[] 1. Cover 2. Table of contents பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - 2 பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - 2   அண்ணாதுரை     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/letters_of_peraringar_anna_2 மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!! காஞ்சியில் காணக் கிடைக்காதவரைக் காணப் பெருந்திரள் திருச்சியில் கண்டவரையே காணப் பெருந்திரள் நாவலரிடம் நமது கழகம் தம்பி! நன்றி! உளங்கனிந்த நன்றி! அன்பு கலந்த நன்றி! மகிழ்கிறேன், பெருமைப்படுகிறேன், பூரித்துப் போகிறேன். கவிதை தீட்டக்கூடக் கருத்து துள்ளுகிறது - என் செய்வேன்! என் சிந்தையெல்லாம், தோள்களெல்லாம் பூரிக்குது!! வெற்றி! மகத்தான வெற்றி! மறக்கொணா வெற்றி! வரலாற்றுச் சுவடியில் இடம் பெறத்தக்க வண்ணம் நிரம்பிய வெற்றி! உன் செயல் வண்ணம் கண்டேன்! எதிரே நின்று உருட்டி மிரட்டிய ஓராயிரம் இன்னலும் பிடரியில் கால்பட ஓட்டம் பெருநடையாய்ச் சென்றிடக் காண்கிறேன். உள்ளம் உவகைக் கடலாகிவிட்டது - ஒன்றின்மீதொன்றாக, ஒன்றைத் துரத்திக் கொண்டு மற்றொன்று என்ற முறையில் நெஞ்சில் களிப்பு அலைகள்!! அல்லும் பகலும் ஆயாசமும், அச்சமும் பிடித்தாட்டிய நிலையில் இருந்தேன். - அண்ணா என்ற குரல் கேட்டுத் திரும்பினேன், என் அருமைத் தம்பி! உன்னை நான் கண்டேன் - உன் கை வண்ணத்தை எழிலோவியமாக அமைத்த “வள்ளுவர் நகர்’ எடுத்துக் காட்டிற்று! உன் ஆர்வத்தை வானளாவப் பறந்த நம் கழகக்கொடி காட்டிற்று! எங்கும் உன் முழக்கம் கேட்டேன் - புதியதோர் இன்பம் கண்டேன். போற்றுகிறேன் உன்னை.”புவியோரே! புவியோரே! காண்மின் இக்காட்சியை! கையில் ஊமையரோ! கருத்தழிந்த நிலையினரோ! செய்தொழில் மறந்தவரோ மனித உருக்கொண்ட பதுமைகளோ! என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கிக் கிடந்தோம் - எள்ளி நகையாடியும், இழிமொழியால் தாக்கியும் ஏதறிவர் தீது பேசலன்றி என்று இயம்பியும் எம்மை வாட்டிய வன்கணாளரைத் தாங்கி கிடக்கும் வையகமே! இதோ காண்பாய், செயல் வீரர் தரும் சித்திரவதை, கொள்கைக் கோமான்கள் கட்டியுள்ள கோட்டையினைப் பாராய், அவர்தம் படைக்கலனாகத் திகழும் ஆர்வம் காண்பாய், அவர்தம் களிப்பொலி எனும் முரசம் கேட்டாய். அதோ, அதோ இங்கு, அங்கு, எங்கும் ஆயிரக்கணக்கில் பல்லாயிரக் கணக்கில், இலட்சக்கணக்கில் - நெடுஞ்சாலைகளெல்லாம் அணி அணியாக வந்த வண்ணமிருக்கும் இந்த வீரர் கூட்டத்தைப் பாராய், இங்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியை, இன எழுச்சியை, விடுதலைப் பேரார்வத்தை எடுத்துக் கூறாய்’’ - என்றெல்லாம் குன்றேறிக் கூவத் தூண்டுகிறது. திருச்சி மாநில மாநாட்டில் வெற்றியை நிச்சயமாக எதிர்பார்த்தேன். ஆற்றல்மிக்கதோர் அணிவகுப்பு நம் தாயக விடுதலைக்காகத் தயாராகிவிட்டதை அறிந்தவன் என்பதால், நான் மாநில மாநாடு மகத்தானதோர் வெற்றியாகவே திகழும் என்பதிலே நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால், தம்பி, என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டாய் - தேடித் தேடிப் பார்க்கிறேன் தெள்ளு தமிழில் - வெற்றி என்ற சொல் போதவில்லை, நாம் பெற்றதை விளக்க, புத்துயிர்பெற்றோம் என்பதா - புதியதோர் உலகு கண்டோம் என்பதா - பொற்காலத்துதயம் என்பதா - மாற்றார் புறமுதுகிடும் காட்சியினைக் கண்டோம் என்பதா - நான் திணறுகிறேன் தம்பி, திட்டமான ஓர் சொல் கிட்டவில்லை. வெற்றிகள் பல நாம் பெற்றிருக்கிறோம். தியாகத் தழும்பு எனும் விருதுகளைப் பெற்றிருக்கிறோம். நமது மாநாடுகளே, அறிவும் திருவும் நடமிடும் மன்றங் களாகத்தான் எப்போதும் காட்சி தருவன. ஆனால், திருச்சியில் நான் கண்டது வெறும் வெற்றியா. . . அல்ல தம்பி, அல்ல! தமிழகம் தன்னிகரற்ற எழிலுடன் என் முன் நின்று, ஏடா, மூடா, நானிருக்க, நீ கவலைகொள்வது எதுக்கு? என் மடியில் தவழ்ந்திடும் பேறு உனக்கு இருக்கும்போது எத்தரும் பித்தரும் சத்தமிடுவதுபற்றி நீ ஏன் ஆயாசப்படுகிறாய்? - இதோ நான் உன் முன் நிற்கிறேன் - என் எழில் விழி உமிழும் ஒளி, மாற்றாரின் வஞ்சனையைச் சுட்டுக் கருக்கிப் பிடிசாம்பலாக்கிவிடும் - அஞ்சற்க; ஆயிரம் எண்ணி அயர்ந்துபோய், செயலற்று இருந்து விடாதே, விழி, எழு, இதோ நான் - உனக்காக நான் - என்றல்லவா முழக்கமிட்டது. அந்திசாயும் வேளையிலே, ஆற்றோர வெண் மணலில், மென்காற்றுத் தாலாட்ட மெல்லியதோர் துயி-னில் வீழ்ந்து பட்ட வீரனிடம், துயில் நீக்கி எழுந்து வாராய், தோகையாள் அழைக்கின்றேன், ஆரத் தழுவிடாயோ, அன்பு முத்தம் தாராயோ என்று வீணாகானத்துடன் பாடி, வண்ண மங்கை அருகே வந்தால். . . வந்த வனிதையும் அந்த இளைஞன் உள்ளத்தில் நீண்ட பெரு நாட்களாக இடம் பெற்றிருந்த இளமங்கைதான் எனின். . . எவ்வண்ணம் இருக்கும். தம்பி, திருச்சி உன்போன்ற இளைஞர்கட்கெல்லாம், இது போலல்லவா அமைந்தது. தாயே, உன் நிலை கண்டு உளம் நொந்து, உனக்கு வந்துற்ற இடரும் இழிவும் உடைத்திடவும் துடைத்திடவும் ஆற்றலற்றுப் போனேனே என்று எண்ணி அயர்ந்திருந்த என்முன் நின்று, மகனே, சுரந்தெழும் உன் உள்ளன்பு, என் கண்ணீரைத் தடுத்து விட்டது - விலங்குகள் என்னை வருத்தமுறத்தான் செய்கின்றன. எனினும், அதனை உடைத்திடும் ஆற்றல்பெற்ற மகன் நீ இருக்கிறாய் என்று அறிவதால் ஏற்படும் ஆனந்தம், என் அல்லலைக்கூட ஓரளவு குறைக்கின்றது, மகனே! புலம்பியது போதும், புறப்படு. இதோ என் ஆசி உனக்குக் கவசமாகி நிற்கும், என் வரலாறு, உனக்கு வீரமூட்டும், புறப்படு, போரிடு, வெற்றி பெறு - என்று தாயகம், உச்சிமோந்து கூறிடும் காட்சியாகக் காணப்பட்டது, திருச்சி மாநாடு - அகநானூற்றுப் பருவத்தைக் கடந்துவிட்ட என்போன்றோருக்கு. அனைவருக்கும், தம்பி, இது வெறும் வெற்றியாக மட்டும் தோன்றவில்லை - மாநாட்டிலே சம்பத் எடுத்துச் சொன்னபடி இலட்சியப் பாதையிலே நாம் எத்துணை நெடுந்தூரம் முன்னேறி இருக்கிறோம் என்பதை மட்டுமல்ல, குறிக்கோள் வெற்றி பெற, இன்பத் திராவிடம் காண, நாம் மேலே செல்லவேண்டிய பாதை அதிகமில்லை என்பதனையும் திருச்சி மாநில மாநாடு காட்டிற்று. வெற்றி என்ற சொல் மட்டும், எங்ஙனம், இந்த நிலையினை விளக்கிடப் போதுமானதாகும். தம்பி, மோனநிலை என்று மதத்துறையினர் ஓர் கட்டத்தைக் கூறுவர். எண்ணவேண்டியதை எல்லாம் எண்ணி யான பிறகு, சொல்லவேண்டுவனவற்றைச் சொல்-யான பிறகு, மோனநிலை பிறக்கும் என்கிறார்கள். அப்போது, ஏதும் சொல்வதும் தேவைப்படுவதில்லையாம். மணம் வீசும் சந்தனம், மரமாக இருக்கும்போது, ஒலியும் கிளப்புகிறது - அரைபட்டு உடலில்போய்ச் சேர்ந்தான பிறகு - மணம் மட்டுந்தானே இருக்கிறது, ஒலியில்லை. நான் "மோனநிலை’யில் இருந்திட விரும்புகிறேன். மாநில மாநாட்டின் வெற்றி, அதன் மகத்தான தன்மை, அதற்கான காரணங்கள், இவைகளைக் குறித்தெல்லாம் பேச, எழுதக்கூடத் தோன்றவில்லை. அந்தக் கட்டத்தைக் கடந்ததோர் நிலை - மோனநிலை என்கிறார்களே அது, இதுதான்போலும். "என்னடி பெண்ணே! புன்னகைக்குக் காரணம்? கிள்ளையும் இல்லை எதிரே; சுழலாடவும் காணோம்! தானாகப் புன்னகை புரிந்தபடி இருக்கிறாயே. . .’’ - தாய் கேட்கிறாள். "ஒன்றுமில்லை அம்மா!’’ - அவ்வளவுதான் மங்கையால் கூற முடிகிறது. "இதென்ன வேடிக்கை; பித்துப் பிடித்த பெண்ணே, காரண மற்றுக் களிப்பு வருமோ?’’ என்று தாய் கடாவுகிறாள், உண்மையை உணர முடியாத தாயே, உன்னிடம் நான் எப்படிச் சொல்வேன், என் புன்னகையின் காரணத்தை! - என்று மகள் கூறவில்லை, எண்ணிக்கொள்கிறாள் - புன்னகை மேலும் மலருகிறது!! அகநானூற்று நிலையுடன் தமிழக இல்லங்கள் இருந்த நாட்களில் காணக் கிடந்த காட்சி இதுபோன்றது. மாநில மாநாட்டு வெற்றி தரும் மகிழ்ச்சியை என்னாலும் இப்போது எடுத்து இயம்பவும் முடியவில்லை - சுவையுள்ள தேன், சுகமளிக்கும் தேன் - என்று கூறிக்கொண்டிருக்க முடிகிறதா, தேன் பருகும்போதும் சரி, தேன்மொழியாளரிடம் சொல் விருந்து பெறும்போதும் - அதுபோல்தான், மாநில மாநாடு அளித்த மகிழ்ச்சியைச் சுவைத்துக்கொண்டு மற்ற எல்லாவற்றையும் மறந்து கிடக்கிறேன் - மோனநிலை, - எனவே, அதிகமாகக்கூடப் பேச விருப்பம் எழவில்லை. மாநாடு எப்படி? வெற்றி. மக்கள் திரளாக வந்தனரோ? வெள்ளம்போல் என்னென்ன சிறப்புகள் மாநாட்டிலே, சொல்லு கேட்போம். சிறப்புகளா. . .? மாநாட்டுச் சிறப்புகளா. . .? - என்று வாய்விட்டுக் கூறுகிறேன், மேலால் பேச விருப்பம் எழவில்லை, என் உள்ளத்தை விட்டு நீங்காத அந்த எழிலைக் காண்கிறேன், இன்புறுகிறேன் - எடுத்தியம்பும் நிலையையும் இழந்து கிடக்கிறேன். இதோ நான், இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில், நானிருக்கும் இடத்திலிருந்து ஆறேழு கல் தொலைவில் வினோபா இருக்கிறார். அவருடைய வருகைக்காக "சர்வோதய நகரம்’ காஞ்சியின் மற்றோர் கோடியில் இருக்கிறது. இடையில் மூவாயிரம் போலீஸ் வீரர்களும், சில நூறு அதிகாரிகளும், பல கோடி ரூபாய்களின் சொந்தக்காரரும் உள்ளனர். சர்வோதய நகரின் பந்தல் அமைப்புக்கும் பாதை அமைப்புக்கும், உண்டி உறைவிடம் அமைப்பதற்கும் ஊராள்வோர், நிபுணர்களைக்கொண்டு திட்டம் தீட்டி பயிற்சி பெற்றோரைக்கொண்டு உருவாக்கி வைத்துள்ளனர். நேற்றைவிட இன்று வண்டிகள் அதிகம் - நாளைக்கு மேலும் அதிகமாகும் - பாதை நடுவில் செல்லாதீர்கள் - ஓரமாகச் செல்லுங்கள் - என்று அறிவுரை புகன்றபடி போலீஸ் வான் செல்லுகிறது. காஞ்சி நகரில், பெரியதோர் நிகழ்ச்சியாக இஃது உருவாக்கப்பட்டு வருகிறது. வினோபா வருகிறார் என்றாலே, போதும், விசேஷமான மாநாடாக்கிவிடலாம். இங்கோ வினோபா மட்டுமல்ல, பாபு ராஜேந்திரர் வருகிறார், - ஜெயப் பிரகாஷ் நாராயணன் வருகிறார், - கவர்னர் பிரகாசா வருகிறார், - முதலமைச்சர் காமராஜர் வருகிறார், - வேறு மாநிலங்களின் காமராஜர்கள் சிலர் வருகின்றனர் - ஆசிரியப் பெருங்குழு வருகிறது, - கல்வித்துறை நிபுணர்கள் வருகிறார்கள் - கலாச்சாரக் கோஷ்டிகள் வருகின்றன - கனதனவான்கள் வருகின்றனர் - வந்துகொண்டு இருக்கின்றனர் - இவற்றை எல்லாம்விட 40 இலட்சம் ஏக்கருக்குமேல் "தான நிலம்’ இருக்கிறது - பங்கு போட்டிடும் திட்டம் தயாரிக்கப் போகிறார்கள். வினோபாவை அடிக்கடி காண முடியாது. ஜெயப்பிரகாசரும் வந்த வண்ணம் இருப்பவரல்ல. எனவே, காணக் கிடைக்காத காட்சியைக் காண, பெருந் திரள் குவியலாம் காஞ்சியில். இப்போதைக்குப் பெரும் போலீஸ் படை குவிந்துவிட்டிருக்கிறது. சர்க்காருடைய நிர்வாக யந்திரம், மும்முரமாகவும், திறம்படவும் ஒரு புறம் பணியாற்றுகிறது; "சாது சன்யாசிகள்’ வரிசையில் சேர்ந்து சன்மார்க்கம் போதிக்கும் வினோபாவின் செல்வாக்கு மற்றோர்புறம் பணியாற்றுகிறது. இதனால் இங்கு எழிலும் ஏற்றமும், பெருங் கூட்டமும் பிரமுகர் நடமாட்டமும் மிகுதியும் இருந்திடக் காரணமிருக்கிறது. இவ்வளவுக்கும் பிறகு, நடைபெற இருக்கும் வரதர் தேர் திருவிழாவின் துணையையும் நாடுகின்றனர். தம்பி! வறண்ட தலையினர் கூடினோம் திருச்சியில். வாழ்ந்துகெட்ட இனத்தினர் கூடினோம். வீழ்ச்சியுற்ற நிலையி னின்றும் மீட்சிபெற, எழுச்சிபெறக் கூடினோம். எண்ணி எழுபது போலீஸ் உண்டா? ஏற்பாடுகளைக் கவனிக்க வசதிகள் உண்டா? பிரமுகர்களின் கடைக்கண் பார்வை உண்டா? இல்லை. இல்லை! நீ! உன் உள்ளத்தில் உள்ள உவகை! திருச்சியின் எழிலுக்கு இவை தான் இருந்தன. ஆனால் இவை எவ்வளவு மகத்தானவை என்பதை நான்கு நாட்கள் கண்டேன் - நான் மேற்கொண்டுள்ள பணியின் மேன்மையிலே எனக்கு எப்போதும் உள்ள நம்பிக்கை, ஆயிர மடங்கு மேலோங்கி வளர்ந்தது. ஒரு இலட்சம் என்று முதல் நாள் கூறினார் - நாலாம் நாள், மூன்று இலட்சத்துக்குக் குறையாது என்றனர் - நமது தோழர்கள் அல்ல - ஊரார். யாரைக் காணக் கூடினர்? காண்பது பெரும் பேறு என்று கருதத்தக்க நிலைபெற்ற ஞானவான்களையா? மனமருளை ஓட்டி, அஞ்ஞானத்தை விரட்டிடும் ஆற்றல் பெற்ற அருளாளர்களையா? திடுக்கிடவைக்கும் திட்டம் தந்தோர், உலகு கண்டு பதறத்தக்க போர்வகை கண்டோர் ஆகியோர்களையா? கவர்னரையா? முதலமைச்சர்களையா? மூதறிஞர்களையா? இல்லை தம்பி, இல்லை. சாமான்யர்களைக் காணக் கூடினர் - சதாசர்வ காலமும் யாரை, சந்தைச் சதுக்கத்திலும், அங்காடிப் பக்கமும் ஊருணித் திட-லும் காணுகின்றனரோ, அவர்களையே காணத்தான். நாவலர் நெடுஞ்செழியன் என்பவர் யார்? எப்படி இருப்பார்? எங்கிருந்து வருகிறார்? - என்று ஆவலுடன் கேட்டு, ஆர்வம் கொந்தளிக்கும் நிலைபெற்று மக்கள் குவிந்தனர் என்றா கொள்ள முடியும்! அவரைத் தமிழகம் அறியும்; மிக நன்றாக அறியும். மாநாட்டுக்கு முன்பு மூன்று திங்களுக்கு ஓர் முறை யேனும் திருச்சி அவர் உரை கேட்டிருக்கும். மதுரையில் அவர் முழக்கம் பழக்கமானதாகிவிட்டது. பட்டிதொட்டிகளிலும் அவர் அடிக்கடி நடமாடி வருபவர். மற்றையோர் அதேபோல, எப்போதும் மக்கள் மத்தியிலே உலவியபடி இருப்பவர்கள். காணக் கிடைக்காத தங்கங்களல்ல - சாமான்யர்கள். அவர்கள்தான் மாநாட்டில் - மூன்று இலட்சம் மக்கள் அங்கு கூடுகின்றனர். பொருள் விளங்குகிறதா தம்பி! பொருள் என்ன என்பதை மாற்றார் உணருகிறார்களா என்று கேட்டுப்பார். சாமான்யர்கள் அழைக்கிறார்கள் - ஜனசமுத்திரம் கூடுகிறது. அவர்களுக்கு முன்னும் பின்னும் அதிகாரிகள் படை வரிசை இல்லை. அவர்கள்மீது ஏதும் புத்தம் புது மெருகு பூசப்படவில்லை. அவர்கள் நேற்று வந்தார்கள் - பேசினார்கள் - நாளை வருவார்கள் பேசுவார்கள் - நாடு அறியும் - எனினும் அவர்கள் மட்டுந்தான் வருகிறார்கள் என்று தெரிந்தும், 3 இலட்சம் மக்கள் கூடினர் - நாலு நாட்கள் ஆர்வத்தைச் சொரிந்தனர் - காலையில் 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி விடியும் வரையில் நடைபெறும் - அவ்வளவிலும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இந்த மகத்தான நிகழ்ச்சியின் உட்பொருளை உணர்வோரே, காலத்தின் கருத்தை அறியமுடியும். பிறர் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டோம் என்று பின்னையோர் நாள் கை பிசைந்து கூறிக்கொள்ளவேண்டி நேரிடும். மாநில மாநாடு, மாபெரும் தலைவர்களைத் தரிசிக்க ஏற்பட்ட ஏற்பாடல்ல - நாட்டின் விடுதலை வேட்கையை, விழிப்புணர்ச்சியை எடுத்துக் காட்டும் ஏற்பாடு. இதனை உணர்ந்ததால்தான், பல நூறு தடவை, யாரார் உரைகளைக் கேட்டிருக்கின்றனரோ, அவர்களேதான் மாநில மாநாட்டிலே பேசுவர் என்பதை அறிந்திருந்தும், நாம் அறிந்த வர்கள்தானே என்று அலட்சியமாக இல்லை. நாம் பல தடவை கேட்ட பேச்சுத்தானே என்று அக்கறையற்றுக்கிடவில்லை. நமது மாநாடு கூடுகிறது, நாம் அதிலே கலந்துகொண்டாக வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன் மூன்று இலட்சம் மக்கள் கூடினர். பிற கட்சிகளில் இருப்பினும், சிந்தனைத் திறனை இழந்திடாமலிருக்கும் பெரியவர்களை, இதுபற்றி எண்ணிப் பார்த்து, உட்பொருளை உணர்ந்து, உலகுக்கு உரைத்திடச் சொல்கிறாயா, தம்பி? முயன்று பார். என்ன இதன் உட்பொருள், தம்பி! சாமான்யர்களின் மாநாடு. ஏன் இத்துணைச் சிறப்புடன் விளங்கிற்று? காரணம் உண்டு, கருத்துள்ளோர் அறிவர் - அறிந்திடும் மாற்றார் கலங்குவர். கை கொட்டிச் சிரித்தனர் தலைக்கனம் கொண்டவர்கள். கரியும் பரியும் மந்தை மந்தையாக உள்ளன. தேர்ப் படையும் காலாட் படையும் பெரிதும் உடையேம், எமது வீரத்தின் எதிர் நிற்பார் எவர் உளர் என்று இறுமாந்து பேசினர். அவன் இளைஞன், எது செய வல்லான் - என்று உளையக் கூறினர் - இளைஞனாக இருந்த தமிழ்க் காவலனை - பேரரசர்கள். இளைஞன்தான் - எனினும் ஏச்சும் பேச்சும் கேட்டாக வேண்டுங்கொல்! படையின் தொகை மிகுதியாக இல்லாதிருக்கலாம், ஆயின் அதனைக் காட்டி என் வீரத்தைப் பழிக்கப் போமோ? பேரரசராயின் ஆகுக. அதுபற்றி அவர் சிற்றரசர்தமைச் சீரழிவாகப் பேசுதல் முறையோ, - என்றெல்லாம் இளஞ்சீய மன்னனான அத்தமிழன் எண்ணினான். உள்ளம் வெதும்பிற்று, அது வீரத்தைக் கருக்கிவிடவில்லை - வீரம் கொழுந்துவிட்டெரிந்தது. வஞ்சினம் கூறினான். நாவடக்கமற்று எனை இழித்தோரை எதிர்த்து அறிவு புகட்டுவேன். களத்திலே அவருடன் போரிட்டு, அவர்தம் முரசு பறிப்பேன். அங்ஙனம் யான் செய்யாதொழியின், கொடுங்கோலன் என்ற வசையைத் தாங்கித் தாழ்வுறுவோனாகக் கடவேன். புலவர் பாடிடத் தகுதிபெறாத நாட்டுக்குரியோன் என்ற இழிநிலை பெற்றவனாகக் கடவேன். இரப்போருக்கு ஈந்திடும் நிலையையும் இழந்தவன் என்ற ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்கானவன் ஆகக் கடவேனாக - என்றெல்லாம் வஞ்சினன் கூறினன். நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் இளையன் இவனென உளையக் கூறிப் படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையும் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாமென்று உறுதுப்பு அஞ்சாது உடல்சினஞ் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை என்று. இதுகளுமன்றோ ஓர் கட்சி நடாத்துகின்றன! அன்னக்காவடிகளுக்கு அரசியலில் என்ன வேலை? இந்து உண்டோ? மித்திரன் உண்டோ? பேழை உண்டோ? பெரும் பண்ணை உண்டோ? யாது உளதெனக் கழகம் கண்டனர் - என்று சிறுசொற் சொல்லிய சிறு மதியாளர்கட்குப் பாடம் கற்பிக்க விரும்பினர் தம்பி நமது கழகத் தோழர்கள் - அதுதான் திருச்சி மாநாடு. எமது கழகம்பெற்றுள்ள ஏற்றம் எத்தகையது என்பதை மாற்றாரே, மதியற்றாரே உணரும் விதத்தில், திருச்சியில் வெள்ளம்போல் தமிழர் கூட்டமொன்றை, வெற்றிகொள் வீரர் கூட்டமொன்றைத் திரட்டிக் காட்டிடுவோம். காணீர். அங்ஙனம் செய்யாதுபோயின், எமக்கென ஓர் கொடி வேண்டோம், கழகம் வேண்டோம், குறுந்தடிகொண்டோர் காலடி வீழ்ந்தழிந்து போவோம் - என்று, தம்பி, நீயும் நானும் சேர்ந்து வஞ்சினம் கூறினோம். சினங்கெழு வேந்தர், சிறுசொற் கூறினர். வஞ்சினம் கூறினன் வேந்தன்; இளையன்!! யாது கூறினன்? அருஞ்சமம் சிதையத் தாக்கின் முரசமொடு ஒருங்கு அகப்பட்டே (எ)ன் ஆயிற் பொருந்திய என்னிழல் வாழ்நர் சென்னிழல் காணாது கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பி குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவன் ஆக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் நிலவரை புரப்போர் புன்கண் கூர இரப்போர்க் கீயா இன்மையா னுறவே! (புறநானூறு 72) இது அந்த வீர மன்னன் கூறிய வஞ்சினம். இழித்தும் பழித்தும் பேசிடும் அரசர் தம் முரசு பறிப்பேன் - அஃது நான் செய்யாதுபோயின், கொடுங்கோலன் என்று இகழட்டும் என்னை, புலவர் பெருமக்கள் என் நாட்டைச் சிறப்பித்துப் பாடாது இருக்கும் இழிவைப் பெறுவேனாக! - தம்பி, - தமிழ்ப்புலவரிடம் பொருள் கேட்டுப்பெற்று இன்புறுவாய். இளையோன், பெரும் படையற்றோன் என்று கூறி நகைத்தோர் செயல்கண்டு வஞ்சினம் கூறினன் ஓர் தமிழ் மன்னன் - வீரன் - இளைஞன் - என்பதையும் - அவன் வஞ்சினம் - கூறியதற்கொப்பச் செரு வென்றனன், போரில் வெற்றி பெற்றனன் என்பதை மட்டுமே, மாந்தரை நிறையுடையோர் ஆக்கத்தக்க தமிழ் இலக்கியத்தில் குறையறிவு மட்டுமே கொண்ட நான் உனக்கு எடுத்துக்காட்ட முடியும் - சுவையும் பயனும் மிகுதியும் பெறத்தம்பி, நமது நாவலரை நாடு! வஞ்சினம் கூறினன் முரசு பறிப்பேன் என்று. பகை முடித்தனன் களத்தில் நின்று - அன்று - தமிழ் மன்னன். இன்று, நம்மை ஏதுமிலாதார், இல்லாமையால் இடர்ப் படுவோர், இலட்சியம் பேசுவர் எனினும் அதிலே வெற்றி காணும் வசதிகளற்றோர் என்று இறுமாந்து கூறினர், பொருள் உடையாரும், புகழ் சுமப்போரும், பதவிபிடித்தோரும். நாமும் வஞ்சினம் கூறினோம். திருச்சி மாநாடு, நமது வெற்றியாகத் திகழ்ந்தது. தம்பி! கேட்டால் உடல் புல்லரித்துப் போகும், இதோ நான் தரப்போகும் செய்தி கேட்டு. வஞ்சினம் கூறிச் செருவென்ற அம்மன்னன் யார் அறிவாயோ? தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் நமக்குக் கிடைத்திருப்பவரும் நெடுஞ்செழியன். வஞ்சினம் கூறினோம்; வெற்றி கண்டோம் திருச்சியில். ஆயின், களத்திலே நின்றுள்ள நாம், சிறு சொற் சொல்-ய சிறு மதியாளர் அகலக் கண் திறந்து ஆச்சரியப் படத்தக்க வெற்றியை, மகத்தான மாநாடு கூட்டிக்காட்டியதன் மூலம் பெற்றோம் - ஆனால், நாம் பெறவேண்டிய வெற்றி வேறொன்றுளது. அதனைப் பெறுதற்கே நமக்கோர் நெடுஞ்செழியன் கிடைத்துள்ளார். நாமும் நமது கழகத்தை அவரிடம் ஒப்படைத்திருக்கிறோம். தமிழ் மரபறிந்த அவர் தலைமையில் சிறுசொற் கூறிடும் சிறுமதியாளர்களின் கொட்ட மடக்கி, மாங்குடி மருதன்போன்ற பெரும் புலவர்கள் பாடிப் போற்றிய இத் திருவிடத்தை வடவர் பிடியி-ருந்து விடுவித்து, வாகைசூடத்தான் போகிறோம். தம்பி, விழி திறந்திருக்கட்டும் - வாள் கூர்மையாக இருக்கட்டும் - தாயகத்தின் தளையினை உடைத்திடும் அறப்போருக்கு அஞ்சா நெஞ்சமும் நமது பொதுச் செயலாளரின் அழைப்புக் கிடைத்ததும், நெடுநல்யானையும் தேரும் மாவும் கொண்டு இறுமாந்து கிடந்த மன்னர்களைச் செருவென்றதுபோல, பண பலம், பதவி பலம், பத்திரிகைப் பலம் படைத்தோரை, நாம் நமது தூய உள்ளத்தில் துளிர்த்தெழும் அறப்போர்த் திறத்தால், வீழ்த்துவோம் - விடுதலைபெற்ற தாயகம் கண்டு வாழ்த்துவோம். திருச்சி மாநில மாநாடு, நமக்கு இந்த வீர உணர்ச்சியை அளித்திருக்கிறது. எல்லாம் உன் அறிவாற்ற-ன் விளைவு! உன் உழைப்பின் பலன்! உன் உள்ளத்தில் ஊற்றெடுத்துவரும் உணர்ச்சியின் காரணமாகக் கிடைத்தது. தம்பி! உன் ஆற்றல் வளரட்டும் - புகழ் ஓங்கட்டும் - வாழ்த்துகிறேன் உன்னை. அண்ணன், 27-5-1956 வெகுண்டெழுந்தான் பிள்ளை -1 பெரியார் - மாநில மாநாட்டில் தேர்தல் முடிவு. தம்பி, நான் உண்மையைப் போல் கர்ணகடூரமாய் இருப்பேன். நீதியைப்போல் நெறி பிறழாதிருப்பேன். ஒப்புக்கு நடிக்கமாட்டேன், உண்மையாகவே உழைப்பேன். இரண்டுபடப் பேசேன், சாக்குப் போக்குக் கூறேன். அதனால் நான் கூறுவதற்கு யாரும் செவி சாய்க்காமலிருக்க முடியாது! ஏ! அப்பா! எவ்வளவு ஆணவம் ஒலிக்கிறது - இவர் பேசுவாராம், கேட்டே திருவேமாமே! எத்துணை அகம்பாவம்! செவிக்கு இனிமைகூட இருக்காதாம் - எனினும், இவர் பேசுவதை ஒருவரும் தள்ளிவிட முடியாதாமே! அதென்ன "மாய சக்தி’ யோ! பேசட்டும், பேசட்டும், நா உலரும் வரையில் பேசிக் கொண்டே இருக்கட்டும் - நாம் இவர் பேசுவதை எப்படியும் கேட்டே தீருவோம் என்று நம்பிக்கொண்டு, நப்பாசை கொண்டு பேசிப் பேசிப் பிறகு கேட்பாரில்லை, மதிப்பார் இல்லை என்பதை உணர்ந்து, வெட்கித் தலை குனியட்டும்; வேதனைப் படட்டும். இவர் பேசுவாராமே! கேட்டே தீருவாராமே! பார்ப்போம் பார்ப்போம். குழலாயினும், யாழாயினும், காதலைக் குழைத்தளிக்கும் கீதமேயாயினும், விருப்பமில்லை என்றால் கேளாமல், பலர் தம் அலுவலைக் கவனித்துக்கொண்டு போய்விடக் காண்கிறோம். வேலை மிகுதியிருந்தாலோ, வேதனை ததும்பிடும் நிலையிலிருந்தாலோ, வித்தகர் பேசுவதைக்கூட வேம்பென ஒதுக்கிடக் காண்கிறோம் - இகத்திலே இன்பமும் பரத்தில் பேரின்பமும் பெற்றிடும் மாமந்திரமோ இவர் எடுத்துரைக்கப் போவது! எப்படியும் செவியில் வீழ்ந்து தீருமாமே! ஆளைப்பார் ஆளை! கர்த்தர் அனுப்பிய தூதுவரோ, நாம் கவனியாம லிருந்தாலும், தானாக உள்ளத்தை ஈர்த்திட! கர்ணகடூரமாகவே பேசுவாராம் - காது கொடுத்தே தீருவோமாம்!! தம்பி! நான் பேசுவேன், நீங்கள் கேட்டே தீருவீர்கள் என்று கூறிய ஒரு பெரியவர் பற்றி, பேதைகளல்ல - மேதைகளென்ற புகழணி கொண்டோர்கூட இவ்விதம்தான் ஏளனம் பேசினர். எனினும் இறுதியில், அவர்களல்ல, உள்ள உறுதியைத் தம் உரை மூலம் காட்டிய வில்லியம் லாயிட் காரிசன் எனும் உரிமைப் போரார்வம் கொண்ட பெரியவர்தான் வென்றார்! அமெரிக்கா அவர் பேச்சைக் கேட்டது - எழுத்தைப் படித்தது - எண்ணத்தை ஏற்றுக்கொண்டது - சட்டமே இயற்றிற்று அவர் கோரிக்கையை நிறைவேற்ற! இத்தனைக்கும் அவர் பிறப்பு - இறப்பு என்பதிலே தொக்கி நிற்கும் மர்மத்தை விளக்கிடும் தத்துவம் பேசவில்லை. மரணத்துக்குப் பின் ஜீவன் உண்டா! இங்கு மரித்தவன் பிறகு எங்கேனும் செல்கிறானா? அங்ஙனமாயின், எங்ஙனம்? வடிவம் உண்டா? தனியானதோர் வாழ்வு உண்டா? என்ற கேள்விகளைக் கிளப்பி விடைகளை அளித்திடும் "வித்தை‘யைச் செய்து காட்டினவரல்ல, அருளாளரல்ல!! மனித உரிமை மதிக்கப்பட வேண்டும், மிதிக்கப்படக் கூடாது என்ற ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளம் படைத்த ஒரு சாமான்யர்! அமெரிக்காவில் தலைவிரித்தாடிய "அடிமை வாணிபத்தை’ - அடிமை முறையைக் கண்டித்தவர் - மக்களிடம் பேசினார், செவியில் விழவில்லை - இதழ்களில் எழுதினார், எவர் கண்களிலும் படவில்லை! முச்சந்திகளில் நின்றுகொண்டு சத்தற்ற விஷயம் பற்றிச் சுவை சொட்டச் சொட்டப் பேசி இரசித்திடும் வம்பளப்போர் கூட, இவன் யாரடா வரட்டுக் கூச்சலிட்டுக் கொண்டு வாட்டி வதைக்கிறான்! - என்றுதான் எள்ளி நகையாடினர். மேதைகள் இலக்கியச் செறிவு குறித்தும், இலக்கணம் அளிக்கும் வடிவழகு பற்றியும் பேசினர் - எழுதினர் - வாதங்கள் புரிந்தனர்! கடைக்கண்ணின் பொலிவுக்கும் கட்கத்தின் வலிவுக்கும் தம் எழுத்துத் திறமையைக் காணிக்கையாக்கி, படிப்போரின் இதயங்களைத் தடவி மகிழ்ந்தனர் கதாசிரியர்கள். வணிகர்கள் கடலிடை உள்ளதையும், காட்டிடை காணப்படுவதையும், மலைபடு பொருளையும், மக்கள் தம் உழைப்பால் உருவம் பெறுவதையும், நானிலமெங்கும் கொண்டும் கொடுத்தும், இலாபம் திரட்டி மகிழ்ந்தனர். ஆட்சியாளர்களோ, சட்டம் சரியாமலும், சமூகத்தின் அமைப்பு மாறாமலும் இருந்திடத் தம் ஆற்றலைப் பயன்படுத்தினர். ஒருவரேனும், மிருகமாக்கப்பட்ட மனிதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, ஏனென்றும் கேட்கவில்லை! பட்டியில் மாடென அடைத்து வைத்தனர். பன்றிகளுக்குப் போடும் தீனியை அவனுக்கு வீசினர். அவனை அடிமை கொண்டவன், ஆயாசப்படுகிறான், அவன் துள்ளித் துடித்துக் கீழே துவண்டு விழவில்லையே, சவுக்கடி கொடுத்தும் என்று. தாயை மகனிடமிருந்து, மனைவியைக் கணவனிடமிருந்து, குழந்தையைத் தாயின் அணைப்பிலிருந்து பிரித்து விற்கிறான் “எஜமானன்’ - ஒருவரும்,”ஐயோ பாவம்!’’ என்று கூறவில்லை! பாதிரிகளே இது பாபம் என்று கூறவில்லை! ஞாயிற்றுக்கிழமை ஆலயம் வரவில்லை - பாபம்! பாதிரியாருக்குக் காணிக்கை தரவில்லை - பாபம்! ஆலயமணி வாங்க "தர்மம்’ தரவில்லை - பாபம்! இப்படிப்பட்ட "பாபம்’ பற்றித்தான் - உள்ளம் உருகும் வண்ணம் பேசி வந்தனர் - பாதிரிமார்! இந்தச் சாமான்யன்தான் கேட்டான், "மனிதனை மிருக மாக்குகிறீர்களே! மாபாவிகளே! மாதாகோயில் சென்று மண்டியிடுகிறீர்களே! கர்த்தரிடம் கருணையை எதிர்பார்க்கிறீர்களே! அக்ரமமல்லவா!! அநியாயமல்லவா!’ என்றெல்லாம் பேசினான்; அலட்சியப்படுத்தினர். அப்போது தான் காரிசன் கூறினான், நான் உண்மையைப் பேசுகிறேன் - எனவே என் பேச்சு உங்கள் செவியில் விழுந்தே தீரும் என்று! ஆணவம் பிடித்தவன் என்று இடித்துரைத்தனர் முதலில் - பிறகோ காரிசன் சொன்னபடிதான் நடந்தது - அவன் பேச்சு, அனைவர் செவியிலும் விழுந்தது - வெற்றியும் கிடைத்தது. தம்பி! அமெரிக்காவுக்கு உன்னை அழைத்துச் சென்று இதனைக் காட்டுவதற்குக் காரணம் - நெடுந் தொலைவிலே உள்ள காட்சியாகையால் கவர்ச்சி தெரியும் என்பதற்காகத்தான்! எத்துணை நம்பிக்கையுடன் பணியாற்றி, வெற்றி பெற்றான்! இஃதன்றோ, அறிவாற்றல்! - என்று பாராட்டுவர், எவரும்! ஆனால் தம்பி, இதோ இங்கு, நாம் பேசினோம் - கேட்க மறுத்தனர் - ஏசி ஒழித்திட முனைந்தனர் - ஏளனம் பேசினர் - எரிச்சல் மூட்டினர் - எனினும், நாம் கூறினோம் - நாங்கள் பேசுகிறோம் - அது உங்கள் செவியில் விழுந்தே தீரும் - ஏனெனில் நாங்கள் உள்ளொன்றும் உதட்டிலொன்றும் கொண்டு பேசவில்லை - எமது "மேதை’யை விளம்பரப்படுத்திக் கொள்ளப் பேசுகின்றோமில்லை - உண்மையை உரைக்கிறோம், எனவே, அதனை நீவிர் நீண்ட காலம் அலட்சியப்படுத்திவிட முடியாது - எமது பேச்சு உமது செவியில் விழுந்தே தீரும் என்றோம். சூளுரைத்தோம் - வெற்றியும் பெற்றோம். இதுபோது நமது சொல் புகாத செவியில்லை - நமது பேச்சு பற்றிச் சிந்திக்காத மனம் இல்லை - நம்மைப் பற்றிய பேச்சு எழாத பட்டியில்லை - நமது வளர்ச்சி குறித்துக் கணித்திடாத கட்சி இல்லை!! மாநில மாநாடு, இதனை நமக்கு மிக நன்றாக எடுத்துக் காட்டிற்று. உள்ளத்தில் உறுதி கொண்டால், வாக்கினிலே வலிவும் பொலிவும் ஏற்பட்டே தீரும் - என்பதனை எடுத்துக்காட்டும் விதமாக, மாநில மாநாட்டிலே பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி நமது தோழர்கள் பேசினர் அல்லவா! அது கேட்டு மகிழாதார் யார்? மாநில மாநாட்டுக்கு வந்திருந்த மாற்றுக் கட்சிக்காரர் கூட, மகிழ்ந்தனர் - அது வெளியே தெரிந்து விடக்கூடாதே என்பதற்காக, வெகுபாடுபட்டனர். அனைவருக்கும் ஆனந்தம். ஆனால் நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, தம்பி, அது அலாதியானது. நீ அறிவாய், இந்த நாடும் அறியும். நான் பதினைந்து ஆண்டு காலத்துக்கு மேலாக, பெரியாரிடம் பணி யாற்றியவன் என்பதை அப்போதெல்லாம், அவர் கூறுவார் - யார் இருக்கிறார்கள், யோக்யதையுடன்? எவரை நம்பி எந்தக் காரியத்தை ஒப்படைப்பேன்? எவன் என் மனம் திருப்தி அடையும்படி நடந்துகொள்கிறான் - என்றெல்லாம் கேட்பதற்கு மெத்த வருத்தமாக இருக்கும் - சில விநாடிகளுக்குப் பிறகு, வெட்கமாக இருக்கும் - நாட்கள் செல்லச் செல்ல வேதனையே கொடுக்கும். இவ்வளவு கஷ்டப்படுகிறார் - நாள் தவறாமல் பயணம் - நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுகிறார் - ஓய்வின்றி உழைக்கிறார் - இருந்தும், ஒருவர் கூட "யோக்யதை’யைப் பெறவில்லையே - பரிதாபம் - உழைப் பெல்லாம் வீணாகிப் போகிறதே என்று வேதனையாக இருக்கும். பிறகு என்னைப் பற்றிய எண்ணம் பிறக்கும் - சே! நமக்கு அந்தப் பரிபக்குவம் ஏற்படவே இல்லையே என்று வெட்கம் பிறக்கும். அப்படிப்பட்ட "நிலை’ பெரியாருக்கு! இப்போதும் அதிலே மாறுதல் ஏதும் ஏற்பட்டு விடவில்லை என்பது ஒரே வழி அவர் அறிக்கைகள் அறிவிக்கின்றன. நான், மாநில மாநாட்டிலே "கர்வம்’ கூட அடைந்தேன்! எத்தனை எத்தனை ஆற்றலுள்ள இளவல்கள், பொறுப்பறிந்த பெரியவர்கள், அஞ்சா நெஞ்சு படைத்த வீரர்கள்! ஆறேழு ஆண்டுகளிலே அமைந்துவிட்ட அணிவகுப்பு! மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் - அமைக்கவேண்டிய கொட்டகையின் அளவு குறிப்பதிலும், கொட்டகைக்கு ஏற்ற கழிகள் பொறுக்குவதிலும், கழிகளுக்கேற்ற குழிகள் பறிப்பதிலும் அதற்கான உழைப்பை உற்சாகத்துடன் தந்திடும் தோழர்களின் உள்ளன்பைக் காண்பதிலுமல்லவா ஈடுபட்டிருந்தேன் - நாவலரும் நடராசனும் பிரதிநிதிகள் கூட்டம் நடத்துவதிலும் தீர்மானங்கள் குறித்து ஆய்வுரை நடத்துவதிலும் ஈடுபட்டிருந்த நேரத்தில். எனக்கு, எந்தக் காரியம் குந்தகப்பட்டு விடுமோ - அது எப்படிக் குலைந்து விடுமோ - நமது கண் பார்வை விழாததாலோ, கை படாததாலோ எந்தச் செயல் செம்மையற்றதாகிவிடுமோ என்ற கவலையே எழவில்லை - எல்லாவற்றினையும் பொறுப்புடன் கவனித்துக்கொள்ள, நிரம்பத் திறன் படைத்தவர்கள் நமது கழகத்திலே இருக்கிறார்கள் - என்ற நம்பிக்கை காரணமாக நமது மாநில மாநாட்டிலேயே, தம்பி, பொதுத் தேர்த-ல் நமது கழகம் ஈடுபடவேண்டுமா, வேண்டாமா என்பதல்லவா மிக முக்கியமான பிரச்சினை - கேட்டுப் பார், தம்பி, அது குறித்தேனும் நான், நமது கழகத்தின் காவலர்களிடம் கலந்து பேசினேனா - ஜாடை காட்டினேனா? என்று இல்லை. அவ்வளவு நம்பிக்கை எனக்கு, ஓட்டுச் சீட்டுகளைப் போடுவதற்கான முறை என்ன என்பது குறித்து அவ்வளவு அலட்சியம் என்பதல்ல - நமது நாவலரும் பிறரும் யோசித்துக் கொண்டிருந்திருப்பார்கள் என்று நான் எண்ணுகிறேன். - நான், ராபியும் தர்முவும், பராங்குசமும் வாணனும், பூஞ்சோலையும் மற்ற நண்பர் களுடனும் கூடிக்கொண்டு, உன் கண்ணுக்கு விருந்தாகவும் கருத்துக்கு உவகையாகவும் அமைந்திருந்த சிங்கங்களைக் கவனித்துக் கொண்டிருந்தபோது! மணமகன் எழுந்திருந்து மண அறைக்கு வருவதற்கு முன்பே, துயிலெழுந்து மேளக்காரர் எங்கே? பந்தல்காரரைக் கூப்பிடு - சமையற்காரர் எங்கே? பூமாலைக்காரர் எங்கே பார்? என்று கேட்டு, சருகான உடல் இருப்பினும், சிட்டு எனச் சுற்றி வந்து வேலை பார்த்து, அதனாலேயே பெருமகிழ்ச்சிக் கொள்கிறாரே வயோதிகர் - மணமகனைவிட அதிகமான அளவு அலாதியான மகிழ்ச்சி பெறுகிறாரே - அது போல் எனக்கு, இந்த மாநில மாநாட்டிலே மகிழ்ச்சி! என் மகன் திருமணம் இரண்டோர் ஆண்டுகளுக்குப் பிறகு நடத்த வேண்டும் - இதேவிதமான களிப்பு அப்போது நான் பெறுவேன். என்னால் பெற முடிந்த இந்தக் களிப்பினை - நான் உடனிருந்து பணியாற்றும் நண்பர்களிடம் நம்பிக்கை கொள்வதால் அவர்தம் திறமைகளுக்குத் தக்க வாய்ப்புகளை அவர்களுக்கு அளித்திடும் பொறுப்பினை நிறைவேற்றியதால் நான் பெற்றிடும் இந்தப் பேரானந்தத்தை - பெரியார் பெற மறுத்து விட்டாரே - என்னே இதன் காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது. இன்று நமது கழகத்தில் இருந்தவர்களிலே மிகப் பெரும் பாலானவர்கள், நான் முன்னமோர் சமயம் உரிமையுடனும் உவகை பொங்கவும் கூறியபடி, மீரான் சாயபு தெருவில் வளர்ந்தவர்களே! அவர்களிடமெல்லாம் இன்று காணப்பட்டு, கழகத்தின் மூலம் நாட்டுக்குப் பயன்பட்டு எனக்குக் கழிபேரு வகையூட்டும் இந்த ஆற்றல் - முன்பு இல்லையோ அடியோடு எனின், எவரும் அங்ஙனம் கூற இயலாது. எல்லா ஆற்றலும் இருந்தது. ஆனால், யாவும், குடத்திலிட்ட விளக்காய் இருந்தது. இன்று மூன்று இலட்சம் மக்கள் கூடுகிறார்கள் - மூதறிஞர்கள் கேட்டுப் பாராட்டத்தக்க பேச்சும், வீரர்கள் கண்டு உறவு கொண்டாடத்தக்க செயலும் விளங்குகிறது - திருச்சியில் இந்த ஆற்றல் படையினர் நடாத்திய மாநாடு, தமிழகமே போற்றத்தக்க திருவிழாவாயிற்று! தம்பி! இவ்வளவுக்குப் பிறகு - நாம் என்ன ஆனோம் என்கிறாய்? வீழ்ச்சியுறும் தமிழகத்தில் எழுச்சி கண்டோம்! விசை ஒடிந்த தேகத்தில் வன்மை கொண்டோம்! தாழ்ச்சியுறும் நிலை ஒழிப்போம் - தாசராகோம் - தன்னரசு காண்பதற்கே தகுதி பெற்றோம். இவ்விதமெல்லாம் இசை கிளம்பும் உன் உள்ளத்தில் - செல்வா பாடிக் கேட்டால் செந்தேனாக இனிக்கும் - கஸ்தூரி பாடினால் இசை மணக்கும் என்றெல்லாம் கூறுவாய். ஆனால், மாநில மாநாட்டுக்குப் பிறகு நாம் என்ன ஆனோம் என்று நமது பணியினைப் பிணியென்றெண்ணி விலக்கிவிட்ட நண்பர் கூறுகிறார், அறிவாயா! நாடே வியந்தது! நல்லோர் கொண்டாடினர்! நான்கு நாட்கள் கருத்துச் சுவை பெற்றோம்! தித்திக்கும் பேச்சுமட்டுமல்ல, திட்டவட்டமான தீர்மானங்கள் நிறைவேற்றினோம்! திருப்புமுனை! - என்றெல்லாம் நீ பூரிக்கிறாய். ஆனால், மாநில மாநாடு என்ன செய்திருக்கிறது என்பதை எடுத்தியம்பியுள்ளார் ஒரு ஆராய்ச்சியாளர் - கேள்! பதறமாட்டாய் என்பதை நான் அறிவேன் தம்பி, ஏனெனில் இதுபோன்ற பல கேட்டுக் கேட்டுப் பழகிப்போயுள்ள நிலை அல்லவா உனக்கும், எனக்கும். அந்த நண்பர் கூறுகிறார், மாநில மாநாட்டுக்குப் பிறகு, நாம் செத்து விட்டோம் என்று. தம்பி! சிரிக்காதே! சிரமப்பட்டு சிந்தனையைச் செலவிட்டு அவருக்கு இயல்பாக உள்ள நல்ல இதயத்தில் வேண்டுமளவு நஞ்சு கலந்து கொண்டு கூறுகிறார், செத்துவிட்டார்கள் என்று! அடே அப்பா! பய, என்னென்ன விதமா ஆடுவான், பாடுவான் - எதைக் குறித்தும் கவலை கொள்வதில்லை - இனி முடியுமா அப்படி ஆடியோட, திமிர் ஒழிந்து போச்சு, இனி ஆசாமி, பெட்டிப் பாம்பாகிவிடவேண்டியதுதான். ஆட்டம் பாட்டம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்தே போகும்! இனித்தானே தெரியும் அவனுக்கு! மாட்டிக் கொண்டு திண்டாடப் போகிறான்!- இவ்விதம் முதியவர்கள், கடுகடுத்த முகத்துடன் அல்ல, சிரிப்புப் பொங்கி வழியும் நிலையில் சொல்லுவார்கள், யாராவது ஒரு வாலிபனைக் குறித்து. என்ன இது, இந்தக் கிழவர் இப்படி எல்லாம் அந்த வாலிபனைத் தாக்கிப் பேசுகிறாரே, என்றுகூட எண்ணிடத் தோன்றும். தாத்தா! ஏன் இப்படி எல்லாம் சொல்கிறீர்கள் என்று கேட்டால், முதியவர் நமது முதுகில் தட்டியபடி சொல்வார், தெரியாதா, விஷயம், நம்ம ஆடியபாதத்துக்குக் கலியாணம் ஆகிவிட்டது! கால்கட்டுப் போட்டாச்சி! இனி ஆட்டம் பாட்டம், அலட்சியம் எல்லாம் அடங்கித்தானே போகும்!- என்று கூறுவார். நாம் செத்துவிட்டோம் என்று கூறினவர் நோக்கம் என்ன என்பது கிடக்கட்டும் - அவருடைய உள்ளம் நற்பண்புகளுக்கு உறைவிடம் என்பதைப் பழகி அறிந்து மகிழ்ந்தவன் நான் - இப்போது அரசியல் “ரசாயனம்’ என்ன மாறுதல் விளைவித்து விட்டதோ அறியேன் - என் நினைவில் அந்தப் பழைய பண்பாளர் மட்டுமே இருக்கிறார் - இன்று அவர் எந்த நோக்கத்தோடு, நாம் செத்துவிட்டோம் என்று கூறினார் என்பது கிடக்கட்டும் - அவருடைய பேச்சை, திருமணமான ஆடியபாதத்தை முதியவர் மகிழ்ச்சி பொங்கும் நிலையில் அவருக்கே உரித்தான”பாஷை’யில் பாராட்டினாரே, அதற்கொப்பானதாகவே நான் கொள்கிறேன். 17-18-19-20-இன்ப நாட்கள் என்கிறாய் நீ? ஆமாம் என்கிறது நாடு! உண்மை என்கிறேன் நான்! மாநில மாநாடு - மணம் நிறைந்த பூந்தோட்டம் - இல்லை, இல்லை, கனிகுலுங்கும் சோலை - அல்ல அப்பா, அது காவியப் பூங்கா - என்றெல்லாம் பாராட்டிடும் பல்லாயிரவரைக் காண்கிறேன். பெற்ற முத்தத்தை எண்ணி எண்ணிச் சுவை பெறும் காதலன் பெறும் இன்பம் எத்தன்மையது என்பது கூடப் புரிகிறது. பழமுதிர் சோலை அல்ல - இது பாசறை - என்கின்றனர் பல்லாயிரவர்! அதற்கென்ன ஐயம் - என்கிறேன் நான். இப்படி நாமெல்லாம், மாநில மாநாடு, மலர்ச்சோலை, பழச்சோலை, பாசறை, பல்கலைக்கழகம் என்றெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கிறோம் - மாநில மாநாடு மரணப் படுக்கை என்பதை அவர் கண்டறிந்து, இந்தப் பேருண்மையை உலகு இழந்துவிடக் கூடாதே என்ற ஆவலால் தாக்குண்டு, கூறியே விட்டார், மாநில மாநாடு முடிந்தது - இவர்களும் மடிந்தனர் - என்று. இவர், இருபதாம் தேதியுடன் நாம் இறந்துபட்டோம் என்று கூறிவிட்டார். வேறோர் தெளிவாளர், ஆட்சியாளர், காமராஜர் கூறுகிறார், இல்லை, இல்லை, இவர்களுக்கு மரணம் இனித்தான் வரப்போகிறது - விரைவில் - என்று கூறுகிறார். முன்னவர், "டாக்டர்’ பின்னவர் ஆரூடக்காரர்! முன்னவர், ஜில்லிட்டுப்போய் விட்டது - நாடி பேச வில்லை - செத்தார்கள் என்று கூறிவிட்டார். பின்னவரோ ஜாதகத்தைப் புரட்டிப் பார்த்தோ, குருவி கூறுவது கேட்டோ, செப்புகிறார், இவர்கள் துள்ளுகிறார்கள் விரைவில் மடியப் போகிறார்கள் என்று. ஐயா டாக்டரே! அருமை அமைச்சரே! நாங்கள் செத்துப் போகவுமில்லை, சாகப்போவதுமில்லை என்று நாம் கூறவா வேண்டும்! அவர்கள்தான், பாபம், மாநில மாநாட்டுச் செய்திகள் கேட்டு, சித்தம் குழம்பி, ஏதேதோ சத்தமிடுகிறார்கள் என்றால், மகத்தான வெற்றிபெற்று, அந்த விருந்தின் சுவையைக் கண்டு மகிழ்ந்த நிலையில் இருக்கும் நாமுமா அவர்கள் போல் அர்த்தமற்றதைப் பேசிக் கொண்டிருப்பது! வேண்டாத காரியம்! வேறு வேலை நிரம்ப இருக்கிறது! ஆனால், அவ்விருவரும் ஏன் கூறுகின்றனர் இதுபோல்! நாம் தேர்தலில் ஈடுபடுவது என்று தீர்மானித்திருக்கிறோ மல்லவா - அதனால். அந்தத் தீர்மானமே நமது கழகத்தைச் சாகடித்துவிட்டது என்கிறார் ஒருவர். அந்தத் தீர்மானத்தின்படி நாம் தேர்தலுக்கு நின்றால், அதிலே நாம் ஒழிந்து போய்விடுவோம், கழகம் மடிந்து போகும் என்கிறார் மற்றோர் மதிவாணர். எத்தனை முறை “சாபம்’ கொடுத்துவிட்டோம் - எவ்வளவு ஆரூடம் கணித்துக் கணித்து ஏமாந்துபோனோம்- இனியும் நமக்கேன் இந்த”ஆகாவழி’ என்று அவர்கள் எண்ணவில்லையே என்றுதான் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது கழகம் காண்பதே முடியாத காரியம். கழகம் கருகியே போகும் - விரைவில் கழகம் உடைந்துபோகும் - உட்பகையால். கழகம் செத்துப்போகும் - செயலற்றதால். கழகம் மாண்டொழியும் - எங்கள் போர் வெற்றிச் சேதி கேட்டு. கழகம் கரைகிறது துரோகி தொலைந்துபோவான். விதவிதமாகக் கூறினர், வேளைக் கொன்று கூறினர்; நமது கழகமோ தூற்றலையும் தொல்லையையும் தாங்கித் தாங்கி, உரம் பெற்று விட்டது. இப்போது அவர்களுக்கு ஒரு ஆசை-தேர்தல் நமது கழகத்தைச் சாகடித்துவிடும் என்று. டாக்டர்-ஜோதிடர்-இருவருக்குமே, இப்போதே கூறுகிறேன் - தேர்தல் நமது கழகத்தின் உயிரைக் குடித்திடும் என்று மனப்பால் குடிக்காதீர் - ஏமாற்றம் அடைவீர். தேர்தல் - அதன் இலட்சணம், அதிலே ஈடுபடுவதற்கான முறைகள் - இவைகளை ஆய்ந்து பாராமல், மக்கள் தீர்ப்பளித்திடவில்லை. தேர்தல் - நமது கழகத்துக்குப் புதியதோர் பொறுப்பு - தவிர்க்க முடியாத கடமை. திராவிட முன்னேற்றக் கழகம், அந்தப் பொறுப்பினை ஏற்றிடும் பக்குவத்தை மட்டுமல்ல, அதன் விளைவுகளுக்கேற்றபடி நிலைமைகளை உருவாக்கிக்கொண்டிடும் திறன் பெற்றிருக்கிறது. அதனை அறியும் வாய்ப்பினை, டாக்டருக்கும் ஜோதிடருக்கும் அளிக்கிறோம் - பிறகேனும்…! ஓஹோ! ஒரு பெருந்தவறு செய்துவிட்டேன். அவர்கள், உண்மையை உணர்ந்த பிறகு போக்கை மாற்றிக்கொள்வார்கள் என்று சொல்ல வாயெடுத்தேன் - அது பெருந்தவறு என்பதை உணர்ந்தேன். அவர்கள் உண்மையை உணராததால் இதுபோலெல்லாம் பேசுவதல்லவே. அவர்களுக்கு உண்மை மிக நன்றாகத் தெரியும். ஆனால், அவர்களை நம்பி உள்ளவர்களுக்கு, ஒரு விதமான உற்சாகமூட்ட வேண்டுமே-போனது போக மிச்சம் இருப்பதையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே, அதற்காகத்தான் இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள். வேறென்ன! "ஸ்டாலின்கிராட் நகரினைத் தாக்கிப் பிடித்திட, இருபது டிவிஷன் விமானங்களை உடனே அனுப்ப உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று கோயபில்ஸ் கேட்டானாம், ஹிட்லரிடம். கடுங்கோபம் கொண்ட ஹிட்லர், “என்ன இது? ஸ்டாலின் கிராட் பிடிபட்டதாகி விட்டது என்று சென்ற வாரம் நாம் வெற்றி விழாகொண்டாடவில்லையா?’ என்று கேட்டானாம்.”ஆமாம்! அது பிரச்சாரத்துக்காக!’’ என்று கோயபில்ஸ் கூறி விட்டுச் சிரித்தானாம். நமது மாநில மாநாடு, தமிழகத்தின் சமீபகால அரசியல் வரலாற்றிலேயே காணக் கிடைக்காததோர் வெற்றி என்பதைக் கண்டும், கேட்டும், உணர்ந்தும், சொச்சம் இருப்போர் சோகமடைந்து, செயலற்றுப் போய்விடக்கூடாதல்லவா, அதற்காகத்தான், "அது என்ன மகாநாடா? தூ! தூ! மரணப்படுக்கை அல்லவா!’’ - என்று பேசுவது, நிலைமை எனக்குப் புரிகிறது - நகைப்பினை அடக்கிக் கொள்வது, சற்றுச் சிரமமாகத்தான் இருக்கிறது. கேவலம் மலம்! அவ்வளவும் மலம்! என்றானாம் வெகுண்டெழுந்தான் பிள்ளை, என்ன? என்ன’ - என்று ஏக்கத்துடன் கேட்டான் வேகாப்பண்ட நாதன். அந்த வெற்றிப் பாதையான் விருந்துண்டான் என்றுதானே ஏக்கமாக இருக்கிறாய்? என்று கேட்டான் வெகுண்டெழுந்தான் பிள்ளை. “ஆமாம்?’’ என்று ஆயாசத்துடன் கூறினான் வேகாப்பண்ட நாதன்.”பைத்யக்காரா! வெற்றிப் பாதையான் பால் பேணியும் பாதாம் அல்வாவும், மல்கோவாவும், மாதுளையும் சாப்பிட்டானே அதைத்தானே பிரமாதமான விருந்து என்கிறாய்’’ என்று கேட்டான் வெகுண்டெழுந்தான் பிள்ளை. அது மட்டுமல்லவே, அவல் பாயாசமாம், அவியலாம், பன்னீர் ஜிலேபியாம், வெண் பொங்கலாம், சித்ரான்னமாம், சீரகச்சம்பா சாதமாம்’’ என்று ஏக்கம் பிடித்தவன் கூறினானாம். "நிறுத்தடா, நிறுத்து; இதைத்தான் பிரமாதமான விருந்து என்கிறாயா? அவ்வளவும் கேவலம் மலம் ஆகப்போவதுதானே! விட்டுத் தள்ளு!’’ என்றானாம், வெகுண்டெழுந்தான் பிள்ளை. கதை, தம்பி! கதை! இவர்கள் போக்கு எனக்கு அளிக்கும் கதை. தம்பி! வெகுண்டெழுந்தான் பிள்ளையின் "பிரசாரம்’ நடைபெறட்டும், கவலையில்லை; நாம் மேற்கொண்டுள்ள பயணத்தில், புதியதோர் கட்டம் பிறந்திருக்கிறது - அதை எண்ணி மகிழ்வோம்; அதற்கான தகுதியைப் பெறப் பாடுபடுவோம், அந்த வேலையில் ஈடுபட வேண்டும். அதற்கு உன் அறிவாற்றலைப் பயன்படுத்து. மாநில மாநாடு தந்துள்ள ஆர்வம், அந்த அறிவாற்றலை வளமுள்ளதாக்கும் - வெற்றிக்கு வழிகோலும். உனக்கென்ன சொல்லித் தரவா வேண்டும்! வெட்டி வா என்றால் கட்டி வரும் தம்பி அல்லவா! அன்பன், 3-6-1956 வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2 சிட்டுக்குருவி கருத்துக் கதை - திருச்சி மாநில மாநாடு - தேர்தலில் போட்டியிடுவது பற்றி பிறர் கருத்து தம்பி, ஒரு கதை சொல்கிறேன், கேள். கருத்தளிக்க இட்டுக் கட்டிய கதை. சிட்டுக்குருவி ஒன்று - அதற்குச் சிறிதளவு அதிகமான குறும்புத்தனமாம். கதைதானே, தம்பி! சிட்டுக் குருவிக்கு குறும்பு இருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டு விடாதே! மரத்திலே உட்கார்ந்து கொண்டிருந்த அதனிடம் ஒரு "காசு’ இருந்தது - அவ்வழியே ஒரு மன்னன் சென்று கொண்டிருக்கக் கண்ட குருவி, குறும்புள்ளதல்லவா, அதனாலே கூவிற்றாம், "எங்கிட்டே ஒரு காசு இருக்கு யாருக்கு வேணும்’’ என்று. மன்னன் புன்னகையுடன் இக்காட்சியைக் கண்டுவிட்டு, மேலால் நடந்தான். விடவில்லை குருவி - கீச்சுச் கீச் சென்று விடாமல் கத்திற்றாம். "எங்கிட்டே ஒரு காசு இருக்கு யாருக்கு வேணும்’’ என்று. வேடிக்கைக்காக மன்னன் "எனக்குத்தான் கொடேன்’ என்று கேட்டானாம். குருவி உடனே, "ஐயயே, ஒரு ராஜாவுக்குக் காசு வேணுமாம், என் காசு வேணுமாம்!’’ என்று கூவிற்றாம். செச்சே! மெத்தக் குறும்புத்தனம் கொண்ட குருவி இது என்று எண்ணிக்கொண்டு, மன்னன் தன் வழி செல்லலானான்; குருவி விடவில்லை. எனக்குப் பயந்து எடுத்தான் ஓட்டம் இதோ ஒரு ராஜா! என்று பாடிற்றாம். போக்கிரிக் குருவியே என்று கோபமாக அல்ல, செல்லமாகக் கூறியபடி, மன்னன் குருவியை ஓட்டினானாம் - குருவி அப்போதும் சும்மா இருந்ததா? அதுதான், இல்லை! "குருவியைக் கொல்ல வருகிற ராஜா பறந்து வா, பார்ப்போம்!’’ என்று சவால் விட்டதாம்! மன்னன் சிரித்தபடி, தன் அரண்மனையை நோக்கி விரைந்தான். குருவி, குறும்புத்தனத்தை விடவில்லை. "எனக்குப் பயந்து ஓடிப் போனான் ஏமாந்த ராஜா’’ என்று கூவிற்றாம். கதை! கருத்து என்ன என்பது புரிகிறதல்லவா? குறும்புக் குணம் கொண்டவர்கள், ஒருவர் எதைச் செய்தாலும், ஏதாவது பேசுவர்; நமது எந்தச் செயலுக்கும் ஏதேனும் ஓர் விஷமத்தனமான பொருள் கொண்டு, ஏசுவர்! அதிலும் அரசியல் உலகில், சொல்லத் தேவையில்லை; வாயைக் கிளறி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதிலே வல்லமை மிக்கவர்கள் ஏராளம். அதிலும் தாமாக ஏதேனும் செய்ய இயலாத நிலையோ அல்லது எதைச் செய்யினும் ஏமாற்றமே காணும் நிலையோ ஏற்பட்டுவிட்டால், சொல்லத் தேவையில்லை, பிறர் செய்யும் எந்தச் செயலும் அவர்களுக்குக் "கேலிக் கூத்தாக’ - வீண் வேலையாக’த்தான் தெரியும்! தி.மு.க. - தானே! பேசுவார்கள் - ஓயாமல் பேசுவார்கள் - ஓராயிரம் விஷயம் பற்றிப் பேசுவார்கள் - எது ஓட்டை, எங்கே ஒடிசல் என்று தேடித் தேடிக் கண்டுபிடித்துப் பேசுவார்கள் - வேறே என்ன செய்வார்கள்? - என்று பேசுவர்! சலிப்போ கோபமோ கொண்டு ஒரு நாலு நாளைக்கு நமக்கேன் வீண் தொல்லை என்று "பேசாமல்’ இருக்கிறோம் என்று வைத்துக் கொள்-அவர்கள் வாய் அடைத்துப் போகும் என்கிறாயா! இல்லை! சீந்துவார் இல்லை இதுகளை. சத்தமே காணோம். மூச்சு பேச்சு இல்லை. முடிந்தது இதுகள் கதை. இவ்விதம் "ஏளனம்’ கிளம்பும். "கத்தத் தெரியும் கரடியாக! கண்டபடி பேச முடியும்! போராட்டம் நடத்துவரோ! அதற்கான ஆற்றல் ஏது இதுகளிடம்?’’ என்றோர் சமயம் பேசுவர்; அந்த ஏளனப் பேச்சால் எரிச்சல் கொண்டு, கிளர்ச்சி, போர், ஏதேனும் துவக்கி ஈடுபடுகிறோம் என்று வைத்துக்கொள், தம்பி. பயல்கள் பரவாயில்லை’ இப்போதுதான், "சூடு சொரணை’ பிறந்தது என்று பேசும் அளவுக்காவது பண்பு காட்டுவார்களோ? அவர்களால் அதுவும் முடிவதில்லை! பூ! பூ! போராம், போர்! எதற்காகப் போர்? தாங்கள் இருப்பதைக் காட்டிக் கொள்ள வீண் ஆரவாரம் விளம்பரத்துக்காக இந்த வீறாப்பு! இவ்விதம் இருக்கும், இயலாமையை மறைத்திட இழிமொழி பேசுவதைக் கலையாக்கிக்கொண்டவர்கள் போக்கு! நமது சிந்தனை தம்பி, இத்தகைய "சிட்டுகள்’ மீது செல்லக் கூடாது! சென்றதில்லை. எனவேதான், நாம் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று வருகிறோம். மாநில மாநாடு நடைபெறப் போகிறது என்று நாம் வெளியிட்டபோது, சிரித்தார்கள் - ஏளனமாக சீந்துவரோ இதுகளை? என்று கேட்டனர். மாநாடு மகத்தானதோர் வெற்றியாக அமைந்திருக்கிறது. 1,10,000 ரூபாய்கள் நுழைவுக் கட்டணமாகக் கிடைத்தது என்று நாம், குதூகலத்துடன் கூற முடிந்தது. நாவலர் இப்போது கணக்காயும் வேலை பார்த்து வருகிறார்; எனவே மேற்கொண்டு, விளக்கம் நமக்கெல்லாம் விருந்தாகக் கிடைத்தவண்ணமிருக்கிறது. நுழைவுக் கட்டணம் 1,12,000 பிரதிநிதிகள் கட்டணம் 5,000 பொதுக்குழு உறுப்பினர் கட்டணம் 1,000 அங்காடி உரிமைக் கட்டணம் 6,000 இத்துடன், மாநில மாநாட்டுக்காக, மாவட்டங்கள் முன் கூட்டியே அளித்த நன்கொடைத் தொகை 28,000 ஆக மொத்தத்தில் வரவு என்ற வகையில் கிடைத்த தொகை 1,52,000 இனி, மாநில மாநாட்டுக் கொட்டகை அமைப்புக்காக நாம் வாங்கிப் பயன்படுத்தி, இப்போது நம்மிடம் உள்ள கொட்டகைச் சாமான்கள் விற்பனை மூலம் 10,000 கிடைத்தாக வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனையும் கூட்டினால், களிப்பு மிகத்தான் செய்யும். மாநில மாநாட்டுக்கு நுழைவுக் கட்டணம் செலுத்தி வருவதுதான், “அறம்’ என்ற உணர்ச்சி பழுதுபடாமலிருந் திருந்தால், அந்த”அறம்’ பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு அனைவருக்கும் இருக்கவேண்டுமல்லவா, அதனை நாம் செம்மையாக நிறைவேற்றியிருந்திருந்தால், குறைந்த அளவு, மேலும் 50,000 கிடைத்திருக்கும். அதனை இழந்தது கழகம். வெளியாரும், வெதும்பிய மனத்தினரும், வேடிக்கை காணும் நோக்கினரும், மாற்றாரும் கூடி நமக்கு இந்தத் தொகை கிடைப்பதைத் தடுத்துவிட்டனர். பரவாயில்லை! இந்த முறை பெற்ற “அனுபவம்’ இனி, இவ்வித”ஓட்டைகளை’ எப்படி அடைப்பது என்ற நுண்ணறிவை, மாநாடு அலுவலில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்குத் தந்திருக்கிறது. அந்த அனுபவம், பல இலட்சத்துக்கு ஈடு - ஐயமின்றி. நான் கூற வந்தது, தம்பி, குறும்பரும் குணக்கேடரும், நாம் மாநில மாநாடு நடத்தும் திட்டம் வெளியிட்டபோது, என்ன கூறினர்…? பெரியதோர் திடல் தேடி அலைந்த காலை, யாது பேசினர்? விரிவான அளவில் பந்தல் அமைத்தபோது, எத்துணைப் பரிகாசம் புரிந்தனர்? "என்ன ஏமாளித்தனமய்யா இதுகளுக்கு? நாடே இங்கே திரண்டுவரும் என்ற நப்பாசையில், இதுவரை எந்த மாநில அரசியல் கட்சியும் அமைத்திடத் துணியாத அளவில் கொட்டகை போடுகிறார்களே! சில ஆயிரம் பேர் வரக்கூடும் - அதுவும் கட்டணம் செலுத்தாமல்! மிச்சமிருக்கும் இடத்திலே எதை அடைக்கப் போகிறார்கள்?’’ என்றல்லவா கேட்டனர். கதையில் வரும் சிட்டுக்குருவி மட்டுந்தானா, அரசியலில் பலர் இருக்கிறார்கள் அதே போக்கில். அவர்களெல்லாம் ஆச்சரியத்தால் தாக்குண்டு, "ஐயய்யோ’ போட வேண்டிய அளவில் வெற்றி கிடைத்தது. இந்த வெற்றியைக் கண்ட பிறகாவது, அவர்கள் ஏளனம் பேசுவதை நிறுத்திக்கொண்டரோ? முடிந்ததா, சிட்டுக் குருவியால்! இப்போது, வேறு முறையில் தமது எரிச்சலைக் காட்டுகிறார்கள். ஒன்றரை இலட்சம் தானா வசூல்! என்னய்யா அநியாயம், வெறும் ஒன்றரை இலட்சம் தானா? ஏதோ அவர்கள் நடத்திடும் மாநில மாநாடுகளிலே ஒன்பதரை இலட்சம் வசூலாவது போலவும், நாம் செல்வாக் கற்றவர்கள் என்பதாலே வெறும் ஒன்றரை இலட்சம் மட்டுமே "வசூல்’ ஆனது போலவும் பேசித் தமது துக்கத்தைத் துடைத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். பரிதாபப்படுவோம் தம்பி, பரிதாபப்படுவோம்! வேறென்ன செய்யலாம்! மன்னன்! தன் வழி தானே சென்றான்! அவனென்ன சிட்டுக்குருவி தன் சீரழிவான குணத்தை விட்டொழித்தா லொழிய வாளாயிருத்தலாகாது என்றா காரியமாற்றினான்! வேடிக்கையான பறவை! விநோதமான போக்கு! என்று எண்ணிச் சிரித்தான். விந்தையான மனிதர்கள்! விசித்திர சித்தர்கள்! என்று நாமும் கூறிவிட்டு, வேறு வேலைகளைக் கவனிக்கவேண்டியது தான்! வேலைதான், தம்பி, நிரம்ப இருக்கிறதே! இது சொத்தை, இது சொள்ளை என்று கண்டிப்பதும், இதை ஒழிக்கப் போர், அதை எதிர்த்துக் கிளர்ச்சி என்று குழப்பம் விளைவிப்பதும், இதன் பெயரை மாற்று, அந்த முறையை அகற்று என்று எதையாவது சாக்காகக் கொண்டு கலகம் உண்டாக்குவதும் - செச்சே! ஒரு அரசியல் கட்சி இப்படியா நடந்து கொள்வது? ஆளும் கட்சி தவறான பாதையில் சென்று மக்களுக்குக் கேடு செய்கிறதென்றால், இக்கட்சியை நீக்கிடும் வாய்ப்புதான், மக்களாட்சி முறையில் இருக்கிறதே, தேர்தல் தானே மாமருந்து, அதிலே ஈடுபட்டு மக்களுக்குப் பணியாற்றாமல் சொல் வீச்சும் சிற்சில வேலைகளில் கல்வீச்சும் நடத்துவதுதான், அழகா, அறமா, அரசியலா! என்றெல்லாம் காமராஜர்கள் கூறி வந்தனர். தேர்தல் என்பதே ஒரு பெரிய "தெகிடுதத்தம்’ ஆக்கப் பட்டிருக்கிறதே, பெரும் பணம் செலவு செய்யக்கூடியவர் களுக்குத்தானே, அவர்களுடைய குணமும் செயலும், குடி கெடுப்பதாயும், நாடு பாழ்படுவதாயும் இருப்பினும், வெற்றி கிட்டுகிறது. நடைபெறுவது ஜனநாயகம் என்று பேசப்பட்டாலும், பணநாயகமல்லவா உண்மையில் காண்கிறோம். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவது எளிதான காரியமல்லவே. உண்மைக்கு ஊறு விளைவிக்க எண்ணற்ற வழிகளைத் திறம்படச் செய்திடும் வன்கணாளர்கள் பொதுவாழ்வுத் துறையிலே நடுநாயகர்களாகி விட்டனரே, என் செய்வது! என்று நாம் கூறினோமென்றால், கை கொட்டிச் சிரித்து கையாலாகாத் தனத்தை மறைத்திட ஏதேதோ பேசுகிறார்கள், மக்களிடம் உள்ளபடி செல்வாக்கு இருந்தால் தேர்தலிலல்லவா அதனை எடுத்துக் காட்ட வேண்டும் என்று பேசிக் கேலி செய்வர். திருச்சி மாநாட்டிலே நாம் தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவு செய்தோம். இது கண்டு, மெத்தச் சரி, இதுதான் முறையான காரியம், ஒரு அரசியல் கட்சி இப்படித்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாராட்டுகின்றனரா? இல்லை! ஒழிந்தார்கள்! அழிந்தார்கள்! தீர்ந்தது! தீய்ந்தது!- என்று சாபம் கொடுக்கிறார்கள். ஓட ஓட விரட்டி அடிப்போம் - உருத்தெரியாமல் ஒழிந்து விடப்போகிறார்கள்! - என்று ஆரூடம் கணிக்கிறார்கள். தேர்தலில் ஈடுபடப்போவதில்லை என்று கூறினால். கையாலாகாத்தனம் என்று கேலி பேசுவது; தேர்தலில் ஈடுபடுவது என்று திட்டமிட்டாலோ சாபம்! வெகுண்டெழுந்தான் பிள்ளையின் மனம் வெதும்புகிறது! என்ன! என்ன! இதுகள் தேர்தலில் ஈடுபடவிடுவதா! ஆஹா! எப்படி இதைச் சகிப்பேன், எவ்வாறு இதனைத் தாங்கிக் கொள்வேன்!- என்று துக்கம் துளைத்திடும் நிலைபெற்று, தூற்றக் கிளம்புகிறார். காரணம், தம்பி, நாம் எந்த முறையில் பணியாற்றும் போதும், அது கழகத்தின் கட்டுக்கோப்பினைச் சமைத்திடும் பணியாகட்டும், கிளர்ச்சி மூலம் கழகத்தின் உரத்தை வலுப்படுத்தும் பணியாகட்டும், கேடு நீக்கிட அறப்போர் தொடுத்திடும் செயலாகட்டும், தேர்தல் களத்திலே ஈடுபடும் காரியமாகட்டும், எதைச் செய்ய முற்பட்டாலும், அதனைச் செம்மையாகச் செய்திடும் வழிவகை கண்டறிந்து, ஆர்வம் ஆத்திரமாகாதபடி பாதுகாத்துக்கொண்டு பணியாற்றுகிறோம், அதன் காரணமாக, நமது சக்திக்கும் மீறிய அளவில் வெற்றிபெறு கிறோமல்லவா, அந்த உண்மை வெகுண்டெழுந்தான் பிள்ளையின் உள்ளத்தை உறுத்துகிறது; திடீரென்று ஓர் திகில் பிறக்கிறது. அந்தத் திகிலிலிருந்து தப்பித்துக்கொள்ள, தீர்த்துக் கட்டிவிடுகிறேன், ஒழித்துப் போடுகிறேன் என்றெல்லாம் நம் மீது கண்டனம் வீசுகிறார். மாநாடு முடிவுற்றதும், மாநில முதலமைச்சர் - காமராஜர் திருச்சிக்கு வந்தார் - அமைச்சர்களுக்கென்றே அமைந்துவிட்ட ஏதோ ஓர் வேலையைக் கவனிக்க. "வந்த வேலையை மறந்து பந்தல் காலைக் கட்டிக்கொண்டு நின்றானாம்’ என்றோர் பழமொழி உண்டு. அதுபோல அவர், எதற்கு வந்தாரோ அதை மறந்தார், எடுத்தார் பாணம், தொடுத்தார் கழகத்தின்மீது! தேர்தலில் ஈடுபடப்போகிறார்களாம்! ஈடுபடட்டும், ஈடு படட்டும்! இவர்களுக்கு அழிவு காலம் இதுதான்! - என்று கூறிவிட்டார். சரி, புதியதோர் ஆபத்து அல்லது சங்கடம் என்ற முறையில் அவர் இதுபோலச் சபிக்கிறார் என்று எண்ணிக்கொள் வோம். ஆனால் அவர் அத்துடன் விடவில்லை. தி.மு.க. தேர்தலுக்கு நிற்கிறது என்பது பற்றி, காங்கிரஸ் காரர்களாகிய நாங்கள் கிலிகொள்கிறோமா! ஏன், கிலி! என்ன நேரிட்டுவிடும்? மந்திரி வேலை போய்விடும் என்றா நாங்கள் பயப்படப் போகிறோம்! போனால்தான் என்ன! மந்திரி வேலை, சட்டை மாதிரி!-என்று அரசியல் பேசுவதாக எண்ணிக் கொண்டு, தமக்கு ஏற்பட்டுவிட்ட கிலியை வார்த்தையாகக் கக்குகிறார்! மிகச் சாமான்யர்கள் நாம்! ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபடுவதற்கான "பேழைபலம்’ அற்றவர்கள்! நாட்டின் பெரிய ஏடுகள் அத்துணையும், ஆளும் கட்சிக்குச் சாமரம் வீசி மகிழ்வன, நம்மை நிந்திப்பதில் இனிமை காண்பன! நமது திட்டமும் கொள்கையும், ஆவலோடு அனைவரும் ஓடிவந்து நமது முகாமில் சேர்ந்துகொள்ளத்தக்க விதமான, மெருகு உள்ளன அல்ல! இந்நிலையில், நாம் தேர்தலில் ஈடுபடப் போகிறோம் என்றதும், ஏன், காமராஜருக்கு பதவி பறிபோகும் என்ற பயம் கிளம்ப வேண்டும்? அதிலேதான் சூட்சமம் இருக்கிறது! நாம் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும், நாமே எதிர் பார்க்காத அளவு வெற்றி கிடைத்து வருகிறது என்பது காமராஜருக்குத் தெரியும். தமிழக அரசியல் குறிப்பேடு, இதனைத் தெளிவாகக் காட்டுகிறது. கண்ணீருடன் பிறந்தோம் - இரண்டோர் முறை கதறித் துடித்து, கைகாலை உதைத்துக் கொண்டு பாலூட்டுவாரும் சீராட்டுவாருமின்றி மடிந்துபடுவோம் என்றனர்! பிழைத்துக் கொண்டோம் - வளர்ந்து வருகிறோம்! உட்பகை மூட்டிவிட்டால் உருக்குலைந்து போவோம் என்று எண்ணி முயன்றனர் - மூக்கறுபட்டனர். கிளர்ச்சிகளில் ஈடுபட்டால், ஆளவந்தார்களின் அடக்கு முறையால் தாக்குண்டு, தாங்க மாட்டாமல் திகைத்துத் திண்டாடி மூலைக்கொருவராக ஓடி ஒளிவோம் என்றனர் - அஞ்சா நெஞ்சும், அறநெறி நின்றிடும் ஆற்றலும் பெற்றவர் நாம் என்பதனை அவனி அறிந்திடச் செய்தோம். மாமேதையாம் ஆச்சாரியார் பேசிப் பார்த்தார், ஏசிப் பார்த்தார், கடுங்கோபம் கொண்டு இதுகளின் கணக்கையே தீர்த்துக்கட்டி விடுகிறேன் என்று முழக்கமிட்டார்! நாம், வளர்ந்து வருகிறோம். இதுபோலத்தான் தேர்தலும்! தேர்தலில் ஈடுபட்டால் நாம் தீர்த்துக் கட்டப்பட்டு விடுவோம் என்று, திகிலும் வெறுப்பும் கொண்ட வெகுண்டெழுந்தான் பிள்ளைகள் கூறிவிட்டு - நாம், இந்தத் தேர்தலில் ஈடுபடுவதையும், கழக வளர்ச்சிக்கும் கொள்கை வளர்ச்சிக்கும், நமது குறிக்கோளில் வெற்றி காண்பதற்கும் ஓர் "படிக்கட்டு’ ஆக்கிக்கொள்வோம் - ஐயம் வேண்டாம்! தேர்தலில் ஈடுபட்டு, எப்படியாவது சட்ட சபையில் இடம் பிடித்துக்கொண்டு, அதன் மூலமாகப் புதிய "கௌரவம்’ செல்வாக்குப் பெற்று, பளபளப்பு அடைய வேண்டும் என்ற அற்ப நோக்கத்துக்காக நாம் ஈடுபடவில்லை. அரசியல் பட்டுப்பூச்சிகளும் வெட்டுக்கிளிகளும் அவ்விதமான அற்ப ஆசைகொள்ளும். ஒரு நாட்டை மீட்டிடும் பெரும் பணியினை நமதாக்கிக் கொண்டுள்ளவர்கள், இத்தகைய இழிநிலைக்குத் தங்களை ஆளாக்கிக் கொள்ளமாட்டார்கள். நாம் மேற்கொண்டுள்ள பணி, நம்மை எத்துணை தூய்மையுடையோராக்கி வைத்திருக்கிறது என்பதை வெகுண்டெழுந்தான் பிள்ளைகளால் உணர்ந்துகொள்ள முடியாது. நாம் மேற்கொண்டுள்ள மகத்தான பணி - விடுதலைக் கிளர்ச்சி - தாயகத்தின் தளை ஒடித்துத் தன்னாட்சி அமைத்தல், இத்துணைப் பெரும் குறிக்கோளை, நிறைவேற்றிடத் தக்கவர்கள் நாம் என்று ஆணவம்கொண்டு நாம் இதிலே ஈடுபட்டோமில்லை. மற்றையோர், தமது மனதை வேறு வேறு பிரச்சினைகளில் பதித்துவிட்டது கண்டு மனம் வாடி, அந்தோ! தாயகமே! நின் கரங்களில் பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கி, நின் கண்ணீர் துடைத்து, அரியணை ஏற்றி அகங்கனிந்து நோக்கி இன்புறும் அறச்செயலில் ஈடுபடாமல், அறிவாற்றல் கொண்டோர், திறம்படைத்தோர், வசதி நிரம்பியோர், விளக்கு நோக்கிச் செல்லும் விட்டில் நிலையில், எவர், நமது இன்றைய இழிநிலைக்குக் காரணமோ அவர்களின் புன்னகையைப் பெறக் குற்றேவல் புரியக்கிளம்பிவிட்டனரே, அன்னை அழுகிறாள், அதனைக் கண்டும் காணாதாராகி, அவளைத் துகிலுரியும் பேர்வழிகளுக்குத் துதிபாடித் திரிகின்றனரே, என்னே இக்கொடுமை என்று எண்ணி வேதனைப்பட்டு, நாமேனும், திறனும் வசதியுமற்றுக் கிடக்கும் சாமான்யர்களான நாமேனும், அன்னையின் கண்ணீரைத் துடைத்திட முனைவோம், மாற்றாரின் ஈட்டி நமது மார்பினில் பாய்ந்து குருதி கொட்டினும், நாம் குற்றுயிராகிப் போயினும், பரவாயில்லை, மிகச் சாமான்யர்களாகிய நாம் இந்த மகத்தான் காரியத்தில் ஈடுபடுவதைக் கண்ட பிறகேனும், ஆற்றலை ஆகா வழியில் செலுத்திடும் அன்பர்கள் அன்னையின் பணிக்குத் தம்மை ஆட்படுத்தும் நிலை பெறட்டும் என்ற உணர்ச்சியுடன் விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டுப் பணியாற்றி வருகிறோம்; அந்தப் பணியில், நாம் ஈடுபடுவதால் நமக்கே ஓர் புத்தம் புதுப் பண்பு கிடைத்திருக்கிறது! மலர் பறித்திடுவோனுக்கு, தொட்டுத் தொட்டு கரமும் மணக்குமன்றோ! அது போலத்தான்! தாயக விடுதலைக்கான பணியில் ஈடுபட்டதால், நாம் தனியானதோர் ஆற்றலை, பண்பை, பொறுமை, பொறுப்பு, கண்ணியம், கடமை உணர்ச்சி ஆகியவற்றினைப் பெற்று விட்டோம் - அதன் பயனாக நமக்கு இயற்கையாக உள்ள குறைகள் கூடத் தாமாகப் பட்டுப்போய், புதியதோர் "தகுதி’ கிடைத்து வருகிறது! எடுத்துக்கொள்ளும் காரியம் ஏற்புடையதாயின், ஈடுபடுவோருக்கும் அது புதுப்பொலிவு தரத்தான் செய்கிறது என்பதை, தூய பணியில் ஈடுபட்ட நாம் உணர்ந்து வருகிறோம். நமது சொல்லிலே ஓர் சுவையும், நமது செயலிலே ஒர் சீலமும், நமது முறைகளிலே ஓர் உறுதிப்பாடும் கிடைத் திருப்பதற்குக் காரணம், நாம் எடுத்துக் கொண்டுள்ள காரியம், கோழையையும் வீரனாக்கிடும் ஆற்றல் வாய்ந்தது. சாமான்யர்களை உயர்பண்பினர்ஆக்கிடத்தக்க தூய்மை நிரம்பியது. தம்பி! தாயக விடுதலை என்பது போன்றதோர் தூய பணி வேறேதுமில்லை என்பதை வரலாற்றுச் சுவடி நன்கு எடுத்துக் காட்டுகிறது. இவனா இப்படிச் செய்தான்! இவனிடமா இத்துணை ஆற்றல் இருந்து வந்தது! என்றல்லவா வியந்து புகழ்ந்தனர், விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரர்பற்றி! கட்கமேந்திடத் தெரியாதவன், வாட்போர் வீரர்களை மிரண்டோடச் செய்திருக்கிறான்! சிற்றூரில் பிறந்து, சிறு குடிலில் வாழ்ந்து, கழகினியில் வேலை செய்தவன், தன் உள்ளத்தில் தாயக விடுதலைப் பணிக்கான தூய்மைக்கு இடமளித்ததும், மேதைகள் கண்டு பாராட்டத்தக்க அறிவும், வீரக் கோட்டத்துக் காவலர்கள் கண்டு வியந்திடத்தக்க ஆற்றலும் பெற்று, வெற்றியைத் தேடித் தந்திருக்கிறான் என்பதை நமக்கு எடுத்துக்காட்டத்தானே வரலாறு இருக்கிறது. தொட்டால் மணக்கும் சவ்வாது - என்று பாடுகிறார் களல்லவா, தம்பி, அதுபோல நாம் எடுத்துக் கொண்டுள்ள காரியம் நமது சொல்லுக்கும் செயலுக்குமே ஓர் தனி மணம் கமழத்தக்க நிலையைத் தந்திருக்கிறது. காங்கிரஸ், நாட்டு விடுதலைக்கான "பாசறை’யாக இருந்தபோது, அதிலே ஈடுபட்டிருந்தவர்களுக்கு இதே நிலை இருந்தது. இன்று காங்கிரஸ், பாசறையுமல்ல, பல்கலைக் கழகமுமல்ல, போட்டிப் பந்தயக் கூடாரமாகி விட்டது - எனவேதான், அதிலே ஈடுபட்டுப் பணியாற்ற, அரசியல் சூதும் அடுத்துக் கெடுக்கும் தொழில் திறனும் தேவைப்படுகிறது - அதன் பயனாக, இயல்பாக உள்ள நற்குணமே நாளாவட்டத்திலே நசித்துப்போகிறது, நயவஞ்சகம் உள்ளத்தில் தாராளமாக நெளிகிறது. நாட்டு விடுதலை எனும் நற்காரியத்துக்கு நம்மை நாம் ஒப்படைத்து விட்டோம்; அதன் பயனாக நாமே தூய்மைப் படுத்தப்பட்டு விட்டோம் - அற்ப ஆசைகளைச் சுட்டெரித்து விட்டோம் - எனவே அதே நோக்குடனேயே, தேர்தலில் ஈடுபடுவோம்! தேர்தல் ஆயிரத்தெட்டு சூதுகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் பிறப்பிடம், இருப்பிடம். அந்தச் சூதும் சூழ்ச்சியும் ததும்பிடும் நிலையில் உள்ள நம்மிடம் இவர்கள் போட்டியிட்டு என்ன செய்யப்போகிறார்கள்! நம்மாலே பேழையுடையோரை பிடித்திழுத்து வரவும், பேச்சு விற்போரைக் குத்தகைக்கு எடுக்கவும், பேதம் பிளவு மூட்டிக் காரியம் சாதிக்கவும், தட்டிக் கொடுக்கவும், தடவிக் கொடுக்கவும், தழுவி மகிழ்ச்சி தரவும், குழைந்து குதூகல மூட்டவும் முடியுமே! இவர்கள் வெட்டு ஒன்று துண்டு இரண்டெனப் பேசத்தானே அறிவர் கொள்கைக்கு ஒத்து வருவோரின் கூட்டுறவு மட்டும்தானே கொள்வர். இந்நிலையில் இவர்கள் தேர்தலில் ஈடுபட்டுக் காணப்போகும் பலன் என்ன? என்று வெகுண்டெழுந்தான் பிள்ளை கருதுகிறார் - கூறவே செய்கிறார். வினோபாவைக் கண்டேன் 1 வினோபாவுடன் திராவிட நாடு பிரச்சினை- காங்கிரசும் வினோபாவும் தம்பி, புனிதமான புத்தர் விழாவைக் கெடுத்துத் தொலைத்தான் பாவி, தூய்மை நிரம்பிய தமிழ்ச் சங்கப் பொன்விழாவைப் பாழாக்கிவிட்டான் பாதகன் என்றெல்லாம், பழிசுமத்தப்படுகிறது உன் அண்ணன் மீது. ஏன்தான் நமக்கு இந்தத் தொல்லைகள் தாமாக வந்து தாக்குகின்றனவோ என்று நான் சில வேளைகளிலே கவலைப் படுவதும் உண்டு - எனினும் என் செய்வது? சில பல நிகழ்ச்சிகளில் நான் ஈடுபட நேரிடுகிறது. நான் ஈடுபடுவதனாலேயே நிகழ்ச்சிகள் கெட்டு விடுகின்றன என்று கூறி, நான் தாக்கப்படுகிறேன். அந்த முறையில், இதற்கு என்ன பழி சுமத்தப்படுமோ என்ற அச்சத்துடனேயே நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவேண்டி இருக்கிறது. என் செய்வது? வினோபாவைக் கண்டேன்! தமிழகத்தில் தண்ணொளி பரப்பும் நோக்குடன் தவப்புதல்வர் வருகிறார், மும்மலங்களை விட்டொழித்திடச் சொல்லும் முனிபுங்கவர் வருகிறார், பூதானம் பெற்று, மக்களில் ஒரு சாராரின் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் பேராசையை விரட்டிடும் பெம்மான் வருகிறார், அவருடைய புனிதப் பாதம் பட்டதால், தமிழ்நாட்டின் சாபம் விமோசனமாகும் என்றெல்லாம் பக்கம் பக்கமாகப் பத்திரிகைகள் எழுதியது கண்டு, அவரைக் காண வேண்டும் என்று நானும் ஆவல்கொண்டேன் - உடனே ஒரு அச்சமும் பீடித்துக் கொண்டது - நாம் நுழைவதாலேயே, பல நற்காரியங்கள் நாசமாகிவிடுவதாகக் கூறும் “நல்லவர்கள்’ இருக்கிறார்களே! ஏழை எளியோர்பால் இரக்கம் காட்டச் சொல்லி, இரும்பு இருதயங்களையும் கனியச் செய்யும் இணையற்ற திருத்தொண்டு புரிந்துவரும் வினோபாவை நாம் சென்று காண்பதால், பதறிக் கதறி, கைபிசைந்து கண் கசக்கிக்கொண்டு, இங்கும் வந்து தொலைத்தானா இக்கெடுமதியாளன்? நிம்மதியும் நிர்மலமும் பெறுவதற்கு ஏற்ற இடம் என்று இந்தக்”குடில்’ வந்தோம், இங்கும், விடமாட்டேன் என்று வந்துவிட்டானே இந்த வீணன் என்று ஏசித் தமது மனதுக்குத் தாமாகப் புண் ஏற்படுத்திக் கொள்வார்களே சில புண்ணியவான்கள்’ என்று எண்ணினேன். ஆவலை அடக்கிக் கொண்டேன். ஆனால், வந்ததும் வராததுமாக வினோபா, திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவைகளைக் காண விரும்புகிறார், தமது பூதான இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்க விழைகிறார் என்று "செய்திகள்’ வந்தன. அந்தப் பெரியாருடைய அந்த நோக்கத்தைச் சிலர் எப்படிக்கருதினர் என்பதை, இதழ்களில் வெளியான கேலிச் சித்திரங்கள் காட்டின. ஒரு இதழில் - நாகப்பாம்புகள் படமெடுத்தாடுகின்றன - வினோபா "மகுடி’ ஊதுகிறார் - பாம்புகள், தம்பி, நாமும் திராவிடர் கழகமும்! பெயரே எழுதப்பட்டிருக்கிறது. நச்சுப் பாம்புகளய்யா இந்தக் கழகங்கள் - என்று வினோபாவுக்கு எச்சரிக்கவும், அவர் "மகுடி’ ஊதி, உங்களை மயங்க வைப்பார் என்று நமக்கு எடுத்துரைக்கவும், அவ்விதம் படம் தீட்டினர். ஒரு குறிக்கோளைத் தம் இதயநாதமாகக் கொண்டவர் எவரும், அந்த குறிக்கோளுக்கு யாராரிடமிருந்து ஆதரவு கிடைப்பதாயினும், பெற்றாக வேண்டும் என்று எண்ணுவதும், அதற்காக முயற்சிப்பதும், அவர்களுடைய உள்ளம் தூய்மையானது என்பதனையும், அவர்கள் கொண்டுள்ள கொள்கை "தொட்டால் சுருங்கி’யல்ல என்பதையும் எடுத்துக் காட்டுவதாகும். அம்முறையில், ஒரு கட்சிக்கோ, குறிப்பிட்ட கூட்டத்துக்கோ, ஒரு ஜாதிக்கோ மதத்துக்கோ, என் பூதானத் தொண்டு சொந்தமானதல்ல, அனைவருக்கும் இதிலே பங்கு உண்டு, ஏழை அழுத கண்ணீர் துடைத்திடுவதே எம்மானுக்கு ஆற்றும் பணி என்று எண்ணி எவரும் இதிலே ஈடுபடலாம், என்று வினோபா அறிவிக்கிறார்! எதனையும் தமதாக்கிக்கொண்டு - தமக்குச் சாதகமான தாக்கிக்கொண்டு - தமக்கு ஆதிக்கமளிக்கும் கருவியாக்கிக் கொண்டு பிழைக்க, கொழுக்க விரும்பும் “குணவான்கள்’ வினோபாவின் இயக்கத்தில் மற்றவர் எவரும் நுழைந்திடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணி, அடிகள் யாராருடன் தொடர்புகொள்ள வேண்டுமென்று ஆவல் தெரிவிக்கிறாரோ, அவர்களைப்”பாம்புகள்’ என்று சித்தரித்துக் காட்டுகின்றனர். இனி, வினோபா, நம்மீது பார்வையைச் செலுத்தமாட்டார் - படம் போட்டுக் காட்டிவிட்டனர் - என்று நான் எண்ணிக் கொண்டு - தொலைவிலிருந்தே அவர் நடாத்திவரும் தூய தொண்டு வெற்றிபெறுவது கண்டு மகிழலாம் என்று தீர்மானித்தேன். ஆனால், வினோபாவின் அன்பழைப்பு என்னை விடாமல் துரத்திற்கு! "பாம்பு’ - என்கிறார்களே, எப்படித்தான் இருக்கிறது பார்ப்போம் - என்று எண்ணிக்கொண்டார் போலும். வினோபாவைச் சந்தித்தேன். நான் பாம்பல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளாமலிருந்திருக்க முடியாது! பூஜிதரே! புண்ய புருஷரே! நீரோ பூதானம் கேட்கிறீர்! நீர் காண விரும்பும் அந்தப் புல்லர்கள், பூதானம் தரமாட்டார்கள், அவர்களே காமராஜரிடம் பூதானம் கேட்டுத் தொல்லை தருகிறார்கள் - திராவிட நாடு கேட்கிறார்கள் - எனவே, அவர்களைச் சந்தித்து என்ன பயன் என்று வினோபாவைக் கேட்பதுபோல, ஒரு இதழ் வினோபா, தி.மு.க. விடம் பூதானம் கேட்பதுபோலவும், தி.மு.க. காமராஜரிடம் திராவிட நாடு தானம் கேட்பதுபோலவும், கேலிப்படம் வெளியிட்டது. இது கண்டும் அந்த இதயசுத்தி உள்ள பெரியவர், தமது நோக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை; சந்திக்க வேண்டும் என்ற தமது விருப்பத்தைத் தெரிவித்தார். வினோபாவைச் சந்தித்தேன். 7-6-56 "கிராமோதயம்’ இதழில் (சர்வோதய இதழ்) வினோபா - ம.பொ.சி. சந்திப்பு பற்றிய கட்டுரையில், "திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கழகங்களின் தலைவர்களைக்கூட சந்திக்க விரும்புகிறேன். அவர்களுடைய ஆதரவும் பூமிதான இயக்கத்திற்குக் கிடைக்குமென்று நம்புகிறேன்’’ என்று வினோபா கூறியதாக வெளியிடப்பட்டிருக்கிறது. கழிபேருவகையுடன் கண்டு பேசிடத்தக்க கண்ணியமிக்கவர் வினோபா என்று எப்படி என்னாலே எண்ணாமலிருக்க முடியும். கண்டு பேசினேன். தயக்கத்துடன்தான் நான் சென்றேன். காங்கிரஸ் ஏடுகள் யாவும், வினோபாவை வாழ்த்தி வரவேற்பதையும், அர்ச்சித்து அஞ்சலி செலுத்துவதையும், அவர் அருளால் அஞ்ஞானம் அழியும், மெய்ஞ்ஞானம் பரவும். வகுப்புவாதம் ஒழியும், வர்க்கபேதம் தொலையும் என்றெல்லாம் கூறிப் பூரிப்பதையும், அவருடைய முகத்திலே “ஜோதி’ காண்கிறோம், கண்களிலே அருள் வடிந்திடக் காண்கிறோம், அவர் நடையிலே காந்தியார் காணப்படுகிறார், உடையிலே மகரிஷிக் கோலம் தெரிகிறது என்றெல்லாம், வர்ணிப்பதையும் கண்ட நான், ஓகோ! வினோபா மூலமாக அவர் திரட்டி வரும் மகத்தான செல்வாக்கின் மூலமாக இவர்கள், தமது இழந்த செல்வாக்கை மீட்டிடவும், இவர்களைக் கப்பிக்கொண்டு வரும் இருட்டினை ஓட்டிடவும் முயற்சிக்கிறார்கள், இந்நிலையில், நாம் குறுக்கிட்டு அவர்கள் ஆசை குலையவும், நேசம் முறியவும் காரணமாக இருக்க வேண்டாம் என்று கருதினேன். ஆனால் வினோபா அந்தக் காரியத்துக்காகத் தம்மை ஒப்படைத்தவரல்ல, அவருடைய உள்ளத் தூய்மை”குத்தகை’ப் பொருளல்ல என்பதைப் பூதான இயக்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ள நண்பர்கள் என்னிடம் கூறினர். சிறப்பாக தோழர் ஜகன்னாதன் என் தயக்கம் போகப் பெரிதும் பயன்பட்டார். அடக்கமும் அன்பும், ஆற்றலைக்கூட மறைத்துக் காட்டும் பண்பும் கொண்டு, ஆழ்ந்த நம்பிக்கையுடன் பூதான இயக்கத்தில் ஈடுபட்டுப் பணியாற்றி வருபவர் நண்பர் ஜகன்னாதன். இரண்டு மூன்று ஆண்டுகளாகவே எனக்கு அறிமுகமானவர்; வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நமது கழகத் தோழர்களிடம், பூதான இயக்கம் பற்றிக் கலந்து பேசுபவர்; நமது பொதுச் செயலாளரிடமும் தோழர் சம்பத்திடமும் பல முறை இப்பிரச்சினை குறித்துப் பேசியுமிருக்கிறார். நான் வினோபாவைச் சந்தித்ததற்குப் பெரும் காரணமாக அமைந்தவர் அவரே! அங்குச் சென்ற பிறகு எனக்குற்ற நண்பர்கள் வேறு பலரும் அங்கு இருக்கக் கண்டு மகிழ்ந்தேன். காஞ்சிபுரத்தில் சர்வோதய மாநாடு நடைபெறுகிறது - அந்தச் சமயம், வினோபாவைக் காண வேண்டும் - என்று நண்பர் ஜகன்னாதன் கூறினார் - எனக்கும் விருப்பம் எழுந்தது. சம்மேளனமும், நமது மாநாடும், ஏறத்தாழ ஒரு கால அளவுக்குள்ளாகவே இருந்தது. எனவே, நான் நம்மேளனத்தில் கலந்துகொள்ள இயலவில்லை; அது எனக்கு முத-ல் வருத்தமாகத்தான் இருந்தது. என்றாலும், சம்மேளனம் குறித்த நடவடிக்கைகளைச் சேதிகளாகக் கண்ட பிறகு, நான் போகாமலிருந்தது, எவ்வளவோ பேருக்கு மன நிம்மதியாக இருந்திருக்குமல்லவா என்பதனால் மகிழ்ச்சி பிறந்தது; சென்றிருந்தால், நான் ஓரளவு மனச்சங்கடத்தைச் சமாளித்துக் கொண்டுதான் அங்கு இருந்திருக்க முடியும் அத்தகைய சூழ்நிலை அங்கு உருவாக்கப்பட்டது. மனிதன் உள்ளத்திலே பேய்க்குணம் புகுந்து, உலகம் கெட்டுவிட்டது. அவா புகுந்தது; அழுக்காறு குடைந்தது; பகை புகைகிறது; பாபம் பெருகுகிறது. சுயநலம், சுரண்டிக் கொழுத்தல், சுகபோக நாட்டம் எனும் தீயசக்திகள், மனிதனை மிருகமாக்கிவிட்டன. எதனையும் தன் ஆதிக்கக் கருவியாக்கிக்கொள்ளத் துணிந்துவிட்டனர், இதனால் துன்பம் பெருகிற்று, தூய்மை அருகிப்போய்விட்டது- வினோபாவின் கருத்து இவை. சம்மேளனத்துக்குத் "தூண்களாக’க் காட்சி தந்தவர்களிலே பலர், இத்தனைக்கும் பிறப்பிடம், இருப்பிடம்! இதை நான் அங்கு சென்று கண்டு, எங்ஙனம் வெளியிடாமல் இருந்திட இயலும்; வெளியிட்டிருந்தால், சபையின் வனப்பு எப்படிக் குலையாதிருக்க முடியும்! சென்று வந்தவர்களும், பூதான இயக்கத்திலும், வினோபாவின் அப்பழுக்கற்ற தொண்டிலும் மனது இலயித்திருப்பவர்களுமே, சர்வோதய சமமேளனத்தில் கண்ட காட்சியைக் கண்ணீருடன் கூறுகிறார்கள். "புது வாழ்வு’ என்றோர் இதழ் - இதோ என் எதிரில் - சேலத்திலிருந்து வெளிவரும் முற்போக்கு இதழ் - அதிலே, நான் காண்பது, தம்பி, உன் மூலம், நாடு காணட்டும் : "சென்ற மாதம் இறுதியில் காஞ்சிமா நகரில் 8-வது சர்வோதய சம்மேளனம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இமயத்திலிருந்து குமரிவரை, ஏன், சிலோன், ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளினின்றும் ஆயிரமாயிரம் பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் விஜயம் செய்து, சம்மேளனத்தைச் சிறப்பித்தார்கள். ஆனால் அவர்கள் தாம் எதிர்பார்த்தபடி மன நிறைவு கொண்ட மனதினோடு திரும்பினரா? இல்லையென்றே சொல்ல வேண்டும். ஏன்? காங்கிரஸ் கட்சியின் கண்மூடிச் செயல், ஆளும் கட்சியின் அநாகரீக தர்பார், நல்லவர்களின் உள்ளங்களை யெல்லாம் வதைத்து விட்டது.’’ தம்பி, வினோபா பூதானம் கேட்கிறார் -அவருடைய தூய்மை கண்டு அளிக்கிறார்கள் - ஆனால் ஆளும் கட்சியோ, அவரிடம் இரத்ததானம் கேட்கிறது! உண்மை ஊழியர்களுக்கு வேதனை உண்டாகிறது, ஆனால் அதற்காக, ஆளும் கட்சியினர். இந்தப் பொன்னான வாய்ப்பையா இழந்துவிடுவார்கள்! அவர்கள் பாபம், ஆகாவழியில் ஆட்சி நடத்துவதால், மக்களை அணுகவே அஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள். அருள் நெறியினர் அண்ணல் வினோபா என்பதற்காக ஆயிரக் கணக்கிலே அவருக்கு அஞ்சலி செலுத்த மக்கள் வருகிறார்கள் என்று அறிந்ததும், அவர் நிழலில் பதுங்கிக் கொண்டு, மக்களிடம் சென்று, புன்னகை செய்தும், புண்யவான் என்று பேசியும், மதிப்புப் பெறலாமா என்று முயற்சிக்கிறார்கள். அவர்களாக, மக்களைச் சந்திக்க, எத்தனையோ திறப்பு விழாக்கள், ஆண்டு விழாக்கள், பாராட்டு விழாக்கள் நடத்திப் பார்க்கின்றனர் - அலுத்துப்போன அதிகாரிகளும், ஆயாசப்படும் கனதனவான்களும் மட்டுமே காட்சி தருகின்றனர்- மக்களோ, அங்காடியில் நின்றபடி கெக்கலி செய்கின்றனர். இந்த நிலை கண்டு நொந்து போயிருப்பவர்களுக்கு, வினோபாவின் விஜயத்தைச் சர்வரோக நிவாரணியாக்கிக்கொள்ளலாம் என்ற அற்ப ஆசை ஏற்படுகிறது. ஆகவேதான், தம்பி, "வினோபா பிரார்த்தனையில் விளம்பரம் பெறும் நோக்கத் துடன் காங்கிரஸ்காரர்கள் அவர் மேடைமீது நிரம்பத் துவங்கி விட்டார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களிடம் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வது செலவற்ற தேர்தல் வேலை என்று கருதி விட்டார்கள்!’’ என்று அந்த ஏடு எழுதுகிறது. எனக்கு எடுத்துச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. இவ்வளவு கூச்சம்விட்டா, பெருந்தலைவர்கள் நடந்துகொள் வார்களென்று தோன்றுகிறது. ஆனால், அந்த இதழ், திட்டவட்டமாகக் கூறுகிறது, வினோபா கூட்டத்தைத் தமது விளம்பரத்துக்குக் காங்கிரஸ்காரர் பயன்படுத்திக்கொண்டதால் ஏற்பட்ட அவலட்சணத்தை. "இதனால் வினோபாவுக்கே மேடையில் இடம் இல்லை. அவர்பாடு சங்கடமாகிவிட்டது. எனவே சர்வோதய ஊழியர்கள் கூடி, பிரார்த்தனையின்போது, வினோபாஜி, அவரது மொழிபெயர்ப்பாளர் ஆகியோரைத் தவிர வேறு யாரும் மேடைமீது அமரக்கூடாது என்று முடிவு செய்தார்கள். ஆனால் விளம்பரத்திற்கே வாழும் காமராஜர் இதனைப் பொருட்படுத்தாது, மேடையின்மீது வந்து ஆனந்தமாக அமர்ந்தார். ஏற்கனவே செய்யப்பட்ட முடிவுக்கு மாறாக நடந்ததைக் காண சர்வோதய ஊழியர்கள் உள்ளம் நொந்தார்கள். உத்தமத் தோழர், ஒப்பற்ற வீரர், தமிழ்நாடு மாணவ பகுதி பூமிதானக் கமிட்டிக் கன்வீனர் த.ஃ.கிருஷ்ணமூர்த்தி மெத்தவும் துடித்து காமராஜரை அணுகி, மேடையைவிட்டுக் கீழே இறங்கு என்று கர்ஜித்தார். காமராஜர் அதனைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாகப் பேசினார். முடிவில் அநீதியை அப்பால் அகற்றத் தன்னால் முடியாது என அறிந்த கிருஷ்ணமூர்த்தி அவ்விடத்தைவிட்டு அகன்றார்.’’ தம்பி, காமராஜர் குறித்து இவ்வளவு விஷயம் வெளியிடும் இந்த "ஏடு’-நமது முகாம் அல்ல - சர்வோதய சம்மேளனம் வெற்றிபெறுவதற்காகப் பணியாற்றிடும் நண்பர் குழாம் - நினைவிருக்கட்டும். மனம் அவ்வளவு புழுங்கிடும் அளவுக்கு, சர்வோதய சமமேளனத்தைக் காங்கிரஸ் மாநாடு ஆக்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் மாநாடாக மாறியதுகூட அல்ல, அந்தச் சம்மேளனம், போலீஸ் மாநாடாகிவிட்டதே என்று துளைத்திடும் துக்கத்தை ஏடு வெளியிடுகிறது; படித்துக் காட்டு; புனித இடங்களை நான் பாழ்படுத்திவிடுகிறேன் என்று புகார் கூறிடும் நண்பர்களுக்கு. "ராஜன் பாபு வந்தாரோ இல்லையோ, சம்மேளனம், ஏன், காஞ்சி வட்டாரமே போலீஸ் இராஜ்யம் ஆகிவிட்டது. ஆயிரக்கணக்கான மலபார் போலீசும் இதர போலீசும் குவிந்துவிட்டனர். எங்கும் போலீஸ் மயம்! அது போலீஸ் மகாநாடாக மாறிவிட்டது. எல்லோரும் சமம் என்பதை நிலை நாட்ட எழுந்த அந்த மகாநாட்டிற்கு ராஷ்டிரபதி ராஜன்பாபு வந்ததற்காக பல இலட்சங்கள் செலவு! ஒரு மனிதரைக் காப்பாற்ற ஆயிரமாயிரம் போலீஸ். மழை காரணமாக பல குடிசைகளில் நீர் நிரம்பிவிட்டதால் பல பிரதிநிதிகள் வெட்ட வெளிகளில் தங்கினார்கள். தொண்டு கிழங்களும், தாய்மார்களும், தரையில் புரண்டார்கள். மகரிஷி வினோபா, ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்குக்கூட எளிய குடிசைகள்தான். ஆனால் அதே சம்மேளனத்திற்கு வந்த ஒரு மனிதர் ராஜன் பாபு இரண்டு நாட்கள் தங்கப் பத்தாயிரம் ரூபாய் செலவில் புதியதோர் நவநாகரிக மாளிகை நிர்மாணிக்கப் பட்டது. எத்தனையோ நூறு நூறு உள்நாடு, அயல்நாட்டு மக்கள் வெப்பத்தைப் பொருட்படுத்தாது சம்மேளனத்தில் தங்கினார்கள். ஆனால் அந்த ஒரு மனிதருக்குப் பல ஆயிரம் ரூபாய் செலவில் மித உஷ்ண அறைகள் அமைக்கப்பட்டன! ஓரம் ஓரம் என்று போலீஸ் பொதுமக்களுக்கு தெரு ஓரச் சாக்கடைகளைக் காட்டினர். பலர் சாக்கடைகளில் விழுந்தனர் . சமுதாயத்தில் மூண்டுவிட்ட சீர்கேடுகளை நீக்கச் சம்மேளனம் கூடுகிறது - உண்மை ஊழியர்கள் உள்ளம் வெதும்பி, அங்கு காணப்பட்ட சீர்கேடான நிலையைக் கூறி வருந்துகிறார்கள். மேலும் எழுதுகிறது, "புது வாழ்வு’. "அடுத்தது காங்கிரஸ் தலைவர் தேபர். இம்மனிதர் வழக்கப்படி தமது சின்னத்தனத்தைக் காட்டச் சிறிதும் தவறவில்லை. ஒரு சர்க்கஸ் கம்பெனியைப்போல் பரிவாரங்கள் புடைசூழ வந்தார்’’- தம்பி, இவ்வளவு கொதிப்பு "புதுவாழ்வு’ இதழ் கட்டுரையாளருக்கு ஏற்படும் விதமாகச் சூழ்நிலை இருந்தது என்றால், நான் இங்குச் சென்றிருந்தால், மனம் என்ன பாடுபடும் என்பதையும், புதுவாழ்வு கட்டுரையாளர் கூறுவதிலே பத்திலொன்று நான் கூறிட நேரிட்டால் எவ்வளவு பதறிப்போய், பாவி! பாதகா என்று பழித்திருப்பார்கள் என்பதையும் எண்ணிப் பார். "ஒன்று மட்டும் சம்மேளனத்தில் தெளிவாகிவிட்டது. காங்கிரஸ்காரர்கள் கட்சி விளம்பரத்திற்குத்தான் பூமி தானத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் அது!’’ உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும், சொந்தம் கொண்டாடிக் கொண்டும் சம்மேளனத்தில் கலந்துகொண்ட ஒருவர், அங்கு காட்சிகளைக் கண்ட பிறகு அளித்திடும் தீர்ப்பு இது. எனக்கு முன்கூட்டியே நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று மனதில்பட்டது - ஆனால் அதனை நண்பர் ஜகன்னாதனிடம் எடுத்துச் சொல்வது கண்ணியக் குறைவாகத் தென்படும் என்று எண்ணினேன். விளம்பரம் பெறக் காங்கிரஸ்காரர்கள், வினோபாவின் ஒளியைப் பயன்படுத்திக்கொள்வதுகூட ஒருபுறம் இருக்கட்டும் - அதிலே அவர்கள் வெற்றி பெறப்போவதுமில்லை - வினோபா அதனை அனுமதிக்கவும் போவதில்லை என்பது எனக்குப் புரியத்தான் செய்கிறது - வேறோர் வேடிக்கையைப் பார், தம்பி, வந்துள்ள பெரியவரிடம் உபதேசம் கேட்போம், உயர்நெறி அறிவோம், உள்ளத்துக்குச் சாந்தி தேடிக்கொள்வோம், ஏறிவிட்ட கறைகளைப் போக்கிக்கொள்வோம் என்று துளியும் அக்கறை காட்டாமல், காங்கிரஸ்காரர்கள், வினோபாவைத் தூண்டிவிட்டு, நம்மைத் தாக்கச் சொல்கிறார்கள். இந்த அரும்பணியைத் திறம்படச் செய்ய முயன்றி ருக்கிறார், ஆச்சாரியார்! "ஆச்சார்ய வினோபா அவர்களே! இங்கு, தமிழ்நாட்டிலே, நாஸ்தீகம் தலைவிரித்தாடுகிறது. அரக்கர் கூட்டம் பெருத்து விட்டது! அதிலும் காஞ்சிபுரத்தில் அது அதிகம். தாங்கள் இதனை ஒழிக்க வேண்டும்’’ - என்று, ஆச்சாரியார் பேசியிருக்கிறார். தம்பி! எனக்குக் கோபம் வரவில்லை - சிரிப்புத்தான் வருகிறது! ஆச்சாரியார், பாபம், மாமேதை என்று கொண்டாடப் படுகிறார். ஓயாமல் பேசுகிறார், ஒய்யாரமாக எழுதுகிறார். இராமனை அழைக்கிறார் அரிபரந்தாமனை பஜிக்கிறார். ஆரிய குலத்தவரே! அஞ்சற்க! அயர்ந்துபோய் இருந்து விடாதீர்! விழித்தெழுக! வீழ்த்துக விரோதிகளை! - என்கிறார். இவ்வளவும், பயன்படவில்லை - என் பாணங்களை ஏவி ஏவிப் பார்க்கிறேன், அரக்கர் தொலையவில்லை. வினோபா அவர்களே! தாங்கள் தமது சக்தியால், இந்த அரக்கர்களைச் சம்ஹரிக்க வேண்டும் - என்று கேட்கும் போக்கு, சிரிப்பாகத் தான் இருக்கிறது. எனக்கு மட்டுமா, தம்பி வினோபாகூடத்தான் உள்ளூரச் சிரித்திருக்கிறார்! "மெத்த அலுத்து வந்திருக்கிறாள் அத்தை! குத்திப் புடைக்கச் சொல்லு நெல்லை’’ - என்று குக்கிராமத்துப் பழமொழி கூறுவார்கள். வினோபா, தமிழகத்தில் பூதானத்தை வெற்றிபெறச் செய்வதற்காக, பல்லாயிரக்கணக்கிலே "பாத யாத்திரை’ செய்துகொண்டு வருகிறார், எவரெவர் எவ்வெவ்வகையான உதவி தருகிறீர்கள், என் பணி, உமது பணியாகும், உத்தமப் பணியாகும் என்று கூறி வருகிறார். வந்துள்ள அந்தப் பெரியவருக்கு, அன்புரையும் ஆதரவும் தந்து, இன்னின்ன வகையிலே, தாங்கள் மேற்கொண்டுள்ள மகத்தான தொண்டுக்கு நான் பேருதவிபுரிவேன் என்று கூறிடாமல், வந்ததே வந்தீர், தங்கள் வல்லமையைக்கொண்டு, இந்த அரக்கர் கூட்டத்தைத் தொலைத்துக் கட்டும்’ என்றா பேசுவது! எவ்வளவு இரக்கமற்ற மனம்! இலஜ்ஜை கெட்டதனம்! நப்பாசை! வினோபா, இதனை மிக நன்றாகப் புரிந்துகொண்டு, சுடச் சுடக் கொடுக்கிறார் - சரி, வந்த வேளை சரியில்லைபோலும் என்று நொந்துகொண்டு செல்கிறார் ஆச்சாரியார். சம்மேளனம் கூட்டப்பட்டதற்கும், "சம்ஹாரமூர்த்தி’ யாகும்படி வினோபாவுக்கு ஆச்சாரியார் தூபமிடுவதற்கும் என்ன சம்பந்தம்? அதே சம்மேளனத்தில் வேறு யாரேனும், சம்பந்தப்படாத பொருள்பற்றிப் பேசினால் எத்தனை சலசலப்பு ஏற்படும். அத்தகைய சூழ்நிலை காணப்பட்ட சம்மேளனக் கூடத்திலே நான் வினோபாவைச் சந்திக்காதது, நல்லதுதான் என்பதை நண்பர் ஜகன்னாதன்கூட இப்போது ஒப்புக்கொள்வார் என்று எண்ணுகிறேன். நான் வினோபாவைச் சந்தித்த இடமும் - இவ்விதமான தூபதீப நைவேத்தியங்களற்ற, தூண்டிவிடும் தூயவர்களோ கிண்டிவிடும் கனவான்களோ இல்லாத சிற்றூர். தம்மனூர் எனும் இச்சிற்றூர், எங்கள் காஞ்சிபுரத்திலிருந்து பத்து கல் தொலைவில் உள்ளது - பல காலமாகத் தண்ணீரற்றுப் போயுள்ள பாலாறு கடந்து இங்கு செல்ல வேண்டும் - ஆறு பர்லாங்குக்குமேல் ஆறு. சாதாரண மோட்டார் செல்லாது - ஜீப் மோட்டாரின் துணைகொண்டுதான் ஆற்றினைக் கடக்கமுடியும். முன்னாள் பகலே இந்தச் சங்கடத்தை அறிந்த நண்பர் ஜகன்னாதன், பூமிதானக் கமிட்டியாருடைய ஜீப்பை அனுப்பிவைப்பதாகக் கூறினார்; அதன்படியே ஜீப் வந்தது; உடன்வந்த பூதான இயக்கத் தொண்டர்கள், "பாபா’வின் கருத்துக்களை, குறிப்பாக ஆஸ்திக நாஸ்திகம்பற்றி அவர் வெளியிடும் கருத்துக்களை எனக்கு எடுத்துரைத்தனர். நான் தம்மனூர் சென்ற வினோபாவைக் கண்டபோது, உண்மையிலேயே, உருக்கமானதோர் காட்சியாகவே தென்பட்டது. அந்தத் தொகுதியின் உறுப்பினர்கூட அந்தச் சிற்றூருக்குச் செல்வதிலே சிரமம் கொள்ளக்கூடும் - எங்கோ நெடுந் தொலைவில் இருப்பவர் - இந்தக் குக்கிராமத்தில் வந்து தங்கி, மக்களைக் கண்டு பேசி, மகத்தான பணிபுரிகிறாரல்லவா, தூய்மையான தொண்டு என்றால் இஃதன்றோ என்று எண்ணா மலிருக்க முடியுமா! அதிலும், வினோபாவை நான் கண்டபோது இருந்த சூழ்நிலை எனக்குப் பெரிதும் விசாரமே தந்தது. மொகலாய சாம்ராஜ்யாதிபதிகள் கட்டிய செங்கோட்டை யிலே கொடி பறக்கிறது. வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் கட்டிய மாளிகையில் வீற்றிருந்து அரசோச்சுகிறார்கள், வினோபாவின் உழைப்பினைப் பெற்று உயர்வு அடைந்த காங்கிரஸ்காரர்கள். மாலை தவறாமல், தோட்டக் கச்சேரிகளும், நடன விழாக்களும் நடக்கின்றன - டில்லியிலும், மாகாணத் தலைநகர்களிலும்! விருந்தும் வைபவமும் தெவிட்டும் அளவுக்கு நடைபெற்ற வண்ணமிருக்கிறது தர்பார் நடாத்துவோருக்கு. இங்கு, தம்மனூரில், ஒரு சிறு பஜனைக் கோவிலில், ஓலைப்படுதா முகப்பில் அமைக்கப்பட்ட நிலையில், முழங்காலுக்கு மேல் வேட்டி கட்டிக்கொண்ட முதியவர், உட்கார்ந்துகொண்டிருக்கிறார்! அவர் காலடியில் ஏறக்குறைய ஐம்பது இலட்சம் ஏக்கர் தான நிலம் கிடக்கிறது! ஒரு துளி "தர்பார் மினுக்கு’ இல்லை. எளிமை இனிமை தருகிறது, தூய்மை பளிச்சிடுகிறது. இம்மட்டோ, தனிமையும் தெரியத்தான் செய்கிறது! நான் சில விநாடி ஏதும் பேசாமல், வினோபாவைப் பார்த்தபடி எதிரே அமர்ந்திருந்தேன் - என்னை அறிமுகப் படுத்திய ஜகன்னாதன், அருகே அமர்ந்தார் - பத்து இருபது பேர்கள், உரையாடல் நடைபெறும் என்றறிந்து உடன் அமர்ந்தனர். களைப்பா? சலிப்பா? மனதிலே ஆழ்ந்ததோர் விவாதமா? அல்லது ஆழப்பதிந்துவிட்ட தன்னடக்கமா? காரணம் என்ன இவர் முகத்திலே, கவலைக் கோடுகள் தெரிந்திட!- என்று நான் எண்ணிக்கொண்டேன். ஐம்பது இலட்சம் ஏக்கர் நிலத்தை - அவற்றிலே பயன்படாதவை இருக்கத்தான் செய்கின்றன - ஒருவர் - சர்க்காரின் துணையின்றி, சாந்தம், சீலம் எனும் அருங்குணத்தின் துணைகொண்டு மட்டுமே, தானமாகப் பெற்றார் என்றால், அது சாமான்யமான விஷயமல்ல!! மகத்தான வெற்றி! குமாரிகளும் கோகிலங்களும் ஆடிப்பாட, கோலோச்சும் கவர்னர் தலைமை தாங்க, திக்கெட்டும் சென்ற கலெக்டர்கள் திரட்ட, பணம் ஏதேனும் ஓர் நிதிக்கு, மொத்தமாக ஒரு பத்தாயிரம் கிடைத்துவிட்டால், "ராஜ நடை’ போட்டுக் கொண்டு சிம்மம்போல் கர்ஜிக்கும், மந்திரிகளைப் பார்க்கிறோம் - இதோ ஓர் முதியவர் - வரப்புச் சண்டைக்குத் தலையைச் சீவிக் கொள்ளும் அளவுக்கு உடைமை உணர்ச்சி உள்ள நாட்டிலே, காலத்திலே - 50 இலட்சம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று, இத்துணை தன்னடக்கத்துடன் அமர்ந்திருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன்! முனிபுங்கவர் - மகரிஷி - என்றெல்லாம், அவரைப் புகழ்வதாக எண்ணிக்கொண்டு அவரிடம் உறவுகொண்டாடி, ஊராளும் வாய்ப்பினை மீண்டும் பெறத் துடிப்போர் கூறுகின்றனர். முனிவர்களும், மகரிஷிகளும், உடைமை உணர்ச்சி கொண்டோரிடம் "தானம்’ பெற்றிருக்கிறார்கள்- கோதானம் - பூதானம் - சொர்ணதானம் - பலப்பல! கன்னியாதானம் கூடத்தான்!! ஆனால் யாருக்காக? ஏழை எளியோருக்காகவா!! இல்லை வாமன அவதாரமேகூட, மாவலியிடம் பூதானம் பெற்றது, ஏழை எளியோருக்குப் பங்கிட்டுத்தர அல்லவே! வினோபா, மகரிஷி அல்ல - முனிபுங்கவர் அல்ல! எனவேதான் காட்டிலே சென்று ஊசி முனைமீது நின்று தவம் செய்து கொண்டில்லை. கால் கடுக்கக் கடுக்க, காடுமலை வனம் வனாந்திரங்களைக் கடந்து, ஏழைக்கு இதம் தேடுவேன், இயலாதாருக்கு உதவி பெறுவேன், இரும்பு இதயத்தையும் இளகச் செய்வேன் என்று கூறிக் கொண்டு தொண்டாற்றுகிறார். கூப்பிட்ட குரலுக்கு பகவான் ஓடோடி வருவார் என்ற “அற்புதம்’ நடத்திக் காட்டிவிட்டு,”தானம்’ கேட்கும் மகரிஷி அல்ல வினோபா. ஏழையின் கண்ணீரைக் காண்கிறார், அதனைத் துடைத்திடக் காந்தியார் சமைத்தளித்த காங்கிரஸ் அந்தக் காரியத்தைச் செய்யாமல், பதவிப் பன்னீரில் குளித்துக் களித்திடக் காண்கிறார்; பதறிப்போய், அந்தக் கூடாரத்தில் தங்காமல், கோல்கொண்டோர் செய்திட மறந்த காரியத்தை குணத்தால் சாதிக்க முயல்கிறார். குடி அரசுத் தலைவரிலிருந்து குட்டி மந்திரிகள் வரையிலே, அவருக்கு நன்றாகத் தெரியும். அவர்களெல்லாம், என்னென்ன செய்ய வேண்டும் என்று எடுத்துக் கூறிட அவருக்கு உரிமையும் இருக்கிறது. எனினும், அவர்கள் எந்த நிலைமைக்குச் சென்றுவிட்டனர் என்பதை நன்கு அறிந்ததாலும், அவர்களைத் திருத்துவதோ தன் வழிக்குக் கொண்டு வருவதோ இயலாத காரியம் என்று உணருவதாலும், "சர்வோதயம்’ எனும் தனி இயக்கம் கண்டு பணியாற்றுகிறார். காங்கிரஸ், இனி மக்களுக்குப் பயன்படாது என்பதைத் திட்டவட்டமாக விளக்க ஏதேனும் ஓர் எடுத்துக்காட்டு தேவை என்றால், நாம், தம்பி, வினோபாவின் தொண்டினைக் காட்டலாம். மகன், தாசில் வேலை பார்க்கிறான் - தகப்பனார் வாழைத் தோட்டத்திலோ வயலிலோ வாட்டத்துடன் வேலை செய்கிறார் என்றால் பொருள் என்ன புரியவில்லையா! வினோபாவிடம் நான் கண்ட விசாரத்துக்குக் காரணம் இதுதானோ - நானறியேன். நண்பர் ஜகன்னாதன், என்னை அறிமுகப்படுத்தியானதும், பேசினோம்; நினைவிலே உள்ளபடி கீழே குறித்திருக்கிறேன். உரையாடலின் போது, வினோபா தமிழ் பேசுவார் என்று நான் பெரிதும் எண்ணினேன் - அவர் இந்தியில் பேசினார் - மொழிபெயர்ப்பாளர் துணையில்தான், உரையாடல் நடைபெற்றது. வினோபா : உங்கள் கழகத்தின் நோக்கம்…? நான் : நாங்கள், திராவிட நாடு கேட்கிறோம் - அறிவீர்களே. வினோபா:- உங்கள் கழகத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாமல்லவா… உதாரணமாக நான் சேர விரும்பினால்…? நான் :- நாங்கள், திராவிட நாடு சம்பந்தமாகத்தான் கழகம் அமைத்திருக்கிறோம்; அகில இந்தியக் கட்சி அல்லவே. எனவே இயல்பாகவே. திராவிட நாட்டிலுள்ளோர்தான் உறுப்பினராகச் சேர விரும்புவர். வினோபா:- திராவிட நாடு என்றால், தனி நாடாகவே வா…? நான்:- ஆமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிவழி அரசுகள் அமைத்து, பிறகு, அவைகளின் கூட்டாட்சியாகத் திராவிட நாடு ஏற்படுத்துவது… வினோபா:- மத்திய சர்க்காருக்கு என்ன அதிகாரம்? நான்:- மத்திய சர்க்காரின் கீழ் இருக்கும் நிலைமையே எழாது. தேவைப்படும்போது வெளிநாட்டு விவகாரம் குறித்து, கலந்துபேசலாம்; கூடிப் பணியாற்றலாம்… வினோபா : - அப்படி என்றால், தனி நாடு… அதாவது தனி அரசு… சிலோன்போல…. நான்- ஆமாம்… வினோபா : - பாகிஸ்தான் போல் ஆகிவிடும்… நான் :- நியாயமான கோரிக்கை மறுக்கப்பட்டால், பாகிஸ்தான் போல்தான் ஆகிவிடும்…. வினோபா :- தனி நாடு என்றால் தனிப் பட்டாளம்கூட இருக்கும்…. நான் :- ஆமாம், தனிப்படை இருக்கும்… வினோபா :- தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம் ஒன்றாக இருக்குமா…? நான் :- எங்களுக்கு நம்பிக்கை உண்டு - ஏனெனில் நாலு மொழிகளும் ஒரே மூலம் கொண்டவை. வினோபா :- நான் நாலு மாதம் ஆந்திரத்தில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறேன். ஆந்திரர்கள் தமிழர்களுடன் ஒன்று கூடி அரசு அமைக்க விரும்பும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. நான் :- இப்போதைக்கு அவ்விதமான எண்ணம் அங்கு இருக்கலாம். தாங்கள் ஆந்திரம் சென்ற சமயம் ஆந்திரர்கள் தமிழர்களுடன் ஒரே அரசில் இருந்ததால், தங்கள் வளர்ச்சி தடைப்பட்டது என்று எண்ணி கசப்பு அடைந்திருக்கும் நேரமாக இருந்தது. தனியாகிவிட்டார்கள். இப்போது அவர்களுக்கும் மத்திய சர்க்காருக்கும்தான் தொடர்பு. இப்போதும் தங்களுக்கு வளர்ச்சி இல்லை என்றால், அதற்குக் காரணம் தமிழரல்ல, மத்திய சர்க்கார்தான் என்று அறிந்துகொள்வார்கள். இப்போதே மைசூர், ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளில் ஐந்தாண்டுத் திட்டங்களில் சரியான முறையில் தமக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்கவில்லை என்று எண்ணுகிறார்கள். வினோபா :- மத்திய சர்க்கார் அநீதியாக நடப்பதால்தானே பிரிந்துபோக விரும்புகிறீர்கள்? நீதியாக நடந்து கொண்டால்? நான்:- அப்படிப் பார்ப்பதைவிட இதுபோல் எண்ணக் கேட்டுக்கொள்கிறேன். மத்திய சர்க்கார் அநீதியாக நடப்பதால் கசப்படைகிறோம் என்று கூறுவதைவிட, மத்திய சர்க்கார் என்று ஒன்று இருந்தால், அநீதிதான் நடக்கும் என்று கொள்ள வேண்டுகிறேன்… மேலும் நீதியாக நடக்கக்கூடிய கடைசித் தலைமுறையே இப்போது வடநாட்டில் உள்ளது என்று நினைக்கிறோம். இனி வரக்கூடிய தலைமுறையில், அதிகமான அநீதிதான் இருக்கும். வினோபா:- நீங்கள் நாலு மொழிப் பிரதேசத்தையும் கூட்டாட்சியாக்கியான பிறகு உங்கள் ஆட்சியிலே அதிருப்தி யாருக்கேனும் எந்தப் பகுதிக்கேனும் ஏற்பட்டால், என்ன செய்வீர்கள்? நான் :- பிரிந்துபோக உரிமை தருகிறோம். வினோபா :- தனி நாடு ஆகும். நான்: ஆகலாம். வினோபா :- அதாவது, அன்புடன் ஒன்றாக இருக்கலாம், இல்லையானால், பிரிந்து போகவேண்டியது…. அதுதானே. நான்:- ஆமய்யா! ஒன்று சேர்ந்து இருப்பது என்பது ஒரு விஷயம் - அந்தப் பெயர் கூறிக்கொண்டு ஒன்றின்கீழ் ஒன்று என்ற நிலைமை ஏற்படுவது பேறோர் விஷயமல்லவா. வினோபா :- இதனை நான் புரிந்து கொண்டேன். இது அஹிம்சா முறையில்தானே நடைபெற வேண்டும். பலாத்காரம் கூடாதல்லவா? நான் :- பலாத்காரம் கூடாது. பலாத்காரமென்றால், ஆயுத பலாத்கார மட்டுமல்ல, தத்துவ மூலம் பலாத்காரம் புகுத்துவதும் கூடாது. வினோபா : அப்படியென்றால்…? நான் :- தேச ஒற்றுமை, தேசியம் என்ற ஏதேனும் தத்துவங்களையே கருவியாக்கிப் பலாத்காரப்படுத்துவது கூடாது. வினோபா :- அஹிம்சைதானே முறை. நான் :- ஆமாம். வினோபா :- அப்படியானால், தனி நாடு, அதிலே தனியாகப் படையும் இருக்கும் என்றீர்? ஏன், படை? நான் :- மற்றவர்களிடம் படை இருப்பதால், ஏற்படும் ஆசைதான் அதற்குக் காரணம். தாங்கள் இப்போது, மகா நாட்டிலே இந்திய சர்க்காருக்குக் கூடக் கூறியிருக்கிறீர், படை குறைக்க. பாபு ராஜேந்திரபிரசாத் கூடக் கேட்டுக் கொண்டி ருந்தார். பார்ப்போம், அவர்கள் படை குறைவதை. வேறொருவர் :- பாபு ராஜேந்திரபிரசாத் அவ்விதம் கூற வில்லையே. வினோபா :- இல்லை - நான் கூறியபோது பாபு ராஜேந்திர பிரசாத் இருந்தாரல்லவா… சரி… இதே போல, வங்காளம், மராட்டியம் இவைகளெல்லாம் பிரிந்து போக விரும்பினால்…. நான் :- பிரியலாம். ஆனால் அது அந்த இடத்து மக்களின் உணர்ச்சியைப் பொறுத்து இருக்கிறது. வினோபா : இப்படி சிறுசிறு நாடுகளாகிவிட்டால், சிறிய நாடுகளைப் பெரிய நாடுகள் பிடித்து அழிக்குமல்லவா… நான் : அப்படிக் கூறிவிடுவதற்கில்லை. சிறிய நாடுகளைப் பெரிய நாடுகள் தாக்காதபடி தங்களைப் போன்றவர்கள் உபதேசிக்கும் அஹிம்ஸை ஆத்ம சக்தி இவைகள் பயன்படு மல்லவா? வினோபா :- அரசியல் விஷயத்தில் உங்கள் எண்ணம் அறிந்து கொண்டேன். சமுதாய சம்பந்தமாக உங்கள் கட்சிக் கொள்கை என்ன? நான்:- தங்களுக்குத் திருமூலர் தெரியுமென்று எண்ணுகிறேன். ஒன்றே குலம் ஒருவனே தேவன் - என்பதைத் தான் நாங்கள் கொள்கையாக்கிக் கொள்கிறோம். வினோபா :- பொருளாதாரத் திட்டம் என்ன? நான் :- மனிதனுடைய அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, குடியிருக்கும் இடம் ஆகியவை சர்க்காரால் அனைவருக்கும் உறுதி அளிக்கப்பட வேண்டும். வினோபா:- அதாவது சுரண்டல் கூடாது? நான் :- அப்படிச் சொல்வதைவிட, நான் வேறுவிதமாகக் கூற விரும்புகிறேன். இந்த மூன்று அடிப்படைத் தேவைகளைப் பொறுத்த தொழில்கள் இலாப நோக்கத்துக்காக நடத்தப்படக் கூடாது. வினோபா:- அப்படியானால், அந்தந்த கிராமத்து நிலம், கிராமச் சொத்தாக இருக்க வேண்டும். நான் :- ஆமாம் - அதிலே உழைத்துப் பெறக்கூடியது, அந்தக் கிராம மக்களுக்குப் போதுமானதாக இல்லாவிட்டால் சர்க்கார், தேவைப்படும் அளவு தர வேண்டும். வினோபா : அதிகமாக இருந்தால் சர்க்கார் எடுத்துக் கொள்ளலாம். நான் :- ஆமாம். வினோபா:- (அரியநாயகம் என்பவரைப் பார்த்து) பார்த்தாயா! நான் சொன்னேனே! நம் கொள்கையேதான். (என்னைப் பார்த்து) கட்சி முறையில், பூமிதான இயக்கத்துக்கு என்ன செய்கிறீர்கள்? நான் :- கட்சி அடிப்படையில் நாங்கள் ஈடுபடுவதற்கு இல்லை. சங்கடம் உண்டு எங்கள் கட்சி இதில் ஈடுபட்டால். அதனாலேயே வேறு சில கட்சிகளுடைய பகை, தங்கள் இயக்கத்துக்கு ஏற்பட்டு விடக்கூடும். ஜகன்னாதன் : தனிப்பட்ட முறையில் கழகத் தோழர்கள் பல இடங்களில் நமக்குத் துணை இருக்கிறார்கள். வினோபா :- நீங்கள் தனிப்பட்ட முறையில் என்ன செய்கிறீர்கள்? நான்:- தங்கள் நல்ல நோக்கத்தை மக்களுக்குக் கூறுகிறேன். நல்லவர், அவரை ஏமாற்றி விடாதீர்கள் என்று கூடச் சொல்லி வருகிறேன். வினோபா :- தனிப்பட்ட முறையில் ஏதேனும் உதவி செய்கிறீரா? நான்:- என்னாலான உதவிகளை மக்களுக்குச் செய்து கொண்டிருக்கிறேன். வினோபா :- என்னோடு பாத யாத்திரை வாருங்களேன், ஒரு தடவை. பழக்கம் உண்டா? நான் :- பழக்கமில்லாமலென்ன, வருகிறேன். ஜெக :- மறுபடியும் வாருங்கள் பார்க்க. நான் :- அதற்கென்ன. இன்னும் ஒரு மாதம் கழித்து மறுபடி வந்து பார்க்கிறேன். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வினோபா புறப்பட்டார். நான் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, சில நிமிஷ நேரம், மற்ற நண்பர்களிடம் அளவளாவிவிட்டு, ஜீப்பின் துணையால் ஆற்றைக் கடந்து ஊர் வந்து சேர்ந்தேன். உள்ளமோ வினோபாவின் முயற்சிபற்றியும், அதற்குத் துணை நிற்பதாகக் கூறிடும் துதி பாடகர்களாலேயே, எந்தெந்த வகையில் குலைக்கப் பட்டு வருகிறது என்பது பற்றியும் எண்ணிற்று, அது பற்றிப் பிறகு. அன்பன், 17-6-1956 மின்னல் வேக மேதாவிலாசம்! ஐந்தாண்டுத் திட்டமும் பஞ்சமும் - இலங்கையில் தமிழர் கொடுமை. தம்பி, இப்போதெல்லாம் மிகமிக அருமையாகிவிட்டது - அத்தி பூத்ததுபோல என்றுகூடச் சொல்லிவிடலாம் ஒரு காட்சி - நான் சிறுவனாக இருந்தபோது கண்டிருக்கிறேன் அதனை - நீ காணவேண்டுமானால் நமது இயக்கக் கதிரொளி அதிகம் பரவாத "பட்டி’யாகச் சென்றால் எப்போதேனும் காணலாம் தெருக்கூத்துக் காட்சி. என்ன அண்ணா! இது! தெருக்கூத்து இப்போது எங்கும் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கிறது - அத்தி பூத்தது போல என்கிறாயே - சதா நடக்கிறதே - என்கிறாயா தம்பி! நான், நீ இப்போது காணும் தெருக்கூத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை - இப்போதுதான், ஆச்சாரியாரும் ஆதி சங்கரர் வாரிசும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே காலம் கெட்டுப் போய்விட்டதே - அம்முறையில் நடைபெறும் தெருக்கூத்து நீ காண்பது; நடத்தப்படுவது புராண நாடகமாக இருந்தால்கூட, அதிலே நாலு சீர்திருத்தப் பாடல் பாடினால் மட்டுமே, மக்கள் ஒப்பம் தருகிறார்கள்; நானும் அத்தகைய தெருக்கூத்துக்களைக் காண்கிறேன், ஒவ்வோர் சமயம். ஒரு சமயம், தம்பி, நான் நெடுந்தொலைவிலிருந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்தேன் - திருநெல்வேலிச் சீமையிலிருந்து. நாம் அன்று வாழ்ந்து, இடையில் தாழ்ந்து, இது போது விழிப்புற்று எதிர்காலம் ஏற்றமுடையதாக இருந்திடச் செய்வோம் என்ற சூள் உரைத்துக் கொண்டிருக்கும் "சேதி’ பற்றி, மக்களிடம் எடுத்துக் கூறிவிட்டுத் திரும்பிக்கொண்டிருக்கிறேன் - ஒரு குக்கிராமத்தில் கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது; யாரும் அறியா வண்ணம் ஒருபுறம் இருந்து கொண்டு, கண்டு களித்திடலானேன்; நல்லதங்காள் நாடகம்!! பெற்றெடுத்த செல்வங்கள் பஞ்சத்தால் எலும்புந் தோலு மாகப் போயிருந்த நிலையில், உத்தமி நல்லதங்காள், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன் அண்ணனிடம் உதவிக்குப் போகும் உருக்கமான கட்டம்; அந்தக் காட்சியைக் கிராமத்து மக்கள் மெத்த உருக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்; சிலர் கண்களைக்கூடக் கசக்கிக் கொண்டதைக் கண்டேன், தம்பி! நான் குறிப்பிடும் இந்தக்கூத்து நடைபெற்றபோது, டில்லியில் "முன்μ மகாப் பிரபு’ உணவு மந்திரியாக இருந்தார் என்றால், எப்படிப்பட்ட நிலைமை அப்போது நாட்டிலே என்பதை நீயே யூகித்துக் கொள்ளலாம்! நல்லதங்காள் நாடகத்திற்கு இயற்கையாகவே உள்ள உருக்கம், நாட்டின் அப்போதைய நிலைமையினால் பன்மடங்கு அதிகமாகி இருந்தது. அப்போது, என்னைத் தூக்கி வாரிப்போடும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. "உத்தமி! மெத்தக் கஷ்டப்படுகிறாயே! பஞ்சம் அப்படியா பரவி இருக்கிறது உன் தேசத்திலே….’’ என்று கட்டியக்காரன் கேட்கிறான். பாதி பேச்சும் பாதி அழுகையுமாக நல்லதங்காள் பேசுகிறாள்: "ஐயா! தர்மப் பிரபு! என்னவென்று சொல்லுவேன்? பதினான்கு வருஷமாக மழையே இல்லை! அதனாலே ஒரே பஞ்சம், பட்டினி.’’ "நெல்லே விளையவில்லையோ அம்மணி?’’ என்று கட்டியக்காரன் கேட்டான். "ஆமாம் ஐயா! அரிசிச் சாதத்தை, என் அருமைக் கண்மணிகள் கண்டு மாதம் ஆறு ஆகிறது!’’ என்றாள் நல்ல தங்காள். "அம்மணி! அரிசி கிடைக்காவிட்டால் என்ன? பருத்திக் கொட்டை கிடைக்கவில்லையா?’’ என்று கேட்டானே கட்டியக்காரன்!! "குபீர்’ என்ற சிரிப்பொலி கிளம்பிற்று. "அப்பா! வெந்த புண்ணிலே வேல் சொருகலாமா? பஞ்சத்தால் அடிபட்டு, பரதவித்து வருகிறேன், பச்சிளங் குழந்தைகளைப் பார்த்தும், அரிசி இல்லாவிட்டால் என்ன, பருத்திக் கொட்டை இல்லையா என்று கேட்டு, பரிகாசம் செய்கிறாயே! தர்மமா?’’ என்று நல்லதங்காள் கேட்கிறாள். கன்னத்தில் போட்டுக்கொண்டபடி, கட்டியக்காரன், "அம்மா! ஏழை என்மீது கோபம்கொள்ள வேண்டாம். உத்தமிகளுடைய சாபத்துக்கு என்னை ஆளாக்க வேண்டாம். சத்தியமாக நான் பரிகாசம் செய்யவில்லை. தாயே! எங்கள் தேசத்திலேயும் இப்போது பஞ்சம் - பசி - பட்டினி - அரிசி கிடையாது - அதற்கு இங்கே, உள்ள ஒரு மந்திரி, எங்களை பருத்திக்கொட்டை சாப்பிடச் சொன்னார். அதைத்தான் நான் சொன்னேன் மகராஜிமாதாவே, பரிகாசமல்ல!’’ என்று கூறிவிட்டுக் காலில் விழுந்தான். மீண்டும், பெரியதோர் சிரிப்பொலி கிளம்பிற்று. நல்லதங்காள், கட்டியக்காரனை எழுந்திருக்கச் சொல்லி, "அப்பா! நீ நல்லவனாக இருக்கிறாய்! உன் நாட்டிலே, பருத்திக்கொட்டையை தின்னச் சொல்லும் பாவிகளா மந்திரிகளாக இருக்கிறார்கள்?’’ என்று கேட்டாள். "ஆமாம் தாயே! நாங்களாகத்தான் தவமாய்த் தவமிருந்து அப்படிப்பட்ட தயாமூர்த்திகளை மந்திரிகளாகப் பெற்றோம்’’ என்றான் கட்டியக்காரன். "இது என்ன அநியாயமடா அப்பா! மாடு தின்னும் பருத்திக் கொட்டையை மக்கள் தின்னட்டும் என்று சொல்கிற மகாபாவியா உங்கள் தேசத்து மந்திரி! கடவுளே! ஏனோ இப்படிப்பட்ட அநியாயத்தைக் கண்டும் கண்திறவாமலிருக்கிறாய்?’’ என்று நல்லதங்காள் கேட்க, கட்டியக்காரன், "அம்மா! ஆண்டவன் என்ன செய்வாரம்மா! நாங்களாகத்தான் இந்த நாசகாலர்களைத் தேடிக்கொண்டு வந்து மந்திரிகளாக்கினோம்’’ என்று கூறிவிட்டு, மாட்டுப் பொட்டியில் ஓட்டுப் போட்டோம், மகராஜி எங்க வயித்திலே மண்ணைப் போட்டாங்க, மகராஜி! என்று பாடவே ஆரம்பித்தான். மக்கள், "கரகோஷம்’ சொல்லி முடியாது. தம்பி! நீ, இத்தகைய கூத்துக்களைக் காண்கிறாய், இப்போதெல்லாம். ஜாதி பேதம் கூடாது; அது ஆரியர் வகுத்த சூது! என்று வள்ளியிடம் முருகன் பாடுகிறார், "தேவலோகத்தி லேயே, எங்கப்பா நாரதப் பாவி! இருந்து தொலையேன். இங்கேதான், கலகமூட்டி, காரியத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்க, உங்க ஆளுங்க, ஊருக்கு ஒரு பத்து உச்சிக் குடுமியாவது இருக்குதே!’’ என்று நாரதரிடம் நையாண்டி பேசுகிறான் கட்டியக்காரன்! காலம் கெட்டுப் போச்சுது - என்று ஆச்சாரியார் இதனால்தான் பாவம், கை பிசைந்து கொள்கிறார்!! நான் குறிப்பிடும் தெருக்கூத்து - அசல் புராணம்!! பகுத்தறிவு அதிகமாகப் பரவாத காலத்து கூத்து. அப்படிப்பட்ட கூத்துக்களில், பரமாத்மாவைத் தரிசிக்க வேண்டும், “சாலோக சாமீப சாரூப சாயுச்ய’ பதவியைப் பெறவேண்டும், காமக் குரோதாதிகளை விட்டொழித்து, கர்மவினைகளை அறுத்தொழித்து, பரமபதம் சேர வேண்டும், அதற்கு என்ன வழி? என்ன மார்க்கம்? என்று அறியாமல், திகைத்துத் திண்டாடிக் கிடப்பார் ஒரு தேசத்து”ராஜா‘! திடீரென்று ஒரு நாள், யாராவது ஒரு மகரிμ அவர்முன் தோன்றுவார். உடனே மன்னர், அடியற்ற நெடும் பனைபோல் அவர் பாதத்தில் வீழ்ந்து வணங்கி, “மாமுனியே! மாதவரே! இந்தப் பாவியேன் கடைத்தேறும் மார்க்கம்தனை அருளுவீரே!’’ என்று கெஞ்சுவான். உடனே மனம் இளகி, மகரிμ, மன்னனை அருகே அழைத்து,”குழந்தாய்! இதோ நான் அருளும் இந்த மஹா மந்திரத்தை, நீ ஜெபித்துக் கொண்டிருப்பாயானால், உனக்குச் சகலமும் சித்திக்கும்’’ என்று கூறி, அவன் காதருகே, இரண்டோர் விநாடி உதடசைப்பார்! அவர் உதடசைக்கும் போதே, மன்னன், முகத்தை மலரச் செய்துகொண்டு, கண்களை மூடியபடி, “ஆஹாஹாரம்’ செய்வான். இரண்டோர் விநாடிகளிலே”மஹாமந்திர’ உபதேசம் முடிந்துவிடும். மன்னன் மற்றோர் முறை மகரிμயின் பாதத்தில் வீழ்ந்து வணங்கிவிட்டு, "தன்யனானேன்! தன்யனானேன்! இது நாள்வரையில், இதனை அறியாது மாயாப் பிரபஞ்சத்தில் உழன்று கிடந்தேன், பாவியேன்! இந்தக் கடையேனுக்கு அருள்பாலித்தீரே கருணாமூர்த்தி! உமது கருணையே கருணை!’’ என்று போற்றி விட்டு, மாதவ பூஜிதரே! உம் மலரடிதனை நிதம் பதமுடன் தொழுவேன், மாதவ பூஜிதரே! என்று பாடுவான்! காட்சி முடிவு பெறும்; மக்கள் காணக் கிடைக்காத காட்சி என்று கூறிக் களிப்படைவர். நான் சிறுவனாக இருக்கும்போது, இத்தகைய காட்சிகள் நிரம்பியதுதான் "கூத்து’’ நாடாளும் பிரச்சினை பற்றிப் பேசாமல், நாடகமாடும் பிரச்சினை குறித்துக் கூற வந்துவிட்டாயே, என்ன அண்ணா! என்று கேட்டுவிடாதே, தம்பி, உன் அண்ணனே ஒரு கூத்தாடிதான்!! நாடாள்வோரின் மூலம் கிடைக்கும் நன்மைகளை விடச் சற்று அதிகமாகவே நாடகமாடிகள் மூலம் மக்களுக்குக் கிடைக்கிறது என்ற நம்பிக்கை கொண்டவன். மேலும், தம்பி, இந்த நாடகம் பற்றிக் குறிப்பிடுவதும் நாடாள்வோர் பற்றிய பிரச்சினையை விளக்கத்தான்! மதி குறைந்து நிதி மிகுந்திருந்த பழைய மன்னனிடம் மந்திரம் கால், மதி முக்கால் படைத்த மகரிμ, இரண்டோர் விநாடி உதடசைத்து “மஹா மந்திரம்’ உபதேசிப்பாரே, தெருக் கூத்திலே, அதுபோல,”நறுக்கென்று’ நாலே நிமிஷம் பேசி, மக்கள் மனதிலே மூண்டு கிடக்கும் துக்கத்தைத் துடைத்து, கோபத்தைப் போக்கி, சந்தேகத்தை நீக்கி, தெளிவினைத் தந்து, தேச பக்தியை ஊட்டி, தமது கட்சியின் கீர்த்தியினை நிலைநாட்டி, மாற்றுக் கட்சியினரை ஓட்டி வருகிறார், நமது மதியூக முதலமைச்சர் காமராஜர்! அவருடைய மின்னல் வேக மேதாவிலாசம், எனக்கு, நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த தெருக்கூத்துக் காட்சியை நினைவுபடுத்தியது. அதைத்தான் உனக்கு நான் சொன்னேன். நான் வேறு என்ன தம்பி சொல்ல முடியும். வேதமும் உபநிஷத்துமா சொல்ல முடியும்!! ஒரே நாளில் பதினைந்து கூட்டங்களில் பேசியிருக்கிறார், காமராஜர்! யாராரோ, என்னைப் பேசத் தெரியாதவர், கல்லுப் பிள்ளையார் என்றெல்லாம் கேலி பேசினார்களே, இதோ பாருங்கள் என் திறமையை, மின்னல் வேகத்தில் மேதா விலாசத்தைக் காட்டுகிறேன் என்று கூறிவிட்டுக் கிளம்பினவர் - ஒரே நாளில் 15-கூட்டங்களிலே பேசித் தீர்த்துவிட்டார்! மக்களும் கேட்டுத் தொலைத்தார்கள்! ஒரே நாளில் 15 கூட்டங்கள்! தம்பி! நான் ஐந்து நாட்கள் சுற்றி விட்டு கணக்குப் பார்க்கிறேன் - திகைக்கிறேன். 15. ராமநாதபுரம், பரமக்குடி 16. வில்லிபுத்தூர், தளவாய்புரம் 17. சாத்தூர், விருதுநகர் 18. அருப்புக்கோட்டை 19. சின்னமனூர் இவ்வளவுதான் முடிந்தது!! ஐந்து நாட்களில் எட்டே கூட்டங்கள்! செச்சே! எனக்கே வெட்கமாக இருக்கிறது! ஒரே நாளில் 15 கூட்டங்களிலே பேசிய அந்த "மேதை’ எங்கே, ஐந்து நாட்கள் சுற்றியும் எட்டு கூட்டங்களுக்கு மேல் பேச முடியாமலுள்ள உன் அண்ணன் எங்கே! மின்னல் வேக மேதா விலாசமாக அல்லவா இருக்கிறது, அவருடைய அருஞ்செயல்!! ஆனால் தம்பி, அவரால் ஒரே நாளில் 15 கூட்டங்க ளென்ன-அதிகாரிகள் தம் ஆயாசத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடுமானால் இன்னும் ஒரு பத்து கூட்டங்களிலே கூடப் பேசுவார்! மகரிμ “மஹாமந்திரத்தை’ உபதேசிப்பது போலத்தானே! நம்மைப்போல, அடிவயிறு வலிக்க, காரணங்களை விளக்கவேண்டிய தொல்லை அவருக்கு ஏது? வரலாறு பேச வேண்டுமா! பூகோளம் காட்டப்போகிறாரா! இலக்கியம் குறித்து எடுத்தியம்பப் போகிறாரா? வாதிடப் போகிறாரா? பைத்தியக்காரர் நாம், இவைகளைச் செய்கிறோம்; அவர், நறுக்கென்று நாலே வார்த்தை பேசுகிறார் -”மஹாமந்திரம்’ உச்சரிப்பதுபோல - மக்கள் உடனே தெளிவு பெற்று, என்னே இவர்தம் திறமை! ஏன் இத்தனை காலமாக இதனை ஒளிய வைத்துக்கொண்டிருந்தார் என்று கொண்டாடு வதாக, அவர் கருதுகிறார்! கொப்பம்பட்டியிலும் சரி, கொடுமுடியிலும சரி, பொள்ளாச்சியிலும் சரி, போடியிலும் சரி, அவர் கூறுவது என்ன? எதிர்க் கட்சிகளை நம்பாதே! திராவிட நாடு என்பது பைத்தியக்காரத்தனம். வடநாடு தென்னாடு என்றெல்லாம் பேசக்கூடாது. வடக்கு ஒன்றும் கெடுதி செய்யவில்லை. காங்கிரஸ் நிறைய நன்மை செய்கிறது. ஏழை பணக்காரன் என்றெல்லாம் பேதம் பேசக்கூடாது. பணக்காரன் இலாபம் சம்பாதிக்கிறான்; சம்பாதிப்பதால் என்ன? வரி போட்டு, வாரி எடுத்துக்கொள்ளலாம். இவ்வளவுதான்! பதினைந்து என்ன, மூன்று பதினைந்துகூடப் பேசலாமே! இவைகளை விளக்க, இவைகளுக்குக் காரணம் காட்ட, ஆதாரம் கூற, மறுப்போரின் வாதங்களுக்குப் பதில் கூற, அவசியம் இருந்தால்தானே, நேரம் பிடிக்கும் - திறமையும் வேறு தேவைப்படும்! கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய், அண்ணன் எழுதிய கடிதம் எங்கே? என்று பேசுவதிலே தொல்லை என்ன இருக்கிறது! ஒரு நாளில் பதினைந்து ஒய்யாரமாகப் பேசிவிட்டு வரலாமே! பேசுகிறார்! காரணம் கேட்போர், ஆதாரம் தேடுவோர், வரலாற்றினைக் காட்டு என்போர், என் "கூட்டத்திலே’ இருந்தால் தானே, நான் அவைபற்றி எல்லாம் பேச வேண்டிய அவசியம் ஏற்படும் - நான் பேசும் கூட்டங்கள் எப்படிப்பட்டவை, அதிலே கலந்து கொள்வோர், யாரார் தெரியுமல்லவா? என்றுகூட அவர் கேட்டுவிடக்கூடும். ஏனெனில், அவருக்கு வேகமாக வளருகிறது கோபம்! கலெக்டரும், அவர் தயவினைத் தேடும் கனவானும், போலீஸ் அதிகாரியும் அவர் தயவின்றி அறுவடைக்குச் செல்ல முடியாத மிராசுதாரும், கிராமத் திருப்பணியாளர்களும் அவர்களுடைய உதவியைத் தேடித்திரியும் “காண்ட்ராக்டர்களும்’’ - கூடி நிற்கும் அந்த மாமன்றத்துக்கு இந்த மின்னல் வேக மேதாவிலாசம் போதும் - என்பதை தம்பி! நீ ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். இவர்களுக்கெல்லாம், எந்தப் பிரச்சினையிலே சந்தேகம் எழப்போகிறது - முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க! உண்மையைச் சொல்வதானால், தம்பி இவர்களுக்குப்”பிரச்சினை’ ஏது? அப்படியே ஏதாவது தனிப்பட்ட விஷயமான பிரச்சினை இருந்தாலும், பொதுக் கூட்டத்திலே எடுத்துக் கூறத் தக்கதாகவா இருக்க முடியும்! எனவேதான் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் தம் மேதாவிலாசத்தைக் காட்டிவிட்டு, கோட்டைக்கு வந்து கொலுவீற்றிருக்கிறார்! வறுமை கொட்டுகிறது பொறு! பொறு! வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டுகிறது? இரு! இரு! அகவிலையால் கஷ்டப்படுகிறோம்! ஆமாம்! ஆமாம்! விலை குறையும், சீக்கிரத்தில். பஞ்ச நிலைமை இன்னும் நீடிக்கிறது! ஐந்தாண்டுத் திட்டம் பஞ்சத்தை ஓட்டிவிடும். இவ்வளவு போதாதா! இதையாவது சொல்கிறாரே! "இந்தியா பல்வேறு நாடுகளைக் கொண்ட ஒரு உபகண்ட மாகத் திகழ்கிறது. நடு நிலைமையுடன் இந்தியாவின் சரித்திரத்தை ஆராய்ந்தோர் அனைவரும் இந்த முடிவுக்கே வந்திருக்கின்றனர். சீதோஷ்ண நிலை, மண் வளம், பொருளுற்பத்தி, மக்களின் பழக்க வழக்கங்கள், பேசும் மொழிகள், முதலியன யாவும் இந்தியாவிலுள்ள பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. இந்தியாவிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இனத்தினர் வாழ்கின்றனர். அந்த இனங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மொழி, நாகரிகம், சரித்திரம் ஆகியவைகள், இருந்து வருகின்றன. இங்ஙனம் பல நாட்டுப் பண்புகள் அமைந்திருப்பதனாலேயே இந்தியாவை ஒரு உபகண்டமென்று சொல்ல வேண்டி இருக்கிறது. மேலும், இந்தியாவின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்க்குங்கால் மேற்சொன்ன நாடுகள் ஒவ்வொன்றிலும் தனித்தனி அரசாங்கங்கள் நடந்துவந்திருப்பதாகவும் தெரிகிறது. ஆங்கிலேயர்களால் இந்தியாவில் ஒரே அரசாங்கத்தை நிலைக்கச் செய்வதும், இந்தியா ஒரே நாடு என்ற எண்ணத்தைப் பரப்புவதும் ஓரளவு முடிந்தது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் யாருடைய நன்மைக்காக அப்படிச் செய்தார்கள்? நமக்காக அல்ல. இந்தியா முழுவதையும் ஒரே ஆட்சியின்கீழ் வைத்து இவ்வளவு காலம் பிரிட்டிஷாரால் ஆள முடிந்ததற்குக் காரணம் அவர்களது ஆயுத பலமும், பிரித்தாளும் தந்திர புத்தியுமேயாகும். இந்தியாவில் ஒரு இனத்தையும் அதற்குரிய தாயகத்தையும் எதைக்கொண்டு நிர்ணயிப்பது? இது முக்கிய விஷயமே. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஆகியவைகளை உடையோரைத் தனி இனமாகவும், அவர்கள் சேர்ந்தாற்போல் வாழும் பிரதேசத்தை அவர்களுக்குரிய தாயகமாகவும் கொள்வதே சரியான முறை. இதன்படி பார்த்தால், இந்தியாவில். தமிழர், ஆந்திரர், கேரளர், கன்னடர், கூர்ஜரர், வங்காளத்தார், பாஞ்சாலத்தார், மராட்டியர் போன்ற பதினேழு தேசிய இனங்களும் அவற்றின் தாயகங்களும் இருக்கின்றன. இந்தப் பதினேழு நாடுகளும் தத்தம் எல்லையில் வேறு எவர் தயவுமின்றி, தனி அரசு புரியக் கூடிய அளவுக்கு, மக்கள் தொகை, பொருள் வளம், நிலவளம் ஆகியவைகளைப் பெற்றிருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக, மொழிப்பற்று, இனப்பற்று களுக்குப் புறம்பாகத் தமிழ்நாட்டில் தேசியம் வளர்ந்து வந்தது. அதே வழக்கம்தான் இன்றும் நீடித்து வருகிறது. ஆனால் இனியும் நீடிக்கக் கூடாது; நீடிக்க விடவும் முடியாது. ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரத்தைப் பெறப் போராடிய காங்கிரஸ்வாதிகள், பெற்ற சுதந்திரத்தைப் பிற இனத்தவரிடமிருந்து பிரித்து வாங்குவதற்குப் பின்வாங்குவது தமிழினத்துக்கு நன்மை செய்வதல்ல. ஏகாதிபத்தியச் சுரண்டலிலிருந்து இந்தியா விடுபடுவது போல் வடநாட்டாரின் சுரண்டலிலிருந்தும் தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்பதே தமிழரின் பொருளாதாரக் கொள்கை. வர்த்தகத் துறையில் ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற உரிமைகள் அனைத்தும் பம்பாய்த் துறைமுகத்தோடு நின்றுவிட்டன. தம்பி! திராவிடத்திலே, "திராவிடம்’ என்பதைக் கற்பனை என்று கூறி வருவோரே, இந்த அளவுக்குக் கூறிட நேரிட்டது. நாம், இந்தக் கருத்துகளுக்கு, வரலாற்றுச் சான்றுகளையும், இலக்கிய ஆதாரங்களையும் எடுத்தியம்புகிறோம். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் துணைகொண்டு துரைத்தனம் நடத்தத் தொடங்கிய வடநாட்டு ஏகாதிபத்தியம், நம் நாட்டினைத் தமது வேட்டைக்காடு ஆக்கிக்கொண்டதற்குப் புள்ளி விவரம் காட்டுகிறோம்; அவ்வப்போது காங்கிரஸ் தலைவர்களே கூட மனம் புழுங்கிய நிலையில், வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதுபற்றிக் குமுறுவதை எடுத்துக் காட்டுகிறோம், ஐந்தாண்டு திட்டம் ஒரு ஓரவஞ்சனைத் திட்டம் என்பதற்குக் காங்கிரஸ் ஏடுகளே தரும் கருத்துக்களை எடுத்து மக்களிடம் வழங்குகிறோம் - இவ்வளவையும் காமராஜர், தமது மின்னல் வேக மேதாவிலா சத்தின் துணைகொண்டு, ஒரே நாளில், 15 கூட்டங்கள் நடத்தி ஒழித்துவிடுகிறார். இஃதன்றோ ஆற்றல்! இவரன்றோ முதலமைச்சர்! மக்கள் என்ன எண்ணுகிறார்கள்? திராவிட நாடு தனி நாடாக வேண்டும் என்பதற்கும், வடநாட்டு ஆதிக்கம் நம்மை வாட்டி வதைக்கிறது என்பதற்கும், பணக்காரர் கொட்டம் வளர்ந்து வருகிறது, பாமரர் பராரியாகிக்கொண்டு வருகிறார்கள் என்பதற்கும் காமராஜர் “அதெல்லாம் இல்லை! அதெல்லாம் தப்பு!’’ என்பதன்றி, தக்க வேறு சமாதானமோ, காரணம் காட்டி மறுப்போ கூறக்காணோமே - என்று மக்கள் எண்ணிக்கொள்ள மாட்டார் களா? என்று நீ கேட்பது, தெரிகிறது தம்பி! மக்கள், அப்படித்தான் எண்ணிக்கொள்வார்கள்; எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் காமராஜரின் மின்னல் வேக மேதாவிலாசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், மனம் குமுறும் நிலையில் உள்ள மக்களல்ல; வறுமையால் கொட்டப்படும் ஏழைகளல்ல; பழையகோட்டை பட்டக்காரரும், பழனிச்சாமி கவுண்டரும், சேனாபதியும், மகாலிங்கமும் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் அகம்பாவத்தின் விலை அறிவார்களேயன்றி, ஆழாக்குக்கும் உழக்குக்குமா அலைந்து திரிபவர்கள்! அவர்கள், முதலமைச்சரைக் கண்டனர்; தம்மை அவர் களிப்புடன் கண்டார் என்று அறிந்து மகிழ்ந்தனர்; வேறொன்றும் அறியார், பாபம்! நாட்டிலே கொதித்தெழும் நிலைமையினைப்பற்றி அவர்கட்கு என்ன கவலை? முன்பு அவர்கள் காங்கிரஸ் எதிரிகள், இப்போது நண்பர்கள்! முன்பு, காமராஜர் அவர்களைக்”கடுவிஷம்’ என்றார், இப்போது சுவைக்கிறார்; அவர்கள் இந்த "உயர்வு’ கண்டு உளம் பூரித்துக் கிடக்கும்போது, ஒரு நாளில் பதினைந்து என்ன, நாற்பத்தைந்து கூட்டங்களில் கூடக் காமராஜர் தமது மேதா விலாசத்தைக் காட்டலாமே! ஒரே நாளில் பதினைந்து இடங்களிலே, முதலமைச்சர், மின்னல் வேகத்தில் தம் மேதாவிலாசத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்; இலங்கைத் தீவில் ஒரே நாளில் 25 பிணங்களைக் கண்டெடுத்தனர்! தமிழரின் பிணங்களடா தம்பி, தமிழரின் பிணங்கள்! யார் பெற்ற மக்களோ, எத்தனை மக்களைத் தவிக்கவிட்டுச் சென்றனரோ? வெட்டப்பட்டனரோ, குத்தப்பட்டனரோ, வெந்தழலில் தள்ளப்பட்டனரோ, வெறியரின் தாக்குதலுக்குப் பலியாகி, உயிர் இழந்த உத்தமர்களின் பிணங்கள் சிங்களத் தீவினிலே தலைவிரித்தாடும் செருக்குக்கு இறையான செந்தமிழ்த் தோழர்தம் உடலங்கள், அழுகிக் கிடக்கின்றன. கண்டெடுத்தவை இருபத்து ஐந்து, கணக்குக்கு வராதவை எத்துணையோ! கண்ணீர் சிந்தி என்ன பயன்? காட்டாட்சி நடக்கிறது அங்கே, இங்கே மின்னல் வேகத்தில் மேதா விலாசத்தைக் காட்டுகிறார் தமிழர் - பச்சைத் தமிழர்! சுட்டுத் தள்ளுகிறார்கள் வெட்டிக் கொல்லுகிறார்கள் துரத்தித் தாக்குகிறார்கள் கொள்ளை அடிக்கிறார்கள் பெண்களையும் மானபங்கம் செய்வதாகக் கூறப்படுகிறது. இலங்கையில், அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட்டி ருக்கிறது; அவதி, காட்டுத் தீயெனக் கிளம்பிவிட்டிருக்கிறது, ஆயிரம் "கோவா’ நடக்கிறது அங்கு! கடலுக்கு அப்பால்; எமது தாயகம் இருக்கிறது, காமராஜர் என்றோ தமிழர் கோலோச்சுகிறார், இந்தப் பேயகத்துச் செயலைக் கேட்டு அவர் சீறி எழுவார், சிங்கள வெறியைக் கண்டிப்பார் என்றெல்லாம் அங்கே தமிழர்கள், அந்தோ பரிதாபம், எண்ணிக்கொள்ளு கிறார்கள், இங்கே மின்னல் வேக மேதாவிலாசம் நடாத்தி கனதனவான்களிடம், கன்னல் மொழி பேசிக் காலந் தள்ளுகிறார், காமராஜர், கனம்! திருமாவளவன் சிங்களம் வென்றான், அங்கு பிடிபட்ட வரை ஈண்டுக் கொணர்ந்து காவிரிக்குக் கரை கட்டினான் என்கின்றனர், புலவர் பெருமக்கள்! அதோ, சிங்களத் தீவிலே, செந்நீர் ஆறாக ஓடுகிறது. கண்ணீர் பொழிகின்றனர், காவிரியைத் தமது என்று உரிமை கொண்டாடும் தமிழ் இனத்தவர். கோவா கொடுமையைக் கண்டிக்க, "நா’ இருந்தது; தமிழன் தாக்கப்படுகிறான், வாயடைத்துக் கிடக்கின்றனர். வகையற்றோர் ஆள்கின்றனர்; வேற்றுச் சீமையிலே நம்மவர் மாள்கின்றனர்! கொன்று குவிக்கப்படுகிறார்கள், நம் குலத்தவர்; கோலோச்சும் கோமான், முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக்கட்ட "பழையகோட்டை’களை நாடுகிறார் - பதவி மகுடி ஊதுகிறார்! “கதறுகின்றாள் தமிழ் அன்னை. அந்தக் கூக்குரல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் காதைத் துளைக்கிறது. ஆனால் அவர்கள் என்ன செய்ய முடியும்? சென்னை இராஜ்ய முதல் மந்திரி தமிழர் காமராஜ் உள்ள திசையை அவர்கள் நோக்குகிறார்கள். தமிழ் அன்னையின் கதறல் அவர் காதில் விழவில்லையே’’ - என்று பதறிக் கேட்கிறது,”சுதந்திரம்’. எப்படி ஐயா, விழும்! "இந்த வழியாகத்தானே பிணம் வரும்; வரட்டும், நான், கலந்து கொள்கிறேன்’’ என்று கூறவில்லையா, இரத்தக் கண்ணீரில் - குட்டம் பிடித்துப் பிறகு அலையும் மோகன்! நான் ஆள் பிடிக்கும் வேலையில் அலைந்து திரிகிறேன். தி.மு.க. வைத் தீர்த்துக்கட்டக் கங்கணம் கட்டிக்கொண்டு, வேலையில் இறங்கிவிட்டேன். ஆச்சாரியார் கைவலுக்கிறதா என் கரம் வலுக்கிறதா என்று பார்த்துவிட நான் "கோதா’வில் இறங்கிவிட்டேன். இந்த நேரத்தில், இலங்கையாம், இருபத்து ஐந்து தமிழ்ப் பிணங்களாம். செச்சே! சமயமறியாமல் தொல்லை தருகிறார்களே, சமூகத் துரோகிகள்! - என்றுகூட அவர் சலித்துக் கொள்ளக்கூடும்! நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவர் துணிந்து தம் மேதாவிலாசத்தைக் காட்ட மின்னல் வேகத்தில் புறப்பட்டிருக்கிறார்! ஒரே நாளில் 15!! இருபத்து ஐந்து பிணங்களாம்!! தமிழர் பிணங்களாம்! அங்குதான் எத்தனை எத்தனையோ இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்களாமே, ஒரு இருபத்து ஐந்துபேர் பிணமாகிவிட்டால் என்ன, குடியா முழுகிவிடும்? - ஒரு முதலமைச்சர் - தமிழர் - பச்சைத் தமிழர் - தம் மேதா விலாசத்தை மின்னல் வேகத்தில் காட்டிக்கொண்டிருக்கும் போது, கதறி, பதறி, இலங்கையில் தமிழர் இம்சிக்கப்படுகிறார்கள் என்கிறீர்களே, எவ்வளவு கேவலமான, கேடு கெட்ட, தேசத் துரோக புத்தி ஐயா உங்களுக்கெல்லாம்? என்று கேட்க, காமராஜரிடம் சீடர்கள் இருக்கிறார்கள்! மின்னல் வேக மேதா விலாசத்தை இரசிக்கிறார்கள் - பலனும் பெறுகிறார்கள். அன்பன், 24-6-1956 டமாஸ்கஸ் முதல்… நேரு பண்டிதரின் சுற்றுலா மராட்டிய மாது கைது - டமாஸ்கஸ்ஸில் விருந்து - நாகநாடு பிரச்சினை. தம்பி, மலாய் நாட்டு நண்பரொருவர் என்னைக் கண்டு பேசிக் கொண்டிருந்தார் - இங்கு நாகைப் பகுதியில் நமது கழகத்தில் ஆர்வத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர் - ஆறேழு ஆண்டுகளாக அங்கு சென்று வாழ்ந்து வருகிறார். அவர் "மலாய் நாட்டிலே, அண்ணா! நமக்கு மகத்தான செல்வாக்கு மலர்ந்திருக்கிறது; அங்கு, இங்கு மாநாடுகளிலே காணப்படும் கொடி அலங்காரக் காட்சி சாதாரணமாகவே ஊர்களில் தெரியும்’ என்று மிக்க ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தார். உடனிருந்து பேசிக்கொண்டிருந்த நமது நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி மலாய் நாட்டிலே, எந்தக் கழகம் செல்வாக்குடையது? திராவிட முன்னேற்றக் கழகமா, திராவிடர் கழகமா? என்று கேட்டார். வந்த நண்பர் அங்கு அந்த வித்தியாசமே கிடையாது என்றார்! கடல் கடந்தால் கடுவிஷம் குறையும் போலும் என்றெண்ணிக் கொண்டேன். நண்பர், மலாய் நாட்டிலே இருப்பதால், இங்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக் கட்டத் திராவிடர் கழகம் போதாதா என்று காமராஜர் இறுமாந்து கூறும் நிலைமை இருப்பது தெரியாது. எனவே, தூய உள்ளத்துடன், "எங்கள் பகுதியில் வித்தியாசம் கிடையாது’ என்றார். அவ்விதமான தூய உள்ளம், இங்கும் சிலருக்கு இருக்கிறது. தம்பி, உன் பொறுமையும் பொறுப்புணர்ச்சியும் தொண்டும் தோழமைப் பண்பும்தான், அந்தச் சிலர் பலராவதற்கு வழி செய்ய வேண்டும். மலாய் நண்பர், அரியலூரிலும் அம்பாசமுத்திரத்திலும், திருநெல்வேலியிலும் தில்லையிலுமே பேசிக்கொண்டிருந்தால், என்ன பலன் என்று எண்ணிக் கொண்டார் போலும்-எனவே அவர் "அண்ணா! மலாய் நாட்டுக்கு வாருங்களேன். சிங்கப்பூர், பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர் ஆகிய இடங்களிலெல்லாம் வந்திருந்து நமது தோழர்களிடம் விஷய விளக்கமளிக்க வேண்டாமா? அவர்களெல்லாம் எத்துணை ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதை அறிவீரா?’’ என்று கூறி என்னை மகிழ்வித்தார். நானோ அவர் பேசிக் கொண்டிருக்கையில் டமாஸ்கசில் இருந்தேன்!! இவர் என்னை இதோ அருகே இருக்கும் சிங்கப்பூர் அழைக்கிறார் - நானோ அங்கும் இன்னமும் சென்றிட முடியாத நிலையில்தான் இருக்கிறேன் - ஆனால் தம்பி, உன் துணைகொண்டு எந்தத் திராவிடத்தை விடுதலை பெற்ற நாடாக்க முடியும் என்று நான் மனதார நம்பிக்கொண்டு, சக்திக்கேற்ற வகையிலும், வாய்ப்புக் கிடைக்கும் அளவிலும் பணி செய்து கொண்டிருக்கிறேனோ, அந்தத் திராவிடத்தை இன்று வடநாட்டுடன் பிணைத்து ஏகாதிபத்தியம் நடத்தும் நேரு பண்டிதர், எங்கே சென்றிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தேன், ஒரு கணம், திகைத்தே போனேன். எங்கள் பண்டிதர் எங்கே இருக்கிறார்? இலண்டனில். எமது பண்டிதர் எங்கெங்கு சென்றார்? பாரிஸ், மாஸ்கோ, பீகிங், பெல்கிரேட், ஏதன்ஸ்!! - என்றெல்லாம் எக்காளமிடும் காங்கிரஸ் நண்பர், மனக்கண்முன் தோன்றினார்; பண்டிதர் சென்றுள்ள பயணத்தை நினைவூட்டினார், நானும் டமாஸ்கஸ் சென்றேன். டமாஸ்கஸ்! பன்னெடுங் காலமாகக் கவர்ச்சியூட்டும் காதைகளுக்குப் பிறப்பிடமான வசீகர மிக்க நகரம்! மதிலேறிக் குதித்து மான்விழியாளிடம் மதுரமொழி கேட்டு இன்புற்று, காட்சி கண்டு கடுங்கோபம் கொண்ட கொற்றவனின் கூர்வாளுக்கு இரையான குமரர்கள் உலவியதோர் இன்பபுரி என்கின்றனர், அந்த அழகு நகரை! அந்த நகரில் - டமாஸ்கஸ் நகரில் - நேரு பண்டிதர் விருந்துண்டார் - ஊர் சிறப்புப் பற்றி உபசரிப்பு நடத்தியோரிடம் உவகையுடன் எடுத்துரைத்தார். அவர்களுக்கு வந்துற்ற இன்னல் அனைத்தையும் துடைத்திடுவதாக வாக்களித்தார். அம்மட்டோ! விடுதலை பெற்ற நாடுகளின் முன்னேற்றம் குறித்தும், சிக்கிக் கிடக்கும் நாடுகளின் விடுதலைக் கிளர்ச்சி வெற்றி பெறுவதற்கான வழிவகை பற்றியும் எடுத்துரைத்தார்! என்னே பண்டிதரின் பரிவு! எத்துணை ஆர்வம் காட்டுகிறார், விடுதலைப் பிரச்சினையில்! எங்கோ கிடக்கும் டமாஸ்கஸ்தானே - நமக்கென்ன இங்கு பந்தமா, பாசமா, ஒட்டா உறவா என்று அலட்சியம் காட்டினாரில்லை; எவ்வளவு பரந்த நோக்குடன், பாரில் எங்கு எழும் பிரச்சினையாயினும், மக்களின் உரிமை அதிலே தொக்கி இருக்கிறதென்றால், நான் ஆர்வம் காட்டுவேன், அப்பிரச்சி னையை எனதாக்கிக் கொள்வேன் என்ற கருத்துடனல்லவா அவர் பேசியிருக்கிறார் என்றெல்லாம் எண்ணிப் பிரமுகர்கள் களிப்படைந்திருப்பர்; "பழச்சாறு பருகுக! சிற்றுண்டியை எடுத்துக்கொள்க’’ என்று உள்ளன்புடன் உபசரித்திருப்பர்! டமாஸ்கஸ்! டமாஸ்கஸ்!! கவர்ச்சிகரமான நகரம்!- என்று அவரும், நேரு! நேரு! புகழ்மிக்க தலைவர்! - என்று அவர்களும் பூரிப்புடன் பேசியபடி, விருந்து வைபவத்தில் கலந்து களிப்படைந்திருப்பர்! "வயது என்ன?’’ "நூறு.’’ "நூறு வயதா! பாட்டி! இந்தத் தள்ளாத வயதில், உனக்கேன் இந்தத் தொல்லை? பேரனும் பேத்தியும் பார்த்துக் கொள்ள மாட்டார்களா? உனக்கென்ன வந்தது? "அட அறிவற்றவனே! பேரனும் பேத்தியும் மட்டுமரியாதை யுடனும், உரிமையுடனும் வாழத்தானே நான் இந்தப் பாடுபடுகிறேன்; என் மக்களுக்காக நான்தானே பாடுபட்டாக வேண்டும்; பெற்று வளர்த்துப் பெரியவர்களாக்கியான பிறகு, எந்தப் பேயாட்சியிலே வேண்டுமானாலும் இருந்து போகட்டும் என்றா விட்டுவிடுவார்கள்! ஏறக்குறைய என் பேரன் வயதுதான் இருக்கும் உனக்கு. நீ, போய்க் கேட்கிறாயே, உனக்கேன் வம்பு என்று! இதுவா நியாயம்…?’’ “உம்! சரி, சரி, உன் வாயைக் கிளறினால், நீ மேலும் மேலும் பேசுவாய்…. சரி… உன் வயதை உத்தேசித்து எனக்கு வருத்தம். வேறென்ன. இந்த வயதிலே,”ஜெயில்’ வாசமா என்று எண்ணும் போது எனக்குத் துக்கம்… வேறென்ன…?’’ "பைத்தியக்காரனாக இருக்கிறாயே! ஜெயிலுக்குப் போகப் போவது, நான். உனக்கேன் துக்கம்?’’ "மகராஜீ! உன்னோடு பேசி என்னால் வெல்ல முடியாது. இருக்கட்டும், நீ சிறை செல்வதாலே, என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது, சொல்லேன் கேட்போம்…’’ "நீ கேலிக்காகக் கேட்டாலும் சரி, உண்மையாக விஷயம் தெரிந்துகொள்ளும் எண்ணத்தாலே கேட்டாலும் சரி, எனக்கென்ன. நான் சொல்லவேண்டியதைச் சொல்லி விடுகிறேன். படுகிழமாயிற்றே - நடக்கக்கூட முடியாத வயதாயிற்றே - நீ ஜெயிலுக்கு போய் என்ன சாதிக்க முடியும் என்றல்லவா கேட்கிறாய் - சொல்கிறேன் கேள். எனக்கோ வயது நூறு. காண வேண்டிய காட்சிகளைக் கண்டாயிற்று - இனி நான் தேடிப் பெறவேண்டியது எதுவும் இல்லை - கீழே உதிர்ந்து விழ வேண்டிய சருகு நான் - வீழ்ந்ததும் மண்ணோடு மண்ணாகிவிட வேண்டிய சரீரம் இது - இப்படிப்பட்ட நானே நாட்டுக்காக, உரிமைக்காக, அநீதியை எதிர்த்து, அடக்குமுறையை துச்சமாகக் கருதி, அறப்போரில் ஈடுபட்டு, சிறை செல்கிறேன் என்றால், இந்த நாட்டிலே உள்ள வீரர்கள், வாலிபர்கள், இளம் பெண்கள் எல்லாம், கிழவி அல்லவா வீரமாகக் கிளம்பி, தீரமாகப் போராடிச் சிறை சென்றாள், நாம் கல்லுபோல் உடலும், பாம்பைக் காலால் மிதித்துக் கொல்லும் வயதும் கொண்டி ருக்கிறோம், நாமுண்டு நம் குடும்ப சுகம் உண்டு என்று இருக்கிறோமே, எவ்வளவு கோழைத்தனமும் சுயநலமும் நம்மிடம் குடிகொண்டிருக்கிறது என்று எண்ணி வெட்கித் தலைகுனிவார்கள் ஒரு விநாடி, பிறகு வீறு கொண்டெழுவர். விடுதலைப் போரிலே ஈடுபடுவார்கள். விடுதலை கிடைக்கும்; உரிமை நிலைக்கும்! அறம் தழைக்கும்! மகனே! அதற்காகத் தானடா, நான் இந்த வயதிலே சிறை செல்கிறேன்.’’ மராட்டிய மண்டலத்திலே, இப்படி ஒரு உரையாடல் நடைபெறவில்லை - ஆனால் 100வயது சென்ற ஓர் மூதாட்டி பம்பாய் நகர் மராட்டியருக்கு என்பதற்காக நடத்தப்படும் கிளர்ச்சியில் ஈடுபட்டுச் சிறை சென்றார். அதிகாரியும், அந்த மூதாட்டியும் சந்தித்தபோது, பார்வையிலேயே, இந்த உரையாடல் நடைபெற்றிருக்கத்தானே வேண்டும். டமாஸ்கஸ், இந்த மூதாட்டியை அறியாது! நூறாண்டு வயதுள்ள மூதாட்டியும் துணிந்து சிறை செல்லும் அளவில் பம்பாய் அறப்போர், நேரு பண்டிதரின் ஆட்சியிலே நடைபெற்றுக் கொண்டிருப்பதை டமாஸ்கஸ் அறிந்திராது. துப்பாக்கியின் துணையுடன் துரைத்தனம் நடத்திவரும் தூயவர்தான் நேரு என்பதை டமாஸ்கஸ் அறியாது! டமாஸ்கஸ் நகரப் பிரமுகர்கள் நேருவின் புகழொளியில் மயங்கி, அவர் ஏறிவரும் விமானம் சோவியத் தந்ததாம், அவர் செல்ல இருக்கும் இடம் சீமையாம், அங்கு அவருக்கு உள்ள அலுவல்களிலே ஒன்று மகாராணியாருடன் விருந்து சாப்பிடுவதாம், குபேரபுரி என்று கொண்டாடப்படும் அமெரிக்காவில் அவருக்குக் கோடிகோடியாக டாலர்கள் கொட்டுகிறார்கள் என்ற இந்தச் செய்திகள் கேட்டுச் சொக்கிப் போயுள்ளவர்கள்! எனவே, அவர்கட்கு நேருவின் ஆட்சியிலே உரிமை முழக்கமிடுவோர் பிணமாவதும், ஊராள் முறையிலே உள்ள ஊழலையும் ஊதாரித்தனத்தையும் கண்டிக்க முற்படுவோர் கொடுமைப்படுத்தப்படுவதும், நூறு ஆண்டு வயதான மூதாட்டிகள் சத்யாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வதும். தெரியாது - தெரிந்து கொள்ளச் செய்வதற்கு, வழியே கூடக் கிடையாது என்று கூறலாம். காரணம், அவர்கட்குத் தரப்படும் செய்திகள் அத்தனையும், நேருவின் புகழ்பற்றியனவே தவிர, அந்தப் புகழ்த்திரைக்குப் பின்னால் உள்ள "பம்பாய்ச் சம்பவங்கள்’’ அல்ல! எனவே கவலையற்று, யாரேனும் ஏதேனும் துணிச்சலாகக் கேட்டுவிடுவார்களோ என்ற பயமற்று, நேரு பண்டிதரால், டமாஸ்கஸ் நகர் விருந்தின்போது, உரிமை, விடுதலை, சமாதானம், நல்லாட்சி, மக்கள் நல்வாழ்வு என்பன போன்ற சுவைமிகு சொற்செல்வத்தை வாரி வாரி வழங்க முடிகிறது! டமாஸ்கஸ் விருந்து நடத்துகிறது; விருந்தும் பெறுகிறது! ஏதன்ஸ் நகரம், உலக வரலாற்று ஏடு படித்திடுவோர்க் கெல்லாம், இனிப்பூட்டும் பெயர் - எழிலோவியமாகப் பன்னெடுங் காலத்துக்கு முன்பே திகழ்ந்ததோர் நகரம் - அதன் நெடுஞ்சாலைகளிலே, உலகை வென்ற வீரர்கள் உலவி இருக்கிறார்கள் - அதன் அங்காடியிலே, அவனி எங்கணுமிருந்து பண்டங்களைக் கொண்டுவந்து குவித்து வாணிபம் நடாத்தியோர் வாழ்ந்திருக்கின்றனர் - அதன் குன்றுகளிலே நின்று காவியம் புனைந்தனர், மலைச் சரிவுகளிலே குருதி கொட்டிச் சுதந்திரத்தை வளர்த்தனர் - ஏதன்ஸ் - ஏற்புடைய எண்ணங்கட்கெல்லாம் பிறப்பிடமாக இருந்திருக்கிறது, பல்வேறு துறைகளிலே வித்தகரானோர் வாழ்ந்திருந்த சிறப்பிடம் ஏதன்ஸ்! அங்கும் சென்றார் நேரு பண்டிதர்! எத்தகைய எழுச்சி ஏற்பட்டிருக்கும் அவர் உள்ளத்தில் என்பதை தெளிவாக யூகித்துக் கொள்ளலாம். அந்த எழிலூரில், நேருவுக்கு விருந்தும் உபசாரமும் கிடைத்தது; பிரமுகர்கள் பரிவுடன் பேசினர்; பண்டிதர், அந்நகர் வளர்த்து நானிலமெங்கணும் பரப்பிய பண்பாடு பற்றிப் பேசியிருப்பார்! ஏதன்ஸ் நகரில் இற்றை நாளில், ஏக்கம் குடிபுகுந்திருக்கிறது. தாயகத்துடன் சேரத்துடிக்கிறது, சைரப்ஸ் தீவு! அதனைத் தமது ஆதிக்கத்திலே வைத்துக்கொண்டு அடக்குமுறை மூலம் அந்த ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது பிரிட்டன். அங்கல்லவா செல்கிறார் நேரு பண்டிதர்! அழைக்கப்பட்டுச் செல்கிறார் - மதிப்பளிக்கப் பட்டுள்ள மாபெருந் தலைவர். அவரிடம் நமது குறையினைக் கூறுவோம்; உரிமைவேட்கை மிகுதியால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு வெற்றியும் பெற்றவரல்லவா பண்டிதர், அவர் அறிவார் உரிமைப் பிரச்சினை உயிரினும் மேலானது என்பதனை, அவரிடம் நாம் நமது உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும் விடுதலை ஆர்வத்தைக் கட்டினால் போதும். இலண்டனில் சிறிதளவு அமைச்சர்களிடம் எடுத்து இயம்புவார், வாதாடுவார் - என்றெல்லாம் எண்ணிக் கொண்ட ஏதன்ஸ் நகரத்தார், நேரு பண்டிதரை எதிர் கொண்டழைத்து உபசரித்து, விருந்து வைபவம் நடாத்தி, வீரரே! தீரரே! என்று அர்ச்சித்து உபசரித்திருக்கின்றனர். நேரு பண்டிதர், அகங்குழைந்துதான் போயிருந்திருப்பார்! அகில முழுதும் புகழ்க் கொடியைப் பறக்கவிட்ட ஏதன்ஸ் நகரம், சாம்ராஜ்யங்கள் பலவற்றினைத் தன் சுட்டு விரல் காட்டி நடாத்திச் சென்ற ஏதன்ஸ் நகரமல்லவா "உதவி’’ கேட்கிறது - உள்ளம்- பூரித்துத்தானே போகும்! சைப்ரஸ், சின்னஞ் சிறு தீவுதானே - சுண்டைக்காய் அளவுள்ளது - எங்கள் பாரத தேசத்திலே ஒரு தாலுக்கா அளவு இருக்கும், இதற்காக ஏன் இத்தனை கொதிப்பு, கொந்தளிப்பு? என்று கேட்டாரா? கேட்பாரா? சைப்ரஸ், கிரேக்கத்துடன் சேர விழைகிறது; தாயைச் சேய் அழைக்கிறது; அந்த பந்தமும் பாசமும், உரிமை உணர்ச்சியும் படைகொண்டு அழித்திடப் போமா? பாவிகள் ஏனோ இதனை அறிய மறுக்கின்றனர்? என்று பேசுகிறார்; ஏகாதிபத்திய முறையினைச் சாடுகிறார்; இது கேட்டு, ஏதன்ஸ் நகரப் பிரமுகர்கள், இவரன்றோ! உரிமையின் அருமைதனை அறிந்தவர்! விடுதலைக் கிளர்ச்சியின் மேம்பாட்டினை உணர்ந்த உத்தமர் இவரன்றோ! மனுச் செய்தோம், அசட்டை காட்டினர், மன்றாடினோம், மமதை பொழிந்தனர்; கண்ணீர் பொழிந்தோம்; கைகொட்டிச் சிரித்தனர்; கிளர்ச்சியில் ஈடுபட்டோம், சுட்டுத்தள்ளுகின்றனர்; இந்த வெறிச் செயலைக் கண்டிக்க, எங்கோ ஓர் கோடியில் உள்ள நாடு, ஏற்றம் பெறாதார் உள்ள நாடு, வெள்ளையருக்கு வேட்டைக்காடு என்றெல்லாம் இகழ்ந்துரைக்கப்பட்டு வந்த இந்தியாவிலிருந்து வந்துள்ள நேரு பண்டிதருக்கு நெஞ்சு உரமும் நேர்மைத் திறனும் இருந்திடக் காண்கிறோம்; இத்தகைய கருத்து வளமும் கருணை உள்ளமும் இவருக்கு இருப்பதனாலன்றோ, இவரை மனிதருள் மாணிக்கம் என்று புகழ்கின்றனர் என்று பாராட்டியிருப்பர். ஏதன்ஸ் நகரமே நேரு, நேரு! என்று புகழுரையைச் சொரிந்திருக்கும். சரண் அடைந்தால் உயிர் தப்பலாம்! இல்லையேல் சுட்டுத் தள்ளப்படுவீர்கள்!! தாக்கீது, பறக்கிறது, பட்டிதொட்டிகளிலெல்லாம்! பிடிபட்டனர், சுடப்பட்டனர்; தாக்கப்பட்டது தகர்க்கப்பட்டது; என்று மக்களில் ஒரு பிரிவினர் பீதியுடன் பேசுகின்றனர். நீங்களும், உங்கள் அடக்குமுறையும்! - என்று கேலி பேசியபடி சிலர், குன்றேறிக் கூவுகின்றனர், அதோ, அதோ! என்று காட்டியபடி படை வீரர்கள் அவர்களைத் துரத்துகின்றனர்; அந்த வீரர்களோ எந்தப் பிலத்திலே நுழைந்தனரோ, எந்தக் கணவாயில் பதுங்கினரோ தெரியவில்லை, படைவீரர்கள் கால் கடுக்கக் கடுக்க நடந்து சென்றதுதான் மிச்சம் என்று ஆயாசப் பட்டபடி, வெறுங்கையுடன் திரும்புகின்றனர். முற்றுகையிட்டு முறியடிப்போம்! படைகளைக் குவிப்போம் பகையினை முடிப்போம். என்று சீறி எழுகிறது உத்தரவு! படைத்தலைவர்கள் தூக்கிச் செல்லப்படுகின்றனர்; அதிகாரிகள் திக்குத் தெரியாத இடத்திலே கொண்டுபோய் விடப்படுகின்றனர்; காட்டிக் கொடுப்போர் வெட்டித் தள்ளப்படுகின்றனர்; பேதமும் பிளவும் மூட்டுவோர் எச்சரிக்கப்படுகின்றனர்; இது என்ன களம்? இவர்கள் நடத்தும் போர் இவ்வளவு "மாயசக்தி’ வாய்ந்ததாக இருக்கிறதே; பீரங்கிக்கும் பெரும் படைக்கும், டாங்கிக்கும் விமானத்துக்கும் இவர்கள் அஞ்சுவதாகக் காணோமே, திடீரென்று கிளம்புகிறார்கள், திணற அடிக்கிறார்கள்; திருப்பித் தாக்கத் தயாராகித் தேடிப் பார்த்தாலோ, ஒரு ஆளும் தென்படக் காணோம், இவர்களை எங்ஙனம் அடக்க முடியும்; துரைத் தனமோ இவர்களை அழித்தேயாக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துவிட்டது, நாம் என்ன செய்வது? காஷ்மீர் களம் இதனைவிட ஆயிரம் மடங்குமேல்! நிச்சயமாக! - என்று பெருமூச்சுடன் பேசுகின்றனர் பட்டாளத்துப் பெரிய ஆசாமிகள். தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலகக்காரரின் கோட்டைகள் தாக்கப்படுகின்றன. புரட்சி படைகள் சின்னாபின்னமாகின்றன. கலகத் தலைவர்களை மக்கள் கண்டிக்கின்றனர். நிலைமை வேகமாகச் சீர்திருந்தி வருகிறது. கலகக்காரரின் ஆவேசம் குலைந்துவிட்டது. இவ்விதமாகவெல்லாம் துரைத்தனம் அறிக்கைமேல் அறிக்கைவிட்டு, தன் பிரதாபம் கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளும் வேலையை வேறு கவனித்துக்கொள்ள வேண்டி நேரிட்டுவிட்டது. எப்படி இருக்கிறது நிலைமை? இன்னமும் கலகம் ஒழியவில்லையா? என்று வெளி நாடுகளி-ருந்தெல்லாம் கேட்கிறார்கள். சிறு சுயநலக் கும்பல் - கொள்ளைக் கூட்டம்? என்று எந்த எதிர்ப்பாளர்களைப்பற்றி ஏசிப் பேசினரோ, அந்த எதிர்ப்பாளர்களை அடக்க, ஒடுக்க, படைகள் சென்றும் வெற்றிகிட்டாமலிருக்கும் நிலைமை இருப்பது தெரிந்தால், துரைத்தனத்துக்கு மதிப்பு எப்படிக் கிடைக்கும்! எனவே கலகக்காரர்களிலேயே பிளவு ஏற்பட்டுவிட்டது; தலைவனின் வலது கரம்போலிருந்தவனே விலகி தலைவனின் தகாத போக்கைக் கண்டிருக்கிறான் : ஊர் மக்களெல்லாம் கூடி, இனி எமக்கு இந்தத் தலைவனே வேண்டாம் என்று உறுதியுடன் கூறி விட்டனர்; ஆதரிப்பாரற்று, அடவியில் பதுங்கியும் அருவியில் மூழ்கியும் அலைந்து திரியும் கலகத் தலைவன், நாளையோ மறுநாளோ சரண் அடையப்போகிறான்’ - என்று "பிரசாரம்’ செய்து பார்த்தனர். மக்கள் நம்ப மறுத்தனர்; வெளி நாடுகள், கண் சிமிட்டின. எல்லாம் நாகநாடு நிலைமை! சைப்ரஸ் தீவு, கிரீசுக்குத்தான் சொந்தம்; தாயகத்துடன் தீவு சேர்ந்திட விழைவதைத் தடுப்பது தகாது; தேசியக் கிளர்ச்சியை ஒடுக்க, அடக்குமுறை வீசுவது மன்னிக்க முடியாத குற்றம்; உரிமைக்காகப் போரிடும் உத்தமர்களைத் தூக்கிலிடு கிறார்கள், சுட்டுத் தள்ளுகிறார்கள், சிறையில் தள்ளிச் சித்திரவதை செய்கிறார்கள், பாதிரியாயினும் பள்ளி மாணவனாயினும், விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடுவது தெரிந்தால், பிடித்திழுத்துச் சென்று பேயாட்டம் நடத்துகிறது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்று அறியும்போது என் உள்ளம் அனலிடு மெழுகாகிறது, கண்களில் கனலும் புனலும் சுரக்கிறது என்று கனிவுடன் பேசிடும் நேரு பண்டிதருடைய ஆட்சியிலேதான், பன்னெடுங்காலமாக, சாம்ராஜ்யாதிபதிகளும் சாம்ராட்டுகளும் டில்லியில் அரசோச்சிய காலத்திலும், தனி அரசு செலுத்திக் கொண்டு வந்த நாக நாடு, இன்று டில்லியிடம் அடிமைப்பட மறுக்கிறது, விடுதலைப் போர் நடத்துகிறது. ஏதன்ஸ் நகர், இதனை அறியாது. சைப்ரஸ் தீவுக்கு உரிமை வழங்குவதுதான் நியாயம் என்று பேசும் நேரு, சுதந்திரம் கேட்கிற நாக நாட்டின்மீது படைகளை ஏவி இருக்கிறார் என்பதை அறியாது! நேரு பேசுவதைத்தான், ஏதன்ஸ் கேட்க முடிகிறது, நேருவின் பீரங்கிகள், நாக நாட்டுக் குன்றுகளைப் பிளந்திடும் சத்தத்தையும் துப்பாக்கிகள் நாகர்களின் நெஞ்சத்தைத் துளைத்திடும் சத்தத்தையும் கேட்டிட முடியவில்லை; வாய்ப்பு இல்லை! இது தெரியும் நேருவுக்கு - எனவே நாக நாட்டை நசுக்கிக் கொண்டிருக்கும் கோலத்தை மறைத்துக்கொண்டு, “அந்தோ! என்ன அநியாயம்! விடுதலை கோரும் சைப்ரஸ்மீது குண்டு பொழிகின்றனரே கொடியவர்கள்’ என்று கூறிக்கொண்டே கண்களைக் கசக்கிக் காட்டுகிறார்; ஏதன்ஸ்,”மனிதருள் மாணிக்கமே! மகாத்மாவின் வாரிசே!’’ என்று வாழ்த்துகிறது, ஏதன்ஸில் என் வேலை முடிந்தது; இனிச் செல்ல வேண்டிய இடம் நோக்கி, விமானத்தைக் கிளப்பு என்று களிப்புடன் கூறுகிறார் நேரு பண்டிதர். நாமும் சென்று பார்ப்போமே, தம்பி! ஆனால், நேருவின் ஆட்சியிலே உரிமைகள் அழிக்கப்படுகின்றன, மொழியும் கலையும் நசுக்கப்படுகின்றன என்று மட்டும் கூறிவிடாதே - புருவத்தை நெரிப்பார், போக்கிரிகளே! பாருங்கள் உங்கள் கொட்டத்தை அடக்குகிறேன்! - என்று மிரட்டுவார் - இரத்தக் கரை படிந்த கரமடா, தம்பி, ஈவு இரக்கமற்ற மனம்! அதோ, பண்டாரநாயகா அதைத் தெரிந்தவர் போலல்லவா சிரிக்கிறார். பாரத தேசம் இமயம் முதல் குமரிவரையில்! இலங்கைக்கு ஒப்பிட்டால் - ஏ! அப்பா! பெரிய நாடுகளைக் கண்டு சிறிய நாடுகள் கிலிகொள்ளுவது என்றால், இலங்கை இதற்குள் நடுநடுங்கிப் போயிருக்கும், ஆனால் இலங்கைப் பிரதமர் பண்டாரநாயகாவைப் பார், கெம்பீரமாக, இலண்டனில் உலவுகிறார். "இலங்கை இனிக் குடியரசு நாடு! இலங்கையில் பிரிட்டிஷ் தளம் இருக்கக் கூடாது!! என்று முழக்கமிடுகிறார் - அங்கேயே. பிரிட்டிஷ் சிங்கத்தை, அதன் குகையில் நுழைந்தே, பிடரி பிடித்துக் குலுக்குவேன் - என்று காலஞ்சென்ற சத்தியமூர்த்தி கூறுவார்! பண்டாரநாயகா இலண்டனிலேயே, பிரிட்டிஷ் பிடியை உடைத்தெறியப் போகிறேன் என்று முழக்கமிடுவது, அபாரமான வீரமென்று நான் கூறவில்லை - அதிலும் அந்தச் சிங்கம் பல்போன நிலையில் இருக்கிறது! ஆனால் நேரு பண்டிதரை, நேருக்கு நேராகச் சந்தித்த துணிவு இருக்கிறதே, அது உண்மையாகவே ஆச்சரியப்படத்தக்கதுதான்! என்ன காரியம் செய்துவிட்டு, சீமை வந்திருக்கிறார். தமிழர்களைப் படுகொலை செய்துவிட்டு, இலண்டன் வந்திருக்கிறார். சித்திரவதைக்கு ஆளான தமிழ் மக்களுடைய கண்ணீர் உலரக்கூட இல்லை, நேரு பண்டிதரைச் சந்திக்கிறார். நேரு பண்டிதர் எனக்கு நண்பர் என்றல்லவா கூறிக் கொள்கிறார் - எனவே கண்டதும் இரு தலைவர்களும் கனிவு ஒழுகத்தான் பேசிக்கொள்வர். "மெத்தச் சிரமம் தங்களுக்கு… நீண்ட பயணம்.’’ "ஆமாம்! என்ன செய்வது? ஈடன் ரொம்பத் தொல்லை தருகிறார்!’’ "தங்களைக் கண்டால், என்ன பேசுவது, தங்கள் பஞ்சசீலம் பாரெல்லாம் பரவி வருகிறதே! நாட்டோவும் சீட்டோவும் கேட்பாரற்றுப் போய்விட்டனவே! இனி நமது கதி என்ன? இனியும் எதற்காக அணுகுண்டு என்று பண்டிதர் கேட்டு விட்டால் என்ன பதில் அளிப்பது என்று எண்ணி எண்ணி, அந்தத் திகிலாலேயே, ஐசளோவர், பாபம், படுத்த படுக்கையாகிவிட்டார்!’’ "நாசர் வேறு, கெய்ரோவில் வந்து தங்கியாக வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார்.’’ "ஆமாம்! இதற்கெல்லாம் எப்படி உடம்பு இடங்கொடுக் கிறது?’’ “மனம்தான் காரணம்!’’”மனமென்றால் அது என்ன சாமான்யமானதா! மார்க்ஸ் செய்த தவறுகளையே கண்டறியும் வளம் நிரம்பியதல்லவா!’’ "நான், மனவளம்தான் உலகின் உண்மையான செல்வம் என்று கூறுவேன்.’’ “சந்தேகமென்ன! பண்டிதரே! பம்பாய் விஷயமாக, என்ன”ரகளை’’ தீர்ந்தபாடில்லையே!’’ "ஆமாம், நான் பரிதாபப்படடு, பயல்களை ஏதோ பேசட்டும் என்று விட்டுவைத்திருந்தேன். அதுகள் இப்போது தலையை விரித்துக்கொண்டு ஆடுகின்றன. செச்சே! இனி இதனைத் துளியும் அனுமதிக்கக் கூடாது என்று, பலாத்காரத்தை ஒடுக்கியே தீரவேண்டும், இதிலே ஈவு, இரக்கம், பரிவு, பாசம், தத்துவம் இவைகளைப்பற்றி எண்ணிக் குழப்ப மடையக் கூடாது, உறுதி வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து விட்டேன்.’’ "அதுதான் முறை! ஈவு இரக்கம் என்று இதோபதேசம் பேசுவது நல்லதுதான். ஆனால் பலாத்காரத்தை எப்படி அனுமதிக்க முடியும்? ஒழித்துக்கட்ட வேண்டியதுதான். எத்தனைபேர் பிணமானாலும் கலங்கவோ, கவலைப்படவோ கூடாது - பலாத்காரத்தை அழித்துத் தீரவேண்டும் - ஜனநாயகக் கடமைகளிலே முக்கியமானதாயிற்றே, தங்களுக்கா தெரியாது. ஆனால், சுயராஜ்யக் கிளர்ச்சிக் காலத்திலே, உரிமைபற்றிப் பேசியதை எல்லாம் இப்போதும் எண்ணிக் கொண்டு, தங்கள் தேசத்தவர் சிலர், தலைகால் தெரியாமல் ஆடுகிறார்கள்.’’ “மட்டந் தட்டிக்கொண்டு வருகிறேன். புறப்படுவதற்கு முன்பு சொல்லிவிட்டுத்தான் வந்தேன், எலெக்ஷன் முறையையே மாற்றிவிட வேண்டும் என்று.”ஓட்டு’ ஒன்று இருக்கிறது என்பதாலே தலைகால் தெரியாமல் குதிக்கின்றன.’’ “ஆமாமாம்! மொழிச் சண்டையைப் பாருங்களேன்…’’”வெறி அளவுக்குச் செல்கிறது….’’ "அந்த வெறியைச் சமாளிக்க, பண்டிதரே! மெத்தச் சிரமப்பட வேண்டி இருக்கிறது.’’ "வெளிநாட்டுக்காரர் தூண்டிவிடுகிறார்கள்…’’ "அதேதான் இலங்கையிலும், வெளிநாட்டுக்காரர்தான் தமிழர்களை தூண்டிவிடுகிறார்கள்’’ "நிலைமை இப்போது எப்படி இருக்கிறது?’’ “ஏன், சென்னை சர்க்கார் ஏதாவது கேட்டதா?’’”அதெல்லாம் இல்லை. பொதுவாக உலகப் பிரச்சினை களிலே அது ஒன்று என்பதால் கேட்கிறேன்.’’ "நிலைமை கட்டுக்கு எப்போதோ அடங்கிவிட்டது. வெட்டி வீழ்த்தி விட்டோம் - குழி தோண்டிப் புதைத்து விட்டோம் - தவறான வழி சென்ற ஜனங்களை’’ "தமிழர்களிடம் மெத்த மனக் கொதிப்பு ஏற்பட்டுவிடும்…’’ "அப்படித்தான் பலபேர் என்னிடம் சொன்னார்கள். நான் சொன்னேன், போங்களடா புரியாத பேர்வழிகளே! நேரு பண்டிதருக்கு நிலைமை தெரியாதா என்ன? பஞ்சாபிலும் மராட்டியத்திலும், நாக நாட்டிலும், பிற இடத்திலும், பலாத்காரம் கண்டதும், பண்டிதர், படையையே அனுப்பி அடக்கினவராயிற்றே - அவருக்கு ஆட்சிப் பொறுப்பும், அதிலுள்ள சிக்கலும் தெரியாதா? அவர் இதனைத் தமிழர்களுக்கு எடுத்து விளக்குவார் என்று கூறினேன்.’’ தம்பி, பண்டாரநாயகா இதுபோல் வாதாட வாய்ப்பு இருக்கிறது - நேரு பண்டிதரின் நடவடிக்கையே அந்த வாய்ப்பை அளிக்கிறது என்ற துணிவு இருக்கவேதான், தமிழ் இரத்தம் படிந்த கரத்தைக் கழுவிடவும் முயற்சிக்காமல், இலண்டன் மாநாடு சென்றிருக்கிறார். தட்டிக் கேட்கும் துணிவும் பண்டிதருக்குக் கிடையாது - பண்பும் பட்டுப்போய் விட்டது. எதைக் கேட்டால், எதைச் சுட்டிக் காட்டுவார்களோ என்ற பயம், பிய்த்துத் தின்கிறது அவரை, பாபம்! உரிமையை மறுக்கலாமா, சத்யாக்கிரகத்தை அடக்குமுறை கொண்டு அடக்க முற்படுவது அறமாமா? மக்களின் இதயநாதமெனத் தகும் மொழி, கலை, ஆகியவற்றினை அழித்தொழிக்கும் செயல் ஆகுமா, அடுக்குமா? - என்று எதைப் பண்டிதர் எவரிடம் கேட்டாலும், எவருக்கும், என்ன பதிலளிப்பது என்ற கலக்கம் ஏற்படக் காரணம் இல்லையே. பம்பாய், பஞ்சாப், கல்கத்தா, சென்னை, நாக நாடு. என்று நீண்டதோர் பட்டியலைக் காட்டியல்லவா அவர்களால் பேச முடிகிறது! எனவேதான் பண்டிதரின் சுற்றுப் பயணம் பெரும்பாலும் விருந்துமயமாகக் காணப்படுகின்றதே யன்றி, விவாதம், நியாயம் காணப் பேசுதல், தன் நாட்டு மக்களைப் பிற நாட்டார் இழிவாகவும் இம்சையுடனும் நடத்துவதுபற்றிக் கொதித்தெழுந்து கேட்பது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபட இயலவில்லை. டமாஸ்கஸிலிருந்து இலண்டன் வரையில், தலைநகர்களிலே விருந்து வைபவங்கள், சுவையான உபசாரப் பேச்சுக்கள், ஆங்காங்கு உள்ள உரிமைப் பிரச்சினைகளுக்குப் பேராதரவு காட்டும் போக்கு, இவ்வளவுடன் முடிந்து விடுகிறது. இலண்டன் செல்கிறார்-செல்லுமிடத்தில், தமிழரைக் கொடுமை செய்யும் பண்டாரநாயகாவைக் காண்பார், கொடுமையைக் கைவிடு, இல்லையேல் என் கொற்றம் சீறி எழும் என்று எச்சரிக்கை விடுப்பார், ஆப்பிரிக்க மனு ஸ்ட்ரிடம் வருவார், அவருக்கு நிறவேறி தலைக்கேறியிருப்பது தெரியும் பண்டிதருக்கு. எனவே அதனைக் கண்டிப்பார், பாகிஸ்தான் பிரதமரைக் காண்பார். காஷ்மீர் பிரச்சினைக்குப் பரிகாரம் தேடுவார் - என்றெல்லாம் பாழும் மனம் எண்ணுகிறது, ஆனால் அவரோ, பாருக்கெல்லாம் நல்லவராகப் பார்க்கிறார். படுகொலை செய்பவனையும். தோலிருக்கச் சுளை விழுங்குபவனையும் தோழனாகக் கொண்டு, தொல்லை நிரம்பிய உலகுக்கு நான் சொல்லிவருவது ஒன்றுதான். அதுதான் பஞ்ச சீலம் - அதை நான் இரங்கூனில் சொன்னேன், பீகிங்கில் சொன்னேன், பாரிசில் பேசினேன், நியூயார்க்கில் எடுத்துரைத்தேன், மாஸ்கோவில் சொன்னேன், பெல்கிரேடில் பேசினேன், இங்கும் சொல்கிறேன், என் தேசத்திலும் சொல்லுவேன் என்று பேசிவிட்டு, பாராட்டுரையைப் பெற்றுக் கொண்டு தாயகம் திரும்புகிறார் - மீண்டும் மடகாஸ்கர் செல்லப் போகும் "சேதி’யை மன்னார்குடிக்கு வந்து கூறுவார். மக்கள் பட்டினிகிடப்பர், வறுமை கொட்டும், வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டும். அகவிலை தாக்கும், உரிமை பறிபோகும், அடக்குமுறை அவிழ்த்து விடப்படும். வடநாடு கொழுக்கும், திராவிடம் தேயும். ஐயோ! - என்று சொன்னால் ஆஹா! தேசத் துரோகி!- என்று கொக்கரிப்பர். இதற்காகவா எமக்கு ஒரு நேரு? என்று கேட்டாலோ. பிடி சாபம் என்று மிரட்டுவர்! பொல்லாத காலமடா தம்பி. மிகப் பொல்லாத காலம்! ஆனால் பொழுது புலரத்தான் போகிறது! அதுவும் உன் ஆற்றலால்தான். அதுவரையில், அவர் டமாஸ்கஸ் செல்லட்டும், ஏதன்ஸ் காணட்டும், இலண்டனில் விருந்து பெறட்டும் - நீ மட்டும் தம்பி, நாட்டு மக்களிடம் பண்டிதரின் பரிபாலனத்திலே நெளிந்து கிடக்கும் அவலட்சணத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டு இரு - ஓயாமல் கூறு - நம்ம காமராஜர் கோபித்தாலும் கவலைப்படாமல் கூறு-தேர்தல் வருகிறது, இப்போ தேனும் தெளிவும் துணிவும் பெறுக! உரிமையும் வாழ்வும் கேட்டிடுக! என்று அனைவருக்கும் எடுத்துச் சொல்லிக் கொண்டிரு. பொழுது நிச்சயம் புலரும். அன்பன், 1-7-1956 மாமியார் வீட்டில்… தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் டில்லியும் தட்சிணப் பிரதேசம் - வடநாட்டார் தலைமை. தம்பி! மாமியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பிய மாப்பிள்ளை கதை தெரியுமா உனக்கு. கலியாண நாட்களிலே, கிராமத்துப் பெரியவர்கள் யாராவது கிடைத்தால் கேட்டுப் பார், சொல்லுவார்கள், சுவையாக இருக்கும். பொதுவாகவே, மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறவேண்டும் என்பதிலே ஒரு அலாதியான ஆசை உண்டு; தன் வீட்டிலே அந்த மதிப்பு இல்லாமற்போனாலும் பரவாயில்லை, மாமியார் வீட்டிலே மதிப்புக் கிடைக்க வேண்டும் என்பதிலே மிகுந்த அக்கறைகொள்வான். நீண்ட காலமாகவே இருந்துவரும் ஒரு வேடிக்கையான சுபாவம் - பழக்கம் - முறை. கவனித்தாயா, தம்பி, மாமியார் வீடு என்றுதான் சொன்னேன், மாமனார் வீடு என்று சொல்லவில்லை; காரணம் புரிகிறதல்லவா, மாமியார்தான் அங்கு ஆட்சி செலுத்துவது, மாமனார் வெறும் கிருஷ்ணமேனன்தான், இலாகா இல்லாத மந்திரி! இங்கும் அங்கும் சென்று மேலிடத்துச் செய்தியைக் கூறிவிட்டு வருவது! மாமியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பாத மாப்பிள்ளை இல்லை. மருதமுத்து இதற்கு விலக்கல்ல. எனவே, தன் நண்பனிடம் கேட்டானாம், மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறுவதற்கு என்னடா வழி என்று. நண்பன், அந்தக் கிராமத்தில் “ஆயிரந்தொழில்’ தெரிந்த அனுபவசாலி என்று பெயரெடுத்தவன். அவன் சொன்னான்,”மருது! மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறுவது மிகமிகச் சுலபமான காரியம். அங்கு எதை அவர்கள் அன்புடன் உபசாரத்துக்காகக் கேட்டாலும், வேண்டாம்! வேண்டாம்! என்று கூறவேண்டும்; பால் வேண்டுமா மாப்பிள்ளை! பதிர் பேணி வேண்டுமா மாப்பிள்ளை! லட்டு கொஞ்சம் சாப்பிடுங்களேன் மாப்பிள்ளை - என்று மாமியார் சொன்ன உடன், பல்லை இளித்துக்கொண்டு, கொடுங்கள் கொடுங்கள் என்று கேட்டால், ஏதேது! இது சுத்தப் பஞ்சைபோல இருக்கிறது - என்று எண்ணிக் கொள்வார்கள் - மதிப்புப் பிறக்காது - பசியே வந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் - "பிகுவு’ மட்டும் விடக்கூடாது’ என்றான். மருதமுத்து, இதில் ஒரு கஷ்டமும் இல்லை; நாலு நாளைக்குப் பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கவா முடியாது, என்று எண்ணிக்கொண்டு, மாமியார் வீட்டுக்குக் கிளம்பினான். சிம்மிளி - என்றோர் சுவையான பண்டம் செய்வார்கள். தம்பி, உனக்குத் தெரியுமோ என்னவோ! கேழ்வரகுடன் வெல்லமும், மணம் தர வேறு சில சில்லரைச் சரக்குகளும் கலந்து, உரலிலிட்டு "மசிய’ இடித்து எடுப்பார்கள். பதமாகச் செய்தால், அந்த இனிப்புப் பண்டம், மணம் பெற்றுத் தனியானதோர் சுவை தருவதாக இருக்கும். இடிக்கும்போதே கிளம்பும் மணம், உரலைக் கழுவி உலர்த்தும் வரையில் இருக்கும். "மாப்பிள்ளை! சிம்மிளி சாப்பிடுங்கோ.’’ "உஹும், வேண்டாம்’’ "ரொம்பச் சுவையாக இருக்கும் மாப்பிள்ளை.’’ "வேண்டாம், வேண்டாம்! எனக்குப் பிடிக்காது’’ "சிம்மிளியா பிடிக்காது; மணமாக இருக்கும், மதுரமாக இருக்கும், சாப்பிட்டுத்தான் பாருங்களேன், ஒரு விளாங்காயளவு.’’ “ஐயயே! எனக்கு அந்த”நெடி‘யே பிடிப்பதில்லை.’’ "எலுமிச்சம் பழ அளவாவது சாப்பிடுங்க. உங்களுக்காக எத்தனை கஷ்டப்பட்டு, நானே இடித்துச் செய்தது, மாப்பிள்ளை.’’ "தொந்தரவு செய்யாதீர்கள். எனக்கு இந்தப் பலகார மெல்லாம் பிடிக்காது.’’ மருதமுத்து அபாரமான திறமையுடன் நடந்து கொண்டான்; பண்டத்தின் மணம் மூக்கைத் துளைத்தது. நாக்கில் நீர் ஊறிற்று. சபலத்துக்குத் துளியும் இடம் தரவில்லை. வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டான். இந்த ஒரு சம்பவம் போதும். மாமியார் வீட்டிலே தன் மதிப்பு வேகமாக வளரும் - அமெரிக்கக் கடன் கிடைத்தவுடன் டாட்டா கம்பெனி "ஷேரின்’ விலை ஏறுவதுபோல, மதிப்பு உயரும் என்று எண்ணிக்கொண்டான். "எவ்வளவு உறுதியாக இருந்துவிட்டோம்! நாக்கிலே நீரே ஊற ஆரம்பித்து விட்டது, அவ்வளவு மணம்; சுவைமிக்க பண்டம்தான்; சாப்பிட்டிருக்கிறேன் பல தடவை; எவ்வளவு தின்றாலும் தெவிட்டாது’’ - என்று மாப்பிள்ளை தனக்குத்தானே கூறிக்கொண்டான். வீணான பிகுவு பிடிவாதம் கௌரவம் பார்க்கிறார். என்று ஏதேதோ பேசிவிட்டு, கணவன் ஆமோதிப்பைப் பெற்றுக்கொண்டு மாமியார் கண் அயந்தாள், மகளைப் பக்கத்தில் படுக்க வைத்துக்கொண்டு! உரல், அழைக்கலாயிற்று மாப்பிள்ளையை! மணம், காற்றடிக்க அடிக்க, "கமகம’வெனக் கிளம்புகிறது, மாப்பிள்ளையின் மூக்கைத் துளைக்கிறது, நாவில் நீர் ஊறுகிறது. பண்டத்தின் சுவைபற்றிய எண்ணம் வந்து தாக்குகிறது. புரண்டு புரண்டு படுக்கிறார் மாப்பிள்ளை. விடுவதாக இல்லை, மணம்! கொஞ்சம் சாப்பிட்டிருக்க வேண்டும்! ஒரு விளாங்காய் அளவு! எலுமிச்சம் பழ அளவாவது சாப்பிட்டிருக்கலாம். மாமியார், கெஞ்சித்தான் கேட்டாள். நான்தான் சற்று அதிகமாகவே "பிகுவு’ காட்டிவிட்டேன். இந்தச் சனியன், மூக்கைத் துளைத்து, நாக்கைக் கொட்டுகிறது. மாப்பிள்ளை, பாபம், "சிம்மிளி’ தவிர வேறு எதுபற்றியும் எண்ண முடியாத நிலைபெற்றுப் பரதவித்தான். விசித்திரமான யோசனை - நிலைமைக்கு ஏற்றபடி - எழுந்தது அவன் உள்ளத்தில். உரலில் சிம்மிளி கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டு இருக்குமல்லவா! எவ்வளவு திறமையாக வழித்தெடுத்துவிட்டாலும், சிறிதளவாவது நிச்சயம் உரலில் இருக்கத்தான் செய்யும் - கிடைக்கும் - அதையாவது எடுத்து, வாயில் போட்டுக் கொண்டால்தான், இந்தப் பாழும் ஆசை தீரும் என்று எண்ணினான்; அடுத்த விநாடி, மெள்ள, பூனைபோல நடந்தான். உரல் இருக்கும் இடத்துக்கு. “எனக்குத் தெரியுமடா மாப்பிள்ளை! நீ குஞ்சாலாடு, குலாப்ஜான், அதிரசம், ஆமவடை, எதை வேண்டுமானாலும் இழக்கலாம், என்னைமட்டும் விட்டுவிட, உன்னைவிட”வீராப்பு’ கொண்டவர்களாலும் முடியாது; ஓசைப்படாமல் நடுநிசியில் வருகிறாயா, வா! வா!’’ என்று மணம் அழைத்தது. மாப்பிள்ளை சுற்றுமுற்றும் பார்த்தபடி, உரலருகே சென்று, கரத்தை விட்டு உள்ளே துழாவினான் - அடியில் சிறிதளவு ஒட்டிக் கொண்டிருந்தது வழித்தெடுக்க எளிதாக இல்லை! எடுப்பதற்கு முடியாத நிலை, அவனுடைய ஆசையை ஆயிரமடங்கு அதிகமாக்கிவிட்டது. உரலடியிலே இருப்பதால், மணம் மிகவும் தொல்லை தந்தது, நாவிலிருந்து சொட்டுக்களே விழ ஆரம்பித்தன. ஆவல் மிகுதியால், தலையைக் குனிந்தான் - மேலும் மேலும் -அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் "சிம்மிளி’யைக் கண்டறிந்து எடுக்க! அப்பாடா! கிடைத்தது! மகிழ்ச்சியுடன் மாப்பிள்ளை “நிமிர்ந்திடலானான் - முடியவில்லை - தலை”கலவடை’யில், உரலின் மேல் பாகத்தில் மாட்டிக்கொண்டது, வரவில்லை. “ஐயோ!’’ என்று அலறிவிட்டான் - என்ன? என்ன? என்று கேட்டபடி, ஓடி வந்த மாமியார், மாப்பிள்ளை இருக்கும்”கண்றாவிக்’ கோலத்தைக் கண்டு, விழுந்து விழுந்து சிரித்தாளாம். மாமியார் வீட்டிலே மதிப்புப் பெற மதிகெட்ட மாப்பிள்ளைகள் முயற்சித்து இவ்விதமான அலங்கோலப்படுவதுண்டு. நமது காங்கிரஸ் தலைவர்கள், டில்லியிடம் மதிப்புப்பெற, பல்வேறு விதமான முயற்சிகள், விசித்திர விசித்திரமாக எடுத்துக் கொண்டு, பல தடவைகளில், கதையில் காணுகிறோமே “மாப்பிள்ளை’ அது போலாகிவிடுகிறார்கள். அப்படியானால், அண்ணா! மாமியார் வீட்டிலாகட்டும், டில்லியிலாகட்டும்,”மதிப்பு’ பெற என்னதான் சரியான வழி சொல்லு கேட்போம் என்று கேட்டுவிடாதே, தம்பி. நான் அந்த "வித்தையை’க் கூற அல்ல இதைச் சொன்னது. மதிப்பு கிடைக்க வேண்டும் என்ற மன அரிப்பு எடுத்து விடுகிறது காங்கிரஸ் தலைவர்களுக்கு. அதனாலே, பாபம் அவர்கள், "கலவடை’யைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு கலங்கிய மாப்பிள்ளை போலாகி விடுகிறார்கள் பல சமயங்களில். இதற்கு, எந்தக் காங்கிரஸ் தலைவரும் விதிவிலக்கு அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் முறை இருக்கிறது. அவரவர் திறமை, பழக்கம், பயிற்சிக்குத் தக்கபடி - ஆனால் ஒவ்வொருவரும் எப்படியாவது, டில்லியின் மதிப்பைப் பெற வேண்டும் என்று முயற்சித்தபடி இருக்கிறார்கள். இதிலே சுவையான பகுதி என்ன தெரியுமோ? எனக்குத்தான் டில்லியில் மதிப்பு அதிகம் - அவரைச் சீந்துவதில்லை - என்னிடம்தான் டில்லிக்கு நம்பிக்கை - அவரிடம் ஒரு துளியும் நம்பிக்கை கிடையாது - என்று ஒவ்வொரு தலைவரும் எண்ணிக் கொள்வதும், நண்பர் குழாத்திடம் கூறிக்கொள்வதும்தான்! டில்லியோ. "தட்டிவிட்டு’ வேடிக்கை பார்ப்பது, பலனும் சுவையும் தருகிறது என்பதை நன்கு அறிந்துகொண்டுவிட்டது. எந்தக் காங்கிரஸ் தலைவர், எந்தச் சமயத்தில், ஆட்சிப் பீடத்தில் இருக்கிறாரோ, அவரிடம் டில்லி மதிப்பு, அன்பு, நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக்கொண்டே இருக்கும் - எது வரையில்? - அவர் “பரிபூரண அடிமை’யாக இருக்கும் வரையில் - அவர் உள்ளத்திலே ஒரு துளி சுதந்திர உணர்ச்சி - தன்மானம் - துளிர்க்கிறது என்று தெரிந்தால்போதும், அவர் மீது பாயச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கும்”ஆசாமிகள்’ இருக்குமிடம் நோக்கி, புன்னகை பொழியும், கருணையைக் காட்டும், கண் சிமிட்டும்!! பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயம் பிடித்துக்கொண்ட நிலையில் மீண்டும் பணிய, குனிய, குழைய, கெஞ்சிட, முன்வந்து, "மதிப்பு’ப் பெற முயற்சி எடுத்துக் கொள்வர். பதவிப் பசையில் சிக்கிக் கொண்டோர்! பதவிப் பசி எமக்கு இல்லை என்று கூறிடவும், அந்த உறுதியுடன் நடந்திடவும் முனைவரேல், பாய்ந்து பிய்த்துத் தின்றிடக் காத்துக் கிடப்போரிடம், டில்லி பாசவலை வீசும் - நாசவேலையை, அவர்கள் வெற்றிகரமாக்கிக் காட்டுவர். காஷ்மீரச் சிங்கமென்று உலகுக்கே அறிமுகப்படுத்தப் பட்டவர், வகுப்புவாதப் பேயைச் சாடிச் சாடி ஓட ஓட விரட்டி அடிக்கும் மந்திரவாதி என்று தமிழகத்துக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டவர், ஜனாப் ஜின்னாவின் செல்வாக்கையே சின்னாபின்னமாக்கத்தக்கவர் என்று இஸ்லாமிய உலகுக்கு "சிபாரிசு’ செய்யப்பட்டவர் தம்பி, ஷேக் அப்துல்லா! பாபம்! வழக்கு இல்லை, விசாரணை இல்லை, உள்ளே சென்ற நாளைக்கூட உலகம் மறந்துவிட்டது, சிறையிலே தள்ளப்பட்டிருக்கிறார் - காரணம்? - அவர் சிறிதளவு உரிமை உணர்ச்சியை வெளியிட்டார் - டில்லி, ஒரு குலாம் பக்μயைப் பிடித்திழுத்து வந்து பீடத்தில் அமர்த்திவிட்டது! ஷேக் அப்துல்லாவின் கதியைக் கண்ட பிறகு, ஒவ்வொரு மாநிலக் காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் "அஸ்தியில் ஜுரம்’ கண்டுவிட்டது!! எந்தச் சமயத்தில், என்ன காரணத்தால், டில்லிக்குக் கசப்பு வந்துவிடுமோ - டில்லிக்கு என்னென்ன வகையான இனிப்பு ஊட்டவேண்டுமோ - யாரேனும் ஏதேனும் போதனை செய்துவிடுவார்களோ - என்ற திகில் குடைந்தபடி இருக்கிறது. இதை நன்கு தெரிந்து கொண்ட டில்லி, இவர்களை ஆட்டிப்படைக்கிறது. இதை மக்கள் எங்கே தெரிந்துகொண்டு விடுகிறார்களோ என்ற பயம் வேறு இவர்களைப் பிடுங்கித் தின்கிறது. எனவே டில்லி நோக்கிப் பல்லைக் காட்டுவதும், இங்குள்ள மக்களை நோக்கிப் படாடோபம் வீசுவதுமாகக் காலந்தள்ளியபடி உள்ளனர், சிரமமான வேலை! ஆனால் செய்து தீரவேண்டியதாக இருக்கிறது, அவர்கள்பால், தம்பி, ஒரு வகையில் நாம் பச்சாதாபம் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், தம்பி, நாம் மருதமுத்துவைக் கேட்போம், இதற்கான விளக்கம் கூறுவான். "மருதமுத்து! மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறவேண்டும் என்று, ஏனப்பா, முயற்சி எடுத்துக் கொண்டாய்? ஏன் உனக்கு அந்த எண்ணம் தோன்றிற்று?’’ "உண்மையைச் சொல்லிவிடுகிறேன். மாமியார் வீட்டார் என்னை மதிக்கமாட்டார்கள் என்றோர் பயம் எனக்கு. படிப்பு அதிகம் இல்லை. பண வசதியும் மட்டு. எந்த விதமான புகழ் பெறவுமில்லை! வாத நோய் வேறு என் உருவத்தைக் கெடுத்து விட்டது! - இதனால், மாமியார் வீட்டிலே மதிப்பாக நடத்த மாட்டார்களே என்ற பயம், சந்தேகம் எனக்கு.’’ மருதமுத்துவாவது தன் உயிர்த்தோழனிடம் இந்த உண்மையைக் கூறுவான் - நமது காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் உண்மையைக் கூறமாட்டார்கள்!! ஆனால், ஒருவர்மீது ஒருவர் “சாடி’ சொல்லும்போது மட்டும், உண்மையைக்”கசிய’ விடுவார்கள். தட்சிணப் பிரதேசத் திட்டத்தை, நிதி மந்திரி சுப்ரமணியமும், சேதுபதியும் ஆதரித்துப் பேசினர் - காரணங்கள் கூடக் காட்டினர் - அவர்களை மறுத்த முதலமைச்சர் தட்சிணப் பிரதேசத் திட்டம் இத்தகைய கேடு பயப்பது என்று விளக்கினாரா? இல்லை! தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எல்லாக் கட்சிகளும் (சர்க்கார் கட்சியும் சல்லாபக் கட்சியுந் தவிர) நடத்திய வெற்றிகரமான "அர்த்தால்’ மூலம், தமிழகம் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறது என்பது விளங்கிவிட்டது, நாடே எதிர்க்கிறபோது, அந்தத் திட்டத்தை நான் எப்படித் திணிக்க முடியும், என்ற விளக்கம் அளித்தாரா? இல்லை! ஆனால் என்ன காரணம் காட்டினார்? டில்லி சர்க்காரை களிப்படையச் செய்து, அங்கு பெரிய மந்திரிவேலை பெறலாம் என்ற ஆசையால், சில பேர் தட்சிணப் பிரதேசத்தை ஆதரிக்கிறார்கள்!! இத்தகைய சபலம்கொண்ட, பதவிமோகம் பிடித்தலையும் “உதவாக்கரை‘களைச், சகாக்களாகக் கொண்டு அமைச்சர் குழுவினை நடத்திச்செல்வது, காமராஜருக்கே இழுக்கல்லவா? - என்று நாம் ஏன் கேட்கவேண்டும் தம்பி. கேட்டால், அவர் “நான்தான் பச்சையாகச் சொன்னேனே, இதுகள் உதவாக்கரைகள், பதவி மோகம் பிடித்தலைபவர்கள்!’’ என்று,”ரோஷம்’ இருந்தால், அவர்களல்லவா, இப்படி எங்களை அலட்சியப் படுத்தி, பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியவரின் தலைமையில், நாங்கள், கேவலம் சில ஆயிரம் ரூபாய்களுக்காக, தன்மானத்தை இழந்து மந்திரி வேலை பார்க்கமாட்டோம் - பண்புதான் பெரிது; பதவி அல்ல! மானம் உயிரினும் பெரிது என்று போற்றிடும் தமிழ் மறக்குடியினர் நாங்கள், எங்களைப் பதவிப் பித்தர்கள், உதவாக்கரைகள் என்று பொதுமக்கள் முன்னிலையில்”முதலமைச்சர் சொல்லியான பிறகும் நாங்கள், பதவியில் இருத்தல், மிக மிகக் கேவலம், இதோ எங்கள் "ராஜிநாமா‘க் கடிதம்!!-என்று கூறி விலகல் கடிதத்தை என் முகத்தில் விட்டெறிந்துவிட்டு, வீரதீரமாய், மந்திரி சபையிலிருந்து வெளியேறிவிடுவதுதானே! வீரப்பேச்செல்லாம், நான் சவுக்கடி கொடுத்ததும், "விக்கல், விம்மல்’ ஆக அல்லவா மாறிவிட்டது!!’’ என்று சொல்லக்கூடும். அதிலே உண்மை இருக்கத்தானே செய்கிறது, தம்பி! உண்மையாகவே, தட்சிணப் பிரதேசத் திட்டத்தில், இந்த அமைச்சர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்குமானால், அதை மக்களிடம் விளக்கிப் பேசியதற்காக, உதவாக்கரைகள் என்றும், மேலிடத்துக்கு மனுப்போடுபவர்கள் என்றும், டில்லியில் மந்திரி வேலை தேடுபவர்கள் என்றும், என்றையத் தினம் முதலமைச்சர், ஒளிவுமறைவின்றி, மக்கள் மன்றத்திலேயே எடுத்துரைத்தாரோ, அப்போதே அல்லவா அமைச்சர் பதவியை உதறித்தள்ளிவிட்டு, தமிழினம் தன் பண்பினை இழந்துவிட வில்லை, எம்மைக் காணீர்! - என்று அறிவித்திருக்க வேண்டும். தட்சிணப் பிரதேசத் திட்டத்துக்கு ஆதரவு வளருமோ இல்லையோ, நிச்சயமாக, தமிழ் இனத்தின் மாண்பல்லவா உயர்ந்திருக்கும்! கொங்குநாடு, விழாவே கொண்டாடி இருக்கும் - எமது திருமகன், சென்னை நிதி டில்லி நிதி இரண்டும் தந்து, தில்லியோடு தமிழாளத் தருவரேனும், பங்கமுற வேண்டுமெனில், பதைத்தெழுவார், பதவியினைத் துச்சமென வீசிடுவார் என்று பதிகமே பாடும்! தென் பாண்டிமண்டிலம், சேதுபதி, குலப்பெருமையை, குடிப் பெருமையை, நிலை நாட்டிவிட்டார் என்று குதூகலித்திருக்கும்! இந்திய துணைக் கண்டமே, இவ்விருவரின் பெயர் கூறி வியந்திருக்கும். ஆனால், தம்பி, பாபம், மாவட்டக் கலெக்டரிடம். டாமிட் நான்சென்ஸ் இடியட் கூஸ் என்றெல்லாம் "வசைமொழி, கேட்டுக்கொண்டும், வேலையை விட்டு விட்டால் வேட்டிதுவைத்துப் பிழைக்கவும் முடியாதே என்றெண்ணி, நம் விதி! துரை, ஏதோ கோபத்தில் இருக்கிறார்! என்று சமாதானம் கூறிக்கொண்டு வேலை பார்த்துவரும் தாசில்தார் போலல்லவா, நிதி அமைச்சர் நடந்துகொண்டார் - சேதுபதியுமல்லவா அவர் வழி சென்றார்! ஏட்டிலேயும் சரி, நாட்டு நடப்புகள் பற்றிக் கூறிடும் நாளிதழ்களிலும் சரி, ஒரு முதலமைச்சர் இவ்வளவு வெளிப்படையாக, உதவாக்கரைகள் - பதவிக்காக அலைபவர்கள் - என்று பேசிய பிறகும், பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கும், மந்திரிகளை, நான் கண்டதுமில்லை கேட்டதுமில்லை! நானறிந்தவரையில் நாக்கில் நரம்பின்றிப் பலர் எந்த ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களை இழித்தும் பழித்தும் பேசினரோ, அவர்களில் ஒருவரிடமாவது, "சொரணை கெட்டத் தனமும்’‘, "பதவிக்காக மானத்தை இழந்திடும் கெடுமதியும்’’ இருந்ததில்லை. யாரோ ஒரே ஒரு உறுப்பினர்தான், "நம்பிக்கையில்லை’ என்று முணுமுணுத்தார் - அது கேட்ட நமது மறைந்த மாவீரர் பாண்டியன், அந்நாளே, மாவட்ட ஆட்சி மன்றத் தலைவர் பதவியை உதறித் தள்ளிவிட்டு, தமிழ்ப் பண்புக்கு உள்ள, உரத்தை உலகறியச் செய்தார்! இதோ இரு அமைச்சர்கள்!! முதலமைச்சர் வீசிய சிறு சொல்லைக் கவனித்தால் பில்லைபோட்ட சேவகன் எங்கிருந்து கிடைப்பான் என்று கேட்கிறார்களே! இந்த இலட்சணத்தில், எதிர்க்கட்சிகளை ஏளனம் செய்ய நாக்கு வேறு நீளுகிறது!! “சரி, சரி, சந்தடி சாக்கிலே கந்தப்பொடி விற்கக் கிளம்பிவிடாதே! நாங்கள் உதவாக்கரைகள். பதவிக்காகப் பல் இளிக்கிறோம் என்று அவர் கூறிவிட்டார் - சரி என்றே வைத்துக்கொள்வோம் - இப்படிப்பட்ட எங்களை, ஏனய்யா, இந்த வீராதி வீரர் விரட்டக்கூடாது? நாங்கள் இன்னமும் மந்திரிசபையில்தானே இருக்கிறோம்! உதவாக்கரைகளை ஏன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? தைரியமிருந்தால், எங்களை போகச் சொல்லட்டும்! பார்ப்போம்! போகச் சொல்லட்டும். அப்போது, நமது சக்தி என்ன, நமக்கு இருக்கும்,”ரதகஜ துரகபதாதிகள் "எப்படிப்பட்டது என்பதைக் காட்டுவோம்! முதலமைச்சர் பதவி இவருக்கு நிலைக்கிறதா என்பதையும் பார்த்து விடுவோம் என்றுதானே நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று நிதி அமைச்சர் பேசக்கூடும். இதிலும், உண்மை இல்லாமற் போகவில்லை! இந்த அமைச்சர்கள், உதவாக்கரைகள், ஊறு செய்தேனும் உயர்ந்த பதவி தேடுபவர்கள் என்பது முதலமைச்சருக்குத் தெரிந்திருக்கும் போது, அதை மக்களுக்கே தெரிவித்தாக வேண்டும் என்று அவருக்குப் பொறுப்புணர்ச்சி பொங்கி வழிந்திருக்கும்போது, அவர் நிச்சயமாகச் செய்திருக்க வேண்டியது, ஊசல் பண்டத்தைக் குப்பையில் போட்டு விட்டேன், உடைந்த பாண்டத்தை வீசி எறிந்து விட்டேன், உதவாக்கரைகளை விரட்டி விட்டேன், என்றல்லவா ஊராருக்கு அறிவித்திருக்க வேண்டும்? செய்யவில்லையே!! ஏன்? சிந்தையில் நடுக்கம் என்கின்றனர் சிலர். அது எப்படியோ போகட்டும், மக்கள் என்ன எண்ணிக் கொள்வார்கள்? உதவாக்கரைகள் என்று முதலமைச்சரால் ஏசப்படுபவர்கள் நிதி, மதி ஆகியவற்றின் காவலர்களா!! என்ன அக்ரமமய்யா இது! இவர்கள் இத்தகைய பதவிப் பித்தர்கள், பயனில் மாந்தர் என்று தெரிந்தும், இவர்களை ஏன் ஆளச்சொல்கிறீர்கள்? - என்று கேட்கமாட்டார்களா? கேட்கிறார்கள்!! ஆனால் ஏன் இந்தக் கூத்து நடைபெறுகிறது - டில்லியில் யாருக்கு மதிப்பு என்பதைக் கண்டறியும் பலப்பரீட்சையில் இருதரப்பினரும், ஈடுபட்டுள்ளனர். இதில் எந்தப் பக்கம் டில்லி சாய்கிறதோ, அந்தப் பக்கம் வலிவு பெறும் - இதுதானே இன்றுள்ள நிலைமை!! டில்லிக்கு இந்த “வாய்ப்பு’ இருப்பதனால்தான், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், டில்லியின் மதிப்பினைப் பெற, பல்வேறு வகையான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் - சில சமயங்களில் கதையில் கண்டோமே”மாப்பிள்ளை’ - அது போன்ற கண்றாவியும் நேரிட்டு விடுகிறது. காந்தியார் காலத்தில், ஒரு முறை, ஆச்சாரியார் காமராஜர் தகராறு கிளம்பி, ஊர் சிரிப்பாய்ச் சிரித்தது. தம்பி! கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது என்று அப்போது நான் ஓர் தலையங்கம் தீட்டினேன். ஆச்சாரியார், அப்போது காந்தியாரின் மதிப்பினைப் பெற்றிருந்தார் - எனவே, காமராஜர்மீது காந்தியார் கண்டனத்தை வீசினார்!! சூழ்ச்சிக்காரக் கும்பல் - என்ற பொருள்பட, காமராஜர் மீது காந்தியார் கண்டனம் வீசினார். சின்ன தலை படைத்த பெரிய தலைவர்! - என்று காமராஜர் குறித்து, கல்கி எழுதினார் - படமும் தீட்டினார். அது பழங்கதை! ஆனால் முற்றுப் பெறாதது!! இப்போதும் அதே போன்ற "சூழ்நிலை’ உருவாகிக் கொண்டு வருகிறது என்பது சிறு சிறு செய்திகள் மூலம் தெரிகிறது! அப்போதுபோலவே இப்போதும், டில்லியில் மதிப்பு எப்படிப் பெறுவது? என்பதுதான் போர் முறையாகவும், வாழும் வழியாகவும் இருந்து வருகிறது. இதிலே, யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதல்ல முக்கியம் - நாம், தம்பி, எந்தத் தரப்புக்கும் முட்பொறுக்கி வேலைக்காக முந்திக்கொண்டிருக்கவில்லை - நான் இதிலே தொக்கி நிற்கும் வேறோர் பிரச்சினையைக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வெற்றி மாலையும் வீரகண்டாமணியும் யாருக்குக் கிடைக்கிறது என்பதல்ல பிரச்சினை - டில்லியிடம் மதிப்புப் பெறுவதுதான், இங்கு செல்வாக்கு நிலைத்திருக்கச் செய்வதற்கான வழி என்ற கேடான, கேவலமான, சூழ்நிலை இருக்கிறதே, இதைக் கவனிக்க வேண்டும் - இதுதான் மக்கள் கூர்ந்து பார்த்திடவேண்டிய பிரச்சினை. எத்துணைதான் "தேசியம்’ கொண்டிருப்பினும், நாட்டின் பல்வேறு துறைகளிலும், குறிப்பாக, மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் வாய்ப்புகளாக உள்ள எந்தத் துறையினைக் கவனிக்கும்போதும், வடநாடு தலைமைப்பீடமாகி ஆதிக்கம் செலுத்துவதையும், தென்னாடு அடிமையாகி அடங்கி ஒடுங்குவதையும், காணாமலிருக்க முடியாது! காங்கிரஸ்காரர்கள் கூடத்தான்!! அந்த வெட்கக்கேடு நமக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதிலே அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி, நம் எதிரே, ஏதும் வேதனையற்றோர் போல நடிக்கிறார்கள் - உள்ளூர அவர்கட்கும் வேதனை பீறிட்டு எழத்தான் செய்கிறது. "அகில இந்தியா’ - என்ற அடைமொழியுடன் இயங்கும் எந்த அமைப்புக்கும், தம்பி, தலைமை வடக்கிலேதான். இங்கே பேரறிவாளர் உளர் - வீரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! ஆனால் அவர்கள் செக்கிழுக்க! தலைமை தாங்கவோ, வடநாடுதான் அருள்கிறது! அகில இந்திய, காங்கிரசுக்குத் தலைவர் - தேபர் - வட நாட்டார்! அகில இந்திய முதலமைச்சர் - நேரு பண்டிதர் - வட நாட்டவர். அகில இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குத் தலைவர், அஜாய் கோஷ்! அகில இந்திய பிரஜா சோஷியலிஸ்டுகளை நடத்திச் செல்ல ஜெயப்பிரகாஷ் நாராயண், கிருபளானி, அசோக் மேதா!! அகில இந்திய சோஷியலிஸ்டுக் கட்சிக்கு, டாக்டர் லோகியா! அகில இந்திய இந்து மகாசபையை நடத்திச் செல்ல கோல்வால்கர்! இராமகிருஷ்ண மடாலய இயக்கம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், அகில இந்திய இந்தி பிரச்சார சபா எதிலும், தலைமை அமைந்திருப்பது வடக்கேதான்! உன்னிடம் உண்மையைச் சொன்னால் என்ன, தம்பி - நான் சின்னாட்களுக்கு முன்பு வினோபாவைக் கண்டேனல்லவா - பெருமதிப்பு கொண்டேன் - எனினும் என் உள்ளத்திலே ஓர் எண்ணம் தோன்றி என்னை உறுத்தத்தான் செய்தது. ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்திருக்கிறார் வினோபா. மொழியால், மாநிலத்தால் பழக்க வழக்கங்களால், வேறு பட்டவர் எனினும், அவர் ஈடுபட்டுள்ள காரியம் மக்கள் தொண்டு என்று தெரிந்தவுடன், நம் தமிழகத்துச் சிற்றூரில், அவர் வருகையை விழாவாக்கி, அவர் பேச்சை உபதேசமாகக் கொண்டு, அவர் காட்டும் வழி நடக்க முயற்சிக்கிறார்கள். தமிழகத்துச் சிற்றூர்களிலெல்லாம், சொந்தத்துடன் பந்தத்துடன், அவர் வருகிறார் - வரவேற்கும் பெரிய உள்ளம் நமது மக்களுக்கு இருந்திடக் காண்கிறேன். இதைக் கண்டபோது, நான் எண்ணிக்கொண்டேன், கடந்த நூறு ஆண்டுக் காலத்தில் இதுபோல ஒரு தமிழர் - வடநாட்டில், குக்கிராமங்களிலும் வரவேற்கப்பட்டு, "பவனி’ நடத்தியதுண்டா? இப்போதாவது முடிகிறதா! திருக்குறளையும் திருவாய்மொழியையும் தாம் கற்றறிந்ததைத் தமிழரிடம், தமிழகத்தில், வினோபா எடுத்துக் கூறுகிறார் - போற்றுகிறோம் - பூரிக்கிறோம் - புனிதனே! என்று மக்கள் கொண்டாடுகின்றனர். இதே திருக்குறளையும் திருவாய்மொழியையும் - மாமேதை என்று புகழ்பெற்றுத் துலங்கும் ஆச்சாரியார், வடநாட்டிலே, (களக்காட்டூர், காட்டூர், தம்மனூர், வயலூர் போன்ற) சிற்றூர்களில் சென்று எடுத்துக் கூற இயலுமா? அங்கு உள்ள வடநாட்டு மக்கள், அவரை வாழ்த்தி வரவேற்க இசைவரா? அங்கு இருந்துதான் அறிவு ஒளியும், அன்பு நெறியும், அரசியல் முறையும், பொருளாதார வழிவகையும் அளித்திட இங்கு "தலைவர்கள்’ - வருகின்றனர் - இங்கிருந்து, அங்கு? ஏக்கமன்றி பிறிதென்ன பதிலுள்ளது! வினோபாவைக் கண்டபோது, என் மனதில் இந்த எண்ணம் எழத்தான் செய்தது. எந்தத் துறையிலும், வடக்கு தலைமை தாங்க, நடத்திச் செல்ல, ஆதிக்கம் செய்ய இடமளித்தான பிறகு, டில்லியில் மதிப்புப் பெற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம், ஏற்பட்டு விடத்தானே செய்யும், எனவேதான் காங்கிரஸ் தலைவர்கள், டில்லியின் தயவைப்பெறத் தவங்கிடக்கிறார்கள். பாரேன் ஒரு சம்பவத்தை. தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழருக்குத்தான் என்று எவ்வளவு அறிவாற்றலுடன், ஆர்வத்துடன், மக்களிடம் பேசினர் - காமராஜரும் அவருடைய உதவாக்கரைகளும்! மார்தட்டிப் பேசினார்கள், எங்களுக்கு யாரும் எடுத்துக் கூறவேண்டியதில்லை - யாமறிவோம் - எமக்குத் தெரியும் - எம்மால் ஆகும் - என்றெல்லாம் முழக்கமிட்டன்ர். தேவிகுளம், பீர்மேடு தமிழருடையதுதான் - இவை கிடைத்தாக வேண்டும் - கிடைத்தே தீரும் - பெற்றே தீருவோம் - பெற்றிட எம்மால் முடியும் - எம்மால்தான் முடியும் - இதைச் சாக்காகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஊளையிட வேண்டிய தில்லை என்றெல்லாம் "கர்ஜனை’ புரிந்தனர், காங்கிரஸ் மந்திரிகள்! சட்டசபைகளிலே தீர்மானம் நிறைவேற்றினர். தமிழ்நாடு காங்கிரஸ் குழு தீர்மானம் நிறைவேற்றிற்று! எல்லாவற்றினையும் வழித்தெடுத்துச் சாக்கடையில் போட்டது டில்லி! என்ன செய்தனர்? காமராஜரும் சரி, உதவாக்கரைகளும் சரி, என்ன செய்தனர்? என்ன செய்ய முடிந்தது? குளமாவது, மேடாவது - என்று பேசினார் காமராஜர். கேட்டுப் பார்த்தோம், கிடைக்கவில்லை - என்றார் நிதி அமைச்சர். மற்ற அமைச்சர்கள், இதைத்தான் சொல்வானேன் வாய்தான் வலிப்பானேன் என்று இருந்துவிட்டனர். ஏன்? டில்லியின் தயவு வேண்டும்! நல்ல பிள்ளைகள்! நமது சொல் தட்டாதவர்கள், குட்டினாலும், கும்பிடுபோடும் குணாளர்கள், - என்று டில்லி அறிந்திட வேண்டும். அந்த நல்லெண்ணம், ஆயிரம் தேவி குளத்துக்குச் சமானம்! - என்றுதான் எண்ண முடிந்தது. அதோ, வடக்கே பார் தம்பி. அங்கேயும் காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள் - காங்கிரசை மீறியும் தலைவர்களானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!! என்ன சொல்லுகிறார்கள், கேட்கிறதா? ஒரு கணம், காட்கிலின் முழக்கத்தைக் கேட்டால் கோழையும் வீரனாவான்!! "கட்சி பெரிதுதான், ஆனால் உரிமை அதனினும் பெரிது’ என்கிறார். "நேரு என் தலைவர் சரி, ஆனால் மராட்டியம் என் தாயகம்! அதற்கு நான் துரோகம் இழைக்கமாட்டேன்’ என்கிறார். கிளர்ச்சி ஓயவில்லை - அறப்போர் நடந்தவண்ண மிருக்கிறது - ஆயிரக்கணக்கிலே அணிவகுத்து நிற்கின்றனர். தேஷ்முக் - பம்பாய் மராட்டியருக்கு இல்லை என்றால், நான் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது - நான் மராட்டியன்! - என்று முழக்கமிடுகிறார். பஞ்சாப், வங்காளம், பீகார் - எங்கும், தம்பி, உரிமை பறிபோகிறது என்று தெரிந்ததும் துடித்தெழுந்து, தடுத்து நிறுத்துவோம் என்று முழக்கமிடத் தலைவர்கள் இருக்கிறார்கள். இங்கோ, தாசர்புத்தி தலைக்கேறிவிட்ட நிலையில், குளமாவது மேடாவது, எனக்குப் பதவிபோதும் என்று கூறிடத்தான் "தலைவர்கள்’ இருக்கிறார்கள். அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள் அங்கே! கெஞ்சிக் கூத்தாடி பஞ்சைப் புத்தியைக் காட்டுவோர் இங்கே!! பொதுவாக, தென்னாட்டில் வடநாட்டு மக்களும் வட நாட்டுத் தலைவர்களும் அடைந்துள்ள கௌரவம் வடநாட்டில் தென்னாட்டு மக்களும் தென்னாட்டுத் தலைவர்களும் அடைய வில்லை. நம் நாட்டைப் பற்றியும் நமது பண்பாட்டை பற்றியும் வடநாட்டில் உள்ள பொதுமக்களுக்குப் பொதுவாக ஒன்றுமே தெரியவில்லை என்று சொன்னால் மிகையாகாது. அப்படி நம்மைப் பற்றித் தெரிந்து கொண்டிருப்பவர்களும் நல்ல முறையில் தெரிந்து கொண்டிருக்கவில்லை என்பதைப் பார்க்கும் போது மனத்துக்குச் சலிப்பாகத்தான் இருந்தது. 12-2-56-ல் கல்கியில் காணப்படும் மணிவாசகம் தம்பி. சலிப்பு, வெறுப்பு, கசப்பு, - எல்லாம் ஒரே வழி எழுகிறது - எனினும், ஆட்டிப்படைக்கும் அதிகாரம் டில்லியில் இருக்கிறதே என்பதை எண்ணும்போது, அச்சம் பிறக்கிறது, அதனால் அடிபணிகிறார்கள். அவர்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்குவதும் நமது அருந்தொண்டிலொன்றாகத்தான் அமைய வேண்டும். டில்லியின் ஆதிக்கத்தை எதிர்த்து, நாம் நடாத்தும் அறிவுப் பிரசாரம், மக்களை மட்டுமல்ல, மருட்சியால் கட்டுண்டு கிடக்கும் இந்தத் தலைவர்களையும், அச்சத்தை விட்டொழிக்கச் செய்யும். ஏதுமிலாதார், இவர்கட்கே டில்லி ஆதிபத்தியத்தை எதிர்த்திடும் துணிவு பிறக்கிறதே, நாம் மட்டும், ஏன் கோழைகளாய், கோடிட்ட இடத்தில் கையொப்பமிட்டுக் குற்றேவல் புரிபவராய் இருந்திட வேண்டும் - கொற்றம் நடாத்த நம்மால் ஆகாதா என்று அவர்கள் எண்ணிடும் நிலைமை பிறந்திட வேண்டும். அந்த நன்னாளை எதிர்பார்த்தே, தம்பி, நீயும் நானும், நாளெல்லாம் உழைக்கிறோம். நமது உழைப்பு வீண் போகாது! நிச்சயமாக!! அன்பன், 8-7-1956 உழைப்பே செல்வம் ! சீனாவில் நடிகையின் அரசியல் வேலை - காங்கிரஸ் தலைவர்களில் நடிகர் - உழைப்பின் பெருமை. தம்பி, நாடகமொன்று காணப்போகிறாய் இப்போது - சுவை தருவதுதான்! கருத்துடன் காண்போர் பயன்பெற முடியும். கண்ணை மட்டுமே பயன்படுத்துவோர் களிப்பு மட்டுமே பெற இயலும். நான் பேசிக்கொண்டே இருக்கிறேனே - அதோ பார் கண்களிலே காதல் ஒளி பூத்திடும் நிலையில் ஓர் கன்னி - பகையும் படையும், பழியும், பரிகாசமும், எது குறுக்கிட்டாலும் அஞ்சாது நின்று, காதலுக்காகத் தன்னை அர்ப்பணித்து விடும் அழகரசி! “கண்ணாளா! என்னை உம்மிடமிருந்து பிரித்துவிட எவர் என்ன சூழ்ச்சி செய்யினும், வெற்றி பெறப் போவதில்லை. வியர்த்து, விம்மிக் கிடக்கும் இந்த வறியவளா, சீறி எழும் பகைதனைக் கண்டு கலங்காதிருக்கப் போகிறாள்? பெற்றோர் மிரட்டினால் பெரும் பீதி பிறக்கும்! ஊர்ப்பகை கிளம்பிடின் உள்ளம் நடுக்குறும்!! கொற்றம் கோலெடுத்தால் குலை நடுங்கும்! இவளோ இளையள் - என்ன செய்யவல்லாள்? என்று எண்ணாதீர்! ஏந்திழையே! என் இதயராணி! தண்ணொளி தந்து தரணிக்கே தனியானதோர்”தகத்தகாயத்தை‘த் தரும் வெண்ணிலவு! அதுபோன்றே ஆரமுதே! உன் அன்பொளி பட்டதும், என் உள்ளமே புதுப் பொலிவு பெறுகிறது என்று அன்றோர் நாள் என்னிடம் கூறினீரே! என்னை வாழ்விக்க வந்த வேந்தே! காதலிக்கவும், அதற்குத் தடை ஏற்பட்டால் உருகி கருகிப் போகவும் மட்டுமே என்னால் முடியும் என்று எண்ணாதீர். என் காதலைக் கருக்கிடத் துணிவோரை எதிர்த்து நின்று வெற்றி பெறும் ஆற்றலும் படைத்தவள் நான்!’’ " என் அன்பே! இன்பமே! அன்னமே!…’’ "என்றென்றும் இந்த அன்பு மாறாதே, மன்னவா?’’ "தேனின் இனிமையும், தென்றலின் குளிர்ச்சியும், பூத்துக்குலுங்கும் மலரின் கவர்ச்சியும் மாறுமோ, மைவிழி யாளே!’’ "ஏனோ எனைப் பெற்றோர் நம்மைப் பிரித்திடும் பேய்க் குணம் கொண்டோராயினர்! வானத்து வெண்ணிலவைப் பறித்தெடுத்துச் சதுப்பு நிலத்திலே ஆழப்புதைத்துவிட எண்ணுவதா, அறிவு!’’ "காதலின் வலிவு எத்தகையது என்பதை அவர்கள் காண விரும்புகின்றனர் போலும்!’’ "கட்டாரியை என் மார்பில் பாய்ச்சிடும்போது, குபு குபுவெனப் பொங்கி எழும் குருதியும், என் அரசே! உமது திருநாமத்தைத்தான் ஒலிக்கும்…’’ "கொத்தும் கழுகையும் துரத்திவிட்டு, கோலமயிலே! நான் பிணமாகிப்போன நிலையிலிருந்தும் மீண்டெழுந்து வந்து, உன் பக்கம் நிற்பேன், ஒருகணம் காண்பேன், ஒவென்றலறி வீழ்வேன் - உன்னை அணைத்தபடி உயிர் துறப்பேன்’’ தம்பி! போதும்; இந்தப் பக்கம், பார். நாடகக் கொட்டகையில் காணும் இந்தக் காதற்காட்சியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே காலத்தை ஓட்டிவிடுவதற் கில்லை; காரியமாற்ற வேண்டும் நிரம்ப. காதல் மட்டும்தான் உனக்குள்ள வேலை என்று எண்ணிக்கொண்டு, இன்னும் என்ன? மேலால் என்ன? காதல் கைகூடிற்றா? கட்டழகி கடிமணம் புரிந்துகொண்டாளா அல்லது காதகர் வெற்றிபெறக் கண்டு, கட்டாரிக்கு இரையானாளா என்பது அறிய, மற்றக் காட்சிகளுக்காக ஏங்கித் தவிக்காதே. நாடகக் கொட்டகையை விட்டு எழுந்துவா. போவோம்! காலையில் வேறோர் காட்சி காணவேண்டும்! "பயிர்களுக்குப் பூச்சித் தொல்லை ஏற்படாதிருப்பதற்காக, எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கதுதான். ஆனால் செலவினத்தைப் பார்க்கும்போது, சங்கடமாக இருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைக்கான துறையிலே எவ்வளவு பெரும் பொருள் செலவிடுவதும் தவறல்லதான். எனினும் பயன்கெடாத முறையில் செலவின் அளவைக் குறைத்திட முடியுமா என்பதுபற்றி நாம் எண்ணிப் பார்த்திட வேண்டும்.’’ “பூச்சிகள் முழுவதையும் ஒழித்திடாமல், பாதி அளவு மட்டும் ஒழித்திடலாம் என்பது அம்மையாரின் வாதமோ!’’”அப்பாவியும் அப்படிக் கூறானே! அன்புக்கே உறைவிடமான தாய்க்குலத்தவளான நானா அதுபோல் எண்ணுவேன். பரிகாசம் பேசும் தோழர், சிறிதளவு பொறுப்புணர்ச்சியைக் காட்டி நான் கூறும் பிரச்சினைக்கு விளக்கம் தர வேண்டுகிறேன்.’’ "பெரும் பொருள் செலவாவது உண்மைதான்! ஆனால் பயிரை நாசம் செய்யும் பூச்சிகளைக் கொன்றொழிக்க இந்தப் பொருள் தேவைப்படுகிறது.’’ "பூச்சிகளை ஒழித்திட, இப்போது நாம் தெளிக்கும் மருந்து வகையின் உற்பத்திச் செலவை, மேலும் குறைத்திட, நமது விஞ்ஞானிகளிடம் யோசனை கேட்கப்பட்டதா?’’ "இந்த யோசனை நிச்சயம் கவனிக்கப்படும்.’’ "நன்றி! விரைவில் கவனிக்க வேண்டுகிறேன்.’’ என்ன தம்பி! இப்படிப் பார்க்கிறாய்? பகட்டுடையின்றி, எளிய தோற்றத்துடன், குழுவில் அமர்ந்து, உழவுமுறை, விஞ்ஞான வளம், பொருளாதாரப் பிரச்சினை குறித்தெல்லாம், தெளிவும் கனிவும் காட்டிப் பேசிடும், இந்தக் காரிகை யார்? எங்கோ பார்த்த முகம்போலிருக்கிறதே என்று ஆச்சரியப் படுகிறாய் அல்லவா! உனக்கேன் தொல்லை. நான் கூறிவிடுகிறேன். இதோ நாட்டு ஆட்சிமுறைக் குழுவில் அமர்ந்து பணியாற்றும் இந்த நாரீமணிதான், நேற்றிரவு நாடக மேடையில் கண்களிலே நீர்துளிர்க்க, கேட்போர் மெய்சிலிர்க்கும் விதமாகப் பேசி நடித்த நங்கை. முன்னாள் இரவு நடிகை; இங்கு, ஆட்சிமன்ற அலுவலில் ஈடுபட்டுள்ள மாதரசி! தம்பி, நீயும் நானும் சீனா சென்றால், கற்பனைபோல் தோன்றும் இந்தக் காட்சியில் காணப்படும் காரிகையைச் சந்திக்கலாம்!! டியன் ஹுவா என்றோர் நடிகை, சீன நாட்டில் பெரும் புகழ்பெற்று விளங்கி வருவதுடன், தேசிய மக்கள் காங்கிரசில் உறுப்பினராகவும் அமர்ந்து அரும்பணியாற்றுகிறார். நாடகத் துறையிலும் படக் காட்சித்துறையிலும் ஈடுபட்டு, கலைஞர்களின் நன் மதிப்பையும் மக்களின் பேராதரவையும் காணிக்கையாகப் பெற்றுத் திகழும் டியன் ஹுவா, நாட்டாட்சிப் பிரச்சினையிலும் ஆர்வம் காட்டுவதுடன், ஆட்சிப் பிரச்சினையைக் கவனிக்கும் மன்றத்திலமர்ந்து அரும்பணி யாற்றுகிறார் - இன்றைய சீனாவில் - செஞ்சீனாவில். வயது 27; வசீகரமான தோற்றம்! கலைத்திறம் வளமாக இருக்கிறது! நாடகமேடையில் "நவரசம்’ சொட்டச் சொட்ட நடித்து மக்களை மகிழ்விக்கிறார். ஆட்சி மன்றக் குழுவில் காலையில் அமர்ந்து அரும் பணியாற்றுகிறார். புன்னகையும் பெருமூச்சும், பொறிபறக்கப் பேசுவதும் புலம்பி நிற்பதும் தேன்மொழி பேசுவதும் திகைப்புண்டு நிற்பதும், தாபத்தை வெளியிடுவதும் தத்தளிப்பைக் காட்டுவதும், நாடக மேடையில்! ஆய்வுரை நடத்துவதும் ஆதாரங்கள் காட்டுவதும், புள்ளி விவரம் கேட்பதும் பிரச்சினைகளை அலசுவதும் மன்றத்திலே. நாடகமாடும் நாரீமணிதானே, நயனத்தின் மூலம் நானாவிதமான உணர்ச்சிகளை எடுத்துக்காட்ட, நெளிய, குழைய, பூவிதழ் விரித்திட, பூங்கொடிபோலாடிட, கலைந்திடும் கூந்தலையும், நெகிழ்ந்திடும் ஆடையையும், வளைகுலுங்கிடும் கரத்தால் சரி செய்து காட்ட இயலுமேயன்றி, மக்கள் சார்பாகப் பேச, பணிபுரிய, திட்டங்களை ஆராய, கருத்துரை தர, எங்ஙனம் இயலும் என்று சீன நாட்டிலே கேட்கவில்லை. சாய உதட்டுக்காரி, சல்லாபப் பேச்சுக்காரி, - சட்டம் இயற்றும் இடத்திலே ஏன் இருந்திட வேண்டும்? என்று கேட்கக் காணோம். இங்கு - காமராஜர் - கேட்கிறார் - அவர் கேட்கிறாரே நாமும் அதே "பாணியில்’ பேசியாக வேண்டுமே - (ஒப்பந்தத்தை மீறலாமா!!) என்று எண்ணிக்கொண்ட நிலையில் வேறு சிலரும் கேட்கிறார்கள், நாடகமாடிகள் நாடாள்வதா? என்று. உலகுக்கோர் புதுமை என்று கொண்டாடப்படும் சீனாவில், நாடகமாடும் நாரீமணி நாட்டாட்சிக் குழுவிலும் அமர்ந்திட முடிகிறது! உலகத் தலைவர்கள் வரிசையில் இடம் பெற்றுத் திகழும் சூயென்லாய், அந்த "நடிப்புச் செல்வி’யைப் பாராட்டுகிறார் என்று நாளிதழ்கள் கூறுகின்றன. தம்பி! நாம் தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவு செய்தவுடன், நம்மீது வீசப்படும் கணைகள் பலப் பல!! கலை உலகினர் நம் கழகத்தில் உள்ளனர் என்பதால் ஏற்பட்ட காய்ச்சல் கசப்பாக மாறி, இப்போது கடு விஷம் கக்குகின்றனர், உள்ளம் வெதும்பிய நிலையில் உள்ளவர்கள். "நாடகமாடுவோருக்கும் நாட்டாட்சிப் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்கின்றனர். நாடகமாடுவோர், நாட்டாட்சி மன்றத் தேர்தல்களில் ஈடுபடக் கூடாது என்று கண்டித்துப் பேசுவோர், தத்தமது தரத்துக்கு ஏற்ப ஏசுகின்றனர். நமது கழகத்தில் ஈடுபடுவதால் கலைஞர்களுக்கு ஏற்படும் பல தொல்லைகளிலே ஒன்று, இந்தத் தாக்குதல். எனினும், அவர்கள் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். ஆகையால், இந்த இழிமொழிகளைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. சீன நாட்டு நடிகைபற்றிய கட்டுரை காண நேரிட்டது; களிப்பும் நம்பிக்கையும் பிறந்தது. நாடகமாடிகள் நாடாள்வதா என்று நையாண்டி செய்வோர், இதைக் கண்டு திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதவில்லை! அவர்கள் நாடகமாடுவோர்மீதா கோபப்பட்டுள்ளனர் - தங்களிடம் இல்லையே என்பதல்லவா, அவர்கட்கு உள்ள கோபம்! நாடகமாடிகட்கு நாட்டாட்சியில் என்ன வேலை என்று இன்று கேட்கும் இவர்கள், நாம் நாடகமாடியபோது, ஏதும் ஏசாதிருந்தனரோ எனில், இல்லை, இல்லை, இழிமொழி வாணிபம் அப்போதும் நடாத்தி வந்தனர். நாடாளும் முறை குறித்து மக்களைப் பக்குவப்படுத்த, பொது வாழ்வுத் துறையில் ஈடுபடுவோர் நாடகமாடுவதா? என்ன கேவலம், எத்துணை அக்ரமம்! வானமே! இடிந்து வீழாயோ!! பூமியே! பிளந்து விழுங்காயோ! ஆடை அணிகளே! அரவமாகி அவர்களைக் கடித்துச் சாகடிக்காயோ! - என்றெல்லாம் அலறித் துடித்து அழுதனர். தம்பி, நான், படித்த சீன நாடு பற்றிய கட்டுரையில் காண்கிறேன், மேனாட்டு ராஜதந்திரிகளும் கண்டு வியந்திடத் தக்க திறன்படைத்த சூயென்லாய் நாடகம் காண்பதில் பேரார்வம் கொண்டவராம் - அது மட்டுமல்ல, அவருக்கே நடிப்பதில் மெத்த விருப்பமாம் - பலமுறை நாடகமாடியும் இருக்கிறாராம்! சீறிடும் ஏறுகள் அங்கு கிளம்பி, நாடகமாடி நாடாள்வதா என்று கேட்கக் காணோம்! இது குறித்து நான் எண்ணிக் கொண்டிருக்கும்போது, தம்பி, இன்றைய தபாலில் கிடைத்தது மற்றோர் தகவல். வெண்புறா வட்டமிட்டுச் செல்கிறது, வானத்தில் - வடிவழகன் அதைக் கண்டு வியக்கிறான். புறா திடீரென்று ஆபத்தினின்றும் தப்ப, திசைமாறிச் செல்கிறது - இளவலின் கண்களுக்குத் தெரியவில்லை. எங்கே என் புறா? சிறகடித்துச் சிங்காரமாகப் பறந்த என் வண்ணப் புறா எங்கே? என்று தேடி அலைகிறான் குமரன். "கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் உறவாடிட வாராததேனோ’’ என்று இசைபாடி, வெண்புறாவைக் கொஞ்சுகிறாள், கண்டாரைக் கொல்லும் ஓர் கட்டழகி. அவன் வருகிறான், அவள் பார்க்கிறாள்!! அம்புவிழி தொடுக்கிறாள், வம்பு வந்து சேருகிறது! தம்பி! சாரங்கதாரா நாடகம். இதிலே சித்திராங்கி பாத்திரம், காவி உடையோனையும் கரையச் செய்யும் என்பார்கள். இந்தச் "சித்திராங்கி’ வேடத்தை அருமையாகத் தாங்கி நடித்தவராம், ஆந்திர நாட்டுத் தலைவர், பிரகாசம்!! இந்த ருசிகரமான சேதியை "சோஷலிஷ்டு’ இதழில் காண்கிறேன்; இதோ அது; படித்துப்பார், தம்பி, பகை கக்குவதுதான் பழைய தொடர்புக்கு இலட்சணம் என்று எண்ணிக் கொண்டிருப்போருக்கும் காட்டு, பார்க்கச் சம்மதித்தால். “தி.மு.க.வின் பேரில் காமராஜ் சுமத்துகிற குற்றச் சாட்டு மிகவும் விநோதமானது.”அவர்கள் நாடக மாடுவோர்கள், நாடாள்வதாவது?’’ என்று கேட்கிறார். இருந்திருந்து பிடித்தாலும் புளியங்காம்பைப் பிடிக்க வேண்டும் என்னும் கதையாக, ஒரு அருமையான "பாயிண்டைக்’ காமராஜர் பிடித்திருக்கிறார். இதற்காக அவரைப் பாராட்டவே வேண்டும். இந்த நாடகமாடுவோரைப்பற்றி அபேதவாதிக்கு ஒரு சில சம்பவங்கள் தெரியும். ஆந்திர நாட்டில் ஒரு மகாராஜா இருந்தார். அவர் கலைப்பிரியர். அவர் முன்னால் ஒரு சில இளைஞர்கள் சேர்ந்து சாரங்கதாரா நாடகம் நடத்திக் கொண்டிருந்தனராம். அதில் சித்திராங்கி வேஷம் தரித்து ஒரு இளைஞன் அற்புதமாக நடித்தானாம். அந்த இளைஞன் பேரில் மகாராஜாவுக்கு அபார பிரியம் ஏற்பட்டு, அந்த இளைஞனின் படிப்பு எல்லாவற்றையும் தானே கவனித்துக் கொண்டாராம். இந்த இளைஞர்தான், இன்றைக்கு ஆசியாவிலே வயது முதிர்ந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்துவரும் ஆந்திர கேசரி தங்கத்தூரு - பிரகாசம் பந்துலுகாரு அவர்கள். அவர் நாடகமாடியவர். அதனால்தானா சென்னை முதன் மந்திரி பதவியிலேயிருந்து அவரை விரட்டினார் காமராஜர்? அவ்வளவிற்குப் போவானேன்? காமராஜர் என்கிற பெயரை உலகுக்கறிவித்து, அவரை அரசியல்வாதியாக்கிவிட்ட பெருமை வாய்ந்தவர் ஸ்ரீ சத்திய மூர்த்தி அவர்கள். சத்தியமூர்த்திக்கு நல்ல சங்கீதம், நாடகம் இவற்றில் அபார பிரியம். கே.பி. சுந்தராம்பாள், எஸ். ஜி கிட்டப்பா ஆகியோர் அவருக்கு அத்யந்த நண்பர்கள். இது மட்டுமல்ல. அவரே சில தடவைகளில் அரிதாரம் முத்து வெள்ளை தடவிக்கொண்டு நாடகம் நடித்துள்ளார். காமராஜருக்கு இவ்விஷயத்திலும் சந்தேகமிருந்தால், "தீரர் சத்தியமூர்த்தி’ என்று பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு புஸ்தகம் வந்துள்ளது. அதில் வேஷம் போட்டபடியே இருக்கும் சத்தியமூர்த்தியின் படமும் வந்துள்ளது. தயவுசெய்து அதையாவது பார்த்துக் கொள்ளட்டும். தேர்தலில் நாம் ஈடுபடத் தீர்மானித்ததும், திகில்கொண் டோரும் பொறாமை கொண்டோரும், மக்களிடம், நம்மைப் பற்றிக் கேவலமான முறையில் இழித்தும் பழித்தும் பேசுவதன் மூலம், நமக்குப் பெருந்தோல்வியை ஏற்படுத்தலாம் என்று எண்ணிக்கொள்கின்றனர். வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறிபிடித்தும் நாம் அலையவில்லை, தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற "தொடை நடுக்கமும்’ நாம் கொண்டில்லை; இதனை வசவாளர்கள் உணர்ந்து கொள்ளும் நிலையிலும் இல்லை. பதவியைச் சுவைத்துக்கொண்டு, அந்த இனிப்பில் சொக்கி, புதிய "பவிசு’ கண்டு பல்லிளிப்போரின் பராக்குப் பெற்றுப் பூரித்துக் கிடப்போருக்கு, தேர்தல் வருகிறது என்றதும், திகில் பிறக்கத்தான் வேண்டும். மீண்டும் இதே சுவை கிடைக்குமா அல்லது தட்டிப் பறித்துக்கொள்வரோ என்றெல்லாம் ஏக்கம் பிறக்கும். கவர்னர் கைலாகு கொடுக்க, கலெக்டர் கட்டியங்கூற பிரமுகர்கள் பராக்குக் கூற, அதிகாரிகள் ஆலவட்டம் சுற்ற, கல்லூரிகள் கனிவுகாட்ட, கட்டிடங்கள் கண்சிமிட்ட, பவனி நடத்துகிறோமே - இது மறுபடியும் கிடைக்குமா அல்லது பால் தராத பசுவுக்கு “தரும விடுதி வாசம்’ கிடைப்பது போல, பயன் கெட்ட பொருள் பரணைக்குச் செல்வதுபோல, நாமும் கேட்பாரற்றுப் போய்விட நேரிடுமா என்ற கவலை அவர்கட்கு ஏற்பட வேண்டும். அந்த அச்சமும் கவலையும் அவர்களை ஆலாய்ப் பறக்கவைக்கிறது, ஆரூடம் கேட்கச் செய்கிறது, ஆதரவு பெறுவதற்கு யாராரிடம் ஐயா! அப்பா! என்று கெஞ்சவேண்டும், எவரெவருக்கு என்னென்ன அச்சாரம் தரவேண்டும் என்றெல்லாம் சிந்திக்க வைக்கிறது. நமக்கென்ன நடுக்கம் தம்பி!”மயிலுக்குக் கண்ணிவைத்தேன் மாமன் மகளே! குயில்வந்து விழுந்தது பார், கொண்டேனடி பெண்ணே’’ என்று வயலோரத்தில் பாடுவார்கள் தம்பி, அது போலப் பாடிவிட்டுப் போவோம், கவலை என்ன!! தேர்தலிலா நிற்கிறீர்கள்? கூத்தாடிகளே! நீங்களா தேர்தலில் ஈடுபடுகிறீர்கள்? என்று, ஏதோ நையாண்டி செய்வதுபோலப் பேசுகிறார்களே தவிர, உள்ளூர அவர்கட்கு நடுக்கம்; நாம் எப்படிப்பட்ட பலசாலிகளோ என்பது கூட அல்ல அவர்கட்குப் பிரச்சினை, "எப்படிப்பட்ட தவறுகளெல்லாம் செய்து தொலைத்துவிட்டிருக்கிறோம்; எத்தனை வாக்குறுதி களைக் காற்றிலே பறக்கவிட்டுவிட்டோம்; எத்தனைவிதமான ஊழல், ஊதாரித்தனம் வெடிக்கின்றன. மக்களின் வாழ்விலே எத்தனை எத்தனை இடிகள், அதிர்ச்சிகள் ஏற்பட்டுவிட்டன; எவ்வளவு அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு விட்டோம்; இவைகளுக்கெல்லாம், மக்கள், பாடம் புகட்டக் காத்துக் கொண்டிருக்கிறார்களே; இந்தப் பாவிகள் பிரச்சினைகளைப் புட்டுப்புட்டுக் காட்டுகிறார்களே; வடநாடு கொழுக்கிறது, தென்னாடு தேய்கிறது என்பதற்கு ஆதாரம் தருகிறார்கள், புள்ளி விவரம் காட்டுகிறார்கள், பாடல்கள் தருகிறார்கள், படம் போட்டுக் காட்டுகிறார்கள், நாடகமே ஆடமுடிகிறது. அத்துடன் விடாமல், நம்மவர்களே அவ்வப்போது பேசுவதி லிருந்தே, வடநாட்டு ஆதிக்கம் இருப்பது விளங்கிவிட்டது கேளீர் என்று எடுத்துக் காட்டுகிறார்கள்; உரிமையைப் பாதுகாத்திட முடிந்ததா? வாழ்வில் வளம் கிடைத்திடச் செய்ய முடிந்ததா? என்று கேட்கிறார்கள்! தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை இழந்துவிட்டு இளித்தவாயரானார்கள், இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு வாய்மட்டும் இருக்கிறது காதுவரையில் என்று கேலி செய்கிறார்கள். சித்தூர் திருத்தணி எங்கே? என்று கேட்கிறார்கள்; நிலச் சீர்திருத்தச் சட்டம் என்ன கதியாயிற்று என்று இடித்துக் காட்டுகிறார்கள்; செச்செச்சே! பெரிய தலைவலியாகிவிட்டது; வாயை அடக்கலாம் என்றாலோ, எவ்விதமான அடக்குமுறைக்கும் தயார் என்கிறார்கள்; இந்த நிலையில் தேர்தல் வருகிறதே என்ன ஆகுமோ, ஏது நேரிடுமோ என்று அவர்களுக்கு அச்சம் நிச்சயமாக! தேர்தல் வரட்டும், ஒரு கை பார்த்தே விடுகிறோம் என்று பேசுகிறார்களல்லவா. சென்ற தடவை இவர்களின் கதி என்ன ஆயிற்று தெரியுமோ! மறந்துவிட்டார்கள், மகானுபாவர்கள்! மக்கள் மறக்கவில்லை! மண்ணைக் கவ்வினார்கள். மாபெருந் தலைவர்களெல்லாம்! மண்டைக் கனம்கொண்டு பேசுகிறார் களோ என்று எண்ணிக் கொள்ளாதே தம்பி, பழைய சம்பவம் நினைவிற்கு வந்ததால், மருட்சி அடைந்து பேசும் பேச்சு அது, ஒரு கை பார்த்துவிடுவோம் என்பது! அவர்களுக்கு நினைவிலில்லாமற்போகும், தம்பி. ஒன்று உனக்குக் கவனத்திலிருக்கட்டும் - சென்ற பொதுத்தேர்தலில் பெருந்தலைவர்கள் பலர் பிடரியில் கால்பட ஓடினர்; சிலர் கொல்லைப்புற வழியாக நுழைந்துகொண்டு கொலுவிருக் கின்றனர்; வேறு சிலர் "வனவாசம்’ சென்றுவிட்டனர்; ஆனால் அனைவரும் அல்லல் எவ்வளவு படவேண்டுமோ, பல்லைக் காட்டி எவ்வளவு கெஞ்ச வேண்டுமோ அவ்வளவும் நடந்தேறிற்று; அவ்வளவுக்குப் பிறகும், மொத்தத்தில் கணக்குப் பார்க்கும்போது, காங்கிரசுக்குக் கிடைத்ததைவிட, காங்கிரசல்லா தாருக்குத்தான் மக்களின் ஓட்டு அதிக அளவு கிடைத்தது. ஆனால், இடதுசாரிக் கட்சிகள் என்பவைகளுக்குள் ஒரு கூட்டு எண்ணம் ஏற்படமுடியாமல் போய்விட்டது; அதனால், காங்கிரஸ் இங்கு ஆட்சியில் அமர முடிந்ததே தவிர, மக்கள் விரும்பி அழைத்ததால் அல்ல; ஆதரவு அளித்ததால் அல்ல. காங்கிரசிடம் நம்பிக்கையில்லை என்பதைத்தான், கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் தெளிவாக எடுத்துக் காட்டினர்! மூக்கறுபட்டும், முகத்தில் கரிபூசிக் கொண்டும், முக்காடிட்டும், மூலையில் சென்றும் பலர் பதுங்கினர். என்னமோ, நின்ற முன்னூறு இடங்களிலும் இவர்கள் முன்பு வெற்றி பெற்றுவிட்டதுபோலவும், இன்றைய தேர்தலில் அதுபோலவே, எங்கும் "ஜெய பேரிகை’ கொட்டப்போவது போலவும், முழக்கிக்கொண்டு வருகிறார்களே தவிர, உண்மையை மக்கள் மறந்துவிடவில்லை. சென்ற தேர்தலின் போதே, காங்கிரசிடம் நம்பிக்கை இல்லை என்பதுதான் அறிவிக்கப்பட்டுவிட்டது! வளைய வைத்தும், வலை வீசியும், வழியே நின்று குழைந்தும், வாசனை பூசியும், "இரவல்களை’ இழுத்துக் கொண்டு, இவர்களின் ஆட்சி அமைக்கப்பட்டதே தவிர, பெருவாரியாக வெற்றி பெற்றதால் அல்ல! வெட்கித் தலை குனிந்து, வியர்த்து வெடவெடத்துக் கிடந்தனர் அந்த நாட்களில், இப்போது ஏதோ -வீராப்புப் பேசுகிறார்கள் – ஒரு கை பார்ப்போம் என்கிறார்கள்! கை வண்ணம் கண்டோமே முன்போர் முறை! ஆகவே தம்பி, தூய உள்ளத்துடனும், முடிவுபற்றிய கவலையற்றும், நாம் இந்தத் தேர்தலில் ஈடுபடுகிறோம். மக்களிடம் சென்று கூறுவோம், இந்த ஆட்சி. நம்பினோரை நட்டாற்றில் விட்டுவிட்டது. நலிந்தோரைக் காப்பாற்றத் தவறிவிட்டது. நேருவின் புகழொளியைக் காட்டுகிறதே தவிர, மக்களின் வாழ்விலே ஒளி இல்லை. முதலாளிமார்களின் முகாமாகிவிட்டது! பேசுவது "ஆவடி’, கிடப்பதோ முதலாளியின் காலடி!! வளமெல்லாம், தொழிலெல்லாம் வடக்கே; வறுமை நெளிவது தெற்கே என்ற முறையில் ஆட்சித் திட்டம் அமைந்து கிடக்கிறது, எனவே இது அடிமைகளின் கூடாரமாகி விட்டது. இதனைச் சென்ற கிழமை நிதி அமைச்சரே, தூத்துக்குடியில் பேசியுமிருக்கிறார். தமிழருக்கு உரிய தேவிகுளம், பீர்மேடு பறிக்கப்பட்டு விட்டது; தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்துகொண்டு நடத்தப்படும் துரைத்தனம் இது. வடக்கெல்லைப் பிரச்சினைக்கு இன்றுவரை நியாயம் காண முடியாமல், திண்டாடுகிறது இந்தத் துரைத்தனம்! தம்பி! இந்த அவலட்சணம் அனைத்தும் அம்பலமாகி, இல்லமெல்லாம், இதயமெல்லாம் உண்மை சென்று தங்கிட வேண்டும். நமது தேர்தல் நோக்கம், இதுதான். இதிலே நமக்கு, "நாடகம்’ கருவியாகிறது; எனவேதான் நாடகமாடிகளா!! என்று ஏசுகிறார்கள்; ஏசட்டும்! உலகில் பல்வேறு இடங்களிலே அமுலில் இருக்கும் முற்போக்குத் திட்டங்களை, மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம். எத்தகைய முற்போக்குத் திட்டத்துக்கும் இடமளிக்காத போக்கிலே, இவர்களின் ஆட்சிமுறை இருப்பதை எடுத்துக் காட்டுவோம். ஏழெட்டு ஆண்டுகளாக இவர்களின் ஆட்சியிலே யார் இலாபம் பெற்றார்கள்? எவருடைய கரம் வலுத்தது என்பதை எடுத்துக் கூறுவோம். இல்லாமையால் ஏழை மக்கள் இடர்ப்படுகிறார்களே, அதனை உலகறியச் செய்வோம். இலண்டனிலும் பாரிசிலும், நேருவுக்குப் பழரசம் தருகிறார்களே, அதேபோது, இலங்கையில் தமிழரின் இரத்தத்தைக் குடிக்கும் ஓர் கொடிய ஆட்சி நடக்கிறதே, கேட்டவர் யார்? ஏன் உள்ளம் துடிக்கவில்லை? உணர்வு ஏன் பிறக்கவில்லை? என்று கேட்போம்; ஓட்டுக் கேட்கக் காங்கிரசார் வருகிற இடமெல்லாம், இரத்தக்கறையைக் கழுவினீர்களா? என்று மக்கள் இவர்களைக் கேட்கப் போகிறார்கள். எனவே தம்பி! நண்பர்களுடன் கலந்து பேசி, நமது தேர்தல் பிரச்சார முறைபற்றிய திட்டம் வகுத்துக்கொண்டு, தலைமைக் கழகத்துக்கும் தெரியப்படுத்து. அண்ணா! எல்லாம் சரி! பணம்? - என்றுதானே கேட்கிறாய். பணத்துக்கு என்னடா தம்பி, குறை!! கள்ளங்கபடமற்ற உள்ளம் படைத்த உன் ஒரு சொட்டு வியர்வை, ஓராயிரம் ரூபாய்க்குச் சமமாயிற்றே! இலட்சியத்திலே அசைக்கொணாத நம்பிக்கை கொண்டுள்ள உன் ஒரு சொல், ஒரு சொற்பொழி வல்லவா! உன்னிடம் உள்ள "திறமை’ பயன்பட்டால் போதும், பேழையை நம்பியே தேர்தலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பு நம்மை ஏதும் செய்துவிடாது! தம்பி, இன்றிலிருந்து தேர்தலுக்காக இது என்று நீ ஒதுக்கி வைக்க வேண்டும், சேமித்து வைக்க வேண்டும்; உன் வாழ்க்கைக்காகச் செலவிடப்படும் தொகையிலே ஓர் பகுதியை! வீட்டுக்கு வீடு, வேளைக்கு வேளை ஒரு பிடி அரிசி! கேலியல்ல! உன் காணிக்கை அதுவாக இருக்கும் என்றால், மகிழ்கிறேன், பெருமைப்படுகிறேன், சேமித்து வை. செலவாகும் ஒவ்வோர் ரூபாயிலும ஒரு அணா - தேர்தல் செலவுக்கு என்று எடுத்துவை! இன்றே துவக்கு, இனிதே வெற்றி கிடைக்கும். பதின்மர், இருபதின்மர் கூடிடும்போதும், அதனைப் பயனுள்ள கூட்டமாக்கிக்கொண்டு, காங்கிரசாட்சியின் கேடுகள் குறித்த தகவல்களை எடுத்துக் கூறு. வசதி கிடைக்கும்போதெல்லாம் துண்டு வெளியீடுகள் பரப்பு! எவர் செவியிலும், நமது கொள்கை புகவேண்டும்! அங்காடியை மறவாதே, அறநெறியினின்றும் பிறழாதே. ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளாதே, ஆத்திரத்துக்கு இடமளித்துவிடாதே! ஏசினால், கோபம்கொள்ளாதே - எவர் இதயத்திலும் நமது நோக்கம் சென்று தங்க வேண்டும் - கோபம் நம்மைக் குறுக்கு வழி இழுத்துச் சென்றுவிடும். தலைமைக் கழகம், விரைவில் தேர்தல் திட்டம் பற்றிய விளக்கம் அளிக்கும். அதுவரையில் செயலற்று இருக்க வேண்டும் என்பதல்ல, தலைமைக் கழகம் எவ்வகையில் திட்டங்கள் தீட்ட வேண்டும் என்பதற்கான கருத்தினை வழங்க வேண்டுகிறேன். கோடீஸ்வரர்களும் இலட்சாதிபதிகளும், ஆலை அரசர்களும் வணிகக்கோமான்களும், நிலப் பிரபுக்களும் வட்டிக் கடை வேந்தர்களும், காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபட்டு பணத்தை வாரி வாரி இறைக்கப் போகிறார்கள் - தெரிகிறது! - எனினும் எனக்கு இருக்கும் தைரியத்துக்குக் காரணம், நம்மிடம் உள்ள செல்வம் சாமான்யமானதல்ல என்ற எண்ணம்தான்! வைரம் பாய்ந்த நெஞ்சமல்லவா உனக்கு, தங்கக் குணம் படைத்த தம்பி! ஊரை அடித்து உலையில் போடும் உலுத்தர்களை முறியடிக்க, உன் உழைப்பும் எழுச்சியும் போதும்! உழைப்பே செல்வம் என்பது உலகறிந்த உண்மையல்லவா? அன்பன், 15-7-1956 நாடகமாடிடலாம்…(1) காங்கிரசை எதிர்ப்போர் நிலை - காமராஜரின் தேர்தல் பிரச்சாரம். தம்பி, ஈவு இரக்கம் காட்டமாட்டான்; எதிர்த்திடத் துணிந்தோரை மட்டுமல்ல, ஏனய்யா இந்த அக்ரமம் செய்கிறீர், உமக்கு நான் என்ன கேடய்யா செய்தேன் என்று கேட்டாலும் போதும், அவர்களையும் அடித்து நொறுக்குவான்; பெண்களின் அழுகுரல் கேட்டு மனம் பதறமாட்டான், பச்சிளங் குழந்தைகளின் மழலை கேட்டு இன்புறவும் மாட்டான், பயந்து அக்குழவிகள் அழுது துடித்திடும் போது மனம் இளகமாட்டான்; இரத்தம் ஆறென ஓடும், கண்டு கலக்கம் கொள்ள மாட்டான்; குடிசைகளைக் கொளுத்துவான்; நெருப்பில் வீழ்ந்தோர் அலறித் துடிப்பர், அவன் அது கண்டு இரக்கம் காட்டமாட்டான்; வெற்றி ஒன்றுதான் அவன் குறிக்கோள்; எதிர்ப்பட்டோர் அனைவரும் தனக்கு அடிபணிந்தாக வேண்டும், இல்லையேல் தன் வல்லமையை அவர்கள் காண வேண்டும், அழிந்தொழிய வேண்டும் என்றே எண்ணுவான், கொடு நோய் எங்ஙனம் குமரியாயினும் குழவியாயினும் குடுகுடு கிழவராயினும், இரக்கம் காட்டாதோ, அதுபோலவே, எவர்பாலும் இரக்கம் கொள்ளாது அழிவை உமிழ்ந்த வண்ணம் இருப்பான்; காட்டுத் தீ போலப் பரவி, பயங்கர நாசத்தை விளைவிப்பான். செங்கிஸ்கான், தைமூர் போன்றவர்கள் குறித்து இவ்விதம் கூறப்பட்டிருக்கிறது. அழிவினை அவர்கள் ஏவி ஏவி, உலகில் பல்வேறு இடங்களிலே அச்சத்தை மூட்டிவிட்டனர்; அந்த நகரம் நாசமாக்கப்பட்டது, இத்துணை ஆயிரம் மக்கள் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள்; பெண்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள்; சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற “செய்தி’ பரவிப் பரவி, தைமூர் வருகிறான் என்று எந்தக் கோடியிலிருந்தாவது வதந்தி கிளம்பினாலும் போதும், பீதி கொண்ட மக்கள் பேழை வேண்டாம் பிழைத்தால் போதும் என்று ஓடிப் போவர், தங்கள் இல்லங்களையும உடைமைகளையும் விட்டு விட்டு; முதியவர்களை விட்டு விட்டு வாலிபர்கள் ஓடிப்போன சம்பவங்களும் உண்டு. எப்படியேனும் பிழைத்துக்கொள் என்று மனைவிக்குக் கூறிவிட்டு தன் உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று ஓடிவிட்ட”கணவன்’ கூட இருந்திருக்கிறான்!! இவ்வளவும், அச்சத்தின் விளைவு! அழிவின் மூலம் அச்சத்தை மூட்டிவிடுவது; அந்த அச்சம் பிடித்தாட்டும் நிலையை உண்டாக்கியதும், அந்த நிலையையே வெற்றிக்குக் கருவியாக்கிக் கொள்வது என்பது, அந்த வெறியர் கையாண்ட முறை. ஐயய்யோ! அவனை யார் எதிர்த்து நிற்க முடியும்? அடே அப்பா! அவன் பழி பாவத்துக்கு அஞ்சாதவனாயிற்றே! படுகொலைதானே அவனுக்குப் பஞ்சாமிர்தம்! சித்திரவதை செய்வதுதானே அவனுக்குப் பொழுதுபோக்கு! வெறி நாய்கள் துரத்தும்போது நாம் என்ன செய்ய முடியும்! என்றெல்லாம் பீதி கொண்ட நிலையில் மக்கள் பேசுவர். இந்த "பீதி’யே பிறகு, இந்தப் பேயர்களுக்கு மேலும் வெற்றிகளை, சிரமமின்றிக் கிடைத்திடச் செய்தது. அந்த நகரம் வீழ்ந்துபட்டது; இந்த ஊர் அடி பணிந்தது; அங்கோர் அணிநகரம் அழிந்துபட்டது, அந்த எழிலூர் சுடுகாடாகிவிட்டது - என்று சேதிகள் பரவின; அந்த நகர்களெல்லாம் அவ்விதம் அதோ கதியான பிறகு நமது நகர்மட்டும் அந்த நாசகாலனை எதிர்த்து நின்று தாக்குப் பிடிக்கவா முடியும்? தப்பிப் பிழைத்தோடிப் போவோம்! என்று மிரண்டோடிப் போவர்; வெறியனின் படைகள் போரிடாமலே வெற்றி பெற்று, நகரங்களில் நுழைந்து, உடைமைகளைக் கொள்ளையிட்டுச் செல்லும். தைமூர், செங்கிஸ்கான் போன்றாரின் நாட்களிலே, “பீதி’ எப்படி மக்கள் மனதை அலைக்கழித்து, அவர்களை மேலும் கோழைகளாக்கிவிட்டதோ, அதே”பீதி’ ஜனநாயகமும் நாகரிகமும் மேலோங்கியுள்ள இந்த நாட்களிலே, அடியோடு பட்டுப்போய்விட்டது என்று கூறுவதற்கில்லை. பெர்லினில் கிளம்பிய பேய்க் குரல் கேட்டு, இங்கு பீதி கொண்டலைந்தவர்களைக் கண்டோமல்லவா! ஹிட்லர், தன் வீரதீர பராக்கிரமத்தைக் கொண்டுதான், பெரும பெரும் வெற்றிகள் கொண்டான் என்பதல்ல. அவனை எதிர்த்து நிற்க முடியாது, அவன் அசகாய சூரன் மட்டுமல்ல, “அருள்’ அவனுக்குத் துணை நிற்கிறது, அவன் படை பெரு நெருப்புப் போன்றது, புகுந்த இடம் பொசுங்கிப் போகும் என்று, பல்வேறு நாடுகளிலே”பிரசாரம்’ பலமாகப் பரவிற்று, வெற்றி அவனைத் தேடிவந்து, "சரண்’ அடைந்தது. சூறாவளிப் படை - என்று பெயரே ஏற்பட்டுவிட்டது. படையிலே உள்ளவர்கள் அனைவரும், உயிர் குடிப்பதிலே தேர்ச்சி பெற்றவர்கள், அவர்களின் போர் முறையே இதுநாள் வரையில் உலகு காணாதது என்றெல்லாம் பேசப்பட்டது. இதனால் கிளம்பிய பீதி ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் பரவி, உலகையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது; கண்டோமல்லவா! அதுபோலவே, ஆனால், பயங்கரத் தோற்றத்துடன் அல்ல, காங்கிரஸ் கட்சி அச்சமூட்டிவிட்டிருக்கிறது. நல்லாட்சி நடத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்படாமல், ஆங்கிலேயரிடம் சூத்திரக் கயிறு சிக்கிக் கிடந்த நிலையில் நீண்ட காலம் ஆட்சிப் பொறுப்பினை ஜஸ்டிஸ் கட்சி ஏற்று நடத்தி வந்தது; வெளியே இருந்துகொண்டு "வீராவேசம்’ காட்டியும் பழி பல சுமத்தியும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள்மீது மக்கள் வெறுப்பும் ஆத்திரமும் கொள்ளச் செய்ய முடிந்தது; இந்தச் சூழ்நிலையை உண்டாக்கி வைத்ததால், தேர்தலில் காங்கிரஸ் ஈடுபட்டதும், பெரும் தலைவர்களை வீழ்த்த முடிந்தது. அப்போது நாடெங்கும் கிளம்பிய பேச்சு, அரசியல் உலகிலே புதியதோர் சூழ்நிலையை உருவாக்கிற்று. பித்தாபுரம் மகாராஜா தோற்றார் வெங்கிடகிரி ராஜா தோற்றார் பொப்பிலி ராஜா தோற்றார் ஏலேல சிங்கப் பிரபு தோற்றார் கோடீஸ்வரர் கோபாலபூபதி தோற்றார் என்று இவ்விதமான சேதிகள் வெளிவந்தன. சீமான்களும் சிற்றரசர்களும், இலட்சாதிகாரிகளும் மிட்டாமிராசுகளும், எப்படிப்பட்ட செல்வாக்கினை, பரம்பரை பாத்யதையாக, தலைமுறை தலைமுறையாகப் பெற்றவர்க ளாயினும், காங்கிரசிடம் எதிர்த்து நிற்கமுடியவில்லை, தோற்றோடுகிறார்கள். இலட்சக்கணக்கிலே பணத்தை வாரி வாரி இறைத்துப் பார்த்தனர், ஜரிகைக் குல்லாய்க்காரர் படையே கிளம்பி, மக்களிடம் "ஓட்டுக் கேட்டு’ மிரட்டியும் மயக்கியும் பார்த்தது; ஓட்டுக்குப் பணம் கொடுத்தும் பார்த்தனர்; எதுவும் பலிக்கவில்லை; மக்கள் புதியதோர் எழுச்சி பெற்றனர்; எத்தர்களின் தித்திப்புப் பேச்சுக் கேட்டு ஏமாளிகளாக மாட்டோம், எம்மை ஆள்வதற்கான அதிகாரத்தை இந்த ஆள் விழுங்கிகளுக்குத் தரமாட்டோம்; மிரட்டினால் பணிந்துவிடமாட்டோம்; மயக்கினால் ஏமாந்து போக மாட்டோம்; காங்கிரசுக்குத்தான் எமது ஓட்டு! என்று கூறினர், காங்கிரசை எதிர்த்தோர் அனைவரும், படுதோல்வி அடைந்தனர். மண்ணைக் கவ்வினர்! படுதோல்வி அடைந்தனர்! முகத்தில் கரி பூசப்பட்டது! மூக்கு அறுக்கப்பட்டது! மூலையில் துரத்திவிட்டனர்! முக்காடிட்டுச் சென்று ஓடினர்! காங்கிரஸ் தேர்க் காலில் சிக்கிய சீமான்கள் கூழாகிப் போயினர்! - இவ்விதமெல்லாம் வெற்றி பற்றிய பிரதாபம் பரப்பப்பட்டது; இது மூட்டிவிட்ட அச்சம், பலரை அரசியலைவிட்டு ஓடிவிடச் செய்தது; பலர் "பாதுகாப்பான இடம், பலம் பொருந்திய இடம், காங்கிரஸ் கட்சி, எனவே அதிலே சென்று தங்கிவிட்டால் பயமில்லை என்று கருதினர்; அதுபோலவே செய்தும் காட்டினர். காங்கிரசை எவராலும் எதிர்த்து வெற்றி பெறமுடியாது - எப்படிப்பட்ட கனதனவான்களெல்லாம் தோற்றோடினர் தெரியுமா! - என்று பேசத் தலைப்பட்டனர். அச்சம் புகுந்தது - அடிபணிந்து விடுவதும், இச்சகம் பேசுவதும், இளித்துக் கிடப்பதும் பிழைக்கும் வழி என்று மேட்டுக் குடியினர், மேனாமினுக்கிகள், துரைத்தனத் துதிபாடகர்கள் கருதினர் - காங்கிரசில் நுழைந்தனர். தேர்தலில், காங்கிரஸ் பெற்ற வெற்றிக்குக் காரணம் என்ன? தோற்றவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்பு எவ்வண்ணம் இருந்தது? தோற்றவர்கள் தமது கட்சியினை எந்த முறையில் அமைத்திருந்தனர்? கட்சித் தொண்டர்கள் எவ்வளவு கசப்புடன் உழன்று கொண்டிருந்தனர்? என்பன பற்றி எண்ணிப் பார்த்திட அச்சம் இடம் தரவில்லை! காங்கிரசை எதிர்க்க முடியாது - எதிர்ப்போர் பிழைக்க முடியாது - சந்தேகமிருந்தால், பித்தாபுரத்தைப் பார், பொப்பிலியைக் கவனி, சீமான்களின் கதியைப் பார், சிற்றரசர்கள் தோற்றோடின சேதியைக் கேள்! - என்று கூறினர். பீதி பிடித்துக்கொண்டது; இந்தச் சூழ்நிலையை வாய்ப்பாக்கிக் கொண்டு, காங்கிரஸ், தேர்தல் களத்திலே மேலும் பல வெற்றிகளைப் பெற்றது; அந்த வெற்றிகள், மற்ற மற்றக் கட்சிக்காரர்களின் மன மருட்சியை அதிகமாக்கிற்று. இனி நமக்கு ஈடும், எதிர்ப்பும் இல்லை, - என்று இறுமாந்து கிடந்திட முடிந்தது காங்கிரஸ் கட்சியினால். ஆளும் கட்சியிடம் எவர் தட்டிக் கேட்க முடியும் என்ற இறுமாப்பும், மற்றக் கட்சிகளிடம், காங்கிரசை எவ்விதம் எதிர்த்து நிற்கமுடியும் என்ற அச்சமும், ஒருசேர இருந்துவிட அனுமதித்துவிட்டோமானால் தம்பி, பிறகு நாட்டிலே சர்வாதிகாரம் தலைவிரித்தாடுவதைத் தவிர்த்திட முடியாது. சர்வாதிகாரம் ஏற்பட்டுவிட்டால் அரசியல் நடவடிக்கை பற்றிய எண்ணம்கூட மக்களுக்கு எழாது - எழவிடமாட்டார்கள்! இந்தப் பயங்கரச் சூழ்நிலையை ஒழித்தாக வேண்டுமானால், அச்சத்தைத் துடைத்துக்கொண்டு, அல்லல், அவதி, ஆயாசம் கொள்ளாமல், ஜனநாயகக் கடமையைச் செய்வதற்கு, கட்சிகள் துணிவுகொள்ள வேண்டும். நாம், தேர்தலில் ஈடுபட முடிவு செய்தது, இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் என்பதை மறவாதே! நாம் இந்த முடிவு எடுக்காமுன்பு காங்கிரஸ் கட்சி இந்த முறை, தேர்தல் என்பது, மிகச் சாதாரணமான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது, எதிர்ப்பு அதிகம் எழாது, பல இடங்களில் "போட்டி‘யே இருக்காது என்று மனப்பால் குடித்தது. காங்கிரசின் தலைவர்கள், தமக்குப் புதிய நேசமும் பாசமும், கூட்டுறவும் கிடைத்திருப்பதால், புதிய பலம் கிடைத்துவிட்டது, எனவே தேர்தலைக் குறித்துக் கவலைப்படத் தேவையேயில்லை, கேட்டால் தருகிறார்கள், வேறு யார் இருக்கிறார்கள் எதிர்த்து "ஓட்டு’ கேட்க என்று எண்ணி இருந்தனர். இப்போது தம்பி, சென்னை முதலமைச்சர், "தேர்தல் பிரசார காரியாலயம்’ துவக்கிவிட்டார்! நிதி அமைச்சர், பிரசார முறைகள் பற்றிய யோசனைகளைக் கூறிவிட்டார்! தரகர்கள் திக்கெட்டும் கிளம்பிவிட்டார்கள்! ஆட்பொறுக்கும் அலுவலில் அனுபவம் பெற்றவர்கள்; பணம் இருக்கும் இடத்தை மோப்பம் கண்டுபிடித்துக் கூறுபவர்கள், பஞ்சதந்திரம் அறிந்தவர்கள், பாசவலை வீசுவோர், நேசக்கரம் தேடுவோர், வாக்களித்து வளையவைப்போர் எனும் பல்வேறு துறையினர் கிளம்பிவிட்டனர்! ஒரு கை பார்க்கிறேன் என்போரும், ஒழித்துக் கட்டுகிறேன் என்று உறுமுவோரும், சிண்டு முடிந்துவிடுவேன் என்று செப்புவோரும், காலைவாரிவிடுவேன் என்று கூறுவோரும் ஊரூராகச் செல்கிறார்கள். “முதலியார்வாள்! நாயுடுகாருக்குச் சொல்லுங்கள், படையாச்சி நம்ம பக்கம்தான் என்று! ரெட்டியார் பக்கம் நான் சாய்ந்து விடுவேன் என்று கோனார் பேசினதாகப் பிள்ளை கூறினார். நீங்கள் அதை எல்லாம் நம்பவேண்டாமென்று சொல்லுங்கள்; நம்ம நாடார் ஒருபோதும் சொன்ன சொல்லைத் தவறமாட்டார்; அதெல்லாம் ஐயர் ஐயங்கார் வேலை என்பதை விளக்குங்கள்; கவுண்டர் போட்டிக்குக் கிளம்புவாரே என்று சந்தேகம் வேண்டாம்; அவர் விஷயமாக தேவர் கூறிவிட்டார்’’ என்று இப்படி, தேசியக் கட்சி,”ஜாதீயம்’ பேசிக் கொண்டு படை திரட்டிக்கொண்டிருக்கிறது. இவரை நிறுத்தினால் அவருக்குக் கோபம் வருமோ? இவருக்கு அவர் வேண்டியவரா? இவர் அவருக்குப் "பாக்கி’ சேரவேண்டுமாமே, உண்மை தானா? என்ற ஆராய்ச்சிகள் மும்முரமாக ஆரம்பித்து விட்டன!! இதற்காகவே தனிப் பயிற்சி பெற்றவர்கள் சுறுசுறுப்பாகிவிட்டனர். செங்கிஸ்கான் வருகிறானாமே, ஐயோ, செத்தோம்-என்று பீதியுடன் பேசிய நிலை போய்விட்டது. செங்கிஸ்கான் வரட்டும் அவன் செவிட்டில் அறைகிறேன் என்று சின்னப்பயல் சீறிப் பேசுகிறானாமே! செச்சே! நாம் பயந்து சாவதா? நாமும் எதிர்த்து நிற்கவேண்டியதுதான், வரட்டும் செங்கிஸ்கான்!! - என்று வீரம் பேசும் நிலை ஏற்பட்டுவிட்டது. எல்லாம், ஏன்? நாம், தேர்தலில் ஈடுபடத் துணிந்ததால் மட்டுமல்ல, நாம் தேர்தலில் ஈடுபடத் துணிந்தது கண்டு, தேர்தலில் காங்கிரசை எப்படி எதிர்ப்பது என்று பொதுவாகவே பலரும் கொண்டிருந்த அச்சம் உடைப்பட்டுப் போய்விட்டது என்பதனால். பேழை பலமோ, பெரும் பத்திரிகைகளின் பிரசார பலமோ, அனுபவ பலமோ அற்றநாமே தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நிற்க முடியும் என்று துணிந்து தீர்மானித்தானது கண்டு, பலருக்குக் “குளிர்’ நீங்கிவிட்டது; இந்தப்”பயல்களே’ தைரியமாகக் கிளம்பும்போது, நாம் மட்டும் காங்கிரசுக்குப் பயப்படுவானேன், பார்ப்போம் நாமும் நம்மாலானதை என்று கிளம்புகிறார்கள். தி.மு.க. கேவலம் வகுப்பு வாதம், நாத்திகம், பேதம், பிளவு ஆகிய தீதான கொள்கைகளைப் பேசிக்கொண்டு திரியும் செல்வாக்கற்ற சிறு கும்பல் - இது கிளம்புகிறது, தேர்தலில் காங்கிரசுடன் போட்டியிட! நமக்கு எத்தனை எத்தனை மேதைகள் தந்த தத்துவங்கள் உள்ளன, எவ்வளவு விரிந்த பரந்த, புதுமை செறிந்த புரட்சி நிறைந்த திட்டங்களை நாம் வைத்துக்கொண்டிருக்கிறோம், நாம் வேகமாகக் கிளம்பாம லிருக்கலாமா? நாமென்ன, தி.மு.க. வைவிட வீரதீரத்தில் மட்டமா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு, ஒவ்வொரு இடதுசாரிக் கட்சியும் கச்சையை வரிந்து கட்டுகின்றன, களத்தில் கையாளவேண்டிய முறைகள் பற்றிக் கூடிப் பேசுகின்றன! தம்பி! ஒரு ஆறு திங்களுக்கு முன்பிருந்த "திகைப்பு’ போயேவிட்டது. சூடுபிடித்திருக்கிறது, சுறுசுறுப்பு ஏற்பட்டுவிட்டது. கதவில்லா வீடல்ல, தாளிட்டு, காவலும் வைத்திருக்கிறது என்று தேர்தல்பற்றி காங்கிரஸ் கவலையுடன் எண்ணிட - வேண்டிய கட்டம் பிறந்திருக்கிறது; எனக்குக் களிப்பு இதனால் நிச்சயமாகப் பிறக்கிறது; ஏனெனில் நான் இதைத்தான் விரும்பினேன், எதிர்பார்த்தேன். ஏமாறவில்லை. செல்லும் இடமெல்லாம், தி.மு.க. தேர்தலில் ஈடுபடப்போகிறது என்ற செய்தியை, நமது பிரதம பிரசாகர் போலிருந்துகொண்டு, முதலமைச்சர் காமராஜரே கூறிக்கொண்டு வருகிறார்! வீணான தொல்லையை ஏற்படுத்திவிட்டானே என்று காமராஜர் கைபிசைந்துகொள்கிறார் - அவர் பேச்சு ஒவ்வொன்றும் அதைத்தான் காட்டுகிறது. கைபிசைந்து பயன் இல்லை, கண் சிமிட்ட வேண்டும் என்று முறை கூறுகிறார் நிதி அமைச்சர். ஆடலும் பாடலும் உண்டாம்! நாடகம் நடத்திக் காட்டப் போகிறார்களாம்! சினிமாக் காட்சியும் இருக்கிறதாம்! இப்படிப்பட்ட முறைகளை எல்லாம், தேர்தலுக்குப் பயன்படுத்தப் போகிறார்களாம்! யார்? நாடகமாடுவதை நையாண்டி செய்த நாடாளும் கட்சியினர். ஏன்? இந்த முறைகளிலே, நாம் பயிற்சி பெற்றவர்கள், பொது மக்கள் இதனால் மயங்கிவிடக்கூடும் என்ற எண்ணம்! எனவே, இவர்களென்ன, நாங்களும்தான் நாடகம் நடத்தப் போகிறோம் என்று நாடாளும் கட்சி பேசுகிறது. அவர்களுக்கு, நாடகம் நடத்த நிரம்ப வசதி இருக்கிறது என்பது உனக்கும் எனக்கும் நன்றாகத் தெரியும்! ஐம்பது என்பதை நூறு என்று வீசினால், நாடகமாட யாரும் வருவார்கள் என்றுதான் காங்கிரஸ் தலைவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர்; அவர்கள் எண்ணுகிறபடி பல நாடக நடிகர்கள், இணங்கவும் கூடும். ஆடவும் பாடவும் ஆட்களுக்கு என்ன பஞ்சமா? எடுத்துக் காட்டுக்காகக் கூறுகிறேன் - என் வாக்கு பலித்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - குமாரி கமலாவை, அழைத்து ஐந்தாண்டுத் திட்டப் பிரசாரத்துக்கான நாட்டியம் அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்து, அதற்கு, பட்டம் பெற்ற சுப்புலட்சுமியைப் பக்கப் பாட்டுப் பாடச் செய்தால், "பிரம்மானந்தமாக’ இருக்கிறது என்று பாக்கார்டிலும், ஓல்ட்ஸ்மோபைலிலும், செவர்லேயிலும் பியாட்டிலும் வருகிற கனவான்கள் பூரித்துக் கூறாமலா இருப்பார்கள்! அஞ்சு! அஞ்சு! அஞ்சு! எல்லாம் அஞ்சு! அஞ்சு! அஞ்சு! என்ற பாடலைத் துவக்கி, குமாரி கமலா அரங்கத்தில் நின்று, அதற்கான அபிநயம் காட்டி, பூதம் அஞ்சு பஞ்ச பூதம் அஞ்சு பாண்டவர் அஞ்சு பஞ்ச பாண்டவர் அஞ்சு தந்திரம் அஞ்சு பஞ்ச தந்திரம் அஞ்சு! நேரு மந்திரம் அஞ்சு பஞ்ச சீலம் அஞ்சு! என்று பாடலை, விழியாலும், விரலாலும், இடை நெளிவாலும், உடை வளைவாலும், காலாலும், கழுத்து அசைவாலும், விளக்கிக் காட்டினால் போதாதா? ஐந்தாண்டுத் திட்டத்தின் அதியற்புதச் சாதனைகளை, விளங்கிக்கொள்ளவா மாட்டார்கள்! வீடு சென்றதும் குமாரிகளும், பாலாக்களும், பாய்களும். ஐஞ்சு! ஐஞ்சு! ஐஞ்சு! என்று பாடுவர், பரதம் காட்டுவர். அவர் பதிகளோ, பாணம் அஞ்சு! பஞ்ச பாணம் அஞ்சு! மன்மதன் ஏவும் பாணம் அஞ்சு என்று பாடிக் கொஞ்சுவர்! புரிகிறது! இனிப்புக்கூடச் சுரக்கிறது! ஆனால், இவைகளின் மூலம், இன்னலால் தாக்குண்டு இல்லாமையால் இடர்பட்டுக் கிடக்கும் மக்களை, மயக்கிடவும், அவர்தம் உள்ளக் குமுறலை மாய்த்திடவுமா முடியும் நிச்சயம், அந்தப் பலன் கிட்டாது என்பதை, அவர்கள், ஆட்டமாடி பாட்டுப்பாடி அழகான ஜதை காட்டி பார்த்த பிறகு தெரிந்துகொள்வார்கள்! ஆனால் ஒன்று, தம்பி, நம்மை விட அவர்கள், பளபளப்பு அதிகம் காட்ட முடியும், நாடகங்களில். பேச்சு மேடையே, தெரியுமா, நாமும்தான் ஓயாமல் பேசுகிறோம், ஊரூர் சென்று பேசுகிறோம், ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கூட்டம் கூடப் பேசுகிறோம் மேடையில் ஏறியதும், நாம் ஆட, நாற்காலி உடனாட, ஒலிபெருக்கி தானும் ஆட என்ற முறையிலே அமைப்பு இருந்திடக் காண்கிறோம். தேர்தல் வருகிறது என்றவுடன் அலங்காரமான மேலிட அமைப்பே ஒன்று இரண்டாயிரம் ரூபாய் செலவிலே புதிதாகக் கண்டு பிடித்து விட்டார்களே! மரத்தாலான மேடை! இரும்பாலான கால்கள்! பூட்ட ஒன்றரை மணி நேரம் பிடிக்குமாம்! கழற்ற முக்கால் மணிதானாம்! மேடையில் இருபது பேர் அமரலாமாம்! கண்டனராம் காங்கிரஸ் மந்திரிமார், கழிபேருவகை கொண்டனராம். இனி என்ன குறை! கோவைக்கு ஒன்று, மதுரைக்கு இரண்டு, நெல்லைக்கு ஒன்று, சென்னைக்கு நாலு என்று காங்கிரஸ் கட்சியால் இந்த "புதிய அமைப்பு’ வாங்கிப் பயன்படுத்த முடியும்! பணம் இருக்கிறது, கொள்ளை கொள்ளையாக! தம்பி! அவர்களின் வேலை துவங்கிவிட்டது. நாம்! அந்தக் கேள்வியை, ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டே இருந்தால், வேலை ஏதும் நடவாது. எனவே, அவரவர்க்குக் கிடைக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, அவரவர்க்கு உள்ள துறையில், அவரவர்க்கு உள்ள "சக்தியுக்தி’க்கு ஏற்ப வேலை செய்ய வேண்டியதுதான். ஒன்று நான் கூறுவேன், நீயும் அறிவாய், அவர்கள் எந்தக் காரியத்துக்கும், பணம் கொடுத்து, பசை காட்டி ஆட்களை இழுத்துக் கொண்டு வரவேண்டும்; நாமோ, பணமற்றவர்கள்; எனவே "கூலிக்கு மாரடிக்க’ ஆட்கள் தேட மாட்டோம், கொடி பிடிப்பதிலிருந்து கூத்து ஆடுவது வரையில், நாமேதான் செய்யப்போகிறோம்; திறமையாகச் செய்யப்போகிறோம்; ஏனெனில் நம்பிக்கை ஒன்று மட்டுமே தரும் ஆர்வம் நம்மிடம் நிரம்ப இருக்கிறது. நாட்டுக்கு எடுத்துக் காட்டுவதற்கு ஏராளமான காட்சிகள் உள்ளன! நாடகம் நடத்த நாடாள்வோர் துவக்கப் போகிறார்களாம்! அந்த நன்னாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறேன். ஆடட்டும்! ஆனால், தம்பி, எங்கே உன்னுடைய நாடகக்குழு? இன்றே, குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறட்டும், நாடகம் தயாராகட்டும்! நாட்டு நலிவுபற்றிய விளக்கம், நாடாள வந்தவர்கள் தந்த வாக்குறுதிகள் யாவும் பொய்த்துப் போனது பற்றிய விளக்கம், நம்மவர் படும் துயரம், நாடாள்வோர் அதற்குக் கூறும் சமாதானம் இவை பற்றிய, நாடகங்கள் நால்வர், அறுவர், பதின்மர் கொண்ட குழுக்களால், எளிமையும் இனிமையும் கொண்ட முறையில், முச்சந்திகளில் நடத்திக் காட்டப்பட வேண்டுமே! நாமென்ன, குமாரி கமலா, சமூக சேவகி சாருபாலா, சங்கீத கலாநிதி சாம்பமூர்த்தி என்போருக்குச் “சன்மானம்’ கொடுத்து”சபை’யை ரம்மியமானதாக்கிக் காட்டவா முடியும்? நமக்கு நாமே! ஆனால், அந்த நாம் என்பதிலே உள்ள திருவும் திறமும் சாமான்யமானதல்ல! அதை மறவாதே! உன் குறும்புப் பார்வை எனக்குப் புரிகிறது தம்பி, புரிகிறது! அண்ணா! நாடகம் ஆடு என்று யோசனை கூறி விட்டால் போதுமா? நாடகம் வேண்டுமே, எங்கே நாடகம்? என்றுதானே உன் பார்வை பேசுகிறது, பொல்லாதவனல்லவா நீ! சமயம் பார்த்து, என்னை வேலை வாங்கி வாங்கிப் பழக்கப்பட்டுப் போய்விட்டாய்! சரி, நாடகமும் தருகிறேன்! "கூடு’ மட்டும் - எழில் உருவம் அமைத்துக்கொள்ள உனக்கா தெரியாது! - நாடகம் இது முதலாவது! இனித் தொடர்ந்து பல நாடகமும் தருகிறேன்; உன் குழுவினைக் குதூகலமாகப் பணியாற்றச் சொல்லு. இந்த நாடகத்தின் பெயர் "பெரிய மனுஷா அப்படித்தான்!’’ என்பதாகும். அடுத்த "கிழமை’ நாடகம்! அதுவரை உன் ஆவலைச் சிறிது அடக்கிக்கொண்டிருக்கத்தான் வேண்டும், இங்கு அடிகள் இடம் இல்லை என்று கூறிவிட்டார். அன்பன், 22-7-1956 நாடகமாடிடலாம்…(2) 1 காங்கிரஸ் முன்னும் பின்னும் - தேர்தலில் பணம் - தம்பி, உள்ளன்புடன், ஓய்வின்றித்தான் நீயும் எண்ணற்ற இளைஞர்கள் பலரும் பணியாற்றிக்கொண்டு வருகிறீர்கள் - பொதுக்கூட்டங்களிலே உணர்ச்சி வெள்ளம் காண்கிறேன் -மாநாடுகளிலே மட்டற்ற எழுச்சி தெரிகிறது - நமது கழகம் எங்கும் எழிலுடன் வளர்ந்து வருவது விளக்கமாகத் தெரிகிறது - பொலிவும் வலிவும் பூரிக்கத்தக்க விதமாகக் காணப்படுகிறது - அண்ணா! இந்த ஆர்வத்துக்கு ஈடாக எதைக் காட்ட முடியும் என்று என்னைக் கேட்கிறாய், நானும் பெருமிதத்துடன் இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்? என்று கேட்டுக் களிப்படைகிறேன். தமிழகத்தில், முறையும் நெறியும் அறிந்து, அறநெறியில் அக்கறை காட்டி, சிறந்ததோர் மக்கள் கட்சியாக வளர்ந்துவிட்டிருக்கிறது தி.மு.க. என்று உண்மையை உணர்ந்து உரைத்திடும் பண்பினர் கூறிடக் கேட்கிறேன்; எனினும், இதோ முதலமைச்சர் "தி.மு.க.வுக்கு எங்கும் பலம் இல்லை!!’’ என்று ஒரே வரியிலே கூறிவிடுகிறார். எப்படி இந்த அபூர்வமான ஆராய்ச்சி நடத்தினார்? நமக்கோ, நாட்டுக்கோ. புரியாததோர் கண்டுபிடிப்பை அவர் எத்தகைய முறை மூலம் கண்டறிந்தார்? என்று என்னைக் கேட்காதே, தம்பி. அவர் முதலமைச்சர், ஆகவே கூறுகிறார்; தேர்தல் சூழ்நிலை உருவாகிறது அதனால் கூறுகிறார் என்று மட்டும்தான் கூறலாம். வேறே அவருடைய அரிய முறை என்ன? தனிப்பட்ட திறமை யாது என்பனபற்றி எனக்கென்ன தெரியும்! கோயில்பட்டி வட்டாரத்திலே, வழக்கப்படி மின்னல் வேகச் சுற்றுப்பயணம் நடத்தினார்; இடி முழக்கம் கேட்டனர், இன்மொழி மழை பொழிந்திருக்கும், பிரமுகர்கள் கூடி இருப்பர், பேழையுடையோர் குழைந்திருப்பர்; இவைகட்குப் பிறகு, முதலமைச்சர், இரத்தினச் சுருக்கமாக’ "தி.மு.க.வுக்கு எங்கும் பலம் இல்லை’’ என்று கூறி இருக்கிறார். அவர் அவ்விதம் கூறுவதற்குக் காரணம் இருக்கிறது; ஒன்று அவர், அவருடைய கட்சிக்காரர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும் என்பது, மற்றொன்று நமது கழகத் தோழர்களுக்கு மனக் கசப்பு உண்டாக்க வேண்டும் என்பதாகும்; இதில் அவர், அவருடைய கட்சிக்காரர்களைப் பொறுத்தவரையிலே எதிர்பார்த்த பலனைப் பெற்றிருக்கக்கூடும்; நமது கழகத் தோழர்களைப் பொறுத்தவரையில் அவர் கசப்பூட்டும் நோக்குடன் பேசியது கேட்டு, நம்மில் யாரும் நாடி நரம்பு தளர்ந்துபோய், "ஐயகோ! நாம் ஏதோ பெரும் பலம் பெற்று விட்டோம் என்று பேசித் திரிகிறோமே, தேர்தலில் ஈடுபடவும் திட்டமிட்டு விட்டோமே, நமக்கு எங்கும் பலமே கிடையாதாமே, எல்லாவற்றையும் அறிந்தவர் என்று கூறத்தக்க நிலைக்கு உயர்ந்துள்ள காமராஜரே இதனைக் கண்டறிந்து கூறிவிட்டாரே! இனி என்ன செய்வது?’’ என்று கதறிக்கொண்டிருக்கப் போவதில்லை; செயலற்றுப் போய்விடவும் மாட்டோம். நமக்கு உள்ள பலம் நமது கொள்கையிலும், அதனை எடுத்துரைக்க நாம் மேற்கொள்ளும் முறையிலும், அந்த முறை பிறருக்கு வேண்டுமென்றே பெரும் பீதியும் அருவருப்பும் தரத்தக்கதாக இல்லாமல், பலரையும் அருகே ஈர்த்திடத்தக்கதான பண்புடையதாகவும் அமைந்திருப்பதையும் பொறுத்திருக்கிறது. இதனை நாம் செய்து வருகிறோம் - செம்மையாகச் செய்து வருகிறோம் - நாளுக்கு நாள் நமது முறையிலும் திறத்திலும் முன்னேற்றமும், மக்களை நம் பக்கம் கொண்டு சேர்க்கும் தன்மையும் வளர்ந்து வருகிறது என்பதை எந்தக் கட்சியிலும் காணக் கிடைக்கும் ஏற்புடையோர் எடுத்தியம்புகின்றனர். நமக்குப் புரிகிறது! எனவேதான் காமராஜர், நமக்கு எங்கும் பலம் இல்லை என்று கூறுவது, பொருளற்றது என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு, நாம் நமது பணியினைத் தொடர்ந்து நடத்துகிறோம். தி.மு.க.வுக்கு எங்கும் பலம் இல்லை - என்று கூறிடாமல், தி.மு.க.வுக்குப் பணம் இல்லை என்று காமராஜர் கூறியிருந் திருந்தால், பெருமூச்சுடன் "ஆமய்யா, ஆம்!’ என்று நாம் ஒப்புக்கொள்வோம்! ஆனால், காமராஜர் அகராதியில் - அரசியலுக்காகத் தயாரிக்கப்பட்ட தனி அகராதியில், பலம் என்பதற்குப் பணம் என்று பொருள் இருக்கும் போலும்! பணத்தால் கிடைக்கக்கூடிய பலம் நமக்கு இல்லை என்பது உண்மை; அத்தகைய பலம் நமக்கு இல்லை என்று கூறிக்கொள்வதிலே நாம் வெட்கப்படத் தேவையுமில்லை! இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பொருளைக் கொள்ளை அடிப்பவனைப் பிடித்துக் கொடுக்கும் போலீஸ்காரர், சம்பளம் எவ்வளவு பெறுகிறார்? தேர்தலில் தித்திப்பு மொழி பேசிடும் எத்தர்களிடம் பொது மக்கள் சிக்கிச் சீரழியாதபடி பாதுகாக்கும் பணியாற்றக் கிளம்புகிறோம். நம்மிடம் இதற்குப் பெரும்பொருள் தேவையில்லை. உள்ளத்தில் தூய்மையும், கொள்கையில் உறுதியும், அக்கொள்கையைப் பரப்புவதற்கான முறையில் ஓர் பண்பும் இருந்தால் போதும். பணம், படைக்கலன் அல்ல என்று நான் கூறவில்லை தம்பி; படைக்கலன் அது ஒன்றுதான் என்று எண்ணுவது பேதமை, பெரும்பிழை என்றுதான் கூறுகிறேன். பணம் படைத்தவர்கள் தேர்தலில் கையாளும் முறைக்கும், அது அற்ற நாம் கையாளும் முறைக்கும், இந்தத் தேர்தலின்போது கடும் போட்டி இருக்கத்தான் போகிறது. சென்ற கிழமை, அதுபற்றித்தான் குறிப்பிட்டேன், பணம் படைத்த காங்கிரஸ் கட்சி அள்ளிக்கொடுத்து, அம்புவிழி மாதரையும் கரும்பு மொழி ஆடவரையும் கலைத்துறையில் கண்டறிந்து பயன்படுத்தும்; நாம் அந்தக் காரியத்தில் நாமே ஈடுபட வேண்டும்; நாட்டு மக்களுக்கு நல்லறிவும் அரசியல் தெளிவும் தரத்தக்க நாடகமாடிடலாம் என்று குறிப்பிட்டேன். இது, அதற்கான ஆர்வம் உனக்கு ஏற்பட ஒரு தூண்டு கோல்; முழு நாடகமல்ல!! பெரிய மனிதர்களின் போக்கு, அரசியல் பிரச்சினையில் எப்படி இருக்கிறது என்பதை மக்களுக்குக் காட்டிட ஒரு வழி. எந்த தனிப்பட்டவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்துக்காக அல்ல, அரசியலைப் பெரிய மனிதர்கள் என்போர் எவ்வளவு "இலாவகமாக’ உபயோகித்துப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை விளக்கவே இதுபோன்ற நாடகங்கள். இனி நாடகத்தைப் படித்துப்பார், தம்பி,….. பெரிய மனிதர்கள்…! இடம் : கீரோடு இரயில்வே ஸ்டேஷன் இருப்போர் : செட்டுக்காரர் அவர் கணக்காளர் பணியாட்கள் போட்டர் சின்னான் காலம் : 1940 நிலைமை : கீவை மாவட்டத்தில் கீர்த்தி வாய்ந்த குடும்பத் தினரான, செட்டுக்காரர், சின்னையம்பதி செல்வதற்காகக் கீரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார். சில்க்குக் கோட்டும், ஜரிகை அங்கவஸ்திரமும், காதில் வைரக் கடுக்கனும், விரல்களில் வைர மோதிரங்களும் அணிந்துகொண்டு இருக்கிறார். கணக்காளர் கவலையுடன் அவர் பின்னோடு வருகிறார்; பளுவான பெட்டிகளையும், படுக்கையையும் தூக்கிக் கொண்டு பணியாட்கள் வருகிறார்கள். வெள்ளிக் கூஜாவும், பழக்கூடையும் எடுத்துக் கொண்டு, ஒரு பணிப்பெண் வருகிறாள். ரயில்வே ஸ்டேஷனில் வருவோரும், போவோரும், செட்டுக்காரரைக் கண்டு, மரியாதை காட்டுகிறார்கள். அவர்கள் போடும் கும்பிடுகளைக் கவனியாதவர்போல் செட்டுக்காரர் இருக்கிறார். பெட்டி படுக்கையை வண்டிக்குள்ளே எடுத்துவைக்க போட்டர் சின்னான் வருகிறான். செட்டுக்காரருடன் பணியாள் வந்திருப்பதைப் பார்த்து விட்டு, தனக்குப் "பிழைப்பு’ இல்லை என்றெண்ணி வருத்தப்படுகிறான். புரோகிதர் புண்யகோடீஸ்வரர், மேல் மூச்சு வாங்கும் நிலையில் ஓடி வருகிறார். அவரைக் கண்ட செட்டுக்காரர், சிரித்தபடி… செட்டிக்காரர் : என்ன சாமி! புண்யகோடீஸ்வரர் : (பச்சைச் சிரிப்புக் காட்டியபடி….) என்ன கஷ்டகாலம் போங்கோ! தலைதெறிக்க ஓடிவரவேண்டி நேரிட்டுவிட்டது. பாழாப் போன ரயில் எங்கே கிளம்பிடறதோண்ணு, பயம்…. (சொல்லிக்கொண்டே கையில் உள்ள சிறு பையைத் திறந்து, அதிலிருந்து, குங்குமப் பிரசாதத்தைத் தருகிறார். செட்டுக்காரர், பயபக்தியுடன் அதை நெற்றியில் அணிந்து கொண்டபடி….) செட் : இதுக்காகவா குடல் அறுந்துபோகிறபடி ஓடி வந்தீர். அடப்பாவமே! இன்னும் அரை மணி இருக்கே ரயில் புறப்பட… புண் : நேக்கு என்ன தெரியும்! ரயில் இந்நேரம், கீலம் போயிருக்கும்னு, அவ பயம் காட்டினா…. செட் : யார் ஐயரே, உம்மைப் பயம் காட்டினவ? புண் : நம்ம பாகு…! செட் : அவளை எங்கே பார்த்தீர்? வீட்டண்டே போயிருந்தீரா? புண் : என்ன, அப்படிக் கேட்டுவிட்டீர்? நான் எதுக்காக அவ வீட்டுக்குப் போகப் போறேன்? செட்டுக்காரர் கால் மறுபடியும் பட்டாலொழிய அவ வீட்டு வாசப்படியை மிதிக்கப்படாதுன்னு சங்கல்பம் செய்துண்டு இருக்கேன்… நான் அவ ஆத்துக்குப் போவனா… அவ வந்திருந்தா, அம்பா சன்னதிக்கு… நான் அர்ச்சனை செய்துண்டு, பிரசாதம் வாங்கிண்டிருந்தேன்… தெரிஞ்சுண்டா… அவதான், சதா, உம்ம சங்கதியைச் சகலமும் விசாரிச்சுண்டு இருக்காளே! "என்ன ஸ்வாமீ! இங்கே இப்படி காலகரணம் செய்துண்டிருக்கீரே, இந்நேரம் செட்டுக்காரர் கீலம் போய்ச் சேர்ந்திருப்பாரேன்னு சொன்னா. பயந்தே போயிட்டேன். அங்கே பிடித்த ஓட்டம், இங்கே படி ஏறும்போதுதான் நின்னுதுன்னு வையுங்கோ… செட்டு : அடபாவமே! என்னாலே, உமக்கு மெத்தச் சிரமம்… புண் : இது ஒரு பிரமாதமான சிரமமா.. இன்னக்கி அலங்காரம் கண்ணைப் பறிச்சுட்டுது போங்க…. செட் : அவளுக்கென்னய்யா, மகா தளுக்குக்காரியாச்சே… பதினெட்டு வயது குட்டிபோலத்தான் இருப்பா… புண் : தாங்கள் யாரோட அலங்காரத்தைப் பத்திப் பேசறேள்? செட் : எல்லாம் அந்த பாகுவோட அலங்காரத்தைப் பத்தித் தான்… புண் : சிவ! சிவ! நான், அம்பாளோட அலங்காரத்தைச் சொன்னேன். செட் : அடடே! நான் தப்பர்த்தம் பண்ணிக்கொண்டேன்…. புண் : ஆனா, ஒருவகையிலே பார்த்தா பாகுவோட அலங்காரம், அம்பாளோடே போட்டி போடறது போலத்தான் இருந்ததுன்னு சொல்லணும்… செட் : போமய்யா, அவளைப்பத்தி நீர் எப்பவுமே இப்படித்தான் பிரமாதமாப் புகழ்ந்து பேசறது… புண் : கண் இருக்கு, பார்க்க, பொய் பேச மனசு கேட்கறதில்லை… உம்! கிரஹம் சரியாக இல்லாததாலே, அவளோடு மனஸ்தாபம் ஏற்பட்டதே தவிர, உமக்கு அவமேலே பிராணன் என்கிறது, நேக்குத் தெரியாதா? (பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் போக்கில் இருக்கும் போர்ட்டரைப் பார்த்து) செட் : ஏண்டா, மரமாட்டமா நிற்கறே… சாமான்களை எடுத்து வண்டியிலே வையேன்…. (போர்ட்டர் மகிழ்ச்சியுடன், சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான்.) புண் : கின்னையம்பதியிலே எத்தனை நாள்? செட் : நாளை மறுநாள்தானே கவர்னர், டீ பார்ட்டி. அது முடிந்ததும், புறப்பட வேண்டியதுதான். புண் : என்ன விசேஷம், டீ பார்ட்டிக்கு… செட் : கவர்னரோட குதிரை, பந்தயத்திலே ஜெயித்தது. அதற்காக, சேட் தர்மசந் இந்த டீ பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கான்… புண் : என்ன சொல்லுங்கோ… அவன், எத்தனை பெரிய சேட் நடத்தற டீ பார்ட்டியாக வேணுமானா இருக்கட்டும், போன வருஷம் நடத்தினீர் பாரும், டீ பார்ட்டி, அதைப் போல, இனி ஒருவனாலும் நடத்தவே முடியாது. அட, அடா! ஊரே, பிரமாதம்! பிரமாதம்னு, பேசிண்டுது… செட் : டீ பார்ட்டி, ரொம்ப அருமையாத்தான் இருந்தது. ஆனா, திருஷ்டி பரிகாரம்போல, இந்த காங்கிரஸ்காரப் பயல்கள் கொஞ்சம் "கலாட்டா’ செய்துவிட்டானுக… புண் : கவர்னர், ரொம்ப வருத்தப்பட்டாரோ…? செட் : அதெல்லாம் இல்லே… எல்லாம் வெளியூர்லே இருந்து கூலிகொடுத்துக் கொண்டு வந்தானுக, நம்ம ஊர்லே, எவனும் காலித்தனம் செய்ய மாட்டானுகன்னு சொன்னேன். திருப்தியாத்தான் பேசினார்… ஆனா, நம்ம ஊர் பசங்களும், வரவர தலையரட்டலாயிட்டுதுங்க… புண் : சும்மா, வயித்துச் சோத்துக்கு வழி இல்லாததுகளெல்லாம் வந்தே மாதரம்னு வரட்டுக் கூச்சல் போடறதுகள், வேறே என்ன….? (போர்ட்டர் பணிவாக) போர் : வந்தே மாதரம் சொல்கிறவங்க, வயித்துச் சோத்துக்கு வழியத்தவங்கன்னு சொல்லி விடலாமுங்களா? மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இப்படிப்பட்டவங்களெல்லாம், வயித்துச் சோத்துக்கு வழி இல்லாதவங்களா…? (செட்டுக்காரர் கோபம் கொள்கிறார். கலெக்டர், வருவதைக் கண்டுவிட்டு அவரை எதிர்கொண்டு அழைக்கிறார். கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.) கலெக்டர் : சீலமா…? செட் : இல்லே, சின்னையம்பதிக்குத்தான்…. எப்படி இருக்குது ஊர் நிலைமை… என்னமோ சத்தியாக்கிரகம்… நின்னு தொலைஞ்சுதா… லீடர் வேஷம் போடற ஆளுகளை பிடிச்சு, அஞ்சு வருஷம், பத்து வருஷம்னு ஒரு பத்துப் பேருக்குத் தீட்டி விட்டா, பயல்களெல்லாம், பெட்டிப் பாம்பாகி விடுவானுக… கலெக் : ஆமாம்… ஆனா நிதானமா நடந்துகொள்ளச் சொல்றது, கவர்மெண்டு…. வந்தே மாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே! தேசபக்தன் திருமலைக்கு ஜே! என்ற கோஷம் கேட்கிறது. எதிர்ப்பக்கமிருந்து, கிருச்சி வண்டி வந்து நிற்கிறது. எல்லோரும், பரபரப்புடன் அங்கே ஓடுகிறார்கள். வண்டியிலிருந்து, திருமலை எனும் காங்கிரஸ் தொண்டன் இறங்குகிறான். மாலைகள் போட்டு வரவேற்கிறார்கள். போர்ட்டர் சின்னான் ஒரு கதர் மாலை போடுகிறான். இதற்குள் போலீஸ்படை வருகிறது. கலைந்து செல்லும்படி உத்தரவிடுகிறது. மக்கள் ஆர்வத்துடன் ஜெயகோஷமிடுகிறார்கள். போலீஸ் தடியடி நடத்துகிறது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். போர்ட்டர் சின்னானுக்கு நெற்றியில் இரத்தக் காயம் ஏற்படுகிறது. மெள்ளத் தப்பித்துக்கொண்டு செட்டுக்காரர் இருக்கும் பக்கம் வருகிறான். கலெக்டர், விடைபெற்றுக்கொண்டு செல்கிறார். (போர்ட்டர் நெற்றிக் காயத்தைக் கண்ட…) புண் : என்னடா இது, பாவிப் பயலே! போர்ட் : (சிரித்தபடி) ஏன் சாமி! அடித்தவனைப் பாவி என்கிறதா, அடிபட்டவனைப் பாவின்னு சொல்றதா….? புண் : வக்கணை கிடக்கட்டும்… நோக்கு என்னடா அங்கு வேலை…? அங்கேதான், அடித்து விரட்டறாளே, ஏன் அங்கே போகணும்னேன்…? போர் : என்னமோ, மனசு கேட்கலே, போனேன், திருமலை, பாவம், மூணுமாசமாச்சி, ஜெயிலுக்குப் போயி; என் சிநேகிதனோட மவன், ரொம்ப நல்ல பையன்… செட் : யாரு… அந்தத் திருட்டு விழி திருமலையா…? என்ன அவனுக்கு? ஜெயிலிலே இருந்து வெளியே விட்டாச்சா? சரி! இனி ஊர்லே ஒரே ரகளைதான்… டே! நீ, போர்ட்டர் தானேடா? கூலிக்காரன்தானே! சாமானைத் தூக்கித் தானே பிழைக்க வேண்டியவன்… போர் : ஆமாங்க…. வயித்துப் பிழைப்புக்கு எது செய்தா என்னங்க? அள்ளக் கூடாது திருடக் கூடாது…. செட் : சீ! கழுதே! கூலிக்காரப் பயலுக்கு, அந்தக் கும்பலோட என்னடா வேலை…. பெரிய லீடர் அந்தத் திருமலை… நீ போனயோ, அவனைத் தரிசனம் செய்ய…. புண் : (அசட்டுச் சிரிப்புடன்) இதோ, தரிசனம் செய்துண்டு பிரசாதமும் வாங்கிண்டு வந்திருக்கான் பாருங்கோ…. செட் : போட்டதே போட்டானுங்களே, பார்த்துச் சரியா மண்டையிலே போடப்படாதா…? எனக்கு மட்டும் ஒரு ஆறு மாதம் "பவர்’ கொடுத்தா, இந்தப் பயல்களிலே ஒரு பத்துப் பேரை, கடைத் தெருவிலே நிற்க வைத்துச் சுட்டுத் தள்ளுவேன்; மத்தப் பயல்களெல்லாம், வாலை மடக்கிக் கொள்ளுவானுங்க. போர் : (சிறிது கோபமாக) என் கூலியைக் கொடுங்கய்யா… சுட்டுத் தள்ளுவதும் வெட்டிப் போடறதும் உங்க இஷ்டம்… கூலியைக் கொடுங்க…. போயி, ஏதாவது, தடவித் தொலைக்கணும், இந்தக் காயத்துக்கு…. செட் : என்னடா ஒரு தினுசாகப் பேசறே - திமிரு பிடிச்சிருக்குதோ… கதர்ச்சட்டை போட்டதுமே இந்தக் கந்தப்பயல்களுக்குக் கண்மண் தெரியறதில்லை… எவனோ சொல்லிவிட்டானாம் கதர் போட்டா போதும், வெள்ளைக்காரர் ஓடிப்போவான்னு… அடித்தாலும், அணைத்தாலும்….! காமராஜரும் பெரியாரும் - பெரியாரின் அரசியல் விளக்கம் நேருவும் திலகரும். தம்பி! அடித்தாலும், அணைத்தாலும், ஐய, நின் அன்பெனும் பாசமது அறிந்துருகும் என்னெத்த அடியவர்கள் இங்குண்டு அதனால் மின்னொத்த இடை உமையாள், கண்பொத்த பொன்னொத்த மேனியனாய், பொடி பூசி பண்ணொத்த மொழிகேட்டு இன்புற்று, மண்விட்டு விண் வரட்டும் என்றே நிற்கும் மாமணியே! நின் நோக்கம் அறிந்தேனன்றோ! மற்றையோர் உற்றகுறை பற்றித்தாக்க இதுமுறையோ? இது அறமோ? என்றே கேட்பர் கற்றைச் சடையதனில் மதிசூடிக் காட்டும் தேவ! உற்றகுறை உண்டெனினும் உள்ளம் நோகேன் ஊர்தோறும் உன்புகழைப் பாடிச் செல்வேன், காரழகுமிகுந்திடு நந்தம் நாட்டில் கண்கசக்கி கடிந்துரைப்போர் போக்கினரைக் கண்டால் காய்வேன்; கண்ணுதலைக் கொண்டவனை அறியாதானே! பண்டுமுதல் அவன்கொண்ட முறை ஈதன்றோ? தொண்டு செயும் தூயவரின் பெண்டைக் கேட்டான் துடித்திடாது அறுத்திடுக மகவை என்றான், பெயர்த்தெடுத்த கண்ணினை அப்பிக்கொண்டே பெம்மானும் இருந்த நிலை அறியாய் போலும்; அடித்தாலும், அணைத்தாலும் ஐயன், அன்றோ! அவனடியை மறந்திடுதல் அடியார்க்குண்டோ! அணைத்தாலென், அடித்தாலென், வேறு வேறா? அனைத்துமே அவனாற்றும் வினையே யன்றோ? அரகரா மகாதேவா! என்றேத்தித் தொழுவதன்றி ஆகாது ஐயன் செயல் அடுக்காது, என்பார் உண்டோ? ஆன்றோர்கள் அளித்த நெறி ஈதேயன்றோ! அறியாது போனதுமேன், அறிவற்றோனே! அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன்! அடிதொழா திருந்திடுவார், அடையார் இன்பம்! பத்து நாட்களுக்கு முன்பு நான் குன்றக்குடி மடத்துக்குச் சென்றிருந்தேனே, அங்கு யாரோ எனக்குப் பாடிக்காட்டிய பதிகம்போலும் என்று எண்ணிக்கொள்ளாதே, தம்பி. அடிகளாரின் அன்பழைப்புப் பெற்று மடம் சென்ற எனக்கு, சிறந்த உணவு, சுவைமிக்க உரையாடலுடன் சேர்த்தளிக்கப் பட்டது; பதிகம் தரப்படவில்லை. மேலும், தம்பி, இது பதிகமும் அல்ல; பதிகம் போன்றது! சமதர்மம் அல்ல, சமதர்மம் போன்றது என்று ஆவடிப் பருவத்தின்போது பேசிக்கொண்டார்களே அதுபோல என்று வைத்துக்கொள்ளேன்! பதிகம்-முறைப்படி, ஒருவர் என்னிடம் பாடிக் காட்டிய துண்டு. இலக்கண முறைப்படி அவர் தந்த பதிகத்தை, நினைவிற்கு வந்த வடிவத்தில் தந்துள்ளேன் - பொருட்குற்றம் கிடையாது - வடிவம் புலவர்களால் திருத்தி அமைக்கப்பட வேண்டியதாக இருப்பதை உணருகிறேன். ஆனால் நான் உனக்குப் பதிகத்தின் வடிவம் காட்ட அல்ல இதனைத் தருவது அதிலே உள்ள பொருளுக்கும் அதற்கும் இன்றைய அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வேடிக்கையான தொடர்பினைக் காட்டுவதற்குமேயாகும். பல நாட்களுக்கு முன்பாக நான் கேட்ட இந்தப் பதிகம் என் நினைவிற்கு வந்தது. அடித்தாலும் அணைத்தாலும், ஐயன், அடிதொழுவேன் - என்று பாடினார், யாரோ, பாவம், பக்தியில் கட்டுண்ட நிலையில். பெண்டுகேட்டான், பிள்ளைக்கறி கேட்டான், பேயாக அலையச் செய்தான் - எனினும் பெம்மான் செய்தது, எனவே, அவன் ஆற்றிய வினைக்குக் காரணம் அவனறிவான் என்றெண்ணி, அகமகிழ்ந்து, அவனடி தொழுதேன் என்று கூறுவதுதான் ஆன்றோர் நெறி என்பதை எடுத்துக்காட்டும், பதிகமல்லவா; மறுபடியும் ஒரு தடவை, பார், தம்பி. அக்ரமம், அநீதி நிலவிடக் காணும்போது, ஊர் கெடுப்பவன் உயர்ந்து உழைப்பவன் உருக்குலையும்போது, பொய்யனும் புரட்டனும் போக போக்கியத்தில் புரள, நெறி தவறாதான், அறம் பிறழாதான் வறுமைப் படுகுழியில் வீழ்ந்துழலும் போது, இந்தப் பதிகம்கூடப் பொருளற்றுப் போகிறது, கடவுள் நெறியில் நம்பிக்கை கொண்டவர்களுக்கே! அடித்தாலும் அணைத்தாலும் ஐயனன்றோ என்ற அமைதியைப் பெற முடிவதில்லை - அவர்களாலேயே. அறநெறி தவறுவோனை அடித்திடவும், அவ்வழி தவறாதானை அணைத்திடவும் வேண்டுவதன்றோ ஐயன் முறையாக இருத்தல் வேண்டும் என்று இக்காலை கேட்கின்றனர். அருள் விஷயமாகக் கூறப்படும் பதிகத்தின் கருத்தே ஆராய்ச்சி மிகுந்துள்ள இந்தக் காலத்தில் பொருளற்றதாகித் தெரிகிறபோது, அடித்தாலும் அணைத்தாலும் அவனே எமது ஐயன் என்று ஏத்தித் தொழுதிடும் போக்கு, அரசியலில் கொள்ளப்படுமானால், எப்படிப் பொருந்தும்? ஆனால், தம்பி, அனைவரும் இந்த ஆபத்தான நிலையில் தங்களைச் சிக்கவைத்துக் கொள்வதில்லை - ஒரு சிலர்தான்; மற்றையோர், ஐயன், அதாவது ஆள்பவர் எந்தப் போக்குடன் நடந்துகொள்கிறாரோ, அதனால் எத்தகைய பயன் விளைகிறதோ, அதற்கொப்பத்தான் அந்த ஆளவந்தாருக்கு ஆதரவு காட்டுவதோ, திருத்த முற்படுவதோ அல்லது விரட்டப் போரிடுவதோ ஆகிய முறைகளை வகுத்துக்கொள்கிறார்கள். பட்டினிபோட்ட மகாராஜன் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க. சோறு போட்டுச் சுவையூட்டிய சூதுக்காரன் அடியோடு ஒழிக - என்று எவரேனும் கூறுவரோ? அரசியலில், நேசமும் பாசமும், தொடர்பும் தொந்தமும் ஏற்பட்டு விடுவது சகஜம் - ஆனால், அது, நாம் மேற் கொண்டுள்ள காரியத்துக்கே உலைவைத்திடுவதாகவும், நமது நீண்ட கால உழைப்பின் உறுபலனையே கெடுத்தொழிப்ப தாகவும் அமைந்துவிடுமானால், நாம் அந்தத் தொடர்புக்குக் கட்டுப்பட்டு, பதிகம் கட்டினேனே, அதிலே காணக் கிடப்பது போல, அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன் என்றா தீர்மானித்துக் கொள்வது. வடநாடு, தென்னாட்டின்மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பது நமக்குத் தெரிகிறது, நமது நெஞ்சில் தீயாகப் பாய்கிறது, நமது வலிவினைப் பெருக்கிக்கொண்டு, இந்த அக்ரமத்தை ஒழித்திட வேண்டும் என்ற நோக்குடன் வாய்ப்புக்கேற்ற வண்ணம் பணியாற்றுகிறோம். காமராஜர், வடநாடு, தென்னாடு என்று பிரித்துப் பேசுவதே பித்த முதிர்ச்சி - சித்தக் குழப்பம் - என்கிறார். இந்த நோக்கத்தைத் தமது அரசியல் நடவடிக்கைகளில் தவறாது காட்டுகிறார். வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கு நாம் கட்டுப்பட்டவர்கள்; காமராஜர் அந்தத் திட்டத்தை எதிர்த்திடுபவர்; இந்நிலையில், நமக்கும் காமராஜருக்கும் தொடர்பு எவ்வகையினாலோ ஏற்பட்டு விடுகிறது என்றால், அது எந்த வகையில் வடிவம் கொள்ள வேண்டும். "அடித்தாலும் அணைத்தாலும் அவனே என் ஐயன்!’ என்ற அளவுக்கா செல்வது! கூடையில் வைத்துச் சுமந்து கொண்டு போனாளாமே உத்தமி நளாயினி, அந்தப் போக்கின் அளவுக்குமா செல்ல வேண்டும். கூடாது! அது தீது! அது கொள்கைக்கு வெற்றி தாராது! தவறான போக்கு அது, ஆகாது - என்றெல்லாம் தம்பி! நீ கூறுகிறாய், கேட்கிறது; மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது; ஆனால், மற்றோர் புறமிருந்து பதிகம் கேட்கிறதே! அடித்தாலும், அணைத்தாலும், அவரே எமது ஐயன்! - என்று! என்னென்கிறாய், இந்தப் போக்கினை. தம்பி, தம்பி, ஆராயச் சொல்கிறேன், அவர்களைப் போய் நீ கேட்டுவிடாதே நம்மீது மெத்தக் கோபம் கொண்டவர்கள்! காமராஜர் நம்மவர், ஆகவே நல்லவர். காமராஜர் நல்லவர், ஆகவே நம்மவர். நாம், நம்மவர் என்பதற்காக மட்டும், காமராஜர் நல்லவர் என்று சபலம்கொள்ள மறுக்கிறோம் - வேறு சிலரோ, காமராஜர் நம்மவர், ஆகவே நல்லவர் என்று பாசம் காட்டுகிறார்கள், அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்! - என்று. எத்துணை பக்தி! என்று பதிகம் கேட்டுக் கூறிடுவது போலத்தான், ஆஹா! என்ன பாசம்! எத்துணை நேசம்! என்று கூறத் தோன்றுகிறதே தவிர, இதிலே பொருள இருப்பதாக என்னால் உணர முடியவில்லை. பக்தி மேலிட்டால் பதிகம் பாடுபவர் கூறுகிறாரல்லவா, அடித்தாலென் அணைத்தாலென் அனைத்தும் உன் வினையேயன்றோ என்று, அதுபோல காமராஜர், கிளர்ச்சிகளை அடக்காதிருந்தாலும் அழித்தொழிக்க முற்பட்டாலும் எல்லாம் நன்மைக்கே! என்றும், எப்படிச் செய்தாலும் அவர் நல்லவர் என்று, கொள்ள என் மனம் இடம் தரவில்லை - வேறு சிலருக்கு எப்படி மனம் இடம் தருகிறது என்பதுபற்றி எண்ணிப்பார்த்த போதுதான், பழைய பதிகம் நினைவிற்கு வந்தது, உனக்குக் கூறமுற்பட்டேன். பெரியாரைக்கூடக் கைது செய்கிறாரே, காமராஜர் என்று கோபம் வருகிறது - உடனே பதிகம் பாடப்படுகிறது. அதற்காக அவர்மீது கோபப்படுவது போக்கிரித்தனம், அது அவர் கடமை, திராவிடர்களைச் சிறையில் தள்ளுகிறார் காமராஜர், ஏன்? அது அவர் கடமை! திராவிடர்களை அடிமைப் பிடியில் வைத்திருக்கும் வட நாட்டு ஆதிக்கத்தை ஒரு துளியும் காமராஜர் எதிர்க்க மறுக்கிறாரே, அது ஏன்? அது அவர் நிலைமை! இலங்கையில் தமிழர்கள் இம்சிக்கப்படுவது பற்றி, இது வரையில் ஒரு வார்த்தை ஏன் என்று காமராஜர் கேட்க வில்லையே அது ஏன்? அது அவர் காட்டும் பொறுமை தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு நிச்சயமாகக் கிடைத்திடச் செய்வேன் என்று வாக்களித்துவிட்டு, பிறகு பறிகொடுத்துவிட்டு, வாளா இருக்கிறாரே, அது ஏன்? அது அவருடைய நிலைமை! சென்னை என்ற சீரழிவான பெயர் வேண்டாம், தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கூடாதா, இது பெரியாருக்கும் பிரியமானதாயிற்றே, இதைக்கூடச் செய்யவில்லையே காமராஜர், அது ஏன்? அது அவருடைய பதவியால் ஏற்பட்ட நிலைமை இப்போதெல்லாம் அவர் கோயில் கோயிலாகச் சென்று தரிசிக்கிறாரே, அவர் ஏதோ வீரதீரமிக்க சுயமரியாதைக்காரர் என்ற பேசப்பட்டதே, இப்போது அவர் போக்கு இவ்விதம் இருக்கிறதே, அது ஏன்? அது அவருடைய பக்தி அல்ல, யுக்தி! காங்கிரஸ் கட்சியின் கஷ்ட திசையில் கண்ணெடுத்தும் பாராதிருந்தவர்களை எல்லாம் இப்போது கட்டிப்பிடித்திழுத்துக் கொஞ்சுகிறாரே, அது ஏன்? அது அவருடைய ராஜதந்திரம்! ஆகட்டும், பார்ப்போம், அதற்கென்ன, கவனிக்கிறேன், என்றே எப்போதும் எதற்கும் கூறிக்கொண்டு காலத்தை ஓட்டு கிறாரே, அது ஏன்? அது அவருக்கு மாமந்திரம் இதுபோலத் தம்பி, காமராஜர் செய்கிற ஒவ்வொன்றுக்கும், செய்யத் தவறுகின்ற ஒவ்வொரு கட்டத்துக்கும், விளக்கம் கனிவுடன் தரப்படுகிறது. காரணம் என்ன? பதிகத்தைப் படி, தம்பி, பதிகத்தைப் படி! இராமர் பட எரிப்பு சம்பந்தமாக ஏற்பட்ட நிலைமைக்காக மட்டுமே, நான் இதனை எழுதவில்லை. பொதுவாகவே, மெள்ள மெள்ள, ஆனால் ஆபத்தளிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள விசித்திரமானதோர் அரசியல் நிலைமையைக் குறித்தே இதனை எழுதுகிறேன். அதற்கும் காரணம், இங்கு இத்தகையதோர், "பாசவலை’ வீசப்பட்டு அதிலே திராவிடரில் சிலர் சிக்கிக்கொண்டதனால் சிந்தை நொந்து கிடந்திட்ட நிலையில், நான், நாளிதழ்களைப் பார்க்கும் போது, வேறோரிடத்தில், கொள்கைக்காக, கொண்ட திட்டத்துக்காக, பாசம் குறுக்கிட்டாலும், நேசக் கரம் நீட்டப்பட்டாலும், சொந்தம் பந்தம் பேசப்பட்டாலும், அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்! என்ற போக்கிலே நடந்துகொள்ள மறுப்போர் உளர் என்பதைக் காண்கிறேன்; புன்னகையும் பெருமூச்சும் பிறக்கிறது. திலகர் எனது மாபெருந் தலைவர்! சிறுவனாக இருந்தபோது நான் அவரைக் காண ஓடியிருக்கிறேன்! நாட்டு விடுதலை இயக்கத்தின் பிதா அவர். அவருக்கு நான் என் ஆழ்ந்த அஞ்சலியைத்செலுத்துகிறேன். நேரு பண்டிதர், உருக்கமாகத் திலகர் திருநாளில் இது போலப் பேசினார் இலண்டனில். திலகரின் திருஉருவப் படத்தை அங்கு திறந்துவைத்து உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கூடிய அவையிலே திலகரின் பெருமையை எடுத்துக் கூறினார். நேரு பண்டிதருக்கு இன்று கிடைத்துள்ள செல்வாக்கு சாமான்யமானதல்ல. அவருடைய பெயர் அறியாத பெருநகர் இல்லை! அவர் நேசம் விரும்பாத நாடு இல்லை! புகழேணியின் உச்சியில் வீற்றியிருக்கிறார். அடுத்த படிக்கட்டிலே இவர், அதற்கு அடுத்ததில், இன்னவர், என்று கூடச் சுட்டிக்காட்ட முடியாதபடி, தனியானதோர் பீடத்தில் அமர்ந்து கொலுவிருக்கிறார். அப்படிப்பட்டவர், திலகர் திருநாளில், அஞ்சசெலுத்துகிற ôர் என்றால், திலகர் பிறந்த திருநாட்டவர் எத்துணைப் பெருமையும் பூரிப்பும் கொள்வர். மராட்டியம் முழுவதும், எமது நாட்டுப் பெரியவரை, நானிலம் புகழும் நேரு பண்டிதர், இத்துணை பக்தியுடன் பெருமைப்படுத்திப் பேசியது கேட்டு எமது உள்ளமெலாம் உவகை பொங்கி எழுகிறது என்றுதானே பேசுவர், மகிழ்வர்! மகிழ்ச்சி அடையாமலில்லை, மராட்டியர் - ஆனால், அந்த மகிழ்ச்சியால் மயங்கி, பம்பாய் பறிபோகட்டும் என்று இருந்துவிடவில்லை. "பம்பாய் மராட்டியருக்குக் கிடைத்தாக வேண்டும் - அதனைத் தர மறுக்கும் நேருவை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்று இடிமுழக்கம் செய்கிறார்கள். நேரு - நம்மவரய்யா, நல்லவரய்யா, - என்கிறார்கள். பம்பாய் எமது நகரம் - என்றுதான் மராட்டியர் முழக்க மிடுகிறார்கள். நேரு - திலகர் பெருமானிடம் எவ்வளவு பக்தி விசுவாசம் காட்டி இலண்டனில் பேசினார் தெரியுமா என்று கேட்டுப் பாசவலை விரிக்கிறார்கள். பார்த்தோம் - படித்தோம் - மகிழ்ந்தோம் - நன்றி கூறுகிறோம் - ஆனால் பம்பாய் எமக்குக் கிடைத்தாக வேண்டும் என்றுதான் மராட்டியம் கூறுகிறது. அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்!- என்று அரசியலில் பதிகம் பாடவில்லை. நமக்குப் பாடம் புகட்டத்தக்கதாக அமைந்திருப்பது மராட்டிய மக்களின் போக்குமட்டுமல்ல. திலகரின் பேரனுக்கு இல்லக்கிழத்தியாகியுள்ள அம்மையுமன்றோ, அரும்பாடம் புகட்டுகிறார். திலகரின் திருநாமம் வாழ்த்திவிட்டு, அவர் திருஉருவப் படத்தை இலண்டன் மாநகரில் திறந்து வைத்து விட்டு, இந்தச் செயல்கண்டு, சிந்தையில் மகிழ்வுகொண்டு, மன்னா வருக, மாவீரா வருக, அண்ணலே வருக! எமதருமைத் திலகரைப் போற்றிய ஏந்தலே வருக! என்றெல்லாம் குதூகலித்து அர்ச்சித்து குறைமறந்து, குளிர் முகம் காட்டி, கரும்பு மொழி பேசிடுவர் மராட்டிய மக்கள் - பம்பாய் குறித்து எழுந்த குமுறலும் கொந்தளிப்பும் இருந்த இடம் தெரியாது போயிருக்கும், பவனியும் பாராட்டும் மெத்தவும் சிறப்புற இருக்கும், பாசம் காட்டுவர், நேசம் கோருவர் என்றெல்லாம் நேரு பண்டிதர் மனப்பால் குடித்திருக்க வேண்டும் - பூனா கிளம்புகையில். எத்தனை எத்தனை தலைநகர்கள் வாழ்த்தி வரவேற்றன என்பது நித்த நித்தம் பத்தி பத்தியாக இதழ்களிலே, வெளி வந்ததே பார்த்திருப்பரே மராட்டியர்; இலண்டனும் பாரிசும், கெய்ரோவும், பிரியோனியும், டமாஸ்கசும் ஏதன்சும், அயரும் பிறவும் அளித்திட்ட உபசார வைபவமும், படமாகிப் பளிச்சிட்டனவே! பாராதிருந்திருப்பரோ மராட்டியர்; இத்துணை விழாக் கண்டவர் வருகிறார், அதிலும் திலகர் பெருமானுக்குத் தண்டனிட்டுவிட்டு வருகிறார்; எனவே, பம்பாய் கிடைத்தாலென்ன பறிபோனால்தானென்ன, பார் புகழும் பண்டிதரை நாமும் பாராட்டி வரவேற்போம் என்று மராட்டியர் புதுக்கோலம் கொள்வர், பாசவலையில் வீழ்வர் என்றெண்ணியபடிதான், புருவத்தை நெறித்திடாமல் புன்னகையை இழந்திடாமல், நேரு பண்டிதர் பூனா வந்தார். அதே நாளில், தம்பி, பாசவலையில் வீழ்ந்து எமது உரிமையை இழந்திடவில்லை என்று அவரும் அகிலமும் உணரத்தக்க வகையில், திலகரின் பேரனுக்கு மனைவியாக வாய்த்துள்ள வனிதாமணி, பம்பாய் மராட்டியருக்கே என்பதற்காக நடந்துவரும் அறப்போரில் ஈடுபட்டு, சத்யாக்கிரகப் படையொன்றினுக்குத் தலைமை வகித்து நடாத்திச் சென்று, கைதாகியிருக்கிறார். அறப்போர் தலைமைக்குத் திலகரின் குடும்பத்தில் ஓர் திருவிளக்கு! அறப்போர் நடந்த இடம், நெஞ்சை அள்ளுவதாக அமைந்திருக்கிறது, திலகர் சிலைக்கு முன்புறம். நேருவின் தீர்ப்பு நேர்மையானதல்ல. மராட்டியரின் உரிமையை அழித்திட முனைந்துள்ள நேரு பண்டிதர், மாவீரர் என்று போற்றப்படலாம்; மாநில முழுதும் அவர் நடந்து செல்லும் பாதையில் மலர் தூவி வரவேற்கப்படலாம்; எனினும், எமக்கு அவர் இழைத்துள்ள மாபெருந் துரோகத்தை நாங்கள் மறவோம், பணியமாட்டோம் என்று கூறி அறப்போர் நடத்துகிறார் திலகர் திருமனையின் திருவாட்டியார். அவர் அஞ்சாநெஞ்சுடன் நடாத்தும் அறப்போர் நடைபெறும் இடத்திலே, வீரத்தின் சின்னமாய், விடுதலை வேட்கையின் பேருருவாய், தியாகத் திருஉருவாய் திலகர் சிலை நிற்கிறது. "திலகரின் உருவச்சிலைக்கு சமீபத்தில், திலகரின் பேரனின் மனைவி இந்து திலகரின் தலைமையில் ஒரு ஸ்திரீ கோஷ்டி சத்யாக்கிரகம் செய்தது. இதையடுத்து மேலும் இரு ஸ்திரீகள் கோஷ்டியும் பல ஆண்களும் சத்யாக்கிரகம் செய்தனர்.’’ (சு. மித்திரன்) பவனி நடத்தப்படுகிறது பண்டிதருக்கு; அதிகாரிகள் அச்சம் வெளியே தெரியாதவண்ணம் பாவனைகாட்ட மெத்தச் சிரமப்பட்டிருக்க வேண்டும்; ஏனெனில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடியபோது கலாம் விளைந்தது தெரியுமல்லவா! பண்டிதரின் பவனி நடந்து கொண்டிருக்கும்போது, இந்து, பம்பாய் மராட்டியருக்கே, என்று முழக்கமிடுகிறார்! பண்டித நேருவுக்கு ஜே! என்று அல்ல! கிளர்ச்சியை ஒடுக்க, சர்க்கார் உங்களைக் கைது செய்யக் கூடும் - தடியால் தாக்கக்கூடும் - அப்போதும் நீங்கள் காமராஜர் ஆட்சி ஒழிக, என்று கூவக்கூடாது. அப்படிப்பட்ட நேரத்தில் ஏதாவது கூவத் தோன்றினால், ஆச்சாரியார் ஒழிக என்று வேண்டுமானால் முழக்கமிடுங்கள், ஆனால் மறந்தும் காமராஜர் ஆட்சி ஒழிக என்று கூவிடாதீர்கள் - காமராஜர் நம்மவர்; ஆகவே நல்லவர்! என்று இங்கு போதிக்கப்படுகிறது. அங்கு பூனாவில், பாசவலையில் வீழ்ந்து கொள்கையை இழந்துவிடமாட்டோம், பம்பாய் மராட்டியருக்கே என்று முழக்கமிட, அறப்போர் நடாத்த, சிறைப்பட, இந்து இருக்கிறார்! அன்றுமட்டும், பூனா நகரில் மட்டும் 678-தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்! அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன் என்று கொள்ள தேஷ்முக் காட்கில் போன்றாரின் மனம் மட்டுமல்ல, மராட்டியப் பாமரனின் மனமே ஒப்பவில்லை. இந்திதான் தேசிய மொழியாகத் தீரும் - இதைத் தவிர்த்திட, தடுத்திட முடியாது - கூடாது; இதற்குத் தயாராகி விடுங்கள் - தகராறு வேண்டாம். இதோ பாருங்கள், நாணயங்களிலேயே இந்தி பொறித்தாகிவிட்டது - என்று சிண்டுபிடித்திழுத்துக் குட்டுகிறது, டில்லி. இராமர் பட எரிப்பும், இந்தி திணிப்பு தடுப்பு முறைக் கிளர்ச்சிதான் என்பதைப் பெரியார் கூறுகிறார். பெரியாரின் பேராதரவினை எந்த நிலைமையிலும் பெற்றிடும் வாய்ப்பினைப் பெற்றுள்ள காமராஜர், இந்தப் பிரச்சினை குறித்து என்ன கருதுகிறார்? காமராஜர் நம்மவர், அவருக்கும் இந்த இந்திச் சனியன் பிடிக்காது; எதிர்க்கிறார் என்று கூறி, "பாசம்’ கொள்ளத்தக்க விதத்திலா? இல்லை தம்பி, இல்லை. பொறுக்கு மணிகளை உதிர்க்கிறார்! இதிலென்ன வாதம், சமாதானம், இதுதான் தேசியத் திட்டம் என்று சுடச்சுடப் பேசுகிறார். இருந்தாலும், அவர் நம்மவர்; ஆகவே நல்லவர் என்று பாசவலையில் வீழ்ந்தோர் பேசுவது கேட்கிறோம். இந்தி ஒழிக, இந்தியைப் புகுத்தும் டில்லி அடியோடு ஒழிக! என்று பொறிபறக்க முழுக்கமிட்டுவிட்டு, கனிவுடன் குழைந்த குரலிலாவது. இந்திக்கு உடந்தையாக இருக்கும் காமராஜர் திருந்துக என்றாவது கூறக்கூடாதா, என்று இந்தப் பாழும் மனம் கேட்கிறது. கப்சிப் - காமராஜருக்குச் சங்கடம் உண்டாக்கக் கூடாது, என்று கட்டளை பிறந்துவிடுகிறது. இந்தி ஒழிப்புக்காக நாம் நமது கடமையைச் செய்வோம். இந்தி திணிப்புக்காக நமது காமராஜர் அவருடைய கடமையைச் செய்கிறார். நமது முயற்சி அவருடைய நடவடிக்கையால் முறிந்து விடுகிறது என்பதாலே, நீங்கள் அவர்மீது கோபப்படாதீர்கள்; அவர் நம்மவர்; ஆகவே நல்லவர்! - என்று வாதாடப்படுகிறது. இந்தி ஒழியத்தான் வேண்டும். இந்தியப் பேரரசு முறை ஒழிந்தாக வேண்டும். ஆனால், இந்தி திணிப்புக்கும், இந்தியப் பேரரசு முறைக்கும் பக்கபலமாக இருக்கும் காமராஜர் ஆட்சிமீது மட்டும் "தும்பு தூசு’ விழப்படாது! என்கிறார்களே, தம்பி, இந்தப் போக்கை என்னாலே புரிந்துகொள்ளவே முடியவில்லை! உனக்குப் புரிகிறதா? ஏன்? என்ற கேட்டாலோ, ராஜரத்தினம் அப்பாதுரை சுந்தரவடிவேலு என்று ஏதேதோ பெயர்களைக் காட்டி, இவர்கட்கெல்லாம் உத்தியோக உயர்வு தந்த உத்தமரையா எதிர்ப்பது? ஒரு துளி நன்றி காட்டும் போக்குமா தமிழா! தோழா! திராவிடா! உனக்கு இல்லாமற் போய்விட்டது? என்று இடித்திடித்துக் கேட்கிறார்கள். இந்தப் பெரியவர்கள் ஏதோ இப்போது இவர்கள் வகிக்கும் வேலைகளுக்கு அருகதையே அற்றவர்கள் போலவும், ஆறேழு மந்திரி சபைகளின் போதெல்லாம் தவங்கிடந்து வரம் கிடைக்காமல் இவர்கள் தவியாய்த் தவித்தது போலவும், காமராஜர் இவர்களை எங்கோ கிடக்கிறார்களே பாவம் என்று இன்முகம் காட்டி, தூக்கி உயர உட்காரவைத்தது போலவும் பேசுவது, இவர்களை மரியாதையாக நடத்தப்படுதாகவே எனக்குத் தோன்றவில்லை. இவர்களுக்கெல்லாம் உத்யோகம் கொடுத்தார், கொடுத்தார் என்று பேசப் பேசப், பொது மக்கள் இவர்கள் இந்த உத்யோகங்களுக்கே தகுதி இல்லைபோலும் காமராஜர் தயவினாலே மட்டுமே இவர்கள் இவ்வளவு பெரிய உத்தியோகம் பெற்றார்கள்போலும் என்றெண்ணிக் கொள்ளக்கூட இடமளிக்கிறது. நான், உள்ளபடி அவர்கள்பால் சிறிது பச்சாதாபப்படுகிறேன். அவர்களுடைய “பெயர்’ காரணமற்ற முறையில், அடிக்கடி அடிபடுகிறது - ஒரு”அரசியல் கூட்டு’ விளக்கத்துக்காகவே இவர்களின் பெயர் பயன்படுத்தப்படுகிறது. காமராஜர் செய்த இந்தக் காரியத்துக்காகவே அவருடைய, வடநாட்டு ஆதிக்கத்துக்கு உடந்தையாக இருப்பது இந்தி திணிப்புக்கு வழி செய்து கொடுப்பது தமிழ் உரிமையைக் குலைப்பவருக்கு துணை நிற்பது போன்ற போக்கை மறந்து, அவருடைய புகழ் பாடிட, மனம் இடம் தரவில்லை. பெம்மானின் பெருமை கேளாய் என்று பதிகம் பாடுகிறார்கள்; நான் என்ன செய்வது. தம்பி, மராட்டியருக்கு நேரு பண்டிதரின் சீரிய குணம் சிறந்த பண்பு, நாட்டுக்கு அவராற்றிய தொண்டு, நானிலத்தில் அவருக்கு வளர்ந்து வரும் புகழ், இவை தெரியாமலில்லை, - எனினும், பம்பாய் மராட்டியருக்கு என்று அவர்கள் கூறாமலில்லை. தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு என்றுகூட நாம் முழக்கமிட முடியவில்லை - குளமாவது மேடாவது என்கிறார் குணவான். அவருடைய ஆட்சியை எதிர்க்க "இந்தப் பசங்கள்’ கூப்பாடு போடுகிறார்கள் - தள்ளுங்கள் குப்பையிலே -தங்கமானவர் காமராஜர் - என்று பாசம் பேசப்படுகிறது. உரிமையை இழக்கமாட்டோம்! மாபெருந் தலைவரே! எமது மண்டலம் வருகிறீர், இந்தச் சமயம் எமது மனப் போக்கை அறிந்துகொள்ளும்! பம்பாய் மராட்டியருக்கு என்பது எமது உரிமை முழக்கம்! இதை மறுக்கிறீர், உமது பேச்சை ஏற்க மறுக்கிறோம்! உமக்கு அளிக்கப்பட இருக்கும் வரவேற்பில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை. மராட்டியர் தொடுத்துள்ள அறப்போரில், நாங்கள் பணியாற்றுவது என்று சூளுரைக்கிறோம், அறிக! என்று பூனா பல்கலைக்கழக மாணவர்கள், நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, முடங்கல் விடுத்தனர். நேரு பண்டிதர் பேச வருகிறார், மராட்டிய மக்களே நெருப்பென்று கருதுங்கள் அந்தக் கூட்டத்தை, அங்கு செல்லாதீர், கூடுவோம் வேறோர் இடத்தில், உரிமை முழக்கமிடுவோம், வாரீர் - என்று அழைப்பு விடுத்தனர், மராட்டிய விடுதலைக் கிளர்ச்சிக் குழுவினர். சாந்தம் சீலம் போதிப்பவர், சமர் தவிர்ப்பவர், சமரசத் தூதுவர் என்று நாடு பல கொண்டாடும் நேரு வருகிறார், மராட்டியத்திலே ஒருபுறம் மாணவர்கள் மடலனுப்பி உரிமை முழக்கமிடுகிறார்கள், மாதர் படை திரண்டெழுந்து சிறைக் கோட்டம் செல்கிறது, மக்களின் அணிவகுப்பு, வேறோர் பக்கம் காணப்படுகிறது. நேரு பண்டிதரால், மராட்டியர் மீது பாசவலை வீச முடியவில்லை பாசவலையில் வீழ்ந்திட மராட்டியம் மறுக்கிறது. எப்படிப்பட்ட மராட்டியம் தெரியுமா, தம்பி! நேருவை, பொன்னார் மேனியேனே! புவியாளப் பிறந்தவனே! மன்னா, மாணிக்கமே! மலர்தூவித் தொழுதிடுவோம் - என்று அன்பு பொழிந்து வரவேற்ற மராட்டியம்தான்! எனினும், தங்கள் உரிமை மதிக்கப்படவில்லை என்று அறிந்ததும், அவர்கள் உள்ளம் குமுறுகிறது; பாசவலையை அறுத்தெறிந்துவிட்டு, போர்க் கோலம் பூண்டெழுகிறார்கள். அடித்தாலும் அணைத்தாலும், அவரன்றோ நமது ஐயன் என்று பாடி, மக்களின் உரிமை பறிபோகும் பாழ் நிலையை உண்டாக்காமலிருக்கும், அந்த உத்தமர்களை நெஞ்சில் நிறுத்தி, பாசம் குறுக்கிட்டாலும், நாம் நமது கொள்கை வெற்றிக்கான பாதையை இழந்துவிடாதிருக்கும் பயிற்சியில் வெற்றி பெற்றாக வேண்டும். உன்னாலே அது முடியும் என்று உறுதியாக நான் நம்புவதனால்தான், யார் எவ்வழி சென்றாலும், நாம் கொள்கை வழி சென்றாக வேண்டும் என்பதிலே ஆர்வம் பெறுகிறேன். அன்பன், காஞ்சிபுரம் 5-8-1956 இலவுகாத்த கிளி! அமைச்சர் ந.ந. இராமசாமி - வன்னியர் குலம் - ஜாதி முறை - புதுச்சேரி பொம்மைகள் தம்பி! மருத்துவர்களிலே பலவகை உண்டல்லவா - நோயின் மூலம் கண்டறியாமல், மருந்து கொடுத்துவிடுபவர்கள் - மருந்து பலனளிக்காமற்போனால், அதனை உண்டவன் பத்தியம் தவறிவிட்டான் என்று பழிபோடுபவர்கள் - மருந்து அபூர்வமானதுதான், ஆயிரம்போர் இதிலே குணம் கண்டனர், ஆனால், உன் "கிரஹம்’ சரியாக இல்லை, அதனாலே பலன் ஏற்படவில்லை என்று கூறி கையை விரிப்பவர்கள்; இப்படிப் பல வகையினர் உண்டல்லவா! ஆனால், எந்த மருத்துவரும், தன் மருந்துண்டவனுக்கு நோய் தீராதது தெரிந்தும், அதனை மறைத்துவிட்டு, தன் மருந்து அபூர்வமானது, கைகண்டது, உண்டோரனைவரும் பலன் கண்டனர் என்று கூறிக்கொண்டி ருக்கமாட்டார். ஆனால், ஒரு மருத்துவர் தன் மருந்துதான் கைகண்டது, அதனையேதான் அனைவரும் உட்கொள்ள வேண்டும் என்று அங்காடியில் நின்று கூவுகிறார்; அவருடைய மருந்தை உட்கொண்டவரோ மனையில் இருந்து கொண்டு, ஐயோ! மார்வலி தாளமுடியவில்லையே! மயக்கம் வேறு மேலிடுகிறதே! குலையில் ஏதோ குத்துவதுபோலிருக்கிறதே! – என்று கதறுகிறார். மருத்துவர் அளித்த மருந்து, நோயைத் தீர்க்கவில்லை என்பதைக் கூறிக் குமுறுவதுடன், மருத்துவர் தந்தது மருந்தே அல்ல, அவரை மருத்துவராகக் கொண்டதே பெருந்தவறு, தீங்கிழைத்துவிட்டது என்று கூறிக் கைபிசைந்து கொள்கிறார்; அட பாவமே! மிகமிக நம்பிக்கையுடன், மருந்து உட்கொண் டாயே, பலனே இல்லையா? என்று பச்சாதாபத்துடன் கேட்பவரிடம், "ஆமய்யா ஆம்! நம்பினேன், ஏமாற்றம் கண்டேன்; மருத்துவர் கேட்ட தொகையை முகங்கோணாமற் கொடுத்தேன், ஆனால் நோய் போகவில்லை, நொந்துகிடக்கிறேன், மனம் வெந்துகிடக்கிறது’ என்று கூறுகிறார். அதேபோது, வேறோர் புறத்திலே மருந்தளித்த மருத்துவர் மார்தட்டுகிறார், மன்றத்தில் கூறுகிறார். நல்ல மருந்து நலிவு தீர்க்கும் மருந்து நான் கண்ட மாமருந்து நமது பிணி எலாம் ஒழித்திடும் ஒரே மருந்து! என்று புகழ்ப்பண்ணே பாடுகிறார். மருந்து பலனளிக்கவில்லை என்பதைக் கூறிக் குமுறும் நோயாளியின் குரலில், வேதனை ததும்புகிறது! நான் கண்டறிந்த மருந்து கைகண்டது என்று பெருமை பேசும் மருத்துவரின் குரலிலேயோ, பெருமிதம் பொங்குகிறது! எங்கு நடைபெறுகிறது இத்தகைய நிகழ்ச்சி என்று கேட்கிறாயா தம்பி! எங்கு நடைபெறும்? எதையும் எளிதாக நம்பிடும் நல்லவர்கள் ஏராளமாக உள்ள தமிழகத்தில் தவிர! அண்ணா! உனக்கு ஏதோ உடல் நலமில்லையாமே, அதனாலே உள்ளம் உறுத்தி, மருத்துவ முறைகள் குறித்து எழுதத் தலைப்பட்டனையோ என்று கேட்கத் தோன்றும். தம்பி, நான் குறிப்பிடுவது உடற்கூறு பற்றிய மருத்துவம் அல்ல; சமூகத்திலே நெளியும் நோய் நீக்குவதற்கான மருத்துவர்கள் பற்றிக் குறிப்பிடுகிறேன்; அதிலே ஏற்பட்டுள்ள வேதனை தரும் நிலைமையை விளக்க, எடுத்துக்காட்டாக, மருத்துவர் கதை சொன்னேன். இனி, நோயாளி கதறுவதைக் கேள், தம்பி! அன்றைக்குச் சுமை தாங்கிய வன்னியன் இன்றைக்கும் சுமைதாங்கிதான். அன்று கழனியிலே கஷ்டப்பட்ட வன்னியன் இன்று அதிகமாகக் கஷ்டப்படுகிறான். அன்று குமாஸ்தாவாக இருந்த வன்னியன் இன்றும் குமாஸ்தாவாகவே காட்சியளிக்கிறான். குலையில் குத்தல் - கண்களில் எரிச்சல் - மண்டையில் குடைச்சல் - என்று நோயாளி கூறித் தவிப்பதுபோலில்லையா, இந்தப் பேச்சு. மருந்து உட்கொள்ளுவதற்கு முன்பு இருந்ததைவிட, நோய், அதிக வேதனை தருவதாகிவிட்டது என்றல்லவா நோயாளி கூறுவது கேட்கிறது. நோயாளி யார்? வன்னிய சமூகம்! மருந்து என்ன? இரண்டு அமைச்சர்களைப் பெற்றது. மருந்து சாப்பிட்ட பலன் என்ன? நோய் அதிகமாகி விட்டது என்று அவதிக்கு ஆளான வன்னியத் தோழர் கூறுகிறார். வன்னிய சமூகத்தின் உரிமை இதழாகத் திகழ்ந்துவரும் "உழைப்பாளி’யில், வன்னியன் அன்றுபட்ட அவதி இன்று குறையக் காணோம் என்று வன்னிய குலத்தவர் ஒருவரே மனம் நொந்து எழுதுகிறார். மருத்துவரோ, கூசாமல், குன்றாமல், அச்சம் காட்டாமல், பச்சாதாபப்படாமல், மறுப்பார்களோ, கேள்வி கேட்பார்களோ என்று கவலைப்படாமல், தமது மருந்தினைக் கூவிக் கூவி விற்கிறார். "வரப்போகும் பொதுத் தேர்தலில் மக்கள் ஒன்று பட்டு, காங்கிரஸ் வெற்றிபெறப் பாடுபடவேண்டும். அதன் மூலம் பிற்பட்ட மக்கள் பல நன்மைகளை அடையமுடியும். இதர கட்சிகளின் பிரசாரங்களுக்குச் செவி சாய்க்கக் கூடாது!’’ அமைச்சர் S.S. இராமசாமிப் படையாச்சியாரின் பேச்சு, தெற்கே, அவர் வரவேற்கப்பட்ட ஓரிடத்தில் திருவாய் மலர்ந்தருளியது! காங்கிரஸ்தான், பிற்பட்ட மக்களின் பிணிபோக்கும் மாமருந்து என்று, அம்மருந்தினை வன்னிய மக்கள் உட்கொள்ளச் செய்த அரசியல் மருத்துவர், கூறுகிறார், தம்பி! மருத்துவர் இப்படிப் பேசுகிறார், நோயாளி மனம் நொந்து பேசியதை (முழுவதும் அல்ல) நான் முதலிலே, எடுத்துக் காட்டினேன். மருத்துவர்களிலே, இப்படிப்பட்ட மனதிடமும், உண்மையை மறைத்திடும் திறமும், அநேகருக்கு ஏற்பட முடியாது! புடம்போட்டதில் தவறோ, அரைவையில் பதம் இல்லையோ, காய்ச்சியதிலே தரம் குறைந்ததோ, ஒரு குண்டு மணி “வீரம்’ அதிகமோ, பூரம் போதுமான அளவு சேர்க்கவில்லையோ என்று தமது மருந்து முறையிலே ஏற்பட்டுவிட்ட குறை ஏதேனும் இருக்கக்கூடும் என்றுதான் எந்த மருத்துவரும் எண்ணுவாரே தவிர, சுமைதாங்கி சுமைதாங்கி யாகவே இருந்து கஷ்டத்தைச் சுமக்கிறோமே! என்று வேதனையுடன், வன்னியர் நிலை குறித்து, வன்னியரின் உரிமைக்காகப் பாடுபடும்,”உழைப்பாளி’யில் ஒரு வன்னியர் எழுதி, உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியும், அதனை மறைத்து விட்டு, அல்லது அலட்சியப்படுத்திவிட்டு, வன்னியர் போன்ற பிற்பட்ட வகுப்பாருக்குள்ள பிணிபோக்கும் மாமருந்து காங்கிரஸ் ஒன்றுதான் என்று அரசியலில் மருத்துவராக உள்ள இராமசாமி மந்திரியார் கூறுவதுபோல, எந்த மருத்துவரும் கூறத் துணிய மாட்டார்கள்! மாணிக்கவேலரும் இராமசாமிப் படையாச்சியாரும் மந்திரிகள்!! தம்பி! இவர்கள், மந்திரிகளாக மட்டுமல்ல, மந்திரி சபைகளை அமைக்கும் உரிமையும் வலிமையும் பெறவேண்டு மென்பதிலே, நான் மிகுந்த அக்கறை கொண்டவன்; ஆனால் எந்த நோக்கத்துக்காக இவர்களை, வன்னிய சமூகம், தலைவர்களாகக் கொண்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றி வைப்பதற்கான, முழு அதிகாரமும் வசதியும் பெற்ற நிலையில், மந்திரிகளாகத் திகழவேண்டும் என்று ஆசைப்பட்டவன். எனக்கு, மாணிக்கவேலரிடம் தொடர்பு அதிகம் ஏற்பட்ட தில்லை; ஆனால் S.S. இராமசாமி அவர்களிடம், தோழமை அளவுக்குச் செல்லக்கூடும் என்று நான் ஆசைகொள்ளும் தன்மையில், எனக்குத் தொடர்பு இருந்தது. அவர், தமக்குக் கிடைத்த வலிவையும் வாய்ப்பையும், வகுப்பு மூலம் கிடைத்த ஆதரவையும் அடிப்படையாகக் கொண்டு நாட்டிலே, பதவிப்பாசம் விட்டுப்பணியாற்றி, பிற்பட்ட வகுப்பினரின் நம்பிக்கைக்கும் பிரியத்துக்கும் உரிய பெருந்தலைவ ராக உருவெடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையும், ஆவலும் கொண்டிருந்தேன்; ஆனால் ஆசையுடன் காய் கனியட்டும் என்று நாம் இருக்கும் நேரத்தில், அணில் கொத்தித்தின்று விடுவதுபோல, பிற்பட்ட வகுப்பினரின் பெருந்தலைவராக வளர்ந்திருக்கவேண்டியவர், மந்திரியானார்; அந்தப் பதவியில் சிக்கிக்கொண்டதும், வகுப்புக்குக் கட்டுபடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமற் போனதுடன், வன்னிய சமூகப் பாதுகாப்புக்கும் உரிமைக்கும் அமைத்த உழைப்பாளிக் கட்சியை, அவரே, கூசாமல் குமுறாமல், வெட்டிப் புதைத்துவிட்டார்! அவர் பேசுகிறார், பிற்பட்ட மக்களுக்குப் பிணிபோக்கும் மாமருந்து, காங்கிரஸ் ஒன்றுதான் என்று! அவரால் ஊட்டப்பட்ட மருந்து, நோயைத் தீர்க்கவில்லை, என்பதை நொந்த உள்ளத்துடன் "உழைப்பாளி’ எடுத்துக் காட்டுகிறது. வன்னியர் இருவர் அமைச்சர்களாகி விட்டனரே என்று பொறாமை கொண்ட, பிற வகுப்பு ஏட்டிலே, யாரோ வழிப் போக்கன் எழுதுவதல்ல; இந்த இருவர் அமைச்சர் கோலம் பூண்டது கண்டு குதூகலம் கொண்ட வன்னிய சமூகத்தின் ஏட்டில், ஒரு வன்னியர் எழுதுவது என்பதை, ஏனோதானோ என்ற போக்கினருக்கும், இவர்கள் இப்படித்தான் இல்லாததும் பொல்லாததும் பேசுவர் என்று நமது கழகம்பற்றி அலட்சியம் காட்டுவோருக்கும் எடுத்துக் கூறு, தம்பி! முன்பு இருமி ஈளைகட்டிக் கிடந்தது, என் மருந்து உட்கொண்ட பிறகு, வாலிப முறுக்கு வந்துவிட்டது. உருகிக் கருகி இருந்தவன், இன்று என் மருந்தின் பலனால், இரும்பையொத்த வலிவும், பொன்னையொத்த பொலிவும் பெற்றுத் திகழ்கிறான். எடுத்தடி வைத்தால் மேல் மூச்சு வாங்கும் நிலையில் இருந்தவன், நான் தந்த மாமருந்தை உட்கொண்டதால், புலியை வேட்டையாடிக் கொல்லும் வீரம் பெற்று விளங்குகிறான், என்றெல்லாம், விவரம், விளக்கம் அளித்துவிட்டு, மருத்துவர் தம்மிடம் உள்ள மருந்து அபூர்வமான சக்தி வாய்ந்தது என்று சொன்னாலாவது, பரவாயில்லை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலை, நான் அமைச்சராவதற்கு முன்பு, இத்துணை அலங் கோலமாக இருந்தது - நான் பதவியில் அமர்ந்த பிறகு, இந்த அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது என்று எடுத்துக்காட்ட முடிந்ததா? முடியுமா? பிற்படுத்தப்பட்ட மக்கள் நான் அமைச்சராவதற்கு முன்பு கல்வித்துறையிலே, இத்துணை மோசமான நிலையில் இருந்தனர், நான் அமைச்சரான பிறகு, அவர்களின் நிலைமை இந்த அளவுக்கு உயர்ந்துவிட்டது! என்று காட்டினாரா? காட்டவில்லை! காட்டுவதற்கு ஒன்றும் இல்லை! பிற்பட்ட மக்களுக்குச் சமூகத்தில தரப்பட்டுள்ள இடம், அநீதி நிரம்பியதாக இருந்தது, நான் அமைச்சராகா முன்பு; இப்போது அவர்களின் நிலைமை உயர்ந்திருக்கிறது என்று கூற முடிகிறதா? அதுவுமில்லை! ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் காங்கிரஸ்தான் இரட்சகன் என்பதற்கு, அவர் காட்டும் ஆதாரம் என்ன? வேறென்ன ஆதாரம் காட்டவேண்டும், என்னைப் பாருங்கள்! என்றுதான் அவரால் கூற முடியும்! ஆனால், பிற்பட்ட வகுப்பினரின் பிரச்சினைக்குப் பரிகாரம் காணவும், அவர்களை முன்னேறச் செய்யவும் அதிகாரமோ, சட்டபூர்வமான வாய்ப்போ பெறாமல், அமைச்சராகமட்டும் இருப்பதனால், பிற்பட்ட வகுப்பு மக்களுக்கு, என்ன பலன்? என்று கேட்டால் என்ன பதிலளிப்பார்? ஆனால் யார் கேட்பார்கள்? கேட்பவர்களை, தேசத் துரோகி - காங்கிரஸ் விரோதி - என்று கூறினால், வாயடைத்துப் போகிறார்கள்; அதற்கா நமக்கு வழி தெரியாது! என்றெண்ணி மகிழ்கிறார்கள், இந்தத் தலைவர்கள். ஆனால், அமைச்சர்கள் இருவர் நம் வகுப்பினர் என்பதிலே இயற்கையாக எழக்கூடிய, எழவேண்டிய மகிழ்ச்சியால், அந்த வகுப்பு இளைஞர்கள் அனைவரும், மயங்கிக் கிடந்துவிட வில்லை; உண்மை அவர்கள் உள்ளத்தை உறுத்தத்தான் செய்கிறது; ஓரோர் சமயம், அவர்களால் தம் மனக்குமுறலை வெளியே கொட்டிக் காட்டாமலுமிருக்க முடியவில்லை. அதனாலேதான், "நாம் அன்று எந்த இலட்சியத்துக்காக பொதுக்கூட்டங்கள் போட்டு, ஊர்வலங்கள் நடத்தி, மாநாடுகள் கூட்டி, முரசு முழங்கினோமோ, அந்தக் கோரிக்கைகள் இன்று வரை கண்டோமில்லை’’ என்று, 1-7-56-ல் "உழைப்பாளி’ எழுதுகிறது. “வன்னியர் முன்னேற்றத்திற்காகத்தான் மந்திரிப்பதவி வகித்து வருகிறேன் என்று மார்நிமிர்ந்து கூறும் நம் இன மந்திரியைக் கேட்கிறோம், நீங்கள் பதவியேற்று ஆண்டுகள் சில உருண்டோடியதே இதுவரை சாதித்தது என்ன?’’ என்று”உழைப்பாளி’ உரிமையுடன் இடித்துக் கேட்கிறது. கைகண்ட மருந்து என்று வேறோரிடத்தில், அங்காடியில் கூவிக் கூவி விற்கிறார் அமைச்சர். ஊர்சுற்றிவருவதில் பயனொன்றும் இல்லை என்றும், இம்மாதிரி சூழ்நிலையை வளரவிடுவது நம் சமூகத்திற்கே ஆபத்து, என்றும் “இலவு காத்த கிளிபோல்’ ஆகிவிட்டோம் என்றும், கோபம், சோகம், திகைப்பு, கண்டனம் எனும் எல்லாவற்றையும் கொட்டிக்காட்டுகிறது,”உழைப்பாளி’! தம்பி! அரசியலில் இப்படிப்பட்ட மருத்துவர்கள் இடம் பெற்றுவிட்டதால், பிணி குறையாததுடன், பிணி போக்கிக் கொள்ளும் முறையையும் மறந்துபோய், உழைப்பாளிகள் நோயாளிகளாகி நொந்துகிடக்க நேரிட்டுவிடுகிறது. நோய் தீர்க்கும் மருத்துவன் யார்? பிணிபோக்கும் மாமருந்து யாது? என்பதைக் கண்டறிந்து பலன் காணுமுன்பு, நோய் என்ன? ஏன் ஏற்பட்டது? என்பதல்லவா தெரிய வேண்டும். ஏழ்மை, அறியாமை என்பவைகள், சமூகம் முழுவதிலும் கப்பிக்கொண்டிருக்கும் பிணி. உழைப்பின பலன் உலுத்தருக்குப் போய்ச் சேரும் விதமாக அமைந்துவிட்டிருக்கும் அக்ரமத் திட்டம்; மனதில் குருட்டறிவும் இருட்டு நிலையும் மூட்டப்பட்டுவிட்டதால் ஏற்பட்டுவிட்ட கேடு, ஏழ்மைக்கும் அறியாமைக்கும் காரணம். ஏழ்மை, அறியாமை எனும் பிணிபோக்கப்பட வேண்டும் என்று பொதுவாகப் பேசி, பொதுவான பரிகாரம் தேடாமல், பொதுவான மருத்துவ முறையை நாடாமல், பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்சினை என்று, தனியாகக் கோடிட்டுக் குறிப்பிடப்பட்டு வருகிறதே, அதன் உட்பொருள் என்ன? அதனை அறிந்துகொள்ள, தம்பி, பிற்பட்ட வகுப்புப் பிரச்சினையையே ஆராய வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற பேச்ச - ஐரோப்பிய நாடுகளிலே அதிகம் அடிபடுவதில்லை. மலை ஜாதி மக்கள் - நாடற்றவர்கள் - என்று சில சமயம் பேசப்படுவதுண்டு. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற பேச்சுக்கு அங்கெல்லாம் உள்ள சமூக அமைப்பு இடமளிப்ப தில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைமை அங்கெல்லாம் இல்லை. "இந்தியா’வில்தான், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று சமூகத்தில் ஒரு பிரிவு காணப்படுகிறது; இந்தப் பிரிவும் மிகப் பெரிது. தாழ்த்தப்பட்டோர், ஆதிவாசிகள், மலைஜாதியினர், நாடோடிக் கூட்டத்தார், என்போர்களைச் சேர்த்தல்ல பிற்படுத்தப்பட்ட வகுப்பார் என்று பேசுவது; இவர்களையும நீக்கிவிட்டுப் பார்த்திடும் போதே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொகை, மிகப் பெரிதாகக் காணப்படுகிறது. இதனைக் கவனிக்கும்போது, இங்குள்ள சமூக அமைப்பின் அவலட்சணம் விளக்கமாகத் தெரியும் - வேதனையும் பிறக்கும். சமூகத்தில் மிகப் பெரும் அளவு மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் என்றால், கல்வி, தொழில், சமூக அந்தஸ்து, பொருளாதாரம், அரசியலிலும் அலுவலகங்களிலும் இடம், எனும் இவைகளிலெல்லாம் பிற்படுத்தப்பட்டு, தாழ்நிலை தரப்பட்டு, கவனிப்பாரற்று, ஓரவஞ்சனையாக நடத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு உழல்பவர்கள் என்பது பொருள். உழைக்கவும் அதன் உறுபயனைப் பிறருக்குக் கொட்டி ஏமாறவும், உழைக்கவும் அதன் காரணமாகவே தாழ்நிலையில் தள்ளிவைக்கப்படவும், உழைக்கவும் அதனாலே, கல்வித் துறையில் முன்னேற உத்தியோகத் துறையிலே இடம்பெற, அரசியலில் அந்தஸ்து பெற இயலாமல், உழைத்துக் கிடப்பதற்காகவே படைக்கப்பட்டவர்கள் போன்றதோர் நிலை பெற்று நொந்து கிடப்பவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். உடலில் திடமுண்டு, உழைப்பில் தரம் உண்டு, உள்ளத்தில் திண்மை உண்டு, ஆனால் சமூக அமைப்பிலேயோ, இவர்களுக்கு, நாலாந்தர, ஐந்தாந்தர இடமும் தரப்படுவதில்லை. உழைப்பின் பலனாகக் கிடைக்கும் "விளைவுகள்’ அவ்வளவும், மேலும் மேலும் இவர்களைப் பிற்படுத்தப்பட்ட நிலைக்கு இறக்கிவிடத்தான் செய்கிறதே தவிர உழைத்தனர், உயர்ந்தனர் என்று பேசத்தக்க நீதியான நிலை ஏற்படச் சமூக அமைப்பு இடம் தரவில்லை. நல்ல உழைப்பாளி! - என்று பேசும்போது, பாராட்டு கிறார்கள் என்று பொருள் அல்ல, எஜமானர்கள் தம் ஊழியர்களின் "சேவை’ கண்டு மகிழ்கிறார்கள் - தட்டிக் கொடுக்கிறார்கள் என்றுதான் பொருள். இந்த வேதனையை, தலைமுறை தலைமுறையாக பல நூற்றாண்டுகளாக அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள், இன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படுபவர்கள். அவர்களிடம் உள்ள தொழில் திறமை - கைவண்ணம் - அவர்கட்கு, சமூகத்தில் உரிய இடத்தைப் பெற்றுத் தருவதில்லை, "ஜாதி முறை’ தான், அவர்களுக்கு இன்னதுதான் இடம் என்று நிர்ணயிக்கிறது. அரசிளங்குமரியின் அழகுக்கு அழகு தரும் அற்புதமான நவரத்ன மாலை செய்தளிக்கவல்ல தொழில் திறமை இருக்கலாம் - ஆனால் அந்தத் திறமையை அளவுகோலாகக் கொண்டோ, அந்தத் தொழிலால் சமூகம் பெறக்கூடிய பயனை அளவுகோலாகக் கொண்டோ, அந்தத் தொழிலில் ஈடுபட்டவனுக்கோ - அந்த வகுப்புக்கோ இடம் அளிக்கப் படுவதில்லை - அந்த வகுப்புக்கு உரிய இடம் இது என்று ஜாதி முறை குறிப்பிட்டு, சமூகச் சம்பிரதாயமும், அதற்கு அரணாக அமைந்த சட்டமும் எந்த இடத்தைத் தருகிறதோ, அதுதான், அந்த வகுப்பினருக்குக் கிடைக்கிறது. கடினமான உழைப்பினைத் தந்து, சமூகம் நிலைக்கவும், வளரவும், நேர்த்தி பெறவும் தேவைப்படுகிற தொழில்கள் செய்து 798 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி ஒன்று 799 வரும் உழைப்பாளர்கள், பிற்படுத்தப்பட்ட நிலைக்கு வைக்கப் பட்டு, இந்தச் சூதான திட்டத்தைக் கண்டறிந்ததிலும், நிலைநாட்டினதிலும், பாதுகாப்பதிலும் மட்டும் தலைமுறை தலைமுறையாகத் திறமையைக் காட்டி வந்தவர்கள், முற்போக்கு வகுப்பினராகவும் இருந்துவரும், மோசமானதோர் சமூக அமைப்பு இங்கு இருப்பதுபோல, வேறு எங்கும் இருந்திட அனுமதித்ததில்லை. ஆனால், இங்கு அத்தகைய அக்ரமமான, அநீதி நெளியும் அமைப்பு நீண்டகாலமாக இருந்து வருவதற்குக் காரணம், ஜாதி முறையில் ஆழ்ந்த நம்பிக்கை அனைவருக்கும் புகுத்தப் பட்டிருப்பதாகும். அந்த நம்பிக்கை ஆழப் பதிந்ததற்குக் காரணம், இந்த ஜாதி முறை என்பது, சுகபோகியாவதற்கு வழிகாண விரும்பிய சூதுக்காரன், எதற்கும் தலையாட்டும் போக்கினர் மீது சுமத்திய சூழ்ச்சித் திட்டம் என்ற தெளிவு, நெடுங்காலமாக ஏற்படாததாகும். ஜாதி முறை என்பது கடவுளின் ஏற்பாடு என்று மக்களிடம் பேசப்பட்டு, ஒப்புக்கொள்ளப்பட்டதால், இந்தத் தெளிவு ஏற்படவில்லை. கடவுள் எனும் புனிதம், எத்தகைய அக்ரமமான காரியத்துக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதை எண்ணும்போது, எவருக்கும் மன அதிர்ச்சி ஏற்படாமலிருக்க முடியாது. கடவுள் எனும் புனிதத்தைப் பயன்படுத்தி இந்தச் சூழ்ச்சிக் காரியம் நடைபெற்றுக் கொண்டு வந்ததால், இந்தச் சூழ்ச்சித் திட்டத்தை எதிர்ப்போர் கடவுட் கொள்கைக்கு எதிரிகள் என்று கூறி, அழித்திட, சூழ்ச்சிக்காரர்களுக்கு எளிதாக முடிந்தது. நமக்கேன் இந்தப் பகை என்ற அச்சம் காரணமாகப் பலரும், இந்த அக்ரமத்தினைக் கண்டிக்காமலிருந்து விட்டனர். பல பொருள் உணர்ந்தோரே, இதனைக் கண்டிக்காத காரணத்தால், இது மெத்தச் சரியான, தேவையான, தூய்மையான திட்டம் போலும் என்ற எண்ணம் வெகுவாகப் பரவிற்று. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரேகூட இந்த மனமயக்கத் துக்கு ஆளாயினர் - தமக்குச் சமூகத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இடம் அநியாயமானது என்ற உணர்வு பெறவும் முடியாமலிருந்தது. மேலும் அவர்கள், தமக்குள் ஒருவருக்கொருவர் தரம் பார்த்துக்கொள்ளவும், உயர்வு தாழ்வு பேசிக்கொள்ளவும் தலைப்பட்டு, மொத்தத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்திட ஆர்வம் காட்டாமல், தமக்குள் "மேல் கீழ்’ பேசிக் கிடக்கவும், ஏசி மோதவும் தலைப்பட்டனர். மக்களாட்சியின் மாண்பினை உணர்ந்தவர்களும், மேனாடுகளில் உள்ள சமூக அமைப்பு கூடுமான வரையில் நீதி நிலவ வழி செய்கிறது என்ற உண்மையைத் தெரிந்தவர்களும், இங்கு அரசியல் நடவடிக்கைகளிலே ஈடுபட்டபோதுதான், வகுப்பு நீதி, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற முறைகளைப் பற்றிப் பேசலாயினர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படலாயிற்று. அதன் பயனாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தத்தமது வகுப்பின் சக்தியைத் திரட்டவும் அந்தச் சக்தியை அரசியலுக்குக் கருவியாக்கிக் கொள்ளவும், முற்பட்டனர். சென்ற தேர்தலின்போது, இந்தக் "கருவி’ மிக நன்றாகப் பயன்பட்டது. ஜஸ்டிஸ் கட்சி, மொத்தமாக பார்ப்பனர் - பார்ப்பன ரல்லாதார் என்று சமூக அமைப்புத் திட்டத்தைக் கவனித்து, அதற்கேற்றபடி, தன் அரசியல் முறைகளை அமைத்தது. வகுப்பு நீதி - வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற திட்டங்கள் அமுலுக்கு வருவதற்கான சூழ்நிலையை ஜஸ்டிஸ் கட்சி உருவாக்கிற்று. அதுவும் போதுமானதல்ல என்பது மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக உணரப்பட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த திட்டம் உருவாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சிக்கு, இந்தத் திட்டத்தை உருவாக்கி, அமுலாக்குவதற்கான வாய்ப்புத் தரப்படவில்லை. இதற் கிடையில், காங்கிரஸ், சர்க்காரை நடத்தும் கட்சியாகி விட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரச்சினையை, காங்கிரஸ் கட்சி கவனிக்க மறுத்தது. கவனிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்குக் காங்கிரசின் செல்வாக்கு, நிகரற்றதாக அப்போது இருந்தது. அத்தகைய செல்வாக்கு காங்கிரக்கு இருந்ததற்குக் காரணம், நாட்டு மக்களிடம், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பன போன்றவைகளெல்லாம், அற்பமான பிரச்சினைகள் - யாரோ சிலருடைய பதவி ஆசையைப் பூர்த்தி செய்யும் காரியம், மக்களுக்கு அது அல்ல உயிர்ப் பிரச்சினை; உயிர்ப்பிரச்சினை, வெள்ளைக்கார ஆட்சியை விரட்டிவிட்டுச் சுயராஜ்யம் பெறுவதுதான், என்று எடுத்துக் கூறப்பட்டது. நாடு, அடிமைப்பட்டிருப்பதை உணர்ந்து, அந்த இழி நிலையைப் போக்கித் தீரவேண்டும் என்ற "தேசிய’ உணர்வு பெற்ற மக்கள், இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டார்கள். வகுப்புப் பிரச்சினைகளைக் கவனிப்பது சிறுமைத்தனம், “சிரழிவு, தேசத் துரோகம், என்று கருதினர். எனவே , காங்கிரஸ், அந்தப் பிரச்சினையை,”குப்பைக் கூடை’க்கு அனுப்பிவிட்டு, தன்னிகரற்ற செல்வாக்குடன், கொலுவிருக்க முடிந்தது. இந்தச் செல்வாக்கு நிலைத்திருக்க முடியாதது, சிதையலாயிற்று சென்ற தேர்தலில். இதற்குச் சான்று கூறுவது போன்ற சம்பவங்கள் பல நடைபெற்றன. பிற்பட்ட வகுப்பினரின் நம்பிகையைப் பெற்ற தலைவர்கள் பலர், காங்கிரசை முறியடித்தனர்; காங்கிரஸ் கட்சி சார்பிலேயே நின்று வெற்றிபெற்ற சிலரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பின் செல்வாக்கைத் துணைகொண்டே வெற்றிபெற முடிந்தது. பிற்பட்ட வகுப்பனரிடையே ஏற்பட்ட இந்த அரசியல் எழுச்சியைக் கண்ட பிறகுதான், காங்கிரஸ் கட்சி, அருவருப்புடன் பேசி அலட்சியப்படுத்திவிடத்தக்க பிரச்சினை அல்ல இது என்பதை அறிந்தனர்; அறிந்தவர்கள், பிற்பட்ட வகுப்பு மக்களை முன்னேற்றடையச் செய்ய என்ன வழி என்று நல்லெண்ணத்துடன் திட்டம் வகுக்கவில்லை; மாறாக, பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான பணியாற்றுவதாகக் கூறி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, சட்டசபைக்குள் நுழைந்துள்ள வகுப்புத் தலைவர்களை எப்படி வலைபோட்டுப் பிடிப்பது என்ற தந்திரத் திட்டம் வகுத்தனர். வழக்கபடி, இத்தகைய தந்திரத்தில் ஆச்சாரியார் வழி காட்டினார்; மாணிக்கவேலர் கிடைத்தார். காமராஜர், அதே திட்டத்தைப் பின்பற்றினார், ந.ந. இராமசாமி கிடைத்தார். அமைச்சர் அவைக்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இருவர் கிடைத்தனர். அப்படிக் கூறுவதைவிட, பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பேரால், இருவர் அமைச்சர்களாயினர் என்பதுதான் பொருந்தும். இவர்கள் அமைச்சர்களாக்கப்பட்டதும், பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பிரச்சினை தீர்ந்துவிட்டதா என்பதே இப்போதுள்ள பிரச்சினை; பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் தீவிரமாக எண்ணிப் பார்க்கவேண்டிய பிரச்சினை. இதைப்பற்றி எண்ணுவதற்குத் துணைபுரிவதற்காக, ஒரு உண்மையை அவர்கட்கு எடுத்துக் காட்டவேண்டி வருகிறது. குறிப்பிடப்பட்ட, இரு அமைச்சர்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்தைக் கவனித்துக்கொள்வதற்காக அழைக்கப்பட்டவர்கள் அல்ல. மாணிக்கவேலர் வரி வசூலிக்கவும், எஸ். எஸ். இராமசாமி "ஸ்தல ஸ்தாபன’ங்களை ஆளவும் அழைக்கப்பட்டனர்; பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முன்னேற்றம் அளிக்கும் வசதி, வாய்ப்பு, உரிமை ஏதும் அவர்களிடம் தரப்படவில்லை. எனவே, இருவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் திரண்டெழுந்த சக்தி காரணமாக, அமைச்சர்களாக முடிந்ததே தவிர, பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான வழி வகுக்கும் பொறுப்பைப் பெறவில்லை. எனவே, இவர்கள் இருவரும் அமைச்சர்களான காரணத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடவில்லை. அதற்கான வழியேகூட ஒரு வகையில் அடைபட்டுப் போய்விட்டது என்று கூறலாம். இந்த இருவரும், அமைச்சர்களாகாமல் வகுப்புத் தலைவர் களாக இருந்துவந்த போதாவது, பிற்பட்ட வகுப்பினருக்கு உற்ற குறைகளை எடுத்துக்கூறவும், கிளர்ச்சி நடத்தவும், சர்க்காரை வற்புறுத்தவும் வழி இருந்தது. இவர்களே அமைச்சர்களாகிவிட்டதால், அந்த வழியும் அடைபட்டுப் போய்விட்டது! இவர்களும் "தேசியம்’’ பேச ஆரம்பித்துவிட்டனர்! உழைப்பாளர் கட்சியும், பொதுநலக் கட்சியும், கலைக்கப் பட்டுவிட்டது - எல்லாம் காங்கிரசில் கரைக்கப்பட்டுவிட்டது என்று, இரு தலைவர்களும் கூறும் அளவுக்கு அந்தத் "தேசியம்’ முற்றிவிட்டது. அந்தத் "தேசியம்’ பேசும் போக்கில்தான், அமைச்சர் S.S. இராமசாமி, பிற்படுத்தப்பட்ட மக்களின் இரட்சகன், காங்கிரஸ்தான்! பொதுத் தேர்தல் வருகிறது, பிற்படுத்தப்பட்ட மக்களே! காங்கிரசை ஆதரியுங்கள் என்று பேசி இருக்கிறார். அமைச்சர் இவ்விதம் பிரதாபம் பேசுகிறார், ஆனால் வன்னிய குலத்தவர் காங்கிரசின் சேவை குறித்தும், அமைச்சர் போன்றார் குறித்தும், என்ன கருதுகின்றனர்? எல்லாம் பேச்சளவிலேதான்; செயலளவில் ஒன்றும் பலனில்லை. இதைக் கண்டு நம்மால் போற்றிப் பாராட்டி அனுப்பிய தலைவர்கள், அவர்களின் சுயநலத்திற்காக அவர்கள் கைக்கொண்ட முறையைப் பின்பற்றும் நம்மையும் எங்களோடு நாங்கள் சேர்ந்துள்ள கட்சியில் சேருங்கள் என்று நமக்கு வேறு புத்தி கற்பிப்பதுடன், தனக்கு ஒரு கண் போனதால் மற்றவர்களுக்கும் கண் போகட்டும் என்பதுபோல் உபதேசம் செய்ய முற்பட்டதைத் தவிர நாம் கண்ட பலன் யாது என்பதை மனவேதனையுடன் கேட்கின்றோம்.’’ "உழைப்பாளி’யில், பட்டம்மாள் என்றோர் அம்மையார் இது போல எழுதுகிறார். வகுப்பின் பெயர்கூறிக்கொண்டு சட்டசபை சென்ற "தலைவர்கள்’ தங்கள் சுயநலத்தைத்தான் கவனித்துக் கொண்டார்கள் - என்று மனவேதனையுடன் அந்த அம்மையார் கூறவேண்டிய நிலைமை இருக்கிறது. “மக்களின் ஓட்டைப்பெற்றுச் சட்டசபைக்குச் சென்று பச்சோந்தியைப்போல் நிறத்தை (லேபிலை) மாற்றிக்கொண்டு’’ என்றும்”என் பதவிக்கு ஆபத்து வரும், என் வருவாய் போய் விடும்’ என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லியது தவிர நாம் கண்ட பலன் என்ன? - என்றும் கேட்டுள்ளார். சுயநலம் - பச்சோந்திக் குணம் - பதவிப் பாசம் - என்பவைகளுடன், புதுச்சேரி பொம்மைகள் போல சட்ட சபையில் கொலுவிருக்கிறார்கள் என்றும் கேலி செய்திருக்கிறார். இந்த நற்சான்று கிடைக்கிறது மருத்துவருக்கு - ஆனால், அவரோ என் மருந்து கைகண்டது - என்று கூவிக் கூவி விற்கிறார் - பிற்பட்ட வகுப்பினர் அனைவருமே இதை உட்கொள்ளலாம் என்று "சிபாரிசு’ செய்கிறார்! தம்பி! சாதித்தது என்ன? என்ற தலைப்பில் இரா. வீரசம்பு என்பார், "உழைப்பாளி’ 1-7-56 இதழில் தந்துள்ள கட்டுரையில் உள்ள காரசாரமான பகுதியை வேறோர் இடத்தில் அடிகள் வெளியிட்டிருக்கிறார் - படித்துப் பார். நம் வகுப்பு மந்திரியை நம் வகுப்புத் தோழனே இப்படிச் சந்தி சிரிக்கச் செய்யலாமா என்று வேண்டுமானால், கட்டுரையாளர் மீதோ இதழாளர் மீதோ பெரிய இடம் கோபித்துக் கொள்ளுமே தவிர, இதிலே குறிப்பிட்டுள்ள எந்த விஷயத்தை, ஆதாரம், புள்ளி விவரம் காட்டி, மறுக்க முடியும்? உண்மையிலேயே, இலவுகாத்த கிளிபோல்தான் ஆகிவிட்டது. ஐயமில்லை! ஆகவேதான், பிற்பட்ட வகுப்பு இளைஞர்கள் மீண்டும் மீண்டும், ஏமாற்றத்துக்கு ஆளாகாம லிருக்கத்தக்க முறையைக் கண்டறிய வேண்டும். வகுப்புத் தலைவர்கள், வகுப்பு நலன் குறித்துப் பேசுவது கேட்டுப் பூரிப்படைந்து, அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை மறந்து, கட்சி மாறும்போது திகைப்படைந்து, அவர்கள் உயர் பதவி பெற்றது கண்டு உள்ளூர மகிழ்ந்து, அந்த உயர்வு, வகுப்பு முன்னேற்றத்துக்கு வழிகோலாதது கண்டு மனம் உடைந்து போவதுதானா, இளைஞர் கடமை!! பிற்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதிலே ஒருவரிருவர் உயர் பதவியில் அமருவதால் ஏற்பட்டுவிடாது என்று அவர்கள் அறிந்துகொண்ட உண்மையை, இனமக்கள் அறியும்படி செய்யவேண்டிய கடமை அந்த இளைஞர்களுக்கு இல்லையா? திறம் இல்லையா? பிற்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்துக்கான தனியானதோர் திட்டம் காணவும், அதற்கான பண வசதியைப் பெறவும், சட்ட பூர்வமான திட்டம் தீட்ட, பிற்பட்ட வகுப்புத் தலைவர்கள் ஒன்றுகூடிட வேண்டாமா? காங்கிரசுக்குள் சென்று "குடித்தனம்’ நடத்த ஆரம்பித்துவிட்டால், இந்தக் காரியம் செய்யும் ஆற்றலை எப்படி அவர்கள் இழக்காமலிருக்க முடியும்! விதை நெல்லை வேகவைத்துத் தின்றுவிட்டால், வயலில் தூவ நெல் எங்கிருந்து பெறுவது? அம்பை ஒடித்து மாடோட்டும் தார் குச்சியாக்கிவிட்டால், வில் வைத்துக் கொண்டு என்ன சாதிக்க முடியும்? பிற்பட்ட வகுப்பினரின் நிலைமை சகல துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கான சட்டபூர்வமான திட்டத்தைப் போராடிப் பெறவேண்டிய தலைவர்கள், வகுப்பு முன்னேற்றம் தானாக வருகிறபோது வரட்டும், முதலில் எங்கள் முன்னேற்றத்துக்கு வகை செய்து தாருங்கள் என்று ஆளும் கட்சியிடம் கொஞ்சவும், கெஞ்சவும் முற்பட்டபோது, வகுப்பு இளைஞர்கள் மட்டும் சிறிதளவு விழிப்புணர்ச்சியுடன் இருந்திருந்தால், தம்பி, இலவுகாத்த கிளியானோமே! பச்சோந்தி களாகிவிட்டார்களே! புதுச்சேரிப் பொம்மைகளாக இருக்கிறார்களே! என்றெல்லாம் கூறித் துக்கிக்கவேண்டிய சூழ்நிலையே ஏற்பட்டிராது. இப்போது மனம் குமுறிப் பேசினாலும் எழுதினாலும், அமைச்சர்களாகிவிட்ட குலப் பெரியவர்கள், எங்களுக்கு உங்கள் ஆதரவு தர முடியாது என்றால்கூட நாங்கள் அச்சம் கொள்ளமாட்டோம்; ஏனெனில், எங்களுக்கு வேலை செய்ய காங்கிரஸ் கட்சியே காத்துக் கிடக்கிறது என்றல்லவா சொல்லுவார்கள்!! எனவே, பிற்பட்ட வகுப்பிலே உள்ள இளைஞர்கள், அந்தப் பிரச்சினையை நன்கு ஆராய்ந்தறிந்து, தலைவர்களின் தந்திரத்துக்கும், ஆசை வார்த்தைக்கும், வகுப்பின் பெயர் கூறி ஊட்டும் மயக்கத்துக்கும் மக்கள் பலியாகாமற் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் இளைஞர்கள் வெற்றி பெற முடியாது போனால், நீண்டகாலத்துக்கு, பிற்பட்ட வகுப்பின் பெயர் கூறிக்கொண்டு தலைவர்கள் ஆவர்; மந்திரிகளாவர்; கட்டுரையாளர் கூறுவதுபோல, இனமக்கள் என்றும்போல் சுமைதாங்கிகளாகவே இருப்பர்; மந்திரிகளானவர்கள், பச்சோந்திகளாயினும், பளபளப்புடன் பவனி வருவர். பலன் பெறுவர். புதுச்சேரிப் பொம்மைகள் என்று கேலி பேசினாலும், கவலைப்படமாட்டார்கள்; இனமக்களின் நிலைமையோ "இலவு காத்த கிளி’யாகத்தான் இருக்கும். பலன் எந்த அளவுக்கு ஏற்படும் என்பது பற்றியும், நமக்குக் கிடைத்திடக் கூடிய வசதி எத்தகையதாக இருக்கும் என்பது குறித்தும், கவலையற்று, நாம், தம்பி, இந்தத் தேர்தலின்போது, இந்த உண்மைகளை ஊரறியச் செய்ய வேண்டும். பிற்பட்ட வகுப்பினர் பிரச்சினைக்குப் பரிகாரம் என்ன என்ற உண்மையை எடுத்துரைத்து, பிற்பட்ட வகுப்பினருக்கு உரிமையும் நல்வாழ்வும் பெற்றுத் தருவதாக வாக்களித்தவர்கள் போக்கு எப்படி மாறிவிட்டது என்பதை எடுத்து விளக்கி, அடுத்த சட்டசபையிலேனும், பிற்பட்ட வகுப்பினரின் உரிமைக்காக, நலனுக்காக, பாதுகாப்புக்காக, ஆளும் கட்சியின் புன்னகைக்கு மயங்காமல், கோபம் கண்டு அஞ்சாமல், வாதாடக்கூடிய, போராடக்கூடிய, தூய்மையும் ஆற்றலும் கொண்ட பிற்பட்ட வகுப்பு இளைஞர்கள் ஒரு சிலராவது இருந்தால்தான், பிற்பட்ட வகுப்பைப் பிடித்துக்கொண்டுள்ள பிணி நீங்கும் மாமருந்தே யொழிய பிற்பட்ட வகுப்பின் பிணி தீர்க்கும் மாமருந்து காங்கிரஸ் ஒன்றுதான் என்று வாணிபம் நடாத்துவோரால் நிச்சயமாக முடியாது; முடியவே முடியாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பில், ஆற்றல் மிக்கவர்கள், தியாகிகள், வீரர்கள் இருக்கிறார்கள். நாடு ஆளும் தகுதியும் திறமையும் அவர்களிடம் இருக்கிறது; நிரம்ப இருக்கிறது. ஆனால் அவர்கள் காங்கிரஸ் கூடாரத்தில் குடிபுகுந்து விட்டால், இனம் குறித்துப் பேசவும், இனமுன்னேற்றத்துக்கான திட்டம் தேடவும் முடியாது, அனுமதி கிடையாது! எனவேதான், பச்சோந்திகளாய் புதுச்சேரிப் பொம்மைகளாய் இருக்கவேண்டி நேரிட்டுவிடுகிறது. எனவேதான், தம்பி, கொடி கட்டி ஆளும் கட்சியில் கோடீஸ்வரர்களும், கோலெடுத்துத் தாக்க வருவோரும் இருப்பது தெரிந்தும், ஒடுக்கப்பட்டோர் நசுக்கப்பட்டோர் ஒதுக்கி வைக்கப்பட்டோர் சார்பில் பேசும் ஜனநாயகக் கடமையை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், தேர்தலில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறோம் - வெற்றி பெற்று விடுதலைத் திட்டம் பிரகடனம் செய்துவிடப் போகிறார்களோ இந்த சூரப்புலிகள் என்று வீராவேசமாகக் கேட்கின்றனர் வெந்த மனதினர் தமது நொந்துபோன நிலையினை நாடு கண்டறியலாகாதே என்ற எண்ணத்தால் - கேட்கட்டும் தம்பி, அதனால் என்ன! நமது கடமையை நாம் செய்வோம், மக்களுக்கு, உண்மையான உழைப்பாளர்கள், உறுதி படைத்த வாதாடுவோர், குறுக்குவழி செல்லாதவர்கள் தேவை என்றால் நம்மை ஆதரிக்கட்டும்! இலவுகாத்த கிளியானோம் என்று இன்று மனவேதனைப்படுகிறார்களே இந்த உண்மைகளை எல்லாம் எடுத்துச் சொல்லிக் கேட்போம். உண்மையை மக்கள் உணரும்படி செய்வதற்கேற்ற ஆற்றல் வெற்றி பெற்றால் வெற்றி கிடைத்தே தீரும்; இல்லையென்றாலும், நஷ்டம் நமக்கல்ல, நாட்டுக்கு என்று மன அமைதிகொள்ளவும் நமக்குத் தெரியும். இனி என்ன கவலை! தம்பி! இலவுகாத்த கிளி போன்ற நிலைமையில், வன்னியர் மட்டுமல்ல, பொதுவாகப் பிற்பட்ட வகுப்பு மக்கள் அனைவருமே அதே நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களிடமெல்லாம், உண்மைகளை எடுத்துரைக்கும் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டு வருவோம்; பெரியார் அடிக்கடி சொல்லுவார் கவனமிருக்கிறதா, தம்பி, ஊதுகிற சங்கை ஊதுவோம், விடிகிறபோது விடியட்டும் என்று. அதைவிடச் சற்று அதிகமான நம்பிக்கை கொள்ளக்கூடிய விதமான அறிகுறிகள், நம்பிக்கை தரும் நிலைமைகள் நாட்டில் தென்படத்தான் செய்கின்றன; எனவே, நமது பணி, ஆர்வமும் எழுச்சியும் கொண்டதாகவே அமைந்திருக்கிறது. அன்பன் 12-8-1956 ஒரே ஒரு பிரச்சினை… ! அரசியலில் பெரியார் - பெரியார் பார்வையில் காமராஜர் தம்பி! "நேற்று, கூட்டத்திலே என்ன விசேஷமான விஷயம் பேசினார். நான் வேறோர் இடத்திலே மாட்டிக்கொண்டேன், வம்பிலே சிக்கிக்கொண்டேன். அதனால் வரமுடியவில்லை.’’ "போயும் போயும் உனக்கு நேற்றுத்தான் நாள் கிடைத்ததா வேறு வேலை பார்க்க. நேத்துப் பிரமாதம்…. "என்ன? என்ன? புது சேதி ஏதாவது….!’’ "சாகடித்துவிட்டார்! அந்தப் பயல்கள் இருந்திருந்தால் முகம் செத்துப் போயிருக்கும். ஏண்டா பசங்களா! நீங்களா சட்டசபைக்குப் போகணும்? என்று கேட்டுவிட்டு ஒரு சமாசாரம் சொன்னார், தூக்கிவாரிப் போட்டுவிட்டது போயேன்….’’ "என்ன சொன்னார்…. என்ன?’’ "என்னோடு இருந்துவிட்டு ஓடிப்போனான்களே இந்தப் பசங்க, இதுகளெல்லாம், என்னமோ எம்.ஏ., பி.ஏ. என்று போட்டுக் கொள்கிறானுங்க. இந்த எம்.ஏ., பி. ஏ. எல்லாம் எப்படிக் கிடைச்சுது? போனா போகட்டும்னு நான் பல பேருக்குச் சொல்லி, மார்க்கு போடச் சொல்லி, இதுகளுக்கு பி.ஏ., எம்.ஏ ன்னு வாங்கிக் கொடுத்தேன் - என்று சொன்னாரு…. சிரிச்சி சிரிச்சி வயிறெல்லாம் புண்ணாப் போச்சி போ….’’ "அப்படியா சொன்னார்?’’ "ஆமாம்! அந்தப் பசங்களுக்கு இதைக் கேட்டா, வெட்கம் பிடுங்கித் தின்னுமல்லவா?’’ "அட போப்பா! எனக்குந்தான் வெட்கமா இருக்குது; இப்படியெல்லாமா பேசுவது?’’ "அட, அந்தப் பசங்களைச் சொன்னா உனக்கு என்ன வெட்கம்? நீ என்ன பி.ஏ.வா, எம்.ஏ.வா?’’ "நீயும் நானும் பி.ஏ. இல்லெ…. ஆனா, நம்ம குருசாமி ஒரு பி.ஏ.; நம்ம ஜெனார்தனம் எம்.ஏ. இன்னும் ராஜாராமு, வீரமணி, வேதாசலம் இவர்களெல்லாம் எம்.ஏ. பி.ஏ.ன்னு இல்லையா! என்கூட இருந்தவங்களுக்கு நான்தான் மார்க்கு போடச் சொல்லி பி.ஏ.எம்.ஏ. ஆக்கனேன்னு அவர் சொன்னா, அது இவங்களுக்கும் பொருந்துதே. அப்படித்தானே பொதுவா உள்ளவங்களெல்லாம் எண்ணிக்கொள்ளுவாங்க. தன் பக்கத்திலேயே பி.ஏ.வும், எம்.ஏ.வும் வைத்துக் கொண்டு, நான்தான் பாஸ் போட்டு இதுகளுக்குப் பட்டம் வரச்செய்தேன்னு சொன்னா, நம்ம பி.ஏ., எம். ஏக்களுக்கும் கூடத்தானே சுருக்குன்னு தைக்கும்… வெட்கமா இருக்கும்’’ "அடெ, அதுக்குச் சொல்றியா’’ “தன்னோடு இருந்துகொண்டு தனக்குப் பயன்பட்டுக் கொண்டு இருந்த வரையிலே சும்மா இருந்துவிட்டு, வேறே கட்சியானதும், இதுகளுக்கு பி.ஏ. எம்.ஏ. எல்லாம் நான்தான் வாங்கிக்கொடுத்தேன்னு பேசறாரே, இதோ இப்ப இவரோடு இருக்கிற பி.ஏ. எம். ஏ.க்களுக்கும் இதே”சூடு’ தானே கிடைக்கும், இவரை விட்டுப் பிரிந்தா? என்று பொதுவா இருக்கிறவங்க, பேசிக்கொள்ள மாட்டாங்களா?’’ "அட, அப்ப பார்த்துக்கொள்வோம். இப்ப, இதுகளுக்குச் சூடு கொடுக்கிறபோது, கேட்கறதுக்கு சந்தோஷமா இருக்குது; இல்லையா?’’ "அதுபோலக்கூட எனக்கு இதிலே சந்தோஷம் ஏற்பட வில்லை. கூட இருக்கிறவரையிலே, இரத்தினமே! மாணிக்கமே! அறிஞனே! கவிஞனே! என்றெல்லாம் தூக்கி வைக்கிறது, பிறகு அதே ஆசாமிகளுக்கு அ ஆ தெரியாதுன்னு பேசுகிறதுன்னா, கேட்கும்போது சிரிப்பு வரும், கை தட்டலாம்; ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்க்க ஆரம்பிச்சா, சரி இல்லைன்னு நமக்கே தோணும், நெஞ்சு உறுத்தும். எனக்கு, உண்மையாச் சொல்றேன், வெட்கமாகக்கூட இருக்குது. முன்னுக்குப்பின் முரணான பேச்சா இருக்குதே என்பதாலே அல்ல. இந்தப் பயல்களுக்கெல்லாம், நான்தான் பி.ஏ. எம்.ஏ.ன்னு பட்டம் வாங்கிக் கொடுத்தேன்னு அவர் சொல்கிறபோது, அந்தப் பசங்க இவ்வளவுதானா என்று மட்டுமா ஜனங்க எண்ணிக்கொள்ளு வாங்க. இந்தப் பெரியவர், பார்த்தாயா, வெட்டி ஆளுங்களுக் கெல்லாம், அவனுங்க தனக்கு வேண்டியவனுங்க என்கிறதுக்காக, யாராருக்கோ சொல்லி மார்க்கு போடச் செய்து பட்டம் வாங்கிக் கொடுத்தாராம்! அவரே சொல்கிறார். இவ்வளவு பெரிய தலைவரா இந்த மாதிரி வேலை செய்வது? போலிச் சரக்குகளை வைத்துக் கொண்டுதான் கட்சி நடத்தி வந்தார்னு அவர் பேசறதிலே தெரியுது. அது சரியா? அப்படின்னு பொதுவா உள்ளவங்க எண்ணிக்கொள்ளமாட்டாங்களா? அதை நினைச்சாத்தான் எனக்கு வெட்கமா இருக்குது.’’ "பொதுவா உள்ளவங்களைப் பத்தி நமக்கென்ன கவலை. நாம் - அந்தப் பசங்க! அவ்வளவுதான்.’’ "அது போதாதே, அந்த பசங்களையும் நம்மையும் கவனித்துக்கொண்டு, எதிலே உண்மை இருக்கு, நியாயம் இருக்கு என்று கண்டறிந்து ஆதரவு தருவதற்கு இருக்கிற பொதுவானவர் களைப் பொறுத்துத்தானே கட்சி வளருவது இருக்கிறது’’ "அட சரிதான் போயேன், மகா கண்டவன், மேதாவிதான் நீ… போ…’’ என்ன அண்ணா! எங்கே நடைபெற்ற உரையாடல். கற்பனையா? காதில் விழுந்ததா? என்றெல்லாம் கேட்கத் தோன்றும் தம்பி! கற்பனை அல்ல என்று மட்டும்தான் கூற விரும்புகிறேன். சென்னையில், எங்கோ ஓரிடத்தில் நடைபெற்ற உரையாடல், முழுவதும் இட்டுக்கட்டியது அல்ல. இதை ஏன் நான் உனக்கு எடுத்துக் கூறுகிறேன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது பகை உமிழும் போக்கில், எதை வேண்டுமானாலும் சொல்லி, அந்த நேரம் "சபாஷ்’ வாங்கிக் கொள்ளும் போக்கு, இப்போதெல்லாம் திராவிட கழகத்திலேயே சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதை, இந்த உரையாடல் ஓரளவுக்கு விளக்குவதனால்தான். மற்றப்படி அந்த இடத்தார் தொடுத்திடும் ஏசல்களைக் கண்டு, எனக்கென்ன புதிதாக வருத்தம் வர இருக்கிறது. எவரும். எந்தவிதமான பகையின்போதும் சொல்லக் கூசும் சொற்களை எல்லாம் சொல்லியாகிவிட்டது - நானும் கெட்டுக் கேட்டுப் பழக்கப் பட்டாகிவிட்டது. திடுக்கிடவைப்பது - நாவினால் சுடுவது-பிரசார முறையில் ஒருவகை. வாதிடுவது - வழிக்குக் கொண்டுவருவது - வாஞ்சனையைப் பெறுவது - மற்றோர் வகை, பிரசார முறையில். தம்பி! நமக்கு இந்த இரண்டாவது முறை போதும் - அது தக்க பலனளித்து வருகிறது - அந்த முறையை மேலும் மேன்மையுடையதாக்கிக் கொள்வதற்கே, நமக்கு எல்லா வாய்ப்புகளும் பயன்பட வேண்டும் என்பது என் விருப்பம். மயிலே! மயிலே! இறகு போடு என்றால் போடுமா என்பது போல தற்குறிகளும், கற்றறி மூடர்களும், சுயநலப் புலிகளும் நயவஞ்சக நரிகளும். ஆரிய அடிமைகளும் மலிந்து கிடக்கும் இந்தச் சமுதாயத்தில், சுடச்சுடக் கொடுப்பது, “ரோய ரோய’த் திட்டுவது, ஏசலை வாரி வாரி வீசுவது என்னும் முறைதான் ஏதேனும் ஒரு துளியாவது பலன் அளிக்குமே தவிர, அன்பர்களே! நண்பர்களே! எண்ணிப் பாருங்கள், தவறு இருந்தால் எடுத்துக்காட்டுங்கள்! காரணம் காட்டி எங்கள் கோரிக்கையை மறுத்துப் பேசுங்கள்! என்றெல்லாம் கனிவுடன் பேசுவது, சரியல்ல பலன் தராது - என்று எண்ணிக்கொண்டு, கேட்டதும் திடுக்கிடட்டும், தீ போலச் சுடட்டும் என்ற முறையைப் பிறர் கையாள்வது வெற்றி தருகிறது என்று எண்ணிக்கொள்வார் யாருமில்லை - பேசுபவர்களுக்கு அன்றைக்கு ஒரு மனத்திருப்தி - வெளுத்துக் கட்டிவிட்டோம் - ஒரு பிடிபிடித்து விட்டோம் - பயல்களுக்குச் சரியான சவுக்கடி கொடுத்துவிட்டோம் - என்று எண்ணி எக்களிக்கவும் எதிரே நின்று எதை எதையோ எதிர்பார்த்து ஏவல் செய்வோர்,”ஒழிந்தானுக! இனித் தலைகாட்டமாட்டானுக! தொலைஞ்சானுக! இனி கால்தூசுக்கும் எவனும் இதுகளை மதிக்கமாட்டானுக!’’ - என்று பேசக்கேட்டு, பூரிப்பதும்தான் மிச்சம் - உருவான பலன் கிடைப்பதில்லை. ஆர அமர இருந்து கணக்குப் பார்த்தால், உண்மை விளங்காமாற் போகாது. நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால், ஏன் சிலர் இந்த முறையில் நடந்துகொள்ள நேரிடுகிறது என்பதும் விளங்காமற்போகாது. நமக்கென்று ஏற்பட்டுள்ள வரலாற்றினைக் கூர்ந்து பார்த்தால், நாம் ஏன் அந்த முறையினை வெறுத்தொதுக்கி விட்டோம் என்பதும் புரியும். ஏமாற்றம், தம்பி, எரிச்சல் தரும் - திருப்தி, மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும். நமக்கு இன்னது கிடைக்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்த்து, அதை அடைவதற்காகப் பாடுபட்டும், அது கிடைக்காமற் போனால், ஏற்படும் ஏமாற்றம் ஒருவகை. அதனினும் கொடியது, கிடைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்த்தது நமக்குக் கிடைக்காமற் போனதுடன், மற்றவருக்கு, அதிகச் சிரமமின்றி, கிடைப்பதைக் காணும்போது ஏற்படும் ஏமாற்றம்! அந்த நேரத்தில் மனதில் மூண்டுவிடும் எரிச்சல், மனதை நிச்சயமாக எரிமலையாக்கிவிடும் - பிறகு சொல்லவா வேண்டும். பொறுக்கிப் பசங்க போக்கிடமத்ததுக என்ற "பாஷை’ மளமளவென்று பிறக்கும். இது சகஜம். "திராவிட முன்னேற்றக் கழகம்’ துவக்கியதிலிருந்து தம்பி, நாம் எதில் ஏமாற்றம் அடைந்தோம், எரிச்சல் கொள்ள? திக்குத் தெரியாத காட்டில் துரத்திவிடப்பட்ட பாலகர்கள் போல், மேல்வேட்டியை உதறிப் போட்டுக்கொண்டு, உழைத்தது வீணாச்சே, இனி உலகு என்ன வழி காட்டுகிறதோ பார்ப்போம் என்ற ஏக்கத்துடன், முதலாளியின் மாளிகையை விட்டு வெளியேறும் உழைப்பாளியைப்போல, அன்று நாம் வெளியேறினோம். வெளியேறினோம் என்பதைக் கூட உலகு ஒப்பக்கூடாது என்று வெளியேற்ற எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருந்தேன், திருட்டுப்பயல்க, எப்படியோ அதைத் தெரிந்துகொண்டு, தலை தப்பினால் தம்பிரான் புண்யம் என்று ஓடிவிட்டார்கள் என்று தூற்றினர். துக்கத்தைச் சுமந்துகொண்டு, துணைக்கு வருவோர் யார் இருக்க முடியும் என்று ஏதும் தெரியாமல் வெளியேறினோம். அரசியல் என்றால் என்ன சாமான்யமா? அன்னக்காவடி களெல்லாம் பொது வாழ்வில் நிலைத்திருக்க முடியுமா? இதுகளுக்கு வாழ்வு இருண்டுவிட்டது ப்யூஸ் போன பல்புகளாகிவிட வேண்டியதுதான் - சீந்துவார் யார் இருக்கப் போகிறார்கள் - திகைத்துத் திண்டாடி தெருவில் சுற்றி, தேசாந்திரியாகி, ஏதாவது ஒரு கட்சியின் காலடியிலே விழுந்து பிச்சைப் பிழைப்பு நடத்த வேண்டியதுதான் என்று "வாழ்த்தி வழியனுப்பினார்கள்.’’ தம்பி! நாம் உருத்தெரியாமலாகி விடவுமில்லை, உருமாறிப் போய்விடவுமில்லை. ஊர்மக்கள் நம்மை உதவாக்கரைகள் என்று ஒதுக்கிவிடவுமில்லை, வளர்ந்து நிற்கிறோம். எப்படி இது அவர்களுக்கு ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தராமலிருக்கும். தம்பி! நாம் மேற்கொண்டுள்ள காரியம் எளிதானது, நமக்கு அந்தக் காரியத்தை முடித்துக் காட்டும் ஆற்றல் ஏராளமாக இருக்கிறது என்ற எண்ணம் நம்மில் யாருக்கும் எழுந்ததில்லை. எனவேதான், நம்மால் எவ்வளவு சாதாரண வெற்றி பெற முடிகிறபோதும், மனதுக்கு ஒரு அலாதியான மகிழ்ச்சி பிறக்கிறது. சுடு சோறும், சுவையான குழம்பும், பாட்டாளிக்கு இனிக்கிறது. பாதம் அல்வா பதிர்பேணி பங்களாவில் கசப்பாகக் கூட ஆகிவிடுகிறது. நாம், அரசியலில், பொது வாழ்வுத் துறையில், தீண்டப்படாதாராக - ஒதுக்கப்பட்டோராக - விரட்டப்பட்டவர் களாக - ஆக்கப்பட்டவர்கள்! எனவே நமக்குக் கிடைக்கும் மிகச் சாமான்யமான வெற்றியும், மனதுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. மேலும் பல வெற்றிக்கான வாய்ப்பினையும் வலிவையும் தருகிறது. இவ்விதமின்றி நாம், நமது ஆற்றலைக் குறித்து மிக அதிகமான கணக்கிட்டுக் கொண்டு, நாம் சாதிக்க வேண்டிய காரியம் பற்றி மிகக் குறைவான கணக்கிட்டிருந்தால், எத்துணை மன வேதணை ஏற்பட்டிருந்திருக்கும், தெரியுமா! நமக்கு இருக்கும் திறமையும் குறைவு; அதைவிடக் குறைவு நமக்கு அமைந்துள்ள வாய்ப்புகளும் வசதிகளும்; நாம் எதை எதை மாற்ற வேண்டும் என்று பாடுபடுகிறோமோ, அவைகளைக் கட்டிக் காப்பவர்களும், அதனால் பலன் பெறுபவர்களும், அறிவிலிகளுமல்ல, அவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பும் வசதியும் நமக்கு உள்ளதைவிட மிக அதிகமானது. எனவே, நமது பணியின் பலன், வேகமாக உருவெடுக்க முடியாது என்பதை உணருகிறேன், எனவே உள்ளத்திலே அமைதியேகூட ஏற்படுகிறது - சிறு உருவில் பலன் தெரியும்போது மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்கிறது. நம்மால் இவ்வளவாவது முடிகிறதே என்ற மகிழ்ச்சி! இதே நிலையில்தான் பெரியார் இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை - கூறும் அளவுக்கு நான் குணம் கெட்டுப் போனவனல்ல. அவசரப்படவும் ஆத்திரப்படவும், அவருக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு அரை நூற்றாண்டுக் காலமாக உழைத்து வருகிறார். இவ்வளவு உழைப்புக்குப் பிறகும், கண்ணுக்குத் தெரியும் பலன் சிறிய அளவாக இருப்பது கண்டு, அவர் சலித்துக் கொள்கிறார். ஆனால், அவர்மட்டுந்தான், அந்த உரிமை பெற்றி ருக்கிறாரே தவிர, அவருடன் பணியாற்ற அவ்வப்போது அவருக்குக் கிடைப்போர்கள், அதே அளவுக்கு உரிமை பெற்றவர்களாகிவிட முடியாது. சர்ச்சிலுக்கு ஈடன் கிடைத்தார் - பெரியார் எந்த ஈடனையும் பெற்றதில்லையே! கிடைப்பவனெல்லாம், காட்டிய வழி நடக்க, போட்ட கோட்டை மீறாதிருக்க, மாட்டிய கடிவாளத்துக்கு ஏற்றபடி திரும்ப பயிற்சி பெற்று, படையில் இருக்கிறார்கள் - ஏதோ ஓர் கட்டம் வருகிறது - பிய்த்துக்கொண்டு ஓடுகிறார்கள் அல்லது பிய்த்தெறியப்படுகிறார்கள். ஜீவாவும் இராமநாதனும், விசுவநாதமும் பாலசுப்பிரமணி யனும், சாமி சிதம்பரனாரும் வல்லத்தரசும், நீலாவதியும் இராமசுப்பிரமணியமும், பொன்னம்பலனாரும் பாண்டிய னாரும், புகழுடன் விளங்கி, இரத்தினங்களாய், மாணிக்கங்களாய், ஒளிவிட்டு வந்து, பிறகு வீசி எறியப்பட்டுப் போனார்கள். நான் இப்போது, காரணங்களை ஆராயவில்லை; பழைய கதையையும் கிளறவில்லை. பெரியாரின் பெரும் படை வளர்ந்து வருவதற்குப் பதிலாக எப்படி அடிக்கடி வதைபட்டு சிதைக்கப்பட்டு, மாற்றி அமைக்கப்பட்டு, வந்திருக்கிறது, என்பதைக் காட்ட மட்டுமே இதைக் கூறுகிறேன்; குற்றம் சாட்ட அல்ல. நண்பர் குருசாமிக்கே இது “மூன்றாவது ஜென்மம்’ என்று கருதுகிறேன் - இருமுறை அவரும்”புளித்தவராகி’ விட்டவர்தான். விலகியவர்கள் - விலக்கப்பட்டவர்கள் - அந்தந்த "கால கட்டத்துக்கு’ ஏற்றபடி, கசப்பும் காரமும் காட்டியும், கண்ணீர் வடித்துக் கை பிசைந்து நொடித்துப்போயும், வேறு கட்சி தேடிக்கொண்டும் அல்லது வாழ்க்கைக் கலையில் ஈடுபட்டும், பல்வேறு வழியில் சென்றுவிட்டனர். நாம் மட்டுந்தான், தம்பி, கொள்கையை மாற்றிக்கொள்ளாமல், மாற்றாருடன் கூடிக் குலவிடாமல் முக்காடிட்டு மூலைக்கு சென்றிடாமல், வீண் வீம்புக்குப் பலியாகாமல், களத்திலிருந்து வீசி எறியப்பட்டவர்கள், சுழலுக்கும் சுறாவுக்கும் தப்பி, தெப்பத்தின் துணை கொண்டு, எங்கோ ஓர் திட்டுதேடி அலைந்து அங்கு தங்கி, சிறியதோர் சிங்காரத்தோணி அமைத்துக் கொண்டு, அதிலேறிப் பயணம் செய்வோர்போல நமது பயணத்தை, அதே பாதையில் தொடர்ந்து நடத்துகிறோம். நம்மீது எரிச்சலும் பகையும் இந்த அளவுக்கு ஏற்படுவதற்கான காரணம் இதுதான். “விரோதியாகு!’’ என்கிறார்கள்,”ஐயா! அது எப்படிச் சாத்தியமாகும். எனக்கு அத்தகைய கெடுமதி கிடையாது. எம்மால் எந்த அளவுக்குச் செய்ய முடிகிறதோ அந்த அளவுக்குக் கொள்கைக்காகப் பணியாற்றி வருவோம்’’ என்று நாம் கூறுகிறோம்; கோபம் அதிகமாகிறது. என்னென்னவிதமாக வெல்லாம் தமது பகையைக் காட்டிக்கொள்ளச் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றனவோ, அந்த முறையில் நடந்து கொள்கிறார்கள் - இன்றைய அணிவகுப்புக்குக் கர்த்தாக்களாகி விட்டவர். அவர்கள் மிகப் பெரிய சந்தர்ப்பம், நம்மைத் தீர்த்துக்கட்ட, அடித்து நொறுக்க என்று எண்ணிக் கொண்டிருப்பது, அடுத்து வரும் தேர்தல். "பயல்கள் சினிமா நாடகம் எழுதிக் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில், அதை எல்லாம் தொலைத்துவிட்டு, கையில் பிச்சைத் தட்டு ஏந்திக் கொண்டு அலையப் போகிறார்கள், அதை இந்தக் கண்ணால் பார்த்துவிட்டுத்தான்…..’’ என்று கூறினாராம், நீண்டகால நோன்புக்குப் பிறகு, கழகத்தின் நடுநாயகமானவர்! பார் தம்பி, அவர்தம் கண்களுக்கு, எத்தகைய விருந்து வேண்டுமென்று விரும்புகிறார். கண்ணால் காண வேண்டிய விருந்து எத்தனை எத்தனையோ இருக்கிறது - எண்ணத்தில் அவைகளைக் கொள்ளக் கூடாதா! இராஜ பவனத்தில் நேரு பண்டிதர் கவலையுடன் உலவுகிறார். போடு, கையொப்பம், திராவிட நாடு பிரிவினைக்கு இப்போதே போட்டாக வேண்டும்; இல்லையானால், நாளையத் தினம் பகல் பனிரண்டு மணிக்கு சௌகார்பேட்டை கொளுத்தப்படும் - இதோ தீக்குச்சு, என்று அவரிடம் காட்டுவது போலவும, அது கண்ட அவர், கையொப்பம் போடுவது போலவும், கடற்கரையில் கூடியுள்ள கால்கோடி மக்கள் கொண்ட கூட்டத்தில், "பெரியாரின் தளபதி, பிரியத்துக்கும் நம்பிக்கைக்கும் உரிய தளபதி என்ற முறையிலே, இதோ நான் அவர் சார்பில் திராவிட நாடு திட்ட வெற்றி பற்றிய பிரகடனத்தைப் படிக்கிறேன். கேட்டு இன்புறுக’’ என்று படித்துக் காட்டுவது போலவும், நடுநாயகருக்குத் தோன்றக் கூடாதா? ஐயோ! அம்மா! பிச்சை போடுங்க என்று நாம் பிச்சை எடுக்கிற காட்சியைக் காணத்தான், கண்கள் விரும்புகிறதாம்! பகற்கனவு காண்பது என்று தீர்மானித்தான் பிறகு, கொஞ்சம் நல்ல கனவாவது காணக்கூடாதா! தேர்தலில் ஈடுபடும் நம்மைத் திக்குமுக்காடச் செய்து, தோற்கடித்துவிட்டு, அந்தத் தோல்வியால் நாம் எலும்புந் தோலுமாகி, பிறகு இருக்குமிடம் தெரியாமல் போய்விடுவோம் என்று அன்பர் ஆசைப்படுகிறார். தேர்தல் வருகிறது, ஈடுபடப் போகிறோம், வெற்றி! வெற்றி! எங்கும் வெற்றி! - என்று வெறிகொண்டு நாம் அலைந்து மிக அதிகமாகப் பலனை எதிர்பார்த்து இந்தத் தேர்தலில் ஈடுபட்டால், தோல்வி ஏற்பட்டால் நாம் துவண்டு போவோம், துளைக்கப்பட்டுப் போவோம். ஆனால், தம்பி! நாம், நம் வலிமை, மாற்றான் வலிமை, நமக்கிருக்கும் வாய்ப்பு நாட்டிலே உள்ள நிலைமை ஆகிய எல்லாம் அறிந்து, அதிகம் எதிர்பார்க்காமல், நம்மால் பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, காங்கிரஸ் ஒரு சர்வாதிகாரத்தை ஏற்படுத்தவிடாமல் தடுக்கும் ஜனநாயகக் கடமையைச் செய்யமுடிகிறதே, அது போதும் என்ற உள்ளத் தூய்மையுடன், திருப்தியுடன் ஈடுபட இருக்கிறோம். ஆகவே அன்பர் ஆவலாக எதிர்பார்க்கும் காட்சி கிடைக்காது. எத்தனை எத்தனையோ காட்சிகளை அவர், பாபம், காண விரும்பினார். முடியத்தான் இல்லை. திருமணத்தன்று பெரியார் மாளிகையில் சத்தியாக்கிரகம் நடத்தி, ஊரே திரண்டுவந்து கூடிநின்று வேடிக்கை பார்க்கும் காட்சியைக் காண விரும்பினார். நான்தான் அது எவ்வளவு அநாகரீகமான போக்கு என்பதை எடுத்துரைத்தேன். இலட்சக்கணக்கான மக்கள் கூடிடும் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து ஆவேசமாகப் பேச விரும்பினார். சுவரொட்டியே தயாராயிற்று. நான்தான், நாடு நம்மைத்தான் நிந்திக்கும் என்றேன். இன்னும் அவர் காண விரும்பிய காட்சிகள் பலப் பல; ஒன்றுக்கொன்று தரத்தில் மட்டமானவை. இப்போது, நாம் பிச்சை எடுப்பதைக் காண விரும்புகிறாராம். என்ன அற்புதமான மனமடா, தம்பி! உலகில் இன்னும் ஒரு பத்து பேருக்கு இப்படிப்பட்ட மனம் இருந்தால் போதுமல்லவா!! தேர்தலில் நமக்குப் பெரிய விபத்து நேரிட்டுவிடப் போகிறது என்று இவர் கணக்கிடுவதற்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறாய்? காமராஜர் திராவிடச் சமுதாயக் காவலராம் - எனவே அவர்மீது "தூசு’ விழுந்தால், இவருக்குக் கண்ணில் மிளகாய்ப் பொடி பட்டது போலவாம்! காமராஜர்மீது இந்தக் கனிவுவரக் காரணம் என்ன? திராவிட நாடு தேவை என்று வடநாட்டுத் தலைமையிடம் வாதாடினாரா என்றால் அதெல்லாம் இல்லை. ஒரே ஒரு காரணம்தான், அவருக்கு உத்யோகம் கொடுத்தார், இவருக்கும் கொடுத்தார் என்ற பட்டியல். காமராஜர் மக்களுக்கு என்ன செய்தார்? என்று கேட்பதல்லவா அரசியல் பிரச்சினை என்பீர்கள். தம்பி, இந்த நண்பர், வீடு சுகப்பட்டால் நாடு சுகப்பட்டது என்ற அளவுக்கு அரசியலின் நேர்த்தியை உயர்த்திக் கொண்டு விட்டார். தமிழனுக்குத் துளியாவது நன்றி காட்டும் புத்தி இருந்தால், நன்றி காட்டும் தமிழன் ஒருவனாவது இருப்பானானால், காமராஜர் சர்க்காரை எதிர்ப்பானா!! - என்று கேட்டாராம். பெரியார் இந்தப் போக்கை ஆதரிக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக. தம்பி, ஒரு போக்கு கொள்வது என்று துணிந்த பிறகு, முன்பின் யோசிக்காமல் பொருத்தம் அருத்தம் தேடாமல், விறுவிறுப்பாகப் பேசுவது, ஒருவிதமான பிரசார முறையல்லவா! அந்த முறைப்படி, காமராஜர் ஏதோ, திராவிட மக்களுடைய நீண்டகாலத் தவத்தின் பயனாக முதலமைச்சராக வந்து, கேட்கும் வரங்களை எல்லாம் கொடுத்தவர் போலச் சித்தரித்துக் காட்டுகிறார்கள். இனித் தென்னாட்டில் ஒரே ஒரு பிரச்னைதான். "நீ திராவிட நாடு பிரிவினையை ஏற்றுக்கொள்கிறாயா? “ஆம்?’’ என்றால் என் நண்பன்.”இல்லை’ என்றால் எனக்கு எதிரி. "இதுதான இனி. இதில் தயவு, தாட்சணியம் கிடையாது. முன்பின் நட்பு கிடையாது. மதம், ஜாதி, மொழி, உறவுகூடக் கிடையாது.’’ எப்படித் தம்பி, பொறி பறக்கிறதல்லவா? வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பார்களே அதுபோல இல்லையா! யாருடைய மணிமொழி? விடுதலைதான்!! திராவிட நாடு பிரிவினையை ஒப்புக்கொள்ளாதவருடன், அவர் யாராக இருந்தாலும் சரி, ஒட்டு இல்லை உறவு இல்லை! விட்டுத் தள்ளு! என்கிறார். வீரம் கொப்பளிக்கிறது - கொள்கை ஆர்வம் கொழுந்து விட்டெரிகிறது அல்லவா? அவரே இன்று, நன்றிகெட்ட ஜென்மங்களா! காமராஜர் - ஐயோ காமராஜர்மீதா எதிர்ப்பு - பாவிகளா, நீங்கள் பிடிசாம்பலாய்ப் போக! அவரை எதிர்ப்பதா; அவர்தான் மீண்டும் முதல் மந்திரியாக வேண்டும் - மூன்றாவது தடவையும் அவர்தான் வரவேண்டும். அவர் விரும்புகிற வரையில் அவரேதான் - முதல் மந்திரிப் பதவி என்ற ஒன்று இருக்கும் வரையில் அவர்தான் வரவேண்டும்! - என்று முழக்கமிடுகிறார். ஏன்? திராவிட நாடு பிரிவினையைக் காமராஜர் ஏற்றுக் கொண்டாரோ? இல்லை, இல்லை, அவரிடம் அதுபற்றி இவர் கேட்கக்கூட இல்லை! எனினும் அவர்தான் முதல் மந்திரியாக வேண்டும் என்று பேசுகிறார். என்னய்யா என்றாலோ, பிச்சை எடுத்து அலையப் போகிறீர்கள் பார்! பார்! என்று சபிக்கிறார். திக்குநோக்கித் தண்டனிட்டபடி காமராஜருக்கு இன்று ஆதரவு தேடுகிறார் நடுநாயகர். அது அரசியல் நேர்மையல்ல என்போரைச் சபிக்கிறார், கடுமையாகத் தாக்குகிறார் - பெரியாரோ, பி.ஏ., எம்.ஏ. பட்டமே நான் வாங்கிக் கொடுத்தது என்று பேசுகிறார். தம்பி! நம்மை இவ்வளவு கேவலமாகப் பேசி ஏசுகிறார்களே என்று கவலைப்படாதே, துக்கப்படாதே. நம்மையாவது பிச்சை எடுக்கச் சொன்னார்; இதோ கேள், வேறோர் அர்ச்சனையை. "திராவிட, தமிழக என்ற பேரைக் கண்டு எவனாவது முகம் சுளித்தால், அவன் முகத்தில் காரித்துப்புங்கள். தனது தாய்நாட்டின், தனது இனத்தின் பேரைக் கேட்டு முகம் சுளிக்கும் துரோகியின் கூட்டுறவில் நமக்கு என்ன நன்மை இருக்க முடியும்? இந்தச் சிறு காரியத்துக்கு இணங்காத மக்கள் எப்படி மனிதத்தன்மையும் சுதந்திரமும் பெறமுடியும்’’ தம்பி! தீப்பொறி கண்டாயா? காரித்துப்புங்கள்! முகத்தில் காரித்துப்புங்கள்! துரோகியின் முகத்தில் காரித்துப்புங்கள்! விடுதலையில் வந்த வீர முழக்கம். எவனொருவன், திராவிடன், தமிழ்நாடு என்று சொன்னால் முகம் சுளிக்கிறானோ, அவன் துரோகி. அவன் கூட்டுறவில் நமக்கென்ன நன்மை விளையப் போகிறது என்று கேட்டது விடுதலை. திராவிட நாடு - பூ! பூ! இதென்ன காட்டுக் கூச்சல் என்று கேட்கிறார் காமராஜர். தமிழ் நாடு என்று பெயர் வைக்க முடியாது போ என்று முடுக்காகக் கூறுகிறார், முதலமைச்சர் காமராஜர். அவருக்கு "திருஷ்டி கழித்து‘, ஆலம்சுற்றிப் பொட்டிட்டு, அரசாள அழைக்க, "லாலி’ பாட வேண்டுமாமே, சரியா? அன்பன், 19-8-1956 பேரகராதி சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முறையீடு - "விடுதலை’யும் காங்கிரசும். தம்பி, "திருநெல்வேலியில் பருவமழை தவறியிருக்கிறது; விவசாயிகள் பரிதாப நிலையில் இருக்கிறார்கள். சங்கரன்கோயில் தாலுகாவில். சிவகிரி பகுதியில், நாங்குனேரியில் பெரும்பகுதி வறட்சி ஏற்பட்டிருக்கிறது. இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட மக்கள் ஏராளமான பேர் திருநெல்வேலி இராமநாதபுரம் ஜில்லாக்களில் கஷ்ட நிலையில் இருக்கிறார்கள்’’ என்று செல்வராஜ் எனும் காங்கிரஸ் எம். எல். ஏ. இப்போது நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் எடுத்துரைத்தார். பொதுத் தேர்தல் நெருங்குகிறது. பொதுமக்களை மீண்டும் கண்டு “ஐயா! அப்பா!’ என்று ஓட்டுக் கேட்க வேண்டுமே.”ஆமய்யா M.L.A, அங்கே போய் முன்பு அமர்ந்திருந்தீரே, என்ன சாதித்துவிட்டீர்?’’ என்று யாராவது கேட்டு விட்டால், “நமது மக்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள். ஆட்சியாளர்கள் தக்க பரிகாரம் தேடவேண்டும் என்று அடித்துப் பேசினேன் அன்பரே! இடித்துரைத்தேன் நண்பரே! இதோ”இந்து’’ பார்த்திடுக! இதோ “மித்திரன்’’ படித்திடுக!’’ - என்று எடுத்துக்காட்டி, இளித்து நிற்க இது உதவட்டும் என்பதற்காகவே இந்த M.L.A., இவ்விதம் சட்டசபையில் பேசினார் என்று ஏளனம் செய்யாதே, தம்பி! காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும். காங்கிரசாட்சியின்”கோணலை’ ஒரு காங்கிரஸ் பிரமுகர் எடுத்துக் கூறுகிறார் - எனவே இந்த ஆட்சியின் அவலட்சணத்தை நாம் வேண்டு மென்றே (நன்றி மறந்து!) கண்டிக்கிறோமென்று குற்றம் சுமத்துபவர்களின் வாய்க்கு ஆப்பாகவாவது இது பயன்படுமல்லவா? அந்தத் திருப்தி எனக்கு. திருநெல்வேலிச் சீமையே வளம் குன்றித் திண்டாடுகிறது - தேயிலைக் காட்டிலே பாடுபட்டு எலும்புந் தோலுமாகி, அந்தப் பிழைப்பின் வாயிலும் மண் விழுந்ததால் அவதிப்பட்ட மக்கள், வேறு வாழவழி கேட்டுக்கொண்டு வறட்சியால் வாட்டப்படும் நெல்லைச் சீமைக்கு வந்துள்ளனர். ஆட்சியாளர்கள் இந்த அவதி துடைத்திடுவோம் என்று உறுதி அளிக்கக் காணோம் - அதற்கான திட்டம் தீட்டுவதாகவும் தெரியவில்லை - அப்படி ஒரு பிரச்சினை இருப்பதை அவர்கள் ஒப்புக்கொள்வதாகவும் தெரியக் காணோம். "கோயமுத்தூர் ஜில்லாவில் மாத்திரம் 12-ஆஸ்பத்திரி களில் டாக்டர்கள் கிடையாது’’ என்று வி.கே. பழனிச்சாமிக் கவுண்டர் எனும் காங்கிரஸ் M.L.A. அதே சட்டசபையில் கூறுகிறார். கோவை மாவட்டம் காங்கிரசுக்குத் தேர்தல் செலவுக்குத் தயாராக இருக்கும் பணப்பெட்டி. தொழிலதிபர்களின் கோட்டம். இங்கு டாக்டரில்லா ஆஸ்பத்திரிகள்! இந்த வெட்கக் கேட்டை எடுத்துக்கூறத் துணிவு காங்கிரஸ் M.L.A-க்கு ஏற்பட்டது கண்டு எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி. "பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?’ என்று பாரதியார் பாடினார். ஆமாம், ஆமாம் என்று காங்கிரசாட்சி அறைகின்றது. பஞ்சம் ஒருபுறம், பதைத்தோடி வந்து பிழைக்க வழி கேட்கும் "பராரிகள்’ மற்றோர் புறம், நோய் நொடி நெளிவது வேறோர்புறம், என்று இப்படி நிலைமை இருக்கும்போது, மகிழ்ச்சியா பொங்கும்? என்று கேட்கத் தோன்றும், தம்பி! மகிழ்ச்சி பொங்குமா? பொங்காது! ஆனால் வேறொன்று பொங்கி வழிகிறது!! என்ன என்கிறாயா? இதோ கேள், மற்றோர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேசுவதை. "வீட்டுக்கு வீடு கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழில் விமரிசையாக நடந்து வருகிறது! சர்க்கார் தீவிர நடவடிக்கை எடுத்துக்கொள்ளாவிடில் காங்கிரஸ் ஸ்தாபனத்துக்குக் கெட்ட பெயர் வந்துவிடும்’’ என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாரிமுத்து என்பவர் பேசுகிறார். “சர்க்கார் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையோ’ என்றால், இது சம்பந்தமாக எடுக்கவில்லையே தவிர, வேறு”அதிமுக்கியமான’ ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறது; "கோட்டையிலே இளைப்பாற்றிக்கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவாய்’ விளங்கும் உதகமண்டலத்தில், ஒரு மகாராஜாவின் அரண்மனையப் பல இலட்ச ரூபாய் விலை கொடுத்து வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது!! வெள்ளையாட்சிக் காலத்தில், கோடையின்போது, “ஊட்டி’ செல்வர். இங்கு மேடையில்”கோடை இடி’ யெனக் காங்கிரசார் முழக்கமிடுவர், "கேளுங்கள் தேச மகா ஜனங்களே! இங்கு கொளுத்தும் வெய்யிலில், கால் கொப்பளிக்கும் நிலையில், கை புண்ணாகும் நிலையில், கண் பூத்துப் போகும் நிலையில், நாம் பாடுபடுகிறோம்; மண்டை பிளந்து போகிறது இங்கு; நமது வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கும் கொலைகாரக் கும்பல், கோடை தாக்காதிருக்க, ஊட்டிக்குப் போயிருக்கிறார்கள், உல்லாசமாகக் காலங் கழிக்க!! இதுவா தர்ம ராஜ்யம்? இதுவா இராம ராஜ்யம்!! - என்று வெளுத்து வாங்கினார்கள். கோடை இடிகள் கோலோச்சுவோராகிவிட்டனர்; இப்போது ஊட்டியில் ஆரன்மூர் அரண்மனையை வாங்க ஏற்பாடாகி வருகிறது. “ஊட்டியில் இந்த ஏற்பாடு நடைபெறுகிறது என்கிறீரே, ஊட்டியில் மதுவிலக்குச் சட்டம் தளர்த்தப் படுகிறதாமே, உண்மையா?’’ என்று தெய்வசிகாமணி எம்.எல்.ஏ. கேட்கிறார். அமைச்சர் கூறுகிறார்,”இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை’’ என்று. இப்படியாகத்தானே காங்கிரஸ் இராஜ்யபாரம், நடைபெற்றுக் கொண்டு வருகிறது; இந்தவிதமான ஆட்சியை “கேள்வி கேட்பாரற்ற’’ முறையிலே விட்டுவிடக் கூடாது, அடுத்த தேர்தலில் கடும்போட்டி இருக்கவேண்டும், ஜனநாயகத்துக்கு அப்போதுதான் சிறிதளவாவது வாய்ப்பு ஏற்படும் என்ற நோக்குடன், நமது கழகம் தேர்தலில் போட்டியிடத் திட்ட மிட்டாலோ,”எமது கண்ணுக்குக் கண்ணாக உள்ளவர் காமராஜர்; அவருக்கா எதிர்ப்பு? அடபாவிகளா! நீங்கள் நாசமாய்ப்போக!! கருவேப்பிலைக் கொத்துப்போல அவர் கிடைத்திருக்கிறார்!! அவருக்கு "உலை’ வைக்கலாமா?’’ என்று கேட்கின்றனர். திராவிட நாடு பிரிவினையை ஒப்புக்கொள்பவன் நண்பன்; இல்லை என்பவன் எதிரி! இதுதான் இனி ஒரே பிரச்சினை - என்ற பேச்சு "பழங்கதை’யாகிவிட்டது. இப்போது உள்ள ஒரே பிரச்சினை, உயிர்ப்பிரச்சினை, காமராஜர் மீண்டும் முதலமைச்சராக வேண்டும், அதை இந்த கண்ணாரக் காண வேண்டும் என்று கூறுகின்றனர். பஞ்சம் பட்டினி போக்காவிட்டாலும், சொந்த நாட்டான் பிச்சை எடுப்பதைக் கண்டு ஒரு சொட்டுக் கண்ணீர் விடாவிட்டாலும், சோற்றுக்கில்லாதானே! செத்துத் தொலை! என்று இலங்கையில் உள்ள சர்க்கார், தமிழனைச் சுட்டுத் தள்ளக் கண்டும் துளி பதறாவிட்டாலும், கள்ளச்சாராயம் பொங்கு வதையும் கள்ளமார்க்கட் பெருகுவதையும் கண்டும் காணாதது போலிருந்துவிட்டாலும், மீண்டும் காமராஜர் ஆட்சிதான் வரவேண்டும் என்று காங்கிரஸ்கட்சி கருதக் கடமைப்பட்டிருக்கிறது. "காங்கிரஸ் கட்சியானது இந்துமதக் கோவில்களிலுள்ள மண்டபங்களைப் போலிருக்கிறது. உள்ளே புகுந்தால் ஒரே இருள். வௌவால் புழுக்கை துர்நாற்றம். அண்ணாந்து பார்த்தால் வௌவால்கள் தொங்கிக்கொண்டிருப்பதைத் தவிர வேறெந்தக் கலையையும் காணமுடிவதில்லை. கோயில் மண்டபம் என்ற பக்திக்காக அதன் துர்நாற்றத்தை வெளியில் கூற வெட்கப்படுகின்ற பக்தர்போல், இன்றுஞ் சிலர் அந்தக் காலத்துக் காங்கிரஸ் ஆச்சே, அதைக் குறை கூறலாமா? என்று கருதிக்கொண்டு மூக்கைப் பிடித்துக் கொண்டு அந்த இருட்டு மண்டபத்திற்குள் இன்னமும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். திருட்டுக்கும் கொலைக்கும் தவிர ஆயிரக்கால் மண்டபம் வேறு ஏதேனும் நல்ல காரியத்துக்குப் பயன்படுகிறதா? காங்கிரஸ் கட்சியின் நிலையும் அதேதான். அந்த மண்டபத்துக்குள்ளிருந்து வருகிறவர்களைக் கண்டாலுமே யோக்கியர் சந்தேகப்பட மாட்டார்கள்’’ இது, தம்பி, பெரியார் கருத்து; விடுதலை மூலம் நாட்டுக்கு அளிக்கப்பட்டது. காமராஜர், அந்த மண்டபத்தில்தான் கொலுவீற்றிருக்கிறார்! பக்தர்கள்தான், வௌவால் புழுக்கையின் துர்நாற்றத் தையும் சகித்துக் கொண்டு, அந்த நாள் மண்டபம் எனப் பாராட்டுகிறார்கள்; நமக்குமா அதே நிலைமை? பக்தர்களே கூட, நாற்றம் அதிகமாகிவிட்டால், பதை பதைக்கிறார்கள் – மண்டபத்தைச் சுத்தம் செய்தாக வேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள். எல்லை குறைகிறதென்றால் “விடமாட்டேன்’’ என்று வங்கம் சீறுகிறது; பம்பாய் உங்களுக்கில்லை என்றால், மராட்டியர்”பார்க்கிறோமே ஒருகை’’ என்கிறார்கள்; குஜராத் தனி மாகாணமாக அமையாது என்றால், மந்திரியின் வீடு புகுந்து தாக்குகிறார்கள் குஜராத்திகள். இங்கு தேவிகுளம் பீர்மேடு, நெய்யாற்றங்கரை, கொச்சின் சித்தூர், செங்கோட்டையில் ஒரு பகுதி, பறிபோயிற்று! வந்தே மாதரம் - என்று வாளா இருந்துவிடச் சொல்லி விட்டார் காமராஜர். யாராவது வாய் திறந்தாலோ, அவர்கூட, நியாயந்தானே, உரிமை பறிபோனதால் மனம் குமுறுகிறார்கள் என்று கூறுவார் போலிருக்கிறது; மற்றவர்களல்லவா, "காமராஜர் மீது எதிர்ப்பு எழலாகாது’ என்கிறார்கள். ஆந்திர தமிழக எல்லைத் தொல்லைக்கு இன்று வரை பரிகாரம் காணோம். என்றாலும் கடை அடைப்புச் செய்து கண்டனத்தை காட்டினால், காலித்தனம் என்று கூறவும், மனம் இடம் தருகிறது! "காங்கிரசை இப்போது மட்டும், கடையனே! ஆதரிக்கவா செய்கிறோம். அது, ஐயா சொன்னது போல, வௌவால் புழுக்கை துர்நாற்றமடிக்கிற பாழ்மண்டபந்தான்; எங்களுக்கு அந்த மண்டபத்தின் மீது வெறுப்புத்தான்; எப்போதும் போல; ஆனால், காமராஜர் நல்லவர், இன உணர்ச்சி உள்ளவர், ஏதோ நாம் எண்ணுகிறபடி, சொல்லுகிறபடி, நல்ல காரியங்கள் செய்து வருகிறார். எனவேதான் மீண்டும் அவர் வரவேண்டும் என்று ஆதரிக்கிறோம்; இது புரியவில்லையா?’’ என்று கேட்டுக் கெக்கசெய்யும் தோழர்கள் இருக்கிறார்கள். தம்பி! காமராஜர், தமது இன உணர்ச்சியை எந்த வகையில் காட்டிக்கொண்டு வருகிறார் என்று கூடக் கேட்க வேண்டாம் - பொதுஜன நன்மையை உத்தேசித்து அதற்குப் பதில் அளிக்கக்கூடாது என்று கருதிக் கொண்டிருக்கக் கூடும் - வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம், இன உணர்ச்சி கொண்டவர் என்பதை; ஆனால் காங்கிரஸ் தலைவரோ, முதலமைச்சரோ, இன உணர்ச்சி கொண்டவராக, அதன்படி நடந்து கொள்பவராக இருந்து விட்டால், அந்தக் காரணத்துக்காக, காங்கிரசை எதிர்க்காதிருக்கலாமா? என்பதுபற்றி எண்ணிப் பார்த்திட வேண்டுமல்லவா? இதற்கும் எனக்குத் துணை "பெரியாரின் பேரகராதி’ தான் இன உணர்ச்சியில் ஒமந்தூர் ரெட்டியாரவர்கட்கு இணையான நீதிக்கட்சித் தலைவர் ஒருவர்கூட இல்லை யென்று நாம் வெட்கமின்றி ஒப்புக் கொள்ளவும் தயாராயிருக்கிறோம். பழைய ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைவிட அதிகமான இன உணர்ச்சி கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் இருக்கின்றனர் என்பது பற்றி நாம் பெருமைப்படுகிறோம். ஆயினும் காங்கிரஸ் ஒழிப்பு நாள் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? 1. காங்கிரஸ் இயக்கம் ஏழைகள் - பாட்டாளிகள் ஆகியோருக்குக் கேடு செய்யும் இயக்கம். 2. காங்கிரஸ் இயக்கந்தான் தென்னாட்டை வடநாட்டு முதலாளிகளுக்கு அடமானம் வைத்திருக்கிறது. 3. காங்கிரஸ் இயக்கந்தான் ஜாதிகளையும் மதங்களையும் கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறது. 4. காங்கிரஸ் இயக்கந்தான் தென்னாட்டுக் கலாச்சாரத்தை அழித்து வருகிறது. இதைவிடத் தெளிவாக என்னால் கூற முடியாது! தம்பி, இது தெளிவளிக்காவிட்டால், தெளிவு பெறக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டு திட்டமிட்டுக் காரியம் நடக்கிறது என்பதுதானே பொருள். தம்பி! ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்த நாட்களில், உனக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன், மறதி உள்ளவர்களுக்கு நினைவூட்டு, அவர், கதர்ச் சட்டைப் பெரியார், கருப்புச் சட்டை நண்பர் என்றெல் லாம் பெயரெடுத்தார். அச்சம் தயை தாட்சணிய மற்ற நிர்வாகி பார்ப்பன மேலிட மிரட்டலுக்குப் பணியாத விவேகி வடநாட்டு மத்ய சர்க்காரிடம் வாதிடத் துணிந்த அஞ்சா நெஞ்சர் என்றெல்லாம், போற்றிப் புகழப்பட்டவர். தர்மமும், நேர்மையும் அதே போது நெஞ்சுஉரமும் அவர் ஆட்சியில் கொலுவிருந்தன என்று நாமே பேசியிருக்கிறோம். அவருடைய பழைமை உணர்ச்சி, பக்தி, ஆகியவை கூட, பசப்பு அல்ல, சுயநல நோக்கமுடையதல்ல என்று பாராட்டினோம். அந்த நாட்களிலே, வடநாட்டுப் பத்திரிகைகள், சென்னையை ஆட்சிபுரிவது, பெரியார் கட்சிதான் - ஓமந்தூரார் அதற்கு ஒரு திரை - கருவி என்று எழுதின. அப்போது "நாம்’ ஒன்றாக இருந்த காலம். எனக்கு, “இந்தி எதிர்ப்பு நடத்தும்”சர்வாதிகாரி’ பட்டம் கிடைத்த நேரம். "சிட்ரன்’ கார் சவாரியும், மீரான் சாயபுத் தெரு மாளிகையில் ஒரு அறையும், விருந்துபசாரமும், சினிமா செல்வதற்குக்கூடப் பணமும், பெரியார் மூலம் அன்புடன் தரப்பட்டு வந்த காலம். பழம் பெருமையை எண்ணி ஏங்க அல்ல, இதைக் கூறுவது; அந்த நாட்களில், அப்படிப்பட்ட ஓமந்தூரார் என்று நாம் பாராட்டிய போதிலும், அவர் நல்லவர், ஆகையால் அவருக்காக, வௌவால் புழுக்கை துர்நாற்றத்தைச் சகித்துக்கொள்ள வேண்டுமா என்று கேட்டோம் என்பதை எடுத்துரைக்கத்தான். இன உணர்ச்சி இருக்கலாம் - இருக்கிறது ஓமந்தூராரிடம்; என்றாலும் காங்கிரசில் அல்லவா இருக்கிறார் - என்று நாட்டு மக்களைப் பார்த்துக்கேட்டோம் - இஃதல்லவா கொள்கை உரம் என்று நேர்மையாளர்கள் பாராட்டினர். அண்ணா! இது சரி, ஆனால், ஓமந்தூரார், “வைதீகப் பிடுங்கல்’ நமது”சுயமரியாதைக்’ கிளர்ச்சிகளுக்கு வைரியாக இருந்தவர், காமராஜர் அப்படி அல்ல; நாம் இவருடைய ஆட்சியில், எத்தனை புரட்சிகரமான சுயமரியாதைக் கிளர்ச்சியும் செய்யலாம், இடம் தருகிறார்’’ என்று வாதாட எண்ணுவாய் தம்பி! இதுவும் சரியான வாதமல்ல - ஏனெனில், காமராஜரும் இப்போது கோயில் கோயிலாகச் செல்கிறார். கோயில் கோயிலாகச் சென்றுகொண்டிருந்த ஓமந்தூரார், மடாதிபதிகளின் ஆதிக்கத்துக்கே உலைவைக்க அஞ்சா நெஞ்சுடன் அன்று கிளம்பினார். எத்தனை பெரிய சுயமரியாதைக் கிளர்ச்சிக்கும் இடம் தருபவர் இந்தக் காமராஜர் மட்டுமல்ல; ஆச்சாரியார் காலம், பிள்ளையார் உடைத்த நேரம். எனவே, இந்த சர்ட்டிபிகேட் தந்து, காமராஜருக்கு ஆதரவு திரட்டுவதிலும் அர்த்தமில்லை. மற்றோர் உண்மையையும், அறிந்து வைத்துக்கொள் தம்பி, குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்த நாட்களில், (13-10-51) பத்திரிகை நிருபர்கள் அவரை அணுகி, "திராவிட கழகத்தார் கோயில்கள் முன்பு கூட்டம் போட்டுக் கடவுள்களை பரிகசிக்கிறார்களாமே இதைத் தடுக்க முடியாதா?’’ என்று கேட்டனர், அதற்கு குமாரசாமி ராஜா, என்ன சொன்னார்? எந்தப் பத்திரிகை, நிருபராவது, காமராஜரிடம் இந்தக் கேள்வி கேட்டால், "போங்க, போங்க, வேறே வேலையே கிடையாதா உங்களுக்கு? உங்க கோயிலும், உங்களோட சாமிகளும் மகாலட்சணந்தான்! திட்டினா என்ன தீயா பிடிச்சுவிடும்’’ என்று கேட்டு, கேள்வி கேட்டவர்களைத் திக்குமுக்காடச் செய்துவிடுவார் என்று பதில் கூறுவதற்குத் துடிப்பவர்கள் என் மனக்கண்முன் தெரிகிறார்கள். குமாரசாமி ராஜா, இன உணர்ச்சி ததும்பும் உள்ளத்தினர், நம்மவர் - அவர் நமது ஆதரவினைப் பெற்றுத் தீர வேண்டியவர் - என்று நாம் கூறினது கூட இல்லை; எனினும், தம்பி, நிருபர்களிடம் அவர் என்ன பதிலளித்தார்? "திராவிட கழகத்தினர் கடவுள்களைத் திட்டுவதுபற்றி யாதொரு நடவடிக்கையும் சர்க்கார் எடுக்க முடியாது. கோயிலுக்குச் செல்லும் தனிப்பட்டோரை பரிகசித்தாலே நடவடிக்கை எடுக்க முடியும்’’ இப்படித்தான் சொன்னாரே தவிர, "பக்தர்காள்! அஞ்சற்க! நாம் இந்தப் பாவிகளை அழித்தொழித்து விடுகிறோம்’’ என்று கூறவில்லை. இதற்கு முன்பு நமக்கு முதல் அமைச்சராக வாய்த்திருந்தவர்களெல்லாம், வைதீகப் படைத் தளபதிகளாக இருந்து, சுயமரியாதை இயக்க நடவடிக்கைகளை நொறுக்கித் தள்ளியது போலவும், காமராஜர் மட்டும்தான், வைதீகர்களுக்கு இடமளிக்காமல், சுயமரியாதைக் கிளர்ச்சிகளுக்குப் பாதுகாப் பாகத் தமது ஆட்சி அதிகாரத்தைத் துணை தருவதுபோலவும் வாதிடுவது, அவரிடம் பிறந்துவிட்ட வாஞ்சனையைக் காட்டுகிறதே தவிர, வேறொன்றுமில்லை. குமாரசாமி ராஜா, இன்னும் தெளிவாகவே கூறினார்: "மதச் சார்பற்ற சர்க்காரில் மதத்தைக் கண்டித்துப் பேசுவதைத் தடுக்க முடியாது. கோவிலுக்குமுன் ஒரு கட்சிக்குக் கூட்டம்போட இடமளிக்கையில், மற்றொரு கட்சிக்கு மட்டும் மறுக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொதுக் கூட்டம் போடக் காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி அளித்தபிறகு, அதே இடத்தில் கூட்டம் போடத் திராவிட கழகத்துக்கோ, இதர கட்சிக்கோ, அனுமதி மறுக்க முடியாது’’ இதைவிட, தம்பி, காமராஜர் போக்கிலே என்ன புதுமை, புரட்சி, நேசம், பாசம், காண்கிறோம்!! குமாரசாமி ராஜா ஓமந்தூரார் ஆகியோர் நல்லவர்கள் - நேர்மையாக நடந்து கொண்டவர்கள் என்பது கண்டோம் - எனினும், அப்போது, "தென்னாட்டான் தன் நாட்டுக்குச் செய்யவேண்டிய முதல் தொண்டு காங்கிரசை ஒழிப்பதுதான்!’’ என்று அழுத்தந்திருத்தமாக விடுதலை எழுதக் கண்டு, தம்பி, நீயும் நானும் தோள்தட்டிக் கொண்டு கிளம்பினோம், காங்கிரசை எதிர்க்க, கவனமிருக்கிறதல்லவா!! ஏனெனில், நமக்கு "விடுதலை’ எடுத்துக் காட்டிற்று, அவருக்கு இன உணர்ச்சி இருக்கலாம், இவர் நேர்மையாளராக இருக்கலாம், ஆனால் அதற்காக நாம் மயங்கிவிட முடியாது, வௌவால் புழுக்கை துர்நாற்றத்தைச் சகித்துக் கொள்ள முடியாது என்று அறிவூட்டியது. காங்கிரஸ் கட்சி பிர்லாகட்சி, டாட்டா கட்சி, முத்தைய்யா செட்டியார் கட்சி - வடபாதிமங்கலம் கட்சி. காங்கிரஸ் கட்சி பிராமணப் பாதுகாப்புக்கட்சி - வட நாட்டுச் சுரண்டலை ஆதரிக்கிற கங்காணி கட்சி. காங்கிரஸ் கட்சி அடக்குமுறை ஒன்றையே நம்பி வாழ்கின்ற பணநாயக் கட்சி. என்று அன்று "விடுதலை’ எழுதிய நிலையில்தான் இன்றும் காங்கிரஸ் இருக்கிறது. அந்தக் காங்கிரஸ் வெற்றி பெற்றுத்தான் காமராஜர் முதலமைச்சராக வேண்டும். அந்தக் காமராஜர் வெற்றி பெற்று முதலமைச்சராக வேண்டும் என்று, “வௌவால் புழுக்கையின் துர்நாற்றத்தை எப்படிச் சகித்துக் கொள்வது’’ என்று கேட்ட”விடுதலை’ இன்று வாதாடுகிறது. "பேரகராதி’யைப் பார்க்கிறேன் - திடுக்கிட்டுப் போகிறேன். தம்பி! என்னைப் பற்றி இழித்து எழுதுவது கண்டு நீ, வருத்தப்பட்டு, எனக்கு ஆறுதல் கூறுகிறாய். எனக்கு நிச்சயமாக என்னைப்பற்றி எழுதப்படுகின்ற இழிமொழி பற்றி எரிச்சல் கிளம்புவதில்லை. எனக்கு இருக்கிற ஒரே திகைப்பு, வௌவால் புழுக்கையின் துர்நாற்றம் சகிக்க முடியவில்லை என்றல்லவா, பேரகராதி எழுதிற்று… இப்போது…? என்று எண்ணித்தான், திடுக்கிட்டுப் போகிறேன். உனக்கு எப்படி இருக்கிறதோ? ஊரார் என்ன எண்ணுகிறார்களோ! அன்பன், 26-8-1956 "மிருக ஆட்சி’’ தேர்தலும் காங்கிரசும் - "விடுதலை’’யும் காமராசரும் - காங்கிரசாட்சியின் கொடுமை. தம்பி! போஸ்டர் வேண்டுமா, போஸ்டர்! கண்ணைக் கவரும், கருத்தைக் கிளறும்! காங்கிரஸ் ஒழிப்பிலே கவலைகொண்ட பெரியவர்களே! இளைஞர்களே! போஸ்டர் தயாரித்திருக் கிறோம். "காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள்’ என்று அழகாக அச்சடிக்கப்பட்ட போஸ்டர் - இலட்சக் கணக்கிலே உள்ளன - அடக்க விலை - ஆதாயம் கருதிப் போடப்பட்டதல்ல - வியாபார நோக்கத்துடன் வெளியிடப்பட்டதல்ல - நாட்டைக் கேடர்களிடமிருந்து மீட்டிட நல்லறிவுப் பிரசாரம் நடாத்துவதற்காகவே, பொருள் நட்டம், நேரக்கேடு, எதனையும் பொருட்படுத்தாது, இதனை வெளியிடுகிறோம். ஆயிரக் கணக்கிலே வாங்குங்கள் - விலை மலிவு - பல்லாயிரக் கணக்கிலே வாங்குங்கள் - பட்டி தொட்டி களிலுள்ளோரும் வாங்குங்கள் - வீடுதோறும் ஒட்டிவையுங்கள் - ஓட்டு கேட்க வரும் காங்கிரசாரை ஓட்டுங்கள். காங்கிரசார் கண்களிலே, எந்தப்பக்கம் திரும்பினாலும் இந்தப் போஸ்டர்கள் படவேண்டும் - நாடே நமக்கு விரோதமாக இருக்கிறது - ஊரார் அனைவரும் ஒன்று கூடிவிட்டார்கள் நம்மை விரட்ட என்று கிலிகொண்டு, அவர்கள் பிடரியில் கால்பட எடுக்க வேண்டும் ஓட்டம் - அதற்கு உதவக்கூடிய போஸ்டர், வாங்குங்கள் ஒட்டுங்கள்! ஆயிரம் ஐந்தே ரூபாய்! கருப்பு மையில் அச்சிடப்பட்டது, கண்கவரும் வனப்புள்ளது. நாலரை அல்லது ஐந்து அங்குல அகலம் இருக்கும் பதினெட்டு அங்குல நீளம்! புரட்சிகரமான தோற்றம் தேடுவோர், சிகப்பு மையில் அச்சிடப்பட்ட போஸ்டர்களை வாங்கலாம் - விலை சிறிதளவுதான் கூடுதல் - ஆயிரம் 7-ரூபாய்தான்! காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள் - என்ற இந்த அறிவுரைத் தாட்களை அனைவரும் ஆயிரக் கணக்கிலே வாங்கி, ஊரெங்கும் ஒட்டி, திராவிட நாட்டுக்கு ஆபத்து வராதிருக்க நம்மாலான நல்ல தொண்டு செய்தோம் என்ற மனத்திருப்தியும் மகிழ்ச்சியும் பெறுங்கள். இந்தச் சிறு காரியத்தைக்கூடச் செய்யத் தவறுபவர்களை, நாம் எப்படித் திராவிட மக்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்? இழி ஜாதி மக்கள், ஈனப் பிறவிகள், காலித்தனத்தால் கூலித்தனத்தால் வயிறு கழுவும் வக்கற்ற மக்கள், என்று உலகு நாளைக்குக் கூறும். எனவே போஸ்டர் வாங்குங்கள், பொன்னான வாய்ப்பு, புனிதமான கடமை, பொறுப்பு உணர்ந்தோர் செய்து தீரவேண்டிய தொண்டு - காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள் - என்ற போஸ்டர்களை வாங்கி எங்கும் ஒட்டி வைப்பதுதான். என்ன அண்ணா! இது! காங்கிரஸ் ஒழிப்புக்கான போஸ்டர் வெளியிடுகிறோம், விலை கொடுத்து வாங்கி ஊரெல் லாம் ஒட்டு என்றால் ஒட்டுகிறோம் - அதற்காக, வாங்காதவர்கள், ஈனப் பிறவிகள் - இழி ஜென்மங்கள் என்றெல்லாம் சுடுமொழி கூறுகிறாயே, இதென்ன; என்றைக்குமில்லாத முறையில் இருக்கிறதே என்று சிறிதளவு கோபத்துடன் கேட்க எண்ணுகிறாய் அல்லவா? தம்பி! சுடுசொல் கூறுபவனா நான் - உன்னையா நான் சுடுமொழியால் தாக்குவேன்? என் மொழியும் அவ்விதம் இராது - என் வழியும் அது அல்லவே! விஷயத்தைச் சொன்ன பிறகல்லவா உனக்கு உண்மை துலங்கும், கேள். சென்ற பொதுத்தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி எப்படியும் ஒழிக்கப்பட்டாகவேண்டும்; அதிலே ஒரு சில கண்ணியவான்கள், ஓமந்தூரார் போன்ற உத்தமர்கள் இருந்தாலும் கவலைப்படுவதற்கில்லை, அந்த ஸ்தாபனம்’ ஒழிக்கப்பட்டாக வேண்டியது மிக மிக அவசரமான கடமை, அதிலிருந்தும், அணுவளவும் பிசகுவது கூடாது, அச்சம், தயை தாட்சணியம் - முன்பின் தொடர்பு எதுவும் குறுக்கிடக் கூடாது என்று வீரவேசமாகத் திராவிடர் கழகம் சீறிப் போரிட்டபோது, விடுதலைக் காரியாலயம், காங்கிரசை ஒழித்துக் கட்டுங்கள் - காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று மக்களுக்கு அறிவு விளக்கம் தர, அவர்களை ஆண்மையாளர்களாக்க, கருப்பிலும் சிகப்பிலும் போஸ்டர்கள் பல இலட்சம் வெளியிட்டு, விற்பனை செய்தார்கள் - அதை நினைவூட்டுகிறேன் - உனக்கு மட்டுமல்ல - அவர்களுக்கோ என்று கேட்டு விடாதே, அவர்களுக்கு நான்தரும் கரும்பும் கசக்கும் - நாட்டவருக்கு நினைவூட்டுகிறேன். அன்று காங்கிரஸ், எந்த அளவுக்கு, வெறுக்கப்பட வேண்டிய, ஒழிக்கப்படவேண்டிய, கேடான "ஸ்தாபனமாக’ இருந்ததோ, அதிலே ஏதேனும் ஒரு துளி மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? நாமெல்லாம் வாழ்த்தி வரவேற்கத்தக்க, அல்லது சகித்துக்கொள்ளத்தக்க விதமான அமைப்பாக, காங்கிரஸ் மாறிவிட்டதா? பார்ப்போம் - இந்த ஒரு தடவை இருந்து தொலைக்கட்டும் - என்று கூறத்தக்க, மனநிலையை நாம் பெறுவதற்கான திட்டங்களை, காங்கிரஸ் நாட்டுக்கு அளித்திருக்கிறதா? என்பன போன்ற எண்ணங்கள் என் மனதைக் குடைகின்றன, மனமென்ற ஒன்று இருந்து தொலைப்பதால்! சென்ற பொதுத் தேர்தலின் போது இருந்ததைவிட, எல்லாத்துறைகளிலும், காங்கிரஸ், கேடு தருவதாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. சிறையிலே தள்ளிச் சித்திரவதை செய்வதிலும், தெருவில் செல்வோரைத் துரத்தித் துரத்தி அடிப்பதிலும், மிரண்டு ஓடுவோரைச் சுட்டுக் கொல்வதிலும், காங்கிரஸ் பயங்கரமான பயிற்சி பெற்றுவிட்டிருப்பது காண்கிறோம். இன்று எந்த இடத்தில் துப்பாக்கிப் பிரயோகம், ஊரடங்கு சட்டம், எந்த இடத்தில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டனர் என்று வெளியிடப்பட்டிருக்கிறதோ என்ற பயத்துடன் தான், நாளிதழ்களைப் பிரித்துப் படிக்க வேண்டி இருக்கிறது. சென்ற பொதுத் தேர்தலின் போது, காங்கிரசாட்சியினால் விழுந்த பிணங்களின் எண்ணிக்கையைக் கூறினோம் - இந்தத் தடவை கூறும்போது, முன்பு எவ்வளவோ மேல் என்று சொல்லத்தக்க விதமாகத்தான் இப்போதைய ஆட்சி அலங்கோலம் இருக்கிறது. மக்களின் "வாழ்வு’ முன்பு இருந்ததைவிட, இப்போது மோசமாகி இருக்கிறது. தொழில் வளம் - தென்னாட்டைப் பொறுத்தமட்டில், இந்த ஐந்தாண்டுகளில் எந்த விதத்திலும் வளர்ச்சி அடைய வில்லை. இதனைச் சிற்சில சமயங்களில் காங்கிரஸ் அமைச்சர்களே கூறி அழுகிறார்கள். இவை எதனையும் மறுத்திடவுமில்லை. ஆனாலும், காமராஜர் நல்லவர், அவர் மறுபடியும் ஆட்சிபுரிய வேண்டும் ஆகவே அவருடைய வெற்றிக்காகத்தான் வேலை செய்யப் போகிறோம். அவர் வெற்றிபெறுவது, தமிழர்களுக்கு ஒரு "வரப் பிரசாதம்’ என்று எண்ணுகிறோம் என்பதாகக் கூறுகிறார்களே, இவர்களேதான் ஆயிரம் ஐந்து ரூபாய் என்று போஸ்டர் போட்டு நாட்டவருக்குக் கொடுத்தார்கள். இப்போது ஒரு சமயம், காங்கிரசை மறவாதீர்கள்! ஓட்டுகளைக் குவியுங்கள்! என்று போஸ்டர் போடவேண்டிய நிலைமை வருகிறதோ, அல்லது. நாடு வாழ மாடு வேண்டும் மக்கள் ஓட்டு மாட்டுப் பெட்டிக்கே! காளைமாட்டுப் பெட்டி காமராஜர் வைக்கும் பெட்டி என்று விதவிதமான போஸ்டர்கள், பச்சை, நீலம், ஊதா கலர்களில் வெளியிட்டு விற்பனைக்குத் தரப்படுமோ என்னமோ, யார் கண்டார்கள்! இல்லை, அண்ணா! அப்படி எல்லாம் போடமாட்டார் கள், கூச்சமாக இருக்குமல்லவா, வேண்டுமானால், நம்மீது உள்ள வெறுப்பைக் காட்டுகிற முறையில். கண்ணிர்த் துளிக்கு வேட்டு காமராஜருக்கே ஓட்டு என்று வெளியிடக்கூடும் - அல்லது இன்னமும் இழிமொழி அழகுடன் வெளியிடக்கூடும் என்று கூறுவாய்; எவ்விதமான முறையைக் கையாண்டாலும், தம்பி நாடும் நாமும், காங்கிரஸ் குறித்து, பெரியார் கொண்டுள்ள கருத்து என்ன என்பதை எப்படி மறந்து விடமுடியும். அவர் என்ன, பட்டும்படாதது மாகவா, கூறியிருக்கிறார். பொறி பறக்கப் பறக்கப் பேசி இருக்கிறார் - பசுமரத்தாணி போலல்லவா பதிந்திருக்கிறது. நான் கூடச் சில வேளைகளில், ஏன் வீணான தொல்லை, சஞ்சலம், சங்கடம், சிக்கல் - காங்கிரசே வந்து தொலைந்து போகட்டுமே, நமக்கென்னவென்று இருந்துவிடுவோமே, நாம் எதற்கு வம்புதனை விலைகொடுத்து வாங்குவதுபோல, தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நின்று இடர்ப்படவேண்டும், என்று சலிப்புடன் எண்ணிக்கொள்வதுண்டு. ஆனால் அடுத்த கணமே அவருடைய உருவம் தோன்றும் மனக்கண்முன்பு, "அடே அறிவிலி! எவ்வளவு இடித்திடித்துக் கூறினேன் - எத்துணை அருமையான காரணம் காட்டினேன், காங்கிரஸ், ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்று; இவ்வளவும் கேட்டுவிட்டு, இனியும் இளித்தவாயனாவதா? காங்கிரசை எதிர்த்து நிற்கும் ஆற்றலை எவ்வளவு தந்தேன் - எங்கே போயிற்று அந்த ஆற்றல்! விழலுக்கு இறைத்த நீராயிற்றா என் அறிவுரை விளக்கம்!’’ என்று கேட்டுக் கேலிசெய்கிறதே, என் செய்வேன்? இதோ கேளேன், தம்பி, ஒரு விளக்கம் - அவர் அருளியது: "காங்கிரஸ் ஒழிந்த ஒரே வருடத்தில் பட்டினி என்று பரிதவிக்கும் பாமர மக்களைப் பார்க்கவே முடியாதே! கஞ்சியின்றிப் பிச்சை எடுத்துத் திரியும் தொழிலாள நெசவாளி மக்களைக் காணமுடியாதே!’’ என்னென்ன இன்ப அலைகள் நெஞ்சில் கிளம்புகிறது, இந்த அரசியல் விளக்கம் கேட்கும்போது. பாமரன் பட்டினி கிடக்கமாட்டான். பாட்டாளிக்குத் துன்பம் இல்லை! இதைவிட "வெற்றி’ வேறு என்ன காணமுடியும்? இந்த இன்ப நாள் காணக் காங்கிரஸ் ஒழியவேண்டும், என்கிறார் - காங்கிரஸ் ஒழிந்த ஒரே வருடத்திலே, இந்த இன்பநிலை ஏற்படும் என்று கூறுகிறார். இதை எண்ணத்தில் பதிய வைத்துக்கொண்டானபிறகு, காங்கிரசை எதிர்க்காமலிருக்க முடிகிறதோ!! உன்னாலும் என்னாலும் முடியவில்லை!! காமராஜர் நல்லவர், ஆகவே, இப்போதைக்கு, காங்கிரஸ் ஒழிப்பு வேலையை நிறுத்திவைக்க லாம் என்று வாதிட முடிகிறது அவர்களால், நமக்கோ அந்த வாதம், மயக்கமளிக்கிறது. காரணம் காட்டும்போது, கசடனே! நீ, பழங்காலப் பேச்சையே, புட்டுப்புட்டுக் காட்டிக்கொண்டு கிடக்கிறாயே, சரியாகுமா? நல்லவர் நம்மவர் என்று பெரியாரால் பரிவுடன் அழைக்கப்படும் பேறு பெற்றவர், காமராஜர், ஆட்சி புரியக் கண்டு உளம்மகிழ்ந்தோம், அவருடைய ஆட்சித் திறமையால் ஏற்பட்ட நன்மைகள் பலப்பல, மறுபடியும் அவர் ஆட்சி ஏற்படின் இன்னும் எண்ணற்ற நன்மைகள் கிடைத்திடும் - எனவே தான், இப்போது “புதிய போர்முறை’ வகுத்திருக்கிறோம் - நீ சுத்தக்”கர்நாடகமாக’ இருக்கிறாயே, எப்போதோ அவர் சொன்ன அந்தப் பழைய விஷயத்தைக் கிளறிக் கொண்டிருக்கிறாயே, இப்போது புதிய நிலைமை, புதிய காரணம், எனவே புதிய முறை, இதனைப் புரிந்துகொள் என்று சிலர் கூறிடக் கேட்டிருப்பாய். காரணம் என்ன கூறப்பட்டாலும், கடமையிலிருந்து துளியும் தவறாதே! துரோகம் இழைக்காதே! என்று பெரியார் எச்சரித்திருக்கிறார் -மிகுந்த கோபத்துடன், சாபமிடுவதுபோலப் பேசியிருக்கிறார் - அது என் நினைவிலே நின்று, வாட்டுகிறது, வதைக்கிறது, தவறி நடக்காதே என்று எச்சரிக்கை செய்கிறதே, நான் என்ன செய்யமுடியும். நாட்டுக்குத் துரோகம் திராவிட மக்களுக்கு துரோகம். தகப்பன், தாய், பெண்டு பிள்ளைக்குச் செய்யும் தீங்கு. எது? காங்கிரசுக்கு யாராவது ஒரு ஓட்டு போடுவார்களானாலும் கூட, இத்தனை "பாபமும்’ பற்றிக்கொள்ளும் என்று பெரியார் கூறியிருக்கிறார். காரணம் கூறினால் போதாது என்கிறார். ஒரு ஓட்டுப்போட்டாலும் கெட்டுவிடும் காரியம் - துரோகப் பட்டியலில் உன் பெயர் இடம்பெற்றுவிடும் என்கிறார். அவர் கூறும் அறிவுரை முழுவதையும், கேள், தம்பி, கேள். "ஒவ்வொருவரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் காங்கிரஸ் பெட்டியில் ஓட்டுப் போடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. இதை மறந்து யாராவது ஒரு ஓட்டுக்கூட போடுவார்களானால் அது இந்த நாட்டுக்குச் செய்த துரோகம் மாத்திரமல்ல, திராவிட மக்களுக்குச் செய்கிற துரோகம் மாத்திரமல்ல, ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தன் தகப்பன் தாய், பெண்டு பிள்ளைகளுக்குச் செய்யும் பெருந்தீங்கு’’. இவ்வளவு கடுமையாக அவர் எச்சரித்திருக்கும்போது, காமராஜர் நல்லவர் என்று ஒரு காரணம் காட்டி, காங்கிரசை எதிர்க்காமலிருக்கவேண்டும் என்று எப்படித் தம்பி, நான் உனக்குக் கூறமுடியும் - நாடு நகைக்காதா? நல்லோர் கை கொட்டிச் சிரிக்கமாட்டார்களா? நாட்டு மக்களிலே, பொதுநல நோக்கமற்றோர் சிலர், காங்கிரசைச் சுயநலம் கருதி ஆதரித்து மீண்டும் காங்கிரசாட்சி ஏற்படவழி செய்து விடுவார்களோ என்ற கவலை கலக்கும் நிலையில், பெரியார், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது நாட்டுக்கு எத்துணை பெரிய நாசம் என்பதை எடுத்துரைத் திருக்கிறார் - தம்பி - கேட்டால் நடுக்கம் பிறக்கும் உனக்கு - காங்கிரசாட்சியை எதிர்த்திட கல்லுருவும் உயிர்பெற்று எழத் துணியும் என்று கூட, கற்பனை அலங்காரத்துடன் பேசுவாய். "நம்மைப் பொறுத்தமட்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆதிக்கத்திற்கு வருவதைவிட, உலகப் போர் வந்து, இந்தியாவின் பெரும் பகுதி மக்கள் அணுகுண்டுக்கு இரையாகி மடிவதே சிறந்த முடிவு என்போம். சித்திரவதைக் காட்டிலும், திடீர் மரணம் மேலான தல்லவா?’’ சித்திரவதை! காங்கிரசாட்சி மீண்டும் ஏற்படுவது, மரணத்தினும் கொடியது என்றாலும், அவர் எம்மிடம் சிரித்துப் பேசுகிறார், ஆகவே, இந்தத் தடவை சித்திரவதையைச் சகித்துக் கொள்ளும்படி செந்தமிழ் நாட்டவருக்குக் கூறுவோம் வாரீர் என்று நாட்டு மக்களை அழைத்திட என்னால் எப்படித் தம்பி முடியும்! அவர்கள் அழைக்கிறார்கள்! நான், முன்பு பெரியார் காங்கிரஸ் குறித்துச் சொன்னதை மறவாமலிருக்கிறேன் - மாற மறுக்கிறேன். காங்கிரஸ்காரர்கள் ஆளத் தகுதியற்றவர்கள்; அவர்களுக்கு நிர்வாகத் திறமையில்லை. காங்கிரசின் பெயரைச் சொல்லிக் கொண்டு, காந்தியின் பெயரைச் சொல்லிக்கொண்டு, கதர் வேஷம் போட்டுக் கொண்டு ஏமாற்றுகிறவர்கள், ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு-மக்கள் அரசாங்கம் என்று சொல்லிக்கொண்டு பதவி வேட்டை ஆடுகிறவர்கள், மக்களுடைய கருத்தை அலட்சியம் பண்ணிவிட்டுத் தங்களுடைய விருப்பப்படி அதிகாரம் செலுத்த ஆசைப்படும் எதேச்சாதிகார வெறியர்கள்’’ அந்த வெறியர்களிலே வேண்டியவர்கள் - வேண்டாதவர் கள் என்று பாகுபாடு என்ன தேவைப்படுகிறது. பெரியாரின் "பாஷை’யில் கேட்கிறேன், எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? காமராஜர் நல்லவர். என்கிறார்கள் - எனக்குப் பெரியார் பேசும் அந்தப் பழமொழி நினைவிற்கு வருகிறது. நேருவுக்கு வலது கரம், பார்ப்பனப் பாதுகாவலர், முதலாளிக்கு இரும்புத்தூண், அடிதடியாட்சிக் கர்த்தா, கொலைபாதக ஆட்சிக்கு உடந்தையானவர். இவை, காமராஜருக்கு விடுதலை சூட்டிய பட்டங்கள். முன்பு தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் நின்று காமராஜர் வெற்றி பெற்றார் - அப்போது அவர் தோற்க வேண்டும் என்பதற்காகப் பட்டபாடு வீணானது கண்டு, மனம் வெதும்பி “எப்படிப்பட்ட”ஆசாமி’ வெற்றி பெற்று விட்டார், ஐயோ! தமிழகமே! உன் கதி இதுவாகவா போக வேண்டும்’’ என்று கொதித்தெழுந்து கேட்டு, விடுதலை தீட்டிற்று. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரை - அடிதடியாட்சிக்குக் காரண மாயிருந்த தலைவரை - எதிர்க்கட்சிக் காரர்களைச் சுட்டுக் கொன்ற கொலைபாதக ஆட்சிக்குக் காரணமாயிருந்த கட்சித் தலைவரை தோற்கடித்து உலகப்புகழ்பெற வேண்டுமென்று கருதியிருந்த தமிழர்கள் ஏமாந்து விட்டனர். இராவணீயம் தோற்றுவிட்டது; விபீஷணத்தும் வெற்றி பெற்றுவிட்டது.’’ தம்பி! இப்போது இந்த விபீஷணத்துவ வெற்றியிலே தான் தமிழரின் நல்வாழ்வே இருக்கிறது என்று எடுத்துக் கூறுகிறார்கள் - நியாயந்தானா? விபீஷணன், இராவணனாகி விடவுமில்லை; விபீஷணன் இராவணன் ஆகியோர் பற்றி கொண்டுள்ள கருத்தும் மாற்றிக் கொள்ளப்படவில்லை; ஆனால் திருவில்லிபுத்தூரில் வெற்றி பெற்ற காமராஜர், விபீஷணர்; இன்று அவர் தமிழர் தலைவர் ஏன்? ஏன்? திருவில்லிபுத்தூரில் வெற்றி பெறுவதற்காகக் காமராஜர் ஊரூர் சுற்றி ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது. அவர் எப்படிப்பட்டவர் என்பதுபற்றி விடுதலையில் "விமர்சனம்’ வெளிவந்தது. அதையும் கொஞ்சம் பார் - அவர்களிலே பொறுமைசாலிகள் கிடைத்தால் பார்க்கச் சொல்லு; நாடாரின் வாய்ப்புக் குறித்து கேட்டேன், இதற்கு ஒரு குடிமகன் கூறியதாவது - காங்கிரஸ் தலைவர் காமராஜ நாடாருக்கு இங்கு செல்வாக்கில்லை. அவர் எங்கு சென்றாலும் யாரோ என்று மக்கள் அலட்சியமாகக் கருதுகின்றனர். அவருக்கு அரசியல்பற்றி மூலாதார அறிவே கிடையாது. "நாடாரால் அரசியல் சூழ்ச்சிகள் தான் நாம் தெரிந்து கொள்ள முடிந்தது. போதும் அச்சூழ்ச்சிகள்’’ "முதலமைச்சராயிருந்த கண்ணியமான அரசியல் வாதியான ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரை மேற்படி பதவியிலிருந்து நீக்கியதற்கு நாடார்தான் பொறுப்பாளி. அவ்வாறு இருக்க, நாடாருக்கு ஏன் நாங்கள் எங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்’’ "நாடாரைப் போன்ற சுயசாதிப் பித்தரைப் பார்க்க முடியாது. சுய சாதியிலும் தமக்கு வேண்டிய நண்பர் களுக்கே சலுகை காட்டுவார். எனவே நாடார்களிலே பெரும்பாலோர் அவருக்கு எதிராகவே இருப்பர்’’ இருக்கலாம்! திருவில்லிபுத்தூர் தேர்தலின்போது காமராஜரின் குணாதிசயம் அவ்விதம் இருந்திருக்கலாம் பிறகு அவர், படிப்படியாக, மெல்ல மெல்ல, நல்லவராகி விட்டிருக்கக் கூடாதா, என்று கேட்கத் தோன்றும் தம்பி, அந்த ஆராய்ச்சியும் சிறிதளவு செய்தே பார்த்துவிடுவோமே அதிலென்ன கஷ்டம். "காமராசர் தோற்றார் என்ற செய்தியினால், இந்த மாகாணம் மட்டுமல்ல, இந்த நாடே எவ்வளவு கிடுகிடுத்துப் போயிருக்கும். நேருவுக்கு வலது கையாகவும், பார்ப்பனர்களுக்கு நீங்காத் துணையாகவும், முதலாளி களுக்கு இரும்புத் தூணாகவும் இருக்கின்ற ஒருவரைத் தோற்கடிக்கக்கூடிய தலைசிறந்த வாய்ப்பைத் தமிழ் மக்கள் இழந்துவிட்டார்களே! தோழர் தங்கமணிக்குப் பயந்து கொண்டு விருதுநகரை விட்டு ஓடி, சென்னை ராஜ்ய சட்ட சபையையும் விட்டு ஓடி, பார்லிமெண்ட் அபேட்சகராக நின்ற ஒரு காங்கிரஸ் தலைவரைத் தோற்கடிக்கக்கூடிய தங்கமான வாய்ப்பைப் பாழாக்கிவிட்டார்களே, படுமோசக்காரர்கள்’’ என்று விடுதலையில் எழுதப்பட்டது; இதை எல்லாம் கண்டு காமராஜர் திருந்திவிட்டிருக்கக் கூடாதா என்று கேட்போர் எழக்கூடும் அல்லவா? அதையும் கவனிப்போம், தவறென்ன! காவடி தூக்கினார் கன்னத்தில் போட்டுக்கொண்டார் காலில் வீழ்ந்தார். தோள்மீது சுமந்தார் கோவை சுப்பிரமணியத்தை அடுத்துக் கெடுத்தார்! இவ்வளவு, திடுக்கிடக் கூடிய கேடுகளை, இழிவு என்றும் பாராமல் செய்த ஆசாமி யார்? இப்படி ஒரு தமிழ்ப் பண்பு இழந்தவரை நாடு தாங்கிக்கொண்டிருக்கிறதா? தமிழ் மண்ணிலேயா தாசர் புத்தி தலைக்கேறிய "ஜென்மம்’ இருக்கிறது! - என்றெல்லாம் கேட்கத் தோன்றும். ஆசாமியார் என்பதை அறிந்து கொள்வதற்கு முன்பு, அரசியல் சம்பவம் என்ன என்பது பற்றி அறிந்துகொள்வோம். பொதுத் தேர்தல் முடிந்து, காங்கிரஸ் இளைத்து, ஈளை கட்டி எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி என்ன செய்யுமோ என்று கிலிகொண்டிருந்தது. அப்போது தமிழ்நாடு காங்கிரசுக்கு, காமராஜர்தான் கக்கன். காங்கிரஸ் குலைந்துவிடாது இருக்கவும், மந்திரிசபை அமைக்கவும், ஆச்சாரியாருடைய தயவு தேவைப்பட்டது. ஆச்சாரியாருக்கும் தனக்கும் நீண்டகாலமாக இருந்துவரும் விரோதத்தை, இந்தச் சமயம் கவனித்தால், காரியம் கெட்டுவிடும் என்று கருதிய காமராஜர், காங்கிரஸ் கட்சி சார்பில் மந்திரிசபை அமைத்து நடத்திச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி, ஆச்சாரியாரிடம் சென்று "பயபக்தி விசுவாசத்துடன்’’ பணிந்து கேட்டார். அந்த "அடிமைப் புத்தியை’’க் கண்டித்து, காரசாரமாக விடுதலை எழுதிற்று அதுபோது கிடைத்த மணிமொழிகள்தான் முன்னாலே உள்ளன. "திருப்பரங்குன்றத்தில் தங்களைக் குப்புறத் தள்ளிய தற்காகக் கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். திராவிடர் களாகிய எங்களில் யாருக்கும் தலைமைப்பதவிக்கான தகுதி கிடையாது. நாங்களெல்லோரும் அடி முட்டாள்கள். நெல்லிக் காய் மூட்டைகள் உதவாக்கரையான சுரைக்காய் குடுக்கைகள், தங்கள் திருப்பாதங்களைக் கண்ணில் ஒத்திக் கொள்கிறோம். தயவு கூர்ந்து கருணை புரியுங்கள். மீண்டும் பதவியேற்று எங்களுக்கு நல்லபுத்தி கற்பியுங்கள்’’ என்று கூறுவதுபோல, அவர் வீட்டுக்கு நூறுதடவை காவடி தூக்கி மண்டியிட்டு வணங்கி, தோள்மீது சுமந்துவந்து தலைமைப் பீடத்தில் அமர்த்திவிட்டனர். தோழர் காமராசர் கோவை சுப்பிரமணியத்திடம் கூடவே இருப்பது போல நடித்து, இறுதியில் அவரைக் கவிழ்த்துவிட்டு, ஆச்சாரியாரிடம் அடைக்கலம் புகப்போகிறார் என்று ஒரு வாரத்துக்கு முன்பே பல முக்கிய நண்பர்கள் பேசிக் கொண்டனர். அது தவறு என்று கருதினோம். ஆனால் இன்று உண்மையாகி விட்டது!! எனவே, திருவில்லிப்புத்தூரில் எந்தக் காமராஜர் தெரிந்தாரோ அவரேதான், பிறகும் தெரிகிறார் - விடுதலையின் கண்ணோட்டத்தின்படி. காங்கிரஸ் கட்சியின் கண்ணியத்தையும் செல்வாக்கையும் காப்பாற்றுவதற்காக, சொந்தத்தில் இருந்துவந்த பகைமையும் மறந்தது பெருந்தன்மையல்லவா! சொந்தத்தில் "மானாபிமானம்’ பார்த்துக்கொண்டு, கட்சி எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று அவர் இருந்துவிடவில்லை, இதிலிருந்தே அவர் எவ்வளவு நேர்மையுணர்ச்சி கொண்டவர், கட்சிப்பற்றுக் கொண்டவர் என்பது தெரியவில்லையா? காங்கிரசுக்குள்ளேயே பிளவு இருக்கிறது - காமராஜ் காங்கிரஸ் ராஜாஜி காங்கிரஸ் என்று கோஷ்டிச் சண்டை இருக்கிறது, கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டும் இருக்கும்; இந்தச் சமயம்தான் அந்தக் கட்சியை ஒழித்துக்கட்ட ஏற்றது என்று காங்கிரஸ் விரோதிகள் எண்ணுவார்கள், இதற்கு நாம் இடமளிக்கக்கூடாது, நமக்கும் இராஜகோபால ஆச்சாரியாருக் கும் சொந்தத்தில் ஆயிரத்தெட்டு விரோதம் இருக்கலாம், அதற்காகக் காங்கிரசுக்குக் கேடுவர சம்மதிக்கக் கூடாது, இப்போது நாம் எப்படியாவது ஆச்சாரியார் துணையைப் பெற வேண்டும் என்று எண்ணிக் காரியமாற்றியது மிகத்திறமையான இராஜதந்திரமல்லவா? இவ்விதமெல்லாம் கூறவில்லை, காவடி தூக்கினார் காலடி வீழ்ந்தார் கன்னத்தில் போட்டுக்கொண்டார். என்று சொன்னதுடன், கோவை சுப்பிரமணியத்தை அடுத்துக் கெடுத்தார் என்றுதான் கூறப்பட்டது. காங்கிரஸ் அமைச்சு நடைபெறுகிறது - பெரியார் போர்க் கொடி உயர்த்தினார், வடநாட்டுத் துணிக்கடை, உண்டிச் சாலைகளின் முன்பு மறியல் நடத்தினார். அப்போது, காமராஜர் என்ன செய்தார்? ஆட்சியில் உள்ளவர்கள் உண்டு, பெரியார் உண்டு, நமக்கென்ன என்று இருந்தாரா? இல்லை! இதென்ன மறியல்! நாங்கள் செய்த மறியல், மகத்தானது தூய்மையானது - அது சத்யாக்கிரகம் - இது துராக்கிரகம் - என்று கண்டித்தார். அடக்குவோம், ஒடுக்குவோம் என்று ஆர்ப்பரித்தார். ஆட்சியாளருக்கு இவர் "வக்காலத்து’ வாங்கிக்கொண்டு பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், அது அவருடைய கடமை அல்லவா, என்று கேட்பர்; ஆம்! ஆம்! கடமை! அதனைக் குறைகூற அல்ல இதுபோது கூறுவது, அந்தச் சமயத்தில் காமராஜர், நல்லவர் - நம்மவர் என்று கூறத்தக்க நிலையில் இல்லை என்பதை நினைவூட்டத்தான். காமராஜர் அத்துடன் விடவில்லை; மறியலுக்கு எதிர் மறியல் செய்யப்போவதாகக் கூறினார். எடுத்தனர் எழுது கோல்லிதொடுத்தனர் பாணம் - காமராசர் என்றோர் தலைப்பில் தலையங்கம் வெளிவந்தது விடுதலையில் - அதிலே, காமராசரின் படப்பிடிப்பு முதல்தரமாக அமைந்திருக்கிறது. காண்போம் தம்பி, காண்போம். "காமராஜர் இன்றைய இந்த தமிழ்நாட்டில் தன்னை ஒரு சர்வாதிகாரி ஸ்டாலின் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார். சர்க்கார் தன் காலடியில் இருப்பதாகவும், மந்திரிகள் தன்னுடைய அடிமைகள், வேலைக்காரர்கள் என்றும் எண்ணிக்கொண்டிருக்கிறார்.’’ எடுத்த எடுப்பிலேயே, விடுத்தகணை "விர்’ரென்று பாய்கிறது பார்த்தாயா தம்பி, அகம்பாவம் ஆணவம் அதிகார வெறி எனும் கொடிய குணங்கள் குடிகொண்டவராக, சர்வாதிகாரியாக இருக்கிறார், என்று, சவுக்கடி கொடுத்த விடுதலை, மேலும் எழுதுகிறது. "காமராஜர் யார்? அவரின் இயற்கை நிலை என்ன? எப்படி இருந்தவர்? என்ன காரணத்தால் இவர் பொது வாழ்வில் மதிக்க வேண்டியவரானார்? இன்றைய வாழ்வு இவருக்கு எப்படி வந்தது? இவருடைய பொருளாதாரம், கல்வி, பொது அறிவு, அரசியல் திறமை, தகுதி, திறமை, நேர்மை, அனுபவம், ஒழுக்கம் எவ்வளவு? என்பவைகளான விஷயங்களை இவரே சிந்தித்துப் பார்ப்பாரானால், இவர் இப்போது பேசும் பேச்சுகளுக்குதான் தகுதியுடையவரா? இந்தப் பேச்சுகள் பேசுவது தன் பேரால் இருந்துவரும் பதவிக்கு ஏற்றதா என்பது விளங்குவதோடு, மிகுதியும் வெட்கப்படுவார் என்றே கருதுகிறோம்’’ காமராஜர்மீது இந்தக் கடும் தாக்குதலை நடத்தினால் மட்டும் போதாது, இதில் ஒளிவு மறைவு என்ன, மக்களிடம் வெளிப்படையாகக் கூறிவிடவேண்டியதுதான், என்று தீர்மானித்து, காமராஜரின் முகமூடியைப் பிய்த்தெறிந்து, இந்த அவலட்சணத்தை நீங்களே பாருங்கள் என்று மக்களிடம் காட்டுவதுபோல, விடுதலை, மேலால் எழுதுகிறது; "காங்கிரசானது முதல்தர மக்களிடமிருந்து பிடுங்கி மூன்றாந்தர மக்களிடம் ஒப்புவிக்கப்பட்டாலொழிய தங்களால் இந்த நாட்டில் வாழமுடியாது என்கின்ற நிலை, பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டபோது, அந்த மாதிரி நிலை பார்ப்பனருக்கு ஏற்படும்படியாக சுயமரியாதை இயக்கம் செய்துவிட்டதன் பயனாய், பார்ப்பனர்கள் தேடிப்பிடித்த ஆள்களில் ஒருவராக காமராஜர் பார்ப்பனர்களுக்குக் கிடைத்தவரே தவிர, அதற்கேற்ற காமராஜரின் தகுதி என்ன என்று சிந்திக்கப் பொது மக்களை வேண்டுகிறோம்’’ தம்பி! நீயும் நானும் காங்கிரஸ் வரலாற்றிலே பெரும் பகுதியை, படித்துத் தெரிந்து கொண்டவர்கள் - பெரியார் அப்படி அல்ல; அவர் அந்தச் சம்பவங்களிலேயே தொடர்பு கொண்டிருந்தவர். காங்கிரசின் தலைவர்களின் கொடிவழிப் பட்டி அறிந்தவர் - யாரார் என்னென்ன யோக்யதை உள்ளவர் என்பதைத் தெரிந்தவர் - எவரெவர் எப்படி எப்படிக் காங்கிரசுக்குள் வந்து சேர்ந்தனர் என்ற "கதைகள்’ அவருக்குத் தெரியும். அவர் கூறுகிறார், இந்தக் காமராஜர், பார்ப்பனர்கள் தேடிப் பிடித்துக்கொண்டு வந்து சேர்ந்தவர்களிலே ஒருவர் என்று. மூன்றாந்தரம்!! என்பதைக் கூறிவிட்டு, சந்தேகமிருப்போர், கல்வி பொது அறிவு ஒழுக்கம் அனுபவம் நேர்மை தகுதி திறமை என்ற இவைகளைக் கவனித்துப் பார்த்து, இந்தக் காமராஜர் யார் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார் - ஆண்டு ஆறுதான் உருண்டோடியுள்ளன, அந்த அரிய கருத்துரை நாட்டுக்கு அளிக்கப்பட்ட பிறகு. பதவியும் அதிகாரிகளை மிரட்டி வளைய வைக்கும் வாய்ப்பும் இருந்தால், அகம்பாவம் ஏற்பட்டு, எப்படிப் பட்டவர்களையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் துணிவு கிளம்பும். இது காமராஜர் விஷயத்தில் முற்றிலும் உண்மையாகி விட்டது என்பதையும், விடுதலை விளக்குகிறது. "காமராஜருடைய பதவி காரணமாக காமராஜருக்கு சில அதிகாரிகள் அடங்கி நடக்கவேண்டியதாகவும், காமராஜர் சிபார்சின் மேல் பதவி பெறவேண்டியவர் களாகவும், பல பெரும் தப்பிதங்கள் செய்து தப்பித்துக் கொள்ள வேண்டியவர்களாகவும் இருக்கும்படியான நிலையில் இருப்பதால், காமராஜர், உண்மையிலேயேதான் ஏதோ பெரிய பதவியில் இருக்கும் சர்வாதிகாரி என்பதாகக் கருதிக்கொண்டு அகம்பாவ வெறியில் இருக்கிறார்.’’ பெரியார் பொதுமக்களைச் சிந்தித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, இப்போதும் நாம் சிந்தித்துப் பார்க்கிறோம், தம்பி, காமராஜர், கல்வி திறமை பொது அறிவு அனுபவம் எனும் அருங்குணங்களின் பெட்டகம் என்று முடிவு கட்ட, மனம் இடம் தரவில்லை. பார்ப்பனர்களின் கையாள் என்ற பேச்சும், முதலாளிகளின் பாதுகாவலர் என்ற பேச்சும் பொருளற்றுப் போய் விட்டதாகத் தெரியவில்லை; அன்று போலவே இன்றும் காமராசர் திராவிட இன உணர்ச்சிக்கு மதிப்பளிக்க மறுக்கும் மகானுபவராக இருப்பதை கண்கூடாகத் தெரிகிறது - இந்நிலையில், என்ன காரணத்துக்காக அவர் நல்லவர் - நம்மவர் என்று கொள்வது? இராஜரத்தினம் சுந்தரவடிவேலு என்று பட்டியல் கொடுத்தால், ஆச்சாரியார் காலத்து சபாநாயகம் சிங்காரவேலு தேவசகாயம் ஞானசம்பந்தம் என்றும் அடுக்கிக் கொண்டே போகலாமே!! எனவே, விபீஷணன் என்று திருவில்லிபுத்தூரின்போது. காட்டப்பட்ட காமராஜர், அதே போக்கிலேதான் இருக்கிறார். நோக்கமும் வேறு ஆகிவிடவில்லை.’ காங்கிரசோ, முன்பு இருந்ததைவிட, மக்களுக்கு, குறிப்பாக தென்னகத்து மக்களுக்குக் கேடு விளைவிக்கும் பாசீச அமைப்பாக மாறிக்கொண்டு வருகிறது. இதைக் கண்டும், தம்பி! நம்மீது உள்ள கோபத்தைக் காரணமாகக் கொண்டு, காமராஜரை ஆதரித்து, அதன் தொடர்பாகக் காங்கிரசை ஆதரித்து, மீண்டும் காங்கிரசாட்சி ஏற்படுத்தி விட்டால், ஏற்பட உடந்தையாக இருந்தால், நாட்டு நிலைமை எப்படி ஆகும்? தம்பி! நான் கூறினால், பொறி பறக்காது; முன்பு பெரியார் சொன்னதை இரவலாக’க் கொண்டு உனக்கும், உன் மூலம், நாட்டுக்கும் தருகிறேன். "அடுத்த தேர்தலிலேயும் காங்கிரசு பதவிக்கு வந்து விட்டால் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நாட்டில் மனித ஆட்சியா நடக்கும்? அசல் கரடி, புலி, ஓநாய், சிறுத்தை, சிங்கம் ஆளுகிற மாதிரியான எதிர்ப் பட்டதை அடித்துக் கொல்லுவதான முறையில்தான், மிருக ஆட்சிதான் நிச்சயம் நடக்கும்’ அப்படிப்பட்ட “மிருக ஆட்சி’ ஏற்படக்கூடாது எச்சரிக்கையாக இருங்கள், காங்கிரஸ் கட்சியைப் பாசீச ஸ்தாபனமாக்கி விடாதீர்கள் என்று மக்களிடம் இந்தத் தேர்தலின்போது எடுத்துக் கூறுவோம், தம்பி. நம்மாலே, காங்கிரசின் கேடுபாடு குறித்தும், காமராசரின் திருக்கலியாண குணம்பற்றியும், ஆணித்திறமாக எடுத்துக்கூற முடியாதபோது, காமராஜர் குறித்தும், காங்கிரஸ் பற்றியும்,”விடுதலை’ நாட்டுக்குத் தந்துள்ள விளக்க உரைகளைத் தொகுத்து அளித்தாலே போதும், சூடும் சுவையும் நிரம்ப உண்டு. குரங்குகைப் பூமாலைபோல், காங்கிரசு சர்க்கார் வரிப் பணம்போல. யானை உண்ட முலாம் பழம்போல! காங்கிரசு நிதிக்குக் கொடுத்த பணம்போல! பெருச்சாளி புகுந்த வீடுபோல! காங்கிரஸ் சர்க்கார் ஆண்ட நாடுபோல! இப்படிப்பட்ட அரசியல் பழமொழிகள் - படப்பிடிப்புகள். கண்டனங்கள் - விளக்கங்கள் - ஏராளம் - ஏராளம்!! பேரகராதி நமக்குப் பெருந்துணை புரியும்!! அன்பன், 2-9-1956 சந்தனம் அரைத்த கரம் இந்திய சர்க்காருக்கு வரிப்பணம் - வெளிநாட்டாருக்கு விருந்தும் வரவேற்பும் - திட்ட ஊழல் - ஏழை துயரம். தம்பி! ஒரு ஓலைக்கொத்துக் குடிசைக்குள்ளே நடைபெற்றுக் கொண்டிருக்கும், அவலச் சுவைமிக்க சம்பவம் கூறுகிறேன், கேள். மாட மாளிகைகளிலே நடைபெறும் சம்பவமாக இருந்தால், கேட்கத் தித்திக்கும், இது…? என்று எண்ணி, அலட்சியமாக இருந்து விடாதே, பலப்பல ஆயிரம் குடிசைகள் பாடுபட்டால் தான் ஒரு மாளிகை; கவனமிருக்கட்டும். "கையைத் தூக்கவே முடியவில்லை. ஒரே குத்தல், குடைச்சல். நானும் எப்படி எப்படியோ சமாளித்துப் பார்க்கிறேன், முடியல்லே… பிராணனை வாட்டுது…’’ "பாரடி அம்மா, உங்க அப்பன், சுளுக்குக்கு இந்தக் கூச்சல் போடறதை! கை சுளுக்கிக்கிட்டுதாம், அதுக்கு உசிரு போகுது, தாளமுடியல்லேன்னு ஒரே அமக்களம் பண்ணுற கூத்தைப் பாரு…’’ "பெரிய கிராதகிடி, நீ. நான் என்ன, துடியாத் துடிக்கறேன். மூணுநாளா நான் பல்லைக் கடிச்சிக்கிட்டு, நோவை பொறுத்துக்கிட்டு இருந்தேன் - என்னாலேயும் வதாள முடியாததாலே கூச்சல் போடறனே தவிர, வேணும்னு வேஷமாப் போடறேன்…’’ "இருக்கும்மா! அப்பா எப்பவும், எப்படிப்பட்ட வலியையும் பொறுத்துக்கிட்டு இருப்பவராச்சே. பாவம்! என்னமா வலிக்குதோ என்னமோ…’’ Missing Page "கொழந்தைப் புள்ளெக்குக் கூடத் தடவலாம். புண்ணு ஏன் ஆவுது? போடி, இருட்டிவிட்டா, அந்தப் பக்கம், கன்னிம்மா கோயில் சர்ப்பம் உலாத்தும்…’’ "ஆமாம் பொண்ணு, பார்த்துப்போ…’’ "அது என்ன பண்ணும்? கன்னிம்மா! கன்னிம்மான்னு மூணுதடவை சொன்னா, மாயமா மறைஞ்சிடும்…’’ "எதுக்கும் ஜாக்கிரதை வேணும் போயிட்டு சுருக்கா, வாம்மா. என்ன இழவெடுத்த சுளுக்கோ தெரியல்லே, உசிரை வாட்டுது…’’ களிமண் தடவி, நோய், நொடியிலே போய்விடும் என்று உபசாரம் பேசி, அவனை அன்றிரவு உறங்கவைக்க, தாயும் மகளும் வெகுபாடு பட்டனர். காலையில் எழுந்ததும், வலி அதிகமாயிற்றே தவிர குறைய வில்லை. "அப்ப இது, நோய் அல்ல; கன்னியம்மா குத்தம்’ என்று தீர்ப்பளித்துவிட்டு, கோயில் சுற்றக் கிளம்பிவிட்டாள் கோவிந்தம்மா. கந்தப்பன், வேலைக்குப் போகமுடியாதே, என்ன கோபம் செய்துகொள்வார்களோ, வேறு ஆளை வைத்து விடுவார்களோ என்று பயந்தான். ஆனால் என்ன செய்வது, இப்படிப் பயந்து பயந்துதான், வலி இருக்கும்போதே அதைப் பொருட்படுத்தாமல், மூன்று நாட்களாக வேலைக்குச் சென்று, வலியை அதிகமாக்கிக்கொண்டான். "ஏன், அந்தச் சோம்பேறி, இன்னைக்கு மட்டம் போட்டுட்டுதா…?’’ என்று ஒரு குரலும், அதற்கு ஆதரவாக, "இப்பத்தான் இதுகளுக்கெல்லாம் திமிர் தலைவிரித்து ஆடுதே’’ என்று வேறோர் குரலும் கிளம்புவது, கந்தப்பனுக்குக் கேட்பது போலவே இருந்தது. இருந்தாலும் பரவாயில்லை, தேவையைவிட அதிகமாகவே சரக்கு தயாரித்து வைத்தாயிற்று; இன்று ஒரு நாள் வேலை செய்யாததாலே காரியம் குந்தகப்பட்டுவிடாது என்ற தைரியத்தில் கந்தப்பன் இருந்தான். தைலம் வாங்கிவரச் சொல்லி தன் மகள் முத்தம்மாளை அனுப்பிவிட்டு, அம்மா! அப்பா! அம்மம்மா! ஐயயோ…! அடடடா! - என்று முனகியபடி படுத்துக் கிடந்தான். சுளுக்கு, எலும்பு முறிவு ஆகியவைகளுக்குப் பச்சிலைத் தைலம் தடவிக் குணப்படுத்தும் பரம்பரை ராஜ வைத்தியர் ராமண்ணா வீட்டில் இல்லை. அன்று செந்திலாண்டவன் கோயிலில் முருகனுக்குச் "சந்தனக் காப்பு’ உற்சவம், பிரமாதம், அதைத் தரிசிக்கப்போயிருந்தார் வைத்தியர். முருகனுக்குச் சந்தனக் காப்பு உற்சவம் தடபுடலாக நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், கண்டு களித்தனர். மேளம் வாணவேடிக்கை எல்லாம், செலவு பற்றிய கவலையற்ற முறையில், ஏற்பாடாகி இருந்தது. "சந்தனக்காப்பு’ சேவை முடிந்ததும், சந்தனம் பக்தர்களுக்குத் தரப்பட்டது - விலைகொடுத்து அல்ல, காணிக்கை செலுத்தி, சந்தனம் பெற்றுக்கொண்டனர். அத்தரும் பன்னீரும், அரகஜாவும் பிறவும் கலந்துதான் பார், என் செந்திலாண்டவன்மீது அப்பப்பட்ட சந்தனத்துக்கு உள்ள மணம், இருக்கிறதா என்று பார்! இருக்கவே இருக்காது! சந்தனக் காப்பு முடிந்ததும், தனியாக ஒரு தெய்வீக மணம், சந்தனத்துக்கு ஏற்பட்டு விடுகிறது! மல்லிகை முல்லை, மருவு மருக்கொழுந்து, ரோஜா, மகிழம்பூ, மனோரஞ்சிதம், எனும் புஷ்பங்களிலே எல்லாம் கிடைக்கும் "வாசனை’ அவ்வளவும் ஒன்றாகச் சேர்ந்து விட்டதுபோலிருக்கும். செந்திலாண்டவன் கோயில் சந்தனக்காப்பு உற்சவம் என்றால், தேசமுழுவதும் தெரியும் - என்றெல்லாம் பக்தர்கள் பேசிக்கொண்டனர். எலுமிச்சை அளவு, விளாங்காய் அளவு, குண்டுமணி அளவு, உருத்திராட்சைக் கொட்டை அளவு, இப்படிப் பக்தர்கள் அவரவர் செலுத்தும் காணிக்கைக்குத் தக்கபடி, சந்தனப் பிரசாதம் பெற்றுச் சென்றனர். தெய்வீக மணம் பொருந்தியது என்று நம்பப்பட்ட இந்தச் சந்தனம் முழுவதும், குடிசையிலே குமுறிக்கொண்டிருக்கிறானே கந்தப்பன், அவன் அரைத்தெடுத்துக் கொடுத்தது! செந்திலாண்டவன் கோயிலில், சந்தனம் அறைத்துக் கொடுக்கும் "ஊழியக்காரன்’ இந்தக் கந்தப்பன். பல ஊர்களிலிருந்தும் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், பகவத் பிரசாதம் என்று பயபக்தியுடன் காணிக்கை செலுத்திப் பெறுவதற்காகத் தயாரிக்கப்பட்ட சந்தனம், இந்தக் கந்தப்பன், கை வலிக்க வலிக்க அறைத்தெடுத்துக் கொடுத்தது. சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு, கந்தப்பன், இரவு பகலாகச் சந்தனம் அறைத்தெடுத்துக் கொடுத்துத்தான், கை சுளுக்கிக்கொண்டுவிட்டது. மார்பில் பூசிக்கொண்டும், நெற்றியில் பொட்டாக வைத்துக்கொண்டும், சந்தனம் "கமகம வென்று இருப்பது குறித்துக் களிப்புடன் பேகிறார்கள், பக்தர்கள்! கன்னத்தில் தடவி மகிழ்பவரும், மார்பிலே பூசிக்கொண்டு மந்தகாசமாக இருப்போரும், மாளிகைகளிலே உள்ளனர். உண்ட ருசியான பண்டம் "ஜீரணம்’ ஆவதற்காகப் பூசிக்கொண்டு முருகா! கடம்பா! கந்தா! வடிவேலா! - என்று கூறிப் புரண்டுக்கொண்டிருக்கிறார்கள். சில பக்தர்கள், கோயில் அர்ச்சகர், தனக்கு வேண்டியவாளுக்காகப் பிரத்யேகமாக, வெள்ளி வட்டிலில் சந்தனத்தை வழித்தெடுத்து வைத்திருக் கிறார்; வத்சலாவோ சபலாவோ, அபரஞ்சிதமோ அம்சாவோ, அதன் மணம் பெற்று மகிழப் போகிறார்கள். காட்டில் கிடைக்கும் மரம் - அதிலே கவர்ச்சியூட்டும் மணம்! - அரைத்தெடுத்திட உழைப்பாளிக்கு முடிகிறது. சீமான்களின் மாளிகையாக இருந்தால் கூட கந்தப்பன், இவ்வளவு கடினமாக உழைத்திருக்கமாட்டான்; கைசுளுக்கு ஏற்பட்டிருந் திராது. செந்திலாண்டவன் கோயிலின் சந்தனம் அரைத்துக் கொடுப்பது என்பது "புண்ய காரியம்’ என்பது அவனுக்குக் கூறப்பட்டது. "கேவலம் கூலிக்காக, சோற்றுக்காகவாடா, கந்தப்பா நீ வேலை செய்கிறாய்? சகல சித்திகளையும் அருளவல்ல, முருகப் பெருமானுக்கு நீ செய்யும் கைங்கரியம் இது - ஊழியக்காரனல்ல நீ பக்தன்! தெரிகிறதா! எனவே, கஷ்டத்தைப் பாராதே, காசு எவ்வளவு தருவார்கள் என்று கேளாதே பகவானுக்கு நாம் சேவை செய்கிறோம் என்ற எண்ணத்தோடு வேலை செய், வேல் முருகன், உனக்குத் தக்க சமயத்தில் தக்க விதமாக அருள் பாலிப்பார், என்று திருப்புகழ் பஜனைக் கூடத்தாரும், கோயில் தர்மகர்த்தாவும் கூறினர்; அவர்களெல்லாம் மெத்தப்படித்த வர்கள், அவர்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை கந்தப்பனுக்கு. எனவேதான், கை தழும்பேறியதைக் கவனியாமல், சுளுக்கு ஏற்பட்டு உயிர் துடிக்கும் விதமான வலி உண்டாகும் அளவுக்கு, சந்தன அரைப்பு வேலையைச் செய்திருக்கிறான். முருகனுக்குச் சந்தனக் காப்பு நடைபெற்றது, சன்னதியே நறுமணம் பெற்றது. பக்தர்கள் சந்தனப் பிரசாதம் பெற்றனர் - மகிழ்ந்தனர். கோயில் நிருவாகத்தினர், வரவு-செலவு கணக்குப் பார்த்தனர். நல்ல ஆதாயம், எனவே, மிகுந்த மகிழ்ச்சி அவர்களுக்கு. அவர்களின் இல்லங்களிலெல்லாம் சந்தன மணம் கமழ்ந்தது! கந்தப்பன் வீட்டிலேயோ, எருக்கம் பால் வாடை மூக்கைத் துளைத்தது. கந்தப்பன் அரைத்துக் கொடுத்த கலவைச் சந்தனம், பலருடைய உடலுக்கு அழகும் மணமும் அளித்தது கந்தப்பன் உடலில், களிமண் பூசப்பட்டிருக்கிறது. எருக்கம் பால், தடவி இருக்கிறார்கள்; மூதாட்டி ஒருத்தி சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள், "இதெல்லாம் எதுக்கு? பசுமாட்டுச் சாணியைக் கொதிக்கவைத்துத் தடவு, நோய் பட்டுன்னு விட்டுப்போகுது பாரு’’ என்று. இந்திய சர்க்காருக்கும் தம்பி, மக்கள், கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு, கைசுளுக்குக்கு எருக்கம் பால் தேடிடும் கந்தப்பன் போல, தங்கள் வாழ்க்கை வசதிக்கு, தகுந்த அளவும் வகையும் பொருள் கிடைக்காமல், திண்டாடித் தேம்புகிறார்கள். சந்தனம் அரைத்துக் கொடுத்ததால் உண்டான வலி தீர்ந்தால் போதும் என்ற நிலையில், கந்தப்பன் இருப்பதுபோல, நாளுக்கு நாள் ஏறிப் பாரமாகிக்கொண்டு வரும் வரித் தொல்லையைத் தாங்குவதற்காவது வலிவு வேண்டுமே, அதை எப்படிப் பெறுவது என்று, ஏழை மக்கள் ஏங்கித் தவித்து கிடக்கிறார்கள். சந்தனக் காப்பு உற்சவம், பார்க்கப் பதினாயிரம் கண் வேண்டும் என்று பக்தர்கள் பரவசத்துடன் கூறுவதுபோல் இந்திய சர்க்கார், மந்திரிகளின் கௌரவம் உயர்த்தப்படுவதற்கும், மதிப்பு பெருகுவதற்கும் செலவிடும் தொகையையும் வகையையும் கண்டால், சுயராஜ்யத்தின் "சுதந்தர சொரூபம்’ தெரிகிறது என்று தெந்தினம் பாடிடப் பலர் உளர். “கேவலம் கூலிக்காகப் பாடுபடுவதாக எண்ணிக் கொள்ளாதே, இது பகவத் கைங்கரியம், எனவே”விசுவாசத்துடன்’ சேவை செய்ய வேண்டும்’’ என்று கந்தப்பனுக்கு உபதேசிக்கப் படுவது போலவே, "அன்னிய ஆட்சியின் போது, வரி கொடுக்க, உங்கட்கு, மனக்கசப்பும் கொதிப்பும் இருப்பது சகஜம்; இப்போது அப்படி இருக்கக் கூடாது; இது சுயராஜ்யம்; எனவே முகத்தைச் சுளிக்காமல் பாரம் என்று குமுறாமல், முடியவில்லையே என்று கூறிக் கண் கசக்கிக்கொள்ளாமல், கேட்கும் வரிப்பணத்தைக் கொடுக்கவேண்டும்; அதுதான் தர்மம் தேசபக்தி’’ என்று உபதேசிக்கும் காங்கிரஸ் தலைவர்கள், உரத்த குரலில் பேசுகிறார்கள். களிமண் தடவினால் வலிபோகுமா, எருக்கம் பாலடித்தால் சுளுக்கு நீங்குமா என்று கந்தப்பன் பரதவிப்பது போலவே, என்னென்ன பாடுபட்டால் பிழைக்கலாம், எந்தெந்தத் தேவைகளைக் குறைத்துக் கொள்ளலாம், என்னென்ன துணைத் தொழில்கள் தேடிடலாம், கூடை முடைவோமா, கோழி வளர்ப்போமா, கொல்லன் பட்டரையில் வேலை செய்வோமா, என்ன செய்தால், நமக்கு இன்னும் ஒரு கவளம் கிடைக்கும் என்று ஏக்கத்துடன் எண்ணி எண்ணி, "போதாமை‘யால் தாக்குண்டு கிடக்கிறான், ஏழை! அவனுக்குப் போதிக்கப்படும் தேசீயமோ, குமுறாமல் கொடு, குறை கூறாமல் கொடு, வரியாகக் கொடு, கடனாகக்கொடு, நகைக்குச் செலவிடாதே, "நல்லது பொல்லதுக்கு’ என்று பணத்தை வீணாக்காதே, நாங்கள் அடிக்கடி கடன் கேட்போம், உன் கடமை என்று எண்ணிக்கொண்டு கழுத்துத் தாலியில் உள்ள குண்டுமணிப் பொண்ணாக இருந்தாலும், எடுத்துக் கொடு, தேசபக்தன் என்ற கீர்த்தி உனக்குக் கிட்டும் - என்று பிரசாரகர்கள் பேசுகிறார்கள். கந்தப்பன், கையைத் தூக்கமுடியவில்லையே, என்று கதறிக் கிடக்கிறான். வாழ்வு சுமையாகிவிட்டது, தலைநிமிர்ந்து நிற்க முடியவில்லை என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள். செந்திலாண்டவனுக்குச் சந்தனக் காப்பு உற்சவம் “சம்பிரமமாக’ நடைபெறுகிறது; சவுதி அரேபியா சுற்றுப்பயணத் துக்காக நேரு பெருமகனார் தம்”ஜமா’வுடன் தயாராகிக்கொண் டிருக்கிறார். அவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்து ஒரு திங்கள் ஆகிறது, இதற்குமேல் அவருக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை, சவுதி அரேபிய மன்னரின் விருந்தினராகிறார்! அன்றலர்ந்த ரோஜா தினமும் விமான மூலம் நேருவுக்குக் கொண்டுவந்து தர ஏற்பாடாம். சவுதி அரேபிய மன்னரின் இரம்மியமான ஒரு அரண்மனையில் நேரு துரைமகனார் தங்கி இருக்க ஏற்பாடு! நேருவுக்குப் பிரியமான உணவு வகைகளைச் சமைத்திட, இங்கிருந்தே திறமையான சமயற்காரர்கள்! சவுதி அரேபிய மன்னர், கோடீஸ்வரர்! அவருடைய விருந்தினராகத் தங்கி இருக்கும் நாட்களில், ரோஜாவின் மணமும் ராஜோபசாரமும், சலாமிட்டு நிற்கும் பணியாட்களின் குழைவும், சர்வதேச நிலைமை பற்றிய பேச்சும், நேருவுக்கு மனச் சந்துஷ்டி அளிக்கும்; மகனைத் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாக்கிவிட்டு மாரடித்து அழுது கொண்டிருக்கும், தாய்மார்களின் கதறல் அல்லவா அவருக்கு இங்கு காது குடையும் அளவுக்குக் கிடைக்கிறது! கண்ணீர்க் குண்டு வீச்சினால் கிளம்பும் புகையும், பிணவாடையும், நாள் தவறாமல் இங்கு! எப்படி நேரு பெருமகனார் இந்தக் "கண்றாவி’க் காட்சியைக் காண்பது! நிம்மதி இராதே! இதற்கோ அவர் இந்தியாவின் முடிசூடா மன்ன ரானார்! மோதிலாலின் திருக்குமாரன், தங்கத்தொட்டிலில் தாலாட்டி வளர்க்கப்பட்ட செல்லப்பிள்ளையாமே! கண்ணே! கண்வளராய் கட்டிக்கரும்பே! கண்வளராய் என்று தாலாட்டுப்பாடித் தாதியர் தொட்டிலாட்டி யிருப்பர். அப்படி வளர்ந்த ஆனந்த பவனத்தாருக்கு, இங்கு, ஐயோ! அப்பா! அம்மவோ! என்ற அலறலும் கதறலும், எப்படி இனிப்பளிக்கும்? எனவே சவுதி அரேபியா செல்கிறார்! பன்னீரில் குளிக்கலாம், பரிமளகந்தம் பூசலாம், சிரித்திடும் ரோஜாவையும் புன்னகை பூத்திடும் இராஜதந்திரிகளையும் கண்டுகளிக்கலாம். தேன் பாகிலே பதமாக்கப்பட்ட பேரீச்சம்பழமும், கனிச்சாறும் அவருக்கு, மொழி வழி அரசு, எல்லைத் தொல்லை என்பன போன்றவைகளால் ஏற்பட்ட எரிச்சலைப் போக்க உதவக்கூடும். மறந்தே போனேனே தம்பி, இந்தியாவின் மதிப்பு உயரும்!! இதனாலா? இங்கு மக்கள் இல்லாமையில் இடர்ப்பட்டுக் கொண்டு கிடக்கும்போது, இவர் சவுதி அரேபியா சென்று இராஜோபசாரம் பெறுவதாலா இந்தியாவின் மதிப்பு உயரும்? என்று - உனக்குக் கேட்கத் தோன்றும்! அப்படித்தான் அவர்கள் சொல்லுகிறார்கள், நம்பாதவனைத் தேசத் துரோகி என்று ஏசுகிறார்கள். “என்ன சந்தனக் காப்பு உற்சவமோ! கைசுளுக்கு என் பிராணனை வாட்டுவது எப்படி வலி எடுக்கும் அளவுக்கு நான் அரைத்தெடுத்த சந்தனந்தானய்யா அது”என்று செந்திலாண்டவன் கோயிலில் சந்தனம் அரைத்திடும் கந்தப்பன் சொன்னால், சும்மா விடுவார்களா! செந்திலாண்டவன் கூட அல்ல, அங்கு வரும் காவடி தூக்கியும், காவிகட்டியும், மொட்டையும் பிறவு குன்றோ, கந்தப்பன்மீது வசைபொழியும்! சவுதி அரேபியாவோடு நின்று விடுவதா, நேரு பவனி. நேரு பவனி ஒரு நீண்ட தொடர்கதை… அமெரிக்கா அழைக்கிறது, ஆஸ்திரேலியாவில் அலுவல் இருக்கிறது, எங்குதான் செல்லக்கூடாது! செல்கிறார்!! இதற்காகச் செலவாகும் தொகையை எமக்குச் செல விட்டால்கூடப் போதுமே, புளித்த கூழுக்கு ஒரு துண்டு கார மிளகாயாவது கிடைக்குமே! என்று கேட்பர் இந்தப் பஞ்சைகள். பஞ்சைகள் எப்போதும் எந்த நாட்டிலும் இப்படித்தான் கேட்பது வாடிக்கை; பவனிவரும் ஆட்சியாளர் குறுநகை புரிந்தபடி, "குறைமதியினரே! வீணாக ஏதேதோ கூறிக் கிடக்கின்றீரே! பவனியால் எமக்கா இன்பம்? நாட்டின் மதிப்பன்றோ உயருகிறது’’ என்று பேசுவதும் வழக்கம்! பொறுமையின் எல்லைக்குப் பஞ்சைகள் சென்று முகட்டின் மீது நிற்பர். மேலால் செல்ல வழி இருக்காது. பிறகுதான் திரும்பிப்பார்த்திடுவர். தம்பி! அப்படித் திரும்பிப் பார்த்திடும்போதுதான், "பஞ்சடைந்த கண்களிலே கனல் கக்கும் புழுவும் போரிடும்’ என்ற நிலை பிறக்கும். அது, இப்போது, உடனடியாக நடைபெறக் கூடியதா, என்ன? எனவே, வீண் பீதிக்கு இடமளிக்காமல், நேரு பெருமகனார். சந்தனக் காப்பு உற்சவத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார். தம்பி! எப்படிப்பட்ட எழில் மிக்க நாட்டிலே இருக்கிறாய் தெரியுமா என்று, எந்த ஏழையைக் கேட்டாலும், அவன் ஒரு விளக்கமற்ற பார்வையால் நம்மைத் திகைக்கவைப்பான். இமயப் பனிமலையின் எழிலும் கங்கை புரண்டோடும் கவர்ச்சியும், காதல் மாளிகையாம் தாஜ்மஹாலின் தகத்த காயமும், குதுப்மினாரின் கெம்பீரமும் அஜந்தா சித்திரமும், விஜயநகர சாம்ராஜ்யச் சேதக்குவியலும், மாமல்லபுரத்துச் சிற்பங்களும், குமரிமுனைக் கோலமும் அவன் எங்கே கண்டான்? எங்ஙனம் காண்பான்? இதோ வருகிறார்கள். இந்த எழில் கண்டு மகிழவும், இவை தம் ஏற்றத்தை எடுத்துரைக்கும் பிரமுகர்களுடன் அளவளாவவும், இந்த நாட்டுக் கலை கல்லிலே வடித்துக்காட்டப்பட்டது மட்டுமல்ல, காவலர்களே! கல்லிலே நீவிர்கண்ட குமரியை, அஜந்தா சித்திரத்திலே உங்களை வசீகரித்துக்கொண்ட அந்த வளைவு, குழைவு, நெளிவுகளை, இதோ உங்கள் சிந்தை அணு குழைவு தெளிவுகளை, இதோ உங்கள் சிந்தை அணு ஒவ்வொன்றும் சிலிர்த்திடச்செய்யும் வகையில் எடுத்துக் காட்டும், மாலாக்களையும் பாலாக்களையும் குமரிகளையும் தேவிகளையும் காணீர். அவர்கள் கரத்தால் கமலம் காட்டுவர், கண்ணால் கடலைக் காட்டுவர், வெறும் ஆடலல்ல அன்பரீர்! கேவலம் இச்சையைக் கிளறும் அங்க அசைவுகளல்ல! இவை ஆன்ம சுத்திக்காகவே எமது ஆன்றோர் அளித்துச் சென்ற "கலோபாசனை’ - கலைமூலம் கடவுளைப் பூஜிப்பதாகும்! - என்று கூறுவர். இந்த உபசாரம், உலா, பெறுவதற்கு இப்போது தூர இருக்கும் தலைவர்களின் பட்டியல், தற்காலிகமானது, தருகிறேன், பார் கந்தப்பன் கரத்திலே சுளுக்கு இருந்தால் என்ன, சந்தனக்காப்பு சம்பிரமமாக நடைபெறுகிறதே அந்தச் சம்பவம் நினைவிற்கு வரும். எதியோபிய சக்கிரவர்த்தி இந்தோனேசியத் தலைவர் டாக்டர் சுகர்ணோ போலந்து முதலமைச்சர் தாய்லந்து முதலமைச்சர் சிரியா நாட்டுத் தலைவர் இலங்கை முதலமைச்சர் நேபாள நாட்டு முதலமைச்சர் இவர்களெல்லாம் "விஜயம்’ செய்ய இருக்கிறார்கள்! விருந்து, வேட்டை, கேளிக்கை, கண்காட்சி, இடை யிடையே சர்வதேச நிலைமை பற்றியும் பேசுவர்! ஒவ்வொருவருக்கும், குடியரசுத் தலைவர் விருந்தளிப்பார். குடியரசுத் தலைவருக்கு அவர்கள் ஒவ்வொருவரும் விருந் தளிப்பர்! முதலமைச்சர் ஒவ்வொருவருக்கும் விருந்தளிப்பார், ஒவ்வொருவரும் முதலமைச்சருக்கு விருந்தளிப்பர்; எல்லா விருந்துகளிலும் நளினிகளின் நடனம் உண்டு! எல்லாம் கந்தப்பன் அரைத்தெடுத்த கலவைச் சந்தனம் தம்பி, அவன் கைக்கு எருக்கம்பாலடித்து, களிமண் பூச்சுத் தடவிவிடப்பட்டிருக்கிறது! ஒரே அடியாக உன் அண்ணன், எரிந்து விழுகிறான், நாங்களெல்லாங்கூட வருத்தப்படக்கூடிய விதமாகப் பெரும் பொருள் இப்படிப்பட்ட விருந்து, உபசாரம், உலா, உற்சவம், ஆகியவற்றுக்குச் செலவாகி விரயமாகிறது. ஆனால் எல்லாப் பணமும் இதற்கே பாழாகிவிடுவது போல எடுத்துக் கூறுவது, சரியல்ல; வாழ்வும் வளமும் தரத்தக்க எத்துணையோ நல்ல திட்டங்களுக்குப் பணம் செலவிடப்படுகிறது, என்று தம்பி! காங்கிரஸ் நண்பர் கூறக்கூடும். அந்த இலட்சணம் எப்படி இருக்கிறது என்பதையும், அந்தப் பொல்லாத மனிதர், கவர்னர் குமாரசாமிராஜா சென்ற கிழமை எடுத்துக் காட்டிவிட்டார். பிரம்மாண்டமான பணவிரயம் - வீண்செலவு! - என்று குமாரசாமிராஜா கூறுகிறார். பத்துக்கோடி ரூபாய் செலவில் இங்கு கட்டப்படுகிறது, பவானிசாகர்! மிகப் பிரமாதம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு வரும் தாமோதர் திட்டத்தை நான் பார்த்தேன் - அங்கு பிரம்மாண்டமான பண விரயம் நடந்துகொண்டிருக்கிறது’ - என்று, சென்ற கிழமை கோவையில் கூறினார். அஞ்சா நெஞ்சும், நேர்மைத் திறனும் கொண்டிருந்தா லொழிய, இவ்வளவு வெளிப்படையாக, இந்திய சர்க்காரின் திறமைக் குறைவை, ஊதாரித்தனத்தை, கண்டித்திருக்க முடியாது. இந்திய சர்க்காரின் நிர்வாகத்தைக் கண்டிப்பது என்றால் நேருவைக் கண்டிப்பது என்று பொருள்! நேருவுக்கோ யாராவது ஒரு சிறுசொல் கூறிவிட்டாலும் கண் சிவந்துவிடும். நேரு புருவத்தை நெரித்தால், எந்தக் காங்கிரஸ் தலைவருக்கும் எதிர்காலம் இருண்டுவிடும்! இவை தெரிந்தும், உள்ள நிலையை எடுத்துக் கூறத்தான் வேண்டும் என்ற வீரத்தைக் காட்டிய, குமாரசாமிராஜாவைப் பாராட்டாதவர்கள், பண்பற்றோரே! கவர்னர் பதவி என்பது காந்திகோயிலில் பஜனை செய்வதற்கும் கலா பவனத்தில் காட்சி காண்பதற்கும் மட்டுமே உள்ள "பொழுதுபோக்கு’ என்று கருதாமல், நாட்டவருக்கு உண்மையை நடுக்கமின்றி எடுத்துரைக்கும் பெரும் பொறுப்பும் கவர்னருக்கு உண்டு என்ற தூய நோக்குடன், குமாரசாமிராஜா பேசினார். எங்கள் பக்கம் அணை கட்டுவதற்கு, செலவு சற்று அதிகம்தான் பிடிக்கும் - உங்கள் பகுதியில் கிடைப்பதுபோன்ற கற்கள் இங்கு கிடைப்பதில்லை, எனவே இங்கு சிறிது பணம் அதிகமாகச் செலவாகிறது என்று, திட்ட அலுவலக அதிகாரி சமாதானம் கூறுகிறார். குமாரசாமிராஜா அவர்கள் பல உண்மைகளைத் தமது "இரத்னச் சுருக்கமான’ பேச்சிலே வெளியிட்டிருக்கிறார்; முப்பது ஆண்டுகள் இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி இதமாக எடுத்துச்சொன்னாலும், இதுபோன்ற அஞ்சா நெஞ்சுடன் நம்ம காமராஜர் பெரிய இடத்தின் போக்கைக் கண்டித்துப் பேசும் அஞ்சாமையைப் பெறுவாரா என்பதும் சந்தேகமே! 1. இங்கு செலவாவதைவிட வடக்கே, பணம் அதிகம் செலவாகிறது. 2. செலவு செய்யப்படும் முறை, வீண் விரயத்துக்கு இடமளிக்கிறது. 3. அனாவசியமாக அதிகமான அளவு மேலதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவை, திட்டம் அமுல் செய்யப்படுவதுபற்றி, நேரில் கண்டறிந்தவர், பொறுப்பான பதவியில் அமர்ந்திருப்பவர், கூறுவன. வடக்கு என்பதற்காகவே, ஏதாவது வம்பும் தும்பும் பேசும் வட்டாரமல்ல. தேர்தல் ஆசை பிடித்துக்கொண்டதால், பேசும் பேர்வழியுமல்ல!! பணம் விரயம் ஆவதை மட்டுமல்ல, அவர் சுட்டிக்காட்டி இருப்பது. தாமோதர் திட்டத்தில் தேவையைவிட அதிகத் தொகை செலவிடப்படுகிறது என்பது மட்டுந்தான் ராஜாவின் மனக்குறை என்றால், உயரிடத்தில் அமர்ந்துள்ள அவர், இதனை நேருவிடம் ஜாடை மாடையாகக் கூறினாலே போதும், ஆனால் "ராஜா’ - கோவைப் பொதுக்கூட்டத்தில் தொழிலதிபர்களும்’ துரைத்தனத்தாரும் கூடியிருந்த மன்றத்தில் எடுத்துப்பேசி இருக்கிறார். திட்டங்களைச் சிக்கனமாகச் செலவிட்டு முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகப் பேசினதாக யாராவது கருதிக் கொண்டு, தமது பேச்சின் சூட்சமத்தை அறியாது போய்விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தினால் உந்தப்பட்ட நிலையில், ராஜா மேலும் சில உண்மைகளை எடுத்துக் காட்டினார். 1. வடக்கே, பேசுவது சர்வோதயம் பற்றி! ஆனால் நடைமுறை என்ன என்றால், பிரம்மாண்டமான நவீன அமெரிக்க யந்திரங்களை வரவழைப்பது!! இந்தக் "கேலி’க்கு ஈடாகச் சமீப காலத்தில், எந்தத் தலைவரும் வட நாட்டுப் போக்கைக் கண்டித்ததில்லை என்று கூறலாம். கட்டுவது காவி தொட்டு இழுக்கிறான் பாவி! என்று காரிகை கதறக் கேட்டால் எப்படி இருக்கும்? அது போல, பேசுவது சர்வோதயம், வரவழைப்பதோ அமெரிக்க நவீன யந்திரம் - என்று குட்டுகிறார் ராஜா!! சர்வோதயம் - ஒரு இலட்சியம், உத்தமரொருவர் ஊருக்கும் உலகுக்கும் காட்டும் பாதை! இதற்கு உதட்டுபசாரம் அளித்துவிட்டு, தமது தேவைக்கு, வசதிக்கு, அமெரிக்காவி லிருந்து நவீன யந்திரங்களை வரவழைத்துப் பயன் பெறு கிறார்கள் வடக்கே! சர்வோதயம் பேசப்படுகிறது - செயலோ அதற்கு நேர் மாறாக இருக்கிறது. இந்தக் கபடத்தைக் காட்டமட்டும் ராஜா இதைக் கூறினதாக நான் எண்ணவில்லை, தம்பி, இதற்கு உள்ளே மிகப் பெரிய உண்மை உறங்கிக்கொண்டிருக்கக் காண்கிறேன். ஓ! என் நாட்டவரே! உரத்த குரலில், சர்வோதயம் பற்றிய உபதேசம் நடக்கிறது; வடக்கே இருக்கும் தலைவர்களெல்லாம், அந்த இலட்சியத்தை வாழ்த்திப் பேசுவது கேட்டு, மயங்கிவிடாதீர்கள்! சர்வோதயம் பேசும் அந்த வடக்கத்தித் தலைவர்கள், இனிக்க இனிக்க, நெஞ்சு நெக்குருகப் பேசுகிறார்களே தவிர, உள்ளூர அவர்களுக்கு சர்வோதயத்திலே நம்பிக்கை கிடையாது; சர்வோதயம் பேசிக்கொண்டு அவர்கள் அங்கே சர்க்கரை ஆலை வேண்டாம் கருப்பட்டி போதும், நூலாலை வேண்டாம் சர்க்கா போதும், காகித ஆலை வேண்டாம் பனை ஓலை போதும், மோட்டார் தொழில் வேண்டாம், கட்டை வண்டி போதும், டிராக்டர் வேண்டாம் ஏர் எருது போதும். என்றெல்லாம் இருந்துவிடுகிறார்கள் போலும் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். நாமும் இங்கு சர்வோதயம் காண்போம் என்று மனதார நம்பி வளர்ச்சியைக் குலைத்துக்கொள்ளாதீர்கள்; வடக்கே உள்ளவர்கள் பேச்சிலே தான் சர்வோதயம்; ஆனால் நடைமுறையிலோ, நவீன அமெரிக்க யந்திரங்களைத்தான் வரவழைக்கிறார்கள். அவர்களுடைய இந்தக் கபடத்தை நான் கண்ணால் கண்டேன் - ஏமாறாதீர், என் நாட்டவரே! அவர்களின் சொல் வேறு, செயல் வேறு! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள்! குமாரசாமிராஜாவின் பேச்சிலே இவ்வளவும், எண்ணிப் பார்க்கப் பார்க்க, இதனினும் அதிகமாகவும், பொருள் பொதிந்திருக்கக் காண்கிறேன். சர்வோதயம் பேசுகிறீர்களே! இப்படி நவீன யந்திர மோகம் கொண்டு அலைகிறீர்களே! - என்று ராஜா, வடக்கே இடித்துக் கூறவில்லை, தம்பி, இங்கு நமக்கு எச்சரிக்கை செய்கிறார், சர்வோதயம் பேசும் வடநாட்டார் தங்கள் தொழிலில் பழைமையின் சாயலைக்கூட வைத்துக்கொண் டில்லை, எல்லாம் அமெரிக்க யந்திர மயமாக இருக்கிறது; உண்மையை அறியாமல், அவர்கள் உதட்டசைவு கேட்டு, மயங்கிவிடாதீர்கள்; சர்வோதயம், பேச்சு; செயல், நவீனம், நவயுகம் அமெரிக்க முறை! என்று எடுத்துக் கூறுகிறார். தம்பி! பலமுறை பார்த்து, மிகவும் மனம் புழுங்கி நீண்ட காலம் மறைத்துப் பார்த்து, கடைசியில் இனியும் நாமறிந்த இந்த உண்மையை நமது மக்களுக்கு எடுத்துக் கூறாமலிருப்பது, மக்களுக்கு நாம் மனதறிந்து செய்யும் துரோகமாகும் என்று உணர்ந்து, என்னை நேரிட்டாலும் கவலை இல்லை, நேருவுக்கு கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து, பேசின பேச்சு என்றே நான் இதனைக் கொள்கிறேன். தம்பி! வடக்கு வளருகிறது தெற்கு தேய்கிறது என்று நாம், கூறும்போது, அலங்காரப் பேச்சு அடுக்குமொழி என்று கேலி பேசினரே, அவர்கள், ராஜா அம்பலப்படுத்தியிருக்கும் உண்மையைக் கண்ட பிறகேனும், சிந்திப்பார்களா என்று கேட்டுப்பார். அவர்கள் சிந்திக்கிறார்களோ இல்லையோ, குமாரசாமி ராஜா அவர்கள் நிரம்பச் சிந்தித்திருக்கிறார் என்பதும், செயல்படக்கூட விரும்புகிறார் என்பதும் விளங்கும் வகையில், மேலும் சில உண்மைகளை அவர் கூறுகிறார். 1. மத்திய சர்க்கார் அனாவசியமாக மாகாண சர்க்காரின் அலுவலில் குறுக்கிட்டுக் கொண்டு வருகிறது. மத்திய சர்க்கார் ஆதிக்கம் செய்கிறது, மாகாண சர்க்காருக்கு முழு உரிமை கிடையாது என்று நாம் பேசும்போது, முகம் சுளித்துக் கொள்கிறார்களே காங்கிரசார், அவர்கள் இந்தக் "குற்றச்சாட்டு’ ஒரு கவர்னர் மூலம் பதிவு செய்யப்படுவது கண்டு ஆச்சரியத்தால் வாய் திறந்து நிற்பார்கள் என்று எண்ணுகிறேன். எவ்வளவு திறமையாக, அப்பழுக்கற்ற முறையில் மாகாண சர்க்கார் ஒரு திட்டம் தயாரித்தாலும், தங்கள் அதிகாரமும் அமுலும் இருக்கவேண்டும் என்பதற்காகவென்றே, மத்திய சர்க்கார், அதிலே அங்கொரு மாற்றமும் இங்கொரு மாற்றமும் செய்து, திட்டத்தைத் திருத்துகிறது என்று கூறுகிறார், ஒரிசாவில் கவர்னராக வேலை பார்க்கும் ராஜா. கூறினதுடன் அவர் அமைதி கொள்ளவில்லை; மத்திய சர்க்கார் இனியும் இந்தப் போக்கிலே இருக்கக் கூடாது என்று புத்திமதி கூறலாமா என்றுகூட அவர் எண்ணிக் கொள்ளவில்லை. புத்திமதி கூறும் கட்டம்போய் விட்டது; பிறர் கூறும் அறிவுரையைக் கேட்கும் நிலையிலும் மத்திய சார்க்கார் இல்லை என்பது அவருக்குப் புரிந்திருக்கிறது. எனவே குமாரசாமிராஜா, போர்க்கொடி உயர்த்துவது போலவே பேசுகிறார். 2. மேலிடத்தவரின் குறுக்கீடுகளை நாம் எதிர்த்துப் போராட வேண்டிய காலம் விரைந்து வருகிறது. என்று கூறியிருக்கிறார். தம்பி! பொறுமை உணர்ச்சியும் பொதுப் பிரச்சினை களிலே அக்கரையும் கொண்ட காங்கிரஸ் நண்பர் யாராவது உனக்குத் தெரிந்திருந்தால், அவரை, குமாரசாமிராஜாவின் பேச்சிலே பொதிந்து கிடக்கும் உண்மைகளைப்பற்றி விளக்கும்படி கேள்; கேட்டுக்கொள்ளும் பண்பு அவரிடம் இருந்தால் நீ விளக்கிக் காட்டு. வடக்குவேறு தெற்குவேறு வடக்கு வஞ்சனையுடன் நடந்துவருகிறது. வடக்கே, பணம் விரயமாகிறது. தெற்கு ராஜ்ய அலுவலில் வடக்கு, அனாவசியமாகக் குறுக்கிடுகிறது. வடக்கு குறுக்கிடும் போக்கை, தெற்கு எதிர்த்துப் போரிடவேண்டும். அந்தக் காலம் விரைவில் வருகிறது. இவ்வளவும், சுரங்கத்துள் தூங்கும் தங்கம் போலவோ, கடலுக்குள் உறங்கும் முத்து போலவோ கூட அல்ல, தோலுக்குள் இருக்கும் சுளை போலவோ, நெல்லுக்குள் இருக்கும் அரிசி போலவோ, இருக்கிறதா இல்லையா என்று கேட்டுப்பார். குமாரசாமிராஜா இந்த அளவு எடுத்துக் கூறியது எனக்கென்னமோ, கை சுளுக்குடன் கஷ்டப்படும் கந்தப்பனுக்கு வலி போக்கிக் கொள்ளக் கிடைக்கும் பச்சிலைத் தைலம் போலத் தோன்றுகிறது. இதுவாவது கிடைக்கிறதே என்று மகிழக்கூடத் தோன்றுகிறது. கவர்னர் பதவியிலிருந்து விலகியதும், இது குறித்து, மேலும் பல உண்மைகளை, விஷயங்களை நான் கூறுகிறேன் - என்று குமாரசாமிராஜா கூறுகிறார். இதற்குள், தூதும், சமரசப் பேச்சும், ஆகாது கூடாது, அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள், இவர்கள் ஏளனம் செய்வார்கள் என்றெல்லாம் எடுத்துக் கூறும் பாசவலையும் வீசப்பட்டிருக்கும். அத்தனைக்கும் தம்பி வந்து, ஆற்றலுடன், குமாரசாமி ராஜா அவர்கள், வடக்கு கொண்டுள்ள கோலத்தையும் போக்கினையும் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, வடக்கு செலுத்தும் ஆதிக்கத்தை எதிர்த்து, ஏன் என்று கேட்கும் வீரத் தலைவராக வெளிவர வேண்டும். முடிகிறதோ இல்லையோ, இப்போதைக்கு இந்த அளவுக்கேனும் அஞ்சா நெஞ்சுடன் உண்மையை எடுத்துரைத்த நேர்மையைப் பாராட்டத்தானே வேண்டும். செந்திலாண்டவன் கோயிலில் சந்தனம் அறைத்திடும் கந்தப்பனுக்கு, கை சுளுக்குப் போக, எருக்கம் பாலும் களிமண் பூச்சும் மட்டுமல்ல, பச்சிலைத் தைலமும் சிறிதளவு கிடைக்கிறதென்றால், கொஞ்சம் நிம்மதிதானே! அந்தவிதமான மகிழ்ச்சி நமக்கு, ராஜாவின் பேச்சு கேட்டதில், வாழ்க அவர்தம் வாய்மைப் பற்று, வாழ்க அவர்தம் அஞ்சாமை என்று நீயும் நானும் வாழ்த்துவோம், தம்பி! வேறு என்ன இருக்கிறது நம்மிடம், அவருக்கு அளித்திட. அன்பன், 9-9-1956 ஆனால்… ஆகவே…! தமிழர் பிரச்சினையும் காமராஜரின் போக்கும் - அடக்குமுறையும் தம்பி! ஆனால்… ஆகவே… எளிதாகப் பொருள் விளங்கி விடுகிறது என்று எவரும் கருதிக்கொண்டுள்ளனர்; அன்றாட உரையாடலிலிருந்து பாராளுமன்றப் பேச்சுவரையில் மிகத் தாராளமாகப் பயன்படுத்துகின்றனர், இந்த இரு சொற்களை. ஆனால்… …? பார்த்தாயா, தம்பி, நாலு வரி முடிவதற்குள் இந்த ஆனால் எனும் சொல் வந்து தொலைக்கிறது. ஆகவே இதிலிருந்து என்ன புரிகிறது?… … மீண்டும், பார், தம்பி. ஆனால் எனும் சொல்போலவே, ஆகவே என்ற சொல்லையும் அழைத்துக் கொண்டேன். அந்த அளவுக்கு எவருடைய பேச்சிலும் எழுத்திலும், தோழமை கொண்டாடிக்கொண்டு, ஆனால், ஆகவே எனும் இந்த இரு சொற்களும் இடம்பெற்று விடுகின்றன. பேச்சிலும் எழுத்திலும் தோழமை கொண்டாடி இடம் பெற்றுள்ள இந்த இரு சொற்களும், தம்பி, காண்பதற்கு மிக எளிதாகப் பொருள் தரத்தக்கன போல் இருக்கும். ஆனால், இந்தச் சொற்களிலே புதைந்து நிற்கும் பொருளை விளக்கிக் கொள்வது உண்மையில் எளிதல்ல. அணு என்ற உடன், ஓஹோ! அணுவா? என்று எப்படி எவரும் மிகமிகச் சாதாரணமாகக் கூறிவிடுவதன் மூலம் அணு குறித்து அனைவரும் அறிந்துகொண்டுள்ளனர், அத்துணை எளிது, அதன் தன்மையை அறிதல் என்று எண்ணும்படிச் செய்துவிடுகிறார்களோ, அது போன்றே, இந்த ஆனால், ஆகவே எனும் இரு சொற்கள் குறித்தும், ஒருபோக்குக் காட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, இந்த ஆனால், ஆகவே எனும் இரு சொற்களையும், "அசை’க்குப் பதிலாகப் பயன்படுத்துவோரும் நிரம்ப உள்ளனர்! ஏதேது, அண்ணா! தமிழ் இலக்கணம் பேசுவது போன்ற போக்குக் கொண்டு, தமிழ் ஆசிரியர்களின் "ஓட்டுக்களை’ப் பறிக்க முயலுகிறாயா? என்று, தம்பி, நீ கேட்க மாட்டாய் - என்னிடமும் உன்னிடமும் கடுப்புள்ளவர் பேச்சல்லவா, அது. நான், தமிழ் இலக்கணம் குறித்து அல்ல இதனை எழுதுவது - எனது இரு தமிழ்ப் பேராசிரியர்களும் - மணி திருநாவுக்கரசு, மோசூர் கந்தசாமியார், இருவரும் வெகு பாடுபட்டனர், எனக்கு இலக்கணம் கற்பிக்க, நான் தமிழின் இனிமை பற்றி மட்டுமே அறிந்துகொள்ள முடிந்தது. இலக்கணப் பயிற்சியில் என்னை வெற்றிபெறச் செய்வதிலே, எனது இரு ஆசிரியர்களும் வெற்றிபெறவில்லை, ஆகவே… பார், பார், தம்பி! மீண்டும் அந்த ஆகவே வந்து ஒட்டிக்கொள்கிறது! அடா, அடா, இந்த இரு சொற்களும், பொதுவாழ்வுத் துறையினரின் நாவிலே இருந்துகொண்டு, அவர்களையும் அவர்களிடம் தொடர்பு கொண்ட பொது மக்களையும், படுத்தும் பாடு இருக்கிறதே, தம்பி, சொல்லுந்தரத்ததல்ல. ஒரு பிரச்சினையை விளக்கிக் கொண்டே போகிறார் ஒரு தலைவர் என்று வைத்துக்கொள் - ஏன் வைத்துக்கொள் என்று தயவாகக் கேட்டுக்கொள்கிறேன் என்றால், இப்போதெல்லாம் பிரச்சினைகள் விளக்கப்படுவதில்லை, புகுத்தப்படுகின்றன, புதிராக்கப்படுகின்றன! எல்லாத் தலைவர்களுமா அவ்விதம் என்றால், தம்பி, பெரும்பாலோர் இம் முறையைத்தான் கையாள் கிறார்கள் - வேறு சிலர், நல்ல விளக்கம் தருகிறார்கள், ஆனால் பிரச்சினைகளுக்கு அல்ல - இந்த நிலைமை இருப்பதனால்தான் பிரச்சினையை விளக்குவதாக வைத்துக்கொள் என்று தயவு கோரும் தன்மையில் கேட்டுக்கொண்டேன் - இனிக்கேள், பிரச்சினையை விளக்கியானதும், ஆனால் அல்லது ஆகவே எனும் இரு சொற்களும் துள்ளிக் குதித்து வந்து நிற்கின்றன - அந்தத் தலைவர், இந்த இரு சொற்களிலே, எதனைத் தன் பேச்சுக்கும், அதை அடுத்துத் தன் செயலுக்கும் துணையாகக் கொள்கிறாரோ, அதைப் பொறுத்துத்தான், சமுதாயத்துக்குக் கிடைக்கும் பலன் இருக்கிறது. இதைச் சொல்லத்தான் நான் இலக்கண பாடம் போன்ற முறை துவக்கினேன் - இலக்கணம் போதிக்க அல்ல. நமது நாட்டிலே, இந்த இரு சொற்களுக்கிடையே கடுமையான போட்டிலிதலைவர்கள் திணறும்படியான நிலை ஏற்பட்டுவிடுகிறது - கடைசியில் அவர்கள், ஆனால் போடவேண்டிய கட்டத்தில் ஆகவே யையும், ஆகவே என்று கூறவேண்டிய கட்டத்தில் ஆனால் என்று கூறியும், பிரச்சினைகளைப் பாழடித்து விடுவதைத்தான் பெரிதும் காண்கிறோம். நம் நாட்டிலேயே பல பிரச்சினைகளுக்கு, எத்துணையோ முயற்சிக்குப் பிறகும், தக்கதோர் பரிகாரம் கிடைக்காமற் போனதற்குக் காரணம், இந்த ஆனால் ஆகவே எனும் இரு சொற்களும், தலைக்குப் போட வேண்டியதைக் காலுக்கும் காலுக்குப் போடவேண்டியதைத் தலைக்கும் போட்டுக் கொள்ளும் அலங்கோலம் போலப் பயன்படுத்தப் பட்டுவிடு வதுதான் என்பதை, பல்வேறு அரசியல் சம்பவங்களையும் ஆய்ந்தறிந்தால், அறிந்துகொள்ளலாம். பொதுவாகக் கவனிக்கும்போது ஒரு உண்மை புலப்படும்; ஆனால்… என்றசொல், இழுப்பு, வழுக்கல், திகைப்பு, திணறல், அச்சம், தயை, தாட்சணியம் போன்ற மனப்போக்கின் விளைவாக முளைப்பதையும், ஆகவே எனும் சொல், உறுதிப்பாடு, செயல்படுதிறன், எழுச்சி, முயற்சி போன்ற போக்கிலே மலர்வதையும் உணரலாம், பெரிதும். எழுச்சி கொண்டோர்போல நடித்துவிட்டு, பிறகு வழுக்க விரும்புவோர், பிரச்சினை பற்றிப் பேசிக்கொண்டே வரும்போது; சரி சரி, பிரச்சனையைக் காரசாரமும் வீரதீரமும் ததும்பும் வகையில் விளக்குகிறார் இந்தத் தலைவர், ஆகவே இந்த அக்ரமத்தை ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிடப் போகிறார் என்று கேட்போர் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பர். ஆகவே என்று சொல்வதற்குப் பதிலாக அந்த அருந்தலைவர் ஆனால் என்று இணைப்புப் போட்டு, இழுப்புப் பேச்சில் இறங்கி, வழுக்கி விழுந்து, தமது அச்சத்தையோ, அல்லது தயவு தாட்சணியத்துக்குக் கட்டுப்பட்டு விட்ட தன்மையையோ காட்டிக் கொண்டுவிடுவார். இதோ ஓர் எடுத்துக்காட்டு - "நமது திட்டம் சமதர்மம், சமதர்மம்தான் நீதியையும் நேர்மையையும் அடிப்படையாகக் கொண்டது. சமதர்ம திட்டத்தைத்தான் மக்களாட்சியின் மாண்பறிந்த நாடுகளெல்லாம் ஏற்றுக்கொண்டுள்ளன. பாரதமும் சமதர்ம திட்டத்தை ஆவடி காங்கிரசின் போதே, ஏற்றுக்கொண்டுவிட்டது. நேரு பண்டிதர், தமது ஆட்சியின் குறிக்கோள் யாது என்ற பிரச்சினையை இவ்விதம் விளக்குகிறார். மாம்பழத்தை, தோலைப் பதமாகச் சீவி எடுத்துவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கிறார். மாம்பழத் துண்டு கிடைக்கப் போகிறது, சுவை பெறப்போகிறோம் என்றுதானே எவருக்கும் தோன்றும். கிடைக்கிறதா என்று பார், தம்பி. பிரச்சினையை இந்த ஆர்வத்துடன் நேரு பண்டிதர் விளக்கிக் கொண்டு செல்வது கண்டு, என்ன எண்ணிக் கொள்வோம். விளக்கத்தின் இறுதியில் ஆகவே என்று வீரச்சொல் தந்து, ஆகவே, இந்த நாட்டிலே தொழில்களை முதலாளிகளிடம் விட்டுவைக்கப் போவதில்லை. கொள்ளை இலாபக்காரனை விட்டு வைக்கமாட்டோம். உழைப்பவனை வாட்டி வதைத்து ஒரு சிலர் உல்லாச வாழ்வு நடத்துததற்கு அனுமதிக்கமாட்டோம். என்றெல்லாம் நேரு பேசப்போகிறார். ஆர்வம் கொந்தளிக்கும், வீரம் வீறிட்டெழும் என்றுதானே எண்ணிக்கொள்வோம். அவரோ, பிரச்சினையை விளக்குவதிலே விவேகம் காட்டி விட்டு, இறுதியாக உறுதிப்பாட்டைக் குறித்திடும் கட்டம் வந்ததும், ஆகவே என்ற சொல்லை, மெல்லச் சிரமப்பட்டுத் தள்ளிவிட்டு, ஆனால் எனும் இழுப்புச் சொல்லினை இழுத்தணைத்தபடி, ஆனால் சமதர்மம் வெற்றி பெறுவதற்கு முதலாளிகளை ஒழித்தாக வேண்டும் என்பதில்லை. தொழில்கள் தனிப்பட்ட முதலாளியிடம் இருக்கக் கூடாது என்று சட்டம் போடத் தேவையில்லை. இலாபம் தேடுவோரைத் தடுக்கவேண்டும் என்பதில்லை. என்றெல்லாம் பேசுகிறார். திகைத்து நிற்கிறோம், திணறிப் போகிறோம், சமதர்மத் திட்டமே திக்குத்தெரியாத காட்டிலே விடப்பட்ட சிறகொடிந்த பறவை போலாகிவிடுகிறது. தம்பி, இந்தக் கட்டத்தில் மட்டும் ஆனால் என்ற அவலச் சுவை தரும் சொல்லைக் கொள்ளாமல், ஆகவே என்ற சொல்லை இணைத்துத் தம் ஆற்றலைக் காட்டினால் எத்துணை நன்மை கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்கும்போது, ஏக்கம் பிறக்கத்தான் செய்கிறது. சூயஸ் கால்வாய் எகிப்தின் உடமை: அதனை நிர்வாகிக்கும் உரிமையை எழுச்சி பெற்ற எகிப்து நிலைநாட்டிக்கொண்டு விட்டது - என்ற இந்த விளக்கத்தின் தொடர்ச்சியாக, ஆகவே, ஆனால் எனும் இரு சொற்களில் எது பயன்படுத்தப்படுகிறதோ அதைப் பொறுத்து, இன்றைய உலகப் போக்கே இருப்பதனை எண்ணிப் பார்த்திடும்போது, ஆனால் - ஆகவே எனும் இருசொற்களும் வடிவில் சிறியன, மகத்தான வலிவுடையன என்பதை அறிந்து கொள்ளலாம். சூயஸ் வரையிலே செல்வானேன், தம்பி, நமது குடும்ப விவகாரம் போதுமே. பெரியாரின் திருமணப் பிரச்சினை கிளம்பியபோது ஆனால் போட்டவர்கள் ஒரு சிலர் ஆகவே போட்டவர்கள் ஒரு சாரார் - திராவிடர் கழகம் திராவிடர் முன்னேற்றக் கழகம் எனும் இரு வடிவமே அல்லவா ஏற்பட்டு விட்டன! தம்பி, சாமான்யமான சொற்களல்ல, இந்த, ஆனால் ஆகவே - என்பவைகள், மிகப் பொல்லாதன!! தேவிகுளம் பீர்மேடு பிரச்சினையின்போது, அவை தமிழருக்கு உரியன என்பதற்கான காரணங்களை, வரலாற்று ஆதாரங்கள், புள்ளி விவரங்கள் ஆகியவற்றினைத் துணை கொண்டு நிதியமைச்சர் சுப்பிரமணியம் நேர்த்தியாகப் பேசினார், சட்டசபையில் - தேவிகுளம் இழந்தோம் - காரணம் என்ன? - இவ்வளவு பேசியவர், ஆகவே என்று ஆர்த்தெழவில்லை, ஆனால் என்று ஆமையானார்; சிறிது நாட்களிலே அந்தப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் ஊமையுமானார். ஆகவே என்ற சொல் கொலுவிருக்கவேண்டிய கட்டத்தில், ஆனால் எனும் சொல் குடிபுகுந்தது; காடும் மலையும் கவினுற விளங்கிடும் தேவிகுளம் பீர்மேடு, நெய்யாற்றங்கரை போன்ற இடங்களை இழந்தோம். ஆகவே என்ற சொல்லினை அமைச்சர், அரியாசனத்தில் அமர்த்தியிருந்தால், தேவிகுளம் ஆகிய பகுதிகள் தமிழர்க்குக் கிடைத்திருக்கும் அமைச்சர் பதவி ஒருக்கால் அவருக்கு இல்லாது போயிருக்கும்! தமிழர் வாழும் இடம் இது தமிழரின் தாயகம் - ஆகவே தமிழ்நாடு என்றே பெயர் அமைதல்வேண்டும் என்று பெரியாரே கூறினார். அவருடைய பேரன்பைப் பெற்றுப் பெருமிதம் கொண்டுள்ள காமராஜரோ, ஆகவே இதற்குத் தமிழ்நாடு என்று பெயரிடலே பொறுத்த முடைத்து என்று கூறாமல், ஆனால், உலகில் சென்னை என்றால்தான் புரியும், சென்னை ராஜ்யம் என்றே பெயர் இருக்கும் என்று அறிவித்துவிட்டார். தமிழருக்குத் "தமிழ்நாடு’ என்ற பெயர் அணியும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகவே இப்படிப்பட்டவரின் ஆட்சியை ஆதரிப்பது அறமாகாது என்றல்லவா தம்பி! நீ கூறுகிறாய். தமிழ்நாடு என்ற பெயர்கூட வைக்கத்தான் காமராஜர் முன்வரவில்லை, ஆனால் அவர் நல்லவர், நம்மவர், தமிழர், அவர்தான் மீண்டும், மீண்டும் ஆட்சி செய்யவேண்டும் என்றல்லவா பெரியார் சொல்கிறார். இதன்பயனாக அரசியல் நிலைமையும், போக்கும், எவ்வளவு எதிர்பாராதமுறையில் உருவாகிவிட்டது, உணருகிறாயல்லவா? பொதுமக்கள் பேசுவதை சற்று உற்றுக் கேட்போம், வா, தம்பி, பெரியார், தமிழ்நாடு என்று தான் பெயர் இருக்க வேண்டும் என்கிறார். ஆர்வத்தோடு சொல்கிறார் : எழுச்சியூட்டும் முறையில் எடுத்துரைக்கிறார். இந்தப் பெயர் கிடைப்பதற்காகப் பெரும்போரே நடத்துவேன் என்று எச்சரித்திருக்கிறார். காமராஜரோ, அதெல்லாம் அர்த்தமில்லாத பேச்சு, ஆனாவசியமான ரகளை, வீணான குழப்பம், சென்னை ராஜ்யம் என்ற பெயர்தான் இருக்கும். ஆமாம், யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூச்சல் போடட்டும் என்று பிடிவாதமாகப் பேசுகிறார். ஆகவே பெரியார், காமராஜரின் இந்தக் குருட்டுப் போக்கை வன்மையாக எதிர்த்துப் போராடக் கிளம்புவார் - இப்படித்தானே பொதுமக்கள் - பெரியார், தமிழ்நாடு என்ற பெயர் தேவை என்பதற்கான விளக்கமளித்தபோது பேசிக்கொண்டனர். பிறகோ, காமராஜர், தமிழ்நாடு என்ற பெயர் சூட்டக்கூட ஒப்பாதது கண்டு, பரணி பாடினாரோ என்றால், இல்லை. ஆனாலும் காமராஜரை ஆதரிக்கிறார்! ஏன்? ஏன்? என்று பொதுமக்கள் கேட்கின்றனர். இவ்வண்ணம், தம்பி, ஒவ்வோர் பிரச்சினையிலும், இந்த ஆனால், ஆகவே எனும் சொற்கள், வண்ணத்தை, வடிவத்தை வலிவை, விளைவை, நிலையை, நோக்கை, மாற்றிவிடக் காண்பாய். ஒவ்வொன்றாகவும், ஒவ்வோர் முனையில் நின்றும் எண்ணிப் பார்த்தால், முழுவதையும் காண்பாய் - இல்லையேல், குருடர் கண்ட யானைக் கதையாக முடியும். என்னோடு இருந்தார்கள், என்னால் ஆளானார்கள், என் திருமணத்தின்போது விட்டுப் பிரிந்தார்கள், தனிக் கட்சியானார்கள். என்ற பேச்சுடன், பெரியார் ஆனால் திராவிடநாடு பிரச்சினை, பொருளாதாரத் திட்டம் சமுதாயப் பிரச்சினை ஆகியவற்றிலே, முன்பு கொண்டிருந்த கருத்தினையே கொண்டு இருக்கிறார்கள். தனியாக இருக்கிறார்கள், வேறு கட்சிகளிலே குடிபுகுந்துவிடவில்லை. என்று மட்டும் சேர்த்துப் பேசுவது என்ற போக்கு இருந்தால், இன்று அவர், என்னை விட்டுப் பிரிந்து போனதுகள், ஆனாலும் என் கொள்கைகளையே கொண்டோராக இருப்பதால், தேர்தலில் ஆதரிக்கிறேன் என்றல்லவா கூறுவார்! ஆனால் - ஆகவே எனும் இரு சொற்களும், பயன்படுத்தப்படவேண்டிய முறைதவறிப் போவதால், தாலாட்ட வேண்டியவர்கள் தடிகொண்டு தாக்க வருவது போன்ற வேதனைதரும் விசித்திரம் விளைகிறது. மற்றோர் வேடிக்கை, கேள், தம்பி! வடநாட்டு நேருவுக்கு நாம் கருப்புக் கொடி காட்டினோமல்லவா? நையப் புடைத்தார்கள்! சிறையில் போட்டுச் சிதைத்தார்கள்!! இதைக் கண்டோர் கண் கலங்கினர். இது குறித்துப் பேசினோர், பரிதாபப்பட்டனர். தி. மு. க. க்களின் திட்டம் எங்களுக்குப் பிடிக்காது, ஆனால் அவர்கள் மீது சர்க்கார் ஏவிய அடக்கு முறையைக் கண்டிக்கிறோம். என்று நம்மோடு நேசமற்ற ஏடுகளும் எழுதின. இதுகள் என்னைவிட்டுப் பிரிந்துபோய் தனிக் கட்சி வைத்துக்கொண்டன, ஆனால் பாவம், வடநாட்டு எதிர்ப்பு உணர்ச்சியைக் கைவிட வில்லை; நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டும் அளவுக்கு ஆர்வமும் ஆற்றலும் காட்டினர்; மகிழ்கிறேன்; அவர்களைப் போலீஸ் காட்டு மிராண்டித்தனமாக அடித்தனர்; கண்டிக்கிறேன். இதுபோல் பெரியார் கூறும் போக்கிலே இருந்தால், பாசம் பால்போல் பொங்குமல்லவா! இப்படித்தான் பேசுவது முறை என்று தானே பகைவரும் கூறுவர்! கட்சியிலிருந்து, பிரிந்து போனார்கள், ஆனால் கடுமையான அடக்குமுறைக்கு ஆளானார்கள், என்று பச்சாதாபம் காட்டத்தானே வேண்டும். அந்தச் சம்பவத்தின்போது, ஆனால் போட்டுத்தான் பெரியார் பேசினார், எழுதினார்; எப்படி? நம்மிடம் பச்சாதாபம் காட்டும் முறையில்! அடக்குமுறையைக் கண்டிக்கக் கடற்கரையில் கூட்டம் கூட நடத்தினார். அந்த "ஆனால்’ அவருடைய அவசரகாலத் திட்டம் என்பது இப்போது அவர் ஆனால் என்னும் பதத்தை வேறு நோக்குடன் பயன்படுத்துவதலிருந்து தெரிகிறது. இப்போது பெரியார் பேசுகிறார், நான் கொடிகொளுத்து என்றேன். சர்க்கார் என்னிடம் நெருங்கவில்லை. கருப்புக் கொடி பிடித்தோம்; போலீஸ் பாதுகாப்பு கொடுத்தது. ராமர் படம் கொளுத்தினேன்; ஒரு துளி சர்க்கார் அடக்குமுறையும் கிடையாது. நீ, நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டினாய் என்ன செய்தார்கள்? பூட்ஸ் காலால் உதைத்தார்கள், உருட்டி உருட்டித் தள்ளினார்கள். என்று பேசியிருக்கிறார். நான் கிளர்ச்சி செய்தேன் அடக்குமுறை ஏவவில்லை, ஆனால் நீ கருப்புக் கொடி காட்டினாய், உதை உதை என்று உதைத்தார்கள்! என்று பேசுகிறார். ஆனால் எனும் சொல் இதற்குப் பயன்பட்டது! ஒருமுறைக்குப் பன்முறை இந்தப் போக்கினை அலசிப்பார், தம்பி, தமிழகத்தின் அரசியலே புரியும்! நம்மோடு சேர்ந்திருப்பவர்களுக்குப் பெரியார் பயமூட்டப் பார்க்கிறார். ஓ! தோழர்களே! அங்கே இருந்தால் உங்களுக்கு அல்லல், அவதி, அடக்குமுறை தாக்கும். என்னோடு இருந்தால், துளியும் தொல்லை இல்லை. துரைத்தனம் உங்களைத் தொடாது. என்ன கிளர்ச்சி செய்தாலும், என்னோடு இருப்பவருக்கு இம்சை நேரிடாது. சந்தேகமிருந்தால், கொடி கொளுத்தும் திட்டம், பிள்ளையார் உடைப்பு, ராமர் எரிப்பு எதை வேண்டுமானாலும் பார். போலீஸ் நம்மை ஏதாவது செய்ததா? அதுகள் கதை தெரியுமா? அதுகள் கருப்புக் கொடி பிடித்தன! உதைத்தார்கள்! உருட்டினார்கள்! சுட்டுத் தள்ளினார்கள். ஆகவே அதுகளோடு சேராதே! என்னோடு வா! தொல்லை வராது! துரைத்தனம் தொடாது! என்று அழைக்கிறார். பூட்ஸ் காலால் உதைபட்டோம் - உண்மை. உருட்டி உருட்டித் தள்ளப்பட்டோம், உதை உதை என்று உதைத்தனர்; மறுக்க வில்லை! துப்பாக்கியால் சுட்டனர் - பிணமாயினர் தோழர்கள்! ஆமாடா தம்பி ஆமாம். மிகமிக நாகரீகமான முறையில், நல்லாட்சியுள்ள எந்த நாட்டிலும் அனுமதிக்கப்படும் கருப்புக் கொடி காட்டும் முறையில் கிளர்ச்சி செய்தோம் - பெரியார் கூறுகிறபடி பூட்ஸ் காலால் உதைத்தனர். உருட்டி உருட்டித் தள்ளினர். உதை உதை என்று உதைத்தனர். இல்லை என்று சொல்லவில்லை - இது இழுக்கு என்று பேசும் பெரியாரோடு நாம் இன்று இல்லை. உதைப்பான்; பட்டுக்கொள். அடிப்பான்; பொறுத்துக் கொள். சுடுவான்; தாங்கிக்கொள். பத்துபேர் செத்தாலும் கவலைப்படாதே. செத்தவர் போக மிச்சம் இருப்பவர், மானத்தோடு வாழட்டும். இப்படிப் போதித்த பெரியாருடன் நாம் இருந்தோம். அடக்குமுறை, வெறிக்கோலத்தில் துரத்தியபோது, நம் தோழர்கள் கலங்காது நின்றபோது, மனக் கண்ணால் அந்தப் பெரியாரைத்தான் கண்டனர். அடிபட்டோம், உதைபட்டோம், என்று கூறிக் கொள்வதிலே, வெட்கமில்லை, பெருமிதத்தோடு கூறுகிறோம்; தாயக விடுதலைக்காக இந்த அளவுக்காவது துணிவு பெற முடிந்ததே என்று மகிழ்ச்சியோடு கூறுகிறோம்; பெரியார் நம்மோடு இல்லாதிருக்கும் இந்நிலையில், அடக்குமுறை கண்டு அஞ்ச நேரிட்டுவிடுமோ என்று ஐயம் கொண்டிருந்த நாம், இல்லை, அவர் இன்று நம்மோடு இல்லாமற் போகலாம், அவர் ஊட்டிய ஆர்வமும் நம்மை விட்டுப் போய்விடவில்லை. உதைக்கிறீர்களா? பட்டுக் கொள்கிறோம். சுடுகிறீர்களா? தாயகத்தின் தளை உடைத்திடும் பணிக்கு இன்னுயிர் தருகிறோம் என்று கூறினோம். இது, என்றென்றும், எண்ணுந்தொறும் நெஞ்சினை நெகிழச் செய்திடும் சம்பவம். இது கேலிக்கும் உதவும் என்று யார் எண்ணியிருப்பார்; ஆனால் - ஆகவே எனும் பொல்லாத சொற்களின் போக்கினால் தம்பி, எது கண்டு எவரும் பாராட்டுவரோ அதே கஷ்ட நஷ்டம் ஏற்ற சம்பவத்தையே, பெரியார், கேலிபேசப் பயன்படுத்திக்கொள்ளும், விசித்திரம் ஏற்படுகிறது. தம்பி, பெரியாராவது, தம்மோடு இருந்தால் கிளர்ச்சி செய்யலாம், சர்க்கார் "கிச்சுகிச்சு’’ மூட்டுவரேயன்றி கொட்ட மாட்டார்கள், தட்ட மாட்டார்கள் என்று ஆசைகாட்டி, அதன் மூலமாக நமது அணிவகுப்பிலேயிருந்து யாரையாவது இழுத்துக்கொள்ளலாமா என்று முயற்சிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்; ஆசைக்கு ஆட்படும் போக்கு நம்மிடம் இருந்தால், இதைவிட, காங்கிரஸ் சுவைமிக்க ஆசை காட்டுகிறதே. பதவி கிடைக்கும் என்று! - அணி வகுப்பிலே, யார் இளித்தவாயராயினர்! கொள்கைக்காக கொடிய அடக்கு முறைக்கு ஆளாகினார்கள் என்பது புகழின் சின்னமாயிற்றே! இதைக் காட்டியும் கேலி பேச முடிகிறதே!! அடக்குமுறை கண்டு அஞ்சாமலிருக்கும் மனப்போக்கு பூண்போட்ட தடியால் அடித்தாலும், பூட்ஸ் காலால் உதைத்தாலும், தாங்கிக் கொள்ளும் வீர உள்ளத்தை, பெரியாரே! எமக்குத்தாரும்!! தாரும்!! - என்று கேட்டுக் கேட்டுப் பெற்றோம். இன்று அடிபட்டார்கள், உதைபட்டார்கள், ஆகையால் அங்கே போகாதீர்கள் - நான் நடத்தும் கிளர்ச்சியிலே புகை இருக்கும் நெருப்பு இராது; நெருப்பே தீண்டினாலும் சுடாது சுட்டாலும் புண்ணாகாது; புண்ணானாலும் மருந்தில்லாமலே குணமாய்விடும் என்று பேசுவது கேட்டா, தம்பி, நீ நமது கழகத்தைவிட்டுச் சென்றுவிடுவாய்! அப்படி நீ கேட்பதோ, தவறு அண்ணா!! என்று கேட்டிடும் எண்ணற்ற தம்பிமார்களின் கோபப் பார்வையை அல்லவா நான் காண்கிறேன்! அடிப்பார்கள்! உதைப்பார்கள்! ஆகவே, என்னோடு வாருங்கள் - எந்தக் கிளர்ச்சி செய்தாலும் சர்க்கார் கிட்டே கூட வரமாட்டார்கள் என்று ஆசை காட்டும் பெரியார் ஒரு அரைமணி நேரம் மட்டும்தான் பேசுகிறார். உடனே உண்மைப் பெரியார் முழக்கமிடுகிறார், அதே கூட்டத்தில் 5000 பேர் தூக்குமேடை ஏறச் சித்தமாக இருக்கவேண்டும் தெரிகிறதா! - என்று கூறுகிறார்! இதிலிருந்து உனக்கு என்ன, தம்பி, புரிகிறது! எனக்குத் தலை சுற்றுகிறது! அங்கே இருந்தால் அடிப்பார்கள், ஆகவே அங்கு இராதே; ஆனால் இங்கே வா, தூக்குமேடை ஏற!! இதிலே உள்ள ஆகவே ஆனால் - இவைகளின் போக்கு எப்படி இருக்கிறது, என்பதை ஆரஅமர இருந்து எண்ணிப்பார்! அடிபட்டோரே! உதைபட்டோரே! அடக்குமுறைக் கொடுமைக்கு இலக்கானோரே! அவர்கள் எம்மை அடித்தபோது ஏற்பட்ட வேதனையைக் காட்டிலுமன்றோ, அது குறித்துக் கேலி பேசுவது கேட்டு வேதனை எழுகின்றது. அருந்தொண்டாற்றக் கிளம்பினோரையா அடித்திடக் கிளம்பினீர்! அறிவிலிகாள்! பிரிந்தோர் எனினும் அவரும் எம்மவர் என்பதை மறந்தா நிற்போம்! என்று கூறி, களம் வந்து துணிபுரிவர் நல்லோர். அந்த அளவுக்கு மனம் இடம் தராது போயினும், ஐயகோ! அடிக்கின்றனரே, அறியாச் சிறாரை! என்று கூறிக் கண்ணீர் சிந்தவேனும் இசைவர் இதயம் படைத்தோர். அடித்தனர், உதைத்தனர், உருட்டினர்! என்று கேலியல்லவா செய்கின்றனர் - என்று தோன்றும் தம்பி! இதையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். போர்க்குறிக் காயமே புகழின் காயம்! யார்க்கது வாய்க்கும்! ஆ! ஆ! நோக்குமின்! அனந்தம் தலைமுறை வருந்தனி மக்கள் தினந்தினம் தாம் அனுபவிக்கும் சுதந்திரம் தந்தது தம்முனோர் நொந்த புண்ணென் றெண்ணிச் சிந்தை அன்புஉருகிச் சிந்துவர் கண்ணீர் என்றார் மனோன்மணீயம் ஆசிரியர். புகழின் காயம் பெற்றோம்! மேலும் மேலும் பெறுவதற்கான உள்ள உரம், இத்தகு கேலி மொழிகளால் ஏற்படும். ஆகவே, தம்பி, கவலைப்படுவானேன்! ஆனால்… ஆகவே எனும் சொற்களின் சிலம்பம் தரும் சுவையான பாடம் கண்டு மகிழத்தான் இதைச் சொல்கிறேனே யல்லாமல், இதிலே குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்காக அல்ல. "இந்த நாட்டை இன்றைய தினம் ஆளுகிறவர்கள் வடநாட்டார்கள்; பணியாக்கள், மார்வாடிகள், குஜராத்திகள்தானே! அவர்கள் இந்த நாட்டை ஆளுவதற்கு உள் உளவாய் இருந்துகொண்டு இருப்பவர்கள் நம் நாட்டுப் பார்ப்பனர்கள்; அவர்களுக்குக் கூலியாயிருப்பவர்கள், திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த சில விபீஷணர்களும், அனுமார்களும் ஆவார்கள்.’’ பெரியார் பேருரையில் அவர் பகுதி இது. ஆகவே, விபீஷணர்களையும் அனுமார்களையும் தேர்தலில் ஆதரிக்கக்கூடாது. இந்நாட்டு காமராஜர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள்தான், உள் உளவு ஆட்கள் - என்று கூறத் தோன்றும் உனக்கு. ஆகவே போட்டால் இந்தக் கருத்துத்தான் பிறக்கும். ஆகவே, ஆகவே போடாமல் ஆனால் போட்டு காமராஜர் காங்கிரஸ்காரர்தான், அந்த முறையில் வடநாட்டுக்குக் கங்காணிதான், ஆனால் அவர் நல்லவர், நம்மவர், ஆகவே அவரை ஆதரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம், அவர் ஒண்டிக்கட்டையாக வெற்றிபெற்றால் பலன் இல்லை, ஆகவே காங்கிரஸ் மெஜாரடியாக வெற்றி பெறப் பாடு பட்டுத் தீரவேண்டும். ஆனால் காங்கிரஸ் நல்ல ஸ்தாபனம் என்று எண்ணிவிடாதீர்கள், அது முதாளிமுகாம், பார்ப்பனப் பாதுகாப்புச்சபை, வடநாட்டுக்கு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் கங்காணி ஸ்தாபனம் - என்று எடுத்துரைக்கப்படுகிறது. இந்த அரசியல் தனி ரகமாக இருக்கிறதே என்பதற்காக அல்ல இதனைக் கூறுவது, இந்தக் கருத்தோவியத்தில், ஆனால் ஆகவே என்ற சொற்கள் அரசியல் போக்கையே தம் இஷ்டப்படி ஆட்டிப்படைக்கும் வேடிக்கையைக் கவனித்துக் களிப் புறுவதற்குத்தான். அண்ணா! உன் நோக்கம் இந்த இரு சொற்கள் நடத்தும் சிலம்ப வேலையின் வேடிக்கையை எடுத்துக்காட்டுவதாக இருப்பினும், இடையிடையே வரும் அரசியல் பிரச்சினைகளை அடியோடு எப்படி ஒதுக்கிவிட முடியும் - ஆகவே ஒரு கேள்வி கேட்கிறேன் - காங்கிரஸ் கெட்டதுதான், காமராஜர் போன்றவர்கள் வடநாட்டு ஆதிக்க வளர்ச்சிக்கு உடந்தைதான் ஆனால் காங்கிரசை இதற்காக ஒழிப்பது என்று நாம் முயற்சிக்கும்போது, அதனைச் சாக்காகக்கொண்டு சந்து கிடைத்ததும் பொந்து ஆக்கிக்கொள்ளும் நச்சுகள் இடம் பெற்றுவிட்டால் என்ன செய்வது சொல்லு கேட்போம் - என்று கேட்கத் தோன்றும், தம்பி. பெரியார் இதை எண்ணிப் பார்க்காமலில்லை! இது பற்றி அவர் தீர்க்கமாக ஆலோசித்துப் பார்த்தார் பிறகு, சொல்லுகிறார் - சொல்லி இருக்கிறார்… காங்கிரசை ஒழிப்பதற்கு முதல் வேலை காங்கிரஸ் எதிரிகளுக்கு வெற்றி உண்டாக்குவதேயாகும். உண்மை எதிரி கிடைக்காத இடத்தில் எதிரி வெற்றிபெறமாட்டார் என்று கண்ட இடத்தில், வசதிபோலப் பார்த்து யாருக்கு ஓட்டுப் போட்டால், காங்கிரஸ் தோல்வி அடையும் என்பதாகக் காணக்கிடைக்கிறதோ அந்தப் பெட்டியில் ஓட்டுப் போடுங்கள். வேறு அபேட்சகர் இல்லை என்றோ, வெற்றி பெறமாட்டார் என்றோ கண்ட இடத்தில், பார்ப்பனருக்கு ஓட்டுப் போட்டால்தான் காங்கிரஸ் அபேட்சகர் தோல்வியுறுவார் என்று கண்டால், பார்ப்பனருக்கு ஆவது ஓட்டு செய்து காங்கிரசைத் தோற்கடிக்கவேண்டியது அறிவுடமையாகும். கங்காணிகள் - துரோகிகள் - உண்மைச் சூத்திரர்கள் பேச்சைக் கேட்டு எந்தக் காரணத்தைக்கொண்டும் காங்கிரஸ் கங்காணிப் பெட்டியில் ஓட்டு விழும்படி நடந்துகொள்ளாதீர்கள். எப்படியாவது காங்கிரஸ் அழியவேண்டும், ஒழிய வேண்டும். ஏன் என்றால் அது நம் நாட்டுப் பார்ப்பனர் போல் தேவை இல்லாத ஸ்தாபனம் கேடானகேட்டை விளைவிக்கும் உள்மாந்தை போன்ற ஸ்தாபனம் என்பதே நமது முடிவு.’’ தம்பி! இன்னும் என்ன விளக்கம் வேண்டும்? அப்போதைக்கு இப்போதுள்ள நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்தால். சென்ற தேர்தலின்போது, அபேட்சகர்கள் நிறுத்தும் வேலையில் ஆச்சாரியார் ஈடுபடவில்லை, இப்போது டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் அந்தக் காரியத்தைக் கவனிக்கப் போகிறார்! இந்தக் கட்டம் வந்ததும், மீண்டும் அந்தப் பொல்லாத சொற்கள் வந்துவிடுகின்றன! வளைவும் நெளிவும் தெரிகின்றன. ஆனால், ஆகவே என்ற சொற்களின் சுவைமிகு காதையை நான் நமக்குச் சாதகமாக்கிக்கொண்ட கோபத்தில் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள், அதே பாணியில் தன்னால் எழுதும். படித்துச் சுவைத்திடுவதுடன், நாம் நமக்காகமட்டுமல்ல, நம்மைத் தாக்குவோருக்கும் உதவுகிறோம் என்று பெருமையும் கொள்ளலாம். நினைக்க நினைக்க வேடிக்கை வேடிக்கையாக இருக்கிறது இந்த இரு சொற்கள் நடத்தும் விளையாட்டு. குமாரசாமிராஜா, வடக்கு பொருளைப் பாழாக்குகிறது ராஜ்ய சர்க்கார் விஷயத்தில் அனாவசியமாகக் குறுக்கிடுகிறது, அதன் இந்தப் போக்கை நாம் எதிர்க்கவேண்டும் - என்றெல்லாம் பேசினாரல்லவா! அந்தப் பேச்சுடன் அவர், “ஆகவே’ எனும் சொல்லை இணைத்திருந்தால், இன்று, தென்னாட்டு விடுதலைப் போர்த் தலைவராகிச் செயல்பட வேண்டிவரும். அவருக்கு அது விருப்பமில்லை. ஆகவே,”ஆகவே’ வை விட்டுவிட்டார். இப்போது "ஆனால்’ பேச ஆரம்பித்து விட்டதாகத் தெரிகிறது. வடக்கு அப்படிச் செய்கிறது, அது, இது என்று நான் சொன்னேன் - ஆனால் எனக்கு வடநாடு தென்னாடு பேதம் கிடையாது - அந்தக் காரியத்தை நான் ஆதரிக்கவும் மாட்டேன் - எதிர்க்கக் கூடச்செய்வேன் - நான் காங்கிரஸ் வாதியாக்கும்! - என்று நிருபரிடம் கூறுகிறாராம். பார்த்தாயா; தம்பி, ஒரே ஒரு சொல், ஒருவருடைய போக்கையே மாற்றிவிடுகிறது. "ஆகவே’’ என்று அவர் கூறினால் எப்படி இருந்திருக்கும் - ஆனால் என்று கூறும்போது எப்படி இருக்கிறது! மைசூரில் முதலமைச்சராக இருந்த அனுமந்தைய்யாவும், காங்கிரஸ் கெட்டுவிட்டது சுயநலமிகள் புகுந்து விட்டார்கள். இந்தியா, அமெரிக்காவுக்கோ ரμயாவுக்கோ அடிமை ஆகிவிடும். ஏதோ, நேருவின் புகழ், செல்வாக்கால் அந்த அவதி இன்னும் வரவில்லை. என்பதாகப் பேசியிருக்கிறார். “ஆகவே’’ - என்று பேசினால் ஒரு தினுசான அனுமந்தய்யாவும்,”ஆனால்’ என்று பேசினால் முற்றிலும் வேறுவிதமான அனுமந்தய்யாவும் தெரிவார்களல்லவா! ஆகவே, தம்பி, ஆனால் என்பதற்கும் ஆகவே என்பதற்கும் உள்ள மகத்தான சக்தி, பிரச்சினைகளை, நிலைமையை, போக்கை எப்படி எப்படி எல்லாம் உருவாக்க, மாற்றி அமைக்க முடிகிறது என்பதுபற்றி எண்ணிப்பார்த்தேன், ஏ! அப்பா! ஏடு போதாது அவ்வளவு கருத்தலைகள் எழுகின்றன! ஆனால் அவ்வளவும் ஒரு இதழில் தரமுடியுமா? ஆகவே இத்துடன் இதனை நிறுத்திக்கொள்கிறேன். உறக்கமும் வருகிறது; காகம் கரைவது காதில் விழுகிறது. அன்பன், 17-9-56. அறைகூவுகிறார் அமைச்சர்!! நிதி அமைச்சர் மொழிகள் - ஜஸ்டிஸ் கட்சியும் காங்கிரசும் - ஆயிரம் கோடி திட்டம் தம்பி! நிதியமைச்சர் சுப்பிரமணியனார் போர்க்கோலத்துடன் வந்து நிற்கிறார். மெத்தக் கோபத்துடன் அவர் இருக்கிறார் என்பதும் தெரிகிறது. கோபம் ஏன் அவ்வளவு கொந்தளிக்கிறது என்பதும் புரிகிறது. செல்லுமிடமெல்லாம் அவருக்குச் சொல்லுகிறார்கள் "ஊழியர்கள்’ - நமது கழகம் வளர்ச்சி அடைந்திருப்பதனை! "கூட்டம் குறைவுதான்.’’ "பரவாயில்லையே! சென்ற மாதம் காமராஜர் வந்தபோது இதிலே கால்வாசிதான் இருக்கும்.’’ "அப்படியா… இந்த ஊரில் மக்களுக்குப் போதுமான அரசியல் விழிப்புணர்ச்சி இல்லை… பொதுக்கூட்டத்திற்கு வருவதில் ஆவல் எழாததற்கு அதுதான் காரணமாக இருக்க வேண்டும்…’’ "அப்படிச் சொல்லிவிடுவதற்கில்லை…’’ "ஏன்?… என்ன…!’’ "முன்னேற்றக் கழகத்தார் கூட்டம் போட்டால்…!’’ "முன்னேற்றக் கழகம் ஒரு கட்சியா?… அடுக்கு மொழி பேசிடும் ஆள் மயக்கிக் கூட்டம், அதுகளுக்கு அரசியல் என்ன தெரியும்…?’’ "அதுசரி, அதுசரி… ஆனால் இந்த ஜனங்கள்…’’ "குப்பையில் தள்ளுங்கள்… பெரிய கூட்டமா அவர்கள் வந்தபோது?’’ "ஆமாம்… பிரமாண்டம்… அதைப் பார்த்த பிறகுதான் நம்ம பேச்சிமுத்து, தேர்தலில் இறங்கவே தயங்குகிறார்.’’ "அப்படியா! இன்று வெளுத்து வாங்கிவிடுகிறேன், முன்னேற்றக் கழகத்தை…’’ இப்படி உரையாடல் நடந்தான பிறகு, பொதுக்கூட்டம் சென்றிடவும், "பிரமுகர்கள்’ அவரை வரவேற்கவும், பொதுமக்கள் ஆர்வம் காட்டாமலிருக்கவும் கண்டவுடன், நிதி அமைச்சருக்குக் கோபம் கோபமாக வருகிறது, கொக்கரிக்கிறார். இந்தக் கிழமை, தம்பி, சென்ற இடமெல்லாம், எங்கே அந்த அண்ணாத்துரை? பிடித்திழுத்து வாருங்கள்! - என்று கேட்பது போலவே, சீற்றத்துடன் பேசியிருக்கிறார். நான் வருத்தமடை கிறேன், மெத்தவும் அவருக்கு "வேலை’ கொடுத்துவிட்டதற்காக. திட்டம் எங்கே? திட்டம் எங்கே? காட்டட்டும்! நீட்டட்டும்! பார்க்கிறேன்! நிபுணர்களை, அழைக்கிறேன்! அவர்கள் அளித்திடும் தீர்ப்பை ஏற்கிறேன்! என் பதவியைக் கூடத் துறக்கிறேன்! - என்று ஒரே வீராவேசமாகப் பேசியிருக்கிறார். தேர்தல் நேரமல்லவா - தீ பறக்க வேண்டுமே - அப்போது தானே ஐம்பது ஆயிரமானாலும் இலட்சமானாலும் பரவாயில்லை என்று வீசி எறிந்து தேர்தல் வேட்டையில் ஈடுபட “ஆட்கள்’ தைரியம் பெறமுடியும். அதற்காகப் பாபம், அமைச்சர் ஆலாய்ப் பறக்கிறார்,”ஆலகாலம்’ கக்கப்பார்க்கிறார். அவர் உதிர்த்துள்ள "முத்துகளை’ சிந்தாமல் சிதறாமலெடுத்து ஏடுகள் வெளியிட்டுத் தமது தேசியத்தைத் தெரிவித்துக்கொண்டுள்ளன! தேசியத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன் அந்த ஏடுகள், மக்களுக்குத் தெளிவும் அளிக்க வேண்டும் என்ற பொறுப்பையும் கவனித்து நடப்பதானாலும் நான் எடுத்துக் கூறும் பேச்சையும், குலைக்காமல் வெளியிட வேண்டும். அந்தப் பண்பு ஏது? இருந்தால் ஜனநாயகம் ஏன் இன்று கேலிக்கூத்தாகிக் கிடக்கிறது! அது கிடக்கட்டும் நீண்டகால வியாதி, உடம்போடு ஒட்டிக் கொண்டது! என் மீது இத்துணை எரிச்சல் கொள்ள என்ன காரணம் நிதி அமைச்சருக்கு? சாதாரணமாக, நிதி அமைச்சர், நம் பிரச்னைகளை - பேச்சுகளைத் தமது மேலான கவனத்துக்கு உரியன என்றே கருதுவது கிடையாது. நிதியும் மந்திரியும், ஒருசேரத் தம்மிடம் சிறைப்பட்டிருப்பதால், அவர் பண்டைக்காலப் பாதுஷாக்கள் போல, ஊர்ப் பிரமுகர்கள் தரும் உக்காவைப் பிடித்துக்கொண்டு, ஊஹும்… ஆஹாம்… பேசிக் கொண்டு உலா வந்தால் போதும், கழகத்தார் பற்றிக் கவனிப்பதே, தமது மேலான நிலைக்கு ஏற்றதாகாது என்று எண்ணிக்கொள்பவர், எனினும், இந்தக் கிழமை, முழுவதும் அவர், கரூரிலும் மதுரையிலும், திருச்சியிலும் செல்லுமிடமெங்கணும், பொதுவாக முன்னேற்றக் கழகத்தையும், குறிப்பாக என்னையும் போடு போடு’ என்று போட்டு விட்டதாகக் கருதிக் கொண்டு தம்முடைய பலவீனத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார். 1. திராவிட முன்னேற்றக் கழகம் சரியான முறையில் அமைந்த எதிர்க்கட்சி அல்ல. 2. திராவிட முன்னேற்றக் கழகத்தாருக்கு அரசியலே தெரியாது. 3. அடுக்குமொழி பேசுவார்கள் - அனாவசியமாக எதிர்பார்கள். 4. அவர்களுக்கு நாட்டிலே ஆதரவே கிடையாது. இவை நிதியமைச்சரின் மொழிகள் - மதிமிகு மொழிகள் என்று அவர் எண்ணிக்கொண்டிருக்கிறார் - அவராவது அவ்விதம் எண்ணிக்கொள்ளாவிட்டால், வேறு யார் துணைவரப் போகிறார்கள். எதிர்க்கட்சி என்பதற்கு என்ன இலக்கணம் காண்கிறார் நிதி அமைச்சர் - அவர் படித்துள்ள அரசியலில் - படித்திருந்தால்! - என்று அறிய யான் மிகவும் ஆவல் கொண்டுள்ளேன். அவர் பேசுவதிலிருந்து; நான் யூகித்துக்கொள்ள என்ன இருக்கிறது? கம்யூனிஸ்டு கட்சி கெட்டது. சோஷலிஸ்டுகள் கெட்டவர்கள். முன்னேற்றக் கழகம் மிகமிகக் கெட்ட கட்சி. இப்படி எல்லாவற்றையும் கண்டித்துவிட்டு, எதை எதிர்க்கட்சி என்று இவர் கூறுகிறார்? ஒரு சமயம், உண்மையான எதிர்க்கட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே, காங்கிரசிலே இருந்தே சிலரை இவர் அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பி, எதிர்க் கட்சியாக்கி, அரசியல் "சேவை, செய்யப் போகிறாரோ என்னவோ? யார் கண்டார்கள்! ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தைக் கண்டிப்பது. ஆளும் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை அம்பலப்படுத்துவது. ஆளும் கட்சியின் அமுலில் ஏற்படும் அல்லலை, அவதியை எடுத்துக் காட்டுவது. ஆளும் கட்சியின் சட்ட திட்டங்களும், நிர்வாக முறைகளும் ஏழைகளை எவ்விதத்தில் கெடுக்கிறது என்பதை எடுத்துரைப்பது. ஆளும் கட்சி, என்னென்ன விதமான இதமளிக்கும் சட்டம் செய்திருக்கவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவது. உரிமையையும் உடைமையையும் பறிகொடுக்கும் போக்கில் ஆளும் கட்சி நடந்து கொள்ளும்போது, கண்டிப்பது எதிர்த்துக் கிளர்ச்சி நடத்துவது. இவைபோன்றவைதாம், எதிர்க்கட்சிகளுக்கு இருக்க வேண்டிய இலட்சணங்கள் என்று நான் படித்த - அதிக அளவு படிக்கவில்லை, ஆனால் படித்தவரையில் கவனத்துடன் படித்திருக்கிறேன் - அரசியல் விளக்க ஏடுகளில் காணப்படுகின்றன. எதிர்க் கட்சிகளுக்கு இருக்கவேண்டிய இந்த இலட்சணங்கள், யாரிடம், எந்த வகையிலே இல்லை என்பதை எடுத்து விளக்கிட இந்த வீராதி வீரர் முன்வரவில்லை - அதை விட்டு விட்டு "ஓஹோ! இவைகளெல்லாம் கட்சிகளே அல்ல என்று கூறிவிடுகிறார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற கதை உண்டல்லவா, அதுபோல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கத்தில் இன்ன தவறு, போக்கிலே இந்த விதமான கோளாறு இருக்கிறது என்று எடுத்துக்காட்ட வக்கற்ற இந்த வக்கீல், இந்தக் கழகத்தார், முன்பு வெள்ளையர் ஆட்சியிலே வெண்சாமரம் வீசினவர்கள் என்று குதர்க்கம் பேசிவருகிறார். இன்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களில் - முக்கியஸ்தர்களில் - யார் வெள்ளையருக்கு வெண்சாமரம் வீசினவர்கள் - யார் பதவியில் இருந்தவர்கள் - யார் வெள்ளைய னிடம் பணம் வாங்கி வேலைபார்த்தவர்கள் என்பதை எடுத்துக் காட்டும்படி, "சூரசம்ஹார’க் கோலம்பூண்டு சுற்றி வரும் இந்தச் சுப்பிரமணியனாரைக் கேட்கிறேன். எப்போது ஜஸ்டிஸ் கட்சி, சேலத்தில் திராவிடர் கழகமாக மாறிற்றோ, அன்றே, களங்கம் துடைக்கப்பட்டது. "கழுவிவிட்டதை’க் காங்கிரஸ் தங்கக் கலசத்தில் அல்லவா ஏந்திகொண்டது? நாமறியோமா, நாடு அறியாதா, இந்தச் சேதியை? வெள்ளையனிடம் சுளைசுளையாகப் பணம் பெற்றுக்கொண்டு, அவன் காலைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டவர்களை, கட்டி அணைத்துக்கொண்டது காங்கிரஸ் என்பதை விளக்க எத்தனை எடுத்துக்காட்டு வேண்டும்! மந்த மதியினரும் இதனை அறிந்துகொள்ள முடியுமே! அல்லாடி கிருஷ்ணசாமி ஐயா யார்? அலிபுரம் சிறையில் அவதிப்பட்ட தேசியத் தொண்டரோ!! வெள்ளையர் ஆட்சியை ஒழித்திட வீரப்போரிட்ட சிதம்பரனாருடன் கூடிச் செக்கிழுத்த வரோ! அன்னிய ஆட்சிக்கு அடங்கிக் கிடக்கமாட்டேன் என்று ஆர்த்தெழுந்த வைக்கம் வீரருக்கு வலதுகரமோ? தேசத்தை அடிமை கொண்டவனுடன் உறவுகொள்ளமாட்டேன் என்று கூறி, "உத்தியோகத்தை’ உதறி எறிந்த தியாகியோ? நாடு கேட்காதா, நாப்பறை அறையும் இந்த அமைச்சரை? ஐயா! அமைச்சரே! அண்ணாத்துரையும் அவன் சார்ந்துள்ள கழகத்தினரும், வெள்ளையரை ஒழித்திடும் வீரப்போர் புரிந்தவர்களல்லர், எனவே அவர்கள், எமது ஆட்சியிலுள்ள அலங்கோலத்தை எடுத்துக் கூறினால், கேளேன், எவரும் கேளார் என்று விசித்திர வாதம் புரிகிறீரே, இந்த அல்லாடி யார், கூறும் கேட்போம், என்றால், பதில் ஏது கூறுவார்! நான் கூறுகிறேன், தம்பி, நாடறிந்த உண்மையை, அதை மறுத்திடவாவது முன்வருகிறாரா, கேள் இந்த மந்திரியை! அல்லாடி - ஒரு, சர்! ஆங்கில அரசு தந்த பட்டம், அட்வகேட் ஜெனரல் பதவி - ஆங்கில அரசு வீசிய எலும்புத் துண்டு என்றுரைக்கவேண்டும் அமைச்சரின் பாஷையில்! அவரை அல்லவா, அடிபணிந்து அழைத்து, இவர்கள், அரசியல் சட்டம் தீட்டும் வேலையைத் தந்தனர்! தேசத்துரோகி - இவர் தீண்டக்கூடாது எமது விடுதலைச் சாசனத்தை என்றா கூறினர். தேடித் தேடிப் பிடித்திழுத்து வந்தனர், தேசியத் தலைவர்கள், அவர் திருவடி சரணம் என்று கிடந்தனர். அமைச்சரின் அறிவாற்றல் என்ன செய்துகொண்டிருந்தது? அல்லாடியை அழைக்காதே! அவமானத்தைத் தேடாதே! என்றா இவர் ஆர்ப்பரித்தார்! அல்லாடி, அரசியல் சட்டத்தைத் தீட்டிக்கொண்டிருந்த போது, இந்த அமைச்சர் இருந்த திக்கும் தெரியாது நாட்டு மக்களுக்கு! இன்று இளித்து நிற்கவும், இனிப்பாகப் பேசவும் பதவியின் காரணமாக நாலுபேர் நத்திக்கிடக்கக் கிடைத்து விட்டார்கள் என்பதனால் உண்டான போதையில், போதகா சிரியராகிறார் - வெள்ளையன் காலத்தில் இந்தக் கழகத்தார் என்ன செய்தார்கள் தெரியுமா என்று விண்ணாரம் பேசுகிறார். கலெக்டர் வேலையில் காலடி வைத்து, காஷ்மீர் திவான் வேலை வரையில் உயர்ந்து, உள்ளே நுழையாதே! என்று உத்திரவிட்டு, நேரு பண்டிதரின் மார்புக்கு நேராகத் துப்பாக்கியை நீட்டிடும் துணிவுடன் துரைத்தனம் நடத்திய கோபாலசாமி ஐயங்காரல்லவா, மந்திரியானார்! அப்போது. மானமும் ரோஷமும் எங்கே போய்க் குடிபுகுந்தது? வெள்ளை ஏகாதிபத்யத்தின் செல்லப் பிள்ளையாயிற்றே இந்த கோபால சாமியார்! இவரைக் காங்கிரசாட்சியிலே காராக்கிரகத்தில் தள்ளுவார்கள், கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுவார்கள், எந்தத் துப்பாக்கி முனையை நேரு பண்டிதரின் மார்பிலே வைத்தாரோ, அதே துப்பாக்கி முனையை இவருடைய முதுகிலே குத்தி விரட்டுவார்கள். என்றெல்லாம் முழக்கமிட்டனரே காங்கிரஸ் பேச்சாளர்கள் வெட்கமின்றி அவரை அழைத்து “சோடசோபசாரம்’ நடாத்தி,”சுபசோபனம்’ பாடி பாதுகாப்பு இலாகா, மந்திரியாக்கிக் கொள்கிறோமே, உலகு கைகொட்டிச் சிரிக்காதா, என்று, அன்று எண்ணிய தன்மானத் தலைவர் யார்? காட்டச் சொல்லுங்கள்! இன்று துள்ளி வருகுதுவேல்! தூர விலகி நில் என்று துந்துபி முழக்கிடும் இந்தத் தூயவராவது, வாய் திறந்தாரோ! இவர் இருப்பதையே நாடு கவனிக்கவில்லை அந்த நாட்களில்!! இன்று வீரம் சொட்டுகிறது பேச்சில் - அன்று அசடு வழிந்தது இவர் போன்றார் முகத்தில்! ஆங்கில ஆட்சியின்போது எத்துணை ஜொலிப்புடன் இருந்தாரோ, அதே பளபளப்புடன், கொலு வீற்றிருந்தார் கோபாலசாமி ஐயங்கார். வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்திடும் வீரப்போருக்கு முத்துராமலிங்கத் தேவர் தேவைப்பட்டார் - இன்று பசும்பொன் இருக்கவேண்டிய இடத்தில், பரங்கியருக்குப் பல்லக்குத் தூக்கிய சிற்றரசர் கூட்டத்தைச் சேர்ந்த இராமநாதபுரம் ராஜா அல்லவா வீற்றிருக்கிறார்! வெட்கங்கெட்ட நிலைக்கு வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும். தமிழ்நாடு என்ற பெயர் வேண்டும். ஏழைகள் ஈடேற்றப்படுவதற்கான திட்டம் வேண்டும். ஆட்சியாளர்கள் இதைச் செய்கிறவரையில் உண்ணாவிரத மிருக்கிறேன், என்று சங்கரலிங்க நாடார் எனும் காங்கிரஸ் தியாகி, அல்லற்படுகிறார்; அமைச்சர் அவையில் அமர்ந்து கொண்டு, என்ன ரகளை? என்ன கூச்சல்? என்று கேட்டிட, இராமசாமி படையாச்சியும் மாணிக்கவேலரும் இருக்கிறார்கள். இது வேதனையைக் கிளறவில்லை வெட்கத்தை மூட்டவில்லை, இந்த அமைச்சருக்கு! நாம் ஒரு காலத்திலே ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தோமாம், ஆகவே நம்மை மக்கள் ஆதரிக்கக் கூடாதாம்!! யாரார் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் என்று மக்களால் சுட்டிக் காட்டப்பட முடியுமோ, அவர்களிலே பசை கொண்டோரிடமெல்லாம் நேசம் கொண்டு சுவைத்து, இன்புறுவதுதான் இன்றைய காங்கிரஸ் என்பதை யார்தான் அறிந்து கொள்ளவில்லை! ஊர் முழுவதையுமா ஒரு அமைச்சர் தமது அதிகாரப் பேச்சினாலே உண்மையை மறந்துவிடச் செய்யமுடியும்? எனவே தம்பி, சொத்தை வாதத்தை மெத்தச் சிரமப்பட்டு, மெச்சுவதற்கு யார் கிடைக்கா விட்டாலும், அடுத்த தேர்தலுக்கு மனு போட்டிருக்கும் மகானுபாவர்களாவது பாராட்டுவர் என்ற எண்ணத்தில் அமைச்சர் பேசுகிறார் அந்த மகானுபாவர்களிலே பலரும், ஜஸ்டிசில் இருந்தவர்கள்!! மற்றோர் பெரிய தவறு நாம் செய்கிறோமாம் - தேமதுரத் தமிழோசை அவர் செவியைத் துளைக்கிறதாம்! ஏனடா, தம்பி, தமிழின் எழில் விளங்கப் பேசுகிறாய்? பார்! அமைச்சருக்கு எவ்வளவு ஆத்திரம் வருகிறது; அமைதி அழிகிறது; அழுது விடுவார் போலிருக்கிறது. நானே கூடச் சொல்லலாமென்று இருக்கிறேன் - நீயும் சொல்லு - மலையினின்றும் கிளம்பும் சிற்றாரின் ஒலியோ, மங்கை நல்லாள் மதலைக்கு முத்தமிட்டுக் கொஞ்சும் போதும், மணவாளனிடம் பேசி மகிழ்ந்திருக்கும் வேளையிலும் கேட்கக் கிடைக்கும் சிரிப்பொலியோ, வாட்போரின்போது கேட்கும் ஓசையோ, தென்றலோ, புயலோ, தேனோ, என்றெல்லாம் பலரும் பலப்பல எண்ணி மகிழத்தக்க விதமாக, இனிப் பேசி, இந்த அமைச்சரின் இதயத்தை வாட்டாமலிருக்கும்படி, நமது நாவலருக்கும், மற்றையோருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். சீவிச் சிங்காரித்துக்கொண்டு, முல்லை சூடி, முறுவலுடன் இடுப்பில் குழந்தையுடன் இதயத்தில் மகிழ்ச்சியுடன் இளமங்கை செல்லக் கண்டால், பதியை இழந்ததால் பசுமை உலர்ந்து போன பரிதாபத்துக்குரிய "மொட்டை’க்குக் கோபமும் சோகமும் பீறிட்டுக் கொண்டுதானே வரும்! அமைச்சருக்கு நாம் ஏன் அந்த அல்லல் தரவேண்டும்!! அவர் நமது கழகத் தோழர்கள் பேசும் மொழியில் ஏற்றமும் எழிலும் இருந்திடக் காண்கிறார் - எரிச்சல் பிறக்கிறது - அதை மறைத்துக்கொள்ளும் ஆற்றலும் அற்றுப்போய், அழகாகப் பேசி, அடுக்குமொழி பேசி, மயக்கிவிடுகிறார்கள் என்று கூறி மாரடித்து அழுகிறார்! நாம் என்ன செய்வது, தம்பி, வேண்டுமென்றே, தமிழின் இனிமையைத் தேடிப் பிடித்திழுத்தா வருகிறோம். தமிழ் உள்ளம் நமக்குத் தமிழ் இனிமையைத் தருகிறது; அமைச்சரின் நிலை அது அல்லவே! உள்ளொன்று வைத்துப் புறம் மொன்று பேசவேண்டிய நிர்ப்பந்தம் தாக்குகிறது. உண்மை தெரிகிறது, அதை மறைத்தால்தான் பதவி என்பது குடைகிறது. எந்தத் துறையிலே பார்த்தாலும் வடவர் வளம் பெறுவதையும், தென்னவர் திகைப்புண்டு கிடப்பதையும் அறிகிறார். உள்ளத்தில் சோக அலை கிளம்புகிறது கோபப் புயல் வீசுகிறது. ஆனால் அந்த வெல்வெட்டு மெத்தையில் அமர்ந்து எண்ணிப் பார்க்கும்போது, தெற்குத் தேய்ந்தாலென்ன, காய்ந்தாலென்ன, என்ன சுகம்! என்ன சுவை, இந்தப் பதவி! என்று சபலம் பிறக்கிறது; அமைச்சரின் பேச்சு, உள்ளத்தில் உள்ளதை மறைத்திடப் பயன்படுத்தப்படுகிறது. அதனாலேயே பேச்சிலே சூடு இருந்தால் சுவை இல்லை சுத்தம் இல்லை! சூட்சமம் அதுவே தவிர அவருக்கென்ன அகமும் புறமும் படித்திட, தமிழின் அருமையும் இனிமையும் அறிந்திட, எதுகை மோனையை அழைத்திட, எழிலும் சுவையும் பெற்றிடவா இயலாது! நம்மைவிட அதிகம் முடியும்!! ஆனால். உள்ளத் தூய்மை வேண்டுமே! கொள்கை ஆர்வம் தேவையாயிற்றே! தெளிவும் துணிவும் நிரம்ப வேண்டுமே! அதை எங்ஙனம் அவர் பெறுதல் இயலும் - அமைச்சராயிற்றே! அமைச்சர் பேசியதாக "தினமணி’ கூறுகிறது, நான் ஓர் மாபாதகம் செய்துவிட்டிருப்பதாக அவர் மனச்சங்கடம் அடைந்திருக்கிறார் என்று தெரிகிறது என்ன என்கிறாயா? கேள், தம்பி, நான் ரோமாபுரி ராணிகள் - ஓர் இரவு - என்றெல்லாம் ஏடுகள் எழுதினேனாம் - எனவே, இதுதான் இவர்கட்குத் தெரியும், வேறென்ன தெரியும் - என்று ஏளனம் செய்ய முற்படுகிறார், அமைச்சர் பெருமான்! அமைச்சர் பெருமானுடைய கவனத்தை ஓர் இரவும், ரோமாபுரி ராணிகளும் ஈர்த்திருக்கும் உண்மை எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறதல்லவா - மகிழ்ச்சி - மெத்த மகிழ்ச்சி, நரைதிரை மூப்பு என்பவைகளுக்கு ஆளான தொண்டு கிழங்களே, ரோமாபுரி ராணிகளிடம் சிக்கிக்கொண்டனர் என்றால், வாலிப முறுக்குக் குறையாத அமைச்சர், அவர்களிடம் சொக்கிப் போனதிலே ஆச்சரியமில்லை. ஆனால் இதிலே ஆச்சரியம் என்ன தெரியுமா தம்பி, கயல்விழி, மையல் மொழி, காட்டியும் ஊட்டியும் கட்டழகிகள் கருத்தைக் கெடுப்பர், காரியம் குலைப்பர், ரோம் சாம்ராஜ்யம் அழிந்துபட்டதற்கு வேல்விழி மாதரிடம் வாள் ஏந்திய வீரர்கள் அடிமைப்பட்டது ஒரு காரணம் என்று எச்சரிக்கை செய்ய, நான் அந்த ஏடு எழுதினேன். அமைச்சர், பாவம், அதைப் படித்து, பெறவேண்டிய பாடம் பெறாமல், வேறு ஏதேதோ எண்ணங்களைப் பெற்று, மெத்தச் சிரமப்பட்டிருக்கிறார்போலும். அதனாலேதான், அவர் அத்துணை கோபத்துடன், ரோமாபுரி ராணி புத்தகம் எழுதியதைக் கூறியிருக்கிறார். அமைச்சரே! அலைமோதும், அடக்கிக்கொள்க! ஆசை வந்து உந்தும், ஆட்பட்டுவிடவேண்டாம். அந்த ஏடு, சுவையூட்டுச் சூறாவளியை மூட்டிவிடும் சுந்தராங்கிகளிடம் அரசியல் உலகத்து அதிபர்கள், ஆழ்வார்கள், அடிவருடிகள் எனும் எவரும் சர்வஜாக்கிரதையாக இருக்கவேண்டும், ஏனெனில், ரோம் சீரழிந்ததே, கோலமயிலனையார் கண்டாரைக் கொல்லும் விழியால் தாக்கியதனால்தான் என்று எடுத்துக் கூறவே எழுதப்பட்டது அந்த ஏடு. இது, சபலம் எழும்போதெல்லாம், அமைச்சர்போன்று பெரிய நிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் படித்துப் பாடம் பெற்று, பதமும் பக்குவமும் கெடாதபடி தம்மையும் நாட்டையும் பாதுகாத்துக்கொள்ள உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்பட்டது. படித்துவிட்டு, பாடம் பெறாமல், பெருமூச்சு விடுவதும், ஆஹா! அந்தக் காலம், எப்படிப்பட்ட அருமையான காலம்! என்று ஏங்குவதும், இது அதுபோலவா? கண்டால் புன்னகை மலருகிறது, கைபட்டால் முகம் சுளித்துக்கொள்வதும் தெரிகிறது. தொட்டால் துவளும் போக்கு அல்லபோலும், கனியவைத்திடக் காலம் அதிகம் தேவைபோலும் என்றெல்லாம் எண்ணமிடுவதும் சிலருக்கு ஏற்படுகிறது எனின் குற்றம் என்னுடையதல்ல, கிடைத்த பாலை குழந்தைக்குத் தந்து மகிழ்ந்திடும் மதியூகியும் உண்டு, பாம்புப் புற்றுக்கு வார்த்துவிட்டு பரமபதத்துப் பேரேட்டிலே பெயர் பதிவாகிவிட்டது என்று எண்ணிக்கொள்ளும் ஏமாளியும் உண்டு! குற்றம், பாலில் இல்லை!! அமைச்சர் இப்போது காங்கிரஸ் வட்டாரத்திலே இடறி விழுந்தால், ஓர் இரவு எனும் ஏட்டிலே நான் காட்டி இருக்கும் ஜெகவீரர் மீது தான் விழ வேண்டும். அத்தகையோரின் கெடுமதியைக் கண்டிக்க ஏடு எழுதுவது, எந்த வகையான குற்றமோ எனக்குத் தெரியவில்லை - காலஞ்சென்ற "கல்கி’யும் வ.ரா.வும் அவ்விதம் கூறவில்லை! அவர்கள் ஏதேனும் குறை காட்டியிருந்தால், நான் திருத்திக் கொண்டிருப்பேன். அமைச்சர் போன்றவர்கள் அந்த ஏடுகள் குறித்து ஏதேதோ பேசும்போது, எனக்கு அவர்கள் அந்த ஏடுகளிலிருந்து பெறவேண்டிய பாடத்தைப் பெறவில்லை என்றுதான் தெரிகிறது. அவர்களை எல்லாம் திருத்தும் ஆற்றலையா நான் பெற்றிருக்கிறேன்! நாட்டு மக்கள்தான் அவர்களைத் திருத்தவேண்டும். சீதையை இராவணன் சிறை பிடித்ததைக் கூறிடும் சம்பவத்தைக் கவி கூறுவது எதற்கு? அதுபோல ஒன்று கிடைக்காதா, இராவணன் போல கெஞ்சிக் கிடக்காமல், வஞ்சியைப் பஞ்சணை விருந்தாக்கிக் கொள்ளலாமே என்ற கெடுமதி பெறுவதற்கா? ஓர் இரவு, - ரோமாபுரி ராணிகள் - மேலிடத்தில் உள்ளவர்கள் ஒழுக்கத்தைத் துணைகொண்டால்தான், நாடு உருப்படும் என்ற உண்மையை உணர்த்தும் ஏடுகள்! துரோபதை துகில் உரியப்படும் சம்பவத்தைப் படிக்கக் கேட்டு, பரிதாபப் படவேண்டும், அக்ரமம் இந்த அளவுக்கா போவது என்று கொதித்தெழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறை. துகிலா உரித்தார்கள்… ஆஹா… பலே! பலே!… சொல்லு சொல்லு… எப்படி எப்படி உரித்தார்கள்… என்று ரசித்துக் கேட்டபடி, எதை எதையோ எண்ணிக்கொண்டு, உதட்டை மடக்கிக் கடித்துக்கொள்ளும் உலுத்தர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! அதற்கென்ன செய்யலாம். கிடக்கட்டும், நான் வகை கெட்டவன், ஓர் இரவும், ரோமாபுரி ராணியும் குறித்து மட்டுமே எழுதினேன்; இதனை ஏளனம் செய்து எரிச்சல்பட்டுப் பேசுகிறாரே, இவர் தீட்டி, நாட்டவருக்குத் தந்துள்ள கேடு நீக்கிடும் ஏடுகள், யாவை? இவர் தீட்டிய ஓர் அரசியல் விளக்க ஏடு வெளிவந்த பிறகுதான், உலகப் பெரும் தலைவர்கள் ஒன்று கூடி, உண்மையை உணர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையையே அமைத்ததுபோலவும், இவர் அளித்த விஞ்ஞான விளக்க ஏட்டினைப் படித்த பிறகே ஈன்ஸ்டின் தத்துவத்தையே உலகு பெற்றது போலவும் இவர் கீதைக்குப் புது வியாக்யானம் தீட்டிடக் கண்டு, கண்ணனே ஆச்சாரியார் கனவில் தோன்றி, கண்ணன் காட்டிய வழி என்று நீர் வெளியிட்ட ஏடு சரியில்லை, நமது பக்தன் பண்டித சிகாமணி சுப்பிரமணியம் தீட்டியுள்ள ஏடுதான் சரியானதாகும் என்று எடுத்துரைத்தது போலவும், "உலகப் பேருண்மைகள்’ என்று இவர் ஓர் ஏடு தீட்டிட, அதிலே உள்ள கருத்துரையைக்காணவே, நேரு பண்டிதர் ரμயாவுக்கும் கிரீசுக்கும், சவுதி அரேபியாவுக்கும், பிரான்சுக்கும் இப்படித் தேசம் தேசமாகச் சுற்றி அலைந்து தேடிக்கொண்டிருப்பது போலவும், நோபல் பரிசு வருஷா வருஷம் எனக்கே தருகிறீர்களே, மற்றவர்களும் பிழைத்துப் போகட்டும் பாவம் என்று இவராகப் பார்த்து நிறுத்திக் கொண்டது போலவும், பேசுகிறாரே, தம்பி, இவர் தீட்டி நாட்டுக்கு நீட்டிய ஏடு எத்தனை? இன்றுவரையில், சொத்தையோ சோடையோ இவர் பார்க்க, படிக்க, கண்டிக்க, வெறுக்க, நான், ஏடு தந்ததாகத் தெரிகிறதே தவிர, நான் படித்திட இவர் ஒரு ஏடும் தந்ததாகத் தெரியவில்லையே! இந்த மலடியா என் படைப்புகளை நையாண்டி செய்வது? பரிசீலனை நடத்தும் உரிமையே உண்டா என்பது சந்தேகம்! வடநாட்டவர் பொருளாதாரத் துறையிலே படுத்தும் பாடுகளை விளக்குவது பணத்தோட்டம் ரோமாபுரி ராணிகள் மட்டும் படித்ததாகக் காட்டிக்கொள்ளும் இந்தக் "கனம்’ இதைப் படித்ததுண்டா? நாடு, படித்ததுண்டா? நாடு, படித்தது. தமிழன் "கலிங்கம்’ வென்ற தீர இனத்தவன் என்பதைக் கதை வடிவமாக்கியது கலிங்கராணி - அமைச்சர் கண்சிமிட்டி கருத்தழித்த ரோமாபுரி ராணிகளைக் கண்டு, சொக்கிப்போய் நின்றுவிட்டார். கலிங்கராணியைக் காண முடியவில்லை, பாபம்! பொது வாழ்க்கைத் துறையிலே உள்ள போலிகளை அம்பலப் படுத்துவது பார்வதி B.A. பார்த்ததில்லை அமைச்சர் - மற்றும் பல. ரோமாபுரி ராணிகள் - ஓர் இரவு - இந்த இரு ஏடுகள்தான் இவருக்குச் சுவை தந்தனபோலும். பேசத் தெரியும், இதுபோன்ற ஏடுகள் தீட்டத் தெரியும் என்று கூறிவிட்டதோடு, நிற்கவில்லை அமைச்சர். நான் செய்யவேண்டிய வேலை’ என்ன என்பதுபற்றியும் கூறுகிறார். தம்பி! தேர்தலில் ஈடுபட, நாம் முனைகிறோமல்லவா - பலருக்கு இது பலத்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. நமது பலம் பெரிது என்பதற்காக அல்ல, அவர்களுடைய பலக்குறைவு அவ்வளவு அதிகம்; அதனால். பதவி ஆசை பிடித்துக்கொண்டது, அதனால்தான் தேர்தலுக்கு வருகிறார்கள் என்று பதவியில் பிசின்போல் ஒட்டிக்கொண்டுள்ள இந்த உத்தமர்கள் பேசினர். அச்சம் காரணமாகவோ, அல்லற்பட வேண்டிவருமே, என்ற சங்கடம் காரணமாகவோ, இவர்கள் இவ்விதம் பேசக்கூடும் என்று எண்ணிக்கொண்ட நான், இரண்டோர் திங்களுக்கு முன்பு மதுரையில் பேசினேன், "ஐயா காங்கிரஸ் நண்பர்களே! ஆயாசப்படாதீர்கள்! எமக்குப் பதவியும் வேண்டாம், இடமும் தேவையில்லை; தேர்தலில் போட்டியிடாதபடி எம்மைத் தடுத்திடும் வாய்ப்புக்கூட நான் தருகிறேன்; இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஆறு ஆயிரம் கோடி செலவழிக்கப் படும் என்கிறீகள்; முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேதான் தென்னாடு ஏமாற்றப்பட்டது. இப்போதாவது, முன்னாலே வஞ்சகம் செய்யப்பட்டதற்குப் பரிகாரம் தேடும் முறையிலும் இப்போதைக்கு நீதி வழங்கும் தன்மையிலும், தென்னாட்டுக்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்குவதாக, நேருபண்டிதரை வாக்களிக்கச் சொல்லுங்கள்; அந்த வாக்குறுதி கிடைத்தால், நாட்டுக்கு 2000 கோடியும் அதன் பயனாகப் பல நற்பயனும் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியுடனும், நாம் முயற்சி எடுத்ததால், இந்தப்பலன் நாட்டுக்குக் கிடைக்கிறது என்ற திருப்தியுடனும், நாங்கள் தேர்தலில் நிற்பதைக் கூட விட்டுவிடுகிறோம், என்றேன். இது சில நாட்கள், கவனிப்பாரற்றதாக இருந்துவந்தது. நாட்டுமக்கள், இதனைக் கவனிக்கும்படியான அரிய தொண்டாற்ற முதலில் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபட்டது; நான் சொன்ன யோசனையை ஆதரிப்பதன் மூலமாக அல்ல; நையாண்டி செய்வதன் மூலமாக. திராவிட நாடு கூட வேண்டாம் போலிருக்கிறது, 2000 கோடி ரூபாய் கொடுத்தால் போதுமாம் - அண்ணாத்துரையின் அரசியலைப் பார்த்தீர்களா - 2000 கோடி கிடைத்துவிட்டால், தேர்தலில் கூட ஈடுபடாமல் விலகிக்கொள்வார்களாம் - இப்படி இருக்கிறது "இதுகளோட’ அரசியல் - என்று கம்யூனிஸ்டுகள் கேலிபேசினர். இது மக்களிடம் நமக்கு இருந்த "மதிப்பை’ உயர்த்தியதை, அவர்கள் அறியவில்லை. இதுவா அரசியல்? என்று கம்யூனிஸ்டுகள் கேட்டுக் கேசெய்த திலிருந்தே, மக்களுக்கு ஒன்று புரிந்தது: மற்ற மற்ற கட்சிகளைப்போல அல்லாமல், முன்னேற்றக் கழகத்தார், நாட்டுக்கு நன்மை கிடைப்பதானால் நாங்கள் தேர்தலைக்கூட மறந்துவிடுகிறோம் என்றல்லவா தெரிவிக்கிறார்கள். தேர்தலில் ஈடுபட்டுத் தமது கட்சிக்குப் புதிய அந்தஸ்து தேடிக்கொள்வது தான் குறிக்கோள் என்று இல்லாமல், நாட்டுக்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கினால், தேர்தல் வாய்ப்பும் வேண்டாம் என்றல்லவா கூறுகிறார்கள் - கட்சியைவிட, நாடு பெரிது என்று கருதும் இவர்களல்லவா, உண்மை ஊழியர்கள், என்று மகிழ்ந்தனர். இப்போது, கம்யூனிஸ்டுகள் செய்த "தொண்டு’ மேலும் திருத்தமாக, சுப்பிரமணியனார்மூலம், செய்யப்பட்டிருக்கிறது. இவர், கம்யூனிஸ்டுகளைவிட பலபடி தாவிச் சென்று "ஆக்ரோஷத்துடன்’ பேசியிருக்கிறார் என்பது எல்லா ஏடுகளாலும் தெரிகிறது. "அண்ணாத்துரை 2000 கோடி ரூபாய் தரப்பட வேண்டும் என்று கூறுகிறார்; சரி; 2000 கோடிக்கு, நல்ல திட்டம் தீட்டட்டும், அதை ஒரு அயல் நாட்டு நிபுணர் ஒப்புக்கொள்வா ரானால் நான் என் மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்து விடுகிறேன் - என்று பேசியிருக்கிறார். படித்ததும், தம்பி, எனக்கு முதலில் பரிதாபமாக இருந்தது. திட்டம் தீட்டினதும், முதலில் களப்பலிபோல, இவருக்குப் பதவி போய்விடுமாமே! அந்தோ, பரிதாபமே, எவ்வளவு சிரமப்பட்டுப் பெற்றார், எத்துணை இராஜதந்திரத்தைக் கொண்டு, ஆபத்தினின்றும் தப்பிப் பிழைத்தார்! கடைசியில் நம்மாலா இவருடைய பதவிக்கு "முடிவு’ ஏற்பட வேண்டும், என்றெல்லாம் எண்ணத் தோன்றிற்று. நான் 2000 கோடி தென்னாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டது, இவருடைய "பதவி’க்கு முடிவு காண அல்ல! அது சாதாரணமாகவே, காலாவதி ஆகிவிடக் கூடியது! இவர், ஏன், பதவியை, இதற்காக இழக்க வேண்டும்! தாராளமாக இருக்கட்டும். அதிலும், எப்போது இவர் திட்டம் தீட்டச் சொல்லி என்னை அறைகூவி அழைக்கிறாரோ, இவரேதானே இருந்து அதை நிறைவேற்றித்தர வேண்டும்! ஏன், ஓடிவிடப் பார்க்கிறார்! ஆனால் உண்மையில் அப்படி ஓடிவிடக் கூடியவரா? செச்சே! அதற்கு வேறு ஆளைப்பாருங்கள்! ஆச்சாரியார் ஆட்சியின்போது, குலக்கல்வித் திட்டத்தை முழு மூச்சாக ஆதரித்தனர், பிறகு அது காமராஜர் ஆட்சியின்போது, குழி தோண்டிப் புதைக்கப்பட்டது கண்டும், கண்ணீர் வடித்துக் கொண்டு, நான் பெற்ற செல்வம் மடிந்ததே என்று "மந்திரி’ வேலையை இராஜிநாமாச் செய்வார் என்று பலரும் கூறினர். அவரா இதற்கெல்லாம் இடம் கொடுப்பவர்! ஒட்டிக் கொண்டார்! அவர் புகுத்திய கல்வித் திட்டத்தை ஓட்டினர் - இவர் மட்டும், ஓட்டினவருடன் ஓட்டிக்கொண்டார்; ஓடிவிடவில்லை. பிசின் அவ்வளவு பலம்!! தேவிகுளம் பீர்மேடு பெறாவிட்டால்…! என்று முழக்க மிட்டார்; நேரு பண்டிதர், “மையமைய’ அரைத்தெடுத்த கரியை முகத்தில் பூசினார்; செ! இதுவும் ஒரு பிழைப்பா? சட்ட சபையிலும் மக்களிடமும் மார்தட்டித் தட்டிப் பேசினோம், நமது வார்த்தைக்கு மதிப்பளிக்கவில்லையே டில்லி தர்பார், இந்த அவமானத்தைத் துடைத்துக்கொள்ளவாவது அமைச்சர் பதவியை இராஜிநாமாச் செய்வோம் என்று”ரோஷம்’ காட்டினாரா? அவரா! காட்டியிருந்தால் இன்று கரூரிலும் மதுரையிலும் பிற இடங்களிலும், "பிரமுகர்கள் தரும் வரவேற்புக் கிடைத்திருக்காதே! இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 400 கோடி தரவேண்டுமென்று, டில்லி சென்று "இருந்து முகத்திருத்தி ஈரோடு பேன் வாங்கி’க் கேட்டார். நேரு பண்டிதரோ, ஆடினார் ஆடி சாடினார் ஓடோட! என்ன செய்தார், வேண்டாமய்யா இந்தப் பதவி என்று கூறி இராஜிநாமா செய்தாரா? செய்வாரா? சுவை சாமான்யமா? எனவே, திட்டம் தந்தால் இராஜிநாமாச் செய்கிறேன் என்று பேசுவது, உண்மையல்ல; விளையாடுகிறார்.! திட்டம் தீட்ட எனக்குத் தெரியுமா, தெரியாதா, என்பதா, இன்று அரசியல் பிரச்சினை? இதிலேயும், பார் தம்பி, அடிமைப் புத்தியை. நம்மைப்போல் நையாண்டி செய்கிறார், அன்னிய மோகம் என்று, இவர் இலட்சணத்தைக் கவனித்தாயா? நான் திட்டம் தீட்டவேண்டுமாம், அதை ஒரு அயல்நாட்டு நிபுணர் ஒப்புக்கொள்ள வேண்டுமாம்! அயல் நாட்டு நிபுணர்!! ஏன் இந்த அடிமை மனப்பான்மை? சரி, இனிப் பிரச்சினையைப் பார்த்திடுவோம். நான், அயல்நாட்டு நிபுணர் கண்டு மெச்சி ஏற்றுக் கொள்ளத்தக்க திட்டம் ஒன்று என்னிடம் இருக்கிறது, அதை நிறைவேற்ற 2000 கோடி தருக! என்று கேட்கவில்லை. நான் கேட்டது, நீங்கள் தீட்டியுள்ள இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2000 கோடி ரூபாய் தென்னகத்துக்கு ஒதுக்குங்கள், என்றுதான் கேட்டேன் - கேட்கிறேன் - ஒவ்வொரு வாக்காளரிடமும் கூறி இதைக் கேட்கச் சொல்லப் போகிறேன். இப்போது, இந்த அமைச்சர் கொலுவிருக்கும் சென்னை ராஜ்யத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 170 கோடி! இவர் கேட்டது 400 கோடி! கிடைத்தது 170! இந்த வெட்கக் கேட்டைப் போக்கிக்கொள்ள இவர் முனையாமலிருக்கலாம்; பதவி காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காக. முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே வஞ்சிக்கப்பட்ட தென்னகம், இப்போது 2000 கோடி கேட்க உரிமை பெற்றிருக்கிறது. நான் 2000 கோடி என்று கேட்டபோது, என்னிலும் மிக மிகப் பெரிய தலைவர்கள் சார்பில் கேட்கிறேன். அமைச்சர் ஆச்சரியத்தில் மூர்ச்சையாகாமலிருக்கவேண்டும். நான் அவர் சார்பிலும்தான் கேட்கிறேன்! தென்னாடு தொழில்துறையில் பின்னடைந்திருக்கிறது என்று இவரே கோவையில் இரண்டோர் திங்களுக்கு முன்பு கதறவில்லையா! சிந்தாமணி தேஷ்முக், இது உண்மைதான் என்ற ஒப்புக் கொள்ளவில்லையா? தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதுபற்றி அனுமந்தய்யா ஆயாசப்படவில்லையா? தென்னேட்டி விசுவநாதம் தேம்பவில்லையா? வல்லத்தரசு கண்டிக்கவில்லையா? புன்னூஸ் புலம்பவில்லையா? அன்னா மஸ்கரினிஸ் கேட்கவில்லையா? இங்குள்ள தேசீய ஏடுகளேகூட அவ்வப்போது கண்டிக்க வில்லையா? இவ்வளவு மலையெனக் குவிந்திருக்கும் மனக் குமுறலின்பேரால், கேட்டேன்; என் "மேதாவிலாசத்தை’க் காட்டிக்கொள்ள அல்ல. திட்டம் தீட்டித் தர நான் மட்டும்தான் என்ற "அகம்பாவம் புகத்தக்க விதமாக நான் பயிற்சி பெற்றவனுமல்ல’ பதவி எனக்குத் தலைக்கனம் தரவில்லை. திட்டம் தீட்ட நாட்டிலே உள்ள எல்லாக் கட்சித் தலைவர்களும் உட்காரலாம் - எனக்கும் இடமளித்தால் இருக்கிறேன் - தொழில்துறை நிபுணர்கள் இருக்கிறார்கள், நிர்வாக அலுவலர்கள் உள்ளனர், விஞ்ஞான வித்தகர்கள் உளர், பேராசிரியர்களின் அணிவகுப்பே இருக்கிறது, பாரெங்கும் உள்ள பல்வேறு முறைகளைப் பாங்குடன் அறிந்த பத்திரிகை ஆசிரியர்கள் பலர் உளர், அனைவரும் அமரலாம், அற்புதமான திட்டம் தீட்டலாம் - எந்த அயல்நாட்டு நிபுணரும் மெச்சத் தக்கவகையில். இது முறை - இது நெறி, "திட்டம் தீட்டு பார்ப்போம்’ என்று எனக்கு அறைகூவல் விடுவதா முறை? ஒருவகையில் இதனை எனக்கு அளிக்கப்படும் பெருமை என்றுகூட நான் எடுத்துக்கொள்ளலாம் - ஆனால் அகம்பாவம் என்னைப் பிடித்துக்கொண்டில்லை - எனவே அருமையான திட்டம் தீட்டத்தக்க அறிஞர் பெருமக்கள் அனேகர் உள்ளனர் என்பதை அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். அதெல்லாம் முடியாது, உன்னால் முடியுமா என்றே அமைச்சர் பிடிவாதமாகக் கேட்பதானால், அந்த அறிஞர் பெருமக்களின் உதவியை நான் கேட்டுப் பெற்று, திட்டம் தருகிறேன் என்று உறுதி அளிக்கிறேன். அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன் - ஆனால் அந்த 2000 கோடி ஒதுக்கும் அதிகாரம் இருக்கிறதே, அது என்னிடம் வீரதீரமாகப் பேசிடும் இந்த வித்தகரிடம் இல்லையே என்ன செய்வது? ஐந்தாண்டுத் திட்டம் தீட்டவும், தொகை ஒதுக்கவும் அதிகாரம் படைத்தவர் நேரு! இவர், கையேந்தி நின்று, கிடைத்தால் மகிழ்ந்து, இல்லையென்றால் கண்கசக்கிக்கொண்டு வரும் நிலையில் வைக்கப்பட்டிருக்கும், "பொம்மை’தானே! இவர் எனக்கு அறைகூவல் விடுப்பதும், நான் அதனை ஏற்றுக்கொள்வதும் என்ன பலன் அளிக்கும்? நேரு பண்டிதர், இவ்விதம் கேட்பாரானால், நான் அழைக்கக்கூடத் தேவையில்லை, தென்னாட்டின் அறிஞர் பெருமக்களேகூடி, அருமையான திட்டம் தீட்டுவர். அவர்களில் பலர் "தனிநாடு’ என்று பிரிவது தேவையில்லை, என்று எண்ணுபவர்களாக இருக்கலாம்; ஆனால், வடநாடு மிக மிக அதிகமாகத் தொழில்துறையில் முன்னேறிவிட்டது - தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து வேதனை அடைந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே, என்மீது சுடுசொல் வீசியோ, கேலி பேசியோ, அமைச்சர் தமக்கு ஏற்பட்டுள்ள எரிச்சலைக் காட்டிக்கொள்ள லாமே தவிர, நாட்டு மக்கள் உள்ளத்திலே கொதித்துக் குழம்பிக்கொண்டுள்ள அதிர்ப்தியை அடக்கிவிட முடியாது. இந்தச் சூழ்நிலையில், ஆவேசமாகப் பேசுகிறார் என்று தம்பி யாரார் பாவம் எப்படி எப்படியோ குவித்த பணத்தை இலட்ச இலட்சமாக, இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அபேட்சகர் களாக நின்று, இழந்துவிட்டு ஏங்கப் போகிறார்களோ! அப்படிப்பட்ட பணப் பெட்டிகளைத் தேடிச் செல்லும் வேளை இது; எனவேதான் அமைச்சர் ஆர்ப்பரிக்கிறார்; அறைகூவல் விடுகிறார்! மதுரையில் நான் பேசினபோது; இவ்வளவு எளிதில் முளைவிடும் என்று எண்ணவில்லை; இதோ அமைச்சர் ஆர்ப்பரிக்க வேண்டிய நிலைமை வேகமாக வளர்ந்துவிட்டது. எனவே தம்பி, முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் மோசம் போய் விட்டோம் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திலாவது நாம் சரியான, நியாயம் பெறவேண்டும். தி. மு. க. 2000 கோடி ரூபாய் தென்னாட்டுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்று கேட்கிறது. நாட்டு மக்களே! இதற்கு உங்கள் ஆதரவு தாருங்கள், என்று இல்லந்தோறும் எடுத்துச் சொல்ல, நாள் தவறாமல் பணியாற்று; பார், பதைக்கிறார், கதைக்கிறார், "கனம்’. பலன் அளிக்கிறது நமது பிரசாரம் என்பது தெளிவாகிறது, எனவே, புதிய உற்சாகத்துடன் பணிபுரியலாம், தம்பி, அமைச்சரின் ஆவேசப் பேச்சு அதற்கே பயன்பட வேண்டும். அன்பன், 23-9-1956 வேதனை வெள்ளம் கே. வி. கே. சாமியின் மறைவு தம்பி! நெஞ்சிலே பெருநெருப்பு மூண்டதடா, தம்பி ஓராயிரம் நச்சுப் பாம்புகள் ஒருசேரக் கூடி, இதயத்தைக் கடித்துக் கடித்து, மென்று மென்று கீழே உமிழ்ந்தவண்ணம் இருக்கிறது. வேதனை வெள்ளத்தில் வீழ்ந்து, கரைகாணாமல் தவிக்கும் நிலையிலே இருக்கிறேன். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று நான் சொல்லாத நாளில்லை. இதயம் தாங்கிக்கொள்ள முடியாத பெரு நெருப்பு புகுந்து, சுட்டு எரிக்கிறது. உட்கார்ந்தால் உடல் சாய்கிறது. உடலைக் கீழே சாய்த்தால் தானாக எழுகிறது. நடமாடினால் கால்கள் நடுக்கமெடுக்கின்றன, பேசினால் நாக்குக் குளறுகிறது. நண்பர்களைச் சந்தித்தாலோ, கண்ணீர் குபுகுபுவெனக் கிளம்புகிறது. ஐயயோ வேதனை, வேதனை, இது நாள்வரை நான் அனுபவித்தறியாத வேதனை! எவராலும் தாங்கிக் கொள்ள முடியாததோர் வேதனை! எந்தக் காதகனும் கன்மனம் படைத்தோனும், எண்ணவும் சொல்லவும் கூசும் விதமான கொடுமை நேரிட்டுவிட்டதே! வாழ்கின்ற இடம் நாடா, காடா? சூழ இருப்போர் மனிதர்களா, கொலைபாதகர்களா, கொடிய காட்டு மிருகங்களா? இதென்ன 1956 தானா அல்லது நாக்கறுத்து மூக்கறுத்து, கண்டதுண்டமாக்கிக் கொலைபுரியும் காட்டுமிராண்டிக் காலமா? என்றெல்லாம் எண்ண எண்ண, நெஞ்சிலே குபீல் குபீலென்று ஓர் ஜுவாலை கிளம்பி, தகித்துத் தள்ளுகிறது என்ன செய்வது, எப்படித் தாங்கிக்கொள்வது. ஐயயோ! என்று அலறி மாரடித்து அழுது புரண்டு புரண்டு அழுது, காணும் நண்பர்களுடன் கூடிக் கூடி அழுதாலும், கப்பிக்கொண்டுள்ள துக்கம் ஒரு துளியும் விலகுவதாகக் காணோம். என்னைப் பிடித்திழுத்து, செயலற்றவனாக்கிவிட்டது. பித்தன்போல, வெறிச் சென்றதோர் பார்வையுடன் இருக்கிறேன். பேயறைந்தது என்பார்களே, அதுபோன்றதோர் கோலம் என்னைப் பிடித்துக்கொண்டது. நான் எந்நாளும் இதுபோன்றதோர் வேதனையைக் கொண்டதில்லை. நடுநிசிக்குமேல், இரண்டிருக்கும். அடிகள் நாக்குக் குழறக் குழற, சென்னையிலிருந்து கிடைத்த சேதியைக் கூற வந்தார். இல்லத்தில் படுத்து, அந்தக் கிழமை இதழில் நான் நாட்டுக்கு அளித்துள்ள கருத்துகளைப்பற்றி எண்ணியபடி இருந்த என்னிடம். “அடிகள்?’’ - என்று நான் கேட்கிறேன் - படியிலிருந்து கீழே உருண்டு விழுந்து விடுபவர்போல் காணப்பட்டார். என்ன? - என்று நான் கேட்க,”நமது சாமி… தூத்துக்குடி சாமி…’’ என்றார், கண்ணீர் தளும்பியபடி… “என்ன, என்ன தூத்துக்குடி சாமிக்கு… என்ன?… என்ன…’’ நான் கேட்கிறேன், நடுக்கும் குரலில்…”யாரோ, அவரை… கொலை… போய்விட்டாராம்….’’ என்றார்; அந்தத் தாக்குதலிலிருந்து நான் இந்த விநாடிவரையில் மீளமுடியவில்லை, முழுதும் மீள என்றைக்குமே முடியாதடா தம்பி, முடியாது. இதயத்திலே ஏற்பட்டுவிட்ட பிளவு, குறையாது, மறையாது… அந்த விநாடியிலிருந்து வேதனை வெள்ளத்தில் வீழ்ந்து பட்ட நான், என்ன செய்வது, என்ன எண்ணுவது என்று தெரியாமல், திகைத்துப்போய், கிடக்கிறேன்…. அஞ்சாதீர்கள் - எதற்கும் கவலை கொள்ளாதீர்கள் - மலை குலைந்தாலும் மனம் குலையாதவன் தமிழன் - இன்னல் இடுக்கண் வரிசை வரிசையாக வந்து தாக்கினாலும், கலங்காதவன் திராவிடன்! அஞ்சா நெஞ்சுடையோன்! தம்பி, ஆயிரம் தடவை கூறி இருப்பேன், பல்லாயிரம் தடவை எழுதி இருப்பேன், மேடைகளிலே நின்று இவைதமை முழக்கியிருக்கிறேன், இதோ கவிழ்ந்த தலையைத் தூக்கிவிட முடியவில்லை, பொங்கும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. பதறும் உடலத்தைக் கட்டுக்குக் கொண்டுவர இயலவில்லை, வேதனை பிடித்தாட்டுகிறது. ஆபத்து என்றால் அஞ்சா நெஞ்சம் இருந்தால்போதும் எதிர்த்து நிற்க. இது நமது இதயத்தை அல்லவா சுட்டெரிக்கும் பெருநெருப்பு - அந்தோ! எத்தனை நாளாக எண்ணி எண்ணித்திட்டமிட்டு, இதயத்தில் இந்தப் பெருநெருப்பை மூட்டினரோ… எத்தகைய இதயம் படைத்த இழிகுண மக்களோ, மனித உருவத்தை எப்படித்தான் பெற்றனரோ, அந்த மாபாவிகள்… எண்ணும்போதே நெஞ்சு வெடித்து ஓராயிரம் சுக்கலாகிவிடும் போலிருக்கிறதே… இப்படியும் ஒரு கொடுமை நடப்பதா… இது போன்றதோர் கொடுமை நடைபெறக்கூடும் என்று எண்ணவே நெஞ்சு நடுக்குறுமே! நடத்தினரே நாசகாலர்கள்! காலம் சுமக்கிறதே அக்கயவர்களை, மண்ணிலே அவர்கள் நிற்க முடிகிறதே! எத்தனை எத்தனை இலட்சம் மக்களின் இதயத்தைப் புண்ணாக்கிவிட்டனர் அந்த இதயமற்ற கொடியவர்கள்… அந்தோ! அந்தோ! அக்ரமமே உருவான அந்த மாபாவிகள் இந்த நம் மண்ணிலே தோன்றினரே! தூத்துக்குடி சாமியை, தமிழ் மாநிலமே! திருஇடமே! பெற்றெடுத்துப் பெருமை பெற்றாய் - எப்படித்தான் இத்தகையோரைப் பெறமுடிந்தது. இதோ தெரிகிறானே அந்த மாவீரன், வடித்தெடுத்த வேல்போல நிற்கிறான், கொள்கைப் பற்று கொழுந்துவிட்டெரியும் கண்களால் பார்க்கிறான் உழைத்து மெருகேறிய உடற்கட்டுடன் நிற்கிறான், உறுதி படைத்த உள்ளம் எனக்கு உண்டு என்று அந்த உருவமே அறிவிக்கிறதே - திருஇடமே! இதோ உன் விடுதலையைத் தன் பேச்சாக மூச்சாகக்கொண்ட செயல் வீரனைக் காண்பாய் உன் தலை உடைபடும் வரையில் ஓயாது உழைக்கும் நோக்குடன் தன்னைத்தானே உனக்கு அர்ப்பணித்துவிட்ட ஆற்றல் வீரனைக் காண்பாய், மக்கள் பணியன்றி வேறோர் நோக்கமில்லை, கழகத் தொண்டன்றிப் பிரிதொன்றிலே என் எண்ணம் பாய்வதில்லை என்று கூறிப் பணியாற்றி வரும், குன்றெடுக்கும் நெடுந்தோளுடையானைக் காணாய்! எவரிருக்கிறார்கள், பிறந்த நாட்டைப் பீடுடையதாக்கும் பெரும் பணியாற்ற? மக்கள் தொண்டாற்ற யார் இருக்கிறார்கள்? அதற்கேற்ற மனதிடமும் கொள்கைப் பற்றும் குன்றாமல், குறையாமல், குலையாமல் கொண்டோர் யார் இருக்கிறார்கள்? என்று கவலைப்படத் தேவையில்லை, இதோ சாமி, தூத்துக்குடி சாமி, பாண்டி மாநாட்டின் படைத் தளபதி, பாட்டாளிகளின் தோழன், கழகத்தின் காவலன், உண்மை உழைப்பாளர்களின் உற்ற நண்பன், என் தம்பி, என் தம்பி, என்று நான் பெருமையுடன் கூறிக்கூறி, திருஇடமே! உனக்குக் காட்டினேன்! அந்தத் திருவிளக்கு அணைந்துவிட்டதே - எண்ணெய் தீர்ந்தா? அல்லவே! அல்லவே! திரி குறைந்தா? அதுவும் இல்லையே! இருளொழிக்கும் இன்ப ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இதயமற்ற கயவர் சிலர் அந்தத் திருவிளக்கை அணைத்து விட்டனரே… தூத்துக்குடி சாமி - என்றால் தமிழகம், கேட்ட விநாடியிலேயே ஓர் களிப்பு காட்டுமே - பல ஆண்டுகளாக அந்தக் கொள்கை வீரனின் தொண்டு தழைத்து, மணம் தந்து வருவது கண்டு, மகிழ்ந்து இறுமாந்தல்லவா இருந்து வந்திருக்கிறது. தூத்துக்குடி கே. வி. கே. சாமி என்ற பெயர் உச்சரிக்கப்பட்டதும் எந்த மன்றத்திலும், மாநாட்டிலும், உள்ள மக்கள், நிமிர்ந்து உட்கார்ந்து, கண்களுக்கு ஓர் விருந்து, இதயத்துக்கு ஓர் நம்பிக்கை, நாடு விடுதலை பெற்றுத் தீரும் என்பதற்கோர் அத்தாட்சி இதோ, இதோ, என்று சுட்டிக்காட்டி அல்லவா இன்புறுவர். தத்துவ விளக்கமா செய்வார்? தர்க்கமா பேசுவார்? தழதழத்த குரலா? தட்டுத் தடுமாறும் போக்கா? ஒரு துளியும் கிடையாதே! கழகம் இன்ன திட்டம் தீட்டுகிறது. நான் அந்தக் கட்டளையை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறேன், கடமையை, எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் நிறைவேற்றியே தீருவேன், இது உறுதி என்றல்லவா தொண்டு உள்ளத்துடன், வீர உள்ளத்துடன் எடுத்துக் கூறுவர். ஆம்! இந்த மாவீரன், செய்து முடிப்பான்! அதற்கான ஆற்றல் இவனிடம் இருக்கிறது! - என்று எவரும் கூறுவரே! அத்தகைய மாவீரனை, தம்பி, இழந்தோமே - நாம் வாழ்கிறோம், வேதனையால் வாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம், வன் கணாளர்கள் நமது குலக்கொடியை வேரோடு பறித்தெடுத்து அழித்து விட்டனரே! தம்பி, நான் உங்கள் யாவரிடத்திலும், உரிமையுடன் பேசுவேன். சாமியிடம் நான் சொந்தத்துடன் பேசுவேன் - என்னை நன்றாகப் பார்த்தபடியே அவர் இருக்கமாட்டார் - நான் பேசும் போது, அவர் அப்படியா? என்று கேட்டதில்லை, ஆகுமா! என்று கேட்பதில்லை, ஆகட்டும் என்பதன்றி பிறிதோர் சொல்லை அவர் எனக்கு அளித்ததில்லையே! அவரிடம் நான். பழகிய ஆண்டுகள் பலப்பல, சுயமரியாதை இயக்க கால முதற்கொண்டு, அவருடன் பழகும் வாய்ப்பு பெற்றிருந்தேன். கடந்த பத்து ஆண்டுகளாக அந்த வாய்ப்பு, எனக்கு, நாம் எடுத்துக்கொண்டுள்ள இலட்சியத்தில் வெற்றி கிடைத்தே தீரும் என்பதற்கான நம்பிக்கையை மிகுதியாக்கிற்று செயல்படு திட்டம் எது என் எண்ணத்தில் எழும்போது அடுத்த விநாடி சாமியின் பெயர் நினைவிற்கு வரும். அப்படிப்பட்ட தம்பி, அந்த ஆற்றல் வீரன், அவனுக்கா இந்தக் கொடுமை!! அந்த மறத்தமிழ் வீரனுக்கா இந்தக் கொடுமை! வெட்டினராம், குத்தினராம், பயங்கரமான ஆயுதங்களால், வெறியர்கள்; தனியாக நின்றான்; அவன் கூப்பிடு குரலுக்கு ஓடிவர இலட்சக்கணக்கான மக்கள் உள்ளனர், தமிழகமெங்கும். ஆனால், யாரும் உதவிக்கு வராததோர் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, சண்டாளர்கள், தாக்கினரே கொன்றனரே! ஐயோ, இக் கொடுமையைக் கேட்கவே நமக்கு வேதனை பிறக்கிறதே - அந்த இரவு அக்ரமக்காரர்கள் தாக்கிய போது, எதிர்த்துப் போரிடமுடியாத நிலையில் சூழ நின்று அவரைச் சித்திரவதை செய்தபோது, நம் சாமி அந்தோ! என்னென்ன எண்ணினாரோ, ஏதேது நினைத்தாரோ, எப்படி எப்படித் துடித்தாரோ, வெட்டும் குத்தும் அவர் மீது பாயப்பாய, வெறியர்கள் தாக்கத் தாக்க, நம சாமி இரத்தம், வெள்ளமாகி ஓட, உயிர் ஊசலாட நின்ற நிலையிலும் வீழ்ந்திடும் போதும், "ஐயோ! திருஇடமே! தாயகமே! பார்! உன் உண்மைத் தொண்டனை இந்த உலுத்தர்கள் உருக்குலைப்பதைப் பார்! ஊருக்கு உழைப்பவனை இந்தக் கொலைபாதகர்கள் கொன்றுபோடும் கொடுமையைப் பார்! பாட்டாளியின் நண்பனை இந்த மாபாவிகள், பதைக்கப் பதைக்க வெட்டுவதைப் பார்! பார்! தாயகமே! பார்! - என்று எண்ணியிருந்திருப்பார்! என் குரல் கேட்டு ஓடிவர, இலட்சக்கணக்கான வீரர்கள் உள்ளனர் - எனக்காக இன்னுயிரும் தர பாட்டாளிகளின் படைவரிசை அணி அணியாக இதே தூத்துக்குடியிலிருக்கிறது எனினும், அவர்கள் எவரும் வர முடியாத நிலையிலே, என்னைக் கொல்கிறார்களே, கொடியவர்கள், என் செய்வேன்’’ என்று அல்லவா குத்தும் வெட்டும் உடலைத்தாக்கி உயிரைக் குடித்திடும்போது எண்ணியிருந்திருப்பார். மலை மலையாக நாம் இருக்கிறோம், அணி அணியாக இருக்கிறோம், நாடெங்கும் இருக்கிறோம், நாசகாலர்கள், நமது சாமியைப் படுகொலை செய்துவிட்டனரே! ஏழைகளின் இன்னல் துடைக்க, அவர்தம் உரிமைக்காக அல்லும் பகலும் பாடுபடும் ஆர்வமிக்க தொண்டராயிற்றே, பொதுத் தொண்டிலே, துள்ளும் பிள்ளைப்பருவ முதற்கொண்டு ஈடுபட்டு, எதிர் நீச்சு நடத்தி ஏற்றம் பெற்றவராயிற்றே! எங்கு அநீதி தலை விரித்தாடினாலும், அக்ரமம் கொக்கரித்தாலும் பாய்ந்து சென்று அதனை எதிர்த்தொழிக்கும் அஞ்சாநெஞ்சனாயிற்றே என்று எதனையும் எண்ணிப்பார்த்தார் இல்லை அந்தக் கொலை பாதகர்கள். ஐயகோ! அவ்வளவு ஆற்றல் படைத்தவர் என்பதற் காகவே அவரை அடித்துக் கொல்லக் கிளம்பிய கொடியவர் களல்லவா, அந்தக் கொலை பாதகர்கள்! எங்கும் சாமி! எதற்கும் சாமி! எப்போதும் சாமி! எங்கள் சாமி! - என்று நாடே பூரிப்புடன் பெருமிதத்துடன் கூறிடக் கேட்டதால், கெடுமதியாளர்கள் பொறாமை படமெடுத்தாடும் பாம்பாயினரோ! எங்கள் சாமி! என்று எண்ணற்ற வீரர்கள், நேருக்கு நேர் நின்று போரிடும் வீரம் காட்டிட எவர் வரினும் அவர்தம்முடன் வீரப் போரிட்டு வெற்றி கொள்ளத்தக்க அடலேறுகள், சொந்தம் கொண்டாடினர், பந்த பாசம் கொண்டிருந்தனர். பாட்டாளிகள், எங்கள் சாமி! எங்கள் சாமி! என்று பரிவுடன் அழைத்தனர். ஆலைத் தொழிலாளரும் உப்பளத் தொழிலாளரும், கல் உடைப்போரும் கட்டை வெட்டுவோரும், எங்கள் சாமி! எமக்குற்ற குறை அறிந்து உருகி, அக்குறை தீரத் துடிதுடித்தெழும் உள்ளம் படைத்த எங்கள் சாமி! என்று பாசம் காட்டினர். பள்ளிச் சிறுவர்களும், எங்கள் சாமி! என்று அன்புடன் அழைத்தனர். வணிகர் கோட்டத்திலும், நகராட்சி மன்றத்திலும் எங்கள் சாமி! என்றுதான் உவகையுடன் அழைத்தனர். எங்கள் சாமி! எதற்கும் அஞ்சா நெஞ்சினன்! எந்த இன்னலுக்கும் கலங்காத உள்ளத்தினன்! - என்று நமது கழகம் பெருமையுடன் நாடெங்கும் கூறிற்று! ஓங்கி வளர்ந்தது புகழ்! ஒப்பற்ற தொண்டு உயர்ந்தது, உயர்வளித்தது, பலன் தெரிந்தது! இது கண்டு பொறாதார், இது போன்ற ஆற்றல் பெற இயலாதார், பொறாமை கொண்டனர், பொச்சரிப்பு உமிழ்ந்தனர், நச்சரவு ஆயினர், நள்ளிரவிலே, நாட்டுக்குக் கிடைத்த நல்ல புதல்வனை, வெட்டிக்கொன்றனர் - படுகொலை புரிந்தனர். அடுத்து வரும் தேர்தலில் எங்கள் சாமி வெற்றிக்கொடி நாட்டப்போகிறார். K.V.K. சாமி திராவிட முன்னேற்றக் கழக நெல்லை மாவட்டச் செயலாளர்; செயற்குழு உறுப்பினர்; உப்பளத் தொழிலாளர் தலைவர்; ஆலைத் தொழிலாளர் தலைவர்; இம்மட்டோ, விரைவிலே K.V.K. சாமி, M.L.A. ஆகப் போகிறார் என்று கூறிக் குதூகலித்தோமே - நமது தேர்தல் வெற்றிபற்றிய பட்டியலை எண்ணும்போதே, முதல் வெற்றி என்று இதனைக் குறித்திருந்தோம் - நமக்குச் செந்தேனாக இனித்த இதே எண்ணம், செந்தேளாயிற்றோ பொறாமை உள்ளம் கொண்டோருக்கு - ஆகா! ஓங்கி வளருகிறான், புகழ் ஓங்குகிறது, ஓங்கியபடி இருக்கிறது, எப்படி இதனைக் கண்டு சகிப்பது என்று எண்ணினரோ அந்த இதயமற்றோர் படுகொலை செய்துவிட்டனரே! பூவும் பிஞ்சும் தோன்றி கனி குலுங்க வேண்டிய பக்குவம் பெற்ற பச்சை மரத்தை வெட்டி வீழ்த்தினரே, பாரில் எங்கும் கேள்விப்படமுடியாத பாதகச் செயலன்றோ செய்தனர். பாவிகளா! படுபாவிகளா! சாமியை வெட்டினீர்கள், சாமியைமட்டுமா, எமது இதயங்களை எல்லாமல்லவா ஈட்டி கொண்டு குத்திவிட்டீர்கள் - குருதிகொட்டி அந்த வீரன் பிணமானான், இதோ நாங்கள் பல்லாயிரவர், இரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டு நடைப்பிணமாகிவிட்டோமே - உமக்கு நாங்கள் இழைத்த கொடுமைதான் என்ன? ஏன்தான் இத்தகைய பயங்கரப் படுகொலை செய்தீர்கள்? சட்டமே! கேள்! சமூகமே! நீதிக்காக வாதாடு! நீதியே, உன் நீண்ட கரத்துக்கு வேலை கொடு! படுகொலை செய்த பாதகர்களைப் பாருக்குக் காட்டு. காரி உமிழட்டும் கற்றறிந்தோர்; சட்டம் அதன் சக்தியைக் காட்டட்டும். ஈடு செய்யமுடியுமா இந்தப் பெரும் இழப்பை - ஏது? ஏது? எம்மிடம் பேச்சாளரும் எழுத்தாளரும் நிரம்ப இருக்கிறார்கள் - நடிகர்கட்குக் குறைவில்லை - நல்லோருக்குக் குறைவில்லை - வல்லோருக்கும் குறைவில்லை - ஆனால் நமது சாமி நல்லவர், வல்லவர், எனும் இரு அருங்குணமும் ஓருருவாய் அமைந்து, பேசுவோருக்கும் எழுதுவோருக்கும் பெருந்துணையாய், பேசப்படத்தக்க பெரும் பொருளாக அல்லவா விளங்கிவந்தார் - அவரல்லவா அனியாயமாக வெட்டி வீழ்த்தப்பட்டார். செயல்முறையிலே ஓர் நாட்டம், செயல் படுவதிலே ஓர் தனி ஆர்வம், செயலில் ஓர் எழுச்சி - இவையாவும் ஒருங்கு அமைந்த ஓர் படைத்தளபதி அல்லவா நம் சாமி! கட்டளையிட்டுவிட்டுக் கண்ணயர்பவரா, உத்தரவு பிறப்பித்துவிட்டு உறங்கச் செல்பவரா, அல்லவே; படை அமைத்து, படை வரிசையை நடத்திச் சென்று, பணியாற்றி வெற்றிகாணும், வீரம் செறிந்த தலைவராக அல்லவா விளங்கிவந்தார். நரை முளைக்காப் பருவம் - நாற்பதுக்குச் செல்லவே இன்னும் எட்டாண்டு செல்லவேண்டும் - போய்விட்டாளே அந்த வாலிப வேந்தன் - எப்படித் தாங்கிக் கொள்வோம்! அழுகிறேன், அழுகிறீர்கள், அழுகிறோம் - நம்மை அழ வைத்துவிட்ட அக்ரமக்காரர்கள் எங்கோ இருந்துகொண்டு சிரிக்கிறார்கள். பெருமைப்பட்டுக்கொண்டிருந்தீர்களே, எங்கள் சாமி, எங்கள் சாமி என்று. மார்தட்டித் தட்டிப் பேசினீர்களே, எங்கள் சாமி!, எங்கள் சாமி! என்று எங்கே உங்கள் சாமி? என்று கேட்கின்றனர்; ஐய்யயோ? என்னபதில் சொல்லுவோம். வேதனையால் தாக்கப்படுகிறோம்; படுபாவிகளா! எங்கள் சாமியைப் படுகொலை செய்துவிட்டீர்கள், பாதகம் புரிந்துவிட்டீர்கள், பண்பற்றவர்களே! எங்கள் சாமியின் உடலைத்தான் வெட்டி எறிந்தீர்கள், அவர் உள்ளம் எங்களோடு இருக்கிறது, வேறெங்கும் செல்லவில்லை, அது அழிந்துபட வில்லை, எங்களோடு இருக்கிறது, எங்களுள் இருக்கிறது, நாங்கள் யாவரும் கே. வி. கே. சாமிகளாகிறோம், அவர் காட்டிய ஆர்வத்தைக் கொள்கிறோம். அவர் பெற்றிருந்த ஆற்றலைப் பெறுகிறோம். பேயர்களே! எங்களையும் கொலை செய்ய, கத்தி தீட்டுங்கள், அரிவாள் எடுங்கள், வாருங்கள், நாங்கள் சாக அஞ்சும் பரம்பரை அல்ல, என்றெல்லாம் தம்பி, கூறத் தோன்றுகிறது, நா எழமறுக்கிறது, அழுகிறோம், அழுகுரல் கேட்கிறோம், ஆறுதல் பெறமுடியவில்லை. ஆறுதல் அளிக்கச் சக்தி இல்லை. ஒருவரை ஒருவர் காணும்போது கண்ணீரைத்தான் பரிமாறிக்கொள்கிறோம். மறைந்த மாவீரன் குடும்பத்தாருக்கு நாம் என்ன ஆறுதல் கூற முடியும். நாமும் அவர்கள் கூடநின்று கதறித் துடிப்பதன்றி வேறென்ன செய்யும் நிலை இருக்க முடியும். அவர் நமது சாமியாயிற்றே, அழுகிறோம், அழுகிறாய், அழுகிறேன், தம்பி, செய்திகேட்டதிலிருந்து வேதனையால் தாக்கப்பட்டுக் கிடக்கிறேன் - வேறு எதுவும் எழுத முடியவில்லை. அன்பன், 30-9-1956 காடு இது-நாடு அல்ல! கே.வி.கே. சாமியின் குண இயல்புகள் - சாமிக்குப் பின் தம்பி! தூத்துக்குடி சென்றிருந்தேன், துயரக் கடலில் வீழ்ந்து உழலும் நம் தோழர்களைக் கண்டு ஆறுதல்கூற; ஆனால் எனக்கு ஆறுதல் அளியுங்கள் என்றுதான் என்னால் கேட்க முடிந்தது. சாமியின் திருமணக் கோலத்தைக் கண்டு களித்து, வாழ்வில் எல்லா இன்பமும் எய்தி மகிழ்ந்திடவேண்டும் என்று வாழ்த்துரை வழங்கச் சென்றிருக்கவேண்டிய நான் தம்பி தகுதியும் திறமையும் படைத்தவன், அஞ்சா நெஞ்சன், ஆற்றல் மிக்கோன், ஏழையின் இதயத்தை நன்கு அறிந்தவன், மாளிகையில் மந்தகாச வாழ்வு நடாத்திக்கொண்டு குடிசை வாழ்வோரின் குமுறல் குறித்துப் பேசி உருகிடும் போக்கினன் அல்ல, அவர்களோடு கலந்து உறவாடி அவர் தம் கஷ்ட நஷ்டம் இன்னது என்று கண்டறிந்தவன், பாட்டாளி ஆலையில் வெந்து கருகுவதையும், உழவன் உழைத்து உருக்குலைந்து போவதையும், நடுத்தரக் குடும்பங்கள் வாழ்க்கைத் தொல்லை எனும் சுமையைத் தாங்க மாட்டாமல் வளைந்து போயிருப்பதனையும் கண்டு குமுறும் நெஞ்சினன், இவர்தம் இன்னலைத் துடைத்திட வேண்டும் என்ற பேரார்வம் கொண்டுமட்டுமல்ல, துடைத்திட இயலும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் உத்தமத் தொண்டன், மேதா விலாசத்தைக் காட்டுவதற்காக "மேடை’ ஏறுபவனல்ல, பொதுநலத் தொண்டாற்ற வேண்டும் எனும் எண்ணத்துடன் பேசும் போக்கினன், மக்களின் வாழ்வு செம்மை பெற எது செயல்வேண்டும், எங்ஙனம் அதனைச் செயல்வேண்டும் என்ற முறை அறிந்து ஓயாது உழைத்து வருபவன், அத்தகைய சாமி, உங்கள் தொகுதியின் உறுப்பினனாகி, சட்டசபையில் வீற்றிருந்தால், உமக்கு உற்ற குறை எல்லாம் தீரும், நலன் பல வந்து எய்தும் என்று எடுத்துக்கூறி ஆதரவு திரட்டிட தேர்தல் கூட்டத்தில் சென்று பேசிடவேண்டிய நான், காலத்தின் கொடுமையை என்னென்பது, சாமியின் சவக்குழியைக் காணவும், அங்கு நின்று பேசவும், அனுதாபக் கூட்டத்தில் கதறவும் வேண்டியதாயிற்று. என்மீது தீராப்பகை கொண்டோரும், இந்த அளவுக்கு என்னை வாட்டி வதைத்திருக்க முடியாது. சவக்குழியைக் காணச் சென்றேன் - சண்டமாருதம் என்றனர் சாமியின் ஆர்வம் கண்டோர், சளைக்காத உழைப்பாளி என்றனர் அவன் அல்லும் பகலும் அனவரதமும் பாடுபடக் கண்டோர், நகராட்சி மன்றத்திலே உறுப்பினராக அமர்ந்து நற்பணியாற்றி வரும் திறம் கண்டு வியந்து பாராட்டினர், அத்தகைய என் தம்பியின், சவக்குழியைக் காணச் சென்றேன் - கண்ணீரைச் சுமந்துகொண்டு சென்றேன் - வெடித்துவிடும் நிலையிலிருந்த இதயத்தோடு சென்றேன் - எந்த தூத்துக்குடிக்கு நான் சென்றால், அண்ணா! என்று வாய்நிறைய அழைத்து, வாஞ்சனையுடன் பேசி மகிழ்ந்து மகிழச் செய்வானோ, அந்தத் தம்பியின் சவக்குழியைக் காணச்செல்வது என்றால், இதனைவிட எனக்கு நேரிடக்கூடிய கொடுமை வேறு என்னவாக இருக்கமுடியும்? சென்றேன், கண்ணீர் வெள்ளத்தில் உழலும் தோழர்களைக் கண்டேன், கண்ணீர் வடித்தேன், கண்ணீர் வடித்தனர். தூத்துக்குடி செல்லும் பாதை நெடுக, நான் பன்முறை சாமியுடன் சென்ற நினைவுகள், அப்போதெல்லாம் கழகம் குறித்து நடத்திய உரையாடல்கள், ஆங்காங்கு உள்ள கழகத் தோழர்களைக் கனிவுடன் சாமி இன்னின்ன காரியத்தை இப்படி இப்படிச் செய்யுங்கள் என்று பணித்திட்ட பாங்கு ஆகிய நினைவுகள் என் நெஞ்சில் எழும்பின, வாட்டி வதைத்தன. சாமி மறைந்துவிட்டார் - மாவீரன் கொல்லப்பட்டார் - மாபாவிகள் அந்தக் காளையை வெட்டிச் சாய்த்துவிட்டனர் - சாமி இல்லை, சவக்குழியை அல்லவா காணச் செல்கிறோம் என்று எண்ணிய உடனே, நெஞ்சில் பெரு நெருப்புத் தோன்றும் - ஆறுதல் பெற எண்ணி இப்பக்கம் திரும்பினால், அழுத கண்களுடன் நடராசன், பிறிதோர் பக்கமோ, மனம் குலைந்த நிலையில் மதுரை முத்து-ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்ளமுடியாத நிலையில் இருந்தோம் என் செய்வது? நமது கழகம் தோன்றி வளர்ந்து வரும் இந்த எட்டு ஆண்டுகளில், பலப்பல கொடுமைகளுக்கு ஆளானோம் - மனம் பதறப்பதறப் பழி மொழியும் இழி சொல்லும் வீசினர் - எத்தனையோ விதமான தாக்குதல்களை நடத்தினர் - இழிப்புகள் பல - இடிகள் ஏராளம் - ஈனத்தனமான செயல் புரிகிறோமே, அடுக்குமா என்ற எண்ணமுமின்றி, பகை கொப்பளிக்கும் உள்ளத்தினர் எதை எதையோ செய்தனர் - நமது தோழர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர் - தம்பி! இவை எதுவும் சாதிக்க முடியாததை, இந்தப் பேரிடி சாதித்துவிட்டது - வேதனை என்றால் எப்படி இருக்கும் என்பதை நமக்குக்காட்டிவிட்டது. யாருடைய திருமணப் பந்தலுக்கும் வெற்றி விழாக் கூட்டத்துக்கும் நான் சென்று களிப்பும் பெருமையும் பெற்றிருக்க வேண்டுமோ, அந்தச் சாமியின் சவக்குழி கண்டேன். தம்பி! தம்பி! என்று பரிவுடன் பாசத்துடன் சொந்தம் கொண்டாடினேன் - என் தம்பி சவக்குழி சென்றுவிட்டான் - தவிக்கிறேன் - தவிப்பு தீரவுமில்லை, குறையவுமில்லை - என்றைக்கேனும் தீருமா என்று ஐயமே கொள்ளவேண்டி இருக்கிறது. சாமியிடம் சொன்னால் காரியம் முடிந்துவிடும். சாமியால் மட்டுமே இந்தக் காரியத்தைச் செய்துமுடிக்க முடியும். சாமிக்குத்தான் இந்தக் காரியத்தைச் சாதிக்கும் ஆற்றல் உண்டு. சாமி சாதித்த வெற்றி இது காணீர். சாமியின் திட்டப்படி இந்தக் காரியம் துவக்கப்பட்டது - அதனால் வெற்றி கிட்டிற்று. இவ்விதம் பேசாதவர் இல்லை - பேசும்போது அலாதி யானதோர் மகிழ்ச்சிகொள்ளாதார் இல்லை. வாழ்க்கையை அர்ப்பணிப்பது என்று பேசுவர்; பலர் விஷயத்திலே அது ஆர்வத்தினால் பிறந்திடும் அன்புரை என்றோ, வெறும் சொல்லலங்காரம் என்றோ மட்டுமே கூறப்படவேண்டும் - சாமியைப் பொறுத்தமட்டில், அந்தப் பேச்சு முழுக்க முழுக்க உண்மை ஒவ்வொரு நாளும். நாளில் ஒவ்வொரு மணி நேரமும், தொண்டு - தொண்டன்றி வேறில்லை - கழகத் தொண்டு, பாட்டாளிகளுக்கான பணிமனை அமைக்கும் தொண்டு - பள்ளிக்கூடம் நிறுவும் தொண்டு, நகராட்சிக்கான நற்றொண்டு - என்று இப்படி வகை வகையாக இருக்கும் - தொடர்ந்து நடந்தேறிவரும். ஒரு காரியம் வெற்றியானால் மற்றொன்று, அது வேறோர் காரியத்தைத் துவக்க வழி காட்டும் - இப்படி இடைவிடாது தொண்டாற்றிவந்த இளவல் சாமி, காதகரின் கத்தி தன் உயிரைக்குடிக்கும் - அதுவும் விரைவில் - என்று முன் கூட்டியே அறிந்து - அந்தக் கொடுமையான முடிவு வந்து சேருவதற்குள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகத் தொண் டாற்றி, சமூகத்துக்கு நன்மை காணமுடியுமோ அத்தனையையும் விரைந்து செய்துமுடித்து வெற்றி காணவேண்டும் என்று திட்டமிட்டதுபோல, அந்தப் பாண்டிமண்டலப் பாசறைக் காவலன், முன்னேற்றக் கழகத்தின் முன்னணி வீரன், ஆர்வத்தால் உந்தப்பட்டு, செயல், செயல், செயல், என்று ஈடுபட்டிருந்தான். நாசகார உலகம் இது! நன்றி கெட்ட நாடு இது! நயவஞ்சகர் கொட்டமடிக்கும் காலம்! நல்லது செய்பவரை நாசமாக்கும் நச்சு நினைப்பினர் உலவும் காடு இது - நாடு அல்ல! நன்றி கூறவேண்டியவர்கள், நட்புக் காட்டவேண்டியவர்கள், பாராட்ட வேண்டியவர்கள், பரிவுகாட்டவேண்டியவர்கள் இவர்களே, நற்றொண்டு ஆற்றும் நல்லோனை, வெட்டுவர், குத்துவர், கொல்வர் - என்று அறிந்ததாலோ என்னமோ, நமது சாமி, அந்த நாசகாலர்கள் தன்மீது பாய்ந்து சாய்க்கு முன்பு, நம்மாலான நல்ல காரியமனைத்தையும் செய்து முடித்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்து செயலில் ஈடுபட்டான். வயது முப்பதாகி ஈராண்டுகளே உருண்டன - சவக்குழி புகுந்துவிட்டார் சாமி. அவர் ஆற்றலால் வீரரான, உறுதியுடன் பாடுபடும் பண்பாளர்களான, ஊருக்கு உழைக்கும் உத்தமர்களான, கட்டிளம் காளைகள் ஆயிரக்கணக்கில் அழுது நிற்கின்றனர் - அந்த ஆற்றல்மிக்கோன் சவக்குழி சேர்ந்து விட்டான். கொடுமையாளர்களால் கொலை செய்யப்பட்டு, மறைந்தான் - கொப்பளிக்கிறது கண்ணீர். "அண்ணா -’’ என்றனர் அழுகுரலில் - சூழ வந்து நின்ற தோழர்கள் - நான் என்ன சொல்லுவேன். நோய்நொடியால் இறந்துபட்டார் என்றால், தக்க மருத்துவம் பார்த்திடவா இயலாது போயிற்று? என்று கேட்பேன். இறந்துபட்ட சாமிக்கு அறுபது வயது என்றால் பழம் கீழே உதிர்ந்தது, பதறி அழுது என்ன பயன் என்பேன். காட்டு மிருகங்கள் அவர் உடலைக் கிழித்தெறிந்து உயிரைக் குடித்தது என்றால் வேட்டையாடி அவைகளை வீழ்த்திடும் வீரம் உமக்கு எங்கே போயிற்று என்று கேட்பேன், அடக்குமுறைக்கு அவர் பலியானார் என்றால்கூட, சாமியின் உயிர் குடித்த ஆணவ ஆட்சியின் ஆதிக்கத்தை அழித்தொழிப்போம், வாரீர், என்று அழைத்து, சூள் உரைத்திடச் செய்வேன் - சாமி, சாகவில்லையே - கொல்லப்பட்டார் - படுகொலை அல்லவா செய்யப்பட்டார். பெரியதோர் பயங்கரக் கலகமாம், இருதரப்பினரும் ஆயுதம் எடுத்துப் போரிட்டனராம், எதிர்த் தரப்பிலே ஏழெட்டு பிணமாம், சாமியின் இதயத்திலே ஈட்டி பாய்ந்ததாம், சாய்ந்து பட்டாராம் கீழே என்று இருந்தால்கூட, சோகத்துக்கு இடையிலேயே ஒரு பெருமை உணர்ச்சிகூடம் பளிச்சிட்டிருக்கும் - கேட்கவே கூசும், கொடுமையல்லவா நடைபெற்றுவிட்டிருக் கிறது - இரவு மணி பத்து ஆகவில்லை - ஊர் உறங்கவில்லை - ஆள் ஆரவம் அடங்கவில்லை - வீடு செல்கிறார் - வழியில், முட்டுச் சந்தில் அல்ல, காட்டுப் பாதையில் அல்ல, பனைமரச்சாலையில் அல்ல, பயங்கரப்பாதையில் அல்ல, நெடுஞ்சாலையின் நடுவே, எத்தனைபேர் தாக்கினரோ - ஏழெட்டு என்கிறார்கள் - கத்திக்குத்து மட்டும் பதினெட்டாம் - பாதையில் மடக்கிக்கொண்டு, பதைக்கப் பதைக்க வெட்டிக் கொன்றுவிட்டனரே - இதைக் கேட்டு நெஞ்சம் கொதிப்படைவதன்றி - "அண்ணா’ என்று அழுகுரலில் என்னை அழைத்த தோழர்களிடம் நான், என்ன சொல்லுவது. பதறாதீர்கள் என்பதா - நானே பதறிப்போயல்லவா இருக்கிறேன். அழாதீர்கள் என்பேனா, நான் அழுதுகொண்டு அல்லவா இருக்கிறேன். நான் அவர்களின் கண்ணீரைக் கண்டேன் - அவர்கள் நான் அழக் கண்டனர். சாமியின் இல்லம் சென்றேன் - உள்ளே நுழையும்போதே - இங்குதானே சில திங்களுக்கு முன்பு நம்மை அழைத்துவந்து இருக்கச் செய்து - உபசாரம் நடத்தி - உவகையுடன் உரையாடினார் - என்று எண்ணினேன் - கால்கள் பின்னிக்கொண்டன. உள்ளே படுக்கையில், செயலற்ற நிலையில் அமர்ந்திருந்தார், சாமியின் தந்தை, முதியவர், அவரிடம் சென்றேன் - ஐயோ! தம்பி! நான் எப்படி எடுத்துச் சொல்வேன், அந்த இதயம் வெடிக்கும் காட்சியை. ஐயா! ஐயா! என் அருமை மகனைக் கொன்றுவிட்டார் களய்யா! என் மகன் போய்விட்டானய்யா, போய்விட்டான். ஊருக்கு உழைக்கிறான், உத்தமனென்று பெயரெடுக் கிறான் என்று பூரித்துக் கிடந்தேன் - கொலை செய்துவிட்டார் களய்யா - கொன்று போட்டு விட்டார்களய்யா - என்று கூறிக் கதறினார் - என்னைக் கட்டிப் பிடித்தபடி, தம்பி! அந்த ஒரு கணம் நான் அடைந்த வேதனை, பகைவனுக்கும் வரலாகாது - நிச்சயமாகக் கூடாது. உன்னிடம்தானே ஒப்படைத்தேன் - உலுத்தனே - எங்கே என் மகன்? - என்று கேட்கிறது, அந்த முதியவரின் கண்ணீர். நான் என்ன பதில் அளிப்பேனடா, தம்பி? என்ன பதில் அளிப்பேன்? உங்கள் கழகத்தில்தானே என் மகன் ஈடுபட்டு, குடும்பத்தை மறந்து, தொண்டு செய்வதிலே மூழ்கிக் கிடந்தான் - அவன் கொல்லப்படுவதைத் தடுத்திடும் வக்கு அற்றுப் போனீர்களே? நீங்கள் மனிதர்கள்தானா!!! - என்று கேட்கிறது அந்த முதியவரின் கதறலொலி! நான் என்ன பதிலளிப்பேன். மார்புடன் சேர்த்து அணைத்துக்கெண்டேன். எங்கள் இருவரின் கண்ணீரும் கலந்தன - சூழ நின்றோர் கதறினர். “ஐயா! சாமியைப் பறிகொடுத்துவிட்டோம் - கதறுகிறோம் - வேறு என்ன செய்யமுடியும் - ஐயா! சாமி போய்விட்டார் - என்னை உங்கள்”சாமி‘யாக ஏற்றுக்கொள்ளுங்களய்யா!’’ என்று கூறிக் கதறினேன் - பெரியவர், ஐயா! ஐயா! என் மகன்! என் மகன்! என்று கதறியவண்ணம் இருந்தார். வயோதிகத்தால் இளைத்துக் கிடக்கும் அந்தப் பெரியவரின் மடியிலே, சாமி பெற்றெடுக்கும் செல்வங் களல்லவா தவழ்ந்திருக்க வேண்டும்! அந்தப் பேரப்பிள்ளைகளை வாரி எடுத்து மார்போடு அணைத்து, உச்சி மோந்து முத்தமிட்டு கண்ணே! மணியே! என்று கொஞ்சிட வேண்டிய அந்த முதியவர், தன் மகன் படுகொலை செய்யப்பட்ட கொடுமையைக் காண்பது என்றால் ஐயய்யோ! அதைவிட இம்சை வேறு என்ன வேண்டும்! இருவரும் சென்றோம், சவக்குழி காண. உடன்வந்தோர் உருகி அழுதனர் - சுற்றுப்புறமிருந்து வந்திருந்தோர் அனைவரும் பதறி அழுதனர் - நடராசன் தேம்பித் தேம்பி அழுதார் - முத்து சிறிதளவு சமாளிப்பார் என்று எண்ணினேன் - அவரும் கதறுகிறார். என்னுடன் வந்திருந்த நண்பர் பாபுவும், சென்னைத் தோழர் தேவராசன் அவர்களும், கண்ணீர் பொழிந்தனர். சவக்குழி - தம்பி - சாமியின் முயற்சியால் உருவாகி எழிலுடன் விளங்கும் பள்ளிக்கூடத்தின் பக்கத்தில்!! - ஒருபுறம் சாமியின் வெற்றி - மற்றோர்புறம் அவருடைய சவக்குழி - பணியின் உருவம் அந்தப் பள்ளிக்கூடம் - பாதகரின் காதகச் செயலின் உருவாக அமைந்தது சவக்குழி அதனைக் காண நேரிட்ட கண்கள் - புண்கள், கண்டோம் - நாடு, காடுதான் சிற்சில வேளைகளில் - நல்லாட்சியும் நாகரிக மேம்பாடும், சட்டமும் சமூகக் கட்டுக்கோப்பும் எல்லாம் உள்ளன என்றுதான் பெருமையாகச் சொல்-க்கொள்கிறோம் - ஆனால் இதோ சவக்குழி படுகொலை செய்யும் பாதகர்கள் - எதிர்த்துப் போரிடவோ, தப்பிப் பிழைக்கவோ முடியாத நிலையில் சிக்கிக் கொண்டவனை வெட்டிக் கொல்லும் வெறியர்கள், உலவு கிறார்கள் என்ற வெட்கக்கேடான நிலையைக் காட்டிக்கொண்டு இருக்கிறது. நெடுஞ்சாலையிலே நின்று நாசகாரர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள் - தடுத்திட ஒருவர் இல்லை - துணைக்கு யாரும் இல்லை. துரைத்தனம் கொடிகட்டி ஆள்கிறது - பல்லாயிரக்கணக்கிலே, ஆடவரும் பெண்டிருமாகக் கூடினர் - அழுத கண்களுடன் - அனுதாபக் கூட்டத்தில். ஆறுதல் அளிக்க வந்தேன் - எனக்கு ஆறுதல் அளியுங்கள் - என்று கேட்டுக் கதறினேன். ஒருவருடைய முகத்தலும் ஈயாடவில்லை. படுகொலைக்குக் காரணம் என்ன? இந்தப் பயங்கரச் சூழ்நிலைக்குக் காரணம் யாது? - அனைவரும் கேட்கின்றனர் - ஒருவரும் இன்னதுதான் என்று கூறமுடியாமல் திகைக்கின்றனர். சோகமும் திகைப்பும் தூத்துக்குடியைக் கப்பிக்கொண் டிருக்கிறது. தமிழகமெங்கும் இதுவே நிலைமையாகிக் கிடக்கிறது. "போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைக்குக் குந்தகம் ஏதும் விளைந்திடலாகாது, படுகொலை மர்மம் விளக்கப்பட வேண்டும், நாட்டிலே தலைவிரித்தாடும் காட்டுப்போக்கு அடக்கப்பட்டாக வேண்டும்,’’ என்று தூத்துக்குடி வட்டாரமே கேட்கிறது. தம்பி! என் வாழ்நாளில் இது போன்றதோர் கொடுமையை நான் கண்டதில்லை. நாங்கள் கூடத்தான் இப்படிப்பட்ட "நீசத்தனமான காரியத்தைக் கண்டதில்லை என்று அறுபது வயதினரும் கூறுகின்றனர். அதிர்ச்சியிலிருந்து நமது தோழர்கள் மீண்டிடவே சில காலம் பிடிக்கும் என்று தோன்றுகிறது-கலம் கவிழ்ந்து, பச்சிளம் குழந்தை பிணமாகிக் கடலில் மிதந்திடக்காணும் தாய், கதறுவது போலக் கதறுகின்றனர், நமது கழகத் தோழர்கள். ஆண்டு எட்டு ஆகிறது நமது கழகத்துக்கு - இந்த அறியாப் பருவத்திலே இப்படிப்பட்ட அக்ரமம், கொடுமை நமது கழகத்தைத் தாக்கியிருக்கிறது. தாங்கிக்கொள்ள இயலுமா? இந்தச் சோகத்திலிருந்து திகைப்பிலிருந்து நாம் மீளமுடியுமா? அல்லது, திகைப்பு நம்மைச் செயலற்றவர்களாக்கி விடுமா என்றுகூட, சில வேளைகளிலே எண்ணிடத் தோன்றுகிறது. எத்துணை மகிழ்ச்சியுடன் இருந்து வந்தோம் - இன்னல் பல வந்துற்றாலும், இழிமொழியாளர் எதிர்த்தாலும், தொல்லை பல துரத்திவந்து தாக்கினாலும், அவைதமை எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றுவிட்டோம் என்றெல்லாம் எண்ணி இறுமாந்து கிடந்தோம். இந்தப் "பேரிடி’யைத் தாங்கிக் கொள்ள முடிகிறதா, பார்! என்று காலம் கேட்டுவிட்டதே, என் செய்வோம்? சாமி, தனி ஆள் அல்ல! தந்தைக்கு மகன் என்பதான நிலையினன் மட்டுமல்ல! நம் கழகத்துச் செல்வன் - நம் குடும்பத்துப்பிள்ளை - நமது இலட்சியத்தின் காவலன். அவனைக் கொன்றதானது நம் ஒவ்வொருவரையும் வாட்டும் கொடுஞ் செயல். துரைத்தனத்தின் துப்பாக்கிக்கும், தடியடிக்கும், தூற்றிக்கிடப்போரின் இழிமொழிக்கும் ஈடுகொடுத்துக்கொண்டு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று இலட்சியம் பேசிக்கொண்டு திரிகிறீர்களே, இதோ உங்கள் சாமியைப் படுகொலை செய்கிறோம், தாங்கிக் கொள்ளுங்கள் பார்க்கலாம் என்று கேட்பது போலல்லவா, இந்தக் கொடுமை நடந்துவிட்டது தம்பி! நாம் என்ன செய்வது? எனக்கு ஒன்று தோன்றிற்று, தூத்துக்குடியிலிருந்து திரும்புகையில். நாம், வளர வளர, கொடுமை பலப்பல, பல்வேறு வகையில் நம்மைத் தாக்கத்தான் செய்யும் என்று தோன்றிற்று. நாம், மிகச் சாமான்யர்கள் - சிறுவர்கள் என்றுகூடச் சொல்கிறார்கள் - நமக்கு ஏற்பட்டுவிட்ட வளர்ச்சியின் அளவுக்கு வளர்ச்சி காண, அனுபவ மிக்கவர்கள் அரை நூற்றாண்டு பாடுபட்டால்மட்டுமே பெறமுடிகிறது, பிற கட்சிகளால். கொழுந்துவிட்டெரியும் ஆர்வம் காரணமாகவும் கொள்கைப் பற்றுடன் பணியாற்றும் திறனாலும், கொதிப்பு மூட்டுவோர்பற்றிப் பொருட்படுத்தாது பணியில் ஈடுபடும் பண்பினாலும், நாம், மிக உன்னதமானதோர் வளர்ச்சியைக் கண்டோம். இதுகண்டு பொறாதாரும், இதற்கு நாம் தகுதி அல்ல என்று எண்ணுவோரும், இது நமக்குக் கிட்டாமற் போயிற்றே என்று ஏங்குவோரும் ஏராளமாக உள்ளனர். அவர்களில் பலர் வெளியில் இருந்து நமக்கு வேதனை விளைவிக்கப் பல்வேறு முறைகளில், முனைகின்றனர். உடனிருந்து கொண்டே வேதனை விளைவிக்கவும் சிலர் உளர் போலும். எது எப்படி இருப்பினும், இந்தக் கட்டத்தையும் நாம் கண்டாகவேண்டும்போல் தோன்றுகிறது. "பயல்கள் இதனால் மருளட்டும், மனம் உடைந்து போகட்டும்,’ என்று எண்ணுவோரும் இருக்கக்கூடும். இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன? நான் எண்ணி எண்ணிப்பார்த்தேன் - ஒன்றுதான் எனக்குப்பட்டது - அதைத்தான் தம்பி, உனக்கும் கூறுகிறேன். எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் எத்தகைய காதகச் செயலுக்குப் பலியாக நேரிடுமோ என்ற நிலைமை இருக்கிறது - அந்த நிலைமையின் ஒரு அறிகுறிதான் சாமி - படுகொலைச் சம்பவம் - அந்த நிலைமை நமக்குக் குழப்பத்தையும் கிலியையும் மூட்டுவதாக இருத்தலாகாது - அப்படிப்பட்ட ஆபத்து எந்த நேரத்திலும் நேரிடக்கூடும், ஆகையால், ஒவ்வோர் நாளும், நாளை என்ன ஆகுமோ இன்றே நாம் நம்மாலான நல்ல தொண்டினைச் செய்து முடித்துவிடுவோம், என்ற பொறுப்பைத்தான் நமக்கு அளிக்க வேண்டும். அதற்கென்ன பிறகு செய்யலாம் - நாளையத்தினம் பார்த்துக்கொள்வோம் - அவசரம் எதற்கு - என்று நாம், யாரும், காலதாமதம் செய்வதுகூடாது - ஒவ்வோர் நாளும் பணியாற்றும்போது, இதுவே நமதுகடைசி நாளாகிவிட்டால் என்ன செய்வது, இன்றே நம்மாலானதைச் செய்து முடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடனேயே பணியாற்றவேண்டும். அது ஒன்றுதான், நாம் மேற்கொள்ள வேண்டிய முறை - இப்போதைய சோகச் சம்பவம் நமக்குக் காட்டவேண்டிய பாடம். சாமி, சவக்குழியில்; நாம் வெளியில். சவக்குழியினின்றும் ஒருவரும் தப்பித்துக்கொள்ளப் போவதில்லை - ஆனால் அங்கு கொண்டுசெல்லப்படுமுன், நமது தொண்டு, பார்த்தோர் பாராட்டத்தக்க விதமான பட்டியல் ஆக இருத்தல் வேண்டுமல்லவா. அதனை மனத்திலிறுத்தி நாம் அனைவரும் நித்தநித்தம் மெத்தவும் பாடுபட்டு, நமது பங்கினைச் செலுத்திவிடவேண்டும். நாளை, நாளை என்று கூடாது! நாளையத் தினம், யார். நம்மைச் "சாமி’யாக்கிவிடுவார்களோ. யார் கண்டார்கள் - எனவே இன்றே நாம் நமது கடமையைச் செய்யவேண்டும். கண்ணீர் தளும்பும் நிலையில் இருக்கிறோம் - கடமை வீரனைப் பறிகொடுத்ததால். நாம் நமது கடமையை விரைந்து செய்தல் வேண்டும் என்பதைக் காட்டும், கொடிய ஆசானாகிறது, அந்தச் சவக்குழி. அன்பன், 7-10-1956 நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்…! நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்…! தேவி குளமும் பீர்மேடும் - காமராஜரும் நக்கீரரும். தம்பி! நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம், குற்றமே! திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், மான் மழுவேந்திய மகேசன், மாலும் அயனும் தேடித்தேடிப் பார்த்தும் அடியும் முடியும் கண்டறியவொண்ணாதபடி அண்டசராசரமனைத்து மாய் நின்ற அரன், உமையொரு பாகன், சிறுபொறி கிளப்பிச் சிதறினாலே எதிர்ப்பட்டதனைத்தையும் சாம்பலாக்கிடத் தக்கதான "சம்ஹார சக்தி’ படைத்த நெற்றிக் கண்ணைக் காட்டினார் - ஏடும் எழுத்தாணியுமின்றி பிறிதோர் பலமற்ற நக்கீரன் எனும் பெரும்புலவர், ஐயனே! யார் நீவிர் என்பதனை அறிந்தேன், எனினும் அச்சம் காரணமாகவோ, பக்திக்குக் கட்டுப்பட்டோ, என் நெஞ்சார உணர்ந்ததை எடுத்துரைப்பதை விட்டுவிடுவேன் என்று மட்டும் எண்ணாதீர், நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே! என்று எடுத்துரைத்தாராம். தமிழர் பங்கமுறாமல் சங்கம் வளர்த்து, சான்றோராய், ஒழுகி வந்த நாட்களில், தமிழ்ப்பெரும் புலவர்களின் மனவலிவு எத்துணை ஏற்றமுடையதாக இருந்தது என்பதனை எடுத்துக்காட்ட, நக்கீரன் நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று அஞ்சாது எடுத்துரைத்த காதையைக் கூறுவது, இப்போது, ஏறத்தாழ மேடை மரபு ஆகிவிட்டது. தமிழன் எதற்கும் அஞ்சமாட்டான், மனதிற்குச் சரியெனப் பட்டதை, எவர் குறுக்கிட்டாலும், உருட்டி மிரட்டினாலும் எடுத்துரைக்கத் தயங்கமாட்டான், என்பதற்கான எடுத்துக் காட்டாக, நக்கீரன் விளங்குவதுபோல், பிறமொழியாளர்களிடம் காதைகள் உள்ளனவா என்பதுகூட ஐயப்பாடுதான். தமிழரின் அஞ்சா நெஞ்சினையும், தயாபரனின் உருட்டல் மிரட்டல் வேலையையும் விளக்கிடப் பயன்படுத்தப்படும் இந்த நக்கீரன், பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணமா, செயற்கை மணமா என்ற பிரச்சினையை ஒட்டிப் பிறந்தது. செயற்கையில்தான் மணம் என்பது நக்கீரன் வாதம். இல்லை, இயற்கை மணம் உண்டு என்பது இமயவன் இயம்பிய வாதம். நக்கீரனுக்கு நெஞ்சில் நடுக்கம் இல்லை - புலமை வலுவளித்தது. உள்ள படைகள் உருக்குலைந்து ஓடிடக் கண்டான பிறகு மூலப்பலப் படையின் துணையை நாடும் முறைப்படி, சிவனார், புலமைக்கு உரிய வாதங்கள் பயன்படாமற் போன பிறகு, மூலபலம் காட்டும் போக்குடன், ஏ! எடு தூக்கியே! எம்மை யார் என்று காண்பாயாக! என்று எடுத்துக்கூறி, மடக்கிடும் முறையில், நெற்றிக்கண்ணைக் காட்டினார். கண்டேன், கண் மூன்றுடையோனே!, கண்டேன்! எனினும் குற்றம் குற்றமே என்று துணிந்துரைத்தார், நக்கீரர் என்னும் பெரும் புலவர். தமிழர் இதனை மேடைமரபு ஆக்கிக்கொள்ளும் அளவுக்கேனும் ஆர்வம் இழந்திடாமல் உள்ளனரே என்பதிலே மகிழ்ச்சி கொள்ளத்தான் வேண்டும். எனினும், என் மகிழ்ச்சி ஒன்றுக்குப் பத்தாகி, என் உள்ளத்தில் களிப்புக் கொந்தளிக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும் ஓர் நிகழ்ச்சி, சின்னாட்களுக்கு முன்பு நடைபெற்றது - பெரும்புலவனாம் நக்கீரன் பற்றி காமராஜர் பேசினார்! ஆமடா, தம்பி, ஆமாம்! நக்கீரன் பற்றி காமராஜர் பேசினார்!! தமிழன் இனி தலைநிமிர்ந்து நிற்கலாம், தோள் தட்டி ஆடலாம், பள்ளுப்பாடி மகிழலாம்; காமராஜர், மாநில முதலமைச்சர், சங்கம் புகழ விளங்கிய சான்றோராம் நக்கீரனார் குறித்துப் பேசிடவும், அதனை நாட்டுமக்கள் கேட்டு இன்புறவு மானதோர் நற்காலம் பிறந்துவிட்டதே என்று கூட ஒருகணம் எண்ணினேன் - மறுகணமோ…! நக்கீரர் போலக் குற்றம் குற்றமே என்று எடுத்துக்கூறும் பண்பு பாராட்டத்தக்கது. அது வளர வேண்டும் என்று பேசுகிறார் என்றால், அதுதான் இல்லை! "உன் புருஷனோடுதான் நீ எப்போதும் சரசமாடுவாயே இன்று என்னோடு கொஞ்சம் சிரித்துப் பேசேன்’ என்று கேட்கும் பாவனையில், நக்கீரர் குறித்துச் சுட்டிக் காட்டிய காமராஜர், அவர்போல அஞ்சா நெஞ்சுடன், தவறு எத்துணை பெரிய இடத்தவர் செய்தாலும் கலங்காமல், அஞ்சாமல், குற்றம் குற்றமே என்று எடுத்துக் கூறுக என்று பேசாமல், நக்கீரர் பரம்பரை என்று கூறிக்கொள்கிறீர்களே, உங்களுக்கு ஏன் வடநாட்டினிடம் பயம், வடநாடு ஆதிக்கம் செலுத்தும் என்று ஏன் பயப்படுகிறீர்கள்? வடநாடுதான் ஆதிக்கம் செலுத்தட்டுமே? என்று பேசுகிறார். இதிலே, அவர் காட்டும் தெளிவு இருக்கிறதே, அதைக் கண்டு அகில உலகும் அதிசயிக்கும்! முதுகின் மீது யார் ஏறி அழுத்தினாலும், வாய் திறவாமல் இருப்பதுதான் நக்கீரர் பரம்பரையின் போக்காக இருக்க வேண்டும் என்று கருத்துரை அளித்திட, காமராஜரால் தவிர வேறு ஒருவரால் நிச்சயமாக முடியாது! வேறு ஒருவரால் முடியாது. சிவபெருமான் என்று தெரிந்த பிறகும், நக்கீரர் அஞ்சாமல் தமது எதிர்ப்பை, மறுப்பைத் தெரிவித்தார். அதே முறையிலேதான், சுட்டுச் சாம்பலாக்கவல்ல சக்தியைப் பெற்றவர் நேரு பெருமகனார் என்று தெரிந்தும் அந்தச் செயலில், அவருடைய துரைத்தனம் இந்த எட்டாண்டுகளிலே, நிரம்பப் பயிற்சியும் பெற்றுவிட்டது என்பதை அறிந்தும், நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று எடுத்துரைக்கும் துணிவும், தமிழ் மரபு இதுதான் என்பதைக் காட்டிடும் போக்கும். முன்னேற்றக் கழகத்திடம் இருக்கிறது. இதைக் கண்டு பெற வேண்டிய கருத்தைப் பெறாமல், அப்படிப்பட்ட நக்கீரர் வழி வந்தவர்கள், வடநாட்டுக்குப் பயப்படுவானேன் என்று வக்கணை பேசுவதற்குத் தேவையான சிறுமதியைப் பலர் பெற முயன்றாலும் முடியாது. நமது மாநில முதலமைச்சருடன் இதில் போட்டியிட எவராலும் இயலாது. எனினும் எனக்கோர் மகிழ்ச்சி - கனியைப் பறித்து குறும்புக்காக மந்தி வீசினாலும், கனி கிடைப்பது நல்லதல்லவா! அதுபோல, தவறாகப் பயன்படுத்துகிறார் என்றபோதிலும், காமராஜர். தமிழகம் தாழ்ந்திடாமல் இருந்த காலத்துச் "செய்திகளை’ மேலும் மேலும் தெரிந்துகொள்வது நல்லது என்று எண்ணவேண்டி இருக்கிறது. நக்கீரர், நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கூறியதும், என்னே இவர் தம் அஞ்சாமை! என்று வியந்து வெண்மதி சூடியோன், அவரை வாழ்த்தினன் என்று கதை இல்லை. வெந்தழல் நக்கீரர் உடலைப் பற்றிக் கொண்டதன்ன தோர் நிலையை மூட்டிவிட்டார் என்றும், பின்னர் அப்பெரும் புலவர் திருமுருகாற்றுப்படை பாடி உய்வு பெற்றார் என்றும்தான் திருவிளையாடல் குறித்து உரைக்கின்றனர். எனவே, நக்கீரர் காலத்திலும் சரி அஞ்சா நெஞ்சனைப் போற்றிட ஒரு சிலரே உளர் என்று கூறத்தக்க இக்காலத்திலும் சரி, நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கூறும் போக்கினை, மேலிடத்தில் அமர்ந்தவர்கள் பாராட்டுவது கிடையாது - பகைதான் பெரு நெருப்பாகும். நக்கீரர் கதியே இதுவாயிற்று - உண்மையைச் சொன்ன தற்காக உழல நேரிட்டது, அதுவும் உமாநாதனின் உக்கிரத்தினால் என்று கண்ட பிற்காலத் தமிழர்கள். ஒற்றைக் கண்ணனாக இருந்தாலும்கூட அவன் ஊராளும் நிலைபெற்றான் என்றால், அடங்கவும் ஒடுங்கவும், ஆமையாகவும் ஊமையாகவும் தாழ்ந்து போயினர். எனவே, எதைச் சொன்னாலும் சரி என்று ஏற்றுக்கொள்ளும் பாவனைப் பணிவும், கோழை உள்ளமும் ஏற்பட்டுவிட்டது; அதன் விளைவாகவே இங்கு ஆரியம் நுழையவும், பிறகு ஆங்கிலேயர் அரசாளவும் இன்று வடவர் கொட்டமடிக்கவுமான கோணல் நிலை ஏற்பட்டது; இதை நாட்டுமக்களுக்கு எடுத்துக் கூறிடும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்; காமராஜரோ, நாவடங்கிக் கிடவுங்கள் என்று புத்தி கூற, நக்கீரர் கதையையே பயன்படுத்தப் பார்க்கிறார். போகட்டும் இதற்காக வேனும், இவர் நக்கீரர், கபிலர், இளங்கோ போன்றார் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைப்பது குறித்து நான் உள்ளபடி மகிழ்கிறேன். "முதியோர் கல்வி’யில் பலவகை உண்டு; அதில் இது ஒருவகை என்றெண்ணி மகிழ்கிறேன். பெறவேண்டிய "பாடம்’ துவக்கத்தில் கிடைக்காமற் போயினும், தமிழகம் கொண்டிருந்த புலமையும், கோலோச்சிய தன்மையும், பெற்றிருந்த வளமும், பின்னர் அதனை இழந்ததன் காரணமும் அறிந்திடவும், அறிந்ததன் பலனாகவே, மீண்டும் தாழ்ந்த தமிழகம் எழுச்சி பெறுவதற்கான திட்டம் காணவேண்டும் என்று எண்ணவும், உள்ளத்தில் ஆவல் அரும்பும்! இது என் நம்பிக்கை. நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே! - என்று கூறிடும் அளவுக்கு நெஞ்சு உரம், தமிழகத்தில் இருந்து வந்தது; காமராஜர் அறிந்து உரைக்கும் அளவுக்கு, அந்தக் காதை நாட்டிலே சர்வ சாதாரணமாகிவிட்டு மிருக்கிறது - எனினும், அத்தகைய தமிழகத்தில், காணக் கிடைக்கும் எல்லா வகையான ஆதாரங்களையும் கொண்டு பார்க்கும் போது, தேவிகுளம் பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழகத்துக்குத்தான் உரிமையான உடமைகள் என்பது தெரிந்திருந்தும், அதனைத் தேசியப் பாசம் குன்றாமுறையிலும், தெளிவு தெரியும் வகையிலும் எடுத்துக் காட்டியும், டில்லி ஏற்க மறுத்ததே அதுபோது, நக்கீரம் பேசும் இந் நற்றலைவர் செய்தது என்ன? தமிழரின் உரிமையை மறுப்பவர், எவராயினும், எத்துணை ஏற்றம் பெற்றோராக இருப்பினும், கொற்றம் கொண்டு அதனையே கொடுமைக்குக் கருவியாக்கிக் கொண்டோராக இருப்பினும், நான் பணிந்திடுவேன் அல்லேன், பணிந்திடுதல் பண்புமல்ல, தமிழ் மரபுமாகாது, என்றா சீறிக்கிளம்பினார்!! தேவிகுளம் போனாலென்ன வாவி குளம் வந்தாலென்ன வாஞ்சனை போதுமய்யா, நேருவே! வாய்திறவேனே, மெய்யாய்! என்று கண்ணி பாடிக் கிடந்திட்டாரே! இப்படிப்பட்டவர் களிடம் தமிழகம் சிக்கிய பிறகுதான், நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கூறிடும் உள்ள உரம் உருக்குலைந்தது, எடுப்பார் கைப்பிள்ளைகளும், எனக்கென்ன பங்கு என்று கேட்பவர்களும் கொலு வீற்றிருக்கத் தொடங்கினர், கோல் சாய்ந்தது, கோலம் கலைந்தது, ஞாலம் புகழ வாழ்ந்த தமிழர், நாமம் மட்டும் தமிழரெனப் பெற்று வாழ்த்திடும் அவலம் பிறந்தது, அவதி மிகுந்தது. எனவேதான், இதுகாலை தமிழரின் பண்டைய பெருமையினை எடுத்துக் காட்டியேனும், ஓர் புது எழுச்சி காணலாமா என்று தம்பி, நாமெல்லாம் எண்ணுகிறோம். தமிழ் இனம், பண்பு கெடாத நாட்களில் பாராண்ட பாங்குபற்றி, படிக்குந்தொறும் படிக்குந்தொறும் பாகெனச் சுவை அளித்திடும் பாக்களைக் காண்கிறோம்; பெருமூச் செறிகிறோம். கோடும் குவடும் பொரு தரங்கக் குமரித் துரையில் முத்தும் கொற்கைத் துறையில் துறைவாணர் குவிக்கும் சலாபக் குவால் முத்தும் ஆடும் பெருந்தண் துறைப் பொருளை ஆற்றில் படுதெண் ணிலா முத்தும் அந்தண் பொதியத் தடஞ்சாரல் அருவி சொறியும் குளிர் முத்தும்! என்று பாடுகிறார்கள் - உன் தமிழகம் முத்தும் மணியும் ஒளி தர விளங்கிய உயிரோவியம் என்பதனை அறிந்திடுக! என்று புலவர் பெருமக்கள், பொருளுரையும் பொழிப்புரையும் கூறுகின் றனர் - பழிப்புரை கேட்டும் பதைத்திடாதார் பரிபாலனத்திலே உள்ளோமே! முத்து கூத்தாடுமாமே முந்தையர் நாட்களில், வறுமை முடைநாற்ற மன்றோ துளைக்கிறது என்று எண்ணுகிறோம், ஏங்கித் தவிக்கிறோம்! "குன்றின் இள வாடை வரும் பொழுதெல்லாம் மலர்ந்த திருக்கொன்றை நாறத் தென்றல் வரும் பொழுதெல்லாம் செழுஞ்சாந்தின் மணநாறும் செல்வவீதி…’’ என்று கூறுகிறார் புலவர் - தமிழகத்தின் புகழ் மணம், கமழ்ந்திருந்த அந்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன, அந்தச் "செல்வவீதி’களிலே இன்று தேம்பித் தவித்தும், திண்டாடித் திகைத்தும், உழைத்து உருக்குலைந்தும், பிழைப்பிற்கு வழி காணாது புலம்பியும், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் கிடைக்காததால், இழிநிலை பெற்றும், தமிழர் உழல்கின்றனரே! குன்றிலிருந்து கிளம்பும் காற்றும், ஊருக்குள் செல்கிறோம், மக்களுடன் உறவாடி மகிழச் செல்கிறோம், செல்லுங்காலை, எமைக்காண வந்த இளங்காற்றே! எமக்களிக்க எது கொணர்ந்தனை? என்று கேட்டிடின் என்ன செய்வது என்று எண்ணிப்போலும், மலர்ந்த கொன்றையின் மணத்தை வாரிக் கொண்டு வந்து தருகிறது; இளவாடை! தென்றல் வீசும்போது, இனியதோர் குளிர்ச்சி மட்டுமா! அந்தத் தென்றல் தமிழகத்தில் வீசுகிறதல்லவா, தமிழர், தென்றலுக்கே வாசம் அளிக்கின்றனர் - செழுஞ்சாந்தின் மணம் பெறுகிறது தென்றல்! இவ்விதமெல்லாம் இருந்த "செல்வ வீதி‘களிலே இன்று காண்பது என்ன? இன்றைய நிலையை எண்ணி எண்ணி ஏக்கமுறும்போது, எதிரே வந்து நின்று காமராஜர், "ஓலமிட்டுக் கிடப்பானேன் - நீதான் நக்கீரன் பரம்பரையாயிற்றே!’’ என்று கேலி பேசுகிறார். தமிழகம் எத்துணை தாழ் நிலையில் இருக்கிறது என்பதற்கு நான் ஓர் நடமாடும் சான்று என்று கூறிக்கொள்கிறார்!! நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்ற நெஞ்சுறுதி கொண்டோராகத் தமிழர் இருந்த நாட்களில், சிங்களம், புட்பகம், யவனம், சீனம், சோனகம், வங்கம், மகதம், கலிங்கம், காந்தாரம், காமரூபம் - எனும் எண்ணற்ற நாடுகள் பலவும், தமிழகத்தின் திருவைக் கண்டு வியந்தன, திறனைக் கண்டு அஞ்சின, செருமுனைக்கு வரப் பயந்தன, தோழமைக்குக் காத்துக் கிடந்தன! இமயம் தொட்டு நின்ற அரசுகள் அனைத்தும் தமிழர் முரசு கொட்டுகின்றனர் என்று அறிந்தால், தமது அரசு கட்டில் ஆடிட அச்சம் கொண்டனர். கலிங்கத்துப் பரணி இதனைக் காட்டி நிற்கிறது. கனக - விசயர் காதை இதனை அறிவிக்கிறது. கடாரம் கொண்டான். கங்கை கொண்டான், இமய வரம்பன் - என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உள்ளன - ஒவ்வொன்றும் ஒவ்வோர் வீரக் காதையை விளக்குவன! அவ்விதம் புகழ் பரப்பி வாழ்ந்த தமிழன் இன்று, அடிபணிந்தும், அடிமையாகியும் உரிமை இழந்தும், உதவாக்கரை நிலை பெற்றும், இழிந்து கிடக்கிறானே, இந்த நிலை மாற வழி என்ன என்கிறோம் - காமராஜர், நீதான் நக்கீரன் பரம்பரையாச்சே! உனக்கென்ன குறை! - என்று நையாண்டி பேசுகிறார். நையாண்டி பேசட்டும், தம்பி, தாராளமாகப் பேசட்டும், பேசுவதற்காகவேனும், தமிழரின் வரலாற்றுத் துணுக்குகளைக் கேட்டுப் பெறட்டும் - அவை உள்ளத்திலே வந்து புகப்புக, நையாண்டி பேசும் போக்கே கூட மாறிவிடக்கூடும். "அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்? இந்த மாநிலம் முழுதாண்டிருந்தார் இணையின்றி வாழ்ந்தார் தமிழ் நாட்டு வேந்தர்’’ என்று பண்பாடத் தோன்றும், தமிழகத்தின்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளை உடைத்திடாமல், இந்தத் தடந்தோள்கள் எதற்கு என்று கேட்டிடும் ஆற்றல் எழும், தமிழ் அரசு அமையும்! அந்த நன்னாளைப் பெறுவோம் என்ற நம்பிக்கை யுடனேயே, நக்கீரர் காதை காட்டி நையாண்டி செயும் காமராஜரை நாம் சகித்துக்கொள்கிறோம். அன்பன், 14-10-1956 வீரத் தியாகி வீரத் தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் - தமிழர் சமுதாயச் சீர்கேடு - தமிழ்நாடு - பெயர் வைத்தல். தம்பி! நடுநிசி! தூக்கம் வரவில்லை; துக்கம் துளைக்கிறது! வெட்கமும் வேலாகக் குத்துகிறது; கொழுந்து விட்டெரியும் பெருநெருப்பும், அதிலே கிடத்தப்பட்டுள்ள தியாகத் திருமேனியும், தெரிகிறது; தீ என்னைத் தீண்டாது, தீயோரின் பிடியிலிருந்து நான் விடுதலை பெற்றுவிட்டேன், தீரமற்றோரே! தெளிவற்றோரே! இனி தீ உங்களைத்தான் தாக்கும்! வெந்து வேதனைப்படுங்கள்! உணர்ச்சியற்ற உருவாரங்களே! உண்ண, உடுக்க, இருக்க, வழி கிடைத்தால் போதும் என்று எண்ணி, அவைதமைப் பெற "எடுபிடியாகவும், இழி நிலையைச் சகித்துக்கொள்ளவும் சம்மதித்துக் கிடக்கும் சத்தற்ற ஜென்மங்களாகிவிட்டீர், சடங்களே! கருகிப் பொடியாகட்டும், எனக்கென்ன! இதோ நான் கண்மூடி விட்டேன்! இனி உங்களைத் திரும்பிப்பாரேன்! செல்கிறேன், சிந்திக்கவும் செயலாற்றவும் திறனற்றுப்போன உம்மைக் காணக் கூசினேன், இந்த நிலை பெற்றீரே என்றெண்ணிக் குமுறினேன், இனி இவர்தம் கூட்டுறவு வேண்டாம் என்று துணிந்தேன், சாவை வரவேற்றேன்! நான் மறைகிறேன், நீங்கள் உலாவுங்கள்!! நான் இறந்து படுகிறேன், நீங்கள் இளித்துக் கிடவுங்கள்! எனக்கு மானம் பெரிது, உயிர் அல்ல; உயிரை இழக்கிறேன்! உலுத்தருக்கு உயிர்தான் வெல்லம், அதைச் சுமந்துகொண்டு திரியுங்கள்! சவத்துக்கும் உயிர் உள்ள சடத்துக்கும் என்ன மாறுபாடு? உணர்ச்சிதானே, இரண்டினையும் வேறுபடுத்திக் காட்டுவது! உணர்ச்சியற்றுக் கிடக்கும் உம்மை, மாந்தர் என்றும் மறத் தமிழர் என்றும் கூற என் நா, கூசுகிறது! இதோ இனி நான் பேசப்போவதில்லை! போகிறேன், பொல்லாங்கும் பழியும், புல்லர் வாழ்வும் பூசலும் நிரம்பிய இந்த இடத்தைவிட்டே அகன்று செல்கிறேன்! சாக்கடையில் நீங்கள் உழலுங்கள், சாக்காடு எனக்குச் சாந்தி அளிக்கட்டும்! பதைக்கிறீர்கள், துடிக்கிறீர்கள்! ஆஹா! என்கிறீர்கள், ஆகட்டும் என்று ஆர்ப்பரிக்கிறீர்கள்; யார் தெரியுமா என்று உருட்டுகிறீர்கள், என்ன செய்வேன் தெரியுமா என்று மிரட்டுகிறீர்கள்; எல்லாம், எதற்கு? ஒரு சிறு பொருள் உன் கரத்தை விட்டுப் போவதானால்! ஒரு சிறு சொல் உம்மீது எவனேனும் வீசுகிறானென்றால்! சுயநலத்துக்குக் குந்தகம் விளைகிறது என்றால், சூரத்தனமாகக் கிளம்புகிறீர்கள். போராடுகிறீர்கள்! தாயகம் அழிக்கப்படுகிறது, தாயகம் இழிநிலை பெறுகிறது. ஏன் என்று கேட்கும் துணிவு இல்லை உங்கட்கு! தாயகம் தருக்கரின்காலடியில் சிக்கிச் சீரழிகிறது; தடுத்திடும் ஆற்றல் இல்லை, உங்களுக்கு! மொழி அழிக்கப்படுகிறது, உமது விழியிலே நீர் சேரக்கூடக் காணோம். தன்மானம் அழிக்கப்படுகிறது, தடுத்திடக் கிளம்புகிறீர்களா? இல்லை! தாளேந்திக்கிடக்கிறீர்கள்! நத்திப் பிழைத்திடவும், நமக்கென்ன என்று ஒதுங்கிக் கிடக்கவும், நம்மால் ஆகுமா என்று பெருமூச்செறியவும் கற்றீரேயன்றிக் கடமை உணர்ச்சியை எங்கே கொண்டீர்! வீரர் வழி வந்தோரே! வெற்றி முரசு கொட்டினோரே! தமிழர்காள்! தரணி புகழப் பரணி பாடிய பரம்பரையினரே! கடலில் கலம் செலுத்தி, கரிப்படைகொண்டு கருங்கற்கோட்டைகளைத் தூளாக்கி, வேற்படைகொண்டு மாற்றாரை விரட்டி, வாகை சூடிய வெற்றி வீரர் வழிவந்தோரே! என்றெல்லாம், ஏடு உம்மைக்குறித்து குறிப்பிடுகிறது; நாடு நலியக் கண்டும், வலியோர் சிலர் எளியோர்தமை வாட்டிடக்கண்டும் வாய்திறந்து கேட்கவும் வக்கற்றுக் கிடக்கிறீர்! உம்மோடு, நான் இருக்கச் சம்மதியேன்! உம்மில் ஒருவனாக இருக்க என் மனம் இடம்தரவில்லை! நான் பிணமாகிறேன், பேசும் பிணங்களே! குடும்பம் அழைக்கிறது, சென்று குதூகலமாகக் காலங் கடத்துங்கள், குட்டவருவான் கொடியோன்! குனிந்து கிடவுங்கள். குறை கூறாதீர்கள், குண்டாந்தடியுடன் வருவான், கோலோச்சுவோரின் ஏவலன், இழிவாகப் பேசுவான், இனிமை, இனிமை! என்று கூறுங்கள் - இல்லையெனில் இருட்டறையில் தள்ளிப்பூட்டிவிடுவான்! வாழவேண்டுமே என்பீர், வாழுங்கள், வாழுங்கள், மானம் இழந்து, உரிமை இழந்து, உணர்ச்சி இழந்து; உயிரைச் சுமந்துகொண்டு உலவுங்கள்! என்னால் முடியாது! இதோ, நான் மரணத்தைத் தழுவிக்கொண்டேன்! மலர் தூவிய மஞ்சம் உமக்குக் கிடைக்கக்கூடும், மானத்தை இழந்த பலருக்குக் கிடைக்கும். எனக்கு இந்த நெருப்புப் படுக்கைபோதும்! பிடிசாம்பலாகிறேன்! பேதையாய், தலையாட்டிப் பதுமையாய், அடிமையாய் கிடந்து உழல்வதைக் காட்டிலும் பெருநெருப்புக்கு என்னை ஒப்படைத்துவிடுவது சாலச்சிறந்தது! எனவே, நான் செல்கிறேன், நீங்கள், பூச்சி புழுக்களும், சீச்சீ என்று இகழ்ந்திடும் விதத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு கிடவுங்கள்! - என்று நம்மை நோக்கி பெருநெருப்பில் கிடத்தப்பட்டுள்ள பெரியவர் பேசுவது போன்றதோர் பிரமை ஏற்படுகிறது! அவர் இதுபோலெல்லாம் நம்மை ஏசி இருக்கக்கூடாதா - ஏசியிருந்தாலாவது, ஒரு வகையில், நன்றாக இருந்திருக்கும் அந்தப் பெருங்குணவான், ஒருதுளி ஏசினாரில்லை, நமது இழிநிலை கண்டு இரக்கப்பட்டு இறந்து பட்டேனும், நமக்கு உய்யும் வழி கிடைத்திடச் செய்வோம் என்று எண்ணினாரேயன்றி, ஏடா! மூடர்காள்! என்று சினந்துகொண்டாரில்லை! இறந்துபட்டார் - நமக்காக இறந்து பட்டார் - நாட்டுக்காக உயிர் துறந்தார் - நாமெல்லாம் நடைப்பிணமாகிவிட்டோம் என்பதறிந்து வேதனையுற்றார் - உயிர் துறந்தார்! உயிர் போகிறது - போய்க்கொண்டே இருக்கிறது என்று அறிந்தார் - விநாடிக்கு விநாடி. மரணவாயிலை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார் - சாவை வரவேற்றார்! நாம் வாழ்கிறோம்! வெட்கமின்றி, வாழ்ந்துகொண்டு கிடக்கிறோம் - வெந்து சாம்பலாகிவிட்டார் அந்த வீரத்தியாகி! எண்ணும்போது. இதயத்தை யாரோ சம்மட்டி கொண்டு தாக்குவது போலாகிவிடுகிறது. இந்த நடுநிசியில், என் நெஞ்சம் நடுக்குறுகிறது, எண்ணம் ஈட்டியாகிவிடுகிறது - எரிதழல், தெரிகிறது - தியாகியின் உடல் அதிலே கிடப்பது தெரிகிறது; ஓர் கேலிச் சிரிப்பொலிகூடக் கேட்கிறது - ஓஹோ! நீ விடுதலைப்படை வரிசையில் உள்ளவனல்லவா? உரிமை முழக்கமிட்டுக்கொண்டு ஊரூரும் அலைபவனல்லவா? தமிழர், தமிழர் என்று மார்தட்டித்தட்டிப் பேசுபவனல்லவா? அகம் என்பாய், புறம் என்பாய், ஆற்றல் என்று கூறுவாய், என் ஆன்றோர், சான்றோர் என்று புகழ்பாடுவாய், அல்லவா? என்று கேட்டுவிட்டுக் கேலிச் சிரிப்பொலி கிளப்பி என்னை வாட்டி வதைக்கிறது, நான் மனக்கண்ணால் காணும் அந்தக் காட்சி இந்த நடுநிசியில், என்போல் இதுபற்றி எண்ணி எண்ணி நெஞ்சு புண்ணாகிக்கிடப்போர் எண்ணற்றவர்கள் என்பதும் தெரிகிறது. ஆனால் எனக்குத் துக்கம் மட்டுமல்ல; வெட்கம் என்றேன்! உண்மையிலேயே நான் வெட்கப்படுகிறேன்! - ஏனெனில் இத்தகைய வீரத்தியாக உள்ளம் கொள்ளமுடியுமா உன்னால் என்று எவரேனும் என்னைக் கேட்டுவிட்டால், நானென்ன பதில் அளிக்க முடியும்! தலையைக் கவிழ்த்துக் கொள்ளத்தான் வேண்டும் - பலகோடி மாந்தரில் ஒருவருக்கு மட்டுமே கிட்டக்கூடியது அந்த வீரத் தியாக உள்ளம், விருதுநகர் சங்கரலிங்கனார், அதனைப் பெற்றிருந்தார். பேதை நான், அதனை உணர்ந்துகொள்ளும் ஆற்றலும் பெற்றேனில்லை! அவர் இறந்துபடுவார் என்று எனக்கு எண்ணவே இயலாதுபோயிற்று. அவரை நான் கண்டேன்; எனினும், அவர் இறந்துபட நேரிடும் என்று எண்ணவில்லை - காரணம். நானோர் ஏமாளி. நாடு அவரை அந்தநிலை செல்லவிடாது, நாடாள்வோர் அவரைக் கைவிடமாட்டார்கள், அந்த அளவு கேவலத் தன்மை நாட்டைப் பிடித்துக்கொண்டில்லை, அவர் கடைசிக் கட்டம் செல்லும் வரையில் கூடக் கன்னெஞ்சம், கொண்டிருப்பர், பிறகோ, பழிபாவத்துக்கு அஞ்சியேனும், பிற்காலத்துக்குப் பயந்தேனும் அறிவுலகம் ஏசுமே என்று எண்ணியேனும், அவர் சாவதைத் தவிர்த்து விடுவதற்கான தக்க முறையினை மேற்கொள்வர், என்று என் பேதை நெஞ்சு எண்ணிற்று! பெரு நெருப்புக் கிளம்பிற்று, அந்தோ! அந்த வீரத்தியாகியை அணைத்துக் கொண்டது - சங்கரலிங்கனார் நம்மைவிட்டுப் பிரிந்தார். எனக்கு அவரை, இதற்குமுன் தெரியாது - நாடு அவர்புகழ் பாடிட, அவர், “நடுநாயகமாக’ இருந்திடவில்லை - எனினும் இன்று நடுநாயகங்களாகிவிட்ட பலருக்கு அவர் போன்றாரின் ஆற்றல்மிக்க தேசத்தொண்டு பயன்பட்டு வந்திருக்கிறது. நீண்டகாலமாகக் காங்கிரசில் பணியாற்றியவர், காமராஜர் கதர் அணியக் கிளம்புமுன்பே, கைராட்டையில் நூல் நூற்றவர்; காந்தியார் மகாத்மா ஆகிக்கொண்டிருக்கும்போது, உடனிருந்து அந்த உயர்வு உருவாவது கண்டு உளமகிழ்ந்தவர்; வந்தேமாதரம், தேர்தல் தந்திரமான பிறகு அல்ல, அஃது தேசிய மாமந்திரமாக இருந்த காலத்திலேயே, அந்தக் குறளைக் கற்றுக்களித்தவர்,”சிறைசென்று நலிந்தவர்’ வணிகத்துறையிலும் அவருக்கு வெற்றிதான்; சங்கரலிங்கனார், பழம் பெரும் தேசபக்தர் வரிசையைச் சேர்ந்தவர். இன்றைய நிதி மந்திரிகளுக்கும், சோப்புச் சீமான்களுக்கும், அவரைத் தெரிந்திருக்க முடியாது. மாணிக்கவேலர்கள், அவர் பற்றிக் கேள்விப்பட்டிருக்க முடியாது. நிச்சயமாக, சேதுபதிகளின் பார்வையில் அவர் பட்டிருந்திருக்க முடியாது. இவர்களெல்லாம், நாடு குறித்துக் கவலைகொள்ளும் பக்குவம் பெறுவதற்குப் பன்னெடு நாட்களுக்கு முன்பே சங்கரலிங்கனார் “சத்யாக்கிரகி’ ஆகிவிட்டார்! ஆனால், அவர் சபை நடுவே இடம் பிடித்திடும்”சத்காரியத்தில்’ ஈடுபடவில்லை! கமிட்டிகளைக் கைவசப்படுத்தும் வித்தையில் ஈடுபட்டாரில்லை! தலைவர்’ ஆக மறுத்துவிட்டார்; தன்னலமறுத்து தாய்நாட்டுக் காகப்பணியாற்றி, விடுதலை விழாக்கண்டு வெற்றிக் களிப்பு பெற்று, பெறவேண்டிய பேறு இதனினும் வேறு உண்டோ என்றெண்ணிப் பெருமிதம் கொண்டு இருந்த ஒரு பெரியவர். தாயின் மணிக்கொடி பாரீர் அதைத் தாழ்ந்து புகழ்ந்து பணிந்திட வாரீர்! என்ற தேசிய கீதம் கேட்டு மகிழ்ந்தவர். ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை ஜாதியில் இழிவு கொண்ட மனிதர் என்போர் இந்தியாவில் இல்லையே! என்ற சிந்துகேட்டு, செந்தேன் செந்தேன்! இதுநாள் வரை நான் கேட்டறியாத கீதம் என்று கூறிக்களித்தவர்! தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம். என்ற வீரக்கவிதை கேட்டு, நெஞ்சம் விம்மிடும் நிலையில் ஆம்! ஆம்! அழிந்துபட்டது ஆங்கில அரசு! செவி குளிரக்கேட்கிறது சுதந்திர முரசு! இனி, பசியும் பட்டினியும் கொட்டுமோ! பஞ்சையும் பராரியும் இருப்பரோ! - என்று எண்ணிக் களிநடம் புரிந்தவர். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு கொழுத்திருப் போரை நிந்தனை செய்வோம். என்ற கீதம், ஊரூரும் பாடிடத் தேச பக்தர்கள் கிளம்பிடக் கண்டு, இனி என் நாட்டுக்குப் புதுவாழ்வு நிச்சயமாகிவிட்டது பொழுது புலர்ந்தது, புதுவாழ்வு மலர்ந்தது, என்று பூரித்துக் கூறியவர். காங்கிரஸ் அரசாள்கிறது, என்ற நிலைகண்டு, இனி ஜெயமுண்டு! பயமில்லை! மனமே! என்று சிந்துபாடிச்சிந்தை மகிழ்ந்திருந்தார். காமராஜர், ஆட்சிப்பீடம் ஏறி அமரக் கண்டதும், பட்டம் பெற்றறியார், பல்கலைக் கழகம் பார்த்தறியார், பாரதமாதாவின் சேவையன்றிப் பிறிதோர் பயிற்சியும் பெற்றார் இல்லை, எனினும், இவர் நாடாள வாய்ப்புக் கிடைத்துவிட்டது, பாமர மக்கள் பாராளும் காலம் இது - என்ற கவிதா வாக்கியம், உண்மையாகி விட்டது; இஃதன்றோ காணக்கிடைக்காத காட்சி என்றெல்லாம் எண்ணி எண்ணி இறும்பூதெய்தி இருப்பார். ஏன் எனில், காமராஜரும், விருதுநகர் - தொண்டர் குழாத்தில் இருந்த தூயமணி! இவ்வளவு இன்ப நினைவுகளும், பொடிப் பொடியாகும் படியான பேரிடி அவர் நெஞ்சிலே விழுமென்று யார் கண்டார்கள் - இந்தப் படுபாவிகள் இவ்வளவு மோசமாகிப் போவார்கள் என்று நாங்கள் எண்ணவில்லையே! எவ்வளவோ பாடுபட்டு, இவர்கள் ஆட்சிக்கு வர உழைத்தோம்… எல்லாம் வீணாயிற்றே… என்று என்னிடம் அவர் கூறியபோது, தம்பி, உள்ளபடி, அவருடைய கண்களில் நீர் துளிர்த்துக் கொண்டிருக்கக் கண்டேன். அப்போதுகூட, நான் அவர் இறந்துபடுவார் என்று எண்ணிடவில்லை - காரணம், அவர் அவ்வளவு தெளிவாக, உணர்ச்சி வயப்பட்டவராக என்னிடம் பேசிக்கொண்டிருந்தார் - அறுபது நாட்களுக்கு மேலாகிவிட்டது உண்ணாவிரதம் துவக்கி - எனினும் என்னிடம் அரைமணி அளவுக்கு அவர் பேசுகிறார் என்றால், நான் என்ன எண்ணிக்கொள்வது. இப்போதல்லவா எனக்குப் புரிகிறது, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளையிலும் அந்த உத்தமருடைய உள்ளத்தில் அத்துணை உரம் இருந்திருக்கிறது என்ற உண்மை. இன்றுபோல் அன்றும் நடுநிசி - நானும், நண்பர்கள் நடராசன், மதுரை முத்து ஆகியோரும், அவரைக் காணச் சென்றபோது, விருதுநகரில், காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கம் என்பார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்தே, எனக்கு அவரைக் காணச் செல்லவேண்டும் என்று அவா. அன்றுதான் முடிந்தது. அந்தத்திடலில், நான் பலமுறை பேசியிருக்கிறேன் - கடைவீதியை ஒட்டி உள்ள மாரியம்மன் கோயில் திடல். வீரம், தியாகம், வாழ்க்கையை அர்ப்பணிப்பது, எதற்கும் அஞ்சாமல் கடமையைச் செய்வது, இன்னல் எதுநேரிடினும் கலங்காம லிருப்பது என்பனபற்றி, பலர் ஆற்றலுடன் முழக்கமிடுவதற்காக அமைந்துள்ள திடல், நானும் அங்கு நின்று பேசியிருக் கிறேன் அந்தத் திடலில் வீரமும் தியாகமும் ஓருருவாகி, சங்கரலிங்கனாராகிக் காட்சி தரும் என்று, யார் எண்ணியிருந்திருக்க முடியும். அந்தத் திடலில், ஒரு சிறு ஓலைக்கொத்துக் குடில் அமைத்துக்கொண்டு, ஒரு கயிற்றுக் கட்டிலின்மீது அவர் படுத்துக்கொண்டிருக்கக் கண்டேன். அந்தக் குடிலின் மீது, காங்கிரஸ் கொடி பறந்துகொண்டிருந்தது. காங்கிரசால் உயர்ந்தவர்கள் ராஜபவனத்தில் சயனித்துக் கொண்டிருக்கக் காண்கிறோம்; கோட்டைகளில் கொலுவிருக்கக் காண்கிறோம்; உல்லாச தோட்டக்கச்சேரிகளிலும், நளினிகளின் நாட்டியக் கச்சேரிகளிலும், உலவிக் களித்திடப் பார்க்கிறோம்; மாளிகைகளிலே பலர் குடி ஏறிடக் காண்கிறோம், காங்கிரசின் துணையினால்; இதோ குடிசையில் படுத்துக்கிடக்கிறார், உணவு உட்கொள்ள மறுத்துத் திங்கள் இரண்டு ஆகிறது. உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் நிலையில் கிடக்கிறார், காங்கிரசை வலிவும் பொலிவும் கொள்ளச்செய்யும் தொண்டாற்றிய வீரர் - முதியவர். காங்கிரஸ் கொடி, அந்தக் குடிலின்மீது பறந்துகொண் டிருக்கக் கண்டதும், தம்பி, எனக்குச் சொல்லொணாத வேதனைதான்! உள்ளே உயிர் போகட்டும், கவலையில்லை, உணவு உட்கொள்ளப்போவதில்லை - என்று கூறிக்கொண்டு ஒரு முதியவர் சாகும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறார் - அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டதே, காங்கிரஸ் ஆட்சி, அலங்கோலங்களைப் போக்கிக்கொண்டு, அறவழி நிற்க வேண்டும் என்பதற்காக; அந்தக் குடிலின்மீது, அவர் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கும் கொடுமையை விளக்கவா காங்கிரஸ் கொடி பறந்துகொண்டிருக்கவேண்டும்! நடுநிசி - எனவே அங்கு நான்கைந்து பேர் மட்டுமே இருந்தனர் - ஒரு திரை போடப்பட்டிருந்தது, குடில் வாயிலில் அதை நீக்கியபடி உள்ளே சென்று பார்த்தேன் - கயிற்றுக் கட்டிலின்மீது சுருண்டுபடுத்திருந்த உருவம் தெரிந்தது - மங்கலான விளக்கொளியில், எனக்கு அவருடைய முகம் தெளிவாகத் தெரியவில்லை! சில விநாடி உற்றுப்பார்த்த பிறகே தெரியமுடிந்தது. அமைதி குடிகொண்டிருந்த இடம்; நாங்கள், சத்தம் ஏதும் எழலாகாது, அவருக்குச் சங்கடம் ஏற்படும் என்று எண்ணிக்கொண்டபடி உடன் வந்த தோழரை, எழுப்பாதீர் ஐயா! என்று ஜாடை காட்டிச் சொன்னோம். அவரோ, தியாகத் திருவைத் தொட்டுத் தட்டினார். சங்கரலிங்கனார் கண் திறந்தார் - தூக்கமல்ல, சோர்வினால் செயலற்றுப்போன நிலை. “ஐயா! அண்ணாத்துரை…’’ என்றார் அந்த நண்பர், ஒருவிநாடி அவர் என்னைப் பார்த்தார் - அந்தப் பார்வையின் முழுப்பொருளை”பாவி’ நான், அன்று சரியாக உணர்ந்து கொள்ளமுடியவில்லை! செத்துக்கொண்டு இருக்கிறேனடா, செயலறியாதவனே! என்பதல்லவா அந்தப் பார்வையின், பொருள். மிகப் பெருங்குணம் வாய்ந்தவர் அந்தப் பெரியவர். "அண்ணாத்துரை…’’ என்று அந்த நண்பர் சொன்னதும், என் இரு கரங்களையும் பற்றிக்கொண்டார் - அவருடைய முகத்தருகே என் கரங்கள் - கண்ணீர் கரத்தில் தட்டுப்பட்டது, என் கண்கள் இருண்டுவிடுவது போன்றதோர் நிலை ஏற்பட்டது. "தலைமாட்டிலே’ நான் உட்கார அவர், இடம் செய்துதர சிறிது, நகர்ந்தார் - நான் அமர்ந்தேன் - அவருடைய போர்வை கலைந்தது. எலும்புக்கூடாகத் தெரிந்தார். பழுத்த பழம்! பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு காலந்தள்ளிக் களித்திடவேண்டிய வயது - உண்ணாவிரதம் மேற்கொண்டு அறுபது நாட்களுக்கு மேலாகிவிட்டன. பச்சைத் தமிழர்தான் பரிபாலனம் செய்கிறார், பாதி உயிர்போய்விட்டது என்று கூறாமற் கூறிக்கொண்டு குமுறிக்கிடக்கிறார், காங்கிரஸ் ஆட்சியைக் காணவேண்டும் என்பதற்காக, கடமை உணர்ச்சியுடன் தொண்டாற்றித் தொண்டு கிழமான அந்தத் தூயவர். அவர், உண்ணாவிரதம் மேற்கொள்வதற்கான காரணங் களை விளக்க வெளியிட்ட அறிக்கையையும். அவர் வெளியிட்ட கோரிக்கைகளையும் நான் பார்த்திருக்கிறேன் அதிலே ஒன்றுகூட சொந்த நலன்பற்றியது என்று சுட்டிக்காட்ட, சூட்சித்திறன் மிக்கோரால்கூட, முடியாது. நாடே கேட்கும் கோரிக்கைகள். நல்லோர் எவரும் மறுக்கமுடியாத கோரிக்கைகள் நாடாள்வோரின் கவனத்துக்கு நாள்தவறாமல் பல கட்சிகளும் வைத்த வண்ணம் இருக்கும் கோரிக்கைகள் இவைகளை நிறைவேற்றி வைப்பதாலே, காங்கிரஸ் ஆட்சி அழியாது இந்திய ஐக்கியம் பாழ்படாது. எந்த வகுப்பாருக்கும் கேடுவராது, பெரும்பணச் செலவு ஏற்படாது, சட்டச் சிக்கல் எழாது. மாற்றுக் கட்சிகளுக்கு மணிமகுடம் கிடைத்து விடாது. பச்சைத் தமிழரின் பரிபாலனத்துக்குக் கூடக் குந்தகம் ஏதும் நேரிட்டுவிடாது. அவர் கோரிக்கை மொத்தம் 12 - அதிலே 10, மத்திய சர்க்காரைப் பொறுத்தது, இரண்டே இரண்டுதான் மாகாண சர்க்கார் சம்பந்தப்பட்டது என்று திருப்பூரில் முதலமைச்சர் என்ற முறையில் காமராஜர், விளக்கம் அளித்திருக்கிறார். முதலமைச்சர் பேசினார், காங்கிரஸ்காரர் பேசவில்லை! மந்திரிப் பதவி பேசிற்று, மனிதாபிமானம் பேசவில்லை. விளக்கம்தரப்பட்டது, இதயம் திறக்கப்படவில்லை. கேட்டது 12 அதில் 10 மத்திய சர்க்கார் சம்பந்தப்பட்டது என்று சட்ட நுணுக்கம் காட்டும் முதலமைச்சர் செய்தது என்ன? சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை டில்லிக்கு அறிவித்தாரா? அறிவித்து ஆவன செய்வதாக, அந்தப் பெரியவருக்குத் தெரிவித்தாரா? தெரிவித்துவிட்டு, என்னால் ஆனதைச் செய்வேன் என்று வாக்களித்தாரா? இல்லை! இல்லை! இப்போது விளக்கம் அளிக்கிறார்! நாம் எதைச் சொன்னாலும் கேட்டுத் தீரவேண்டிய பக்குவத்தில் நாடு இருக்கிறது, நமக்கென்ன என்று பேசினாரேயன்றி, இதயத்திலிருந்தா எண்ணம் வெளிவந்தது. மத்திய சர்க்கார் சம்பந்தப்பட்ட பத்து இருக்கட்டும் - இவர் சம்பந்தப்பட்ட இரண்டு இருக்கிறதே, அதற்கென்ன பதில் அளித்தார்! இப்போது விளக்கம் அளிக்கிறார். இவருடைய விளக்கம் அந்த வீரத்திருவிளக்கு அணைந்தபிறகு வெளிவந் திருக்கிறது. எத்துணை அன்பு ததும்பும் நெஞ்சம், தம்பி, நமது முதலமைச்சருக்கு. எனக்குப் பழக்கமில்லை, உனக்குத் தெரிந்திருக்காது, சங்கரலிங்கனாரை, காமராஜருக்குத் தெரியாதா? இப்போது காமராஜர், காரில் போவார், நடந்து செல்லும் நண்பர்களைக் கண்டு உறவாட இயலாது; முதலமைச்சர் என்ற முறையில் அது முடியாததாகிவிட் டிருக்கக்கூடும்; முன்பெல்லாம், கடைவீதியில் கண்டிருப்பாரே அந்தக் கடமையாற்றிய வீரரை, திடலில் பார்த்திருக்கக் கூடுமே அந்தத் தியாகியை! விருதுநகர்தானே அவர் இருப்பிடம்! ஏன், சங்கரலிங்கனாரின் மாண்பை மறந்திடத் துணிந்தார்? யார் கேட்கமுடியும்? ஆச்சாரியாராக இருந்தால் கேட்கலாம் - கேட்கலாமா - கடாவலாம், சாடலாம், கிளர்ச்சி செய்யலாம், கவிழ்த்தேவிடக் கிளம்பலாம் - காமராஜர் பச்சைத் தமிழராயிற்றே! சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம் செய்து கொண்டாரே, என்பாய். ஆமாம் - என்ன செய்வது - பரிதாபமாகத்தான் இருக்கிறது - இருந்தாலும்…’ தம்பி! இப்படிப் பேசிட முடிகிறதே, இன்று. இப்படிப்பட்ட தமிழகத்தில், எப்படி இருப்பார், சங்கரலிங்கனார். மரணம்! மேல் என்றார். "ஐயா! இன்றைய ஆட்சி கருணைக்குக் கட்டுப்படுவதாகக் காணோமே. ஆட்சியை நடத்தும் கட்சி, இது பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே. எத்துணை பயங்கரமான பலி கொடுத்தாலும். திருந்தும் என்று தோன்றவில்லையே. இந்த ஆட்சியிலே, உண்ணாவிரதம் இத்துணை உறுதியுடன் இருக்கிறீரே… பலன் இராதே…’’ என்று நான் கூறினேன் - தட்டுத் தடுமாறிக்கொண்டுதான். அவரோ அனுவபமிக்கவர், நான் பள்ளிச்சிறுவனாக இருந்த நாட்களிலேயே பரங்கி ஆட்சியை எதிர்த்திடும் பணியில் ஈடுபட்டவர் - அவருக்கு நான், யோசனை கூறுவது என்றால், சரியான முறையாகுமா என்ற அச்சம் என்னைப் பிய்த்தது. இவ்வளவு இன்னலை, இந்தத் தள்ளாத வயதிலே அனுபவிக்கத்தான் வேண்டுமா என்று நான் பதறியதால் கேட்டேன், தம்பி! அவர் சொன்ன பதில், என்னைத் திடுக்கிடவைத்தது அப்போது; இப்போது கண்களைக் கலங்கச் செய்கிறது; இல்லை… நான் செத்துவிடுகிறேன்… பிறகாவது பார்ப்போம்… சண்டாளர்கள்… எவ்வளவோ கண்டித்துக் காட்டுகிறீர்கள்… திருந்துகிறார்களா… என்று அவர் சொன்னார், நெஞ்சு உலர்ந்ததை அறிந்து, பக்கத்தில் ஒரு நாற்காலிப் பலகைமீது இருந்த தண்ணீர்க் குடத்தைப் பார்த்தார். மண்பாண்டம் தம்பி குளிர்ந்த தண்ணீர்! பக்கத்தில் ஒரு முழுங்கு தண்ணீர் மட்டுமே கொள்ளத்தக்க சிறு மண் குடுவை அதிலே தண்ணீர் நிரப்பி, அவர் வாயருகேகொண்டு சென்றேன் - நாகரீக உணர்ச்சியை அந்த நேரத்திலும் காட்டியதைக் கேள் தம்பி - அந்தக் குடுவையை அவர்தம் கரத்தால் வாங்கி, இரண்டு கரண்டி அளவு தண்ணீர் பருகினார். பிறகு, அவர், மெள்ளப் பேசலானர் - எனக்கு, அவருக்குக் களைப்பு மேலிட்டுவிடுமே என்று பயமாக இருந்தது; அவரோ, தமக்கு "முடிவு’ விரைவிலே இருக்கிறது என்ற எண்ணத்தினாலோ என்னவோ, என்னிடம் பேசவேண்டியதைப் பேசிவிட வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டவர் போலப் பேசினார். எல்லையை வாங்க முடியாதா? இதில் என்ன கஷ்டம்? இதய சுத்தியோடு இரண்டு மணி நேரம் ஆந்திர சர்க்காருடன் பேசினால், காரியம் நடக்காதா…? என்று கேட்டார்… பதில் நானா கூறவேண்டும்… நாடு அல்லவா அந்த நல்லவரின் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும். கவர்னருக்கு ஏன் இலட்ச இலட்சமாகச் சம்பளம்? ஒரு வடநாட்டான்… நீங்கள் கண்டித்தீர்கள்… நியாயம்… ஏன், வீண் செலவு… என்ன பிரமாதமான வேலையாம், கவர்னருக்கு… காலணா செலவில்லாமல், கச்சிதமாக எங்கள் வி.வி. சண்முக நாடார் பார்ப்பாரே, இந்தக் கவர்னர் வேலையை… என்று, அவர் கூறியபோது, நான் உருகிப்போனேன். சங்கரலிங்கனார், காங்கிரஸ்காரர் - என்றாலும், காரிய மாற்றும் ஆற்றல் கொண்டவர் வி.வி. சண்முகம், எனவே அவர் காங்கிரஸ்காரராக இல்லாதுபோயினும் பரவாயில்லை என்று எண்ணிய அரசியல் கண்ணியம் என்னை உருகச் செய்தது. எனக்கு அவர், பேசப்பேச, நாம் அவருக்கு மெத்தச் சங்கடம் தருகிறோமே, என்ற பயமே மேலிடத் தொடங்கிற்று. அவரோ பேசுவதையும் நிறுத்திக்கொள்ளவில்லை, என் கரங்களையும் விடவில்லை. இந்த அளவுக்கு அவர் பேசினதாலேதான், நான், அவர் உயிருக்கு ஆபத்து இராது, என்றுகூட எண்ணிக் கொள்ள நேரிட்டது. காமராஜர் வரப்போகிறார், இரண்டோர் நாட்களில் என்று நான் கேள்விப்பட்டதால், ஒரு தைரியம் கொண் டிருந்தேன் - காமராஜர், கனிவு காட்டுவார், கோரிக்கைகளிலே சிலவற்றையாவது நிறைவேற்றிவைத்து, அந்தக் குணவானுடைய உயிரைக் காப்பாற்றிவிடுவார் என்று எண்ணிக்கொண்டேன். நான் கண்டேனா, நாடாள வந்தவர்கள், மனதை இரும்பாக்கிக் கொள்ளவேண்டும் என்பதை, காமராஜா, அதுபோலவே மலைகுலைந்தாலும் மனம் குலையாத தமிழனல்லவா! அதனால், பிணமானாலும் பரவாயில்லை, கோரிக்கைகளுக்கு இணங்குவதாகக் கூறமாட்டேன், கூறினால் “கௌரவம்’ என்ன ஆவது, என்று கருதுபவர் போலத் தம் போக்கால் காட்டிக்கொண்டார்; சங்கரலிங்கனார், எழுபது நாட்களுக்கு மேல் உண்ணாவிரதமிருந்து, மூர்ச்சையாகிவிட்ட பிறகு, மதுரை மருத்துவ விடுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மறைந்து போனார், அவருடைய உயிர்தான் போயிற்றே தவிர, முதலமைச்சர் பதவிக்கு உள்ள”கௌரவம்’ இருக்கிறதே, அது போகவில்லை! போகவிடவில்லை காமராஜர்! சங்கரலிங்கனார்கள் சாகலாம், பிழைக்கலாம், காமராஜர், முதலமைச்சர் பதவிக்கு உள்ள கௌரவத்தைக் குலைத்துக் கொள்வாரா! உறுதியாக இருந்துவிட்டார். உண்மையிலேயே மோசமாகிவிட்டது. உயிர் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. பேச்சு நின்றுவிட்டது; ஊமை மூச்சுதான் இருக்கிறது. எந்த விநாடியும் உயிர் போய்விடக்கூடும். மேல் மூச்சு வாங்குகிறது; கண் மூடிவிட்டது; கால் வீக்கம் கண்டுவிட்டது. தம்பி! ஒற்றர் படையினரும்’ உற்ற நண்பர்களும், பதவிக்குப் பிறகு பெற்ற தோழர்களும், நிலைமையைக் காமராஜருக்கு, இதுபோலெல்லாம் எடுத்துச்சொல்லாமலா இருந்திருப்பார்கள். என்ன சொன்னாரோ முதலமைச்சர்! அப்படியா… ஆமாம்… அட, பாவமே… நிஜமாவா… போய்விடும்னே சொல்றாங்களா… பெரிய தொல்லையாப் போச்சே… என்ற விதமாகத்தான் அவர் கூறியிருப்பார்; வேறு விதமான பேச்சு இருந்திருந்தால்தான், சங்கரலிங்கனாரை நாடு இழந்திருக்காதே! துணிவுடன், நடப்பது நடக்கட்டும் என்று இருந்து விட்டிருக்கிறார். ஏழை அழுத கண்ணீருக்கே பயப்படவேண்டும். நேர்மையான ஆட்சியாளர் என்கிறார்கள். சுடலையின் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. காமராஜர் ஒரு சொட்டுக் கண்ணீர் விடவும் மறுக்கிறார் - வேறு வேலை நிரம்ப! நான் சாவதனாலாவது… என்று அந்த உத்தமர் என்னிடம் சொன்னார் - தமிழர் சமுதாயம் இன்று அடைந்துள்ள சீர்கெட்ட நிலைமை உணராது இதுபோலப் பேசுகிறாரே என்று நான் எண்ணி வருந்தினேன். பொட்டி சீராமுலு உண்ணாவிரதம் இருந்தார் - ஆந்திரம் அலறித் துடித்தது - சங்கரலிங்கனார் சாகக்கிடக்கிறார் என்று தெரிந்து, தமிழகம் என்ன கோலம் கொண்டிருந்தது - ஒவ்வொரு காங்கிரஸ்காரரையும் உரைத்தும் நிறுத்தும் பார்த்து, எந்தக் "கோஷ்டி’ என்று கண்டறியும் காரியத்தில் ஈடுபட்டிருந்தது! எப்போதும்போல, மாணவ மணிகள்தான், தமிழ் இனம் இன்னமும் தலைதூக்கவே முடியாத நிலைக்குத் தாழ்ந்து அழுந்திவிடவில்லை என்பதைக் காட்டும்விதத்தில், மௌன ஊர்வலம் நடத்தியும், அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றியும், தன் கடமையைச் செய்தது. மதுரையிலும் வேறு இரண்டோர் இடங்களிலும், தமது கழகம் அனுதாபக் கூட்டம் நடத்திற்று. மற்றப்படி பார்க்கும்போது, தமிழகம், காமராஜ் கோலத்தில்தான் இருக்கிறது.! இந்தத் திங்கள் 21-ம் நாள், தமிழகம் தன் கடமையைச் செய்யும் - நாடெங்கும் அனுதாபக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவகையில் ஆறுதல்தான். ஆனால், தம்பி, அந்த உத்தமர் தம் இன்னுயிரை ஈந்தாரே, நாம் என்ன செய்யப் போகிறோம். தமிழ்நாடு என்ற பெயர் பெறுவதற்காவது நாம் முனைந்து நிற்க வேண்டாமா? ஒப்பற்ற ஒரு உத்தமரின் தியாகம், இதற்குக்கூடவா வழி ஏற்படுத்தாது. சங்கரலிங்கனாரைத்தான் சாகடித்து விட்டீர்கள், உங்கள் அலட்சியப்போக்கினால். அவருடைய உள்ளத்தில் ததும்பிக்கொண்டிருந்த ஆசையில், ஒன்றே ஒன்றையாவது. தமிழ்நாடு என்ற பெயர் தரும் காரியத்தையாவது செய்யக்கூடாதா என்று காங்கிரஸ் ஆட்சியைக் கேட்கும் அளவுக்காவது தமிழகம் செயல் படலாகாதா? அந்தோ! அருமைத் தியாகியே! தமிழகத்திலே யன்றோ, உன் அரும்பெரும் தியாகம் கண்டனர். தாசர் புத்தி தலைக்கேறிவிட்ட தமிழகமாயிற்றே! தருக்கரிடம் சிக்கிச் சீரழிந்து கிடக்கும் தமிழக மாயிற்றே! உண்மைத் தியாகத்தின் உயர்வு அறியாத உலுத்தர்கள் உயர் இடம் பிடித்துக்கொண்டு, அன்பு, அறம், ஆகியவற்றை அழித்தொழிக்கும் நிலைக்கு வந்துற்ற தமிழகமாயிற்றே! இங்கே அறம் ஏது? வீரம் எங்ஙனம் எழும்? நீதிக்கு வழி ஏது? நிமிர்ந்து நின்று உரிமை பேசுவோர் யார்? என்றெல்லாம் அழுதபடி கேட்கத் தோன்றுகிறது. அண்ணா! அப்படி ஒரே அடியாகத் தமிழகத்தைத் தாழ்த்திவிடாதே - தமிழகம் தயக்கமடந்திருக்கிறது, உண்மை; ஆனால் உத்தமரின் உயிர்த்தியாகம், தமிழகத்தின் கண்களிலே குருதி பீறீட்டுவரச் செய்திருக்கிறது; கட்சி பேதமின்றி, இந்தக் கட்டத்தில், சங்கரலிங்கனாரின் தியாகத்தை நினைவிற்கொண்டு, தமிழ்நாடு என்ற பெயர் கிடைக்கச் செய்வதற்கான கிளர்ச்சி யினைத் துவக்க ஆற்றல் உள்ளவர்கள் அனைவரும் ஒரு அணிவகுப்பாகுவர், அனுதாபக் கூட்டமே, அதற்கான நாளாகும். அந்தச் சூள் உரைத்திடும் நாளாக அமையும் - என்று கூறிடும் எண்ணற்ற தம்பிகளைக் காண்கிறேன். அவர்களிடம் எனக்கு நிரம்ப நம்பிக்கையும் உண்டு. வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம். அவர் காட்டிய தியாகப் பாதையில் செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல; ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்! தமிழகம் விடுதலைபெறுவதற்கே இந்த வீரத்தியாகம் பயன்படப் போகிறது. பிறபிற இடங்களில், இத்தகைய சம்பவம், கலகத்துக்கு பலாத்காரத்துக்கு வழிகோலும் - காண்கிறோம். தமிழகத்தின் முறை தனித்தன்மை வாய்ந்தது; அறவழியின்படி உள்ளது. அறம் வெல்லும், நிச்சயமாக வெல்லும்; அறம் ஆர்ப்பரிக்காது, அத்துமீறிய காரியத்துக்கு மக்களைச் செலுத்தாது அதன் பயணம் துரிதமானதாக இராது - ஆனால் தூய்மையானதாக இருக்கும். அறம் நிச்சயமாக வெல்லும் - ஆனால் அது கடுமையான காணிக்கைகளைக் கேட்கும். மிகக் கடுமையான காணிக்கை தரப்பட்டாகிவிட்டது; வீரத்தியாகி உயிரை அர்ப்பணித்தார். தமிழக விடுதலைக்காக, நாமும் காணிக்கைதரத் தயாராகவேண்டும்; அந்தப் பக்குவம் நமக்கு ஏற்படவேண்டும்; வீரத்தியாகியின் நினைவு, நமக்கு உள்ளத் தூய்மையை, உறுதியை தியாக சுபாவத்தை தருவதாக அமைதல்வேண்டும். தியாகிக்குத் தலைவணங்குவோம்! தாயகத்துக்குப் பணிபுரிவோம். அன்பன், 21-10-56 நாமாவது…! மத்திய அரசை மைசூர் கண்டிப்பு - தியாகி, கித்வாய் அமைச்சர் ஆனமை - கட்டாய இந்தி தம்பி! எடுத்ததற்கெல்லாம் டில்லி அதிகாரத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடப்பது என்றால், இங்கு நமக்கு ராஜ்யத்தில் பாராளும் மன்றம் என்ற ஒன்று எதற்கு? என்று கேட்கிறார், அனுமந்தய்யா, முன்னால் முதலமைச்சர். மைசூர் ராஜ்யம், தமிழகத்தைக் காட்டிலும் தொழில் துறையில் வளம் பெற்றது; என்றாலும், அங்குகூட, வடநாட்டு வளம் ஓங்கி வளருகிறது, தென்னகம் தேய்கிறது என்ற எண்ணமும், வடநாட்டின் அதிகாரத்துக்குத் தலையாட்டும் நிலைமைக்குத்தான், இங்கு "ராஜ்யங்கள்’ ஆக்கப்பட்டுள்ளன என்ற எரிச்சலும் இருக்கத்தான் செய்கிறது. அனுமந்தய்யா, இந்த எரிச்சலை வெளியிட்டிருப்பது இது முதல் முறை அல்ல. பதவி பறிபோய்விட்ட ஆத்திரத்தில் இது போலப் பேசுகிறார் என்று அலட்சியமாகக்கூறி உண்மையை மறைத்து விடலாம் என்று சில காங்கிரஸ் காரருக்கு எண்ணம் ஏற்படும் - ஆனால், அனுமந்தைய்யா இப்போது மட்டுமல்ல, மைசூர் ராஜ்யத்தின் முதல் அமைச்சராக இருந்த நாட்களிலேயே கூட, மத்திய சர்க்காரின் ஆதிக்கத்தைக் குறித்துத் தமது கண்டனத்தை ஒளிவு மறைவு இன்றிக் கூறியிருக்கிறார் - அவருடைய வீழ்ச்சிக்கு உள்ள பல காரணங்களில் இதுவும் ஒன்று என்று கருதுவோர் உளர். மைசூர் ராஜ்யத்தின் முதலமைச்சராக அவர் இருந்த நாட்களிலேயே மத்திய சர்க்காரின் ஆதிக்கப்போக்கைக் கண்டித்ததால், அவர்மீது டில்லி அரசுக்கு ஒரு கடுப்பு வளர்ந்திருக்கக்கூடும் - மைசூர் ராஜ்யத்திலேயே அவருக்கு வேறு காரணத்தால் எதிர்ப்பு கிளம்பியதும், டிலலி அவருடைய வீழ்ச்சியை அனுமதித்து இருக்கக் கூடும், பெரிய இடத்து விவகாரம் - எனவே முழு உண்மை வெளிவருவது கடினம். ஆனால், ஒரு அரசின் முதலமைச்சராக உள்ளவர் தமது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமானால் என்னென்ன முறையைக் கையாளவேண்டும் என்ற சாணக்கிய சூத்திரம் தெரிந்துகொள்ள அல்ல, இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுவது. நாடு அறியவேண்டிய மிக முக்கியமான உண்மை, தன் ராஜ்யத்தின் நலனில் அக்கரை கொண்ட தலைவர் யாரும், மத்திய அரசு கொண்டுள்ள போக்கைக் கண்டிக்காமலிருக்க முடியவில்லை, மனக் குமுறல் ஏற்படாமலில்லை. "ஜாடை மாடை’யாக வேனும் பேசிக்காட்டவேண்டி இருக்கிறது, என்பதுதான். சிலர் இதுபோலப் பேசத் தலைப்பட்டதும், டில்லி விழித்துக்கொள்கிறது - ஆசை காட்டியோ அச்சமூட்டியோ, அவர்தம் வாயை அடைத்துவிட முடிகிறது. கவர்னர் பதவிகளையும், வெளிநாட்டுத் தூதர் பதவியையும், பல்வேறு நாடுகளுக்குப் பவனி செல்லக்கூடிய கமிஷன் பதவிகளையும், வாரி வீசும் அதிகாரம் கையில் இருக்கிறது முற்றுந் துறந்த முனிவர்களை மயக்கிட கடவுளே, தேவலோக கட்டழகிகளை ஏவுவாராமே! கடவுளின் செயலே இதுவென்றால், ஆதிபத்ய ஆசை கொண்டவர்கள், பதவிப் பாவைகளை ஏவிவிட்டு, இவர்களை இளித்தவாயர்களாக்கி விடுவது, நடை பெறக்கூடாததாகுமா!! சபலம், யாரை விடுகிறது? "மத்திய சர்க்கார் - மாகாண சர்க்கார் என்று பிரித்துப் பேசுகிறார் பிரபோ!’’ "யார், அவ்விதம் பேசுபவர்?’’ "இன்ன ராஜ்ய முதலமைச்சர்!’’ “முதலமைச்சராக இருந்து கொண்டா அங்ஙனம் பேசுகிறார்? என்ன பேதைமை, என்ன பேதைமை!’’”என்ன போக்கிரித்தனம் என்று சொல்லுங்கள், பிரபோ! நமது தயவைநாடி, துதிபாடி, மற்றவர்கள் தமது ஆட்சியைக் காப்பாற்றிக்கொண்டிருக்க, இந்த முதலமைச்சர். எவ்வளவு துணிவுடன், நமது ஆதிபத்தியத்தைத் துச்சமென்று கருதி, யாரோ தம்மை மெச்சிக்கொள்ள வேண்டுமென்பதற்காக மத்திய சர்க்கார் - மாகாண சர்க்கார் என்று பிரித்துப் பேசுகிறார், உரிமைபற்றிக் கதைக்கிறார் - இதை மகாப்பிரபோ! நாம் அனுமதிக்கலாகாது… ஆபத்தாகும், பிறகு! ஒரு இடத்திலே இந்தத் துணிவு ஏற்பட்டுவிட்டால், ஏற்பட்டது கண்டும் நாம் அதனைக் களைந்து எறியாமலிருப்பது தெரிந்து விட்டால், மற்றவர்களும் கிளம்புவர் - பிறகு பாரதம், களமாகி விடும் எனவே, இதனை உடனடியாக, அடக்கியாக வேண்டும்.’’ "வீண் பீதிகொள்கிறாய்! ஒரு முதலமைச்சர் முணு முணுப்பதாலே, நமக்கு என்ன ஆபத்து நேரிட்டுவிடப் போகிறது; நாம் இதன் பொருட்டு, அந்த முதலமைச்சரை அடக்கமுற்பட்டால், ஆ - ஊ - என்று கூவி, மற்றையோரையும் கிளப்பிவிட்டுவிடுவார்…’’ "அதுவும் ஒரு வகையில் உண்மைதான்… ஆனால் நமது ஆதிபத்தியத்தைக் கண்டிக்கும் போக்கு வளர விடலாகாது…’’ "ஆமாம்! வளரவிடப்போவதில்லை…’’ "எப்படி, மகானுபாவா!’’ "எண்ணற்ற வழிகள் உள்ளன! அந்த முதலமைச்சருக்கு உள்ள ஆசாபாசங்களை அறிந்துவா; எந்தப் பதவிமீது மோகம் பிறந்திருக்கிறது; ரμயாபோய்ப் பார்க்கப் பிரியம் ஏற்பட்டு விட்டதா; பாரிஸ் பயணம் தேவையா; அமெரிக்கா சென்று ஆனந்தம்காண விருப்பம் எழுந்திருக்கிறதா; என்னதான் புதிய பசி என்பதை அறிந்துவா; அந்தப் பசிக்கு ஏதேனும் தருவோம்; வாய் தானாக மூடிக்கொள்கிறது; வாழ்த்தி வணங்க ஓடோடி வருவார்’’ "எல்லோரும், இதேபோல இருப்பார்களோ?’’ "இது ஒன்றுதான், நமக்கு உள்ள முறையோ! பைத்தியக்காரா! நமது அம்புறாத்தூணியில் இஃதுமட்டுமா இருக்கிறது? ஆசைக்குக் கட்டுப்படாதவர் என்று தெரிந்தால் அச்சத்தை ஏவுவோம்… ஷேக் அப்துல்லா படம் ஒன்று அனுப்பிவைத்தால் தெரிந்துகொள்கிறார்.’’ "பலே! பலே! நானோர் ஏமாளி! தங்கள் முறையின் நுட்பத்தை அறிந்துகொள்ளும் ஆற்றலைப் பெற்றேன் இல்லை!’’ மத்திய சர்க்காரிடம் அளவுமீறிய அதிகாரம் குவிந்து கிடக்கிறது; அதனால் ராஜ்ய சர்க்கார் தரம் இழந்து, திறம் அற்று, பெரியதோர் பஞ்சாயத்துபோர்டாக வாழ்க்கையை ஓட்டவேண்டி நேரிட்டுவிடுகிறது என்ற கருத்து குடையும் மனத்தினராகி, மனதிற்பட்டதை எடுத்துக்கூறும் துணிவினைப் பெற்றுவிட்டால், அவரைப் பற்றி, டில்லி தேவதைகள், இதுபோல் பேசிக் காரியமாற்றும் போலத் தெரிகிறது. மகாவீர் தியாகி என்றோர் மந்திரி இருக்கிறார், டில்லியில் - இவர் டில்லி பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த நாட்களில், சர்க்காரின் செயலில், திட்டத்தில், போக்கில், காணக்கிடைக்கும் "ஓட்டைகளை’க் காட்டிக் காட்டிச் சாடுவார்! பல இலாகாக்களிலே மலிந்துகிடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்துவார்! அமைச்சர்களின் தவறுகளைக் காட்டிக் கேலி பேசுவார். அவருடைய கேள்விகள், சர்க்கார் தரப்பினரைத் திணறவைத்திடும்! அவர் தரும் புள்ளி விவரங்கள், சர்க்காருக்கு மண்டைக் குடைச்சல் ஏற்படுத்தும். இந்தவிதமாக இடித்துக் கொண்டிருந்த தியாகி இப்போது அமைச்சராகிவிட்டார்! ஏன்? அழைத்தார்கள்! எப்படி? அதுதான் இன்று டில்கையாளும் அரசியல் செப்படிவித்தை. தியாகியைத் தீர்த்துக்கட்ட வேண்டும்! தீபோலச் சுடுகிறார்; சர்க்காரின் போக்கைச் சாடுவதிலே சமர்த்தராக இருக்கிறார்; இவரை வெளியே விட்டு வைத்தால், இது போலத்தான் தொல்லை தந்தபடி இருப்பார்! எனவே இவரைப் பிடித்து "உள்ளே’ போடவேண்டும்; அமைச்சராக்கிவிடுங்கள்! ஆசாமி பிறகு வெல்வெட்டு மெத்தையில் சாய்ந்துகொள்வார், எதிர்ப்புமாய்ந்து போகும்!… என்று டில்லி தீர்மானித்தது; தியாகிக்கு அமைச்சர் வேலை கிடைத்தது, சர்க்கார் தரப்புக்கு தலைவலி குறைந்தது. உணவுத்துறையிலே அமைச்சராக உள்ள கிருஷ்ணப்பா என்பவரை, இப்படித்தான், கித்வாய் கண்டெடுத்தார், என்று, பெருமையுடன் பேசுகிறார்கள், கேட்கிறோமல்லவா ரபி அகமத் கித்வாய், உணவுத்துறைக்கு மந்திரியாக இருந்தபோது, கிருஷ்ணப்பா வெறும் உறுப்பினராக இருந்துகொண்டு ஓயாது கேள்விகள் கேட்டுக் கேட்டுக் குடைவாராம்! கித்வாய் இந்த ஆசாமியை இழுத்துவாருங்கள் என்று கூறி, வந்தவருக்கு ஒரு வெல்வெட்டு மெத்தையைக் கொடுத்து “உட்கார்! நீர் மெத்த சுறுசுறுப்பும் சூட்சமமும் உள்ளவர்! மந்திரிவேலை பாரும்!’’ என்றாராம். கிருஷ்ணப்பா இப்போது மந்திரியாகி,”பஞ்சமா? யார் சொல்வது, பொய்! பொய்! என்கிறார். "விலை ஏறிவிட்டது, மக்கள் சொல்லொணாக் கஷ்டம் அனுபவிக்கிறார்கள்’ என்று முறையிட்டால், விலை ஏறினால் என்ன, தானாக இறங்கிவிடும் - என்று சமாதானம் பேசுகிறார். இதே முறையிலே காரியமாற்றும் பழக்கம் ஏற்பட்டு விட்டதால், மத்திய சர்க்காரின் போக்கை எவரேனும் கண்டிக்கக் கிளம்பினால், அவர்களை, ஆசைகாட்டி, மடக்கிவிடலாம் என்ற நம்பிக்கை, டில்லிக்கு இருக்கிறது. குறை கூறியும், கண்டனக் குரல் எழுப்பியும், உரிமை முழக்கமிட்டுக் கொண்டும், வெளியே தலைநீட்டுகிற காங்கிரஸ் தலைவர்களிலே பலரும், தமது திருவும் உருவும் டில்லிக்குத் தெரிந்து, "தூது’வராதா என்ற ஆசையினால் உந்தப்பட்டும், என்னை இப்படியே நீங்கள் வாளா இருக்கவிட்டுவிட்டால், வேறு வேலை இல்லாத காரணத்தாலும், அலட்சியப்படுத்தி விட்டார்களே என்ற எண்ணத்தாலும், நானும் ஏதாவது செய்ய முடியும் என்பதைக் காட்டித் தீரவேண்டிய அவசியத்தினாலும், மத்திய சர்க்காரின் போக்கை எதிர்த்துப் பேசக் கிளம்புவேன் - என்று டில்லிக்கு மிரட்டல் பாணம் ஏன் இந்தப் போக்கினைக் கொள்கிறார்கள். இல்லையென்றால், மத்திய சர்க்கார் ஆதிக்கம் செய்கிறது, இது நியாயமல்ல, நல்லதல்ல; ராஜ்ய சர்க்காரின் தரமும் திறமும் கெட்டுவிடுகிறது என்று கூறிடும் அனுமந்தய்யாக்கள், நெஞ்சார இதை உணர்ந்து, நேர்மைவழி நின்று இதனை எடுத்துரைக்க முன்வருகிறார்கள் என்றால், இதற்குப் பரிகாரம் கூறவேண்டாமா? மக்களின் ஆதரவினை இந்தத் தம் கருத்துக்குத் திரட்டிக் காட்ட வேண்டாமா? நாட்டுக்கான சட்டதிட்டங்கள் குறித்து, கலந்து பேசி முடிவெடுக்கும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிகளிலே, இதுபற்றி, அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல் எடுத்துரைக்க வேண்டாமா? நேரு பண்டிதரிடம் வாதாட வேண்டாமா? செய்கின்றனரோ? இல்லை! வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் வாயடைத்து இருந்துவிடுகிறார்கள்; மத்திய சர்க்கார் என்ற முறையே இத்தகைய கொடுமையை, எதேச் சாதிகாரத்தை, சர்வாதிகாரத்தைத்தான் மூட்டிவிடும். எனவே, தனியாட்சியாக ராஜ்யங்கள் இருத்தல்வேண்டும் ஒன்றுக்கொன்று நேசமாகவும் பாசத்துடனும், தோழமையுடனும் இருக்க வழிசெய்துகொள்ளலாம். ஒற்றுமையின் பேரால், இந்தக் கொடுமைக்கு இடமளித்துவிட்டு, மத்திய சர்க்காரிடம் எதற்கெடுத்தாலும் மண்டியிட்டுக் கிடக்கும் கேவல நிலைமை கூடாது. அதனைப் போக்கிக்ககொள்வோம், என்று நாம் கூறும்போது, இதே அனுமந்தய்யாக்கள் பேசும் பாணி என்ன? பாரதம் ஒரு தேசம் - ஓர் அரசு - இந்த ஐக்கியத்தை நாசம் செய்தல்கூடாது - என்றல்லவா பேசுகிறார்கள்!! நமது உரிமை முழக்கத்தை வரட்டுக் கூச்சல் என்று ஏசுகிறார்கள்; நமது “தனி நாடு’ கோரிக்கையை,”நாட்டைப் பிளவுபடுத்தும் நாசசக்தி’ என்கிறார்கள்!! மத்திய சர்க்கார் தலையிட்டுத் தொல்லை தருகிறது - எதற்கெடுத்தாலும் டில்லி உத்தரவு பிறப்பிக்கிறது, நாம் அதன் கட்டளைப்படி ஆடவேண்டி இருக்கிறது - சேச்சே! இது மகாகேவலம்!!- என்று பேசிக் கைபிசைந்து கொள்ளும் இந்தக் கண்ணியவான்கள், ஆசைக்கு ஆட்படாமலும், அச்சத்துக்கு இடமளிக்காமலும், கொள்கைக்கு மதிப்பளித்து, மக்கள் மன்றத்திலே அந்தக் கொள்கைக்கு ஆதரவு திரட்டி வரும், நம் போன்றார்மீது காய்வது ஏன்? பாய்வது எதன் பொருட்டு!! பாரதம் ஒரு தேசம்… என்ற தத்துவத்தைப் பேசும்போதும், இவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள்! மத்திய சர்க்கார் எதிலும் குறுக்கிடுகிறது, எதற்கெடுத்தாலும் கட்டளை பிறப்பிக்கிறது, நாங்கள் கைகட்டிச் சேவகம் செய்யவேண்டிய கேவலம் ஏற்படுகிறது என்று மனக் குமுறலுடன் பேசும்போதும், அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்களே தவிர கொள்கைப் பற்றினால் செயலாற்றக் கிளம்புகிறார்கள் இல்லை! குமாரசாமிராஜா, கவர்னர் கோலத்திலேயே கோவை வந்ததும், அங்கு பிரமுகர்களும் தொழில் அதிபர்களும் கூடியிருந்த ஓர் அவையில், டில்லியின் போக்கினையும், தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதையும், வடநாட்டு அணைத் திட்டங்களில் பணம் பாழாக்கப்படுவதையும், கேட்போர் பதறித் துடித்து எழும் விதத்தில் பேசியதையும் அறிவாய். "இவ்வளவுதான் என்று எண்ணாதீர்கள்! இன்னும் சொல்லவேண்டியவை ஏராளமாக உள்ளன. இந்தக் கவர்னர் வேலையிலிருந்து விலகியதும் அவ்வளவையும் சொல்லி விடுகிறேன்’’ என்றல்லவா முழக்கமிட்டார். பத்திரிகைகளெல்லாம் பத்தி பத்தியாக வெளியிட்டன. கொட்டை எழுத்திலே தலைப்புகளிட்டன; குமாரசாமிராஜா இவ்விதம் பேசிடக் காரணம் என்ன என்பதுபற்றி "நிருபர்கள்’ தமது கருத்துகளைத் தொகுத்தனர்; நாட்டு மக்கள், வியந்தனர்; பலர் பாராட்டினர்; இஃதன்றோ அஞ்சா நெஞ்சம்! கவர்னர் பதவியில் இருப்பதாலேயே கண்மூடி மௌனியாகிவிட மாட்டேன்! அக்ரமமும் அநீதியும் கண்டால், எடுத்துக் காட்டிக் கண்டிக்கத்தான் செய்வேன்! என்று கூறிடும் போக்கிலல்லவா குமாரசாமிராஜா பேசியிருக்கிறார். தென்னாட்டுத் தலைவரில் ஒருவர் இப்படி வீரதீரமாகப் பேசுகிறார் என்பதறிந்தால், வடநாட்டுச் சர்வாதிகாரிகள் கூடச் சிறிதளவாவது அச்சம் கொள்வார்கள்; எதையோ காட்டி மயக்கிவிடலாம் என்று யாரைக் குறித்து வேண்டுமானாலும் நம்பலாம், குமாரசாமி ராஜா அப்படிப்பட்டவரல்ல, கவர்னர் வேலை கொடுத்தோம், அதிலே இருந்துகொண்டே நமது போக்கைக் கண்டிக்கிறார். ஏ! அப்பா! பொல்லாத ஆசாமி! இவரிடம் நாம் சர்வ ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும், என்றெல்லாம் வடநாட்டுத் தலைவர்கள் எண்ணிக் கொள்வார்கள். இப்படிப்பட்ட அஞ்சாநெஞ்சு படைத்தவர் முதலமைச்சராக இருந்தால் தேவிகுளம் பீர்மேடு பறிபோகுமா, திருத்தணி திருப்பதியை இழந்து நிற்போமா, என்றுகூட எண்ணிக்கொள் வார்கள்; அவ்வளவு பட்டவர்த்தனமாகப் பேசினார், கவர்னர் பதவியில் இருந்து கொண்டே! ஆனால்…? என்ன ஆயிற்று! இலவு காத்த கிளி என்பார்கள், அந்த உவமை போதவில்லை!! குமாரசாமிராஜா, சின்னாட்களுக்கெல்லாம் மென்று விழுங்கினார், நான் சொன்னதை மிகைப்படுத்தி விட்டார்கள் என்று மழுப்பினார், நானொன்றும் வடநாடு தென்னாடு என்று பேதம் பேசுபவனல்ல என்றார், அப்படிப் பேசுபவர்கள்மீது பாய்ந்து தாக்குவேன் என்றார்! கடைசியில் நம்மீதுதான் அவர் தமது கோபத்தை திருப்ப முடிந்ததேயொழிய கோவைப் பேச்சைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை!! நிதி அமைச்சர் சுப்பிரமணியனார், சில வேளைகளில், இதேபோல ஓசை எழுப்பி மகிழ்கிறார். தொழில் வளம் தென்னாட்டில் போதுமானதாக இல்லை; புறக்கணிக்கப்பட்டிருக்கிறது; நமக்கு இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை மிகக் குறைவு - என்றெல்லாம் அவரும், “இடம் பொருள் ஏவல்’ கவனித்து, வீரத்தை விவேகத்தை அள்ளி வீசுகிறார்! வீசிவிட்டுச் சுற்று முற்றும் பார்க்கிறார்!! டில்லி, சவுக்கு எடுக்கும் என்று தெரிந்தால், கிலி பிடிக்கிறது. உடனே,”என்றாலும்’ என்ற பதத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, வடநாடு தென்னாடு என்று பேசுவது மடத்தனம், போக்கிரித்தனம், பைத்தியக்காரத் தனம் தேசத் துரோகம் என்று சுடுசொல் வீசுகிறார் நம் மீது இதென்ன பைத்தியக்காரத் தனமாக, புத்தி கெட்டதனமாக, துடுக்குத்தனமாக, சுப்பிரமணியம் வடநாடு தென்னாடு என்ற பேதம் தொனிக்கும்படி பேசினாராமே, என்று டில்லி கேட்க, அது கேட்டு ஏற்பட்ட அச்சத்தால் அமைச்சர் தாக்கப்பட்டு, “தாசனய்யா நான்! தர்ம துரைகளே! என்னைத் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்! இதோ எண்ணிக்கொள்ளுங்கள்”தோப்புக்கரணம்’ போடுகிறேன் - என்று டில்லியை நோக்கிக் கூறுவதாகத்தான் நமக்கு அவர் பேச்சுப் படுகிறது - நம்மை நிந்திப்பதாகக்கூடத் தெரியவில்லை. நேர்மையில்லை, எனவே நெஞ்சிலே உறுதி இல்லை! பற்றற்ற தன்மை இல்லை, எனவே பயமற்ற போக்குக் கொள்ள முடியவில்லை. தெளிவும் இல்லை, துணிவும் எழவில்லை; தோத்தரித்துத் துதிபாடினால் துரைத்தனத்தில் பங்கு கிடைக்கிறதே, இதனை இழந்துவிடுவதா என்ற எண்ணம் குடைகிறது, வடநாடாவது, தென்னாடாவது பதவி, பதவி, பதவி! அது போதும்! அது இனிக்கிறது! சுவைப்போம், கிடைக்குமட்டும்!! என்ற திருப்தி ஏற்பட்டுவிடுகிறது; பதவியில் பதுங்கிக்கொள்கிறார்கள். இவர்களை எல்லாம் கூட விட்டுவிடு, தம்பி, விவேகத்தில் இவர் வசிஷ்டர், வைராக்கியத்தில் விசுவாமித்திரர், தந்திரத்தில் சாணக்கியர், தத்துவார்த்த விவாதத்தில் குல்லூகபட்டர், என்றெல்லாம் புகழ்கிறார்கள் இராஜகோபாலாச்சாரியாரை! அவர் போக்கு என்ன? இந்தி மொழிமீது அவர் போர் தொடுத்திருக்கிறார் பேச்சளவில்! ஆங்கிலத்தைக் கைவிடுவது முட்டாள்தனம் என்று பேசுகிறார். இது குறித்து அவர் தம் கருத்துகளைத் தெரிவிக்கும்போது முடுக்கும் மிடுக்கும் களிநடனம் புரிகின்றன! எதற்கும் அஞ்சேன்! எவருக்கும் தலைவணங்கேன்! என்று கூறிடும் கெம்பீரம் காண்கிறோம். ஆச்சாரியார், இந்தியைப் புகுத்தும் டில்லியின் போக்கைக் கண்டிக்கும் போக்கிலே நூற்றிலே ஒரு பாகம், நாம் பேசினால், காங்கிரஸ் நண்பர்களுக்குக் கண்கள் சிவந்துவிடும், மீசை துடிக்கும், கோபம் வெடிக்கும். அவர் "அனாயாசமாக’ வடநாட்டுப் போக்கைக் கண்டித்துப் பேசுகிறார் எழுதுகிறார். இதென்ன பைத்தியக்காரப் போக்கு! இந்த அநீதியை நான் அனுமதியேன்; சர்வாதிகார வெறி கூடாது. மனம் பதறுகிறது - மானமும் போகிறது. என்றெல்லாம் "காரசாரமாக’ப் பேசுகிறார். அறிக்கைமேல் அறிக்கை விடுகிறார்! பெரியார் பி. டி. ராஜன் ராஜா சர். மா. பொ. சி. சேதுப்பிள்ளை டாக்டர் மு. வ. இராமசாமி சாஸ்திரியார் கிருஷ்ணசாமி ஐயர் வடபாதிமங்கலம் திருச்சி விசுவநாதன் நாவலர் நெடுஞ்செழியன் போன்ற தலைவர்களை எல்லாம், தமிழ் வளர்ச்சியில் பேரார்வம் காட்டும் அன்பர் சுப்பைய்யா அவர்களின் “தமிழகம்’ எனும் இல்லத்தில் கூட்டிவைத்துப் பேசி, அனைவரிடமும்,”இந்தியை அரசாங்க பாஷை’ ஆக்கும் போக்கைக் கைவிட்டு விட வேண்டும், மாகாணத்துக்கு மாகாணம் தொடர்பு வைத்துக்கொள்ளவும். மாகாணத்துக்கும் மத்திய சர்க்காருக்கும் தொடர்பு வைத்துக்கொள்ளவும் ஆங்கிலம்தான் தகுதியானது, வசதியானது என்ற அறிக்கையில் கையொப்பமிடச் செய்தார். நானும் உடனிருந்தேன். இவ்வளவு செய்தவர் யார்? கட்டாய இந்தியை முதல் அமைச்சராக இருந்தபோது புகுத்திய ஆச்சாரியார்!! கட்டாய இந்தியைப் புகுத்தி அதை எதிர்த்ததற்காகப் பெரியாரைப் பெல்லாரிச் சிறையில் வாட்டியவரும் அவரே! இந்தியைப் புகுத்தி தமிழரை நாசமாக்காதீர்கள். ஆங்கிலமே இருக்கட்டும், என்ற தம்முடைய திட்டத்துக்குப் பெரியாருடைய கையொப்பத்தை வாங்கியரும் அவரேதான்!! ஆச்சாரியார் எப்படிப்பட்ட குணத்தவர் என்பதற்காக இதைக் கூறவில்லை. கட்டாய இந்தியைப் புகுத்தி, பெரியாரையும் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொண்டர்களையும், சிறையில் போட்டு வாட்டி வதைத்து, தாளமுத்து நடராசன் எனும் இரு இளைஞர்களின் உயிரையும் குடித்து, கையில் கிடைத்ததைக் கொண்டு அடிப்பேன்! என்று கொக்கரித்துக் கோலோச்சிய ஆச்சாரியார், எங்களை எல்லாம் அழைத்து, அனைவரும் கூடி ஆங்கிலம் கேட்போம் வாரீர் என்று பேசினாரே, இது எத்தகைய விந்தை, எங்களுக்கு எத்துணை பெரிய வெற்றி, என்பது பற்றிப் பேசிட அல்ல, இதனைக் கூறுவது. இந்தி ஆதிக்கம் புகுத்தப்பட்டபோது, எதிர்த்திட இவர் முன் வரவில்லை; மனம் இல்லை; மாறாக இவரே அந்த ஆதிக்கத்தைப் புகுத்த முனைந்து நின்றார்; எதிர்த்தோரை அடக்குமுறை கொண்டு தாக்கினார். காலங்கடந்து கருத்து மலர்ந்தாலென்ன, கருத்து மலர்ந்தது என்பதிலே மகிழத்தானே வேண்டும் என்று கேட்பாய் தம்பி, நான் அவர் ஏன் அப்போது அப்படிச் செய்தார், இப்போது ஏன் இவ்விதம் செய்கிறார் என்று கேட்கவில்லை; நான் சொல்வது, இப்போதும் அவர் செய்ய வேண்டியதை முறைப்படி செய்யவில்லை என்கிறேன்! இப்போதும் அவர், காங்கிரஸ் மேலிடத்தில், இதுபற்றி வாதாட, போராட, காங்கிரஸ் இதற்கு இணங்க மறுத்தால். மக்களைத் திரட்டி, அந்தப் போக்கை எதிர்த்திட முன் வரவில்லை! அதனால் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொள்ளும் துணிவு பெற மறுக்கிறார்! அன்று அனைவரையும் கூட்டிவைத்து, அருமையாக விளக்கமளித்தார்! விளக்கத்தில், அருமைப்பாடு இருந்தது. ஆனால் அதற்குத் தேவை இருந்ததா என்றால்; இல்லை என்பதை அங்கு கூடி யிருந்தோரின் பெயர்ப்பட்டியலைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். இந்த நாட்டை ஆள்வது யார்? இராமசாமிப் பெரியாரா? நானா? - என்று ஆச்சாரியார் ஆத்திரத்துடன் கேட்க வேண்டிய அளவுக்கு வீரமான அறப்போர் நடத்திய பெரியாருக்கு, ஆச்சாரியார் இந்தியால் விளையும் கேடுபற்றி விளக்க வேண்டிய அவசியம், என்ன வந்தது? தமிழ் மொழியின் தொன்மை பற்றி டாக்டர் மு.வ.வுக்கும், பேராசிரியர் சேதுப்பிள்ளைக்கும் இவர் எடுத்துச் சொல்வதா! ஏதோ, அவர் விளக்கம் அளித்தார் - கேட்டுக் கொண்டோம், இந்த நிலைக்கு அவர் வந்து சேர்ந்தாரே என்று மகிழ்ச்சியுடன். அதற்குப் பிறகு அவர் வந்து சேர்ந்தாரே என்ற மகிழ்ச்சியுடன். அதற்குப் பிறகு; அவர் செய்தது என்ன? கட்டுரை எழுதுகிறார் - அழகான கட்டுரைதான் - ஆணித்தறமான வாதங்கள் காண்கிறோம் - இது மேதாவித் தனம்; இல்லை என்பார் இல்லை! ஆனால் இது போதாதே! நயாபைசா அல்லவா நடமாடுகிறது!! ஆச்சாரியார், இந்தப் போக்கை கைவிட்டாக வேண்டும் என்று, நேரு பெருமகனாருக்கு, இறுதி எச்சரிக்கை ஏன் விடக் கூடாது? ஏன் தமது ஒப்பற்ற நண்பர் பெரியாரிடம் கலந்து பேசி, இந்தி ஆதிக்க ஒழிப்புக்கான அறப்போர் தீட்டி நடத்தக் கூடாது? செய்கிறாரா? இல்லை! செய்வாரா? அவரா! கனவிலே கூட அப்படி ஒரு காட்சியைக் காண முடியாது. ஆனால் பேசுகிறார், எழுதுகிறார், இந்தி ஆதிக்கம் ஆபத்தானது, அக்ரமம், அநீதி என்று! அந்தப் போக்கை எதிர்த்து ஒழித்தாக வேண்டும் என்று எக்காளமிடுகிறார், ஆனால் எதிர்ப்பு நடத்த மறுக்கிறார். அனுமந்தய்யாவும், சுப்பிரமணியனாரும், குமாரசாமி ராஜாவும் வேறு பலரும், எப்படியோ, அப்படியேதான் ஆச்சாரியாரும் இருக்கிறார். இவர்கள் யாவரும் வடநாடு, மெள்ள மெள்ள தன் ஆதிக்கப் பிடியைப் பலப்படுத்திக் கொண்டு வருவதை உணருகிறார்கள். ஓரோர் சமயம் வெளியிலே கொட்டியும் காட்டுகிறார்கள். ஆனால், துணிந்தும் தொடர்ந்தும் பணியாற்றி, வடநாட்டு ஆதிக்கத்தை ஒழித்திடும் விடுதலைப் போர் நடத்த அஞ்சுகிறார்கள், அந்த அச்சத்துடன் காங்கிரஸ் மேலிடத்தைப் பகைத்துக் கொள்ளாமலிருந்தால், பசையும் ருசியும் இருக்கிறது என்பதைச் சொந்த அனுபவ மூலம் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே ஆசையும் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. எனவேதான், தம்பி ஆசைக்கும் அச்சத்துக்கும் ஆட்பட வேண்டிய நிலையில் இல்லாத நாம், துணிந்து, தூய உள்ளத்துடன், நமது வசதிக்கும், நமக்கு மக்கள் அளித்திடும் வாய்ப்புக்கும் ஏற்ற முறையில், தாயகத்தின் தன்மானம் காத்திடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நாம், தகுதியற்றவர்கள் என்று கூறுவாருளர். அந்தச் சுடுசொல், நமக்குக் கோபமூட்டக்கூட இல்லை - அந்தக் கட்டத்தையும் கடந்துவிட்டோம். மேலும் தகுதி பெற வேண்டும் என்ற ஆர்வத்தை நமக்கும் தூண்டி விடவே, அந்தத் தூற்றலெல்லாம் பயன்பட்டு வருகிறது. பெரும் பெரும் தலைவர்கள், துணிவு பெறாமல் தடுமாறிடக் காண்கிறோம்; டில்லியை எதிர்த்து நிற்க முடியாது என்று எண்ணி மருண்டிடக் காண்கிறோம்; கண்ட பிறகும், நாம் நமது பணியினைக் கலங்காது செய்து வருகிறோம். அவர்களின் தடுமாற்றத்துக்கு உள்ள காரணம் புரிகிறது. நாம் மேற்கொண்டுள்ள பணியின் தூய்மையும் தெரிகிறது. நாம், அவ்வளவு பெரிய பணிக்கு ஏற்றவர்கள்தானா என்ற ஐயப்பாடு கூட எழக்கூடும் - விடுதலைப் போர் சாமான்ய மானதல்ல. என்றாலும், நம்பிக்கையுடன் பணியாற்றுகிறோம், மேதைகள் மருண்டோடுகிறார்கள்; நாமாவது, இந்த நற்காரியத்துக்கு நம்மை ஒப்படைத்துவிடுவோம் என்ற எண்ணத்துடன் பணியாற்றி வருகிறோம். அந்தப் பணியிலே ஒரு சிறு பகுதி - சுவையும் சூடும் மிகுந்த பகுதி - தேர்தல். ஆய்வுக் குழுவினர் தமிழகமெங்கும் சென்று, தோழர்களைக் கண்டு பேசிவிட்டு வருகின்றனர் - அவர்களிடம் நான் கேட்டுப் பெறும் கருத்துரைகளை, தம்பி, உன்னிடம் கூறி மகிழ்ந்திட உள்ளம் துடிக்கிறது - இப்போது உறக்கம் மேலிடுகிறது, மணி விடியற்காலை நாலு. அன்பன், 28-10-56 வாழ்க தமிழகம் ! வருக திராவிடம் ! தமிழக அமைப்பு - நேரு பண்டிதரின் திறமை - பாரதத்தில் தமிழ்நாடு தம்பி! தமிழகம் திருநாள் கொண்டாடுகிறது - தாயகம் விழாக் கோலம் பூண்டிருக்கிறது - திருநாட்டைப் பெற்றோம், இனி இதன் ஏற்றம் வளரத்தக்க வகையிலே பணிபுரிதலே நமது தலையாய கடன் என்று, தமிழ்ப் பெருங்குடி மக்களெல்லாம் உறுதிகொண்டிடும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது - கொடியும், படையும், முரசும் அரசின் முறையும் வேறு வேறு எனினும், எல்லா முற்போக்குக் கட்சிகளும், தாயகத்தின் திருவும் திறனும் செழித்திடப் பணியாற்ற வேண்டும் என்பதிலே, முனைந்து நிற்கின்றன - புதிய தமிழகம் கண்டோம், இது புதியதோர் உலகிலே உரிய இடம் பெற்றுத் திகழ்ந்திட வேண்டும் - நாம் அனைவரும் அதற்கான வழியிலே தொண்டாற்றும் திறன் பெறல் வேண்டும் என்ற ஆர்வம் மலர்ந்திருக்கிறது. நவம்பர் திங்கள் முதல் நாள், புதிய தமிழகம் உருவாகிறது. ஓர் அரை நூற்றாண்டுக் காலமாக, அரசியல் தெளிவும் நாட்டுப் பற்றும் கொண்டோரனைவரும், நடத்தி வந்த இலட்சியப் பயணம், தடைபல கடந்து படை பலவென்று ஆயாச அடவிகளையும், சஞ்சலச் சரிவுகளையும் கடந்து வெற்றிக் கதிரொளி காணும் இடம் கொண்டுவந்து சேர்ந்திருக்கிறது. இன்று நம்முன் தோன்றி, நம்மை எலாம் மகிழ்விக்கும் இத்தாயகம், புதியதோர் அமைப்பு அன்று ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே இந்த மாநில முழுதும், மதிப்பும் பெற்றிருந்த மணித்திருநாடாகும். இடைக் காலத்திலே இடரும் இடியும் தாக்கின, இழிநிலைக்கு இழுத்துச் சென்று அழுத்திவைக்கப் பட்டிருந்தது; இன்று கட்டுண்ட நிலைபோயிற்று, தலைகள் நொருங்கின, தமிழகம் புதிய கோலம் காட்டி நம்மை மகிழ்விக்கிறது. மக்களாட்சியின் மாண்பும் பயனும் மிகுதியும் மொழிவழி அரசு மூலமே கிட்டும் என்று அரை நூற்றாண்டாகப் பேசி வந்தனர் பேரறிவாளர், போரிட்டனர் ஆற்றல் மிக்கோர், அந்த உயரிய குறிக்கோளை அழித்துவிட முனைந்தனர் ஆணவக்காரர், எனினும், எல்லா இடையூறுகளையும் காலச் சம்மட்டி நொறுக்கித் தூளாக்கிற்று. கருத்துக்கு விருந்தாய் அமைகிறது தமிழகம். புதிய தமிழகம் - ஏதேதோ புதுமைகள் நிகழ்ந்திடும் என்று எதிர்பார்த்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்றன்று. அது ஆட்சி அலுவலைச் செம்மையுடையதாகச் செய்விக்கும் ஒரு வசதி தரும் ஏற்பாடு - வேறில்லை - என்று எண்ணுவோர், புதிய தமிழகம் கண்டு, மக்கள் விழாக்கொண்டாடுவதன் கருத்து யாது? அவர்தம் அகமும் முகமும் மலர்ந்திடும் காரணம் என்ன? என்பதறியாது கிடக்கின்றனர். அட்லிக்கும் ஸ்டீவன்சனுக்கும், அபிசீனிய மன்னருக்கும், அயிசனவருக்கும், இது, வெறும் ஏற்பாடுதான் - அரசியல் அலுவலுக்காகச் செய்து கொள்ளப்படும் நிர்வாக அமைப்புத்தான்! அவர்களால், அதற்குமேல் இது குறித்து உணர்ந்திடமுடியாது - அவர்கள் தமிழர் அல்லர் என்ற காரணத்தால். தமிழர்க்கோ, தமிழ்நாடு புதிய அமைப்பாகக் கிடைப்பது, மன எழுச்சி அளித்திடுவதாகும். முத்தம் வெறும் "இச்சொலி‘தானே, இதிலென்ன சுவை காண்கிறாய் என்று, தான் பெற்றெடுத்த பாலகனை உச்சிமோந்து முத்தமிடும் தாயிடம் கேட்பார் உண்டா! தமிழர், தமிழகம் கண்டோம் என்று களிநடமாடி, விழாக்கொண்டாடும்போது, இதிலே என்ன பெரிய சுவை கண்டுவிட்டீர்கள், முன்பு இருந்த ராஜ்ய அமைப்பு நிர்வாக காரியத்துக்குக் குந்தகம் விளைவிப்பதாக இருந்தது, அதன் பொருட்டு, இப்போது "ராஜ்ய சீரமைப்பு’ செய்துள்ளோம், இதனாலேயே தமிழர், ஆந்திரர், கேரளத்தார். கருநாடகத்தார் என்றெல்லாம் கருத்திலே உணர்ச்சிகளை வளரவிட்டுக் கொள்ளாதீர்கள்; அனைவரும் இந்தியர், அது நினைவிலிருக்கட்டும், யாவரும் பாரத நாட்டினர், அதனை மறந்துவிடாதீர்கள் என்று நேரு பண்டிதர்கூடப் பேசுகிறார். அவருடைய மனது குளிர நடந்து கொள்வதுதான் இன்றைய அரசியல் சூழ்நிலையில் பலன் அளிக்கும் என்று எண்ணும் பலரும், அதுபோன்றே பேசிடக் கேட்கிறோம். தமிழருக்குத் தமிழகம் அமைகிறது என்பதனால் ஏற்படும் எழுச்சி, எங்கே, ஊட்டிவிடப்பட்டிருக்கும் பாரதம் - இந்தியர் - என்பன போன்ற போலித் தேசியத்தைத் தேய்த்து, மாய்த்து விடுமோ, புதிய தமிழகம் என்று பூரிப்புடன் பேசத்தொடங்கி, தாயகம் என்று பெருமையுடன் பேசத் தொடங்கி விடுவார்களோ என்ற அச்சம், எல்லாத் தேசிய இனங்களையும் ஒரே பட்டியில் அடைத்து, எதேச்சாதிகாரத்தால் ஆட்டிப்படைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்போருக்கு இருக்கத்தான் செய்கிறது. எனவேதான் அவர்கள், அட்லிபோலவும், அபிசீனிய மன்னர் போலவும், இதெல்லாம் நிர்வாக ஏற்பாடு என்று கூறுகின்றனர் மாலை விலை ஆறணா என்பது மட்டுந்தான், மலர் விற்போனால் அறிய முடிந்தது - அதனை மங்கை நல்லாளுக்காகப் பெறுகிற மணவாளன் அல்லவா அறிவான், மாலையைக் கண்டதும் கோலமயில் சாயலாள், குமுதவிழிப் பாவையாள், பாகுமொழியாள், அடையும் மகிழ்ச்சி எத்துணை சுவையுள்ளது என்பதனை, தமிழகம் புதிய அமைப்பாகிறது என்பதிலே காணக்கிடைக்கும் எழுச்சியைத் தமிழர் மட்டுமே முழுதும் பெறமுடியும் - மற்றையோர் முயற்சித்தும் பலன் இல்லை. ஓரளவுக்கு இந்த இயற்கையை அறிய முடிந்ததனாலேயே, நேரு பண்டிதர், காந்தியார் காலத்திலே வாக்களிக்கப்பட்ட திட்டமாகிய மொழிவழி அரசு பற்றி முகத்தைச் சுளித்தபடி பேசவும், அது என்ன பித்தம் என்று கேசெய்யவும், அது வெறி அளவுக்குச் சென்றுவிடாமற் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை ஏவவும் முற்பட்டார். உலக அரங்கிலே காணக்கிடக்கும் பிரச்சினைகளை அறிந்தவர், உயர்நிலையில் அமர்ந்திருக்கும் நேருபண்டிதர். தேசிய இன எழுச்சி வரலாறுகளைத் தெரிந்தவர். அழுத்திவைக்கப்பட்ட தேசிய எழுச்சி, என்றேனும் ஓர் நாள் வெடித்துக் கிளம்பிடும் என்ற பேருண்மையை அறிந்தவர். பல தேசிய இனங்களை தலைதூக்கவிடாதபடி அடக்கி ஒடுக்கி ஆட்சி நடாத்தியோர் இறுதியில், என்ன கதியாயினர் என்பதைப் படித்திருக்கிறார் தேசிய இன எழுச்சியை அலட்சியப் படுத்தும், அறிய மறுக்கும், அப்பாவிகள் பட்டியலில் அவர் பெயரை அறிவிலியும் சேர்த்திடத் துணியமாட்டான். அவர் காண்கிறார், மேலை நாடுகளிலே, காலம் கிடைத்ததும், புயலெனக் கிளம்பிடும் தேசிய இன எழுச்சிகளை. எனவே நேரு பண்டிதர், "மொழிவழி அரசு’ எனும் திட்டத்தை அமுலாக்குவதில், தாமதம் தயக்கம் காட்டினார், காலத்தை ஓட்டினார், பிறகு கட்டுக்கு அடங்காத நிலைகிளம்பும் என்பதற்கான குறிதோன்றியதும் மொழிவழி அரசு எனும் திட்டத்தை மூளியாக்கியே தந்திருக்கிறார். மூளியாக்கப்பட்ட நிலையிலும், மொழிவழி அரசு என்பது, புதியதோர் நம்பிக்கையை, ஊட்டும் என்பதையும் அறிந்து, பாரதத்தை மறவாதீர்! இந்தியர் என்பதை நினைவிலே கொள்ளுங்கள்! இதெல்லாம் வெறும் நிர்வாக ஏற்பாடு! என்று பன்னிப் பன்னிக் கூறுகிறார் - அவருக்குப் பக்கம் நின்று அதே பல்லவியைப் பாடப் பல கட்சிகள் உள்ளன. வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரதமணித் திருநாடு! என்று அவர்கள் கீதம் இசைப்பது அனைவரும் வாழவேண்டும் என்ற நல்லறத்தைக் கூறுவதற்காக மட்டுமல்ல - தமிழர்காள் தமிழகம் பெறுகிறீர்கள்! புதிய அமைப்பு! விழாக் கொண்டாடு கிறீர்கள்! உற்சாகம் பெறுகிறீர்கள்! அதுவரையில் சரி - ஆனால் இந்த உற்சாகத்தை உறுதுணையாக்கிக்கொண்டு தனி அரசு என்று பேச ஆரம்பித்துவிடாதீர்கள் - பாரதமணித் திருநாட்டை வாழ்த்துங்கள்! - என்று கூறி, கட்டிவிடப்பட்டிருக்கும் அந்தப் போலித் தேசியத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடனும்தான், பாடுகின்றனர். பாரதமணித் திருநாடு என்று பாடுவதும், சொந்தம் கொண்டாடுவதும், பரந்த மனப்பான்மை, பண்புக்கு அறிகுறி; தமிழ்நாடு என்று மட்டும் கூறிக்கிடப்பது குறுகிய மனப்பான்மை; கிணற்றுத் தவளைப்போக்கு அறிவீரா? என்று வாதாடுவோர் உளர்! தம்பி! விரிந்து பரந்த மனப்பான்மையைத் தமிழருக்கு எவரும் புதிதாகக் கற்றுத்தர வேண்டியதில்லை! பாரில் இந்தப் பண்பு பேச்சளவுக்கேனும் வளருவதற்குப் பன்னெடுங் காலத்துக்கு முன்பே "யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று பாட்டு மொழியிற் கூறிய பண்பாளர் தமிழர்! எனவே, பரந்த மனப்பான்மையைத் தமிழர்க்கு அளித்திட ஆசான்கள் தேவை இல்லை - தமிழருக்கு அந்தப் பாடத்தைக் காட்டி, ஓர் பேரரசுக்குக் குற்றேவல் புரியும் எடுபிடியாக்கிடவே முனை கின்றனர் என்று ஐயப்பாட்டுக் கிடமின்றித் தெரிகின்றபோது, எங்ஙனம் அதனை நீதிநெறி விளக்கமென்று கொள்ள முடியும். போராற்றலால் பெற்ற வெற்றிகளைப் பேரரசு அமைத்திடப் பயன்படுத்தியவர்களிலே பலரும், தமது இரும்புக் கரத்தின் மூலமே, அந்தப் பேரரசுகளை முடிந்த வரையில் கட்டிக் காத்தனர் - பிறகோ, தேசிய இன எழுச்சி சூறாவளியாகி, சாம்ராஜ்யங்களைச் சுக்கு நூறாக்கி விட்டிருக்கிறது. கிரேக்க சாம்ராஜ்யம், ரோமானிய சாம்ராஜ்யம், உதுமானிய சாம்ராஜ்யம் என்பவைகளெல்லாம் இன்று பாடப் புத்தகங்கள் - படித்து அதுபோல் சாம்ராஜ்யங்கள் கட்டப் பயிற்சிபெற அல்ல - பேரரசு வேண்டும் என்று தோன்றும் மன அரிப்பை அடக்கிக் கொள்வதற்கான பாடம் பல பெற! நேரு பண்டிதர் இந்த உண்மைகளை நன்கு அறிவார் - அறிந்த காரணத்தாலேயே. அவர், மிகச் சாமர்த்தியமாக நடந்துகொள்வதாக எண்ணிக் கொண்டு, பல்வேறு முறைகளாலும், மறைமுக வழிகளாலும், பாரதம் எனும் பேரரசுக்குள்ளே அடைத்துவைக்கபட்டிருக்கும் பல்வேறு தேசிய இனங்களையும், தத்தமது தேசியத்தன்மையை, நினைப்பை இழந்துவிடச் செய்யப் பார்க்கிறார். இதனை எதேச்சாதிகாரியின் குரலிலே அவர் கூறவில்லை - வரலாறு தெரிந்திருப்பதால் - இனிக்கப் பேசினால் இளித்துக் கிடப்பர் என்று திட்டமிட்டுக் காரியமாற்றி வருகிறார்! கேட்போருக்கு மன மயக்கம் ஏற்படச் செய்யும் விதமான விரசாரம் நடத்தி, இந்தியா - இந்தியர் - என்பன போன்ற கற்பனைகளைக் கவர்ச்சிகரமானதாக்கிக் காட்டி, போலித் தேசிய போதையை ஊட்டி, தமிழர் போன்ற தேசிய இனத்தவர்களை, தாசர்களாக்கிடப் பார்க்கிறார். மொழி, கலை, ஆகியவற்றால் தனித் தன்மை பெற்றிருப்பதை அழித்திட இந்தியை ஏவுகிறார்… சல்லாபி வடிவத்தில்!! இந்தியை, அஞ்சல் நிலையத்திலும், அங்காடி அலுவலுக்கும், அரசாங்க காரியத்துக்கும், புகுத்தும் நேரத்திலேயும், தமிழ் என்ன சாமான்யமானதா, உயர் தனிச் செம்மொழி என்று மொழி வல்லுநர் பலர் கூறக் கேட்டுள்ளேன், இந்தி மொழி தமிழ் கொலுவிருக்கும் இடத்தருகேயும் வரத் தகுதியற்றது, என்றாலும், வசதிக்காக, நிர்வாக ஏற்பாட்டுக்காக, பாரதத்தின் ஐக்கியத்துக்காக இந்தியைத் தேசிய மொழியாகக் கொள்ளத்தான் வேண்டும் என்று பேசுகிறார். கிழப்புலி பொன்காப்பு காட்டிய கதை படிக்கிறார் களல்லவா, சிறார்கள்; அதுபோல, எதேச்சாதிகாரம் கிழடு தட்டிய பருவத்திலே இவ்விதமான போக்குத்தான் கொள்ளும். நேரு பண்டிதர் இந்த வகையிலே, தம்பி, மிகத் திறமையாகப் பணியாற்றி வருகிறார் - என்றாலும் அவருக்கும், உள்ளூரத் தெரிகிறது, எத்தனை முறைகளைப் புகுத்தினாலும் தேசிய உணர்ச்சி அழிந்து படாது என்ற உண்மை. மொழிவழி அரசு எனும் திட்டம், மெத்தச் சிரமப்பட்டுத் தாம் தயாரிக்கும் போலித் தேசியத்தை நாளா வட்டத்திலே நைந்துபோகச் செய்துவிடும் என்று அவருக்குப் புரிகிறது. எனவேதான் அவர், மொழி அரசு என்ற பிற்போக்குத் திட்டம் கூடாது, ஆகாது என்று அடிக்கடி பேசுகிறார். இதோ, புதிய தமிழக அமைப்புக்கு, விழா நடத்தப்படுகிறதே, இதன் உட்பொருள் என்ன? கம்யூனிஸ்டுக்கு இந்த விழா மகிழ்ச்சி தருவானேன்? பொது உடைமை பூத்தாலன்றோ விழா, கம்யூனிஸ்டு சித்தாந்தப்படி! புதிய தமிழக அமைப்பினைத் திருநாள் ஆக்கி மகிழக் காரணம்? இதனை அறியாயோ, பேதாய்! பேதாய்! புதிய தமிழக அமைப்பு, பொது உடைமை அடைவதற்கான பாதையிலே ஓர் கட்டமாக்கும்! என்று கடிந்துரைப்பர் கம்யூனிஸ்டுகள்! தம்பி! அவர்கள் கோரும் கம்யூனிசம், பாரதம் முழுவதற்கும் - எனவே, அதிலே, தமிழகம் என்று ஓர் எல்லை தேவை கூட இல்லை! எனினும் எல்லை கிடைத்து, புதிய தமிழகம் எனும் அமைப்பு ஏற்பட்டதும் அவர்கள் மகிழத்தான் செய்கிறார்கள் மகிழ வாரீர் என்று மக்களையே கூட அழைக்கிறார்கள்! ஏன்? அவர்களையும் அறியாமல் அவர்களை ஆட்கொண்டிருக்கும், தேசிய இன உணர்ச்சி என்பதன்றி வேறென்ன! அவர்களிடம் கூறாதே, தம்பி. நான் கூறுவதனாலேயே அவர்களுக்கு அது கசக்கும், அவர்கள் போலந்து ஹங்கேரி இப்படிப்பட்ட இடங்களிலே வெடித்து, சிதறி, இங்கு வந்து துண்டு துனுக்குகள் வீழ்ந்த பிறகுதான், இவைகளை உண்மைகள் என்று மதிப்பளிக்க முன் வருவார்கள். நாம் சொல்லியா ஏற்றுக்கொள்வார்கள்! புதிய தமிழக அமைப்பு, எல்லாக் கட்சியினருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆச்சாரியார் மட்டும் பாபம், துக்கமாக இருக்கிறார்! ஐயோ! மெலிந்துவிட்டதே! சிறியதாகிவிட்டதே! சென்னை ராஜ்யம் என்றிருந்தபோது, எவ்வளவோ பெரிதாக இருந்தது - இப்போது ஆந்திரம், மலையாளம், இவை பிரிந்த நிலையில், தமிழ்நாடு என்பது சிறிய அளவாகி விட்டது என்று வருத்தப்படுகிறார்; அவருக்கு இது விழாவாக இல்லை; விசாரப்படுகிறார்! காரணம் காட்டாமலிருக்கிறாரா? அவராலா, முடியாது? காரணம் தருகிறார்! பாரதத்தில். தமிழ்நாடு எனும் அமைப்பு மிகச் சிறிய ராஜ்யம் - அதனால் அதற்குச் செல்வாக்கு மத்திய சர்க்காரில் இருக்காது - பாரதத்தில் உள்ள மற்ற ராஜ்யங்கள் அளவில் பெரிது, அவைகளின் செல்வாக்கு மிகுதியாக இருக்கும் என்று ஆச்சாரியார் காரணம் காட்டுகிறார். ஆச்சாரியாரும் நமது கம்யூனிஸ்டு நண்பர்கள் போலவே, "பாரதம்’ எனும் திட்டத்தை ஏற்றுக்கொண்டுதான் பேசுகிறார். பாரதத்தில் ஓர் அங்கமாக, தமிழ்நாடு இருக்கிறது, இதன் பலனாக, எதிர்காலம் ஒளியுள்ளதாகும் என்பது கம்யூனிஸ்டு களிப்புடன் காட்டும் வாதம். கவலையுடன் ஆச்சாரியார் கூறுவது, பாரதத்தில் ஓர் அங்கமாக அமையும் சென்னை ராஜ்யம், அளவில் மிகச் சிறியது, எனவே அதற்கு மத்திய சர்க்காரில் மதிப்பும் செல்வாக்கும் கிடைக்காது, என்பதாகும். சரி, அண்ணா! காமராஜர் என்ன கருதுகிறார் என்று என்னைக் கேட்டுவிடாதே தம்பி. நான் இப்போது, சிந்தித்துக் கருத்தளிக்கக் கூடியவர்களைப்பற்றிக் கூறுகிறேன்; எஜமானர் களின் உத்தரவை நிறைவேற்றி வைக்கும் ஊழியம் செய்து வரும் சம்பளக்காரர்களைப்பற்றி அல்ல. காமராஜரைத்தான் நாடு நன்றாக அறிந்துகொண்டு வருகிறதே! குளமாவது, மேடாவது! என்பவர்தானே, அவர்!! ஏதோ, நேரு பெருமகனார் சம்மதமளித்ததால், குமரி கிடைத்தது! "இல்லை’ என்று டில்லி கூறிவிட்டிருந்தால் இவர் என்ன சீறிப் போரிட்டா பெற்றிருப்பார்! குமரியாவது கிழவியாவது, உள்ளது போதும், போ, போ! என்றல்லவா பேசுவார்! இனி சிந்தித்துக் கருத்தளித்திடுவோர் குறித்துக் கவனிப்போம் வா, தம்பி நமக்கேன், நாடாள்வதால் நாலும் செய்யலாம் என்ற போக்குடன் உள்ளவர் பற்றிய கவலை. பாரதம் என்ற பேரரசு இருக்கும் - புதிய தமிழகம் அதிலே ஓர் ராஜ்யம் - என்ற ஏற்பாடு, நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற கருத்துடன்தான், கம்யூனிஸ்டும் ஆச்சாரியாரும் பேசுகின்றனர். தமிழ்நாடு தனி அரசு ஆகவேண்டும் என்று சொன்னாலே அவர்களுக்குத் தலை சுற்றும்!! ஆச்சாரியார், சென்னை ராஜ்யம் அளவில் சிறியதாகும்; எனவே மத்திய சர்க்காரிலே செல்வாக்கும் கிடைக்காது என்று கூறுகிறார் - இதன் அடிப்படை உண்மை என்ன? மத்திய சர்க்கார் நீதியாக நடக்காது. மத்திய சர்க்கார் பெரிய ராஜ்யத்துக்குத்தான் ஆதரவு தரும். என்ற கருத்து, வலுத்தவன் இளைத்தவனைக் கொடுமை செய்வான், பணக்காரன் ஏழையை அடிமை கொள்வான், என்பதுபோல இல்லையா! மத்திய சர்க்கார் என்ற அமைப்பிலே இருந்துகொண்டு நாம் செல்வாக்குப் பெறவேண்டுமானால் அதற்கு ஏற்ற கெம்பீரம் இருக்க வேண்டுமாம்!! இதிலிருந்தே தெரியவில்லையா, மத்திய சர்க்காருடைய போக்கின் இலட்சணம்!! ஏதேதோ சொல்லவேண்டுமென்று எண்ணிக்கொண்டு எதைச் சொன்னால் தாட்சணியக் குறைவு ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து பயந்து, ஆச்சாரியார் பேசுகிறார். மத்திய சர்க்கார் என்ற திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்போது அதிலே சிறிய ராஜ்யமென்ன - பெரிய ராஜ்யமென்ன!! செல்வாக்கும் மதிப்பும் பெறவேண்டிய அவசியம் என்ன வந்தது மத்திய சர்க்கார், நீதியாக, நேர்மையாக நடக்காது என்ற சந்தேகம் கொள்வானேன்! அந்தச் சந்தேகத்துக்கு இடமிருக்கிறபோது, மத்திய சர்க்கார் என்ற திட்டத்துக்கு ஒப்பம் அளிப்பானேன்! ஆச்சாரியார் இதற்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர் - கிலியை அவரே கிளப்பி இருப்பதனால். கம்யூனிஸ்டுகளுக்கு இந்த அச்சம் இல்லை - அவர்கள் உத்தரப்பிரதேசத்தைவிடச் சென்னைப் பிரதேசம் அளவில் சிறியதாயினும், அதன் காரணமாக, மத்திய சர்க்கார் பாரபட்சமாக நடந்துகொள்ளாது - என்று தைரியமளிக்கிறார்கள். தம்பி! நாமோ, இருவரும் அஞ்சிடும் திட்டம் கூறுகிறோம் - எதற்காக, மத்திய சர்க்காரின் ஆதிக்கத்தில், தமிழ் அரசை உட்படுத்துகிறீர்கள் - பிறகு, அங்கு நீதி கிடைக்குமா கிடைக்காதா என்று விவாதம் நடத்திக் கொண்டு அல்லற் படுவானேன் - தனி அரசாக இருந்தால் என்ன? என்று கேட்கிறோம். உடனே, மாறுபாடான கருத்துக்களை விநியோகித்துக் கொண்டிருக்கும் ஆச்சாரியாரும் கம்யூனிஸ்டும் கைகோர்த்துக் கொண்டு, நம் எதிரே வந்து நிற்கிறார்கள் - தனி நாடா!! ஆகாது! ஆகாது! கூடாது! கூடாது! பாரத் மாதாகீ ஜே!! என்று கோஷமிடுகிறார்கள். தமிழ்நாடு - அளவில் சிறியது என்று ஆச்சாரியார் கூறும்போது, கம்யூனிஸ்டுகள், அளவுபற்றி என்ன கவலை, அதற்காக அச்சம் கொள்வானேன் என்று பேசுகிறார்கள்! தமிழ்நாடு கூட அல்ல, தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கருநாடகம் - இந்த நான்கும் மொழிவழி அரசுகளாக இருக்கும் நிலையில், ஓர் கூட்டாட்சி அமைத்துக்கொண்டு, பாரதப் பிணைப்பை நீக்கிக்கொண்டால் என்னய்யா, என்று நாம் கேட்கும் போதோ. ஆச்சாரியாரும், அவரை நோக்கி அஞ்சாதீர் என்று கூறிய கம்யூனிஸ்டும் கூடிக்கொண்டு வந்து தம்மைக் குட்டியபடி, ஏடா! மூடா! சிறுசிறு நாடுகளாகப் பிரித்தால் சீரழிவுதானே ஏற்படும், என்று குடைகிறார்கள். தம்பி! இவர்தம் போக்கை என்னென்பது! ஆச்சாரியார் கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிக் கொள்ள அவர் காட்டும் பரிகாரம், தட்சிணப்பிரதேசம். அது கலவை! தமிழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் எனும் மொழி வழி அரசுகள் கூடாது, கிடையாது - இவையாவும் ஒரே கொப்பரையில் போட்டுக் கொதிக்க வைத்துக் குழம்பாக்கி, ஒரு வார்ப்படமாக்க வேண்டுமாம் - தட்சிணப் பிரதேசமென்று - இதை வார்த்தெடுத்து, டில்லியிடம் காட்டி "முத்திரை’ பொறித்துக்கொள்ள வேண்டுமாம் - இது ஆச்சாரியாரின் அவியல்!! கம்யூனிஸ்டு திட்டம் மொழிவழி அரசு இருக்கும்; ஆனால் அது டில்லி காட்டும் வழி நடக்கும் என்பதாகும். நாம் கூறுவது, மொழிவழி அரசு அமையட்டும்; பிறகு, ஓர் திராவிடக் கூட்டாட்சி அமைத்துக்கொண்டு, டில்லியின் பிடியிலிருந்து விலகுவோம் என்பது! கூட்டாட்சிக்கு, "திராவிட’ என்ற அடைமொழி கொடுப் பதற்குக் காரணம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கருநாடகம் ஆகிய நான்கும் திராவிட மொழிகள் என்பதாலும் திராவிட இனத்தவர் இந்த நால்வர் என்பதாலும் ஆகும். தட்சிணப்பிரதேசம் என்ற நாமகரணத்தைக் காட்டிலும், திராவிடநாடு - திராவிடக் கூட்டாட்சி என்று பெயரிடுவது, வரலாறு, இலக்கியம், கல்வெட்டு, மொழிநூல் அறிவு எனும் பல்வேறு ஆதாரங்களைத் துணைகொண்டதாகும். ஆனால், அதனைக் கூறுகிற நாம், தம்பி, சாமான்யர்கள்! ஏழையின் பேச்சு அம்பலம் ஏறவில்லை!! எனவே தம்பி, புதிய தமிழகம் அமைகிறது - அதிலே நமது நம்பிக்கையும் மலர்கிறது. மொழிவழி அரசு - திராவிடக் கூட்டாட்சிக்குத்தான் வழிகோலும் என்பது, நமது திடமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையுடனேயே நாம், புதிய தமிழக அமைப்பை, விழாவாகக் கொண்டாடுகிறோம். தீபாவளியுடன் அந்தத் திருநாள் இணைந்துவிட்டது - எனவே, திராவிட முன்னேற்றக் கழகம், இந்த விழாக் கொண்டாடி, இதிலிருந்து பெறக் கிடைக்கும் கருத்துகளை நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூற, வேறோர் நாளைக் குறித்திட வேண்டும் என்று, உன் சார்பிலும் என் சார்பிலும், நமது பொதுச் செயலாளரை நான் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!! அன்புடன், 4-11-1956 மூவர் முரசு மூவர் முரசு இத்தாலி நாட்டில் ஒரு கொடிய நிகழ்ச்சி - அமைச்சர் பதவியும் சுப்பிரமணியமும் - வடக்கும் தெற்கும் - ஆச்சாரியார். தம்பி! படித்து முடித்ததும், அந்தப் பாவை என் மனக்கண்முன் தோன்றிடவே "வீர வணக்கம், வனிதாமணியே! உலகிலே மாண்பும் அறமும் அடியோடு அழிந்து படாமலிருப்பது, உன்போன்ற ஆரணங்குகள் ஒரு சிலர் அவ்வப்போது ஆற்றலுடன் பணிபுரிவதனாலேதான்! தாய்க்குலத்தின் தனிப் புகழைத் தரணிக்கு விளக்கிய ஒளிவிளக்கே! உன் தாள் பணிகிறேன்! தையல் என்போர் மையல் ஊட்டும் மைவிழியும், களிப்பூட்டும் கொவ்வைக் கனிவாயும், தாலாட்டும் திருக்கரமும் மட்டுமே கொண்டவர்கள்; அவர்கள் மெல்லியலார், சுடு சொல் கூறிடக் கேட்டாலே அவர்தம் அகம் அல்லற்படும், முகம் பொலிவிழந்து விடும்; அனிச்சப்பூ போன்றார் அரிவையர், என்று மட்டுமே பேசுவர். ஆனால் பிறர் திகைத்துப் போயிருக்கும் நேரத்தில், அம்மையே! நீ காட்டிய அஞ்சா நெஞ்சு, அவனிக்கே ஓர் அணி எனலாம்!! வாழ்க உன் திருப்பெயர்! வளர்க மகளிர் மாண்பு’’ - என்றெல்லாம், கூறிக் கூறி வியந்து பாராட்டினேன். ஆமாம், தம்பி, அனைவருமே போற்றிடத்தக்க வீரச் செயலைப் புரிந்தார் அந்த மாதர்குல மாணிக்கம். எழு நூறு போலீஸ் வீரர்கள் தடியும் துப்பாக்கியும் தயாராக வைத்துக்கொண்டுள்ளனர் - ஆனால் செய்வது யாது என்ற அறியாமல் திண்டாடித் தவிக்கின்றனர்; கட்டிடத்துக்கு வெளியே இருந்தபடி. உள்ளே இருந்தோ "ஐயய்யோ! அம்மம்மா! ஆபத்து! ஆபத்து! ஆண்டவனே! காப்பாற்று ஓடிவாருங்கள். வாருங்கள் ஓடி!’’ என்ற கூக்குரல் பீறிட்டும் கொண்டு வருகிறது. துப்பாக்கி வேட்டுக் கிளம்பி உள்ளே நுழையலாம்!! ஆனால், துப்பாக்கியால் சுட்டால், கொடுமைக்காரர்மீது குண்டு பாய்ந்திடாமல், ஆபத்தில் சிக்கிக்கிடப்போர்மீது வீழ்ந்தால், என்ன ஆவது என்ற அச்சம் போலீசாரைச் செயலற்றவர்களாக்கி விட்டது. பள்ளிக்கூடக் கட்டிடம் தம்பி, உள்ளே தாளிடப்பட்டுக் கிடக்கிறது - ஆறு வயதிலிருந்து பத்து வயது வரையில் உள்ள சிறார்கள் சிறுமியர்கள் - அந்தச் சிட்டுகள் உள்ளே சிக்கிக் கொண்டன, சித்திரவதை செய்யப்போகிறோம். வெட்டிக் கண்டதுண்டமாக்கி வீசி எறியப்போகிறோம் என்று வெறியர் இருவர் கொக்கரிக்கின்றனர். எப்படியோ, பள்ளிக்கூடத்துக்கு உள்ளே நுழைந்துவிட்ட இரண்டு வெறியர்கள், பள்ளி மாணவர்களின் கைகாலைக் கட்டிப்போட்டு விட்டனர்; ஆசிரியர்களையும் சிறைப்படுத்திவிட்டனர் - வெறியர் கரத்தில் கத்தியும் இருக்கிறது, துப்பாக்கியும் இருக்கிறது. எவ்வளவு பதைபதைத்திருக்க வேண்டும் அந்தப் பாலகர்கள்!! ஆறு மணி நேரம் 92 குழந்தைகள், மூன்று ஆசிரியர்கள் இப்படிச் சிக்கிக் கொண்டனர் - இரண்டு வெறியர்கள் உள்ளே இருந்துகொண்டு கொக்கரிக்கிறார்கள் - மரியாதையாக நாங்கள் கேட்பதைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, உங்கள் குலக்கொழுந்துகளை மீட்டுக்கொண்டு செல்லுங்கள்!! தாக்கிட நுழைவீரேல், நாங்கள் பிடிபடுமுன்பு, குழந்தைகளை வெட்டிக் குவிப்போம்!! - என்கிறார்கள். அந்தக் கொடியவர்கள் கொண்டுவந்து கொடுக்கும்படி கேட்டது என்ன தெரியுமா, தம்பி, கேள், 18,24,000 ரூபாய் வேண்டும் என்கிறார்கள்!! உள்ளே, துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தினர் - அவர்களை உயிரோடு திரும்பப் பெறவேண்டுமானால், பதினெட்டு இலட்ச ரூபாய் தரவேண்டும் என்கிறார்கள் - கூறுபவர்கள் கரத்தில் கத்தி, துப்பாக்கி! வெளியே பல நூறு போலீஸ்!! வந்தது வரட்டும் என்று உள்ளே நுழையலாம். ஆனால், பாதகர்கள், மிரட்டுகிறபடியே, குழந்தைகளைக் கொன்றுவிட்டால்…? அவ்வளவு வெறிபிடித்தவர்களா என்ற சந்தேகத்துக்கு இடமேயில்லை - ஏனெனில், குழந்தைகளைக் கட்டிப்போட்டு விட்டு, கொண்டுவா, பணத்தை! - என்று கொக்கரிக்கும் இருவரும், பைத்தியக்காரர்கள்! மிகப் பயங்கரமான போக்குடைய பித்தர்கள்! பித்தர்கள் விடுதியிலிருந்து தப்பி ஓடிவந்து விட்டவர்கள்! இப்போது, ஒரு முறை அந்தக் காட்சியை மனக்கண்ணாலே பார் தம்பி! உள்ளபடி, திடுக்கிடச் செய்கிறதல்லவா? அப்படிப்பட்ட சமயத்திலேதான், அந்த ஆரணங்குக்கு எங்கிருந்தோ ஓர் வீர உணர்ச்சி பொங்கி எழுந்தது! குலக்கொடிகள், உயிரோவியங்கள், கட்டப்பட்டு, கண்ணீர் வடிக்கின்றன! கொஞ்சி விளையாடும் சிறார்கள், சிறுமிகள்! கன்னக்குழியைக் காட்டி மகிழ்விக்கும் ஓர் சிட்டு, கண்ணில் குறும்பு காட்டி களிப்புறச் செய்யும் ஓர் மான், இசைபாடி இன்பமூட்டும் ஓர் குயில், களிநடம் காட்டி கவலையைப் போக்கிடும் ஓர் கலாபம், மழலையால் மனதுக்கு மதுரம் தரும் பருவத்தினர், தாய் உச்சிமோந்து முத்தமிட்டு பள்ளிக்கு அனுப்பிவைக்கும் பருவத்தினர் - பாதகர் இருவர், பயங்கரம் பேசுகின்றனர். அவர் தம் கரத்தில் கத்தியும் இருக்கிறது, புத்தியிலோ கோளாறு! எதையும் செய்வர்! எதற்கும் அஞ்சார்! பாதகம் இது, தீது, ஆகாது என்ற பாகுபாடு அறியா மனம்! எந்த நேரத்திலும், சுட்டுத் தள்ளிவிடக் கூடும், வெட்டிச் சாய்த்துவிடக் கூடும்!! குழந்தைகளைப் பார்க்கப் பார்க்க, குபுகுபுவெனக் கண்ணீர் கிளம்புகிறது! பயன்? எதையாவது செய்து, ஆபத்தைப் போக்கியாக வேண்டும். அதுவும் விரைவில்! பூவை புலியானால்! வெறியன்மீது பாய்ந்தாள் - அஞ்சாமையன்றி வேறொர் ஆயுதம் இல்லை! ஆனால் அஞ்சாமையைவிட ஆற்றலளிக்க வல்ல ஆயுதம் வேறென்ன உண்டு! பாய்ந்தாள் - பித்தன் கரத்திலிருந்த கத்தியைப் பறித்துக்கொண்டாள் அந்தக் கத்தியைக்கொண்டே அவன் மண்டைமீது தாக்கவே, மதி குழம்பிக்கிடந்த அந்த வெறியனின் மண்டை பிளந்தது, கீழே சாய்ந்தான்! வெற்றி - முதல் கட்டம்! கட்டிடக் கதவினைத் திறந்திட முடிந்தது. காரிகையைக் கொன்றுபோடக் கிளம்பினான் மற்றோர் பித்தன்! அவனைச் சுட்டுச் சாய்த்தது, உள்ளே நுழைந்த போலீஸ், குழந்தைகள் பிழைத்துக் கொண்டன! ஊரார் குதூகலமடைந்தனர்! இரு பித்தர்களில் ஒருவன் மருத்துவமனையில் இறந்தொழிந்தான் மற்றவன் கூண்டில் தள்ளப்பட்டுக் கிடக்கிறான். தெய்வமே! தெய்வமே! எங்கள் குடும்பத்துக்கு நீயே கண்கண்ட கடவுள்! - என்று பலரும் கண் கசியும் நிலையில் நின்று, அன்பைக் காணிக்கையாக்கி அந்த ஆரணங்கின் காலடியில் கொட்டி இருப்பர். நமக்கே தோன்றுகிறதே, அந்த நல்ல பெண்மணியின் நாமத்தை வாழ்த்த வேண்டும் என்று. தம்பி! கார்ட்டோரி என்பது அந்தக்காரிகையின் பெயர். பித்தர் இருவரில். ஒருவன் பெயர் ஆர்ட்டூரோ, மற்றவன் பெயர் ஆஸ்வால்டோ. பெயர், அந்த நாட்டுக்குத் தக்கபடி, மொழியின் தன்மைக்கேற்ப அமைந்திருக்கட்டும் - அந்த அணங்கு காட்டிய தீரத்துக்குத் தக்கவிதத்தில் பெயர் சூட்டி நாம் மகிழலாம், தம்பி, மறக்குடி மகள்!! மகளிர் குலத்தின் மாண்பினை விளக்கிடும் நோக்குடன் யாரோ ஆசிரியர் ஆர்வத்துடன் கட்டினார் போலும் - வீரக்காதை தீட்டும் புலமை இதிலே விளக்கமாகத் தெரிகிறது என்று எண்ணிக்கொண்டுவிடாதே தம்பி, இது கதை அல்ல; உண்மை நிகழ்ச்சி - சென்ற திங்களில், இத்தாலி நாட்டில் டெராஜானோ, எனும் ஊரில் நடைபெற்றது. இந்த வீரக்கதையை நான் படித்ததும், வியப்புற்றேன் - பலப்பல கருத்துக்கள் அலை முறையில் தோன்றிடலாயின! கொடுமை இந்த அளவுக்கெல்லாம் செல்லுகிறதே என்று ஓர் எண்ணம் குடைந்தது - உலகு இன்றளவும் நாகரீகத்தைக் கடைப்பிடிக்கக் காணோமே என்ற கவலை மனதினை அரித்தது. அந்த வனிதையின் வீரமே வீரம் என்ற எண்ணம் வந்தது - ஆம்! ஆம்! உலகு கெட்டுக் கிடப்பினும், நம்பிக்கைக்கு இன்னமும் இடமிருக்கிறது, இத்தகைய நாரீமணிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் - என்ற மகிழ்ச்சி மலர்ந்தது. அந்த இரண்டு பித்தர்களை எண்ணிக்கொண்டேன் - கள்ளங்கபடமற்ற அந்தக் குழந்தைகளிடம் தமது கொடுவாளைக் காட்டி நின்றனரே! என்பதை நினைத்தபோது நடுக்கமே எடுத்தது. இவர்களிடம் மனிதத்தன்மை மாண்டொழிந்தது ஏனோ என்று எண்ணினேன் - பித்தர்களன்றோ! அவர்கட்கு, தாம் எது செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் என்று என்ன தெரியும் - குழம்பிய மனம் - என்பதை எண்ணினேன், ஓரளவு சாந்தி பெற்றேன். அதிலிருந்து தம்பி, என் மனம், நமது நாட்டு அரசியலுக்குத் தாவிற்று - என் மனக்கண்முன், மூன்று தலைவர்கள் போர்க்கோலம் பூண்டு, மும்முரமாகப் பரணிபாடி பவனி வரும் காட்சி தெரியலாயிற்று. கெடுமதியுடையோய்! எதையோ சொல்லி வருகிறாய் என்றெண்ணிப் படித்துக்கொண்டே வந்தால், இடையிலே நீ எமது தலைவர்களை இழித்துப் பேசும் கட்டத்தைப் புகுத்துகிறாயே, பித்தர்களின் பேய்ச் செயலைப்பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, எமது “மூவர்’ பற்றிப் பேச வருகிறாயே, அங்ஙனமாயின், எமது”மூவர்’ பித்தர் என்று கூறவா துணிகிறாய், விடமாட்டோம் உன்னை… என்று கோபத்துடன் கூறிடக் கிளம்பும் காங்கிரஸ் நண்பர்கட்கு, என் விளக்கத்தைத் துவக்கத்திலேயே கூறிவிடுகிறேன் - நான் காட்டிய நிகழ்ச்சியில், விவரமறியாச் சிறுவர்கள் கட்டிப் போடப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடியவர் இருவரின் பயங்கர ஆயுதங்களுக்கு இரையாகும் ஆபத்துக்கு உட்படுத்தப்பட்டார்களே, அதுவரையில்தான், நம் நாட்டு அரசியல் நிலைமையுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கிறது என்று கூறிவிடுகிறேன். இத்தாலி நாட்டிலே இரு பித்தர்கள் செய்த வெறிச்செயல் போன்றதோர் நடவடிக்கை தமிழக அரசியலிலும் இதுபோது நடை பெற்றுக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறதே தவிர, இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், பித்தர்களாகத் தெரிகிறார்கள் என்று கூறவில்லை. எனவே நமது தலைவர்களைப் பித்தர் என்று தூற்றுகிறேனோ என்றெண்ணிக் கோபம் கொள்ளற்க! என்று நான் கூறுவதாகத் தம்பி! காங்கிரஸ் நண்பர்களுக்குச் சொல்லிவிடு. நமக்கேன் நல்லவர்களின் பொல்லாப்பு! இத்தாலி நாட்டு இரு பித்தர்கள் பள்ளிச் சிறார்களைக் கட்டிப் போட்டு, கத்தி காட்டி, கொன்று போடுவதாக மிரட்டி பணத்தைக் கொள்ளை அடிக்க முயற்சித்ததுபோல, இந்நாட்டு மக்களைத் தெளிவுபெறாத நிலையில் தள்ளிவைத்துவிட்டு, அடக்குமுறை, பணபலம் எனும் இரு பயங்கரக் கருவிகளைக் காட்டி, அழித்தொழித்து விடுவதாக மிரட்டி, காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுகளைக் கொள்ளையிடத் திட்டமிட்டு வேலைசெய்து வருகின்றனர். மற்றவர்கள் திகைத்துப்போய், செயலற்றவர்களாகிக் கிடந்தபோது ஓர் ஆரணங்கு, அஞ்சாது போராடி, கொடியவர்களின் கொலைபாதகச் செயலைத் தடுத்து வெற்றி கண்டதுபோல, நாம், இந்தத் தேர்தலிலே, காங்கிரசை எதிர்த்து நிற்கிறோம். அந்த ஆரணங்குக்கு இருந்த அஞ்சா நெஞ்சம், நம்மில் ஒவ்வொருவருக்கும் தேவை - எங்ஙனம், கயவர்களிடம் கத்தி இருக்கிறதே, காட்டுக் கூச்சலிடுகிறார்களே, துப்பாக்கி இருக்கிறதே, துடுக்குத்தனமாகத் தாக்குகிறார்களே, என்பதுபற்றித் திகில் கொள்ளாமல், அந்த மங்கையர் திலகம் கொடியவனின் கொடுவாளைப் பறித்து எறிந்தாளோ, அதுபோல் செயலாற்ற, நமக்குத் துணிவுவேண்டும், ஏனெனில், துரைத்தனத்தில் அமர்ந்துள்ளவர்களிடம், படைக்கலன்கள் மிகுதியாக உள்ளன என்பதுமட்டுமல்ல, அவர்களில் மிகப்பலருக்கு, வெறி அளவுக்கு நம்மீது கோபம் பிறந்துவிட்டிருக்கிறது அதிலும் நம்மை எல்லாம் ஆளாக்கிவிட்ட பெரியாரையே அன்புக் கயிற்றினால் கட்டிப்போட்டுவிட முடிந்தது, இந்தப் “பொடியன்கள்’ அல்லவா போரிடக் கிளம்பு கிறார்கள் என்று எண்ணும்போதே, அவர்களுக்குக் கோபம் கோபமாக வருகிறது. அது நமக்கு நன்றாகப் புரிகிறது! கடந்த பத்து நாட்களாக, பவனிவரும்”மூவர்’ செல்லுமிடமெல்லாம் சீறிச் சீறிப் பேசுகிறார்கள் - இதுகளை ஒழித்துக்கட்டுவோம் என்று உறுமுகிறார்கள்! தேர்தலுக்காகச் செலவிடத் தம்மிடம் குவிந்துகிடக்கும் பணத்தையும், மேலும் இலட்சக் கணக்கில் கொட்டித்தர, கொள்ளை இலாபக்காரரும் கள்ளமார்க்கட் அதிபரும் காத்துக்கிடக்கும் காட்சியையும், தமது வீரதீரம், அறிவு ஆற்றல், பக்தி யுக்தி பற்றி எல்லாம் புகழ்பாடிட பத்திரிகைகள் பல பராக்குக்கூறிக் கிடப்பதையும் காணும்போது, அவர்களுக்கு ஏன் அந்த அளவுக்கு ஆணவம் பிறக்காது! அம்மி குழவியையே அப்பளமாக்கிவிட்டோம், இந்த இஞ்சி பச்சடிகள் எம்மாத்திரம் என்று எக்காளமிட்டு வருகிறார்கள். கொப்பம்பட்டியிலே தமது “குரலை’ உயர்த்திய காமராஜர்’ ஒரு பத்து நாள் படபடவெனப் பேசிவிட்டு, அதன் பலனாக ஆயாசம் தவிரப் பிறிதொன்று காணாததால், சிறிதளவு அமைதி பெற்றார். வாய்மூடிக் கிடந்திடலானார். இப்போது,”மூவர்’ கிளம்பியுள்ளனர், முரசு அறைந்திட! ஆஹா! தம்பி! இந்த "மூவர்’களின் பொருத்தம் இருக்கிறதே, சொல்லி முடியாது. பெரியார், நாட்டுக்கு ஒவ்வோர் நாளும் எடுத்துச்சொல்லி வருவது தெரியுமல்லவா? காமராஜர் நல்லவர், நம்மவர், ஆனால் இந்தச் சுப்பிரமணியம் இருக்கிறாரே, ஆபத்தான "பேர்வழி’ - ஆச்சாரியாரின் கையாள் - சமயம் பார்த்துக் குழி பறிப்பவர் - சந்தர்ப்பம் பார்த்துத் தட்சிணப் பிரதேசத் திட்டத்தைப் புகுத்திவிடக் காத்துக்கிடப்பவர் - என்பது பெரியாரின் ஆய்வுரை. அவர் கூறுவதற்கேற்பவே, காமராஜர் தட்சிணப் பிரதேசம் கேட்பவர்களைத் தாக்கிப் பேசினார், சுப்பிரமணியனார், தட்சிணப் பிரதேசத்தின் அவசியத்தைச் சிலர் உணராமலிருக்கிறார்களே, என்ன அறிவீனம் என்று கேலி பேசுகிறார். ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்துக்கு, கனம் சுப்பிரமணியம் தாலாட்டும் பாடினார், பிறகு அதை அவரே சவக்குழியில் புதைத்துவிட்டு, ஒப்பாரி வைத்தாலும், பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தால், ஒரு சொட்டுக் கண்ணீரும் விடாமலிருந்துவிட்டார். ஆச்சாரியார் காலத்திலே, இந்த ஆற்றல்மிக்க அமைச்சர், கொதித்ததையும் குதித்ததையும், நாடு கண்டது குலக் கல்வித் திட்டத்தை இந்தக் கொள்கை வீரர், விட்டுக் கொடுக்கவே மாட்டார், பதவிப் பிசின் அவரை ஒன்றும் செய்யாது, தன்மானம் பெரிது, கேவலம் பதவி அல்ல என்று கருதும் தமிழர் இவர், இவரிடம் கொங்குநாட்டு உறுதிப்பாடு உள்ளத்தில் குடிகொண்டிருக்கிறது என்று பலரும் கருதும்படி பேசினார் - மறுப்புக் கூறினோரை ஏசினார்! கல்வித்துறையில் இந்தத் திட்டத்தைப் புகுத்தாவிட்டால், இந்த “ஜென்மம்’ கடைத்தேறாது என்று”கர்ஜனை’ செய்தார். நாடு சீறிற்று - காமராஜர் கண் சிமிட்டினார் - காங்கிரஸ் கமிட்டிகளே களமாயின! ஆச்சாரியார் கவிழ்ந்தார் - காமராஜர் துறவறத்தைத் துறந்து, தமது ஓய்வைத் தியாகம் செய்துவிட்டு, பதவியில் வந்து அமர்ந்தார்; பக்கத்திலேயே பல்லை இளித்துக்கொண்டு நின்றார் இந்தப் பண்பாளர்! நான், நாட்டுக்குத் தந்த நல்ல திட்டத்தை, ஆயிரம் எதிர்ப்புகளையும் கண்டு நான் அஞ்சாமல் திணித்த இந்தத் திட்டத்தைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்ட இந்த அமைச்சர் அவையில் நான் இடம் பெற்றால், எவர்தான் என்னை மதிப்பர், காலம் முழுவதும் கைகொட்டிச் சிரிப்பரே, பதவி மோகம் விட்டதா பார் என்று கேலி பேசுவரே, நான் எப்படி இந்த அமைச்சர் அவையில் இருக்கலாம் - வேண்டேன்! என்று கூறிவிட்டு, கோவை சென்று, வக்கீல் வேலையை விட்ட இடத்திலிருந்து துவக்குவார், குருநாதர் இராமாயணம் பற்றி எழுத, இவர் பாரதம் பற்றி எழுதுவார், என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அமைச்சர் பதவி என்ன சாமான்யமானதா! அந்த வெல்வட்டு மெத்தையின் சுகம் வேறு எங்கு கிடைக்கும்! ஆனந்தமாக அங்கு அமர்ந்துகொண்டு, அலட்சியமாக மற்றவர்களைப் பார்த்துக் கொண்டு, ஆணவமாக எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடும் வாய்ப்பை இழக்க மனம் வருமா! பில்லை போட்ட சேவகர்கள் எத்துணை பேர்! பிரியத்தைக் கொட்டிடத் துடிப்போர் எத்துணை! சீமான்கள், கட்டியங் கூறி நிற்கிறார்கள், காளையையும் தன்னையும் ஒரேவிதமாகப் பார்த்து வந்த பட்டக்காரர்களெல்லாம், “கனம்’ ஆன பிறகு, கைலாகு கொடுக்கிறார்கள். கொடுத்துவிட்டு, கை வலிக்கிறதோ! - என்று கனிவுடன் கேட்கிறார்கள்! இந்தச் சுகானுபவத்தை இழக்க மனம் வருமா! தோட்டக் கச்சேரிகள், அதிலே வந்து கலந்துகொள்ளும் துதிபாடகர்கள்! மாநாடுகள், அதிலே, மதிப்பளிக்க வரும் மகானுபாவர்கள்! கலைக் காட்சியைத் திறந்திட, கானமழையில் நனைந்திட”கனம்’ ஆக இருந்தால், தனிக் கவர்ச்சி காணலாமே! இசைவாணரிடமே இசை இலக்கணம் பற்றிப் பேசி, ஆசான் கோலமே காட்டலாம்! தமிழ்ப் பேராசிரியரிடமே, தமிழ்மொழியில் என்ன இருக்கிறது என்று கேட்டுவிட்டு, அவர் முகம் சுளிக்கிறதா என்றுகூடக் கவனிக்கலாம்? நடனக் கச்சேரிகளில் தலைமை தாங்கி, "மனிதனைத் தேவனாக்கும் மதுரமான கலை! அம்பலத்தானின் அடிபணியும் பக்தியை ஊட்டும் லலிதக் கலை! கண்டேன்! களிப்புக்கடலில் மூழ்கினேன்! அந்தக் கட்டிளங்குமரியின் கடை வெட்டினையும் இடை நெளிவையும் கண்டபோது, நான் கைலை சென்றது போன்றே களிப்புப்பெற்றேன்’’ என்று பேசலாம்! தம்பி! இவ்வளவு இன்பம் கூட்டித்தரும் பதவியை இழக்க அவர் என்ன இளித்த வாயரா? கல்வித்திட்டம் வேண்டாம் என்கிறீர்கள், அவ்வளவு தானே! உங்களுக்குக் கல்வித் திட்டம் பிடிக்கவில்லை, நான் அல்லவே! சரி! கல்வித்திட்டம் வேண்டாம்! அதைக் குழிதோண்டிப் புதைக்கத்தானேவேண்டும், உமக்கு ஏன் அந்தச் சிரமம், நானே செய்கிறேன் - எனக்குத்தான் அந்தக் குழி எத்துணை ஆழமாக இருக்கவேண்டும் என்பது தெரியும் என்று கூறினார்போலும், பதவியில் ஒட்டிக்கொண்டார்! அப்படிப்பட்ட தன்மானம் ததும்பும் மனம், தம்பி, இந்த அருமை அமைச்சருக்கு! அவருடன், காமராஜர்! ஊரிலே, பெரியார் பேசுவதோ நான், கனம். சுப்பிரமணியம் ஆச்சாரியாரின் கை ஆளாக இருந்துகொண்டு, என் காமராஜரைக் கவிழ்த்து விடாதபடி பாதுகாப்பு அளித்து வருகிறேன், என்பதாகும். காமராஜர், பெரியார்மீது அன்பும் பொழிவதில்லை, வம்புக்கும் நிற்பதில்லை. காமராஜர், பெரியார்மீது அன்பும் பொழிவதில்லை, வம்புக்கும் நிற்பதில்லை. கனம், சுப்பிரமணியனாரோ, தனக்குப் பெரியார்மீது மட்டுமல்ல திராவிட இயக்கத்தின்மீதே உள்ள, "துவேஷத்தை’க் கூட்டம் தவறாமல் கக்குகிறார், கூட இருப்பவர்கள், மெத்த நாற்றமடிக்கிறது என்று கூறித் தடுக்கும் வரையில் கக்கித் தீர்க்கிறார். அவர் இருக்கிறாரே, பக்தவத்சலனார் - சொல்லத் தேவை இல்லை! மக்கள் பார்த்து, சட்டசபைக்கும் செல்லவிட மாட்டோம் என்று கூறி, தேர்தலில் தோற்கடித்தார்கள். எம்.எல்.எ. ஆகத்தானே கூடாது என்றீர்கள், இதோபாருங்கள் மந்திரியே ஆகிவிடுகிறேன் என்று ஜனநாயகம் செய்து காட்டிய பெருந்தகையாளர்! இந்த மூவரும் முரசுகொட்ட, ஊர்பல சென்றனர். உள்ளத்துக்கு உற்சாகம் பொங்குமளவுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏசினர் - நான்தான் இருக்கிறேனே ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பார்களே, அதுபோல; என்னை எடுத்து அலசி, ஆராய்ந்து, உரைத்து, நிறுத்து, தூக்கி எறிந்து விட்டார்கள், கீழே! வடக்கு தெற்கு என்று பேசுவது அபத்தம் - ஆபத்து - தீது - அப்படி ஒரு பிரச்சினை கிடையாது. அப்படியே ஒன்று இருந்தாலும் அதைக்கண்டு அச்சம் கொள்வது கோழைத்தனம். இந்த தி.மு.க. கோழைகள்; வெள்ளைக்காரனுக்குக் குலாம்கள்! இவர்களை ஒழித்துவிடுவோம், அழித்துவிடுவோம். மூவர் முரசும் இதைத்தான் ஒலித்தன! இதை ஒலிக்கமட்டுமே இவர்கள் பயின்றுள்ளனர். ஆனால் மக்கள் வேறுபல இசைகளைக் கேட்டுப் பழக்கப்பட்டுப் போய்விட்டனர். "அண்ணாத்துரை கிடக்கிறானய்யா, அமைச்சர் பெருமக்களே! உங்கள் சங்கதி என்ன? நாடு ஆளும் வாய்ப்பு அளித்தோம், நாங்கள் கண்டது என்ன? வரிச்சுமையைத் தாங்கித் தத்தளிக்கிறோம், வாட்டம் ஓட்டிட நீவிர் வகுத்தளித்தது என்ன? தி.மு.க. இதைச் சொல்கிறது கேளாதீர், அதைக் கூறுகிறது நம்பாதீர் என்று எங்களுக்குப் போதனை புகட்டியது கிடக்கட்டும் - நாங்கள், எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு எனும் குறள்வழி நடக்கத் தெரிந்தவர்கள் - எனவே எந்தக் கழகமும் இல்லாதது கூறி எம்மை ஏய்த்திட முடியாது! உண்மையை நாங்கள் தெரிந்துகொண்டோம். உமது ஆட்சி எமக்குத் திருப்தி தரவில்லை. ஊழல், நாற்றமடிக்கிறது. உழைப்பாளிக்கு உரிமை மறுக்கப்படுகிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்தும் வக்கும் உமக்கு இல்லை. அடக்குமுறையை அவிழ்த்துவிடுகிறீர்கள். வரிமேல் வரி போட்டு வாட்டி வதைக்கிறீர்கள். வடநாட்டிலே அதிகாரத்தைக் குவித்திருக்கிறார்கள். எதற்கும் காவடி தூக்கிக்கொண்டு டில்லி போகிறீர்கள். வளமும் செல்வமும் வடநாட்டில் பெருகிக் கிடக்கிறது. தென்னகம், தொழில் வளர்ச்சியற்றுத் தேய்கிறது. புதிய புதிய தொழில் திட்டம் தீட்டும் உரிமை சென்னையிடம் இல்லை, - டில்லியின் கரத்தில் இருக்கிறது. அணையும் தேக்கமும் அங்கு, பிரம்மாண்டமான அளவு. இங்கு பாசனத்துக்காகச் சிறு அணைகள் - அதற்கும் மக்களிடம் அதிகாரப் "பிச்சை’ எடுத்தீர்கள். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில், தென்னகத்துக்குச் செய்யப்பட்ட அநீதியை, "தேசீய’ ஏடுகளே காட்டின - கட்டுரை, கவிதை, படம், போட்டு; நீங்களேகூடச் சில நேரங்களில் கண்ணைக் கசக்கிக்கொண்டும் கையைப் பிசைந்து கொண்டும், சொல்லியிருக்கிறீர்கள்! தமிழகத்தின் உரிமையைக்கூடக் காப்பாற்றும் ஆற்றல் உமக்கு இல்லை; தேவிகுளம் பீர்மேடு இழந்தீர்கள். உம்முடைய வார்த்தைக்கு டில்லி மதிப்பளிக்கவில்லை; மானம் பெரிது என்று கருதி பதவியைத் துறக்கப் போவதாக "பாவனை’க்குச் சொல்வதற்கும் பயந்தீர்கள்! ஒரு முதியவர், சாவது தெரிந்தும், ஈவு இரக்கமற்று இருந்தீர்கள். தமிழ்நாடு என்று பெயரிடும் அளவுக்கும் உமக்குத் தன்மான உணர்ச்சி இல்லை! ஆகவே அமைச்சர்களே! அண்ணாத்துரை கிடக்கிறான், அற்பன், அவனுக்கு அரசியல் என்ன தெரியும், சினிமா வசனம் எழுதுபவன்; பிளேட்டோவுக்குப் பெயர் கிடைத்ததே, நீவிர் அவர் காலத்தில் இல்லாததால்; அரிஸ்டாடிலுக்கு அறிவாளி என்ற பெயரே, உம்மை மறந்ததால் தந்தனர் - அது தெரியும் எமக்கு - எனவே, அவனைத் தள்ளிவிட்டு, தயவுசெய்து இதோ நாங்கள் கேட்கிறோமே, எங்கள் உள்ளத்தில் குமுறிக்கொண் டிருக்கும் பிரச்சினைகளை, இவைகளுக்கு, ஒளிவு மறைவு இன்றி, உள்ளத் தூய்மையுடன் பதிலளியுங்களேன் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். மக்களைக் காணும்போதே இந்தச் சூழ்நிலை புரிந்துவிடுகிறது, மூவருக்கும் சுரீல் என்று கோபம் கிளம்புகிறது, கோபத்தைக் காட்ட வேறு வழி? நம்மீது காய்ந்து விழுகிறார்கள். மூவர் முரசு, சென்ற கிழமை மிக மும்மரமாக வேலை செய்தது - இம்முறையில். இதிலே, காமராஜர், இப்போது ஒரு புதிய கட்டிடத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறார். நான் இதனை எதிர்பார்த்தேன், ஆனால் இவ்வளவு விரைவில் நடைபெறும் என்று நினைக்கவில்லை. இதுநாள் வரையில், அவர், தமது கோபப் பார்வையையும், அலட்சியமான கண்டனத்தையும், நம்மீது மட்டும்தான் செலுத்தி வந்தார். இப்போது, காலம் கனிந்துவிட்டது என்று எண்ணுகிறாரோ, என்னவோ, மெதுவாக பெரியார் மீதும், திராவிட கழகத்தின்மீதும் கூடத் தமது தீ நாவைச் செலுத்தத் தொடங்கிவிட்டார். காமராஜருக்கு, நமது கழகத்தின்மீது கசப்பும் கொதிப்பும் இருக்கக் காரணம் இருக்கிறது - சீச்சி! இந்தப் பழம் புளிக்கும்! என்று நரியே சொல்லிற்றாமே, (கதையில்) இந்த நாடாளும் நாயகர் சொல்லாமலா இருப்பார்! நாம், தனியாக எம்மிடம் ஒரு கட்சி இருக்கும், கொடி இருக்கும், ஆனால் உமக்குத்தான் அவ்வளவும் பயன்படும் - என்று கூறி "குத்தகைக்கு’ விடவில்லை, நமது கழகத்தை!! கண்ணீரும் செந்நீரும் கொட்டி வளர்த்த இந்தக் கழகம், விசுவாமித்திரனிடம் ராஜ்யத்தைத் தானமாக்கிவிட்டு, சுடலைகாக்கச் சென்றானாமே அரிச்சந்திரன், அவ்விதம், காமராஜருக்குக் காணிக்கையாக்கிவிட்டு, அவருடைய திருவைப் பாராட்டும் பஜனை வேலையை மேற்கொள்ளும், துணிவு பெறவில்லை. முடிகிறதோ இல்லையோ, மூலைக்குச் செல்கிறோமோ, காலத்தின் துணைபெற்று வெல்லுகிறோமோ, அது வேறு பிரச்சினை - அது குறித்துக் கவலையற்று, தேர்தலில் "போட்டி யிடவே முடிவு செய்திருக்கிறோம். எனவே, காமராஜருக்கு சென்றேன், கண்டேன், வென்றேன், என்று கூறுவதற்கான வாய்ப்பும் பாழாகிவிட்டதே என்பதனால், கோபம் கொப்பளிக்கக் காரணம் இருக்கிறது - சுடு மொழி பேசுகிறார். பேசட்டும். பெரியார்மீது, இழிமொழி வீசக் காரணம் இருக்கிறதா! செய்நன்றி மறப்பவர்பற்றி வள்ளுவர் கூறியதைக் காமராஜருக்குக் கவனப்படுத்தும் ராஜவேலர்கள் கூடக் கிடைத்திருக்கிறார்களே! நான் எந்த நன்றியையும் கொல்வேன் என்று துணிந்து கூறுபவர் போலல்லவா, காமராஜர் பெரியார்மீதே கேலி வீசுகிறார். திராவிடர் கழகத்தின் வளர்ச்சியே பாழாவதானாலும் கவலையில்லை, நான் காமராஜரை ஆதரித்தே தீருவேன் என்று பெரியார் பேரார்வம் காட்டி வருகிறார். அவருக்குக் காமராஜர் காட்டும் மரியாதை, நன்றி, என்னவிதமாக இருக்கிறது? ஆச்சாரியார்மீது காமராஜருக்குக் கோபம் வந்தது. ஆச்சாரியார், காங்கிரசில் சர்வாதிகாரப் போக்கு வளர்ந்து விட்டிருக்கிறது, சீரழிவு ஏற்பட்டுவிட்டது என்று பேசுவது மறை முகமாகத் தன்னைக் கண்டிப்பது என்று காமராஜர் கருதுகிறார், அதற்காக ஆச்சாரியாரைக் கண்டிக்கக் கிளம்புகிறார். நாம் கண்டிக்கக் நேரிடும்போது, என்ன சொல்கிறோம், குல்லூகபட்டர் சாணக்கியர் வர்ணாஸ்ரமி சனாதன வெறியர் என்று பல கூறுவோம். தம்பி! நினைவில் வைத்துக்கொள். ஒரு குழந்தையைக் கொஞ்சுகிறோம் - செல்லப் பெயரிட்டு அழைத்துக் கொஞ்சுகிறோம், என்னென்ன சொல்கிறோம், வாடா என் குரங்கே! கிட்டே வாடா கோட்டானே! என்று சொல்வோமா! தங்கக் கட்டியே வைர மணியே வண்ண நிலாவே பேசும் ரோஜாவே என்று ஏதேதோ பேசுகிறோம். அதுபோலவே, கண்டிக்கும் போது, பயன்படுத்தப்படும் சொற்களையும், நினைவிலே கொண்டு, வா. தம்பி! இனிக்கேள், இந்த வேதனை தரும் விஷயத்தை. ஆச்சாரியாரைக் கண்டிக்கக் காமராஜர் கிளம்பினார்; என்ன கூறிக் கண்டித்தார், தெரியுமா? என்ன இந்த ராஜகோபாலாச்சாரியார் இப்படிக் கெட்டுவிட்டாரே! வர, வர, இராமசாமிப் பெரியார் தரத்துக்கு கீழே இறங்கிவிட்டாரே! என்று கண்டிருக்கிறார். எல்லா இதழ்களிலும், வெளியிட்டனர்; ஒன்றுக்கேனும் காமராஜர் மறுப்பு அளிக்கவில்லை. பெரியார் பற்றிக் காமராஜரின் எண்ணம் எப்படி இருக்கிறது என்பது தெரிகிறதல்லவா! எவ்வளவு ஏளனம் தொனிக்கிறது, அந்த ஏசலில் என்பதைப் பார்த்துவிட்டு, பெரியார் எத்துணை மும்முரமாக இந்தக் காமராஜருக்கு ஆதரவு திரட்டுகிறார் என்பதையும் பார்க்கும் போது, எனக்கு வேதனையாக இருக்கிறது, முன்னேற்றக் கழகத்தின்மீது இருக்கும் கோபம் காரணமாகக் கருத்துக் குழம்பியுள்ள தோழர்களுக்குத் தவிர, மற்ற தி.க. வட்டாரம், உள்ளபடி வேதனையும் வெட்கமும் அடையத்தான் செய்கிறது. பெரியார் என்பதற்குக் காமராஜர் கொள்ளும் பொருள், கெட்டுவிட்ட ஆச்சாரியார்! நியாயந்தானா! சகித்துக்கொள்ள முடிகிறதா! என்று கேட்கத் தோன்றுகிறது. எனக்குத்தான் அந்த வாய்ப்பும் உரிமையும் இல்லையே, நான் என்ன செய்வது! யாருக்கேனும் இருக்கக்கூடும், அவர்களேனும், கேட்கட்டும். ஆச்சாரியார் தரம் கெட்டநிலையில் இருக்கிறார் - இதை விளக்கக் காமராஜர் கூறுவது, பெரியார் அளவுக்கு இறங்கிவிட்டாரே, என்பது. இன்னும் வெளிப்படையாகவே பேசத் துணிந்து காமராஜர், தஞ்சையில் சென்ற கிழமை பேசும்போது சொல்கிறார். திராவிடர்கழகம் தேர்தலில் ஈடுபடாமலிருப்பது, என்மீது கொண்ட அன்பு காரணமாக அல்ல! தேர்தலில் நின்றால் தோற்றுவிடுவோம் என்று திராவிட கழகத்துக்கு நிச்சயமாகத் தெரியும். அதனால் பயந்துபோய், புத்திசாலித் தனமாக, தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று திராவிடர் கழகம் சொல்லுகிறது. இந்தக் கேலி மொழியா, கருப்பஞ்சாறாக இனிக்கிறது, என் அருமை தி.க. தோழர்களுக்கு! நண்பர்களே! நீங்கள் வலிய வலியச் சென்று வழங்கும் ஆதரவு, காட்டும் பரிவு, சொரியும் அன்பு, மொழியும் பாசம், படைத்திடும் நேசம், என்னவிதமான மனப்போக்கைக் காமராஜருக்கு ஊட்டிவிட்டது, பாருங்கள்! என்மீது உங்களுக்கு நிரம்பக் கோபம் இருக்கிறது, நான் அதனை உணருகிறேன், உள்ளம் வருந்தாத நாள் இல்லை - ஆனால் அதன் காரணமாக, காமராஜரிடமிருந்து இத்துணை இழி மொழிகளைக் கேட்டுக்கொள்ள வேண்டுமா!! எண்ணிப் பாருங்கள். ஏதோ நான் தமிழருக்குப் பாடுபடுபவன் என்பதால், பெரியார் என்னை ஆதரிக்கிறார் என்று காமராஜர் பேசியிருக்கக்கூடாதா! பெருந்தன்மை தெரிந்திருக்குமே! கேட்க, இனிக்குமே! அவர்களுக்குத் தேர்தலில் தோல்வி ஏற்படும் என்பது தெரியும் - அதனால் என்னை ஆதரிக்கிறார்கள் என்றல்லவா ஏசுகிறார். மருதப்பன், மாப்பிள்ளைத் தோழனாக இருப்பது ஏன் தெரியுமா? இந்த மணப் பெண் மருதப்பனைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறி விட்டாள் - எனவே, மருதப்பன், எனக்கு, மாப்பிள்ளைத் தோழனானான். இப்படிக் கலியாண வீட்டிலே பேசினால், போலீஸ் வந்து, கலகத்தை அடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் - நாட்டிலே காமராஜர் இதனைப் பதட்டத்துடன் பேசி வருகிறார் நண்பர்களே! நீங்களோ, நெறித்த புருவத்தினராகிறீர்கள், என்னைக் காணும்போது!! யார் அழைத்தார்கள்? தானாக வந்தார்கள்! வேறு வழி என்ன இருக்கிறது? வேறு வேலை என்ன இருந்தது? சும்மாவா, வந்தார்கள்! என்று, இந்த ஏச்சு, மளமளவென்று வளரும் - ஒரு நாள் உட்கார்ந்து இதற்காக உளம் வருந்த நேரிடும். மூவர் முரசு அறைந்ததில், என்னைப் பொறுத்தமட்டில், இந்தப் புதிய கட்டத்தில் காமராஜர் காலடி எடுத்து வைப்பது தெரிகிறது. இவ்வளவு அதிகமாக நம்மோடு பயணம் நடத்தியாகி விட்டது. இனி இவர்களை என்ன கண்டித்தாலும் கோபித்துக்கொண்டு எங்கே போகமுடியும்! என்று, காமராஜர் எண்ணிக்கொள்வதாகத் தெரிகிறது. தம்பி! உள்ளபடியே, காமராஜரின் இந்த இரு தாக்குதலையும் எடுத்துக்காட்டி சில காங்கிரஸ் நண்பர்களே ஏளனம் செய்தனர்; நான் தலையைத் தொங்கவிட்டுக் கொள்ளாமல் என்ன செய்வது! எனவேதான், இத்தாலி நாட்டிலே இரு வெறியர்கள் பல சிறார்களைச் சித்திரவதை செய்யக் கிளம்பியபோது, வீரமாகப் போரிட்ட வனிதைபற்றிப் படித்தபோது, எனக்கு, இங்குள்ள அரசியல் சூழ்நிலையும், அதிலே நாம் மேற்கொண்டுள்ள பணியும், நினைவிலே வந்தது. உன்னிடம் சொன்னேன்; வேறு யார் தம்பி, இருக்கிறார்கள் நான் கூறுவதைக் கேட்க! அன்பன், 11-11-’56 இயற்கை கொஞ்சுகிறது ! இல்லாமை கொட்டுகிறது !! உழைப்பும் சிக்கனமும் - "தினமணி’யின் விளக்கம் - தமிழ்நாட்டுத் தொழில் நிலை தம்பி! கடந்த ஒரு திங்களாகத் தமிழகத்தின், மாமழை பொழிந்த வண்ணமிருப்பதனால், இப்போது எங்கு பார்த்தாலும், இயற்கை கொஞ்சுகிறது - ஏறி குளங்களில் எழில் வழிகிறது - வயல் வரப்பு களிலே வண்ணம் காணப்படுகிறது - மரம் செடி கொடிகள் யாவும் பசுமை பொழிகின்றன. பாங்கான காட்சி தெரிகிறது. வரண்டுகிடந்த இடங்கள், வெடித்துக்கிடந்த வயல்கள், தூர்ந்து கிடந்த வாவிகள் வாய்க்கால்கள் எல்லாம் புதுக்கோலம் காட்டி நிற்கின்றன. எங்கள் மாவட்டத்தில், பாலாறுகூட “கலகலென’ச் சிரித்துவிட்டது என்றால் பாரேன்!! பத்துப் பதினைந்து ஆண்டுகளாக, ஈரம் காணாது, இருந்த ஏரிகளெல்லாம் இன்று நிரம்பி வழிகின்றன.”வெறிச்சென்று’ இருந்துவந்த வெளிகள் பெருமழையால் வெள்ளக்காடாயின; மழை நின்றதும், சதுப்பாகி, இப்போது ஈரம் அழகளிக்கும் தோற்றம் தெரிகிறது. வரண்ட மனதினர் போன்றிருந்து வந்த குன்றுகளே இப்போது வளமளிக்கும் வகை பெற்ற நிலையில் இருக்கின்றன! அடவிகளின் நிலையைக் கூறவா வேண்டும்! நள்ளிரவில், நான் நண்பர்களுடன் கூட்டம் முடித்துக்கொண்டு வருகிறபோது, “சலசல’ வென்ற ஒலி சூழ்ந்து கேட்கிறது! கதிரவனின் பொன்னிறக் கதிர் கிளம்பியவுடன், இயற்கையின் கோலம் காண்கிறேன்; உண்மையிலேயே இயற்கை கொஞ்சுகிறது. துரைத்தனத்தாரின் அலட்சியப்போக்கின் காரணமாகச் சிற்சில இடங்களில்”உடைப்புகளும்’ “சேதங்களும்’ ஏற்பட்டுவிட்டன; பட்டிகள் பலவற்றிலே மக்கள் அல்லற்பட நேரிட்டது; எனினும் மொத்தத்திலே, இயற்கை எழிலுடன் காணப்படுகிறது! இந்தப் பேருண்மை தெரியாமலா,”மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!’ என்று மனம் கனிந்து பாடினார் இளங்கோ அடிகள்! வெண்ணிற மேகங்கள், உலவிய வண்ணம் உள்ளன - ஆடலழகிகள் நீலநிறத் திரைகொண்ட அரங்கிலே அன்னமென ஊர்ந்தும், அழகு மயிலென நடந்தும் காட்டும் பான்மைபோல! சூல் கொண்ட மங்கை புது எழில் பெறுதல்போல, மழை முத்துக்களைக் கருவிற்கொண்டு கருநிறம் பெறுகின்றன - காணக் காட்சியாகின்றன - பிறகு, முறையும் நெறியும் மறந்தோரின் பிடியிலே சிக்கிவிட்ட நாட்டவருக்கு நாமேனும் இதம் அளித்திடல் வேண்டுமே என்ற நோக்கு கொண்டதுபோல, இயற்கை தன் அன்பைச் சொரிந்திடக் காண்கிறோம். வாரி வாரி இறைக்கிறார்கள் தம்பி, பணத்தை, கோடிக் கணக்கில். கிராமப்புனருத்தாரணம் என்கிறார்கள், தேசிய விஸ்தரிப்புத் திட்டம் என்கிறார்கள், சீரமைப்பு என்று செப்பு கிறார்கள், சமாஜப் பணி, மாணவர் சேவை, என்று ஏதேதோ பேசுகின்றனர் - எனினும் இயற்கை மழை பொழிந்தானதும், தம்பி, பல கிராமங்கள் தீவுகளாகிவிடக் காண்கிறோம் - பாதைகள் வாய்க்கால்களாகி விடுகின்றன - கிராமங்கள் சகதிக் காடாகி விடுகின்றன! அந்த இலட்சணத்திலே இருக்கிறது, துரைத்தனம் அமைத்துள்ள பாதைத் தொடர்புகள்! பாலங்கள் ஓலமிடுகின்றன! மழை நீர் ஒழுங்காகச் செல்வதற்கான வழிகால்கள் சரியாக அமைக்காததால், ஆங்காங்கு குப்பை கூள மேடுகள் கிளம்புகின்றன! இத்தனை கேடுபாடுகளையும் நாம் மறந்திடச் செய்யும் விதத்தில், இயற்கை கொஞ்சுகிறது - இன்ப வாழ்வுக்கான வழி அளித்திருக்கிறேன் - வளம் கொழித்திட வகை தந்துவிட்டேன் - மகிழ்ச்சிப் பெருக்கெடுத்திடவேண்டும் என்பதற்காக மாமழை பெய்வித்துள்ளேன், மாந்தரே! காண்மின்! என்மீது குறை ஏதுமில்லை அறிமின்! வாழ்வில் இன்பம் பெறுவதற்குத் தடையாக நான் இல்லை என்பதை உணருமின்! உமக்கு உள்ள கொற்றம், குடிமக்களின் நல்வாழ்வு காணும் குறிக்கோள் கொண்டதாக அமைந்தால், உமக்கு வாழ்வில் இடர் ஏதும் வருவதற்கில்லை. என் கடமையைக் கனிவுடன் செய்துள்ளேன், காண்மின்! அதோ அருவி! இதோ ஏரி, குளம், மடுவு, வாய்க்கால்! எங்கும் பசுமை! வளம்பெறுவதற்கான வாய்ப்புகள்!! - என்று இயற்கை பெருமிதத்துடன் பேசுகிறது!! ஆமாம், தம்பி, இயற்கை கொஞ்சுகிறது, எனினும், இல்லாமை கொட்டுகிறது! என் பயணங்களில் நான் இரண்டையும் காண்கிறேன்! எல்லோரும் இன்புற்று வாழ்வதற்குத் தேவையான அளவு செல்வம் செழித்திடத்தக்க சூழ்நிலையை இயற்கை அளிப்பதும் தெரிகிறது! மிகப் பெரும்பாலான மக்கள், இல்லாமையால் இடர்ப்படுவதும் தெரிகிறது!! இயற்கையின்மீது குற்றம் காண்பதற்கில்லை. நில நடுக்கமேற்பட்டு நாசம் விளைதல், நெருப்பைக் கக்கி நாசம் ஏவுதல் போன்றதேதுமில்லை! வெள்ளச் சேதம் சிற்சில இடங்களில் காண்கிறோம். அரசுக்கு ஆற்றல் இருந்தால் தடுத்து, சேதம் ஏற்படாது செய்திருக்க முடியும் என்பதும் தெரியத்தான் செய்கிறது. இயற்கை கொஞ்சுகிறது, இல்லாமை கொட்டுகிறது! காரணம் என்ன? வயலிலே பசுமை தெரிகிறது, உழைப்பாளியின் உடலிலே பசைகாணோம்! இயற்கையின் அழகொளி எங்கும் தெரிகிறது! ஏழையின் கண்களோ இருண்டுதான் உள்ளன, ஒளி இல்லை! இயற்கை வளமளிப்பதாக இருந்தும், இல்லாமை இந்நாட்டு மக்களிலே மிகப் பெரும்பாலோரைக் கொட்டுகின்ற இந்த நிலைக்குக் காரணம் யாது, இந்த நிலையினை மாற்றிட வழி என்ன, இந்த வழியினைக் கண்டறிந்து கடமையினைச் செய்து வெற்றிகாணும் பொறுப்பை ஏன் துரைத்தனம் ஏற்றுக்கொள்ள வில்லை, அங்ஙனம் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளாத துரைத்தனத்தை, மக்கள் எங்ஙனம் அனுமதித்துள்ளனர், ஏன் சுமந்து கிடக்கின்றனர், என்ற இன்னபிற எண்ணங்கள் எழுந்த வண்ணம் இருக்கும், பயணத்தின் போதெல்லாம். பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு, சுற்றுப்புறங்களிலிருந்து, பத்து, இருபதுகல் தொலைவிலிருந்தெல்லாம் இளைஞர்கள், இருவர் மூவர் உந்து வண்டிகளில் வந்து குழுமிடக் கண்டு களித்ததுண்டு; இப்போது இலட்சியம் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மட்டுமல்ல, தம்பி, உழைத்து உழைத்து உருக்குலைந்து போயிருக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள், தாய்மார்கள் வருகிறார்கள்! கண்டதும் எனக்குக் கவலை குடைகிறது! ஆமாம், கவலைதான்! அவர்கள், உழைப்பின் பெருமையை உற்சாகத்துடன் பேசி வரும் தலைவர்களின் துரைத்தனத்தினால், என்ன கதிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது, கவலை குடையாமலிருக்க முடியுமா! கவனித்தாயா, தம்பி, இயற்கை கொஞ்சுகிறது, உழைப்பு நிரம்ப இருக்கிறது, இருந்தும், இல்லாமை கொட்டுகிறது! மானும் மயிலும் மட்டுமல்ல, பாம்பும் புலியும் பிறவும் பெறுகின்ற வாழ்க்கை வாய்ப்புகள்கூட, இந்தக் கள்ளமில்லா உள்ளம் படைத்த மக்களுக்கு, துரைத்தனம் அளித்திட மறுக்கிறது. அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவே மறுக்கிறது. பட்டினியும் பசியும், வேலையில்லாக் கொடுமையும் இருந்திடல், அறமல்ல, அந்த அவல நிலையைக்கண்டும் மாற்றிட முனையாத துரைத்தனம், நாகரிகமுள்ளதென்று எவரும் கூறார். இங்கோ இயற்கை அன்பு சொரிகிறது, மக்கள் வியர்வையைக் கொட்டுகிறார்கள். எல்லாம் பதவியில் உள்ளோருக்கும் அவருக்குப் பராக்குக்கூறி வாழ்ந்திடும் செல்வர்களுக்கும் குளித்திடப் பன்னீர் ஆகிறது; உழைத்தும் வாழ்வில் சுகம்காணா மக்கள், கண்ணீர் பொழிகின்றனர்; கண்ணீர்த்துளிக் கட்சி என்று நம்மைக் கேலி செய்வதாக எண்ணிக்கொண்டு சிலர் செப்பு கின்றனரல்லவா, இந்த மக்கள், கண்ணீர்த்துளி கட்சி என்றால், அது நம்கட்சி, இனம் இனத்தோடு என்றபடி கண்ணீர் கண்ணீருடன் கலந்து உறவாடலே முறை என்று எண்ணிக் கொண்டனர்போலும்; பல்லாயிரக் கணக்கிலே கூடுகின்றனர். ஏத்தாபூர் என்றோர் சிற்றூரில் நான் பேசிக்கொண் டிருந்தேன் - நண்பர் N.V. நடராசன் சென்ற கிழமை முழுவதும், என்னைக் “கிட்டி’ போட்டு வேலை வாங்குவது என்பார்களே, அதுபோல வேலை வாங்கினார்; செல்லுமிடமெல்லாம், தேர்தல் நிதி திரட்டு, நன்கொடைகள், மேலும் மேலும் கேட்டு வாங்கு, பொதுச்செயலாளர் ஐந்து இலட்சம் கேட்கிறார், நிதிதிரட்டு, உடனே, இங்கேயே, பணம் திரட்டிக்கொடு என்று”சிமிட்டா’ கொடுத்தபடி இருந்தார்; நான்கூட குடந்தைக் கூட்டத்தில் சொல்லியும் விட்டேன். N.V. நடராசன் என்பதற்குப் பொருள் என்ன தெரியுமா நண்பர்களே! நன்கொடை வாங்கும் நடராசன் என்பது பொருள் - என்று! ஏத்தாபூர் கூட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்த போது, கிராமத்து உழைப்பாளி ஒருவர் - முப்பது வயது இருக்கலாம் - அவர் மேனி உழைப்பால் கருத்து இருந்தது போலவே, அவர் கட்டியிருந்த ஆடை காலத்தால் கருப்பாகிக் கிடந்தது - மேடைக்கு வந்தார் - தேர்தல் நிதி என்று கூறி, தொகையின் அளவு கூறாமல் பணம் கொடுத்தார் - தம்பி, ஒரு அணா!! ஆமாம்! அவ்வளவுதான் இருந்தது அந்த உத்தமனிடம். அதையேனும் கொடுத்தாக வேண்டும் என்ற கடமை உணர்ச்சி இருந்தது அந்தக் கண்ணியவானுக்கு. கனவான்களுக்கு உதிக்க முடியாத கடமை உணர்ச்சி அல்லவா அது! அந்த ஒரு அணாவை, நான் ஒரு இலட்சமாக மதித்து மகிழ்ந்தேன். உபசாரப்பேச்சு அல்ல! அந்த ஒரு அணாவை என்னிடம் கொடுக்கும்போது, நான் அந்த உழைப்பாளியின் முகத்தை நன்றாகக் கவனித்தேன் - இதயம் ஒரு அணாவாக வடிவெடுத்து வந்ததை உணர்ந்தேன். அன்று இரவு பசி நீக்கிக்கொள்ளப் பயன்பட்டிருக்கும், களைப்புப் போக்க தேனீர் அருந்தப் பயன்பட்டிருக்கும், ஆனால் அந்தக் கண்ணியமிக்கவன், நாடு மீளவும் கேடுமாளவும் நான் என்னாலான காணிக்கையை இதோ செலுத்துகிறேன் என்ற எண்ணத்துடன் தருகிறான் ஒரு அணா! இத்தகைய நல்ல மனம் படைத்தோரெல்லாம், இயற்கை கொஞ்சுகிறது, உழைப்பு நிரம்ப தரப்படுகிறது என்ற நிலை இருந்தும், இல்லாமையால் கொட்டப்படுகிறார்கள். இவர்களை ஆளும் காங்கிரஸ் கட்சியினரோ, ஏழைகளை ஈடேற்ற, அவர்களுக்குத் தொழில் தந்து துயர்துடைக்க, ஏற்கனவே இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவிட்டு விட்டார்கள், இன்னும் ஒரு ஆறு ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப் போகிறார்கள்!! உழைத்து உருமாறிக் கிடக்கும் உத்தமர்களே! உங்களுக்கு உள்ள தரித்திரத்தைப் போக்க, துரைத்தனத்தார் இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். அறிவீரா? என்று நான் பொதுக்கூட்டங்களில் எடுத்துச் சொல்லிவிட்டு, இவர்களின் முகத்தைப் பார்க்கிறேன் - திகைத்துப் போகிறார்கள் இந்த மக்கள். இரண்டாயிரம் கோடியா! எமக்காகவா! ஏற்கனவே செலவிட்டாகிவிட்டதா! நிஜமாகவா? எனய்யா இப்படிக் கேசெய்கி றீர்! வெந்த புண்ணிலே வெந்தழலைப் போடுகிறீர்! பகல் பட்டினி இராப்பட்டினி என்ற நிலையில் இங்கு நாங்கள் அவதிப்படுகிறோம், எங்களிடம் வந்து இரண்டாயிரம் கோடி ரூபாய் எமக்காகச் செலவிட்டாகிவிட்டதென்று சொல்கிறீர்களே என்று, கேட்பது போலிருக்கிறது அவர்கள் பார்வை! இந்த இலட்சணத்தில் துரைத்தனத்தை நடத்தும் கட்சியினர் கல்கத்தாவில் கமிட்டி நடத்தி, மக்களுக்குப் புத்திமதி கூறுகின்றனர்! என்ன அறிவுரை அளித்துள்ளனர் அறிவாயோ, தம்பி, கேள்! கேட்டால், கைகொட்டிச் சிரிக்கத் தோன்றும். சிக்கனமாக வாழவேண்டும் செலவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். இதுதான், கல்கத்தாவில் சமதர்மச் சீமான்கள் கூடிக் கலந்து பேசித் தயாரித்த புத்திமதி. வயிறாரச் சோறின்றி, மானமார ஆடையின்றி, குடியிருக்கக் குச்சிலின்றி, நோய் தீர மருந்தின்றி இருக்கிறார்களே இவர்களைப் பார்த்துத்தான் காங்கிரஸ் தலைவர்கள் சிக்கனம் என்ற அறிவுரை கூறுகிறார்கள். மிக மிக நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும் இதற்கு! இருக்கிறது, இத்தகைய நெஞ்சழுத்தம், சீமான்களுக்கு! "எப்போதும், உனக்கு இந்தப் பஞ்சப்பாட்டுதான்! சாமி! சாமி! பணம்! பணம்! பணம்! செச்சேச்சே! இப்படியாடா உயிரை வாங்குவது. கையைப்பிடிப்பது, காலைபிடிப்பது பணத்தை எப்படியாவது, கெஞ்சிக் கூத்தாடிப் பெற்றுக்கொள்வது; பிறகு கண்ணை மூடிக்கொண்டு, வீண்செலவு செய்வது இதே உனக்கு வழக்கமாகிவிட்டது.’’ என்று எலும்பு உடையப் பாடுபடும் ஏழை உழவனுக்கு இதோபதேசம் செய்துகொண்டே, வெற்றிலைச் சாறைக் காரித்துப்புகிறாரே, வடபாதிமங்கலத்தார், குன்னியூரார், கோட்டையூரார், கொடிக்காலுடையார், அந்தச் சாற்றிலே, குங்குமப்பூவும் கிராம்பும், ஏலக்காயும் சாதிக்காய் ஜாபத்திரியும், இருக்கிறது, தம்பி! புளித்துப்போன கஞ்சிக்கு, உறைப்புக் குறைந்துபோன மிளகாய்த் துண்டைத் தேடித் தவிக்கும் உழைப்பாளிக்கு, வீண் செலவு செய்யாதே என்று புத்தி கூறுகிறார்கள். கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டியில், இதே உபதேசம் தரப்பட்டது. தினமணிக்கே பொறுக்கவில்லை. எவ்வளவு எரிச்சல் ஏற்பட்டிருந்தால், ஆளவந்தார்களின் இருமல் உறுமலைக்கூட இன்னிசை என்று கூறி, கூடச் சேர்ந்து தாளம் தட்டும் தினமணிக்கே கோபம் ஏற்பட்டு, வீண் செலவு செய்யாதீர் என்று ஊராருக்கு உபதேசம் செய்வது இருக்கட்டுமய்யா ஊராள்வோரே! முதலில் உங்கள் ஊதாரித்தனத்தைச் சற்றுக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று கூறும், என்பதை எண்ணிப்பார், தம்பி. "பொதுமக்களுக்கு உபதேசம் செய்யும் அநாவசியச் செலவுத் தவிர்ப்பையும் சிக்கனத்தையும், மத்திய சர்க்காரும் ராஜ்ய சர்க்கார்களும் முதலில் தாமே பின்பற்றி பிறருக்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டும்’’ தினமணியின் திருவாசகத்தில் ஒரு துளி இது! என்ன பொருள் கிடைக்கிறது இதிலிருந்து? ஊதாரித் தனமாகச் செலவிடுகிறது சர்க்கார் என்ற உண்மை. எப்படிப்பட்ட சர்க்கார் இப்படிப்பட்ட ஊதாரித்தனமாக நடந்து கொள்கிறது? எம்மை மிஞ்சக்கூடியவர்கள் யாரும் இல்லை. எமக்கு நிகர் யாமே! - என்று தம்பட்டமடிக்கும் கட்சியினர். உலகத்திலேயே உத்தமர் என்று பெயரெடுத்த காந்தியாரால், மாணிக்கங்களாக்கப் பட்ட மண்ணாங்கட்டிகளெல்லாம், தம்மை இயற்கை மாமணிகள் என்று கூறிக்கொள்கின்றன! அவர்தம் ஆட்சியிலே நடைபெறும் ஊதாரித்தனம், தினமணிக்கே பிடிக்கவில்லை; குமட்டலெடுக்கிறது!! தினமணிக்கு ஏதோ கோபம், அதனால்தான் "எதிர்க்கட்சி’ பேசுகிறது, என்று எவரும் எண்ணிவிடக்கூடாது என்பதற்காக, மேலும் விளக்கம் அளிக்கிறது, அந்த ஏடு. "சர்க்கார்களின் முயற்சிகளில் வீண்செலவு அம்சம் ஒரு அளவு இருக்கிறது என்பது உலகமறிந்த விஷயம். தணிக்கைக் கமிட்டிகள் இவற்றை ஒருவாறு புலப்படுத்தியுள்ளன. இவற்றிற்குமேலாக தண்டச் செலவுகளும் இருக்கக்கூடும். ஏராளமான அதிகாரிகளும், கமிட்டிகளும், கோஷ்டிகளும், ஜமாக்களும், ஆலோசனைகளும், அதிகாரிகளின் மகாநாடுகளும், நடந்துகொண்டே இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அடிபட்டுப் போகவேண்டும். இதில் ஏற்படும் வீண்செலவும் வேலை நஷ்டமும் கொஞ்சநஞ்சமல்ல.’’ தம்பி! இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது! இந்த நிலைமைக்குக் காரணமாக உள்ளவர்கள், "ஜமாக்கள்’ அமைத்துக்கொண்டு தண்டச்செலவு செய்து கொண்டு இருக்கிறார்கள். இது உலகறிந்த விஷயம் என்று தினமணி கூறுகிறது. ஒவ்வொரு முறை தணிக்கைக் கமிட்டி தன் கருத்துரையை வழங்கும்போதும், நடைபெற்ற ஊழல்களை இடித்துக்காட்டுகிறது! எனினும், தண்டச் செலவும், தர்பார் போக்கும் துளியும் குறைவது கிடையாது. எதற்கு எடுத்தாலும் ஒரு கமிட்டி! எந்த விஷயத்தைப் பற்றிப் பரிசீலிக்கவும் ஒரு "ஜமா’ - ஒவ்வொன்றுக்கும் படிச்செலவு! ஒன்றை ஒன்று மிஞ்சும் விதத்தில் செலவு! ஒரு கமிட்டியின் கருத்துக்கு நேர்மாறாக மற்றோர் கமிட்டியின் கருத்து! இந்தவிதமான ஆட்சியைச் செய்துகொண்டு, பணத்தைப் பாழாக்கி வருகிறவர்கள்தான், பாட்டாளிகளுக்கு சிக்கனமாக வாழ்க்கை நடத்துங்கள்! வீண்செலவு செய்யாதீர்கள்! என்று உபதேசம் செய்கிறார்கள். இந்த அபாரமான கண்டுபிடிப்புக்காகக் கல்கத்தாவில் கூடினர்! நாடெங்கும் கொட்டமடித்துக் கிடக்கும் எந்தக் காட்டரசனுக்கும் தெரியுமே இந்த உபதேசம். பொதுப்படையாகப் பேசுவது போதாது - சுட்டிக்காட்டி யாவது இவர்களைத் திருத்தவேண்டும் என்றுகூடத் தினமணிக்குத் தோன்றி இருக்கிறது. எனவே, துரைத்தனம், எப்படியெப்படி தண்டச் செலவு செய்கிறது என்பதைப் படம் பிடித்துக்காட்டவே முற்பட்டிருக்கிறது. "ஒரு சிறிய பள்ளிக்கூடத்துக்கு கால்கோல் விழா, சிறிய ஓடைப்பாலத் திறப்புவிழா போன்ற சாதாரண ஸ்தல பணிகளுக்கு மந்திரிகள் அழைக்கப்படுவதும், அநேகமாக எல்லா ஜில்லா அதிகாரிகளும் வரவேண்டியிருப்பதும், சகஜமாகிவிட்டது. இதனால் ஏற்படும் செலவுகள் முற்றிலும் அநாவசியமானவை’’ இவ்வளவு பச்சையாக எடுத்துக் காட்டியாவது, திருத்தலாம் என்று தினமணி கருதுகிறது. அமைச்சர்களுக்குக்கூடச் சிறிதளவு கோபம் உண்டாகும். திண்ணைப் பள்ளிக்கூடத் திறப்பு விழாவும், ஓடைப்பால அமைப்பு விழாவுக்கும் நாம் சென்று வீண் செலவிடுகிறோம் என்று தினமணியே கேலிசெய்கிறதே என்று வருத்தமாக இருக்கும். ஆனால் இதுபோன்ற ஒவ்வோர் விழாவையும், மக்கள் காண நேரிடும்போது எத்துணை வேதனை அடைகிறார்கள் என்பதை இந்த அமைச்சர்கள் உணர்ந்தால்தானே! எத்தனை எத்தனை வீண் விழாக்கள்! தண்டச் செலவுகள்! எத்தனை கால்கோள் விழாக்கள்! கட்டடம் என்றென்றும் எழுப்பப் போவதில்லை என்பது, ஊராருக்கும் தெரியும், இவர்களும் அறிவார்கள், எனினும் அதற்கும் ஓர் விழா! மக்களைக் காணவும், மக்கள் முன்பு தமக்குக் கிடைத்துள்ள புதிய மதிப்பைக் காட்டிக்கொள்ளவும், மாவட்ட கலெக்டர் முதற்கொண்டு, தமது ஏவலர்களாகக் கைகட்டி வாய்பொத்தி நிற்பதைக்காட்டவு மன்றோ இந்த விழாக்கள் நடக்கின்றன. வீண் விழாக்கள்! தண்டச் செலவு! என்று கண்டிக்கும் இதே தினமணிகள், இந்த விழாக்களின் கோலத்தை விளக்கத் தனி நிருபர்களை அனுப்புவதும், படம்போட்டுப் பாராட்டுவதும் கொஞ்சமா! இப்போது, நாற்றம் தாளமுடியாததாகிவிட்டதால், இந்தத் தண்டச் செலவுகள் ஏன் என்று கேட்டுத்தீர வேண்டி வந்தது இந்த ஏட்டுக்குக்கூட! "பிறர் நாலணாவில் செய்யக்கூடியதை சர்க்கார் செய்தால் எட்டணா ஆகிறது என்ற பழிச் சொல்லுக்கு இடங்கொடுக்கலாகாது. தாம் தரும் வரிப்பணம் அதிகபட்ச சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுகிறது என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்படவேண்டும்’’ என்று "இரத்தினச் சுருக்கமாக’ இன்றைய ஆட்சிமுறையின் யோக்கியதையைத் தினமணி அம்பலப்படுத்துகிறது. இன்றுள்ள ஆட்சிமட்டும் காங்கிரஸ் கட்சியுடையதாக இல்லாமலிருந்தால், தினமணியின் எழுத்திலே தீப்பொறி காண்போமே! ஜஸ்டிஸ் கட்சிக் காலமாக இருந்தால், என்னென்ன எழுதத்தோன்றும், இந்தத் தேசிய ஏடுகளுக்கு! ஏழை அழுகிறான்; அவனைக் கொள்ளை அடித்துக் கொட்டமடிக்கிறார்கள். கமிட்டி கமிட்டி என்று அழைத்துக்கொண்டு, ஏழையின் பணத்தைப் பகற்கொள்ளை அடிக்கிறார்கள். திறப்பு விழாவாம்! மூடு விழாவாம்! இதற்கு பணம் கொள்ளை போகிறது! இந்தத் "தூங்குமூஞ்சிகளை’ யார் காண விரும்புகிறார்கள்! எதற்காக இதுகள் விழா நடத்த வரவேண்டும்! நாலணா செலவுக்கு நாலு ரூபாய் எடுத்துக்கொண்டு கொழுத்துவிட்டார்கள்! என்று காரசாரமாக, நடையை நாராசமாக்கி எழுதுவர்! இப்போது தமது சொந்தக்கட்சியே இத்தகைய கேவலமான நடத்தையில் ஈடுபடுவதால், தினமணியால், இப்படியும் அப்படியுமாகத்தான் இடித்துக்காட்ட முடிகிறது. ஆனால், உண்மையை ஊரார் அறிந்து கொள்வதற்கு இவ்வளவே போதும் இயற்கை கொஞ்சுகிறது, இல்லாமை கொட்டுகிறது, அதற்கான காரணத்தில் ஒன்று ஊராளும் பொறுப்பும் வாய்ப்பும் ஒரு ஊதாரிக் கூட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பது. இதனை உணர்ந்துகொள்ள, தினமணியின் கண்டனம் போதுமானதுதான். இம் முறையில் ஊதாரித்தனமாக நடந்துகொள்ள எப்படி முடிகிறது? கேட்பதற்கு நாதி இல்லை! தினமணி எழுதுவதுகூட குதிரை பறிபோன பிறகு கொட்டிலைப் பூட்டும் கதை போன்றதுதான். கமிட்டிகள், ஜமாக்கள், விழாக்கள், வீண் செலவுகள், இவை கிளம்பும் போதே, ஆட்சி மன்றத்திலே, கேள்விக் கணைகளைப்பூட்டி, தடுத்து நிறுத்த எதிர்க்கட்சி எங்கே இருக்கிறது? கடிவாளம் இல்லை, குதிரை, காடுமேடு தாவிச் செல்கிறது!! எதிர்க்கட்சி இல்லை, எனவே, ஊரார் பணம் ஊதாரிச் செலவுக்குப் பாழாக்கப்படுகிறது!! இரண்டாயிரம் கோடி என்ன - இருபதினாயிரம் கோடி செலவானாலும், இப்படிப்பட்ட துரைத்தனம் நடத்துவோரின் தர்பாரில் நாடு சிக்கிக்கிடக்கிறவரையில், இல்லாமை கொட்டத்தான் செய்யும் - இதனைத் தம்பி! அரசியல் விளக்க ஏடுகள் படித்தவர்கள் அறிந்து கொண்டிருப்பதைவிட, நான் காட்டினேனே, ஒரு அணா கொடுத்த உழைப்பாளி, அப்படிப் பட்டவர்கள் மிக நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். இதுதானா இரகசியம்? நீங்கள், இல்லாமைக்குக் காரணமாக இருப்பவர்கள் இந்த ஊதாரித்தனமிக்க ஆட்சியாளர்கள் என்பதை எடுத்துரைக்கிறீர்களா - ? இதைக் கேட்கத்தான், திரள் திரளாக மக்கள் கூடுகின்றனரா? அப்படியானால், நாங்களும் அதனையேதானே செப்புகிறோம்? உம்மைவிடச் சற்று அதிகமான வீரதீரத்துடன், காரசாரமாகவே சொல்கிறோமே… என்று கேட்கும், மற்ற மற்ற கட்சிகளைக் காண்கிறேன். தம்பி! இயற்கை வளமளித்தும், உழைப்பு உற்பத்தி அளித்தும்கூட, இல்லாமை கொட்டுவதற்குக் காரணம், ஆட்சியாளர்களின் ஊதாரித்தனம் மட்டுந்தான் என்று கூறவில்லை. பல காரணங்களிலே இது ஒன்று என்பதை விளக்கி விட்டு, ஊதாரித்தனமாக நடந்துகொள்ளாதீர்கள், ஊருக்கும் பயந்து ஆட்சி நடத்துங்கள், ஏழையின் வயிறு எரியச் செய்யாதீர்கள், என்று அறிவுரை கூறித் திருத்த முற்பட்டாலும், ஆட்சிக் குழுவினரையேகூட மாற்றி அமைத்தாலும், பலன் கிடைக்காது; ஏனெனில், நந்தம் நாட்டைப் பொறுத்த மட்டில், ஆட்சியிலே வீற்றிருப்போருக்கு, அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் மிகமிகக் குறைவு; ஆட்டிப்படைத்திட டில்லியிலே ஓர் பேரரசு இருக்கிறது, இங்கு உள்ளது, பேருக்குத்தான் அரசு என்ற உண்மையை எடுத்துக் காட்டுகிறோம். இதுபோது காணக்கிடைக்கும் இயற்கை அழகு ஒருபுறம் இருக்கட்டும், தம்பி, திராவிடம் முழுவதும்கூட அல்ல, தமிழகம் வரையிலேயே வேண்டுமானால், பார்க்கச் சொல்லு, பரந்த மனப்பான்மையினரை, என்ன வளம் இங்கு இல்லை? என்ன பொருள் கிடைக்கவில்லை? தமிழ்நாடு எல்லை, சிதைக்கப்பட்டு, உரிய இடங்கள் பறிக்கப்பட்டுப் போன நிலையிலும், தனி அரசு செலுத்தி மதிப்புடன் வாழ்ந்து வரும் பல சுதந்திர நாடுகளைவிட, அளவிலும் வளத்திலும் பெரிதாகவே இருக்கிறது. 50,170 சதுர மைல் அளவுள்ளது இன்றைய தமிழகம்! தமிழகத்து மக்கள் தொகை மூன்றுகோடி - இதில் 2,65,46,764 மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர். விளைநிலம் மட்டும் 15,878,000 ஏக்கர் உள்ளன என்று புள்ளி விவரத் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். விளைநிலம் ஆகத்தக்கதும், இன்று ஆட்சியாளரின் அசட்டையால் கரம்பாகிக் கிடப்பதும் மட்டும் 37 இலட்சம் ஏக்கருக்கு மேலிருக்கிறதாம். காட்டு வளத்துக்கும் குறைவு இல்லை. விஞ்ஞானத் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான கனிப் பொருள்கள் ஏராளமாக உள்ளன, பூமிக்கடியிலே தூங்கிக் கிடக்கின்றன! இன்று புதியமுறை தொழில்களுக்காக, குரோமைட் மோனசைட் சில்மனைட் கார்னெட் என்றெல்லாம் கூறுகிறார்களே அப்பொருள்களும், உலகத்தின் போக்கையே மாற்றி அமைக்கத்தக்கதான தோரியம் யுரேனியம் ஆகியவைகளும் தமிழகத்தில் ஏராளமான அளவுக்குக் கிடைக்கின்றன. பொன்னும் மணியும் ஒரு நாட்டுக்கு வாழ்வும் வளமும் அளித்திடாது; ஆனால் எந்த நாடும் பொன்னாடு ஆகத்தக்க நிலையை ஏற்படுத்த இரும்பும் நிலக்கரியும் இருக்கவேண்டும். இந்த இரு செல்வங்களையும் தமிழகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரியின் பாங்கினைப் பாராட்டாத நிபுணர் இல்லை; மிக உயர்தரமானது என்கின்றனர்; கிடைக்கும் அளவும் மிகப்பிரம்மாண்டமானது; பல நூற்றாண்டுகள் கிடைக்குமாம்! கஞ்சமலை, கோதுமலை, கொல்லிமலை, கொத்தளமலை, பச்சைமலை, பெருமாமலை, தீர்த்தமலை, சித்தேரிமலை ஆகிய இடங்களில், இரும்பு சிறைப்பட்டிருக்கிறது, விழிப்புற்று எழுச்சிபெற்ற தமிழகம் அமையுமானால், தூங்கிக் கிடக்கும் இந்தக் கருப்புத் தங்கத்தை வெட்டிக் கொணர்ந்து, தமிழகத்தைத் தொழிலகமாக்கிச் செழிப்பினைக் காணலாம். சேலம் மாவட்டத்திலே இரும்பு! தென் ஆற்காடு மாவட்டத்திலே நிலக்கரி! சேலத்து இரும்பு 30 கோடி டன் என்கிறார்கள். நெய்வேலி நிலக்கரி 100 சதுரமைல் அளவுக்கு அடைந்து கிடக்கிறதாம், 200 கோடி டன் அளவு நிலக்கரி உள்ளது என்கின்றனர். சேலம் சேர்வராயன் மலையில் பாக்சைட், மாக்னசைட், திருச்சி அரியலூர் வட்டாரத்தில் ஜிப்சம், குமரிமுனையில் தோரியம், - தம்பி! காவிரிப் பகுதியில் பெட்ரோலாம்! எந்தெந்தப் பொருள் கிடைக்காமல் நாடு பல திண்டாடுகின்றனவோ, அந்தப் பொருள் யாவும் இங்கு நமக்காக இயற்கை, கட்டிக் காத்து வருகிறாள் - கனிவுடன் அழைக்கிறாள் ஆனால், வெட்டி எடுக்க நமக்கு உரிமை ஏது! கட்டித் தங்கமடா, மகனே! பலகாலமாக உனக்காக நான் காத்து வந்திருக்கிறேன், வெட்டி எடுத்துக்கொள் என்று வாஞ்சனையுடன் தாய் அழைக்கிறாள், தனயன், "அந்தோ அன்னையே! என் கரம் கட்டுண்டு கிடக்கிறதே!’’ என்று கண்ணீர் பொழிந்து நிற்கிறான். சேலத்து இரும்பு சிறைப்பட்டிருக்கிறது - டாட்டா கம்பெனிக்கு நாம் கப்பம் கட்டுகிறோம். நெய்வேலி நிலக்கரி வெளிவர மறுக்கிறது, இங்கு ஏழையின் கும்பி, இல்லாமையால் எரிகிறது! காடு போதும், நாட்டுக்கு செல்வமளிக்க! எனினும் இங்கு நஞ்சை கரம்பாகிறது - கரம்பு கள்ளிகாளான் படரும் இடர்மிகு இடமாகிறது. பச்சை மாமலைகளும், பளிங்கன்ன நீரோடைகளும், இங்கு இருந்தும், பசி! பசி! என்று பதறிக் கதறி, வேலை கிடைக்காததால் வேற்றுச் சீமைகள் சென்று சோற்றுக்கு அலைகிறார்கள், நேற்றுவரையில் நானிலம் போற்றிடத்தக்க நல்லாட்சியில் இருந்தவர்கள். கத்துங் கடலில் முத்து எடுத்து கடலகமெனத்தகும் கலம்தனில் ஏறிச்சென்று, காற்றை அடக்கி, யவனம் சென்று வாணிபம் நடத்தி, பொன்னும் புகழும் ஈட்டினர் முன்னோர். நாமும் தமிழரே! நாமமதில் தமிழர் என்றாரே, பாரதியார், அந்தத் தமிழர்! நாம், நமது உடன்பிறந்தாரை, மலாய்க் காட்டுக்குத் துரத்திவிட்டிருக்கிறோம்! பர்மாவில் ரப்பர் பால் எடுக்கிறார்கள் - தாயகத்தின் கோலத்தை எண்ணி அழுகின்றனர்! இங்குள்ள ஏழை எளியவர்களோ இல்லாமை கொட்டும்போது, "அக்கரை’ சென்றாலாவது அரை வயிறு கஞ்சி நிச்சயமாகுமோ, போகலாமா, என்று எண்ணி ஏங்கிக் கிடக்கின்றனர். கட்டழகி, கன்னிப் பருவத்தினள் கலகலெனச் சிரித்தபடி, மணமிகு சந்தனம் குழைத்துப் பூசி, மகிழ்தல் போல பொன்னி எனும் பேரழகி பூரிப்பை அள்ளித் தெளிக்கிறாள். காவேரி தண்ணீர் பட்டால் கன்னியர் மேனி தங்கம், தங்கம்! என்று கவி சுரக்கிறது, அவள் எழிலை எண்ணும்போதே. செந்நெலைக் கண்டு செங்கமலம் சிரிக்கிறாள் - அன்னம் அதுகண்டு நின்ற நிலையிலன்றோ நீ இருப்பாய், என்போல் குடைந்தாடி மகிழவல்லாயோ என்று கேட்டு, கவர்ச்சியூட்டக் காண்கிறோம். கன்னல் விளைகிறது, காரமிக்க மிளகுக் கொடிகள் படருகின்றன! உலகின் தொழில்துறை பலவற்றுக்கும் தேவையான ரப்பர் விளையும் காடுகள் - மனைக்கும் மரக்கலத்துக்கும் தேவையான தேக்கு - ஓங்கி வளரும் தெங்கும், ஒயிலாகக் காட்சி தரும் கமுகும், என்னென்ன எழில், எத்துணை வளம், எல்லாம் நந்தம் இன்பத் தமிழகத்தில்! முல்லை மணமும், காட்டிலே விளைந்துள்ள சந்தன மரத்திலே உடலைக் களிறு தேய்ப்பதினாலே எழும் நறுமணமும், தென்றலிற் கூடிக் கலந்து வந்து, தமிழகத்துக்கு என்றோர் தனிமணமல்லவா தருவதாக உளது. எனினும், வறுமை முடை நாற்றமன்றோ அடித்திடக் காண்கிறோம். சந்தன மணத்தைச் சாகடிக்கும் அளவுக்குச் சஞ்சலச் சாக்கடை நாற்றமடிக்கிறது. இத்தனை இருந்தும் இல்லாமையை விரட்டிட ஓர் மார்க்கமின்றி இடர்ப்பட்டுக் கிடப்பதற்குக் காரணம், உள்ளத் தெளிவற்றோர், ஊதாரிகள், மக்களாட்சியின் மாண்பினை மாய்த்திடுவோர் பிடியில் ஆட்சி சிக்கிவிட்டது என்பது மட்டுமல்ல, இவர்களின் அதிகாரம் என்பது செல்வர் சிலருக்குச் சுகபோகம் வழங்கிடவும், செல்லரித்துப்போன வாழ்வினர், பெருமூச்சினைச் சிறிது உரத்துக் காட்டினாலே, பிடி! அடி! சுடு! என்று அடக்குமுறை வீசவுமான அளவுக்குத்தான் அமைந் திருக்கிறது!! தமிழகத்தைத் திருநாடு ஆக்கும் திட்டம் தீட்டிச் செயல்படும் உரிமை இவரிடம் இல்லை! மக்களின் வாழ்க்கையில் உள்ள வாட்டத்தை ஓட்டிட, இயற்கை வளத்தையும் மக்களின் உழைப்பின் திறத்தையும் ஒன்று கூட்டிட, அதன் பயனாகக் கிடைக்கும் செல்வத்தைச் சமுதாய உடைமையாக்கிட இவர்கட்கு, உரிமை கிடையாது. எனவே, இயற்கை கொஞ்சியும் இல்லாமை மிஞ்சுகிறது என்றால், அதற்கான காரணங்களிலே மிக முக்கியமானது, இங்கு அமைந்துள்ளது பேருக்குத்தான் அரசு - சிலருடைய பெருமைக்குத்தான் அரசு - உண்மையில் முழு அதிகாரம் படைத்த அரசு அல்ல. இது பிரசாரம் - தீதான பிரசாரம் என்கின்றனர் டில்லியிடம் வரம் கேட்டு வாங்கி வாழ்க்கையை நடத்தி வருவோர். இது குறுகிய மனப்பான்மை, குறை நெளியும் கொள்கை, தவறுள்ள தத்துவம் என்கின்றனர், அகிலமெல்லாம் கட்டி ஆளும் ஆற்றலைப் பெற்றோம் என்ற ஆசைக்குப் பலியானவர்கள். அமைச்சர்கள் - அதிலும் அமைச்சர் அனைவருக்கும் "வாய்’ அளித்திடும் நிதி அமைச்சர் - டில்லியின் ஆதிக்கம் என்பது அபத்தம் என்று அறைகிறார். ஆனால், இவர்களில் ஒவ்வொருவரும், தத்தமது தலையில் குட்டு, எரிச்சல் ஏற்படும் அளவுக்குப் பலமாக விழும்போது பதறிப்பதறிக் குளற முன் வருகின்றனர் - ஆமாம்! டில்லியிடம் கேட்கவேண்டும்! எம்மிடம் இல்லை! என்று பேசுகின்றனர். முதலமைச்சர் காமராஜரே கூடப் பேசுகிறாரே, உயிர் நீத்த உத்தமர் சங்கரலிங்கனாரின், கோரிக்கைகள் 12 இல், 10 மத்திய சர்க்காரைப் பொறுத்தது என்று. அமைச்சர்களாக ஆக்கப்பட்டுள்ள இவர்களுக்கு, டில்லியின் தயவு இருக்கும் வரையில்தான் "பதவி பவிசு எல்லாம், டில்லியின் முகம் சிறிதளவு சுளித்திடும் அளவில் இவர்களின் போக்கு இருப்பினும்கூடப் போதும், காஷ்மீரச் சிங்கத்தின் கதிதான்! பாகிஸ்தானில் உள்ளவர்கள் உன் இனத்தவராக இருக்கலாம், பழக்க வழக்கத்தால், நடைநொடி பாவனைகளால், அங்கு உள்ளோர் நமது இனத்தவர், என்று தோன்றக் கூடும் - ஆனால் அந்தச் சபலத்துக்கு இடமளித்தால், உமது சுதந்திரம் சுக்குநூறாகும் - என்று அன்பு சொட்டச் சொட்டப் பேசி, காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாவை வலையில் போட்டுக் கொண்டு, பாரதம் முழுவதும் உலாவரச்செய்து, அவரைக் கொண்டே ஜனாப் ஜின்னாவை ஏசச்செய்து, பாகிஸ்தானை எதிர்க்கச்செய்து, இவ்வளவுக்கும் பிறகு, அவர் காஷ்மீர் இந்தியாவின் நேசநாடாகமட்டும் இருக்கும், ஆனால் அடிமை நாடு ஆகாது, தனி நாடாகத்தான் இருக்கும் என்று கூறத் துணிந்ததும், அவர் வாயை அடைத்து, கைகாலைக் கட்டி, சிறையில் போட்டுப் பூட்டி, வழக்கும் போடாமல், வாட்டுகிறார் களே! சிங்கத்துக்கே இந்தக் கதி என்றால் சிறு நரிகள் கதியாதாகும்!! இந்த அச்சம், நமது அமைச்சர்களைப் பிடித்தாட்டுகிறது. இந்த நிலைமையைத் தம்பி, நாம் ஒவ்வோர் நாளும் கூறுகிறோம், ஒவ்வோர் துறையிலே கிளம்பிடும் பிரச்சினை களையும் எடுத்துக் காட்டிக் கூறுகிறோம். நமக்கு ஏன் இந்த வம்பு என்று இருக்கும் இயல்பினர் கூட தமக்குத் தனி அக்கரையுள்ளதென்று உள்ள பிரச்சினைகளிலே, டில்லியின் இரும்புக் கரம் அழுத்தமாக விழுகிறபோது, அலறித் துடித்துக் கிளம்புகின்றனர். இறக்குமதி ஏற்றுமதி சம்பந்தமாக நீதி கிடைக்க வேண்டும், டில்லியிடம் நீதி கிடைக்கவில்லை, என்று மனம் உறுத்தும்போது வாணிபத்துறையினர், வாய் திறக்கின்றனர். எல்லாம் டில்லியிடமா! ஈதென்ன முறையற்ற செயல்!! என்று குமுறுகின்றனர். தொழில் துவக்குவோர், துவக்கிடும் தொழில் துவண்டிடக் காண்போர், மனம் நொந்த நிலை பெறுகிறபோது, எழுகின்றனர், எல்லா வளமும் வடக்கேதானே! தெற்கை யார் கவனிக்கிறார்கள்? என்று கேட்கின்றனர். அவ்வப்பொழுது ஆனந்தராமகிருஷ்ணன் எனும் தொழிலதிபர், பேசிடக் கேட்கிறோமல்லவா? அமைச்சர்களேகூடச் சிலவேளைகளில், பேசிவிடுகின்றனர் - பிறகு அஞ்சி ஆமையாகி விடுகிறார்கள். குமாரசாமிராஜா அவர்கள் குமுறிய உள்ளத்தோடு பேசத் தலைப்பட்டதை, நாடு எங்ஙனம் மறந்துவிடும்! எல்லாம் மத்திய சர்க்காரில் என்று இருக்கும் நிலைமையை எதிர்த்துப் போரிடவேண்டிய காலம் விரைவில் வரும் என்றல்லவா கூறினார். தமிழகம், அவர் இந்தத் துறையில் முனைந்து நிற்பாரானால், வாழ்த்தி வரவேற்றிருக்கும், வணங்கி அவர் தலைமையைப் பெற்றிருக்கும். கோவையில் கொதித்தெழுந்தவர், பிறகு ஏனோ மௌன மாகிவிட்டார். காலம் கனியவில்லை என்று கருதுகிறாரோ - என்னவோ! எனினும் அவரவருக்கு முக்கியமானது - உயிர்ப்பிரச்சினை என்று கருதத்தக்க கட்டம் கிளம்பும்போது, அவர்களெல்லாம், டில்லியின் ஆதிக்கம் ஆகாது, கூடாது, பெருந்தீது! என்று பேசுவது காண்கிறோம். இவர்களெல்லாம் தொடர்ந்து இந்தக் கருத்தை நாட்டிலே எடுத்துரைத்து, மக்களைப் பக்குவப்படுத்தலாகாதா என்று ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறோம். பிறகோ அவர்கள், வாய்மூடிடக் கண்டு வாடுகிறோம்; சரி, சரி, இன்னும் இவர்களே பக்குவப்படவில்லை என்றெண்ணிக்கொண்டு, நாம் நமது பணியினைத் தொடர்ந்து செய்து வருகிறோம். ஒரு அணா கொடுத்தானே, உழைப்பாளி, அவன் இதை அறிவான்!! நம்மிடமிருந்து தொடர்ந்து இந்தப் பணியை எதிர்பார்க்கிறான். சோர்வடையாதீர்கள்! என்னால் ஆன உதவியை நான் அளிப்பேன் என்று சொல்லால் அல்ல, செயலால் காட்டுகிறார்கள், இத்தகைய செம்மல்கள். அவர்களை அமைச்சர்கள் அறிவதில்லை. இந்தியாவிலிருந்து கலைத் தூதுக் குழுவினர் பலர் பல முறை வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கின்றனர்… மக்கள் போற்றி மகிழும் கலைஞர்கள் தமிழ்நாட்டிலிருந்து தூதுக்குழுவுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பப்படவில்லை. ஊர்பேர் தெரியாத யாரோ ஒரு சிலர் தமிழ்நாட்டின் கலைஞராகப் போய்வருகிறார்கள். காரணம் என்ன? மக்களின் மனதை அறிந்து நடக்கும் ஆட்சி இல்லை. மத்திய அரசியலார், பாராளுமன்றத்தில் ஒரு சிலரைமட்டும் நம்புகிறார்கள். அவர்கள் மனம்போல் எல்லாம் நடக்கிறது. மத்திய அரசியலாரின் போக்கை மாற்றவோ திருத்தவோ இங்குள்ள அரசியலார் முன்வருவதில்லை! அச்சம் தடுக்கிறது. தம்பி! பிரச்சினை, கலைத்துறை பற்றியது - எனினும் என்ன - எந்தத் துறையில் அநீதி காணப்பட்டாலும் அதனைக் கண்டித்துக் களைந்து எறியத்தானே வேண்டும். மத்திய அரசியலாரின் போக்கைக் கண்டிக்கிறார் - இதனை மாற்றாது இருக்கும் இங்குள்ள நமது பேர் அரசையும் கண்டிக்கிறார். அச்சம் தடுக்கிறது இவர்களை என்றார். பயந்தாங்கொள்ளிகள் - தொடை நடுக்கம் கொண்டோர் - கோழைகள் - என்றெல்லாம் அந்த அச்சம் என்பதற்குப் பல பொருளைப் பெறலாம். அச்சம் தடுக்கிறது! என்ன அச்சம்! அதுதான் தம்பி, ஷேக் அப்துல்லா பற்றிச் சொன்னேனே, அந்த அச்சம்தான். பதவியும் பவிசும் போய்விடுமே என்ற அச்சம் - வேறென்ன? போனால் என்ன? மானமன்றோ பெரிது! நாடல்லவா பெரிது! என்று ஒரு அணா கொடுப்போன் கேட்பான் - ஆமாம் - அவனிடம் அணாக்கள் தானே உள்ளன. பதவியில் உள்ளவர்கள், மானத்தை இழந்து விட்டாலும், இலட்சாதிபதியாகிறார்களே - அதிலே அவர்களுக்குத் திருப்தி - பெருமை - பாசம்! ஆசை ஊட்டவும் அச்ச மூட்டவும், டில்லிக்கு முடிகிறது. டில்லிக்கு இந்த நிலை இருக்கும்வரையில், இங்கு அரசுக் கட்டிலில் அமருவோர் அடங்கி ஒடுங்கி "அடைப்பம்’ தாங்கு மட்டும் கொலுவிருக்கலாம். ஏனென்று கேட்கத் துணிந்தால், ஷேக் அப்துல்லாவாக வேண்டும். இந்த அச்சம் தடுக்கிறது! எனவேதான் தம்பி, ஆட்டிப்படைக்கும் டில்லியின் பிடியில் திராவிடம் சிக்கிக் கிடக்கும் நிலைமை ஒழிந்தாக வேண்டும் என்று நாம், கூறுகிறோம். தமிழ்நாட்டு மக்களின் பலவகைக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. எல்லைப் பிரச்சினையைத் தமிழ் மக்கள் முன் ஒருமுறை எழுப்பியபோது, “கேட்கத் துணிந்துவிட்டீர்களா? கேட்டால் உள்ளதும் போய்விடும்’’ என்று’ செங்கோட்டையை எடுத்துப் பிறருக்குத் தந்தனர். மீண்டும் ஒருமுறை கேட்டபோது”அப்படியா? இன்னும் உங்கள் துணிவு போகவில்லையா? தமிழ்நாடு என்று நாடும் இல்லாமல் செய்துவிடுவோம். தட்சிணப்பிரதேசம் என்று உங்களில் சிலரைக் கொண்டே மாற்றியமைத்துவிடுவோம். எங்களால் முடியும், தெரியுமா?’’ என்ற மிரட்டலே கிடைத்தது. அமைதியான கிளர்ச்சி ஒன்று நடந்தபோது "இவ்வளவா, தமிழ்நாடு என்ற பெயரும் கிடையாது, போ’’ என்று விரட்டலே கிடைத்தது. தெளிவாக, நிலைமை விளக்கப்பட்டிருக்கிறதே, படம் பிடித்துக் காட்டுவது போலிருக்கிறதே, யார் இப்படி விளக்கமாகத் தந்திருப்பவர் - என்று கேட்கத் துடிக்கிறாய் அல்லவா? தம்பி, மிரட்டல், விரட்டல், என்று கூறியிருப்பது கேட்டு ஆட்சியாளர்கள் மனம் "சுருக்’கெனத்தான் தைக்கும். ஆனால், நிலைமை இதுதான். அச்சத்தால், இங்குள்ள அமைச்சர்கள் காலமெலாம் வாயடைத்துத்தான் கிடக்கின்றனர் - எப்போதோ ஓர் சமயமாகிலும், பொதுமக்கள் பொங்கி எழுவது கண்ட பீதியால், எதிர்க்கட்சிகளின் ஏளனம் குத்துவதால், ஒரோர் சமயம் உள்ளமே சுடுவதால் துடித்து எழுந்து, நீதி கேட்கின்றனர். அப்போது டில்லியிடமிருந்து அவர்கட்குக் கிடைப்பது என்ன? மிரட்டல் - விரட்டல்! ஆமாம், டில்லியின் போக்கையும் இங்குள்ள நம் அமைச்சர்களின் நிலையையும் அழகுபட எடுத்துரைத்துள்ள இவர் யார், என்றுதானே கேட்கிறாய். தம்பி, இவர் நமது கழகம் அல்ல. அந்தக் கழகத்தினரும் அல்ல, அரசியல்வாதியே அல்ல. அப்படியா? அப்படியானால்… யார்… என்று கேட்கிறாய், தெரிகிறது… கேட்டுப்பார், நண்பர்களை, இப்படி, டில்லி - சென்னை நிலைமைகளைப் படம் பிடித்துக் காட்டுபவர், யார் என்று; நீயே கூடத்தான் கண்டுபிடியேன் பார்க்கலாம். அடுத்த கிழமை நான் அவரை உனக்குக் காட்டுகிறேன். அன்பன், 18-11-’56 மிரட்டல்! விரட்டல்! டாக்டர் மு.வ.வின் கருத்தும் டில்லி அரசினர் போக்கும் - டில்லியின் ஓரவஞ்சனை - கல்வி, கலை, அரசியலில் தம்பி! தக்கோரைத் தேர்ந்தெடுத்து கலைத் தூதுக்குழுவிலே அனுப்பும் திறம் மத்திய சர்க்காருக்கு இல்லை. தட்டிக் கேட்கும் துணிவு, சென்னையில் இல்லை. அமைச்சர்களை அச்சம் தடுக்கிறது, துணிந்து சில வேளைகளில் கேட்டாலோ மிரட்டல், விரட்டல் தான் கிடைக்கிறது என்று கூறினவர் யார் என்ற ஆவலை கொண்டிடச் செய்தேன் அல்லவா - கோபமில்லையே என்மீது அதற்காக!! மனம் நொந்து அவர் இதுபோல் கூறுகிறார் - அரசியல் துறையிலே ஈடுபாடு கொண்டவரல்ல - ஆசிரியத் தொழிலில் இருப்பவர் - அமைதியில் ஆனந்தம் காண்பவர் - அனைத்தையும் துருவித் துருவிக் கண்டறிவார். அவ்வளவும் சொல்லிவிடக்கூட மாட்டார் - இவ்வளவு போதும் - கோடிட்டுக் காட்டினாலும் போதும் - இப்போதைக்கு இவ்வளவுபோதும் - என்று அவ்வப் போது அளந்து அளந்து கருத்து அளித்து வருபவர் - என் நண்பர் - தமிழருக்கு நல்லபல ஏடுகளைத் தந்துள்ளவர் - பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பெரும் பேராசிரியராக இருப்பவர், டாக்டர் மு. வரதராசன். பழைய நாட்களிலே, தம்பி, எவருடைய இடித்துரைக்கும் கலங்காது காட்டாட்சி நடத்துபவருங்கூட, புலவர்கள் புத்தி புகட்டுகின்றனர் என்றால், வெட்கப்படுபவர், வேதனைப்படுவர், திருத்திக்கொள்ள முற்படுவர் என்று இலக்கியங்களிலே காணுகிறோம். இன்றைய ஆட்சியினரோ, மக்களைப் பார்த்து, “பாமரர் நீவிர்! உமக்கு இதெல்லாம் என்ன தெரியும்!’’ என்று கூறியும், புலவர்களைப் பார்த்து,”ஏடு தூக்கிடும், உமக்கு ஏனய்யா இந்த வீண் வேலை’’ என்று ஏளனம் செய்தும், இறுமாந்து கிடக்கின்றனர். அதிலும், தமிழாசிரியர்கள் - அதிலும் குறிப்பாகத் தமிழ் இனத்துக்கென்று ஓர் தனி வாழ்வு அமைதல்வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் - ஆரியம் இது, தமிழ் நெறி இது என்று பிரித்துக் காட்டிடும் போக்கினர் என்றால், பெருங்கோபம் பீறிட்டுக்கொண்டு கிளம்புகிறது. அவர்களை, "நாத்திகர்’ என்று நிந்திக்கவும், ஆட்சி யாளர்கள் துடித்தெழுகின்றனர். எனவே, டாக்டர். மு.வ.வின் இந்தக் கருத்துரை கேட்டு ஆட்சியாளர் திருந்த முற்படுவர் என்றுநான் எண்ணவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை - அவருக்கும் அந்த நம்பிக்கை எழுமா என்பது ஐயப்பாடுதான்! நேரடியாக அரசியல் துறையிலே ஈடுபாடு கொள்ளாதவரும், இன்றைய அரசியலில் நெளியும் நிலைமையைக் கண்டு மனம் பொறாது பேசவேண்டி வந்ததே என்பதை நாடு காண்கிறது! அதன் பயன் மிகுதியும் உண்டு என்பது என் எண்ணம். அரசியல் துறைக்குத் தம்மை ஒப்படைக்காமல், பேதம் பிளவு என்பவை தீது, ஒற்றுமை சமரசம் என்பன நற்பண்புகள் என்பதை வலியுறுத்தத் தவறாமலிருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களே, டில்லியிடம் சிக்கிக்கொண்டு, நமது அமைச்சர்கள் அச்சத்தால் தாக்குண்டு கிடக்கும் நிலை கண்டு மனம் வெதும்புகின்றனர். பலருக்கு, பாரதம் ஒரே நாடு, இதனைத் தனித்தனி நாடுகளாக்கிவிட்டால் ஒற்றுமை குலைந்துபோகும் என்று டில்லிப் பெரியவர்கள் பேசும்போது, ஆம் என்றுதான் கூறத்தோன்றுகிறது. அதிலும் தமிழாசிரியர்கள், “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற நெறியினைப் பாராட்டுபவரல்லவா! எனவே, பாரதநாடு ஒரே ஆட்சியின்கீழ் இருத்தல் முறை என்று கூறப்படும்போது அவர்கள் இசைவு அளிப்பது மட்டுமல்ல, எம்மனோர் உலகு முழுவதையுமே ஒரே நாடு என்று எண்ணிச் சொந்தம் கொண்டாடிய பெருநோக்கினர்! இமயத்துடன் நிற்பானேன் - கடலையும் கடந்து எல்லா எல்லைக் கோடு களையும் கலைத்தொழித்துக்கூட”உலகு ஒன்று’ என்ற உன்னதம் காணலாம் என்று உள்ளன்புடன் கூறத் தயங்குவதில்லை. ஆனால், அவர்கட்கும் ஒற்றுமை ஓரரசு பேரரசு என்பதன் பேரால் அநீதி நடத்திடும்போது மனம் வெதும்புகிறது - இடித்துரைக்க முற்படுகின்றனர். ஆட்சியாளர்களோ, அரசியல் துறையினர் பேசும்போது, இதெல்லாம் அரசியல் வாதிகள் கிளப்பிவிடும் கேடுகள் என்று சுடுசொல் கூறியும், தமிழாசிரியர்கள் பேசும்போது, ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் படித்துக்கொண்டு கிடப்பதைவிட்டு இந்த ஆசிரியர்கள் ஏன் அரசியலில் தலையிடவேண்டும் என்று அலட்சியமாகப் பேசியும் ஆணவப்போக்குடன் உள்ளனர். விரட்டல் மிரட்டல் டில்லியிடமிருந்து நாம் பெறுவது இவையே என்று கூறுமுன்னர், டாக்டர் பல நூறு முறை தயங்கியிருப்பார் - சொல்வதா வேண்டாமா? சொல்லிப் பயன் காணமுடியுமா? சொல்வது கேட்டு, நம்மை இன்னார் என்று கண்டுகொண்டு காய்ந்திடமட்டுமே பயன்படுமோ? என்று பலப்பல வகையில் யோசித்துவிட்டு, முடிவிலேதான் இதனைச் சொல்லியே தீரவேண்டும் என்று துணிந்து கூறிவிட்டிருக்கிறார். தம்பி! கலைத்துறைப் பிரச்சினையில் மட்டுமே இந்த நிலையா என்றால் இல்லை, இல்லை, கலைத்துறைப் பிரச்சினையிலும் இது, என்றுதான் கூறவேண்டி இருக்கிறது. எந்தத் துறையிலும் இதே நிலைதான்! எந்தத் துறையிலும் டில்துரைத்தன ம், தமிழர்க்கும் தமிழகத்துக்கும் இதே விதமான மிரட்டல் விரட்டல் அளித்துக் கொண்டுதான் அமுல் நடத்தி வருகிறது. அவ்வப்போது, ஒவ்வோர் துறையினர் உள்ளம் வெதும்பிப் பேசுவர்! மற்றத் துறையினர் அதுபோது பிரச்சினை, எந்தத் துறையினர் மனம் நொந்து பேசுகின்றனரோ, அந்த ஒரு துறைக்கு மட்டுமே உரியது என்று எண்ணி, தமக்கு உரிய பிரச்சினை அல்ல என்று எண்ணிக்கொண்டு விடுகின்றனர். டாக்டர் மு.வ. கலைத்துறையில், டில்லி காட்டும் கருத்தற்ற போக்கினையும், சென்னையில் உள்ள அச்சத்தையும் எடுத்துக் காட்டும்போது, வாணிபத் துறையினர், இது தமக்குத் தொடர்பற்ற பிரச்சினை என்று இருந்துவிடுகின்றனர் அதுபோன்றே வாணிபத்துறையில் எழும் பிரச்சினையில் டில்லி காட்டும் ஆணவப்போக்கினை, வணிகர் சங்கம் கண்டித்தெழும் போது, டாக்டர் மு.வ. போன்ற தமிழாசிரியர்கள், இது வணிகர்களின் பிரச்சினை, நமக்கு உரியதல்ல என்று ஒதுங்கி நிற்பர். எனவே கூட்டு எண்ணம், ஏற்படவழி கிடைப்பதில்லை. தம்பி! நாம், எந்தத் துறையுடன் நேரடியாகத் தொடர்புகொண்ட பிரச்சினையாக இருப்பினும், அந்தப் பிரச்சினை, "டில்லி - சென்னை தொடர்பினை’ எடுத்துக் காட்டுவதாக அமைந்தால், அந்தப் பிரச்சினையை நமக்கு உரிய பிரச்சினை - நாட்டு மக்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினை என்றுதான் கொள்கிறோம். இது தமிழாசிரியர் கவனிக்க வேண்டிய பிரச்சினை, இது துரைத்தன ஊழியருக்கு மட்டுமே உரிய பிரச்சினை, இது பாட்டாளிகளுக்கு மட்டுமே சொந்தமானது என்று எந்தப் பிரச்சினையையும் நாம் ஒதுக்கி விடுவதில்லை. காரணம், நமக்கு எந்தப் பிரச்சினையும், அந்த ஒரு பெரும் பிரச்சினை இருக்கிறதே, தனி அரசுகளை விழுங்கிக் கொழுத்துப் பேரரசு ஒன்று உருவெடுக்கும் பிரச்சினை, அதனுடைய பல கூறுகளிலே ஒன்றாகவே படுகிறது. கைகால் பிடிப்புக்காரன், தைலம் தடவியும், வலியுள்ள இடத்தை நீவியும் நலன் பெற முயல்வது இயல்பு என்றாலும், வலிக்கு உள்ள காரணம் களைந்திடுவதற்கான மருத்துவம் பார்த்துக் கொண்டாக வேண்டுமல்லவா! நாம் அந்த நல்ல மருந்து தேடுகிறோம். அதுபோது, ஐயோ முதுகு எலும்பு வலிக்கிறதே! கண் எரிச்சல் தருகிறதே! கைகால் பிடிப்பு ஏற்பட்டுவிட்டதே! குமட்டலெடுக்கிறது, குடைச்சலுமிருக்கிறது! என்று அவரவர் தத்தமக்கு வந்து தாக்கும் வலிபற்றி வாய்விட்டுக் கூறிடக் கேட்கிறோம் - கேட்கும்போது நமக்கு, இவையாவும், தனித்தனி நோய்களல்ல, வெறும் குறிகள், என்று புலப்படுகிறது. கலை, மொழி, எல்லை எனப்படும் துறைகளிலே மட்டுமே தமிழருக்கு மிரட்டல் - விரட்டல் டில்லியிடமிருந்து கிடைக் கிறது, மற்ற மற்ற துறைகளிலே அரவணைப்பு கிடைக்கிறதா! எல்லாத் துறைகளிலும், ஏன்! என்ற குரல் கேட்கும் போதெல்லாம், மிரட்டல் - விரட்டல்!! தம்பி! டில்லியில், சென்ற திங்கள், இந்தியப் பேரரசு பல்கலைக் கழக இளைஞர் விழா நடத்திற்று. இதில் 31 பல்கலைக் கழகங்கள் கலந்துகொண்டன. 1600 மாணவர்கள் சென்றனர். நேரு பண்டிதர் இதில் கலந்துகொண்டு சிறப்பளித்தார். சென்னைப் பல்கலைக் கழகம் மட்டும் இந்த விழாவிற்குப் பிரதிநிதிகளை அனுப்பிவைக்கவில்லை. பாட்டும், கூத்தும், கேளிக்கையும் நிறைந்த விழா - ஒவ்வோர் பல்கலைக் கழகமும் தத்தமது கோட்டத்தில் வளர்ந்துள்ள கலைத்திறனைக் காட்டிடும் வாய்ப்பு - இதிலே சென்னைப் பல்கலைக் கழகம் கலந்து கொள்ளவில்லை. காரணம் என்ன? இந்தியப் பேரரசு, சென்னைப் பல்கலைக் கழகத்தின் வேண்டுகோளைப் புறக்கணித்தது. மதியாதார் தலைவாசல் மிதிக்கமாட்டோம் என்று சென்னைப் பல்கலைக் கழகம் கூறிவிட்டது. இந்த விழா, ஆண்டுதோறும் டில்லியிலேயே நடத்துகிறீர்கள் - இது சரியல்ல - ஒவ்வோர் ஆண்டு ஒவ்வோர் "ராஜ்ய’த்தில் நடத்துவதுதான் நல்லது என்று சென்னைப் பல்கலைக் கழகம் கூறிற்று இந்தச் சாதாரணமான நியாயத்தைக்கூட ஏற்றுக்கொள்ள டில்லிக்கு விருப்பம் இல்லை. டில்லி ஒரு திட்டம் வகுப்பது, அதை முறையில்லை சரியில்லை என்று கூறி, சென்னை மறுப்பதா! நந்தா! உனக்கேன் இந்தப் புத்தி! டில்லியின் போக்கு இது போலிருந்திருக்க வேண்டும். சென்னைப் பல்கலைக் கழகத்தின் யோசனையைப் புறக்கணித்தது. புண்பட்ட மனம்; சென்னைப் பல்கலைக் கழகம், இதனைக் காட்டவும், தன் கண்டனத்தைத் தெரிவிக்கவும் டில்லி விழாவில் கலந்துகொள்ளவில்லை. சென்னைப் பல்கலைக் கழகத்தில் பல பாடங்கள் போதிக் கப்படுகின்றன, ஆனால் திராவிட நாடு திராவிடருக்கே என்பது பாடமாக்கப்பட்டதில்லை! சென்னைப் பல்கலைக் கழகம் கேட்டதெல்லாம் "விநயமான கோரிக்கை’ - அதற்கே டில்லி இணங்கவில்லை. சென்னைப் பல்கலைக் கழகம் என்ன செய்யும்? என்ன செய்தார் டாக்டர் மு.வ.! கலைத் தூதுக்குழு சம்பந்தமாக டில்லி காட்டும் போக்கைக் கண்டு மனம் வெதும்பி - மிரட்டல் - விரட்டல் என்று கூறினார். சென்னை பல்கலைக் கழகம், விழாவில் கலந்து கொள்ளாது ஒதுங்கி நின்றது! அவ்வளவுதான்!! சென்னைப் பல்கலைக் கழகம் இதுபோல் நடந்து கொண்ட காரணம் என்ன என்பதுகூடப் பொது மக்களுக்குத் தெரியாது. தெரிவிக்கப்பட்டாலும், மற்றத் துறையினர் இது குறித்து அக்கரை காட்டி, இது டில்லி ஆதிக்கத்தின் ஒரு "கூறு’தான் என்று கூறிட முன் வந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே! ஒன்றுபட்டு, தமிழகம் தன் உள்ளக் கொதிப்பை எடுத்துக் காட்டும் வாய்ப்பே ஏற்படவில்லை. கலை, கல்வித்துறை பற்றிய பிரச்சினை நம்முடைய தல்ல என்று மற்றவர்களும், எல்லை, உரிமை என்பன அரசியல் வாதிகளின் ஆயாசப் பேச்சு என்று கலை கல்வித் துறையினரும், வாணிபம், இலாப வேட்டைக்காரர் பிரச்சினை, இதில் நமக்கென்ன அக்கரை என்று பிற துறையினரும், இவ்விதம், ஒவ்வொருவர் ஒவ்வோர் “முனை‘யில் மட்டும் பார்வையைச் செலுத்திக் கொண்டு, பிற பிரச்சினைகளில் கருத்தைச் செலுத்துவதே தேவையில்லை என்று எண்ணும் போக்குக் காண்கிறோம். அதுமட்டுமல்ல; இவர் ஒவ்வொருவரும், எதற்கும் “பிள்ளையார் சுழி’ போடுவது என்பார்களே, அதுபோல, டில்லியின் போக்கைக் கண்டிக்கக் கிளம்பும்போதே, எமக்கு இந்தியா ஒரு நாடு என்பதிலோ, இந்தியர் ஓர் இன மக்கள் என்பதிலோ, ஐயம் இல்லை. நாங்கள், நாடு துண்டாடப்பட வேண்டும் என்ற தீய கொள்கை கொண்டோரல்ல! இந்தியாவின் ஐக்கியமே, எமது பேச்சு, மூச்சு என்ற”துதி’ பாடிவிட்டுத்தான், தமது கண்டனத்தை வெளியிடு கின்றனர். இப்படிப்பட்ட”அடக்கமான’வர்களுக்கே, டில்லி வழங்குவது, மிரட்டல், விரட்டல்! எத்தனை காலத்துக்கு, எத்தனை பிரச்சினைகளுக்கு, இப்படி இருகரம் கூப்பி, ஐயா! ஐயா! என்று இறைஞ்சி நின்று இடியும் கடியும் பட்டுத் தீரவேண்டும் என்று இவர்கள் எண்ணுகிறார்களா, தெரியவில்லை. தம்பி, ஒன்று புரிகிறது. இன்று எனக்கு வந்த தபாலில், டில்லியிலிருந்து வெளியாகும், இந்துஸ்தான் டைம்ஸ் இதழிலிருந்து ஒரு துணுக்கு வெட்டி அனுப்பி வைத்திருந்தார் ஒரு நண்பர். இந்த இதழ் மகாத்மாவின் புத்திரரும் ஆச்சாரியாரின் மருகருமான தேவதாஸ் காந்தியை ஆசிரியராகக் கொண்டது. இடியும் கடியும் பொறுத்துக் கொண்டு, வலியையும் வெளியே தெரியவிடுவது நாகரிகமல்ல வென்று கருதிக் கொண்டு, கரம் கூப்பிச் சிரம் தாழ்த்தி, கண்ணீர் பொழிந்து கனிவு பெறலாம் என்று காத்து நிற்போர் மட்டுமல்ல, தமிழகத்தில் விளைவு விபரீதமாகுமோ, அடக்குமுறை அவிழ்த்து விடப்படுமோ என்பது பற்றிய அச்சமற்று, வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் ஓர் கழகம் இருக்கிறது, அது, தி.மு.க. என்பதை, டில்லி வட்டாரத்து ஏடு புரிந்துகொண்டிருப்பது, நன்றாகத் தெரிகிறது. இந்துஸ்தான் டைம்ஸ் இதழில், தி. மு. க. தேர்தலில் ஈடுபட இருப்பது பற்றிய குறிப்புரை வெளிவந்திருக்கிறது. வழக்கமான வசையும் - சாபமும் காண்கிறேன், குறிப்புரையில். கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு காமராஜர் கிளம்பி விட்டார், எனவே இந்த தி.மு.க. தோற்று அழிந்துபோகும் என்று அந்த இதழ் "ஜோதிடம்’ கூறுகிறது. பிறகோ, அந்த ஜோதிடத்தில் அதற்கு நம்பிக்கையில்லாமல், இந்த தி. மு. க. திராவிட நாடு, தனி நாடு என்றெல்லாம் பேசுகிறது - இப்படிப்பட்ட பேச்சுக்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று எடுத்துக் காட்டி, வக்கீலாகிறது; வழக்கறிஞர் வேலையில் மற்றவர்களும் ஈடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் இல்லை என்றால் என்ன, ஐயா! அதற்கு இடம் இருக்கும் வகையில், இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டி, மக்களிடம் பேசலாமல்லவா, என்று வாதாடக்கூடுமே என்ற அச்சம் பிறக்கிறது. உடனே, வழக்கறிஞர் வேலையை விட்டுத் தொலைந்து, போலீஸ் வேலையை இந்த இதழ் மேற்கொண்டு, தி. மு. கழகத்தை இனியும் சும்மா விட்டு வைக்கக் கூடாது! இராஜத்துரோகக் குற்றம் செய்கிறது இந்தக் கழகம்! உடனே தகுந்த நடவடிக்கை எடுத்து தி. மு. கழகத்தை ஒடுக்கித் தீரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறது. ஜோதிடர் வேடம் கண்டு சிரிப்பு வருகிறது, வழக்கறிஞர் கோலம் காணும்போது பரிதாபமாக இருக்கிறது, போலீஸ் குரலில் பேசக் கேட்கும்போதோ, இந்த இதழிடம் எனக்கு அனுதாபம்கூட ஏற்படுகிறது. எவ்வளவு கிலி, பாபம், இந்த இதழுக்கு. இந்துவும் மித்திரனும் இடம் அளிப்பதில்லை, கல்கியும் விகடனும் கவனம் செலுத்துவதாகக் காட்டிக் கொள்வதில்லை காட்டுக் கூச்சல், கவைக்கு உதவாப் பேச்சு என்று காமராஜர்கள் கூறிவிடுகின்றனர். இந்த நிலையிலேயே, டில்லியில் உள்ள ஏடு, தீபட்டது போலத் "தகதக’வென ஆடி, தடி எடு! தடைபோடு! தடைபோடு! என்று கொக்கரிக்கிறது. தம்பி! நீயும் நானும் விரும்புகிறபடியும் நாட்டில் நல்லோர் பலரும் எதிர்பார்க்கிற படியும், பொதுத் தேர்தலிலே நமக்குச் சிறப்பான வெற்றி கிடைத்து, நாம் ஆட்சி மன்றத்திலேயும் அமர்ந்து, நமது உரிமை முழக்கத்தை நடத்தினால் ஏ! அப்பா! இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஏடுகள் என்ன பாடு படுமோ என்று எண்ணும்போதே எனக்குச் சிரிப்பு வருகிறது. இந்த அரியவாய்ப்புக்காக நாம் அரும்பாடுபடும்போது, 150 ரூபாய்க்காக இதுகள் ஆலாய்ப் பறக்கின்றன, என்று நம்மவர்களிலேயே சிலர் கூறுவது கேட்கும்போது, நெடுந்தொலைவிலிருக்கிற இந்துஸ்தான் டைம்சுக்கும் புரிகிறதே, இவர்களுக்கு ஏனோ வயிறு எரிகிறது என்றெண்ணி ஆயாசமடைகிறேன். நாங்கள் எவ்வளவு அரும்பாடுபட்டு, சில வேளைகளில் கனிவு காட்டி மகிழச்செய்கிறோம், மற்றும் சில வேளைகளில் உருட்டுவிழி காட்டி மருளச் செய்கிறோம், எனினும் எல்லாம் எதன் பொருட்டு? நாம் ஒன்றாக வாழலாம், ஒரே நாடாக இருக்கலாம், ஓரரசுக்குள் இருந்திடலாம், தனித்தனி நாடுகள் தனித்தனி அரசுகள், வேண்டாம், கவி பாடியும் கதை கூறியும் நாங்கள் இதனைத்தானே எடுத்துக் கூறுகிறோம் ஒற்றுமைக்காக ஓயாது உழைக்கிறோம், ஏன் உமக்கு மட்டும் இந்த உயர்ந்த நோக்கம் ஏற்படவில்லை, எதனாலே உமக்குமட்டும், பேதபுத்தி, பிளவு மனப்பான்மை ஏற்படுகிறது, கங்கைக் கரைக்கும் காவிரிக் கரைக்கும் பேதம் ஏன் காணவேண்டும்? காசி காஞ்சி என்று ஏன் பிரித்துப் பிரித்துப் பேசுகிறீர்கள்? எல்லாம் பாரதநாடு என்று பரிவுடன் எண்ணிடலாகாதா? என்று தலைவர்கள் பேசத்தான் செய்கிறார்கள் - கேட்கும் போது சிற்சில வேளைகளிலே எனக்குக்கூடத் தம்பி! நாம்தான் ஒருவேளை தவறாக நடந்துகொள்கிறோமோ, வீணான பேதபுத்தி நம்மைப் பிடித்தாட்டுகிறதோ, ஒற்றுமையின் மேன்மையை, ஓரரசின் உன்னதத் தன்மையை, ஒரு பெரும் நாடு என்ற திட்டத்தின் அருமை பெருமையை அறிந்து போற்றிடும் அறிவற்றுப் போனோமோ, என்றெல்லாம் தோன்றச் செய்கிறது. எனினும் மறுகணம், நம் நாட்டின் இயல்பும் அதற்கேற்ப வளர்ந்துள்ள வரலாறும், அதன் பயனாக நாம் பெற்ற பெருமைகளும் வந்து நிற்கின்றன. "ஏடா! மூடா! என்னை மறந்திட, துறந்திடத்தக்க நிலையிலா உன் மூதாதையர் காலமுதற்கொண்டு உன் காலம் வரையிலே நான் வாழ்ந்து வந்துகொண்டிருக்கிறேன் - இயற்கை எழிலும் வளமும் ஈந்த என்னை, உன் அன்னை என்று ஏற்றுக்கொள்ளவுமா உனக்குக் கூச்சம் ஏற்படுகிறது! உனக்கென்று ஓர் தனி இயல்பும், தனிவாழ்வு முறையும், கிடைத்திட அல்லவா, பாலூட்டிச் சீராட்டி வளர்த்து வந்தேன்! புன்னகை பூத்து நிற்கும் பூவையரெல்லாம் தாய் ஆவரோ? அவரிடம் பகை கொள்ளச் சொல்கிறேன் இல்லை! அவர்கள் அன்புடன் உன்னை அழைத்திடும்போது, அருவருப்பு அடைந்து வெறுத்து ஒதுக்கிவிடு என்று பேசினேன் இல்லை! ஆயிரம் கனிவு காட்டலாம் அம்மையே! எனினும் இதோ என் அன்னை! என்று பெருமையுடன் என்னைச் சுட்டிக்காட்டிடவா நீ தயக்கமடைய வேண்டும்! மதியற்றவனே! நேசம் வேறு, தாய்ப்பாசம் என்பது வேறு! கன்னல் மொழி பேசக்கூடும் மற்றவர் - உன் தாய் சில வேளைகளிலே கடிந்துரைக்கக் கூடச் செய்வாள் - எனினும் "தாய் அன்பு’ என்பது தனியானதல்லவா - பிற எங்கும் பெறமுடியாததோர் பேரன்பு அல்லவா! பெற்றமனம் கொண்டிடும் பாசத்தை வேறு எங்கு காண இயலும்! இதனையுமா கற்பிக்கவேண்டும்? கடுவனிடமும் கொல்லும் புலியுடமும்கூடக் காண்கிறோமே இதனை. கருத்தற்றவனே! உன்னிடம் அகமும் புறமும் அளித்து, அணி ஆரமும் மேகலையும் தந்து, அறநெறியும் பிற பெருமைகளையும் தந்து, அழகியதாய் விழுமியதாய் உன் வாழ்வு அமைவதற்கான வாய்ப்புகளைத் தேடித்தேடித் தந்து, நீ ஏற்றம் பெற்று, கொற்றம் நடாத்தி, ஏறுநடை போட்டு, எங்கணும் சென்று, என் வீரமும் அறிவும் எனக்கு என் அன்னை அளித்தாள்! என்று கூறி எனக்குப் பெருமை தேடித் தருவாய் என்று பார்த்தால், பெற்றவளை மறந்திடத் துணியும் பேதையே! கற்றதை மறந்திடும் கசடனே! என்னை மகனாக்கிக்கொள்ள ஒரு மகராசி, அழைக்கிறாள் - அவள் தன் வயிற்றில் பிறக்காதவர்களாயினும் வாஞ்சனை காட்டுவதாக வாக்களிக்கிறாள் - உச்சி மோந்து முத்தமிட்டு, உன் தாயாக நான் இருக்கிறேன்! உனக்கும் உன் போலப் பல பிள்ளைகட்கும் நான், தாய்வேலை பார்க்கும் பேராவல் சுரந்திடும் உள்ளம் கொண்டேன்‘, எனவே உத்தமனே! உன் தாய் என்று அவளையும் இவளையும் காட்டி அழாதே! நான் தாயானேன், நீ என் மகனானாய் என்று அழைக்கிறாள், நான் இனி அந்த அம்மைக்கு மகனாகி விடுகிறேன், தாயே! விடைகொடு! என்று துணிந்து என்னைக் கேட்கிறாயே! பெற்ற வயிறு பற்றி எரிகிறதே! அந்த வேளையிலும், உன்னைப் பாவி! பழிகாரா! படுநாசமடைவாய்! என்று கூறவும் மனம் கூசுகிறதடா, பாலகனே! என்னைப் பார்! என் தாய்! என்று நீ கூறிப்பெருமைப்படத்தக்க நிலையில் நான் இல்லையா?… என்னிடம் என்னடா மகனே! குற்றம் கண்டாய்? என்னை வெறுத்துவிட்டு வேறோர் வேற்றுச் சீமையாளிடம் "தத்து’ போகவேண்டிய நிலையா வந்துற்றது? நான் என்ன நீ பசியால் துடித்து, பதறிக் கதறிடும்போது உன் முகத்தையும் பாத்திடாமல், என் சுகத்தைக் கவனித்துக்கொண்ட மாபாவியா? உன்னை மாடாய் உழைக்கச் செய்து, நான் உலவி மகிழ ஒரு மாடி கட்டிக்கொண்டேனா! உழைப்பால் நீ ஓடானாலும் பரவாயில்லை, எனக்கு ஓர் உல்லாச ஓடம் வேண்டும், அதனை நான் களிப்புக் கடலில் செலுத்தி மகிழப்போகிறேன் என்று செப்பிய வன்னெஞ்சக்காரியா! என்ன குறை கண்டாயடா மகனே! புதிய தாய் தேடிடவேண்டிய விபரீதம் நேரிட்டதா, மகனே! மகனே! மதி இழந்தனையோ! மயக்க முற்றனையோ! பேதை மகனே! எதனையும் பெறலாம், அதற்கும் ஓர் வழி கிடைக்கும், ஆனால் அன்னையின் அன்பு என்பதனை, அறியாச் சிறுவனே! விலைபோட்டு வாங்க இயலுமா! அன்னையின் அன்பு, பெற்றவள் பாசம், மலிவு விலைக்குத் தருகிறோம், வருக! பெறுக! என்று யாரோ அங்காடியில் கூவிக்கூவி விற்பதாகக் கூறுகிறாயே! விளையாட்டுப் பருவத்தினன் நீ எனினும், கூடுகட்டி வாழும் குருவிகளைப் பார்க்கத் தெரியுமே உனக்கு தாய்க் குருவியிடம் தானே குஞ்சுகள் தீனியைக் கேட்கின்றன - ஊட்டப் பெறுகின்றன! மடியிலே பாலைச் சுமந்து நிற்கும் பசு எதுவோ அதுவே நமக்குத் தாய் என்று ஊட்டிடச் செல்லும் கன்று, நீ பார்த்ததுண்டா! ஏடுகள் புகட்டுவதைக் கூடக் கவனிக்க வேண்டாம்; பக்குவம் வேண்டும் அதற்கு! கண்ணுள்ளோர் காணக்கூடிய காட்சிகளடா இவை குருவிக் கூட்டிலே காணப்படும் குடும்ப பாசமும், துள்ளிடும் கன்றுக்குப் பாலும் அளித்து பரிவுடன் உடலை நாவினால் நீவியும் விடும் தாய்ப்பசுவின் பாசமும்!! இந்தக் காட்சிகள் போதுமே, தாய் உள்ளத்தைத் தாயிடம்தான் பெறமுடியும் என்ற உண்மையை உணர்த்த!’’ என்றெல்லாம் தம்பி! தாயகம் கேட்கிறது! நான் காணுகின்ற வயலும் அதற்கு வளமூட்டும் நீர் நிலையங்களும், அந்த வளத்தை விளக்கக் குலுங்கிடும் மணியும் கனியும், அவை தமைப் பெற உழைப்பு நல்கிடும் உத்தமரின் வியர்வையும், குன்றும் குளமும், கூத்தும் பாட்டும், மக்களின் மாண்பும் பிறவும், எல்லாம் எனக்கு இதனைத்தான் காட்டுகின்றன! உனக்கு மட்டுமென்ன, நீயும் இதே எண்ணம்தான் பெறுகிறாய்!! தம்பி எனக்கும் உனக்கும் காமராஜருக்கும் என்றுகூட வேண்டுமானால் சேர்த்துக்கொண்டே பேசுவோம், தேசிங்கு ராஜன் என்ற உடனே சுரக்கும் வீர உணர்ச்சி, வங்கத்திலும் கலிங்கத்திலும் ஏற்படமுடியுமா? பாக்தாதிலும் டமாஸ்கசிலும் எப்படி தேசிங்கு ராஜன் கதை கேட்டால், வியந்து பேசுவரோ அவ்வளவுதான் கல்கத்தாவிலும் கான்பூரிலும்! கட்டப் பொம்மன் என்றதும் இங்கு தோள்பூரித்து, மாற்றானின் தாள் வணங்கமாட்டேன், என் கரத்தில் வாள் உண்டு! என்று ஆர்த்தெழத்தக்க வீரம் நமக்கு எழுவதுபோல, பிற எங்கு காணமுடியும்? பாஞ்சாலங்குறிச்சியின் வீரக் கதையைக் கூறினால், பாஞ்சாலத்தில் உள்ளவர்கள் மனதிலே சொந்தம் எழாதே! வியப்பு தோன்றக்கூடும்! சுவை மிக்க வீரக்கதை கேட்டோம் என்ற மகிழ்ச்சி பிறக்கக் கூடும்! எனக்குத் தம்பி! சாதாரணமாக நெல் காணும்போது ஏற்படும் நம் பொருள் என்ற உணர்ச்சி கோதுமையைக் காணும்போது ஏற்படமாட்டே னென்கிறதே, என்ன செய்வேன்! நம் நாடு - நம் இனம் - நம் நாட்டு இயல்பு - நமது வரலாறு - நம் நாட்டு வீரக் காதைகள் - நம் நாட்டு எழில் நம் நாட்டு முறைகள் - என்பன, தம்பி! தாயிடம் சேய்கொள்ளும் பாசம் போன்றது, இயற்கையாகச் சுரப்பது, இந்தப் பாசம், பெற, தம்பி! எத்தனை எத்தனை தலைமுறைகளாயின என்று எண்ணிப்பார்! காவிரி குறித்தும், தமிழகத்து வீரக் காதைகள் குறித்தும், இந்நாட்டுக் குன்று குறித்தும் நம்மவர் கொண்டிடும் கொள்கை குறித்தும், எத்தனை எத்தனை தலைமுறைகளாகப் பேசிப் பேசிப் பேசி; அந்தப் பாசம் நிலைத்து நிற்கிறது! சேரன் செங்குட்டுவன் காலமுதற்கொண்டு சொல்லிச் சொல்லிச் சுவை ஊறி ஊறி, நமக்கென்று ஓர் சுபாவம் அமைந்து விட்டது - அதனை சுப்பிரமணியனார் பார்த்து சூ! மந்திரக் காளி! ஓடிப்போ! என்று சொல்லுவாராம் அந்த "பாசம்’ ஓடியே போகுமாமே! இந்தக் கேலிக்கூத்தை என்ன வென்று சொல்வது! நம் நடிகமணி டி.வி. நாராயணசாமி, 108 நாட்கள் சிவசீலா நாடகத்தில் சிவபெருமான் வேஷம் போட்டார் - பித்தளைப் பாம்புகள், கிரீடம் - ஏகப்பட்ட “பாரம்’ - அந்தப் பழக்கத்தில், காலை வேளைகளிலேயே கூட, அந்த நாடகம் முடிந்து பல நாட்களுக்குப் பிறகும் நண்பர் நாராயணசாமி என்னிடம்வந்து பேசிக்கொண்டிருக்கையில்,”பாரம்’ சுமந்து கொண்டிருக்கும் தோற்றமே இலேசாகத் தென்படும்! தம்பி, தாய்நாட்டுப் பாசம், நாராயணசாமி சுமந்தது போன்ற பாரம் அல்ல - அதுதான் தேசியம் - பாரம்பரியம் என்கிறார்களே அது அதனை விலங்கு களும் அடியோடு இழந்துவிட முடியுமா என்பது ஐயப்பாடுதான் - நாம் எங்ஙனம் அதனை இழந்துவிட முடியும் - அமைச்சர்கள், அதனை இழந்தால்தானே எமக்கு அமைச்சர் வேலை கிடைக்கிறது என்று வாதாடக் கூடும் - தம்பி! அது அவர்கள் கீழ்நிலை சென்று விட்டதைக் காட்டுவதாகுமே தவிர, நாட்டுப்பற்று எனும் மாண்பு பொருளற்றது என்பதையா காட்டிடும்! தலைமுறை தலைமுறையாக வளர்ந்து நமது குருதியுடன் கலந்துள்ள தாய்நாட்டுப் பாசத்தை, ஒரு உத்தரவு பிறப்பித்து ஒழித்துவிட முடியும் என்று எண்ணுகிறார்களே, இவர்களை என்னென்று கூறுவது! சின்ன வயதிலே சந்தைப் புறத்திலே காணாமற்போய் விட்ட குழந்தை, வேற்றாரிடம் வளர்ந்து, பெரியவனானாலும், பிறகோர் நாள், உண்மை தெரிந்ததும், தாயின் பாதத்தைத் தன் கண்ணீரால் கழுவிடக் காண்கிறோம் - கதைகளில் தலைமுறை தலைமுறையாக தொல்காப்பியரும், வள்ளுவரும், இளங்கோவும் காக்கைப்பாடினியாரும், சீத்தலைச் சாத்தனாரும் கோவூர் கிழாரும், கணியன் பூங்குன்றனாரும், கபிலரும், திருத்தக்கரும், நக்கீரரும், நாகனாரும், நச்செள்ளை யாரும், (மற்றவர் பற்றிய முறையான பெயர் வரிசையை நமது நாவலரிடம் கேட்டுப் பெறுக) ஊட்டி வளர்த்து, உருவாக்கி வைத்துள்ளதை, ஊராளவந்தவர்கள் உத்தரவு போட்டு உருக்குலைத்து விடுவதாமே! இப்படியொரு "உற்பாதம்’ நேரிட விடலாகுமா! எனவேதான் தம்பி, பாரத நாடு - இந்தியா - இந்தியர் - என்று இவர்கள் இட்டுக்கட்டி இதுகாலை திணிக்க விரும்பும் போலித்தேசீயம், முளைவிட மறுக்கிறது. நீண்ட நெடுங்காலமாக நமது பரம்பரைக்குக் கிடைத்து, கண்ணீரும் செந்நீரும் வியர்வையும் அதற்கு அளித்து, செழிப்புறச் செய்து, எந்த இயல்பு - தாய்நாட்டுப்பற்று தேசியம் - நம்மிடம் குருதியிற் கலந்திருக் கிறதோ, அதனை அழித்திட முற்படுவது அறிவீனம் என்பது மட்டுமல்ல, ஆகாத காரியம், அடாத செயல் என்பதுடன், இவர்கள் எக்காரணம்பற்றியோ வெற்றி நிலை எய்தினாலும், இவர்கள் பிடியில் சிக்கிவிட்ட மக்கள், இருந்ததையும் இழந்து, புதியதோர் இயல்பும் பெறாமல், ஏதுமற்றவர்களாக, பட்டியில் மாடென உழல வேண்டி நேரிடுமேயன்றி, எமது! எம்மவர்! எமது இயல்பும் எம்வீரர்! எமது புலவர்! எமது நெறி! என்று கூறிப் பெருமைப்பட, அறிவாற்றல் பெறமுடியாததோர் நிலை பெறுவர்! நாடு இருக்கும், அதிலே மக்கள் இருப்பர் - ஆனால் இரண்டினையும் ஒன்று ஆக்கிடும் பாசம் - பற்று - தேசியம் - இருக்காது!! வீட்டிலே இருக்கும்போது, நம்முடன் இருப்போரைவிட, அதிகமான அளவில்தான் ஆட்கள் இருக்கிறார்கள் இரயில் பயணத்தில் வீட்டிலே காணப்படுவதைவிட சிற்சில வேளைகளிலே இரயிலில் குதூகலமும் கூடக் காணப்படும் - எனினும் அதிலே செல்லும் எவரும் - இரயிலைத் தமது வீடு என்று கொள்வதில்லையே!! சிறு குடில் எனினும், அதனிடம் ஏற்படும் பாச உணர்ச்சி, புதுமெருகுடன் கூடியதாக இருப்பினும், இரயிலிடம் ஏற்படுகிறதா!! புதிய போதகர்களோ, குடிலையும் அழித்துவிடுங்கள், நாங்கள் அமைந்திருக்கும் கூடாரத்தை உமது மனையென்று கொள்ளுங்கள் என்கின்றனர்! முடியாது ஐயன்மீர், ஏனெனில் அது முடியக்கூடிய செயலல்ல என்கிறோம். விடாதே! பிடி! சிறையில் அடை! என்று இந்துஸ்தான் டைம்ஸ் கொக்கரிக்கிறது! இதிலிருந்து தம்பி, நான் துவக்கத்தில் எடுத்துக் காட்டியபடி, அங்கு வரையில், நமது கழகம் மணம் பரப்பிவிட்டிருக்கிறது என்ற பேருண்மை தெரிகிறது. இதுபோல, எங்கும் நமது கழக நிலை தெரிந்திடவேண்டும் என்பதற்காகவேதான் தம்பி, நானும் துணிந்து ஆங்கிலக் கிழமை இதழ், ஜனவரித் திங்களிலிருந்து வெளியிடுவது என்று ஏற்பாடுகளைத் துவக்கிவிட்டேன். சென்ற ஆண்டு, எப்படியும் இந்த இதழ் துவக்கி நடத்துவது என்று, ஏற்பாடுகளை என் நண்பர் S.S.P. லிங்கம் அவர்களைக் கொண்டு துவக்கினேன். அவரும் மிக ஆர்வத்துடன் பணியாற்றினார் ஆனால், என் சுபாவம்தான் உனக்குத் தெரியுமே, புதிய பொறுப்பாயிற்றே! எப்படி இதனையும் கவனித்துக் கொள்வது! என்ற அச்சம் குடைந்தது. மெத்தச் சமாதானம் சொல்லி, நண்பர் லிங்கத்தை, இப்போதைக்கு வேண்டாம், பிறகு பார்ப்போம் என்று கூறினேன். இப்போது சென்னையிலிருந்து நடத்துவதைவிட காஞ்சியிலிருந்து வெளியிடுவது, சிறிதளவு வசதி தரும் என்ற எண்ணத்துடன், ஏற்பாடுகள் செய்துவருகிறேன். தம்பி! நான் அதற்காகக் கேட்கும் ஆதரவு நன்கொடை அல்ல - துவக்கத்திலேயே எனக்குத் தெம்பும் தைரியமும் வருவதற்காக, ஆயிரம் சந்தா தேவை என்று கேட்டேன். நான் இதுபோலக் கேட்கும்போது, தம்பி, நீ மட்டுமல்ல கேட்டுக்கொண்டிருப்பது. மாற்றுக் கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்; சர்க்காரும் உற்றுக் கேட்கிறது. என் வேண்டுகோளைத் தம்பி, நீ அன்புடனும் அக்கரையுடனும் நிறைவேற்றி வைத்தால், உனக்கும் எனக்கும் உள்ள உறவு எவ்வளவு உயர்தரமானது என்பதை அறிவதுடன் நமது கழகத்துக்கு எத்துணை செல்வாக்கு இருக்கிறது, காரியத்தை வெற்றிகரமாக்கும் ஆற்றல் நமது கழகத் தோழர் களிடம் எவ்வளவு இருக்கிறது என்பதை, மாற்றுக்கட்சியினரும், சர்க்காரும் அறிவர்! உன் அன்பும் அக்கறையும், ஆங்கில ஏடு பொறுத்த வரையில், நான் மகிழத்தக்க வகையில் இன்னும் உருவெடுக்கவில்லை என்பதைக் கூறிக்கொள்ள வருந்துகிறேன். எனினும் சொல்லிவைக்கிறேன், நிலைமையை அறிந்து விரைவினில் ஆதரவு திரட்டி அளித்திடும் ஆற்றல் உன்னிடம் நிரம்ப இருக்கிறது என்று அறிந்தவன் என்பதனால். இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பல, வளமான ஆங்கில ஏடுகளை மட்டுமே வெளி உலகு காண்கிறது. எனவே திராவிடம் தெரிவதில்லை. டாக்டர் மு.வ. கூறுவதுபோல, சென்னை அமைச்சர் களையோ அச்சம் தடுக்கிறது; எப்போதேனும் அவர்கள் துணிந்து நீதி வழங்கும்படி கேட்டாலோ, மிரட்டலும் விரட்டலுமே கிடைக்கிறது. பல்கலைக் கழகத்தினரின் நியாயமான கோரிக்கையையும் டில்லி புறக்கணித்து விடுகிறது, மதிப்பளிக்க மறுக்கிறது. இப்படி ஒவ்வோர் முனையிலிருந்தும் டில்லியின் தாக்குதல் கிளம்புவது கண்டு, மனம் நொந்து போயுள்ள நம்மையோ நாட்டிலே நடமாடவிடுவதே கூடாது, ஒழித்துக்கட்ட வேண்டும் என்று டில்லியிலுள்ள இந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது. இந்நிலையில், நமது கழகத்தைப் பிறர் அறிவதற்காகவாவது ஒரு ஆங்கில ஏடு - கிழமை இதழாவது வேண்டும் அல்லவா! இதை அறிந்துள்ள உனக்கு ஆதரவு திரட்டி உடனே அனுப்பி வைக்கும்படி, தம்பி, நான் பன்னிப் பன்னிக் கூறத் தேவையில்லை என்று எண்ணுகிறேன். கலை, கல்வி, அரசியல், எனும் மூன்று துறைகளிலே, டில்லி வழங்கியுள்ள மிரட்டல் விரட்டல் கண்டோம் - இனித் தம்பி, தொழில் துறையிலிருந்து கிளம்பும் ஒரு துயரக் கீதம், கேள். அதைக் கூறு முன்பு, நமது நிதி அமைச்சர் உருவத்தையும் உரையையும் நினைவிலே கொண்டுவந்து நிறுத்திக் கொள்ளவேண்டுகிறேன்!! அடுத்த கிழமை அந்தத் துயர கீதம் பற்றிக் கூறுகிறேன். அன்பன், 26-11-’56 சுகஸ்தான் வாசி… தொழில் துறையில் வடக்கும் தெற்கும் - ரோச்விக்டோர் யாவும் T.V.S.-ம் தம்பி! அமைச்சர் அடித்து அடித்துப் பேசுகிறாராம், வடக்கு தெற்கு என்றெல்லாம் பேசுவது தவறு - பெருந்தவறு - விஷமிகளின் கூக்குரல் என்று பேசுகிறாராம், போகுமிடமெல்லாம்!! தெற்கே தொழில் சிறிதளவு குறைவுதான் - என்கிறார், உடனே மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள் - செய்ததும், குட்டம் பிடித்தவனைக் காண்பவர்கள், ஐயா! கொஞ்சம் எட்டி நில் என்று கூறியதும், கோபம்கொண்டு கண்டபடி ஏசுவானல்லவா, அந்நிலை பெற்றவராகி, "இதற்காக ஏன் கத்துகிறீர்கள்! யார் உங்களைத் தொழில் நடத்தவேண்டாமென்று சொன்னவர்கள்? யார் உங்கள் கையைப் பிடித்துத் தடுத்தவர்கள்?’’ என்று வெளுத்து வாங்குவதாக எண்ணிக்கொண்டு வகைமுறை கெட்ட நிலையில் வசைமாரி பொழிந்து கொண்டு வருகிறாராம்! இது, தம்பி! தொழில் நடத்த விரும்பியவரின் கையைப் பிடித்து மட்டுமல்ல, அவருடைய முதுகில் குத்தி, மூக்கினை அறுத்து, மூலையில் டில்லி உட்காரவைத்த சோகக்காதை. வடக்கே தொழில்வளம் பெருகிவிட்டதே, தெற்கு தேய்ந்துவிட்டதே என்று பேசிக்கொண்டு இருப்பவர்களின் போக்குக்கூட இருக்கட்டும், தெற்கிலே தொழில் வளர வேண்டும், பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு பிழைக்கும் வழி கிடைக்கவேண்டும், நேரு பண்டிதர் ஓயாமல் வற்புறுத்தி வருகிறாரே அதற்கேற்ப, உற்பத்தி பெருக வேண்டும், செல்வம் கொழிக்கவேண்டும் என்பதைப் பேச்சளவில் விட்டுவிடாமல், செயலுக்குக்கொண்டுவர விரும்பி, துவக்கிவிட்டுத் துடிதுடிக்கும் தொழிலதிபரின் துயரகீதம் இது. தூத்துக்குடியிலும் அதன் வட்டாரத்திலும், உப்பளம் ஏராளம். இங்கு கிடைக்கும் இயற்கைப் பொருள்களைக் கொண்டு, மிகப்பெரிய சோடா உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டார்கள். சோடா உப்பும், அதனைத் தயாரிக்கும்போது உடன் தயாராகக்கூடிய குளோரைன் - குளோரைட் - இலிமினைட் - போன்றவைகளும், கனரகத் தொழிற்சாலைகளுக்கு மிகமிகத் தேவைப்படுவன. தெற்கே, கனரகத் தொழில் வளர்ச்சி காணவேண்டு மானால், குளோரைட், குளோரைன், இலிமினைட், காஸ்டிக் சோடா, போன்ற இவைகளின் உற்பத்தி வளமாகவேண்டும். இந்தப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்றது, தூத்துக்குடி வட்டாரம், என்ற உண்மையை நிபுணர்கள் ஒப்புகின்றனர். சோடா உப்பும், இதுபோன்ற பொருள்களும், வெளிநாடு களிலிருந்தே வரவழைக்கப்படுவது பொருள் பாழாகும் முறை, இந்த முறை நீடிக்குமட்டும் இங்கு புதுப்புது கனரகத் தொழில் வளருவது கடினம், எனவே சோடா உப்பு உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலை அமைப்பது அவசியம்தான் என்பதை, இந்திய சர்க்காரின் பாதுகாப்பு அமைச்சர் குழுவே எடுத்துக் காட்டிற்று. நிபுணர்கள் ஒப்பம் அளித்தனர், ஆய்வுக்குழுவினர் திட்டம் தேவைதான் என்றனர், இந்தப் பொருள்களை உபயோகிக்கும் பல்வேறு தொழிற்சாலையினரும் வரவேற்றனர். குறிப்பாக ஜவுளி ஆலைத் தொழிற்சாலையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்; அனைவரும்கூடி இந்திய சர்க்காரிடம் முறையிட்டு, தூத்துக்குடியில் இந்தத் தொழில் துவக்கி - ஆதரவு அளிக்கவேண்டுமென்று வலியுறுத்தினர். இதுபோன்ற தொழிற்சாலை பெரிய அளவில், வேறு எங்கும் இல்லை. இதற்கு கனரகத் தொழிற்சாலை ரசாயனப் பொருள் உற்பத்திக் கம்பெனி; அமைக்கப்பட்டது. மூலதனம் ஒரு கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டில், இந்த ஒரு கோடி ரூபாய் கம்பெனியின் துவக்கவிழா விமரிசையாக நடந்தேறியது. துவக்க விழா நடத்தினவர் மைசூர் மகாராஜா!! தம்பி! இப்போது அந்தத் தொழிற்சாலை இயங்கவில்லை!! அது குறித்தே இந்தத் துயரகீதம் வெளிவந்திருக்கிறது. ஒரு கோடி ரூபாய் முதல் திரட்டி, நடத்தத் திட்டமிட்டு மும்முரமாக ஆரம்ப வேலைகளை நடத்தி வெற்றி பெற்று, 17 இலட்ச ரூபாய் வரையிலே பங்குத் தொகை திரட்டிவிட்டனர். சென்னை சர்க்காரும், 10 இலட்ச ரூபாய் அளவுக்கு இந்தத் தொழிற்சாலையில் பங்கு எடுத்துக்கொள்வதாக வாக்களித்தது. இங்ஙனம் நிபுணர்களின் ஆதரவைப் பெற்று, பிரமுகர்களின் ஆசியைப்பெற்று, துவக்க விழாவிலே மைசூர் மகாராஜாவின் வாழ்த்துகளைப் பெற்றுத் துவக்கப்பட்ட தொழிற்சாலை, இன்று மூடுவிழாவுக்கு முகூர்த்தம் பார்க்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டிருக்கிறது! ஏன் என்று நிதி அமைச்சரைக் கேள் தம்பி, ஏனா? உங்களால் முடியவில்லை! உங்கள் தெற்குக்கு அவ்வளவுதான் யோக்யதை!’’ என்று கொதித்துக் கூறுவார் ஆனால் அவருக்கும், உண்மை விளங்கினால், கோபமல்ல, கண்ணீர் வரும். தொழிற்சாலை அமைப்புக்காக நூறு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது; பாதைகள், பாதை ஓரத்தில் மரம் செடி கொடிகள், காரியாலயக் கட்டிடங்கள், அவைகளைச் சுற்றி கிராதிகள், காம்பவுண்டுகள், வேலிகள், தோட்டங்கள், யாவும் கட்டப்பட்டன. சுவிட்சர்லாந்து நாட்டு விஞ்ஞானத் தொழில் நிபுணர்களின் கூட்டுறவு கேட்டுப் பெறப்பட்டது. கிரெப் கம்பெனியார், இதற்கான இயந்திரம் தரவும், தொழிற்சாலையில் பணியாற்றவும் இசைந்ததுடன், தங்கள் பங்குத் தொகையாக 6 இலட்ச ரூபாய் அளிக்கவும் ஒப்புதல் அளித்தனர். சுவிட்சர்லாந்து நாட்டு நிபுணர்களுக்கான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன! சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இயந்திரக் கருவிகள் வருவதற்கான ஏற்பாடு முடிந்துவிட்டது. கிராம்ப்டன் கம்பெனியார் மின்சார சம்சார சம்பந்தமான இயந்திரங்களை அனுப்பிவைத்துவிட்டனர். தொழிற்சாலை அமையும் இடத்தருகே வசதிக்காக இரயில்வே இலாகாவினர் விடுதி அமைத்தளித்துவிட்டனர். குடிதண்ணீர் வசதிக்காகப் பெரிய கிணறுகள் தோண்டப் பட்டாகிவிட்டன. தொழிலாளருக்கான விடுதிகள் கட்டுவதற்கான திட்டம் தயாராகி வேலை துவங்கிவிட்டது. தொழிற்சாலையின் தேவைக்காகவென்றே, பாளையங் கோட்டையிலிருந்து தூத்துக்குடி வரையில் புதிய பாதை அமைக்க ஏற்பாடாகி வேலை நடந்தேறி வருகிறது. தம்பி! இந்த ஒவ்வொரு வேலை துவக்கப்பட்டு நடந்தேறியபோதும் தொழிற்சாலை நடத்தவேண்டுமென்று திட்டமிட்டவர்களின் மனதிலேயும், தொடர்புகொண்டவர் களின் மனதிலேயும், எத்தனை ஆசை ஊறியிருக்கும்: வேலையற்ற மக்களில் எத்தனை ஆயிரம் பேர், இந்தப் புதிய தொழிற்சாலை எழுவது கேட்டும் கண்டும், இனித் தங்கள் கஷ்டம் தீரும் என்று கருதியிருப்பர். ஆனால், தம்பி! 