாத’ பேச்சாகப்படாது என்ற எண்ணம் எனக்கு. ஆனால் இந்த அளவு பேச்சுகூட, வழக்கு நடந்து முடியும் வரையில்தான்! தண்டனைக் கைதி என்று ஆகிவிட்ட பிறகு, இந்த அளவுக்கு அடிக்கடி பார்க்கவோ, பேசவோ முடியாது - அனுமதி கிடைக்காது. வழக்கு தொடுத்திருக்கிறார்கள் என்பதை நாவலரும் கருணாநிதியும் தெரிவித்தார்கள். நான் திடுக்கிட்டுப் போய்விட வில்லை; உண்மையிலேயே, அன்று என் மனம் என்னைப்பற்றிய நினைவிலே இல்லவே இல்லை. அமெரிக்க குடியரசுத் தலைவர் கென்னடி படுகொலை செய்யப்பட்ட பாதகத்தை எண்ணி எண்ணி நான் மிகுந்த வேதனையில் ஆழ்ந்து போயிருந்தேன். வேலூர் சப்ஜெயிலில் இருந்தபோதுதான், கென்னடிபற்றிய புத்தகங்களையும். அவர் எழுதிய நூற்களையும், ஆர அமரப் படித்து, அந்த ஆற்றல் மறவனுடைய அருங்கருத்துக்களை உணர்ந்து, பெரும் பயன் அடைந்தேன். உலகே திடுக்கிட்டுப் போகத்தக்க விதத்தில், ஒரு கொடியோன், அந்தப் புனிதனைச் சுட்டுக் கொன்றதுபற்றிப் பத்திரிகையில் படித்துப் படித்து, உலகில் நல்லது செய்வதற்கே வாய்ப்பு இல்லையா! என்று ஓர் வெறிச்சிட்டுப்போன வேதனை கப்பிக்கொண்டிருந்த நிலை! இந்த நிலையில் என்மீது சதி செய்ததாக வழக்குத் தொடுக்கிறார்கள் என்று நண்பர்கள் சொன்னது, எனக்குச் சரியாகக்கூடக் காதிலே விழவில்லை. அவர்கள் சென்ற பிறகு, பத்திரிகைகளிலேதான், வழக்குபற்றிய முழு விவரம் படித்தேன். நாளை (நவம்பர் 28) வழக்கு மன்றம் செல்லும் நாள். அன்புள்ள அண்ணாதுரை 27-9-1964 வழக்கும் அரசியல் போக்கும் தம்பி! வெளியிலிருக்கும்போதேகூட, தேதிகள்பற்றிய நினைவு எனக்குச் சரியாக இருப்பதில்லை; நானென்ன கடிகாரம் பார்த்து வேலைக்குச் சென்று, காலண்டர் பார்த்துச் சம்பளம் வாங்கிப் பழக்கப்பட்டவனா! வெளியே இருக்கும்போதே இந்த நிலை என்றால், சிறைக்குள்ளே அடைபட்டு கிடக்கும்போது தேதி எப்படித் தெளிவாகத் தெரியப்போகிறது? இங்குதான் ஒரு நாளைக்கும் மற்றொரு நாளைக்கும் ஒரு வித்தியாசமும் தெரியாதே, அதனால்தான் வழக்கு மன்றம் செல்லும் நாள், நவம்பர் 28 என்று குறிப்பிட்டேன். வழக்கு மன்றம் போய்விட்டு வந்த பிறகுதான், 29 என்பது நினைவிற்கு வந்தது. வழக்கு மன்றம் சென்றிருந்தேன் - சென்றிருந்தேனா! அழைத்துக்கொண்டு போகப்பட்டேன். ஒரு லாரி நிறையப் போலீஸ் - சில அதிகாரிகள்! சிறை வாயிற்படியிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத் திருப்பம் வரையில், இரும்புத் தொப்பிப் போலீசார். வழக்கு மன்றக் கட்டடத்தைச் சுற்றிலும் அதுபோலவே, காவல்! வழக்கு மன்றம் சென்றேன். உள்ளே நாவலர், கருணாநிதி, மதி, ஆசைத்தம்பி, நடராஜன், சத்தியவாணி, அலமேலு அப்பாதுரை, கபாலி, நீலநாராயணன், எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலர் இருந்தனர். வழக்கறிஞர்களும் அதிகாரிகளும் நிரம்ப! என் நண்பர் வழக்கறிஞர் நாராயணசாமி இருந்தார். அங்குச் சில நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் வேலூர் நாராயணனையும் பார்த்தேன். யாரிடமும் இரண்டொரு விநாடிகளுக்கு மேல் பேச அனுமதி கிடைக்கவில்லை. பேசினால்தானா! பார்த்துக்கொண்டிருப்பதும் பேச்சிலே ஒரு வகைதானே! அந்தத் திருப்தி ஏற்பட்டது. வழக்கு மன்றத் தலைவர் வந்தமர்ந்தார் - சர்க்கார் தரப்பில் வழக்கு நடத்த வந்திருந்தவர் (பப்ளிக் பிராசிக்யூட்டர்) வந்திருந்தார். எல்லோரும் வந்துவிட்டனர்; ஆனால் என்னுடைய "கூட்டாளிகள்’ அந்த நால்வர் காணோம். விநாடிகள் நிமிடங் களாகின்றன; வழக்கு மன்றத் தலைவர் காத்திருக்கிறார். நால்வர் வரவில்லை. இந்த வழக்கு மன்றத்துக்கு நான் முன்பொருமுறை, இதே வழக்கு மன்றத் தலைவர் முன்பு கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கிறேன் - சாட்சி சொல்ல. நண்பர் எஸ். எஸ். ராஜேந்திரன், விலைவாசிக் குறைப்புக்கான மறியலில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டபோது, என்னை வேலூர் சிறையிலிருந்து, சாட்சியம் கூற அழைத்து வந்திருந்தார்கள். அப்போது நான் கண்ட வழக்கு மன்றத் தலைவர்தான் இப்போதும். அரை மணி நேரம் கடந்துவிட்டது. அவர்கள் வரவில்லை. வேறு சில வழக்குகளைக் கவனித்தார் - முக்கால் மணி நேரமும் ஆகிவிட்டது, நால்வர் வரவில்லை. வழக்கு மன்றத் தலைவருக்குக் கோபமும் சங்கடமும் ஏற்பட்டது. "நால்வர் வரட்டும், வழக்கை எடுத்துக்கொள்வோம், என்ற எண்ணத்தில் உள்ளே சென்றுவிட்டார். அவர் உள்ளே சென்றுவிட்ட உடனே, அங்கு ஒரே கலகலப்பு, உரையாடல், அறிமுகப் பேச்சு எல்லாம். ஆனால் அப்போதும், நான் மற்றவர்களுடன் அளவளாவ அனுமதி கிடைக்கவில்லை. சூடு சுவையற்ற சிலபற்றி மட்டும், இரண்டொரு விநாடிகள் பேச முடிந்தது. "நால்வர் வந்து சேர்ந்தனர் - காஞ்சிபுரத்திலிருந்து என்னோடு கிளம்பியவர்களை, 16-ம் தேதிக்குப் பிறகு அன்றுதான் பார்க்கிறேன். மாப்பிள்ளைகள்போலத்தான் காணப்பட்டார்கள். எப்படி? ஏன் தாமதம்? அங்கு நிலைமை எவ்விதம்? என்று கேட்டு, அவர்கள் பதில் அளிப்பதற்குள், வழக்கு மன்றத் தலைவர் வந்துவிட்டார்; வழக்கை எடுத்துக் கொண்டார்.’ குற்றப் பத்திரிகையின் பிரதிகள் எங்களுக்குத் தரப்பட்டன - இதோ இப்போது எனக்குப் பக்கத்திலேதான் இருக்கிறது - 29 தாட்கள்! பிரதிகளைத் தந்ததுடன், எங்களைத் தனக்கு அருகே, எதிரே வந்து நிற்கும்படி அழைத்து, வழக்கு மன்றத் தலைவர், “குற்றச்சாட்டு’ இது என்பதைப் படித்துக்காட்டிவிட்டு,”என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். “இந்தத் தாள்களிலே என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்’ என்றேன்.”வேறோர் நாள் வைத்துக்கொள்ளலாமா?’ என்று அவர் கேட்டார்; சர்க்கார் தரப்பு வழக்கறிஞர், “அவர்கள் குற்றப் பத்திரிகையைப் படிக்க அவகாசம் தரப்படவேண்டுமல்லவா - படித்துவிட்டு அவர்கள் பதில் அளிக்கட்டும்’’ என்றார். நான் வேறோர் நாள்கூட வேண்டாம், இப்போதே ஒருமணி நேர அவகாசம் தரப்பட்டால்கூடப் போதும் என்றேன். நான் கேட்டுக் கொண்டபடி நண்பர் வழக்கறிஞர் நாராயணசாமி,”வழக்கை விரிவாக நடத்திக்கொண்டுபோக என் கட்சிக்காரர்கள் விரும்பவில்லை. சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்வது போன்ற காரியம்கூட அதிக அளவில் இருக்காது. இறுதிக் கட்டத்தில், குற்றவாளிகளாகக் கொண்டுவரப்பட்டுள்ளவர்கள், தங்கள் நிலையை விளக்கி ஒரு அறிக்கை அளிக்க இருக்கிறார்கள். வழக்கை விரைவாகவே முடித்துவிடலாம்’’ என்றார். அன்றையதினம், “என்ன சொல்லுகிறீர்கள்’ என்று வழக்கு மன்றத் தலைவர் கேட்டதற்குப் பதில் அளிக்காவிட்டால், அதற்காகவே வேறோர் நாள் வாக்கு நடத்தவேண்டிவரும். காலம் நீடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே, வழக்கு மன்றத் தலைவரைப் பார்த்து,”ஐயா! தாங்கள் படித்த “குற்றச்சாட்டு’ மெய்ப்பிக்கப்படுவதற்கான தகவல்கள் மட்டுமே இந்தத் தாள்களில் உள்ளன என்றால், நான் இப்போதே பதில் கூறிவிட விரும்புகிறேன்,”நான் குற்றவாளி அல்ல’’ - என்றேன். வழக்குகளில் ஏற்படும், தவிர்க்க முடியாத கட்டத்தில் ஒன்று அது. நால்வரும் அதுபோலவே கூறினர். எனவே, வழக்கு அடுத்து எடுத்துக் கொள்ளப்படும்போது, சாட்சிகள் விசாரணை என்ற கட்டம் நடைபெறும்; டிசம்பர் 5-ம் தேதி பகல் 12 மணிக்கு வழக்கு நடைபெறும் என்று அறிவித்தார். ஐவரும் ஒன்றாகப் போலீஸ் வானில் ஏறினோம் - நால்வரையும், சென்னைச் சிறைக்கே கொண்டுபோகும்படி வழக்கு மன்றத் தலைவர் உத்தரவிட் டிருந்தார். அப்பாடா! என்ற ஒரு நிம்மதி எங்கள் ஐவர் பார்வையிலும். ஆனால், அந்த நிம்மதி எதுவரையில் இருந்தது தெரியுமா, தம்பி! சிறை நுழைகிறவரையில். சிறைக்குள்ளே சென்றதும், நான் பழையபடி, 5-ம் நம்பர் அறையில், தனியனாக! அந்த நால்வர் சிறையில் வேறோர் பகுதியில்! இது என்ன ஏற்பாடோ? ஏன் இந்த ஏற்பாடோ? புரியவே இல்லை. 16-ம் தேதியிலிருந்து அவர்களை நான் காணவில்லை. பேச நிரம்ப ஆவல். சிறையிலே எதைப் பேசி, என்ன திட்டம் போட்டு, இந்தச் சர்க்காருக்கு என்ன சங்கடத்தை நாங்கள் ஏற்படுத்திவிடப் போகிறோம்? எதற்காக இப்படிப் பிரித்துப் பிரித்து வைக்க வேண்டுமோ தெரியவில்லை! சரி, எனக்கு அந்த ஒரு பழக்கம். தனியனாக இருக்கும் பழக்கம் - இதுவரையில் ஏற்பட்டதில்லை; எப்போதும் நாலு பேருக்கு நடுவிலேயே இருப்பது வாடிக்கை. "அதென்ன கெட்ட பழக்கம் - தனியாக இருந்து பழகிக்கொள்’’ என்று சர்க்கார் எனக்குப் போதிக்கிறதுபோலும் நன்றி! மகிழ்ச்சி இல்லை! நன்றி! இன்றுதான் மேயர் தேர்தல். இதைப்பற்றி வழக்கு மன்றத்தில் வந்திருந்த நண்பர்களிடம் பேச எண்ணினேன் - முடியவில்லை. நிலைமை சாதகமாக இல்லை என்பதை கம்யூனிஸ்டுக் கட்சி காங்கிரசுக்கு ஓட்டு அளிக்க முடிவு செய்துவிட்டதுபற்றிய செய்தியே காட்டுகிறது. கிருஷ்ணமூர்த்தி நல்லவர், நமது கழகம் அல்ல - ஆனாலும் பண்புள்ளவர்; பழகுவதற்கு ஏற்ற பெரிய மனிதர். இதனை விளக்கி இவருக்கே ஆதரவு அளிக்கும்படி, 14-ம் தேதியே ஒரு அறிக்கை எழுதி, மாநகராட்சி மன்ற தி. மு. க. தலைவர் அ. பொ.அரசு அவர்களிடம் கொடுக்கச் செய்திருந்தேன். இடையிலே என்னை வந்து பார்த்துவிட்டுச் ùன்ற முன்னாள் மேயர் முனுசாமியும், முன்னாள் துணை மேயர் செல்வராசும், அ. பொ. அரசும், எப்படியும் வெற்றி காண முயற்சி எடுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். என்ன ஆகியிருக்கும் என்பதை அறிந்துகொள்ள ஆவல்தான். என் அறைக்கு எதிர்ப்புறத்திலே சற்றுத் தொலைவிலேதான் மாநகராட்சி மன்றக் கட்டடம் இருக்கிறது. ஆனால் இது சிறை! வெளியே நடப்பது எனக்கு எப்படித் தெரியமுடியும்? எது நடைபெறுவதாயினும், நாம் நமது நண்பருக்கு ஆதரவு காட்டினோம், அதிலே ஒரு குறையும் இல்லை, களங்கமும் இல்லை என்று எண்ணித் திருப்திப்படுகிறேன். (காலமெல்லாம் எந்தக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தோழமையை விரும்பி, பெற்று, மகிழ்ந்து வந்தாரோ, அதே கம்யூனிஸ்டுக் கட்சிதான் அவரைக் கைவிட்டுவிட்டது. இது, காலத்துக்கும் இருக்கப்போகும் கறை என்பதைக் கம்யூனிஸ்டுகள் உணர மறுக்கிறார்கள்.) மாலையில், பரிமளம், வளையாபதி முத்துகிருஷ்ணனுடன் வந்து பேசிவிட்டுப்போனது, மனதுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. இத்தனை நாட்களைக் காட்டிலும் இன்று அதிக நேரமும் பேசிக்கொண்டிருந்தேன் - அதிக கலகலப்பாகவும் பேசினேன். வழக்கு தொடங்கிவிட்டது என்று ஏற்பட்ட உடனேயே, மனதிலே இருந்துவந்த ஒரு மூடு பனி விலகிவிடுகிறது, ஒரு பாரம் குறைந்துவிடுகிறது. அதுதான் காரணம் என்று நினைக்கிறேன். இன்று பரிமளத்திடம் கலகலப்பாகப் பேசியதற்கு. அவர்கள் வருவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பு, பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் வந்திருந்தார் - டில்லியில் நடைபெற்றவைகளைப்பற்றிச் சொல்லிவிட்டுப் போனார். எனக்காகக் கொண்டுவந்த பிஸ்கட், பழங்களைக்கூட, "எனக்கு வேண்டாம். நால்வருக்குக் கொடு’’ என்று கூறிவிட்டேன். சிறையிலே நானோர் பக்கம்! அந்த நால்வர் வேறோர் பக்கம்! உள்ளே நான்! வெளியே, என் அன்புக்குரிய தம்பிகள்! எத்தனை நாட்களோ! எத்தனை மாதங்களோ! யாருக்குத் தெரியும்!! காலையில், பத்து பதினோரு மணிக்குத்தான் தெரியும், மேயர் யார்? என்பது. நமது கடமையை நாம் செய்திருக்கிறோம், வெற்றிக்காக நமது பங்கினைச் செலுத்தி இருக்கிறோம் என்ற திருப்தியுடன் இன்று படுக்கச் செல்கிறேன், ஒரு நல்லவருக்குத் தக்க மரியாதை தரப்படுகிறதா இல்லையா என்பதை நாளைக் காலையிலே தெரிந்துகொள்ளலாம் என்ற எண்ணத்துடன். காலையில் தெரிந்துகொண்டேன், அந்த நல்லவருக்குத் துணை நிற்க, கழகம் தவிர வேறு எவரும் இல்லாததால், மேயர் தேர்தலில் அவர் தோற்றுவிட்டார் என்பதை. இழந்த கோட்டையை ஒரு படை திருப்பித் தாக்கிப் பிடித்தால் செய்தி வெளியிடுவதுபோல நாலரை ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை கார்ப்பரேஷனைக் காங்கிரஸ் கைப்பற்றிவிட்டது! என்று எல்லா இதழ்களும் பெரிய தலைப்புக் கொடுத்து, இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தன. திராவிட முன்னேற்றக் கழகம் வலதுசாரிக் கட்சியாகிவிட்டது; ஆகவே அதனுடைய ஆதிக்கத்தில், மாநகராட்சி நிர்வாகம் இருக்கவிடக்கூடாது என்ற "தத்துவ’க் காரணம் காட்டிவிட்டு, கம்யூனிஸ்டுக் கட்சி, சென்னையின் பெரிய புள்ளிகளில் ஒருவர் என்ற நிலையில் உள்ள ஒரு குஜராத்தி பிராமணச் சீமானுக்கு வெற்றி தேடிக்கொடுத்து பெருமை தேடிக்கொண்டது!! தி. மு. கழகத்திடம் அடக்க முடியாத அளவில் பகை உணர்ச்சி கொண்ட நிலையில், ஆளுங்கட்சி மட்டுமல்ல, மற்றப் பல கட்சிகளும் உள்ளன. காரணம், ஒவ்வொரு கட்சி ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்று கூறுகிறது - ஆனால் உண்மையான காரணம், அடிப்படைக் காரணம், கழக வளர்ச்சியிலே அந்தக் கட்சிகளுக்கு ஏற்பட்டுவிட்ட அருவருப்பு, திகைப்பு, ஆத்திரம். இதைப் போக்கிக்கொள்ள அவர்கள் காங்கிரசுக்கு வலிவூட்டுகிறார்கள். இது இடதுசாரிக் கொள்கையாம்!! தி. மு. க. சுதந்திரக் கட்சியுடன் நேசத் தொடர்பு கொண்டிருப்பது ஒன்றைத்தான், இந்தக் கட்சிகள் சுட்டிக் காட்டுகின்றன. அந்தத் தொடர்பு காரணமாக, தி. மு. க. இடதுசாரிக் கொள்கை எதனையும் இழந்துவிட்டதா என்று பார்த்தால், இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஓரிரு திங்களுக்கு முன்புகூட நில உடைமைப்பற்றிய பிரச்சினை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது, உடைமை யாளர்கள் பக்கம் சுதந்திரக் கட்சி வாதாடிற்று; தி. மு. க. இடதுசாரியினர் பக்கம்தான் துணை நின்றது. இதனைப் பொதுமக்கள் அடியோடு மறந்துவிடுவார்கள் என்றா இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? இதே கம்யூனிஸ்டுக் கட்சி, சென்ற பொதுத் தேர்தலின் போது, தி. மு. கழகம் சுதந்திராவுடன் தொகுதி உடன்பாடுக்கு இசைந்தபோது, அப்படி ஒரு வலதுசாரி கட்சியுடன் உங்களுக்கு ஒட்டு உறவு இருப்பதானால், உங்களுடைய துணையோ, தோழமையோ வேண்டாம் என்று உதறித் தள்ளிவிடவில்லை. பேச்சு நடந்தது, இறுதியிலே முறிவு ஏற்பட்டதுகூட, தொகுதிகள் சிலவற்றை யாருக்கு ஒதுக்குவது, கழகத்துக்கா, கம்யூனிஸ்டுக்கா என்பதிலேதான் தகராறு. இது ஊரறிந்த உண்மை. அப்போது, தி. மு. க. வலதுசாரி என்று ஏசப்படவில்லை. பேச்சு முறிந்த பிறகுகூட, திருச்சியைப் பொறுத்தவரையில் கம்யூனிஸ்டு கலியாணசுந்தரம், அனந்தநம்பியார் ஆகியோருக்குக் கழக ஆதரவும், கழக எம். எஸ். மணி, அன்பில் தர்மலிங்கம் ஆகியோருக்குக் கம்யூனிஸ்டு ஆதரவும் நடைமுறையில் இருந்தது, வெற்றியும் கிடைத்தது. இப்போதுதான், கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு வெறுப்புணர்ச்சியை வளர்த்துக்கொண்டு, அதனை ஒரு “தத்துவம்’ என்ற நிலைக்கு வேறு உயர்த்திக் காட்டுகிறது. ஆனால் இந்த நிலையும் போக்கும், இதுபோலவே இருக்கும் என்று நான் எண்ணவில்லை. அடுத்த பொதுத் தேர்தலின்போது, வேறு தத்துவம் - வேறுநிலை - மலரும் என்று நம்புகிறேன். அது அப்படி ஆவதாக இருப்பினும், கழகத்திடம், கடுங்கோபம் மூண்ட நிலையில் பல கட்சிகள் இருப்பது நன்றாகத் தெரிகிறது. கழகத்தை அழிக்கும் நோக்குடன், அதனை நடத்திச் செல்பவர்களை”ஒழிக்க’த் திட்டங்கள் போடப்படுவதாக மிரட்டல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன - குறிப்பாக என்னையும், கருணாநிதியையும். நான் வழக்கு மன்றம் சென்றேனே – 29லில் - அன்றுகூட வழியிலேயே என்னைத் தீர்த்துவிடப் போவதாக, கடிதங்கள் வந்தனவாம் - போலீஸ் அதிகாரிகளிடம் அவை ஒப்படைக்கப்பட்டன என்று வழக்கு மன்றத்தில் கருணாநிதி கூறக் கேட்டேன். இன்று மாலை என்னைப் பார்க்க வந்தபோதுகூட கருணாநிதி, இதுபோன்ற ஒரு செய்தியை, டெலிபோன் மூலம் தன்னிடம் யாரோ கூறியதாகவும், அந்தத் தகவலையும் போலீஸ் அதிகாரிகட்கு தான் தெரிவித்ததாகவும் கூறினார். இவை வீண் மிரட்டல்களாகவும் இருக்கலாம் - ஏதாவது நடந்தாலும் நடக்கலாம்; நடந்தால் நாம் என்ன செய்யமுடியும்! திடீரென்று பாம்பு கடித்தால் பச்சிலை கிடைப்பதற்குள் ஆள் செத்துப்போவதில்லையா! என்ன நடக்கும் என்பதல்ல முக்கியம், அரசியல் எத்துணை அருவருப்பான காட்டுமிராண்டிப் போக்குக்கு இழுத்துச் செல்லப்படுகிறது என்பதுதான் முக்கியம். அத்தகைய, காட்டுமிராண்டித்தனமல்லவா கென்னடியின் உயிரைக் குடித்துவிட்டது. கொடுமை! கொடுமை! இன்று மாலை நாவலரும், நடராஜனும், கோவிந்தசாமியும், ராஜகோபாலும், கருணாநிதியும், வழக்கறிஞர் நாராயணசாமியும் வந்திருந்தனர். வழக்கு மன்றத்தில் நான் தருவதாகக் கூறியுள்ள அறிக்கை எந்த முறையில் இருக்க வேண்டும் என்பதுபற்றி நாராயணசாமியிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். சட்டத்துக்கும் நீதிக்கும் உள்ள தொடர்பு, இருக்கவேண்டிய தொடர்பு, அறப்போருக்கு அளிக்கப்படவேண்டிய மதிப்பு ஆகிய கருத்துக்களை அறிக்கையில் விளக்க வேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் அதற்கான ஏடுகள் கிடைக்கக்கூடிய இடத்திலா நான் இருக்கிறேன். சிலவற்றை திங்கட்கிழமை கொண்டுவந்து தருவதாக, வழக்கறிஞர் நாராயணசாமி கூறிவிட்டுச் சென்றார். சைதாப்பேட்டையில் வந்து பார்த்த பிறகு, ராஜபோபால் இன்றுதான் மறுபடியும் என்னை வந்து பார்க்க முடிந்தது. ராஜகோபால் வந்தாலே, மகிழ்ச்சி பிறக்கும் வழக்கமல்லவா எனக்கு! அதற்கு ஏற்றபடி, இங்கு இரண்டு நாட்களாக “வெற்றிலை பாக்கு’ இல்லாமல்”வெறும் வாயனாக’ இருந்து வந்தேன் - ராஜகோபால் கொண்டுவந்து கொடுத்த வெற்றிலை பாக்கு, எனக்கு மகிழ்ச்சி அளித்தது. கடந்த ஒரு திங்களாகவே, எனக்கு இருந்துவரும், இடது கைக் குடைச்சலுக்காக, சத்தியவாணி கொண்டுவந்து கொடுத்த "புலித்தைலம்’ வேறு எனக்கு கிடைத்தது. அதனைத் தேய்த்துக்கொண்டு, வலி சிறிதளவு குறையும் நிலைபெற்று, அதே நினைப்புடன் இன்றிரவு படுக்கச் செல்கிறேன். ஞாயிறு, - சிறை சந்தடியற்றுக் கிடக்கும் நாள். வெளியிலிருந்து யாரும் பார்க்க வரக்கூடாது. சிறை அதிகாரிகளின் நடமாட்டமும் மிகக் குறைவு. அன்று "கைதிகள்’ சீக்கிரமாகவும் பூட்டிவிடப்படுகிறார்கள். இன்று வெளி உலகத் தொடர்பு எந்த நண்பர்கள் மூலமாகவும் இல்லை; பத்திரிகைகள் மட்டுந்தான். இன்றைய பத்திரிகையில், பண்டித ஜவஹர்லால் நேருவின் சென்னைப் பேச்சு பெரிய அளவில் இடம் பிடித்துக் கொண்டிருந்தது; அவரேகூட, பத்திரிகையாளர்களின் கூட்டத்தில் இந்தப் போக்கைக் கண்டித்திருந்தார். பண்டிதரின் பேச்சை, பத்திரிகைகள் எப்படிப் பெரிய அளவிலே வெளியிடாமலிருக்க முடியும்! தி. மு. கழகக் கிளர்ச்சியைக் கண்டித்துப் பேசினாரே!! வழக்கமான கண்டனந்தான் - வார்த்தைகள்கூடப் புதிது இல்லை - சிறுபிள்ளைத்தனம் - கேலிக்கூத்து - இவைபோலத்தான். ஒரு நாட்டு மக்களின் மனதை வெகுவாக வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும் மொழிப் பிரச்சினைபற்றி காட்டவேண்டிய அக்கறையும், கொள்ள வேண்டிய பொறுப்புணர்ச்சியும், அவருடைய பேச்சிலே மருந்துக்கும் இல்லை. அரசியல் சட்டத்தை எரித்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? என்று கேட்டிருக்கிறார். பிரச்சினை அதனால் தீர்ந்துவிடும் என்று எண்ணிக்கொண்டு தி. மு. க. கிளர்ச்சி துவக்கவில்லை. இந்தியை ஆட்சி மொழியாக்குவது குறித்து இங்கு நாம் எவ்வளவு மனக் கொதிப்பு அடைந்திருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதே கிளர்ச்சியின் நோக்கம். இதனைப் பல கிளர்ச்சிகளை நடத்திய பண்டிதர் தெரிந்துகொள்ளாமலா இருக்க முடியும்? அதிகாரப் பேச்சு பேசி இருக்கிறார், வேறென்ன கூறமுடியும்! பயப்படாதீர்க்ள! அநீதி நடக்காது! என்று தைரியம் கூறி இருக்கிறார். தான் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப் பட்டிருப்பதாக, அடித்துப் பேசி இருக்கிறார். தம்பி! அவர் கொடுத்த வாக்குறுதி ஆங்கிலத்தை அகற்றமாட்டேன் - இந்தி பேசாத மக்களுடைய சம்மதம் பெறாமல் இந்தியை ஆட்சிமொழியாக்கிவிடமாட்டேன் - இந்தி ஆட்சி மொழியாகவேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை இந்தி பேசாத பகுதி மக்களுக்கே அளிப்பேன் - என்பதாகும். இது அறநெறி அரசு முறை - நேருவின் புகழ் நிலைக்குப் பொருத்தமான முறை - ஆனால் எங்கே அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது? 1965லிருந்து இந்திதானே ஆட்சி மொழி! சட்டம் அப்படித்தான் சொல்கிறது. அதிலிருந்து ஒரு 10 வருஷ காலம், ஆங்கிலம் சில காரியங்களுக்குப் பயன்படுத்தப்படலாம்! அதுதானே பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள சட்டம்! பண்டித நேரு தந்த வாக்குறுதி, அவருடைய துரைத்தனம் நிறைவேற்றிய சட்டத்தினால் சாகடிக்கப்பட்டுவிட்டிருக்கிறது. இதனைச் சுட்டிக்காட்டியவர்கள் பலர் - இங்கு உள்ள இதழ்களில் அநேகமாக எல்லா இதழ்களுமே இதனைச் சுட்டிக்காட்டின. ஆனால் சென்னைப் பேச்சிலே அவர் அடித்துப் பேசினார், என் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் என்று! சரியா? நியாயமான பேச்சா? இவரே, பாராளுமன்றத்திலே முன்பு பேசும்போது, "நான் வாக்குறுதி கொடுத்தது உண்மை - இப்போதும் அதனை மறுக்கவில்லை. ஆனால் என் வாக்குறுதியை ஒரு சட்டத்திலே எப்படி இணைக்க முடியும்!’’ என்று கேட்டார் ராஜ்ய சபையில், சாப்ரு எனும் மூதறிஞர், அந்த வாக்குறுதியை, ஏதாவதொரு முறையில், சட்டத்திலே இணைத்திருக்கலாம் - முடியும் - செய்திருக்க வேண்டும் என்று கூறினார். அவர் காங்கிரஸ் உறுப்பினர். இதனை எல்லாம் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். என்றாலும், சென்னையிலே பண்டிதர் பேசுகிறார், என் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று. பெரியவர்கள் இதுபோல் உண்மைக்கு மாறாகப் பேசும்போது, திகைப்புத்தான் ஏற்படுகிறது. நாட்டுப் பிரிவினையை நாம் விட்டுவிட்டதற்காகவும், நமது கழகச் சட்டதிட்டத்தைத் திருத்தி அமைத்திருப்பதற்காகவும், மகிழ்ச்சி தெரிவித்துப் பேசிவிட்டு, இது போதாது, மனம் மாற வேண்டும், இதயம் மாற வேண்டும் என்று கூறி இருக்கிறார். வேண்டுகோள்கள் நிராகரிக்கப்படும், மனுக்கள் குப்பைக் கூடைக்குப் போகும், நியாயங்கள் மறுக்கப்படும் - ஆனால் மனம் மாற வேண்டும்! எந்த விதமான நீதியோ எனக்குப் புரியவில்லை! பண்டித நேருவின், சென்னைப் பேச்சு ஒரு பெரிய நாட்டு ஆட்சித்தலைவர், நாட்டிலே எழுந்துள்ள பிரச்சினையை அலசிப் பார்த்து பேசும் முறையில் அமையவில்லை. - ஒரு கட்சித் தலைவருடைய கண்டிப்பான பேச்சாக - அதிலும் ஆட்சியில் இருக்கிறோம் என்ற உணர்வுடன் உள்ள ஒரு கட்சித் தலைவரின் பேச்சாகவே அமைந்திருந்தது. தம்பி! ஆளுங்கட்சியை ஆதரிக்கும் தவறான போக்கிலே கம்யூனிஸ்டுக் கட்சி சென்றுகொண்டிருப்பதனைச் சுட்டிக் காட்டியிருந்தேனல்லவா! இன்று பத்திரிகையில், கேரள முன்னாள் முதலமைச்சர் நம்பூதிரிபாத், இதே கருத்தை, தெளிவாக ஒரு அறிக்கையில் கூறியதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இன்றைய கம்யூனிஸ்டு போக்கு மாறிவிடக்கூடியது என்று நான் கொண்டுள்ள நம்பிக்கையை, நம்பூதிரிபாத்தின் அறிக்கை மேலும் வலிவுபடுத்தியது. இன்று கம்யூனிஸ்டுக் கட்சி, இந்திய அரசாங்கத்து வாலாகிவிட்டது என்று அவர் கூறுகிறார். நாம் மட்டும், "வால்’ என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டிருந்தால், கம்யூனிஸ்டுகள் அகோரக் கண்டனக் கூச்சலிட்டிருப்பார்கள். நம்பூதிரிபாத் அத்தோடு விடவில்லை, கம்யூனிஸ்டுக் கட்சி, சுதந்திராக் கட்சிக்கும் வாலாகிவிட்டது! ஜனசங்கத்துக்கும் வாலாகிவிட்டது! என்று கண்டித்திருக்கிறார். பொதுவாக, மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டாலொழிய, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் இவ்விதம் “அறிக்கைகள்’ வெளியிடமாட்டார்கள். பாராளுமன்றத்தில் மூன்று மாதங் களுக்கு முன்பே ஒரு கம்யூனிஸ்டுத் தலைவர் மெத்த வருத்தத்தோடு என்னிடம் சொன்னார்,”உட்குழப்பம் ஏற்பட்டு விட்டது; பிளவு அதிகமாகிவிட்டது; முடிவு எப்படி இருக்கும் என்று கூறமுடியாத நிலை! கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களிலே பலர், காங்கிரசில் சேர்ந்துவிட்டால்கூட நான் ஆச்சரியப் படுவதற்கில்லை! என்றார். என்றாலும், கம்யூனிஸ்டுக் கட்சியில், குறிப்பிடத்தக்கவர்கள், தவறான தத்துவத்திலும், ஆபத்தான போக்கிலும் கட்சி சென்று கொண்டிருக்கிறது என்பதை உணரத் தலைப்பட்டிருப்பது மட்டுமல்ல, பேசவும் முற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒரு மாறுதலாகவே எனக்குத் தென்படுகிறது. நாளைய தினம் மறியல் - மதி தலைமையில், என்ன முறையைச் சர்க்கார் கையாள இருக்கிறதோ தெரியவில்லை. இன்று இரவு எனக்கெங்கே தூக்கம் வரப்போகிறது! இதே நினைவாக இருக்கும். மறியல் நடத்த விடுவார்களா? கைது செய்வார்களா? அடித்து விரட்டுவார்களா? எதையும் சொல்வதற்கில்லை. ஏனெனில் காங்கிரஸ் சர்க்காரின் போக்கு எந்த இலக்கணத்துக்கும் உட்பட்டதாகவே இல்லை - கொச்சையாகப் பேசிக்கொள்வார்களே, சித்தன் போக்கு சிவன் போக்கு என்று, அதுபோல இருக்கிறது! எதற்கும், நாளைய தினம் மதி இங்கே வருவார் என்ற எண்ணத்துடனேயே இன்றிரவு, படுக்கச் செல்கிறேன். அன்புள்ள அண்ணாதுரை 4-10-1964 கை வலியும் சிறையின் நிலையும் தம்பி! இன்று பகல் பனிரெண்டு மணி சுமாருக்குத்தான் மதியும், மறியலில் ஈடுபட்ட மற்ற நான்கு தோழர்களும் இங்கு கொண்டுவரப்பட்டார்கள் என்று தெரிந்துகொண்டேன் - பார்க்கக்கூட முடியவில்லை. இதிலிருந்து, சிறையிலே, நான் இருக்கும் பகுதி தனிச் சிறையாக இருந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இங்கு வார்டர்கள்கூட அதிகமாக வருவதில்லை. என்னைக் காண யாராவது வருகிறபோதுதான், சிறை அதிகாரிகளைக்கூட நான் காண முடிகிறது. மாலை 6-30 மணிக்குப் போட்டுப் பூட்டிவிட்டால், காலையில் திறந்து விடுகிற வரையில், தனிமைதான்! இன்று என்னைக் காண, ராணியும் வரவில்லை. காலை முதற்கொண்டே கடுமையான மழை, விட்டுவிட்டுப் பெய்து கொண்டிருப்பது, எனக்கு இங்கே சங்கடமாக இருப்பது போலத்தான் வெளியே இருந்து இங்கு வர எண்ணுபவர்களுக்கும் இருந்திருக்கும். ஆகவே இன்று வெளியிலிருந்து வரக்கூடியவர்கள் மூலமாகவும், மறியல் எப்படி நடந்தது, கைது செய்யப்பட்டது எப்படி, எப்போது என்ற விஷயம்கூடத் தெரிந்துகொள்ள வழி ஏற்படாமல் போய்விட்டது. கிட்டத்தட்ட கண்காணாத தீவிலே கொண்டுபோய் வைத்திருப்பதுபோன்ற நிலைமையே இருப்பதை உணருகிறேன். முன்பு எப்போதும் இப்படி ஒரு நிலைமை சிறையில் இருந்ததில்லை. இம்முறை இவ்விதம் இருக்கக் காரணம் என்னவென்றும் புரியவில்லை, என்னுடன் இங்கு இருக்கும் தேவகோட்டையார் சொன்னார், “ஒரு விஷயம் கேள்விப் பட்டேன், சிறையில் நாம் இருக்கும் பகுதியிலே, ஒரு சி.ஐ.டி, போடப்பட்டிருக்கிறதாம் - அதுவும் வார்டர் உடையிலேயாம்’’ என்றார். நாலைந்து நாட்களுக்கு முன்பு, இதேபோல, இங்கு வேலை செய்ய வரும்”கைதி’ மூலமாகவும் இதேபோன்ற செய்தி கேள்விப்பட்டேன். எவ்வளவு தூரம் உண்மையோ தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது, வார்டரிலிருந்து சிறை அதிகாரிகள் வரையில், என்னை அணுகுவதுகூட இல்லை - அந்த அளவுக்குத் தனியனாக்கி வைத்திருக்கிறார்கள். “தனியன்’ என்று நான் கூறுகிறேன், அவர்கள்”சனியன்’ என்று என்னைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ! இத்தனைக்கும், எனக்கோ, நமது கழகத் தோழர்களுக்கோ சிறை விதிகளுக்கு உட்பட்டு நடப்பதுதான் வழக்கம் என்பது சிறை அதிகாரிகளுக்கும் தெரியும். பத்திரிகையில் சென்ற கிழமைதான் படித்துப் பார்த்தேன். வேலூர் சிறை அதிகாரி காப்டன் ரகுநாதன் என்பவர், "அரசியல் கைதிகளிலேயே, தி. மு. கழகத்தினர் மிக ஒழுங்காக நடந்துகொள்பவர்கள்’ என்று பேசியிருப்பதை. கை வலி குறைந்தபாடில்லை. பல தைலங்களைப் போட்டாகிவிட்டது. இளங்கோவன் கொண்டுவந்து கொடுத்த ஒரு புதிய மருந்தையும் போட்டுப் பார்த்தேன். வகுறை யவில்லை. இங்கு டாக்டரிடம் கூறும்போதெல்லாம், மாத்திரை கொடுத்தேனே, சாப்பிட்டீர்களா என்று கேட்கிறார், ஆம்! என்று நான் சொன்னதும், வலி குறைந்துவிட்டிருக்க வேண்டுமே? என்றுதான் கூறுகிறார். எதனாலே வலி? சதை வலியா? நரம்பிலே ஏதாவது வலியா? சுளுக்கா? என்று கண்டறியலாம். டாக்டர் அந்தக் கட்டத்துக்குச் செல்லவில்லை. இதனை இரண்டொரு முறை சிறை அதிகாரியிடமும் குறிப்பாகச் சொல்லிப் பார்த்தேன் கேட்டுக்கொண்டார், அவ்வளவுதான். எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்த பிறகு, இதற்குத் தக்க சிகிச்சை செய்தால் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்குத் தோன்றி என்ன பலன்? டாக்டருக்கல்லவா அந்த எண்ணம் தோன்ற வேண்டும். நல்லவேளையாக வலி, இடது கரத்தில் - இல்லையென்றால் இதனை எழுதக்கூட வழி கிடைத்திருக்காது. முன்பு நான் சிறையில் இருந்த நாட்களில், இரவுக் காலத்தில் அடிக்கடி வார்டர்கள் வந்து போவார்கள் - ஏதாகிலும் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் அவர் மூலம் சொல்லி, வைத்திய உதவி பெறலாம். இங்குதான் பகலிலேயே, வார்டர்கள் வருவது இல்லையே. இரவு நேரத்தில் யார் வரப்போகிறார்கள்!! என் கதி இது என்றால், என்னுடைய கூட்டாளிகள் நால்வர் நிலைபற்றி அறிந்தபோது, இதைவிட வேதனையுடையதாக இருப்பது தெரிகிறது. அவர்களுடைய துணிமணிகளெல்லாம் சைதைச் சிறையில் இருக்கிறது. அவர்களை இங்கு அழைத்து வந்தபோது, - வழக்கு மன்றத்திலிருந்த போலீஸ் அதிகாரிகள், உடனே நால்வருடைய சாமான்களையும், மத்திய சிறைக்குக் கொண்டுவந்து சேர்ப்பதாகக் கூறினர். கூறியதோடு அவர்கள் கடமை முடிந்துவிட்டதுபோலிருக்கிறது. அவர்களுக்குச் சாமான்கள் வராமல், குளிக்கவும் முடியாமல் கஷ்டப்படுவதாக அங்கு போய்வந்த கைதிகள் மூலம் அறிந்து கொண்டேன். இன்று மாலை ஐந்து மணி சுமாருக்கு, சாமான்கள் கொண்டுவந்து தரப்பட்டதாகக் கண்டுகொண்டேன் - தோழர் T.M. பார்த்தசாரதி ஒரு பெட்டியுடன், உள்ளே சென்று கொண்டிருப்பதை, நான் மாடிப்படியில் நின்றபடி பார்த்தேன். அவர் என்னைப் பார்த்ததாகத் தெரியவில்லை. இந்த அளவுக்கு தொடர்பற்று, தோழமையற்று, சிறையிலே தள்ளப்பட்டுக் கிடக்கும் இந்த அனுபவம் முற்றிலும் புதிது; ஆனால் இதுவும் தேவையானது என்று எண்ணி ஒரு விதத்தில் திருப்தி பெறுகிறேன். நேற்றுபோலவேதான் இன்றும் மறியல் செய்த தோழர்கள் ஐவர் இங்கு கொண்டுவரப்பட்டார்கள் என்று அறிந்து கொண்டேன். அவர்களும் சிறையில் வேறோர் பகுதியில்தான். பகல் 11 மணிக்குமேல் நாவலர், கருணாநிதி, நடராஜன், கோவிந்தசாமி, அரங்கண்ணல், சத்தியவாணி, இளங்கோவன், ராணி ஆகியோர் வந்து பேசிக்கொண்டிருந்தனர். மறியல்பற்றி இரண்டொரு நிமிடம் கூறினார்கள். இளங்கோவன் காஞ்சீபுரத்திலிருந்து புத்தகங்கள் சிலவற்றைக் கொண்டுவந்து கொடுத்தான். பரிமளத்துக்குத் தேர்வு என்பதுபற்றி ராணி மூலம் தெரிந்துகொண்டேன். முதலிலே மிகத் தைரியமாக இருந்துவந்த தொத்தா இப்போது குழம்பிப்போயிருப்பதாக இளங்கோவன் சொல்லக் கேட்டு மெத்தக் கவலையாக இருந்தது. என்னை வந்து பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருப்பதாகச் சொன்னான். தொத்தாவின் உடல் நிலை இருக்கும் விதம், சென்னைப் பயணத்துக்கு ஏற்றதாகவும் தென்படவில்லை. எதற்கும் கொஞ்ச நாள் பார்த்து, இரண்டு மூன்று வாரங்கள் பொறுத்துப் பார்க்கலாம் என்று சொன்னேன். ராணிக்கு சோகம் தீர்ந்தபாடில்லை என்பதை கண்கள் வெளியிட்ட திகைப்பு காட்டிற்று. தொகுதி ஐந்து 189 சிறை அதிகாரிகள், நிலைமைகளையோ, நினைப்பு களையோ அறியாதவர்களல்ல - தொத்தாவைப்பற்றிய பேச்சு வந்த உடனே, சிறை பெரிய அதிகாரி, மிக அக்கறை காட்டி, அவர்கள் உடல்நிலை, பாவம், சரியாக இருக்காதே என்றுகூடக் கூறினார். இத்தகைய பரிவு காட்டும் உணர்ச்சி இருக்கிறது என்றாலும், என்ன காரணமோ தெரியவில்லை, இந்த முறை என் விஷயத்தில் அக்கறையோ பரிவோ துளிகூடக் காட்டவில்லை. கை வலி விஷயமாக அவரிடம் சொன்னேன் - "வெளியே உள்ள டாக்டர் எவரிடமாவது காட்டி, எந்தவிதமான வலி என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வலி குறையாதது மட்டுமல்ல, அதிகமாகி வருகிறது’’ என்றும் சொன்னேன். மிகவும் கூச்சப்பட்டுக் கொண்டுதான் சொன்னேன். பார்க்கிறேன் என்றார். ஆனால் பிறகு அதுபற்றி ஒரு தகவலும் தெரிவிக்கப் படவில்லை. பிற்பகல் அவருக்கு உடல் நலம் இல்லை என்று வீட்டுக்குச் சென்றுவிட்டார் என்று தெரிந்துகொண்டேன். இரண்டு மூன்று நாட்களாகவே அடித்துக்கொண்டிருக்கும் குளிர்காற்றினால்கூட, இந்த வலி அதிகமாகி இருக்கும் என்று தேவகோட்டையார் ஆறுதல் கூறினார். அந்தவிதமான அன்பு வார்த்தைகளைக் கேட்கும்போது வலியே போய்விடுவது போலிருக்கிறது. ஆனால், இரவு முழுவதும் வலி வாட்டியபடிதான் இருக்கிறது. வழக்கறிஞர் நாராயணசாமி கொண்டுவந்து கொடுத்த, "சட்டம்’ பற்றிய சில ஏடுகளைப் படித்து இன்புற்றேன். சட்டப் புத்தகம் என்றால், என்னென்ன சட்டங்கள், எவ்வளவு தண்டனை என்ற இவைகளை விளக்கும் ஏடுகள் அல்ல. சட்டம் ஏன், எப்படி ஏற்பட்டது, ஏன் சமூகமும் தனி நபர்களும் அதற்கு அடங்கி ஒழுகி வருகிறார்கள், சட்டத்துக்கும் அரசுகளுக்கும் உள்ள தொடர்பு எத்தகையது, சட்டத்துக்கும் நீதிக்கும் உள்ள தொடர்பு எப்படி அமைகிறது, எப்படி அமைதல் வேண்டும் என்ற இத்தகைய சுவையான, பயன்தரும் விவரங்கள், விளக்கங்கள் தரும் ஏடுகள். அவைகளிலே காணப்படும் பல நல்ல கருத்துக்களை, இங்கு எனக்கு நிலை செம்மைப்பட்டு மனம் தெம்பான பிறகு, எடுத்துக் காட்டக்கூட நினைக்கிறேன். நாளைக்கு, என்னைக் காண, அநேகமாக யாரும் வரமாட்டார்கள் என்று எண்ணுகிறேன் - இன்று நிரம்பப் பேர் வந்துபோனதால். நாளை மறுநாள், வழக்கு, சாட்சிகள் விசாரணை. இன்று பத்திரிகையில் வெளி வந்த செய்திகளில் மெயில் தலையங்கம் மிக அருமையாக அமைந்திருக்கக் கண்டேன். இரும்பு அமைச்சர், கழகத்தை ஏசிக் கோவையில் பேசியதற்கு, "மெயில்’ மிகப் பொருத்தமாகப் பதில் அளித்திருந்தது. உடலமைப்பைப் பார்த்தால் அதிக அளவு அலைந்து கட்சி வேலை செய்யக்கூடியதாகத் தெரியவில்லையே, எப்படி முடிகிறது இவ்வளவு வேலை செய்ய என்று என் உறவினர்களும், கட்சியில் ஈடுபாடு கொள்ளாத நண்பர்களும் என்னைக் கேட்பதுண்டு. “மனதிலே கொழுந்துவிட்டு எரியும் ஒரு உணர்ச்சி தரும் வலிவுதான் காரணம்’ என்று பதில் கூறுவேன். ஆனால், உடலில் ஏதாகிலும் வலி ஏற்பட்டு, அது இன்னது என்று புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை என்றாகிவிட்டால், மனதிலே ஒரு சோர்வு யாருக்கும் ஏற்பட்டுவிடுகிறது. அந்த நிலை எனக்கு நரம்பிலே ஏதாகிலும் கோளாறு ஏற்பட்டுவிட்டதா? அல்லது ஏதாகிலும் உள்ளே இரணமோ என்றெல்லாம் சந்தேகம். எவ்வளவு நேரம், துண்டுத் துணியால் அழுத்திக் கட்டிவைத்துக் கொண்டிருப்பது? செல்வக் குடியில் பிறந்தவன் அல்ல என்றாலும், என்மீது மிகுந்த பாசம் கொண்டு, நான் ஒரு துளியும் வேதனைப்படக்கூடாது என்பதற்காகக் கண்ணுங் கருத்துமாக இருக்கும் குடும்பத்தில் பிறந்தவன். இங்கு சிறையில் உடல்நிலை கெட்டுக் கிடக்கிறது என்று”ஜாடை மாடை’யாகத் தெரிந்தால் கூடத் துடித்துப்போவார்கள். எனவே அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக, என்னைக் காண வரும் வீட்டாரிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருந்து வருகிறேன். தனிமையாக இருக்கும்போதோ, வலிபற்றிய நினைப்பு வளர்ந்துவிடுகிறது. என்னைப்போல, உடல்நலம் கெட்டு எத்தனை எத்தனை தோழர்கள் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணுகிறேன்; ஏக்கம் கொள்கிறேன். ஆனால், அதே போது இந்தி ஆதிக்கத்தினால் விளையக்கூடிய கொடுமைகளைப் பற்றிய எண்ணம் எழுந்துவிட்டாலோ, வலி வேதனை எத்தனை அளவில் இருந்தாலும் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்ற துணிவு பிறக்கிறது. அந்த மருந்துதான், நானாக இங்குத் தேடிப் பெற்றுக்கொள்ள முடிகிறது. பொதுப் பிரச்சினைகளைப்பற்றி நண்பர்களிடம் பேசிப் பேசி, தெளிவு பெறுவதிலே சுவை காண்பவன் நான். அந்த விருந்து இல்லை; வலி போக்க மருந்தும் இல்லை. இதே நிலை நீடிக்குமானால், சிறை நினைவுபற்றித் தொடர்ந்து எழுதுவதுகூட இயலாததாகிவிடும். ஓயாமல் எனக்குள்ள வலிபற்றியே எழுதி உன் மனதுக்குச் சங்கடம் ஏற்படுத்த விரும்பமாட்டேனல்லவா? மாடிப்படியின்மீது நின்றுகொண்டு பார்க்கிறேன்; விதவிதமான நோயின் பிடியிலே சிக்கி நொடித்துப் போய்க் கிடக்கும் “பாதி மனிதர்கள்’ கொண்டுவரப்படுகிறார்கள் -”அடைக்க’ப்படுவதற்காக. குற்றவாளிகள்! ஆனால் பாபம், நோயாளிகள்! குற்றம் - நோய் இரண்டையும் மூட்டிவிடும் வறுமையின் பிடியிலே சிக்கிக்கொண்டவர்கள். இந்தக் கோரமும் கொடுமையும் குறைவதாகவும் தெரியவில்லை. அவர்களைப் பார்க்கும்போது, சமூகம் எத்தனை கோணலாகிக் கிடக்கிறது என்பது நன்றாகப் புரிகிறது. அவர்களும் என்னைப் பார்க்கிறார்கள் - பெரும்பாலானவர்கள் பச்சாதாப உணர்ச்சியுடன். அவர்கள் அதுபோல என்னைப் பார்ப்பதுகூடச் சிறை விதிகளுக்கு விரோதம்போலத் தெரிகிறது. ஏனெனில் என்மீது பார்வையைச் செலுத்துபவர்களிலே பலருக்கு, அடி - உதை - தலையிலே தட்டு! இப்படிக் கிடைக்கிறது! முணு முணுக்கிறார்கள், என்னை மறுபடியும் பார்க்கிறார்கள் - இம்முறை அவர்களுடைய கண்கள் கேள்விக் குறிகளாகின்றன! இப்படி, காரணமற்று அடித்துத் துன்பப்படுத்துகிறார்களே, பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய், நியாயம் தெரியும் என்கிறார்களே உனக்கு, எங்களுக்காகப் பரிந்து ஒரு வார்த்தை பேசக்கூடாதா என்று கேட்கிறார்கள், பார்வையால்; புரிகிறது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்! நானே "குற்றவாளி’’ - கைதி!! கேட்டால், ஒழுங்கான பதிலா கிடைக்கும்? உனக்குத் தெரியாது, சும்மா இரு! என்பார்களோ! இவர்களை இப்படி அடித்து உதைத்து அடக்கிவைக்காவிட்டால், சிறையை நடத்திச் செல்லவே முடியாது என்பார்களோ! அல்லது, மிரட்டி, போ உள்ளே! என்பார்களோ, யார் கண்டார்கள்? மனதிலே மூண்டுவிடும் சங்கடத்தைப் போக்கிக்கொள்ள படித்துக்கொண்டிருப்பதை “முறை’ ஆக்கிக்கொள்கிறேன். பல நிகழ்ச்சிகளையும் பலருடைய வாழ்க்கை வரலாறுகளையும் படிக்கும்போதும் ஏற்படும்”இன்பம்’ தனியானது; சுவைத்தவர்களுக்கே புரியும்! வழக்கு மன்றத்திலே தருவதற்காக அறிக்கை தயாரிக்க, சட்ட புத்தகங்கள் சிலவற்றைப் படித்திட முனைந்ததுபற்றிக் கூறினேனல்லவா. அவைகளில் குறிப்பிடத்தக்கதாக, இயற்கையாக அமைந்துள்ள மனித உரிமைகளுக்கும், செயற்கையாகச் சட்டத்தின் மூலம் ஏற்படும் கட்டுதிட்டங்களுக்கும் மோதுதல் ஏற்படுமானால், எதற்கு அதிக மதிப்பளிக்க வேண்டும்? ஆக்கப்பட்ட சட்டங்களுக்கா? - அடிப்படையாகவும் இயற்கையாகவும் மனித குலம் பெற்றிருக்கும் உரிமைகளுக்கா? என்ற பிரச்சினைபற்றி எழுதப்பட்ட ஏடுகள் அமைந்திருந்தன. பல நீதிபதிகள் இந்த இயற்கை உரிமைகளுக்காகப் பரிந்து பேசி இருப்பதைப் படித்தேன். அதன் தொடர்பாக, சட்டங்கள் ஏன் தேவைப்பட்டன என்பதுபற்றிய விளக்க நூலும் படித்துப் பயன் பெற்றேன். இந்த சட்ட ஏடுகளைப் படிக்கும்போது, சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே சிறையில், என்னோடு மும்முனைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைமேற்கொண்ட மதி கொண்டு வந்திருந்த சட்டப் புத்தகங்களைப் படித்து, அவைகளில் உள்ளவைகள்பற்றி அவருடன் உரையாடிக்கொண்டிருந்த நினைவு வந்தது. இப்போது ஒரே சிறையில், மதி வேறோர் பக்கத்தில், நான் மற்றோர் பக்கத்தில்! வேறு பக்கத்தில் உள்ள நண்பர்களின் நிலைபற்றித் தெரிந்துகொள்ள, உட்புறமிருந்து உணவு கொண்டு வரும் "கைதி’களிடம் பேசிப் பார்த்தேன். நன்றாகத்தான் இருக்கிறார்கள்; அவர்களும் உங்களோடு இந்தப் பகுதியில் இருக்க விரும்புகிறார்கள் என்று கூறினார்கள். பாவம் பிடிபட்டு அடைபட்டுக் கிடப்பவனுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு. கீரை வேண்டுமா என்பார்கள் - துவையல் வேண்டுமா என்பார்கள் - கொண்டு வந்தும் கொடுப்பார்கள் - கீரை வெந்திருக்காது - துவையலில் மண்ணும் கல்லும் கலந்திருக்கும். ஆனால், அவற்றிலே ஒருவிதமான அன்பு மணம் கமழ்ந்திருந்ததைக் கண்டேன். வழக்கு முடிவுபெற்று, தண்டனை இன்னது என்று அறிவிக்கப்பட்டதும் உள்ளே கொண்டுபோவார்கள். நண்பர் களுடன் சேர்ந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள், சிறைப் பணியாளர்கள் - அந்தப் பேச்சும் மிக மெல்லிய குரலில்; சுற்றுமுற்றும் நோட்டமிட்டபடி. அவ்வளவு பயம், எங்கே அதிகாரிகளின் பார்வையிலே சிக்கிக்கொள்கிறோமோ என்று! வழக்கு மன்றத்திலே தருவதற்கான அறிக்கையில், சிறை நிலைமைகள்பற்றியும், அச்சத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் இங்கு உள்ளவர்கள் கிடப்பது பற்றியும் குறிப்பிடலாமா என்று கூடத் தோன்றிற்று. பிறகு யோசித்ததில் அதிலே எந்தவிதமான பலனும் ஏற்படப் போவதில்லை என்பது புரிந்தது. பல வழக்குகளைப்பற்றிய விவரங்களையும் - அந்த வழக்குகளில் காணப்பட்ட சட்ட நுணுக்கங்கள்பற்றியும் படித்தேன் - ஒரு புதிய உலகமே என் கண் முன் தோன்றுவது போல இருந்தது. சர்க்காருடைய செல்லப் பிள்ளைகளாக வேண்டும் என்ற சபலமோ, சர்க்காருக்குப் பரிந்து பேசி, தயவுபெற்று, ஆதாயம் அடைய வேண்டும் என்ற அற்பத்தனமான ஆசைகளோ கொள்ளாத சில நீதிபதிகள், சிக்கல் மிக்க வழக்குகளில், சட்டத்துக்கே புதுப் பொருள் கண்டறிந்து கூறி, குற்றவாளிகள் என்று கூண்டில் நிறுத்தப்பட்டவர்களைத் தைரியமாக விடுதலை செய்த சம்பவங்களைப்பற்றிப் படித்தபோது, எழுச்சி மயமாகிப் போனேன். ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை, குற்றம் - தண்டிக்கத்தக்கது என்று சட்டம் கூறலாம் - ஆனால், அந்த நடவடிக்கையிலே ஈடுபட்டவன், எந்தச் சூழ்நிலை காரணமாக, எந்த நிர்ப்பந்தத்தினால், என்ன நோக்கத்துடன், அந்த நடவடிக்கையிலே ஈடுபட்டான் என்பதுபற்றி ஆராய்ந்து பார்த்த பிறகே, அந்தச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை, துணிவுடன் சில நீதிபதிகள் எடுத்துக் கூறி இருந்தனர். இவைபற்றி எல்லாம் படிக்க ஆரம்பித்து, அறிக்கை எழுதவேண்டிய நிலையை மறந்து, குறிப்புகள் எடுக்கவும், மேற்கொண்டு என்னென்ன புத்தகங்கள் இதுபற்றிப் படிக்கலாம் என்பதுபற்றிய தகவல் திரட்டவுமான பணியில் ஈடுபட்டேன். என்னென்ன புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று குறித்திருக்கிறேனோ அவைகளை, சிறையிலோ வெளியிலோ, படித்தாக வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாகி விட்டது. அறிக்கையை நான் விரும்பிய அளவிற்குத் தயாரிக்க முடியவில்லை என்ற போதிலும் அதன் தொடர்பாக பல புத்தகங்களைப் படித்ததிலே மிக்க மகிழ்ச்சி பெற்றேன். உண்மையையும் சொல்லிவிடுகிறேன் தம்பி! நீண்ட அறிக்கை எழுதுவதற்கு ஏற்ற நிலையும் இல்லை - இடது கரத்திலே இருந்துவரும் வலி, மெல்ல மெல்ல வலது கரத்திலும் படை எடுக்கத் தொடங்கிவிட்டது. வலது கரமும் பாதிக்கப்பட்டு விடுமேயானால், எதையும் எழுத முடியாது. இந்தக் கவலையைச் சுமந்துகொண்டே படுக்கச் சென்றேன். தனியாக அடைபட்டுக்கிடப்பவன் என்று கூறினேனே தம்பி! அது முழு உண்மை அல்ல!! - எனக்குத் துணையாக சுறுசுறுப்பான எத்தனை எத்தனை மூட்டைப் பூச்சிகள், கொசுக்கள்!! டில்லியிலிருந்து திரும்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோகரனும், ராஜாராமும், பாராளுமன்றத்திலே எழுப்பப்பட்ட மொழிப் பிரச்சினைபற்றியும், பண்டித ஜவஹர்லால் நேருவிடம் பேசியதுபற்றியும் கூறினார்கள். இன்று காலையில், மதி, பொன்னுவேல், பார்த்தசாரதி, சுந்தரம், வெங்கா ஆகிய தோழர்கள், நான் இருக்கும் பகுதி வழியாக, ஊசி போட்டுக் கொள்வதற்காக அழைத்துவரப்பட்டார்கள். பார்க்க முடிந்தது. என்ன? என்ன? என்ற என் கேள்விக்கு, கரத்தைக் காட்டினார்கள், ஊசி போட்டுக்கொண்டதைக் குறிப்பிட. வார்டர், வேகமாக அவர்களை உள்ளே அழைத்துக்கொண்டு போய்விட்டார். ஐந்தாம் தேதி வழக்கு விசாரணை அல்லவா - 12 மணிக்கு மேல் துவங்கிற்று. நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர் - சிறிதளவு அவர்களுடன் அளவளாவ முடிந்தது. எந்தச் சாட்சிகளையும் குறுக்கு விசாரனை செய்யாததால், ஒரே நாளில் எல்லாச் சாட்சிகளையும் விசாரிக்கும் கட்டம் முடிந்துவிட்டது. பிற்பகல் 2-லிருந்து மூன்றுவரை, வழக்கு மன்றம் ஒத்திவைக்கப் பட்டிருந்ததால், ஐவருக்கும், நண்பர்கள் அங்கேயே சாப்பாடு கொண்டுவந்தார்கள். மீண்டும் 3-மணிக்கு வழக்குத் தொடர்ந்தது - எல்லாச் சாட்சிகளும் முடிகிறவரையில் நடைபெற்றது. பத்திரிகையில் பார்த்துக்கொள்வாய் என்பதால் விவரம் எழுதவில்லை. 7-ம் தேதி, நான் வழக்கு மன்றத்தில், என் நிலையை விளக்கி ஒரு அறிக்கை தர இருக்கிறேன். அநேகமாக 12-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. இன்று வழக்கு மன்றத்துக்கு, இரண்டு வாரம் சிறையிலிருந்துவிட்டு மதுரை முத்து வந்திருந்தார். மிக உற்சாகமாகவே காணப்பட்டார். திண்டிவனம் தோழர் தங்கவேலு எம்.எல்.ஏ., அன்பழகன் எம்.எல்.சி., மனோகரன் எம்.பி. ஆகியோரும் வந்திருந்தனர். சத்தியவாணியும், மவுண்ட்ரோடு குப்பம்மா அவர்களும் வந்திருந்தனர். 7-ம் தேதி காலையில் என் நண்பர் வழக்கறிஞர் நாராயணசாமி, சிறையில் என்னைச் சந்தித்து, அந்த அறிக்கைபற்றிக் கலந்து பேசுவது என்றும், 7-ம் தேதி பிற்பகல் 2-30 மணிக்கு வழக்கு மன்றம் கூடும்போது அறிக்கையை ஒப்படைப்பது என்றும் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம். நாளைய தினம் நண்பர் நடராஜன், என்னைக் காணவரக்கூடும் என்று எண்ணுகிறேன். இன்று வழக்கு மன்றத்தில், கே. ஆர். ராமசாமி சோகமே உருவாக வந்திருக்கக் கண்டேன். எனக்கு ஒரு சங்கடம் என்றால் மிகவும் சஞ்சலப்படும் சுபாவம் ராமசாமிக்கு - அத்தனை பாசம்! இத்தகைய தோழர்களின் அன்பினைப் பெற்றிருப்பதை ஒரு பேறு என்றே நான் கருதுகிறேன். உடல் நலக்குறைவாக இருந்த அப்துல்சமத் அவர்களும் இன்று வழக்கு மன்றம் வந்திருந்தார். அ. பொ. அரசு, அவர்தான் ஓடோடிச் சென்று, உணவுக்கான ஏற்பாடுகளைக் கவனித்தார். நண்பர்களுக்கு ஒரு எண்ணம் - இயற்கையானதுதான் - அண்ணனை எப்படியும் தண்டித்துவிடப்போகிறார்கள் - நல்ல சாப்பாடு எங்கே கிடைக்கப்போகிறது - இப்போதாவது சாப்பிடட்டும் என்ற எண்ணம் எதை எதையோ கொண்டுவந்து, எதிரில் குவித்தார் அரசு. பக்கத்தில் இருந்தவர்கள், பண்டங்களின் தரம், சுவை, பக்குவம் இவைபற்றி விளக்கிக்கொண்டிருந்தார்கள். நானோ, அவர்கள் காட்டிய அன்புத் தேனை உண்டு மயங்கிக் கிடந்தேன். வழக்கு மன்ற நிகழ்ச்சிகளை இதழ்களிலே காண்பாய் என்பதால், அங்கு நடைபெற்றவைபற்றி அதிகமாக எழுதாது விடுகிறேன். தம்பி! இன்றிரவு வலி வலது கரத்தைத் தாக்கிவிட்டது. இனியும் இங்கே இருப்பது சரியல்ல என்பதைக் கண்டிப்பாக சிறை மேலதிகாரிக்குக் கூறி, மருத்துவமனை சென்றாக வேண்டும் என்ற எண்ணம், உறுதியாக ஏற்பட்டுவிட்டது. மருத்துவ மனையில் இருந்தபடி, வழக்கு மன்றம் செல்லலாம் என்று தோன்றுகிறது. நாளை என்ன நடக்கிறதோ பார்த்துவிட்டுக் கூறுகிறேன். அன்புள்ள அண்ணாதுரை 11-10-1964 சிற்றன்னையின் இறுதி. . . தம்பி! 26-2-1964 நீண்ட நாட்களுக்குப் பிறகு, விட்ட இடத்திலிருந்து எழுதத் தொடங்குகிறேன் - தொடர்ந்து எழுதுவதா வேண்டாமா என்று சில நாட்கள் எண்ணியபடி இருந்தேன். ஒரு முடிவுக்கு வர இயலாத நிலையில். எழுதும்போதே, அடக்கிவைத்திருக்கும் வேதனை பீறிட்டுக்கொண்டு வெளிவந்து, என்னைச் செயலற்றவனாக்கிவிடும் என்ற அச்சம் என்னைப் பிடித்து உலுக்கியபடி இருக்கிறது. என் இயல்பையே கருக்கிவிடத்தக்க பெருநெருப்பு என் இதயத்திலே நுழைந்தது. எத்துணை சமாதானங்கள், தத்துவ விளக்கங்கள், உலகியல் நிலைமைகள் தெரிந்திருந்தாலும், ஒவ்வொருவருக்கும் தாங்கிக்கொள்ள முடியாத துக்கம் மூண்டிடும் சம்பவம் நேரிடும்போது, அவர்கள் தமது வேதனையைத் துடைத்துக்கொள்ள முடிவதில்லை. கவிதைகள், கதைகள், விளக்கங்கள், மேற்கோள்கள் எத்துணை எத்துணை எடுத்துக் கூறப்பட்டபோதிலும், அவை யாவும் வெந்த புண்ணின்மீது தடவப்படும் கார மருந்தாகிறது - எரிச்சலை அதிகமாக்கிவிடுகிறது. இறுதியில் புண்ணை ஆற்றக் கார மருந்து பயன்படும் என்றபோதிலும், துவக்கத்தில், எரிச்சல் அதிகப்படத்தான் செய்யும். என் சிற்றன்னையை, நான் இழந்தேன். எனக்கே ஐம்பத்து ஐந்து வயதாகிறது என்றால், என்னை ஆளாக்கிவிட்ட என் சிற்றன்னைக்கு வயது, எழுபது அளவுக்கு இருக்கவேண்டுமே - அந்த வயதிலே அவர்கள் மறைந்ததை எண்ணி, அதிகமான வேதனைப் படலாமா என்று சிலர் சொல்லக்கூடும்; பலர் எண்ணிக் கொள்ளக்கூடும். வயது என்ன என்பதல்ல பிரச்சினை - அந்த இழப்பு என் இதயத்தில் எத்தகைய வேதனையை மூட்டிவிட்டது என்பதுதான் பிரச்சினை. என்னால் எத்தனை சமாதானங்களைத் தேடித் தேடித் தருவித்துக்கொண்டாலும், தாங்கிக்கொள்ளக் கூடியதாக அந்த வேதனை அமையவில்லை. நான் சிறைப்பட்டிருக்கும் நேரம், அவர்கள் வீட்டில் மரணத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். என்னை வாழ்த்தி வழி அனுப்பிவைத்த என் சிற்றன்னை - என் வாழ்வை எனக்காக அமைத்துக்கொடுத்த என் வழிகாட்டி - எனக்காகவே, உயிர் ஊசலாடும் நிலையில், வலிவெல்லாம் இழந்து, நோயினைத் தாங்கிக்கொண்டு, வாழ்ந்து வந்த அந்த அன்புத் தாய், நான் விடுதலையாகி விடு திரும்புவதைத் தன் விழிகளால் கண்டு, மகிழ்ச்சி பொங்கிடும் நிலையில் என்னை வரவேற்க எண்ணிக் கொண்டிருந்த என் சிற்றன்னை, பேச்சிழந்து உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள் காஞ்சீபுரத்தில், வீட்டில். நான், அவர்கள் பக்கம் இருந்து பணியாற்றிக்கொண்டில்லை. எனக்கு ஒரு சிறு தொல்லை, மிகச் சாதாரணமான நோய் என்றாலும், அதைக் காண இயலாமல், கலக்கமடைந்து, எனக்கான பணியிலே தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருந்த என் சிற்றன்னையின் கடைசி நாட்களில், அவர்களுக்குத் துளியும் பயனற்றவனாக்கப்பட்டுவிட்டேன். நான் அவர்களைக் காணச் சென்றபோதே, அவர்கள் நினைவிழந்து கிடந்தார்கள் - என் குரலொலி செவிபுகவில்லை. என்னைக் காண அந்தக் கண்கள் திறக்கவில்லை. அவர்கள் மரணத்திற்கான பயணத்திலே இறங்கிவிட்டார்கள் - என் கண்ணீரைக்கொண்டுகூட அவர்களை அந்தப் பயணத்திலிருந்து திரும்பிவிடச் செய்ய இயலாது என்பது, கண்டதும் புரிந்து விட்டது. புரிந்து? உணர்ச்சிகள் வாதங்களால் அடக்கப்படக் கூடியனவா? அவர்களுக்கு வந்துற்றிருப்பது, தீரக்கூடிய நோயல்ல - அதனை ஒரு நோய் என்றுகூடக் கூறுவதற்கில்லை - மூளைக் குழாய்கள் சேதமாகிவிட்டன - தேக அமைப்பிலேயே ஒரு ஊறு நேரிட்டுவிட்டது - அதனைச் சரிப்படுத்த மருந்து கிடைக்காது என்பதனை நுண்ணறிவு படைத்த மருத்துவர்கள் கூறினார்கள் - இப்போது எனக்கு அது புரிகிறது - அன்று எனக்கு, இந்த மருத்துவர்களுக்குத் துளியும் பச்சாதாப உணர்ச்சியே கிடையாதா, உயிர் போய்க்கொண்டிருக்கிறது என் சிற்றன்னைக்கு, இவர்கள், என்னிடம் “மருத்துவப் புலமை’ பேசுகிறார்களே என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. என் மகன் பரிமளத்திடம்தான் கோபித்துக் கொள்ள முடிந்தது,”மனித பாஷையில் பேசுங்கள்; வெறும் மருத்துவ மொழியில் பேசுகிறீர்களே!’’ என்று சொன்னேன், அவன் என்னிடம் அந்த நிலைமையை விளக்கிக்கொண்டிருந்தபோது. என் மனநிலை அறிந்து, மருத்துவர்கள், மிகுந்த அக்கறையுடன், அந்த நிலையில் என்னென்ன செய்து பார்க்க முடியுமோ அவ்வளவும், செய்தபடி இருந்தனர் - என் சிற்றன்னையோ இறுதிப் பயணத்தில், மேலால் மேலால் சென்றபடி இருந்தார்கள் - நான் குமுறுகிறேன் பக்கம் நின்று. அவர்கள் நெடுந்தூரம் சென்றுவிட்டேன் மகனே! இனியும் காத்துக்கொண்டிராதே! நான் திரும்புவதாக இல்லை! திரும்பப் போவதில்லை! - என்று கூறாமற் கூறிக்கொண்டு, மரணப் படுக்கையிலே கிடந்தார்கள். பல நாட்கள் பயணம் செய்துவிட்டு, வீடு திரும்புவேன், ஒரு பொய்க் கோபப் பொலிவுடன் முகம் இருக்கும் - எதிரில் நிற்பேன். இரண்டோர் வார்த்தை பேசுவேன். ஓர் புன்னகை மலரும் - மன்னித்துவிட்டேன் மகனே! என்று அந்தப் புன்னகை அறிவிக்கும். அந்த முகத்தைக் காண்கிறேன், மரணத்தின் முத்திரை படிந்துவிட்டிருக்கிறது! எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? நான் வந்திருக்கிறேன் தொத்தா! இதோ வந்துவிட்டேன் தொத்தா! என்று என் கண்ணீர் பேசுகிறது. அவர்கள் அதைக் கேட்கவுமில்லை, என்னைக் காணவுமில்லை. தன்னை மரணத்திடம் ஒப்படைத்துவிட்டார்கள் - இத்தனை காலந்தான் உனக்காக ஓயாது உழைத்து வந்தேனே, போதாதா? என் இறுதிப் பயணத்திலே ஈடுபட்டுவிட்ட நான் இனியும் இருந்து உன்னைக் கவனித்துக்கொள்ளவா? - நடவாது மகனே! நடவாது! நான் போகிறேன் உன்னை விட்டுவிட்டு! என்னை இனியும் எதிர்பார்க்காதே!! - என்றல்லவா நிலைமை தெரிவிக்கிறது. ஆறு நாட்கள் அருகேயே இருந்தேன் - இரவும் பகலும் - ஊண் உறக்கம் மறந்து - அழுத கண்களுடன் - பாதிப் பயணத்தில் என் நினைவு வந்து, திரும்பி வந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் - என் எண்ணத்தில் மண் விழுந்தது; இதயத்தில் நெருப்பு விழுந்தது; யார் மறுபடி எழுந்து நடமாடி என்னைக் களிப்படையச் செய்விப்பார்கள் என்று எண்ணினேனோ, அந்த என் "தொத்தா’ தீயாலான படுக்கையில் கிடத்தப்பட்டு, என் கண்ணெதிரே சாம்பலாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கொடிய காட்சியைத்தான் நான் காணவேண்டி நேரிட்டது. அவர்கள் மனம் நோகும்படி நான் நடந்துகொண்டதே இல்லை - இத்தனை வருஷங்களில், நான் ஏதாகிலும் சிறு சிறு தவறுகளைச் செய்து, அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தி விட்டிருந்திருந்தால், அவற்றினுக்கான தண்டனையைச் சிறுகச் சிறுக, அப்போதைக்கப்போது எனக்கு அவர்கள் தரவில்லை. மொத்தமாக, ஒரே நாள், ஒரே தண்டனையாகத் தருவதுபோல், என் கண்ணெதிரே, வெந்தழலில் கிடந்தார்கள் - பார் மகனே! பார்! படுமகனே படு! என்று கூறுவதுபோலிருந்தது அந்தக் கொடுமை. சே! அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அந்த நேரத்தில் அவர்கள் உயிர்பெற்று எழுந்தாலும், முதலில் மகனே! மிகவும் பயந்துவிட்டாயா! மிகவும் வேதனைப்பட்டாயா! என்றுதான் கேட்டிருந்திருப்பார்கள். அவர்கள், எனக்கு வேதனை மூளக்கூடாதே என்பதற்காகவே மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள் - சில ஆண்டுகளாகவே - அவர்களால் முடிந்தவரையில் போராடிப் பார்த்தார்கள் - மரணத்தின் பிடியின் வலிமை கடைசியில் அவர்களைக் கொண்டு சென்றுவிட்டது. மூளைக் குழாய்கள் சேதமடையும்படியான அதிர்ச்சி அவர்கள் ஏன் கொள்ள நேரிட்டது - நான் சிறைப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டபோது ஏற்படாத அதிர்ச்சி, நான் நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனை அனுப்பப்பட்டதைக் கேள்விப்பட்டபோது ஏற்படாத "அதிர்ச்சி‘, நான் நலமாக இருக்கிறேன் என்ற செய்தியை ஒவ்வொரு நாளும் மருத்துவமனையில் என்னை வந்து பார்த்துவிட்டுச் சென்ற ராணியும், பரிமளமும், தொலைபேசி மூலம் கூறக் கேட்டு அறிந்து கொண்டிருந்தவர்களுக்கு, திடீரென, ஒரு காரணமுமற்று, "அதிர்ச்சி’ ஏற்படுவானேன். விளங்கவில்லை. விளக்கிய மருத்துவரும் இல்லை. பார்ப்பதற்கு எப்போதும்போலிருந்த நிலையில், எங்கே அவன்? அவனைப் பார்க்கவேண்டுமே என்று கேட்டார்களாம், என் அன்னையைப் பார்த்து. என்னைப் பார்க்கவேண்டுமென்ற ஒரு அவா, அதிர்ச்சியாக வளர்ந்துவிட்டது. நான் சிறைப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறேன் என்பதனை மறந்து, நான் ஊரிலே இருப்பதாகவே நினைத்துக்கொண்டு, எங்கே அவன்? என்று கேட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும்போலக் காணப்பட்ட நிலையில் பேசிய கடைசி வார்த்தைகள் அவைதாம்! பிறகு அவர்கள் படுத்த படுக்கையானார்கள்; பயணத்துக்குத் தயாராகி விட்டிருக்கிறார்கள். என்னைப்பற்றியே, ஏனோ திடீரென எண்ணிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த எண்ணம் வேகமாக, பலமாக வளர்ந்திருக்கிறது, அதிர்ச்சியாகிவிட்டிருக்கிறது, அந்த அதிர்ச்சி, மூளைக் குழாய்களைச் சேதப்படுத்திவிட்டிருக்கிறது. இறுதியைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டிருக்கிறது. இத்தனை நாட்களுக்குப் பிறகு, இத்தகைய விளக்கம் நினைக்க முடிகிறது. நான் கண்ட அன்று? ஐயோ! நினைக்கவே பயமாக இருக்கிறது. ஒரு விதத்தில் பார்க்கும்போது, நான் சிறைப்பட்டது, அவர்கள் மறைந்ததற்கு, ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நான் பல முறை சிறை சென்றதை அவர்கள் தாங்கிக் கொண்டவர்கள். ஆகவே இம் முறை நான் சிறை செல்வது அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கும் என்றாலும், விபத்தைக் கொடுக்காது என்றுதான் நான் எண்ணிக்கொண்டேன். ஆனால் அவர்களோ, இத்தனை முறை தாங்கிக்கொண்டேன் - இந்த முறை முடியாது - தாங்கிக்கொள்ளும் வலிவை இழந்துவிட்டேன் - என்று தெரிவிப்பதுபோல, என்னைவிட்டுப் போய்விட்டார்கள். எனக்கு என் சிற்றன்னை, எத்தனையோ விதமான "புத்திமதி‘களைக் கற்றுக் கொடுத்தது மட்டுமல்ல, வேதனையைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதனையும், சில ஆண்டுகளாகவே, எனக்கு எடுத்துக் கூறிக்கொண்டு வந்தார்கள். சில ஆண்டுகளாகவே அவர்களுக்கு உடல்நலமில்லை - அடிக்கடி, “பயப்படும்படியான’ கட்டங்கள் ஏற்பட்டுவிடும் - அப்போது நான் மிக வேதனையில் ஆழ்ந்திருப்பேன் - அவர்கள் நல்ல நிலை அடைந்த உடன், என்னிடம் கூறுவார்கள்,”பைத்யமே! இந்த வயதிலே எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதற்காக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாமா - தைரியத்துடன் இருக்கவேண்டாமா - ஆக வேண்டியவைகளை நடத்திவிடவேண்டாமா - அழுது கொண்டிருக்கிறாயே’’ - என்று சொல்லுவார்கள். ஆக வேண்டியவைகளை நடத்திவிட்டேன். வேறு என்ன செய்ய முடிந்தது என்னால்? என் உடலில் ஒரு துளி மாசுபடக்கூடப் பார்த்து சகித்துக்கொள்ளமாட்டார்கள் - அத்தகைய என் சிற்றன்னையின் உடலுக்குத் தீ மூட்டினேன். எத்தனை கொடிய கரங்கள், எனக்கு இருப்பவை! சே! எப்போதுமே, மிகச் சுறுசுறுப்பான அறிவுத் திறமை அவர்களுக்கு உண்டு. அதிலும் சில ஆண்டுகளாக, அவர்கள் அரசியல் பிரச்சினைகள், நுட்பமான அரசியல் பிரச்சினைகள், மிக ஆராய்ந்து அறிந்துகொள்ளத் தலைப்பட்டார்கள். உடல் வலிவிழந்த நிலையில், வெளியே நடமாடுவது அவர்களுக்கு இயலாது போய்விடவே, தனது நேரத்தில் பெரும்பகுதியை, படிப்பதில் செலவழிக்கத் தொடங்கினார்கள் - நான் ஈடுபட்டுள்ள பிரச்சினைகளில் அக்கறை காட்டத் தொடங்கினார்கள். ஆதரவாகப் பேசத் தலைப்பட்டார்கள். இன்ன விஷயத்தை இன்ன விதத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று எனக்குக் கூறுவதில் ஈடுபட்டார்கள். நான் எடுத்துக்கொள்ளும் முயற்சி நியாயமானது என்பதிலே அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு, நமது கழக வளர்ச்சியிலே மிகுந்த அக்கறை காட்டி வரலானார்கள். நமது கழகத் தோழர்களில், மிகப் பெரும்பாலானவர்களை, அவர்கள் மிக நன்றாக அறிவார்கள். அந்தத் தோழர்கள், வீட்டுக்கு வருகிறபோது உபசரிப்பதில், உள்ளன்பு கொண்டார்கள். அவர்களிடம் உள்ள பேரன்பு காரணமாக அவர்களின் போக்கு பேச்சு எதிலாவது குறை இருப்பது தெரிந்தால், கண்டிக்கக்கூடத் தயங்கினதில்லை. அரசியல் பற்றியும், குறிப்பாக கழகப் பிரச்சினைகள் குறித்தும், அவர்கள், ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் பேசுவார்கள் - அதிலே மிகப் பெரிய பங்கு, அ. க. தங்கவேலருக்கு இருக்கும். ஒருவரும் கிடைக்காதபோது, என் அன்னையிடம், “விவாதிக்க ஆரம்பித்துவிடுவார்கள் - அரசியல் காரணமாகவே மகன் வீடு தங்காது இருக்கிறான் என்ற துக்கம் கொண்டுள்ள என் தாய், தன் தங்கையும், அரசியல் பேசுவது கேட்டு, மிகுந்த சங்கடமடைந்து,”நீ சும்மா இரு அம்மா!’’ என்று கூறுவார்கள். அப்போது, என் சிற்றன்னை சிரிக்கும் சிரிப்பொலி இருக்கிறதே! இருந்ததே! - என்றல்லவா சொல்லவேண்டி வந்துவிட்டது இருந்தார்கள்! இருந்தார்கள்! - என்று ஆகிவிட்டது. என்னால் மட்டுமே, முழு அளவிலும் கூர்மையாகவும், உணரக்கூடிய வேதனை குறித்து மேலும் எழுதிப் படிப்போர் களுக்கு ஒரு சங்கடத்தை உண்டாக்குவது அறமாகாது - ஆகவே இது குறித்து என் உள்ளத்தில் பொங்கி எழுந்திடும் எண்ணங்களை அடக்கிக்கொள்கிறேன், என் வேதனை மிகப் பெரிதாகவும், தனித்தன்மை கொண்டதாகவும் எழுந்ததற்கு மிக முக்கியமான காரணம், அந்த இழப்பு நான் துளியும் எதிர்பாராத முறையில், நேரத்தில், ஏற்பட்டதுதான். நான் என் சிற்றன்னை மரணப்படுக்கையில் இருப்பதைக் காண்பதற்குக் காஞ்சிபுரம் சென்ற நாளைக்கு முன்மாலைகூட, ராணியும் பரிமளமும் என்னை மருத்துவமனையில் வந்து பார்த்தார்கள் - அப்போது, தொத்தாவுக்கு உடல்நிலை சரியாக இல்லை என்ற பேச்சே எழவில்லை - என்னிடம் சொல்லிக் கொண்டு, அவர்கள் காஞ்சிபுரம் போயிருக்கிறார்கள். அன்றிரவு தொத்தாவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு படுத்துவிட்டார்கள். மறுநாள் காலை, “முரசொலி‘யில் செய்தி பார்த்து, நான் திகைத்துப் போனேன் - எப்படி காஞ்சிபுரத்துடன் தொடர்பு கொள்ள முடியும் - நானோ மருத்துவமனையில் நோயாளியாக மட்டுமல்ல - கைதியாக - நான் இருந்த அறைக்கு எதிரிலே ஆறு போலீஸ்காரர்கள் காவல் - என்னிடம் அவர்கள் பேசவும் மாட்டார்கள்! என்ன செய்வது! இதை எண்ணி நான் திகைத்து உட்கார்ந்துகொண்டிருந்தேன். காலை மணி 10 இருக்கும், பரிமளம் வழக்கறிஞர் நாராயணசாமியுடன் உள்ளே வரக் கண்டேன் - ஒரு அற்ப சந்தோஷம் கலந்த நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது; தொத்தாவுக்கு ஆபத்தான நிலைமை என்றால் பரிமளம் காஞ்சிபுரத்தைவிட்டு புறப்பட்டிருக்கமாட்டானே, பத்திரிகையில் மிகைப்படுத்திவிட்டார்கள்போல இருக்கிறது - ஆபத்து ஏதுமிராது என்று எண்ணிக்கொண்டு, சிறிதளவு மகிழ்ச்சியாகவே, “பரிமளம்! முரசொலியில் என்னமோ போட்டிருக்கிறார்களே! தொத்தாபற்றி. என்ன?’’ என்று கேட்டேன்.”ஆமாம்பா! அதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன் உங்களை அழைத்துக்கொண்டுபோக; உங்களைப் பார்த்தால் ஒரு சமயம் அவர்களுக்கு நினைவு திரும்பக்கூடும்’’ என்றான்.”நான் வருவது என்றால், அமைச்சர் அனுமதி கிடைக்கவேண்டுமே’’ என்று கூறி முடிப்பதற்குள், “நான் வக்கீலுடன், முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களைப் பார்த்துப் பேசினேன் - பரோலில் போக அனுமதி கொடுக்கும்படி அதிகாரிகட்குக் கூறிவிட்டார். அதிகாரிகளின் உத்திரவு பெறச் செல்கிறேன். அதற்குள் உங்களிடம் கூறிவிட்டுப்போக வந்தேன்’’ என்று சொல்லவே ஓரளவுக்கு தைரியம் பெற்றேன். மிகுந்த கூச்சமுள்ளவன் பரிமளம். ஆனால் சில நிலைமைகள் ஏற்படும்போது, அதற்கு முன்பு இயல்பாக எழாத திறமை, சுறுசுறுப்பு, துணிவு, தன்னம்பிக்கை, வினைசெய்வகை யாவும் தன்னாலே ஏற்பட்டுவிடும் என்ற பொது விதிபற்றி எனக்குத் தெரியும் - ஆனால் அதை நான் விளக்கமாகப் புரிந்துகொண்டது பரிமளம் அமைச்சரை அணுகி, எனக்குப்”பரோல்’ பெற்ற சம்பவத்தின்போதுதான். அன்று, கருணாநிதி, நடராஜன், நெடுஞ்செழியன், இவர்கள் யாரும் சென்னையில் இல்லை. எவர் இருந்தால், “பரோல்’ பெறுவது இயலுமோ அவர்களில் ஒருவருடனும் தொடர்பு கொள்ளும் நிலையில் நான் இல்லை. நானோ கைதியாக இருக்கிறேன். இந்த நிலையில், வழக்கமாக உள்ள கூச்சத்தை உதறித் தள்ளிவிட்டு, பரிமளம், எனக்குப்”பரோல்’ கிடைக்க ஏற்பாடு செய்தது, உள்ளபடி என் வாழ்நாளில், நான் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்று. அமைச்சர் குறிப்பிட்ட அதிகாரியின் உத்திரவைப் பெற்று வர, பரிமளம் சென்றான். நான் மருத்துவமனையில் காத்துக் கிடந்தேன் - ஒவ்வொரு விநாடியும் பல மணி நேரமாக எனக்குத் தோன்றிற்று - மருத்துவர்கள் என் நிலையைப் பார்த்து, ஆபத்து ஒன்றும் இருக்காது பயம் வேண்டாம் என்று அன்புரை கூறினர் - என் மனம் ஒரு நிலை கொள்ளவில்லை! மணி ஆக ஆக என் மனம் குழம்பலாயிற்று. அந்தச் சமயத்தில்தான் அமைச்சர் ராமய்யா அவர்கள் அங்கு வந்தார் - பார்த்து ரொம்ப நாளாயிற்று - உடம்பு சரி இல்லை என்றார்கள் - பார்க்க வந்தேன் என்று சொன்னார். அவர் பார்த்தாகவேண்டிய “நோயாளி’ எவரேனும் மருத்துவமனையில் இருந்திருக்கக்கூடும் - அவரைப் பார்க்க வந்தவர், நானும் மருத்துவமனையில் இருப்பதால் என்னையும் பார்க்க வந்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டேன் - ஒரு அமைச்சர் வந்து பார்த்து விசாரிக்கவேண்டிய நிலையில் உள்ள”பிரமுகர்’ அல்லவே நான். எப்படியோ ஒன்று, வந்ததற்கு நன்றி கூறத்தான் வேண்டும். மிக்க அன்புடன் பேசினார் - என் கரத்தில் உள்ள வலியின் தன்மைபற்றி விசாரித்தறிந்தார் - கொஞ்சமும் தூக்க முடியாதிருந்த நிலையிலிருந்து ஓரளவு தூக்கக்கூடிய நிலைக்கு, என் இடது கரம் வந்திருப்பதைச் சொன்னேன் - இந்த அளவுக்குக் குணம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியே என்று என் திருப்தியைத் தெரிவித்தேன் - அவரோ, அதெல்லாம் இல்லை - முழுக் குணம் ஏற்பட வேண்டும் - அவசரம் வேண்டாம் - இருந்து குணப்படுத்திக்கொண்டு போங்கள் என்று கனிவுடன் பேசினார் - என் உடன் பிறந்தவர்போல பேசுகிறாரே என்று நான் பெருமிதம் கொண்டேன்; தொத்தா விஷயம் சொல்லி, பரோலில் செல்ல எற்பாடு செய்ய, என் மகன் சென்றிருக்கிறான் என்றேன்; "இதிலே என்ன சங்கடம் இருக்கிறது, கட்டாயம் பரோலில் விடுவார்கள்; இப்படிப்பட்ட ஆபத்து என்றால் விடாமலா இருப்பார்கள்; நானும் முதலமைச்சரைக் கண்டால் சொல்லுகிறேன்’ என்று கூறினார். நான் சட்டசபையில் இருந்த காலத்தில்கூட அமைச்சர் ராமையாவிடம் எனக்கு ஒரு தனியான நேசப்பான்மை உண்டு - அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருக்கும் போதே, நான் அவரை அறிந்தவன். அன்று அவர் என்னிடம் காட்டிய அன்பு, உள்ளபடி என் மனதுக்குப் பூங்காற்றுப் போலிருந்தது. ஏன் அதுபற்றி இவ்வளவு எழுதுகிறேன் என்றால் இவ்வளவு கனிவு காட்டிப் பேசிய அதே அமைச்சர் ராமைய்யா அவர்கள், என் நோய்ப்பற்றியும் நான் மருத்துவமனை சேர்ந்தது பற்றியும் கேவலமாகவும் கேலியாகவும் பொதுக்கூட்டத்திலே பேசியதாகச் சில தினங்களுக்குப் பிறகு இதழ்களில் வெளிவந்திருக்கக் கண்டேன் - திகைப்படைந்தேன் - இல்லை! இல்லை! மனிதர்களுக்கு எத்தகைய இயல்புகளெல்லாம் ஏற்படுகின்றன என்று எண்ணித் திடுக்கிட்டுப்போனேன். பத்திரிகையில் அந்தச் செய்தியைப் பார்க்கும்போது, என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதுபோன்ற தீய குணங்களைச் சுட்டெரிக்கத்தக்க உயர்குணத் தலைவர் காந்தியாரின் கட்சியில், இப்படிப்பட்டவரும் இருக்க இடம் இருக்கிறதே என்று எண்ணி வருத்தப்பட்டேன். எவ்வளவு கனிவான பேச்சு என்னிடம். எத்துணை தேவையற்ற, பயனற்ற, பொருளற்ற கேலிப்பேச்சு, மேடையில்! அரசியல் இந்த அளவுக்குத் தரங்கெட்ட துறையாகிவிடக்கூடாது. மணி நாலு - நான் விநாடிக்கு விநாடி வேதனை வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில், தவித்துக் கிடக்கிறேன் மருத்துவமனையில் - பரிமளம் வந்து சேரவில்லை, பதறிப் போனேன். ஐந்து மணி சுமாருக்கு வந்தான். அன்று சர்க்கார் அலுவலகங்களுக்கு விடுமுறை, ஆகவே அமைச்சர் அளித்த "வரம்’ பழமாகவில்லை - எந்த அலுவலகமும் பணியாற்றவில்லை. இது தெரிந்து இளைஞனாக இருப்பினும், பரிமளம், என்றுமில்லாத அறிவுத்திறனும் ஆற்றலும் கொண்டு நேராக அமைச்சர் பக்தவத்சலம் அவர்களின் இல்லத்தின் எதிரிலேயே சென்று நின்றுகொண்டானாம். எங்கோ சென்றுவிட்டு, அவர் வீடு திரும்பி இருக்கிறார், இவன் எதிரே சென்று நின்று, இன்னும் பரோல் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறான். உடனே அவர், அவனை உள்ளே அழைத்துச் சென்று, அவன் எதிரிலேயே, தொலைபேசி மூலம் பெரிய அதிகாரியிடம் தொடர்புகொண்டு, உடனே பரோலுக்கு ஏற்பாடு செய்தாக வேண்டும் என்பதைக் கூறி, இனி கிடைத்து விடும், நீ சென்று உத்தரவைப் பெற்றுக்கொள் என்று பரிமளத்திடம் கூறி அனுப்பினார். அதன்படி உத்திரவு பெற்றுக்கொண்டு, பரிமளம் வந்து சேர்ந்தான். அ. பொ. அரசு மெத்தத் துணைபுரிந்திருக்கிறார். மிக்க பச்சாதாப உணர்ச்சியுடன் அமைச்சர் பக்தவத்சலம் நடந்துகொண்டதை நான் என்றும் மறக்க முடியாது. அவர் அமைச்சர் ராமைய்யாபோல கனிவாக என்னிடம் பேசியதில்லை; பரிமளம், என் மகன் என்பதும் அவருக்குத் தெரியாது. வழக்கறிஞர் நாராயணசாமியை உடனழைத்துக்கொண்டு, பரிமளமும் நானும் இரவு எட்டு மணிக்குக் காஞ்சிபுரம் சென்றோம் - அன்றிலிருந்து ஆறு நாள் வரையில், என் சிற்றன்னை இறுதிப்பயணதில் சென்றவண்ணம் இருப்பதைக் கண்டு கண்டு குமுறியபடி இருந்தேன் - இறுதியும் நடைபெற்றுவிட்டது. நாவலரும், நடராஜனும், கருணாநிதியும், சத்தியவாணியும், அலமேலு அப்பாதுரையும், பிறரும், நமது கழகத் தோழர்கள் அனைவரும், என் உடனிருந்து ஆறுதல் கூறினர். எம். ஜி. இராமச்சந்திரன், கே. ஆர் இராமசாமி, எஸ். எஸ். இராஜேந்திரன், சிவாஜி கணேசன், டி. வி. நாராயணசாமி ஆகியோர் வந்திருந்தனர் - இருபத்தியொரு நாட்கள், நான் காஞ்சிபுரத்தில் தங்கினேன் - என் வாழ்க்கையில், அதற்கு முன்பு நான் கண்டறியாத ஓர் வேதனையால் தாக்கப்பட்ட நிலையில் மனிதத் தன்மையை இழந்துவிடாத எவரும், இந்த என் நிலை கண்டிரங்குவர் - ஆனால் அரசியல் எதிர்ப்புணர்ச்சி காரணமாகச் சிலர் - தமது நிலைமையைக்கூட மறந்து - நான் பரோலில் வந்ததைக் கேலி செய்து பேசியதையும் பத்திரிகையிலே கண்டேன். அரசியல்துறை இத்தகைய காட்டு உணர்ச்சிகளையா தூண்டிவிட வேண்டும். அரசியல் பகையுணர்ச்சியைக் காட்டிக்கொள்ள, பண்பிழந்து, மனிதத் தன்மை இழந்தா பேச முற்பட வேண்டும்! என்னையோ, என் கழகத்தையோ, கண்டிக்க வேறு வழியே இல்லையா - முறையே கிடையாதா! சிற்றன்னையை இழந்து நான் தவித்துக் கிடக்கும்போது, குடும்பத்தாருடன் இருந்து துக்கத்தைப் பங்கிட்டுக் கொள்ள, பரோலில் சென்றது நியாயத்திற்கு அப்பாற்பட்டதா! பெரும் காங்கிரஸ் தலைவர்கள் பரோலில் சென்றது இல்லையா? பல் வலிக்காக பரோலில் சென்றவர்கள் எனக்குத் தெரியும்; பண்பிழந்து பேசின சிலருக்குத் தெரியாதிருக்கலாம். அரசியல் துறையில் இத்தகைய அநாகரீகம் புகக்கூடாது என்பதற்காகவே இதுபற்றி எழுதுகிறேன். இருபத்தியொரு நாட்கள் பரோல் என்றால், என் தண்டனைக் காலத்தில் இருபத்தியொரு நாட்கள் குறைந்துவிடும் என்று பொருள் அல்ல. - அந்த இருபத்தியொரு நாட்கள், நான் சிறையில் இருந்துவிட்டு வரவேண்டும். இனாம் பெறவில்லை; இருபத்தியொரு நாட்களைக் கடனாகப் பெற்றேன்; திருப்பித் தந்தாக வேண்டும். எத்தனை இழிமொழி, கேலி மொழி இதற்கு! இதைக் காரணம் காட்டியா தேர்தலில் வெற்றிபெற வழி தேடுவது. அவ்வளவு வக்கற்றுப்போன நிலை வந்துவிட்டதா! அவ்வளவு வறண்டுபோய்விட்டதா, நெஞ்சத்தின் ஈரம், தொகுதி ஐந்து 207 நேர்மை; பண்பு! எண்ண எண்ணத் திகைப்பாக இருக்கிறது. கள்ளநோட்டு வழக்கிலே சிறை புகுந்தவர்கள், இரண்டு மாதங்கள் “பரோல்’ பெறுகிறார்கள், குடும்ப, வியாபார விவகாரத்தைக் கவனிக்க - இந்த அரசில். என் சிற்றன்னையின் மறைவுக்காக - நான்”பரோல்’ பெற்றதைக் கண்டிக்க, கேலி பேச, ஆட்சிப் பொறுப்பிலே உள்ளவர்களுக்கு, மனம் வருகிறது. அத்தகைய பேச்சை, அரசியல் பேச்சு என்றும் அவர்கள் கருதுகிறார்கள். எவ்வளவு தரம் கெட்ட நிலைக்கு வந்துவிட்டது அரசியல்!! அரசியலா! அல்ல! அல்ல! அதிலே இலாபம் காணும் போக்கினர், அவ்வளவு தரம் கெட்ட நிலைக்கு வந்துவிட்டனர். மருத்துவமனைக்கு நான் சென்றதுகூட, மாலை நேரப் பேச்சுக்கு, அந்த மகானுபாவர்களுக்குப் பயன்பட்டுவிட்டது. என் இடத் தோளில் ஏற்பட்ட வலி, இன்னும் அடியோடு போய்விடவில்லை - எளிதாகவும் போய்விடாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். வலக் கரத்தைத் தூக்கும் அளவுக்கு இடக் கரம் தூக்க வராது; ஒரு விதமான பிடிப்பு ஏற்பட்டு விட்டிருக்கிறது - ஆர்தர்டிஸ் என்று பெயர் கூறுகிறார்கள். இடத்தோளில் எலும்புக்கும் சதைக்கும் இடையில் உள்ள மெல்லிய பாகம் தடித்துப் போய்விடுவதால், கை தூக்குவதிலே இடையூறு ஏற்பட்டுவிடுகிறது. ஏன் தடித்துப்போகிறது? மருத்துவ நூலில், விளக்கம் இல்லை. வயதானால் தடித்துப் போகலாம் - குளிர் காற்றின் வேகம் தாக்கித் தடித்துப் போகலாம் - இவைகளெல்லாம், காரணங்களாகக் காட்டப்படுகின்றன - இதுதான் காரணம் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறுவதற்கில்லை. அதைப்போலவே இதனைப் போக்க, திட்டவட்டமான முறையும், உடனடியான பலன் தரத்தக்க மருந்தும் இல்லை. இது அடியோடு நீங்க, மாதக் கணக்கில் ஆகலாம் - வருடக் கணக்கில் ஆகலாம் - இதற்குச் செய்யக் கூடியதெல்லாம், பிடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் மின்சாரத்தின் மூலம், "ஒத்தடம்’ கொடுப்பது; விடாமல் தேகப் பயிற்சி செய்வது; வலி தெரியாதிருக்க மாத்திரைகள் சாப்பிடுவது, இவைகளே. இப்போதும், எனக்கு அந்த வலியும் இருக்கிறது; தூக்கும் நிலையில் பிடிப்பு இப்போதும் இருக்கிறது. வலி மிக அதிகமாக இருந்ததுடன், வலக் கரத்துக்கும் வலி படை எடுத்த நிலைபற்றி, குறிப்பிட்டேன் அல்லவா; அது கண்டுதான் நான் அச்சம் கொண்டேன். பொதுவாக இடப் பக்கம் தோளோ, கரமோ, வஎடுக்கிற து என்றால், இருதய சம்பந்தமானதாக இருக்கக்கூடும்; அப்படியா அல்லது வேறுவிதமா என்பதைக் கண்டறியும் சாதனம், சிறை மருத்துவமனையில் இல்லை. அதனாலேயே நான் சர்க்கார் மருத்துவமனைக்குச் செல்ல விரும்பினேன். மருத்துவமனைக்குச் சென்றுவிட்டால், சிறையில் இருப்பது போன்ற கட்டுக்காவல் இருக்காது, சிட்டுப்போலச் சிறகடித்துப் பறக்கலாம் என்பதால் அல்ல. சிறையில் இரவு மட்டும்தான், தனி அறை; மருத்துவமனையில் 24 மணி நேரமும், தனி அறை - போலீஸ் காவல். ஒருவரிடமும் பேச அனுமதி கிடையாது. பார்க்க வருபவர்கள், மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள், சர்க்கார் மருத்துவமனை பெரிய அதிகாரியின் அனுமதி பெற்று வந்து போகலாம். எப்போதும் எட்டு, ஆறு, நாலு என்ற அளவில் போலீஸ்காரர் அறைக்கு எதிரே காவல். நான் இருந்த பகுதியில் பணியாற்றும் மருத்துவர் தவிர, அதே மருத்துவமனையில் வேறு பகுதியில் பணியாற்றும் மருத்துவர் வந்தால்கூட, போலீசார் விடுவதில்லை. அவ்வளவு கண்டிப்பு, அத்துணை கண்காணிப்பு! இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தேன் - நான். ஏதோ மருத்துவமனையில், விழாக்கோலத்தில் விருந்து சாப்பிட்டுக் கொண்டு இருப்பதுபோல எண்ணிக்கொண்டு, பேசிவந்தனர், கழகத்துக்கு மாசு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, எவ்வளவு மட்டமான முறையும், நேர்மையற்ற போக்கையும் மேற்கொள்வதிலே வல்லவர்கள். எனக்கு ஏற்பட்ட வலியின் தன்மையைக் கண்டறியச் சிறையிலுள்ளவர்கள் துளியும் முயற்சி எடுக்காததைக் கூறினேன், நாவலரிடம். அவர் சர்க்கார் பெரிய அதிகாரியிடம் பேசி இருக்கிறார்; அந்த அதிகாரி சர்க்கார் மருத்துவமனைத் தலைமை மருத்துவர் திரு. இரத்திரனவேலு சுப்ரமணியம் அவர்களை, சிறைக்குச் சென்று என்னைப் பார்த்துவரச் சொல்லி இருக்கிறார். மருத்துவர் என்னை வந்து பார்த்துவிட்டு, மருத்துவமனையில் வைத்துத்தான் வலியின் தன்மையைக் கண்டறிய வேண்டும் என்று கூறிடவே, நான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். டாக்டர் இரத்தினவேலு சுப்பிரமணியம், டாக்டர் நடராசன், டாக்டர் சத்தியநாராயணா ஆகிய மூவரும், என் வலி எதனால் என்பதைக் கண்டறிய பல்வேறு பரிசோதனைச் செய்தனர். இதயத் துடிப்புகளைப் படமாக்கும் மின்சாரக் கருவிகொண்டு பார்த்ததில் இருதய சம்பந்தமான கோளாறு எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்து கூறினர். பிறகு பல், வாய், காது இவைகளில் ஏதேனும் கிருமிகள் உள்ளனவா என்று ஆராய்ந்தனர். எனக்குள்ள வலி, பெரி-ஆர்திடிஸ் - என்பதாகும் என்று முடிவாயிற்று. மின்சார ஒத்தடமும் முறையான தேகப் பயிற்சியும் அளிக்கப்பட்டன. டாக்டர் நடராசன், எலும்பு சம்பந்தமான கோளாறுகளைச் சரிப்படுத்தும் நிபுணர். நமது எம். ஜி. இராமச்சந்திரனுக்கு, கால் எலும்பு முறிந்திருந்தபோது மிகத் திறமையாகக் கவனித்து, எந்தவிதமான ஊனமும் ஏற்படாமல், எம். ஜி. இராமச்சந்திரனை எழுந்து நடமாட வைத்தவர் இந்த டாக்டர் நடராசன் அவர்களே. இளம்பிள்ளை வாதத்தால் வதைபடும் குழந்தைகளுக்கான சிகிச்சை முறையை, நேர்த்தியாக அமைத்து, மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறார். இந்தத் துறையில், மற்ற எந்த மருத்துவமனையையும் விட, சிறப்பானதாக, இங்கு அமைய வேண்டும் என்பதிலே, டாக்டர் நடராசன் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். என் வபோக்க அவர் துவக்கிய மின்சார சிகிச்சை முடிவடைய ஒரு வாரம் இருக்கும்போது, அவர் அறுவைத் துறை நிபுணர்களின் மகாநாட்டிலே கலந்து கொள்வதற்காக, கல்கத்தா புறப்பட்டார். மறுநாளே நான், காஞ்சிபுரம் செல்லவேண்டி ஏற்பட்டுவிட்டது. டாக்டர் இரத்தினவேலு சுப்ரமணியம் மருத்துவர்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருப்பவர் - ஆழ்ந்த அறிவுத் தெளிவும், மிக அமைதியான இயல்பும், நோயாளிகளிடம் கனிவு காட்டும் இவருடைய பார்வையும் பேச்சுமே, மருந்தாகிவிடும். எப்போதும் ஓர் புன்னகை தவழும் நிலையில் இருப்பவர்; மிகுந்த நகைச்சுவையுடன் பேசுபவர். என்னுடைய உடற்கூறு அவருக்குக் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே நன்கு தெரியும். சில திங்களுக்கு ஒரு முறை அவரிடம் சென்று, என் உடல் நிலைபற்றிக் கூறி, மருந்து பெறுவது வாடிக்கை - பத்து ஆண்டுகளாகவே; அவருடைய தனியான கவனிப்பு எனக்குக் கிடைத்தது கண்டு நான் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கு வந்துற்ற, பெரி-ஆர்தடிஸ்சின் இயல்புபற்றி அவர் கூறிய பிறகு, எனக்கு வலி கண்டவுடன் ஏற்பட்ட குழப்பமும் அச்சமும் வெகுவாகக் குறைந்துவிட்டது. தொடர்ந்து ஒரு பத்து நாள் அங்கு நான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இடையில் என்னைத் தாக்கிய வேதனை, இருபத்தியொரு நாட்கள், மருத்துவமனையில் நான் இருப்பதற்கு முடியாத நிலையை உண்டாக்கிவிட்டது. காஞ்சிபுரத்தில், என் சிற்றன்னைக்கு ஏற்பட்ட நோய் தீர வழி இல்லை என்றபோதிலும், என் மனதுக்கு ஆறுதல் தர, உடனிருந்து, பல்வேறு சிகிச்சை முறைகளைக் கையாண்டு பார்த்து, கடைசி விநாடி வரை, இருந்து வந்த டாக்டர் ராமமூர்த்தி என்பவர், நான் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்த நாட்களில், என்னையும் கவனித்துக் கொண்டார். இதயத்தில் பலமான அடி விழுந்துவிட்ட நேரம். எனவே, என் கை வலி எனக்கு அப்போது நினைவிலே நிற்கக்கூட இல்லை. சில நாட்கள் ஆயுர்வேத முறைப்படி, மருத்துவர் தங்கப்பன் என்பவர், என் வலி போக்க முயன்றார். போதுமான காலம் கிடைக்கவில்லை. என் சிற்றன்னை தழலில் கிடத்தப்பட்டு, சாம்பலாயினார்கள் - நான் செயலற்ற நிலையில் உழன்று கிடந்தேன். "பரோல்’ முடிந்தது. பரிமளத்துடன் சென்னைக்கு வந்து, வழக்கறிஞர் நாராயணசாமி இல்லத்தில் உணவருந்திவிட்டு, நாவலர், நடராஜன், கருணாநிதி ஆகியோரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, 15ஆம் தேதி மாலை, மீண்டும் சென்னை மத்திய சிறைக்கோட்டம் நுழைந்தேன். இம்முறையேனும், என்னை நண்பர்கள் உள்ள பகுதிக்கு அழைத்துச் செல்வார்கள் என்று எண்ணிக்கொண்டே, உள்ளே நுழைந்தேன் - சிறை அதிகாரிகள் என்னை, பழைய இடத்துக்கே அழைத்துச் சென்றனர். பழைய இடம், புதிய நிலையிலும் இருந்திடக் கண்டேன் - என்னோடு தேவகோட்டையாரும் இஸ்லாமியப் பெரியவரும் இருந்தனர் அல்லவா - அவர்களும் அங்கு இல்லை; நான் உள்ளே நுழைகிறேன். தேவகோட்டையார் வெளியே போகிறார்! இஸ்லாமிய நண்பர், மருத்துவமனை சென்றுவிட்டதாக அறிந்தேன். ஆக அன்று இரவு எட்டு அறைகள் கொண்ட அந்த விடுதியில் நான் மட்டுமே - பணியாற்ற அமர்த்தப்பட்ட கன்னியப்பன் என்ற ஒருவர், என் வேண்டுகோளின்பேரில், பக்கத்து அறையில் இருக்க அனுமதிக்கப் பட்டது. வெறிச்சோடிய மனம்! வெறிச்சோடிய இடம்! அன்று இரவு தங்கி இருந்தேன் - மருத்துவர் முன்பே தெரிவித்திருந்ததற் கிணங்க, சிறை அதிகாரி, காலையில், என்னை அழைத்துக் கொண்டுபோய், மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தார் - வழக்கமான போலீஸ் காவல் - பகல் இரவு எந்த நேரமும் அறைக்குள்ளே இருந்து தீரவேண்டிய நிலை - மாலையில் மருத்துவமனை பெரிய அதிகாரியின் அனுமதி பெற்று, என் துணைவியும், மகனும் வந்து பார்ப்பது என்ற பழைய ஏற்பாடு - வெளிக்குச் செல்ல, குளிக்கச் செல்ல என்றால்கூட பலத்த போலீஸ் காவல் - மிகப்பெரிய சமூகக்கேடான குற்றம் புரிந்து, வாய்ப்புக்கிடைத்தால் ஓடிவிடக்கூடிய கெடுமதி கொண்ட குற்றவாளிகளுக்கென அமைந்திருந்த அமுல், முறை யாவும், மொழி காத்திடும் தூய நோக்குடன் அறப்போரில் ஈடுபட்டு, சிறைபுகுந்த எனக்கும்! ஏனோ இந்தப் பொருளற்ற போக்கு! சிறைக் கொடுமைகளைத் தாமே கண்டவர்கள், காங்கிரசார் - அவர்கள் நடத்தும் ஆட்சியில், சிறைக் கொடுமை நீக்கப்பட வில்லை - சிறை நிலைமையை மருத்துவமனையிலும் புகுத்தி இருந்தார்கள். சிறையிலாவது பகலெல்லாம் சிறிதளவு நடமாடலாம், சிலருடன் உரையாடலாம் - மருத்துவமனையில், பகலிலும் சரி இரவிலும் சரி, ஒரு அறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் நிலை. சேலம் மாவட்டம் வேலூர் தோழர் சிவப்பிரகாசம் எனக்கு நீண்ட பல ஆண்டுகளாக நண்பர் - அவர் அறுவை சிகிச்சை பெற்றுக்கொண்டு, நான் இருந்த இடத்தில் வேறோர் அறையில் படுத்திருந்தார். அவரைச் சென்று பார்க்கக்கூட, அனுமதி இல்லை. அவர் இங்கு வந்து பார்க்கவும் அனுமதி இல்லை. அவர், மருத்துவமனையிலிருந்து உடல்நலம் பெற்று வீடு ஏகும்நாள், என் அறைக்குள் வந்து, இரண்டொரு நிமிடங்கள் பேசிவிட்டு, போலீசார் மேற்கொண்டு கெடுபிடி செய்வதற்கு முன்பு சென்றுவிட்டார். அவ்வளவு கண்டிப்பான முறையிலே, காவல் இருந்து வந்தது. இதனை அறியாமலோ, அறிந்தும் வேண்டுமென்றோ, அரசியல் மாச்சரியம் காரணமாகச் சிலர், மருத்துவமனையில் நான் தங்கி இருந்ததை, ஏதோ மணவிழா மன்றலில் தங்கி இருந்ததுபோல எண்ணிக்கொண்டு, ஏசிப் பேசினர். சிலருக்கு உள்ளம் அப்படி இருக்கிறது!! மாலை வேளைகளில் ராணியும் பரிமளமும், என் பெரிய மருமகப் பெண்ணும் வருவார்கள் - அவர்களுக்கு என்னைக் காண்பதால் ஒருவிதமான மன நிம்மதி - எனக்கும் அவ்விதமே. ஆனால் "தொத்தா’ பற்றிய நினைவு வந்துவிடும் - வேதனை மீண்டும் தேளாகக் கொட்டும். இந்நிலையில் இருந்துகொண்டு மீண்டும் மின்சார சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்தேன். அன்புள்ள அண்ணாதுரை 18-10-1964 டாக்டர்கள்! தேர்தல் முடிவு! சிறைச்சாலை விதிகள்! தம்பி! காது, மூக்கு, வாய், இந்தப் பகுதிகளிலே ஏற்படக்கூடிய வியாதிகளைத் தீர்த்துவைக்கும் நிபுணர் டாக்டர் சத்தியநாராயணா, மருத்துவருக்கு இருக்கவேண்டிய நல்லியல்புகள் பெற்றவர். முன்பு ஒரு முறை நண்பர் ஏ. கோவிந்தசாமி அவர்களுக்கு, குரலொலி கெட்டுவிடத்தக்க நோய் ஏற்பட்டபோது, இதே டாக்டர் சத்தியநாராயணா அவர்கள்தான், தக்க அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினார்கள். அப்போது அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்தார்கள். நான்கூட நண்பர் கோவிந்தசாமியைப் பார்க்க மருத்துவமனை சென்றிருந்தேன். நான் மறந்துவிட்டிருந்தேன் - டாக்டர் சத்தியநாராயணா நினைவுபடுத்தினார்கள். உயர்திரு. ஆச்சாரியார், அமெரிக்கா சென்றபோது உடன் சென்றிருந்தவர், டாக்டர் சத்தியநாராயணா. அவருடைய சீரிய மருத்துவ உதவிப் பெற்றுப் பெரும் பயன் அடைந்தேன். எனக்கு ஏற்பட்டுள்ள வலி போக்க, தனியாக எந்த மருந்தும் இல்லை என்பதால், இது மெள்ள மெள்ளத் தன்னாலேதான் போகவேண்டும், தேகப் பயிற்சி செய்வது ஒன்றுதான் இதற்குக் "கைகண்ட மருந்து’, வலி அதிகமாகும்போது ஒத்தடம் கொடுக்கலாம், வலியை மறந்திருக்க மாத்திரை உட்கொள்ளலாம். வேறு ஏதும் செய்வதற்கில்லை என்று கூறி, மருத்துவ மனையிலிருந்து பிப்ரவரி 13-ம் நாள், என்னை மீண்டும் சென்னை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தார்கள். டாக்டர் சத்தியநாராயணா, 21-ம் தேதி வரவேண்டும். ஓரு ஊசி போடப்போகிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். டாக்டர் இரத்தினவேலு சுப்பிரமணியம் அவர்கள், சில காலத்துக்கு, வாரம் ஒரு முறை மருத்துவமனை வந்து, பரிசோதித்துக்கொள்ள வேண்டும், அதுபற்றி நான் சர்க்காருக்கு எழுதி இருக்கிறேன் என்று கூறினார்கள். அவருடைய யோசனையை சர்க்கார் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. டாக்டர் சத்தியநாராயணா குறித்திருந்தபடி 21-ம் தேதி மருத்துவமனை சென்று, அரை மணி நேரத்திற்கெல்லாம் திரும்பினேன் - மறுபடியும், மார்ச் 20-ம் நாள் வரச்சொல்லி இருக்கிறார். இப்போதுகூட, வலி இருந்தபடி இருக்கிறது - இன்று. பிற்பகல்கூட, வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக்கொண்டேன். வமற ப்பதற்காக ஒரு நாளைக்கு மூன்று வேளை நொவால்ஜின் மாத்திரைகள் உட்கொள்கிறேன். மருத்துவமனை சென்று திரும்பியதில் வலிபற்றி அச்சம் எழத்தக்க குழப்பம் நீங்கி, என்னோடு நீண்ட நாள் இருக்கும் நினைப்புடன் இந்த வலி இருக்கிறது என்பது புரிந்துவிட்டது. மருத்துவமனையிலிருந்து சிறை செல்லும் ஏற்பாடுபற்றி, ராணி பரிமளம் ஆகியோருக்கும் தெரியாது - ஆகவே அவர்கள் வழக்கம்போல் அன்று மாலை வருவார்கள் - ஏமாற்றமடைவார்கள். இதைத் தவிர்க்க முடியுமா என்று எண்ணினேன் - மேலும் நான் படித்து முடித்துவிட்ட புத்தகங்களை வீட்டிற்குக் கொடுத்தனுப்ப வேண்டும். எப்படி? என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் தோழர் ஆசைத்தம்பி வந்தார் - அவரிடம் புத்தகக்கட்டை கொடுத்து வீட்டிலே சேர்த்துவிடும்படியும், நான் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுபற்றிப் பரிமளத்திடம் கூறும்படியும் தெரிவித்தேன். ஆசைத்தம்பி, அதற்கு முன்பே இரண்டொரு முறை என்னை வந்து பார்த்தார் - மிகுந்த உற்சாகமாகத் தேர்தல் பணிகளைக் கவனித்துக்கொண்டு வருவதாகக் கூறினார். சென்னையில் வெற்றி நிச்சயம் என்று உறுதியாகக் கூறினார். நான் விடுதலையாகிற வரையில் வைத்திருக்கப்போவதாகக் கூறி, "தாடி’ வளர்த்துக்கொண்டிருந்தார். மருத்துவமனையில் எனக்குத் துணையாக இருந்து வந்த டாக்டர் மோகன் எனும் இளைஞர், நான் சிறை செல்லக் கிளம்பும்போது, மெத்த வாட்டமடைந்தார். பல நாட்களாக, என்னுடன் பாசத்துடன் பழகிவந்த காரணத்தால், நான் மீண்டும் சிறை செல்வதறிந்து, ஒருவிதமான மனச்சங்கடம், அந்த இளைஞருக்கு. மருத்துவத் துறையில் ஈடுபட்டிருக்கும் இந்த இளைஞரின் தந்தை போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருப்பவர்; தாயார் கல்வித் துறையில் சீரிய பணியாற்றிக் கொண்டு வருபவர். மருத்துவமனையில் எனக்குக் கிடைத்த முதல் நண்பர் டாக்டர் கிருஷ்ணன் - இவர் கோவை மாவட்டத்தவர் - என்னிடம் மிகுந்த பற்றுகொண்டு, எனக்குப் பெரும் துணையாக இருந்து வந்தார் - டாக்டர் இரத்தினவேலு சுப்பிரமணியம் அவர்களிடம், பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார் - ஆகவே அவர் என்னைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலும் இருந்தார். இனிய இயல்பு, அன்பு ததும்பும் மனம். மருத்துவத் துறைக்கு ஏற்றவர். அவருடைய பயிற்சிக் காலம் முடிந்தது. அவர் வேறு இடத்தில் வேலை பெறச் செல்லவேண்டி ஏற்பட்டது. என்னை விட்டுவிட்டுப்போக மனமின்றி, ஒரு வாரம், எனக்காகவே, மருத்துவமனையில் தங்கி இருந்தார். நான் மீண்டும் சிறை செல்லும் வரையில், இருக்க எண்ணினார் - நான் வற்புறுத்தி, அவரை அவருடைய கடமையை மேற்கொள்ளச் சொன்னேன். டாக்டர் கிருஷ்ணன், தான் போவதற்கு முன்பு, என்னைக் கவனித்துக்கொள்ளும்படி, டாக்டர் மோகனிடம்தான் சொல்லிவிட்டுச் சென்றார். இந்த இரண்டு இளைஞர்களையும் நான் என்றென்றும் மறப்பதற்கில்லை. என்னைக் கவனித்துக்கொண்ட டாக்டர்களில், சுந்தரகாந்தி என்பவரும், சங்கர் என்பவரும் குறிப்பிடத்தக்கவர்கள். டாக்டர் சொக்கலிங்கம் எனும் என் நண்பரும் எனக்குத் துணை புரிந்தார். மருத்துவ மகளிர் பலர் - உடன்பிறப்புகள்போன்ற அன்புடன் பணியாற்றி வந்தனர். நாவலரும், நடராஜனும், கருணாநிதியும், வழக்கறிஞர் நாராயணசாமியும் அடிக்கடி வந்து என் உடல் நலம் குறித்து விசாரித்தவண்ணம் இருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோகரன், ராஜாராம், முத்து ஆகியோரும், அரங்கண்ணல், சி. வி. ராசகோபால், கிட்டு மற்றும் பலரும் பல முறை வந்து அளவளாவினர். நகராட்சி மன்றத் தேர்தல்கள், நான் மருத்துவமனையில் இருந்தபோதே துவங்கிவிட்டன. பம்பரம்போலச் சுழன்று அதிலே பணியாற்றும் என் தம்பிகளுடன் இருந்து பொறுப்பை ஏற்கும் வாய்ப்பை இழந்து, மொத்தச் சுமையையும் அவர்கள் தாங்கித் தத்தளிக்கும் நிலையை ஏற்படுத்திவிட்டு, நான் மருத்துவமனையில் படுத்துக்கொண்டேன். தேர்தல் நிலைமைகளைப்பற்றி, களைத்துப் போய், இளைத்துப்போய், கருணாநிதியும், நடராஜனும், நாவலரும் மற்றவர்களும் என்னிடம் வந்து சொல்லும்போதெல்லாம், அவர்களை இவ்வளவு தவிக்கச் செய்கிறேனே என்று என்னை நானே நொந்துகொண்டேன். எத்தனை விதமான இன்னல்கள் - எத்தனை எத்தனை எரிச்சலூட்டும் நிலைமைகள் - எத்தகைய கொடிய, இழிதன்மை மிகுந்த எதிர்ப்புகள், என்னென்ன சிக்கல்கள், பிரச்சினைகள், புகைச்சல்கள் - இவ்வளவுக்கும் இடையிலே அவர்கள் உழன்றுகொண்டிருக்க, நான், மருத்துவமனையில்! எனக்கு அதனை எண்ணும்போது மிகுந்த வேதனையாகக்கூட இருந்தது. ஆனால் அந்த வேதனைக் கிடையிலேயே மற்றவர்களின் சாமர்த்தியம் தெரிந்தது. எதையும் பொறுப்பேற்று செம்மையாகச் செய்திடும் ஆற்றல் மிக்கதோர் அணி அமைந்துவிட்டிருக்கிறது - நாமே முன்னின்று செயல்பட வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை - என்னை மகிழ்விக்க வேண்டும் என்பதைத் தமது கடைமையாக்கிக்கொண்டு பணியாற்றும் பண்பினர் கொண்ட பாசறையாகிவிட்டது தி. மு. க. என்று எண்ணி, மன மகிழ்ச்சி பெற்றேன். முதல் கட்ட தேர்தல் முடிவுகள் மருத்துவமனையிலிருக்கும்போதே கிடைத்தன - நான் அகமகிழ்ந்தேன். இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும்போது, நான் சிறை வந்துவிட்டேன். சிறையில், இரண்டாம் கட்ட முடிவுகளைக் கண்டேன் - களிப்புற்றேன். இறுதியாக, சென்னை மாநகராட்சித் தேர்தலில், கழகம் பெற்ற போற்றத்தக்க வெற்றி பற்றிய முழு விவரத்தைப் படித்துவிட்ட பிறகுதான், விட்ட இடத்திலிருந்து, இந்தக் குறிப்பினை எழுதத் தொடங்கினேன். நகராட்சி மன்றத் தேர்தல், மாநகராட்சி மன்றத் தேர்தல், இதிலே நமது கழகம் பெற்ற வெற்றிகள், அதனால் பெறப்படும் அரசியல் பாடம், இவை தனியாகவே விளக்கப்படவேண்டிய பிரச்சினை. இந்தக் குறிப்பில் நான் பெற்ற மகிழ்ச்சியை மட்டுமே எடுத்துக் காட்டினேன். இந்த வெற்றிச் செய்தியைப் படித்துவிட்டு, சாப்பிட உட்கார்ந்தபோது, இது சிறையாக அல்ல, சிங்கார மாளிகையாக மாறிவிட்டது! சிறை உணவு, தனிச்சுவை பெற்றுவிட்டது! நீ சிறையில் இருக்கும்போதெல்லாம் இத்தகைய சிறப்பான வெற்றிகளை ஈட்டித் தருவோம் என்று கழகத் தோழர்கள் கூறுவதுபோலிருக்கிறது! வார்டர்களின் பார்வையிலே ஒரு பாவம், திடீரென்று மலருகிறது! அதிகாரிகளின் பேச்சிலே புதுமணம் வீசுகிறது. பூங்காற்று மிகுந்து இருக்கிறது! புள்ளினம் இசை பாடுகிறது! அந்த இன்ப உணர்ச்சியுடன், இன்றிரவு துயில்கொள்ளச் செல்கிறேன். 