[] []  பெரும்பாலும் குறுங்கவிதைகள் கவிதைகள் பேயோன் பெரும்பாலும் குறுங்கவிதைகள் (கவிதைகள்) உரிமம்: பேயோன் [] Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0  சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது. முதல் மின்பதிப்பு ஆகஸ்ட் 2014 அட்டை ஓவியம், வடிவமைப்பு: பேயோன் Perumbaalum Kurungavidhaigal (poems) This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. First electronic edition August 2015 Cover art and design: Payon  முன்னுரை ஒருவரைக் கவிதை எழுதத் தூண்டுவது எது? உலகின் முன்னணி கிரிமினாலஜிஸ்ட்டுகள் கேட்கும் கேள்வி இது. என்னைப் பொறுத்த வரை, சிலர் பிறக்கும்போதே கவிஞர்களாகப் பிறந்துவிடுகிறார்கள். சிலர் சமூகச் சூழ்நிலைகளால் அப்படி ஆகிறார்கள். சிலருக்கு முன்பே கிரிமினல் ரெக்கார்டு இருக்கிறது. நான் கவிஞனாகப் பிறக்கவில்லை என்றே நினைக்கிறேன் (எப்படியும் அந்த வயதில் கண்டுபிடிப்பது கடினம். எனக்கு எதுவும் செய்ய வராது என்று நான் உணர்ந்தபோது என் ஆசிரியர் லோகையாதான் எழுத்துத் துறைக்கு என்னைத் திருப்பி விட்டார். எழுத்தின் எளிமையான வடிவங்களிலிருந்து சிரமமான வடிவங்களுக்குப் படிப்படியாக முன்னேறு என்று அவர் கூறினார். அதாவது கவிதை > சிறுகதை > குறுநாவல் > நாடகம் > நாவல் > வீட்டுக்கணக்கு என்னும் வரிசையில். நான் கவிதையில் தொடங்கி நாவல் வரை வந்து நிறுத்திக்கொண்டேன். வீட்டுக்கணக்கு எழுத ஒருவரைத் திருமணம் செய்துகொண்டேன் (சமைக்க, குழந்தை பெற்றுப்போட, மற்றும் உடல் இச்சைக்குத் திருமணம் செய்துகொள்ளும் ஆணாதிக்கவாதிகளிடமிருந்து இப்படித்தான் வேறுபடுகிறேன்). எத்தனையோ எழுத்து வடிவங்களில் ஈடுபட்டாலும் கவிதைதான் எனக்கு முதல் காதலி. தொண்ணூறுகளில் நான் கவிதை எழுத வந்தபோது எனக்கு முன்பு சுமார் ஐம்பது லட்சம் பேர் கவிதை எழுதிக்கொண்டிருந்தார்கள் (அப்போது அது பெரிய எண்ணிக்கை). ரங்கநாதன் தெருவில் நுழைந்தது போல் இருந்தது. இருந்தாலும் ஒரு கை குறைவதாகத் தோன்றியது. அது என்னுடையதுதான். எனவே நான் தீவிரமான எண்ணிக்கையில் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். தெருவில் யாரை வேண்டுமானாலும் நிறுத்தி "கவிதை எழுதுவதைவிடச் சுலபமான விஷயம் ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டுப்பாருங்கள். அவ்வளவு ஏன், எந்த வீட்டுக்குள்ளும் புகுந்து கேளுங்கள். பதில் கிடைக்காது. ஏனென்றால் இல்லை. "வெந்நீர் வைக்கவே திண்டாட்டமா, கவிதை எழுதிப்பார்" என்பார் லோகையா சார். சிலர் கவிதை என்றால் கம்பசூத்திரம் என்று