1953 இல் மைசூர் மகாராஜாவால் துவக்கப் பட்ட இந்தத் தொழிற்சாலை, இப்போது எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா? 1956 செப்டம்பர் திங்களில், துயரகீதம் பாடுகிறார்கள்! துரோகம்! வஞ்சகம்! நம்பவைத்துக் கழுத்தறுப்பது! நம்பினோரை நட்டாற்றில் தள்ளுவது! தூங்கும்போது கல்லைத் தூக்கித் தலையில் போடுவது! - என்று பலப்பல கூறப்படுகிறதே, இந்தத் தொழிற்சாலை சம்பந்தமாக நடை பெற்றுள்ள சம்பவம், இவைகளை எல்லாம் தூக்கி அடிப்பதாக இருக்கிறது. கனரகத் தொழிலுக்குத் தேவையான ரசாயனப் பொருள் களைத் தயாரிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் மூலதனத்துடன் நடத்துவது என்று திட்டமிட்டுத் துவக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் வளர்ச்சிக்காக ஒரு முறையும் வகுத்தனர். முதல் தவணை - அல்லது முதல் கட்டம் ஒன்று; இந்த முதல் கட்டத்தில் நாளொன்றுக்கு ஐந்து டன் சோடா உப்பு தயாராகும் அளவு வேலை நடத்துவது என்றும், ஐந்தாண்டுகள் இம்முறையில் வேலை செய்தான பிறகு, தினசரி பத்து டன் சோடா உப்பு தயாராகத்தக்க விதத்தில் தொழிற்சாலையை விரிவுபடுத்துவதென்றும், முறை வகுத்துள்ளனர். தென்னாட்டிலே தொழில் வளம் ஏற்படவில்லை என்பதை அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்! வேண்டுமென்றே தென்னாடு புறக்கணிக்கப்படவில்லை; ஓரவஞ்சனை நடைபெற வில்லை என்று சமாதானம் கூறுகின்றனர். தென்னாட்டிலே தொழில் நடத்த, பணம் படைத்தோரும், பணத்தைத் திரட்டக்கூடியவர்களும் முன் வரவேண்டும் என்று யோசனை கூறினர்; டாட்டா, பிர்லா என்றுகூறி வயிற்றெரிச்சல்பட்டு என்ன பிரயோஜனம், உங்களுடைய அழகப்பாக்களை அழைத்துத் தொழில் நடத்தச் சொல்லுங்களேன் என்று கேலி பேசினர். அவ்விதம் புதிய தொழில்கள் துவக்கப்பட்டால் துரைத்தனம் வரவேற்கும், ஆதரவு அளிக்கும் என்று வாக்களித்தனர். இதனைக் காங்கிரஸ் பேச்சாளர்கள் நமக்கு அவ்வப்போது எடுத்துக் காட்டியும் வருகின்றனர். இப்போது, நடைபெற்று வரும் வேடிக்கையைக் கேள், தம்பி! கேள்! இவ்வளவு வேலைகள் நடந்தான பிறகு - அதற்காகப் பல இலட்சம் செலவான பிறகு - மைசூர் மகாராஜாவின் திருக்கரத்தால் அஸ்திவாரம் அமைத்து, புதிய தொழிற்சாலைக்கான துவக்க ஏற்பாடுகள் பல செய்து முடித்து, நிபுணர்களை நியமித்து, வேலையைத் துவக்கியான பிறகு, இந்திய சர்க்கார் இந்தத் தொழிற்சாலை, தகுந்தபடி நடத்தப்படுமா என்பதிலே எமக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது, என்று ஒரு கரடி’யை அவிழ்த்துவிட்டிருக்கிறது. நாளொன்றுக்கு 5 டன் சோடா உப்பு தயாராகும் என்கிறீர்களே - இதுதான் உமது உற்பத்தியின் அளவு என்றால், கட்டிவராதே, தொழிலில் இலாபம் வராதே, வீண் கஷ்ட நஷ்டமல்லவா ஏற்படும் - இந்த நிலையில். புதிய தொழிற் சாலையை ஏன் கட்டிக் கொண்டு மாரடிக்கிறீர்கள் - விட்டுத் தொலையுங்கள் என்று இந்திய சர்க்கார், தமது மேலான, ஆலோசனையைக் கூறுகிறது. எப்படி இந்தத் தொழிற்சாலையைச் சரியான முறையில் நடத்தமுடியும் - செலவுக்கும், போடும் முதலுக்கும், எடுத்துக் கொள்ளும் கஷ்டத்துக்கும் ஏற்ற பலன் கிடைக்காதே, இதற்கு என்ன சமாதானம் சொல்கிறீர்கள் என்று இந்திய சர்க்கார், கேள்வி கேட்கிறது. தம்பி! எல்லா விவரமும் ஆதாரமும் தேடித்தந்து, புள்ளி விவரக்கணக்குக் காட்டி, திட்டத்தை விளக்கி, திட்டத்துக்கு நிபுணர்கள் ஒப்பம் அளித்ததையும் எடுத்துக் காட்டித்தான், 1953 இல், இந்திய சர்க்காரிடமிருந்து அனுமதி பெறப்பட்டது - இந்தப் புதிய தொழிற்சாலை துவக்க. இப்போது, இரண்டாண்டுகளுக்குப் பிறகு, துவக்கவிழா நடத்தி, ஊன்றிய விதை செடியான பிறகு, கில்லி எடுத்து வேர் ஆழச்சென்றிருக்கிறதா என்று பார்க்கச் சொல்வது போல, இந்தத் தொழிற்சாலை நடத்துவது இலாபகரமானதாக இருக்குமா என்பதுபற்றி எமக்குப் பலமான சந்தேகம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது, என்ன சொல்கிறீர்கள் என்று டில்லியில் உள்ள சர்க்கார் கேட்கிறது. மகள் ஆறு மாத கர்ப்பிணியான பிறகு, என் மருகன் குடும்பத்தை வளரச் செய்யக்கூடியவன்தானா என்பதுபற்றிய ஐயப்பாடு எனக்கு ஏற்பட்டுவிட்டது. எனவே என் இல்லத்துக்கே அழைத்துச் செல்ல எண்ணிவிட்டேன் என்று கூறுபவர் உண்டா! டில்லி இருக்கிறது! ஆண்டு மூன்று ஆகிறது, அஸ்திவாரம் போட்டு! பல இலட்சங்கள் செலவாயின, துவக்க வேலைகளுக்கு! தொழிற்சாலைக்கான தளம் எழும்பி விட்டது, பாதைகள் அமைந்துவிட்டன! இவ்வளவுக்கு பிறகு, இந்திய சர்க்காருக்கு, பிள்ளை பிழைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டதாமே, கேட்டனையோ இந்த வேடிக்கையை!! துவக்கச் சொல்லேன் புதிய தொழிற்சாலைகளை, என்று பேசும் அமைச்சர்களுக்கு, தம்பி! துவக்கிய பிறகு ஏற்பட்டுள்ள இந்தத் துயரச்"சேதி’ தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? என்ன செய்தார்கள்? கேட்டுப்பாரேன், காங்கிரசில் உள்ள நல்லவர்களை. வெடி குண்டு வீசுவது போல, இந்திய சர்க்கார் வீசிய கேள்வி இருந்தது எனினும் புதிய தொழிற்சாலை அமைப்பாளர்கள், இந்திய சர்க்காரின் சந்தேகத்தைப் போக்க, புள்ளி விவரங்களை மீண்டும் விளக்கி, 5 டன் உற்பத்தி என்பது, முதல் கட்டத்தில்தான், இரண்டாவது கட்டத்திலேயே நாளொன்றுக்கு பத்து டன் உற்பத்தியாகும், தொழில் கட்டி வரும், பணம் விரயமாகாது, உழைப்பு வீண்போகாது என்றெல்லாம் எடுத்துக் காட்டினர். இந்தச் சமாதானத்துக்கு, விளக்கத்துக்கு, இந்திய சர்க்கார் மறுப்பும் தரவில்லை, தமது பழைய புகாரையும் விட்டுவிடவில்லை. தம்பி! நட்டாற்றில் விடுவது என்கிறார்களே, இது வேறு என்ன? தூங்கும்போது கல்போடுவதும், துவக்கிட அனுமதி தந்து, வேலைகள் மளமளவென்று வளர்ந்திடும்போது, "கட்டை’ போடுவதும் வேறு வேறா!! எண்ணிப் பார்க்கச் சொல்லு, நம்மை எல்லாம் பேதம் பிளவு பேசுவோர் என்று எண்ணிக்கொண்டு நிந்திக்கிறார்களே, காங்கிரஸ் நண்பர்கள், அவர்களை! இத்துடன் இந்தச் சோகக் காதை நின்றுவிடவில்லை. இதுபோதும், வேதனையைக் கிளற, கதர்ச்சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு கழகத்தில் சேர! எனினும், மேலும் நடந்திருக்கும் "வேலை’யையும் கூறுகிறேன், கேள், தம்பி. 1953 இல் ஆதாரம் காட்டி, அவசியத்தை வலியுறுத்தி, புள்ளி விவரம காட்டி, நிபுணர்களின் ஒப்புதலைக் காட்டி இந்தத் தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற்றனர். 1955 இல் தூத்துக்குடிக்கு அருகேயே, இது போன்ற வகையான புதிய தொழிற்சாலை அமைக்க, வேறோர் தரப்பினருக்கு இந்திய சர்க்கார் அனுமதி அளித்தனர். 1953 இல் அனுமதி அளித்து வேலையைத் துவக்கிய தொழிற்சாலை, உற்பத்தி செய்யும் அளவு போதாது என்பதைக் கண்டான பிறகு, மேலும் உற்பத்தியை அதிகமாக்கும் வழி அந்தத் தொழிற்சாலைக்கு இல்லை என்பதைக் கண்டறிந்த பிறகு, மற்றோர் தொழிற்சாலைக்கு அனுமதி தந்தனரா இந்திய சர்க்கார்? இல்லை, தம்பி, இல்லை. 1953 இல் துவக்கப்பட்ட தொழிற்சாலை, உற்பத்தி செய்திடும் நிலைக்கு வரவில்லை - முயற்சி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்திலே, அதே வட்டாரத்தில் வேறோர் தொழிற்சாலைக்கு அனுமதி அளிப்பது ஏன்? நீதியும் நியாயமும் மடிந்திடக்கூடாது என்ற நல்லெண்ணம் கொண்ட எவரும், அவர் எந்தக் கட்சியில் இருப்பினும், கேட்க வேண்டிய கேள்வி அல்லவா இது? கேட்பார்களா? 1953 இல் அனுமதி அளித்தது, சோடா உப்பு தயாரிக்க! 1955 இல் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி அளித்திருக்கிறோம். என்றால், அது சோடா உப்பு தயாரிக்க அல்ல, சோடா சாம்பல் தயாரிக்க! என்று சமாதானம் கூறிட சர்க்காருக்கு மனம் இடம் தருகிறது. தம்பி! பெயர் ஒன்றுக்கு சோடா உப்பு - Caustic Soda - மற்றொன்றுக்கு Soda Ash - சோடா சாம்பல் என்று இருக்கிறதே தவிர, தொழில் முறை, உற்பத்தி வகை ஆகியவை ஒரேவிதம்தான்! எனினும், சர்க்கார் நடத்திய இந்தத் திருவிளையாடலை, சொற்சிலம்பம் செய்து மறைத்திட முயற்சிக்கிறது! பல் ஆஸ்பத்திரிக்குப் போவானேன் - பல ரூபாய் பாழாக்கிக் கொள்வானேன் என்பதற்காகத்தான், நாலைந்து அறை கொடுத்து இவனுடைய பற்கள் கீழே உதிர்ந்திடச் செய்தேன் என்று போதையில் உள்ள காலிகூடப் பேசமாட்டான். பொறுப்பு அறிந்த சர்க்கார், பொன்னாடாக இருந்த தென்னகம் தேய்ந்திருக்கிறது, மீண்டும் இங்கு திருவும் தெம்பும் ஏற்படப் புதிய தொழில்களை அமைத்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டிய சர்க்கார், உங்கள் தொழிற்சாலை, "கட்டி வரக்கூடிய’ முறையில் இல்லை என்று நாங்கள் கருதுவதால், இது நடைபெறு வதைக் குறித்துப் பலமாகச் சந்தேகப்படுகிறோம் என்று சாக்குக் கூறிவிட்டு, இது போன்ற வகையினதாகவே வேறோர் தொழிற்சாலை நடத்த, மற்றொருவருக்கு அனுமதி அளித்திருக்கிறது. இதனை அறம் என்று கூற, யார் முன் வருவர்? இதனை நேர்மையான அரசியல் என்று கூறும் துணிவு கூட எவருக்கும் எழாதே! 1953 இல் ஏற்பட்ட தொழிற்சாலை Caustic Soda தயாரிக்க; 1955 இல் அனுமதி பெற்றிருப்பது Soda Ash தயாரிக்க என்று சொல்லை வைத்துக்கொண்டு "ஜாலம்’ செய்தார்கள்!! உன் கடையில் இட்லி சாம்பார்! அவன் கடை உன் கடைக்குப் போட்டியாக நான் கிளப்பிவிடுவது என்று எண்ணிக் கொள்ளாதே, அவன் கடையில் இட்லி சட்னிதான், சாம்பார் கிடையாது, என்று சொன்னால், அதற்குப் பெயர் சமாதானமா!! சிலநாள்தான் இந்தப் போலிவாதம் கூட! இப்போது, 1955 இல் அனுமதி பெற்ற, புதிய தொழிற் சாலையினர் (Caustic Soda) சோடா உப்பு தயாரிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள்! இப்போது நிலைமை என்ன என்பதை எண்ணிப் பார்த்திடலாம், வா, தம்பி! ஒரு கோடி ரூபாய் மூலதனம் ஏற்பாடு செய்து, அதற்கான பங்கு பெற, என்னென்ன முயற்சிகளில் ஈடுபட வேண்டுமோ அவை யாவும் செய்து முடித்து, துவக்க விழா நடாத்தி, வேலையைத் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறது, 1953 இல் அனுமதி பெற்ற கம்பெனி. இதற்குக் கழுத்தில் கத்திவைப்பது போல, அதே தூத்துக்குடி வட்டாரத்திலேயே, வேறோர் அமைப்புக்கு அனுமதி வழங்கிற்று, டில்லி. வாழவைக்கும் வழியா இது? தொழிலை வளர்த்திடும் இலட்சணமா? மூன்று ஆண்டுகள் முயற்சியும் செலவான பணமும் குப்பைதானே!! தம்பி! இனி, இந்தத் துயரச் சேதியின் உச்சத்தைக் கவனி. 1953 இல் அனுமதிப் பெற்று, இப்போது ஊசலாடிக் கொண்டிருக்கும் கம்பெனிக்கு அமைப்பாளர், ரோச் விக்டோரியா! 1955 இல் அனுமதி பெற்றுக் கிளம்ப வந்திருக்கும் கம்பெனி T.V. சுந்தரம் ஐயங்காருடையது!! பக்கத்திலே, யாராவது, "பாரத மாதாவின் பிள்ளை’ இருந்தால், இந்தச் சேதியைக் கூறிவிட்டு, அவர் முகத்தைக் கவனித்துப்பார், தம்பி! ரோச்விக்டோரியா தூத்துக்குடித் தொழிலதிபர் - காங்கிரஸ்காரர், இப்போதைய M.L.A. முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்! T.V. சுந்தரம் ஐயங்கார், காங்கிரஸ்காரராக இருந்ததில்லை! ரோச் விக்டோரியாவின் முயற்சியில் மண்ணைப் போடுவானேன்? சுந்தரம் ஐயங்கார் கம்பெனிக்கு சந்தன தாம்பூலம் அளிப்பானேன்? ரோச் விக்டோரியா மூன்றாண்டுகளாக எடுத்துக்கொண்ட முயற்சி என்ன கதி ஆவது? அஸ்திவார விழாவன்று அவர், பாபம், மைசூர் மகாராஜாவின் பக்கத்திலே நின்றுகொண்டு, பூரிப்புடன், புதிய தொழிற்சாலை பற்றிப் பேசியபோது, அவருடைய மனக்கண் முன்பு ஓங்கி நிற்கும் புகை போக்கிகளும், உருண்டு கிடக்கும் இருப்புச் சக்கரங்களும், உற்பத்தியாகும் சரக்குகளும், அவைகளை ஏற்றிச் செல்லும் பெட்டிகளும், கிடைத்திடும் இலாபத்தைக் கொட்டிவைத்திடும் கொட்டடியும், இலாபம் தேடித்தர உழைத்திடும் பல்லாயிரம் பாட்டாளிகளும், தோன்றி இருந்திருக்கக் கூடும்! நாமே காங்கிரஸ்காரர், கழகம் அல்ல! பிரமுகர் வரிசையிலே மட்டுமல்ல, தொழில் அதிபர் பட்டியலிலே, நமது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது! காங்கிரஸ் அமைச்சராகவேகூட இருந்திருக்கிறோம். வல்லவனுக்கு, வடக்காவது தெற்காவது - எல்லாம் ஒன்றுதான்!! டில்லியில் நமது குரலுக்கு மதிப்பு எப்படியும் இருந்தே தீரும் என்று பலப்பல எண்ணிக்கொண்டிருந்திருப்பார். எல்லாவற்றிலும் இடிவிழுவதுபோல, 1955 இல் T.V.S. கம்பெனிக்கு அனுமதி அளித்தது, இந்திய சர்க்கார். இப்படி ஒரு பேரிடி வந்து விழும் என்று, ரோச் எப்படிக் கருதியிருக்க முடியும்! தொழிற்சாலை அமைப்பிலே தீவிரமாக ஈடுபட்டார். தேவையான இயந்திரங்கள் அனுப்பப்படுவதிலே தாமதம் ஏற்படுகிறது என்பதால், ரோச் விக்டோரியா, சுவிட்சர்லாந்து நாட்டுக்கே சென்று, இயந்திரங்களைச் சேகரம் செய்தாராம்! தொழிற்சாலையோ புதிது, ஆனால் தேவையானது; மூலதனமோ ஒரு கோடி: முயற்சியில் ஈடுபட்டவரோ தொழிலதிபர்; வளர்ச்சியோ குறிப்பிடத்தக்க அளவில்; எனினும் 1955 இல் T.V.S. கம்பெனிக்குப் புதிய அனுமதி கிடைக்கிறது! நிலைமையை, இப்போது ஆராய்ந்து பார்க்கலாம், நமது காங்கிரஸ் நண்பர்கள்! வெட்கமாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது என்று கூறுவர் இரண்டோர் காங்கிரஸ்காரராவது; அவர்களைக் கண்ணீர்விடச் சொல்லாதே, தம்பி, இன்னுமோர் "சேதி’யைக் கேட்டுவிட்டு, பிறகு வேண்டுமானால், வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளட்டும். ரோச் விக்டோரியாவின் முயற்சிக்கு உலைவைக்கத்தக்கதாக T.V.S. கம்பெனியார், புதிய தொழிற்சாலைக்கு அனுமதி பெற்றார்களல்லவா, அவர்கள் அந்த அனுமதியை தாரங்க தரா ரசாயன தொழிற்சாலை எனும் வேறோர் கம்பெனிக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார்கள்! இந்தக் கம்பெனி, வட நாட்டுக்காரருடையது! தம்பி! சம்பூரணமாகிவிட்டதல்லவா, நாராயணம்! இப்போது, சொல்லச் சொல்லு வடநாடு என்ன போக்கில் தென்னாட்டை நடத்துகிறது என்று. துக்கம் தொண்டையை அடைக்கிறது என்பர் தூய உள்ளத்தை இழந்திடாத, காங்கிரசார். சென்னை சர்க்காரிடம் முறையிடலாமே! காமராஜர் தமிழராமே! தமிழ் நாட்டுக்குந் தாழ்வு வரவிடமாட்டாராமே! அவரிடம் மனுச்செய்யலாமே! என்று முணுமுணுப்பர், சிலர். எல்லா முறைகளையும் செய்து பார்த்து மூக்கறுபட்ட நிலைக்கு வந்துற்ற பிறகுதான், மாஜி மந்திரியும், இன்றைய காங்கிரஸ் M.L.A. யுமான, ரோச் விக்டோரியாவே 1956 செப்டம்பரில், இந்தத் துயரச் "சேதி’யை அச்சிட்டு, அனைவருக்கும் வழங்கி இருக்கிறார்! இப்படியெல்லாம் இடுக்கண் வந்துற்றதால், என் முயற்சியை விட்டுவிடுகிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் கூறவில்லை. இப்படி எல்லாம் நடப்பதால், நண்பர்களே! நாட்டவரே விழிமின்! எழுமின்! இந்த விபரீதப்போக்கைக் களைமின்! என்று முழக்கமிடும் முறையிலே அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் மாளிகையின் பெயர் சுகஸ்தான் என்று தெரிகிறது! தம்பி! சுகஸ்தானில் இருப்பவருக்கே, திராவிடஸ்தான் அமைந்தாலன்றி நாடு வாழ வழி ஏற்படாது என்று புத்துணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் - அவ்வளவு வேதனைக்குரல் தெரிகிறது அந்த அறிக்கையில். சென்னை சர்க்காரால் செயலாற்ற முடியவில்லை. சென்னை சர்க்காருக்கு அதிகாரம் இல்லை. மத்திய சர்க்காருடைய "லகா’னில் நாம் இருக்கிறோம். இந்த நிலை இருக்குமட்டும் இங்கு வாழ்வும் வளமும் கிடைக்காது. எனவே அனைவரும் ஒன்றுகூடி எழுமின். இந்த இராஜ்யத்துப் பொருளாதார சுதந்திரம் பறிபோகாமல், தடுத்து நிறுத்த வேண்டும். உடனே! உடனே! அனைவரும் அனைவரும்!! இந்த முறையிலே இருக்கிறது. சுகஸ்தானத்திலிருந்து வெளிவரும் அறிக்கை! பட்டால்தான் தெரிகிறது பலருக்கும். உன் அண்ணன், துரும்பைத் தூணாக்கிக் காட்டுகிறான் ரோச் விக்டோரியா காங்கிரஸ்காரர், அவர் இதுபோலெல்லாம் கூறியிருக்கமாட்டார் என்று, தம்பி, உன்னிடம், யாரேனும் சில காங்கிரஸ் நண்பர்கள் வாதாட வருவர் அவர்களின் மேலான பார்வைக்கு, இதோ இந்தப் பகுதியைக் காட்டு; இது ரோச் விக்டோரியா வெளியிட்ட ஆங்கில அறிக்கையில் உள்ள வாக்கியங்கள்: The Madras Government have been approached several times, the Legislators of the Tinnevelly district have also made representations on behalf of the South Indian venture and the public were looking to the State Government to give an encouragement to the Scheme. The Madras Government is however helpless in the matter, for the Government of India in the Commerce and Industries Department are dictating the policy as to what should be done or what should not be done in the State of Madras. WE ARE TIED TO THE APRON STRINGS OF THE CENTRAL GOVERNMENT. It is time therefore that all those who are interested in the Industrial Development of the South, should join hands and see to it that the economic freedom of the State in particular and the South as a whole, is not taken away from us. சென்னை சர்க்காரிடம் பலமுறை முறையிட்டோம் - பயனில்லை, காரணம், இந்திய சர்க்காரிடமே இந்த அதிகாரம் இருக்கிறது, மத்திய சர்க்காரின் முந்தானையில் முடிபோட்டு வைக்கப்பட்டிருக்கிறது சென்னை-தென்னகத்துத் தொழில் வளர்ச்சியில் அக்கரை கொண்டோரனைவரும் செயலாற்றி, இந்த இராஜ்யத்துக்கு சிறப்பாகவும், பொதுவாகத் தென்னகத்துக்கும் உள்ள பொருளாதார சுதந்திரம் பறிபோகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை, காரசாரமான முறையிலே, ஆங்கில மொழியிலே, ரோச் வெளியிட்டிருக்கிறார். தாம் ஈடுபட்ட ஒரு தொழில் முயற்சியிலே ஏற்பட்ட இடுக்கண், அதிலே டில்லி சர்க்கார் காட்டிய போக்கு, அதிலே சென்னை சர்க்காரின் செயலற்ற தன்மை, அதிகாரமற்ற நிலை, இது மனதிலே உறுத்தியதும், ரோச் விக்டோரியா, தாமோர் காங்கிரஸ்காரர், அமைச்சராகக்கூட இருந்தவர், பாரத நாடு என்ற பரந்த மனப்பான்மையைக் கொள்ள வேண்டியவர் என்று எதற்கும் கட்டுப்படமுடியா நிலைபெற்று, கொதித்தொழிந்து, கேண்மின்! தோழர்காள்! கேண்மின்! என்று கூவுகிறார். எங்கே போயிற்று, டில்லி போதிக்கும் தேசியம்!! போலிதானே!! சமயத்திலே, அந்தத் தேசியம், தேய்கிறது மாய்கிறது, இயற்கை உணர்ச்சிதான் மேலோங்கி வருகிறது!! ரோச் விக்டோரியா இந்த நிலையைக் கண்டதால், இனி நாட்டுக்கு மத்திய சர்க்காரின் ஆதிக்கப் போக்கை எடுத்துக்காட்டி, இந்த இராஜ்யத்துக்கும், தென்னகத்துக்கும், பொருளாதார சுதந்திரம் கிடைத்திடச் செய்யும் பணியில் ஈடுபட முற்படுவாரா என்று என்னைக் கேட்டுவிடாதே. நான் திருப்பி உன்னைக் கேட்பேன், கவர்னராக இருந்த நிலையிலேயே, கொதித்துப் பேசினாரே இதுபோல், குமாரசாமிராஜா, அவர் என்ன செய்தார் பிறகு, என்று! இவர் போன்றாரின் பேச்சு, நாம் மேற்கொண்டுள்ள கொள்கை, அப்பழுக்கற்றது என்பதை நமக்கு உறுதிப்படுத்த உதவுவது, வேறு விளைவுகளை நாம் அவர்களிடமிருந்து எதிர்பார்த்துப் பயன் இல்லை. சோடா உப்புக்கு அனுமதி கிடைத்தும் பயனில்லை என்றால், இத்தகைய முதலாளிமார்களுக்கு சுவை ஊட்ட டில்லியிடம் வேறு பண்டங்களா கிடைக்காது! இவர்களும், நாடு வஞ்சிக்கப்படுகிறது. நாங்கள் இதற்கு உடந்தையாக இருக்கமாட்டோம், உயர்பதவி தந்தாலும் வேண்டோம், இலாபச்சுவை ஊட்டினாலும் சீந்தமாட்டோம், என்றா சீறிப் போரிடக் கிளம்புவர்? சுகஸ்தானத்தில் அல்லவா அவர்கள் வாசம்! தம்பி! உனக்கும் எனக்கும், நம்போல, உள்ளவர்களுக்கும் தான் இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து பணியாற்றி வெற்றிகாணும் பொறுப்பு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அந்தப் பணியில் நாம் ஈடுபட்டு வருகிறோம் இடையிடையே எரிச்சல் காரணமாகவோ ஏமாற்றம் கண்டதாலோ, இப்படிச் சிலர், உண்மை நிலைமையை எடுத்துக் கூறும்போது, நாம் மேற்கொண்டுள்ள பணி நியாயமானதுதான் என்று நமக்கு உறுதியும் உவகையும் ஏற்படுகிறது! அதுவரையில் அவர்கட்கு நாம் நன்றி கூறிக்கொள்ளத்தானே, வேண்டும். நாளைக்கே, ரோச் விக்டோரியாவுக்கு சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும்கூட அளித்திடும் சக்தி டில்லிக்கு உண்டு - பெற்றுத் தருவதாகச் சாகசம் செய்யும் திறம் காமராஜ் சர்க்காருக்கு நிரம்ப உண்டு! எனவே, மீண்டும் அவர்கள் இந்தியா - இந்தியர் - என்று பஜிக்கத் தொடங்கிவிடக்கூடும். ஆனால், அவர்களின் இந்தத் தேசிய பஜனை, உதட்டளவு என்பதும், உள்ளத்தில் இடம்பெற்றதல்ல என்பதும், அவ்வப்போது, பீறிட்டுக்கொண்டு வருகிற பேச்சுகளிலே தெரிகிறதல்லவா! அது நல்லதல்லவா, நமக்கும் நாட்டுக்கும்! அதனாலேயே, இந்தச் சம்பவத்தை எடுத்துக்கூறினேன், உனக்கும் உன் மூலம், நாட்டவருக்கும். ஆனால், இதுமட்டும் போதுமா! பிற இடங்கட்கும், உலகுக்கும். இந்தச் சம்பவங்களை எடுத்துக் காட்டி, நமது கழகத்தின் நோக்கத்தை விளக்க வேண்டாமா? ஆங்கில ஏடு மூலம்தானே அதனைச் செய்ய முடியும். ஆம்! அண்ணா! என்றுதான் சொல்கிறாய்! அன்புடன் சொல்கிறாய்! ஆனால், சந்தா? அது வரக்காணோமே!! அன்பன், 2-12-1956 வெற்றிபுரி செல்ல… தமிழ் நாட்டில் வறுமை - தேர்தல் கால அரசியல் தம்பி! மருத்துவ விடுதிக்கு உன்னை அழைத்துச் செல்லப் போகிறேன், வருகிறாயா? ஒவ்வொரு அண்ணன் தன் உடன் பிறந்தானை, புதிதாகக் கட்டிய மாளிகை, மணம் பரப்பும் மலர் வனம், அருவிக்கரை, என்பன போன்ற இடங்களுக்கு அழைத்துப் போய்க் காட்டுவார்கள் - குறைந்தபட்சம் ஒரு சிற்றுண்டிச் சாலைக்காவது அழைத்துச் செல்வார்கள் - எனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறானே, மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறேன் என்று கூறிட, என்று கூறிக் கோபித்துக் கொள்ளாதே, சோகமடையாதே! காரணம் இருக்கிறது, உன்னை அங்கு அழைத்துச் சென்றிட. வா, தம்பி, வா! அதோ பார்! பாபம்! உடலெங்கும் புண்!! உடனிருந்து அவனுக்கு உபசாரம் செய்து கொண்டிருக்கிறாரே, அண்ணன் போல! அவர் எதிர்வீட்டுக்காரர், அண்ணன் அல்ல! துடி துடிக்கிறான் இளைஞன். பயப்படாதே, மகனே! பயப்படாதே! ஆபத்து இல்லை என்று மருத்துவர் கூறுகிறார், பயம் இல்லை, உனக்கு ஒரு குறையும் நேரிடாது! கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு வலியைப் பொறுத்துக்கொள்! - என்று கனிவுடன் கூறிக் கொண்டே, தளும்பும் தன் கண்ணீரைத் துடைத்துக் கொள் கிறார்களே ஒரு அம்மையார், அவர்கள் அவன் தாய் அல்ல!! உடனே இங்கே அழைத்து வந்தது நல்லதாயிற்று! பைத்தியக்காரத்தனமாக, எண்ணெய் தடவலாம், பச்சிலை வைத்துக் கட்டலாம் என்று இருந்துவிட்டிருந்தீர்களானால், இந்நேரம் "ஜன்னி’ பிறந்து மிக மிக ஆபத்தாகிவிட்டிருக்கும். இப்போது ஒரு பத்து நாள் படுக்கையில் இருக்கவேண்டும், அவ்வளவுதான், உயிருக்கு ஒரு துளியும் ஆபத்து இல்லை - என்று உள்ளன்புடன் பேசுகிறாரே, டாக்டர். அவர் வழக்கமாக வாங்கும் கட்டணத்தை வாங்காதது மட்டுமல்ல, அவரே பணம் போட்டு வாங்கிக்கொடுத்ததுதான், தட்டில் இருக்கும் பழம், மேஜைமீது இருக்கும் வலி வளிக்கும் பானம், எல்லாம்! டாக்டர், இந்த இளைஞனுக்கு நீண்ட நாளாகப் பழக்கமானவரல்ல - முதல் முறையாகத்தான் சந்தித்தார்!! தெரிகிறது அண்ணா! தெரிகிறது. இவர் யாரோ சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை, அதனாலேதான் அனைவரும் இவ்வளவு கனிவு காட்டுகிறார்கள் என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா! இதோ இந்தத் தனி அறைப் பக்கமாகப் போகலாம் வா, தம்பி! உஸ்! பேசாதே! மெல்ல நட! - என்று உத்தரவிட்டுக் கொண்டு நிற்கிற இந்த ஆசாமிக்கு, மாதம் அறுபது ரூபாய் சம்பளம்! அதோ இரண்டு நர்சுகள் பேசிக் கொள்கிறார்கள் - என்னவென்று கவனிப்போம். "வாடி, லிலி! இனி நீ போய் அந்தச் சனியனைப் பார்த்துக்கொள். எனக்குத் தலைவலிக்கிறது, கண்றாவி’’ "கிரேஸ்! எனக்கு மட்டும் வேதனையாக இருக்காதா? என்ன சொல்லுகிறது கிழம்?’’ “யார் பேசினார்கள் அதனிடம்! அருகே நெருங்கினாலே, குமுட்டலல்லவா எடுக்கிறது, ஒரே நாற்றம்’’”டாக்டர், என்ன சொல்கிறார்?’’ "அவர் ஒன்றும் சொல்லுவதில்லை. வருகிறார், மருந்து பூசுகிறார், கட்டுகிறார்கள். கிழம், இளிக்கிறது. இன்னும் எத்தனை நாள் ஆகும் என்று கேட்கிறது. நானென்ன ஜோதிடனா? என்று அட்சியமாகப் பதில் அளிக்கிறார் டாக்டர்.’’ "நல்ல வேலை செய்தார்! ஆமாம். இந்த ஆசாமியிடம் யார்தான் முகம் கொடுத்துப் பேசுவார்கள்?’’ லிலியுடன், தம்பி, நாமும், உள்ளே எட்டிப் பார்க்கலாமா? அதோ பார்! உடலிலே பல இடங்களிலே புண்!! ஆசாமிக்கு வலி அதிகம்தான். முகத்திலே பார், சவக்களை என்பார்களே, அப்படி இருக்கிறதல்லவா? மேலே மின்சார விசிறி இருந்தும், பக்கத்தில் நின்றபடி மயில் விசிறி கொண்டு வீசிக்கொண்டு நிற்கிறானே, அவன் பாபம், நான்கு குழந்தைகளுக்குத் தகப்பன் - நாய் பிழைப்புத்தான்! இருந்தாலும் என்ன செய்வது! என்று சகித்துக் கொண்டு ஊழியம் செய்கிறான். அதோ அந்த அலங்கார ஆசனத்தில் அமர்ந்துகொண்டு இருப்பவன், படுக்கையில் உள்ளவருக்கு மருமகன். எப்படி இருக்கிறது என்று விசாரித்துவிட்டுப் போகத்தான் வந்தான். இப்போது அவன் கரத்தில் இருப்பது ஒரு கதைப் புத்தகம் - படத்தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறான். தம்பி! இந்த ஆசாமிதான் உண்மையில், சீமான்! முதலில் கண்டோமே அவன் அன்றாடம் உழைத்துப் பிழைப்பவன் - பாட்டாளியாக இருப்பதால் பராரியாகாமலிருப்பவன்! தனி அறையில் உள்ள தனவான் இரும்பு வியாபாரத்தால் கொழுத்தவர் - பெயர் தங்கப்பர். பாட்டாளியாக இருப்பவன், இரும்புப் பட்டறையில் வேலை செய்பவன், பெயர் ஆண்டியப்பன். ஆண்டியிடம் இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள் - உடன் இருப்போர், மருத்துவர், அனைவரும். சீமான் தங்கப்பரிடம் மருத்துவரும் மருகரும், பணியாளும் பாங்கியரும், அனைவரும் அருவருப்புக் காட்டுகின்றனர். தங்கப்பர், மருத்துவ விடுதிக்கு ஆயிரக்கணக்கில் நன்கொடை கூடத் தரக்கூடும் - வசதி உண்டு. ஆண்டிக்கு, பழவகையே டாக்டர் தம் செலவில் வாங்கிக் கொடுத்தார். காரணம் என்ன, நிலைமைக்கு? எண்ணிப்பார்! இதிலென்ன சிரமம்? இந்த மருத்துவ விடுதி ஏழைக்கு இரங்கும் நெஞ்சம் படைத்தவர்களால் நடத்தப்பட்டு வருகிறது; செல்வச் செருக்கர்களைச் சீந்துவதில்லை; சரியான முறைதான் - நல்லது… என்று மகிழ்ச்சியுடன் கூறப்போகிறாய். தம்பி! இங்கு நீ காணும் இந்தப் போக்குக்குக் காரணம், இது அல்ல. இது மட்டுமல்ல. படுக்கையில் துடித்துக் கொண்டிருக்கும் ஆண்டியப்பன், உடலில் தீப்புண்கள் ஏற்பட இருந்த காரணம் வேறு - சீந்து வாரற்றுச் சாய்ந்து கிடக்கும் அந்தச் சீமானுடைய உடலிலே காணப்படும் புண்களுக்குக் காரணம் வேறு - இந்த இரு வேறு காரணங்கள்தான், இருவேறு விதமான மனப்பான்மையை, காண்போருக்கும் உடன் இருப்போருக்கும் உண்டாக்கிவிட்டிருக்கிறது. ஆண்டியின் உடலில் ஏற்பட்டுள்ள தீப்புண்களைக் காணும்போது, ஐயோ பாவம்! - என்று இரக்கமும் அன்பும் கலந்த குரலில் கூறுகிறார்கள் - சீமான் தங்கப்பன் உடலில் உள்ள புண்களைக் கண்டதும், "சனியன்! கண்றாவி!’’ என்று அருவருப்புடன் பேசுகிறார்கள். ஆண்டி உழைத்து அலுத்த நிலையில் தன் குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் - இருட்டும் சமயம் ஐயயோ! என்ற கூக்குரல் கேட்டது, தெருக் கோடியில் ஒரு வீடு, தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது - பலர் பதறினர் - தண்ணீர் இறைத்தனர் - மணல் வாரி வாரி வீசினர். ஒரு மூதாட்டி, தலைவிரி கோலமாக நின்றுகொண்டு, ஐயோ! குழந்தை, தொட்டிலில்… தொட்டிலில் குழந்தை…’’ என்று கதறி நிற்கக் கண்டனர் பலரும். பெரு நெருப்பாகிவிட்டது வீடு - உள்ளே நுழைய யாருக்கும் துணிவு இல்லை. உள்ளே ஓடமுயன்ற மூதாட்டியை மட்டும் தடுத்து நிறுத்திவிட்டனர். ஆண்டி வந்தான் - அலறல் கேட்டான் - உள்ளே, குழந்தை, தொட்டிலில் - என்ற மூன்றே வார்த்தைகள்தான் - எதிரே பெரு நெருப்பு - பாய்ந்தோடினான் உள்ளே! ஐயோ ஐயோ! என்று அலறினர் - ஆண்டியின் காதில் மூதாட்டியின் குரலொலி தவிர, வேறு எதுவும் விழவில்லை. இரண்டோர் விநாடியில் ஆண்டி, குழந்தையுடன் ஓடி வந்தான் வெளியே! குழந்தையை ஒரு பெரிய சாக்குப்போட்டு மூடி இருந்தான் - குழந்தை பிழைத்தது, ஆண்டியின் உடலெல்லாம் தீப்புண்!! சீமான் தங்கப்பன் தன் தோட்டத்தில் குடிசை போட்டுக் கொண்டு குடியிருந்து வந்த குற்றேவல்கார முனியனை, பக்கத்து ஊருக்கு ஒரு வேலையாக அனுப்பிவிட்டு, பசுமாடு இளைத்து விட்டதே , சரியாக தீனி போடுவதில்லையா? என்று அதிகாரம் பேசும் பாவனையில் இரவு எட்டு மணிக்குமேல் குடிசைக்குச் சென்று, "சத்யத்துக்குப் பொதுவாக நடக்கிறோம் எஜமான்! சாமி சாட்சியா, பசுவுக்குச் சரியானபடி தீனி போடுகிறோம் எஜமான். சந்தேகப்படாதீங்க’’ என்று சமாதானம் கூறிய குப்பியை…! பசுமாடு, அவள் போட்ட கூச்சலில் மிரண்டு, கட்டு அறுத்துக் கொண்டதுலிசீமான் அதனிடம் சிக்கிக் கொண்டான் - அன்றாடம் தீனிபோட்டு அன்புடன் பராமரிக்கும் குப்பியின் கற்பைக் காப்பாற்றும் கடமையை அந்தப் பசு மேற்கொண்டது - சீமான் உடலிலே புண் இந்த வகையில் ஏற்பட்டது! ஆண்டியிடம் அனைவரும் அன்பு காட்டுவதற்கும் சீமானிடம் அருவருப்பு அடைவதற்கும் இப்போது காரணம் விளக்கமாகிவிட்டதல்லவா! இந்த விளக்கம் பெறத்தான், நாம் மருத்துவ மனை வந்தோம். இனி வா, தம்பி, வேறோர் காட்சி காண்போம். விளக்கம் சரி, அண்ணா! ஆனால் இப்போது இந்தக் காட்சியும் அது அளித்திடும் கருத்துரையும், என்ன காரணத்துக்காக, என்று இப்போது கேட்கவேண்டாம் - மற்றோர் காட்சியையும் பார்த்துவிட்டுப் பேசுவோம். அதோ பார், ஏழ்மையாலும் அடியோடு அழித்திட முடியாத அழகும் அதற்குப் பெட்டகமாக விளங்கும் இளமையும் கொண்ட பெண் மயில்!! பொன்னகை ஒன்றுகூட இல்லை - அந்தப் புன்னகை ஒன்று போதாதா என்று அவளைத் தன் குடும்ப விளக்காகப் பெற்ற குணவான் கூறிக் களிப்படைகிறான் போலும். ஆடையிலே அழுக்கு! கூந்தலில் நெய் இல்லை! ஆனால் கண்களிலே ஓர் கனிவு கவர்ச்சி அளிக்கிறது. போனமாத வாடகை பாக்கிக்காக "மூக்குத்தி’யை மார்வாடியிடம் விற்றுவிட்டு, பத்தரை ரூபாய் வாங்கிக்கொண்டு செல்கிறாள் அந்தப் பாவை. கலியாணத்தன்று அவள் அத்தை வீட்டார் கொடுத்த இரவல் நகையைப் போட்டு அலங்கரித்துக்கொண்டு, எடுத்த போட்டோ படத்துக்கு கண்ணாடி போட எண்ணினாள் - அதற்கு இரண்டு ரூபாய் கேட்டான் கடைக்காரன் - அவ்வளவுக்குச் சக்தி இல்லை என்று கூறி விட்டுத் திரும்பினாள். மடியில் இருக்கிறது படம்! வயிற்றிலே தவழ்கிறது செல்வம்!! "லட்சுமி எங்கேடிம்மா போய்விட்டு, வர்ரே?’’ "மார்வாடி கடைக்குத்தான் மாமி’’ "எதை வித்துப் போட்டு வந்தூட்டே?’’ "மூக்குத்தியை… …’’ "அதுவும் தொலைஞ்சுதா… …’’ "மூக்குத்தி போனா என்ன மாமி! மூக்கு, இருக்குதேல்லோ…’’ “போடி, போக்கிரிப் பெண்ணே! மூக்கு இருக்குதாம், மூக்கு! இருக்கு, மூக்கும் முழியும், ராஜாத்திக்கு இருக்கிறது போலத்தான் இருக்கு. இருந்து? தரித்திரம் பிடுங்கித் திங்குதே…’’”அதனாலே என்ன மாமி! நகை போட்டாத்தானா…’’ “உன்னோடு யார் பேசுவாங்க… அதிகமாக எதுவும் வேணாம்… மூக்குத்தி, காதுக்குக் கம்மல்… கையிலே ஒரு இரண்டு வளை…’’”கழுத்துமட்டும் என்ன குத்தம் செய்தது, மாமி. இரண்டு "வடம்’ செயின் போடக்கூடாதா அதுக்கு…’’ "குறும்புக்காரப் பொண்ணு. அதெல்லாம் போட்டா பதினாயிரம் கண்ணுவேணும் பார்க்க, என்பாங்களே, அப்படி இருக்கும். உம்! பகவான் அழகைக் கொடுத்தாரு, அதுக்கு ஏத்த அந்தஸ்து கொடுத்தாரா… …?’’ "போ, மாமி! எத்தனையுன்னுதான் அவரும் கொடுப்பாரு…’’ சிரித்துக்கொண்டே செல்கிறாள் லஷ்மி. "அவலட்சணம்னா, சொல்லி முடியாது, டோய்! அட்டைக் கருப்பு! மாறுகண்ணு! உதடு, தடிம்மனா என்னமோபோல இருக்குது. காது, துளிண்டு, எலி காது போல… செச்சே! இராத்திரி வேளையிலே, பார்த்தா, பயமே வந்துவிடும். அந்தச் சனியனுக்குக் குரல் இருக்கு பாரு, அசல் ஆந்தையேதான்…’’ செல்லாயி புருஷன், தம்பி, இதுபோலப் பேசுவது. மெகானிக் மாதவனிடம் பேசுகிறான். யாரைப்பற்றி இந்த வர்ணனை தெரியுமோ? தன் எஜமானருக்கு வந்துள்ள மருமகப் பெண்ணைப்பற்றி. செல்லாயி புருஷன் சிகப்பண்ணனுக்கு, மோட்டார் ஓட்டும் வேலை மோட்டூரார் வீட்டில்!! அந்த மருமகள் அவ்வளவு அவலட்சணம் என்றானே, வா, போய்ப் பார்ப்போம். இதோ இதுதான், மோட்டூரார் மாளிகை! ஊஞ்சலில் தெரிகிறதா, உருவம்… மூக்கும் முழியும், கையும் காலும், சரியாகத் தெரியவில்லையே என்கிறாயா, தம்பி, தெரியாது. எல்லாம் சேர்ந்துதான் ஒரு மாமிசப் பிண்டமாகத் தெரிகிறதல்லவா - மோட்டூரார் மருமகள் கமலாம்பிகாவைக் காண்கிறாய். கூடவே நீ காண்பது என்னென்ன தெரியுமா, தம்பி, அதை மறந்துவிடாதே! காதிலே மூவாயிரம் ரூபாயில் வைரத் தோடு! தலைச் சடையில் ஆயிரத்தைந்நூறு ரூபாய் பெறுமானமுள்ள வைரத் திருகுபில்லை. மூக்குத்திகள் பச்சை! இரண்டாயிரம்! கழுத்திலே புரளும் தங்கமும் வைரமும், பத்தாயிரத்துக்கு மேல் பெறுமானமுள்ளது! இடுப்பில் காணப்படும், ஒட்டியாணத்தைச் செய்யும்போது "பத்தர்’ வீட்டிலே, ஒரே சிரிப்பு - இது என்ன இடுப்புக்கா, அல்லது நெல்கொட்டும் குதிருக்கா என்று கேட்டுக் கேலி செய்து, வீட்டார் சிரித்தார்கள்! கல் இழைத்தது! மயில் தெரிகிறதா? அருமையான வேலைப்பாடு! ஆறாயிரம் மதிப்பிடுகிறார்கள். காலில், கமலாம்பிகா அணிந்திருப்பதை, அவர்களாலும் காணமுடியாது, நாமும் பார்க்கமுடியாது; ஆடை தரையிலே புரளுவதால், நகை மறைந்து கிடக்கிறது நமக்குத் தெரியவில்லை! கமலாம்பிகாவின் உடல் அமைப்பு, பாபம், குனிந்து, தன் காலில் உள்ளதைக் காணவிடவில்லை! ஆபரணச் சுமை தாங்கி, தம்பி, இந்தக் கமலாம்பிகா! செல்லாயிக்கு மூக்குத்தியும் இல்லை - முகம் செந்தாமரையாக இருக்கிறது. காணச் சகிக்கவில்லை இந்தக் கமலாம்பிகையை - பூட்டியிருக்கும் நகைகளின் மதிப்பு மட்டும் பலப் பல ஆயிரம்! இந்த அவலட்சணத்துக்கு இவ்வளவு நகை இருக்கிறது! நகைகளின் அழகே பாழாகிறது. இந்தச் சனியன் மேலே பூட்டியதும். மரத்தாலே பாவை செய்து, பூட்டி வைத்தால் கூட, இந்த நகைகளைப் பார்க்க இலட்சணமாக இருக்கும், என்றுகூடப் பேசிக்கொள்கிறார்கள்! மூக்கும் முழியும் ராஜாத்திபோல இருக்கிறது, செல்லாயிக்கு; மூக்குத்திக்குக்கூட வழி இல்லை! இதோ, மூலைக்கோயில் காளி உருவாரம் போலக் காணப் படும் கமலாம்பிகையின் உடலில் ஆபரணச் சுமை!! தம்பி! செல்லாயி, கமலாம்பிகை - இருவரில் யாரைக் கண்டதும், முகம் மலரும் சொல்லு. ஆண்டி - தங்கப்பன் மருத்துவமனையில்! செல்லாயி - கமலாம்பிகா அவரவர் மனையில்!! இந்தக் காட்சிகள், ஏன் நான் காணச் சொன்னேன் தெரியுமா? தம்பி! நமது முன்னேற்றக் கழகம், தீப்பிடித்துக் கொண்ட குடிசைக்குள்ளே தீரமாக நுழைந்து, தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து காப்பாற்றியதால், உடலெங்கும் தீப்புண் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, அனைவராலும் அன்புடன் பராமரிக்கப் பட்டுவரும், ஆண்டியப்பன்! வாடகை பாக்கிக்காக மூக்குத்தியை மார்வாடிக்கடையிலே விற்று விட்டு வீடு திரும்பும், அழகி செல்லாயிபோல என்றும் சொல்லலாம். காங்கிரஸ், கமலாம்பிகை போல ஆபரணச் சுமைதாங்கியாகக் காட்சி அளிக்கிறது! நம்மை, செல்லாயிபோல மூக்கும் முழியும், பார்த்தால் ராஜாத்தி போல இருக்கிறது என்று நல்ல மனம் படைத்தோர் பாராட்டத்தான் செய்கிறார்கள். கமலாம்பிகையின் உடலில் புரளும் நகைகளைப் பார்த்தவர்கள். இந்த அவலட்சணத்துக்கு இவ்வளவு ஆபரணச் சுமை கிடைத்திருக்கிறது என்று அருவருப்புடன் பேசுவது போலத்தான் இன்று, பொதுமக்கள், காங்கிரசிடம் உள்ள பணபலம் பற்றி அருவருப்புடன் பேசுகிறார்கள். இந்தக் கருத்தை எடுத்துக் காட்டவே நான் உனக்கு இந்த இருவேறு காட்சிகளைக் காட்டினேன். ஆபரணச் சுமை தாங்கியாக உள்ள கமலாம்பிகையின் மாளிகையில் வேலை செய்து பிழைக்கும் சிகப்பண்ணனே அல்லவா, அந்த மாது இருக்கம் அவலட்சணத்தை எடுத்துக் காட்டி அருவருப்பாகப் பேசுகிறான் - அது போன்றே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியினால் அவதிப்பட்டு வரும் மக்கள், அந்தக் கட்சியிடம் குவிந்து கிடக்கும் பணபலத்தைக் கண்டு அருவருப்புடன்தான் பேசுகிறார்கள். செல்லாயி விஷயத்தில் ஆதரவு காட்டிப் பேசுவது போலத்தான், பணபலமற்ற நமது கழகத்தைக் குறித்துப் பேசுகின்றனர். ஊழல் மிகுந்த ஆட்சி, உதவாக்கரைத் திட்டமிடும் ஆட்சி, முதலாளிக்குச் "சலாமிடும்’ ஆட்சி, வெளிநாடு களில் கடன்படும் ஆட்சி, அடக்குமுறை அவிழ்த்துவிடும் ஆட்சி. என்று அடுக்கடுக்காக, அருவருப்புடன் காங்கிரஸ் ஆட்சியின் அவலட்சணத்தை எடுத்துக் காட்டுகின்றனர்; எனினும் இறுதி யில், ஒரு பெருமூச்சுடன் இவ்வளவு அக்ரமம் செய்த ஆட்சிதான் என்றாலும், தேர்தலில் மக்களை வளையவைப்பதற்குத் தேவையான பணபலத்தை மலைபோலப் பெற்றிருக்கிறதே! பாபம், திராவிட முன்னேற்றக் கழகத்தார், ஓயாது உழைக்கிறார்கள், உள்ளன்புடன் பாடுபடுகிறார்கள், ஏச்சும் இழிமொழியும் பழிச்சொல்லும் வீசப்படுகிற போதும் தாங்கிக்கொண்டு பணியாற்றுகிறார்கள். எனினும் தேர்தலில் ஈடுபடுவதற்குத் தேவையான பணபலம் இல்லையே - ஏராளமான செலவு இருக்கிறதே, எப்படிச் சமாளிக்க முடியும் என்றுதான் பேசிக் கொள்கிறார்கள். நமது கழகத் தோழர்களிடையேகூட இந்தப் பேச்சு எழக் கேட்டிருக்கிறேன். தம்பி! ஆண்டியப்பனைப் பார்த்தோமல்லவா! அது போலத்தான், நமக்குக் கையிலே போதுமான பணவசதி இல்லாதிருக்கலாம்; ஆனால் நாம் பொதுமக்களிடம் ஆற்றி வரும் பணி வீண்போகப் போவதில்லை; அவர்களிடம் பணம் இல்லை; எனவே, செலவுக்கு அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்க லாகாது, நம்மாலானதையெல்லாம் நாம் செய்து தரவேண்டும் என்ற ஆர்வத்துடன், தூய தொண்டுக்கு துணை நிற்க வேண்டும் என்ற நல்ல மனம் படைத்தோரெல்லாம் முன்வரத்தான் செய்வார்கள். தம்பி! அரசியலில், அதிலும் தேர்தல் கால அரசியலில், பணத்துக்கு இருக்கிற செல்வாக்கையும் கண்டிருக்கிறேன்; பணபலத்தையும் சுக்கு நூறாக்கக்கூடிய மக்கள் சக்தி வீறு கொண்டெழுந்ததையும் பார்த்திருக்கிறேன். எனவே நான், நமது கழகத்துக்குப் போதுமான தேவையான பணபலம் இல்லை என்பது பற்றி எண்ணாமலுமில்லை, சில வேளைகளிலே ஏக்கம்கூட அடைகிறேன். ஆனால் உன்னிடம் சொல்லுவதிலே மகிழ்ச்சி அடைகிறேன். மனம் உடைந்து போகவில்லை - அந்த நிலை ஏற்படவிடக்கூடாது என்று நமது கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும், ஆண்டியப்பனுக்கு இலவசமாக மருத்துவமும் பார்த்து, பழம் பண்டமும் வாங்கித் தந்த டாக்டர் போல, பரிவுடன் நடந்துகொள்ளக் காண்கிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். சென்ற கிழமை சென்னை மூலக்கொத்தளம் வட்டாரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தல் நிதி 100 ரூபாய் தருவதாகச் சொன்ன நமது தோழர்கள், 50 மட்டுமே கொடுத்தனர் - எனக்கு பேச்சே எழவில்லை! அதனை நான் கூட்டத்திலேயே குறிப்பிட்டுக் கூறினேன் - பெருமையும் நம்பிக்கையும் கொள்ளச் செய்யும் சேதி கேள், தம்பி - நான் சிறிதளவு சலிப்புடன் பேசுவது கண்ட தோழர்கள் கூடிக் கலந்து பேசி, என்னிடம் தெரிவித்தனர், இந்த வட்டாரத்தின் சார்பாக நமது நண்பர் துரைராஜ் அவர்கள் ஆயிரம் ரூபாய் தேர்தல் நிதி அளிக்க இசைந்திருக்கிறார் - என்று கூறினர். மகிழ்ந்தேன்! கூட்டத்தில் இதனை அறிவித்தேன் - அப்போது மக்கள் அந்தச் சந்தோஷச் செய்தியை எத்துணை ஆர்வத்துடன் வரவேற்றனர் என்பதைக் கண்டு நான் பூரித்துப் போனேன்! பழம் வாங்கி வந்து தந்ததும், ஆண்டியப்பன் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பான் - அதுபோலானேன்! நமது கழகத்தில் வரலாற்றிலே, மிக முக்கியமான கட்டம், இந்தத் தேர்தல். நம்மைச் சுற்றி நச்சு நினைப்பினர் ஏவிவரும் பொச்சரிப்புகள் கொஞ்சமல்ல நம்மைப்பற்றி, நடமாடவிடும் நிந்தனைகளின் அளவும் அதிகம், வகையும் பலப்பல. ஒரு முகாம், இருமுகாமிலிருந்து மட்டுமல்ல, பல்வேறு முகாம்களும் மும்முரமாக இந்தத் திருத்தொண்டில் ஈடுபட்டு, தத்தமது முழுச் சக்தியையும் பயன்படுத்துகின்றன. இதை நான் எதிர்பார்த்த துண்டு. எளிதிலே வழிவிடுவார்கள் என்று எண்ணிடும் ஏமாளியா, நாம்; அல்லவே!! பொது வாழ்வுத் துறையில் புதியவர்கள் என்று அலட்சியமாகப் பேசுவது மட்டுமல்ல, புகக்கூடாதவர்கள் என்று வெறுப்புடன் பேசுவோர் நிரம்பிய நிலையை நான் அறிவேன். அவர்கள், நாம் ஈடுபடும் இந்தத் தேர்தல் முயற்சியில், முதல் கட்டத்திலேயே தடுத்து நிறுத்தி, தகர்த்து அழிக்காவிட்டால், ஒரு முறை "உள்ளே’ போக இடமளித்துவிட்டால், பிறகு, அந்தக் கழக வளர்ச்சியைத் தடுக்கமுடியாது என்ற திகில்கொண்ட நிலையில், முதல் முயற்சியையே, முழுப்பலம் கொண்டு தாக்கி முறியடித்தாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றுவர் என்பதை எதிர்பார்த்தவனே! நான் இப்போது காணும் நிலைமை, நான் எதிர்பாராததுமல்ல, என்னைத் திடுக்கிடச் செய்யக்கூடியதுமல்ல. என் நிலையே அது என்றால், தம்பி, எனக்கு அன்பும் ஆதரவும் அளிப்பதன் மூலம் ஆற்றலைத் தரும் உன் நெஞ்சு உரத்தை விளக்கவா வேண்டும்! ஒன்று நான், காண்கிறேன்! எனக்கே, உள்ளத்தில் ஓர் சாந்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது; நமது கழக வரலாற்றின் ஒவ்வோர் கட்டம் தெரியும் போதும், நாம் அதனைக் கடந்து செல்ல முடியுமா; அல்லது பயணம் அந்த இடத்துடன் நின்று போகுமா என்ற ஐயப்பாடு - உனக்கோ உன் போன்ற எண்ணற்ற தம்பிகட்கோ அல்ல - எனக்கு ஏற்படுவதுண்டு! ஆனால், நாட்டிலே, தம்பி, நீ நற்பணியாற்றி அதன் மூலம் திரட்டித் தரும் ஆற்றல், என் ஐயப்பாட்டினைத் துரத்தி அடிக்கிறது, அச்சத்தை அயர்வைப் போக்குகிறது, வெற்றி முரசு ஒலிக்கிறது; ஒவ்வோர் கட்டத்தின் போதும். இதனை, நான், நமது கழகத் துவக்கத்திலிருந்து காண்கிறேன். பெரியாருடைய திருமணத்தால், மனதிலே பேரிடி விழுந்த நிலை பெற்று, குருசாமியார் ஓடோடி வந்து, என்னைப் பிடித்திழுத்து கச்சையை வரிந்து கட்டிவிட்ட நாளிலிருந்து, இன்று என் செயலை, பிச்சுப்பிள்ளை விளையாட்டு என்று எண்ணிக்கொண்டு எச்சில் துப்புகிறாரே, இந்த நாள்வரையில், ஒவ்வோர் கட்டத்திலும், நான் இந்தக் கவர்ச்சியூட்டும் உண்மையைச் சந்திக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் - என்று பெயரிட்டுக் கொண்டு, முன்பு போலவே நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் - என்று, சென்னை முத்தியாலுப்பேட்டையில் ஓர் இல்லத்தில், ஆலோசனைக் கூட்டம் நடத்தியபோது, நான் சொன்ன நேரத்தில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிலிருந்து பொறுமைக்கு இருப்பிடம் எனத்தகும் நமது பொதுச் செயலாளர் வரையிலே கொதித்து எழுந்து, கோபம் கொப்பளிக்கும் நிலைபெற்று, நாம் ஏன் பெயர் மாற்றிக்கொண்டு போக வேண்டும், நமக்குத்தான் ஜனநாயக முறைப்படி பழைய பெயர் சொந்தம் என்று வாதாடிய காட்சி இப்போதும் நான் காண்கிறேன். அன்று, நாம் இந்த அளவிலும் வகையிலும் வளருவோம் பொதுவாழ்வு துறையில் இந்தவிதமான நிலை பெறுவோம், ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபடும் கட்டம் காண்போம் என்று எண்ணியவர்கள் எத்தனை பேர் இருக்கமுடியும் என்று எண்ணுகிறாய்!! ஆனால் அந்தக் கட்டம் காண்கிறோம். காண்பாய்! காண்பாய்! மூடா, கேள், என் ஆரூடத்தை! இதுதான் நீ காணப்போகும் கடைசிக் கட்டம் என்று மனக்கசப்பு முற்றி விட்ட காரணத்தால் பகை பேசும் நிலைக்குச் சென்றுவிட்ட சிலர் கூறுகின்றனர். தம்பி! நான் என் வரையில் பேசுவதானால், இதனைக் கூறுவேன்; இது கடைசிக் கட்டம் ஆகிவிட்டால்கூட நான் கவலைப்பட மாட்டேன்; ஏனெனில் இவர்கள் “ஆரூடம்’ பலிக்கத் தக்கதானால், நான் இந்தக் கட்டத்தையேகூட எட்டிப் பார்த்திருக்கக் கூடாது. இந்தக் கட்டம் அளவுக்கு”ஆயுள்’ - இவ்வளவு ஆரூடத்துக்குப் பிறகும் இருந்ததல்லவா என்றுகூட எண்ணி மகிழ்ச்சி கொள்வேன். என் சுபாவம் அப்படிப்பட்டது. ஆனால் கழகத்தின் சார்பில் பேசுகிறேன் - ஆரூடம் முன்பு பலித்ததில்லை, இம் முறையும் பலிக்காது! தம்பி! ஒவ்வொரு கட்டமாக நினைவிலே கொண்டு வந்து பார், நான் கூறுவதன் உண்மை தெரியும்! எத்தனை எத்தனை பழிச் சொற்களை, நம் வழியிலே கண்டோம் - பயணம் குந்தகப்படவில்லையே! காரணம் என்ன? ஐயப்பாடு, அச்சம், அயர்வு, எழும்போ தெல்லாம், ஆர்வத்துடன், நமக்கு ஆதரவு அளித்திடப் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் முன்வருகின்றனர்! அண்ணன் அல்ல, பரிவுடன் பேசுகிறார்! தாய் அல்ல, ஆனால் பாசம் காட்டுகிறார்! டாக்டர், ஆனால் கட்டணம் வாங்கவில்லை! ஆண்டியப்பனைக் கண்டோமல்லவா - அது போலவே என்ன செய்வது என்று திகைக்கும் போதெல்லாம், என்ன நேரிடுமோ என்று கை பிசைந்து கொள்ளும்போதெல்லாம், நமக்கு உறுதுணையாக மக்கள் ஆதரவு வந்து சேருகிறது. அந்த ஆதரவே "அறிவகம்’ - அச்சகம் - திடல் பல ஊர்களில் கழகப்பணி மனைகள் - இப்படி, உள்ளன. இரண்டு கிழமைகளுக்கு முன்புதான், குளித்தலைக்குப் பக்கத்திலே பணிக்கம்பட்டி என்ற சிற்றூரில் சிறிய அளவில் சிங்கார மாளிகை எனத்தகும் கழகக் கட்டிடம் ஒன்றினைத் திறந்துவைக்கும் வாய்ப்பினை, தோழர்கள் எனக்கு அளித்தனர். (அடுத்த கிழமை, படம் காணலாம்) அன்று நான் அந்தச் சிற்றூருக்குச் செல்வதற்கு, கடுமழையையும் கடந்து செல்ல வேண்டி இருந்ததால், நீண்ட நேரம் தாமதமாகிவிட்டது - எனினும் பல்லாயிரவர், மழை மிரட்டியது கண்டும் மனம் கலங்காமல் திடலில் இருந்தனர். அவர்கள் காட்டிய உற்சாகத்தை நான், காலங்கடந்து சென்ற பொறுப்புக் குறைந்த போக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, நானே சிறிதளவு வெட்கப்பட்டுப் போனேன். கழகப்பணிமனையைத் தோழர்கள் என்னிடம் காட்டியபோது, அவர்கள் முகம் எத்துனை பொலிவு பெற்றது. இந்த எழுச்சி எல்லாம் கிள்ளுக்கீரை என்று கருதிக் கொண்டு, காரமான பேச்சினாலேயே நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணுவோர் குறித்து நான் என்ன கருதுவது!! ஆண்டியப்பன், பாபம், விளைவு தெரியாமல், நெருப்பை எதிர்த்துக் கொண்டான். உடலெல்லாம் தீப்புண், நல்ல சிகிச்சை செய்து கொள்ளக்கூட, பணவசதி கிடையாது, என்ன ஆகுமோ தெரியவில்லை - என்று பலரும் பரிதாபத்துடன் பேசிக்கொண் டிருக்கக்கூடும்; ஏனெனில் அவனிடம் பணம் இல்லை என்பது மட்டுமல்ல, அவனிடம் பரிவு காட்டிய பலரிடம் நல்ல மனம் இருந்தது, இருந்த பணம், போதுமானது அல்ல. எனவேதான் அவர்கள் எல்லோருமே திகைத்தனர்; ஆனால், யாரோ ஒருவன் துணிந்து, தூய உள்ளத்துடன் துவக்கினான் - நாம் ஆளுக்குக் கொஞ்சம் செலவிட்டால், சிறு துளி பெரு வெள்ளம் ஆகாதா என்றான் - ஆண்டியப்பனுக்கு நல்லவிதமான மருத்துவ உதவி கிடைத்தது. அது போலத்தான், தம்பி, பெரிய செலவு, மிகப் பெரிய செலவு, பல இலட்சம் வேண்டும், என்று நாம் திகைத்தும் செயலற்றும் இருந்துவிடாமல், சிறு துளி பெரு வெள்ளம் என்ற முறையிலே, பணியைத் துவக்கி இருக்கிறோம் - நமக்கு நம்பிகை வளருகிறது. பணபலம்கூட இருக்கட்டும், அறியாச் சிறுவர்கள் ஆழம் தெரியாமல் காலைவிடுவதுபோல, ஏதோ சில குறிப்பிட்ட தொகுதிகளாகப் பார்த்து, பக்குவமாக நின்று பலன் காண்போம் என்று எண்ணாமல், அகலக் கால் வைக்கிறார்களே! என்று ஆயாசக் குரலில் சிலர் பேசுவது கேட்கிறோம். நம்மிலே, சிலர் எப்படியாவது, சட்ட சபைக்கு உள்ளே நுழைந்தாக வேண்டும் என்ற அரிப்பு இருந்தால் இந்த முறை தான் சாலச்சிறந்தது; ஐயமில்லை! ஆனால் நமது நோக்கம், எத்தனை தொகுதிகளிலே போட்டியிட்டு எத்தனை தொகுதிகளிலே வெற்றி காண்கிறோம் என்று கணக்கெடுத்துப் பார்த்து, அதற்குத் தக்கபடி "கீர்த்தி - கித்தாப்பு’ தேடிக்கொள்ள வேண்டும் என்பது அல்ல. எவ்வளவு பரந்த அளவில் ஜனநாயகக் கடமையைச் செய்ய முடிகிறது - எத்தனை விரிவான முறையில், தேர்தல் காலத்தில் அரசியல் எழுச்சி விளக்கம் அளிக்க வசதி இருக்கிறது, என்பதைச் செயல்படுத்திப் பார்க்கவேண்டும் என்பதுதான். ஜனநாயகத்துக்கான சூழ்நிலையை எந்த அளவுக்கு உருவாக்க முடிகிறது என்பதுதான், இந்தத் தேர்தலில் நமக்கு உள்ள முக்கியமான பணி. அரசியல் கட்சிகள் தேர்தல்களில் ஈடுபடும்போது, ஏற்படும் வெற்றி தோல்விகள் - ஓட்டு எண்ணி அறிவிக்கப்படும் முடிவுகள் காட்டும் பாடத்துடன் நின்றுவிடுவதல்ல. ஒரு கட்சியின் தாங்கும் சக்தியைக் கணக்கெடுப்பதே, இதிலே மிக முக்கியமான பாடமாகக் கொள்ளவேண்டும். இந்தக் கருத்தைத் தெளிவாக உணரவேண்டும் என்பதற்காக, நான், சென்ற கிழமை பிரிட்டனில், நடைபெற்ற பல தேர்தல்களின் கருத்துரையைக் காட்டும் ஏடொன்று படித்தேன்; நான் அதிலே கண்டவற்றில், சில இது போது தம்பி! உனக்குகூறி வைப்பது முறை என்று எண்ணுகிறேன்; அரசியல் கட்சிகள், தேர்தல்களில் ஈடுபடுவதை, அங்கு எவ்வளவு முக்கியமான ஜனநாயகக் கடமையாகக் கருதுகிறார்கள், வெற்றி தோல்வி பற்றி எந்த வகையில் பொருட்படுத்தாமல் கடமையாற்றுகிறார்கள், வெற்றி தோல்வி என்பது எப்படி எப்படி மாறிமாறி அடிக்கிறது, என்ற இன்னபிற பாடங்களை, அந்த ஏடு காட்டுகிறது. எனவே, நாம், சிந்தனைக் குழப்பத்துடன் இந்தப் பொறுப்பான காரியத்தில் ஈடுபடவில்லை; நல்ல தெளிவுடன், ஜனநாயகக் கடமை என்ற உணர்ச்சியுடன், இதிலே ஈடுபடுகிறோம்; மக்களின் ஆதரவு நிச்சயமாகிக் கொண்டு வருகிறது. இடையில் நாம் காணும் இடையூறு அவ்வளவும், இயற்கையாக எழுந்து தீரவேண்டியவை அது கண்டு நாம் ஆயாசப்படப்போவது இல்லை; நமது கழக வரலாறு நமக்குக் காட்டும் பாடம் நமக்குத் துணை நிற்கும். "என் தொல்லைகளுக்கு எல்லையே கிடையாதா? என்று துயரப்படாதே! வைரம் என்பது நெடுங்காலமாய் நெருக்கிக் குறுக்கி வைத்த ஒரு துண்டு நிலக்கரியே என்ற உண்மையை நினைவுகொள்’’ என்று நான் படித்த நினைவு வருகிறது. உனக்கு, அதனைக் கூறுகிறேன். வெற்றிபுரி செல்ல வேதனைபுரத்தைத் தாண்டித்தான் ஆகவேண்டும், தம்பி, மறவாதே. அன்பன், 9-12-1956 எரிகிற தழலில்…! தேர்தலுக்கு நேரு வருகை - அரியலூர் விபத்து - பெரியாரும் காமராஜரும் தம்பி! நேரு பண்டிதர் வருகிறாராம்! தமிழ் நாட்டில் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைக்கப் போகிறாராம்!! வேறு சில ஊர்களுக்கும் சென்று பிரசாரம் செய்வாராம். பெருமையுடனும் பூரிப்புடனும் காமராஜர் இதனை அறிவித்திருக்கிறார். "கமிட்டிகளிலே கவலையுடன் பேசினீர்களே! எவ்வளவு பணம் கரைந்து போகுமோ, எவனெவனுடைய கையைக் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சவேண்டிவருமோ, எப்படி எப்படி எல்லாம் நாட்டிலே பிரசாரம் செய்வார்களோ, மாற்றுக் கட்சிக்காரர்கள் என்றெல்லாம் ஏங்கித் தவித்துக் கிடந்தீர்களே! இதோ கேளுங்கள் பெருமைக்குரிய செய்தியை; நம்பிக்கை தரும் செய்தியை; நான் நிலைமையை எடுத்துக் கூறி, நமது நேரு பண்டிதரை இங்கு வந்திருந்து தேர்தல் பிரசாரத்தைத் துவக்கித்தரச் சொல்லிக்கேட்டுக் கொண்டேன், அவரும் அன்புடன் இசைந்துவிட்டார், இனி என்ன பயம் உங்களுக்கு? துவக்குங்கள் வேலையை, துரிதமாகக் கிளம்புங்கள்!’’ என்று, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபடும் கனதனவான்களுக்குக் காமராஜர் கூறிவிட்டார்!! எனக்கு, தம்பி! இதிலே வருத்தந்தான் - அதற்குக் காரணம் இரண்டு. சென்ற திங்களில்தான், இந்தப் பரந்த உபகண்டத்திலேயே, மிகப் பயங்கரமானதும், மிக மிகக் கோரமானதுமானதோர் இரயில் விபத்து நேரிட்டது - சர்க்கார் கணக்களித்துள்ளனர் 152 பிணங்களைக் கண்டெடுத்தோம் என்று மற்றப்படி, கூழாகிப்போன உடலங்கள் ஏராளம்! குவியலாகக் கொட்டிக் கொளுத்தியே விட்டார்களாமே!! தொலைவிலே நின்றுகொண்டு, தீ மூண்டு எழுந்தது கண்டு ஐயோ! என் மகன்! அப்பா! என் தாய்! ஐயயோ! என் கணவன்! ஐயகோ! எனதருமை மனைவி! என் அண்ணன்! என் தம்பி! என்றெல்லாம் கதறினராம், சென்றவர்கள் பிணமாகக்கூடத் தம்மிடம் ஒப்படைக்கப்படாத நிலைபெற்ற துர்ப்பாக்கியவான்கள்!! ஆற்றிலே மூழ்கி, இறந்து, உடலை, மீனினங்கள் கொத்திக் கெடுத்துவிட்ட நிலையிலும், அழுகிப்போன நிலையிலும், பல சடலங்களை ஆங்காங்கே கண்டெடுத்தனர்! இதுபோன்றதோர் கோரமான விபத்து நேரிட்டதில்லை என்று உயர் நிலையில் உள்ளவர்களே ஒப்புக்கொள்கின்றனர். விபத்து நடந்த இடத்தருகே செல்லவே முடியவில்லை. அவ்வளவு கோர நிலைமை என்கின்றனர் "கனம்’கள். அப்போது, அரியலூர் வருவார்! ஆறுதல் அளிப்பார்! விபத்துக்குக் காரணமானவர்களைக் கண்டிப்பார்! விழியைத் துடைத்துக் கொள்ளுங்கள், மனம் உடையும் துக்கம் நேரிடும் போதுதான், மகத்தான மனோதிடம் காட்டவேண்டும்! என் அனுதாபம் உங்கட்குத்துணை நிற்கும்!! - என்றெல்லாம் நேரு பண்டிதர் பேசுவார்; கேட்டு மக்கள் தமக்கு வந்துற்ற அவதியையும் ஓரளவுக்கு மறந்து, நமது முடிசூடா மன்னர், நமது குடும்பப் பெரியவர் போன்றவர், எத்துணை மனம் உருகிப் போயிருக்கிறார், நாம் அடைந்துள்ள அவதி கண்டு அவர் ஆறாத்துயரம் அடைந்துள்ளார், அவர் கூறுவது போல, நமக்கு இப்படிப்பட்ட சமயத்திலேதான் மனதிடம் வேண்டும், ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ! என்ன செய்வது, தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறியும் எண்ணியும் மனதுக்கு ஓர் சாந்தி தேடிக் கொண்டிருந்திருக்கக்கூடும். - இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தனர். நேரு பண்டிதரே நேரடியாக விபத்து நடைபெற்ற இடத்துக்கு வருகிறார் என்ற உடன், அந்த வட்டாரத்து அதிகாரிகள் குழாமே அலறிப்புடைத்துக் கொண்டு நிவாரண வேலையை மும்முரமாக்கி இருக்கும். நீயும் நானும் சென்றிருந்தால், என்ன நடைபெறும்! கதறுவோருடன் கூடி நாமும் அழுதிருப்போம்! ஐயய்யோ எனும் ஓலம் கேட்டு நாமும் துடித்திருப்போம். நேரு பண்டிதர் வந்திருந்தால் நிலைமையில் நிச்சயமாக ஓர் மாற்றம் தெரியும், ஆட்சித் தலைவருக்கு நம் மக்களிடம் எத்துணை அன்பு இருக்கிறது என்று தெரிந்திருக்கும். ஆனால், நேரு பண்டிதர் அரியலூர் வரவில்லை! பிணமலையும் இரத்த வெள்ளமும் கண்டு தமிழகம் துடிதுடித்து அழுதபோது ஆறுதல் அளித்திட நேரு பண்டிதர் இங்கு வரவில்லை. தாலி இழந்த தாய்மார்கள், மகனை இழந்த மாதாக்கள், கதறினர், அம்மையே! அழாதே! வந்துற்ற விபத்து வேதனை தருவதுதான், எனினும், என் செய்வது, தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்! என்று தைரியம் பேசிட, ஆறுதல் அளித்திட நேரு பண்டிதர் வரவில்லை. அரியலூர் விபத்தின்போது வராத நேரு பண்டிதர், ஓட்டுக் கேட்க மட்டும் ஓடோடி வருகிறாராம்! வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்! - என்று பொறுப்பை மறவாத, மனிதாபிமானத்தை இழந்திடாத காங்கிரஸ் நண்பர்கள் கூறிக் குமுறுவது தெரிகிறது, தம்பி. ஆனால் நேரு பண்டிதருடைய உள்ளப்பாங்கு எப்படி இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தாயா? எத்துணை அலட்சியம் இருந்தால், எந்த அளவுக்கு பந்த பாசம் இல்லாதிருந்தால், இங்கு 152 பிணம் கண்டெடுத்தோம் என்று சர்க்காரே கணக்குக் கொடுத்தனர், மற்ற உருவங்கள் உடலங்களாகக்கூட இல்லை, தலைவேறு உடல் வேறு, கால் வேறு கரம் வேறு என்று ஆகிவிட்டன, ஆகவே அடையாளம் கண்டறியவும் முடியவில்லை, இத்தனை பேர் என்று கணக்கு எடுக்கவும் இயலவில்லை என்றுகூறி, குழி வெட்டி அதிலே போட்டு மொத்தமாகக் கொளுத்திவிட்டோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்; காணச் சகிக்காத காட்சியாக இருக்கிறதே. கண்றாவிக் கோலமாக இருக்கிறதே என்று பத்திரிகைகள் எடுத்துக் காட்டின; இவ்வளவுக்குப் பிறகும், நேரு பண்டிதருடைய உடல் ஆடவில்லை, அசையவில்லை, ஓடோடிச் சென்று அந்த மக்கள் மத்தியில் நின்று, மாரடித்து அழும் அந்த மக்களுக்கு ஆறுதல் அளிப்போம் என்று இரக்கம் எழவில்லை! இப்போது வருகிறாராம், எல்லோரும் காங்கிரசுக்கே ஓட்டு அளியுங்கள்! என்று உத்தரவு பிறப்பிக்க! ஒரு வேளை, மக்களைப் பார்த்து அந்த மகானுபாவர் கோபித்துக் கொண்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை; “மக்களே! என்ன உங்கள் புத்தி வரவர இப்படிக் கெட்டுப் போகிறது! எதற்காக இரயிலைக் கவிழவிட்டீர்கள்! அதனாலே இரயில்வே இலாகாவுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம். அதுதான் போகட்டும் என்றால், எவ்வளவு பேர் செத்துவிட்டார்கள் - அதனால் எங்கள் கட்சிக்கு எத்தனை”ஓட்டு’ நஷ்டம் தெரியுமா? இனி இப்படியெல்லாம், சாகாதீர்கள் - எப்படியும் ஐந்தாண்டுக்கு ஒரு தடவை எங்கள் கட்சிக்கு ஓட்டுத் தரவேண்டுமே அதை மறந்துவிட்டு, மடிந்து போகிறீர்கள் - இது மன்னிக்கமுடியாத குற்றம்! எனினும் பொறுத்தேன் - இனி இந்தத் தேர்தலில் அனைவரும் கூடி, ஐந்தாண்டுத் திட்ட பஜனைபாடி, ஓட்டுச்சாவடிக்கு ஓடி மாட்டுப் பெட்டியை நிரப்புங்கள் - என்று கூடப் பேசுவார். தமிழ் நாட்டிலே, இந்த அரியலூர் விபத்தின்போது மட்டுமல்ல தம்பி, முன்பு இருமுறை புயலால் பேரிழப்பு நேரிட்டபோதும், நேரு பண்டிதர் வரவில்லை. உனக்கு நினைவி லிருக்கும், புயல் நிவாரண நிதிக்காகப் பணியாற்றியிருக்கிறாயே! காங்கிரஸ் நண்பர்களுக்கு நினைவில் இருக்காது; நினைவிற்குக் கொண்டு வருவது என்றாலும், அவர்களுக்குச் சங்கடமாக இருக்கும். ஆனால் நாடு எப்படி மறக்கமுடியும்? தமிழகத்தில் புயலாலும் வெள்ளத்தாலும் இரயில் விபத்தாலும் பயங்கரமான அழிவு நேரிட்டு, அழுகுரல் பீறிட்டுக் கிளம்பிய நேரத்திலெல்லாம், நேரு பண்டிதர் வரவில்லை. தமிழகத்திலே தேர்தல் பிரசாரத்துக்கு இப்போது வருகிறார்; முன்பும் வந்திருந்தார்! தேர் திருவிழாப் போல நடத்தப்படும் கோலாகலங்களிலே கலந்துகொள்ள, அடிக்கடி வருகிறார் - ஆனந்தத்தோடு வருகிறார்! சங்கீத வித்வத் சபையின் துவக்க விழாவா? வருகிறார்! கண் காட்சி துவக்கவேண்டுமா? வருகிறார்! திருவிதாங்கூர் சமஸ்தானத்துக் காட்டிலே, கண்ணாடி மாளிகையிலே தங்கி இருந்து, கரிகளின் காதல் விளையாட் டினையும், புலியாரின் களியாட்டத்தையும் கண்டு களிக்கலாம் என்று அழைப்பு விடுத்தனர்; சென்றார், கண்டார்! தமிழ் இசையை நான் அறியேன்! இசையே கூடப் பொதுவாக எனக்குப் புரியாது! எனினும் சுப்புலட்சுமியின் கானம் கேட்கும்போது, விவரிக்க முடியாததோர் ஆனந்தம் எழத்தான் செய்கிறது. சுப்புலட்சுமியார் சங்கீத ராணி!- என்று நெஞ்சு நெக்குருகப் பேசினார்! எல்லா விழாக்களுக்கும் அழைப்பு அனுப்பினால், தமிழகம் வருகிறார் - விபத்து, அழிவு நேரிடுகிறது என்றால் வருவது இல்லை. வரவேண்டும் - ஆறுதல் அளிக்கவேண்டும் என்ற பாசம் எழுவதில்லை; டில்லியிலேயே நமது வல்லத்தரசுதான் குழந்தைபோலத் தேம்பித் தேம்பி அழுதார் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன; நேரு பண்டிதருக்கு ஏற்பட்ட வருத்தமெல்லாம் தமது ஆருயிர்த்தோழர் லால்பகதூர் சாஸ்திரி, இந்தக் காரணத்துக்காக மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டாரே என்பதுதான். நேரு பண்டிதரின் இதயம் ரொம்ப மென்மையானது - அவரால் அவதியை, அழுகுரலைச் சந்திக்க முடியாது - விபத்து, வேதனை என்றால் அவரால் காணச் சகிக்காது - அதனாலேதான் அவர், தமிழகத்தில் புயலும் வெள்ளமும் புகுந்து அழிவு ஏற்படுத்திய நேரத்திலும், இப்போது அரியலூர் இரயில் விபத்தால் பயங்கர நாசம் ஏற்பட்ட நேரத்திலும், நேரடியாக வந்து ஆறுதல் கூறவில்லை. அறிமின்! அறிவிலிகாள்! இதைக் காட்டிக் கரிபூசாதீர்! துரும்பைத் தூணாக்காதீர்! என்று வாதாடும் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். உண்மையா அது என்று பார்த்தால், அல்ல, அல்ல, என்று விளக்கமாகத் தெரிகிறது. வடக்கே எங்கு எவ்விதமான விபத்து நேரிட்டுவிட்டாலும், நேரு பண்டிதர், உடனே பறந்து சென்று, பாசமும் நேசமும் காட்டுகிறார்; அன்பும் ஆறுதலும் பொழிகிறார்; இதனை இல்லை என்று எவ்வளவு துணிவு பெற்ற காங்கிரஸ்காரரும் சொல்லிவிட முடியாது. கோசி நதியால் வெள்ள விபத்து கட்சு பூகம்ப விபத்து அசாமில் வெள்ள விபத்து உத்தரப்பிரதேசத்தில் வெள்ள விபத்து. இந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் நேரு பண்டிதர் சென்றதும், ஜீப்பிலும் விமானத்திலும் பயணம் செய்து, மக்கள் மத்தியில் நடமாடி ஆறுதல் அளித்ததும், காங்கிரஸ் நண்பர்களுக்குத் தெரியும். அங்கெல்லாம் அவதி நேரிட்டபோது, ஓடோடிச் சென்று உருக்கம் காட்டிய நேரு பண்டிதர், தமிழகத்திலே அழிவு நேரிட்டு, மக்கள் கதறும்போது மட்டும், நேரில் சென்று துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், ஆறுதல் கூறிச் சோகத்தைத் துடைக்கவேண்டும் என்று எண்ணவில்லை. அந்த எண்ணம் இயல்பாக எழாத காரணம் என்ன? ஏன் அந்த மனம் வடக்கே காணப்படும் விபத்துகளின்போது அனலிடு மெழுகாகிறது, தமிழகம் தலைவிரி கோலமாகும்போது மட்டும், பாறையாகிவிடுகிறது? இந்த விசித்திரமான போக்குக்குக் காரணம் என்ன? நாம் கூறும்போது பலருக்குக் கோபம்கூட இருக்கிறது. கவைக்கு உதவாத காட்டு மிராண்டிக் கருத்தென்று ஏசக்கூடச் செய்கிறார்கள். எனினும், இத்தகைய சம்பவங்களின் போதாவது, சிறிதேனும் ஆழச் சிந்திப்பார்களானால், சீற்றமடையும் நண்பர்கள், நாம் வலியுறுத்தி வரும் உண்மையை உணருவார்கள் - வடக்கு வேறுதான் - தெற்கு வேறுதான்!! தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே - அது தமிழகத்தில் விபத்து நேரிடும்போது நேரு பண்டிதருக்கு ஏற்படுவது இல்லை. ஆனந்தவிகடனுக்கே இது ஆச்சரியத்தை மூட்டி விட்டிருக்கிறது; சிறிது ஆயாசமும் எழுத்திலே தொனிக்கிறது; எண்ணத்தில் மட்டும் நாம் கூறிவரும் உண்மை இடம் பெறமறுக்கிறது! எனினும் ஆச்சரியத்தையேனும் தந்திருக்கிறதே என்று எனக்கு ஓரளவு திருப்திதான். தம்பி! நேரு பண்டிதருடைய இந்தப் போக்கு விகடனுக்கு விசாரம் தருகிறது. "நமது பிரதம மந்திரி நேருஜீ, அரியலூர் விபத்து நடந்தவுடனேயே ஒரு நிபுணர் கோஷ்டியுடன் கூட, விபத்து நடந்த இடத்துக்கு நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம், அவர் ஏன் அப்படிச் செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கோசி நதியில் வெள்ளம் வந்து சேதம் விளைவித்தபோது, அவர் அந்தப் பிரதேசங்கள்மீது பறந்து பார்வையிட்டார். கட்சில் பூகம்பம் நாசம் விளைவித்தபோதும், அசாமிலும் உத்திரப்பிரதேசத்திலும் வெள்ளம் ஏற்பட்டபோதும், அவர் அங்கெல்லாம் நேரில் விஜயம் செய்து பார்வை யிட்டார். இதனால் கஷ்டப்படும் மக்களுக்கு ஆறுதல் பெற முடிந்ததோடு நிவாரண வேலைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும், உடனடியாக நடப்பது சாத்தியமாயிற்று’’ இவ்விதம் ஆனந்தவிகடனே எழுத நேரிடுகிறது. அரியலூர் விபத்து, நேரு பண்டிதரை இங்கு வரவழைக்கவில்லை; ஆனால் தேர்தல் ஆபத்து அவரை இங்கு ஓடோடி வரச் செய்கிறது. அரியலூர் விபத்தின்போது நேரு பண்டிதரை, இங்கு வரச்சொல்லி அழைத்து, தமிழ் மக்களின் துயரத்தைக் கண்ணாலே பாருங்கள், என்று காட்டிட, காமராஜருக்கு எண்ணம் எழவில்லை, தேர்தல் ஆபத்து என்ற உடன், வாருங்கள்! ஓட்டு வரம் தாருங்கள்! - என்று ஏத்தி ஏத்தித் தொழுது, நேரு பண்டிதரை இங்கு அழைத்து வரவேண்டும் என்ற அவசியம் காமராஜருக்குச் சுரக்கிறது. தம்பி! என் துக்கத்துக்கு மற்றோர் காரணம் என்ன தெரியுமா? இங்கு, காமராஜரையும் அவருடைய கூட்டாளி களையும் இந்தத் தேர்தலிலே வெற்றி பெறச் செய்வதே இப்போதைக்கு அவசரமான அவசியமான கடமை என்று கூறி, உள்ளன்புடன் பெரியார் பாடுபடுகிறார் - அவருடைய இன்றைய நண்பர்களோ, அந்த நோக்கத்துடன், தீனாமூனாகானாக் களுடைய பெட்டியிலே, ஒரு ஓட்டுகூடப் போடக்கூடாது, மண்ணை அள்ளிப் போடுங்கள் என்று கூறும் அளவுக்குப் பிரசார இயந்திரத்தை முடுக்கிவிடுகிறார்கள் - காமராஜரின் யோக்யதை என்ன, உன் யோக்யதை என்ன! அட பாவி! அவரைப் போய் எதிர்க்கக் கிளம்புகிறாயே! - என்று மனம் நொந்து பேசுகிறார்கள். காமராஜர் பக்கம் அணிவகுத்து நிற்கிறார்கள்! இருந்தும், பார் தம்பி! காமராஜர், நேரு பண்டிதரைத்தான் அழைத்து வருகிறார், தமிழகத் தேர்தல் பிரசாரத்துக்காக!! சென்ற பொதுத்தேர்தலின்போது, பெரியார், காங்கிரஸ் கட்சியை ஒழித்துக்கட்டுவதற்காகப் பெரும்பணியாற்றினார். அப்போது அவருடைய பலமான எதிர்ப்பைச் சமாளிக்க, நேரு பண்டிதர் தேவைப்பட்டார்; வரவழைக்கப்பட்டார். இப்போதுதான், பெரியாரின் பேராதரவு காமராஜருக்குக் கிடைத்திருக்கிறதே. நேரு பண்டிதர் வந்திருந்து உதவிசெய்ய வேண்டிய அவசியம் என்ன? முன்பு இருந்ததைவிடத் தமிழகத்தில் காங்கிரசுக்குச் செல்வாக்கு அமோகமாகிவிட்டது; காமராஜரின் வீரமும் தீரமும் வேலைப்பாடும் மிகுந்த நன்மை தரும் திட்டங்களின் காரணமாக, எதிர்ப்புகள் பட்டுப்போயின, புது உறவுகள் பூத்துக் காய்க்கின்றன என்கிறார்கள் - எதிர்த்து நிற்கும் நாமோ, அற்பர்கள், அலட்சியப்படுத்தத்தக்கவர்கள் என்கிறார்கள்; இந்த நிலையில் காமராஜர் ஏன், நேரு பண்டிதரை வரவழைக்கிறார்! பெரியார் எனக்காகப் பிரசாரம் செய்கிறார் - செய்யட்டும் - ஆனால் அது போதாது - காங்கிரசுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமானால், பாரெல்லாம் புகழ் பெற்ற பஞ்சசீலப் பண்டிதர், நேரு, வரவேண்டும் - அப்போதுதான் இலட்சக் கணக்கிலே மக்கள் கூடுவர், கொண்டாடுவர், அப்போதுதான் ஓட்டுகள் குவியும் என்று அல்லவா, காமராஜர் எண்ணுவதாகத் தெரிகிறது’’ இது எனக்கு ஏற்பட்டுள்ள, துக்கத்துக்கு உள்ள இரண்டாவது காரணம். பெரியாரின் பேரன்பர்கள் இதற்கெல்லாமா மனம் உடைந்து போவார்கள்! என்ன ஆணவம் இந்தக் காமராஜருக்கு! நமது பெரியாரின் பேராதரவு இடைவிடாது கிடைத்திருக்கும் போது, இந்தக் கண்ணீர்த் துளிகளையும் கம்யூனிஸ்டுகளையும், பிரஜாக்களையும், சோμயலிஸ்டுகளையும், உதிரிகளையும் பூண்டோடு ஒழித்துக்கட்டிவிட்டு, பிறகு திராவிட நாடு பெறுவதுபோன்ற வேலையில் ஈடுபடுவோம் என்று சூள் உரைத்து விட்டு, சுறுசுறுப்புடன், விறுவிறுப்புடன் நாம் பணியாற்றி வருகிறதைக் கண்ணாலே கண்டான பிறகு, இந்தக் காமராஜர் தேர்தல் பிரசாரத்துக்காக, நேரு பண்டிதரை வரவழைக்கிறேன் என்று அறிவிக்கிறாரே! இது தகுமா? முறையா? தேவையா? நம்மைப்பற்றி அவர் இவ்வளவு தாழ்வாகவா கருதுவது! என்றெல்லாம் எண்ணவா போகிறார்கள்!! நான் அப்படி நினைக்கவில்லை. இந்த ராஜகோபாலாச்சாரியார் என்ன இப்படிக் கெட்டுவிட்டாரே!! ராமசாமிப் பெரியாரின் தரத்துக்கு வந்துவிட்டாரே! என்று காமராஜர் கேவலப்படுத்திப் பேசியதைக் கேட்டே சகித்துக் கொண்டவர்கள், இப்போது ஏன் கோபம் கொள்ளப் போகிறார்கள்! "நல்ல பிரபலமான சர்ஜனை வரவழைத்துக் காட்டப் போகிறேன்’’ என்று கூறுவது கேட்டால், அதுவரை வைத்தியம் பார்த்து வந்த டாக்டருக்குக் கோபம் வரும் தன்னை மரியாதைக் குறைவாக நடத்துகிறார்கள் என்று மனவேதனை ஏற்படும். காமராஜரோ துணிந்து நானொன்றும் பெரியாரை நம்பிக்கொண்டில்லை, பெரியாரின் பிரசாரம் போதும் என்று திருப்திப்பட்டுக் கொண்டில்லை, பெரியாரின் துணை தேர்தலில் வெற்றி தந்துவிடும் என்று சும்மா இருந்துவிடமாட்டேன். நான், ஏன் நேருவை வரவழைக்கிறேன் என்று சொல்லுகிறார். இந்த அவருடைய மனப்பான்மை எனக்குத் துக்கத்தைத் தருகிறது. எப்படியோ ஒன்று, நேரு பண்டிதர் வருகிறார், தேர்தல் பிரசாரம் செய்ய - அரியலூர் விபத்தின் போது தமிழகத்தை அலட்சியப்படுத்தியவர். புயல் வெள்ளக் கொடுமையின் போது தமிழகத்தை எட்டிப் பார்த்திட மனமற்று இருந்தவர், தேர்தலுக்காகத் தமிழ்நாடு வருகிறார்! வரட்டும்! தமது செல்வாக்கை வழங்கட்டும்! ஈளைகட்டி இருமிக்கொண்டிருக்கும் நோயாளியைப் பிழைக்கவைக்கட்டும் - தம்பி - எனக்கு அதுபற்றித் துளியும் கவலை இல்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள், தமிழ் நாட்டை எவ்வளவு உதாசீனப்படுத்துகிறார்கள், எத்துணை அலட்சியம் காட்டப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டப்படுவதாக அமையும் போதுதான் வேதனை குடைகிறது! ஒவ்வொரு முனையிலும் இந்த நிலை காண்கிறோம் - ஒவ்வொரு முனையிலும், இந்தப் போக்கினாலே கஷ்ட நஷ்டம் அடைபவர்கள், மனம் குமுறுகிறார்கள்; சில வேளைகளிலே கண்டனத்தைக் கூட வெளியிடுகிறார்கள் - ஆனால், தொடர்ந்து நடைபெறும் இந்த ஓரவஞ்சனையை - மாற்றாந்தாய் மனப்பான்மையை - மாற்றிடப் பொதுவான, பலமான, முயற்சி எடுத்திட முன்வருவதில்லை! ஆபத்தின்போது அவரவர்கள் தத்தமது உயிரையும் உடமையையும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்று இருந்து விடுவதுபோல, நம் வரையில் சலுகை கிடைத்து விட்டால் போதும், ஊர்த்தொல்லையைத் தூக்கி நாம் நம் தோளில் போட்டுக் கொள்வானேன் என்று இருந்து விடுகிறார்கள். இந்தப் போக்குத் தெரிகிறது பண்டிதருக்கு; எனவேதான் அவர் அரியலூர் விபத்தின்போது கண்ணீரைத் துடைக்க இங்கு வரவில்லை, ஓட்டுகளைத் தட்டிப் பறித்திடமட்டும் வர இருக்கிறார். இவருடைய இந்தப் போக்கு நியாயமா? இவர் ஈவு இரக்கம், மனிதாபிமானம், மக்களாட்சிக்குத் தேவையான கடமை உணர்ச்சி ஆகிய தூய்மைகொண்ட உள்ளத்தினர்தானா என்றெல்லாம் ஆராய்வதற்காக நான் இதனை விளக்கினேன் இல்லை! நமது நாட்டுக்குத் தரப்படும் நிலையைப்பற்றி, நாட்டுப்பற்றுக் கொண்டோரனைவரும் எண்ணிப் பார்த்திட வேண்டும் என்பதற்காகவே, இதனை விரிவாகக் கூறினேன். தமிழ்நாடு, இந்தத் தாழ்நிலைக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருப்பதைக் காட்டிடும் நிகழ்ச்சிகள் பலப்பல. அதில் இது ஒன்று. தமிழகம் தவித்தபோது இங்கு வராத நேரு பண்டிதர், ஓட்டுக் கேட்கமட்டும் வருகிறார், என்பது வேதனை தருகிறது; அதுபோலவே காங்கிரசுக்கு ஓட்டு அளிக்கும்படி மக்களிடம் பேசிட, தமிழகத்துக்குத்தான் நேரு வருகிறாரே தவிர, வங்கத்துக்குக் காமராஜர் போகிறார் இல்லை, பாஞ்சாலத்துக்கு பக்தவத்சலம் பறக்கிறார் என்று இல்லை, இது வெட்கமும் வேதனையும் தருகிற நிலைமையாகும் - ஆனால் இரண்டு என்ன - எத்தனையையும் ஏற்றுக்கொண்டு பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க இங்கு காங்கிரஸ் கனவான்கள், தயாராக இருக்கிறார்கள். தேவிகுளம் பீர்மேடு நெய்யாற்றங்கரை கொச்சின் - சித்தூர் பாலக்காட்டுத் தமிழ்ப் பகுதி தமிழருக்கு இல்லை! என்று டில்லி உத்தரவு பிறப்பித்தது - ஐயனே! - மெய்யனே! இதோ பாரும் புள்ளி விவரம்! இந்தப் பகுதி எல்லாம் தமிழருக்கே உரியது என்பது விளங்கும் என்று “இருந்து முகந்திருத்திக்’ கூறினர்;”என்னிடம் புள்ளி விவரம் காட்டவா துணிகிறீர்கள்!’’ என்று நேரு பண்டிதர் உருட்டுவிழி காட்டினார். "எமை ஆளும் கோவே! பிழை பொறுத்திடுக! பெருங்கோபம் விடுத்திடுக! குளமாவது மேடாவது! குணாளா! உன் குளிர்மதிப் பார்வைபோதும் எமக்கு! தேவிகுளம் போனாலென்ன, தேவதேவா! உன் திருப்பார்வை பட்டால் போதாதா! அந்தப் பகுதி அனைத்தும் அளித்து விடுகிறோம். அதுமட்டுமல்ல, எமை ஆளாக்கிவிட்ட ஆற்றலரசே! செங்கோட்டையில் ஒரு பாதியையும் தருகிறோம், பெற்றுக் கொள்க! - என்று கூறிவிட்டு வந்தவர்களல்லவா கோலோச்சுகிறார்கள். இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்கிற பண்டாரநாயகாவின் ஆட்சியின் போக்குப்பற்றி, ஒரு துளியும் டில்லி நடவடிக்கை எடுத்ததில்லை - சிறிதளவு அதட்டிக் கேட்கலாகாதா, அவனி புகழ ஒரு காலத்தில் வாழ்ந்த இனமாயிற்றே எமது தமிழர், சிங்களத்தை எமது மன்னன் வென்று, அந்தப் போரிலே பிடிபட்ட சிங்களவர்களைக் கொண்டு, காவிரிக்குக் கரை அமைத்தான் என்று கல்லில் பொறித்திருக்கிறார்களே! அத்தகைய வீரமரபினர், இன்று ஓட்டாண்டிகளாக மட்டுமல்ல, நாடற்றவர்களாக ஆக்கப் படுகிறார்களே, கள்ளத்தோணிகள் என்று கேவலப்படுத்தப் படுகிறார்களே - இதற்குப் பரிகாரம் காண ஒரு சிறு முயற்சி எடுத்திட வேண்டாமா? - பாதகம் விளைவிக்கும் பண்டார நாயகாவின் ஆட்சிக்கு நல்லறிவு கொளுத்த வேண்டாமா? என்று கேட்டனரோ நமது மந்திரிமார்! இல்லை! கேட்டால், மந்திரி பதவி நிலைக்காதே என்ற மருட்சியால், வாய் அடைத்துக் கிடந்தனர்! ஒவ்வோர் சமயத்திலும் இதே போக்குத்தானே கண்டோம். மனம் குமுறிப் பேசினர் பலரும். எனினும் நிலைமையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை: ஒவ்வொரு துறையிலும் டில்லி ஆதிக்க உணர்ச்சியையும், தமிழரின் நியாயமான "கோரிக்கை களை’க் கூட அலட்சியப்படுத்தும் போக்கையும் காட்டிக் கொண்டேதான் வருகிறது. சென்னை மந்திரிமார்களிலேயே மார்தட்டிப் பேசுவதில் முதல் தாம்பூலம் பெற்றவர், நிதி அமைச்சர். நமது கழகப் பெயர் கேட்டாலே அவர் நெரித்த புருவத்தினராகிறார். நமது கழகத்தைத் தாக்கிப் பேசக் கிளம்பினாலோ, பற்களை நறநறவெனக் கடிக்கிறார். அப்படிப்பட்ட “வீரதீரமிக்கவர்’ இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொழில் துறையிலே பின் தங்கி இருக்கும் சென்னைக்கு முதல் ஐந்தாண்டு திட்டத்திலே புறக்கணிக்கப்பட்டுப்போன சென்னைக்கு, 400 கோடி ரூபாயாவது தரவேண்டும் என்று கேட்டார்: கரம் கூப்பினார், கண்ணைப் பிசைந்துகொண்டார்,”கஷ்டத்தைப் பார்த்துக் கூலிகொடுங்கள் எஜமானே! உங்கள் வாய்க்கு வெற்றிலைபாக்கு, நம்ம வயிற்றுக்குச் சோறு!’ என்று கெஞ்சுவார்களே - அது போலெல்லாம் கேட்டுப் பார்த்தார். என்ன நடந்தது என்பதைத் தம்பி நாடறியுமே! கேட்டது 400 கிடைத்தது 170 இந்த இலட்சணத்தில் இருக்கிறது தொடர்பு! காட்டும் வீரம் அத்தனையும் இங்கே, நம்மிடந்தானே! டில்லி சென்றதும், எவ்வளவு அடக்க ஒடுக்கம்! பயபக்தி, ஏ! அப்பா! என்ன சொன்னால், நேரு பண்டிதருக்குக் கோபம் வந்து விடுமோ - அதன் பயனாகப் பதவிக்கு ஆபத்து நேரிடுமோ என்ற திகில், இவர்களை தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகளாக்கி விடுகிறது! இங்கே, பார் வீரதீரத்தை! குட்டுபவனுடைய கரத்தில் மோதிரம் இருந்தால், வலியையும் தாங்கிக்கொண்டு "ஆஹா! அருமையான வைரம்! அற்புதமான பூரிப்பு;’ - என்று பாராட்டுகிறார்கள். கலைத்துறை, கல்வித்துறை, வணிகத்துறை எனும் பல்வேறு துறைகளிலே நடைபெறும் அநீதிமிக்க போக்கை, தம்பி! நான் அவ்வப்போது விளக்கித் தருகிறேன் இதனைக் கண்ணுறும் காங்கிரஸ் நண்பர்கள் என்ன எண்ணுகிறார்களோ தெரியவில்லை. நாடு, மட்டும் நிச்சயமாக, அறிந்து ஆறாத் துயரம் கொண்டிருக்கிறது.நேரு பண்டிதரைக் கண்டால் அந்தத் துயரமும் கோபமும், பகலவன் முன்பனி போலாகும் என்று காமராஜர் கருதுகிறார் - பலமுறை அதுபோலாகி இருக்கிறது - இம்முறை அது பலிக்கப் போவதில்லை; மக்கள் மனம், கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. நாம் மட்டுமல்ல தம்பி, நாட்டிலே உள்ள பல்வேறு முற்போக்குக் கட்சிகளும், தமிழர் மிகப்பெருவாரியாகக் குடியேறி உள்ள வெளிநாடுகளுக்காகிலும், தமிழர்களையே தூதுவர்களாக அனுப்பி வைக்க வேண்டும் - இது உரிமைப் பிரச்சினை என்றுகூட அல்ல, வசதியைக் கவனித்தாலே, இதுபோலச் செய்வதுதான் திறம் தரும் என்பதை வலியுறுத்திக் கூறியபடி உள்ளன. பொதுக் கூட்டங்கள் பலவற்றிலே, மன்றங்களிலே, மாநாடுகளிலே, விளக்கப்பட்டு வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழர்களைத் தூதுவர்களாக அனுப்புவதால், டில்லிக்கு நஷ்டம் ஏதும் ஏற்படப்போவதுமில்லை, அதனைச் செய்வதிலே நஷ்டமும் எழாது. இங்குள்ள தமிழர்களும் இதை விரும்புகிறார்கள், குடி ஏறியுள்ள தமிழர்களும் ஆவலுடன் வரவேற்கிறார்கள். எனினும் இந்த ஒரு சிறிய காரியத்திலேகூட, டில்லி தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை! மேதைகள் கேட்கிறார்கள், காதிலே ஏறவில்லை! அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பிரமுகர்கள் கூடக் கேட்கிறார்கள், அதனையும் டில்பொருட்படுத்த மறுக்கிறது. தொடர்ந்து, துணிந்து, எல்லா இடங்கட்கும் வடக்கிலிருந்தே தூதுவர்களை அனுப்புகிறது - அதிலும் குறிப்பாக, தமிழர்கள் மிகப் பெருவாரியாகக் குடி ஏறியுள்ள நாடுகளில்! நியாயமா? கேட்டுப்பாரேன், காங்கிரஸ் காரர்களை. “என்ன தோழரே! செய்வது?’’ என்று பரிதாபத்தோடு சிலரும்,”இதெல்லாம் ஒரு பெரிய, பிரமாதமான பிரச்சினை அல்ல! என்று அலட்சியமாகச் சிலரும் பேசுவர் - ஆனால் அந்தக் காங்கிரஸ்காரர் மனதிலெல்லாம் நிச்சயமாக, கசப்பு முற்றிக்கொண்டுதான் வருகிறது. இதை நேருவின் விஜயம் மாற்றிவிடாது. நேரு பண்டிதர் தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்தால்தான், காங்கிரசை எதிர்த்துத் தேர்தலில் ஈடுபடும் நமது கழகத்தின் செல்வாக்கைச் சிதைத்திட முடியும் என்று காமராஜர் கணக்குப்போடுவது, தவறு என்பது மட்டுமல்ல அவர் அந்தக் கணக்குப் போடுவதன் மூலம், நமது கழகத்திடம் எவ்வளவு கடும் கோபம் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது மட்டுமல்ல, பெரியாரின் துணையை அவர் போதுமானது என்று எண்ணவில்லை. காமராஜர் கருதுவதுபோல் நேரு பண்டிதர் இங்கு வந்து பேசுவதன் மூலம், நமது கழகத்துக்குப் புதிதாக ஏதேனும் ஓர் எதிர்ப்பு கிளம்பும் என்று நான் நம்பவில்லை! நேரு பண்டிதருக்குப் பாவம், சர்வதேச நிலைமையை விளக்கிட தனக்கும் பிற நாட்டுத் தலைவர்களுக்கும் உள்ள தொடர்புகளைச் சித்தரித்துக் காட்டவே நேரம் போதாது! மேலும் தம்பி; நமது கழகத்திலுள்ள பணியாளர்களை, குறிப்பாக உன் அண்ணனைப் பற்றி, அடுத்துக் கெடுப்பவர் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வோர் ஊர் சுற்றிகள் என்று கடுமையாகவும், காரசாரமாகவும் பேசிடவா தெரியும்! அதற்கெல்லாம் பெரியார் இருக்கிறார்! வேறு எதற்காக நேரு பண்டிதரைக் காமராஜர் வரவழைக்கிறாரோ தெரியவில்லை. காரணம் எதுவாயினும், தம்பி நேரு பண்டிதரின் "விஜயம்’, இங்குள்ள பொதுமக்கள் மனதிலே, பல்வேறு சம்பவங்களின் மூலமாக மூண்டு கிடக்கும் கசப்பினைப் போக்கிடப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. நேரு பண்டிதரைப் பார்க்கும் போதே, புயலின்போது நாம் புலம்பிக் கிடந்தபோது வராத நேரு, வெள்ளக் கொடுமையிலே மூழ்கி வதைபட்டபோது வராத நேரு அரியலூரில் விபத்தினால் கதறித் துடித்தகாலை வராத நேரு, இப்போது ஓட்டுக்காக மட்டும் வந்திருக்கிறார், பாரீர்! என்ற எண்ணத்தை உமிழும் கண்களுடன்தான் மக்கள் இருக்கப்போகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் தமிழர்களின் முகத்தில் கரி பூசப்படும் கொடுமைக்கு யார் தலைமை வகித்திருக்கிறாரோ, அந்த நேரு இவர்தான் என்றுதான் பார்க்கப்போகிறார்கள். “தமிழ் மக்கள் குடி ஏறி இருக்கும் நாடுகளான இலங்கை, பர்மா, மலேயா, தென்னாப்பிரிக்கா, முதலிய நாடுகளில், தமிழர்கள் தூதுவர்களாக நியமிக்கப்படுவதே, பொருத்தமுடையதாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட கவர்னராயில்லாவிட்டாலும், தூதுவர் பதவிகளிலாவது தமிழர்களுக்குச் சிறப்பளிக்கக்கூடாதா? உலகமெல்லாம் புதுப்புது இடங்களில் தூதுவர்கள் நியமிக்கப்பட்டு வரும்போது எங்காவது ஒரு தமிழருக்குக்கூட இடமில்லை என்பது வருந்தத்தக்கது. தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரசு கட்சியிலும், பிறகட்சிகளிலும், கட்சிச்சார்பற்ற நிலையிலும், கல்விச் சிறப்பு, கலைப் பண்பு, பிற நாட்டு அனுபவம் முதலிய தகுதிகளுடைய சிலர் கூடவா, புதுடில்லி அரசினருடைய தொலை நோக்கிற்குப் புலப்படவில்லை? மேலும் தமிழர்களே மிகப் பெரும்பான்மையினராகவும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு ஒரு தமிழரை, இந்தியப் பிரதிநிதியாக ஏன் நியமிக்கக் கூடாது? மக்களுடைய மொழியறியாத ஒருவரை எதற்காக நியமிக்கவேண்டும்? தம்பி! இப்படி எழுதும் ஏடு, தி. மு. க. முகாமைச் சேர்ந்தது அல்ல! மதுரை”தமிழ்நாடு’ - நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, இந்த ஏட்டதிபரின் மாளிகைக்குக்கூடச் செல்லக்கூடும் - வேண்டியவர்தான் ஆட்சியினருக்கு - எனினும், மனம் வெதும்பத்தான் செய்கிறது, இவர் போன்றாருக்கும். காரணம் என்ன? தொடர்ந்து தமிழர் அவமதிக்கப்பட்டு வருவது, வெளிப்படையாகவே அவமதிக்கப்படுவது, சுயநலத்தால் பீடிக்கப்பட்டுப் போனவர்களுக்குத் தவிர, பிற அனைவருக்கும், மனவேதனையைத் தருவதாகத்தான் இருக்கிறது. அந்த வேதனையை நேரு பண்டிதரின் விஜயம் போக்கிவிடாது - எரிகிற தழலுக்கு எண்ணெய்தானாகும்! "தனி நாடு’ என்று கேட்பது தவறு, தீது, தேவையற்றது என்று காரணம் காட்டி, நம்மீது கடிந்துரைக்கும் போக்கின ரெல்லாங்கூட, எல்லா அதிகாரங்களும் வசதிகளும், வாய்ப்புகளும் உரிமைகளும் டில்லியில் - மத்திய சர்க்காரில் குவிந்து விட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, இது தவறு, தீது, தேவையற்றது என்று எடுத்துக் காட்டுகிறார்கள். இந்த நிலைமை மாற்றப்பட்டாகவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். மாகாணங்களுக்கு - மாநிலங்களுக்கு - இராஜ்யங்களுக்கு இன்று உள்ள அதிகாரங்கள், போதாதன; இந்த அளவுக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாநிலங்கள் தத்தமது ஆட்சியின்கீழ் உள்ள மக்களின் செல்வ வளர்ச்சிக்கான, நல் வாழ்வுக்கான திட்டங்களை நிறைவேற்றிவைக்க முடியவில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். வடக்கு வேறு, தெற்கு வேறு என்று பேசுவது அவர்களுக்குக் கசப்பாக இருக்கிறது. இனப் பிரச்சினையை எழுப்பினாலே, கடுப்பெடுக்கிறது. எனினும், அவர்கள் அனைவருக்குமே எங்கோ ஓர் "சுருதி பேதம்’ இருப்பது தெரிகிறது. அவர்கள், மாகாணங்களுக்கு அதிகமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வாதாடுவதும், வாதங்கள் பலிக்காது போனால் போராடுவதும்தான் அரசியல்; வடநாடு- தென்னாடு என்று குறிச் சொற்களைக் காட்டிப் பேசுவது "காட்டுமிராண்டித்தனம் என்று எண்ணிக் கொள்கிறார்கள்; தம்பி, இவர்களின் அரசியலாவது வெற்றிபெறுகிறதா? அதுதான் இல்லை. ஏற்கனவே உள்ள அதிகாரங்கள் போதாமல், மேலும் மேலும் மத்திய சர்க்காரிலே அதிகாரங்களைக் கொண்டுபோய்க் குவித்துக் கொள்ளும் போக்குத்தான் காண்கிறோம். வடக்கு - தெற்கு என்று பேசுவது அறிவுடைமை அல்ல என்று கருதும் "நகாசு’’ வேலைக்காரர்களையே கேட்கிறோம், அந்தப் பேதம் ஆகாது என்றால், ஏன் தமிழனுக்கு உரிமை தரவில்லை. தமிழனை ஏன் உயர் பதவியில் அமர்த்தவில்லை? தமிழனை ஏன் தூதுவர்களாக்கவில்லை என்று எப்படிக் கேட்கத் தோன்றுகிறது! லங்காஷயர்காரருக்கே பதவியா? வேல்ஸ்காரருக்கே விருதுகளா? ஷெப்பீல்டுகாரர்களுக்கே பட்டமா? என்று இங்கிலாந்தில் கேட்பதில்லை; காரணம், அங்குள்ள மக்கள் அனைவரும் தம்மை ஆங்கிலேயர் என்று நம்புவதால் - அந்த எண்ணம் குருதியில் கலந்துவிட்டிருப்பதால்! இங்கும் அதுபோல, நேரு பண்டிதரும், அவர் கூறுகிறாரே என்பதாலே பிறரும், அனைவரும் இந்தியர் என்று பேசுகிறார்கள். இந்தப் பேச்சு உண்மை உணர்ச்சியை, இயற்கையைக் காட்டுவதாக இருந்தால், அடிக்கடி பல்வேறு துறைகளிலேயும், நம்மைப் புறக்கணித்து விட்டார்கள், நமது நலன்கள் பாழாக்கப்பட்டுவிட்டன; நமது உரிமைகள் அழிக்கப்படுகின்றன; என்ற குமுறல் எழக் காரணம் என்ன? "இன்று இந்தியாவில் எந்த இராஜ்யத்திலும் தமிழர், கவர்னராக இல்லை. இந்தியாவின் மற்றப் பகுதிகளில் கிடைக்காத பதவி தமிழருக்கு தமிழ் நாட்டிலேயாவது கிடைக்கட்டுமே. தமிழ் நாட்டுக்கு ஒரு தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டால், டில்லியில், யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது.’’ தம்பி! "குமுதம்’ இதுபோல் எழுதிடக் காண்கிறேன்! ஏன், இந்த ஆவல் எழுகிறது! தமிழனுக்கு இந்தியாவிலே எந்த இடத்திலும் கவர்னர் பதவி இல்லையே என்ற ஏக்கம் ஏன் எழுகிறது! தமிழருக்குத் தமிழ் நாட்டிலேயாவது என்பதிலே தொக்கி நிற்கும் துயரத்துக்குக் காரணம் என்ன? இந்தியர் என்று பேச முடிகிறதே தவிர, பேசுவது இன்றைய அரசியல் நாகரீகம் என்று கருதுகிறார்களே தவிர, அதிலே ஆழ்ந்த நம்பிக்கையோ, பற்று பாசமோ இல்லை - இயற்கையாக எழுவதில்லை! தமிழ்நாட்டுக்குத் தமிழர் கவர்னர் ஆகவேண்டும் என்று எண்ணச் செய்யும் உணர்ச்சிக்கு "குமுதம்’ என்ன பெயரிடுகிறதோ, நான் அறியேன்! எனக்கென்னவோ நாமக்கல் கவிஞரின் பாடல் செவியில் விழுகிறது. தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அவர்க்கோர் பண்பு உண்டு. அவ்வளவு பச்சையாகச் சொன்னால், அண்ணாத்துரைக்கும் நமக்கும் ஒரு வித்தியாசமும் தெரியாமல் போய்விடுமே, நாமென்ன அவன்போலவா, அரசியலில் அந்தஸ்து குறைந்த நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணம் பலருக்கு உண்டு என்பதை நான் அறிந்திருக்கிறேன். தம்பி! இதிலே இன்னொரு வேடிக்கையைக் கவனித்தாயா? தமிழ் நாட்டுக்குத் தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டால் டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது.’’ என்ற வார்த்தை இருக்கிறதே, அதிலே உள்ள நயங்களும் அதற்குள்ளே புதைந்துள்ள உணர்ச்சிகளும், பலமுறை படித்துப் படித்துப் பார்த்தால்தான் அறிந்து ரசிக்கமுடியும். நமது அமைச்சரவை! தம்பி! இதிலே, பாசமும் பரிவும், அன்பும் அக்கரையும், உரிமையும் உறவும் எல்லாம் அந்த நமது என்ற சொல்லுக்குள்ளே வைத்து இழைத்துத் தருகிறார் அந்த ஆசிரியர்! வாழ்க, அவர்தம் தமிழ் உள்ளம்!! நமது அமைச்சரவை, தமிழ் நாட்டுக்கு நல்லவரை திறமைசாலியை அனுபவமிக்கவரை கவர்னராக நியமியுங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று கேட்கிறார். இனித் தம்பி, தமிழ் நாட்டின் அவலநிலையைக் காட்டுகிறாரே, அந்தச் சுவையைப் பார்! தமிழ் நாட்டுக்குத் தமிழ் கவர்னரை நியமிக்கும்படி மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளவேண்டுமாம். மத்திய அரசாங்கத்திடம் அந்த அதிகாரம் சேர்க்கப்பட்டிருக் கிறது, என்பது விளங்குகிறது என்பாய். தம்பி! ரசம் அதிலே இல்லை. மத்திய அரசாங்கம் என்று மட்டுமே கூற ஆசிரியரின் மனம் இடந்தருகிறது. நமது மத்திய அரசாங்கம் என்று சொல்லக் கூச்சமாக இருக்கிறது. நமது அமைச்சரவை என்று, உரிமையோடும் பெருமையோடும் கூறுவதற்கு முடிகிறது, மத்திய அரசாங்கம் என்று மட்டுமே, பந்தம் சொந்தம் அற்ற முறையிலே சொல்ல முடிகிறது. பாவி! நான் மிகப் பாடுபட்டு உள்ளத்து உணர்ச்சிகளை திரைபோட்டு வைக்கிறேன், கிளறிக் கிளறிக் காட்டித் தொலைக்கிறாயே, தேசிய முகாமின் தீப்பொறி கிளம்புமே… என்று ஆசிரியர் ஆயாசப்படக்கூடுமே என்பதுபற்றி, தம்பி நான் பலமுறை எண்ணிப் பார்த்தேன்; என்ன செய்வது; அவருக்குக் கஷ்ட நஷ்டம் வருவதானாலும், இதனை நான் எடுத்து விளக்குவது தமிழருக்கு இலாபம் அல்லவா!! தமிழ்நாட்டுக்குத் தமிழரை கவர்னராக நியமிக்கும்படி நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளவேண்டும் என்று யோசனை கூறியதும், ஆசிரியருக்கு வேறோர் யோசனை வருகிறது. நமது அமைச்சர்கள், டில்லியின் கோபம் கிளம்பிடும் என்று மருளக் கூடியவர்களாயிற்றே! என்று எண்ணம் வந்தது. உடனே, நமது அமைச்சரவைக்கு தைரியம் கொடுக்கிறார். மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டால் டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டு விடாது! என்று கூறுகிறார்! ஏண்டா! இப்படிப் பயந்து, தொடை நடுங்கியாக இருக்கிறாய்! உயிர் ஒன்றும் போய்விடாது - என்று கோழைக்கு அச்சமற்றவன் கூறுவதிலே உள்ள “ரசம்’ இதிலே இருக்கிற தல்லவா? ஆம், அண்ணா, என்பாய், தம்பி இதனினும் மேலான”ரசமும்’ இருக்கிறது, கேள். அமைச்சரவையின் அச்சத்தைப் போக்கி, தைரியமாகத் தமிழ் நாட்டுக்குத் தமிழ் கவர்னர் வேண்டும் என்று கேளுங்கள், டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டு விடாது - என்று வீரச்சூரணம் தருகிறாரல்லவா "குமுதம்’ ஆசிரியர், அவரைப் பார்த்து, தமிழ் நாட்டுக்கு யார் கவர்னராவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஏனய்யா மத்திய அரசாங்கத்திடம் இருக்கவேண்டும்? தமிழ் நாட்டு அரசிடமே அந்த உரிமை இருத்தலாகாதா? தமிழ் நாடு தனி நாடு என்ற நிலை ஏற்படுமானால் காவடி தூக்கும் கேவலம் எழாதல்லவா! என்று கூறிப்பார்! ஆசிரியருக்கு மூர்ச்சை போட்டுவிடும்!! ஆசிரியர்கள் நிலையே இது என்றால், அமைச்சர்கள் அச்சம் கொள்வதிலும், ஆமையாவதிலும், ஊமையாவதிலும் ஆச்சரியப்படுவானேன்! பிரச்சினை இதுதான், தம்பி. பலருக்கும் நன்றாகத் தெரிகிறது தமிழகத்தின் தாழ் நிலையும், அதற்கான சூழ்நிலையும். உள்ளமும் குமுறச் செய்கிறது. அதனை எடுத்துக் காட்டிப் பரிகாரம் கேட்பதிலே ஈடுபட்டால், “உள்ளதும்’ போய்விடுமோ என்றுகூடச் சிலர் அஞ்சுகிறார்கள். மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி என்று இந்தத் தேர்தல் முடிவு இருக்குமானால்.”மத்திய அரசாங்க’ப்பிடி, இரும்புப் பிடியாகிவிடும் என்ற நிலைமை இருக்கிறது. இதனை நன்கு உணர்ந்துள்ள யாரும், நேரு பண்டிதரின் "திக் விஜயத்தி’னால் தங்கள் நெஞ்சிலே மூண்டுள்ள நெருப்பை அணைத்துக் கொள்ள முடியாது. எரிகிற தழலில் எண்ணெய்தான், நேரு பண்டிதரின் பவனி!! அண்ணன், 16-12-1956 காட்டாட்சி… ஆமதாபாத்தில் குழப்பம் - பட்டேல் தினம் - "மகா குஜராத்’ கிளர்ச்சி தம்பி! பம்பாய்க்காரர் பட்டீல் காங்கிரசை கேரளத்தில் வெற்றிபெறச் செய்வதற்காகவென்றே, தனியானதோர் திட்டத்துடன் அனுப்பப்படுகிறாராம். புறப்படுவதற்கு முன்பு பட்டீல், தமது திட்டத்தில் ஒரு துளி எடுத்துக் காட்டினார் - ஓட்டு வேட்டைக்கு இந்தத் தடவை சினிமாப்படம் பயன்படுத்தப்படுமாம்! மிகப் பெரும்பாலான மக்கள் தற்குறிகளாக உள்ள இந்த நாட்டிலே, சினிமா மூலம் நல்லவிதமான பிரசாரம் நடத்தலாம் - படக்காட்சியைக் காணும்போது கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சி ஏற்படும் - மக்கள் மகிழ்ந்திருக்கும் நேரமாகப் பார்த்து, காங்கிரசுக்கு "ஓட்டு’ தாருங்கள் என்று கேட்டுப் பெறுவது எளிது என்பது பட்டீல் வாதம். இந்தத் திட்டத்தை, நெடுந் தொலைவிலிருந்து, பட்டீல் வந்து தானா செய்துகாட்ட வேண்டும் - பனம் பள்ளியிடம் ஒரு படம் கொடுத்தால் போதாதா என்று கேட்கிறாய், தெரிகிறது; ஆனால், தம்பி! ஒரு விஷயம் உனக்குப் புரியவில்லையே, கேரளத்துக்குப் பட்டீல் தேவை என்பதற்காக அவர் அனுப்பப்படுகிறார் என்று கூறப்படுகிறதே தவிர, உண்மை வேறு என்றுதான் நான் எண்ணவேண்டி இருக்கிறது. பட்டீல், கேரளம் அனுப்பப்படுவதற்குக் காரணம், இங்கு அவர் மிக மிக அவசியமாகத் தேவை என்பதாலே அல்ல; பட்டீல் இந்தத் தேர்தலின்போது, பம்பாயில் இருக்க முடியாது என்பதாலே, அவர் கேரளம் அனுப்பப்படுகிறார் என்று எண்ண வேண்டி இருக்கிறது. "தேர்தல் வேலை’யிலே இவர் புலி! கல்லிலே நார் உரிப்பார்! காயைக் கனியவைப்பார்! புதுப்புதுப் பிரசார முறைகளைக் கண்டறிவார்! யாராரை எப்படி எப்படி வளைய வைப்பது, எங்கெங்கு எப்படியெப்படி நெளிந்து கொடுப்பது, என்ற வித்தைகளிலே மெத்தச் சமர்த்தர் என்றெல்லாம் கூறப்படுகிறது இது உண்மை என்று வைத்துக் கொண்டால், தம்பி, இந்த வித்தையை அவர் தமது மாகாணத்தில் செய்து காட்டலாமே! ஏன், இங்கு வருகிறார்? தேர்தல் காலத்தில் பட்டீல் பம்பாய் பகுதியிலே இருப்பது, அவருக்கோ, காங்கிரசுக்கோ நல்லதல்ல! எனவேதான், பட்டீலைப் பிடித்துக் கேரளத்துக்கு அனுப்புகிறார்கள். நான் வேண்டுமென்றே கூறுகிறேன் என்று காங்கிரஸ்காரர் யாராவது பேசுவரேல், தம்பி, ஒரு கிழமையாக, பட்டீல் வாழ்கிற பகுதியில், காங்கிரஸ் படுகிற பாடுபற்றிப் பத்திரிகைகளிலே வருகிற செயல்களைப் படித்துக் காட்டு. படம் தயாரித்துக் கொண்டு, பட்டீல், இங்கு வருவது இருக்கட்டும், இப்போது, அவர் மாகாணத்தில் காங்கிரஸ் பெரிய புள்ளிகள் படுகிறபாடு, படமாக்கப்பட்டால், பாரெல்லாம் பரிகாசம் செய்யும் போலல்லவா இருக்கிறது!! பம்பாய் - ஆமதாபாத் அமளி அடங்கிவிட்டது என்றும், மக்கள் அறிவு பெற்றுவிட்டனர், காங்கிரஸ் ஆணைக்குக் கட்டுப்பட்டுவிட்டனர் என்றும், இருமொழி ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றும், மொரார்ஜி தேசாயைத் திணறவைத்தவர்கள், நேரு பண்டிதரைப் பேசவிடாதபடி செய்தவர்கள், இப்போது வெட்கித் தலைகுனிந்து கிடக்கிறார்கள் என்றும், தேசிய ஏடுகள் மிகத் தந்திரமாகப் பிரசாரம் செய்தன. சவான் பம்பாய் மாகாண முதலமைச்சரானார், புதிய சூழ்நிலையே பூத்துவிட்டது, என்று பூரிப்புடன் அந்த ஏடுகள் எழுதின. ஆனால், நீறுபூத்த நெருப்பென, சம்யுத்த மராட்டிய இயக்கமும் மகா குஜராத்தி இயக்கமும் இருந்து வருகின்றன! அடுத்து வருகிற பொதுத் தேர்தலில், காங்கிரசை முறியடிப்பதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அந்த இயக்கங்கள் ஓய்ந்து போயின, மாய்ந்துவிட்டன, என்று டில்லி மனப்பால் குடித்தது. இல்லை! இல்லை! எங்கள் இதயக் குமுறல் அடங்காது! எமது இலட்சியம் அழிந்துபடாது! நாங்கள் எதற்கும் தயார்! என்று கூறுவது போல, கிளர்ச்சிகாரர்கள், ஒரு கிழமையாகக் கொதித்து எழுந்து விட்டுள்ளனர். பழையபடி, மந்திரிகள் மருள்கிறார்கள்! மோட்டார்கள் உடைபடுகின்றன! கதர்க்கொடிகள் தீக்கிரையாகின்றன! குல்லாய்களைக் கொளுத்துகிறார்கள்! குலை அறுபடும் நிலையில், தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று தலைவர்கள் ஓடி ஒளிகிறார்கள். கருப்புக் கொடி காட்டுவதும், கண்டன முழக்கம் எழுப்புவதும், பொதுக் கூட்டங்களை நடைபெற வொட்டாது தடுப்பதுமான காரியம், தீவிரமாகச் செய்யப்படுகின்றன! இந்த நிலைமை நீடிக்குமானால், தேர்தலின்போது ஓட்டுச் சாவடிக்குப் பட்டாளக் காவல் போட்டாக வேண்டும் போலிருக்கிறது! காங்கிரஸ் அபேட்சகர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்களா என்பது கிடக்கட்டும்; மக்களிடம் இவர்கள் சென்று, ஓட்டுக் கேட்டுவிட்டு மானம் அழியாமல், மரியாதை கெடாமல், ஊனம் ஏற்படாமல், வீடு திரும்புவார்களா என்பதே அல்லவா, பாவம், சந்தேகமாகிவிட்டது! பட்டீல், மெத்த சமர்த்தர்தான்! இந்தச் சூழ்நிலையில் அவர் கேரளம் நாடுகிறார்! தமிழ் நாடு தவிர, பிற எல்லா இடங்களிலும், மக்கள் தத்தமது மொழி, பண்பாடு, இவற்றின் அடிப்படையில் அமையும் உரிமை ஆகியவற்றுக்காகச் சிறிது வரம்புமீறிக் கூடக் காரியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்குதான், கோயிலில் கற்பூரம் கொளுத்துவது மூடப் பழக்கம், அது ஒழியவேண்டும்; அதை ஒழிப்பதுதான் எமக்குள்ள வேலை; என்றாலும், கற்பூரக்கடை வைத்திருக்கும் காத்தமுத்து, நல்ல மனிதர், நாலைந்து குழந்தைகளுக்குத் தகப்பன், எனவே அவனுக்குப் பிழைப்புத் தரவேண்டும் என்பதற்காக, அவன் கடையிலே கற்பூரம் வாங்கிக் கோயிலில் கொளுத்துங்கள்; என்று கூற முடிகிறது! மனம் இடம் தருகிறது!! அங்கெல்லாம், அவ்விதமில்லை; எமது பிறப்புரிமையைப் பறித்திட உனக்குத் துணிவு பிறந்துவிட்டபோது, எனக்கும் உனக்கும் என்ன பந்தம் பாசம், ஒட்டு உறவு, சொந்தம், போ! போ! - என்று உரிமைக்காகக் கிளர்ச்சி நடத்துவோர், முழக்கமிடுகிறார்கள்! அவர்கள் கையாண்டுவரும் முறைகள், தம்பி, எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் அவர்கள் உரிமைக்காக எழுச்சி பெற்று பணியாற்றும் போக்கினைப் பாராட்டாமலிருக்க முடிகிறதா!! அமைச்சர்கள் படுகிற அவதியைக் காணும்போது, பட்டீல் எப்படி அங்கு தேர்தலின்போது இருந்திட ஒப்புவார்! எனவேதான் கேரளம் வருகிறார். பலமான கல்வீச்சு போலீஸ் சவுக்கிமீது தாக்குதல் முனிசிபல் லாரிகள் தகனம் போலீசாருக்குக் காயம் விளக்குகள் உடைக்கப்பட்டன பொதுக் கூட்டம் கலைக்கப்பட்டது கைகலப்பிலே பலருக்குக் காயம் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு! தம்பி, ஆமதாபாத் நகரில், டிசம்பர் 15 மாலை நடைபெற்ற நிகழ்ச்சிகளை, தலைப்புகளாகத் தந்திருக்கிறேன்; இவற்றைக் கொண்டு, நீ, மனக்கண்ணால் பார், நிகழ்ச்சியை. கூட்டம் போட வந்துவிட்டார்களா, கூட்டம்? அவ்வளவுக்குத் துணிந்துவிட்டார்களா, அக்ரமம், ஜீரணமாகிவிடும் என்ற எண்ணமோ! என்று, சிறு சிறு பிரிவினர் உரையாடுவது, தெரிகிறதா! கூட்டத்தில் பேசும் பிரமுகர், எந்த போலோ பாரத் மாதாகீ என்ற முழக்கமும், மகாத்மா காந்திக்கு ஜே என்ற முழக்கமும், கோடிக்கணக்கான மக்களைச் சொக்கிட வைத்ததோ அதே முழக்கத்தின் துணையைத்தான் தேடுகிறார்; ஆனால் பாபம், பலிக்கவில்லை! அந்த முழக்கத்தை மிஞ்சும் வேறோர் முழக்கம் எழுகிறது. மகாகுஜராத் ஜிந்தாபாத்! சவான் சர்க்கார் மூர்தாபாத்! இந்த முழக்கம், கலவரத்துக்கு முன் அறிவிப்பாகிறது! ஐயோ! கல்! கற்கள்! நாலா பக்கமும்! தலை ஜாக்கிரதை, கண் ஜாக்கிரதை! ஓடிவிடுவோம், ஓடிவிடுவோம்! பாவிப் பயல்கள்! கொலைகாரப் பயல்கள்! கூப்பிடு போலீசை, போலீசைக் கூப்பிடு! ஓடு! ஓடு! பதுங்கிட இடம், தேடு! தேடு! மக்கள் இவ்விதமெல்லாம் கூவிக்கொண்டு ஓடுவது தெரியுமே, தம்பி, எண்ணத்தேரில் ஏறிச் சென்று பார்த்தால். அன்று, பட்டேல் தினம்! மக்களும், தலைவர்களும், அநேகமாக, அந்த இரும்பு மனிதரை மறந்தேவிட்டார்கள்! மராட்டியத்திலும், குஜராத்திலும் அமளிநிலை இருப்பதைச் சரிப்படுத்த, எந்த ஆமதாபாத் நகரில் அவர் இட்டதுதான் சட்டம் என்ற நிலை இருந்து வந்ததோ அங்கே, பட்டேல் தினம் கொண்டாடினால், மக்கள் பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் இவை நாலும் கலந்து பானம் சுவைப்பது போலாகி மாச்சரியத்தை மறப்பர், என்று எண்ணிக்கொண்டனர், மக்கள் இளித்த வாயர் என்ற எண்ணம்கொண்ட இறுமாப்பாளர். மகாகுஜராத் இயக்கத்தினருக்கு இந்தச் "சூட்சமம்’ புரிந்துவிட்டது; நீங்களென்ன படேல் தினம் கொண்டாடுவது! நாங்கள் நடத்துகிறோம் என்றுகூறி, காங்கிரசார் நடத்துவதற்கு முன்பு, மகாகுஜராத் ஆதரவாளர் சார்பில் கூட்டம் நடத்தினர். பட்டேலின் அருமை பெருமைகளை எடுத்துரைத்தனர். "பாரதம்’ அவருடைய பணியின் பயனைப் பெற்றதைக் கூறினர்; பலன் பெற்ற கூட்டம் இன்று, தமது இலட்சியத்துக்கு, மகாகுஜராத்துக்கு இழைக்கும் கேடுபற்றிக் கண்டித்தனர். வேறோர் இடத்திலே காங்கிரஸ் ஏற்பாடு செய்த கூட்டம். இதைக் கண்டதும், ஆத்திரம் பிறந்தது - ஆர்ப்பரிப்பு எழும்பிற்று - அமளி மூண்டது! யாரோ இரண்டொரு காலிகள் செயல் என்று, தேசிய ஏடுகளாலேயே இதனை அலட்சியப்படுத்திவிட முடியவில்லை. கல்வீச்சு கண்டிக்கத்தக்க செயல்; ஐயமில்லை! ஆனால் கல் வீச்சிலே ஈடுபட்டவர்கள், விரல்விட்டு எண்ணத்தக்க சிலர் அல்ல. மாணிக்கசௌக் பிரதேசத்தில் 3000 பேர்கள் கற்களை வீசினர்! என்று "மித்திரன்’ தெரிவிக்கிறது! மூவாயிரம்பேர் கல்வீச்சில் ஈடுபட்டால், எத்துணை அலங்கோலம் ஏற்பட்டிருக்கும், எவ்வளவு அமளி மூண்டுவிட்டிருக்கும்; எண்ணிப் பார்க்கும்போதே தம்பி, அந்தக் கண்றாவிக் காட்சி தெரிகிறதல்லவா? போலீசார் 14 கண்ணீர் வாயு வெடிகளை உபயோகித்தனர். போலீஸ்மீது சோடாபுட்டிகள் வீசப்பட்டன. கூட்டத்தைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்திற்று! போலீசைத் தாக்கிட ஜனத்திரள் முனைந்தது. மொத்தம் 30 போலீசாருக்கு மேல், காயமுற்றனர். நாலு ஆபீசர்களுக்குப் பலமான தாக்குதல். போலீஸ் லாரிகள் ஜரூராயின! போக்குவரத்துக்கு ஜனக்கூட்டம் தடைகளைப் போட்டுவிட்டன! முனிசிபல் பஸ்கள் கொளுத்தப்பட்டன. தம்பி! பெரியதோர் அமளி நடந்திருக்கிறது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், தேசிய ஏடுகள் தகவல்களைத் தருகின்றன! வெறும் காலிகள் சேட்டை அல்ல இது! பொறுப்பு உணர்ந்தவர்களுக்கே, ஆத்திரம் பொங்கி எழத்தக்க விதத்தில் அநீதி இழைக்கப்பட்டால், காலித்தனமேகூட அவர்களுக்குக் கரும்பாக இனிக்கிறதுபோலும்! எந்த அளவுக்கு, அங்கு காங்கிரசாட்சியின்மீது கசப்பு இருந்தால், கோபம் கொதித்தால், தம்பி இது நடந்திருக்கும் என்று எண்ணிப்பார். "இன்று மக்கள் தெருக்களில் காந்தி குல்லாய் அணிந்து சென்றவர்களைக் குல்லாய்களை அப்புறப் படுத்தும்படி நிர்ப்பந்தித்தனர்.’’ தம்பி! நிர்ப்பந்தித்தனர் என்ற நாசுக்கான பதத்துக்குப் பின்னாலே தெரியும் நானாவிதமான நடவடிக்கைகளைக் கூறவாவேண்டும்! ஆமதாபாத் காட்டியதைவிடவா "காங்கிரஸ் பக்தி’யை, வேறு நகரம் காட்டமுடியும்!! அங்கு, இது! எல்லாம் எதன் பொருட்டு? மொழிவழி அரசு எனும் உரிமை அழிக்கப்படுவதை எதிர்த்து! இங்குமட்டுமே தேவிகுளம், பீர்மேடு பறிகொடுத் திடவும், ஐயோ! இழந்தோமே என்று கதறினால், குளமாவது, மேடாவது என்று கேலி பேசிடவும் ஒரு முதலமைச்சரால் முடியும் காரணம் என்ன? அவர்தான் தமிழரின் புதிய ரட்சகர்! ஒரே ரட்சகர்! ஒப்பற்ற ரட்சகர்!! - என்று நெஞ்சு நெக்குருகப் பேசும் பேரியக்கம் இருக்கிறது. ஆமதாபாத்தில் காங்கிரசார் நடத்திய படேல் தினக்கூட்டம் காரணமாக இந்த அமளி ஏற்பட்டு, பதினைந்தே நிமிஷத்தில் கூட்டம் கலைந்தது. வேறோரிடத்திலே மகா குஜராத் இயக்கம் நடத்திய "படேல் தினம்’ இரவு நெடு நேரம் வரையில் நிம்மதியாக நடைபெற்றது. டிசம்பர் 2 ஆம் தேதிதான் ஆமதாபாத் ஜில்லா போலீஸ் சூபரின்டெண்டு, நகரில் குற்றங்களை பெரும் அளவுக்குக் குறைந்துவிட்டன, என்று அறிக்கை விடுத்தார். எனவே, காலிகளின் சேட்டையே இவ்வளவு அமளிக்குக் காரணம் என்று கூறுவதில் பொருள் இல்லை வழக்கமாக இதுபோல் தத்துவ விளக்கம் தரும் ஏடுகள் கூட, இம்முறை அதுபோல் கூறிடக் காணோம். படேல் தினம் நடத்திப் “படாத பாடுபட்ட’ காங்கிரசார் அதிகமாக வருத்தப்படுவதற்கில்லை; ஏனெனில் இதைவிட”மோசமான’ நிலைமை காங்கிரஸ் அமைச்சராகப் பணியாற்றும் ஒரு அம்மையாருக்கு ஏற்பட்டது. அது டிசம்பர் 14 இல். இந்துமதி சிமன்லால் சமூக நலமந்திரி! மாதர்குல நலனுக்காக, துவக்கப்பட்ட ஜோதி சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொள்ள அம்மையார் சென்றார், கிளர்ச்சிக்காரர்கள் வளைத்துக்கொண்டனர். அமைச்சரின் மோட்டார் “பன்ச்சர்’ செய்யப்பட்டதாம்! நடந்தே சென்றார்களாம் அமைச்சர்! வழிநெடுக, ஒரே கூச்சல், கேலி, கண்டனம், இடையிடையே கல்வீச்சு! கலவரத்தில் ஈடுபட்டவர் தொகை 2000 என்று, பம்பாய்”டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகை எழுதுகிறது. அமைச்சரின் விலாவிலும் முதுகிலும் அடியாம்! அவருக்குத் துணைசென்ற பத்து பன்னிரண்டு தாய்மார்களுக்கும் தாக்குதலாம்! பெண்களைப் பாதுகாக்கச் சென்ற போலீசாரில் ஐவருக்குப் பலமான காயமாம்! இத்தனைக்கும் போலீசார், கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பார்த்தனர், கல்வீச்சின் முன்பு, அது போதுமான பலன் தந்ததாகத் தெரியவில்லை! கார் கெடுக்கப்பட்டு விட்டதால் கால்நடையாகச் சென்றாரல்லவா, அம்மையார்; வழியில் பாவம், உருட்டிக் கீழேகூடத் தள்ளிவிட்டார்களாம்! இவ்வளவு சங்கடத்தையும் சமாளித்துக்கொண்டு சங்கம் சென்றார். அங்கு என்ன நடந்தது தெரியுமா, தம்பி! உள்ளே நுழையாதே! என்று முழக்கமிட்டனர். யார்? பெண்கள்! மகா குஜராத் ஆதரவாளர். புதிய முதலமைச்சர் சவான் மட்டும் தப்பினாரா? இல்லை, தம்பி, இல்லை. ஆமதாபாத் காங்கிரஸ் மாளிகையில், ஊழியர்கள் கூட்டம் நடத்த வந்தார் முதலமைச்சர். வருகிற வழியிலேயே கலகம் ஆரம்பமாகிவிட்டது; கல்விச்சு பலமாகிவிட்டது; கருப்புக்கொடிகள் ஏராளம்; கட்டுக்கு அடங்கும் போக்கு இல்லை; போலீஸ் நடவடிக்கை பலன்தரவில்லை; ஆர்ப்பாட்டக்காரர் அமளிநிலை உண்டாக்கி விட்டனர். இது காலையில். மாலையிலோ, காங்கிரஸ் மாளிகையையே ஆர்ப்பாட்டக் காரர் முற்றுகையிட்டு விட்டனர். போலீஸ் வளையம், அவர்களைத் தடுத்தது, ஆர்ப்பாட்டக்காரர் வளையத்தைப் பிளந்து கொண்டு முன்னேறினர், தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு நடத்திப்பார்த்தனர் - பலன் கிட்டவில்லை. இடி முழக்கம் போல, சவான்! திரும்பிப்போ! மகா குஜராத் வேண்டும்! என்றனர் மக்கள். முதலமைச்சரின் முகம், படமாக்கப்பட்டதோ, என்னவோ! படமாக்கப்பட்டிருந்தாலும், பட்டீல் அதையே காட்டுவார், மக்களிடம்! “மாஜி‘யையும் சும்மாவிடவில்லை’ இந்த”வம்புக்காரர்கள்.’ அவர் இந்தத் தொல்லையே வேண்டாமென்று, பம்பாய்ப் பிரச்சினைக்குத் தலைமுழுக்குப் போட்டுவிட்டு, நேருவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார்! போகட்டும் என்று விட்டுவிட்டார்களா? அவர் ஒரு கூட்டத்தில் பேசினார் - பேச முயன்றார். பெருங்கூச்சல் எழுப்பினர், பேசவிடாதபடி தடுத்தனர். இதற்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல, என்றார் மொரார்ஜி. எதற்கும் நாங்கள் அஞ்சுபவர் அல்ல, என்று கூறுவது போல, மக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். மொரார்ஜி, கடுமொழி புகன்று பார்த்தார்லிபோலீஸ் நடவடிக்கை எடுத்தது - குழப்பமோ நிற்கவில்லை. இந்த நிகழ்ச்சி, "பரோடாவில்’ டிசம்பர் 16 இல் நடைபெற்றது. தம்பி! குஜராத்திகள் எத்துணை கொந்தளிப்பாக இருக்கிறார்கள் - மொழிப்பற்றும், அதனுடன் தொடர்பாக உள்ள உரிமை குறித்த ஆர்வமும், அந்த மக்களுக்கு “எத்தனை தேசியம்’ பேசப்பட்டாலும்,”பாரதீயம்’ உபதேசிக்கப்பட்டாலும், குலைவதாகவோ, குறைவதாகவோ காணோம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. குஜராத்திகள், "காங்கிரஸ் வளர’ கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தவர்கள். காந்தி மகாத்மாவை கோயில் கட்டிக் கும்பிடும் போக்கினர். "மகா குஜராத்’ என்ற தேசிய எழுச்சியின் முன்பு, இதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகிறது. இத்தனைக்கும், தம்பி, குஜராத்துக்கு, தமிழகத்துக்கு உள்ளதுபோன்ற உலகப் புகழ் பெற்ற வரலாறு கிடையாது. எனினும் அங்கே அந்த அளவுக்கு எழுச்சி இருக்கிறது! இங்கு, "தமிழ்நாடு’ என்ற பெயர் இல்லாவிட்டால் என்ன! குத்துகிறதா, குடைகிறதா’ - என்று கேட்கும் காமராஜர் பவனி வருகிறார். தம்பி! இந்தக் கருத்துமட்டுமல்ல நான் உன்னைக் காணச் சொல்வது, நாட்டுக்கு எடுத்துக் கூறச் சொல்வது. அங்கெல்லாம், மொழிக்கிளர்ச்சி எவ்விதமான கோர உருவம் எடுத்திருக்கிறது, எவ்வளவு அமைதியுடன், அறநெறி நின்று இங்கு பணியாற்றுகிறோம் - இதற்கு இங்குள்ள காங்கிரஸ் அரசு. எவ்வளவு சுறுசுறுப்புடன் அடக்குமுறையை அவிழ்த்துவிடுகிறது. இதை எண்ணினேன் - பொது மக்களுக்கு அறிவிக்க, ஒரு துண்டு வெளியீடு அச்சிட்டு வழங்கினால் என்ன என்று தோன்றிற்று - அது இதோ - இதை அச்சேற்றி, இல்லந் தோறும் வழங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத்தான், தம்பி, நீ இருக்கிறாயே, எனக்கென்ன கவலை. காட்டாட்சி மராட்டியம் குஜராத் வங்கம் எங்கும் கலகம் மந்திரிகளைத் தாக்கினர் நேருவை மடக்கினர் போலீசை அடித்தனர் கார்களைக் கொளுத்தினர். கதர்க் குல்லாயைக் கொளுத்தினர் நேரு படத்தை உடைத்தனர்! எல்லாம் மொழி உரிமைக்கு. அன்புடையோரே! அறிவாளரே! இங்கு நாங்கள் உரிமை கேட்டோம், அமைதியாக பலாத்காரமின்றி. இங்கு காங்கிரஸ் தடியால் தாக்கி துப்பாக்கியால் சுட்டு அடக்குமுறை தர்பார் நடத்திற்று. ஏன் என்று கேட்கமாட்டீர்களா? நீதிக்காக வாதாடமாட்டீர்களா? கொடுமைக்கு ஆளானோர் உங்கள் இனத்தவர்! உங்கள் நாட்டவர்! உங்கள் தொண்டர்! அவர்களிடம் ஆதரவுகாட்டுவது அடக்குமுறையைக் கண்டிப்பதாகும். காங்கிரசை ஆதரிப்பது காட்டாட்சிக்கு வழிகாட்டும். பட்டீல் கட்சியில் பணம் படைத்தோர் ஏராளம். பல இலட்சம் மிக இலேசாகத் திரட்ட வழி இருக்கிறது. படம் எடுக்கலாம், கட்டணமின்றிக் காட்டலாம்! உன்னால் முடியுமா, என்னால் முடியுமா? நாம், நம்மாலான முறையில், நாட்டுக்கு உண்மையை எடுத்துச் சொல்வோம். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை என்பார்களே, அதுபோல, இந்தத் துண்டு வெளியீடு என்று எண்ணிக்கொள்ளேன். தம்பி! இதுபோன்ற துண்டு வெளியீடுகளை, வீடுதோறும் வழங்கு - தூய உள்ளம் படைத்தோர்; உண்மைக்காக வாதாட முன்வந்தே தீருவார்கள். காட்டாட்சியால் நாட்டுக்குக் கேடு என்ற பேருண்மையை உணர்ந்து, அதற்கு ஏற்ப, பொதுத் தேர்தலின்போது, தமது கடமையைச் செய்வார்கள். அன்பன், 23-12-56 ஓட்டுச்சாவடி போகுமுன்பு… பம்பாயில் சவானுக்கு எதிர்ப்பு - தமிழர் தாழ்ந்த நிலை - வடக்கின் வளர்ச்சி தம்பி! புதுடில்லியிலிருந்து கிளம்பி வந்த மொரார்ஜி தேசாய், பூவிருந்தவல்லியிலே, காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைத்தார் - ஞாயிறன்று! இந்தத் திருநாளுக்குத் துணைநின்றனர். ஓ.வி. அழகேசன், போன்றோர். உள்ளூர் அமைச்சர்கள் உற்சவத்திலே கலந்து கொண்டனர். ஒரே ஒரு குறைதான்; மக்களுக்கு உற்சாகம் எழவில்லை!! முதல் காரணம், முதன் முதலாக இவர்கள் அழைத்து வந்தது, யாரை, கவனித்தாயா? மலடியைக்கொண்டு, பிள்ளைப் பேறின் சுகவழி பற்றிய போதனை பெறுவது போல, மங்கலநாண் இழந்தவளைக்கொண்டு, கட்டுக் கழுத்தினளுக்கு மங்கல ஸ்நானம் செய்விப்பது என்பார்களே, அதுபோல பம்பாய் மாநிலத்தில், மக்களின் சீற்றத்தால் தாக்கப்பட்டு மேற்கொண்டு அங்கே முதலமைச்சராக இருக்கமுடியாத நிலைபெற்று, நேரு பண்டிதருடைய தயவினாலே, டில்லியில் வேலைதேடிக் கொண்டு ஓடிப்போன மொரார்ஜி தேசாயை, அழைத்து வந்தார்கள்! பாபம், அவர், ஆமதாபாத்தில் பட்ட அல்லலையும், பம்பாயில் பதறியதையும், மக்கள் பத்திரிகை வாயிலாகப் பார்த்திருக்கிறார்கள். பேச வந்தார் இந்தப் பெரியவர்; ஆமதாபாத்திலே, ஆத்திரமிகுந்த மக்கள், இவர் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடியும், மக்களுக்குத் துரோகம் செய்துவிட்ட மகானுபாவரே! போதும் உமது பேச்சு! நிறுத்திக்கொள்ளும்! என்று பெருங் கூச்சலிட்டு, இவரைப் பேச விடாமலே தடுத்துவிட்டனர். பெரிய கலகம் நேரிட்டது. பல நாள் பட்டினி கிடந்து, பரிதாபத்தை ஊட்டிப்பார்த்தார்; பிறகாவது பேசவிடுவார்கள் என்று அப்போதும் மக்கள், நீ என்ன மாயாஜாலம், மகேந்திர ஜாலம் செய்தாலும், அதற்கெல்லாம் மயங்கப் போவதில்லை என்று கண்டிப்பாகக் கூறிவிட்டனர். பேச, மேடை ஏறினார், கலகம்தான் மீண்டும்! எந்த மாகாணத்தில் இவர் தேசிய விடுதலைப் போராட்டக் காலத்திலே, வீரர் என்றும் தீரர் என்றும் தியாகி என்றும் கர்மயோகி என்றும் புகழ்ந்துரைக்கப் பட்டாரோ, அங்கு இவருடைய பேச்சு, செல்லாக்காசு ஆகிவிட்டது - இவர் வருகிறார் பூவிருந்தவல்லிக்கு!! பாரததேசம் என்பது ஒன்று - இதிலே வடக்கு என்றும், தெற்கு என்றும், மத்திய சர்க்கார் என்றும், மாநில சர்க்கார் என்றும், இந்த மொழி என்றும், அந்த மொழி என்றும் பேசிப் பிளவு உண்டாக்கக்கூடாது என்று மொரார்ஜி “தேசிய மாமந்திரம்’ உபதேசித்தார்; அவருடைய மாகாணத்திலே, அவரை இந்த உபதேசத்தைப் பேசக்கூட விடவில்லை; விரட்டி அடித்தனர், வீறுகொண்ட மக்கள்! அங்கு அல்லற்பட்டவரை அழைத்து வந்து இங்கு விழா நடத்திக் காட்டினார் அமைச்சர் பக்தவத்சலம்!! பரிதாபம்! ஆரம்பமே அழுது வடிவதாக அமைந்தது பற்றி அவருடைய”ஆப்த’ நண்பர்களேகூட ஆயாசப்பட்டுக் கொண்டார்களாம்!! முதலமைச்சருடன் சேர்ந்து மொத்தம் நான்கு மந்திரிகள், தம்பி! டில்லி மந்திரி ஒருவர் - அவர்தான் மொரார்ஜி - குட்டி மந்திரி ஒருவர் - அரியலூர் அழகேசன் அவர்கள்! எல்லோருமே அன்று வெளுத்து வாங்கிவிட்டார்களாம் போயேன், நமது கழகத்தை, “கூட்டம் கூடும் அவர்களுக்கு - கும்பகோணம் மாமாங்கத் துக்குக் கூடத்தான் கூடுகிறது’’ - என்றாராம், ஒரு மேதை!! இவர்களுக்குக் கூட்டம் வராததாலே, இந்தப் பேச்சுப் பேசுகிறார்கள், வெட்கமின்றி; பிறருக்குப் பெரிய கூட்டம் கூடினால்,”மாமாங்கக் கூட்டம்’ என்று கேலி பேசுகிறார்களே, இவர்களுடைய நேரு வருகிறபோது, கூடும் கூட்டமும், மாமாங்கந்தானா? அப்போது பார், வாயை! ஜன சமுத்திரம்! மக்கள் வெள்ளம்! இலட்சோப இலட்சம்! என்றெல்லாம் அப்போது பெருமை அடித்துக் கொள்கிறார்களே!! - என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் பேசிக் கொண்டதாகக் கேள்விப்பட்டேன். நொந்த உள்ளம் கொண்டோர் தம்பி! பேசுவது, வேகாததைத் தின்றுவிட்டு வேதனைப்படுபவர் எடுத்திடும் வாந்தி’ போலத்தான் - நாற்றமும் குழப்பமும் அவ்வளவு இருக்கும். எனவேதான், "கூட்டம் கூடுகிறதாம் கூட்டம்! என்ன கூட்டம்! மகாமகத்துக்குக்கூடத்தான் கூடுகிறது’’ என்று பேசினர். போகட்டும், எப்படியோ ஒன்று தம்மை நிந்திப்பதால், நொந்து கிடக்கும் அவர்கள் உள்ளத்துக்குச் சிறிதளவு சாந்தி ஏற்படட்டுமே, நமக்கென்ன நஷ்டம்! மொரார்ஜி, மாகாணப் பிரிவினை உணர்ச்சி - வடக்கு தெற்கு என்ற பேதம் கூடாது, என்று இங்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் - அதே போது பம்பாய் மாகாண முதலமைச்சர் சவான், திணறித் திண்டாடிப் போகிறார். மொரார்ஜி இங்கு தந்த உபதேசம் போலவே சவான் அங்கு உபதேசம் செய்யப் புறப்பட்டார். மராட்டிய மக்கள் இதற்கு இடந்தரவில்லை! சம்யுத்த மராட்டியம் வேண்டும்! சவான், திரும்பிப்போ! என்ற முழக்கம் இடியென்று கிளம்பிற்று! இது சரியா? இது முறையா? இது தேசியம் ஆகுமா? என்றெல்லாம் சவான், இறைஞ்சுகிறார் - மராட்டிய மக்களோ, எமது உரிமையை இழக்கமாட்டோம்! எமக்கு சம்யுத்த மராட்டியம் வேண்டும்! என்று முழக்கமிட்டிருக்கிறார்கள். கருப்புக் கொடிகளைக் காட்டி, ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். முதலமைச்சர் கலந்துகொள்ளும் கூட்டமாதலால் போலீஸ் படை வரிசையும் ஏராளம், ஆட்சிக்குத் துதிபாடகர் களாக உள்ளோரும் நிரம்ப! எனினும், உரிமை முழக்கத்தின் முன்பு எந்தச் சக்தியும் நிமிர்ந்து நின்றிட முடியவில்லை! சவான் பாடு, திண்டாட்டமாகிவிட்டது. போற்றித் திரு அகவல் போதுமானதாகிவிடவில்லை! இந்த “பம்பாய்’ மாநிலத்திலிருந்து வந்த மொரார்ஜி தான் பூவிருந்தவல்லியிலே”ஒற்றுமை’ - "தேசியம்’ என்பன பற்றித் திருப்பல்லாண்டு பாடி இருக்கிறார், - ஆங்கிலத்தில் அதனை அவசரத் தமிழாக்கித் தந்திருக்கிறார், அமைச்சர் பக்தவத்சலனார். வடக்கே உள்ள மக்கள் ஏதோ, மாகாணப்பற்று, மொழிப் பற்று, ஏதுமற்று "பாரதம்’ என்ற பாசத்துக்கே கட்டுப்பட்டுப் போய்விட்டது போலவும், இங்கே மட்டுமே அதுபோன்ற ஓர் உணர்ச்சி ஏற்படுத்தப்பட்டு இருப்பது போலவும், அதுவும் நாம் நடத்துகிற பிரசாரம், விஷமத்தனத்தையும் விபரீதத்தையும் இங்கு மூட்டிவிட்டது போலவும், அந்த நஞ்சு போக மொரார்ஜி போன்றார் வந்து பேசுவது போலவும் ஒரு நாடகம் ஆடப்படுகிறது; தம்பி, உண்மை நிலைமையோவேறு, அதனை நீயும் அறிவாய், நம் நாட்டிலுள்ள காங்கிரசாரும் அறிவர். எந்த மொழிக்காரரும், மாநிலக்காரரும், காங்கிரஸ் என்பதற்காகக் கட்டுப்பட்டு, தமது உரிமைகளை இழந்துவிடத் தயாரில் இல்லை! “கண் கண்ட கடவுள்’ என்றும்”பார்புகழ் தலைவர்’ என்றும் பிற நேரங்களிலே கொண்டாடும் நேரு பண்டிதராக இருப்பினும், மொழி உரிமை, மாநில உரிமை என்ற பிரச்சினைகள் எழும்போது, பண்டிதரையே பதறி ஓடச் செய்கிறார்கள். காந்தி படமானாலும் நேரு உருவச் சிலையானாலும், கதர்ச் சட்டையானாலும் குல்லாயானாலும், கொளுத்துகிறார்கள், உடைத்துத் தூளாக்குகிறார்கள். துப்பாக்கிக் குண்டுகளுக்கு அஞ்ச மறுக்கிறார்கள்! இரத்தத்தைச் சந்தனக் குழம்பென எண்ணிக் கொள்ளுகிறார்கள். அமைச்சர்கள் அஞ்சி ஓடுகிறார்கள்! ஆமதாபாத்தில் அகில உலகப் புகழ் பெற்ற நேரு பண்டிதர், 20 நிமிடம் முயன்று பார்த்தார், கெஞ்சிப் பேசினார், கோபம் மிஞ்சிடப் பேசினார், கதை பேசிப் பார்த்தார், எதுவும் பலன் தரவில்லை! எங்கள் உரிமை எங்கள் குஜராத்! என்றே எக்காளமிட்டனர் குஜராத்திகள்! வங்கமும் - பீகாரும் இணையும் என்று கூறினார், வங்க முதலமைச்சர் டாக்டர் ராய்! இஃதன்றோ தேசிய - இது வன்றோ பாரதப் பண்பாடு என்று அங்கிருந்து மகிழ்ந்து வாழ்த்தினார் நேரு பண்டிதர். இங்கிருந்தபடியே ஆசி கூறினார் ஆச்சாரியார்! ஆனால், வங்க மக்கள் செய்தது என்ன? கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பினர் - டாக்டர் ராய்மீது! அவர் “தேசிய ஒற்றுமை’ பேசித்தான் பார்த்தார்!”நான் தெரியவில்லையா? உங்கள் தலைவன்! வங்கத்துக்கு வாழ்வளிப்பவன்! உங்கள் சுகமே என் சுகம் என்று எண்ணிப் பணியாற்றும் ஊழியன்!’’ என்று ஏதேதோ பேசினார்! அவருடைய பேச்சுக்குப் பக்க பலமாகப் போலீசும் பட்டாளமும் நின்றது! எனினும் சிங்கக் குணம் படைத்த வங்க மக்கள், “இணைப்பு’ எமக்கு வேண்டாம் என்று தீர்ப்பளித்தனர் - டாக்டர் ராயைக் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றினர்-”தள்ளாத வயதிலே, இந்த எதிர்ப்புத் தருகிறீர்களே, தகுமா?’’ என்றார். "எதிர்ப்பு உம்மீது அல்ல; எம்மைத் துச்சமாக மதித்த உமது போக்கினை எதிர்க்கிறோம், என்றனர் வங்க மக்கள்! ஆர்ப்பரிப்பு அமளியாற்று! அடக்கு முறை அமளியைக் காட்டுத் தீயாக்கிற்று! வங்கமும் பீகாரும் இணைந்து ஒரு பேரரசாகும் என்று பேசிவிட்டு வந்த டாக்டரே, பிறகு, இணைப்பு இல்லை! வங்கம் வங்கமாகவே இருக்கும்! என்று அறிவித்தார்! மக்கள் வெற்றி பெற்றனர். இதுபோல, வடக்கே, ஒவ்வொரு மாநிலத்தாரும் தத்தமது உரிமையைப் பாதுகாத்துக் கொண்ட பிறகு, தேசியக் காலட்சேபம் செய்கிறார்கள்! விருந்தினை முடித்துக்கொண்டு, பட்டுப்பட்டாடை அணிந்துகொண்டு, பீடத்தில் அமர்ந்து, விரலில் உள்ள வைர மோதிரத்தைப் பளபளப்பாக்கிக் கொண்ட பிறகு, வாழ்வாவது மாயம் செல்வம் ஒரு பிசாசு என்று வேதாந்தம் பேசும், பாகவதரைப் பார்க்கிறோமல்லவா, அதுபோல் வடக்கே உள்ள தலைவர்கள் இங்கு வந்து நமக்குப் பேசுகிறார்கள் - வேறென்ன! தம்பி! வடக்கே உள்ள மக்கள், தத்தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதிலே, தவறுவதில்லை. அதற்கான உரிமைக் கிளர்ச்சிகளிலே மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது மட்டுமல்ல, அந்தக் கிளர்ச்சிகளில், வெறுக்கத்தக்க பலாத்காரத்தை, கண்டிக்கத்தக்க காலித்தனத்தை, புகுத்துகிறார்கள்! இங்கு, நாம் நமது மாநில உரிமைக்காக, மொழி உரிமைக்காக நடத்துவது இன்னும் கிளர்ச்சி உருவம்கூட எடுக்க வில்லை! நியாயத்தை எடுத்துரைக்கிறோம்; காரணங்களைக் காட்டுகிறோம்; நீதி கோருகிறோம்; இதற்கே, எவ்வளவு இடி, இழிசொல்! எத்துணை அடக்கு முறை; தாக்குதல்! நேரு பண்டிதர் சிலையை உடைக்கும் அளவுக்கு வடக்கே காலித்தனம் நடக்கிறது, அதற்குத் துப்பாக்கி தூக்குகிறது, அங்கு உள்ள துரைத்தனம். இங்கு நாம், பொது மக்களிடம் முறையிட்டுக் கொள்கிறோம், அதற்கே, துப்பாக்கி துரத்துகிறது! இந்த இலட்சணத்திலே, மொரார்ஜிபாயை அழைத்துக் கொண்டு வருகிறார்கள் இங்குள்ள அமைச்சர்கள், நமக்கு "தேசிய’ பாடம் போதிக்க! வெட்கம்! வெட்கம்! என்று கூறுவதன்றி, வேறென்ன கூறுவது? நான் பன்னிப் பன்னிக் கூறி வருகிறேன், “இல்லாத ஒன்றை, இயற்கையாக எழாத ஒன்றினை, எத்தனை பெரிய தலைவர் களானாலும், அறிவாளர்களாயினும், ஆற்றலரசர்களாயினும் கூடி முயற்சித்தாலும், புகுத்தி நிலை நிறுத்திட முடியாது’ என்பதனை. காங்கிரஸ் நண்பர்கள் ஏதோ”தேசிய ஒற்றுமை’ என்ற உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது போலவும், அதனை நாம் பாழாக்குவது போலவும் எண்ணிக்கொண்டு வேதனைப் படுகிறார்கள், வெகுண்டெழுகிறார்களேயன்றி, இயற்கையாக எழ முடியாத ஓர் உணர்ச்சியை இட்டுக்கட்ட முயற்சிப்பது தவறு என்பதை அறிந்து திருந்த அஞ்சுகிறார்கள். தம்பி! வெண்ணெய்ச் சட்டியை வெளியே வைத்திருந்தால் பூனை களவாடித்தின்று விடும் என்று பயந்துகொண்டு, வீட்டுக்கரசி, அந்த வெண்ணெய்ச் சட்டியை எடுத்து அடுப்புக்குள்ளே செருகி வைத்தால் என்ன ஆகும்!! "தேசியம்’ பேசுவோர், நம்மீது குறைபட்டுக் கொள்கிறார்களேயன்றி, இந்தப் பேருண்மையை உணர மறுக்கிறார்கள். எத்தனை எத்தனையோ நெருக்கடிகள், தாக்குதல்கள், இடிகள், இழி நிலைகள் ஆகியவற்றினுக்குப் பிறகும், தமிழன் என்ற ஓர் உணர்ச்சி இன்றும் மகிழத்தக்க அளவுக்கும், நம்பிக்கை தரத்தக்க வகையிலும், மின்னிக்கொண்டு இருக்கிறது என்றால், தம்பி! இந்த உணர்ச்சியைப் பெற, எத்தனை எத்தனை நூற்றாண்டுகள், எவ்வளவு பெரும் பெரும் அறிவாளர்கள், என்னென்ன வகையினாலே பணியாற்றினர், தெரியுமா அவ்வளவையும் அரை நூற்றாண்டில் அழித்துவிட முடியும் என்று எண்ணிக் கொண்டனரே, அதிலேதான் தவறு இருக்கிறதே தவிர, நம்மீது என்ன குற்றம்? சிலம்பு ஒலிக்கவில்லை, சிந்தாமணி மின்னிடவில்லை, அகம் இல்லை, புறம் இல்லை, தொல்காப்பியம் ஏதுமில்லை. எனினும், குஜராத்தி தன் மொழிக்கு ஏற்றமும், உரிய இடமும், தனித்தன்மையும், இவைதமைக் கெடுத்திடாத தனிக் கொற்றமும் தேவை என்று கேட்கலாமாம், கேட்பதுடன் விடாது கேடுபல நேரிடுமே என்றுகூட எண்ணிடாமல், அமைச்சர்களை விரட்டலாமாம், அமளி பலவற்றினை மூட்டிவிடலாமாம், இங்கு நாம் மட்டும், அருந்தமிழ் மரபு காத்திட “உம்’ மென்றாலும்”இம்’மென்றாலும் தேசியம் கெடுமாம், பாரதீயம் பாழ்படுமாம், நாடு நலியுமாம்! என்ன அறிவீனம்!! என்று சீறிக் கேட்பதா? என்னே உமது ஓரவஞ்சனை? என்று துக்கத்துடன் கேட்பதா? நம்மை எவ்வளவு, ஏது மறியாதார், இனப்பற்று இல்லாதார், மரபு காத்திடும் வழி அறியாதார், என்று எண்ணிக் கொண்டிருந்தால், மொரார்ஜிகளைக் கொண்டுவந்து இங்கு பேசச் சொல்வார்கள் என்பதை எண்ணிப்பார், தம்பி, எண்ணச் சொல்லிப் பார், காங்கிரஸ் நண்பர்களை. பூவிருந்தவல்லியிலே மொரார்ஜி வந்து பேசிவிட்டுச் சென்றார்; என் மாநிலத்திலேகூட இந்த அளவுக்கு எனக்கு மதிப்பளிப்பார் இல்லை, இங்கு என் புகழ்க்கொடி சிறப்புறப் பறக்கிறது என்றுகூட மகிழ்ந்திருக்கக்கூடும்; ஆனால் இங்கு அவர் - “தமிழ், என் மொழி! தாய் மொழி! தமிழ் நாடு! தனி நாடு என்றெல்லாம் பேசுவது தீது, தவறு, தேசியமாகாது’’ என்றெல்லாம் பேசினாரே, அதுபோல, பக்தவத்சலனாரை குஜராத்திலே சென்று பேசச் சொல்லு, பார்ப்போம்; அழகேசரை ஆமதாபாத் போகச் சொல்லு; காமராஜரை பூனா போய்,”மராட்டிய மக்களே! ஏன் உங்கள் மதி இப்படிக் கெட்டுவிட்டது!’’ என்று கேட்கச் சொல்லு, பட்டாளம் அணிவகுத்து நின்றாலும், இவர்கள் தலைதப்புவது கஷ்டமாகி விடும்! ஆமாம், தம்பி, அந்த அளவுக்கு அங்கெல்லாம் உரிமை உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிகிறது! இங்குதான் அபிசீனிய மன்னர் வரலாம், அகவல் எதுக்கு, ஆங்கிலப் பாடல் போதாதோ என்று பேசலாம், தலாய்லாமா வரலாம், திருவாசகம் எதுக்கு எமது திருப்பாதம் வீழ்ந்து வணங்கினால் போதாதோ என்று வினவலாம், தாழ்ந்து கிடக்கும் இந்தத் தமிழகத்திலேதான், தருக்கரின் பிடியிலே சிக்கிவிட்ட தமிழகத்திலேதான், உலகின் எந்தக் கோடியிலிருந்தும் எந்த வகையான தலைவரும் வரலாம், தமிழரின் மரபினை இகழலாம், தமிழரைக் கண்டித் துரைக்கலாம்; அதற்கு அவர் தமக்கு மாலையிட்டு மகிழ்விக்க, போற்றிப் புகழ்ந்திட, இங்கு பக்தவத்சலனார் படை வரிசை இருக்கிறது! வேறெங்கும் இந்நிலை வரவிடமாட்டார்கள்! ஏதுமற்ற நிலையைக்கூடப் பொறுத்துக் கொள்வர், எவர் வேண்டுமாயினும் எதைவேண்டுமானாலும் கூறிடும் இழிநிலைக்கு மட்டும் இடமளிக்கமாட்டார்கள்! பிச்சை எடுப்போன்கூடத் தம்பி, இல்லை போ! என்றால் ஏக்கத்துடன் சென்றிடுவான். மச்சு வீடுடையோனாயினும் அவனைப் பார்த்து, “ஏ! பிச்சைக்காரப் பயலே!’’ என்று பேசினால், எச்சிற் பண்டத்தைப் போட்டு வைத்திருக்கும் குவளையால் அடித்துவிட்டுக் கூறுவான்,”மச்சு வீடு என்றுமே உனக்கு நிலை என்ற எண்ணமோ, நானும் எனக்கென்று ஓர் “குச்சி’ இருந்து அதிலே வாழ்ந்தவன்தான்! ஏன் உனக்கு இந்த வாய்த்துடுக்கு?’’ என்று கோபத்துடன் கேட்பான். போலீஸ் சுற்றியபடி இருப்பதால், இன்று மச்சு வீட்டுக்காரனுக்கு இது நேரிடாதிருக்கிறது!! தம்பி! அதனினும் இழிந்த நிலையிலன்றோ நாம் வைக்கப்பட்டிருக்கிறோம். சர்கசில் காண்கிறோமே, காட்டரசனாம் சிங்கத்தைக் கூட்டிலே நிற்கச் செய்து, அதன் முதுகின்மீது ஆட்டுக் குட்டியைச்”சவாரி’ செய்ய வைக்கிறானல்லவா, கரத்திலே துப்பாக்கி வைத்திருக்கும் கரடி’ வித்தைக்காரன்! அதுபோலத்தான் தமிழக நிலைமை இருந்திடக் காண்கிறோம்!! அது போன்ற நிலைமை என்றால்கூடப் போதாது; இங்க "ஆடு’ வீரம் பேசிட, அரிமா அடக்க ஒடுக்கமாக அதனைக் கேட்டுத் தீரவேண்டி இருக்கிறது. மொரார்ஜிகள் பேசும்போது, மரபு மறவாத தமிழர் ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற எண்ணம்தானே ஏற்பட்டிருக்க முடியும்!! தேர்தலுக்கு எப்படி இது பயன்படப்போகிறது!! “இந்தியா’ ஒன்று, என்று நமக்காகப் பேசிடும், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கேகூட, குட்டும், குத்தும் வதருமள வுக்கு ஏற்படுகிறபோது, என்ன பேசுகிறார்கள் என்பதை நாடு மறந்தா போய்விட்டது! எத்தனை எத்தனை முறை குமுறி இருக்கிறார்கள். இவர்கள் தம் நாத்தழும்பேறப் பேசுகிறார்களே”தேசியம், அது அப்போதெல்லாம் ஏன் மறைந்து விடுகிறது? டில்லி பாராளுமன்றத்திலேயே டாக்டர் லங்காசுந்தரம் என்பார், "அரசியல் அதிகாரம் அனைத்தும் வடநாட்டிலேயே குவிக்கப்பட்டிருக்கிறது’’ என்று பேசுகிறார்; 1955 டிசம்பர் 14 இல்! பொருள் என்ன இதற்கு? இத்தனைக்கும் இந்த டாக்டர்கள், நம்மை எல்லாம், நாட்டைப் பிடித்தாட்டும் "நோய்’ என்று கூசாது பேசுபவர்கள்! அவர் போன்றாருக்கே பொறுக்கவில்லை, வடக்கே எல்லா அதிகாரங்களும் குவிந்து வைக்கப்பட்டிருக்கும் கொடுமை. சென்னை சர்க்கார் அமைத்த ஆலோசனைக் குழுவே’ 1955 மே 30 இல், "பெரும் தொழில்களைப் பொறுத்த மட்டில் சென்னை மாநிலம் வருந்தத்தக்க அளவு, புறக்கணிக்கப் பட்டிருக்கிறது’’ என்று அறிவித்தது. ஏன், இந்த அழுகுரல்? புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. என்ற உண்மையையும் கூறுகிறது அந்தக் குழு; அதனால் நாடு வருந்துகிறது, வருந்தவேண்டும், என்ற எண்ணத்தையும் விளக்கிட, வருந்தத்தக்க என்றும், எழுதுகிறது! "தேசியம்’ எங்கே ஓடிவிட்டது, இது போலக் கேட்கும்போது? இங்கே பெரிய தொழில்கள் இல்லையே என்ற கவலை குடைவானேன்? வருத்தம் பிறப்பானேன்? எங்கே இருந்தால் என்ன என்ற வேதாந்தம் ஏன் பிறக்கவில்லை! ஏன், புறக்கணிக்கப்பட்டுவிட்டதே என்ற துக்கம் துளைக்கிறது! அந்த உணர்ச்சி உங்கள் உள்ளத்திலே சுரக்கும் போதெல்லாம், அருமைக் காங்கிரஸ் அன்பர்களே! நீவிர் அனைவரும், தி. மு. க. ஆகிறீர்கள்! பிறகு, பதவி வேறு பக்கம் அழைக்கிறது, மோசம் போகிறீர்கள், மொரார்ஜியை அழைக்கிறீர்கள். சென்னை மாநிலம் வருந்தத்தக்க அளவு, புறக்கணிக்கப் பட்டிருக்கிறது என்பதையும் 1955 இல் கூறிவிட்டு, இப்போது தேர்தலில் ஓட்டு பறிப்பதற்காக, நீங்களே, தாரை தப்பட்டை யுடன் கிளம்பி, தமிழாவது தெலுங்காவது வடக்காவது தெற்காவது எல்லாம் அபத்தம், தமிழ் நாடு புறக்கணிக்கப் பட்டதாகக் கூறுவது பொய்யுரை, என்று பேசுகிறீர்களே, எதையும் ஆய்ந்தறியும் திறனும், முன்பின் பேச்சுகளை ஒப்பிட்டுப் பார்த்து உண்மை காணும் போக்கும் கொண்ட மக்கள், உமது புரட்டினைக் கண்டுகொள்ள மாட்டார்களா? என்று கேட்டால், காங்கிரசின் பெருந்தலைவர்கள் கூறும் பதில், "அவ்வளவு அறிவுத் தெளிவு உள்ளவர்கள், எத்தனைபேர் இருக்கிறார்கள்’’ என்பதுதான். தம்பி! நம் நாட்டுப் பாமர மக்களைக் காங்கிரசார், எப்படி வேண்டுமானாலும் ஆட்டிவைக்கலாம் எதைச் சொல்லியும் நம்பவைக்கலாம், என்று மனப்பால் குடிக்கிறார்கள், மக்கள் இதோ, நான் புட்டுப் புட்டுக் காட்டுவதுபோலப் பிரச்சினை களை அலசி ஆராயாமலிருக்கலாம், ஆனால் அவர்களுக்கு உண்மையை ஒரு நொடியில் உணர்ந்துகொள்ளும் திறன் இருக்கிறது; காங்கிரஸ் தலைவர்களின் புரட்டினை, மக்கள் உணர்ந்து வருகிறார்கள்; நமது பிரசாரம் இதனைப் பலப்படுத்துகிறது!! மொரார்ஜிகள் வருவதாலே, இந்த நம் பணி குந்தகப்பட்டு விடாது!! வடநாட்டிலிருந்து இங்கு மொரார்ஜிகள், அடிக்கடி வந்தபடி இருப்பதையும், அவர்கள் வருகிற போதெல்லாம், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், வணங்கி வரவேற்று, வரம் கேட்டுப் பெறுவதையும் காணும் தமிழக மக்கள், அந்த நாட்களில் இங்குவந்த வெலிங்டன், கோஷன், எர்ஸ்கின் போன்ற துரைமார்களிடம் எப்படி இளித்துப்பேசி இனிப்புப் பண்டம் பெற்றார்களோ சீமான்கள், சிற்றரசர்கள், மிட்டா மிராசுகள், அதே செயலைத்தான், இப்போது பக்தவத்சலங்கள், மொரார்ஜிகள் வருகிறபோது செய்கிறார்கள், முறை மாறவில்லை, ஆள்மட்டும்தான் மாறியிருக்கிறது என்பதையா தெரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள். "ஓட்டு’ வாங்குவதற்காக, தம்பி, காங்கிரஸ் பிரசாரகர்கள், ஐந்தாண்டுத் திட்டச் சாதனைகளைப் பேசுகிறார்களல்லவா! எல்லாப் பேச்சாளர்களுமல்ல, மிகச் சிலரே, அந்தச் சிரமத்தை எடுத்துக்கொள்வர் - பெரும்பாலானவர், நம்மை ஏசிவிட்டாலே போதும், என்று எண்ணிக்கொள்கிறார்கள் - உண்மையிலேயே சிலருக்கு, மிகக் காரமாக நம்மை ஏசுவதால் ஏற்படும் நாக்கெரிச்சலே வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் பேச இடமளிக்காது - நான் இந்தப் போக்குக்கு விதிவிலக்கு என்று குறிப்பிடத்தக்க இரண்டொருவரைக் கூறுகிறேன் - அவர்கள் ஐந்தாண்டுத் திட்டத்திலே பெற்ற அரிய வெற்றிகளைக் கூறி, ஓட்டு கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள். மக்கள், அதைக் கேட்கும்போது உள்ளபடி திகைக்கிறார்கள். பெருமைப்படத்தக்க, மகிழ்ச்சி கொள்ளத்தக்க வெற்றிகள் கிடைத்துள்ளன; நாடு, நலிவு போக்கிக் கொண்டது; எல்லோருக்கும் இன்பவாழ்வுக்கு வழி ஏற்பட்டுவிட்டது; என்றெல்லாம் பேசும்போது, மக்கள் தம்மைச் சூழ இருக்கிற வறுமையைப் பார்க்கிறார்கள்; தமது சொந்த வாழ்விலே கப்பிக்கொண்டிருக்கும் சோகத்தைப் பார்க்கிறார்கள்; என்ன அதிசயம், இது! ஐந்தாண்டுத் திட்டத்தின் அரிய வெற்றியாலே பாலும் தேனும் ஓடுவதாகச் சொல்கிறார், இந்தப் பாழும் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லையே; நாம் பார்க்கும்போது, பழங்கலமும் அதிலே உள்ள பழஞ் சோறும், அதிலே நெளியும் பூச்சிப் புழுவும் தெரிகிறது! இவர், ஏதோ, இங்கு வளம் கொஞ்சுவதாகக் கூறுகிறாரே! எங்கே அந்த வளம்? யாருக்குப் பயன்படுகிறது அந்த வளம்! என்றுதான், எண்ணித் திகைக்கிறார்கள். ஐந்தாண்டுத் திட்டத்திலே அரிய வெற்றிகள் ஏற்படவே இல்லையா? என்று கேட்டால், ஏற்பட்டது! எப்படி ஏற்படாமலிருக்கும், இரண்டாயிரம் கோடி ரூபாயைச் செலவிட்டிருக்கும்போது! ஆனால், நமது கேள்வி, நாட்டு மக்களின் கேள்வி. அதனால் ஏற்பட்ட பலன், யாரை வாழ வைத்திருக்கிறது என்பதுதான்! இதற்கு மொரார்ஜிகள் தரக்கூடிய பதில் என்ன? இதோ என்னிடம் உள்ள பட்டியல்! நீயும் படித்துப் பார். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள்: 1. நந்திகொண்டா 2. கோசி 3. காக்ராபர் 4. ஹரிகே 5. துங்கபத்ரா 6. (டி. வி. சி.) தாமோதர் 7. கோய்னா 8. ஹிராகூட் 9. பக்ரா - நங்கல் 10. ரீகண்டு 11. மயூராட்சி 12. சாம்பால் 13. பத்ரா 14. கட்டபிரபா 15. தூத்வா 16. கீழ் பவானி 17. மச்சகந்த் 18. சாரதா 19. ஜோக் 20. மாஹி 21. காந்தி சாகர். இவைகளெல்லாம் முதல் ஐந்தாண்டுத் திட்ட வெற்றிகள். இவைகளில், இங்கு பலன் தந்திருப்பது, எத்தனை என்று கேட்டுப் பார், அதற்காகச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்ற கணக்கு கேள், வடக்கே உள்ளவை எத்தனை? செலவிடப்பட்ட தொகை எத்தனை? என்று கணக்குக் காட்டச் சொல்லு பிறகு ஓட்டுச்சாவடிக்குப் போகட்டும் மக்கள்! “நீயும் நானும் ஒற்றுமையாக இருக்கலாம்! உன் கைக்கடியாரத்தை என்னிடம் கொடுத்துவை! உனக்குத் தேவைப் படும்போது, நான் மணி பார்த்துச் சொல்லுகிறேன்’’ - என்று பாரிஸ் பட்டினத்து எத்தன் ஒருவன் சொன்னதாக நான் படித்திருக்கிறேன். மொரார்ஜிகளும், அவர்களின் அடிதாங்கி, அரசியலில் இலாபம் தேடுவோரும், பேசும்”ஒற்றுமை’ இதுபோன்றதுதான், வேறில்லை! நாடு இதனை, மெள்ள மெள்ள அறிந்துகொண்டு வருகிறது; தேர்தலின்போது மேலும் தெளிவு ஏற்படப்போகிறது! நிச்சயமாக!! தொழில் வளர்ச்சித் திட்டங்களில் தென்னிந்தியா இந்தியப் பேரரசால் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. என்று, சென்ற ஆண்டு ஜூலையில் மைசூர் சட்டசபையில், மைசூர் தொழில் மந்திரி, சென்ன பாசப்பா பேசி இருக்கிறார். இவர் என்ன, ஓட்டுக்கேட்க வரும், தி. மு. கழகமா? அல்லவே!! நாடு, எண்ணிப்பார்திடவே செய்யாதா? எண்ணிப் பார்த்திடும்படி செய்யும் பணியினைத்தானே நாம், மேற் கொண்டிருக்கிறோம். அது எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதைப் பொறுத்துத்தான், தேர்தலில் நாம் வெற்றி பெறுவது இருக்கிறது. நாடெங்கும், வீடெங்கும், இந்தப் பேச்சு எழவேண்டும்; அதை ஆக்கித் தரும் பணிதான், தம்பி, உன்னிடம் நான் எதிர்பார்க்கிறேன். தாயும் மகனும் மகன் : எப்போதும் அழுதுகொண்டே இருக்கிறாயே ஏனம்மா? தாய் : மகனே! என்னடா செய்வது, உன் அப்பாவுக்கு இன்னமும் ஒரு வேலை கிடைக்கவில்லையே! அந்த வேதனைதான்! மகன் : அப்பா ஏனம்மா வேலைக்குப் போகாமலிருக்கிறார்? தாய் : வேலை கிடைக்கவில்லையடா மகனே! மகன் : போம்மா! அப்பா ஏமாற்றுகிறார்! வேலைதான் நிறைய கிடைக்கிறதாமே! தாய் : யாரடா அப்பா, சொன்னது? மகன் : நேற்று, கூட்டத்திலே ஒரு மந்திரி சொன்னார், அம்மா! ஐந்தாண்டுத் திட்டம் போட்டார்களாம் - நாடு சுபிட்சமாகிவிட்டதாம் - வேலை எல்லோருக்கும் கிடைக்கிறதாம். தாய் : காங்கிரஸ் கூட்டமாடா மகனே! மகன் : ஆமாம்மா! தாய் : அங்கு அப்படித்தான் மகனே! பொய்யை மளமள வென்று கொட்டுவார்கள்… சுபிட்சமாகிவிட்டதாமா, நாடு… நம் வீட்டைப் பார்த்தால் தெரியவில்லையா இலட்சணம்! வேலையா கிடைக்கிறது, வேலை! யாருக்கு? இந்தக் காங்கிரசுக்குப் பக்கமேளம் அடிக்கிறவர்களுக்கு வேலை கிடைக்கிறது! அதுவும் என்ன வேலை? இவர்களை இந்திரன், சந்திரன் என்று புகழ்கிற வேலை! வயிற்றெரிச்சலை ஏண்டா மகனே, கிளப்புகிறாய்… மகன் : ஏம்மா, அப்படியானா, பொய்யா பேசறாங்க… தாய் : எலக்ஷன் வருதடா, மகனே! அதனாலே, மக்களை ஏமாளியாக்கி ஓட்டுவாங்க அதுபோலப் பேசுகிறார்கள். மகன் : நான் ஒரு சின்னப் பொய் பேசினா, காதைப் பிடித்துக் கிள்ளி, கன்னத்திலே அறைகிறே…! தாய் : போடா, குறும்புக்காரா!… மகன் : காங்கிரஸ்காரர், நாடு சீர்பட்டுவிட்டது, எல்லோருக்கும் வேலை கிடைத்துவிட்டது என்று பொய்யை வாரி வாரி வீசறாங்க… அவங்களை, என்ன செய்தே…? தாய் : என்ன செய்தேனா… தேர்தல் வருது… மகனே! அப்போது தானே, அவங்களுக்குப் புத்தி புகட்ட வேணும்… பார், அப்போது… மகன் : ஆமாம்மா! பெரிய மனுஷருங்க பொய் பேசுகிறபோது, புத்தி சொல்லாமே விட்டுவிட்டா என்னைப்போல சின்னப் பசங்கக்கூடக் கெட்டுப் போயிடுவாங்கம்மா… தாய் : ஆமாண்டா, மகனே! இப்படிப் பொய்யைப்பேசி ஜனங்களை ஏமாத்துகிற காங்கிரசுக்கு மறுபடியும் ஓட்டுப்போட்டா, நாடேகெட்டுப்போகும். நான் மட்டுமில்லடா, நம்ம பக்கத்து வீட்டு பங்கஜம், எதிர் வீட்டுத் தாத்தா, கோடிவீட்டுக் குப்பி, நம்ம மாமன் வீடு, எல்லோருமே இதே முடிவுக்குத்தான் வந்திருக்கிறோம்… மகன் : நான்கூட அம்மா, யாராரைப் பார்க்கிறேனோ, அவங்களிடமெல்லாம், இதைத்தான் சொல்லப்போகிறேன். தம்பி! எண்ணற்ற இல்லங்களிலே, இதுபோன்ற உரையாடல் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. எது பற்றியும் கவலைகொள்ளாத இல்லங்கள், நம்மால் என்ன ஆகும் என்று எண்ணும் இல்லங்கள், இவைகளில் எல்லாம்கூட, இதுபோன்ற உரையாடல்கள் எழச் செய்ய வேண்டிய பொறுப்பு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஓட்டுச் சாவடி போகுமுன்பு, நாட்டு மக்கள், எல்லாப் பிரச்சினைகளையும் அறிந்திடத்தக்க முறையிலே, ஏசுவோருக்குப் பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கே இடமேற்படாத முறையில். இனிய எளிய, பிறரிடம் பகை காட்டாத தன்மையில், தம்பி, நீ அறிந்துள்ள உண்மைகளை, மக்களுக்கு எடுத்துக் கூறு, அதுபோதும்; ராஜாக்களும் கோடீஸ்வரர்களும் முகாமிட்டுள்ள காங்கிரஸ் நம்மை ஒன்றும் செய்துவிடாது! நாட்டு மக்கள், மீண்டும் ஓர்முறை, கேட்டினை மூடிவிடும் காங்கிரசைக் கட்டி அணைத்திட மாட்டார்கள்! அவர்கள், பட்டது போதும் என்ற நிலையில் உள்ளனர். ஓட்டுச்சாவடி போகுமுன்பு நாட்டு மக்களிடம் நிலைமையைக் கவனப்படுத்தினால், போதும்; நாம் மகிழத்தக்க பலன், நிச்சயம் கிடைக்கும். தொடர்ந்து பணியாற்று! வெற்றிக்கு வழிகாட்டு !! அன்பன், 30-12-1956 வீட்டு விளக்கு! காங்கிரஸ் ஆட்சியில் வரிச்சுமை - தி.மு.க. வுக்கு ஓட்டு தம்பி! தங்கம் விளையும் நம்நாட்டினிலே தரித்திரம் இருப்பதும் எதனாலே…? தட்டிக் கேட்டிடுந் தமிழ்வீரர் சட்ட சபைக்குள் இல்லாமையால்! தட்டிக் கேட்டிடுந் தமிழ்வீரர் சட்ட சபைக்குச் செல்லாததேன்…? வெட்டிப் பேச்சு வீணர்கள்தம் வெறும்பேச்சு வெற்றிபெற்றதனால்! இரும்பு கிடைக்கும் நாடிதனில் இல்லாமை வாட்டுவதும் எதனாலே…? தூங்கும் இரும்பை எழுப்பிவிடத் துரைத்தனம் நமக்கென்று இல்லாததால்… துரைத்தனம் நமதாக இல்லாததேன்…? வடநாட்டுக் கடிமை ஆனதாலே…! வடநாடு வாழ்வதும் எதனாலே…? தென்னாட்டைச் சுரண்டும் வலியாலே…! சுரண்டும் வல்லமை எதனாலே…? சர்க்கார் டில்லியில் இருப்பதாலே! டில்லியில் சர்க்கார் அமைவானேன்? தேசியம் பேசியோர் ஏய்த்ததனால்! தமிழர் உண்மையை அறியாததேன்? தினசரி ஏடுகளின் புரட்டாலே…! புரட்டொழியும் காலம் வாராததேன்…? அறிவுத்தெளிவைப் பாமரர் அடையாததால்…! இதையெல்லாம் இன்று கூறுவதேன்…? இனியேனும் ஏமாற்றம் தெளிவதற்கே! ஏமாற்றுக் காரரிடம் சிக்குவதேன்…? சுண்ணாம்பை வெண்ணெய் என்பதாலே தெளிவினைப் பெறுவது எப்போது? தேர்தல் பொறுப்பறியும் போது… பொறுப்பினை உணர்ந்தோர் செயல் யாது? புது ஆட்சி அமைத்திட வழிகாணல். ஆட்சியில் புதுமை கேட்போர் யார்? அருந்தொண் டாற்றிடும் தி. மு. க. காங்கிரஸ் ஆட்சி வேண்டாமோ? காட்டுத் தீயை வேண்டுவையோ…? வீட்டு விளக்குத் தி. மு. க. நாட்டுத் தொண்டன் அதுவேயாம்! வீட்டு விளக்கை ஏற்றிடுவீர்! நாட்டு நலனைப் பெற்றிடுவீர்! எனக்கு மட்டும், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி யின் குரல் இனிமை இருந்தால், வீடெல்லாம் கேட்கும்படி நாடெங்கும் சென்று இதுபோலப் பாடிக் காட்டுவேன்! பாடல் ஏதேனும் சுவைபடப் பாடிட வேண்டும் என்பதாலே அல்ல; நாடு கேட்டிட வேண்டிய "செய்திகள்’ இதுபோல, எங்கும் பரப்பப்பட வேண்டும் என்ற ஆர்வத்தினாலே. பேச்சாலும், பாட்டாலும், கூத்ததனாலும், ஓவியங்களின் துணைகொண்டும், தம்பி! நாம் நாட்டுமக்களுக்கு, நல்ல முறையிலே அரசியல் சூழ்நிலைகளை எடுத்து விளக்கி, அனைவரும் உண்மையை உணர்ந்திடச் செய்தால் மட்டுமே, நாம் எடுத்துக் கொண்டுள்ள காரியத்திலே வெற்றி கிட்டும்; அந்த வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது மக்களாட்சியிலே மாண்பு வளருவது! நோக்கம் தூய்மையானது என்பதனாலேதான், பணபலமற்ற நாம் இந்தக் கடுமையான "பலப் பரீட்சை‘க்கு நம்மை நாமே உட்படுத்திக்கொண்டோம். நானோர் கூட்டத்திலே கூறினேன், "தம்பி, பணம் இருக்கிறது ஏராளமாக, காங்கிரசாரிடம்; ஆனால் அந்தப் பணத்துக்குப் பலம் இல்லை’’ என்று. சொல்லழகு கருதிக் கூறினதல்ல, உள்ளத்திலே உண்மையாகப்பட்டது; சொன்னேன். நான் அங்ஙனம் பேசிக்கொண்டிருந்தது, சேறும் சகதியும் நிரம்பியதோர் திடல்! மழை வேறு பெய்துகொண்டிருக்கிறது! எனினும், ஆடவர் அனைவரும், பெருமழை பற்றிப் பொருட்படுத்தாமல், நாங்கள் இருக்கிறோம் காண்பாய், என்று பெருமிதத்துடன் என்னை நோக்கி விழி மூலம் மொழிந்திட விழைந்தனர்; ஆனால் அவர்தம் எண்ணம் ஈடேற வழி இல்லை! ஏனென்று கேட்கிறாயோ!! மழை பெய்வது பற்றித் துளியும் கவலையற்றுத் தாய்மார்கள் பலர் அந்தத் திடலில் நின்று கொண்டிருந்தனர்! அவர்களின் ஆர்வத்தைக் கண்ட பிறகு, ஆடவர் காட்டிய ஆர்வத்துக்குத் தனிச் சிறப்பு எங்ஙனம் இருந்திட முடியும்! திடலில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன் - எதிர்ப்புறத்தே, பெரியதோர் மாளிகை! உட்புறத்தின் உன்னதம் எப்படி இருக்குமென்பதை வெளிப்புறத்தின் கெம்பீரத்தைக் கொண்டுதான், நீயும் நானும் யூகித்துக்கொள்ள வேண்டும். அந்த மாளிகை, முதலமைச்சரும், துணை அமைச்சர்களும் துணிந்து கொள்கையைத் துறந்ததால் அமைச்சர்களானோரும், வீற்றிருந்திடும் நிலைபெற்றது! டில்லி, நிதி அமைச்சர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் மாளிகை தம்பி! உனக்கும் எனக்கும், ஏழை எளியவர்களுக்கும், உடலிலே அழுக்கு இருந்திடலாகாதே என்ற அக்கறையால் உந்தப்பட்டு, வெள்ளைக்கார நாட்டுச் சோப்புக் கட்டிகளை வண்டி வண்டியாகத் தருவித்து விற்று, "தேச சேவை’ செய்து வந்த சீமானுடைய சிங்கார மாளிகை! மகாத்மா கோலைக் கையில் பிடித்தபடி தண்டிக்கு “யாத்திரை’ சென்றாரே, அப்போதும் சரி, சபர்மதி ஆஸ்ரமம் அமைத்து சத்தியாக்கிரகத் தத்துவத்தை நாட்டுக்கு அளித்தாரே, அப்போதும் சரி, எர்வாடா சிறையிலே அடைக்கப்பட் டிருந்தாரே அப்போதும் சரி, இந்த மாளிகை வாசி, வெள்ளையன் நடத்திடும் கொடுமையைக் கண்டு வெதும்பின தில்லை காந்தியார் ஏற்றுக்கொண்ட கஷ்ட நஷ்டம் கண்டு இந்த கனவான் கலங்கினதில்லை! இந்தச்”சேதி‘களையெல்லாம் படித்திடவாவது அவருக்கு நேரம் இருந்ததா என்பதுகூட ஐயப்பாடுதான். டன் ஒன்றுக்கு இலாபம் நானூற்று நாற்பத்தைந்து வீதம் ஆறாயிரத்துப் பதினாலு டன் சோப் விற்றதிலே, “இலாபம், வரவு… என்ற”கணக்கு’ பார்த்திடவே கருத்தைச் செலவிட முடிந்தது; அவர் இப்போது, நிதி அமைச்சர், காங்கிரசாட்சியில்! மகாத்மாவின் மாண்பு பற்றி, அவரை அழைத்துப் பேசச் சொன்னால், அற்புதமாகப் பேசுவார்! அவருடைய அணிமாடத்துக்கு எதிர்ப்புறத்தில், ஆளை அழுத்திவிடும் சேறும், காலைக் குத்திவிடும் கள்ளியும் முள்ளும் நிரம்பியதோர் திடலில், நான் பேசுகிறேன்! எத்தனைத் தள்ளு எண்ணற்ற மக்கள், தி. மு. கழகத்துக்கு ஆதரவு அளித்திட ஆர்வத்துடன் வந்துகூடி வாக்களிக்கின்றனர். இந்தத் திடலுக்கு நான் சென்று கொண்டிருந்தபோது, தம்பி, வெகு அருகாமையில், புயலையும் எதிர்த்து நிற்கக்கூடிய தன்மையில் அமைந்திருந்த பெரியதோர் அலங்காரக் கொட்டகையைக் கண்டேன்! ஜெகஜ்ஜோதியாக இருக்கிறது என்பார்களே, அப்படி மின்சார விளக்குகள்! நூறு மோட்டார் களுக்குக் குறைவிராது! உள்ளே "ஆலாபனை’!! தம்பி! சங்கீத வித்வத் சபையின் விழாக் கொட்டகை அது. அதையும் பார்த்துவிட்டு, திடலில் சென்று நமது கூட்டத்தையும் பார்த்தேன்! எதிரேயோ, சோப்புச் சீமானுடைய மாளிகை!! என்னென்ன தோன்றியிருக்கும்? எண்ணிப்பார், தம்பி எண்ணிப்பார்! உனக்கும்தான் என்னென்ன தோன்றுகிறது. கூறேன்!! “காம்போதியடி, காவேரி! அவர் பாடிக் கேட்கவேண்டும் இவருக்கு எப்போது”வராளி‘தான்’’ "அதென்னடி அம்சா! அப்படிச் சொல்லிவிட்டாய். போன மாதம் இவர், ரசிக ரஞ்சனி சபாவில், தோடி பாடினார், என்ன பிரம்மானந்தமாயிருந்தது தெரியுமோ…’’ "உன்னைப்போலத்தான் ஊர்மிளா சொல்கிறாள்…’’ "அது கிடக்குது. ஏண்டி ஊர்மிளா ஆத்திலே ஒரு உம்மணாமூஞ்சி வந்திருக்கே, யார் அது?’’ "நேக்கு என்னடி தெரியும். ஒவ்வொரு புதுமுகம் வருகிற போதும், அவ, ஒவ்வொரு புது உறவாச் சொல்றா. யார் கண்டா?’’ "போடி! போக்கிரி! நோக்கு எப்பவும் சந்தேகம் தான்.’’ “தப்படி அம்மா, தப்பு! சாட்சாத் ஜானகி அவள், போதுமோ… சரி, சளசளன்னு நாம பேசிண்டிருந்தா, சபாக்காரா கோபிப்பா… இதோ”ஜாவளி’ ஆரம்பிச்சுட்டார் கேட்போம்.’’ தம்பி, ஒவ்வொரு உருவமும் ஒரு இலட்சத்தைச் சுமந்து கொண்டு, இதுபோல உல்லாசமாக உரையாடிக் கொண்டிருக்கும் இடம், அந்தக் கொட்டகை. திடலிலே கூடிய நமது மக்களோ தோடிக்கும் காம்போதிக்கும், காதுகொடுக்க நேரம் படைத்தவர்களா! "ஏன் இன்னும், மார்வாடி பாக்கியைக் கட்டணும் என்கிற பயம் வரலியா?’’ "பணம் வந்தாத்தானே!’’ "போன இடத்திலே…’’ "போய் வா என்கிறான்…’’ "உடனே நீ வந்துவிட்டாயா? ஆமா இப்படி இருந்தா எப்படி ஆகும்! அவன் ஈவு இரக்கம் இல்லாதவனாச்சே! உள்ளே புகுந்து, சாமான்களைக்கூடத் தூக்குவானே…’’ "தூக்குவாண்டி, தூக்குவான்! இந்த துரைசாமி பிணமானா தூக்குவான்! இப்ப. உள்ளே நுழைந்தா, என்ன நடக்கும் தெரியுமேல்லோ, எலும்புக்கு ஒரு அடியா எண்ணி அடிப்பேன்…’’ “போதுமே, உன்னோட வீராவேசம். பட்ட கடனைக் கட்ட வக்கு இல்லாவிட்டாலும்,”பட்டாசு’ வெடிக்கிற மாதிரிப் பேசறதிலே குறைச்சல் இல்லே…’’ தம்பி! நமது ஏழைக் குடும்பங்களிலே இதுபோன்ற ஆலாபனங்களும், அதற்கேற்ற தாளவரிசைகளும்தானே காண்போம்! அந்த அலங்காரக் கொட்டகை, எதிரே இருக்கும் சீமானின் மாளிகை, இவற்றைக் கண்டதாலே, எனக்கு இவ்விதமெல்லாம் எண்ணம் பிறந்ததே தவிர, ஆர்வம் பொங்கிடும் நிலையில் பல்லாயிரவர் அங்கு திடலில் மழையையும் பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்ததைக் கண்டபோது, ஏக்கம் பறந்த இடம் தெரியவில்லை; அதுமட்டுமல்ல, என் உள்ளம் சொல்லிற்று, "இதோ நீ காணுகின்றாயே, உழைத்து அலுத்த மக்கள்! ஊர்வாழ உழைப்பவர்கள்! ஏழை எளியவர்கள்!! நாளைக்கு என்ன என்று இன்று கூறிட முடியாத நிலையினர்! நாலு நாட்கள் படுக்கையில் படுத்தால், குடும்பம் என்ன செய்யும் என்ற கவலைப்பட வேண்டியவர்கள்! இந்த ஏழை எளியவர்கள் ஒன்றுபட்டு நின்றிடும்போதெல்லாம் மாட மாளிகையும் கூட கோபுரமும் சரிந்ததாகத்தானே வரலாறு சாற்றுகிறது! ஏதேதோ படித்தேன் என்று பேசுவாயே, பேதையே! இந்த மக்கள் சேற்றிலும் சகதியிலும் இருந்தால் என்ன! சீமான்கள் மாளிகைகளிலே இருந்திட்டால் என்ன! கவலை குடைவானேன், கற்றதை மறந்திட்டாலொழிய! அவர்கள் சிலர்; நாம் மிகப் பலர் என்று ஷெல்லி கூறினானே, கவிதையைப் படித்துப் படித்துச் சுவைத்திருக்கிறாயே! இப்போது ஏன் கவலை! நிமிர்ந்து நில்! நாட்டுக்குடையவர் எதிரே இருக்கிறார்கள் அஞ்சாமல் பேசு! ஊராள்வோர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தகுதியும் உரிமையும் படைத்தோர் உன் எதிரிலே, எனவே ஏக்கமற்று, கூறவேண்டியதை எடுத்துக் கூறு என்று கட்டளையிட்டது; பேசினேன். இதை உன்னிடம் இப்போது நான் சொல்வதற்குக் காரணம், தம்பி, தேர்தல் நெருங்க நெருங்க, காங்கிரஸ் கட்சியின் பணம், பல உருவங்களிலே நாட்டில் ஏராளமாக நடமாடும் கவலை! குறையட்டும், மருட்சி ஏற்படட்டும் என்பதற்காகக் கூறுவர். இந்தத் தொகுதியில் உள்ளவர் புத்தம்புது நோட்டுகளாக எழுபத்து ஐயாயிரம் அடுக்கி வைத்து விட்டாராம்; அந்தத் தொகுதியிலே, கிராமத்துக்கு நாலாயிரம் வீதம் பணம் ஒதுக்கி விட்டாராம்; என்றெல்லாம் பேசுவர்; அந்தச் சமயத்திலெல்லாம், தம்பி, நீ நண்பர்கட்குச் சொல்லு, காங்கிரசிடம் பணம் இருக்கிறது, ஆனால் அந்தப் பணத்துக்குப் பலம் இல்லை என்று எடுத்துக் கூறு. நாட்டிலே உள்ள நல்லவர்களைக் கேட்டுப்பார். உங்கள் கட்சி எந்தக் கட்சி என்று எடுத்துக் கூறச் சொல்லு. எந்தக் கட்சி உங்கள் சொந்த கட்சி இராமநாதபுரம் ராஜா செட்டிநாட்டு ராஜா குட்டிக் குபேரர்கள் ஆலை முதலாளிகள் ஆகியோர் கொட்டமடிப்பது காங்கிரஸ் கட்சி. பாடுபட்டுப் பிழைப்போரே! உழைத்து உருக்குலைந்தோரே! உங்கள் கட்சியாகக் காங்கிரஸ் இருக்க முடியுமா? என்று கேட்டுப்பார்! பதில் அளிக்கத் தயங்குவர், தம்பி, உடனே மீண்டும் அவர்களை நோக்கிக்கேள், புள்ளிமான் குட்டிக்கு புலியா பால் கொடுக்கும்? என்று! ஏழை எளியவர்கள், நடுத்தரக் குடும்பத்தார், பணம் காங்கிரஸ் கட்சியிடம் இருப்பது கண்டு அஞ்சத்தான் செய்வர். ஆனால் அந்த அச்சத்துக்கு இடமளித்தால், உள்ள கஷ்டம் ஓராயிரமாகி, வாழ்வில் மேலும் வேதனை படர்ந்திடும் என்பதை எடுத்துக் கூறுவதோடு, பாடம் புகட்டுவீர்! வரிச்சுமை ஏறிக்கொண்டேதான் இருக்க வேண்டுமா? விலைவாசியும் ஏறிக்கொண்டேதான் இருக்குமா? வாழ்விலே விசாரம் இருந்துகொண்டுதான் வரவேண்டுமா? பரிகாரம் தேடவேண்டாமா? ஆளும் கட்சிக்கு உங்கள் அல்லல் தெரியவேண்டாமா? உங்கள் மனக்குறை தெரிந்தால்தானே, ஆளும் கட்சி குறைபாடுகளைப் போக்கும்? மீண்டும் உங்கள் ஓட்டுகளைக் காங்கிரசுக்கு அளித்தால் குறைபாடு நீடிக்கும்; கசப்பு வளரும். இந்த முறை பாடம் கற்பித்துப் பாருங்கள்! தட்டிக் கேட்டிட, சர்வாதிகாரம் சாய்ந்திட, தி.மு.க. அபேட்சகர்களுக்கு ஓட்டு அளியுங்கள். புது வாழ்வுக்கு வழி காணுங்கள்! என்ற நல்லுரையை அளித்திடு, இல்லமெல்லாம் நல்லோர் உள்ளமெல்லாம், உண்மை சென்று தங்கிடும் வகையிலே எடுத்துக் கூறிடு. பிறகு பார், வெற்றி நம்மைத் தேடி வருகிறதா, இல்லையா, என்று. பணம் இருக்கிறது காங்கிரசாரிடம், ஆனால் அதற்குப் பலம் இல்லை என்று நான் கூறுவதற்குக் காரணம், தம்பி! நாட்டு மக்களே சிறிதளவு சிந்தித்தாலே தெரிந்து கொள்வார்கள். அந்தப் பணம், ஏழை எளியவர்களைப் பார்த்து நொந்த வாழ்விலே சிக்கிக் கிடக்கும் நடுத்தரக் குடும்பத்தினரைப் பார்த்து, என்ன பேசுகிறது என்கிறாய்! “உன் கஷ்டமெல்லாம் தீர்ந்து போகும்! காருள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், உன்னைக் கலி தீண்டாது. உன் மாடுகளை, மக்கள் சுற்றம் எல்லாமே இன்பம் பெறும்!’’ என்றா பேசும். ஒருபோதும் இல்லை.”பாடுபடுபவனே! என்னைக் காட்டி உன்னை ஏய்க்கிறானே எத்தன்! ஏமாளியாகலாமா? நான் எத்தனை நாள் உன்னோடு இருக்கப் போகிறேன்! ஒரு நொடியில் உருண்டோடிப் போவேன். உன் வேதனை அத்தனையும் நான் தீர்க்கவா போகிறேன்? உன் எதிர்காலத்தை, உன் குடும்ப நலனை, உன் நாட்டின் தன்மானத்தை, அத்தனையையும் இழந்து விடுகிறாய், இளித்துப் பேசிடும் இந்தப் பேர்வழி என்னை உன்னிடம் தந்ததால்! என்னைக் கண்டு மயங்கி விட்டால், பிறகு உன் உரிமையை இழக்க நேரிடும், ஊராள வருவோர் உன்னையே உதாசீனப் படுத்துவார்கள். உன்னைப் பெயரிட்டும் அழைக்க மாட்டார்கள், நீ பெற்ற தொகையைக் குறிப்பிட்டு அழைப்பார்கள், யார் வருவது ஆறணாவா? ஓஹோ எட்டணா வருகிறதா? வாங்கய்யா ஒரு ரூபா! வாங்க வாங்க பச்சை நோட்டு! - என்று பரிகாசம் பேசுவார்கள். ஊர் வாழத் திட்டமிடக் கூடாதா என்று அவர்களைப் பிறகு நீ உரிமையோடு கேட்டிட முடியாது. போதுமய்யா, போதும், என்ன செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்பது எமக்குத் தெரியும் - "ஓட்டுப் போட்டதாலேயே ஏதும் பேசிவிடலாம் என்று எண்ணிக் கொள்ளாதே, எல்லாம் எட்டெட்டணா கொடுத்துத்தான் ஓட்டுப் பெற்றோம், என்று அலட்சியமாகத்தான் பேசுவர். எனவே, வேண்டாமய்யா இந்த அற்ப ஆசை - என்னைத் திருப்பி அவன் முகத்திலே வீசி எறிந்துவிடு! வெட்கமும் வேதனையும் ஏற்படுத்திக் கொள்ளாதே’’ என்றல்லவா அந்தப் பணம் பேசும். ஆகையினாலேதான் தம்பி, காங்கிரசிடம் பணம் இருக்கிறது, ஆனால் பலம் இல்லை என்று கூறுகிறேன். சரிதானே நான் சொல்வது? உழைப்பாளர்களுக்கு மட்டும், அவர்கள் எப்படியெப்படி வஞ்சிக்கப்பட்டுவிட்டிருக்கிறார்கள் என்பது நல்ல முறையிலே அறிவிக்கப்பட்டால், தம்பி, அவர்கள், காங்கிரசார் ஓட்டுகளைப் பறிப்பதற்காகக் காசு வீசும்போது, காரித் துப்புவார்களேயன்றி, ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். "ஆஹா! அழகு! அழகு! அற்புதம்! அற்புதம்!’’ என்று - சொன்னது புலி. "புலியாரே! புலியாரே! எதன் அழகு பற்றிப் பேசுகிறீர்?’’ என்று கேட்டது ஓநாய். "ஓநாயாரே! மானின் உடலிலே உள்ள புள்ளியின் அழகைத்தான் சொல்கிறேன்’’ என்று புலி சொல்லிற்று! "புலியாரே! நான் கூடப் பார்க்க வேண்டுமே, எங்கே அந்தப் புள்ளிமான்?’’ என்று கேட்டது ஓநாய். "என் வயிற்றிலே!’’ என்று கூறிக்கொண்டே, ஏப்பம் விட்டது புலி! இது காட்டில் நாட்டில் "ஏழையின் உழைப்பு எவ்வளவு அருமை தெரியுமா?’ என்று பூரித்துப் போகிறான் முதலாளி. "அப்படியா? எங்கே அவனைக் காட்டும் பார்க்கலாம்,’ என்று கேட்கிறது சர்க்கார் - சில வேளைகளில். "முடியாதே! அவன் என் வயிற்றுக்குள்ளே அல்லவா இருக்கிறான்! விழுங்கிவிட்டேனே’ என்று கூறிவிட்டு, ஏப்பம் விடுகிறான் முதலாளி. "அப்படியா! அதிர்ஷ்டக்காரனய்யா நீ’ என்று கூறுகிறது, சர்க்கார். இந்த ஆட்சிமுறை நீடிக்கவே காங்கிரஸ் ஓட்டுக் கேட்கிறது. இந்தச் சூட்சமம் தெரிவிக்கப்பட்டு, மக்கள் விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டால், காங்கிரசினிடம் குவிந்துள்ள பணத்துக்குப் பலம் எப்படிக் கிடைக்கும்? எண்ணிப் பார்! திராவிட நாடு ஓட்டுகளைத் தட்டிப் பறிப்பதற்கு காங்கிரசில் குடி புகுந்துள்ள சீமான்கள், பணத்தைக் கொட்டித் தருகிறார்கள், "ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளம் வரை பாயுமே’’ என்று இறுமாப்புடன் பேசுகிறார்கள்; ஆனால், தம்பி, இத்தகையவர்கள் ஆட்சியில் அமர்வதால் என்ன நேரிடும் என்பதை நாட்டு மக்கள் எண்ணிப் பார்க்காமலா இருப்பார்கள்? ஒன்றுக்குப் பத்தாக, இதே மக்களிடமிருந்து வரி போட்டு வாங்குவர். வாணிபத்தில் ஈடுபட்டு இலாபம் குவிப்பர். இலட்சம் செலவிட்டால், கோடி குவித்துக் கொள்வர். கெண்டையை வீசுகிறார்கள்! எதற்கு? வரால் பிடிக்க! ஓட்டுக்குப் பணம் வீசுகிறார்கள்! எந்த நோக்கத்துடன்? ஆட்சியில் செல்வாக்குப் பெற்று, ஒன்றுக்குப் பத்தாக, அதே ஏழையைக் கசக்கிப் பிழிந்து, சுவைக்கலாம், கொழுக்கலாம் என்ற நோக்கத்துடன். இப்போதே, ஆட்சியில் அமர்ந்திருப்பவர், போடும் திட்டம்பற்றி எடுத்துக்கூறு. ------------------------------------------------------------------------ நகைகள் ஜாக்கிரதை வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி நகை செய்தீர்கள் தாய்மார்களே! சர்க்காருக்குத் தங்கம் வேண்டுமாம் டாட்டா பிர்லா டால்மியா ராஜா சர். அழகப்பா போன்றோரிடம் கேட்கவில்லை. தாய்மார்களே! உங்கள் நகைகளைக் கேட்கிறார். காங்கிரஸ் நிதி அமைச்சர்! கூசாமல் பேசாமல் இருந்தால் கேட்கிறார்! சட்டம் வரலாம்! பொதுத் தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டு அளித்தால் உங்கள் நகைகளைப் பறிக்கும் திட்டத்துக்கு நீங்களே சம்மதமளித்ததாகப் பொருள்! தாய்மார்கள் எமக்கே ஓட்டு அளித்தனர். எனவே, அவர்களின் நகைகளைப் பறிக்க, எமக்கு உரிமை உண்டு’ என்று காங்கிரஸ் கட்சி வாதாடும்! மாட்டுப் பெட்டிக்கு ஓட்டளிக்காதீர் பூட்டியுள்ள நகைகளைப் பறிகொடுக்காதீர்! தி. மு. கழக அபேட்சகர்களுக்கு ஓட்டு அளியுங்கள். பூட்டியுள்ள பொன்னாபரணத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதை எடுத்துக்காட்டு நாட்டு மக்களிடம் - ஓட்டளியுங் கள் பணம் தருகிறோம் என்று பேசும் காங்கிரஸ் கனவான்களை, கண்ணாலே காண்பதே தமக்குக் கேடளிக்கும் என்று மக்கள் உணருவார்கள். இந்த நம்பிக்கை எனக்கு இருப்பதனால்தான், நான், சக்தி நிரம்பிய திடலில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, சங்கீத விழாவிலே கூடி இருந்த சுகவாசிகளும், மாளிகையிலே கூடியிருந்த சீமான்களும் என் மனக்கண்முன் தெரிந்தபோதிலும், கலங்காமலிருந்தேன். மக்களின் கண்களிலே வீசிய நம்பிக்கை ஒளி, உண்மையிலேயே, சீமான் விரலிலே மின்னிடும் வைரத்தின் ஒளியைவிட, உயர்தரமானதல்லவா! ஏழையின் இதயத்திலிருந்து கிளம்பி அவன் கண்களிலே கூத்தாடும் ஒளிக்கு உள்ள பொலிவும், வலிவும் வேறு எங்கு காணமுடியும் - நாம் பெற்றெடுத்த மதலையின் புன்னகையிலும், நமக்கு அந்தச் செல்வத்தை அளித்த சேல்விழியாளின் கண்வீச்சிலுமன்றி! எனவே தம்பி, நம்பிக்கையுடன் பணியாற்று; நாடு நமது பக்கம் என்பதை அறிந்து பணியாற்று! வெற்றிக்கு வழிகாட்டு. அண்ணன், 6-1-’57 வாகையூர் பொதுத் தேர்தல் பெரியார் பணி "பாரி பறித்த பறி’ நெடுஞ்செழியன் பாசறையில் இருந்த பாங்கு சங்கரலிங்கனார் செய்த தியாகம் தம்பி! பொங்கற் புதுநாள்! தமிழருக்குத் தனிப்பெருந் திருநாள்! இன்பம் பொங்கிடும் எழிலோவியமாக இல்லமெலாம் விளங்கிடும் விழா நாள்! புதுக்கோலம் காட்டி, பூரிப்பை ஊட்டிடும் கண்கவர் வண்ணம் பல எழும் நாள்! பசுமையின் பாங்கும் பயனும், பளிச்சிடும் பொன்னாள்! மனைதொறும் மனைதொறும் மயிலும் குயிலும், மானும் உலவிடும், மலர்வனமாகும் மாண்புபெறும் நன்னாள்! ஏராளர் தம்மாலே மாந்தரெலாம் சீராளர் ஆயினர் காண் என்று, செந்நெலும் செங்கரும்பும் செப்பிடும் சீரிய நாள்! மேலே பார்த்துப் பெருமூச்செறியாது, மேதினியை மறந்து ஏதினிவாழ்வு என்று ஏக்கமுறாது, என் மனை என் மகவு, என் உழைப்பு, என் உயர்வு என்று மட்டுமல்லாது நம் இல்லம், நம் நாடு, நமது நலன் என்று நயம் கூறி, தோழமை வழங்கிடும், தூய்மை துளிர்த்திடும் திருநாள்! வீழ்ந்துபட்டான் ஒரு கொடியன் விண்ணவன் அருள தாலே! ஆங்கவன் தன் அருள்பெறவே, அடிபணிந்தே அளித்திடுவீர், தேன் கதலி பலாவுடனே செம்பொன்னும் ஆடையுந்தான்! யாம் வான்சுரரை விட்டு வந்த பூசுரர் காண் என்று கூறி, ஆன்றோர் நெறிமறந்தார் அனைவரையும் அலைக்கழிக்கும், ஆரியத்தின் காவலர்கள் மக்களை அண்டிடாத அருந்திருநாள். உழைப்போனின் உதிரத்தை உண்டு உருசி கண்டவனும், ஒருகணம் உள்ளமதில் உண்மைக்கு இடமளித்து "பெற்றோம் நாம் பெருஞ்செல்வம் மற்றெதனால்? அவர் உழைப்பதனால்! உழைத்தோர் உருக்குலைந்தார், உண்ட நாம் பெருத்து விட்டோம். என்றும் இந்நிலைதான் என்றே இறுமாந்து இருந்திடுதல் இனியும் நடவாது, குன்றெடுக்கும் நெடுந்தோள்கள் குலுக்குவது கண்டிட்டோம், ஆட்காட்டி விரலுக்கு அடங்கினோர், ஏன்? என்று அழுத்தமும் திருத்தமும் அழகுபெறக் கேட்டெழுந்தார், ஆர்த்தெழுந்து அவர் உரிமைக்கவர், ஆணையிட்டுக் காட்டு முன்னம், அவா அடக்கி, அவரவர் உழைப்புக்கு அவரவரே உரிமையாளர் என்றுள்ள அறநெறிக்கு அடி பணிவோம்; பிணியாகோம்’’ - என்று தனக்குத் தானேனும் தத்துவம் கூறிக்கொள்ளும், புத்தறிவு பூத்திட மெத்தவும் உதவும் மேலான நாள். தமிழரின் இத்திருநாளன்று, நுமது இல்லமெல்லாம் இன்பம் பொங்குக! என்ற என் வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கிறேன் - அதுபோன்றே நீவிர் எனக்களிக்கும் நல்லன்புக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். கார் கண்டதால் கலாபம் விரித்தாடும் மயில்போன்று இந்தத் திருநாள் காணும்போதே, தமிழரின் உள்ளத்தில் உவகை மலர்ந்திடக் காண்கிறோம். இத்தனைக்கும், இதற்கு முன் இல்லாத அளவிலும் முறையிலும் விளக்குகளின் வரிசைகளோ, மணியோசைகளோ, காது குடைந்திடும் ஒலி கிளம்பும் வேட்டுச் சத்தமோ, வீண் ஆரவாரமோ, இந்நாளில் இருப்பதில்லை. "பொங்கலோ! பொங்கல்!’’ என்று இல்லத்துள்ளார் அனைவரும் எழுப்பிடும் குரலொலி, இன்னிசையாகிறது; காலத்தின் பல கோலங்களைக் கண்டு கண்டு தெளிந்து, முதுமைக் கோடுகள் முகத்தினில் பதிந்துள்ள பெரியவரின் குரலும், தத்தை பெற்றெடுத்த அஞ்சுகத்தின் தீஞ்சுவைக் குரலும், முழக்கமிடும் காளையர்கள் வழக்கத்தை மாற்றி, கனிவுகூட்டி எழுப்பிடும் குரலொலியும், பொங்கலோ! பொங்கல்! என்று கூறுவது, புதுப்பானை தன்னிலே பொங்கிடும் பால் கண்டுமட்டுமல்ல, உள்ளமதில், உன்னைக் கண்டதால், உயிருக்குயிரே! பொங்கி எழும் காதலினையும் குறித்தேதான் என்று கண்ணால் பேசிடும், ஆரணங்கின் இசையொலியும், எல்லாம் கலந்து, இன்னதென்று விளக்கிட முடியாததோர் இன்னிசையாகிறது! பொங்கிற்றா பால், தம்பி, பால் பொங்கிற்றா, அக்கா, - என்று பாங்குடன் கேட்டு மகிழ்வர். நாட்டிலே மனைகள் பலப் பல இருப்பது, தோட்டத்திலே பலப்பல மலர்ச்செடிகள் இருத்தல்போல; எல்லாவற்றிலும் நறுமணம் எழுந்தால், பொழில் முழுதும் மணம் பரவும், அங்குப் பயிலும் காற்றும் மலராகி அனைவருக்கும் சுவை தரும் என்பதுபோல், வீடெங்கும் விழா இருந்தால், நாடே விழாக்கோலம் காட்டும்; இன்பம் சில இல்லங்களிலும், இருள் பலவற்றிலும் இருக்குமானால், அது எருக்கம் செடிகள் படர்ந்துள்ள காடதனில், இங்கொன்றும் அங்கொன்றுமாக இஞ்சியும் மஞ்சளும் இருத்தல் போன்றதாகும்; எனவே, பொங்குக இன்பம், எங்கும் பொங்குக, எல்லோர்க்கும் இன்பம் கிடைத்திடுக! - என்று வாழ்த்தும் மாண்பினை அனைவரும் பெற்றிடும், பயிற்சி நாள் ஆகிறது, பொங்கற் புதுநாள். இந்த ஆண்டோ! பொங்கற் புதுநாளன்று, நமக்கெல்லாம், ஓர் புதுவிதமான இன்ப உண்ர்ச்சி, கருவில் உலவும் களிப்புப் போல் எழுகிறது. மனத்துக்கிசைந்த மங்கை நல்லாள், கருவுற்றாள் என்று, மெல்லிய குரலில் பேசி, ஓர் புன்னகையை வீசுகிறார்களே, அது கெட்ட அடலேறு, "ஓ! ஓ! தேன் துளி, தெவிட்டாத பாகு, யான் பெற்றேன் இன்பத்தின் கனியை,’’ என்றெல்லாம் எண்ணி எண்ணி, களிநடம் புரியும் இதயம்கொண்டோனாகிறானே, அஃதேபோல, நாம் ஈடுபடுவது இந்தப் பொதுத் தேர்தலில் என்று திட்டம் வகுத்துக்கொண்டுவிட்டதனால், அதன் விளைவாக நாம் பெறக் கிடைக்கும் வெற்றி பற்றிய எண்ணம், உள்ளத்துக்குப் புதியதோர் உணர்ச்சியைத் தரத்தான் செய்கிறது. இதோ, இன்று இல்லம் கொள்ளும் விழாக் கோலம்போன்ற மற்றோர் மகிழ்ச்சிகொள் கோலம், நாடு பெறுமன்றோ, நாம் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவில் பெற்றி பெற்றால் என்று எண்ணாத இளைஞர் இல்லை, பேசிடாத பெரியவர் இல்லை, இதனை விரும்பிடாத நல்லவர்கள் இல்லை, அதனை நஞ்செனக் கருதும் சிலர் உளர் என்கிறார்கள் - மலர் தூவிய பஞ்சணையிலேகூடத்தான் மலர்க்காம்பு முள்ளாகுமாம், சில வேளைகளில், அதனால் என்ன? இதற்கு முன்பெல்லாம் நாம் கண்டுகளித்த பொங்கற் புதுநாளைவிட, இந்த ஆண்டு, நமக்கெல்லாம் அதிகமான அளவுக்கு ஆர்வம் தருவதாக அமைகிறது; நமது உழைப்பையும் தூய்மையையும் உணர்ந்து பாராட்டி, நமது இடையறாத பணியினைக் கண்டு மகிழ்வுற்று, மேலும் பணியாற்றிடும் வாய்ப்பினை வழங்கிட, நாடு எந்த அளவுக்குப் பக்குவப்பட் டிருக்கிறது, நல்லன செய்தால் அல்லன அகலும் என்ற ஆன்றோர் மொழிக்கு ஏற்ப, நாடு, நடந்துகொள்வதிலே, எந்த அளவுக்குத் திறம்பெற்றுத் திகழுகின்றது என்பனவற்றை எடுத்துக் காட்டிட உதவும் பொன்னான வாய்ப்பாக அமைகிறது, இந்தப் பொதுத் தேர்தல். எனவே, பால் பொங்கி, அதனால் மகிழ்ச்சி பொங்கிடும் மனைகளிலே வீற்றிருக்கும் அன்பர்கட்கெல்லாம், நாடு புதியதோர் தொண்டர் படையினைப்பெற்று, ஆட்சித் துறைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு எழுந்துள்ள வேளை இது என்ற எண்ணம் கனிந்திருக்கத்தான் செய்யும். அவர்தம் பேராதரவு பெறத்தக்க விதத்திலே, பணியாற்றி வந்துகொண்டிருக்கிறோம் என்பதனாலே, நமக்கு, உரிமையோடு கேட்டுப் பெறலாம் என்ற எண்ணம் எழுந்தது, மக்கள் மன்றத்திலே இதற்கான ஒப்பமும் கிடைத்தது, இதுபோது செயல்படு கட்டம் அடைந்துள்ளோம், செய்நன்றி மறவாதார் தொகை குறைந்துபடவில்லை என்ற நம்பிக்கை நாதமாகி நிற்கிறது, பயணத்தைத் துவக்கிவிட்டோம், போதுமான அளவு பலம் தேடித் திரட்டிக்கொள்ளக்கூட நேரமின்றி. ஏனெனில், நாம் நமது மக்களுடைய நேர்மையில் மிக மிக அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கிறோம். உற்றார் எவர்? மாற்றார் யாவர்? உண்மை ஊழியம் புரிந்திடும் பண்பு எவரிடத்தில் உளது? ஊரை அடித்து உலையில் போட்டிடும் உலுத்தர்போக்கு கொலு வீற்றிருப்பது எவ்விடத்தில்? என்பதனையெல்லாம் ஆய்ந் தறிந்திடும் ஆற்றல்மிக்கவர்கள் நமது மக்கள், என்பதிலே நாம், நம்பிக்கை கொள்கிறோம்; எனவேதான், மலை என உருவும் மதயானையன்ன போக்கும்கொண்டு, எதிர்ப்பட்டோர் அழிவர், அழிவர் என்று ஆர்ப்பரித்திடும் ஆளும்கட்சியை, தடுத்து நிறுத்தி, தட்டிக் கேட்டிட, கணக்குக் காட்டச் சொல்லிட, முனைந்து நிற்கிறோம்; மூக்கு உடைபடும் என்போரும், முகத்தில் கரி பூசப்படும் என்று ஏசுவோரும், மூலைக்கு மூலை துரத்தி அடிப்போம் என்று முழக்கம் எழுப்புவோரும், உளர்; சந்தனக் காட்டிலேயே, சத்தற்ற செடி கொடி அறவே இல்லாமலே உள்ளன? உள்ளன; இருக்கட்டும், மக்களின் அறிவுக்கண் நல்ல முறையில் விளங்கிடுமானால், கறை பூசிக் காரியத்தைக் கெடுத்திட முனைந்திடும் "கண்ணியர்களின்’ செயல், நாணறுந்த வில்லில், முனை ஒடிந்த அம்பினை, கரம் குறைந்தவன் ஏற்றிடும், காதையாகிப்போகும். இந்தக் "காரக்கருணை’ ஒரு புறம் இருக்கட்டும் - கரும்பும் மஞ்சளும், இதோ; அவைதமைக் காண்கிறோம், அகம், இன்பம் பொங்கும் கலமாகிறது. நடைபாதை வியாபாரிகள்: பொருள் என்ன இதற்கு? நாளங்காடி - அல்லங்காடி: இவை தமிழர் தாழ்ச்சியுறாத நாட்களில் இருந்து வந்த எழில். இன்று, தமிழ் இனம், சொந்த நாட்டிலேயே “சோற்றுக்கு அலைபவர்கள்’ ஆகியுள்ளனரன்றோ; இவர்தமில் ஒருசிலர் சென்னை நகரில், கடை வீதியில், நடைபாதையில் நின்றும், நடந்தும், இருந்தும், போலீஸ் புகும்போது மறைந்தும், சிறு சிறு சாமான்களை விற்று வாழ்கிறார்கள். இவர்கள்”இலாபம்’ என்ன பெறுவர்? அணாக்கள்; மிகச் சுறுசுறுப்பாக வேலை செய்தால், ஒரு நாளில் சில அணாக்களே கிடைக்கும்; இதில் ஒரு பகுதியைச் சேர்த்துத் துளிகளைத் திரட்டித் தூய உள்ளம் படைத்த அந்தத் தோழர்கள் தேர்தல் நிதிக்கு என்று சென்னைக் கடற்கரைக் கூட்டத்திலே, என்னிடம் தந்தனர்; நான், எங்கெங்கோ சென்றேன், அந்தக் கணம். மழையால் நனைந்து வந்த ஔவைப் பெருமாட்டிக்கு "எந்தையும் இழந்தோம், எம்குன்றும் பிறர்கொண்டார்’’ என்று கூறிடவேண்டிய நிலைபெற்று நலிந்து நின்ற பாரி மகளிர், ஒரு நீலச் சிற்றாடை தந்தனராமே, அதுபோது, மூதாட்டி அம் மகளிரின் மாண்பு கண்டு நெஞ்சு நெக்குருகி, பாரி பறித்த பறியும், பழயனூர்க் காரி கொடுத்த களைக்கொட்டும் - சேரமான் வாராய் என்றழைத்த சொல்லும்இம் மூன்றும், நீலச்சிற் றாடைக்கு நேர்! என்று பாடினதாகக் கூறுகிறார்களே, அந்த நிலைக்குத் தாவிற்று, என் உள்ளம். அந்த "நீலச் சிற்றாடை’ தரும் நேர்மையாளர்கள், நிரம்ப இருக்கிறார்கள் நாட்டில், மிக நிரம்ப. பெரியாரின் பெரும்படையின் பகைப் பேச்சினைக்கூட நான், "பாரி பறித்த பறியா’கவே கொள்கிறேன். ஆம்! பரிசு தந்தான் பாரி. பெற்ற மூதாட்டியார், புறப்பட்டார், போக. பாரிக்கு, பிரிந்து நிற்க, மனமில்லை. மூதாட்டியைச் சொல்லால் தடுத்திட இயலாது என்று எண்ணினான். எனவே, தன் ஆட்கள் சிலரை அனுப்பினானாம், எதற்கு? தான் மனமுவந்து தந்து பரிசுகளை, வழியில், பறித்துக்கொண்டு வந்து விடுவதற்காக. ஔவை அறியார், பாரியின் இந்தப் போர் முறையை. வழிப்பறி கள்வர் செயல் இது, என்று எண்ணிக் கொண்டார், பொருள் பறிக்கப்பட்டபோது. பொருள் பறிபோயிற்றே என்பதைவிட, பாரியின் ஆட்சி நடந்திடும் இக்காலையிலா, கள்வர் இத்துணைத் துணிவுடன் உள்ளனர்; அந்தோ! அஃது அவனது ஆட்சிக்கேயன்றோ இழுக்கு என்பதை எண்ணியே, மூதாட்டியார் பெரிதும் மனம் வாடினராம். நாட்டிலே இத்தகு கொடுஞ்செயல் நடைபெறுகின்றது என்பதை எடுத்துக்கூறச் சென்றார் - ஔவையார். வந்தார், தமிழுக்கு வாழ்வளிக்கும் பெருமாட்டி என்பதைக் கண்ட பாரி, களிப்புற்று, பிறகே, நடந்ததன் உட்பொருளை எடுத்துரைத்தானாம். "பாறி பறித்த பறி’ இதுதான். பெரியார், இதுபோது, இதே முறையைத்தான் கையாள்கிறார் என்றெண்ணி, முன்னம் பாரி காலத்து முறைபற்றிய காதை, கருத்தளித்திருப்பதால், நான், மன அமைதி கொள்கிறேன். சில வேளைகளில், மகிழக்கூட முடிகிறது. நாடெங்கணும், நமக்கு "நீலச் சிற்றாடை’ தந்தேனும் மகிழ்விக்கவேண்டும் என்றெண்ணும் பாரி மகளிர் உளர். இந்தத் தூய துணை வீண்போகும் என்றெண்ணவும் கூசுகிறது. இத்துணை ஆதரவு தந்திடும் நேர்மையாளர்களும், ஆற்றலுடன், அதனைத் திரட்டி உருவாக்கிடும் திறம் படைத்த, தம்பிகள் எண்ணற்றவர்களும் இருந்திடும்போது, காடுமலை குறுக்கிட்டாலென்ன, கடுஞ்சொற்கள் மழையெனப் பொழிந்தா லென்ன, வா, தம்பி! வா, வா, கடமை கட்டளையிடுகிறது, நாட்டவர் கனிவு நம் பக்கம் துணை நிற்கிறது, செல்வோம், புறப்படு; - என்று அழைத்திட என்னால் முடிகிறது. அழைக் கிறேன்! என் உள்ளம் உன்போன்றோருக்கெல்லாம் புரிகிறது, வருகிறீர்கள்; இனி, வாகையூர் போய்ச் சேரவேண்டும்! - வழி கொடிது, கொடிது! எனினும், மேற்கொண்டுள்ள பணியின் மேம்பாட்டினை அவ்வப்போது நினைவிற்குக் கொண்டுவந்தால் போதும். பாலையில் நடந்திடும்போதும் இன்பம் காணக் கிடைக்கும். பாய்களைப் புயற்காற்றுப் பிய்த்தெறிந்துவிடுமே என்று அஞ்சி, கலம் செலுத்தாமல், கரையில் படுத்துறங்கிக் கிடந்தானோ, தமிழன்? கொல்லும் புலி உண்டு காட்டினிலே என்று தெரிந்தும், உள்ளே சென்று, சந்தனம் கொண்டுவராமலா இருந்தான், நமது முன்னவன்? மூச்சை அடக்கி ஆழ்கடலுக்குள் மூழ்கி, ஒரு கரத்தால் சுறாவைத் தள்ளிவிட்டு, மறு கரத்தால் சிப்பியைப் பற்றி எடுத்து வந்தல்லவா, தமிழன் முத்து தந்தான் முத்தம் பெற்றான்!! வழி வழி வந்த நாம், பாதையின் வளைவு கண்டா பயணத்தை விட்டுவிடுவோம்? அதோ, உன் அன்பினைப்பெற்றதால், அன்னமென நடந்து, மின்னலிடை துவள, உனக்கென, கன்னல் சுவைகொண்ட கனி களைத் தட்டினில் வைத்துக்கொண்டுவரும், தாமரையாளைக் கேட்டுப்பார், வழி நெடிது, கொடிது என்பதன் பொருட்டு, வாழ்விலே நாம் நமக்கு என்று ஏற்றுக்கொண்டுவிட்டஒரு குறிக்கோளை மறந்திடப்போமா? என்று. பதில் கிடைக்காது - ஆனால், அப்பாவையின் கண்களிலே ஓர் பயங்கரம் தோன்றும்! இங்ஙனம் பேசிட எப்படி இவரால் முடிகிறது? இவர் அழைத் தால், நான் பாம்பு புரளும் காடாயினும் பாய்ந்தோடிச் செல்வேனே, கொடுவழி கண்டு குறிக்கோளை இவர் மறக்கும் இயல்பினரானால், அம்மவோ! பிறகு கொண்டவளின் அன்பினைப் பெறுதற்காக, குறுநடை நடந்தாலும், குதி வலிக்கும் என்றும் எண்ணி, துறப்பரோ, என்று அந்தப் பார்வை பேசுகிறது! பயணத்திலே, வெற்றிபெற, நாம் பெறவேண்டிய ஆற்றலை, எவ்வெவ்வழிகளால் பெறல்வேண்டும் என்பதை எண்ணித் திட்டமிட்டுப் பணியாற்றி வரும் உன்னிடம், நானேன், தயக்க மடைவோர், தளர்நடைக்காரர், துவண்டு விழுவோர் ஆகிய இன்ன பிறர் பற்றிய பேச்சினைக் கிளப்பிடவேண்டும். தம்பி, உன் தகுதி நானறிவேன், உன் ஆற்றல் நான் கண்டிருக்கிறேன். நாடு அதனைத் தக்க விதத்தில், மெச்சத்தக்க முறையில், உருவான பலன் கிடைக்கத்தக்க அளவில், காணவேண்டும். பிறகென்ன, வெற்றிதான்! மலையளவுள்ள மதகரியை அடக்குபவன், அதனினும் பெரிய உடல் அளவா கொண்டுள்ளான்? மார்பிலே தைத்ததும் குருதியை வெளியே கொண்டுவருகிறதே, அம்பு, அதன் முனையில் உள்ள கூர்மை பொருந்திய இரும்பு, தம்பி, எத்துணை சிறியது அளவில். எனவே, அளவுபற்றி, எண்ணி, நாம் ஆயாசப் படப்போவதில்லை. சிறிதளவு பால்தான் பெய்தாள் உன் அன்னை உண்ண உண்ண மகிழ்கிறாயே. தேனை, தம்பி! குடம் குடமாகவா பருகிடவேண்டும் சில துளிகள், அதிலும், உன் சிந்தைக்கினியவள் கரம் பட்டதென்றால், தேன் மட்டுமா இனிக்கும்! தொட்ட அத்தனையுமன்றோ உனக்கு, மலைத்தேனாகும்! அளவுபற்றி, அஃதொன்று மட்டுமே பெற்றுள்ளோர், பேசி மகிழட்டும், எண்ணி ஏமாற்றம் காணட்டும். நாம், எளியவர், மறந்தோமில்லை, நாம் எடுத்துக் கொண்டுள்ள செயல் சீரியது, மறவோம் இதனை. அல்லலும் தொல்லையும் வறுமையும் நிரம்பிய வாழ்வின ராக, நம்மவரில் மிகப் பெரும்பாலோர் உளர். இந்நிலையிலேயே நம்மால் ஓர் திருநாள் கொண்டாடமுடிகிறது. அறுவடை விழா என்கிறோம், அறுப்பவன் ஒருவன், அனுபவிப்பவன் வேறொருவன் நிலை குலையாதிருக்கும்போதுகூட. ஆனால், நாம் விரும்பிடும் நாடு கிடைத்துவிட்டால்! நமக்கென்று ஒரு கொற்றம் - நமது முயற்சிகளுக்குத் தங்கு தடை இல்லாததோர் துரைத்தன முறை - நம் நாடு வளம் பெறுவதற்கான வழிவகை காணும் உரிமையைப் பறித்திடும் ஆதிக்கம் எவரிடமும் இல்லாததோர் அரசுமுறை அமைந்துவிட்டால்? அமைந்துவிட்டால், கூனன் நிமிர்ந்திடுவான், கரம் கூப்பிப் பிழைப்போன் மனிதனாவான், மங்கிய கண்களில் ஒளி பிறக்கும்; புதியதோர் தமிழர் சமுதாயம் அரசோச்சும்; நரம்பு புதுப்பிக்கப் பட்ட வீணை காண்போம்; கானம் எழும்; மாசு துடைக்கப்பட்ட மணியிலிருந்து ஒளி கிளம்பும்; விழாக் கோலம் நாடெங்கும்; என்றும். வழி நெடிதா, கொடிதா என்பது குறித்துக் கண்டறிந்த பிறகா பயணப்படவேண்டும்; இந்த வாகையூர் காண? மாணிக்க விளக்கு ஒளி தருகிறது. புலிச் சங்கிலியிட்டுச் செய்த இருக்கையில், படுத்திருக் கிறான் மன்னன். காவலாளிகள், சுற்றித் திரிந்தபடி உள்ளனர்; மாற்றா ரிடமோ, உற்றாரிடமோ, நடப்பனவற்றை உளறிக்கொட்ட முடியாத நிலையினர்; ஊமையர். விளக்குகள் அணையும்போது, பந்தத்தைக் கொளுத்தி விளக்குகளை எரியச்செய்கிறார்கள் கச்சையணிந்த மங்கையர். கச்சையணிந்த மங்கையர்தானே, என்று கெடுமதியாளர் எண்ணிடத் துணியமுடியாது - அம்மங்கையர் வாள் அணிந்துள்ளனர். மெய்காப்பாளர்களும் காவலிருக்கின்றனர். காலத்தைக் கணக்கிட்டு, "நாழிகை’ கூறி நின்றனர், சிலர். இருக்கையில் உள்ளான் மன்னன் - நடுநிசிக்குப் பிறகும் உறக்கம் கொள்ளவில்லை! பள்ளி அறை அல்லவே! பாசறை! அடர்ந்த காட்டினை அழித்து, அமைக்கப்பட்ட பாசறை! அங்கு உலவிய கொடிய மிருகங்களையும், கொடியோரையும், அழித்தும் அகற்றியும், முள்வேலி அமைத்துக் காவலாக்கிய நிலையில் உள்ள பாசறை! உறக்கம் கொள்ளாதது ஏன்? கடும்போர் நடந்திருக்கிறது! அதிலே படுகாயமுற்றனர், தன் படையினர்! அதனை எண்ணி, வெற்றிபெற்று, தன் கொற்றத்தின் சிறப்பினை நிலைநாட்டிட, அவ்வீரர், பட்ட கஷ்டங்களை எண்ணி, உள்ளம் உருகுகிறான் மன்னன்! போர்வீரர்கள் குறித்து மட்டுமல்ல, பகைவரின் தாக்கு தலால் புண்பட்ட, கரிபரி குறித்தும் கவலையுறுகிறான்! ஒரு கரம் படுக்கையில்! மற்றோர் கரம்கொண்டு கண்களைத் தடவிக்கொண்டுள்ளான் மன்னன்! காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் அளித்துள்ள முல்லைப்பாட்டு, பாசறையில் இருந்த மன்னனைப் படம்பிடித்துக் காட்டுகிறது. வீரத்தையும் வீழ்ந்துபடாக் கொற்றத்தையும் தமிழர் பெற்றிருந்த காலை, பாசறையில் இது நிலைமை. தமிழகத்தைக் காட்டிடும் இக்காட்சியை, நினைவிற் கொள்ளும் நாம், மறந்துகிடப்போருக்கு நினைவூட்டும் நாம்; எங்ஙனம், நாம் மேற்கொண்டுள்ள பயணத்திலே, வழி நெடிதா, கொடிதா என்பதுபற்றிக் கலங்க முடியும்? தம்பி! நெடுஞ்செழியன் பாசறையில் இருந்த "பாங்கு’ காண்போம்! நக்கீரர், காட்டுகிறார், நெடுநல்வாடையில். பாசறையில், தூக்கம் வரவில்லை, பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு. களத்திலே, களிறுகளின் துதிக்கைகளை வெட்டி வீழ்த்திக் கடும்போரிட்டுக் களைத்துக் கிடக்கின்றனர் வீரர்கள்! வாடைக்காற்று அடித்துக்கொண்டிருக்கிறது. விளக்கின் சுடர்கள், வாடை காரணமாகத் தென் திசையாகச் சாய்ந்து காட்டுகின்றன! பாண்டியன் நெடுஞ்செழியன் தன் தோளின்மீதுள்ள ஆடை நழுவிடுவதை, இடப்பக்கத்தில் இறுக்கிப் பிடித்தபடி, பாசறைப் பகுதியில், விழுப்புண்பெற்றுப் படுத்துக் கிடக்கும் வீரர்களைச் சென்று பார்க்கிறான். வேம்பு அணிந்த வேந்தன், தன் கொற்றத்தின் ஏற்றத்தைக் குறைத்திடத் துணிந்த மாற்றாரின் கொட்டத்தை அழித்திட, களம் புகுந்து கடும் போரிட்டு, விழுப்புண்பெற்று, வீரராய்த் திகழ்ந்திட இத்துணை ஆற்றலர்கள் உள்ளனர் என்பதைக் காண்பதால்போலும், முகமலர்ச்சியுடன் காணப்படுகிறான்! இது மன்னன் நிலை - பாசறையில். அழகான அரண்மனை! அந்தப்புரம்! படுக்கை அறை! யானையின் கொம்பினால் வேலைப்பாட்டுடன் செய்யப் பட்ட கட்டில், தந்தக் கட்டில்தானே என்று கருதிவிடக்கூடாது, தம்பி! நக்கீரர் வெகுண்டெழுவார்! அந்தக் கட்டில், செல்வ நிலையை மட்டும் காட்டுவது அல்ல. போரிலே ஈடுபட்டு இறந்துபட்ட, யானையின் கொம்புகள்! நாற்பது வயதானதாக இருக்குமாம், யானை! முத்தாலே சாளரங்கள்! புலி வடிவமும், பூவேலைப்பாடு முடைய திரைகள்! முல்லையும் பிற மலர்களும் அன்னத்தின் தூவியும் தூவப்பட்ட படுக்கை! அதிலே, படுத்திருக்கும்போது, துயில் வரவில்லை! அவள் அடியினை, அழகு மகளிர், மெல்ல வருடுகிறார்கள், துயில் கொள்ளட்டும் என்று; பயன் இல்லை! தலைவன் இல்லை, துயிலும் இல்லை. தலைவன் இல்லாததால், துயில் மட்டுமா இல்லை! மார்பிலே முத்து மாலைகள் இல்லை! கரங்களிலே பொன் மணி வளைகள் இல்லை; சங்கு வளையல்களே உள்ளன! நூற்புடைவை தான் - அதிலும் மாசு நிரம்ப! அணிபணி அகற்றிவிட்டு, பிரிவாற்றாமையால், பெருந்துயர் உற்று, கண்களிலே துளிர்த்திடும் நீர்த்துளியைத் தன் கைவிரலாற் போக்கி, கலங்கித் தவிக்கிறாள், அரசி. தந்தக் கட்டிலில் படுத்துத் துயில்கொள்ளாது துயரம் மிகுந்து, தத்தளித்துக்கொண்டிருக்கும் இந்த அரசியைப் பிரிந்து தான், பாண்டியன் நெடுஞ்செழியன் பாசறையில் உலவிக் கொண்டிருக்கிறான். "நெடுநல்வாடை’ காட்டும் பாடம், மறக்கப்போமோ!! நமது பொதுச் செயலாளருக்கு நெடுஞ்செழியன் என்ற பெயர் அமைந்திருப்பதும், அவரும் பிரிவு பற்றிய கலக்கமற்றுத் தான் நமக்காக அரும்பணியாற்றுகிறார் என்பதனையும் எண்ணும்போது, எப்படி இருக்கிறது, உனக்கு, எனக்குத் தம்பி! செருங்கரும்பின் சாற்றிலே, நம் குழந்தையின் உமிழ்நீரும் கலந்திருப்பதுபோல் இனிக்கிறது! களம் செல்வதெனின், காதலையும் மறந்திடும் ஆற்றல் கொண்டவர், தமிழர். காதலின்பம் பற்றிய கருத்தற்றவரோ, மனை மாண்பு அறியாதாரோ, எனின், அகம் கேலி செய்யும், அதற்கென்றே ஓர் களஞ்சியமாக நிற்கிறேன், அறிவிலிகாள்! ஏன் உமக்கு, அர்த்தமற்ற ஐயப்பாடு என்று கேட்கும். வறிய நிலத்திலே, உள்ளது நெரிஞ்சி. சிறிய இலைகள் கொண்டது; கண்ணுக்கினிய பூக்கள்கொண்டது. பூ உதிர்ந்ததும், காய் காய்க்கும், அது முள்ளாகிக் காலில் குத்தும். நெரிஞ்சியோ, புதுமலர் தருகிறது. கண்ணுக்கு இனிமை கிடைக்கிறது. அதே நெரிஞ்சியே முள்ளும் உதிர்க்கிறது, காலில் தைக்கிறது. இதனை எடுத்துக் காட்டி, என் காதலர் எனக்கு இனியது செய்தும் மகிழ்விக்கிறார்; அவரே பிறகு இன்னலை விளை விக்கிறார் எனைப் பிரியும்போது; நெரிஞ்சிபோல!! - என்று பிரிவுத்துயரை விளக்கிடத் தமிழணங்குக்குத்தான் தெரிகிறது! நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே! புன்புலத்து அமன்ற சிறிஇலை நெரிஞ்சி கட்குஇன், புதுமலர், முள்பயந்து ஆங்கு இனிய செய்த நம் காதலர் இன்னா செய்தல், நோம்என் நெஞ்சே! கண்ணுக்கு இனிமை தரும் புதுமலர் கிடைப்பதும் நெரிஞ்சியில்! - முள் பயந்து குத்துவதும் நெரிஞ்சியால்! என்று இயற்கை உவமையைக் காட்டி தன் உள்ளத்து நிலையை விளக்கிடும் தமிழணங்கு காண்கிறோம். இத்துணை அளவுக்குப் பிரிவாற்றாமை ஏற்படுகிறது என்பது அறிந்துந்தான், களம் சென்றனர் - உரிமை காத்திட, மரபு வாழ்ந்திட! களம் செல்லாக்காலை, எத்துணை கவர்ச்சி கண்டனர் காதலில்!! கார் காலம் கண்டான் தலைவன்! மயில் ஆடுகிறது! முல்லை மலருகிறது! உடனே, தலைவியின் நினைவு வந்து குடைகிறது. மேகத்தைவிட விரைந்து வருகிறான்; காதலியிடம் கூறுகிறான். மயிலைக் கண்டேன், உன்னைப்போலவே இருந்தது! முல்லை மலர்ந்திருக்கக் கண்டேன் - உன்னை எண்ணினேன்! ஒளி பொருந்திய நெற்றியை உடைய அரிவையே! விரைந்து வந்தேன்! - என்று காதல் பொங்கிக் கவிதை வடிவாகிறது! நின்னே போலும் மஞ்ஞை! என்று "ஐங்குறுநூறு’ அழகாகக் கவிதை அளிக்கிறது. காதலில் இத்துணை ஈடுபாடும், அதன் மாண்பினிலே சிறந்த பற்றும் கொண்டோரெனினும், நாடு காத்திடப் போர் எழுந்ததெனின், நள்ளிரவிலும் தூக்கம் வராமல், பாசறையில், பணியாற்றினர் தமிழர். அவர் வழிவந்தோம் - பழிச்சொற் களாகவா மாறிவிடுவது! வேண்டாம், தமிழர்காள்! வேண்டாம்! வீழ்ந்துபடுவதாயினும், வெஞ்சமர் புரிந்தான் பிறகு என்று உறுதிப்பாடு கொள்வோம். தமிழகம், தனி அரசோச்சிய நாட்களிலே, வீரம் குன்றாமல், அறமும் அடுபோரிற் காட்டவேண்டிய ஆற்றலும் குறைவற இருந்ததால், கொற்றம் தழைத்தது, இயற்கையுடன் உழைப்பும் கலந்து, வளம் கொழித்திருந்தது! வாரி வாரி வழங்கிடவும், வண்ணம் பல கண்டிடவும், வாணிபத்தில் சிறந்திடவும், இலக்கியச் செல்வத்தை ஈன்றெடுத்து வளர்த்திடவும் முடிந்தது. கடலிலே கிடக்கிறது, தம்பி, காவிரிப்பூம்பட்டினம். எனினும், கடியலூர் உருத்திரங்கண்ணனார் தந்துள்ள பட்டினப் பாலையில், அந்நகர் அழியாது நின்று தன் அழகை எடுத்தளிக்கிறது, காண்போம்: இதோ பார் சோழ நாடு! மாரி பொய்ப்பினும் தான் பொய்யாத பொன்னி ஓடுகிறது. கழனிகளில் விளைச்சல் அமோகமாக! கழனிகளில், கரும்பை அடும் ஆலைக் கொட்டில்கள் உள்ளன; ஆதலால் அந்த நெருப்பினால் ஆம்பல் பூக்கள் கருகிவிடுகின்றன. நெற் கதிர்களைத் தின்று தெவிட்டிப்போன நிலையில் எருமைக் கன்றுகள் துயிலுகின்றன! கதிர்களை, அவை தின்று தீர்த்ததால், குறை வந்ததுற்றதோ என்றால், அதுதான் இல்லை! நெற்கூடுகளின் நிழலிலேதான், எருமைக்கன்றுகள் துயில்கொள்ளுகின்றன! தெங்கு, வாழை, கமுகு, மஞ்சள், மா, பலா, இஞ்சி இவை, எங்கும்! நெல்லை உலர்த்தி இருக்கிறார்கள் வீட்டு வாசலில், கோழிகள் தின்ன வருகின்றன. அந்தக் கோழிகளை, மகளிர் பொற்குழைகளைக் கழற்றி எறிந்து விரட்டுகிறார்களாம்! இந்த வளம் உள்ளது சோழநாடு! இங்கிருந்து, கடல் கடந்து சென்றுள்ளனர் தமிழர், இற்றை நாளில், சோற்றுக்கு இங்கு வழியற்று!! இனி, காவிரிப்பூம்பட்டினம் காணப் போவோம். உப்பு விற்றுவிட்டு அதற்கு ஈடாக, நெல்கொண்டு வந்த படகுகள் வரிசையாகக் கட்டி நிற்கவைக்கப்பட்டுள்ளன. சோலைகள், பொய்கைகள், ஏரிகள்! மதில் சூழ்ந்த நகரம்! மதிலின் வாயிலில் இரட்டைக் கதவுகள்! மதிலிலே, புலிச்சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சோறிடும் சாலைகள் ஏராளம்! அங்கு வடித்த கஞ்சி ஆறென ஓட, அதிலே ஏறுகள் புகுந்து சண்டையிட, சேறாகி, பிறகு உலர்ந்து, புழுதியாகிறதாம்! கடல் வழி வந்த குதிரைகள் நிலவழி வந்த மிளகுப் பொதிகள் இமயச் சாரலின் மணியும் பொன்னும், குடகு மலைச் சந்தனமும், அகிலும், தென்கடல் முத்து கீழ்க்கடல் பவளம் ஈழ நாட்டுப் பொருள் காழக நாட்டுப் பொருள் இவைகளெல்லாம் மலைமலையாகக் குவிக்கப்பட் டிருந்தன; ஒவ்வோர் நாளும் விழாக்கோலமாம்! ஆடலும், பாடலும் அழகியதாய் அமைந்திருந்தனவாம்! கடலடி சென்று விட்டது காவிரிப்பூம்பட்டினம், கவிதை வடிவில் உள்ளது இன்றும்! நாமோ, நிலமிசை நின்றுவிட்டோம்; நீங்காப் பெரும் பழியை ஏற்று நிற்கிறோம். வளம், தமிழகமெங்கணுமே கொழித்திருந்தது, நன்கு தெரியத்தக்க கவிதைகள் இருந்துகொண்டு நம்மை இன்று, வேதனைக்கும், வெட்கும் நிலைக்கும் தள்ளியபடி உள்ளன! தமிழில் என்ன உண்டு என்றெண்ணிடும் பெருமதியேனும் பெற்றோமா! இல்லையே! தமிழின் இனிமையும், தொன்மையும், உள்ளத்தைத் தொட்டுத் தொட்டு அவ்வப்போது நம்மைத் தமிழனாக்கிவிடுகின்றன! பெருங்குன்றூர்ப் பெரும்புலவரொருவர் பாடியுள்ள மலைபடுகடாம், நம்மைத் தம்பி, படாதபாடு படுத்துகிறது! இவற்றினை நாடாமல், தேடாமல், நமக்கென்று கிடைத்துள்ள இலக்கியக் கருவூலம் என்று எண்ணாமல் எல்லாம் ஒன்றுதான் - எதில் எது இருந்தால் என்ன - எது போனால் என்ன - என்று எண்ணிக்கொள்ளத்தக்க துணிவினைப் பெற்றிட முடியவில்லை - கல்லாமை எனும் செல்வத்தை நாம் பெறாததால்! சில பல கற்றுத் தொலைத்தோம் - கருத்துகள் குடைகின்றன! அக்காலத்து அழகும் இக்காலத்து இடரும் இழிவும் ஒருசேரத் தெரிகின்றன! மலைபடுகடாம் காட்டிடும் வளம், காண்போம், வா, தம்பி! மழை, வேண்டியபோது பொழிந்து வளமளிக்கிறது. எல்லாம் செழித்து வளருகின்றன! விண்ணகத்து நட்சத்திரங்கள் உதிர்ந்து கீழே சிதறிக் கிடப்பதுபோல, கொல்லைகளிலே, முசுண்டைக் கொடியின் பூக்கள் உள்ளன. எள்ளு, எத்துணை வளமாக இருக்கிறது என்கிறார், புலவர்! ஒரு கைப்பிடியில் ஏழே காய்கள்தான் அடங்குமாம்! தொட்டதும் நெய் மணம். தினைக்கதிர்களைக் காண்கிறார் - கண்டதும், யானைக் கன்றுகள், விளையாடும்போது, துதிக்கைகளை ஒன்றோ டொன்று பிணைந்துகொண்டு நிற்பது நினைவிற்கு வருகிறது; அவ்விதம் உள்ளதாம், தினைக்கதிர்கள். அவரைப் பூக்கள் சிதறி இருப்பது, தயிர்க்கட்டிகள் வீழ்ந்து கிடப்பதுபோல் இருக்கிறதாம்! கரும்பு கண்டதும், புலவர் களமே சென்றுவிடுகிறார்! மிக வளர்ந்துள்ள கரும்புகள், காற்றினாலே ஒரு பக்கமாகச் சாய்ந்து அசைகின்றன. வேற்படைச் சேனைகள் ஓடுவதுபோலத் தெரிகிறது புலவருக்கு! வேண்டாம், தம்பி, வேண்டாம்! அந்த வளமத்தனையும் விளக்க விளக்க, இன்றைய வெறிச்சிட்ட நிலை தரும் வேதனை அதிகப்படும். இன்று இடர் படர்ந்துள்ளது, இல்லாமை கொட்டுகிறது; கல்லாமை அரசாள்கிறது. தமிழ்நாடு என்ற பெயர்கூட இல்லை. உயிர் தருகிறேன், உரிய பெயரை, உரிமைப் பெயரை, முன்னோர் நானிலமெங்கணும் சென்று பெருமிதத்துடன் கூறிய பெயரினைத் தாருமய்யா என்று கேட்டுக் கேட்டு, மடிந்தார், வீரத் தியாகி சங்கரலிங்கனார்! அதனாலென்ன - என்று கேட்டிடும் அன்பர் அரசாள்கிறார்! இடருக்கு இடையிலும், மின்னிடும் செல்வமோ, சிலரிடம் சிக்கிச் சீரழிகிறது. செப்பனிட்டுத் தீரவேண்டியன ஓராயிரம் உள்ளன! எதற்கும், செயல்படும் உரிமைபெற்ற கொற்றம் வேண்டுமே, அது மறுக்கப்பட்டுக் கிடக்கிறது. மனை அறம் கண்டு மகிழ்ந்திடும், இந்நாளில், தமிழகம் புதிய பொலிவு பெறுவதற்கான வழிவகை கண்டிடுவதே, எம் வாழ்வின் குறிக்கோள், என்று கொண்டிட வேண்டுகிறேன். அதற்கான பாசறையே தி. மு. க. அதன் செயல்படுதிறன் உன் ஆற்றலைப் பொறுத்தது! தம்பி, நீ விரும்பினால், இந்நாட்டைப் பொன்னாடு ஆக்க முடியும் - அதற்கு ஒன்று தேவை - பொன்னும் பொருளும் நமக்கு மட்டும் கிடைத்தால் போதும் என்று எண்ணும் தன்னலம் சுட்டெரிக்கப்படல் வேண்டும். முத்து முத்தாக, உன் திங்கள் முகத்தழகி, வியர்வையைச் சிந்தி, வெந்தழலின் வெப்பத்தைத் தாங்கிக்கொண்ட பிறகுதான், உனக்கு, இந்தப் பாற்பொங்கலும் பல்வகை உண்டியும் சுவை தந்து மகிழ்விக்கிறது! சுந்தரியின் "தியாகம்’ எனும் தேன் அதிலே கலந்திருக்கிறது. அந்த உண்மையை உணரச் செய்யும் உன்னத நாள் இன்று. மகிழ்ந்திரு! இன்புற்று உரையாடு! எவரிடமும் இன்சொல் பேசு, ஏற்புடைய நாட்டவர் நாம் என்பதனை மறந்திடாது இருந்திடச் சொல்லி, மற்றையோர்க்கும் சொல்லு. அனைவரும் சீரும் சிறப்பும் பெருக்கெடுக்கத்தக்க செல்வ ராய்த் திகழ, தமிழகம் புதிய பொலிவு பெறவேண்டும், அதற்கான முயற்சியிலே ஒரு கட்டம் இந்தப் பொதுத் தேர்தல், இதிலே ஈடுபட்டுள்ள தி. மு. க. வெற்றிபெறவேண்டும்; வாகையூர் சென்று வளமெல்லாம்பெற்று, தமிழர் வாழ்ந்திட, அது தான் வழி - என்பதனை எடுத்துக் கூறு. வாழ்க தமிழர்! வாழ்க தமிழகம்! இந்த என், வாழ்த்துரையை உனக்கு இல்லத்தார் தரும் இன்சுவைப் பண்டங்களுடன் கலந்துண்டு; இன்புற்று இரு - என் அருமைத் தம்பி! இன்புற்று இரு! வாகையூர் சென்றிடத்தக்க வலிவினை, உள்ளத் தூய்மையினை, இவ்விழா வழங்கிடுமாக! அண்ணன், 14-1-1957 படமும் பாடமும் (1) தேர்தலின் முடிவும் விளைவும் - வசவாளர்கள் - காமராஜரின் வெற்றி தம்பி! நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்! எத்தனை எத்தனை நாட்களாகிவிட்டன, நாம் உரையாடி!! என்ன இருந்தாலும் இப்படியா ஒரே அடியாகவா வாய்மூடிக் கிடப்பது? மறந்தே விட்டீர் என்றல்லவா எண்ணிக் கொண்டேன்! இப்போதாவது இப்படி ஒரு கடமை இருப்பது நினைவிற்கு வந்ததே!! இவ்விதமும், இதற்கு மேலும் பலப்பல கூறிட எண்ணுகிறாய் - நானறிகிறேன் - ஆனால் அடுத்த கணமே, உனக்கு ஒரு புன்னகை மலர்ந்திடுகிறது, நான் காண்கிறேன்! பாவம், நமது அண்ணன்மீது தவறு இல்லை, அந்த அளவுக்குக் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது - அந்தக் காரியத்தைச் செம்மையாகச் செய்துதீர வேண்டுமல்லவா, அதனாலேதான், கிழமைதோறும் நம்மிடம் பேசி மகிழும் வாய்ப்பையும் இழந்து, நின்றிட நேரிட்டது என்று தம்பி உன் மனமே எடுத்துக் கூறுகிறது, முகம் மலருகிறது! ஆனால் உண்மையில், அது சமாதானமல்ல - இத்தனை கிழமைகளாக, இந்தக் காரணம் காட்டி, சந்திக்காமலிருப்பது, முறையே அல்ல! வேலை, ஆயிரம் இருக்கட்டும்! உழைப்பு கடுமையாகத்தான் ஏற்படட்டும்! அதற்காக அன்புடன் உரையாடும் வாய்ப்பைக் கூடவா ஒதுக்கித் தள்ளிவிடுவது! அஃது எங்ஙனம் சரியாகும்! சரியல்ல! முறையல்ல! நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்!! அவ்விதமானால், அண்ணா! நீ, என்னதான் சமாதானம் கூறப்போகிறாய்? நாம் இத்தனை கிழமைகளாகச் சந்திக்காத தற்குக் காரணம் என்ன காட்டப்போகிறாய்? என்று கேட்கிறாயா தம்பி! கேள்!! தம்பி! நாம், இத்தனை கிழமைகளாகச் சந்திக்காததற்குக் காரணமல்லவா, கேட்கிறாய்! நாம் சந்திக்காதிருந்தால்தானே, காரணம் காட்டவேண்டும்! நான் எங்கே, உன்னைக் காணாமல் இருந்தேன்! ஒவ்வொருநாளும் நான் உன்னைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துக்கிடந்தேனே! ஒவ்வொரு புன்னகையிலும் பெருமூச்சிலும், வியர்வைத் துளியிலும் வீர முழக்கத்திலும் வாழ்த்தொலியிலும், வரவேற்பு உரையிலும், நான், உன்னைத்தானே கண்டேன்!! நான் எப்போது உன்னைக் காணாமலிருந்தேன், காணாததற்குக் காரணம் காட்ட!, எண்ணங்களை எழுதிக்காட்ட இயலவில்லையே தவிர நான் எந்தக் கணமும் உன்னைக் குறித்து எண்ணாமலிருந்த தில்லையே! வேறு என்னதான் இருக்கிறது, எனக்கு எண்ணி எண்ணிப் பெருமைப்பட, பூரிப்படைய!! எப்போதும், உன் நினைப்புத்தான்! எந்த இடத்திலும், உன்னைத்தான் கண்டேன்!! காடு கரம்புகளிலே சுற்றிய போதும், கழனி வெளிகளில் நடந்த நேரத்திலும், ஏரிக்கரைகளில் நடந்தபோதும், உளைகளைத் தாண்டிச் சென்ற சமயத்திலும், பட்டி தொட்டிகளிலேயும் சாலை சோலைகளிலேயும் உலாவிய போதும், பாட்டியிடமும் பெரியவரிடமும், துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தினரிடமும், அரும்பு மீசை வாலிபரிடமும் நான் உற்சாகத்தைக் கண்ட போதும், உன்னைத்தானே சந்தித்தேன்! எனவேதான், நீண்ட நாட்களாக நாம் சந்தித்தோமில்லை என்ற பேச்சே எழவில்லை; ஆகவே அதற்குக் காரணம் தேடிடவும் தேவை ஏற்படவில்லை! நாம், சில பல நாட்களாக, சந்திப்பதையும் உரையாடி மகிழ்வதையும், வழக்கமான முறையிலே அல்ல, புதியதோர் முறையிலே நடத்திக் கொண்டிருந்தோம். அந்தக் கட்டம் முடிவுற்றது. இனி நமது பழைய முறை துவக்கப்படுகிறது!! அப்பப்பா! இந்த இரு திங்களுக்கு மேலாக, நாம் எத்துணை கடுமையாக உழைத்திட வேண்டி நேரிட்டது; என்னென்ன விதமான தொல்லைகளையும் துயரங்களையும், இன்னல்களையும் எதிர்ப்புகளையும் காணவேண்டி வந்தது; புதியதோர் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். அதனைத் திறம்பட நடாத்திக் காட்டியாக வேண்டுமே என்ற கடமை உணர்ச்சி, நம்மை எல்லாம் கடுமையாக உழைக்கச் செய்தது; எரிதழலில் தள்ளிவிட்டோம், இனி இதுகள் சாம்பலாகிப் போகும் காணீர்! என்று கருதினர்; தழல் பெரிது, கொடிது! எனினும், கழகம், குப்பை கூளமல்ல, குச்சிமிலாரல்ல, சாம்பலாகிப்போக! புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கம் என்பார்களே அதுபோல, வெந்தழலில் கிடந்தது; தழல் அணைந்தது, தங்கம் கருகுமா? கழகம் இன்று தணலிலிட்ட தங்கமாகி நிற்கிறது. ஆனால் தம்பி, இந்த அரும் நிலைமையை அடைவதற்கு முன்பு, தணலில் தள்ளப்பட்டுக்கிடந்த நாட்களிலே எத்துணை எத்துணை தவிப்பு! இவ்வளவையும், நம்மால் தாங்கிக்கொள்ள முடிந்ததே என்பதை, இப்போது எண்ணிக்கொள்ளும்போது, களத்திலே பெற்ற "வடு’ மீது காதலியின் கூந்தலிலே செருகப்பட்டுள்ள முல்லை பட்டால் என்னவிதமான களிப்பு ஏற்படுமோ அதுபோலல்லவா இருக்கிறது. நான் தம்பி, நமது கழகத்தின் வலிவுபற்றியும், தாங்கிக் கொள்ளும் சக்திகுறித்தும், எப்போதுமே நம்பிக்கையற்று இருந்ததில்லை. எனினும் தேர்தலில் நாம் ஈடுபடுகிறோம் என்ற நிலை உருவானதும், பீறிட்டுக் கிளம்பிய பேய்க்காற்றைக் கண்டபோது சிறிதளவு நானே கலங்கிப்போனேன், கழகம் தாங்கிக்கொள்ளுமா என்பது குறித்து!! கரடி, கால்களைப் பிடித்து இறுக்கிட, மலைப்பாம்பு மரத்திலே சுற்றிக்கிடந்த நிலையில் வாய்திறந்து கழுத்தருகே அசைந்தாட, கரும்புலி மேலே பாய, தொலைவிலிருந்து செந்நாய்கள் சீறிட, புதரருகே நின்றபடி நரிக்கூட்டம் இரத்தம் குடித்திடச் சமயம் பார்த்திருக்க, கழுகுகள் மேலே வட்டமிட்டபடி இருக்க, வளைந்த வாளைக் கரத்திலே ஏந்திய ஓர் வீரன் இந்நிலையினின்றும், தன்னை விடுவித்துக் கொள்ளப் போரிடும் காட்சியை மனக் கண்ணாலே பார் தம்பி! அது போலல்லவா, தேர்தல்களத்திலே நமது நிலைமையிருந்தது! எப்படிச் சமாளித்தோம்!! எங்ஙனம் தாங்கிக்கொள்ள முடிந்தது!! எங்கிருந்து பெற்றோம், இத்துணை பயங்கர எதிர்ப்புகளையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை! எனக்கு வியப்புதான்! அதனாலேதான், இந்தத் தேர்தலில், நமக்கு வேதனை தரும் தோல்விகள் பல ஏற்பட்டபோதிலும், கழகத்தைப்பற்றிய நமது மதிப்பு உயர்ந்திருக்கிறது; கலக்கமடையவோ, மனம் உடைந்திடும் நிலைபெறவோ தேவையில்லை என்று கூறிட முடிகிறது. மண்ணைக் கவ்வினார்கள்! டிபாசிட் இழந்தார்கள்! படுதோல்வி அடைந்தார்கள்! பத்திலோர் பாகம்தான் கிடைத்தது! என்று கொட்டை எழுத்துக்களில் நம்மைக் குறித்து, எழுதுகிறார்கள். பார்க்கிறோம் - ஆனால் பதைக்கவில்லை - பீதி அடையவில்லை - ஏன்? ஏன்? என்பதற்கு, மாற்றார்கள் விடைகாண முயலு கிறார்கள். முடியவில்லை!! தம்பி! உன் ஆற்றலையும், தாங்கிக்கொள்ளும் சக்தியையும் அவர்களால் கணக்கெடுக்கத் தெரியவில்லை, எனவேதான், அவர்கள், பல இடங்களிலே இந்தப் பயல்கள் படுதோல்வி அடைந்தும், மண்ணைக் கவ்வியும், துளிகூட துக்கம் துளைத் திடும் நிலைபெறாமல், எப்போதும்போல "எக்காள’மிட்டபடி இருக்கிறார்களே - ஏன்? ஏன்? என்று கேட்டுக் கேட்டுக் கலக்க மடைகிறார்கள். வேதனை தரும் தோல்விகள் வெட்கப்படத்தக்க தோல்விகள் எரிச்சலூட்டும் ஏமாற்றங்கள் நம்பி மோசம்போன இடங்கள் இப்படிப் பலப்பல கண்டோம்! இவைகளை. கேசெய்வதற்காக, கேவலப்படுத்துவதற்காக, இழித்தும் பழித்தும் பேசுவதற்காக மற்றவர்கள் கூவிக் கூவிக் காட்டுகிறார்கள்! அவர்கள் எந்த நோக்கத்துடன், அவ்விதம் செய்வதாயினும் பரவாயில்லை, விடாமல் அவர்கள் அவ்விதம் குத்திக்குத்திக் காட்டவேண்டுமென்று நான் பணிவன்புடன் வேண்டி வேண்டிக் கேட்டுக்கொள்ளுவேன்!! தம்பி! உன் அரிய உழைப்புக்குப் பிறகும், அற்புதமான ஆற்றலுக்குப் பிறகும், உயரிய பணிக்குப் பிறகும், தூய தொண்டுக்குப் பிறகும், நாம் பல இடங்களில், டிபாசிட் இழந்தோம் படுதோல்வி அடைந்தோம் என்ற உண்மையை நாம், எக்காரணம் கொண்டும் மறந்திடக் கூடாது! நமது நெஞ்சிலே பாய்ச்சப்படும் இந்த உண்மை, வேதனையையும் வெட்கத்தையும் தருகிறது என்பதற்காக, நாம் இதனை வீசுவோர்மீது சினம்கொள்வது கூடாது - நான் சீலம் போதிக்கிறேன் என்று கேலிபேசாதே, தம்பி! அவர்கள் இந்தக் கணைகளை நம்மீது ஏவியபடி இருந்தால்தான், நாம், நமது நிலைமையைத் திருத்திக்கொண்டாக வேண்டும் என்ற உள்ளத் தெளிவினைப் பெறமுடியும்! எவ்வளவு பாடுபட்டோம், எத்துணை உழைப்பை அளித்தோம், மக்களிடம் எவ்வளவு கனிவுரை கூறி, ஆதரவு கேட்டோம், எனினும், பல இடங்களில் படுதோல்வி அடைந்தோம். பல இடங்களில் டிபாசிட் இழந்தோம். என்பதை மறவாதிருப்பதுதான், இனி இத்தகைய வேதனை தரும் தோல்விகளும், எரிச்சலூட்டும் ஏமாற்றங்களும் நம்மைத் தாக்காது இருக்க, நாம் என்ன முறையில் நடந்துகொள்ள வேண்டும், நமது முறைகளில் எதனை எவ்விதம் திருத்திக்கொள்ள வேண்டும், மக்களின் பேராதரவைப் பெறுவதற்காக மேலும் எம்முறையிலே பணியாற்ற வேண்டும் என்பனவற்றினை ஆய்ந்தறிந்து செயலில் ஈடுபடவைக்கும். இந்தப் பேருதவியைத்தான் நம்மைத் தூற்றுவோர் புரிகிறார்கள்! முன்னமோர் முறை, வாழ்க வசவாளர்கள்! என்று நான் எழுதியது நினைவிலே இருக்கிறதல்லவா! பொருளும் புரியுமே இப்போது. கோபக்கனலை உமிழ்ந்திடும் குணாளர்களே! தூற்றலைத் தொண்டாக்கிக்கொண்ட தூயவர்களே! இழிமொழி பொழிந்து இன்பம் காணும் பெரியீர்! தூற்றுங்கள்! தூற்றுங்கள்! தூ! தூ! என்று நாள் தவறாமல் நாக்கு வரண்டிடு மட்டும் தூற்றிக் கொண்டே இருங்கள். கைகொட்டிச் சிரியுங்கள்! கெக்கசெய்யுங்கள்! டிபாசிட்டு இழந்தனர் படுதோல்வி அடைந்தனர் என்பதைப் பன்னிப் பன்னிக் கூறுங்கள் - பதைக்கப் பதைக்கப் பேசுங்கள்!! ஆமாம், அன்பர்காள்! இந்தக் காரியத்தில் அகில முழுவதும் ஆசானாகத்தக்க அளவுக்கு ஆற்றலைப் பெற்று விளங்கிடும் அரசர்க்கரசர்காள்! அயர்ந்துபோகாமல் இந்த நாராசத்தை எடுத்தெடுத்து வீசுங்கள்! அப்போதுதான், எமக்கு, சூடும் சுறுசுறுப்பும் சூழ்நிலை விளக்கமும் செயல்படு முறையும் தரமும் திறமும் வழியும் வகையும் நிரம்ப நிரம்பக் கிடைக்கும் - கிடைக்கப் பெற்றால்தான், இன்றைய பதினைந்து, நாளை ஐம்பதாகும் அறுபதாகும். வேதனை தரும் தோல்விகள் மிரண்டோடும். செந்தேனென இனிக்கும் வெற்றிச் செய்திகள் விருந்தாகக் கிடைக்கும். எனவே, ஏசலை ஏவிப் பூசலை எதிர்பார்க்கும் இணையற்ற வீரர்காள்! நித்த நித்தம் தூற்றுங்கள், நிரம்ப நிரம்ப ஏசுங்கள். எம்மிலே செயலற்றுக் கிடப்பவனும் துடித்தெழுந்து செயலாற்றும் செம்மலாக உதவுங்கள். தம்பி! இந்தத் தேர்தலில் நாம் வேதனைப்படத்தக்க தோல்விகளைப் பெற்றோமே, அவை, நம்மை கவலைக் கடலிலே ஆழ்த்திவிட்டிருக்கும், கரை காணாமலும், உயிர்த்தெழ இயலாமலும் நாம் அதிலே அமிழ்ந்து போயிருப்போம். நமக்கென்றே தமிழகத்தில் தனிச்சிறப்புடன் அரசோச்சி வருகின்ற வசவாளர்கள் மட்டும் கிளம்பி, வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சாதிருந்தால்! அவர்தம் இழிமொழிதான், நம்மை, சோகக்கடலிலே ஆழ்ந்துபோவதினின்றும் தப்பவைக்கிறது - அந்தோ! அயராது உழைத்த எமக்கு, அருள்தொண்டாற்றும் எமக்கு, தூயதோர் பணியிலே ஈடுபட்டுள்ள எமக்கு, தாய்த் திருநாட்டின்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கி எறிந்து, தன்னரசு காணவேண்டுமென்று தளராது உழைக்கும் எமக்கு, மக்கள் தம் ஆதரவு இன்னின்ன இடத்திலே இன்னமும் கிடைக்கவில்லையே, தோல்வியன்றோ துரத்தி வந்து தாக்கிற்று, நமது விளக்கமும் வேண்டுகோளும் தெளிவாக இல்லையோ, நமது பணியின் மாண்பு மேலும் பண்பு பெறவேண்டுமோ, மக்களை அணுகி அளவளாவுவதிலே நாம் எடுத்துக்கொண்ட முயற்சி போதாதோ, காரணம் யாதோ? நம்மைச் சிலபல இடங்களிலே வெற்றிபெற ஒட்டாது செய்துவிட்டனரே. நம்மைக் கெடுத்தாலும் தடுத்தாலும் பரவாயில்லை, அங்ஙனம் செய்வதன் மூலம், நாம் எந்த இலட்சியத்தைப் பரப்புகிறோமோ, அந்த இலட்சியத்துக்கு இழிவும் இன்னலும் ஏற்பட்டுவிடுமோ, இனி அதுபோன்றதோர் காரியத்துக்கு ஒரு இடையூறு நேரிடாதிருக்க, நாம் வெற்றிக்கானும் வகையில் நமது முறைகளைத் திருத்தி அமைக்கவேண்டும், ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள வேண்டும், கூட்டுச் சக்தியைத் தேடிப்பெறவேண்டும். மக்களிடம் உள்ள தொடர்பு மேலும் கனிவுள்ளதாகிட வழிகோலவேண்டும் - என்ற இன்னோரன்ன பிற எண்ணங்களை நாம் பெறவும், பெறுவதன் மூலம் எதிர்கால வெற்றிகளுக்கான அச்சாரம் காணவும், இழிவினைப் பழியினை, இல்லாததை இட்டுக் கட்டியதை, எரிச்சலை, குமுறலை, காய்ச்சலை, கசப்பை, பொல்லாங்கை பொச்சரிப்பை, நச்சு நினைப்புகளை, நாசக்கருத்துகளை, வாரி வாரி வீசிடும் உத்தமர்களல்லவா உதவுகிறார்கள்! வாழ்த்திடத் தவறலாமா!! அதனால்தான், தம்பி, மீண்டும் அவர்களை எண்ணி, நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியுடன். வாழ்க வசவாளர்! என்று வாழ்த்துகிறேன்! சோகம் கப்பிக்கொண்ட நம் உள்ளத்துக்கெல்லாம், சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் சுரந்திடச் செய்யும் சுடுசொல் வீசி, நம்மை எழச் செய்கிறார்கள்!! எழுந்து நின்று, துக்கத்திரையை நீக்கியபடி, சூழ்நிலையை மீண்டும் பார்க்கிறோம். ஆங்காங்கு தாரகைகள் மின்னிடத்தான் செய்கின்றன! வெற்றிக் கதிரொளியும் தெரியத்தான் செய்கின்றது! பெருமைப்படவும் பேசிப்பேசி மகிழவும் தக்க சீரிய வெற்றிகள் சிற்சில கிடைத்துத்தான் இருக்கின்றன! பாலைவனம் என்றெண்ணிப் பதைக்கிறோம். நீரோடைகள் நிரம்பித்தான் உள்ளன!! வேதனைப்படத்தக்க தோல்விகளை நாம் கண்டு கவலைப்படத்தான் செய்கிறோம்; ஆனால் அதே போது, உற்றுப் பார்க்கும்போது, கைகளைப் பிசைந்துகொண்டும், கண்களைக் கசக்கிக்கொண்டும், முணுமுணுத்துக்கொண்டும், சபித்துக் கொண்டும் நிற்கும் அன்பழிக்கும் அருங் குணத்தார்களைக் காண்கிறோம். காரணம் என்ன என்று கேட்கிறோம், அவர்கள் ஆயாசப்படத்தக்க அச்சப்படத்தக்க ஐயோ! அம்மா! என்று அரற்றிடத்தக்க!! அவனா! அவனா! அவனா! என்று கொதித்துக் கூவிடத் தக்க வெற்றிகளையும் பெற்றிருக்கிறோம்!! என்பது புரிகிறது!! அந்த வெற்றிகளால் நாம் அடக்கமுடியாத நம்பிக்கைப் போதை கொள்ளாது தடுத்திட, வேதனை தரும் தோல்விகளும், அவைதமைக் குறித்து வீசப்படும் வெந்தழலினும் கொடிய வசைமொழிகளும் பயன்படுகின்றன; அதுபோன்ற, நாம் அடைந்த தோல்விகள் நம்மைத் துளைத்துத் துளைத்துச் செயலற்றவர்களாக்கிடும்போது, பெற்ற ஒருசில வெற்றிகள் பளிச்சிட்டுக் காட்டி, நம்மை, பாதையை மறவாதீர்! பணிபுரியத்தவறாதீர்! சோகக் கடலில் ஆழ்ந்திடாதீர்! சொல்லம்பு கண்டு நிலைகுலையாதீர்! வெற்றி இதோ காணீர்! வேதனையைத் துடைத்துக்கொண்டு, புதிய வேகத்துடன் பணியாற்றி, மேலும் பலப்பல வெற்றிகள், வேதனையைத் துடைத்திடத்தக்க வெற்றிகளைப் பெறவாரீர்! என்று அழைத்திடக் காண்கிறோம் - தன்னடக்கமும் பெறுகிறோம், தன்னம்பிக்கையையும் மீட்டுக்கொள்கிறோம். தம்பி! இதுதான், இன்று நமது நிலைமை!! சிந்தித்துப் பார், சிறிதளவு உன்னிப்பாக - பிறகு, மீண்டும் ஒரு முறை படித்ததைத் திரும்பப் படித்துப் பார். படமும் தெரியும் பாடமும் கிடைக்கும்!! “நூறு இடங்களுக்குமேல் தேர்தலில் போட்டியிட்ட”இதுகள்’ கேவலம் பதினைந்து இடங்களிலேதான் வெற்றிபெற முடிந்தது’’ என்று பேசுகிறார்களல்லவா, தம்பி, அவர்களை, நான் மூன்று வகையினராகக் காண்கிறேன். 1. அதனையும் செய்ய இயலாதார். 2. அதைக் கண்டே அச்சம்கொண்டார். 3. அது நமக்குப் போதுமே என்று அங்கலாய்ப்போர்! அண்ணா! இப்படி ஏன் சுற்றிவளைத்துப் பேசுகிறாய், சுருக்கமாக இன்னின்ன கட்சிகள் என்றுதான் கூறிவிடேன் என்று கேட்கிறாய், தம்பி தெரிகிறது, நீயேதான் அந்த வேலையைச் செய்து விடேன்! காங்கிரஸ் கட்சி, நம்மைவிட அதிகமான இடங்களிலே தேர்தலில் ஈடுபட்டது, பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது, முறையும் நெறியும், பிறகு கவனிப்போம் - வெற்றிபெற்றிருக்கிறது - எனினும், மிகமிகக் குறைந்த அளவு இடங்களையே பெற முடிந்த, நம்மிடம் அந்தப் பெரிய கட்சி அலட்சியமாகவா நடந்துகொண்டது!! ஊர் உலகம் அறியுமே, நம்மை வீழ்த்த, காந்தியாரின் கண்ணீரைப் பன்னீராக்கிக் குளித்து மகிழ்ந்திடும் அந்தக் கட்சி, எவ்வளவு உழைத்தது, உழன்றது, ஊரை அடித்து உலையில் போடுபவனுடைய கரத்தைப் பிடித்துக்கொண்டு, இது கையல்ல… … என்று என்னென்ன சொல்லி, கெஞ்சிக் கூத்தாடிற்று, எவ்வளவு எவ்வளவு கொட்டிற்று என்பதனை எல்லாம் அறியாதார் யார்? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போதுமல்லவா, பதம் பார்க்க! இதோ, பார்!! சாத்தூர் தொகுதியில் தேர்தலுக்கு நின்றார் முதலமைச்சராக இருக்கும் காமராஜர்! அந்த முலாம் கலையாதிருக்கும் நிலையுடன்!! காமராஜருக்கு, பெரியாரின் பேராதரவு எனும் புதிய கவசமும் கிடைத்தது! ஆச்சாரியாரை வீழ்த்தியவர் என்ற "விருது’ வேறு அவருக்கு ஏற்கனவே இருக்கிறது. தேர்தல் காரியத்திலே "அசகாயச் சூரர்’ என்று புகழ் சூட்டப்பட்டவர். களத்திலே ஈடுபடுமுன்பே உழைப்பாளர் கட்சியை ஒழித்துக் கட்டியதன் மூலம், ஒரு பலமான எதிரியைப் பக்குவமாகத் தன் முகாமுக்கு இழுத்துக் கொண்டவர். இவ்வளவு ஆற்றலுள்ளவர் - காமராஜர் - தேர்தலுக்கு நின்ற இடமோ, சொந்தத் தொகுதி! எதிர்த்து நின்றாரே ஜெயராம ரெட்டியார், அவரை, தம்பி உனக்குத் தெரியுமா? ஊராரைக் கேட்டுப் பார், தெரியுமா என்று. ஜெயராம ரெட்டியாரின் அறிவாற்றல், தேசத் தொண்டு, தகுதி திறமை, நேர்மை நாணயம் ஆகியவைபற்றி, இந்துவோ மித்திரனோ, தினமணியோ, கல்கியோ, விகடனோ வேறு இதழ்களோ எழுதிப் படித்ததுண்டா - நீயோ, நாடோ? இல்லை! அவருடைய படங்களைப் பத்திரிகைகள் வெளி யிட்டனவோ? இல்லை! அவர்தான், ஊரறிந்த, உலகறிந்த, முதலமைச்சராகவும் பெரியாரின் பேரன்பராகவும் கொலுவீற்றிருக்கிற காமராஜருக்குப் போட்டி!! டிபாசிட் கிடைக்கலாமா? இப்படிப்பட்ட, அசகாயச் சூரரை எதிர்க்கிறவருக்கு!! தலைமுறை தலைமுறையாகத் தமிழர்கள், காமராஜரைப் பூஜை செய்யவேண்டும் என்று, பூஜாமுறைகளே புரட்டு என்று ஐம்பதாண்டுகளாகப் போதித்துவரும் பெரியாரே பேசுகிறார். அப்படிப்பட்ட, தமிழரின் பாதுகாவலர் தேர்தலுக்கு நிற்கும் போது, யார், எவர் என்று ஊரார் ஆவலுடன் கேட்டுக்கேட்டு விவரம் கிடைக்கப் பெறாமல் திண்டாடும் நிலையில், ஒருவர் போட்டியிடுகிறார். அவரை வீழ்த்திய விருதுநகரார், பெற்ற அதிக "ஓட்டுகள் எத்தனை? தம்பி! சாத்தூரில், காமராஜர் போட்டியிட்டாரே, நமக்குத்தான் காமராஜரை கவிழ்ப்பதுதான் வேலை என்ற அரசியல் இரகசியத்தை பெரியார் தமது முழு ஆற்றலையும் கொண்டு கண்டுபிடித்து, உலகம் உய்யட்டும் என்ற உயர்ந்த நோக்குடன் இந்த உண்மையை நாளைக்குப் பத்து கூட்டங்கள் மூலம் எடுத்துரைத்து வந்தாரே,- அவருடைய அபூர்வ கண்டுபிடிப்பு உண்மை என்றால், நாம் சாத்தூர் சென்று, காமராஜருக்கு ஓட்டுப்போடாதீர்கள் என்று பேசியிருக்க வேண்டுமல்லவா? நானோ, ஆசைத்தம்பியோ, அன்பழகனோ, சம்பத்தோ, கருணாநிதியோ, கண்ணதாசனோ, சிற்றரசோ, சண்முகமோ, சத்தியவாணியோ, நடராசனோ, யாராவது சாத்தூர் சென்றோமா? சென்று ரெட்டியார் நல்லவரோ கெட்டவரோ ஒருபுறம் அது கிடக்கட்டும், சங்கரலிங்கனாரைச் சாகடித்தவருக்கு சென்னைக்குத் தமிழ்நாடு என்ற பெயர் வைக்காதவருக்கு தேவிகுளம் பீர்மேடு பறிகொடுத்தவருக்கு ஓட்டுப் போடாதீர்கள்! என்று பேசி இருக்கக் கூடாதா? நமது பிரச்சாரம் அங்கும் மும்முரமாகி இருந்தால், காமராஜரின் வெற்றிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்காதா? நெஞ்சில் கை வைத்து சொல்லச் சொல்லுங்கள் - நெஞ்சில் நேர்மைக்கு இடம் தருபவர்களை!! அரசியல் நாகரிகம், நம்மை சாத்தூர் பக்கம் போகவிடாமல் தடுத்தது! ஆனால் அவர்? ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்கள் - அகப்பட்டுக் கொண்டு விழிக்கப் போகிறார்கள் என்று அரசியல் பேசுகிறாரே அந்தக் காமராஜர், 100க்கு 15 என்ற கேலிக்கு இலக்காகி உள்ள நாம், தேர்தலில் ஈடுபட்டபோது, வராத இடம் உண்டா? வரிந்து கட்டாத நாள் உண்டா? பம்பரம் போல் சுழன்றாடவில்லையா? இப்போது மூன்று வகையினர் குறிப்பிட்டிருக்கிறேனே, அதிலே இரண்டாவது வகை யார் என்று யோசித்துப் பாரேன்! புரிகிறது!! அதுபோன்றே மற்ற இரண்டு குறித்தும், சிந்தித்துப் பார், படமும் தெரியும் பாடமும் கிடைக்கும். அண்ணன், 31-3-57 படமும் பாடமும் (2) தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றியும் விளக்கமும் - காங்கிரசும் கம்யூனிஸ்டும். தம்பி! "கண்ணே! காதற்கனியே! இன்னும் ஓர் திங்களில் நான் வந்து சேருகிறேன். தென்றலும் திங்களும், தேன்மொழியாளே! உன்னைத்தான் வாட்டுகின்றன என்று எண்ணாதே; என்னை அவை இரண்டும் ஈட்டி எனக் குத்துகின்றன. எனினும், என் அன்பே! உனக்கு, முத்துமாலையும் தங்கவளைகளும், உன் அழகுக்குத் தக்கதான அணிபணி பலவும் பூட்டி அழகுகண்டு பெருமைப்படத்தானே, நான் இங்கு அல்லும் பகலும், கொல்லும் நினைப்பினையும் ஒருபுறம் நிறுத்தி வைத்தபடி, பாடுபல பட்டவண்ணம் இருக்கிறேன். பால் வண்ண நிலவே! விரைவில் வருகிறேன்! நான் உனக்குக் கொண்டுவர இருக்கும் அணிகளை அணிந்துகொண்டு, அன்னமென நீ நடந்து செல்ல, ஆரணங்குகள் பலரும் உன்னைக் கண்டு, பெற்றாள் பெருமைக்குரிய மணாளனை! அதனால் அழகு மயிலாள் ஆனந்தவாழ்வு பெற்றாள்! என்று புகழ்ந்துரைக்கக் கேட்டு, அன்று உன்னை, முதன் முதலாக முந்திரிச் சோலையிலே அந்திசாயும் வேளையிலே தொட்டிழுத்து முத்தமிட்டேனே துணிவுடன். நீயும், துரையே! இதென்ன துடுக்குத்தனம் என்று கொதித்துக் கூறுவதுபோலத் துவக்கி, மறுகணமே, புன்னகையுடன் என் மார்பகத்தில் சாய்ந்தனையே, அன்று கண்ட இன்பத்துக்கு இணையான இன்பம் பெறுவேன்! அதற்கே, இந்தப் பிரிவு! அஞ்சாதே! நெஞ்சில் உறைபவளே! வழிமேலே விழிவைத்துக் காத்துக்கிடக்கிறாயே, வஞ்சி! உனைவிட்டுச் சென்றவன், அப்படி என்னதான் கொண்டு வந்து உன்முன் குவித்திடப் போகிறானோ! என்று மகளிர் சிலர் எள்ளி நகையாடிப் பேசுவதாகக் குறித்திருக்கிறாய். கேலி பேசிய அந்தப் பாதி மதியினர், அகலக் கண் திறந்து, ஆச்சரியம் கொள்ளத்தக்க விதத்தில், நான் உனக்கு, ஆடை அணி கொண்டுவந்து தருகிறேன். தந்து, உன்னிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுகிறேன்!! பொருள் தேடச் சென்ற தலைவன், பிரிவாற்றாமைப் பெருந்துயரில் சிக்குண்ட தலைவிக்கு இதுபோலன்றோ மடல் எழுதுவான். ஏந்திழையின் உள்ளத்திலே எத்தனை எத்தனையோ சுவைமிகு எண்ணங்கள் கூத்தாடும். பிறகோர் நாள், திரும்பிய தலைவன் தலைவிக்கு எண்ணற்ற முத்தங்களைத் தந்துவிட்டு, தத்தை மொழியாளே! உனக்கென நான் ஏதேதோ தேடிப் பெற்றுவர வேண்டுமென்றுதான் படாதபாடு பட்டேன்; எனினும் உன் அழகுக்கு ஏற்ற அணிபணி கொண்டுவந்தே னில்லை; முயன்று பார்த்தேன், முடியவில்லை! செல்வம் குவிந்திடும் செய்தொழிலால் என்று எண்ணினேன்; ஆனால் ஏய்ப்பவன் இழுத்த பக்கமே செல்வம் செல்கிறது; உழைப்பவனை உதாசீனம் செய்கிறது என்ற உண்மையைத்தான் கண்டேன்; உனக்கு ஏமாற்றம் தருகிறேனே என்று எண்ணும்போது, துக்கம் துளைக்கிறது, வெட்கம் வேலாகக் குத்துகிறது; என் செய்வேன்! என்னால், உனக்கென்று கொண்டுவர முடிந்தது இது ஒன்றுதான்’’, என்று கூறியபடி, அவளிடம் ஒரு கைவளையோ, காலுக்குத் தண்டையோ, கூந்தலிற் செருகிக்கொள்ள ஒரு திருகோ, கழுத்திலே பூட்டிக்கொள்ள ஒரு மாலையோ, மட்டும் கொடுத்திடுகிறான் என்றால், அவன் இதய ராணி, “செச்சே! இதுதானா! இவ்வளவுதானா! உமது ஆற்றல் இதற்குத்தானா பயன்பட்டது! இந்த இலட்சணத்துக்கா, ஈராறு மாதங்கள் உழைக்கிறேன், உழைக்கிறேன் - கொண்டுவந்து குவிக்கிறேன் குவிக்கிறேன் என்றெல்லாம் கூறிக்கூறி என்னை ஏய்த்து வந்தீர்! எங்கோ வெளியூர் சென்றிருக்கிறார் மணவாளர், எனக்காகக் கரியும் பரியும் கட்டித் தங்கமும் கல்லிழைத்த நகைகளும் கொண்டு வரப்போகிறார் என்றெல்லாம் கூவிக் கிடந்தாயே, விவரமறியாதவளே! உன் கணவன் கொண்டு வந்தது இதுதானா! என்று என் தோழிகள் கேலி பேசுவரே என்றெல்லாமா, பேசுவாள்!”அன்பே! திரும்பி வந்து உமது அன்பைப் பொழிந்தீரே, அது போதும் எனக்கு! உமது புன்னகையை எனக்களித்துவிட்டீர், அதனினும் மேலான அணியும் பணியும் அவனியில் உண்டா? இந்த நகைகூட, எனக்கு நீர் கொண்டு வந்திராவிட்டாலும், நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்! எனக்கு ஏதேதோ அணிபணிகள் பெற்றுத் தரவேண்டும் என்பதற்காக அல்லவா, கண்காணா நாடு சென்று கடினமான உழைப்பிலே ஈடுபட்டீர், எவ்வளவு அன்பு, உமக்கு என்னிடம் என்று எண்ணும்போதே, என் உடல் புளகாங்கிதமாகிவிடுகிறது - என்றல்லவா கூறுவாள். அதுபோலத்தான் தம்பி! நூறு இடங்களுக்குமேல் தேர்தலில் போட்டியிட்ட நாம், 15 இடங்களை மட்டுமே பெறமுடிந்தது என்று துக்கத்துடனும் வெட்கத்துடனும் எடுத்துக் கூறும்போது, நாட்டிலுள்ள நல்லோர், ஆயாசப்பட வேண்டாம்! கிடைத்தது குறைந்த அளவு என்றால் என்ன! உங்கள் முயற்சியின் தரத்தையும் திறத்தையும் கண்டு நாங்கள் மகிழ்கிறோம்! பெற்ற வெற்றி, பெற்றிருக்க வேண்டிய வெற்றியைக் கவனப்படுத்துவதாக அமைகிறது, கவலைப்படவோ, கலக்கமடையவோ அல்ல! என்று கூறி, நம்மை ஊக்குவிக்கிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள்! நமக்கு அதிலும் குறிப்பாக எனக்கு, இவ்வளவு குறைந்த அளவு மட்டுமே கிடைத்ததே என்ற எண்ணம் ஒவ்வொரு கணமும் நெஞ்சைக் குடைகிறது - என்றாலும், இந்த வெற்றியை எங்ஙனம் காதலன் கடும் உழைப்புக்குப் பிறகு, கொண்டு வந்து கொடுத்திடும் கைவளையையோ, காதணியையோ, அன்பின் காணிக்கை என்ற முறையில், காதலி பெற்று அகமகிழ்ந்து பூரிப்படைவாளோ, அதுபோலவே நாம் பதினைந்தே இடங்களிலே மட்டுமே பெற்ற வெற்றியை, நல்லோர், பெருமைக்குரியதாகக் குறிப்பிட்டு, நம்மைப் பாராட்டுகிறார்கள். மலையைக் கெல்லி எலியைப் பிடித்தனர்! என்று நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். - நாடு என்றால், நல்லதும் கெட்டதும், நொந்ததும் வெந்ததும், பலபட இருக்கத்தானே செய்யும். நல்லோர் கூறுவது, மலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள் என்பதல்ல; மலையைக் கெல்ல முடிந்ததே, கிடைத்தது எலிதானே என்று கவலைப்படத் தேவை யில்லை; மலையைக் கெல்லும் ஆற்றலையும் கெல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் பெற்றீர்களல்லவா, அது சாதாரணமானதல்ல; பெற்ற வெற்றி, இனிப் பெறவேண்டிய வெற்றிக்கு அச்சாரம் என்று கொள்ளுங்கள்; முறை புரிந்துவிட்டது, இனி அடுத்த முயற்சி பலன் அதிகம் பெற்றுத் தரும் என்று கூறி வாழ்த்துகிறார்கள். மலையைக் கெல்லினோம் - எலிதானே கிடைத்தது என்று நானேகூடச் சிறிதளவு சோகமாகக் கூறும்போது, அந்த நல்லவர்கள், "இதற்கேன் கவலைப்படுகிறாய்! என்றுமே உன்னைப் பற்றியும் உன் முயற்சிகளைப்பற்றியும் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டு, இழிமொழியைக் கக்கிக்கக்கி தமது நெஞ்சிலே உள்ள பாரத்தைக் குறைத்துக் கொள்ளுபவர்கள்தானே, இப்போதும் மலையைக் கெல்லினார்கள் எலி பிடித்தார்கள் என்று ஏளனம் செய்கிறார்கள் - சொல்லட்டுமே, அதனால் என்ன, மலையைக் கெல்லினார்கள், எலியைப் பிடித்தார்கள் என்று அவர்கள் சொன்னால், வலையை வீசினார்கள் பாசியைப் பெற்றார்கள், குப்பையைக் கிளறினார்கள் குண்டூசியைக் கண்டெடுத்தார்கள் என்று ஏதாவது திருப்பிச் சொல்லிவிட்டுப் போயேன். என்று கூடச் சொல்லித் தருகிறார்கள். நான்தான் தம்பி! பதில் கூறிக் காலத்தை வீணாக்கிக் கொள்வதில்லையே!! அதனால், மலையைக் கெல்லி எலி பிடித்தார்கள்; மண்ணைக் கவ்வினார்கள், செம்மையாக உதைபட்டார்கள் என்றெல்லாம் சிலர் பேசுவது கேட்டுப், பதில் அளித்திடாமல், அவர்கள் அவ்விதமாகப் பேசுவதை, நாம், நமது கழகத்துக்கு எந்த வகையிலே பயன் படுத்திக்கொள்வது என்ற ஆராய்ச்சியிலே ஈடுபடுகிறேன். அது பலன் அளிக்கிறது; நிச்சயமாகவே!! நாடு, நாம் பெற்ற இடங்கள் பதினைந்து என்றபோதிலும் அது குறித்துத்தான் பேசுகிறது - ஏன் இவ்வளவு குறைவாகப் பெற்றார்கள் என்று ஒரு சாராரும் - இவ்வளவுதானா பெற முடிந்தது என்று மற்றோர் சாராரும் - இவ்வளவுகூட எப்படிக் கிடைத்தது என்று வேறோர் சாராரும் - இவ்விதம் பல்வேறு வகையாக - நாடு பேசுகிறது!! இதன் பொருள் என்ன? நாட்டவரின் விழி, நம்மீது இருந்த வண்ணம் இருக்கிறது என்பதல்லவா பொருள்! அந்த “நிலை’யை அடைவதென்பது, சாமான்யமானது அல்ல என்பதை அரசியல் தெளிவு படைத்தவர் அனைவரும் அறிவர். அந்த”நிலை’யைப் பெற முடிந்தது நமது கழகத்துக்கு, நாட்டு மக்கள் கூர்ந்து நோக்கி, மதிப்பிட்டுப் பார்க்கத்தக்க கட்டம் வந்திருக்கிறது என்பதனால்தான், நாட்டிலே உள்ள நல்லவர்கள், பதினைந்து இடங்களிலே நாம் பெற்ற வெற்றியை, காதலன் தன் காதலிக்குத் தந்த பரிசுப் பொருள் போன்றது என்ற முறையில் மகிழ்ந்து கொண்டாடி, வரவேற்பளித்து வாழ்த்துகிறார்கள். வாட்போரில் ஈடுபட்ட இரு வீரர்களில், வென்றான் ஒருவன், வீழ்ந்தான் மற்றவன் என்றால், வீர மரபு அறிந்தவனாக வென்றவன் இருந்தால், வீழ்ந்தவனைக் கேலி செய்யமாட்டான்; வீழ்ந்துவிட்டான் இம்முறை எனினும், அவன் நல்ல திறமை பெற்றிருக்கிறான், மிகமிகக் கஷ்டப்பட்ட பிறகே அவனை வீழ்த்த முடிந்தது, வீச்சு முறை நேர்த்தியாக இருக்கிறது, மேலும் சிலகாலம் பயிற்சி இருந்தால், நம்மை நிச்சயம் வீழ்த்தியிருப்பான் என்று எண்ணிக்கொள்வான். இடி இடியெனச் சிரித்து, “ஏடா மூடா, என்னிடமா போரிடத் துணிந்தாய்! என் வாள் வீச்சுக்கு முன்பு நீ எம்மாத்திரம்? பிழைத்தோடிப்போ! இனி, உன் கரத்தால் கத்தியைத் தொடாதே!’ - என்று கடுமொழியைச் செருக்குடன் வென்றவன் பேசுகிறான் என்றால், அவன் வீரமரபு அறியாதவன் என்றே விவேகிகள் கூறுவர். தம்பி! வென்றவன் நம்மைப் பார்த்து வீழ்ந்தவனே! என்று கேலி பேசிடக்கூட இல்லை! ஆனால்,”வென்றவனுடன் இருந்தோம்’ என்பதை பெறுவதற்கரிய விருது என்று எண்ணிக் கொள்பவர்கள், நம்மை கேலி பேசுகின்றனர், வீழ்ந்தாயா! வீழ்ந்தாயா! செம்மையாக விழுந்ததா அடி!! ஹை, ஹை! ஹி!, ஹி!, ஹா, ஹா! என்று கூவுகிறார்கள் - அதனை வீரமுழக்கம் என்று வேறு எண்ணிக்கொள்கிறார்கள். வீரர் இருவர் குறித்த எடுத்துக்காட்டினைத் தொடர்ந்து கற்பனை செய்து பார், தம்பி! வென்றவன், வீழ்ந்தவனுடைய வீச்சுத் திறமையை வியந்துகொண்டிருக்கும் வேளையில், வேறோர் ஆசாமி அங்கு வந்து, கெக்கலி செய்தபடி “வீழ்ந்தாயா, வீழ்ந்தாயா! வேண்டும்! வேண்டும்! தலை வேறு உடல் வேறு ஆகியிருக்க வேண்டும், ஏதோ தப்பித்துக்கொண்டாய்! வாட்போர் ஒரு கேடா உனக்கு!’’ என்று கேலி பேச,”ஐயா! யாரே நீவிர்’ என்று வீழ்த்தப்பட்ட வீரன் கேட்கும்போது, “தெரியவில்லையா பயலே! நான்தான் உன்னை வீழ்த்திய வீரன், கைவாளுக்குத் தைலம் பூசியவன்! இப்போது தெரிந்துகொள் நீ, யாரால் தோற்கடிக்கப்பட்டாய் என்பதை’’ என்று கூறினால், வென்றவன், வீழ்த்தப்பட்டவன் எனும் இரு வீரருமேயன்றோ. கைகொட்டிச் சிரித்தபடி,”பலே! பலே! வீரதீர கெம்பீரச் சிங்கமே! வாழ்க! வாழ்க!’’ என்று கூறுவர். அது போலத்தான், 150 - இடங்களைப் பிடித்த காங்கிரஸ், 15 - இடங்களை மட்டுமே பெறமுடிந்த, நம்மிடம் வாள்வீச்சுத் திறமை வகையாக இருக்கிறதே என்றெண்ணி வியந்துகொண் டிருக்கும் வேளையில், காங்கிரசுக்குத் தேர்தல் களத்திலே வாளுக்குத் தைலம் பூசிக்கொடுக்கும் திருப்பணியாற்றியவர்கள், வீழ்ந்தாயா! வீழ்ந்தாயா என்று நம்மை நோக்கி நையாண்டி செய்கிறார்கள். காங்கிரசும், இந்தக் "கேலிக்கூத்து’ கண்டு கைகொட்டித்தான் சிரிக்கிறது! நாம் அதுகூடச் செய்வது, நேரக்கேடு என்று கருதி, 150 இடங்களைக் காங்கிரசினால் எப்படிப் பெறமுடிந்தது, நாம் ஏன் 15 - இடங்களை மட்டுமே பெற்றோம், நமது முறையிலே என்ன கோளாறு இருக்கிறது, என்பதைக் கண்டறிந்து, எதிர்காலத்துக்கான காரியத்தை உருவாக்குவதிலே ஈடுபடுகிறோம். 150 இடங்களிலே வெற்றி பெற்ற காங்கிரசுக்கு, நிச்சயமாகத் தெரியும் பதினைந்தே இடங்களைப் பெற்ற நமது கழகம், எந்த அளவுக்குத் தேர்தல் களத்திலே திறமையைக் காட்ட முடிந்தது என்ற உண்மை; இடையே இருந்தவர்கள், யாதறிவர் பாபம்! அவர்கள் அறிந்ததெல்லாம், ஆத்திரம் தீரத் திட்டித் தீர்த்தோம்! ஆபாச அகராதியை ஒப்புவித்துக் காட்டினோம்! அதுவும் மற்றவர் செலவில்!! என்பதுதான் - வேறு என்ன! காங்கிரஸ் அபேட்சகர்களுக்கல்லவா தெரியும், பட்ட கஷ்டம், கொட்டிய பணம்; கால்கடுக்கச் சுற்றியவர்களுக்குத்தானே எரிச்சல் தெரியும் - கையும் மனமும் வலிக்க வலிக்கப் பணத்தைக் கரைத்தவர்களுக்குத்தானே அதன் கஷ்ட நஷ்டம் தெரியும் - இடையே இருந்தவர்களுக்கு என்ன! வாய்வலிக்க நம்மைத் திட்டினார்கள். அவ்வளவுதானே! இதில் என்ன கஷ்டம் அவர்களுக்கு! வழக்கமாகச் செய்துகொண்டு வருகிற காரியம் - அதுதவிர வேறு எந்தக் காரியத்திலும் அவர்களுக்கு நாட்டமே செல்ல முடியாத அளவுக்கு, அந்த ஒரு காரியத்தில் ஈடு எதிர்ப்பற்ற திறமை பெற்றல்லவா விளங்குகிறார்கள்! காங்கிரஸ் கட்சி நாம் 15 - இடங்களில் மட்டும்தானே வெற்றி பெற்றோம் என்று கேவலமாகக் கருதவுமில்லை; அலட்சியமாக இருந்துவிடவுமில்லை, மாறாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்; தோல்வி ஏற்பட்ட காரணங்கள் குறித்து விளக்கம் கேட்கிறார்கள். தம்பி! காஞ்சிபுரம் தொகுதியில், காங்கிரஸ் தோற்றதன் காரணத்தைக் கண்டறிந்து, நிலைமையைச் சரிப்படுத்துவதற்காகவே அமைச்சர் ஒருவர் தமது அலாதியான அறிவாற்றலைச் செலவிட்டிருக்கிறார்!! திராவிட முன்னேற்றக் கழகத்தை நாங்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம், அதனால்தான் எங்களுக்கு இவ்வளவு தொல்லையும் தோல்வியும் வந்தன என்று கம்யூனிஸ்டு வட்டாரம் கருதுவதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று பார்த்தேன். பிரஜா - சோμயலிஸ்டு கட்சியின் தலைவரும், என் நண்பருமான சின்னதுரை, திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டாக இருந்து தேர்தலில் ஒரு அணி ஏற்படுத்தாது போனதனால்தான், காங்கிரஸ் இத்தனை இடங்களைப் பிடித்துக் கொண்டது என்று கூறுகிறார். சோஷியலிஸ்டு வட்டாரத்திலும், இதுபோன்றே கருதப் படுவதாக அறிகிறேன். தேர்தல் களத்திலே ஈடுபட்ட ஒவ்வொரு கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி 15 இடங்களிலே தானே என்று அலட்சியம் காட்டவில்லை; ஆராய்கிறார்கள்; மேற்கொண்டு எடுத்துக்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிறார்கள்; தைலம் தடவியவர்கள் மட்டும்தான், கேலி பேசுகிறார்கள், 15 இடங்கள்தானே என்கிறார்கள். புலியுடன் போரிட்டு, உடலெங்கும் புண்ணாகிக்கிடக்கும் வீரனை, பாராட்டுவர், கேலி பேசமாட்டார்கள். அஃதேபோல, இன்றளவு வரையில் “இந்தியாவிலே’ ஏகசக்ராதிபத்யம் செய்வதற்கான கட்சி என்று புகழப்பட்டுவரும் காங்கிரசைத் துணிந்து எதிர்த்து நின்று, பதினைந்து இடங்களில் வெற்றி பெற்ற நமது கழகத்தைக் கேலி பேசுகின்றனர் - பேசுபவர்கள். எங்கள் ஆற்றலைக் காணீர்! நாங்கள் காங்கிரஸ் கட்சியை ஓட ஓட விரட்டி அடித்தோம், எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினோம் என்று பட்டியல் காட்டுகிறார்களா என்றால், அதுதான் இல்லை! போகட்டும், பாவம், நம்மைக் கேசெய்வதன் மூலம், தமக்கோர்”தெம்பு’’ தேடிக்கொள்கிறார்கள். தம்பி! பதினைந்து இடங்களிலே மட்டுமே வெற்றி பெற்றோம்; இது நமக்கு ஏமாற்றத்தைத் தரத்தான் செய்கிறது; எனக்கோ பெரியதோர் ஏமாற்றத்தைத் தருகிறது. போட்டியிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நான் எண்ணி ஏமாற்றம் அடையவில்லை. நான் குறைந்தது 30 இடங்கள் மட்டிலுமாவது கிடைக்கும் என்று கணக்கிட்டிருந் தேன். பதினைந்துதான் கிடைத்தது, இது எனக்கு வேதனை தரத்தான் செய்கிறது. இந்த வேதனை எனக்கு எப்போது குறைகிறது என்றாலோ, இதற்கும் வக்கற்றுப்போய், இரு கொடி ஏந்திகளாகி, அழையாமலே நுழைந்துகொண்டு, தேர்தல் முரசாகப் பயன்பட்டவர்கள், பதினைந்துதானா! பதினைந்தே பதினைந்துதானா என்று பரிகாசம் பேசுகிறார்களே, அப்போது தான் குறைகிறது! இப்படியும் சில விசித்திர சித்தர்கள் இருக்கிறார்களே என்பதைக் காணும்போது, எனக்கு வேதனை மறைகிறது, வேடிக்கையாக இருக்கிறது. தம்பி! பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து பதவியில் இருந்தும், பலபல கொடுமைகளை இழைத்தும், இந்த முறையும் நாட்டு மக்கள், காங்கிரசு கட்சியையே "ஆளவந்தார்‘களாக்கி விட்டனர். மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகை, இது குறித்து வியந்து பாராட்டி எழுதுகிறது. கார்டியன் வியப்புடன் இதனைப் பாராட்டுவதற்குக் காரணம், ஜனநாயகத்திலே பண்பட்ட பிரிட்டன் போன்ற நாடுகளிலே, மக்கள் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறார்கள். ஆளும் கட்சி, அறிவீனத்தாலோ, அகந்தையாலோ, அலட்சியத்தினாலோ, மக்கள் நலனுக்கு ஊறுநேரிடும் காரியம் செய்து விட்டால், மக்கள் சீறி எழுந்து ஆளும் பொறுப்பை மீண்டும் அந்தக் கட்சியிடம் தர மறுக்கிறார்கள். இங்கோ காங்கிரஸ் கட்சி ஆயிரத்தெட்டு தவறுகளைப் புரிந்தும், பொறுப்புமிக்க தலைவர்களும் பொறுப்புள்ள பத்திரிகைகளும் அத்தவறுகளைக் காட்டி இடித்துரைத்தும், ஓட்டுகளை மட்டும் காங்கிரசு கட்சியினால் தட்டிப் பறிக்க முடிகிறது! இதுதான், மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகைக்கு வியப்பாக இருக்கிறது. இது ஒரு புறம் இருக்கட்டும்; நான் கூறவந்தது தம்பி! இப்படி மக்களிடம் ஓட்டுகளைத் தட்டிப் பறிக்கும் "மகத்துவத்தை’ இன்றும் குன்றாமல் பெற்றிருக்கும் ஒரு பலம் பொருந்திய கட்சியுடன் போட்டியிட்டு நாம் பதினைந்து இடங்களைப் பெற்றோம்; அதனை, காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு எனும் சூறாவளியில் சிக்கினால் புயலிற்பட்ட கலமாவோம் என்று அஞ்சி ஒதுங்கிக் கொண்டவர்களும், அடிபணிந்து அக்காரவடிசல் பெற்றவர்களும், கேலியாகப் பேசிக்கொண்டு போகட்டும்; தங்கள் இயலாமையை இதன் மூலம் காட்டிக் கொள்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு இன்றளவும் பத்திரிகை பலம், பிறர் கண்டு வியந்திடத்தக்க அளவு இருந்திடக் காண்கிறோம். முதலாளிகள், தங்கள் இலாப வேட்டைக்கு வாய்ப்பும் வசதியும் பெற, காங்கிரசை ஆதரிக்கவேண்டும் என்ற தத்துவத்தைப் பொன்னெனப் போற்றி வருகிறார்கள். டாட்டா போன்றோரின் பணம் பெட்டிகள், காங்கிரசின் ஓட்டுப் பெட்டிகளுக்குத் துணையாக நிற்கின்றன. இவ்வளவு “வல்லமை’ படைத்த ஒரு கட்சியை, தோள் வலியும் வாள்வலிவும் படைத்த ஓர் தூர்த்தனை, தொலைவிலிருந்து”கவண்கல்’ வீசியே வீழ்த்த முற்பட்ட அஞ்சா நெஞ்சனைப்போல், வசதியற்ற நிலையையும் மறந்து, நாம் எதிர்த்து நின்றோம். நமது கோபப்பார்வை போதும் இவர்களைச் சுட்டுச் சாம்பலாக்க என்று கொக்கரித்தனர்; கலங்கினோ மில்லை; தேர்தலில் ஈடுபடுவது ஜனநாயகக் கடமை, வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று ஒன்றும் இல்லை, கூடுமான வரையில், முடிந்த அளவு, பலமான எதிர்ப்பினை உருவாக்கிக் காட்டப்போகிறோம் என்று கூறிவிட்டு, களத்தில் இறங்கிக் கடமையைச் செய்தோம், 15 இடங்களில் வெற்றி கிடைத்தது. மற்றவர்கள் கண்டு புகழ்ந்திட, வியந்திடவேண்டிய சம்பவமே தவிர, கேலி பேசும் சம்பவமாகுமா இது!! பதினைந்து இடங்கள்தான் பெற்றோம். ஆனால் மொத்தமாக நமக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள், சாமான்யமல்லவே! கட்சி என்ற முறையில், காங்கிரசுக்கு அடுத்தபடியாக சென்னை ராஜ்யத்தில் தி. மு. கழகமே "ஓட்டுகள்’ பெற்றிருக்கிறது என்பதை வியந்தே, பல இதழ்கள் எழுதியுள்ளன. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பழமொழி போலல்லவா இது இருக்கிறது, இடங்கள் அதிகம் கிடைக்காவிட்டாலும் ஓட்டுகள் ஏராளம் கிடைத்தன என்று "விண்ணாரம்’ பேசுவது என்று சிலர் கூறக்கூடும். ஒரு ஜனநாயக நாட்டிலே இடங்கள் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை எத்தனை கிடைத்தன என்பதை மட்டுமல்ல, ஓட்டுகளின் எண்ணிக்கையையும் கூர்ந்து பார்த்துத்தான், அரசியல் போக்கு, எப்படி உருவாகிறது என்பதைத் தெரிந்து கொள்வார்கள் - எதிலும் தெளிவு வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். அந்த முறையிலே, தி. மு. கழகம் பெற்றிருக்கும் ஓட்டுகளின் எண்ணிக்கை, பலப்பல அரசியல் தலைவர்களை, மலைக்கச் செய்திருக்கிறது. அதனை மறைத்துச் சிலர் பேசுவர், உண்மையை நேருக்கு நேர் சந்திக்கக் கிலி கொள்பவர்கள், உள்ளதைக் காண மறுக்கிறார்கள். உலகமே, ஒரு ஒப்பற்ற சம்பவமாகக் கருதத்தக்க விதத்தில், கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது - ஆளும் கட்சியாகிவிட்டது. ஆச்சரியத்தால் மூர்ச்சையானவர்களும், அச்சத்தால் தாக்குண்டவர்களும், கலக்கத்தை மறைத்துக்கொண்டு, கம்யூனிஸ்டுகள் இனிப் பெட்டிப்பாம்புதான் என்றும், சட்டசபை அவர்களுக்குச் சிறைக் கூடமாகிவிடும் என்றும், அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று கொட்டி அளந்து வந்தார்களே கொடி தூக்கிக்கொண்டு, இதோ இனி என்ன சாதிக்கப் போகிறார்கள் பார்த்துவிடுவோமே இவர்களின் ஆற்றலை என்றும் பலவிதத்தில் பேசி, தோல்வியால் ஏற்பட்ட துயரத்தை மறைத்துக் கொள்ள முற்பட்டிருக்கின்றனர், மூக்கறு பட்டவர்கள் - ஆனால், உலக வரலாற்றிலேயே, நேரு பண்டிதரின் புகழ் உலகில் எங்கும் பரவியிருக்கும் நேரத்தில், பாரில் எமது நேருவுக்கு நிகர் யாரே! என்று பாவாணர்கள் பாடிடத்தக்க நிலை இருக்கும்போது, அவருடைய பெரும் புகழொளி கண்டும் மயங்கமாட்டோம், காங்கிரசுக்கு அடிபணிய மறுக்கிறோம் என்று துணிந்து கூறி, கம்யூனிஸ்டு ஆட்சிக்குக் கேரளம் அழைப்பு விடுத்துள்ள சம்பவம், அகில உலகும் அச்சமோடு உணர்ச்சியின் வகை எப்படிப்பட்டதாக இருப்பினும் கூர்ந்து கவனிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்; வரலாற்றிலே பொறிக்கப்படத் தக்க சம்பவமாகும். பளிச்சிட்டுத் தெரியும் இந்தச் சம்பவத்துக்கே, "இந்து’ இதழ் புள்ளிவிவரத்தின் துணையைத் தேடி, இடம் அதிகம் கிடைத் திருக்கிறது, என்றாலும் கம்யூனிஸ்டுக் கட்சிக்குக் கிடைத்துள்ள ஓட்டுகள், காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்ததைவிடக் குறைவுதான்! என்று வாதாடுகிறது. கம்யூனிஸ்டு கட்சிக்கு 19,89,369 - காங்கிரசுக்கு 21,62,000 ஓட்டுகள். கேரளத்துச் சம்பவத்துக்குப் பயன்படும் வாதம், தி. மு. கழகத்துக்குக் கிடைத்த இடங்கள் பதினைந்துதான் என்றாலும், கிடைத்த ஓட்டுகள் ஏராளம் என்று கூறும்போது மட்டும், சொத்தை வாதம், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்ற பேச்சு என்று எப்படி ஆகிவிடும். தம்பி! உன் அரிய உழைப்பும் பிறர்கண்டு பாராட்டத்தக்க ஆற்றலும் வீண்போகவில்லை; நாட்டு மக்களை நித்த நித்தம் சந்தித்து உரையாடி, நமது கொள்கைகளை எடுத்துக்கூறியது பலன் அளிக்காது போய்விடவில்லை; இந்தத் தேர்தலில், மொத்தத்தில் நமக்கு 16 இலட்சத்துக்குமேல் ஓட்டுகள் கிடைத் துள்ளன; ஏ! அப்பா! எத்தனைவிதமான எதிர்ப்புக்களுக்குப் பிறகு. தாக்குதல்கள் எவ்வளவு கீழ்த்தரமானவை, எவ்வளவு ஈனத்தனமான செயல்களால் நம்மை அழிக்க முனைந்தனர், எவ்வளவு மிருகத்தனமான முறைகளைக் கையாண்டனர். தப்பித்தவறி காட்டுவழி சென்றுவிட்டவனைத் தாக்க மிருகங்கள் எப்படிக் கிளம்புமோ, அப்படி அல்லவா, நமது கழகத்தின்மீது பலரும் பாய்ந்தனர்; என்னென்ன பழிச்சொற்கள், எவ்வளவு வதந்திகள்! இவ்வளவுக்கும் நாம் கலங்காதிருந்தோம் என்பதல்ல ஆச்சரியம், இவ்வளவு பேச்சுக்களையும் துச்சமானவை, குப்பைக் கூளம் நொந்துபோன உள்ளத்திலிருந்து கிளம்பும் நாராசம் என்று கருதி, மதிப்பளிக்க மறுத்து, நாட்டு மக்களில் 16 லி இலட்சம் பேர் நமது கழகத்துக்கு ஓட்டு அளித்தனரே, அது அல்லவா ஆச்சரியம். மான்செஸ்டர் கார்டியனுக்கு இது தெரியாது; இப்போது இது தெரிவித்தாலும் புரியாது. ஆனால் இவ்வளவு எதிர்ப்பு நெருப்பை நீந்தி, நம்மில் பதினைந்துபேர் வெற்றியை அடைந்தோமே, அது நேர்மை உள்ளம் படைத்த அனைவருக்கும், நம்மிடம் உள்ள மதிப்பினை, நிச்சயமாக அதிகப்படுத்தி இருக்கிறது என்பதிலே ஐயமில்லை. நமக்கு எவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகு இத்துணை ஓட்டுகள் கிடைத்தன என்பது மட்டுமல்ல, நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, நாம் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறோம், அவ்வளவுக்கும் பிறகு நமக்கு இந்த அளவு ஆதரவு திரண்டதே அதனைக் கவனிக்கச் சொல்லுகிறேன். என்னைப் பொறுத்தவரையிலும் சரி, என்னுடன் மிக அதிகமாக நெருங்கிப் பழகிடும் என் தம்பிமார்கள் பலரைப் பொறுத்தவரையிலும்கூட, கடந்த பத்து பதினைந்து ஆண்டு களாகவே தேர்தலில் ஈடுபடுவது என்றாலே, ஒருவிதமான "கசப்பு’ இருந்து வந்தது. ஓட்டுக்கேட்பது என்பதையே ஏதோ செய்யத்தகாத, செய்யத் தேவையற்ற ஒரு காரியம் என்று கருதி வந்திருக்கிறோம். இந்த நாட்டு மக்கள் யார் எதைச் சொன்னாலும், இனிக்க இனிக்கச் சொன்னாலும், எதனையும் நம்பிவிடுகிறார்கள். நாம் கூறும் உண்மைகளோ மக்களுக்குக் கசப்பாகவும் கிலி மூட்டுவதாகவும் இருக்கின்றன. அதனாலேயே நம்மை அவர்கள் வெறுக்கிறார்கள். இந்த நிலையில், அவர்கள் நமக்கு ஓட்டுத் தருவார்களா என்ன! செச்சே! நமக்கேன் பல்லிளிக்கும் வேலை! பொறி பறக்கப் பேசுவோம்! அச்சம் தயை தாட்சணியத்துக்கு இடம் வைக்காமல் பேசுவோம்! கேட்டால் கேட்கட்டும், கேட்காவிட்டால் நாசமாய்ப் போகட்டும்! ஊதுகிற சங்கினை ஊதுவோம், பொழுது விடிகிறபோது விடியட்டும்! என்று இவ்விதமாகவெல்லாம் நினைத்துக்கொண்டு இயக்கப் பணியாற்றிக்கொண்டு வந்திருக்கிறோம். அப்படிப்பட்ட நாம் தேர்தலில் ஈடுபட்டபோது, அதிலே மிகுதியான சுவையும், அந்தச் சுவை மட்டுமே தரக்கூடிய சுறுசுறுப்பும், எங்ஙனம் பெற முடியும். உன்னிடம் கூறிக்கொள்வதிலே தவறு என்ன தம்பி! நான் காஞ்சிபுரம் பகுதியில், நல்ல முறையில்தான் பணியாற்றினேன். ஆனால், பொதுக்கூட்டத்திலேயும் சரி, தனித்தனியாக மக்களிடம் அணுகியபோதும் சரி, "ஓட்டு’ தரச்சொல்லி, கேட்க முடியவே இல்லை; விருப்பமில்லாததால் அல்ல; முறை தெரியாததால்! உடன் வந்தவர்கள்தான் பேசுவர். நான் நாக்கு கட்டுண்ட நிலையில் நிற்பேன்; மெத்தச் சிரமப்பட்டு, நான் சொல்லக்கூடியதெல்லாம், பார்த்துச் செய்யுங்கள் கூட இருங்கள் வரட்டுமா என்ன? செய்கிறீர்களா! என்ற இவைகளேதான்! மேலால் பேசமுடியவில்லை - தெரியவில்லை. அது போன்றே, நான் பேசிய பொதுக்கூட்டங்கள் ஏராளம் - இரண்டே இரண்டு கூட்டங்களிலேதான், எனக்கு "ஓட்டு’ போடுங்கள் என்று கேட்க முடிந்தது - உதயசூரியன் பெட்டியில் ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டேன். உடனிருந்த நண்பர்கூட, அப்பா! பரவாயில்லையே! அண்ணா ஓட்டு போடச் சொல்லிக் கேட்டுவிட்டாரே! என்று வேடிக்கையாக வியந்துரைத்தார்! என் நிலைதானே, நமது அபேட்சகர்களிலே பலருக்கும் இருந்திருக்கும். பல ஆண்டுக் காலமாக, பொறிபறக்கப் பேசுவது கண்டந்துண்டமாக்கிக் காட்டுவது எதிர்ப்பு வாதங்களை முறியடிப்பது விளக்கம் தருவது வீரமுழக்கம் புரிவது வரலாற்றுச் சம்பவம் தருவது போன்ற முறைகளிலேயே பழகிப் போயிருக்கிறோம். அப்படிப்பட்ட நாம் மக்களிடம் கனிவாகப் பேசி, அவர்கள் அலட்சியம் காட்டினால் தாங்கிக்கொண்டு, புரியாதவர்களாக இருந்தால் பொறுமையை இழக்காமல், ஓட்டு கேட்கும் முறையை, எப்படி எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். கேள், தம்பி! என் கதையை! தங்கவேலர், என்னை "ஓட்டு’ கேட்பதற்காக, முதல்நாள் கோவிந்தவாடி என்ற கிராமத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றார் - அழைத்துக் கொண்டு சென்றார் என்று கூறுவதைவிட, இழுத்துக் கொண்டு சென்றார் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். நாலைந்து கிராமத்துப் பெரியவர்களைச் சந்தித்தோம் - சந்தித்தோம் என்று கூறுவதைவிட, எங்களைப் பார்க்கும்படி, சிரமப்பட்டு அவர்கள் எதிரில் சென்று நின்றோம். தங்கவேலர் துவங்கினார், "இதோ - நம்ம அண்ணாதுரை - நம்ம தொகுதிக்கு நிற்கிறார் - சட்ட சபைக்கு - நல்லவர் - படிப்பாளி - தமிழ் நாட்டில் ஒரு தலைவர் -’’ என்று விவரித்தார். கேட்டுக் கொண்டிருந்தவர்கள் முகத்திலே ஒருவிதமான மலர்ச்சியும் இல்லை; எனக்குச் சிறிதளவு வெட்கமாகக்கூட இருந்தது. சில நிமிடங்கள் தங்கவேலர் பேசிவிட்டு, பிறகு, கிராமத்துப் பெரியவர்களின் பதிலை எதிர்பார்த்தார்! தம்பி! பதில் வெளிவந்தது, நான் பயந்துபோனேன், கோபம் கூடத்தான்!! "அது சரிங்க! எலக்ஷனுக்கு வருகிற ஒவ்வொருவரையும் தான் இந்திரன் என்று சொல்றீங்க, சந்திரன் என்று சொல்றீங்க, நாங்க என்னத்தைக் கண்டோம்!’’ இது அவர்கள் அளித்த பதில்! ஓட்டு கேட்கச் சென்ற எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பாரேன் தம்பி! கோவிந்தவாடி, காஞ்சிபுரத்துக்கு வெகு அருகாமையில் உள்ள சிற்றூர் - ஐந்தாறு மைல்களுக்குத்தான் தொலைவு. அங்கு, இவ்விதம், "வரவேற்பு!’’ எப்படி இருந்திருக்கும், என் எண்ணம் என்பதை நினைத்துப் பாரேன்! ஓட்டு கேட்டுக்கேட்டுப் பழக்கமாகி இருந்தால், இவ்வளவு அக்கறையற்றும் அலட்சியமாகவும் பேசியவர்களிடம், மளமள வென்று பதில் பேசிடத் தெரிந்திருக்கும். நமது கழகம்தான் தேர்தல் அலுவலில் இதுநாள் வரை ஈடுபடவில்லையே, பதில் ஏதும் கூறத் தோன்றவில்லை! தம்பி! இதே கோவிந்தவாடி, எனக்கு "ஓட்’ அளிக்காமல் இருந்துவிடவில்லை; நிறைய அளித்தார்கள்; ஆதரவு கிடைத்தது. தேர்தல் காரியத்திலே ஈடுபாடுகொண்டு, நாம் சுவையும் சுறுசுறுப்பும் வழியும் வகையும் பெறவில்லை. பொதுவாகவே ஒரு தேர்தலுக்குத் தேவையான அளவு வசதி இல்லை! அத்துடன் இந்தக் குறை வேறு! இந்த நிலையில் நமக்குப் பதினாறு இலட்சத்துக்குமேல் "ஓட்டுகள்’ கிடைத்தன என்பதிலேதான் வியப்பு இருக்கிறது! நாமக்கல் அடுத்த சிற்றூர் ஒன்றிலே, மாலை சுமார் ஐந்து மணிக்கு, நான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஏழாம் தேதி! திடீரென்று, நண்பர் சித்தய்யன், என் கரத்திலிருந்த "மைக்கை’ வெடுக்கெனப் பறித்துக் கொண்டு, ஒரு சந்தோஷமான செய்தி ஒரு மகிழ்ச்சியான செய்தி நம்ம அண்ணா எம்.எல்.ஏ. ஆகிவிட்டார். எலக்ஷனில் ஜெயித்துவிட்டார். என்று சிரிப்பும் பேச்சும் குழையக் குழையக் கூறினார். தம்பி! கோவிந்தவாடி கிராமத்திலே, நான் கண்ட முதற் காட்சியையும், நாமக்கல் அருகே உள்ள சிற்றூரில் சித்தய்யன் என்னிடமிருந்த "மைக்’கைப் பறித்துக்கொண்டு பேசிய காட்சியையும் மனக்கண்ணாலே பார். படமும் தெரியும் பாடமும் கிடைக்கும். கோவிந்தவாடி கிராமத்திலே, முதலிலே எனக்கு ஏற்பட்ட திகைப்பு, வெட்கம், கோபம், சலிப்பு இவைகளை, என்னுடன் பணியாற்றியவர்கள், மக்களைச் சந்திப்பதிலும் உரையாடி விளக்கமளிப்பதிலும் தனித்திறமையும் தளராத ஊக்கமும் காட்டி, விரட்டி அடித்து வெற்றி தேடித் தந்தனர். தம்பி! நான் இந்தச் சம்பவத்தைக் கூறுவதற்குக் காரணம், நாம் தேர்தலில் ஈடுபட்டோமே தவிர, அதற்கான பக்குவத்தை, பயிற்சியைப் போதுமான அளவு பெறுவதற்கு நமக்குக் காலம் போதுமான அளவு கிடைக்கவில்லை. இந்தக் குறை மட்டுந்தானா! நாம் - நான் உட்படத்தான் - பல தவறுகளை விவரமறியாத காரணத்தால் புரிந்திருக்கிறோம். "தொகுதிகளின் தன்மையை ஆராய்ந்து அறிதல் எவரெவர் எந்தெந்தத் தொகுதியில் ஈடுபடும் நல்வாய்ப்பு உளது என்பதைத் தெரிந்து கொள்ளுதல், போன்ற "அரிச்சுவடி’யே நாம் சரியான முறையில் பெற்றிருந்தோமில்லை. நமது மாநாடு கூட்டுவதற்கு நாம், "திடல்’ தேடிப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியைவிட, அதிலே காட்டும் திறமையைவிட, குறைவாகவே, தேர்தல் தொகுதிகளை ஆராய்வதிலும், யார் எந்தத் தொகுதிக்கு என்பதுபற்றித் தீர்மானிப்பதிலும் காட்டியிருக்கிறோம். இவ்வளவு, "குறைபாடு’கள் இருந்தும், நாம் பதினாறு இலட்சம் வாக்குகளைப் பெற்றோம்!! வானம் பார்த்த பூமி என்ற நிலையிலேயே விளைச்சல் குறிப்பிடத்தக்க அளவு என்றால், நல்ல பாசனவசதியும் கிடைத்துவிட்டால் விளைச்சல், தரமாகத்தானே இருக்கும்! அந்த முறையிலே, எவ்வளவோ திறமைக் குறைவு தெளிவுக் குறைவு வசதிக் குறைவு அனுபவக் குறைவு இருந்தும் பதினாறு இலட்சம் "ஒட்’டுகளுக்குமேல் பெற்றிருக்கிறோம் என்றால், முறையும் சரிவர அறிந்து, வசதிகளையும் தேடிப் பெற்று, தேர்தலில் ஈடுபட்டால், இந்த பதினைந்து கண்டே பதறிப்போகிறார்களே சிலர், அவர்கள் மயங்கிக் கீழே சாய்ந்திடும் அளவுக்கல்லவா, வெற்றியின் எண்ணிக்கை உயரும்!! வசதிகளைத் தேடிக்கொள்வதற்காகக் கூடிக் கூடிப் பேசினோம் - திட்டம் பல தீட்டினோம் - நானும் வீர தீரமாக வாக்களித்தேன். ஐந்து இலட்சம் திரட்ட வழி கண்டுபிடித்து விட்டேன் என்று! ஆனால், அந்தத் திட்டத்தின்படி காரியத்தைத் துவக்கவே இல்லை. புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி இலட்சிய நடிகர் ராஜேந்திரன், நடிகமணி டி. வி. நாராயணசாமி, இவர்கள், இந்தத் தேர்தல் செலவுக்கென்றே ஒரு நல்ல நிதிதிரட்டி உதவவேண்டும் என்பதற்காக, ஒரு படத்தில் ஊதியமே பெறாமல் நடித்துத் தருவதாக முன் வந்தனர். நான்தான் அவர்கள் தர இருந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி, சில இலட்ச ரூபாய்கள் கிடைப்பதற்கான வாய்ப்பைப் பெறத் தவறிவிட்டேன். அந்தத் தவறு, என்ன தொல்லையைத் தந்தது என்கிறாய்!! தேர்தல் நேரத்தில் தாங்க முடியாத பணமுடை!! நூறு இடங்களுக்குமேல் போட்டியிடுகிறோம். பணபலம் இல்லை - அதனை ஓரளவுக்கேனும் பெறத்தக்க வாய்ப்பு கண்ணுக்குத் தெரிந்தும் பயன்படுத்திக்கொள்ளத் தவறி விட்டோம். பாய்மரமும் இல்லை - சுழற் காற்றும் அடிக்கிறது - கலம் என்ன கதி? என்று கேட்கும் நிலை அல்லவா இது. இந்த நிலையிலே, இடம் 15 தான் என்றாலும், கிடைத்த ஓட்டுகள் 16 இலட்சத்துக்குமேல் என்றால், தம்பி! அது உன் அறிவாற்றலின் விளைவு என்பதன்றி வேறென்ன? நாட்டு மக்களுக்கு, நாம் எடுத்துக்கூறி வருவது, புரிந்துவிட்டது என்பதுதானே இதன் பொருள்! பெருமைக்கும் பூரிப்புக்கும் உரிய நிலைதான் இது - கேபேசுவோரும், உள்ளூர இதனை அறிவர். ஐயம் சிறிதேனும் உள்ளவர்களை, வேண்டுமானால், வெற்றிபெற்ற காங்கிரஸ்காரர் படும் வேதனையையும் பார்க்கச் சொல்லு. தோற்றாலும், முக மலர்ச்சியுடன் இருக்கும் நமது கழகத் தோழரையும் பார்த்திடச் சொல்! தம்பி! கேரளத்தில் கம்யூனிஸ்டு அமைச்சரவை ஏற்பட்டிருக்கிறது. முற்போக்கு எண்ணம்கொண்டவர் அனைவரும் வாழ்த்தி வரவேற்கவேண்டிய மகத்தான நிகழ்ச்சி இது. வெற்றிபெற்று அமைச்சரவை அமைத்த கம்யூனிஸ்டுகளை வாழ்த்துவோம், தம்பி, உளமாற. அமைச்சர் அவைதான் கம்யூனிஸ்டுகள் அமைத்தனரே தவிர, ஆட்சி எம்மிடம்தான் என்று டில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் எக்காளமிடுகின்றனர்! வெட்கத்தையும் துக்கத்தையும் மறைத்துக் கொள்ள, இது அவர்களுக்கு உதவுகிறது. சங்கரன் நம்பூதிரிபட் எனும் கம்யூனிஸ்டு தலைவர், அமைச்சர் அவை அமைத்திருக்கிறார். கேரளத்துக் கவர்னர் மாளிகையிலே மூவர்ணக் கொடி பறக்கிறது! செங்கொடியைச் சிறப்புடன் பறக்க விட்டிருக்கும் கம்யூனிஸ்டு கட்சி அமைச்சர் அவை அமைத்திருக்கிறது. தம்பி! கேரளத்துக் காட்சியை மனக்கண்ணாலே காண்கிறாய் அல்லவா! கேரளத்தில், கம்யூனிஸ்டு கட்சி பெற்றுள்ள ஓட்டுகள். 19,89,369! அமைச்சர் அவை அமைத்து அவனி எங்கும் கவனித்துப் பார்த்திடத்தக்க நிலையைப் பெற்றுவிட்டனர். தம்பி, பதினைந்தே இடங்களைத்தானே பெற்றார்கள் என்று நம்மைக் கேலி செய்கிறார்களல்லவா, இந்தக் கேலியைத் தாங்கிக்கொள்ளும் நாம் பதினாறு இலட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றிருக்கிறோம். பத்தொன்பது இலட்சத்துக்கு ஒரு மந்திரிசபை அமைகிறது - கேரளத்தில்! பதினாறு இலட்சம் நமக்கு - இடமோ பதினைந்துதான்! என்னதான், ஏளனம் பேசட்டும், தம்பி! 19 இலட்சம் ஓட்டுகள் கேரளத்தில் அமைச்சர் அவை ஏற்பட உதவிற்று என்ற உண்மையை அறிந்த பிறகு, நாம் பெற்ற 16 இலட்சத்தை அலட்சியமாக, கேவலமாகப் பேசத்தோன்றாது, அரசியலில் பொறுப்பும், நேர்மையும் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு. மற்றவர்பற்றி நமக்கென்ன கவலை. அண்ணன், 7-4-57 படமும் பாடமும் (3) தி. மு. க. வெற்றியும் வடநாட்டுப் பத்திரிகைகளும் - நாகநாடும் திராவிட நாடும். தம்பி! தேர்தல் துவங்கிய நாள்தொட்டு, பத்திரிகைகளில் பல்வேறு விதமான படங்களைக் கண்டாய் அல்லவா? ஒவ்வொன்றும், நமது கழகத்தை மக்கள் துச்சமென்றெண்ணி ஒதுக்கித் தள்ளிவிடவேண்டும், நச்சுப் பூச்சி என்றெண்ணி நசுக்கி அழித்திடவேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியிடப்பட்டன. படங்களை வெளியிட்டவர்களின் எண்ணம் கெட்டது என்பது மட்டுமல்ல, நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, அவர்களுக்கே உள்ளபடி, நமது கழகத்திடம் அத்துணை வெறுப்பு; வெறுப்புக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறாய்? நம்மைப்பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளாதது அல்லது புரிந்துகொள்ளவேண்டுமென்ற எண்ணமே கொள்ளாமல், ஏனோதானோ என்ற போக்குடன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் இருந்து வந்தது. ஏழைக் குடும்பத்து ஏந்திழை, தன் கணவனுக்கு வந்துற்ற நோய் தீர்க்க மருந்துபெற, செலவுக்குப் பணம் கிடைக்காமல், தன் காதணியைக்கொண்டு சென்று, அங்காடியில் விற்றிட முயலும் காட்சியைக் கண்டதுண்டா? சோகம் கப்பியமுகம் - நீர் ததும்பும் கண்கள் - தைலமற்ற கூந்தல் - அழுக்கேறிய ஆடை - தட்டுத்தடுமாறும் பேச்சு - தள்ளாடும் நடை! இந்நிலையில் இருந்திடும் அம்மை, காதணியை விற்றிட முனையும்போது, அங்காடி ஐயன், ஐயோ! பாவம்! என்று இரக்கம் காட்டுவதில்லை. - பொருள் களவாடப்பட்டதோ? என்றே ஐயப்படுகிறான். அச்சமூட்டும் கேள்விகளால் தாக்குகிறான். கண் கசிந்து காரிகை நின்றாலோ, "நீலி வேடமிட்டு, என்னை ஏய்க்காதே! கள்ளி! காதணியை எங்கு களவாடினாய்?’’ என்று கேட்டு கண்டபடி ஏசுகிறான். போலீசுக்குத் தகவல் கொடுத்திடும் போக்கினனும் உண்டு. காரணம் என்ன? அந்த அம்மையின் கோலம்!! கண்ணகியின் காற்சிலம்பு விற்ற கோவலனையே, கோலம் கண்ட மன்னன், கெடுமதியாளன் சொல்லை நம்பி, கள்ளனென்று கூசாது கூறி, கொலையும் செய்திட கட்டளை பிறப்பித்தனனே!! அஃதேபோல, நமது கழகத்தின் கொள்கைகளை எடுத்துக் கூறி, ஆதரவு திரட்ட முனைந்திடும் நாம், எளியோர். நாற்பதாண்டு அனுபவம் - நாலாறு இலட்ச பணபலம் - ஏழெட்டு கிராமச்சொத்து - எனும் "மகிமை’கள் இல்லை; சாமான்யர்கள், பெரிதும் இளைஞர்கள்! அணிமணியினை ஓர் ஏழை விற்றிட முற்படும்போது, ஐயம் கொண்டு, அதட்டி மிரட்டிக் கொடுமை செய்யும் உலக வழக்குக்கு ஒப்ப, நல்ல மதிப்புள்ள கொள்கைகளை, நாம் எடுத்துக்காட்டுகிறோம், அதுகண்டு அலட்சியப்படுத்துகிறார்கள் - அச்சமூட்டுகிறார்கள் - கண்டிக்கிறார்கள். மாளிகைவாசிகள் அல்லது மடாலயவாசிகள் மதியற்றது பேசிடினும், உட்பொருள் ஏதேனும் இருந்திடக்கூடும், அதனை அறிந்திடும் "பரிபக்குவம்’ நமக்கு ஏற்படவில்லை என்றெண்ணி, பயபக்தி காட்டுவோர் நிரம்பிய சமூகமல்லவா! அதே பழக்கமல்லவா!! அதனால், நாம் எடுத்துக்காட்டும், கொள்கைகளில் சிறப்பும் சீலமும், நமது போக்கில் பெறுப்பும் இருப்பதாக, நம்புவது பெரும்பாலோருக்குக் கடினமாக இருக்கிறது. இதன் காரணமாகவே, நம்மைப் புரிந்துகொள்ள மறுத்து வந்திருக்கிறார்கள்; புரிந்து கொள்ளாததால் அலட்சியமாகப் பேசி ஏச முற்பட்டனர். அந்தப் போக்கின் விளைவுதான் நம்மைக் குறித்து, இதழ்கள் வெளியிட்ட பலப்பல கேலிப் படங்கள்!! அவைகளை எல்லாம் கண்ட உனக்கு, இந்த இதழில் ஒரு படம் காணும் வாய்ப்பு! இதழின் மேலட்டையில்!! பார்த்திருப்பாய், மேலால் படிப்பதற்கு முன்பு, மீண்டுமோர் முறை பார்; படத்தை! அடிபட்ட மாடுகளை மருத்துவ விடுதிக்குத் தூக்கிச் செல்கிறார்கள்! தோல்வி ஏற்பட்ட இடங்களில், காங்கிரசைத் திருத்த, மருந்தூட்ட புதிய வலிவு ஊட்ட முற்பட்டிருக்கிறார் களே, தலைவர்கள். அதனை விளக்கிடும் படம். பல்வேறு இடங்களிலே, காங்கிரஸ் தோற்றிருக்கிறது. காங்கிரசுக்கு இருப்பதுபோன்ற உலகப் புகழ்பெற்ற தலைவர் பிரம்மாண்டமான பத்திரிகை பலம் பெரியதோர் பணபலம் அளவற்ற அதிகார பலம் வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது என்பதை எவரும் ஒப்புக் கொள்வர். எனினும், பல மாநிலங்களிலே, காங்கிரஸ் கட்சியினர் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். மாடுகள் அடிபட்டு கட்டித்தூக்கி வரப்படும் காட்சி, இதனைக் காட்டத்தான்! ஆனால் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டதேயொழிய, மருந்தூட்டி மீண்டும் வலிவுபெறச் செய்யமுடியும், அதற்கான வசதி இருக்கிறது என்பதைக் காட்டவே, "மாடுகளுக்கு மருத்துவ விடுதி’ இருப்பதாகப் படம் காட்டுகிறது!! தம்பி! இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வந்துற்ற நிலையை எடுத்துக்காட்டும் இந்தப் படம், நமது இதழில் காண்கிறாயே தவிர, இதனை முதலில் வெளியிட்டது நாமல்ல. அசாம் ட்ரைப்யூன் எனும் ஆங்கில நாளிதழில் நான் கண்ட படம்; அசாம் மாநிலத்தில் கௌஹத்தி நகரிலிருந்து வெளியிடப்படும் இதழ்; காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதை, காங்கிரஸ் ஏட்டினாலேயே, அடியோடு மறைத்திட இயலவில்லை. மருத்துவ விடுதிக்கு அடிபட்ட மாடுகள் தூக்கிச் செல்லப்படுவதுபோல், படம் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கேரளத்தில், கம்யூனிஸ்டு கட்சி அமைச்சர் அவை அமைக்கும் அளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறது; பார்க்கலாமே இவர்கள் என்னதான் சாதித்துவிடுகிறார்கள் என்று வீம்பு பேசுகிறார்களே தவிர, காங்கிரஸ் மேலிடத்துக்கு உள்ளத்தைப் பிடித்துக் குலுக்குவது போன்ற நிலைமைதான், இதனால் ஏற்பட்டிருக்கிறது. தேர்தலுக்குமுன்பு, இம்முறை கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி தலைதூக்காது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம் என்று வீரம் பேசினர் - இப்போது, கம்யூனிஸ்டு கட்சி வெற்றிபெற்றுவிட்டால் என்ன! என்ன சாதித்துவிட முடியும்! கட்டு திட்டத்துக்கு அடங்கி, பெட்டிப் பாம்பாகி, நாங்கள் சொல்லுகிறபடி ஆடித் தீரவேண்டும். இல்லையானால் அமைச்சர்களுக்குச் சீட்டுக் கொடுத்து விடுவோம் என்று வீம்பு பேசுகின்றனர். ஏமாற்றமும் கிலியும் இவ்விதம் பேசச் செய்கிறது என்பதை எவரும் எளிதில் அறிய முடிகிறது!! நேரு பண்டிதரை, ஆசியாவைக் கம்யூனிஸ்டு அபாயத்தி லிருந்து காப்பாற்றவல்ல “புருஷோத்தமர்’ என்று கொண்டாடி வரவேற்கும் அமெரிக்கா,”நேருவின் இந்தியாவில்,’ ஒரு மாநிலம் - அது அளவிலே எப்படி இருப்பினும் சரி - கம்யூனிஸ்டு அமைச்சர்களின் ஆட்சியில் வந்துவிட்டது என்ற செய்தி கேட்டு, பாராட்டவா செய்யும்!! நேருவின் இந்தியா’ - நேருவின் பிடியிலிருந்து பிய்த்துக் கொள்கிறது என்ற பேருண்மையைக் கேரளம் எடுத்துக் காட்டுகிறது!! அகில இந்தியாவையும், உலகின் பல்வேறு நாடுகளையும், சிந்தனையில் ஆழ்த்திவிட்ட அளவு வெற்றிபெற்று, அமைச்சர் அவை அமைக்கும் நிலையைப் பெற்றிருக்கும் கம்யூனிஸ்டு கட்சியின் வெற்றியையே, கேலிக்குரியதாகப் பேசும் போக்கில், காங்கிரஸ் தலைவர்கள் இருக்கும்போது, தம்பி! 15 இடங்களை மட்டுமே பெற முடிந்த நம்மை ஒரு பொருட்டாகவா மதிப்பார்கள்!! மமதை நிரம்பியவர்களாகப் பேசுகிறார்கள்! அந்தப் போக்கு தவறு, தீது பயப்பது என்பதைக் காட்டவே அடிப்பட்ட மாடுகளை மருத்துவ விடுதிக்கு எடுத்துச் செல்வதாகப் படம் போட்டுக் காட்டி, அசாம் டிரைப்யூன் அறிவூட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு, கேரளத்தில் சிதைக்கப்பட்டிருப்பது, பண பலத்தால் அல்ல, கொள்கை பலத்தால். காங்கிரஸ் கட்சி பிற்போக்குக் கொள்கையின் இருப்பிடமாகவும், முதலாளித்துவத்தின் பாசறையாகவும், சர்வாதிகாரம் நெளியும் இடமாகவும் இருக்கிறது, என்பதை உணர்ந்த மக்கள், முற்போக்கும், ஜனநாயகமும், சமதர்மமும் வேண்டும் என்ற தம்முடைய "வேட்கை’யை கம்யூனிஸ்டு கட்சியின் வெற்றிமூலம் எடுத்துக் காட்டுகின்றனர். இது காண முற்போக்கு எண்ணங் கொண்ட எவருக்கும் மகிழ்ச்சியும் பெருமையுமாகவே இருக்கும். ஆனால், காங்கிரசின் செல்வாக்கை ஒரிசாவில் சிதைத்தவர்கள், காங்கிரஸ்காரர் எவ்வளவோ தீவிரவாதிகள் என்று சொல்லத்தக்க அளவுக்குப் பிற்போக்குவாதிகளாக உள்ள கண தந்தர பரீஷத் எனும் ஜரிகைக் குல்லாய்க்காரர்கள்!! மராட்டியப் பகுதியிலேயோ, பல்வேறு கட்சிகளிலும் உள்ள மொழி அரசு கொள்கை கொண்டவர்கள் ஒன்றுகூடிய "சமிதி’ காங்கிரசை அந்தப் பகுதியில் முறியடித்திருக்கிறது. அசாமில், தனிநாடு கேட்போர் செல்வாக்குப் பெற்று விளங்கும் மலைநாடு, காங்கிரசை வீழ்த்தியிருக்கிறது. இங்கு, காங்கிரசை எதிர்த்து நின்ற நாம், பொச்சரிப்புக் காரர் தவிர, பிறர் கண்டு பாராட்டத்தக்க வகையில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்தக் "குறிகள்’ காலப்போக்கைக் காட்டுவதாகும் என்று கருத்துத் தெளிவுள்ளோர் எண்ணுகின்றனர். அலாதியாகத் தெரியும் என்பதற்காகவே, எதிலும் காட்டுப்போக்கு காட்டுபவர்கள் மட்டும், பூ! பூ! இதெல்லாம் ஒரு வெற்றியா!! இதுகளெல்லாம் ஒரு கட்சியா!! என்று பேசுகின்றனர். தம்பி! தேர்தலின்போது, நமது கழகத்தை இழித்தும் பழித்தும் பெரியாரின் படை பேசியபோது, மனம் குமுறிய பலர் என்னிடம் கூறினர் - என்னிடம் கூறுவானேன் ஐயா! என் செவிக்கேதான் அந்தச் சங்கீதம் நித்த நித்தம் கேட்கிறதே என்று சொன்னேன்; இப்படி வரைமுறையின்றி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்களே, இதை அனுமதித்துக்கொண்டே போவதா என்று கேட்டனர்; நாம் அனுமதிப்பதாவது தடுப்பதாவது, இந்த இழிமொழிகளைத் தாங்கிக்கொள்வதற்கான நெஞ்சு உரத்தை நாம் பெறவேண்டும் என்று பதிலளித்து அனுப்பினேன். பிறகு நானே யோசித்தேன் - ஏன் அவ்விதமாகப் பேசுகிறார்கள் என்று. எனக்கு, தம்பி! பேசுபவர்களின் நிலை புரிந்தது - புரிந்ததால் எனக்கு அவர்களிடம் இருந்த "கொஞ்சநஞ்சம்’ கோபம்கூடக் குறைந்தது. அனுதாபம் ஏற்பட்டது. அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள வேலையும், தமக்கென்று மேற்கொண்டுவிட்ட போக்கும், வேறு விதத்தில், முறையில், பேசவைக்கவில்லை - முடியவில்லை. புலிவேடம் போட்டுக்கொண்டு பரத நாட்டியம் ஆடமுடியுமா? கற்பனை செய்து பாரேன்!! புலிவேடம் போட்டு ஆடுவது என்றால், அதற்கான விதத்தில் தாவியும் பாய்ந்தும், பதுங்கியும் உலுக்கியும், "ஜகா’ வாங்கியுந்தான் ஆடவேண்டும் - ஆடமுடியுமே தவிர, பரத நாட்டிய பாணியிலா ஆடிக்காட்ட முடியும்!! அதுபோலத்தான், தம்முடைய கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டுவது என்ற வேலையை விட்டுவிட்டு, அல்லது மூட்டை கட்டி ஒரு புறம் வைத்துவிட்டு, யார் பேரிலோ எதற்காகவோ ஏற்பட்டுவிட்ட ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துக்கொள்வதற் காக, வேறு யாருக்கோ “அடி ஆளாக’ப் போகத் துணிந்துவிட்ட பிறகு, அதற்குத் தகுந்த”பாஷை’ தானே இருக்கும் - வேண்டும் - பிறக்கும் - மணக்கும்! எத்தனை எத்தனை ஏற்புடைய கொள்கைகளை, எவ்வளவு எழிலுடன் எடுத்துக் கூறிவந்தவர், இன்று இப்படிப்பட்ட "பாஷை’யில் பேசவேண்டி நேரிட்டுவிட்டது என்று எண்ணியபோது, உண்மையிலேயே நான் அனுதாபப்பட்டேன். அந் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், இப்போது அதே முறையில் பேசுகிறார்கள் - தமக்கென வேறு புரட்சிகளைக் கண்டுபிடித்து செயல்படுகிறவரையில், இதே "பாஷை’தான் இருக்கும். பொதுவாகவே, அரசியல் நிலைமைகளுக்கான ஆய்வுரைகளையும், தீர்ப்புகளையும், அவ்விடமிருந்து எதிர்பார்த்தால், எரிச்சலும் ஏமாற்றமும்தான் கிடைக்கும். அல்லிப் பூவில் மல்லிகை மணம் கிடைக்காது. ஆனால், அரசியற் குறிகளைக் கண்டு காலத்தைக் கணிப்போர், காங்கிரசுக்குப் பல்வேறு பகுதிகளிலே ஏற்பட்டிருக்கும். "சரிவு சிதைவுகளை’ சுட்டிக்காட்டுகிறார்கள். இதழின் மேலட்டையில் உள்ள படம், இந்த நோக்கத்தை விளக்குவதாக இருக்கிறது. தம்பி! தேர்தலென்பதே ஒரு பித்தலாட்டம் - அதில் ஈடுபடுபவர்கள் அனைவருமே அயோக்கியர்கள் - ஓட்டர்கள் எல்லோருமே அப்பாவிகள் - என்ற "அருமை’யான தத்துவத்தை யும் கண்டறிந்து கூறிக்கொண்டு, அந்தத் தேர்தலில், ஓட்டு கேட்பதற்காக யார் பின்னோடும் சென்றால், மனதுக்கு இலாபகரமான சந்தோஷம் கிடைக்கும் என்று இருந்தவர்களின், பேச்சும் போக்கும் தொல்லை நிரம்பிய வாழ்க்கையில் தவிக்கும் மக்களுக்கு, ஒருபொழுது போக்காகிவிட்டது. எனவே, அது குறித்து நாமும் அதிகமாகக் கவனிப்பதற்கில்லை!! நாம் பெற்ற வெற்றிகள், கம்யூனிஸ்டு கட்சி கேரளத்தில் பெற்றுள்ள மகத்தான வெற்றி, கணதந்திர பரீஷத் ஒரிசாவில் பெற்ற கவலையூட்டும் வெற்றி, மராட்டிய மண்டலத்திலே சமிதி பெற்றுள்ள வசீகரமிக்க வெற்றி, அசாமில் மலைநாடு பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வெற்றி - இவைகளுக்கான காரணங்களைச் சிலர் உள்ளபடி கண்டறிந்தாகவேண்டுமென்று முயலுகின்றனர். அந்தச் சிரமம் நமக்கேன் என்று கருதும் போக்கினர் - காட்டுத் தீ - கடுவிஷம் - என்று சுடுசொல் கூறிவிடுவதன் மூலம், தமது வேலை முடிந்துவிட்டதாகக் கருதுகின்றனர். பீகார் மாநிலத்திலிருந்து வெளிவரும், இந்தியன் நேஷன் ஆங்கில இதழ், இது குறித்து வழங்கியுள்ள ஆய்வுரை சுவையும் பயனும் உள்ளதாக இருந்திடக் கண்டேன். கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி பெற்ற வெற்றிபற்றியே அந்த இதழ் ஆய்வுரை அளித்திருக்கிறது - என்றாலும், பொதுவான அரசியல் விளக்க மும், தத்துவவிளக்கமும் அதிலே இருந்திடக் காண்கிறேன். ஆரிய - திராவிடப் பிரச்சினை என்பது அபத்தம் என்பாரும், ஆரிய - திராவிடப் பிரச்சினை ஆபத்தானது என்பாரும், ஆரிய - திராவிடப் பிரச்சினை என்பது, புதை குழியைத் தோண்டிப் பார்த்திடும் போக்கு என்பாரும் உண்டல்லவா? காங்கிரசு கட்சி மட்டுமல்ல, வெற்றிபெற்ற கம்யூனிஸ்டு கட்சியே கூட, ஆரிய… திராவிடப் பிரச்சினையை, கேவலமானது கேடு பயப்பது என்று சில வேளைகளிலும், இல்லாதது இட்டுக் கட்டியது என்று சில நேரங்களிலும், பேசிடக் கேட்கிறோம். நமது கம்யூனிஸ்டு நண்பர்கள், திடுக்கிட்டுப் போவர் என்று எண்ணுகிறேன், "இந்தியன் நேஷன்’ இதழ் தரும் ஆய்வுரையைக் கண்டால். தம்பி! இதழ் "பாட்னா’ விலிருந்து வெளியிடப்படுகிறது. காஞ்சிபுரத்துக் காகிதமல்ல!! கம்யூனிஸ்டு கட்சி கேரளத்தில் வெற்றி பெற்றதற்குக் காரணம் கேரளத்தில் உள்ள திராவிட உணர்ச்சிதான் என்று அந்த இதழ் எழுதுகிறது. Kerala is a small reorganised State in the South கேரளம், தெற்கே உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட அரசு. The basis of her culture is Dravidian அதன் அடிப்படை திராவிடப் பண்பாடு. இந்த எழுத்துக்களைப் படிக்கும்போதே, மற்றவர்களுக்கு ஏற்படுவதைவிடக் கம்யூனிஸ்டுகளுக்கு எரிச்சல் இருக்கும் - திராவிடமாவது ஆரியமாவது என்று முணுமுணுப்பர். ஆனால் "இந்தியன் நேஷன்’, பண்பாடுகளுக்குத் தக்கபடிதான் அரசியல் மாற்றங்கள் இதுபோது ஏற்பட்டுள்ளன என்பதை எடுத்து விளக்குகிறது. In our analysis there are historical reasons for the growing Communist influence in the non - Brahminical belt of Inida. பார்ப்பனரல்லாதார் வாழும் இந்தியப் பகுதிகளிலே கம்யூனிஸ்டு செல்வாக்கு வளர்ச்சி அடைந்து வருவதற்கு சரித்திர பூர்வமான காரணங்கள் இருப்பதை ஆராய்ந்தறிகிறோம். To be precise, the Communist party is showing better results in the non-Aryan belt. குறிப்பாகக் கூறுவதானால், கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு ஆரியமல்லாத பகுதிகளிலேதான் நல்ல பலன்கள் கிடைத்து வருகின்றன! There is marked influence of Communist in Southern States and in Bengal, which may be taken as non-Aryan Belt தென்னரசுகளிலும், வங்காளத்திலும், கம்யூனிஸ்டுக்கு சிறப்பான செல்வாக்கு இருக்கிறது - இந்த இடங்களை ஆரியரல்லாதாரின் வட்டாரங்கள் என்று குறிப்பிடலாம். செச்சேச்சே! இதென்ன இந்தக் கழகத்தார், பாட்னாவிலுள்ளவர் களைக்கூடவா கெடுத்துவிட்டார்கள். பார்ப்பனர் - அல்லாதார்! ஆரியர் - திராவிடர்! ஆரிய பூமி, திராவிடத்தரணி என்ற பைத்தியக்காரத்தனமான பேச்சு, பாட்னாவில் கூடவா எழுவது!- என்று கை பிசைந்துகொண்டும், கண்களைக் கசக்கிக் கொண்டும், சிலர் கூவக்கூடும். "இந்தியன் நேஷன்’ கேரளம் திராவிடப் பண்பாடு மிகுந்த இடம், அங்கு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றதற்குக் காரணம் அதுதான் என்று கூறிவிட்டு, அதற்கான விளக்கம் தராமலில்லை. ஆரிய கலாச்சாரம், திராவிடப் பண்பாடு என்பவையின் அடிப்படை பற்றிய விளக்கம் அளிக்கிறது. The Aryan mind which may be Characterised as the Brahminical mind may be sharp but it is rigid. It is burdened with rites and taboos. It may be metaphysical but it is not emotional and as such it is not very receptive. ஆரிய மனப்பான்மையை பிராமண மனப்பான்மை என்று கூறலாம். அந்த மனப்போக்கு கூர்மை நிரம்பியதாக இருக்கலாம்; ஆனால், அது வளர்ச்சிபெற மறுக்கும், ஆழ்ந்துவிட்ட நிலையில் உள்ளது. தடை விதிகளையும் சடங்குகளையும் சுமந்துகொண்டிருப்பது. வேதாந்தப் போக்கினதாக இருக்கலாம்; ஆனால், எழுச்சிக்கு இடமளிப்பதில்லை; எனவே புதிய கருத்துக்களை வரவேற்று ஏற்றுக்கொள்ளும் வளம் ஆரிய மனப்பான்மைக்கு இல்லை. The non-Aryan mind is definitely emotional ஆரியரல்லாதார் மனப்பான்மை நிச்சயமாக எழுச்சிமிக்கது. It is receptive to New ideas புதிய கருத்துக்களை வரவேற்று ஏற்றுக்கொள்ளும் மனவளம் கொண்டது. Thus the anti-Congress temper in the South and in Bengal has found expression in the support to the Communist party. எனவே, தெற்கிலும் வங்கத்திலும் கிளம்பிய காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சி, கம்யூனிஸ்டு கட்சியை ஆதரிப்பது என்ற வடிவமெடுத்தது. But in the Aryan Belt the opposition pattern is different. ஆனால் ஆரிய வட்டாரத்தில், காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சியின் வடிவம் வேறு வகையானதாக இருக்கிறது. The Janata party and the Jharkand party represent the anti-Congress mood in Bihar, but they are not wedded to evolutionary experiments. பீகாரில் உள்ள ஜனதாகட்சி, ஜார்கண்டு கட்சி, காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சியின் வடிவங்களாக உள்ளன; ஆனால் இவை புரட்சிகரமான திட்டங்களைக் கொள்ள மறுப்பவை. The Ganatantra Parishad is strong in Orissa as an opposition party; the Jana Sangh and independents have some strength in the Punjab, Rajasthan, Uttar Pradesh which are strongly Aryan Belts. ஒரிசாவில், பலம் வாய்ந்த எதிர்க் கட்சியாக கணதந்தர பரீஷத் உள்ளது! ஜனசங்கமும் சுயேச்சைகளும் பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் சிறிது வலிவு பெற்றுள்ளனர் - இந்த இடங்க ளெல்லாம் ஆரிய வட்டாரங்கள். The Dravidian mind is a daring mind with expressions and rich varieties. திராவிட மனப்பான்மை, அஞ்சாதது! புத்தம் புது முறைகளைக் கையாண்டிடத் துடிப்பது. தம்பி! ஆரிய திராவிடப்பிரச்சினையைப் பேசிடும் நாம், வீணர்கள் என்று விளம்பி வந்தனரே, இப்போது அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? ஆரியர் - திராவிடர் என்று நாம் தனி ஆட்களைக் குறித்து, வெறுக்கவோ, விரட்டி அடிக்கவோ, பேசும் போக்கினரல்ல, முறைகளைத்தான் எடுத்துக் கூறி வருகிறோம். அதுவும் தவறு - முறைகள் ஒன்றோடொன்று குழைந்து போயே விட்டன, என்று கூறுவார் உளர். அவர்களெல்லாம், அகலக் கண்களைத் திறந்து பார்ப்பர், பாட்னா இதழ் தரும், இந்த ஆய்வுரையைக் கண்டு. ஆரியம் என்பது பழமையின் பாசறை - திராவிடம் புதுமை பூத்திடும் பூங்கா - என்று நாம் கூறும்போது, அடுக்குமொழி பேசுகின்றனர் மயக்க என்று அலட்சியம் செய்தனரே, அவர்கள், இந்திய பூபாகத்தில் இருவேறு பகுதிகளை ஆரியக் கலாச்சாரம் பிடித்துக்கொண்டுள்ள இடம், திராவிடப் பண்பாடு நிரம்பிய இடம் என்று வேறுபடுத்திக் காட்டி, அந்த வேறுபாட்டினுக் கேற்றபடி, அரசியல் நிலைமைகள் உருவாகின்றன என்பதை பாட்னா பத்திரிகை விளக்கும்போது, என்ன பதில் அளிக்கின்றனர்!! பாட்னாவில் உள்ள இந்த இதழுக்கும், நமது கழகத்துக்கும் தொடர்பு துளியும் இல்லை. இல்லாததால்தான், கேரளத்தில் கம்யூனிஸ்டு பெற்ற வெற்றிக்குக் காரணம், அந்த நாட்டிலே உள்ள திராவிடப் பண்பாடு, என்று எழுத முற்பட்ட இதழ், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருடனேயே பணியாற்றி, குறிப்பிடத்தக்க வெற்றிபெற்ற நம்மைக் குறித்து ஏதும் எழுதவில்லை. Home Land - ஆங்கில இதழ் வெளிவந்த பிறகு, கருத்துத் தொடர்பு ஏற்படக் கூடும்; அப்போது நமது கழகத்தின் செல்வாக்கு எத்திறத்தது என்பதனை இன்று அறியாமலிருக்கும் பலரும் அறிந்திட வாய்ப்புக் கிடைக்கும். வம்பு வல்லடிக்காரர்கள், வறட்டுக் கூச்சலிடுவோர், வகுப்புவாதம் பேசுவோர், வரைமுறை அழித்திட ஆர்ப்பரிப்போர் என்றெல்லாம், ஏளனமும் எரிச்சலும் கலந்து குரலிற் பேசி வந்தோரெல்லாம், இப்போதுதான் சிறிதளவு விழிப்புற்று நம்மைப்பற்றி அறிந்திட ஆவல் காட்டுகின்றனர். தம்பி! நமக்குக் கிடைத்தது 15 இடங்களேதான் என்றாலும் இதுவரையில் இல்லாத அளவிலும், முறையிலும், நமக்கு மக்களின் இதயத்திலே இடம் கிடைத்திருக்கிறது. இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மட்டுமே மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கோட்பாடு கூறிடவில்லை. அதிக எண்ணிக்கை உள்ள இடங்களைக் கைப்பற்றி விட்டால், உடனே காங்கிரஸ் வட்டாரம், கன்னத்தில் போட்டு கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறதா என்றால் அதுவுமில்லை. நாம்தான், பல இடங்களில் டிபாசிட் இழந்தோம், பலமாகத் தோற்றோம், பதினைந்தே இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றோம், எனவே பரிகாசம் செய்கின்றனர் என்று வாதத்துக்கு ஒப்புக்கொள்வோம். நிரம்ப இடங்களைப் பிடித்துவிட்டால் மட்டும் மதிப்பளிக்கின்றனரோ? அந்த மாண்பு இருக்குமானால், மராட்டிய மக்கள் பெற்றுக் காட்டிய மகத்தான வெற்றிகண்ட காங்கிரசார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, இழைத்த அநீதியைத் துடைத்திட அல்லவோ முற்படுவர்! செய்தனரோ? அதுதான் இல்லை! மொழி வெறி ஊட்டி, மக்களை பெருமளவு ஏய்த்துவிட்டனர் என்று குற்றம் சாட்டி, மராட்டிய மக்கள் பெற்ற வெற்றியின் மதிப்பைக் குறைத்துப் பேசுகின்றனர். மராட்டிய மண்டலத்தில் மட்டும் 135 - இடங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் 32 - இடங்களைத் தான் பிடித்திட முடிந்தது; 100 - இடங்கள் சம்யுக்த மராட்டிய சமிதிக்குக் கிடைத்தது. மலையைக் கெல்லினர் எலி பிடித்தனர் காங்கிரசார் என்று கூறிப் பார், ஆர்ப்பரிப்பர், அந்தத் தலைவர்கள்! செய்யாத முயற்சி இல்லை - வீசாத பணம் இல்லை - பேசாத தலைவர் இல்லை - எனினும் பலன் கிட்டவில்லை. டில்லி பாராளுமன்றத் தேர்தலில், 23 - இடங்கள்; இதில் 2 - இடங்கள்தான் காங்கிரசுக்கு! மராட்டிய மக்கள் தாயகத்திடம் செலுத்தவேண்டிய அன்பினைத் தெளிவுபடக் காட்டிவிட்டனர். தடியடியும் துப்பாக்கிப் பிரயோகமும் நடாத்திய காங்கிரஸ் தர்பாருக்குத் தக்க பாடம் புகட்டி விட்டனர். உற்றார் உறவினர் என்றும், உலகம் மெச்ச வாழ்ந்திடுவோர் என்றும், உயர்ந்த இடத்தில் அமர்ந்தோர் என்றும் என்ன கித்தாப்பு பேசினாலும், அவர்கள் உரிமையை அழித்திடுவோர் என்றால், அவர் அடிவருடமாட்டோம் உரிமைக்காக வீரப் போரிட்டே தீருவோம் என்று மராட்டிய மக்கள், செயலால் காட்டிவிட்டனர்! 135-க்கு 32!! - காங்கிரசுக்கு! இந்த தெளிவான முடிவுக்குப் பிறகாவது, காங்கிரஸ் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டு, தன் எதேச்சாதிகாரத்தை விட்டொழித்ததா? இல்லை! இல்லை! 135-ல் 100 - இடங்களில் வெற்றி பெற்ற "சமிதி’யைக் கேவலப்படுத்தித்தான் பேசி வருகிறது. “நாக நாடு’ உரிமைக்காகக் கிளர்ச்சிகள் நடத்திப் பலன் காணாததால், பிசோ என்னும் தலைவனுடைய ஆணையின்கீழ் திரண்டெழுந்து போர்க்கொடி உயர்த்தி விட்டிருக்கும் நாகர்கள் - சிதறுண்டு போயினர், சரணடைந்தனர், இந்திய ராணுவமும் ராஜதந்திரமும் சேர்ந்து நடத்திய தாக்குதலால் எதிர்ப்பு அழிந்தொழிந்து, தனிநாடு கேட்பது தீது என்ற தெளிவுபெற்ற நாகர்கள், இப்போது இந்திய சர்க்காருடன் ஒத்துழைக்கத் துடிக் கின்றனர், தோழமையைப் பெற விழைகின்றனர் என்றெல்லாம்,”டில்லி’ பிரசாரம் செய்ததல்லவா? பிசோ பிடிபட்டு அடிபணிய வேண்டியது ஒன்றுதான் பாக்கி, அவன் வலது கரம் - அவன் கண் - அவனுடைய காது - அவனுடைய மூளை - போன்ற "சகாக்கள்’ பிடிபட்டனர், அறிவூட்டப் பெற்றனர், அடங்கி விட்டனர் என்றெல்லாம் அறிக்கைகளை வெளியிட்டு, டில்லி தர்பார் மகிழ்ச்சி தெரிவித்ததல்லவா, அந்த நாகநாடு இந்தத் தேர்தலிலே என்ன பாடம் தந்திருக்கிறது தெரியுமோ! கடந்த பொதுத் தேர்தலின்போது, “எம்மை அடிமைப் படுத்திய டில்லி நடத்தும் தேர்தலில் நாங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை; உரிமையை உயிரினும் மேலெனக் கருதிடும் நாகர் எவரும், இந்தத் தேர்தலில் பங்கு கொள்ளக்கூடாது’’ என்று நாகநாடு காணக் கிளர்ச்சி நடத்துபவர் கூறினர். நாகநாடு, அடியோடு தேர்தலை வெறுத்துத் தள்ளிவிட்டது.”நாகநாடு’ பகுதிக்கென இந்திய சர்க்கார் 3 - பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்டு என்றனர்; ஒரு இடத்துக்கும் "ஆள்’ கிடைக்கவில்லை, தேர்தலுக்கு நிற்க!! இந்தத் தேர்தலின்போதும் ஒரு தொகுதிக்கு யாருமே அபேட்சகராக நிற்க முன்வரவில்லை! மற்ற இரண்டு தொகுதிகளிலும், நாகநாடு தனி அரசு ஆக வேண்டும் என்ற உரிமைத் திட்டத்தை ஆதரிக்கும் சுயேச்சைகள் தான் வெற்றிபெற முடிந்தது - காங்கிரஸ் அல்ல! நாக நாடு பகுதியில், 19 - சட்டசபைத் தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி, பெற்ற வெற்றி என்ன என்று கேட்டுப்பார்! நேரு பண்டிதரை உலகமே புகழ்கிறது என்கிறார்கள் - ஆனால் தனி அரசு கோரும் நாகர்கள், அந்தப் புகழொளி கண்டு மயங்கிட மறுத்து விட்டனர். 19-ல் 1-இடமே காங்கிரசுக்கு! ஒன்றே ஒன்று!! குன்றுக்குக் குன்று, விடுதலை வேட்கை தாவுகிறதாம் அங்கு! இங்கு அணைத்துவிட்டோம், அங்கு அணைத்து விட்டோம் என்று கூறி முடிப்பதற்குள், நாகநாடு உரிமைக்காக எழுந்துள்ள தியாகத்தீ, வேறு இடத்திலே கொழுந்துவிட்டு எரியக் காண்கின்றனர். வீழ்ந்துபட்டனர் என்றெண்ணி, வீழ்த்த எடுத்துக் கொண்ட உழைப்பினால் ஏற்பட்ட வியர்வையை இந்திய ராணுவத்தினர் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, வேறோர் இடத்திலே எதிர்ப்பு வெடிக்கிறது. இந்த நிலைமையைக் கண்டாவது, காங்கிரஸ் தலைவர்கள், நாகநாட்டினர் வீறுகொண்டு எழுந்துள்ளனர், எம்மால் அவர்களை அடிமைப்படுத்த முடியவில்லை - வேட்டு முறையிலும் அவர்களை அழிக்க முடியவில்லை, ஓட்டு முறையாலும் ஒடுக்க இயலவில்லை, நாகநாடு தனி அரசு ஆகவேண்டும் என்பவர்களே, பெருவாரியான இடங்களிலே வெற்றி பெற்றனர் 19-ல் 1-தான் காங்கிரசுக்குக் கிடைத்தது - என்று கூறி, நாகநாடு கேட்பவரிடம் மதிப்பு காட்டுகின்றனரா? இல்லை! இல்லை! இந்த நாகர்கள், தலைவெட்டிக் காலந்தள்ளுபவர்கள், வெளிநாட்டாரின் கைப்பாவைகள், காட்டுப்போக்கினர் என்று இழிமொழி பேசுகின்றனர். தேர்தலில், மக்களின் தீர்ப்பு எங்ஙனம் அமைகிறது என்பதைக் கண்டறிந்து, காங்கிரஸ் கட்சி தன் போக்கை மாற்றிக்கொள்வதாக இல்லை. காரணம் வேறு ஏதேனும் காணவும் பெற்ற வெற்றிக்குக் களங்கம் கற்பிக்கவும் முற்படுகின்றனரேயொழிய, மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க முன்வருவதில்லை. எதிர்க்கட்சிக்கு வெற்றி எத்தனை இடங்களில் என்பதைப் பொறுத்து காங்கிரஸ், தன் நோக்கையும் போக்கையும் அமைத்துக்கொள்ள மறுக்கிறது. எனவே தம்பி, நமக்குக் கிடைத்த இடங்கள் எத்தனை என்பதுகூட அவ்வளவு முக்கியமல்ல. எவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகு! என்பதுதான் மிகமிக முக்கியமானது. இந்த வெற்றி, அளவிலே எப்படியோ இருக்கட்டும், தரம் எப்படிப்பட்டது என்றால், அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தமிழகத்தில் புதியதோர் வலிவு பொலிவுடன் எழுகிறது என்ற எண்ணத்தை உண்டாக்கி வைத்திருக்கிறது. மக்கள் மனதிலே புதியதோர் ஆவல், அன்பு, நம்பிக்கை உணர்ச்சி எழுந்திருக்கிறது. இவ்வளவு ஏற்றமும், நமது கழகம், தன்னந்தனியே நின்று போராடிப் பெற்றது; துணை - கூட்டு - ஒத்துழைப்பு - என்பதேதும் இல்லை என்று அறியும் போது மக்கள் நமது கழகத்துக்கு உள்ள வலிவினை உணர முடிகிறது. சிலாக்கியமான கொள்கைகள் உள்ளன; எவரும் போற்றிப் புகழ்ந்திடத்தக்க கொள்கைகள்; நாட்டுக்கு மிகமிகத் தேவையான கொள்கைகள் என்பதிலே ஐயமில்லை. ஆனால் அந்தக் கொள்கைகளைப் பரப்புவதாகக் கூறிக்கொண்டு உலவும் இந்தப் பேர்வழிகள், சரியான ஆட்களல்லவே, தரமற்றவர்கள், திறனற்றவர்கள், நேர்மையற்றவர்கள்; எனவே கொள்கை வெற்றி பெறாது; கொள்கை சிலாக்கியமானது என்பதற்காக, இப்படிப் பட்ட தரம் கெட்டவர்களுடன் கூடிப் பணியாற்ற முடியுமா! - என்று சில கட்சிகளைக் குறித்து எடுத்துக் கூறிடுவதுண்டு. "ஆசாமிகள்’ நல்லவர்கள், நாணயமானவர்கள், திறமை மிக்கவர்கள், மதிக்கத் தக்கவர்கள், அறிவாற்றலுள்ளவர்கள் - அதிலே ஒருவருக்கும் ஐயமில்லை; ஆனால் அவர்கள் எடுத்துக் காட்டும் கொள்கைகள் சரியானவைகளல்லவே, கேடு பயப்பன, நாட்டுக்குக் கேவலத்தைத் தருவன, மக்களை நாசப்படுத்துவன வாக உள்ளனவே; என்ன செய்வது? ஆசாமிகள் நல்லவர்கள் என்பதற்காக, அவர்களுடன் கூடி நாட்டைக் கெடுக்கும் கொள்கைக்கு ஆக்கம் அளிக்கலாமா - அறிவுடைமையாகுமா, ஆபத்தல்லவா அது? என்று சில கட்சிகள் குறித்துச் சிலர் கூறுவதுண்டு, தம்பி! நம்மைப்பற்றிப் பலரும் கூறிவந்ததோ, கொள்கையும் கேடானவை நாமும் தரமற்றவர்கள் என்பதல்லவா? கொள்கை ஏது இவர்களுக்கு, வகுப்புவாதம் நாசமூட்டுவ தாகுமே, நாட்டைப் பிளக்கும் நாசகாலர்களுக்குக் கட்சி ஒரு கேடா, வறட்டுக் கூச்சலிட்டுக் கொண்டு நாட்டைக் குட்டிச்சுவராக்கும் ஒரு கும்பலுக்கு, கொடி ஒன்று வேண்டுமா!! - நம்மைக் குறித்து மாற்றுக் கட்சிகள் கூறுவனவற்றை மெத்தக் கஷ்டப்பட்டு, நாகரீகமாக்கித் தரமுயன்றிருக்கிறேன். இதுவரையில் எந்த ஒரு கட்சியையும் இவ்வளவு கேவலமாக, ஒருவர் பேசி ஏசியதில்லை. அவர்கள் நம்மைப்பற்றிக் கூறியுள்ள "இழிமொழிகளை’த் தாங்கிக் கொள்ள முடிந்ததொன்றே, பலருக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு கேவலப்படுத்தப்பட்ட நமது கழகம், மக்களிடம் இந்த அளவுக்கு மதிப்புப்பெற முடிந்தது என்றால், நாம் உள்ளபடி பெருமைப்படாமலிருக்க முடியுமா? எத்துணை கேவலப்படுத்திக் காட்டினோம், இவர்களை வளரவிடாதீர்கள் நாட்டுக்கு நாசம் என்று எச்சரித்தோம், எனினும் பதினாறு இலட்சத்துக்குமேல் வாக்குகளை இந்த மக்கள் கொட்டித் தந்தனரே! - என்று எண்ணும்போதே, நம்மை ஏசி வருபவர்களின் வயிறு "பகீர்’ என்கிறது, நெஞ்சு பதறுகிறது, மக்களையே, துரத்தித் துரத்தி அடிக்கலாமா என்று துடிக்கிறார்கள். பதினைந்து இடங்களைப் பிடித்து விட்டார்களாம் - பதினைந்து!! - பூ! இது ஒரு பிரமாதமா என்று பரிகாசம் பேசுகிறார்களே, அதன் உண்மையான பொருள் இதுதான்; மக்களின் இதயத்திலே நமக்கோர் மதிப்புள்ள இடம் கிடைத்துவிட்டது என்ற உண்மை அவர்களின் உள்ளத்தைச் சல்லடைக் கண்ணாகத் துளைக்கிறது; துடியாய்த் துடிக்கிறார்கள். அவர்கள் வீட்டில் சிறுவர்கள், கள்ளங் கபடமற்ற நிலையில், “அப்பா! பத்தும் ஐந்தும் கூட்டினால், எவ்வளவு?’’ என்று கேட்டுவிட்டால்கூடப் போதும். அவர்கள் பாபம் பதறி,”பாவீ! பாதகா! கண்ணீர்த்துளிகளின் "வெற்றி‘யையா கொண்டாடுகிறாய்! என் எதிரிலா? அவ்வளவு ஆணவமா உனக்கு? எதைக் கண்டு மயங்கி விட்டாயடா, ஏமாளி! அந்தப் பயல்களின் பேச்சைக் கேட்டா? எழுத்தைப் பார்த்தா? பாடல் கேட்டா? படம் பார்த்தா? பத்தும் ஐந்தும் கூட்டுவதா? பத்தும் ஐந்தும் பதினேழு! போ! ஆமாம்! அப்படித்தான் சொல்லுவேன்! கூரைமீது ஏறிக் கூவுவேன்! கோபுரத்தின்மீது ஏறிக் கொக்கரிப்பேன்!’’ என்றெல்லாம்கூட, குளறுவர்! நல்லவர்கள்தான், பாபம், ஆனால் அவர்கட்கு வந்துற்ற நோய் அப்படிப்பட்டது!! அண்ணன், 14-4-57 படமும் பாடமும் (4) மராட்டிய மண்டல எழுச்சியும் வெற்றியும் - தேர்தலில் தி. மு. கவும் காங்கிரசும் பெற்ற வாக்குநிலை தம்பி! தமிழகத்தின் தனிச்சிறப்பினை, இலக்கியமும், வெட்டுண்டும் சிதறுண்டும் கிடக்கும் நிலையில் மட்டுமே கிடைத்திடும் வரலாறும் காட்டும்போது, எனக்கு மன எழுச்சி உண்டாவது போலவே, எவருக்கும் உண்டாகத்தானே செய்யும். நாட்டுச் சிறப்புப்பற்றி அறிந்திடும்போது, அனைவரும் அகமகிழத்தான் செய்வர் - அந்த உணர்ச்சி, "கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாக’ அமைகிறது. பொல்லாத புலவர்கள், ஏனோ இவ்வளவு அழகுபட, உள்ளத்தில் உவகை பொங்கிடத்தக்க வகையில், நந்தம் நாடு பற்றிப் பாடினரோ என்று திகைத்துக் கேட்டிட வேண்டி நேரிடுகிறது, இன்று நம் கண்முன் நெளியும் நிலைமைகளுடன், புலவர்கள் பாக்கள் மூலம் காட்டிடும் தமிழக நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்திடும்போது. தமிழக வரலாறு, நம் தாயக வரலாறு என்ற முறையில் என் உள்ளத்தில் உவகையை உண்டாக்குவது இயற்கைதான் - ஆனால் அதற்கு அடுத்தபடியாக என் மனதுக்கு எழுச்சியைத் தரத்தக்கதாக, மராட்டிய மண்டல வரலாறு அமைகிறது. என் னென்ன வீரக் காதைகள்! எத்துணை எத்துணை தியாகங்கள்! ஏரோட்டியவன் எதிரியை விரட்டிட வாளேந்தியதும், தலைவாரிப் பூச்சூடி மகிழத்தக்க பருவத்தினள் குதிரை ஏறி மாற்றானைப் போரிட்டு விரட்டியதும், கீர்த்திக் கணவாயில் குருதி கொட்டியேனும் நாட்டை மீட்டிடக் கிளம்பிடும் ஆற்றல் படையினரின் அஞ்சா நெஞ்சமும், காணக்காண நெஞ்சு நெக்குருகும். மராட்டிய மண்டலம், அன்று அரசு பெற்று, அணியெனத் திகழ்ந்தது; இன்று அரசு இழந்து அல்லல்படுகிறது; எனினும், அந்த மக்கள் நாட்டுப்பற்றை இழந்தாரில்லை; தம் பண்டைப் பெருமையை மறந்தனரில்லை; மறவாதது மட்டுமல்ல, பெருமையை மீட்டிட முடியும் என்று உறுதிபூண்டு, இதுபோது பணியாற்றி வருகின்றனர். இந்த மாபெரும் எழுச்சியின் ஒரு சிறு கூறுதான் சம்யுக்த மராட்டிய சமிதி எனும் முயற்சி; இந்த முயற்சி, நம்பிக்கை தருவதாக அமைந்துவிட்டது! மராட்டிய மண்டலத்திலே, காங்கிரஸ் மேலிடம் இழைத்த அநீதியை எதிர்த்து, கொடுமைக்கு ஆளானார்கள் அனைவரும் ஒன்றுகூடி, காங்கிரசுக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே அமைந்தனர் புதிய முகாம் - சம்யுக்த மராட்டிய சமிதி வெவ்வேறு கட்சிகளை நடாத்திக்கொண்டு வருபவர்கள் - தத்தமக்கென்று தனிக்கொடியும் படையும் கொண்டுள்ளோர் - இந்த ஒரு நோக்கத்துக்காக, தமது ஆற்றலை தனித்தனியே செலவிட்டால் சிதறுண்டு போகும் என்பதற்காக ஒரு தனி முகாம் அமைத்து கூட்டுவலிவு காட்டிக் காங்கிரசை எதிர்த்தனர் - 135 இடங்களில் 100 இடங்களில் வாகை சூடினர். இங்கு, அது போன்ற முயற்சி வெற்றிபெறவில்லை! உள்ளதை மறைத்திடாமல் பேசுவது என்றால், இங்கு காங்கிரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் போட்டி எத்துணை கடுமையோ, அதனினும் கடுமையாக, காங்கிரசுக்கு எதிர்ப்புக் கட்சிகளாக உள்ளவைகளுக்குள் இருந்து வந்தன! காங்கிரஸ் வெற்றி பெற்றால்கூடப் பரவாயில்லை, இந்தக் கழகம் வெற்றிபெறக் கூடாது - என்பதை மேடையிலேயே பேசிடச் சிலர் கூசவில்லை. எது எந்த நாசமாகப் போனாலும் பரவாயில்லை, பார்ப்பானோ பாதகனோ, மொண்டியோ முடமோ, கூனோ குருடோ, ஊர்க்குடி கெடுப்பவனோ ஊமையோ, கழுகோ வௌவாலோ, காட்டானோ காவாலியோ, எவன் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை, இந்தக் கண்ணீர்த்துளிகள், மட்டும் வெற்றி பெறக்கூடாது - அதைக் காண நேரிடுமானால் எமக்கு உள்ளவை கண்களல்ல, புண்கள்!! - என்று பேசிடும் அளவுக்கு அநாகரீக அரசியல் படமெடுத்தாடிற்றே!! மராட்டியத்திலே, உரிமைக்காக அனைவரும் ஒன்றுபட்டு நின்று காங்கிரசை எதிர்த்துப் போராடினர் - எனவே 135-ல் 100 இடங்கள் வெற்றிபெற முடிந்தது. இங்கு, நிலைமை வேறு; மராட்டியம் போல, இங்கு, காங்கிரசை எதிர்த்து நிற்கும் கட்சிகள், ஒன்றை ஒன்று ஒழித்துக் கட்டவேண்டும் என்ற எண்ணம் கொள்ளாது, ஒன்றுக்கொன்று துணை நிற்கவேண்டும் என்ற திட்டத்தை அமுலாக்கி, கூட்டுச் சக்தியைக் காட்டி இருந்தால், காங்கிரசுக்கு இத்தனை "அமோகமான’ வெற்றி கிடைத்திருக்காது. மொத்தத்தில், சென்னை மாநிலத்திலே, காங்கிரசுக் கட்சிக்கு ஆதரவாகத் தரப்பட்ட ஓட்டுகளைவிட, காங்கிரசுக் கட்சிக்கு எதிராகத் தரப்பட்ட ஓட்டுகளின் எண்ணிக்கையே அதிகம். தொகுதிகளைத் தனித்தனியே பார்க்கும்போது, பதறப் பதற, எதிர்க்கட்சிகள் "பங்குச் சண்டை’ போட்டுக் கொண்டதால் மட்டுமே, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பதைக் காணலாம்! எதிர்க் கட்சிகளுக்குள் ஒரு உடன்பாடு, ஒத்துழைப்புத் திட்டம் இருந்திருக்குமானால், காங்கிரசுக்குச் சரிவு, சரிக்கட்ட முடியாத அளவுக்கு ஏற்பட்டிருந்திருக்கும். எதிர்க்கட்சிகள், ஒன்றை ஒன்று மதிக்க மறுத்ததும், உடன்பாடு குறித்து உரையாடி முடிவுகாணத் தகுந்த முறை, தக்க சமயத்தில் ஏற்படாமற் போனதும், காங்கிரசுக்கு "அமோக’ வெற்றி தேடிக்கொள்ள வழி தந்தது. மக்கள் பேரில் குற்றம் கூறுவதற்கில்லை. காங்கிரஸ் எதேச்சதிகாரத்தை நாங்கள் வெறுக்கிறோம், எதிர்க்கிறோம், மீண்டும் அந்த எதேச்சதிகாரத்தை அனுமதிக்க விரும்போம் என்று மக்கள், தமது "தீர்ப்பை’ தெளிவுடன், துணிவுடன், அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல் அளித்துள்ளனர்; மக்கள் பேரில் குறை இல்லை - குற்றமத்தனையும் மக்களை நடத்திச் செல்வதாகக் கூறப்படும், தலைவர்களிடமே இருந்திருக்கிறது. தம்பி! திருவையாறு தொகுதியில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்துக் கிடைத்த "ஓட்டுகள்’ 19,722; காங்கிரஸ் கட்சியை எதிர்த்து மக்கள் போட்டுள்ள ஓட்டுகள் 26,138 - என்றாலும் வெற்றி பெற்றவர், காங்கிரஸ் அபேட்சகராக நின்ற சுவாமிநாத மேற்கொண்டார் என்பவர்! இந்த விசித்திரத்துக்குக் காரணம் என்ன? காங்கிரசை எதிர்த்து திருவையாறு தொகுதி மக்கள் 26,138 - ஓட்டுகள் அளித்தனர் - ஆனால், அவை மொத்தமாக ஒருவருக்கு போய்ச் சேரவில்லை, ஆளுக்குக் கொஞ்சமாகப் பலர் பிய்த்து எடுத்துக் கொண்டு விட்டனர். பட்சிராஜன் - 8,270 சுயம்பிரகாசம் - 8,077 இராதாகிருஷ்ணன் - 4,648 இராமலிங்கம் - 4,096 திருவேங்கிடத்தான் ஐயங்கார் - 1,047 இப்படி, காங்கிரசுக்கு எதிர்ப்பான ஓட்டுகள் சிதறிப் போயுள்ளன! இவர்கள் அனைவரும் தோற்றனர் - மொத்தமாக 19,722 - ஓட்டுகளைத் திரட்டிக் கொள்ள முடிந்த மேற் கொண்டார் எனும் காங்கிரசுக் கட்சியார் வெற்றி பெற்றார்! திருவையாறு தொகுதியிலே காங்கிரசு வெற்றிபெற்றது என்று விழாக் கொண்டாடி, காங்கிரசின் செல்வாக்கினைப் பாரீர் என்று சிந்து பாடுவர்! ஆனால், தொகுதி மக்களிலேயோ, 26,138 - பேர் காங்கிரசு கூடாது, ஆகாது என்று கருதுகிறார்கள். 19,722 வாக்காளர் மட்டுமே, காங்கிரஸ் கட்சி வேண்டும் என்று தீர்ப்புக் கூறினர். 26,138 - மக்கள், காங்கிரஸ் கட்சி கூடாது, ஆகாது என்று தீர்ப்பளித்தும், பலன் கிடைக்காமற் போனதற்குக் காரணம் என்ன? ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக் கொள்வோம் என்று கூறி பத்து ரூபா நோட்டை, ஐந்து பாகமாகக் கிழித்து, ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக் கொண்டால் எப்படியோ, அப்படி ஆகிவிட்டது இந்தச் சம்பவம். காங்கிரசு கூடாது, ஆகாது என்பதைக் குறித்திடும் தீர்ப்புச் சீட்டுகளை - "ஓட்டுகளை’ - மக்கள் மொத்தமாக ஒருவரிடம் அளித்திருந்தால், காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றிருக்க முடியாது - திருவையாறு, காங்கிரஸ் கோட்டை என்று பேசிப் பெருமைப்பட முடியாது! ஆனால் காங்கிரசு கூடாது என்பதைக் குறித்திடும் தீர்ப்புச் சீட்டுகளில் 8,270 - நமது கழகத் தோழர் பட்சிராஜனிடமும், 8,077 - சீட்டுகளை, காங்கிரஸ் சீர்திருத்தக் குழுவினருடன் கூடிக்கொண்ட சுயம்பிரகாசம் அவர்களிடமும் என்று இம்முறையில் ஐந்து தோழர்களிடம், ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, 26,138 - ஓட்டுகளைப் பிரித்துப் பிரித்துக் கொடுத்து விட்டனர் - பத்து ரூபாய் நோட்டு கிழித்துக் கொடுக்கப்பட்டது - துண்டுகளாக்கப்பட்டன - பலன் இல்லாமற் போய்விட்டது. திருவையாறு தொகுதியில் 26,138 - மக்கள் காங்கிரசை எதிர்த்து ஓட்டு அளித்தும், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று விட்டதன் மர்மம், இதுதானே! காங்கிரசை எதிர்த்து ஓட் அளிக்க வேண்டுமென்று முடிவு செய்த அந்த 26,138 - வாக்காளர்களும், தத்தமது அறிவு, ஆராய்ச்சி, தொடர்பு, தோழமை, தெளிவு ஆகியவற்றுக்குத் தக்கபடி, காங்கிரசை வீழ்த்தக் கூடியவர் இவராகத்தான் இருக்க வேண்டும், இவருக்கு ஆதரவு அளித்தால்தான் காங்கிரஸ் கட்சியை முறியடிக்க முடியும், என்று முடிவு செய்து, அதற்குத் தக்கபடி ஓட்டுக்களைத் தந்தனர். இவ்வளவு “அபேட்சகர்கள்’ காங்கிரசை எதிர்க்கும்போது, காங்கிரசை எதிர்த்தொழிக்க எண்ணும் வாக்காளர்கள், குழப்பமடைவதும், அதன் பயனாக”ஓட்டுகள்’ சிதறுவதும்தானே நடக்கும். காங்கிரசை எதிர்த்த அத்தனை அபேட்சகர்களும், காங்கிரஸ்கட்சி கூடாது, ஆகாது, அதற்கு ஓட்டளிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டுள்ள வாக்காளர்களைச் சந்தித்தபோது, காங்கிரஸ்கட்சியை வீழ்த்தும் ஆற்றல், காங்கிரஸ் கட்சியினால் ஏற்பட்டுவிட்ட கேடுபாடுகளைப் போக்கும் வலிவு எனக்கு உண்டு, எனக்குத்தான் உண்டு, காங்கிரசை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு உங்களிடம் ஓட்டு கேட்க வருகிறார்களே மற்றவர்கள், அவர்களுக்கு அந்த ஆற்றலும் கிடையாது, வெற்றி பெறும் வாய்ப்பும் இல்லை; எனக்கு ஓட்டு அளித்தால் மட்டுமே காங்கிரசை வீழ்த்த முடியும்! என்று பேசியிருப்பர். வாக்காளர்கள் இதுபோல நாலாபக்கமும் பிடித்து இழுக்கப்பட்டதால், முடிவு நைந்துபோய்விட்டது. "காங்கிரஸ் கட்சி கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், காங்கிரசை வீழ்த்த, கழகத்தானால் முடியாது, நம்ம சுயம்பிரகாசம்தான் அதற்குச் சரியானவர் என்று 8,077 - வாக்காளர்க்குத் தோன்றியிருக்கிறது; இல்லை, இல்லை, என்ன இருந்தாலும், திராவிட பார்லிமெண்டரி கட்சி என்று சட்ட சபையில் இருக்கும்போது கூறிக்கொண்ட அதே சுயம்பிரகாசம் அவர்கள், இப்போது இழுத்தவன் பின்னோடு போகிற போக்கில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியிலே சேருகிறாரே, இப்படிப்பட்டவர் ஆதரித்துப் பலனுமில்லை, ஆதரிப்பது நிச்சயமுமல்ல, நாம் நமது கழகத்துப் பட்சிராஜனைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று 8,270 வாக்காளர்களுக்குத் தோன்றியிருக்கிறது; இத்தனை தொல்லை எதற்கு, ஐயங்கார் ஸ்வாமிகளை ஆதரித்துவிட்டுப் போவோம், அவர்தான் காங்கிரசை ஒழித்துக் கட்டக் கூடியவர் என்ற எண்ணம் 1,047 - வாக்காளர்களுக்குத் தோன்றியிருக்கிறது; காங்கிரஸ் சர்வாதி காரத்தை முறியடிக்க, மற்றவர்களை ஆதரித்தால் பயன் இல்லை; சம்மட்டி கொண்டு அடிக்க வேண்டும்; சரியான ஆசாமி இதற்கு, கம்யூனிஸ்டுதான், ஆகவே, அவருக்குத்தான் ஓட்டு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் 4,096 - வாக்காளர்களுக்குத் தோன்றியிருக்கிறது! மொத்தத்திலோ 26,138 - வாக்காளர்களுக்கு, காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம். இதேபோலப் பல தொகுதிகளிலும், நிலைமை ஏற்பட்டு விட்டது; மொத்தத்தில் காங்கிரசை எதிர்த்து வாக்காளர்கள் தீர்ப்பு அளித்திருக்கின்றனர்; ஆனால் தீர்ப்புச் சீட்டுகளை, பல்வேறு பெட்டிகளிலே பிரித்துப் பிரித்துப் போடவேண்டிய நிலைமை - மக்களால்கூட அல்ல - தலைவர்களால் ஏற்பட்டு விட்டது. அதனால்தான் தம்பி! மக்கள் பேரில் குறை கூறுவதற்கில்லை, குற்றம் "தலைவர்கள்’ பேரில்தான் என்று கூறினேன். நமது இராஜேந்திரன் தொகுதி தேனீயைப் பாரேன். நாடகமாடி நாடாளலாமா என்ற தத்துவம் கக்கினார்களே சிலர், இரண்டிலும் திறமையற்றவர்கள், அவர்கள் எதிர்பார்க்கவில்லை, சென்னையில் பல ஆண்டுகளாக “வாசம்’ செய்து கொண்டுள்ள அந்த இளைஞன், தேனீ தொகுதியில் பெற்றிருக்கும் செல்வாக்கின் அளவை. 31,404 வாக்குகளல்லவா, கிடைத் திருக்கிறது,”மணிமகுடத்துக்கு!!’ காங்கிரசுக்குத்தான் வெற்றி ஆனால் வெற்றி பெற்றவருக்கு, "விருது’ என்ன தெரியுமோ! இராஜேந்திரனைத் தோற்கடித்த தேனீ தியாகராஜன்!! பார்த்தாயா, தம்பியின் சமர்த்தை! தியாகராஜனுக்கு, பத்ம பூஷணம் பட்டம்போல், இப்போது இராஜேந்திரன் பெயர் பயன்படுகிறது!! இதேபோலச் சென்னையில், கூட்ட விளம்பரச் சுவரொட்டி கண்டேன் - கேலிக்காக நானாக இட்டுக் கட்டிக்கொண்டு கூறினேன் என்று காங்கிரசார் யாராவது எண்ணிக் கொள்ளப் போகிறார்கள். 38,185 வாக்குகள் பெற்றார் தியாகராஜன்; காங்கிரஸ் வெற்றி பெற்றது; தேனீ தேசியக் கோட்டை என்று பெருமைப்படட்டும் - வேண்டாமென்று கூற, நாம் யார். ஆனால், தேனீ தொகுதி மக்களின் தீர்ப்பு என்ன? காங்கிரஸ் அபேட்சகருக்கு வெற்றி கிட்டிற்றே தவிர 46,712 மக்கள், காங்கிரஸ் கட்சி கூடாது, ஆகாது, என்றல்லவா தீர்ப்பளித்துள்ளனர். 38,185 வெற்றிபெற்றது! 46,712 தோல்வியுற்றது! காரணம், தெரிகிறதல்லவா? 31,404 வாக்காளர்கள் காங்கிரஸ் கூடாது, ஆகாது, என்ற தம்முடைய தீர்ப்பினை, இராஜேந்திரன் மூலமாக, நாட்டுக்கு அறிவித்தார்கள்; 15,308 வாக்காளர்கள், காங்கிரஸ் கூடாது என்ற தீர்ப்பை, சீர்திருத்தக் கமிட்டி சார்பில் போட்டியிட்ட அருணாசலம் என்பவர் மூலம், நாட்டுக்கு அறிவித்தனர்; மொத்தத்தில் காங்கிரஸ் கூடாது என்று தீர்ப்பளித்தவர் தொகை 46,712!! நோட்டு கிழிக்கப்பட்டுப் போய்விட்டது! ஓட்டுச் சிதறிவிட்டது! காங்கிரஸ் வெற்றியைத் தட்டிப் பறித்துக்கொண்டது. தேனீ, காங்கிரசுக்கா ஆதரவு காட்டியிருக்கிறது? இல்லையே!! பல்வேறு தொகுதிகளிலே, காங்கிரசுக்கு இதே முறையிலே தான் வெற்றியைத் தட்டிப் பறித்துக்கொள்ள முடிந்திருக்கிறது! கொடைக்கானல் தொகுதியில், கழகத் தோழர் குருசாமிக்குக் கிடைத்த 17,452 வாக்குகளுடன், காங்கிரசை எதிர்த்த சுயேச்சை ஞானவரம் என்பவருக்குக் கிடைத்த 6,365 - வாக்குகளையும் கூட்டி, வெற்றி கிட்டியது என்ற நிலை பெற்ற காங்கிரஸ் அபேட்சகர் அளகிரிசாமியார் பெற்ற 21,107 வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார். தவறு, மக்கள்மீது அல்ல என்ற பாடம் கிடைக்கும்! அரியலூரில், தம்பி, 31,048 வாக்காளர்களை, 11,744 வாக்காளர்கள் தோற்கடித்திருக்கிறார்களே, தெரியுமா!! காங்கிரஸ் கூடாது என்று 31,048 வாக்காளர்கள் தீர்ப்பளித்தனர், ஆனால், கழகத் தோழர் நாராயணனிடம் 10,404 ஓட்டுகள் மட்டுமே தந்தனர்; 6,992 வாக்குகளை அப்துல்காதர் என்பவரிடமும், தனராஜ் என்பவரிடம் 4,797 வாக்குகளும், மாணிக்கம் என்பவரிடம் 3,069 வாக்குகளும், 2,640 வாக்குகளை அரசன் என்பவரிடமும், 2,154 வாக்குகளை தங்கவேலு என்பவரிடமும் தந்துள்ளனர்; கொடுத்தவரையில் கொடுங்கள் என்று 992 வாக்குகளை வடிவேலு என்பவர் பெற்றிருக்கிறார். இத்தனை பேரும், காங்கிரசை எதிர்த்து நின்றவர்கள். இவர்களில் ஒவ்வொருவருக்கும் ஓட்டு அளித்தபோது, வாக்காளர் எண்ணிக்கொண்டது, காங்கிரசை வீழ்த்த நமது "ஓட்டு’ பயன்படுகிறது என்பதுதான்! ஆனால் நடைபெற்றதோ, வாக்காளர்களில் மிகப் பெரும்பாலோர் விரும்பாதது, எதிர்பாராதது; 11,744 வாக்குகள் மட்டுமே பெற்று, காங்கிரஸ் அபேட்சகர் இராமலிங்கப் படையாச்சி என்பவர் வெற்றிக்கொடி நாட்டினார் - மூலைக்கு ஒருவராக நின்றுகொண்டு, முழக்கமிட்டவர்களில் யாருக்கு வாக்களித்தால் காங்கிரசை ஒழித்துக்கட்டலாம் என்பதில் மக்கள் குழப்பமடைந்தனர்; ஓட்டுகள் பிளவுபட்டன; காங்கிரஸ் பிழைத்துக்கொண்டது! அரியலூரில் காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றார், ஆனால் அந்தத் தொகுதியில் காங்கிரசுக்குச் செல்வாக்கு என்று கூறிட முடியாது, எதிர்ப்பாளர்கள் 31,048 ஆதரவாளரின் தொகை 11,744 மட்டுமே! தங்கவேலுவோ, வடிவேலுவோ, அரசனோ அப்துல் காதரோ, நாமேன் வீணாக ஓட்டுகளைப் பிரியச் செய்வது, கழகத்துக்குத்தான் கைகொடுப்போமே என்று மட்டும் எண்ணியிருந்திருப்பின், நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று பாரேன், தம்பி! 10,404 வாக்குகளல்லவா பெற்றிருக்கிறார், நாராயணன் எனும் நமது கழகத்தோழர்! வெற்றி எக்காளமிட முடிகிறது காங்கிரசால்; பெற்ற வாக்குகளோ, 11,744!! பாபநாசம் தொகுதியிலும் இதே நிலைமை - காங்கிரசுக்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் 38,971 - காங்கிரசை எதிர்த்து அளிக்கப்பட்ட வாக்குகள் 50,761!! ஆனால், இந்த ஓட்டுகள் ஐந்து பெட்டிகளில் பிரிந்து பிரிந்து விழுந்தன. மதுராந்தகம் தொகுதியில் 57,619 வாக்குகளை, காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் மூவர், பங்குபோட்டுக் கொண்டு தோற்றனர்; 24,402 வாக்குகளைத் திரட்டி காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி தேடிக்கொள்ள முடிந்தது. ஆலங்குடித் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு 28,447 ஓட்டுகள் - காங்கிரசைத் தோற்கடிக்க 36,686 வாக்காளர்கள் திரண்டனர். ஆனால் நமது கழகத்தோழர் சுப்பையா 18,444 வாக்காளர்களையும், பாலகிருஷ்ணன் எனும் சுயேச்சையாளர் 18,242 வாக்காளர்களையும் தத்தமது முகாமுக்கு அழைத்துச் சென்றனர்; தோல்வி தாக்கிற்று. சூலூர் தொகுதியில்; காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற கடமை உணர்ச்சியில் 22,777 வாக்காளர்கள் இருந்திருக்கின்றனர் - மூவர் பங்கு போட்டுக் கொண்டதால், 18,328 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் காரிகை வெற்றி பெற்றார். கந்தர்வகோட்டைத் தொகுதியில் காங்கிரஸ் அபேட்சகர் வெற்றிபெறமுடிந்தது - ஆனால் தொகுதி எத்தகைய கோட்டை என்பதைப் புள்ளிவிவரத்தைப் பார்த்தபிறகு, காங்கிரஸ் நண்பர்களையே சொல்லச் சொல், தம்பி. இராமச்சந்திரதுரை 9,839 தங்கமுத்து நாட்டார் 8,553 மாரிமுத்து உடையார் 1,638 தர்மராஜ மேற்கொண்டார் 1,115 இரங்கசாமி உடையார் 1,051 ஆக மொத்தத்தில் 22,196 வாக்குகள், காங்கிரசுக்கு எதிர்ப்பாக அளிக்கப்பட்டன! வெற்றிபெற்ற காங்கிரஸ் அபேட்சகர் கிருஷ்ணசாமி கோபாலருக்கு 18,928 வாக்குகள் மட்டுமே தரப்பட்டன!! தர்ம பிரபுக்கள்! இப்படி இருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு, ஓட்டுக்களை ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொண்டிராவிட்டால், வெற்றியாவது நமக்குக் கிட்டுவதாவது என்று உள்ளூர, கும்மிடிபூண்டி தொகுதியில் வெற்றி தேடிக்கொண்ட கமலாம்புஜம் அம்மையார் எண்ணாமலிருக்க முடியுமா? என்பதை, அந்தத் தொகுதியில் ஏற்பட்ட நிலைமையை ஆராய்ந்து பார்ப்பவர் நிச்சயம் அறிந்து கொள்வர். அங்கு ஐந்து அபேட்சகர்கள் காங்கிரசை எதிர்த்தனர். ஒவ்வொருவரும், காங்கிரசை வீழ்த்தக்கூடியவர்கள் என்ற நம்பிக்கையை. வாக்காளரிடம் பரப்பியதில், மக்கள் குழப்ப மடைந்து, எந்த "அம்பு’ காங்கிரசை வீழ்த்தும் கூருள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது போய்விட்டது. வேணுகோபால் ரெட்டியார் 8,908 துஷ்யந்தராஜா 7,768 மாரிமுத்து 3,998 P.B. ஜீவரத்னம் 3,152 கன்னைய்ய நாயுடு 888 மொத்தம் கூட்டிப் பார்க்கும்போது கமலாம்புஜம் அம்மையாருக்கு கலக்கமாகத்தானே இருக்கும்! 24,714 வாக்குகள், காங்கிரசுக்கு எதிர்ப்பாக!! அம்மையாருக்குக் கிடைத்ததோ 9,002!! துஷ்யந்தராஜாவும் வேணுகோபாலரும், அல்லது மாரிமுத்துவும் துஷ்யந்தராஜாவும், நிலைமையைப் பரிசீலனை செய்து, தோழமை தேடி காங்கிரசை வீழ்த்த நமக்குள் போட்டி இருக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தால்? எண்ணும்போதே, வெற்றி பெற்ற அம்மைக்கு முகம் எப்படி இருக்கும்? வேணுகோபால ரெட்டியாரும் கன்னைய்ய நாயுடுவும் தோழர்களாகி விட்டிருந்தால்கூட அல்லவா ஆபத்து!! பெட்டிகள் பல - அதன் பலன், காங்கிரசுக்குத்தான்! மதுரையில் கழகம் இத்துணை எழிலும் ஏற்றமும் பெற்றும், வெற்றி காங்கிரஸ் அபேட்சகர்களுக்குக் கிடைத்ததே என்று நம்மில் பலர் திகைத்திடுகிறோம். உண்மை என்ன? காங்கிரஸ் வெற்றிபெறவில்லை - காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி அடைந்திருக்கின்றார்! வாக்காளர்களிலே பெரும்பாலோர் காங்கிரசுக்கு எதிர்ப்பாகத்தான் தீர்ப்பு அளித்தனர். - ஆனால் நாலு வெவ்வேறு பெட்டிகளில் அந்த எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்து பிரிந்து விழுந்தன; காங்கிரஸ் அபேட்சகரின் பெட்டிக்கு 20,305 வாக்குகள் வீழ்ந்தன - அவர் வெற்றிபெற்றார் 9,872 வாக்குகள் நமது முத்துவுக்கும், பாகுலேயன் என்னும் பிரஜா சோμயலிஸ்டு 7,873 வாக்குகளும், விசுவநாதன் எனும் கா. சீ. க. 4,565, முத்துமாலை என்பவர் 523 வாக்குகளும் பெற்று, காங்கிரஸ் அபேட்சகரை வெற்றிபெற வைத்துவிட்டனர். முசிரி தொகுதியில் நமது கழகத்தோழர் முத்துக்கருப்பன் 18,657 வாக்குகள் பெற்றார் - முத்தையா எனும் காங்கிரஸ் அபேட்சகர் 34,427 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்; அவ்வளவு செல்வாக்கா காங்கிரசுக்கு என்று மலைக்கத் தோன்றுகிறதல்லவா? விளக்கத்தைக் கண்டால், வேறோர் உண்மை புலனாகும். கா. சீ. க. அபேட்சகர் 15,936, கம்யூனிஸ்டு தோழர் 11,543, சுயேச்சை 4,206 வாக்குகள் பெற்றனர் - மொத்தத்தில் காங்கிரசுக்கு எதிர்ப்பாக 50,342 - வாக்குகள்!! எதிர்ப்பாளர் பலர்!! எனவே காங்கிரஸ் அபேட்சகர் வெற்றிபெற முடிந்தது. தூத்துக்குடியிலும் இதே சேதி! சட்டசபை உறுப்பினராக முடியாது போய்விட்டதல்லவா நமது கழகத் தோழர் சிவசாமி அவர்களால்! பெற்ற வாக்குகள் 15,298 - ஆனால் அவர்போல காங்கிரசை எதிர்த்து கம்யூனிஸ்டு முருகானந்தம் 14,665 வாக்குகள் பெற்றார் - இருவருமாக, காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளைப் பங்குபோட்டுக் கொண்டதால் 17,438 - வாக்குகள் பெற்ற காங்கிரஸ் அபேட்சகர் சட்டசபைக்கு வெற்றி வீரராக வருகிறார். தி. பழுர் தொகுதியில் நமது கழக அபேட்சகர் 15,602 வாக்குகள் பெற்றார் - காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை கா.சீ.க. தோழர் 7,276 பிரித்துக் கொண்டார் - காங்கிரஸ் அபேட்சகர் 17,522 வாக்குகள் பெற்று, வாகை எனக்கு என்றார். கடலூரில், 30,135 வாக்குகள் காங்கிரசுக்கு எதிர்ப்பாக! ஆனால் அது அவ்வளவும் ஒரே பெட்டியில் இல்லை. நமது கழகத்து இளம்வழுதி 13,091 பெற்றார், S.K. சம்பந்தம் 17,044 பெற்றார் - காங்கிரசு அபேட்சகர் 21,100 வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ. ஆகிறார்! ஆம்பூர் தொகுதியில், நமது கழகத் தோழர் சம்பங்கி, 25,105 வாக்குகள் பெற்றார் - 25,562 வாக்குகள் காங்கிரஸ் அபேட்சகருக்குக் கிடைத்து வெற்றி கிட்டிற்று - ஆனால், தம்பி! இந்த வேதனையைப்பார், காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளில் 14,592, ஒரு கா. சீ. க. மடக்கிக்கொண்டார். ஆம்பூர் மக்கள் போரில் குறை கூற என்ன இருக்கிறது? 39,697 பேர் காங்கிரசு கூடாது, ஆகாது என்று தீர்ப்பு அளித்துத்தான் இருக்கிறார்கள். வடசென்னை காங்கிரசுக்கு எதிர்ப்புக் கோட்டை என்று எக்காளமிட்டு வந்தீர்களே, ஏன் உங்கள் ஜீவரத்தினம் தோற்றார் என்று காங்கிரசில் தரம்குறைந்த சிலர் கேட்கும்போது, எனக்கு வேதனையாகத்தான் இருக்கிறது - தரம் குறையாத காங்கிரஸ்காரர் 11,770 வாக்குகள் வாங்கினார் என்பதையும், நமது ஜீவரத்தினம் 11,279 - வாக்குகள் பெற்றார் என்பதையும் அறிகின்றனர் - அகமகிழ்ச்சிக்கோ பெருமைக்கோ இடமில்லை என்பதை உணருகின்றனர்; அது கிடக்கட்டும் ஒருபுறம்; வடசென்னையில் காங்கிரசுக் கட்சிக்குச் செல்வாக்கு இருக்கிறதா? இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி - மாயாண்டி நாடார் வெற்றி பெற்ற பிறகு, உனக்கு அந்தச் சந்தேகம் எழலாமா என்று சிலர் கேட்பர். மாயாண்டி நாடார் எனும் காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றார் என்பதை மறந்து பேசவில்லை; அவர் வெற்றி பெற்றார். ஆனால் அது காங்கிரசுக்கு வெற்றியாகுமா? காங்கிரசுக்கு எதிராக வடசென்னைத் தொகுதி குவித்துள்ள வாக்குகள் 28,143!! ஆதரவாகக் கிடைத்தவை 11,770!! நால்வர், பங்கு போட்டுக்கொண்டனர், எதிர்ப்பு வாக்குகளை! நோட்டு துண்டாக்கப்பட்டுவிட்டது!! இதுபோலப் பலப்பல தொகுதிகள்! ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகள் 57,992 - காங்கிரஸ் ஆதரிப்பு ஓட்டுகள் 49,498!! பென்னாகரத்தில், காங்கிரசுக்கு ஆதரவு அளித்தோர் 8,791 - எதிர்ப்பு தெரிவித்தோர் 19,042!! மன்னார்குடியில் காங்கிரஸ் வெற்றிபெற விடமாட்டோம் என்று 31,171 வாக்காளர்கள் தீர்ப்பளித்தனர் - பெட்டிகள் மூன்று - எனவே 25 ஆயிரம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் அபேட்சகர் வெற்றியை அணைத்துக் கொண்டார். புள்ளி விவரங்களைப் பார்க்கப் பார்க்க, வேதனை தருவதாக மட்டுமல்ல, காங்கிரஸ் அபேட்சகர்கள் வெற்றி பெற்றார்களே தவிர, காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை என்பது விளக்கமாகும். எதிர்ப்பாளர்களுக்குள்ளே இருந்துவந்த பிளவு, காங்கிரஸ் அபேட்சகர்களுக்குச் சாதகமாகி விட்டது; வேறென்ன. இதுபோலெல்லாம் பிய்த்துப் பிய்த்துப் பார்த்திடலாமா? பத்து ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருவது போலவே, இனியும் காங்கிரஸ் கட்சிதானே ஆட்சி செய்யப் போகிறது! - என்று கேட்பார் உளர். ஆம்! அதிலே ஐயம் இல்லை! ஆனால் ஆதிக்கம் செலுத்தும்போது, இனி காங்கிரஸ் கட்சிக்கு உள்ளூற அச்சம் இருந்து வரும் என்பதை, காங்கிரசுக்கு எதிராகக் குவிந்துள்ள "ஓட்டுகள்’ காட்டுவதை, கருத்துக் குருடரன்றி பிறர் யாரும் உணராமலிருக்க முடியாது. பத்து ஆண்டுகளாக ஆட்சி நடாத்தி வருகிற காங்கிரஸ் கட்சி தன் சாதனைகளைப் பகட்டான முறையிலே விளம்பரப் படுத்திக் கொண்டும், பல்வேறு நாட்டுத் தலைவர்களை வாழ்த்தி வரவேற்று, “ராஜோபசாரம்’ நடாத்தி, தாஜ்மஹாலையும் அஜந்தாவையும் காட்டி, புலிவேட்டைக்கும் யானை மீது அம்பாரி அமைத்துச் சவாரி செய்யும் பவனிக்கும் ஏற்பாடு செய்து வைத்து, மாமல்லபுரத்துச் சிற்பங்களையும் மகாத்மாவின் சமாதியையும் காட்டி,”புகழுரைகளை’ப் பெறுவதிலும், ஈடில்லா ஆற்றலைக் காட்டி வருகிறது; அதுமட்டுமின்றி, இன்றளவு வரையில் நாட்டை மீட்டவர்கள் என்ற விருது காட்டி, மக்களை மயக்கத்திலாழ்த்தி வைத்து வருகிறது. எனினும், காங்கிரசுக்கு எதிராக மக்கள் அளித்துள்ள ஓட்டுகள் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளதைவிட அதிகம். ஜனநாயகத்தில் இந்தக் குறியை அலட்சியமாகக் கருதமாட்டார்கள். தம்பி! உன் உழைப்பின் பலனாக, நானும் மற்றும் பதினான்கு நண்பர்களும் சட்டசபை செல்கிறோமல்லவா? அங்கு எவரெவரைக் காணப்போகிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போதே, கழகத்துக்குக் கிடைத்த வெற்றி போலப் பத்து மடங்கு வெற்றி காங்கிரசுக்குக் கிடைத்திருப்பினும், அந்த வெற்றியைப் பெற, எத்தகைய விலை கொடுக்கப்பட்டது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. ராஜா சர். முத்தையா செட்டியார், "கெம்பீரமாக’ அமர்ந்திருக்கக் காண்பேன் - அவரும் நானும் சந்திக்கும்போது என்னென்ன எண்ண அலைகள் எழும், இருவர் உள்ளங்களிலும்! சர்தார் படேல் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து, காங்கிரசுக்கு நிதி திரட்டினார் - தமிழர்கள் ஏமாளிகள், வடநாட்டுத் தலைவர்களிடம் பணத்தை இழந்துவிட்டுப் பல்லிளிக்கப் போகிறார்கள் - இதை நாம் தடுத்தாகவேண்டும் என்று தீர்மானித்த ராஜா சர். என்னை வரவழைத்து, படேலிடம் பணம் கொடுக்காதீர்கள் என்று மக்களைக் கேட்டுக்கொள்ள ஒரு அறிக்கை தயாரிக்கச் சொன்னார் - படேல் வருகிறார் பணப்பை ஜாக்ரதை! என்ற தலைப்புடன், அந்த அறிக்கை தயாரானதும், ராஜா. சர். எவ்வளவு குதூகலமடைந்தார்! அவர் காங்கிரஸ்காரராக! நான் எதிர்க்கட்சியில்!! அன்றும் அவர் "ராஜா‘! இன்றும் அதே!! அன்றும் அவர் ஆளும் கட்சியிலே ஓர் உன்னத இடம் பெற்றிருந்தார்! இன்றும் அவருக்கு அதே அந்தஸ்து!! நான், காங்கிரஸ் ஆட்சியை, மக்களுக்கு உகந்ததல்லாதன செய்யும் போது கண்டித்துப் பேச முற்பட்டால், ராஜா. சர், "காரசாரமாக’ என்னைத் தாக்கக்கூடும்! காங்கிரஸ் கட்சியின் திட்டம் கவைக்கு உதவாது! அதன் போக்கு காட்டுத்தனமானது! என்று அன்று பேசினார் - இன்று கழகமாம் கழகம் - என்ன களகம், மகாகளகம் என்று பேசுபவர்களின் நடுவில் அமர்ந்து ஒளிவிட இருக்கிறார். தம்பி! இந்தக் காட்சியைக் கொண்டு பார்க்கும்போது, கனதனவானின் வெற்றி என்று தலைப்பிடத் தோன்றுகிறதா காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்று தலைப்பிடத் தோன்றுகிறதா என்று கருத்திலே சிறிதாவது நேர்மை உணர்ச்சியுள்ள காங்கிரஸ் அன்பர் இருந்தால் கேட்டுப்பாரேன்!! காங்கிரஸ் கட்சி 150 இடங்களைப் பிடித்ததாக எக்காள மிடுகிறார்களே, மக்கள் ஏதுமறியாதவர்கள் என்று எண்ணிக் கொண்டு, பிடித்த இடங்களில் அமர்ந்துள்ள பெரியவர்களின் இலட்சணம் என்ன என்று கூறிடச் சொல், கேட்போம்!! அன்று போலவே அடையாறு அரண்மனை, அரசியலில் தனக்கென ஓர் தனிச் செல்வாக்கைத் தேடிக்கொள்ளும், சுவையையும் சூட்சமத்தையும் நிரம்பப் பெற்றிருப்பது இதிலிருந்து புரிகிறதே தவிர, காங்கிரஸ் கட்சியின் வெற்றியா, இதிலே மணம் வீசுகிறது!! ராஜா. சர். காங்கிரஸ் அபேட்சகராக நிறுத்தப்பட்டாரே, அந்தச் சம்பவத்தையே, காங்கிரசின் வெற்றி என்றா கூறுவர், உண்மைக் காங்கிரஸ்காரர். "ராஜா. சர். அவாளோட யோக ஜாதகம் அப்பேற்பட்டதாகும்!’’ என்றுதான் வாழ்த்தி இருப்பார்களே தவிர, காங்கிரஸ் கட்சியையா, பாராட்டியிருப்பார்கள். அடிபட்டவனும் அவதிப்பட்டவனும், "தியாகி’ என்ற பட்டம் மட்டும் பெற்று, வறுமை கொட்ட, வேலையில்லாத் திண்டாட்டம் வாட்ட கவனிப்பாரற்றுக் கசிந்து கண்ணீர் மல்கிக் கிடக்கின்றனர். இதோ கொலு வீற்றிருக்கிறார் கோடீஸ்வரர்! அந்தப் "பாவ’த்திலே தம்பி தெரிந்து அல்ல, தெளிவு இல்லாததால், தவறு செய்ய நேரிட்டு விட்டதால், நமக்கும் பங்கு இருக்கிறது. ராஜா. சர். இரண்டாயிரத்துச் சொச்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று, "வெற்றி’ பெற்றார்; அந்த இரண்டாயிரத்துச் சொச்சம் ஓட்டுகளை, நமது கழக அபேட்சகர்தான் மடக்கிக்கொண்டார் - அந்த ஓட்டுகள் காங்கிரசை எதிர்த்து நின்றவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் - ராஜா, சர். தோற்றிருப்பார் - தவறு நம்முடையது, நம்முடையது என்று எண்ணும்போதெல்லாம், நான் வேதனை அடைகிறேன், மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் துடிக்கிறேன். இது போலப் பல தவறுகளைச் செய்துவிட்டோம் - போதிய அனுபவம் இல்லாததால்!! இவைகளெல்லாம் சேர்ந்துதான், 150 - இடங்களைக் காங்கிரஸ் கட்சிக்குப் பெற்றுத் தந்தனவே தவிர, மக்கள் தங்கள் ஆதரவைக் காங்கிரஸ் கட்சிக்கு, "இதயபூர்வ’மாகத் தந்துவிடவில்லை. பெற்ற வெற்றியின் தன்மையும் தரமும் ஒருபுறம் இருக்கட்டும் - தம்பி! காங்கிரஸ் கட்சியின் சார்பிலே நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்களே, அவர்களிலே எத்தனை பேர். காங்கிரஸ்காரர்கள் சத்யாக்கிரகிகள் காந்தீயவாதிகள் தியாகிகள் பட்டம் பதவி விட்டவர்கள் ஏழை பங்காளர்கள் என்று கூறிடச் சொல்லு, கேட்போம். உண்மையிலேயே, 150 இடங்களிலே, 100 இடங்களுக்கு மேல், காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று கூறுவதைவிட தந்திரம் தெரிந்தோர் காங்கிரசைக் கைப்பற்றிக்கொண்டனர் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த வெற்றியைப் பெருமைக்குரியதாகக் கருதும், காங்கிரஸ்காரர்கள், சில ஆண்டுகள் கொடிகட்டி ஆளவும், அதன் பயனாக இலாப வேட்டை ஆடவும் வசதி கிடைத்தது என்பதற்காக வேண்டுமானால் குதூகலப்படலாமே தவிர, இது காங்கிரஸ் வெற்றி என்று எங்ஙனம் கூறமுடியும்? "அடா! அடா! இவ்வளவு எளிதாகக் காங்கிரசை வீழ்த்திட வழி இருக்கும் என்று தெரிந்திருந்தால், நான் மிகச் சிரமப்பட்டு, எதிர்ப்புறம் இருந்துகொண்டு காங்கிரசை வீழ்த்தப் பாடுபட்டிருக்கமாட்டேனே! தொட்டால் துவண்டுவிடும் இந்தத் தோகை மயிலாளுக்காக, நான் தோட்டத்துச் சுவருக்கல்லவா கன்னம் வைத்துக் கஷ்டப்பட்டேன்! என்றல்லவா, ராஜா சர்கள், பேசிப் பேசிச் சிரித்துக்கொண்டு கிடக்கிறார்கள். திடலில் கூட்டம் போட்டு, தீர்த்துக் கட்டிவிட்டோம் கழகத்தை என்று தீப்பொறி பறக்கப் பேசுகிறார்கள் காங்கிரஸ் பேச்சாளர்கள்; அதேபோது, மாளிகை பலவற்றிலே மந்த காசத்துடன் சீமான்கள், காங்கிரஸ் கட்சியை எவ்வளவு எளிதாக ஏய்த்துவிட முடிந்தது என்றல்லவா, கூறிக் களிநடமாடுகிறார்கள். யாரார், எப்பாடு பட்டேனும், எவ்வளவு பணம் செலவிட்டேனும், என்னென்ன சூது சூழ்ச்சிகள் செய்தேனும், ஆளும் குழுவினராக அமர்ந்தால் மட்டுமே, ஆதிக்கமும் சுயநலமும் அழியாதிருக்கும் என்ற திட்டம் கொண்டவர்களோ - யாரார், மக்களாட்சியிலே தமது உடைமைகளுக்கும் சுரண்டும் தொழிலுக்கும் கேடு வந்துவிடுமோ என்ற அச்சம் கொண்டு, அந்த ஆபத்து வராதிருக்க, மக்களாட்சியை வீழ்த்தவேண்டும் என்று எண்ணுபவர்களோ - அவர்களையே அழைத்து, ஆட்சி மன்றத்திலும், ஆட்சிக் குழுவிலும் இடம் தருவதாகக் கூறினால், கரும்பு தின்னவா கூலி கேட்பர் - தாராளமாகச் சேர்ந்திட லாயினர் - ஏராளமாகப் பணத்தை வீசினர் - வெற்றி கிட்டிற்று - காங்கிரசுக்கு அல்ல - கனவான்களின் கபட திட்டத்துக்கு!! எதிர்த்து அழிக்க முடியாததை அடுத்துக் கெடுத்திட முடிகிறது!! பிடிபட்டால் தலைபோகுமே என்று கிலி கொள்பவனைப் பிடித்திழுத்து, தலையாரி தன் மருமகனாக்கிக் கொள்வது போலிருக்கிறதல்லவா!! இம்முறையில் பெற்ற வெற்றிகள், காங்கிரஸ் கட்சிக்கும் ஊருதான் தரும் - நாட்டுக்கும் நல்லது கிடைக்காது. தம்பி! இந்தச் சூழ்நிலையில், நாம் 15 இடங்களைப் பெற்றோம்; 16 இலட்சம் வாக்குகள் மொத்தத்தில் கிடைத்தன, என்பது, அவ்வளவு அலட்சியமாகத் தள்ளிவிடக்கூடிய சம்பவமல்ல; ஏசிடுவோர்கூட புதியதோர் எழுச்சியைக் கண்ட மருட்சியால்தான், தமக்கும் தம்மை நம்பியுள்ள கடைசிப் பிரிவினருக்கும் "தாஜா’ தேடிக்கொள்ளும் முறையில், தாறு மாறாகப் பேசி வருகின்றனர். நாடு மகிழ்கிறது; வரவேற்கிறது. 15 - இடங்களில் வெற்றி பெற்றதற்காக, நமது கழகம் நடத்திய கடற்கரைக் கூட்டத்தையும் நான் கண்டேன் - 150 - இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி அதே கடற்கரையில் நடத்திய கூட்டத்தையும் காண நேரிட்டது. மக்கள் மிகமிக அறிவாளர் என்பதை நான் உணருகிறேன்!! "அன்று கடற்கரைக் கூட்டத்தை ஒரு முறை சுற்றிப் பார்க்கலாமென்று சென்றேன் - பாதி வளையம் சென்றதும் மேலால் நடக்க முடியாமல், களைத்துப் போய் உட்கார்ந்து விட்டேன்’’ என்று நண்பர் எஸ். எஸ். பி. லிங்கம் என்னிடம் சொன்னார் - காங்கிரஸ் வெற்றி விழாக் கூட்டத்தில், மேடை வரை, மிக எளிதாகச் சென்று, திரும்பி வந்த நிலையில். மக்கள் காட்டும் இந்தப் போக்குக்குக் காரணம் இல்லாமலில்லை. "மகனே! வெந்நீர் தயாராகி விட்டது, வா! குளித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, படுத்துத் தூங்கு, அப்போதுதான் களைப்பு போகும். கால்கடுப்பு நீங்கும்’’ என்று கனிவுடன் கூறி, தாய் மகனுக்கு அன்புடன் உபசாரம் செய்கிறாள், ஏழைக் குடிலில். அவன் இரண்டே ரூபாய்கள்தான், அன்று கொண்டு வந்தான்! ஆனால், அதை அவன் தன் தாயிடம் கொடுக்கும்போது அன்னை அடைந்த அகமகிழ்ச்சி அளவிட முடியாது. மற்றோர் மனை! மாளிகை அல்ல, குடிலுமல்ல; வாடகை இடம், சிறிது வசீகரமானது. "இதைக் கொண்டுபோய், அலமாரியில் வைத்துப் பூட்டு’’ என்று அலட்சியமாக ஒருவன், சிறு பேழையைத் தருகிறான் - விலையுயர்ந்த வைரமாலை இருக்கிறது உள்ளே! பேழையை வாங்கும்போதே, அந்தத் தாயின் கரம் நடுக்கமெடுக்கிறது, முகத்தில் பயக்குறி படருகிறது; பெருமூச் செறிகிறாள். "கதவைத் தாள்போட்டுவிட்டுப் போய்ப் படு… என்ன போறாதவேளையோ! என்ன தீம்பு கொண்டுவரப் போகிறாயோ?’’ என்று கலக்கத்துடன் அந்த மாது பேசுகிறாள். காட்சிகள் தெரியட்டும் தம்பி! மீண்டும் படித்துப்பார்!! இரண்டு ரூபாய் கொண்டுவந்த மகனிடம் அன்பு சொரியும் தாய் - வைரமாலை கொண்டு வரும் மகனிடம் வெறுப்பும் பயமும் காட்டும் அன்னை! காரணம் என்ன? முன்னவன், சந்தைக் கடையில் மூட்டை சுமந்தான் தம்பி! வெயிலில் பாடுபட்டான், வியர்வை கொட்டக் கொட்ட வேலை செய்தான் - அதற்குத் தரப்பட்ட கூலி, இரண்டு ரூபாய்! நரம்பு முறிய வேலை செய்து, நாணயமான தொழில் செய்து, அவன் பெற்ற பணம், அன்னையின் கண்களிலே கனிவு கசிந்திடச் செய்கிறது. மகனே! மகனே! மார்பு உடையப் பாடுபடுகிறாய், உன் மாதாவைக் காப்பாற்ற! சந்தைக் கடையிலே உன் தலைமீது எவ்வளவு "பாரம்’ ஏற்றினார்களோ! கழுத்துச் சுளுக்கிக் கொண்டதோ, என்னவோ! எவ்வளவு சுற்றினாயோ! கால் எப்படிக் கடுக்கிறதோ! இவ்வளவு கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணமல்லவா இந்த இரண்டு ரூபாய்! மகனே! ஏழைக் குடும்பம்! நான் உன்னை மாளிகையிலா பெற்றெடுத்தேன்! படாதபாடு படுகிறாய்! ஆனால், நாணயமாக வாழ்ந்து வருகிறாய்! அது போதுமடா, அப்பா! உன் உழைப்பு, நமது குடும்பத்துக்கு உயிரூட்டம் தருகிறது! உத்தமனடா நீ! - என்று, தாயின் கனிவான பார்வை பேசுகிறது. இளவரசனுக்குக்கூட அந்த வரவேற்பும் உபசரிப்பும் கிடைக்காது - இரண்டே ரூபாய் கொண்டு வரும், கடமையை நிறைவேற்றிய மகனுக்கு, அவ்வளவு கனிவுடன் உபசாரம் கிடைக்கிறது. மற்றோர் மனையிலே, வைரமாலையைத் தருகிறானே, - மகன் அவன் தாய் ஏன் திகிலுற்றுப் போகிறாள்? அவனும் அங்காடி சென்றுதான் அந்த அரிய பொருளைக் கொண்டு வந்தான். காலையில் வெறும்கையாகச் சென்றான். மாலையில் மாலையுடன் திரும்புகிறான்! தாய் திகிலடைகிறாள்! காரணம் புரிகிறதல்லவா! தாய், உணருகிறாள், மகன் ஏமாந்தவனிடம், தட்டிப் பறித்துக்கொண்டு வந்திருக்கிறான், வைரமாலையை என்பதை. தலைக்குத் தீம்பு வருமே என்று அஞ்சுகிறாள்; மகனிடம் விவரம் கேட்டால் கோபிப்பான்; எனவே பெருமூச்செறிகிறாள். தட்டிப்பறிக்கப்பட்ட வைரமாலை! மூட்டை சுமந்ததால் கூலியாகக் கிடைத்த இரண்டு ரூபாய்!! தூ! இரண்டே இரண்டு ரூபாய்தானோ, அதோ அண்டை வீட்டுக்காரியின் மகன் இன்று வைரமாலை அல்லவா சம்பாதித்துக் கொண்டு வந்தான் என்று கூறிடும் தாயும் உண்டா? வைரமாலை - ஒரே நாளில் என் மகன் சம்பாதித்தான் பலே பேர் வழி - என்று புகழ்ந்து பேசத்தான், எந்தத் தாயாருக்காவது மனம் வருமா? தம்பி! நாம் பெற்ற 15 சந்தை மேட்டில் மூட்டை சுமந்தவன் கொண்டுவந்து அன்னையிடம் தந்த இரண்டு ரூபாய்!! அதனால்தான், நாடு நம்மைக் கனிவுடன் வாழ்த்துகிறது வரவேற்கிறது - பாராட்டுகிறது. வைரமாலையைத் தட்டிப் பறித்துக்கொண்டு வந்த மகனை, வாழ்த்தி வரவேற்க முடியாத நிலையில் தாய் இருப்பது போல, காங்கிரஸ்காரர்களாலேயே 150 இடங்களில் பெற்ற வெற்றிபற்றி பெருமையாகவும் பூரிப்பாகவும் பேசமுடிவதில்லை! அண்ணன், 21-4-57 விழாவும் விளக்கமும் சைப்ரஸ் கிளர்ச்சியும் விடுதலை விழாவும் - நாகநாடு பிரச்சினை - தி. மு. க. வின் இன்றைய நிலை - எதிர்க்கட்சி தம்பி! வெடிகுண்டு வீசுகின்றனர், தூக்குமேடைக்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர்! பதுங்கிப் பாடுகின்றனர். பிடிபட்டுப் பதறப் பதறச் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்! ஆற்றல், ஆடவரின் தனி உடைமை அல்ல என்று முழக்கமிட்டுக்கொண்டு ஆரணங்குகள் கிளம்புகின்றனர், தாய்க்குலம்! ஆனால் எமக்கென்ன? தலை உண்டு, சிறை உண்டு என்று ஆட்சியினர் ஆர்ப்பரிக்கின்றனர்; பேயாட்சி இது, இதனிடம் நியாயம் கிடைக்காது, அறிவோம் என்று எழுச்சியுடன் பேசுகின்றனர் மாதர்குலமாணிக்கங்கள், சதி! பயங்கரத்திட்டம்! கொலை! கொள்ளை!! குலைநடுக்கம் தரும் கொடுமைகள்!! - என்றெல்லாம் இதழ்களில், கொட்டை எழுத்துக்களில் வெளிவருகின்றன! முப்படையும் மும்முரமாகிறது, வீரரோ, காடுகளைக் களமாக்கிக் கொள்கின்றனர், மலைச் சரிவுகளை மன்றங்களாக்கிக் கொள்கின்றனர், பாசறைகள், அடர்ந்த அடவிகளிலே எழுகின்றன! இங்கு! இங்கு! - என்று அதிகாரிகள் கூறித்தேடுகின்றனர். ஓரிடம் சென்றால், புரட்சிப் படையினர் மற்றோரிடம் சென்றுவிடுகின்றனர்! மாயாவிகள்! மாபாவிகள்!! - என்று கடிந்துரைக்கின்றனர் ஆட்சியாளர்! எமது தாயகத்தை விடுவிக்கும் தங்கக் கம்பிகள்! அறிவுடை நம்பிகள், அடலேறுகள்! என்று வாழ்த்துகின்றனர், நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டோர். மலையும் வனமும், மனையும் தொழிலிடமும், அங்காடியும் அடுக்களையும் பூங்காவும் - எல்லாம் வீரக் கோட்டமாகி விடுகின்றன! பரலோகம் குறித்த பஜனை நடைபெறும் இடங்கள் மட்டும் என்ன? அங்கும், விடுதலை பற்றியே உபன்யாசம்!! சைப்ரஸ் தீவு, தம்பி! நான் மேலே காட்டியுள்ள இடம்!! படைவரிசையினர் மட்டுமல்ல, பள்ளிச்சிறார் மட்டுமல்ல, பாதிரிமார்களும் பங்குகொள்ளும் உரிமைக் கிளர்ச்சி வேகத்துடனும் விறுவிறுப்புடனும் நடத்தப்பட்டுவரும் சைப்ரஸ் தீவு. பிரிட்டிஷ் பிடியில் இனியும் இருந்திடச் சம்மதியோம். எமது தாயகமாம், கிரீஸ் நாட்டுடன் இணைந்து வாழ்ந்திட அனுமதி அளியுங்கள். பீரங்கிப் படையைக் காட்டி எமது பிறப்புரிமையை அழித்திட முனையாதீர்கள்!! - என்று சைப்ரஸ் தீவிலே உருவாகியுள்ள உரிமைப் போர்வீரர் கூறுகின்றனர். வேண்டுகோள் கவனிக்கப்படவில்லை - கெஞ்சினர், மிஞ்சினர் - எனவே, பலாத்கார முறைகள், பயங்கரச் செயல்கள் கிளம்பின; இந்தப் போக்கை ஒடுக்க, பிரிட்டன், அடக்கு முறையை அவிழ்த்துவிட்டது, ஐயகோ! தம்பி! அடக்குமுறை வயிறு வெடிக்குமளவுக்கு, சைப்ரஸ் நாட்டு விடுதலை வீரரின் குருதியைக் குடித்தது. கடைசிச் சந்திப்பு! இறுதி முத்தம்! இன்னுயிரே, என்றென்றும் எனை மறவாதே! - என்று கூறிவிட்டுச் செல்வான் காதலன். மறுநாள் இராணுவத்தினர் விதித்திடும் மரண தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வான் - மலர் கருகும் - மனையில் ஓலம் பீறிட்டெழும் - மக்கள் கண்ணீர் பொழிவர் - புதிய வேட்டைக்குத் தன்னைத் தயாரித்துக் கொண்டு, அடக்குமுறை கிளம்பும். இந்தச் சைப்ரஸ் தீவில், கனலை மூட்டிவிட்டவர், கலகத்தைத் தூண்டிவிட்டவர், சதிச்செயல்களுக்குத் தூபமிட்டவர், பயங்கரவாதிகளுடன் தொடர்புகொண்டவர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்ட மகாரியாஸ் பாதிரியாரை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சிறைப்படுத்திற்று. கர்த்தரின் நாமத்தைப் பூஜிக்கவேண்டிய வாயால், கலகமூட்டிப் பேசினார், ஜெபமாலை உருட்ட வேண்டிய கரங்களில் பயங்கரக் கருவிகளை ஏந்தினார், பரலோக மகத்துவத்தைக் குறித்துப் போதிக்க வேண்டியவர் புரட்சியை ஊட்டிடப் பேசினார், பாதிரி அல்ல இவர், பயங்கரவாதி! இவரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆலயத்தை இவர் ஆயுதக்கிடங்காக்கி விட்டார் - ஆபத்தானவர்!! - என்றெல்லாம், மகாரியாஸ்மீது பிரிட்டிஷார், கண்டனம் வீசினர் - ஷீஷ்லீஸ் தீவு கொண்டு சென்று சிறைப்படுத்தி வைத்தனர். நெடுந்தொலைவிலே தாயகம் - அங்கு குன்றிலும் பொழிலிலும், காடு கழனியிலும், வீரர் முழக்கம் கேட்டபடி இருக்கிறது. - முதியவர் இந்தப் பாதிரியார், சிறை வைக்கப்பட்ட தீவிலிருந்துகொண்டே, மனக் கண்ணால், விடுதலைக் கிளர்ச்சியின் வடிவத்தைக் கண்டு களிகொண்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வெறிக்கு, இஃதோர் எடுத்துக் காட்டு - அதற்காகத்தான் அண்ணா, இதனைக் காட்டுகிறார் என்று கூறுகிறாய், தம்பி! விடுதலை வேட்கை கொண்டவருக்கு, வந்துற்றிடும் இடுக்கண்கள் எண்ணற்ற வகையின என்பதை விளக்கிட, இதனைக் கூறுகிறேன் என்று கருதும் தம்பிகளையும் காண்கிறேன். நாடு நலிந்தால் நமக்கென்ன, நாமாவாளி பாடிடத்தானே நாம் இருக்கிறோம் - என்ற போக்கிலே ஆண்டிகளும் இருந்திட லாகாது. சைப்ரஸ் தீவின் விடுதலைக்கான கிளர்ச்சியிலே, ஒரு பாதிரியார் எத்தகைய தீவிரத்துடன் ஈடுபட்டு, எத்துணை இன்னலை ஏற்றுக்கொண்டார், காணீர் என்று இந்நாட்டுக் காவிக்கோமான்களுக்குக் காட்ட இதனை நான் எடுத்துரைக் கிறேன் என்று எண்ணும் தம்பிமார்களும் இருக்கிறார்கள். நான், இந்தக் கருத்துக்களுக்காக மட்டுமல்ல, இதனைக் கூறி இருப்பது. பயங்கரப் பலாத்காரமும், அதை ஒடுக்க என்று கூறிக் கொண்டு மோசமான அடக்குமுறையையும் வீசும் நிலையில் உள்ள சைப்ரஸ் தீவில், பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டவர், நடத்திச் செல்பவர் என்று கருதப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டவராயிற்றே, மகாரியாஸ் பாதிரியார், அவர் சென்ற கிழமை, விடுதலை பெற்றிருக்கிறார்! சைப்ரசில் மட்டுமல்ல, கிரேக்க நாடு முழுவதுமே, விழாப்போன்ற நிலைமை! உலகெங்கும் உயர்ந்த எண்ணம் படைத்தோரிடமிருந்தெல்லாம் வாழ்த்துக்கள்! அமெரிக்க மக்கள், தங்களைக் காண விழைகின்றனர், வருக! வருக! என்று அழைப்பு!! மகாரியாஸ் பாதிரியார் கிரேக்க மன்னர் அவை செல்கிறார். விருது அளிக்கிறார் பால் மன்னர்! தம்பி! மறந்துவிடாதே, வெடிகுண்டு வீசி விடுதலைக் கிளர்ச்சி நடத்தும் இடம், சைப்ரஸ்; வெட்டி வீழ்த்தியும் சுட்டுத்தள்ளியும் விடுதலை வீரர்களை ஒழித்திட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முனைந்துள்ள இடம், சைப்ரஸ்!! எனினும், மகாரியாஸ் பாதிரியாரை, விடுதலை செய்திருக்கிறது, பிரிட்டன்! சைப்ரசில் பேயாட்சி நடத்தும் பிரிட்டன், மகாரியாஸ் பாதிரியாரை விடுதலை செய்திருக்கிறது. அதேபோது, சாந்தமும் சன்மார்க்கமும், சீலமும் அகிம்சையும் பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டு இயங்குகிறது, "பாரதம்’ - இங்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஷேக் அப்துல்லாவை, மேலும் சில காலம் சிறையிலேயே வைத்திருக்க, தாக்கீது பிறந்திருக்கிறது!! காஷ்மீரில், பொதுத் தேர்தல் நடைபெற்றிருக்கிறது - அதற்கான அமைதியான சூழ்நிலை கிடைத்திருக்கிறது - எனினும், பீரங்கி முழக்கமிடும் தீவின் பயங்கரமனிதர் என்று சித்தரிக்கப்பட்ட, பாதிரியார் விடுதலை செய்யப்படுகிறார் - என்ன செய்தார் என்பதுபற்றி வழக்கும் தொடராமல். இவர் வெளியே உலவுவது காஷ்மீரத்து நிலைமையை அபாயத்துக்கு உள்ளாக்கும் என்று கூறிவிட்டு, சிறையிலே தள்ளினரே ஷேக் அப்துல்லாவை, அவருடைய சிறைவாசம் மேலும் சில காலத்துக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது!! ஜெய்ஹிந்த் - சொல்லச் சொல்லிச் சொல்கிறீர்களா? - அல்லது வந்தே மாதரம் பாடுவமா - அல்லது கோஷ்டியாகக் கூடி ஜனகணமன பாடுவதா என்று கேளுங்கள், காங்கிரஸ் நண்பர்களை! பிரிட்டிஷ் பேயாட்சியில் பயங்கர மனிதர் விடுதலை பெறுகிறபோது, நேருவின் மாஜி நண்பர் வெளியே விடப்பட்டால், எங்கோ அவர் ஒளித்து வைத்திருக்கும் அணுகுண்டை எடுத்து, அலகபாத்தாரின் அரண்கள்மீது வீசியா அழிவு உண்டாக்குவார் என்று அஞ்சுகிறார்கள்! மகாரியாஸ் பாதிரியார் விடுதலை - ஷேக் அப்துல்லாவின் சிறைவாசம் நீடிப்பு - இந்த இரு செய்திகளையும், ஒரு சேர எண்ணிப் பார்த்திடும்போது என்ன தோன்றுகிறது - உனக்கல்ல - அவர்களுக்கு - காங்கிரஸ் அன்பர்கட்கு. வீட்டுக்கொரு வீரன் வேண்டும்! வெற்றி அல்லது வீர மரணம் என்ற இலட்சியம் ததும்பும் இதயம் படைத்தோர், திரண்டு எழல்வேண்டும்! இனியும், வாளா இருப்பின் வையகம் நம்மைக் கேலியால் கொல்லும்! நேரடிக் கிளர்ச்சியில் ஈடுபட வாரீர், வாரீர்! - என்று இலங்கைத் தீவிலே உள்ள தமிழர் தலைவர்கள் முழக்கமிடுகின்றனர். எண்ணற்ற இளைஞர்கள், நான் நீ - என்று போட்டியிட்டுக்கொண்டு அறப்போரில் ஈடுபட முன்வருகின்றனர். "இலங்கையில் எங்குபார்த்தாலும், வானளாவும் நீலமலைகளின் உச்சி எல்லாம் பசுமை நிறைந்த தேயிலைச் செடிகள், இரப்பர் காடுகள், இவை தோன்றக் காரணமாயிருந்தவன் மலைநாட்டுத் தமிழன். மண்ணைப் பொன்னாக்கிக் குவித்து, நாட்டின் வளத்தைப் பெருக்கி, சுபிட்சத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுவாழ வழி வகுத்த தென்னாட்டு மக்களின் உரிமையையும், அந்தஸ்தையும் பறித்து, அடிமைகளாக, இலங்கை வைத்திருக்கிறது. பல இலட்சம் தமிழ் மக்களின் இரத்த வியர்வையைக்கொண்டு உருவாக்கப்பட் டிருக்கும் இந்த இலங்கை நாட்டில், தமிழ் மக்கள் இன்று அந்த நாட்டிலே அடிமைகளாக, அனாதைகளாக, நாடற்றவர்களாக, நசுக்கப்பட்டு வருகிறார்கள்’’ - என்று சென்ற கிழமை, நமது டி. கே. சீனிவாசன் கொழும்பு நகரத்தில் நாராயண குருமண்டபத் தில், தி. மு. க. ஆதரவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசி இருக்கிறார். இந்த இலங்கைக்கு, நேரு பண்டிதர், மே திங்களில், செல்கிறார்!! தமிழரின் துயர் துடைக்க! உரிமைக்காக வாதாட! பண்டார நாயகா சர்க்காரின் படுமோசத்திட்டத்தை ஒழித்திட! என்றெல் லாம், காங்கிரஸ் நண்பர்கள் எண்ணிக் கொள்ளப் போகிறார்கள் - தமிழர் தத்தளிக்கின்றனர் - ஆனால் நேரு பண்டிதர் "விஜயம்’ செய்வது, அவர்தம் பிரச்சினை குறித்துப் பேச அல்ல - பகவான் புத்தருடைய ஜெயந்தியில் கலந்து கொள்ளும்படி, பண்டார நாயகா சர்க்கார் விடுத்துள்ள அழைப்பினை ஏற்றுக்கொண்டு, செல்ல இருக்கிறார். பஞ்சையாய், பராரியாய், பாட்டாளியாய்க் கிடந்து உழலும், இந்தத் தமிழர்களுக்குப் பணிபுரிவதா, பார்புகழ் பண்டிதருக்கு இருக்கும் வேலை! அவர் புத்தர் விழாவில், பிரசன்னமாகி, சீலம், சாந்தம், சன்மார்க்கம், - சமரசம் - சத்காரியம் எனும் பொருள்பற்றி எல்லாம் பேசப்போகிறார்! என்னே, நேருவின் அறிவாற்றல்! - என்று ஏடுகள் எழுதப்போகின்றன! ஜனசமுத்திரம் காணீர் என்று இதழ்கள் படங்களை வெளியிடப்போகின்றன!! உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவ, பஞ்சசீலம் போதித்து வரும், பாரதப் பிரதமரே வருக, வருக!! - என்று பண்டார நாயகா வரவேற்புரை கூறுவார் - அதேபோது, இலங்கையில் வேறேதாவதோரிடத்தில், "ஏ! கள்ளத்தோணி! கட்டு மூட்டையை! சட்டமாவது! திட்டமாவது! ஓடுகிறாயா நாட்டை விட்டு, இல்லையானால் குத்திக் கொல்லட்டுமா’’ என்று வெறியன் எவனாவது கொக்கரித்துக் கொண்டிருப்பான். அழாதே, தமிழா! அழாதே!! ஆயாசப்படாதே அன்பனே! உன் நாட்டின் அருமை பெருமை எப்படிப்பட்டது என்பதைப் பார்! இதோ உனக்கென்று, நீயாகத் தேடிப் பெற்றுக்கொண்ட முடிசூடா மன்னர் இருக்கிறாரே, நேரு பண்டிதர், அவருக்கு நடத்தப்படும் இராஜோபசாரத்தைப் பார்! அவர் முன்நின்று, வணங்கியும் வாழ்த்தியும், கைகுலுக்கியும் கனிவுரை பொழிந்தும் நிற்பவர்கள், சாமான்யர்கள் அல்ல - பண்டார நாயகாக்கள் - சேனாநாயகாக்கள் - கொத்தலாவலைகள் - கோடீஸ்வரர்கள்!! அவர்கள் சுட்டுவிரலிலே சட்டம் இருக்கிறது! அவர்களிடம் நாடு இருக்கிறது! அப்படிப்பட்ட பெரிய தலைவர்கள் மெத்தப் பயபக்தியுடன், உன் பண்டிதர் முன்நின்று பணிவிடை செய்வதைப் பாராய் - என்று சொன்னால் - எப்படி இருக்கும், கண்ணீர் கொப்பளிக்கும் நிலையில் உள்ள, நம் உடன் பிறந்தார்க்கு!! வெட்டுக் காயத்தில், அரைத்தெடுத்த மிளகாயை அப்பி வைத்து, உலைக்கூடத்திலே இருக்கச் செய்துவிட்டு, "பாக்யவான்டா நீ! உனை ஆளும் வேந்தன், வெண்ணெய்யால் பல்விளக்கி, பன்னீரால் வாய்கொப்பளித்து சுத்தம் செய்த பிறகுதான், தங்கக் கோப்பையில் கனிரசம் ஊற்றிப் பருகுவாராமே என்று சொன்னால், அவனுக்கு எப்படி இருக்கும். அதே நிலைதான் தமிழருக்கு!! அல்லலும் அவமானமும் தமிழருக்கு; வைபவமும் அரசாங்க மரியாதையும் நேரு பண்டிதருக்கு. கண்ணால் பாரும் எமது புண்களை - என்றுகூறத் தமிழர் துடிப்பர் - காதால் கேளும் என் பஞ்சசீல உபதேசத்தை என்று மட்டுமே பண்டிதர் கூறிட நினைப்பார். விசித்திரம் இதுமட்டுந்தானா? பூசல்கள் கூடாது - சமரசமாகவே எந்தத் தகராறுகளையும் தீர்த்துக்கொள்ள வேண்டும் - அன்புதான் அடிப்படையாக இருக்கவேண்டும், பலாத்காரம் அறவே இருத்தல் கூடாது!! - என்றெல்லாம், கேட்போர், சாந்த சீலர்களாகும் விதமாகப் பண்டிதர் பேச இருக்கிறார். ஜெயந்தியில் - அவருடைய "பாரதத்தில்’ நாகநாட்டவர் உரிமைக் கிளர்ச்சியை நீண்ட காலமாகவே நடத்திக் கொண்டு வருகிறார்கள் - அந்த மக்களுக்குச் சீலம் போதிக்க, நேரு பண்டிதரின் ஆட்சி லெப் ஜெனரல் திம்மய்யா லெப் ஜெனரல் தொராட் மேஜர் - ஜெனரல் கோச்சார் கர்னல் பிரேஸ்வர் நாத் ஆகியோர் கொண்ட ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்திற்று. திம்மய்யாவும் தொராட்டும் படைகளை நாலாபக்கமும் அனுப்பி, நாகர்களை, கலகத்தினின்றும் விடுவிக்கிறார்கள்!! எப்படி? சுட்டுத் தள்ளுவதன் மூலம்!! பாருக்கெல்லாம் பஞ்சசீலம்! பாரதத்தில்? பட்டாளத்துப் பெரும் தலைவர்களிடம், நாகநாடு பிரச்சினை பெரிதும் ஒப்படைக்கப்படுகிறது. நாள் தவறாமல், நாகர்கள் பிடிபட்டனர், சுடப்பட்டனர், விரட்டப்பட்டனர் என்ற "செய்தி’கள் தரப்பட்டு வருகின்றன! குருதி கொட்டியா, பிரச்சினையைத் தீர்ப்பது, அன்பு நெறி மூலம், அகில உலகிலும் அமளி எழாமற் செய்ய இயலுமே, அண்ணல் காந்தி அதனைத்தானே அவனிக்கே அறிவித்தார் - என்று பாரதப் பிரதமர் அடுத்த திங்களில் பேசப்போகிறார்! இப்போது, நாகநாடு பிரச்சினையில் அவருடைய "இராணுவம்’ மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது!! இப்படி எண்ணற்ற விசித்திரங்கள், "பாரதத்தில்’ உள்ளன. ஆனால், சில அரசியல்வாதிகளுக்கு இவைகளெல்லாம், விசித் திரங்களாகத் தோன்றவில்லை - தம்பி! அவர்கள் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற, (மிகச் சிறிய அளவினதான) வெற்றியை, விசித்திரமானது என்று கருதுகிறார்கள். இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் என்ன? காஷ்மீர் சிக்கல் இன்னமும் எத்தனை எத்தனை கோடிகளைத்தான் விழுங்கும்? கோவாவில், நடைபெறும் அன்னிய ஆட்சியை நீக்கிட நேரு பண்டிதரால் ஏன் இன்னமும் இயலவில்லை? என்பனபோன்ற பிரச்சினைகளைக் கூட, அலச, ஆராய, நேரமோ, நினைப்போ இல்லை. அவர்கள் கண்முன் இப்போது தெரிவதெல்லாம், 15!! ஆமாம், பதினைந்து!! கழகம் பெற்ற வெற்றிபற்றிய எண்ணம்தான் குத்துகிறது, குடைகிறது!! எப்படிப் பெற்றார்கள்? என்று கேட்டுக்கேட்டு, ஏதேதோ காரணம் கட்டிப் பார்த்து மகிழ்ந்தாகி விட்டது - இப்போது அவர்கள், இந்தப் பதினைந்து பேர் என்ன செய்யப் போகிறார்கள்? என்று கேட்கின்றனர் - அதுகுறித்தே, தத்தமது தரத்துக்குத் தக்க வண்ணம், உரையாடித் திரிகின்றனர். திராவிட கழகத்தார் பரவாயில்லை. அவர்களுக்கு, புத்தம் புதிய வேலை கிடைத்துவிட்டது - அதிலே மும்முரமாக ஈடுபட்டு விடுவர் - இடையிடையே, இப்படியும் அப்படியுமாகக் குத்துவர் - ஆனால் அவர்களின் முழு ஆற்றலும், இப்போது, களத்துக்குத் திரட்டப்பட்டு வருகிறது!! இனிச் சிலகாலம், காரசாரம், வீரதீரம், சூடு சூளுரைத்தல், இவைகளை, புதிய போராட்டங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அணுகுண்டுகளை எல்லாம் ஆழ்கடலுக்குள் போட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்தாலும் சரி, அவர்கள் அக்கறை காட்டவும் மாட்டார்கள், அக்கறை காட்டிட யார் முனைந்தாலும், அற்பனே! அதுவா இப்போதைய முக்கியமான பிரச்சினை!! இதோ, பார், இது பிரச்சினை - இதோ, இது, இது!!’’ என்று கூறுவர்; மறுப்பவன் மீதோ, நாராச பாணங்கள் சரமாரியாக விடுப்பர். ஆனால், தீவிரமாக, தீரப்போரில் ஈடுபட்டிருக்கும் வேளையிலும், "இந்தப் பயல்கள்… கண்ணீர்த்துளிகள்…’’ என்ற அந்த அர்ச்சனையையும், கூறாமலிரார். ஆனால், தம்பி! போர்க்கோலம் பூண்டு நிற்கும்போது, அவர்கள் மிகச் சாமான்யமான காரியமான அரசியல் பிரச்சினையை அணுகும் நம்மைப்பற்றிப் பேசினால், நாம் கவலைப்பட்டு என்ன பயன்!! வாகை சூடுக!! என்று நாம், மனதார அவர்களுக்குக் கூறிட விழைகிறோம். அவர்கள்போல, போர்க்கோலம் பூண்டுள்ளவர்கள் அல்ல, மிகச் சாமான்யமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நம் போன்றவர்கள் இருக்கிறார்களே, அவர்கள், இந்தப் பதினைந்து பேர் சட்டசபையில் போய் இருந்துகொண்டு, என்ன சாதிக்கப்போகிறார்கள்? என்ன செய்ய முடியும்? என்ன திறமை இருக்கிறது? - என்றெல்லாம் பேசுகிறார்களே, அவர்களைக் குறித்து நாம் யோசிக்கவேண்டும். அதற்கு முன்னதாக, ஏன், பதினைந்து பேர் பெற்ற வெற்றியை விசித்திரம் என்று கருதுகிறார்கள் என்பதுபற்றி, எண்ணிப் பார்த்தாயா, தம்பி. நான் அது குறித்து எண்ணிப்பார்த்தேன் - அவர்கள் அவ்விதம் எண்ணுவதற்குக் காரணம், யார் தெரியுமா? நீதான் தம்பி! நீயேதான்!! நாள் தவறாமல் ஊரூருக்கும், பெருந்திரளான மக்களைக் கூடச்செய்து, விழாக் கோலம் காட்டி, நடத்திய வண்ணம் இருக்கிறாயே வெற்றிக் கூட்டங்கள் - வரவேற்பு விழாக்கள் - பாராட்டுக் கூட்டங்கள் - இவைகளைக் காணக் காணத்தான், அவர்களுக்கு, கோபம்கோபமாக வருகிறது - வெற்றியாம் விழாவாம்! வெற்றி பெற்றவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்களாம் சட்டசபையில் என்று கோபமாகக் கேட்கின்றனர். நமது பேரில் அவர்களுக்குக் கிளம்பும் கோபத்தில், அவர்கள், காஷ்மீர் பிரச்சினை என்ன ஆகும்? கோவா கொடுமை எப்போது ஒழியும்? இலங்கைத் தமிழரின் எதிர்காலம் என்ன? என்பன போன்றவைகளைக் கூடக் கவனிக்க மறந்துவிடுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நேரு பண்டிதரின் ஆட்சியிலே காணக்கிடக்கும் விசித்திரங்களைக்கூட மறந்து போகின்றனர். உள்ளபடி, சென்ற கிழமை, திருச்சியிலே, நமது தோழர்கள் நடத்திய பாராட்டுக் கூட்டத்தைக் கண்டவர்கள், காய்ந்து விழாமல் எப்படி இருந்திட முடியும்? நான் அந்தக் கூட்டத்திலேயே நிலைமையை எடுத்துரைத்தேன். "நீங்கள் மெத்தப் பொல்லாதவர்கள்’’ என்றுதான் குறைசொல்ல வேண்டும். பெற்றது 15 - தான் என்றாலும், 1,500 - இடங்களைப் பிடித்ததைப்போல இப்படி மலர் மாலைகளையும் கைத்தறி ஆடைகளையும் குவிக்கின்றீர்கள். ஏன்தான் நீங்கள் இப்படிச் செய்கின்றீர்களோ? நீங்கள் இப்படிச் செய்வதின் பலன் எங்கள் தலையில் வந்து விழுகின்றது. நாளைக்கோ மறுநாளோ கூடிக்கூடி காங்கிரஸ்காரர்கள் பேசப் போகின்றார்கள்; முறைத்து முறைத்துக் கம்யூனிஸ்டுகள் ஏசப்போகிறார்கள் - திரும்பிப் பார்த்துவிட்டு பார்த்து விட்டுத் திராவிடர் கழகத்தவர்கள் தீப் பொறி பறக்கப் பேசப் போகிறார்கள் - என்ன இந்தப் பயல்களுக்கு இவ்வளவு கருவம்? - என்ன இந்தக் கருணாநிதிக்கு இவ்வளவு பெரிய மாலை? அண்ணாத்துரைக்கு என்ன அவ்வளவு பெரிய மாலை! இதற்கு ஒரு போட்டோ, 150 - இடங்களைப் பிடித்தார்களே அவர்கள் இப்படியா ஆடினார்கள் - என்று. நீங்கள் மெத்தப் பொல்லாதவர்கள். கொடுத்த வெற்றி குறைவுதான் என்றாலும், அதற்காக நீங்கள் நடத்துகின்ற கொண்டாட்டம் மிக அதிகம். ஆனால் உண்மையிலேயே நீங்கள் பொல்லாதவர்களா என்றால், உண்மையிலே பொல்லாதவர்கள் என்று பிறர் சொல்வார்களே தவிர, நீங்கள் நல்லவர்கள். இந்தக் கூட்டத்திற்கு வருகிற நேரத்திலே இந்த நகரத்து மக்கள் சிறு சிறு சோற்று மூட்டைகளைக் கட்டிக் கொண்டு, ஆடவனும் அவனுக்குச் சொந்தமான அணங்கும், அவர்கள் பெற்றெடுத்த பொற்கொடிகளும் செல்வங்களும் வரிசையாகச் செல்லக் கண்டேன்; நல்ல நிலவு, ஆற்றோரத்திற்குச் செல்லுகிறார்கள். அருமையாகச் சமைத்த பண்டத்தைச் சாப்பிடப்போகிறார்கள். அந்தச் சோற்றில் ஒரு சமயம் உப்பு குறைவாக இருக்கக் கூடும்; பண்டம் வேகாமல்கூட இருக்கலாம். ஆனால் அதை அன்போடு பிசைந்து தந்த ஆரணங்கு உப்பில்லாத பண்டத்தை உப்புள்ள தாக்குகின்றாள் - வேகாததை வெந்ததாக்குகிறாள் - கையிலே வாங்கி உண்ணுகின்ற நேரத்தில் உப்பு இல்லை என்று அவன் சொல்லுகின்றான் - அவள் சரியாகச் சாப்பிட்டுப் பாருங்கள் என்று சொல்லவேண்டிய முறைப்படி சொல்கிறாள் - பிறகு உப்பு இருப்பதுபோல அவனுக்குத் தோன்றுகிறது. அப்பொழுது அவளுடைய கன்னத் திலே இடித்துச் சொல்லுகிறான், "நீ மிகப் பொல்லாதவள்’ என்று! அந்த வகையிலே நீங்கள் பொல்லாதவர்கள்! என்று சொன்னேன். உள்ளே செல்பவர்கள் 15 பேர்! ஆளும் கட்சியிலோ, பத்து மடங்கு!! நமக்குத் துணையாக, உள்ளத் தூய்மையும் கடமை உணர்ச்சியும்! நமக்கு விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் தர, நம்மை நாசம் செய்வதாக எண்ணிக்கொள்வோர் தரும் தூற்றல், துளைத்தல், குத்தல், இன்ன பிற!! இதை எண்ணினேன் - ஆமாம், நம்மை உள்ளே அனுப்பி விட்டு, கழகத் தோழர்கள், இனி நாம் செய்யவேண்டியது ஏதுமில்லை என்று எண்ணிக்கொண்டால், நிலைமை என்ன ஆகும் என்ற எண்ணம் பிறந்தது - ஒரு விநாடி திகிலேகூட ஏற்பட்டது; அன்று அங்கு, என் எண்ணத்தைக் கூறினேனே கூட்டத்தில், அதைத் தம்பி! இப்போதும், நினைவிற்குக் கொண்டுவருகிறேன். "நீங்கள் எங்களை உள்ளே அனுப்பிவிட்டு, வெளியிலே கழகத்தை நல்லமுறையிலே வளர்க்காவிட்டால், நடுக்காட்டில் கையிலே நல்ல ஒரு தங்கநகையைக் கொடுத்து, ஒரு இளம் பெண்ணைக் காட்டுக்குள்ளே துரத்திவிட்டுவிட்டால் அது எவ்வளவு கொடுமையான காரியமோ, அப்படிப்பட்ட காரியமாக முடியும், எங்களை உள்ளே அனுப்பிவிட்டு வெளியிலே நீங்கள் பணியாற்றாமலிருந்தால். தங்க நகை கையிலே, தையல் நடந்து செல்லுகின்றாள் தன்னந்தனியாக - எதிர்ப்பட்டோர் நகையையும் பறித்துக்கொள்ளக் கூடும் - நகை போனாலும் பரவாயில்லை - செல்லுகின்றவள் தையல், ஆகையினால்தான் நாங்கள் அங்கே வேறு காரியம் ஆற்றமுடியாமல் போய்விட்டாலும் பரவாயில்லை, நாங்கள் சீர்குலைக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், வெளியிலே இருக்கும் நீங்கள் உண்மையிலே கழகத்தை வலிவோடு காப்பாற்ற வேண்டும். நான் தையலை உதாரணம் சொல்லி, அரசியலை நினைவூட்டியதற்குக் காரணம், அரசியலில் அப்படிச் சீர்குலைக்கப்பட்டவர்கள் பலர். இராமசாமி (படையாச்சி) தலைசிறந்த உதாரணம், மாணிக்கவேலர் மற்றோர் உதாரணம் - எத்தனையோ பேர் வீராவேசத்தோடு உள்ளே போனார்கள் - வெளியிலே அவர்களைத் தட்டிக்கேட்க ஆளில்லை - ஆகவே நகையைக் கையிலே வைத்திருந்த தையல், காட்டிலே சிக்கி, நகையையும் இழந்து அவளும் என்ன ஆனாளோ என்று ஊரார் எல்லாம் பேசுகின்ற விதத்தில், மாணிக்கவேலரும் இராமசாமிப் படையாச்சியும் சீர்குலைக்கப்பட்டார்கள். அப்படிப்பட்ட அரசியல் சீர்குலைவு எங்களில் யாருக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், நீங்கள் வெளியிலே இருக்கிற கோட்டையைத் திறம்படக் கட்டிக் காப்பாற்றவேண்டும். அங்கிருந்து நீங்கள் கொடுக்கின்ற குரல், நாங்கள் கொஞ்சம் ஓய்வாக இருந்தால், எங்கள் காதிலே நுழைந்து நெஞ்சத்தைத் தட்ட வேண்டும், அங்கிருந்து நீங்கள் பிறப்பிக்கின்ற கட்டளை எங்களைச் சட்டசபையிலே பணியாற்றுகின்ற அளவுக்கு உற்சாகத்தைத் தரவேண்டும், அதேபோல் எங்களை உள்ளே இருப்பவர்கள் அலட்சியப்படுத்தினால், 15 - பேர்தானே நீங்கள் நாங்கள் 150 - பேர் என்று அவர்கள் சொன்னால், அங்கே நாங்கள் அதிகம் பேசமாட்டோம். ஒரு சமயம் நான் இல்லாவிட்டால் கூட, நம்முடைய தம்பிமார்கள் அதிகம் பேசுவார்கள். நான் இருக்கின்ற காரணத்தினாலே அவர்களுக்கு இன்னின்னது பேசவேண்டும் என்று தோன்றும் - வேண்டாம் வேண்டாம் என்று நான் தடுப்பேன். அவர்களையும் அழைத்துக் கொண்டு, மறுபடியும் நான் உங்களிடத்திலேதான் வருவேன் என்று எடுத்துக் கூறினேன் இதில் என்ன அண்ணா! சந்தேகம்!! இந்தப் பதினைந்து போதும் என்றும், நாங்கள் கருதிக்கொண்டில்லை, சட்ட சபையில் அமர்ந்துவிட்டாலே சகலகாரியமும் நடை பெற்று விடும் என்றும் நாங்கள் தப்புக் கணக்குப் போடவில்லை, உங்களை உள்ளே அனுப்பிவிட்டதோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது என்றும் எண்ணிக் கொண்டில்லை; நாங்கள், இதுவரை பணியாற்றியதில் கிடைத்தவை, ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைக்கழகங்கள் இலட்சத்துக்கு மேற்பட்ட கழக அன்பர்கள் சென்னையில், அறிவகம், அழகிரி அச்சகம், திடல், நம் நாடு பல ஊர்களிலே கழகத்துக்குச் சொந்தமான இடங்கள் என்று பட்டியல் தயாரிக்கிறோமே பூரிப்புடன், அதிலே, புதிதாக உற்சாகத்துடன், பதினைந்து சட்டசபை உறுப்பினர்கள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று சேர்த்து மகிழ்கிறோம்; அந்த மகிழ்ச்சி எம்மை, மேலும் மேலும் நம்பிக்கையுடன் கழகப் பணியாற்றிடத் தூண்டுமே தவிர, படுத்து உறங்கவா வைத்துவிடும்? உனக்கேன் அப்படி ஒரு அச்சம் ஏற்பட்டது? என்று என்னைப் பார்த்துக் கேட்பது போலிருந்தது, திருச்சியில் தோழர்கள் காட்டிய மகிழ்ச்சி முழக்கம்!! எனக்கு தம்பி, இந்தக் குறிகள் எல்லாவற்றையும்விட, அதிக நம்பிக்கை தருகிற குறி வேறொன்று உண்டு! நாம், என்ன காரணத்திலும் சோம்பிக் கிடந்திட மாட்டோம் - நம்மைத் தூற்றுவோர் நமக்குப் பேருதவி புரிகிறார்கள்! அவர்கள் செய்து வரும் கேலியும், காட்டி வரும் எதிர்ப்பும், கொட்டி முழக்கும் கண்டனங்களும், நம்மை, தரமும் திறமும் குறையாமல் வேலை வாங்கும் எஜமானர்களல்லவா! அதிலும் அவர்கள், “பிரமாண்டமான’ போராட்டத்தில் ஈடுபடப் போகிறார்களாமே! சும்மாவா இருப்பார்கள், உலகினரே காண்மின்! இதோ நாங்கள் உயிரைத் துரும்பென மதித்து, உடைமைகளைத் துச்சமென்று ஒதுக்கித் தள்ளிவிட்டு! உரிமையைக் காக்க, மானத்தை மீட்க, போரில் ஈடுபடுகிறோம், இந்தப் பயல்களை அனுப்பினீர்களே, என்ன ஆனார்கள்? என்ன செய்கிறார்கள்? தமிழர்கள் கண்டது என்ன? என்றெல்லாம்,”பட்டாசுகளை’க் கொளுத்தி வீசியபடி அல்லவா இருப்பார்கள்! தம்பி! நாம் கல்லக்குடிக் கிளர்ச்சியும், இரயில் நிறுத்தக் கிளர்ச்சியும், நடாத்தியபோது அவர்கள், இதெல்லாம் ஒரு கிளர்ச்சியா? குப்பை! கூளம்!! என்றெல்லாம் கேலி பேசி வந்தனரே, அதுபோல் இருக்க மாட்டோம். வீரர்காள்! களம் செல்லும் தீரர்காள்! வாகை சூடுமின்! வெற்றியின் பெருமையிலே, பிற எவருக்கும் ஒரு துளியும் பங்கு கிடைத்திடலாகாது, அனைத்தும் உமக்கே இருத்தல் வேண்டும் என்று விரும்புகிறோம். பங்குக்கு நாங்கள் வந்துவிட மாட்டோம்! பக்கம் வந்து நின்று பணிவிடை செய்தால்கூட, பிறகோர் நாள் அதனாலேயே பெரிய கஷ்டமும் நஷ்டமும், தோல்வியும் துயரமும் தந்துற்றது என்று பழிகூறுவீர்கள் - தேர்ச்சி பெற்றவர்கள் - எனவே போரிலே ஈடுபட்டு, வாகை சூடுக! திக்கு நோக்கித் தெண்டனிட்டு உலகுக்குக் கூட அறிவிக்கிறோம் - என்று கூறுகிறோம். போர்க்கோலம் எதுவரையில்? தேசியக் கொடி கொளுத்தக் கிளம்பிய காலை, தமிழர் தலைவரின் தாக்கீது கண்டு, கலைந்தது போலவா, இதுபோதும் என்பதுபற்றி, நமக்குக் கவலை எதற்கு? நடைபெறுகிற வரையில் காண்போம், போற்றுதலுக்குரிய தெனின், போற்றத் தயங்கப் போவதில்லை. ஆனால், தம்பி! போர்ப் பிரகடனம், போர் அறிக்கை விளக்கம், போரில் கலந்துகொள்ள அன்பழைப்பு, போரில் சேராதிருப்போருக்குச் சாபம், போரில் ஈடுபடுவோரின் பட்டியல் வெளியிடுதல், போரில் ஈடுபடவேண்டாம் என்பதற்கு விதிவிலக்குப் பெறும் பிரமுகர்கள் பெயர் வெளியிடுதல் என்ற வழக்கமான - நாடு பலமுறை கண்டிருக்கிற, சடங்குகளின் போதெல்லாம் “சுடச்சுட’ நம்மைத்தானே தாக்கப் போகிறார்கள்! போர் நடைபெறும் போதும் சரி, பிறகு போர் நிறுத்தம், நிறுத்தத்துக்கான விளக்கம், பலன் ஆராய்தல், புதுப் போருக்கு ஆயத்தப்படுத்துதல் எனும் கட்டங்களின் போதும் சரி,”கண்டனம்’ நமக்குத்தானே! இவைகளைத்தான், நான் நம்மைச் செம்மையாக வேலை செய்ய வைக்கும், சாதனங்கள் என்கிறேன்! வேடிக்கை அல்ல, தம்பி, விசித்திரம்போலத் தோன்றும், ஆராய்ந்து பார், விளக்கமாக, உண்மை தெரியும். எனவே, எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது, சட்டசபையிலே இடம் பெற்றவர்களும் சரி, வெளியே இருந்திடும் கழகக் காவலர்களும் சரி, நெறி தவற மாட்டார்கள், முறை கெட விட மாட்டார்கள் தரம் குறையாது, திறம் வளரும். ஏனெனில், எவ்வளவு நேர்மையாக நடந்துகொண்டாலும், “சபித்துக் கொட்ட’”தூற்றித் துளைக்க’ ஒரு திருக்கூட்டம், சளைக்காது தொண்டாற்றிக் கொண்டிருக்கும்போது, நாம் பணியினையும் மறந்துவிட்டு நேர்மையினின்றும் தவறி விட்டால், ஏ! அப்பா! சும்மாவா விடுவார்கள்!! எனவேதான், அந்தத் தூற்றல் - நம்மை "வேலை செய்ய வைக்கும்’ - என்ற நம்பிக்கை எனக்கு. அவர்கள், பாராட்டி விட்டால், பட்டுப்போய் விடுவோம், என்ற பயம் எனக்கு உண்டு! அவர்கள், எப்படியோ தொலைந்து போகட்டும், நாம் நமது வேலையைப் பார்த்து கொண்டிருப்போம் என்று அலட்சியமாக இருந்து விட்டால், நாம் "மந்தமாகி’ விடுவோம்!! நமது கழகத்தைக் குறித்து, நாட்டு மக்களின் பெரும்பகுதியினர் ஆச்சரியப்படுவதே இந்தச் சூட்சமம் புரியாததால்தான். இவ்வளவு ஏசுகிறோம்; பொருத்தம் அர்த்தம்கூடப் பார்க்காமல் தூற்றுகிறோம்; சொல்லக் கூசும் வார்த்தைகளை வீசுகிறோம்; இவ்வளவையும் இந்தப் பயல்கள் சுமந்து கொண்டு கருமமே கண்ணாயினார் என்றல்லவா இருக்கிறார்கள் - என்று வசவாளர்களே ஆச்சரியப்படுகிறார்கள்! நாம் அவர்களின் "அர்ச்சனை’யை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்கிற சூட்சமம், புரியவில்லை, பாபம்! "ஊதுகுழல் வேண்டுமா, ஊதுகுழல்,?’’ என்று கேட்டான், நடைபாதை வியாபாரி; வேண்டாமப்பா என்று கூறினான், அவ்வழி சென்றவன். பொத்தான் வேண்டுமா? பேனா வேண்டுமா? சாக்லெட் வேண்டுமா? சாயப்பவுடர் வேண்டுமா? சோப்பு, சீப்பு, கண்ணாடி, ப்ரோச், பின், வேண்டுமா? என்று வியாபாரி, விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தான். அவ்வழி வந்தவருக்குப் பெருத்த தொல்லையாகிவிட்டது; அவர் அங்காடி வந்தது எதையும் வாங்க அல்ல; யாரையோ சந்திக்க! வியாபாரி, விடாமல் தொல்லை கொடுக்கக் கண்டு, அவர், கோபத்துடன், ஒன்றும் வேண்டாமப்பா, போய்த் தொலை! ஒரே தலைவலியாகிவிட்டது உன்னாலே! என்றார். அருமையான தலைவலி மருந்து இருக்கிறது! ஆறே அணா வேண்டுமா? என்று கேட்டானாம், வியாபாரி! தம்பி! அந்த “ஆசாமி’யின்,”சகிப்புத்தன்மை’யில் பெறத்தக்க பாடம் இருக்கிறது!! ஒரு விஷயம், நீ, கவனித்தாயோ இல்லையோ, எனக்கு அது நெஞ்சில் பதிந்திருக்கிறது. நம்மை, இந்த அளவுக்கு அவர்கள் தூற்றிக்கொண்டு இருந்திராவிட்டால், நாட்டு மக்களில் நல்லவர்கள், நம்மிடம் இந்த அளவுக்கு நல்லெண்ணம் காட்டி ஆதரவு அளித்திருக்கக்கூட மாட்டார்கள். நமக்கு வாக்களித்த பதினேழு இலட்சம் மக்கள் அனைவருமே, நம்மாலே மட்டுமே நமக்கு ஆதரவாளர்களாக்கப் பட்டவர்கள் அல்ல; பெரியாரின் பெரும்படையினர், இந்தப் பதினேழு இலட்சத்தில், சில இலட்சங்களை நமக்காகத் தேடித் தயாரித்துத் தந்துள்ளனர். நான், நன்றி கூறிக்கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும், இதை மறவாதிருக்கிறேன். தம்பி! நாம் பெற்ற வெற்றிக்கான பல காரணங்களில் இது முக்கியமானது என்பதை மட்டும் எப்போதும் மறவாதே!! இனி, நாம் பெற்ற வெற்றிபற்றி, அனைவரும், அதன் அளவு குறைவு எனினும், ஆச்சரியத்துடன் கவனிப்பதற்குக் காரணம் இருக்கிறது. பிற பிற கட்சிகள், நாங்களும் அமைச்சர்கள் ஆகக்கூடும்- ஆகவேண்டும் - ஆக விரும்புகிறோம் என்று சொல்கின்றன. தி. மு. க. நாங்களும் அமைச்சர்களாக முடியும் என்பதை எடுத்துச் சொல்லுகின்ற கட்சி அல்ல - எங்களுக்கென்று ஒரு தாயகம், அதற்குப் பழம்பெரும் நாகரிகம் இருந்தது, அதன் கொடி வானளாவப் பறந்தது, அதனுடைய நாவாய்கள் எத்திசையும் கடலில் செல்லும், அதனுடைய பட்டுப்பட்டாடைகளை ரோம் நாட்டிலே வாங்கி அணிந்துகொண்டார்கள், அவர்களுடைய முத்தை யவன நாட்டு மக்கள் விலைபோட்டு வாங்கினார்கள் - அதனிடத்திலே, காடு இருக்கிறது, அந்தக் காட்டிலே அகில் இருக்கிறது சந்தனம் இருக்கிறது, அந்த மண்ணைத் தோண்டினால், தங்கம் கிடைக்கிறது, இரும்பு கிடைக்கிறது, நாட்டிலே கரும்பு போட்டாலும் விளைகிறது, கட்டாக இருக்கிற புகையிலை போட்டாலும் விளைகிறது - இப்படிப் பட்ட அரும்பெரும் நாடு எங்களுக்கு உண்டு. அந்த நாட்டினுடைய துரைத்தனம் எங்களிடத்திலே இல்லை. அது ஆயிரம் ஆயிரத்தைந்நூறு மைல்களுக்கு அப்பாலே இருக்கிற டெல்லி புதிய பாதுஷாக்களிடத்திலே ஒப்படைக்கப்பட்டது. அதைத் திரும்பப் பெற்றுத் தாயகத்தைத் தனித்தரணியாக்கித் தன்னாட்சி செலுத்துவதற்கு நாங்கள் ஏற்பட்டிருக்கின்றோம் என்று சொல்கிற கழகம் தி.மு.