[] 1. Cover 2. Table of contents பெரியாரின் பொதுவுடைமை புரிதல் பெரியாரின் பொதுவுடைமை புரிதல்   ஆர். பட்டாபிராமன்   pattabieight@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/periyar_communism மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/periyar_communism This Book was produced using LaTeX + Pandoc முன்னீடு பெரியார் பெரும் ஆளுமைகளுள் ஒருவராக உயர்ந்து நிற்பவர். தந்தை பெரியார் என தமிழகத்தில் பெரும் மரியாதையுடன் நன்றிபாராட்டி அழைக்கப்படுபவர். கடவுள் மறுப்பு- மத எதிர்ப்பு- பிராமண எதிர்ப்பு- ஜாதி ஒழிப்பு ஆகியவற்றில் அவரது கலகக்குரல் உரக்கக்கேட்டது. விளைவுகளுக்கு அஞ்சாமல் ஒளிவு மறைவின்றி ’அபிப்பிராயங்களை’ வெளிப்படுத்தியவர். இடமறிந்து என்பதெல்லாம் இல்லாமல் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் சரியென தனக்குப்படும் கருத்துக்களை வெளியிட்டவர் பெரியார் எனும் பேருரு மனிதர். பொதுவுடைமை- பொதுவுரிமை விவாதத்தை கூர்மையாக நடத்தியவர் பெரியார். கம்யூனிஸ்ட்களுடன் தோழமையாக இருந்து விவாதத்தை மேற்கொண்டவர் - வேறுபட்டும் நின்றவர். கடும் விமர்சனங்களையும் செய்தவர் - தாங்கியவர். சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் பெரியாருடன் உடன் நின்றும் - வேறுபட்டும் விவாதம் நடத்தியவர்கள். சமீப ஆண்டுகளில் பெரியாரின் பொதுவுடைமை பார்வை குறித்த விவாதம் பொதுவெளிகளில் பரவலாக நடைபெறவில்லை. தமிழகத்தில் இன்று இந்துத்துவா எதிர்ப்பு கருத்தியல் போராட்டம் தீவிரப்பட்டு நிற்கும் நிலையில் இவ்விவாதம் எதிர் சக்திகளுக்கு உதவுவதாக அமைந்துவிடக்கூடாது என்கிற பொறுப்புணர்வும், எண்ணப்பாங்கும் மார்க்சியர்களுக்கு சற்றுக்கூடுதலாகவே இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி புத்தக காட்சியில் திராவிடர் கழக அரங்கு பெரியாரின் பொதுவுடைமை கருத்துக்களை திரட்டி மூன்று வால்யூம்களாக வெளியிட்டுள்ளது. சிங்காரவேலர் சிந்தனையாளராக அறியப்பட்ட தோழர் பா வீரமணி தொகுத்துள்ளார். ஆசிரியர் வீரமணி அவர்கள் முன்னுரை வழங்கியுள்ளார். தொகுப்பு என்பதால் பெரியார் பேசியவை எழுதியவை அப்படியே முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுவெளியில் மீண்டும் இவ்விவாதம் எழுவதற்கான தூண்டுகோலாக இத்தொகுப்புகள் அமைகின்றன. முகநூலில் சிலர் எழுதத் துவங்கிவிட்டனர். குறிப்பாக தோழர் அ.க.ஈஸ்வரன் தொடர்ந்து முகநூலில் எழுதிவந்தார். பெரியார் சமதர்மம், ஆகஸ்ட் 15 போன்ற தொகுப்புகளை தோழர் எஸ் வி ராஜதுரை 2000க்கு முன்னர் கொணர்ந்தார். சிங்காரவேலர் தொகுப்புகள், ஜீவா தொகுப்புகளும் வந்துள்ளன. தோழர் ஆனைமுத்து அவர்கள் கொணர்ந்த பெரியார் சிந்தனைகள் தொகுப்பும் 1974லேயே வந்தது. இவைகளிலிருந்து இளம் தலைமுறையினர் பெரியாரின் பொதுவுடைமை பார்வை குறித்து அவரது புரிதல் – அதன் மீதான விமர்சனங்கள் குறித்து விளங்கிக்கொள்ள இயலும். வடவர் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட சுதந்திர தமிழ்நாட்டில்தான் மனித சமத்துவ கொள்கைகளை தன் இஷ்டம் போல் அமுலாக்கமுடியும் என்பதை விடுதலைக்கு முன்னரும் பின்னரும் பெரியார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேற்கூறிய தொகுப்புகளிலிருந்து கூர்மையாக இன்றளவும் தேவைப்பட்டு நிற்கும் சில அம்சங்களை தொகுத்துக்கொண்டும், அவற்றிற்கு சமகாலத்திலும் பின்னரும் எழுந்த சில மார்க்சியர்களின் விமர்சனங்களையும் தர முயற்சித்துள்ளேன். கம்யூனிஸ்ட்கள் பொதுவாக பெரியாரின் பொதுவுடைமை சார்ந்த கருத்துக்களை கொச்சை பொருள்முதல்வாதம் ( Vulgar Materialism) என்றே வகைப்படுத்தினர். இப்படிச் சொல்வது தவறானது என பேசுவோரும் உளர். இவ்வாண்டு வெளிவந்துள்ள பெரியாரின் மூன்று வால்யூம்களிலிருந்து சில முக்கிய கருத்தாங்களும், வே ஆனைமுத்து அவர்களின் வால்யூம்களிலிருந்தும் சில அம்சங்களும் இங்கு தொகுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சிங்காரவேலர், ஜீவாவின் தொகுப்புக்களிலும் திராவிடர் இயக்கத்துடன் மேற்கொண்ட விமர்சன உரையாடல்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து சில குறிப்புகள் இங்கு இடம் பெற்றுள்ள விமர்சன குறிப்புகள் எனும் இரண்டாம் பகுதியில் எடுத்தாளப்பட்டுள்ளன. தோழர் எஸ் வி ராஜதுரை தொகுப்புகள் கம்யூனிஸ்ட்கள் மீதான விமர்சனங்களையும் பெரியார் மிகச் சரியானவர் என உயர்த்திப் பிடிக்கும் தொகுப்புகளாக இருக்கின்றன. தோழர் பி ராமமூர்த்தியின் புத்தகமான விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் முழுநீள திராவிட இயக்கம் பற்றிய ஆய்வு நூலாகும். அதிலிருந்து பொருத்தம் என நினைத்த பகுதிகள் எடுத்தாளப்பட்டுள்ளது. இந்நூலுக்கு ஆசிரியர் வீரமணி பதில் நூல் எழுதியுள்ளார். நிறப்பிரிகை பெரியார் தொகுப்பில் இடம் பெற்ற சில கருத்துக்கள் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளன. அதே போல் தோழர் கோவை ஞானியின் சில கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. சிந்தனையாளர் ராமகிருஷ்ண ராவ் திராவிடர் இயக்கத்தின் மீது கம்யூனிசத்தின் செல்வாக்கு என்கிற சிறு கட்டுரை ஒன்றிலிருந்து சில ஆங்கில வாசகங்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது. திரு சட்டநாதன் அவர்களின் உரையிலிருந்தும், நம்பி ஆரூரான் புத்தக அத்தியாயம் ஒன்றிலிருந்தும் கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் பரவலாக விவாதிக்கப்படும் வலுவான கருத்தாக்கங்களின் பிரதிபலிப்பை - தமிழ்நாட்டின் வளர்ச்சியின் பலனை கடந்த 60 ஆண்டுகளில் எச்சக்திகள் பெரும் ஈவாக அடைந்துள்ளன என்ற மதிப்பீட்டில்தான் பெறவியலும். அதற்கு வெளித்தெரியும் அரசியல் சொல்லாடல்களைத் தாண்டி பொருளாதார மேம்பாட்டு அம்சங்களை நுணுகிப் பார்க்கவேண்டிய தேவையிருக்கிறது. பலன்கள் பரவலாக வெகுமக்களை சென்றடைந்துள்ளதா- இல்லை சிலரிடம் செல்வக் குவிப்பை உருவாக்கியுள்ளதா என்பதும் பார்க்கப்படவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. பெரும் பக்கங்களை கொண்ட மேற் சொல்லப்பட்ட தொகுப்புக்களை- உள்ளார்ந்து முழுத்தொகுப்பையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை சிலரிடமாவது தூண்டுவதற்கு துணையாக இச்சிறு நூல் இருக்கும் என நினைக்கிறேன். - ஆர். பட்டாபிராமன் 17-9-2020 பகுதி 1 - பெரியாரின் பொதுவுடைமை புரிதல் பெரியாரியல்வாதிகள் அழுத்தமாக திரும்பத் திரும்ப காட்டும் அவரது மேற்கோள் ’பொதுவுடைமை என்பது சமபங்கு- பொதுவுரிமை என்பது சம அனுபவம்’ என்பதாகும். தனி உரிமையை முதலில் ஒழித்துவிட்டால், தனி உடைமையை மாற்ற அதிகப்பாடு தேவைப்படாது. முதலில் தனி உரிமை ஒழிப்பு வேலைத்திட்டம், அது பொதுவுடைமைக்கு இலகுவாக வழிவகுப்பதுடன் அதை நிலைத்து நிற்க செய்யவும் உதவும் என்பது பெரியார் அவர்களின் முன்மொழிவு. இங்கு ஜாதிகள் இருப்பதால் பொதுவுடைமைக்கு அதை ஒழிப்பது என்பது நிபந்தனையாக இருக்கவேண்டும் என அவர் அழுத்தமாக சொல்லி வந்தார். பார்ப்பனர்களும் மேல்ஜாதிகளும் ஒழிக்கப்படுவதே ’அரைப்பாக’ பொதுவுடைமை என அவர் வலியுறுத்தினார். இந்த ஒழிப்பு பொதுவுடைமைக்கு முன்னர் தேவைப்படுவதாக கருதிய வேலைத்திட்டத்தையே அவர் வைத்தார். பொதுவுரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை குறித்து அவருக்கு சந்தேகம் இருந்தது. அதை அவர் ஏற்கவும் மறுத்தார். பொதுவுரிமையில்லா பொதுவுடைமை அதிக உரிமை இருக்கிறவனிடமே மறுபடியும் அதிகாரத்தையும் போய் சேர்க்கும் என அவர் உறுதிபட தெரிவித்து வந்தார். ஆசிரியர் வீரமணி அவர்களும் இதையே தன் முன்னுரையில் ’சமதர்மத்தின் விளைச்சல், குலதர்மத்தின் அழிவின் மீதே ஏற்படும்’ என தெரிவித்திருக்கிறார். பார்ப்பனர் பணக்காரராக இருக்கிறார் என்பதை தலையாய பிரச்னையாக பெரியார் பார்க்கவில்லை. பார்ப்பனர் அல்லாத பணக்காரர்கள் போல்தான் அவர்களும் என அதை அவர் சமப்படுத்தினார். பணக்காரத்தன்மை கேடானதல்ல, தொல்லையானது- சாந்தியற்றது என்று பார்த்தார். ஆனால் ’பார்ப்பனர்’ ஆக உயர் மேல்ஜாதி உரிமைக்கொண்டாடுவதை அனுபவிப்பதை அவர் தலையாக எதிர்ப்பாக முன்வைத்தார். ’ஒரு பார்ப்பான் கூட மேல்ஜாதியாக இருக்கக்கூடாதென்பதே சுயமரியாதை’ என அவர் குடியரசில் (9-11-1946) எழுதினார். கார்ல் மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழாக்கம் செய்து 1931 அக்டோபர் துவங்கி குடியரசு இதழ்களில் வெளியிட்டது பெரியாருக்குரிய மிக முக்கிய சிறப்பு. சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் கட்டுரைகள் எழுத இடமளிக்கவும் செய்தார் பெரியார். ருஷ்யா குறித்தும் எழுதினார். டிராட்ஸ்கி, சக்லத்வாலா கருத்துக்களும் இடம் பெற்றன கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டதுடன் அதற்கு முன்னுரை ஒன்றையும் அவர் குடியரசில் எழுதினார். இரு ஜெர்மானியர்கள் எழுதி வெளியிட்டது என மார்க்ஸ் எங்கெல்சை அறிமுகம் செய்கிறார். ருஷ்யாவிற்கு முன்னர் இந்தியாவில்தான் புரட்சி வந்திருக்கவேண்டும். இங்குள்ள பார்ப்பன ஆதிக்கம், மத ஆதிக்கம் அதற்கு தடையாக இருந்துவிட்டது என்றும் பெரியார் கருத்துக் கொண்டிருந்தார். பிறவியிலேயே உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனியத்தையும் அதன் ஆதிக்கத்தையும் அழிக்கவேண்டியது எவ்வளவு முக்கியமோ, அது போலவே பணமுடையவன் உயர்ந்தவன் என்கிற தத்துவத்தையும் பணக்காரன் ஆதிக்கத்ததையும் அழிக்கவேண்டியது என்பதும் முக்கியமானதே என அவர் செப்டம்பர் 4, 1927 குடியரசில் எழுதியும் இருக்கிறார். ருஷ்யா விடுதலை அடைந்த விதம் என்ற கட்டுரையை அவர் 1-6-1930 குடியரசில் எழுதியிருந்தார். ருஷ்யர்கள் அனுபவத்தை விவரித்துவிட்டு நமக்கு தேவை என்ன என்பதை அதில் விளக்கியிருந்தார். இந்தியாவில் இரண்டுவித ஆதிக்கங்களை மத ஆதிக்கம்- அந்நிய ஆதிக்கம் ஒழிப்பது அவசியம். இவை இரண்டும் ஒரே அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் விஷயம் என்பதை கவனமாக பார்த்தால் புலப்படும் என்று தெரிவித்திருந்தார். அவரைப்பொறுத்தவரை மத ஆதிக்கமே அந்நிய ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்துக்கொண்டிருக்கிற விஷயம். எனவே முதலில் மத ஆதிக்க ஒழிப்பு அவசியம் என முன்வைத்தார். அப்படி மத ஆதிக்கத்தை ஒழித்துவிட்டால் பிறகு அந்நிய ஆதிக்கம் வலு குறைந்து தானாகவே ஒழிய ஆரம்பித்துவிடும் என்கிற முடிவிற்கு அவர் வந்திருந்தார். மதம்- அரசாங்கம்-பிரபுத்துவம் என்கிற மூன்றையும் அவற்றின் சேர்மானத்தையும் பெரும்பான்மை ஏழைகளை வருத்துவன என்று அவர் பட்டியலிட்டார். இதற்கு உதவும் ஆயுதங்களை கண்டறிந்து அவற்றை பிடுங்கவேண்டும் என்றார். கடவுள் தான் அந்த ஆயுதம் என தான் உணர்ந்ததை மற்றவர்க்கும் புரியவைத்தார். எனவே விடுதலை பெறவேண்டுமானால் கடவுளை ஒழிக்கவேண்டும் என முன்மொழிந்தார். குடியரசு (7-9-1930) பெரியாரின் ’சமதர்மமும் நாஸ்திகமும்’ என்கிற சொற்பொழிவை வெளியிட்டிருந்தது. ’வெள்ளைக்காரனை வைதால் பிரச்சனை தீர்ந்துவிடாது. அவன் கொள்ளைக்கும் கடவுள்தானே துணைபோகிறார். தர்மம் என்பது காலப்போக்கில் மாறும். இன்று கோயில் கட்டுவது தர்மம் எனில் பிற்காலத்தில் கோயில்களை இடித்து விக்கிரகங்களை உடைத்து பள்ளிக்கூடம், தொழிற்சாலை ஏற்படுத்துவது தர்மம் ஆகும். கடவுளை மறுக்கத் துணிந்தவனால்தான் தர்மத்தின் பெயரால் இன்று நடக்கும் கொடுமைகளை ஒழிக்க முடியும்’ என்பது அவர் உரையின் சாரமாக இருந்தது. நாகர்கோயிலில் சமதர்மம் குறித்து அவர் சொற்பொழிவாற்றினார் (குடியரசு 21-9 -1930). அக்கூட்டத்தில் சுயராஜ்யம் என பேசிவருபவர்களை சூழ்ச்சிக்காரர்கள் என பெரியார் விமர்சித்தார். மேல்ஜாதிக்காரன், பணக்காரன், முதலாளி, அதிகாரக்காரன், கூலிக்காரன் ஆகியோர் அப்படியே இருப்பதற்கான சூழ்ச்சி என்றார். சுயராஜ்யம் வந்தால், சட்டசபை தீர்மானம் போட்டால் தீண்டாமை போய்விடும் என நம்புகிறீர்களா என கூட்டத்தாரிடம் வினவினார். சட்டசபைக்கு பல்லாயிரம் செலவு செய்தால்தான் போகமுடியும் - என் போன்றவர்கள் போகமுடியுமா என்கிற எதார்த்தம் உணர்த்தினார். எல்லாவற்றையும் ஒன்றாய் போட்டு பங்கிட்டுக்கொள்ளத்தக்கதாகவோ அல்லது எந்த நிலையையும் யாரும் அடையத்தக்கதாகவோ உள்ள சீர்திருத்தமும் சுயராஜ்யமும் சுதந்திரமும்தான் நமக்கு வேண்டும் என அக்கூட்டத்தில் பெரியார் தெளிவுபடுத்தினார். அதேபோது இவை கிட்டும்வரை மூன்றாவதாக ஒருவன் இவர்களை மிரட்ட இருப்பதில் ஒன்றும் குடி முழுகிப்போய்விடாது. பிரிட்டிஷாரிடம் உள்ள அதிகாரத்தை உயர்ந்த ஜாதியார், ஜமீன்தார், மிராசுதார், வக்கீல், வட்டி வியாபாரி, சந்நியாசிகளிடம் வாங்கிக்கொடுக்கமுடியாது என்று கண்டிப்பாக மக்கள் சொல்லவேண்டும் என அவர் வாதாடினார். இச்சொற்பொழிவை கவனமாக பார்த்தால் அதிகாரமாற்றம் என வந்தால் அது பொது உரிமைக்குரிய சுயராஜ்யமாகவோ இருக்கவேண்டும் என்பதை பெரியார் விழைந்தார் என்பது புலப்படும். பிரிட்டிஷாரிடமிருந்து மேலும் அவர்களைவிடக் கொடுமைக்குரியவரிடத்தில் அதிகாரமாற்றம் கூடாது என அவர் நினைத்தார். தீமைகளை அழிக்கவேண்டுமானால் அவற்றின் காப்புகளையும் காவல்களையும் முதலில் நிர்த்துளியாக்க வேண்டும். அரசன், மதம், கடவுள் இவையெல்லாம் தீமைக்கு காவலாக இருப்பதால்தான் அழிக்க விரும்புகிறோம்- வேறு காரணமல்ல என குடியரசில் (5-2-1933 ) பெரியார் தெளிவுபடுத்தியிருந்தார். பொதுநலம் என்றால் என்ன எனக்கேள்வி எழுப்பிய பெரியார் அது கொடுமைப்படுத்துகின்ற கூட்டத்துக்கும் நன்மை என்பதாக இருக்கக் கூடாது- அதனால் பிரயோஜனமில்லை என்றார். சோம்பேறிகள் பலனை அடையக்கூடாதென்பதுதான் நோக்கமே தவிர எவரிடமும் குரோதமோ, வெறுப்போ , துவேஷமோ இல்லை என்பதையும் வெளிப்படையாக தெரிவித்தார். ஜாதி மத கடவுள், தேசம், அரசு ஆகிய அபிமானங்களால் யாதொரு பயனும் இல்லை. அவை போலியும் சூழ்ச்சியும் நிறைந்த ஏமாற்றுகள் என்றே பெரியார் கற்பித்துவந்தார். எப்படிப்பட்ட மதத்தை சிருஷ்டித்தாலும் அதற்கு ஒரு உபதேச கர்த்தாவை சிருஷ்டித்தாக வேண்டும். அக்கர்த்தாவிற்கு தெய்வீகத்தன்மை ஏற்படுத்தித்தான் ஆகவேண்டும். அவர் மூலமாக ஒரு வேதத்தை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அவ்வேதம் கடவுளால் அவருக்கு