நினைக்கிறார்கள். எழுதினால் அப்படித் தோன்றாது. படித்தால் தோன்றலாம். ஆனால் படிப்பானேன்? நீங்கள் படிக்கும் ஒவ்வொரு கவிதைக்கும் தலா ஒரு கவிதையை இழக்கிறீர்கள் - இது வேலைக்கு ஆகாது. காரணம், அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் சொந்தக் கவிதையை எழுதலாம். தமிழுக்கு நிறைய கவிதைகள் தேவை. ஏன் தெரியுமா? ஒரு கவிதை எழுதப்படும்போது ஒரு நிஜமான குற்றம் நிகழாமல் தடுக்கப்படுகிறது. ஒரு கவிஞன் உருவாகும்போது ஓர் அரசியல்வாதி, ஒரு கொலைக் குற்றவாளி, ஒரு மெல்லமாரி, ஒரு திருடன் உருவாகாமல் தடுக்கப்படுகிறான். கவிதை எழுதுவதை 'thought crime'-ஆகக் குற்றவியல் நிபுணர்கள் கருதினாலும், கவிதை ஓர் ஆயுதமாகக் கருதப்படாதிருக்க, சட்டபூர்வமான நடவடிக்கையாக மிஞ்சியிருக்க அதன் நிவாரண குணமே காரணம். இதனால்தான் எல்லோரும் கவிதை எழுத வேண்டும். இதற்காகத்தான் இந்தத் தொகுப்பை எழுதினேன், எழுதிக்கொண்டிருக்கிறேன், இனியும் எழுதுவேன். பேயோன் 05-08-2015 குவியல் தனிக்கல் அது சரியும் வரை சூளைச் செங்கல் குவியலிலே.  சுகம் எல்லாவற்றையும் முறைத்துக்கொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்?  பேசும் பலகை பூக்களைப் பறிக்காதீர்கள் என்கிறது பலகை பூக்களைப் பற்றி என்னோடு பேசிய பலகையே, இந்தா முத்தம்.  உதிர்தல் துருத்தும் வேர்களிடைப் பள்ளத்திற்குள் பத்திரமாய் இலை ஒன்று உதிர்ந்து விழுகிறது.  இன்றைக்குக் காலையில் இன்றைக்குக் காலையில் பார்த்தபோதுகூட நன்றாக இருந்த மனிதர் எங்கே? அவர் இன்றைக்குக் காலையில் நன்றாக இருக்கிறார்.  கூடத்துக் குருவிகளே கூடத்துக் குருவிகளே, கவலை வேண்டாம் என் வீட்டுக்குள் ஒரு தனி வீடாக உங்கள் கூடிருந்தாலும் நான் அதைக் கலைக்க மாட்டேன் நான் ஒரு ஜப்பானியக் கவிஞன். பதினேழாம் நூற்றாண்டு.  நீர் நீரில் பிரதிபலிக்கிறேன் நீர் என்னைப் பிரதிபலிக்கிறது நீர் என்னைப் பிரதிபலிக்கிறீர்.  எத்தனை என் கார்ப்பரேட் புதுமனை அழித்த கூடுகள் புற்றுகள் தேனடைகள் எத்தனை முன்தொகை போக நிலுவை எத்தனை.  இவ்வுலகு உலகம் எவ்வளவு சிறிது என்றால் ஒரு தீப்பெட்டி லிஃப்ட்டில் நூறு பேருடன் சிக்கிக்கொண்டது போலிருக்கிறது.  அதிகாலைகள் அதிகாலைகள் அழகாய் இருக்கக் காரணம் மனிதர்கள் அதிகம் கண்ணில் படாமை. அதுதானோ? நெடுநாள் கழித்துப் பார்க்கும் நண்பன் இளைத்துத் தெரிவதேனோ? காலமும் அளவும் குறித்த பிரக்ஞையின் வளர்சிதை மாற்றந்தானோ?  போதும் ராட்சத நீர்த்துளி மூட்டம் காட்டிக் காதை அடைக்கும் பலத்த ஆர்ப்பாட்டத்துடன் அருவி கொட்டுகிறது என் வீட்டுக் குழாய் போதும் எனக்கு.  