க. ஒன்றுதான். ஆகையினாலேதான், இது பெற்ற வெற்றியைப் பற்றிப் பலபேர் ஆராய்கிறார்கள். உதாரணம் உங்களுக்குச் சொல்லவேண்டுமானால், ஆட்டினுடைய கழுத்தை வெட்டிக் கொண்டு வந்து உங்களிடத்திலே காட்டினால் ஆச்சரியத்தோடு பார்க்கமாட்டீர்கள், புலியின் நகத்தைக் கொண்டுவந்தால் "புலி நகமா’ என்று ஆச்சரியத்தோடு பார்ப்பீர்கள். தி. மு. க. புலி நகத்திற்குச் சமம் - பிறபிற கட்சிகள் வெட்டுப்பட்ட ஆடுகூட அல்ல, துள்ளி ஓடுகின்ற ஆட்டுக்குட்டி என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள் - மக்கள் அதனைக் கவனிக்க மாட்டார்கள். இங்ஙனம், கவனிக்கின்றவர்கள் - அரசியல் அலுவலை தேவையுள்ள காரியம் என்று கருதுபவர்கள் - அடுத்தபடியாக "சரி, சரி - காரணம் கிடக்கட்டும், எப்படியோ 15 பேர் வந்து விட்டீர்கள்? என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர். நாலைந்து நாட்களுக்கு முன்பு உத்திரமேரூர் என்ற ஊரில் பேசும்போது, நான் இதற்குப் பதிலளிக்கும் தன்மையில் கூறியது நினைவிற்கு வருகிறது. "எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்? என்று எங்களைக் கேட்கின்றனர், காங்கிரஸ் தலைவர்கள். என்ன செய்யச் சொல்கிறீர்கள்? என்று நான், அவர்களைக் கேட்கிறேன்’’ - என்று அன்று பேசினேன். உண்மையிலேயே ஆளும் கட்சி, எதிர்க்கட்சியில் உள்ளவர்கள், என்ன செய்யவேண்டுமென்று விரும்புவர், என்பது ஆளும் கட்சியின் பண்பு, பயிற்சி நினைப்பு, நோக்கம், அந்தக் கட்சிக்கு ஜனநாயகத்திலே உள்ள நம்பிக்கை, இவைகளைப் பொறுத்து இருக்கிறது!! இவை, ஆளுங் கட்சிக்கு எந்த வகையில் இருக்கிறதோ, யார் கண்டார்கள்? “ரசம்’ கலையாத கண்ணாடி முன் நின்று பார்த்தால்தான்,”முகம்’ சரியாகத் தெரியும்! ஜனநாயகப் பண்பு கெடாத நிலை ஆளுங் கட்சிக்கு இருந்தால்தான், எதிர்க் கட்சியின் தரம் தெரியும்!! தொல்லை தரவேண்டுமென்று நாங்கள் எதிர்க்கட்சி அமைக்கவில்லை. ஆனால் நாங்கள் செய்கின்ற நல்ல காரியங்களையெல்லாம் நீங்கள் தொல்லையென்று நினைக்க வேண்டாம் என்று அவர்களை வேண்டிக் கேட்டுக்கொள்வேன். ஏனென்றால் தாய், திருவிழாக் காலத்தில் சாமியைப் பார்த்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில், பசிக்கின்ற குழந்தை தாயைக் கேட்கின்றது ஏதாவது வாங்கித் தரச்சொல்லி, அந்த நேரத்திலே, தாய்க்குக் குழந்தையினுடைய பசி தெரியாது, எதிரிலே இருக்கின்ற திருவிழாக் கோலந்தான் தெரியும். அந்தக் கோலத்தைப் பார்த்துக்கொண்டே பசியோடு இருக்கின்ற குழந்தை பிராண்டுகின்ற நேரத்தில், தொல்லை தருகிறாயே என்று அடித்துத் தாயே தன்னுடைய குழந்தையை தவறாக நினைக்கின்ற நேரத்தில், எதிர்க்கட்சிக்காரர்களை நாட்டை யாளுகின்ற அமைச்சர்கள் தவறாகக் கருதுவார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தாய் தன்னுடைய குழந்தையைப் பசிக்கின்றது என்று தெரிந்தும் அது தொல்லை தருகின்ற காரணத்தினால் கண்டிப்பதானால், நாங்கள் செய்கின்ற நல்ல காரியத்தையும் தொல்லையென்று அமைச்சர்கள் கருதக்கூடும் - தோன்றும். எதிர்க்கட்சியிலே இருப்பவர்கள் எடுத்துச்சொல்லுகின்ற கருத்துக்களை எடுத்துச் சொல்லுகின்ற திட்டங்களை ஆராய்கின்ற நேரத்தில் அனுதாபத்தோடு ஆளுங்கட்சி கவனிக்க வேண்டும். அனுதாபத்தோடு கவனித்தால்தான் எதிர்க்கட்சிக்கு ஆளுங்கட்சியினிடத்து மதிப்புப் பிறக்கும். ------------------------------------------------------------------------ மாயவரத்தில், சிறப்புச் சொற்பொழிவின்போது, நான் இதுபோலக் கூறினேன். ஏன், தம்பி, சரிதானே! எதிர்க்கட்சியின் இயல்பு, போக்கு, ஆளுங்கட்சியின் தன்மையைப் பொறுத்துத் தானே அமையும்! அதைத்தான், சொன்னேன். விழாக்கள் போல நடத்தப்பட்டு வரும் கூட்டங்களில் இந்த விளக்கங்களை நமது தோழர்கள் தந்து வருகின்றனர். விழா - வெற்றி தந்த உற்சாகத்தின் விளைவு! விழாமூலம் புதிய உற்சாகமும் கிடைக்கிறது. எத்தனை எத்தனை புதிய கழகங்கள் அமைகின்றன தெரியுமா!! பெறவேண்டிய வெற்றி என்றால் 15 - இடத்தை இப்போது பிடித்தோம். இனி அடுத்தமுறை 100 - இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல. அது மட்டும் நம்முடையது என்றால், தேர்தலுக்காகவே துவக்கப்பட்ட ஒரு கட்சியாக இருக்கவேண்டும். ஆனால், நம்முடைய கழகம் தேர்தலுக்காகவே மட்டும் துவக்கப்பட்ட கழகம் அல்ல. ஆகையினால் எதிர்கால வெற்றி என்று நான் கவனப்படுத்துகின்ற நேரத்தில், பிடிக்க வேண்டிய இடங்கள் இத்தனை என்று தூண்டுகின்றேன் என்று அர்த்தமல்ல. பிடிக்க வேண்டிய இடங்கள் அதிகமாகக் கிடைக் கலாம்; பெற்றுத் தருவீர்கள்; ஆனால் நாம் பெறவேண்டிய வெற்றி சட்டசபையிலே அதிகமான இடங்கள் என்பது மட்டுமல்ல, நமது தாய்த்திருநாடு நமக்குத்தான் உரியது என்ற உண்மை எந்தெந்த உள்ளத்திலே ஏறாமல் இருந்ததோ, எந்தெந்தச் செவியிலே புகாமல் இருந்ததோ, அந்தச் செவிவழி புகுந்து, அவர்களுடைய நினைவிலே நின்று, நெஞ்சத்திலே பதிந்து, அவர்களுடைய நிலைமையை மாற்றி, மனமாற்றத்தை ஏற்படுத்தித் தரவேண்டும். தாய்த் திருநாட்டை மீட்பதற்காக, நாம் எடுத்துக் கொள்ளுகின்ற பல்வேறு வகையான முயற்சிகளில், சட்டசபைக்கு போகின்ற முயற்சியும் ஒன்று. சட்டசபைக்குப் போகின்ற முயற்சியும் ஒன்று என்று நான் சொல்லுவதைவிடச் சட்டசபைக்குப் போகிற முயற்சி, பல முயற்சிகளிலே தரத்திலே சாதாரணமானது என்றும் கூறுவேன். சட்டசபைக்குள்ளே போய் "திராவிடநாடு கொடுங்கள் கொடுங்கள்’ என்று அமைச்சர்களின் குரல்வளைகளைப் பிடித்து அழுத்தமுடியாது. நாங்கள் அங்கே செய்யக்கூடியதெல்லாம், விஷயங்கள் விவாதிக்கப்பட்டால் அவற்றிற்கு ஒளிதருகின்ற அளவுக்கு அறிவுத் தெளிவோடு விவாதிக்கலாம். கேடுதருகின்ற காரியத்தைக் காங்கிரஸ் அமைச்சர்கள் செய்ய முற்பட்டால், எங்களுடைய வலிவைத் திரட்டி, எங்களுடைய ஆற்றலைத் துணைக்கழைத்துக் கொண்டு அவர்களைத் தடுக்கலாம். அவர்கள் நல்ல காரியங்களைத் தப்பித் தவறிச் செய்தால், அந்த நல்ல காரியத்திற்கு அவர்களை மனமாரப் பாராட்டலாம். இவைகளைத்தான் நாங்கள் செய்யலாம். தாய்த் திருநாட்டை மீட்கும் பணியில், சட்டசபைக்குச் செல்லுவதென்பது தரத்திலே சாதாரண முயற்சி. ஆனால், அந்த முயற்சி தரத்திலே உயரவேண்டுமானால், நாங்கள் அங்கே உள்ளே இருக்கின்ற நேரத்தில், வெளியிலே இருக்கிற நீங்கள் கழகத்தை இப்போது இருப்பதைவிட அதிக வலிவுள்ள தாக்கினால், கழகத்திலே இப்போதுள்ள உறுப்பினர்களைப் போல் இரட்டிப்பு, மூன்று மடங்கு, நான்கு நடங்கு என்று நீங்கள் அதிகப்படுத்திக் காட்டினால், நம்முடைய கொடி பறக்காத ஊரில்லை, நம்முடைய குரல் கேட்காத பட்டிதொட்டி இல்லை என்று சொல்லத்தக்க அளவு நீங்கள் நம்முடைய பிரசாரத்தை வலிவுள்ளதாகவும் ஆக்கினால், வெளியிலே நீங்கள் கட்டிக் காக்கின்ற கோட்டையைச் சுட்டிக் காட்டிவிட்டு, உள்ளே இருக்கிற நாங்கள் ஏற்றம் பெறலாம். வெளியிலே கழகம் கலகலத்தது என்றால், உள்ளே 15 பேர் இருந்தும் பயனில்லை; 150 பேர் இருந்தும் பயனில்லை. ஆகவே தம்பி, வெற்றிக் களிப்பிலே, விழாதரும் மகிழ்ச்சியிலே, இனி ஆகவேண்டிய காரியத்தை மறந்து விடாதே. உனக்கும், உள்ளே சென்றுள்ளவர்களுக்கும், புதிய பொறுப்பு ஏற்பட்டுவிட்டது; புதியதோர் நிலைமை - அதற்கு ஏற்றபடி, நமது பணியின் அளவும் தரமும் வளரவேண்டும். உன்னால் முடியாததையா செய்யச் சொல்லுகிறேன்!! அண்ணன், 28-4-57 ஆலிங்கனமும் - அழிவும்! ஆலிங்கனமும் - அழிவும்! சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும் - காங்கிரசில் முதலாளிகள் தம்பி! "இன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழகத்தவர் பதினான்கு பேர்களுடன், என் அண்ணன், சென்னை சட்டசபை சென்று அமரப்போகிறார்’’ என்று, அகமும் முகமும் மலர்ந்த நிலையில், பெரியதோர் வெற்றி, புதியதோர் வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன், உன்போன்ற உள்ளம் கொண்ட எண்ணற்றவர்கள், பேசிக்கொண்டிருக்க, "இந்தச் சனியன்கள் இன்று சட்டசபை நுழைகின்றனவாம்; பதினொரு மணிக்காம்! காலம் இப்படியுமா கெட்டுவிட வேண்டும்? கமலம் பூத்துக் குலுங்கும் தடாகத்தில், கசுமலம் சேரு கிறது. கண்ணுக்குக் கண்ணான காமராஜர் கொலுவீற்றிருக்கும் மன்றத்திலே, இந்த கண்ணீர்த் துளிகள்’ செல்லுகின்றனவே!’’ என்று தாமாக, வீணாக வேதனையை வருவித்துக் கொண்டு அவதிப்படுவோர் அங்கலாய்த்துக் கொண்டிருக்க, "அடுக்குமொழிபேசி, ஆளைமயக்கி, ஆகாத திட்ட மெலாம் பேசி, ஊரைக் கலக்கி, உதவாக்கரைக் கொள்கை கூறி, உண்மைப் பண்புக்கு ஊறுதேடிடும் மாபாவிகள், வகுப்பு வாதிகள், பிளவு உண்டாக்கும் பேதைகள், நாம் நானிலம் கண்டு புகழத்தக்க விதமாக, நமது நாட்டினை நடத்திச் செல்வதற்கான அரும்பணியாற்றக் கூடிடும் மணிமாடத்தில், கதிர் குலுங்கும் பயிரருகே மறைந்து கிடக்கும் களைபோல, முத்து தூங்கும் கடலிலே ஊர்ந்திடும் நத்தைபோல, முல்லை பூத்திடும் கொல்லையின் ஒருபுறம் கள்ளி இருத்தல்போல, பாதகப் போக்கினர் பதினைந்து பேர் வந்து அமரப் போகின்றனரே! அடாது இச் செயல் என்பதனை அறிவிக்க, விண்மீன்கள் உதிர்ந்திடுமோ - ஆழ்கடல் வறண்டிடுமோ - வானம் இருண்டு, பேய்க்காற்று வீசி, இடி முழக்கி, மழை பெய்து வெள்ளக் காடாகிடுமோ - என்றெல்லாம் எண்ணுவதற்கு, இது அக்காலம் அல்லவே; தக்கோர்க்கு இடமளிக்குமாம், இடமளிக்க, தானே வளருமாம், மற்றையோர் அமர்ந்திட இடம் இராதாம், அன்றோர் நாள் இருந்த சங்கப்பலகை ஒன்று! இற்றை நாளில் கற்றைச் சடைமுடியான், கண்ணுதலான் வீற்றிருந்து நடாத்தும் கழகம் ஏது? எனவேதான், ஏதேதோ நுழைகின்றன! என் செய்வது? நாமும், அங்கு அமர்ந்திடவேண்டி இருக்கிறது!’’ என்ற சட்டமன்றத்தவர்களாகிவிட்ட காங்கிரஸ்காரர்களில் பலர், கவலை கொப்பளிக்கும் நிலையினராகி இருந்திட, “அரும்பாடு பட்டோம், தூயதோர் திட்டத்தை உளமாரக் கொண்டு பணியாற்றினோம், எனினும்,”பணம் பாதாளம்வரை பாயும்’ என்ற பழமொழியின் வலிவு நம்மைத் தாக்கியதால், தோல்வி பல இடங்களில் கண்டோம். துயரத்தைத் தாங்கிக் கொண்டோம். ஆளுங் கட்சியினர் 100 - பேர் உளர்! நாம் இதில் பத்தில் ஓர் பகுதியே! இந்நிலையில் உள்ளே செல்கிறோம் நமது உள்ளத்தில் உரைத்திடும் உத்தமக் கருத்தினை, எண்ணிக்கை அதிகமுள்ள காரணத்தால், அவர்கள் எள்ளி நகையாடக்கூடும். துரைத்தனம் தமது என்பதால் துடுக்குத்தனம் ஆகாது என்ற பண்பினையும் மறந்து நம்மைத் துச்சமென்று எண்ணிடக்கூடும். இச் சிறு கூட்டம் எப்படியோ இங்கு வந்து இடம் பிடித்துக் கொள்கிறது! உண்டு மிஞ்சியதைக் காக்கையும் பெறுமல்லவா! இதுகளுக்கு ஒரு பதினைந்து கிடைத்தது, அதுபோன்றதே! இந்தச் சிறுகுழு, அடக்க ஒடுக்கமாக ஆட்சிப் பொறுப்பும், அது அளிக்கும் கருவிகளும் கருவூலங்களும் மிகுதியாக எம்மிடம் உளது என்பதை அறிந்து எமது ஏவலர் போன்றிருத்தல் வேண்டும்! ஏன்? எப்படி? ஏது? என்று பேசிடத் துணிவரேல், எமது கோபப் பார்வையாலேயே சுட்டுச் சாம்பலாக்கி விடுவோம் - என்றெல்லாம், காங்கிரசார், மிரட்டுமொழி பேசி, உருட்டு விழி காட்டுவரோ என்ற ஐயப்பாடு தொடர்ந்திட, நாங்கள் பதினைந்து பேரும், சென்னைக் கோட்டையில் நுழைந்தோம்! கோட்டை! அகழ் - அரண் கொண்டதாக ஆங்கிலேயன் அமைத்த கோட்டை! அலைகடல் எதிரே! உள்ளே, அரசோச்ச, மக்களிடம் அனுமதி பெற்றோர் அமர்ந்திடும் இடம். இந்தக் "கோட்டை’யை, பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்து, பயம் வெளியே தெரிய ஒட்டாதபடி மிகச் சிரமப்பட்டு, மறைத்துக்கொண்டு, பாருக்குள்ளே நல்ல நாடு எமது பாரதத் திருநாடு என்ற பண்ணினை, வெண்மணற் பரப்பினையே மன்றமாகக் கொண்டு இசைத்து, எழுச்சியும் இன்பமும் பெற்றவர்கள் - இன்று கோலோச்சும் நிலைபெற்று, கோட்டையும் கொத்தளமும் கோலும் கொடிமரமும் எம்முடையதாகிவிட்டது காணீர்! என்று பேசும் நிலையில் உள்ளனர். இவர்கள் ஒரு நாள் இந்நிலை பெறுவர் என்பதனை, இருபதாண்டுகட்கு முன்னம், யூகித்தறிந்திட முடியாதிருந்த ஆங்கிலேயன், கொக்கரித்தானல்லவா! இத்தனைக்கும், பிறர் கண்டறிந்திடாத பல கருத்துக்களை அறிவாற்றலால், கண்டறிந்தவன் கால்சட்டைக்காரன்! இங்கு தங்கம் கிடைக்கும் - இரும்பு இங்கு இருக்கும் - காட்டாற்றினை இதுபோலக் கட்டுப்படுத்தலாம் - காற்றினை இதுகொண்டு எதிர்த்து நீந்தலாம் - கடலுக்குள்ளேயே கலம் சென்றிட இயலும் - கல்லின் வயதையும் கணிக்கலாம் - என்ற இன்ன பிறவற்றிலெல்லாம் பெருமதி காட்டினவன்தான் வெள்ளையன் - எனினும், மறைந்துகிடந்த விஞ்ஞான உண்மைகள் பலவற்றினை, துருவித் துருவிக் கண்டறிய முடிந்ததே தவிர அவனால் கொடி பிடித்துக்கொண்டு, “வந்தே மாதரம்’ எனும்”கோஷம்’ கிளப்பிக்கொண்டு வருகிற ஒரு சிறு கூட்டம், அன்னிய ஆதிக்கத்தை அழித்தொழிக்க வேண்டும் என்ற எழுச்சியின் சிறு வடிவம் என்பதனை மட்டும், கண்டறிய முடியவில்லை!! ஆதிக்கம், அறிவினை அந்த முறையில் மழுங்கச் செய்து விடுகிறது! அவன், கிரேக்க சாம்ராஜ்யம், ரோமானிய சாம்ராஜ்யம், உதுமானிய சாம்ராஜ்யம் எனும் பலப்பல ஆதிக்கப் பேரரசுகள், வீழ்ச்சி அடைந்த வரலாறு நன்கு படித்திருந்தான் - எனினும், தன் ஆதிக்க அரசு குலைந்து போகாதிருக்க, அந்த வரலாற்றி லேயே பாடம் தேடினான் - ஏதோ கிடைத்தது - அது தன்னை என்றென்றும் காப்பாற்றும் என்று எண்ணினான் - உண்மை திடீரென்று பிறகோர்நாள் அவனைத் தாக்கித் துரத்திற்று! தன் பேதமையைப் புன்னகையால் மறைத்துக் கொண்டு, ஓட்டம் பெருநடையாய் ஊர்போய்ச் சேர்ந்தான்! தம்பி! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலே, இந்தக் "கோட்டை’யிலும் சூழவும் என்றென்றும் நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணத்தைக் கொண்டு கிடந்த வெள்ளையர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களின் நடமாட்டத்தைக் கண்டு நடுங்கி, நம்மவர்கள், அடங்கி ஒடுங்கிச் சென்றதையும் கண்டிருக்கிறேன். அவனே, “எதிர்காலம்’ இப்படி எல்லாம் வடிவெடுக்கக் கூடும் என்பதனை அறிந்து கொள்ளாதிருந்தான் என்றால், ஆளவந்தார்களாகிவிட்ட காங்கிரசார், எங்ஙனம்,”எதிர்காலம்’ எப்படியெல்லாம் உருவாகிக்கொண்டு வருகிறது என்பதை அறிந்திட முடியும். குற்றம் அவர்கள்மீது அல்ல, தம்பி! கோலெடுப்போரில் பெரும்பாலோர், குறைமதியையே துணையாகக் கொண்டழிந்துபட்டனர்! "கோட்டை’க்குள்ளே நுழைந்தபோது, இதுபோலெல்லாம் எண்ணிக்கொண்டேன்! பீரங்கிக்குப் பக்கத்தில் நாம் நிற்கிறோம் - ஒரு மூங்கிலாலான கொடிமரத்தின் கீழே நின்றுகொண்டு, கொக்கரிக்கிறார்களே, சுயராஜ்யம் வேண்டும் என்று!! கோட்டை எம்மிடம் - வெட்ட வெளி நின்று வீரம் பேசுகிறார்களே! என்று, அன்று ஆங்கிலேயன் ஆணவத்தால் பேசினான். இன்று… …!! - என்று எண்ணிக் கொண்டேதான் உள்ளே சென்றேன். வாழ்த்தொலி! ஆமாம்! கோட்டையானாலென்ன, கொத்தளமானாலென்ன - எப்படியோ பெருந்திரள் கூடி விட்டது, வாழ்த்தொலி கூறிட!! இந்தப் "பதினைந்துக்கே’ இவ்வளவு ஆர்ப்பாட்டமா… என்ற அலட்சியத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, காங்கிரஸ் அன்பர்கள் உள்ளே நுழைந்தனர். கொட்டும் மழையில், குடையுமின்றி, எட்டாண்டுகளுக்கு முன்பு, இராயபுரத்தில் ஓர் வெட்டவெளியில், நின்று பேசினோம் - நினைவிலே இருக்குமே. தம்பி!! பெரியாரின் போக்கால் நாம் அதுவரை உகுத்த கண்ணீரின் அளவினைக் காட்டுவதற்கு இயற்கை எடுத்துக்கொண்ட முயற்சி போன் றிருந்ததல்லவா, அன்று பெய்த மழை; அன்று துவக்கப்பட்ட, திராவிட முன்னேற்றக் கழகம், சதிகளைச் சகித்துக்கொண்டு, சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், எதிர்ப்புகளால் முறிந்து போகாமல், பழிச்சொல்லால் பாழ்படாமல், நம்மை அழித்தொழிக்க எண்ணுவோர் எத்துணை தரக்குறைவாக நடப்பினும், நாம் நமது முறையையும் நெறியையும் தரம் கெடாமல் பார்த்துக்கொண்டு, நாட்டு மக்களின் நம்பிக்கையை மெள்ளமெள்ளப் பெற்று, அரசியல் கழைக்கூத்தாட்டம் நடத்தாமலும், மயிர்க்கூச்செறிய வைக்கும் செயல்களைச் செய்துகாட்டாமலும், அந்த நம்பிக்கையை நமது பண்பு நிறைந்த பணியின் மூலமே பெற்று, ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, அந்தப் பாரத்தைத் தாங்கிக்கொண்டு, ஒரு பதினைந்துபேர், கோட்டைக்குள்ளே நுழைந்திடத் தக்க நிலையையும் பெற்றிருக்கிறோம். மணி பதினொன்று - நல்ல வெயில் - எனினும், என் மனக் கண்முன், அப்போது, துவக்க நாளன்று பெய்த மழைதான் தெரிந்தது. அடாது மழை பெய்தாலும் விடாது கூட்டம் நடந்தே தீரும் - என்று குடந்தை நீலமேகம் பேசின காட்சி தெரிந்தது!! அந்தத்திடல் - அதிலே, மழையால் ஏற்பட்ட சகதி - அதனைப் பொருட்படுத்தாமல் பெருந்திரள் கூடி நின்றிருந்தது - எல்லாம் மிகத் தெளிவாக எனக்குத் தெரிந்தன! அந்த “நாம்’ - இன்று இங்கே!! - என்று எண்ணிக்கொண்ட போது - எனக்கு உள்ளபடி, தம்பி, 150 - 15 - என்ற இந்தக் கணக்கு மறந்தே போய்விட்டது - திக்குத் தெரியாத காட்டிலே, தத்தி நடந்த சிறகொடிந்த பறவை போன்றிருந்தோம் அன்று - இன்று நொண்டி நடந்து கொண்டேனும், இந்த”ஆட்சி மன்றம்’ நுழைந்திருக்கிறோம் - இந்தக் கட்டம் வரையில், வளர முடிந்ததே, வளர நாடு ஊட்டம் அளித்ததே, நல்லோர் துணை புரிந்தனரே என்று எண்ணினேன் - நன்றி கூறியபடி உள்ளே நுழைந்தேன். இதற்கு ஏன் இவர்கள் இத்துணை களிப்படைகிறார்கள் என்று எண்ணிக்கை பெருத்தோர் கேட்கின்றனர் - அவர் களுக்குப் புரியாது; இந்தக் “கட்டம்’ வந்தடைவதற்கு முன்பு, நாம் நடந்து சென்ற பாதையிலே என்னென்ன படுகுழிகள் சரிவுகள் - சதுப்புகள் - இருந்தன என்பது அவர்கட்கு எப்படித் தெரியும். அவர்கள் ஒரு”மகாத்மாவின்’ "மந்திரக் குளிகை’ அணிந்துகொண்டு இந்த மன்றம் வந்திருக்கின்றனர்! ஆகாய விமானமூலம் ஆறாயிரம் மைல் பயணம் செய்தவன், அலுப்பாக இருக்கிறது என்று ஆறுகல் கடந்து வந்தவனிடம் கூறும்போது, கேலிப் புன்னகை செய்வதுபோல, அவர்கள் நிலை இருக்கிறது. அவர்களில் எத்தனை பேர், நாம் கண்ட எதிர்ப்புகளின் வகையை, அளவைத் தாங்கிக்கொள்ளக் கூடியவர்களாக இருக்கமுடியும், என்ற ஒரே எண்ணத்துடன், நான் அங்கு அமர்ந்திருந்த காங்கிரஸ் அன்பர்களைக் கவனித்துப் பார்த்தேன் - அவர்கள் நான் கூறுவது கேட்டு வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாது - அவர்களில் மிகச் சிலரே - விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே, அத்தகைய உள்ளம் உரம் படைத்தவர்கள்!! நிச்சயமாக!! கொட்டும் வறுமையைத் தாங்கிக்கொண்டு, உனக்கேனடா இந்த ஊரைத் திருத்தும் வேலை - என்று கோபத்துடன் அல்ல வேதனையுடன் கேட்டிடும் பெற்றோரின் பெருமூச்சைக் கேட்டுக் கலங்கிச் செயலற்றுப் போகாமல், ஊரிலுள்ள உலுத்தனெல்லாம், ஓம் நமச்சிவாயா! என்று கூறிவிட்டு ஊர்க் குடி கெடுத்துக் கொண்டே, "உலகமல்லவா அழிந்துபடும் இந்த உதவாக்கரை களை வளரவிட்டால், இதுகள் சாமியே கிடையாது என்றல்லவா பேசுகிறதுகளாம்’ என்று கொதித்துப் பேசுவதைப் பொறுமையுடன் கேட்டுக்கொண்டு, பத்திரிகைகள் இருட்டடிப்பாலும், இட்டுக் கட்டுவதாலும் தாக்க, அதனால் தகர்ந்து போகாமல், அடித்தால் சிரித்து, ஆத்திர மூட்டப் பேசினால் அன்பு காட்டி, நாம் நமது பணியினைத் தொடர்ந்து நடத்தி வந்ததுபோல, இதோ இந்த 150 - பேர்களில் எத்தனை பேர்களால் முடிந்திருக்கும் - என்று, நான் மிகக் கூர்மையாகவே கவனித்துப் பார்த்தேன் - மிகச் சிலரால்தான் முடிந்திருக்கும். நிச்சயமாக!! அதோ இராமநாதபுரம் ராஜாவும், செட்டிநாட்டு ராஜாவும் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு, அவர்களுடைய "முன்னோர்’ வைத்து விட்டுப் போனது, செல்வம் செல்வாக்கு - மாடமாளிகை கூட கோபுரம் - வியாபாரம் - முதலியன!! அவர்கள் ராஜ குடும்பத்தில் பிறந்தார்கள் - "ராஜோப சாரம்’ பெற்று வளர்ந்தார்கள்!! அவர்கள்கூட, தாமும் சில பல, பாடுபட்டுத் தேடிப் பெற்று அனுபவித்தால்தான், "சுவை’ மிகுதியாக இருக்கும் என்பதறிந்திருக்கிறார்கள். இதோ காங்கிரஸ் அன்பர்கள் இருக்கிறார்களே, இவர்கள் ஒவ்வொருவரும். “மகாத்மா’ அரும்பாடுபட்டு, சபர்மதியில் தவமிருந்து, எரவாடாவில் சிறையிலிருந்து, தண்டியில் யாத்திரை செய்து, உண்ணாவிரதமிருந்து, உலகையே ஒரு கலக்கு கலக்கி, பெற்று வைத்துவிட்டுப் போயிருக்கும், பெருஞ் செல்வத்தை ரசித்து ருசி பார்த்துக் கொண்டிருப்பவர்கள் - இவர்களுடைய”சாதனைகள்’ என்ன என்று கேட்டுவிடாதீர்கள் - சுவைக்கத் தெரிந்திருக்கிறதே! மோப்பம் பிடித்து இரை கிடைக்குமிடம் கண்டறிந்தது ஒரு சாதனை அல்லவா!! நாம் - தம்பி! மகாத்மாக்களின் மாநிதிக்கு "வாரிசு‘களாக முடியவில்லை. நாமே - காடு திருத்தினோம், கழனியாக்கினோம் - வரகோ, சாமையோ, அது நமது உழைப்பின் பலன் - எனவே தான், பதினைந்துபேர் உள்ளே நுழைந்தபோது "வாழ்க!’ என்றனர். பொருளற்று அல்ல! அதன் பொருளை, பிறருடைய சேமிப்பில் வாழ்வு நடாத்துவோர் உணர்ந்து கொள்ளத்தான் முடியாது! இங்கே நான் பார்க்கிறேன் காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று அமர்ந்திருக்கும் 150 பேர்களை! அதென்ன அண்ணா! காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப் பட்டவர்கள் என்று சுற்றி வளைத்துப் பேசுகிறாய் - காங்கிரஸ்காரர் என்று சுருக்கமாகக் கூறக்கூடாதோ என்று கேட்காதே தம்பி, இவர்கள் அத்தனை பேர்களையும் காங்கிரஸ்காரர் என்று கூற மனம் இடம் தரவில்லையே, என் செய்ய! அவர்களுக்கு அங்கு இடம் கிடைத்திருக்கிறது - உன் மனம் இடம் தராது போவதென்ன என்று கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தாதே, தம்பி. கரையான் புற்றெடுக்க பாம்பு குடிபுகுந்துவிடுகிறது - பாம்புப் புற்று என்றுதானே பெயர் மாறவேண்டும்!! அவர்கள் புதிய பொருத்தமான பெயர் சூட்டிக் கொள்ளவில்லை - பழைய பெயரிட என் மனம் இடந்தரவில்லை. நான் என்ன செய்ய! இதோ, நாகைத் தொகுதியிலிருந்து காங்கிரசால் நிறுத்தி வைக்கப்பட்டு வெற்றிபெற்று என்முன் அமர்ந்திருக்கும் N.S.இராமலிங்கத்தைக் காண்கிறேன்; ஒரு பெரிய புத்தகமல்லவா, என் முன் திறந்துவைக்கப்படுகிறது!! நெடும்பலம் சாமியப்பா பெருநிலக்கிழார் - நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் - மிக நல்லவர்; அவருடைய திருக்குமாரர் இராமலிங்கனார். இவர் கதரணிந்து, காமராஜரைக் கைகூப்பிக் கும்பிட்டுவிட்டு, ஆளுங்கட்சியினரின் பகுதியில் அமருகிறார் - இதோ நான், அந்த நெடும்பலத்தாருடைய அரசியல் நடவடிக்கைகளிலே நேசத் தொடர்புகொண்டு காங்கிரசை எதிர்த்து வருபவன்! தஞ்சை மாவட்டத்துக் காங்கிரசின் வலிவு முழுதும் திரட்டி, நெடும்பலத்தாரைத் தாக்கினர். தேர்தலில் தோற்றாலும் தோற்பேனேயன்றி, என் உள்ளத்துக்கு ஒத்துவராத கொள்கையை, உடன்பாடு உடையதுதான் என்று தலையாட்டிவிட்டு, தப்பிப் பிழைக்க விரும்பவில்லை- என்று துணிவுடன் கூறினவர் - தொல்லை பலவற்றினுக்கு ஆளானவர் - ஆனால் தலை இறக்கம் கூடாது என்று இறுதி வரையில் வீரமாகவே இருந்தவர்! இதோ, அவர் மகன் அமர்ந்திருக்கிறார் - ஆற்றல்மிக்க அவர் தந்தையால் சாதித்துக் கொள்ள முடியாததை, மகன் சாதித்துக் கொண்டிருக்கிறார், என்றா என்னை வாழ்த்தச் சொல்லுகிறாய். எதிர்ப்புக்கு அஞ்சாத அந்த அடலேறு, வீழ்த்துபட்டதி லேயும் ஓர் வீரம் காணக்கிடந்தது! எங்ஙனம் அதனை மறந்திடச் சொல்லுகிறாய்! எக்காரணம் காட்டி, N.S. இராமலிங்கனாரைக் காங்கிரஸ்காரர் என்று கூறச் சொல்லுவாய்! காங்கிரசால் நிறுத்திவைக்கப்பட்டவர் - அவ்வளவுதான் கூறலாம்!! இவர் போன்றார்தானே பெரும்பகுதி - அந்த 150ல்!! நான் சிறுவனாக இருந்தபோது, கடைவீதியில், “கலர்’ சாப்பிடச் சென்றேன் ஒரு தடவை. அந்தக் கடையில் இரு பக்கங்களிலும், அழகழகான கலர் பாட்டில்கள் இருந்தன. அதில் ஒன்றைக்காட்டி,”அது கொடு’ என்றேன், கடைக்காரர் சிரித்துக் கொண்டே, "தம்பி! அது, சும்மா அழகுக்காக கலர் தண்ணீர் ஊற்றி வைத்திருக்கிறது - சாப்பிட அல்ல’ என்று கூறிவிட்டு, உள்ளே இருந்து ஒரு கலர் கொண்டு வந்து கொடுத்தார். காமராஜரின் முறையும் அதுவாகவே இருக்கிறது! காங்கிரஸ்காரர் சிலர் - மிகச் சிலர் - காங்கிரசால் நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் ஏராளம்! பாரேன், தம்பி, வேடிக்கையை - நான் பம்பரம் ஆடும் பருவத்திலே, அங்காடியில் கண்ட முறையை, என் மகன், "பாட்மின்டன்’ ஆடும் பருவம் பெற்றிருக்கிற இன்று, அரசியல் அங்காடியில் பார்க்கிறேன்! விசித்திரமான உலகம், தம்பி, இது! "என்ன சட்டசபைக்கு சென்றிருக்கிறீர்கள். இதைக் கண்குளிர அப்பா, பார்த்திருப்பார். கொடுத்து வைக்காதவர்கள். நாம் -’’ என்று இராமலிங்கனார் இல்லத்தில் எவரேனும் அவரிடம் கூறினால், அவர் பயந்தல்லவா போவார்! "அப்பாவின் அஞ்சா நெஞ்சு எங்கே! இதோ நான் தஞ்சம் புகுந்து ஒரு இடம் பெற்றேனே - இதுபோலப் பணிந்திட அவர் இசைந்திருந்தால், மந்திரியேகூட அல்லவா ஆகியிருக்க முடியும். புயல் அடித்தாலும் கலத்தைச் செலுத்துவேன் - கலமே மூழ்குவதானாலும், கூடச் சேர்ந்து மூழ்குவேனே அல்லாமல், தலை தப்பினால் போதும் என்று ஓடிவிட மாட்டேன் என்று கூறிடும் வீர மாலுமிக்கு இருந்த உள்ள உரம் அவரிடம் இருந்தது. நான்…! செச்சே! அவர் இருந்து இந்தக் காட்சியைக் காணுவதா? - மகனே! மகனே! இதென்ன, எனக்குத் தெரியாத வித்தை என்று எண்ணிக் கொண்டாயோ! என் உறுதியை உனக்களிக்க முடியாது போய்விட்டதே என்னால்! என்னைக் கேலிசெய்யவா இந்தப் புதியகோலம் பூண்டனை! என்றல்லவா, கேட்பார். நல்லவேளை, அவர் இல்லை’’ - என்றல்லவா, இராமலிங்கனார் எண்ணுவார். "யார் தெரிகிறதா?’’ "யார்? வாலிபப் பருவமாக இருக்கிறார் வசதியானவர் போலிருக்கிறது.’’ "பெரிய பிரபுக் குடும்பமையா - பெருநிலக்கிழாராக்கும்!’’ "தஞ்சை ஜில்லாவோ?’’ "சாட்சாத் தஞ்சையேதான்! நெடும்பலம் சாமியப்பா என்று கேள்விதானே!’’ "அடேயப்பா! அசகாயசூரராச்சே!! இந்தப் பன்னீர் செல்வமும் சாமியப்பாவும் கூடிக்கோண்டு தஞ்சாவூர் ஜில்லாவில் காங்கிரசைக் கண்ட துண்டமாக்கினார்களே!’’ "அந்தச் சாமியப்பாவின் மகன் - நம்ம வலையில் - பார்த்தாயா, புத்தம் புதிய கதர்ச் சட்டை!’’ "எமகாதகப் பேர்வழி என்றால், உனக்குத்தானய்யா தகும்! சாமியப்பா மகனையே, காங்கிரசில் இழுத்தாச்சா?’’ “கெண்டையை போட்டு, வரால் இழுக்கணும்.’’”ரொம்பக் காலமாக அந்தக் குடும்பம் காங்கிரசுக்கு எதிர்ப்பாயிற்றே - எப்படிக் காங்கிரசில் சேரச் சம்மதித்தார்? "என்னய்யா, அப்படிக் கேட்கறே! ஆவடியிலே சமதர்மத் தீர்மானம் போட்டுவிட்டு இப்படிப்பட்ட ஆசாமிகளைக் காங்கிரசிலே எப்படிச் சேர்க்கலாம் என்றல்லவா கேட்க வேண்டும்?’’ "இரண்டும்தான் கேட்கிறேன் என்று வைத்துக் கொள்ளுமே.’’ "சரி, பதில் சொல்லட்டுமா?’’ "பதில் சொல்லத்தானே கேட்கிறேன்.’’ "நான் ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லும்.’’ "இதென்ன வேடிக்கை, உம்மை நான் கேள்வி கேட்டால்…’’ "நான் கேள்வி கேட்கிறேனே, பதில் கூறாமல் என்கிறீரா? என் கேள்வியிலேயே உமக்குப் பதில் இருக்கிறதய்யா. தேர்தலில் வெற்றிபெறக் கதர்ச்சட்டை மட்டும் போதுமா?’’ "போதாது.’’ "பணம் வேண்டுமல்லவா?’’ "வேண்டும்.’’ "சரி! இவரிடம் பணம் இருக்கிறது - நம்மிடம் சட்டை இருக்கிறது! எப்படி!!’’ "பலே! பலே! இப்படிப்பட்டவர்கள் கிடைக்கிற வரையில், உமக்கென்ன - யோகம்தான்.’’ இவ்விதம் ஒரு வட்டாரத்தில் உரையாடலும், மற்றோர் வட்டாரத்தில், "நம்ம நெடும்பலத்து இராமலிங்கமில்லாவிட்டால், நாகையில், காங்கிரஸ் என்ன ஆகியிருக்கும்?’’ "மண்ணைக் கவ்வி இருக்கும்?’’ "காங்கிரஸ் என்றால் கட்டோடு பிடிக்காதே அவருக்கு. எப்படி அதிலே சேர்ந்தார்?’’ "அவராகவா சேர்ந்தார்! கெஞ்சி, கூத்தாடி, கை காலைப்பிடித்துக்கொண்டு, காங்கிரசின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் - உங்களால்தான் அது முடியும் என்று மந்திரிகளே வந்து தூண்டினார்கள். இல்லாவிட்டால், அவராவது காங்கிரசில் சேருவதாவது…’’ "காங்கிரசில் சேர்ந்தால் காசுபணம் செலவில்லாமல் ஜெயிக்கலாம் என்று எண்ணினார் போலும்’’ "காசு பணமா! செச்சே! மகாத்மாவுக்கு ஜே! என்று சொன்னதால், குரல் கெட்டிருந்ததே, அவர்களுக்குக் காப்பி வாங்கிக் கொடுத்தது தவிர, வேறு செலவு ஏது?’’ "என்ன, அவ்வளவு வெறுப்பாகப் பேசுகிறாய்?’’ "வேறே எப்படிப் பேசுவது? பணம் கொஞ்சமாகவா கரைந்திருக்கிறது. ஆனந்தம், காங்கிரசுக்கு! அலுப்பு நம்மவருக்கு’’ என்றவிதமான பேச்சும்; மற்றோர் இடத்தில், "அடிபட, உதைபட, சட்டம் மீற நாம் - சட்டசபை செல்ல சீமான், பூமான்! இந்த இலட்சணத்துக்கு நமக்குச் சமதர்மம் திட்டமாம்,’’ என்று மனம் நொந்து பேசுவதுமாக, நிலைமை இருப்பது எனக்குத் தெரிகிறதே, தம்பி, எப்படி, 150 காங்கிரஸ்காரர் என்று கூறத் துணிவு பிறந்திட முடியும்? காங்கிரசால் நிறுத்திவைக்கப் பட்டவர்களைத்தான் நான் இங்கு பெரும்பாலோராக இருக்கக் காண்கிறேன். பனைமரத்துண்டுக்குச் சாயமடித்து பீரங்கி போலாக்கித் தரையிலே வைத்துவிட்டு, விமானத்திலிருந்து பார்க்கிற எதிரியை ஏமாற்றுகிறார்கள் என்று, முன்பு பிரிட்டிஷாரைப் பற்றிச் சொன்னார்களே, அதுபோல, செட்டிநாட்டு ராஜா இராமநாதபுரம் ராஜா மதுக்கூர் ஜெமீன்தார் நெடும்பலம் மிராசுதார் இராமசாமி படையாச்சி எல்லைவீரர் வினாயகம் சேனாபதிக் கவுண்டர் பழனிச்சாமிக் கவுண்டர் போன்றோர்களல்லவா, கதர் அணிவிக்கப்பட்டுக் காட்சி அளிக்கின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ்காரர் 150 பேர் அங்கு அமர்ந்திருக்கக் கண்டேன் என்று எங்ஙனம் கூற முடியும்? எண்ணிக்கை பொருத்திருக்கிறதே தவிர, அது வலிவின் அறிகுறியுமல்ல, பொலிவுக்குகந்ததாகவுமில்லை. எப்படியேனும் இடம் பெறவேண்டும் என்ற பேராவல் கொண்டோரும், யாரைப் பிடித்தாகிலும் கட்சிக்கு வெற்றி என்ற கணக்கைக் காட்டவேண்டும் என்ற தந்திரம் தெரிந்தோரும், ஒன்றுகூடி நடத்திய "பண்டமாற்று’ திறம்படப்பலன் அளித்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறிப் பாராட்டலாம்; காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு புதிய வலிவு கிடைத்துவிட்டிருக்கிறது என்று எப்படிக் கூறமுடியும்? சட்ட மன்றத்தில், என் எதிர்ப்புறம் அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும், எனக்கு, அவர்களைக் காணாத முன்பு, வெறும் எண்ணிக்கையை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தபோது, இருந்த அச்சம்கூட நீங்கிவிட்டது. அச்சப்பட வேண்டியவர்களும், ஆயாசப்படவேண்டியவர் களும் காங்கிரஸ் கட்சியை, அது காடுசுற்றிய காலமுதற்கொண்டு நாடாளத் தொடங்கிய நாள்வரையில் கட்டிக் காப்பாற்றி, அதன் வளர்சிக்காக, கண்ணீரும் செந்நீரும் கொட்டினார்களே அவர்கள்தான். T.T.. கிருஷ்ணமாச்சாரிகளல்ல! காங்கிரஸ் கட்சிக்கு எண்ணிக்கையில் அதிகமாக வெற்றி கிடைத்தது என்றாலும், உண்மைக் காங்கிரஸ், அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைக்கப்பட்டுவிட்டது என்பதை உணருகின்ற சிலர் அச்சப்படுகிறார்கள், ஆயாசப்படுகிறார்கள். இன்று காங்கிரசுக்குள் அழிவு சக்திகள் புகுந்துவிட்டன. இதனால் என்றுமில்லாத அளவுக்கு காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது. தக்க சமயத்தில் நாம் தடுக்காவிட்டால், அழிவு நிச்சயம். இது, யாரோ, நிலம் கிடைக்காத தியாகி! - அல்லது காமராஜர் தமிழரின் பாதுகாவலர் என்ற பேருண்மையை உணர மறுக்கும் அப்பாவி, பேசியது என்று எண்ணிவிடப் போகிறார்கள். இவ்வாறு, காங்கிரஸ் அழிந்து கொண்டு வருகிறது என்று கூறுபவர், மொரார்ஜீ தேசாய். சென்ற திங்கள் இறுதியில் ராஜ்கோட்டில், காங்கிரஸ் மாநாட்டில் பேசி இருக்கிறார். எனக்குத் தம்பி, வலைவீசி ஆள்பிடித்து, சிக்கினோரை ஆட்டிப்படைத்து, ஆதிக்கத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு வல்லவரும் - இந்த இடமாவது கிடைத்ததே, இதுபோதும் இறைவா! இறைத்த பணத்துக்கு இதுவும் கிடைக்காமற் போயிருந்தால் என்ன செய்வது!! - என்று எண்ணிக்கொள்ளக் கூடிய "நல்லவர்கள்’ ஏராளமாகவும், அயன் சரக்கோ போலியோ, நமது அங்காடி நிறையச் சரக்கு நிரப்பிக் காட்ட முடிகிறது, அதுபோதும் என்று திருப்திகொள்கிற சிலரும்தான், இங்கு இருப்பது தெரிகிறது. எனவே, தியாகிகளை, வீரதீரப் போராட்டம் நடத்தியவர்களை, காங்கிரசுக்காகக் குருதி கொட்டியவர்களை, ஏராளமாகக் கொண்டதோர் வீரக் கோட்டத்துக்குள்ளே, நாம் ஒரு பதினைந்துபேர் நுழைந்து விட்டோமே, அவர்தம் ஆற்றலுக்கு எங்ஙனம் ஈடுகொடுப்பது - அவர்கள் மத்தியில் அமர்ந்து எங்ஙனம், நமது உரிமைகளுக்காக வாதாடுவது - என்ற அச்சம் எழக் காரணம் இல்லை. எனவே, நானும் நமது கழகத்தவரும், உள்ளே வந்து பார்த்ததில், புதிய நம்பிக்கையே கொள்கிறோம்; நமது பணியினைத் திறம்படச் செய்ய இயலும் என்ற உற்சாகம் நிரம்ப ஏற்படுகிறது. எதிர்ப்புறம் இருப்பவர்களிலே, மிகப் பெரும்பாலான வர்கள், அரசியலில் “பல ஜென்மம்’ எடுத்தவர்கள். சிலர்”தத்து’ எடுக்கப்பட்டவர்கள். வேறு சிலர் எந்தக் கட்சிக்கு வலிவு ஏற்படுகிறதோ, அந்தச் சமயத்தில் அதில் இருப்பவர்கள். விளைந்த காட்டுக் குருவிகள் ஏராளம்! வாடி இருக்கும் கொக்குகளும் உள்ளன! சொன்னதைச் சொகுசாகச் சொல்லவல்ல பஞ்சவர்ணக் கிளிகள் சில உள! மரம் பழுத்தது, பழம் நமக்குத்தான் என்றெண்ணிக் கொண்டு வட்டமிட்டு வந்து, கிடைக்கப் பெறாததால், துயரத் துடன் தொங்கிக்கிடக்கும் வௌவால்களைக் காண்கிறேன். "மாடப்புறாவுக்குக் கண்ணிவைத்தேன்! மரங்கொத்தி மாட்டிகிட்டுது, தங்கம் தில்லாலே!’’ ] என்று பாடுவார்களே அதுபோல், எதை எதையோ எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தோரையும் காண்கிறேன்! ஏராளமாக - மன்றத்தின் பெரும்பகுதியை நிரப்பிக் கொண்டு இருக்கிறார்கள் - ஆனால் அவர்களில், உண்மையான காங்கிரஸ்காரர்களை, தடியடி சிறைவாசம் சத்யாக்கிரகம் உப்புக் காய்ச்சுதல் மறியல் தண்டியாத்திரை போன்றவைகளைக் குறித்து எண்ணும்போதே, நெஞ்சு நெக்குருக, கண்கள் நீர் துளிக்க, "ஆம்! ஆம்! அந்த வீரதீரப் போராட்டமெனும் தணலில் புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கக் கட்டிகள் நாங்கள் - என்று உரிமையுடன் கூறிக்கொள்ளக் கூடியவர்கள், மிகச்சிலரே உளர்! செஞ்சிக்கோட்டை செல்பவரை எல்லாம் தேசிங்குராஜா வென்றா கூறுவது!! இங்கே, இந்தக் கோட்டையிலும், கதர்சட்டை இருக்கிறவர்களை எல்லாம், காங்கிரஸ்காரர் என்று கூறுவதற்கில்லை. எனவே, எங்கள் எதிரில் உள்ள உண்மையான காங்கிரஸ் காரர்கள், நாங்கள் எவ்வளவோ அந்த எண்ணிக்கை அளவுதான் இருக்கும். நாம், 15! இத்துடன் ஒரு "சைபர்’ - சேர்க்கப்பட்டு 150 ஆகியிருக்கிறது!! - என்று நான் கூறுவதை நையாண்டி என்று கருதிவிடாதே, தம்பி, அதிலே, இன்றைய அரசியல் நிலைமை தொக்கி நிற்கிறது. சைபருக்குத் தனியாக மதிப்பு இல்லை - வேறு எண்ணுடன் சேரும்போது சைபருக்கென்று புதிய மதிப்பு பிறப்பதுமில்லை - சைபர் எந்த எண்ணுடன் சேருகிறதோ அந்த எண் மட்டும் பெருத்துவிடும். இதே முறையிலேதான் எண்ணிக்கை இங்கு பெருத்திருக் கிறது; உண்மையில் வலிவு அல்ல இது; இரவல்!! நான், வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டுக் காட்டுகிறேன் என்று கூறி, காங்கிரஸ் நண்பர்கள் திருப்தி தேடிக் கொள்வர் - அது அவர்கள் விருப்பம் - நான் குறுக்கிடவில்லை. 52 நிலப்பிரபுக்கள் 14 மில் முதலாளிகள் 21 பெரும் வர்த்தகர்கள் 15 பஸ் முதலாளிகள் 35 மாஜி காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் இப்போது சென்னை சட்டசபையில், 150 காங்கிரஸ்காரர்கள் இருப்பதாகப் பேசிப் பெருமைப்படுகிறார்களே - அவர்களை பம்பாய் ஏடு ஒன்று, "ரகவாரியாக’ப் பிரித்துக் காட்டியிருக்கிறது!! இதற்கு என்ன சொல்லுகிறார்கள்? நான் சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே - பம்பாய் இதழ் பரிகாசம் செய்கிறதே!! சட்ட மன்றத்தில் அமர்ந்திருக்கும், இந்தக் “கனவான்’ களுக்கு, காங்கிரசின் எதிர்காலம் குறித்து என்ன அக்கறை ஏற்பட முடியும்? காங்கிரசின் உள்ளிருந்து கொண்டே, அதனை உருக்குலைய வைத்திடுவது தவிர, இவர்களால் வேறு என்ன”தொண்டு’ ஆற்றமுடியும்? கொடிய நோய்களை மூட்டிவிடுகிற “கிருமிகளில்’ பார்க்க அழகானவைகளும் உள்ளன என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். காங்கிரசில்,”கிருமிகள்’ ஏராளமாகப் புகுந்து விட்டிருப்பதுதான் எண்ணிக்கை பெருத்திருப்பதாகத் தோற்றமளிக்கிறது. ஏற்கனவே, நான் இந்த உண்மையை ஓரளவு அறிந்தவனே என்றாலும், இங்கு உள்ளே வந்து காணும்போது, மிகத் தெளிவாகத் தெரிகிறது - காங்கிரஸ்காரர்கள் அதிகமாக இல்லை - காங்கிரசை வீழ்த்தியவர்கள் - அதிகம் உளர். பாரதத்திலே இருந்து ஒரு எடுத்துக்காட்டுத் தருவது கண்டு, ஏனண்ணா, இந்தக்குப்பை என்று சலித்துக்கொள்ளாதே தம்பி. அவர்களுக்காக, “அவர்கள்’ அறிந்த”அவர்கள்’ கதையிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு. திருதராஷ்டிரன் - துரியனின் தந்தை - யாரையேனும் அழிக்க வேண்டுமென்றால், வாள், வேல், கதை, சூலம் போன்ற ஆயுதங்கள் தேடுவதில்லையாம் - ஆலிங்கனம் செய்துகொள் வானாம்! அது போதுமாம் அழித்திட! "திருதராஷ்டிர ஆலிங்கனம்’ என்று புராண பாஷையில் கூறுவார்கள்! ஒரு அணைப்பிலா, ஆளுக்கு அழிவு நேரிட்டுவிடும் என்று கேட்காதே - தம்பி! - ஆலிங்கனங்கள், ஆசாமிகளை என்ன, அரசுகளையே அழித்திருக்கிறது - ரோம் நாட்டு வரலாற்றில் காணலாம் - தம்பி! ரோமாபுரி ராணிகள் என்ற புத்தகம் எழுதியவன் என்று நமது நிதி மந்திரி ஏற்கனவே என்மீது கோபித்துக் கொண்டிருக்கிறார் - மேலும் விளக்கம் கூறினால் இந்தக் கோடை காலத்தில் அவருக்குத் தொல்லை - கோபம் வரும் - என்பதற்காக, கோடிட்டுக் காட்டி நிறுத்திவிடுகிறேன். சட்டசபையில் நான் இந்தத் திருதராஷ்டிர ஆலிங்கனம் காண்கிறேன்!! அண்ணன், 5-5-57 இனியன பல இனி! பிரிவும் இலக்கியமும் - பத்தாண்டு காலம் பற்றி அமைச்சர் சுப்பிரமணியம். தம்பி! முகத்தை ஏன் அப்படிச் சுளித்துக் கொண்டிருக்கிறாய்! ஒரு முறைக்கு நாலுமுறை அழைத்தாலும், கவனியாம லிருக்கக் காரணம் என்ன? என்மீது உனக்குக் கடுமையான கோபம்! அதுதானே மௌனத்துக்குக் காரணம்? அவ்வளவு கோபமா? கூப்பிடக்கூப்பிட, ஏனென்றும் கேளாமல், என்னைத் திரும்பியும் பாராமல் இருக்கிறாய்! கோபம் உனக்கு ஏற்பட்டிருப்பது, நியாயம்; ஆமாம், தவறு இழைத்தவன் நான்தான். ஆனாலும், அதற்காக, இத்துணை கோபமா? “ஏன் இராது அண்ணா? எத்துணை நாட்களாகிவிட்டன, என்னுடன் உரையாடி! என்னிடம் பேசக்கூட நேரமின்றி, என்ன பெரிய வேலையாக இருந்து விட்டாய்! நாடு புதிதாகக் காணச் சென்று விட்டாயோ? நாவாய்தனில் ஏறிக் கடலின் கவர்ச்சிக் காணச் சென்று விட்டாயோ? கட்டித் தங்கத்தை மடியில் வைத்துக்கொண்டு, கரித் துண்டுகளைத் தேடி அலைபவனுண்டா! இதோ நான் இருக்கிறேன், உன் உரைகேட்டு உளம்மகிழ, நீ கூறிடும் கருத்தைக் கேட்டு செயலாற்ற, நீ காட்டிடும் காரணங்களை நாட்டுக்கு அறிவிக்க, தீட்டிடும் திட்டங்களுக்கு உயிரூட்டம் அளிக்க, அறப்போர்களை நடாத்த, விடுதலைக்காக வகுக்கப்படும் வழி நடக்க, வாகை தேடிட! - இத்துணைக்கும், ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்துடன், மாற்றாரும் கண்டு பாராட்டிடும் ஆற்றலுடன், நான் இருக்கிறேன்,”அண்ணா! அண்ணா!’’ என்று அன்பு ததும்பத்ததும்ப உன்னை அழைத்தவண்ணம்; நீயோ, அலட்சியப்படுத்திவிட்டாய், அருவருப்பும் அச்சமும் கொள்ளத்தக்க அளவுக்கு. என்னுடன் அளவளாவுவதை நிறுத்திக்கொண்டாய். ஏன் உனக்கு இந்த ஆகா வழி? பொல்லாத போக்கு ஏன் கொண்டாய்? என் மனத்தை ஏன் இத்துணை வாட்டிவிட்டாய்? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்! என் தம்பிகள் தங்கக் கம்பிகள், நாட்டுக்கு உழைக்கும் நல்ல தம்பிகள்! என்றெல்லாம் வாய் மணக்க, கேட்டிடும் செவியில் இனிமை பாயப் பாய அழைத்து வந்த நீ, அண்ணா! காரணம் என்னவென்று கடுகத்தனையும் காட்டாமல், கிழமைக்கு ஒருமுறை காட்டிடும் தோழமையை நிறுத்திக் கொண்டனையே! ஏதோ அலுப்பு போலும்! அவசர அலுவலாக இருக்கும்! ஓயாத பயணம்! புதிய பொறுப்புகள்! - இந்தக் கிழமை இல்லை, அடுத்த கிழமை நிச்சயம் அண்ணன் எழுதும் கடிதம் காண்போம் என்று எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணானது உனக்கென்ன தெரியும்? இப்போது வந்து விட்டாயா, ஒரு தவறும் செய்யாத பாவனையுடன், தம்பியாம் தம்பி! தம்பி! தம்பி! என்று குழையக் குழையக் கூறிவிட்டால், குற்றம் அத்தனையும் மறைந்துவிடும் போலும்! கொடுமை செய்ததற்கு, பதில் கூறு, அண்ணா! திட்டவட்டமான பதில்! ஆமாம், மழுப்பினால், ஏற்றுக் கொள்ள மாட்டேன்… போதும் அண்ணா! வேடிக்கை காட்டி என் வேதனையைப் போக்கிட முடியாது… நான் சிரிப்பதனாலேயே கோபம் போய்விட்டது என்று எண்ணிக் கொள்ளாதே… போதும் போதும்! இவ்வளவு அன்பும் அக்கறையும் உண்மையானால் இத்தனை காலம் எங்கே ஒளிந்திருந்தன… கண்டித்துத்தான் பேசுவேன்… ஆமாம், கடுமையாகக் கண்டிப்பேன்…’’ தம்பி! இப்படியும் இதற்கு மேலும் கணைகளை வீசத்தான் செய்வாய்! நான் குறைபடுவதற்கில்லையே! குற்றவாளி நான் தான்! ஆனால், தம்பி! நீ எத்துணை இரக்கமனம் படைத்திருக் கிறாய், என்னிடம் கொண்டுள்ள அன்பின் காரணமாக, எதையும் பொறுத்துக் கொள்வாய் என்பது எனக்குத் தெரியாதா! கோபம் நிச்சயம் விலகிவிடும் என்ற நம்பிக்கையை, உன் நெரித்த புருவம் மாற்றி விடாது! எனக்குத் தெரியும், அடுத்த கணம், அண்ணா! என்று அன்பு பொழியப் போகிறது! அதோ! அடக்க அடக்க, புன்னகை வந்துவிட்டதே - தவழும் புன்னகையைத் தந்தாகி விட்டது - தம்பி! இனியும் என்னை வாட்டிட முடியாது - அதோ அந்தப் பழைய புன்னகை ஒளிவிடும் கண்கள், கெம்பீரப் பார்வை, வா, தம்பி! வா, சிறிது நாள் சந்திக்காமலிருந்து விட்டோம் - பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? என்பது பழமொழி - புதுமொழி, பிரிந்தவர் கூடினால் பேச்சுக்குப் பஞ்சமா? என்பது. தம்பி! உன்னிடம் ஒளிக்காமல் ஒன்று கூறிவிடட்டுமா - காரணம் ஏதேனும் காட்டவேண்டும் என்பதற்காகக் கூறுவதாக எண்ணிக் கொள்ளாதே - முழு உண்மை! உன்னைச் சில நாள் சந்திக்காததற்குக் காரணம், உனக்காக வேறு ஒரு முக்கியமான அலுவலிலே ஈடுபட்டிருந்ததுதான்! உனக்கு நான் ஏதேதோ ஆக்கித் தரவேண்டுமென்ற "கடமை’ உள்ளவனல்லவா? அதன் காரணமாக, நீண்ட நாட்களாக - ஆண்டு பலவாக - உன் அருமை பெருமைகளையும், நீயும் நானும் சார்ந்திருக்கும் இயக்கத்தின் வண்ணமிகு வரலாற்றினையும், பிற மொழியாளர்கள் அறிந்து, ஆர்வம் கொண்டு நமது இலட்சியத்தை உணர்ந்து ஒன்றுபடச் செய்யவேண்டும் என்ற ஆவல் உண்டு அல்லவா - அதற்கான பணியில், மும்முரமாக ஈடுபட வேண்டி இருந்தது - அப் பணியின் துவக்கக் கட்டம் செவ்வனே நடைபெற்றிருக்கிறது - ஆங்கில வார இதழ் வெளியீட்டினைத்தான் குறிப்பிடுகிறேன் - அந்தப் பணி எனக்குச் சற்று அதிகமான சிரமத்தையும், செலவினையும் அளித்தது - அந்தச் சுமையைத் தாங்கிக் கொள்வதிலே ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது. என்றாலும், அந்தப் புதிய பொறுப்பிலே ஈடுபட்டிருந்த காரணத்தால், நான் உன்னைச் சந்திக்கும் பொன்னான வாய்ப்புகளை இழந்திட நேரிட்டது! உன்னைக் கண்டு என் உள்ளத்தைத் திறந்து பேசுவதைவிட, எனக்கு வேறு எதிலே இன்பம் இருக்கமுடியும்! எனவே, உன்னை இதுநாள்வரையில் காணாததன் காரணம், உன்னை மறந்ததால் அல்ல, மறவாமல், உனக்கு மற்றோர் துணை தேடிடும் காரியத்தில் ஈடுபடவேண்டி இருந்ததால்! ஆனால், காரணம் பல கூறினாலும், கடுமை குறைந்திடாது. உணருகிறேன், தம்பி! நன்றாக உணருகிறேன்! உணருவதால் தான், ஊரெல்லாம், உறங்கும் இந்த நேரத்தில் உன்னைக் காண்கிறேன் - எழுதிக் கொண்டிருக்கும்போதே!! பிரிவு - தம்பி! நமது இலக்கியத்திலே, மிகச் சிறந்த சுவைமிகு பாக்களை நாடு பெற உதவிற்று! அறிவாய்! நோம் என் நெஞ்சே! நோம் என் நெஞ்சே! புன்புலத்து அமன்ற சிறிஇலை நெரிஞ்சி கட்கு இன் புதுமலர் முள் பயந்து ஆங்கு இனிய செய்த நம் காதலர் இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே! தம்பி! வறிய நிலத்திலே சிறிய இலையுடன் கண்ணுக்கு இனிய பூ தரும் நெருஞ்சி படரும்; அந்தப் பூ உதிர்ந்ததும் கடிய முள்ளாகக் காய் காய்க்கும்; வழியே செல்வோர் முன்பு, பூ கண்டு மகிழ்ந்தனரல்லவா? அவர்கள் மகிழத்தக்க மலர்கள் தந்த அதே நெரிஞ்சி, முள்ளாகிக் குத்தும், வலி தரும்! நமதரும் புலவர் பெருமக்கள் - எதை விளக்குவதற்கும், எந்த அறிவுரை தருவதற்கும், எத்தகைய நிலைமைகளை விளக்கு வதற்கும், வார்த்தைகளுக்காக வானத்தை நோக்கிடும் வறியராக இல்லை! நெருஞ்சி முள் காலில் தைத்தபோதும், அது தந்த வலியுடன் கலந்து புலவருக்கு, அந்தப் படரும் நெருஞ்சியே கவர்ச்சியுள்ள மலர்களை முன்னம் தந்ததும், மலர்கள் உதிர்ந்த பின்னர், முள்ளாலான காய்கள் அதே நெருஞ்சியில் காய்த்ததும், நினைவிற்கு வந்து, காதற் கடிமலர் பூத்திடும்போது கிடைத்திடும் காட்சி இன்பம் - பிரிவு ஏற்பட்டதும் முள்ளாகி நெஞ்சில் தைத்திடும் கொடுமையாகி விடுவதுபற்றி நினைவூட்டுகிறது. நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே! என்ற பா, பாருக்குக் கிடைக்கிறது! நெருஞ்சி, முள்ளைத் தந்தது - ஆனால் முன்பு அதே நெருஞ்சி கட்குஇன் புதுமலர் - கண்ணுக்கு இனிய புதிய மலர்களைத் தந்ததல்லவா? அது போலத்தான், பிரிவு, துன்பம் தருகிறது - ஆனால் முன்பு கண்ட இன்பம்… …!! பிரிவு - குறித்த சுவைமிகு பாக்கள் பல உள; காதலின் பத்தைக் காட்டும் அப் பாக்கள், நில இயலையும், பொதுவாக உள்ள பல இயற்கை உண்மைகளையும் விளக்கும் திறம் படைத்தன. நீ மகிழ்வாய், தம்பி, நெருஞ்சியின் இயல்பை, பிரிவு தரும் துன்பம் குறித்த பாட்டுடன் இணைத்து அளித்த புலவரின் திறம்பற்றி - ஆனால் அமைச்சர் பக்தவத்சலனார் இருக்கிறாரே - அவருக்கு இந்த முறையே கட்டோடு பிடிக்கவில்லை. மெத்தக் கோபித்துக் கொள்கிறார். தம்பி, சட்டசபையில் கவர்னர் பேருரை குறித்து நான் பேசுகையில், “ஐயன்மீர்! எங்களை ஆயிரம் தூற்றுங்கள், கவலையில்லை; ஆனால், எங்களைக் காட்டியாகிலும் டில்லி தர்பாரிடம் தமிழ்நாட்டுக்கு அதிகமான வசதிகளைப் பெற முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றேன்; அதற்கு அமைச்சர்,”அண்ணாதுரை இப்படிச் சொன்னார்; செய்யலாம்; ஆனால் அவர் அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டாரே! இனி நான் அதுபோல் நடந்தால், டில்லியில் உள்ளவர்கள் சந்தேகம் கொள்வார்களே! பலன் கிடைக்காதே!’’ என்ற கருத்துப்படப் பேசினார். சட்டசபை முறைப்படி, அமைச்சர்கள் “யார் வாயையும் அடக்கும்’ வாய்ப்பினையும் பெற்றிருக்கிறார்கள்; பதில் அளிப்போரின் வாயைப் பூட்டிவிடவும் உரிமை இருக்கிறது! எனவே, அங்கு நான் பதிலளிக்க இயலவில்லை; சென்னையில் அதுபோது நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, நான், நிதி அமைச்சரின் போக்குபற்றிக் குறிப்பிட்டபோது,”அவருடைய போக்கு, எப்படி இருந்ததென்றால், வெளியே நின்று கொண்டு, சன்னல் வழியாகப் பார்த்தபடி இருந்த தன் காதலியைத் "தோட்டத்துக்கு வா!’ என்று காதலன் ஜாடை காட்டும்போது, அதே அறையில் வேறோர் பக்கம் இருக்கும் தன் தாய் கண்டுவிட்டால் ஆபத்தாகுமே என்ற அச்சம் கொண்ட காதலி, தாய் பார்த்துவிடப் போகிறாள் - சிக்கிக்கொண்டால் இருவருக்கும் ஆபத்து, போ! போ! என்று ஜாடை காட்டுவதுபோல இருந்தது’’ என்றேன். அமைச்சர் பக்தவத்சலனாரால் கோபத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; ஒரு இடத்திலே, அவர், "அரசியல் விஷயத்துக்கான விளக்கத்தைக்கூட காதலி உவமைவைத்துப் பேசுகிறார்கள்!’’ என்று பேசினார். கண்டனம்! அகம், புறம். என்ற இரு அணிகலன்கள், தமிழில்! நான் புறம் விளங்க அகம் துணை செய்யட்டும் என்று கருதினேன் - அமைச்சருக்குப் பிடிக்கவில்லை. காரணம், யாதோ, நானறியேன்! தமிழ்ப் புலவர்களோ, நெரிஞ்சி முள்ளையும் பிரிவுத் துயரத்தையும் இணைத்து, பா அளித்தனர்! அவர்கள், பாபம், புலவர்கள்! நானோ அமைச்சர் என்பார் போலும்! உண்மை! இது என்ன, புலவர் தம் அறிவுரை கேட்டு அரசு நடத்திடும் காலமா!! ஆள் எண்ணி அமுல் நடத்தும் நாள்!! தம்பி! அந்த எண்ணிக்கை பலத்தை வைத்துக்கொண்டு தான், காங்கிரஸ் அமைச்சர் அவை, இன்று எல்லாக் கண்டனக் கணைகளிலிருந்தும் தப்பிப் பிழைத்து வருகிறதே அன்றி, வேறில்லை என்பதனைச் சட்டசபை குறித்த நடவடிக்கைகளைக் கூர்ந்து பார்த்தால் விளங்கும். எண்ணிக்கை பலம் தவிர, வேறு எதைக்காட்டி, எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு "தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும் எனக் கேட்டதைத் தோற்கடித்திருக்கமுடியும் என்று எண்ணிப் பாரேன்! தமிழார்வமும் புலமையும் பெற்றும், பிறர் பெறச்செய்யும் பணியாற்றுவோரும், அந்த அவையிலே அமர்ந்துள்ளனர் தம்பி, காணக் களிப்பாகத்தான் இருக்கிறது. உரிமை எல்லை, உடைமை, இவைபற்றி உரத்த குரலிற் பேசி, மிக உரத்த குரலிலே பேசுவதன் மூலமே, பிறரும் அதனையே எடுத்துரைக்கின்றனர் என்பது நாட்டினருக்குத் தெரியாதிருக்கச் செய்வதுடன், விறுவிறுப்பாகப் போராடிய வீரர்கூட அங்கு வீற்றிருக்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் என்ற தலைப்பின் கீழ் ஓர் அமைப்பு; அதிலே உள்ளவர் அனைவரும் அரசோச்சும் அணி மண்டபத் தில் அமர்ந்திருந்தனர். இருந்து? பாரதம் படித்தும், படித்திடக் கேட்டும் சுவைப்பவர்களல்லவா? துகில் உரியப்பட்டது; தலையைத் தொங்க விட்டுக்கொண்டு இருந்தனர். எண்ணிக்கை பலம் தவிர, இந்த இழிநிலைக்கு வேறு என்ன அரண் இருந்திட முடியும்! இவர் தம்மில், முன்பு நான் எடுத்துக் காட்டியபடி, விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுத் தியாகத் தழும்பேற்றவர்கள் உளர் - ஆனால் அவர்தம் தொகையும் சிறிது; அவர் தமக்கு அரசோச்சும் அலுவலில் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பும் மிகக் குறைவு! வேடிக்கை என்னவென்றால், அத்தகைய வீரச் செயல் புரிந்தவர்களிலே, பலர், நாட்டின் ஆட்சி தமது கட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, எதிர்பார்த்தவை கிடைக்கப் பெறாமல், நலிவு மலிந்து நாசக் குறிகளும், சுயநலச் சூறாவளியும் மிகுந்திருப்பது கண்டு, மனம் உடையும் நிலையில் உள்ளனர்; அத்துடன், ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துக்காகப் பாடுபட, கஷ்ட நஷ்டம் ஏற்க துணிவு பெற்ற நாம் இருப்பதையும், நாடு, மெல்ல மெல்ல, ஆனால் யார்தான், எவ்வளவுதான் எத்துணை முறைகளைக் கையாண்டுதான் தடுத்தாலும், நமது குரலைக் கேட்கவும், புரிந்துகொள்ளவும், ஆதரவு தரவும் முற்பட்டிருப் பதையும், உணர்ந்து மதிப்பளிக்கின்றனர். அதிக ஆத்திரமும், அருவருப்பும் அச்சம் தரும் துடிதுடிப்பும் - ஆளும் கட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் பெற்றெடுக்கும் முடுக்குடனும் மிடுக்குடனும் பேசுவோர் யார் அறிவாயோ? விடுதலைப் போராட்ட காலத்திலே ஒதுங்கி நின்றவர்கள், வெறுத்துப் பேசியோர், எதிர்த்து வந்தோர், இவர்களே! இந்த "விளைந்த காட்டுக் குருவிகள்’’ வீரக் குரலெழுப்புவது கேட்க, வேடிக்கையாகத்தான் இருக்கிறது!! செஞ்சிக் கோட்டையில் ஏறுபவர்களெல்லாம், தேசிங்கு ராஜா அல்லவே! - என்று நான் சட்டசபையில் கேட்டபோது, தம்பி! நமது தோழர்கள் அடைந்த மகிழ்ச்சியைவிட, காங்கிரஸ் நடாத்திய கடும் போராட்டத்திலே ஈடுபட்டு, வெஞ்சிறை கண்டு, வெந்தழலெனும் அடக்குமுறையில் நீந்தி, வெளிவந்தவர்களே அதிக மகிழ்ச்சி அடைந்தனர். நீ அறிவாய் - நான் கூறி நாட்டினரும் அறிவர் - நான் எப்போதும், விடுதலைக்கு உழைத்த வீரர்களின் தியாகத் தழும்பு களைக் கண்டு, உரிய மதிப்பு அளிப்பவன் என்பதை, அவர்கள் ஒரே ஒரு குற்றம் - தம்மையும் அறியாது புரிகின்றனர். என்ன வென்றால் விடுதலைப் போரின் எல்லாக் கட்டங்களும் முடிந்து விட்டன என்றும் - தியாக உள்ளமென்பது தம்முடனன்றிப் பிற எவரிடமும் இருந்திடாது என்றும் எண்ணுகின்றனர். பெருந் தவறு! நீண்ட நாள் பிடிக்காது அவர்கள் இந்தத் தமது தவறை உணர்ந்திட. அதுவரையில், அவர்கள் அருவருப்புடன், கோபத்துடனும்தான் பேசுவர். அவர்கள் பட்ட கஷ்டம் பாழாகிறது என்பது கோபத்துக்கு முதற் காரணம். அதைப் பார்த்து நாம் பரிகாசம் செய்கிறோம். என்பது மற்றோர் காரணம். நான், அவர்களின் கோபத்தைக் கூட மதிக்கிறேன்! ஆனால் “கூடிக் கொண்டதாலேயே’ மதிப்பு தேடிக் கொண்டுவந்து தீரும் என்ற நினைப்பு நெளியும் உள்ளத்துடனும்,”கூடினேன் கிடைத்தது இதுமட்டும்தானா’ என்று கணக்குப்பார்க்கும் காரியவாதத் தன்மையுடனும் இருப்பவர்கள், கண்களை உருட்டும்போதுதான், உள்ளபடி சிரிப்பு வருகிறது!! மயில், தோகையை இழந்து நிற்க, வான்கோழி ஆட்டம் ஆடுவது போலிருக்கிறதல்லவா!! சட்டசபையில், நமது தோழர்கள் காட்டிடும் ஆர்வமும் பெற்றுவரும் ஆற்றலும், கொண்டுள்ள பொறுப்புணர்ச்சியும், அனைவராலும் பாராட்டப்படுகிறது - இந்திய துணைக் கண்டத்திலுள்ள எல்லா இதழ்களுமே, மக்களாட்சியின் மாண்பு வளரத்தக்க விதத்தில் ஒரு புதிய சக்தி உருவாகி வருகிறது என்பது குறித்து மகிழ்ந்தும், வியந்தும் எழுதுகின்றன. அதிலும், அமைச்சர் சுப்ரமணியம் அவர்கள், அனுபவம் குறித்து அவையில் புதிதாக வந்தோர்களுக்கு, ஆசிரியர்போல் பாடம் நடாத்திவிட்டு, “பத்தாண்டுக் காலம் பிரிவினைக் கிளர்ச்சியை ஒத்திப் போடுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டாரல்லவா - தம்பி, தம்பி, படாதபாடுபடுகிறார் - காங்கிரஸ் ஏடுகள் பலவும் அவர்மீது சீறிப் பாய்கின்றன - அவரும்”பாயைச் சுருட்டிக் கொண்டேன்’’ என்று கூறிப் பார்க்கிறார். அமிர்த பஜார் பத்திரிகை பிரீபிரஸ் இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற இதழ்கள் பலவும், யார் இந்த அவசரக்கார ஆசாமி? எப்படி இவர் அமைச்சராக இருந்திட அனுமதிக்கப்படுகிறார்? என்றெல்லாம் கருத்துப்பட காரசாரமாகவும், கடுமையாகவும் தாக்குகின்றன. எனக்கு உள்ளபடி வருத்தம் - அமைச்சர் தமது உள்ளத் திலே உறங்கிக்கிடக்கும் பல எண்ணங்களைத் தட்டி எழுப்பி நடமாட விடுவதை, இந்த இதழ்கள் தடுத்து விட்டனவே என்று; அவருக்குக் கோபம், ஒரு வார்த்தை, தெரிந்தோ தெரியாமலோ, தவறியோ சரியாகவோ கூறி விட்டால்தான் என்ன? குடியா முழுகிப் போய்விடும்? ராஜ்குமாரி அமிர்தகவுரி, அமைச்சராக இருந்து, அவனி எங்கும் பவனி வந்து, இப்போது கிரீடத்தைக் கீழே இறக்கி வைத்த உடனே மது விலக்காவது மண்ணாவது! அது புதைகுழி சென்று எத்துணையோ நாளாகிவிட்டது! என்றும், வரிமேல் வரிபோட்டு ஏழைகளை வாட்டி வதைக்கும் ஆட்சியை வாழ்த்தவா முடியும், வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் பேசினார்கள் - இந்த இதழ்கள் எவ்வளவு இங்கிதமாக இருந்து விட்டன - என்மீது எவ்வளவு வெறியுடன் பாய்கின்றன. காரணம் என்ன? நான் தெற்கு!! என்பதனால்தானே - பார்க்கப் போனால், கழகத்தார் சொல்வது உண்மையாகத்தானே இருக்கிறது - என்று எண்ணிக் கோபமடைகிறார்!! நாட்டு மக்களின் கவனம், நல்ல முறையில் ஈர்க்கப்படுகிறது - நமது தோழர்களின் சட்டசபை நடவடிக்கைகளின் மூலம். நாளிதழ்களில் வெளிவருவன குறைவுதான் - அவரவர் பேச்சும், அவைகளை ஒட்டி எழும் நிகழ்ச்சிகளும், துரைத்தனத்தாரின் ஏடு தாங்கி வரும் - அதுபோது உன் பார்வைக்கு வைக்கப்படும் - தீர்ப்பு அளிப்பாய்! ஆங்கில இதழின் உணர்ச்சியிலேயே என்னை நான் பின்னிக் கொண்டு, உன்னுடன் உரையாடும் மகிழ்ச்சியை இழந்துவிடுவேனோ என்று ஐயப்படாதே, தம்பி. அது முந்திரிப் பருப்பானால், இது வெண் பொங்கல்! அது கருவி, இது என் உள்ளம்! அது பிறர் நெஞ்சைத் தொட, இது உன்னுடன் உறவாட! அது நம்மைப் பிறருக்கு விளக்க, இது நம்மை உருவாக்க!! எனவே, இதனை இழந்துவிட ஒருபோதும் சம்மதியேன். "திராவிட நாடு’ மூலமாகவும், இந்த மடல் வழியாகவும் உனக்கு நான் என்னென்ன வெல்லாமோ கூற நினைக்கிறேன் - பல எண்ணங்கள் ஓவிய வடிவாகாமல், கோடளவு உள்ளன, சில ஓவிய வடிவம் கொண்டுள்ளன. ஆனால் வண்ணம் கூட்டப் பட வேண்டும். இந்த இதழ், தம்பி, பதினாறாம் ஆண்டு!! தித்திப்பான செய்தி - "அலைந்து திரிந்துவரும் இவன் ஒரு இதழ் நடத்த வல்லானா என்று ஏளனக் குரல் எழுப்பியோர் எத்துணை - இவன் எம். ஏ. படித்தால் போதுமா, தமிழ் இலக்கண இலக்கியம் அறிவானோ? என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசியோர் எவ்வளவு? ஈராறு திங்கள் நடமாடி, பிறகு ஈளைகட்டி இருமி, இருக்குமிடம் தெரியாது போகும் என்று சாபமளித்தோரும் உண்டே! எதுகை மோனை போதுமா, எண்ணத்திலே ஓர் புதுமை, எழுதுவதிலே ஓர் தெளிவு இருத்தல் வேண்டாமோ - அஃது இவன் பெறுதல் ஆகுமோ என்று தலை அசைத்துப் பேசினோரின் தொகைமட்டும் சிறிதா? எல்லா இன்னலும் தாங்கி, தம்பி, உன் அன்பெனும் அணிகலனைப் பெற்று, "திராவிட நாடு’ பதினாறாம் ஆண்டு பெறுகிறது. இனி, உன்னுடன் உரையாடுவதன் வாயிலாகவே, உலக நடவடிக்கைகளையும், நமது உள்ளத்தை ஆட்கொண்டுவிட்ட இலட்சிய வெற்றிக்கான பிரச்சினைகளையும், எடுத்துரைக்க இருக்கிறேன். அமைச்சர் கோபப்படுகிறார் என்பதற்காக "அகத்துறை’யை நிறுத்திக்கொள்ள இயலுமா? அந்திக் கலம்பகம் புதுமுறைத் தொடராக அளிக்க எண்ணியிருக்கிறேன் - கோடுகள் தயாராகி விட்டன - வடிவம், விரைவில், வண்ணமும் கூட்டிட இயலும், உடனடியாக உனக்கோர் புது விருந்து; இராதாமணாளன் தீட்டிய சுவைமிகு தொடர்கதை, பாண்டியன் திருமேனி வெளிவர இருக்கிறது. தம்பி! நீண்டநாட்களாகிவிட்டனவே என்பதற்காக அண்ணன், செல்லமாக இது கிடைக்கும், அது கிடைக்கும் என்று ஆசை வார்த்தை பேசுகிறான் என்று எண்ணிவிடாதே! உண்மையிலேயே, "வட்டியும் முதலுமாக’ திருப்பி வாங்கிக் கொள்வது என்பார்களே, அதுபோலச் சிலகாலம் உன்னுடன் உரையாடாதிருந்த குற்றத்துக்குக் கழுவாய் தேடிக்கொள்ளும் முறையில் புதியன, இனியன, பல; இனி. அண்ணன், 21-7-’57 இன்றையப் பகைவர் நாளைய நண்பர்! "டைம்ஸ் ஆப் இந்தியா’ கருத்து - நமது இலட்சியம் தம்பி! இனியன, இனி, பல என்று எழுதியிருந்தது கண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறாய் - நன்றி - ஆனால் எனக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டதே, என்ன செய்வது? இனியன என்று பொதுப்படையாகக் கூறிவிட்டேன். ஆனால் உனக்கு எவை இனியனவோ! இனியன என்று எண்ணிக்கொண்டு நான் எதைக் கூறினும், அண்ணா! இதனை எங்ஙனம் இனியன! என்று நான் கொள்ளமுடியும் என்று கூறிவிட்டால் என்ன செய்வது? இதுதான் எனக்கு வந்துற்றகவலை! எனினும் அடுத்த கணம் என் கவலை, சிறிதளவு சிந்தனையின் காரணமாகக் கடுகி ஓடிவிட்டது. உன்னை நான் அறிவேன் அல்லவா! உடன் பிறந்தானின் உள்ளப் பாங்கு புரியாமலா போகும்! உன்னை ஆட்கொண்டிருக்கும் எண்ணங்களை அறிந்திருக்கும்போது, உன் உள்ளத்திலே உருவாகி எழிலும் ஏற்றமும் பெற்று நாட்டுக்கு அளிக்கப்பட்டு வரும் எண்ணங்களை நான் மிகுந்த ஆவலுடன் கவனித்து அறிந்துகொண்டிருக்கும்போது, தம்பி! உனக்கு எவை இனியன என்பதனையா அறிந்துகொள்ள முடியாது? வாளின் கூர்மை அறிந்தால் வீரன் இன்புறுகிறான் - ஆனால் அவன் முழு இன்பம், கூர்வாள் கொடியோனின் மார்பிலே பாய்ந்து, அவன் கீழே வீழ்ந்திடும் போதன்றோ ஏற்படும்! ஆம்! என்கிறாய், கேட்கிறது. ஆனால் தம்பி, தூய்மையான இன்பம், சுவையுடன் பயனும் கலந்ததான இன்பம், கூர்வாள் கொடியோனைக் குத்திக் கொன்றிடுவதிலே அல்ல. "கூர்வாள் கொண்டோன்! குறியில் திறனுள்ளோன்! அஞ்சாது போரிடும் ஆற்றல் படைத்தோன்! இவனிடம் போரிட்டு வெற்றிகாண இயலாது, எனவே ஆற்றலுக்கு அடங்குதலே சாலச் சிறந்தது, இவன் போன்ற வீரர், கொடுமை நடமாட விட்டுவைக்க மாட்டார்கள், கொடுமை இனி நிலைக்காது, நீதிக்காகப் போரிட, நேர்மை நிலைத்திருக்கப் போரிடும் ஆற்றல் மிக்கோர் எழுந்துவிட்டனர், இனி நம் கொட்டம் பலிக்காது’’ என்பதனை உணர்ந்து, கொடுமைக் குணத்தையே அவன் விட்டொழித்திட, நல்வழிப்பட, உறுதி காட்டுகிறானே, அப்போதல்லவா தனியானதோர் இனிமை உள்ளத்தில் எழும்! "காலையிலே, கண்ணாளா! கடை வீதியிலிருந்து தாங்கள் வாங்கி அனுப்பிய புதுப் புடவை! எப்படி இருக்கிறது, அதனை நான் அணிந்துகொண்டிருக்கும் காட்சி’’ என்று கலாபம் இல்லாமலேயே மயிலென விளங்கிடும் குயில்மொழியாள் பேசிடக் கேட்டு, உள்ளத்தரசன் உவகை அடைகிறான்! களிப்பு அடைகிறான்! இல்லை என்பார் இல்லை! ஆனால், தம்பி, குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்புணர்ச்சி தட்டி எழுப்ப, உழைத்துப் பிழைத்துப் போ! என்று உறுமிடும் முதலாளியின் குரல்போல ஆலைச் சங்கொலி இழுத்திட தொழிற்சாலைக்குச் செல்லும் நேரத்தில், துயரால் தாக்கப்பட்டு, தொல்லைகளைத் தாங்கித் தாங்கி, தவித்துக்கிடக்கும் அவன் துணைவி அழுக்கேறிய ஆடையுடன் அலங்கோலமாக இருக்கக்கண்டு, மானென்றும், மயிலென்றும், மாடப்புறாவென்றும், பாடாத பைங்கிளி வாடாத முல்லை, தெவிட்டாத தேன்! என்றெல்லாம் கதையும் கவிதையும் கூறத்தான் செய்கின்றன! இளமை தரும் எழிலுடன், உழைப்பு அளித்த உருவ அமைப்புடன்தான், இவள் என்னை மணம் புரிந்து கொண்ட நாளன்று இருந்தாள்! இன்றோ? இளைத்து, களைத்து, இளமைக் கட்டுகள் குலைந்து, ஓயாத உழைப்பும், அதற்குத் தேவையான அளவுக்கு வலிவூட்ட மளிக்கும் உணவு படிப்படியாகக் குறைந்ததனால் வலிவினை இழந்து நிற்கிறாள். ஆடையிலே பொத்தல் - அழுக்கேறி இருக்கிறது! நான், உழைக்கத்தான் செய்கிறேன், கடுமையாக உழைக்கிறேன், கடமை உணர்ச்சி குன்றாமல் உழைக்கிறேன், இவளைக் களிப்புடன் வாழ்ந்திட வைக்கவேண்டும் என்ற எண்ணத்தைத் துணைக்கு அழைத்தபடிதான் உழைக்கிறேன். எனினும் கிடைக்கும் ஊதியம் போதுமானதாக இல்லை; உருக்குலைந்து கிடக்கிறாள். அழுக்கேறிய ஆடை - அதிலும் பல பொத்தல்! - என்று எண்ணிக் கவலை குடையும் மனத்தின னாகித்தான் ஆலை செல்கிறான். மாலை அவன் வீடு திரும்பும் போது, ஆடையின் அழுக்கு போக்கப்பட்டு, பொத்தல்கள் சரியாக்கப்பட்டு, அதனை மெத்த பக்குவமாக உடுத்திக்கொண்டு, புன்னகை தவழும் முகத்துடன் அவன் துணைவி வரவேற்றால், அதிலே கிடைக்கும் இனிமை - அந்தக் காட்சி தரும் இனிமை - காலையில் கடைவீதியிலிருந்து வாங்கி அனுப்பிய புதுச் சேலையை உடுத்திக்கொண்டு, மாலையில் மகிழ்ச்சியுடன் நிற்கும் மனைவியைக் காணும்போது ஏற்படும் இனிமையைவிட, அதிகமா, குறைவா என்பதல்ல தம்பி பிரச்சினை, நிச்சயமாக, இஃது தனியானதோர் இன்பம் தருவது - அதில் ஐயமில்லை. தம்பி, இனியன என்பன, உனக்கும் எனக்கும் எவை என்பதிலே மாறுபட்ட கருத்திருக்கக் காரணமில்லை. ஆனால், வேறு பலர் உளர். அவர்தம் உள்ளத்தைத் தொடும் எண்ணங்களும், அவர்களுடன் உறவாடும் கருத்துக்களும் வேறு. அதற்கேற்பத்தான், அவர்கள், இன்னின்ன எமக்கு இனியன என்று கூறுவர். "அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன்! அத்துணை ஆணவமா, நேற்றுக் கிளம்பிய இந்த நீண்ட பேச்சினனுக்கு! நாட்டு மக்களைப் படை திரட்டிவிட்டோம் என்று முழக்கிடும் இந்த முரடன், முடி தரித்த மன்னர் பலர் எமது அடிபணிந்தனர் என்பதனை அறிவானோ! இவன் கொட்டம் அடக்கிக் காட்டுகிறோம்! கொடிகட்டி ஆள்கிறானாம்; இவன் எமக்கு, பிடித்தால், பொடி! அறியான்!’’ என்றெல்லாம் ஆர்ப்பரித்த ஆங்கில அரசு, பிறகு நிலைமை அறிந்துகொண்டு, ஆணைக்கு அடங்கி, கட்டணம் செலுத்த இணங்கி, குறித்த நேரத்தைக் கணக்கில் வைத்து, காட்டிய வழியினை கவனத்திலிருத்தி, தனது கலங்களை அனுப்பிற்றே சூயஸ் கால்வாயில், அந்தக் காட்சி நாசரின் கண்ணுக்கும் கருத்துக்கும் எத்தனையோ விதவிதமான காட்சிகளை எல்லாம்விட, நிச்சயமாக இனியது அல்லவா! பரூக் மன்னன் மிரண்டோடிய காட்சியும், நகீப் அடங்கி ஒடுங்கிய காட்சியும் இனிமை தருவனவாகத்தான் இருந்திருக்கும்! ஆனால் ஆணவத்தை விட்டொழித்து, ஆங்கில அரசு, சூயஸ் கால்வாயில், தன் கலத்தினை அனுப்பிவைத்ததே, அந்தக் காட்சிதான், மிக்க இனியது! இனியன கேட்கின் இயம்புதல் கேளீர், இனிது இனிது எகிப்தின் எழுச்சி! அதனினும் இனிது ஆணவம் தவிர்த்து ஆங்கில அரசு அடி பணிந்ததுவே! என்று நாசர் பாடவா வேண்டும். இப்போதெல்லாம் வெளி வருகிற படத்தைப் பார்த்தால், தம்பி இந்தப் பாடல் தெரியும்! அதேபோல, சட்டப் பேரவையிலே அமர்ந்திருக்கும் அனுமதியை உன் அறிவாற்றலின் துணைகொண்டு பெற்ற நாங்கள், அங்கு, ஒவ்வொரு பிரச்சினையின் பேரில் பேசும் வாய்ப்புப் பெறுகிறபோதெல்லாம், தென்னகம், வடக்கே அமர்ந்து அரசோச்சுபவர்களால் தாழ்த்தப்படுவது குறித்துக் கண்டனம் தெவிக்கிறோம். அந்த இழிநிலை இருக்கு மட்டும், நீவிர் எத்துணைதான் நல்லெண்ணம் கொண்டோராக இருப்பினும், ஆளவந்தோரே! மக்கள்தம் குறை தீர்த்து அவர்தம் வாழ்வினுக்கு வளம் அளித்திடல் இயலாது!! - என்றெல்லாம் எடுத்துக் கூறுகிறோம் - தாயகத்தின் சார்பில், வாதிடும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நழுவ விடாது அவைதமைப் பயன்படுத்திக்கொள்ளும் பாங்கு, உனக்கு உவகை அளிக்கிறது, இனியன காண்கிறோம்! என்கின்றனர், சட்டப் பேரவையில் நமது தோழர்கள் கடமையாற்றுவதைக் காண்போர். ஆனால், அமைச்சர் சுப்பிரமணியனாரோ, ஆயாசப்படுகிறார். இதென்ன, மெத்தப் படித்தவர்கள் என்கிறார்கள் இவர்களை இவர்களோ எடுத்த பிரச்சினையின்மீதெல்லாம் தொடுத்திடும் கணை, வடக்கு - தெற்கு என்பதாகவே இருக்கிறதே, என்னே இது என்று பேசுகிறார்; தமது அருவருப்பைக் காட்டிக்கொள்கிறார். எந்தப் பிரச்சினையின்மீது விவாதம் நடந்தாலும் அண்ணாத்துரையும் அவர் சகாக்களும் தனிநாடு கோரிக்கை குறித்துத்தான் பேசுகிறார்கள் - என்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுதுகிறது; எழுதும்போது அந்த இதழின் நோக்கம், சட்டப் பேரவையிலே நடந்துகொள்ள வேண்டிய முறைப்படி நடந்துகொள்ளாமல், நாட்டுப் பிரிவினைக் குறித்தே இவர்கள் பேசுகிறார்கள் என்று தன் அருவருப்பைத் தெரிவித்துக் கொள்ளுவதுதான் என்று மட்டும் எனக்குப் படவில்லை தம்பி! வடநாட்டு இதழ்கள் பல இதுபோல எழுதுவதிலே, ஒரு உட்பொருள் நிச்சயமாக இருக்கிறது! சென்னைச் சட்டப் பேரவையில் அமர்ந்துகொண்டு, ஒரு சிறு கூட்டத்தார், நித்த நித்தம் வடவர் ஆதிக்கத்தைக் கண்டித்துப் பேசியவண்ணம் உள்ளனர்; இதுநாள் வரையில் சதுக்கங்களிலும் திடல்களிலும் எழுப்பப்பட்டு வந்த முழக்கம் இப்போது சட்டப்பேரவையிலேயே கேட்கப்படுகிறது! நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கிறது!! எனவே, இது உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியதாகும்; அவசரமாக நடவடிக்கை எடுத்து இவர்களை ஒடுக்குங்கள் - காலம் கடந்துவிடுமுன் காரிய மாற்றுங்கள் - என்று டில்லி அரசுக்குக் கலகமூட்டுகிறார்கள் என்பதுதான், இத்தனை ஏடுகளும் இது குறித்து எழுதுவதிலே உள்ள உட்பொருள் என்று நான் எண்ணுகிறேன். வரி அதிகம்; தொழில் குறைவு; அறியாமை அதிகம்; கல்விக் கூட்டங்களின் தரம் மட்டம்; விவசாயம் செழிக்க வில்லை; வாணிபம் ஓங்கி வளரவில்லை என்பன போன்றவைகள் குறித்துப் பேசுவோரும், அறிவுத் தெளிவும் செயலாற்றும் திறனுமற்றோர் இடத்தைப் பிடித்துக்கொண்டு, ஆட்சியை அலங்கோலமானதாக்கி வருகிறார்கள், இவர்களை விரட்டி விட்டால், வல்லமையும் வாய்மையும் நிரம்பப் படைத்த நாங்கள் ஆட்சியை ஏற்று நடாத்த வந்திடுவோம், அப்போது கூனன் நிமிர்ந்து நடப்பான், குருடன் விழி பெறுவான் என்றெல்லாம் பேசுபவர்களும் மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். இந்தப் "புதியவர்களோ’ நம்மை நிந்திக்கின்றார்கள் இல்லை, நமது அறிவாற்றலைக் குறைத்துப் பண்பற்ற முறையில் பேசிடவும் இல்லை; ஆனால் நம்மையும் சொக்க வைத்திடும் வசீகரம் படைத்த ஒரு தத்துவத்தை, கொள்கையை, ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகியுள்ள கொள்கையை, அழுத்தந் திருத்தமாகக் கூறி வருகிறார்கள்; அவர்கள் கூறக்கூற, நாமே அல்லவா, உண்மையின் பக்கம் அழைத்துச் செல்லப்படுவது போன்றதோர் உணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது என்று எண்ணி, அமைச்சர்கள் சங்கடப்படுகிறார்கள். எப்போதும் இதே பேச்சா, எதற்கெடுத்தாலும் இந்தப் பேச்சா? ஒவ்வொரு பிரச்சினையின் போதும், இதே "பாணி’ தானா! - என்றெல்லாம் கேட்கிறார்கள். சிலர், தம்பி முகத்தைக்கூடச் சுளித்துக்கொள்கிறார்கள் - ஆனால் அவர்கள், நாம் பேசுவது கேட்டுத்தான் அப்படி அருவருப்படைகிறார்கள் என்று நான் கருதவில்லை - நம்மைப் பார்க்கும்போதே அருவருப்படைகிறார்கள் - அகத்திலே உள்ள ஆயாசம் முகத்திலே தோன்றும் விசாரத்தால் தெரிகிறது. நான் பரிதாபப்படுகிறேன் - கோபங்கொள்ளவில்லை. நம்மையும், நாம் கூறிடும் கொள்கையின் தன்மையையும் இவர்கள் புரிந்துகொள்ளும் நாளும் வராதா? புரிந்துகொள்ளும் பொன்னாள் புலர்ந்தால், இன்று கடுமையைப் பொழியும் கண்களிலிருந்தே கனிவு வழியாதா என்றுதான் நான் ஆவலுடன் காத்துக் கிடக்கிறேன். அந்த நாளும் வந்திடாதோ? என்று ஆவல் என் நெஞ்சத்தில் நிறைந்து இருப்பதால், கோபம் புகக்கூட இடமில்லை. நமது "இலட்சியம்’ அவர்களுக்குப் புரியாததால், நமது பேச்சு இனிப்பளிக்கவில்லை - நாம் நமது இலட்சியத்தை எடுத்துப் பேசும் காட்சியேகூட அவர்கட்குக் கடுங்கோபத்தை மூட்டுகிறது! மெத்தக் கஷ்டப்படுகிறார்கள்!! ஒன்று, என்னாலே நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. சட்டப் பேரவைக்கு உள்ளே நான் காண்பதிலிருந்தும் சரி, வெளியே காணக் கிடைப்பதிலிருந்தும் சரி, தம்பி, நாம் கூறிடும் கருத்து, கேட்போர் உள்ளத்தைத் தொடுகிறது! அவர்களில் சிலருடைய உள்ளத்திலே அவை இடம்பெறவில்லை - இன்னமும்; ஆனால் தொடுகிறது! இது, நமது இயக்கம் பெற்று வரும் வளர்ச்சியிலே மிக முக்கியமான ஒரு கட்டமாகும். அரசியல் வரலாற்றினை ஆய்ந்து அறிந்தவர்கள் எவரும், இந்த "கட்டத்தின்’ முக்கியத்துவத்தை நிச்சயம் உணருவார்கள். பலாப்பழத்தில் மொய்த்துக் கொள்ளும் ஈக்கள்போல, இலாபம் தரத்தக்க பக்குவம் பெற்ற நிலையில் உள்ள கட்சிகளிலே இடம் தேடிக்கொண்டவர்களைக் குறித்து, நான் கவலைப் படவில்லை. மரம் பழுத்தால் வௌவால் வட்டமிடும்! இதற்கு ஒரு அழைப்புத் தேவையா!! தம்பி! நான் கவலையுடன் கவனிப்பது, உண்மையிலேயே காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டதால், அதன் சார்பில் கஷ்டநஷ்டம் ஏற்றுக்கொண்டதால், அதன் சாதனைகளில் பங்குகொண்டிருப்பதாலே, அந்தக் கட்சியிடம் பற்றும் பாசமும் மிகுந்த அளவுக்குக் கொண்டு, அதன் காரணமாகவே, நாம் எடுத்துக்கூறும் "இலட்சியம்’ தீதானது, கேடானது என்று நம்பி, காது கொடுத்துக் கேட்பதும் தவறு காதில் வீழ்ந்தால் கடுங்கோபம் கொள்ளத்தான் வேண்டும், சுடுசொல் கூறிடத்தான் வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களைத்தான்! அகப்பட்டால் சுருட்டுபவர்கள், கெண்டையை வீசி விராலை இழுப்பவர்கள் - இவர்கள் குறித்து நான் கவலைப்பட வில்லை. அத்தகையவர்கள், எங்கிருந்தாலும் ஒன்றுதான்! என்ன பேசினாலும், அதற்கு ஒரே ஒரு நோக்கம்தான்! - இலாபம்! - வேறு இருப்பதற்கில்லை. தூய்மையான தேசத் தொண்டாற்றியவர்கள், நாம் எடுத்துக் கூறிடும் இலட்சியத்தைப் புரிந்து கொள்ளாத காரணத்தினால், கடுகடுப்பும் சிடுசிடுப்பும் காட்டுகிறார்களே - அவர்கட்கு இன்று நாம் சட்டப்பேரவையில் பணியாற்றிடும் காட்சியே, கண்றாவியாக இருக்கிறது; உணர்ச்சி வயப்படும் இத்தகையவர்கள் மட்டும், நமது கொள்கையின் நியாயத்தை உணர்ந்துகொள்ளத்தக்க அளவுக்கு இதிலே தெளிவு பெற்று விடுவார்களானால் - எண்ணும் போதே, தம்பி, தித்திக்கிறது - இதிலே ஈடுபாடு கொண்டுள்ள நாம் நடத்தும் செயலை இனியன என்றுதானே, இவர்கள் கொள்ளுவார்கள்! பொறுமையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் பணி யாற்றிக் கொண்டுவந்தால், அவர்களிலே எத்துணையோ பேர், மனம் மாறி, நமது நியாயமிக்க கொள்கைக்கு நிரம்ப வலிவு அளித்திடுவார்கள். நான் இந்த எண்ணத்தை எப்போதும் மறவாமல் பணியாற்றுவதனால்தான், நான், சிலர் பகை கக்கினாலும் பதறுவதில்லை; கடுமொழி புகன்றாலும் கோபிப்பதில்லை; முகம் சுளித்தாலும் வருந்துவதில்லை; கதிரவனைக் கண்டல்லவா கமலம் மலருகிறது - நாம் நமது கொள்கையை எடுத்துரைப் பதிலே பெற்றுள்ள ஆற்றல் போதாது - கமலம் மலரவில்லை - காரணம் கதிரொளி கிளம்பவில்லை - என்றுதான் எண்ணிக் கொள்கிறேன். தம்பி! உன் நோக்கமும் இதுவாகவே இருத்தல் வேண்டும் என்பதற்காகவே, இதனைச் சற்று விரிவாகவே எழுதினேன். இனியன கேட்பின் என்னரும், தம்பி! இனிது இனிது இலட்சியம் இனிது அதனினும் இனிது அதன் பகைவர்கள் அடுத்ததன் நண்பராய் ஆகுதல் அன்றோ! என்று கூறிடத் தோன்றுகிறது. தமிழாசிரியர் துணை கொண்டு சீரும் தளையும் செப்பனிட்டுக் கொள்வாய் என்ற துணிவில் குறைநிறை கவிதை வடிவம் கொடுத்துவிட்டேன். தம்பி! தத்தமது கட்சிகளை எப்பாடுபட்டேனும் வளரச் செய்ய வேண்டும். அதன்மூலம் ஆதிக்கம் நடாத்தி இன்பம் காணவேண்டும் என்று கருதுபவர்கள், நாம் காரணம் ஆயிரம் எடுத்துக்காட்டினாலும், கனிவுடன் பேசினாலும், அவர்களுக்கு அளித்திடவேண்டிய உரிய மரியாதையைத் தந்தே உரையாற்றினாலும், நமது கொள்கைக்கு வரவா செய்வர்? என்ற எண்ணம் எழத்தான் செய்யும். அமைச்சர் அவையினரை நோக்கி, சட்டப் பேரவையிலே நான், "நீவிர் அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள்; மக்களுக்கு நல்லன செய்தல்வேண்டும் என்பதிலே அக்கறை கொண்டும் இருக்கின்றீர்கள் - ஆனால் உமக்கு போதுமான அதிகாரம் அளிக்கப்பட்டில்லை. வடக்கே குவிந்து விட்டிருக்கிறது’’ என்று பேசினேன் - பத்திரிகையைப் பிறகு புரட்டிப் பார்த்தாலோ, தமிழ்நாடு காங்கிரசின் தற்போதையத் தலைவர் - தற்காலிகத் தலைவர் என்று கூறுகிறார்கள் - தி. மு. க. காரர்கள் அரசியலுக்கு இலாயக்கில்லை என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறிவிட்டார் என்ற செய்தியைக் காண்கிறேன்! நானும், நமது கழகத்தவரும் அமைச்சர் அவையினருக்கு அறிவும் ஆற்றலும் உளது என்பதனை சட்டப்பேரவையில் கூறி, எமது பண்பினைத் தெவித்தோம் - காங்கிரஸ் கட்சித் தலைவரோ, "நாங்கள் அரசியலுக்கே இலாயக்கில்லை’’ என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்! பண்பு தேவையில்லை என்று ஒதுக்கிவிடுவோருக்கு நாம் எங்ஙனம் தந்துதவ முடியும்? நம்மை அரசியலுக்கு இலாயக்கில்லை என்று திருமங்கலத்துத் திருவாளர் கூறிவிட்டாரே என்று வருத்தப்பட்டுப் பயன் என்ன? சட்டப் பேரவையிலே, நமது தோழர்கள் பேசிய பேச்சிலே காணக்கிடைக்கும் பண்பும் கண்ணியமும், வெட்ட வெளியிலே காங்கிரஸ் தலைவர் பேசியதிலே தெளிவும் கண்ணியக் குறைவும், நேர்மையாளர்களாலே ஒப்பிட்டுப் பார்க்கப்படாமலா இருந்து விடும்? “தாக்குகிறார்! தாக்குகிறார்!’’ என்று தாசர் கூட்டம் மகிழக் கூடும் - அதற்கான கூட்டமும், போதுமான அளவுக்குக் கூடுவதில்லை. ஆனால் அறிவாளர்கள்,”புத்தம்புதியவர்கள், இளையவர்கள், தீவிரமாகப் பேசவல்லோர், சட்டப்பேரவை யிலே எத்துணைப் பண்புடன் பேசுகின்றனர், தமிழ் நாட்டு காங்கிரசின் தலைவர் ஏனோ, இத்தகு சுடுசொல் கக்கினார் கண்ணியத்தைவிட்டு விலகினார், பண்பினை மறந்தார் என்று எண்ணிப் பார்த்திடத்தான் செய்கின்றனர். நாம் "தாங்கிக் கொள்கிறோம்’. அவர்களோ, தாக்குதலை நடத்தி நடத்திப் பயன் காணாததாலே தவிக்கிறார்கள். அரசியலுக்கு இலாயக்கில்லை என்று இவர் கூறட்டும் - பரவாயில்லை - இலாயக்குள்ளவர்கள் என்று 17 இலட்சம் வாக்காளர் பெருமக்கள் அறிவித்துள்ளனர்; அதுமட்டுமல்ல - வேறொன்றினையும் அறிவித்துள்ளனர் - இந்த விற்பன்னர் - எவரெவர் சட்டசபைக்கு உரியவர் என்று தீர்ப்பளிக்கும் திறம் படைத்தவர், சட்ட சபைக்குத் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளனர். இதனையும் நாடு அறியும் - நல்லோர் அறிந்தே உளர். நாத்தழும்பேற நம்மை நாத்தீகர் என்றனர் - நன்மதி படைத்தோர், அந்தப் பழிச்சொல்லை, ஏற்க மறுத்தனர். நாசவேலைக்காரர்கள் என்று கூசாமல் கூறினர் - மக்கள் மன்றத்து மாமணிகளோ, வடிகட்டின பொய்யை வல்லமை யினால் மெய்யாக்க முயற்சிக்கும் இவர்தம் போக்கை எள்ளி நகையாடினர். அரசியலுக்கு மட்டுமல்ல, தம்பி! சமூகத்திலேயே, நாட்டிலேயே, இவர்கட்கு இடம் இல்லை - இருந்திட இலாயக்கு இல்லை என்று இவர் போன்றார் பேசினர் - நாடு, இத்துணை ஆணவப்போக்கு எத்துணை நாட்களுக்கு என்று கேட்டு, எள்ளி நகையாடிற்று. வெட்கமேனும் இவர்தம் உள்ளத்தில் உறுத்தினால், நாமோ என்னென்ன பழிகளைச் சுமத்தலாமோ அவ்வளவும் சுமத்திப் பார்த்தோம் - கடுமொழியினைக் கொட்டினோம் - சட்டம் கொண்டு தாக்கினோம் - சபித்தோம் - சந்துமுனைச் சிந்து பாடி நிந்தித்தோம் - எல்லாம் குறைவறச் செய்தும், காண்பது என்ன? கழகம் கருகிவருகிறதா? மக்கள் விலகிச் செல்கின்றனரா? ஆதரவு அழிந்துபட்டதா? இல்லையே! நாள் தவறாமல், நாலாறு இடங்களிலே அந்தக் "குரல்’ அல்லவா கேட்கிறது! விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் விதண்டாவாதம் பேசிக்கொண்டு, தமிழகத்தில் நடமாடித் திரிகிறார்கள் என்று நையாண்டி பேசியது போய், இன்று எங்கும் இரண்டொருவர் இருந்துகொண்டு, அடுக்குமொழி பேசி மயக்கி’ வருகிறார்கள், இவர்களை இனியும் விட்டு வைத்தலாகாது, என்று பேசிடும் நிலையன்றோ வந்து சேர்ந்தது? பலகாலும் பழிகூறிப் பலன் ஏதும் காணோமே? இனியும் அதே முறையில் இருந்திடின், காணப்போகும் பலன் என்ன இருக்கிறது? என்றாவது எண்ணுவர். எண்ணினரா? இல்லை! ஆசை வெட்கமறியாது என்றுதான் ஆன்றோர்களே கூறிவிட்டனரே! மீண்டும் மீண்டும், அரைத்த மாவையே அரைக்கிறார்கள் - அவர்கட்கு அலுப்புதான் அதிகமாகிறதே ஒழிய, கழகத்துக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு குன்றவில்லை, குறையவில்லை, குன்றின் மேலிட்ட விளக்கென ஒளிவிட்ட வண்ணம் இருக்கிறது. சென்னை பெரம்பூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு காஞ்சி வந்து இதனை எழுதுகிறேன். தம்பி, நாளை மீண்டும் சென்னையிலே கூட்டம்! நான் மட்டுமல்ல - நமது கழகப் பேச்சாளர்கள் யாவருக்குமே, இதே முறையில், வேலை மிகுதி இருந்திடக் காண்கிறோம். இந்த இடையறாத பொது மக்கள் தொடர்பு வீண்போகும் என்றா, ஒரு இயக்கத்தில் ஈடுபட்டவர் எண்ணுவது? இந்தத் தொடர்பு எதன் விளைவு? என்பதனையாவது எண்ணிப் பார்த்தாரோ! இல்லை என்றல்லவா அவர் பேச்சு காட்டுகிறது! இதற்கு, வளரும் சக்தியைக் கூர்ந்து கவனித்து மதிப்பிடுவது தேவை - வேண்டாமய்யா, அத்தனை பெரியவருக்கு இத்தனை கடினமான வேலை தர வேண்டாம்; மிகச் சாதாரணமாகப் புரிந்துகொள்ளக் கூடியதையுமா இவர் மறந்து நிற்கவேண்டும். மமதை மதியை அடியோடு அழித்து விட்டதே, வருந்துகிறேன் தம்பி, நிச்சயமாக வருந்துகிறேன். நாம் பேசுவதோ பயனற்றவை, போக்கோ பொருளற்றது, ஆற்றலோ அடியோடு இல்லை, அறிவோ சூன்யம், சரி - அங்ஙனமே இருக்கட்டும் - இத்தகையவர்களை நாள் தவறாமல் பல்லாயிரவர் சந்தித்திடவும், உரையாடவும், சொல் கேட்கவும் துடிப்பானேன்? எனக்கு உண்மையில் விளங்கவில்லை - எவரெவர் அரசியலுக்கு இலாயக்கு என்பதனைக் கண்டறியும் திறமை இருப்பதாகக் காட்டிக் கொண்ட வித்தகர், இந்த விசித்திரத்துக்கு விடை அளிப்பாரா? நான், கழகத்தின் சார்பில் வாதாடும் போக்கிலேகூட இப் போது இதனைக் கூறவில்லை. தமிழ் நாட்டு நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பவன் என்ற முறையிலேயே கூறுகிறேன்; அமைச்சர் பெருமான்களும், அந்தப் பெருமை அதிக நாள் கிடைக்காது ஆயாசப்படுவோரும், அடுத்த முறை எனக்குத்தான் என்று ஆவல் ததும்பும் உள்ளத்துடன் இருப்போரும் பொன்னும் பொருளும் மிக்கோரும், புலமையைத் துணைகொண்டோரும், எல்லோரும்தானே, கூடிக்கூடி, நாடெங்கும் ஓடி ஆடி கழகத்தைக் கடுவிஷமென்றும், காட்டுத் தீ என்றும், நாசவேலை என்றும், நாத்தீகமென்றும், மயக்கமென்றும், மதியீனமென்றும் பலப்பல கூறினர்; பலன் என்ன கண்டனர்? பட்டிதொட்டி எங்கும் பட்டொளி வீசிப் பறந்திடும் நமது கழகக் கொடிகளைக் காணுகின்றனர்! பட்டினமும் பாக்கமும், நமது கழக விளக்கம் கேட்கும் கோட்டங்களாவதைக் காண்கின்றனர். நள்ளிரவு வரையிலும்கூட தாழ்ந்த தமிழகம் மீண்டும் எழுந்திட வழிவகை யாது என்பது குறித்து நமது தோழர்கள் பேசுவதைக் கேட்டிட பல்லாயிரவர், ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்துடன் ஆவலாக இருப்பதைக் காண்கின்றனர். பழி பேசிப் பகை வளர்த்திட எண்ணமிடும் தலைவர்களிற் பெரும்பாலோர் இல்லங்களிலேயே நமது கழக இலட்சிய முழக்கம் எழக் கேட்கின்றனர். "எங்கும் நிறைநாத’ மாகிவிட்ட இந்த எழுச்சியை, இன்னமும் ஏளனத்தினாலும் பழி பேசுவதாலும், தூற்றுவதாலும் துடுக்குத்தனமாகத் தாக்குவதாலும் அழித்தொழித்திட முடியும் என்று இவர்கள் கருதுவார்களானால், தம்பி, நாம் பரிதாபப்படுவது தவிர, வேறென்ன செய்ய முடியும். நீயே கூறு, கேட்போம். இவர்களின் காரணமும் பொருளும் அற்ற கடும் தாக்குதல், இவர்தம் குணம் யாது என்பதனை, நாடறியச் செய்கிறது; இவர்தம் சுடுமொழிகளைத் தாங்கிக்கொண்டு, நாம் நமது கடமையில் கண்ணுங் கருத்துமாக இருந்து பணியாற்றியபடி இருந்திடும் பண்பும் நாட்டுக்குத் தெரிகிறது. தெரிந்ததும், தொலைவில் நின்றோரெல்லாம், தோழரா கின்றனர்; கழகம் வளருகிறது! அழகு தமிழும் அடுக்குமொழியும், நமது கழக வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள்! தமிழ் மொழி வண்ணமும் வளமும் மிக்கது. ஐயமில்லை! அதன் துணை பெற்றோர் தொடங்கும் செயலுக்கு சீர் கிடைக்கிறது, மறுக்கவில்லை; ஆனால், நமது கழகம் இத்துணை வேகமாகவும் சிறப்புடனும் வளருவதற்கு உள்ள மிக முக்கியமான காரணம், அச்சமும் அதன் விளைவான அருவருப்பும் பொச்சரிப்பும், அதன் காரணமாகக் கிடைக்கும் நச்சு நினைப்பும் கொண்டோர், நம்மீது வீசிடும் சுடுசொற்களே என்பதை நான் உணருகிறேன்; தம்பி! நீயும் அறிவாய்! கழகம் வளர வளர, கடுமொழி வளரும்: ஆனால் இறுதியில், கடுமொழி பேசுவோர்தான் தமது நோக்கையும் போக்கினையும் மாற்றிக்கொள்ளப்போகிறார்கள்; கழகத்துக்கு இம்மியும் கேடுபாடு வந்து சேராது. இனியது கேட்கின் கனிமொழித் தம்பி! இனிது இனிது அன்பர்கள் அருங்குழாம் அதனினும் இனிது ஆர்த்தெழும் மாற்றார் திருந்தி நம்முடன் சேர்ந்திட விழைதல்! எனவே, என்றேனும், வென்று வருகிறோம் என்பதை அறிவதனாலே வெகுண்டெழுந்து நமது கழகத்தின் மீது ஒரு சிலர் வெறுப்பினைக் கக்கிடக் கேட்டால், தம்பி, குறித்து வைத்துக்கொள், நம்மீது அவர்கள் வீசிடும் ஒவ்வொரு சுடு சொல்லும் பத்து புதிய ஆதரவாளர்களை நம்மிடம் அழைத்து வருகின்றது என்ற பேருண்மையை. இன்றைப் பகைவர் நாளைய நண்பர், என்றார் ஒருவர். என் தேர்தலின்போது, “எனக்குத்தான் ஓட்டுப் போட்டாக வேண்டும்’’ என்று நான் வலியுறுத்திக் கேட்கும் அளவுக்கு உறவும் உரிமையும் உள்ள ஒரு இல்லத்திலே, ஒரு இள மாது, அண்ணாவுக்கு இல்லாமலா எமது ஓட்டு? என்று கூறி, என்னைக் களிப்புக் கடலில் ஆழ்த்திய பிறகு, காங்கிரசுக்கு”ஓட்’ அளித்ததாக அறிந்து, ஒரு பொதுக்கூட்டத்தில், இப்போது இங்கு எழுதியது போலவே இடமும் பெயரும் குறிப்பிடாமல் பேசினேன்; அது புரிந்ததால், எனக்கு ஓட்டளிக்காததன் காரணத்தை விளக்கியும், தான் கொண்ட போக்கு குறித்து வருத்தம் தெரிவித்தும் அந்த வனிதை எழுதிய கடிதத்தின் கடைசி எழுத்து, எனக்கு நினைவிற்கு வருகிறது. இப்படிக்கு, எதிர்கால தி. மு. க. உறுப்பினர் என்பதுதான், அந்த வாசகம்! இன்றைய பகைவர் நாளைய நண்பர் - ஆகிறார்களோ இல்லையோ, நாட்டு விடுதலை எனும் மிகப் பெரிய செயலுக்கு நம்மை நாம் ஒப்படைத்துவிட்டோம் - நாம் இந்தச் சீரிய நோக்கத்துடன்தான் பணியாற்றவேண்டும். உன் ஆற்றல், இதிலே எத்துணை வெற்றிபெற்றுத் தருகிறாய் என்பதைப் பொறுத்துத்தான் மதிப்பிடப்படும். பாட்டுக்கு பாட்டெடுப்பேன் உன் பாட்டனாரைத் தோற்கடிப்பேன்! என்ற "இலாவணி’ முறையிலே அரசியல் நடத்துவது, எளிது. துவக்கத்திலே சுவைகூடத்தரும். ஆனால் அந்தச் சுவை, தம்பி; நானும் துள்ளி விளையாடும் பருவத்திலே மெத்தக் கண்டதுதான். புளியம் பழத்தைச் சுவைக்கும்போது, புளிப்புடன் ஓர் இனிப்பும் கிடைக்கும்! ஆனால் இரண்டொரு பழம் உண்ட பிறகோ, எதைச் சாப்பிட்டாலும், நாக்கிலே எரிச்சல் ஏற்படும்! தம்பி! இலாவணி முறை அரசியலும், இதுபோலத்தான்; எளிது, துவக்கத்தில் சுவையும் தருவது, பிறகோ உள்ளத்தில் அமைதியைக் குலைக்கும், இலட்சியத்தைச் சிதைக்கும். நமக்கு வேண்டாம், அந்த முறை! அது அவர்களின் "ஏகபோக உரிமை’ யாகவே இருக்கட்டும்; அனுமதிப்போம். அண்ணன், 28-7-57 கல்லணை காவிரியும் கரிகாலன் கல்லணையும் - நங்கவரம் பண்ணைப் பிரச்சினை தம்பி! கல்லணை! தமிழகம் தனிச் சிறப்புடன் விளங்கிய நாட்களை, இன்று நமக்கு நினைவூட்டும் சின்னமாகக் காட்சி அளிக்கிறது. தமிழ் இனத்தின் வீரம் கண்டு சிங்களம் அடிபணிந்த வீரக் காதையும், போரிலே பிடிபட்ட சிங்களவர்களைச் சிறையிலிட்டுச் சீரழிக்காமல், சந்தைச் சதுக்கத்திலே நிற்கவைத்து அடிமைகளாக விலைபேசி விற்றிடாமல், தமிழ் மன்னன், அவர்களைக் கொண்டு, நாட்டுக்குப் பயன் தரத்தக்கதும், என்றென்றும் நிலைத்து நிற்கத்தக்கதுமான "அணை’ கட்டவைத்த கருத்தாழமும், கவினுற விளக்கிடச் செய்கிறது அந்தக் கல்லோவியம்! வீரப் போரிட்டு வாகை சூடி, வேற்று நாட்டவர் வியந்திட, சொந்த நாட்டவர் போற்றிட, திறை பலர் தரப்பெற்று, திருவோலக்கத்தில் அமர்ந்து, எமக்கு இணை எவர் உளர்? என்று கேட்பது மட்டுமல்ல, தமிழ்நெறி; வீரம் காட்டினோம் வெற்றி பெற்றோம்; மாற்றார் தோற்றனர் மாப்புகழ் கண்டோம்; ஆயின் என்னை! மக்களின் நல்வாழ்வு, மன்னன் மார்பகத்திலே புரளும் வெற்றி மாலைகளின் ஒளியில் மட்டுமோ உளது; இல்லம்தோறும் ஒளியும் இதயமெல்லாம் இன்பமும் மலர்ந்திடத்தக்க விதத்திலே, வாழ்வு செம்மைப்படுத்திட வேண்டாமோ? எமது மன்னன் பிடித்த கோட்டைகள் ஆயிரம்; இடித்த அரண்கள் பலப்பல; தரைமட்டமாக்கிய நகர்கள் நூறுநூறு; கொன்று குவித்த மாற்றார் - பல குவியல்! கரியும் பரியும் கழுகுக்கு இரையாயின! காடு, காடாயிற்று! போரிட்டுத் தோற்றவர் வெண் பொடி பூசி உருமாறி ஓடிப் பிழைத்தனர்! - என்று மக்கள் மகிழ்ந்து பேசுவது மட்டும், மன்னனின் மாண்பினை விளக்கிடுவதாக அமைந்திடாது! கொல்லும் புலியும், பேசிட இயலுமேல், வீரக்காப்பியம் கூறுமே! எனவே, வீரச் செயல் பல ஆற்றியதுடன், மன்னன், மக்களுக்கு ஆற்ற வேண்டிய அரும்பணி முடிவு பெற்றுவிடவில்லை! மக்கள், உறுபசிக்கு ஆளாகாதபடி தடுத்திட, அவர்தம் உழவுத் தொழில் சிறந்திட வழிவகை கண்டறிந்து அளித்திடவேண்டும்! நீர் உயர, நெல் உயரும்! எனவே, உழவரின் உள்ளத்தில் உவகை பொங்கவேண்டுமானால், வறண்ட இடங்களுக்கு, பொங்கிப் பெருகி, தங்கி நிற்க இடமில்லாததால் காட்டுப் போக்கிலே புரண்டு வீணாகி, வீணாகும் வெள்ளமும் வீழ் நீரும், தடுத்துத் தேக்கி வைக்கப்படவேண்டும் - உழவுக்குப் பயன்படவேண்டும் என்ற உன்னதமான நோக்கம் கொண்டு, தமிழகத்துத் தன்னிகரில்லா மன்னன், கட்டி முடித்த கருவூலம்! இக்காலக் கட்டட விற்பன்னரும், கண்டு வியந்திடுகின்றனர்! உழவுக்கு உறுதுணை இத்தகைய அணைகள் என்ற உண்மைதனைக் கண்டறிய, ஏடு பல கற்றிடுவோரெல்லாம், கல்லணை காட்டிடும் "பாடம்’, கல்லூரிகள் பலவற்றினும் கிடைத்திடுவதைவிட, பொருளும் சுவையும் மிக்கது என்று கூறிப் போற்றுகின்றனர். பொன்னி - அழகி! மக்களுக்கு நலன் அளிக்கும் நோக்குடன், நடைபோட்டு வருகிறாள்! குழவியை எடுத்து முத்தமிட்டுக் களிப்பிக்கும் அன்னைபோல, பொன்னி தன் அன்புக் கரத்தால் தொட்டு, பாலையையும் சோலையாக்கிப் பூரிக்க வைக்கிறாள்! வீரம் காட்ட தமிழ் மன்னர்கள் நாடு பல சென்றனர்; களம் பல புகுந்தனர்; நானோ, என் இதயத்திலே ஊற்றெடுக்கும் ஈரம் தன்னை, வறண்ட இடங்களெல்லாம் தந்துதவ, வளைந்தும் நெளிந்தும், வழி கொண்டும் செல்கிறேன்; என் கண்முன் தெரியும் கரம்புகளைக் கரும்புத் தோட்டங்களாக்கிக் களிப்படைகிறேன்; என்னுடன் வாளையும் வராலும், கெண்டையும் ஆராவும், துள்ளித் துள்ளி விளையாடுகின்றன! என் வருகையால் வளம் காண்கின்றனர், மக்கள். நான் உள்ளம் பூரிக்கின்றேன்!’’ - என்றெல்லாம் கூறிடும் பான்மை போல, சலசலவெனும் ஒலியுடன், சதங்கை அணிந்த மாது சதுராடுதல் போல் வரும் பொன்னி, பெற்றெடுத்த மக்கள் சிறுவீடு கட்டி விளையாடி மகிழ்வதைச் சற்றுத் தொலைவிலிருந்து கண்டு, பெருமிதத்துடன் வீற்றிருக்கும் நரை கண்டு திரை காணா நடுத்தர வயதினள் அமைதியாக அமர்ந்திருக்கும் காட்சி - கல்லணை. ஆடிப் பாடி ஓடியதும், அல்லி மலரினைக் கொய்ததும், ஐயோ! போ! போ! என்று அலறியதும், அன்னை! அங்கே! என்று அச்சம் காட்டியதும், அந்த நாளில்; இன்று அடலேறு என் ஆண் மகன், மின்னலிடையாள் என் செல்வி, அவள் மாலை தொடுக்கிறாள், அவன் கலம் விடுகிறான் என்று பெருமையுடன் பேசிடும் பெருமாட்டிப் பருவம் இன்று! கல்லணை - காவிரிப் பெண்ணாள் பெருமாட்டியானாள் என்பதனைக் காட்டி நிற்கிறது. தமிழகம், அதுபோலெல்லாம் இருந்தது! தமிழகத்தில் வீரமும் அறிவும், திறனும், திருவும், செழித்து இருந்தன! எந்தத் துறையிலும் பயன் காணும் வகையிலே செயல்பட்டனர்! எந்தச் செயலும் சீரியதாக இருக்கும் வண்ணம், சிந்தனை துணை நின்றது! கல்லணையைக் கட்டிடும் முன்னம், மன்னன், எத்தனை எத்தனை நாட்கள், நினைவிலே திட்டமிட்டிருந்தானோ - கூற வல்லார் யார்? கல்லணை அந்த மாமன்னனின் செயல்படு திறன் பற்றி மட்டும்தான், கவிபாடி நிற்கிறது - கருவில் உருவாகிய கருத்து, எப்படியெப்படி வளர்ந்தது என்பது தெரியவில்லை. "என்னைப் பெற்றெடுக்க என் அன்னை பட்ட கஷ்டம், சொல்லுந் தரத்ததன்று’’ - என்று கூறிடக் குழந்தையால் இயலுமா? கல்லணையும், அதனால்தான், அது குறித்து ஏதும் கூறாமலிருக்கிறது! கல்லணையைக் கண்டு மன்னனை நம்மாலே காண முடிகிறது! இங்கு, வீணாகும் பெருவெள்ளம் கட்டுப்படுத்தப்பட்டால், கழனிகளில் வாளை துள்ளும், கதிரொரு முழமே காணும், கமலத்தில் அன்னம் துஞ்சும், கமுகும் தெங்கும் ஓங்கி வளரும், எங்கும் மணம் கமழும் - ஆனால்…! என்று மன்னன் எண்ணிப் பல நாள் ஏங்கி இருந்திருத்தல் வேண்டும்! ஆறு ஒன்றுக்குக் கரையும் அணையும் அமைந்திடும் செயல், "அந்தரத்துச் சுந்தரி’ போல, திடீரென்றா தோன்ற முடியும்! நீரைத் தேக்கி வைக்கும் முறை, கரை உடையாதபடி பாதுகாத்திடும் வகை, இதற்காகும் உழைப்பு, அதனை நல்கிடத் தேவைப்படும் பெருந்திரளான மக்கள் - என்பன போன்ற பிரச்னைகள், மன்னன் மனதைப் பல காலமாக வாட்டிக் கொண்டிருந்திருக்க வேண்டும். வீரப்போர் புரிந்த காலத்திலும் சரி, நிலா முற்றத்தில் உலவிய நேரங்களிலும் சரி, மன்னன் மனதிலே இந்த எண்ணம் குடைந்தபடி இருந்திருத்தல் வேண்டும்; எனவேதான், சிங்களவர் போரிலே பிடிபட்டபோது, நமது எண்ணம் ஈடேற, இவர்களைப் பயன்படுத்துவோம்; களத்திலே பெற்ற வெற்றி, இனிக் கழனிகளுக்கு வளமளிக்கட்டும் என்று முடிவு செய்து, திட்டமிட்டு வெற்றி கண்டிருக்கிறான், அக்கொற்றவன். எனவே கல்லணை, வெற்றியை விளக்கிடும் கோட்டமாக நிற்கிறது. தமிழகத்தின் வீரமும் வளமும் விளக்கிக் காட்டிடும் கல்லணையில் இன்று உலவும்போது, அற்றை நாளில் இருந்து வந்த சிறப்புடன் இதுபோது வந்துற்ற அல்லலளிக்கும் நிலையை ஒப்பிட்டுப் பார்த்து உள்ளம் நொந்திடாது இருத்தல் முடியாது. ஒரு சமயம், முடியுடைய மன்னர் கட்டிய கல்லணையிலே, இன்று, அரசோச்சும் அமைச்சராக விளங்கிடும் "நாம்’ உலவுகிறோம்! - என்று அமைச்சர் பெருமகனார் பெருமையை அணைத்துக்கொண்டிருக்கக் கூடும் - ஆனால் அவரேகூட, அந்த அணை அமைக்கப்பட்ட காலத்துத் தமிழகத்தை நினைவிற்குக் கொண்டுவந்தால், ஓரளவு வருத்தமே கொள்வார். வளம் குன்றி, வருவாய் குறைந்து, வாழ்க்கை வசதியற்று, வேற்று நாடுகளுக்குக் கூலிகளாகச் சென்று, இழிநிலையில் இடர்ப்படும் இன்றையத் தமிழரின் முன்னையோர், களத்தில் வாகை சூடினர், கல்லணை அமைத்து நாட்டை வளப்படுத்தினர். உள்ளத்தில், பெருமித உணர்ச்சியும் வேதனையும் பின்னிக் கொண்டல்லவா குத்துகிறது. கல்லணை - கரிகாலச் சோழனுடைய கருத்தில் உருவாகி, தமிழகத்துக் கட்டட அமைப்புத் திறனின் அரண் பெற்று, சிங்கள நாட்டு உழைப்புத் துணையுடன் உருவாயிற்று - 1080 அடி நீளமும், 40 - 60 அடி அகலமும், 15 - 18 அடி ஆழமும் கொண்டதாக அமைந்துள்ளது. இதனைவிட அளவிற் பெரிய, அதிசயமிக்க, விஞ்ஞான நுணுக்கத் திறமைகள் தெரியத்தக்க அணைகளும் தேக்கங்களும், இன்று பல உள - எனினும் கல்லணை, கட்டப்பட்ட காலத்தைக் கருத்திலே வைத்துப் பார்க்கும் போதுதான், அதன் சிறப்பு நன்கு விளங்குகிறது - எவரும் பாராட்டுகின்றனர். விஞ்ஞான அறிவு மிகவும் பரவியுள்ள இந்நாளிலேயும், இந்தத் துறை விற்பன்னர்கள், கல்லணையைக் கண்டு வியந்து பாராட்டுகின்றனர். தமிழன் பெற்றிருந்த தனிச் சிறப்பு தெரிகிறது - காண்போர் பாராட்டுகின்றனர். கரிகாற் சோழன் உருவச் சிலையொன்றும் அங்கு அமைத்துள்ளனர் - இக்காலத்தவர். அன்று அம்மன்னன் அமைத்த "கல்லணை’ தந்த வளம்தான் இன்று, தஞ்சைத் தரணியை கிளி கொஞ்சும் சோலையாக்கி இருக்கிறது. புதுப் புது அணைகளையும் தேக்கங்களையும் பொறுக்கு விதைப் பண்ணைகளையும், இரசாயன எருக்களையும், கால்நடைச் செல்வத்தையும், அவைகட்காகச் செயற்கை முறை உற்பத்தியையும், பெருமளவுக்குச் செய்ததுடன், சூல் கொண்ட மேகத்தை மழை முத்துக்களை ஈன்றளிக்கச் செய்வதற்கான குளிர்காற்றை அளித்திட எங்கும் “வனமகோத்சவம்’ நடத்தியும், உற்பத்தியைப் பெருக்குங்கள் என்ற அறிவுரை அளித்தும், வளம்பெருகி வாழ்வு சிறப்படைய வேண்டும் என்ற நோக்குப்பற்றி நேர்த்தியாகப் பேசிவரும், அமைச்சர் பெருமான் சென்ற கிழமை”கல்லணை’யில் தங்கி இருந்திருக்கிறார் - அதுபோது, உணவு உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்காததால் அக விலையும், அதனைச் சமாளிக்க வெளியிலிருந்து உணவுப் பொருள் தருவிக்க வேண்டுமென்ற நிலையும், மீண்டும் உணவுக் கட்டுப்பாடு புகுத்தப்படுமோ என்ற பீதியும் நாட்டிலே ஏற்பட்டு இருப்பதுபற்றி, எண்ணிப் பார்த்திராமல் இருந்திருக்க முடியாது! வந்த இடத்திலே காட்சி கண்டு களித்திடலாம், ஆட்சியிலே இருப்பதாலே ஏற்படும் பெருமை குறித்து மகிழலாம் என்று அமைச்சர் உள்ளூற எண்ணியிருந்தாலும் கூட, தம்பி கருணாநிதி அதையும் “அனுபவிக்க’ விடவில்லை. உழுது பயிரிட்டு உழலும் மக்களை, நில முதலைகள் படுத்துகிற பாடுபற்றிய, வேதனை தரும் செய்திகளை எடுத்துக் கொண்டு சென்று,”கனமே! கனமே! கல்லணையின் கவர்ச்சியிலும், அது காட்டும் தமிழரின் முன்னாள் மாட்சியிலும் ஈடுபட்டுள்ள கனமே! உழைக்கின்ற மக்களை உருவில்லாமல் செய்துவிட, பிறர் உழைப்பால் கொழுத்திடும் போக்கினர் செய்திடும் கேடுகளைக் கேளீர்! ஏரடிக்கும் சிறுகோலின் துணையின்றி, மன்னன் கரம் தங்கும் செங்கோல் பயன் தராது என்பதனை, ஆன்றோர் கூறினர் - ஆனால் இன்றோ, மாளிகைவாசிகளின் பேச்சுத்தான் மந்திரிகள் செவி புகும்! மாடோட்டும் ஏழையரின் பேச்சு அம்பலம் ஏறாது! சட்டம் நமக்காக என்று எண்ணிக் களித்திடும் ஏரடிப்போர், ஏதறிவார்! சந்து பொந்து கண்டறிவோம், சர்க்காரின் சட்டங்களில்! என்று இறுமாந்து கூறிவரும் இன்னின்னார் செயல் பாரீர் - என்று அடுக்கடுக்காகச் சேதிகளைக் கொண்டுபோய்க் கொடுத் திருக்கிறார். கல்லணையில் காட்சி காண வந்தோம் - "முள்ளணை’யல்லவா காண்கிறார் அமைச்சர் என்று அவர்தம் நண்பர் சிலர் எண்ணியிருந்து இருக்கக்கூடும். கல்லணையில் "கனம்’ அமைச்சர்! கல்லணையில் கருணாநிதி - தம்பி! பார்த்தனையா, தமிழக - அரசியலில் ஏற்பட்டு வரும் புதுப்புது நிலைமைகளை. கருணாநிதி கல்லணையும் செல்வார் மலரணைக்கும் செல்வார் - எதற்கு? - ஏதாவது கதை எழுதுவார்! வேறெதற்கு என்று பேசிடுவோர் பலர் உண்டு. நீ அறிவாய். அவர்களே கூட, "இதேது! பயல்கள், உண்மையிலேயே, தொண்டாற்றுகிறார்கள் என்பது உலகுக்குத் தெரிந்துவிடும் போலிருக்கிறதே!’’ என்று கவலையுடன் பேசிக் கொள்வர், கை பிசைந்து கொள்வர். “நாடு பாதி நங்கவரம் பாதி!’’ என்றோர் பேச்சு, திருச்சி மாவட்டத்திலே உண்டு. நங்கவரம் பண்ணையின் அளவினையும் அந்தஸ்தினையும் விளக்கிட எழுந்தது அப் பழமொழி, அந்தப் பண்ணையும் பிறவும் உள்ள குளித்தலை வட்டத்திலே, இன்று உழவர்களிடையே ஒரு பெரும் கொந்தளிப்பு. பட்டது போதும் இனிப் பயமில்லை - நமக்குப் பாதுகாப்பு தரச் சட்டம் வந்துள்ளது என்று அந்தச் சூதுவாதறியாத உழைப்பாளி மக்கள் உளம் பூரித்து இருந்த வேளையில்,”சட்டமா? வார்த்தைகளின் கோர்வைதானே? இதோ என் திறமையால், அதனைச் சல்லடைக் கண்ணாக்கி விடுகிறேன், பாருங்கள்’’ - என்று சீறிக்கூறி, பண்ணை யின் பணப்பெட்டிக்குப் பாதுகாவலராகிவிட்டனர் சிலர். அவர்களால் விளைந்துள்ள வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல், உழவர் பெருமக்கள் கிளர்ச்சியில் ஈடுபடவும் பக்குவமாகிவிட்டனர். வயலோரங்களிலே, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார்! உழவர் வாழ் பகுதிகளில், உருட்டல் மிரட்டல் ஏராளம்! இந்த நிலைமையை எடுத்துக் காட்டி, உழவர்களுக்கு நீதி வழங்கும்படி, அமைச்சரைக் கேட்டுக் கொள்ளும் பணியிலே கருணாநிதி ஈடுபட்டது, எனக்குப் பூரிப்பும் பெருமையும் தருவதாக இருக்கிறது; உனக்கும் உவகை கொஞ்சமாகவா இருக்கும்! அமைச்சரை, வேறு எந்த இடத்திலாவது கருணாநிதி சந்தித்துப் பேசியிருந்தால்கூட, கல்லணையில் பெற்றிருக்கக் கூடிய எழுச்சியைப் பெற்றிருக்க முடியாதென்று நான் எண்ணு கிறேன் - கல்லணையே, தமிழ் ஆட்சி முறையின் மாண்பு விளக்கமாக அல்லவா இருக்கிறது! கல்லானாலும், அது தரக்கூடிய கருத்து, மதிப்பு மிக்கதாக அல்லவா இருந்திருக்கும்! உழவர் உழைத்துவிட்டு புழுபோலத் துடிப்பர்; பண்ணை முதலாளிகள் பாடுபடுவோரை உருட்டி மிரட்டி வேலை வாங்கி, அவர்கள் வயிற்றிலடித்துக் கொழுத்து நிற்பார்கள் - என்று அன்று கல்லணை கட்டிய காவலன் எண்ணியிருந்திருக்க முடியுமா? அவன் கண்ட தமிழகத்தில், உழைப்பவன் உயர்ந்தான், உலுத்தன் ஊராளவில்லை!! அந்த மன்னன் கண்ட தமிழகம், உணவுக்காகப் பிற நாடுகளிடம் கையேந்தி நின்றிருக்கவில்லை. திறமை அத்தனையும் திட்டம் தீட்டுவதில், விளைவு அத்தனையும் வறுமைதான் என்று உள்ள இன்றைய நிலைமையா அன்று? அல்ல! அல்ல! தம்பி! இயற்கை இன்ப வாழ்வுக்கான வழி காட்டிற்று! உழைப்பு அதனை உருவாக்கித் தந்தது. ஊராள்வோர், அந்த உருவு குலையாமல் பார்த்துக்கொண்டனர். முறை தவறி மன்னன் நடந்தாலும், வரி அதிகம் கரந்தாலும், கவிபாடிக் களித்திடும் புலவர்களும் கடுமொழி கூறிடவும், காவலனைத் திருத்திடவும், தயங்காத காலம் அது. இன்று உள்ள நிலையோ, உள்ள கேடுபாடுகளை நீக்கிட வழி அறியாததை மூடி மறைத்துக் கொண்டு, கேடுபாடு நீங்க வேண்டும் என்ற நோக்குடன் எவரேனும் உண்மையை எடுத்துக் கூறினால் மெத்தக் கோபம்கொண்டு, "ஏதறிவான் இச் சிறுவன்! எமதன்றோ இன்று அரசு?’’ என்று எக்களிப்புடன் பேசுகின்ற காலம்! இருப்பினும், தம்பி, உன் சார்பிலே சட்டசபையிலே நாங்கள், நாட்டிலே காணப்படும் குறைபாடுகளை எடுத்துக் காட்டி வருகிறோம்; ஆட்சிப் பொறுப்பிலே உள்ள அமைச்சர் களுக்குக்கூட அத்துணை கசப்பாக இல்லை, இடையில் நின்று இனிப்புப் பெறுவோருக்குத்தான் ஒரே எரிச்சல்!! ஏதேதோ பேசுகின்றனர். "உங்கள் தீனா மூனா கழகத்துக்காரர்கள், சட்டசபையிலே வந்து என்ன சாதித்துவிட்டார்கள்? திணறுகிறார்கள்! சட்ட சபையிலே எங்கள் மந்திரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல், திண்டாடித் தவிக்கிறார்கள்’’ என்று, ஒரு திருவாளர் பேசியதாகக்கூடப் பத்திரிகையில் பார்த்தேன். தம்பி! அந்தத் திருவாளரை நீயோ நானோ சந்திக்க முடியாது - ஆனால் அவருடைய நண்பர்கள் எவரேனும் எடுத்துக் கூறட்டும் என்ற எண்ணத்தால், இதைக் கூறுகிறேன். சட்டசபையில், மந்திரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூறமுடியாமல், நாங்கள் திண்டாடிப் போகிறோம் என்றெல்லவா கூறுகிறார், அந்தத் திருவாளர் - அவர் எத்துணை தெளிவில்லாதவர் என்பதைக் கவனி. சட்டசபையில் மந்திரிகள், உறுப்பினர்களைப் பார்த்து கேள்வி கேட்பதில்லை - முறை அது அல்ல! மந்திரிகளைப் பார்த்து உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் - அதுதான் அங்கு உள்ள முறை! இதனைக் கேட்டாகிலும் தெரிந்துகொண்டு பேசாமல், அந்தப் பேச்சாளி, மந்திரிகள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்பதாகவும், நாங்கள் என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் திணறுகிறோம் என்றும் "உளறுகிறார்’ என்று கூறத் தோன்றுகிறது - பாபம், போகட்டும் - பேசுகிறார் என்றே கூறுகிறேன். கேள்வி - பதில் என்ற பிரச்சினையை நான் இதுபோது இங்கு எழுப்பியது, சட்டசபை நடவடிக்கை குறித்துக் கூற அல்ல. கல்லணை எழுப்பும் கேள்வியும் "கனம்’ அமைச்சர் அளிக்கக் கூடிய பதிலும், எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணியே அந்தப் பிரச்சினையை எடுத்தேன். “மன்னர் மன்னவா! பிடிபட்ட சிங்களவர்கள் பல ஆயிரம் இருக்கும். அவர்களை என்ன செய்வது?’’ என்று அமைச்சர் கேட்டிட,”ஆயிரம் அடி நீளம், அறுபது அடி அகலம், இருபது அடி ஆழம் கொண்டதாக ஒரு அணை கட்டுவதற்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படும்?’’ - என்று கரிகாற் சோழன் அமைச்சரின் கேள்விக்கு மற்றோர் கேள்வி வடிவிலேயே பதிலளித்திருப்பான். அமைச்சரும், பொருளை அறிந்து கொண்டு, "அரசே! அறிந்தேன்! சிங்களப் போரிலே நம்மிடம் சிக்கினோரைக் கொண்டே அணை கட்டி முடிக்க ஏற்பாடுகளைத் துவக்குகிறேன்’’ என்று கூறி இருந்திருப்பார். இன்று அமைச்சர்களை நாடு கேட்கும் கேள்விகள், தம்பி உனக்கும் எனக்கும்தான் நன்றாகத் தெரியுமே! ஜாதி பேதத்தையும் அதனை நிலைத்திருக்கச் செய்திடும் முறைகளையும் ஏற்பாடுகளையும் ஏன் மாற்றி அமைக்கக் கூடாது - என்று பெரியார் கேட்கிறார் - அதற்காக ஆகஸ்ட்டுக்கு ஆகஸ்ட்டு ஒரு அறப்போரும் தொடுக்கிறார். "வேலை கொடு! அல்லது சோறு போடு! சமதர்மம் மலரச் செய்திடு! தமிழ் நாடு என்ற பெயரிடு! இவைகளைக்கூடச் செய்யாது, மக்கள் ஆட்சி என்று பெயர் மட்டும் சுமந்து கொண்டிருக்கலாமா?’ என்ற கேள்விக் கணைகளைத் தொடுத்தபடி, சோμயலிஸ்டு களும், ஆகஸ்ட் கிளர்ச்சி நடத்துகிறார்கள். "நாட்டின் நாடி நரம்பு நாங்கள்! நாங்கள் பலமற்று இருப்பது நாட்டுக்கு நல்லது அல்ல; எங்கள் ஊதியத்தை உயர்த்துங்கள் துயர் தீர்க்க வழி காணலாகாதா?’ என்று கேட்டு, தபால் - தந்தி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துவிட்டனர். இவைகளுக்கெல்லாம் துரைத்தனம், ஒரு கேள்வி மூலமாகவே பதில் அளிக்கின்றது. "எங்களுக்குத்தானே ஓட்டு, போட்டீர்கள்?’’ என்பதுதான் காங்கிரஸ் துரைத்தனம், கேள்வி வடிவிலே தரும் பதில்! கல்லணையில் கேட்கும் கலகலவெனும் ஒலி, இன்றைய ஆட்சியின் போக்கு கண்டு, காவிரிப் பெண்ணாள் எழுப்பிடும் நகையொலியோ! இருக்கலாம்!! தம்பி! இதோ வேறோர் ஒலி, என் செவிக்கு. "மணி ஐந்து! சென்னையில் கூட்டம்’’ என்கிறார் நண்பர். கிளம்புகிறேன்! அடுத்த கிழமை, பிறவற்றினைக் குறித்துப் பேசுவோம்; அதற்குள் முதலமைச்சர் காமராஜர் அவர்கள் என் தொகுதியின் நிலைமைகளைக் காண்பார். இங்கு கல்லணையும் இல்லை, மலரணையும் கிடையாது; கள்ளியும் காளானும் அதிகம்! இப்போது, முதலமைச்சர் வருவதற்கே, வழி அமைக்கிறார்களாம்! அப்படிப்பட்ட "கிராமம்’ மிகுந்த தொகுதி. அங்கு, உள்ள நிலைமைகளை முதலமைச்சர் காண இருக்கிறார். கண்டதன் விளைவு என்ன என்பதனையும் அடுத்த கிழமை கூறுகிறேன். ஒன்று, இப்போதே விளங்கும் - விளக்கம் காண அஞ்சாதாருக்கு - என்று நம்புகிறேன். கல்லணையில் கருணாநிதி அமைச்சர் பக்தவத்சலத்தைக் கண்டு பேசுவதும், சத்தியவாணிமுத்து, அமைச்சர் லூர்து அம்மையாரை, தமது தொகுதியின் அலங்கோலத்தை வந்து பார்த்திடச் செய்ததும், நான் எங்கள் தொகுதி நிலைமையை முதலமைச்சர் காண ஏற்பாடு செய்வதும், இவைகள் யாவும், நமது கழகம், மக்கள் சார்பில், ஏழை எளியோர் சார்பில் நின்று பாடுபட முனைந்துள்ள ஒரு புதிய ஜனநாயக சக்தி என்பதை எடுத்துக்காட்டும், நிகழ்ச்சிகள். கல்லணை கட்டித் தமிழரின் கீர்த்தியை நிலை நாட்டினான் மன்னன்! இன்றோ மக்கள், உழைத்து உருக்குலைந்து கிடக்கிறார்கள்; ஊராள்வோருக்கு இந்த உண்மையினை எடுத்துக் கூறி, இயன்ற அளவு இதம் தேடித்தரும் கடமை நமக்கு உண்டு அல்லவா? அந்தக் கடமையில் களிப்புடன், தம்பி! நாம் அனைவரும் ஈடுபட்டிருக்கிறோம். நாம் வாழ்ந்த இனம் கீர்த்திமிக்கது என்பதனை எடுத்துக்காட்டக் கல்லணையும் இருக்கிறது, நாம் தாழ்ந்து கிடக்கிறோம் என்பதனை எடுத்துக் காட்ட, "கண்காணாச் சீமையிலே தமிழர் கசிந்துருகிக் கிடக்கும் காட்சியும்’’ இருக்கிறது. ஆனால், எத்துணைதான் தாழ்ந்து கிடப்பினும், ஓரளவு ஒற்றுமையும் எழுச்சியும் பெற்றால், குறிப்பிடத்தக்க வெற்றியும் தமிழருக்கு கிட்டுகிறது என்பதனை, இதுபோது இலங்கைவாழ் தமிழர்கள் பெற்றுள்ள வெற்றி நமக்கு நினைவூட்டுகிறது. "ஆகஸ்ட்டு’ இல்லாமலே நமதரும் தோழர்கள் அங்கு வெற்றி பெற்றனர் - தம்பி! நாமும் ஒன்றுபட்டுப் பணியாற்றினால், பலன் கிடைக்காமலா போகும்! தமிழன் திட்டமிட்டால் காரியத்தை முடிக்கவல்லவன் என்பதைக் காட்டி நிற்கிறதே "கல்லணை’ - கண்டிருக்கிறாயா, தம்பி! இன்னும் இல்லையென்றால், காணத் தவறாதே - கல்லணை தமிழரின் ஆற்றலை விளக்கிடும் அரிய சின்னம்!! அண்ணன், 4-8-57 கொட்டடி எண் : 9 இரத்தப் பொங்கல் சைதைச் சிறை : அன்றும் இன்றும் அடையாறு "லாக்கப்’பில் ஆட்சியாளர் இழைத்த கொடுமைகள் அறிவாற்றல் வளர்க! தம்பி! முடுகு முரசொலி முடுகு முழவொலி முடுகு முருடொலி முடி விலாக் கடுகு பறையொலி கடுகு கலமொலி கனிவெழாத் தொடுகு குழலொலி தொடுகு குரலொலி தொடுகு துதியொலி தொடுதலாற் படுகு முகிலொளி படுகு கடலொலி படுதலில் மணமாயதே! உடன்பிறந்தோரே! தமிழகத்தைக் காட்டுகிறார் கவி! ஆங்கு எழும் ஒலிகளைக் கேட்கச் சொல்கிறார். இன்றைய தமிழகத்தில் நித்தநித்தம் கேட்டிடக் கிளம்பிடும் "ஒலி’, அனைவர் உள்ளத்தையும் வாட்டுவதாக உளது. ஒரேவழி, பழந்தமிழகத்தைப் புலவர் பெரு மக்கள் காட்டிடக் காண்பது, பயனற்றதாகிவிடாது; பெருமூச்சும் புன்னகையும் கலந்திடும் ஓர் நிலை தரும். அந்நிலையில்தானே, உள்ளோம்! இருந்ததையும், இனிக் காண விழைவதையும் எண்ணிடுங்காலை புன்னகை; இருப்ப தையும் இழப்பதையும் எண்ணிடும்போதோ, பெருமூச்சு! பொங்கற் புதுநாள் என்று வரும் என்று வரும் என்று ஆவலுடன் வரவேற்கும் நிலையுடையார், அதிகம் இல்லை; வருமே என்று அஞ்சுவோரின் தொகையே அதிகம்; எனினும், எப்பாடு பட்டேனும் எவ்வளவு தொல்லையைத் துரத்தியபடி யேனும், தமிழர் உளமெலாம் மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடிக் களித்திடுவது, இந்தத் திருநாளைத்தான்! இந்தத் திருநாள், இவ்வாண்டு, "இரத்தப் பொங்கலோ?’’ என்று கூறத்தக்க வகையிலே, நடைபெற்ற அடக்குமுறை அலங்கோலத்தை, நாடு கண்டு, நடுக்கம் கொண்டுள்ள நேரத்திலே வந்துளது. நாலாயிரவருக்குமேல் எனலாம், நாடாள்வோரால், வேட்டையாடப்பட்டவர்கள். ஆயிரவருக்கு இருக்கும் என்கின்றனர், அடிபட்டோர், படுகாயமுற்றோர். சிறை சென்றோரின் தொகை கணித்திட இயலவில்லை. வழக்குகள் பல, வாய் பிளந்தவண்ணம் உள்ளன. இவற்றினுக்கிடையே, பொங்கற் புதுநாள் வருகிறது - எங்ஙனம் நாம் மகிழ்ச்சி அடைவது? கண்ணீர் பெருக்கியும், செந்நீர் சிந்தியும் செந்தமிழ் நாட்டார் இருக்கையிலே, ஐயயோ! அம்மவோ! என்றலறி, கை உடைந்தது, கால் முறிந்தது, துவைத்து விட்டனர், துரத்தித் தாக்கினர், எலும்பு நொறுங்கிற்று, இரத்தம் கொட்டிற்று, என்றெல்லாம், பதறிக் கதறிப் பலரும் இருந்திடும் வேளையில் "பொங்கலோ பொங்கல்!’’ என்று கூறிக்கொண்டாட நாவும் எழாதே, என்றெண்ணி நானிருந்தேன். எனினும், நாள்பலவில் திரு காணாதிருக்கிறோம், விழா பலவும் வீணாட்டம் என வெறுத்தொதுக்கி, வேண்டாம் வெற்றாட்டம் என்றே கூறிவிட்டோம், ஆண்டுக்கோர் நாள், அருமைமிகு பொன்னாள், பொங்கற் புதுநாள், புது வாழ்வு மலரும் நாள் என்றே இதனை நாம் நன்றெனக் கொண்டாடி வருதல், நாடு கண்ட முறை அல்லவோ என்றெண்ணி எப்படியும் விழாவினை நாம் ஏற்றமுடன் நடாத்துதல்தான், அடிப்போம். குடல் அறுப்போம் என்றே ஆர்ப்பரிக்கும் ஆணவக்காரருக்கும் அரும்பாடம் தானளிக்கும் என்று உறுதிகொண்டு, ஏற்புடைய விழாவினை எவ்விதத்தும் நடத்துதலே சால்புடைத்து என்று கண்டோம். இந்த நிலைகூட வந்திடுமோ, வாராதோ என்று எண்ணிடும் வகை ஒன்றும், என்னையும் என்போன்ற நமதருமைத் தோழரையும், வந்து கைப்பற்றிற்று. சிறையில் சென்றிருந்தோம்; சில நாட்கள்! விரைவிலே வெளிவருவோம் என்ற நிலை அல்ல அது. இந்த ஆண்டுப் பொங்கற் புதுநாள், உடன்பிறந்தோரோ! உம்மிடமெல்லாம் அளவளாவும் வாய்ப்புக் கிடைக்குமோ, மறுக்கப்படுமோ என்ற ஐயப்பாடு என்னை வாட்டிக்கொண் டிருந்த நிலையில், சென்ற கிழமை, நான் 9ஆம் எண்ணுள்ள கொட்டடியில் அடைபட்டுக் கிடந்தேன். துளியும் எதிர்பாராத நிகழ்ச்சி - அதிலேயும் ஒரு வேடிக்கை இழைந்திருந்தது. அதே 9ஆம் எண்ணுள்ள கொட்டடியில், நான் இருபதாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை அடைக்கப்பட்டிருந்தேன். இருபதாண்டுகள் உருண்டோடி விட்டன; இந்த இருபதாண்டுகளுக்குள், நாட்டிலே உலகிலே, என் மன நிலையிலே, என்னென்ன மாறுதல்கள்! எத்துணை வளர்ச்சி! திட்டமிட்டு நடத்தப்படுவதுபோல, அதே கொட்டடிக்குள் இருபதாண்டுகளுக்குப் பிறகு, நான் சென்றேன்!! அப்போது - இருபதாண்டுகளுக்கு முன்பு - 1938இல் நான் ஒரு நாள் “அந்தி சாயும்’ நேரத்தில் அங்கு இழுத்துச் செல்லப் பட்டேன். கட்டாய இந்தியை எதிர்த்து நடத்தப்பட்ட கிளர்ச்சியில், நான்”மறியலை‘த் தூண்டிப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டேன். வழக்கு விசாரணைக் காக, என்னை அந்தக் கொட்டடியில் அடைத்து வைத்தார்கள். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியிலே "பிடிக்கப்பட்ட’ நூற்றுக் கணக்கானவர்கள், சென்னை மத்திய சிறையில் இருந்தனர். என்னை மட்டும், தனியாக அழைத்துக்கொண்டு போனார்கள்- 9ஆம் எண்ணுள்ள கொட்டடிக்கு - சைதாப்பேட்டை சப்ஜெயிலில்!! அதே சிறை!! அதே கொட்டடி! அப்போது, உள்ளே பூராவும் “கருப்பு’ சாயம் பூசப்பட்டிருந்தது! இப்போது”வெள்ளை’ அடிக்கப்பட்டிருக்கிறது! அறை மட்டுமா? நானேகூடத்தான்!! அப்போது கருத்த மீசை! இன்று வெளுத்துக் கிடக்கிறது! அப்போது காளை! கல்லூரி முலாம் கலையாத பருவம்! இப்போது, கட்டுத் தளர்ந்து, கல்லூரி முலாம் குலைந்து, “பட்டிக்காட்டான்’ என்பார்களே, அந்த”உருவம்’ பெற்றுவிட்டிருக்கிறேன். அப்போது “சிறை’ என்றால், ஏதோ ஓர் இனம் அறியாப் பயம்! இப்போது? சிறையி லிருப்பதற்கும் வெளியில் இருப்பதற்கும் அதிக மாறுபாடு காண முடியாத மனப்பக்குவம் பெற்றுவிட்டேனல்லவா? அப்போது, நான் தனியாகச் சென்றேன்! இப்போது, என்னுடன் எழுபது தோழர்கள்! அப்போது, நான் பெரியாரின்”புதிய கண்டுபிடிப்பு!’ இப்போதோ பெரியாருக்குத்தான் என் பெயர் என்றாலே கசப்பாமே! அந்தி சாயும் வேளையிலே, அன்று, உள்ளே என்னை அழைத்துச் சென்ற போலீஸ்காரர், சிறைக் "காவலர்’ முன் நிறுத்தினார். முதியவர்! நாட்டு நடப்புபற்றி அதிகம் ஏதும் அறியாதவர் - அறிந்துகொள்ளவேண்டுமென்ற நினைப்பும் கொள்ளாதவர். இப்போது, சைதாப்பேட்டை “சப்-ஜெயில்’ உள்ளே நான் அழைத்துச் செல்லப்பட்டபோது, என் மனக்கண் முன்னால், அந்த முதியவர் தெரிந்தார்; அவர்”உரையாடல்’ ஒலித்தது! ஒரு "உம்’ போட்டபடி என்னை ஏற இறங்கப் பார்த்தார் அந்த முதியவர்! சிறை என்றால் இப்படித்தான் பார்ப்பது வாடிக்கை போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். நாமாகப் பேசுவதுகூடாது - அது ஒரு வேளை, சிறையிலே, குற்றமென்று கருதப்படக்கூடும்; நமக்கேன் வீண் தொல்லை என்று நினைத்துக் கொண்டு, சிலையாக நின்றேன். முதியவர், சிரிக்கவில்லை - ஆனால், புன்னகைக் கோடுகள் முகத்திலே காணப்பட்டன. "மணி ஆறுக்கு மேலாகிவிட்டது! இந்த நேரத்திலே, வந்தால் சோறு ஏது’’ என்றார் சிறைக் காவலர். நான் சோறு கேட்டுத் தொல்லை தருவேன் என்று எண்ணிக்கொண்டார் போலும். நானோ, சோர்ந்து கிடந்தேன்; ஓயாத பயணம்; பல நாட்களாக, இன்று பிடித்துவிடுவார்கள், இதோ வருகிறார்கள், அதோ “வாரண்டு’ - என்றெல்லாம் பலர் கூறக் கேட்டுக் கேட்டு, மனக்குடைச்சல் ஏற்பட்டிருந்தது. சிறைக்கு! - என்ற செய்தி, எனக்கு ஒருவகையில், செந்தேனாகிவிட்டது - ஏனெனில், என்ன செய்வார்களோ? எப்போது வருவார்களோ? என்றெல்லாம் எண்ணி எண்ணி, மனத்தைப் புண்ணாக்கிக்கொண்டிருந் தேனல்லவா? அந்தத் தொல்லை தீர்ந்தது - சிறை! என்ற செய்தி, செந்தேனாயிற்று. எனவே,”சோறு’ கிடைக்காவிட்டால், என்ன செய்வது என்று எண்ணும் நிலையோ ஏங்கும் நிலையோ இல்லை! ஒரு "அத்தியாயம்’ முடிந்தது! - என்ற திருப்தி. சிறைக் காவலரிடம், கைதிகள், “சோறு’ கேட்டுத் தொல்லை தருவது, வாடிக்கையாக இருந்திருக்கவேண்டும்; எனவேதான்,”ஆறு மணிக்கு மேல் வந்ததால், இன்று சோறு இல்லை!’’ என்ற செய்தியை, விளக்கமளிக்கும் முறையில், சிறைக்குக் காவலராக இருந்த முதியவர் கூறினார். அடக்க ஒடுக்கத்துடன் அவர் எதிரே நின்ற என்னைக் கண்டதும், அவருக்கே ஒரு “பரிவு’ ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்; எனவேதான், சோறு இல்லை! என்று கூறியதுடன், ஒரு வாழைப்பழம் தருகிறேன் - ஒரு பொட்டலம் தின்பண்டம் தருகிறேன் - என்றார். அவர் பரிவுக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவிக்கவேண்டுமல்லவா! பற்களை வெளியே தெரியச் செய்தேன்! காவி படிந்திருப்பது கண்டார் - சிறிதளவு கண்டிப்புடன்”வெற்றிலை கிற்றிலை’ எதுவும் போடக்கூடாது - கிடைக்காது - என்றார்! மேற்கொண்டு, "உத்தரவுகள்’ மளமளவென்று புறப்பட்டன. கிட்டே வா! துணியை உதறு! சொக்காயைக் கழற்றி! அரைஞாணை அறுத்தெறி! ஒழுங்காக, பரிசோதனைக்கு உட்பட்டேன். மெல்லிய குரலிற் கேட்டார். "ஏதாவது அபினி கிபினி, கஞ்சா கிஞ்சா, பீடி கீடி, இருக்கா?’’ "அதெல்லாம் கிடையாதய்யா! அப்படிப்பட்ட பழக்க மெல்லாம் கிடையாது.’’ "ஆமாம்! இங்கே வருகிற எந்தப் பயதான், அந்தப் பழக்க மெல்லாம் இருப்பதாக ஒப்புக்கொள்கிறான்.’’ "நான் அப்படிப்பட்டவனல்ல.’’ "நீ பெரிய யோக்கியன்தான் - சரி - அதோ, பார் மூலையில்; சட்டிகள்; இரண்டு எடுத்துக்கொள்; ஒன்று குடிக்கத் தண்ணீர் வைத்துக்கொள்ள; மற்றொன்று இரவிலே சிறுநீர் கழிக்க. . . . நிற்காதே. . . . எடுத்துக்கொண்டு போய் அறையிலே, வைத்துக் கொள்; கம்பளி இருக்கும், விரித்துக்கொள்; தொந்தரவு கொடுக்காமல் படுத்துக்கொள்!’’ படுத்துக்கொண்டேன்! அந்தக் கொட்டடிதான், 9ஆம் எண்! அதே கொட்டடிதான், இந்த ஜனவரித் திங்கள் நாலாம் நாளில்! இம்முறை, என்னுடன், நாவலர், அவர் தம்பி, நடராசன், அன்பழகன்!! - அதே கொட்டடியில். இதிலென்ன பெருமை! - என்றுகூட அவர்கள் எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள்; நான் அந்தக் கொட்டடியைக் காட்டி, "இதோ, என் அறை! இருபதாண்டுகளுக்கு முன்பு, நான் இருந்த இடம்! மீண்டும் இங்கு வந்திருக்கிறேன்’’ - என்று சொன்னது கேட்டு. இருபதாண்டுகளில், நாட்டிலே ஏற்பட்டிருக்கும் மாறுதலை விளக்கிட வேறெதுவும் காட்டத் தேவை இல்லை; அன்று, சிறைக்காவலர் அடைந்த திகைப்பையும், இன்று எங்கு உள்ள சிறைக்காவலராயினும் கொண்டுள்ள தெளிவையும் ஒப்பிட்டாலே போதும். அன்று, உள்ளே சென்று, கம்பளியை விரித்துக்கொண்டு, “ஒழுங்காக’ நான் படுத்தேன்; பக்கத்து அறைகளிலே,”கைதிகள்’ கானம் பாடினர், கைத்தாளமிட்டனர், சிறைக்காவலரை நையாண்டி செய்தனர் - எல்லாம் எரிச்சலூட்டும் முறையில். நான் இருந்த நிலை கண்டு, அந்த காவலருக்கே, ஒரு வியப்பு! அருகே வந்தார் - கம்பியைப் பிடித்தபடி. “ஏன் வந்திருக் கிறாய்?’’ என்று கேட்டார்.”இந்தி எதிர்ப்பு!’’ என்று சற்றுக் கெம்பீரமாகச் சொன்னேன்!! முகத்தில் அறைந்ததுபோலப் பதில் பிறந்தது, "அப்படின்னா?’’ என்று கேட்டாரே, காவலர்!! துக்கம் துளைத்தது! வேதனை பிய்த்தது! வெட்கம் கொட்டிற்று! கோபம்கூட, மெள்ள மெள்ளக் கொப்புளித்தது! தமிழ் நாடெல்லாம், சுற்றிச் சுற்றிப் பேசி வருகிறோம். இந்தி ஆதரவாளர் காட்டும் காரணங்களை எல்லாம் சுக்கு நூறாக்கி விடுவோம். நாகையில், தஞ்சையில், அய்யம்பேட்டையில், ஆற்காட்டில், வேலூரில், சூலூரில் - காட்டூரில், மோட்டூரில், நெல்லையில், தில்லையில், சென்னையில், கோவையில், எங்கும் "ஈரோடு செய்தியை‘ப் பரப்பி வருகிறோம் - சென்னைக்கு அருகே உள்ள சைதையில், இந்தி எதிர்ப்பு என்றால் என்ன? என்று கேட்கிறாரே, என்பதை எண்ணியபோதே, நெஞ்சம் "பகீர்’ என்றது! கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு - என்பார் களே; சுற்றியதன் பலன் சைதைவரைகூட எட்டவில்லையே! அதுவாகவன்றோ இது இருக்கிறது. செச்சே! இவ்வளவுதானா, நமது "பிரச்சாரம்‘? இந்தச் சிறைக் காவலருக்குக்கூடச் "சேதி’ எட்ட வில்லை; நாமோ, நாள் தவறாமல் பேசுகிறோம்! - என்று எண்ணி வெட்கப்பட்டேன். இந்தி - அதனை ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங்கள், இவைகளை விளக்குவது எளிதல்ல; அவ்வளவு மூடுபனி படர்ந்திருக்கக் கண்டேன்; எனவே, இயலாததை முயல வேண்டாமென்று தீர்மானித்து சிறைக்காவலர், எளிதிலே, புரிந்து கொள்ளக்கூடிய முறையில் பேசினேன். "சர்க்காருக்கு விரோதமான காரியம் செய்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.’’ என்று சொன்னேன்; அவர் விளக்கம் கேட்கவில்லை; புரிந்ததாகத் தெரிவித்தார் ஒரு பத்து நாட்களுக்குப் பிறகுதான், அவர், விளக்கம் பெற்றார். அது, இருபதாண்டுகளுக்கு முன்பு! இப்போது? ஒவ்வொரு அதிகாரியும் தமது மகனை "நமது வலையில்’ விழாது தடுத்திடவேண்டுமே என்றல்லவா, தவியாய்த் தவிக்கிறார்கள். நமது நோக்கம், எங்கும் நிறைநாதமாகி விட்டிருக்கும் நேரமல்லவா? எனினும், இருபதாண்டுகளுக்கு முன்பு, நான், எந்தச் சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் சிறை வைக்கப்பட்டேனோ, அதே இடத்தில், அதே 9ஆம் எண் கொட்டடியில் கொண்டு போய்ப் பூட்டப்பட்டேன்!! எனக்கு, சிரிப்பும் பீறிட்டுக்கொண்டு வந்தது, “சம்பத்து!’’ என்றேன்.”என்னண்ணா?’’ என்றான், "ஒரு வேடிக்கை பார். இப்படி, சப்-ஜெயிலிலும், ஜெயிலிலும் அடைபட்டுக் கிடந்த வர்கள், எம். எல். ஏ.-க்கள் ஆனார்கள், எம். பி.-க்கள் ஆனார்கள்; ஆனால் நாமோ, எம். எல். ஏ. எம். பி. - எல்லாம் ஆன பிறகும், சப்-ஜெயிலில் தள்ளப்பட்டிருக்கிறோம்’’ என்றேன், என்னுடன், இரண்டு எம். பி.-க்கள், - சம்பத்து - தர்மலிங்கம்; ஒரு டஜன் எம். எல். ஏ.-க்கள்! பல கவுன்சிலர்கள்! பல வணிகர்கள்! பல பட்டதாரிகள்! எல்லோரும், சப்-ஜெயிலில் தான்!! சப்-ஜெயிலில், சாதாரணக் கைதிகளாக! சாதாரணக் கைதி என்றால், சிறை விதியின்படி, 4 அவுன்சு அரிசி; 4 அவுன்சு கேழ்வரகு, 4 அவுன்சு காய்கறி! இவைகளைக் கேட்டுப் பெறவும், கடப்பைக் கல்லில், எரிச்சலூட்டும் கம்பளியை விரித்துப் படுக்கவும், ஒரு மூலையில் “மூத்திரச் சட்டி’ உடனிருக்க, உள்ளே உறங்கவும்,”உரிமை’பெற்றவர்கள்!! எம். எல். ஏ.-க்களுக்கு, சட்டசபை நடைபெறும் நாட்களில், "படிச் செலவு’ - ஒரு நாளைக்கு 12-ரூபாய் தருகிறார்கள்! எம். பி.-க்களுக்கு இதைவிட அதிகம்!! இவர்கள் யாவரும், சைதை சப்-ஜெயிலில், “மூத்திரச் சட்டியை’ மூலையில் வைத்துக்கொண்டு, கம்பளிமீது படுத்து உறங்கும்,”கைதிகள்’ ஆக்கப்பட்டனர். “கோடை’ கொளுத்தும்போது, சட்டசபையைச் சென்னையில் நடத்தினால், தாங்கமாட்டார்கள், எனவே”ஊட்டி’ சென்று கொலு இருக்கவேண்டுமென்று, காங்கிரஸ் சர்க்கார் எங்களிடம் பேசுகிறது. சைதைச் சிறையில், கேழ்வரகுக் கஞ்சியும், கம்பளியும், மண் சட்டியும், எங்களுக்கு! சென்னை மத்திய சிறையில், "வகுப்புகள்’ உண்டு. - நாங்கள் வகுப்பு பேதம் ஒழியவேண்டும் என்று கூறுகிறோம் அல்லவா! அதனால், இருப்பதிலேயே, எது கீழ்த்தர வகுப்போ, அதிலே தள்ளி, அழகு பார்த்தனர் போலும்! பரவாயில்லை! அதனால், எங்கள் இலட்சியம் பட்டுப் போய்விடாது, உடல் கெட்டாலும், உள்ளம் பழுதுபட்டு விடாது! கோடிக்கணக்கான மக்கள், இந்த "அளவு’ வாழ்க்கைத் தரமும் பெறமுடியாது வேதனைப்படும் நாடல்லவா இது! நாட்டினை இந்த நிலையில் வைத்திருக்கும் நாயகர்கள், எங்களை மிகக் கேவலமான வருப்பில் தள்ளியதில், ஆச்சரியப்படவோ, ஆயாசப்படவோ தேவையில்லைதான்! "சைதை‘ச் சிறையிலாவது இரவில், அறையில் சிறுநீர் கழித்திடச் "சட்டி’ தந்தனர்; அங்கு கொண்டு செல்லுமுன்னம், நாங்கள் அடையாறு போலீஸ் லாக்கப்பில் அல்லவா, தள்ளிப் பூட்டப்பட்டிருந்தோம். அங்கு, இந்தக் கம்பளியும் கிடையாது, சட்டியும் இல்லை; மேல் துண்டை உதறிப்போட்டுப் படுத்துக் கொண்டு உறங்கிறோம், என்றால்லவா, எண்ணிக்கொள்கிறீர்கள்; நாங்கள் எம். எல். ஏ.-க்கள், எம். பி.-க்கள் ஆயிற்றே, 17 இலட்சம் வாக்காளர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கழகத்தவ ராயிற்றே, எங்களை அந்தக் கேவலத்துக்கா, ஆளாகவிடுவார்கள்; மேல்துண்டுகளை ஒன்றுவிடாமல், எடுத்து வைத்துக் கொண்டனர்!! வெறும் கல்லிலேதான் படுத்தோம். அமைச்சர் பக்தவத்சலம், எங்களைச் சாடினார் - பொறுப் பற்றவர்கள், போக்கிரிகள், என்பதாகவெல்லாம் சீரழிவும் வன்செயலும் கண்டிக்க, நாம் தயங்கோம்; கயவர் செயலெல்லாம் கழகத்தைக் காய்வதற்குப் பயன்படுத்தல் முறையல்ல. எங்களை நாடு அறியும்; நல்லோர் எமது நோக்கம் அறிவர்; ஆனால், எங்களை இந்த ஆட்சியாளர் நடத்தியதை, நாடு அறியாததல்லவா? அதற்காக "அடையாறு’ சம்பவம் கூறினேன்!! வேறு, யாரையும் குறைகூற அல்ல. நடுசிநி! நா வறண்ட நிலையில், தர்மலிங்கம் எம். பி. தண்ணீர் கேட்டார்; தர இயலாத போலீஸ்காரர் கண்ணீரைச் சொரிந்தார்!! அடையாற்று லாக்கப்புக்கு, சைதை சப் - ஜெயில், "அரண்மனை’ போலத்தானே!! மூத்திரச் சட்டியாவது, தந்தார்கள்! லாக்கப்பில், அறையில் ஒரு மூலையைத்தான் காட்டினார்கள்! நாங்கள்தான், சட்டசபையில் உட்கார்ந்து சட்டங்கள் பற்றிப் பேசுகிறோம், திட்டங்களைக் குறித்து விவாதிக்கிறோம்!! எங்களைப் போட்டடைத்ததோ, சாதாரண கைதிகள் தங்கிடும், கொட்டடியில்தான். எனினும், அந்த 9ஆம் எண் கொட்டடியில் நாங்கள் தங்கி இருந்தோமே தவிர, எங்கள் எண்ணம் சிறகடித்துக்கொண்டு தமிழகத்தையே ஒரு சுற்றுச் சுற்றிவிட்டது! கழகம் அடைந்துள்ள வளர்ச்சியைக் கண்டறிய இயலாதார், எம்மைக் கேவலமாக நடத்துகின்றனர். ஆனால், எமது கொள்கையின் நேர்த்தியை அறிந்து கொண்டாடிப் போற்றுபவரின் தொகையோ, வளருகிறது, வளருகிறது, வளர்ந்த வண்ணம் இருக்கிறது - என்பதை எண்ணிடும்போதே, அந்த இருட்டறையே, ஒளிப்பிழம்பாகத் தெரிந்தது! தண்ணீர் கேட்கிறோம், தரமறுக்கிறார்கள். இவர்கள் அறியார், நாங்கள் சிறைப்பட்டோம் என்ற செய்தி கேட்டு, கண்ணீர் உகுத்தோரின் தொகையையும். பெற்றவர் காட்டிடும் பரிவினும் மிக்கதான அன்பு காட்டி, உறவுகாட்டி உற்சாகமூட்டி, நம்மை ஆதரிப்போர், "ஆலெனத் தழைத்து, அறுகுபோல வேர்விட்டு, வளர்க, வளர்க! என வாழ்த்துவோர் எண்ணற்றவர்’ என்பதனை அறிந்துகொள்ளும் எண்ணற்றவர்கள், கஞ்சிக் கலயத்தை எமது கரத்தினில் தருகின்றனர்; கேவலம் என்றா எண்ணிக் கவலைப்படுவோம்!! மனைதொறும் மனைதொறும் மகிழ்கிறார்கள், கழகம் தாழ்நிலை நீக்கிக்கொண்டு, தன்மானம்பெற்று வாழ்ந்திட உழைத்துவரும் நமது கழகத்தின் மாண்பு கண்டு! இதனை உணர்ந்து உவகை பூத்திடும் முகத்தினராகிப் பணியாற்றி வரும் நம்மைச் சிறையில், சீரழிவாக நடத்தினால், இரத்தம் சிறிது சுண்டிவிடும், உடல் சற்றே இளைத்துவிடும், வாலிபனுக்கும் வயோதிகம் மேலிடும், இஃதேயன்றி, வேறென்ன நட்டம்? சிறையிலே, தகுதிபற்றியும், பொது மக்களிடம் பெற்றுள்ள ஆதரவுபற்றியும், அலட்சியம் காட்டி, அருவருக்கத்தக்க விதத்தில் நடத்துவதனாலேயே, நாட்டிலே நமக்குக் கிடைத்துள்ள நன்மதிப்புக் குன்றிப் போகுமா, குறைந்து போகுமா! வரலாறும் வீரக்கதையும் அறியாதாரே அங்ஙனம் எண்ணுவர்; துளியேனும் அவை அறிந்தோர், அரைபடும் சந்தனம் மணத்தல்போல, சிறை தரும் இன்னல், கழகத்தின் புகழைத்தான் பெருக்கும் என்பதனை அறிந்து அகமகிழ்வர். அவ்விதத்தில், உடன்பிறந்தோரே! நீவிர், மகிழவேண்டும் என்பதற்கே, சிறையில் நாங்கள் பெற்ற சீரழிவைக் கூறினேன் - சிந்தை நொந்திடச் செய்யவுமல்ல. அதோ, உமது உள்ளம் வென்றாள், குத்திப் புடைத் தெடுக்கும் செந்நெல்லைப் பயிரிட்டோன், முழங்காலளவு சேற்றிலே இறங்கினான். இன்னல் முதலில் பிறகே கன்னல்! முத்து முத்தாக வியர்வை உதிர்த்திடும், முல்லை, வாழை பரப்பி, வண்ணச் சேலை புரள, வகைவகையான உண்டி நிரப்பி, நீ உண்ணும்போது கண்ணால் கொத்திடத்தானே போகிறாள்! முத்து முத்தாக வியர்வை - முதலில்! பிறகு, முத்தம், முத்தம், முத்தம் - உனக்கல்ல - பெற்றெடுத்த மகவுக்கு!! கொட்டடி, எண் 9இல் நாங்கள் தள்ளப்பட்டால் என்ன? அதனினும் கொடிய இருட்டறையில் அடைக்கப்பட்டால் தானென்ன, கருவில் உருவானபோது, கண்டது கதிரவனை அல்லவே! இருள் மயம்தானே! பிறந்த பிறகோ? அஃதே போலத் தான், கொட்டடியில் பூட்டி வைக்கப்படும் கொள்கை வீரர்கள், இன்னலைத் தழுவிக்கொள்கின்றனர்; ஈன்றெடுக்கப்போகும் செல்வத்தை எண்ணி மகிழ்கின்றனர் என்பதனைத்தான் நீவிர் அனைவரும் எண்ணுதல் வேண்டும். உறுதி வளரவேண்டும்! உழைக்கும் திறன் ஓங்கவேண்டும்! இடுக்கண் கண்டு அஞ்சாமை ஓங்கவும் வேண்டும்! இன்னல் செய்வோரை வெறுத்திடாத தூய்மை வேண்டும்! மறந்தும் தீச் செயலை தொடாதிருத்தல் வேண்டும் தமிழ் மரபென்பதனை மனதிலிருத்த வேண்டும்! தன்மானம் நாட்டினிலே தழைத்திட உழைக்கும்போது, நம் மானம் பறித்திடவே மாற்றார் செய்யும் கொடுமைதனைச் துச்சமென்று தள்ள வேண்டும்! இச்சகம் பேசிடினும், ஏசிடினும், இடித்திடினும், இகழ்ந்திடினும், மனம் உடைந்திடாமல், என் நாடு பொன்னாடு, இஃதோ உற்றவர்க்கு அடிமைக் காடு? என் முன்னோர் மாப்புகழை மறந்து நானும், நத்திப் பிழைத்திடவோ, மற்றென்ன எத்திக்கும் கொடி கட்டி, எவருக்கும் திறை கட்டா, ஏற்றமிகு தமிழ் இனத்தில் உதித்தேன் அலனோ? என்றெண்ணி, இதயம் தன்னில் ஏற்புடைக் கொள்கை கொண்டு, உழைத்திடவே வேண்டும்! நாடு பல உள, நாமறிவோம்! காடும் மேடும் கொண்டன வாய், கழனி நலமற்றதுவாய், பொன்னும் மணியும் காணாது, கரும்பும் இரும்பும் கிடைக்காது, கனல் கக்கும் மலையும் நில நடுக்கமும் கொண்டதாய், உள்ள நாடுகளும் உள்ளன. பாறைமீது தூவிய விதையாகும், அத்தகு நாடுகளிலே, பாட்டாளி தரும் உழைப்பு என்று எண்ணத்தக்க விதத்தில், இயற்கை வளமற்று உள்ள நாடுகள் பல. நாமிருக்கும் நாடு அஃதல்ல! இயற்கை கொஞ்சும் எழிலகம்! இங்கு இல்லாத பொருள் இல்லை; எவர்க்கும் ஈந்திடத் தக்க அளவு கண்டிடலாம். இந்நாடதனில், காடு காட்டும் கனிவுங்கூட பல்வேறு நாடுகளில் காண இயலாதென்பது கட்டுக் கதை அல்ல; கணித்துரைப்போர் கூறுவது? உடன்பிறந்தோரே! இத்தகு திருநாட்டில் வந்துதித்தோம், இருந்து வருகிறோம்; நாமிருக்கும் நாடு நமதல்ல என்ற நஞ்சினும் கொடியதோர் நிலை நம்மைப் பிடித்தாட்டுகிறது. ஏடெல்லாம், நம் நாட்டின் புகழ் பாடுகின்றன! புலவர் தரும் சொல்லோவியத்தில், பூம்புகார் காணு கின்றோம், பூரிப்படைகின்றோம்; அல்லங்காடி செல்கின்றோம். ஆடலரங்கம் நுழைகின்றோம்; சுங்கம் கொள்வார் காண்கின் றோம், அங்கம் தங்கம் என்று அகமகிழ்ந்து கூறிடத்தக்க அரிவையர் தெரிகின்றனர்! பழமுதிர் சோலைகள் - பாங்கான வயல்கள்! களிறு உராயும் சந்தனக் காடுகள்! வாளை துள்ளும் வயல்கள்! தேன்சொரியும் தேமாக்கனிச் சாலைகள்! சிற்பக் கலையின் சிறப்புகள்! அம்மவோ! தமிழகத்தை இந்தப் “பொல்லாத’ புலவர்கள் காட்டும்போது, தெரிந்திடும் திருவுடன், நம் கண்முன் தோன்றிடும் தமிழகத்தின்”உருவினை’ ஒப்பிட்டுப் பார்க்கும்போது உள்ளம் வெதும்பாதிருத்தல் இயலுமோ? எலும்புருக்கிக்கு ஆளாகி நாம் காணும்போதே இளமையும் எழிலும், குன்றியும் குறைந்தும் போகும், மனை யாட்டியையும், மணக்கோலத்துடன் காட்சி தரும் அம்மங்கை நல்லாளின் ஓவியத்தையும் மாறிமாறிப் பார்த்திடும் மணவாளன் மனம் என்ன பாடுபடும்! நாட்டுப்பற்றுடையார், இன்று பெறும் வேதனை அத்திறத்தது; ஐயமில்லை. ஊரில் இருக்கும் துள்ளு நடையுடன் கூடிய ஆண் குருவி, கர்ப்பம் முதிர்ந்திருக்கும் பெண் குருவிக்குப் பிரசவிக்கும் இடம் ஏற்பாடு செய்வதற்காக, இனிமை பொருந்திய கரும்பின் வெள்ளிய பூவைக் கோதி எடுக்கிறதாம்!! புலவர் கூறுகிறார்! ஊர்ச் சிறப்பு, ஊராள்வோன் சிறப்பு, வீரம் ஈரம், காதல் கவிதை, வளம் கொடை, அறம் அன்பு, போர் முறை பொருள் தேடுமுறை எனும் எத்துறை பற்றியதாயினும், புலவர் தீட்டிடும் ஓவியம் காண்போர் உள்ளத்தைத் தொடுவதாகவே இருந்திடக் காண்கிறோம். வளம் நிறைந்து, வாழ்க்கைத் தரம் சிறந்து, ஆட்சி முறையில் அன்பும் அறமும் தழைத்து வீடெல்லாம் மகிழ்ச்சிக்கூடங்களாகி இருந்த திருநாடு, நம்முடையது. இங்கு, யானைகொண்டு போரடித்தனர்; முத்துக்கொண்டு கழலாடினர், சந்தனம்கொண்டு நெல் குத்தினர்; தந்தம்கொண்டு "இருக்கை’ அமைத்தனர்; கரும்புகொண்டு கூரை வேய்ந்தனர்; அறிவுகொண்டு ஆண்டு வந்தனர்; ஆற்றல் காட்டி வெற்றி கண்டனர்; புலவரைப் போற்றிப் பெருமைபெற்றனர். அத்தகைய நாடு, இன்று பழுதுபட்ட சித்திரமோ, பழங் கதையோ என்று நினைத்திடத்தக்க கோலம்கொண்டுளது; மக்களிற் பெரும் பகுதியினர் ஓலமிட்டு உழல்கின்றனர்; ஆட்சி யாளர், "ஏனென்றால், சிறைவாசம், இம்மென்றால் வனவாசம்’ என்பார்களே, அந்நிலைக்கு வேகமாகத் தாவிக் குதிக்கின்றனர். இந்நிலை மாற, நமக்கெனத் தமிழ்ப் பண்புடன் கூடியதோர் அரசுவேண்டும் என்கிறோம்; ஆர்ப்பரிக்கின்றனர், அரசுக் கட்டிலில் அமர்ந்திட அனுமதிக்கப்பட்டுள்ள அடிவருடிகள். கிடைக்கும் இன்பத்தைக்கொண்டு, மகிழ்ந்திருக்கும் இத் திருநாளன்று, நாடு வாழவும் கேடுதீரவும் பாடுபடும், நமது கழகத்தவர் அனைவருக்கும், அறிவாற்றல் வளரவேண்டும் என்ற வாழ்த்துரையை வழங்குவோமாக! அறிவாற்றல் மிகுந்து, அது மிகுந்தோர் தொகை வளர்ந்து, அதற்கேற்ப அறமும் திறமும் வளர்ந்து நமது குறிக்கோள் ஈடேறி னால். . . .! பாலை சோலையாகும், பைங்கிளிகள் கொஞ்சும், பங்கப் பழனத்து உழும் உழவர் பலவின் கனி பறித்து, தெங்கு திருகிடும் மந்தியைச் சாடுவர்; மலரை வாளை தாக்கி, தேனினைச் சொரியச் செய்யும்; தேமதுரத் தமிழோசை கேட்டுப் பல தேயத்தார், தருக! தமிழ்! தருக! என்று, வருவர்! இல்லாமை இல்லாது ஒழியும், இடுக்கண் எனில், என்ன என்று கேட்பர் மக்கள். தொழிலெலாம் துலங்கும், தொல்லை அகலும்! பகலென ஒளி பரவி, பேத இருளினைப் போக்கி வைக்கும், அறநெறி நிலைக்கும், அன்பு அரசோச்சும், இன்பநிலை எவ்வெவர்க்கும்; இதிலே அட்டியில்லை என்று எடுத்தியம்பும் காலம் காண்போம். மின்னிடும் பொன்னினைக் காண, எலும்பு நொறுங்குமோ என்பது குறித்து எண்ணாது, உழைப்பாளி குடைந்து சென்றிடக் காண்கிறோம்! சுறாவும் சுழலும் கண்டு அஞ்சாது, மூழ்கித்தான், முத்துக்கொணர்கின்றனர். அவரையும் துவரையும், இஞ்சியும் மஞ்சளும், வாழையும் தெங்கும், வரகும் தினையும், சேமையும் பிறவும் கிடக்கும் இடம் பார்த்து எடுத்து வரப்பட்டன அல்ல! நிலம் திருத்தி, நீர் பாய்ச்சி, காத்து வளர்த்த பின்பு, கண்டோர் கை சிக்கிடாமல், விழிப்பாக இருந்து, பின்னர், கொண்டு வரப்பட்டவை! படர்வனவும், வளர்வனவும்கூட, உழைப்பின் துணை பெற்றாகவேண்டும் எனில், பட்ட மரம் துளிர்த்திடும் பான்மை போல, எந்தையர் நாட்டிலே இன்றுள்ள இழிநிலைபோக்கி, இடர்களை நீக்கி, மிடியினைத் தாக்கி, சுடர்தனைக் காண வேண்டுமாயின், நாம் ஒவ்வொருவரும், எத்துணை அளவுக்குப் பாடுபடவேண்டும், தொல்லைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதனை எண்ணித் துணிவுகொள்ள வேண்டாமோ? அதனை எண்ணிடும்போது, கொட்டடி ஒன்பதும், அதிலே நாங்கள் பெற்ற கொசுக்கடியும், சகதியும், சட்டியும் அவை பரப்பிய கெடுநாற்றமும் அமுலும் அதட்டலும், அவை தரும் அல்லலும் அருவருப்பும், ஒரு பொருட்டாகா!! எனவே, கடினமான உழைப்புக்கு, கண்ணியமிக்க தொண்டினுக்கு, கண்டோர் வியக்கும் கட்டுப்பாடுணர்ச்சிக்கு, ஏற்றவர்களாக, நாம் ஒவ்வொருவரும் ஆகவேண்டும், திருநாள் தரும் தித்திப்பு இந்தப் பயனை நாம் பெற உதவவேண்டும். சுற்றிலும் காணும், பொருள் ஒவ்வொன்றும் வினையின் விளைவு - மதியுடன் கலந்த வினையின் விளைவு! உழைத்துப் பெற்றது! சுவை கண்டு மயங்கி, பொருள் வந்த விதம் மறத்த லாகாது! மறந்திட மாட்டீர்!! மரபறிவீர், நானறிவேன்!! எனவே, இன்று மகிழ்ந்திருப்பீர், எனினும் நாட்டுக் குழைக்கும் கடமையினை மறவாதீர்! வீட்டிலே இன்று காணும் பாட்டொலி, வளைகூட்டொலி, பேச்சொலி, "இச்’சொலி இவை யாவும் நலிவில்லை என்று நாட்டிலோர் நல்லொலி எழ வேண்டும். அதற்கான செயலினிலே புகவேண்டும், அச்செயலில் அறமும் திறமும் இணைந்திருத்தல்வேண்டும் என்ற கருத்தினைக் கெடுத்திட அல்ல; வளர்த்திட! - என்பதனை, காணும் சுவை யுடனே, நான் அளிக்கும் தேனெனவே கலந்து உண்பீர்!! நாட்டுக்கு நாம் உழைத்து, பாட்டு மொழியாம் தமிழ் பாரெல்லாம் மணம் பரப்பும் பாங்கு கண்டு பழம் ஏடதனில் பார்த்திடும் ஓர் சீரும் சீலமும் துலங்கிடவும் விளங்கிடவும், காண்பதுதான் திருநாளிற் திருநாள் - தீதெல்லாம் தீய்ந்தொழிந்த திருநாள்! அதற்கான ஆவலை எழச்செய்ய வருவதுதான் ஆண்டுக்கு ஒரு நாள், ஆன்றோர் காலந்தொட்டு அகமகிழ்வுதானளிக்கும் அறுவடைத் திருநாள் பொங்கற் புது நாள்!! இதனை உமக்குக் கூறிடவும், இவ்வாண்டு இசைவுபெற இயலாதோ என்றெண்ணி, இருட்டறையில், கொட்டடியில், முடங்கிக் கிடந்திட்டேன். உமது விருப்பம் உணர்ந்தாற்போல், ஊராளும் பேறு பெற்றோர் உனை விடுத்தோம்! என்றல்ல, வெளியே சென்றிரு, விளிப்போம், வந்து சேர்! என்று கூறியே எனை அனுப்பினர்! வந்தேன் - செந்தேனென இனித்திடும் திரு நாளில், நலமெலாம் பெருக! என்று என் நல்லெண்ணந்தனைத் தந்தேன். இருந்துவிட்டு வந்த எண் ஒன்பது கொட்டடியைக் காட்டினேன் - மீண்டும் அஃதோ, வேறோ, நானறியேன்! எங்கு எனைக் கொண்டு செல, இன்று ஆட்சியிலுளார் எண்ணம் கொண்டிருப்பினும், என்றென்றும், உமது நெஞ்சில் எனக்கோர் இடமுண்டன்றோ! இச்சிறப்புப் பெற்ற பின்னர், இருட்டோ இடரோ, இழிவோ பழியோ எது வந்து தாக்கிடில், என், எதையுந் தாங்கும் இதயம் உண்டு, என்னினும் ஆற்றல்மிக்கார் எண்ணற்றோர் உண்டு. எனவே, நாடு நன்னிலை அடையப் போவது உறுதி! நமது இலட்சியம் வெற்றிபெறப்போவது திண்ணம். பால் பொங்கும்! பொங்கிட, தழலிட விறகுவேண்டும்!! நாட்டிலே நல்லாட்சி எனும் பால் பொங்கிட, தழலில் நாம் விறகாக்கப்பட்டால், அதனினும் சிறந்ததோர் பேறு வேறில்லை அல்லவா!! சிறை புகுதலும் அங்குச் சீரழிவு காணுதலும், ஒவ்வொரு நாட்டு விடுதலைக்காகப் பலர் பட்ட இன்னலுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, மிகச் சாதாரணமானவை! ஆனால், இவைகளைத் தாங்கித் தாங்கி, நெஞ்சுரம் கொண்டு, பின்னர்க் காவியம் புனைவோனும் ஓவியம் தீட்டு வோனும், கருத்திலே கொண்டிடத்தக்க, "வீரத் தியாகி’ ஆகிடும் வாய்ப்பைப்பெறவேண்டும். கேட்டுப்பாருங்கள், உழவனை! முளைவிட்டு, பச்சைப் பசேலென்று வளர்ந்து, முனையில் கதிர் காட்டி, குலுங்கிக் கூத்தாடி, முற்றிச் சாய்ந்ததுதான், இன்று முனை முறியா அரிசியாகி, ஆவின் பாலுடன் கருப்பஞ் சாற்றுடன், அடுக்களை ஏறி, உமது அன்புக்குரிய அல்லியோ அஞ்சுகமோ, அன்னமோ, சொர்ணமோ, மலர்க்கொடியோ செல்வியோ "ஒரே ஒரு பிடி! என் கையால்! இந்த ஒரு முறை மட்டும்’’ என்று கொஞ்சிப் பேசி, உமக்கு வட்டிக்கும் பொங்கலாகிறது! சிறுவிரலாற் துழாவி, வாயிலிட்டு மீண்டும் வழித்தெடுத்து இலையிலிட்டதை வாள் நுதலாள் கண் காட்ட எடுத்துண்ணு கின்றீர்; அல்லது மீண்டும் செல்வத்திற்கே ஊட்டுகின்றீர்! நமக்குப் பிறகு இங்கு வாழ்ந்திடும் வாய்ப்பினைப் பெற இருக்கும், வழித்தோன்றல்களுக்கு, முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டி ஊட்டினால் மட்டும் போதாது, நாவுக்கு மட்டுமே சுவை கிடைக்கும்; நாட்டுக்கோர் நல்ல நிலை நாம் கண்டு தந்திட்டால், வீட்டுக்கு வீடு, விழாக்கோலம், என்றென்றும், அறிந்திடுவீர் இவ்வுண்மையினை, அதற்கேற்பச் செயல்படுவீர்! இன்றல்ல! இன்று, திருநாள்! காண, களிக்க, பேண பேருவகைகொள்ள, நாணம்கொண்டாளின் நல்லிதழில் ஒளி ஏற்ற, வீணை மொழி கேட்டு வியர்த்திருக்க, பாணன் துணை தேடாமல் பாவையரின் பரிவுபெற, இன்புற்றிருக்க ஏற்ற நாள்! இந்நாளில், நீவிர்கொள்ளும் இன்பம், எந்நாளும் எங்கெங்கும் இருந்திடத்தக்கதான, "திருநாடு’ நாம் காண்போம், திறமெல்லாம் அதற்களிப்போம் என்ற உறுதிபெற்று, எழுவீர் விழா முடித்து. விழா நாளன்று, உடன்பிறந்தோரே! என் மகிழ்ச்சியை, நல்லெண்ணத்தை அளிக்கிறேன்; பெறுவதிலே நீவிர் அடையும் மகிழ்ச்சியினும், தருவதிலே நான் பெறும் பெருமிதம் அதிகம். அண்ணன், 14-1-1958 இன்ப நாளிது! இதயம் பாடுது ! ஆரியம் நுழையா அறிவுத் திருநாள் ஆடிக் காட்டிட ஓர் அருங்காட்சி புறநானூற்றுப் புலவர்கள் வரிசை சுந்தரர் காட்டும் இயற்கைக் காட்சி தம்பி! திருநாளாம் திருநாள்! திருநாள் என்ன வேண்டிக் கிடக்கிறது நமக்கு? துக்கம் துளைக்கிறது, வேதனை கொட்டு கிறது, இந்நிலையில், மனையில் மகிழ்ச்சி மலரும் வகைபற்றி எழுதுதல்தான் இயலுமா? - என்று எண்ணிடும் நிலையில் உள்ளேன் என்பதை அறிந்துள்ள தம்பி, வெதும்பித்தான் கிடக்கும் அண்ணன் மனம், விழா நாளன்று வழங்கும் வகை வகையான களிப்பூட்டும் கருத்துக்களை இம்முறை பெறப் போவதில்லை என்று நிச்சயம் தீர்மானித்துத்தான் இருந்திடுவாய் என்பதை அறிவேன்; அடிகள் கிட்டிப் போட்டுப் போட்டு, கடாவிக் கடாவி, மனநிலையை விளக்கிடும் மடலேனும் தீட்டித் தருக என்று பணிந்து, எனை வேலை வாங்குகிறார். ஆம்! தம்பி! ஆறாத்துயர் தாக்கிய நிலையால், ஆண்டுக்கோர் முறை தமிழர்தம் இல்லம் தங்கி இன்புறச் செய்து, இல்லாமை, இயலாமை என்பனபோன்ற இடுக்கண்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை அளித்திடும், விழாக்கோலம்கூட, எனக்கு வேம்பாகிக் கிடக்கிறது. ஆறுதல் பெறும் வழி வந்துற்ற அல்லலை எண்ணி எண்ணி மனம் அழிந்துபடுதலன்று, மற்றையோரின் மகிழ்ச்சி கண்டு மனநிறைவு பெறுதலும், மற்றையோருக்கு மகிழ்வு அளிப்பதன்மூலம் மனநிம்மதி பெறுவதுமே, சாலச் சிறந்த முறை என்பதை உணர்ந்திட முடிகிறது. ஒருபுறம், வெதும்பிய நிலை, மற்றோர் புறம், தமிழர் தம் மனைதொறும் மனைதொறும் அரும்பி அழகளித்து மலர்ந்து மணம் பரப்பிடத்தக்க மாண்புமிகு திருநாள் குறித்தெழும் எண்ணங்கள்! சதங்கையும் கிண்கிணியும், கிளிமொழியும், குழலிசையும், இல்லங்களில் எழவேண்டும்; எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்; எழில் பூத்திடவேண்டும், ஏற்றம் கண்டிடல்வேண்டும், எண்ணத்திலே புது வண்ணங்கள் சேர்ந்திடவேண்டும்; எக்குறையும் இலாதொழியவேண்டும், பட்ட பாட்டின் பலன் நுகரவேண்டும், அதனாலாய பண்புபெற்று அகமகிழவேண்டும்; மகவு கண்டு தாயும், மானைக் கண்டு மணாளனும், அக்காட்சி கண்டு பெற்றோரும், களிப்படைதல்வேண்டும்; கனி மொழியும் கருணை மொழியும் விழியும், தோழமையும் எங்கும் வழிந்திடல் வேண்டும்; புன்னகை பொலிவளிக்க, பூவிதழ் "இச்சொலிக்க’, புத்தாடை அழகளிக்க பொங்கலோ! பொங்கல்! என்று மனை யுளார் மகிழ்ந்தொலிக்க, ஊரெல்லாம் உள்ளமெல்லாம், உவகை பொங்கிடவேண்டும். என் உள்ளத்திலே சுமை ஏறி நெரித்திடு வதால், எங்கும் பொங்கிடவேண்டும் என்று யான் விழையும் நல்லெண்ணம் எங்ஙனம் பிறவாதிருக்கும்; அஃது அடாதது மட்டுமன்று, அறமுமாகாதன்றோ! எனவே, என்னை வாட்டிய வேதனையை, எங்கும் எழுந்திடும் இன்னிசைகொண்டு, வீழ்த்தத் துணிவுகொண்டேன், விழாவில் பங்கேற்க முன்வந்தேன். இஃதென்ன புதுமையோ! அன்று, அன்று! கரும்பு சுமந்து வந்து, இரும்பு மனம் படைத்த பண்ணையாரிடம் தந்துவிட்டு, வழிந்திடும் வியர்வையைத் துடைத்திடக் கந்தலெடுத்து, அதிலுள்ள பொத்தல் கண்டு மெத்தவும் வருத்தப்பட்ட நிலையில் நிற்கிறானே, உழவன், உழைத்தவன், உருக்குலைந்த உத்தமன், ஏரடித்துச் சீரளித்தோன், எவர் வாழ்வுக்கும் ஏற்றம் தந்தோன், அவனுக்குக் காய்ச்சலால், வாய்க்கசப்பு! எனின், அவனளித்திடும் கரும்பு? இனிப்பு! இனிப்புத்தானே! அவனுக்கும் விழாதான்! நிலைமையை ஆய்ந்தறிந்தால் அவன் மனத்தில் என்னென்ன எண்ணமெலாமோ நெளியும்; நெரித்த புருவத்தினனாவான், நீர் சொரியும் கண்ணினனாவான்! ஆனால், அந்த நல்லோன், இன்று விழா! திருநாள்; அறுவடை அளித்திடும் அகமகிழ்வு அனைவருக்கும் கிடைத்திடும் இன்ப நாள்! இன்று இன்னலை எண்ணிடல் முறையல்ல, என் நிலை யாது? என்று உசாவிடல் சரியல்ல; நாடு விழக்கோலம் பூண்டிடும் வேளை இது, நானோர் களங்கம் தேடிடல் ஆகாது; என்றன்றோ எண்ணி, அடிமைப் படுத்திக் கொடுமை புரிந்து, சுரண்டிச் சுக்கு நூறாக்கி, ஏய்த்து ஏமாளியாக்கி, மிரட்டி வேலை வாங்கி மேனாமினுக்கியாகும் பண்ணை முதலாளிகளைக் கண்டும், துளியும் காயாமல், முகத்திலே முறுவலை வருவித்துக் காட்டுகிறான், பேச்சிலே சுவை கூட்டுகிறான். பேழையுடையானுக்கு, ஏழை தானெனினும் எடுத்தளிக்கிறான் இனிமை. அவன்போன்றோர், காட்டிடும் அறநெறியும் அமைதியும், பொறையுடைமையும் பொறுப் புணர்ச்சியுமன்றோ, நாடு அதிரும் பேரிடிகள் ஏற்படாமலிருப்ப தற்குக் காரணம்? அந்த நல்லான், தொல்லைகளைத் தாங்கிக் கொள்ளுவது தெரிந்த பிறகு, நான், மனதிலே கப்பிக்கொண்ட துயரத்தைத் துரத்திவிட்டுக் கடமையில் களிப்புக் காண முனைவதா, கடினம்? இல்லை, இல்லை! என்னரும் தம்பி! பொங்குக இன்பம்! தங்குக மனைதோறும்! என்ற என் நல்லுரை தந்து மகிழ்கிறேன். பெருக! மகிழ்க! பெருகிடும் மகிழ்ச்சியில் தருக என் பங்கு! கொள்வோம், கொடுப்போம், கொளக் கொளக் குறையாது, கொடுத்திடவும் குறையாது நல்லுரை, தருவோர் பெறுவோர் இருபாலர்க்கும் இன்பம் சேர்த்திடும், தன்மை பெற்றது. தீதான கருத்துகளும், தீயோரின் கூட்டுறவும் திருவழிக்கும் போக்குகளும்கொண்டவனாக, விழாக்கள், விரதங்கள், வீணாட்டம், வெறிச் செயல்கள் அடுக்கடுக்காய்ப் பெற்றிருந் தோம், அனைத்தையும் விட்டொழித்தோம். அசுரன் அவன் அழிந்துபட்டான், அப்பம் சுட்டுண்போம், ஆகாசவாணிக்கு அக்காள் திருமணமாம், ஆமைவடை பாயசம் அடுக்களையில் ஆக்கிடுவோம், வனவாசம் நீங்கிய நாள் வந்துற்ற காரணத்தால், விலைவாசி பாராமல், வெள்ளியால் விளக்களிப்போம், இரவெல்லாம் கண்விழித்து இறையவனின் அருள்பெறுவோம், என்றெல்லாம் பல கூறி, ஏதேதோ விழாக் கண்டார். எல்லாம் எத்தர்கள் பித்தர்களை ஏய்த்திடும் ஏற்பாடென்று எடுத்தியம்ப, எழுந்தது அறிவியக்கம். அவ்வியக்கம் நம் மனத்தின் நீண்டநாள் மயக்கமதை மாய்த்தொழித்துவிட்டதாலே, நாமே நமை அறிந்தோம். நமது ஏதுவென உணர்ந்தோம், நாடிது அந்நாளில் நானிலம் வியந்திட வாழ்ந்து, நல்லன பல கண்டு நயந்தோர்க் கெலாம் அளித்து, அறிவுத் தெளிவுடனே, ஆண்மை அறம் கூட்டி அரசோச்சி வாழ்ந்திட்ட அருங்காதையாவும் கண்டோம். அறுவடை விழாவாக, அனைவர்க்கும் அகமகிழ்வு தருவதாக அமைந்திட்ட அரும் நாள், தமிழர் திருநாள், பொங்கற் புதுநாள்; அந்நாளில், அடிபணியச் செய்து அடிமடியில் கையிட ஆரியம் நுழைவதில்லை; நெல்லும், கரும்பும், இஞ்சியும், மஞ்சளும், இச்சையைக் கிளறிவிடும் பச்சைக் காய்கறியும், பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும், காயும் கனியாகும், தொட்டால் துளிர்த்துவிடும், எடுத்தளித்தால் இனிமை தரும் கரம்பட்டால் மணம் சேரம் என்றெல்லாம் எண்ணிடச் செய்யும், இனியாளின் இன்மொழியும், இன்னமுமா உங்கள் ஆட்சி? இதோ வந்தேன் இளவரசன் என்று கூறாமற் கூறிடும் குழந்தைதரும் மழலையும் பல்போனால் சொல்தான் போகும், பரிவு காட்ட இயலாதோ என்றுரைக்கும் வகையான முதியோரின் பொக்கை வாய்ச் சிரிப்பும், இவையன்றோ ஏராளம், எனவேதான் பொங்கற் புதுநாளை, தமிழர் திருநாளைப் போற்றுகிறோம் மனமார. அந்தத் திருநாளில் அறிவுசால் என் தம்பி! அகமகிழ்தல் போன்றே நம் எண்ணம் வளர்தல்வேண்டும். நாடுபற்றி எண்ணிடவும், நானிலத்தின் நிலை குறித்து அறிந்திடவும், நாம் கொண்ட குறிக்கோளில் வெற்றி கண்டிட செய்யத்தக்கன பற்றிய வழி வகைபற்றிக் கலந்துரையாடிடவும், கருத்தில் இதுபற்றிக் கவலையற்றிருப்போர்க்குக் “கதை கதையாய்’ தமிழ் வாழ்வை எடுத்தியம்பி நிற்பதற்கும் இந்நாள் அமைந்ததாகும். வானிலுறை தேவர் குழாம், வடித்தெடுப்பது எப்பானம்? வந்திடும் கலாம் பலவும் வார்குழலால் என்பாரே. கலாம் விளைத்த கடவுளர் யார்? படுத்துறங்கும் பகவனுக்கு, பாரழிக்கும் தேவனுக்கும் இருக்கும் உறவு என்ன? அங்குச் செல்லும் வழி எது? சென்றோர் தொகை என்ன? என்றெல்லாம் கதை பேசும்”பண்டிகை’யல்ல. பரம்படித்துப் பதப்படுத்தி, உழுது, நீர் பாய்ச்சி, விதைத்து முளை வளர்த்து, களை பறித்து, கதிர் கண்டு, அறுத்து அவித்தெடுக்கும் அருங்கலைக்கு விழாவெடுக்கும் அறிவுத் திருநாள், பொங்கற் புதுநாள். அந்த நாளில், வாளும் வேலும், போதும், நாளும் கோளும் என் செய்யும்? கரியும், பரியும் இருப்பின், புகையும் புல்லருரையும் எற்றுக்கு? என்று அறிந்து வீறென நடைபோட்டு, களத்திலே வீரக்கலாபம் விரித்தாடி, வெற்றிக் கழலொலியால் வளையொலி யாள் காதலினைக் காணிக்கையாகப்பெற்ற, வீரர் கோட்டமாக, நம் நாடு விளங்கிய வரலாறு நினைவிலே வந்து நிற்கவேண்டும்; நெஞ்சிலே தேனூறும்! நம்மவர் அங்ஙனம் இருந்தகாலை, பாரிலே மற்றையோர், மந்தை முறையில் வாழ்ந்தனராம். நொந்து கிடந்தனராம், மொழி வளமே கிடையாதாம். வரைமுறை அறியாராம், அறிவளிக்கும் நூலின்றி, அறம் காக்கும் அரசின்றி, வாழ்வளிக்கும் வகையின்றி, நாடே காடாக, நலிந்தனராம். கடலில் நம் கலமாம்! கடாரம் நம் காலடியாம்! பொன்னும் மணியும் எங்கெங்குமாம்! போர் முரசு கேட்டால் பேரரசுகள் நடுக்குறுமாம்! கவிதை புனைவாராம் புலவர் குழாம், காவலர் தருவாராம் கனகமணி! அகமும்புறமும் கண்டவர் யார்? அவனி புகழ வாழ்ந்தோர் யார்? என்றால், அவர்தாம் தமிழர், என்று எவரும் கூறும் நிலைபெற்று, நம்மவர் வாழ்ந்தார் சீரோடு, நாம் அவர் வழிவழி, மறத்தலாமோ!! இவரிடம் உளது என்? இல்லாமை, போதாமை, இயலாமை! இருட்டறிவு! குலபேதம், மதபேதம், குருட்டறிவு, அடிமை நிலை, அச்ச நிலை, நச்சரவுபோன்ற நானாவிதமான பிச்சு நினைப்புகள், பேதைமை! அரசிழந்தார், வளமிழந்தார், கொத்தடிமை செய்தேதான் சாகாதிருக்கின்றார்! - என்றெல்லாம் இன்று நமை எவரும் கூறிடலாம். கோபம் கொப்புளிக்கும். ஆவது என்? உண்மை நிலைதான் அஃது? உலகறியும், நம் உள்ளம் அறியும்! ஊமையர்தாமறிவர்! இந்நாளில் இந்நிலை; அந்நாளை அறிந்திடவோர் வாய்ப்புமின்றி இருந்த நிலை மாறிற்று, விழி பெற்றோம், வழி காண விழைகின்றோம்; பிழை தோன்றும்; கவலையில்லை; மனத்திலோர் உறுதி உண்டேல் வழி காண்போம், வெற்றி காண்போம்! நாம் காணும் செந்நெல்தனை அவன் கண்டான்; உழுமுன் அத்தனையும் காடு மேடு! மான் கண்டு மயங்கும் தன்மை தான்கொண்ட விழியின் நல்லாள், தேன் தந்தாள், அதைச் சேர்த்திடச் சென்றோன், மலை சென்றான், பிலம் சென்றான், மட்டற்ற இன்னல்பட்டான், கொட்டிய ஈக்கள் உண்டு, கொணர்ந்தான் தேன். அறுந்தது நூல்! அவிழ்ந்தது கட்டு! இருண்டது கண்! அலுத்தது உடலம்! நெய்தான் நேர்த்தியாக, செம்பொற் சித்திரம் அழகளிக்க அதை உடுத்தாள்! அருகிற் சென்று அன்னமே என்றழைக்க, அவள்பெற்ற செல்வமோ வழியும் விட்டான்!! பொங்கற் புதுநாளன்று நம் கண்முன் தோன்றும் பொரு ளெலாம், நமக்குத் தரும் பாடம், அருமை மிகுந்ததொன்றாகும். மனையிற்பெறும் அந்தப் பாடம், நமது மனத்தில் உறையும் குறிக்கோளை நாம் அடைய, உதவும் வகையானதாகவேண்டும். அதற்கு, இன்பம் எனது இல்லத்தில் இருந்தால் போதும் என்ற தன்னலம் தகர்த்தொழித்து, நாடு வாழ, நாம் வாழ்தல் வேண்டும், கூடி வாழ்வதே கேடில் வாழ்க்கை என்ற பொது நெறி பூத்திடவேண்டும்; நாடு வாழ்ந்திட நாம் ஆற்றவேண்டிய பணிகள் யாவை என்ற கேள்வி எழும்; அதற்குக் கிடைத்திடும் விடை, நம்மை வீரராக்கும் விழா, விலாப்புடைக்கத் தின்பதற்கு அல்ல; வீர உள்ளம் பெறுதற்கும் வழிகோலுவதாதல்வேண்டும்; அஃது இல்லையெனில், மேய்ந்திடும் ஆனிரையும், மானின் குருதி குடித்த வேங்கையும் பிணத்தைக் கொத்தித் தின்றிடும் பெரும் பறவையும் வயிறு நிரம்பியபோதெல்லாம், விழாக் கொண்டாடு வதாகத்தானே கூறவேண்டும்! மிருகங்கள்போலன்றி, மக்கள் “திருநாள்’ எனத் தனி நாள்களைக் கொண்டாடுவது, விருந்துக்காக அல்ல, அந்த நாள்களை, நற்கருத்துக்கள் பெறுவதற்கான வாய்ப்புகளாக்கிக்கொள்ளும் நோக்கத்துக்காகத்தான். தமிழர், பொங்கற் புதுநாளை இம்முறையிலேதான், சில ஆண்டுகளாக வேனும் கொண்டாடி வருகின்றனர். அவர்க்கு அந்த நோக்கம் கிடைத்திடச் செய்த பணியில், நாம் பங்குபெற்றவர் என்ற முறையில் நமக்கு பெருமை நிச்சயம் உண்டு; உரைத்திடார் யாரும் இதுபோது; உலகு கூறும்; நாம் வாகை சூடிய பின்னர்! அதோ ஆடிப்பாடிடும் நம் அருந்தங்கை ஆற்றலரசனைப்பெற்று, ஆண் மகவு ஈன்றெடுத்து,”ஆளப் பிறந்தவனே! என் ஆருயிரே கண்வளராய்’’ என்று தாலாட்டுப் பாடப்போகிறாள். சில ஆண்டுகள் சென்றபின் என்று கூறட்டும், கோல் ஊன்றி நடந்திடும் நம் குடும்பப் பெரியார்; "கெக்கெக்கே! வெவ்வெவ்வே!’’ என்று கேலி செய்து, கோணல் நடை காட்டி நாணிடுவாள் நம் செல்வி! மாற்றார் என்றுரைத்து, நமைத் தூற்றிடும் தூயோரெல் லாம், அவள் போன்றாரே! அடையா முன்னம், அடைவோம் என்று அறியார்! அறியச் சொல்வோரை அறைவார்! அஃது உலக வழக்கு! ஆமாம், தம்பி! வீறுகொண்ட மக்கள் எவருள் விரல்விட்டு எண்ணிடத்தக்க, விடுதலை விரும்பிகளைத்தான், முதல் அணியில் பெற்றிருந்தார். சூழ இருந்ததெல்லாம் தொல்லை. சூதும் சூழ்ச்சியும்கூட உண்டு! சூறைக் காற்று மோதினாலும், அசையாது நின்றிடும் குன்றேபோல, உள்ளத்தில் கொள்கை கொண்டோர், களம் நின்றார்; கண்டார் வெற்றி; காண்கிறோம் கவின் அரசு பலவும் புதிது புதிதாக இன்று. ஆங்கிலேயரின் சந்தை இது, அடிமைகளின் கூடாரம், காமக் களியாட்டத்தில் காலமெல்லாம் ஈடுபடும் கனதனவான் கூட்டமதைப் போட்டிக்கிழுத்து வாட்டமின்றி வெற்றிபெறும் வேந்தன் பரூக்கின் விளையாட்டு மைதானம் என்றுதான் எவரும் முன்னர் இயம்பினர் இகழ்ச்சியாக, எழில் குலுங்கும் நாடாம் எகிப்துதனை! இன்று? கண்டு நடுங்குநரும், காணாது வியப்போரும், அண்டிப் பிழைத்திட ஓர் அழைப்புண்டா என்று கேட்போரும்; நான் நண்பன்; நானே நண்பன், நான் தருவேன் கேட்பதெல்லாம், கேளாமல் நான் தருவேன்! என்று உந்திக் கொண்டும் முந்திக்கொண்டும் உறவு நாடும் வல்லரசுகளும், எகிப்து நோக்கி நின்றிடக் காண்கிறோம். அதுபோன்றே பல்வேறு தேயங்கள் பஞ்சையர், பராரிகள் என்று ஏசப்பட்டு வந்த நிலையினின்றும் தமை விடுத்துக்கொண்டு, "எமை மதிப்போர் நண்பர்; ஆதிக்கம் கொளவருவோர் மாள்வர்!’’ என்று எக்காளமிடக் காண்கிறோம். தம்பி! தீவுகளெல்லாம் போர்க்கோலம் பூண்டுள்ளன! பரமண்டலத்துக்கு வழிகாட்ட வல்லார் என்றனர், மகாரியாஸ் பாதிரியாரை. அவர், தம் தாயகமாம் சைப்ரஸ் தீவு, விடுதலை பெற வழி அமைக்கத் துணிந்துவிட்டேன் என்று சூள் உரைக்கிறார்! கர்த்தர் கருப்பரைப் படைத்ததே கடினமாக உழைத்து, நம்மை வெள்ளையராக்கத்தான்! - என்று ஆணவமாகப் பேசினர் முன்பு. இன்று நீக்ரோக்கள், விடுதலை முரசு அறையக் கேட்டு, இடி கேட்ட நாகமாகின்றனர், இறுமாப்பைத் தமக்கு இயல்பு ஆக்கிக்கொண்ட வெள்ளையர்! எங்கும் இன்று எமது அரசு! எமக்கு விடுதலை! எவர்க்கு எவர் அடிமை? என்ற முழக்கம் மிகுந்துவிட்டிருக்கிறது. அத்தகையதோர் சூழ்நிலையில் தமிழகம், தன்னிலை உணர்ந்து, தன்னரசு கேட்கும் வீறுபெற்று நிற்கிறது. விழாக் காணும் குழாம், தமிழகம் பெறவேண்டிய நிலையும் பெற்றால், கோலம் எங்ஙனம் பொலிவுடன் இருந்திடும் என்பதை எண்ணிப் பார்த்திடவேண்டும்; இன்பம் பெறமட்டுமல்ல, எழுச்சி பெற; வீரம்கொள; வெற்றிக்கு உழைக்க! புத்தறிவு புகுந்துவிட்டது தம்பி, இனி அதை வீழ்த்த வல்லோர் இல்லை; தம் காலம் உள்ளமட்டும் கதையின் கருப் பொருளைக் காரணத்தோடு கழறக் கேண்மின்! கடவுள் நெறிக்கு உரமூட்டத்தந்தார் காதை! என்று சிலர் ஆச்சாரியாராகிப் பார்ப்பர்; என்ன பலன்? தோற்பர்! பண்டுமுதற் கொண்டதிது என்று கூறிப் பலனே இல்லை. இன்று உள நிலையே வேறு. எதற்கும் ஓர் விளக்கம் கேட்பர்! “எப் பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’’ என்றார் வள்ளுவர்; ஆமெனக்கொண்டார் அறிவாளர். வான வெளியிலே வருவார் நாரதர், கானம் எழுப்பியே! என்றனர் கதைப்போர்!”யாம் விடுத்த செயற்கைக்கோள், சந்திரமண்டலத்தையும் கடந்து சென்றுளது’’ என்கின்றனர் சோபித மிகுந்த சோவியத் நாட்டு விஞ்ஞான வித்தகர்கள். தாரை தழுவிட, வழுவினான் சந்திரன்! “தகாதது புரிந்தாய், தேய்வாய்’’ என்று சாபமிட்டார் குருவும் கண்டு என்று சாற்றினார் புராணிகர் சந்திரன்பற்றி.”சற்றே பொறுத்திரும், ஆண்டு மூன்று ஆகட்டும்; ஆங்குக் குடியேறி அருமையாக வாழ்ந்திடலாம்; வழி அறிவோம்; முறை காண்போம்,’’ என்று கூறுகிறார்கள் ரμய நாட்டவர். இந்நிலையில் "லீலைகளும் விளையாடல்களும், அவதார மகத்துவமும்’’ எத்தனை நாள் விலை போகும்? வீண் முயற்றி! எல்லாப் புராணமும் எலிவாலைப் பிடித்தவன், ஏழ் கடலைத் தாண்டினான் எனும் கதைபோன்றதுதான் என்று, எவரும் துணிந்துரைக்கும் நிலைபெற்றார். கவிதையில் அழகுண்டு, மெருகுண்டு - சுவையுண்டு - என்று கூறிடும் வாரியாருக்கு, சுவைமிக்க அருங்கவிதை, வேறு பல உண்டன்றோ, பழந்தமிழர் அளித்துள்ள பாடலெல்லாம் போதாவோ, பதுமத்தில் உறைபவனை, பாஞ்சசன்யம் கொண்டவனை, நெற்றிக்கண் நேர்த்தியனை, அவன் பெற்றெடுத்த இரு மகவை, தவமாய்த் தவமிருந்து மணமுடித்த அம்மையரை, ஆமையாய், அழகற்ற பன்றியாய், கொல்லும் அரியாய், குரங்கேறி நின்றவனாய், இவ்வாறெல்லாம் வந்த இறையவனைக் காட்டுதற்கோ, உவமையும் உருவகமும், அணியும் பிறவும் பயன்படுத்துதல் வேண்டும்? குன்றும் களிறும், கொங்கும், தெங்கும், வண்டும், நண்டும், வாளையும், வாவியும், புன்னையும் புறவும், மயிலும் குயிலும், மாலை மதியமும் காலைக் கதிரோனும், இன்ன பிற அழகெல்லாம் இன் கவிதையாக்கி, எட்டுத்தொகை என்றும் பத்துப்பாட்டென்றும் தந்துளரே தமிழ்ப்புலவோர், போதாவோ என்று கேட்க, இளம் தமிழர் எழுந்துவிட்டார்; ஏற்றம் தமிழுக்கு; எங்கும் தமிழ் முழக்கம்! இந்நிலையில், ஆடலிலும் பாடலிலும் கூத்திலும் கூட்டத்துப் பேச்சிலும், பழமைகள் படும்பாடு, கொஞ்சமல்ல; பரிதாபம்! அன்றோர் நாள், அண்ணா! ஆடிக் காட்டிட அருங்காட்சி ஒன்றளிப்பீர் என்று எனைக் கேட்டார், உனைப்போன்ற உடன்பிறந்தார். தந்ததைத் தருகின்றேன், சிந்தை மகிழ்ந்திடும் காண். மாடி வீடு; கூடம்! செல்வர் அங்கு; அவரை அண்டி, வாடிக்கையாக வேலை செய்திடும் வீராச்சாமி! செல்வர் பேர், மாசிலாமணி. இருவர் பேசும் நிலைதான் காட்சி. பேச்சோ கொச்சை, எனினும் காணக் கருத்துகள் புதியன பலவும் உண்டு. தம்பி! படிக்கலாம்! நடிக்கலாம்; பகுத்தறிவு காண! மாசிலாமணி: டே! வீராச்சாமி! ஏன், வேலைக்காரி, கண்ணைக் கசக்கிக்கொண்டு இருந்தா, உள்ளே. வீராச்சாமி: கொஞ்சம் திட்டிப்போட்டேனுங்க. . . . மா: ஏண்டா! வீ: பாருங்க எஜமான், நான் குளிக்கணும்னு தண்ணி எடுத்து வைத்தேன். அவ போயி, கையைக் கழுவினா அதிலே அவ கையிலே அழுக்கு, அதைப் போயி அதிலே கழுவி, குளிக்கிற தண்ணியையே அசுத்தப்படுத்திவிட்டா. மா: இதுக்காடா கோவிச்சிக்கிட்டே. அட மடப்பயலே! ஏண்டா! போன வருஷம் நீ, தஞ்சாவூர் போயிட்டு வர்ரேன்னு என்கிட்ட புளுகிட்டு, கும்பகோணம் போனேயேல்லோ. . . . வீ: போனேனுங்க. . . . மா: எதுக்குடா? பன்னீரிலேயா குளிச்சே! ஏண்டா! சேத்திலே தானேடா புரண்டுட்டு வந்தே, எருமைபோலே! வீ: மாமாங்கம்ங்க. . . . . மா: ஆமாங்க, மாமாங்கங்தானுங்க, ஆனா தண்ணி எப்படி இருந்தது, சேறுதானே. . . .! வீ: ஆமாங்க. . . . . மா: சுத்தமாவா இருந்தது? வீ: இல்லிங்க. . . . மா: அதைவிடவா, அவை கை கழுவின தண்ணி அசுத்தமாப் போச்சி. . . . வீ: அழுக்குக் கையைக் கழுவினாங்க. . . . மா: அட அறிவு கெட்டவனே! அவ, அழுக்குக் கையைக் கழுவினா, அதனாலே தண்ணி அசுத்தமாப் போச்சுன்னு சொல்லறயே, இந்தப் புத்தி அண்ணிக்கு எங்கேடா, போச்சு? வீ: நான் மட்டும் இல்லிங்க. . . . ரொம்பப் பேரு. . . . மா: அவனை எல்லாம் நான் போயிக் கேட்கவா? நீ, ஏண்டா, புரண்டே அந்தச் சேத்திலே? வீ: தெரியாமெத்தான். . . . மா: ஆயிரமாயிரமா விழுந்திங்களே குளத்திலே, தண்ணியோ குறைச்சலு, அதிலே இவ்வளவு பேரும் போய் விழுந்தா, குழம்பிச் சேறாத்தானே போகும். . . வீ: ஆமாங்க. . . மா: குளிக்கப்போயிச் சேத்தைப் பூசிக்கொள்றவனுக்கு என்னடா பேரு. . . ? வீ: தெரியாதவன்னுதான் சொல்லணும். . . மா: நல்லா, பச்சையாத்தான் சொல்லேண்டா, மடப் பயலே! வேலைக்காரி கையைக் கழுவிட்டா, அந்த அழுக்கு, தண்ணியை அசுத்தப்படுத்திவிட்டதுன்னு சொல்லமட்டும் அறிவு இருக்கு. மகாமகம் கதை தெரியுமாடா உனக்கு. . . வீ: தெரியும்ங்க. பாவத்தைப் போக்கிக்க 12 வருடத்துக்கு ஒரு முறை போறது. . . மா: பழைய கணக்கைப் பைசல் செய்தூட்டு, புதுசா தயார் செய்றதுக்கு? ஏண்டா, அப்படித்தானே, அதைக் கேட்கலே, மகாமகத்துக் கதையைக் கேட்டேன். வீ: புண்யம் வருதுங்களாம், குளிச்சா. மா: புண்யம் வருவதும், வராததும் தெரியறதில்லை சரியா, ஆனா ஊர்லே கால்ரா வருது. அது தெரியுது விளக்கமா. . . எவனெவனோ என்னென்ன நோய் பிடித்தவ னெல்லாமோ, விழுந்து எழுந்திருக்கிறான் அந்தக் குளத்திலே அதிலே போய் குளிக்கிறதாம், அதுக்கு பேறு புண்யமாம், என்ன புத்திடா, டே! (ஒரு, ஊர்ப் பெரியவர் வந்து உட்காருகிறார்) ("சதாசிவம்! சம்போ! மகா தேவா!’’ என்று கூறிக் கொண்டு, கட்டுக் கட்டாக விபூதி; கையில் சில புத்தகங்கள். மாசிலாமணி அவரைப் பார்த்துவிட்டு; பிறகு வீராசாமியைப் பார்த்து. . .) மா: டே! வீராசாமி! யாருடைய அது. . . வந்தவர்: நமஸ்காரம். நான், இந்த ஊர்தான், பிரசங்க பூஷணம் பிரம்மானந்த மூர்த்தி ஸ்வாமிகள்னு பேர். மா: இங்கே, என்ன காரியமா வந்தீர்கள். . .? வந்: இங்கே வராமல் வேறே எங்கே வரமுடியும்? தாங்கள் தானே, எங்களைப்போன்றவளை, ஆதரித்து இரட்சிக்க வேண்டியவா. மா: டே! வீராச்சாமி, எதற்கு வந்ததார், என்ன விசேஷம்னு கேட்டு, பதில் சொல்லி அனுப்பு போ. . . வந்: அவனுக்கு என்ன தெரியும்? நான் இந்த ஊரிலே புராணப் பிரசங்கம் செய்யப்போகிறேன். அதற்குத் தாங்கள் ஆதரவு தரவேண்டும். மா: இப்ப, இப்படிக் கிளம்பிவிட்டிங்களா? உங்களைக் கூப்பிட்டனுப்பின காலம் போயி, இப்ப நீங்களாகவே கிளம்பிவர ஆரம்பிச்சாச்சா. சரி, சரி, மார்க்கட் ரொம்ப டல்லாயிடுத்து போலிருக்கு. வந்: நிலைமை ஒரு விதத்திலே அதுதான். ஆனால், நான் புராணத்திலே சில புது உண்மைகளை, சில அற்புதமான விஷயங்களைக் கண்டுபிடித்து இருக்கிறேன்; ஊரிலே இப்போ இந்தச் சுயமரியாதைக்காரா கொஞ்சம் தொந்தரவு தருகிறா பாருங்கோ, அவாகூட, என்னுடைய புராணப் பிரசங்கத்திலே தப்புக் கண்டுபிடிக்க முடியாது. சகலருக்கும் பிடிக்கும்படியா, ஒருவருக்கும் மனக்கஷ்டம் வராத விதமா இருக்கும் நம்ம பிரசங்கம். மா: வெண்டைக்காய்போல, வழவழப்பு இருக்கும்னு சொல்லுய்யா; அதானே! பணத்துக்குத்தானே! வந்: பணத்துக்காக அல்ல. சிவ! சிவ! பணம் எதற்கு? என்ன பிரயோஜனம்? யார் அதை மதிப்பா? காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று சொல்லி யில்லையோ. . . மா: ஆமாம்! காதற்ற ஊசி கடை வழி வரத்தான் செய்யாது, காதறுந்த ஊசியை யாரு வாங்குவாங்க. போய்யா எழுந்து. (புராணிகர் எழுந்து போகிறார். பிறகு வேலையாளிடம்.) மா: இவனுங்க தொல்லை பெரிசாப்போச்சு. இவனுங்களுக்கு வேறே பிழைப்பு இல்லை, இப்படிப் புளுகிக்கிட்டு, ஊரைக் கெடுத்துகிட்டு இருக்கறானுங்க. . . வீ: புராணம், படிச்சாலும் கேட்டாலும், கைலாயம் போவலா முங்களாமே. மா: கைலாயம் போவணுமாம் கைலாயம்! டே வீராசாமி! கழுதைகூடப் போயிருக்குடா கைலாயம். . . ஏண்டா! நான், போக்கிரித்தனமாகப் பேசுவதாக நினைக்கறயா, நிஜத்தைச் சொன்னேண்டா. ஒரு புராணம் இருக்கு, அதுபோல. வீ: கழுதை, கைலாயம் போனதாகவா? மா: ஆமாண்டா, கழுதை, எருது, எல்லாம் போனதாகக் கதை, புண்ய கதை இருக்கு. ஒரு ஆதித் திராவிடப் பெண்ணு, புல்வெட்டிப் பிழைக்கிறது. வீ: உம். மா: ஆதித்திராவிடப் பெண் வேறே என்னடா செய்யும், பிழைப்புக்கு. அது என்ன ஐயமார் வீட்டுப் பெண்ணா. நாட்டியம் ஆடி, மெடல் வாங்க; புல் செதுக்கி ஜீவிக்கிறது வழக்கம். ஒரு நாள் ஒரு பிள்ளையார் கோயில் பக்கமா, புல்லைக் கொட்டி வைச்சுது. யாரு? வீ: அந்தப் பொண்ணு. மா: அப்ப, கேளுடா, கழுதை எருது இரண்டும் புல்லை மேய ஆரம்பிக்கவே, அந்தப் பொண்ணு, இரண்டையும் அடிச்சு விரட்டிச்சி. எதை? வீ: கழுதையும், எருதையும். மா: கழுதையும் எருதும், அந்தக் கோயிலைச் சுற்றிச் சுற்றி ஓட ஆரம்பிச்சுது. வீ: அடிதாங்கமாட்டாமே. . . மா: அடியும் தாங்க முடியல்லே, புல்லையும்விட மனம் இல்லை. ஓடினபோது, புல்லும் கொஞ்சம் கொஞ்சம் கீழே விழுந்தது. வீ: ஓடின வேகத்திலே. மா: ஆமாம்! இவ்வளவுதாண்டா நடந்தது. உடனே புள்ளையார் கோயிலைச் சுற்றி வலம் வந்து, அருகம் புல்லைக்கொண்டு கழுதையும் எருதும் அர்ச்சனை செய்ததுன்னு, சொல்லி, வந்துவிட்டார்கள் சிவகணங்கள். வீ: வந்து? மா: வந்து, என்ன? கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து, தேர் திருவிழாச் செய்து, தேவ பூஜை எல்லாம் செய்து, பக்திமான்க, எங்கே போகிறாங்க? கைலாயத்துக்குத்தானே, அந்தக் கைலாயத்துக்கு இந்தக் கழுதையையும், அழைச்சி கிட்டுப் போனாங்க. . . வீ: எஜமான், எவன் எழுதினான் இது மாதிரி கதையை? ரொம்ப முட்டாத்தனமா இருக்கே. . . மா: வேணுமானா, யாராவது புராணம் படிக்கிறவனிடம் கேட்டுப்பாரு, இப்படி ஒரு கதை இருக்கா இல்லையான்னு. இதுமட்டுமாடா; ஒரு ஆசாமி, ஒரே காமவெறி பிடித்த வனாகி, தன் தாயாரையே. . . வீ: கொன்றுபோட்டுவிட்டானா. மா: அது செய்தாக்கூட பரவாயில்லையேடா. தன் தாயாரையே கற்பழிச்சான். . . வீ: அது யாருங்க அந்தப் பாவிப்பய? எங்கே இருக்கிறான்? மா: இப்போ கைலாயத்திலே இருக்காண்டா, கேளு கதையை. தாயைக்கற்பழிச்சானா. பிறகு தகப்பனார் இருந்தாத் தொந்தரவுதானேன்னு, அவனையும் கொன்று விட்டான். . . வீ: பெத்த தாயைப் பெண்டாண்டு, சொந்த அப்பனைக் கொன்றுபோட்டு. அவனைத் துண்டுதுண்டா வெட்ட வேணாமா? முள் பிப்பாயிலே போட்டு உருட்ட வேணாமா? மா: நீ செய்வே, நான் செய்வேன். அதுபோல, அக்ரமக் காரனுக்குத் தக்க தண்டனை தரவேணும்னு. . . நடந்ததைக் கேள்டா. சிவபெருமான் அவனை மன்னிச்சிவிட்டார், அந்த மகா பாதகனும் புண்யவானாகிக் கைலாயம் போய்ச் சேர்ந்தான். . . வீ: நிஜந்தானுங்களா? நம்பவே முடியலைங்களே. . . மா: திருவிளையாடற்புராணத்திலே மாபாதகம் தீர்த்த படலம்னு இருக்கு, கேட்டுப்பாரு. வீ: எப்படிங்க சாமிக்கு ஒப்பிச்சி இப்படிப்பட்ட மகா பாவியைக் கைலாயத்துக்குச் சேர்த்துக்கொள்ள? மா: டே! அவன் ஜாதியிலே யாரு தெரியுமா? ஐயருடா ஐயர்! ஆமாம் நீ என்ன கைலாயத்திலே, இப்படிப்பட்டவ னெல்லாம் இல்லைன்னு நினைச்சிக்கிட்டாயா? நாக்கை அறுத்தவன் - மூக்கை அறுத்தவன், தலையை அறுத்தவன், இந்தமாதிரிக் கொலைகாரப் பசங்க வேண பேர் இருக்காங்கடா அங்கே; கேட்டா பக்தியிலே செய்தா னுன்னுவாங்க. நான், இல்லாததைச் சொல்றேன்னு எண்ணிக்கொள்ளாதே. ஒரு ஆசாமி, தன் மனைவியோடு கோயிலுக்குப் போனான், திருவாரூரிலே. கோயிலுக் குள்ளே பூ கிடந்தது கீழே, பெண்களுக்கு பூன்னா இஷ்ட மில்லையா? வீ: ஆமாங்க. . . மா: அந்தம்மா, பூவைப் பார்க்கவே, எடுத்து, மோந்து பார்த்தாங்க. . . வீ: அந்தம்மா புருஷன். . .? மா: அவன் இன்னொரு பக்கமா இருந்தான், பக்தி செய்து கிட்டு. . . வீ: சரிங்க, அப்புறம் என்னா நடந்தது? மா: கோயிலிலே இருந்தான் இன்னொரு பக்தன், அவன் ஓடி வந்தான், பொம்பளை, பூ எடுத்து மோந்ததைப் பார்த்து… வீ: வந்து. . .? மா: நீதான் சொல்லுடா, என்ன செய்வான், ஒரு யோக்கிய மான மனுஷன்? வீ: ஆரம்மா இது, பூவை எடுக்காதே. அது சாமிக்குன்னு சொல்வான். மா. கொஞ்சம் முரட்டுப்பயலா இருந்தா, திட்டுவான் கண்டபடி. இவன் என்ன செய்தான் தெரியுமோ? உள்ளே ஓடி, ஒரு அரிவாள் கொண்டு வந்தான். வீ: அரிவா கொண்டு வந்து. . . மா: அந்தப் பொம்பளை மூக்கை அறுத்துப்போட்டுட் டாண்டா? வீ: அட பாதகா! பூவை எடுத்து மோந்ததுக்கா. . . ஒருத்தன் பெண்ணு மூக்கை அறுத்தான். என்னா அக்ரமங்க. . . ஏனுங்க, அவ புருஷன் என்னா செய்தான்? எப்படிப்பட்ட சொரணையத்தவனுக்குக்கூட ரோஷம் வருமே. மா: கேள் வீராசாமி அந்தக் கூத்தையும், அவ புருஷன் ஓடி வந்து, என்னான்னு கேட்டான். இப்படி இப்படி நடந்ததுன்னு சொன்னான் அந்த மூக்கறுத்தவன். இவன் உடனே அந்த அரிவாளைப் பிடுங்கி. . . வீ: போட்டானா அவன் தலையிலே வெட்டு. . . மா: இல்லை, கையிலே, போட்டான் வெட்டு. . . வீ: போடவேண்டியதுதான், அந்தக் கையாலேதானே அவ மூக்கை அறுத்தான் அந்தப் பாவி. கையை வெட்ட வேண்டியதுதான். மா: டே! மடப்பயலே! யார் கையை வெட்டினான்னு நினைச்சிக்கிட்டுப் பேசறே. தன் பெண்டாட்டி கையை வெட்டினாண்டா, பூ எடுத்த கையை வெட்டவேணும்னு சொல்லி. . . வீ: அட ரோஷங்கெட்ட, அக்ரமகாரா! மா: திட்டாதேடா! இரண்டு பேரும் நாயன்மாருக. இப்ப. தெரியுமா? மூக்கறுத்தவனும் கைலாயவாசம் செய்கிறான், கையை வெட்டினவனும் அங்கேதான் இருக்கிறான். பக்திடா பக்தி. வீ: இதுதானுங்களா பக்தி! மூக்கை அறுக்கறதும், பெண்டாட்டி கையை வெட்றதும் பக்தியா. . .? மா: மூக்கறுத்தவன் பேரு, செருத்துணை. கையை வெட்டி னவன் பேரு, கழற்சிங்கம். காலட்சேபம் செய்யலே. அவர்களை வேணுமானா கேளு, பெரியபுராணத்திலே இது இருக்கா, இல்லையான்னு. இந்த மாதிரி ஆசாமி களெல்லாம் போயிருக்காங்க, கைலாயத்துக்கு. ஏண்டா நாம்ப போகணும்? வீ: எஜமான்! நான் என்னமோ நினைச்சிகிட்டு இருந்தேன், கைலாய்ம்னா, இப்பத்தான் தெரிஞ்சுது விஷயம். இந்த மாதிரி ஆசாமிக இருக்கிற இடமா அது? நமக்கு வேண்டாம் எஜமான், அந்த மாதிரி இடம்! தம்பி! இது நாட்டிலே பகுத்தறிவு பரவ எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள முயற்சியிலே, மிகச் சாதாரணமானது. புலமைமிக்கவர்கள் பலர், தரமான முறையிலே சிந்தனைக்குத் தெளிவளிக்கும் ஓவியங்களைத் தீட்டித் தந்தபடி உள்ளனர். பகுத்தறிவு பரவுவது மட்டுமல்ல, புராணப் பிடிப்பு குறையக் குறைய, தமிழ் இலக்கியத்தின்மீது ஆர்வம் வளருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு திருக்குறளை அறிய மறுத்தவரெல் லாம் இன்று புதுப்பொருள் கூறுகின்றனர்; சிலர் சூதுமதியுடன்! தமிழன் தொன்மை, மென்மை, தூய்மை, பொலிவு யாவும் இப்போது மக்கள் மன்றத்திலே எடுத்துரைக்கப்பட்டு, மனை களில் பேசிக்கொள்ளப்படுகின்றன. உனக்காகத் தம்பி, ஒருநாள், புறநானூற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படித்தேன் என்று கூற மனமில்லை. படிக்கவேண்டும் நிரம்ப என்ற ஆர்வம் உண்டு; புறநானூறு பாடிய புலவர் பெருமக்கள் - பெண்பாற் புலவரும் உண்டு - பற்றிய குறிப்புக் கண்டேன்; வியந்தேன். எத்துணைப் பழங்காலத்திலே புறநாநூறு எழுந்தது. அக்காலத்தே, உலகிலே பல நாடுகள், உருவம்கூடப் பெறவில்லை, நாடான பலவற்றிலே மொழிவளம் இல்லை, மொழிவளம் இருந்த இடங்களிலும் இலக்கியம் எழவில்லை, இங்கொன்றும் அங்கொன்றுமாக இலக்கியம் எழுந்த இடங்களிலும், இத்துணைப் புலவர்கள் இருந்ததில்லை; அதிலும் பெண்பாற்புலவர்கள் இங்கு இருந்தது போல, அளவிலாயினும் சரி, தரத்திலாயினும் சரி, மற்ற இடங் களிலே இருந்ததாக எனக்கு யாரும் கூறினாரில்லை. தம்பி! எத்துணை வாழ்க்கை வளம், அரசு நெறி, சீர் இருந்தால் இத்துணைப் புலவர்கள், இன்றளவும் இவைபோன்ற அருங்கவிதை இல்லை என்று கற்றோர் வியந்திடும் தரமான கவிதைகளை இயற்றி இருக்கமுடியும் என்பதை எண்ணிப்பார். தமிழர் எத்திறத்தவர் என்பதும் புரியும்; தமிழர் என்று பேசிப் பேதம் வளர்த்திடாதீர் என்று கூறிடும் மேதாவிகளின் கூற்று எத்துணை பொருளற்றது என்பதும் விளங்கும். அடைநெடுங்கல்வியார் அண்டர் மகன் குறுவழுதி. அரிசில் கிழார். அள்ளூர் நன்முல்லையார். ஆடுதுறை மாசாத்தனார். ஆலங்குடி வங்கனார். ஆலத்தூர் கிழார். ஆலியார். ஆவூர்க் கிழார். ஆவூர் மூலங்கிழார். இடைக்காடனார். இடைக்குன்றூர்க்கிழார். இரும்பிடர்த்தலையார். உலோச்சனார். உறையூர் இளம்பொன்வாணிகனார். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். உறையூர் மருத்துவன் தாமோதரனார். உறையூர் முதுகண்ணன் சாத்தனார். உறையூர் முதுகூத்தனார். ஊன்பொதி பசுங்குடையார். எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார். எருமை வெளியனார். ஐயாதிச் சிறுவெண்டரையர். ஐயூர் முடவனார். ஐயூர் மூலங்கிழார். ஒக்கூர் மாசாத்தனார். ஒக்கூர் மாசாத்தியார். ஒருசிறைப் பெரியனார். ஒரு உத்தனார். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன். ஓரம்போகியார். ஓரேருழவர். ஔவையார். கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி. கண்ணகனார். கணியன் பூங்குன்றன். கபிலர். கயமனார். கருங்குழலாதனார். கருவூர்க் கதப்பிள்ளை. கருவூர்ப் பெருஞ்சதுக்கப் பூதநாதனார். கல்லாடனார். கழாத்தலையார். கழைதின் யானையார். கள்ளில் ஆத்திரையனார். காக்கைப்பாடினியார் நச்செள்ளையார். காரிகிழார். கரவட்டனார். காவற்பெண்டு. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார். குட்டுவன் கீரனார். குடபுலவியனார். குடவாயிற் கீரத்தனார். குண்டுகட் பாலியாதன். குறமகள் இளவெயினி. குறுங்கோழியூர்க் கிழார். குன்றூர்க்கிழார் மகனார். கூகைக் கோழியார். கூடலூர்க்கிழார். கோடைபாடிய பெரும்பூதனார். கோதமனார். கோப்பெருஞ் சோழன். கோவூர்க்கிழார். கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார். சங்கவருணரென்னும் நாகரியர். சாத்தந்தையார். சிறுவெண்டரையார். சேரமான் கணைக்காலிரும்பொறை. சேரமான் கோட்டம்பலத்துஞ்சிய மாக்கோதை. சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். சோழன் நல்லுருத்திரன். சோழன் நலங்கிள்ளி. தன்காற்பூட் கொல்லனார். தாமப்பல கண்ணனார். தாயக்கண்ணனார். தாயங்கண்ணியார். திருத்தாமனார். தும்பி சோகினனார். துறையூர் ஓடைகிழார். தொடித்தலை விழுத்தண்டினார். தொண்டைமான் இளந்திரையன். நரிவெரூஉத்தலையார். நல்லிறையனார். நன்னாகனார். நெட்டிமையார். நெடுங்கழுத்துப்பரணர். நெடும்பல்லியத்தனார். நொச்சி நியமங்கிழார். பக்குடுகை நன்கணியார். பரணர். பாண்டரங்கண்ணனார். பாண்டியன் அறிவுடை நம்பி. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். பெருந்தேவனார். பாரி மகளிர். பாலை பாடிய பெருங்கடுங்கோ. பிசிராந்தையார். பிரமனார். புல்லாற்றூர் எயிற்றியனார். புறத்திணை நன்னாகனார். பூங்கணுத்திரையார். பூதப்பாண்டியன்தேவி பெருங்கோப்பெண்டு. பெருங்குன்றூர் கிழார். பெருங்கோழிநாய்க்கன் மகள் நக்கண்ணையார். பெருஞ்சித்திரனார். பெருந்தலைச்சாத்தனார். பெரும்பதுமனார். பேய்மகள் இளவெயினி. பேரெயின் முறுவலார். பொத்தியார். பொய்கையார். பொருந்திலிளங்கீரனார். பொன்முடியார். மதுரை அளக்கா ஞாழலார் மகனார் மள்ளனார். மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார். மதுரை ஓலைக்கடைக்கண்ணம் புகுந்தாராயத்தனார். மதுரைக் கணக்காயனார். மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார். மதுரைக் கள்ளின் கடையத்தன் வெண்ணாகனார். மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார். மதுரைத் தமிழ்க்கூத்தனார். மதுரை நக்கீரர். மதுரைப் படைமங்கமன்னியார். மதுரைப் பூதனிளநாகனார் மதுரைப் பேராலவாயர். மதுரை மருதனிள நாகனார். மதுரை வேளாசான். மருதனிள நாகனார். மாங்குடி கிழார். மாதி மாதிரத்தனார். மார்க்கண்டேயனார். மாற்பித்தியார். மாறோக்கத்து நப்பசலையார். முரஞ்சியூர் முடிநாகராயர். மோசி கீரனார். மோசி சாத்தனார். வடம நெடுந்தத்தனார். வடமவண்ணக்கன் தாமோதரனார். வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார். வடமவண்ணக்கன் பேரிசாத்தனார். வடமோதங்கிழார். வன்பரணர். வான்மீகியார். விரிச்சியூர் நன்னாகனார். விரியூர் நக்கனார். வீரை வெளியனார். வெண்ணிக் குயத்தியார். வெள்ளெருக்கிலையார். வெள்ளைக்குடி நாகனார். வெள்ளை மாளர். வெறிபாடிய காமக்கண்ணியார். வேம்பற்றூர்க் குமரனார். தம்பி! மிகுந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, கிடைத்துள்ள புலவர் வரிசை இது. இன்னமும் கண்டறிய வேண்டிய பெயர்களும் உள்ளன. ஒவ்வோர் புலவரும் ஒன்று அல்லது இரண்டு கவிதைகளே இயற்றினர்; இன்று அவைகட்கு உயிரூட்டம் உள்ளன! என்ன பொருள்? அத்துணை புலமையை அதிலே வடித்துள்ளனர்! எவர்? இந்தியை அரசுக் கட்டிலில் ஏற்றிக்கொள், இல்லையேல், சிறை பிடிப்போம், சுடுவோம் என்று வடவர் கூற, அஞ்சி அஞ்சிச் சாகும் இன்றைய மக்களின் முன்னோர்; தமிழர்! அற்றை நாளில் அப்பெரும்புலவோர் அளித்தனவெல்லாம் இற்றை நாளில் நாம் எடுத்தியம்பலால், முற்றும் அவர் உரை ஏற்றோம் என்று பொருள்கொளல் வேண்டாம். அவர் திறம் வியந்திடவும், அந்நாளிலே இருந்த புலமை வளம் கண்டு மகிழ்ந்திடவும், கூறுகிறோம். அவர் அறிவாற்றல் பெரிது; ஆயினும், அதனினு பெரிது காலம் கனிந்தளிக்கும் கருத்துப் படையல்கள் அன்று அவர் கண்ட உண்மை பல உண்டு எனினும், மேலும் பல உண்மை காணும் வாய்ப்பு, காலம் சமைத்தளிக்கக் காண்கிறோம். முடியுடை மூவேந்தர்கள் மட்டுமல்ல; குறுநில மன்னர்கள், வேளிர்கள், பலரும்கூடப் புலவர் பெருமக்களை ஊக்குவித்தனர். கவிதை பெருக்கெடுத்தது; தமிழ் மணம் கமழ்ந்தது. அந்நிலை காட்டவே அவர் பெயர் கூறி மகிழ்கிறோம். தம்பி! மற்றோர் முறை புலவர்கள் பெயர்ப்பட்டியலைப் படி. மூடிவை! நினைவிற்குக் கொண்டுவந்து பார்! இயலாது! உனக்கு மட்டுமல்ல! எனக்குந்தான்! எனக்கு மட்டுந் தானா, இன்றுள்ள புலவர்களிலே பலருக்கு. எல்லோருமா டாக்டர் மு. வ. வாக இருப்பர்? போகட்டும்; பழனிமலைப் பேகன், பறம்புமலைப் பாரி; கோடைமலை நெடுவேட்டுவன்; கொல்லி மலை ஓரி; பொதிய மலை ஆய் ஆண்டிரன்; குதிரைமலை அதிகமான்; முதிரமலைக் குமணன்; தோட்டிமலைப் பெருநள்ளி. தமிழகம் தனி அரசு ஆகக்கூடாது, பாரதத்தின் ஒரு பகுதியாகத்தான் பிணைந்து (இணைந்துகூட அல்ல) கிடக்கவேண்டும் என்று கூறும் குடி அரசுத் தலைவர் பாபு ராஜேந்திரருக்கு இந்த மலை அரசுகளாண்டவர் எவராவது தெரியுமா, என்று கேட்டுப்பார். தெரியாது! பன்றிமலைச் சுவாமிகளைத் தெரியும்! பூவார் சோலை மயிலாடப் புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி! என்று பாடினார் இளங்கோ. கவி தாகூரின் சிறப்பினை நமக்கறிவிக்கும் பண்டித நேரு அறிவாரா, சேர நன்னாட்டு இளவலை! கோபிப்பார், கேட்டால், ஆணையும், அரசும், பெருமளவில் பெருமிதத்துடன் அமைத்துக்கொண்டு அரும் பாடுபட்டு வருகிறேன்! என்னைப் போய், அறிவிலி! அந்த நாளில் ஏதோ ஆறு பற்றிப் பாடிய ஒரு புலவனைப்பற்றிக் கேட்கிறாய். என்ன துணிவு! எத்துணைத் தேசத் துரோகம் என்று ஆர்ப்பரிப்பார். கொங்கும் வேங்கையும் ஓங்கி வளரும்; குரவமும் முல்லையும் நறுமணம் கமழும்; கோலமயில் தோகை விரித்தாடும்; தேனுண்ட வண்டுகள் தமிழ்ப்பாட்டிசைக்கும் என்றார் தமிழ்ப்புலவர். அன்பார்ந்த குழவியை அழகிய மஞ்சத்தில் அமைத்து, அதன் மேனியைக் கைகளால் தடவித் துயில்விக்கும் அன்னை போல் ஈரம் வாய்ந்த பொய்கை, கமலப்பள்ளியில் அமர்ந்த அன்னத்தைத் தன் அலைக்கைகளால் தட்டித் துயில்வித்தது - என்று ஓவியம் தீட்டுகிறார், கவிதை வடிவில் மற்றோர் மாத்தமிழர். வியக்கத்தக்க காட்சிகளைக் கவிதைகளாக்குவதுடன் அமைந்தனரோ? அன்று! அன்று! அறம் உரைத்தனர்! அரசருக்கும் அஞ்சாது அறநெறியை எடுத்துரைத்தனர். வெற்றுரையாம் பழமையிலா அவர்தம் மனம் படிந்திருந்தது? இல்லை! புது மொழியில் திளைத்தனர். செதுமொழி சீத்த செவிசெறு வாக முதுமொழி நீராப் புலன்நா உழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர! புது மொழிவழி அவர்தம் நாட்டம் தொடர்ந்து சென்ற தனால், விளைந்த எண்ணம் ஓர்வகை சுற்றுச் சார்பை ஏற்படுத்திய தால்தான், பக்தி மார்க்கத்தைப் புகுத்த வந்த புனிதர்களேகூட, எவரும் எங்கும் எஞ்ஞான்றும் வாதிடும் கடவுட் கொள்கைபற்றி, கழியுளா ரெனவுங் கடலுளா ரெனவுங் காட்டுளார் நாட்டுளா ரெனவும் வழியுளாரெனவு மலையுளா ரெனவு மன்னுயிர் விண்ணுளா ரெனவும் சுழியுளா ரெனவுஞ் சுவடுதா மறியார் தொண்டர்வாய் வந்தனசொல்லும் என்று கூறவேண்டி வந்தது. "கண்ணுதலோனைக்’ காண்மின் என்று கூறப்போந்த சுந்தரரே, தமிழர்கள், கடவுள்பற்றிய கட்டுக் கதைகளை மட்டும் கூறினால் கேட்டு இன்புறார் என்று அச்சப்பட்டவர்போல், அவர் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் தலத்தைக் காண்மினோ என்ன வேண்டுகிறார். கண்ணுதலோன் மேவிய ஊர்வினன் அரும்பருகே சுரும்பருவ அறுபதம் (வண்டு) பண்பாட அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூ ழய-ன் கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம்மலரும் கலயநல்லூர் காணே! என்றுபாடி, அரும்பு, கரும்பு, வண்டு, மயில், கருங்குவளை, கமலம் ஆகியவற்றினைக் காட்டி இப்படிப்பட்ட அழகு மல்கும் ஊர் காண்மின் என்கிறார். இயற்கையின் இனிய கோலத்தில், தமிழர் கொண்டிருந்த பேரார்வத்துக்கு இதனினும் சான்று வேண்டுமோ! எதிலும் ஏற்றம் பெற்றிருந்த நாடு, இன்று எடுப்பார் கைப்பிள்ளை நிலைபெற்றுளது; அறிந்தோம், மாற்றிட முனைகிறோம்; மனை எங்கணும், இதங்கான ஆர்வம் எழ வேண்டும். விழாதரும் மகிழ்ச்சியுடன் இதனைக் கலந்து உண்ண வேண்டும், ஊட்டிட வேண்டும். இறவாப்புகழ் பெற்ற நூல்கள் இயற்றப்பட்டன; தம்பி! அது மட்டுமன்று. நூல், எங்ஙனம் இருத்தல்வேண்டும் என்பதற்கே, விளக்கம் கண்டனர் அந்த நாளிலே. நூலெனப் படுவது நுவலுங் காலை நுதலிய பொருளை முதலில் கூறி முதல்நடு இறுதி மாறுகோள் இன்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி உண்ணின் றமைந்த உரையொடு பொருந்தி நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே. எல்லா எழிலும் நிரம்பிய நாடுமட்டுமல்ல, எதிலும் எழிலும் ஏற்றமும் பெறுதல் எங்ஙனம் என்ற “இலக்கணம்’ வகுத்துக் கொண்ட நாடு. இன்று வளம் பிறர்க்கு, வாட்டம் தமிழர்க்கு என்ற நிலையில் கிடந்து உழலக் காண்கிறோம்; உள்ளம் உலைக்கூடம் போலாகிக் கிடக்கிறது. பேச்சும் பெருமூச்சும் பொறிகளென்றாகி, தமிழரிடை வந்துற்ற தீய நினைப்புகள், தன் நிலை மறந்த போக்கு என்பவைகளை எரித்திடத் தலைப் பட்டுள்ளன. உனைக் கண்டு மயக்குற்றதால், எரி நெருப்பிட எடுத்த விறகுத் துண்டைக் கெண்டை விழியாள், வேறு பக்கம் போடக் கண்டு, கேலியால் கொத்துகிறாய்; ஆனால், நம்மிலே பலர்,”ஏக இந்தியா’ எனும் பிடிப்பில் மயங்கி, தமிழர்க்குத் தொண்டாற்றத் தவறிவிடுவது கண்டால் நெஞ்சம் எரியிடைப் பட்ட மெழுகாகவன்றோ ஆகிறது. உன் ஒரு சிறு நகை கண்டதும், முல்லை நகையாள், தன் தவற்றினைத் திருத்திக்கொண்டு, முத்தமல்லவா தருகிறாள், உன் இன்பப் பெருக்குக்கு! உன் பணியும், தம்பி, உணராதாரிடம் காய்வது அல்ல; அவர்தம் விழியைத் திருப்புவது, வழியைக் காட்டுவது, உடன் அழைத்து வருவது, என்றிருக்கவேண்டும். பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் என்றார் புலவர். அவ்வழியே நம் வழியாதல் வேண்டும். தம்பி! உனை நெடுந்தொலைவு அழைக்கிறேன் என்று கோபம் கொள்ளாதே! நானறிவேன் இன்று உன் நிலை யாது என்பதை! மனையில் மகிழ்ந்திரு! பெற்றோருக்குப் பெருமை தேடிடு! உற்றார் உறவினரை உவகைகொள்ளச் செய்! ஊருக்கு உழைத்தலில் இன்பம் பெறு! விழிபுகுந்து நெஞ்சிலே உறையும் உன் இனியாளைக் கண்ணெனப் போற்றிடு! கன்னல் மொழிக் குழந்தைகளைக் கற்றோராக்கு! தமிழ் மணம் கமழ வழி காண்பாய், தம்பி! தமிழன் என்றோர் இனம் உண்டு! தனியே அவர்க்கோர் குணம் உண்டு! தமிழர்க்கென்றோர் விழா உண்டு, தனியாய் அதற்கோர் சிறப்புண்டு. பொங்கற் புதுநாள், அந்த விழா போற்றி மகிழ்வோம், தமிழ்த்திருநாள். போ! போ! தம்பி! ஆயிரம் நான் சொல்கிறேன், உன் கண்கள் மட்டும். . .! உன்மீது என்ன தவறு? உன்னை ஈர்க்கும் துடியிடையும் குற்றமா புரிகிறாள்? செக்கச் செவந்த கன்னம் சேல்விழியாள் நடையில் அன்னம் செந்தாமரை யாகும்முகம் செதுக்கி வைத்த செம்பொற் சிலையாகுமே வடிவம். என்று காதற்பண் பாடிய தமிழ் மரபினனல்லவா! கத்தும் கடலில் முத்தெடுத்தான் கற்றைக் குழலாளுக்களித்தான் கட்டழகி பெற்றதைத் திருப்பித் தந்தாள் கண்ணே! என்றழைத்து மகவுக்குத்தான்! என்றல்லவா, குறும்பும் புலமையும் குழைத்துப் பாடினார் முன்னோர். அவ்வழி வந்தவனன்றோ! வேறாகவா இருக்கும் உன் போக்கு! இன்பநாளிது! இதயம் பாடுது! மகிழ்ந்திரு. ஆனால், திருநாட்டை மறவாதிரு! வாழ்க நின் குடி! வளர்க் நின் மகிழ்ச்சி! வாழ்க தமிழ்! அண்ணன், 14-1-1959 இசைபட வாழ்வோம் பொங்கல் விழா நாட்டுக்கோர் பொது விழா தமிழரின் வரலாற்றுத் தொன்மை இயற்கைக் காட்சிகள் அடிமைநிலை போக்கி அரியாசனம் காண்போம் தம்பி! பொங்கல் நன்னாள் இன்று; எனவே, எத்துணைதான் என்மீது கோபம் இருப்பினும் - காரணம் உண்டு; அதனை மறுப்பவனும் அல்ல நான் - அதனை மறந்து உவகையுடன் என்னை நோக்குவாய் என்பதனை நான் நன்கு அறிவேன். இந்த நன்னாளில், நமது எண்ணங்கள் கலந்து குழைந்து, எவர் இட்டார், எவர் குழைத்தார், அளவும் வகையும் எவரெவ ருடையது, எங்ஙனம் இருந்தது என்று கண்டறியக்கூடாதவாறு தேனென இனித்து, மலர்மணம் அளித்து, மாண்புடன் இருந்திடும். உண்மை. இயற்கை. இன்றன்றோ தமிழகமெங்கணும், இல்ல மெங்கணும், எங்கிருந்தோ வந்து பூரிப்பைப் பொங்கவைக்கிறது ஓர் விழா உணர்வு. பட்ட பாடுதனைக்கூட ஓரளவு மறந்திடச் செய்கிறது - கவலைப்படலம் கணப்பொழுது மறைகிறது, விழாக் கொண்டாடுகிறோம், வீரமும் தீரமும் வெற்றி நடைபோட்ட, எந்தையர் நாடு இன்று ஏற்றம் குறைந்து, மாற்றார் யார், உற்றார் எவர் என்று அறிந்து செயல்படும் திறமும் தேய்ந்து, கலைந்துள்ள ஓவியமாய், காதிலே முன்னமோர் நாள் கேட்ட இசையாய் இருந்திடுகிறது; எனினும், இருக்கும் இன்னலை மறந்து, கன்னல் நிகர் சுவை தரும் எண்ணங்களைத் தழுவி நிற்கிறது. செய்த வினை யாதோ, அதற்கு அளிக்கப்பட இருக்கும் அல்லல் எத்தகையதோ, அதனைக் குறைத்திட, இயன்றால் போக்கிட, எவர் அடி வீழ்வது, என்ன பொருள் தந்து ஏத்தி நிற்பது என்ற எண்ணத்தைக் கொண்டதோர் பண்டிகை நாளல்ல; பாடுபட்டால் பலன் உண்டு, பாழ்வெளியும் செழுமை பெறும் என்ற பொது உண்மையை உணரவும், உழைப்பு எனும் அச்சாணியே உலகு இயங்குதற்கு அமைந்துள்ளது, அதன் வலிவு கெடாமலிருக்குமட்டுமே இயங்கும், எக்காரணம் கொண்டு, அந்த அச்சாணிக்குக் கேடு செயினும், உலகுக்கு ஊறு நேரிடும் என்பதை அறியவும், ஊறு நேரிடாமல் காத்திட உழைப்பின் மேம்பாட்டினை ஏற்று நடக்கவும், உழைப்பை அளித்திடும் உத்தமர்களை உருக்குலைய வைத்திடும் உலகொப்பா முறைகளை மாற்றிடவும், தோழமை மலர்ந்திடல்வேண்டும், அஃதொன்றே இல்லாமை எனும் நோயையும் நீக்கிடும் மாமருந்து என்று தெளிவு பெறவும், அந்தத் தெளிவு பெற்றதன் காரணமாகத் தோழமையைக் கெடுத்திட மூட்டிவிடப்படுகிற, கெடுமதி, கீழ்ச் செயல், பேதபுத்தி, தன்னலம் அடிமைகொளல், அடுத்துக் கெடுத்தல், இல்லது கூறி நல்லதுமாய்த்தல், உள்ளது மறைத்து உண்மையைச் சாய்த்திடல் போன்ற, கயமையை எதிர்த்துப் போராடியேனும் வீழ்த்திடல் வேண்டும் என்ற உறுதி பெறவுமான உயர்ந்த மனநிலை ஏற்பட, இவ்விழாப் பயன்படல் வேண்டும். வீட்டிலே, கலாபம் விரித்தாடும் காரிகை கண்டும், யாழ் வேண்டாமென்று எண்ணிடவைத்திடும் மழலை மொழிக் குலவி கண்டும், புத்தாடை ஒளிதர, புன்னகை இதயத்தைத் தொட, இளமைக்கோலத்தை அந்தப் பருவம் மாறி இருப்பினும், எளிதில் பெற்றும் இன்புறுவர். மிடுக்கு ஏன் போதுமான அளவு இல்லை! இதற்குள் எப்படி வந்தது நரை! ஏன் இவனுக்கு உடலில் தளர்ச்சி! அந்த நாட்களில், நான். . . . என்று இரு நாற்பது ஆண்டுகளை இனிதே கடந்த முதியவர் கேட்டுத் தம்மை ஒத்தவரிடம், அருவிக்கரை ஓரத்திலும், ஆலும் வேலும் சூழ்ந்த காவிலும், குன்றின் முகட்டிலும் கடலோர மணற்பரப்பிலும், அங்காடியிலும், ஆடல் அரங்கிலும், மற்போர்க் கூடத்திலும், சொற்போர்ப் பள்ளியிலும் இருந்ததையும், இனிமை பெற்றதையும், கூறிக்கூறிக் களிப்படையும் காட்சியைக் கண்டு தந்தையாகித் தத்தை மொழியாளின் முத்தத்தில் ஒரு பகுதி இழந்து, வந்தானே வம்புக்கு! என்று மகிழ்ச்சியுடன் கேட்டபடி மகனைக் கொஞ்சிடும் வயதினர், அக்காலம் இக்காலம் என்றெல்லாம் பேசுவதில் பொருள் என்னை? எக்காலமும், இந்தத் துறையைப் பொறுத்த மட்டில் ஒன்றேதான்! புறநானூறு மாறி இருக்கலாம் - மாறி இருக்கிறது - மாற்றப்பட்டிருக்கிறது! மறுத்தல் இயலாது, ஆயின் அகநானூறு மட்டும், அப்பழுக்கின்றி அன்றுபோல இன்றும் உளது. காலம் அதனைக் கெடுத்திடல் இயலாது; அது தமிழரின் தனிச் சிறப்பு; வழி வழி வந்தது; மரபு ஆகி நிற்பது; என்று எண்ணி மகிழ்கின்றனர். குன்று இழந்தும், கொற்றம் இழந்தும், கொடுத்திடும் இயல்பினை இழந்தாரில்லை பாரி மகளிர். பாரி கட்டித் தங்கம் தந்தான்; கரியும் பரியும் தந்தான். அவை தரத்தான் இயலவில்லை, அவன் ஈன்ற அருமைமிகு மகளிரால்! ஆயின், இருந்ததை, இயன்றதைக் கொடுத்தனர்; பெறுவோர், பெற்றோம் பெருஞ் செல்வம் என்று உளமார உணர்ந்து மகிழத்தக்க வகையில் கொடுத்தனர். பொருள் குறைந்ததேயன்றி இயல்பு கெடவில்லை! பாரி இருந்தால் எவ்வளவு அன்பு காட்டி பண்பினை நிலை நாட்டக் கொடை நல்கி இருப்பானோ, அதே பான்மையில், மகளிர் ஈந்தனர். அவன் கொடைத் திறனைக் காட்டிலும், அவன் மகளிருடையது, பெருமைக்குரியதாகும். என்னெனில், அரசு இழந்து அல்லற்பட்ட நேரம்! முரசு இல்லை! குன்றம் கொடி காட்டி நிற்கவில்லை! எத்துணையோ இடுக்கண்! பிறரிடம் பிடிபட்டோம் என்ற வேதனை! இத்தகைய நிலையில், அம் மகளிரின் மனம், வெதும்பிடுவதும், பிறரைக் காணவும், உரையாடவும், கவி இன்பம் கேட்டுக் களித்திடவும், மனம் இடம் தராத நிலை ஏற்பட்டிருக்கக்கூடும். எனினும், உரிய இயல்பு, உடைமை போயினும், இறந்துபடவில்லை; இருந்தது; ஒளி தந்தது; கொடை அளித்தனர் அக்குமரிகள், இருந்ததை, இயன்றதை!! அஃதொப்பவே, இதுபோது தமிழகம், பல்வேறு காரணங் களால் தாழ்வுற்றுக்கிடப்பினும், தேய்வுற்றுக் கிடப்பினும், உழவு செழுமையற்றுத் தொழில் வளர்ச்சியற்றுக் கிடப்பினுங்கூட, இட்டடி நோக, எடுத்த அடி கொப்புளிக்கத் தக்கதான வெம்மை எனினும், சேயைக் காண விரைந்தோடும் தாயின் பரிவுபோல; "பண்பை’ப் பட்டுப்போக விடாமல், உயிரூட்டி வளர்த்து வருகிறது. கலாம் செய்திடத் தூண்டிடும் காரணம் ஆயிரம் இருப்பினும், அமைதி கெடல் ஆகாது என்ற அருங்குணத்தைக் காட்டி நிற்கிறது. கோல்கொண்டோர், வேலெறிதல் எவர்மீது, பால் பெய்தல் எவரெவர்க்கு, வெஞ்சினம் கூறல் எதுபோது, இன்முகம் காட்டிடல் எந்த இடத்தில், எவர் சுமப்பர், எவர்மீது சுமை ஏறின் சாய்வர்; என்ற அடிப்படையையும் மறந்து அட்டகாசப் புரவிமீது அமர்ந்து பாழ் வெளிப் பயணத்தில் ஈடுபடும் காலையும், எதிர்த்திட உரிமை இருந்தும், ஆற்றல் அடியோடு அற்றுப்போய்விடவில்லை எனினும், அவரும் திருந்துவர் தமிழராதலால்; நல்வழி வந்து சேருவர்; அறம் அவர்தமை அழைத்து வந்து சேர்க்கும் என்று எண்ணி, நம்பி, நல்ல குடிமக்களாகவே நடந்து வருகின்றனர். வயல் காய்ந்துவிடுதற்கும், வந்த நீரை வாய்க்கால் குடித்து விடுவதற்கும், தொழில் பட்டுப்போவதற்கும், தொல்லைகள் ஆயிரம் தோன்றிக் கொட்டுவதற்கும், பொறுப்பேற்றுக் கொண்டு, பணியாற்றிப் பயம் நீக்கிப் பயன்காட்ட வேண்டியது, அரசுக்கு உள்ள நீங்காக் கடமை என்பதை அறிவர். வசதிப் பெருக்கும் விஞ்ஞான வளர்ச்சியும் அற்ற நாட்களிலேயே, குடி அரசு எனும் புதுமுûற் காணாமல், கோனாட்சியே குடிகட்கு நல்லாட்சியாக இருத்தல் இயலும் என்ற அளவு மட்டுமே கொள்கை இருந்து வந்த காலத்திலேயே, வந்துள்ள இடர்களைக் களைந்திட முற்படுவது அரசர் கடமை என்பதை, மன்னனும் மக்களும் ஒருசேர உணர்ந்து, ஒப்பி, அதன்படி நடந்து வந்தனர் என்பதை எடுத்துக் காட்டிடும் இன் கவிகள் பல, ஏடாகி உள்ளன! ஏட்டளவில் உள்ளன! அவைதமை எடுத்துக்காட்டி, எமை ஆளும் தகுதி உமக்குண்டு எனில், நமதரசு முன்னாளில் இருந்ததனைக் கண்டறிவீர், அதன்படி அரசு நடாத்துவீர் என்று கேட்டிட, உரிமை இருக்கிறது, தமிழ்ப்பெருங்குடி மக்கட்கு. எனினும், நமக்கே இது தெரியும்போது நமை ஆளவந்தார்க்குத் தெரியாமலா போகும்; தெரியும்; ஏனோ தயக்கம், எதன் பொருட்டோ காலந்தாழ்த்தி நிற்கின்றனர்; பொறுப்போம் சிறிது காலம்; என்றெண்ணித் தூற்றாது போற்றியும் நின்று வருகின்றனர். அம்மட்டோ! பாரிமகளிர் பரிவுடன், அன்பு கலந்த உண்டியை அருங்கலத்திட்டு அளித்த பான்மைபோல், ஏற்ற மற்றுக் கிடக்கும் இந்நாளிலும், தமிழ்பெருங்குடி மக்கள், தேவைப்படும்போதெல்லாம், வாய்ப்புக் கிடைக்கும்போதெல் லாம், தமது அருந்திறனைக் காட்டுகின்றனர்; அளிக்கின்றனர்; பயன் பிறருக்கே போய்ச்சேரினும்கூடப் பொறுத்துக் கொள்கின்றனர். தம்பி! அந்த நாட்களில் அருந்தமிழ் வளர்த்து ஆற்றலுடன் நாடாண்ட, மன்னர்களின் ஓவியத்தைக் காணத்தானே, இங்கு மங்கும் பார்க்கிறாய்! அது தெரியாமல், உன் செங்கரும்பு, பார், நானிருக்க இவர் நயனம் நானாபக்கம் பாய்வதேன் என்று கேட்கிறார் - கேட்கவில்லையா உன் செவிக்கு? அதோ பழத்தைத் தோலோடு தின்ன முற்படும் உன் அருமை மகனிடம் பேசுகிறாள் பார், அந்த அணி மயில்! ஒரு இடமாக உட்காரக் கூடாதா? இங்கும் அங்கும். . . என்று பேசுவது தெரிகிறதா! உனக்காகத் தான்! நீ தேடுவது வேறோர் தேன்மொழியையோ என்று தோன்றுகிறது; நீ தேடுவதோ, அருந்தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களின் ஓவியத்தை. தேடிப் பயனில்லை, தம்பி, துளியும் பயனில்லை. தமிழர் இல்லங்களில் தமிழ் அரசர் ஓவியங்கள் இரா! இல்லங்களில் மட்டுந்தானா இல்லை! பலர் உள்ளங் களிலேயே இல்லையே அந்த நினைப்பு. அரசு இழந்ததுமட்டுமல்ல, என்னருந் தம்பி! அந்த நினைப்பையே இழந்துவிட்டோம்! அதிலேதான் இருக்கிறது, நமது வீழ்ச்சிக்கான காரணம். அந்தக் காரணம் விளங்கினால், அடுத்த கனம் விழிப்புணர்வு? ஆம்! உறுதி! அந்த உணர்வு, நமக்குக் கிடைத்திட, நமக்கென்று உள்ள வாய்ப்புகள் மிகமிகச் சில! அதிலே தலை சிறந்தது, இந்தத் திருநாள்! எனவேதான், திருநாள் கொண்டாடத்தக்க "நிலை’ இல்லை எனினும்கூட, நமது கழகம், எப்பாடு பட்டேனும், இந்த விழாவினை, நாட்டுக்கோர் பொதுவிழாவாக்கி நடாத்த வேண்டும் என்று விரும்புகிறது; அம்முறையில் பணியும் புரிந்து வருகிறது; இயன்ற மட்டும்! தமிழகத்தின் தனிச் சிறப்பை, தரணி மெச்ச நம்மவர் தனி அரசு நடாத்திய வரலாற்றினை, நாம் எடுத்துக் கூறி வருகிறோம், மக்களிடையே. அதன் பயனாக ஏற்பட்டு வரும் மகத்தான எழுச்சி கண்டு, மனமகிழ்கிறோம். ஏனோவெனில், நாட்டுப்பற்று ஊற்றெடுத்தோட வேண்டுமாயின், நாடு நன்னிலையில் இருந்த வரலாறு மக்கட்குத் தெரிந்திருக்கவேண்டும். இல்லையேல், விழிப்பும் இல்லை, எழுச்சியும் ஏற்படாது, விடுதலை உணர்ச்சி இல்லை, வீறிட்டெழுவார் இரார். தமிழக வரலாறு, நீவீர்தாம் புதுமையைக் கூறப் போந்தீரோ? அறிந்தோர் பிறர் இலையோ! அறிவித்தோரும் உண்டு, மறுப்பீரோ? என்று கடாவுவர் சிலர். அவர்தம் கோபத்தைக் குறிக்கவே, கடாவுவர் என்ற வலிமை மிக்க சொல்லைத் தந்துள்ளேன். அவர் கேட்பதுபோல, பலர் உண்டு; உளர். ஆயின், அவர்களின் நோக்கம், ஏடொன்று புதிதாக எழுதி அளிப்ப தாகவோ, ஆராய்ச்சித்துறையின் மற்றோர் அணிகலன் என்று இயம்பிடத் தக்கதாகவோ மட்டும் இருந்தது. பகை பாயாதிருக்கப் பலரின் நேசம் கிட்ட, ஆள்வோரின் ஆதரவு தேட, அம்முறையே சிறந்ததெனக் கண்டனர்; கொண்டனர். தமிழக வரலாற்றினை, எழுச்சிக்கு வழியாகக் கொண்டாரில்லை; கொள்வோரை மறுக்காமலுமிருந்ததில்லை. ஒருமுறை சென்னை உயர் நீதிமன்றத்துக்குத் தலையாய பேரறிவாளர், “திராவிடப் பண்பாடு’ குறித்து விளக்கமுறைத்தார், மன்றமொன்றில். கூறிக்கொண்டே வரும்போது, அவர்க்கோர் ஐயப்பாடு குடைந்ததுபோலும்! ஏதேது, இவர் போன்றாரும்”திராவிடம்’’ பேசத் தலைப்பட்டுவிட்டனரே! கருத்து ஏன் காட்டு வழி செல்கிறது? கழகவாடை வீசிடக் காரணமென்ன - என்று எவரெவர் எதிரில் பேசுவரோ; மறைவில் ஏசுவரோ, என்ற ஐயப்பாடு! அது, அச்சத்தை அழைத்து வந்தது. எனவே, அப் பெருந்தகை, "யான் திராவிடப் பண்பாடு குறித்துப் பேசக் கூசுகிறேன்; ஏனெனில், அந்தச் சொல், இனம், அரசியல் ஆகிய வற்றுடன் இப்போது பிணைக்கப்பட்டு இருக்கிறது’’ என்று சாற்றினார். சாற்றியதால், அவரைப் போற்றி நின்றார் தூற்றத் தலைப்படாதிருந்தனர். கழகத்தார் மட்டுமே, தமிழக வரலாறு, தமிழர்க்கு விழிப்பூட்ட என்ற நோக்கம் கொண்டனர்; புது வழி கண்டனர்; வெற்றியும் கிட்டாமற் போகவில்லை. வெற்றி எங்ஙனம் கிட்டிற்றோ, அஃதேபோன்று வேற்றுக் கருத்துடையாருக்கு, வெகுண்டெழும் எண்ணமும் உடன் எழுந்தது. வரலாற்றினை, வண்கணாளர்கள், வம்பு வல்லடிக்குப் பயன்படுத்துகிறார்கள்; இது அடாத செயல்; அறிவீனமான போக்கு என்று கூறப் போந்தனர். அவர்தம் நாப்பறைக்கு மக்களிடையே இல்லை யெனினும், கொலு மண்டபங்களிலே, மேட்டுக் குடியினரின் கோட்டங்களிலே, பொருளுடையாரின் கூடங்களிலே செல்வாக்கு உண்டன்றோ! அந்த முறையிலும், அளவிலும், நமது கழகத்துக் ஓரளவு ஊறு ஏற்படத்தான் செய்தது. எனினும், பிறருக்குக் கூறிக்கூறி, நமக்கே, அந்த வரலாறு, ஒரு அஞ்சா நெஞ்சத்தைத் தந்துவிட்ட காரணத்தால், எதிர்ப்பு கண்டு நாம் அயரவில்லை; ஏளனம் கேட்டு ஒதுங்கிவிடவில்லை; "தன் நெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்’ என்றாரே வள்ளுவர்; தீயோரின் நாவினால் புண் ஏற்படுமே என்று அஞ்சினால், அதனைவிடச் சகித்திட முடியாத புண், நமது நெஞ்சுக்கு நெஞ்சத்தாலேயே ஏற்பட்டுவிடுமே, என்று எண்ணினோம், ஏது வரினும் அஞ்சற்க! உண்மையை இயம்புதற்கு அஞ்சற்க! என்ற போக்குடன் பணியாற்றி நிற்கிறோம். இதுகண்ட ஒரு சிலர், இளித்தவாயர் கிடைக்காமலா போவார்கள் என்ற துணிவில், "இதென்ன தமிழரரசர்கள்பற்றிய பெருமைப் பேச்சு! செச்சே! அது பழைய கதை! கர்நாடகக் கதை! அணுபிளந்து ஆயிரத்தெட்டு அற்புதங்காணும் இந்நாளில், அனிச்சமலர், அன்றிற் பறவை, அல்லிப்பூ, முல்லைக்கொடி, ஆத்திமாலை, நெடுநல்வாடை, பரணி, அந்தாதி, வாள்வேல், மந்தி, மகரந்தம் என்றெல்லாம் பேசித் திரிகின்றனரே!’’ என்று ஏளனம் பேசுகின்றனர். பேசுவோர் எவ்வளவு முற்போக் குடையார் எனில், வீசித்தான் போடுவார் திறநீற்றை! அமைச்ச ரானால் என்ன, அதனினும் உச்சம் சென்றவரானால் என்ன, ஐதீகத்தைப் பாழ்படுத்துவதா! ஆலய பூஜா முறைக்கு இழுக்குத் தேடுவதா! புனிதத்தைப் பாழ்படுத்துவதா!! என்று, ஆத்திரம் பொங்கிடும் நிலையில் கேட்கின்றனர். மறுநாள் மாலை அணு உலைக்கூடம்பற்றிப் பேசுவர்!! இத்தகைய இயல்பினர்தாம் தமிழரின் தொன்மை குறித்து நாம் பேசிடுவது கேட்டு, அச்சத்தை மறைத்துக்கொள்ள அவதூறு பேசித் திரிகின்றனர். இவர் தொகை குறைவு என்பது மட்டுமல்ல, இவர்தம் கருத்துக்குக் கிடைத்துவரும் “மதிப்பும்’ மிகமிகச் சொற்பம், அந்தச் சொற்பமும் அவர்கள் பெற்றுள்ள”இடத்தின்’ காரணமாகச் சாகாது இருந்து வருகிறது. அவ்வளவே! தமிழரின் தொன்மையை எடுத்துரைப்பது, தொன்மையே சிறந்தது, புதுமை அன்று என்று எண்ணிடும் மருளால் அல்ல. அன்று, எங்ஙனம், தமிழர்தம் அறிவாற்றலால் பல்வேறு நாட்டவர்களைக்காட்டிலும், எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெற்று விளங்கினரோ, அதுபோன்றே, இன்றும், முயற்சி செய்தால், தளைகளை நொறுக்கினால், தன்னரசு அமைத்தால், தரணி கண்டு மெச்சத்தக்க வகையில், தமிழர் வாழ்வர்; பண்பு காண்பர்; பாருக்கு அளிப்பர்; என்பதே நோக்கம். சந்தன மரத்துத் துண்டு, அடுப்பெரிக்க அல்ல, அரைத்தெடுத்து மணம் காண! அதோ, உன் எதிரே உள்ள கரும்பு மாடோட்டும் கோலாக அல்ல, உன் மனத்துக்கிசைந்தாளின் மதுரமொழியும் அதரச் சுவையும் கிடைக்காதிருக்கும் வேளையில், இனிப்புச் சாறுதர. இங்ஙனம் கூறுங்காலை, குறிப்பாக என்மீதும், பொதுவாக நமது கழகத்தவர்மீதும் பழியொன்று கூறிடப் பதைத்தோடி வருகின்றனர் - வழி பல கண்டு அலுக்கும் வகையற்றோர். சுவைபடப் பேசுகின்றனர். மக்களை மயக்க! அதுவும் ஆரணங்குகள்பற்றி அழகுறப் பேசுகின்றனர், இளைஞர் சொக்கிடும்படி - என்று கூறுகின்றனர். இது எற்றுக்கோ எனில், பிறர் கேட்டுக் காய்வராம், கசக்கிறது என்பராம்! என்ன பேதைமை! எத்துணை தமிழறியாத்தன்மை இருப்பின் இவர்கட்கு இந்த எண்ணம் தோன்றும்! வள்ளுவர், "காமத்துப்பால்’ இயற்றியதே தவறு, தேவையற்றது, தீதும் பயப்பதாகும் என்று கூறி வருவதையும், பேரறிவின் சான்று என்று கருதிக் கதைக்கின்றனர். மறைந்த தமிழ்ப்பெரியார், திரு. வி. க. அத்தகையோருக்கு அறிவு கொளுத்திப்பார்த்தார். அழுக்கு மட்டுமல்ல, அழுக்காறு நிரம்ப உள்ளத்தில் அவர்கட்கு இருப்பதால், அந்த முயற்சி முழு வெற்றி அளிக்கவில்லை. இன்று, அதே போக்கிலே பேசுகின்றனர் - பேசுவது கேட்டு, இல்லறத்தில் யாரோ இவர்களை இழுத்துப் பிடித்து வைத்துள்ளார்! இல்லையேல் ஐம்புலனை அடக்கி ஒடுக்கி, மும்மலம் நீக்கிக்கொண்டு, முகதிக்கு வழி தேட, மலைமுகடோ, காடோ, சென்று கடுந்தவம் செய்வர் - என்று கூறி இறைஞ்சுவர் என எண்ணிக்கொள்கின்றனர். மக்கள் அறிவர், மாண்புபற்றிப் பேசிடும் இவர்கள், எத்துணை மாண்பு வளர்த்தனர் என்பதை!! தம்பி! தமிழ் கற்றால், தமிழ் வரலாறு பேசினால், தமிழர் வாழ்ந்த வகை குறித்துப் பெருமைப்பட்டுக்கொண்டால், வருகிறது கோபம் இவர்கட்கு. காரணம், இதற்கு இரண்டுண்டு, ஒன்று, விடுதலை வேட்கை வளருகிறதே என்ற அச்சம்; பிறிதொன்று, இவர்கள் அறிய மாட்டார்கள், தமிழக வரலாற்றினை, அறிந்தோர் பெறக்கூடிய எழுச்சி எத்தகையது என்பதை. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு, தம்பி, புலவர் பெருமக்கள், இயற்றியது அகம் - புறம் - எனும் இரண்டினை! அறிந்து இயற்றினர், அஃது மக்கட்குத் தேவை என்பதால். கட்டற்ற களியாட்டத்துக்கு அல்ல, இல்லற இன்பம் குறைவற்றதாக இருத்தல்வேண்டும், வாழ்க்கை ஒருகலை, அதனை மக்கள் உய்த்து உணரவேண்டும் என்ற பெருநோக்குடன் இயற்றினர். நுண்ணறிவும், நோக்கிடும் திறனும், பொருள் கொண்டிடும் நேர்த்தியும் செறிந்த முறையில் இயற்றினர். காணும் பொருளுக்குக் காணாப் பொருளை உவமை காட்டி. குருடனைக் கொண்டு குருடனை அழைத்துச்செல்லச் சொன்னாரில்லை. அழகிலே அவள் அரம்பை என்றல்ல, ஆடும் மயில் அந்த ஆரணங்கு என்றனர்! வீரத்திலே அவன் வில்விஜயன் என்றல்ல, மலையைப் பிளந்திடும் மதகரி என்றனர்! “அவனும் அவளும்’ பொழிலில் உலவியதை, தேவேந்திரனும் இந்திராணியும் கற்பகத் தருவடியில் சல்லாபித்தது போன்றது என்று அல்ல, பெடையுடன் ஆடிடும் புள்ளினம், மடப்பிடியுடன் களிறு களித்தாடுவது, இவைகளைக் கூறினர்.”காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்’’ என்கிறார், கடவுள் திருப்பாதத்தைக் காணப் பாடியவரும்கூட! தம்பி! ஒரு யானை! அது ஒரு நாள், தன் பிடி முன்வர வெட்கப்பட்டுக்கொண்டு புறக்கடைப்பக்கம் போய் நின்றதாம்! ஈதென்ன வேடிக்கை, யானை வெட்கப்படுவதா, ஏன்? என்பீர்! காதலி எதிரில், அலங்கோலமான நிலையில், வந்து நிற்க வெட்கமாக இராதோ உங்கட்கு. ஆள்வோரைத் தள்ளி விடுங்கள், அவர்கள் விரைவில் "ஜடாமுடி’ தாரிகளாகி, காவி கட்டிக் கமண்டலமேந்தி, கடுந்தவம் செய்யப் புறப்படுவார்கள்! அப்படிப் புறப்பட்டால்தானே, பேரழகி மேனகை வருகிறாள்!! போகட்டும்! தவத்தை நடத்தட்டும். நான் கேட்பது இல்லறம் நடத்துவோரை! யாம் கூறுவதன்றிப் பிறிதேதும் அறமாகாது என்று அறைந்திடுவோரை அல்ல! பல்லிரண்டு ஒடிந்துபோய், உதடு கிழிந்து, ஆடை கலைந்து இருக்கும் நிலையில் காதலி எதிரே வந்து நிற்கத் துணிவீர்களோ? முடியாது, என்கிறீர்கள். அதேதான் அந்தக் களிறு இருந்த நிலை. தந்தம் உடைந்துவிட்டது! நகங்கள் தேய்த்து போய்விட்டன! அந்தத் தந்தத்தைக் கண்டு கண்டு எத்தனை முறை பெண்யானை களிப்புற்றிருக்கும்; உரிமையுடன் உவகையுடன், தன் துதிக்கை யால் எத்தனை முறை தந்தத்தை வருடிற்றோ, நீ கண்டாயோ! என்ன ஒரு விதமான புன்னகை!! அன்றொருநாள், தோளின்மீது சாய்ந்து. . . ஓஹோ! அதை எண்ணிக்கொண்டாயா! யானை மட்டும் என்னவாம்! களிறு, கவலைப்படுகிறது! செ! இந்த நிலையில், மடப்பிடி என்ன எண்ணுவாளோ! எப்படி எதிரே போவது! வெட்கமாக இருக்கிறதே என்று. எனவே, புறக்கடைப் பக்கம் சென்று நிற்கிறது. தந்தம் ஒடிந்தது ஏன் தெரிகிறதா? கொடி மதில் பாய்ந்தது - போரில்! கோட்டைச் சுவரினைக் கோடுகொண்டு - தந்தந்தைக்கொண்டு, தாக்கிற்று! கோட்டைச் சுவரும் இடிந்தது, தந்தமும் உடைந்தது. போரின் காரணமாகத் தான் நகமும் தேய்ந்தது! இதைப் பெண் யானை பிறகு, தானே தெரிந்துகொள்ளும் பார்த்ததும்! என்ன அலங்கோலம் இது! கோடு உடைந்து கிடக்கிறதே! என்று கேட்டுக் கேலி செய்யுமே! அந்த எண்ணம், ஆண் யானைக்கு! வெறும் காதல் மட்டுமா, தம்பி. இதிலே காணக் கிடக்கிறது! தமிழர் போர் முறை விளக்கப்படுகிறது! மனப்போக்குத் தெரிவிக்கப்படுகிறது. அரிய நகைச்சுவை ததும்புகிறது! இத்தனையும் தமிழ்! அந்தத் தமிழ், நமது மொழி! அந்தக் களிறு, பிடி, நம்முடையவை! “அந்த நாட்கள்’ நம்மவர்,”நமது அரசு’ அமைத்து ஆண்ட நாட்கள்! இவ்வளவும், இதற்கு மேலும், ஊற்றெடுக்குமே, இத்தகைய தமிழ்ப்பாக்களைப் பயிலுங்காலை. தம்பி! நாடாள்வோரைக் கண்டு கண்டு சலித்துப் போயிருக்கிறதல்லவா, உன் கண்கள். அதிலும், கோயிலுக்குச் சென்று கும்பிட்டு நின்று, ஆண்டவன் அருளைக்கூடப் பெற்று விடலாம் எளிதாக. ஆனால், ஆலயத்துப் பூசாரியிடமிருந்து மட்டும், மட்டு மரியாதை, மனிதத்தன்மையை மதிப்பதுபோன்ற மிகச் சாதாரண “பிரசாதம்’கூடக் கிடைக்கவில்லையே என்று, கை பிசைந்து கண் கலங்கி நிற்கும்”கனம்’களைக் காண்கிறோமே! கஷ்டந்தான்! எனக்குந்தான்! சரி, தம்பி! ஒரு நாரையைக் காண்போமா! துயில்கின்றது! எவ்வளவு இன்பமாக; கவனித்தாயா! உன் மார்பின்மீது, மதலையின் சிறுகால்! உன் முகத்திலே, ஓர் மலர்ச்சி! பக்கமுள்ள பாவைக்கு உன்னை அம்மகவு படுத்தும் பாடு கண்டு, பெருமை, பூரிப்பு! உனக்கு அடங்க மறுக்கிறது, உன் ஆற்றலின் விளைவு! “நானே, அடங்க! உங்கள்”வீரம்’ என் கண்ணிடம் பலிக்காது!’’ என்று கூறிக் கெக்கலி செய்கிறார்கள், முக்கனிச் சாற்றைப் பேச்சிலே பெய்தளிக்கும் பாவை. உனக்கும் உன்போன்றோர்க்கும் அது. இதோ நாரையைப் பார், நிம்மதியாகத் தூங்குகிறது! இளம் காற்று வருடினால், தூக்கம் ஏன் வாராது? அதுவும், மாமரத்தின் இளந்தளிர், தடவிக் கொடுக்கிறது. இனிமையான தூக்கம் நாரைக்கு. மாத்தின் இளந்தளிர் வருட வார்குருகு உறங்கும். ஆமாம், தம்பி! புலவர், ஏன் நாரையைக் காட்டினார்? நாரையை அல்லது அதன் தூக்கத்தைக் காண்பதிலே, என்ன இன்பம்! துரைத்தனம் நடத்துபவர்களிலேகூட, அவையில் அமர்ந்து, கண்மூடிக் கிடப்பவர்கள் உண்டே! இது சாதாரண நாரைதானே. இதை ஏன், புலவர் காட்டினார் என்பார். காரணத் தோடு தம்பி, தகுந்த காரணத்தோடு நாட்டிலே இருந்த இயற்கை வளத்தைக் காட்டுகிறார், வெறும் நாரையை மட்டும் அல்ல. கழனிக் கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து பழன யாமை பசுவெயில் கொள்ளும். நன்செய் நிலத்தில் வளர்ந்துள்ளது கரும்பு. ஆமைக்கு இளவெயிலில் காய்ந்து இன்புறும் எண்ணம். கரும்பின் வழியாக ஏறிக் காலை இளம் வெயிலில் காய்கிறது. சேச்சே! இதென்ன ஆமைக்கு ஒரு பாடலா என்று கேட்பர், ஆள வாய்ப்பு கிடைத்ததாலேயே; அறிவின் முதிர்ச்சி தமது சொத்து என்று அதிகாரத்தைக் காட்டி மக்களை நம்பச் சொல்வோர். நாட்டு வளம் மட்டுமா? புலவர்கள், இயற்கைக் காட்சிகளை எவ்வளவு அழகுறப் படமெடுத்திருக்கிறார்கள் என்பதல்லவா முக்கியம். ஆமையைக் கண்டு கூர்மாவாதாரக் கதை கட்டினாரிலை; வளம் எப்படி இருந்தது என்று உணர்த்தினர். இயற்கை வளம் காட்டுவதுடன் நின்றாரில்லை, அரசர்கள் முறை தவறி நடந்தகாலை இடித்துரைத்தனர், கோல் கோணாதிருத்தல்வேண்டும் என்பதை வலியுறுத்தினர். சுவைபடக் கூறுவது ஆகாது என்று பேசுவோர், குறிப்பாக "அகத்துறை‘யை ஒதுக்கித் தள்ளிவிடுகின்றனர். உனக்கென்ன, என்று கேட்பாயானால் தம்பி, எனக்கொன்றும் இல்லை; ஆனால், அங்ஙனம் கூறுவோர், "புறம்’ பற்றிய, புலவருரையையேனும், போற்றினரா, பாடம் பெற்றனரா? இல்லையே! ஏன்? ஆரணங்குபற்றிய பேச்சு அவர்கட்கு எட்டி. சரி! அப்படியே இருக்கட்டும். மற்ற அறநெறிபற்றி, என்ன கருதுகின்றனர்? எவ்வாறு நடந்துகொள்கின்றனர்? மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ காற்றும் சிலரை நீக்கி வீசுமோ மானிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ குலமும் ஒன்றே குடியும் ஒன்றே இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே. என்று பாடியுள்ளனரே. இதிலே கடை இல்லை; இடை இல்லை, பிறகேன், இதனைக் கூர்ந்து பார்த்து, அவ்வழி நல்வழி என்று கண்டு, கேடு களைய முற்படக்கூடாது! நீண்ட காலமாக இருந்து வரும் "பூஜா’ முறையை எவரும் குறைகூறக் கூடாது என்றல்லவா, பேசுகின்றனர், அமைச்சரானோர். சிறப்பும் சீலமும் அல்லாது பிறப்பு நலந்தருமோ பேதையீரே! என்று கேட்கிறாரே, புலவர்! எங்ஙனம் விடை இறுக்க இயலும்? இந்தத் தேவாலயத்திலே, இன்னார்தான், இன்ன முறைப் படிதான், பூஜை செய்வர்; அதற்கு உட்பட்டுத்தான் பக்தர் செல்ல வேண்டும் - என்று பேசும் போக்குக்கும், பழந்தமிழர் கொள்கைக்கும் ஏதாகிலும் பொருத்தம் இருக்கிறதா? இல்லையே! ஆலயத்துக்குப் “பூஜாரிகள்’’ ஆக, இன்னின்ன தகுதி வேண்டும், ஜாதி அடிப்படையில் அல்ல என்று சட்டம் இயற்றச் சொல் பார்ப்போம்! அந்த முயற்சியில் ஈடுபட்டால், எமது செல்வாக்குச்”சடசடெனச் சரியும்’’ என்பார்கள். எனவேதான், தம்பி, தமிழரின் வரலாறு குறித்து நாடு அறிந்தால் மட்டுமே, நெஞ்சுரம் ஏற்படும் என்று கூறுகிறது, நம் கழகம். சிறைப்பட்ட மன்னனுக்குத் தாங்கமுடியாத தாகம் ஏற்பட்டது. காவலாளியோ பருக நீ கொடுக்கும்போது மரியாதைக் குறைவாகக் கொடுத்தானாம். மானம் பெரிது, உயிரல்ல என்று எண்ணிய அந்த மறத்தமிழன், நீர் பருகாதிருந்து உயிர் நீத்தான் என்று பாடல் இருக்கிறது. அந்தப் பாடலும் பழம் கதையும் எற்றுக்கு என்று ஏசுவோரின் ஆளுகையில், “எட்டிநில்! கிட்டே வராதே! வீசுவேன் பிரசாதம், வாங்கிக்கொள்!’’ என்று ஆலயத்தில் உள்ளவன் ஆரியம் பேசுகிறான், அது நியாயந்தான் என்று”ஐதீகம்’ பேசுகிறார் ஒரு அமைச்சர்! ஊரே கிளம்பி, இந்தச் சுழியில் சிக்கிய துணை அமைச்சரைத் துளைத்தெடுக்கிறது. தமிழ் அறம் அரசோச்சுமானால் நிலைமை இதுவாகவா இருக்கும்? அந்த அறம், அமைச்சர்களின் துணையால் வாராது; தம்பி! உன்போன்ற தூய உள்ளமும் துயர் கண்டு துவளாப் போக்கும் கொண்டோர், தொடர்ந்து பணியாற்றினால் மட்டுமே முடியும். தொடர்ந்து பணியாற்றவேண்டும், தம்பி, தொடர்ந்து! இன்று கூடவா, அண்ணா! என்று, ஏக்கத்துடன், கேட்கத் தோன்றும். நான் அவ்வளவு கடின மனம் கொண்டவன் அல்ல. இன்று இல்லத்தில் இன்புற்று இரு! உன்னைப் பெற்றோர் உளமகிழ்ந்து "எமது குடிசிறக்க வந்துற்றான் இவன்’ என்று கூறிடத்தக்க விதமாகச் செயலாற்று. மஞ்சளும் இஞ்சியும், அவைதமை நறுக்கிடும் மாம்பழக் கன்னத்தாளும், பால் பெய்த பொங்கலும், பருப்பும் பாகும், எதிரிருக்க உன்னை ஏடு எடு! நாடாள வந்தவர்கட்கு அறிவுச் சுடர் வரத்தக்க விதத்தில் எடுத்துக் கூறு! எதிர்ப்புக்கு அஞ்சாதே! என்று கூறி, அழைப்பேனா! அண்ணன் கூறுவதை எப்படித் தட்டி நடக்க முடியும் என்று கூறிப்பார், வேல் இரண்டு பாயும் உன் நெஞ்சில்! எடுத்தெறியத் தேவை இல்லை வேலை! ஏறெடுத்துப் பார்த்து, என்ன? என்று கேட்டாலே போதும், நானறிவேன். பொங்கலெனும் நன்னாளைப் பூரிப்போடு போற்றுதற்கு, ஊரெல்லாம் திரண்டிடும்போது, உனக்கு மட்டும் வேறு பணியா? இல்லை, தம்பி, இல்லை, செங்கரும்பும் சீனியும் செவ்வாழைச் சீப்பும், சுவைக்க! முல்லையும் மல்லியும் சூட! பூ இரண்டு போதாதோ, புதுப்பூக்கள் தேடுவதோ, என்று மலர்க்கண்ணாள் கேட்டிடுவாள் இதழ் விரித்து. அந்த இன்பக் காட்சியிலே, உன்னை மறந்து, ஒரு நாள் இருப்பது, பிறகு தன்னை மறந்து, தமிழுக்குப் பணிபுரியும் உற்சாகம் பெறுவதற்கே என்பதை மட்டும் மறவாதே! காடதிர, நாடதிர, கயவர் கூட்டம் சிதற, வீரம் விளைவித்து வெற்றி கண்ட இனத்தில் உதித்தோம். வேழம் உராயும் சந்தனமும், வெற்பில் விளையும் பல பொருளும், பழமுதிர் சோலைகளும், பாங்குநிறை கழனிகளும், பலவும் பெற்றோம். தீயன நினைக்கா நெஞ்சும், தேனென இனிக்கும் மொழியும், வையகம் போற்றும் நெறியும், நமக்கு. முப்புறம் கடலுண்டு; எப்புறமும் அந்நாளே கண்டு வியந்ததுண்டு. பலப்பல இலக்கியம் உண்டு, கலை பல உண்டு, காண்பாய்! அலைகடல் அடக்கும் ஆற்றல், ஆணவம் முறிக்கும் அடுபோர்த்திறன், வாணிபம் நடாத்தும் நேர்த்தி, செய்பொருள் ஆக்கும் செம்மை, யாவும் உண்டு இங்கே. முத்து அளிக்கும் கடல்! அகில்போல் பல தருக்கள் அளிக்கும் நம் காடு, வாழ்வுக்கு வகை அளிக்கும் நம் கழனி! வல்லமை அளிக்கும், மரபின் இயல்பு! வாய்மையும் தூய்மையும் அளித்துச் சென்றார், நம் ஆன்றோர். அத்தனையும் உடனிருக்க, நத்திப்பிழைக்கலாமா? இத்தனையும் இங்கிருக்க, இல்லாமை இருக்கலாமா? நாடு வளம் தந்திடினும், நாம் வாழ வழி காணோம், கடல்கடந்து வந்துள்ளோம், அடிமைகளாய் வதைவதற்கே என்று கூறிக் கசிந்து நிற்கின்றனர், நம் உடன்பிறந்தார், வேற்றுச்சீமைகளில். இவைகளை எண்ணாமல், எம்முடன் இணைந்திருங்கள், இறுக்கிப் பிணைத்துவிட்டோம், எங்கு இனிச் சென்றிடுவீர் என்று கேட்டு மிரட்டுகிறது பேரரசு. இது இன்றுள்ள நிலைமை. இந்த நிலைமையை மாற்றினால்தான் தம்பி, வீடெல்லாம் விழாக்கோலம், நாடே விழாக்கோலம், நாளெல்லாம் நல்ல விழா! சின்னஞ்சிறுநாடு செம்மையுடன் வாழ்ந்திருக்க, பண்டைப் பெருமைதனைப் பாங்காகப் பேசிவரும், நந்தம் திருநாடு, நாதி யற்றுக் கிடப்பதுவோ? திண்தோள் உண்டென்றும், தீவிரம் பல பேசி, ஆவது ஒன்றுமில்லை. தெளிவுகண்டோம் என்றால், மற்றவர்க்கும் தெளிவளித்து நம்மைப்போல் அவராகும் நாளை எதிர்நோக்கி நிற்போம்; கன்னல் வளரக்கண்டு கருத்தோடு உழைத்திட்ட காராளன் தருவான் பாடம். இங்கிதனைச் செய்வதற்கு, ஏற்றதோர் இளவல் நினையன்றி வேறெங்கு காணக்கிடைத்திடுவான்? நின் முன்னோன் ஒரு சேரன், நீள்புகழ் நாட்டிச் சென்றான். மற்றோர் மாமன்னன் கடலைக் கடந்து சென்று காட்டினான் பெருவீரம்! அவர் தந்த "நாடு’ அழகழிந்து இருப்பதுவோ? நமை நோக்கி உள்ளார்கள் நாளைத் தலைமுறையார், அவர் வாழ வழிவேண்டின் அடிமை நிலை போக்கி, மடைமைதனை நீக்கி, வறுமைப் பிணிக்கு இது வாழிடம் அன்றென்று கூறி, கிளர்ந்தெழுந்து கொடுமைகளை ஒழித்திடுவாய். நான் மட்டுமல்ல, தம்பி, நாடே அழைக்கிறது. நம் நாடு மட்டுமல்ல, எங்கும் இது குறித்து இன்று பலர் பேசுகிறார். விந்தை மனிதரென்றும், வெட்டிப் பேச்சாளரென்றும் வீறாப்புப் பேசுவோரும், உள்ளூர உணர்ந்துகொண்டார்; நமக்கின்று உள்ள நிலைமையோ பாய்மரமில்லாக் கப்பல் என்ற பெரும் உண்மையினை. கோதிக்குழல் முடித்து, கோலவளை குலுங்க அழகு நடை போட்டு அருகில்வரும் ஆரணங்கும் "ஆமாம் அத்தான்; அரிமாவாம் உம்முடைய ஆற்றலுக்கு ஏற்றதோர் அரும்பணி ஈதேயாகும்’’ என்பார். வீடாளும் வேல்விழியாள், நாடாளும் நற்பேறு நமதாதல் வேண்டுமென்று நாளும் நினைப்பவள்தான். ஆகவே, “அண்ணன் அழைக்கின்றான் அயராது போய் வருவீர்’ என்றே கூறிடுவாள் அகம்குழைந்துமட அன்னம். கேட்டு,”அன்புத் தாயகமே அடிமை நிலைபோகும்; அரியாசனம் காண்போம்’ என்று நாட்டுக்கு எடுத்துரைக்கத் துடிக்கின்றேன். எனினும், இன்று அன்று! இன்று மனை; மகிழ்ச்சி; விழாக்கோலம்! இன்புற்றிரு, என் அன்பினைப் பெற்று உன் அன்பினை எனக்களிக்கத் தவறாதே - அளித்தால் குறையாது. அஃதொன்றே, கொடுக்கக் குறையாதது. செந்நெல்மணி குவித்துச் செங்கரும்பு விளைவித்துச் சேயிழையார் ஈன்றெடுத்த செல்வங்களோடு இல்லறம் உவந்தளிக்கும் இனியன பலவும் பெற்று இன்புற்று இரு! இந்நிலையும், எல்லார்க்கும் ஏற்படவேண்டும் என்பதனை மறவாதிரு! எண்ணம் பாரியானால் எத்துணையோ கோடி காதம், "இம்’மென்று கூறி முன் சென்றிடலாம் என்பர். அம் முறையில், எண்ண நின்றால், அரசு அமையும் என்றிருத்தல் அழகல்ல, அறமல்ல, ஆகும் நெறியாகாது, நெஞ்சம் புகுந்து விட்ட அந்த எண்ணமதை, எல்லோரும் உணர்ந்திட ஓர் வழி காணல் நின் கடமை. கடமை அத்தோடு நின்றிடவுமில்லை. எழுச்சி எங்கணுமே ஏற்றமுடன் தோன்றியபின், காட்சி இதுபோலக் காணக்கிடைக்காது என்று இறும்பூதெய்தி இருந்திட்டால் போதாது. எங்கே எம் பகைவர். எப்பக்கம் களம் உளது? ஏன் இன்னும் முரசு இல்லை? எனக் கேட்டுத் துடிதுடித்துக் கேடகற்ற நீ முனைவாய்! ஆடகச் செம்பொன்னும் ஈடாமோ உன் மேனி அழகதற்கு என்று பேசிடின், ஏற்றிடுமோ ஏந்திழையும், காணக் காத்திருத்தல், கண்பொத்தி விளையாடல், கா சென்று பூப்பறித்தல், வேழம் தனை விரட்டல், வெஞ்சமரில் முந்திநிற்றல் என்றன்றோ முறைகள் பல இயம்புகின்றார் அகம் அறிந்தோர். அவரே அழகுபடப் "புறம்’’ இருந்திடும் முறைதனையும் அன்றே கூறியுள்ளார்! களிறோ, கடுங்காற்றோ காணீர் இவ்வீரனையே! என்று மாற்றாரும் வியந்திடும் போக்கினிலே அஞ்சாது போரிட்டு அரசு காத்திருந்தார், இந்நாளில் இடர்ப்பட்டு ஏங்கித் தவித்திடும் இத்தமிழ் மக்களின் எந்தையர்கள் முந்தையர்கள். இன்றுள்ள நிலைமையினால் ஏற்பட்டுவிட்டுள்ள இழுக்கைத் துடைத்திடவோர் ஏற்றமிகு செயல்புரிய எல்லோரும் துடிக்கின்றனர். அவர்தம்மை வாழ்த்துகிறேன். ஆர்த்தெழும் முரசாவர் அருந்தமிழர் விடுதலைக்கே! அன்னாரும் அன்பர்தாமும், இனிதே மகிழ்ந்திருக்க விழைகின்றேன். என் வாழ்த்துதனைச் சேர்க்க ஏற்ற முறை கிடைத்திடுமேல், பொன்னான தம்பி! அதைச் செய்தும் சுவை பெறுவாய். இந்நாளில் பொங்குவது இன்பம் மகிழ்ச்சி எலாம். எந்நாளும் இதுபோன்ற அமைந்திட ஓர் வழி உண்டு. அந்த நல்வழி நடக்க, உனக்கு ஆற்றலும் நிரம்ப உண்டு. அறிந்தே உரைக்கின்றேன், ஆகும் என்று உரைக்கின்றேன். உழவர்கள் உள்ளம் பொங்க ஒளிதரும் கதிர்கள் ஈன்று கழனிகள் தோறும் செந்நெல் களிநடம் புரியும் தையே எழிலோடு வாராய். . . .! என்று இங்குளார் அழைக்கின்றார்கள். செங்கதிர் சிரித்த சிறப்பினிலே சிதறிய ஒளியின் சிதற-லே பைங்கதிர் கொண்ட உவகையிலே பைம்பொன் கதிராய் மாறுகையிலே மங்களத் தோற்றம் காண்கையிலே பொங்கிய உள்ள மகிழ்ச்சியிலே தங்க நிறக்கதிர் கொய்தனரே பொங்க லெனவிழா வைத்தனரே! என்று பாடுகின்றனர். இசையுடன் வாழ்ந்த இனத்தில் வந்துதித்தோம், இனியொரு முயற்சி செய்வோம், இழந்ததைப் பெறுவோம், இசைபட வாழ்வோம், வாராய். இன்றல்ல என்று தனது இருவிழியால் கூறிடும் என் உடன்பிறந்தாள் தனக்குமே, உரைத்திடு, முறை அறிந்து உரைத்திடுவாய், தம்பி, நீ அண்ணன், 14-1-1960 ‘நெடுநல்வாடை’ நின்ற பிறகு தோழர்கட்குச் சகிப்புத்தன்மை - காங்கிரசாட்சியும் நகரசபையும் தம்பி! “நெடுநல்வாடை‘யில் சிக்கினோர், தென்றல் மீண்டும் ஓர் நாள் கிட்டுமோ என்று ஏங்கிக் கிடப்பர் - நமது நிலை அதுபோன்றதாக இருந்தது. நீண்ட நாட்களாக - செச்சே! நாட்களா? - நீண்டகாலமாக, நமது தொடர்புக்குத் தனிச் சுவையும் தகுதிமிகு பயனும் அளித்துவந்த, “மடல்’ நின்றுபோய் இருந்தது, செய்வதையும் செய்துவிட்டுச் செப்படி வித்தை வேறா? என்று கோபித்துக்கொள்கிறாய் - தெரிகிறது. ஆனால், நான் என்ன செய்ய? குறைபாடு ஏற்பட்டுவிட்டதற்கு, நானேவா முழுக்க முழுக்கப் பொறுப்பாளி?”நீயும், உன்போன்ற உடன்பிறந்தார்களும், “மடல்’ எழுத எங்கே எனக்கு நேரம் தந்தீர்கள்? திங்களில் இருபது நாட்களேனும், நானன்றோ, நீங்கள் இருக்குமிடம் தேடிவந்தேன். காடும் மேடும் கண்டு கலங்கினேனா? அருவிக்கரை ஓரமாயினும் சகதி மிகு இடமெனினும், கொஞ்சிடும் நஞ்சை சூழ் நகராயினும், பஞ்சம் தாக்கும் பட்டியெனினும், சகடத்தைச் சாய்த்திடும் குழிகள் மிகு பாழ்வெளியெனினும், புதை மணல் நிரம்பிய புரம் எனினும், உன் அன்பழைப்புப் பெற்றால், தயக்கம் கொள்ளவா முடிகிறது; ஓடோடி வருகிறேன், உன் உள்ளன்பைப் பெற, உற்சாகம் பெற! அண்ணா! இது அறுபத்து எட்டாவது முறை!! இம்முறையும் வாராது இருப்பீரேல்…! என்று உரிமையுடன், கோபித்துக் கொள்கிறாய்.”பயண அலுப்பு, பாதையில் உடைப்பு’ என்று என்ன காரணம் காட்டினால்தான், உன் மனம் திருப்தியா பெறுகிறது!”அதெல்லாம் முடியாது, மாற்றுக் கட்சியினர், மனம்போன போக்கிலே ஏசிவிட்டுச் செல்கின்றனர் - கோபம் கொந்தளிக்கிறது - மக்களுக்கு உடனடி வந்து, விளக்கம் தாராது போனால், மனம் உடைந்துபோகும், மன்றம் கலகலத்துப் போகும், கழகம் கரையும், உலகம் பழிக்கும் என்றெல்லாம் காரணம் காட்டுகிறாய், நீட்டோலை கொண்டு தாக்குகிறாய்! ஆனால் தம்பி அந்த நீட்டோலைத் தாக்குதலில்தான், நான் எத்துணை இன்பம் காணுகிறேன், தெரியுமா! கழகக் கருத்துக்கள் பரவவேண்டும், குறிக்கோளுக்கு வலிவு ஏறவேண்டும், மாற்றார் கட்டிடும் மமதைக் கோட்டைகள் மண்மேடாக வேண்டும் என்ற ஆர்வமல்லவா, உன்னை, அவ்விதமெல்லாம், எழுதச் சொல்கிறது. கோபம் கொப்பளிக்கிறதே, நமது நிலை குறித்துத் துளியும் எண்ணிப் பாராமலேயே, இத்துணை வேகம் காட்டுகிறானே தம்பி! என்று, ஒரு கணம் எண்ணுகிறேன். மறுகணமோ, கழக வளர்ச்சியில் உள்ள அக்கறை அல்லவா இதற்குக் காரணம். இத்தகைய ஆர்வமன்றோ பெருதற்கரிய கருவூலம், அஃதன்றோ நாம் காண்பது என்று எண்ணுகிறேன். உன்னைக் காணப் புறப்படுகிறேன். ஓட்டையோ ஒடிசலோ. சொந்தமோ இரவலோ, எந்த மோட்டார் கிடைத்தாலும், வழி நெடுக, அன்பு பொழியும் கண்ணினர், ஆர்வமிகு உரையினர். அஞ்சா நெஞ்சினர், ஆற்றல் மறவர்கள் ஆகியோரைக் கண்டு கண்டு களிப்படைகிறேன்; உன் செயல்திறனின் உருவமாய் அமைந்திடும் மாபெருங் கூட்டத்தைக் காண்கிறேன். மட்டற்ற மகிழ்ச்சியால் உந்தப்பட்டு, ஓராயிரம் சொல்லத் துடிக்கிறேன், ஒருசில மட்டுமே சொல்லுகிறேன். உள்ளம் விரும்பும் அளவுக்குப் பணிபுரியத்தக்க உடல் வளம் இல்லை - அறிந்தே இருக்கிறாய்! எனினும், எனக்குள்ள வலிவிலே செம்பாகம் உனக்கே! என்பது நீ அறிந்த உண்மை. ஆனால் நீ அறியாதது, என்னையோவெனில், நித்த நித்தம் உன்னைக்காண மெத்தவும் சுற்றிவந்த பிறகு, ஓய்வாக இருக்க, உள்ளத்திலே தோன்றிடும் கருத்துக்களை வகைப்படுத்த, வரிசைப்படுத்த, வளம்காண, படிக்க, சிந்திக்க, ஆராய, ஐயமகற்றிக்கொள்ள, நேரம் கிடைப்பதில்லை. தம்பி! நேரம் கிடைப்பதில்லை. இந் நிலையில் ஒவ்வோர் கிழமையும், உன்னிடம் உறவாட மடல் தீட்டி மகிழும் வாய்ப்புக் குறைந்தே போய் விட்டது; அடியோடு மறைந்தே போய்விடுமோ என்ற அச்சம்கூட மனதைப் பிய்த்துத் தின்னத் தொடங்கிற்று. எனினும், கூட்டங்கட்கு வரச்சொல்லி, வேலை முடிந்ததும், “விடை கொடுப்பாய் தம்பி!’ என்று நான் கூறிடும்போது,”மடல்’ எழுதுங்கள் அண்ணா! மறவாமல் எழுதுங்கள்!, ஏமாற்றாதீர்கள்! - என்று கூறுகிறாய். நான் என்ன செய்ய!! என்ன செய்ய என்றா கேட்கிறாய், இதோ இப்போது சொல்கிறீரே, அதுதான் - எப்படியாவது நேரம் கண்டுபிடித்து எழுதத்தான் வேண்டும் என்று கட்டளையிடுகிறாய்! சரி! எழுதுகிறேன். ஆனால் இப்போது நேரம் என்ன தெரியுமா தம்பி, ஏதோ அலுப்பு, கோழி கூவவில்லை, ஆனால், நேரம் அதுதான்! இரவு மணி பன்னிரண்டுவரை, கழகத் தோழர்களிடம் பேசிவிட்டுச், சிறிது படித்துவிட்டுப் பிறகு எழுதுகிறேன். பொதுக்கூட்டங்களிலே எடுத்துக் கூறியது தவிரக் கடிதமூலம், என் எண்ணங்களைத் தெரிவித்து நீண்ட காலமாகி விட்டதால், தம்பி, எதை விடுவது எதைத் தொடுவது என்ற திகைப்பேகூட ஏற்படுகிறது. எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள், எழுச்சிகள்! "வேலவன் குன்றம் வென்றோம்! இனி மாலவன் குன்றம் வெல்வோம்!’ என்று இதோ ம.பொ.சி. குழுவினர் முழக்கமிட்டுச் செல்கின்றனர். "பிரிட்டிஷ் சிங்கத்தை வென்ற, வீரமிகு தலைவனே வருக! வருக! - என்று எழில்மிக எகிப்து பெற்ற இணையில்லாத் தலைவனாம் நாசருக்கு வரவேற்பு வழங்குகிறார்கள், ஓர் புறம். "எல்லாம் முடிந்துவிட்டது! மாணவர் படை கலைந்து போய்விட்டது! பொதுமக்களோ, எப்போதோ போய்விட்டார்கள் இவர்களை விட்டு! இப்போது நடிகர்களும் இவர்களை விட்டு விலகிவிட்டார்கள். இனி இதுகளுக்கு நாதியே இல்லை! - என்று நற்றமிழ் நாட்டுக்கு வந்துள்ள புதிய கொற்றவனார் அறிவித்து விட்டார். காமராஜரோ, கழகம் கலையப்போவது உறுதி என்று - ஏதோ கலைப்பதற்கான ஏற்பாட்டினை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டவர் போலப் பேசுகிறார். அவர் தயவை நாடிடுவோரோ நரகல் நடையை நாட்டிலே காட்டி, "ஓட்டு’க் கேட்கின்றனர். அடிக்கடி, மாற்றார்கள் கையாண்டு பார்க்கும் முறையான - கழகத்தில் பிளவு - என்று கூறிக் கரடிவிடும் வித்தையையும், கனம்களிலிருந்து வெறும் "சினம்’கள் வரையில், காட்டி வருகின்றனர். எல்லாவற்றையும் கண்டும் கேட்டும், கொள்ள வேண்டிய தைக்கொண்டு, தள்ளவேண்டியதைத் தள்ளி, இலட்சியபுரி நோக்கி இலட்சக்கணக்கானவர்கள் புடைசூழ, வீரநடைபோட்டு வருகிறாய்! இந்தக் காட்சியைக் கண்டும், கருத்திலே தெளிவு பெறாதார், உளர்! நாடு, முற்றிலும் காட்டுக் குணத்தை விட்டுவிடவில்லை என்பதற்குச் சான்று வேண்டுமல்லவா - அது இது! சேறு தேடிச் செல்லும் தவளையிடம், செந்தாமரையின் அழகு பற்றி, அகவல் பாடினால் என்ன, வெண்பாப் பாடினால் என்ன! பலன் உண்டோ! அஃதேபோல, இழுக்கிலே இன்பம் தேடிடும் சழக்கர்கள், நமது கழகத்திலே பேதம் மூண்டுவிட்டது, பிறவு கண்டுவிட்டது என்று பேசுவது காண்கிறோம். அழுக்குத் தேடி அலைவோருக்கு, கழகத்தின் வளர்ச்சியின் ஒரு கூறுதான், அதனைச் செம்மைப்படுத்த எடுத்துக் கூறப்படும் முறைகள் என்பது எங்ஙனம் புரியும்? சுட்டாலும் வெண்சங்கு நிறம் மாறாது! கழகம் அந்நிலையில் உள்ளது!! அவர்கள் அதனை உணர மறுக்கிறார்கள், உணரின் மருட்சி ஏற்படும் என்பதால். பொன்னைப் புடத்தில் போடும்போது, ஐயகோ! அநியாயமாக நெருப்பிலிட்டுவிட்டார்கள்! அரை நொடியில் வெந்து, கருகிச் சாம்பலாகிப் போகும், இந்தக் கட்டித் தங்கம் என்று பேசுவோரை என்னென்று கூறுவது! கட்டித் தங்கத்துக்கு உடையார் அறிவர், அழகுமிகு அணிபணியாக்க, இம்முறை தேவை என்பதை! கட்டித் தங்கமும், எவரிடமிருந்தும் தட்டிப் பறித்துக்கொள்ளப்பட்டதல்ல! பத்தாண்டுகளாகப் பாடுபட்டதிலே கிடைத்தது! இந்த விளக்கம், அவர்கள் அறியாது போவது ஏனோ என்று கேட்கத் தோன்றும் - எவருக்கும். விளக்கமறியாது பேசுவோரும் உளர் - தெரிந்தும் திரித்துரைப்போர் உளர் - இரு சாராருக்கும் ஒரே நோக்கம்… அஃது இதுதான் - அடுத்து வரும் தேர்தலுக்குள் கழகத்தைத் தாக்கித் தாக்கித் தகர்க்க வேண்டும் என்பது. ஆண்டு இரண்டு இருக்கும் போதே, ஆரம்பமாகிறது தேர்தல் பிரசாரம்! பொருள் தெரிகிறதா தம்பி! அவ்வளவு முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, படை அமைத்துக்கொண்டு, பாய்வதற்கான “கவாத்து’ பழகவேண்டி இருக்கிறது, நமது கழகத்தை எதிர்க்க. அந்த அளவுக்குக் கழகத்துக்கு உரம்தேடிக் கொடுத்திருக்கிறாய்! கால்கடுக்கச் சுற்றினாய், கண்ணீரைக் காணிக்கையாக்கினாய்,”மகனே, உடல் துரும்பாக இளைத்துவிட்டதே! சிவந்த மேனியும் கருத்து வருகிறதே! ஏனோ உனக்கு இத்துணை அலைச்சல்! எந்த இராச்சியத்தைப் பிடிக்க, மகனே! இத்தனை பாடுபடுகிறாய்?’’ என்று கனிவுடன் கேட்டிடும் அன்னைக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டுப், பாசறை காணவும், படைக்கலன் சமைக்கவும், போர்முறை பயிலவும், புகழ்க்குறி பெறவும் கிளம்பிடும், உன்போன்ற இலட்சக்கணக்கான காளையரின் கோட்டமாகிவிட்டதால், கழகம், காங்கிரசை இந்த அளவுக்கு முன்னேற்பாடு செய்துபார்க்கும்படி செய்துவிட்டது. புதுப்புது முறைகளும் புயல்வேகப் பிரசாரமும், நாராசக் குண்டுவீச்சும், நரிக்குண நடவடிக்கைகளும் மேற்கொண் டாகிலும், கழகத்தை எதிர்த்து ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம், காங்கிரசை, மதுகுடித்த மந்தியினைத் தேளும் கொட்டிவிட்டால் என்ன நிலைமையோ, அந்த நிலைமைக்குக் கொண்டுபோய்விட்டிருக்கிறது. கழகத் தோழர்கள் அடிக்கடிக் கூறுகிறார்கள், "காதில் கேட்கச் சகிக்காத பேச்செல்லாம் பேசுகிறார்கள் காங்கிரசார்’ என்று! தம்பி! அந்த நாராசத்தை அவர்கள் நா தாங்கிக்கொள் கிறதே! - அதை எண்ணிப் பரிதாபப்படு! கோபம் கொள்ளாதே! சத்தியமென்றும் அஹிம்சை என்றும் பேசிடச் சொல்லி உலக உத்தமர் காந்தியார் கூறினார் - இவர்களோ, இன்று இழி மொழியைப் பேசி இன்பம் காணுகிறார்கள்! அந்த அளவுக்குத் தரம் கெட்டுவிட்டதே என்பதை எண்ணி வருத்தப்பட வேண்டும் - வரிந்துகட்டிகொண்டு வம்புக்குச் செல்லுதல் ஆகாது! நமது மரபும் அஃதல்ல! நமக்குள்ள பணியோ, வேறு - தாங்கிக் கொள்ளும் சக்தியும் வீரமும் இணைந்ததோர் போக்கு வேண்டும். தெளிவு - துணிவு - கனிவு - இவைகளில், ஒவ்வொன்றைப் பழுதறப் பெறுவதே கடினம். ஆயின், நமக்கோ இம் மூன்றும் ஒரு சேர இருத்தல் வேண்டும் - அஃதே, நாம் மேற்கொண்டுள்ள அறப்போருக்கு உரிய படைக்கலனாகும். உன் மனதை வாட்டிடும் எந்தப் பிரச்சினையாயினும் சரி, தெளிவு கிடைக்கும் அளவுக்குச் சிந்திக்க வேண்டும் - கசடுஅறலிதெளிவு கிடைத்ததும், அதனின்றும் எழும் ஓர் உன்னதமான வலிவே, துணிவாகித் துணைநிற்கும்! துணிவு பெற்றதும், ஓர் துடிப்பு உணர்ச்சி இயல்பாக எழும்! அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், தேக்கி வைக்கப்பட்ட மின்சாரமே, பிறகு ஒளிதர, ஒலிதர, விசையாகி நிற்கப் பயன்படும்! அதுபோலவே, தெளிவால் கிடைத்திடும் துணிவு, நமக்காக மட்டுமல்ல, நம்மோடு இருந்துவிட அல்ல, மற்றவர்களுக்கும் கிடைக்க, அளித்திட! அங்ஙனம் மற்றையோர்க்கும் அளித்திட வேண்டுமேல், கனிவு இருத்தல் வேண்டும்! கனிவு என்ற சொல்லிலே, கனி காண்கிறாய் அல்லவா, தம்பி! சுவை!! ஆம்! இனிமை!! அந்தக் கனிவு, எந்த இதயத்தையும் தொடவல்லது! நாம் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள இலட்சியங்கள், கோடி கோடி இதயங்களிலே, குடி ஏறுவதிலேதானே, வெற்றியே இருக்கிறது! அந்த வெற்றி காணக் கனிவு பெரிதும் வழிகாட்ட வல்லது. நான், தம்பி, முன்னது இரண்டினைக்கூட, வேண்டுமளவு பெற்றிடவில்லை என்று கூறிடலாம் - ஆனால் கனிவு என்பதை, நான் போதுமான அளவுக்குப் பெற்றிருக்கிறேன்! மேலும் பெற விரும்புகிறேன். என்னை ஊக்குவிப்பதும், பொதுவாழ்விலே எனக்கு உவகை ஏற்படுவதும், அந்தக் "கனிவு’ எனக்குக் கைகொடுத்து உதவுவதால்தான்! சென்ற கிழமை நமது கழக நண்பரொருவர், மாற்றுக் கட்சி ஏடுகள், நமது மனதுக்குப் பீதியூட்டவே முயலுகின்றன என்பதை மறந்து, அவைகளில் உள்ளவைகளைப் படித்து, மெத்த மனம் நொந்து, என்னிடம் வந்து பேசலானார். "அண்ணா!’’ - என்றார். மேற்கொண்டு பேச முடியாது. என்னையே, உற்றுப் பார்த்தவண்ணம் இருந்தார். பிறகு தழதழத்த குரலில் பேசினார். அவர் பேசுவதற்கு முன்பே எனக்கு அவர் இருந்த நிலை, அவர் உள்ளத்தைக் காட்டிற்று. உற்சாகப்படுத்த முயன்றேன். "அண்ணா! கட்சியிலே, பிளவாமே’ என்றார். கேட்டார் என்றுகூட, எழுதவில்லை கவனித்தாயா. தம்பி! அப்படி ஒரு கேள்வி கேட்கக்கூட, அந்த நல்ல உள்ளம் கூசிற்று. “போபாலில்’’ என்று நான் ஆரம்பித்தேன். தம்பிக்கு, என் பேச்சைக்கேட்க விருப்பம் எழவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே, முதலில், அவர் கேட்க விரும்புவதைக் கூறுவதே முறை என்று எண்ணினேன்.”தம்பி! கட்சியில் ஒரு பிளவும் இல்லை. பயப்படாதே. கட்சியிலே இன்னின்ன முறைகள் ஏற்பட்டுப் பொலிவும் வலிவும், தரமும், தூய்மையும் வளரவேண்டும் என்று, தம்பி சம்பத் தன் கருத்தைக் கூறி இருப்பது, பிளவுக்கு அறிகுறியுமல்ல, வழியும் ஆகாது’’ என்று கூறிவிட்டு, "இனிக் கேள் சேதியை’’ என்று துவக்கினேன். ஓரளவு மனநிம்மதி அடைந்த அந்தத் தம்பி, - ஓரளவுதான் - என் பேச்சைக் கேட்கத் தயாரானது தெரிந்தது, பேசினேன். “போபாலில், காங்கிரஸ் சட்டசபைக் கட்சிக் கூட்டத்தில், தலைவர் செயலாளர் முதலிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற ஏற்பாடாகி இருந்த கூட்டத்தில், கூச்சலும் கலவரமும் ஏற்பட்டு, அமளி மூண்டுவிட்டது. அமளியை அடக்கப் பார்த்து முடியாது போகவே, தலைவர் தேர்தலைப் பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்று கூறிக், கூட்டத்தை ஒத்தி வைத்தார். கூட்டம், கலைந்தது. தம்பி! இந்த நிகழ்ச்சி எந்தக் காங்கிரசில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதோ, அதே காங்கிரஸ்தான் நமது கழகத்திலே பிளவு என்று பேசியும் ஏசியும் வருகிறது. புரிகிறதா நோக்கம்!’’ - என்று கேட்டேன்.”அது புரிகிறது, அண்ணா!’ என்றார் அந்தத் தம்பி. “இந்தக் கிழமை, தம்பி, நாம் நாடெங்கும் போபால் சம்பவம் குறித்துப் பேசி இருப்போம் - அதைப் பேசவிடாமல் செய்திடக் காங்கிரஸ், கழகத்துக்குள் கலகம் புகுந்துவிட்டது. என்று பேசியும் எழுதியும் தந்திரம் செய்கிறார்கள். புரிகிறதா!’’ என்றேன் -”ஆமாம்’ என்றார். இதேபோலத்தான் எதையும், தெளிவாக்கிக் கொண்டால் நல்லது, என்றேன். "கார்ப்பரேஷனில்?’ - என்று, இழுத்தாற்போல் பேசலானார், தம்பி! ரோடு படுமோசம்! சுகாதாரம் மட்டம்! கொசுத்தொல்லை அதிகம்! - ஏன் தம்பி! அதைத்தானே கேட்கிறாய், என்றேன். சிரிப்பைத் தம்பியால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. "அப்படி எல்லாம் காங்கிரசார், மேடையிலே பேசும்போது, கேட்க, வேதனையாக இருக்கிறதே! ஏன் சென்னை நகரம் அப்படி இருக்கவேண்டும்? சரியாக வைத்துக்கொள்ளக் கூடாதா? நமது நிர்வாகத் திறமையைக்கண்டு பலரும் பாராட்டவேண்டாமா?’’ என்று கேட்டார். “ஆமாம், தம்பி! ஆனால்…’’ என்று நான் பதில் கூறத் தொடங்கினேன். தம்பி விடவில்லை,”பணம் இல்லை… சர்க்கார் கொடுக்கவில்லை - என்று காரணம் - சமாதானம் கூறுவீர்கள். கூறுகிறார்கள் நமது தோழர்கள்… ஆனாலும்…’’ என்றார். "உனக்குத் திருப்தி இல்லை! அதுதானே!’’ என்று கேட்டேன். பார்வையால் பதிலளித்தான், பாசம் நிறைந்த தம்பி! "சென்னை நகரப் பாதைகளைச் சீராக வைத்திருக்கப் போதுமான அளவுக்குப் பணவசதி தேடித்தர, துரைத்தனம் முன்வரவில்லை. அதனால்தான், சில சீர் கேடுகள் உள்ளன. தம்பி! சில விநாடி, கேள் - இது விஷயமாகப் படித்துக் காட்டுகிறேன் - என்று கூறிவிட்டு, ஏடொன்றை எடுத்துப் படித்துக் காட்டினேன். அது இது! "சென்னை நகரத்தை எடுத்துக்கொண்டால் இந்த ஆண்டு போட்டிருக்கக்கூடியது ஒரு பற்றாக்குறை பட்ஜட், கிடைக்கக் கூடிய பணம் போதாதநிலை இருக்கிறது. போதாத நிலை இருந்தும், இப்போது கொடுக்கவேண்டிய தொகையில் கருணை காட்டிக் கொடுக்காவிட்டால், நகரசபையின் கதி என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நமது மாநிலத்திற்குத் தலைநகரம் சென்னை. அந்நியர்கள் இங்கே வரும்போது நாம் அடைந்திருக்கிற பல முன்னேற்றங்களைக் காட்டிப் பெருமைப் படுகிறோம். அவர்களைச் சென்னை நகர வீதிகளில் அழைத்துக் கொண்டு போகிறபோது, போகிற ஊர்தி வீதியிலுள்ள குண்டுகுழிகளில் விழுந்து உள்ளே இருப்பவர்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டு போகுமானால், அவர்கள் நாம் அடைந்திருக்கிற முன்னேற்றத்தைப்பற்றி மறந்து ரோடுகள் மிகவும் மோசமாக இருக்கிறதே என்று வெளியே சொல்லாவிட்டாலும்கூட நினைத்துக்கொண்டு போவர். சென்னை நகரத்துக்கு இன்னொரு சாபம். இங்கே ஓடுகிற பஸ்களை அரசாங்கம் நடத்துகிறது. மோட்டார் வெகிகில்ஸ் டாக்ஸ்சேஷன் இருப்பதால், இந்தப் பஸ்களைத் தனியார் நடத்தி வந்தால், அவர்களிடம் வரிப்பணத்தை வாங்குவோம். பஸ்களைத் தேசிய மயமாக ஆக்கியிருப்பதால், இதிலே வரிப்பணத்தை நகராண்மைக் கழகத்திற்குக் கொடுக்காமல், வீதிகளை மட்டும் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், எப்படி முடியும்! இப்படி, மோட்டார் வெகிகில்ஸ் டாக்சேஷனில் எங்களுக்குக் கிடைக்கவேண்டியது 67 இலட்சம். ஆனால் கிடைப்பது 5 இலட்ச ரூபாய். அவர்கள் கொடுக்கக் கூடிய பணத்தைக்கொண்டு நகரிலுள்ள எல்லாச் சாலைகளையும் எப்படிப் பராமரிக்க முடியும்? அப்படிப் பராமரிக்க முடியவில்லை என்றால், கெட்ட பெயர் வாங்கிக் கொள்ளட்டும்; வாங்குவது நகரசபைதானே, நமக்கு என்ன என்ற முறையில் இருக்கிறார்கள். இதைப்பற்றிப் பல ஆண்டுகளாக, நகராட்சி மன்ற அங்கத்தினர்கள் தூதுக்குழு அமைத்து, அமைச்சரைக் கண்டு, அதிகமாக ஒதுக்குங்கள் என்று கேட்டபோதிலும், அதைப்பற்றிக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னது போல, மாற்றாந்தாய் குணத்தை ஏன் எங்களுக்குக் காட்டுகிறீர்கள் என்று நான் கேட்கிறேன். படித்து முடித்ததும், “எப்படி, தம்பி? என்று கேட்டேன். காரணம் காட்டுகிறார்கள், நமது தோழர்கள். ஆனால், காங்கிரசார், இந்தக் காரணத்தை எல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டார்களே’’ என்றார்.”அவர்கள் போக்குக் கிடக்கட்டும், சொல்லப்பட்ட காரணம், சரியானதுதான் என்று உனக்குப் படுகிறது அல்லவா?’’ என்று கேட்டேன். "ஆம்’ என்றார். எங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை நீங்கள் கொடுக்கவில்லை. ரோடுகளை ஏன் சரியாகப் பராமரிக்கவில்லை என்று எங்களை, நீங்கள் கேட்கிறீர்கள். எங்களை, நீங்கள் மாற்றாந்தாய் மனப்போக்கில் நடத்துகிறீர்கள். எங்களை, நீங்கள் ஏன் இப்படி நடத்துகிறீர்கள் என்று நான் கேட்கிறேன். தம்பி! எங்கள் - நீங்கள் - என்றால் தெரிகிறதல்லவா? என்று கேட்டேன். என்னண்ணா இது! தொடக்கப்பள்ளி நடத்துகிறீர்! எங்கள் என்றால் கழகம், நீங்கள் என்பது, காங்கிரசை; இதற்குக்கூடவா விளக்கம் வேண்டும் என்று, தம்பி கேட்டார். தம்பி! தெளிவு வேண்டும் என்றேனல்லவா? கேள்! எங்களுக்கு என்பது கழகம் என்ற பொருள் தரச் சொல்லப் படுவது அல்ல - கார்ப்பரேஷனுக்கு என்பது பொருள்! அது போலவே, நீங்கள் என்று குறிப்பிடப்படுவது, சர்க்காரை! கார்ப்பரேஷனுக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடுக்காமல், சாலை சரியாக இல்லை என்று மாநில சர்க்கார் கண்டிக்கிறதே, சரியா முறையா என்று கேட்கிறார் என்றேன். ஆமாம், புரிகிறது, என்றார் தம்பி! யார் கேட்கிறார்? என்று கேட்டேன். கார்ப்பரேஷன் கவுன்சிலராக உள்ள நமது கழகத் தோழர் என்று தம்பி பெருமிதத்துடன் கூறிடவே, நான் சிரித்துவிட்டு, "தம்பி! தம்பி! கார்ப்பரேஷன் சார்பாக வாதாடி, சென்னை மாநில துரைத்தனத்தைச் சாடி, நான் கேட்கிறேன் என்று உரிமையோடு கேட்டவர், நமது கழகத்தோழர் அல்ல! - என்றேன் - தம்பிக்குச் சிறிதளவு திகைப்பு ஏற்பட்டது. "காரசாரமாகப் பேசியவர், காங்கிரஸ்காரர், தம்பி! ஆமாம், திகைக்காதே’’ - என்றேன். "காங்கிரசாரே காங்கிரஸ் கட்சி நடத்தும் சென்னைத் துரைத்தனத்தின் போக்கைக் கண்டித்தாரா?’’ என்று கேட்டார் தம்பி. "நேர்மையும் அஞ்சாமையையும் பாராட்டுகிறாய் அல்லவா?’’ என்று நான் கேட்டேன். “எப்படிக் கேட்கத் துணிந்தார்?’’ என்று தம்பி கேட்க,”நியாயமான கேள்விதான் தம்பி! ஏன் கேட்டார் என்றால், அவர் ஒரு காங்கிரசார் மட்டுமல்ல, கார்ப்பரேஷனில் அக்கறை கொண்டவர். யார் சொல்லட்டுமா? திருமதி அனந்தநாயகி அம்மையாரின் திருவாசகம் தம்பி! என்றேன். தம்பி, உண்மையிலேயே திணறிப்போனது தெரிந்தது. நான் கேட்கிறேன் மாற்றாந்தாய் மனப்போக்கிலே நடக்கிறீர்கள் - என்றெல்லாம், அடித்துப் பேசியவர், அனந்தநாயகி அம்மையேதான்!! கார்ப்பரேஷனில் பேசவில்லை! கடை வீதிக் கூட்டத்திலும் அல்ல!! அங்குதான் நாம் கிடைக்கிறோமே, கரும்புபோல!! அம்மையார், பேசியது, சென்னை சட்டசபையில், மார்ச் 25-ம் நாள், 1959-ம் ஆண்டு; அதாவது கார்ப்பரேஷனில் கழகத்தவர், மேயராகா முன்பு!! அப்போது, அந்தப் பேச்சு, நேர்மைக்கு எடுத்துக்காட்டாக, நாணயத்துக்கு உதாரணமாக, அஞ்சாமைக்கும் அறிவுடைமை க்கும் சான்றாக இருந்தது!! அப்போது கார்ப்பரேஷனில் காங்கிரஸ் கட்சி அரசோச்சி வந்தது. ஆகவே, துரைத்தனத்தைத் தட்டிக் கேட்க முன்வந்தார். இப்போது ஆண்டு பல அல்ல, திங்கள் சில ஆயின, கார்ப்பரேஷனில் கழகம் நிர்வாகம் நடத்தத் தொடங்கி. இப்போது அம்மையாரின் அருமருந்தன்ன கட்சியினர் “ஐயயே! சாலை மோசம்! கொசுக்கடி அதிகம்! நாற்றம் தாங்க முடியவில்லை!’ என்று அருவருப்பைக் கொட்டுகிறார்கள், மனக் கசப்பைக் கக்குகிறார்கள்.”ஐயன்மீர்! மோட்டார் வரியிலே, கார்ப்பரேஷனுக்கு உரிய பங்கு கொடுக்காமல், உருட்டி மிரட்டிப் பார்க்கிறீர்களே, சரியா, முறையா?’’ என்று நமது கழகத்தவர் கேட்டால், காங்கிரஸ் கண்ணியவான்களுக்கு, முகம் கடுகடுப் பாகிறது. வார்த்தைகளிலே தீ பறக்கிறது, "உள்ளவர்களுக்கு’ மீசை துடிக்கிறது!! நான் சொன்னதைக் கேட்ட, தம்பி, பதறி எழுந்து "அண்ணா! முதலில் இதைப் போய், நான், நமது நண்பர்களுக் கெல்லாம் கூறிவிட்டுத்தான் மறுவேலை’’ என்று சொல்லிவிட்டுச் சென்றான். தம்பி! உன் உள்ளத்திலும், காங்கிரசார் கதைத்திடுவது கேட்டு, கோபமோ, வருத்தமோ, ஏற்பட்டால், ஆர அமர எண்ணிப்பார், உண்மை விளங்கும். அப்படி எண்ணிப் பார்த்துப் பார்த்துத்தானே ஓர் தெளிவான திட்டத்தை நாம் பெற்றிருக்கிறோம். கட்சிக்கான முறைகள், திட்டங்கள் என்னென்ன மாற்றம் பெற்றாலும், கழகக் குறிக்கோளில் உயிரூட்டம் உள்ளவரையில், காப்பாற்றப்படும் வரையில், எந்தக் கெடுதியையும் விளைவித்துவிடாது என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு. அந்த நம்பிக்கையை நான் பெறுவது, உன் கண்ணொளி காட்டிடும் ஆர்வத்தைக் காண்பதாலும், கனிமொழி கேட்டு இன்புறுவதாலும், சிலகாலம் தொடர்பற்று இருந்ததால் கஷ்டமும் நஷ்டமும், உனக்கல்ல, தம்பி; எனக்குத்தான். இனி, இந்நிலை ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள முடிவெடுத் திருக்கிறேன். உன் ஒத்துழைப்பும் வேண்டுமே! கிடைக்குமா? அண்ணன், 10-4-60 முள்ளு முனையிலே… மறவனும் மறத்தியும் - சட்டசபையில் 15 தி. மு. க. - தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தம்பி! "புலிபோலப் பாய்ந்தான்! வேல் வீசினர்; தைத்தது; இழுத்தெடுத்து வீசினான் வெளியே; கொட்டும் குருதியைத் துடைத்துக் கொள்ளக்கூட இல்லை; துரத்திக்கொண்டு வருபவர்களின் தொகை வளர்ந்துகொண்டிருந்தது; அவன் அது குறித்துக் கவலைப்பட்டானில்லை; அகன்ற வாய் முதலைகள் நிரம்பியது அகழி; அச்சமின்றி அதனைக் கடந்தான்; வழவழப்பான வகையிலே அமைத்த சுற்றுச்சுவர், பல்லிபோல அதிலே ஊர்ந்து சென்றான்; கயிறு வீசி இழுத்துப் பார்த்தனர், உடும்புபோலப் பற்றிக்கொண்டான்; கல்லெறிந்தனர் கவண்கொண்டு; கலங்கவில்லை; சுற்றுச் சுவர்மீது நின்றான்; கீழே இறங்க வழியில்லை; குதித்தாகவேண்டும், குதித்தால் எலும்புகளே நொறுங்கிப் போகும் - என்றே அனைவரும் கருதினர். அவனோ இங்குமங்கும் நோக்கினான்; கீழே குதித்தான்; ஓடோடிச் சென்றான்; அந்தச் சத்தம் கேட்டு, மிரண்டு கட்டவிழ்த்துக்கொண்டு ஓடிற்று ஒரு குதிரை; அதன்மீது தாவினான், காற்றெனப் பறந்தது; அவன் அடவிக்குள் சென்று விட்டான்.’’ தம்பி! கேட்பதற்கே சுவையாக இருக்கிறதல்லவா? "ஆற்றலென்றால் இவ்விதமன்றோ இருந்திடவேண்டும்! அஞ்சா நெஞ்சு இருந்தாலன்றோ இதுபேலச் செய்திட இயலும்! ஆபத்துக்களைச் துச்சமென்று கருதிடுபவனையன்றோ வீர உலகம் மெச்சிப் புகழ்ந்திடும்! இத்தகு திறனுடையாரன்றோ, ஒரு நாட்டுக்குத் தேவை! அத்தகையவர் இருந்தாலன்றோ, மாற்றார் அந்த நாட்டினைக் கண்டு மருண்டிடுவர்!’’ - என்று பேசிடத் தோன்றும். உள்ளத்திலே ஒரு எழுச்சி ஏற்படும்! கண்களிலே புது ஒளி காணப்படும்! உரையிலே உவகை ததும்பிடும்! ஓவியம் தீட்டுவோமா, காவியம் இயற்றுவோமா, கவிதை பாடுவோமா, காட்சியாக்கிக் காட்டிடுவோமா என்றெல்லாம் விருப்பம் எழும். "இதுபோலத்தான்’ என்று துவக்கி, மாவீரர் காதை, மண்டலம் வென்ற தீரர் வரலாறு, மாற்றாரைக் கண்டதுண்ட மாக்கிய ஆற்றல் மிக்கவன் பற்றிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கூறிடப் பலர் முன்வருவர். நமக்கு இல்லையே அந்த ஆற்றல்? - என்று சோகித்துக் கொள்வர் சிலர். அவன் என் ஆருயிர்த் தோழன் என்று சொந்தம் கொண்டாடிக்கொள்வர் மற்றும் சிலர். "அவன் இயற்கையிலே அத்துணை ஆற்றல் படைத்தவன் அல்ல, சூழ்நிலை அவனை அவ்விதம் ஆக்கிவிட்டது’’ என்று விளக்கம் கூறுவர் இன்னும் சிலர். பல்வேறு முறையாகப் பேசிக்கொண்டாலும், ஊடே மணிகளைச் சேர்த்திடும் இழைபோல, மகிழ்ச்சி, பெருமை எனும் உணர்ச்சி காணப்படும், அல்லவா? "இது என்ன அண்ணா! கேள்வி! வீரச்செயல் குறித்துக் கேள்விப்பட்டால், எவர் உள்ளத்திலும் மகிழ்ச்சியும் எழுச்சியும் ஏற்படத்தானே செய்யும், இயல்பாகவே! இதைக்கேட்டுத்தானா தெரிந்துகொள்ளவேண்டும்!’’ - என்று கூறுகிறாய். புரிகிறது, ஆனால் தம்பி! மேலும் கூறுகிறேன் கேள். கேட்போர் மனத்திலே எழுச்சி ஊட்டத்தக்க விதமான வீரச்செயல் புரிந்திடுபவனை, எவரும் மெச்சிடுவர் - மெச்சிப் பேசுவது தவறுமல்ல - தேவையுங்கூட. ஓங்கி வளர்ந்த தென்னை - ஒய்யாரமாக நின்றிடும் தென்னை! நிலவொளி, கீற்றிலே படும்போது ஓர் தகத்தகாயம் தெரியும். அப்படிப்பட்ட தென்னை தரும் பானம் இது - என்று, தம்பி! இளநீரையும் கூறலாம், கள்ளையும் கூறலாமல்லவா!! இரண்டிலே, எது விரும்பத்தக்கது என்பதற்கு விளக்கமா வேண்டும்! இரண்டும், ஒரே தென்னை தருவதுதான். எனினும், கள்ளை வெறுத்திடத்தானே வேண்டும். கள், கூடத் தம்பி, தொழிலறிந்தோர் கூறுகின்றனர், பாளை சீவிப் பானையில் துளிகளைத் தேக்கினால் உடனே அது கள்ளாகிவிடுவதில்லை; இனிப்புச் சாறாக மட்டுமே இருக்குமாம்; வேறோர் முறையின் மூலமாகவே இனிப்புச் சாறு, மனிதனை மிருகமாக்கிடத்தக்க போதைதரும் கள் ஆக்கப்படுகிறது. தென்னை தருவதுதானே என்பதால், கள் விரும்பத்தக்கது ஆகிவிடாது. அதுபோலவேதான், தம்பி! செயல், வீரதீர மிக்கது என்பதால் மட்டுமே, பாராட்டப்படத்தக்கது, போற்றப்படத் தக்கது என்று கூறிவிடமுடியாது. நான் காட்டினேனே, கல்லெறிக்கும் வேல் வீச்சுக்கும் அஞ்சாது, எதிர்ப்புக்கண்டு கலங்காது, அகழி கடந்து, சுற்றுச் சுவரைத் தாண்டி, ஓடினவன் - அவன் போற்றத்தக்கவனா அல்லவா என்பது, அவன் காட்டிய திறமைகளை மட்டும் கவனித்தால் விளங்கிவிடாது - ஆற்றல் மிக்கோனாக, எதிர்ப்பட் டோரை வீழ்த்துவோனாக, எந்த இடர்ப்பாட்டையும் கண்டு கலங்காதவனாகத் தெரிகிறானே, அவன், யார்? எந்தக் காரணத்துக்காக அவன் அதுபோல நடந்துகொண்டான்? விளைவு என்ன? என்பதைப் பொறுத்துத்தான், போற்றத் தக்கவனா அல்லவா என்பதுபற்றி முடிவுசெய்ய இயலும். அதுதான் முறை. செங்கிஸ்கான், தைமூர் போன்றோர்கள், அழித்த நகரங்கள் ஏராளம்! கொன்று குவித்த மக்கள்தொகை மிக மிகுதி! பெருங்காற்றுக் கிளம்பினால் அழிந்திடும் பூங்காபோல, பெரு நெருப்புப் பிடித்துக் கொண்டால் சாம்பலாகும் எழிலூர்போல, செங்கிஸ்கான், தைமூர் போன்ற கொடியவர்களின் கோபப் பார்வை பட்டதால் மட்டுமே, பாழாகிப் போயின பேரூர்கள், சிற்றூர்கள்; எனினும், அவர்களை, வீரத்தின் சின்னமென, விருதுபெறத்தக்கோரென, அறிவாளர் கூறார். இயற்கை சில வேளைகளில் கக்கிடும் கொடுமைகள் போன்ற கொடுமைகள் இவை என்றே கூறுவர். ஆயினும், தம்பி! போர் முறைகளிலே, அவ்விருவரும் வல்லவர்கள்! புது முறைகளைக்கூடக் கண்டவர்கள்! மிகப்பெருங் கூட்டத்தைச், சிறுபடை கொண்டு, சின்னாபின்ன மாக்குவதிலே சமர்த்தர்கள்! பீதி கிளப்பியே அரசுகள் சிலவற்றை அழித் தொழித்தவர்கள். “நட!’ என்று அவர்கள் கட்டளையிட்டதும், ஏன் என்று கேட்கவோ, எவ்வழி? என்று விசாரிக்கவோகூட முடியாத நிலையில், படையினர் பாய்வர்!”விழு,’ என்று உத்தரவு பிறந்தால், எதிரே தெரிவது கரை புரண்டோடும் பெருவெள்ள மெனினும், கதி யாது? என்று எண்ணிடாமல், வீழ்வர்! "வெட்டிவா தலைகளை’ - குருதி சொட்டச் சொட்ட, தலைகளைக் கொண்டுவந்து, தாளின்கீழ் கொட்டுவர்!! ஆக, படை அமைத்திட, படையினரிடம் அதிகாரத்தைப் புகுத்திட, முறை வகுத்திட, திறன் இருந்தது அவ்விருவரிடமும். எனினும், போர்முறை பலவற்றைக் கண்டறிந்து அளித்த ஆசான்களாக அவர்களை, அவனியில் எவரும் ஏற்றுக் கொண்டாரில்லை. எனவே, வீரதீரம், அறிவாற்றல், திறமை எனும் எதனையும், பெற்றவர் எவர் என்பதைப் பொறுத்தும், பெற்றதனால் விளைந்தன யாவை என்பதைப் பொறுத்தும் தான் மதிப்பிட வேண்டுமேயல்லாமல், ஆஹாஹா! வீரதீரம் இருந்தவாறென்னே! அறிவாற்றலை என்னென்பது! திறமை இஃதன்றோ! என்று விளைவு அறியாது, பாராட்டிடக்கூடாது. ஆனால், கேட்டவுடன், பாராட்டலாம்போலத் தோன்றும். துவக்கத்திலே நான் காட்டினேனே, மயிர்க் கூச்செறியத்தக்க விதமான வீரச் செயலாற்றியவனை; அவன் போன்றாரின் "காதை’யைக் கேட்டதும், பாராட்டிடத்தானே தோன்றும். புரவிமீதமர்ந்து அடவி சென்றானே, ஆற்றல் மிக்கோன் - அவனைக் காண்போம், தம்பி! கருத்துத் துலங்கிட. வேகமாக வருகிறது குதிரை! வேலேந்திகள் வெருண்டோடு கின்றனர்! விழியில் வழியும் கண்ணீரைத் துடைக்கவும் இயலாத நிலை! தலைவிரிகோலம்! கரங்களில் விலங்கு! இந்நிலையில் உள்ளாள் மூதாட்டி. காவல் புரியவந்த வீரர்கள் ஓடிடுவதையும் கடுகிவரும் குதிரைவீரனையும் காண்கிறாள்; கண்ணீரால், பார்வை சிறிதளவு தெளிவற்று இருக்கிறது! உற்றுப் பார்க்கிறாள், முகம் மலருகிறது, "மகனே! என் அருமை மகனே!’ என்று கூவுகிறாள். "அம்மா! அம்மா! என்னை ஈன்றவளே! என்னை ஆளாக்கி விட்ட அன்னையே!’’ என்று குதிரை வீரன் கதறுகிறான்; காலடி வீழ்கிறான்; கண்ணீரால் அவள் காலடியைக் கழுவுகிறான். அவன் முகத்தைத் தன் இரு கரங்களில் வைத்துக் கொண்டு, தாய் பெருமிதம் கொள்கிறாள். இந்த இன்பம் கிடைக்குமென்று, நான் துளியும் எண்ணினேனில்லையடா, மகனே! கடைசி முறையாக ஒரு கணம், என் கண்குளிர உன்னைக் காணவேண்டும், அப்போதுதான் நிம்மதியாகச் சாகமுடியும் என்று நினைத்தேன். என்னையோ கொலைக்களம் இழுத்துச் செல்கிறார்கள். உன்னையோ, சிறையிலே வைத்துப் பூட்டிவிட்டார்கள். உன்னை எப்படி, இந்தப் பாவி காணமுடியும்! - எனக்குக் கிடைக்காது அந்த வாய்ப்பு! - என்று எண்ணினேன் - ஏக்கம் தாக்கிற்று. ஆனால், மகனே! இதோ இணையில்லா இன்பம்! நான் பெற்றெடுத்த செல்வத்தைக் கண்குளிரக் காணும் இன்பம்! இனி, என்னை, மகனே! கொடியவர்கள் கொன்று போடட்டும். கழுகுக்கு இரையாக்கட்டும், கனலோ புனலோ, கடுவிஷமோ, கட்டாரியோ, தூக்குக் கயிறோ, சித்திரவதையோ, எம்முறை அவர்களுக்கு விருப்பமோ அம்முறையில், என்னை அழிக்கட்டும், கவலையில்லை! உன்னைக் கண்டேன். அந்தக் களிப்பு என் இதயத்தில் பொங்கி வழிந்து கொண்டிருக்கும் நிலையில், மரணம் எனக்கு வேதனை தராது. அவ்விதம் அகங்குழைந்து பேசிய அன்னையின் தாளை வணங்கி, அந்த மாவீரன், “என்ன வார்த்தையம்மா சொன்னீர்கள்! என் உடலிலே உயிரும், கரத்திலே வாளும் உள்ளவரையில், படையே வரினும், தொடவிடுவேனா தங்களை! என்னைப் பிணமாக்கிய பிறகல்லவா, கொடியவர்கள் உன்னிடம் நெருங்க முடியும். சிறைக்கம்பிகளைப் பெயர்த்துவிட்டு, சீறும் புலிகளை விரட்டிவிட்டு, நான் ஓடோடி வந்தது,”போய் வா, தாயே! கொலைக்களத்துக்கு!’’ என்று கூறி, வழி அனுப்பவா! அன்னையே! வீரதீரமும், தியாகமும் கலந்தல்லவா, பாலூட்டி வளர்த்தீர்கள்!’’ என்று கேட்கிறான். அடவியிலே, இதுபோன்ற காட்சி கண்டிடின், தம்பி! அவன் வீரர் கோட்டத்துக்கு ஏற்றவன், வழிபடத்தக்கவன் என்று கூறலாம்; கூறிட எவரும் தயங்கார். அந்தவிதமான காட்சியாக இல்லாமல், அடவியில் ஓர் குகை; அதன் அருகே சென்று, அவன், உள்ளே நுழைகிறான் என்று வைத்துக் கொள், தம்பி! அவனைக் கண்டதும், அலறித் துடித்தபடி, ஒரு அபலை நிற்கிறாள். அவன் "இடி இடி’யெனச் சிரிக்கிறான். அவள் உடல் படபடவெனத் துடிக்கிறது. "சிறையில் தள்ளிவிட்டோம் - செத்தொழிவான் அல்லது நடைபிணமாகிவிடுவான் - என்று எண்ணிக் கொண்டா யல்லவா? இதோ பார்! நன்றாகப்பார்! உற்றுப்பார்! கண்களில் பழுது இல்லை அல்லவா! பார்! நான்தான்! ஆமாம்! பிடித்திழுத்துச் செல்லுங்கள் பேயனை என்று கூறி, நான் பிடிபட்டது கண்டு பெருமிதம் கொண்டாயே, அதே ஆள்தான், நன்றாகப் பார்த்துக் கொள். உன் கண்ணீரைக் கண்டும், கூக்குரலைக் கேட்டும், என்மீது பாய்ந்தனர், பலர்! தாக்கினர் ஈட்டியால், வாளால், வேலால்! பிடிபட்ட புலியைக் கூண்டிலடைத்த பிறகு, மாடோட்டும் சிறுவன்கூடக் கோல் கொண்டு குத்திக் குறும்பு செய்து சிரிக்கிறான்! என்னைப் பிடித்தவர்களோ, களம்பல கண்டவர்கள்! அரச ஆணையால் வலிவுபெற்றவர்கள். சிறையில் தள்ளினர்! கருங்கற் சுவர்கள்தான், காரிகையே, கருங்கற்சுவர்! இரும்புக் கம்பிகள்! எப்புறம் திரும்பினாலும் காவலர்கள்! இரவுபகல், எந்த நேரத்திலும் கட்டுக்காவல்! அவர்கள் என்னைப் பூட்டிவைத்தது, அத்தகைய சிறையில்தான்! விடுதலை தந்துவிடவில்லை! என் வல்லமையால், வெளியேறினேன்! தடுத்தனர், தாக்கினேன்! தாக்கினர், தப்பினேன்! துரத்தினர், பிடிபடவில்லை. வேல் எறிந்தனர், எடுத்தேன், ஒடித்தேன், இதோ இங்கு நிற்கிறேன்! நன்றாகப்பார்! நானேதான்!’’ என்று அவன் பேசுகிறான், அந்த மாது மிரளுகிறாள். காட்சி இதுபோல் எனின், என்ன தோன்றும் உனக்கு, அவனைப்பற்றிக் கூறிட? அவன் ஆற்றலையும் அஞ்சா நெஞ்சத்தையும், பாராட்ட வேண்டும்போல் தோன்றுகிறது. அவன், அந்த மாதிடம் பேசுகிறான் - அவளோ திகைக்கிறாள். அவளிடம் அவன் பேசுவதிலிருந்து, அவனைப் பிடிபட வைத்தது, அந்த மாதுதான் என்பதும், சிறையிலிருந்து தப்பி ஓடிவந்தவன், அவளிடம் வந்து நின்று மிரட்டுகிறான் என்பதும், அவனால் அதுபோது, அவளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதும் தெரிகிறது. இந்த நிலையில், அவனைப் பற்றி என்ன எண்ணத் தோன்றுகிறது. உனக்கு உடனே, கூறிவிடாதே, தம்பி, அவ்வளவு எளிதல்ல! "பிடிபட்டேன் - என் வல்லமையால், விடுபட்டேன்’’ என்கிறான். பாராட்டத்தக்க ஆற்றல் இருக்கிறது இவனிடம் என்பது தெரிகிறது. அந்த வகையில், அளவில், அவன் பாராட்டப்பட வேண்டியவன். சிறையிலிருந்து தப்பி வந்தவன், கொலைக்களம் இழுத்துச் செல்லப்படும், தாயைக் கண்டு, அவளைக் காப்பாற்றத் தன்னையே அர்ப்பணிக்க உறுதிக் கொண்டதாகக் கூறுவது போன்றது, காட்சியாக இருந்திடின், அவன் பெருவீரன் என்று பெருமிதத்துடன் கூறலாம்; அவன் மிதித்த மண் மணம் பெறும் என்று கவிதை பாடலாம். அவன் காண்பது கொலைக்களம் கொண்டு செல்லப்படும் தாய் அல்ல, குகையிலே இருக்கும் ஒரு மாது; அவள் பேசுவது மகன் என்ற பாசத்தால் அல்ல, பிடித்துக் கொடுத்தவள் இவள் அல்லவா என்ற கோபத்தோடு பேசுகிறான் என்பது தெரிகிற போது, அவனைப் பற்றி என்ன கூறப்போகிறாய்! அவன் வீரதீரத்தை, ஆற்றலை அஞ்சாமையைப் பாராட்டப் போகிறாயா? காடு! குகை! அங்கு ஓர் அபலை! அவளிடம் அச்சமூட்டும் முறையில் பேசுபவனைப் பாராட்ட முடியுமா! அவன் ஆயிரத்தெட்டு அகழிகளைத் தாண்டினவனாக இருக்கட்டும்! நூற்றெட்டுக் கருங்கற் சுவர்களைத் தாண்டிக் குதித்தவனாக இருக்கட்டும்! எதிர்ப்பட்டோரைக் கொன்று குவித்தவனாக இருக்கட்டும்! இருந்தாலும், அவன் ஓர் மாதிடம், உருட்டி மிரட்டிப் பேசுவது கண்ட பிறகு, அவனை வீரனென்றா கூற முடியும்? கொடியவன் என்றல்லவா கண்டிக்கவேண்டும்! சிறை கடந்தவன் என்றா பாராட்டமுடியும், ஏய்த்துவிட்டு ஓடி வந்த கைதி அல்லவோ அவன்! - என்று கூறுவாய் - கூறத் தோன்றும்; ஆனால் அவசரப்பட்டு அவ்விதமும் கூறிவிடாதே. முழு உண்மை, உனக்குத் தெரிந்துவிட்டதா? குகை தெரிகிறது, மாது காண்கிறாய், அவளிடம் மருட்டிப் பேசுபவனைக் காண்கிறாய். அதுபோதுமா, உண்மையை உணர்த்த? போதாது! உண்மை முழுவதும் தெரியவேண்டுமானால், "என்னைப் பிடித்துக் கொடுத்தாய் - சிறையில் அடைத்தனர் - இதோ நான் தப்பி ஓடி வந்திருக்கிறேன்’’ என்று பேசுபவனையும், அவன் பேசக்கேட்டுக் குகையிலே நின்றிருக்கும் மாதையும், பார்த்தால் மட்டும் போதாது; அவர்கள் யார் என்பதும் தெரிந்தால்தான் உண்மை துலங்கும். “ஏழை எளியோரை வாட்டி வதைக்கிறான் மன்னன்! அவன் அருகிருந்து, அறம் அழிக்கின்றனர், அவனால் அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கும் ஆள் விழுங்கிகள்! இந்த அக்கிரம அரசு இருக்கும் வரையில், விளைவது உழுபவனுக்குக் கிடைக்காது, வீணர் கொழுப்பர்; விவரமறியாதார் விவேகிகள் என்ற விருது பெறுவர், நாடு நாசமாகும், நல்லோர் மறைவர் என்பதை உணர்ந்தேன். இந்த அரசை அழித்திடத் திட்டமிட்டேன். காடுகளைக் கூடாரமாக்கிக்கொண்டேன்! கூனர்களை நிமிரச் சொன்னேன்! விழி திறந்திருந்தும் காணாது இருந்தவர்களைக் காணச்செய்தேன்! ஊமையரல்ல, உள்ளத்தில் பட்ட உண்மையை எடுத்துக் கூறுங்கள் என்றேன். பாமரரைப் படை வீரராக்கினேன்! நான் வாழ அல்ல. நாடு வாழ! செல்வம் தேடிட அல்ல, சீரழிவைத் தடுக்க. மாதரின் கற்புக்கு ஆபத்து ஏற்படக் கூடாதே! மாதாவிடமிருந்து மகனைப் பிரிப்பது மாபாவமாகுமே! உழைப்பவனை உருக்குலையவைப்பது ஊராளும் முறை அல்லவே! என்பதால். அரசுக்கு எதிராக வேலை செய்தேன். என்னைப் பிடித்திட என்னென்னவோ திட்டமிட்டனர். தோற்றனர்! எவரெவரையோ ஏவினர், வெற்றி கிட்டவில்லை! ஓயாத உழைப்பு, நோய்வாய்ப்பட்டேன் - இங்கு வந்தேன், அடைக்கலம் என்று. படையால் பிடித்திட முடியவில்லை, என்னை; பாவிமகளே! படுத்துக் கிடந்தேன் உணர்வற்று அந்த நிலையில் பத்தாயிரம் பொன் பரிசு தருவார்கள் என்று ஆசைப்பட்டு, உளவு கூறி, என்னைப் பிடித்துக் கொடுத்தாயே! நீ பெண்தானா!!’ - என்று அவன் பேசிடக் கேட்டால், அவனை மாவீரன் என்று மட்டுமல்ல, விடுதலை வீரன், வீரத்தியாகி என்றெல்லாம் பாராட்டவும், அவனைக்”கள்ளி’ என்று இடித்துரைக்கவும், "வீரத்திலகமே! இந்த மாபாவி நின்றிருக்கும் மண்ணில் உன் கால்படுவதுகூடத் தகாது! வா, வீரனே, வா! எமது இதயத்தைப் பெயர்த்தெடுத்து, மாலையாகத் தொடுத்து உனக்கு அணிவிக்கப் போகிறோம். மக்கள் மன்றம் வா! மாண்பு மிக்கவனே! நீ வாழும் நாட்களிலே, நாங்கள் வாழ்கிறோம் என்பதொன்றே எமது நெஞ்சை விம்மிடச் செய்கிறது’’ என்றெல்லாம் பேசிடச் செய்யும் - பேச வேண்டும். அதுபோலத்தான் பேசப்போகிறேன் என்று துவக்கி விடாதே, தம்பி! இப்படி இருந்தால், எப்படிப் பேசவேண்டி நேரிடும் என்பதையும் எண்ணிப்பார். “அடி கள்ளி! அரண்மனையில் தவழும் அன்னங்கள் எல்லாம், என் கண்ணடிக்குப் பலியாக வீழ்ந்தன - நான் தொட்டேன், மகிழ்ந்தன! காட்டுமல்லிகை நீ! பாட்டுமொழி பேசினேன் உன்னிடம்; நீ பணிய மறுத்துவிட்டாய். அங்கம் தங்கம், என்னை ஆரத்தழுவிய ஆயிரம் ஆரணங்குகளுக்கு! கருநிறம் உனக்கு! உழைத்துப் பிழைக்க வேண்டியவள் நீ! நீ மறுத்தாய், என் மஞ்சம் வர!! சந்தனக்கட்டையாலான காலணி போட்டுக்கொண்டு, சப்பாத்திக் கள்ளிக்காக, காடு அலைவாரில்லை. நானோ சரசாங்கிகளின் சல்லாபத்தை, போதும் போதும்! என்று கூறிவிட்டு, உன்னைத் தேடிவந்தேன். மாடப்புறாவே, மடமயிலே, மாதுளைக் கொத்தே, மனமகிழ் மலரே, காதளவோடிய கண்ணினை உடையாய், காற்றினில் ஆடிடும் கவின் மலர்க்கொடியே! - என்றெல்லாம் எவளிடமும் நான் பேசினதில்லை. எவர் பேசியும் நீ கேட்டிருக்கமாட்டாய். பேசத் தெரிந்தவனுக்கும், உன்னைக் கண்டால் பேசத்தோன்றாது - எனினும், அதுபோலெல்லாம் பேசினேன் - நீ என்னை அடித்து விரட்டினாய்! துடிக்கத் துடிக்க உன்னை… முடியும் என்னால்… ஆனால் கசக்கி முகர்ந்தால், மலர் மணம் ஏது என்று காத்திருந்தேன் - நீயோ, மன்னனிடம் மண்டியிட்டு அழுது, என்னைக்”குற்றவாளி’ ஆக்கி சிறையிலும் தள்ளி விட்டாய். இப்போது!! எங்கே சிறைச்சாலை! எங்கே காவலர்கள்! மன்னன் ஆணை மண்ணாகிறது! மாதே! கற்பு கற்பு என்று விக்கிவிக்கிப் பேசுவாயே, அது என்ன ஆகப்போகிறது பார்! சிறையிலே தள்ளிப் பூட்டிவிட்டார்கள், இனி அவன் நம்மை என்ன செய்யமுடியும் என்று, சிறுமதி கொண்டவளே, மெத்தத் தைரியமாக இருந்திருக்கிறாய், இனி?’’ - என்று அவன் பேசுகிறான் என்று வைத்துக்கொள் தம்பி! அவனைப் பாராட்டவா முடியும்! இனி? - என்று கூறி அவன் வாய் மூடுமுன், அவன் மீதல்லவா பாய்ந்திருப்பாய்! "உண்மைதான் அண்ணா! அவன் யார்? என்ன போக்குடை யவன்? அவன் செயலால் விளைவது யாது? என்று அறியா முன்னம், வீரதீரச் செயல் புரிந்தவன் என்ற உடனே பாராட்டலாம் என்ற துடிப்புத்தான் ஏற்பட்டது. ஒவ்வொரு கட்டமாக தீட்டிக் காட்டிக்கொண்டே வரும்போதுதான், ஒவ்வொரு கட்டத்தின்போதும், ஒவ்வோர் வகையான உணர்ச்சி ஏற்பட்டது என்று கூறுகிறாய். சரி! ஆனால், தம்பி! இதனையே ஒரு நாடகமாகக் கண்டால்? வீரத்தை அக்கிரமத்துக்கு, திறமையைத் தகாத காரியத்துக்குப் பயன்படுத்தியவனைக் கண்டிக்கவேண்டும் என்பதற்காக, மாதரின் கற்பைச் சூறையாடிடும் மாபாவி வேடமிட்டு நடித்தவனைக் கண்டிக்கவா, கிளம்புவாய்! இல்லை அல்லவா? நடிப்புத் திறமையைப் பாராட்டுவாய்! அதுபோலத் தம்பி! நான், நிதி அமைச்சர் சுப்பிரமணியத்தைப் பாராட்டுகிறேன். சந்துமுனை நின்று சத்தமிடும் சத்தற்றதுகளுக்குச் சீற்றம் மேலிடும். என்ன மண்டைக் கர்வம் இவனுக்கு! காமுகனைப் பற்றிக் கூறிவிட்டு, கணக்கிலே புலி, வாதத்திலே வேங்கை, என்று கூறத்தக்க, எமது அமைச்சர் பெருமகனை அந்தக் கதைப்போக்குடன் இணைத்துப் பேசுவதா! இதைக் கேட்ட பிறகும் நாங்கள் சும்மா இருக்கமுடியுமா! - என்றெல்லாம் கொதித்துக் கூறுவர். நான், தம்பி! கருத்து விளக்கத்துக்காக, கதை வடிவமாக்கித் தந்தது, "கனம்’ அவர்களைக் காமுகனோடு ஒப்பிட அல்ல! கல்லாமை கயமை எனும் பிணிகளால் பீடிக்கப்பட்டவனல்ல, நான். கதை வடிவிலே, நான் சொல்லவந்தது, எவருடைய அறிவாற்றல், வீரதீரம், அஞ்சாநெஞ்சம் - எனினும், அவர்களின் போக்குக்கான காரணம், அதனால் ஏற்படும் விளைவுகள், நிகழ்ச்சிகளுக்குள்ள பின்னணி என்பன போன்றவைகளை எல்லாம் ஆய்ந்தறிந்து கண்டபிறகே, பாராட்டுவதா அல்லவா என்ற முடிவுக்கு வரமுடியும்- மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், முழு உண்மை தெரியாது என்ற கருத்தை விளக்க. அதன் தொடர்ச்சியாக அறிவாற்றல், திறமை, தீரம், என்பவைகளைக் காட்டிடுவோர் என்பதுகூட அன்றி, அத்தகையோர்போல வேடமிட்டு நாடகமாடிடுவோரைக் கண்டால், என்ன கூறத் தோன்றும் என்று எண்ணினேன் - நடிப்புக்கு நமது பாராட்டுதலை வழங்குவோமல்லவா, அதைக் கூறினேன். அதைக் கூறும்போது, நடிப்புத்திறமையைக் காட்டும் பான்மையில் பேசிவரும், நிதி அமைச்சரின் நினைவும் வந்தது; அவரையும் நாம் பாராட்டத்தானே செய்கிறோம் என்ற நினைவு தொடர்ந்தது. அதைத்தான் கூறினேன் - அவரைக் காமுகனுடன் ஒப்பிட்டுவிட்டேன் என்று தப்பாக எண்ணிக்கொண்டு, புதிய கதர்ச்சட்டைகள் கோபித்துக் கொள்ளக்கூடாதே என்பதற்காக இந்த விளக்கம் தருகிறேன். அமைச்சரிடம் உள்ள திறமையை, அறிவிலி! நடிப்புத் திறமை என்றா கூறுகிறாய். ஏன்! பதினைந்து!! அவர் சாமான்யர் என்றா எண்ணிக்கொண்டாய் - அவருக்குப் பக்கத்தில், நூற்று ஐம்பது - தெரிகிறதா? - என்றெல்லாம் கோபமாகப் பேசிக் கனம் களின் கண்ணில் படவேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் "துந்துபிகள்’ முழக்கமிடுகின்றன; கேட்கிறது! அமைச்சர்க ளென்ன, பக்தர்களைப்பற்றியேகூட, இவ்விதம் கூறப்பட்டிருக் கிறது. நாடகத்தில் உன் அடியார்போல் நடித்து என்பது மேற்கோளுக்காகக் கொள்ள வேண்டுகிறேன். நடிப்பு, அமைச்சரிடம் ஏது? என்பர். எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாக தி. மு. க. பயனற்றவை, வலிவே இல்லாதவை, வளர்ச்சியே அடையாதவை, அவைகளைப்பற்றிக் கவலைப்படவே தேவையில்லை என்று பேசுகிறாரே, அது நடிப்பு! வடக்கு - தெற்கு என்று பேசுவது பேதமை, அதை ஒரு தத்துவமாகக் கொள்வது மடைமை, அதை மக்கள் காது கொடுத்துக் கேட்பது, கொடுமை - என்றெல்லாம் பேசுகிறாரே அது நேர்த்தியான நடிப்பு! திறமையும் இருக்கிறது. மறைக்கவில்லை, ஆனால் எதில்? எவ்வகையில்? என்ன விளைவுகள்! என்பவைகளைத்தானே முக்கியமாகக் கவனிக்கவேண்டும். புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது ஒரு திறமை! அவைகளைச் சமயம்பார்த்துப் பயன்படுத்துவது திறமையில் குறிப்பிடத்தக்கவை. எதிரியின் வாய் அடைத்துப் போகும் என்று, தன் கட்சிக்காரர்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே புள்ளிவிவரங்களைக் காட்டுவது, ஒருவிதத்தில் திறமைதானே! நான், கதைவடிவில் காட்டிய "வீரன்’ - கத்தி, கட்டாரி தூக்குவான் களத்தில். அமைச்சருக்கு புள்ளிவிவரம் ஆயுதம் என்று தோன்றுகிறது. ஆனால், அதே "போர் முறை’யைக் கையாள எண்ணி புள்ளிவிவரங்களைக் கூறினால், அமைச்சர்கள், என்ன செய்கிறார்கள்? இப்படி எல்லாம் பேசுகிற இந்தத் தி. மு. கழகத்தவர் யார் தெரியுமா? அவர்களுடைய யோக்யதை தெரியுமா? பூர்வோத்திரம் அறிவீர்களா? என்று மூலைவாரி ஓடும் காளைகள்போல வேறு பக்கம் சென்று விடுகிறார்கள். தமக்கு எல்லாப் பிரச்சினைகளும் புரிந்துவிட்டது, தமக்கு மட்டுமே புரிந்திருக்கிறது, தமக்குமட்டுமே புரியும்!… என்ற நம்பிக்கையுடன் அமைச்சர் இருக்கிறாரோ, என்னவோ! அப்படிப்பட்ட நம்பிக்கை இருப்பதுபோலப் பேசுகிறார், அது நேர்த்தியாக இருக்கிறது. அதை நான் பாராட்டியிருக்கிறேன். இதைக்கூடப் பெருந்தன்மையின் விளைவு என்று கொள்ள முடியவில்லை அவர்களால். சட்டசபையிலே, எதிரிலே, தி. மு. கழகத்தார், எங்களைத் திறமைசாலிகள்! ஆற்றல்மிக்கவர்கள்! என்றெல்லாம் பாராட்டு கிறார்கள், வெளியே வந்துதான், கன்னாபின்னா என்று கண்டபடி பேசுகிறார்கள் - என்று பொருள்பட நிதி அமைச்சர் பேசுவதாகப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. அவரும் அதனை மறுத்திடவில்லை. என்ன எண்ணிக்கொண்டு அவர் அவ்விதம் பேசுகிறாரோ புரியவில்லை. இந்தப் பயல்களுக்குச் சட்டசபையிலே பேசப் பயம். அங்கே கைகட்டி வாய்பொத்தி இருக்கிறார்கள். அங்கு ஏதாவது பேசினால் அமைச்சர்கள் சும்மாவிட மாட்டார்கள். இவ்விதமெல்லாம், தம்முடைய கட்சிக்காரர் பேசி மகிழ வேண்டும்; மந்திரியாக்கி வைத்தவர்களுக்கு இந்த இனிப்புப் பண்டமாவது தராவிட்டால் நல்லதல்லவே என்ற நினைப்பிலே பேசுகிறாரோ என்னவோ! அந்தக் காரணத்துக்காகப் பேசுவதானால் நான் குறை சொல்வதற்கில்லை. அமைச்சர்களும் எதிர்காலத்தைப்பற்றிச் சிந்தித்தாக வேண்டுமல்லவா! செய்யட் டும். ஆனால், அமைச்சரே உள்ளபடி நாம் ஏதோ பயந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருப்பாரானால், பரிதாபப்படவேண்டி இருக்கிறது. தம்பி! ஒன்றுமட்டும் கூறுவேன். நூற்று ஐம்பது பேருக்கு எதிரே பதினைந்து பேராக நாம் உட்கார்ந்துகொண்டு, எதிர்க் கட்சி என்ற கடமையை அச்சம் தயை தாட்சணியத்துக்குப் பலியாகாமல், எண்ணிக்கை பலத்தைக்கண்டு அஞ்சாமல், பணியாற்றி வருகிறோமே, அந்த வகையிலும், அளவிலும், அமைச்சர் அவையில் உள்ள தலைவர்கள் எண்ணிக்கை பலமிழந்த பிறகு, அறிவாற்றலை, அஞ்சாது பணிபுரியும் கடமையைச் செய்யக்கூடியவர்களா என்று கேட்டால் அவர்கள் கோபித்துக்கெண்டாலும் பரவாயில்லை, உண்மையைக் கூறுகிறேன், ஒருநாள் கூட முடியாது! பணக்காரன் வீட்டுப் பாயாசத்திலே பதம் சரியாக இல்லாவிட்டாலும், வெளியே சொல்லமாட்டார்களல்லவா - அதுபோல எண்ணிக்கை பலம் மிகுந்திருக்கிற கட்சி என்பதால், பேச்செல்லாம் அறிவுரை என்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் போக்கு வீரதீரம் என்றும்கொள்ளப்படுகிறது; கூட்டல் கழித்தல் கணக்கெல்லாம், புள்ளிவிவர நிபுணத்துவம் என்று கருதப்படுகிறது; வேறென்ன? அமைச்சர்கள் எதிரே பயந்துகொண்டு கிடப்பவர்கள் எவருமில்லை! அவர்கள் என்ன பக்கத்திலே வெடிகுண்டா வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், மிரட்ட! அதிகாரிகள் கஷ்டப்பட்டுத் தயாரிக்க "அறிக்கைகளை’ எதிரே அடுக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். நாம் பதினைந்தே பேர்தானே என்ற பயம் எப்போதும் ஏற்பட்டதில்லை. இங்குகூடக் கிடக்கட்டும் - பதினைந்து பேர்களாவது இருக்கிறோம். கோவிந்த வல்லப பந்த் இருக்கிறாரே, அவருடைய முழு உருவத்தையும் பார்க்காமல், முகத்தை மட்டும் சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தால், கூண்டுக்கு வெளியே தலையை நீட்டிக்கொண்டிருக்கும் சிங்கம்போலத் தோற்றமிருக்கும். அங்குதான் தி. மு. கழகத்தினர், இரண்டே இரண்டு பேர் - இளைஞர்கள் - இருக்கிறார்கள் - இளித்துக்கொண்டு அல்ல, இச்சகம் பேசிக்கொண்டு அல்ல - பயந்துகொண்டு அல்ல - இந்தியா ஒரு நாடு அல்ல! பல இன மக்கள் கொண்ட ஒரு துணைக்கண்டம் என்று பேசிக்கொண்டு. இருவர்! ஐந்நூற்றுச் சொச்சம், ஆளுங் கட்சியினர் - அதிலே ஒரு அரை டஜன் பேர்களாவது சுதந்திரப்போராட்ட காலத்திலே, "அசகாய சூரர்கள்’ என்று பெயரெடுத்தவர்கள். அச்சம், நிச்சயம் ஏற்படாது. காரணம் அறிந்துகொள்ளக் கனம்களும், அரசியல் இலாபம் தேடிடும் இனம்களும் விரும்பினால் கூறுகிறேன் - தனிப்பட்ட ஆட்களின் வீரதீரத்தின் போக்கு அல்ல அதற்குக் காரணம் - நாம் கொண்டிருக்கிற கொள்கையின் தூய்மையில், நமக்கு இருக்கும் அப்பழுக்கற்ற பற்று, அசைக்கமுடியாத நம்பிக்கை! அதிலிருந்து பிறப்பதே நமக்கு உள்ள அறிவாற்றல், அஞ்சா நெஞ்சம், ஆளடிமையாகாத் தன்மை. இத்தனைக்கும் சட்டமன்றம், பாராளுமன்றம் எனும் இடங்களிலே உள்ள தி. மு. கழகத்தினர், எல்லாச் சுகத்தையும் ஆண்டு அனுபவித்துவிட்டு அலுத்துப்போன, "சஷ்டியப்த பூர்த்திகளல்ல.’ ஆசாபாசங்கள், கோபதாபங்கள், கொந்தளிக்கும் நிலை என்று கூறத்தக்க வாலிபப் பருவத்தினர் - (நான்தான் 51 -) எனினும், வெள்ளைவேட்டிப் பண்டாரங்களாகி விட்டவர்கள்! தங்களை "மேதாவிகள்’ என்று கருதிக்கொண்டு, இந்தக் காரியத்தில் ஈடுபட்டவர்களுமல்ல, மேதாவிகள் என்போர், பதவியில், மேலுக்குமேல் தாவிக் கொண்டிருக்கிறார்களே, நாமாவது இதைச் செய்வோம் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டவர்கள். ஆசைதான் துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர். ஆசை, அச்சத்துக்கும் காரணமாக அமைந்துவிடும். சட்டசபைக்கு வந்துவிட்டோமே, ஒரு நாலு கமிட்டி களில் இடங் கிடைக்க வேண்டாமா, இரண்டு மந்திரிகளுடைய நேசமாவது ஏற்படவேண்டாமா, உறவினரில் ஒரு நாலு பேருக்காவது வேலை வாங்கிட வேண்டாமா என்ற ஆசை ஏற்பட்டிருந்தால், அச்சம் அதைத் தொடர்ந்து படரும். இதைப் பெறவேண்டுமானால், அமைச்சர்களைக் குறை கூறாமலிருக்க வேண்டும்; அவர்களுக்குப் பிடிக்காத விஷயத்தைப் பேசக் கூடாது; அவர்களுக்குச் சங்கடம் ஏற்படக்கூடிய பிரச்சினை களைக் கிளறக்கூடாது என்றெல்லாம் தோன்றும். எதைப் பேசினால் எந்த அமைச்சருக்குக் கோபம் வந்துவிடுமோ என்ற அச்சம் “பிடித்தாட்டும், பிறகு”ஐயா! ஒரு சேதி கேளும்! இந்த அடிமைக்காரன் சொல்லும் வார்த்தை கேளும்’ என்று நொண்டிச்சிந்து பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஆசை இல்லை, எனவே அச்சம் இல்லை! அமைச்சர்கள், எமக்குத் தரக்கூடியது என்று ஒன்றும் இல்லை. ஒன்று கேட்டேன், துவக்கத்திலேயே - இதயத்தை. திறமையை, வேண்டுமானால் காட்டுகிறேன் என்றனரே தவிர இதயத்தைத் தரவில்லை. எமது கொள்கைகளுக்கு இதயத்தில் இடம் கொடுங்கள் என்றுதான் கேட்டேன். ஆசை அற்ற இடத்தில், அச்சம் எழக் காரணம் இல்லை. அமைச்சர் சுப்பிரமணியம், நமது தோழர்களின் பண்பையும், ஜனநாயகத்துக்கு இன்றியமையாத அடக்க உணர்ச்சியையும், பயம் என்று எடுத்துக் கொண்டாரோ என்னவோ! பதினைந்து பேர்கள் சட்ட மன்றத்தில், திட்டமிட்டு, பண்பு கெடாத வகையில் பணியாற்றுவதால், காங்கிரஸ் உறுப்பினர் களிடமேகூட ஏற்பட்டுக் கொண்டுவரும் மனமாறுதலை அமைச்சர், உணருகிறாரோ இல்லையோ, அதைத் துளிகூட வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாரே, அதைத்தான் நான், நேர்த்தியான நடிப்பு என்று கூறுகிறேன் - பாராட்டுகிறேன். தகவல் கோரியும், விளக்கம் பெறவும் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்குப் பதில் கூறப்படுகிறதே, அதிலே எத்தனை முறை அமைச்சர்கள், மத்திய சர்க்காரைக் கேட்கவேண்டும் - இது மத்திய சர்க்காரைப் பொறுத்த விஷயம் - மத்திய சர்க்கார் இணங்கவில்லை - என்று பதிலளிக்கிறார்கள். இந்தப் பதில்கள் எதைக் காட்டுகின்றன? இன்றுள்ள அரசியல் முறையின்படி, இந்த அரசு முழு அதிகாரம் பெற்றதாக இல்லை, போதுமான அதிகாரம் பெற்றதாகவும் இல்லை என்பதைத்தானே. இந்த உண்மை சட்டசபையில் ஒப்புக்கொள்ளப்படுகிறதே - அதுபோதும் எங்களுக்கு! அதைப்பெற நாங்கள் அங்கு வந்தவர்கள் - வேறு எந்த ஆசையும் எமக்கு இல்லை - எனவே அச்சமும் இல்லை. "டெல்லிக்காரர்களைத் தட்டிக் கேட்கத்தக்க துணிவை இந்தத் துரைத்தனத்தார் இன்னும் பெறவில்லை. அண்டை ராஜ்யமான ஆந்திர ராஜ்யத்தில் அமைச்சர்கள், மத்திய சர்க்காரின் மூலம் தங்கள் ராஜ்யத்துக்குக் கிடைக்கக்கூடிய வசதிகளை மத்திய சர்க்காரிடமிருந்து பெறுவதற்காக, மத்திய சர்க்கார் மூலம் தங்கள் ராஜ்யத்தில் ஏற்படவேண்டிய தொழிற் சாலைகளைக் கேட்க, மத்திய சர்க்கார் தக்க விதத்தில் ஏற்படுத்த வில்லை என்று மத்திய சர்க்காரின்மீது குற்றம் சாட்டத்தக்க துணிவைப் பெற்றிருக்கிறார்கள். நமது ராஜ்ய அமைச்சர்கள் அதைக் கவனிக்கவேண்டும் - ஆனால் நமது மாநில அமைச்சர் கள், எப்போதும் மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். நமது ராஜ்யத்தில் மத்திய அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்றக்கூடிய திட்டங்களைப் பற்றி நாங்கள் பேசும்போதெல்லாம், இவர்கள், மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள்… பிற மாநில துரைத் தனங்கள் எல்லாம் மத்திய சர்க்காருடன் போராடித் தங்கள் மாநில நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சி எடுத்துக் கொள்கின்றன. ஆனால் இந்த மாநில அமைச்சர்களோ, ஐந்து வருஷத்துக்குக் குத்தகைக்கு எடுக்கப்பட்டு, மத்திய சர்க்காரி லிருந்து மாநில சர்க்காருக்கு அனுப்பப்பட்டவர்கள்போல, எப்போதும் மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். தம்பி! 16-3-60-இல் சட்டசபையில், நான் கூறியது இது. இதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுத்தான், அமைச்சர் வெளியே சென்று, சட்டசபையில் அவர்கள் எங்களைக் கண்டிப்பதே இல்லை, குறை கூறுவதே இல்லை, அவ்வளவு பயம் அவர்களுக்கு என்ற கருத்துப்படப் பேசுகிறார். விந்தை மனிதர்! "மந்திரிகளாக வந்து அமர்ந்திருக்கும், மாமிசப் பிண்டங்களே! உங்களை இந்த மாநிலத்து மக்கள் காரித் துப்பு கிறார்கள்! ஏன், பிசின் போட்டு ஒட்டப்பட்டது போல், பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். மக்களுக்கு வயிறாரச் சோறுபோட முடியாத நீங்கள், விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாத நீங்கள், தொழிலை வளர்க்கமுடியாத நீங்கள், ஏன் கொலுப்பொம்மைகளாக உட்கார்ந்திருக்கிறீர்கள்? வெளியே போய்விடுங்கள்! மக்கள் வாழ்வு துலங்கும்! பதவியை விட்டு விலகுங்கள், பசி பஞ்சம் பட்டினி போகும்!’’ இவ்விதமெல்லாம் சட்ட சபையில் நாம் பேசுவோம் என்று அமைச்சர் எதிர்பார்த்திருந்தால், நிச்சயம் அவருக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஏனெனில், நாம் அவ்விதமான காட்டுமிராண்டித்தனத்தை நம்பிப் பிழைக்கும் அரசியல் இலாபச் சூதாடிகள் அல்ல. நாக்கில் நரம்பின்றி, பதவியில் இல்லாதபோது காங்கிரசார் மற்றக்கட்சியினரைப் பேசிவந்தார்களே, அதுபோல நாம் பேசமாட்டோம். அது பண்புமல்ல - மரபும் அது அல்ல. இவ்விதமும் கூறிவிட்டு, காமுகன் கதை கூறிக் "கனம்’ பற்றி இணைத்துப் பேசலாமா என்று எண்ணிக் காங்கிரசார் வருத்தப்பட வேண்டாம். மீண்டும் ஒரு முறை துவக்கத்தைப் படித்துவிட வேண்டும். படித்தாகிவிட்டதா! சரி வீரதீரம், அஞ்சா நெஞ்சம், எதிர்ப்புக் கண்டு பொருட்படுத்தாத தன்மை, இவைகளை மட்டும் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் முழு உண்மை விளங்காது, எல்லாக் கட்டங்களையும் எண்ணி எண்ணிப் பார்த்தால் மட்டுமே உண்மை துலங்குமே அதே போலத்தான் நமது அமைச்சர்கள் அல்லது காங்கிரஸ் அரசு குறித்து மதிப்பிட வேண்டுமானால், அவர்கள் காட்டும் புள்ளி விவரக் கணக்கு எண்ணிக்கை பலத்தால் ஏற்படும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கு, நையாண்டிப் பேச்சை வாதமாக்கும் வல்லமை, இவைகளை மட்டும் பார்த்தால் போதாது. இவர்களுக்கு உள்ள அதிகாரம், இவர்களை ஆட்டிப்படைப்பவர்களிடம் உள்ள அதிகாரம் ஆகியவற்றையும் கவனித்துப் பார்க்கவேண்டும். துவக்கத்திலே காட்டினேன் வீரதீரச் செயலில் ஈடுபட்டவனை. இதோ இன்னொருவர். சுற்றாத நாளில்லை! போகாத ஊரில்லை! தேடாத புள்ளி விவரமில்லை! வாதம், நேர்த்தியாக! துணிவு, அளவுக்கு அதிகமாக! அவருக்கு. திங்களன்று விமானம் ஏறுகிறார் - செவ்வாயன்று மனுக் கொடுக்கிறார் - வியாழன்வரை காத்திருக்கிறார் - வெள்ளி வீடு திரும்புகிறார் - வெறுங்கையோடு. இந்தியா முழுமைக்கும் திட்டம் போடப்படும் ஆலோசனைக் குழுவில், இவருக்கு இடமுண்டு! நேரு பெருமானுக்கு வலமோ, இடமோ இடம் கிடைக்கும். மாநிலத் தேவைகளைக் கணக்கெடுத்து, ஆதாரங்களைத் திரட்டி, அங்கு காட்டுவார். இனிய முகம் காட்டி, எமது குறை தீரும் ஐயனே என்று வேண்டுவார். இவ்விதமானவரைப் பாராட்டத்தானே வேண்டும்! மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்; ஆம்! ஆனால், துவக்கத்திலே கூறினேன் அந்தக் கதைவடிவக் கருத்து விளக்கத்தின்படி, இதனையும் கவனித்துப் பார்த்தால், பாராட்ட முடிகிறதா என்று கூறு தம்பி! எதிர்க்கட்சிகளைத் தாக்கும் தீரர், எண்ணிக்கை பலத்தைக் காட்டும் வீரர், எமக்கன்றோ எல்லாம் தெரியும் என்று எக்காளமிடும் எந்தல், ஏற்றமிக்க குழுக்களில் இடம் பெற்றுள்ள மேலோன், எது வேண்டும் இங்கு என்பதைக் கண்டறிந்த கற்றறிவாளன், நேரு பெருமகனாரின் நண்பர் என்ற அளவுக்கு உயர்ந்தோர், வாதவல்லவர், புள்ளி விவரப்புலி, விமானமேறித் திங்களுக்கு இருமுறையேனும் தில்லி தரிசனம் செய்யும் பக்திமான்! ஆமாம்! அதிலே ஒன்றும் குறைவில்லை! ஆனால், வீரதீரம், அறிவாற்றல், அஞ்சாநெஞ்சம், திறமை, எல்லாம் ததும்பி வழிகிறது - அவர் ஆட்சியில் உள்ள நாட்டுக்கு, தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை. மைல் கற்களிலேயும் இந்தித் தொல்லை. சேது சமுத்திர திட்டம் வரப்போவதில்லை. சேலத்து இரும்புத் தொழிலுக்கு, விமோசனம் இல்லை. நெய்வேலி நிர்வாகம் இவரிடம் அல்ல. அலுமினியத் தொழிலுக்கு அதிகாரி இவரல்ல. காகித ஆலை கட்டப்போவது இவர் துரைத்தனம் அல்ல! - என்று அடுக்கிக்கொண்டே போகலாம் (அவ)லட்சணத்தை. இந்த நிலையில் நாடு; இதற்கு வந்து வாய்த்த அமைச்சர் வீரதீர மிக்கவர், அறிவாற்றல் நிரம்பியவர் என்று காட்டிப் பயன் என்ன? இந்த முழு உண்மை தெரியாமுன்பு பாராட்டக்கூடத் தோன்றும்! முழு உண்மை தெரிந்த பிறகு? நாட்டுப் பாடல்தான் நினைவிற்கு வருகிறது, முள்ளு முனையிலே வெட்டியது மூணு குளம்! இரண்டு குளம் பாழ் ஒன்றில் தண்ணியே இல்லை. தம்பி! இந்த நிலையில் உள்ள துரைத்தனத்தையும், துரைத்தனத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ள அரசியல் ஏற்பாட்டையும், இன்னமும் சரிவர உணர்ந்து கொள்ளாத மக்கள், மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, துவக்கத்தில் காட்டினேனே பார்க்கச் சொல்லி, அந்த வீரச் செயலில் ஈடுபட்டவனை, பாராட்டலாம் என்று எண்ணுவது போலாகி, பாராட்டியும் விடுகிறார்கள். முழு உண்மை தெரியவேண்டும் - எல்லோருக்கும். அதைத் தெரியப்படுத்தும் பணியில்தான், உன் அறிவாற்றல் அனைத்தும் இன்னும் குறைந்தது பத்து ஆண்டுகள் பயன்பட வேண்டும். அதற்கான முறையிலேதான், உன் திறம் வளரவேண்டும், மிளிர வேண்டும். அந்த நம்பிக்கைதான், எனக்கும் உனக்கும் உள்ள ஒரே ஒரு கருவூலம். அண்ணன், 17-4-60 "ஆட்டம்பாம்’’ ஆண்டியப்பன் அரசனும் அமைச்சனும், கருத்துக் கதை - எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் - ஆட்சியில் குறைபாடுகள் அமெரிக்க பால்பவுடர் கள்ள மார்க்கட்டில் தம்பி! "மகாராஜா! எனக்குத் தாங்கள் அடிக்கடி புத்திமதி சொல்லி வருவீர்களே, பொறுமைவேண்டும், ஆத்திரம் கூடாது என்றெல்லாம். அந்தக் கவனம் வராமலிருந்திருந்தால், எனக்கு வந்த கோபத்தில், நான் என்னென்னவோ செய்து விட்டிருப்பேன். பல்லைக் கடித்துக்கொண்டிருந்து விட்டேன்.’’ "பதறாமல் சொல்லு, யார் என்ன செய்தார்கள்? உனக்கு ஆத்திரம் வருகிறபடி எவன் என்ன பேசினான்?’’ "என்னை ஆயிரம் ஏசட்டும் மகாராஜா! பொறுத்துக் கொள்கிறேன். விளைவு என்ன ஆகும் என்பதுபற்றி யோசிக் காமல், புத்தி கெட்டு, என்னைத் தாக்கினால்கூட, சகித்துக் கொள்கிறேன். ஆனால், என் எதிரே, என் காதுபட, நான் ஒருவன் இருக்கிறேன், உங்கள் உப்பைத்தின்று வளர்ந்தவன், உங்கள் பொருட்டு உயிரையும் தரக்காத்துக் கிடப்பவன், உங்களுக்காக எந்த எதிர்ப்பையும் தாங்கிக் கொள்ள, தடுத்து ஒழிக்க ஆற்றல் பெற்றவன் என்பதை எண்ணிப் பார்க்காமல், ஏசினால்… மகாராஜா! எப்படித் தாங்கிக்கொள்வேன்…’’ "ஏசினானா? யார் அந்த அற்பன்?’’ "அப்படிக் கேட்கத்தான், கொதித்து எழுந்தேன்! அற்பனே! அரசனைக் குறைகூற உனக்கு ஏதடா அருகதை? குறைகூறும் உன் நாவைத் துண்டித்தெடுத்து, நரிக்கு விருந்திடுவேன். மாற்றானை ஓட்டிய மாவீரன், மண்டலத்தை அடிமைப் பிடியிலிருந்து மீட்டிட்ட தீரன், களம்பல கண்டு, வெற்றிபல பெற்று, நமது மக்களின் மானம் பறிபோகாதிருக்க வழி அமைத்த மன்னனை, மடையனே! மனம்போல போக்கிலே ஏச, எப்படியடா மனம் துணிந்தது! இந்தக் கேவலச் செயலை விட, எதிரியிடம் கூடிக் குலவிடலாமே! எந்த அரசு முறை பிடிக்கவில்லை என்று ஆயாசப்படுவதாகப் பாசாங்கு காட்டுகிறாயோ, அங்கு உனக்கென்ன வேலை! அந்த இடம், ஏன் உனக்கு, ஓடு, நாட்டைவிட்டு! உதவாக்கரைகளைக்கூட, ஒரு காலத்தில் திருத்திவிடலாம் - பயன்படுத்திக் கொள்ளலாம் - உள்ளத்தில் இத்துணை வஞ்சகத்தைக் கொண்டுள்ள, உன் போன்ற துரோகிகளை விட்டுவைக்கக்கூடாது - என்றெல்லாம் பொறிபறக்கப் பேசத்தான் துடித்தேன். ஆனால் என் செய்வது, தங்கள் ஆணைபற்றிய நினைவு வந்தது, அடங்கிப்போய்க் கிடந்தேன். காவலன் இட்ட கட்டளை, நினைவிற்கு வந்தது கட்டுண்டு கிடந்தேன். வேதனையுடன் வெட்கம்! என் செய்வேன்…’’ "ஏசினவன்…?’’ "எல்லையப்பன்,’’ "தொல்லையப்பன் என்று சொல்! உம்! எல்லையப்பன் எப்போதும் ஏதேனும், உளறிக் கொட்டிக்கொண்டிருப்பதை வாடிக்கை ஆக்கிக்கொண்டான். கிடக்கட்டும். நமது ஆட்சியிலே, குறை காண்பதையே, அவனோர் கலையாக்கிக் கொண்டான். பிழைப்பும் அதுவாகிவிட்டது. சரி - சரி - என்ன கூறினான் - குறை யாது என்கிறான்.’’ "ஆட்சி சரியாக இல்லையாம்…’’ "கோணலாட்சி! கொடுங்கோலாட்சி! வேறொருவன் ஆட்சி நடத்துவதைக் கண்டாலே, சிலதுகளுக்கு இப்படித்தான், காரணமற்ற சீற்றம், அர்த்தமற்ற ஆத்திரம், தேவையற்ற மனக்குமுறல்…’’ "வெள்ளாற்று நீர், மகாராஜா! கரைபுரண்டு, முன்பு, என் கிராமத்தைக்கூடத்தான் அழித்துவிட்டது. விளைநிலம் பாழ்வெளியாகிவிட்டது. வீடுகள்கூட மண்மேடுகளாயின. கால்நடைகள் நூற்றுக்கணக்கிலே மடிந்தன. கஷ்டம் நஷ்டம், எனக்குமட்டுமல்ல, எண்ணற்றவர்களுக்கு வெள்ளம் வர நேரிட்டால், விபரீதம் விளையும் என்று முன்கூட்டியே எடுத்துரைத்தும், கரையைச் சரியானபடி அமைக்கவில்லையே, அதனாலன்றோ இவ்வளவு அழிவு ஏற்பட்டது என்று எண்ணினோர் பலர் - நான் உட்பட, எடுத்துக்கூறியதுகூட நினைவிலிருக்கும்.’’ "ஆமாம்…’ “எவருக்கும் விபத்து நேரிட்டால், வருத்தம், ஆத்திரம் ஏற்படத்தானே செய்யும். எனக்கே, ஏற்பட்டதே! நானே தங்களிடம், பதறி ஓடிவந்து, முறையிட்டேன். அந்தச் சம்பவத்தையும், அதுபோன்ற வேறு பலவற்றையும், எடுத்து வைத்துக் கொண்டு, பயல், புட்டுப்புட்டுக் காட்டுகிறான், விவர விவரமாகப் பேசுகிறான், கலகமூட்டுகிறான், தூண்டி விடுகிறான், துடுக்குத்தனமாகப் பேசுகிறான், துளியும் பயமின்றி ஏசுகிறான்.”ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட அவதியைக் காட்டி, ஆட்சிக்கு எதிர்ப்பை மூட்டுகிறான்.’’ “ஆற்று வெள்ளத்தால், அவதி ஏற்பட்டுவிட்டது. அதை யார் மறுக்கிறார்கள். எங்களுக்குத் தெரியாதா? நாங்கள் முறையிடவில்லையா! ஆனால் அதற்கு, ஒரு வரைமுறை வேண்டாமா? மக்கள் மனையிழந்து, மாடிழந்து, தொழில் அழிந்து, துயரத்தில் விழும்போது, துடிதுடிப்பர், பதை பதைப்பர். இது இயல்பு. இதைக் கண்டறிய, கடுந்தவமியற்றவா வேண்டும்; கடுகளவு அறிவு போதும். இதனை நாங்கள், தங்களிடம் எடுத்துக் கூறாமலா இருந்தோம். ஆனால் எல்லையப்பன், இதைக் காரணமாக்கிக் கொண்டு கொடிய பகையை அல்லவா, கக்கித் திரிகிறான். அறநெறி பரப்ப அமைக்கப்பட்டுள்ள கோட்டங்களில், அறம் மட்டுமல்ல, அறிவையரின் கற்பும் அழிந்துபடுகிறது என்பதை நாங்கள் கூறிடவில்லையா, முன்பு! மக்கள் அதுகுறித்து, மனம் கொதித்துக் கிடக்கிறார்கள் என்பதனை எடுத்துக் கூறாமலா இருந்தோம். தங்கள், மனதுக்குச் சிறிது வேதனை ஏற்படும் என்று அறிந்தும், உண்மை நிலைமையை மறைத்திடலாகாது, ஊரார் உள்ளப்போக்கைக் காட்டியே ஆகவேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன், கூட்டாமல், குறைக்காமல், மறைக்காமல், திரிக்காமல், எடுத்துரைத்தோம். அதே விஷயத்தை, எல்லையப்பன், கேட்போர், மிருக உணர்ச்சி பெறக்கூடிய முறையில் பேசுகிறான்.”மரக்கட்டைகளா நீவீர், மான உணர்ச்சி அடியோடு மடிந்தே போய்விட்டதா! மதப் போர்வையிலே, மதோன்மத்தன் உலவுகிறான். அவனை அரண்மனையில் உள்ள ஒரு ஆள் விழுங்கி ஆதரிக்கிறான். ஏன் என்று கேட்கத் துணிவு இல்லையா! கேட்டால், என்ன போய்விடும்! தலை உருளும் கீழே என்ற பயமா! கோழைகளே! உங்களுக்குக் கொடி ஒரு கேடா! அஞ்சி அஞ்சிச் செத்திடும் அறிவிலிகளாகக் கிடப்பதைவிட, ஆமையாய், ஊமையாய்ப் பிறந்திடலாமே - அடவிசென்று, புலி அடித்துப்போட்ட மிருகத்தின் இறைச்சித் துண்டைப் பொறுக்கித் தின்று வயிறு நிரப்பிக்கொள்ளும் நரியாகி நத்திப் பிழைக்கலாமே!’ - என்றெல்லாம் பேசுகிறான். கேட்போர், வெட்கத்தால் தலைகுனிகிறார்கள், ஒரு கணம்; மறுகணமோ கோபம் அவர்களைப் பிடித்தாட்டுகிறது. அரண்மனை இருக்கும் திக்கு நோக்கி நடக்கிறார்கள்… தீப்பொறி உமிழும் கண்களுடன்.’’ "அவ்வளவுக்குத் துணிந்துவிட்டனரா, அடங்கிக் கிடந்ததுகள்! குதிரைப் படை, சும்மாவிடும் என்றா எண்ணுகிறார்கள்?’’ "தெரியாமற் போகுமா, அவர்களுக்கு. மூன்றாண்டுகளுக்கு முன்பு, குதிரைப்படை வீரர்கள் தாக்கியதால், இறந்துபட்டவர் எண்ணிக்கை இருபது அல்லவோ; அதிலே பத்துப் பேர், கர்ப்பவதிகளாயிற்றே; மகாராஜா! என் மைத்துனியும் மாண்டாள். தங்கள்முன், என் மனைவிகூட மாரடித்து அழுதுநின்றாளே! குனிந்த தலை நிமிராமல், புரண்ட கண்ணீரைத் துடைக்கவும் முடியாமல் நான் கொலு மண்டபத்திலே நின்றுகொண்டிருந்தேன். குழந்தைகள்கூட மிதிபட்டுச் செத்தன என்பதைச் சொன்னேன். குதிரைப் படையினர், கொடுமை செய்கிறார்கள், ஊரே அமளிக் கோலத்தில் இருக்கிறது என்றும் கூறினேன்…’’ "உண்மைதான் அழுதுகொண்டே பேசினாய், நினைவிருக்கிறது.’’ “அந்த நிகழ்ச்சியை, மகாராஜா! இந்த எல்லையப்பன்! கேட்போர் கண்களில் நீர் கொப்பளித்து, குபுகுபுவென வெளிவரத்தக்க முறையில், எடுத்துப் பேசுகிறான்.”பெற்றெடுத்தீர் பேசும் பொற்சித்திரங்களை! போட்டு மிதித்துக் கூழாக்கின, கொற்றவன் அமைத்துள்ள குதிரைப்படை!’ என்று அவன் பேசுகிறான். மக்கள், வழியே வருகிற குதிரைப் படை வீரர் மீது பாய்ந்து, அடித்துக் கொன்றுவிடுவார்கள் போலிருக்கிறது, அவ்வளவு ஆத்திரமடைகிறார்கள்.’’ "எதற்கும் துணிந்துவிட்டார்கள் போலும்! என்னுடைய புதிய வரியைக்கூட, சரிவரக் கட்ட மறுக்கிறார்கள் - கேள்விப் பட்டேன். "நானும், முன்பே சொல்லியிருக்கிறேனே, மகாராஜா, வரி, இந்தச் சமயத்தில், இந்த முறையில் விதிப்பது சரியாகாது என்று நான் சொன்னதை அந்த நாசகாலன், எப்படிச் சொல்லுகிறான் என்கிறீர்கள்! வரிகட்டப் பணமில்லாவிட்டால் என்ன, அரண்மனைக்குள்ளே குவிந்து கிடக்கிறது, பொன்னும் மணியும்; புகுந்து எடுத்து வாருங்கள் - வரி கட்டியதுபோக மிச்சம் இருப்பதை வைத்துக் கொண்டு, மருந்தில்லாததால், மடியும் நிலையில் உள்ள மனையாட்டிக்குத் தாருங்கள் - பட்டுச் சட்டை கேட்டு, குட்டுப்பட்டுக் கதறிய பாலகனுக்குக் கொடுங்கள்; ஒரு பத்து நாளைக்காவது, வயிறாரச் சாப்பிடுங்கள் - பிறகு அரண்மனையில் கொள்ளை அடித்த குற்றத்துக்காகத் தூக்குத் தண்டனை தருவார்கள், நிம்மதியாகச் செத்துவிடுங்கள் - என்று பேசுகிறான். மருந்து கிடைக்கத்தான் இல்லை, போதுமான அளவு. விலையும் ஏறியபடி இருக்கிறது. வாங்கும் சக்தி தேய்ந்துதான் போய்விட்டது. பொன்னே! மணியே! முத்தே! என்று செல்லமாகப் பெயரிட்டு அழைத்துக் கொள்ளத்தான் மக்களால் முடிகிறதேயன்றி, பொன்னையும் மணியையும் முத்தையும், கண்ணால் காணவும் முடியத்தான் இல்லை. அனைவருக்கும் இது தெரியும்! அடிக்கடி நானே, தங்களிடம் இதைச் சொல்லியுமிருக்கிறேன். இதை எல்லையப்பன், பகைமூட்டப் பயன்படுத்துகிறான். இப்படிப் பேசாதே, எல்லையப்பா! ஆட்சியைக் குறைகூறாதே, ஆத்திரத்தை மூட்டாதே! என்று அறிவுரை கூறினால், கைகொட்டிச் சிரிக்கிறான்! நாங்கள், நாவிழந்தவர்களாம்! நத்திப்பிழைக்கும் கூட்டமாம்! குறையைக் கண்டும் வெளியே கூறிடப் பயப்படும் கோழைகளாம். கோணலாட்சிக்குக் கொடி தூக்கிக் கும்பி கழுவிடும் குணக்கேடர்களாம்!…’’ "அப்படியா சொன்னான் அயோக்கியன்… யார் அங்கே…. வரச்சொல் பாதுகாப்புப் படைத் தளபதியை உடனே.’’ "மனம் குளிருகிறது, மகாராஜா! என்ன பேசினாலும், எப்படி ஏசினாலும், மன்னன் நம்மை ஏதும் செய்யமாட்டார் என்று மனப்பால் குடிக்கும் அந்த எல்லையப்பனை, பிடித்திழுத்து வந்து, விசாரித்து, சிறையில் தள்ளிச் சித்திரவதை செய்தால்தான், என் மனம் நிம்மதி பெறும்.’’ "சித்திரவதைதான் செய்ய வேண்டும். சிரத்தை ஒரே வெட்டிலே கீழே வீழ்த்தினால், பயன். இல்லை. தொடர்ந்து இருக்க வேண்டும், தண்டனை. ஆறு நாட்கள், யானைக்காலில் மிதிபடவிட்டு வைக்க வேண்டும்!’’ "ஆறு நாட்களா… …!!’’ "ஆமாம். ஆற்று வெள்ளத்தால் அழிவு ஏற்பட்டது என்று பேசி, ஏசிய குற்றத்துக்காக பத்து நாள் பாம்புகளை விட்டுக் கடிக்கச் செய்யவேண்டும். உயிர் உடனே போய்விடாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்…’’ "பத்து நாட்களா…’’ "பத்து நாட்கள்; குதிரைப்படை கொடுமை செய்தது என்று பேசிய குற்றத்துக்காக… பிறகு, எட்டு நாட்கள், எரிகிற நெருப்புக் குழிக்கு மேலே, கட்டித் தலைகீழாகத் தொங்கவிட வேண்டும் - வரி எதிர்ப்புப் பேச்சுக்காக…’’ "இதோ தளபதியார்! குறித்துக்கொண்டார், தாங்கள் கூறியவற்றை, எல்லையப்பன் இப்போது சந்தைச் சதுக்கத்தில் தான் இருப்பான், ஏதாவது சத்தமிட்டுக்கொண்டு - இழுத்து வரச் சொல்லுங்கள்’’ "இழுத்துச் செல்லும் தளபதியாரே! பிடரியில் அறைந்து. இழுத்துச்சென்று, இருட்டறையில் போட்டுப் பூட்டும்… உம்! எல்லையப்பனை அல்ல, இந்த இச்சகம் பேசித் திரியும் பிச்சு மணியை.’’ "மகாராஜா! மகாராஜா!…. என்னையா… என்னையா…?’’ "வேறு யாரை? அடே, அறிவிலி! இதைக் கேள் எல்லையப்பன், என் ஆட்சி முறைக்கு மாறாக வேறோர் ஆட்சி முறை ஏற்படுத்தவேண்டும் என்பதை வெளிப்படையாகக் கூறிக் கொண்டு, அந்தக் கருத்துக்குச் செல்வாக்குத் தேடிக்கொண்டு வருபவன். குற்றம் குறைகளைக் கண்டிப்பதைத் தன் கடமையாகக் கொண்டு விட்டான். இளித்துக்கிடந்தால் இன்ப வாழ்வு கிடைக்குமே, அடங்கிக்கிடந்தால் பட்டம் பதவி பெறலாமே என்ற பிச்சைப்புத்தி இல்லாதவன். என்னை அண்டிப் பிழைப்பவன், நீ! உன்னை ஆளாக்கிவிட்டவன், நான்! என் ஏவலைச் செய்வதற்காகக் கூலிகேட்டுப் பெறுபவன் நீ! கொடுத்த கூலிக்குத் தக்கபடி, வேலைசெய்கிறாயா என்று கணக்குப் பார்க்கவேண்டியவன் நான்! தலையாட்டிக் கிடக்கிறாய், தர்பாரில்; மாளிகை கிடைத்தது அதனாலே!! அப்படிப்பட்ட நீ, எல்லையப்பன் என் ஆட்சியில் உள்ள குறைகளைக் காட்டிப்பேசினான் என்று எடுத்துக்காட்டும் பாவனையில், ஆட்சியைக் கண்டித்துப் பேசினாய்! ஆற்றுவெள்ளத்தால் ஏற்பட்ட அவதியைக் கூறி, நான் அல்லலைப் போக்காமலிருந்து விட்டேன் என்று குத்திக் காட்டினாய் அல்லவா! குதிரைப் படையை ஏவி, நான் மக்களைக் கொன்று குவித்தேன் என்று எல்லையப்பன் பேசினான் என்று அவனைக் கண்டித்தாய் - ஆனால் அதே பேச்சோடு பேச்சாக, குதிரைப்படையினர் நடத்திய கொடுமைக்கு நானே காரணம் என்று இடித்துரைத்தாய்! வரிச்சுமையை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று என் எதிரிலேயே பேசுகிறாய் - எல்லையப்பனைக் காட்டிக் கொண்டே! நானென்ன, அறிவற்றவனோ! எல்லையப்பன் கூறிய, குற்றங்கள் அத்தனையையும், நீயும் கூறுகிறாய். அவன் எங்கோ பேசினான்! உனக்கு உள்ள நெஞ்சழுத்தம், என் எதிரிலேயே, பேசுகிறாய்!! ஏடா! மூடா! எல்லையப்பனை நீ ஏசிப்பேசி விட்டதாலேயே, உன்னை நான், ஓர் யோக்யன் என்று கணக்கிட்டுக் கொண்டேன் என்றா கணக்கிட்டுக் கொண்டாய். என் ஆட்சி முறையிலே இன்னின்ன குற்றங்கள் உள்ளன என்று அவன் எடுத்துக்காட்டிப் பேசுகிறான் - அச்சம் தயைதாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல்!! நீ! அரசே! உமது ஆட்சியிலே குறை ஏது! என்றா பேசினாய்? இல்லையே. நீயும் அவன் என்னென்ன குற்றம் குறைகளைக் கூறினானோ, அவைகளை என் எதிரிலேயே எடுத்துக்காட் டினாய். உன்போக்குக்கு, எனக்குப் புரியாது என்றா எண்ணிக் கொண்டாய். தளபதியாரே! நமது கொலுமண்டபத்தில், நமது பரிவாரத்தில் ஒருவனாக இடம் பெற்று அமர்ந்துகொண்டு நமது ஆட்சியைக் குறைகூறிய இந்தக் கெடுமதியாளனை, இழுத்துக்கொண்டுபோய், அடைத்திடுங்கள் சிறையில், இருட்டறையில்…’’ "ஐயையோ… வேண்டாம், வேண்டாம்… தப்பு! தப்பு!’’ கூச்சல் கேட்டு, அலறி எழுந்து உட்கார்ந்தேன். அருகே படுத்து உறங்கிக்கொண்டிருந்த, ஆண்டியப்பன், ஏதோ கனவு கண்டு உளறிக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. தட்டி எழுப்பி, “ஆண்டி! என்ன இது? ஏன், இப்படிக் குளறிக்கொண் டிருந்தாயே…’’ என்று கேட்டேன். ஒரு விநாடி மிரண்டபடி இங்குமங்கும் பார்த்தான். மறுவிநாடி, அடக்கமுடியாத நிலையில், ஓவெனச் சிரித்தான்.”என்ன? என்ன?’ என்று நான் கேட்டதற்கு, ஆண்டியப்பன் “ஒன்றுமில்லை - ஒரு வேடிக்கையான கனவு கண்டேன்’’ என்றான்.”கனவில்…?’’ என்று நான் கேட்டேன். "கனவில், நான் ஓர் தளபதி! அரச சபையில்! என்னை அரசனுடைய உத்தரவுப்படி, சிறையில் தள்ள இழுத்தார்கள். விழித்துக்கொண்டேன்’’ என்றான் ஆண்டியப்பன். முழுவதும் கூறும்படி கேட்டேன். எளிதில் இசைவு தரவில்லை. மெத்த வற்புறுத்திய பிறகு, கனவிற் கண்டதை விவரமாகக் கூறினான். அதைத்தான் தம்பி! நான், முறைப்படுத்தி, துவக்கத்திலே தந்திருக்கிறேன். "அரசன், எப்படி இருந்தான்?’’ என்று நான் விளக்கம் கேட்டேன். “போடா, போ! இதை வைத்துக்கொண்டு, கேலி செய்யப் போகிறாய்; தெரியுமே, எனக்கு” என்றான். நெடுநேரத்துக்குப் பிறகுதான், அரசன் காமராஜர்போல இருந்ததாகக் கூறினான். என்னால் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. ஆண்டியப்பன், அப்படி ஒரு வேடிக்கையான கனவு ஏன் கண்டான் என்பதற்கான காரணமும் எனக்கு விளங்கலாயிற்று. தம்பி! ஆண்டியப்பன், என் நண்பன். இருந்தும் காங்கிரசில் இருப்பவன், அங்கு இருப்பவர்களெல்லாம் நமக்குப் பகைவர்களா, என்ன! நம்மோடு இருக்கவேண்டியவர்கள், நம்முடன் இருந்தவர்கள், நமது அழைப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எனும் வகையினரன்றோ, இன்றையக் காங்கிரசில், ஒலிக்கும் மணிகளாகி உள்ளனர். அந்த வகையினரில், ஆண்டியப்பன்! பேச்சாளனுங்கூட! பேச்சிலென்ன இருக்கிறது, செயல்வேண்டும், அனைவரும் செயல் வீரராகவேண்டும் என்று பேசும் பேச்சாளன். "அட, பார்க்கலாம், பேசலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தால், நீ, கிடைத்தால்தானே. நாள் தவறாமலா, கூட்டம்! செச்செச்சே! உனக்கும்தான் சலிப்பாக இல்லையா!! என்ன இருக்கிறது, அப்படிப் பேச, ஒவ்வொருநாளும்!’’ என்று என்னிடம், கனிவுடனும் உரிமையுடனும் பேசும் போக்கினன் ஆண்டியப்பன். காங்கிரஸ் வட்டாரத்தில், ஆட்டம் பாம் ஆண்டியப்பன் என்று, சிலநாள், விளம்பரம் செய்துகூட வந்தார்கள்! இரண்டோர் மாதம். நள்ளிரவு, நான் மழையூர் சென்றபோது, சிறு தூறல் விழத் தொடங்கிற்று. ஆனால் பத்தாயிரம் இருக்கும் கூட்டத் திலிருந்தோர் - நான் என்ன செய்வது? ஒருமணி நேரத்துக்கு மேல் பேசினேன். அடுத்த கூட்டம், தவனியில்! மோட்டார் கொண்டு வந்தவர், முடியாது என்று கூறிவிட்டதால், வந்தவாசி திரும்பினேன்; தவனி கூட்டம் நடைபெறவில்லை, மறுநாள், ஆண்டியப்பன் வந்திருந்தான். “ஆமாம், இந்த இடங்களெல்லாம் போகிறாயே, உழுந்தை, மழையூர், காட்டுகாநல்லூர், பொன்னூர், ஊத்துக்காடு என்றெல்லாம். இங்கே உள்ளவர்களிடம், என்ன பேசுகிறாய்?’’ என்று வியப்புடன் கேட்டான். இரண்டு ஆண்டுகட்குமுன்பு, இதே ஆண்டியப்பன் கேட்டிருக்கிறான்,”என்ன உங்கள் கழகம், திருப்பித் திருப்பி திருச்சி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், சென்னை, இவ்வளவுதானே. கிராமப்பக்கம், யார் உங்களை அழைக்கிறார்கள்!! என்று கேபேசி இருக்கிறான். இப்போது தம்பி! நமது கழகக் கூட்டங்கள், பெரும் அளவு கிராமங்களிலே நடைபெறுவது கண்டு, அதே ஆண்டியப்பன், "அந்தக் கிராமங்களில் என்ன வேலை?’’ என்று கேட்கிறான். கேலிக்காக அல்ல! சிறிதளவு கிலியுடன்!! சிற்றூர்களிலே, நமது கழகம் செல்வாக்குப் பெற்றுக்கொண்டு வருவதைக் கள்ளங்கபடமற்ற கட்டிளங்காளைகள், கல்லூரி சென்றும் பெறமுடியாத நல்லறிவைக் காலமெனும் ஆசானிடம் கற்றுத் தெளிந்த பெரியவர்கள், ஊரைப் பார்த்து, அரசியல் பிரச்சினையைப் புரிந்துகொண்டுள்ள தாய்மார்கள், நமது கழகக் கருத்துக்களை, சுவை தருவன என்று முதலில் கவனிக்கத் தொடங்கி, பிறகு, பயனுள்ளவை என்பதை அறிந்து சுவைப்பதை, ஆண்டியப்பன் மட்டுமா, பொதுவாகவே காங்கிரசில் பலரும், உணரவில்லை, அது நமக்கு நல்லதுதானே! ஆண்டியப்பனிடம், பிறகு, அரசியல் உரையாடல், சட்டசபை நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுகள், காங்கிரஸ் ஆட்சியிலே ஏற்பட்டுப்போயுள்ள ஊழல்கள் பற்றிய விளக்கங்கள் - மறுப்புரைகள் - அவற்றினுக்கு எதிர்ப்புரைகள் இப்படி. அதைத் தொடர்ந்து நான், காங்கிரஸ் ஆட்சியின் போக்கிலே, காங்கிரசாரே கசப்படைந்து, சில வேளைகளிலே வெளிப்படையாகவும், மற்ற வேளைகளிலே, இலைமறை காயாகவும் பேசிக்கொண்டு வருவதுபற்றிச் சட்டசபைப் பேச்சுகளையே எடுத்துக்காட்டிக் கூறினேன். "நாங்கள் எதிர்க்கட்சி, ஆண்டி! ஆட்சியிலே உள்ள முறையே மாறவேண்டும் - மாற்றப்படவேண்டும் என்ற கருத்துடையவர்கள். உங்கள் தலைவர்களின் ஆட்சியிலே காணக்கிடக்கும் கேடுபாடுகளை எடுத்துரைக்கிறோம். இதற்காக எங்கள்மீது பாய்கிறார்கள். அதைக்கேட்டு ஆட்சியை நடாத்திச் செல்லும் நாயகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், அதே வாயால், ஆட்சியிலே உள்ள குறைபாடுகளையும், எடுத்துப் பேசுகிறார்கள். அப்போது அந்தத் தலைவர்களுக்கு எப்படி இருக்கும், எரிச்சல்! ஏமாற்றம்! இவர்களும் குறை கூறுகிறார்கள், அவர்களும் குறை காணுகிறார்கள்! அவர்களாவது, எதிர்க்கட்சி! இவர்கள் நமது கட்சி என்று முத்திரை பொறித்துக்கொண்டு சலுகைகள், உரிமைகள் பெற்றுக் கொண்டு, நமது ஆட்சியில் குறைகள் உள்ளன என்று அவர்கள் எதிரிலேயே பேசுகிறார் களே, இது எவ்வளவு கேவலம்! இதையுமா, நாம் தாங்கிக் கொள்ளவேண்டும்! - என்று எண்ணாமலிருக்க முடியுமா? இப்படிப்பட்டவர்களை, நம்மவர் என்று நம்பிக் கிடப்பதே ஆபத்து’’ எந்த நேரத்தில் காலைவாரி விட்டு விடுவார்களோ என்றல்லவா அச்சப்படவேண்டி இருக்கிறது, என்றுகூடத் தோன்றாதா என்றெல்லாம் கேட்டேன். ஆண்டி ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டான் - நல்ல உறக்கம் எனக்கு, அவன் தூங்கத் தொடங்கியதும், பாவம் கனவு கண்டிருக்கிறான். நான் சொன்னவற்றைத் தூக்கத்திலே துணைக்குக் கொண்டதால், கனவுதான் என்றாலும், இப்போது நடைபெறும் இதே மக்களாட்சி மன்னனாட்சியாக இருந்து விடுமானால், காங்கிரஸ் கட்சிக்காரர்களில் பலருக்கு, ஆண்டி கனவில் தோன்றிய பிச்சுமணி கதிதான்!! தம்பி! கழகத்தின் அடிப்படைக் குறிக்கோள் திராவிடநாடு பெறுவது. ஆயினும் இடையிலே, காங்கிரஸ் துரைத்தனம், நடத்திவரும் ஆட்சிமுறையின் விளைவுகளை எங்ஙனம், கவனிக்காதிருக்க முடியும்! குறைகளைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிறோம், திருத்த முற்படுகிறோம். திடலில் மட்டுமல்ல, சட்டமன்றங்களிலும்! அங்கு, நமது கழகத்தவர், காங்கிரஸ் ஆட்சியால் விளைந்துள்ள கேடுபாடுகளை எடுத்துக் கூறும்போது, காங்கிரஸ் உறுப்பினர்களுக்குக் கடுங்கோபம் வருகிறது. சுடுசொல்லால் தாக்கித் தகர்த்திடலாம் என்று தோன்றுகிறது. பலர் பலவிதமாகக் கழகத்தைக் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர்களே, அந்த வேலை முடிந்ததும், காங்கிரஸ் ஆட்சியிலே ஏற்பட்டுவிட்ட, கேடுபாடுகளை எடுத்துக்காட்டிப் பேசவேண்டி வந்து விடுகிறது… நிலைமை அப்படி. தம்பி! அவர்கள், நமது கழகத்தைக் கண்டித்துப் பேசுவது மட்டுமே, உன் காதுக்கு எட்டியிருக்கும் - ஏனெனில் அதுவரையில் மட்டுமே, உன் கண்களில் படும்படி, தேசியப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன! ஆனால் சட்டசபையில் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசுவதை - முழுவதையும், கேட்க நேரிட்டால், தம்பி! ஆச்சரியம் மேலிடும். அமைச்சர்களுக்கு, 150 என்ற எண்ணிக்கை பலம் இருப்பதால், அலாதியான மகிழ்ச்சி இருப்பது இயல்பு. அந்த மகிழ்ச்சி, போதைபோலாகி, துடுக்குத்தனம் என்ற அளவுக்குக் கூடத் துணிவு வளர்ந்து விடுகிறது. மக்களாட்சி முறைக்கு, இந்தப் போக்கு ஆகாது; தீது பயப்பதுதான் - ஆனால் இது சுவைத்திடும்போது இனிப்பாக இருப்பதால், பலரும், அதற்கு இரையாகிவிடுகிறார்கள். நல்ல கருக்கல்! சாவடியில், படுத்திருந்தான் ஒரு குறைமதி யுடையான், பாதித் தூக்கத்தில். மடியில் சிறு பணமுடிப்பு! விரலில் ஒரு மோதிரம்! கள்ளர் இருவர் வந்தனர். இருட்டிலே படுத்துக் கிடந்தவன்மீது, அவர்கள் கால்பட்டது. “சனியன்! ஏதோ மரக்கட்டை காலில் பட்டது!!’’ என்றான் திருடன். படுத்துக் கிடந்தவன், வாய்திறப்பானேன்! குறைமதியாள னல்லவோ? புத்திக்கூர்மையைக் காட்ட வேண்டும்போல் தோன்றிற்று. எனவே, படுத்திருந்தபடியே,”உங்கள் வீட்டு மரக்கட்டை, மடியிலே பணமும், விரலிலே மோதிரமும் வைத்திருக்குமோ’’ என்று கேட்டான். நமக்குத் தெரியாமலே போய்விட்டதே, இந்த விஷயம் என்று கூறிப் படுத்திருந்தவனை எழுப்பிப் பதக்கமா கொடுத்திருப்பார்கள். இரண்டு அறை கொடுத்தார்கள் - பணத்தைப் பறித்துக்கொண்டு துரத்தினார்கள் - என்றோர் கதை கூறுவர். அமைச்சர்கள் இந்தவிதமான தெளிவும் துணிவும் நிரம்பப் பெற்றவர்கள் என்பது பலமுறை வெளியாகிறது. ஆனால் கதையில், திருடன் வருகிறான் அடித்துப் பறித்துக்கொள்ள. கழகம், பதவியைப் பறித்திட, சட்டமன்றம் செல்லவில்லை. எனவே அமைச்சர்களின் எந்தப் போக்கையும், அரசியல் இலாபத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதில்லை. படுத்துக் கிடந்த குறைமதியாளனுக்கு, மடியிலிருந்த பணமும், விரலில் அணிந்திருந்த மோதிரமும், நினைவிலே கொட்டிக்கொண்டே இருந்ததைப் போல, அமைச்சர்களுக்கு, 150 என்ற எண்ணிக்கை யின் நினைவு எப்போதும், குடைந்தவண்ணம் இருக்கிறது. அந்த 150-ல் என்னென்னவிதமான போக்கினர் மனதினர், உளர் என்பதை அறிந்துகொள்ள வாய்ப்புகள் பல ஏற்படுகின்றன; தெளிவு ஏற்பட்டதாக மட்டும் இன்னும் தெரியவில்லை. அந்த 150-ல், சிலர் கழகத்தின் மீது கணை வீசும்போது அமைச்சர் களுக்கு உச்சி குளிர்த்து விடுகிறது; ஆனால் அதேபோது, அவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்குக் கசையடி கொடுக்கிறார்கள் - உறைக்கிறதோ இல்லையோ, நானறியேன். ஆனால் ஆண்டியப்பன் அதையெல்லாம் நான் சொல்லக்கேட்டதால் தான், கனவு கண்டு கலக்கமுற்றான். இந்த ராஜ்யத்தினுடைய ஜனத்தொகையில் 80 சதவிகிதம் கிராமங்களில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? இன்றைய தினம், மருத்துவ சுகாதார வசதி, பெரும் பகுதி நகரங்களில்தான் செய்யப்படுகிறது. இன்று கிராமங்களில் உள்ள மருத்துவ, சுகாதார முறைகளைப் பார்த்தால், எந்தவித மருத்துவ உதவிகளும் அவசர உதவிகளும் அற்ற நிலையில் இருக்கிறதென்பதை அமைச்சர் அவர்கள் நன்கு மனதில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ★ கிராமப் பகுதிகளில் இருந்து வருகிறவர்களுக்கு வைத்திய வசதி அளிக்க ஏதாவது ஏற்பாடு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அங்கு எவ்வித வசதியும் கிடையாது. ★ வைத்தியத் துறையில் இலஞ்சம் என்ற நிலைமை இருக்குமானால், அது மக்களை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை நீங்கள் கவனித்துப் பார்க்கவேண்டும். ★ இன்னும் பல கிராமப் பகுதிகளில் டாக்டர்கள் இல்லை. டாக்டர்கள் இல்லை என்று, அந்தப் பகுதிகளைக் கவனிக்காமல் அப்படியே விட்டுவிடக்கூடாது. ★ தம்பி! நல்லாட்சிக்கு அடையாளமா இவை? கிராமத்தைக் கவனிக்காத ஆட்சி! மருத்துவமனைகள் இல்லாத கிராமங்கள்! டாக்டர்கள் இல்லாத மருத்துவமனைகள்! மருந்து களவுபோகும் இடங்கள்! வைத்தியத்துறையில் இலஞ்சம்! - இவை இந்தக் காங்கிரஸ் ஆட்சியிலே காணக்கிடப்பவை. சட்டமன்றத்திலே, இவைகளைச் சுட்டிக்காட்டிப் பேசும் போது, அமைச்சர்களின் காதுக்குக் குளிர்ச்சியாகவா இருக்கும்? எண்பது கோடி ரூபாயல்லவோ, தம்பி துரைத்தனம், இந்த ஆண்டுக்குப் பெறுகிறது; பணமில்லா நிலையல்லவே! அவ்விதமான ஆட்சியிலே கிராமங்கள் கவனிப்பற்றுக் கிடப்பானேன்! என்ன செய்கிறார்கள் இந்த அமைச்சர்கள்? எங்கே போகிறது பணம்? இந்த நிலையில், கிராமங்களை வைத்துவிட்டு, ஆதரவு கேட்பது அக்ரமம் அல்லவா! சட்டமன்றத்திலே, இது எடுத்துக்காட்டப்படும்போது அமைச்சர்களுக்கு ஆத்திரம் எழுவது இயல்பு - அவ்விதம் பேசுவோர், நமது கழகத்தவராக இருந்தால். ஆனால், தம்பி! நான் குறிப்பிட்டிருப்பது, திருநெல்வேமாவட்டத்தைச் சார்ந்த உறுப்பினர், வி. சுப்பையா என்பவரின் பேச்சு - 1959-ம் ஆண்டு, மார்ச்சுத் திங்கள், இருபத்து ஆறாம் நாள்! ஆண்டியப்பன், என்ன பதில் அளிக்க முடிகிறது? ஆண்டி கிடக்கட்டும் - வெறும் பேச்சாளன் - அறிவாளர் களாம் அமைச்சர்கள் என்ன பதில் கூறுவர்? பாபம்! எங்கள் பிர்க்காவில் இருக்கின்ற வீரபாண்டி, வேம்படிதாளம், வெண்ணந்தூர் போன்ற பத்துக் கிராமங்கள் இருக்கின்றன. அவைகள் ஒன்றிலும் ஒரு டிஸ்பென்சரி (மருத்துவமனை) கூடக் கிடையாது. ★ பல கிராமங்களில் அரிஜனங்கள் குடிதண்ணீர்க் கிணறுகள் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள். பல கிராமங்களுக்குச் சென்று பார்த்தால் இது நன்றாகத் தெரியவரும். ------------------------------------------------------------------------ அனுபவம் இல்லாத அதிகாரிகள் இருப்பதால் பல வேலைகள் நடைபெறாமல் தடைப்படுகின்றன. அவர்களுக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. அந்த இலாகாவின் அதிகாரிகளிடத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன. ------------------------------------------------------------------------ தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பது, காங்கிரஸ் ஆட்சி - எனினும், நிலைமை, மேலே கூறப்பட்டது போல! பெருமைப்படுவதற்கான நிலைமையா? தம்பி! இவ்விதம் பேசியவர், நமது கழகத்தவர் என்றால், இவர்கள் யார் தெரியுமா? பூர்வோத்திரம் என்ன தெரியுமா? இவர்கள் வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தவர்கள்! - என்றெல்லாம், நிதி அமைச்சர் வெளுத்து வாங்குவார்! சமர்த்தர்! ஆனால் இவ்விதம் பேசியவர் காங்கிரஸ்காரர்! காங்கிரஸ்காரர் என்பதோடு கழகத்தைக் கண்டித்துப்பேசுவது தேசத்தொண்டு என்று எண்ணிடும் போக்கினரில் ஒருவர் - சேலம் மாவட்டம் - கந்தசாமி எனும் பெயருடையார்! நான் இத்தனை கூறியபோது, ஆண்டியப்பன் எப்படி திகைத்துப்போய் வாய் அடைத்துக் கிடந்தானோ, அதேதானே, அமைச்சர்கள் நிலையும். இவர்களுமா இப்படி இடித்துப் பேசுவது? என்று எண்ணி வாட்டமடைந்திருப்பார்கள். இருக்கும் நிலையை மறக்கவோ, மறைக்கவோ முடிய வில்லை. எனவே, அவர்கள், நடப்பது காங்கிரஸ் ஆட்சிதான். இருந்தாலும் உண்மையை எப்படி எடுத்துரைக்காமல் இருப்பது; ஏதும் பேசாதிருந்தால், வாக்குக்கொடுத்த மக்கள், வாட்டி எடுக்க மாட்டார்களா - என்று எண்ணித்தான் பேசிவிட்டார்கள்!! என்னுடைய தொகுதியில் வீடுகட்டும் திட்டத்திற்குப் போடப்பட்ட மனைக்கட்டுகளுக்கு ஆயிரக்கணக்கான மனுக்கள் இருக்கின்றன. ஒரு மனைக்கட்டுக்கூடப் பரிசீலனைக்கு வந்த தில்லை. அந்த மனைக்கட்டு விஷயத்தில் ரொம்பச் சங்கடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அரிஜனங்களுக்கும் மனை ஒதுக்க வேண்டுமென்று பிரயத்தனப்பட்டும் அது கூடிவரவில்லை. சங்கடங்கள் நிறைய இருக்கின்றன. அரிஜனங்களுக்காகத் தனி இலாகா, அங்கு ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு கிராம சேவகர் என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எங்கிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பது தெரியாது. ★ தம்பி! பரிதாபமாக இருக்கிறதல்லவா! "அரிஜனங்களின் நலன்களைக் கவனிக்கவே, தனியாக அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். எமது ஆட்சியின் பெருமையே இதிலேதான் இருக்கிறது,’ என்று பேசாத மந்திரியில்லை, பேசாத நாளில்லை. அந்த அதிகாரிகளைக் காணவேண்டும், கண்டு அவர்களிடம் கூறினால், அரிஜனங்களுக்கான நலன்களைப் பெற்றளிக்க முடியும் என்று ஒரு சட்டசபை உறுப்பினர் கதராடையார், காங்கிரஸ் கட்சியினர், தேடித் தேடிப் பாக்கிறார், அவர் கண்களுக்கு ஒருவரும் தட்டுப்படவில்லை. உள்ளம் கொதித்துச் சட்டசபையில் எழுந்து நின்று பேசுகிறார். "அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பது தெரியவில்லை!’’ இது ஒன்று போதுமல்லவா, பெருமைப்பட்டுக் கொள்ள! பாரத புத்ரர்களே! கேளுங்கள், எமது ஆட்சியின் அருமை பெருமையை. அரிஜன மக்களின் நலன்களைக் கவனிக்க வேண்டு மென்றே, தனியாக அதிகாரிகளை நியமித்திருக்கிறோம். அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பது மட்டும், ஒருவருக்கும் தெரியாது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தேடினாலும், கண்டுபிடிக்க முடியாது. அவர்களை நீவிர், கட்டாயம் பார்க்கவேண்டுமானால், நாங்கள் எங்காவது விழா நடத்த "விஜயம்’ செய்கிறோமே, அப்போது வாருங்கள்; ஜீப்புகள் வந்து நிற்கும், அதிலிருந்து அதிகாரிகள் இறங்குவார்கள்!! - என்றா, அமைச்சர்கள் பேசிக்கொள்ள முடியும்? ஆண்டியப்பன், தலை குனிந்துகொண்டான். வெட்கம்; துக்கம் அவனுக்கு. அமைச்சர்களும் வெட்கப்படத்தானே வேண்டும், ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.யே, இவ்விதம் பேசக்கேட்டு. இந்த வேதனையை உண்டாக்கவேண்டுமென்று பேசியவர் ஒரு சமயம், எண்ணாமலிருந்திருக்கலாம். எதிர்க்கட்சி என்ன, நாமேதான் இவைகளைச் செய்வோமே, தெரியாதா? முடியாதா என்ற போக்கில் பேசியிருக்கலாம். பேசிய நோக்கம் அறிய, பேசியவர் தெரியவேண்டும் என்கிறாய், சரி கேட்டுக்கொள், இவ்விதமாகக் காங்கிரஸ் ஆட்சியின் (அவ) லட்சணத்தை எடுத்துக் கூறியவர் சடையப்ப முதலியார் என்பவர் - சாட்சாத் காங்கிரஸ்காரர். குறைகள் இருந்தால் எடுத்துச் சொல்லத்தானே வேண்டும் - இதிலே தவறு என்ன? என்று வாதாட முற்படுவர் - சிலர் இப்போதே வாதாடுகின்றனர். மூன்று உண்மைகள். இவர்களை அறைகூவி அழைக்கின்றன. குற்றம் குறைகளைப் பேசுவது தவறல்ல - பேசிக் களைந்து கொள்ளுவதுதான், ஜனநாயக முறை. எவரும் ஒப்புக் கொள்வர். ஆனால், தம்பி! 1. எங்கள் ஆட்சியின் பெருமையே பெருமை என்று இவர்கள் பேசிக்கொள்கிறார்களே, அது தவறுதானே? பொய்தானே? 2. குற்றம் குறைகளைக் கழக உறுப்பினர்கள் எடுத்துக் கூறும்போது, காய்கிறார்களே, மாய்கிறார்களே, தவறுதானே! 3. குற்றங்குறைகளை இந்தக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கட்சிக்கூட்டத்திலே எடுத்துக் காட்டித் திருத்திக் கொள்ள வழி இருக்கிறதே, ஏன் செய்யவில்லை? அனுமதி இல்லையா? பலன் ஏற்படவில்லையா? எதுவாக இருப்பினும், தவறு அல்லவா? ஏன் அது தொடர்ந்து இருக்கிறது? சொந்தக் கட்சிக்காரர் சுட்டிக் காட்டியும், ஆட்சியாளர், மந்தத்தனம் காட்டுவது ஏன்? நல்லது செய்ய இயலவில்லையா? அல்லது குறையை எடுத்துக் காட்டுவோரை மதிக்க மறுக்கிறார்களா? இவ்விதமெல்லாம் ஆண்டியப்பனைக் கேட்டதால்தான், அவனுக்கு ஆயாசம் மேலிட்டது - உறக்கம் சரியாக வரவில்லை. - கனவு கண்டான், குளறிக் கூவினான். நான் இந்த இலாகாவைப் பற்றிக் குறிப்பிடுகின்ற இந்தச் சமயத்தில் ஒரு குறைபாட்டைப்பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தச் சிறியவனுடைய சொல் எவ்வளவு தூரத்திற்கு ஏறும் என்று எனக்குத் தெரியவில்லை. மற்றத் தனிப்பட்ட இலாகாக்கள் இயங்குவதுபோல இந்த டெவலப்மென்ட் இலாகா இயங்கவில்லை. ------------------------------------------------------------------------ பிளாக் டெவலெப்மென்ட் அதிகாரிகளுடைய நிலை எல்லாம், இன்றைக்குத் தண்ணீரைவிட்டுவிட்டு வெளியே போட்ட மீன் மாதிரியும், தாயற்ற குழந்தை போலவும் இருந்துகொண்டிருக்கிறது. ★ சில இடங்களில் பிளாக் டெவலெப்மென்ட் அதிகாரி களாகத் தகுதியற்றவர்களைப் போடுவதால் பல தவறுகள் நடக்கின்றன. ★ இப்போது அம்ரோஸ் என்று ஒருவரை நியமித்திருப்ப தாகத் தெரிகிறது. நாங்கள் இதுவரையில் அவரைப் பார்த்த தில்லை. ★ மேலும் அதிகாரிகளிடையே பொறாமை இருந்துகொண் டிருக்கிறது. இதையும் போக்கவேண்டும். இது தவிரச் சில இடங்களில் அக்கவுண்டுகள் எல்லாம் சரியாக இல்லை என்று சொல்லப்படுகின்றன. ★ இவ்விதம் இருந்தால், நிச்சயமாகப் பொதுமக்கள் குறைகள் சொல்லத்தான் செய்வார்கள். ★ சில இடங்களில் கணக்குகள் எல்லாம் குழப்பமாக இருக்கிறது. கடைசியில் அதைப்பற்றி நல்ல முறையில் விசாரணை ஒன்றும் நடப்பது இல்லை. ★ தம்பி! இந்தத் திருவாய்மொழி, காங்கிரஸ் கட்சியின் கண்ணின் மணி என்று கொண்டாடப்பட்டு வரும், சமுதாய நலத்திட்டம் பற்றியது. பேசிய பெருமகனோ, கழகத்தை ஏசினால், பாரதமாதா, கட்டித் தழுவி, உச்சி மோந்து முத்தமிட்டு, "பாலகா! உன் அரும் புத்திக் கூர்மை வேறு யாருக்கடா வரும்! வா, மகனே! வா! உன்னை வையகமெங்கும் அழைத்துச் சென்று காட்ட வேண்டும்’’ என்று பூரித்துக் கூறுவார்கள் என்று எண்ணி இரும்பூதெய்துபவரோ என்று எண்ணத்தக்க வகையில், சமயம் கிடைக்கும்போதெல்லாம், கழகத்தைச் சாடிடும், நாகராஜ மணியக்காரர் எனும் நற்றொண்டர்! சேலம் மாவட்டம். அவர், பொறாமை பொய்க் கணக்கு பூசல் திறமைக் குறைவு அனுபவமின்மை எனும் அரிய குணங்களை ஆபரணங்களாகப் பூட்டிக்கொண்டு, எமது கட்சி நடாத்தும் ஆட்சியின் செல்லப் பிள்ளையாம், சமுதாய நலத்திட்ட இலாகா இருக்கிறது; கண்டேன், காணீர்; என்கிறார். அமைச்சர்கள் என்ன சொல்வார்கள்? ஆண்டியப்பன், என்ன செய்தான்? படுத்தான் - புரண்டான் - குளறினான்! வெட்கம்! துக்கம்! அமெரிக்காவிலிருந்து நம் நாட்டிற்குப் பால் பவுடர் அனுப்புகிறார்கள். அது இப்பொழுது டின் ஒன்றுக்கு ஏழு, பத்து ரூபாய் வரை விற்கப்படுகிறது. அந்தப் பால் பவுடர் யார் யாருக்கோ தின்பண்டங்கள் முதலியவை செய்வதற்காகப் போய்விடுகிறதே தவிர, ஏழை மக்களுக்கு அந்தப் பால் பவுடர் கிடைப்பதில்லை. இதுபற்றிக் கலெக்டர் போன்றவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெட்டிஷன் மூலமாக அமைச்சர்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே அமெரிக்காவிலிருந்து வரும் பால் பவுடர், ஜனங்களுக்கு, ஏழை மக்களுக்குக் கிடைக்கவேண்டும், அது ப்ளாக் மார்க்கெட்டில் இப்போது போவதைத் தடுக்க வேண்டும். எப்படி இருக்கிறது தம்பி! பச்சைத் தமிழரின் ஆட்சி! பால் பவுடர், பிளாக் மார்க்கெட்டாகிறதாம்! பேசியவர் நமது கழகமல்ல! ஏ! அப்பா! அப்படிப் பேசிவிட்டிருந்தால், எத்தனை மேடைகள் அதிர்ந்திருக்கும்!! "ஆண்டியப்பா! பெரிய விஷயங்கள்கூடக் கிடக்கட்டும். உங்கள் ஆட்சியிலே மிகக் கேவலமான ஒரு காரியம் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன், கோபம்கூட அல்ல, வருத்தமாக இருக்கிறது. ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாகத் தரச் சொல்லி, தானமாகத் தருகிறானே அமெரிக்க நாட்டான், பால் பவுடர். அதைக் கூடவா கள்ளமார்க்கெட்டில் கொண்டுபோய் விற்பது! இது ஈனத்தனமான செயல் அல்லவா?’’ என்று நான் கேட்டபோது, ஆண்டியப்பன், என்னை அறைந்தே விடுவான் போலிருந்தது - அவ்வளவு ஆத்திரம் வந்தது. ஆனால், சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினர், பெரியசாமி என்பவர் பேசினார், பால் பவுடர் விஷயம். இதை எல்லாம் கேட்டுக்கொண்ட பிறகும், அமைச்சர்கள் வெட்கமின்றி எதிர்க்கட்சியைத் தாக்க, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்களே, வேடிக்கையாக இல்லையா!! அங்கே ஏனோ, சொரணையற்ற தன்மை!! ஆண்டியப்பன் வருத்தத்துடன் சொன்னான், "இவர்கள் - எங்கள் கட்சிக்காரர்கள் - ஏன்தான் இப்படி எல்லாம் பேசி மானத்தை வாங்குகிறார்களோ, தெரியவில்லை. இதையெல்லாம் சட்டசபையில்தானா பேச வேண்டும் - அமைச்சர்களிடம் தனியாகச் சொல்லக் கூடாதா?’’ என்றான். "ஆண்டி! அப்படி அவர்கள் சொல்லாமலிருந்துவிட்டால், எதிர்க்கட்சிகள் இந்த விஷயங்களை வெட்ட வெளிச்சமாக்க மாட்டார்களா? மேலும், உன் கட்சிக்காரர்கள் ஏன் அப்படிப் பேசுகிறார்கள், என்பதற்கும் தகுந்த காரணம் இருக்கிறது’’ என்றேன். என்ன காரணம்? என்று கேட்டான். இருக்கும் குறைபாடுகளை சட்டசபையில் எடுத்துக் காட்டத்தானே அனுப்பினோம் என்று ஓட்டர்கள் கேட்டுவிடுவார்களே என்ற பயம்தான் காரணம் என்றேன். ஆண்டி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சரி, என்று ஆண்டியப்பன் ஒத்துக்கொண்டே தீரவேண்டிய ஆதாரத்தைத் தந்தேன்; அது இது: "எங்களுடைய சேலம் மாவட்டத்தில் கொல்லி மலையில் ஒரு ரோடும் புத்தர் கௌண்டன்பாளையத்தில் ஒரு பாலமும் கட்டப்பட்டிருக்கிறது. இவை தவிர எங்கள் சேலம் ஜில்லாவில் ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் வேறு எந்த வேலையும் நடந்ததாகத் தெரியவில்லை.’’ ------------------------------------------------------------------------ "என்னுடைய தொகுதியாகிய அரூர் தாலுகாவில் அறவே இதுவரை எந்த முன்னேற்றமும் கிடையாது. எந்தவிதமான நீர்ப்பாசன வசதியோ கிடையாது. சென்ற ஆண்டிலும் இந்த மன்றத்தில் நான் குறிப்பிட்டேன். எங்களுடைய தாலுகாவில், சேர்வராயன் மலை வடபகுதியில் வாளியாறு உற்பத்தியாகிறது. அது ஜீவநதியாகும். அதனுடைய தண்ணீரை நல்ல முறையில் விவசாயத்திற்கு உபயோகப்படுத்துவதற்காக அதன் குறுக்கே ஒரு அணை கட்டுவதற்கு வெள்ளைக்காரன் காலத்திலே திட்டத்தைப் போட்டு, அது கைவிடப்பட்டது.’’ ★ "மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கட்டுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தி லாகிலும் எடுத்துக் கட்டினால் அரூர் தாலுகாவிலுள்ள விவசாயிகளுடைய மனம் நிம்மதி அடையும்.’’ ★ நான் கிராம மக்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டவன். அதனால் இவைகளைப்பற்றி என்னை அடிக்கடி கேட்க வசதி இருக்கிறது. இதற்குத்தானா உங்களுக்கு ஓட்டுப் போட்டோம் என்று கேட்கிறார்கள். இவ்விதம் சட்டசபையில் பேசியவர், மாரியப்பன் எனும் காங்கிரஸ் உறுப்பினர், சேலம் மாவட்டம். நெடுநேரம் ஆண்டியப்பன் பேசவில்லை. பிறகு, ஒரு பெருமூச்சுக் கிளம்பிற்று. பாவிகளே! இப்படிப் பேசிப்பேசி, காங்கிரஸ் கட்சியின் மானத்தை வாங்குகிறீர்களே! இதற்குத்தானா, உங்களைக் காங்கிரஸ் கட்சி நிற்கவைத்து, எம். எல். ஏ. ஆக்கிவைத்தது என்று கூறினான். அவ்வளவு வருத்தம் ஆண்டிக்கு. நான் வேடிக்கையாகக் கேட்டேன், "அப்படியானால் ஆண்டி! இப்படிப் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் அடுத்த தடவை, காங்கிரஸ் கட்சியிலே இடம் தரமாட்டாரோ, காமராஜர்’’ என்றேன். முறைத்துப் பார்த்தான் - தலையணையை இழுத்துப் போட்டுக்கொண்டான் - படுத்தான் உறங்க. பேசியவை யாவும் குடையவே, கனவு கண்டான். தம்பி! இப்போது, முதலிலிருந்து மறுதடவை படித்துப் பார், கனவு காட்டும் கருத்து விளங்கும். ஆண்டியப்பன், யார் எங்கே இருக்கிறார் என்று கேட்கிறாய் - தெரிகிறது. உன் அருகிலேயே இருக்கிறார்! காங்கிரஸ் கட்சியிலே இன்று பலர் ஆண்டியப்பன் நிலையில் உள்ளனர். மனதிலே குமுறல் - குழப்பம். அவர்களைக் கண்டு பிடித்து பக்குவப்படுத்தி, கழகக் கொள்கைகளைப் புகுத்துவதுதான், நீ மேற்கொள்ள வேண்டிய பணி! இப்போது, தம்பி! ஆறு மணி, காலை, தூங்க முயற்சிக்கிறேன். விழிப்புற்றிரு - விடுதலைக்கு உழைக்கத் தயாராகிவிடு. அண்ணன், 24-4-60 ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது! மின்சார இரயில் செங்கற்பட்டு வரை - சர். சண்முகனார் வழி - தமிழ்நாட்டின் பின் தங்கிய நிலை தம்பி! ஒரு உறுப்பினர்: தென்னிந்திய ரயில்வே பாதையில், தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டுக்கும், அதற்கு அடுத்தபடி விழுப்புரம் வரையிலும், மின்சார ரயில் எப்போது அமைக்கப்படும் என்பதுபற்றித் தயவுசெய்து இரயில்வே அமைச்சர் அவர்கள் அறிவிப்பாரா? இரயில்வே அமைச்சர்: தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் அமைப்பதற்கான திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம், எப்போது நிறைவேற்ற எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறும் நிலையில் இப்போது சர்க்கார் இல்லை. மற்றோர் உறுப்பினர்: தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் அமைக்க, சர்க்கார் திட்டமிடுவதில் என்ன தடையாக இருக்கிறது என்று கேட்கலாமா? அமைச்சர்: ஒன்றுமில்லை, திட்டத்தை ஏறத்தாழ உருவாக்கி விட்டிருக் கிறோம். இரயில்வே பொது நிர்வாகி, நமது என்ஜினியர்களுடன் விவரங்கள் குறித்துக் கலந்து பேசும்படியும் கூறி இருக்கிறோம். என்ஜினியர்கள் சரி என்று சொன்னதும், திட்டத்தை நிறைவேற்ற எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். மற்றோர் உறுப்பினர்: திட்டம் எப்போது முடிவான வடிவம் பெறும்? எப்போது வேலை துவக்கப்படும் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா? அமைச்சர்: இரயில்வே பொது நிர்வாகி இப்போது என்ஜினியருடன் கலந்து பேசி வருகிறார் என்று நினைக்கிறேன். இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவர்களின் பதில் கிடைத்துவிடும். பிறகு, திட்டத்தை அமுலாக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் கவனிப்போம். ஆக்கப் பொறுத்தவர் ஆறப்பொறுத்திட வேண்டாமா? அமைச்சர்தான் அவ்வளவு திட்டவட்டமாகக் கூறுகிறாரே, தாம்பரத்துக்கும் செங்கற்பட்டுக்கும் இடையில், மின்சார இரயில் அமைப்பதிலே தடை ஏதும் இல்லை என்று. திட்டம் கூடத்தான், உருவாகிவிட்டதாமே, முறைப்படி நடைபெற்றாக வேண்டிய “கலந்தாலோசித்தல்’ எனும் கட்டத்திலல்லவா, இப்போது நிலைமை இருக்கிறது. இந்த நிலையில் வீணாக ஆரவாரம் செய்வதும், தெற்குப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று புகார் பேசுவதும் எற்றுக்கு! உறுப்பினர் கேட்டதற்கு, இரயில்வே அமைச்சர், அன்பும் அக்கறையும் ஆர்வமும் ததும்பும் வகையில் பதில் அளித்திருக்கிறார். தெற்குச் சீமையின் குரலுக்கு அவ்வளவு மதிப்பு! மறுப்பு எழுவதில்லை! எது கேட்டாலும் கிடைக்கிறது. இதனை அறியாமல் இந்தத் தீனாமூனாக்காரர்கள், வடக்கு - தெற்கு என்று வம்பு பேசுகிறார்களே! அமைச்சர் அளித்த பதில், இதுகளின் கன்னத்தில் அறை கொடுத்தது போலன்றோ இருக்கிறது. தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் போட முடியாது என்றா அமைச்சர் கூறினார்! அங்ஙனம் கூறியிருந்தால், ஆர்த்தெழலாம், அதட்டிக் கேட்கலாம், ஆகுமா ஓரவஞ்சனை என்று சாடலாம். ஆனால் நடந்தது என்ன? உறுப்பினர் கேட்டார்; அமைச்சர் உள்ளன் புடன் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று, நமது அகம் மகிழத்தக்க விதத்தில், பதில் அளித்திருக்கிறார் - உறுதி அளித்துவிட்டார். இப்போது இதுகள் என்ன செய்யும்! கைகால் வெடவெடக்கத் தலை கவிழ்ந்துகொண்டு, வாயடைத்துக் கிடக்கவேண்டியது தானே! வடக்கே உள்ளவர்கள் என்னமோ, தெற்குச்சீமையை ஓரவஞ்சனையாக நடத்துவது போலவும், தெற்குக்குத் தேவையானவற்றைச் செய்ய மறுப்பது போலவும் பேசித் திரியும், இந்த பிளவு மனப்பான்மையினரைக் கண்டால், கேளுங்கள்,”ஏடா, மூடா! கேட்டனையோ, இரயில்வே மந்திரியின் பேச்சை, வெட்டவெளிப் பேச்சல்ல; பாராளுமன்றத் தில் பேசியுள்ளார். பேச்சா அது! வாக்குறுதி!! நமது பகுதிக்கு, வரப்போகிறது வளம்; தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டுவரை மின்சார இரயில் அமையப்போகிறது. விரைவில் அது அமையாததைக் காட்டிக்காட்டி அங்கலாய்த்துக் கொண் டிருந்தாயே! இனி என்ன பேசுவாய்! மின்சார இரயில் கிளம்பியதும் எதிரே வீழ்ந்து இறந்துபடுவாயோ!!’’ கேட்கவேண்டும். அப்போதுதான், “அதுகளுக்கு, புத்தியில் தெளிவு ஏற்படும்; பேச்சிலே அடக்கம் உண்டாகும்; நூறே நாட்கள்! மின்சார இரயில் அமைந்துவிடப் போகிறது. அமைச்சர் உறுதி தந்தாகிவிட்டது’’ என்று காங்கிரஸ் கட்சியில் முழக்கம் எழுப்புவோர் எக்காளமிடுவர்; மூலைக்கு மூலை நின்று கொண்டு நமது கழகத் தோழர்களே கூட,”உண்மைதானே, இரயில்வே அமைச்சர்தான் கட்டாயமாக, இரண்டு மூன்று மாதங்களில், தாம்பரம் - செங்கற்பட்டு இரயில் பாதை மின்சார மயமாகிவிடும் என்று உறுதி கூறிவிட்டாரே! வடக்கு தெற்கைப் புறக்கணிக்கிறது என்று பேசினால், மக்கள் இனி நம்புவார்களா?’’ என்று எண்ணிக்கொள்ளக் கூடும். அவ்விதம் எண்ணத்தக்க விதமாகத்தான் அமைந்திருக்கிறது, இரயில்வே அமைச்சர் பேச்சு! ஆனால், காங்கிரஸ்காரர் எக்காளமிடவும், கழகத்தவர் எண்ணமிடவும் தக்கதானவிதத்தில், இரண்டு மூன்று மாதங்களில் தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டுவரை மின்சார இரயில் திட்டம் நிறைவேற்ற எடுத்துக்கொள்ளப்படும் என்று பாராளுமன்றத்திலே வாக்களித்துப் பேசிய, இரயில்வே அமைச்சர், தம்பி! திடுக்கிடாதே! மனதைத் திடம்செய்து கொள்! கேட்கும்போதே இனிக்கும் வாக்குறுதி தந்த அந்த அமைச்சர் இறந்துவிட்டார்!! என்ன அண்ணா இப்படி ஒரு போடுபோடுகிறாயே என்று என்னைக் கேட்டுப் பயனில்லை, தம்பி! நான் உண்மையைத்தான் உரைக்கிறேன். அந்த இரயில்வே அமைச்சர் இறந்துவிட்டார்!! அப்படியானால்…? என்று, ஏதோ கேட்க எண்ணுகிறாய் - தெரிகிறது. கேள் விஷயத்தை; தாம்பரம் - செங்கற்பட்டு மின்சார இரயில் அமையும் - மூன்று மாதத்திற்குள் - என்று உறுதிமொழி அளிக்கப்பட்டதும், அந்த உறுதிமொழி பெற, உறுப்பினர் இருவர், கேள்விகள் எழுப்பியதும், இப்போது அல்ல; ஆண்டு பத்துக்கு முன்பு! ஆமாம், தம்பி, வேடிக்கை அல்ல. படிக்கும் போது, இப்போதுதான், பாராளுமன்றத்திலே, கேட்கப்பட்டது போலத் தோன்றும் - ஆனால் நான் துவக்கத்திலே குறிப்பிட் டிருக்கும், கேள்வி - பதில் டில்லி பாராளுமன்றத்தில், 1950 மார்ச்சுத் திங்கள் 17-ம் நாள் கிடைத்ததாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு!! மூன்று மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள், முடிவடையும் தருவாயில் இருக்கிறது திட்டம் நிறைவேற்றத் தடை ஏதும் இல்லை என்று, இரயில்வே அமைச்சர் பேசினார், பத்து ஆண்டுகளுக்கு முன்பு. அவர் இறந்துபோய்விட்டார் - மின்சார இரயில் திட்டம் இப்போதும், "விவாத’க் கட்டத்திலேதான் இருக்கிறது, மூன்று மாதம் என்று தவணை குறிப்பிட்டார், நூற்று இருபது மாதங்களாகிவிட்டன அந்த வாக்குறுதி கூறி. மின்சார இரயிலும் ஓடவில்லை சுவைதரும் உறுதிமொழி கூறிய இரயில்வே அமைச்சர் கோபாலசாமி ஐயங்காரும் மறைந்து போனார். கேள்வி கேட்ட உறுப்பினரில், ஒருவர், கனகசபை என்பார்; மற்றொருவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார்! ஆண்டு பத்துக்கு முன்பே, அளிக்கப்பட்ட வாக்குறுதி, இன்னும் நிறைவேற்றப்படவில்லை!! வடக்கு - தெற்குக் குறித்து, கழகம் பேசிவருவது, நியாயமற்றதா, தேவையற்றதா என்று காங்கிரஸ் நண்பர்கள், எண்ணிப்பார்த்திடவேண்டும்!! வடக்கு, தெற்கை எவ்வளவு வஞ்சிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தெற்கு என்ன செய்ததோ அதையேதான், இன்றும் செய்யவேண்டி இருக்கிறது! மூன்று மாதம் என்று தவணை குறிப்பிட்டார், கோபாலசாமி ஐயங்கார். - இப்போது உள்ள அமைச்சர்களும், அதேபோன்ற பதிலைத் தருகிறார்கள் - வரும் - நிச்சயம் வரும் என்கிறார்கள்! இந்தப் பத்து ஆண்டுகளில், வடக்கே எத்தனை எத்தனை புதுமைகள் ஏற்பட்டுள்ளன, அவைகுறித்து எத்துணை பெருமிதத்துடன், காங்கிரஸ் தலைவர்களே பேசி மகிழ்கிறார்கள். நாமும் மகிழ்ச்சி அடையவேண்டும் என்று எண்ணுகிறார்கள். பாலைவனங்களைப் பழமுதிர் சோலைகளாக்கியுள்ளனர்; பாதாளத்தில் அடைபட்டுக்கிடந்த கனிப்பொருள்களை வெட்டி எடுத்து வெளியே கொண்டுவந்துள்ளனர்; புதிய துறைமுகங்களையும் புத்தம் புதிய தொழிற்சாலைகளையும் கண்டுள்ளனர்; நாடு விடுதலை பெற்றுவிட்டது. நம்மவர் ஆட்சி நடைபெறுகிறது என்று பாமர மக்களும் உணர்ந்து உவகை கொள்ளத்தக்க விதத்திலே, வடிவம், வண்ணம், வளம், வாய்ப்பு எனும் எந்தத் துறையிலும் ஓர் ஏற்றம் தெரியத்தக்க விதத்திலே, வடக்கே காரியங்களை நடத்திக் காட்டுகின்றனர்; இங்கோ, பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எந்த மின்சார இரயில் பாதைக்காகப், பாராளுமன்றத்திலே, கேள்விகள் கேட்கப்பட்டு, அமைச்சர் பதிலும் வாக்குறுதியும் அளித்தாரோ, அதே நிலைதான் நீடிக்கிறது; ஏன் இந்த நிலை என்று கேட்டால், "ஜெய் ஹிந்த்’ என்று கூச்சவிட்டுக் குமுறலை அடக்கப் பார்க்கிறார்கள். ------------------------------------------------------------------------ நாம், தம்பி! இந்த ஓரவஞ்சனையை ஓயாமல், அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல், உள்ளதை உள்ளபடி எடுத்துக்கூறி வருவதால், நமது கழகத்தில் இல்லாதவர்கூட, நமது கழகத்தின், தனி அரசுக் கோரிக்கையை வெறுப்பவர் எதிர்ப்பவர் கூட, இப்போது, வெளிப்படையாகவும் சிறிதளவு வீராவேச உணர்ச்சியுடனும், தெற்குச் சீமையை பட்டினிபோட்டுப், பஞ்சத்தில் ஆழ்த்திப் பராரிக் கோலத்தில் வைத்திருக்கும் போக்கினைக் கண்டிக்கக் கிளம்புகின்றனர். தான் தீட்டிய ஓவியம், ஓர் மாளிகைக் கூடத்தில் இடம்பெறக் கண்டால், மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ளும் ஓவியன்போல, இன்று, நாம் கூறிவரும் மருந்து பிறருடைய இதயங்களிலே இடம் பெற்று, பேச்சிலே வெளிப்படுவது காணும்போது கழகம், மகிழ்ச்சி பெறாமலிருக்க முடியுமா! எத்துணை இன்பம்! எத்துணை இன்பம்!! பொருளற்ற பேச்சு என்றனர், நாம், முதலில் பேசும்போது. இன்றோ, பல்வேறு அரசியல் முகாம்களிலுமிருந்து அதே பேச்சு எழுகிறது. வசை பேசும் வன்கணாளர்கள் என்று நம்மைத் தாக்கினர், தம்மைத் தலைசிறந்த தேசியக் குணாளர்கள் என்று கருதிக்கொண்டு கதைப்போர்; இன்றோ, இங்கு ஏன் புதிய இரயில் ஏற்படுத்தவில்லை? எல்லாம் வடக்கேதானா? ஏன் இந்த மாற்றாந்தாய்ப் போக்கு? என்று பலரும் துணிந்து கேட்கின்றனர். இல்லையே, உங்கட்கு நிரம்பச் செய்கிறோமே. இன்னும் பல செய்யப் போகிறோமே என்று கோவிந்தவல்லப பந்து, குழைகிறார். எனினும், தெற்குப் பகுதியைப் புறக்கணிக்கிறீர்கள், இது தீதே பயக்கும். இதை இனியும் தாங்கிக்கொள்ள இயலாது என்று பலரும் குமுறிக் கேட்கின்றனர்; இந்தப் புதிய பேச்ச, சுவைமிகு இசையாக நமது செவியில் வீழ்கிறது; பட்டபாடு வீண் போகவில்லை, எடுத்துச் சொன்னோம், தடுத்துப் பார்த்தனர், முடியவில்லை; இன்று அவர்களே, நாம் சொல்வதைச் சொல்கிறார்கள் என்று அறிந்து அகமகிழ்கிறோம். "பார்த்து நடக்கவேண்டாமா! மேலே வந்து மோதிக் கொள்கிறீரே?’’ "பார்த்து நடக்கத் தெரியாதா….. எதிரே வருபவர்மீது இடித்துக்கொள்வதுதான் உமது பொழுதுபோக்கா?’’ "யாரய்யா இது, போக்கிரித்தனம் செய்கிறீர். எதிரே வருபவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? முரட்டுத்தனமா?’’ "கண் குருடா, உனக்கு!’’ "குருடா! என்ன? உதை கேட்கிறதா?’’ "திமிர் பிடித்து அலைகிறான். இப்படிப்பட்ட ஆசாமிகளுக்குச் சரியானபடி பூஜை கொடுத்துப் புத்தி கற்பிக்க வேண்டும்.’’ "தடிக்கழுதை! ஏ! எருமை மாடு! யாரிடம் காட்டுகிறாய் உன் மண்டைக் கனத்தை’’ தம்பி! பார்வை பழுதானவன், பாதையில் நடந்து செல்கையிலே யார்மீதாவது மோதிக்கொள்ள நேரிட்டுவிடும். முதல்முறை சிறிது மரியாதையாகவும், பிறகு படிப்படியாகக் கோபம் வளர்ந்த நிலையிலும் கேள்விகள் கிளம்பி, இறுதியில், "அடி தடி’ அளவுக்குச் சென்றுவிடும். இது இயல்பு. அஃதே போலத்தான், திட்டங்கள் தீட்டப்பட்டபோது தென்னகத்துத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டது கண்டு, ஏனய்யா இந்தப் போக்கு என்று ஆரம்பமான பேச்சு, இப்போது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் தீட்டப்படும் கட்டம் ஏற்பட்டிருக்கும் வேளையில், தட்டிக் கேட்கும் பேச்சாக, அதட்டிக் கேட்கும் போக்காக, உண்டா இல்லையா? முடியுமா முடியாதா? உன் யோக்யதையே இதுதானா? என்று கேட்கும் விதமாக, வீரம், உரிமை உணர்ச்சி, ஆத்திரம் எல்லாம் கலந்த வகையான பேச்சாக வளர்ந்துவிட்டது. நமது கழகம் மட்டுமே இந்தப் பேச்சைப் பேசியபோது, இது கல்லாதார் போக்கு என்று கூடப் பலரும் கருதிக்கொண்டனர்; இன்றோ கற்றறிந்தோர் என்று நாடு கொண்டாடத்தக்க நிலைபெற்றவர்களுங்கூட, இதே பேச்சினைப் பேசக் கேட்கிறார்கள். கேட்டிடவே, செச்சே! நாம்தான் தவறு செய்துவிட்டோம் - தீனாமூனாக்காரர்கள் பேசியபோது, ஏனோதானோ என்று இருந்துவிட்டோம், அவர் களை ஏதுமறியாதார் என்றுகூட ஏசிவந்தோம், இப்போதல்லவா தெரிகிறது உண்மை. அவர்கள் இத்தனை நாட்களாக எடுத்துச் சொல்லிக்கொண்டு வந்ததத்தனையும் உண்மை. முழு உண்மை, என்று கூறிவருகிறார்கள். நாம் பெற்ற மகத்தான வெற்றி, தம்பி! இதிலேதான் இருக்கிறது!! நாம் எடுத்துக்கொண்டிருக்கிற காரியம் நமது உள்ளத்தில் இடம்பெற்று, தம்மைப் புதுமனிதர் களாக மாற்றிவிட்ட அந்த இலட்சியம், இன்று மற்றையோரால் அலட்சியப்படுத்தப்படும் நிலைமாறி, அந்த இலட்சியம் உருவானதற்கான, உணர்ச்சி, இன்று தூற்றியோர், தொலைவிலிருந்தோர் ஆகியோருக்கும் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அவர்கள், அந்த இலட்சியத்தை இன்னும், ஏற்றுக்கொள்ள வில்லை; கூச்சம் காரணமாக இருக்கலாம்; அச்சம்கூட எழக்கூடும்; ஆயினும், எப்போது அவர்களுக்கு நமக்கு ஏற்பட்ட உணர்ச்சி ஏற்பட்டுவிட்டதோ, இனி அவர்கள், விலைக்கு வாங்கப்பட்டாலொழிய, வழுக்கி வீழ்ந்தாலொழிய, நிச்சயமாக, இலட்சியப் பாதையில் நடந்து நடந்து, நாம் இருக்கும் இடம் வந்து நிற்பர்; இது உறுதி. சிலருக்கு அந்த நெடுவழி நடந்திடும் அளவுக்கு வலிவு இலாது போகக்கூடும்; சிலர், வழியில் இருக்கும் சத்திரம் சாவடி தங்கி இளைப்பாறிவிட்டு பிறகு மேலால் நடக்கலாம் என்று எண்ணிப் பயணத்தை நிறுத்திப், பிறகு, சத்திரச் சாப்பாடே போதும் என்று அங்கேயே தங்கிவிடவும் கூடும்; ஆனால், தன்னலமற்றவர்கள், தளராது பாடுபடும் போக்கினர், நாடு பெரிது வீடல்ல என்ற குறிக்கோள் கொண்டோர், நிச்சயமாகப் பயணத்தைத் துவக்கிடின், இறுதிவரை நடந்து, நாம் இருக்கும் இடம் வந்தே சேருவர். எண்ணும்போதே, செந்தேன் பருகிடும் நிலை; தம்பி! அதற்கான அறிகுறிகளைக் காண்கிறேன், மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இத்தனை பெரியவர்கள், மெத்தப் படித்தவர்கள், மேல் நிலை உள்ளவர்கள், பலநாடு சென்று பக்குவமடைந்தவர்கள், என்போரெல்லாம், நமக்கென்ன என்று இருக்கிறார்களே, யாதும் ஊரே என்று உரைக்கின்றனரே, நமது போக்கைக் குருட்டறிவு என்றும், குறைமதி என்றும் குறுகிய மனப்போக்கு என்றும், பிளவு மனப்பான்மை என்றும் கூறி, கேலியும் கண்டனமும் வீசி நிற்கின்றனரே! நமது இதயமோ நாம் கொண்டுள்ள கொள்கை நியாயமானது என்று கூறுகிறது; நாட்டின் நாயகர்கள் என்று கூறத்தக்க விருதுபெற்றோரோ, இதை வெட்டிப்பேச்சு என்கிறார்கள். நாம் என்ன செய்வது? இதயம் இடும் கட்டளையையோ மீற முடியவில்லை! முடியாது! கூடாது! இந்தப் பெரியவர்களோ, நமது உள்ளுணர்ச்சியையே ஒழித்திடத்தக்க விதத்தில் பேசுகிறார்கள்!! என்செய்வது! என்று தம்பி! என்னைப் பொறுத்தவரையில் பல நாட்கள் எண்ணியதுண்டு. பெரியாருக்கு இதுபோன்ற நிலை பலமுறை ஏற்பட்டதுண்டு; ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. ★ ஈரோடு, என் இருப்பிடமாக இருந்த நாட்கள். சித்தப்பா சீற்றமாக இருந்தாலும், அப்பா ஆர்ப்பரித்து வந்தாலும், ஓடோடி வந்து, நான் படுத்திருக்கும் இருக்கைக்குக் கீழே பதுங்கி, அப்படியே, தம்பி சம்பத்து உறங்கும் நாட்கள். யாராவது சிறிதளவு கடுமையாக நமது இயக்கத்தைப்பற்றிப் பேசினாலும், துடிதுடித்து எழுந்து, படபடவென்று பேசிடும் பருவத்தில் நான் இருந்த காலம். ஒரு மாநாடு ஏற்பாடாகி இருந்தது, ஈரோட்டில். எந்தத் திடலில் என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறாய் அல்லவா? திடலில் அல்ல!! பள்ளிக் கட்டிடத்தில் - கூடத்தில். நாங்கள் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது; திடீரென்று, சர். ஆர். கே. சண்முகம் செட்டியார், தாம் மாநாட்டுக்கு வருவதாக, தாமாகவே பெரியாருக்குத் தெரிவித்தார். ஏன் வருகிறார்? இவருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு அலுவலுக்கு இடையிலே, இந்த மாநாட்டுக்கு வர எண்ணிட காரணம் என்ன? என்று யோசிக்கவேண்டி நேரிட்டுவிட்டது. எதிர்பாராத இந்த அறிவிப்பு, ஏதேதோ எண்ணங்களை மூட்டிவிடலாயிற்று. பெரியாருக்கு, சர். சண்முகத்திடம் பெருமதிப்பு, பாசம்! எனவே பயந்து போனார். பாசம் இருந்தால், பயம் ஏற்படுமா என்று கேட்பாய், தம்பி! பாசம் எப்படிப்பட்டது; அதன் வயமாகி விட்டால், அது என்னென்ன பாடுபடுத்தும் என்பதை, தம்பி! உன்னால் எப்படி இன்று உணர முடியவில்லையோ, அதுபோலத்தான் எனக்கு அப்போது நிலை; இப்போது அந்தப் பாசம், என்னை என்ன பாடுபடுத்துகிறது என்பதை, நானன்றோ அறிவேன். பெரியாருக்கு, சர். சண்முகத்திடம் இருந்த பாசத்தால்தான் பயமும் ஏற்பட்டது; காரணம் என்ன தெரியுமா? சிலர், சர். சண்முகம் மாநாட்டுக்கு வருவதாகத் தெரிவித்திருந்தாரே, அதற்கு ஒரு காரணம் காட்டினார்கள் - கற்பித்தார்கள் - என்றே கூறலாம். விளைவு எப்படி எப்படி ஏற்பட்டுவிடக்கூடும் என்பதுபற்றி எண்ணிப் பார்க்காமல், நிகழ்ச்சிகளுக்கு, அவரவர் தத்தமக்குத் தோன்றிய வகையில், பொருள்கூற முற்படுவது, எளிதிலே நீக்கிட முடியாத இயல்பல்லவா? அதனால்தான், அன்று சண்முகம் அவர்கள் ஈரோட்டு மாநாடு வருவது எதற்காக என்பதுபற்றி, அவரவர் அவரவருக்குத் தோன்றிய காரணங்களைக் காட்டினர். அதிலே, பெரியாருக்கு மன அதிர்ச்சியே தரத்தக்க விதத்தில் சிலர், ஒரு காரணம் காட்டினர். நாட்டுப் பிரிவினைத் திட்டத்தை, நாம் கைவிட்டு விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், பெரியாரின் போக்கை அன்பினால் கட்டுப்படுத்தி மாற்றக்கூடிய ஆற்றல் படைத்தவர், சர். சண்முகம் ஒருவர்தாம் உளர் என்பதறிந்து அவரை அனுப்புகிறார்கள்; அவர் மாநாடு வந்து நாட்டுப் பிரிவினைத் திட்டம் நாசம் தரும், மோசம் போகாதீர் என்று பேசப் போகிறார்; அவ்விதம் வேறு எவரேனும் பேசினால், பெரியார் தமது கோபப் பார்வையாலேயே அவர்களை அடக்கிவிட முடியும்! எவருடைய வாதத்தையும் பொடிப் பொடியாக்கிடமுடியும்!! ஆனால் சர். சண்முகம் நாட்டுப் பிரிவினையை எதிர்த்தால், அவரிடம் பாசம் கொண்டுள்ளதால், பெரியாரால் மறுத்திட, எதிர்த்திட மட்டுமல்ல, வாதிடக்கூட முடியாது; மனம் நெகிழும், குழம்பும்; நம்ம சண்முகமா இப்படி ஆகிவிட்டார் என்று எண்ணுவார், வருத்தம் மேலிடும்; நம்ம சண்முகமே இப்படி ஆகிவிட்டபிறகு நாம் யாரை நம்புவது என்ற எண்ணம் தோன்றும், திகைப்பு மேலிடும் என்பது பலருடைய கருத்து. அதிலே பெருமளவு உண்மையும் உண்டு. பெரியார் உள்ளபடி பயந்தார், அன்புக்குரிய சண்முகத்தை எதிர்த்துப் பேசவேண்டிய நிலையும் ஏற்படும் போலிருக்கிறதே என்று. நான் உடனிருந்தேன்; என்னை அவர் பார்த்தார்; பார்வையைப் புரிந்துகொண்டேன்; சிறிது பணமும் கொடுத்தார், புதிய சில புத்தகங்கள் வாங்க; படித்துக் குறிப்புகள் எடுத்தேன், நாட்டுப் பிரிவினைக்கு ஆதாரங்கள். இந்த ஆதாரங்களை, வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறினால், சர். சண்முகம்கூட மறுக்க முடியாது என்ற தெம்பு எனக்கு. ஆனால், நான் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். மெத்தக் கஷ்டப்பட்டு நான் தேடி எடுத்த குறிப்புகள் எனக்குப் பயன்படவில்லை! சந்திரகுப்தன், சமுத்ரகுப்தன், ஹர்ஷன் அசோகன் என்ற மாமன்னர்கள், இந்தியாவை ஒரு குடையின் கீழிருந்து ஆளத் திட்டமிட்டுத் தோற்ற வரலாற்றினைப் படித்துக் குறிப்புகள், மேற்கோள்கள், பேரறிவாளரின் கருத்துரைகள் பலவும், தயாராகவைத்திருந்தேன், பயன்படுத்த தேவையே இல்லாமற் போய்விட்டது. ஏன் எனில், சர். சண்முகம் ஒரு சிலர் கூறியதுபோல, நாட்டுப் பிரிவினைத் திட்டத்தைக் கண்டிக்கவுமில்லை; மாறாகப் பிரிவினை கேட்பதிலே, தவறு ஏதும் இல்லை; உரிமையே இருக்கிறது; சாதாரண இந்துக் குடும்பத்திலேயே பிரிவினை கேட்க உரிமையும், பெற வழியும் இருக்கும்போது, ஒரு தனி இனம், தனி அரசு நடாத்தி வெற்றி கண்ட இனம், "தனி நாடு’ வேண்டும் என்று கூறாமலிருக்க முடியுமா? அந்தக் கோரிக்கையைப் புறக்கணிக்கத்தான் செய்யலாமா? என்றெல்லாம் சர். சண்முகமே பேசலானார். எதிர்த்திடப் போகிறார் என்று யாரைக் குறிப்பிட்டார்களோ, - காலம் விழைவோர், சாடி கூறுவோர் என்பவர்கள் - அதே சர். சண்முகம், தனிநாடு கேட்பதிலே, தவறு துளியும், இல்லை, மறுத்திடத் துளியும் நியாயம் இல்லை என்று பேசினார். பெரியார், பிரிவினைக்கான வழக்குத் தொடர்ந்து விட்டார். ஆட்சிப் பொறுப்பிலே உள்ளவர்கள், அலட்சியம் காட்டாமல், வீணான அருவருப்புக் கொள்ளாமல், வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, நீதியும் உரிமையும் நிலைநாட்டப்படுவதற்கான வழிவகை செய்தாகவேண்டும் என்ற கருத்துப்பட, சர். சண்முகம் விளக்கம் அளித்தார். சர். சண்முகம் தனி அரசு கேட்பது, சிறுபிள்ளைத்தனம் என்று கூறிடுவாரோ என்ற அச்சம் என் போன்றோருக்கு. எனவே, சர். சண்முகமே, விடுதலை உணர்ச்சியை ஊட்டத்தக்க விதத்திலே நடந்து கொள்ளும்போது, எத்துணை மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதை எண்ணிப்பார் தம்பி! எங்கள் பேச்சிலேயே ஒரு புது முறுக்கு! ஏறு நடை என்கிறார்களே அது! அவ்வளவு மகிழ்ச்சி எமக்கு. சர். சண்முகம் மட்டும் தொடர்ந்து அந்தப் போக்கைக் கொண்டிருந்திருப்பாரானால், தமிழக வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனை ஏற்பட்டுவிட்டிருந்திருக்கும். அவரோ, வேறு பிரச்சினைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். பாதை வேறாகிவிட்டது. ஒரு பெரு மூச்சு; சிறிதளவு மனத்தளர்ச்சி; எனினும் கொள்கை எங்களை ஊக்குவித்தது; பயணத்தைத் தொடர்ந்து நடத்தினோம். உன் போன்றாரின் தோழமையும் உழைப்பும், உறுதியும், கஷ்ட நஷ்டம் ஏற்கும் இயல்பும், கிடைத்தன. இன்று நான் துவக்கத்தில் கூறியபடி, நமது இலட்சியம் வெவ்வேறு முகாம்களில் உள்ளவர்களின் உள்ளத்திலும் குடிபுகுந்திருப்பது காண்கிறோம், மகிழ்கிறோம். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது பழமொழி. அது பொய்த்துப் போய்விட்டது. ஏதுமறியாதவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள், ஏலாதனவற்றை எல்லாம் எடுத்தியம்பும் போக்கினர் என்று நம்மைக் கேலி பேசி வந்தவர்களிலே பலரும், இன்று, மெள்ள மெள்ள, நமது நோக்கத்தைப் புரிந்துகொள்ள வும், போக்கினை ஓரளவு ஆதரிக்கவும் முன்வருகின்றனர். நல்ல சமயம், தம்பி இதை நழுவவிடலாகாது!! ★ தம்பி! சீற்றம் மேலிட்டுப் பலர், நமது கழகத்தைத் தாறுமாறான முறையில் தூற்றித் திரிகிறார்களே; வரலாறு படித்தறியாதார்கள், நாம் காட்டும் வரலாற்றினை வெற்றுரை என்று கூறுகின்றனர்; உள்ள உணர்ச்சியை உளறல் என்றும், நாட்டுப் பற்றை நாச நினைப்பென்றும் ஏசி வருகின்றனரே, இந்நிலையில் நமக்கு ஆதரவு பெருகி வருகிறது என்று கூறுவது, எங்ஙனம் பொருந்தும் என்று கேட்கத் தோன்றும். தம்பி! ஒரு கணம் எண்ணிப்பார்! எதைக்கண்டு நீ, இதுபோலக் கேட்கிறாயோ, அதிலேயே ஓர் பேருண்மை அடங்கிக் கிடந்திடும் அற்புதம் காண்பாய். ஏன் எதிர்க்கிறார்கள் தம்பி! ஏன்? நமது பேச்சு, மக்களுக்குப் பிடித்துவிட்டது, புரிந்தும் விட்டது! அது தெரிந்ததால், ஆதிக்கக்காரர்கட்கு அவர்தம் அடிவருடிகட்கு, அச்சம் குடைகிறது. எத்துணையோ பாடுபட்டு நாம் அமைத்துக் கொண்டுள்ள ஆதிக்கம் அழிந்தொழிந்து போய்விடும் போலிருக்கிறதே, என் செய்வது என்ற எண்ணம், அவர்களைப் பிடித்தாட்டுகிறது. கிளைக்குக் கிளை தாவிடும் கடுவன் - சில வேளைகளில் மந்தியிடம் சொக்கியதால் அதுபோலச் செய்வதுண்டு. எனினும், பெரும்பாலும், தன்னைப் பிடித்துக் கொள்ள யாராரோ முயற்சிக்கிறார்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு, அதன் காரணமாகத் திகில் கொண்டு விடுகிறது; தப்பிப் பிழைக்க வேண்டும் என்றோர் தவிப்பு, கடுவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. தாவுகிறது, குதிக்கிறது, குறும்புச் சேட்டைகள் செய்கிறது, பற்களைக் காட்டுகிறது. அதைக் கண்டு, கருத்திலே தெளிவுள்ளோர், கண் சிமிட்டியும் குறுநகை காட்டியும், செல்வரேயன்றி, "ஏ! கடுவனே! உன்னால் மட்டுந்தானா, உச்சாணிக் கிளைக்குத் தாவமுடியும், இதோபார், என்னை!’’ என்று கூறி, மரமேறித் தாவவா செய்வர். சிறுமதியின் விளைவாக ஏற்பட்ட சீற்றத்தாலோ, சில்லறை கிடைத்திடும் என்ற எண்ணத்தாலோ, இவர்கள் இத்துணை ஏற்றம் பெறுவதா என்ற அருவருப்பாலோ சிலர், இழிமொழி பேசித்திரிவரேல், அதனை ஒரு பொருட்டாகவும் கொள்ளலாமோ? தள்ளு குப்பையை என்று கூறிவிட்டு, நமது தூய பணியினைத் தொடர்ந்து நடாத்திச் செல்ல வேண்டும். எங்கிருந்து கிளம்பினோம்! எந்த நிலையில் தொடங்கினோம்! துணைநிற்க யார் இருந்தனர்? ஆயினும், இன்று எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டு விட்டோம் என்பதனை எண்ணிப்பார்த்தால், தம்பி! ஏற்படும் எழுச்சியும் மகிழ்ச்சியும் உன்னையும் என்னையும் இன்பபுரிக் கல்லவா அழைத்துச் செல்கிறது. அந்த இடம் சென்றிட்டால், விடம்கொண்ட நாவினர் வீசிடும் சுடுசொல் நம் செவிபுகவும் இயலாது என்பதனை ஏன் மறந்தாய்? நிரம்பாத குடம் தளும்பிடும் பான்மைபோல, கொள்கை பதியாத மனத்தினர், குளறுவர், வேறென்ன செய்வர். அது நம்மைத் தீண்டவும் முடியாத உயர் இடமல்லவா, நாம் இருப்பது. அதை மறத்தல் அழகல்லவே! பெற்றெடுத்த செல்வியின் பேச்சொலி கேட்டு இன்புறும் தாயின் செவிக்கு குழலும் யாழும்கூடக் குதூகலம் தாராது என்றனர் ஆன்றோர். இலட்சியம் ஒலி இசை எனக் கிளம்பி, இனிமை தந்திடும் இடம் வந்த பிறகு, உன் செவியில், ஊளையும் உறுமலும் வீழ்ந்திட இடமளிக்கலாமோ! ★ தம்பி! ஒன்று கூறுவேன். அதனை என்றும் மறவாதே நம்மைவிட மிகப்பெரியவர்கள், அறிவிலும், ஆற்றலிலும் தியாகத்திலும், தரத்திலும், திறத்திலும், மிகமிக மேலோர் என்று நாமே, நெஞ்சு நெக்குருக ஒப்புக்கொண்டு தீரவேண்டிய பேரறிவாளர்கள், இன்று நம்மீது வீசப்படும் இழிமொழிகளை விட மிகமிகக் கேவலமான இழிமொழிகளையும் பழிச் சொற்களையும் தாங்கிக்கொண்டனர். உலகே இன்று புகழுகிறது; அறிவியலுக்கே அடித்தளம் அமைத்த ஆசான் என்று கிரேக்க நாட்டு சாக்ரடீசை. அவர் பட்டபாடு, கொஞ்சமா? ஆம், அண்ணா! மாபாவிகள், நஞ்சு கொடுத்தல்லவா சாகடித்தார்கள் என்பாய். நான், அதைக் கூறவில்லை, தம்பி! அது, அவர் கிரேக்க நாட்டுக் கொடியவர் களுக்குத் தந்த தண்டனை. இறந்துபட்டார்; எத்தகைய இழிமக்கள் கிரேக்கத்தில் இருந்தனர் என்பதனை உலகு அறிந்து காரித் துப்பச் செய்து விட்டுச்சென்றார். நான் அவர் இறந்து பட்டதைக் கூறவில்லை. அவர் உயிருடன் இருக்கும்போதே, எத்துணை இழிமொழியைக் கேட்டுக்கொண்டார் தெரியுமா? நாடகம் தீட்டி நாட்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்ற புலவனொருவன், வெறும் பொச்சரிப்புக் காரணமாக சாக்ரடீசை, முட்டாள், முரடன், கயவன், காமுகன், பொய்யன், புரட்டன், என்றெல்லாம் ஏசி, ஒரு நாடகம் தீட்டி, சாக்ரடீஸ் வாழ்ந்த நாட்களிலேயே, அவர் உலவிய ஏதன்ஸ் நகரத்திலேயே, நாடகத்தை நடத்திக் காட்டினான். நையாண்டி செய்தனர்! செச்சே இவ்வளவுதானா, இந்தச் சாக்ரடீசின் இலட்சணம் என்று ஏளனம் பேசினர் பலர். சாக்ரடீஸ் துளியும் பொருட்படுத்தவில்லை! தாங்கிக் கொண்டார்! தடுத்தார் இல்லை! திருப்பித் தாக்கவுமில்லை!! மங்காப் புகழொளி இன்றும் அவருக்கு, அறிவாய். அவரை விடவா, நாம் ஏற்றமிக்கோர்! இல்லை அல்லவா? ஆம் எனின் தம்பி, நமக்கு ஆத்திரமூட்ட வேண்டும், அதன் காரணமாக அமளி மூளவேண்டும் என்ற அற்பநோக்குடன், நாராச நடை பயிலுவோர் நாலாறு வார்த்தைகளை வீசினால், தாங்கிக்கொள்ளக் கூடாதா! கல்லடியாம், கலீலியோவுக்குக் கிடைத்தது! முள் முடியாம், ஏசுவுக்கு! நெருப்பிலிட்டனர், ப்ரூனோவை! சுட்டே கொன்றனர், ஆபிரகாம் லிங்கனையும் அண்ணல் காந்தியாரையும். எனினும், அண்ணா! அடக்கிக் கொள்ள முடியவில்லை ஆத்திரத்தை! அவ்வளவு மோசமாக ஏசுகிறார்கள் என்றும் ஆயாசப்படுகிறாயே, நியாயமா? தம்பி! உன்னையும் என்னையும்தான், அந்த "உயர்’ பண்பு படைத்தோர் ஏசுவர், தூற்றுவர்! அறிஞனாம் அறிஞன், எவன் கொடுத்தான் பட்டம் - என்று பேசுவர்! ஆளைப்பார் ஆளை! என்று கேலி செய்வர். அவர் யோக்யதை தெரியுமா? என்று கூசாமல் பொய்யுரைத்து ஏசுவர். அவன் பொய்யன், புரட்டன், கள்ளன், காமுகன், அடுத்துக் கெடுப்பான், ஆகாவழி காட்டுவான், அர்த்தமற்ற பேச்சுப் பேசுவான், ஆதாரமற்ற காரணம் காட்டுவான், இப்படிப் பட்டவனை அடித்தாலும் கடித்தாலும் கொன்றாலும் மென்று உமிழ்ந்தாலும் குற்றம் இல்லை, பாபம் இல்லை. நாட்டுக்கு இவன் துரோகி, நல்லன எல்லாம் அழித்தான், நாசப் பாதைதான் காட்டுவான், நம்பினோரை நாட்டாற்றில் விடுவான், பெட்டி பேழை நிரப்பிக் கொள்வான், பேயாய் அலைவான்… போதுமா, தம்பி! இவ்வளவுதான், ஏச முடியும்; ஏசட்டும் ஏசுகிறார்கள். ஆனால், என்னை இப்படியும், உன்னை ஓரளவுக்கும் தூற்றிப் பேசவும், இழிமொழியால் ஏசவும்தான், வசவாளர் களால் முடியுமேதவிர, நாம் எந்த நாட்டினை மீட்டிடவேண்டும், சொந்த அரசு அமைத்திடவேண்டும் என்று எடுத்துக்காட்டுகிறோமோ, அந்தத் தாய்த்திரு நாட்டினை, தமிழகந்தன்னை, ஒரு துளியேனும், இழித்தும் பழித்தும் ஏளனம் செய்தும், பேச இயலுமா? என்னிடம் வண்டி வண்டியாகக் குறைகள் உள்ளன என்று பேசி, ஆசையைத் தீர்த்துக் கொள்ளட்டும், என்னையும் உன்னையும், "என் அரும் மக்காள்! எனக்கோ தளைகள்! நீவிரோ புதல்வர்!’’ என்று கூறி அழைத்து, விடுதலைக்கான தொண் டாற்றும் ஆர்வத்தை ஊட்டி ஆணை பிறப்பித்துள்ள, தாயகத் திடம், குறை ஏது காண முடிகிறது இவர்களால். தாயகத்தின் எழிலையும் ஏற்றத்தையும், இல்லை என்று கூறக் கொல்லைச் சரக்கின் நாற்றத்தையும் மிஞ்சவல்ல கொடிய மொழி பேசிடும் குணாளர்களாலும், முடியவில்லையே! முடியாதே!! எனக்குத்தான் அறிவு இல்லை, ஆற்றல் இல்லை, தரம் கிடையாது, திறம் இல்லை என்று ஏச முடிகிறதேயன்றி நமதரும் நாடு வளமற்றது, வகையற்றது, மரபற்றது, மாண்பற்றது, வீரமற்றது, வரலாறற்றது என்று கூற முடிகிறதா!! என் தாய் மலடி என்று கூறிடும் மகன் எங்குளான்? என் நாடு எழிலற்றது என்று கூறிட, வேறு வேறு நேரங்களிலே இழிமகனாக உழப்பவனும்கூடக் கூச்சப்படுவான்; அச்சம்கூடக் கொள்வான். விரலிலே புண் என்று கூறட்டும் - கண் அல்ல, கருத்துக் குருடானதன் விளைவு அந்தப் பேச்சு என்போம் - ஆயின் விரலில் உள்ள மோதிரத்திலே பதிந்துள்ள வைரத்தினை ஒளியையும் உயர்வையும் கூடவா மறுத்திட இயலும். தம்பி! எனக்குள்ள மகிழ்ச்சி, இதிலேதான். தாயகத்தின் அருமை பெருமை, மரபு மாண்பு இப்போது மிகமிகச் சமான்யர்களுக்கும் பளிச்செனத் தெரிந்துவிட்டது; எனவேதான், நம்மை இழித்தும் பழித்தும் பேசிடும் போக்கினர் கூடத் தாயகத்தை ஏசக் கூசுகிறார்கள். நமக்கென்று உண்மையான, பொருத்தமான, தரம் திறம் இருக்குமானால், தருக்கரின் தாக்குதல், நம் தாள்படு தூசு ஆகிப்போகும்; எனவே கவலைகொள்ளத் தேவையே இல்லை! நாடு, எத்துணை ஏற்றத்துடன் ஒரு காலத்தில் இருந்து வந்தது; இன்று செங்கற்பட்டு - தாம்பரம் மின்சார இரயிலுக்காகக் கூட பத்து ஆண்டுகள் தவம் கிடந்தும் கிடைத்திட முடியாத தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறது; ஒரு காலத்தில் தரணி மெச்சிட வாழ்ந்த தாயகம், இன்று தமிழ் நாடு என்ற பெயரும் பெறாமல் பெருமை குறைந்து கிடக்கிறது. வளம் கொஞ்சும் களஞ்சியமாக இருந்த நாடு இன்று வாட்டம் கொட்டிடும் கொட்டிலாகக் கோலம்மாறித் தவிக்கிறது. வீர கோட்டம் இன்று எங்ஙனம் வீணர் தங்குமிடமாகித் தாழ்வுற்று இருக்கிறது என்ற இந்த மறுக்கொணா உண்மைகள் மக்கள் மன்றத்திலே எடுத்துரைக்கப்பட்டுவிட்டது! இதனை மறுத்திடவோ, தாயகத்தைப் பழித்திடவோ, நா எழவில்லை, தீயுமிழ்வோருக்கும். இதனை எண்ணிடும்போது, தம்பி! எனக்கு உள்ளபடி, அவர்கள் நம்மை ஏசுவதுகூட நினைவிற்கு வாராதுபோய்விடுகிறது. செம்பொன்னால் அணிபணி செய்தளிப்போன், கருநிறம் என்று கூறட்டும் - அதனால் அணிபணிக்குத் தினைத்துணையும் இழுக்கு வாராதன்றோ. அஃதேபோலத் தாயகம் தனி அரசாகி, தகுதி பெற்றுத் திகழவேண்டும் என்ற திட்டம் நம்முடையது! நமது வண்ணம் குறித்தோ, வல்லமைபற்றியோ, வர்க்கம் குறித்தோ, எவரெவர் ஏதேது பேசினால்தான், என்ன கெட்டுவிடும்! செந்தாமரை இருக்கிறது பக்கத்தில். தவளை அதை மதிக்கவா செய்யும்; கண்டு மகிழவா செய்யும் - சேறுதான் அதற்கு உறைவிடம்!! செருக் கெனும் சேற்றில் இறங்கிப், பதவியிலுள்ளோரிடம் பல்லிளித்துப் பராக்குக் கூறி, "பவிசு’ பெறத் துடியாய்த் துடிக்கும் பேர்வழிகள், நாவடக்கத்துடன் இருப்பர் என்று எதிர்பார்ப்பது, கர்த்தபத்திடம் காம்போதியையும், புழுத்துப்போனதிடம் நறுமணத்தையும் எதிர்பார்ப்பதற்கு ஒப்பாகும். பால் பருகுவோன்தான் சீனி தேடுவான், புளித்துப்போன பானம் பருகுவோனுக்குப் புழுத்துப்போன காரக் கருவாடுதானே வேண்டும் என்பார், கைவல்யம். அதுபோலவே, ஏசிப் பேசுவதன் மூலம், நம்மை ஒழித்திடலாம் என்று எண்ணிக்கிடப்போரிடம், பண்பான பேச்சு இருக்கும் என்று, எப்படி எதிர்பார்க்க முடியும்? முருங்கையில் தேடினால் முல்லையா கிடைக்கும்! தம்பி! ஒன்றை மறந்துவிடு, மற்ற இரண்டை மறவாதிரு. உன்னையும் என்னையும் ஒழித்திட எண்ணி உலாவிடும் போக்கினர். உமிழ்ந்திடும் தூற்றலை, மறந்துவிடு! அவரும்கூட, தாய்த்திரு நாட்டின், திருவை திறத்தை மறைத்திட இயலாதிருப்பதை மறவாதிரு. அத் திருநாடு, அரசு இழந்ததால் அனைத்தும் இழந்து ஆயிரம்கல் அகன்று கிடக்கும் தில்லி நோக்கி எதற்கும் இரந்திடும் நிலைதனைக் கூறினோம், அதனை அன்று மறுத்தோரில் பலர், ஆய்ந்து பார்த்ததால் அனுபவம் பெற்றதால், "ஆம்! அங்ஙனம்தான், நமது நாட்டுநிலை உளது! எதற்கெடுத்தாலும், வடக்கு நோக்கி எடுக்கிறோம் பிச்சை என்ற உண்மையை உணர்ந்தோம்’’ என்று உரைத்திடக் கேட்டிடு! உன் சொல் வென்றது என்ற உண்மையை, மறவாதிரு! ஏழை சொல் அம்பலம் ஏறாது என்ற அம்மொழி இந்நாள் பொய்மொழியாயிற்று. எடுத்து இயம்பினோம், தடுத்து ஓய்ந்தனர். பிறகு அவரும் நம்மொழி பேசிட முனைந்தனர் என்பதனை மறவாதிரு! நம் மொழி பேசிட நல்லோர் பலரும் முனைந்து வந்ததால், முன்னிலும் அதிக ஆர்வம்கொண்டு, பணியினைத் தொடர்ந்து நடாத்திடு, தம்பி! நம் மொழி கேட்டு, அம்மொழி பேச முனைந்து வந்துள்ள நல்லோர் யாவரும், நம் வழி நல்வழி, அஃதே எம்வழி, என்றே கூறி வருவர், துணைசெய். அந்நாள், நன்னாள்; அஃது விரைந்திட, ஆற்றல் அனைத்தையும் அளித்திட வாராய் - அன்னையின் விலங்கினைப் பொடிப் பொடியாக்கு. பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க மைந்நிற முகில்கள் வழங்கு பொன்னாடு! பூரித்துப் பாடுகிறார், தம்பி! புலவர் பெருமகன், நந்தமிழ் நாட்டினைக் குறித்து. இத் திருநாட்டினைத் தாக்கிட, மாற்றார் வந்த காலை, என் செய்தனர், நமது முன்னோர்! ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்! நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்! வாளுடை முனையினும் வயந்திகழ் சூ-னும் ஆளுடைக் கால்கள் அடியினும் தேர்களின் உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள் உருளையிற் கண்டு நெஞ்சு உவப்புற வம்மின்! அழைப்பு இதுபோல! ஆர்த்தெழுந்தனர், நம் முன்னோர்! பகை அழித்திட, புகழ் மிகுத்திட! களம் எங்ஙனம் காட்சி அளித்தது? புலவரைக் கேள், தம்பி! பூரித்துக் கூறுகிறார். எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிந்தன மருப்பு கலங்கினர் பலர். வெற்றி பெற்றனர், விரட்டினர் மாற்றார்களை, அரசு நடத்தினர் அறவழி நின்றனர். நாடு, எவருக்கும் வேட்டைக் காடாகா வண்ணம், வீரத்திருமகன். கனமே குழல்! செங்கயலே விழி! மொழி கார்க்குயிலே! என்று தன் உள்ளம் கொள்ளைகொண்ட வேல்விழியாளிடம் பாட்டுமொழி பேசினான் - அவன் கேட்டதனைத் தந்து இன்புற்றாள் கடிமணம் புரிந்துகொண்ட கட்டழகி; அக மகிழ்ந்து ஆடினர். எனவேதான் புலவர், கன்னிய ரோடும் நிலவினிலாடிக் களித்ததும் இந் நாடே; பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இந் நாடே! என்று உளத்தில் உவகை பொங்கப் பாடுகிறார். தம்பி! அந்த நாடு, விடுதலைப்பெறப் பாடுபடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம், அந்த வீரப்பணியில் ஈடுபட்டுள்ள நமக்கு, வேறு நாட்டம் எழலாகாது; எழாது! ஏலாதனவெல்லாம் கூறுகிறான் என்று ஏளனம் செய்தனர். ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது!! அண்ணன், 1-5-60 FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.