அருளப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அதை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை என்று சொல்லித்தானாக வேண்டும். பிறகு அந்தப்படி நடக்காதவனையோ அல்லது அந்த கர்த்தாவை ஒப்புக்கொள்ளாதவனையோ ’வையவோ’ ’கொலை செய்யவோ’ முயற்சித்தாக வேண்டும். இவ்வளவு மாத்திரம் அல்லாமல் அந்த வேதத்திற்கு சுயநலக்காரர்கள் சோம்பேறிகள் ஆகியவர்கள் தங்கள் நலத்திற்கு ஏற்ற மாதிரியாக செய்துகொள்ளும் கருத்தை எவனாவது மாற்றிச் சொன்னால் அது எவ்வளவு உண்மையாக இருந்தாலும், அவன் மீது பாய்ந்து தான் ஆகவேண்டும். இந்தப்படி தான் இதுவரை நடந்து வந்திருக்கிறது “. (திருவாங்கூர் சொற்பொழிவில் குடியரசு 26-2-1933) ருஷ்ய புரட்சி குறித்தும், அந்நாட்டில் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட பல முன்னேற்றங்களையும் பாராட்டி, பரிந்துரைத்து தமிழக மக்கள் மனங்கொள்ளத்தக்கவையே என பெரியார் பேசியும் எழுதியும் இருக்கிறார். அதே நேரத்தில் நமது நாட்டில், சமூகத்தில் செய்யவேண்டிய வேலைகள் என பார்க்கும்போது அங்கு ஏதும் தான் கற்றுக்கொள்ளவில்லை என்கிற அபிப்பிராயத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். “எனது அய்ரோப்பிய யாத்திரையிலோ, குறிப்பாக ரஷ்ய யாத்திரையிலேயோ நான் கற்றுக்கொண்டு வரத்தக்க விஷயமொன்றும் அங்கு எனக்குக் காணப்படவில்லை. ஆனால் நமது சுயமரியாதைக் கொள்கைகள் மிகவும் சரியானவை என்றும் அக்கொள்கைகளால்தான் உலகமே விடுதலையும் சாந்தியும் சமாதானமும் அடையக்கூடும் என்றும் தெரிந்தேன். இதுதான் அய்ரோப்பாவுக்குச் சென்று வந்தவன் என்கின்ற முறையில் சொல்லும் சேதியாகும்” (விருதுநகர் உரை கு.அ 12-3-1933) இதனை பெரியாரின் அதீதமான claim ஆகவே பார்க்க முடிகிறது. கம்யூனிஸ்ட் அறிக்கையில் அய்ரோப்பாவை கம்யூனிசம் எனும் பெரும் பூதம் ஆட்டிப்படைக்கிறது என்று இளம் மார்க்ஸ் எழுதியதே விமர்சனங்களுக்கு உள்ளாயிருந்தது. எதார்த்தத்தை மீறிய உரிமைகோரலாக அவ்வரிகள் பார்க்கப்பட்டன. வட ஆற்காடு ஜில்லா சுயமரியதை மாநாட்டில் சமூக முன்னேற்றம் என்றால் என்ன எனக்கேள்வி எழுப்பிக்கொண்டு அதை விளக்கி விவரித்தார் பெரியார். குளிப்பது, மதக்குறியிட்டுக்கொள்வதா முன்னேற்றம் - புராணம் படிப்பது- கோயிலுக்கு போவதா? இவைதான் காலகாலமாக நடக்கிறதே? பாடுபடுபவன் பெண்டு குட்டிகளோடு பட்டினிக்கிடப்பதும் சோம்பேறி சொகுசாக வாழ்வதையும் ஒழிப்பதுதான் சமூக முன்னேற்றம் . ”பறையன் என்றால் என்ன- சதா கஷ்டமான வேலையை செய்யவேண்டியவன். பார்ப்பான் என்றால் சரீரத்தால் வேலையே செய்யக்கூடாது. இதற்காகத்தான் ஜாதி பிரிக்கப்பட்டிருக்கிறது. சமூகம் முன்னேற பொருளாதாரமும் அரசியலும் அவசியமல்லவா?.. வேடிக்கையாக புராண முட்டள்தனத்தையும், பார்ப்பன சூழ்ச்சியையும் பேசிக்காலம் கழிப்பதே சுகம் - அதுவே இயக்க வேலையானால் சுய மரியாதை இயக்கம் அழிந்துபோவதே மேலான காரியம் என்று சொல்லுவேன். அரசியலையும் பொருளாதாரக் கொடுமையையும் பேசுவதே குற்றமான காரியம் என சில தோழர்கள் நினைத்தால் அது வீண் பயங்காளித்தனமேயாகும். .. அப்படி பேசும்போது பயங்காளிகளுக்கும் சுயநலக்காரர்களுக்கும் ரஷ்யா ஞாபகம் வந்து விடுகிறது , இது பைத்தியக்காரத்தனமாகும் ” ( கு அ 14-5-1933) ஜமீன்தார் அல்லாதோர் மாநாடு ஒன்றில் அவர் ஆற்றிய சொற்பொழிவை குடியரசு 27-8-1933ல் வெளியிட்டிருந்தது. மனிதச் சமுகத்துக்கு உள்ள தரித்திரத்திற்குக் காரணம் செல்வவான்களேயாகும். செல்வவான்கள் இல்லாவிட்டால் தரித்திரவான்கள் இருக்க மாட்டார்கள். மேல்வகுப்பார் இல்லாவிட்டால் கீழ்வகுப்பார் இருக்கமாட்டார்கள். ஆகவே இம்மாதிரி அல்லாதவர் மாநாடு கூட்டவேண்டும். ஜமீன்தார் பதவியினர் பிரிட்டிஷாருக்கு சவுகரியம் செய்து எதிர்ப்புகளை அடக்க காட்டிக்கொடுத்து வந்தவர்கள். மற்றபடி என்ன யோக்கியதை? தேசத்திற்கு மனித சமுகத்திற்கு அதனால் என்ன பலன்? சர்க்கார் லைசென்ஸ் பெற்ற கொள்ளைக்கூட்டத்தார் இவர்கள் என பெரியார் கடுமையாக சாடியிருந்தார். இலேவாதேவி என்பது சட்டப்படி கொடுமைப்படுத்தி கொள்ளையடிப்பதே. ஜமீன் தன்மை கூடாது. ஜமீன்தார் தன்மை விஷ ஜந்துக்கு ஒப்பாகும். ஆன்மா எனப்பேசும் கூட்டம், ஜமீன்தார்கள், இலாவாதேவிக்காரர்கள் என மூன்றும் இருந்தால் அங்கு எப்படி ஜனநாயகம் வரும் என பெரியார் வினவினார். குடியரசு 10-9-1933 ல் பொதுவுடைமை கணக்குப் பிரச்சனை என விளக்கம் ஒன்றைக் கொடுத்திருந்தார் பெரியார். பொதுவுடைமை கட்சியின் இலட்சியம் உலகம் பூராவும் ஒரு குடும்பம்- உலகமக்கள் சகோதரர்கள் என்பதாகும். எனவே உலகம் குடும்ப சொத்து - அனைவருக்கும் சரிபாகம் என பெரியார் விளக்கம் சென்றது. பொதுவுடைமை எந்தமதக் கொள்கைக்கும் விரோதமானதல்ல. ஆஸ்திகத்திற்கும் விரோதமானதல்ல. மகாத்மாக்கள் இக்கொள்கையை வெறுக்க முடியாது. ஆனால் அரசர், பாதிரி, குருமார், முதலாளி, ஜமீன், மிராசு, மேல் சாதிக்காரன் பார்ப்பான் அகியவர்களுக்கு வேண்டுமானால் ஆட்சேபனை இருக்கலாம். இவர்களுடைய ஆட்சேபனைகளை நாம் இலட்சியம் செய்யவேண்டாம் எனபெரியார் அறிவுறுத்தியிருந்தார். பெரியார் தேவகோட்டையில் சமதர்மம் பற்றி செப்டம்பர் 9 1935ல் சொற்பொழிவை நல்கியிருந்தார். அதில் சமதர்மம்- சோசலிசம்- பொதுவுடைமை என்கிற பதங்கள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக புரிந்துகொள்வதை விளக்குகிறார். நமது நாட்டின் தேவைக்கேற்ப தான் புரிந்து கொண்டதை எடுத்து வைக்கிறார். சமூகத்துறையில், பொருளாதாரத்துறையில் மக்கள் உயர்வு தாழ்வின்றி வாழ்தல் என்கிற புரிதலில் சமதர்மம் பற்றிப் பேசுவதாக சொல்கிறார். இங்கு பிறவி வேறுபாடுகள்- அதற்கான மத இணைப்பு அரசியல் பாதுகாப்பு இருப்பதை உணரவேண்டும். பிறவி காரணமாய் உயர்வு தாழ்வு உள்ள மதத்தில் சம்பந்தப்பட்டு, அம்மதம் பாமர மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும் அதை மாற்றாமல் அதை மாற்றுவதற்கு தகுந்த முயற்சி எடுக்காமல், மேல்நாட்டு சமதர்மம் பேசுவது பாலைவனத்தில் இருந்து சத்தம்போடுவது போலவேயாகும் என்கிற பார்வையைத் தந்தார். தோழர் சிங்காரவேலருக்கும், பொன்னம்பலத்துக்கும் சமாதானம் என்பதை குடியரசு 22-10-1933 தலையங்கமாக பெரியார் எழுதியிருந்தார். இயக்கக் கொள்கைகளை ஒப்புக்கொள்ளாதவர்களை சேர்த்தால் குழப்பமும், விரோதமும், மாச்சரியமும் நேர்கின்றன என்று சிங்காரவேலர் சொல்லியிருப்பதை சிறிதும் ஒப்புக்கொள்ள முடியாதென்றார் பெரியார். அரசாங்க சட்டத்தை மதித்து, அதற்குட்பட்டு கிளர்ச்சி செய்து காரியத்தை சாதிக்கக் கருதியிருக்கும் நாம், கொள்கைக்கு - திட்டத்திற்கு பாதகமில்லாமல் சம்மதித்து வருபவர்களை ஏற்றுக்கொள்வதால் காரியம் கெட்டுப்போகுமென்று பயப்படவேண்டுமா என்கிற கேள்வியை பெரியார் முன்வைத்தார். அதேபோல் பொன்னம்பலத்திடமும் மற்றொரு கேள்வியை அவர் முன்வைத்தார். பார்ப்பானை ஒழித்து, பணக்காரன் கையில் ஆதிக்கத்தை வாங்கிக்கொடுத்து, சுயமரியாதை இயக்கம் இருக்கின்றது என்று சொல்லுவதாலேயே, கஷ்டப்படும் மக்களுக்கு இவ்வியக்கத்தால் எவ்விதப் பலனும் ஏற்படாது என்கிற அபிப்பிராயத்தை