வேர் கணுக்கால் வரை வெட்டுப்பட்ட முண்ட மரத்தின் பாதம் மட்டும் பேஷாய் வேரூன்றியிருக்கிறது.  தனியன் கண்கள் காதுகள் நாசித் துவாரங்கள் பல்வரிசைகள் கைகள் கால்கள் விரைகள் நுரையீரல் சிறுநீரகம் எல்லாம் என்னில் ஜோடித்திருக்கும் நான் ஒரு தனியன் அன்றோ.  விரைதல் கால்கள் விரைந்து நடக்கின்றன தரையில் பாவாத கால்களாய்க் கைகளும் அந்தரத்தில் விரைகின்றன.  (Busonக்கு) மருதாணிக் கையில் செருப்பணிந்து குட்டை நதியைக் கடக்கிறேன். ஒப்பீடு கோடை நிலவை எதனுடன் ஒப்பிட? எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?  விஷயம் கிலுகிலுப்பையை ஆட்டிக் கண்களுக்குக் கீழ் மடிப்பு விழச் சிரிக்கிறது குழந்தை பாவம், சாருக்கு விஷயமே தெரியாது. கணக்கு விடாமல் பெய்யும் இரவு மழையால் நிலவைப் பார்த்து நாளாயிற்று இருந்தாலும் நஷ்டமில்லை.  போல அற்றைத் திங்கள் செத்துப்போன ஊர்ப் பாட்டியின் நினைவுகளாய் ஒளியாண்டுகளுக்கு முன்பு மரித்த நட்சத்திரங்களின் வெளிச்சம் போல தெருக்கோடிக்காரனின் பீடிப்புகை இக்கோடியில் சூழ்கிறது என்னை.  விளையாட்டு குதூகலம் தாங்கவில்லை கன்றுக்குட்டிக்கு சாலையின் பரபரப்பு லட்சியமில்லை கற்பனைத் தோழர்களிடம் பிடிபடாமல் ஆட்டம் காட்டி இங்குமங்கும் ஓடுகிறது கன்றுக்குட்டி. போக்குவரத்து சுற்றி என்னென்னவோ நடக்கிறது மூச்சு மட்டும் அது பாட்டுக்குப் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறது.  மலர்ப்பாதை சில்லிடும் மார்கழிக் காற்றோடு மேகமாய் வந்து தழுவும் பூ வாசம் தார்ச்சாலையில் வேய்ந்த மலர்ப்பாதை செல்லும் இடமெல்லாம் நீ பூக்களைத் தூவிச் செல்கிறாய் சவ ஊர்தியிலிருந்து.  ரோஜாக்கள் ரோஜாவைப் பார்க்கும்போது உன் ஞாபகம் வருகிறது உன் பெயர் ரோஜா என்பதாலோ என்னவோ. ஆனால் ரோஜாக்களைப் பார்க்கும்போது வருவதில்லை உன் பெயர் ரோஜாக்கள் அல்ல என்பதாலோ என்னவோ.  முழம் கொஞ்சம் வைத்து விடேன் என்று மல்லிகையைத் தந்து திரும்பி நிற்கிறாய் முழம் பத்து ரூபாய் கிடைப்பதோ இத்தனூண்டு.  நினைவாக இரவின் வாராவதி மேல் அசைவற்று அமர்ந்திருக்கிறான் ஆளில்லாக் கிழவன். உன் ஸ்தூலம் மறைந்து நீங்காத நினைவாய்ச் சுருங்கிடக் காத்திருக்கிறான்.  கடைசி ஒளி அஸ்தமிக்கும் சூரியனின் கடைசி ஒளி பட்டுத் தெறிக்கும் வழுக்கைத் தலைக்குக் கீழே வரப்பிடை ஒற்றையடிப் பாதையில் தடுமாறி நடக்கிறான் ஆளில்லாக் கிழவன்.  ஓர் சருகு பூக்கள் மறையும் வேளையில் பூச்சிகள் ஒலித்திடும் நேரத்தில் சருகுகள் விரவிய மட்பாதையில் உனக்கென்று எடுத்துவைத்த ஓர் சருகை நொறுக்காமல் உள்ளங்கையில் அடக்கிப் பாதை விளிம்புகள் கூம்பிடும் புள்ளியை வெறிக்கிறான் ஆளில்லாக் கிழவன்.  