25-2-1964 பல நாட்கள் எழுதாதிருந்ததால், மொத்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து, அளவைக் குறைத்து எழுதினேன். என் உடல்நிலை குறித்தும், தேர்தல்களைப்பற்றியும் எழுதியபோது, சிறையிலேயே ஏற்பட்டிருக்கிற மகிழ்ச்சி தரும் மாறுதலைக் குறிப்பிட மறந்துவிட்டேன். இப்போது நான் சிறை வந்த அன்று எந்தப் பகுதியில் நுழைந்தேனோ அதே இடத்தில்தான் இருக்கிறேன் - ஆனால் ஆறாம் எண் அறைக்கு வந்துவிட்டேன். நான் முன்பு இருந்த ஐந்தாவது என் அறையில் அன்பழகன் இருக்கிறார்; ஏழாவது அறையில் தையற்கலை ஆசிரியர் சுந்தரம்; எட்டாவது எண் அறையில் மதியழகன், கீழ் தளத்தில், தோழர்கள் பொன்னுவேல், வெங்கா, டி. எம். பார்த்தசாரதி. என் "தனிமை’ ஒழிந்தது, இனிமை மலர்ந்தது தானாக அல்ல - மெத்தக் கஷ்டப்பட்டு. மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் பழைய இடத்துக்கே கொண்டு செல்வார்களோ என்ற கவலை, கலக்கம். அவர்களெல்லாம் இருக்கும் இடத்துக்கே அழைத்துக்கொண்டு போகக்கூடாதா என்று கேட்டேன். இல்லை! அவர்களில் சிலர் இங்கு வருகிறார்கள்! என்று அதிகாரி கூறினார். அன்பழகன், மதியழகன், சுந்தரம் ஆகிய மூவரும் வந்தனர். தோளில் ஏற்பட்ட வலி, இருதய சம்பந்தமானது அல்ல என்று மருத்துவர் கூறியபோது ஏற்பட்ட, மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது, மூன்று நண்பர்களும் என்னுடன் இருந்திட வந்தபோது, பிரிந்திருந்த நாட்களிலே ஏற்பட்ட நிகழ்ச்சிகள்பற்றிப் பேசி மகிழ்ந்தோம். விளையாட்டுச் சாமான்கள் கிடைத்ததும் குழந்தைகள் குதூகலமடைவதுபோல, ஏதோ ஓர்வித மகிழ்ச்சி, சிரிப்பு, பேச்சு! அன்பழகனைச் சுற்றி, ஒரே வள்ளுவர் மயம்! ஆமாம்! பரிமேலழகரின் வள்ளுவர், பரிதியாரின் வள்ளுவர், வரதராசனாரின் வள்ளுவர், இலக்குவனாரின் வள்ளுவர், குழந்தையின் வள்ளுவர், நாமக்கல்லார் வள்ளுவர், கி. வா. ஜெகனாதன் வள்ளுவர், மனக்குடவர் வள்ளுவர் இப்படிப் பலப்பல. திருக்குறள் ஆராய்ச்சி நூலொன்று திறம்பட ஆக்கிக்கொண்டிருக்கிறார் அன்பழகன். குறளாராய்ச்சி குறித்து உரையாடும் சுவைமிகு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. மதியழகன், சான்று விளக்க நூலும், அதுபோன்ற வேறு சட்டநுணுக்க ஏடுகளையும் படிப்பதும், சட்ட சபைத் துறைக்கு இங்கிருந்தபடியே, பல்வேறு பிரச்சினைகள்பற்றி கேள்விகள் தயாரித்து அனுப்புவதும், இடையிடையே, பல முன்னாள் - இந்நாள் பிரச்சினைகள்பற்றி உரையாடுவதுமாக இருக்கிறார். சென்னை மாநகராட்சித் தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ என்று நான் குழம்பிக்கிடந்தபோது, வெற்றி நமக்குத்தான் என்பதை, புள்ளிபோட்டே காட்டிவிட்டார். பெரும்பாலும், அவர் போட்டுக்காட்டிய "புள்ளி’ மெய்யாகிவிட்டிருக்கிறது. சிறுவர்களுக்கான உடைபற்றிய நூலொன்று தயாரித்துக் கொண்டிருக்கிறார், தோழர் சுந்தரம். நான் எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டுள்ள பிரச்சினைக்குத் தேவைப்படும் ஏடுகள் பெற முடியாமல், திகைத்துக் கிடக்கிறேன்; கிடைக்கும் ஏடுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அறப்போரில் ஈடுபடுவதற்காக நான் சென்னை புறப்படுவதற்கு முன் இரவு, திருவத்திபுரத்தில் பேசினேன் - புலவர் கோவிந்தன் ஒரு காகிதக்கட்டு, மைக்கூடு, எழுதுகோல் இவைகளைக் கொடுத்து, தக்கதோர் நூல் எழுத வேண்டும் சிறையில், என்றார். சிறையில் உள்ள இடர்ப்பாடுகளை அவர் உணரவில்லை. அதிலும் இம் முறை, சிறையில் மிகுந்த கண்டிப்பு, கெடுபிடி!! ஆறு புத்தகங்களுக்குமேல் அனுமதிக்க முடியாது. இப்படி ஒரு கண்டிப்பு. அந்தப் புத்தகங்கள் அரசியல் சம்பந்தப்பட்டவைகளாக இருந்தால், அனுமதி மிகக் கடினம். புத்தகங்கள், இந்தச் சிறைக்குள்ளே நுழைந்ததும், நேரே எம்மிடம் வந்து சேர முடியாது. ஒரு வாரமோ, பத்து நாட்களோ, அவைகளுக்குக் கடுங்காவல் - அதிகாரிகளின் மேஜைக்குள்! ஒரு வாரமாகிறது, "அடக்குமுறைக் கொடுமை’ பற்றிய ஒரு ஆங்கில ஏடு, இங்கே தரப்பட்டு, மிகுந்த ஆவலுடன் அந்தப் புத்தகத்தைக் கொண்டுவரச் சொல்லி இருந்தேன். புதிய வெளியீடு - 19-ம் தேதி, பரிமளம் அந்தப் புத்தகத்தை என் எதிரில்தான் சிறை அதிகாரி ஒருவரிடம் கொடுத்தான் - அவர் மேலதிகாரியிடம் காட்டி, ஒப்புதல் பெற்ற பிறகு தருவதாகச் சொன்னார் - இன்றுவரை, புத்தகம் தரப்படவில்லை. தரப்படாதது மட்டுமல்ல, எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்றும் சொல்லுகிறார்கள். "அடக்குமுறை’ பற்றிய புத்தகம் என்ற உடனே, இந்த நாட்டு நிலைமை - இந்தச் சர்க்கார் செய்திடும் கொடுமைபற்றிய புத்தகமோ என்று எண்ணிக்கொள்ளாதீர்கள் ஐயா! இது அடக்குமுறை எனும் பிரச்சினைபற்றி, மேனாட்டார் ஒருவர் வெளியிட்டுள்ள புதிய புத்தகம் என்றுகூட மேலதிகாரியிடம் விளக்கம் சொன்னேன். அதையும் கேட்டுக்கொண்டார். அதுதான் அவர் எனக்காகச் செய்தது. புத்தகம் என் கைக்கு வரவில்லை. சட்டமும் சமுதாயமும் என்பதுபற்றி ஒரு நூலெழுத விரும்புகிறேன், அதற்காகப் பல ஏடுகள் தேவை - எங்கே கிடைக்கப்போகின்றன! சிறையில் இம் முறை இத்தனை கண்டிப்பு இருப்பதற்குக் காரணம், புதிய சிறை அமைச்சருடைய "பெருந்தன்மை’தான் என்று தெரிகிறது. தெரிந்து? வாரத்துக்கு ஒரு முறை, கைதிகளை, நண்பர்கள் உறவினர்கள் வந்து பார்க்கலாம் என்பது சிறைக்கான விதிகளில் ஒன்று. உறவினர்கள் மட்டுந்தான் பார்க்கலாம், நண்பர்கள் கூடாது என்று இம் முறை ஆக்கிவிட்டிருக்கிறார்கள். சுயராஜ்யம் மலரமலர அத்துணை மணம் வீசுகிறது. நண்பர்களும் வந்து பார்க்கலாம் என்றிருக்கும் விதியைக் காட்டி, முதலமைச்சரிடம் பேசிப் பாருங்கள் என்று நாவலரிடம், மருத்துவமனையில் இருக்கும்போது சொல்லிவிட்டு வந்தேன். முயற்சி செய்து பார்க்கிறேன் என்றார். 26-2-1964 இன்று நாவலரும், கருணாநிதியும், எம். ஜி. இராமச்சந்திரனும், கே. ஆர். ராமசாமியும், என்னைக் காண வந்திருந்தனர். முதலமைச்சரிடம் நாவலர் பேசியன் விளைவு. எல்லோரும் களைத்துப்போயிருந்தனர். தேர்தல் அலுப்பு! எல்லோருடைய கண்களும் கீதம் பாடின - தேர்தல் வெற்றியின் விளைவு. நாங்கள் பேச உட்கார்ந்த இடத்தில் - பக்கத்தில் - சிறையின் மேலதிகாரிகள் இருவர் உட்கார்ந்துகொண்டனர் - என்ன பேசிவிடுகிறோமோ என்ற கவலையுடன். அவ்வளவு கண்காணிப்பு. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டோம் - மாநகராட்சித் தேர்தலில், சில இடங்களில் ஏற்பட்ட தோல்விகள்பற்றிக் காரணம் கேட்டறிய விரும்பினேன். எப்படிக் கேட்பது! அரசியல் பேசக்கூடாதே! ஆகவே மதுரை வழக்கு எப்போது, சட்டசபை எப்போது கூடுகிறது, மோட்டாரில்தானே வந்தீர்கள் என்ற இவைபற்றித்தான் பேசினோம். பல நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்; பேச முடிந்ததோ, இவ்வளவுதான். இதற்குள்ளாகவே ஒரு அதிகாரி தமது கைகடிகாரத்தைப் பார்த்துக்கொண்டார். இந்தச் சூழ்நிலையின் சங்கடம் எனக்கு மிகவும் வெறுப்பாக இருந்தது. விரைவிலே பேசி முடித்து, அவர்களை அனுப்பிவிடுவதே நல்லது என்று தோன்றிவிட்டது. ஒரு அதிகாரி சொன்னார், "பத்திரிகைகளில் எதையாவது போட்டுவிடுகிறார்கள் - இன்னின்னார் வந்தார்கள், அண்ணாதுரையிடம் யோசனை கேட்டார்கள் என்றெல்லாம். அது, பல கேள்விகளை எழுப்பிவிடுகிறது; எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது’’ என்று. சிறையில் இம் முறை உள்ள நிலைமைக்குக் காரணம் ஏதேனும் கூறவேண்டும்போல, அதிகாரிகளுக்கே தோன்றுகிறது போலும்! நான் சொன்னேன், “பத்திரிகைகளில் வருவதுபற்றிக் கவலைப்படுவதானால், இங்கு எங்களைக் காணவருகிறவர்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் கொடுமை, எங்களுக்கு எந்தவிதமான பொருளும் தருவித்துக்கொள்வதிலே இருக்கும் தடை, இவைபற்றி எங்கள் பத்திரிகைகளில் வெளியிட முடியுமே - அது விரும்பத்தக்கதா?’’ என்று கேட்டேன். அதிகாரி அதற்கு ஏதும் பதில் சொல்லவில்லை -”நாங்கள் சர்க்காருடைய உத்தரவின்படி நடந்துகொள்ளவேண்டியவர்கள்’’ என்றார். நான், “நீங்கள் எவ்வளவு உண்மையாக நடந்துகொண்டாலும், எங்களிடம் எவ்வளவு கண்டிப்பாக நடந்துகொண்டாலும், அதனாலேயே உங்களுக்கு நல்ல பெயர் வந்துவிடும், சர்க்கார் அதற்காகவே உங்களைப் பாராட்டிவிடும் என்று நம்பி விடாதீர்கள்’’ என்று சொன்னேன். பொதுவாகப் பார்க்க வருபவர்கள் மனம் சங்கடம் அடையும்படியான சூழ்நிலை இங்கு ஏற்படுத்தப்படுகிறது. நண்பர்கள் நிலையை அறிந்து கொண்டு, விடைபெற்றுக்கொண்டு சென்றனர். அதிகாரிகள் முகம் மலர்ந்தது. நண்பர்கள் பார்த்தசாரதி, வெங்கா, பொன்னுவேல் ஆகியோரையும், நான் தங்கி இருக்கும் பகுதிக்கே அனுப்பிவிடலாமே என்றேன் - சரி என்று அதிகாரி ஒப்புக்கொண்டு”நீங்கள் காலையில் 7-30 லிருந்து மாலை 4 மணி வரையில் சிறை உடுப்பில்தான் இருக்க வேண்டும்’ என்றார். “சரி’ என்றேன். நான் சிறை உடுப்பில் இருப்பதை அவர் பார்க்கவில்லைபோல் தெரிகிறது. நூல் நூற்க வேண்டும் என்றார். எனக்குக் கை வலி அடியோடு போகவில்லை, இந்த நிலையில் நூற்பது இயலாது என்றேன். அதிகாரிகளின் இதயம் எவ்வளவு இளகியது என்பதைக் காண ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. கைவலி காரணமாக நூற்க இயலாது என்று நான் சொன்னவுடன், அதிகாரிகளில் ஒருவர்,”தேகப் பயிற்சி செய்யச் சொன்னாரே டாக்டர்’’ என்று கருணை பொழிந்தார். "ஐயா! டாக்டர் செய்யச் சொன்ன தேகப் பயிற்சி வேறு, நூல் நூற்பது வேறு’ என்று நான் கூறிவிட்டு வந்தேன். 27-2-1964 பார்த்தசாரதி, வெங்கா, பொன்னுவேல் மூவரும் இங்கு வந்து குடியேறினார்கள் - ஐவர் அணி, மீண்டும் ஒன்று கூடிற்று என்று மகிழ்ச்சி அடைந்தார்கள். பொன்னேரியில் சுந்தரமும், காஞ்சிபுரத்தில் பார்த்தசாரதியும், பூவிருந்தவல்லியில் பொன்னுவேலும், செங்கற்பட்டில் வெங்காவும் சிறை வைக்கப்பட்டிருந்த சம்பவம் முதற்கொண்டு, தொடர்ந்து நடைபெற்ற பல சம்பவங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தேன். இன்று மாலை, காஞ்சிபுரம் மறியலில் ஈடுபட்டு சிறை தண்டனை ஏற்றிருக்கும் கேசவன் குழுவினர், சிறை உடையில், உட்புறம் அழைத்துச் செல்லப்பட்டதைக் கண்டேன். அடையாளம் தெரியவில்லை. சிறை உடை அத்துணை அலங்கோலத்தைக் கொடுத்துவிட்டது, நேற்று, சின்னசாமி குழுவினரும், பிறகு சட்டமன்ற உறுப்பினர் ராமசாமியும் சிறை கொண்டுவரப்பட்டனர். ராமசாமியை நான் பார்க்க முடியவில்லை. அவர்கள் வேறு பகுதியில் வைக்கப்பட்டுள்ளனர். சிறை வார்டர்கள் மூலமாக அவர்களைப்பற்றிய செய்தி அறியலாமா என்றால், ஒருவரும் பேசுவதில்லை - அவ்வளவு அச்சம் ஊட்டப்பட்டிருக்கிறது! இன்று மாலை, எங்கள் பகுதியின் நுழைவு வாயிலருகே, தரையில் பாய் போட்டு, உட்கார்ந்துகொண்டு, தேய்ந்துபோன நிலையில் உள்ள கைதிகளை, வார்டர்கள் உட்புறம் அழைத்துக்கொண்டு போவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இவர்கள் பல்வேறு குற்றங்கள் செய்ததற்காக இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். தொகுதி ஐந்து 221 இங்கு இவர்கள் இருக்கும் நிலையைப் பார்க்கும்போது, விடுதலை பெற்று வெளியே செல்லும்போது சமூகத்திலே இடம்பெற்று, செய்யும் தொழில் கிடைக்கப்பெற்று, புதுவாழ்வு பெறப் போகிறார்களா என்பதை எண்ணிக்கொண்டேன். வெளியில் இருந்தபோது, நாணயமான தொழில் நடத்திப் பிழைக்க முடியாமல், குற்றம் இழைத்தார்கள்; உள்ளே வந்ததன் காரணமாக, எந்தத் தொழிலுக்குமே இலாயக்கற்ற "உருவங்கள்’ ஆகிவிடுகிறார்களே, இவர்கள் இனி வெளியே போய் என்ன பலன் காணப்போகிறார்கள் என்பதை எண்ணியபோது, மிகுந்த கவலையாகிவிட்டது. இந்தக் கவலையுடனேயே இன்றிரவு படுக்கச் செல்ல வேண்டும் போலிருக்கிறது. 28-2-1964 சிறை, எதனாலே கொடுமையானதாகிறது என்பதுபற்றி யோசித்துப் பார்த்தேன்; அறையில் போட்டு அடைத்துப் பூட்டி வைக்கிறார்கள் என்பதால் மட்டும் அல்ல, அதிகாரிகளின் அக்கறையற்ற போக்கு மனதுக்குச் சங்கடம் தருகிறது என்பதால் மட்டுமல்ல, கொடுமைக்கு மிக முக்கியமான காரணம், ஒரு நாள் போலவே மற்ற எல்லா நாட்களும் உள்ளன! ஒவ்வொரு நாளும், வேக வேகமான நினைப்புகளில் நடவடிக்கைகளில், தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளவர்கள், எல்லா நாட்களும் ஒரே விதமாகவே தோற்றமளிக்கும்படியான நிலை, சிறையில் இருப்பதைத்தான் தாங்கிக்கொள்ள முடியாத கொடுமை என்று உணருவார்கள். ஒரு நாள் நடவடிக்கையை, விவரித்தால், அது மற்ற எல்லா நாட்களுக்கும் பொருந்துவதாக அமைந்துவிடும். இன்று என்ன நிகழ்ச்சிகள் என்று கணக்கிட்டுக் காட்டுகிறேன் - காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, சிறை உடை அணிந்துகொண்டேன். மெத்த அன்புடன், முகமலர்ச்சியுடன் தோழர் பார்த்தசாரதி “தோசை’ கொடுத்துச் சாப்பிடச் சொன்னார் - அவருடைய முகம் எவ்வளவு மலர்ந்திருந்ததோ அந்த அளவுக்கு”தோசை’ என்ற பெயர் படைத்த அந்தப் பண்டம், கறுத்து, வறண்டுபோய் இருந்தது. கோதுமை மாவினாலே செய்யப்பட்ட மெல்லிய அடை! பிறகு காபி; நிறத்தாலே அந்தப் பெயர் பெறுகிறது. மணத்தாலும் சுவையாலும் அல்ல. பிறகு நூற்பு வேலை - இழையின் நீளம் எவ்வளவு என்பதைவிட எத்தனை முறை அறுந்தது என்பதுதான் என் நினைவிற்கு வருகிறது. பிற்பகல் 1 மணிக்குச் சாப்பாடு. காலையில் ஒன்பது அல்லது பத்து மணிக்கெல்லாம் செய்யப்பட்டு நன்றாக சில்லிட்டுப்போன நிலையில், எங்களுக்காக உட்புறமிருந்து கொடுத்தனுப்பப்படும் சோறு, பருப்பு கலந்த குழம்பு - கலந்த என்று உபசாரத்துக்காகச் சொல்கிறேன் - துறவிகள் உலகிலே வாழ்ந்தாலும் பற்றற்று இருப்பார்கள் என்கிறார்களே அதுபோல பருப்பும் குழம்பும் ஒரே குவளையில் உள்ளன - ஒன்றுக்கொன்று பாசமற்று! எனவே சுவை இருப்பதில்லை. கரு நிறமுள்ள ரசம்! பிறகு, எங்களுக்கு அளிக்கப்படும் (காபிக்காக) பாலிலிருந்து நாங்களே தயாரித்துக் கொள்ளும் தயிர்; பொரியல் ஒன்று உண்டு - ஒவ்வொரு நாளும். ஆனால் அதனை நான் குறிப்பிடாததற்குக் காரணம் நான் அதனைப் பயன்படுத்தாததுதான், பயன்படுத்தியவர்கள் படும் கஷ்டத்தை மட்டும் பார்க்கிறேன். ஒரு விவாதமே நடத்துகிறார்கள், பொரியலில் போட்டிருப்பது என்ன பண்டம் - என்ன கறி - என்பது குறித்து. சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு மணி நேரம் ஓய்வு. பிறகு, மறுபடியும் நூற்பது - நூற்பு முயற்சி. ஆறு மணிக்கு, அறையில் போட்டு அடைத்துவிடு கிறார்கள் - தனித்தனி அறையில். அந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும். பொது வாழ்க்கைத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் பல பிரச்சினைகளை, பல கோணங்களிலிருந்து பல நண்பர்களுடன் பேசி, சுவையும் பயனும் பெறுபவர்கள். தோழமையினால் பெறப்படும் இனிமையை பெரிதும் விரும்பி வரவேற்பவர்கள், கழக அமைப்புபற்றி கழகத் தோழர்களின் எண்ணங்களைப் பற்றி அறிவதிலும் உரையாடி அகமகிழ்வதிலும், ஈடுபட்டவண்ணம் இருக்கும் என்னையும், என்போன்ற மற்றவர்களையும் செயலற்றவர்களாக இருக்கும் நிலையை மேற்கொள்ள வைக்கிறார்களே சிறையில்! இதனைவிடக் கொடுமை வேறு என்ன இருக்க முடியும்? அதிலும் நகராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்ற பரபரப்பான சூழ்நிலை வெளியே இருந்தபோது, உள்ளே அடைபட்டுக்கிடந்தது, உள்ளபடி மெத்த வருத்தமாக இருந்தது. ஆனால், குடும்பம், அது தரும் குளிர்ச்சி, தோழமை, அது தரும் இனிமை; தொண்டு, அது அளிக்கும் பெருமித உணர்ச்சி இவைகளை இழந்து சிறையில் கிடந்தபோதிலும், சிறைக் கதவுகளையும் கோட்டை மதில்போன்ற சுவர்களையும் தாண்டிக்கொண்டு, எங்கள் எண்ணம் சிட்டுபோலச் சிறகடித்துக்கொண்டு பறந்து, கழக நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமெங்கணும் வட்டமிட்டபடிதான் இருக்கிறது. கண்ணுக்குப் புலனாகாமல் இருக்கும் நிலை; கருத்துக்கு எல்லாம் தெளிவாகப் புலனாகிறது. தூயதோர் நோக்கத்துக்காக, இந்தக் கொடுமையை நாமே மனமுவந்து ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமும், நம்மிடம் பற்றும் பாசமும் கொண்ட இலட்சக்கணக்கானவர்கள் வெளியே நம்முடைய நோக்கத்துக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள் என்பதை உணருவதால் ஏற்படும் எக்களிப்பும், சிறை தரும் சங்கடமான சூழ்நிலையை மறந்திருக்கச் செய்துவிடுகிறது என்பதிலே ஐயமில்லை. எனக்கு உள்ளதுபோன்ற இதே உணர்ச்சிதான், இங்கு மரம் அறுக்கும் வேலையிலும், மாவு அரைக்கும் வேலையிலும், நூற்கும் வேலையிலும், ஈடுபட்டு உழலும், நமது கழகத் தோழர்கள் அனைவருக்கும் இருக்கிறது. அவர்களைப் பார்க்க, பேச, எனக்கு வாய்ப்பு இல்லை. அவர்கள், நண்பர்களையோ, உறவினர்களையோ காண்பதற்காக அழைத்து வரப்படுகிறபோது, நான் இருக்கும் பக்கமாகத்தான் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் பார்க்க, புன்னகை காட்ட, வணக்கம் கூறிக்கொள்ள முடிகிறது; அருகில் வர, சிறைக்காவலர்கள் அனுமதிப்பதில்லை. சிறையில் உள்ள தோழர்களில், இருவர் மோகனசுந்தரம், லோகநாதன், மாநகராட்சி மன்றத் தேர்தலில் ஈடுபட்டார்கள் - இதிலே லோகநாதன் வெற்றி பெற்றார் - மற்றவர், நாவலர் நடையிலே சொல்லுவதானால், வெற்றிக்கான வாய்ப்பை இழந்துவிட்டார். பொதுவாக, மாநகராட்சி மன்றத் தேர்தலில் நமது கழகம் பெற்ற வெற்றி, சிறையில் உள்ள நமது கழகத் தோழர்களுக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. மோகனசுந்தரம் வெற்றிபெற முடியாமற்போய்விட்டதற்கான காரணம்பற்றி, இன்று மதியழகன் விவரமாகச் சொன்னார் - அந்த வட்டத்தின் அமைப்பு - வாக்காளர்களின் வகை - இவைபற்றி, நல்ல தெளிவான மதிப்பீடு போட முடிந்திருக்கிறது மதியழகனால். தேர்தல் களத்திற்குத் தேவையான முறைகளையும், தகவல்களையும் நமது கழகத் தோழர்கள், கூடுமான வரையில் பாராட்டத்தக்க அளவு பெற்றுவருகின்றனர் - தேர்தல் வெற்றிக்கு அது மிக முக்கியமான காரணம். தேர்தலில் கிடைத்த வாக்குகளை, பல முறை, ஆராய்ந்து பார்த்திட்டதில், பல இடங்களில் நாம் பெறவேண்டிய வெற்றி, நமது கரத்திலிருந்து நழுவிவிட்டிருப்பது தெரிகிறது. கழகம் அடியோடு தோற்றுவிடும் என்று எழுதிய இதழ்கள், கழக வெற்றிக்குப் பிறகு, என்ன எழுதியுள்ளன என்பதனைப் படித்து, அதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பல இதழ்கள், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கேடுபாடுகளைக் கண்டிக்கின்றன என்றாலும், கழகத்தை வெளிப்படையாக ஆதரித்து, காங்கிரசின் கோபத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என்ற அச்சம் கொண்ட நிலையில் உள்ளது பற்றி நண்பர்கள் எடுத்துக் கூறினார்கள். இது இயல்புதான் ஏனெனில், நமது கழகம் "பிரமுகர்கள்’ கொண்டது அல்ல; ஆகவே, இந்தக் கழக வளர்ச்சி, இதழ்களுக்குக்கூட எரிச்சலை மூட்டுகிறது; ஆனால் ஒன்று. மக்கள் இதழ்களின் இருட்டடிப்பு, இட்டுக்கட்டும் முறை இவைகளை இப்போது பொருட் படுத்துவதில்லை. எழுதப்பட்டவைகளை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. எடை போட்டுப் பார்க்கிறார்கள் என்பதுபற்றி நான் விளக்கிக் காட்டினேன். பாராளுமன்றத் துறையில் படிப்படியாக முன்னேறிக்கொண்டு வரும் இந்தக் கட்டத்தில், ஒரு ஆங்கில இதழ், குறைந்த அளவு வார இதழாவது கழகத்துக்கு அவசரமாகத் தேவை என்பதுபற்றி, மதியழகன் வலியுறுத்திச் சொன்னார். நான் நடத்திக்கொண்டு வந்த ஆங்கில வார இதழ் நிறுத்தப்படவேண்டி ஏற்பட்ட நிலைமைகளை எடுத்துக் கூறினேன். எத்தனை சங்கடம் இருந்தாலும், வெளியே வந்ததும், மறுபடியும் ஆங்கில வாரப் பத்திரிகையைத் தொடங்கியாக வேண்டும் என்ற உறுதி ஏற்பட்டிருக்கிறது. இந்த இன்ப நினைப்பை அணைத்தபடி இன்று துயிலச் செல்கிறேன். 29-2-1964 "எவனொருவன் இந்திரியங்கள் எனும் துட்டக் குதிரைகளுக்கு அறிவெனும் கடிவாளமிட்டு அடக்கி, நன்னெறி எனும் பாதையிலே செலுத்துகிறானோ, அவனே அரனடி எனும் திருத்தலத்தை அடைவான். இடையே இச்சை எனும் நச்சுக்கொடி கிடக்கும். பச்சென்று இருக்கிறதே என்று பார்த்தாலோ சிக்கினோரைச் சீரழிக்கும். அதற்கு நிராசை எனும் சாட்டை கொண்டு குதிரையைத் தட்ட வேண்டும்.’’ மட அதிபரின் பேச்சல்லவா? இதை ஏன், சிறையில் உள்ள நான் எடுத்துக் கூறுகிறேன் என்று எண்ணுகிறீர்கள். நான் அல்ல; நண்பர் மதியழகன் இன்று, மடாதிபதி போலவே, எங்கள் அறையில் உள்ள “சிமெண்ட்’ திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, இதுபோலப் பேசினார். பேச்சு அல்ல; இது பாடம்.”சந்திரோதயம்’ என்ற நாடகத்தில் அவர் அழகூர் மடாதிபதியாக வேடம் தாங்கிப் பேசுவது. அதனை இன்று நினைவுபடுத்திக்கொண்டார். ஏன் என்கிறீர்களா? நமது கழகப் பிரசாரத்துக்காக, முன்பு நாடகங்கள் நடத்துவோமே - அது நின்று போய்விட்டது நல்லதல்ல, மறுபடியும் நாடகங்கள் போட வேண்டும் என்ற யோசனைபற்றிய பேச்சு எழவே, மதி, இந்த மடாதிபதி உரையை எடுத்துக்கூறி, சட்டசபையில் மடாலயங்கள்பற்றிய விவாதத்தின்போது, இந்த வாசகங்களை, தான் கூறியதாகச் சொன்னார். அமைச்சர்கள்கூட மகிழ்ச்சி அடைந்தார்களாம். நாடகங்கள் நடத்துவதுபற்றிய பேச்சு வளர்ந்து, பொதுவாக, கழகப் பிரசார முறைகள், அளவு, இவைபற்றிய விவாதமாக மலர்ந்தது. இம் முறை மாநகராட்சி மன்றத் தேர்தலில், நமது கழக ஆதரவுக்காக மறைந்த நகைச்சுவை அரசர் என். எஸ். கிருஷ்ணனின் மகன் கோலப்பா வில்லுப்பாட்டும், சேதுராசன் பல குரல் நிகழ்ச்சியும், நல்ல முறையில் நடத்தி இருக்கிறார்கள் என்பதை இதழ்களில் கண்டோம். அதுபற்றி நான் மகிழ்ச்சியுடன் பாராட்டினேன். நாடகங்கள் தேவைதான் - ஆனால், நான் இனி நடிப்பது இயலாது - நீங்களெல்லாம் நடிக்கலாமே என்று அன்பழகன் ஆகியோரிடம் கூறினேன். அவர்களுக்கு விருப்பம் எழுந்ததை உணர்ந்து மகிழ்ந்தேன். நாடகம் எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார்கள். "ஆகட்டும், பார்க்கலாம்’’ என்று காமராஜர்போலச் சொன்னேன். இன்று, தோழர்கள் மதியழகன், அன்பழகன், சுந்தரம் ஆகியோரைக் காண, அவர்கள் வீட்டிலிருந்து வந்திருந்தார்கள். பரிமளம் வரக்கூடும் என்று சிறை மேலதிகாரி கூறியதாகக் கேள்விப்பட்டேன், வரவில்லை. ஒரு சமயம் காஞ்சிபுரம் போயிருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். 1-3-1964 மார்ச்சு மாதம் துவங்கிவிட்டது - துவக்க நாள் ஞாயிற்றுக் கிழமை - ஞாயிற்றுக்கிழமை, சிறையிலே சந்தடியற்ற நாள். பகலெல்லாம், நிரம்பப் பேசிக்கொண்டிருந்தோம் கோவையாக ஒரே விஷயத்தை அல்ல, பல விஷயங்களைப்பற்றி. வெங்கா, திறமையாக நூற்பு வேலை செய்கிறார்; எனவே, அவரிடம் பயிற்சி பெற முனைந்தேன். இன்று பிற்பகல், விலைவாசிக் குறைப்புப் போராட்டத்தின் போது வேலூர் சிறையில் இருந்ததுபற்றிய விவரங்களை, நானும் பொன்னுவேலுவும், மற்றவர்களிடம் "கதை கதை’யாகச் சொன்னோம். அவர்களிடம் அதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போதே, இரவெல்லாம் பேசித் தொல்லை கொடுப்பதால் முகத்தைச் சுளித்துக்கொள்ளும் என் அருமை நண்பர் ராஜகோபால் என் மனக்கண்முன் வந்து நின்றார். தேர்தலில் தோற்றுவிட்டதால், மெத்தவும் திகைத்துப்போயிருப்பார் - என்னை வந்து பார்த்துவிட்டுச் சென்றிருந்தாலாவது சிறிது ஆறுதலாக இருந்திருக்கும் - வரக் காணோம். வேலூர் சிறை நிகழ்ச்சிபற்றிய பேச்சு நடைபெற்றதும் சாரதியின் உரத்த குரல், சண்முகத்தின் வெடிச் சிரிப்பு, வடிவேலுவின் உருக்கமான பாட்டு, தருமலிங்கத்தின் பாகவதர் பாடல், எல்லாம் நினைவிற்கு வந்தன. அந்தச் சிறையில் கழகத் தோழர்கள் பலநூறு பேர், ஒரே பகுதியில், காவலில் வைக்கப்பட்டிருந்ததால், ஒருவருடன் ஒருவர் பழக வாய்ப்பு இருந்தது. தோழர் சுந்தரம் எனக்குப் பல ஆண்டுகளாக நண்பர்; அன்பழகனுக்கு நெருக்கமான நண்பர்; ஆனால் சிறைபுகக் கூடியவர் என்று நான் எண்ணினதில்லை. என்னிடம் அவர் அறப்போரில் ஈடுபடப்போவதாக, மற்றவர்கள் சொன்னபோது, நான் முதலில் நம்பவில்லை. பிறகு, தடுத்தும் பார்த்தேன். இன்று, அவரிடம், சிறை செல்லும் துணிவும் விருப்பமும் எப்படிப் பெற முடிந்தது என்பதுபற்றிக் கேட்டேன். என் பங்கை நான் செலுத்த வேண்டும் என்ற உணர்வு கொண்டுதான் நான் ஈடுபட்டேன் என்று அவர் கூறினார். சிறையில், சங்கடமும், சலிப்பும், பயமும் ஏற்படவில்லையா என்று கேட்டேன். முதலில், என்னைத் தனியாக, பொன்னேரியில் கொண்டுபோய் அடைத்தார்களே, அப்போது சங்கடமாகவும், பயமாகவும் இருந்தது. நல்ல மழை. நான் இருந்த அறையிலே விளக்கும் இல்லை. பாம்பேகூட நுழைந்துவிட்டது. அப்போதுதான் பயப்பட்டேன். இங்கு வந்த பிறகு, சங்கடமாகத் தோன்றவில்லை என்று கூறினார். இன்று மாலை, கடற்கரையில் பாராட்டுக் கூட்டம்! அதிலே கூடிடும் பெருந்திரளைக் காண்கிறேன்! மகிழ்ச்சி ஒகா திலே விழுகிறது! புன்னகை தவழும் முகங்களைக் காண்கிறேன்! எல்லாம் இங்கு இருந்தபடி. என் வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கிறேன். நாளை இதழ்களில், செய்தி பார்த்து, மகிழ வேண்டும். இன்றிரவு, அந்தக் கூட்டத்திலே, "அறிமுகம்’ செய்யப்பட்டு பாராட்டுப் பெறும், மாநகராட்சி மன்ற உறுப்பினர்களை எண்ணி மகிழ்ந்தபடி உறங்கச் செல்கிறேன். அன்புள்ள அண்ணாதுரை 20-9-1964 நாட்டு நிலை - பல நினைவுகள் 2-3-1964 தம்பி! "நலிவுற்றுக்கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்குப் புதுவலிவு ஊட்டும் மருத்துவர்’ என்று கொண்டாடப்படும் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் காமராஜர், எல்லா அரசியல் பிரச்சினைகளையும், சிக்கல்களையும், ஒதுக்கி வைத்துவிட்டு, சென்னை மாநகராட்சி மன்றத்திலிருந்து, தி. மு. கழகத்தை ஓட்டிக் காட்டுகிறேன், என் புகழை நிலைநாட்டுகிறேன் என்று சூளுரைத்துவிட்டவர்போல பம்பரம்போலச் சுழன்று, ஒருவார காலம், தேர்தல் காரியத்தைத் தாமே கவனித்தார்; மேடைகளிலே பேசுவது மட்டுமின்றி வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைக் கண்டு பேசினார். அவருடைய மிகப்பலமான முயற்சியை எதிர்த்து நின்று தி. மு. க. மகத்தான வெற்றியைப் பெற்றுக் காட்டிற்று; முசுலீம் லீகும் சுதந்திரக் கட்சியும் துணை நின்று, மக்களாட்சி முறைக்குப் புதிய தெம்பு ஏற்படச் செய்துள்ளனர்; இந்த மகத்தான நிகழ்ச்சியையும், இதிலிருந்து பெறத்தக்க அரசியல் கருத்துக்களையும் எடுத்துக்கூற, திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான நாவலர் பேசுகிறார்; அகில இந்திய முசுலீம் லீக் தலைவர் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் கருத்துரை வழங்குகிறார்; சுதந்திரக் கட்சிச் செயலாளர் மாரிசாமி சொற்பொழி வாற்றுகிறார். கழகச் செயலாளர் நடராஜன், சிற்றரசு, சத்தியவாணி ஆகியோருடன், கழகப் பொருளாளர் கருணாநிதியும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நல்லுரையாற்றுகிறார்கள், சென்னைக் கடற்கரையில், மிகப் பெரிய கூட்டத்தில். இதுபற்றிய செய்தியை, இந்நாட்டு இதழ்கள் எந்த முறையில் வெளியிட்டன என்பதை இன்று பார்த்தபோது உள்ளபடி மனம் நொந்துபோயிற்று. அரசியல் பண்பு இந்த அளவுக்கா பட்டுப் போய்விட வேண்டும். கழகம் வளருவதற்குத் துணைபுரியத்தான் மனமில்லை என்றாலும், வளர்ந்துவிட்ட கழகத்தை அதன் வளர்ச்சியின் அளவுக்கு ஏற்ற விதத்திலாகிலும் மதிப்பளித்து, பண்புள்ள அரசியலை, இந்த இதழ்கள் உருவாக்க வேண்டாமா? என்பதை எண்ணி மிக்க வேதனைப்பட்டேன். தமிழகத்தில் தனிப்பெரும் எதிர்க்கட்சியாக வளர்ந்துவிட்டிருக்கிறோம், மாநகராட்சி தேர்தலில் வெற்றி ஈட்டிக் காட்டினோம் என்றால், அந்த அளவுக்குப் பொதுமக்களின் நல்லாதரவு தொடர்ந்து தி. மு. கழகத்துக்குக் கிடைத்துக்கொண்டு வருகிறது என்பதல்லவா பொருள்? இந்த நிலை அடைந்துள்ள கழகத்தை, இன்னமும் தங்கள் கோபப் பார்வையாலும், அலட்சியப் போக்கினாலும், புருவத்தை நெரிப்பதாலும் பொசுக்கிவிடலாம் என்று எண்ணுவது எத்துணை பேதமை! கழகத்தை இழிவு படுத்துவதாக எண்ணிக்கொண்டு சில இதழ்கள் மேற்கொள்ளும் போக்கு உள்ளபடி மக்களாட்சி முறையை, மக்களை, இழிவு படுத்துவதுதானே! கழகத்துக்கு ஆதரவு தரும் பல இலட்சக் கணக்கான மக்களை, கேவலம் என்று கருதும் போக்குத்தானே இது? இதனை மக்கள் எண்ணிப் பார்க்கமாட்டார்களா? என்பது பற்றி எல்லாம், நாங்கள் இங்கு பேசிக்கொண்டோம். மொழி காத்திடும் தூயநோக்குடன், தன்னைத்தானே தீயிலிட்டுக் கொண்ட தியாகச் செம்மல் சின்னசாமி பற்றி, நாலு நல்ல வார்த்தை எழுதக்கூட மனம் வரவில்லையே இந்த இதழ்களுக்கு! தியாகத்தைக்கூட அல்லவா, பழிக்கிறார்கள் என்று எண்ணி மிக்க வேதனையுற்றோம். நான் சொன்னேன். "இதழ்களில் சின்னசாமி இடம் பெறாமலிருக்கலாம்; ஆனால் தமிழ் உணர்வு உள்ளோர் இதயங்களிலெல்லாம், இடம்பெற்றுவிட்டான் - சின்னசாமி உயிருடன் இருந்த நாட்களில் கழகத்திலுள்ள பல இலட்சம் இளைஞர்களில் ஒருவன் - குறிப்பிடத்தக்க நிலையைக் கழகத்தில் பெற்றவனாகக்கூட இருந்ததில்லை - ஆனால் தியாகத் தீயில் குளித்த அந்தத் தீரன் இன்று கழக வரலாற்றிலே மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலேயே ஓர் உன்னதமான இடத்தைப் பெற்று விட்டான் - இதழ்கள் அந்த இணையற்றவனைப் பற்றி எழுதாவிட்டால் என்ன, அவன் தன் பெயரை வரலாற்றிலே பொறித்துவிட்டான்’’ என்று கூறினேன். காங்கிரஸ், இயக்கம் நடத்திய நாட்களில், இதழ்கள் கொடுத்து வந்த சிறப்பிடத்தை விளக்கும் சம்பவங்களில், எனக்குத் தெரிந்த சிலவற்றை எடுத்துச் சொன்னேன். நம்முடைய இயக்கம் நடாத்தும் அறப்போர்பற்றி, இதழ்கள் காட்டும் இருட்டடிப்பு மனப்பான்மை, நமது கழகத்துக்கு ஊறு உண்டாக்காது; ஏனெனில் நமது தோழர்கள் பலப் பல ஆண்டுகளாக இந்த இருட்டடிப்பைக் கண்டு, முதலில் வெகுண்டு, பிறகு அந்தப் போக்கைப் புரிந்துகொண்டு, இப்போது அதனைப் பொருட்படுத்தாத நிலையைப் பெற்றுவிட்டனர். நம்முடைய செய்திகள், நம்முடைய இதழ்களிலேதான், செம்மையான முறையிலே வெளியிடப்படும் என்ற பொது உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்; ஆகவே பத்திரிகைகளின் இருட்டடிப்பினால், கழகத்துக்கு எந்தக் கேடும் வந்துவிடாது; ஆனால், இந்த இதழ்களிலே பல, இந்தி ஆதிக்கம் கூடாது என்ற கருத்து கொண்டுள்ளன; அந்தக் கருத்துக்கு மதிப்பு அளிப்பதானால், இந்தி எதிர்ப்பு உணர்ச்சி தமிழகத்திலே எவ்விதம் கொழுந்துவிட்டு எரிகிறது என்பதை, இந்தி ஆதிக்கக்காரர்கள் உணரும்படியாக, செய்திகளை வெளியிட வேண்டாமா? அவ்விதம் செய்திகள் வெளிவந்தால்தானே டில்லி அரசு, மொழி விஷயமாகக் கொண்டுள்ள போக்கிலே மாறுதல் ஏற்படும்? ஏனோ இந்த இதழ்கள், இதனைக்கூட, உணர மறுக்கின்றன. விளக்கமளிக்கும், வாதத்தன்மை மிக்க ஆயிரம் தலையங்கங்கள் தீட்டி டில்லியின் போக்கை மாற்ற முயற்சித்தாலும் அடைய முடியாத வெற்றியை, இந்த இதழ்கள் தீக்குளித்த சின்னசாமியின் படத்தைத் தமது இதழ்களில் வெளியிட்டு, அந்தச் சம்பவம் காட்டும் பாடத்தை பண்டித நேரு உணரும்படி செய்திருந்தால், மொழிப் பிரச்சினையிலே மகத்தான வெற்றி ஏற்பட்டிருக்குமே; கழகத்தின்மீது உள்ள கசப்பினால் - காரணமற்ற கசப்பினால் - இதழ்கள் பெறவேண்டிய வெற்றியையுமல்லவா இழந்துவிட்டன - நாட்டுக்கே பெரிய நட்டமல்லவா இது என்று பேசிக்கொண்டோம். இதிலிருந்து, எங்கள் பேச்சு பொதுவாக இந்தி எதிர்ப்புப் பிரச்சினைபற்றித் தொடர்ந்தது. தமிழகத்திலே ஆச்சாரியார் அமைச்சர் அவையின்போது நடைபெற்ற இந்தி எதிர்ப்பின்போது, தமிழ்ப் புலவர்கள் பலரும் சீரிய பங்கெடுத்துக்கொண்டனர். இம் முறை அந்த அளவுக்கு இல்லையே, ஏன்? என்பதுபற்றி யோசித்தோம். அப்போது, உண்மைக்காகப் பரிந்து பேசுபவருக்கு உத்தியோகம் போய்விடாது என்ற நிலைமை இருந்தது. இப்போது, "வணக்கம்’ என்று கூறிடும் தமிழ் ஆசிரியர்களுக்கே, வந்தது ஆபத்து என்ற நிலை இருக்கிறதே, அதனால்தான், அவர்கள் மனம் எவ்வளவு துடித்தாலும், இந்தி எதிர்ப்பிலே ஈடுபட முடியாது இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டிவிட்டு, இந்த நிலையிலும், ஔவை துரைசாமிபோன்ற அருந்தமிழ்ப் புலவர்கள், தீக்குளித்த சின்னசாமி குறித்து எழுச்சியுடன் பாடல் புனைந்து வெளியிட்டுள்ளனர். அந்தப் பாடல்களைப் பன்முறையும் படிக்கலாம். படிக்கப் படிக்க, பட்ட மரம் துளிர்ப்பதுபோல, மொழிப்பற்றற்ற நிலை பெற்றவர்கட்கும் மொழி ஆர்வம் ஏற்படும் என்று சொன்னேன். மாலையில், கழக உறுப்பினர்கள் சேர்ப்பது, அமைப்புகளில் புதுமுறுக்கு ஏற்படுத்த வழி காண்பது, மாநாடுகள் நடத்துவது ஆகியவைபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம், கழகம் வளர்ந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் ஒருவர் செயலாளராகப் பணியாற்றுவது, அநேகமாக இயலாததாகிவிடுகிறது. இனி வட்டச் செயலாளர்கள் அதிக பொறுப்புக்கள் அளிக்கப்பட்டு, பணியாற்ற நமது கழக விதிமுறைகளில் வழி செய்ய வேண்டும் போலத் தோன்றுகிறது என்று நான் கூறி, இதுபற்றி நன்றாக யோசித்து, நல்ல கருத்துக்களைத் தாருங்கள் என்று நண்பர்களைக் கேட்டுக்கொண்டேன். கிளைக் கழகங்களுக்கும் துணை மன்றங்களுக்கும் உள்ள தொடர்புகள், சில இடங்களில் அந்தத் தொடர்பு பலனைத் தரும் முறையில் இருப்பது, சில இடங்களில் வெறும் போட்டிக்குக் களமாக இருப்பது ஆகியவைபற்றிப் பேசினோம். இரண்டு நிலைகளுக்கும் எடுத்துக்காட்டுகள் உள்ளன என்பது, பேசும்போது நன்றாகப் புரிந்தது. இன்று மாலை, பரிமளம் என்னைக் காணவரக்கூடும் என்று எதிர்பார்த்தபடி இருந்தேன். வரவில்லை. வெங்காவைக் காண அவர்கள் வீட்டிலிருந்து வந்திருந்தார்கள். பரிமளம் வராமற் போனதுபற்றிய வருத்தம், வெங்கா, தன் வீட்டாரைக் காணச் சென்றபோது, அதிகமாயிற்று, ஒரு கணம். பிறகு நானே வெட்கப்பட்டுக்கொண்டேன். என்னை விட எவ்வளவோ இளமைப் பருவத்தில் உள்ளவர் வெங்கா. அவருக்கு ஆவல் எழுவதைவிட, எனக்கு எழுவது கூடாதல்லவா! ஆகவே, சரி இன்று இல்லாவிட்டாலும். நாளை பரிமளம் வரக்கூடும் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். நாளையத் தினமிருந்து, நாங்கள் இங்கேயே சமைத்துக் கொள்வது என்று ஏற்பாடாகி இருக்கிறது. அதற்கான பாத்திரங்கள் தரப்பட்டுள்ளன. நாளைக் காலையில், “பைல்’ - அதாவது கைதிகளை அதிகாரிகள் வரிசையாக நிற்கவைத்துப் பார்வையிடும் நாள். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்தத்”திருநாள்’. நான் இருக்கும் இடத்தில் இருந்தபடியே, இன்று, உறவினரைக் காணச் சென்ற, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமியைக் கண்டேன். சிரித்த முகத்துடன்தான் காணப்பட்டார் - ஆனால் மனதுக்குள் என்னை நிச்சயமாகத் திட்டிக்கொண்டிருந்திருப்பார்! மெத்தவும் ஒதுங்கிப்போகும் ஆசாமி! இந்தத் தேர்தலிலேயே, நான் வலுக்கட்டாயப்படுத்தி, அவரை நிற்கச் செய்தேன்; நமக்கு எதற்கு, நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கிவிடுபவரை, தேர்தல் களத்திலே இறக்கிவிட நான் வெகுபாடுபட்டவன். அத்தகைய ஆசாமி சிறையில்? அவரோ, அவருடைய குடும்பத்தினரோ, கனவிலேகூட இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று நினைத்தே இருக்கமாட்டார்கள். அவருடைய மைத்துனர் ஏ! அப்பா! பெரிய காங்கிரஸ்காரர்!! அமைச்சர் பக்தவத்சலத்தின் பல வலது கரங்களில் ஒருவர். ராமசாமி சிறைபுகும் அளவுக்கு நான் அவரைக் கெடுத்துவிட்டேன் என்றுதான் அவர்களெல்லாம் எண்ணிக்கொள்வார்கள். ஆனால் உண்மையைச் சொல்லுகிறேன், சிறைக்குச் செல்லும்படி நான் ராமசாமியிடம் கூறினதே இல்லை. மொழி ஆர்வத்தால் எழுந்துள்ள சூழ்நிலை வேகம், அவரை, இங்குக் கொண்டுவந்து தள்ளிவிட்டது - அவ்வளவே. மாநகராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற லோகநாதன், இங்கு இருக்கிறார், அல்லவா! அவரை இன்று காணும் வாய்ப்பு கிடைத்தது. அதிகாரியிடம், அதற்கான அனுமதியை அவர் எப்படியோ பெற்றிருக்கிறார். அவரைக் காண, இன்று என்னை, வேறோர் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். “சி’ வகுப்பு உடையில் லோகநாதன் இருந்தார் - நானும் கைதி உடையில்தான் - அவர் அரைக் கை, அரைக் கால் - எனக்கு முழுக் கை; முழுக்கால் சட்டை! என்னைக் கண்டதும் உணர்ச்சி வயப்பட்டு, காலைத் தொட்டு வணக்கம் செய்தார் - என் மனம் மெத்தவும் உருகிவிட்டது. சில விநாடிகள் பேசிக்கொண்டிருந்தோம்.”கார்ப்பரேஷன் கவுன்சிலர்’ ஆகிவிட்டதால், ஒரு சமயம் இன்னும் ஒரு வாரத்தில், “பி’ வகுப்பு தரப்படக்கூடும் என்று நான் சொன்னேன் -”பரவாயில்லை அண்ணா! இன்னும் சில மாதங்கள்தானே - "சி’ வகுப்பிலேயே இருந்துவிடுகிறேன்’’ என்று லோகநாதன் சொன்னபோது, எத்துணை எழுச்சியும் கடமையுணர்ச்சியும் கொண்ட பண்பாளர்கள் இந்தக் கழகத்திலே இருக்கிறார்கள் என்பதுபற்றி எண்ணிப் பெருமிதமடைந்தேன். அந்த மகிழ்ச்சியுடன், இன்று துயிலச் செல்கிறேன் - காலையிலே எழுந்து ஒழுங்காகக் கைதி உடை உடுத்திக்கொண்டு, அடக்கமாக, வரிசையில் நிற்கவேண்டுமே - கைதி என்பதற்கான பில்லையுடன். 3-3-1964 இன்று “கைதிகளை’ சிறை அதிகாரிகள் பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முன்பு நான் சிறைப்பட்டிருந்த போது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதிலிருந்து எனக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த நினைவு வந்தது. இம்முறைதான், சிறையில் புதிய நிர்பந்தங்களாயிற்றே - ஆகவே, நானும் மற்றக் கைதிகளுடன் வரிசையில் நின்றேன். சிறை அதிகாரிகள் நடத்தும் இந்தப் பார்வையிடும் நிகழ்ச்சி, ஓரளவு”ராணுவ’ முறைபோலவே அமைந்திருக்கிறது. கைதிகளின் உடைகள், பயன்படுத்தும் தட்டுகள், குவளைகள் இவைகள் ஒழுங்காக்கப்பட்டு, கைதிகளும் “சுத்தமாக’ இருக்கும் நிலை ஏற்படுகிறது. மிக முக்கியமாக, கைதிகள் தங்களுக்குத் தரப்பட்டுள்ள எண் குறிக்கப்பட்டுள்ள பில்லைகளை பளபளப்பாக்கிக்கொள்கிறார்கள். எனக்குத் தரப்பட்டுள்ள”பில்லை‘யின்படி நான் கைதி எண் 6342, சுந்தரம் 6343, பொன்னுவேல் 6344, வெங்கா 6345, பார்த்தசாரதி 6346 - ஐவரல்லவா அறப்போரின் முதல் அணி! இன்று சுந்தரம் “முகக்ஷவரம்’ செய்துகொள்ளாதிருந்தது கண்டு சிறை மேலதிகாரி, வேடிக்கையாக,”என்ன திருப்பதி போகப்போகிறீரா?’’ என்று கேட்டுவிட்டுச் சென்றார். வழக்கமான நிகழ்ச்சிகள் பிறகு தொடங்கின. அன்பழகன், முன்னாள் இரவு திருக்குறள் ஆராய்ச்சி நடத்தியதில் சிலபற்றி எடுத்துரைத்தார். “பலர் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார்கள் என்றாலும், நுண்ணறிவுடன் மேலும் பல உரைகள் எழுதுவதற்கான வாய்ப்பும் தேவையும் இருக்கிறது’ என்பது, அன்பழகன் பேசும்போது தெரிகிறது. பொதுவான”உரை’யில், ஒருவர் எழுதுவதற்கும் மற்றவர் எழுதுவதற்கும் அதிகமான அளவு மாறுபாடு இல்லை - இருக்க முடியாது - என்றாலும், சில இடங்களில், சிறப்புரையும் புதுமை உரையும் பெற வழி இருக்கிறது. ஏனோதானோவென்றோ, எடுத்தேன் கவிழ்த்தேன் என்றோ, வலிந்து பொருளையும் கருத்தையும் திணித்தோ உரை எழுதக்கூடாது. புதுமைக் கருத்து கூறுவதாயினும், பொருத்தம் பார்த்து, கற்றோர் ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான் என்று கூறத்தக்க முறையில் அமைய வேண்டும் என்பதிலே, அன்பழகன் மிகுந்த அக்கறை காட்டுகிறார். குறளில் வரும் "தென்புலத்தார்’ எனும் கருத்து குறித்துப் பேசத் தொடங்கிய நாங்கள், தமிழர்கள் பிறநெறியை எப்போது, ஏன், எவ்வகையில் கொண்டனர் என்பது பற்றி. ஆராயலானோம். தமிழக வரலாற்றுத் துணுக்குகள்பற்றிய பேச்சு சுவை அளிப்பனவாக இருந்தன. நான்கு நாட்களாக, படித்துக்கொண்டிருக்கும் சட்டம் பற்றிய வரலாற்று ஏடுபற்றிக் குறிப்பிட்டு, மனு தர்ம சாஸ்திரம் சட்ட திட்டங்களைக் குறிப்பிடுவதுபற்றியும், அதிலே உள்ளவைகள் சாதி ஆதிக்கத்துக்குத் துணை செய்வதாக இருந்தபோதிலும், சட்டம் அந்த நாட்களில் எந்த முறையில் இருந்தது என்பதை அறிய வாய்ப்பளிக்கிறது என்பதையும் எடுத்துக்கூறி, தமிழகத்தில், சட்ட திட்டம் இவ்வாறு இவ்வாறு இருந்தது என்பது தெரியத்தக்க விதத்தில் ஒரு தனிநூல் இல்லையே என்று கூறினேன். சங்க காலத்தில், நீதி, சட்டம் இவை எங்ஙனம் இருந்தன என்பதுபற்றி, சட்டக் கல்லூரிப் பேராசிரியர் பழனிச்சாமி எனும் நண்பர் ஆராய்ந்துகொண்டிருப்பதாக மதியழகன் சொன்னார். மிகத் தேவையான ஆராய்ச்சி! பழனிச்சாமி அதற்கான நூல் வெளியிட்டால், மிக்க பயன் அளிப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை. “மனுநீதி கண்ட சோழன், மனு தர்ம சாஸ்திரத்தை மேற்கொண்டு நடந்தானென்று தெரிகிறதே, அப்படியாயின் மனு தர்மத்தைத் தமிழ் அரசு ஏற்றுக்கொண்டுவிட்டதாகத்தானே பொருள்படுகிறது’ என்று மதியழகன் கேட்டார். அன்பழகன்”உள்ளபடி ஆராய்ந்து பார்த்தால் அந்தச் சோழன், மனு தர்மத்தின்படி நடக்கவில்லை என்பது தெரியும். கன்று, தேர்க்காலில் சிக்கி இறந்ததற்கு, மனு போன்றார் கூறிடும் "தர்மம்‘, பொன்னாலே கன்று செய்வித்து, அதனைப் “பிராமணர்களுக்கு’ தானமாகத் தருவதுதான்! ஆனால் மன்னன் அதைச் செய்யவில்லை; மகனையே தேர்க்காலின் கீழ் இருந்து இறந்திடச் செய்தான்’’ என்றார். மனுநீதி கண்ட சோழன் என்று கூறுவதைவிட, மனுநீதி கொன்ற சோழன் என்பதே பொருந்தும் என்றார். எனக்கு இது சாமர்த்தியமான சமாதானமாகப்பட்டதேயன்றிச் சரியான விளக்கமாகப் படவில்லை. நான் சொன்னேன்,”நமது முன்னோர்கள், பழந் தமிழர்கள், பிறநெறியாளரின் முறைகளை, ஆரிய சட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டதே இல்லை. ஆகவே அவை நமக்கு இப்போதும் வேண்டாம் என்று வாதாடி, எவரேனும் ஒருவர், ஏதேனும் ஓர் ஏட்டிலே ஒரு இடத்தை விளக்கிக் காட்டி, நீங்கள் கண்டிக்கும் முறைகளைத் தமிழர்கள் முன்பு கொண்டிருந்தனர் காணீர் என்று இடித்துரைத்து, நாம் அதற்கு ஒரு சமாதானம் தேடிக்கொண்டு இருப்பதைவிட, தேவையற்ற, பொருளற்ற, பொருத்தமற்ற, நெறிமுறை, சட்டதிட்டம் முன்பே தமிழ்ச் சமுதாயத்தில் இருந்திருந்தாலும், அவை நமக்கு வேண்டுவதில்லை என்று கூறுவதுதான், வீணான சிக்கலுக்குள் நம்மைச் சிக்கவைத்துக்கொள்ளாத முறை. நாம் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, சில முறைகள் முன்பே இருந்தனவா இடையிலே நுழைந்தனவா என்பது பற்றி அல்ல; அவை தேவையா வேண்டாமா என்பதுதான்’’ என்று கூறினேன். பிறகு, வழக்கம்போல், இதழ்கள் தரப்பட்டன. அவைகளைப் படித்து, செய்திகள்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சின்னசாமியின் தியாகம் பற்றி, நமது கழகத் தோழர் ராமசாமி சட்டசபையில் பேசியிருந்ததைப் படித்தபோது, கண்களில் நீர் துளிர்த்தது. மற்றோர் இளைஞன் இதுபோலச் செய்யப்போவதாக அறிவித்திருந்ததாகச் செய்தி கண்டேன்; திடுக்கிட்டுப் போனேன். "இருந்து அநீதியை எதிர்த்துப் போராட வேண்டும்; இறந்துவிடுதல் தேவையற்ற முறை; அத்தகைய எண்ணம் ஏற்படவிடக்கூடாது’’ என்று இங்கு நண்பர்களிடம் கூறினேன். வேறோர் இளைஞன் சட்டமன்ற நுழைவு வாயிலில் நின்றுகொண்டு, என்னை விடுதலை செய்ய வேண்டும் என முழக்கமிட்டதாகவும், அதற்காகக் கைது செய்யப்பட்டதாகவும் பத்திரிகையில் கண்டேன். இதுவும் தேவையற்ற செயல். நானும் நண்பர்களும், சிறையில் அடைபட்டுக் கிடப்பதன் மூலம், தமிழர்களின் சிந்தனையைக் கிளறி, மொழி ஆதிக்க எதிர்ப்புணர்ச்சியை எழச் செய்யலாம் என்று நம்பி, கம்பிகளுக்குப் பின்னால் கிடக்கிறோம். மொழி ஆதிக்கத்தின் கேடுகளை மற்றவர்கள் உணரும்படியாகப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டுவது முறையேயன்றி, எங்களை "விடுதலை’ செய்யச் சொல்லி முழக்கமிடுவதும், கிளர்ச்சி செய்வதும் முறையுமல்ல, தேவையுமில்லை. தூத்துக்குடியில் அரசியல் சட்டத்தைக் கொளுத்திய இளமுருகுபொற்செல்வி குழுவினரின் வழக்கு, மிக துரிதமாக முடிவுற்றது, மகிழ்ச்சிகரமான செய்தி. ஆறுமாதக் கடுங்காவல் விதிக்கப்பட்டிருக்கிறது. இளமுருகு ஆசிரியராகப் பணியாற்றியவர்; பொதுத்தொண்டில் நீண்டகாலமாக உள்ளவர். அவருக்கு "சி’ வகுப்புதான் என்று விதித்திருப்பது, நாம் காங்கிரசாட்சியில் இருக்கிறோம் என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது. இன்று பிற்பகல், நாங்கள் இங்கேயே சமைத்துக் கொள்வதற்கான ஏற்பாட்டின்படி சமையலுக்குத் தேவையான பண்டங்கள் எவ்வளவு அளிக்கப்படும் என்பதற்கான "பட்டியல்’ பார்த்தசாரதியிடம் தரப்பட்டது. பட்டியலைக் காண்பதற்காகத் தந்திருக்கிறேன். எங்கள் எழுவருக்கு இரண்டு வேளை சாப்பாட்டிற்கும் காலை சிற்றுண்டிக்கும் சேர்த்து, ---------------- ------------- கிலோ கிராம் அரிசி 1 - 610 கோதுமை 0 - 805 பருப்பு 1 - 190 புளி 0 - 210 மிளகாய்த்தூள் 0 - 40 உப்பு 0 - 280 வெங்காயம் 0 - 210 காய்கறி 1 - 610 உருளைக்கிழங்கு 0 - 420 கடுகு 0 - 070 மிளகு 0 - 070 நல்லெண்ணெய் 0 - 210 சர்க்கரை 0 - 210 காபிதூள் 0 - 105 பால் - லிட். 2 - 094 நிலக்கடலை 0 - 420 நெய் 0 - 210 விறகு 6 - 370 ---------------- ------------- இன்று மாலை சிறை மேலதிகாரி எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாளையத் தினம், சட்டமன்ற உறுப்பினர் ராமசாமியை எங்களோடு கொண்டுவந்து சேர்த்துவிடப் போவதாகத் தெரிவித்தார். நமது கழகத் தோழர்களின் எண்ணிக்கை செங்கற்பட்டு மாவட்ட அறப்போர் வீரர்களின் வருகையால் வளருகிறது. இப்போது நாங்கள் இருக்கும் "பகுதி’ இனிப் போதாது என்று தெரிகிறது. இன்னும் சில நாட்களில் வேறு பகுதிக்கு மாற்றுவதாக மேலதிகாரி தெரிவித்தார். இன்று மாலையும் பரிமளம் வரவில்லை; எதிர்பார்த்திருந்து ஏமாற்றமடைந்தேன். சட்டப் புத்தகம் படித்துக் குறிப்பெடுத்தேன் - "வரவு - செலவு’ என்ற சிறுகதை ஒன்றும் எழுதினேன். நிரம்பப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன; கிடைக்கும் வழிதான் தெரியவில்லை! வெளியிலேயே, நான் இரவு நீண்ட நேரம் தூக்கம் பிடிக்காமல் விழித்திருப்பது வாடிக்கை. சிறையில் சொல்ல வேண்டுமா? இரவு இரண்டு மணி வரையில் படித்துக் கொண்டிருக்க ஏடு தேவை! கிடைப்பதில்லை! கிடைக்கும் ஏடுகளை, பண்டங்களைச் சிறுகச்சிறுக உபயோகப்படுத்துவது போல ஒரேயடியாகப் படித்து முடித்துவிடாமல், விட்டு விட்டுத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். சிறையில் - குறிப்பாக நான் இருக்கும் பகுதியில், எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் - நானோ, துயிலலாம் என்று படுக்கையில் படுத்தாலும், தூக்கம் பிடிக்காமல், புரண்டபடி இருக்கிறேன். விளக்கு எப்போதும் எரிந்தபடி இருப்பதால், பக்கத்திலேயே புத்தகமும் மூக்குக்கண்ணாடியும் வைத்துக்கொண்டிருக்கிறேன், தூக்கம் வர மறுக்கிறது என்றால் படித்திட. படிக்காமல் படுத்திருக்கும் நேரத்திலெல்லாம், வெளியே உள்ள நமது தோழர்களைப்பற்றி எண்ணியபடிஇருக்கிறேன். 4-3-1964 சட்டசபை உறுப்பினர் ராமசாமி இங்கு கொண்டுவரப் பட்டதால், இன்று என் அறையில் தோழர்கள் பொன்னுவேல், வெங்கா இருவரும் தங்கியுள்ளனர். இருவருமே, அதிகமாகப் பேசும் பழக்கம் உள்ளவர்கள் அல்ல. வேலூர் சிறையில் பொன்னுவேல் என்னுடன் ஒரே அறையில் இருந்திருக்கிறார். நாங்கள் வேலூரில் இருந்தபோது, பிரிவினைக் கொள்கையை ஒடுக்க சர்க்கார் மேற்கொள்ளப்போகும் திட்டம்பற்றிய செய்திகள் இதழ்களில் வந்திருந்தன, பல இரவுகள் அது குறித்து நான் பேசி வந்தேன். மாணவர்கள், கொள்கைத் துடிப்புள்ள இளைஞர்கள் ஆகியோருடைய நோக்கம், கருத்து குறித்து பொன்னுவேல் மெத்த ஆர்வத்துடன் பேசுவார். பல இரவுகள் இந்தப் பிரச்சினைபற்றி வேலூர் சிறையில் பேசிப் பேசி, தெளிவும் நடைமுறைக்கு ஏற்றவை எவை என்பதுபற்றிய வேலைத்திட்ட விளக்கமும் கிடைக்கப்பெற்றோம். பொன்னுவேல் - வெங்கா போன்றவர்கள் இளைஞர்கள். மண வாழ்க்கையின் பொலிவு களையும் பொறுப்புகளையும் மேற்கொள்வதிலே ஆர்வம் கொள்ளவேண்டிய வயதினர். ஆனால் மொழிப்பற்றும், ஆதிக்க எதிர்ப்புணர்ச்சியும் அத்தகையவர்களைச் சிறைபுகச் செய்திருக்கிறது. நல்ல ஆர்வத்துடன், தூய்மையான எண்ணத்துடனும், அழுத்தமான நம்பிக்கையுடனும், இந்தத் தொண்டில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். அரக்கோணம் ராமசாமி, சிறைக்குப் புதியவர் - சிறையிலே காணப்படும் முறைகளையும், நிலைமைகளையும் பார்த்துத் திடுக்கிட்டுப் போயிருக்கிறார். “முதலிலே பயமாக இருந்ததா?’ என்று கேட்டதற்கு சற்று தயக்கத்துடன்”ஆமாம்! முதல்நாள் கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது’’ என்று கூறினார். நம்மிலே பலர் கருதுவதுபோலவே நண்பர் ராமசாமியும், அரசியல் கைதிகளை, மற்றக் கைதிகளைப்போல அல்லாமல், தனிவிதமாக நடத்த வேண்டும் என்று எண்ணுகிறார் - அவருக்கு இந்தச் சிறை அனுபவம், பல புதிய கருத்துக்களைத் தரும் என்பதில் ஐயமில்லை. இன்று மாலை, அவருடைய தம்பி வந்திருந்தார் - ராமசாமியைக் கண்டதும் அழுதேவிட்டாராம். இதை ராமசாமி என்னிடம் சொன்னபோது, அவரே ஓரளவு கலங்கித்தான் போயிருந்தார். பொன்னுவேலுவைக் காண அவருடைய தம்பி வந்திருந்தார். பரிமளத்துக்கு இப்போது பரீட்சை நேரமென்றும், அதனால்தான் என்னைக் காண வரமுடியவில்லை என்றும், எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இன்று எங்கள் பகுதியில் நாங்களே சமைத்துக் கொண்டோம். நீண்ட பல நாட்களுக்குப் பிறகு, சில்லிட்டுப் போகாத சோறும் சாறும் உண்டு மகிழ்ந்தோம். சமையல் வேலையில் சிறிதுநேரம் பார்த்தசாரதிக்குத் துணையாக இருந்தேன். சட்ட வரலாறுபற்றிய புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். அதன் தொடர்பாகப் படித்தாகவேண்டிய புத்தகங்களைத் தருவித்துக் கொடுக்கும்படி பொன்னுவேலிடம் சொன்னேன். அவர், தன் தம்பியிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார். நான் படித்து முடித்த புத்தகம், ஒரு முறை படித்தால் போதும் என்ற முறையில் உள்ளதல்ல, மறுமுறையும் படிக்க எண்ணிக்கொண்டிருக்கிறேன். "அடக்குமுறை’ பற்றிய புத்தகம், காணாமற்போய்விட்டதாக, சிறை அதிகாரிகள் சொல்லி இருந்தார்களல்லவா? திடீரென்று, இன்று மாலை, அந்தப் புத்தகத்தை அவர்களே கொடுத்தனுப்பினார்கள். ஏதாவது ஒரு புத்தகம், எங்களிடம் கொடுக்கப்படக் கூடியதா அல்லவா என்ற ஐயம் இங்குள்ள அதிகாரிகளுக்கு ஏற்பட்டுவிட்டால், அவர்கள் அந்தப் புத்தகத்தை, சர்க்காருக்கு அனுப்பி அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்டறிந்து அதன்படி நடக்கிறார்களாம். இப்படி ஒரு விளக்கம் - அதிகாரிகளால் அல்ல - எனக்கு அளிக்கப்பட்டது. சிறை அதிகாரிகளுக்கு, ஏடுகளைப் படிக்க நேரமும் கிடைக்காது; நினைப்பும் எழாது - மற்ற எந்த ஏடுகளாக இருப்பினும், உடனே கொடுத்துவிடலாம். புத்தகங்கள் தருவதிலே இத்தனை கண்டிப்பும், தடைகளும் இருக்கத் தேவையில்லை - அதிலே பொருளும் இல்லை. சிறையிலே புத்தகங்கள் தருவதிலே இவ்விதமான முறையும் தடையும் இருக்கிறது. ஆனால் இன்று பத்திரிகையில் ஒரு செய்தி பார்த்தேன் - அறிவுக்குத் தடை விதிக்கும் அக்ரமத்தை எவரெவரெல்லாம் கண்டிக்கிறார்கள் என்பதற்கான சான்று, அந்தச் செய்தி மூலம் கிடைத்தது. வழுக்கி விழுந்தவளைப்பற்றிய ஏடொன்று, ஆபாசமானதாக இருக்கிறது என்று அமெரிக்க நீதிமன்றம் கூறிவிட்டது. ஆனால், இப்படி ஒரு ஏடு, ஆபாசமானது என்று கருதி தடை விதிப்பது முறையாகாது என்ற கருத்துக்கொண்ட கிறித்தவ தேவாலய அதிபர் ஒருவர், அந்த ஏட்டினைத் தமது தேவாலயம் வருபவர்களுக்குத் தந்து படிக்கச் சொல்லப்போவதாகவும், அதிலே உள்ளதுபோன்ற கருத்தோவியங்கள் பல பைபிள் புத்தகத்திலேயே இருப்பதுபற்றிப் பேசப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இங்குச் சிறையிலோ, தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் அல்ல, வரலாறுகூட அய்யப்படத்தக்க புத்தகமாகத் தெரிகிறது. அவர்கள்மீது குற்றம் இல்லை - அவர்களுக்கு தொகுதி ஐந்து 239 இவ்விதமான “கண்டிப்புடன்’ நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிற சர்க்காரின் போக்கிலேதான் குற்றமிருக்கிறது. பண்டித ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்தபோது - அகமத் நகர் கோட்டைச் சிறையில் - இலண்டனில் உள்ள அவருடைய நண்பர்கள் பல புத்தகங்களைக் கொடுத்தனுப்பினார்களாம் - அந்த ஏடுகள் சிறையில் நேருவிடம் தரப்பட்டன. இலண்டனிலிருந்து அந்தப் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு வந்து, சிறையில் இருந்த நேருவிடம் அனுப்பிவைத்தவர் யார் என்றால், வைசிராய் வேலை பார்க்க வந்த வேவல் பிரபு. வெள்ளைக்காரனுக்கு அந்தத் தாராளத்தன்மை இருந்தது என்பதை துரைத்தனத்தில் பெரிய பதவி வகித்திருந்த எச். ஆர். வி. அய்யங்கார் என்பவர் இந்த வாரம் ஒரு கட்டுரையில் விளக்கி இருந்தார். அதனையும் சிறையிலே படித்தேன். சிறையில் புத்தகங்கள் தருவதிலே மேற்கொள்ளப்படும்”கெடுபிடி‘யையும் காண்கிறேன். "சுயராஜ்ய’ சர்க்காரிடம் பரிவா ஏற்பட முடியும்!! இன்று பிற்பகல், "அவை அறிதல்’’ பற்றியுள்ள குறள்பற்றி, அன்பழகன் தனக்குத் தோன்றிய சில கருத்துக்கள் குறித்து, என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். இன்று மாலை, வழக்கம்போல் எங்கள் பகுதி நுழைவு வாயிலருகே, உட்கார்ந்துகொண்டிருந்தேன்; மூன்று புறாக்கள் ஒயிலாக உலவிக்கொண்டிருக்கக் கண்டேன். புறாக்களை வளர்ப்பதிலும் அவைகளுடன் விளையாடிக்கொண்டிருப்பதிலும் எனக்கு மிகுந்த விருப்பம் என்பது பலருக்குத் தெரியும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, புறாக்களைக் கண்டபோது ஓடிச் சென்று அவைகளைப் பிடித்து வைத்துக்கொண்டு விளையாடலாமா என்றுகூடத் தோன்றிற்று. சிறை அதிகாரிகளிலே ஒருவருடைய புறாக்கள் அவை என்று கூறினார்கள். எங்களிடம் சிறை அதிகாரிகள் நடந்துகொள்ளும் முறையும், அதற்கான காரணமும்தான் எனக்குத் தெரிந்திருக்கிறதே! இந்நிலையில் புறாக்களைக் கேட்டால் கொடுக்கவா சம்மதிப்பார்கள். கொடுத்தால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் வெளியே வளர்க்கும் புறாக்கள் என்னிடம் மிக அன்பு காட்டும்; என் கரத்திலும் தோட்களிலும் தொத்திக்கொண்டு தீனி தின்பதிலே அவைகளுக்கு மிகுந்த விருப்பம். இங்கு, புறாக்கள் வளர்த்திட அனுமதி கிடைத்தால், மிக மகிழ்ச்சி அடைவேன். நாங்கள் இருக்கும் பகுதியில், பூனைகளும் அதிகமாக இல்லை; ஒரே ஒரு பூனைதான் உலவிக்கொண்டிருக்கிறது. அழகான பூனை, சாமான்கள் கிடங்கிலே இருக்கும் பூனை, மிகச் செல்லமாக வளர்க்கப்படுகிறது. ஆகவே அது வேட்டையாடும் போக்கைக் கூட மறந்துவிட்டது. காலையும் மாலையும், அசைந்து அசைந்து நடந்து வரும்; புல்வெளிப்பக்கம் சில விநாடிகள் உலவிவிட்டு பொறுப்புள்ள அதிகாரி தமது அலுவலைக் கவனிக்கச் செல்வதுபோல, கிடங்கு சென்றுவிடும். ஆகவே புறாக்களுக்குப் பூனையால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கூட இருக்காது; ஒரே ஒரு ஆபத்து - பெரிய ஆபத்து - இருக்கிறது! இங்குதான் பொன்னுவேல் இருக்கிறார். நான் சிறிது ஏமாந்திருந்தால் புறா, ஏப்பமாக மாறிவிடக்கூடும். அந்த ஒரு பயம்தான். வீணான எண்ணங்கள்!! சிறை அதிகாரிகளாவது எங்களுக்கு மன நிம்மதிக்கான உதவிகளைச் செய்வதாவது!! அன்புள்ள அண்ணாதுரை 1-11-1964 அடக்குமுறை - குறள் - சிறை நிலை! தம்பி! வேலூர் சிறையில் நாங்கள் இருந்த பகுதியில், நூற்றுக்கணக்கான கிளிகள்! பெரிய பெரிய மரங்கள் அங்கு. அவைகளிலே பொந்துகளை அமைத்துக்கொண்டு, ஏராளமான கிளிகள் இருந்து வந்தன. கும்பல் கும்பலாகக் கிளம்பி, கிறீச்சிட்டபடி, அந்தக் கிளிகள் ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு பறந்துபோகும் அழகை, நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மாலை வேளைகளில் நண்பர்கள் வடிவேலு, ராஜகோபால் ஆகியோருடன் உலவும்போது, கிளிகளைக் கண்டு மகிழ்வோம். உட்பக்கம் உள்ளனவோ என்னவோ, இங்கு கிளிகளே இல்லை. இத்தனைக்கும் பெரிய அரசமரமும், வேம்பும் இங்கு உள்ளன; கிளிகளைக் காணோம்! வேலூர் சிறை, ஊருக்கு வெளியே, ஒரு சிறு குன்றுக்கு அருகே அமைந்திருப்பதால், சிறைக்குள்ளே, நிறைய மரங்கள் உள்ளன. நான்கூட, ஒரு அரசங்கன்று நட்டு வைத்தேன்; அது நன்றாக வளர்ந்திருப்பதாக, பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு, சில மாதங்கள் அதே வேலூர் சிறையில் இருந்துவிட்டு வந்த, கம்யூனிஸ்டு நண்பர் அனந்தநம்பியார் என்னிடம் சொன்னார். சென்னைச் சிறை, நெருக்கடி நிரம்பிய ஊர்ப்பகுதியில் இருக்கிறது. ஆகவே, அது ஆட்களை அடைத்துவைக்கும் கிடங்காக மட்டுமே இருக்க முடியும். காக்கைகளை மட்டுமே கண்டு சலித்துப்போனேன் - அன்பழகன்தான், ஒரு மாலை, இரண்டு மைனாக்கள் இருப்பதைக் காட்டினார். ஒவ்வொரு மாலையும், அவைகளைக் காண்பதில் சில நிமிடங்களைச் செலவிட்டு, மகிழ்ச்சி அடைகிறேன். கிளிகளை வளர்ப்பதில், ஆயுட்கால தண்டனை பெற்ற கைதிகளுக்கு, சிறிது சலுகை காட்டப்படுகிறது என்று தோன்றுகிறது, வேலூரிலும் பார்த்தேன், இங்கேயும் முன்பு பார்த்திருக்கிறேன். நீண்ட காலத் தண்டனை பெற்ற சிலர், கிளிகளை வளர்க்கிறார்கள், வேலூரில் ஒரு கைதி அணில் வளர்த்துக்கொண்டிருந்தார் - மணி! மணி! என்று அந்தக் கைதி குரல் கொடுத்ததும், அந்த அணில் மரத்திலிருந்து வேகமாக இறங்கி ஓடி வந்து, அந்தக் கைதியிடம் விளையாடும் விதமாகப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இன்று இரவு, இரண்டு துணைகள் - தோழர்கள் பொன்னுவேல் - வெங்கா. கடந்த பொதுத்தேர்தல், வரப்போகிற பொதுத்தேர்தல், தொகுதிகளின் அமைப்புகள். நிலைமைகள் ஆகியவைபற்றிச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். பொதுவாக, அரசியல் துறையில் காட்டுத்தனம் மேலோங்கிக் கொண்டு வருவதுபற்றி, காலையில் மதியழகனுடன் பேசிக் கொண்டிருந்தேன். நண்பர் கே. எம். பாலசுப்பிரமணியம் எழுதிய தென்னாட்டுப் பிரமுகர்கள் என்ற ஆங்கிலப் புத்தகத்தை அவர் படித்துக்கொண்டிருந்தார். அதையொட்டி அந்தப் பேச்சு வளர்ந்தது. அந்த நாட்களிலே இருந்த அரசியல் பிரச்சார முறைக்கும் இப்போது அரசியல் பிரச்சாரத்திலே தரம் கெட்டுக்கொண்டு வருவதுபற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். பொன்னுவேல், அடுத்து வரப்போகும் பொதுத்தேர்தல் குறித்துப் பேசியபோது, தனது பிடியை இழந்துகொண்டுவரும் ஆத்திரத்தில், காங்கிரஸ் கட்சியினர், வரப்போகும் பொதுத் தேர்தலில் என்னென்ன காட்டுமுறைகளைக் கட்டவிழ்த்துவிடப் போகிறார்களோ என்று எண்ணி ஆயாசப்பட்டேன். பிறகு, ஆப்பிரிக்க நாட்டு, "ஜுலு’ இன மக்களைப்பற்றிய தகவலைப் பின்னணியாகக்கொண்ட ஒரு கதைப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். ஜுலு மக்களுக்குள் மூண்டுவிடும் பகை, நடைபெறும் போர், வெட்டி வீழ்த்துவது, கொளுத்தி நாசமாக்குவது, பெண்களை இழுத்துச் செல்வது, மாடு கன்றுகளை மடக்கிக் கொண்டுபோவது போன்ற சம்பவங்கள் நிரம்பிய புத்தகம் இது. ஒரு அரை மணி நேரத்துக்குள், நிரம்ப இரத்த வெள்ளம்! இன்றைக்கு இதுபோதும் என்று ஆகிவிட்டது - புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, நண்பர்களைப் பார்த்தேன் - அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்! நானும் முயற்சிக்கப் போகிறேன் - அவர்களுக்குச் சமமாக ஆக முடியவே முடியாது. என்றாலும், ஓரளவுக்காகிலும், பார்க்க வேண்டாமா! இல்லையானால், அவர்கள் என்ன எண்ணிக்கொள்வார்கள்! சே! என்ன அண்ணன் இவன்? ஒழுங்காகத் தூங்கக்கூடத் தெரியவில்லையே என்று எண்ணிக்கொள்வார்களல்லவா. அதனால், தூங்கியாக வேண்டும். மணியும் ஒன்று அடித்துவிட்டது. 5-3-1964 இன்று, ராணி, பரிமளம், அ. க. தங்கவேலர் மூவரும் என்னைக் காணவந்திருந்தனர். பல நாட்களாக பரிமளத்தை எதிர்பார்த்திருந்து ஏமாற்றமடைந்திருந்த எனக்கு, இன்று மூவரையும் கண்டதும், மிக மகிழ்ச்சி ஏற்பட்டது. பரிமளம் வராமலிருந்ததற்குக் காரணம் இடையில் நாவலரும், கருணாநிதி, எம். ஜி. ஆர். ஆகியோரும் வந்துபோனதால், தன்னை அனுமதிக்கமாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டதுதான் என்று தெரியவந்தது. இனி மாதத்துக்கு ஐந்துமுறை என்னைக் காணவரலாம் என்பதைக் கூறினேன். என் பெரிய மருமகப்பெண் சென்னை வந்திருப்பதை அறிந்தேன், என்னைக் காண்பதற்காக. இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து வரட்டும் என்று சொல்லி அனுப்பினேன். அல்லி அச்சகம் நடத்த இளங்கோவனுக்கு அனுமதி கிடைத்துவிட்டதாகப் பரிமளம் சொல்லக் கேட்டேன். காஞ்சிபுரம் நகராட்சி மன்றத் தலைவர் தேர்தல் சம்பந்தமான நிலைமைகளை அ. க. தங்கவேலர் கூறினார். என்ன காரணமோ தெரியவில்லை, அ. க. தங்கவேலர் மிக இளைத்து, கருத்து போய்க் காணப்பட்டார். அதுபற்றி அவரிடம் கேட்கலாம் என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும்போதே, அவர், நான் இளைத்துப் போயிருப்பதாக உணர்ந்து காரணம் கேட்டார். சென்னையில் நாவலர், கருணாநிதி ஆகியோர், மேல் சபைகளுக்கான நியமனம் பற்றிய சிக்கலால் மெத்தத் தொல்லைப்பட்டுக்கொண்டிருப்பதாகப் பரிமளம் கூறக்கேட்டு, மிகவும் கவலைப்பட்டேன். எதிர்க் கட்சிகள் கொடுக்கும் மூர்க்கத்தனமான தொல்லைக்கு ஈடு கொடுத்துக்கொண்டு கழகப் பணியாற்றி வரும் இவர்களுக்கு இந்தத் தொல்லையும் வந்து சேர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும் அமைதி இழக்காமல், பிரச்சினைகளைப் பல்வேறு கோணங்களிலுமிருந்து ஆராய்ந்து பார்த்து, நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன். அடுத்த வாரம் அநேகமாக என்னைக் காண, கருணாநிதியும் நெடுஞ்செழியனும் வரக்கூடும் என்று நினைக்கிறேன். நமது கழகத்துக்காக, சென்னை தேனாம்பேட்டையில் வாங்கியுள்ள புதிய மாடிக் கட்டிடத்தின் படம், “நம் நாடு’ இதழில் வெளியிடப்பட்டிருந்தது. அழகிய கட்டிடம் எடுப்பாகவே உள்ளது; கட்டிடம் உள்ள இடமும் நல்ல”மையமான’ இடம். என்னுடன் சிறையில் உள்ள நமது தோழர்கள், படத்தைப் பார்த்து, நல்ல கட்டிடம் என்று மதிப்பிட்டுப் பாராட்டினார்கள். நான் “பரோல்’ காலம் முடிந்து, மீண்டும் சிறைபுகச் சென்னை வந்த அன்று இந்தக் கட்டிடத்தைப் பார்த்து, வாங்கலாம் என்று இசைவு அளித்திருந்தேன்.”நம் நாடு’ அலுவலகத்தை ராயபுரம் அறிவகத்திலும், கழகத் தலைமை நிலையத்தை, இந்தப் புதிய கட்டிடத்திலும் வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். மாநகராட்சி மன்றத்தார், லாரிகள் வாங்கியது முறைகேடானது என்று பழிசுமத்திப் பேசியதோடு மட்டுமின்றி, இந்த ஏற்பாட்டைத் தடுத்திட வேண்டும் என்று கேட்டு, கம்யூனிஸ்டு உறுப்பினர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்குத் தொடர்ந்திருந்தார்; பொது உடைமைக் கட்சியினரான பாரிஸ்டர் மோகன் குமாரமங்கலம், டாக்டர் சுப்பராயனார் மகன், கம்யூனிஸ்டு உறுப்பினர் சார்பில் வாதாடினார் - மாநகராட்சி மன்றத்தின் வழக்கறிஞராக உள்ள டி. செங்கல்வராயன், மாநகராட்சிக்காக வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி வீராசாமி அவர்கள், லாரிகள் வாங்கப்பட்டதில் தவறோ, முறைகேடோ இல்லை என்று தீர்ப்பளித்து, கம்யூனிஸ்டு உறுப்பினர் புகுத்திய வழக்கைத் தள்ளிவிட்டார் என்ற செய்தி, இன்று பல இதழ்களில் வெளியிட்டிருந்தனர். லாரி சம்பந்தமாகப் பழிசுமத்தியே இந்தத் தேர்தலில், தி. மு. கழகத்தை ஒழித்துக் கட்டிவிடலாம் என்று மாற்றுக்கட்சியினர் மனப்பால் குடித்தனர். தேர்தல் முடிவு மட்டுமல்ல, உயர்நீதிமன்றத் தீர்ப்பும், தி. மு. கழக நிர்வாகத்திலே தவறோ முறைகேடோ இல்லை என்பதை எடுத்துக்காட்டிவிட்டது. தேர்தலுக்கு முன்பே இதுபோன்ற "தீர்ப்பு’ கிடைத்திருக்கு மானால், தேர்தல் கூட்டத்திலே வழியவிட்ட ஆபாசம், கொஞ்சம் குறைந்திருக்கக்கூடும். இன்று பிற்பகல், கருணாநிதி, நடராஜன் ஆகியோர்மீது "உடந்தை’யாக இருந்ததாகத் தொடரப்பட்டுள்ள வழக்கை யொட்டி, சென்னை உயர்நீதிமன்றத்திலே தொடர்ந்துள்ள வழக்குபற்றி மதியிடம் பேசிக்கொண்டிருந்தேன். 107-வது பிரிவின்படி இருவரும் குற்றம் இழைத்திருக்கிறார்கள் என்பதற்காக, போலீஸ் தரப்பில் என்னென்ன எடுத்துக் கூறப்படும் என்பதுபற்றி, மதி விவரமாகச் சொன்னார். எனக்கென்னமோ, அவர்கள் மதுரை சென்றதும், அறப்போர் வீரர்களைக் கண்டு பேசியதும் மாலை அணிவித்ததும் குற்றமாக முடியாது என்றுபட்டது; அதுபற்றி நான் எடுத்துக் கூறினேன். உயர்நீதிமன்றத் தீர்ப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய மிக ஆவலாக இருக்கிறோம். புதிதாகச் சிறை புகுந்துள்ள ராமசாமியிடம், இன்று காலை பல்வேறு விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய சிற்றப்பாவும், என் நண்பருமான தக்கோலம் செல்லப்பாவின் நலம்பற்றிக் கேட்டறிந்துகொண்டேன். செங்கற்பட்டு மாவட்டத்தில் வரப்போகும் பொதுத் தேர்தலில், நமது கழகத்துக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிக அளவிலே இருப்பதாக ராமசாமி கூறினார் - காரணங்களையும் விளக்கினார். “கோட்டிக்கொளல்’ என்ற சொற்றொடர்.”அவை அறிதல்’ அதிகாரத்தில் ஒரு குறளில் வருகிறது; நேற்று இரவும், இன்று பகலும் அந்தச் சொற்றொடருக்கான, பொருத்தமான பொருள்பற்றி எண்ணிப் பார்த்துத் தெளிவு பெறுவதிலேயே மும்முரமாக ஈடுபட்டிருந்ததாக அன்பழகன் கூறினார். உலவி எனக்கு மகிழ்வளித்த புறாக்களைக் காணோம். சிறை அதிகாரி வீட்டு முற்றத்துக்கு அவை போய்ச் சேர்ந்தன என்கிறார்கள். கிளிகளே இங்கு இல்லையே என்பதுபற்றி இன்று அன்பழகனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இரண்டு கிளிகள் சில வேளைகளில் பறந்து வருவதாகவும், தான் பார்த்ததாகவும் சொன்னார். அவர் சொன்னபடியே இன்று ஐந்து மணி சுமாருக்கு, இரண்டு கிளிகள் பறந்து சென்றிடக் கண்டேன். காஞ்சிபுரம் நகராட்சி மன்றத் தேர்தலில் தோல்வி கண்ட நண்பர் ராஜகோபால், இன்றுவரை, பரிமளத்தைக் காணக்கூட வரவில்லையாம். எங்கள் வீட்டுக்கும் வரவில்லையாம். விந்தையான இயல்பு! தேர்தல் தோல்வியை ஏதோ தன்னுடைய சொந்த மதிப்புக்கு ஏற்பட்டுவிட்ட கேடு என்று எண்ணிக்கொண்டு மனதைக் குழப்பிக்கொள்வதுடன், தோல்வி காரணமாக எழும் எரிச்சலை எவர்மீதாவது காட்டும் இயல்பு சிலருக்கு இருக்கிறது. அந்த இயல்பின்படி ராஜகோபாலின் போக்கு அமைந்திருக்கிறது. மக்களாட்சி முறையிலே நம்பிக்கை உள்ள எவரும் தேர்தலிலே வெற்றி கிடைக்காமற் போய்விடுவதை பெரிய விபத்தாகவோ, தமது சொந்த தன்மானத்துக்கு ஏற்பட்டு விட்ட களங்கமென்றோ எண்ணிக்கொள்வது மிகத் தவறு. அந்தவிதமான எண்ணம் கொண்டு, தமது மனத்துக்குத் தாமே வேதனையைத் தேடிக்கொள்வது மிகமிகத் தவறு. இன்று, பீடர்பெனின்சன் என்பவர் எழுதிய அடக்குமுறை பற்றிய ஏட்டிலே, ஒரு பகுதியைப் படித்தேன். மனதை உருக்கும் விதமான பிரச்சினை விளக்கம். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, உலகிலே, பல நாடுகளில், தாம் இருக்கும் நாட்டு துரைத்தனம் ஏற்றுக்கொள்ளாத சில கருத்துக்களைக் கொண்டிருந்த காரணத்துக்காகக் கொடுமைப்படுத்தப்பட்ட ஒன்பது பேருடைய வரலாற்றுத் தொகுப்பு இந்தப் புத்தகம். பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் எனும் புனிதமான உரிமைகளை ஆதிக்க அரசுகள் எப்படி அழிக்க முனைகின்றன என்பதை எடுத்துக்காட்டி எழுதப்பட்ட புத்தகம். ஒரு தூய கொள்கைக்காக அறப்போரில் ஈடுபட்டுச் சிறைப்பட்டுள்ள என்போன்றாருக்கு, இத்தகைய ஏடுகளைப் படிக்கும்போது, புதியதோர் உறுதி ஏற்படுவது இயற்கை. கொள்கைக்காக, ஆபத்துக்களைத் துரும்பென மதித்து, வாழ்க்கையிலே பெரும் பெரும் ஆபத்துக்களைத் தாமாக வருவித்துக்கொண்டவர்களைப் பற்றிப் படிக்கும்போது, நான் சிறையிலே அடைக்கப் பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள இன்னல்களைப் பெரிதென்று கூற மனம் இடம் தராது. பலர் தமது கருத்துகளுக்காக, நெருப்பாற்றிலே நீந்தி இருக்கிறார்கள். அவர்களின் வரலாறுகளைப் படிக்கப் படிக்க நாம் எத்தகைய இன்னலையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்ற உறுதி ஏற்படத்தான் செய்கிறது. தூய உள்ளத்துடனும், மன உறுதியுடனும் அறப்போரில் ஈடுபட்டபடி இருக்கும். நமது கழகத் தோழர்களைப் பாராட்டியபடி படுக்கச் செல்கிறேன். 6-3-1964 பறவைகளிலே சில, பொந்துகளிலே அடைபடச் செல்லாமுன்பே, எங்களை அறையில் கொண்டுவந்து அடைத்துவிட்டு, சிறைக்காவலாளிகள், “அப்பா! தொல்லை தீர்ந்தது’ என்று எண்ணிக்கொண்டு போய்விட்டனர். காலை முழுவதும் ஒருவரோடொருவர் பேசி, ஒன்றாக உலவிட இருந்த வாய்ப்பு, மாலை 6 மணிக்கெல்லாம் பறிபோய்விடுகிறது. மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு, சிறை மேலதிகாரியிடம், மதி நாங்கள் உள்ள பகுதியிலே உள்ள தனி இரும்புக் கம்பிக் கதவை பூட்டிவிட்டு, எங்களை அறைகளிலே போட்டுப் பூட்டாமல் விட்டுவைக்கக்கூடாதா? முன்பு அவ்விதம் நிலைமை இருந்ததே என்று கேட்டார்.”அது முன்பு!’’ என்று கூறிவிட்டுச் சென்றார் சிறை மேலதிகாரி. அந்த சொற்றொடருக்கு எத்தனையோ ஆழ்ந்த பொருள் இருக்கத்தான் செய்கிறது. சிறையின் உட்புறப் பகுதியிலேதான் பெரும்பாலான "கைதிகள்’ உள்ளனர். அங்கு இரவு 9, 10 மணிவரையில் பாட்டும் பேச்சும் பலமாக இருக்கும். நாங்கள் இருக்கும் பகுதியில் ஆறுமணிக்கெல்லாம் அடைத்து விடுகிறார்களே, உடனே ஒரு சந்தடியற்ற நிலை ஏற்பட்டுவிடும். பலர், இரவு பத்து மணிக்குள் தூங்கிவிடுகிறார்கள் - எனக்கோ இரவு ஒரு மணியோ, இரண்டு மணியோ!! வழக்கம்போல, இன்றும் காலையிலே, சிறிதுநேரம், சமையல் காரியத்தில், பார்த்தசாரதிக்குத் துணையாக இருந்தேன். சமையல் பொறுப்பு முழுவதும் பார்த்தசாரதியுடையதுதான். என்றாலும், இதையிதை இப்படி இப்படிச் செய்யலாம் என்று கூறுவதிலே எனக்கு ஒரு மகிழ்ச்சி. சிறையிலே சமையல் செய்வதற்குத் தனித் திறமை வேண்டும். வேக மறுக்கும் அரிசி, பருப்பு, காயாத விறகு, சுவையும் மணமும் பறிமுதல் செய்யப்பட்டுவிட்ட பண்டங்கள், இவைகளைக்கொண்டு, “இன்னமுது’’ சமைப்பது என்றால் இலேசான காரியமல்ல. எண்ணெய் போதுமான அளவு இல்லை என்று தெரியவந்ததும்,”தாளிப்பு’ ஒப்புக்கு என்றாகிவிடும். காய்கள் முற்றிப்போனதாக ஒவ்வொரு நாளைக்குத் தந்துவிடுவார்கள் - அன்று விதைகள் மிதக்கும் குழம்புதான் கிடைக்கும். என்றாலும், நாங்களே சமைத்துச் சாப்பிடுவதிலே ஒரு தனி மகிழ்ச்சி எழத்தான் செய்கிறது. "நல்ல குடும்பத்திலேதான் பிறந்தேன்; நல்லபடிதான் வளர்த்துப் பெரியவனாக்கினார்கள்; நாலுபேர் என் பேச்சைக் கேட்டு நடக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் கிராமத்தில்; அந்த நிலையிலுள்ள நான், இங்கு வந்து, கட்டுப்பட்டு, காவலுக்கு உட்பட்டு இருக்கவேண்டி நேரிட்டுவிட்டது’’ என்று நண்பர் ராமசாமி, இன்று பார்த்தசாரதியிடம் சொல்லிக் குறைப்பட்டுக்கொண்டதாகக் கேள்விப்பட்டேன். ஒரு பேச்சுக்காக அவர் அவ்விதம் சொன்னாரே தவிர, சிறையிலே ஆர்வம் குன்றாமல்தான் இருக்கிறார். சட்டமன்ற அலுவலகத்திலிருந்து, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை சம்பந்தப்பட்ட புத்தகங்களெல்லாம், அவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒழுங்காகப் படித்து குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறார். சிறை நிலைமைகள் பற்றியும், நீதி நிர்வாகத் துறைகளின் நிலைமைகள் குறித்தும், சட்டசபையில் பேசுவதற்கான ஒரு சிறு சொற்பொழிவே தயாரித்து விட்டிருக்கிறார். இன்று பிற்பகல், அன்பழகன், சுந்தரம், பொன்னுவேல் ஆகிய மூவருடன், புரசவாக்கம் வட்டத்தின் அரசியல் நிலைமை பற்றியும், கழகத்தின் பிடிப்பு எந்தவிதம் இருக்கிறது என்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். சிறையில், இதுபோல் பேசுவது உடனடியாகப் பலன் அளிக்காது என்றபோதிலும், ஒவ்வொரு வட்டத்திலும் நிலவும் அரசியல் நிலைமைகள்பற்றி, இதுபோல வெளியிலே கலந்து பேசினால், மெத்தப் பலனளிக்கும் என்பதை உணர முடிந்தது. பொதுக்கூட்டங்களிலே பேசிவிட்டுச் செல்வதுடன் திருப்தி அடைந்துவிடாமல், அந்தந்த வட்டத்தில் பணியாற்றும் தோழர்களுடன் கலந்து பேசுவது, நிலைமைகளை உணரவும், கழக வெற்றிக்கான வாய்ப்புக்களை உறுதிப்படுத்தவும், மெத்தவும் பயன்படும். இன்று மாலை அன்பழகனை, அவருடைய துணைவியார் வெற்றிச்செல்வி காணவந்திருந்தார்கள். அன்பழகனுடைய மகனை, நாய் கவ்விக் கடித்துவிட்டதாகச் செய்தி கூறிக் கவலைப் பட்டிருக்கிறார்கள். அன்பழகனும் மிகுந்த கவலைப்பட்ட போதிலும், தமது உணர்ச்சியை அடக்கிக்கொண்டு, என்னிடம் இந்தச் செய்தியைக் கூறினார். மருத்துவருடைய யோசனை யின்படி தக்கது செய்யும்படி துணைவியாரிடம் கூறி அனுப்பி இருக்கிறார். நாய்க்கடி, கடித்த நாய் வெறிகொண்டதாக இருந்தா லொழிய, ஆபத்தானதாகாது என்றாலும், தக்க மருத்துவ முறைகளை மேற்கொள்வதுதான் நல்லது. அன்பழகனுடைய மைத்துனர் ராஜசுந்தரம், திறமை மிக்க மருத்துவர்; அவர் தக்க முறையை மேற்கொள்வார் என்று நம்புகிறேன். நேற்றுப் படித்த "கொள்கைக்காக கொடுமைக்கு ஆளானவர்கள்’’ பற்றிய புத்தகத்தை இன்றும் தொடர்ந்து படித்தேன். நீக்ரோக்களுக்குச் சம உரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக அறநெறிக் கிளர்ச்சி நடத்தும் அமெரிக்க வெள்ளையருக்கு, நிறவெறி பிடித்த வெள்ளையர்களால் ஏற்பட்ட கொடுமைகளை நூலாசிரியர் விளக்கி இருந்தார். "நீக்ரோக்களும் அமெரிக்கர்களே! நிறம் காரணமாக அவர்களை ஓதுக்கி வைப்பதும், தாழ்வாக நடத்துவதும் மிகக் கொடுமை! அது மனிதத்தன்மையையே மாய்த்திடும் இழிதன்மையாகும்’ என்று அந்த அமெரிக்க வெள்ளையர், பல இன்னல்களுக்கிடையில், எதிர்ப்பு ஏசல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், எடுத்துக் கூறிக்கொண்டு வருகிறாராம். சம உரிமைக்காக நீக்ரோக்கள் மேற்கொள்ளும் அறப்போரில் இவர் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்; கொடுமைகள் பல இவருக்கு இழைக்கப் பட்டபோதிலும், மனம் தளராமல் தொண்டாற்றிக்கொண்டு வருகிறார்; நிறவெறி பிடித்த அமெரிக்க நாட்டு வெள்ளையர், குடியரசுத் தலைவர் கென்னடியைக் கொலை செய்யும் அளவுக்குச் சென்றுவிட்டதைக் கண்ட பிறகு, கருப்பருக்குச் சம உரிமை கேட்டுக் கிளர்ச்சி செய்யும் இந்த வெள்ளையருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் வியப்பளிக்கவில்லை. மோட்டாரில் எப்போதும் பயணம் செய்தபடி இருக்கிறாராம். மோட்டாரில், பிரசாரப் படம் ஒன்று எழுதப்பட்டிருக்கிறதாம். உலகத்தின் படம் போட்டு, அதனை தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாக இரண்டு கரங்கள் தீட்டப்பட்டிருக்கிறதாம்; ஒரு கரம், கருப்பு நிறமுடையது, மற்றொன்று வெள்ளை! சிறையில், இந்தச் சீலர் தள்ளப்பட்டார் ஒரு முறை; சிறை அதிகாரிகள், பல்வேறு குற்றங்கள் செய்ததால் சிறையில் இருந்த கயவர்களிடம், இந்த வெள்ளையன் கருப்பருக்குத் துணையாக இருக்கிறான் என்ற செய்தியைக் கூறி, நீக்ரோவுடன் கைகுலுக்கிக் கொண்டிருக்கும் முறையில் இருந்த ஒரு படத்தையும் காட்டினார்களாம். இதைக் கண்ட உடனே அந்தக் கயவர்கள் - கொலை, கொள்ளை, வழிப்பறி, வஞ்சகம், சூது, கற்பழித்தல் போன்ற குற்றங்களைச் செய்த பாதகர்கள், "வெள்ளையரின் புனிதத் தன்மையை, உயர்வை, பாழாக்குபவனா இவன்’ என்று உறுமி எழுந்து, பலமாகத் தாக்கிவிட்டார்களாம். இந்தப் பகுதியைப் படிக்கும்போது, உண்மையாகவே, கண்கலங்கும் நிலை ஏற்படுகிறது! நேற்றும் இன்றும் எழுத்தாளர்கள் பிரச்சினையை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட, இரண்டு கதைப் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தாளர்களை ஏய்த்துக்கொழுத்திடும் புத்தக வெளியீட்டார் பற்றிய கண்டனத்துடன், ஒரு உருக்கமான கதையைப் பின்னி, ஒரு நூல் எழுதப்பட்டிருந்தது. மற்றொன்று, சாமர்செட் மாகாம் எழுதியது; எழுத்தாளர்பற்றி மற்றோர் எழுத்தாளர் கொண்டுள்ள கருத்துக்களையும், அவர்களுக்குள் ஏற்படும் தொடர்புகள் பற்றியும், புகழ்பெறுமுன்பு எழுத்தாளர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதுபற்றியும், மாகாம் எழுதியிருக்கிறார். இன்றைய பத்திரிகையில், சென்னை மேல்சபையில், முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரும், டாக்டர் இலட்சுமணசாமி முதலியாரும், டில்லி மத்திய சர்க்காரின் போக்கையும், அவர்கள் ஆட்டிப்படைப்பதற்கு ஏற்றபடி கிடக்கும் மாநில சர்க்காருடைய அடிமைப் போக்கையும், மிக வன்மையாகக் கண்டித்துப் பேசியது வெளியிடப்பட்டிருந்தது. ஓமந்தூரார், காங்கிரஸ் ஆட்சியின் போக்கைப் பல முறை கண்டித்திருக்கிறார். என்றாலும், முன்னாள் முதலமைச்சர் தமது தள்ளாமையைக் காரணமாகக் காட்டக் கூடுமென்றாலும், இந்தக் கருத்துக்களை, சட்டசபையில் எடுத்துச் சொல்வதோடு நின்றுவிடுவது, சரியல்ல - அறமுமாகாது - மக்கள் மன்றத்தில் இவைகளை எடுத்துச்சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார். மக்களிடம் சென்று, அவர் இந்த ஆட்சியின் போக்கைக் கண்டித்துப் பேசினால்தான், ஆட்சியின் போக்கு மாறுவதற்கு ஒரு வழி ஏற்படும். ஏனோ அவர், தம்மால் செய்யக்கூடிய இந்தச் சேவையைச் செய்திடாமல் இருந்து வருகிறார். தன்னலமற்றவர் என்று நாடு கொண்டாடும் நிலை பெற்ற ஓமந்தூரார், உண்மையை ஊருக்கு எடுத்துச் சொல்லி, ஊராள்வோரைத் திருத்த ஏன் தயக்கம் காட்டுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. அனுபவம் பெற்றவர்களும், ஆற்றல் மிக்கவர்களும், இவ்விதம் தயக்கம் காட்டும் போக்கிலே இருப்பது, வேதனை அளிக்கிறது என்றாலும், ஓரோர் சமயம் சட்டமன்றத்திலேயாகிலும் அவர்கள், மனம் திறந்து பேசுவது, நாம் மேற்கொண்டுள்ள பணியினைத் தொடர்ந்து செய்வதற்கான பேரார்வத்தை ஊட்டுகிறது. இந்தி வெறி எந்த அளவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் மிகத் தெளிவாக - துணிவாகக்கூட - எடுத்துக்காட்டி இருக்கிறார். அவர் காங்கிரசிடமிருந்து பதவியைப் பறித்துக்கொள்ள கட்சி நடத்துபவர் அல்ல; தமது வாழ்நாளில் பெரும் பகுதியைக் கல்வித்துறைக்காகச் செலவிட்டு வரும் அறிவாளர். அவருடைய மேல்சபை பேச்சு, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நாம் நடத்தும் அறப்போர் எத்துணை தேவையானது என்பதை நாடும் நாமும் உணரச் செய்வதாக அமைந்திருக்கிறது. அவருடைய பேச்சைக் கேட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள்கூட, பாராட்டுக் கை ஒலி எழுப்பினர் என்று பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. பாராட்டி என்ன பயன்? கையொலி எழுப்பி என்ன காணப்போகிறோம்! இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் துணிவு பெறவேண்டும். அவருடைய பேச்சு அமைச்சர் பெருமான்களுக்கு அந்தத் துணிவைக் கொடுத்திட வேண்டும். டாக்டர், நாம் மேற்கொண்டுள்ள போராட்ட முறைகளை ஏற்றுக்கொள்பவர் அல்ல; நாமும் அவரிடமிருந்து அதனை எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவர் பேசியிருப்பது, இந்தி ஆதிக்க உணர்ச்சி என்பது பொய்யல்ல; இட்டுக் கட்டியது அல்ல; ஏனோதானோ என்று விட்டுவிடத்தக்கது அல்ல; பெரியதோர் ஆபத்து, எதிர்காலத்தில் இருளும் இழிவும் இந்நாட்டுக்கு மூட்டிவிடக்கூடியது என்பதை மெய்ப்பிக்கிறது. எனவே - முறைகள்பற்றிய கருத்து எவ்விதம் இருப்பினும் - பிரச்சினையின் அடிப்படையைப் பொறுத்தவரையில், நமது கருத்து, அறிவாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதனை அறிந்து அக மிக மகிழ முடிகிறது. கல்வித்துறை வித்தகரும், ஆட்சித்துறை அனுபவம் கொண்டவரும், எந்தக் கேடு போக வேண்டும், கொடுமை நீக்கப்பட வேண்டும் என்று எடுத்துக்கூறி, "வாதாடி’ இருக்கிறார்களோ, அதே நோக்கத்துக்காக, நாம் அறப்போரில் ஈடுபட்டு, சிறையில் கிடக்கிறோம் என்பதை எண்ணிப் பெருமகிழ்வு கொள்ளமுடிகிறது. “துரும்பைத் தூணாக்கிக் காட்டுகிறார்கள்’ என்று நம்மீது பழி சுமத்தும்”பரந்த மனப்பான்மை’யினர், ஓமந்தூரார் மனம் நொந்து பேசியிருப்பதையும், டாக்டர் இலட்சுமணசுவாமி மிகக் கண்டிப்பான குரலில் பேசியிருப்பதையும் கூர்ந்து கவனிப்பார்களானால், தமது நிலை எவ்வளவு கேவலமான தாகிறது என்பதை உணருவார்கள். வெளியில் இருந்து படிப்பதைவிட, சிறைக்கு உள்ளே இருந்துகொண்டு, அந்த இரு முதியவர்களின் பேச்சுக்களையும் படிக்கும்போது, தனிச் சுவையும், எழுச்சியும் பெற முடிகிறது. 7-3-1964 பொதுவாழ்க்கைத் துறையில் ஈடுபட்டு, சிறைப்பட நேரிடுபவர்களுக்கெல்லாம், கைதிகளை நல்லவர்களாக்கும் முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது - சிறையில் இருக்கும்போது. சிறையில் பல விதமான குற்றங்களுக்காக அடைக்கப்பட்டிருப்பவர்களிடம், பழக வேண்டிய நிலை இருப்பதும், அந்த நிலை காரணமாக அவர்களுடன் பேசி அவர்கள் “கதை‘யைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும், அவர்கள் கூறுவது கேட்டு மனம் இளகுவதும், இங்கு இயற்கையாகவே ஏற்பட்டுவிடுகிறது. சிறையில் சீர்திருத்தம் வேண்டும் என்பதுபற்றி, இன்று மாலை, பொன்னுவேல் மெத்த ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார். பொன்னுவேல் உட்புறப் பகுதியில் இருந்த நாட்களில், தண்டனை பெற்று உள்ளே உள்ள கைதிகள், தமது தண்டனையைக் குறைக்கவேண்டுமென்றும், விடுதலை அளிக்க வேண்டும் என்றும் துரைத்தனத்துக்கு, “மனு’ அனுப்பும் காரியத்தில் தொண்டு புரிந்திருக்கிறார். சட்டக் கல்லூரியில் படித்தவர் - படித்தவர் என்று மட்டும்தான் கூற முடிகிறது - வழக்கறிஞர் என்று சொல்லும் பாக்கியத்தை, நான் பெறவில்லை. வழக்கறிஞர் ஆகாவிட்டாலும் சட்டக்கல்லூரியில் படித்ததாலும், சட்டப் புத்தகங்கள்”கைவசம்’ இருப்பதாலும், மனுக்கள் தயாரித்துக் கொடுக்க முடிந்திருக்கிறது. இதன் காரணமாக”கைதிகள்’ வெளியே போகும்போது "மனிதர்கள்’ ஆக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதுபற்றி, ஆர்வத்துடன் பேச முடிந்தது. இந்த ஆர்வத்தையோ, சீர்திருத்த வேண்டும் என்ற துடிப்பையோ யாரும் குறைகூற முடியாது - பாராட்டக்கூடச் செய்யலாம். ஆகவே, நானும் அந்த நோக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பிரச்சினையில் உள்ள சிக்கல்கள் பற்றியும் விளக்கிக் கூறினேன். சிறையிலிருந்து வெளியே செல்பவர்கள் "நல்லவர்களாக’ மாற்றப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், வெளியே உள்ளவர்கள் சிறைக்கு வரத்தேவையில்லாத நிலையை ஏற்படுத்துவது - குற்றம் செய்யவேண்டிய நிலையையும் மனப்போக்கையும் மாற்றி அமைக்க, சமூகத்திலே பெரியதோர் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுபற்றிக் கூறினேன். சென்ற கிழமை நான் படித்த சட்ட வரலாறுபற்றிய புத்தகத்திலும், குற்றங்களுக்குத் தரப்படும் தண்டனைகள், பயங்கரத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதுபற்றி, படித்திருந்தேன். அது குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தூக்குத் தண்டனையை எடுத்துவிட வேண்டுமா? வேண்டாமா? என்பதுபற்றிக் கருத்து தெரிவிக்கும்படி துரைத்தனம் ஒரு கேள்வித்தாள் தயாரித்து சட்டசபை உறுப்பினர்களுக்கு அனுப்பி இருந்தனர். அது இன்று சட்டசபை உறுப்பினர் ராமசாமிக்குக் கிடைத்திருந்தது. ஆகவே, தூக்குத் தண்டனைபற்றியும், பொதுவாக தண்டனை முறைகள்பற்றியும், இன்று மாலை, நாங்கள் பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. சுந்தரத்தைக் காண, நண்பர் ராதாமணாளன் வந்திருந்தார். நாம் நடத்தும் அறப்போர்பற்றியும், நாமெல்லாம் சிறைப் பட்டிருப்பது குறித்தும், நாட்டிலே ஒருவிதமான பரபரப்பும் எழவில்லை என்று அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், உண்மையில் மக்கள் மனதிலே பரபரப்பு உணர்ச்சியும் பரிவும் நிரம்ப இருக்கத்தான் செய்கிறது. சென்னை மாநகராட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் வட்டாரத்தினர்கூட இதனை உணர்ந்துவிட்டிருக்கின்றனர் என்று ராதாமணாளன் கூறியதாகச் சுந்தரம் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். தெளிவுள்ள மக்கள் இந்தி ஆதிக்கத்தால் விளையக்கூடிய ஆபத்தை உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதுபற்றி எனக்கு ஐயம் எழுந்ததே இல்லை. அதுபோலவே நமது மனதுக்குச் சரி என்று பட்ட முறையில் மக்களுக்கு நலன் கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில், நாம் மேற்கொண்டுள்ள அறப்போர் குறித்து, மனதை அடகுவைத்துவிடாத எவரும், பாராட்டத்தான் செய்வார்கள் என்பதிலேயும் எனக்கு ஐயம் ஏற்பட்டதில்லை. பத்திரிகைத் துறையில் ஈடுபட்டிருப்பவரும், காங்கிரசாரிடம் தொடர்புகொண்டுள்ளவருமான ராதாமணாளன், சுந்தரத்திடம் கூறியது, நான் ஏற்கனவே கொண்டிருந்த எண்ணத்தை உறுதிப்படுத்திற்று. மதியைக் காண, அவருடைய துணைவியாரும் குழந்தையும் வந்திருந்தனர். மதியின் பெண் குழந்தை, இந்தச் சிறையை "அப்பா வீடு’’ என்று எண்ணிக்கொண்டு பேசுகிறதாம்! குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று ஆசை எழத்தான் செய்கிறது - ஆனால் எங்கே உட்புறம் பார்த்துவிடுகிறார்களோ என்று இரும்புக் கம்பிகளை இரும்புப் பலகை போட்டு வேறு அடைத்துவைத்துவிட்டிருக்கிறார்களே!! இன்று என்னைக் காண நெடுஞ்செழியன் விரும்பி யிருக்கிறார் - ஆனால் அனுமதி அளிக்கப்படவில்லை. திங்கட்கிழமை வரக்கூடும் என்று சிறை மேலதிகாரி கூறிவிட்டுச் சென்றார். புகழ்மிக்க எச். ஜி. வெல்ஸ் எழுதிய நூல் ஒன்று கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியது - பழைய முறைகளும் கொள்கைகளும் முளைவிடும் பருவத்தை விளக்கும் விதமாக அமைந்துள்ள ஏடு - இன்று அந்த ஏடுதான், தூக்கம் வருகிற வரையில். காலையில், கலைக்களஞ்சியத்தில் சில பகுதிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் 1938லில் சிறை புகுந்தபோது, தமிழாசிரியர் சிங்காரவேல் முதலியார், தன்னந்தனியாக இருந்து தயாரித்த "அபிதான சிந்தாமணி‘யைத் தான் துணைக்குக் கொண்டிருந்தேன். சென்னை, தொண்டைமண்டல துளுவ வேளாளர் பள்ளித் தமிழாசிரியரும், என் நண்பருமான எஸ். எஸ். அருணகிரிநாதர் கொடுத்திருந்தார். கலைக்களஞ்சியம், மிகுந்த பொருட் செலவில், பல விற்பன்னர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படுகிறது - அபிதான சிந்தாமணி, ஒரே ஒரு வித்தகரின் அறிவாற்றலின் விளைவு! கலைக் களஞ்சியத்தைப் பார்த்தபோது, எனக்கு, "அபிதான சிந்தாமணி’ பற்றிய எண்ணமும், அதனை ஆக்கித்தந்த சிங்காரவேலர்பற்றிய நினைவுந்தான் மேலோங்கி நின்றது. அன்புள்ள அண்ணாதுரை 8-11-1964 நினைவலைகள் - கவலைகள்! 8-3-1964 தம்பி! வேலை செய்பவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு, மனதுக்கு மகிழ்ச்சி தேடிட, பல நிகழ்ச்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் நாள் ஞாயிற்றுக்கிழமை. இந்த ஞாயிறு, சிறையைப் பொறுத்தவரையில் வெறிச்சென்ற நிலையை ஏற்படுத்திவிடுகிறது. இன்று எங்களை அறையிலே போட்டு அடைத்தபோது மாலை மணி ஐந்து. இன்று அன்பழகன் கலகலப்பாக இல்லை - மகனுக்கு உடல்நிலை எப்படி இருக்கிறது, என்னவிதமான சிகிச்சை செய்திருக்கிறார்கள் என்பதுபற்றிய தகவல் எதுவும் பெறமுடியாத இடத்திலும் நிலையிலும் இருப்பதால், கவலையாகத்தானே இருக்கும். வாரத்துக்கு ஒரு முறைதானே, வீட்டினர் வந்து பார்க்கச் சட்டம் இடம் தருகிறது. இடையில் கடிதம் போடுவதோ பெறுவதோ அனுமதிக்கப்படுவதில்லை - அப்படிக் கடிதம் போட்டாலோ, பெற்றுக்கொண்டாலோ, உறவினரும் நண்பர்களும் வந்து பார்க்க இருக்கும் உரிமையை இழந்துவிட வேண்டுமாம். இது மிகக் கொடுமையானது, பொருளற்றது, தேவையற்றது என்று கருதுகிறேன். கடிதம் அனுப்பவும் பெறவும், உரிமை வழங்கப்பட வேண்டும் - கடிதங்களைச் சிறை மேலதிகாரி படித்துப் பார்த்து, தரத்தக்கதா அல்லவா என்பதைக்கூட முடிவு கட்ட வேண்டும் என்று விதி இணைத்துக்கொள்ளட்டும். குடும்பத்தினர் நலமாக இருக்கிறார்கள் என்ற செய்தியைக் கடிதம் மூலம் தெரிந்து, சிறையில் இருப்பவர்களும், சிறையில் உள்ளவர்கள் உடல் நலம் கெடாமல் இருக்கிறார்கள் என்று வீட்டாரும் தெரிந்துகொள்வதன் மூலம் இரு தரப்பினருக்கும் ஒரு மன நிம்மதி ஏற்படும் - இதை ஏன் தடுக்க வேண்டும்? புரியவில்லை. மனநிம்மதியை மாய்த்திடவேவா, சிறை! ஆம் என்று கூறுவார்களானால், "சிறைச் சாலையை அறச்சாலை ஆக்குகிறோம், சிறையில் அடைப்பது கொடுமைப்படுத்த அல்ல, திருத்த’ என்றெல்லாம் பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். ஒருபுறத்தில், சிறையிலே புது முறைகளைப் புகுத்துகிறோம் என்று பேசுவதும், மற்றோர் புறத்தில், கடிதப் போக்குவரத்துக்குக்கூடத் தடைபோட்டு வருவதும் பொருத்தமாகத் தெரியவில்லை. கடிதம் போடவும் பெறவும் உரிமை அளிக்கப்பட்டிருக்கு மானால், அன்பழகன் தன் மகனுடைய உடல்நிலைபற்றி அவ்வப்போது தெரிந்து, மனதுக்குச் சங்கடமில்லாமல் இருக்க முடியும். அரசியல் விஷயங்களைப்பற்றி எழுதக்கூடாது என்று தடுக்கட்டும் - நியாயம் - ஆனால் குடும்பத்தாரின் நலன்பற்றி அறிந்துகொள்வதுமா தடுக்கப்படவேண்டும் - நாகரிக நாட்களில் - அதிலும் அரசியல் கைதிகள் விஷயத்தில்! இன்று அறையில் போட்டுப் பூட்டப்பட்டதும், இது பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். கொள்கை காரணமாக கொடுமைக்கு ஆளானவர்கள் பற்றிய புத்தகத்தில், இன்று இருவருடைய வாழ்க்கைபற்றிப் படித்தேன். போர்ச்சுகீசிய ஆதிக்க வெறியின்கீழ் சிக்கிக்கிடக்கும் அங்கோலாவில், விடுதலை விரும்பிகள் எத்தகைய கொடுமையை அனுபவிக்கிறார்கள் என்பதை, டாக்டர் நெடோவின் வரலாறு காட்டுகிறது. தென் ஆப்பிரிக்க வெள்ளையர் ஒருவர் அங்கு தலைவிரித்தாடும் "நிறவெறி’யை எதிர்த்து, அறப்போர் நடாத்துவதுபற்றியும், அதன் காரணமாக அவருக்கு ஏற்படும் அவதிகள்பற்றியும், டன்கன் என்பவருடைய வாழ்க்கை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்ற பொது விதியிலிருந்து, கொள்கைக்காகப் போரிடும் எவருக்கும், எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் விலக்கு இல்லை என்ற பேருண்மையை இந்த ஏடு விளக்குகிறது. அஜந்தா - எல்லோரா ஆகிய இடங்களுக்குப் போய் வந்தது குறித்தும், சரவணபெலகோலா சென்று வந்ததுபற்றியும், ஜெய்பூர், ஜோத்பூர், உதய்பூர், பரோடா, சூரத், ஆமதாபாத் ஆகிய நகர்களின் நிலையைக் கண்டறிந்ததுபற்றியும், சிறிது நேரம், பொன்னுவேல் - வெங்கா ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தேன். எதிரே உள்ள "சென்ட்ரல் ஸ்டேஷனை’யே ஆறு திங்கள் பார்க்க முடியாதபடி அடைத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜெய்பூர், ஜோத்பூர் ஆகிய இடங்களைப்பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தது, ஒரு கேலிக்கூத்தல்லவா! சிறையிலே உள்ளவர்களின் சிந்தனை, வேகவேகமாக, நெடுந்தொலைவு சிறகடித்துக்கொண்டு பறந்து செல்வது இயல்பு, நாங்கள் உள்ள பகுதியில்தான், கிருத்தவர்களுக்கான தொழுகை இடம் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இசையுடன் தோத்திரப் பாடல்களை "கைதிகள்’ - கிருத்தவர்கள் - பாடுகிறார்கள். இன்று காலையில், சற்று நேரம், நாங்கள் உள்ள பகுதி நுழைவு வாயிலில் நின்றுகொண்டு, தோத்திரப் பாடல்களைக் கேலிட்டுக்கொண்டிருந்தேன். இரண்டு நாட்களாக கை வலி சிறிதளவு இருக்கிறது - ஆனால் பனிக்காலம் நீங்கி வெப்ப நாட்கள் ஆரம்பமான திலிருந்து வலி குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இடக் கரம், வலக் கரம்போலத் தூக்க இன்னமும் இயலவில்லை. வதெ ரியாதிருக்க "நொவால்ஜின்’ மாத்திரைகளையும் சாப்பிட்டபடிதான் இருந்து வருகிறேன். தேகப் பயிற்சி ஓரளவு செய்துகொண்டிருக்கிறேன் என்றாலும் இடக் கரத்தைப் பழையபடி தாராளமாகத் தூக்கத்தக்க நிலை ஏற்படவே இல்லை. எப்போதுமே இதுபோலவே இருந்துவிடுமோ என்ற ஐயுறவே அதிகமாகிக்கொண்டு வருகிறது. சிறையில், உட்புறப்பகுதியில் உள்ள நமது தோழர்கள் நலமாகவே இருக்கின்றனர் என்பதை, இங்கு, சமையலுக்கான சாமான்கள் வாங்குவதற்காக வந்திருந்த தோழர் மணிவண்ணன் மூலம் அறிந்துகொண்டேன். இங்குபோலவே, அங்கு பலரும் நூற்பு வேலையில்தான் உள்ளனராம். மணி பதினொன்று அடிக்கிறது; பொன்னுவேலும் வெங்காவும் தூங்கி முக்கால் மணி நேரமாகிறது. நானும் எச். ஜி. வெல்சின் புத்தகத்தைச் சிறிது நேரம் படித்துவிட்டு, தூங்க முயற்சிக்கவேண்டியதுதான். 10-3-1964 நேற்று குறிப்பு எழுதவில்லை; மனதிலே ஏதோ ஒரு விதமான சலிப்பு உணர்ச்சி; இன்ன காரணத்தால் என்று என்னாலேயே கூறமுடியவில்லை; ஆனால் ஏதோ ஒருவிதமான சுமை மனதை அழுத்திக்கொண்டிருப்பதுபோன்ற ஒரு உணர்ச்சி. அதனால் வழக்கமாக எழுதும் குறிப்பைப்பற்றிக் கவனம் செலுத்தவில்லை. படிப்பதிலே மட்டும் கவனம் செலுத்தினேன். வெல்ஸ் எழுதிய அந்தப் புத்தகத்தில், ஒரு ஆராய்ச்சியாளன் காதல் திருமணம் செய்துகொண்டு, காதலியின் மனம் மகிழத்தக்க நிலையைக் காண ஆராய்ச்சித் துறையைவிட்டு விலகி, பொருள் ஈட்டும் வாணிபத்துறைக்குள் நுழைந்து, நிரம்பப் பொருள் ஈட்டி மனைவியை மந்தகாசமான வாழ்விலே ஈடுபடச் செய்து, மனைவி செல்வத்தின் பளபளப்பிலும் நாகரிகமினுக்கிலும் மூழ்கி விட்டதால், காதலின்பம் பெறமுடியாமல் வேதனைப்பட்டு, செல்வம் கொந்தளிக்கும் சூழ்நிலையையே வெறுத்து, பணம் ஈட்டும் பணியில் வெறுப்படைந்து, கண்காணா இடம் சென்று, சிந்தனைச் செல்வத்தைப் பெறவேண்டுமென்று தீர்மானித்து, அது குறித்து மனைவியிடம் பேச, அவளும் வேண்டா வெறுப்புடன், அவனுடன் வரச் சம்மதம்தர, பனிக்காடு நிரம்பிய ஒரு தீவுக்குச் சென்று இருவர் மட்டும், செல்வம், நண்பர்கள், விருந்து, கேலிளிக்கை எதுவுமற்ற ஒரு நிலையில் வாழ்க்கையைத் தொடங்கும் விவரம் தரப்பட்டிருந்த கட்டம், நான் படித்துக் கொண்டிருந்தது அதனால்தானோ என்னவோ, என் மனமும் பனிக்காடு சூழ்ந்த இடத்திற்குச் சென்றவன் அடையும் நிலையை அடைந்தது. கழகம்பற்றிய நினைவுகளும், இந்தி ஆதிக்கத்தை அகற்றும் அக்கறையற்று ஆட்சியாளர்கள் கழகத்தை எப்படி ஒழிப்பது என்பதிலேயே அதிகத் துடிப்புடன் இருப்பதுபற்றிய சங்கட உணர்ச்சியும், என் மனதைக் குடைந்திடும் நிலை. நேற்று காலை, வழக்கறிஞர் நாராயணசாமி வந்திருந்தார் - கருணாநிதி நடராஜன் சார்பாக, உயர்நீதி மன்றத்திலே தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்துக் கூறிவிட்டுச் சென்றார். மாலை, நாவலரும், கருணாநிதியும் வந்திருந்தனர். இளங்கோவன், நான் கொண்டுவரச் சொல்லியிருந்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். மேலவைகளுக்கு எவரெவரைக் கழகம் ஆதரிப்பது என்பதுபற்றி கருணாநிதியும், நாவலரும் கூறினர். சில சட்டமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தியதாக, ஒரு கருத்தையும் கூறினார்கள். பதில் ஏதும் கூறக்கூடிய நிலையிலும் இடத்திலும் நான் இல்லையே! எனவே "நான் என்ன சொல்ல இருக்கிறது. நிலைமைக்குத் தக்கபடி முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறி அனுப்பினேன். கழகத்தின் சார்பில் எடுக்கப்படும் எந்த முடிவும், நான் என்னிச்சையாகவோ, எனக்கு ஏற்படக்கூடிய விருப்பு வெறுப்பினை மட்டும் கணக்கிட்டோ மேற்கொள்வதில்லை. என்றாலும், எனக்கென்று ஏதேனும் ஒரு "விருப்பம்’ எழுகிறது என்றால், அதனை நிறைவேற்றி வைக்கும் விருப்பம் கழகத்தினர் சிலருக்கு இருப்பதில்லை என்பதை, பல சந்தர்ப்பங்களில் நான் உணர்ந்து வருகிறேன். வருந்தி என்ன பயன்! காரணம் என்ன என்று ஆராய்வதிலேதான் என்ன பலன்! நிலைமை அவ்விதம் - அவ்வளவுதான்! ராணிக்கு இரண்டு மூன்று நாட்களாகக் "காய்ச்சல்’ என்று இளங்கோவன் கூறினான். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் வேலை நிறுத்தக் கிளர்ச்சி செய்வதாகவும், கௌதமன் அதிலே ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லிவிட்டுச் சென்றான். பிற்பகல், காஞ்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்டு சிறை புகுந்துள்ள தோழர்கள், நாங்கள் இருக்கும் பகுதி அருகில் வந்திருந்து, பெரிய பெரிய வைக்கோற்போர்களைத் தலைமீது சுமந்துகொண்டு, உட்புறம் சென்றிடக் கண்டேன் - மெத்தச் சங்கடப்பட்டேன். அவர்கள் சிரித்த முகத்தோடுதான் இருந்தார்கள் - ஆனால், அரசியல் கைதிகள் என்னென்னவிதமாக வேலை வாங்கப்படுகிறார்கள் என்பதைக் காணும்போது, வேதனையை அடக்கிக்கொண்டிருக்க முடியத்தான் இல்லை. என் மனம் என்னமோபோல் ஆகிவிட்டதற்கு இதுவும் காரணம். ஆகவேதான், குறிப்பு எழுதாமலேயே இருந்துவிட்டேன். இன்று, இரண்டு நாட்களுக்குமாகச் சேர்த்து குறிப்பு எழுதுகிறேன். மனச்சங்கடம் அடியோடு போய்விடவில்லை - போக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இன்று, சமையல் வேலையில், அதிகக் கவனம் செலுத்தினேன் - நூற்பு வேலையிலும் சற்று அதிக நேரம் ஈடுபட்டேன். நாங்கள் அடைபட்டிருக்கும் பகுதிக்குப் பக்கத்திலேதான், தூக்குத் தண்டனை பெற்ற கைதிகள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலே ஒரு கைதிக்கு, நாளைக் காலை - பொழுது விடியுமுன் - தூக்கு! இன்று மாலை, அதுபற்றிய கவலை என் மனதைக் குடையத் தொடங்கிற்று. ஏழ்மைக் கோலம்! எண்பது வயதிருக்கும்! கூனிக் குறுகிப்போன நிலையில் உள்ள அவன் தாய், இன்று மாலை, மகனைக் கடைசி முறையாகக் காணவந்ததை நான் பார்த்திட்ட போது, மனம் மிக நொந்த நிலை பெற்றேன். சில கெஜ தூரத்தில்தான் இருக்கிறான் - விடியற்காலை தூக்கிலே மாள இருப்பவன். மாலையில், சிறை பெரிய அதிகாரிகள் வந்து பார்த்து விட்டுச் சென்றனர். கோயமுத்தூர் போகிறான், பெங்களூர் போகிறான் என்று ஒருவனுடைய "பயணம்’ பற்றி எவ்வளவு சாதாரணமாகப் பேசுவார்களோ, அதுபோல, இங்கு உள்ள சிறைக்காவலர்களும், கைதிகளுங்கூட, நாளைக் காலையிலே குப்பனுக்குத் தூக்கு! - என்று மிகச் சாதாரணமாகப் பேசுகிறார்கள், கேலிட்கும்போதே, மனம் வேதனையடைகிறது. ஆனால் அவன் செய்த குற்றத்தைக் கூறக்கேலிட்கும்போதோ, இப்படிப்பட்டவனுக்கு இதுதான் தக்க தண்டனை என்றும் தோன்றத்தான் செய்கிறது. பெயரோ, வெறுங் குப்பன் அல்ல - தலைவெட்டி குப்பனாம். ஒரு பெண்ணின் தலையை வெட்டி, கையில் தூக்கிக் கொண்டு, ஊரெல்லாம் சுற்றிவந்து, போலீஸ் அதிகாரியின் முன்பு கொண்டுபோய் அந்தத் தலையை வைத்தானாமே! அதைக் கேலிள்விப்படும்போது, தூக்குத்தண்டனை கூடாது என்று கூற யாருக்குத்தான் மனம் இடம் தரும்? நேற்றுவரை, சாதாரணமாக இருந்தவனுக்கு, இன்று மாலை, மனக்குழப்பம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. ஆறு மணி சுமாருக்கு, ஒரு பயங்கரமான கூச்சலிட்டான், திகில், திகைப்பு, மரணத்தின் பிடியில் சிக்கிவிட்டோம் என்ற வேதனை உணர்ச்சி, இவ்வளவும் கலந்த ஒரு கூச்சல். நான் குப்பன்! வெறுங்குப்பன்! தலைவெட்டி குப்பன் அல்ல! எனக்கு விடுதலை! விடுதலை கிடைக்கப்போகிறது! - என்றெல்லாம் கூவிக்கொண்டிருப்பதாக, சிறைக்காவலர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சில கெஜ தூரத்திலே இருக்கும் ஒருவன், நாளைக் காலையிலே தூக்கிலே மாளப்போகிறான் என்று தெரியும் நிலையில், இன்று எனக்குத் தூக்கம் எங்கேலி வரப்போகிறது! பொன்னுவேலுவும் வெங்காவும், இதோ தூங்கிக்கொண்டிருக்கத்தான் செய்கிறார்கள். பக்கத்து அறைகளிலேயும் சந்தடி இல்லை. இங்காவது சில கெஜ தூரத்துக்கு அப்பால், தூக்கில் தொங்கப்போகிறவன் இருக்கிறான். "ஆரிய மாயை’ வழக்கிலே தண்டனை பெற்று, நான் திருச்சி சிறையிலே கிடந்தபோது, எனக்குப் பக்கத்து அறையிலேயே, தூக்குத் தண்டனைக் காரன்தான்! இவ்வளவுதானா! இதோ, காலையிலே தூக்கிலே தொங்கப்போகும் குப்பன், இப்போது எந்தப் பகுதியில் இருக்கிறானோ அந்தப் பகுதிக்குத்தான், நாங்களெல்லாம் இரண்டொரு நாட்களில் மாற்றப்பட இருக்கிறோம். 13-3-1964 மூன்றாம் நம்பர் அறையிலிருக்கிறேன் - வேறோர் பகுதியில் - முன்பு குறிப்பிட்டிருந்தபடி, தூக்குக்குச் சென்றவன் இருந்த பகுதியில்! மணி பத்து அடித்துவிட்டது! இரண்டு நாட்களாகக் குறிப்பு எழுதாதிருந்தேன் - இன்று மொத்தமாக்கி எழுதுகிறேன். இந்த இடத்திற்கு 11-ம் தேதி பிற்பகலே வந்துவிட்டோம் - மாடி - முதல் - அறையில் அன்பழகன், இரண்டாவதில் சுந்தரம் - நான் மூன்றாவது அறை - நாலாவதில் பார்த்தசாரதி - பிறகு மதி - அடுத்தது பொன்னுவேல் - பிறகு வெங்கா - அடுத்ததில் அரக்கோணம் ராமசாமி. தூக்குக்குச் சென்றவன்போக, அதே தண்டனை பெற்று, காலத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஆறு பேர், இங்கு இருந்து, வேறு பகுதிக்கு - பக்கத்திலேதான் - அனுப்பப்பட்டு விட்டனர். இப்போது இருக்கும் பகுதிக்கும் ரயில்வே தண்டவாளப் பகுதிக்கும் இடையே அதிக தூரம் இல்லை; ஆகவே ரயில்வேக்களின் சத்தம் காதிலே விழுந்தபடி இருக்கிறது; கக்கும் புகை இந்தப் பகுதியில் அடிக்கடி கப்பிக்கொள்கிறது. இந்தப் பகுதியிலிருந்து பார்க்கும்போது, எதிர்புறத்தில் சென்ட்ரல் நிலையத்திலிருந்து, மவுண்ட்ரோட் போகும் வண்டிகளின் மேல்பாகம் நன்றாகத் தெரிகிறது - ஆக நகரத்தின் மத்தியிலே இருக்கிறோம் என்ற உணர்வு ஒருவிதமான மகிழ்ச்சியையும், நகரத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு மனச்சங்கடத்தையும், மாறி மாறித் தருகிற இடம். பெரிய மரமாக ஓங்கி வளரப்போகிறேன் என்று அறிவிக்கும் தன்மையில், “பருவ கருவத்துடன்’ ஒரு மாமரம், அறைக்கு எதிர்ப்புறம் இருக்கிறது. அதிலே பூ இல்லை. காய் இல்லை, ஆனால் சிட்டுக் குருவிகள் நூறுக்குமேல் என்று கருதுகிறேன், அதிலே இடம் பிடித்துக்கொண்டுள்ளன. என்னுடைய - நண்பர்களைப்போலவே, அந்தச் சிட்டுக் குருவிகளும் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டுள்ளன. துளி அரவம்கூட இல்லை. ஆனால் விடியற்காலை, என்னை எழுப்புவதே, அந்தக் குருவிகளின்”கோஷ்டி கானம்’தான். அடே அப்பா! இத்தனை சின்ன உருவத்திலிருந்து எப்படித்தான் அத்தனை பெரிய சத்தம் பிறக்கிறதோ தெரியவில்லை! சத்தம் என்று சொல்லிவிட்ட தற்காக வருந்துகிறேன். இசை - இன்னிசை! கவலை, பயம், தேவை, தவிப்பு எனும் எந்த உணர்ச்சிகளுமற்ற ஓர் நிம்மதியான நிலையிலிருந்து எழும் இசை! "எப்படி எல்லாமோ இருந்தேன் - இப்போது இப்படி ஆகிவிட்டேன்’’ என்று ஏக்கத்துடன் கூறுவதுபோன்ற நிலையில், மாவுக்குப் பக்கத்தில் ஒரு அரசமரம் இருக்கிறது, பல கிளைகள் வெட்டப்பட்டுவிட்டுள்ளன, இலைகள் பசுமையற்று, கீழேயும் விழாமல், கிளைகளுடன் கொஞ்சிக் கொண்டுமில்லாமல், ஏழ்மைக் கோலத்தில் உள்ளன. வேறோர் புறத்தில், இரு மரங்கள் - மரங்களாக வேண்டியவை - ஒரு வேம்பு, நுழைவு வாயிலருகேலி ஒரு பாதாமி மரம். இது, நான் இப்போது இருக்கும் இடத்தின் தோற்றம். இங்கு இருந்தவன் தூக்குக்குப்போன பிறகு, இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, எங்களை இங்கு கொண்டு வருவார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தேன் - அவனைக் காலை ஐந்து மணிக்கு "அனுப்பி‘விட்டு, பத்து மணிக்கு எங்களுக்குச் "சேதி’ அனுப்பினார்கள். இன்று பிற்பகல் புதிய இடம்; சாமான்களை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள் என்று! அங்கு நாங்கள் போவதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது, ராஜகோபால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, எனக்குத் தந்தி கொடுத்தது, வந்தது. எத்தனை “இன்பமான செய்தி’ அனுப்பிவைக்கிறார்கள் பாருங்களேன், நண்பர்கள்! நான் இருப்பது சிறையில், என் மனதில் குடைவது ஓராயிரம் கவலைகள், நான் இழந்திருப்பது என் சிற்றன்னையை, நான் நடத்தப்படுவது ஒரு கைதி என்ற முறையில், எனக்கு வெளியிலிருந்து அனுப்பப்படும்”விருந்து’ இதுபோல! இதை மற்றவர்களுக்குச் சொல்லி, அவர்கள் மனதைச் சங்கடப் படுத்துவானேன் என்று நினைத்து, “தந்தி‘பற்றி ஏதும் சொல்லவில்லை. ஆனால் சில மாதங்கள் “உள்ளே இருக்கும் தொகுதி ஐந்து 263 நிலையில், வெளியே என்னென்ன ஏற்பட்டுவிடுகின்றன என்பதை எண்ணி மெத்த வருத்தப்பட்டேன். மறுநாள் பத்திரிகையில், உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், ஏன் இருக்க நேரிட்டது என்பதற்கான விளக்கமும் கண்டேன். கழக நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர்கள், அவர்களுக்குச் சரி என்றுபட்ட செயலில் ஈடுபடும்போது, அந்தச் செயல், நம்மிலே சிலருக்குக் கசப்பும் கோபமும் ஏமாற்றமும் எரிச்சலும் ஏற்படுத்தக்கூடும்; ஆனால் முடிவெடுத்துச் செயல்படும் பொறுப்பை மேற்கொண்டவர்கள் வேண்டுமென்றே தவறான முறையைக் கைக்கொண்டிருக்கமாட்டார்கள். அப்படி அவர்கள் மேற்கொண்ட முறை குறையுடையது என்று தோன்றினாலும், அதன் விளைவாக நமக்கு வேதனையே ஏற்பட்டாலும், அதற்குப் பரிகாரம், பொறுத்துக்கொள்வதிலேயும், நோக்கத்திலே தவறு காணாமலிருப்பதிலேயும், நம்முடைய கடமையை மறவா திருப்பதிலேயும் கிடைக்க முடியுமே தவிர, கோபம், கொந்தளிப்பு, எதிர்ப்பு வருத்திக்கொள்ளுதல் ஆகியவற்றினாலே அல்ல என்பதை நமது கழகத் தோழர்கள் இன்னமும் முழு அளவிலும் நம்பிக்கையுடனும் உணரவில்லை. அதாவது இன்னமும்”பக்குவம்’ ஏற்படவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. இவ்விதமாக, நான் வருத்தப்படக்கூடிய நிகழ்ச்சிகள் கழகத்தில் ஏற்பட்டுவிடும்போது, நான் வேதனை மட்டுமல்ல, வெட்கப்படக் கூடச் செய்கிறேன். என்ன செய்வது?”இன்னமும் சிறிது காலம் தேவைப்படுகிறது போலும்’ பக்குவம் ஏற்பட. இங்கு நான் பார்க்கிறேன் - உணருகிறேன் - புதிய பாடம் கூடப் பெறுகிறேன் - ரொட்டி சுடுவதற்கு, மாவு பிசைகிறோம். மாவு பிசைந்து ஓரளவு “இளகிய’ நிலை அடைந்த பிறகுதான், அதை உருட்டி தட்டை வடிவமாக்குகிறோம் - ஆனால்,”இளகிய’ நிலையில் மாவு இருப்பதால், அதை உருட்டித் தட்டையாக்கும் போது ஒட்டிக்கொண்டு விடுகிறது. ஒட்டிக்கொள்ளாதிருக்க, உருட்டுவதற்காகப் பயன்படுத்தும் பாண்டத்தின்மீது, உலர்ந்த நிலையிலுள்ள மாவு தூவி, அதன்மீது, பிசைந்த மாவை வைத்து உருட்டித் தட்டையாக்கி எடுத்து, பிறகு, “ரொட்டி’ சுடுகிறோம், இந்த”மாவு’ ரொட்டி ஆகாது! ஆனால், இந்த மாவு தூவாவிட்டால், பிசைந்தது கைக்கு வராது, பாண்டத்திலேயே ஒட்டிக்கொள்கிறது. சாதாரண “ரொட்டி’ சுட்டெடுக்க,”இத்தனை பக்குவம்’ தேவைப் படுகிறது. மிருகத்தனமான எதிர்ப்புக்கு இடையிலே, மிகப் பெரிய மக்கள் இயக்கத்தை நடத்திச்செல்லும் மகத்தான காரியத்தில் வெற்றி காண, எத்தனை பக்குவம் தேவைப்படும்! அடுப்படியில் அமர்ந்திருக்கும்போது, நான் இதனை எண்ணாமலில்லை. கிடைத்ததைப் பயன்படுத்துவது, இருப்பதற்கு ஏற்றபடி ஆக்கிக்கொள்வது, சேதமானதுபோக மீதமுள்ளதைப் பயன்படுத்திக்கொள்வது என்பவைகளெல்லாம், இங்கேலி நான் பெற்றுள்ள பாடங்கள். வாழைப் பழத்தில் முன் பாகமோ, அடிப்பாகமோ, தளதளவென்று ஆகிவிட்டால், பழமே வேண்டாமென்று போட்டுவிடுகிறோம் - வெளியே! இங்கேலி? தளதளவென்று ஆகிவிட்ட பகுதியை நீக்கிவிட்டு மற்றதைப் பயன்படுத்திக்கொள்கிறோம் - இங்கு என்ன பழக்கடையா இருக்கிறது, இது வேண்டாம் வேறு கொடு என்று கேலிட்க? அதிலும் நான் கெட்டுப்போன பாகத்தைக்கூட வீணாக்கி விடாமல், பறவைகள் கொத்தித் தின்னட்டும் என்று அதற்கேலிற்ற இடமாக பார்த்துத்தான் போட்டு வைக்கிறேன். வடித்த சாதம் குழைந்து போய்விட்டால், அன்று தயிரன்னமாக்கப்படுகிறது; விறைத்துப்போய்விட்டால் புளிச்சாதமாக்கப்படுகிறது; இன்று காலையில், சமையலிடத்தில் வாடி வதங்கிப்போய், சத்தற்ற நிலையில், “வெண்டை’ ஒரு குவியல் தனியாக இருந்தது - வீசி எறியவேண்டியதுதான் என்றார் பார்த்தசாரதி. வேண்டாம் வற்றல் போடுவோம் என்று சொல்லி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் ஊறவைத்து, உலரவைத்திருக்கிறேன் - நாளையோ மறுநாளோ, வெண்டைக்காய் வற்றல் விருந்தாகப்போகிறது. இது, சாப்பாட்டுக்காக, நிலைமைக்குத் தக்கபடி நாம் மேற்கொள்ள வேண்டி வருகிற முறை. நமது கழகம், நாட்டுக்குப் புதிய பொலிவு நிலை சமைத்திட அமைந்திருக்கிறது; எத்தனை எத்தனை விதமான”பக்குவம்’ நாம் மேற்கொள்ள வேண்டும்; கற்றுக்கொள்ள வேண்டும். மேலவைத் தேர்தல் சம்பந்தமாக ஏற்பட்டுவிட்ட சில விரும்பத்தகாத நிலைமைகளைக் கண்டபோது, நான் இவ்விதமெல்லாம் எண்ணிக்கொண்டேன். தூக்கிவாரிப் போடுவதுபோல, மேலவை உறுப்பினர் பதவியை, நண்பர் எம். ஜி. இராமச்சந்திரன் ராஜிநாமா செய்துவிட்டாராம் என்று இன்று மாலை மதியழகன் தன் தம்பியைப் பார்த்துவிட்டு வந்து தெரிவித்தார். திகைத்துப் போனேன்; ஆனால், அடுத்தகணமே மதியழகன், நமது நண்பர்களின் சீரிய முயற்சியினால், அந்த நிலைமை மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறி, என் மனதைக் குளிரச் செய்தார். நாங்கள் இங்குவந்து சேர்ந்த மறுநாள் சிறை மேலதிகாரி, வந்திருந்தார் - மெத்த கவலையுடன். சட்ட சபையில் சிறை நிலைமை குறித்து, நமது கழகத் தோழர்கள் கேலிட்டிருந்த கேலிள்விகள்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அதன் விளைவாக, எங்களை, இனி நீங்கள் வேலை ஏதும் செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டாரா என்றால், இல்லை; காலையில் 7-30 - லிருந்து மாலை 4-30 வரையில் சிறை உடையில் இருக்க வேண்டும்; நூற்புவேலையைச் செய்திடவேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டுச் சென்றார். அது அவருடைய கடமை. நான் அதற்காக வருத்தப்படவில்லை. இங்கு நாங்கள் வேலை செய்யாமலில்லை - செய்கிற வேலை வேண்டுமானால், பயனற்றதாக இருக்கலாம் - நூற்புவேலை. ஆனால் முறையாக வேலை செய்து வருகிறோம். நேற்றும் இன்றும், கிருத்துவ மார்க்கத்தின் துவக்க கட்டத்தைப் பின்னணியாகக்கொண்ட ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு புறத்தில் செல்வச் செருக்கும் மூட நம்பிக்கையும்; மற்றோர் புறம் அருளாளரின் அறநெறி. இந்த இருவேறு நிலைமைகள் ஒன்றை ஒன்று எந்த வகையிலே பற்றியது என்பதை இந்த நூலில் வெகு அழகாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர். தூங்கு முன்பு, அநேகமாக முடித்துவிடுவேன். இடையில் சிறிதுநேரம் நாலடியார் படித்துக் கொண்டிருந்தேன். 14-3-1964 இன்று காலைப் பத்திரிகைகளில் எம். ஜி. ஆர். மேலவை உறுப்பினர் பதவியைத் துறந்துவிட்டார்; அந்த நிலையை மாற்ற நாவலரும் மற்றவர்களும் எடுத்துக்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை என்ற செய்தி கண்டு, திடுக்கிட்டுப் போனேன். கழகத்தில் ஆழ்ந்த பற்றும் என்னிடம் பாசமும் மிக்கவர். நான் சிறையில் இருக்கும் சமயத்தில், வெளியே எழும்பும் சில நிலைமை காரணமாக, இவ்விதமான முடிவுக்கு வந்தார் என்றால், எனக்கு மிகுந்த வேதனை ஏற்படாமலிருக்க முடியுமா? ஆனால், என்ன செய்ய முடியும்! நிலைமைகளை அறிந்துகொள்ளவோ, அவரிடம் பேசி நிலைமையைச் சீராக்கவோ முடியாத இடத்திலல்லவா இருக்கிறேன். பகலெல்லாம், இங்குள்ள நண்பர்கள் இது குறித்தே மிகச் சங்கடப்பட்டுக்கொண்டனர். எனக்கு, என்னுடைய மனச்சங்கடத்தை அடக்கிக்கொள்ளும் வேலையுடன், மற்ற நண்பர்களின் சங்கடத்தைத் துடைக்கும் பொறுப்பும் சேர்ந்து, நெஞ்சுக்குப் பெரும் சுமையாகிவிட்டது. கழகத்துக்கும் எம். ஜி. ஆருக்கும் அமைந்துவிட்ட பாசம், சொல்லிக்கொடுத்து ஏற்பட்டதல்ல. தூண்டிவிட்டுக் கிளம்பியதுமல்ல, தானாக மலர்ந்தது. “கனி என் கரத்திலே வந்து விழுந்தது’’ என்று பெருமிதத்துடன்,”நாடோடி மன்னன்’ வெற்றி விழாக் கூட்டத்திலே நான் பேசியது என் நினைவிற்கு வந்தது. அவர் கழகத்தைத் துறந்துவிடுவதோ, கழகம் அவரை இழந்துவிடுவதோ, நினைத்துகூடப் பார்க்கக்கூடாது. எனவே அவர், மேலவை உறுப்பினர் பதவியை விட்டு விலகினாலும், கழகத்தை விட்டு விலகமாட்டார் என் நெஞ்சிலிருந்து விலகமாட்டார் என்று எனக்கு உறுதி உண்டு. அந்த உறுதியைத் துணையாகக் கொண்டு, மனச்சங்கடத்தை மாற்றிக்கொள்ள - குறைத்துக்கொள்ள முனைவதிலேயே இன்று பெரும் பகுதி சென்றுவிட்டது. படித்து முடித்திட திட்டமிட்டிருந்தபடி. கிருத்தவ மார்க்கத் துவக்க நிலைபற்றிய புத்தகத்தையும் படிக்க மனம் இடம் தரவில்லை. ஒருபுறம், ராஜகோபாலின் “உண்ணாவிரதம்’ - மற்றோர் புறம், எம். ஜி. ஆரின் விலகல். எதற்கும் காரணமாக என் சொல்லோ செயலோ இல்லை - ஆனால், அவைகளால் ஏற்பட்டுவிடும் வேதனையின் முழு அளவும் எனக்கு. இப்படி ஒரு நிலைமை எனக்கு! நானாகத் தேடிக்கொண்டது - எனக்காக அல்ல, நாட்டுக்கு நல்லது விளையும் என்ற நம்பிக்கையுடன் நாம் நடத்திச் செல்லும் கழகத்துக்கா! என் இயல்பு தனித்தன்மை வாய்ந்தது; நான் கழகத்தை நடத்திச் செல்லும் முறை அந்த இயல்பை ஒட்டியே பெரிதும் அமைந்துவிட்டிருக்கிறது. கழகத்தை நான் வெறும் அரசியல் கட்சியாகக் கருதுபவனல்ல - எவர் ஒப்புக்கொண்டாலும் மறுத்தாலும், நான் மிக ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பது”கழகம் ஒரு குடும்பம்’ என்ற கருத்தினை. அரசியலை விளக்கும் சிலபல ஏடுகளை அதிலும் கட்சி மாச்சரியங்கள், கட்சி உட்பூசல்கள், தலைமைக்காக மேற்கொள்ளப்படும் முறைகள் ஆகியவற்றை விளக்கும் ஏடுகளைப் படித்த சிலர், "குடும்ப பாசம்’ என்ற இந்தக் கருத்தையே தவறு என்கிறார்கள் - தீது என்று என்னிடமேகூட வாதாடினார்கள். அவர்களுக்கும் எனக்கும் இருந்த உறவுதான் முறிந்ததே தவிர - அவர்களாக முறித்துக்கொண்டார்களே தவிர - குடும்ப பாசம் என்ற கருத்துக்கும் எனக்கும் ஏற்பட்டுவிட்ட பிடிப்பு என்னைவிட்டுப் போய்விடவில்லை - போகாது. இந்தப் பாச உணர்ச்சிதான், நமக்கு வலிவும் பொலிவும் தருவது; இது குறைந்தால் வலிவும் பொலிவும் மறையும். வலிவும் பொலிவும் தருகிற இந்த உணர்ச்சி காரணமாகத் தான், கழகத்திலிருந்து எவரேனும் விலகுகிறார் என்றால், மெத்தச் சங்கடமாகிவிடுகிறது. அதிலும் எம். ஜி. ஆர். போன்ற நட்புக்குப் பொருத்தமிக்கவர் மனச்சங்கடம் கொண்டு விலக முனையும்போது, சங்கடம் வேதனையாகிவிடுகிறது. இதே கிழமை இதழில் பார்க்கிறேன், பஞ்சாப் முதலமைச்சரை விலகச் செய்ய வேண்டும் என்பதற்காக, நேரு பண்டிதர் மாளிகை முன்பு, ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போகிறார் என்ற ஒரு செய்தியும், கடலூர் நகராட்சி மன்றத் தலைவராக, காங்கிரஸ் கட்சி ஒருவரை குறிப்பிட்டுவிட்டதால் மனம் குமுறி, அவ் ஊர் இளைஞர் காங்கிரசார் கண்டன ஆரவாரமும், ஊர்வலமும் நடத்துவது பற்றிய செய்தியும், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் திரு. அருணாசலம் பொறுப்பிலிருந்து வேதனையுடன் விலகும் செய்தியும் வெளி வந்துள்ளன. இவைகள் யாவும், அரசியல் கட்சிகளிலே ஏற்பட்டுவிடும் நடவடிக்கைகள் - இவை கட்சியிலுள்ளோருக்கு வேதனை தருவதில்லை. நாம் அப்படி அல்ல. நம்முடைய இயல்பும் முறையும் முற்றிலும் வேறு - சட்டை கிழிந்துபோவதற்கும் சதை பிய்ந்து விடுவதற்கும் உள்ள பேதம் தெரியுமல்லவா - மற்ற கட்சிகளிலே ஏற்பட்டுவிடும் விலகல் போன்றவைகள், சட்டை கிழிந்துவிடுவது போன்றது; நம்முடைய கழகத்திலே ஏற்பட்டுவிடும் நிகழ்ச்சிகள் சதை பிய்ந்துவிடுவதுபோன்றது - வேதனையில், விளைவில் இவ்விதமாக பலப்பல எண்ணங்கள் குமுறிக்கொண்டிருக்கும் நிலையில், வழக்கம்போல் அடுப்படியில் இருந்தேன். எத்தனையோ முறை பார்த்ததைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுப்பு எரிந்துகொண்டிருக்கிறது - மேலே வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் நறுக்கி எடுத்த காய்கள் வெந்துகொண்டிருக்கின்றன. காய்களை நறுக்கி எடுத்து, அடுப்புக்குள் போட்டா வேக வைக்கிறோம் - கருகிப்போகுமே! காய்வேக நெருப்பின் வெப்பமும் தேவை, அதேபோது அந்த வெப்பம் வேகவைக்கும் அளவிலும் முறையிலும் அமைந்திருக்க வேண்டும்; அதற்காகவே ஒரு பாத்திரம்! வெப்பத்தால் பாத்திரம் தாக்குண்டு காய் வேகுமளவுக்கு வெப்பத்தை அதன் பக்கம் திருப்பிவிட்டு மற்றதைத்தான் பெற்றுக்கொள்கிறது. பாத்திரம் கரி பிடித்து விடுகிறது - காய் வெந்து சுவைப் பண்டமாகிறது. கழகத்துக்கு நான் அப்படிப்பட்ட ஒரு பாத்திரமாக இருக்கிறேன் - மகிழ்கிறேன்! வேதனையை முழுவதும் நான் தாங்கிக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிடுவது, அடுப்பின்மீது ஏற்றப்பட்டுள்ள பாத்திரத்தின் நிலைக்கு என்னைக் கொண்டு சேர்க்கிறது. ஆனால், சமையலுக்கு ஒரு பாத்திரம் போதாது! பல வேண்டும்! என் நண்பர்களை, நான் இதுபோன்ற பாத்திரமாகும்படி கேலிட்டுக் கொள்வது தவிர, வேறு விளக்கம் ஏதும் கூறத் தேவையில்லை என்று கருதுகிறேன். கழகத்திலே ஏற்பட்டுவிடும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகளால் ஏற்பட்டுவிடும், வெப்பத்தை பாத்திரம்போல, நாம் இடையே இருந்து தாங்கிக்கொண்டால்தான் சமையல் காரியம் ஒழுங்காக முடியும். இவ்விதமாக நானாக எண்ணிக்கொண்டு, என் மனக்குழப்பத்தை மாற்றிக்கொள்ள முனைந்தேன். வெற்றி பெற்றேன் என்று சொல்வதற்கில்லை. இன்று மாலை, அன்பழகனுடைய துணைவியார் அவரைச் சந்தித்து, நாய் கடித்ததால், மகனுக்கு எந்தவிதமான தொந்தரவும் ஏற்படவில்லை என்று ஆறுதல் கூறினார்கள். மகனே, தைரியம் சொன்னானாம் - எனக்கு ஒன்றும் இல்லை அப்பா! பயம் வேண்டாம் என்று. இதை அன்பழகன் என்னிடம் சொன்னார் - மனம் நிம்மதி அடைந்தது. இன்றிரவு மீண்டும், குறையாக விட்டிருந்த புத்தகத்தைப் படித்துவிட்டுப் படுத்தேன். 15-3-1964 நான் படித்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த சம்பவங்கள் பற்றி மேற்கொண்டு தகவல்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில், இன்று "பைபிள்’ படித்துக்கொண்டிருந்தேன் - தமிழில் ஆக்கப்பட்டது. ரோமானியர்களிடம் சிக்கிச் சீரழிந்த நாடுகளிலே பஞ்சமும் பசியும், பிணியும், பகையும், மூடமதியும் கேலிடுகளும் நெளிந்து கொண்டிருந்த நிலைமையையும், அறநெறி காட்டிட எவருமின்றி, அந்த மக்கள் மாக்களாகிக் கிடந்ததையும், அந்த இருளையும் இழிவையும் துடைக்க ஏசுநாதர் மேற்கொண்ட அருள் வழிபற்றிய விவரமும் படித்து, மன நிம்மதி பெற்றேன். இதோ விதை விதைக்கிறவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கிறபோது சில விதைகள் வழியோரத்தில் விழ, ஆகாயப் பறவைகள் வந்து அவைகளைப் பட்சித்துப் போட்டன. சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்து மண் ஆழமில்லாததினாலே, உடனே முளைத்தன. ஆயினும் சூரியன் எழும்பவே, அவைகள் எரிந்து வேரில்லாமையால் உலர்ந்துபோயின. சில விதைகள் முள்ளுகள் நடுவே விழவே, முள்ளுகள் எழும்பி, அவைகளை நெருக்கிப்போட்டன. வேறு சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, ஒன்றுக்குச் சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலனைத் தந்தது. நீண்ட நேரம், இந்தப் பகுதியைப்பற்றிச் சிந்தித்து, சிந்திக்கச் சிந்திக்க கருத்துச்சுவை கிடைக்கப்பெற்று மகிழ்ந்தேன். நண்பர் அன்பழகனுடன், இதுபற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். பொதுவாக, மார்க்கங்கள், தூய்மைப்படுத்தும் இயக்கங்கள் மலரும்போது, அந்த இடங்களிலும், நாட்களிலும் நெளிந்து கொண்டுள்ள அக்ரமங்களை ஒழித்திடும் விதமாக ஆற்றல் பெறுகின்றன; தூய்மையும் வாய்மையும் கனிகின்றன; கெடுமதியும் கொடுஞ்செயலும் அழிந்துபடுகின்றன, நன்னெறியும் நல்லறிவும் அரசோச்ச வருகின்றன, இருள் அகலுகிறது, இழிவு துடைக்கப் படுகிறது. வெற்றி கிட்டுகிறது. மனித குலத்துக்கு மேம்பாடு கிடைக்கிறது. ஆனால் அக்ரமத்தை ஒழிப்பதிலே வெற்றி பெற்ற இயக்கங்கள், மீண்டும் அதுபோன்ற அக்ரமங்கள் எழ முடியாத நிலையை நிலைத்திடச் செய்ய முடிவதில்லை. தூய்மைப்படுத்தப் பட்ட இடம் மீண்டும் பாழ்படுகிறது; அரசோச்ச முற்பட்ட வாய்மை மீண்டும் வாட்டி வதைக்கப்படுகிறது. கொடுமைகள் புதிய வலிவில் கொக்கரித்துக் கிளம்புகின்றன. ஒழிக்கப்பட்டது ஒழிந்துபோய்விடவில்லை - துடைக்கப் பட்டது துல்லியமாகிவிடவில்லை - அடக்கப்பட்டது அடங்கிப்போய்விடவில்லை. இது விந்தையாக இருக்கிறது என்பதுபற்றி, அன்பழகனிடம் பேசிக்கொண்டிருந்தேன். வெட்ட வெட்டத் துளிர்த்தெழுவதுபோல, மனித குலத்தை அலைக்கழிக்கும் கேலிடுகள், தூய்மையாளர்களால் அவ்வப்போது தாக்கித் தகர்க்கப்பட்டு வந்தபோதிலும், மீண்டும் மீண்டும் கேலிடுகள் தலை தூக்குகின்றன. மனித குலத்தைப் பாழ்படுத்துகின்றன; தூய்மைப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்தபடி இருக்க வேண்டும்போலும் என்று பேசிக்கொண்டோம். நாளையத் தினம் மேயர் தேர்தல் - என்ன ஆகுமோ என்பது பற்றிய ஏக்கம் ஏற்பட்டுவிட்டது. “மக்கள் கழகத்துக்குப் பேராதரவு காட்டியுள்ளனர். மாநகராட்சி மன்றத்தில் அரசோச்சும் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர் - ஆட்சியைப் பெறுவதற்கான எண்ணிக்கையும் கிடைத்திருக்கிறது, எனவே ஏக்கம்கொள்ளத் தேவை இல்லை’’ என்று மதியழகன், தைரியம் கூறினார். ஆனாலும், காங்கிரஸ் கட்சி,”பண பாணத்தை’ ஏவி, கழகத்தைச் சிதறடிக்கப்போகிறது என்ற மிரட்டல்கள் இதழ்களிலே வந்திருந்த காரணத்தால், நான் சற்றுக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். மாலை, நெடுநேரம் இது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். இரவு, பைபிள், "பழைய ஏற்பாடு’ படித்தேன். 16-3-1964 இன்று பிற்பகல் 2 மணிக்குக் கூடி, மேயர் தேர்தல் நடத்தப் போகிறார்கள் என்ற செய்தியுடன், காங்கிரசின் சார்பில், கேலி. எம். சுப்பிரமணியம் என்ற செல்வவான் நிறுத்தப்பட முடிவாகி இருக்கிறது என்ற செய்தியையும் கழகம் கிருஷ்ணமூர்த்தியை நிறுத்த இருக்கிறது, தி. மு. க. ஆதரவு பெற்ற இவர், சென்ற முறையும் இதேபோல நின்று காங்கிரசிடம் தோற்றுப்போனார் என்ற செய்தியையும் இணைத்து, இதழ்கள் வெளியிட்டிருந்தன. நிலைமை விளக்கம் அல்ல, தமது நினைப்பை வெளிப்படுத்தி இருந்தனர், தேர்தல்களை நடத்துவதிலே திறமை பெற்றவர்கள் என்று பட்டயம் பெற்றுள்ள காங்கிரஸ் தலைவர்கள், மேயர் தேர்தலை நடத்திவைக்க வருகிறார்கள் என்றும், இதழ்கள் மிரட்டி இருந்தன. நமது கழக சம்பந்தமாக என்ன ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ள முடியாத நிலையில், அல்லற்பட்டுக்கொண்டிருந்தோம். இன்று காலை 9 மணிக்கு என்னைப் போலீஸ் பாதுகாப்புடன், பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள் - எனக்கு ஏற்பட்டுள்ள தோள் வலி எந்த நிலையிலே இருக்கிறது என்பதைக் கண்டறிய டாக்டர் நடராஜனிடம் கொண்டுபோயினர். வழக்கம்போல, போலீஸ் காவல், டாக்டர் நடராஜன் பரிசோதனை நடத்தினார். இடக்கரத்தை, வலக் கரம்போல இலகுவாக இன்னமும் தூக்க முடியவில்லை என்பதையும், பனி நீங்கி வெப்ப நாட்கள் துவங்கியது முதல், வலி ஓரளவு குறைந்திருக்கிறது என்பதையும் கூறினேன். இதற்கு வைத்தியம் உங்களிடமேயேதான் இருக்கிறது - இடக் கரத்தில் உள்ள பிடிப்பு போக, தேகப் பயிற்சி செய்தபடி இருக்க வேண்டும் என்று கூறினார். நாளைக்கு மூன்றாக உட்கொண்டு வரும் நொவால்ஜின் மாத்திரையை, இனி இரண்டாகக் குறைத்துக்கொள்ளலாம் என்று கூறி அனுப்பி விட்டார். அன்புள்ள அண்ணாதுரை 15-11-1964 மேயர் தேர்தல் எம். ஜி. ஆர்.! தம்பி! சிறைக்குள்ளே நுழைந்ததும், நான் வெளியே போய் வந்ததால், ஏதேனும் "சேதி’’ கொண்டு வந்திருப்பேன் என்று எண்ணிக்கொண்ட நண்பர்கள், மெத்த ஆவலாக என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். நான் பார்த்துவிட்டு வந்ததோ, போலீசார், நோயாளிகள், டாக்டர்கள் ஆகியோரைத்தான். எனவே நான் நண்பர்களுடன் சேர்ந்து, மேயர் தேர்தல்பற்றிய விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். “மணி இரண்டு! உள்ளே நுழைவார்கள் - உறுதிமொழி எடுப்பார்கள் - மூன்று மணி, உறுதிமொழி எடுப்பது பகுதிக்கு மேல் முடிந்திருக்கும் - நாலு மணி! முன்மொழிந்திருப்பார்கள், கிருஷ்ணமூர்த்தியின் பெயரை! மணி ஐந்து! இந்நேரம்”ஓட்டு’ பதிவாகிக்கொண்டிருக்கும்’’ என்று சிறைக்குள்ளே நாங்கள் துடித்த நிலையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் நிலையை யூகித்தறிந்துகொண்ட சிறைக் காவலாளிகள்கூட புன்னகை செய்தபடி இருந்தனர். ஐந்து மணிக்குமேல், என்னைக் காண ராணி, பரிமளம், நடராஜன் மூவரும் வந்திருந்தனர். ராஜகோபால், உண்ணாவிரதம் இருக்கப்போவதாகச் சொன்னது விளையாட்டுக்கு என்று தான் எண்ணிக் கொண்டதாகப் பரிமளமும், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நாள் முழுவதும் “நம் நாடு’ அலுவலகத்திலேயே ராஜகோபால் தங்கி இருந்ததாக நடராஜனும் கூறினார்கள். சிறை மேலதிகாரிகள் உடன் இருந்ததாலும், அரசியல் பேச்சு அறவே கூடாது என்று தடை இருந்ததாலும், மேற்கொண்டு எந்த விளக்கமும் பெற வழி இல்லாமற் போயிற்று. எம். ஜி. ஆர். கழகப் பணியாற்றுவதிலிருந்து விலகமாட்டார், தம்மீது வேண்டுமென்றே சிலர் வீண் பழி சுமத்துவதைக் கண்டிக்கவே மேலவை உறுப்பினர் பதவியை விட்டு விலகினார் என்று கூறி, நடராஜன் என் மனதுக்கு நிம்மதி ஏற்படுத்தினர். மேயர் தேர்தலில், வெற்றி நிச்சயம் என்றும், சிக்கல் ஏதும் இல்லை என்றும் கூறி, எனக்கிருந்த குழப்பத்தைப் பெருமளவு போக்கினார். என் பெரிய மருமகப்பெண் சரோஜாவை அழைத்துக்கொண்டு, ராணி மாயவரம் செல்லப் போவதாகக் கூறினார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு சரோஜாவுக்கு”ஜுரம்’ என்றும், இப்போது நலமாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்கள். உயர்நீதிமன்றத்தில், கருணாநிதி, நடராஜன் ஆகியோருடைய வழக்கு மறு நாள் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது என்று நடராஜன் கூறினார். அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, உள்ளே வந்ததும், நண்பர்கள் சூழ்ந்துகொண்டார்கள். என்ன சேதி, நடராஜனா வந்திருந்தது? மேயர் தேர்தல் எப்படி? என்றெல்லாம் கேட்டபடி. நடராஜன் தைரியமாகவே இருக்கிறார்; கழகம் வெற்றி பெறும் என்கிறார் என்று கூறினேன். என்றாலும் இரவு நெடுநேரம் வரையில் மேயர் தேர்தல் சம்பந்தமான கவலையுடனேயே இருக்க நேரிட்டது - இத்தனைக்கும் ஒரு சிறைக்காவலாளி, கிருஷ்ணமூர்த்தி மேயராகவும், கபால மூர்த்தி துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள் - 55 வாக்குகள் என்று கூறியிருந்தார் - என்றாலும், பத்திரிகையில் செய்தி பார்க்கிறவரையும், நிம்மதி எப்படி ஏற்படும்? இது குறித்தே கவலை மிகுந்திருந்ததால், இன்று இரவு குறிப்பு எழுதுவதுடன் நிறுத்திக்கொண்டேன் - அதிகமாகப் படிக்க விருப்பம் எழவில்லை. 17-3-1964 இன்று காலையில், சிறை மேலதிகாரிகள் கைதிகளைப் பார்வையிடும் நிகழ்ச்சி, வழக்கப்படி நடந்தேறியது. காலையில், வெளியே இருந்து உள்ளே வந்திருந்த சிறைக்காவலாளிகள் மேயர் தேர்தலில் கழகம் வெற்றிபெற்றது என்று தெரிவித்தார்கள்; மகிழ்ச்சி பொங்கிடும் நிலையில் இருந்தோம். வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே, நூற்புவேலை செய்தேன். பனிரெண்டு மணிக்கு மேல் பத்திரிகைகள் தரப்பட்டன - வெற்றிச் செய்தியைப் படித்துப் படித்துச் சுவைத்தோம். பொள்ளாச்சி நகராட்சித் தலைவராகக் கழகத் தோழர் வெற்றிபெற்றார் என்ற விருந்தும் கிடைத்தது. பொள்ளாச்சி மோட்டார் மன்னர் மகாலிங்கம் அரசோச்சும் ஊர்! டில்லி இரும்பு மந்திரி சுப்ரமணியம் அவர்களின் தொகுதி. காங்கிரஸ் ஆதரவு ஏடுகளே எழுதியுள்ளபடி இதுவரையில் காங்கிரஸ் கோட்டையாக இருந்து வந்த இடம். அங்கு நமது கழகத் தோழர் நகராட்சி மன்றத் தலைவராகியிருக்கிறார் என்பது கேட்டு அகமிக மகிழ்ந்தோம். நாம் விரும்பியபடியே நண்பர் கிருஷ்ணமூர்த்தி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்ற செய்தி எங்களுக்கு இந்த சிறைச்சாலையை சிங்காரச் சோலையாக மாற்றிவிட்டது. துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கபால மூர்த்தி, என் நீண்டகாலத்து நண்பர். இருபது வருடங்களாக எனக்குத் தோழர். சிந்தாதிரிப்பேட்டை சுயமரியாதைச் சங்கத்தில் நான் ஈடுபட்டுப் பணியாற்றிய நாள் தொட்டு, எனக்கு உற்ற நண்பராக இருந்து வருபவர். ஏழை, அடக்கமானவர், கொள்கைப் பிடிப்பு உள்ளவர். அவர் துணை மேயராக வந்திருப்பது எனக்கு அளவிலாத மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாகும். இன்று மாலை, அடைக்கப்படு முன்பு மற்றோர் மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. வழக்கறிஞரும் என் நண்பருமான கழகத் தோழர் சாமிநாதன், சிதம்பரம் நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் - அவருடைய தந்தி கிடைத்தது; மிக்க மகிழ்ச்சி பெற்றேன். ஒரே நாளில் அத்தனை மகிழ்ச்சியா என்று கேட்டுத் தாக்குவதுபோல, நீண்ட பல ஆண்டுகளாக எனக்கு மிகவும் வேண்டியவராக, குடும்ப நண்பராக விளங்கிக்கொண்டுவந்த, கழக அன்பர், திருவெற்றியூர் டி. சண்முகம் அவர்கள் காலமானார் என்ற திடுக்கிடத்தக்க செய்தியைத் தந்தி மூலம் நண்பர் நடராஜன் தெரிவித்திருந்தார். தொத்தாவின் மறைவினால் நான் வேதனைப்பட்டிருந்த போது, காஞ்சிபுரம் வந்திருந்து எனக்கு ஆறுதல் மொழி கூறிய அந்த அன்பரை இழந்துவிட நேரிட்டுவிட்டதை எண்ணி மெத்த வருத்தப்பட்டேன். என்னிடத்திலும் கழக வளர்ச்சியிலும் அக்கறை மிகக்கொண்டிருந்த அன்பர் அவர்; அஞ்சா நெஞ்சு கொண்டவர். அவருக்குச் சுயமரியாதைக் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு; பலரைச் சுயமரியாதைக்காரராக்கிய பெருமையும் உண்டு. நல்ல நிர்வாகத் திறமை உள்ளவர்; செங்கற்பட்டு மாவட்டக் கழகத்தில் நற்பணி புரிந்தவர்; எங்கு நமது கழகக் கூட்டமென்றாலும், மாநாடு என்றாலும், அவரை அங்கே காணலாம்; கழகத் தோழர்களுடன் அளவளாவி மகிழ்வார். அவருடைய மறைவு கழகத்துக்குப் பொதுவாகவும், குறிப்பாக எனக்கும் ஈடு செய்ய முடியாத நட்டமாகும். இன்றிரவு அன்பருடைய மறைவுபற்றிய துக்கம் தாக்கிடும் நிலையிலேயே உறங்கச் செல்கிறேன். 18-3-1964 இன்று காலை நம் இதழ்களில், எம். ஜி. ராமச்சந்திரன் விடுத்திருந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன், ஏற்கனவே நான் அவருடைய உளப் பாங்கை நன்கு அறிந்திருந்தபோதிலும், அவருடைய விளக்க அறிக்கை வெளி வருகிறவரையில், மனது குழம்பியபடிதான் இருந்து வந்தது. என்னைப்போலவே எண்ணற்ற தோழர்கள் இது குறித்துக் குழம்பிக் கிடப்பார்கள் என்பதை அறிந்து, தக்க சமயத்திலே அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு இடையில், கிடைத்த சமயத்தை வைத்துக்கொண்டு, அரசியல் ஆரூடக்காரர்களும் கரகமாடுவோரும், தமது "வித்தைகளைக்’ காட்டி மாலை நேரத்தை ஓட்டிக் கொண்டிருந் திருக்கிறார்கள் என்ற செய்தியைச் சில இதழ்களின் மூலம் தெரிந்துகொண்டேன். எந்தப் பிரச்சினை குறித்தும் அதிகமான அளவு மனக் குழப்பம் கொள்ளாமல், தமக்குத் தோன்றும் விளக்கத்தை ஒளிவு மறைவு இல்லாமலும், கூச்சம் அச்சம் கொள்ளாமலும் எடுத்துக் கூறுபவர் அன்பழகன். அவருங்கூட எம். ஜி. ஆர். விலகல் பற்றி மனச்சங்கடம் கொண்டிருந்தார். இன்று வந்த அறிக்கையைப் பார்த்த பிறகு மகிழ்ச்சி அடைந்தார். வேடிக்கையாக ஒன்று சொன்னார் - அந்த வேடிக்கையிலும் ஒரு நேர்த்தியான உண்மையும், சுவையான கருத்தும் இணைந்திருந்ததை உணர்ந்தேன். எம். ஜி. ஆர். மேலவை உறுப்பினர் பதவியை விட்டு விட்டார் - அது இனிக் காங்கிரசு கட்சிக்குத்தான் கிடைத்துவிடும் - என்று துவக்கினார். ஆமாம் - சில நாள் கழித்து தேர்தல் வைத்துக்கொள்வார்கள் - ஒரே இடம் என்பதால் அது எண்ணிக்கை வலிவுள்ள காங்கிரஸ் கட்சிக்குத்தான் கிடைக்கும் என்று கூறினேன் - வருத்தத்துடன் சிரித்துக்கொண்டே அன்பழகன் சொன்னார், "இதுவரையில் நாம் நமது வாக்குகளைப் பல கட்சியினருக்கும் கொடுத்து அவர்களுக்கு இங்கும் டில்லியிலும் மேலவையில் இடம் கிடைக்கச்செய்தோம் - காங்கிரசுக்கு மட்டுந்தான் இடம் கொடுக்காமலிருந்தோம். இப்போது அந்தக் குறையும் நீங்கிவிட்டது; புரட்சி நடிகர் விட்ட இடத்திலே ஒரு காங்கிரஸ்காரர் புகுந்துகொள்வார்’’ - என்றார். எல்லோரும் சிரித்தோம் - எவரெவருக்கு நாம் இத்தகைய வாய்ப்பு அளித்திருக்கிறோம் என்று கணக்கெடுத்தோம். ஜஸ்டிஸ் கட்சித் தலைவரான பி. டி. இராஜனுக்கு ஒரு முறை வாக்களித்து, மேலவையில் அமரச் செய்திருக்கிறோம். கம்யூனிஸ்டு கட்சியினரான இராமமூர்த்திக்கு வாக்களித்து, டில்லி மேலவையில் சென்று அமர வாய்ப்பளித்தோம். முஸ்லீம் லீகினர் ஜானிபாயை ஆதரித்து சென்னை மேலவையில் உறுப்பினராக இருக்கவைத்தோம். சுதந்திரக் கட்சியினரான பேராசிரியர் இரத்தினசாமியை ஆதரித்து, டில்லி மேலவையில் அமர ஏற்பாடு செய்தோம். முஸ்லீம் லீகின் தோழர் சமதும், சுதந்திரக் கட்சி மாரி சாமியும் இம் முறை நமது ஆதரவு பெற்று டில்லி மேலவை செல்ல இருக்கிறார்கள். இப்படி இத்தனை கட்சிகளுக்குத் துணை செய்து காங்கிரசுக்கு மட்டும் ஒரு முறை கூட ஆதரவு தராமலிருக்கலாமா? இந்தக் குறையும் தீர்ந்துபோகத்தானோ என்னவோ, மேலவை உறுப்பினர் பதவியை எம். ஜி. ராமச்சந்திரன் உதறிவிட்டது! - என்று பேசிக் கொண்டிருந்தோம். மறைந்த பெரும் பேராசிரியர் ரா. பி. சேதுப் பிள்ளை, இன்று மணிகளெனச் சுடர்விட்டு விளங்கும் டாக்டர் மு. வ., ஔவை துரைசாமி, தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற தமிழ்ப் புலவர்களின் அறிவாற்றல் குறித்து அன்பழகன் கனிவாகப் பல கூறினார். பொதுவாக இன்று தமிழ்மொழி பெற்றுவரும் ஏற்றம் குறித்துப் பேசி மகிழ்ந்தோம். குறளாராய்ச்சியில் அன்பழகன் ஈடுபட்டிருக்கிறார். ஆகையால், அவரிடம் அது குறித்துப் பேசி மகிழ்வதிலே எனக்கோர் தனி இன்பம் கிடைக்கிறது. நமது கழகத் தோழர்கள், சட்டமன்றத்தில் மிகச் சுறுசுறுப்புடன் பணியாற்றி வருவது, இதழ்கள் மூலம் தெரிகிறது. மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. வழக்கம்போல இதழ்கள் குறித்து இருட்டடிப்புச் செய்து வருகிறது என்றாலும், ஓரளவுக்கு “நம் நாடும்’ -”முரசொலியும்’ மக்களுக்கு விளக்கமளிக்க முனைந்திருக்கின்றன என்பது, உற்சாகமூட்டுவதாக இருக்கிறது. தமிழ் மொழி ஏற்றத்துக்காகவும் பிற மொழி ஆதிக்கத் தடுப்புக்காகவும், பணியாற்றி வரும் நமது கழகத்திடம், தமிழறிஞர்கள் பற்றுகாட்டவேண்டியது முறையாயிருக்க, சிலர் வெறுத்து ஒதுக்குவதும், சிலர் அஞ்சி ஒதுங்கிக்கொள்வதும், சிலர் எதிர்த்து நிற்பதுமாக இருப்பது வேதனை தரக்கூடிய விந்தையாக இருக்கிறது என்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். ஆட்சியில் உள்ளவர்கள் எந்த விதத்திலும் மனக்கசப்புக் கொள்ளக்கூடாது, அதுவே நமக்கு வாழ்க்கையில் வெற்றித் தேடிக்கொடுக்கும் என்ற பாதுகாப்பு உணர்ச்சியே, தமிழ் கற்ற அறிஞர்களை மட்டுமல்ல, வேறு பலரையும் ஆட்டிப் படைக்கின்றது என்பதனை நான் கூறினேன். அன்புள்ள அண்ணாதுரை 22-11-1964 வெற்றிகள் குவிந்தன! தம்பி! சிலர், உயர்நிலை செல்வதற்காக, ஆட்சியாளர்களுக்கு இனியவர்களாக நடந்துகொள்கிறார்கள் - நம்மிடம் தனியாகப் பேசும்போது மெத்த உருக்கம் காட்டக்கூடச் செய்கிறார்கள். நாமே ஏமாந்துவிடுகிறோம், இவர்கள் மேல் நிலை வருகிறவரையில் இப்படித்தான் இலைமறை காயாக இருப்பார்கள் - இருக்க வேண்டும் - இவர்களின் நிலைமை வலுவாகிவிட்ட பிறகு, இவர்கள் முழுக்க முழுக்க நம்மவர் என்று தம்மை விளக்கிக் காட்டுவார்கள் என்று எண்ணிவிடுகிறோம். ஆனால் “மேல்நிலை’ அடைந்ததும், கிடைத்ததை உறுதிப்படுத்திக் கொள்ளவும் ஊறு நேரிடாமற் பார்த்துக்கொள்ளவும், இவர்கள்”நம்மவர்’ என்பது துளியும் வெளியே தெரியாதபடி, தம்மை ஆக்கிக்கொண்டுவிடுகிறார்கள் என்பதுபற்றிப் பேசி, அதற்கான சில எடுத்துக்காட்டுகளும் கூறினேன். நண்பர் அன்பழகன் இந்த என் கருத்தை வலியுறுத்தத் தக்க வேறு சில எடுத்துக்காட்டுகளைத் தந்தார். இத்தகைய இக்கட்டுகளை, மேல்நிலையினர் மூட்டி விட்டாலும், மக்கள் நமது கழகத்தை மேலும் மேலும் ஆதரித்து வருகிறார்கள் என்பதை நடைபெற்ற நகராட்சி - மாநகராட்சி மன்றத் தேர்தல்கள் எடுத்துக்காட்டிவிட்டன என்பது எங்களுக்கு பெருத்த உற்சாகமளித்தது. வெளியே நடைபெறும் வெற்றி விழாக் கூட்டங்களிலே, நாங்கள் கலந்துகொள்ளும் நிலை இல்லை என்றாலும், இங்கு இருந்தபடியே, அந்த விழாக் கோலத்தை எண்ணி எண்ணி மகிழ்ச்சி பெறுகிறோம். இன்று, ஐரோப்பாவிலே நிலைபெற்றுவிட்ட கிருத்துவ மார்க்கத்தில், பிரிவும் பிளவும் ஏற்பட்ட சூழ்நிலையை விளக்கும் ஒரு வரலாற்றுத் தொடர்புடைய கதையைப் படித்தேன். போப்பாண்டவரின் ஆளுகை ஒருபுறம் - சிற்றரசர்களின் கோலாகலம் மற்றொருபுறம் - சீமான்களின் கொட்டம் பிறிதோர் பக்கம் - இவைகளுக்கிடையிலே துரத்தப்பட்டும் இழுக்கப் பட்டும், ஏழை மக்கள் - இருந்த நிலைமையை விளக்கும் ஏடு. மார்க்கம், தூய்மையையும் வாய்மையையும் பாதுகாத்திட மலருகிறது - அதிலே களங்கம் ஏற்பட்டுவிட்டது. அதனைக் களைந்திட வேண்டும் என்று, எதிர்ப்பு இயக்கம் எழுகிறது - அந்த எதிர்ப்பு இயக்கம் வெற்றி கண்ட பிறகு, புதிய அக்ரமங்கள், புதிய அநீதிகள் முளைவிடுகின்றன. இந்த நிலைமைபற்றியும், அந்த ஏடு தெளிவாக விளக்கம் தருகிறது. "சாமான்யர்களும்’ முறைப்படியும், நம்பிக்கையுடனும், தன்னலமற்றும் எழுச்சியுடனும் பணியாற்றினால், அக்ரமத்தை எதிர்த்தொழிக்க முடியும் என்ற உண்மையை இந்த ஏடு கோடிட்டுக் காட்டுகிறது. முற்றிலும் வேறான காலம் இது; நமது முறைகளும் வேறு என்றாலும், நமது கழகத்தின் பணியும் ஒருவிதத்தில், "சாமான்யர்‘களின் முயற்சிதானே. எனவே, அதிலே ஈடுபட்டுள்ள என் போன்றாருக்கு, பல்வேறு காலங்களிலும் இடங்களிலும், அக்ரமத்தை எதிர்த்து நிற்க சாமான்யர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப்பற்றிப் படித்தறியும்போது, புதிய தெம்பு பிறக்கத்தான் செய்கிறது. நாம் மேற்கொண்டுள்ள பணி, அக்ரமத்தை எதிர்த்து நடத்தப்படும் "புனிதப் போர்’ எனும் பெருங் காப்பியத்திலே ஒரு பகுதியே தவிர, முற்றிலும் புதிதானதல்ல என்ற ஒரு பூரிப்பான எண்ணம், இன்று எனக்குப் பூங்காற்றாகித் துணைபுரிந்தது. 19-3-1964 காஞ்சிபுரத்தில் வெற்றி, ஆரணியில் வெற்றி என்ற செந்தேன் இன்று கிடைத்தது. ஆரணித் தோழர்கள், நான் மருத்துவமனையிலே இருந்தபோது என்னை வந்து பார்த்தனர். வெற்றி நிச்சயம் என்றும் கூறினர். என்றாலும் "பெரிய புள்ளிகள்’ வேலை செய்து, நிலைமைகளைத் தலைகீழாக மாற்றிவிட முடியுமல்லவா - ஆகவே, என்ன ஆகிறதோ என்ற கவலை, மனதைப் பிய்த்தபடிதான் இருந்தது. ஆரணியில் வெற்றி கிடைத்தது என்ற செய்தியை இதழில் படித்த பிறகு மகிழ்ச்சி உறுதியாயிற்று. காஞ்சிபுரத்தைப்பற்றியும் ஐயம் கொள்ளவேண்டிய நிலை இல்லை. என்றாலும், காங்கிரஸ்காரர்கள் பொதுத் தேர்தலில் கையாண்ட முறைகளைக்கொண்டு, ஏதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்துகொண்டிருந்தது. இதழில் வெற்றிச் செய்தி கண்ட பிறகு, புதிய உற்சாகம் பிறந்தது. நான் “பரோலில்’ காஞ்சிபுரத்தில் இருந்தபோது, நமது கழகத் தோழர்கள் என்னிடம் இம் முறை கழகம் மிகப் பெரிய வெற்றிபெறும் என்று எழுச்சியுடன் கூறினார்கள். இப்போது நமது கழகத்தவர் நால்வர் உறுப்பினராக இருக்கிறார்கள் - அதிகம் வேண்டாம், இந்த முறை எட்டு கழகத்தவர் உறுப்பினரானாலே போதும், அதுவே பெரிய வெற்றிதான் என்று நான் சொன்னேன். நண்பர் சபாபதி,”எட்டா? அதற்கு மேல் வெற்றி கிடைத்தால் என்ன தருகிறீர்கள்?’ என்று “பந்தயம்’ பேசினார்.”நூறு ரூபாய் விலையில் ஒரு கைக்கடிகாரம் தருகிறேன்.’’ என்று கூறினேன். நூறு ரூபாய்ச் செலவு வந்துவிட்டது!! இதனை இங்கே நண்பர்களிடம் சொன்னபோது, "வாங்கித் தரவேண்டியதுதான்!’ என்று கூறினார்கள். செலவு, எனக்கல்லவா, இவர்களுக்கு என்ன? வெகு தாராளமாகச் சொல்லிவிட்டார்கள்! காஞ்சிபுரத்தில் வெற்றிக்காகப் பாடுபட்ட நமது தோழர்கள் அனைவருக்கும், நான் நன்றிகூறிக்கொள்கிறேன். அமைச்சர் பக்தவத்சலம், தம்முடைய ஆதீனத்தில் உள்ள ஊர்களிலே ஒன்று என்று காஞ்சிபுரத்தைக் கருதிக் கொண்டிருக்கிறார். அங்கு நகராட்சிமன்றம் கழகத்திடம் வந்திருப்பது தனி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. வெற்றிச் செய்திகளால் ஏற்பட்ட உற்சாகத்தில், என் கரத்திலே "தக்ளி’ வெகு வேகமாகச் சுழன்றது. முன்பு வடார்க்காடு பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்தவரும், இப்போது கதர்த் துறையில் பணி புரிபவருமான அதிகாரி ஒருவர், சிறையில் நூற்பு வேலை - காகிதம் செய்தல் ஆகியவைகளைப் பார்வையிட இன்று வந்திருந்தார். எங்களுடைய நூற்பு வேலையைப் பார்த்து மகிழ்ந்தார். இன்று பிற்பகல், துணை மேயர் கபாலமூர்த்தி என்னைக் காண வந்திருந்தார். இன்று, சென்னை மாநகராட்சி மன்றத் துணைத் தலைவராக வந்த கபாலமூர்த்தி, இதே சிறையில் சென்ற ஆண்டு கைதியாக இருந்தவர்தான்! என்னைப் பார்த்த உடனே மகிழ்ச்சியால், குரல் தழதழத்தது கபாலமூர்த்திக்கு. கபாலி, குமரேசன், ராகவலு இவர்களுடன், சிந்தாதிரிப் பேட்டைப் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில், ஒரு பாலத்துக்குப் பக்கத்திலே, நான் ஒவ்வொரு மாலையும் பேசிக் கொண்டிருப்பேன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு - சிந்தாதிரிப்பேட்டை சுயமரியாதைச் சங்கத்துக்கு நான் அப்போது தலைவன். எத்தனை உற்சாசம்! என்னென்ன பேச்சு!! அந்த நாட்களில்! அதே கபாலமூர்த்தி, துணை மேயர்!! அன்று கபாலியைப் பார்த்தபோது, பாலத்தருகே உலவிய நாட்கள் நினைவிற்கு வந்தன. பேச இயலவில்லை. என் எண்ணம் முழுவதையும், விளக்கிட முதுகைத் தட்டிக்கொடுத்தேன். என்னிடம் எப்போதுமே கூச்சத்துடன் நடந்துகொள்ளும் பழக்கம் கபாலிக்கு - இப்போது நான் "கைதி’யாக, கபாதுணைமேயராக - கூச்சம் மேலும் அதிகமாகிவிட்டது. தேர்தல் நடைபெற்ற முறைபற்றி ஏதேதோ கேட்க எண்ணினேன் - எனக்கும் பேச இயலவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே, பேச்சைவிடப் பொருள் மிகுந்ததாக இருந்தது. மேயர், தமது மகனுடைய திருமண சம்பந்தமாகக் கோவை சென்றிருப்பதாகக் கபாலி கூறினார். சுறுசுறுப்பாகவும் அக்கறையுடனும் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டேன். பணிபுரிவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. இன்று “கல்கி’ இதழில், ரா. கணபதி என்பவர் எழுதியிருந்த”ஜயஜய சங்கர’ என்ற தொடர் கட்டுரையைப் படித்தேன். எழுதப்பட்டுள்ளதில் முழு ஈடுபாடு கொண்டு எழுதியிருக்கிறார். சங்கரர், தமது காலத்தில், நாட்டிலே தலைவிரித்தாடிய அறுபதுக்கும் மேற்பட்ட போலி மார்க்கங்களை அழித்து, அத்வைதத்தை நிலைநாட்டினார் என்பது குறித்து, விளக்க மளித்துள்ளார். சங்கரர் பெற்ற வெற்றி எத்துணை சிலாக்கிய மானது என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆனால் ஏற்கனவே எனக்கு ஏற்பட்ட ஒரு எண்ணம். இந்த ஏடு படித்த பிறகு மேலும் உறுதிப்பட்டது. தூய்மைப்படுத்தும் இயக்கம் எவ்வளவு வெற்றி பெற்றாலும், மீண்டும் அக்ரமம் - அநீதி - தோன்றிட முடியாத நிலையை ஏற்படுத்த முடியவில்லை - சங்கரரின் திக்விஜயம் - வாதம் - “பீடஸ்தாபிதம்’ ஆகியவைகளுக்குப் பிறகு, அத்வைதம் அரசோச்சிய இடத்திலே”துவைதமும்’ - “விசிஷ்டாத்வைதமும்’ மலர்ந்து, மகுடம் சூட்டிக் கொண்டன என்று அறியும்போது, தூய்மைப்படுத்தும் இயக்கம் பெறும் வெற்றி, மீண்டும் கேடுகள் தோன்றிட முடியாத நிலையை ஏற்படுத்துவதில்லை என்ற எண்ணம் வலிவு பெற்றது. அதிலும் சங்கரர் வாதிலே வென்ற இருவர் - குமாரிலபட்டர் - மண்டனமிசிரர் - ஒருவர் முருகன் - மற்றவர் பிரம்மா - சங்கரரோ சிவன்! சிவனாரோ, இந்த இருவரையும் பூலோகத்தில் இவ்விதம் அவதரித்து இருங்கள், நாம் சங்கரராக வந்து உம்மை வாதில் வீழ்த்துவோம் என்று கூறி அனுப்பினார் என்று சொல்லப் படுகிறது. ஏற்கனவே செய்யப்பட்ட ஒரு”ஏற்பாடு’ என்று கருதக்கூடிய ஒரு நிலை இது எனக்கு என்னமோபோலிருந்தது - சில குத்துச்சண்டை - குஸ்திச்சண்டை - ஆகியவைகளில், வெற்றி - தோல்விபற்றி முன்னதாகவே "ஏற்பாடு’ செய்து கொள்வார்களாமே! அதுபோல ஒரு தோற்றமளிக்கிறது - கைலாயத்தில் பேசிக்கொண்டு பூலோகத்திலே வாதப்போர் நடத்தியது. குமாரிலபட்டரும் - மண்டனமிசிரரும், குமரன் பிரமன் என்று இல்லாமல், மார்க்கத் துறையில் வேறு முறைகளை ஆக்கிய ஆசான்களாக மட்டுமே இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றிற்று. ஆனால், எல்லாவற்றுக்கும் தத்துவார்த்தம் ஏதாகிலும் எடுத்துக் கூறப்படக்கூடும், குமாரிலபட்டரும் - மண்டனமிசிரரும் இரு பேரறிவாளர் என்று மட்டும் இருந்திருப்பின், கூறப்பட்டுள்ள நிகழ்ச்சியின் நேர்த்தி மேலும் எடுப்பாக இருந்திருக்கும் என்பதனைத்தான் சொல்கிறேன். முருகனையும் பிரம்மனையும் சிவனார் வாதத்தில் வென்றார் என்பதிலே வியந்திடவோ, பெருமைப்படவோ என்ன இருக்க முடியும். ஜயஜய சங்கர என்ற இந்தத் தொடர் கட்டுரையில், மிக உருக்கமான பகுதியாக எனக்குப் பட்டது - சங்கரருக்கும் அவருடைய அன்னைக்கும் நடக்கும் உரையாடல் பகுதி என் சிற்றன்னையின் நினைவு வந்துவிட்டது. காஞ்சிபுரம் நகராட்சிமன்றத் தலைவராக அ. க. தங்கவேலர் வந்திருப்பதில் தொத்தா எவ்வளவு பெருமைப் பட்டிருப்பார்கள் - மகிழ்ந்திருப்பார்கள் என்பதை எண்ணிக் கொண்டேன். ஒவ்வொரு மாலையும், மணிக்கணக்கில், தொத்தா “அரசியல்’ பேசுவது தங்கவேலரிடம்தானே! தங்கவேலர் நகராட்சி மன்றத் தலைவரானபோது,”தொத்தா’ இருக்க முடியாமற்போய்விட்டதை எண்ணி வருத்தப்பட்டேன். 20-3-1964 இன்று காலையில், போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். டாக்டர் சத்தியநாராயண அவர்கள் என்னைப் பரிசோதிப்பதற்காக அந்த நாளைக் குறிப்பிட்டிருந்தார். அவர் வரும் நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே நாங்கள் போய்ச் சேர்ந்ததால். அவருடைய அறையில் நான் உட்கார வைக்கப்பட்டேன் - எனக்குப் பக்கத்தில் போலீஸ் அதிகாரி உட்கார்ந்துகொண்டார்! வலப்புறம் ஒரு போலீஸ்காரர், இடப்புறம் மற்றொருவர்; துப்பாக்கியுடன். டாக்டர் சத்தியநாராயணா அரை மணி நேரம் கழித்து வந்தார் - என் உடல் நிலையைக் கண்டறிந்து மகிழ்ச்சி தெரிவித்தார். ஒரு பதினைந்து நிமிட நேரம் அங்கு; பிறகு புறப்பட்டு சிறைச்சாலை வந்து சேர்ந்தேன். என் உடல் நிலையைப் பொறுத்தவரையில், எனக்குத் தெரிவதெல்லாம், இடக் கையிலே ஏற்பட்டுவிட்ட "பிடிப்பு’ நீங்குமா என்பதிலேயே சந்தேகம் ஏற்படும்படியாக இருப்பதுதான். வபெருமள வு குறைந்திருக்கிறது. ஓரோர் சமயம் வஎடுக்கும்போது, வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக்கொள்கிறேன். தோழர் சுந்தரம் இதனைப் பக்குவமாகச் செய்கிறார். ஒத்தடம் கொடுத்துக்கொள்ளும்போது வலி குறைகிறது - குறைகிறது என்பதைவிட மறைகிறது என்று சொல்லலாம் - ஆனால் அடியோடு போய்விடவில்லை. என்னைக் காண வருகின்றவர்களும், இங்கே உள்ள நண்பர்களும் நான் இளைத்துவிட்டதாகச் - சொல்கிறார்கள் - ஆனால் எனக்கு வலிவுக் குறைவு இருப்பதாகவோ களைப்பு ஏற்படுவதாகவோ தோன்றவில்லை. வழக்கம்போல் இரவில் நல்ல தூக்கம் இருப்பதில்லை, பசியும் சரியானபடி இல்லை. மற்றபடி தொல்லையாக எதுவும் இல்லை. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் 1920லில் வேலூர் சிறையில் மூன்று மாதம் இருந்தது பற்றி ஒரு ஏடு எழுதி இருக்கிறார்கள் - இங்குதான் கிடைத்தது; படிக்க. அதிலே அவர்கள் குறிப்பிட்டுள்ள ஒரு விஷயம் மிகப் பொருத்தமானது என்று கூற விரும்புகிறேன். சிறை வருகிறவர்களுக்கு, ஒன்று உடல் வலிவு இருக்க வேண்டும், மற்றொன்று பாடத் தெரிய வேண்டும் என்று கூறுகிறார். முழுக்க முழுக்க ஒப்புக்கொள்கிறேன். எனக்கு இந்த இரண்டும் இல்லை. முன்பெல்லாம் பாடுவேன் வீட்டில் - சிறுவனாக இருந்தபோது - அதனால் அண்டைப் பக்கம் உள்ளவர்கள் பொறுத்துக்கொண்டார்கள். இப்போதாவது பாடுவதாவது, ஆனால் உள்ளபடி பாடத் தெரிந்திருந்தால் மிக நன்றாகத்தான் இருக்கும். காலம் ஆமையாகிவிடும் இடம் சிறை. பாடத்தெரிந்து, பாடியபடி இருந்தால், நமக்கும் மகிழ்ச்சி. கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சி. இங்கு எனக்குப் பாடத் தெரியாததுபோலவேதான், மற்றவர்களுக்கும். அரக்கோணம் ராமசாமி மட்டும் பாடுகிறார் - பாடத் தெரிந்தவர் என்று கூறவில்லை - பாடுகிறார்; அவருக்கு ஒரே ஒரு ரசிகர் - மதியழகன். ஆனால் அதிக நேரம் பாடுவதில்லை - நல்லவர் - சீக்கிரமாகவே தூங்கிவிடுகிறார். இங்கே, நண்பர்களில் ஒருவருக்கும் உடல் நலம் கெடவில்லை - சிறு கோளாறுகள் மட்டுமே ஏற்படுகின்றன. மாலை வேளையில் உலவிட வசதியாக இருக்கிறது - இந்தப் பகுதிக்கு வந்த பிறகு. முன்பு இருந்த பகுதியில் அந்த வசதி இல்லை என்றாலும், நான் அப்போதும், என் அறைக்குள்ளாகவே உலாவுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். நான் மருத்துவ மனையில் தங்கி இருந்தபோது அன்பர் ம. பொ. சிவஞானம் கூறிய யோசனை அது. உடல்நலம் பெற, உலவுவது மிகத் துணை செய்யும் என்று கூறினார். உண்மைதான். மருத்துவமனையில் மருந்து ஏதும் பெறாமலேயேதானே, சிறை திரும்பினேன். சிறையிலே, உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்துக்கு வலிவும் களிப்பும் தரத்தக்க "டானிக்’ கிடைத்தது. நெல்லை, தாராபுரம், அரக்கோணம் ஆகிய இடங்களில் கிடைத்த வெற்றிபற்றிய செய்திகள். இரண்டு நாட்களுக்கு முன்பு, நண்பர் ராமசாமியிடம் கடிந்துகொண்டேன் - அரக்கோணம் தேர்தல் சம்பந்தமாக மேலும் சிறிதளவு அக்கறை செலுத்தியிருக்கவேண்டுமென்று. ஆம் என்று கூறி வருத்தப்பட்டார். நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலில், கழக ஆதரவு பெற்றவர் வெற்றி பெற்றார் என்ற உடன் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. தந்திகளைக் காட்டிக் காட்டிக் களிப்படைந்தார். தாராபுரத்தில் கிடைத்த வெற்றிபற்றி நண்பர் மதியழகனுக்கு ஒரே மகிழ்ச்சி. பட்டக்காரரின் பரிபாலனத்துக்கு உட்பட்ட பிரதேசம் என்பார்கள், தாராபுரம் பகுதியை; அங்குக் காங்கிரசுக்கு வீழ்ச்சி. மதியழகன் மகிழ்வதிலே பொருத்தம் இருக்கத்தான் செய்கிறது. நெல்லை, கழக எழுச்சிமிக்க இடமாகி வருவதை, இந்தி எதிர்ப்பு மாநாட்டின்போதே நான் கண்டு பெருமிதம் கொண்டவன். அங்கு நகராட்சி மன்ற தலைவராகக் கழகத் தோழர் ஒரு இளைஞர், இஸ்லாமிய சமூகத்தினர் வெற்றி பெற்றிருப்பது, பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது. நெல்லை உணவுவிடுதியில் என்னைச் சூழ்ந்துகொண்டு உற்சாகமாக உரையாடிய கழக நண்பர்களை எல்லாம், நான் இங்கிருந்தபடியே காண முடிகிறது. ஓடி ஆடிப் பணியாற்றும் மஸ்தானும், வாடிவிடத்தக்க அளவு பணியாற்றினாலும் புன்னகையை இழக்காத இரத்தினவேலுப் பாண்டியனும், மற்றத் தோழர்களும், என் எதிரே நின்றுகொண்டு, "எப்படி அண்ணா! நெல்லை!!’’ என்று கேட்பதுபோலவே தோன்றுகிறது. ஆச்சாரியார் இந்தியைப் புகுத்திய நாட்களிலே தொடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின்போது, நாவலர், சோமசுந்தர பாரதியாருடன், நான், நெல்லையில் பிரசாரம் செய்யச் சென்றிருந்த நாட்களை எல்லாம் எண்ணிக்கொண்டேன். என்னுடைய பழம்பெரும் நண்பர் திருப்பூர் எஸ். ஆர் சுப்பிரமணியம் இன்று என்னைக் காண வந்திருந்தார். இடையில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர் என்றாலும் மற்றச் சிலர்போல, என்னிடம் தனிப்பட்ட முறையில் பகை கக்கினவரல்ல. இப்போது அவர், எப்போதும்போல் நம்மிடம் கருத்து ஒற்றுமை கொண்டிருக்கிறார் என்று எண்ணுகிறேன். திருப்பூரில், நமக்குற்ற "ஒரே’ நண்பராக அவர் இருந்த காலம் ஒன்று உண்டு. இன்று தொழில் துறையில் முனைந்து நிற்கும் நண்பரிடம், சிறிது நேரம் அளவளாவும் வாய்ப்புக் கிடைத்தது. முன்பு ஜப்பான் நாட்டுக்குப் போய்விட்டு வந்தபோது அவரைச் சந்தித்தேன். நமது பயணம்பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்று கூறியிருந்தேன். அதுபற்றி இப்போதும் கேட்டேன் - எழுத நேரம் கிடைக்கவில்லை என்றார். நான் சொல்வது அவரை நூல் எழுதும்படி - அவர் ஈடுபட்டிருப்பது நூலாலைத் தொழில் - அதனால்தான் நேரம் கிடைக்கவில்லை. வெளியே செய்யவேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கின்றன. இங்கு வந்து அடைபட்டுக் கிடக்கிறோமே என்ற எண்ணம் தோன்றும்போதெல்லாம், கவலையாகத்தான் இருக்கிறது - ஆனால் நாம் மேற்கொண்டுள்ள பணியின் தூய்மையை மக்கள் உணர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது அறப்போர் என்று உணரும்போது, சிறையில் அடைபட்டுக் கிடப்பதும் தேவையான ஒரு திருப்பணி என்ற எழுச்சி பெறுகிறோம். ஆளுங்கட்சியும், நமது நாட்டு இதழ்களும் காரணமற்று நம்மிடம் கசப்புக் கொண்டுள்ள நிலையிலிருந்து விடுபட்டு, இந்தி எதிர்ப்புணர்ச்சி எந்த முறையில் இருக்கிறது என்பதனை இந்தி ஆதிக்கக்காரர்கள் உணருவதற்காக, நமது அறப்போர் குறித்து உண்மையை உரைப்பார்களானால், பிரச்சினையின் சிக்கலில் பெரும் பகுதி தீர்ந்துபோகும். ஆனால் ஆட்சியாளர்களின் மனம் மாற மறுக்கிறது; நாம் மேற்கொண்டுள்ள பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதனைத்தான் அவர்கள் போக்கு காட்டுகிறது. 