தன் பதிலாக பெரியார் வெளிப்படுத்தினார். ஜவஹர்லாலின் பொதுவுடைமை என்கிற விமர்சன தலையங்கத்தை பெரியார் குடியரசு 21-6-1936ல் வெளியிட்டிருந்தார். நேரு பேசிவரும் அபேதவாதம் குறித்த முரண்பாடுகளையும், காங்கிரசில் வலது தலைவர்களுடன் அவர் ஒத்துப்போவதையும் பெரியார் குறிப்பிட்டிருந்தார். பூரண சுயேட்சை- பின்னர் அபேதவாதம் என பேசிவரும் நேரு தனது கவுன்சிலுக்கு முக்கால்வாசிப்பேர்களை அபேதவத எதிரிகளாகவே பார்த்து நியமித்துக்கொண்டிருக்கிறார். படேல், பிரசாத், மாளவியா, விஜயராகவாச்சாரியார், ராஜாஜி, சத்தியமூர்த்தி எனும் பெயர்களை பெரியார் பட்டியலிடுகிறார். ”இந்தியாவுக்கு சுதந்திரமில்லாமல் எப்படிப் பொதுவுடைமை வராதோ, அதுபோலவே இந்தியாவில் பார்ப்பானும், பறையனும், மேல்ஜாதியும், கீழ்ஜாதியும் ஒழியாமல், அழியாமல் சுதந்திரம் வரமுடியுமோ என்று கேட்கின்றோம்” என தன் வினாவைத் தொடுத்தார். அபேதவாதம் பேச்சுக்கு சிங்காரம்தான். ஆனால் ஜவஹர்லாலே எப்படி வரும், அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்கிறாரே என பெரியாரின் விமர்சனம் செல்கிறது. சமதர்மமும் முதலியாரும் என்கிற தலையங்கம் குடியரசு 22-11-1936ல் வெளியிடப்பட்டிருந்தது. நவசக்தி நவம்பர் 13ல் திரு வி க எழுதியதற்கு பதிலை பெரியார் தந்திருந்தார். ராமசாமி சமதர்மம், காந்தி சமதர்மம், நேரு சமதர்மம், ஜெர்மனி சமதர்மம் என பல சமதர்மங்கள் வார்த்தை- திட்டம் - செய்முறை வேறுபாடுகளுடன் போரிட்டு வருகின்றன. எந்த சமதர்மம் ஆனாலும் இடம், பொருள், ஏவல் பொருத்துத்தானே தவிர எல்லாவிடத்தும் எந்நேரமும் ஒரே மாதிரி கையாள்வதல்ல என பெரியார் பதில் உரைத்திருந்தார். ராமசாமி சமதர்மக்காரார்தான். அவரது சமதர்மம் கார்ல் மார்க்ஸ்- எங்கெல்சைப் பார்த்தோ, லெனினைப் பார்த்தோ ஏற்பட்டதல்ல. அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதுமல்ல. ராமாசாமியின் சமதர்மம் வயிற்றுப் பிழைப்புக்கோ, மேடைபிரச்சாரத்துக்கோ, தலைமை பதவிக்கோ, ஊர் மெச்சுதலுக்கோ ஏற்பட்டதல்ல என்கிற விளக்கத்தை அவர் தந்தார். ராமசாமி சமதர்மம் யாரை எதிர்பார்த்தும் இருக்காது. அவர் உள்ளவரை மறையாது. சமதர்மம் தெரிந்த ராமசாமிக்கு எப்போது எப்படி பிரச்சாரம் செய்வது எனத்தெரியும் என்கிற கடுமையான பதில் அவரிடம் வெளிப்பட்டது. குடியரசு 29-11-1936ல் உண்மையான நாணயமான சமதர்மக்காரர்கள் பணக்காரனுடன் போராடிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஜாதியை ஒழிக்கும் முயற்சியில், பார்ப்பானை, பார்ப்பனியத்தை ஒழிக்கும் காரியத்தில் ஈடுபடவேண்டும் என்றார் பெரியார். இங்கு இந்திய நிலைமைக்கேற்ப நடக்கவேண்டுமே தவிர, மேல்நாட்டைப் படித்துவிட்டு புத்தக பூச்சியாய் இருப்பது வீண் பிரயாசையாகும். பறையன், சக்கிலி, பிராமணன், சூத்திரன் உள்ள ஊரில் பொருளாதர சமதர்மம், மார்க்சிசம்-லெனினிசம் பேசுவது வெறும் வேஷமும், நேரக்கேடுமேயாகும். குடியரசு 25-3-1944ல் பொதுவுடைமையா பொதுவுரிமையா எது முதலில் என்ற விவாதத்தை பெரியார் எழுப்பினார்.. பொதுவுடைமை சமபங்கு என்றால் பொது உரிமை சம அனுபவம் என விளக்கினார். இங்கு ஜாதி இருப்பதால் பொது உடைமைக்கு முதலில் ஜாதிச் சண்டை துவக்கவேண்டியதாகும். குடியரசு 27-7-1946ல் அவரது சொற்பொழிவு இடம் பெற்றிருந்தது. மனித சமுதயத்தை ஒன்றுபடுத்த, சமதர்மம் தழைக்க மதங்கள் ஒழிக்கப்படவேண்டும். மதங்கள் மக்களை ஒன்றுபடுத்த சம்மதியா என்கிற தான் உணர்ந்த உண்மையை அவரது உரை வெளிப்படுத்தியது. நமது இயக்கமும் கம்யூனிசமும் என்கிற உரை 4-10-1951 விடுதலையில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் நமது இயக்கம் எந்த வகையிலும் கம்யூனிஸ்ட்களுக்கு எதிர்ப்பான இயக்கமல்ல- கம்யூனிஸ்ட்களின் மூலக்கொள்கைக்கு விரோதமான இயக்கமும் அல்ல என்றார். பொருளாதார சமத்துவம் என மட்டும் பேசி கடவுள், மத மூட நம்பிக்கைகள் பற்றிப் பேசாமல் அவர்கள் இருந்து வருகிறார்கள். அது ஒரே மதம் கிறிஸ்துவ மதம் என்கிற மேல்நாட்டுக்கு பொருத்தமாக இருக்கலாம். இங்கு பிறவியிலேயே பேதம் கற்பிக்கப்பட்டு மக்கள் பல சாதிகளாகப் பிரிந்து உயர் சாதி அனுபவிக்க, தாழ்ந்த சாதி உழைக்க என வைக்கப்பட்டுள்ளனர். எப்படி குளிர்நாட்டு உடை உஷ்ண நாட்டிற்கு பயன்படாதோ அதே போல் மேலைநாட்டிற்கு பொருத்தமான பொருளாதார சமத்துவக்கொள்கை இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேலை நாட்டு மக்கள் போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகிவிடுவோமானால் அப்புறம் கம்யூனிசம் முற்றிலும் பயன்படும். இதை உணர்ந்து கம்யூனிஸ்ட்கள் மக்களுக்கு முதலில் அறிவு பெருகச் செய்யவேண்டும் என அவர் அறிவுரை சென்றது. கம்யூனிஸ்ட்களின் கிளர்ச்சி நடந்தாலும் நடைபெறாவிட்டாலும் இந்த நாட்டிற்கு கம்யூனிசம் வரத்தான் செய்யும் அது ஒன்றுதான் உலக அமைதிக்கு மேம்பாட்டிற்கு உற்ற சாதனமாகும்.. பணக்காரத்தன்மைக்கு எளிதில் எதிர்ப்புக் கிடைக்கும்; பார்ப்பனீயத்திற்கு எதிர்ப்புக் கிடையாது. இந்த நாட்டில் இது ஒரு பெரிய கஷ்டம். ஆதலால் சுலபமானதை முதலில் செய்துகொண்டு பிறகு கஷ்டமானதை செய்து கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். கம்யூனிசத்தை நாம் ஏற்பதில் தவறில்லை. இதுதான் மக்களின் நல்வாழ்விற்கு வழி. என்றைக்காவது உலகம் அங்கு சென்றுதான் நிற்கும், அதுவும் சீக்கிரம் சென்று நிற்கும் என மிகுந்த நம்பிக்கைவைத்த உரை ஒன்றை பெரியார் தந்ததை நாம் பார்க்க முடியும். II தொழிலாளி குறித்து அவர் அவ்வப்போது எழுதி வந்தார். அவர்களின் கூட்டங்களில் உரையாற்றவும் செய்தார். தொழிலாளி யார் என்கிற வரையறையைக்கூட அவர் 90 ஆண்டுகளுக்கு முன்னர் தந்துள்ளார். அந்த வரையறைக்குள் வராத அனைவரையும் அவர் கூலிக்காரன் என்றே வரையறுத்தார். “ தொழிலாளி என்பவன் நாட்டின் நன்மைக்காக ஒரு தொழிலைக் கற்று அந்த தொழிலைத் தானாகவே சுயேட்சையுடன் செய்து, அதன் பலன் முழுவதையும் தானும், தன் நாட்டு மக்களும் அடையும்படியான முறையில் தொழில் செய்பவன்தான் தொழிலாளி” மேற்கூறிய விளக்கத்தை அவர் 1925 முதல் சொல்லிவந்தார். குடியரசு 30-5-1926ல் இவ்விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. முதலாளி சொல்படி வேலை செய்பவனை தொழிலாளி என்றோ அவர்கள் அமைப்புகளை தொழிலாளர் அமைப்பு என்றோ ஏற்க முடியாது என்கிற ’அபிப்பிராயம்’ அவரிடம் இருந்தது. அதை தன் கருத்தாக சொல்லியும் எழுதியும் வந்தார். அதனை கூலிக்கார இயக்கம் என பெயரிட்டு அழைக்கவேண்டும் என்றார். சுயத்தொழில் மூலம் கற்ற தொழிலை நாட்டின் நன்மைக்கும் தங்கள் நன்மைக்கும் பயன்படுத்தும்போதே தொழிலாளரால் முன்னுக்கு வரமுடியும் என அவர் நினைத்தார். போராடுவதால் கூலியை கொஞ்சம் கூடக்கொடுத்துவிட்டு தன் பொருளின் விலையை ஏற்றி இலாபத்தை பார்த்துக்கொள்வான் முதலாளி. எனவே இது ஒருவகைப்பட்ட கூட்டுக்கொள்ளை என்கிற ’அபிப்பிராயத்தை’ அவர் வெளிப்படையாக தெரிவித்தார். தொழிலாளர் இயக்கம் என பேசும்போது அவர் பல எச்சரிக்கைகளை செய்தார். வெளியார் தலைமை என்பதை அவர் சாடினார். முதலாளிகளோ, எஜமானர்களோ தலைமைக்கு வராமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்றார். அதேபோல் அரசியல்வாதிகள், தேசத்தலைவர்கள் என சொல்லி வருவோர் குறித்தும் அவர் எச்சரித்தார். தொழிலாளர் தங்களுக்குள்ளாக ஒரு தலைவரை எடுத்துக்கொள்ள யோக்கியதையும் ஆசாமியும் இல்லையானால் தொழிற்சங்கம் வேண்டாம் என்றிருப்பதே நலமானது என்பதே அவரது அபிப்பிராயமாக இருந்தது. தொழிற்சங்கத்தில் நுழையும் அரசியல் தலைவர்களை கசாப்பு கடைக்காரர்கள் என பெரியார் குடியரசில் (ஏப்ரல் 18, 1926) விமர்சித்திருந்தார். தொழிலாளர் சட்டமன்றங்களில் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பும் அளவு விழிப்படையவேண்டும் என அவ்வாண்டுகளில் அவர் வற்புறுத்தினார். தொழிலாளர் சங்கத்தில் தனக்கு பெரிய விருப்பமிருப்பதில்லை என்பதையும் அவர் வெளிப்படையாகவே எழுதினார். மூட்டைத்தூக்கும் தொழிலாளி தன் முதலாளியிடம் தனியாக போய் கூலி சற்று கூடக்கொடு எனக் கேட்கிறான். தனியாக கெஞ்சுவதற்கு பதிலாக 4 பேர் சேர்ந்து கெஞ்சுவதை தொழிற்சங்கம் என்கிறார்கள் என்று கடுமையாகவே தன் பார்வையை முன்வைத்தார் பெரியார். குடியரசு மே 30 1926ல் மேற்கூறிய அவரது கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. தொழிலாளர் அரசியல் கட்சியில் சேரக்கூடாது என்பது அவரது அபிப்பிராயமாக இருந்தது. அரசியலில் உழைக்கின்றவர்களை தொழிலாளர் தங்களின் தலைவராக்கிக்கொள்ளக்கூடாது என அவர் அறிவுறுத்தினார். அப்போது தலைவர்களாக இருந்த சிலரின் பெயர்களை சொல்லி இவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் என்ன சம்பந்தம் என அவர் வினவினார். இக்கருத்துக்கள் செப்டம்பர் 4, 1927 குடியரசில் இடம் பெற்றன. அப்போது உயர்ந்த தலைவர்களாக இருந்த அன்னி பெசண்ட், சீனிவாச அய்யங்கார், சத்தியமூர்த்தியையும் கூட இக்கேள்விக்கு அவர் உட்படுத்தினார். சுயராஜ்யம் யாருக்கு எனும் கேள்வியை அவர் தென்னிந்திய இரயிவே கம்பெனி தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் போது எழுப்பினார். அக்கம்பெனி 14000 ஊழியர்களை வேலையிலிருந்து வெளியேற்றியதை அவர் கண்டனம் செய்தார். ஏறத்தாழ 50000 மக்கள் பாதிப்பு அடைந்துள்ளதை குடியரசில் (8-7-1928) சுட்டிக்காட்டினார். நாடே இதற்கு என்ன செய்யப்போகிறாய் என கேள்வி எழுப்பினார். போலித்தலைவர்களே கவலையுள்ளதா உங்களுக்கு எனக்கேட்டார். அதே நேரத்தில் தொழிலாளர் தங்களுக்கு நேரும் நெருக்கடியை பொறுமை, அகிம்சை முறையை கையாண்டு புத்திசாலித்தனத்துடன் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்கிற அறிவுரையையும் பெரியார் நல்கியிருந்தார். சிறைதள்ளப்பட்டதால் அஞ்சாதீர்கள் எடை கூடி வருவீர்கள் என அவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளை தந்தார். போலீசாருடன் மோதலில் தொழிலாளர் ஈடுபட வேண்டாம். போலீசார் தங்கள் உயர் அதிகாரிகள் சொல்கேட்டு நடக்கவேண்டியவர்கள், இல்லையெனில் அவர்கள் வேலைபோய்விடும் என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்றார். அவர் சென்ற ஊர்களில் எல்லாம் இரயில்வே தொழிலாளர் வேலை நீக்கம்- போராட்டம் குறித்தும் அதற்கு மக்கள் ஆதரவை கோரியும் பேசிவந்தார். காலில் விழுந்து வேலைக்கு திரும்புவர்களால் எதுவும் தீராது. சுயமரியாதையுடன் நின்று போராடுபவர்களாலேயே வெற்றியை உருவாக்க முடியும் என தொழிலாளர்களை உறுதியாக போராட உரமேற்றினார். வேலைநிறுத்தம் தொடர்பாக தூதுபோன சிலரை உள் உளவுக்காரர்கள் என அவர் தாக்கவும் செய்தார். பெரும் சம்பளக்காரர்களை எப்போதும் தாக்கியே பேசியும் எழுதியும் வந்தார் பெரியார். நிர்வாக செலவின் வீக்கம் குறித்தும் , நாணயம் தவறுவோர், லஞ்சம் குறித்தும் கடுமையான தாக்குதலை தந்தார். பரிசுத்தமும் நேர்மையும் உத்தியோகங்களில் வருவதற்கு சம்பளமுறையை மாற்றவேண்டியது அவசியம் என்றார். 1930ன் கணக்கில் குறைந்தது ரூ 20-25 என்பது வருவாயாக இருந்தால் அதிக வருவாய் ரூ1000-1250க்கு மேல் போகக்கூடாதென்றார். உத்தியோகதஸ்தர்களின் எண்ணிக்கையை இருப்பதில் பாதியாக்கிவிடுவதே சரியானது. மக்களிடம் நாணயமும் ஒழுக்கமும் ஏற்பட தனி ஒற்றர் சி அய் டி இலாகா ஏற்படுத்தப்படவேண்டும். அப்படி ஒன்றை ஏற்படுத்தி முறையாக கவனிக்க ஆரம்பித்தால் 10 ஆண்டுகளில் மக்கள் சீரடைந்து உத்தியோகஸ்தர்களின் சீர்கேடும் நாணயத்தவறுதலும் லஞ்சமும் ஒழிந்துவிடக்கூடும் என்கிற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியிருந்தார். சம்பளக்கொள்ளை குறித்து அவர் நிறையவே பேசியுள்ளார். உலகில் வேறு எங்கும் இல்லாத சம்பளக்கொள்ளை இந்தியாவில் என்கிற அபிப்பிராயம் அவரிடத்தில் இருந்தது. வைஸ்ராய்க்கு மாதம் ரூ 20ஆயிரம், கவர்னர்களுக்கு 10000, மாகாண மந்திரிகள் 6500, 5500 என வாங்குவதை அவர் பகல் கொள்ளை என்றார். அன்றிருந்த விலையில் பட்டணம் படி அரிசியை கணக்கிட்டு 5 பேர் குடும்பத்திற்கு ரூ 6 தான் தேவை என்றார். வாழ்வதற்கு சராசரி ரூ 20 போதாதா எனக்கேட்டார். நூறு, இருநூறு, அய்நூறு, ஆயிரம் சம்பளமெல்லம் எதற்கு. ஜீவனக்காரர்களில் 80 சதம் 10-16 மணி உழைத்து ரூ 30க்குள்தான் வாழ்கிறார்கள் என்ற ஒப்பீட்டையும் பெரியார் தந்தார். தேசத்து மக்கள் வரியில் இப்படி பொதுநிர்வாகத்தில் பார்ப்பனர்களே இருந்து வருவதால் சம்பளகொள்ளையும் நடக்கிறது என்கிற முடிவிற்கு அவர் வருகிறார். பெரியார் ஆகஸ்ட் 25, 1935ல் சம்பளக்கொள்ளை என்கிற தலையங்கத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க வேண்டுமெனில் அரசாங்கத்தார் அரசாங்க சம்பளங்களைக் குறைத்தால் அல்லாது சாத்தியமில்லை என எழுதினார். அதேபோல் நிர்வாக உத்தியோகங்களையும் குறைக்க வற்புறுத்தினார். இதில் மீதமாவதைக்கொண்டு தொழிற்சாலைகளை ஏற்படுத்தி அநேகருக்கு வேலை தரலாம் என்கிற ஆலோசனையையும் அவர் முன்வைத்தார். இப்படி சொல்வதால் விமர்சனம் வரலாம் என்பதையும் அறிந்திருந்த பெரியார் அதற்கும் தன் பதிலைத்தருகிறார். “ இப்படி சொல்வதால் அதிகச் சம்பளம் வாங்கிப் பிழைக்கும் நபர்களுக்கு நாம் விரோதியாகக் காணப்படலாம். ஆனால் பாமர ஜனங்களுக்கு துரோகியாக ஆகி, இக்கூட்டத்தார்களின் முகமனுக்கு ஆளாகி, தேச பக்தராவதைவிட ஈனமான காரியம் வேறு இல்லை என்று கருதுவதால் நாம் நமக்கு சரி என்று பட்டதையும் இன்று முக்கியமாய் செய்யப்படவேண்டிய காரியம் இன்னது என்று உணர்வதையும் வெளிப்படுத்தி வருகிறோம்” இன்று நிலவும் சூழலில் பல்வேறு பிரிவை சார்ந்தவர்களுக்கும் அரசாங்க வேலைவாய்ப்பு மேம்பட்ட நிலையில் பெரியாரின் இப்பார்வையை எப்படி விளங்கிக்கொள்வது என்கிற கேள்வி எழாமல் இல்லை. அவரின் சம்பளக்கொள்ளை என்கிற துணிச்சலான பேச்சை இன்று அவரைப்போல் உரக்க யாராலும் பேசமுடியுமா என்பதும் உணரப்படவேண்டும். பள்ளிக்கூட உபாத்தியாயர்கள் அனுபவிக்கும் லீவு நாட்கள் குறித்தும் அவரிடம் விமர்சனம் இருந்தது. அவர்களின் சம்பளக்கொள்ளை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அதேபோல் வக்கீல் என்கின்ற ஒரு கூட்டம் அடிக்கும் கொள்ளைக்கும், அவர்களால் ஏற்படும் அயோக்கியத்தனத்திற்கும் ஏதாவது ஒரு எல்லை காட்ட யாராலாவது முடியுமா