நிலப்பரப்பு ஃப்ளோபேரும் ஸ்டெந்தாலும் மோனேயும் ரெனுவாரும் மாக்கேயும் ம்யூந்தரும் காண்டின்ஸ்கியும் கிர்ஹ்னரும் தெரேனும் பிரெஞ்சுப் புதிய அலையினரும் இதர ஐரோப்பியரும் சித்தரித்த ஆவியடக்கும் கனவு நிலப்பரப்பை இங்கிருந்து சென்றடைய ஆட்டோ எவ்வளவு கேட்பான்?  மழைக்குட்டைகள் அரைகுறையாக உள்ளது நிலவு புழுதியாய்ப் படரும் காற்று குளிர்கிறது அனாமத்து ஒளிகளைப் பிரதிபலிக்கின்றன மழைக்குட்டைகள்; தெருவுக்குக் குறுக்கே எண்ணி ஒரே ஒரு நாய் எலும்புந்தோலுமாய் ஓடுகிறது நிலையாப் பிறாண்டல்களை மழைக்குட்டைகளில் பதித்து.  வாழ்த்து காலைத் தேநீரின் சுவை சரியாக இருக்கிறது சாலையில் நடக்கும்போது மக்களோ வாகனங்களோ ஓயாமல் வழி மறிக்கவில்லை மளிகைக்கடையில் காத்திருப்பின்றி போனதும் வேலை முடிந்தது ஒற்றைத் தலைவலி பலவீனமானதொரு நினைவூட்டலாக மட்டுமே எஞ்சியிருக்கிறது மின்வெட்டு ஏதும் இல்லை வீட்டில் யாருக்கும் யார் மீதும் கோபம் வரவில்லை இது வரை சலனமின்றிக் கடந்திருக்கிறது இன்றைய தினம் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிக் கெடுக்காதீர்கள்.  தேநீர் எறும்பு மேகங்கள் மீது படுத்துறங்குவது போல் தேநீரின் நுரைக்குமிழ் மண்டலத்தில் கிடக்கிறது ஓர் எறும்பு அதைச் சுற்றிலும் பறக்கிறது ஆவி என்றாலும் பறப்பது எறும்பின் ஆவி அல்ல, தேநீரின் ஆவி கோப்பை வாய்நோக்கிச் சாய்கையில் எறும்பை வாய்க்குள் தள்ளிச்செல்லப் பார்க்கிறது நுரைக்குமிழ் நுரையை ஊதித் தள்ளிவிட்டுத் தேநீரை உறிஞ்சுகிறது வாய் எறும்புக்கு விமோசனம் பெற்றுத் தர மீண்டும் மீண்டும் முயல்கின்றன நுரைக்குமிழ்கள் ஒரு பலமான ஊதலில் கண்ணாடிச் சுவர் மேல் ஏறி இறங்குகிறது நுரை சுவரில் ஒட்டிக்கொள்கிறது எறும்பு தேநீரை நுரையுடன் அருந்தி முடிக்கிறது வாய் சுவரில் ஒட்டவைத்த ரப்பர் பல்லியாய்க் கண்ணாடிச் சுவரில் சமைந்து நிற்கிறது எறும்பு. கடத்தல் இந்தட் டூவீலரைப் போல் இந்தப் பைத்தியக்காரனைப் போல் இந்தக் குப்பை வண்டியைப் போல் இந்த எருமை மாட்டைப் போல் இந்தப் பாடையைப் போல் என்னைக் கடந்து செல்கிறாய் இந்தட் டூவீலரைப் போல் என்னை உரசிப் போயேன் இந்தப் பைத்தியக்காரனைப் போல் எனக்கு சிரிப்பைத் தாயேன் இந்தக் குப்பை வண்டியைப் போல் என்னை அள்ளிக்கொள்ளேன் இந்த எருமை மாட்டைப் போல் என்னை இடித்துத் தள்ளேன் இந்தப் பாடையைப் போல் என்னை சுமந்து செல்லேன். கனல் தாரகை மதியத்திலே பள்ளிக்குப் போய்விடுவான் பையன். உண்ட களைப்புத் தீர மாடி ரூம் ஏறுவார் பிணைவி. கட்டை சாய்த்து வம்பு பேச