21-3-1964 இன்று இங்குள்ள டாக்டர் எனக்கு ஊசி போட்டார் - இளைப்பு போக; டாக்டர் நடராசன் குறிப்பிட்டிருந்தாராம் இதுபோல ஊசி போடும்படி. டாக்டர் இளைஞர் என்றாலும் பக்குவம் அறிந்திருக்கிறார். மேலும் சில ஊசி போடுவார் போலிருக்கிறது. இன்று மாலை, நாவலரும் கருணாநிதியும் அன்பழகனும் வந்து பார்த்தார்கள். கழக நிலைபற்றியும், குறிப்பாகத் தேர்தல்கள் குறித்தும், பேசிவிட்டுச் சென்றார்கள் என்று அறிந்துகொண்டேன். இருவருமே இளைத்துப்போய் களைத்துப் போய் காணப்பட்டார்கள் என்று அன்பழகன் கூறினார். வேலைப் பளுவும், பிரச்சினைகளின் சிக்கலால் ஏற்பட்டுவிடும் தொல்லைகளும் அவர்களை வாட்டி எடுக்கும் என்பதை உணருகிறேன். ஆனால் இந்தக் கட்டத்தை அவர்கள் மிகச் சிறந்த ஒரு பயிற்சி வாய்ப்பு என்ற முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். கழக நிர்வாக சம்பந்தமான அலுவல்களிலிருந்து நான் என்னை விடுவித்துக்கொண்டால், கழக வளர்ச்சிக்காக மேலும் சிறந்த முறையில் நாடெங்கும் சுற்றிச் சுழன்று பணியாற்ற முடியும். இந்த என் விருப்பம் நிறைவேற வேண்டுமானால், கழகத்தின் நிர்வாக அலுவல்களை மேற்கொள்ள மற்றவர்கள் முனைய வேண்டும். நான் சிறைப் பட்டிருக்கும் நாட்கள் இதற்கான வாய்ப்பாகக் கொண்டிட வேண்டும் என்று விரும்புகிறேன். கழக நிர்வாகத்திலே வந்துள்ள நகராட்சிகளிலே, புது முறைகளைப் புகுத்தி, கழகம் ஆட்சி நடத்தும் தகுதி வாய்ந்தது என்பதனை மக்கள் உணரும்படி செய்திட வேண்டும் என்று இங்கு ஆர்வத்துடன் நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள். பெல்ஜியம் நாட்டிலே, ஒரு கட்சி நகராட்சி ஒன்றிலே நடத்திக்காட்டிய நிர்வாகத்தின் தரத்தையும் திறத்தையும் கண்டு, நாடாளும் வாய்ப்பையே அந்தக் கட்சிக்கு மக்கள் அளித்தனர் என்று ஏதோ ஒரு ஏட்டிலேதான் படித்ததாகப் பொன்னுவேல் கூறினார். கட்சி மாச்சரியம் காரணமாக, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை நடத்திய கழகத்தின்மீது ஆளுங்கட்சியினர் அபாண்டங்கள் சுமத்தினர் என்றாலும், பொதுவாக நமது கழகத் தோழர்கள் மெச்சத்தக்க முறையிலேயே மாநகராட்சி மன்ற நிர்வாகத்தை நடத்தி இருக்கின்றனர் - தவறுகள் செய்திருந்தால், மேலே உட்கார்ந்துகொண்டிருக்கும் காங்கிரசு அரசு, சும்மா விட்டிருக்குமா? மாநகராட்சி மன்ற நிர்வாகத்தையே கலைத்து விட்டிருக்குமே! குற்றம் கண்டுபிடிக்க இயலாத முறையிலேதான் நிர்வாகம் நடத்தப்பட்டிருக்கிறது என்று நான் கூறினேன். இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முனுசாமி நல்ல முறையிலே அமைத்திருக்கிறார் என்பதை “இந்து’’ இதழேகூட எடுத்துக்காட்டியிருந்தது என்று நண்பர்கள் நினைவு படுத்தினார்கள். ஆமாம்! தேர்தலை மனதிலே வைத்துக்கொண்டு தயாரிக்கப்பட்ட”பட்ஜட்’ என்று “இந்து’ குத்தலாகக்கூட எழுதிற்று; ஆனால் மக்களாட்சி முறையில் மக்களைத் திருப்திப்படுத்தும் விதமாக”பட்ஜட்’ தயாரிப்பது குற்றமல்ல என்று நான் சுட்டிக்காட்டினேன். "ஏதேதோ வீண் பழிகளைச் சுமத்துகிறார்கள்; ஒரு மாட்டை அடித்துக் கொன்றுவிட்டார்கள் கழகத்தார் - மாடு காங்கிரசின் தேர்தல் சின்னம் என்பதற்காக.’’ "இது நடைபெறவே இல்லை, அபாண்டம் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்; மெயில் இதழிலே வெளியிட்டிருந்தார்கள்.’’ "ஆமாம் - அப்படியே முறை தெரியாத யாரோ சிலர் அதுபோலச் செய்திருந்தால்கூட, அது கண்டிக்கத் தக்கது என்றாலும், அதற்காக கழகத்தை அதற்குப் பொறுப்பாக்கிக் கண்டிக்கலாமா?’’ என்றுகூட மெயில் எழுதியிருந்தது. "இன்று பத்திரிகையிலே பார்த்தீர்களா அண்ணா! அமெரிக்காவிலே ஒரு அரசியல் கட்சி எதிர்க்கட்சியின் தேர்தல் சின்னமாக உள்ள யானையை மனதிலே வைத்துக்கொண்டு, கட்சிவிழா விருந்தில், யானைக் கறி சமைக்கப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. ஆப்பிரிக்காவிலே வேட்டையாடிக் கொன்று, யானைக் கறியைப் பதப்படுத்தி அமெரிக்காவுக்குக் கொண்டு வர ஏற்பாடாம்.’’ "இதுபற்றி கண்டனத் தலையங்கம் எழுதக் காணோம். நடக்காத ஒன்றை வைத்துக்கொண்டு நமது கழகத்தைக் கண்டிக்கிறார்கள்.’’ இப்படி நண்பர்கள் பேசிக்கொண்டனர். உழைப்பாளி கட்சிக்குச் சின்னம் "கோழி’ - உழைப்பாளி கட்சியும், கோழிச் சின்னம் கொண்டிருந்த சில சுயேச்சையாளரும் தேர்தலில் தோற்றபோது காங்கிரசார் நடத்திய வெற்றி ஊர்வலத்தில், கோழியை அறுத்துத் தூக்கிக்கொண்டு போனார்கள் என்று நான் கூறினேன். "நம்முடைய கழகத்திடம் மட்டும் இந்த அளவுக்குப் பகை உணர்ச்சிகொள்ளக் காரணம் என்ன?’’ என்று நண்பர்கள் கேட்டனர். “காரணம் இருக்கிறது. நாற்பது ஆண்டுகளாக எதிர்த்து வந்தார் பெரியார், காங்கிரசை; காங்கிரஸ் ஒழிப்புநாள், சுதந்திரம் பெற்ற துக்கநாள் என்றெல்லாம் நடத்தினார். அவரே ஓய்ந்துபோய், நம்பிக்கை இழந்துபோய், காங்கிரசை ஆதரிக்க முனைந்துவிட்டார். காங்கிரஸ் முதலாளிகளின் முகாம் என்று முழக்கமிடும் கம்யூனிஸ்டு கட்சியும் முற்போக்கு அணி அமைப்போம் என்று கூறிக்கொண்டு காங்கிரஸ் எதிர்ப்பைத் தளர்த்திவிட்டது; ஜெயப்பிரகாஷ் நாராயணன் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டார்; அசோக் மேத்தா”ஆலோசகர்’ ஆக்கப்பட்டுவிட்டார்; இப்படி பலப் பலர், இணைந்து போகிறார்கள். பணிந்து போகிறார்கள், இந்தக் கழகம் மட்டும் காங்கிரசைக் கடுமையாக எதிர்த்து வருகிறதே, மக்களின் பேராதரவு கழகத்துக்கு பெருகி வருகிறதே, என்பதை எண்ணிப் பார்க்கும்போது, காங்கிரசுக்கு நம்மீது கடுங்கோபம் எழத்தானே செய்யும்; அதனால்தான் பகை கொட்டுகிறார்கள், பழி சுமத்துகிறார்கள்’’ என்று நான் விளக்கிப் பேசினேன். நண்பர்கள் இது குறித்து நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார்கள். ஆட்சியாளர் எத்தனை பகை கக்கினாலும், மக்களின் ஆதரவு நமக்கு இருக்கிறவரையில், நாம் கவலைப்படத் தேவை இல்லை என்று பேசிக்கொண்டோம். இரவு அறைக்குள் பூட்டப்படும்போது, மக்கள் ஆதரவு கழகத்துக்குத்தான் இருக்கிறது என்பதை மெய்ப்பிப்பதுபோல், ஒரு காவலாளி, "வேலூரிலும் உங்க கட்சிதான் சேர்மனாம் - யாரோ சாரதியாம்’’ என்று கூறினார். பொதுவாக, அறையிலே எங்களைப் போகச் சொல்லி விட்டு, பூட்டும்போது, அந்த காவலாளிமீது எங்களுக்கு இலேசாகக் கசப்பு ஏற்படும். அன்று "தேன்’ கொடுத்து விட்டல்லவா, அறையைப் பூட்டினார்; அதனால் மகிழ்ச்சியுடன் அவரை வாழ்த்தியபடி கூண்டுக்குள் சென்று விட்டோம். 23-3-1964 இரண்டு நாட்களாக, ராகுல சாங்கிருத்தியாயன் என்பவர் எழுதியுள்ள "வால்காவிலிருந்து கங்கைவரை’ என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதனாலே குறிப்பு ஒரு நாள் எழுதவில்லை. பகலில் படிப்பதற்கு அதிகநேரம் கிடைப்பதில்லை. காலையிலிருந்து மாலை நாலரை மணி வரையில், நூற்பு வேலை இருக்கிறது. இரவு மட்டுந்தான் படிக்க வசதி கிடைக்கிறது. சங்கரவிஜயம் படித்து முடித்தவுடன், இந்தப் புத்தகம் - அதாவது முற்றிலும் வேறான ஒரு கருத்துலகில் உலவுகிறேன். சமுதாய வளர்ச்சியை விளக்கும் இந்த ஏடு எழுதியவர் லெனின்கிராட், சர்வகலாசாலையில் பேராசிரியராகப் பணியாற்றிய பேரறிவாளர். கதை வடிவத்தில், கி. மு. 6000-த்திலிருந்து கி. பி. 1942 - வரையில், மனித சமுதாய வளர்ச்சிக்கான விளக்கம் தந்திருக்கிறார் - பொது உடைமையாளரின் கோட்பாட்டின் அடிப்படையில். குறிப்பு எழுதாமலிருந்ததற்கு மற்றோர் காரணமும் உண்டு. காய்கறி நறுக்கியதால், என் வலது கரத்தின் ஆள்காட்டி விரலில் சிறிதளவு காயம் ஏற்பட்டுவிட்டது - முன்பு ஒரு நாளையக் குறிப்பிலே எழுதியிருந்தேனல்லவா, சட்டை கிழிந்து விடுவதற்கும் சதை பிய்ந்துவிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று; அதனை நானே உணருவதற்கான ஒரு வாய்ப்பு. சிறிதளவுதான் சதை பிய்ந்துவிட்டதென்றாலும், எரிச்சல் அதிகமாகிவிடவே, எழுத இயலவில்லை. ஏதோ மருந்து அளித்தார்கள் - இயற்கையாகவே குணமாகி வருகிறது. இன்று இங்கு நண்பர்கள், கழகப் பிரசாரத்துக்காக நாடகங்கள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து மெத்த ஆர்வத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். முன்பு நானும் நமது நண்பர்களும் நடத்திக்கொண்டு வந்த நாடகங்களை, இனி நடத்துவதற்கு அனுமதிக்கமாட்டார்கள் - நாடகத் தடைச்சட்டம் மிகக் கண்டிப்பான முறையிலே அமைந்துவிட்டிருக்கிறது - என்றாலும், அனுமதிக்கப்படும் அளவுக்குப் புதிய நாடகங்கள் தயாரித்து நடத்த வேண்டும் என்று பேசிக்கொண்டோம். மாநகராட்சி மன்றத் தேர்தலின்போது மறைந்த நகைச்சுவை மன்னர் என். எஸ். கிருஷ்ணனின் திருமகன் என். எஸ். கே. கோலப்பன் நடத்திய “வில்லுப் பாட்டு’ மிக்க சுவையும் பயனும் அளித்ததாக நண்பர்கள் கூறினார்கள். நான் இரண்டொரு முறை கேட்டிருக்கின்றேன், சுவையாகவே இருக்கிறது - தந்தையின்”பாணி’ அப்படியே அமைந்திருக்கிறது என்று கூறினேன். திங்கட்கிழமை பரிமளம் வரக்கூடும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் - வரவில்லை. செவ்வாய் மாலையில், பரிமளம், இளங்கோவன், கே. ஆர். ராமசாமி வந்திருந்தனர். மூவருக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை; அதனால் என்னைக் காண வந்திருந்த அடிகள், வெளியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டார் என்று கூறினார்கள்; வீட்டிலுள்ளோரின் நலன்பற்றியும், பொது விஷயங்கள் குறித்தும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திரு. மா. சண்முக சுப்ரமணியம் அவர்கள் எழுதி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்ட "தீங்கியல் சட்டம்’’ என்ற நூலை, அன்பர் சுப்பைய்யா அவர்கள் தந்தனுப்பியதாகக் கூறி, அந்தப் புத்தகத்தைப் பரிமளம் தந்தான். பத்திரிகையில் அந்தப் புத்தகம்பற்றிப் படித்ததிலிருந்து அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தேன். நான் எதிர்பாராமலேயே அந்தப் புத்தகம் கிடைத்திருக்கிறது, மெத்த மகிழ்ச்சி. நண்பர்கள், டில்லி பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து மெத்த ஆவலுடன் என்னிடம் கேட்டறிந்தார்கள். அடுத்த முறை, அதிக அளவில், பாராளுமன்றத் தேர்தலில், நமது கழகம் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இன்று பிற்பகல் அரக்கோணம் ராமசாமி, “இரத்தக் கொடை’ அளித்தார். கட்டுடல் பெற்ற அவருக்கு, அதனால் எந்தவிதமான களைப்பும் ஏற்படவில்லை. வெளியில் இருக்கும் போதே”குருதிக் கொடை’’ தர விரும்பினாராம் - இங்கே அதற்கான வாய்ப்புக் கிடைத்தது. மேலவைகளுக்கான தேர்தல்களில் பங்குகொள்ளப் “பரோல்’ பெறக்கூடும் என்று எண்ணிக்கொண்டிருந்த மதியழகன் - ராமசாமி - இருவருக்கும், இன்றைய பத்திரிகையில் முதலமைச்சர்”பரோல்’ தருவது இயலாது என்று வெளியிட்டிருந்த அறிவிப்பு கிடைத்தது. முதலமைச்சர், "பரோல்’ தர மறுத்துவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை - எனவே அவருடைய அறிவிப்பு எனக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது - பொதுமக்களும் இது கண்டு எரிச்சல் அடைந்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். கள்ளநோட்டு வெளியிட்டவர்களுக்குக்கூட, கேட்கும் போது "பரோல்’ கிடைக்கிறது. நமது கழகத் தோழர்கள் விஷயத்திலேதான், அமைச்சர்கள் தமக்கு உள்ள கண்டிப்பு அவ்வளவையும் காட்டி வருகிறார்கள். இன்று காலை வழக்கம்போல் சிறை மேலதிகாரிகள் கைதிகளை பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. குறளாராய்ச்சிக்கு இடையில், நண்பர் அன்பழகன் நான் படித்து வியந்த "மாமன்னரின் மருத்துவன்’ என்ற ஆங்கில நூலை (கிருத்துவ மார்க்கத் துவக்ககாலக் காதை)ப் படித்து வருகிறார். 25-3-1964 இடது கரத்திலே வலி குறையக் காணோம். சுடுநீர் ஒத்தடம் கொடுத்துக்கொண்டேன் - அப்போதைக்கு இதமாக இருக்கிறது. வெளியே சென்றதும், தக்க மருந்து உட்கொண்டு வலியை நீக்கிக்கொள்ள வேண்டும் என்று நண்பர்கள் அன்புடன் கூறி, பல்வேறு மருத்துவ முறைகள் குறித்துக் கூறினார்கள். செங்கற்பட்டு உள்ளாட்சி மன்ற அமைப்புகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் தேர்தலில், கழகத்தின் சார்பில் நண்பர் ஆசைத்தம்பி ஈடுபட்டிருக்கும் செய்திபற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதுபற்றிக் கணக்கிட்டுப் பார்த்துக்கொண்டோம். செங்கற்பட்டு மாவட்ட ஆட்சி மன்றத் தலைவராக இருந்தவரும், அந்த மாவட்டத்திலே பல ஜெமீன் குடும்ப ஆதரவு பெற்றவரும், அமைச்சர்களின் அரவணைப்பைப் பெறக்கூடியவருமான வி. கே. ராமசாமி முதலியார் போட்டியிடுவதால், மெத்தக் கடினமாகவே இருக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள்; எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அன்புள்ள அண்ணாதுரை 29-10-1964 நிலவு, கழக வெற்றி, சிறைச்சாலை நிலைமைகள் தம்பி! வகுப்புக் கலவரம், உ. பிரதேச சட்ட மன்றத்துக்கும் நீதி மன்றத்துக்கும் இடையே கிளம்பியுள்ள “உரிமை’ மோதுதல் போன்ற செய்திகள், உள்ளபடி கவலை தருவனவாக உள்ளன. வடக்கே வகுப்பு மாச்சாரிய உணர்ச்சி மங்கவில்லை. எப்போதும் நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலை இப்போதைக்கு மட்டுமல்ல, களையப்படும் வரையில், ஆபத்தைக் கக்கியபடியே இருக்கும் என்று தோன்றுகிறது. வகுப்பு மாச்சரிய உணர்ச்சி வடக்கே எந்த அளவிலே இருக்கிறது என்பதுபற்றி நண்பர்களிடம் எடுத்துக் கூறிக்கொண்டிருந்தேன். தமிழகத்தில் இயல்பாகவே அமைந்துள்ள”சமரச’ நோக்கம், உண்மையிலேயே பாராட்டிப் போற்றத்தக்கது என்று பேசிக்கொண்டோம். சிறையைப் பார்வையிடுவதற்காக மேயர் வரப்போகிறார் என்ற பேச்சு இங்கு இரண்டு நாட்களாக இருந்தது - பேச்சாகவே போய்விட்டது - வரக்காணோம். மேயர், கழக ஆதரவு பெற்றவர் என்று தெரிந்துகொண்ட "கைதிகள்’, மேயர் வரப்போகிறார் என்று அறிந்ததும், எங்களிடம், புதிய தனி மரியாதை காட்டினார்கள். சட்ட மன்றத்தில், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்கள், திருவள்ளுவர் திரு உருவப் படத்தைத் திறந்துவைத்த செய்தியும், அந்த நிகழ்ச்சிப் பற்றிய படங்களும் இதழ்களில் வெளிவந்திருக்கக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். இத்தனை காலத்துக்குப் பிறகாகிலும், வள்ளுவருக்கு ஆட்சி மன்றத்திலே "இடம்’ தந்து பெருமை தேடிக்கொள்ள முடிந்ததே என்பதிலே மகிழ்ச்சி. வெளியில் இருந்திருந்தால் இந்த நாளை ஒரு திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று கூறியிருப்பேன். அப்படி ஒரு எண்ணம் இருந்தது. சிறைக்கு உள்ளே இருந்துதான், அந்தச் சிறப்பான நிகழ்ச்சிபற்றி மகிழ முடிந்தது. வள்ளுவரின் திரு உருவப்படம், இந்த ஆட்சி மன்றத்தில் மட்டுமல்ல, உலக நாடுகளின் பெருமன்றத்திலேயே இடம் பெறத்தக்கது. தென்னக வரலாற்றிலே ஒரு கட்டம் பற்றி, சோவியத் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய நூல் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற செய்தியைப் பார்த்தேன். இன்று “நூற்பு வேலை’ செய்யவில்லை - கதர் திட்டத்தின் பயனற்ற தன்மைபற்றி, மாறன் முரசொலியில் தலையங்கம் எழுதியிருப்பதைப் படித்தோம் - ஆனால் அதனால் அல்ல”நூற்பு வேலை’ நடைபெறாதிருந்தது. பஞ்சு தரப்படவில்லை. அறப்போரில் ஈடுபட்டு இங்கு உள்ள தோழர்களில் இருவருக்கு உடல் நலமில்லை - சிறையில் உள்ள மருத்துவ மனையில் உள்ளனர். அவர்களைப் பொன்னுவேல் பார்த்து வரும் வாய்ப்பு கிடைத்ததால், செய்தி அறிந்துகொள்ள முடிந்தது. 26-3-1964 இன்று எனக்கு டாக்டர் ஊசி போட்டார். மதியழகனுக்கு இலேசாக ஜுரம்; அவருக்கும் ஊசிப் போடப்பட்டது. காலையிலிருந்து இங்கு ஒரே பரபரப்பு; ஒவ்வொரு பகுதியிலும் கூட்டுவதும் மெழுகுவதும், சாமான்களை ஒழுங்கு படுத்துவதுமாக இருந்தனர். காரணம், சிறை மாநில மேலதிகாரி பார்வையிட வருகிறார் என்ற செய்தி. அது செய்தி அளவோடு தான் முடிந்தது. என்றாலும், ஒரு சில மணி நேரத்தில், சிறையே புதுக்கோலம் கொண்டுவிட்டது. சிறைத்துறை குறித்து, சட்டமன்றத்தில் நம்முடைய தோழர்கள் பேசியது முரசொலியில் விரிவாக வெளிவந்திருந்தது. குறிப்பாகக் கருணாநிதியின் பேச்சு மிகத் தரமாக இருந்தது, அரக்கோணம் ராமசாமிக்கு அளவில்லா மகிழ்ச்சி. எம். ஜி. ராமச்சந்திரன் கழகப் பொதுக்கூட்டத்தில் பேசியது "நம் நாடு’ இதழில் வெளிவந்திருந்தது. உருக்கமான பேச்சு. கழகத்திடம் அவர் கொண்டுள்ள உள்ளன்பு தெள்ளெனத் தெரிகிறது. சில நாட்களாக நான் அடைந்திருந்த மனச்சங்கடம், அவர் கழகக் கூட்டத்தில் பேசினார் என்ற நிகழ்ச்சிபற்றி அறிந்ததால் நீங்கிற்று. குழந்தைகளுக்கான விளையாட்டு “ரயில்வே’ அமைக்க, மாநகராட்சியில் ஏற்பாடு செய்யப்போவதாக முனுசாமி பேசியது பார்த்தேன். பரோடாவில், மிகப் பெரிய பூங்காவில் நான் அதுபோன்ற ஒரு அமைப்பைப் பார்த்திருக்கிறேன். முனுசாமியிடம் அப்போதே அது குறித்துச் சொல்லியும் வைத்தேன். இங்கும் அதுபோலவே அமைக்கத் திட்டமிடுவது மிகவும் வரவேற்கத்தக்கது. மாநகராட்சி மன்றத்தினர் குழு ஒன்று”பரோடா’ சென்று முழு விவரம் தெரிந்துகொண்டு வருவது மெத்தவும் பயனளிக்கும். மகிழ்ச்சியுடன் பெருமையும் பெறத்தக்க முறையில், மற்றோர் திட்டமும் மேற்கொள்ள மாநகராட்சி மன்றம் முனைவதுபற்றியும் அறிகிறேன். மயிலையில், திருவள்ளுவரின் சிலையினை அமைக்க ஏற்பாடு செய்யப்போவதாக முனுசாமி தெரிவித்திருக்கிறார். மிக நேர்த்தியான யோசனை. ஔவையார் சிலை ஒன்றினை, டில்லியில் உள்ள ஒரு அமைப்பில் - அது அமெரிக்க அரசுக்குத் தொடர்புள்ள அமைப்பு என்று அறிகிறேன் - அமைத்திருப்பதாகச் செய்தி பார்த்தேன். மாநகராட்சி, ஔவையாரின் சிலையையும், அமைத்திட முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். வெளியில் சென்ற பிறகு இதுபற்றி நண்பர்களுடன் கலந்து பேச விரும்புகிறேன். இன்று "பஞ்சு’ கொடுத்துவிட்டார்கள் - நூற்பு வேலையும் நடைபெற்றது. கிருத்துவ மார்க்கம் நிலைபெற்ற பிறகு, அறிவுத் துறையினருக்கும் மார்க்கத் துறையினருக்கும் இடையே மூண்டுவிட்ட மோதல்பற்றிய பின்னணி கொண்ட "ஏடு’ முன்பு படித்து, பகுதியில் நிறுத்தி வைத்திருந்தேன் - இன்று தூக்கம் வருகிற வரையில் அந்த புத்தகத்தைத்தான் படிக்க இருக்கிறேன். மார்க்கத்திலே புகுந்துவிட்ட மாசுகளைப் போக்கவேண்டும், தூய்மைப்படுத்த வேண்டும் என்று துவக்கப்பட்ட ஒரு இயக்கத்தையே, கெடுமதியாளர் கூட்டம், கடவுள் மறுப்புக் கும்பல் என்றெல்லாம் தூற்றிக் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் இந்த ஏட்டிலே விளக்கப்பட்டுள்ளன. 27-3-1964 இன்று கிருத்தவ மார்க்கத்தாருக்குத் திருநாள் - சிறையில் விடுமுறை நாள். ஞாயிற்றுக்கிழமைபோலவே இன்று கைதிகளுக்கு “வேலை’ கிடையாது! நாங்கள் கைதி உடை அணியத் தேவையில்லை. விடுமுறை நாள் என்பதால், இன்று மாலை 5 மணிக்கெல்லாம், எங்களை அறையிலே தள்ளிப் பூட்டி விட்டார்கள். வார்டர்களில் சிலர், கண்டிப்புக் குரலால் காரியம் சாதிப்பவர்கள், சிலர் கனிவு காட்டியே காரியம் சாதிப்பவர்கள்.”இன்று விடுமுறை நாள். சற்று முன்னதாக "லாக்-அப்’ வேலை முடிந்துவிட்டால், வீட்டுக்குப்போகச் சவுகரியமாக இருக்கும். . .’’ என்று கனிவாகப் பேசும்போது, நாங்களே வேலைகளைச் சீக்கிரமாக முடித்துக்கொண்டு அறைகளிலே சென்று அமர்ந்து விடுவதுதானே முறை? அந்த முறையில் மாலை ஐந்துக்கே உள்ளே சென்றுவிட்டோம் - பூட்டிவிட்டு, அதை இழுத்துப் பார்த்து விட்டு, வார்டர்கள் சென்றுவிட்டார்கள். மற்றப் பகுதிகளில் இரவில், மணிக்கு ஒரு முறை வார்டர்கள் வருவார்கள் இங்கு அநேகமாக இரவுக் காலத்தில் வார்டர்கள் வருவதில்லை. அதனால் அடைபட்டுக்கிடக்கும் எங்களுக்கு ஏதேனும் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டால், எந்தவிதமும் உதவியும் கிடைப்பதற்கு வழி இல்லை. இது கவலை தரத்தக்க நிலை. இன்று காலை, மதியழகன் சொன்னார். இரவெல்லாம் காய்ச்சல் - விடியும்போதுதான் வியர்வை கண்டது என்று. சோர்வு அதிகம் தெரிகிறது. இந்த நிலையிலும் வார்டர்கள் வருவதில்லை என்றால், என்ன சொல்லுவது! எனக்கு இடக் கரத்திலே உள்ள வலி சற்று வளர்வதுபோல் தோன்றுகிறது. வலிபோக்க, தரப்பட்டுள்ள தைலத்தைக் காலையிலே தடவிக்கொண்டு பார்த்தேன் - மாலையில் தண்ணீர் கொதிக்கவைத்து வலியுள்ள இடத்திலே ஊற்றிக் கொண்டு பார்த்தேன் - அந்த நேரத்துக்கு "இதம்’ தெரிகிறது, அவ்வளவே. இங்கே இப்பொழுதே, வார்டர்களும் வேலை செய்வோரும், எங்கள் "விடுதலை‘பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். குறைந்தது ஒரு மாத காலமாவது, தண்டனைக் காலத்திலே "கழிவு’ ஆகிவிடும் என்று பேசிக்கொள்கிறார்கள். இதுபற்றிய பேச்சுத்தான், இங்கு பொழுதுபோக்காகி இருக்கிறது. தொகுதி ஐந்து 295 "சட்டமே செல்லாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்து விடப்போகிறது, நீங்களெல்லாம் விடுதலை ஆகப்போகிறீர்கள்’ என்றும் சிலர் சொல்லுகிறார்கள். பொதுவாக அனைவருக்கும், குறிப்பாகப் பொது வாழ்வுத் துறையினருக்கும், அன்றாடம் பத்திரிகைகள் பார்த்து உலக நிலை, நாட்டு நிலை, கட்சி நிலை ஆகியவற்றினைத் தெரிந்து கொள்வதிலே ஆர்வம், துடிப்புணர்வு இருப்பது இயற்கை. ஆனால், இந்தத் துடிப்பினுடைய முழு வேகத்தை உணர வேண்டும் என்றால், சிறையிலேதான் உணர முடியும். எத்தனை ஆவல், ஆர்வம், துடிப்பு! பத்திரிகைகள் கைக்குக் கிடைத்த உடன், பல நாள் பசித்துக்கிடந்தவன், விருந்து கிடைக்கப்பெற்றால் எத்துணை பதைப்பு ஏற்படுமோ, அப்படிப்பட்ட ஒரு பதைப்பு. ஒரு எழுத்துவிடாமல் படித்துப் படித்துச் சுவைக்க முடிகிறது. பத்திரிகைச் செய்திகளைப்பற்றி ஒருவருக்கொருவர் உரையாடல், கருத்துரைகள் வழங்கிக்கொள்வது, இப்படி. எழுதிய எழுத்து உலருவதற்கு முன்பு, நான் சொன்ன ஒரு விஷயம் பொய்த்துவிட்டது. இப்போது ஒரு வார்டர் இங்கு வந்திருந்தார் - இன்னும் தூக்கம் வரவில்லையா என்று கேட்டுவிட்டுச் சென்றார். ஒரு சமயம் வார்டர்களே வருவதில்லை என்று நண்பர்கள் குறைபட்டுக்கொண்டது, எட்டவேண்டிய இடத்துக்கு எட்டி, வார்டர் வந்திருக்கிறாரோ, என்னவோ! படித்து முடித்துவிட்ட "வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற புத்தகத்திலிருந்து சில குறிப்புகள் எடுத்தேன். சிறையில் கைதிகளுக்கு உணவளிக்க எவ்வளவு செலவிடப் படுகிறது என்பதுபற்றிச் சட்டசபையில் அமைச்சர் கணக்களித்திருந்தாரே அதுபற்றி இன்று பிற்பகல் இங்கே நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர். செலவு மிகக் குறைவு என்றும் கூறிவிட முடியாது; பண்டங்கள் தரப்படுவதே இல்லை என்றும் சொல்வதற்கு இல்லை; ஆனால், பண்டங்கள் பாழாகும் விதமான சமைக்கும் முறைதான் இங்கு சங்கடத்துக்குக் காரணம். கைதிகளே சமைக்கிறார்கள் - சமையல் முறை தெரியாதவர்கள். அதனால் பண்டங்கள் பாழாக்கப்பட்டு, கைதிகள் சுவையையோ, வலிவையோ பெற முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. முற்காலத்திலே இருந்ததைவிடச் சிறை எவ்வளவோ மேல் இப்போது என்று அமைச்சர்கள் பேசியிருக்கிறார்கள் - அதுபற்றி இங்கு நண்பர்கள் விவாதித்தனர். விளக்கொளி, உடை, அலுமினியப் பாத்திரம், காற்றோட்டத்துக்கான வழி, இவைகளெல்லாம் இப்போது உள்ளன; முன்பு இருட்டு, மண்பாண்டம், அழுக்குடை, குகைபோன்ற அமைப்பு இவை இருந்தன; இது முன்னேற்றமல்லவா என்று அமைச்சர்கள் கேட்கிறார்கள். அவர்கள் குறிப்பிடும் நிலைமை சிறையிலே இருந்த நாட்களில், வெளியிலேயே இருட்டும் இடர்ப்பாடும் மிகுந்திருந்தன; அதனுடைய மறு பதிப்பாகச் சிறை இருந்தது. இப்போது, வெளியே அமைந்துள்ள வாழ்க்கை முறையில் ஒளியும் காற்றும், தூய்மையும் துப்புரவும் புகுத்தப்பட்டுவிட்டிருக்கிறது; ஆகவே அதனுடைய சாயல், சிறையிலும் இருக்க வேண்டும் - இதனை அமைச்சர்கள் மறந்துவிடுகிறார்கள். முன் பீப்பாயில் போட்டு உருட்டுவது, சுண்ணாம்புக்காள்வாயில் போட்டு வேக வைப்பது, கழுமரத்தில் ஏற்றுவது, மாறுகால், மாறுகை வாங்கி விடுவது, யானை காலில் இடர வைப்பது, இப்படிக் கொடுமைப் படுத்தும் முறைகள் நிரம்ப இருந்தன! அந்தக் காலத்தைத்தான் காட்டுமிராண்டிகள் காலம் என்கிறோம். அவைகளைக் கவனப்படுத்தி, அவைகளைவிட, கசையடி பரவாயில்லை அல்லவா, கை காலுக்கு விலங்கிடுதல் பரவாயில்லை அல்லவா என்று கேட்பது, வாதமுமாகாது; மனிதத்தன்மையின் மேம்பாட்டை வளர்க்கும் வழியுமாகாது. சிறை கொடுமைப்படுத்த உள்ள இடம் என்ற கொள்கை, காட்டுமிராண்டித்தனத்தின் ஒரு கூறு. திருந்துவதற்கான இடம் சிறை என்பதுதான் நாகரிக நாட்டினர் ஒப்புக்கொண்டுள்ள கருத்து. இந்தக் கருத்தை, இங்குள்ள அரசு ஒப்புக்கொள்கிறதா மறுக்கிறதா என்பதுதான் பிரச்சினை. நமது கழகத் தோழர்கள் சட்டமன்றத்தில் இதனை எழுப்பினார்கள் - அமைச்சர் அவையினர் பொருத்தமான பதிலோ, விளக்கமோ தரவில்லை. பல்வேறு குற்றங்களை இழைத்துவிட்டு வந்தவர்கள், இதே காங்கிரஸ்காரர்கள் ஜெயிலில் இருந்தபோது, என்னென்ன ஆர்ப்பாட்டம் செய்தார்கள்? சிறையை அப்படித் திருத்தப் போகிறோம், இப்படி மாற்றப் போகிறோம் என்றெல்லாம் பேசினார்கள், பதவியில் உட்கார்ந்ததும் அதை எல்லாம் காற்றிலே பறக்க விட்டு விட்டார்களே என்று கேலி பேசுகிறார்கள். டில்லி மேலவைத் தேர்தலில், நண்பர்கள் சமதும் மாரி சாமியும் வெற்றி பெற்றது பத்திரிகைகளில் வெளி வந்திருந்தது. இங்கு நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். 28-3-1964 இன்று அறையினுள் அடைக்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றபடி, எதிர்ப்புறம் எழிலோடு விளங்கிக் கொண்டிருந்த நிலவைப் பார்த்தபடி இருந்தேன். அழகிய நிலவு. முழு நிலவுக்கே மறுதினம்! கிளம்பும்போது பொன்னிறம்! மேலே செல்லச்செல்ல உருக்கி வார்த்த வெள்ளி நிறம்! எனக்கு எப்போதுமே நிலவைக் காண்பதிலே பெருமகிழ்ச்சி. கம்பிகளுக்குப் பின்னால் நின்றபடி பார்க்கும்போதும், பெருமகிழ்ச்சியே! சிறைப்படாத நிலவு, அழகினைச் சிந்திக் கொண்டிருக்கிறது - சிறைப்பட்டிருக்கும் எனக்குக் களிப்பை அள்ளிப் பருகிக்கொள் என்று நிலவு கூறுவதுபோலத் தோன்றிற்று. இங்கு வந்த இத்தனை நாட்களில் இத்துணை அழகு ததும்பும் நிலவை நான் கண்டதில்லை. கடலோரத்தில, வெண் மணலின் மீதமர்ந்து கண்டு இன்பம் கொண்டிட வேண்டும் அண்ணா! சிறைக்குள் இருந்தா!! என்று கேட்டுக் கேலி பேசுவர் என்பதால், அதிகம் இதுபற்றி எழுதாதிருக்கிறேன். இன்று உள்ள வானம் நிலவு அளிக்கும் ஒளியினால் புதுப்பொலிவு பெற்று விளங்குவதுபோலவே என் மனமும் எனக்குக் கிடைத்த செய்தி காரணமாக மகிழ்ச்சியால் துள்ளியபடி இருக்கிறது. நண்பர்கள் நடராஜனும், சி. பி. சிற்றரசும் மேலவைக்கான தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டனர் என்ற செய்தி கிடைத்தது. இன்று மாலை - நறுமணம் வீசும் சந்தனத்தை வேலைப்பாடு மிக்க வெள்ளிக் கிண்ணத்தில் ஊற்றித் தருவதுபோல, இந்த மகிழ்ச்சியான வெற்றிச் செய்தியை எனக்குத் தந்தவர், டில்லி மேலவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நண்பர் மாரிசாமி. முதலமைச்சருடைய தனி அனுமதி பெற்று, நண்பர் மாரிசாமி, ஆம்பூர் நகராட்சி மன்றத் தலைவராகியுள்ள சம்பங்கி, திருப்பத்தூர் நகராட்சி மன்றத் தலைவராகியுள்ள சின்னராஜு, வாணியம்பாடித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வடிவேலு ஆகியோருடன் இன்று மாலை என்னைக் காண வந்திருந்தார். சிறை மேலதிகாரிகள் தமது திறமைமிக்க கண்காணிப்பை நடத்த அங்கு அருகிலே அமர்ந்திருந்தனர். நண்பர் மாரிசாமிக்கு என் பாராட்டுதலைத் தெரிவித்தேன். அவர் தம்முடைய நன்றியைக் கூறினார். காங்கிரஸ் வட்டார ஓட்டுகள் சில அவருக்குக் கிடைத் திருப்பதுபற்றி, காங்கிரஸ் பெருந்தலைவர்கள் விசாரம் தரும் விசாரணை நடத்த இருப்பதாக மாலைப் பத்திரிகைகளில் பார்த்தேன் - அதுபற்றி மாரிசாமியிடம் கேட்டேன். - எனக்குத் தெரிந்தவர்கள், வேண்டியவர்கள், காங்கிரஸ் வட்டாரத்தில் , சில மந்திரிகள் மட்டுமே இருக்கிறார்கள் - அவர்களுடைய ஓட்டுகள்தான் கிடைத்திருக்க வேண்டும் என்று கூறினார். அவ்விதமாக, பத்திரிகை நிருபர்களிடம் கூறிவிட்டு வந்ததாகவும் சொன்னார். சுதந்திராக் கட்சிக்காரர் என்பதனால் மட்டுமல்ல, காங்கிரஸ் வட்டாரத்தின் பெரிய புள்ளிகளின் இயல்புகளை, நெருங்கிப் பழகி அறிந்திருக்கிறவர் என்பதாலே, இன்றைய காங்கிரஸ் தலைவர்களிலே முதன்மையானவர்களுக்கு, மாரிசாமியிடம் கோபம் - கசப்பு - அச்சம்கூட! அவருடைய வெற்றியை, அவர்கள் தங்கள் இதயத்துக்குத் தரப்பட்ட கசையடியாகவே கருதுவார்கள். திருப்பத்தூர் நகராட்சி மன்றத் தலைவர் சின்னராஜு நமது இயக்கத்தவர் என்றாலும், எதற்கும் தாமாக முந்திக்கொண்டு வந்து நிற்கும் சுபாவம் உள்ளவரல்ல. சட்ட மன்றத் தேர்தலில் அவர் ஈடுபட்டதே என்னுடைய இடைவிடாத வற்புறுத்தலுக்குப் பிறகுதான். நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலிலும் ஈடுபட அவர் இலேசில் இடம் கொடுத்திருக்கமாட்டார். தேர்தலில் பல்வேறு வகையான எதிர்ப்புகள் இருந்தன என்று கூறினார். அவருடைய வெற்றி, நான் எதிர்பார்த்ததுதான் என்றாலும், காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் வேலைகளில் ஒரு தலைமுறை அனுபவம் பெற்றவர்களாயிற்றே என்பதை எண்ணிச் சிறிது கவலைப்பட்டுக் கொண்டிருந்தவன், வெளியே சென்று அவரைக் காண நாட்கள் பல ஆகுமே என்று எண்ணிக்கொண்டிருந்தேன் - அவரே இங்கு வந்தது என் ஆவலை அறிந்து வந்ததுபோலிருந்தது. ஆம்பூர் சம்பங்கி, மிக அமைதியாகக் காரியத்தைக் கணக்கிட்டு முடிக்கும் இயல்பினர். விலைவாசிக் குறைப்புப் போராட்டம் காரணமாக என்னோடு வேலூர் சிறையில் இருந்தவர். அப்போதே, அவர் ஆம்பூர் நகராட்சித் தலைவராக வரவேண்டும் என்று பேசிக்கொண்டோம். எண்ணியபடியே நடந்தேறியது. ஆம்பூர் நகராட்சிக்கான தேர்தலின்போது இருந்த நிலைமைகள்பற்றிச் சிறிதளவு கூறினார். அவர்களைக் கண்டுவிட்டு வந்து, இங்கு நமது நண்பர்களிடம் "சேதி’ கூறியபோது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். இன்று காலையில், சிறை மாநில மேலதிகாரி வந்திருந்தார் - இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவராம். நாங்கள் இருந்த பகுதிக்கு, சிறை அதிகாரிகளுடன் வந்திருந்தார். மிகப்பெரிய பொறுப்பான பதவியில் இருப்பவர், சிறை நிலைமைகளைக் கண்டறிய வரும்போது, எங்களையும் பார்த்து, நாலு வார்த்தை பேசுவார், நிலைமை எப்படி? என்று கேட்பார் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். கேட்டிருந்தால் சொல்வதற்கு ஏராளமான தகவல்கள் இருப்பதால் அல்ல; ஒரு பரிவு காட்டும் முறையில், பேசுவார் என்று நினைத்தேன். அவர், எங்கள் பகுதியின் கீழ்த்தட்டில் உலவினார் - நாங்கள் மாடிப் பகுதியில், நூற்பு வேலையில் இருந்தோம் - திரும்பிக்கூடப பார்க்கவில்லை! சமையற்கட்டைப் பார்த்துவிட்டு, அங்கு இருக்கும் ஒரு அரச மரத்தைப் பார்த்துவிட்டுப் போய்விட்டார். வெள்ளைக்கார ஆட்சி ஒழிந்ததும், அதிகார வர்க்கத்தின் பழைய மனப்பான்மையே ஒழிந்துவிட்டது என்று வேறு பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள். கம்யூனிஸ்டு கட்சியிலே "பிளவு’ விரிவாகிக்கொண்டு வருவதுபற்றி, நண்பர் மதியழகன், இன்றையப் பத்திரிகையைப் பார்த்துவிட்டுச் சொன்னார். ஆந்திராவில் சுந்தரய்யா - நாகிரெட்டி போன்ற புடம் போட்டு எடுக்கப்பட்டவர் களெல்லாம்கூட, புரட்சி செய்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தமட்டில், கம்யூனிஸ்டு கட்சியில் பிளவு ஏற்படுவது, களிப்பூட்டும் நிகழ்ச்சி அல்ல - காங்கிரசை எதிர்க்க அமைந்துள்ள ஒரு கட்சி வலிவிழந்து, காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தைப் புதுவலிவு கொள்ளச் செய்கிறதே என்பது கவலை தருவதாகவே இருக்கிறது. பொதுவாகவே, இப்போது, எல்லாக் கட்சிகளிலும், இரு பிரிவுகள் - ஒன்றை ஒன்று பிற்போக்கு என்று கூறிக்கொண்டு முளைத்து, முடைநாற்றத்தைக் கிளப்பிவிடும் நிகழ்ச்சி ஏற்பட்டு விட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியில், வலதுசாரி டி. டி. கிருஷ்ணமாச்சாரி, மொரார்ஜி போன்றோராலும், இடதுசாரி கிருஷ்ணமேனன், மாளவியா போன்றோராலும் நடத்தப்பட்டு வருகிற நிலைமை இருப்பதை, மறைக்கக்கூட முடியவில்லை. கம்யூனிஸ்டு கட்சியில், டாங்கே கோஷ்டி, கோபாலன் கோஷ்டி என்கிறார்கள். பிரஜா - சோஷியலிஸ்டுகளில், மிஸ்ரா கோஷ்டி அசோக் மேத்தா கோஷ்டி என்கிறார்கள். திராவிடர் கழகத்தில் பெரியார் சுயமரியாதைக் கட்சி, குருசாமி சுயமரியாதைக் கட்சி என்று பேசப்பட்டு வருகிறது. மாற்றார்கள் எத்துணையோ இட்டுக்கட்டியும் மூட்டி விட்டுங்கூட, நமது கழகம் மட்டும் இத்தகைய கேட்டினுக்கு இரையாகாமல் இருந்து வருவதுபற்றி, வியந்து பேசிக் கொண்டிருந்தோம். இன்று பத்திரிகைகள், காங்கிரஸ் கட்சிக்குள் மூண்டு கிடக்கும் உட்பூசல்களை எவ்வளவோ மூடி மறைக்கின்றன. கேரளத்திலும், ஆந்திரத்திலும், ராஜ்யசபைத் தேர்தலில் காங்கிரஸ்காரர்களே காங்கிரஸ்காரர்களைத் தோற்கடித்தனர். தேர்தல் தந்திரத்தில் தனக்கு மிஞ்சியவர் இல்லை, கட்டுப்பாட்டில் நிகர் வேறு இல்லை என்று விருது பெற்ற காமராஜர் கண் எதிரில், மாரிசாமிக்குக் காங்கிரஸ் ஓட்டுகள் கிடைத்துள்ளன! இந்த நிலைமைகளோடு மிகப் பெரிய நெருக்கடியின் போதும், திராவிட முன்னேற்றக் கழகம், கட்டுப்பாட்டு உணர்ச்சியுடன் காரியமாற்றிவரும் கண்ணியத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் பொதுமக்கள், நமது கழகத்தைப் பாராட்டாமலிருக்க முடியாது. எந்த ஒரு கழகத் தோழரும், இந்த மேலான நிலைக்கு ஊறு நேரிடும்படியான சொல்லிலோ செயலிலோ தன்னை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது என்ற செம்மையான பாடத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வெளியில் இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடியதைவிட, சிறைப்பட்டிருப்பவர்களுக்குத்தான், இந்த அருமையும், அதனால் கிடைக்கப்பெறும் பெருமையும் எழுச்சியைத் தந்திடும். நாம் சிறையில் இருக்கிறோம், நமது கழகம் வெற்றிமேல் வெற்றி பெற்று, மக்களின் நன்மதிப்பைப் பெற்று வளருகிறது என்பதனை விட, உற்சாகமான வேறு உணர்ச்சி தேவை இல்லை அல்லவா? அத்தகைய வெற்றிகளை ஈட்டித்தரப் பாடுபடும் அனைவருக்கும், நன்றி கூறியபடிதான், சிறையிலே இருக்கிறோம். இவைபற்றி இன்று பிற்பகல் அன்பழகனிடம் பேசிக் கொண்டிருந்தேன். நகராட்சி மன்றத் தேர்தல்களில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைத்ததா என்று கேட்டார் -பெரும் அளவு கிடைத்தது. ஆனால் சேலம், ராசிபுரம் இரண்டு இடங்களிலும் நான் அதிக அளவு வெற்றி எதிர்பார்த்தேன் - கிடைக்கக் காணோம் - பொதுவாக இதுபற்றி வெளியே சென்ற பிறகு கண்டறிய வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன் என்று தெரிவித்தேன். ஏன் இதற்கு ஒரு குழு அமைக்கலாமே என்றார் - குழு அமைத்து, இன்னின்னாரால் குறைகள் ஏற்பட்டு விட்டன என்று கிளறிக்கொண்டிருப்பதை நான் விரும்புபவன் அல்லவே என்பதை நினைவுபடுத்தினேன். நிலவைக் கண்டு களிப்பைப் பருகிக்கொண்டிருந்து விட்டு உடனே குறிப்பு எழுதவில்லை. இடையில் வைசாலி தட்சசீலம் ஆகிய பழம் பெருமைமிக்க ஊர்களிலே உலவிக் கொண்டிருந்தேன் - ராகுல் எழுதிய சிந்து முதல் கங்கை வரை என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். இனி, கெய்ரோ நகர் நோக்கி, கிருஸ்தவ அரசுகளின் படைகள் பாயும் நிகழ்ச்சி பற்றி - புனிதப் போர்பற்றி - (ஆங்கில) ஏடு படித்துவிட்டுத் தூங்க முயற்சிக்க வேண்டும். நேற்றிரவு இரண்டு மணியிலிருந்து நாலு மணிவரையில் கைவலியினால், தூக்கம் வராமல் கஷ்டமாக இருந்தது. இன்று பிற்பகலும் வலிதான். ஆனால் இப்போது இல்லை. நிலவின் அழகும் கழக வெற்றியின் நேர்த்தியும், வலியை விரட்டி இருக்கிறது என்று நினைக்கிறேன், பார்ப்போம். 1-4-1964 ஏப்ரல் மாதத் துவக்கம்; இடையில் குறிப்பு எழுதாததற்குக் காரணம், ஏற்பட்டுவிட்ட மனச்சங்கடம். திடீரென்று டி. எம். பார்த்தசாரதிக்கு நெஞ்சுவலி கண்டது. கவலைப்படும் அளவுக்கு வலி விறுவிறுவென்று வளர்ந்து களைப்பு, மயக்கம் மேலிட்டு விட்டது. சிறை மருத்துவர், சில மணி நேரம் பார்த்துவிட்டு, வெளியே மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றார். நாங்கள் அனைவரும் பயந்துவிட்டோம். அதற்கு ஏற்றபடி, பார்த்தசாரதியின் நிலைமையும் இருந்தது. மாலை ஏழு மணி இருக்கும், பார்த்தசாரதியை வெளி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, படிக்கட்டுகளில் இறங்கியதும் மயக்கம் அதிகமாகிவிட்டது. வார்டர் தாங்கிப் பிடித்துக்கொண்டு சென்றார் என்றாலும், சிறிது தூரம் நடப்பதற்குள் மயக்கம் மேலும் அதிகமாகி நடந்துபோக முடியாத நிலை ஏற்பட்டு, வார்டர்கள் பார்த்தசாரதியைத் தூக்கிச் செல்லும்படி ஆகிவிட்டது. இதைக்கண்ட எங்களுக்கு மேலும் திகிலாகி விட்டது. வேறு எங்கும் பெறமுடியாத மேலான மருத்துவ உதவி, வெளி மருத்துவமனையில் கிடைக்குமென்பது தெரிந்திருந்தாலும், பொதுவாக நெஞ்சுவலி விபத்தாக முடிந்துவிடுவதை அறிந்திருந்த காரணத்தால், எங்களுக்குப் பெருத்த மனச்சங்கடம் ஏற்பட்டது. அன்று இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. மறுநாளும் மருத்துவமனை சென்றுள்ள பார்த்தசாரதியின் நிலைமை எப்படி இருக்கிறதோ என்பதுபற்றிய கவலையே உள்ளத்தைத் துளைத்துக் கொண்டிருந்தது. சிறை அதிகாரிகளைக் கேட்டாலோ, “மருத்துவமனைக்கு ஒரு கைதியை அனுப்பிய பிறகு, தொடர்பு வைத்துக்கொள்வதில்லை’ என்று கூறிவிட்டனர். பார்த்தசாரதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுபற்றி, வில்லிவாக்கத்தில் உள்ள அவருடைய துணைவியாருக்குச்”சேதி’ தரும்படி சிறை அதிகாரிகளில் ஒருவரைக் கேட்டுக்கொண்டோம். அவர், வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்துக்குத் தொலைபேசி மூலம் செய்தி அனுப்பி, வீட்டாருக்குத் தெரிவிக்கும்படி ஏற்பாடு செய்வதாகக் கூறினார். இது ஓரளவுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது, என்றாலும் கண்களில் நீர் தளும்பும் நிலையில், இங்கிருந்து பார்த்தசாரதி சென்ற காட்சி, கண்முன் எப்போதும் நின்று மனதை வாட்டியபடி இருந்தது. வயது 60, எப்போதும் மிகச் சுறுசுறுப்பாக வேலை செய்தபடி இருப்பது வாடிக்கை. நான் பல முறை தடுத்தும் எந்த வேலையையும் அவரே மேற்கொள்வார், அந்த அளவு வேலை செய்யக்கூடிய வலிவும் இல்லை. அதை அவர் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை, இதன்றி வீட்டை ஒட்டிய கவலைகள். பொன்னுவேல் சமையல் காரியத்தைக் கவனித்துக் கொண்டார்; எனக்கும் மற்றவர்களுக்கும் சாப்பாட்டின் வகை பற்றிய எண்ணமே எழவில்லை. சிறை மருத்துவரிடம் பொன்னுவேலுவை அனுப்பி இருந்தேன். அவர், "பயப்படும் படியாக நிலைமை இல்லை; இருதய சம்பந்தமான வஎன்றுகூடத் திட்டவட்டமாகச் சொல்லுவதற்கில்லை, பரிசோதனைக்காகத்தான், பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறேன்’ என்று கூறி அனுப்பினார். எனக்கு ஊசிபோட மருத்துவர் வந்திருந்தார். பெரிய மருத்துவமனை சென்று, நிலைமையைக் கண்டறிந்து வந்து கூறும்படி கேட்டுக்கொண்டேன். அன்று மாலையே, அவர் பெரிய மருத்துவமனை சென்று பார்த்தசாரதியைப் பார்த்துவிட்டுத் திரும்பி, கம்பவுண்டர் மூலமாக, கவலைப் படத்தக்கதாக ஏதும் இல்லை என்று செய்தி அனுப்பி இருந்தார். மிகுந்த ஆறுதலாக இருந்தது. தொடர்ந்து, சிறைக் காவலர்களில் ஒருவர், மருத்துவமனை சென்று பார்த்துவிட்டு வந்து, பார்த்தசாரதி நல்லபடி இருக்கிறார் என்ற செய்தியைக் கூறினார். எங்கள் கவலையையும் கலக்கத்தையும் போக்கிடத் தக்கவிதத்தில் 1-4-64 மாலை, பார்த்தசாரதியே, இங்குத் திரும்பி வந்துவிட்டார். நேரிலே பார்த்த பிறகுதான் மன நிம்மதி ஏற்பட்டது. பரிசோதனைகள் செய்தது குறித்தும், வீட்டாரும் நண்பர்கள் நடராஜன், கருணாநிதி, நெடுஞ்செழியன், கிட்டு ஆகியோர் வந்து விசாரித்தது குறித்தும் பார்த்தசாரதி கூறினார். அதிகமாக வேலை செய்க்கூடாது என்று கண்டிப்பாகக் கூறினேன். அவரால் வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை. சோர்வு நீங்கிவிட்டதாகத் தெரியவில்லை. மனச்சங்கடம் காரணமாக, படிப்பதும், உரையாடுவதும், தட்டுப்பட்டுவிட்டிருந்தது. வைசாலி - தட்சசீலம் ஆகிய இடங்களில் அமைந்திருந்த குடியரசுக்கும் மகத நாட்டின் முடியாட்சிக்கும் இடையே மூண்டுவிட்ட போர்பற்றி, ராகுல் விவரித்திருந்த பகுதியைப் படித்தேன். ஷேக் அப்துல்லா விடுதலை செய்யப்படுவார் என்று காஷ்மீர் முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கைப்பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஷேக் அப்துல்லாமீது தொடரப்பட்டுள்ள வழக்கு, பயங்கரமானது - அவருக்கும் அவருடைய கூட்டுத் தோழர் களுக்கும் ஆயுள் தண்டனை பெற்றுத் தரத்தக்க வழக்கு. பாகிஸ்தானோடு கூடி, காஷ்மீர் சர்க்காரைக் கவிழ்க்கச் சதி செய்தார் என்பது வழக்கு. பல இலட்சம் வழக்குக்காகப் பாழடிக்கப்பட்டது. இப்போது வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். பத்து ஆண்டுகளாக சிறைக்கொடுமைக்கு ஆளான ஷேக் அப்துல்லா, நிபந்தனையின்றி விடுதலை பெறுவது, அவருடைய புகழொளியைப் பார் அறியச் செய்யும் என்பதில் ஐயமில்லை. காஷ்மீரத்தின் எதிர்காலமும், காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள தொடர்பின் நிலையும், இந்தச் சம்பவத்தினால் எந்த விதத்தில் உருப்பெருகிறது என்பது, இனிதான் தெரிய வேண்டும். மொரார்ஜி தேசாய் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்வது பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். “அடிமைப்பட்ட மக்களிடம் எஜமானன் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டு செல்லும் விதமாக அவருடைய பேச்சு இருக்கிறதே தவிர, காரணம், விளக்கம், கனிவு ஏதும் காணோம்’ என்று நண்பர்கள் கேட்டார்கள்.”மனதிலே பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறார் - இது ஒருவிதத்தில் பாராட்டத்தக்கது. நமது அமைச்சர்க ளைப்போல மூடி மறைத்து, மக்களின் நோக்கை வேறு திசையில் திருப்பி விடவில்லை? இதுபோன்ற பேச்சுத்தான், நமது மக்களுக்கு, உண்மையான நிலைமையை எடுத்துக்காட்ட உதவும்’’ என்று நான் கூறினேன். மொரார்ஜியின் பேச்சில் மற்றோர் கருத்து - பேசாததன் மூலம் - தொனித்தது. பலரும் பாராட்டிப் பேசிய காமராஜ் திட்டம்பற்றி அவர் ஏதும் குறிப்பிடவே இல்லை. ஒருவேளை அதனால் பாதிக்கப்பட்டவர் என்ற காரணத்தால், அது குறித்துப் பேசவில்லை போலும்! அன்புள்ள அண்ணாதுரை 6-12-1964 தியாக வரலாறுகள் பாரதிதாசன் பிரிவு தம்பி! இன்று நீக்ரோக்களுக்குக் கொடுமைகள் இழைக்கப் படுகின்றன. பிரச்சினையின் ஒரு பகுதி மட்டுமே தீர்க்கப் பட்டிருக்கிறது. துவக்க நாட்களில், இந்தப் பிரச்சினை குறித்து உலகு துடித்தெழ, இந்தத் தியாகத் தீயில், தூயவர் வீழ்ந்துபட்டிருக்கிறார். இதுபோன்ற தியாக வரலாற்று நிகழ்ச்சிகளைப் படிக்கும் போதுதான், நாம் மேற்கொண்ட அறப்போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் இழப்பும் இன்னலும் மிகச் சொற்பம் - அற்பம் - என்ற மெய்யுணர்வு ஏற்படுகிறது - அதுமட்டுமல்லாமல், பெரிய பிரச்சினைகளைத் தீர்த்திட எத்தனையோ முயற்சிகள் நடைபெற்றாக வேண்டும் என்ற தெளிவு பிறக்கிறது. இந்த உணர்ச்சி உள்ளத்தைத் தடவிக்கொடுக்கும் நிலையில், உறங்கச் செல்கிறேன். 11-4-1964 வேதனை தரத்தக்க இழப்புகள் குறித்த பட்டியலில் மற்றும் ஒரு பெயர் இணைக்கப்படவேண்டி நேரிட்டுவிட்டதை இன்றைய பத்திரிகை அறிவித்தது. நாச்சியார்கோயில் தவுல் வித்வான் ராகவப்பிள்ளையின் திடீர் மறைவுபற்றிப் படித்து மிக்க வேதனைப்பட்டேன். தமிழக இசை உலகுக்கு இதுவும் மிகப் பெரிய இழப்பு. எனக்குற்ற நண்பர்களில் இவரும் ஒருவர். இவரும், காருகுறிச்சியுடன் காஞ்சிபுரம் எங்கள் இல்லத்திற்கு, திருமணத்தின்போது வந்திருந்து இசை விருந்தளித்தார். காருகுறிச்சியைவிட இவரை எனக்கு அதிக ஆண்டுகளாகத் தெரியும். மிக்க அன்புடன் பழகுபவர். தவுல் வாசிப்பில் இவருடைய தனித்திறமையை அனைவரும் அறிவர். இவருடைய புலமையை அறிந்த அனைவரும் நெஞ்சம் திடுக்கிடத்தக்க விதமான மறைவு இவருடையது. நான் சோர்வாகக் காணப்பட்டதை எண்ணியோ என்னவோ இங்கு என்னுடைய நண்பர்கள், என்னுடைய பயண அனுபவங்களைப்பற்றிச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அரித்துவாரம், டேராடன், சாரன்பூர், காசி, சாரநாத், லக்னோ, பாட்னா, கல்கத்தா ஆகிய பல இடங்களுக்குச் சென்று வந்ததுபற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். எத்தனை பெரிய பெரிய நகர்கள் போய்வந்தாலும், சென்னைபோல, மனதுக்கு நிம்மதி தரத்தக்க இடம் இல்லை என்ற என் எண்ணத்தையும் கூறினேன். சென்னை மேலும் எழில் நகராவதற்காக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். கடந்த நாலைந்து நாட்களாகவே கையில் வகுறை ந்திருந்தாலும், மிகவும் பளுவாக இருப்பதுபோன்ற ஒரு உணர்ச்சி. இதன் காரணமாக, நூற்பு வேலை செய்யவில்லை. இன்றுதான மறுபடியும் நூற்பு வேலையில் சிறிது நேரம் ஈடுபட்டேன். என்ன காரணத்தினாலோ, நாலைந்து நட்களாக நாங்கள் இருக்கும் பகுதியின் முன்வாயில் இரும்புக் கம்பிக் கதவைப் பூட்டியே வைக்கிறார்கள். சிறையில், முறைகள் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்குக் காரணம் புரிவதில்லை. கேட்டுத் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. பல செய்திகளால் ஏற்பட்டிருந்த மனவருத்தத்தைப் போக்குவதுபோல, இன்று மாலை பரிமளம் என்னைக் காண வந்திருந்தான். இன்றுடன் பரீட்ஷை முடிவுற்றதாகவும் கொன்னான். உடன் யாரும் வரவில்லை. ஆகவே நீண்டநேரம் பரிமளத்திடம் குடும்ப விஷயமாகவும், பொது விஷயங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். நான் இளைத்துக் காணப்படுவதாகவும் சொன்னான் - எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. ஆப்பிரிக்க பூபாகத்தைப்பற்றி ஆங்கிலேயர்கள் "விநோதமான’ முறையில், கதைகள் எழுதுவது வாடிக்கை. அங்கு பூர்வீகக்குடிகள் மனித மாமிசம் தின்பவர்கள், மாய மருத்துவக்காரரிடம் சிக்கிக் கிடப்பவர்கள் என்றெல்லாம் எழுதுவது வழக்கம். பிற நாடுகளையும், பிடித்தாட்டும் ஏகாதிபத்திய உணர்ச்சிக்கு உணவளிக்க, இதுபோல எழுத தலைப்பட்டார்கள் என்று எண்ணுகிறேன். இத்தகைய முறையில் எழுதப்பட்ட ஒரு ஆங்கில ஏடு படித்தேன். எந்த நோக்கத்துக்காக எழுதப்பட்டிருந்த போதிலும், அதைப் படிக்கும்போது, ஆப்பிரிக்க பூபாகத்தின் இயற்கைச் செல்வம் எவ்வளவு அளவுகடந்து இருக்கிறது என்பதைத்தான் உள்ளபடி உணர முடிகிறது. அந்த இயற்கைச் செல்வத்தை, விடுதலைபெற்ற ஆப்பிரிக்க நாடுகள் தக்க முறையில் பயன்படுத்தினால், இந்த நூற்றாண்டு ஆப்பிரிக்க மக்களின் புதுவாழ்வு நூற்றாண்டாகும் என்று தோன்றுகிறது. 12-4-1964 காக்கைக் குருவிகளெல்லாம், எங்களைக் கேலி செய்வது போலக் கூச்சலிட்டு, மரங்களிலே தாவிக்கொண்டிருந்தன - இன்று 5-30க்கே, எங்களை அறைகளிலே போட்டு பூட்டி விட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை, வெளியே மஞ்சள் வெயில் அடித்துக்கொண்டிருக்கும் நிலையில், நாங்கள் அறைக்குள் அனுப்பப்பட்டோம். உள்ளே போவதற்கு முன்பு, ஒரு மணி நேரம் வரையில், மிகப் பயங்கரமான கூச்சல் - கதறல் - நாங்கள் இருக்கும் பகுதிக்குப் பக்கத்துப் பகுதியில், வேட்டையாடப்பட்ட மிருகம், வெகுண்டெழுந்து கதறுவதுபோன்ற கூச்சல். காரணம் கேட்டோம். ஒரு ஆயுள் தண்டனைக் கைதிக்கு மனம் குழம்பிப்போய் இவ்விதம் கூச்சலிடுவதாகச் சொன்னார்கள். உட்புறத்தில் இதுவரை இருந்து வந்தானாம். கதறிக் கதறிக் களைத்துபோய்ப் பிறகு பேச்சற்றுக் கிடக்கும் நிலை மேலிட்டு விட்டது என்று எண்ணுகிறேன். இன்று பிற்பகல், சிரவணபெலகோலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிலைபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அங்கு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒரு விழாபற்றி இன்றைய பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. எனவே நண்பர்கள் அதுபற்றிக் கேட்டார்கள் - நான் அங்குச் சென்று வந்த நிகழ்ச்சிப்பற்றிக் கூறினேன். அதைத் தொடர்ந்து, விஜயநகரம் - ஹம்பி இடிபாடுகள்பற்றிப் பேச்சு எழுந்தது. அங்கு நான் கண்டவைகள்பற்றியும் கூறினேன். சென்ற ஆண்டு நான் சிரவணபெலகோலா பற்றி எழுதியதைப் படித்துவிட்டு, தான் போய் பார்த்துவிட்டு வந்ததாக, காஞ்சிபுரம் கே. டி. எஸ். மணி என்னிடம் கூறினார். போகப்போகிறார்களோ இல்லையோ, இங்கு இந்த நிகழ்ச்சிபற்றி நான் கூறியதைக் கேட்ட நண்பர்கள், பல இடங்களுக்குச் சென்றுவரப் போவதாகப் பேசிக்கொள்கிறார்கள். அரக்கோணம் ராமசாமி, தனது தொகுதியில் உள்ள மகேந்திரவாடி என்ற ஊரையும், ஏரியையும் நான் அவசியம் வந்து பார்க்க வேண்டும் - அந்த இடம் பல்லவர்கள் காலத்தது என்று கூறினார். வருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறேன். ஷேக் அப்துல்லா நிலைமைபற்றியும், கம்யூனிஸ்டு கட்சியின் பிளவுபற்றியும், இங்கு நண்பர்கள் திகைப்புடன் பேசிக் கொண்டுள்ளனர். 13-4-1964 நேற்றுப்போலவே இன்று மாலையும் புத்தாண்டுக்காக விடுமுறையாம் - விடுமுறை என்றால் கைதிகளுக்கு மாலை ஆறு மணிக்குள் கூடு என்பது நிலைமை. இன்று காலையிலேயே, கவலை தரும் செய்தி - ஆசைத்தம்பி, அறிவழகன் தோற்றுவிட்டதாக. அவர்கள் தேர்தலில் ஈடுபட்ட செய்தி அறிந்தபோதே கவலைப்பட்டேன் - அந்தத் தேர்தல் முனைகள் (உள்ளாட்சி மன்றங்கள் தொகுதி, பட்டதாரிகள் தொகுதி) நமது கழகத்துக்குப் போதுமான தொடர்பு உள்ளவைகள் அல்ல. அந்த முனைகளில் செல்வாக்குப் பெறும் வழிமுறைகள், நமக்கு இன்னும் சரியானபடி பிடிபடவில்லை. எனவே, அந்தத் தொகுதிகளில் கழகத் தோழர்கள் தேர்தலில் ஈடுபடுவது, மிகமிகத் துணிகரமான முயற்சி என்று கூறவேண்டும். என்றாலும், எப்படியும் அந்த முனைகளிலும் நாம் ஒரு நாள் இல்லாவிட்டால் மற்றோர் நாள் ஈடுபடத்தானே வேண்டும். இது, முதல் முயற்சி என்ற அளவில் திருப்திபட்டுக் கொள்ள வேண்டும் என்று நண்பர்களிடம் கூறினேன். இந்த இரு தொகுதிகளிலும், அதிலும் குறிப்பாக உள்ளாட்சி மன்றத் தொகுதிகளில் வாக்காளர்களாக உள்ளவர்களில் எந்தக் கட்சியினர் அதிகம் என்று நண்பர்கள் கேட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆளுங் கட்சியைச் சேர்ந்து விடுபவர்கள் - ஜஸ்டிஸ் கட்சி ஆளுங் கட்சியாக இருந்தபோது, அதிலே இருந்தனர்; இப்போது காங்கிரசில் உள்ளனர் - அவர்கள் மட்டுமல்ல, “பெரிய புள்ளிகள்’ என்பவர்களே அவ்விதம்தான் என்று நான் கூறினேன். மாவட்ட வாரியாக, எந்தெந்தப் பெரிய புள்ளிகள், முன்பு ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தவர்கள் இப்போது காங்கிரசில் சேர்ந்துள்ளனர் என்பதுபற்றி நண்பர்கள் கணக்கெடுத்தனர். இதழில், செட்டி நாட்டரசர் முத்தைய்யா செட்டியார், சென்னை மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிற செய்தி வந்திருக்கிறது என்று அன்பழகன் சுட்டிக் காட்டினார். அவருடைய தம்பி இராமநாதன் செட்டியார், டில்லி பாராளுமன்ற உறுப்பினர் - காங்கிரஸ் கட்சி; அதுகூட வேடிக்கை இல்லை, ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக விளங்கிய”பொப்பிலி ராஜா’வின் மகன், பாராளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சி என்று நான் கூறினேன். பெரிய புள்ளிகள் போக்கு இதுதான் என்று நண்பர்கள் கூறி வருந்தினர். நேற்றும் இன்றும், “சாடர்லீ சீமாட்டியின் காதலன்’ என்ற புத்தகம், ஆபாசமானது என்று தடை செய்யப்பட்டதை ஒட்டி தொடரப்பட்ட வழக்குபற்றிய புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தின் கருத்து, நடை இரண்டுமே, நம்மைத் தூக்கிவாரிப் போடக்கூடியது. சாடர்லீ சீமாட்டி, மணமானவள் - கணவன், உலகப் பெரும்போரில் குண்டடி பட்டதால், இடுப்பிலிருந்து செயலற்ற உடல்நிலை பெற்று விடுகிறான். சாடர்லீ சீமாட்டி, சீமானுடைய நண்பனிடமும், பிறகு, தோட்டக்காரனிடமும் தொடர்பு கொள்கிறாள். இதிலே தோட்டக்காரனிடம் கொண்ட தொடர்பு தொடர்கிறது - சீமாட்டிக்கு அவனிடம் இணைந்துவிட வேண்டும் என்ற துணிவு பிறக்கிறது; அவனும் மணமானவன்; முரடன். இருவரும் தத்தமது”விவாகத்தை’ விடுதலை செய்துகொண்டு, திருமணம் செய்துகொண்டு, கண்காணா இடம் சென்று வாழவேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இது கதை. பச்சை பச்சையாகவும், புட்டுப் புட்டுக் காட்டுவதாகவும், ஆபாசமான சொற்களைக் கொண்டதாகவும், நடை. "இந்த ஏடு, ஆபாசமானது, படிப்பவரின் மனதைக் கெடுத்து, ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் பாழாக்கிவிடும், ஆகவே இது தடை செய்யப்படவேண்டும்’ என்பது வழக்கு. வழக்குத் தொடுத்தது பிடிட்டிஷ் அரசு. புத்தகம் வெளியிட முன்வந்தது, பென்குவின் புத்தக நிலையத்தார். இந்த நூலின் ஆசிரியர் டி. எச். லாரன்ஸ் என்பார் இலக்கியத் துறையில் வித்தகர் என்ற விருது பெற்றவர். அவருடைய கதைகள் - கட்டுரைகள் - கவிதைகள், இலக்கியச் செறிவுள்ளன என்பதற்காக பல பல்கலைக் கழகங்களில் பாட நூற்களாகவும் ஆராய்ச்சிக்குரிய நூற்களாகவும் இடம் பெற்றுள்ளன. இந்த நூற்றாண்டின் இணையில்லா இலக்கியப் பேராசிரியர் வரிசையில், லாரன்சுக்குச் சிறப்பிடம் இருக்கிறது. லாரன்சின் மேதைக்கு ஒரு எடுத்துக்காட்டாக மற்றொன்றும் கூறலாம். அவருடைய நூல்களைப்பற்றியும் அவருடைய திறமைபற்றியும் மதிப்பிட்டு எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் மட்டும் 800! லாரன்சின் புகழ், ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. சாடர்லி சீமாôட்டி எனும் ஏட்டின் கருத்தும் நடையும் படிப்போருக்கு ஒரு குமட்டலைத் தருவதாக உள்ளது. எனினும் வழக்கு நடைபெற்று, "புத்தகம் வெளியிட்டதிலே குற்றம் ஏதுமில்லை’ என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஆபாசமானது என்று கருதத்தக்க விதமாக, கருத்தும் நடையும் இருப்பினுங்கூட, பெரிய இலக்கிய மேதையான லாரன்சு, அந்த ஏட்டின் மூலம், மண வாழ்க்கை தூய்மையானது, தேவையானது, கனிந்திருக்கவேண்டியது என்ற பண்பைத்தான் விளக்க முற்பட்டிருக்கிறார், என்ற காரணம் ஒப்புக்கொள்ளப் பட்டு, தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த ஏடுபற்றி பல்கலைக்கழக இலக்கியப் பேராசிரியர்கள், நூலாசிரியர்கள், மனோதத்துவ ஆசிரியர்கள், மார்க்கத் துறை வித்தகர்கள், கல்விக்கூட அதிபர்கள், தமது கருத்தினைச் சான்றாக அளித்துள்ளனர். வழக்கிலே, இருதரப்பு வழக்கறிஞர்களும் வாதாடிய முறை மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது. படிப்போரை மகிழ்ச்சியும் பயனும் கொள்ளச் செய்யும் விதமான ஏடு, இந்த வழக்கு பற்றிய ஏடு. எல்லாவற்றையும் விட, என் மனதைப் பெரிதும் ஈர்த்த பகுதி, மிகப் பெரிய இலக்கிய மேதையான லாரன்சு இதுபோல எழுதியுள்ளாரே என்பதற்காக, பேனா பிடித்தவனெல்லாம் இதுபோன்ற கதையையும், நடையையும் எழுத முற்பட்டுவிடக் கூடாது என்று, லாரன்சின் ஏட்டுக்காக வாதாடிய வழக்கறிஞரே அறிவுரை கூறியிருக்கும் பகுதிதான். வழக்கு ஆறு நாட்கள் நடைபெற்றது - 1960-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் இருபதாம் நாள் துவக்கம். எந்த ஏடுபற்றி வழக்கு நடைபெற்றதோ, அந்த ஏட்டின் ஆசிரியரான லாரன்சு இப்போது இல்லை - அவர் மறைந்து ஆண்டு முப்பதாகிறது. 14-4-1964 வழக்கமான, "கைதிகளைப் பார்வையிடும் நிகழ்ச்சி’ இன்று. நாங்களும் எதுவும் பேசுவதில்லை. அதிகாரிகளும் எங்களை ஒன்றும் கேட்பதில்லை. கைதி உடையில் வரிசையாக நிற்கிறோம் - அதிகாரிகள் கைதிகளைப் பார்வையிடுகிறார்கள். இது ஒவ்வொரு கிழமையும். இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாவதற்கு ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தலாம்போல் தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும், எந்த அதிகாரிகள் கைதிகளைப் பார்க்கிறார்களோ, அவர்களேதான், அன்றும் பார்க்கிறார்கள். சிறையின் நிலைமை, கைதிகளின் நிலைமை இவற்றை அன்று ஊரிலுள்ள பொறுப்புள்ள சிலருக்குக் காட்டும் முறையில் இந்த நிகழ்ச்சியைமாற்றி அமைத்தால், ஓரளவுக்குப் பயன் ஏற்படலாம் - மாநகராட்சி மன்றத் தலைவர் - மேயர் - இந்த நிகழ்ச்சியில் ஒரு முறை கலந்துகொள்வது, மற்றோர் முறை சுகாதாரத் துறை பெரிய அலுவலர் கலந்துகொள்வது, மற்றோர் முறை, விடுதலையான கைதிகளின் நல்வாழ்வுக்காக உள்ள அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்வது என்று இவ்விதமாக ஏதாகிலும் மாற்றம் ஏற்படுத்துவது தேவை என்று நினைக்கிறேன். பொழுதுபோக்காக “ஓவியம்’ வரையலாம். அதற்கான தீட்டுக்கோல், கலவைகள் தருவிக்கிறேன் என்று சுந்தரம் சொன்னார் - அவர் கேட்டுக்கொண்டபடி எடுத்து வந்தார்கள் - ஆனால் அவைகளை”அனுமதிக்க முடியாது’ என்று சிறை அதிகாரிகள், திருப்பி அனுப்பிவிட்டனர். இவ்விதம் பொருளற்ற கட்டுத்திட்டங்கள் கையாளப்படுகின்றன. கைதிகளை இவ்விதம் நடத்தினால்தான். அவர்களுக்கு தண்டனையை அனுபவிக்கி றோம் என்ற உணர்ச்சி ஏற்படும் என்ற ஒரு பழைய காலக் கருத்துத்தான் இன்றும் அமுல் செய்கிறது. அரசியல் கிளர்ச்சி காரணமாகச் சிறை புகுந்துள்ளவர்களுக்கும் இப்படி வீணான கட்டுத்திட்டம் தேவைதானா, என்று மேல்மட்டத்தில் எண்ணிப் பார்ப்பதாகவே தெரியவில்லை. நன்கு பதப்படுத்தப்படாத பஞ்சு - அதை நூற்பதிலேயே, எத்தனை நேரம்தான் காலத்தை ஓட்ட முடியும்? தோட்ட வேலையாவது செய்யலாம், தச்சு வேலையாவது பழகலாம் - என்றெல்லாம் நண்பர்கள் கூறிக் கொள்கிறார்கள். சலிப்பு, நேரக்கேடு, பத்திரிகைகளின் மூலம், நமது கழகத் தோழர்கள் என்னென்ன விதமாகப் பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள் என்பதை அறிந்து அகமகிழ்கிறோம் - அதேபோது, உடன் இருந்து பணியாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் வாட்டுகிறது. இன்று நண்பர்கள், மதுரை, காஞ்சிபுரம் ஆகிய இடத்திலே வழக்குகள் முடிவுபெறாததால், காவலிலே மாதக்கணக்காக அடைபட்டுக் கிடக்கும் மதுரை முத்து, கோவிந்தசாமி போன்ற நண்பர்கள் பற்றி மிகுந்த கவலை தெரிவித்தார்கள். தூத்துக்குடியில் நடைபெற்றது போல, விரைவாக வழக்கு நடத்தப்படவேண்டும் என்று எங்களைப் போலவே, பலரும் கருதத்தான் செய்வார்கள். அறுபது வயதுக்கு மேலான முதியவர் - குடும்பம் நடத்த வேண்டிய நிர்பந்தத்திலிருந்து விடுபட முடியாத நிலையில் ஊரூராகச் சுற்றி, சாமான்களை விற்பனை செய்யும் வேலையைச் செய்து, உடல் இளைத்து, உள்ளம் வாடி, ஆவி சோர்ந்துபோகும் கட்டத்தில் இருக்கிறார். இரண்டு பிள்ளைகள் - முப்பது, முப்பத்தைந்து வயதில், குடும்பத்தை நடத்திச்செல்லும் பொறுப்பில் அவர்கள் இருவரும் வெற்றி காணவில்லை. தகப்பனோ பிள்ளைகள், மணிமணியானவர்கள், குடும்பத்தை மிக மேல் நிலைக்குக் கொண்டு வரத்தக்க அறிவாற்றல் படைத்தவர்கள் என்று நம்புகிறார். அந்த நம்பிக்கை சிதையும் நிகழ்ச்சி ஏற்படுகிறது - மனமுடைந்து மாண்டு போகிறார். நெஞ்சை உருக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள, இந்தக் கருத்து விளக்க ஆங்கில ஏடு ஒன்று படித்தேன். இதுபோல், தமிழகத்தில், பல்லாயிரக்கணக்கில் தகப்பன்மார்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைமைகளைப் பற்றி எண்ணிக்கொண்டேன். நொந்த உள்ளத்துடன், படுத்துப் புரண்டபடி இருந்தேன் - நெடு நேரம். இன்றிரவு தூக்கம் பிடிக்கவில்லை. மகன் உதவாக்கரையாகிவிட்டான் என்று மனம் நொந்து வெகுண்டு, தகப்பன் மகனை ஏசுகிறான். மகன், கண்ணீர் சிந்துகிறான். அந்தக் கண்ணீரைக் கண்டதும், தகப்பனுக்குக் கோபம் எங்கோ பறந்து போய்விடுகிறது. என் மகன் அழுகிறான்! எனக்காக அழுகிறான்! என் நிலைமை கண்டு அழுகிறான்; என்னிடம் அவ்வளவு அன்பு, என் மகனுக்கு - என்று கூறி உருகிப் போகிறான். இரவு, பல முறை இந்தக் கட்டத்தைப்பற்றிய நினைவு, எனக்கு. அந்தக் குடும்பமே கண்முன் நிற்பதுபோல ஒரு எண்ணம். அந்தக் குடும்பமா? அதுபோன்ற குடும்பங்கள்! 15-4-1964 இங்குள்ள சிறை அதிகாரிகளிலே சிலர், மதுரைக்கு மாற்றப்படுகிறார்கள் என்றும், புதிய அதிகாரிகள் இங்கு வர இருப்பதாகவும், பேச்சுக் கிளம்பிற்று. மருத்துவர்கூட மாறுகிறார் - இங்கு இருப்பவர், தஞ்சைக்குச் செல்கிறார். இன்று புதிய டாக்டர். எங்கள் பகுதிக்கு வந்திருந்தார். இவர் நான் 1939லில் சிறையில் இருந்தபோது இங்கு டாக்டராக இருந்தவர் - பல்வேறு இடங்களில் வேலை பார்த்துவிட்டு, மீண்டும் இங்கு வந்திருக்கிறார். எனக்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை; அவர் என்னிடம் பேசிய பிறகுதான் எனக்குப் புரிந்தது. இங்கு நண்பர்களுக்கு, சிறு சிறு நலிவுகள். மதிக்கு பாதத்தில் சுளுக்குபோல வலி - எலும்பு முறிவோ என்று சந்தேகம் - கட்டு போடப்பட்டிருக்கிறது. சுந்தரத்துக்குக் கண் வலி. அன்பழகனுக்குக் காலில் வலி, இராமசாமிக்கு வயிற்றில் வலி, பார்த்தசாரதிக்கு இரத்த அழுத்தம், பொன்னுவேலுவுக்கு இருமல், இப்படி. சிலருக்கு மாத்திரை. சிலருக்கு மருந்து என்று மருத்துவரும் தந்தபடி இருக்கிறார். எல்லா மருந்துகளும் ஒரே மாதிரியாகவே இருப்பதாக நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள். நான் இரவு சாப்பிடுவதை நீக்கிவிட்டேன் - ஏதாகிலும் சிற்றுண்டிதான் உட்கொள்வது. அதுவே ஜீரணமாவது கடினமாக இருக்கிறது; அதற்கான மருந்து நாளுக்கு இருவேளை உட்கொள்ளுகிறேன். கை வலிக்கு, கடுகு எண்ணெய் தேய்த்துக்கொள்கிறேன் - சுந்தரம் மெத்த அக்கறையுடன் ஒவ்வொரு நாளும், பிற்பகல் "மூன்று மணிக்கு’ தைலம் தேய்த்து விடுகிறார். ஓரளவு பலன் இருப்பதாகத் தெரிகிறது. இதற்குள் நண்பர் அன்பழகன், பிண்டத்தைலம் என்று மற்றோர் மருந்து தருவித்திருக்கிறார். சிறை அதிகாரி ஒருவர் தென்னமரக்குடி எண்ணெய்தான் இந்த வலியைப் போக்கும் என்று கூறினார் - மாயவரம் சென்று வரும்போது அந்தத் தைலத்தை வாங்கிகொண்டு வரும்படி, பரிமளத்துக்குச் சொல்லி இருக்கிறேன். கையோ, இன்னமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தூக்க முடியாதபடிதான் இருக்கிறது. இன்று, காஞ்சிபுரம் மணி, திருவேங்கிடம், கிளியப்பன் ஆகியோரைக் காண, அவரவர்களின் வீட்டினர் வந்திருந்தனர். அதிகமான கலக்கம் காட்டவில்லை என்று கூறினார்கள். எல்லோரும் களிப்பாகவே இருக்கிறார்கள். 16-4-1964 தொகுதிகள் திருத்தி அமைக்கப்படுவதற்காக அமைக்கப் பட்டுள்ள குழுவில் மதி ஒரு உறுப்பினர் - குழு, மே பதினோராம் நாள் கூடுகிறது. அதற்குச் சென்று கலந்துகொள்ளத்தக்கவிதமாக, விடுதலை நாள் அமையுமா என்பதை அறிந்துகொள்வதற்காக, மதியும் பார்த்தசாரதியும் இன்று சிறை மேலதிகாரியைக் காணச் சென்றனர். சிறையில் வேலை செய்வதற்காக, மாதத்திற்கு நான்கு நாட்கள் கழிவு உண்டு; இது மூன்று மாதத்திற்கு மேற்பட்ட தண்டனையாக இருந்தால்தான் - அதிலும் கடுங்காவல் தண்டனையாக இருக்க வேண்டும். சிறை மேலதிகாரியைக் காணச் சென்றதில் ஒரு திடுக்கிடத் தக்க தகவல் தெரியவந்தது. தொத்தா மறைவு குறித்து அனுதாபம் தெரிவிக்கும் முறையில் இங்குள்ள நமது கழகத் தோழர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். சிறை மேலதிகாரிகள் மிகக் கோபம் கொண்டுவிட்டனர். "ஐயா! உங்கள் பேரில் கோபித்துக் கொண்டோ, சிறை நிருவாகத்தின்மீது அதிருப்திகொண்டோ நாங்கள் உண்ணாவிரதம் இருக்கவில்லை. இது எங்கள் குடும்பத்திலே நேரிட்டுவிட்டதுபோன்ற ஒரு இழப்புக்காக வருத்தம் கொண்டு நடத்தப்படும் ஒரு மரியாதைச் சடங்கு’ என்றெல்லாம் தோழர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். அதுபோல எழுதிக்கொடுக்கச் சொல்லியும் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். என்றாலும், உண்ணாவிரதம் இருந்தது குற்றம்! தண்டிக்கத் தக்கது என்று கூறி, இரண்டு வாரங்கள் யாரும் வந்து பார்க்க அனுமதி கிடையாது என்று தெரிவித்துவிட்டதுடன், கழிவு நாட்களில் நாலு நாட்களைக் குறைத்துவிட்டனர். இந்தத் தகவலைக் கேட்டுக்கொண்டு வந்தனர் மேலதிகாரியிடமிருந்து. பட்டதும் படாததுமாக, மேலதிகாரி, மே முதல் வாரத்தில் உங்களில் சிலரை அனுப்பிவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார். எத்தனை நாட்கள் “கழிவு’ தரப்படும். எந்தத் தேதியில் விடுதலை என்பதை மூடு மந்திரமாகவே வைத்துக் கொண்டிருப்பதில் இவர்களுக்குப் பிரமாதமான விருப்பம் இருப்பது தெரிகிறது. கழிவு நாட்கள் தருவதிலேயும் நாம் அறிந்துகொள்ளத்தக்க திட்டவட்டமான ஒரு முறை கையாளப் படுவதாகவும் தெரியவில்லை. இந்த முறையை இங்குள்ள கைதிகள்”மார்க்கு’ என்று சொல்லுகிறார்கள் - இதிலே பலரகம் இருக்கிறதாம். பேசிக்கொள்கிறார்கள். ராணி மார்க்கு என்கிறார்கள்; வேலை மார்க்கு என்கிறார்கள்; துரைதரும் மார்க்கு என்கிறார்கள். எல்லாம் "கைதி’ பாஷை. துரை என்றால் சிறை மேலதிகாரி. கைதிகள் இங்கு நடந்துகொள்ளும் முறையின்படி, சுறுசுறுப்பு, அடக்க ஒடுக்கம் ஆகிய முறையின்படி, வெளியே வேலைகளிலே ஈடுபடும்போது நடந்துகொள்வார்களோ என்பது சந்தேகந்தான். தெரியாமல் வந்துவிட்டேன் - விரோதி சிக்கவைத்து விட்டான் - விதிவசம் என்று கைதிகள் உருக்கமாகப் பேசுகிறார்கள். ஆனால் சிலர் திரும்பத் திரும்ப சிறை வந்தபடி இருக்கிறார்கள். இங்கு எங்கள் பகுதியில் வேலை செய்யும் கைதிகளை மேற்பார்வை பார்க்க ஒரு கைதி - மேஸ்திரி என்ற பெயருடன் விடுதலை ஆகிப் பத்து நாட்கள்கூட ஆகவில்லை. இன்று மீண்டும் சிறைக்கு வந்து சேர்ந்துவிட்டதாக நண்பர்கள் கூறுகிறார்கள். விடுதலைக்கு முன்பு “இனி ஜென்ம ஜென்மத்துக்கும் இங்கு வரமாட்டேன்; பட்டது போதும்; புத்தி வந்துவிட்டது’ என்றெல்லாம் சொன்ன ஆசாமி எண்ணி பத்து நாளாவதற்குள், மறுபடியும்”உள்ளே’ வந்தாகிவிட்டது. இங்கே, "சிறையில்’ இப்படி வந்துபோகிறவர்களை, விக்கிரமாதித்தன் பரம்பரை என்றும், ஆயுள் தண்டனைக் கைதிகளை இராமன் பரம்பரை என்றும், வேடிக்கையாகப் பேசிக் கொள்கிறார்கள் - விக்கிரமாதித்தன் நடாறுமாதம் காடாறுமாதம் அல்லவா! இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் அல்லவா!! 17-4-1964 இன்று, இளங்கோவனுடன் கௌதமனும், கே. ஆர். இராமசாமியும் என்னைக் காணவந்திருந்தனர். என்னைச் சிறையில் கௌதமன் வந்து பார்ப்பது, இதுதான் முதல் முறை. பரீட்சை எப்படி எழுதினாய் என்று கேட்டேன்; நன்றாகவே எழுதி இருப்பதாகச் சொன்னான். பரிமளம் மாயவரம் சென்றிருப்பதாகவும், அடுத்த வாரம் வரக்கூடும் என்றும் இளங்கோவன் கூறினான். இராமசாமி, சோர்வாகக் காணப் பட்டார். சட்டசபை படிப்பகத்திலிருந்து சில புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு வந்து கொடுக்கும்படி, இராமசாமியிடம் கூறி அனுப்பினேன். இன்று தையற்கலை ஆசிரியர் கே. பி. சுந்தரமும், தமிழ்ப் பேராசிரியர் அன்பழகனும், சிலப்பதிகார காலத்தில், தையற்கலை இருந்திருக்கிறதா என்பதுபற்றி, சுவையுடன் பேசலாயினர். துன்னகாரர் என்றிருப்பது தையற் கலைஞர்களைக் குறிப்பது தாகும் என்று அன்பழகன் விளக்கினார். இன்று உள்ளதுபோன்ற, வெட்டு முறைகளும், விதவிதமான “பாணிகளும்’ அப்போது இருந்ததாக ஆதாரம் இல்லை என்பது சுந்தரத்தின் வாதம். நான் பொதுவாக ஒன்று கூறினேன் -”மேனாடுகளில், அவ்வப்போது இருந்த நிலைமைகள், பழக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை முறையாகத் தொகுத்து எழுதும் பழக்கம் உண்டு. அதனால், மிகப் பழங்காலத்துத் தகவல்களைக்கூடத் தெரிந்துகொள்ள வழி கிடைக்கிறது. நம்மிடம் அந்தப் பழக்கம் வெகு காலமாக இல்லை, அதனால் எத்தனையோ தகவல்கள் மறைந்துபோய்விட்டன’ என்று குறிப்பிட்டேன். ஆனந்தரங்கம் பிள்ளையின் குறிப்புகள் பற்றிப் பேச்சு வந்தது. புதுவை ஆனந்தரங்கம் பிள்ளையின் குறிப்பு, இங்கே சிறைப் படிப்பகத்திலே இருந்தது; மும்முனைப் போராட்டத்தின் போது சிறையில் நாவலர் அந்தப் புத்தகத்தைப் படித்து, மன்றத்தில் சில கட்டுரைகள்கூட எழுதினார் என்பதை நான் கூறினேன். 20-4-1964 இரண்டு நாட்கள் குறிப்பு எழுதத்தக்க நிகழ்ச்சிகள் இல்லை; வழக்கமான, சுவையற்ற அன்றாட நடவடிக்கைகள், பேச்சும், சோர்வுடன். காரணம், அருப்புக்கோட்டை; இங்கு நான் துவக்க முதலே ஐயப்பட்டுக்கொண்டிருந்தேன். முடிவும் அதுபோலவே ஆகிவிட்டது. தேவருடைய மறைவுக்குப் பிறகு, அந்தப் பகுதியைக் காங்கிரசுக்கு ஆக்கிக்கொள்ள வேண்டுமென்ற காங்கிரஸ் திட்டம் பலனளித்துவிட்டது. என்றாலும், பத்திரிகைச் செய்தியைக் கூர்ந்து பார்த்தால், சாத்தூர், சிவகாசி தொகுதிகளை முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை தொகுதிகளுடன் இணைக்காமலிருந்தால் நிலைமை வேறுவிதமாகி இருக்கும் என்பது புரியும். நண்பர்கள், இதுபோல, மனதுக்கு ஒருவிதமான திருப்தி வருவித்துக் கொண்டார்கள். என்னைப் பொறுத்தவரையில், இதுபோலத் திருப்தியை வருவித்துக்கொள்வதிலே பலன் இல்லை, நியாயமுமாகாது என்று தோன்றுகிறது. பல இடங்களில், காங்கிரஸ் தனது பிடியை இழந்துவிடாதிருக்க, பலமானதோர் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறது. இந்த முயற்சி சில இடங்களில் வெற்றியைக் கொடுக்கிறது. எனவே, காங்கிரசின் ஆதிக்கத்தை அகற்றும் முயற்சி தீவிரமாக்கப்பட வேண்டும் என்ற பாடத்தைத் தான் அருப்புக்கோட்டைத் தோல்வி மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். படித்து, குறிப்பெடுக்கத்தக்க புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வெறும் பொழுதுபோக்குக்கான கதைப் புத்தகங்கள்தான் தரப்பட்டன. அவைகளையும் படித்து முடித்தேன் - சிறையிலே படிக்காவிட்டால் வேறு எங்குதான் அவைகளைப் படிக்க முடியும்! இதிலேயும் ஒரு பலன் இருக்கத்தான் செய்கிறது. அமெரிக்க நாட்டு மக்கள், எத்தகைய மனப்போக்கில் விருப்பம் காட்டுகிறார்கள் என்பதை, இந்தக் கதைகள் காட்டுகின்றன. காட்டுமிராண்டிகளிடம் இருந்த நாட்டை, நாகரிகப்படுத்தும் புனிதப் பணி புரிந்தனர் அமெரிக்கர்கள் என்று இன்றுள்ள அமெரிக்க இளைஞர்கள் எண்ணிப் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, பெரும்பாலான கதைகள் புனையப்பட்டுள்ளன. பண வருவாய் அதிகமாகி உள்ள அமெரிக்காவில் காமக் களியாட்டங்கள் மிகுந்துவிட்டிருக்கிறது என்பதையும், சில ஏடுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆனால் அத்தகைய வாழ்க்கை தவறானது என்று இந்த ஏடுகள் கண்டிக்கவில்லை; உள்ளதை அப்படியே படம் பிடித்துக்காட்டுகின்றன. வேகமும் தாகமும் மிகுந்த வாழ்க்கை. 21-4-1964 அருப்புக்கோட்டை பற்றிய ஆய்வுரையே பெரும்பகுதி இன்றும், வழக்கமாகக் காங்கிரசை ஆதரிக்கும் சில ஏடுகள்கூட, இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஜாதி வெறியை ஊட்டி வெற்றிபெற்றதைக் கண்டித்து எழுதி உள்ளன. இதைப் படித்துவிட்டு, நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்; பாராட்டக் கூடச் செய்தார்கள். "என்ன பிரயோஜனம்? தேர்தல் பிரசாரம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, காங்கிரஸ் ஜாதிவெறியைக் கிளப்புவதைக் கண்டித்து, இந்த ஏடுகள் எழுதி இருந்தால் மக்களில் சிலராயினும், காங்கிரசின் போக்கை வெறுத்து. எதிர்த்து ஓட்டளித்திருப்பார்கள். அப்போது வாய்மூடிக் கிடந்துவிட்டு, காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, அதன் போக்கைக் கண்டித்து என்ன பலன்?’ என்று நான் கேட்டேன். உண்மைதான், இந்தப் பத்திரிகைகள், காங்கிரசின் போக்குக்கு உடந்தையா கத்தான் இருந்துவிட்டன என்று நண்பர்கள் பேசிக்கொண்டனர். சுந்தரம், ஓவியம் வரைவதற்கான வண்ணங்களைக் கேட்டதற்குத் தரமுடியாது என்று கூறிவிட்ட சிறை அதிகாரிகள், என்ன காரணத்தாலோ, தங்கள் மனதை மாற்றிக்கொண்டு, வண்ணங்களைக் கொடுத்துள்ளனர். இப்போது, ஓவியங்கள் தீட்டுவதில் நானும் முனைந்துவிட்டேன். ஒரு ராணுவத் தலைவன், மலைப்பகுதி எனும் இரண்டு ஓவியங்கள் தயாரித்திருக்கிறேன். ராணுவத் தலைவனுடைய தொப்பி சரியாக இல்லையே என்றார்கள் நண்பர்கள். "அதெப்படி சரியாக இருக்க முடியும்; இவன் தோற்றுப்போன ராணுவத் தலைவன்; சரண் அடைவதற்காகச் செல்லும் வேளை; எந்தத் தொப்பி கிடைத்ததோ அதை எடுத்துப் போட்டுக்கொண்டு போகிறான்’’ என்று காரணம் கூறினேன்! ஐயோ பாவம்! என்று அனுதாபம் தெரிவித்தார்கள்; ராணுவத் தலைவனுக்கா, ஓவியம் போடத் தெரியாத எனக்கா என்று நான் கேட்கவில்லை. கேட்பானேன்! 22-4-1964 இன்று என்னைத் திடுக்கிடச் செய்த செய்தி தாங்கி இதழ்கள் வந்தன! நமது நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மறைந்தார் என்ற செய்தி. எல்லோருக்கும் தாங்கொணாத வருத்தம். அதிர்ச்சி தரத்தக்க இழப்புகள் பலவற்றை இந்த முறை சிறை வாசத்தின்போது நான் காணவேண்டி நேரிட்டுவிட்டதை எண்ணி மிகவும் வேதனைப் பட்டேன். தமிழகத்தில் தனிப் புகழுடன் விளங்கிய அந்தப் பாவேந்தனுடைய பார்வையே ஒரு கவிதை! பேச்சே காவியம்! அவருடன் உரையாடினாலே போதும், தமிழின் மாண்பினை உணரலாம். அவருடைய மறைவு, தமிழகத்துக்கு ஈடு செய்யவே முடியாத பெரும் இழப்பு. இந்த வேதனையுடன் நாங்கள் இருந்ததால் நாற்பதாவது வட்டத்தில் நமது கழகத் தோழர் வெற்றிபெற்ற செய்தி மாலையில் அறிந்தபோது, சுவை எழவில்லை. பாரதிதாசனுடைய கவிதைகளைப் பற்றி எண்ணிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தோம். நாங்கள் இருக்கும் பகுதியில், ஒரு அறையில் யாரோ ஒரு நண்பர் முன்பு எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் புரட்சிக் கவிஞரின் கவிதையினை. "மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை.’’ நாற்பதாவது வட்டத் தேர்தலின்போது கலாம் விளைவித்தாக, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் துளசிங்கம், கிருஷ்ணன் உள்ளிட்ட 15 கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, இன்று மாலை இங்கு அழைத்து வரைப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் உள்ள பகுதிக்குப் பக்கத்தில் உள்ளனர். பார்க்கத்தான் முடிந்தது! பேச முடியவில்லை. 23-4-1964 ஓவியம் வரைவதிலே ஒரு தனி மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்கிறது. நான் வரைந்த “தோற்றுப்போன இராணுவத் தலைவன்’ படத்தை அன்பழகன் பார்த்துவிட்டு,”நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவார்கள் - இதை எழுதியது ஏழு வயதுச் சிறுவன் என்று கீழே குறிப்பெழுதினால்’’ என்று நகைச்சுவை ததும்பக் கூறினார். ஆனால் இன்று அன்பழகனே ஓவியம் வரையத் தொடங்கி விட்டார். திருக்குறள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா! அதனால் அவர் தீட்டத் தொடங்கிய முதல் ஓவியமும், திருவள்ளுவரேதான். ஆக இப்போது மூவர், ஓவியம் தீட்டும் பொழுதுபோக்கில் ஈடுபட்டிருக்கிறோம் - நான், சுந்தரம், அன்பழகன். மற்றோர் மலைக்காட்சி வரைந்தேன். . . இது முன்பு வரைந்ததைவிட "தரமாக’ இருப்பதாக நண்பர்கள் கூறுகிறார்கள். கூறுகிறார்கள் என்றுதான் கூறமுடிகிறது. . . கருதுகிறார்களா என்று அறிந்து கொள்ள முடியவில்லை. ஓவியம் வரைவதிலே ஓரளவு பயிற்சி இருந்தால், இங்கு திறமையை நேர்த்தியாக்கிக் கொள்ளலாம். எனக்கோ, மாணவப் பருவத்திலேயே ஓவியம் வரையத் திறமை ஏற்பட்டதில்லை. இத்தனைக்கும் என் மாமா, நான் படித்த பச்சையப்பன் பள்ளியில் ஓவிய ஆசிரியர்! ஆனால் திறமை இருக்கிறதோ இல்லையோ, நாமாக ஒரு ஓவியம் வரைந்து அதற்கு வண்ணமிட்டு பார்க்கும்போது களிப்பு எழத்தான் செய்கிறது. இன்று, யூதர்களின் வரலாறுபற்றிய ஒரு ஆங்கில ஏடு படிக்கத் துவங்கினேன், யூதர்கள் கொடியவர்கள், கல் மனம் படைத்தவர்கள், கடன்பட்டவர்களைக் கசக்கிப் பிழிபவர்கள் என்பதை விளக்கும் ஏடுகளே நிரம்ப உள்ளன. இந்த ஏடு அந்த வகையைச் சேர்ந்ததல்ல. யூதர்கள் கொடுமைகளை, இழிவுகளை, இன்னலை ஏற்றுக்கொண்டவர்கள், மதமாச்சரியம் காரணமாக பல நாடுகளில், கிருத்தவ அரசு யூதர்களை விரட்டியும், வாட்டியும் வந்தன. அவ்வளவையும் யூதர்கள் தாங்கிக்கொண்டு தங்கள் மார்க்கக் கோட்பாட்டை விடாப்பிடியாகக் காத்து வந்தனர் என்ற கருத்தை விளக்கும் ஏடு இது. யூதர்களின் மார்க்கத் தலைவன் என்று ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான கொடுமைக்கு ஆளாகவேண்டி வந்துவிடும். சில கிருஸ்தவ நாட்டு அரசுகளில் ஒரு விபரீதமான திருநாள் இருந்து வந்ததாக, இந்த ஏட்டிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆண்டுக்கொரு நாள், கிருத்தவ அதிபர்கள், தமது நாட்டிலே உள்ள யூதர்களை, சந்தைச் சதுக்கத்தில் நிறுத்தி வைத்து கன்னத்தில் அறைவார்களாம்! இதைக் கண்டு, மக்கள் கைகொட்டி சிரிப்பார்களாம். சில காலத்திற்குப் பிறகு, ஒரு அதிபன், ஒரு குறிப்பிட்ட தொகை காணிக்கை செலுத்தி விட்டால், அப்படிச் செலுத்தும் யூதர்களை, கன்னத்தில் அறைவதுபோல, சற்றுத் தொலைவில் நின்றபடி - ஐந்தடி தொலைவில் - அறைவதுபோல, குறிகாட்டி விட்டுவிடுவது என்ற புதிய ஏற்பாட்டைப் புகுத்தினானாம். "ஏசுவைக் காட்டிக் கொடுத்தவர்கள், அவரைத் தேவகுமாரன் என்று ஏற்றுக்கொள்ளாதவர்கள்’ என்பதனால், யூதர்கள், கேவலமானவர்களாகக் கிருத்தவ மக்களால் கருதப்பட்டு வருவது நெடுங்காலத்து வழக்கம். இதுபற்றி அன்பழகனோடு பேசிக்கொண்டிருந்தேன். யூதர்களை இழிவாக நடத்திவரும் போக்கை இனியும் மேற்கொள்ளத் தேவையில்லை என்று போப்பாண்டவர் இரண்டாண்டுகளுக்கு முன்பு அறிவுரை வெளியிட்டதுபற்றிக் குறிப்பிட்டேன். யூதர்களை நாடற்றவர்களாக, பல நாடுகளிலே தஞ்சம் புகுந்து வாழவேண்டியவர்களாக, பலப்பல நூற்றாண்டுகளாக வேதனைக்கு ஆளாகி இருந்த நிலையை மாற்றி, இப்போது, இஸ்ரேல் எனும் நாட்டைத் தமது தாயகமாக்கிக்கொண்டு, அதனைப் பொன்னகமாக மாற்றி அமைத்துக்கொண்டு வருகின்றனர். இதனை அரபுக்கள், குறிப்பாக எகிப்துத் தலைவர் நாசர், "புதிய ஆபத்து’ என்றும், மேற்கத்திய வல்லரசுகளின் சதித் திட்டமென்றும் கூறி, தொடர்ந்து, எதிர்ப்புக் காட்டி வருகிறார். இஸ்ரேல் நாட்டுத் தூதர், தமது நாட்டு விடுதலை விழாவுக்காக, டில்லி, அசோகா ஓட்டலில் ஒரு தனி விருந்து ஏற்பாடு செய்ததும், அது முறைப்படி ஏற்பாடாகவில்லை என்ற காரணம் காட்டி, இந்திய அரசு அந்த விருந்தை நிறுத்திவிட உத்திரவு பிறப்பித்ததும் பத்திரிகையில் வந்திருந்தது. நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தில் உள்ள பிரச்சினையோடு ஒட்டியதாக இந்த நிகழ்ச்சி இருந்தது. எனவே, அதுபற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். 