என்கிற காட்டமான விமர்சனத்தை அவர் குடியரசில் (9-4-1933) முன்வைத்தார். கொச்சி, திருவாங்கூர், திருநெல்வேலி தொழிலாளர் கூட்டங்களில் அடுத்தடுத்து பெரியார் உரையாற்றியதை குடியரசு 1-10-1933 தொகுத்து வெளியிட்டிருந்தது. தொழிலாளர் என்றாலே சரீரத்தினால் பாடுபட்டு வேலை செய்து ஜீவனம் செய்யும் மக்களாவர் என்கிற எளிய விளக்கத்தை பெரியார் அக்கூட்டங்களில் தந்தார். காலம் காலமாக சொல்லப்படும் தர்மராஜ்யம், ராமராஜ்யம், சத்தியகீர்த்தி ராஜ்யம் ஆகிய காலங்களிலும் அதர்மம், தரித்திரம் கஷ்டம் இருந்துள்ளன. மாற்றுவதற்காக தோன்றிய பெரியவர்கள் எல்லாம் தோல்வி அடைந்துள்ளனர். கஷ்டத்தின் காரணம் என்ன என்பதைக் காணாமல், அஸ்திவார கோளாறுகளை சரி செய்யாமல் மேலும் மேலும் கட்டியதால் அவை இடிந்து வீழ்கின்றன. பெரியார் பட்டறிவில் அவர் பாணியில் எளிய வடிவில் வரலாற்று பொருள்முதல்வாத சிந்தனைகளை இவ்வாறு முன்வைக்கிறார். தொழிலாளர்களின் துன்பம், அடிமைத்தனம் கவலை குறை நீங்கவேண்டுமானால் முதலாளித்தன்மை இல்லாமல் போயே ஆகவேண்டும். வேறு எப்படிப்பட்ட காரியம் செய்தாலும் தரித்திரம், இழிவு ஒழியாது என்கிற விளக்கத்தை பெரியார் உரையில் காணமுடிகிறது. எந்த காரணத்தை முன்னிட்டும், பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும், பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர் கிளர்ச்சியின் முக்கியத் தத்துவமாய் இருக்கவேண்டும். கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். முதலாளி ’விலையை’ அதிகமாக்கிவிட்டு உயர்த்தப்பட்ட கூலியை பிடுங்கி விடுவான் என்பதையே இக்கூட்டங்களில் பெரியார் வலியுறுத்தினார். புரட்சியின் தலையங்கத்தில் (25-3-1934) தொழிலாளிவர்க்க விடுதலைக்கு முதலாளி வகுப்பின் ஆதிக்கம் ஒழியவேண்டும் என பெரியார் எழுதினார். ஜாதி, மத, கடவுள் மற்றும் தேசாபிமானத்தால் தொழிலாளர்களுடைய முற்போக்கு கிஞ்சிற்றும் ஏற்படுவதற்கு வழியில்லை என்பதே தான் கண்டறிந்த உண்மை என பெரியார் அதில் விளக்கியிருந்தார். மேதினம் குறித்து புரட்சி இதழில் (29-4-1934) தலையங்கம் ஒன்றை பெரியார் எழுதியிருந்தார். தியாகம் இல்லாது நல்வாழ்க்கை அமையாது என்பதே அதில் சாரமாக சொல்லப்பட்டிருந்தது. லோகாயுத முரண் என்பதை அவர் புரிந்தகொண்டவிதத்தில் சொல்கிறார். கஷ்டமில்லாமல் சுகமில்லை. சுகமும் கஷ்டமில்லாமல் கிடைப்பதில்லை என்பதுதான் சமதர்மதத்துவத்தின் முரண்பாடு- இதை அலட்சியம் செய்ய முடியாது. உடலுக்கு உணவு, அறிவிற்கு கல்வி வேண்டுமெனில், ’தியாகம் அன்னியில்’ அடையமுடியாது என அதில் பெரியார் விளக்கி சென்றார். பெரியாரின் சமதர்ம சொற்பொழிவொன்றை புரட்சி இதழ் (10-6-1934) வெளியிட்டிருந்தது. அச்சொல் சகஜமாகி போயுள்ளது என்றே பெரியார் உரையைத் துவங்கினார். சமதர்மம் என்றால் சாதாரணமாகப் பாரபட்சமற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற, அதாவது உயர்வு தாழ்வு இல்லாத நிலை என்பதாகும். பிறமக்கள் உழைப்பதினால் விளையும் பயனை தட்டிப் பறித்து அனுபவிக்க வேண்டும் என்னும் சூழ்ச்சிமிக்க சோம்பேறிகளுக்கு சமதர்மம் கசப்பாக,வெறுப்பாக இருக்கலாம். மற்றபடி உடலை கசக்கிப் பிழிந்து வேலை செய்யும் பாட்டாளிக்கு இந்தக் கொள்கை ஒரு நாளும் விரோதமானதல்ல. பிறருடைய உழைப்பில் வரும் படோடோப வாழ்க்கை பெருமையானது கண்ணியமானது என்பது முடநம்பிக்கை- அது ஒழியவேண்டும் என பெரியாரின் உரை அமைந்தது. குடியரசு 28-4-1935 அறிக்கையில் மேதினத்தை எவ்வாறு கொண்டாடவேண்டும் என்பதை பெரியார் வேண்டுகோளாக வைத்தார். தேசம், மதம் , ஜாதி என்கின்ற தேசிய உணர்ச்சிகளை மறந்து உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமூகமாய் ஒன்றுபட்டு எல்லாத் தேச மத ஜாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படி செய்யவேண்டும் என்றும், தொழிலாளர் சமதர்ம ராஜ்யம் ஏற்படவேண்டும் என்றும் பிரச்சாரம் செய்யும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பதாக அவரின் வேண்டுகோள் இருந்தது. மே விழா, மன்னர் ஜீபிலி விழா என்ற தலைப்பில் குடியரசு 12-5-1935 தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. இரண்டு விழாக்களும் கொண்டாடப்பட்டதை பாராட்டுகிறார் பெரியார். இங்கு காங்கிரஸ் எதிர்ப்பை மேலோங்க செய்தும் பிரிட்டிஷ் ஆதரவை காட்டியும் அவர் எழுதியிருப்பதை உகந்ததாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமதர்மவிழா அரசரின் தங்க விழா என்றெல்லாம் இணைத்துப் பேசியது காங்கிரசை வெறியேற்றுவதாக இருந்திருக்கலாமே தவிர சரியானவை என ஏற்கமுடியவில்லை. காரைக்குடியில் 1935 மேதின சொற்பொழிவை பெரியார் நல்கினார். இந்தியாவில் தொழிலாளி, முதலாளி- எஜமான், அடிமை போன்றவை பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மேதின விழாக்களை இதை புரிந்து கொண்டாடவேண்டும் என அவர் கருதினார். பார்ப்பான், பஞ்சமன் என்கிற ஜாதிப்பிரிவுகள் அழிக்கப்படவேண்டும் என்கின்ற நிலையில் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்படவேண்டும் என்கின்ற கருத்தோடு கொண்டாடப்படவேண்டியதாகும். வகுப்பு போர் (வர்க்கத்தை அப்படி சொல்கிறார்) என்பதற்கு பதிலாக ஜாதிப்போர்தான் ஏற்படவேண்டும். ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத்தன்மையையும் அழிக்காமல் வேறு எந்த வழியிலாவது முதலாளி தொழிலாளி தன்மையை மாற்றுவது முடியுமா என்கிற வினாவை அக்கூட்டத்தில் எழுப்பியிருந்தார் பெரியார். இப்படி பேசாமல் ஏழைக்கு- தாழ்த்தப்பட்டவர்க்கு பாடுபடுகிறேன் என யாராவது சொன்னால் அவரை யோக்கியர் என சொல்லிவிட முடியாதென்றார், இந்துமதமும்- ஜாதிப்பிரிவும் முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்பட்டதாகும் என காரைக்குடி 1935 மே கூட்டத்தில் பேசுவது காலமுரண் கொண்ட வரலாற்று பிழையாகவே படுகிறது. தோன்றியுள்ள முதலாளித்துவமும் , இருந்து வருகிற இந்துமத ஜாதிப்பிரிவுகளும் ஒன்றுக்கு ஒன்று அனுசரித்து துணையாக நிற்கின்றன என்றால் புரிந்துகொள்ளலாம். பெரியார் பேசும் அந்த அளவுகோலால் ஜாதிப்பிரிவுகளற்ற மதங்கள் எனப்படும் கிறிஸ்துவ- இஸ்லாமிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் முதலாளித்துவ முறையை நம்மால் விளக்கமுடியாமல் போய்விடும். திராவிடர் கழகம் தொழிலாளர் நிறுவனமே என்கிற திருவல்லிக்கேணி உரை குடியரசு 6-7-1946ல் வெளியானது. தொழிலாளி என்கின்ற பதத்துக்கு அர்த்தம் என்ன என வினவி வேலை செய்கிறவன் என்று பதில் தந்தார் பெரியார். ஆனால் பிறருக்கு தொண்டு செய்து மனு சாஸ்திரப்படி, தொழிலாளியாகவே வாழ்பவர்கள் தொழிலாளி என அழைக்கப்படுகிறார்கள். அந்தக் கருத்தில் பார்த்தால் திராவிடர்களாகிய யாவரும் தொழிலாளிகள் அல்லவா. வண்டி ஓட்டுகிறவன், வீதி கூட்டுகிறவன், கக்கூசுக்காரன், வண்ணார், நாவிதர், குயவன், உழுபவன், விதைப்பவன், தச்சன், கொல்லன், சக்கிலி, பறையன், செக்கு ஓட்டுகிறவன், நெசவு செய்பவன் - சரீரத்தால் உழைத்து வாழ்வுக்கு மாத்திரம் சம்பாதித்து அன்றாட வரும்படிக்கு நிற்கும் யாவரும் தொழிலாளர்களே. இம்மாதிரி