அவர்தம் கூட்டமும் போகும். சிறுபொழுது கடந்தால் நிலுவை சிலிண்டர்காரனும் வந்து போவான். கொட்டை வேகும் கோடையின் உக்கிரம் ஏற செக்கிழுக்கும் தளர்கிழமாய் மின்விசிறி மெல்ல காற்றின்றிச் சுழலும் கனல் தாரகை மதியத்திலே மென்பொருள் ஷிஃப்ட்டுக்கு குச்சிப் பை மாட்டிக் கிளம்பும் வேளை மட்டும் இளம்பெண்ணே ஜன்னலடியான் என் மீதுன் பார்வை படுமோடி? மழை இரவு இன்னும் தூறிக்கொண்டிருக்கிறது தெருவிளக்கொளியில் மின்னுகிறது ஈரத் தரை நாய்களை, மாடுகளைக் காணவில்லை வெகு தொலைவிலிருந்து வாகன ஒலிகள் மங்கலாய்க் கேட்கின்றன குளிர்க் காற்று பரிவாக வருடிச் செல்கிறது இந்த ஊர்கூட ஏற்கத்தக்கதாகிறது அப்போது பார்த்து ஓர் இருண்ட மூலையில் குடிபோதையின் பெருங்குரலில் பாலும் பழமும் பாடுகிறான் ஒரு லூசுக்கூ.  ஈக்களைப் பற்றி ஒரு/இரு கவிதை(கள்) நாற்காலியின் கைதாங்கியில் ஒரு ஈ நான் அமர வந்ததும் பறந்துபோகிறது நான் என்னப்பா செய்துவிடப்போகிறேன் உன்னை? * நீ பாட்டுக்கு உட்காரு எனக்கு ஒரு வேலை இருக்கிறது அதை இப்போது செய்யப்போகிறேன் (உன்னை மாதிரி ஃப்ரீயல்ல நான்) இதன் பெயர் கணினி, இது விசைப்பலகை நான் என்ன எழுதுகிறேன் என்று பாரு புரிகிறதோ புரியவில்லையோ அதுவும் ஓர் அனுபவந்தானே. எத்தனை ஈக்களுக்குக் கிடைக்குமிவ்வாய்ப்பு? பார்த்துச் சலித்த பின் வந்த வழியே பறந்து செல்லலாம் புதிய அனுபவத்தை நண்பர்களோடு பகிரலாம் சற்று முன்பு நான் பார்த்த ஒரு பெரிய ஜந்து எதிலோ அமர்ந்து என்னவோ செய்தது அதை நிறுத்தாமல் வேகமாகச் செய்துகொண்டிருந்தது பார்க்க முட்டாள்தனமாக, வேடிக்கையாக இருந்தது அடிபடாமல் பிழைத்து வந்துவிட்டேன் நீங்களும் சும்மா போய்ப் பார்த்து வாருங்கள் என்று பெருமிதமாய்ச் சொல்லிக்கொள்ளலாம். எதிர்காலம் கேள்விக்குறி நேற்று ஒருவரைப் பார்த்தேன் இன்றும் பார்த்தேன் அவரை நாளைக்கும் பார்ப்பேனா? (நான்) பார்க்க அவர் இருப்பாரா? ஆளே இருந்தாலும் வாராமல் போவாரா? வாராமல் போகுங்கால் இடந்தேடிப் போவேனா? அவர் வீடெங்கே? வாராமல் போகுங்கால் இடந்தேடிப் போயிடவும் நானும்தான் இருப்பேனா? நான் இருக்கும் பட்சத்தில் அவர் தேடி வருவாரா? என் வீடெங்கே? நேற்றும் இன்றும் பார்த்த நாங்கள் நாளைக்கும் பார்ப்போமா? ஏன்? விபத்துகள் எனக்கு விபத்துகளைப் பிடிக்காது ஒரு பொது இடத்தில் நின்று விபத்துகளை நான் ஊக்குவிப்பதை நீங்கள் ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள் பார்த்தவுடனே பார்வையாளனாக்கி விடுகின்றன விபத்துகள் என்னை நான் எங்கே எதற்காகச் சென்றுகொண்டிருந்தாலும் பார்வையைப் பிடித்துத் திருப்பித் தம்மைப் பார்க்கவைக்கின்றன