24-4-1964 இன்று அன்பழகன், ஆங்கிலப் பெருங்கவிஞர் ஷேக்ஸ்பியரின் படம் வரைந்தார். அந்தப் பெருங்கவிஞருடைய 400-வது நினைவு நாள் கட்டுரைகள், படங்கள், இதழ்களில் நிரம்ப வெளியிடப்பட்டுள்ள நேரம்; எனவே இந்த ஓவியம் மிகப் பொருத்தமான நேரத்தில் அமைந்தது. தரமும் நல்லபடி அமைந்துவிட்டது. அன்பழகன் மேற்பார்வையில், அந்த ஓவியத்துக்கு சுந்தரம் வண்ணம் தீட்டினார். புதிய பொலிவு பெற்றிருக்கிறது ஓவியம். ஆங்கில மொழியை எதிர்த்துவந்த தவற்றுக்குக் கழுவாய் தேடிக்கொள்வதுபோல இப்போது நம்முடைய நாட்டு இதழ்கள் அடிக்கடி ஆங்கில மொழியின் அருமை பெருமைகளையும் உலகத் தொடர்புக்கு அம்மொழி மிகமிகத் தேவை என்பதையும் வலியுறுத்தி எழுதிக்கொண்டு வருகின்றன. அந்த "புதிய திருப்பம்’ காரணமாகவோ என்னவோ, ஆங்கிலப் பெருங்கவிஞரின் நினைவு நாள் குறித்து இதழ்கள் நிரம்ப அக்கறை காட்டி, பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் எவ்வளவோ பரவாயில்லை; அடித்துப் பேசி இருக்கிறார்; “இந்தி ஆட்சிமொழியாக இரண்டு தலைமுறைகளாவது பிடிக்கும்; அறுபது ஆண்டுகள் ஆகும்;’’ என்று பேசி இருக்கிறார்; இந்த அளவுக்குக்கூடத் துணிவில்லையே நமது முதலமைச்சர் பக்தவத்சலத்திற்கு என்று பொன்னுவேலுவும் மற்றவர்களும் குறைபட்டுக்கொண்டார்கள். உண்மைதான்! டி. டி. கே துணிவுடன் பேசுகிறார்; ஆனால் அதேபோது இது என்னுடைய சொந்தக் கருத்து என்று கூறி இருக்கிறார். அதனை மறந்துவிடக்கூடாது! கட்சி இந்தி ஆதிக்கத்திற்கு முனைகிறது என்று உணரும்போது, இந்தி ஆதிக்கம் கூடாது, தேவையில்லை என்று உள்ளூரக் கருதுபவர்கள், அந்த போக்கை எதிர்த்து வெளியே வந்து பணியாற்றவேண்டுமேயன்றி, கூடிக் குலவிக்கொண்டே,”என்னுடைய சொந்தக் கருத்து, இந்தி கூடாது என்பதுதான்’ என்று பேசுவதிலே, நேர்மையோ தக்க பலனோ என்ன இருக்க முடியும் என்று கேட்டேன். "ஏன் சிலர் அப்படி இருக்கிறார்கள்’ என்று நண்பர்கள் கேட்டனர். பதவியின் சுவை ஒரு காரணம்; மற்றோர் காரணம், இந்தியை ஆட்சிமொழியாக்குவதில் வெற்றி காண முடியாது என்று ஒரு நம்பிக்கை; மற்றோர் காரணம், நம்முடைய காலம் வரையில் ஆங்கிலம் இருக்கும்; பிறகு எப்படியோ ஆகிவிட்டுப் போகட்டும் என்ற பொறுப்புணராத தன்மை, இவைகளே சிலருடைய போக்குக்குக் காரணம் என்று குறிப்பிட்டேன். இன்று, ஜெயப்பிரகாஷ் நாராயணன் 1944லில் லாகூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டபோது எழுதிய நினைவு நிகழ்ச்சிக் குறிப்புகள்பற்றிய புத்தகம் படித்தேன். இதிலே பெரும் பகுதி, பாகிஸ்தான் பிரச்சினைபற்றிய ஜெயப் பிரகாசருடைய கருத்தே நிரம்பி இருக்கிறது. அவர் அப்போது தெரிவித்துள்ள கருத்தைப் பார்க்கும்போது, பாகிஸ்தான் கூடாது என்று மட்டுமல்ல, பாகிஸ்தான் அமையாது என்றும் மிக உறுதியாக அவர் நம்பிக்கொண்டிருந்திருக்கிறார் என்று தெரிகிறது. நாட்டு விடுதலைக்காக, ஆங்கில ஆதிக்கத்தை அகற்ற பலாத்கார முறைகளையும் பின்பற்றத்தான் வேண்டும் என்ற உறுதியையும், பலாத்காரத்தில் மறைந்திருந்து தாக்கும் முறையில் ஈடுபட்டிருந்தேன் என்று ஒப்புக்கொள்ளும் துணிவும் கொண்டவராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் இருந்திருக்கிறார் என்பது இந்த ஏட்டின் மூலம் தெரிகிறது. அவ்வளவு உரம் படைத்தவர், இன்று, அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டிருப்பதும், சர்வோதய இயக்கவாதியாகி இருப்பதும், விசித்திரமான நிகழ்ச்சி என்றே தோன்றுகிறது. அப்துல்லா பிரச்சினையும், கம்யூனிஸ்டு கட்சியின் உட் போர் பிரச்சினையும், இங்குள்ள எங்களுக்கு, ஒவ்வொரு நாளும், பேசிக்கொள்ளும் பிரச்சினைகளாக உள்ளன. பத்திரிகைகள் கிடைத்த உடன், முதலில், இந்த இரண்டு பிரச்சினைகள் குறித்த பகுதிகளைத்தான், ஆவலுடன் படிக்கிறோம். இராஜ்யசபையில் அப்துல்லா பிரச்சினைபற்றிப் பேசிய ஏ. டி. மணி என்பவர், அரசியல் சட்டத்திலே ஒரு தாளைக் கொளுத்துவதாகச் சொன்ன அண்ணாதுரையைச் சிறையில் தள்ளிவிட்டு, இந்திய அரசியல் சட்டத்தைக் காலின்கீழ் போட்டுத் துவைக்கும் அப்துல்லாவை, உலாவர விடுகிறீர்கள்; இது எந்த வகையான நியாயம்? - என்று கேட்டிருக்கிறார். அவரும், வேறு சிலரும் பேசி இருப்பதிலிருந்து, அப்துல்லா எழுப்பிவிட்டுள்ள புயல் குறித்து, பெருத்த கவலையும் பீதியும் பாராளுமன்ற வட்டாரத்திலேயே கிளம்பிவிட்டிருக்கிறது என்று தெரிகிறது. இராஜ்யசபையில் பேசிய ஏ. டி. மணி என்பவர் குறித்து என்னைப் பொன்னுவேல் கேட்டறிந்துகொண்டார் - மணி தமிழகத்தவர். ஐயர். பல ஆண்டுகளுக்கு முன்பே வடநாட்டில் சென்று தங்கிவிட்டவர்; நாகபுரியிலிருந்து நீண்ட பல ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் “இதவாதா’ எனும் ஆங்கில நாளிதழ் ஆசிரியர்.”இதவாதா’ போபால் நகரிலிருந்தும் வெளியிடப்படுகிறது; மணி இப்போது போபாலில் இருந்து வருகிறார்; சுயேச்சை உறுப்பினர். அன்புள்ள அண்ணாதுரை 20-12-1964 ஆட்சியாளர் மனப்போக்கு 25-4-1964 தம்பி! இன்று மாலை, துளசிங்கம், கிருஷ்ணன் உள்ளிட்ட 15 தோழர்கள் "ஜாமீனில்’ வெளியே சென்றனர். என்னைக் காண ராணி, பரிமளம், சரோஜா மூவரும் வந்திருந்தனர். திருவண்ணாமலை சண்முகம் இல்லத்தில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்றதாகவும், மணமக்களை வாழ்த்திப் பேசியதாகவும் பரிமளம் சொல்லக் கேட்டு ஆச்சரிய மடைந்தேன்; ஏனெனில் கூச்சம் காரணமாக, பரிமளம் பேசுவது இல்லை, மாணவர் கூட்டங்களிலேகூட. என்றாலும், இம்முறை இரண்டொரு விநாடிகள் பேசியதாகக் கூறினான். காஞ்சிபுரத்தி லிருந்து பரிமளத்துடன் திருவண்ணாமலை திருமணத்துக்கு, ராஜகோபால் சென்று வந்ததாகவும் அறிந்துகொண்டேன். பரிமளம் - இளங்கோவன் - கௌதமன் - பாபு இவர்களில் பாபு, கடைசிப் பையன் - சிறுவன் - இவர்களில், அரசியல் ஈடுபாடு, கழகத் தொடர்பு யாருக்கு அதிகம் என்று நண்பர்கள் கேட்டார்கள். கௌதமன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான்; எனவே, அரசியல் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதில்லை. ஆனால் அரசியல் கூட்டங்களுக்குக் குறிப்பாகக் கழகக் கூட்டங்களுக்குச் செல்லுவான், பத்திரிகைகளும் படிப்பதுண்டு; சிறுவனாக இருந்தபொழுது, நாவலர் நெடுஞ்செழியன் பேசுவதுபோலவே பேசிக் காட்டி மகிழ்விப்பான். ஆனால், அவன் அரசியலில் ஈடுபடக் கூடியவனாக எனக்குத் தெரியவில்லை. பரிமளம் அரசியல் பிரச்சினைகளையும், குறிப்பாகக் கழகப் பிரச்சினைகளை மிக நல்ல முறையில், அறிந்து வைத்திருக்கிறான். ஆனால், மருத்துவத் துறையில் ஈடுபடத் தன்னை தயாரித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அவனும் அரசியலில் ஈடுபட இயலாது என்பது தெரிகிறது. இளங்கோவன் அச்சகம் நடத்துவது, புத்தகம் வெளியிடுவது, பத்திரிகை நடத்துவது ஆகியவற்றில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்திருக்கிறான். இந்தத் துறையில் பரிமளம் அவனுக்குப் பெருந்துணையாக இருக்க முடியும். “திராவிட நாடு’ இதழ் நடத்த இயலாமல் நிறுத்தப்பட்டுப் போய்விட்டது; நின்று அதிக நாளாகிவிட்டதால், அதற்கான சர்க்கார் அனுமதியும் நீக்கப்பட்டுவிட்டது; எனவே மீண்டும் வெளிவர இயலாத நிலை. இந்நிலையில் அல்லி அச்சகம் என்ற அமைப்பை நடத்தவும், காஞ்சி என்ற வார இதழ் வெளியிடவும் இளங்கோவன் முனைந்திருக்கிறான்.”காஞ்சி’ இதழில்தான், இனி, நான், தம்பிக்குக் கடிதம், ஊரார் உரையாடல், அந்திக் கலம்பகம் போன்ற பகுதிகளை வெளியிடவேண்டி ஏற்படும் என்று நினைக்கிறேன் என்று விவரம் கூறினேன். "காஞ்சி என்பது ஊரின் பெயர்; அப்படித்தானே’ என்று நண்பர்கள் கேட்டார்கள். ஊரின் பெயர் மட்டுமல்ல, அது ஒருவிதமான உள்ளப்பாங்கையும், முறையையும் கூடக் குறிக்கும் சொல் என்று கூறினேன். காஞ்சி எனும் சொல்பற்றிய விளக்கத்தை அன்பழகன் எடுத்துக் கூறினார். இன்றிரவு, தி. மு. க. மாநாட்டு முகப்பு வாயில் ஓவியம் ஒன்று வரைந்தேன். ஒரு வேலை நிறுத்தத்தைப் பின்னணியாகக் கொண்ட "அல்லும் பகலும்’ என்ற ஆங்கிலக் கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். நீதி கேட்கும் தொழிலாளர்களைப் பொது வுடைமைவாதிகள், பலாத்காரவாதிகள் என்று குற்றம் சாட்டி அடித்து நொறுக்குவதும், சுட்டுத் தள்ளுவதுமான கொடுமை களைச் செய்யும் ஆட்சி முறையைக் கண்டித்து எழுதப்பட்டுள்ள புத்தகம். எளிய நடையில், ஆனால் உள்ளது உள்ளபடி தெரியத்தக்க முறையில், எழுதப்பட்டிருக்கிறது. 26-4-1964 குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் இல்லை. எல்லாத் தோழர்களும் ஏதேனும் படித்தபடி இருக்கிறார்கள். இரண்டு நாட்களாக மதியழகனுக்கு உடல் நலமில்லை. காலில் பாதத்தருகே வலி; இலேசாக எலும்பு முறிவு, கீறலளவுக்காகிலும் இருக்குமோ என்று எனக்கு சந்தேகம். இன்று இங்கு வந்த டாக்டரிடம் எக்ஸ்ரே எடுக்க, மருத்துவமனைக்கு அனுப்பலாமே என்று யோசனை கூறினேன். செய்யலாம் என்றார். ஆனால் பிறகு பெரிய டாக்டர் இது தேவை இல்லை என்று கூறிவிட்டதாக அறிந்துகொண்டேன். வெப்பம் அதிகமாகிக்கொண்டு வருவதாலும், இரவு நேரத்தில் எங்களைப் போட்டு அடைத்து வைக்கும் கொட்டடிக்குள் காற்றுப் புகுவதில்லை என்பதாலும், எல்லோருக்குமே ஒரு விதமான அயர்வு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அன்பழகன், என்னைப்போலப் படம் போடத் தொடங்கி விட்டார். மணிக்கணக்கிலே அதிலே ஈடுபட்டுவிடுகிறார். ஓவியங்கள் எப்படி இருந்தபோதிலும், எங்கள் மூவருடைய உடல், பலவண்ணக் கலவையாகிவிடுகிறது. காட்டுக்காட்சி ஒன்று வரையும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் - ஓரளவுக்குத் தயாராகி விட்டிருக்கிறது. அடர்ந்த காடு - மலைகள் - ஒருபுறம் வேங்கை, மற்றோர் புறம் யானை. யானையைவிட, வேங்கை பெரிய அளவாக இருப்பதாகச் சுந்தரம் கேலி பேசினார். "தம்பி! உனக்குப் பதினாறு அடி, வேங்கையைப்பற்றித் தெரியாது! அது இது’ என்று கூறிச் சமாளித்துக்கொண்டேன். எப்போதுமே எனக்கு ஓவியம் என்றால் மிகுந்த விருப்பம். நமது தோழர்களில் பலருக்கு வீண்செலவு என்று தோன்றினாலும்கூட ஒவ்வொரு மாநாட்டிலும் ஓவியக்காட்சி நடத்தச் சொல்லி வற்புறுத்துவதும், இந்த விருப்பம் காரணமாகத்தான் நடுத்தர நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் ஓவியக்காட்சி மூலம் நல்லறிவு பரப்பும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று எனக்கு நீண்ட காலமாக ஆவல். ஓவியக் கண்காட்சி, நாடகம் எனும் இந்த இரண்டும் ஒப்பற்ற பலனளிக்கத்தக்க முறைகள் என்பதிலே அநேகமாக ஒருவருக்கும் சந்தேகம் எழாது என்று கருதுகிறேன். 27-4-1964 இன்று காலையில், சிறைத் துணை மேலதிகாரி, பார்த்தசாரதியை அழைத்துவரச் செய்து, இனி காலை 7-30 மணியிலிருந்து மாலை 4-30 மணிவரையில் சிறை உடையில்தான் இருக்க வேண்டும் என்று கூறி அனுப்பினார் - கண்டிப்புடன். காரணம், இங்கு சில தோழர்கள் காலையில் சிறை உடை அணியாமல், கீழே நின்று பேசிக்கொண்டிருந்தார்களாம். அதை அதிகாரி பார்த்துவிட்டிருக்கிறார். எனவே கண்டிப்பான உத்திரவு அனுப்பிவைத்தார். சிறையில் ஏற்பட்டுவிடும் எந்தவிதமான நிகழ்ச்சிகளுக்கும், சிறை அதிகாரிகளின் பேரில் வருத்தப்பட்டுக்கொள்வதிலோ, கோபித்துக்கொள்வதிலோ, பொருளும் இல்லை, பலனும் இல்லை என்று வருத்தப்பட்டுக்கொண்ட தோழர்களுக்குக் கூறினேன். அரசு நடத்துபவர்கள், அரசியல் கைதிகளை நடத்தும் முறை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று புதிய ஏற்பாடு மேற்கொண்டாலொழிய, சிறையில் அமுல் இதுபோலத்தான் இருக்கும். இன்று பத்திரிகை பார்த்துத்தான் தெரிந்துகொண்டோம், கைது செய்து கொண்டுவரப்பட்ட, மாநகராட்சி மன்ற உறுப்பினர் கிருஷ்ணன் சிறையில் தாக்கப்பட்டார் என்ற செய்தியை. பதறினோம்; வருத்தப்பட்டோம். முழுத் தகவல் கிடைக்கவுமில்லை; நிகழ்ச்சிக்குக் காரணம் கூறுவாருமில்லை. சிறையில், புதிய ஜெயிலர் வந்திருக்கிறார்; இளைஞர் நல்லவராகக் காணப்படுகிறார். இன்று சிறையில் எங்கள் பகுதிக்கு வந்திருந்து, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த வேலையில் அமர்ந்தாராம். இது வரை சேலம் மத்திய சிறையில் வேலை பார்த்துவிட்டு இப்போது இங்கு வந்திருக்கிறார்; பெயர் குணசேகரன் - திருச்சி மாவட்டமாம்; லால்குடிக்கு அருகே ஓர் ஊர். சேலம் சிறையில் மூன்று ஆண்டு வேலை பார்த்தான பிறகு, மற்ற இடங்களில் வேலை பார்ப்பது எளிதுதான் என்று நான் கூறினேன் - அவரும் சிரித்துக்கொண்டு, "ஆமாம்’ என்றார். சேலம் சிறை, திரும்பத் திரும்பச் சிறைப்படும் கைதிகள் நிரம்பிய இடம். பல முறை சிறைக்கு வருபவர்களை, கருப்புக் குல்லாய் என்பார்கள். இன்று மெயில் பத்திரிகையில் ஒரு செய்தி பார்த்து, ஒரு கணம் பதறிப் போனேன்; இந்தி எதிர்ப்பு அறப்போரினை நான் வெளியே வந்ததும் நிறுத்திட எண்ணுவதாகவும், என்னை வந்து பார்த்த முக்கியமான நண்பர்கள் சிலரிடம் இதுபோல நான் சொல்லி அனுப்பியதாகவும், மெயிலில் சேதி வந்திருந்தது. நான் நினைத்துக்கூடப் பார்த்திராத ஒன்றை, இப்படித் துணிந்து, மெயில் இதழ் வெளியிடுவது கண்டு நான் பதறிப்போனேன். இவ்விதமான பத்திரிகைத் தாக்குதல்களிலிருந்து தப்பிப் பிழைத்து, இந்த அளவு வளர்ந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, பெருமிதம் எழத்தான் செய்கிறது. "அண்ணா! இந்தப் பத்திரிகைகளில் வெளிவருவதை நமது தோழர்கள் நம்ப மாட்டார்கள்; ஏனெனில், நீங்கள்தான் முன்பே சொல்லி விட்டிருக்கிறீர்களே, இந்தி எதிர்ப்பு அறப்போர் சம்பந்தமாக, நம் நாடு, முரசொலி எனும் ஏடுகளில் வருவதைத் தவிர மற்ற எதனையும் நம்ப வேண்டாம் என்று’ என்று அரக்கோணம் ராமசாமி கூறினார். அவர் சொன்னதுபோலவே, நமது கழகத் தோழர்கள் பத்திரிகைகள் இட்டுக்கட்டி வெளியிடுபவைகளை நம்பமாட்டார்கள் என்ற உறுதி எனக்கும் இருக்கிறது என்றாலும், பத்திரிகைகள் திட்டமிட்டு இந்தக் காரியத்தை செய்து வருவதுபற்றி மிகுந்த கவலை எழத்தான் செய்கிறது; கழகத்துக்கு ஊறு தேடுகிறார்களே என்பதல்ல எனக்குள்ள கவலை, ஜனநாயக முறை வெற்றி பெறுவதைக் குந்தகப்படுத்துகிறார்களே என்பதுதான். இதே நாட்டிலே இனி ஒரே கட்சி ஆட்சிதான் என்று அறிவித்துவிட்டால்கூட நிலைமை எத்துணையோ நல்லதாக இருக்கும்; ஜனநாயகம், எதிர்க் கட்சி; பொதுத் தேர்தல்; பேச்சுரிமை என்று உதட்டளவில் கூறிக் கொண்டு, செயலில், எதிர்க் கட்சிகளே வளர முடியாதபடி நடந்துகொண்டு வரும் போக்குதான் மிகவும் ஆபத்தானது. இது குறித்து நண்பர்களுடன் இன்று பேசிக்கொண்டிருந்தேன். 28-4-1964 தமிழகத்தில், சட்ட மன்ற பாராளுமன்ற தொகுதிகளைத் திருத்தி அமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கான வெளியீடு, குழு உறுப்பினர் மதியழகனுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. நமது நண்பர்கள் இதனை மிகுந்த ஆவலுடன் ஆராய்ந்து பார்க்கலாயினர். எந்தெந்தத் தொகுதிகளில் என்னென்ன மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டிருக் கின்றன. அதனால் ஏற்படக்கூடிய சாதக பாதகம் என்னென்ன என்பதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பல தொகுதிகளைப் பிய்த்து எடுத்து, சில சில பகுதிகளை வேறு தொகுதிகளுடன் ஒட்டவைத்திருக்கிறார்கள். சில பொதுத் தொகுதிகளை இப்போது தனித் தொகுதியாகவும், சில தனித் தொகுதிகளைப் பொதுத் தொகுதியாகவும் மாற்றிவிட்டிருக்கிறார்கள். சில தொகுதிகளின் அமைப்பு ஜாதி உணர்ச்சிக்கு இடம் தருவதாகவும் இருக்கிறது. இந்தப் பிரச்சினையை, நமது கழக, மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் கொண்ட ஒரு கூட்டத்தில், தொகுதி அமைப்புக்குழு உறுப்பினர்களான மதியழகனும் ராஜாராமும் எடுத்து விளக்கிக் கலந்து பேச வேண்டும் என்று நினைக்கிறேன். விரைவில் இதுபற்றி மிகத் தீவிரமான கவனம் செலுத்த வேண்டும். புதிதாகத் தொகுதிகளை அமைக்கும்போது, இதுபோன்ற ஒட்டு வெட்டு ஏற்படத்தான் செய்யும். ஆனால், இது வெறும் வசதி காரணமாக மட்டும் அமைந்துவிடுவதில்லை; கட்சி, ஜாதி, மேட்டுக்குடி ஆகியவைகளால் எழுப்பிவிடும் உணர்ச்சிகளும் காரணங்களாக அமைந்துவிடுகின்றன. இவைபற்றி எல்லாம் கழகத் தோழர்கள் கவனம் செலுத்த வேண்டும். தொகுதிகளை வெட்டி ஒட்டி உருவை மாற்றிவிடுவதன் மூலம், அதனை ஒரு கட்சியின் செல்வாக்கிலிருந்து மற்றோர் கட்சியின் செல்வாக்கிற்குள் கொண்டு வந்துவிட முடிகிறது; குறைந்தபட்சம் அதற்கான முயற்சியாவது நடைபெற வழி ஏற்பட்டுவிடுகிறது. இத்தகைய உள்நோக்கங்கள் பற்றி ஆராய்ந்தறிந்து, பொது மக்களிடம் நாம் விளக்கிச் சொல்ல வேண்டும் என்று மதியழகனிடம் கூறினேன். மே, இரண்டாவது மூன்றாவது வாரத்தில், தொகுதிக்குழு கூடும்போது, இதுபற்றி வாதாடும்படி, மதியழகனிடம் சொல்லியிருக்கிறேன். இந்தக் குழுவில், காங்கிரஸ் கட்சியினரே, பெருவாரியானவர்கள்; நமது கழக உறுப்பினர், இருவர் மட்டுமே. எனவே, கழக உறுப்பினரின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும் என்று உறுதி இல்லை. கடமையைச் செய்துவிட்டு, நிலைமையை மக்களிடம் எடுத்து விளக்க வேண்டும். காஞ்சிபுரம் தொகுதியைப் பொறுத்தமட்டில், கீழ்கதிர்ப்பூர், மேல்கதிர்ப்பூர், விஷார், நரப்பாக்கம், விப்பேடு, திருப்பருத்திக்குன்றம், செவிலிமேடு, கோழிவாக்கம், அய்யங்கார்குளம், ஓரிகை, சின்ன அய்யங்குளம், தேனம்பாக்கம், நெல்வாய், தண்டலம், ஆரியம்பாக்கம், தொடூர், கூத்தரம்பாக்கம், பூண்டித்தாங்கல், காரை, ஈஞ்சம்பாக்கம், வேடல், இலுப்பப்பட்டு, ஆட்டுப்புத்தூர், சிறுவேடல், அத்திவாக்கம், ஆலப்பாக்கம், திருமல்பட்டு, மும்மல்பட்டு, சிங்காடிவாக்கம், கரூர், ஏனாத்தூர், வையாவூர், உழவூர் ஆகிய ஊர்களை வெட்டி எடுத்து, சிலவற்றை உத்திரமேரூர்த் தொகுதியிலும், சிலவற்றைக் குன்றத்தூர் தொகுதியிலும் கொண்டுபோய் இணைத்துவிட்டிருக்கிறார்கள். இதுபோல, ஒவ்வொரு தொகுதியிலும் புகுத்தப்பட்டுள்ள மாறுதல்கள் குறித்து நமது கழகத் தோழர்கள் கருத்துடன் கவனித்துப் பார்க்க வேண்டும். தொகுதிகளைத் திருத்தி அமைப்பதிலே அரசியல் நோக்கமும், கட்சி நோக்கமும் இருக்க முடியுமா என்று சிலருக்கு ஐயப்பாடு எழக்கூடும். இந்த இரண்டு நாட்களாக இது சம்பந்தமாக ஒரு நிலைமை, பத்திரிகைகளில் வந்தபடி இருக்கிறது. அது குறித்தும் இங்கு நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஆட்சியிலே, கன்சர்வேடிவ் கட்சி இருந்திடும்போதுகூட, இலண்டன் மாநகராட்சி மட்டும், தொழிற்கட்சியிடமே இருந்து வருகிறது. இது கடந்த முப்பது ஆண்டுகளாக உள்ள நிலைமை. இந்த நிலைமையை, ஒருவிதமான தலைவலி என்று கன்சர்வேடிவ் கட்சி கருதிற்று; மாற்ற முனைந்தது. அதற்காக, இலண்டன் மாநகராட்சியின் தொகுதிகளை விரிவுபடுத்தி, புதிய இடங்களை இணைத்துப் புதிய தொகுதிகளை அமைத்தது. இவ்விதமாகப் பரப்பும் அமைப்பும் புதிதாக்கப்பட்டால், முப்பது ஆண்டுகளாக தொழிற்கட்சிக்கு இருந்துவரும் ஆதிக்கம் ஒழிந்துவிடும் என்பது கன்சர்வேடிவ் கட்சியின் எண்ணம். இந்த உள்நோக்கத்தைத் தொழிற்கட்சி மக்களிடம் எடுத்து விளக்கிற்று. சர்க்காரின் போக்கைக் கண்டித்தது. என்றாலும், இப்போது நடைபெற்ற தேர்தலில், இவ்வளவு திட்டமிட்டும், கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெறவில்லை. மறுபடியும் தொழிற்கட்சியிடமே இலண்டன் மாநகராட்சி மன்ற ஆட்சி வந்து சேர்ந்தது. இங்கு, தொகுதிகளைத் திருத்தி அமைப்பதால் ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டாலும், நமது கழகம் முன்னதாகவே அவைகளைக் கணக்கெடுத்துப் பணியாற்றினால், தொழிற் கட்சி வெற்றி ஈட்டியதுபோல், வருகிற பொதுத் தேர்தலிலும் கழகம் வெற்றிபெற முடியும். எதற்கும் நிலைமைகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். தொகுதிகளை திருத்தி அமைப்பது பற்றிய பிரச்சினை பற்றிய பேச்சு, அடுத்த பொதுத் தேர்தல் பற்றியதாக வளர்ந்தது. பல தொகுதிகளைப் பற்றியும் பிரச்சார முறைகள் பற்றியும் விரிவாகப் பேசிக்கொண்டிருந்தோம். 21-4-1964 “அல்லும் பகலும்’ என்ற புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். ஏழைகள் அமைத்துக்கொண்டுள்ள குடிசைகளை அப்புறப்படுத்த, அடிமனைச் சொந்தக்காரர் போலீசின் உதவியைப் பெறுவதிலிருந்து துவங்கி, கைது, கலகம், சிறை, துப்பாக்கிச்சூடு, தப்பி ஓடுதல் என்னும் கட்டங்கள் கொண்டதாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. பொதுவுடைமைக் கட்சியை ஆதரிப்பதாக இந்த ஏடு இருந்தபோதிலும்,”ஏழைகளின் உள்ளப் போக்கை அப்படியே படம்பிடித்துக் காட்டுவதில்’ மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது. பொதுமக்களின் போக்கறியாத போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகளால், நிலைமை எப்படி எப்படிச் சீர்குலைகிறது என்பதனை, எவரும் ஒப்புக்கொள்ளத் தக்க விதமாக இந்த ஏடு எடுத்துக்காட்டியிருக்கிறது. நிகழ்ச்சி, அமெரிக்காவில் நடப்பதாகக் கதை. எனவே, கிருஸ்தவ மார்க்கத்தைப் பற்றியும் இதிலே இங்கும் அங்குமாக எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. ஏழைகளின் கஷ்டத்தைத் துடைக்க, தொழிற்சங்கம் நடத்துபவர்கள், பொதுவுடைமைக் கட்சியினர் மட்டுமல்லாமல், உண்மையான கிருஸ்தவர்களும் முனைந்து நிற்கிறார்கள். "எங்களுக்குப் பொதுவுடைமைக் கட்சியின் கோட்பாடும் தெரியாது, சட்ட நுணுக்கமும் புரியாது, ஆனால் இதயம் இருக்கிறது; ஏழை படும்பாடும் கஷ்டமும் புரிகிறது. அன்பு போதனைதான் கிருஸ்தவ மார்க்கம்; எனவே ஏழைகளிடம் அன்பு காட்டுவது கிருஸ்தவரின் கடமை என்று உணருகிறோம், செய்கிறோம்,’’ என்று ஏழைக்கு உதவுபவர்கள் பேசுவதாகக் குறிப்பிடும் பகுதி, உருக்கம் நிரம்பியதாக இருக்கிறது. ஏழ்மை, அறியாமை, பிணி, கொடுமை இவைகளிலே சிக்கி உழன்ற போதிலும், தொழிலாளர்களிடம், அக்ரமத்தை எதிர்த்து போரிடும் உணர்ச்சி உள்ளத்தின் அடித்தளத்திலே எப்போதும் கொழுந்துவிட்டு எரிந்தபடி இருக்கிறது என்ற கருத்து, நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. என் கை வலிக்கு இரண்டு நாட்களாய் புதிய மருந்து போட்டுக்கொண்டு வருகிறேன். சிறை அதிகாரிகளில் ஒருவர் சொன்ன யோசனை இது. இப்படிப்பட்ட வலி போக, தென்னை மரக்குடி எண்ணெய் தடவ வேண்டும் என்று சொன்னார். மாயவரத்திலிருந்து பரிமளம் அந்த எண்ணெய் கொண்டுவந்து கொடுத்திருக்கிறான். இரண்டு நாட்களாக, அதைத் தடவி, சுடுசோறு ஒத்தடம் கொடுத்துக்கொள்கிறேன். ஒரு வாரம் கழித்துத்தான், ஏதேனும் இதனால் பலன் இருக்கிறதா என்பது தெரிய முடியும். இரவு வலி எடுத்தால், புலித்தைலம் தடவிக்கொள்கிறேன். இன்றுகூட அந்த மருந்து தடவிக்கொண்டு, அது ஒருவிதமான விறுவிறுப்பை ஏற்படுத்தியதும் உறங்கச் செல்கிறேன். 30-4-1964 இன்று மாநகராட்சி மன்ற உறுப்பினர், கழகத் தோழர் க. பாலன், ஏதோ கலவர வழக்கு சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டு, சிறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அறிந்தேன். பாலனைப் பார்க்க இயலவில்லை. விரைவில் ஜாமீனில் போகக்கூடுமென்று கூறுகிறார்கள். உட்பகுதியில் இருப்பதாகத் தெரிகிறது. மாநகராட்சிமன்ற இடைத் தேர்தலின்போது கலாம் விளைவித்ததாக அவர்மீது வழக்கு தொடர்கிறார்களாம். நானும் பார்க்கிறேன். தேர்தல் கலவரம் காரணமாகக் கைது செய்யப்பட்டு, சிறைக்குக் கொண்டுவரப் பட்டவர்கள் அனைவரும் கழகத் தோழர்கள் அல்லது தொடர்புடையவர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு காங்கிரஸ்காரர்கூட இல்லை. அவ்வளவு ஒழுங்காகத் திட்டமிட்டு, கழகத் தோழர்கள்மீது பழி வாங்கப் படுகிறது. வீணான வழக்குகளிலே சிக்க வைப்பதும், போலீஸ் மூலம் தொல்லைகள் விளைவிப்பதும், கழகத் தோழர்களின் மனதில் பீதியைக் கிளப்பிவிடும், தொல்லை தாங்கமாட்டாமல், கழகத்தைவிட்டு விலகிவிடுவார்கள் என்று ஆளுங் கட்சியினரில் சிலர் நினைக்கக்கூடும். கழகத் தோழர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்பது எனக்குத் தெரியும். இதனால் அவர்கள் குழம்பிப்போகமாட்டார்கள். ஆனால் பொதுமக்கள் மனதிலே அந்தப் போக்கு ஒருவிதமான கிலியை ஏற்படுத்தத்தான் செய்துவிடும். வீண் வழக்குகளைத் தொடுக்கும்போது, கழகம் பொதுமக்களிடம் முறையிட்டு, நிதி திரட்டி வழக்காட வேண்டும். அவ்விதம் செய்ததில், பலமுறை நமது கழகத் தோழர்கள்மீது தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளிவிட்டிருக்கின்றன - கழகத் தோழர்கள் குற்றமற்றவர்கள் என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஷேக் அப்துல்லா, பண்டித நேருவைச் சந்தித்துப் பேசிடும் நிகழ்ச்சி குறித்த செய்தியை, மிக்க ஆவலோடு படித்துக் கொண்டிருந்தோம். பேச்சின் விளைவு எப்படி இருக்கும் என்பது உடனடியாகக் கூறிவிடக் கூடியது அல்ல என்றாலும், காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டத்தின் மனப்போக்கு என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் பேச்சு இதனை நன்கு புரியும்படி செய்துவிட்டிருக்கிறது. ஷேக் அப்துல்லா வருவதற்கு முன்னதாகவே, பல ஆயிரக் கணக்கான மக்கள் கொண்ட ஒரு ஆர்ப்பாட்ட அணிவகுப்பு, பாராளுமன்றத்தின் முன்பு நடத்தப்பட்டிருக்கிற செய்தியைப் பார்த்தோம். அந்த அணி வகுப்புக்கு, காஷ்மீரைச் சார்ந்த ஜனசங்கத் தலைவர் தோக்ரா தலைமை வகித்திருக்கிறார்; "அப்துல்லாவைச் சிறையில் தள்ளு!’ என்பது அணிவகுப்பின் முழக்கங்களில் ஒன்று. இந்தப் பின்னணிக் கீதத்துடன், சமரசப் பேச்சு தொடங்கியிருக்கிறது. எனக்குத் தெரிந்தவரையில், ஷேக் அப்துல்லாவிடம் பண்டிதரும் ஆளுங்கட்சியினரும் பேசுவதற்கு முன்பாகவே ஜெயப்பிரகாஷ் நாராயணாவும், வினோபாவும் பேசி, ஒரு சமரசத் திட்டம் வகுத்துக்கொள்ள வேண்டும் - அந்த சமரசத் திட்டத்தின் மீது, பண்டிதருடன் பேச்சு நடத்த வேண்டும். என்றாலும், பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தப் பிரச்சினையை அதற்குத் தேவையான நிதானத் தன்மையுடன் பரிசீலிப்பார் என்று நம்புகிறேன். ஒரு வாரத்தில் இது பற்றிய வடிவம் ஓரளவுக்குத் தெரியக்கூடும் என்று எண்ணுகிறேன். கம்யூனிஸ்டு கட்சியிலே ஏற்பட்டுவிட்ட "பிளவு’ விரிவாகி விட்டதற்கான நிகழ்ச்சிகள் பெருகிவிட்டிருக்கின்றன. இரு சாராருமே, கம்யூனிஸ்டு கட்சி என்ற பெயருடன் இரண்டோர் ஆண்டுகள் வேலை செய்வார்கள்போலத் தெரிகிறது. இது பொதுமக்கள் சந்தித்தாகவேண்டிய புதிய குழப்பமாகிவிடுகிறது. கம்யூனிஸ்டு கட்சியின் எதிர்ப்பு காங்கிரஸ் கட்சியை அடுத்த தேர்தலில் வெகுவாக ஒன்றும் செய்யாது என்ற எண்ணம், இப்போதே காங்கிரஸ் வட்டாரத்திலே எழும்பிவிட்டது. இதனை எடுத்துக்காட்டுவதுபோல, கேரள முதலமைச்சர் சங்கர் பேசிய பேச்சு பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. கட்டுக் கோப்பான கட்சி, முறை நிரம்பிய கட்சி, தனித் தலைவர்களை நம்பாமல், அமைப்புக்கே முதலிடம் தரும் கட்சி, பிரச்சினைகளை விவாதிப்பதிலே துளியும் சளைக்காத கட்சி, வெளியே பிளவுகள் தெரிய ஒட்டாமல் தன்னைத்தானே கட்டிக் காத்துக்கொள்ளும் கட்சி என்றெல்லாம் பெருமை பேசுவார்கள் கம்யூனிஸ்டு கட்சியைப்பற்றி. நமது கழகத் தோழர்களிலே சிலருக்குக்கூட, கம்யூனிஸ்டு கட்சிபோல முறையோடு நமது கழகம் இயங்க வேண்டும் என்று கூறுவதிலே ஆர்வம் பொங்குவது உண்டு. இப்போது கம்யூனிஸ்டு கட்சியிலே ஏற்பட்டுவிட்ட நிலைமையைப் பார்த்த பிறகு, அந்தக் கட்சியை நடத்திவரும் முறையில் என்னென்னக் கோளாறுகள் உள்ளன என்பதனைத் தோழர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். இது குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் சொன்னேன், நாம், இரண்டு வெவ்வேறான நிலைமைகளையும் சந்தித்திருக்கிறோம் - சமாளித்திருக்கிறோம், குழப்பம் ஏற்படாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறோம் - இறுதியில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். திராவிடர் கழகத்திலிருந்து நாம் வெளியேறினோம் - சிறுபான்மையினர் அல்ல - நாம் விரும்பி இருந்தால், திராவிடர் கழக அமைப்பே நம்முடைய நிர்வாகத்தில் வரவேண்டும் என்று வாதாடி இருக்கலாம் - சிலர் என்னிடம் அதுபோல வற்புறுத்தியும் பார்த்தார்கள் - ஆனால், நாம் வாதிடுவது, வழக்கிடுவது, வம்பு வல்லடிக்குச் செல்வது என்பவைகளிலே காலத்தையும் கருத்தையும் செலவிட்டுப் பாழடிப்பதைவிட, நமக்குப் பிடித்தமான கொள்கைகளுடன் ஒரு புதிய அமைப்பு ஏற்படுத்திக்கொண்டு, நமது அறிவாற்றலை அந்த அமைப்பின் வெற்றிக்காகப் பயன்படுத்தி வருவோம் - நம்முடைய நோக்கம் தூய்மையானதாக இருந்தால், பொதுமக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்று திட்டமிட்டுத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பைத் துவக்கித் தொண்டாற்றினோம் - வெற்றியும் பெற்றோம். எங்களுடையதுதான் உண்மையான திராவிடர் கழகம் - பழையவர்களிடம் இருப்பது போலித் திராவிடர் கழகம் என்ற வம்பிலே நாம் ஈடுபடவில்லை. எனவே தான், இத்துணை ஏற்றத்துடன் நமது கழகம் இன்று ஒளி விடுகிறது. ஒரு அமைப்பிலிருந்து பிரிந்து வந்து, புதிய அமைப்பு துவக்கி, அதனை ஏற்றமடையச் செய்வதிலே வெற்றிபெற்றோம், அதுபோலவே, நமது அமைப்பிலிருந்து சிலர் விலகினார்கள் - விசாரப்பட்டோம், ஆனால் விரோதத்தைக் கக்கிக்கொண் டிருப்பதிலேயே, காலத்தைப் பாழாக்கிக்கொள்ளவில்லை - நிதானம் இழக்காமல், நெறி தவறாமல், பணியாற்றி வந்தோம். நமது அமைப்பு, புதிய வடிவுடனும் பொலிவுடனும் இன்று இயங்குகிறது. ஆக, இரு வெவ்வேறான நிலைமைகளிலும், நாம் நம்முடைய நோக்கத்தின் தூய்மை காரணமாகவும், தொண்டின் நேர்த்தி காரணமாகவும் வெற்றி பெற்றோம். திராவிட கழகத்திலிருந்து நாம் பிரியும்போது, நமக்கு இருந்த நிலைமை நமக்கும் நாட்டுக்கும் புரியும். கழகத்தின் நிர்வாகத்தில் ஒரு நகராட்சிகூடக் கிடையாது. தி. மு. கழகமாக வளர்ந்து, சட்டசபையில் 15-இடங்கள், பாராளுமன்றத்தில் இரண்டு இடங்கள், சென்னை மாநகராட்சி நிர்வாகம் எனும் இவைகளைப் பெற்றோம். நாங்கள்தான் உண்மையான திராவிடர் கழகம் என்ற வம்பு வல்லடியில் ஈடுபட்டிருந்தால் என்ன கிடைத்திருக்கும், வளர்ச்சி எந்த முறையில் இருந்திருக்கும் என்பதை, நான் சொல்லத் தேவை இல்லை. திராவிட முன்னேற்றக் கழக வெற்றி, திராவிடர் கழகத்தை முறையாக நெறியாக நடத்தினால், எத்தகைய அரசியல் நிலைமை உருவாகி இருக்கும் என்பதை, அரசியல் அறிந்த அனைவரும் அறிந்துகொள்ளச் செய்தது. நிதானத்துடனும், பொறுமை யுடனும், பொறுப்புடனும் செயலாற்றுவதற்குப் பலன் கிடைத்தே தீரும் என்ற பாடத்தைப் பலரும் பெறச் செய்தது. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து சிலர் பிரிந்து போயினர் - திட்டமிட்ட விளம்பர பலத்துடன் புதிய அமைப்பு கண்டனர் - வழக்கம்போல, தி. மு. கழகத்தின் முதுகெலும்பு முறிந்துவிட்டது, ஜீவன் போய்விட்டது என்று பத்திரிகைகள் பாடிவிட்டன. நாமோ, பகைக்காமல், பதறாமல், வியர்வையைப் பொழிந்து பணியாற்றினோம்; பிரிந்தவர்கள் நம்மோடு இருந்தபோது சட்டசபையில் நாம் 15-அவர்கள் போன பிறகு சட்டசபையில் நாம் 50-பாராளுமன்றத்தில் முன் 2-இப்போது 8-மீண்டும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் நம்மிடம் - புதிதாகப் பத்துக்கு மேற்பட்ட நகராட்சிகள் நம் வசம். நாம் ஒரு அமைப்பிலிருந்து பிரிந்து வந்தபோதும் சரி, நமது அமைப்பிலிருந்து சிலர் பிரிந்து சென்றபோதும், சரி, நாம் நமது பாதையை ஒழுங்காக்கிக்கொண்டு, மனிதப் பண்பை இழக்காமல், நம்பிக்கையுடன் நெறியாகப் பணியாற்றி வெற்றி பெற்றிருக்கிறோம். இதுபற்றி இங்கு நான் எடுத்துச்சொன்னபோது, நண்பர்கள் மெத்த மகிழ்ச்சி அடைந்தார்கள். 1-5-1964 மேதினி போற்றிடும் மே தினம், வெளியே இருந்திருந்தால், ஏதேனும் ஓரிடத்தில் மேதினம்பற்றிப் பேசி இருப்பேன். இந்த ஆண்டு மே தினம், இல்லாமை, அறியாமை எனும் கொடுமை நிரம்பி உள்ள காரணத்தால் சூழ்நிலை பாழாகி, கழுத்தறுப்பவன், கன்னம்வைப்பவன், கைகால் ஒடிப்பவன், பூட்டு உடைப்பவன், கள்ளச்சாராயம் காய்ச்சுவோன், கத்திரிக்கோல் போடுவோன் என்னும் இன்னோரன்ன பிற வழிதவறிய மக்களை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலையில், ஒரு கொட்டடியில் இருந்துகொண்டு இருக்கின்றேன். இங்கு நான் பார்க்கிறேன். நடத்திச் செல்பவர்கள் அமையாத காரணத்தாலேயே கெட்டவழி சென்றுவிட்டவர்களை; மீண்டும் சமூகத்தில் இடம் கிடைக்காது என்று மனம் ஒடிந்துபோய், "கைதி ஜாதியில்’ சேர்ந்து விட்டவர்களை; இங்கு உள்ள ஆயிரத்துக்குமேற்பட்ட கைதிகளில், ஏ. பி. வகுப்புக் கைதிகள் தவிர, மற்றவர்கள் சொந்தத்தில் வீடு, வாசல், தொழில் ஏதுமற்ற ஏழ்மை நிலையினர். வயிறாரச் சாப்பிட்ட நாட்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கும். குடிசையிலே வாழ்ந்தவர்களே பெரும்பகுதியினர். சமூகத்திலே ஒரு பிரிவினர் இதுபோல் ஆகாதபடி தடுத்திட, சமூக அமைப்பிலேயும் பொருளாதார அமைப்பிலேயும் புரட்சி கரமான மாறுதல் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை உலகம் உணர்ந்திடச் செய்வதிலே மே தினம் பெருமளவு வெற்றி பெற்றிடுகிறது. வெளியே இல்லையே இந்தத் திருநாளை கொண்டாட என்று ஒருகணம் எண்ணினேன் - ஏக்கத்துடன் - மறுகணமோ, இல்லை, இல்லை, இன்று வெளியே இருந்து கடற்கரைக் காற்றின் இனிமையைப் பெற்றுக்கொண்டே பாட்டாளி படும்பாடுகள் பற்றிப் பேசுவதைவிட, பாட்டாளிகளாகவும் இருக்க முடியாமல், வழி தவறிக் கெட்டு, கைதிகளாகிவிட் டுள்ளவர்கள் அடைபட்டுக் கிடக்கும் சிறையில் இருந்து கொண்டுதான், மே தினம்பற்றிச் சிந்திக்க வேண்டும் - அதுதான் பொருத்தம் என்று எண்ணிக் கொண்டேன். பாட்டாளிகளின் மனப்பான்மையில் புரட்சிகரமான மாறுதல் ஏற்படும் முறையில் பிரசாரம் செய்வதில் நாம் முனைந்திருந்தபோது, அந்தப் பிரசாரத்தை நாத்தீகப் பிரசாரம் என்று கூறிப் பலரும் தாக்கிவந்த நிலைமைபற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். தொழிலாளர்களிடம் மேலும் அதிகமான அளவு தொடர்புகொள்ளவேண்டும். புதிய புதிய தொழிற்சங்கங்கள் அமைக்க வேண்டும் என்பதுபற்றி அன்பழகன் வலியுறுத்தினார். இப்போது, நமது கழகத் தோழர்களில் குறிப்பிடத்தக்க சிலர், இந்த முனையில் நல்ல பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள் என்பது குறித்து, மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தோம். 2-5-1964 இன்று, தொகுதி திருத்தி அமைக்கும் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளத்தக்க முறையில், தன் விடுதலை நாள் அமையுமா என்று அறிந்துகொள்ள மதியழகன் சிறை மேலதிகாரியிடம் பேசிவிட்டு வந்தார். குறிப்பிட்டு ஏதும் சொல்ல அதிகாரி மறுத்து விட்டாராம். மேலும் சிறை அதிகாரிகளின் நோக்கம், விடுதலை நாளை முன்கூட்டித் தெரிவிக்கக்கூடாது - சிறைவாயிலில் வரவேற்புகள் நடக்க விடக்கூடாது என்பதாக இருப்பதாகத் தெரிகிறது. விடுதலை, எதிர்பாராத முறையில் இருக்கும்போலத் தெரிகிறது. எப்படியும், குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வசதி கிடைக்கும் என்று மட்டுமே கூறமுடியும் என்று சிறை அதிகாரி கூறியதிலிருந்து மதி, மே முதல் வாரம் முடிவடைவதற்குள் விடுதலை செய்யப்படலாம் என்று கருதுகிறோம். சிறைவாயிலில் வரவேற்பு நடத்தவிடக்கூடாது என்று ஏன் எண்ண வேண்டும், இது என்ன போக்கு என்று நண்பர்கள் வருத்தப்பட்டுக்கொண்டார்கள். இதுபோன்ற பல பிரச்சினைகளில், இன்றைய ஆட்சியினர் கலியாணத்தைத் தடுக்க சீப்பை ஒளித்து வைத்த புத்திசாலியாகத்தான் நடந்து கொள்ளுகிறார்கள் என்று நான் சமாதானம் கூறினேன். உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் திருநாள், மே தினம். இந்த ஆண்டு, இந்தத் திருநாளில், கம்யூனிஸ்டு கட்சியினர் இரு பிரிவுகளாகி, தனித்தனியாக மே தினம் கொண்டாட வேண்டி ஏற்பட்டுவிட்டிருப்பது வருந்தத்தக்க நிகழ்ச்சியாகும். தொடர்ந்து இந்த நிலை இருக்கும் என்பது, கம்யூனிஸ்டு தலைவர்களின் பேச்சிலிருந்து தெரிகிறது. கம்யூனிஸ்டு கட்சியின், எந்த ஒரு பிரிவுக்கும் தமது ஆதரவை அதிகாரப்பூர்வமாக, நண்பர் ம. பொ. சி. அளிக்க வில்லை என்றாலும், இந்த மே விழாத் தொடர்பான கூட்டத்தில் - ஓட்டல் தொழிலாளர் மாநாட்டில் - ராமமூர்த்தியுடன் இணைந்து கலந்துகொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி எதேச்சாதிகாரத்தை வளர்ப்பதுபற்றிக் கண்டித்துப் பேசி, காங்கிரசிடம் உறவு கொண்டாடிச் சந்தர்ப்பவாதிகள் சலுகைகளைப் பெறுவதையும் எடுத்துக்காட்டி இருக்கிறார். ம. பொ. சி. யின் இந்தப் போக்கு எந்த முறையிலும், அளவிலும், இனி வளரும் என்பது தெரியவில்லை. போகப் போகத்தான் தெரியும் என்று எண்ணுகிறேன். சோஷியலிஸ்டு கட்சியின் ஒரு பிரிவினர், ராமமூர்த்தியின் கம்யூனிஸ்டு பிரிவுடன் இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடும் என்று பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. இந்த நிலைமையும், உறுதியான வடிவம் பெறுமா என்பது புரியவில்லை. தென் ஆற்காடு மாவட்டத்தில், மறியலில் ஈடுபட்ட கழகத் தோழர்களை, துரிதமான விசாரணை நடத்தி, மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதித்துவிட்டிருக்கிறார்கள். சட்ட மன்ற உறுப்பினர்கள் சண்முகம், ராஜாங்கம், தங்கவேல் மூவரும் சிறை புகுந்துள்ளனர். இதுபோல உடனுக்குடன் விசாரணை நடத்தி, வழக்கு காலத்தை நீடித்துக்கொண்டே போவதும், தோழர்கள் "காவலில்’ வாட்டப்படுவதும் வருந்தத்தக்கதாக இருக்கிறது என்பதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். எப்படியும், நான் விடுதலை ஆவதற்குள், நண்பர் கோவிந்தசாமியும், மற்றவர்களும், சென்னை சிறைக்குக் கொண்டு வரப்படுவார்கள் என்று கருதுகிறேன். இன்று ராணியுடன் என் இரண்டு மருமகப்பெண்களும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நலன்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அன்புள்ள அண்ணாதுரை 27-12-1964 பொற்காலம் காண!. . . தெற்கு முனையிலே ஏற்பட்ட பெருவிபத்து எடுத்துரைக்கும் எதனையும் மதித்திட மறுக்கும்போக்கு என் தம்பி மணம் பரப்பிடும் மலர் இந்தியா முதலாளிகளின் முகாம் கண்டு கருத்தறிதல் கடினம்; எனினும் தேவை குப்பை கூளம் பற்றிய ஜான் மேஸ்பீல்டின் கவிதை தம்பி! தமிழக மக்கள் தனிச் சிறப்பளித்துக் கொண்டாடி மகிழ்வுபெறும் திருநாள், பொங்கற் புதுநாள். எங்கிருந்தோ ஓர் புத்தெழில், இந்த விழாவன்று அரசோச்ச வந்திடும் விந்தை, சிந்தைக்கு இனிப்பளிக்கக் காண்கின்றோம். இன்னல் மிகுந்த வாழ்வில் பின்னிக்கிடந்திடும் நிலையினிலுள்ள மக்களையும், இன்றோர் நாள், கன்னல் கண்டு பேசிட, செந்நெல் குவிந்திருக்க, செவ்வாழை அருகிருக்க, உழைப்பின் பயனாக உருவான பண்டமெலாம் நிறைந்திருக்க, மாடு கன்றுகளும் மேனி மினுக்குடனே, பொங்கிடுவது நாங்கள் தந்திடும் பாலன்றோ எனக் கேட்பதுபோல் உலவிவர, இந்நாள் இதயம் பாடிடும் நாள்! இஞ்சியும் மஞ்சளும் இயற்கை தந்த அணிகலன் என்பதனை உணரும் நன்னாள் என்றெண்ணி மகிழ்வுதனைப் பெறுத் திகழ்தல் இயற்கை; பொருத்தமும்கூட. நிறைவாழ்வு, கனிச்சுவை போன்றுளது; அதனை நித்த நித்தம் பெற்றிடும் வாய்ப்புக் கிடைக்கப் பெறாதோரும், இன்றோர் நாள், எழில் மாளிகைதனை எட்டிப் பார்த்துக் களிப்படையும் "இல்லாதான்’ போல, இன்ன விதமெல்லாம் இருந்திட்டால், வாழ்வு சிறந்திடும், பயன் மிகுந்திடும், நாடு பொலிவு பெறும், வையகம் கண்டு பெருமைப்படும் என்று எவரும் எண்ணி மகிழத்தக்க இன்ப நாள். இந்நாளில், தமிழ் மரபறிந்த எவரும், அறிதுயிலிலிருந்தபடி அண்டந்தனைக் காக்கும் அரி தங்கும் வைகுந்தமும், ஆடுவதில் வல்லவர் யார்! அறிந்திடுவோம் வந்திடு! என்று உமைதனை அழைத்து, மானாட மழுவாட முக்திக்கு வழிதேடும் பக்தர்கள் மனமாட ஆடிடும் சிவனாரின் கைலையும், இவளழகா அவளழகா? எவள் இன்று எம்முனிவன் தவம் கலைக்க? என்று தேவர் பேசிப் பொழுதோட்டும் இந்திரபுரியும் பிறவும்பற்றிப் பேசிடுவதுமில்லை, எண்ணமும் கொள்வதில்லை. தாள் ஒலி அல்ல, தையலரின் சிலம்பு இசைக்கும் ஒ தன்னே ôடு போட்டியிட்டு, கட்டழகி பெற்றெடுத்த இன்ப வடிவத்தை எடுத்தணைத்து, முத்தமிடும் இளைஞன் எழுப்பி விடும் இச்சொலிக்கும் போட்டி எழ, கண்டு கருத்தறிந்து, பண்டு நடந்ததனை எண்ணி எண்ணிப் பாட்டன் சிரித்திட, இடையே விக்கல் இருமல் கிளப்பிவிடும் ஒலியும், இன்னோரன்ன ஒலியே, இசையாகிடக் காண்கின்றோம் இத்திருநாளில். இந்த யுகந்தனிலே, இந்தத் தேசந்தன்னில், இன்ன குலத்தினிலே அவதரித்த மன்னவனும், அவனைக் கெடுக்க வந்த அசுரனும் போரிட்டபோது, மன்னவன் முற்பிறப்பில் மாதவம் செய்தான் எனவே அன்னவனை ரட்சித்து அசுரனைக் கொன்றிடுதல் முறை என்று, திருமாலும் “சக்கரத்தை’ அனுப்பி வைக்க, வந்தேன்! வந்தேன்! என்று துந்துபி என முழக்கி, வந்தது காண் திகிரி, அழிந்தான் அசுரன்; அந்த நாள், இந்நாள்; பண்டிகை நாள்! இந்நாளில், பாகும் பருப்பும் பாலினிற் பெய்து பக்குவமாய்ச் சமைத்து, சக்கர வடிவமாக்கி, உண்டு உருசிபெறுவதுடன் உத்தமர்க்குத்”தானமாக’த் தருவோர்கள் அடுத்த பிறவியிலே அரசபோகம் பெறுவார்கள். அத்திரி அருளியது அதிகிரந்த மொன்று, அதிலிருந்து பிரித்தெழுதி அளித்திட்டார் மாமுனிவர், அவர் வழியில் வந்தவரே இன்று புராணம் படிப்பவரும், என்றெல்லாம் கதைத்திடும் நாள் அல்ல. வலிந்து சிலர் இதற்கும் கதை கூற முனைந்தாலும், எவர்க்கும் அஃது இனிப்பதில்லை; நெஞ்சில் புகுவதில்லை; இஃது பொங்கற் புதுநாள்! தமிழர் திருநாள்! அறுவடை விழா! உழைப்பின் பெருமையை உணர்ந்து நடாத்தப்படும் நன்றி அறிவிப்பு விழா! என்ற இந்த எண்ணமே மேலோங்கி நிற்கிறது; பெருமிதம் தருகிறது; மகிழ்ச்சி பொங்கி வழிகிறது; அகமும் முகமும் மலருகின்றன; வாழ்வின் பொலிவு துலங்கித் தெரிகிறது. இந்த உலகத்தின் எழில் யாவும் பொய்யல்ல, மெய்! மெய்! எனும் உணர்வும், அந்த எழிலினையும் பயன்தனையும் நுகர்ந்திடவும் வளர்த்திடவும் முனைதல் மாந்தர் கடன் என்ற மெய்யறிவும், அந்தக் கடமையினைச் செம்மையாய்ச் செய்து முடிக்க ஆற்றல் மிக வேண்டும், அவ்வாற்றல் கூட்டு முயற்சியினால் மிகுந்து சிறப்பெய்தும் என்றதோர் நல்லறிவும், இருள் நீங்கி ஒளி காண்போர் இதயம் மலராகி இன்புற்றிருப்பது போல், நல்வாழ்வுதனைக் குலைக்கும் நச்சரவு போன்ற நினைப்புகளும், நிலைமைகளும், நிகண்டுகளும் அமைப்புகளும் நீடித்திருக்கவிடல் நன்றல்ல, நலம் மாய்க்கும் என்பதறிந்து, அறிவுக் கதிரினையே எங்கெங்கும் பரவச்செய்து எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடலே இயற்கை நீதி எனக் கொண்டு பணிபுரியும் ஆர்வமும், பெற்றிடப் பயன்படும் இந்தப் பொங்கற் புதுநாள். இயற்கைச் செல்வங்கள் என்னென்ன இங்குண்டு, அவை தம்மைப் புத்துலக நுண்ணறிவால் மேலும் பயன் அளிக்கும் விதமாக, திருத்தி அமைத்திட என்னென்ன முறை உண்டு என்பதெல்லாம் எண்ணி எண்ணி மகிழ்ந்திடலாம், இந்நாள் நமக்களிக்கும் நற்கருத்தைப் புரிந்துகொண்டால். புனலாடி, பொன்னார் இழை அணிந்து, பொட்டிட்டுப் பூமுடித்து, பாற்பொங்கல் சமைத்து அதில் பாகு கலந்து, பாளைச் சிரிப்புடனே பரிவுமிக்காள் தந்திட, சுவைத்திட இதழிருக்க வேறு தரும் விந்தைதான் எதுக்கோ என்று கேட்டிட இயலாமல் குறும்புப் பார்வையினால் அவன்கூற, பெற்றோர் அதுகண்டு பேருவகைதான் கொள்ள, இல்லமுள்ளார் எல்லோரும் இன்புற்று இருந்திடுதல் பொங்கற் புதுநாளின் பாங்கு; மறுக்கவில்லை. ஆனால், முழுப்பாங்கு என்றதனை மொழிந்திட மாட்டேன் நான்; தித்திக்கும் சுவையுடனே, சிந்திக்கவும் வைக்கும் எண்ணங்கள் பற்பலவும் பொங்கி வருவதுதுôன் இந்நாளின் தனிச்சிறப்பு, முழுப்பாங்கு. மலரின் எழில் கண்டு மகிழ்வது மட்டும் போதாது, மணம் பெறவேண்டுமன்றோ! அதுபோன்றே பொங்கற் புதுநாளன்று மனைதொறும் மனைதொறும் காணப்படும் கவர்ச்சிமிகு கோலம் - புறத்தோற்றம் - கண்ணுக்கு விருந்தாகிறது. ஆனால், அது மட்டும் போதாது; கருத்துக்கும் விருந்து வேண்டுமன்றோ! உளது உணர்பவர்களுக்கு உணர்பவர்களே, பொங்கற் புதுநாளின் முழுப்பயனையும் பெற்றவராவர். உடன்பிறந்தோரே! நீவிர், அந்நன்னோக்கத்துடன் இத்திருநாளின் தன்மையினை உணர்ந்து பயன் பெற வேண்டுமெனப் பெரிதும் விழைகின்றேன். திருநாளின் தன்மையை மட்டுமல்ல, காணும் ஒவ்வோர் பொருளிலும், தெரிந்திடும் புறத்தழகு மட்டும் கண்டு போதுமென்றிருத்தல் ஆகாது; அப்பொருளின் உட்பொருளை, மெய்ப்பொருளை அறிந்திடுதல் வேண்டும். அந்த நுண்ணறிவே, நாம் காணும் பொருள்களின் முழுத்தன்மையையும் துருவிக் கண்டிடவும், காண்பதனால், பயன் பெறவும் வழி காட்டுகிறது. பொருளின் புறத்தோற்றத்தை மட்டுமல்ல, அவைகளின் தன்மையினையும் பயனையும் நுண்ணறிவுடன் கண்டவர் தமிழர்! இன்று தமிழ் பேசிடுவோர் என்று பொதுவாக எண்ணிவிடாதே தம்பி! நான் குறிப்பிடுவது, தமிழராக வாழ்ந்த தமிழர்களை. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்று வள்ளுவர் கூறிச் சென்றார். காலைக் கதிரவன், மாலை மதியம், ஆடிடும் பூங்கொடி, பாடிடும் அருவி, கொஞ்சிடுங் கிள்ளை, துள்ளிடும் வெள்ளி மீன், மருண்டவிழி மான், ஒளிவிடும் விண்மீன், சிரித்திடும் முல்லை, பேசிடும் புறாக்கள், பழமுதிர் சோலை, வளமிகு வயல்கள், எதுதான், தம்பி! அழகாக இல்லை! எதுதான் தம்பி! இன்பம் தராதிருக்கிறது? வா! வா! என்று வாயால் அல்ல, சிறு கரத்தால் அழைத்திடும் குழவி காண்போன் களித்திடுவது போலத்தான், முற்றிய கதிர் நிரம்பிய வயலின் ஓரத்தில் சென்றிடும் உழவனுக்குக் காற்றால் அசைந்தாடும் பயிர் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தி நேரத்துச் செவ்வானத்தைக் கண்டதுண்டா? கண்டிருப்பாயே! எப்படி அந்த அழகு? உன்னைப்போய்க் கேட்கிறேனே! உன்னை முதன்முதலாகக் கண்டபோது உனக்கு வாய்த்தவளின் முகம் வெட்கத்தால் சிவந்திருக்குமே, நீ அதை அல்லவோ எண்ணிக்கொண்டிருக்கிறாய்!! இருப்பினும் இதனைக் கேட்டிடு தம்பி! எழிலோவியம் நிரம்ப உளது நம்மைச் சுற்றி! ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் வகையான அழகு ததும்புகிறது. ஆனால் அந்தப் புறத்தழகு மட்டுந்தான், அவை நமக்களித்திடுகின்றன என்றால், அவை பெருமைக்குரியனவாகா. புறத்தழகு காட்டி நமை மகிழ்விப்பதுடன், அவை, தமது தன்மையின் காரணமாக நமக்கு மிகுந்த பயனையும் வழங்கு கின்றன! நம் வாழ்வு சிறப்படைய அவை துணைசெய்கின்றன! சிறப்படையவா!! வாழ்வே, அவை நமக்கு வழங்கிடுகின்றன. வானத்திலே தோன்றிடும் வண்ணக் குழம்பு, காணற் கரியதோர் ஓவியம்; ஆமாம்; ஆனால், கண்ணுக்காக மட்டுமோ அஃது உளது? இல்லை, தம்பி! கருத்துக்காக! என் அழகைக் கண்டிடு, இதயம் மலர்ந்திடும்! என்று மட்டும் கூறி, மையல் ஊட்டிடும் "சாகசக்காரி’ அல்ல, இயற்கையாள்! என்னைக் கண்டிடு, அறிந்திடு, முழுவதும் உணர்ந்திடு, என் தன்மையினை ஆய்ந்து பார்த்திடு, பயன் பெறு!! - என்று கூறிடும் வள்ளல் அந்த வனிதை! இயற்கையாள் நமக்களித்த எண்ணற்ற பொருள்கள் பெற்றோம்; இன்றவை மனையில் மங்கலம் தந்திடக் காண்கின்றோம். ஆயின், இப்பொருள் தம்மைப் பெற்றோர் எத்தனைபேர் என்ற கணக்கினை மறக்கலாமோ, அதற்கான காரணம் அறியாதிருக்கப்போமோ! மண்மகள் தந்தாள் இந்த மஞ்சளும் மா, பலாவும், வாழையும் வழங்கினாளே, செந்நெலும் பிறவும் அந்தச் செல்வியின் கரத்தால் பெற்றோம்; பெற்றதால் பெற்றோம் இன்பம்; பெறுகின்றனரோ அதனை மற்றோர் என்று எண்ணிடத் தவறல் தீது; ஏனெனில், இயற்கை அன்னை, இங்கு இவைதம்மைத் தந்தது. எவரும் இன்புற்றிருக்க; சிலருக்குப் பலவும், பலருக்குத் துளியுமற்ற பாழ்நிலைக்காக அல்ல, இத்தனை தந்த பின்னும், இத்தரைமீதில், எத்தனை எத்தனையோ மாந்தர் என் செய்வோம் என்றழுதும், இல்லையே என்று கூறி இடும்பையின் பிடியில் சிக்கித் தத்தளித்திடுதல் கண்டு, தாங்கிக் கொள்வதுதான் உண்டோ! மெத்தவும் கோபம் கொண்டு, சிற்சில நேரந் தன்னில், அடித்துக் கேட்கின்றாள் போலும், அட மடமகனே! உன்னை நம்பி நான் தந்தேன் எல்லாம்! நலிகின்றாரே பல்லோர்! இது உன்றன் கயமையாலே!! ஆகவே, உன்னை உன்றன் கொடுஞ் செயலுக்காக வேண்டி தாக்குவேன், பார்! என் ஆற்றல்! என்று பெருமழை, பேய்க்காற்று, கடற் கொந்தளிப்பு, நிலநடுக்கம் எனும் கணைகளை ஏவுகின்றாள் போலும். இந்நிலையில், விழாவென்று சொல்லிடவோ இயலவில்லை, விழியில் நீர்த்துளிகள் - உனக்கும் எனக்கும், உள்ளம் படைத்தோர் அனைவருக்கும். விண்ணிருந்து மண்ணுக்கு வளமூட்ட வந்த மாமழையைப் போற்றுகிறோம்; போற்றினார் இளங்கோ அன்றே! மண்மீது உள்ளனவும், அவை நம்பி வாழ்ந்திடும் மாந்தரும் அழிந்துபட, மலையென அது கிளம்பி, பெருங்காற்றை உடன்கொண்டு பேரிழப்பை மூட்டினதே, பேச்சற்றுத் திகைத்துக் கிடக்கின்றோம் மூச்சற்றுப் போயினர் பல்லோர் என்றறிந்து. கடல் சீறி எழுவானேன், கடுங்கோபம் எதனாலே அந்தோ! ஒரு தீதும் செய்திடாத மாந்தர்களை கொல்வானேன்! எத்தனையோ பிணங்கள் மிதந்தனவாம்; நோயாளி தாக்குண்டு, மருந்து தேடித்தானுண்டும், பிழைத்தெழ முடியாமல், பிணமாவர்; தவிர்த்திட முடிவதில்லை. அது போன்றதோ இஃது? இல்லை! இல்லை! ஒரு துளியும் இதுபோல நடந்திடக் கூடுமென்று, எண்ணம் எழாநிலையில் இருந்தவர்கள், துயின்றவர்கள், பிணமானார்; அழிவுதனை ஆழ்கடலும் ஏவியதால், முறிபடு தருக்களும், இடிபடு மனைகளும், உடைபடும் அமைப்பும், ஓலமிடும் மக்களும், புரண்டோடி வந்திடு புனலும், இழுத்து அழித்திடு சுழலும், அம்மவோ! கேட்டிடுவோர் நெஞ்சு நடுக்குறு விதத்தன என் செய்வர் அந்த மக்கள்; மூழ்கினர்; மூச்சற்றுப் போயினர். சேதி கேட்டிடும் அனைவருக்கும் நெஞ்சில் பெருநெருப்பு, விழியில் நீர்க்கொப்பளிப்பு. எத்தனையோ இன்னல்களைக் கண்டு கண்டு, அவை தம்மால் தாக்குண்டு, எதிர்த்து நின்று வடுப்பெற்று வாட்டம் ஓட்டிடுவோம் வாழ்வின்பம் பெற்றிடுவோம் என்று உழல்கின்றார், ஏழை எளியோர்கள். அறம் மறந்த நிலையினிலே சமூக அமைப்புள்ள காரணத்தால், ஆயிரத்தெட்டுத் தொல்லை, அவர்கட்கு. பிழைக்க வழியில்லாதார், உழைத்து உருக்குலைந்தார், நம்பிக்கை தேயத் தேய நலிவுற்றார். இத்தகையோர் மெத்த உண்டு பெரு மூச்செறிந்தபடி; உயிரோடிருக்கின்றார் ஓர் நாள் வாழ்வு கிடைக்கும் என்று வறுமையின் தாக்குதலும் அகவிலையின் போக்கதனால் ஏற்படும் அலைக்கழிப்பும் நீதி கிடைக்காமல் அவர்கள் பாதி உயிரினராய் உள்ளதுவும் அறிவோம் நாம்; அறியும் அரசு. எனினும், பொழுது புலருமென்று பொறுத்திருந்து வருகின்றார்; அவர் போன்றோர்க்கு, “வாழ்வு கிடைக்குமென வாடிக்கிடப்பதுமேன்! வற்றிய குளத்தினிலே வண்ணத்தாமரை காண்பதுவும் இயலுமோதான்! உழலுகின்றாய் உயிர்காக்க; உலவுகின்றாய் வாழ்வு கிடைக்குமென்று; உண்மையை நான் உரைக்கின்றேன், கேள்! உனக்கு வாழ்வளிக்கும் வழி காண, இன்றுள்ள உலகுக்கு நேரமில்லை, நினைப்புமில்லை; எதிர்பார்த்து ஏமாந்து இதயம் நொந்து செத்திடுவாய்; சாகுமுன்னம், அணு அணுவாய் உன் எண்ணந்தன்னைப் பிய்த்திடும் ஏமாற்றம் மூட்டிவிடும் வாட்டம்; அதனால் உழல்வானேன் வீணுக்கு; உருண்டோடி வந்துன்னை அணைத்துக் கொள்கின்றேன்; ஆவியைத் தந்துவிடு; அமைதி பெறு!’’ என்று கூறியதோ, கொக்கரித்துப் பாய்ந்து வந்த கொடுமைமிகு அலையும்! வாழ வைத்திடுதல் எளிதல்ல; வல்லமை மிகவும் வேண்டும்; சாகடித்திடவோ எளிதிலே இயலும், வா! வா! என்று கூறி மேல் கிளம்பிக் கொதித்துவந்த அலைகள், மாந்தர் உயிர் குடிக்கும் நச்சரவுகளாயின அந்தோ!! பிணமாகி மிதந்த அந்த மாந்தர் உள்ளந்தன்னில் என்னென்ன எண்ணங்கள் உலவி இருந்தனவோ, எவரறிவார்! மணவாளனாவதற்கு ஏற்றவர்தான் அவர்! பெற்றோர் மகன் மனத்தைக் கண்டறிந்தே செய்கின்றார் இந்த ஏற்பாட்டினை, பெறுவேன் நான் மன நிறைவு என்றெண்ணி மகிழ்ந்திருக்கும் மங்கையரும் இருப்பரன்றோ, கத்தும் கடல் அனுப்பப் பாய்ந்து வந்து அலை கொத்திக்கொண்டு சென்ற பல்லோரில்! பூவும் மஞ்சளுடன் போனவர்களும் உண்டே! காய் இது, கனியும் விரைவினிலே என்று கூறத்தக்க பருவமுடன் அழகு தவழ் உருவினரும், அலைக்கு இரையாகிப் போயிருப்பர்! அரும்புகள் பலப் பலவும் அழிந்திருக்குமே. தள்ளாடும் நடையெனினும், தாத்தா! என்றழைத்திடும் மழலை மொழிக் குழவியுடன் மாதரசியும் மகனும் இருக்கின்றான் என்ற எண்ணம் களிப்பளிக்க இருந்து வந்த பெரியவர்கள் பற்பலரும் மடிந்திருப்பர், உயிர் குடியாமுன் மடிந்திடேன் என உரைத்து எழும்பி வந்த அலைகளாலே! என்னென்ன நடந்திருக்கும், எத்தகு ஓலம் எழும்பியிருந்திருக்கும், உயிர்தப்ப ஏதேது முயற்சிகளைச் செய்திருப்பார், எல்லாம் பயனற்றுப் போயின என்றுணர்ந்து, இறுதியாய், இதயத்திலிருந்து அலறல் எவ்விதத்தில் பீறிட்டுக் கிளம்பி வந்திருக்கும் என்பதனை எண்ணிடும்போதே, உள்ளம் நைந்துவிடுவதுபோலாகிறது, என் செய்வோம்; பேரிழப்பை எண்ணி, பொங்கிடும் கண்ணீரல்லால், தந்திட வேறென்ன உண்டு; பொறுத்துக்கொள்க என்று, இழந்தனனே என் மகனை! இழுத்துச் சென்றதுவே என் அரசை! வாழ்வளிக்க வந்தவனை வாரிக் கொடுத்துவிட்டுப் பாழ் மரமானேனே, பாவி நான்! என்றெல்லாம், பதறிக் கதறிடுவோர்க்கு அவர் ஓலம் கேட்டு, காலம் மூட்டிவிட்ட கொடுமையிது எனக்கூறி, கண்ணீர் சொரிவதன்றி, பிறந்தவர் இறந்தே போவர், இறப்பும் ஓர் புது வாழ்க்கையின் பிறப்பாம் என்றெல்லாம்”தத்துவம்’ பேசிடவா இயலும்? நாமென்ன, முற்றுந் துறந்து விட்டோம் என மொழியும் முனிவர்களோ! இல்லையன்றோ! இருந்தான் பலகாலும், பெற்றான் பல நலனும் நோய் வந்துற்று மறைந்தான், மறையுமுன் மாடு மனையுடனே மகிழ்ந்திருக்கும் விதமாகப் பெரியதோர் குடும்பத்தை அமைத்தான் சீராக என்று கூறிடத்தக்க நிலையினிலே இறந்துபடுவோர்க்காகக்கூட இதயமுள்ளோர் கண்ணிர் சிந்திடுவர், கவலைகொண்டிடுவர். தெற்கு முனையிலே நேரிட்ட பேரிழப்புக் கண்டோம், மரணம் இயற்கை என்று கூறி எங்ஙனம் ஆறுதல் பெற இயலும்! இது, எந்தமிழ் நாட்டினிலே, என்றும் நடந்திராத, சிந்தையை வெந்திடச் செய்யும் பெருவிபத்து, பேரிழப்பு! ஆறுதல் கூறுவதோ, பெறுவதுவோ எளிதல்ல. கொடும் அலைக்குப் பலியானோர் விட்டுச் சென்ற குடும்பத்து மற்றவர்கள் தம்மை நம் உற்றார் உறவினர் என்று கொண்டு, அழித்தது அலை, அரசு அணைத்தது என்றவர் எண்ணும் வண்ணம், உயிர் குடித்தது அலை வடிவிலே வந்த கொடுமை, வாழ்வளித்தனர் அன்னையாகி இவ்வரசு எமக்கு என்று கூறத்தக்க விதத்தில் அரசு திட்டமிட்டுத் தக்கனவற்றை விரைந்து செய்தளிக்க வேண்டும். நாட்டினர் அனைவருமே, ஒருமித்துக் கேட்டிடுகின்றனர் அரசை, வீடிழந்து, தொழிலிழந்து, பெற்றோர் உற்றார் இழந்து, பெற்றெடுத்த செல்வந்தனை இழந்து அழுது கிடக்கின்ற மக்களுக்கு, புதுவாழ்வு, முழுவாழ்வு நல்வாழ்வு அளித்திட, பொருள் அளவு அதிகமாமே என்றெண்ணி மருளாமல், பரிவுடன் அவர் நிலையைப் பார்த்து, நலன்தேட முனைந்திடுதல் வேண்டும் என்று. அழிவு ஒரு நாள், அழுகுரல் ஆறு நாள், வேண்டுகோள் ஒரு நாள், ஆகட்டும் பார்க்கலாம் என்று சில நாள், பிறகு "அதது அததன்’ வழிப்படி சென்றிடும் என்ற முறையிலே எண்ணத்தை ஓட விட்டுவிடாமல், தமிழக மக்கள் மனம் குளிர, பிறநாட்டவரும் கேட்டு மகிழத்தக்க விதத்தில், அரசு செயலாற்ற வேண்டுகிறோம். செய்வர் என்று எண்ணி, அந்த நம்பிக்கை தன்னையே ஒளியாக்கிக்கொண்டு, இருண்ட கண்களில் அதனை ஏற்றி, விழாவினுக்குரிய இந்நாளில், தமிழகத்தோர்க்கு என் கனிவுமிகு வாழ்த்துக்களைச் செலுத்துகின்றேன். அணைத்த கரம் அடிக்கிறது, ஆனால், அடித்தது போதுமென்றெண்ணி மீண்டும் அணைத்துக்கொள்கிறது போலும். தம்பி! இயற்கையாள் தந்திடுவனவற்றைப் பெற்று, வாழ்வில் ஏற்றம் பெற்று, சிலர் மட்டும் வாழ்ந்திருத்தல் நன்றன்று. நாம் எவை எவை பெற்று இன்புற்றிருக்கின்றோமோ, அவைதமை அனைவரும் பெற்று மகிழ்ந்திடுவதே முறை, அதற்கே உளது இயற்கைச் செல்வம். பொங்கற் புதுநாளன்று இக் கருத்து நம் நெஞ்சில் ஏற்கவேண்டும், ஊறவேண்டும். கனியெலாம் சிலருக்கு, காய்சருகு பலருக்கு; ஒளியில் சிலர், பாழ் இருளில் பலர்; வாழ்வார் சிலர், வதைபடுவார் பலர்; எனும் நிலைகாண அல்ல; இத்தனைக் கோலம் காட்டி எண்ணற்றனவற்றை ஈந்து, என்றும் இளமையுடன் இயற்கையாள் கொலுவீற்றிருப்பது. அதிலும் தம்பி! இன்பத் தமிழகத்தினிலே, இயற்கையாள் தீட்டி வைத்துள்ள கோலம், எண்ண எண்ண இனிப்பளிப்பதாக உளது. நாமணக்கப் பாடிய நற்றமிழ்ப் புலவோரின் பாக்களில் காண்கின்றோம், பற்பல படப்பிடிப்பு. இயற்கைப் பொருள் ஒவ்வொன்று பற்றியும் மிகுந்த நுண்ணறிவுத் திறனுடன் புலவர்கள் கூறியுள்ளனர்; மலை, மரம், மடுவு, அலை, அடவி, கலகம், புலம், அருவி, வாவி, குளம் எனும் எவை பற்றியும் அந்நாளில் தாம் கண்டனவற்றைச் சுவைபட எடுத்துக் கூறியுள்ளனர் புலவர் பெருமக்கள். இயற்கையின் எழில், அந்த எழிலைக் காட்டும் பலவடிவங்கள், வகைகள் இவை மட்டும் காணக் கிடைக்கும் பட்டியலல்ல அந்தப் பாக்கள். விளக்கின் ஒளிகொண்டு வேறு பொருளைக் காட்டிடும் பான்மைபோல, இயற்கைப் பொருள்களைக்கொண்டு, இன்னுரை, நல்லுரை, வாழ்வு முறை என்பனவற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். இவை யாவும், தம்பி! அன்றோர் நாள்!! இன்று அந்த “அந்தநாள் சிறப்பினை’ மீண்டும் கண்டிட ஓர் சீரிய முயற்சியினில் ஈடுபட்டுள்ளனர் இந்நாளில். விழிப்புற்ற, கற்ற தமிழ் மறவாத மரபழிக்கும் மாபாதகம் வெறுத்திடும் தமிழ்ப் புலவோர். இடையிலேயோ! உயர உயரச் சென்றுவிட்டோம்! கொண்டு சென்றுவிட்டனர் தமிழர்களை! முல்லை பறித்திடச் சென்ற மங்கையை, வேழம் விரட்ட விருது பெற்ற வீரன் கண்டனன் என்ற கதை கூறினரன்றோ அந்த நாள் புலவோர்! ஓ! ஓ! இது மட்டுந்தானோ கூற இயலும் இவர்களால், நாம் கூறுகின்றோம் கேளீர்”மேல் உலக’க்காதை என்று அழைத்தனர் இடையில் வந்தோர்; பாரிஜாதம் காட்டினர், பாற்கடல் காட்டினர், பாசுபதம் காட்டினர், பற்பல விந்தைகளைக் காட்டினர், தமது காதைகளில்! உள்ளதை மறந்தனர் தமிழர்! உருவாக்கப் பட்டனவற்றைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டனர். அதன் காரணமாகவே, பல்வேறு விழாக்கள் - பண்டிகைகள் - தமிழகத்திலே மேற்கொள்ளப்பட்டன. பொங்கற் புதுநாள் அதுபோன்றதல்ல, இது நமது விழா; நம்மை நாம் உணர உதவும் விழா; இடையிலே படர்ந்தனவற்றை நீக்கி, தமிழரின் உள்ளத்தை மாசறு பொன்னாக்கி, ஒளிவிடு முத்து ஆக்கிடத்தக்க நன்னாள். பொங்கிற்று! பொங்கிற்று! பொங்கலோ பொங்கல்! என ஒஎழுப் பிவிடுவதனால் மட்டும் அல்ல! நான் முன்னம் கூறியுள்ளபடி, பொருள் உணர்ந்து பாடம் பெறுவதனால்!! பெறவேண்டுவனவற்றைப் பெற்றிடும் முயற்சியில் ஈடுபடுவதிலே ஏற்படக்கூடியது ஆர்வம்; இருந்ததை, இடையில் இழந்ததை மீண்டும் பெற்றிட எடுத்துக்கொள்ளப்படும் முயற்சி இணையற்ற எழுச்சியை ஊட்டிவிடுமன்றோ? அந்த எழுச்சி பெற்ற நிலையில், பொங்கற் புதுநாளை, புதுமையினைச் சமைத்திடும் பேரார்வம் பொங்கிடும் நாளாகக் கொண்டுள்ளனர். எனவேதான் தம்பி! நாட்டு வளம்பற்றி, மக்கள் நிலை குறித்து, அரசு முறைபற்றி, அறநெறி குறித்து, தாழாத் தமிழகம் என்ன கருத்துக் கொண்டிருந்தது என்பதனைக் கண்டறியும் ஆர்வம் மிகுந்துளது. இந்த ஆர்வத்தை மேலும் பெற்றிடச் செய்திட வேண்டும், பொங்கற் புதுநாள். இயற்கைச் செல்வம் இத்துணை பெற்றிருந்த இன்பத் தமிழகத்தில் இன்னல் கப்பிக்கொண்டிருக்கக் காரணம் என்ன என்று கண்டறிய வேண்டாமோ? கண்டறிய, உலகின் பல்வேறு இடங்களிலே இயற்கையாள் அளித்துள்ளன யாவை? ஆங்கு உள்ளோர் அவற்றினை எம்முறையில் பயன்படுத்தி ஏற்றம் கண்டுள்ளனர்? அம்முறையில், நாம் பெறத்தக்க அளவு யாது? பெற்றிடும் வழி என்ன? என்பனவற்றை அறிந்திடவேண்டுமன்றோ? வேண்டுமாயின், உலக நாடுகளின் வரலாற்றினை ஓரளவாகிலும் நாம் அறிந்திடவேண்டுமே? அறிகின்றோமா? மாலை நேரத்தில் மாபெரும் நகரங்களில் கூடி மக்கள் கூட்டம் இதுபோது பல்வேறு நாடுகளின் வரலாறு பற்றிய விரிவுரையையா கேட்டுப் பயன் பெற்று வருகிறது! இல்லையே! போகப்போகும் இடம்பற்றிய கதைகளை அல்லவா, இருக்கும் இடத்திலே இடரும் இழிவும் நீக்கிடும் முயற்சியை மேற்கொள்ளாத மக்கள் கேட்டு இன்புறுகின்றனர். இந்நிலையில் நாட்டவர் இருந்திடின், உலகின் நிலையினை உணர வழி ஏது, உணர்ந்து நம் நாட்டை நமக்கேற்ற நிலையினதாக்கிடும் முயற்சியில் ஈடுபடுவது ஏது? இங்கு வயலின் அளவு மிகுதி, விளைச்சலின் அளவு குறைவு என்கிறார்கள். பொருள்கள் இங்கு மிகுதியும் பெற்றிடலாம். ஆனால் பெற்றோமில்லை என்கிறார்கள். பெருகிடும் பொருளைக்கூட. சீராகப் பகிர்ந்தளித்தால் சமூக நலன் மிகும்; செய்யக் காணோம் என்கின்றார்கள். முப்புரம் கடலிருக்கிறது. ஆனால், கப்பல் வாணிபம் தேவைப்படும் அளவு இல்லை; மிகமிகக் குறைவு என்கின்றனர். இரும்பு கிடக்கிறது புதைந்து; ஆனால், எஃகு ஆலைதான் அமைக்கப்படவில்லை என்கின்றார்கள். கத்தும் கடல்சூழ்ந்த இடம் இது; எனினும், மீன்பிடி தொழிலும் வளரக் காணோம் என்கின்றார்கள், பொது அறிவு வளம் மிக்கவர் இவர் என்கிறார்கள், எனினும், புத்தறிவு பெற்றிடவில்லை என்று கூறுகிறார்கள். விழி உண்டு பார்வை இல்லை; வாயுண்டு பேசும் திறனில்லை; வளமுண்டு, வாழ்வு இல்லை; இதுபோல, நம் நாடு பற்றிப் பேசிடக் கேட்கின்றோம். ஏன் இந்த நிலை? எதனால் இம் முரண்பாடு? எவர் செய்த செயலால் இந்தச் சீரழிவு? என்பதனைக் கண்டறிய வேண்டாமோ? வளரவேண்டிய முறையிலும் அளவிலும் பயிர் வளரவில்லை என்றதும் உழவன், தம்பி! என்னென்ன எண்ணுகிறான்? என்னென்ன கேட்கின்றனர் அவனை, பூமிநாதர்கள்!! நாடு முழுவதிலும் இன்று உள்ளதோர் நலிவுநிலை குறித்து, காரணம் கண்டறிய, கேடு களைந்திட, நலம் விளைவித்திட நன்முயற்சியில் ஈடுபடவேண்டாமோ? இல்லையே, அந்த நன்முயற்சியும், ஒருவரிருவர், சிறு குழுவினர் மேற்கொண்டால் பலன் மிகுந்திராது, கிடைப்பதும் அவர்க்கு மட்டுமன்றோ போய்ச் சேரும்? நாடு வளம் பெற, பெற்றவளம் அனைவருக்கும் பயன்பட, பயன்படும் முறையை எவரும் பாழாக்காதிருந்திட, தனித் தனியாக முயற்சி செய்யப்படுவது, வளர்ந்துவிட்டுள்ள சமுதாயத்திலே முடியாததாகும். இதற்கான முயற்சியினை மேற்கொள்ளவேண்டுவது, அரசு. அரசு, தம்பி! அமைந்துவிடுவது அல்ல, நாம் அமைப்பது. அரசு நடாத்துவோரும், இதற்கென்று எங்கிருந்தோ எல்லாவிதமான ஆற்றலையும் பெற்றுக்கொண்டு இங்கு வந்தவர்கள் அல்லர்; நம்மில் சிலர், நமக்காக, நம்மாலே நமை ஆள அமர்த்தப்பட்டவர். பொருள் என்ன? விதைக்கேற்ற விளைவு! அரசு அமைத்திடும் திறம் நமக்கு எவ்விதம் உளதோ அதற்கு ஏற்பவே அரசு! எனவே, நாட்டு வளம் காண அரசு முயற்சியில் ஈடுபடல் வேண்டும் என்று கூறிவிட்டு, நாம் கைகட்டி வாய்பொத்திக் கிடந்திடின் பயன் இல்லை; நல்லரசு அமைத்திடும் முயற்சியினைத் திறம்பட மேற்கொண்டு அதிலே நாம் வெற்றி பெற்றிடல் வேண்டும். உழவன் பெற்ற வெற்றிகளன்றோ உன்னைச் சுற்றி இன்று! செந்நெலும், காயும் கனிவகையும், உண்பனவும் உடுப்பனவும், பூசுவனவும், பூண்பனவும்!! அவன் பெற்ற வெற்றிக்காக எத்துணை உழைப்பினை நல்கினான், நாடு முழுவதும் வளம்பெற, ஓர் நல்லரசு அமைத்திட வேண்டுமே, அந்தப் பணிக்காக நாம் எத்தனை அளவு உழைத்துள்ளோம்? அதுகுறித்து நம் மக்கள் எந்த அளவு தமது சிந்தனையைச் செலவிடுகின்றனர்? சிந்தனையில் எந்த அளவு தெளிவு பெற்றுள்ளனர்? தெளிவு பெற்றிடத்தக்க நிலையில், எத்தனை பேர்களுக்கு வாழ்க்கை அமைந்திருக்கிறது? எண்ணிப் பார்த்திடும்போது தம்பி! ஏக்கம் மேலிடும். ஆனால், ஏக்கம் மேலிட்டு ஏதும் செய்ய இயலா நிலையினராகிவிடின் நாடு காடாகும்; மக்கள் பேசிடும் மாக்களாவர். எனவே, அந்த ஏக்கம், நம்மைச் செயல்புரிய வைத்திடும் வலிவாக மாறிட வேண்டும்; மாற்றிட வேண்டும். உலகிலே பல்வேறு நாடுகளில், இடர்ப்பட்ட மக்கள், இழிவு நிலையினில் தள்ளப்பட்ட மக்கள், துக்கத்தால் துளைக்கப்பட்டு, ஏக்கத்தால் தாக்கப்பட்டு, இதயம் வெந்து, இடுப்பொடிந்து ஏதும் செய்ய இயலாத நிலையினராகி விட்டவர்போக, சிலர் - மிகச்சிலர் - துணிந்து எழுந்தனர், எதிர்த்து நின்றனர், வெற்றி கண்டனர். பெருமூச்சிலிருந்து புன்னகை பிறந்தது! சிறைக் கோட்டங்களிலிருந்து மக்களாட்சி மன்றங்கள் அமைந்தன. வெட்டுண்ட தலைகளிலிருந்து கொட்டிய இரத்தத் துளிகள், கொடுமையை வெட்டி வீழ்த்தும் கூர்வாளாயின! இதுபோல் ஆகும் என்பதனை அன்றே உணர்ந்து உரைத்தார் பொய்யா மொழியார். ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும் என்பதாக. கொடுமைக்கு ஆளான மக்கள் கொட்டிய கண்ணீர், ஆதிக்கக் கோட்டைகளைத் தூளாக்கிடும் வெடிகுண்டுகளாயின. வரலாறு காட்டுகிறது, வல்லூறை விரட்டிய சிட்டுக்குருவிகளின் காதையை! நமது மக்களுக்கு இதனை எடுத்துக் கூறுவார் யாருளர்! கூறாதது மட்டுமோ! கருங்குருவி மோட்சம் பெற்ற காதையும், கரிவலம் வந்த சேதியுமன்றோ அவர்கட்கு இசை நயத்துடன் கூறப்பட்டு வருகிறது. தம்பி! ஊர்ந்து செல்லும் ஆமையைக்கூட, பாய்ந்து செல்லும் புரவிகள் பூட்டிய வண்டியில் வைத்தால், போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு விரைவாகவும் எளிதாகவும் போய்ச் சேரும். இங்கு நாம் ஆமைகள் பூட்டிய அலங்கார வண்டியில் பாய்ந்தோடவல்ல குதிரையை ஏற்றி வைத்து, ஒரு விந்தைப் பயணம் நடத்திப் பார்க்கிறோம். கனி பறித்துச் சாறு எடுத்துப் பருகிடுவார் உண்டு; முறை; தேவை. இங்கு நாமோ, கனி எடுத்துச் சாறுபிழிந்து, அந்தச் சாற்றினைக் காய்கள் மேல் பெய்து தின்று பார்க்கின்றோம். இந்த நாட்டிலேதான் தம்பி! இந்த இருபதாம் நூற்றாண்டில், இத்தனை திரித்துக் கூறுவதும் இருட்டடிப்பிலே தள்ளுவதும், இட்டுக் கட்டுவதும், இழிமொழி பேசுவதும் தாராளமாக நடத்திச் செல்ல முடிகிறது, ஆதிக்கக்காரர்களால். இங்கு நாம் மனிதத் தன்மைக்காகவும், பகுத்தறிவுக்காகவும் வாதாடினால், நாத்திகப் பட்டத்தைச் சுமத்திவிடுவதும், ஒற்றுமைப்பட வேண்டும், பேதம் கூடாது, அதனை மூட்டிடும் ஜாதிகள் கூடாது என்று பேசினால், சமுதாயக் கட்டினை உடைக்கிறோம் என்று பழி சுமத்துவதும், பெண்ணை இழிவுபடுத்தாதீர் என்று பேசினால், ஒழுக்கத்தைக் கெடுக்கிறோம் என்று ஓலமிடுவதும், ஏழையின் கண்ணீரைத் துடைத்திடுக! என்று கூறினால், வர்க்கபேதமூட்டிப் புரட்சி நடத்தப் பார்க்கிறான் என்று பேசிப் பகை மூட்டியும், ஆட்டிப் படைக்கும் அளவுக்கு அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து வைத்துக்கொள்வது நல்லதல்ல; அதிகாரத்தைப் பரவலாக்கிடுக! என்று கூறினால், அரசு அமைப்பை உடைக்கப் பார்க்கிறான் என்று கொதித்தெழுந்து கூறியும், நாம் மேற்கொள்ளும் முயற்சிக்கு மக்களின் நல்லாதரவு கிடைத்திடுவதைத் தடுத்திடும் நோக்குடன் செய்து வருகின்றனர். தம்பி! தம்பி!! தூய தமிழுக்காகப் பேசிப்பார்! ஓ! இவனுக்கு "மொழி வெறி’ என்று கூறிக் கிளம்புவர் கோலோச்சும் குணாளர்கள். சங்கத் தமிழ் மணக்கும் தமிழகத்தவர்க்கும் சேர்ந்தா இந்தியெனும் ஆட்சிமொழி என்று கேட்கின்றோம்; தேச பக்தி அற்றவர்கள் என்றன்றோ தூற்றப்படுகின்றோம்? கண்ணீர் வடித்திடுகின்றனரே பல லட்சம் தமிழர் கடல் கடந்து சென்றுள்ள நாடுகளிலே, கொடுமையாளர்களால் என்று பேசும்போது, இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் பகை மூட்டுகிறான்; பாதுகாப்புச் சட்டத்தின்படி இவனைப் பிடித்தடைக்க வேண்டும் என மிரட்டுகின்றனர். தொழில்கள் மிகுதியாக நாட்டின் ஓர் பகுதியில் குவிந்திடல், பொருளாதார ஏற்றத்தாழ்வை உண்டாக்கிடும்; எனவே, புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் தென்னகத்தில் புதுப் புதுத் தொழிலைத் துலங்கிடுக! என்று கூறிடுவோரை "பாரதப் பண்பு’ அற்ற மாபாவிகள் என்று ஏசுகின்றனர். தொழிலில், பெருத்த வருவாய் தரத்தக்கனவற்றை எல்லாம் முதலாளிகளிடம் விட்டுவிடுகின்றீர்களே, இதுவோ சமதர்மம் என்று கேட்டிடின், இவன் தொழில் வளர்ச்சியைக் கெடுக்க முயலுகிறான் என்று கூறுகின்றனர். சர்க்கார் துவக்கி நடத்தும் தொழில்களில், தக்க வருவாய் பெறவில்லையே! இது முறையல்லவே! என்று பேசிடின், இவன் சர்க்கார் துறையை வெறுப்பவன், சுதந்திரக் கட்சியினனாகிறான் என்று கலகப் பேச்சை மூட்டிவிடுகின்றனர். கண்மண் தெரியாமல் கடன் வாங்கிக்கொண்டு போகிறீர்களே, இது பெருஞ்சுமையாகிவிடுமே, எதிர்காலச் சந்ததி இடர்ப்படுமே! என்று கூறிடின், நாடு வளம் பெற வழி தேடினால் இவன் குறுக்கே நிற்கிறான் என்று குறைகூறுகின்றனர். விலைகள் ஏறியபடி உள்ளனவே என்றால், இதைக் கூறி, அரசியல் இலாபம் தேடப் பார்க்கிறான் என்கிறார்கள். ஊழல் மலிந்திருக்கிறதே, ஊடுருவிக் கிடக்கிறதே என்றால், எத்தனையோ நாடுகளில் இதுபோல என்று சமாதானம் கூறுகின்றனர். தம்பி! எடுத்துரைக்கும் எதனையும் மதித்திட மறுக்கின்றனர்; திரித்துக்கூற முற்பட்டுவிடுகின்றனர். ஏடுகளிலே மிகப்பல இதற்குத் துணை செய்கின்றன. இந்நிலையில், இவ்வளவு பேர்களாகிலும், துணிந்து பேசுகின்றனரே என்பது உள்ளபடி பாராட்டி வரவேற்கப்படவேண்டியதே. நாடே போர்க்கோலம் பூண்டுவிடும் நேரத்தில், நானும் அதில் கலந்திருந்தேன் என்று கூறிக்கொள்வதிலே கிடைத்திடும் பெருமை அதிகமில்லை; இன்று நம்முடன் நாட்டவரில் பலர் இல்லை, நல்லறிவு கொளுத்தி நல்லாட்சி காணப் பாடுபடும் கடமையுடன் பணியாற்றவேண்டிய இதழ்களில் பல இல்லை என்ற நிலையில், எவர் வரினும் வாராதுபோயினும், இன்னலுடன் இழிவு சேர்ந்து வந்து தாக்கினும், இவன் நமக்காகப் பாடு படுகிறான் என்பதனைக் கூறிடவும் பலருக்கு நினைப்பு எழாது போயினும், எத்தனை சிறிய அளவினதாக இப்படை இருப்பினும், இதிலே நான் இருந்து பணி புரிவேன்; என் இதயம் இடும் கட்டளையின்படி நடந்திடுவேன்; என் நாட்டைக் கெடுக்க வரும் எதனையும், எவரின் துணைகொண்டு வந்திடுவதாயினும், எதிர்த்து நிற்பேன், சிறைக்கஞ்சேன், சிறுமதியாளர்களின் கொடுமைக்கஞ்சேன், செயலில் வீரம், நெஞ்சில் நேர்மை, உறுதி கொண்டிட்டேன், செல்வேன் செருமுனை நோக்கி என்று சென்று அணிவகுப்பில் சேர்ந்துளரே அவர்க்கே பெருமை அளவிலும் தரத்திலும் மிகுதி! மிகுதி! அத்தகைய அணிவகுப்பில் தம்பி நீ உள்ளாய்; அகமகிழ்ச்சி எனக்கு அதனால்; உன் ஆற்றல் நானறிவேன், "நானிலம்’ அறியும் நாளும் வந்தே தீரும். பூத்த மலரிலெல்லாம் வாசம் உண்டு; நுகர்வோர் குறைவு என்றால், மலர்மீது அல்ல குற்றம். இதோ இந்தப் பொங்கற் புதுநாளன்று, எத்தனையோ இல்லமதில், என் அப்பா சிறை சென்றார்! என் அண்ணன் சிறை சென்றான்! என் மகன் சிறை சென்றான்! செந்தமிழைக் காத்திடவே, சிறை சென்றான் என் செம்மல்! என்று பேசிப் பெருமிதம் அடையத் தான் செய்வர். பலப் பல இல்லங்களில், பாற்பொங்கல் இன்றிங்கு, பண்பற்ற ஆட்சியாளர் என் மகனை இங்கிருக்க விட்டாரில்லை; இருட்சிறையில் அடைத்திட்டார்; இருப்பினென்ன! கண் கசிய மாட்டேன் நான், கடமை வீரனவன்! காட்டாட்சி போக்குதற்குப் போரிட்டான்; மகிழ்கின்றேன் என்று கூறிடுவர், தமிழ் மரபு அறிந்ததனால். பொங்கற் புதுநாளில் எத்தனையோ இல்லமதில், இணைந்து நம்மோடு இல்லாது போயிடினும், நம்மைப்பற்றி எண்ணாதார், இலலை என்று கூறிடலாம். மக்களைத் தாக்கிடும் கேடு எதுவானாலும், கேட்டிட முன்வருவோர் கழகத்தார்! ஆமாம்! அவர்கள் கேட்ட உடன், பாய்கின்றார் அரசாள்வோர், எனினும் பயமும் கொள்கின்றார்; பாவிமகன் கழகத்தான் பற்பலவும் கூறித்தான், அம்பலப்படுத்தி நம் ஆட்சிக்கு ஆட்டம் கொடுத்தபடி இருக்கின்றான் என்றஞ்சிக் கிடக்கின்றார் ஆளவந்தார் எனப்பேசிச் சிரித்திடுவர். புள்ளினம் கூவினதும், பூக்கள் மலர்ந்ததும், புறப்பட்டான் கதிரவனும், புறப்படுவோம் துயில்நீங்கி என்று எல்லா மாந்தருமா கிளம்புகின்றார்? கிளம்பாதுள்ளோர் கண்டு கதிரவன் கவலை கொள்ளான். பாடிடவோ மறவாது புள்ளினந்தான், மலர்ந்து வரவேற்கும் பூக்களுமே! தம்பி! கதிரவனாய், கானம் பாடிடும் வானம்பாடியாய், மணம் பரப்பிடும் மலராக நீ இருக்கின்றாய். மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு, மாசற்றது உன் தொண்டு என்பதனால், நாம் ஈடுபட்டுள்ள பணி எதனையும் எடுத்தாய்ந்து பார்த்திட்டால், தூயது அப்பணி, அறிவாளர் வழிநின்று ஆற்றுகின்றோம் அப்பணியினை என்பதனை அறிந்திடலாம். வந்து புகுந்து கொள்ளும் இந்தியினை எதிர்க்கின்றோம்; இடரில் தள்ளுகிறார் இந்திக்குத் துணைநிற்போர்; இழித்துப் பேசிவிட்டு எனக்கென்ன சுவைப்பண்டம் என்று கேட்டு நிற்கின்றார் மாற்றார் தொழுவத்தில், மரபழித்தார்; ஆயினுமென்! நம் கடமைதனை நாம் செய்தோம் என்ற மனநிறைவு நமக்கு இன்று; நாளை வரலாற்றில் அதனைப் பொறித்திடுவர். எதிர்த்தாய் என்ன பயன்? இந்தி ஏறும் அரியாசனம் என்பது உறுதியன்றோ! என்று கேட்பாரும் உளர்; கெடுமதியால் நடமிடுவோர் கேட்டிடட்டும். கேலியாம் அம்மொழியும் நம் விலாவை வேலாகக் குத்தட்டும்; ஈட்டியாய் அப்பேச்சு நம் இதயத்தில் பாயட்டும்; இருக்கும் வீரம் பன்மடங்கு கொப்பளித்து எழட்டும்; தூற்றுவோர் தூற்றட்டும், தொடரட்டும் நமது பணி என்போம் நாம். மலக்குழி கண்டேன் நான், ஒதுங்கி நடக்கின்றேன். மலமே உனக்கு மணமளிக்குதே அந்தோ! என்றுகூட நாம் அன்னவரைக் கேட்டிடல் வீண் வேலை. எதிர்த்து வந்த சிறுத்தையினை எதிர்த்து நின்றேன் வீரமாய் நான்; என் உடலில் அதன் கீறல். பற்கள் படிந்துள்ள நிலைதான்; குருதி கசிகிறது உண்மை; சொல்ல நான் துடிதுடித்தேன், எனைத்தாக்கி ஓடிப்பதுங்கி, உறுமிக்கிடக்கிறது அச்சிறுத்தை? கூடி அதனைத் தாக்கிக் கொன்றுபோட வாராத கோழையே! என்னை நீ கேலிவேறு செய்வதுவோ! சிறுத்தையின் வாயினிலே கசியும் செந்நீரைப் பானமாய்ப் பருகும் ஈ, எறும்பு, பூச்சி, நீ! என்று கூறிடலாம் ஏசித்திரிவோரை! வீண் வேலை! நேரம் இல்லை! நம்மாலானவற்றை நாம் செய்தாக வேண்டும்; நாமிருந்தும் இந்திக்கு எதிர்ப்பு இல்லை என்ற பேச்சு எழவிடோம், இது உறுதி. மொழித் துறையினிலே புகுத்தப்படும் அக்கிரமம் நிறைந்த ஆதிக்கம், அத்துடன் நில்லாது. காலிலோ கரத்திலோ எந்த இடத்திலே கருநாகம் தீண்டிடினும், உடலெங்குமன்றோ விஷம் பரவி உயிர் குடிக்கும். அஃதேபோல, மொழித் துறையினிலே ஆதிக்க நச்சரவு பதித்திடும் பல்லினின்றும் கக்கிடப்படும் நஞ்சு, தமிழரின் உடல் முழுவதிலும் பரவும்; வாழ்வு அழியும். மொழி ஆதிக்கம், நிர்வாக ஆதிக்கத்துக்கு இடமேற் படுத்தும், அஃது பொருளாதார ஆதிக்கத்திற்கு வழிகோலும், பிறகோ தமிழர் அரசியலில் அடிமைகளாகி, அல்லற்படுவர். இதனை அறிந்தோர் கூறி வருகின்றனர்; ஆலவட்டம் சுற்றிடுவோர் மறுத்துப் பேசி, ஆளவந்தார்களை மகிழ வைக்கின்றனர். எமக்கேன் விடுதலை!! விடுதலை பெற்றால் நம்மைக் காத்திடும் பொறுப்பினை எவர் ஏற்றுக்கொள்வர்? வேலைக்கு வழி ஏது? சோற்றுக்கு வழி ஏது? செத்துவிடத்தான் இது வழி. ஆகவே, விடுதலை வேண்டாம்!! வெள்ளை எஜமானர்களின் பாதமே நமக்குப் பாதுகாப்பு என்று நீக்ரோக்களில் சிலரைப் பேசவைத்தனர் வெள்ளை வெறியர்கள். . ., விடுதலைக் கிளர்ச்சியைத் துவக்கிய நாட்களில். இங்கு நம்மிடையே உள்ளோரில் சிலர் இந்தி ஆட்சி மொழியானால் என்ன என்று கேட்கும்போது, தம்பி! எனக்கு அந்தப் பழைய நிகழ்ச்சிதான் நினைவிற்கு வருகிறது. உடலிலேயே தான் நோய் தங்கி இருந்து, உடன் இருந்தே கொல்லுகிறது; பாசி, குளத்திலேயேதான் உண்டாகிறது; களை, வயலிலேயேதான் முளைக்கிறது, காட்டிக் கொடுப்போரும் அதுபோன்றே நமது சமுதாயத்திலேயே உள்ளனர், மினுமினுப்புடன், மிடுக்குடன், துரைத்தனத்தாரின் மேய்ப்புத் தேய்ப்புப்பெற்று!! காட்டுக் குதிரைக்கு ஏது, தங்கமுலாம் பூசப்பட்ட கடிவாளம்? இல்லையல்லவா! நாட்டிலே, பூட்டுவார்கள் விலையுயர்ந்த கடிவாளம் குதிரைக்கு. எதற்கு? நாம் ஏறிச் செல்லும் வண்டியை அக்குதிரை இழுத்துச் செல்ல வேண்டுமே! காண்போர் எப்படிப் பட்ட விலை உயர்ந்த குதிரை என்று கண்டு அதனை உடையவரைப் பாராட்ட வேண்டுமே. . . அதற்காக! அதுபோல, தமிழரில் சிலர் உளர். தம்பி! மொழிப் பிரச்சினைபற்றி நான் குறிப்பிட்டதற்குக் காரணம் இந்த ஆட்சி, எப்படியெப்படி ஆதிக்கத்தைப் புகுத்துகிறது என்பதனை எடுத்துக் காட்டிட மட்டுமல்ல; வித்தகர்களின் பேச்சுக்கும் மக்களின் மனக் குமுறலுக்கும் ஒரு துளியும் மதிப்பளிக்காத மமதை கொண்டதாக இருக்கிறதே இந்த அரசு, இவர்களிடமிருந்து எவர்தான் எந்த நியாயத்தைத்தான் எதிர்பார்த்திட முடியும்!. . . என்பது குறித்து எண்ணிடும்போது ஏற்படக்கூடிய திகைப்பையும் எடுத்துக் காட்டத்தான். தம்பி! அதோ காண்கிறாயே, கொதி வந்ததும், சோற்றைப் பார்க்கிறார்கள்; அரிசி, சோறாகி இருக்கிறது. அரிசிதானே! அதனுடன் கலந்த கல்லுமா? இல்லையே! கல் கல்லாகவேதான் இருக்கிறது, எத்தனை தீ அதனைத் தாக்கிடினும். வேகக் கூடியதைத்தான் வெந்திடச் செய்யலாம். அடுக்களை எடுத்துக் காட்டும் இந்தப் பாடம் அரசியலுக்கும் பொருந்தக்கூடியதே. இந்த பானை, வேகும் பண்டம் கொண்டதல்ல, இது வெந்து சுவை தரும் பண்டமாகும் என்று எத்தனை நேரம் நெருப்பை எரியவிட்டாலும் வீணாகித்தான் போகும், என்பது. எனவே இந்த வேகாச் சரக்கை எடுத்து வீசிவிட்டு வேறு கொள்ளவேண்டும். இன்றுள்ள போக்குடனும் இயல்புடனும் இவ்வரசு இருந்து வருமானால் நாம் இருக்க விட்டுவைத்திருப்போமானால் - எந்த ஒரு பிரச்சினைக்கும், சிக்கு நீக்கப்பட்டு மக்கள் மகிழத்தக்க "பரிகாரம்’ கிடைத்திடாது. உணவுப் பிரச்சினை, விலை ஏற்றப் பிரச்சினை, தொழில் வளம் சீராக அமையும் பிரச்சினை, வறுமையை ஓட்டும் பிரச்சினை, உரிமைப் பிரச்சினை எனும் எதுவாக இருப்பினும், ஒரு ஆணவம், ஒரு அலட்சியப்போக்கு, எல்லாம் எமக்குத் தெரியும் என்ற முடுக்கு, எவர் எம்மை என்ன செய்துவிட முடியும் என்ற இறுமாப்பு, இவைதான் தலைவிரித்தாடுகின்றன. இதனை ஒவ்வொன்றிலும் பார்க்கிறோம் தம்பி! இலங்கைவாழ் மக்களைக் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தமும், பர்மாவாழ் மக்களைப் பதைக்கப் பதைக்க அந்த அரசு இங்கு ஓட்டிவிட்டதனைப் பார்த்துக்கொண்டு சிறுவிரலையும் அசைக்காது இருக்கும் போக்கும் எதனைக் காட்டுகின்றன? இந்த அரசு மக்களின் நலன்களை, உரிமையினை, வாழ்வை, துச்சமென்று கருதித் துவைத்திடும் இருப்புக்கால் கொண்டது என்பதைத் தானே!! இந்நிலையிலுள்ள ஓர் அரசு, நான் குறிப்பிட்டுள்ள முறைப்படி இயற்கைப் பொருளை நுண்ணறிவுடன் விஞ்ஞான முறைப்படி பயன்படுத்திச் செல்வம் பெருகிடச் செய்து, பெருகிடும் செல்வத்தை அனைவரும் சீராகப் பெற்று, இல்லாமை, போதாமை எனும் கேடு களையப்பெற்று, எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடத் தக்க புது முறையை, பொற்காலத்தை அமைத்திடவா முனையும்! வீண், அந்த எண்ணம். அதற்கு ஏற்றது இந்த அரசு அல்ல! சாறு, கரும்பில் கிடைக்கும்! மூங்கிற் கழியில் கிடைத்திடுமோ! இதனை இன்று உணர்ந்து, சமுதாயத்தின் அழுக்குகளும் இழுக்குகளும் நீக்கப்படத்தக்கதான முறை கண்டு நடாத்தும் ஓர் அரசு அமைத்திடும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஓடப்பர் உயரப்பர் எனச் சமுதாயம் பிளவுபட்டிருக்கும் நிலையை மாற்றிட வேண்டும், எல்லோரும் ஒப்பப்பர் ஆகிட வேண்டும் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். "அதைத்தானே நாங்கள் செய்து வருகிறோம், சமதர்மத் திட்டமிட்டு’’ என்கிறார்கள் ஆளவந்தார்கள். இவர்கள் மேற்கொள்ளும் சமதர்மத்தைக் கண்டு நாம் கவலைப்படத் தேவையில்லை, இவர்களின் சமதர்மம் நமது உரிமைகளையும் நமக்குள்ள சலுகைகளையும் பாதுகாத்திடும் சமதர்மம்! ஆகவே, முதலாளிகளே! சமதர்மம் என்ற சொல் கேட்டு மிரண்டிடாமல் இந்தியாவில் எத்தனை எத்தனை ஆயிரம் கோடி முதலையும், அச்சமின்றிப் போட்டுத் தொழில் நடத்திடுவீர்!. . . என்று அமெரிக்க நாட்டு முதலாளிகளுக்கு, அந்நாட்டு அரசியற் பெருந்தலைவர்கள் கனிவாகக் கூறுகிறார்கள்; அமெரிக்கக் கோடீஸ்வரர்கள், இந்தியா போன்ற "சந்தை’ வேறு இல்லை என்று கூறிப் பேரானந்தம் கொள்கின்றனர். அமெரிக்க “முதல்’ வேறு எங்கும் ஈட்டிக் கொடுத்திடாத அளவு”வருவாய்’ இந்தியாவிலே அவர்களால் பெறமுடிகிறது. பெயர் சமதர்மம்!! நாற்பதனாயிரம் தொழில் வணிகக் கோட்டங்கள் இணைந்த பிரிட்டிஷ் தொழில் அமைப்பு, இதுபோன்றே, "நாம் இந்தியா மேற்கொண்டுள்ள சமதர்மத் திட்டம் பற்றிக் கவலையோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை. சமதர்மம் என்று அவர்கள் சொல்லுவதாலே நாம் தொழிலிலே போட்டிருக்கும் முதலுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்பட்டு விடாது’’ என்று கருத்தறிவித்திருக்கிறது. பொருள் விளங்குகிறதல்லவா தம்பி! நோஞ்சான். பயில்வான் என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிறான், அவ்வளவுதான்! முதலாளிகளின் முகாம் இந்தியா. . . அதற்குப் பெயர், சமதர்மம்!! உண்மை நிலை இதுபோல இருப்பதனால்தான் இவர்கள் நடத்திக்கொண்டுவரும் திட்டம், பணக்காரர்களுக்கே பெரிதும் பயன்பட்டுவிட்டிருக்கிறது. மகனா லோபீஸ் குழு (துரைத்தனமே அமைத்தது) இதனை எடுத்துக்காட்டியும் விட்டது. ஆகவே, ஏழையை வாழ வைத்து, எல்லோரும் பொங்கற் புதுநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிடத்தக்கதோர் நிலையைக் காண வேண்டுமானால், இன்றுள்ள அரசை நம்பிக்கொண்டிருந்தால், ஏமாற்றமடைவோம். கவனித்துப் பார், தம்பி! இஞ்சி போட வேண்டிய இடத்தில் மஞ்சளைப் போடுகிறார்களா என்று! அந்தப் பக்குவத்தைக் கவனி! ஒரு வேளைச் சோற்றுக்கு இவ்வளவு பக்குவம், முறை, தெளிவு, முயற்சி வேண்டும். முந்தானை கொண்டு அந்த வியர்வை முத்துக்களைத் துடைத்துக்கொள்ளக் கூட நேரமின்றி உன் குயிலாள் வேலை செய்த பிறகுதான் தம்பி! உனக்குப் பொங்கல், பால், பழம். உழைப்பு! முறையான உழைப்பு! பக்குவமான முறை! இடமறிதல்! நேரமறிதல்! அளவறிதல்,. . . இத்தனையும் வெறும் சொற்கள் அல்ல!! இவைகளின் வடிவங்களே, மனையிலே காண்கின்றாய்! புதிய சமுதாயம் படைத்திட, இவைகளைக் கண்டு கருத்தறிதல் வேண்டும். கண்டு கருத்தறிதலோ கடினம்; ஆனால் தேவை; மிக மிகத் தேவை. அறிந்ததை மற்றவர்கட்கு எடுத்துரைத்தல் அதனினும் கடினம்; மிகமிகத் தேவை. நாடு வாழ்ந்திட, மக்கள் ஏற்றம்பெற, நம் ஆன்றோர்கள் சான்றோர்கள் கூறியன யாவை என்பதனை ஆய்ந்தறிய இவ்விழா நாளில் முயன்றிட வேண்டும். இன்றுள்ள புத்தறிவினர் கூறியுள்ளனவற்றினை அன்றிருந்த நம் ஆன்றோர்கள் கூறியுள்ளனர் என்பது, கண்டு, கண்சிமிட்டி மகிழ்ந்திருப்பது மட்டும் பயன் தராது. அன்று முதற்கொண்டு சொல்லியும் இன்றுவரை அம்மொழி வழி நாம் நடந்தோ மில்லையே என்றெண்ணி வெட்கித் தலைகுனிதல் வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே நமக்கு வள்ளுவர் கூறியுள்ளார். கூறி? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று இந்நாளில் பாரதியார் கூறிக் காட்டவேண்டியதாயிற்று அதற்குப் பிறகும், ஜாதிப் பிடிப்பும் பித்தமும் நீங்கியபாடில்லையே! பேழையில் பொருளை அடைத்து, பேதையொருவன் அதன்மீதே, பட்டினி கிடந்த நிலையில் சாய்ந்திருந்தான் என்றால் - அப்படி ஒரு கதை சொன்னால் - வியப்படைகின்றோம், அறிவுப் பேழை இங்கு. . . ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே!! எனினும் எத்தனை பேதம், பிளவு, மதியற்ற போக்கு, குருட்டுப் பிடிவாதம், முரட்டுவாதம் சே!! தம்பி! இதனை எண்ணிடும்போது உள்ளபடி வெட்கம் விலாவினைக் குத்திடுகிறது. ஆகவே, அன்றிருந்தோர் கூறிச் சென்ற அரிய கருத்துக் களையும், இன்றுள்ள நூலோர் தந்திடும் நற்கருத்துக்களையும் அறிந்து. மற்றவர்க்கும் அறிவித்து அதற்கேற்ப, நமது முறைகளை, ஏற்பாடுகளைத் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும். மாக்கோலம் போடக் காண்கிறாயே, உன் மனத்தை வென்றாள்! வெண்குழம்பினைக் கலயத்திட்டு, தரைதனைக் கூட்டித் துப்புரவாக்கி, என்ன வரைவது எனத் தேர்ந்தெடுத்துத் திட்டமிட்டு, கோலம் போட்டிடக் காண்கிறாய் - வெண் குழம்பைக் கீழே கொட்டிவிட்டு நடப்போர் கால்பட்டுப் பட்டு ஏதேனும் ஓர் கோலம் உண்டாகட்டும் என்றா இருந்து விடுகின்றாள் உன் ஏந்திழை! இல்லையே? சமுதாயம் புதுக்கோலம் கொள்ள, நீயும் நானும் இன்னமும் என்ன வண்ணக் குழம்பு தேவை? எத்தகைய வட்டிலில் இடுதல் வேண்டும்? என்பது குறித்தேகூட, ஒரு திட்டவட்டமான எண்ணம் கொண்டிடத் தயக்கப்படுகிறோமே! புத்துலகு சமைத்திட எங்ஙனம் இயலும்? நமக்கு நெடுங்காலத்துக்குப் பிறகு, அடவி நிலையினின்றும் விடுபட்டு, நாடு கண்ட இனத்தவரெல்லாம் இன்று தத்தமது நாட்டினைப் புதுமைப் பூங்காவாக்கிப் பொலிவுடன் திகழ்கின்றனர். நாமோ, வித்திடும் செயலைத் தானும் முறையாக மேற்கொண்டோமில்லை. சமூக அமைப்பிலும் செயலிலும் நெளியும் கேடுகளைக் கண்டித்திடும் துணிவுடன் நம் பேச்சும் எழுத்தும் உள்ளனவா? இல்லை! ஒரு சிலர் துணிவு பெற்றிடினும், பாய்கின்றனர் அவர்மீது; பாவி! பழிகாரன்! பழைமையை அழிக்கின்றான்! பாபக் கருத்தைப் புகுத்துகின்றான்! நாத்திகம் பேசுகிறான்! வகுப்பு வெறி ஊட்டுகிறான்! என்றெல்லாம் கதைக்கின்றனர். ஜாதிப் பிடிப்புகளையும் அவைகளுக்கான மூடக் கோட்பாடுகளையும், "புதிய நாடுகள்’ என்று நாம் வெகு எளிதாகக் கூறிவிடுகின்ற இடங்களில், எத்தனை காலத்துக்கு முன்பே, எத்துணைத் துணிவுடன் தாக்கினர், தகர்த்தனர் என்பதனை அறியும்போது வியப்படைகிறோம். ஏழையர்க்காக வாதாடினவர்கள், செல்வபுரிக் கோட்டைகள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள்; மூட நம்பிக்கைகளை முறியடித்தவர்கள் அங்கெல்லாம் இருநூறு ஆண்டுகட்கு முன்பே வீரஞ்செறிந்த பாக்களை இயற்றினர்; புரட்சிக் கருத்தினை அளித்தனர். இங்கோ, அந்த முனையில் பணியாற்றத் துணிபவனை, பாரதப் பண்பாட்டை அழிப்பவன், பக்தி நெறியைப் பழிப்பவன் என்றெல்லாம் ஏசிப் பேசிடக் கிளம்புகின்றனர். 1873-ம் ஆண்டு பிறந்தவர் ஆங்கிலக் கவிஞர் ஜான்மேஸ்பீல்டு என்பார். சங்கத்தில் பயின்று, சீமான்களின் அரவணைப்புப் பெற்றுக் கவி பாடி அரங்கேற்றினவர் அல்ல! கப்பலில் கூலி வேலை செய்துவந்தவர். மற்றும் பல கடினமான உழைப்புகளைச் செய்து பிழைத்து வந்தவர் - அவர். "நான் கவி பாடுவேன்; யாருக்காக? ஏழைக்காக!’’ என்ற கருத்துப்பட ஒரு கவிதை இயற்றினார். அன்று இருந்த அறிவாளர்களிடையேயே அக்கவிதை புரட்சியை மூட்டிவிட்டது என்கிறார்கள். எவரைப்பற்றிப் பாடப்போவதில்லை என்பதனை முதலிலேயே தெரிவித்துவிடுகிறார் மேஸ்பீல்டு: வாழ்வின் சுவைதன்னை வகையாய்ப் பல்லாண்டு உண்டு உடல் பெருத்து ஊழியர் புடைசூழத் தண்டு தளவாடமுடன் தார் அணிந்து தேரேறும் அரசகுமாரர், அருளதிபர் தமைக் குறித்து அல்ல! புலவர் கவி பாடுகிறார் என்றால், அது, மன்னனை அல்லது அருளாளனைப் புகழ, போற்றத்தானே இருக்க முடியும் என்ற எண்ணம் அழுத்தமாக இருந்திருக்கிறது. 1873-ம் ஆண்டல்லவா! அதை அறிந்து, மேஸ்பீல்டு நான் உங்களுக்குப் பழக்கமான கவிஞன் அல்ல, நான் புதுமைக் கவிஞன் - நான் மன்னனைப் பற்றியுமல்ல, தேவாலயத்து அதிபனைப்பற்றியும் அல்ல பாடப்போவது!! - என்று தெரிவிக்கிறார். "அரசகுமாரர் அருளாலய அதிபர் தமைக்குறித்து அல்ல!’’ என்ற துவக்கமே, துணிவு நிரம்பியது. கவிவாணர்கள் நெடுங்காலமாகப் பாடிக்கொண்டு வந்த முறையை நீக்கிவிட்டு, நீ புது முறையில் பாடப்போகிறாயோ? எவரைப்பற்றி? என்று கேட்பார்கள் அல்லவா! கூறுகிறார்!! இன்னல்தரு ஈட்டிவளையத்துள் ஆண்டுபல இருந்தோர் ஏனோதானோக்கள் எச்சிற் கலையங்கள் சாவுவரும் வரையில் சளைக்காது போரிட்ட கந்தலுடைக்காரர் களம் கிளப்பும் தூசி ஓசையுடன் ஓலம் உளம்மருட்ட மண்டை உடைபட்டோர் கண் புண்ணானோர் இவர்களைப்பற்றித்தான் நான் பாடப்போகிறேன் என்கிறார். இவர்கள் இன்னலைக் கண்டவர்கள், இழிநிலையில் தள்ளப் பட்டுள்ளவர்கள், இவர்களை மற்றவர்கள் கவனியாமல், பூபதிகளைப் பாடிக்கொண்டிருந்து வந்தனர்; நான் இந்த ஏனோதானோக்கள் எச்சிற்கலையங்கள் என்று ஒதுக்கிவிட்டிருக்கிறீர்களே, அவர்களைப்பற்றித்தான் பாடப் போகிறேன் என்று தெரிவித்துவிட்டு, மேலும் எந்த விதமான ஐயப்பாடும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்துடன் மார்பகம் தன்னில் விருதுகள் மின்னிட பரிஏறிப் படைகாணப் பவனி வரும் படைத் தலைவனாம் மன்னனின் செல்லப்பிள்ளை இருக்கிறானே, அவனைப்பற்றிப் பாடப்போவதில்லை என்று கூறுகிறார்; மன்னன் தனக்கு விருப்பமான ஒருவனைப் படைத்தலைவனா ஆக்கிவிடுவான்; வீரன் என்பதற்காக அல்ல! அவன் மன்னனின் செல்லப்பிள்ளை என்பதால்! அந்தப் படைத் தலைவன், விருதுகள் பதித்த ஆடம்பர உடை அணிந்துகொண்டு, கெம்பீரமாகக் குதிரை மீதமர்ந்து வருவான், படைவரிசையைப் பார்வையிட! வழக்கமாகக் கவிஞர்கள், இவர்களைப் பாராட்டுவர், புகழ் பாடுவர். இவர்கள் அல்ல உள்ளபடி பாராட்டுப்பெற வேண்டியவர்கள். போரிட்டு மடிந்தவர்கள் வேறு வேறு! இந்தத் தலைவன் காட்சிப்பொருள்! இவனையா நான் பாடுவேன்! இவனை எனக்குத் தெரியாதா! வீரனா இவன்? இவன் மன்னனின் செல்லப் பிள்ளை! என்று கேலி மொழியால் துளைக்கிறார் மேஸ்பீல்டு - துளைத்துவிட்டுக் கூறுகிறார், நான் பாடப்போவது எவரைப்பற்றித் தெரியுமா? எவர், அவர்? என்று எவரும் அறியா நிலையினர்! ஏறு நடைபோட்டு வெற்றி கண்டார்! இளைஞர்! இவர்களைப்பற்றி என் கவிதை! என்கிறார். ஏன்? ஒரு போரிலே மும்முரமாக ஈடுபட்டு, குருதிகொட்டி, வெற்றி ஈட்டியவர்கள் இந்த இளைஞர்கள் - ஆடம்பர உடையுடனுள்ள படைத் தலைவன் அல்ல! நான் அந்தப் "போலி’யைப் புகழ மாட்டேன் என்கிறார். கொலு இருக்கும் கோவை அல்ல! என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிடுகிறார். போர் குறித்த புகழ்ப் பாட்டு என்றால், கொலு இருக்கும் மன்னனைப் பற்றித்தான் மற்றவர்கள் பாடியிருக்கிறார்கள் - இது நாள்வரை. நான் அப்படி அல்ல! குடிமகனாய் உள்ளோன் ஊர் சுற்றும் உழைப்பாளி தோள்குத்தும் முட்கள் நிறை மூட்டைதனைச் சுமப்போன், தாங்கொணாப் பாரந்தனைத் தூக்கித் தத்தளிப்போன் களத்தில் பணிபுரிவோன் உலைக்கூடத்து உழல்வோன் ஏதோ இசை எழுப்பி அதனால் இனிமைபெற எண்ணுபவன் ஏரடிப்போன்! தூக்கம் தொட்டிழுக்கும் துயர் கக்கும் கண்கொண்டான். இவர்களைப்பற்றி நான் பாடுவேன் என்கிறார். இனிமேலா பாட வேண்டும்; இதோ பாடியேவிட்டாரே, தூக்கம் தொட்டிழுக்கும் துயர் கக்கும் கண்கொண்டான் என்ற வரிகள் அந்த ஏழையின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டிவிடுகிறதே! மேஸ்பீல்டுடைய இதயந்தன்னில் எவரெவர் இடம்பெற்றுள்ளார் என்பது விளக்கமாகிறதே. இந்தக் கனிவு, மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டுப்போன, ஏழை, எளியோர்க்காக, உழைத்து உருக்குலைந்தோருக்காக! ஏழையிடம் இந்தக் கனிவு காட்டாத கவிவாணர்களை அலட்சியமாகக் கருதுகிறார்; ஒதுக்கித் தள்ளுகிறார்; மற்றவர் பாடட்டும் மகிழ்ச்சி தரும் மாடு மது குறித்து! என்று இடித்துரைக்கிறார். செல்வவானைப்பற்றி அவனுடைய சிங்கார வாழ்வு பற்றி, அவன் மந்தகாசம் பற்றி, அவன் மாளிகையிலுள்ள மதுவகை பற்றிப் பாடுகிறார்களே, அவர்களைக் குறித்து மேஸ்பீல்டுவுக்கு அத்துணை எரிச்சல். அவர்கள் பாடட்டும் அவை பற்றி என்று ஒதுக்கித் தள்ளி விடுகிறார் என் பாடல் குப்பை கூளம் பற்றி குப்பன் சுப்பன் குறித்து என்று அறிவிக்கிறார். இவர்களைப் பற்றிய கவிதையிலே கவர்ச்சி இருக்காதே, மெருகு இருக்காதே என்று கேட்பவர் உளர் என்பது தெரியுமல்லவா இந்தப் புதுமைக் கவிஞனுக்கு அவர்கள் இசையினிலே வண்ணம் புகழுடன் பொன் மின்னும், என்று கூறுகிறார். பளபளப்பு, மெருகு, இவை தேவையா! அவர்கள் இசையிலே கிடைக்கும், போய்ப் பெற்றுக்கொள், அவைதான் பெறத்தக்கன என்று கருதினால் - என்ற கருத்துப் படக் கூறுகிறார்; கூறிவிட்டு, பிடி சாம்பல் வாய்க்கரிசி இவைபற்றி என் பாடல்! குளிர்கொட்ட மழை வாட்ட குமுறிக்கிடப்போர் விழி இழந்தோர் முடமானோர் இவர்பற்றி என் கவிதை! இஃதே என் காவியம் காண்! என்று தெரிவிக்கிறார். தம்பி! 1873-ம் ஆண்டு பிறந்த ஆங்கிலக் கவிஞர் இந்த அளவுக்கு ஏழைக்காகப் பரிந்து பேசிட முனைந்திருக்கிறார். இருபதாம் நூற்றாண்டில் இருக்கின்றோம்; இந்தக் காலத்திலாவது நாம் இடர்ப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு இல்லாமையால் தாக்கப்பட்டுக் கிடக்கும் எளியோர்க்கு நல்வாழ்வு கிடைப்பதற்கான முறையில் ஓர் அரசு முறை அமைத்திடும் முயற்சியில், ஈடுபடவேண்டாமா! செந்நெல் மணியினைக் காணும்போது தம்பி சேற்றிலே இறங்கி உழுது அதனை விளைவித்த உழவனை நினைவிற் கொள்ள வேண்டும். பாலையும் பாகையும் பழத்தையும் சுவைத்திடும்போது, இவற்றைப் பெற முடியா நிலையிலுள்ள எளியோர்களை வாழ வைத்திட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட வேண்டும். உழைப்பின் உயர்வுபற்றிப் பேசிவிடுதல் மட்டும் போதாது. உழைப்பவன் உருக்குலைய அவன் தந்த செல்வத்தில் சிலர் புரண்டு கிடந்திடும் சீர்கெட்ட நிலையை மாற்றிட வழிகாண வேண்டும். இயற்கை வழங்கிடும் பொருளின் அளவும், தரமும், வகையும் மிகப்பெரிது, அரசு முறை நேர்மையானதாக்கப்பட்டால், எல்லோரும் இன்புற்றிருக்கும் பொற்காலம் கண்டிடலாம், இந்தத் திருநாளன்று, அந்தக் குறிக்கோளைக் கொண்டிட வேண்டுகிறேன். இன்னல் பல பின்னிக் கிடந்திடும்; எனினும் இன்றோர் நாளாகிலும் அவைதமை மறந்து, இன்புற்று வீறுடன் நடாத்தி மகிழ்ச்சி பெற்றிட வேண்டுகிறேன். உனக்கும் உன் மனை யுளாருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கிறேன். வாழ்க வளமெலாம் பெற்று! வாழ்க தமிழகம் உன் வல்லமைத் தொண்டினாலே!! அன்புள்ள அண்ணாதுரை 14-1-1965 சிறை நிர்வாகமே தனி! 3-5-1964 தம்பி! நாளையத்தினம், மதியும் மற்றும் சிலரும் விடுதலை செய்யப்படப்போகிறார்கள் என்று சிறையிலே ஒரு பேச்சு பலமாக அடிபடுகிறது. நானேகூட நம்பிக்கை கொள்ளவேண்டி ஏற்படுகிறது. வெளியில் சென்றதும், தொகுதி திருத்தி அமைப்பதுபற்றி, மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்து பேசும்படி மதியிடம் கூறினேன். இன்று மறுபடியும் தொகுதிகள்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். ஏற்கனவே சிறைபட்டிருப்பவர்கள் குறித்தும், வழக்கின் முடிவுக்காகக் காத்துக்கொண்டிருப்பவர்கள் பற்றியும், பேசிக்கொண்டிருந்தோம். கழகம் வகுத்த திட்டத்திலே தோழர்கள் தொடர்ந்து காட்டிக்கொண்டு வரும் ஆர்வமும், மக்கள் தரும் ஆதரவும் அளித்திடும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நிலையில், சிறையிலே ஏற்படக்கூடிய தொல்லைகள் மிகச் சாதாரணமானவைகளாகி விடுகின்றன. ஒன்று மட்டும் மறப்பதற்கில்லை. வேறு எந்தக் கட்சிக்காரர்கள் கிளர்ச்சிக் காரர்களிடம் காட்டாத அளவுக்குக் கசப்பும் கோபமும், இன்றைய ஆளுங்கட்சியினர், கழகத்திடம் காட்டுகின்றனர் என்பதை உணர்ந்துள்ள அதிகாரிகள், அதற்குத் தகுந்தபடி தமது போக்கை அமைத்துக்கொண்டுள்ளனர். “முன்போல அல்ல! இது ஒரு மாதிரியான காலம்!’ என்று சிறைக்காவலாளிகளேகூடப் பேசிக்கொள்கிறார்கள். எங்களிடம் பேசவும் பழகவும்கூடப் பயப்படுகிறார்கள். ஆனாலும், சென்னை மாநகராட்சிமன்றத் தேர்தல் வெற்றியைக் கண்ட பிறகு, அவர்களுக்கே ஒரு எண்ணம் - சர்க்காருடைய கொடுமை வளரவளர, பொது மக்களுடைய ஆதரவு கழகத்துக்கு வளரத்தான் செய்கிறது என்ற எண்ணம். இதை அவர்கள் பாபம், பேச்சின் மூலமாக அல்ல, பார்வையின் மூலமாகவே தெரிவிக்கிறார்கள். சில வேளைகளிலே அவர்கள் காட்டும் கண்டிப்புகூட,”ஜாண் வயிற்றுக்காக’ என்கிறார்களே, அதுதானே தவிர, எங்களிடம் கோபமோ வெறுப்போ இல்லை என்பதையும் உணருகிறோம். காவலாளிகள் வாழ்க்கையும் எவரும் பார்த்துப் பச்சாதாபப் படக்கூடியதுதான். இன்று சீக்கிரமாக “லாக்கப்’ செய்துவிட வேண்டும் என்று சில காவலாளிகள் துடித்துக்கொண்டு வருவார்கள். காரணம், எங்களை வெளியே ஒரு அரை மணி நேரம் விட்டுவைக்கக்கூடாது என்ற கெட்ட எண்ணம் அல்ல. ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து, அந்தக் காவலாளிகள் வீட்டுக்குப் போய்ச்சேர, இரவு ஒன்பது ஆகிவிடுகிறது. ஒரு நாளைக்காவது வீட்டிலே, பொழுது சாயுமுன் போய், குழந்தை குட்டிகளுடன் பொழுது போக்க வேண்டும் என்ற ஆவல் இருப்பது இயற்கைதானே! மொத்தத்திலே இங்கு பார்க்கும்போது, காவலாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது புரிகிறது. அதனால்தான், காவலாளிகள் கடினமான வேலையில் உழலவேண்டி இருக்கிறது. காவலாளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான். அளவுக்கு மீறிய வேலை செய்வதால் ஏற்படும் சலிப்பு உணர்ச்சி எழாமலிருக்கும்,”வாங்க! வாங்க! மணி ஆறு அடிச்சாச்சி’ என்று கூப்பிட்டார் ஒரு காவலாளி கீழே இருந்த எங்களை. குரல் கேட்டதும், இயற்கையாக "இதற்குள்ளாகவா?’ என்றுதான் கேட்கத் தோன்றும். எனக்கு உடனே எழுந்து, மாடிக்குச் சென்றுவிட வேண்டும் என்றுதான் தோன்றிற்று. ஏன் என்றால், அவருடைய பேச்சு, அவ்விதம் இருந்தது.. "மூணு ஜென்மம் ஆயிட்டுது, இன்னும் இருப்பது சாராயக் கேஸ் தண்டனை காலம்தான்’’ - என்று தன்னைப்பற்றிக் கூறிக்கொண்டார். புரியவில்லையா? மூணு ஜென்மம், முப்பது ஆண்டுகள்! ஒரு ஆயுள் தண்டனை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் - ஒரு ஜென்மம். அதுபோல மூணு ஜென்மம் அளவுக்கு, அதாவது முப்பது ஆண்டுகள் வேலை பார்த்தாகிவிட்டதாம். காவலாளி, தன் வேலை நாட்களை கைதியின் தண்டனை நாட்கள் போன்றவை என்று எண்ணுகிறார், ஏக்கத்துடன் பேசுகிறார். நாலு வாரம் தண்டனை என்பது சாராய வழக்கிலே கிடைப்பது. இந்தக் காவலாளி இன்னும் நாலு வாரம்தான் வேலையில் இருப்பாராம் - பிறகு விலகப்போகிறார். வேலையில் இருக்கவேண்டிய நாட்களை, தண்டனை நாட்கள் என்று கருதுகிறார். காவலாளிகளின் வேலை நேரம் - வேலை முறை - இவைகளைப் பார்ப்பவர்கள், அந்த வயதானவர் கூறினதை மறுக்கமாட்டார்கள். 4-5-1964 ஏமாற்றம்! எதிர்பார்த்தபடி, மதிக்கும் மற்றவர்களுக்கும் விடுதலை கிடைக்கவில்லை; காரணமும் தெரியவில்லை. வழக்கமாக உலவும் வதந்திகளின்படி சர்க்காரிடமிருந்து "உத்திரவு வரவில்லை’ என்று தெரிய வருகிறது. உண்மை என்னவென்றால் விடுதலை ஆகப்போகிறார்கள் என்ற செய்திதான் ஆதாரமற்ற வதந்தி. இன்று, S.S.. ராஜேந்திரன் வந்திருந்தார். நான், மதி, அன்பழகன் மூவரும் கண்டு பேசினோம். சிறை மேலதிகாரியின் அறையில், அவர் முன்னிலையில், நண்பர்களைக் குறித்துக் கேட்டறிந்துகொண்டோம். "அண்ணா! ரவி என்ன சொல்கிறான் என்பதைக் கேளுங்களேன்’’ என்று பாசத்துடன் ராஜேந்திரன் கூறினார்; ரவி அவர் மகன். "அண்ணா! ஜெயில் கதவோட கம்பிகளை எடுத்துட்டு வெளியே வந்துவிடுங்க’’ என்கிறானே! சிறை மேலதிகாரியைக் காட்டி, “இவர் யார் பார்த்தாயா? சும்மாவிடுவாரா?’’ என்றேன்; குழந்தை பயந்தேபோனான். இதற்கு முன்பு எப்போதும் என்னைப் பார்த்திராத முற்றிலும் வேறான இடம், அதனால் அச்சம் ஏற்பட்டுவிட்டது. இல்லையென்றால் மிகக் கலகலப்பாகச் சிரித்துப் பேசுவான். நான், அவனுக்கும்”அண்ணா’‘; அவனுடைய அப்பாவுக்கும் "அண்ணா’’; அப்படி அழைத்தே பழகிவிட்டான். பார்க்க வருகிறவர்களும், மிகுந்த ஆவலுடன் ஏதேதோ பேச வேண்டும் என்றுதான் வருகிறார்கள். நாங்களும், வருகிறவர்களிடம் நிறையப் பேச வேண்டும், எதை எதையோ கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆவலாகத்தான் பார்க்கிறோம். ஆனால் பேசும் இடத்தில் குறைந்தது இரண்டு அதிகாரிகளாவது எதிரே, மிக அருகாமையில் உட்கார்ந்து கொள்ளும்போது, எப்படிப் பேச வரும், எதைப் பேசத் தோன்றும்? பார்த்தோம், நலன் கேட்டறிந்துகொண்டோம், அதுபோதும் என்று சில நிமிடங்களிலேயே தோன்றிவிடுகிறது. அப்படித்தான் இன்று ராஜேந்திரனிடமும், மிகச் சுருக்கமாகவே பேச்சை முடித்துக்கொள்ளவேண்டி நேரிட்டது. டில்லி போய் வந்த “சேதி’ பற்றி ஒரு விநாடி, நாராயணசாமி மகன் உடல் நிலை பற்றி மற்றோர் விநாடி, இப்படி மூன்று நான்கு விஷயங்கள் பேசி முடித்ததும், மேற்கொண்டு என்ன பேசுவது என்பது இருவருக்கும் புரியவில்லை. பேச விஷயமா இல்லை! கழக விஷயம் பேச ஆரம்பித்தால் நாள் போதாது. ஆனால்”அரசியல்’ தான் பேசக்கூடாதே!! இதைக் கூடவா சர்க்கார் கவனிக்கிறார்கள்? என்று நான் ஒரு சிறை அதிகாரியைக் கேட்டேன். சரியாப்போக்சு. உங்களுக்கென்ன தெரியும்? உங்களைப் பார்க்க யாரேனும் கழகத்தார் வந்தார்கள் என்றால், அவர்கள் உங்களைப் பார்த்துவிட்டுப்போன உடனே, துப்பறியும் துறைக்காரர் வருகிறார். “என்ன பேசினார்கள்?’ என்று கேட்கிறார்;”விவரம் விசாரிக்கிறார்’’ என்று கூறினார். “கள்ள மார்க்கட்காரனையும் கொள்ளை இலாபம் அடிப்பவனையும் கண்டுபிடித்து அடக்க இந்தத் துப்பறியும் திறமை பயன்படக்கூடாதா? எதையும் ஒளிவு மறைவு இல்லாமல், மக்களுக்கும் சர்க்காருக்கும் அறிவித்துவிட்டுச் செய்யும் எங்கள் கழக சம்பந்தமாகவா இவ்வளவு திறமையையும் வீணாக்க வேண்டும்?’ என்று நான் கேட்டேன்.”அதெல்லாம் பெரிய விஷயம்!’’ என்று சொல்லிக்கொண்டே அந்த அதிகாரி சென்றுவிட்டார். இந்தப் பேச்சை எவனாவது கேட்டுவிட்டு, ஏதாவது கோள்மூட்டிவிடப் போகிறான் என்று அவருக்குப் பயம். சுயராஜ்யம் ஏற்பட்ட பிறகு தொடங்கிய இந்தப் "பயம்’ நாளாகவாக வளர்ந்தபடி இருக்கிறது. அதிலே ஒரு கூறுதான் இங்குள்ள அதிகாரிகளின் போக்கிலே நான் காண்கிறேன். இத்தகைய பயம் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல. ஆனால், நடைபெறுவது பெயரளவுக்குத்தானே ஜனநாயகம்! இன்று நடைபெற்று வரும் போக்குக்கு, காஞ்சீபுரம் கே. டி. எஸ். மணி ஒரு எடுத்துக்காட்டு கூறினார். கே. டி. எஸ். மணி, திருவேங்கிடம் இருவரும் காஞ்சி நகராட்சி மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் கைதாகிச் சிறையில் இருந்தனர் - வழக்கு முடிவு பெறவில்லை. இடையில், நகராட்சி மன்றத் தலைவர் தேர்தல். இருவருடைய ஓட்டுகளும் கழக வேட்பாளருக்குக் கிடைக்காதபடி தடுத்துவிட்டு, வேறு சில வேலைகளையும் செய்து முடித்துக்கொண்டால், காஞ்சீபுரம் நகராட்சி மன்றத் தலைவராக ஒரு காங்கிரஸ்காரரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது காங்கிரசின் திட்டம். இதைத் தெரிந்துகொண்ட நமது கழகத்தவர், மணி, திருவேங்கிடம் இருவரையும் "பொறுப்பில்’ வெளியே கொண்டு வரவேண்டும், தலைவர் தேர்தலில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினர் - பொறுப்பிலே விடுதலை செய்யப்பட்டனர். வேடிக்கை என்பதா, விபரீதம் என்பதா கூறுங்கள் - பொறுப்பிலே விடுதலை செய்யப்பட்ட இரு தோழர்களும் காஞ்சீபுரம் திரும்பினார்கள்; மறுநாளே பொறுப்பு ரத்து செய்யப்பட்டு சிறைக்கு மறுபடியும் அழைத்துச் செல்லப் படுகிறார்கள். காஞ்சீபுரத்துக் காங்கிரஸ்காரர்கள் கைகொட்டிக் கேலியாகச் சிரிக்காமலிருக்க முடியுமா? "பயல்களை மறுபடியும் உள்ளே தள்ளியாச்சு!’ என்று எக்காளமிடுகின்றனர். முன்னாள் பொறுப்பிலே விடுதலை - மறுநாள் அந்த உத்திரவு திரும்பப் பெறப்படுகிறது மறுபடியும், சிறை! யார் காரணம் கேட்பது! எவருக்கு இதற்கான விளக்கம் புரிகிறது! போக்கு எவ்விதம் இருக்கிறது என்பதுதான் நன்றாகத் தெரிகிறது. தெரிந்து? உயர்நீதிமன்றம் சென்று, அந்த இரு தோழர்களுக்கும், மறுபடியும் பொறுப்பிலே விடுதலை கிடைத்து, அவர்கள் தேர்தலில் கலந்துகொண்டு, கழகத்தவரும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விதமான போக்கு குறித்து பேசிக்கொண்டிருந்தோம். இதற்குத் தனித்தனியான பரிகாரம் கிடையாது; ஒரே கட்சிதான் நாட்டை ஆளும் என்ற நிலைமையை மாற்றி அமைத்து, உண்மையான மக்களாட்சியை ஏற்படுத்துவது ஒன்றுதான், விரும்பத்தகாத முறைகேடுகளையும், விபரீதமான போக்கினையும் ஒழித்துக் கட்டும் வழி என்று கூறினேன். நண்பர்களின் கண்கள், அடுத்து வர இருக்கும் பொதுத் தேர்தலின்மீது பாய்ந்திடக் கண்டேன். விழிப்புடன் இருக்கிறார்கள், உறுதியுடன் இருக்கிறார்கள் என்ற எண்ணம் இனிப்பளித்தது. 5-5-1964 ஓவியம் வரைவதிலே, மற்ற இரு நண்பர்களும் அக்கறை இழந்துவிட்டனர்; நானோ தொடர்ந்து அதிலே விருப்பம் கொள்கிறேன். இரவு வெகுநேரம் வரையில், வண்ணங்களைக் கலப்பதும், எதை எதையோ வரைவதும், மனதுக்குப் புதுவிதமான மகிழ்ச்சி தரத்தான் செய்கிறது. நண்பர்கள் என்னை மகிழச் செய்வதற்காக, ஓவியம் நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் என்பது எனக்கும் புரிகிறது; கண் இல்லையா காண! ஓவியம் வரையத் தெரியாவிட்டாலும், வண்ணங்களைக் குழைத்து எதையாவது வடிவமெடுக்கச் செய்யும்போது களிப்பு எழுகிறது. ஓவியக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள், அந்தக் கலையில் எத்துணை இனிமை காண முடியும் என்பதை உணர இது ஒரு வாய்ப்பு. மலையும் மடுவும், மாவும் பலாவும், காலை கதிரவனும் மாலை மதியமும், கோட்டை கொத்தளங்களும் கொடி படர்ந்த குடிலும், வாளேந்திய வீரனும் வேல் விழியாளும், பாசம் நிறைந்த பார்வையும் பகை கக்கும் விழிகளும், மழலைமொழிக் குழவியும் பெருமிதமிகு தாயும், இன்னோரன்ன பிற கட்சிகளைத் தமது கை வண்ணத்தால் ஓவியர்கள் உயிர்பெறச் செய்யும்போது, தனித்தன்மை வாய்ந்த ஓர் மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்யும். ஓவியக் கலையினர் குறித்து, நான் படித்திருந்த சிறு கதைகள், நெடுங் கதைகள் பலவும் இந்த நேரம் என் நினைவிற்கு வருகின்றன. இன்றுகூட, உட்அவுஸ் என்பவர் எழுதியுள்ள ஒரு கதைத் தொகுப்பில் ஓவியம்பற்றிய தொடர்புடைய சிறு கதை ஒன்று படித்தேன். ஓவியம் வரைவதிலே விருப்பம் மிகுந்திருந்த வேளை - எனவே, அந்தச் சிறு கதை எனக்கு அதிக அளவு சுவை அளித்தது. ஓவியம், நூல் எழுதுதல், இசை பயிலுதல், நடனம் போன்ற நுண்கலைகளில் பெரிதும் நாட்டம்கொண்டு, ஆண்டுக் கணக்கில் ஈடுபட்டு, வறுமையால் தாக்கப்பட்டபோதிலும், உலகம் பாராட்டத்தக்க கலைத்திறனை ஒரு நாள் இல்லாவிட்டால் மற்றோர் நாள் பெறத்தான் போகிறோம். பொன்னும் பொருளும் வந்து குவியத்தான் போகிறது என்ற நம்பிக்கையின் துணையுடன் உழல்பவர்களைக் குறித்து, நம் நாட்டில் உள்ளவற்றினைவிட, மேனாடுகளில் அதிக அளவுள்ள கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளிவந்துள்ளன. உட்அவுஸ், நகைச்சுவை ததும்பும் எழுத்தோவியம் புனைபவர் - வாழ்க்கைச் சிக்கல், பிரச்சினைகள் ஒன்றோடொன்று மோதிப் போரிடுதல் போன்றவைகளைவிட, அசட்டுத்தனம், போலிகளில் மதிப்பு வைத்திடும் பான்மை, மேட்டுக்குடியினரின் மேனாமினுக்கித் தன்மை, போன்றவைகளைப் பற்றி அதிகச் சுவையுடன் எழுதுபவர் - எனினும் அந்த எழுத்தோவியத்தில் வெறும் நகைச்சுவை மட்டுமல்ல, இழையோடுவதுபோல நல்ல கருத்தும் இருக்கும். ஒரு வீட்டின் மாடி அறையில் ஒருவன் குடி இருக்கிறான்; கீழ் அறையில் ஒரு பெண் குடி இருக்கிறாள்; வீட்டின் மற்ற மற்றப் பகுதிகளிலும் இதுபோலப் பலர் குடி இருக்கிறார்கள். வாடகை வீடு. கீழ்த்தளத்தில் குடி இருக்கும் பெண், இசைத்துறையில் வெற்றிபெற விரும்பி வெகுபாடுபடுபவள்; பாடல்கள் புனைகிறாள், பாடிப் பார்க்கிறாள், இசைக் கருவியின் துணையைச் சேர்த்து சுவை எங்ஙனம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முனைகிறாள். சிலருக்கு இசைப்பயிற்சி அளிப்பதிலே கிடைக்கும் சொற்ப ஊதியத்தை வைத்துக்கொண்டு, புன்னகை தரும் பொற்காலம் வரப்போகிறது என்று காத்துக்கொண்டிருக்கிறாள். மாடி அறையில் குடி இருப்பவன், இந்தப் பெண்ணுடைய இசை ஈடுபாட்டைக் கலைப்பதுபோல, அறையின் தரையில் தட்டி ஒலி எழுப்புகிறான். அவளோ இசை நுணுக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தான் புனையும் பாடல், இசை உலகினால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க தரம்பெற என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லற்படுகிறாள்! மேலே இருந்து கிளம்பும் ஒலியோ அவளுடைய மனநிலையை, சிந்தனைத் திறனைக் கெடுக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்க்கிறாள். முடியவில்லை. மளமளவென்று மாடி ஏறி, ஒலி கிளம்பும் அறையைக் கண்டறிந்து, கதவைத் தட்டுகிறாள்; திறக்கப்படுகிறது. உள்ளிருந்து வந்தவனோ, அவளுடைய கோபத்தை, வெறும் பார்வையாலேயே போக்கிவிடக்கூடியவனாக இருக்கிறான். நல்லவனாகவே இருக்கிறான். அழகாகவும்கூட இருக்கிறான். எரிந்துவிழ வேண்டும், பொறிந்து தள்ள வேண்டும் என்ற துடிப்புடன் வந்தவள், அவனுடைய தோற்றத்தைக் கண்டு, மென்மையைக் குழைத்துப் பேச்சை வழங்குகிறாள். "மேலே இப்படி ஒலியைக் கிளப்பியபடி இருக்கலாமா? என் வேலையைக் கெடுக்கிறீர்களே! இசைபற்றிய எண்ண ஓட்டம் தடைப்படுகிறது! ஏன் அப்படி ஒலி எழுப்புகிறீர்கள்?’’ "அதுவா? அது. . . அது. . . நீங்கள், ஒரே பாடலைத் திரும்பத் திரும்பப் பாடுகிறீர்கள் - சில சமயம் அந்தப் பாடலின் ஒரே அடியைக்கூடத் திரும்பத் திரும்ப பல தடவை பாடுகிறீர்கள். . . சலிப்பு ஏற்படும்படி. . . அது ஏன்?’’ "நான், பாடுகிறேன் என்றா எண்ணுகிறீர்கள். பாடகர்களுக்கான புதுப் பாடல்களை இயற்றுகிறேன். அந்தப் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதைக் கண்டறிய, மெருகேற்ற, திரும்பத் திரும்பப் பாடுகிறேன்.’’ "பாடல்கள் புனைவது மற்றவர்களுக்காகவா?’’ "ஆமாம், திறமையாகவும் இனிமையாகவும் பாடக் கூடியவர்களுக்காக. அவர்கள் பாடுவதாலே அந்தப் பாடல்கள் புகழ்பெறும் - புகழ் பெற்ற பாடல்களை நாட்டு மக்கள் விரும்பி விலை கொடுத்து வாங்குவார்கள்.’’ "அப்படியா? இப்போது உங்களுடைய பாடலை எந்த இசைவாணனும் வாங்கவில்லையா?’’ "இல்லையே! ஒரு பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கே ஏகப்பட்ட பணச் செலவு?’’ "யாருக்குப் பணச் செலவு?’’ "எனக்குத்தான். நான் பணம் கொடுத்து வெளியிட்டது தானே. பலரும் வாங்கினால், செலவழித்த பணமும் வரும், வருவாயும் கிடைக்கும். அது சரி, நீங்கள் என்ன?’’ "நானா? நான் ஒரு ஓவியன். . . அதாவது ஓவியம் வரைகிறேன். . . வரைந்து வரைந்து திறமை பெற்றால் ஓவியனாகலாம் அல்லவா?’’ "ஓவியமா! எனக்கு நிரம்ப விருப்பம் ஓவியம் காண. என்ன வரைந்திருக்கிறீர்கள்?’’ அவன் தான் வரைந்திருந்த ஓவியத்தைக் காட்டினான் - ஒரு பூனையை குழந்தை தூக்கிவைத்துக்கொண்டிருக்கும் காட்சி. அந்த ஓவியம் மிக நன்றாக இருப்பதாக அவள் கூறினாள்; அவளுடைய இசைப்புலமையை அவன் புகழ்ந்தான். உலகமோ, இருவருடைய கலையையும் கண்ணெடுத்துப் பார்க்க மறுத்தது. அவர்கள் இருவரும் கண்படைத்த காரணத்தால், ஒருவர் கலையை மற்றவர் புகழ முடிந்தது; அதற்குக் காரணம், ஒருவர் உள்ளத்தில் மற்றவர் இடம் பெற்றதுதான். அதே வீட்டில் மற்றோர் அறையில் மற்றோர் ஓவியன் திறமைமிக்கவன் என்ற நினைப்புகொண்டவன்; நிலை சாதாரணம்தான். அவன், பூனையும் குழந்தையும் என்ற ஓவியத்தைப் பார்த்துவிட்டு, ஏளனம் செய்கிறான். குழந்தை இப்படியா இருக்கும், பூனைகூடச் சரியாக இல்லையே என்று குத்தல் பேசுகிறான்; அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. இளம் ஓவியனோ, குற்றம் இருப்பதை எடுத்துக்காட்டியவருக்கு நன்றி கூறுகிறான். "அந்த ஓவியனுக்கு ஏன் அவ்வளவு பணிந்து போகிறீர்கள். உங்கள் ஓவியம் நேர்த்தியாக இருக்கிறது. இவன் யார், குறைகூற? இவனுடைய ஓவியங்கள் மட்டும், ஊரிலே ஓகோவென்று விலை போகின்றனவோ? இனி அவனிடம் பணிந்து போகக்கூடாது.’’ காரிகை, கண்டிப்பாகக் கூறுகிறாள்; காதல் உணர்ச்சி அவளுக்கு அத்தனை சொந்தத்தை ஏற்படுத்தி வைத்துவிடுகிறது. பெரிய ஓவியனுடைய இயற்கைக் காட்சி ஒன்றை நல்ல விலை கொடுத்து, ஒருவர், வெளியூர்க்காரர் வாங்குகிறார் - பேட்ஸ் என்பது அவர் பெயர். . . முன்னிலும் அதிக முடுக்காகி விடுகிறான் பெரிய ஓவியன். இளம் ஓவியன், கடை கடையாகக்கொண்டு போய்க் காட்டுகிறான் தன் ஓவியத்தை. கடைசியில் பெரிய ஓவியனுடைய சிபாரிசின் பேரில், ஒரு கடைக்காரர், "வைத்துவிட்டுப் போங்கள், யாராவது பார்த்து ஆசைப்பட்டால், விற்க முயற்சிக்கிறேன்’ என்று கூறி அனுப்பினார். "கவலைப்படாதீர்கள். காலம் இப்படியேவா இருந்துவிடப் போகிறது. நல்ல காலம் பிறக்கும். நல்ல விலைக்கு ஓவியத்தை வாங்கப் போகிறார்கள் பாருங்கள்’’ என்று பெண், பரிவுடன் பேசி வந்தாள். நல்ல காலம் பிறந்தது. நல்ல விலைக்கு விற்க ஆரம்பித்தது. ஓவியம் அல்ல; அவளுடைய பாடல்கள். பல பதிப்புகள் வெளி வந்தன; எல்லாம் உடனுக்குடன் செலவாயின. பணம் குவியலாயிற்று, அவளுக்கு மகிழ்ச்சிதான் - ஆனாலும், பூனையும் குழந்தையும் மட்டும் விலைபோகவில்லையே என்ற விசாரம் அவளுக்கு. ஒரு நாள், டெலிபோனில் யாரோ பேசுகிறார்கள் - அவள் பதில் அளிக்கிறாள். "பேட்ஸ் இருக்கிறாரா?’’ "இல்லையே. அப்படி ஒருவரும் இங்கு கிடையாதே.’’ "எட்டாம் நம்பர் வீடுதானே?’’ "ஆமாம்.’’ "மாடி அறையில் இருக்கிறாரே. . . அவர்தான் பேட்ஸ். . . தெரியாதா. . . பரவாயில்லை. . . அவர் வந்ததும் நான் சொன்னதாகச் சொல்லுங்கள். . .’’ “நான் என்றால், யார்?’’”பேட்சுடைய நண்பன். அவனுடைய விடுதியில் தங்கி இருப்பவன். அவனுக்குத் தெரியும். உங்களுக்கு, ஏன் அந்த விவரமெல்லாம். வந்த உடன் அவனைக் கேளுங்கள். கட்டு கட்டாக பாடற் புத்தகங்கள் வந்து குவிகின்றனவே; இடம் கொள்ளாமல், அவைகளை என்ன செய்வது? என்று கேளுங்கள். நான் குடி இருக்க இடமே கொஞ்ச நாளில் இல்லாமல் போய்விடும்போல இருக்கிறது. அவ்வளவு கட்டுகள் ஒவ்வொரு நாளும் - ஒரேவிதமான பாடல். . . அதுமட்டுமா, எத்தனை பெரிய படம், இயற்கைக் காட்சியாம், சிகப்பும் நீலமும், பச்சையும் மஞ்சளுமாக குழைத்து வைத்திருக்கிறார். அதை என்ன செய்வது. . .?’’ "பாடல், யார் வெளியிட்டது? எந்தக் கம்பெனி?’’ பாடல் வெளியிட்ட கம்பெனியின் பெயரை டெலிபோனில் அந்த ஆசாமி சொன்னதும், அவளுக்கு எல்லாம் புரிந்து விட்டது. மாடி ஆசாமி ஓவியன் அல்ல - சீமான். அவன்தான், விலை போகாதிருந்த பாடல்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறான் - தன்னை உற்சாகப்படுத்த, பெரிய ஓவியன் படத்தை வாங்கியதும் மாடி அறை சீமானேதான் என்பது புரிந்தது. கோபமும் வந்தது, ஒரு புன்னகையும் தவழ்ந்தது. அவனும் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டான். காரணமும் கூறினான்; காதல். அது மட்டுமா சொன்னான்? என்னுடைய ஓவியத்தைக்கூட விலை கொடுத்து வாங்க ஒருவர் முன்வந்திருக்கிறார்; இதோ, கடைக்காரருக்கு, அவர் அனுப்பிய கடிதம் என்று கூறி ஒரு கடிதத்தைக் காட்டினான். அவள் கூச்சத்துடன் தலை கவிழ்ந்தபடி நிற்கிறாள் - கடிதம் அவள் எழுதியது. இந்தக் கருத்துடன் தீட்டப்பட்ட சிறுகதை, நான் படித்தது. ஆரவனும் ஆரணங்கும், கதையில்; எனவே காதல் காரணமாக அமைந்தது. நான் வரையும் ஓவியங்களை நண்பர்கள் பார்த்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம், என்னை மகிழச் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் - வேறென்ன? அப்படிப்பட்ட பற்றும் பாசமும் கொண்ட நண்பர்களின் முகாமாக உள்ள கழகத்தில் இருக்கிறோம் என்பதிலே நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் அடையத்தான் செய்வோம். இவ்விதமான பற்றும் பாசமும், கலையாமல் குலையாமல் இருக்கும் வரையில், நமது கழகத்தை எத்தனைப் பெரிய வலிவுள்ளவர்கள் கூடித் தாக்கினாலும் அச்சமில்லை என்ற உணர்ச்சி என்னை ஊக்குவித்தபடி இருக்கிறது. 6-5-1964 பகல் பொழுதைக் கழிப்பதைவிட, இரவுகள்தான் அதிகமாகத் தொல்லை தருகின்றன. அதிலும் இப்போது மிகக் கடினமாக இருக்கிறது. செங்காய்களைப் பறித்து வந்து, அவை கனிவதற்காக வைக்கோற் போரில் போட்டு ஒரு அறையில் போட்டு மூடிவைப்பார்கள், குமுறிக் கனிவதற்காக. இரவு, அறைகளிலே உள்ள நிலைமை இதுபோல். காற்று துளியும் கிடையாது. வியர்வை பொழிந்தபடி, இரண்டு மணிக்காவது முன்பு தூக்கம் வரும். இப்போது மூன்று, நான்குகூட ஆகி விடுகிறது. பகலில் உள்ள வெப்பத்தை இயற்கையாக வீசும் காற்று தணியச் செய்கிறது; இரவில் ஒரே புழுக்கம். நாங்கள் உள்ள பகுதியில் உள்ள மரங்களில் சிலவற்றில் இலை உதிர்ந்து மொட்டையாகி நின்றன. பாதாம் மரத்தின் இலைகள் பச்சையாக இருந்தவை, இரத்தச் சிகப்பாக மாறின; பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது; ஆனால் சிகப்பு கருஞ்சிவப்பாகி, மஞ்சள் கலந்ததாகி, சருகாகி உதிர்ந்துவிட்டன. நான்கூட வேடிக்கைக்காக நண்பர்களிடம் இங்கே கூறினேன் - உங்களுக்கெல்லாம், எப்போது தெரியுமா? இந்த பாதாம் மரத்திலுள்ள மற்ற இலைகளும் உதிர்ந்தது என்று. இலைகள் உதிர்ந்து, மொட்டையாகிவிட்ட அந்த மரம், இந்த நிலையில் தன்னை உலகம் விரும்பாது என்பதால் மேலும் மறுபடியும் துளிர்க்கத் தொடங்கிவிட்டது. மரத்திலேயே கல்லறையும் தெரிகிறது, தொட்டிலும் தெரியத் தொடங்குகிறது. இங்கு உள்ள அரச மரம் முன்பு சளைத்தும் இளைத்தும் காணப்பட்டது. இப்போது பச்சைப் பசேலென மாறிக்கொண்டு வருகிறது. தொலைவிலிருந்து பார்க்கும்போது, இலைகளை எடுத்துத் தடவி மகிழலாமா என்றுகூட ஆசை பிறக்கிறது. சற்றுத் தொலைவில், நாங்கள் உள்ள பகுதிக்கு வெளியே மற்றோர் அரச மரம். அந்த மரம், இந்த நேரத்தில், மொட்டையாகிக்கொண்டு வருகிறது; பத்து நாட்களுக்கு முன்பு இலைகள் அவ்வளவும் மஞ்சளாகி, காலைக்கதிரவன் ஒளியில் பொன் தகடுகள்போலக் காட்சி அளித்து வந்ததைக் கண்டேன். இப்போது, இலைகள் வேகவேகமாக உதிர்ந்துவிடக் காண்கிறேன்; வெகு விரைவில் மொட்டையாகி வருகிறது, அந்த அரச மரத்தில், காக்கை கூடு ஒன்று அமைத்துக்கொண்டிருக்கிறது, உச்சிக்கு அருகில். இங்கு அறையிலிருந்து பார்த்தாலேகூடத் தெரிகிறது. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிலைபோலும். அதனால், காக்கை காவல் காத்தபடி இருக்கிறது; ஒரு காக்கை காவல் பார்க்கும்போது மற்றோர் காக்கை இரைதேட வெளியே செல்கிறது. முறை போட்டுக்கொண்டு வேலை பார்க்கின்றன. இதைப் பார்த்துவிட்டு, எனக்குக் காட்டி, என்னையும் பார்க்கச் சொன்னவர் அன்பழகன். எதற்காகப் பார்க்கச் சொன்னாரோ தெரியவில்லை! ஒருவேளை, காக்கை குருவிகள்கூடக் குடும்பத்தைக் கட்டிக்காத்து வருகின்றனவே, நீ, எங்களை எல்லாம் குடும்பத்தைக் கட்டிக் காத்திடும் கடமையையும் மறந்து சிறையிலே வந்து வாடும்படி செய்திருக்கிறாயே, நியாயமா என்று கேட்கிறாரோ! தெரிய வில்லை. அவர் அவ்விதமான எண்ணம் கொண்டிருந்தாலும் கொண்டிராவிட்டாலும், பலருடைய குடும்ப வாழ்க்கையில், சோகப்புயல் வீசும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை நான் உணருகிறேன்; ஆனால் அவர்கள் தங்கள் நெஞ்சு உரம் காரணமாக, அந்தச் சோகத்தைத் தாங்கிக்கொள்கிறார்கள் என்பதையும் நான் உணர்ந்து பெருமிதமடைகிறேன். நாட்டு மக்களை, இன்றுள்ளவர்களை மட்டுமல்ல, எதிர் காலத்தவர்களையும் வாட்டக்கூடிய ஒரு கேட்டினை எதிர்த்து, சிலராவது, தம்மைத்தாமே வருத்திக்கொள்வது தூயதோர் தொண்டு என்ற உணர்ச்சி, தனிப்பட்ட வாட்ட வருத்தத்தை விரட்டிவிடக்கூடிய, வலிவு கொண்டது, மேன்மை நிறைந்தது. கழக வளர்ச்சியைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், நமது அறப்போர் குறித்துக் கேலி பேசுவதை அறிந்து, துவக்கத்தில், சிறிதளவு துக்கப்பட்ட தோழர்கள்கூட, தாங்கள் சிறை புகுந்திருப்பது நல்ல காரியத்துக்காக, அதன் பலன் உடனடியாக இல்லாவிட்டாலும் ஓர் நாள் கனிந்தே தீரும் என்ற நம்பிக்கை பெறுகிறார்கள், இந்தி ஆதிக்கத்தைத் தமிழர்கள் எதிர்க்கின்றனர் என்று இன்று எடுத்துக்காட்டுவது மட்டுமல்ல, எதிர்ப்புணர்ச்சி காட்டப்பட்டது என்று என்றென்றும் கூறித் தீரவேண்டிய, ஒப்புக்கொண்டாகவேண்டிய ஒரு நிலை ஏற்படத்தான் போகிறது. கொடுமைகளை எதிர்த்து பல்வேறு நாடுகளில், பல்வேறு காலங்களில் சிறை சென்றவர்களைப்பற்றிப் பேசி, எழுச்சி பெறுவதிலே தனி இன்பம் காண்கிறோம். இந்த சென்னைச் சிறையில் நான் இந்தி எதிர்ப்பு காரணமாகவே முதன்முதலாகவே 1939லில் புகுந்தேன். அந்த நாட்களைப்பற்றி, நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். சிறையில், அப்போதும் இதேபோலக் கெடுபிடி இருந்ததா? என்று நண்பர்கள் கேட்டார்கள். இல்லை! அப்போது இருந்த முறையிலே பெரும் மாற்றம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது, அப்போது ஒரு பகுதியில் உள்ள நமது தோழர்கள் மற்றோர் பகுதியில் உள்ள நமது தோழர்களைப் போய்ப் பார்த்துவிட்டு வரக்கூட அதிகாரிகள் அனுமதி அளித்தார்கள். வாராவாரம் நடத்தப்படும் "பார்வையிடும்’ சடங்கிலேகூட, எங்களை ஈடுபடுத்துவதில்லை. இப்போது காங்கிரஸ் அரசுக்கு நாம் விரோதிகள். ஆகவே, நாம் எவ்வளவுக்கெவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு காங்கிரஸ் அரசு மகிழ்ச்சி அடையும் என்ற ஒரு இலக்கணத்தை வைத்துக்கொண்டே, சிறை நிர்வாகிகள் நடந்துகொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. முன்பு, இவர்கள் இந்தியை எதிர்க்கிறார்கள் என்று மட்டுமே, காங்கிரஸ் அரசு நினைத்தது; இப்போது இவர்கள் இந்தியை அல்ல, காங்கிரஸ் அரசை எதிர்க்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். அந்த நினைப்பு காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்குக் கசப்பையும் கோபத்தையும் கிளப்பிவிடுகிறது, ஒரு கட்சி அரசு நடத்துவதை எதிர்த்து ஆட்சி நடத்தும் வாய்ப்பினை எமக்குத் தாருங்கள் என்று பொது மக்களை அணுகிக் கேட்கும் உரிமைதான், ஜனநாயகத்துக்கு அடிப்படை. இந்த அடிப்படையில் நம்பிக்கை அற்றுப்போகிற காரணத்தால், காங்கிரஸ் அரசையா எதிர்க்கிறீர்கள் என்று, காங்கிரஸ்காரர்கள் கனல் கக்குகிறார்கள். அந்தக் கனலின் சிறு பொறிகள், இன்றைய சிறை நிர்வாகத்தில் நிரம்பி இருக்கக் காண்கிறேன். முன்பு நிலைமை இப்படி இல்லை என்று நான் விவரம் கூறினேன். 7-5-1964 மாயவரத்திலிருந்து தருவித்த எண்ணெய் பல நாள் தடவியும், கை வலி நீங்கவில்லை. சலித்துப்போய், இன்று அந்த எண்ணெய் தடவிக்கொள்வதை நிறுத்திவிட்டேன். வெளியே வந்த பிறகு தக்க முறையில் மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நண்பர்கள் வலியுறுத்தினார்கள். நானும் அது தேவைதான் என்பதை உணருகிறேன். இராமாயணப் பிரசாரம், கதா காலட்சேபமாகச் சென்னையிலும் வெளி இடங்களிலும் வேகமான அளவிலே நடத்தப்பட்டு வருவது கண்டு, பெரியார் கடுங்கோபம் கொண்டிருக்கிறார்; எதிர்ப்பிரசாரத்துக்காகத் தொண்டர் படை நடத்தப்போகிறார் என்று செய்தி வந்திருப்பது பற்றி இன்று நண்பர்கள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தனர். பெரியார், எந்த நேரத்தில் எவ்விதமான போக்குடன் நடந்துகொள்வார் என்பதை நம்மாலே கூறமுடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இத்தகைய எதிர்ப்பு காங்கிரசுக்குக் கேடாக முடியும் என்று அவருக்கு எடுத்துக் கூறப்பட்டால் போதும், தமது திட்டத்தை விட்டுவிடுவார். இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால், இராமாயண காலட்சேபம் செய்யும் கிருபானந்தவாரியாரும், இராமாயண எதிர்ப்புப் பிரசாரம் செய்யும் பெரியாரும் காங்கிரசுக்கே ஓட்டுச் சேகரிக்கும் காரியத்தைச் செம்மையாகச் செய்கிறார்கள். இராமாயண ஆதரவு இராமாயண எதிர்ப்பு எனும் இரண்டுமே காங்கிரசுக்கு ஓட்டுப் பெற்றுத்தரப் பயன்படுகிறது. பகுத்தறிவாளர், பழமை எதிர்ப்பாளர், துடிப்புள்ள போக்கினர் ஆகியோரிடம் பெரியார் இராமாயண எதிர்ப்புப் பிரசாரம் செய்யட்டும், கையோடு கையாகக் காங்கிரசுக்கு ஓட்டு திரட்டித் தரட்டும், பெற்றுக்கொள்ளலாம்; பழமை விரும்பிகள், பக்தர்கள் ஆகியோரிடை கிருபானந்தவாரியார் இராமாயண காலட்சேபம் சுவையாகச் செய்யட்டும், அதே மூச்சில் காங்கிரசுக்கு ஓட்டு வாங்கித் தரட்டும், பெற்றுக்கொள்ளலாம்; நமக்கு இந்த இரண்டு உத்திகளில் எது கெலித்தாலும் எது தோற்றாலும் கவலை இல்லை, நமக்கு வேண்டியது ஓட்டு; இருவரும் அதை நமக்கு வாங்கிக் கொடுக்கட்டும், என்பது இன்று தமிழகக் காங்கிரசை நடத்திச் செல்லும் முதல்வருடைய எண்ணம். நாட்டு மக்கள் மனதை, இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன, நமக்கு வேண்டியது நாட்டை ஆளும் ஓட்டு வலிவு - அதை இராமனைக் கடவுள் அவதாரம் என்று கூறிக் கொள்பவரும், கபட வேடதாரி என்று கண்டிப்பவரும், நமக்காக அரும்பாடுபட்டு பெற்றுத் தர முன்வருகின்றபோது, நாம் ஏன் அந்தப் பொன்னான வாய்ப்பை இழந்துவிட வேண்டும் - இராமாயண காலட்சேபமும் நடக்கட்டும், எதிர்ப்பும் நடக்கட்டும் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது என்பது குறித்து எடுத்துச் சொன்னேன். பெரியாரின் போக்கு எப்போது எப்படி வடிவமெடுக்கும் என்று அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏது - முன்போல. இன்று இந்தப் பேச்சு எழுந்தபோது அவருடன் இருந்த நாட்கள், பிரிந்து வந்த நிலை இவைபற்றி எண்ணிப் பார்த்தேன். கணக்கெடுத்துப் பார்க்கும்போது, பெரியாருடன் இணைந்திருந்து நான் பணியாற்றிய காலத்தைவிட, அவரை விட்டுப் பிரிந்து வந்து பணியாற்றிவரும் காலம் அளவில் அதிகம் என்பது தோன்றிற்று, நான் அவருடன் மிக நெருக்கமாக இருந்து பணியாற்றிய காலம் 1939லிருந்து 1949 வரை - பத்தாண்டு காலம் - அவரை விட்டுப் பிரிந்து பணியாற்றத் தொடங்கி இப்போது பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கணக்கு பார்த்தபொழுதுதான், எனக்கே வியப்பாக இருந்தது - நேற்று - பிரிந்ததுபோல ஒரு நினைப்பு இருந்து வந்தது - அது எத்தகைய பொய்த் தோற்றம் என்பதை, இந்தக் கணக்கு மெய்ப்பித்தது. இன்று எனக்கு ஒரு புதிய நட்பு கிடைத்தது - எதிர்பாராத முறையில். நூற்றுக்கணக்கான சிட்டுக் குருவிகள் இங்கு உள்ளன என்பதுபற்றி முன்பு குறிப்பிட்டேன். அந்தக் குருவிகளில் ஒன்றை, பக்குவமாகப் பறந்து தப்பித்துக்கொள்ள முடியாததை, ஒரு காக்கை கொத்திவிட்டது. - இங்குள்ளவர்கள் காக்கையை விரட்டி குருவியைக் காப்பாற்றினார்கள் - என்னிடம் வந்து சேர்ந்தது. எனக்குத்தான், பறவைகள் வளர்ப்பதிலே மிகுந்த விருப்பமாயிற்றே, குருவி கிடைத்ததாலே மிகுந்த மகிழ்ச்சி. அதை எப்படி வளர்ப்பது என்பதுபற்றி நெடுநேரம் பேசி, நாளையத் தினம் ஒரு கூண்டு செய்வது என்று முடிவு செய்து, இன்றிரவு மட்டும் ஒரு பெரிய கூடையில் குருவியைப் போட்டு வைக்கலாம் என்று திட்டமிட்டோம். பகலெல்லாம் குருவியைப் பார்ப்பதிலேயும், அதற்குத் தீனி தருவதிலேயும் தனியான மகிழ்ச்சி பெற்றேன். மாலை, அறை பூட்டப்படுகிறபோது பெரிய ஏமாற்றம் என்னைத் தாக்கிற்று, குருவி எப்படியோ எங்கேயோ பறந்துபோய்விட்டது. தேடிப் பார்த்துப் பலன் காணவில்லை. அந்தக் கவலையுடன் இன்றிரவைக் கழிக்கவேண்டியதாகிவிட்டது. இன்று பிற்பகல், மதியை பெரிய மருத்துவமனைக்கு நாளையத்தினம் அனுப்பப்போவதாக, டாக்டர் கூறிவிட்டு சென்றார்; என் கை வலிக்கும் ஊசி போட்டார். 8-5-1964 குருவி காணாமற் போய்விட்டதுபற்றி நான் மிகுந்த கவலையாக இருப்பது தெரிந்த நண்பர்கள், இன்று விடிந்ததும், குருவியைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தக் குருவி, தப்பிச் சென்றதே தவிர, நீண்டதூரம் பறந்துபோக முடியாததால், காக்கைக்குப் பயந்துகொண்டு, என் அறைக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் மாமரத்தில் பதுங்கிக்கொண்டிருக்கிறது. விடுவார்களா! பிடித்துக்கொண்டு வந்து கொடுத்தார்கள் - மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதை மீண்டும் ஒரு முறை இழந்துவிடலாமா? ஆகவே உடனே, கூண்டு தயாரிக்கும் வேலையைத் தொடங்கினோம். தோழர்கள் கே. டி. எஸ். மணியும், ஏகாம்பரமும், இரண்டு அட்டைகளை, மூங்கில் குச்சிகள், தென்னை ஈக்குகளைக் கம்பிகளாக்கி, கூண்டாக மாற்றிவிட்டார்கள். உள்ளே குருவி உட்கார, ஊஞ்சல்போன்ற அமைப்பு - தீனிக்கு ஒரு சிறு குவளை - பல்பொடி டப்பா - மற்றோர் குவளை தண்ணீருக்கு! இத்தனை ஏற்பாடுகளையும் செய்து முடித்துக் கொடுத்தார்கள் - குருவி கூண்டிலே, முதலில் கவலையுடன் இருந்தது - ஆனால் மெல்ல மெல்ல இரை தின்னத் தொடங்கிற்று. அதை வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே, நீண்ட நேரம் ஈடுபட்டிருந்தேன் என்ன இருந்தாலும் தன்னிச்சையாக பறந்து திரிந்து மகிழ்ந்து கொண்டிருந்த குருவியைப் பிடித்துக் கூண்டிலிட்டு இம்சிக்கலாமா; பாபம் அல்லவா என்று கேட்கத் தோன்றும் பலருக்கும். இந்தக் குருவி, இப்போதுள்ள நிலையில் வெளியே விட்டால், காக்கையால் கொத்தப்பட்டுச் சின்னாபின்னமாகி விடும். ஆகவே இப்போது அதைக் கூண்டிலே போட்டிருப்பது, அந்தக் குருவிக்கே நல்லதுதான். பாபம் என்று கூறுவார்களே என்ற எண்ணம் எனக்குத் தோன்றாமலில்லை! இரண்டு நாட்களாக நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம், பாபம் என்றால் என்ன - வினாவுக்கு விடைகாணும் முயற்சிபற்றியது. சித்திரலேகா எனும் கதை; ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு. சாம்ராஜ்யம் அமைத்து அரசாண்ட சந்திரகுப்தன் காலத்தையொட்டிப் பின்னப்பட்டுள்ள கதை. இதிலே, பாபம் என்றால் என்ன என்ற பிரச்சினை விவாதிக்கப்படுகிறது. அந்தப் பிரச்சினையைச் சுவையான ஒரு கதையாக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர். ரத்னாம்பர் என்றோர் யோகி - அவருக்கு சிவதாண், விசால்தேவ் எனும் இரு சீடர்கள். உபதேசம் முடிந்து, சீடர்கள் குருவைவிட்டுப் பிரியும் நேரம் - அவர்களுக்கு ஒரு ஐயப்பாடு எழுகிறது. பாபம் என்றால் என்ன என்பது பற்றியே ஐயப்பாடு. குரு கூறினார், பாபம்பற்றிய விளக்கம் அவ்வளவு எளிதாகக் கூறிவிட முடியாது, வெறும் தத்துவ விளக்கத்தால் மட்டும் புரிந்துவிடக்கூடியதல்ல. அனுபவத்தின் மூலம்தான், பாபம்பற்றிய விளக்கம் பெறமுடியும். வாருங்கள் உங்களை நான் அதற்கான "யாத்திரை’யில் ஈடுபடுத்துகிறேன் என்று கூறி, மலைச் சரிவை விட்டுக் கிளம்பிச் சென்று, விசால்தேவ் எனும் சீடனை குமாரகுரு எனும் யோகியிடம் அழைத்துச் சென்று, இவன் என் சீடன் - பாபம்பற்றி விளக்கம் பெற விழைகிறான், முற்றும் துறந்தவரான தங்களிடம் ஓராண்டு சீடனாக இருந்து அந்த அறிவு பெறட்டும் என்று கூறுகிறார். சிவதாண் என்பவனை, பாடலிபுரத்தில் காமக்களியாட்டத்திலே மூழ்கிக்கிடக்கும் ஒரு சீமான், பீஜகுப்தா எனும் பெயரினன், அவனிடம் அழைத்துச் சென்று விவரம் கூறி, அங்கு இருந்துகொண்டு, பாபம் என்றால் என்ன என்பதற்கான விளக்கம் பெற்றுக்கொள் என்று கூறுகிறார். இரு சீடர்களும் ஓராண்டுக்குப் பிறகு தன்னை வந்து பார்த்து, பெற்ற பாடம்பற்றிக் கூறவேண்டும் என்பது குருவின் ஏற்பாடு. பாடலிபுரம் முழுவதும் மதிப்பு மிகப்பெற்ற யோகி குமாரகிரி - சாணக்கியரிடமே தத்துவார்த்த வாதம் புரிகிறார் - அரச அவையில் தனி இடம் பெற்றவர் - முற்றுந் துறந்தவர். பாடலிபுரத்திலேயே இவனைப்போல குடியிலும் கூத்தியரிடம் கூடிக் கிடப்பதிலும் எவரும் இல்லை என்ற பெயரெடுத்தவன் பீஜகுப்தா. பீஜகுப்தா ஆடலழகி சித்ரலேகாவிடம் மையல் கொண்டு, அவளுடன் காமக் களியாட்டம் நடத்திக் கிடப்பவன். அங்கு சிவதாண். சித்ரலேகா ஆடற் கலையில் வல்லவள் - பேரழகி - மன்னர் அவையிலும் மாளிகை வட்டாரத்திலும், அவளுடைய அழகொளி, கலையொளி, புகழொளி பரவி இருந்தது. பொற்கொடி போன்ற சித்திரலேகா, இளம் விதவை; பார்ப்பன குலம். ஒவ்வொரு நாளும், சித்ராவும் பீஜகுப்தாவும் மது அருந்தி, மகிழ்ச்சியில் மூழ்குவர் - பாப விளக்கம் பெற வந்திருந்த சிவன், மதுவை உட்கொள்ள மறுக்கிறான், சில நாட்கள். துவக்கத்தில் சித்ரா சிரிப்பொலி காட்டுகிறாள். அவன் மதுக் கிண்ணத்தைத் தூக்கிக்கொள்கிறான். போதையின் இனிமையைப் பெறுகிறான். இளைஞன் என்று கெக்கலி எழுகிறது. காமக் களியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் அந்த இருவரிடமும், யோகியிடம் சீடனாக இருந்து மிகுந்த உபதேசம் பெற்ற சிவன், துளியும் வெறுப்பு கொள்ளவில்லை, கோபம் கொள்ளவில்லை - பீஜகுப்தாவின் தாராளத்தன்மையும், சித்ராவின் லலிதமும் அவனை அவ்விருவரிடம் மிகுந்த நட்பு கொள்ளச் செய்கிறது. ஒரு நாள் அரச அவையில் தத்துவ விவாதம் - சாணக்கியன் ஒருபுறம், குமாரகிரி போன்ற யோகிகள் மற்றோர் புறம். அன்புள்ள அண்ணாதுரை 28-2-1965 அறப்போர் நினைவுகள் தம்பி! கடவுளை மனிதன்தான் படைத்தான் என்பது சாணக்கியன் வாதம். மனிதனைக் கடவுள் படைத்தார் என்பது குமாரகிரியின் வாதம். கடவுள் யார்? எப்படி இருப்பார்? காட்ட முடியுமா? என்பது சாணக்கியன் கேள்வி. காட்டுகிறேன் காணீர் என்று சூள் உரைத்துவிட்டு, குமாரகிரி, “இதோ! ஜோதிமயமான ஆண்டவன்’ என்று, அரச அவையின் மையத்தைக் காட்டுகிறார் - அங்கு அடிநுனி காண முடியாத விதமான ஜோதி. அரசன் உட்பட, அவையினர் அனைவரும் வியப்பிலாழ்கின்றனர்.”சாணக்கிய வாதம் தோற்றுவிட்டது, சர்வேஸ்வரனைக் காட்டி விட்டார் குமாரகிரி’ என்கின்றனர். சாணக்கியன் மட்டும், “ஜோதியா? இங்கா? கண்டீர்களா? எல்லோருமா? நான் காணவில்லையே!’ என்று கூறுகிறான். அவையினர் சாணக்கியன் போக்கை வெறுக்கின்றனர். நாங்கள் அத்தனை பேரும் கண்டது பொய்த்தோற்றமோ என்று கேட்டுக் கோபிக்கின்றனர். தோல்வியால் தலை கவிழ்ந்துகொள்கிறான் சாணக்கியன். அனைவரும் திகைத்துக் கிடக்கும்போது, ஆடலழகி எழுந்திருக்கிறாள், குமாரகிரியிடம் வாதிட”கடவுள் என்பதாக ஒரு ஜோதியைக் காட்டினீர். அது உண்மைத் தோற்றமல்ல. உமது மன வலிமை காரணமாக, இங்குள்ள மற்றவர்களின் மனதை உமக்குக் கட்டுப்பட்டதாக்கிக்கொண்டு, ஜோதி தெரிவதாக நம்பும்படி செய்தீர். சாணக்கியரின் மனதை உமது மன வலிமை ஏதும் செய்ய இயலவில்லை. அதனால் அவர் கண்ணில் எந்த ஜோதியும் தென்படவில்லை; எனக்குந்தான். உண்மைதானே நான் சொல்வது?’ என்று கேட்டாள். திடுக்கிட்டுப்போன குமாரகிரி, ஆம் என்று ஒப்புக்கொண்டான். “வெற்றி சித்ராவுக்கே’ என்று அவையினர் ஆர்ப்பரித்தனர். வெற்றிச் சின்னம் சூட்டினர் சித்ராவுக்கு. அந்த ஆடலழகியோ அந்த வெற்றிச் சின்னத்தை யோகி குமாரகிரிக்குச் சூட்டுகிறாள். சீடன் சிவன்,”காமக் களியாட்டக்காரி என்கிறார்கள், இவளோ கற்றோர் வியக்கும் தத்துவ வாதம் புரிகிறாள்’ என்றெண்ணி வியப்படைகிறான். இந்த வெற்றியால் சித்ராவுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை; புதிய கவலை பிறந்துவிட்டது என்கிறான் பீஜகுப்தா. அவன் கண்டறிந்த கருத்திற்கேற்பவே, யோகி குமாரகிரியிடம், சித்ராவின் மனம் இலயித்துவிடுகிறது. அறிவாற்றல் மிக்கவன், அழகன், அவனே எனக்கு ஏற்றவன் என்று கருதுகிறாள் சித்ரா. துணிந்து ஆசிரமம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறாள். நீ போக போக்கியத்தில் புரள்பவள், உனக்கு இங்கு இடமில்லை என்று விரட்டுகிறார் யோகி. தங்களுக்குப் பணிவிடை செய்வதிலே இன்பம் காண்பேன், வேறு ஏதும் வேண்டேன், போக போக்கியங்களைத் துறக்கிறேன், பற்று அற்றவளாகிறேன் என்று கெஞ்சுகிறாள் சித்ரா. நீயா! பற்று அற்ற நிலை பெறப்போகிறாயா? போ! போ! உன்னால் முடியாது! என்று மேலும் விரட்டுகிறார் யோகி. உங்களுக்கு அச்சம்; நான் இங்கு இருந்தால், தவம் கலைந்துவிடும் என்ற பயம்; அதனால்தான் என்னை விரட்டுகிறீர். முற்றுந் துறந்தவரான உமக்கு ஏற்படலாமா அந்த அச்சம் என்று பேசி, மடக்குகிறாள் சித்ரா. சம்மதமளிக்கிறார் யோகி; சித்ரா ஆஸ்ரமத்தில் தங்குகிறாள். இது தெரிந்த பீஜகுப்தா மனம் உடைந்த நிலை அடைகிறான். சீடன் திகைக்கிறான். பாடலிபுத்ரச் சீமான் ஒருவர் தமது மகளை பீஜகுப்தாவுக்கு மணம் செய்விக்க விரும்புகிறார். அந்தப் பெண் பெயர் யசோதரா. அவளையோ சீடன் சிவன் காதலிக்கிறான். இந்தச் சிக்கல் இங்கு வளருகிறது. ஆஸ்ரமத்திலேயோ முற்றுந் துறந்தவரின் நிலை குலைகிறது; காமவிகாரம் மேலிடுகிறது, போகபோக்கியத்தில் புரண்டு கிடந்தவளோ, துறவு நிலையே மேற்கொள்கிறாள் - யோகியோ, பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, அவளை அண்டவே ஆரம்பிக்கிறார். ஆடலழகியோ தன்னைத் தீண்ட இடம் தரவில்லை. யோகியாருக்கு ஆசைகளை அடக்கவேண்டிய அவசியம் பற்றிப் போதனை செய்கிறாள்! ஒரு நாள், பீஜகுப்தா யசோதராவை மணம்புரிந்து கொண்டதாக, யோகி கூறி, இனி அவனைப்பற்றிய நினைவை விட்டொழி, என்னை ஏற்றுக்கொள், நான் வெறும் மாயையில் மூழ்கிக் கிடந்தேன், இனி உன்னுடன் வாழ்ந்துதான் மெய்ப் பொருளை உணர முடியும், வா! என்று அழைக்கிறார். யோகியை நாடிவந்தபோதிலும் சித்ராவின் உண்மைக் காதல் குப்தனிடம். எனவே, குப்தன் யசோதராவைத் திருமணம் செய்துகொண்டதாக யோகி கூறினதும் திடுக்கிட்டாள்; அந்த அதிர்ச்சி அவனை நிலைகுலையச் செய்தது; அந்தச் சந்தர்ப்பத்தை யோகி விருந்தாக்கிக்கொண்டார். யோகம் கலைந்தது; போக வாழ்க்கையைத் துவக்கினார் குமாரகிரி. இங்கே, யசோதரை - சிவன் காதல் விஷயம் பீஜகுப்தனுக்குத் தெரிகிறது. சித்ராவை இழந்துவிட்டோம், இனி யசோதராவைத் திருமணம் செய்துகொண்டு புது வாழ்வு தொடங்கலாம் என்று பீஜகுப்தன் தீர்மானிக்கும்போது, சிவன் காதல் தெரியவருகிறது. மனம் குழம்புகிறது. விரைவில் தெளிவு பெற்று, தன் சொத்து முழுவதையும் சிவனுக்கு எழுதிவைத்து, யசோதராவையும் திருமணம் செய்துவைக்கிறான். இதைக் கேட்டறிந்த சித்ரா, சீறுகிறாள் யோகியிடம் - கேவலம் சிற்றின்பத்துக்காகப் பொய் பேசி என்னை ஏய்த்தீர். பற்று அற்றவரோ நீர்! யோகியோ? என்று ஏசிவிட்டு, எத்தனை இன்பத்திலே மூழ்கிக்கிடந்தாலும், அத்தனையையும் ஒரு நண்பனுடைய நல்வாழ்வுக்காகத் துறந்துவிட ஒப்பி முடிவெடுத்த குப்தனே உண்மையான யோகி; அவனிடம் பணிவிடை செய்வதே எனக்கு இனித் தவம் என்று கூறிப் பாடலிபுரம் செல்கிறாள் - விவரம் விளக்கம் பேசிக் கொள்கிறார்கள். சித்ராவும், குப்தனைப்போலவே செல்வம் சுகம் யாவற்றையும் துறந்துவிட்டு குப்தனுடன் கிளம்புகிறாள், ஏழையாக. ஓராண்டுக்குப் பிறகு இரு சீடர்களும் குருவிடம் சென்று தாம் கண்டவைகளைக் கூறுகின்றனர். காமக் களியாட்டத்தில் உழன்றபோதிலும், நினைத்தபோது எதையும் துறந்துவிடத் துணிவுபெற்ற பீஜகுப்தனே, முற்றுந்துறந்தவராக இருப்பினும் பேரழகியைக் கண்டபோது நிலைகுலைந்து காமச்சேட்டையில் ஈடுபட்ட குமாரகிரியைவிட, மேலோன் என்று முடிவு செய்கிறார்கள். ஆகவே சீடர்களே! அவரவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் அமையும்; அதனை ஆராய்ந்து பார்த்த பிறகே எது பாபம் என்பதுபற்றி முடிவுகட்ட முடியும் என்று குரு கூறிச் சீடர்களை அனுப்பிவைக்கிறார். இத்தனை பேர்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினையிலேயே, இதுதான் பாபம் என்று உறுதியாகக் கூறமுடியவில்லை என்கிறபோது, காக்கையால் கொத்தப்பட்டுச் சாக இருந்த குருவியை நான் எடுத்து கூண்டிலிட்டு வளர்ப்பது பாபம் ஆகாது என்ற நினைப்புடன்தான், குருவியை வைத்துக் கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறேன். 9-5-1964 நீண்ட பல நாட்களாக நடைபெற்றுக்கொண்டு வந்த மதுரை வழக்கு முடிவுபற்றி இன்று பத்திரிகையில் பார்த்துப் பதறிப்போனோம். ஏற்கனவே கிட்டத்தட்ட ஆறு திங்கள் சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த முத்துவுக்கும் அவரது குழுவினருக்கும் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், குற்றம் செய்ய உடந்தையாக இருந்தார்கள், தூண்டிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட கருணாநிதி, நடராஜன் உள்ளிட்ட குழுவினருக்கு ஆறு திங்கள் கடுங்காவல் தண்டனை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் மதுரை முத்துவுக்கும் அவர் குழுவினருக்கும் ஒன்றரை ஆண்டு சிறை என்று ஆகிறது. மதுரை முத்து இது குறித்து மனக்கலக்கம் அடையமாட்டார் என்றாலும், அவருடைய குடும்பத்தினர் நிச்சயமாகக் கலங்கித் தான் போயிருப்பார்கள். பல திங்களாகவே முத்து, அறப்போர் பற்றியும், தண்டனை கடுமையாக இருக்கும் என்பதுபற்றியும் இல்லத்தாரிடம் சொல்லிவைத்திருப்பார் என்றாலும், அரசியல் சட்டம் கொளுத்தியதற்காக வேறு இடங்களில், மாதக்கணக்கிலே தண்டனை தரப்பட்டிருக்க முத்துவுக்கும் அவர் குழுவினருக்கும் ஓராண்டு தண்டனை தரப்பட்டிருப்பது வேதனையைத்தான் கிளறிவிட்டிருக்கும். நாங்கள், முத்து காவலில் இருந்துவரும் நாட்கள் அதிகப்பட அதிகப்பட, கவலைப்பட்டபடி இருந்தோம். ஆறு திங்கள் சிறையில் காவலில் வைக்கப்பட்டிருப்பதால், தண்டனை அதிக காலத்துக்குத் தரமாட்டார்கள், சில மாதங்களே இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த நானும், அதிர்ச்சி அடைந்தேன். தென்பாண்டி மண்டலத்தில், முத்துவின் பிரசாரப் பணி ஓராண்டுக்கு நடைபெற இயலாமற்போவது இயக்கத்துக்கு ஒரு நட்டம்தான் என்றாலும், அவர் சிறையில் இருப்பதை எண்ணி எண்ணிப் பல்லாயிரக் கணக்கினர் மனம் வேதனைப்படுவர் என்பதும், அந்த வேதனையே இயக்கத்தை வளர்த்திடத்தக்க எழுச்சியாக மாறும் என்பதையும் எண்ணிப் பார்க்கும்போது, முத்து நீண்டகாலத் தண்டனை பெற்றிருப்பது இயக்கத்துக்கு மிகுதியான பயனையே இறுதியில் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எண்ணி, என் மனதுக்கு ஆறுதல் தேடிக் கொண்டேன். முத்து, இதுபோல நீண்டகாலத் தண்டனைதான் தனக்குத் தரப்படும் என்று முன்பே எதிர்பார்க்கும் தோரணையில் அறப்போருக்கு முன்பு மதுரை சென்றிருந்த என்னிடம் பேசிக் கொண்டிருந்த நினைவும், குடும்பத்தாருடன் என்னை வைத்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியின் நினைவும் என் நெஞ்சினில் தவழ்ந்தது. அறப்போரில் ஈடுபட்டவர்களிலேயே அதிககாலச் சிறைத்தண்டனை பெறும் வாய்ப்பை, முத்து பெற்றுவிட்டார் என்பது, அவரைப் பிரிந்திருக்கும்பொழுது வேதனையாகத் தென்பட்டாலும், பிறகு நமக்கெல்லாம் பெருமிதம் தரும் என்பதில் ஐயமில்லை. கருணாநிதியும் நடராஜனும், அறப்போரில் ஈடுபடுவதற்கான நாளை அவர்களே தேர்ந்தெடுத்து அறிவித்துமிருக்கிறார்கள். இடையிலே அவர்கள் ஆற்றவேண்டிய பணி நிரம்ப. எனவே, அவர்கள் தம்மீது தொடரப்படும் வழக்குபற்றி உயர்நீதி மன்றம் வரை சென்று நீதி பெற முயற்சிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தண்டனை பெற்ற அனைவரும் திருச்சி சிறையில், இன்றிரவு இருக்கிறார்கள். நானும் நண்பர்களும் சென்னைச் சிறையில். இடையிலே இருநூறு கல் தொலைவு என்றாலும் காடு மலை கடந்து நெடுவழி தாண்டி, என் எண்ணம், திருச்சிச் சிறையிலே உள்ள அறப்போர் வீரர்களிடம் செல்கிறது. இன்றிரவு அவர்கள் நினைவுடனேயே இருப்பதால் தூக்கமும் எளிதாக வராது என்று எண்ணிக்கொண்டேன்; ஆனால் ஓரிரு மணி நேரத்துக்குப் பிறகு, தமிழ் காத்திடும் வீரர்கள் எங்கெங்கு உள்ளனர், எத்துணை ஆர்வத்துடன் பணிபுரிகின்றனர், எவ்வளவு கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக்கொள்கின்றனர் என்பதை எண்ணியபோது, ஒரு புதுவித மகிழ்ச்சியே பிறந்தது; அந்த களிப்புணர்ச்சியைத் துணை கொண்டு கண்ணயரச் செல்கிறேன். 11-5-1964 நேற்று, ஞாயிற்றுக்கிழமை - உப்புச் சப்பற்ற விடுமுறை நாள். படிப்பதும் பேசிக் கொண்டிருப்பதுமாகப் பொழுதை ஓட்டினோம். இன்று காலை பிறந்ததும், நாங்கள் நூற்பதற்காக ஒப்படைத்திருந்த ராட்டைகளையும், தக்ளியையும், அந்தத் துறையினர் எடுத்துக்கொண்டு போய்விட்டனர். கணக்கெடுக் கிறோம் என்று காரணம் கூறினார்கள். நமது தோழர்களோ இதிலே ஒரு இரகசியம் இருக்கிறது; நாளை மறுநாள் விடுதலை செய்யப்போகிறார்கள்; ஆகவேதான் இன்று இவைகளை எடுத்துக்கொண்டு போகிறார்கள் என்ற பேச்சைத் துவக்கி விட்டார்கள். அவரவர்களுக்கு உள்ள வாதத் திறமையைக் காட்டினர். ஆனால் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்களுக்கே தெரியும் சலுகைகாட்டி விடுதலை செய்யப்போவதில்லை என்பது. என்றாலும் சிறையிலே எழும் பேச்சுகளில் இது மிகச் சுவைதரும் வகையானது என்பதால் பேசுகிறார்கள். இன்று உள்ளபடி மகிழ்ச்சி தரும் செய்தியை “முரசொலி’ தந்திருந்தது. நமது கழகத்தவர்மீது தொடரப்படும் பல்வேறு வழக்குகளை நாம் சந்தித்தாகவேண்டி நேரிட்டுவிட்டது; இதற்காகும் செலவுக்கான பணம் பொது மக்களின் ஆதரவினால் கிடைக்க வேண்டும். இந்த நல்ல நோக்கத்துடன் சென்னை நகரில் ஒவ்வொரு வட்டத்திலும் தோழர்கள்”உண்டி’ வசூல் செய்து கிட்டத்தட்ட ஆறு ஆயிரம் ரூபாய் திரட்டிய செய்தி பார்த்து மகிழ்ந்தோம். பொது மக்களின் பேராதரவு கழகத்துக்கு வளருகிறது என்பதை எவரும் அறிந்துகொள்ள இது தேவைப்படுகிறது. கழகத் தோழர்கள் பொதுமக்களுடன் தோழமைத் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவும் இது நல்ல வாய்ப்பாகிறது. இந்த நல்ல பணியில் ஈடுபட்டு, பொருளும் புகழும் ஈட்டிய தோழர்களுக்கெல்லாம் நன்றி கூறிக்கொண்டேன், இங்கிருந்தபடி. நான் வெளியே இருந்திருந்து இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருந்தால் இத்தகைய வசூலின்போது ஐம்பது ரூபாய்க்குக் குறையாமல் ஒவ்வொரு வட்டமும் வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பேன். சில வட்டங்கள் ஐம்பது ரூபாய்க்கும் குறைவாகத் திரட்டி உள்ளது தெரிகிறது. வெளியே சென்றதும், அந்த வட்டங்களிடம் மிகுதித் தொகையைக் கேட்டுப் பெறப்போகிறேன் என்று இங்கு நண்பர்களிடம் கூறினேன். இரண்டு நாட்களாக மனித குலத்தின் வளர்ச்சிபற்றி ஆராய்ச்சி ஏடு ஒன்று படித்துக்கொண்டிருந்தேன். புல்லாகிப் பூண்டாகி என்று இங்கு தேனொழுகப் பாடிட நம்மிடம் கவிதை இருக்கிறது, இல்லை என்று கூறவில்லை. ஆனால், இந்தத் துறையிலே, ஆண்டு பல உழைத்து, நுண்ணறிவினர், ஆராய்ச்சி நடத்தி அரிய உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள் - மேனாட்டில். அவர்கள் அங்கு எடுத்துக்கொண்ட அரும் முயற்சிகளை வியந்து பாராட்டிப் போற்றவேண்டியது முறையாயிருக்க, இங்கு நம்மிலே சிலர், இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஆராய்ச்சி உண்மைகள் அவ்வளவும், அதற்கு மேலும்கூட, நம் நாட்டிலே வெகு பழங்காலத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டன என்று பேசிக்கொள்வதிலே பெருமை இருப்பதாகக் கருதுகிறார்கள். புல்லாகிப் பூண்டாகி என்ற கவிதைகூட, உயிர்களின் தோற்றம், வளர்ச்சி எனும் அறிவுபெற அல்ல. பாவபுண்யங்களுக்கு ஏற்றபடி பிறவிகள் எடுக்கப் படுகின்றன என்ற வைதீகக் கருத்தை விளக்க எழுந்ததேயாகும். பழம் பாடல்களை, இன்றைய ஆராய்ச்சி உண்மைகளை அன்றே தெரிவித்திட ஆக்கப்பட்ட அறிவுப் பாக்களாகும் என்று வாதிடுவது சுவை அளிக்கலாம்; பயன் இல்லை. அந்தப் பாடல்கள் அந்நாட்களில் "அருளாளர்‘களின் கருத்தோவியங்கள். கண்டு பிடிப்புகளுக்கான வழிகளைக் கூறம் பாடங்கள் அல்ல. சொல்லிக் கொள்ளலாம், சுவைக்காக. “சந்திர மண்டலம் போகலாம் என்பதுபற்றி இன்று ஏதோ பெரிய ஆராய்ச்சி செய்கிறார்களாம். இதனை மிகப்பெரிய விந்தை என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் வள்ளலார்,”நாதர் முடி மேலிருக்கும் வெண்ணிலாவே அங்கு நானும் வரவேண்டுகிறேன் வெண்ணிலாவே’என்பதாக, அன்றே பாடினார் - உங்களுடைய அவ்வளவு ஆராய்ச்சியையும் ஒரே அடியிலே அடக்கிக் காட்டிவிட்டார்,’’ என்று பேசிக் கொள்ளலாம். பயன் என்ன? அவருடைய அந்த அடியை வைத்துக்கொண்டு, தைப்பூசத்துக்குப் பயன்படுத்தினோமேயன்றி, வெண்ணிலா இருக்கும் இடம் செல்ல வழி என்ன என்று ஆராய்ச்சி நடத்த அல்ல. இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் யாவும் தமிழகத்தில் பழங்காலத்திலே அறிந்திருந்தனர் என்று விளக்க, இதுபோன்ற சில பல கவிதைகளைப் பின்னி எழுதப்பட்ட ஒரு தமிழ் ஏடு பார்த்துவிட்டு, அன்பழகன் அதில் உள்ளவைகளைப் படித்துக்காட்டி இதுபோல் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். தமிழ்ப் பேராசிரியராகப் பச்சையப்பன் கல்லூரியில் அவர் பணியாற்றிய நாட்களில், அவருடைய வகுப்பறை எவ்வளவு பயனளித்திருக்கும் என்று அன்று ஓரளவு உணர முடிந்தது. நான் படித்துக்கொண்டிருந்த மனிதகுல ஆராய்ச்சி பற்றிய ஏடு, பாசுரங்கள், அருளாளர் வாக்குகள் ஆகியவைகளிலே இருந்து அடிகளைப் பெயர்த்தெடுத்துப் பிழிந்து, இதோ ஆராய்ச்சியாளரின் கண்டுபிடிப்புகளின் கருப்பொருள் என்று கூறிடும் முறையிலே எழுதப்பட்டதல்ல. கற்காலத்துக்கு முன்பு இருந்த நிலையிலிருந்து, கற்காலம் நாடோடிகளாக வாழ்க்கை நடத்திய காலம், பயிரிட்டுப் பிழைத்த காலம் என்று மனிதகுலம் படிப்படியாகப் பெற்ற வளர்ச்சியின் தன்மைகளை, புதை குழிகளில் கிடைத்த எலும்புக் கூடுகள், அந்த எலும்புகளிலே காணப்பட்ட வெட்டுக்காயக் கோடுகள், சாம்பற் குவியல், குகைகளிலே காணப்பட்ட கற்கருவிகள், அந்தக் குகைகளின் சுவர்களிலே தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் என்பன போன்றவைகளை, அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ள இடங்களில், மனித நடமாட்டமற்ற இடங்களிலே கல்லி எடுத்து, அவைகளின் தன்மைகளிலிருந்து காலத்தைக் கணக்கெடுத்து, அன்று இருந்தவர்களின் வாழ்க்கை முறைகளையும் கண்டறிந்து கூறப்பட்டுள்ள ஏடு. பொழுதுபோக்காக ஒரு முறை படித்துவிட்டு புரிந்துவிட்டது என்று சொல்லிவிடத்தக்க ஏடு அல்ல. பல முறை படித்திடவும், சிந்தித்துப் பொருள் பெறவும் வேண்டும். இன்று பெரும்பகுதி அந்த நூலைப் படிப்பதிலேயே செலவிட்டு மகிழ்ச்சி பெற்றேன். 12-5-1964 இப்போது, குருவிகள் நான்கு உள்ளன - ஆமாம், காக்கைகளிடமிருந்து தப்பி எங்களிடம் கிடைத்தவையும், நண்பர் ஏகாம்பரம் கூடையைக் கண்ணியாக வைத்துப் பிடித்த குருவியும். பகலில் அறைக்கு வெளியே கூண்டு வைக்கப்படுகிறது; அருகில் நான் அமர்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ, குருவிகளின் நடமாட்டத்தின் வேடிக்கையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு விநாடியும் குருவிகள் எப்படிக் கூண்டைவிட்டு வெளியே செல்வது என்ற முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளன; இடையிடையே தீனி பொறுக்குகின்றன; இந்தக் குருவிகளிலே ஒன்றினுடைய தாய்க்குருவி மட்டும் கூண்டுக்கு வெளியே வட்டமிடுவதும், குஞ்சுக்கு வெளியே இருந்தபடியே தீனி கொடுப்பதுமாக இருக்கிறது. மற்றக் குருவிகள் தாமாகத் தின்றிடும் பக்குவம் அறிந்துகொண்டுவிட்டன. இது ஒன்று மட்டும், தாயின் உதவியைப் பெறவேண்டிய பருவத்திலிருக்கிறது. அந்தத் தாய்க் குருவியும், மிகுந்த பாசத்துடன், குஞ்சுக்குத் தீனி கொடுக்க, அடிக்கடி கூண்டு இருக்குமிடம் வருகிறது. இரவு, கூண்டு என் அறையில். என்னோடு பொன்னுவேலுவும் வெங்காவும் இருப்பதால் காவலாளிகள் கணக்கெடுக்க வரும்போது, "மூன்று’ என்று வழக்கமாகக் கணக்குக் கொடுப்பதுண்டு; இப்போது ஏழு என்று வேடிக்கையாகக் கணக்குக் கொடுக்கிறோம். 16-5-1964 இரண்டு மூன்று நாட்கள் குறிப்பு எழுதவில்லை. நிகழ்ச்சிகளில் புதுமையும் இல்லை; குறிப்பிடத்தக்கவையாகவும் இல்லை. சிந்தனையில் தோன்றியவைகளை எப்படி இங்கு வடித்துக்காட்ட முடியும்? பகலில், அரசியல் பிரச்சினைகள் பல பற்றி நண்பர்களுடன் பேசுவது, இரவு அறையில் அமர்ந்து வரைவது, எழுதுவது, படிப்பது இப்படி. ஷேக் அப்துல்லாவின் முயற்சிகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்துல்லாவிடம் நட்புறவு காட்டி ஆச்சாரியார், ஜெயப்பிரகாசர், விநோபா ஆகிய மூவரும் பிரச்சினை தீர வழிகளைக் கூறி இருப்பதாகச் செய்தி வந்திருப்பதுபற்றி நண்பர்கள் விளக்கம் கேட்டார்கள். ஆராயத் தக்க விதமான வடிவத்தில் இன்னும் எந்த வழியும் எடுத்துக் காட்டப்படவில்லை. எனவே இப்போது இந்தப் பிரச்சினையில் அவசரமோ, பரபரப்போ காட்டவேண்டிய அவசியம் எழவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. பாகிஸ்தானும், ஒப்புக் கொள்ளத்தக்க ஒரு சமரசத் திட்டம் கிடைக்க முடியுமா என்பதிலேயே எனக்கு ஐயப்பாடு எழுகிறது. ஜனநாயக முறையைக் குலைத்துவிட்ட ஒரு அதிபரின் கீழ் பாகிஸ்தான் இருக்கும்போது, அங்கிருந்து நட்புறவு, சமரசம், தோழமை என்பவை கிடைக்க முடியுமென்றும் எனக்குத் தோன்றவில்லை என்று நான் கூறினேன். பண்டித நேருவிடம் கொண்டுள்ள பயபக்தி விசுவாசம் காரணமாகவே, காங்கிரசில் உள்ள மற்றத் தலைவர்கள் அப்துல்லாவை எதிர்க்காமலிருக்கிறார்கள் என்பதும் நன்றாகத் தெரிகிறது என்பதுபற்றியும், பேசிக்கொண்டிருந்தேன். காஞ்சிபுரத்தில், அரசியல் சட்ட மொழிப்பிரிவைக் கொளுத்துவதன் மூலம் தமிழகத்திலுள்ள இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை எடுத்துக்காட்டிய அறப்போர் வீரர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, கம்பராசபுரம் இராசகோபால், காஞ்சிபுரம் துரை அச்சக உரிமையாளர் சம்பந்தம், சீதாபுரம் ராமதாசு, மாதவரம் வேதாசலம் ஆகிய ஐவருக்கும் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனையும், அந்த நிகழ்ச்சியின்போது தொடர்பு வைத்துக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மாவட்டச் செயலாளர் சி. வி. எம். அண்ணாலை, நகர செயலாளர் மார்க், பொதுக்குழு உறுப்பினர் சபாபதி ஆகிய மூவருக்கும் ஆறு வாரக் கடுங்காவல் தண்டனையும், செங்கற்பட்டு வழக்கு மன்றத்திலே விதிக்கப்பட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த நெல்லிக்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி பி. ஏ., பி. எல். லும், காட்டுமன்னார்குடி தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தியும், குற்றம் மெய்ப்பிக்கப்படவில்லை என்பதனால், விடுதலை செய்யப் பட்டார்கள் என்றும் இதழ்கள் மூலம் செய்தி கிடைத்தது. மதுரையில் முத்து குழுவினருக்கு ஓராண்டு தண்டனை தரப்பட்டது கண்டு, இங்கும் அதுபோல இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தோம். நான் சற்று அதிகமாகவே கவலைப் பட்டுக்கொண்டிருந்தேன். ஆகவே ஆறு திங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஒருவிதமான ஆறுதல் அளித்தது. தண்டனைதான் ஆறு திங்களே தவிர, அவர்கள் வழக்கு நடைபெற்று முடிய எடுத்துக்கொள்ளப்பட்ட 4 மாதங்களும் சிறையிலே இருந்து வந்தனர்; ஆக மொத்தத்தில் பத்துமாதச் சிறை என்றாகிறது. தோழர் கோவிந்தசாமி சிறையில் இருக்கும்போது, அடுத்தடுத்து அவருடைய அண்ணனும், அக்காவும் காலமாகி விட்டனர். அதனால் ஏற்பட்ட வேதனையையும் சுமந்துகொண்டு, அவர் சிறையிலே அடைபட்டுக் கிடந்தார். தோழர்களைச் சென்னைச் சிறைக்கு எப்போது அழைத்து வருவார்கள் என்று ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தோம். அவர்களுக்கும், சிறை செல்கிறோமே என்ற கலக்கமோ கவலையோ எழுந்திருக்காது; சென்னைச் சிறையில் என்னையும் மற்ற நண்பர்களையும் காணலாம், உடனிருந்து மகிழலாம் என்ற எண்ணம்தான் ஆர்வமாக எழுந்திருந்திருக்கும் என்று எண்ணுகிறேன். தமிழகத்தில், இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டு தண்டனை பெறும் கழகத் தோழர்கள் அனைவரையும், ஒரே ஊரில், ஒரே சிறையில் வைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதுபற்றி பேசிக்கொண்டிருந்தோம். 18-5-1964 இரண்டு நாட்களாக கோவிந்தசாமியும் மற்றவர்களும் வருவார்கள், வருவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாற்ற மடைந்தோம். ஒரு சமயம் அவர்களை வேலூர் சிறைக்கு அழைத்துச் சென்றுவிட்டிருக்கக்கூடும் என்று எண்ணிக் கொண்டோம். சிறையிலே அவ்விதமான வதந்தியும் பரவி விட்டது. ஆனால் பகல் பனிரண்டு மணி சுமாருக்கு எட்டுத் தோழர்களும், கலியாண வீட்டுக்குள்ளே நுழைவதுபோல, புன்னகையுடன் வந்தனர். வெளி உலகத்திலிருந்து வருகிறார்கள் அல்லவா - சிறை உலகிலே இருந்து வரும் எங்களுக்கு அவர்களைக் காண்பதிலே, சேதிகள் கேட்டறிவதிலே, தனி இன்பம் பிறப்பது இயற்கைதானே. இப்போது இந்தப் பகுதியில் நாங்கள் 20-பேர் இருக்கிறோம் - மதி மருத்துவ மனையிலிருந்து வரவில்லை - அவரோடு சேர்த்தால் 21. வந்தவர்கள், அறப்போர் நிகழ்ச்சிகள், மக்கள் காட்டிய ஆர்வம், வழக்குமன்ற விவரங்கள் ஆகியவைபற்றிக் கூறினார்கள். நாங்கள் சிறையில் உள்ள நிலைமைகள்பற்றிக் கூறினோம். மீஞ்சூர் கோவன் அணியினரும், பூவிருந்தவல்லி சின்னசாமி குழுவினரும் விடுதலையாகிச் சென்றதைச் சொன்னோம். விவரமெல்லாம் நடராஜன் கூறினார். அவரும் மதியின் இளவல் கிட்டுவும், சிறை வாயிலில் எங்களைக் கண்டு பேசினார்கள் என்று கோவிந்தசாமி கூறினார். அவருடைய வேதனையை உணர்ந்து, சில வார்த்தைகள் ஆறுதல் கூறினேன். தம்மைச் சிறு வயது முதல் பாசத்தோடு வளர்த்து வந்தவர்கள் தனது அக்காதான் என்பதை, கோவிந்தசாமி கூறிக் கண் கலங்கினார். இரண்டு நாட்களாக, மனிதகுல வரலாறுபற்றிய (மற்றோர்) புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். இது, கற்காலத்தில் இருந்த நிலையிலிருந்து படிப்படியாக மனிதகுலம் எவ்விதமெல்லாம் மாறுதல் அடைந்தது என்பதுபற்றிய ஆராய்ச்சி ஏடு அல்ல. மிகப் பழைய காலத்திலிருந்து உலகிலே நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கதைவடிவிலே எடுத்துக்காட்டும் ஏடு. மொத்தத்தில் கதைகளிலே, கி. மு. 30000 ஆண்டிலிருந்து கி. பி. 1860ஆம் ஆண்டு வரை, குறிப்பு தரப்பட்டிருக்கிறது. காட்டுமிருகங்களைக் கூட்டிவைத்து, இரண்டு காலுள்ள ஒரு பிராணியைக் கண்டேன், இனி நமக்கு ஆபத்து உண்டாகும் என்று ஒரு குரங்கு கூறுகிறது, கி. மு. 30000லில். அடுத்த கதை கி. மு. 15000 - கற்காலத்துச் சூழ்நிலை பற்றியது; பிறகு கி. மு. 3500, கி.மு. 1152; கி. மு. 480, கி. மு. 300, கி. மு. 200, கி. மு. 100, கி. மு. 55 என்று தொடர்ந்து, கி. பி. 1492, அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்ச்சி, கி. பி. 1736, நீராவி பற்றிய ஆராய்ச்சியின் துவக்கம், கி. பி. 1860 - விடுதலை உணர்ச்சி எழும்பியது என்ற முறையில், புத்தகம் அமைந்திருக்கிறது. இதிலே, வியப்பு என்னவென்றால், இது பத்து வயதுச் சிறுவர்களுக்கு உலக வரலாற்று நிகழ்ச்சிகளை ஓரளவுக்கு அறிமுகப்படுத்தி வைக்க எழுதப்பட்ட புத்தகம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது முன்னுரையில் - புத்தகம் 1930-க்கு முன்பு அச்சிடப்பட்டது. மற்ற நாட்டு மாணவர்களுக்கு அறிவு புகட்ட எத்தகைய நேர்த்தியான ஏடுகளெல்லாம் அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணரச் செய்கிறது இந்த ஏடு. 19-5-1964 வழக்கமான - பார்வையிடுதல், ஆனால் இந்த முறை, எங்களுக்குப் புது மகிழ்ச்சி - புதியவர்களுடன் நிற்கிறோம் அல்லவா - மொத்தம் இருபதுபேர், இங்கு மட்டும் - உள்ளே வேறு இருக்கிறார்கள். எட்டுப்பேருக்கும் அவசரம் அவசரமாகக் கைதி உடை தரப்பட்டு அணியில் நிறுத்தப்பட்டனர். இங்கு எல்லாக் கைதிகளைக் காட்டிலும், உயரம், உடற்கட்டு, பார்வையில் உறுதி, எல்லாவற்றிலும் மேலான நிலை, கம்பராசபுரம் ராசகோபாலுக்குத்தான். சிறை மேலதிகாரிகள் பார்வையிட்டுக்கொண்டு சென்றபோது, அவர்கள் மனதிலே எழாமலா இருந்திருக்கும், நல்ல நல்ல ஆட்களப்பா, தி. மு. கழகத்தில் என்ற எண்ணம்! இன்று மேலும் மகிழ்ச்சி எழத்தக்க விதத்தில் திருச்சியில் பல்வேறு முனைகளில் அறப்போரில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் தருமலிங்கம், எம். எஸ். மணி, அழகமுத்து, ஜெகதாம்பாள் வேலாயுதம், வெங்கலம் மணி, அரியலூர் நாராயணன், புதுக்கோட்டை தியாகராசன் உள்ளிட்டு, மொத்தத்தில் 250-க்கு மேற்பட்டவர்கள் "கைது’ செய்யப் பட்டிருக்கிறார்கள். இன்றிரவு மதுரை முத்து அவர்களைத் திருச்சி சிறையில் வரவேற்றிருப்பார் என்று கருதுகிறேன். அந்தத் தோழர்களுக்கு மத்தியில் நான் இருப்பதற்கில்லையே என்று ஒரு கணம் கவலைகூடப் பிறந்தது. பிறகோ எங்கு இருந்தால் என்ன - தொலைவு நம்மைப் பிரித்துவைக்க முடியாது - அவர்கள் நெஞ்சிலே நாம், நமது நெஞ்சிலே அவர்கள் என்ற எண்ணம் மலர்ந்தது. எது சிதைக்க முடியும்? பேசி மகிழ்ந்திருங்கள், தோழர்களே! நாங்கள் இங்கே உங்களைப்பற்றித்தான் பேசி மகிழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நானாகக் கூறிக் கொண்டேன். இன்னும் நாலு நாட்களில், சுந்தரம், வெங்கா, பொன்னுவேல், பார்த்தசாரதி ஆகிய நால்வரும் விடுதலையாகிறார்கள். இன்று காலையிலிருந்து காஞ்சிபுரம் மணி, சுந்தரத்தை பெயரிட்டுக் கூப்பிடுவதில்லை - "என்னய்யா நாலு நாளு!’’ என்றுதான் அழைக்கிறார். 20-5-1964 திருச்சி மாவட்டத்தில் அறப்போரில் ஈடுபட்டவர்களில் பலருக்கு உடனுக்குடன் விசாரணை நடைபெற்று நான்கு, மூன்று, இரண்டு திங்கள் என்ற முறையில் தண்டனைகள் தரப்பட்டுவிட்ட செய்தி பார்த்தோம். வழக்கு தயாரிப்பதாகக் கூறிக்கொண்டு, மாதக்கணக்கிலே தோழர்களைச் சிறையில் அடைத்து வைத்திருக்கும் கொடுமைக்குத் திருச்சி மாவட்டத் தோழர்கள் ஆட்படுத்தப்படாதது மிக்க மகிழ்ச்சி தந்தது. எதிலுமே திருச்சி மாவட்டத் தோழர்கள் நல்ல வாய்ப்புப் பெறுபவர்கள் - தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கியதும் நடைபெற்ற முதல் மாநாடு திருச்சியில்தானே! பொது மக்களின் நல்லாதரவைத் திரட்டி, சென்ற பொதுத் தேர்தலின்போது சிறப்புமிக்க வெற்றிகளையும் ஈட்டிய இடம் திருச்சி மாவட்டம். மற்ற எல்லா மாவட்டங்களிலும் கழகத்துக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் தேர்தல் சமயத்திலே மோதுதல் - திருச்சி மாவட்டத்திலே மட்டும், "தழுவுதல்’ இருந்தது. பல நல்ல வாய்ப்புகளைப் பெற்று வருவதுபோலவே, திருச்சி மாவட்டம், அறப்போர் வீரர்களின் எண்ணிக்கையிலும் மற்ற மாவட்டங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இன்று திருப்பெரும்பூதூர் தொகுதி திருத்தி அமைக்கப்படும் முறைபற்றி அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருந்தேன். இந்தத் தொகுதியிடம் அமைச்சருக்குக் கிடைத்ததைவிட எந்த வட்டத்தில் தனக்குக் கிட்டத்தட்ட 2000 வாக்குகள் அதிகமாகக் கிடைத்ததோ, அந்த வட்டத்தை வெட்டி எடுத்து, அதனை கடம்பத்தூர் தொகுதியிலே இணைத்திருப்பது கழகத்துக்கு ஏற்படக்கூடிய நல்வாய்ப்பைக் குலைப்பதாக அமையும் என்று கவலையுடன் கூறினார். மேலும் பல தொகுதிகளிலேயும், இதுபோன்ற நிலைமை ஏற்படுவதுபற்றி நண்பர்கள் எடுத்துக்காட்டினார்கள். இதற்குப் பரிகாரமே கிடைக்காதா என்று கேட்டனர். நிலைமையைப் பொது மக்களுக்கு எடுத்து விளக்குவதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்? - இதற்காக அமைந்துள்ள குழு முடிவெடுத்தது. நாங்கள் என்ன செய்ய முடியும் என்று, ஆளுங்கட்சி நியாயம் பேசும். எந்தத் தொகுதி எப்படித் திருத்தி அமைக்கப்பட்டாலும், வெற்றி பொதுமக்களின் நல்லாதரவிலே இருக்கிறது. அந்த நல்லாதரவைப் பெறுவதிலே நாம், மும்முரமாக ஈடுபட வேண்டியதுதான் - வேறு பரிகாரம் என்ன இருக்க முடியும்? என்று நான் கூறினேன். இன்று பொதுவாக ஜனநாயக முறைகள்பற்றி அன்பழகனிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஜனநாயகம் எத்தனை குறையுடையதாக இருந்தாலும், மக்கள் தமது கருத்தை அறிவிக்கவும், தம்முடைய நலனுக்கு ஏற்ற ஆட்சியை அமைத்திடும் முயற்சியில் ஈடுபடவும் வாய்ப்பு அளிக்கிறது. இந்த வாய்ப்பு முழுப்பலனைக் கொடுக்க, திருத்தங்கள், முறை மாற்றங்கள் தேவைப்படக்கூடும் - ஆனால் அடிப்படை ஜனநாயக முறையை மக்கள் பெற்றுள்ள மிக பெரிய வாய்ப்பு என்று கருதுவதிலே, மாறுபாடான எண்ணம் எழலாகாது. சிலருக்கு, தோல்வி காரணமாகவோ, தத்துவ விசாரம் காரணமாகவோ ஜனநாயக முறையிலேயே ஐயப்பாடு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. இந்தப் போக்கு விரும்பத்தக்கது அல்ல. சிலர், கட்சிகளற்ற ஆட்சி அமைப்பு வேண்டும் என்கிறார்கள். மற்றும் சிலர், நேரடித் தேர்தல் முறையைவிட, மறைமுகத் தேர்தல் முறை மேலானது என்கிறார்கள். ஆனால் எத்தகைய முறை மாற்றங்களைப்பற்றி அவர்கள் சிந்தனை செய்தாலும், ஜனநாயக முறையைவிட மக்களுக்கு நல்வாய்ப்பு தரத்தக்க வேறுமுறை இருப்பதாக மட்டும் கூறமுடியாது என்று கூறினேன். ஜனநாயக முறையிலே சில மாற்றங்கள் செய்யவேண்டுமென்ற எண்ணம் பல நாடுகளிலேயும் எழும்பிக்கொண்டு வருகிறது என்பதைக் காட்டக்கூடிய ஒரு புத்தகம் இன்று படித்தேன். கற்பனைதான் - அதிலே ஒரு கருத்தோட்டமும் இருக்கிறது. 