தொழிலாளர்கள் யார்? பிராமணர்களா சத்திரியர்களா- சூத்திரர் என்றே அழைக்கப்பட்டவர்தானே. எனவே தான் திராவிட இயக்கம் தொழிலாளர் இயக்கம் எனச் சொல்கிறேன் என்கிற விளக்கத்தை தந்ததுடன் நாம் சூத்திரர் சங்கம் என்றுதான் வைத்திருக்கவேண்டும்- அது இழிவாக கருதப்படுவதால் தொழிற்சங்கம் என்கிறோம் என சொல்லிச் செல்கிறார். குடியரசு 18-1-1947 தலையங்கத்தில் தொழிற்சங்க செயல்பாட்டில் அவர் காணும் குறைகளை சுட்டிக்காட்டி விமர்சித்தார். கம்யூனிஸ்ட்களும் சோசலிஸ்ட்களும் தொழிற்சங்கங்களில் போட்டிபோட்டு உட்புகுந்து தொழிலாளர்களுக்கு இடையூறு செய்கின்றனர். தொழிற்சாலை சச்சரவுகளுக்கு காரணம் இவ்விரு சங்கத்தாரும் செய்துகொள்ளும் தகராறுதான் என்று கூறலாம். கம்யூனிஸ்ட்கள் கூலியை உயர்த்துகிறோம், வேலை நேரத்தை குறைக்கிறோம் என ஆசை வார்த்தைகளை தருகின்றனர். இதை நம்பி தொழிலாளர்களும் போராட்டத்தில் இறங்குகின்றனர். அதேபோல் அக்டோபர் 18, 1947 தலையங்கத்தில் அரசியல் கட்சிகளில் நுழைந்து ஏமாறாதீர் என எச்சரித்தார் பெரியார். நீங்கள் அரசியலில் சேராதீர். அரசியல் உங்களிடம் வரட்டும் என்றார். இதனை அவர் விளக்கி சொல்லவில்லை. கிடைக்கும் ஒரு விளக்கம் அரசியல்காரர்கள் உங்களை தலைவர்களாக கொள்ளட்டும் - அந்த நாளை எதிர்பாருங்கள் என்பதாக இருக்கிறது. சங்கங்களுக்கு தொழிலாளரே தலைவராகட்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். பெரியாரின் இறுதிப்பேருரை மரண சாசனம் என சொல்லப்படுகிறது. அதில் கம்யூனிஸ்ட்கள் கடவுளைப்பற்றி பேசாதது குறித்து விமர்சனம் செய்கிறார். ரஷ்யாவிலே கம்யூனிஸ்ட் இருக்கிறான் அவனுக்கு முதல்வேலை கடவுளை ஒழித்தான்; கோவிலை இடித்தான்; பாதிரியை வெட்டினான். இங்கே இருக்கிற கம்யூனிஸ்ட் என்ன பண்ணுகிறான் பொறுக்கித்தின்கிறான்; என்கிற விமர்சனம் அதில் வெளிப்படுகிறது. (வே ஆனைமுத்து தொகுதி பக் 2067) III முஸ்லீம்களின் விழா ஒன்றில் பொருளாதாரம் குறித்து பேச பெரியார் அழைக்கப்பட்டிருந்தார். அவர் பேசிய உரை குடியரசில் (18-1-1931) வெளியிடப்பட்டது. எளிய பண்டமாற்று முறை துவங்கி ஆலை உற்பத்திவரை அவர் விளக்கிவிட்டு பெரும்பான்மை மக்களுக்கு ஏழ்மையும் துயரும் ஏன் நீடிக்கிறது என்பதையும் அக்கூட்டத்தில் விளக்கியிருந்தார். நமது நாட்டு பொருளாதார வல்லுனர்கள் செத்த கைத்தொழில்களை உயிர்ப்பிக்கவேண்டும் என்கிறார்கள் என விமர்சித்தார். தக்களி நூல் தேசபக்தியாக கற்பிக்கப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார நிலைக்கு மதம், கடவுள், சடங்கு, பழமையில் பித்துக்கொண்ட தலைவர்களுமே காரணம். பெரும்பான்மை மக்கள் வயிராற உண்ண, இடுப்பு மறைய உடுத்த தடையாக இருப்பது மதம் , கடவுள், அடுத்த ஜென்மம் போன்றவைதான். அதிகமான அநாவசிய செலவுகள் இவற்றின் பெயரால் செய்யப்பட்டு பொருளாதாரம் வீணாவதை அவ்வுரையில் எடுத்துவைத்தார். சென்னிமலையிலும் அவர் பொருளாதாரம் குறித்து ஆற்றிய உரை குடியரசில் (5-7-1931) வெளியாகியிருந்தது. அவ்வுரையில் பொருட்படுத்தப்படவேண்டிய எளிய 4 கேள்விகளை எழுப்பினார். பொருளாதார கஷ்டம் நாட்டில் இருக்கின்றதா? இருந்தால் யாருக்கு இருக்கின்றது? ஏன் இருக்கின்றது? யாரால் இருக்கின்றது? என்பனவே அக்கேள்விகள். அதேபோல் புரியவைப்பதற்காக வேறு பொருளாதார முக்கிய பிரச்சனையையும் அவர் கேள்வியாக எழுப்பினார். தங்களை உயர் ஜாதியார், மேல்வருணத்தார், பாடுபடுவதற்கு உரிமையில்லாதவர்களென்று ஏற்பாடு செய்துகொண்ட கூட்டத்திற்கு பொருளாதார கஷ்டம் இருக்கின்றதா? ஜீவனத்திற்கு கஷ்டப்பட்டுக்கொண்டோ பசியுடன் கல்வி கற்க வழியில்லாமல் இருக்கின்றார்களா? பாடுபடுகிறவர்களுக்கும், பரமசாது மக்களுக்கும், எந்த காலத்திலும் பொருள் அற்றவர்களுக்கும் மட்டுமே கஷ்டம் இருக்கிறது என அவர் புரியவைத்தார். சமூகத்துறையில் உள்ள கட்டுப்பாடுகளை உடைக்கவைத்தால் ஒழிய, வேறு வழியில் பொருளாதாரத்துறையை சீர்திருத்துவதென்பது முடியாத காரியமாகும். பெரும்பான்மை இந்தியர்களுக்கு இப்படிப்பட்ட பொருளாதார கஷ்டம் இருப்பது என்பதே வருணாச்சார முறையாலே தான் என்பது தன் அபிப்பிராயம் என்றார். கோயில், மதம், சடங்குகள் பெயரால் கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறதே என கவலைப்பட்ட தலைவராக பெரியார் இருந்தார். கடவுள் மேல் பொறுப்பை போட்டுவிட்டு மாடுபோல் உழைக்கிறார்கள்- இந்த கடவுள் உணர்ச்சியை ஒழிக்கவேண்டும் என்று சொற்பெருக்காற்றினார் பெரியார். பொருளாதாரத்துறையில் நாடு முன்னேற வேண்டுமானால் அதன் அஸ்திவாரமான காரணங்களை எல்லாம் கவனிக்காமல் மக்களுடைய மதியீனத்தையும் பகுத்தறிவற்ற தன்மையையும் உபயோகித்துக்கொண்டு வெளிநாட்டுத்துணியை மறியல் செய்வதாலும், கதரை வாங்கிக்கட்டுவதாலும், கள்ளுக்கடைகளை மூடிவிடுவதாலும் பொருளாதாரத்துறையை சரிப்படுத்திவிடலாம் என்று சொல்வது ஒருநாளும் நாணயமானதோ, அறிவுடைமையானதோ, காரியத்தில் பயன்கொடுக்கக்கூடியதோ என்பதாக சொல்லிவிடமுடியாது என்கிற தன் கருத்தை அவர் குடியரசில் (13-9-1931) எழுதினார். இந்தியாவில் பொருளாதாரம் சீர்பட எடுக்கப்படவேண்டிய அவசிய நடவடிக்கைகள் எவை என்பதை அவர் வரிசைப்படுத்தினார். முதலாவது வருணாசிரம முறை ஒழியவேண்டும். இரண்டாவது மத சம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்படவேண்டும். மூன்றாவது கோயில், குளம், சடங்கு, சாத்தான், சனி விலக்கு ஆகிய எண்ணங்கள் அழிக்கப்படவேண்டும். பிறகு அரசு, ஜமீன்தார் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாகவேண்டும் என்றார். இதை குடியரசு தலையங்கம் செப் 13, 1931ல் பார்க்கமுடியும். தனது முதன்மையான திட்டங்களை தெளிவாக பேசிய, பெரியார் அரசு ஒழிக்கப்படுதல் என்று பேசும்போது அனார்க்கிசம் என்பதை அறிந்துதான் பேசினாரா என தெளிவில்லாமல் இருக்கிறது. அரசிற்கு பின்னால்தான் ஜமீன்தார் அவரால் இங்கு சொல்லப்பட்டுள்ளது. பொருளாதார மாற்றம் என்பதற்கான மேற்கூறிய செயல்களுக்கான திட்டத்தை அவர் மார்க்சியத்திடமிருந்து பெறவில்லை என்பது வெள்ளிடைமலை. அப்படி பெறுவது ஒன்றே பொதுவுடைமைக்கான ஒரே அறிவுப்பாதை எனவும் அவர் ஏற்றவராக இல்லை. மார்க்சிய அடிப்படை நூல்களை பயின்று அதன் வழிப்பட்டு தனது கருத்து செறிவை உருவாக்கிக்கொண்டவரும் இல்லை. அப்படித்தான் செய்யவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் எதற்கும் தன்னை அவர் உட்படுத்திக்கொள்ளவில்லை. நாகை அந்தணர்பேட்டையில் ஊர்க்காரர்கள் இணைந்து முதலிட்டு ’விநாயகர் கதர் நூல் நெசவு ஆலை’ என்கிற பெயரில் கூட்டுறவு ஆலையை வெற்றிகரமாக நடத்தியதை தமிழக கிராமங்கள் மாதிரியாக கொள்ளவேண்டும் என பெரியார் வேண்டினார். அவர்கள் முதலுக்கு 6 சத வட்டியை கொடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். நாகை போய் பார்த்து வந்து கிராம மக்களிடம் கூட்டுறவு முறைக்கான ஆலோசனையை அவர் ஆகஸ்ட் 1925ல் நல்கினார். தீபாவளி பண்டிகை காலங்களில் பணக்காரர் பட்டு பீதாம்பரங்களுடன் வெடிகளுடன் கொண்டாடுவதை அவர் கண்டித்தார். கைராட்டின உற்பத்திக்கு அவர்கள் ஆதரவு தந்து ஏழைகளும் பண்டிகை கொண்டாட வழிவகை செய்ய