விபத்துகள் விபத்துகளின் ரசிகன் அல்ல நான். என் போன்ற சாதாரணர்கள் அற்பமான அன்றாடப் பணிகளைச் சுமந்து தேமே என்று செல்லும் சாலைகளில் கொட்டிய முழு டம்ளர் பாலாய் ரத்தத்தை ஓடவைத்து மிரட்டுகின்றன விபத்துகள் சொந்தச் சிறுநீரில் புரளும் குழந்தை போல் தம் ரத்தத்தில் உயிரோடோ உயிரற்றோ சாக்காடும் மனிதர்களைப் பார்க்கிறேன் கருத்துகள் ஏதும் இல்லாதது போன்ற அவர்களது உணர்ச்சியற்ற முகத்தைப் பார்க்கிறேன் மூன்று பேர் உதவ, 20 பேர் வேடிக்கை பார்க்க எந்தச் செய்தி வீடு போய்ச் சேரும் என்ற ஊகத்தைத் தவிர்க்கிறேன் எனக்கு அது தேவையில்லை சரிந்து கிடக்கும் டூவீலர்களைப் பார்க்கிறேன் (எப்போதுமே டூவீலர்கள்தாம் டூவிலர்விபத்துகளின் கடவுள் தனி ஓட்டுநர்களையே குறிவைப்பார் போலும்) சில சமயம் அங்கு ரத்தமே எஞ்சியிருக்கும் அது தூசு படிந்து தேங்கிய சாக்கடை நீர் போல் கிடக்கும் இனி அதைப் பயன்படுத்த முடியாது அது தொட்டி உடைந்த தண்ணீர் போல் கொள்கலனிலிருந்து வெளியே இறைந்துவிட்டது சில சமயங்களில் கண்ணாடித் துண்டுகள் மட்டும் சிதறியிருக்கப் பார்க்கிறேன் அவை எந்தச் செய்தியும் சொல்வதில்லை அவற்றைப் பெருக்கித் தள்ள ஆளில்லை மறுநாள் துப்புரவுப் பணியாளர்கள் வருவார்கள் அது வரை எல்லோரும் அந்த இடத்தை கவனமாகத் தவிர்த்துச் செல்வார்கள் ஓடும் லட்சம் வாகனங்களில் விபத்துகள் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை என் எதிரிகள் பாதுகாப்பாக ஓட்டுகிறார்கள் விபத்துகள் சொற்பமாக இருந்தாலும் எப்போதாவதொன்று கண்ணில் படாதிருப்பதில்லை அடுத்த விபத்து வரை மனம் விட்டுப் போவதில்லை ஒரு விபத்தைப் பார்த்தால் அது பற்றி யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டேன் யார் மேல் தவறு, எங்கே மோதினான் எங்கே அடிபட்டது, பிழைத்தானா, ரத்தம் நிறைய இருந்ததா என்று கேட்டுத் தாம் பார்த்த விபத்துகளில் யாருக்கு எவ்வளவு ரத்தம் போனது, தலை எப்படி நசுங்கியது என்று தீவிரமாக விவரிக்கும் உச்சுக்கொட்டிகளிடம் பேச்சுக் கொடுக்க விருப்பமில்லை. ஒருநாள் நானே விபத்தில் சிக்கலாம் கை, கால், உயிர் இழக்கலாம் என் ரத்தத்தால் ஓர் அழுக்குச் சாலையின் முகம் சிவக்கலாம் இதை எழுதவைக்கும் மூளை தெரு கிரிக்கெட்டின் வழிதவறிய பந்து போல் சாலையில் உருண்டு ஓடலாம் அது வரை அவற்றைப் பார்ப்பதையாவது தவிர்ப்பேன் நான் அவற்றை எதற்கும் உருவகமாக்கவில்லை மிகவும் நிஜமான விசயங்கள் அவை அதனால்தான் விபத்துகள் என்னைக் கவர்வதில்லை. சுட்டிகள் www.writerpayon.com twitter.com/thepayon writerpayon.tumblr.com  []