1980லில் பிரிட்டிஷ் காமன்வெல்த் அமைப்பு எவ்விதம் இருக்கும், பிரிட்டனில் முடியாட்சி முறை இருக்குமா, ஜனநாயக முறையிலே என்னென்ன புதுமைகள் புகுத்தப்படும் என்பதுபற்றியெல்லாம் நெவில்ஷாட் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில் கோடிட்டுக் காட்டப்படுகிற கதை வடிவம், பிரிட்டனில் முடியாட்சி இருக்கிறதே தவிர, முடிதரித்தோருக்கு உரிமைகளும் சலுகைகளும் படிப்படியாகக் குறைக்கப்பட்டுவிடுகின்றன. 1980லில், பிரிட்டனில் ராணிதான் ஆட்சி செய்கிறார். ஆனால் அவருக்குத் தமக்குப் பிறகு தம் மக்கள் மன்னர்களாக இருக்க வேண்டும் என்ற விருப்பம்கூட எழவில்லை. முடி தரித்துக்கொண்டு, ஆட்சியின்பிடி அவ்வளவையும் மக்கள் மன்றத்திடம் ஒப்படைத்துவிட்டு இருப்பதில், பசையும் இல்லை, ருசியும் இல்லை என்று தோன்றுகிறது. முடி மன்னர்களின் செலவு பற்றி கணக்குப் பார்ப்பதும், கேள்வி எழுப்புவதும் சரியல்ல, முறையல்ல என்ற மரபுகூட 1980லில் எடுபட்டுவிடுகிறது. எந்தச் செலவானாலும் மக்கள் மன்றத்தின் ஒப்பம் பெற்றாக வேண்டும் என்றாகிவிடுகிறது. பிரிட்டனில் நிலைமை இவ்விதமாகிவிடும்போது, காமன்வெல்த்தில் இணைந்துள்ள கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும், ராஜபக்தி ஓங்கி வளருகிறது. மகாராணியின் செலவுக்காகத் தாராளமாகப் பணம் வழங்க அந்த நாடுகள் முன்வருகின்றன. ராணியே, இரண்டொரு மாதங்கள் மட்டுமே பிரிட்டனில் தங்கி இருப்பது, பெரும் பகுதி நாட்களைக் கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் கழிப்பது என்று திட்டமிடுகிறார்கள். ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் பிரிட்டிஷ் ராணியிடம் “பக்தி விசுவாசம்’ காட்டுவதாகக் குறிப்பிடப் பட்டுள்ள பகுதியைவிட, சுவையுள்ள சிந்தனையைக் கிளறிவிடும் பகுதி, ஓட்டுகள் பற்றியது. ஆஸ்திரேலியாவில்,”ஒருவருக்கு ஒரு ஓட்டு’ என்ற ஜனநாயக முறை மாற்றப்பட்டு ஒருவர் ஏழு ஓட்டுகள்வரை பெறத்தக்க வாய்ப்பு அளிக்கப்படும் முறை புகுத்தப்படுகிறது - கதையில். செல்வவான்களும், படித்தவர்களும் மட்டுமே ஓட்டு உரிமை பெற்றிருக்கும் முறை மக்களாட்சிக்கு வழிகோலாது - மேல்தட்டிலுள்ளவர்களின் ஆதிக்கத்துக்குத்தான் வழி அமைக்கும். ஆகவேதான், நீண்ட கிளர்ச்சிக்குப் பிறகு, வயது வந்தவர்கள் அனைவருக்கும், படித்திருந்தாலும் இல்லா விட்டாலும். சொத்து இருந்தாலும் இல்லை என்றாலும் ஓட்டு உரிமை உண்டு என்ற திட்டம் கிடைத்தது. ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற திட்டம், ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகி விட்டது. இந்த முறை மாற்றப்பட்டு, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுகள் கிடைக்கத்தக்க ஒரு முறை, ஆஸ்திரேலியாவிலே புகுத்தப்படுகிறது என்று 1980லில், நிலைமை எப்படி இருக்கக் கூடும் என்ற கற்பனையைக் கதை வடிவிலே தருபவர் தெரிவிக்கிறார். ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையின்படி, வயது வந்த அனைவருக்கும், படிப்பு, உடைமை உண்டா இல்லையா என்று பார்க்காமல், விஷயங்களைப் புரிந்துகொள்ளத்தக்க வயது வந்திருக்கிறதா என்பதைக் கவனித்து, ஓட்டு தரப்படும் முறை அகற்றப்படவில்லை. அனைவருக்கும் அந்த ஒரு ஓட்டு இருக்கிறது - அடிப்படை ஓட்டு. ஆனால் அத்துடன் வேறு ஆறு விதமான காரணங்களால், ஓட்டுகள் வழங்கப்படுகின்றன. அனைவருக்கும் ஓட்டு வழங்கப்பட்ட பிறகு, கல்வியாளர்களுக்கு அவர்கள் கல்வி காரணமாகப் பெறும் புதிய தகுதி, பொறுப்பு இவற்றைக் குறிப்பில் வைத்து, இரண்டாவது ஓட்டுத் தரப்படுகிறது. எவரெவர் தமது நாட்டு நன்மைக்காக வெளி நாடுகள் சென்று பணியாற்றி இருக்கிறார்களோ - குறிப்பாக போர்முனைப் பணியாற்றியவர்கள் - அப்படிப்பட்டவர்களுக்கு அதற்காக ஒரு ஓட்டு கிடைக்கிறது - மொத்தத்தில் மூன்று ஓட்டுகள் அவர்களுக்கு. விவாக விடுதலை செய்துகொள்ளாமல், குடும்பம் நடத்தி, இரண்டு மக்களைப் பெற்று, அவர்களைப் பதினான்கு வருஷங்கள் வரையில் ஆளாக்கிவிடுபவருக்கு, குடும்பக் கடமையைச் செவ்வனே செய்து முடித்தவர் என்பதற்காக, ஒரு ஓட்டு கிடைக்கிறது - குடும்ப ஓட்டு. எவரெவர், தொழில் நடத்தி, பொருள் ஈட்டி, நாட்டின் மொத்தச் செல்வத்தை வளர்க்கிறார்களோ அவர்களுக்கு, அந்தத் துறையில் ஈட்டிய வெற்றிக்காக ஒரு ஓட்டு தரப்படுகிறது. மார்க்கத் துறையில் தூய பணியாற்றுபவருக்கு அந்தத் தனித்தகுதி காரணமாக ஒரு ஓட்டு தரப்படுகிறது. சிறப்பு இயல்பினர் என்று ராணியார் கருதி, சிலருக்கு ஒரு ஓட்டு அளிக்கிறார்கள். இப்படி ஒரு சிலருக்கு ஒரு ஓட்டு என்பது மாறி, ஒருவருக்குப் பல ஓட்டுகள், ஒவ்வொரு தனித் தன்மைகளுக்காக - மொத்தத்தில் ஏழு ஓட்டுகள் என்ற புதுமுறை புகுத்தப்பட்டிருக்கிறது - ஆஸ்திரேலியாவில் - கதையில். கதைதானே என்று கூறிவிடுவதற்கில்லை - ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பது பொதுநீதி என்றபோதிலும், ஜனநாயகம் செம்மையடையவேண்டுமானால் மக்களிடை ஏற்படும் அல்லது மக்களில் சிலரோ பலரோ பெறும், தனித்தன்மைகள், திறமைகள், தகுதிகள் ஆகியவற்றைப் புறக்கணித்துவிடக்கூடாது - அவர்கள் எல்லோரிலும் இருக்கிறார்கள். ஆனால் சில தனிச்சிறப்புகளையும் பெற்றிருக்கிறார்கள். ஆகவே எல்லோருக்கும் இருப்பதுபோல அவர்களுக்கும் ஒரே ஒரு ஓட்டு என்பது முறையாகாது என்ற கருத்து, இந்தக் கதை வாயிலாக வலியுறுத்தப்படுகிறது. இந்த ஏற்பாட்டின்படி, ஒருவருக்குப் பல ஓட்டுகள் கிடைப்பதால், தேர்தலின்போது அவருடைய முக்கியத்துவம் அதிகமாகிறது. சில தகுதிகளைப் பெற்றால், ஒரு ஓட்டுடன் மற்றும் ஒன்றோ இரண்டோ கிடைக்கும் என்ற நிலை இருப்பது காரணமாக, மக்கள், அந்த அதிக ஓட்டுகளைப் பெறுவதற்காக தனித் திறமை களைப் பெற முனைவார்கள் - அதன் காரணமாக, சமூகத்தின் மொத்தத் தரம் உயரும் என்ற கருத்து எடுத்துக்காட்டப்படுகிறது. ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பதுதான் ஜனநாயகத்திலே அடிப்படையாக இருக்கிறது என்றாலும், இப்போதுகூட, ஒருவர் பி. ஏ., பட்டதாரியாக இருந்தால் அவருக்கு எல்லோருக்கும் கிடைக்கும் அடிப்படை ஓட்டு மட்டுமல்லாமல், பட்டதாரி என்பதற்காக ஒரு ஓட்டு கிடைக்கிறது. அவர் இரண்டு ஓட்டுகளுக்கு உரிமையாளர். அவரே, மாநகராட்சி மன்றம், நகராட்சி மன்றம் ஆகியவற்றில் உறுப்பினரானால், அந்த மன்றங்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு ஓட்டு அளிக்கும் உரிமையும் கிடைக்கிறது - ஆக அவருக்கு மொத்தத்தில் மூன்று ஓட்டுகள். ஒருவர் பி. ஏ., படித்திருந்து, ஆசிரியராகப் பணியாற்றினால் பொது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, அதிலே கலந்துகொள்கிறார் - அதற்கு ஓட்டு இருக்கிறது; பிறகு பட்டதாரிகள் தொகுதித் தேர்தலின்போது கலந்து கொள்கிறார்கள், அதிலே ஓட்டு இருக்கிறது; மூன்றாவதாக ஆசிரியர் தொகுதியில் தேர்தல் நடைபெற்றால் அதற்கும் ஓட்டளிக்கிறார் - ஆக அவருக்கு 3 ஓட்டுகள். ஆனால் பொதுவாக, ஜனநாயக அடிப்படை என்று நாம் கூறுவது ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பதைதான். அந்த அடிப்படை நடைமுறையில் இருக்கும் நாடுகளிலே இதுபோல் மூன்று ஓட்டுகள் பெறுகிற உரிமை சிலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது - சில தனித் தன்மைகள் சிறப்புகள் காரணமாக. அன்புள்ள அண்ணாதுரை 7-3-1965 அரசியல் விந்தைகள். . . பண்டித நேரு காலமானார். . . தம்பி! கதையில் இதுபோல ஒருவருக்குப் பல ஓட்டுகள் - மொத்தத்தில் ஏழு - அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதிலே உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவிலே உள்ளதாகக் கற்பனையாகக் கூறப்படும் ஏழு ஓட்டு முறையில், ஒருவர் அந்த ஏழு ஓட்டுகளையும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தலின்போது, உபயோகப்படுத்துகிறார் - இங்கு மூன்று ஓட்டுகளை வைத்திருப்பவர், மூன்று ஓட்டுகளையும், தனித்தனியாக, மூன்று கட்டங்களில் பயன்படுத்துகிறார். இங்கு மூன்று ஓட்டு உள்ளவர், மூன்று வெவ்வேறு தேர்தல்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் உரிமையும் பெறுகிறார். கதையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு ஓட்டு முறையில், ஒரே தேர்தலில் ஏழு ஓட்டுகளை அவைகளைப் பெற்றிருப்பவர் உபயோகித்து, ஒரே ஓட்டுப் பெற்றுள்ள வாக்காளரைவிட, ஏழு மடங்கு வலிவுபெற்றவர் தான் என்பதை எடுத்துக் காட்டுகிறார். சொல்வதில்லையே தவிர, சொல்ல நினைத்தால், இங்கு ஒரு பட்டதாரி ஆசிரியர், சாதாரண வாக்காளரைப் பார்த்து, "உன்னைப்போல நான் என்று எண்ணிக்கொள்ளாதே; பொது உறுப்பினர் தேர்ந்தெடுக்க மட்டுமே உனக்கு ஓட்டு உண்டு; அந்த ஓட்டு எனக்கும் உண்டு; ஆனால் பட்டதாரிகள் தொகுதியிலேயும், ஆசிரியர்கள் தொகுதியிலேயும் உனக்கு ஓட்டு இல்லை; எனக்கு உண்டு; நான் உன்னைவிட மும்மடங்கு; தெரிந்துகொள் என்று சொல்லலாம் - வேடிக்கையாக. ஆஸ்திரேலியாவிலேயே ஒரே பொதுத் தேர்தலின்போது ஒருவர் மற்றொருவரை விட, இரு மடங்கிலிருந்து ஏழு மடங்குவரை வலிவு காட்டக் கூடியவராகிறார். தகுதிகள், தனித் திறமைகள், சிறப்பியல்புகள் ஆகியவைகள் கொண்டவர்கள் மட்டுமேதான், ஆட்சி அமைப்புக் காரியத்தில் ஈடுபட வேண்டும் என்று கூறுவது, ஜனநாயகம் ஆகாது. ஆனால் ஜனநாயகம் என்பதற்காக தகுதிகள், திறமைகள், சிறப்பியல்புகள் ஆகியவைகளுக்குப் பொருளும் பயனும் இல்லாமலே போய்விட வேண்டும் என்று கூறுவதும் சரியாகாது. ஆகவேதான், ஜனநாயக அடிப்படையையும் அழிக்காமல், தனித்தன்மைகளுக்கும் வாய்ப்புத்தர, ஏழு ஓட்டு முறை ஏற்பட்டது என்று கதையில் விளக்கம் தரப்படுகிறது. இதுபோன்ற முறை தேவையா அல்லவா என்பதற்காக அல்ல, ஜனநாயகத்தைச் செம்மைப்படுத்த வேண்டும் என்ற கருத்து இன்று பலரைப் பலவிதமான புது ஏற்பாடுகள்பற்றி எண்ணிப் பார்த்திட வைக்கிறது என்பதற்காக, இந்தக் கதையிலே காணப்படும் விந்தை முறைபற்றி குறிப்பிட்டுக் காட்டினேன். நெடுநேரம் அன்பழகனும் நானும், இது குறித்தும் இதன் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் ஆசிரியர் தொகுதியில் வெற்றிபெற்றவரல்லவா? 22-5-1964 வெங்காவும் பொன்னுவேலுவும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் - பொழுது விடிந்ததும் விடுதலை. என் வலதுபக்கத்து அறையிலுள்ள பார்த்தசாரதிக்கும் இடப்பக்க அறையிலுள்ள சுந்தரத்திற்கும் கூடத்தான். இன்று இரவோடு, அந்த நால்வருடன் ஒன்றாகக் கழித்து வந்த சிறை வாழ்க்கை முடிவடைகிறது. அவர்கள் வெளியே செல்கிறார்கள். நான் இன்னும் ஓர் இருபத்தியொரு நாட்கள் இங்கு இருக்க வேண்டும். இன்றோரு 19 நாட்களாகியுள்ளன என்று பொன்னுவேல் கணக்குக் கொடுத்தார். இவர்களுடன் வெளியேயும் நெருங்கிப் பழகுபவன்தான் நான் என்றாலும், இந்த ஆறு திங்களாக இருபத்தி நாலு மணி நேரமும் ஒரே இடத்தில் இருந்து பழகி வந்ததை நினைக்கும்போது, இந்தப் பிரிவு மனதுக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது. என்னிடம் அவர்கள் கொண்டுள்ள அன்பும், என் நலனைக் கருத்தில் கொண்டு, எனக்காகப் பல்வேறு உதவிகளை அவர்கள் செய்வதிலே வெளிப்பட்ட பாச உணர்ச்சியும் என் உள்ளத்தில் என்றும் நிலைத்திருக்கும். பார்த்தசாரதி தவிர மற்ற மூவரும் இளமைப் பருவத்தினர் - குடும்பம் மட்டுமே தரத்தக்க குதூகலத்தை இழந்தது மட்டும் அல்ல - இழந்து இங்கு ஆறு திங்களாக அல்லலை மேற் கொண்டனர். ஒரு தூய காரியத்துக்காகத் தொண்டாற்றுகிறோம் என்ற உணர்ச்சியும் எழுச்சியும் தவிர, இந்த நிலையை இலட்ச இலட்சமாகக் கொட்டிக் கொடுப்பதாகச் சொன்னாலும் ஏற்படுத்த முடியுமா? தூங்கட்டும், பாவம்! நாளைத்தினம் பெற்றோர் மகிழ, உற்றார் உசாவிட, நண்பர்கள் நலன் விசாரிக்க, இல்லத்தரசி இன்முகம் காட்ட, மகிழ்ச்சி அடையப்போகிறார்கள். அவர்களெல்லாம் அதுபோல இன்பமாக வாழ வேண்டும் என்பதுதான் என் எண்ணம். என்றாலும் கன்னல் தமிழ் மொழி காத்திடும் கடமை எழும்போது, எத்தகைய இன்ப நுகர்ச்சியையும் விட்டுக் கொடுத்துவிட்டு, வீறுகொண்டு எழ வேண்டும் என்பது என் முறையீடு. என் குரல் கேட்டு, மதிப்பளித்து, இன்ப நிலைமையை இழந்திடும் துணிவு கொண்டு, இங்கு வந்தவர்கள் இந்த நண்பர்கள். நாளையத் தினம், நாட்டினரைக் காணச் செல்கிறார்கள். நாளை மாலை, வெங்காவின் கிராமமான சீதாபுரத்தில், பாராட்டுக் கூட்டமாம். அறப்போரில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்; நாடு அவர்களைப் பாராட்டத்தான் செய்யும், சென்று வருவீர்! சிறையிலே மேலும் பலர் இன்னமும் அடைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்ற செய்தியை மக்களிடம் எடுத்துக் கூறிவருவீர்! என்று தெரிவித்துக் கொள்கிறேன். இன்று காலை கருணாநிதி வந்திருந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது - பார்த்து இரண்டு மூன்று திங்களாகி விட்டன. கருணாநிதியுடன் கருணாநந்தமும் வந்திருந்தார். தோழர்களின் நலன் குறித்துக் கேட்டறிந்து மகிழ்ச்சி பெற்றேன். கருணாநிதியின் வழக்கு அடுத்த மாதம் மூன்றாவது வாரம் நடைபெறும் என்று அறிந்துகொண்டேன். கூட்ட நிகழ்ச்சிகள், உண்டி திரட்டியது ஆகியவைபற்றிக் கூறிடக் கேட்டு இன்புற்றேன். "அண்ணா, 13-ம் தேதி நிச்சயமாக விடுதலைதானே? காலையிலே எத்தனை மணிக்கு அனுப்பிவைப்பீர்கள்?’’ என்று ஆவலுடன் கேட்ட கருணாநிதியின் கேள்விக்கு, அதிகாரி அழகான ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்தார். இன்று மாலை என்னைக் காண ராணி, பரிமளம், சரோஜா மூவரும் வந்ததாகவும், காலையிலேயே பார்க்கும் முறை தீர்ந்து விட்டதால் இன்று பார்ப்பதற்கு இல்லை என்று கூறித் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். பார்த்தசாரதி, இத்தனை நாட்களாகப் பார்த்துவந்த சமையல் நிர்வாகத்தை எப்படிச் செம்மையாகச் செய்வது என்ற நுணுக்கங்களை, புதிய நிர்வாகி காஞ்சிபுரம் தோழர் சம்பந்தத்திடம் விளக்கிக்கொண்டிருந்தார். சம்பந்தத்துக்கு இது புதிதுமல்ல, பிரமாதமுமல்ல. இங்கு 16 பேர்தானே, செங்கற்பட்டுச் சிறையில் அவருடைய நிர்வாகத்தில் 55 பேர் இருந்துவந்தார்கள் என்று, காஞ்சிபுரம் தோழர்கள் பூரிப்புடனும் பெருமையுடனும் பேசினார்கள். 23-5-1964 இன்று, பார்த்தசாரதி, சுந்தரம், பொன்னுவேல், வெங்கா ஆகிய நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்! காலை 5-30க்கே நான் எழுந்துவிட்டேன், நண்பர்களை வழி அனுப்பி வைக்க. நால்வரும், இங்குள்ள நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு 6-30 சுமாருக்குச் சென்றனர். சிறை உடைகளைக் களைந்துவிட்டு, அவர்கள் தங்கள் சொந்த உடை அணிந்துகொண்டு, எங்களிடம் விடைபெற எதிரே நின்றபோது, ஒரு புதிய பொலிவு அவர்கள் முகத்திலே மலர்ந்தது. வெளியே செல்கிறோம், அறப்போரில் ஈடுபடச் சிறை சென்றவர்கள் இதோ விடுதலை பெற்று வந்திருக்கிறார்கள் என்று ஆயிரமாயிரம் தோழர்கள் சுட்டிக்காட்டி மகிழப் போகிறார்கள். அறப்போரின் அருமை பெருமையினை அறிந்தவர்கள் பெருமிதம் கொள்ளப் போகிறார்கள். பெற்றோரும் இல்லத்தின் மற்றவர்களும், சிறை சென்றுள்ளனரே நமது செல்வங்கள், எப்படி அவர்களைப் பிரிந்திருப்பது, உடல் நலம் கெடாமல் இருக்க வேண்டுமே, என்றெல்லாம் கொண்டிருந்த கவலை நீங்கப்பெற்று, வந்து விட்டனர் எமது செல்வங்கள், பொலிவளிக்கும் புன்னகை தவழும் முகத்துடன் வந்துவிட்டனர் என்று கூறி, மகிழ்ச்சி பெறப் போகிறார்கள் என்ற எண்ணம், விடுதலை பெற்ற நால்வருக்கும், புதிய தெம்பையும், நடையிலே ஒரு துடுக்கையும் தானாகக் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. அவர்களை அந்த நேரத்தில் காண்பவர்களின் கண்களில் இவர்கள் சற்று முன்புவரை கைதிகளாக இருந்தவர்கள் என்று எண்ணிடக்கூடத் தோன்றாது. அத்தகைய ஒரு புதுப் பொலிவு பெற்றனர். அவர்களை அனுப்பி வைத்துவிட்ட பிறகு, அன்று முழுவதும் எனக்கு, அடிக்கடி அவர்கள் பற்றிய நினைவாகவே இருந்தது. அதிலும், எதற்கெடுத்தாலும், வேடிக்கையாக, சுந்தரத்தைக் கூவிக் கூவி அழைப்பது இந்த ஆறு திங்களாக எனக்குப் பழக்கமாகி விட்டிருந்ததால், அந்த நினைவு மேலோங்கியபடி இருந்து வந்தது. சுந்தரம்! சுந்தரமூர்த்தி! சுந்தரமூர்த்தி நாயனார்! - என்று இப்படி மாறி மாறிக் கூப்பிட்டபடி இருப்பேன் - அவர்கள் வெளியே சென்றுவிட்ட பிறகு, அந்த அறைகள் வெறிச்சிட்டுப் போய்க் கிடந்தன. வெளியே நல்ல கூட்டம் - வரவேற்பு என்று காவலாளிகள் பேசிக்கொண்டார்கள் - விவரங்கள் கூறுவாரில்லை. நாங்களாக, இப்படி இருந்திருக்கும், இன்னின்னார் வந்திருப்பார்கள், இப்படி இப்படிப் பேசி மகிழ்ந்திருப்பார்கள் என்று, இங்கு இருந்தபடி கற்பனை செய்துகொண்டிருந்தோம் - அதிலேயும் ஒரு சுவை கிடைக்கத்தான் செய்தது. முன்பே செய்திருந்த ஏற்பாட்டின்படி, சமையல் நிர்வாகப் பொறுப்பை காஞ்சிபுரம் சம்பந்தம் மேற்கொண்டார். சுந்தரமூர்த்திநாயனார் வெளியே சென்றுவிட்டார், இனி சம்பந்தர் துணைதான் நமக்கு என்று வேடிக்கையாகக் கூறினேன். எந்தக் காரியத்தையும் பொறுப்பாகவும் அமைதியாகவும், தமது திறமை பற்றி எதுவும் பேசாமலும் பெருமை கூறிக்கொள்ளாமலும் செய்து முடிப்பவர், சம்பந்தம் - அடக்கமான இயல்பு. இப்போ, எனக்கு வலப்புறமும் இடப்புறமும், பார்த்தசாரதி, சுந்தரம் இருந்த அறைகளில், சம்பந்தமும் மணியும் குடியேறி உள்ளனர். இரவு என் அறையில், மணியும் திருவேங்கிடமும். இன்றிரவு நீண்ட நேரம் செங்கற்பட்டு மாவட்ட கழக நிலைமைகள் குறித்து, மணியிடம் பேசிக்கொண்டிருந்தேன். என்னுடைய நலனைக் கவனித்துக்கொள்வதிலே மிகுந்த அக்கறை கொண்டுள்ள மணி, சம்பந்தம், திருவேங்கிடம் ஆகியோர், நான் விடுதலை பெற்ற பிறகும், இங்கே இருக்கவேண்டியவர்கள். சுந்தரம், பார்த்தசாரதி ஆகியோர் வெளியே சென்றுவிட்டதால் என் நலனைக் கவனித்துக்கொள்வதில் புதிய பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, அன்பழகன் மெத்த உதவிகள் செய்கிறார். இன்று மாலை, ராணி, பரிமளம், சரோஜா மூவரும் என்னைக் காண வந்திருக்கிறார்கள்; இன்று அனுமதிக்க முடியாது, திங்கட்கிழமை வரலாம் என்று அதிகாரிகள் கூறித் திருப்பி அனுப்பிவிட்டதாகத் தெரியவந்தது. அன்பழகனைக் காணவந்த வெற்றிச் செல்வியையும் அதுபோலவே திருப்பி அனுப்பிவிட்டிருக்கிறார்கள்; அவர்கள் வீடு சென்று, சிறை மேலதிகாரியிடம் தொலைபேசி மூலம் கேட்டிருக்கிறார்கள், "இன்று எனக்கு என் கணவரைப் பார்க்கும் அனுமதி இருந்தும் திருப்பி அனுப்பிவிட்டார்களே, ஏன்?’ என்று. அதற்குப் பிறகு, வெற்றிச்செல்விக்கு அனுமதி தரப்பட்டது. அவர்கள் அன்பழகனை வந்து பார்த்து, இந்தத் தகவலையும் ராணியைத் திருப்பி அனுப்பிவிட்டது பற்றியும் கூறி இருக்கிறார்கள். இன்று சர்க்கார் விடுமுறை நாளாம் - ஆகவே சீக்கிரமாகவே பூட்டிவிட வேண்டும் என்று கூறி, வெளியே மஞ்சள் வெயில் அடித்துக் கொண்டிருக்கும்போதே எங்களை அறைகளில் போட்டு விட்டார்கள். தூக்கம் வருகிறவரையில், ரμயர்வில் புரட்சி வெற்றிபெற்ற காலத்திற்கும் புதிய சமுதாய அமைப்பு பலமடையும் காலத்திற்கும் இடையே இருந்த நிலைமைகளை விளக்கும் பல சிறுகதைகள் - ரμய எழுத்தாளர்கள் தீட்டியவை - கொண்ட ஏடு படித்துக்கொண்டிருந்தேன். சிறை வாழ்க்கை பற்றிய ஒரு சிறுகதை, மனதை உருக்கும் விதமாக இருந்தது. அதைப்பற்றிச் சிந்தித்தபடியே கண் அயர்ந்தேன். 24-5-1964 ஞாயிற்றுக்கிழமை - ஓய்வு நாள் - சிறையில் வறட்சி நிரம்பிய நாள். இந்த வறட்சியை நீக்கும் வகையில், இன்று காலை பத்து மணிக்கு மருத்துவமனை சென்றிருந்த மதியழகன் இங்கு வந்து சேர்ந்தார். கடந்த பதினைந்து நாட்களாக, மருத்துவ மனையில் இருந்துவிட்டு வருகிறார் - சிறையில் உள்ளவர்களுக்கு, இவ்விதம் வெளியில் இருந்து வருகிறவர்களைக் கண்டதும், ஒரு தனி மகிழ்ச்சி பிறப்பது இயல்பல்லவா - சேதிகள் கேட்டறிந்து கொள்ளும் வாய்ப்பு என்பதால். மருத்துவமனையில் தமக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைபற்றி விவரமாக மதி கூறினார். விடுதலையான வெங்கா, பொன்னுவேல், பார்த்தசாரதி ஆகியோர் நேற்று மருத்துவமனை வந்து தன்னைப் பார்த்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு, ராஜாராம் எம். பி., என். வி. நடராஜன் எம். எல். சி., அரங்கண்ணல் எம். எல். ஏ., குத்தூசி குருசாமி, மற்றும் பலர் வந்து நலன் கேட்டுச் சென்றதையும் கூறினார். சென்னைக் கடைவீதியொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கியவர்களை, மருத்துவமனையில் பார்த்ததை, மதி கூறிடக் கேட்கும்போது, மிகவும் வேதனையாக இருந்தது. பயங்கரமான விபத்து என்று தெரிகிறது. மிகப் பரிதாபகரமான சாவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இத்தனை உயிர்களைக் காவுகொண்ட, அத்தகைய ஆபத்தான வெடிமருந்துகளை எத்தகைய இடத்தில், எவ்விதமான முறையில் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டு திட்டம், முறைகளே இல்லையா? இவ்விதமான பயங்கரமான விபத்து ஏற்படக்கூடிய விதத்திலா நிலைமை இருந்திருக்க வேண்டும் என்பனபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். மதியழகன் நேரிலே அந்த விபத்திலே சிக்கிக்கொண்டவர்களைப் பார்த்து விட்டு வந்த விவரம், கூறக் கேட்டபோது மனம் மிகவும் வேதனைப்பட்டது. 25-5-1964 இன்று காலை பத்து மணிக்குமேல் மேயர் கிருஷ்ணமூர்த்தி துணை மேயர் கபாலமூர்த்தியுடன் என்னைக் காண வந்திருந்தார். முன்பு இரண்டொரு முறை முயற்சித்தும் மேயர் என்னைக் காண உரியநேரத்தில் அனுமதி கிடைக்கவில்லை. சில ஆண்டுகளாக என்னிடமும் கழகத் தோழர்களிடமும் நட்புகொண்டு பழகிவரும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இனிய இயல்பு படைத்தவர். அவர் மேயராக வேண்டுமென்று கழகம் எடுத்துக்கொண்ட முதல் முயற்சி வெற்றி பெறாமல் போனபோது நான் சங்கடப்பட்டேன்; அப்போதுகூட அவர், வெற்றி கிட்டாததுபற்றிக் கவலை இல்லை, நீண்ட பல ஆண்டுகளாக நான் எந்தக் கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து பணியாற்றி வந்திருக்கிறேனோ அந்தக் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரசுடன் கூடிக்கொண்டு எனக்குத் துரோகம் செய்த அதே நேரத்தில், கழகத் தோழர்கள் கட்டுப்பாடாக இருந்து எனக்கு ஆதரவு அளித்த பெருமையும் மகிழ்ச்சியுமே எனக்குப் போதும் என்று கூறினவர். மேயர் பொறுப்பிலே ஈடுபட்டதிலே ஏற்பட்ட அனுபவங்கள் பற்றிச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். துணை மேயருடன், அப்போதுகூட நகரில் பல பகுதிகளைப் பார்வையிட்டுவிட்டு வருவதாகச் சொன்னார். எளிய வாழ்க்கையினரான அந்த நண்பருடைய தொண்டு, நகருக்குக் கிடைத்திருப்பது நல்லதோர் வாய்ப்பாகும். அவர் தொடர்பு கொண்டுள்ள கம்யூனிஸ்டு கட்சியின் இன்றைய பிரச்சினைபற்றிச் சில கூறி ஆரம்பித்தார்; அந்தப் பேச்சை மேற்கொண்டு விரிவாக்காதபடி நான் வேறு விஷயங்களைப் பேசலானேன். மாலையில் ராணி, பரிமளம், சரோஜா மூவரும் வந்திருந்தனர். மூவருக்குமேல் அனுமதி கிடையாது என்பதால், கௌதமன் வெளியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கூறினார்கள். அனைவருடைய நலன்பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இன்று இரவு, காஞ்சிபுரம் அறப்போரில் ஈடுபட்ட கோவிந்தசாமி குழுவினர் வழக்கில், அளிக்கப்பட்ட தீர்ப்பு விவரம் படித்துக்கொண்டிருந்தேன். மாலை அணிவித்தார்கள். கொடிகளைக் கொடுத்தார்கள். சென்றுவருவீர்! வென்றுவருவீர்! என்று முழக்கமிட்டு உற்சாக மூட்டினார்கள். ஆகவே தோழர்கள் சி. வி. எம். அண்ணாமலை, மார்க், சபாபதி, நெலலிக்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி காட்டுமன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், (இ. பி. கோ. 120) சதிக் குற்றம் செய்தவர்களாகிறார்கள் என்ற போலீஸ் தரப்பு வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை - அதற்கான விவரத்தைத் தமது தீர்ப்பிலே கூறியிருந்தார். இதேபோன்ற வழக்குத்தான் கருணாநிதி, நடராஜன் ஆகியோர்மீது மதுரையில் தொடரப்பட்டது. ஆனால் அங்கு அவர்களுக்கு நீதிமன்றம் ஆறு திங்கள் கடுங்காவல் தண்டனை என்று அளித்திருக்கிறது. சி. வி. எம். அண்ணாமலையும் மற்றவர்களும், சட்ட விரோதமான செயலில் ஈடுபடக் கிளம்பிய கோவிந்தசாமி குழுவினருக்கு மாலை அணிவித்தனர். அந்தச் செயல் அவர்களைக் குற்றம் செய்யச் சதி செய்தவர்களாக்குகிறது என்ற போலீஸ் வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொள்ள மறுத்து, ஆறாம் குற்றவாளி (அண்ணாமலை) தமது கட்சித் தோழர்களுக்கு மரியாதை தெரிவிக்க மாலை அணிவித்ததாகக் கூறியுள்ளார்; மாலை அணிவித்ததை மட்டுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு, மாலை அணிவித்தவர்களும் சதியில் பங்கு கொண்டவர்களாகிறார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கில்லை. ஒன்றுகூடி, கூட்டமாக ஒரு குற்றம் செய்வது சதி என்றாகிறது. போலீஸ் தரப்பிலே தரப்பட்ட சான்று 17 எண் முதல் ஐந்து குற்றவாளிகள் மட்டுமே அரசியல் சட்டத்தைக் கொளுத்த வேண்டும் என்று தி. மு. க. தலைவர்கள் பணித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அந்த ஐவரும், அதுபோல் செய்திட ஏற்கனவே முடிவெடுத்துள்ளனர் என்பதும் போலீஸ் தரப்பு தந்த சான்று மூலமே தெரிய வருகிறது. ஆகவே முதல் ஐந்து எதிரிகள் அரசியல் சட்டத்தைக் கொளுத்தும்படி, சதி செய்யவேண்டிய அவசியம் மற்ற எதிரிகளுக்கு இல்லை. ஏழாவது குற்றவாளி (சபாபதி) கழகக் கொடிகளை முதல் ஐந்து எதிரிகளிடம் கொண்டுவந்து கொடுத்தார் என்று கூறப்பட்டது. கொடுத்ததாகவே வைத்துக்கொண்டாலும், அதனாலேயே ஏழாவது எதிரி சதி செய்தார், உடந்தையாக இருந்தார் என்று கூறிவிட முடியாது - என்று நீதிபதி தமது தீர்ப்பில் விளக்கம் அளித்திருக்கிறார். சட்டத்தை இன்ன இடத்தில், இன்னின்னார் கொளுத்தப்போகிறார்கள் என்று முன்னதாகவே சுவரொட்டிகள் மூலம் அறிவித்திருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தீர்ப்புப்பற்றி மணியுடன் பேசிக் கொண்டிருந்தேன். 26-5-1964 இன்று மதியழகன் விடுதலை. அவர் உள்ளிட்ட பதினைந்து தோழர்கள் - மூன்று அணியினர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். விடியற் காலை ஐந்தரை மணிக்கே, அறையைத் திறந்துவிட்டார்கள். எங்கள் அறைகளைத் திறக்கவில்லை. விடுதலை பெற்று வெளியே செல்லும் மதியிடம் அளவளாவக் கூட இயலாதுபோலிருக்கிறதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். அரை மணி நேரத்திற்குப் பிறகு, எங்கள் அறைகளையும் திறந்தார்கள் - அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு மதி புறப்பட்டார்; மற்றத் தோழர்களை எந்தப்பக்கமாக அழைத்துக்கொண்டு சென்றார்களோ தெரியவில்லை; நான் அவர்களைக் காண இயலவில்லை. நாங்கள் உள்ள பகுதியிலிருந்து, வெளிப் பக்கத்தைக் கூர்ந்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தோம். எதிர்ப்புற நெடுஞ்சாலையில் செல்லும் மோட்டார்கள், சிறை அருகே வந்ததும், நகர்ந்து செல்லக் கண்டு தோழர்கள் கூட்டமாக வந்திருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டோம். சில கொடிகள் அசைவதுகூடத் தெரிந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, வாழ்த்தொலியும் முரசொலியும் கேட்டது. மதியையும் மற்ற தோழர்களையும் வரவேற்க, கழகத் தோழர்கள் மெத்த ஆர்வத்துடன் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றோம். இன்று வழக்கமான பார்வையிடல் - மதி இல்லை. நண்பர் ஏ. கோவிந்தசாமிக்கு, இரண்டு நாட்கள் பரோலில் செல்லும் அனுமதி கிடைத்தது - காலை பத்து மணிக்கு மேல் அவர் சென்றார் - கடலூரில் தமது உடன் பிறந்த அம்மையாருக்கான இறுதிச் சடங்கிலே கலந்துகொண்டு, மீண்டும் 28-ம் தேதி இங்கு வருகிறார். அவரை வழி அனுப்பி வைத்தோம். இரண்டு நாட்களாக பத்திரிகைகள் எதுவும் எமக்குத் தரப்படவில்லை, பத்திரிகைகள் தரப்படுவதிலே அடிக்கடி முறைக் குறைவுகள் ஏற்பட்டு வருவதுண்டு என்றாலும், ஒரே அடியாகப் பத்திரிகைகள் தரப்படாதது இந்தத் தடவைதான். பல முறை கேட்டனுப்பிய பிறகு, பிற்பகல் மூன்று மணிக்கு இரண்டு நாட்களுக்கான பத்திரிகைகளையும் மொத்தமாக அதிகாரி கொடுத்தனுப்பினார். நாலைந்து குழந்தைகள் உள்ள வீட்டிலே, பெற்றோர் தின்பண்டம் கொண்டுவந்ததும், அந்தக் குழந்தைகள் ஆவலுடன் ஓடோடிச் சென்று மொய்த்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா! பத்திரிகை கிடைத்ததும், நாங்கள் எல்லோருமே தின்பண்டம் கண்டதும் மொய்த்துக்கொள்ளும் குழந்தைகளாகி விடுகிறோம். ஷேக் அப்துல்லாவின் பாகிஸ்தான் பயணம் பற்றிய செய்தி விரிவாகி வெளியிடப்பட்டிருந்தது. எந்தப் பாகிஸ்தான், காஷ்மீர்மீது பாய்ந்து, பகுதியைத் தன் பிடியில் சிக்கச் செய்துவிட்டதோ, அந்த பாகிஸ்தானில், ஷேக் அப்துல்லாவுக்கு மகத்தான வரவேற்பு. எந்தப் பாகிஸ்தானுடைய தாக்குதலைச் சமாளிப்பதற்காக இந்திய துருப்புகளின் துணையைத் தேடிப் பெற்றாரோ, அந்த அப்துல்லாவுக்கு, தாக்குதல் நடத்திய பாகிஸ்தானில் வரவேற்பு. எந்த அப்துல்லா, பாகிஸ்தானுடன் கூடி காஷ்மீர் அரசைக் கவிழ்க்கச் சதி செய்தார் என்று குற்றம் சாட்டி 11 ஆண்டுகள் சிறையில் அடைத்து வைத்ததோ, அதே இந்திய துரைத்தனம், அதே ஷேக் அப்துல்லாவை, அதே பாகிஸ்தானுக்கு, "சென்று வருக! செம்மையான சமரசம் மலர வழி கண்டு கூறுக!’ என்று கூறி அனுப்பி வைத்திருக்கிறது. எத்தனை எத்தனை விந்தை நிகழ்ச்சிகள் - என்னென்ன விதமான திடீர் திருப்பங்கள் அரசியலில் என்பதுபற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். 27-5-1964 இன்று பிற்பகல் 3 மணிக்குத் திடுக்கிடத்தக்க செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். இங்கு உள்ள கொடிமரத்தில் கொடி திடீரென பாதிக் கம்பத்துக்கு இறக்கப்பட்டது; விவரம் புரியாமல் கலக்கமடைந்தபடி, காவலாளிகளைக் கேட்டதற்கு, "நேரு காலமாகிவிட்டாராம்’ என்று கூறினர். - நெஞ்சிலே சம்மட்டி அடி வீழ்ந்ததுபோலாகிவிட்டது. நம்ப முடியவில்லை; நினைக்கவே நடுக்கமெடுத்தது; காலை இதழிலேதான், நேரு டேராடன்னிலிருந்து உற்சாகத்துடன் டிலலி திரும்பினார்; விரைவில், அயூப்கானைச் சந்திப்பார் என்று மகிழ்ச்சி தரும் செய்திகளைப் பார்த்தோம்; பிற்பகல் 3 மணிக்கு, அவருடைய மறைவுபற்றிக் கேள்விப்பட்டால், எப்படி மனம் நிலைகொள்ளும்? சரியாக விசாரியுங்கள் - அதிகாரியையே கேளுங்கள் என்று கூவினேன். அரக்கோணம் ராமசாமி சிறை அதிகாரியைக் கண்டு கேட்டுவிட்டுத் திரும்பினார்; அவருடைய நடையிலே காணப்பட்ட தளர்ச்சியும் முகத்திலே கப்பிக்கொண்டிருந்த துக்கத்தையும் கண்டேன் - நடைபெறக் கூடாதது நடந்துவிட்டது - துளியும் எதிர்பாராதது ஏற்பட்டுவிட்டது என்று உணர்ந்தேன் - சில நிமிடங்கள் கல்லாய்ச் சமைந்துபோனேன். எல்லோருமே கண்கலங்கிப் போயினர். நேரு போய்விட்டாரா - ஒளி அணைந்து விட்டதா - உலகமே அதிர்ச்சி அடையத்தக்க இழப்பு ஏற்பட்டு விட்டதா - அய்யய்யோ! - எப்படி இதனை நாடு தாங்கிக் கொள்ளப்போகிறது - என்றெல்லாம் எண்ணி வேதனைப் பட்டேன். பண்டித நேரு, ஒரு சகாப்தத்தை நடத்தி வைத்தவர் - வெறும் அரசியல் கட்சித் தலைவராக மட்டும் இருந்து வந்தவர் அல்ல. உலகத் தலைவர்களிடையே அவருக்கு இருந்து வந்த நட்பும் தொடர்பும், இங்கு மட்டுமல்ல, உலகிலேயே ஒரு போரற்ற பூசலற்ற காலத்தை உருவாக்கும் நிலைமையை மலரச் செய்தது. காங்கிரஸ் கட்சியிடமும் ஆட்சி முறையிடமும் கசப்பும், கொதிப்பான கோபமும் கொண்டபோதெல்லாம்கூட, பண்டித நேருவுடைய சிறப்பு இயல்புகள், அறிவாற்றல், தனித்தகுதி, பண்பு ஆகியவைகளை நான் மறந்ததுமில்லை, நமது கூட்டங்களிலே எடுத்துச் சொல்லத் தவறியதுமில்லை. அவர் சிறந்த ஜனநாயக வாதி என்பதை உள்ளூர உணர்ந்து, உவகையுடன் கழகத் தோழர்களுக்குக் கூறி வந்திருக்கிறேன். இந்தித் திணிப்பு விஷயத்தில்கூட, தென்னக மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு மதிப்பளிக்கத் தவறாதவர் நேரு பண்டிதர். நமது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் மூலம் 1965லில், இந்தி பற்றிய புதிய கட்டம் பிறந்திடும்போது, நேருவுடைய மனதிலே, ஒரு நல்ல மன மாற்றத்தை ஏற்படுத்தி வைக்கலாம் என்று நம்பிக்கை கொண்டேன்; அதனையும் கழகக் கூட்டங்களில் தெரிவித்திருக்கிறேன். அவரிடம் பேசி அறியாதவன் நான். நான் ராஜ்ய சபையில் பேசியதையும் அவர் இருந்து கேட்க வில்லை. ஆனால் நான் பேசியான மறுநாள், பண்டித நேரு பேசுகையில், இரண்டு மூன்று முறை என் பேச்சைக் குறிப்பிட்டுக் காட்டி, சிலவற்றை ஒப்புக்கொள்வதாகக் கூறிப் பேசினார். அந்தப் பேச்சின்போது, அவருடைய பார்வை என்மீது பல முறை வீழ்ந்தது - அந்தக் காட்சி இப்போதும் தெரிவதுபோலிருக்கிறது. பாராளுமன்றத்திலே, நான் பார்த்திருக்கிறேன் - வியப்படைந்திருக்கிறேன் - காங்கிரஸ் ஆட்சியாளர் அதனைக் கண்டும் பாடம் பெறவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறேன் - நேருவின் பேச்சிலே குறிக்கிட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோபதாபத்துடன், எரிச்சல் ஏளனத்துடன், காரசாரத்துடன் பலர் பேசுவார்கள் - துளியும் பதறாமல், ஒரு ஐம்பது ஆண்டுக்கால வரலாற்றை உருவாக்கிய அந்தப் பெருந்தலைவர், ஜனநாயகத்திலே இது தவிர்க்க முடியாதது என்று மட்டுமல்ல, இது தேவைப் படுவது, வரவேற்கப்படவேண்டியது என்ற பண்புணர்ச்சியுடன் பதில் அளிப்பார் - அத்தகைய ஒரு ஜனநாயகச் சீமான் மறைந்து விட்டார். விவரம் தெரியவில்லை. ஏன் எப்போது, எங்கே, காலமானார் என்ற தகவல் ஏதும் தெரியவில்லை. வேதனை அதிகமாக வளர்ந்தது. என்னைக் காண கருணாநிதி வந்திருப்பதாக அழைத்தார்கள் - நடந்து சென்றபோது, எங்கோ காற்றின்மீது நடப்பதுபோல ஒரு உணர்வு. கருணாநிதியும் அரங்கண்ணலும் வந்திருந்தார்கள். சர்க்காரிடம் தனி அனுமதி பெற்று, வேதனை தோய்ந்த என் முகத்தைக் கண்டார்கள் - அவர்களின் கண்கள் கசிவதை நான் பார்த்தேன். விவரம் கேட்டேன் - தெரிவித்தார்கள். அனுதாபச் செய்தி வேண்டும் என்றார்கள் - எழுதும் நிலை இல்லை - மனக் குமுறல் எண்ண ஓட்டத்தையே ஒடித்து விட்டிருந்தது. மனதிலே கொந்தளித்துக்கொண்டிருந்த எண்ணக் குவியலில், இரண்டொன்றை எழுத்தாக்கிக் கொடுத்தேன். இது, ஒரு கட்சிக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல - நாட்டுக்கு - ஆகவே, நாட்டவருடன் கழகத்தவர் இந்தத் துக்கத்தில் பங்கேற்றுக் கொள்ள வேண்டும் - கூட்டங்கள், ஊர்வலங்கள் வேண்டாம் என்று கூறி அனுப்பினேன். நண்பர்களுடன், நேரு மறைவுபற்றித்தான் பேசிப் பேசி, ஆறுதலைத் தேடிக்கொள்ள முயன்று வருகிறேன். 28-5-1964 வேதனை நிரம்பிய நிலை நீடித்தபடி இருக்கிறது. வேறு எந்த விஷயத்திலும் மனம் செல்லவில்லை. பரோல் முடிந்து சிறை திரும்பிய நண்பர் கோவிந்தசாமி, ஊரே துக்கத்தின் பிடியிலே சிக்கிக் கிடப்பதுபற்றி விவரம் கூறினார். எல்லாக் கட்சிகளையும் கொண்ட மவுன ஊர்வலம் நடப்பதாகத் தெரிவித்தார். இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு - டில்லி நகர் நோக்கி என் எண்ணம் சென்றது. எத்தகைய புகழ்மிக்க ஒரு வரலாறு, தீயிலிடப்படுகிறது! எத்தகைய பொன்னுடலுக்கு எரியூட்டு கிறார்கள்! என்பதை எண்ணி விம்மிக் கிடந்தேன். 30-5-1964 இன்று அரக்கோணம் தோழர் ராமசாமி எம். எல். ஏ. விடுதலையானார். விடியற்காலை ஐந்து மணிக்கே அவரை அழைத்துச் சென்றுவிட்டனர். மற்ற எவருடைய அறையையும் திறக்கவில்லை. ஆகவே, அவர் விடுதலையாகி வெளியே செல்லும்போது நண்பர்கள் அவருடன் அளவளாவி விடை தந்தனுப்பும் வாய்ப்பும் பெறவில்லை. நான் தூங்கிக் கொண்டிருந்தேன். எழுப்ப முயற்சித்து, பிறகு வேண்டாமென்று விட்டுவிட்டார்களாம்; காரணம் எனக்கு நேற்று இரவெல்லாம் அடிவயிற்றிலும் இடுப்பிலும் வலி கண்டு மெத்தத் தொல்லைப் பட்டேன்; மூன்று மணி சுமாருக்குத்தான் தூக்கம் பிடித்தது; ஆகவே என்னை எழுப்பலாகாது என்று இருந்துவிட்டனர். நான் எழுந்த பிறகு இதைக் கூறினார்கள். வருத்தப்பட்டேன். நண்பர் ராமசாமியிடம் நேற்று மாலை நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். மிகவும் அமைதியான வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள ராமசாமி அறப்போரில் ஈடுபட்டுச் சிறை புகுவார் என்று அவருடைய நெருங்கிய நண்பர்களேகூட எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அவர் சிறை புகுந்தது அரக்கோணம் வட்டாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். தக்கோலம் எனும் கிராமத்தில், மதிப்புள்ள ஒரு பெரிய விவசாயக் குடும்பத் தலைவர் ராமசாமி. கழகத்துக்குக் கிராமத்தில் இத்தகையவர்கள் நிரம்பக் கிடைக்க வேண்டும்; கிராமத்திலே குறிப்பிடத்தக்க நிலை பெற்றவர்கள் இதுபோல, பொது வாழ்வுத் துறையில் ஈடுபடுவதும், கொள்கைக்காகக் கஷ்ட நஷ்டம் ஏற்பதும், அவர்கள் ஈடுபட்டுள்ள இயக்கத்துக்கு மட்டுமல்ல, மக்களாட்சி முறைக்கே வலிவும் பொலிவும் ஏற்படுத்தும் என்பதிலே ஐயமில்லை. அரசியல் என்பதே, பளபளப்பான பட்டணக் கரைகளில் உள்ள பணக்காரர் படித்தவர்கள் ஆகியோருக்கென்றே அமைந்துள்ள துறை என்ற எண்ணம் மாறி, கிராமத்தில் குறிப்பிடத்தக்க நிலையிலுள்ளவர்கள் ஈடுபட்டு, செம்மைப்படுத்தி, நாட்டுக்கு நல்லாட்சி ஏற்படுத்த முனைய வேண்டிய துறை அரசியல் என்ற எண்ணம் வலுப்பெற வேண்டும். திகைப்பு, உள்ளக் குமுறல், அதிர்ச்சி ஆகியவை காரணமாக, இரண்டு நாட்களாக எனக்கு உடல் நலிவு ஏற்பட்டுவிட்டது. குனிய நிமிர முடியாதபடி இடுப்பிலே வலி; தைலம் தடவியும் சுடுநீர் ஒத்தடம் கொடுத்தும் என் நலிவைப் போக்க, மணி - மிக்க அன்புடன் முயன்று வந்தார். அன்பழகன் இத்தகைய நலிவுகள் போக, மருத்துவ முறைகள் பல அறிந்திருக்கிறார். அவரும் எனக்கு உதவியாக இருக்கிறார். நேரு மறைவு, நாட்டிலே எப்படி ஒரு இருளையும் வெறிச்சிட்டுப்போன நிலைமையும் உண்டாக்கிவிட்டதோ அதுபோன்று என் மனதிலேயும் ஒரு வெறிச்சிட்ட நிலையை உண்டாக்கிவிட்டது. வழக்கமாக எழும் அரசியல் பேச்சுகள் இல்லை; படிப்பதற்கும் மனம் இடம் தரவில்லை. நேருவின் இறுதிபற்றி உலகப் பெருந்தலைவர்கள் அனுப்பிய இரங்கற் செய்திகளையும், டிலலியில் அவர் உடலுக்கு எரியூட்டியதுபற்றிய செய்திகளையும் பத்திரிகைகளில் படிக்கப் படிக்க, வேதனையும் உருக்கமும் வளர்ந்துகொண்டு இருந்தது. இந்த முறை, நான் சிறை புகுந்தது முதல், என் மனதுக்கு அதிர்ச்சியும் வேதனையும் மூட்டிவிடத்தக்க இழப்புகள் பல நேரிட்டுவிட்டதை எண்ணிக்கொண்டேன். விரைவாக மன வேதனையை நீக்கிக்கொள்ளக்கூடிய இயல்பும் எனக்குக் கிடையாது. சிறையிலே எனக்கு அமைந்துள்ள வாழ்க்கை முறையால் எனக்குத் தொல்லை அதிகம் இல்லை. என் தேவைகள் மிகவும் குறைவானவை. ஆகவே சிறையில் இது கிடைக்கவில்லை, அது கிடைக்கவில்லை என்ற சங்கடமே எழுவதில்லை. ஆனால், உள்ளத்து நெகிழ்ச்சி மிக அதிகமாகிக்கொண்டே வருகிறது. துக்கமோ, திகைப்போ, உருக்கமோ, அதிர்ச்சியோ இதுபோன்ற எந்தவித உணர்ச்சி எழுந்தாலும், அதன் அளவும் மிகுதியாகி விடுகிறது, மிக அதிக நேரமும் அந்த உணர்ச்சியின் பிடியில் சிக்கிக்கொள்ளவேண்டி நேரிட்டுவிடுகிறது. இந்த நிலை காரணமாக, வழக்கமாகப் படிப்பதிலே தடங்கல் ஏற்பட்டுவிடுகிறது. நேரு மறைவு காரணமாகப் பல்வேறு பிரச்சினைகள் எவ்வெவ்விதமாக வடிவம் கொள்ளும் என்பது பற்றி நண்பர்கள் கேட்கிறார்கள்; விரிவான விளக்கமான பதில் கூற இயலவில்லை; கோடிட்டுக் காட்ட மட்டுமே முடிகிறது. 25-5-1964 தொடர்ச்சி. ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்றுப் புதுமுறை அமைந்தபோது, அந்தப் புதுமுறையின் முழுப்பொறுப்புகளை உணர்ந்து, தமது வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்ளும் நிலை சமூகத்திலே ஏற்பட்டுவிடவில்லை - ஏழை எளியோர்க்கு இதம் செய்யும் ஒரு அரசு, பணக்கார ஆதிக்கத்தை அழித்த ஒரு அரசு அமைந்திருக்கிறது என்பதிலே ஒரு மகிழ்ச்சியும் எழுச்சியும் பிறந்தது என்றபோதிலும், பொது உடைமைத் தத்துவம் பற்றிய தெளிவும், அந்தத் தத்துவத்தைச் செயல்படுத்தப் பொது உடைமை அரசு மேற்கொள்ளும் திட்டங்கள்பற்றிய தெளிவும், மக்களில் பெரும்பாலோருக்கு - கம்யூனிஸ்டு கட்சியினர் தவிர - ஏற்பட வில்லை. அந்தச் சூழ்நிலையைக் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நூல் படித்து வந்ததில், இரண்டு கதைகள் எனக்கு மிகவும் உருக்கம் நிரம்பியதாகத் தென்பட்டது; ஒன்று ஒரு கிழவியின் கதை; மற்றொன்று ஒரு கைதியின் கதை. ஒரு கிழவி - வாழ்க்கைச் சுமையைத் தாங்கித் தாங்கி வளைந்துபோன உடல், நைந்துபோன உள்ளம். அவள் தனி, ஒருவரும் உடன் இல்லை. ஏதோ செய்கிறாள். கிடைத்ததை உண்கிறாள்; நடப்பனவற்றைக் காண்கிறாள். ஏதோ நடைபெறுகிறது என்று இருந்து விடுகிறாள். கீழே, விழுவதற்கு முன்பு வரை, மரத்திலே ஒட்டிக்கொண்டு, ஆனால் உடன் உள்ள மற்ற இலைகளினின்றும் முற்றிலும் மாறுபட்ட நிலையில், சருகு இல்லையா - அதுபோல, அந்த மூதாட்டி, அவளுக்கு ஒரே ஒரு கவலை - அவளுடைய வீடு - சொந்தக் குடில் - கலனாகிக் கிடந்தது; எந்த நேரத்தில் இடிந்து விழுந்துவிடுமோ என்ற கவலை, அச்சம் மூதாட்டிக்கு. அவளைவிட அந்தக் குடில் நலிவுற்றுக் கிடந்தது. தான் கண்ணை மூடுவதற்கு முன்பு வீடு, மண்மேடாகி விடக்கூடாது என்பதுதான் அந்தக் கிழவியின் கவலை. ஆண்டவனையும் அடியார்களையும் அவள் இது குறித்துத்தான் வேண்டிக்கொள்வாள். பொது உடைமை அரசு மக்களின் கஷ்டத்தை மகேசனோ அருளாளர்களோ போக்க மாட்டார்கள் என்ற சித்தாந்தம் கொண்டது. மகேசனைக் காட்டி, மதியிலிகளைச் செல்வர்கள் மயக்கி மிரட்டி, சுரண்டிக் கொழுக்கிறார்கள் என்பது, அந்த அரசு அமைத்த கம்யூனிஸ்டு கட்சியின் சித்தாந்தம். மூதாட்டிக்கு இதுபற்றி ஏதும் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் எழவில்லை. எப்போதும்போல அவளுடைய வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது. பழைய கொடுங்கோலாட்சி வீழ்ந்துவிட்டது, புதிய ஆட்சி எழுந்து விட்டிருக்கிறது என்பதுபற்றி அவள் காதில் விழுந்தது. கருத்து அது குறித்துச் செல்லவில்லை. அவளுக்கு இருந்த கவலை யெல்லாம், தன் வீடு இடிந்துவிடக்கூடாது தன் உயிர் உள்ளவரை - அது கொஞ்சக் காலம்தானே - என்பதுதான். வீட்டிலுள்ள பூஜா மாடத்தில், ஏசு, கன்னிமேரி, அடியார்கள் படங்கள் இருந்தன; நாள்தோறும் வேளை தவறாமல், “பிரார்த்தனை’ செய்து வந்தாள்,”பரம பிதாவே! அன்னை மேரியே! அருளாளர்களே! என் வீடு இடிந்து விழுந்து விடாதபடி பாதுகாத்துக் கொடுங்கள். நான் இருக்கப்போவது சில நாட்கள். இதற்குள் வீடு விழுந்துவிட்டால், பழுதுபார்க்கப் பணத்துக்கு எங்கே போவேன். வீடு மண்மேடாகிவிட்டால், தங்க இடமுமின்றித் தத்தளிப்பேன். எனக்குத் துணை எவரும் இல்லை. தேவனே! என் வீடு விழாமலிருப்பது உன் அருளால்தான்; உன்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, உழன்று வருகிறேன். அருள் புரிவாய், ஆண்டவனே!’’ என்றெல்லாம் வேண்டிக்கொண்டாள். இவ்விதமான ஏழையின் புலம்பல், பரமண்டலத்திலே புகாது. சீமான் கொட்டும் காணிக்கைப் பொருளின் சத்தம் மட்டுமே தேவன் செவியில் கேட்கும்; ஏனெனில் தேவன் செவி என்று பாமரர் நம்புகிறார்களே தவிர, உண்மையில் கேட்கும் செவி இருப்பது பூஜாரிக்குத்தான், கடவுளின் பெயர் கூறிக் கொழுத்துக் கிடக்கும் தரகனுக்குத்தான் என்று புது அரசு அமைத்த கட்சியினர் பேசினர்; பேசி வருகின்றனர். கிழவிக்குத் தெரியாது; தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பும் எழவில்லை. தலைமுறை தலைமுறையாக நடந்துவரும் தொழுகையிலேதான் அவளுக்கு நம்பிக்கை. நம்பிக்கைக்குரிய வேறு ஒன்று இருக்க முடியும் என்றுகூட அந்த மூதாட்டி எண்ணிப் பார்த்ததில்லை. ஒரு இரவு - மழை - கிழவிக்குக் கிலி - வீடு இடிந்து விடுமோ என்று - மழையைத் தாங்கும் வலிவுள்ளதா அந்த வீடு - படுகிழமாயிற்றே! தேவனையும் அடியார்களையும் வேண்டிக் கொண்டபடி இருந்தாள்; யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது; பதறினாள். தள்ளாடிக்கொண்டே சென்று கதவைத் திறந்தாள்; ஒரு வாலிபன் உள்ளே நுழைந்தான்; குளிர் நடுக்கத்துடன். பரிவுடன் அவனுக்கு ரொட்டி கொடுத்தாள் கிழவி. வீட்டுக்குள்ளே வந்ததால், அவனுக்கு நடுக்கம் குறைந்தது. கிழவிக்கு நன்றி கூறினான். பூஜாமாடம் தெரிந்தது. வாலிபன் முகத்திலே ஒரு ஏளனப் புன்னகை பிறந்தது. அந்தப் புன்னகையின் பொருளை உணரத்தக்க முறையில் அவனைக் கூர்ந்து பார்க்கக் கிழவியால் இயலவில்லை; கண்கள் ஒளியை இழந்துவிட்டிருந்தன, பெரும் பகுதி. "இவைகளெல்லாம் என்ன?’’ - அவன் கேட்கிறான். “தேவன் திருஉருவம் - பக்கத்தில் அடியார்கள் - அவர்கள் பெயர்களெல்லாம் எனக்கு முறையாகத் தெரியாது - அடியார்கள் என்று மட்டுமே தெரியும் - இவர்கள் அருளாளர்கள் என்பதை அவர்கள் முகத்தின் பொலிவே காட்டுகிறது’’ - கிழவி கூறுகிறாள். வாலிபன் சிரித்தான், சத்தமிட்டு.”இவர்கள் உனக்கு என்ன தருகிறார்கள்? - இவர்களை நீ வணங்கிப் பெறுவது என்ன?’’ அவன் கேட்கிறான். கிழவிக்கு நடுக்கம். இப்படி ஒரு கேள்வி கேட்கிறானே என்று. "அப்பா! நானோ கிழவி! என் வீடு இது. பார் எவ்வளவு கலனாகிக்கிடக்கிறது; இது இடிந்துவிழாமல் பாதுகாத்தருள வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செலுத்துகிறேன்’ என்றாள். "பிரார்த்தனைகள் - ஜெபதபங்கள் - காணிக்கைகள் சடங்குகள் - இவைகளால் பிரச்சினைகள் தீராது. கிழவி! மக்களின் பிரச்சினைகளை மகேசன் தீர்க்கமாட்டார். மக்களேதான் தமது உழைப்பால் தீர்த்துக்கொள்ள வேண்டும். பூஜையாம், அருளாம்! வெறும் மனப்பிராந்தி’’ என்று பேசலானான் வாலிபன். மழை நின்றது. அவன் வெளியே சென்றான். அவன் சொன்ன வார்த்தைகள் அவள் மனதிலே புகவுமில்லை. ஏற்கனவே அவள் மனதில் இருந்துவந்த நம்பிக்கையும் அவளைவிட்டு வெளியேறவில்லை. எப்போதும்போல, "ஏசுவே! மேரியே! அடியார்களே!’’ என்று தொழுகை நடத்தியபடி இருந்து வந்தாள் மூதாட்டி. ஒரு நாள் பாதிரியார் வந்தார் - பூஜை நடத்திக்கொடுக்க; கிழவி பயபக்தியுடன் தொழுகை நடத்தினாள். காணிக்கை கேட்டார்; பணம் வைத்திருந்தாள். தேடித் தேடிப் பார்க்கிறாள் - சிக்கவில்லை; எங்கு வைத்தோம் என்ற நினைவு வரவில்லை; கிழவிதானே! "நீ தேடிக்கொண்டே பொழுதை ஓட்டுவாய், நான் காத்துக் கொண்டே கிடப்பதா! எனக்கென்ன வேறு வேலைகளே இல்லையா. இன்னும் பல இடங்கள் போக வேண்டும் பூஜை நடத்தி வைக்க. எனக்காகக் காத்துக்கொண்டிருப்பவர்கள் பலர் - அவர்களின் சாபத்தைப் பெறுவாய் - எடு எடு - பணம் இல்லாவிட்டால், பத்துக் கோழி முட்டைகளாவது கொடு’’ என்று பக்திப் பிரபாவத்தின் பாதுகாவலன் கேட்கிறான். கிழவி முட்டைகளைத் தருகிறாள், பாதிரியார் பெற்றுக்கொண்டு போகிறார். அன்புள்ள அண்ணாதுரை 28-2-1965 டில்லிக் கடிதம் பத்திரிகை நிருபர்கள் மாநாடு : வினா - விடை இந்தியை ஆட்சி மொழியாக்குவதையும் பரப்புவதையும் ஆட்சியாளர் விட்டுவிட வேண்டும். பக்தவத்சலனாரின் வேடிக்கைப் பேச்சு எங்களுக்கு எந்த மொழிமீதும் வெறுப்பு இல்லை பதினான்கு தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும். தொடர்பு மொழியாகத் தமிழ் இருக்கலாம். துக்க நாளில் வன்முறை எழக் காரணமாய் இருந்தவர்கள் காங்கிரஸ் தலைவர்களே. லால்பகதூரின் பேரப் பிள்ளை ஆங்கிலமொழி மூலம் கல்வி கற்பதாகக் கேள்வி. தம்பி! நாவலர் நெடுஞ்செழியன் அவர்களிடம் தொலைபேசி மூலம் பேசி முடித்தவுடன் எழுதுகிறேன் - மாணவர்கள் கல்விக் கூடங்களுக்குச் செல்லாமலிருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்து வேதனையுடன் எழுதுகிறேன். மொழிப் பிரச்சினையில் இயல்பாகவே அமைந்துவிட்டிருக்கிற சிக்கல்களையோ, இந்திக்கு ஆதரவான அணியினர், ஒரு சாதகமான, சமரசச் சூழ்நிலை எழவிடாதபடி தடுக்க, வன்முறைக் கிளர்ச்சிகளையும், அமளிகளையும் தென்னகம் மேற்கொண்டு விட்டிருக்கிறது என்பதைக் காட்டி வாதாடி, சிக்கலை வளர்த்துக்கொண்டிருக் கிறார்கள் என்பதனையோ, மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, மிக மிகப் பொறுப்புணர்ச்சியும் பொறுமை உணர்ச்சியும் தேவைப்படுகிறது என்பதனையோ உணர மறுத்து மாணவர்கள் இவ்விதமான போக்கினை மேற்கொண்டிருப்பது, தாங்கிக் கொள்ள முடியாத வேதனை தருகிறது. நாவலர் மாணவர்களுக்கு விடுத்த வேண்டுகோள் இன்று மாலை வானொலி மூலம் அறிந்து ஆறுதல் அடைந்தேன். அவர் கேட்டுக்கொண்டது போலவே நானும் மாணவர்களைக் கேட்டுக்கொள்வதாக இதழ்களில் அறிக்கை வெளியிடும்படிக் கேட்டுக்கொண்டேன். இங்கு, நான்கு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்திரிகை நிருபர்கள் மாநாட்டில், நான் பேசியதில், தொடர்பு - பொருத்தம் நீக்கிச் சில பகுதியை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, முதலமைச்சர் பக்தவத்சலம் சட்டசபையில் பேசியது குறித்தும், அதற்கு மதியழகனும் தாமும் தக்க விளக்கம் அளித்ததுபற்றியும் நாவலர் கூறக் கேட்டேன். என் பேச்சிலே துண்டு துணுக்குகளைத் தூக்கி வைத்துக் கொண்டு, காங்கிரஸ் தலைவர்கள் விளையாடுவது இது முதல் தடவை அல்ல; ஒவ்வொரு தடவை அவர்கள் இந்த விதமான விளையாட்டிலே ஈடுபடும்போதும், "இதோடு தொலைந்தான் பயல்! இதோடு கழகம் ஒழிந்தது!’’ என்று எக்களிப்புக் கொள்ளுவதை நாடு நன்கு அறியும். “உங்கள் அண்ணாதுரை இந்திக்குச் சம்மதம் தெரிவித்துக் கையெழுத்துப் போட்டுவிட்டான், தெரியுமா!’’ என்று முன்பு ஒரு முறை காங்கிரஸ் தலைவர்கள் மேடை தவறாமல் பேசியது எனக்கு நினைவிலிருக்கிறது. சட்ட சபையிலே நான் திட்டவட்டமாக, நான் அவ்விதம் கையெழுத்துப் போட்டேனா? என்று கேட்டபோதுதான், அப்போது அங்கு அமைச்சராக இருந்த சுப்பிரமணியம்,”இல்லை! கையெழுத்துப் போடவில்லை’’ என்று தெரிவித்தார். அதுவரையில் ஒரு பத்து நாள், விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதிலே அவர்களுக்கு ஒரு தனிச் சுவை! அனுபவித்துவிட்டுப் போகட்டும். மொழிப் பிரச்சினையிலே உள்ள சிக்கலைப்பற்றியும், தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருப்பதையும், அது குறித்துத் தக்கவிதமான கவனம் செலுத்தாமல், மேல் மட்டத்தில் உள்ளவர்கள் இருப்பதையும் எண்ணி எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு, காங்கிரஸ் தலைவர்கள் செய்வது போன்ற விளையாட்டிலே ஈடுபட நேரமுமில்லை, நினைப்பும் எழவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினேன். பலன்? என்ன கிடைக்கும் என்று எனக்கே தெரியவில்லை. லால்பகதூர் அவர்களின் பேச்சிலே, இதுபற்றிக் குறியும் தென்படவில்லை; கோடிட்டும் காட்டவில்லை. இந்த நிலை இங்கு, ஆளவந்தார் களின் அணியில். ஆனால், முன்பு நான் புதிய திருப்பம் என்ற கட்டுரையில், குறிப்பிட்டுக்காட்டிய "சூழ்நிலை’ பொதுவாகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளில் தெரிகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் நந்தாவைக் கண்டு, மொழிப் பிரச்சினையில் ஒரு நல்ல தீர்வு கண்டாக வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்கள். இரண்டொருவர் அதுபற்றி என்னிடமும் பேசினார்கள் நம்பிக்கையுடன். திராவிட முன்னேற்றக் கழகத்தை இந்தச் சமயம் பார்த்து அழித்துவிட, காங்கிரசிலே சிலர் துடியாகத் துடிக்கிறார்கள் என்பதற்கும் குறிகள் தென்படுகின்றன. மாநிலங்கள் அவையிலே நான் பேசியதன் முழுவடிவம் கிடைக்கப் பெற்றிருக்கக்கூடும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள இதழ்கள் கூடுமானவரையில் இந்தப் பேச்சை வெளியிட்டிருக்கின்றன - அந்தந்தப் பத்திரிகை மேற்கொண்டிருக்கும் கொள்கைப் போக்கிற்கு ஏற்பத் தலைப்புகளிட்டும் - வெட்டி ஒட்டியும் - வெளியிட்டன. இது இயற்கை என்பது புரிவதால் எனக்கு எரிச்சல் எழவில்லை. முதலமைச்சர் அளிக்கும் விளக்கம், சில இதழ்களில் முதலமைச்சரின் உறுதி என்ற தலைப்பிலும், வேறு சில இதழ்களில் முதலமைச்சரின் பிடிவாதம் என்ற தலைப்பிலும் வெளிவருவது காண்கிறோம் அல்லவா? அதுபோல, அவரவர் களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ற தலைப்புகளுடன், என் பேச்சை இதழ்கள் வெளியிட்டுள்ளன. ஆனால், ஒரு இதழும், அடியோடு இருட்டடிப்புச் செய்துவிடவில்லை. இந்தப் பேச்சினால் ஏற்பட்ட சமாதானச் சூழ்நிலை காரண மாகத்தான் பத்திரிகை நிருபர்கள் மாநாடு நடத்துவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. பத்திரிகை நிருபர்கள் மாநாடு என்றால், நாம் சொற்பொழிவு நடத்த நடத்த, நிருபர்கள் குறிப்பு எடுத்து, இதழ்களில் வெளியிடுவது என்பதல்ல. பல இதழ்களின் நிருபர்கள் வருகிறார்கள்; கேள்விமீது கேள்வியாகத் தொடுத்தபடி இருக்கிறார்கள்; அவற்றினுக்கு நாம் அளிக்கும் பதில்களைக் குறித்துக்கொண்டுபோய், தத்தமது இதழ்களில் எந்தப் பகுதி தமக்குத் தேவை என்று அவர்களுக்குத் தென்படுகிறதோ அவைகளை வெளியிடுகிறார்கள். அன்று நடந்த நிருபர்கள் மாநாட்டில், எனக்குத் துணையாகத் தோழர் செழியன் இருந்தார்; அவருடைய இல்லத்தில்தான் நடைபெற்றது மாநாடு. முப்பது நிருபர்கள் இருக்கும் வந்திருந்தவர்கள்; ஒரு மணி நேரத்திற்கு அதிகமாகவே நடைபெற்றது. இத்தகைய நிருபர்கள் மாநாட்டில், மடக்குவது, குறுக்கிடுவது போன்ற முறைகளில் தேர்ச்சி பெற்ற நிருபர்களிடம், மிகத் தெளிவாகவும், அதிகமான பரபரப்புக் காட்டாமலும் பேச வேண்டும். அன்று நான் நடந்துகொண்ட முறை குறித்து விவரமறிந்தவர்கள் பாராட்டியது கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், நான் அப்போதே, திருமதி செழியனிடம் சொன்னேன், "எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தமிழ் நாட்டில் சில இதழ்கள், அண்ணாத்துரை இந்தியைப் பரப்ப ஒத்துக்கொண்டான் என்று மட்டும் வெளியிடும், பாருங்கள்’’ என்று சொன்னேன், இதழ்களின் போக்கு எனக்கும் தெரியுமல்லவா! நானும் ஒரு பத்திரிகை நடத்துபவன்தானே!! நான் கூறியபடியேதான் சில இதழ்கள் வெளியிட்டன. முதலமைச்சர் பக்தவத்சலமும் அதை வைத்துக்கொண்டுதான் பேசியிருக்கிறார் என்று தெரிகிறது. இதுவும் ஒரு நல்லதற்கே பயன்படுகிறது; ஏனெனில், அன்று நடைபெற்றது முழுவதையும் எழுத ஒரு தூண்டுகோல் கிடைத்திருக்கிறது! நிருபர்கள், எவரெவர், என்னென்ன கேள்விகளை, என்னென்ன நோக்கத்துடன் கேட்டனர் என்பதனையும், அவற்றினுக்குப் பதில் அளிக்கும் முறையில் நான் என்னென்ன கருத்துக்களை எடுத்துக் கூறினேன் என்பதனையும் கூறிக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. இந்து இதழிலே மட்டும், குத்திக் கிளறி ஒரு நிருபர் கேட்டபோது அறைகூவலாக அண்ணாதுரை, இந்தியை ஆட்சி மொழியாக்குவதை சர்க்கார் விட்டுவிட்டு, சர்க்கார் முன்னின்று இந்தி பரப்புவதை விட்டுவிட்டு, மக்களின் அமைப்பே இந்தியைப் பரப்ப முனைந்து, என் உதவியை நாடினால், செய்கிறேன் என்று கூறினார் என்று வெளியிட்டிருக்கிறது. இந்து வெளியிட்டிருக்கிற முறையிலிருந்து, (1) சர்க்கார் இந்தியை ஆட்சி மொழியாக்குவதை விட்டுவிடவேண்டும் (2) இந்தியைப் பரப்ப சர்க்கார் முனையக் கூடாது என்பவைகளை நான் வலியுறுத்தி இருப்பது நன்கு விளங்கும். நமக்குத் தேவை, (1) இந்தியை ஆட்சிமொழியாக்கும் முயற்சியை சர்க்கார் கைவிட்டுவிட வேண்டும் என்பது (2) இந்தியைப் பரப்ப சர்க்கார் தனி அக்கறை காட்டும் போக்கும் நிறுத்தப்பட வேண்டும் என்பது. இந்த இரண்டும் சர்க்காரால் கைவிடப்பட வேண்டும்; ஐயா! இதனைச் செய்ய உம்மால் முடிந்து, செய்துவிட்டு வந்தால், பிறகு இந்தி பரப்புவதற்கு உதவி கேளும், செய்கிறேன் என்று நான் கூறியிருக்கிறேன். என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்ட நிருபர், சாஸ்திரி சர்க்காரிடம் பேசி, இந்தி ஆட்சி மொழியாக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிடச் செய்ய வேண்டும் முதலில்! செய்கிறாரா பார்ப்போமே!! அந்த முறையில், ஒ ஜ்ண்ப்ப் ற்ஹந்ங் ன்ல் ற்ட்ங் ஸ்ரீட்ஹப்ப்ங்ய்ஞ்ங் - நான் அந்த அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன் என்ற முன்னுரையுடன் நான் பேசினேன். இதைவிடத் தெளிவாகப் பேசியிருக்க முடியாது என்றும் நம்புகிறேன். இதனை வைத்துக்கொண்டு முதலமைச்சராகட்டும், மற்றவர்களாகட்டும், வேடிக்கை பேச என்ன காரணம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. போகட்டும். எத்தனையோ விதமான கலக்கத்தில் சிக்கிக்கிடப்பவர்களுக்கு, என் பேச்சு, சில விநாடி வேடிக்கைக்குப் பயன்படுவது பற்றி மனக்குறை கொள்வானேன்? நடந்தது முழுவதையும் அறிந்துகொள்ளும் வாய்ப்புப் பெறுபவர்கள், உண்மையை அறிந்துகொள்வார்கள். இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்திடத் தொடங்கிய நாள் தொட்டு, நாம் தெளிவாக, ஒன்று கூறி வருகிறோம்; எங்களுக்கு எந்த மொழிமீதும் வெறுப்பு இல்லை; இந்தியை நாங்கள் அந்த விதத்தில் எதிர்க்கவில்லை; அது இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கப்படுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்பதனைத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறோம். நமது கழகத்தின் தீர்மானம் தேசீய மொழிகளெல்லாம் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்பதாகும். அந்தப் பதினான்கு மொழிகளில் இந்தியும் ஒன்று. இந்தியை அந்தப் பதினான்கு மொழிகளில் ஒன்று என்று கொள்ளமாட்டோம், கொள்ளக்கூடாது என்று நாம் சொன்னதுமில்லை; சொல்லப்போவதுமில்லை; சொல்லுவதில் நியாயமுமில்லை. நாம் சொல்லி வருவதெல்லாம், இந்தி, இந்தியாவின் ஒரு பகுதியினரின் தாய்மொழி, அதனை இந்தியாவின் ஆட்சிமொழி என்று ஆக்குவது அடாது, ஆகாது, பெரும் தீது; அது இந்தி பேசாத மக்களை அநீதிக்கு ஆட்படுத்தும், இரண்டாந்தரக் குடிமக்களாக்கும். ஆகவே, அதனை ஒப்பமாட்டோம், எதிர்க்கிறோம் என்பதாகும். இந்த அடிப்படை மாறாது என்பது மட்டுமல்ல, நாம் மட்டுமே கூறிக்கொண்டு வருகிற இந்த அடிப்படையை இன்று வேறு பலரும் ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டிருக்கிறார்கள். நான், மாநிலங்கள் அவையில் பேசியானதும், பிற்பகல், இந்தியின் தீவிரக் கட்சியான ஜனசங்கத்தைச் சார்ந்த வாஜ்பாய் பேசினார். அவர் என்னையும் நான் சொன்ன கருத்துக்களையும் பலமாகத் தாக்குவார் என்ற நப்பாசை பலருக்கு இருந்தது. அவரோ, அண்ணாதுரை சொல்லுகிற பதினான்கு தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்ற திட்டத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பேசினார். வாஜ்பாய், மாறுபட்டது எதிலே என்றால், 14 - மொழிகளும் ஆட்சி மொழிகளாகக் காலம் பிடிக்கும்; அதுவரை ஆங்கிலம் தொடர்ந்து இருக்கட்டும் என்பதிலேதான். அவருடைய கருத்து இப்போதே 14 மொழிகளும் ஆட்சி மொழிகளாகி விடட்டும், ஆங்கிலம் அகற்றப்படட்டும் என்பது. இதிலே நமக்கு என்ன ஆட்சேபம்! நாளைக்கே நமது தமிழ் மொழி, இந்தியாவின் ஆட்சி மொழியாகி அரியணை ஏறினால், ஆங்கிலம் நமக்கு ஆட்சிமொழியாக இருக்கவேண்டிய தேவை என்ன இருக்கிறது! இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்ற சர்க்கார் கொள்கை விடப்பட்டு, இந்திக்காகச் சர்க்கார் பணம் செலவிட்டுப் பரப்பும் முயற்சியை நிறுத்திக்கொண்டு, பதினான்கு மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழிகள் என்று சட்டமாக்கப்பட்டு, அதன்படி நமது தமிழ் மொழி ஆட்சி மொழி என்ற நிலைபெற்று, பிறகு இந்தியைப் பரப்ப, மக்கள் அமைப்பு முயற்சி எடுத்துக்கொள்ளும்போது என் உதவி கிடைக்குமா என்று என்னை ஒருவர் கேட்கும்போது, கிடைக்கும் என்று கூறுவதிலே என்ன தவறு காண்கிறாரோ முதலமைச்சர், எனக்குப் புரியவில்லை. அந்த நாள் வருகிறபோது, இந்தியை இங்குப் பரப்பும் முயற்சி மட்டுமல்ல, தமிழ்மொழியைப் பிற இடங்களில் பரப்பும் முயற்சியும் நடந்துவரும். இப்போதே, தென்னக மொழிகளில் ஒன்றை, இந்தி மாநிலத்தவர் படித்துக்கொள்ள வேண்டும் என்ற பேச்சு எழவில்லையா! நானேகூடச் சொன்னேனே, மாநிலங்கள் அவையில் பேசும்போது, தமிழ் கற்று, அம்மொழியில் உள்ள இலக்கியச் சுவையைப் பருகினால், வாஜ்பாயேகூட, தமிழ்தான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளுவார் என்று. உடனே அவர் என்ன துள்ளிக் குதித்தெழுந்து, "முடியாது!! முடியாது! அப்போதும் தமிழ் மொழியைத் தொடர்பு மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்றா பேசினார்? இல்லை! ஏன்? வாதங்களின் பொருத்தத்தையும் நிலைமை விளக்கத்துக்கான பேச்சின் பொருளையும் உணருபவர்கள், முதலமைச்சர் காட்டும் போக்கினைக் காட்டமாட்டார்கள். ஆனால், முதலமைச்சர் இப்போது உள்ள நிலைமையில் நான் அவரிடம் அதிக அளவு நிதானத் தன்மையை எதிர்பார்ப்பதற்கில்லை. நிருபர்கள் மாநாட்டிலேகூட ஒரு நிருபர், பதினான்கு மொழிகளும் ஆட்சிமொழிகளாக்கப்பட்டு, பிறகு காலப் போக்கில் மக்களின் முயற்சியால், சர்க்காரின் பலமின்றி, ஒரு மொழி தொடர்பு மொழியாகட்டும் என்று கூறுகிறீர்களே, அந்தக் காலம் வரும்போது, மக்கள் வளமுள்ள மொழியாகப் பார்த்துத்தானே தொடர்பு மொழியாகக் கொள்வார்கள் என்று கேட்டபோது நான், “ஆமாம்! வளமுள்ள மொழியைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அதனால்தான் சொல்கிறேன், தமிழ் மொழியைத் தொடர்பு மொழியாகக் கொள்ளுங்கள் என்று. அது தொன்மையான மொழி - வளமான மொழி’’ என்று கூறினேன். வேறோர் நிருபர் குறுக்கிட்டு,”சமஸ்கிருதத்தைக் கொண்டால் என்ன?’’ என்று கேட்டார்; "அது பேச்சு வழக்கு அற்ற மொழி’’ என்று பதிலளித்தேன். இவைகளையும் முதலமைச்சர் பக்தவத்சலம் மக்களிடம் எடுத்துக் கூறுவார் என்று நான் எதிர்பார்க்க முடியுமா!! ஆனால், இதனை நான் கூறியிருப்பதை நானே எப்படி மறந்துவிட முடியும்! இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் நிருபர் காடிலால், பேட்டிரியட். நாளிதழ் நிருபர் கிரிஷ்மதுர், ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் நிருபர் ரன்ஜித்ராய், டைம்ஸ் ஆப் இந்தியா சுதர்சன்பாடியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் (டில்லி வெளியீடு) திரிபாதி, இந்துஸ்தான் ஸ்டாண்டார்டு சைலேன் சட்டர்ஜி, பி. டி. ஐ. அமைப்பிலிருந்து குப்தாவும் என். பாலசுப்பிரமணியமும், இந்து நிருபர்கள் இ. கே. ராமசாமியும் பட்டாபிராமனும், அமிர்தபஜார் பத்திரிகை நிருபர் தத்தா, ஈவினிங் நியூஸ் சி. பி. இராமச்சந்திரன், மெயில் பி. ராமசாமி, அகில இந்திய ரேடியோ நிலையத்திலிருந்து கே. ஜி. ராமகிருஷ்ணன், யூ. என். ஐ. அமைப்பிலிருந்து கணபதி, இன்பா அமைப்பிலிருந்து ராஜேந்திரகபூர், நவபாரத் இதழிலிருந்து ஜெயின், இந்துஸ்தான் இதழிலிருந்து சந்திராகர், இந்துஸ்தான் டைம்ஸிலிருந்து தார், தினமலர் ராதா கிருஷ்ணன், பிரீ பிரஸ் ஜர்னல் சுவாமிநாதன், நவ்பாரத் டைம்ஸ் ரக்பீர் சகாய், பினர்ன்μயல் எக்ஸ்பிரஸ் சந்தானம், சங்கர்ஸ் வீக்லி கோபு, திருச்சூர் எக்ஸ்பிரஸ் ஆர். சுந்தரம், ஜன்ம பூமி, சுயராஜ்யாவிலிருந்து ஏ. எஸ். ரகுநாதன், இவர்கள் அன்று வந்திருந்தவர்கள். சிலருடைய பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கக்கூடும், ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவர்கள் கேள்விகள் கேட்க. நான் பதில் அளிக்க, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு மிகுந்த விதமாக அந்த மாநாடு நடைபெற்றது. அத்தனை நிருபர்களை மொத்தமாகச் சந்திப்பது எனக்கு முதல் முறை. அவர்கள் ஒவ்வொருவரும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பலவற்றிலே பல முறை கலந்து பழக்கப்பட்டிருப்பவர்கள். என்றாலும், அவர்கள் அனைவருமே என்னிடம் மிகவும் நட்புரிமையுடன் நடந்துகொண்டனர். என் நன்றி அவர்களுக்கு. ஒரு சிலர், என் திறமையைப் பரீட்சிக்க வேண்டும் என்ற முறையில் கேள்விகளைக் கேட்கிறார்களோ என்ற எண்ணம் எழத்தக்கவிதமான பிரச்சினைகளைக் கிளப்பினார்கள் என்றாலும், மொத்தத்தில் எனக்கு, நமது நிலைமையைத் தெளிவுபடுத்தவும், கொள்கையை வலியுறுத்தவும் அவர்கள் நல்ல முறையில் வாய்ப்பளித்தார்கள். இது எனக்காக அவர்கள் செய்த உதவி என்பதனைவிட, நாம் ஈடுபட்டிருக்கும் தூய காரியத்துக்குத் துணை செய்திருக்கிறார்கள் என்று கூறுவதுதான் பொருத்தம் என்று எண்ணுகிறேன். வந்தமர்ந்த சில விநாடிகளுக்குள்ளாகவே ஒரு நிருபர் - டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் என்று நினைவு - "என்ன சொல்லப் போகிறீர்கள்? ஆரம்பிக்கலாமே!’’ என்றார். "என் கருத்தினை மாநிலங்கள் அவையில் கூறியிருக்கிறேன். மேற்கொண்டு ஏதாகிலும் தேவை என்றால் கேளுங்கள் கூறுகிறேன்’’ என்று நான் கூறினேன். கேள்விகள் புறப்பட்டன. ஒரு முறை எதிரே இருப்பவர், அடுத்தது வலப்பக்கத்தில் ஒருவர். திடீரெனக் கோடியிலிருந்து மற்றொருவர், அதைத் தொடர்ந்து இடப்புறத்திலிருந்து ஒருவர், பிறகு மூன்றாவது வரிசைக்காரர், இப்படிக் கணைகள்! சுவையும் இருந்தது, சூடும் தென்பட்டது. அன்பு ததும்பிடும் போக்கும் கண்டேன், அருவருப்பை அடக்கிக் கொள்ளும் போக்கும் இருந்தது. ஜனவரி 26-ம் நாள், தி. மு. கழகம் என்ன திட்டம் மேற்கொண்டது? விளைவு என்ன? விளக்கம் என்ன? என்று ஒரு நிருபர் கேட்டார். ஜனவரி 26-ம் நாள், இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழி என்று ஆக்கிவிடுவதைக் கண்டிக்கத் துக்க நாள் நடத்த, தி. மு. க. திட்டமிட்டது, துவக்கத்திலிருந்தே முதலமைச்சரும் காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும், வன்முறைச் சூழ்நிலை எழக்கூடிய விதமான முறையில் பேசலாயினர். காங்கிரஸ் இதழ்களில் அந்தப் பேச்சுகள் வந்துள்ளன. கறுப்புக் கொடிகள் அறுக்கப்படும், கொளுத்தப்படும், கறுப்புக் கொடி கட்டுபவன் கரம் வெட்டப்படும் என்பன போன்ற பேச்சுகள் பேசப்பட்டன. பல காங்கிரஸ் அமைப்புகள், இத்தகைய வன்முறையில் ஈடுபடப்போவதாக இதழ்களிலேயே அறிவித்தன. போலீஸ் கமிஷனர், பொது இடங்களில் கறுப்புக் கொடி கட்டக்கூடாது, அமளி ஏற்படும்; உங்கள் கட்சிக் காரியாலயத்தில், வீடுகளில் கட்டிக்கொள்ளுங்கள் என்று எங்களிடமும், கறுப்புக் கொடியைக் கண்டால் அறுக்காதீர்கள், எங்களிடம் கூறுங்கள் நாங்கள் அகற்றிவிடுகிறோம் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கும் சொன்னார். நாங்கள் அது போலவே பொது இடங்களில் கறுப்புக்கொடி கட்டவில்லை; எங்கள் வீடுகளில்தான் கட்டினோம். ஆனால், காங்கிரஸ் படையினரும், போலீசாரும் எங்கள் கட்டடங்களிலே அத்து மீறி நுழைந்து கொடிகளை அறுத்தனர்; சிலர் கொளுத்தினர். இந்தவிதமான வன்முறைச் செயல் எழக் காரணமாக இருந்தவர்கள் காங்கிரஸ் தலைவர்களே - என்று கூறினேன். விவரமாக நான் இந்தச் சம்பவங்களை விளக்கியது கேட்டு, பல வட இந்திய இதழ் நிருபர்கள், முதல் முறையாக இந்த விவரம் கிடைக்கிறது; இதுவரை தெரியாதிருந்தது என்று கூறி வியப்படைந்தனர். இன்னும் தெரியவேண்டியது நிரம்ப இருக்கிறது; நள்ளிரவில் மாணவர் விடுதிகள் தாக்கப்பட்டதும், அங்குக் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டதும், அமைதியாக இருந்த மாணவர்களின் கிளர்ச்சி அமளியாகிட வழி வகுத்த அடாத நடவடிக்கைகளும், இவ்விதம் பல உள்ளன. இவைகளெல்லாம் அனைவருக்கும் தெரிய வேண்டும், உண்மை அப்போதுதான் துலங்கும், எங்கள் கழகத்துக்கும் இந்த நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது மெய்ப்பிக்கப்படும். கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், விடுதித் தலைவர்கள், இதழாசிரியர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர்கள் சான்றளிக்கத் தயாராக உள்ளனர். ஆகவேதான் நீதி விசாரணை வேண்டுமென வற்புறுத்துகிறோம் என்று விளக்கமளித்தேன். அடுத்தபடியாக ஒரு நிருபர், "முதலமைச்சர்கள் மாநாடு பற்றி என்ன கருதுகிறீர்கள்?’’ என்று கேட்டார். முதலமைச்சர்கள் மாநாட்டிலும், காங்கிரஸ் காரியக் கமிட்டியிலும், பிரச்சினைபற்றிப் பேசி, சில சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில், அங்குக் காட்டப் பட்ட கருத்தோட்டத்தை ஒட்டி, எந்த விதமான மசோதா என்ன வார்த்தைகள் கொண்டதாகத் தயாரிக்கப்படுகிறது என்பதனைப் பார்த்த பிறகுதான் எங்கள் கருத்தைக் கூறமுடியும். பொறுத் திருந்து பார்க்க வேண்டும். மற்றொன்று; முதலமைச்சர்கள் காட்டிய மனோபாவத்திற்கு ஏற்றவிதமாகவே மசோதா கொண்டுவரப்படுகிறது என்றாலும், அது ஒரு தற்காலிகமான பரிகாரமாகத்தான் கொள்ளப்படும்; கோரிக்கையும் குறிக்கோளும் நிறைவேறிவிட்டதாக மக்கள் கருதமாட்டார்கள் . . . நாங்கள் (தி. மு. க.) விரும்புகிற பதினான்கு மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்ற இலட்சியப் பாதையில், அது ஒரு படி என்று மட்டுமே நாங்கள் கருதுவோம் என்று கூறினேன். ஆட்சி மொழிகள் சட்டத்தில் எந்தவிதமான திருத்தம் வரும் என்பது, இங்கு இத்தனை நாள் இருந்த பிறகும், என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதுபற்றி சர்க்கார் எந்த அளவு சிந்தனை செய்திருக்கிறார்கள் என்றுகூட அறிந்துகொள்ள முடியவில்லை. போன காரியம் முடிந்தது; நூற்றுக்கு நூறு வெற்றி என்று எங்கள் முதலமைச்சர் டில்லியிலிருந்து திரும்பியதும் கூறியிருக்கிறாரே என்று நான் கூறும்போது, இங்குள்ள சிலர் கண் சிமிட்டுகிறார்கள், கேலியாக!! "ஆட்சி மொழிகள் சட்டத்தில் திருத்தம் உடனடியாகக் கொண்டுவரச் சொல்லி, வற்புறுத்தப் போகிறீர்களா?’’ என்று ஒரு நிருபர் கேட்டார். பாராளுமன்றப் பேச்சில் லால்பகதூர், இதிலே அவசரம் காட்டக்கூடாது; அவரவர்களும் தத்தமது கருத்துக்களைக் கூறியபடி இருக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்திருக் கிறார். ஆயினும், எல்லாக் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துப் பேசப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். அவ்விதம் அழைக்கப்பட்டால், நான் வலியுறுத்திப் பேசுவேன் என்று கூறினேன். இடையில் இதனையும் கூறிவிடுகிறேன். இங்கு பல கட்சித் தலைவர்களையும் கலந்து பேசும் முயற்சி இருக்கும் அறிகுறியே காணோம் - பத்திரிகைகளில் வந்த செய்தியைத் தவிர!! "சௌரி சௌரா கலகம்பற்றிக் கூறினீர்கள். அந்தக் கலகம் நடந்தது கண்டதும் மகாத்மா, கிளர்ச்சியை வாபஸ் பெற்று விட்டாரே, நீங்கள் ஏன் அதுபோலச் செய்யவில்லை?’’ என்று ஒரு நிருபர் கேட்டார். கிளர்ச்சி என் தலைமையில் நடைபெறவுமில்லை, கழகக் கிளர்ச்சியுமல்ல அது, நான் வாபஸ் பெற. எங்கள் கிளர்ச்சி, 26-ம் நாள் மட்டும், துக்க நாள் நடத்துவது. 25-ம் நாள் நள்ளிரவே நாங்கள் கைது செய்யப்பட்டு, பிப்ரவரி 2-ம் நாள்தான் விடுதலை செய்யப்பட்டோம். நாங்கள் உள்ளே இருந்தபோதும் பிறகும் தொடர்ந்து நடைபெற்ற மாணவர் கிளர்ச்சி, கழகம் நடத்தியது அல்ல. ஆகவே, அதனை நிறுத்திவிட எனக்கு எப்படி வாய்ப்பு இருக்க முடியும்? நாங்கள் திட்டமிட்டு, எங்கள் கழகத்தின் சார்பில் கிளர்ச்சி நடத்தினால், இன்னின்னார் மட்டும் இன்னின்ன முறையில் கிளர்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு, வரையறை வைத்திருப்போம். தீய சக்திகள் நுழையக் கண்டால் தடுத்து அப்புறப்படுத்தி இருப்போம் என்று கூறினேன். ஒரு நிருபர் கேட்டார், "இந்தி ஆதரவாளர்களாக உள்ள சில தலைவர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்கும் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்களா? உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார். லால்பகதூர் அவர்களின் பேரப்பிள்ளை, டில்லியில் அவ்விதமான பள்ளிக்கூடத்தில் படிப்பதாகக் கேள்விப்பட்டேன் என்று கூறினேன். உண்மையில், இங்கு நான் இதுபோலக் கேள்விப்பட்டேன். நான் கூறினதை எந்த நிருபரும் அன்றும் மறுக்கவில்லை; இன்றும் மறுக்கவில்லை. தெரியுமா! தெரியுமா! உங்கள் அண்ணாதுரை என்ன சொன்னான் தெரியுமா! என்று சிலம்பு போடும் சீலர்கள், இந்தி ஆதரவாளர் லால்பகதூர் தமது பேரப்பிள்ளையை ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி இருக்கிறார் என்பதனைக் கூறவா செய்வார்கள், எப்படி எதிர்பார்க்க முடியும்? சிலர் பசுவிடமிருந்து பால் பெறுகிறார்கள்; சிலர் "கோமயம்’ மட்டும் சிரமப்பட்டுச் செம்புப் பாத்திரத்தில் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள், அது அவரவர்களின் விருப்பம், தேவையைப் பொருத்தது? "திராவிட முன்னேற்றக் கழகம் ஏதாவது கிளர்ச்சி செய்யப் போகிறதா?’’ என்று ஒரு நிருபர் கேட்டார். பொதுக்குழு கூடித்தான் இதுபற்றித் தீர்மானிக்கும். என்றாலும், இப்போது சூழ்நிலை கெட்டுக் கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில் கிளர்ச்சி துவக்கினால் தீயசக்திகள் நுழைந்துவிடும் என்ற அச்சம் எனக்கு இருக்கிறது என்றேன். "அப்படியானால் மக்களிடம் உங்களுக்கு இருந்த செல்வாக்கும் பிடியும் குறைந்துவிட்டது என்று பொருளா?’’ என்று ஒரு நிருபர் மடக்கினார். மக்களிடம் செல்வாக்கு இருந்ததாகவாவது ஒப்புக் கொள்கிறீரே, மெத்த மகிழ்ச்சி. அந்தச் செல்வாக்கு அப்படியேதான் இருக்கிறது. ஆனால், நாம் பேசிக்கொண்டது மக்களைப்பற்றி அல்ல; தீயசக்திகளைப் பற்றி!! - என்று நான் கூறினேன். அவர் விடவில்லை. "ஆக தீயசக்திகளை அடக்கிட முடியாது என்று அஞ்சுகிறீர்கள்?’’ என்று குறுக்குக் கேள்வி கேட்டார். ஆமய்யா ஆம்! சர்க்காரால் முடியாதது போலவே, தீயசக்திகளை அடக்கிட என்னாலும் முடியாமற் போய்விடும் என்று அஞ்சுகிறேன் என்று பதிலளித்தேன். "மொழி விஷயமாக உமது கொள்கை என்ன?’’ என்ற பொதுப் பிரச்சினையை ஒருவர் எழுப்பினார். தேசிய மொழிகளெல்லாம் ஆட்சி மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அந்தக் கட்டம் வரையில் ஆங்கிலம் ஆட்சி மொழியாகத் தொடர்ந்து இருந்து வரவேண்டும். இதற்கு நாமாக ஒரு காலக்கெடு வைத்துக்கொள்ளக்கூடாது. "பிறகு, ஒரு தொடர்பு மொழி வேண்டுமே. அது எது?’’ அது எது என்பது மக்களாகப் பார்த்து, காலப்போக்கில், இயற்கையான சூழ்நிலையில், தீர்மானித்துக்கொள்ள வேண்டும். சர்க்கார் இன்ன மொழிதான் தொடர்பு மொழி என்று ஆணையிடக்கூடாது; ஆதரவு தரக்கூடாது; மக்களே தீர்மானிக்க வேண்டும். பதினான்கு மொழிகளில், எது தொடர்பு மொழியாகும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? என்று கேட்டார் நிருபர். பதினான்கு மொழிகளில் ஏதாவது ஒன்று. தமிழுக்கு என்ன! வளமான மொழி! தொன்மையான மொழி! இலக்கியச் செறிவுள்ளது! தொடர்பு மொழியாகத் தமிழ் இருக்கலாமே என்று நான் கூறினேன். “தொடர்பு மொழியாக சமஸ்கிருதம் இருக்கலாமல்லவா?’’ என்று கேட்டார் மற்றொருவர்.”சமஸ்கிருதமா, அது பேச்சு வழக்கற்ற மொழியாயிற்றே!’ என்றேன். மேலால் அவர் அந்தப் பிரச்சினையைத் தொடரவில்லை. இந்தி ஆட்சி மொழி என்ற திட்டத்தைச் சர்க்கார் விட்டுவிட்டால், பிறகு இந்தி பரப்பப்படுவதுபற்றி உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே! என்று ஒருவர் கேட்டார். இல்லை! ஆனால், அந்தப் பரப்பும் காரியத்தைச் சர்க்கார் செய்யக்கூடாது. மக்களின் அமைப்பு (அதிகார பூர்வமல்லாதது) செய்ய வேண்டும் என்று கூறினேன். அப்போதுதான் அந்த நிருபர், கேட்டார், “நீங்கள் உதவி செய்வீர்களா?’’ என்று. நான் உடனே கூறினேன்,”நான் அந்த அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். இந்தி ஆட்சி மொழி அல்ல என்று சர்க்கார் அறிவிக்கட்டும்; இந்தியைப் பரப்பும் காரியத்தில் சர்க்கார் ஈடுபடாமல் இருக்கட்டும்’’ என்று கூறினேன். இதுதான் முதலமைச்சர் கரத்துக்குப் பந்தாயிற்று! என்ன வேடிக்கையான இயல்பு!! இந்தியை ஆட்சி மொழியாக்கும் திட்டத்தைச் சர்க்கார் விட்டுவிடவேண்டும் என்றேனே அது? இந்தியைப் பரப்பும் வேலையில் சர்க்கார் ஈடுபடக்கூடாது என்றேனே, அது? பதினான்கு மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்றேனே, அது? தொடர்பு மொழி என்று எதனையும் சர்க்கார் அறிவிக்கக் கூடாது என்றேனே, அது? தொடர்பு மொழியாக, தொன்மையும் வளமையும் மிக்க தமிழ் ஏன் கொள்ளப்படக்கூடாது என்று கேட்டேனே, அது? அவை ஒன்றுகூட முதலமைச்சருக்கு, முக்கியமானவை யாகப் படவில்லை!! ஏன் என்று கேட்க நான் யார்!! அவரோ முதலமைச்சர்!! நானோ கருணாநிதிக்கு அண்ணன்? நான் போய்க் கேட்கலாமா அவ்வளவு பெரியவரை, இந்தச் சங்கடமான கேள்வியை!! ஒரு நிருபர் கேட்டார், "ஆங்கிலத்தை வெள்ளைக்காரன் புகுத்தியபோது ஏற்றுக்கொண்டீர்களே, இந்தியை அதுபோல ஏற்றுக்கொண்டால் என்ன?’’ என்று. உம்முடையே கேள்வியின் தோரணையே அச்ச மூட்டுகிறதே ஐயா! வெள்ளைக்காரன் எப்படி ஆங்கிலத்தைக் கற்கச் சொன்னானோ அதுபோல இந்தியை ஏற்கச் சொல்கிறோம் என்றால் என்ன பொருள்? வெள்ளைக்காரன் போல இந்திக்காரர் ஆட்சி செய்யத் திட்டமிடுகிறார்கள் என்பதல்லவா? இதைத்தான் இந்தி ஏகாதிபத்தியம் என்பது. மற்றொன்று, ஆங்கிலத்தை வெள்ளைக்காரன் திணிக்கவில்லை. நான் அறிந்த அளவில் ராஜாராம் மோகன்ராய் போன்ற சான்றோர்கள் ஆங்கிலக் கல்வி வேண்டும் என்று முறையிட்டு, பிறகே ஆங்கிலம் கற்பிக்கப் பட்டது என்றேன். "பன்மொழிகள் ஆட்சி மொழிகளாவது நடைமுறைக்கு ஒத்துவராது என்கிறேன்’’ என்றார் ஒருவர். கடினம் - சங்கடம் என்றெல்லாம் சொல்லுங்கள்; நடைமுறைக்கு ஒத்துவராது என்று கூறிவிடமுடியாது. பல மொழிகள் உள்ள இடத்தில், வேறு மார்க்கம் இல்லையே! என்று கூறினேன். மறுபடியும் ஒருவர் அடிப்படைக் கேள்வியைத் துவக்கினார். "என்ன காரணத்துக்காக இந்தியை வேண்டா மென்கிறீர்கள்’’ என்றார். பல முறை பல காரணங்களைக் கூறியாகிவிட்டது. ஒன்று மட்டும் மறுபடியும் வற்புறுத்துகிறேன். இந்தி சிலருக்கு, தாய்மொழி - தன்னாலே வருவது - பரம்பரைச் சொத்து - அந்த மொழியை நாங்கள் கற்றுத் தேறி இந்திக்காரருடன் போட்டியில் வென்று இடம் பிடிப்பது, நிரந்தரமான இடையூறு - இது அநீதி என்றேன். "இயற்கையான சக்திகளால் மொழிகள் வளர வேண்டும், பிறகு அவைகளிலிருந்து தொடர்பு மொழி கிடைக்க வேண்டும் என்கின்றீர்? இயற்கையான சக்தியை என்ன செய்து பெறுவது?’’ என்று கேட்டார். சக்தி இன்னவிதம் பெறக்கூடியது என்று திட்டமிட்டுக் கூறமுடியாது. பொதுவான சில யோசனைகள் கூறுகிறேன். சகிப்புத்தன்மை வேண்டும், மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் இயல்பு வளர வேண்டும், ஆதிக்க நோக்கம் அகலவேண்டும், வெறித்தனம் என்கிறார்களே அது ஒழிய வேண்டும். ஒரு உதாரணம் தருகிறேன். நான் நண்பர்களுடன் மோட்டாரில் வட இந்தியப் பகுதிகள் சென்றிருக்கிறேன் - மத்தியப் பிரதேசம் போன்ற இடங்கள். அங்கு வட இந்தியர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள், எங்களுக்கு இந்தி தெரியாது என்று தெரிந்த பிறகும், வேண்டுமென்றே பிடிவாதமாக நாங்கள் கேட்பவைகளுக்கு, இந்தியில்தான் பதில் அளித்தார்கள். இது என்ன மனோபாவம் என்றேன். அவர் புரிந்துகொண்டார் என்று எண்ணுகிறேன். டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர், வரும்போதே சொன்னார் "நான் இந்திவாலா’’ என்று நான் கேட்காமலிருக்கும் போதே. அவர்தான், சில கேள்விகளை வேண்டுமென்றே, என் பொறுமையைக் கண்டறியும் முறையில் கேட்டார். அவர் கேட்ட கேள்வி இது. "எவ்வளவுதான் நீங்கள் மறுத்தாலும், பொது மக்கள், தி. மு. கழகமும் வேறு சில அரசியல் கட்சிகளுந்தான் வன்முறைச் செயலுக்குக் காரணம் என்று எண்ணுகிறார்கள். அந்த நிலையில், தமிழ்நாடு, இந்தியாவின் மற்றப் பகுதியை மிரட்டிப் பணியவைக்க முயலுகிறது, இது முறையா?’’ என்று கேட்டார். ஐயா! உம்முடைய கேள்வியின் அடிப்படையே தவறு. தி. மு. கழகம் வன்முறையைச் செய்யவில்லை, தூண்டவில்லை, பங்கு இல்லை என்று நான் பன்னிப் பன்னி மறுத்த பிறகும், நீர், அந்தத் தவறான எண்ணத்தை விட்டுவிடாமல், அதை அடிப்படையாக்கிக்கொண்டு, வாதங்களை அடுக்கும்போதே, உமக்கு நான் பதில் கூறமுடியாது என்று கூறும் உரிமை எனக்கு இருக்கிறது. என்றாலும், கேட்டதற்குச் சொல்கிறேன்; தமிழ்நாடு, இந்தியாவின் மற்றப் பகுதியை மிரட்டிப் பணிய வைக்கக் கிளம்பவில்லை. சொல்லப்போனால், இந்தியாவிலேயே, பலம் குறைந்த பகுதியாகத் தமிழ்நாடு இருக்கிறது என்று கூறினேன். கூறிவிட்டு, ஐயா! வன்முறைக்குக் காரணம் தி. மு. கழகம் என்று முதலமைச்சர் கூறியதை வைத்துக்கொண்டு பேசுகிறீரே, அதே முதலமைச்சர் சில நாட்களுக்குப் பிறகு, கள்ளச் சாராயம் காய்ச்சுவோரும், கள்ளக்கடத்தல் பேர்வழிகளும் போலீசாரிடம் தங்களுக்கு இருந்து வந்த வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ளச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்று அறிக்கை விடுத்திருப்பது தெரியுமா என்று கேட்டேன். அப்படி ஒரு அறிக்கை வெளிவந்ததாகவே அந்த நிருபர் காட்டிக்கொள்ளவில்லை. கெட்டிக்காரர்! "பாராளுமன்றக் கூட்டம் ஒரு தொடராவது தெற்கே நடத்தப்பட வேண்டும் என்று ஒரு யோசனை கூறப்படுகிறதே, அதுபற்றி என்ன கருதுகிறீர்கள்?’’ என்று ஒரு நிருபர் கேட்டார். ஆமாம், மேலும் பல யோசனைகள்கூடக் கூறப்படுகின்றன. பிரதம மந்திரி வடக்கே இருந்தால், குடியரசுத் தலைவர் தெற்கே வசிக்க வேண்டும், கடற்படைத் தலைமைக் காரியாலயம் வடக்கே இருந்து தெற்கு மாற்றப்பட்டு கொச்சியில் அமைக்கப்பட வேண்டும், இத்தகைய அமைப்புகள் இந்தியாவில் பல்வேறு இடங்களிலே பரவலாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் யோசனைகள் கூறப்படுகின்றன. இவைகள், தென்னக மக்களின் மனத்துக்கு ஒருவிதமான ஆறுதல் அளிக்கலாம் - என்று கூறினேன். "மும்மொழித் திட்டப்படி இந்தி கட்டாய பாடமாக்கப் பட்டால், உமது போக்கு எப்படி இருக்கும்?’’ என்று ஒரு நிருபர் கேட்டார். நான் என் எதிர்ப்பைத் தெரிவிப்பேன். இப்போதே அங்கு இந்திக் கற்றுத் தரப்படுகிறது. இந்தி தவிர வேறு எந்த இந்திய மொழி கற்பதற்கும் வகை செய்யப்படாததால் மறைமுகமாக இந்தி கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது. வடக்கே உள்ளவர்களோ, தென்னக மொழியைக் கற்க முன்வரவில்லை. மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் படிக்கிறார்கள். இந்தியைக் கட்டாய பாடமாக்கினால் எங்கள் மக்கள் வேதனைப்படுவார்கள்; எதிர்ப்பார்கள் என்று தெரிவித்தேன். "மத்திய சர்க்கார் அலுவல்களுக்கான பரீட்சை சம்பந்தமாக என்ன கருதுகிறீர்’’ என்று கேட்டார் ஒரு நிருபர்; அதுபற்றித் தெளிவான எந்தத் திட்டமும் வெளியிடப்படவில்லை, ஆகவே, அதுபற்றி நான் கருத்தைச் செலுத்தவில்லை என்று பதிலளித்தேன். "தொடர்பு மொழி இயற்கையான சூழ்நிலையில் வரவேண்டும் என்கிறீரே, மக்கள் ஒரு சிறுபான்மை மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுவிடக் கூடுமல்லவா?’’ என்று ஒருவர் கேட்டார். அப்படியும் நடக்கலாம். மற்றும் ஒன்று. வளமானதாக இருக்கிறதா என்று பார்த்து அத்தகைய மொழியை மக்கள் தொடர்பு மொழியாகக் கொள்ளக்கூடும் அதற்காகத்தான் நான் தமிழுக்காக வாதாடுகிறேன். தமிழ் அத்தனை வளமான மொழி! - என்று கூறினேன். ஒருவர், "வங்காள மொழியும்தான்’’ என்றார், சரி! தமிழ் போன்றே வங்காள மொழியும்; இருக்கட்டும் என்றேன். அவருடைய வங்காள மொழி ஆர்வம், பாராட்டத்தக்கது என உணர்ந்தேன். "சௌரி சௌரா பற்றிச் சொன்னீர்கள் - அங்கு வன்முறை நடந்து, கிளர்ச்சியை மகாத்மா வாபஸ் பெற்றுக்கொண்டார். ஆனாலும் அதற்காக, காங்கிரஸ், கிளர்ச்சி செய்யும் உரிமையை இழந்துவிடவில்லை அல்லவா?’’ என்று கேட்டார். உண்மை நாங்கள்கூட கிளர்ச்சி செய்யும் உரிமையை இழந்து விடச் சம்மதிக்கவில்லை, வன்முறையைக் கண்டிக்கிறோம், வன்முறை எழமுடியாத முறையில் கிளர்ச்சிகள் அமைய வேண்டும் என்பதில் கண்ணுங் கருத்துமாக இருக்கிறோம். ஆனால், கிளர்ச்சி நடத்தும் உரிமையை விட்டுவிடவில்லை என்று கூறினேன். "இந்தி ஒழிக! என்று முழக்கமிடுகிறீர்களே, இந்தி ஆதிக்கம் ஒழிக என்பதுதானே முழக்கமாக இருக்க வேண்டும்?’’ என்று ஒருவர் கேட்டார். இலட்சிய முழக்கங்கள் எடுப்பாக, சுருக்கமாக அமைய வேண்டும். சர்க்காரின் இந்தி ஆட்சி மொழியாக்கும் திணிப்பு ஒழிக! - என்று நீட்டி முழக்கிக்கொண்டிருக்க முடியாது. அதன் காரணமாகத்தான் இந்தி ஒழிக என்று சுருக்கமான முழக்கம் இருக்கிறது. மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு! என்ற இலட்சிய முழக்கம் தந்தார். அவர் விரும்பியது வெள்ளைக் காரர்கள் வெளியேற வேண்டும் என்பது அல்ல; வெள்ளையர் நடத்தும் ஆட்சி ஒழிய வேண்டும் என்பது. வெள்ளையர் இந்தியாவை ஆட்சி செய்வது வெளியேற வேண்டும் என்று விரித்துக் கூறவில்லை, சுருக்கமாக வெள்ளையனே வெளியேறு! என்றார். செய் அல்லது செத்துமடி என்பது அவர் தந்த மற்றொரு சுலோகம். என்ன செய்யவேண்டும், எப்போது, எப்படி, ஏன் சாகவேண்டும் என்றெல்லாம் விளக்கமாக்கி, விரிவாகக் கூறவில்லை. சுருக்கமாக, செய் அல்லது செத்துமடி என்றார். இலட்சிய முழக்கங்கள் அவ்விதந்தான் சுருக்கமாக அமையும் என்று கூறினேன். "இந்தி எதிர்ப்பு உணர்ச்சி காரணமாகக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள வேற்றுமை ஓரளவு குறைந்துவிட்டது உண்மையா?’’ என்று ஒருவர் கேட்டார். உண்மைதான். பல காங்கிரஸ்காரர்கள் நாங்கள் கூறும் கருத்துக்களைப் பேசுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை சட்டசபையில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் இந்தித் திணிப்பைக் கண்டித்துப் பேசியதாகப் பத்திரிகையில் பார்த்தேன். அரசியல் கட்சிகள் அமைத்துக்கொண்டுள்ள அரண்களை உடைத்துக்கொண்டு இந்தி எதிர்ப்புணர்ச்சி பீறிட்டுக் கிளம்பி விட்டது என்று கூறினேன். வேறொரு நிருபர், "பல ஆட்சிமொழித் திட்டமும் கூறுகிறீர், தொடர்பு மொழித் திட்டம்பற்றியும் கூறுகிறீர்; இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண் அல்லவா?’’ என்று கேட்டார். எப்படி முரண்? முரண் அல்லவே! பல மொழிகள் இருப்பதனால்தான் ஒரு தொடர்பு மொழிப் பிரச்சினை எழுகிறது. இரண்டு திட்டமும் ஒன்றுக்கொன்று முரண் அல்ல; துணை என்று கூறினேன். இந்தவிதமாக ஒரு மணி நேரம் நடந்தது அந்த மாநாடு. பயனுள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது. சில நிருபர்கள் கேள்விகள் கேட்டது, அந்தப் பிரச்சினை புரியாததால் அல்ல, நான் என்ன சொல்லுகிறேன் பார்க்கலாம் என்ற நோக்கத்துடன். முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களுக்கும் தெரியாதா, நான் பேசியிருப்பதன் பொருளும் பொருத்தமும், தெரியும். தெரிந்தும் வேறுவிதமாகப் பேசுவானேன்? காரணம், யாருக்குத் தெரியாது. எதையாவது பிடித்துக்கொண்டு கரையேற எண்ணுவது தண்ணீரில் மூழ்கித் தத்தளிப்பவருக்கு எழும் எண்ணம்; துடிப்பு. நெடுநாட்களாக, கழகத்தை அழித்திட, என்ன கிடைக்கும், என்ன கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் துடியாய்த் துடிக்கிறார்கள், எதை எதையோ பேசுகிறார்கள், பிறகு எல்லாம் வீண் என்பது கண்டு விம்முகிறார்கள். இது அவர்களின் இயல்பு. இதனைக் கண்டு நான் வியப்படையவில்லை. இதுவும் ஒரு நன்மைக்குத்தான் என்ற முறையில் எடுத்துக்கொண்டு இங்கு நான் கலந்துகொண்ட நிகழ்ச்சி குறித்துத் தெரிவித்திருக்கிறேன். மணி மூன்று, தூங்க முயலுகிறேன். நன்றி, வணக்கம். அன்புள்ள அண்ணாதுரை 21-3-1965 பின் குறிப்பு : நான் தில்லியிலிருந்து அனுப்பிய கடிதம் 12-3-65 அன்றுதான் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தது. அக்கடிதம் வந்து சேருவதற்குமுன் சென்ற கிழமை 14-3-1965 இதழ் அச்சாகி விட்டமையால், அதனை இந்தக் கிழமை (21-3-1965) இதழில் காணுகின்றீர்கள். அன்புள்ள அண்ணாதுரை ஏழ்மையால் எழில் கெட்டு. . .! ஏழ்மையால் எழில் கெட்டு. . .! விஞ்ஞானத்துறைக் கற்றறிவாளர்களின் வேண்டுகோள் "இட்டுக் கட்டிக்’ கூறுவதே எனக்குச் சாதகமாக அமைந்தது சிறுபான்மையினரின் கருத்தே ஒரு நாள் நாட்டு மக்களின் கருத்தாகிவிடும் டில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் சிறுபான்மைப் பிரச்சினை பற்றிய பேச்சு தம்பி! K. சுவாமிநாதன் B.Sc. J. மஞ்சேஸ்வர் B.Sc. K. சீனுவாசன் B.Sc. S. லட்சுமிவராகன் B.Sc. S. சுப்பிரமணியம் B.Sc. P.A. அசுவதநாராயணா B.E. G. ராமதுரை M.Sc. C.V. கோகுலரத்னம் B.Sc., B.E. V. கிருஷ்ணபிரம்மம் B.E. P.K. வெங்கடேஸ்வரன் B.E. A. ராமகிருஷ்ண சாஸ்திரி B.Sc., B.E. K.M. தாமோதரன் M.Sc. C.V.R. பாபு B.Sc. R. V. ராமகிருஷ்ணசாஸ்திரி B.Sc. N. சீனுவாசன் B.E. G.ரங்கராஜன் M.Sc. A.R. கோடீஸ்வரராவ் M.E. N.V.S. சாஸ்திரி M.Sc. D.V. சுப்பிரமணியம் M.Sc. S.S. ராகவன் M.Sc. K.U.M. பிரசாத் M.Sc. பிரபாகரராவ் B.E. M.R. லட்சுமணன் M.Sc. N. ரமணி M.Sc. K.T. ஜோசப் B.Sc. M.R. அனந்தசயனம் M.E. A. கோபாலகிருஷ்ணன் B.Sc. V.C. ஜேர்μ டட்.D. S. ஹரிஹரன் B.Sc. காசி. விசுவநாத் M.Sc. R. சீதாராமன் B.Sc. K.J. நாயக் B.E. K.V. கிருஷ்ணராவ் M.E. H.R. பார்த்தசாரதி B.Sc. P. மதுசூதனன் நாயர் M.Sc. N.D. ஜெயசங்கர் M.Sc. K.S. நாராயண அய்யர் M.Sc. K. சுப்ரமணிய அய்யர் M.Sc. G. சத்தியநாராயணராஜ் B.Sc. K. ராமசாமி B.E. D. தட்சிணாமூர்த்தி B.E. H.N. கிருஷ்ணசாமி B.E. S.R. சசிகாந்த் B.E. A.S. பெருமாள் M.Sc. E.V.L.N. ராவ் Ph.D. B. ராஜீவலோசனம் B.Sc. V.N. கிருஷ்ணமூர்த்தி M.Sc. ஆஷ்லிஷின்மய்ன் B.Sc. S. வீரேசய்யா B.E. M.K. மணி B.E. V. அளகர்சாமி B.E. K.P. கோபிநாதன் M.Sc. K. அப்பாராவ் B.E. B.V. சோமசேகர் B.E. S. S. கிருஷ்ணமூர்த்தி M.Sc. S. சுப்பிரமணியம் B.E. G. பாஸ்கரராவ் M.Sc. K. ராமசாஸ்திரி M.E. V.V. ஷான்பீ B.E. P.M. கோபிநாத் M.Sc. B.V.S. சர்மா M.Sc. C.H. ராமச்சந்திரராவ் M.E. V. முனிரத்தினம் B.E. (Hons) K.L. நாராயணா M.E. G. செலமா ரெட்டி M.E. G. ரமணி M.Sc. V.N. வசந்தராஜன் M.Sc. T. நாராயணா B.E. N. ரகுநாதநாயக் B.E. P. பிரபாகரராவ் B.E. K.P.R. பிரபு B.Sc. B. ராதாகிருஷ்ணராவ் B.Sc. M. மாதவசம்பிகீதாயா B.E. H.V. வெங்கடகிருஷ்ணா B.E. S. விஜயகுமார் சாஸ்திரி B.Sc. K. நாராயணபட் B.Sc. K. விசுவநாத்அடிகா B.Sc. B. ரத்தினாகரபைரி B.Sc. M.R. பரணேஷ் B.E. M.K. சதீஷா B.E. A.P. சிவபிரசாத் B.Sc. P. சேஷசாயி B.Sc. A. செல்வராஜன் M.Sc. N. கோபால் B.E. H.G. மாதவராஜ் M.Sc. G.G. சண்ட் B.E. R.K. யூவத்சவா B.Sc. K.V.N. சர்மா B.E. M.V. ராமமூர்த்தி M.Sc. V. ராமச்சந்திரன் B.Sc. N. சேஷகிரி B.Sc. N.S. ஜெயந்த் B.Sc. H. ராமகிருஷ்ணா B.Sc. G.V. ஆனந்த் M.Sc. T.V. சத்தியநாராயணா B.Sc. V.P. நாராயணசாமி B.E. R. சீனுவாசன் B.E. B. தத்தகுரு B.Sc. P. தத்தகுப்தா B.Sc. (Hons) N.S. மகாதேவன் B.E. H.K. ராமப்பிரியன் B.Sc. குமாரி A. பிரதீமா B.Sc. G. ரமணி B.E. (Hons) R. விசுவநாதன் B.Sc. N.C. ஜகன் B.Sc. P.K. நாகேஸ்வரராவ் B.Sc. R. சம்பத்குமார் Ph.D. B. சுகவனம் M.Sc. T. கங்காதரய்யா B.E. M.D. இடியாரா B.Sc. D.S.R. சர்மா M.Sc. K.G. கிருஷ்ணமூர்த்தி B.E. K.H. ராமா B.E. R. தண்டபாணி B.Sc. V. மதுசூதனராவ் B.Sc. D.M. பஜிலுல்லா B.Sc. N. ராமச்சந்திரா B.Sc. G. புருஷோத்தமம் B.Sc. A. ராமதாஸ் B.E. K.V. ராமமூர்த்தி B.E. K. பாலசந்திரபட் B.Sc. S. சேஷாசலா B.Sc. R.K. சீனுவாசமூர்த்தி B.Sc. D.S. பதாக் B.Sc. V. சர்மா B.Sc. S.H. வெங்கடேஷ் M.Sc. K. நஞ்சுண்டசாமி B.E. குமாரி S. சீதாலட்சுமி M.Sc. குமாரி பாக்கியலட்சுமி M.A. Ph.D. குமாரி K.S. லிங்ஸி M.Sc. குமாரி D.ஊ. லீலாவதி M.Sc. குமாரி கிளாடிஸ் சுமித்ரா M.A. குமாரி ஊ.J. ராமன் M.A. குமாரி J. அமிர்தவல்லி M.Sc. N. ராமன் B.Sc. V. சீனுவாசன் M. A. S. சத்தாக்கு B.E. V. ராம்ஜி M.Sc. K. நாகராஜ் B.Sc. K. சிவராமன் B.Sc. H.C. நாகராஜ் B.Sc. A. அழகர்சாமி B.E. K. வெங்கடேஸ்வரன் B.Sc. M.V. ராஜா B.Sc. V. சீதாராமராவ் B.E. R. ரவீந்திரன் B.E. K. நாராயணன் B.Sc. V.N. சுப்பாராவ் B.Sc. R. சுந்தரேசன் B.Sc. R. கிருஷ்ணமூர்த்தி B.Sc. N. ரங்கநாதன் B.Sc. R. ராமநாதன் B.Sc. K.S.L. நரசிம்மன் B.Sc. C.S. கணேஷ் B.Sc. N. பார்த்தசாரதி B.Sc. R. ஆனந்தராஜ் B.Sc. K.V. வெங்கடாச்சாரி B.Sc. K.R. சீனுவாசன் B.Sc. B.P. சானி M.Sc. N. பத்மநாபன் B.Sc. (Hons) K.N.N. ரெட்டி M.Sc. S.K. ராமலிங்கம் M.Sc. K. சந்தானம் M.Sc. J. சுப்பிரமணியம் M.Sc. K. சங்கரராவ் M.Sc. V. பச்சையப்பன் M.Sc. N.S. வெங்கடராமன் M.A., M.Sc. R. கண்ணன்குட்டி B.E. K. கிருஷ்ணசாமி B.E. V.R. ரங்கராஜு B.E. C. கந்தசாமி M.Sc. K. சீனுவாசராகவன் B.E. A. சண்முகசுந்தரம் B.E. C.V. ராமகிருஷ்ணன் B.E. T. நடராஜன் B.Sc. P. சூரியநாராயணன் B.Sc. C. ரவீந்திரன் B.Sc. K.S. சங்கரன் B.Sc. K.P.S. பிரபு B.Sc. D. ரவீந்திரா M.E. P. சத்தியநாராயணா B.E. M.S. கிருஷ்ணமூர்த்தி B.E. R. பாலசுப்பிரமணியம் M.E. C.V. வெங்கடசேஷய்யா M.E. S. ராமன் B.Sc. N. ராமன் M.A., M.Sc. S. ராகவன் M.Sc. N. விசுவநாதன் B.Sc. V.V.S. சர்மா B.Sc. R.J. சீனுவாசன் B.E. M.K. சிவலிங்கம் M.A. குமாரி R. லீலா M.A. M. சீனுவாசன் B.Sc. P.S. அனந்தராமன் B.E. H.N. ராமச்சந்திரா B.E. P.G. லட்சுமணன் B.Sc. K.R.K. ஈஸ்வரன் M.Sc. V. கணேசன் B.Sc. ஜான் S. எபனேசர் M.Sc. T.S. ராமபத்திரன் B.Sc. S.A. அக்கீம் B.E. K. ரங்கா டட்.D. B. யக்யநாராயணா B.Sc. M.S. ராதாகிருஷ்ணராவ் B.Sc. G.R. வெங்கடகிருஷ்ணன் M.Sc. T.A. வெங்கடராம் B.Sc. D.N. அஜாரிகா B.E. N. ராகவேந்திரா B.E. S.R. யோகநரசிம்மம் M.Sc. S. அய்யாசாமி M.Sc. குமாரி P. மாலதி M.Sc. குமாரி P. வசந்தா B.Sc. குமாரி P. ராதா M.Sc. குமாரி B. மீராபாய் M.Sc. G.K. வெங்கடராவ் B.Sc. R. நடராசன் M.E. V. சுப்பிரமணியம் B.Sc. V. சீராமுலு B.E. P.R. சீனுவாசன் M.Sc. K. ஸ்ரீதரன் B.E. S. குருராஜராவ் B.E. D.S. தேஷ்முக் M.Sc. K. ராமமூர்த்தி ரெட்டி B.E. M.V. பட் B.E. J. கோபாலகிருஷ்ணன் M.Sc. A. K. மல்லய்யா B.E. M.வ. சுப்பிரமணியம் M.Sc. J.S. கினி B.E. K. தாமஸ் ஜேகப் B.Sc. T.M. ராதாகிருஷ்ணன் M.Sc. T.K. சந்தானம் B.E. C.P. பிரபாகரன் M.Sc. U.V. சவுதாரி B.E. S.B. பாய் B.Sc. (Hons) K.S. சீனுவாஸ் M.Sc. M.K. பிரேமராஜன் B.Sc. K.V. பட் M.Sc. K.R. ஹெக்டே B.Sc. K. சீனுவாசன் B.Sc. (Hons) K.S. சலபதிராவ் B.Sc. C. சூரியநாராயணா B.Sc. A. பாலசுப்பிரமணியம் B.Sc. M.R. கஜபதி B.E. R. ராமநாதன் B.Sc. V.B.K. சன்யாசிராவ் B.E. R.S. சீனுவாசன் B.E. M.V. ராவ் M.Sc. G. ராமசாமி B.E. H. S. முகுந்தா B.E. B. சத்தியநாராயணா B.E. (Hons) K. மல்லிகார்ஜுனராவ் B.Sc. C.H. பிரசாதராவ் B.Sc. M. சாம்பசிவராவ் B.Sc. K.M. காமத் M.Sc. A.N. மோகன் B.Sc. M. ரவீந்திரன் B.Sc. திருநாராயண அய்யங்கார் B.Sc. M.J.S. ரங்காச்சாரி M.Sc. S. ராஜசேகரன் B.Sc. K. ரகுநாதன் M.Sc. S.V. விஜயராகவன் B.E. K. கோபாலன் H.SC. K.N. சுப்பிரமணியம் M.Sc. M. சீனுவாசன் B.Sc. (Hons) V. கிருஷ்ணன் M.Sc. M.S. வாசுதேவ் B.E. V.S.V. மணி B.Sc. K. ரவீந்திரநாத் M.Sc. S.R. ஜெயின் M.Sc. D.V. சுப்பிரமணியம் M.Sc. V.K. வாசுதேவன் உன்னி M.Sc. குமாரி V. வசந்தசேனா M.Sc. குமாரி சரோஜம்மா M.Sc. T.S. கண்ணன் M.Sc. S.R. சத்தியநாராயணா M.Sc. குமாரி D.K. பத்மா M.Sc. N. பாலசுப்பிரமணியம் M.Sc. H.C. மிருத்யன்ஜனேயா M.Sc. குமாரி S. K. விஜயலட்சுமம்மா M.Sc. K.M. தாமோதரன் M.Sc. N. மகாபத்ரா M.Sc. R. ரங்கநாதன் B.Sc. (Hons) K.S. அய்யர் M.Sc. A. சீனுவாசன் M.Sc. T. அருணாசலம் M.Sc. S. ரங்கராஜு M.Sc. G. ராமன் B.E. V. சேஷகிரிராவ் M.E. A.G. நாராயணராவ் B.Sc. M. அந்தோணிரெட்டி B.E. M. அரிசங்கர் B.Sc. P.K. போலோஸ் B.Sc. சீதாராம ஆசார்யா M.Sc. L.R. சுப்பிரமணியம் M.Sc. S. பட்டநாயக் B.Sc. C. தேவநாதன் B.Sc. (Hons) C.V. யோகாநந்தா M.E. N. கிருஷ்ணமூர்த்தி M.Sc. K.K. கண்ணன் M.Sc. B.V. தாசரதி B.E. K. கேசவன் B.Sc. G.B. சுப்பையா B.E. ஜோசப்லோபோ B.E. C.K. சீதாராமன் B.Sc. T. ஜிஷ்ணு B.E. D. மல்லையா B.E. T.V. சுந்தரராஜமூர்த்தி B.A., B.E. C. குருராஜ் B.E. R. பார்த்தசாரதி B.Sc. V. மித்தர் B.Sc. V.K. மாணிக்கசெல்வம் B.E. S. வெங்கடசுப்பன் B.E. (Hons) V. நாகராஜன் டட்.D. C.V. கல்யாணசுந்தரம் M.A. R. பாலகிருஷ்ணன் B.Sc. R. கண்ணப்பன் B.E. S. பாலசுப்பிரமணியம் B.Sc. D.S. சத்தியநாராயணா B.E. S. ராஜசேகரன் B.Sc. R.S. ராஜகோபாலன் M.Sc. S. சந்திரசேகரன் B.E. S. ஸ்ரீதரன் B.Sc. C. அனந்தநாராயணன் B.Sc. V. திருவேங்கிடாச்சாரி B.E. R.S. பட்கோகேஷ்வர் B.E. R.G. புவனேஸ்வரன் B.Sc. R. மீனாட்சிசுந்தரம் B.E. S. ராமப்பிரசாத் B.E. V. பசுபதி B.Sc. N. ராதாகிருஷ்ணன் B.E. H. பரூமிக் B.E. S.C. முகோபாத்யாயா B.E. வ.V. வெங்கடேஷ் B.E. R. ஜம்புநாதன் M.Sc. H.R. வைத்தியநாத் B.Sc. N. K. சீனுவாசன் B.Sc. R. நாகராஜா M.Sc. பட்டியலைப் பார்த்தனையா! பட்டதாரிகள், அதிலும் தொழிலியல், பொறியில், மின் இயல் போன்ற விஞ்ஞானத் துறையின் பட்டங்கள், மிக நீண்டகாலமாகப் புதுமுறைத் தொழில் வளம் பெறாமல் பஞ்சத்தில் அடிபட்டுக் கிடந்தோர் நாட்டினைப் புதுப்பொலிவு பெற்றிடச் செய்திடும் பொறுப்பினை மேற்கொள்வதற்கான தகுதியும் திறமையும் பெற்றிருப்பவர்களின் பட்டியல். இருண்ட சிற்றூர்கள் ஒளி பெற்றிடவும், துவண்டிடும் தொழிலினை முறுக்கேற்றிடவும், மனிதனைக் கசக்கிப் பிழிந்திடும் கடின உழைப்பைக் குறைத்திட யந்திர வலிவினைத் துணையாக்கிடவும், பொருள்களின் தன்மையினை நுணுகிக் கண்டறிந்து பயனை மிகுதியாக்கிடவும், எந்த விஞ்ஞான அறிவுத்திறமை தேவையோ, அதனைப் பெற்றுள்ள அறிவாளர்களின் பட்டியல்! இவர்கள் காட்டாறு களைக் கட்டுப்படுத்துவர், கரம்பைக் கழனியாக்குவர், கடல்நீரைக் குடிநீராக்கிடுவர், வேகம், வலிவாக மாறிட வழி செய்வர் - இவர்களைப் பாரதியார் "புதிய பிரம்மாக்கள்’ என்பார்! அத்தகைய சிறப்பியல்பு பெற்றவர்கள்; பெற்றுள்ள திறமையினை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ள பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளவர்கள் - பெங்களூர் விஞ்ஞானத்துறைக் கல்லூரியில் பயின்று வருபவர்கள்! இவர் போன்றோரின் கரம் பட்டுப்பட்டுத்தான் நாடு செல்வபுரியாகிடவேண்டும். இவர் போன்றாரின் தொகை பெரும் அளவு பெற்றதனால் பிரிட்டனும் ஜெர்மனியும், ரμயர்மம், அமெரிக்காவும், இத்தனை வளர்ச்சி கண்டன. ஆனால். . . . ! பெருமிதமல்லவாகொள்ள வேண்டும், பழமைப் பிடியிலே சிக்கிக் கிடந்திட்ட நாட்டை மீட்டிடத் திறமை பெற்றுள்ளவர் களின் பட்டியலைக் காணும்போது; புதிய உற்சாகமும் நம்பிக்கையுமல்லவா பெற வேண்டும்; அதற்கு மாறாக இந்தப் பட்டியûலையும் காட்டிவிட்டு, பெருமூச்செறிவது ஏன்! ஆனால். . . . என்று இழுப்பு எதற்காக என்று கேட்கிறாய் புரிகிறது. இவர்களின் தகுதியையும் திறமையையும், இவர்களால் நாடு பெற இருக்கும் பெருமையையும் வளர்ச்சியையும் எண்ணும்போது, எல்லோருக்கும் ஏற்படுவதுபோல எனக்கும் இனிப்பான உணர்ச்சிதான் எழுகிறது. என்றாலும். . . நான் இந்தப் பட்டியலைத் தந்துள்ளதன் நோக்கம், விஞ்ஞானத் துறையினரின் தொகை வளர்ந்து வருவதனைக் காட்டுவதற்காக இருப்பின், மகிழ்ச்சி குறைவின்றிக் கொள்வேன். நான் இந்தப் பட்டியலைத் தந்திருப்பது, அதற்காக அல்ல, எப்படிப்பட்டவர்களின் கருத்தையெல்லாம் துச்சமென்று மதித்திடும் துரைத்தனம் நடத்தப்படுகிறது, எவ்விதமான தகுதி திறமை படைத்தவர்களெல்லாம் ஏனோதானோக்களாக்கப் பட்டுவிடுகின்றனர் இந்த ஆளவந்தார்களால் என்பதை அறிவதனால் எனக்கு ஏற்பட்டுள்ள வேதனையைப் பங்கிட்டுக் கொள்வதற்கு உன்னை அழைக்கவே இந்தப் பட்டியலைக் காட்டினேன். எந்த அரசு எனினும், எம்முறையில் நடாத்தப்படும் அரசு எனினும் அந்த அரசு அந்நாட்டு நல்லறிவாளர்களின் நட்புறவு பெற்றிட வேண்டும் - நாற்படையினும் மேலானதோர் நற்படையாகிடும் அந்த நட்புறவு. சொல்லேர் உழவர் என்பது கவிதை புனைவோரை மட்டும் குறித்திடுவதாகாது. . . அறிவுக் கழனியில் பணியாற்றிடும் படைப்பாளர்கள் அனைவரையும் குறிப்பதாகும். அத்தகைய அறிவாளர்களைப் புறக்கணிக்கும் அரசு, புறக்கணிக்கப்படவேண்டிய அரசாகிவிடும் - ஓர் நாள். இவை, ஆன்றோர் மொழிந்தவை. இன்றுள்ள ஆளவந்தார்களோ, ஏன் அடிக்கடி, எதற்கெடுத்தாலும் ஆன்றோர், சான்றோர் என்றெல்லாம் அழைக்கின்றீர்கள்; நாங்கள் இருக்கின்றோமே, போதாதோ என்கிறார்கள்! சொல்வது மட்டுமல்ல, அறிவாளர்கள் கூறுவதை மருந்துக்கும் கொள்ளமாட்டோம் என்று உறுதியாக நிற்கின்றனர் - கற்பாறை போல!! நான் குறிப்பிட்டேனே ஒரு பட்டியல் - விஞ்ஞான வித்தகர்களின் பெயர் வரிசை - இது மேலும் நீண்டதாகிடும். வேறு பற்பல கல்லூரிகளில் உள்ளவர்களின் பெயர்களையும் சேர்த்தால் நான் தந்துள்ள பட்டியல், தயாரித்தால் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய பட்டியலில் ஒரு சிறு துண்டு. இவர்கள், மொழி, வெறி, வகுப்புவாதம், ஜாதிப் பித்து, கட்சி மாச்சரியம், பதவி மோகம், வன்முறையில் நாட்டம், குழப்ப வாதம், பிளவு மனப்பான்மை போன்ற எவற்றினுக்கும் பலியாகிவிடக் கூடியவர்கள் அல்லர் அறிவாலயத்தில் உள்ளவர்கள். எதற்கும், தாமாக முன்னாலே வந்து நிற்கும் இயல்பினருமல்லர். சந்தடி, சச்சரவு, விவாதம் ஆகியவைகளுக்கு அப்பால் நெடுந்தொலைவில் இருந்துகொண்டு, மனநிம்மதியுடன் நுண்ணறிவு பெற்று வருபவர்கள். உனக்கா எனக்கா! பார்த்துவிடலாம் வா! என்ற வம்புக்கும் போட்டிக்கும் வருபவர்களல்லர், தமக்கென்று அமைந்துள்ள கோட்டத்தில் இருந்துகொண்டு, அறிவாற்றலைப் பெற்றுக்கொண்டு வருபவர்கள் - பிறகு அதனை நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்த. அத்தகைய அறிவாளர்கள், கூடிப் பேசி, பிரச்சினையின் பல கோணங்களையும் கண்டறிந்து, ஒரு கருத்தைக் கொண்டு, அதனை அரசு நடாத்திடும் லால்பகதூர் அவர்களுக்குத் தெரிவித்துள்ளனர் - நல்ல விளக்கத்தையும் இணைத்து. இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்கக்கூடாது என்பதும், ஆங்கிலத்தை அகற்றிவிடக்கூடாது என்பதும் அவர்கள் லால்பகதூருக்குத் தெரிவித்திருக்கும் கருத்தின் சுருக்கம். அரசியல்வாதிகள், ஆளுங்கட்சியைக் குறை கூற, அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ள, மொழிப் பிரச்சினையைக் கிளப்பி விட்டு விடுகிறார்கள் என்று ஆளவந்தார்கள் அடித்துப் பேசுகிறார்கள் - தாமே அரசியல்வாதிகள் என்பதை மறந்து; அண்ணல் காந்தியாரின் பெயர் கூறி - அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டவர்கள் என்பதனையும் மறந்து. இது பொருளற்ற குற்றச்சாட்டு என்றபோதிலும், இதனைக்கூடப் பட்டியலில் காணப்படுவோர்மீது வீசுவது இயலாததாகும். ஏனெனில், இவர்கள் ஒவ்வொருவரும் பயிற்சி பெற்றுப் பயன் தரும் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றுள்ளவர்கள் - அரசியல் அங்காடியில் நுழைந்திடவேண்டிய நிலையில் உள்ளவர்கள் அல்லர். இத்தகைய அறிவாளர்களின் பேச்சைத் தட்டி நடக்கக் கூடாது, இத்தகையவர்களை அலட்சியப்படுத்தக்கூடாது என்று. ஆளவந்தார்கள் மேற்கொண்டாக வேண்டிய நெறி, அதிலும் குடியாட்சி முறை காரணமாக ஆளவந்தார்களாகிவிட்டவர்கள், இந்த நெறியைக் கடைப்பிடிக்கப் பெரிதும் கடமைப்பட்டவர்கள். ஆனால், லால்பகதூர் என்ன கருதுகிறார்!! பட்டியலைப் பார்த்து என்ன கூறுகிறார்!! லால்பகதூர் இருக்கட்டும், பெரிய பதவியில் உள்ளவர்; உனக்கு அறிமுகமான மண்டலத்தைக் கேட்டுப் பாரேன்; பட்டியலைக் காட்டிப் பாரேன்! ஒரே வரியில் பதில் வரும், “இவர்கள் கூறிவிட்டால் போதுமா!!’’ என்று. திகைத்து நிற்பாய், அவர் தொடருவார்,”இவர்களுக்கு என்ன தெரியும்?’’ என்பார்! கணைகள் தொடரும், “சில நூறுபேர் கூறுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இலட்சோப இலட்சம் மக்கள் இருக்கிறார்கள். தெரியுமா?’’ என்பார். இறுதியாக,”பொதுமக்களுக்கு எது நல்லது என்பதுபற்றி இந்தப் புத்தகம் புரட்டிகளுக்கு என்ன தெரியும்? சதா பொது மக்களோடு பழகிப் பழகி, தொண்டாற்றித் தொண்டாற்றி, அதற்கே எம்மை அர்ப்பணித்துக்கொண்டுவிட்ட எமக்கன்றி, இந்த B.A. க்களுக்கும், M.A. க்களுக்கும், B. நஸ்ரீ. க்களுக்கும், M. நஸ்ரீ. க்களுக்கும், B.E. க்களுக்கும், M.E. க்களுக்கும், டட்.D. க்களுக்குமா தெரியப்போகிறது?’’ என்று கேட்பார். அவருடைய கோபம் அந்த அளவோடு அடங்கிப்போய் விட்டால், தம்பி! நீ தப்பிப் பிழைக்கலாம்; இல்லையோ, ஆரம்பிப்பார் மளமளவென்று; படித்தவனெல்லாம் அறிவாளியா! படிக்காத மேதை இல்லையா, படித்தால் மட்டும் போதுமா! படித்தவன் படும்பாடு தெரியுமா? எத்தனை B.A. வேண்டும் சோறு போட்டால் போதும் விழுந்து கிடப்பார்கள் காட்டிய இடத்தில்! - இப்படிப்பட்ட துந்துபி தொடரும். காரணம் என்ன, அவருடைய ஆர்வத்துக்கு? அவருடைய கண்களுக்கு மிகப் பெரியவராக, மிகப்பெரிய இடத்தில் உள்ளவராக உள்ளவர்களிலே பலர், படிக்காமலேயே பாராளும் பக்குவம் பெற்றவர்களாகிவிட்டது தெரிகிறது. தெரியும்போது, படித்தவன் என்றால் என்ன, அதற்காகத் தனி மதிப்புத் தரவேண்டுமா என்ன? என்று தோன்றுகிறது. பள்ளிக் கூடத்துக்கும் தனக்கும் நடைபெற்ற "ஒத்துழையாமை’ இயக்கம் வேறு அவருக்கு நினைவிற்கு வந்துவிடுகிறது. வந்ததும் வாயிலிருந்து வார்த்தைகள் பொறி பொறியாகக் கிளம்புகின்றன. படித்தவர்கள் சிறுபான்மையினர் - மற்றவர்களே பெரும்பான்மையினர் - பெரும்பான்மையினர் ஆட்சி நடத்தும் உரிமை பெறுவதே ஜனநாயகம் என்று வாதாடியவர்களே உண்டு! அவர்களைக் காணும் நிலை எனக்கு ஏற்பட்டதுண்டு. மதம், இனம், மொழி என்பவை காரணமாக, சிறு பான்மையினர் இருப்பது தெரியுமல்லவா! - அந்தப் பட்டியலில் தான் மண்டலம் சேர்த்துவிடுவார், நான் காட்டிய பட்டியலையும்! அதனால்தான், "ஆனால்’ என்று பெருமூச்செறிந்தேன். இன்று நாடு உள்ள நிலைமையில் பட்டதாரிகள் சிறுபான்மையினர் - எண்ணிக்கைப்படி. அதிலும் நான் காட்டிய விஞ்ஞானத்துறைக் கற்றறிவாளர்கள் மிகச் சிறிய சிறுபான்மையினர். எனவே அவர்கள், செல்வாக்கற்ற நிலையில் வைக்கப்பட்டுவிடுகின்றனர் - பொதுமக்களால் அல்ல - பொதுமக்கள் பெயரைக் கூறிக்கொண்டு ஆட்சி பீடம் பிடித்துக் கொள்பவர்களால். ஒருநாள் வந்தே தீரும் - படித்தவர்கள் பெரும்பான்மையினர் என்று நாடு பெருமையுடன் கூறிக் கொள்ளக்கூடிய நாள். இப்போது நல்ல வளர்ச்சி உள்ள நாடுகளில் அதுதான் நிலை. அந்த நிலை நோக்கி நம் நாடும் சென்றுகொண்டிருக்கிறது. ஆகவே, இன்றைய சிறுபான்மையினர் நாளைய பெரும்பான்மையினர் ஆகப்போவது திண்ணம். என் மகன் B.A. என்று கூறிப் பெருமைப்படும் தகப்பனார், ஆத்திச்சூடியோடு தமது படிப்பை முடித்துக்கொண்டவராக இருக்கலாம்; ஆனால், அவருக்குத் தம் மகனை நன்றாகப் படிக்க வைக்கவேண்டுமென்ற ஆர்வம் எழுந்தது. நல்லரசு, சிறுபான்மையினர் எண்ணிக்கையில் என்ற கணக்கு மட்டும் பார்த்து, அவர்களின் பேச்சைத் துச்சமென்று தள்ளிவிடக்கூடாது. சொல்லப்படுவதன் பொருள் பொருத்தம், ஏற்றம் கண்டறிந்து, கொள்வதா தள்ளுவதா என்ற முடிவு செய்ய வேண்டும் - இந்தி கூடாது என்று சொல்பவர்கள் சிறுபான்மையினர் - ஆகவே, அவர்கள் பேச்சிலே எவ்வளவு நியாயம் இருந்தாலும், ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பது நல்லாட்சி என்ற தனிச் சிறப்பைப் பெற முடியாது. அதுபோலவே, நாம் மிகச் சிலர் கூறி என்ன பயன்? ஆட்சியிலுள்ளோர் அதனை மதித்து ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள் என்ற ஐயப்பாடு கொள்ளாமல், நாம் உணர்ந்ததை உரைப்பது நமது கடமை என்ற பொறுப்புணர்ச்சியுடன் பெங்களூர் விஞ்ஞானத் துறைக் கல்லூரியினர் மொழி பற்றிய தமது கருத்தினை லால்பகதூருக்குத் தெரிவித்தது கண்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று இவர்கள் கூறிடும் கருத்தினை, "சிறுபான்மையினர்’ கருத்து என்று லால்பகதூர் கருதிவிடக்கூடும். ஆனால், இந்தக் கருத்து இதுவரையில் வாளாயிருந்த எத்தனை எத்தனையோ இலட்சக்கணக்கானவர்களை ஈர்த்துக்கொண்டுவிடும் என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில் ஆளவந்தார்களின் கட்சியிலேதான் பலர், அருவருப்பு, அச்சம் காரணமாக, அறிவாளர்களின் கருத்தை மதித்திட மறுக்கின்றனர். பொதுமக்கள் அந்த விதமான போக்கில் இல்லை. அவர்களுக்கு அறிவாளர்கள் பற்றியும் தெரியும், ஆளவந்தார்களின் ஆலவட்டங்களைப் பற்றியும் நன்றாகத் தெரியும். கேட்கலாமே அவர்களின் பேச்சை, சிற்சில வேளைகளில். "யாரு! கொளந்தையப்பனா! தெரியுமே! தெரியும்!! கொளத்தங்கரைத் தெரு! அடே அப்பா! அது சின்ன புள்ளையிலே ஊர்லே போட்ட ஆட்டம் கொஞ்சமா! அது அப்பன் பொத்தகம் வாங்கப் பணம் கொடுத்தா, இது பொட்டலம் வாங்கிட்டுப் பொடியன்களோட பொழுதை ஓட்டும்’’ என்று ஆரம்பித்து, வாழ்க்கை வரலாற்றை விளக்குவதை. பொதுமக்கள், கூறப்படும் கருத்தை, கவனிக்க மறுப்பதில்லை. ஆகவே, நமது கருத்து நாடாள்வோரால் தள்ளப்பட்டுவிடினும் நாட்டினரால் வரவேற்கப்படும் என்ற நம்பிக்கையுடன். விவரம் அறிந்தவர்கள், விளக்கம் பெற்றவர்கள், உண்மையை அஞ்சாது உரைத்திட வேண்டும். உரைத்து வருகின்றனர். கருத்தளிப்பவர் சிறுபான்மையினரா பெரும்பான்மையினரா என்பதல்ல முக்கியமாகக் கவனிக்கப்படத்தக்கது. அளிக்கப்பட்ட கருத்து ஏற்புடையதா அல்லவா என்பதுதான் மிக முக்கியம். எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவர் வாக்கு, இதற்கும் சேர்த்துத்தான் என்பதை உணரலாம். ஆனால், நமது கருத்தை எடுத்துக் கூறிவிட்டோம், நமது கடமை முடிந்தது என்ற அளவுடன் இருந்துவிட்டால் பயன் இல்லை. அதனைச் சிறுபான்மையினர் கருத்து என்று கூறுபவர் வெட்கித் தலைகுனியும்படி, பெரும்பான்மையினரின் கருத்தாக்கிக் காட்டிட வேண்டும். உண்மையை உணருவது, உண்மையை உரைப்பது என்பதுடன், உண்மையை நிலை நாட்டுவது என்பது இணைய வேண்டும்! என்ன கூறினார் மண்டலம்? நினைவிற்கு வருகிறதா! பொதுமக்களிடம் தமக்குத்தான் தொடர்பு இருக்கிறது, இந்தப் பட்டதாரிகளுக்கு அல்ல என்றார். தமக்குப் பொதுமக்களிடம் தொடர்பு இருப்பதால், பொதுமக்களின் விருப்பம் எது, அவர்களுக்கு நல்லது எது என்பது தமக்கே தெரியும் என்று மார்தட்டுகிறார். அந்தப் பொதுமக்கள் தொடர்பை, இந்த அறிவாளர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்; இயலாததா? மண்டலம் கூறுகிறாரே எனக்குப் பொதுமக்கள் தொடர்பு உண்டு என்று. அந்தப் பொதுமக்கள் விஞ்ஞானத் துறை பயில் அறிவாளர்களை வெறுத்தா ஒதுக்கி விடுவர்? அவர்களுக்கு உள்ள குறையே, இந்த அறிவாளர்கள் பழகமாட்டேன் என்கிறார்களே என்பதுதான்! ஆகவே, பெங்களூர் விஞ்ஞானக் கல்லூரி பயில் வித்தகர்கள், தாம் கொண்டுள்ள கருத்தினைச் சிறுபான்மையினரின் கருத்து என்று ஆளவந்தார்கள் அலட்சியப்படுத்தினால் மனம் தளர்ந்து விடாமல், இக்கருத்தினைப் பெரும்பான்மையினர் கருத்தாக்கிக் காட்டுவோம் என்ற உறுதி எடுத்துக்கொண்டு, பொது மக்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, கருத்தினைப் பரவிடச் செய்திட வேண்டும். முயற்சியில் ஈடுபட்டால், எத்தனை எளிது என்பதும், எத்துணை சுவை உளது என்பதும், என்னென்ன பயன் விளைகின்றன என்பதனையும் அறிந்து கொள்ளலாம். அதிலும் இந்த மொழிப் பிரச்சினையைப் பொருத்தமட்டில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் செய்ய வேண்டிய பணி நிரம்ப உளது. நெடுநாளைக்கு முன்பே இப்பணி துவக்கப்பட்டிருக்க வேண்டும். முன்பே இப்பணி நடை பெற்றிருக்குமானால் இப்போது சிறுபான்மைக் கருத்து என்ற பேச்சுக்குக்கூட இடம் ஏற்பட்டிருக்காது. ஆனால், அந்தப் பேச்சு ஏற்பட்டுவிட்டதாலேயே. மனச் சோர்வு அடைந்துவிட வேண்டும் என்பது இல்லை; ஆலின் விதை மிகச் சிறிது!! சென்னை சட்டமன்றத்தில் தி. மு. கழகத்தினரின் எண்ணிக்கை 15! இப்போது 50! எனினும், எண்ணிக்கை 15 என்றிருந்தபோதும், நாம் மிகமிகச் சிறுபான்மையினராக இருக்கிறோம் என்ற தயக்கம் காட்டியதில்லை; சரியென்று பட்டதனைச் செப்பினோம். அந்தச் செயலை எள்ளி நகையாடி யோரும் உண்டு; ஆனால், அந்த நிலை இன்றி ஓர் வளர்ச்சி நிலையை, கழகத்துக்குத் தந்திருப்பதனை நாடு அறியும்; நல்லோர் மகிழ்கின்றனர்; மற்றையோர் மனத்தாங்கல் கொண்டுள்ளனர். ஒரே மரத்தில் ஒரு கிளையில் குயிலும் மற்றோர் கிளையில் காகமும் இருக்கின்றன; மரம் என்ன செய்யும்! அதுபோலச் சமூகத்தில் நமது கழக வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி கொள்பவர்களும் இருக்கிறார்கள். மல்லாந்து படுத்துக்கொண்டு துப்பிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அன்றும் இன்றும், கழகம் கூறுவதை மறுப்பதும், மறைப்பதும், திரிப்பதும், குறைப்பதும், குலைப்பதும் தொழிலாக்கிக்கொண்டவர்கள் உண்டு; அன்று மறுத்துக் கொண்டிருந்தவர்களிலே சிலர் இன்று மனம் மாறி நமது கருத்தை ஆதரிக்க முற்பட்டுள்ளனர்; அன்று நமது அரணாக நின்றவர் சிலர் நினைப்பு மாறியதால் இன்று நமது மாற்றார் கை அம்புகளாகியுமுள்ளனர்; பூத்தது உதிர்வதும், பெற்றது மடிவதும், சேர்த்தது ஒழிவதும்போல என்று கொள்வோம். மொத்தத்தில் கணக்கெடுத்தால் “சிறுபான்மை’ என்றிருந்த கணக்கு நாம் மகிழத்தக்க மாற்றம் பெற்றிருப்பது தெரியும். இப்போதும்”சிறுபான்மை’ என்று எண்ணிக்கைதான் சட்டமன்றத்தில். ஆனால், 15-50ஆக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி கண்டு, மாற்றுக்கட்சியினர் தமது முறைகளை மாற்றிக் கொண்டனரா என்றால் இல்லை; வேகமாகி இருக்கிறது. அன்று போலவே இன்றும், இட்டுக்கட்டுவதும், திரித்துக் கூறுவது நடந்தபடி இருக்கிறது அன்று - 1958லில் நான் இந்தியை ஏற்றுக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிட்டேன், சட்டசபை கமிட்டிக் கூட்டத்தில் என்று, ஒரே புகார் - வதந்தி - தப்புப் பிரச்சாரம் - பரபரப்பு! எனக்குத் தம்பி! அதிலே ஒரு மகிழ்ச்சி - என்னைப்பற்றி "விஷமம்’ செய்யப்படுகிறதே என்பது குறித்து வரவேண்டிய எரிச்சல்கூட எழவில்லை; இந்திக்கு எத்தனை அளவு எதிர்ப்பு இருக்கிறது, அதனை எவராவது ஆதரிக்க முனைகிறார்கள் என்று கூறப்பட்டால், மக்கள் எத்தனை ஆத்திரம் கொள்கிறார்கள் என்பதனை அறிந்து மகிழ்ந்தேன். பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தேன், கட்டிவிடப்பட்டதை உடைத்துப்போடக் கிடைத்தது வாய்ப்பு. "கூட்டத்திற்குத் தாங்களும் சென்று விட்டு அங்குக் கூறப்பட்ட கருத்துக்களையும் ஒத்துக்கொண்டுவிட்டு, கையெழுத்தும் போட்டுவிட்டு வெளியே வந்து வேறுவிதமாகச் சொல்கிறார்கள்’’ என்று பேசினார் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர்; "அதிலே கையெழுத்துப் போடப்பட்டது என்று சொல்வது தவறு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று நான் குறுக்கிட்டுக் கூறினேன். "அந்தக் கூட்டத்திற்கு யார் யாரெல்லாம் வந்திருந்தார்கள் என்று தெரிந்துகொள்வதற்காகக் கையெழுத்து வாங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்’’ என்று மேலும் கூறினார் அந்தக் காங்கிரஸ் உறுப்பினர். "அவ்விதமும் கையெழுத்து வாங்கவில்லை என்பதை அம்மையார் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று நான் கூறினேன். 1958, பிப்ரவரி 12-ம் நாள் சென்னை சட்டமன்றத்தில் இந்த நிகழ்ச்சி; அதுவரையில், விடாமல் ஒரு திங்கள் மேடைக்கு மேடை, அண்ணாதுரை இந்தியை ஏற்றுக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிட்டான் என்றுதான் பேச்சு! பேச்சா! இடிமுழக்கம்! பெரியாரின் பேருரை! கேலிப் படம்! கடாவுதல்! எல்லாம்!! தெரிந்த வித்தை அவ்வளவும்!! மறுநாளும் எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது சட்டசபையில். "நம் நிதி அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள், நான் கையெழுத்துப் போட்டுவிட்டதாகச் சொன்னதாக நான் பத்திரிகையில் பார்த்தேன்.’’ (நான்) "நான் எந்தக் கூட்டத்திலும் கையெழுத்துப் போட்டதாகச் சொல்லவில்லை’’ (அமைச்சர் சுப்பிரமணியம்) "நிதி அமைச்சர் சொன்னதாகப் பத்திரிகையில் வந்தது. பத்திரிகையிலே வந்தது மட்டுமல்ல; நேற்றைய தினம் பேசிய கனம் அங்கத்தினர் அனந்தநாயகி அவர்கள் கையெழுத்துப் போட்டுவிட்டு இப்போது இல்லை யென்று சொல்கிறாரே என்று ஆழ்ந்த வருத்தத்தோடு கேட்டார்.’’ (நான்) "திருத்திக்கொண்டேன் என்பதைக் கனம் அங்கத்தினர் அவர்கள் தெரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன்.’’ (கனம் அனந்தநாயகி அம்மையார்) புகார் கிளப்பிய இதழ்கள், அது பொருளற்றது என்பதை விளக்கிடும் சட்டசபை நிகழ்ச்சியை எடுப்பாக வெளியிட்டனவா? இல்லை! அதற்கா அவை? இட்டுக் கட்டுகளோ இருப்பதை மறைப்பவைகளோ இவைகளுக்கு இடம் கொடுத்தாகிலும் என்னைக் குறைகூற எண்ணுபவர்களுக்கு இடம் நிறைய! இந்த "இட்டுக்கட்டு’கூட, எனக்கு ஒரு சாதகமாக அமைந்தது. உண்மை விளங்கச் செய்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது மட்டுமல்ல; மொழி விஷயமாக கழகக் கொள்கை எது என்பதனைச் சரியான முறையில் பதிவு செய்துகொள்ளவும் வழி கிடைத்தது. 1958 மார்ச் 11-ம் நாள் அதற்கான வாய்ப்புக் கிடைத்தது. “This House is of firm opinion that Part 17 of the Constitution of India should be suitably amended so as to retain English as the official language of the Union Government without any time limit.” காலவரையின்றி இந்தியப் பேரரசில், ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக நீடிக்கச் செய்வதற்கு ஏற்ற முறையில், இந்திய அரசியல் சட்டத்தின் 17வது பிரிவைத் திருத்தவேண்டுமென்று இந்த மன்றம் உறுதியான கருத்து கொண்டிருக்கிறது. என்ற தீர்மானத்தைக் கழகம் கொடுத்தது. இதற்கு ஆதரவாக 14 வாக்குகள்; எதிர்த்து 121. கழகம் கொடுத்தது தோற்கடிக்கப் பட்டது; ஆனால் நாடு பதிவு செய்துகொண்டது, கழகம் மொழிபற்றிக் கொண்டுள்ள கொள்கை என்ன என்ற உண்மையை. அதே சட்டமன்றத்தில் 1963-ம் ஆண்டு ஆகஸ்ட் எட்டாம் நாள், “This House recommends to the Government to convey to the Union Government that this House is of opinion that steps should be taken to recognize all the fourteen languages enumerated in the 8th Schedule of the Constitution as the official languages of the Union under Article 343 and till such time English shall be retained for all official purposes of the Indian Union.” இந்திய அரசியல் சட்டத்தில் எட்டாம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள 14 - தேசிய மொழிகள் எல்லாம் பேரரசின் ஆட்சி மொழிகளாக ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும், அதுவரையில் 343-ம் விதிமுறையின்படி, இந்தியப் பேரரசின் அதிகாரக் காரியங்கள் அனைத்துக்கும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது நீடிக்கப்பட வேண்டும் என்பதனை மத்திய சர்க்காருக்குத் தெரிவிக்கவேண்டு மென்று. (மாநில) சர்க்காருக்கு இந்த மன்றம் சிபாரிசு செய்கிறது. என்ற தீர்மானம் கொண்டு வந்தது கழகம். ஆதரவாக 44 - வாக்குகள்; எதிர்த்து 84. இம்முறையும் வெற்றி இல்லை. ஆனால், கழகக் கருத்துக்கு ஏற்பட்ட வளர்ச்சி தெரிகிறதல்லவா! "சிறுபான்மை’ வளருகிறது என்பதற்கு இந்தச் சான்று. 1958லில் மொழிபற்றிய கழக யோசனையை வெளியிட்டவர் தோழர் அன்பழகன்; 1963லில் தோழர் மதியழகன். எனவேதான் கூறுகிறேன் சிறுபான்மையினரின் கருத்து என்றால், ஆட்சியினர் அலட்சியப்படுத்திவிடுவதும் தவறு, அந்தக் கருத்து எப்போதுமே சிறுபான்மையினர் கருத்தாகவே இருந்துவிடுமோ என்று அந்தக் கருத்தினர் அச்சப்படுவதும் தவறு. நம்பிக்கையுடனும், நல்ல முறையிலும் பணியாற்றினால், சிறுபான்மையினர் கருத்து என்று கூறப்படுவதையே, நாட்டு மக்களின் கருத்து என்ற அளவுக்கு வளர்ச்சி பெறச் செய்வதில் வெற்றி பெற்றிட முடியும். பெங்களூர் விஞ்ஞானத் துறை பயில்வோர் இதனை உணர்ந்து அதற்கு ஏற்றபடி தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மையினர் என்பது குறித்து மிக அதிகமான அளவு. சிந்தனையைச் செலுத்தவேண்டிய வாய்ப்பு எனக்கு, துவக்கநாள் தொட்டு. சிறுபான்மை என்பதற்கு எண்ணிக்கையை மட்டுமே காரணமாகக் காட்டுகிறார்கள்; அந்த முறையிலே மட்டும் கவனித்தால் அந்தப் பிரச்சினையின் முழு உண்மை துலங்காது. ஜாதி, மதம், மொழி அடிப்படையில் அமைந்துவிடும் சிறுபான்மையினருக்கும், ஜாதி, மதம், மொழி அரசு - முறை, ஆகியவைபற்றிய கருத்தினைக் கண்டறிந்து எத்தகைய கருத்தினை எவரெவர் பெற்றுள்ளனர் என்று கணக்கெடுத்து, அதிலே பெரும்பான்மை - சிறுபான்மை என்று வகைபடுத்திப் பார்ப்பது பிரச்சினையின் உண்மையை உணர்ந்துகொள்ள உதவும். மதம், ஜாதி, மொழி என்பனவற்றின் காரணமாக அமைந்துவிடும் “சிறுபான்மை’ அதிகமான அளவிலோ, அதிகமான வேகத்திலோ வளர்ந்து”பெரும்பான்மை’ ஆகி விடுவது இயலாத காரியம். ஆனால், கருத்து அடிப்படையில் காணப்படும் "சிறுபான்மை’ என்பது அவ்விதமல்ல, வேகமாக மாறி, வளர்ந்து, பெரும்பான்மை ஆகிவிடக்கூடியது. பெரும்பான்மையோர், கூடித் தீர்ப்பளித்துத்தான் கிரேக்கப் பெருமகனார் சாக்ரடீசுக்கு நஞ்சளித்துக் கொன்றனர்; அவருக்காக அந்த மன்றத்தில் சிறுபான்மையோர்தான் பரிவு காட்டினர். ஆனால், சாக்ரடீஸ் உயிரோடு இருந்தபோது இருந்த சிறுபான்மை, அவர் மறைந்ததும் வேகவேகமாக வளர்ந்தது, பெரும்பான்மையாகிவிட்டது! பெரும்பான்மையா! கிரேக்கம் முழுவதும் அவர் சார்பில்! கிரேக்கத்தோடும் நின்றுவிடவில்லை, அறிவுலகம் அவ்வளவும் அவருக்கே!! இவை குறித்தெல்லாம் எண்ணவும், இவைகளில் சிலவற்றைக் குறித்துப் பேசவும் இம்முறை டில்லியில் எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இந்தி எதிர்ப்பு உணர்ச்சியே சிறுபான்மையினரின் உணர்ச்சி என்பதுதானே டில்லிப் பேரரசின் கணக்கு. அந்த முறையில், "சிறுபான்மை’யினரில் ஒருவன் என்ற நோக்கத்துடனேயே என்னை அங்குக் கவனிக்கிறார்கள். அந்நிலையில் சிறுபான்மையினர் பிரச்சினைபற்றிப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது, மகிழ்ச்சி தந்தது. டில்லிப் பல்கலைக் கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரி மாணவர் மன்றத்தில் பேசும் வாய்ப்புப் பெற்றேன். ஜனநாயகத்தில் சிறுபான்மையோர் பிரச்சினை என்பது குறித்துப் பேசினேன். கல்லூரித்தலைவர் சர்க்கார் என்பவரும், ஆசிரியர்களும் மாணவர்களும் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தில் பேசச் சென்ற என்னுடன் நமது மனோகரன், ராஜாராம், செழியன், முத்து, ராமபத்திரன் ஆகியோரும் வந்திருந்தனர். டில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி தரமானது என்று கூறப்படுகிறது. ஆனால், கல்லூரி முதல்வர், சென்னை கிருத்தவக் கல்லூரி, லயோலா கல்லூரி ஆகியவைபற்றிப் பெருமிதத்துடன் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். இங்கு நான் கல்லூரிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்போது, கல்லூரி முதல்வர்கள் என்னிடம் தனியாக, அரசியல் பேசாதிருக்கும்படி கேட்டுக்கொள்வார்கள் - ஒருவிதமான அச்சத்துடன், அன்று செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர் அதுபோல ஏதும் கூறவில்லை. உற்சாகமாக வரவேற்று, நண்பர்போல் பழகினார். மாணவர்கள், பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருப் பவர்கள் என்பதை அறிந்துகொண்டேன். துளியும் எதிர்பாராத நிலையில் இந்த வாய்ப்புக் கிடைத்தது, காரணம் என்ன இதற்கு என்று அறிந்துகொள்ள இயலவில்லை - துவக்கத்தில். அந்தக் கல்லூரி மாணவர் இருவர் ஒருநாள் மாலை என்னைக் கண்டு தங்கள் கல்லூரியில் சொற்பொழிவாற்ற வரவேண்டும் என்று அழைத்தபோது, எனக்கு வியப்பாக இருந்தது. வருவதற்கு இசைவு தெரிவித்துவிட்டு, எதற்கும் முறைப்படி, உங்கள் கல்லூரி முதல்வரிடமிருந்து ஒரு அழைப்புக் கடிதம் பெற்று அனுப்புங்கள் என்றேன். "தேவைகூட இல்லை. எவரெவரை அழைத்துப் பேசச் சொல்வது என்பது மாணவர் மன்றம் பெற்றிருக்கும் உரிமை. முதல்வர் அதற்குக் குந்தகம் விளைவிப்பதில்லை. நாங்கள் ஆண்டுதோறும் ஆண்டுரூஸ் சொற்பொழிவுகள் எனும் தொடர் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். அதிலே, முன்பு ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஹிரேன்முகர்ஜி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்களாகவே ஒரு ஆங்கில மாத இதழ்கூட வெளியிட்டு வருகிறோம்; ஆன்செட் என்பது இதழின் பெயர்; இதழ்கள் நாளை அனுப்பிவைக்கிறோம்; நீங்கள் விரும்புகிறபடியே கல்லூரி முதல்வரின் அழைப்புக் கடிதமும் பெற்று அனுப்புகிறோம்’’ என்று கூறினர் சொன்னபடியே செய்தனர். ஆன்செட் இதழ் கிடைத்தது; அதைக் கண்ட பிறகுதான், ஏன் என்னை அழைக்க விரும்பினார்கள் என்பது எனக்குப் புரிந்தது. அந்த இதழில், தி. மு. கழகத்தைத் தாக்கி ஒரு கட்டுரையும், விளக்கமளித்து ஒரு கட்டுரையும், அந்த விளக்கத்துக்கு மறுப்பு அளித்து ஒரு கட்டுரையும் வெளியிடப்பட்டிருந்தன. முன்னதாகவே, கழகம் செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்குச் சென்றுவிட்டிருக்கிறது! பிறகு, நானும் செல்லவேண்டியது முறைதான் என்று எண்ணிக் கொண்டேன். சிறுபான்மையோர் பிரச்சினை என்றவுடன், அநேகமாக, முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் ஆகியோர் குறித்த விஷயம் பேசுவேன் என்றுதான் அவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள்; நான் முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் ஆகியோர் குறித்த பிரச்சினையாக மட்டும் சிறுபான்மையோர் பிரச்சினையைக் கருதவில்லை; கொள்கை கருத்து இவற்றிலேகூட சிறுபான்மையினராக உள்ளவர்கள் பற்றிய பொதுப் பிரச்சினையாகவே அதனைக் கருதினேன்; அந்த முறையிலேதான் பேசினேன். வாடிக்கையாக, கூட்டத் தலைவர் பேச்சாளர்பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்லி அறிமுகப்படுத்துவார் அல்லவா; அதுபோல மாணவர் தலைவர் என்னைக் குறித்துப் பேசினார் - இவர் நமக்கெல்லாம் மிக நன்றாக அறிமுகமானவர்; பிரமுகர்; தி. மு. கழகத்தவர் என்றெல்லாம். நான் துவக்கத்திலேயே சொன்னேன். "என்னை இங்கு அனைவரும் மிக நன்றாக அறிந்திருப்பதாக நண்பர் கூறினார்; நன்றி; ஆனால், உண்மை என்னவென்றால், என்னைப்பற்றிய தவறான கருத்துக்களைத்தான் நீங்கள் தெரிந்துவைத்திருப்பீர்கள், நல்லனவற்றை அல்ல; என்றாலும், எனக்கொரு மகிழ்ச்சி, நல்லதோ கெட்டதோ, சரியோ தவறோ, ஏதோ ஒரு வகையில், என்னை நீங்கள் அறிந்துகொண்டிருக்கிறீர்கள்; அந்த மட்டில் மகிழ்ச்சிதான். இனி நான் பேசியான பிறகு, என்னை ஓரளவு நீங்கள் சரியாகவும் அறிந்துகொள்ளலாம், அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள்; சரியாக அறிந்துகொள்ளும் இயல்பு உள்ளவர்கள்!’’ என்று கூறினேன். ஏன் அவ்விதம் கூறத் தோன்றிற்று என்றால், பல நூறு முறை என் பேச்சைக் கேட்ட பிறகும், இங்கே இல்லையா சிலர், என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள்; புரிந்துகொள்ள மறுப்பவர்கள். சுளையை விட்டுவிட்டுத் தோலை எடுத்துக்கொள்பவர்கள்! அதுபோல, எங்கும் சிலர் இருக்கத்தானே செய்வார்கள்; அதனால் அவ்விதம் கூறினேன். "ஆனால் மாணவர்களிலே மிகப் பெரும்பாலானவர்கள் அவ்விதமானவர்கள் அல்ல என்பது, அவர்கள் பல முறை, நான் கூறிய கருத்தினுக்கு ஒப்பம் அளிக்கும் முறையில், மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததிலிருந்து தெரிந்தது. துளியும் தொடர்பற்ற ஒருவனுடைய பேச்சை, அக்கறையற்று, ஒரு காதில் வாங்கி மறு காது வழியாக விடுபவர்களாக இருந்துவிடுவார்களோ, பேச்சு பயனற்றுப் போய்விடுமோ என்று நான் அச்சப்பட்டுக் கொண்டேன். அச்சம் பொருளற்றது என்பதனை மாணவர் போக்கு விளக்கிக் காட்டிற்று.’ "சிக்கலும், மாறுபட்ட கருத்துகள் மிகுந்ததுமான ஒரு பிரச்சினை பற்றி என்னை ஏன் பேச அழைத்தார்கள் என்று நான் யோசித்தேன்; என்னைப்பற்றியே பல மாறுபட்ட கருத்துக்கள் உலவுகின்றன என்பதால், நான்தான் சிறுபான்மையோர் பிரச்சினை குறித்துப் பேசப் பொருத்தமானவன் என்று மாணவர்கள் தீர்மானித்தார்கள்போல் தெரிகிறது. சிறுபான்மை யோர் பிரச்சினை மட்டுமல்ல, நானே விவாதத்துக்கு உரிய ஆசாமிதான்!’’ என்று கூறினேன். பிறகு, சிறுபான்மையோர் என்பதற்கு என்னென்ன பொருள் கொள்ளப்படுகின்றன, எங்கெங்கு இந்தச் சிறுபான்மையோர் உள்ளனர் என்பது குறித்து விவரம் அளித்தேன். பெரும்பான்மையோர் என்று ஒரு பகுதி சமூகத்தில் இருப்பதனால், இயற்கையாகவே சிறுபான்மையோர் என்ற பகுதி இருந்து தீரவேண்டி இருக்கிறது. இது இன்று நேற்று முளைத்ததுமல்ல; இட்டுக் கட்டப்பட்டதுமல்ல; பொருளற்றது மல்ல; வெறும் பொழுதுபோக்குப் பிரச்சினையுமல்ல; மிக முக்கியமானது; நெடுங்காலமாக இருந்து வருவது; சிக்கலைப் போக்கும் வழி இதுதான் என்று திட்டவட்டமாக எவரும் எளிதிலே கூறிவிட முடியாத விதமான கடினமான பிரச்சினை இது. மாணவர் மன்றம் இத்தகைய பிரச்சினை பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்கது. ஏனெனில், மிகப் பெரியவர்கள் சிலர், சிறுபான்மையோர் பிரச்சினை, வகுப்புவாதப் பிரச்சினை, ஜாதிப் பிரச்சினை என்பவைகள் சில்லறைப் பிரச்சினைகள்; அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுவிட்டால், கல்வி அறிவு பெருகிவிட்டால், தொழிற் புரட்சி ஏற்பட்டுவிட்டால், இந்த சில்லறைப் பிரச்சினைகள் தாமாக மடிந்தொழியும் என்று கூறிவருகிறார்கள்; பொருளாதார வளர்ச்சி, தொழிற் புரட்சி, கல்வி வளர்ச்சி எல்லாம் வியந்து பாராட்டத்தக்க அளவு உள்ள இன்றைய அமெரிக்காவில், சிறுபான்மையோர் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. உரிமை கேட்டு நீக்ரோ மக்கள் கிளர்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்; ஆகவே, சிறுபான்மையோர் பிரச்சினை என்பது, யாரோ சில சிறுமதியாளர்கள் வேண்டுமென்றே கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகின்ற முறையில் இருக்கிறது என்று தவறாக எண்ணிக்கொள்ளாதீர்கள்; எங்கெங்கு, எந்தெந்தச் சமயத்தில், என்ன காரணம் காட்டி, சமூகத்தில் ஒரு பகுதியினர் மற்றோர் பகுதியினரைக் கொடுமையாக நடத்தினாலும், இழிவுபடுத்தினாலும், உரிமையைப் பறித்தாலும், வளர்ச்சியைத் தடுத்தாலும், ஆதிக்கம் செலுத்தினாலும், கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட, உரிமை பறிக்கப்பட்ட, இழிவாக நடத்தப்பட்ட பகுதி, எதிர்த்துக் கிளம்பியே தீரும், எதிர்ப்பின் முறைகள் வேறு வேறாக இருக்கலாம்; ஆனால், ஆதிக்கம் செய்பவர்களை எதிர்த்து நிற்கும் இயல்பு எங்கும் உண்டு, எப்போதும் உண்டு; ஆதிக்கக்காரர் மிகப்பெரும்பாலோராக இருப்பினும் கொடுமை செய்திட அவர்களுக்கு உரிமை கிடையாது, வலிவு இருக்கலாம்! கொடுமைக்கு ஆளானவர்கள் சிறிய அளவினராக இருப்பினும், எதிர்த்து நிற்கும் உரிமையும் இயல்பும் அந்தச் சிறுபான்மையினருக்கு உண்டு; சிறுபான்மையினர் என்பதற்காக அவர்கள் உரிமை இழந்துவிட வேண்டும் என்பதில்லை, கொடுமையில் உழல வேண்டும் என்பதில்லை. இந்த உணர்ச்சிதான், சிறுபான்மையோர் பிரச்சினை என்பதன் அடிப்படையாக அமைந்திருக்கிறது’’ என்று விளக்கம் தந்தேன். பொதுவாக ஒரு கருத்து இங்குப் பரப்பப்பட்டிருக்கிறது - இங்கு மட்டுந்தான் சிறுபான்மையோர் பிரச்சினை என்பது வேண்டுமென்றே கிளப்பிவிடப்பட்டிருப்பதாக, உண்மை முற்றிலும் வேறு. நீண்ட பல ஆண்டுகளாகக் குடியாட்சி முறையை மேற்கொண்டுள்ள பல நாடுகளில் - ஐரோப்பிய பூபாகத்து நாடுகளில் - இன்றும்கூட சிறுபான்மையோர் பிரச்சினை இருந்து வருகிறது. காரணம்? ஆதிக்கம் செலுத்திடும் இயல்பு, அரசு நடத்தும் வாய்ப்புப் பெற்றதனாலோ, ஜாதி காரணமாகவோ, மொழி காரணமாகவோ, மத அடிப்படையிலோ, பொருளாதார வலிவின் துணைகொண்டோ ஏற்பட்டுவிடுகிறது; ஆதிக்கம் செலுத்திச் செலுத்தி அதிலே ஒரு தனிச் சுவை கண்டுவிட்டவர்கள், எளிதிலே அந்த இயல்பினை விட்டுவிடுவதில்லை; வெற்றி வீரர்கள், ஆளப் பிறந்தவர்கள், அறிவாற்றல் மிக்கவர்கள் என்று காரணம் காட்டி, பண்டைய கிரேக்கத்தில், சமூகத்தில் ஒரு பகுதியினரை அடிமைகளாக, எந்தவிதமான உரிமையுமற்றவர்களாக, மனித மிருகங்களாக வைத்துக் கொண்டிருந்தனர். அறநூற்களும், அறிவு நூற்களும், காவியமும் ஓவியமும், அரசு முறை பற்றிய ஏடுகளும் ஆத்மீகம் பற்றிய ஏடுகளும், எந்தக் கிரேக்கத்திலிருந்து மலர்ந்தனவோ அதே கிரேக்கத்திலே அடிமைகளாக சமூகத்தில் ஒரு பகுதியினரை அழுத்தி வைத்திருக்கும் அக்கிரமம் நெளிந்துகொண்டிருந்தது. பிறகு வடிவமெடுத்த ரோமப் பேரரசு, எகிப்திய எழிலரசு போன்ற பலவற்றிலும், ஒவ்வோர் முறையிலும் வடிவிலும், இந்த அக்கிரமம் இருக்கத்தான் செய்தது. இவைகளைப் பற்றிக் கோடிட்டுக் காட்டத்தான் முடிந்தது - நேரம் கிடைக்க முடியாதல்லவா. சிறுபான்மை, பெரும்பான்மை என்பது வெறும் எண்ணிக்கை பிரச்சினை அல்ல - மிகப் பெரும்பான்மையினரிட மிருந்து சிறுபான்மையினர் - அதாவது சிறிய எண்ணிக்கையில் உள்ளவர்கள், பாதுகாப்புத் தேடிக்கொள்ளும் பிரச்சினை என்று மட்டுமே இதனைக் கருதிவிடக்கூடாது. சில சமயங்களில், சில இடங்களில் மிகப்பெரிய அளவில் உள்ள மக்களை, மிகக் குறைந்த அளவில் உள்ள மக்கள், அடக்கி ஆள்வது காணலாம், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தின்படி; ஆதிக்கம் செலுத்தும் சிறு கூட்டம், தனது நிலையைக் கெட்டிப் படுத்திக்கொள்ள நியாயம் தேடிக்கொள்ளலாமா! அது அநியாயம்! வெள்ளைக்கார ஏகாதிபத்தியம் இங்கு இருந்த போது, பல கோடி மக்களை ஒரு சில ஆயிரவர் - வெள்ளையர் - சிறுபான்மையினர் அடக்கி ஆண்டு வந்தனர், நாங்கள் சிறுபான்மையினர், ஆகவே எங்களுக்குப் பாதுகாப்பு தேவை என்று வெள்ளையர் வாதாடி இருப்பின், எப்படி இருந்திருக்கும்? அதனை அநீதி என்றுதான் எவரும் கூறி இருப்பர்! சிறுபான்மையினராக இருக்கிற ஒரே காரணத்துக்காக இனம், மதம், மொழி, வாழ்க்கை முறை போன்ற துறைகளில் பெரும்பான்மையினரிடம் அடங்கிக் கிடக்க வேண்டும் என்ற நிலை இருக்கும்போதுதான், சிறுபான்மையினரின் உரிமைக் கிளர்ச்சிக்கு நியாயம் இருக்க முடியும். பண்டைய கிரேக்கத்தில் குடியாட்சி முறை நடைபெற்ற விதத்திற்கும் இப்போதுள்ள குடியாட்சி முறைக்கும் நிரம்ப மாறுபாடு - இயற்கையான காரணத்தால் விளைந்த மாறுபாடு - ஏற்பட்டுவிட்டிருக்கிறது. கிரேக்கத்தில், ஏதன்ஸ் நகர மக்கள் ஐம்பது ஆயிரம்பேர் - எந்த அரசியல் பிரச்சினையையும் கவனிக்க, கருத்தளிக்க, முடிவெடுக்க எல்லா மக்களும் ஒருசேரச் சந்தைச் சதுக்கத்தில் கூடுவர். இப்போது, குடியாட்சி முறை என்பது, மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளுவது என்ற கொள்கை அடிப்படையில் இருப்பினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மூலமாகத்தான் ஆட்சி நடத்தப் படுகிறது - நேரடியாக அல்ல - மக்கட் சமுகம் முழுவதனாலும் அல்ல. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எங்கும், தேர்ந்தெடுக்கும் மக்களைவிட எண்ணிக்கையில் சிறிய அளவினராகத்தான் இருக்க முடியும் - சிறுபான்மையினர்! நாங்கள் சிறுபான்மையினர் எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று ஆளவந்தார்கள் வாதாடினால் எப்படி இருக்கும்; விந்தையாக மட்டுமல்ல, விபரீதமாகவும் இருக்கும். ஆகவே, இந்தப் பிரச்சினையை நாம் பார்க்கவேண்டிய சரியான முறை, ஜாதி, மதம், மொழி, செல்வம், வலிவு எனும் ஏதேனும் ஒன்றைத் துணைகொண்டு சமூகத்தில் ஒரு பகுதியினர் ஆதிக்கம் பெற்று, ஆதிக்கக்காரர்களின் மதம், ஜாதி, மொழி, கோட்பாடு என்பதனை ஏற்றுக்கொள்ளாமல், தமக்கென்று மதம், ஜாதி, மொழி, கோட்பாடு ஏதாகிலும் பற்றுடன் கொண்டு, அவைகளுக்கு ஊறு நேரிடாதபடி பாதுகாத்துக்கொள்ளும் உரிமை பெறவேண்டுமென உறுதியுடன் மற்றோர் பகுதியினர் இருப்பின், அங்குச் சிறுபான்மையோர் பிரச்சினை எழுகிறது என்பதுதான். இன்று நீக்ரோ மக்கள், உலக முழுவதும் உள்ளவர்களைக் கணக்கெடுத்தால், அமெரிக்கர்களைவிட எண்ணிக்கையில் அதிக அளவு என்று கூறலாம். ஆனால், அமெரிக்கா என்ற எல்லைக்குள்ளாக மட்டும் கணக்கெடுத்தால், நீக்ரோக்கள் சிறுபான்மையினர். ஆகவே, சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற கணக்கு, அதற்கு நாம் பயன்படுத்தும் அளவுகோல், கணக்கெடுக்கும் இடம், முறை ஆகியவற்றையும் பொறுத்திருக்கிறது. இந்தியாவை ஒரு எல்லையாகக்கொண்டு கணக்குப் பார்க்கும்போது, முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் எனும் இரு பிரிவினருமே சிறுபான்மையினர்! ஆனால், முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் உலகில் உள்ளவர்கள் அனைவரையும் ஒன்றாகக் கணக்குப்போட்டு, இந்துக்களுடன் ஒப்பிட்டால், முஸ்லீம்களும் கிருஸ்தவர்களும் பெரும்பான்மையினர் என்பது தெரிகிறது. உலகமெல்லாம் சுற்றுவானேன் தம்பி! அருகாமையிலேயே இருக்கிறதே விளக்கம்; சென்னை சட்டசபையை எடுத்துக் கொண்டு கணக்குப் பார்த்தால், கழகம் சிறுபான்மையாகிறது! சென்னை மாநகராட்சி மன்றத்தில் கணக்கெடுத்தால் காங்கிரஸ் சிறுபான்மையாகிவிடக் காண்கிறோம். இந்தி மொழி, பெரும்பான்மையினர் பேசும் மொழி என்ற வாதம்கூட, அதன் ஆதரவாளர் பயன்படுத்தும் அளவுகோலின் தன்மையைக் கொண்டுதான். இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளையும் ஒரு கணக்கில் சேர்த்து, இந்தியை மட்டும் ஒரு தனிக் கணக்காக்கினால், இந்தி இந்தியாவில் சிறுபான்மையினரின் மொழி என்பது விளங்கும். ஆனால் இந்தி ஆதரவாளர்கள், மராட்டிய மொழி பேசுவோரைவிட, தமிழ் பேசுவோரைவிட, தெலுங்கு பேசுவோரைவிட, வங்காள மொழி பேசுவோரைவிட, அதிக எண்ணிக்கையினர் பேசும் மொழி இந்தி, ஆகவே அது பெரும்பான்மையினரின் மொழி என்கிறார்கள். உண்மையில் பெரும்பான்மையினரின் மொழியாக இந்தி இருக்கிறது என்று மெய்ப்பிக்கவேண்டுமானால், இந்தியாவில் உள்ள 40 - கோடி மக்களில் 30 - கோடிப் பேர் அல்லது 25 கோடிப் பேர் இந்தி மொழியினர் என்று கணக்கு இருக்க வேண்டும். அப்படி இல்லை. ஆயினும் ஆட்சியினரின் அரவணைப்பு இருப்பதால், இந்தி பெரும்பான்மையினரின் மொழி என்று அடித்துப் பேசுகிறார்கள். தானே தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு கடை வீதி சென்று தின்பண்டம் வாங்கிக் கொடுத்து, தின்னத் தெரியாமல், தின்று சட்டையை அழுக்காக்கிக்கொண்ட சிறு பயல், அரும்பு மீசைக்காரனாகி, முதலாளி என்ற பட்டத்தை, தந்தை செத்ததால் பெற்றுவிட்ட பிறகு, தன்னையே - அறுபதாண்டு நிரம்பிய தன்னையே - பெயரிட்டுக் கூப்பிட்டு மிரட்டுவதை, ஊழியம் செய்து பிழைக்கும் கந்தனும் முருகனும் சகித்துக்கொள்வதைக் காண்கிறோமே! அதுபோல, இப்போதும் கடன் வாங்கிக் காலந்தள்ள நினைக்கும் நிலையிலுள்ள இந்தி மொழி, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே இணையற்றது என்ற ஏற்றம் பெற்றுவிட்ட நமது தமிழ் மொழியைவிட உயர் நிலை பெற்று, ஆட்சி மொழி என்று ஆகிறது அல்லவா! சிறுபான்மை - பெரும்பான்மை என்பது, அதற்குக் கிடைத்திடும் பாதுகாவலனையும் பொருத்து வலிவு பெறுகிறது. ஆனால், எக்காரணம் கொண்டோ பெரும்பான்மை என்ற நிலையைப் பெற்றுவிட்ட ஒரு பகுதி, அதிகார பலம் கொண்டு, சிறுபான்மையைச் சீரழிவாக நடத்தி வெற்றிகாண நினைப்பது, பேராபத்தில் நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். இந்தியே ஆட்சிமொழியாக வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் களிலேயே சிலர், ஆதிக்கம் காட்டி இந்தியைப் புகுத்திடப்போய், அதன் காரணமாக நாட்டிலே பிளவு மனப்பான்மை ஏற்பட்டு ஒற்றுமை குலைந்து போகும்போலத் தோன்றினால், இந்தியை ஆட்சி மொழியாக்குவதை விட்டுவிடத்தான் வேண்டும் என்று பேசத் தலைப்பட்டுவிட்டுள்ளனர். மொழி காரணமாகப் புகுத்தப்படும் ஆதிக்கத்தையும், அதனை நாம் எதிர்த்து நிற்பதையும், நான் கல்லூரிக் கூட்டத்தில் எடுத்து விளக்கும்போதுதான், அவர்களின் இதழில் வெளியிட்டிருந்த கழகம் பற்றிய கருத்துபற்றி எடுத்துக் காட்டினேன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் திராவிடர் கழகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை, இரண்டும் வேறு வேறு அமைப்புகளாகப் பதினேழு ஆண்டுகளாக உள்ளன என்பதனை உணர்ந்துகொள்ளாமலே இதழில் எழுதப்பட்டிருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டிவிட்டு, இப்போது திராவிடர் கழகம் இந்தியை எதிர்க்கத் தேவை இல்லை என்று கூறிடும் அமைப்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி எதிர்ப்பு நடத்திடும் அமைப்பாக இருப்பதனையும் விளக்கினேன். கூட்டம் முடிந்த பிறகு, பலர், நமது கழகம் பற்றிய விளக்கம் பெற ஆங்கில இதழ் ஒன்று வெளியிடவேண்டுமென்றுகூட என்னிடம் கூறிச் சென்றனர். மதம், இனம், மொழி போன்ற காரணங்களால் ஏற்படும் சிறுபான்மையினர் - என்ற நிலையை ஆதிக்கத்திற்கும், கொடுமை செய்வதற்கும் வழியாக்கிக்கொள்ளாமல், அனைவரும் சம உரிமை பெற்று வாழ்ந்திடத் தக்க அரசியல் முறையை வகுத்துக் கொண்டு, ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக, நிம்மதியாக வாழ்ந்துவரும் சுவிட்சர்லாந்து நாட்டு அரசியல் பண்பாடு பற்றியும், ஆங்கில மொழியினர், பிரஞ்சு மொழியினர் எனும் இரு பிரிவு மக்களையும் கொண்ட கனடா நாட்டில் இருமொழித் திட்டம் ஒரு சமரச ஏற்பாடாகப் புகுத்தப்பட்டது பற்றியும், அந்த ஏற்பாட்டை நடத்திச் செல்வதில் நாணயக் குறைவு ஏற்பட்டதனால், இப்போது கனடாவில் கொந்தளிப்பு உள்ளது பற்றியும், கனடாவில் க்யூபெக் எனும் மாநிலம் பிரிந்துபோய்விட வேண்டுமென்ற கிளர்ச்சி மூண்டுள்ளதையும், க்யூபெக்கில் உள்ள பிரஞ்சு மொழி பேசுவோர் மனத்துக்குச் சமாதானம் ஏற்படுத்த, இதுவரை பிரிட்டிஷ் அரசு சின்னம் பொறிக்கப்பட்டதாக இருந்த கனடா நாட்டுக் கொடியைக்கூட மாற்றி அமைத்து, பிரிட்டிஷ் சின்னம் ஆங்கில மொழி ஆதிக்கத்தைக் காட்டுகிறது என்று பிரஞ்சுக் கன்னடியர் கூறுவதால், அந்தச் சின்னத்தை நீக்கிவிட்டு, புதிய கனடா தேசியக் கொடியில், பச்சிலையைச் சின்னமாக்கி இருப்பதனையும் கூறினேன். என்ன கூறி என்ன பலன்? கடைசியாகக் கேட்கிறார்கள், எண்ணிக்கையின்படி தி. மு. கழகம் சிறுபான்மைதானே, தமிழகத்தில் என்பதாL. ஆம்! என்றேன். எத்தனை நாளைக்குத் தம்பி! இதனைக் கூறியபடி இருப்பது? சிறுபான்மையினர் அல்ல, நாங்கள்தான் தமிழகத்தில் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சியினர் என்று கூறும் நிலையை எப்போது ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறாய், தம்பி! கனடாவில் ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாக ஒரு பகுதியாக இணைந்து இருந்துவரும் க்யூபெக் மாநிலத்தில் அந்த மாநிலத்தில் மட்டும், பிரஞ்சுக் கன்னடிய உணர்ச்சி பெற்றவர்கள் அரசியலில் பெரும் பான்மையினராகி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காரணத்தால், கனடா முழுவதற்குமாக இருந்துவந்த தேசியக் கொடியையே, மாற்றிவிடும் காரியத்தில் வெற்றி கிடைத் திருக்கிறது. நீங்கள், உங்கள் மாநிலத்திலேயே, சிறுபான்மை யினராகத்தானே இருக்கிறீர்கள் என்ற கேள்வியை, எத்தனை நாளைக்குத் தாங்கிக்கொண்டிருக்கச் சொல்கிறாய். தமிழக அரசு நடாத்துபவர் வேறு; அந்த அரசு இப்படி இப்படி நடத்தப்பட வேண்டும் என்று கூறிடும் எதிர்க்கட்சியாக - சிறுபான்மைக் கட்சியாக - தி. மு. கழகம் என்ற நிலை இருக்கும் வரையில், நமது கொள்கை, ஏழ்மையால் எழில் கெட்டு, இளைத்துக் கிடக்கும் ஏந்திழை மருத்துவரிடம் பெற்ற மருந்துக்குப் பணம் தரக் காசு இன்றி, காதிலுள்ளதைக் கழற்றிக் கடை நோக்கி நடந்திடும் நிலையினில்தான் இருக்கும். இந்த நிலை உனக்குச் சம்மதம்தானா? அன்புள்ள அண்ணாதுரை 28-3-1965 விலங்கின் கதை. . . வேதனை நிகழ்ச்சிகள் தம்பி! பூஜா மாடத்துப் படங்களை அருகே சென்று பார்த்தான் வாலிபன். திடுக்கிட்டுப்போய், கிழவியைக் கூப்பிட்டு, ஏசுவின் படத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு படத்தைச் சுட்டிக் காட்டி “இது என்ன?’’ என்று கேட்கிறான். இவரும் ஒரு அருளாளர்தான் என்கிறாள் கிழவி.”பெயர்?’’ - “தெரியாது’‘. “எப்படிக் கிடைத்தது? யார் கொடுத்தது? - யாரும் கொடுக்கவில்லை - ஊரில் எங்கோ ஓரிடத்தில் இது விழுந்து கிடந்தது, பார்த்தேன்.’’ -”பார்த்து?’’”இவர் ஒரு அருளாளர் என்று உணர்ந்தேன், எடுத்து வந்தேன்’‘, - “இவர் அருளாளர் என்று யார் சொன்னார்கள் உனக்கு?’’ -”ஒருவரும் சொல்லவில்லை; எனக்கே தோன்றிற்று முகத்தைப் பார்த்ததும். மற்ற அடியார்களைவிட இவர் மேலானவர் என்று தோன்றிற்று. அதனால்தான், முன்பு ஏசுவுக்குப் பக்கத்தில் இருந்த அடியார் படத்தைச் சற்றுத் தள்ளி மாட்டிவிட்டு, இவர் படத்தை ஏசுவுக்குப் பக்கத்திலே மாட்டி பூஜை செய்தேன்.’’ வாலிபன் புன்னகை புரிந்தான் - இந்த முறை ஏளனமாக அல்ல - பெருமிதத்துடன். ஏனெனில் கிழவி கண்டு கொண்டு வந்து பூஜா மாடத்தில் வைத்து, இவர் ஏசுவுக்குப் பக்கத்தில் இருக்கவேண்டிய அருளாளர் என்று கருதி பூஜை நடத்தி வந்தது, - எந்தப் படத்துக்கு என்றால், காரல்மார்க்ஸின் படம்! "இந்த அருளாளரின் போதனையின்படி நடந்தால் ஏழை எளியவர்கள் புது வாழ்வு பெறுவார்கள்’’ என்று கூறினான் களிப்புடன். மழை நின்றது. . . . ஒரு நாள் கிழவி, வெளியே சென்று அலைந்துவிட்டு, அலுத்துப்போய் வீடு திரும்பினாள். வீட்டு எதிரே சாமான்கள் நிரம்பிய பாரவண்டி நிற்கிறது. வீட்டின் கூரைப் புறத்தில் இரண்டு ஆட்கள் உட்கார்ந்துகொண்டு, பலகைகளைப் பழுது பார்ப்பதும், கெட்டுப்போனவைகளை அப்புறப்படுத்திவிட்டுப் புதிய பலகைகள் அமைப்பதுமாக இருக்கிறார்கள். விவரம் புரியாமல் முதலில் காகூவெனக் கூச்சலிடுகிறாள். "கிழவி! ஏன் கூச்சல் போடுகிறாய். உன் வீடு மெத்தக் கலனாகிவிட்டிருக்கிறது. அது விழுந்து விடாதபடி, பழுது பார்த்துக் கொடுக்கிறோம். உன்னுடைய வீட்டை யாரும் தூக்கிக்கொண்டு போய்விட மாட்டார்கள், பதறாதே’’ என்று கூறினார்கள். “என் வீடு விழாதபடி செய்கிறீர்களா! புதுசாக்குகிறீர்களா! நல்லவர்களப்பா நீங்கள். ஆமாம், யாருடைய உத்திரவு இதற்கு - இந்த ஏழையின் கஷ்டத்தைத் தெரிந்து இந்த உதவியைச் செய்யச் சொன்ன உத்தமன் யார்? அருளாளர் யார்? அடியார் யார்?’’ என்று நெஞ்சு நெகிழக் கேட்கிறாள் கிழவி. வீடு பழுது பார்ப்பவர்கள்,”நாங்கள் மாவட்ட பொது உடைமைக் காரியாலய உத்திரவு பெற்று, இதனைச் செய்கிறோம்’’ என்றார்கள். கிழவிக்குப் புரியவில்லை. வீடு செப்பனிடப்பட்டாகிவிட்டது. குளிர் தெரிய ஒட்டாதபடி ஆக்கப்பட்டுவிட்டது. உள்ளே செல்கிறாள் கிழவி; உட்காருகிறாள்; நிம்மதி பெறுகிறாள்; என் பூஜை பலித்தது; என் பிரார்த்தனைக்குப் பலன் கிடைத்தது என்று கூறி தொழுகை நடத்துகிறாள் - குறிப்பாக, பெயர் தெரியாத புதிய அருளாளருக்கு. காரல்மார்க்சின் படம் கர்த்தரின் படத்துடன் ஒரே வரிசையில் பூஜா மாடத்தில் இருக்கிறது. அருள் பாலித்தவர் என்று நெஞ்சு நெக்குருகத் தொழுகிறாள் கிழவி - அவள் அறியமாட்டாள் பூஜா மாடங்கள் பணக்காரர் தமது ஆதிக்கத்துக்காக ஏற்படுத்தி வைத்த கபடக் குகைகள் என்று போதித்த காரல்மார்க்சின் திரு உருவப்படம் அது, என்பதை. மற்றோர் கதை, கைதியின் கதை. ஒரு இரும்புப் பட்டறைத் தொழிலாளி. அவன் தகப்பனும், அண்ணன் தம்பிகளும் அதே பட்டறையில் வேலை செய்பவர்கள். தொழிற்சாலை முதலாளியுடையது. தொழிலாளர்களின் உரிமைக்காகக் கிளர்ச்சி செய்தான் என்பதற்காக, அந்த தொழிலாளியைச் சிறையிலே போட்டு அடைத்தார்கள். காலிலே, ஒரு விலங்கு; ஒரு இரும்புச் சங்கிலி. கதை, இந்த விலங்கைப் பற்றித்தான் - "விலங்குவிடு தூது!’ என்று கருத்துப்பட, கதைக்குத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இந்தக் கால் விலங்கை, மற்றோர் கைதி பார்க்கிறான், உற்றுப் பார்க்கிறான், தொட்டுப் பார்க்கிறான், மகிழ்ச்சியுடன் பார்க்கிறான். பார்த்துவிட்டு, "அதேதான்! அதே விலங்குதான்! அதிர்ஷ்ட விலங்கு!’’ என்று கூறுகிறான். விலங்குகளிலே, அதிர்ஷ்டமானது, அதிர்ஷ்டக்கட்டை என்று என்ன இருக்கிறது என்று புரியவில்லை, தொழிலாளிக்கு. விவரம் கேட்கிறான். "இதே விலங்குதான் முன்பு ஒரு முறை எனக்குப் பூட்டினார்கள்! கழற்றிவிட்டு ஓடித் தப்பித்துக்கொண்டேன். அதற்கு முன்பு ஒரு முறை இதே விலங்கை வேறு ஒருவனுக்குப் பூட்டியிருந்தார்கள். அவனும் இதைக் கழற்றிப் போட்டுவிட்டு ஓடிவிட்டான். இது கைதிகளைத் தப்பி ஓடிவிடச் செய்யும் விலங்கு’’ என்று கூறினான். தன் சிறை வாழ்க்கைபற்றி, தகப்பனுக்கு எழுதிய கடிதத்தில், மகன், இந்த விலங்குபற்றி குறிப்பிட்டிருந்தான் - சிறை அதிகாரிகள் கண்ணில் படலாமா இப்படிப்பட்ட கடிதம். ஆகவே கடிதத்தை அனுப்பவேண்டிய முறைபடிதான், இரகசியமாக அனுப்பி வைத்தான். மகன் சிறையில் இருந்து எழுதிய கடிதத்தைப் படித்த தகப்பனுக்கு, அந்த விலங்குமீது ஒரு விருப்பம் ஏற்பட்டது. எப்படியாவது அந்த இரும்புச்சங்கிலியையும் விலங்கையும் தனக்கு அனுப்பி வைக்கும்படி கடிதம் எழுதினான். மகன், தந்திரமாக, அந்த விலங்கைத் தகப்பனாருக்கு அனுப்பி வைத்தான். அது கிடைத்ததும், தொடுவதும், குலுக்கி கிளம்பும் ஓசையைக் கேட்பதும், மனைவியிடமும் மற்ற மகன்களிடமும் காட்டுவதும் - தகப்பனுடைய பெருமை நிறைந்த வேலையாகிவிட்டது. "தொழிலாளிகள் உரிமை பெற்று வாழவேண்டும் என்பதற்காகப் பாடுபட்ட என் மகன் காலிலே, இருந்த விலங்கு இது. பார் இது பாடுவதை, பாடலின் பொருள் புரிகிறதா!’’ - என்று பேசியபடி விலங்கை நண்பர்களிடம் காட்டுவான். தொழிற்சாலையிலே ஒரு விழா வந்தது, அந்த விழா நாளன்று ஆடல் பாடல். அந்த விழாவிலே விலங்கு கொண்டு வரப்பட்டது. அதை ஒருவர் அணிந்துகொண்டு நடப்பது, அதிலே கிளம்பும் ஓசையைக் கேட்டு மகிழ்வது விலங்கைக் கையிலே எடுத்துக்கொண்டு குலுக்குவது, அதனால் கிளம்பும் ஓசையை இசையாகக் கொண்டு நடனமாடுவது, இப்படி நடந்தது. என் மகன் காலில் இருந்த விலங்கு - என்று கூறிக்கொள்வதிலே அந்தத் தகப்பனுக்கு ஒரு தனிப்பெருமை, தனி மகிழ்ச்சி! தொழிற்சாலை முதலாளிக்கு விஷயம் எட்டிற்று. வெகுண்டெழுந்தான் - "எங்கே விலங்கு? யாரிடம் இருக்கிறது? எப்படிக் கிடைத்தது?’’ என்ற கேள்விகளை அடுக்கினான் அவன். தேடிட ஆட்களை ஏவினான். விலங்கோ, ஒரு கையிலிருந்து மற்றோர் கை, பிறகு இன்னொருவர் கை என்று மாறிமாறி மறைந்தேவிட்டது - பாதுகாப்பான இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது - முதலாளியால் கண்டுபிடிக்க முடியவில்லை. புரட்சி வந்தது, புது ஆட்சி எழுந்தது. முதலாளி தத்துவம் முறிந்தது. தொழிற்சாலைகள் பொது உடைமையாயின. கைதியாகச் சென்ற மகன், இதற்கிடையில், சிறையினிலும் தப்பிச் சென்றான்; புரட்சியில் பங்கு கொண்டான் என்று கேள்விப்படுகிறான் தகப்பன்; மேலும் பெருமைப்படுகிறான். பொது உடைமை ஆட்சி ஏற்பட்டுவிட்டது. இனி விலங்குக்கு விடுதலை - இதைக் கண்டுபிடிக்க மோப்பமிடும் முதலாளி இனி இல்லை - விலங்கு இனித் தலைமறைவாக இருக்கத் தேவை இல்லை - என்று கூறி, தன் வீட்டுக் கூடத்தில் அந்த விலங்கைத் தொங்கவிட்டிருந்தான், காட்சிப் பொருளாக. தொழிலாளர்களும் பொதுமக்களும் அணி அணியாக அவன் வீடு வந்தனர். விலங்கைக் காண, அதனுடன் இணைந்திருந்த வரலாறு கேட்க, பாட்டாளியின் கதை அறிய. என் மகன் காலில் இருந்தது! பாட்டாளிகளுக்காகப் பாடுபட்ட என் மகன் காலில் இதைப் பூட்டி வைத்தார்கள் - என் மகன் இதனால் நசுங்கியா போய்விட்டான் - முதலாளித்தனம்தான் பொசுங்கிப் போய்விட்டது - இதோ, விலங்கு கொலு இருக்கிறது - தளைகள் பூட்டப்பட்டிருந்தவர்கள் தரணி ஆள்கிறார்கள் - இதோ கேளுங்கள் விலங்கின் பாடலை என்று கூறி, கையிலே எடுத்து வைத்துக்கொண்டு குலுக்குவான் - அந்த ஓசை இசையாக இருந்தது கேட்பவர்களுக்கு, எதிர்ப்புரட்சியை அடக்கும் போரில் ஈடுபட்டு மகன் மடிந்துவிட்டான் என்று தகப்பன் கேள்விப்படுகிறான்; வேதனை அடைகிறான். தொழில்கள் பொது உடைமையான உடன், வேலை நேரம் குறையும் கூலி வசதி பெருகும் என்று எதிர்பார்த்த தொழிலாளருக்கு, மேலும் உழைக்கவேண்டிய நிலையும், கடினமான சூழ்நிலையும், கூலி உயராத் தன்மையும் ஏற்பட்டது; ஏற்படவே கோபம் கொந்தளிப்பு! என்னய்யா மணலைக் கயிறாகத் திரிப்போம் என்று வாய்வீச்சாக நடக்கிறார்கள்; நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதே; பொது உடைமை வந்து கண்ட பலன் இதுதானா? முன்பு வேலை செய்ததைவிட அதிகமாக வேலைசெய்ய வேண்டுமாமே! ஏன்? கூடாது! ஆகாது! - என்றெல்லாம் தொழிலாளிகள் முழக்கம் எழுப்புகிறார்கள். இரும்புப் பட்டறையில் குழப்பமான நிலைமை. பொது உடைமை ஆட்சியினர் இதை எப்படிச் சமாளிப்பது, தொழிலாளிகளுக்கு என்ன விளக்கம் அளிப்பது, சமாதானம் கூறுவது என்று குழம்பிக் கொண்டிருந்தனர். இரும்புப் பட்டறையில் மூண்டுவிட்ட கலவரம் பற்றிக் கேள்விப்பட்டதும் அந்த முதியவன் வீட்டுக்கூடத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த விலங்கை எடுத்துக்கொண்டான். நேராகத் தொழிற்சாலை சென்றான், கூவிக்கொண்டும், குழம்பிக் கொண்டும் கிடந்த தொழிலாளர்களை நோக்கினான் - ஒரு மேடைமீது ஏறினான், விலங்கை எடுத்துக் குலுக்கினான் - ஓசை கிளம்பிற்று, கூச்சல் அடங்கிற்று, மேலும் குலுக்கினான்; அனைவரும் அந்த ஓசை இசையைக் கேட்டிடலாயினர். "என் மகன் காலில் இருந்த இரும்புச் சங்கிலி - விலங்கு - கேளுங்கள் இதன் இசையை - இதைப் பூட்டினார்கள் என் மகன் காலில் - எத்தனையோ பேர்களுடைய காலில் - ஏழை எளியோருக்குப் பாட்டாளிக்கு முன்பு இருந்த அரசு பூட்டியது விலங்கு! கவனம் இருக்கட்டும்! விலங்கு - நமக்கு! பூட்டியவர்கள் அவர்கள்; இன்று அவர்களை அகற்றிவிட்டோம். நமது அரசு அமைத்திருக்கிறோம். நமது அரசு ஆரம்பமாகி இருக்கிறது. இந்த அரசு முறையிலே குறை இருக்கலாம் - நீக்கிக்கொள்ளலாம். ஆனால் அந்தக் குறை காரணமாகக் குழம்பிவிடுவது, கலாம் விளைவிப்பது, ஆட்சியை எதிர்ப்பது என்று பாட்டாளிகள் கிளம்பினால், என்ன நடக்கும் - நமது அரசு விழும் - பழைய அரசு எழும். பழைய அரசு வந்தால் என்ன கிடைக்கும்? இதோ இது! விலங்கு! இரும்புச் சங்கிலி! காலில் விலங்கு! என் மகன் காலில் பூட்டியதுபோல - புரிகிறதா! கேளுங்கள் விலங்கின் - இசையை கேளுங்கள்’’ இந்தப் பேச்சும், விலங்கு கிளப்பிய ஓசை இசையும், தொழிலாளிகளை, ஒரு முடிவுக்கு வரச்செய்தது. விலங்கின் இசை புரிகிறது - வேலைக்குச் செல்வோம் - நமது அரசு நிலைத்திட வேண்டும். அதற்காக நாம் கஷ்ட நஷ்டம் ஏற்போம் - விலங்கின் - இசையின் பொருள் அதுதான் என்று எண்ணினர். அமைதியாக வேலைக்குச் சென்றனர். 2-6-1964 இன்று காலை ஆறு மணிக்கு அன்பழகன் விடுதலை யானார். அவருடன் குழுவினரும் விடுதலை பெறுகின்றனர். இத்தனை நாட்களாக மெத்தவும் எனக்கு உதவியாக இருந்து வந்த அன்பழகன் விடைபெற்றுச் சென்றபோது, இருவருமே ஒரு கணம் கவலைகொண்டோம்; பிறகோ இரண்டு வாரத்திற்குள் நானும் விடுதலை பெறப்போகும் நினைவைத் தருவித்துக் கொண்டோம். அன்பழகன் குடும்பமே கழகத்துக்குச் சிதம்பரத்தில் ஆண்டு பலவற்றுக்கு முன்பிருந்தே அணிகலனாய் திகழ்ந்து வருவது. அவருடைய தகப்பனார் என்னைத் தருவித்துச் சிதம்பரத்தில் கூட்டம் நடத்தும் அந்த நாட்களில், ஒல்லியான இந்த உருவம் அன்பழகன் - ஓடி ஆடி வேலை செய்யக் கண்டேன். ஆண்டு சில சென்ற பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயிலக் கண்டேன். அப்போதே ஆர்வம், அஞ்சாநெஞ்சு, உள்ளொன்று புறமொன்று கொள்ளாப் பண்பு, எல்லாம் உண்டு. கழகத் தொண்டு அப்போதே அவருக்குக் கற்கண்டு. இரும்பைக் கரைத்து இன்பவாழ்வு நடாத்தும் குடும்பமல்ல - எளிய வாழ்க்கை என்றாலும் எவரிடமும் இச்சகம் பேசிடவோ, நச்சரித்து வாழ்ந்திடவோ முனைந்ததில்லை. எல்லாப் பிள்ளைகளும் கற்றறிவாளராயினர் - மூவர் ஆசிரியத் தொழிலை மேற் கொண்டனர் - அன்பழகன், பச்சையப்பன் கல்லூரியில் - அறிவழகன், வண்ணை தியாகராயர் கல்லூரியில்; திருமாறன், விருதுநகர் கல்லூரியில். கல்லூரியில் அன்பழகன் கழகக் கொள்கைகளைக் கலந்து தமிழ்த்தேன் குழைத்துத் தந்துவந்தார். அதனால் கிடைத்த தோழர் பலர் நமக்கு. முழுநேரம் கழகத்துக் காக்கிடுவேன் என்று என்னிடம் கூறியபோதெல்லாம், தமிழ்ப் பேராசிரியர் எனும் தகுதிநிலை இழத்தல் கூடாது என்று கூறித் தடுத்து வந்தேன் - பிறகு இசைவளித்தேன் - இன்று அவர் மேல் சபையில் உறுப்பினர்; எனக்கு உற்ற நண்பர். நான் ஓய்வு விரும்பும்போது, சென்னையில் எனக்கு இல்லம் அவர் இல்லம். கனிவு இருக்கும், குழைவு இருக்காது - தெளிவு இருக்கும் பேச்சில், நெளிவு எழாது. எத்தனையோ தோழர்கள் இதனை எடுத்து எப்படிக் கூறுவது என்று எண்ணி இருப்பதுண்டு - இருவர் என்னிடம் தமது மனதில் பட்டதை மெருகும் ஏற்றாமல் எடுத்துரைப்பர் - இவர் அதில் ஒருவர் - மற்றொருவர் காஞ்சி கலியாணசுந்தரம். சிறையிலே சிந்தைக்கு மகிழ்வும் தெளிவும் உண்டாகும் விதமாக எத்தனையோ பேசினோம். குறளின் பொருளதனை சுவைமிஞ்சக் கூறிவந்தார். ஏடு முடித்திட இயலவில்லை, வெளியே சென்று தொடர்ந்து எழுதி முடித்துத் தருவேன் என்றுரைத்துச் சென்றார். உடல் நலிவு எனக்கு, அதில் ஏதும் மாற்றமில்லை - உணவு வகை மாற்றமே உற்ற மருந்தென மருத்துவர் உரைத்துச் சென்றார். இரவெல்லாம் கண்விழிப்பு - பகலெல்லாம் வலிபொறுத்தல் - இந்த விலை நாலைந்து நாளாய். இன்று மருத்துவமனை சென்று வரவேண்டுமென நண்பர்கள் கூறினர் - நானும் அது தேவை என உணர்ந்தேன் - ஆனால் இங்குள்ள மருத்துவர் இப்போதைக்குத் தேவை இல்லை, நோய் கடினமானால் பார்த்துக் கொள்ளலாம் என்ற போக்கில் பேசிச் சென்றுவிட்டார்; பதில் பேசாதிருக்கின்றோம். வலிமுற்றி அதன் வகை முற்றிடும் முன்பு, தக்க முறையினில் மருந்து உட்கொள்வதுதான் மருத்துவம் கூறும் முறை. ஆனால் கைதிகளுக்குக் காட்டுவது வேறு முறை; உணர்கின்றேன். இன்று மாலை அக்காவும் அண்ணாவும் அடிகளும் இளங்கோவனுடன் என்னைக் காண வந்தனர். ஊரில் உள்ளோர் நலன்பற்றிக் கூறினார்கள். புகுமுக வகுப்புத் தேர்வில் கௌதமன், ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் வெற்றி பெறவில்லை என்று சேதி கிடைத்தது. இன்று இதழ்கள் எங்களுக்கு மாலை ஐந்து மணிக்குத்தான் கிடைத்தன. லால்பகதூர் சாஸ்திரி ஒருமனதாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற செய்தி கண்டோம். தொடர்ந்து படித்திட இயலவில்லை - சிலநேரம் படிப்பது, சிலநேரம் பேசுவது, எந்நேரமும் வலிபொறுத்துக்கொண்டிருக்கும் பயிற்சி - இதுபோல் இருக்கின்றேன். நாளையத்தினம் விடுதலையாகும் நண்பர்களை, இன்று மாலை தொலைவிலிருந்து கண்டேன். தோழமை வணக்கம் செய்தேன். அமெரிக்க நூலாசிரியர், அரிய பல ஏடுகளை ஆக்கித் தந்தவர் அப்டன்சிங்களர் என்பார், பல்வேறு நாடுகளில், பல பேரறிவாளர், நீதிக்காகப் பரிந்துரைத்தவைகளைத் தொகுப்பு நூலாக்கித் தந்துள்ளார். இப்போது அதனைத்தான் படித்துப் பயன் கண்டு வருகின்றேன். இன்று மாலை, முன்பு திராவிட நாடு அச்சக அலுவல் பார்த்து, இப்போது துரை அச்சக உரிமையாளராகியுள்ள தோழர் சம்பந்தம், மீண்டும் இதழ் நடத்தவேண்டுமெனக் கூறினார். என்னாலே இதழ் நடத்தும் பொறுப்புகளை நிறைவேற்ற இயலாது, எழுதித் தரலாம். இளங்கோவன் இதழ் நடத்த இருக்கின்றான் என்று கூறினேன். இதழ் நின்றுவிட்டது எனக்கு மட்டும் இனிப்பளிக்குமா? இல்லை. என்ன செய்வது? பொறுப்புகளைக் குறைத்துக்கொண்டாகவேண்டி ஏற்பட்டுவிட்டது. நேற்றிரவு மழை இலேசாக - இன்று குளிர்காற்று, வெளியே மிகுதியாக, உள்ளேயோ தொடுவதும் படுவதுமாக. இப்போது நான் தங்கி இருப்பது முதல் எண் உள்ள அறை - அன்பழகன் இருந்த இடம். நான் மூன்றாம் எண்ணுள்ள அறையில் இருந்தபோதும், இந்த அறையினில் அதிக நேரம் கழித்திருக்கிறேன், இப்போது இங்கேயே குடியேறி இருக்கிறேன். காலையில், வழக்கமான பார்வையிடல் - வரிசையாக நின்றோம். 3-6-1964 இன்று மாலை துரை அச்சகம் சம்பந்தத்தைச் சிறை அதிகாரி அழைத்துவரச் சொன்னார். சம்பந்தம் சமையலறைப் பொறுப்பில் இருப்பதால் அதுபற்றி ஏதோ கூற அழைத்தனர் என்று எண்ணிக்கொண்டோம். சில நிமிடங்களில் சம்பந்தம் பயமும் துக்கமும் கலந்த முகத்துடன் திரும்பி வந்து, "ஒரு வாரம் பரோல் எடுத்திருக்கிறோம், உடனே புறப்படு’ என்று சொல்கிறார்கள், அரங்கண்ணலும் சிட்டிபாபுவும், என்ன காரணம் என்று கூற மறுக்கிறார்கள் என்று சொன்னார். அனைவருக்கும் திகிலாகிவிட்டது; வீட்டில் ஏதோ விபத்து என்று உணர்ந்தோம். விவரமோ தெரியவில்லை. வேதனையை அடக்கிக்கொண்டு, சம்பந்தம் விடை பெற்றுச் சென்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு மணியைக் காணக் காஞ்சிபுரம் தோழர்கள் வந்திருந்தனர். அவர்கள் மூலமாகச் சேதி தெரிந்தது. சம்பந்தத்தின் மகன் ஏழு வயதுச் சிறுவன் அம்மை நோய் கண்டு இறந்து விட்டிருக்கிறான் - முந்தின தினம்; மாலை அடக்கம் செய்து விட்டனராம். பிறகு, சம்பந்தம் பரோலில் செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது. உடலைக்கூடக் காணமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. எப்படி வேதனைப்படுகிறாரோ, என்னென்ன கூறிக் கதறுகிறாரோ, மகனைப் பறிகொடுத்த தாய் எத்தனை பதறுகிறார்களோ என்றெல்லாம் எண்ணி ஏங்கினபடி இருந்தோம். இழப்புகள், இன்னல்கள், இடர்ப்பாடுகள் பல பொறுத்துக் கொண்டு, இன்தமிழ் வாழ, வளர, தமது தொண்டினை நல்கும் ஆர்வம், பலரைச் சிறையிலே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இன்று பிற்பகல்தான், சம்பந்தம் சொன்னார்: “அண்ணா, உங்களோடு சேர்ந்து சிறையினிலே இருப்பதாலே தொல்லைகள் மிகுதியாக இல்லை’’ என்று வேடிக்கையாக நான் சொன்னேன்,”என்னோடு சேர்ந்ததனால்தானே அப்பா, சிறைவர நேரிட்டது உங்களுக்கெல்லாம். உங்கள் வீட்டிலும் வேறு பல இல்லங் களிலும், இவனுடன் கூடிக்கொண்டு, என் மகன் சிறை சென்றுவிட்டான் என்று என்னை ஏசிக்கொண்டிருக்கிறார்களோ என்னமோ’’ என்று சொன்னேன். சம்பந்தம் போன்ற உழைத்துப் பிழைத்து வரும் தோழர்கள் உயர்பதவி கிடைக்குமென்றோ, ஊர் மெச்சுமென்றோ, வருவாய் பெறத்தக்க வழி கிடைக்கும் என்றோ எண்ணி அதற்காகச் சிறை வந்தவர்களல்ல - நமது கழகத் தொடர்பு கொண்டுள்ளவர்கள், அதன் காரணமாக இத்தகைய வாய்ப்புகளைப் பெறவும் இயலாது. இது நாடறிந்த உண்மை; இருப்பதை இழந்தவர்கள் பலரும் உண்டு. இது நன்கு தெரிந்திருந்தும், அச்சகத் தொழிலாளி சம்பந்தம், அறப்போரில் ஈடுபடத் தாமாக நான் தடுத்தும் கேளாமல் ஈடுபட்ட காரணம், அவர் நெஞ்சத்தில் இடம் பெற்றுள்ள தமிழார்வம், உரிமை உணர்ச்சியன்றி வேறெதுவாக இருக்க முடியும்? அத்தகைய நல்லார்வம் பெற்றுள்ள தோழருக்கு நேரிட்டுவிட்ட, இழப்பினை எண்ணி எண்ணிப் பெரிதும் வாட்டமுற்றுக் கிடந்தோம். அன்புள்ள அண்ணாதுரை 4-4-1965 குறிப்பு : இதன் பின்னர், அண்ணாவின் இந்தக் கடித வரிசை மேலும் தொடரவில்லை. 8-6-64 தேதியோடு கடிதம் முடிகின்றது. ஜூன் இரண்டாவது வாரத்தில், அண்ணா, தம் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையும் பெற்றார்கள். கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account