வேண்டும் என அவர் குடியரசு செப்டம்பர் 20, 1925ல் வேண்டுகோள் விடுத்திருந்தார். கூட்டுறவாளர்கள் தினம் என்பதை குடியரசு 2-11-1933 வெளியிட்டிருந்தது. அதில் ரஷ்யா பயணத்தில் பெரியார் பார்வைக்கு வந்த மேம்பட்ட கூட்டுறவுமுறை குறித்து சொல்கிறார். கூட்டுறவு செலவை குறைக்கும். பரவலாக பயன் அளிக்கும் என்பதுதான் சாரம். சர்வாதிகாரி ஸ்டாலினுக்கும் சாதாரண தொழிலாளிக்கும் தங்க இடம் 10-16 அடிக்குள்ள இடம்தான். நூற்றுக்கணக்கானவர்களுக்கு சிறு 4-4ல் கக்கூசு – ’தோட்டி என அதற்கு எவரும் இல்லாமல் சுத்தமாக இருந்ததாக சொல்கிறார். தனித்தனி என்பது நம்மிடம் ஒழியவேண்டாமா – கவலையற்று வாழ கூட்டுறவே தேவை என பெரியார் பரிந்துரைத்தார். அரசாங்கம் நடத்த வரி வேண்டுமென்றால் அதை நேரிடையாக ஏழைகளிடமிருந்து வசூல் செய்துகொள்ளுங்கள். அதற்காக முதலாளி என்றொருவரை நியமித்து அவர்களை ஆனமட்டும் கொள்ளையடிக்கும்படி அனுமதித்துவிட்டு அவர்கள் அடையும் இலாபத்தொகையில் ஒரு ரூபாய்க்கு ஓரணா- இரண்டணா பெற்று அரசாங்கம் நடத்துவதேன். முதலாளி கணக்கு காட்டாமல் அடிக்கும் கொள்ளையே பல இலட்சக்கணக்கில் ஆகி விடுகிறதே. பிர்லா வருடந்தோறும் வரி இல்லாமல் 1 1/2 கோடி கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறதே. அவர் வீட்டிலே போய் காந்தியார் தங்குவாரானால் அவரை எப்படி அரசாங்க உத்யோகஸ்தார் கணக்கு கேட்க முடியும். இவர்கள் அரசாங்கம் யோக்கியமானதாயிருந்தால் முதல் நம்பர் முதலாளி சண்முகம் செட்டியாரை நிதி மந்திரியாக வைத்திருப்பார்களா? கொள்ளை இலாபம் அடிக்கும் கொழுத்த வியாபாரியல்லவா அவர். இந்நாட்டில் முதலாளி என்றொரு வர்க்கம் இருந்துவரவும் அவ்வர்க்கம் அன்றாடம் தழைத்தோங்கவும் வழி செய்து கொடுப்பதும் இன்றைய ஆட்சிதான். தொழிலாளர்களாகிய நீங்கள் அரசாங்கத்தை கைப்பற்றுங்கள். இங்கு ஒரு இராமசாமி ரெட்டியார் ஏன் முதன் மந்திரியாக இருக்கவேண்டும். அவர் உழுதவரா- விதைத்தவரா. ராஜன் ஏன் உணவு மந்திரி- அவர் கலப்பையை தொட்டவரா- உடல் உழைப்பு என்றால் தெரியுமா- அயலார் உழைப்பில் வாழும் அக்கிரமக்காரர்கள் ஏன் உங்களை ஆளவேண்டும் என அவர் பேசியதை விடுதலை (20-1-1948) வெளியிட்டது. பெண்கள் முன்னேற்றம் என்பது பெரியாரின் மிக முக்கிய செயல்திட்டங்களில் ஒன்றாக தொடர்ந்து இருந்தது.. பெண்களின் சொத்துரிமை எனும் துணை தலையங்கத்தை அவர் குடியரசில் (26-10-1930) எழுதியிருந்தார். உண்மையான சுதந்திரம் ஏற்படவேண்டுமெனில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான ஒழுக்கம் கட்டுப்பாடு இருக்கும்படி செய்யவேண்டும். வாழ்க்கையும், அரசியல் சட்டங்களும் இதற்கேற்ப திருத்தப்பட்டால் ஒழிய உண்மையான சுதந்திரம் வராது. பெண்கள் பலவீனமானவர்கள், ஆண்களின் ’சம்ரட்சணையில்’ இருக்க வேண்டியவர்கள் என்கிற உணர்ச்சி அடியோடு மாறவேண்டும்- பெண்களிடம் இது முதலில் மாறவேண்டும் என பெரியார் அதில் அழுத்தமாக எழுதியிருந்தார். பொது உடைகள் எனும் தலையங்கம் ஒன்றும் அவர் எழுதியிருந்தார். சிக்கனம் என்கிற பார்வை – செயல் அவருடன் அவரது வாழ்நாட்களில் தொடர்ந்துகொண்டேயிருந்தது. இதை அவர் எழுத்துக்களிலும் வாழ்க்கையிலும் புலப்படுத்தினார். வேற்றுமைகள் ஒழியவேண்டுமானால் சாயலுக்கு, பிரித்துக்காட்டுவதற்கு ஆதாரமாயிருக்கும் உடையை ஒன்றுபடுத்தவேண்டியது அவசியமானதாகும் என கருதினார் பெரியார். பெண்களை அவர்களது உடை, நகை, தலைமயிர், பெரிய சீலை ஆகியவைகளே பலவீனமானவர்களாகவும் அதன்பொருட்டு அடிமைகளாகவும் காட்டுகின்றன என அவர் சுட்டிக்கட்டினார். உடை விஷயத்தில் 4 முழத்தில் மூட்டி தைத்து அதை இடுப்புக்கும், முக்கால்கை சட்டை மேலுக்கும் போதாதா என கேட்டார். இதையும் மகாநாடு ஒன்றைக்கூட்டி பொது முடிவெடுத்துக்கூட அமுலாக்கலாம் என்றார். பெயர் வைப்பதில் உருவாகும் வேறுபாடுகளையும் அவர் எழுதாமல் இல்லை. பெயர் வைப்பதில் பலபிரிவுகளை கண்டுபிடித்து வேற்றுமை உணர்ச்சிகளுக்கு இடமளிப்பது ஏன் என அவர் வினவினார். பெயரில் மனிதனை பிரித்துக் காணாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிற தன் அக்கறையை அவர் வெளிப்படுத்தினார். IV பெரியார் இந்திய தேசியம் என்பதை பித்தலாட்டம் என்றே விமர்சித்துவந்தார். அரசாங்கம் தலைக்கனத்து நிற்பதும், ஈவு இரக்கமில்லாமல் மக்களை உறிஞ்சுவதற்கும் முக்கிய காரணம் தேசியம் என எழுதினார் பெரியார். முப்பத்தைந்து கோடி மக்களின் பிரதிநிதி என்று சீமைக்கு சென்ற காந்தி தன் தலையில் சுமந்துகொண்டு போய் இருக்கும் சுயராஜ்யத்திட்டம் வருணாசிரமக் கொள்கையும், முதலாளி ஆதிக்கக் கொள்கையும் கொண்டதான பெரிய மூட்டை அல்லவா என்ற கேள்வியை அவர் குடியரசில் (4-10-1931) எழுப்பியிருந்தார். வட்டமேஜை மாநாட்டிற்கு போனதைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார் பெரியார். அரசாங்கமும் தேசியமும் சோம்பேறிகளையும் செல்வான்களையும் காப்பாற்றுவதற்கு ஏற்பட்டதே ஒழிய ஒரு நாளும் ஏழைமக்களை காப்பாற்ற ஏற்பட்டதல்ல என அதில் பெரியார் குறிப்பிட்டிருந்தார். பெரியார் பட்டியலிட்ட ஒழிப்புகளில் அரசாங்கமும் வருவதால் மக்கள் அனைத்து ஒழிப்புகளையும் செய்த பின்னர் தங்களை நிர்வகித்துக்கொள்ள ஏற்பாடு என்ன என்பதை அவர் பேசவில்லை. தேசியக் கிளர்ச்சி என நடத்துவோர்கள் மீது அவருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. விமர்சித்தே வந்தார். குடியரசில் (23-11-1930) தேசியக் கிளர்ச்சி எனும் தலையங்கம் ஒன்றை அவர் எழுதியிருந்தார். சிலர் தியாகியாக காட்ட செய்யப்படும் முயற்சிதான் கிளர்ச்சி , பட்டம் பதவி பெற ஏற்பாடு என்று சாடியிருந்தார். மக்கள் இக்கிளர்ச்சிகளைக் கண்டு ஏமாறவேண்டாம் - எதிர்பார்ப்பு வேண்டியதில்லை என எச்சரிக்கை செய்வதாக அத்தலையங்கம் இருந்தது. தேசியக்கிளர்ச்சியும், சீர்திருத்த முயற்சியும் உண்மையான சுதந்திரத்திற்கும்- விடுதலைக்கும் விரோதமானவையே என அவர் எழுதியிருந்தார். ’தோன்றிவிட்டது சமதர்ம உணர்ச்சி’ எனும் தலையங்கத்தை குடியரசில் அவர் எழுதியிருந்தார். அதில் ஜாதி ஒழிப்பது சமத்துவ சமூகத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதை விளக்கியிருந்தார். சுயராஜ்யம்- பூர்ணவிடுதலை என கேட்பதைவிட- அதனை அடைய எடுத்துக்கொண்டிருக்கின்ற முயற்சியைவிட ’ஜாதி ஒழிப்பு’ மிகுதியும் சமதர்மமும் பொதுவுடைமைத்தன்மையும் கொண்டதாகும் என எழுதியிருந்தார். சுயராஜ்யமும், விடுதலையும் மனித சட்டத்தை மீறி, மனித ஆட்சியை மீறி, பலாத்காரத்திலே சண்டித்தனத்திலே அடையக் கருதுவதாகும். ஜாதி ஒழிப்பதென்பதுவோ கடவுள் கட்டளையையும், ஆட்சியையும், கடவுள் சட்டத்தையும் மீறி பலாத்காரம், சண்டித்தனம் ஆகியவைகளையும் அதற்கும் மேம்பட்டதாக ஏதாவது இருந்தால் அதையும் உபயோகப்படுத்தி அடியோடு ஒழிக்க முயற்சிப்பதாகும். சீர்தூக்கிப்பார்த்தால் ஜாதி ஒழிப்பு முயற்சிதான் மிகக் கடினமான போராட்டம் என்பதை பெரியார் அத்தலையங்கம் மூலம் உணர்த்த முற்பட்டார். வெள்ளைக்கார அரசாங்கம் போய்விட்டால் வரக்கூடிய அரசாங்கம் சமதர்ம - பொதுவுடைமை அரசாங்கமாக இருக்கவேண்டுமே ஒழிய வெறும் ராமராஜ்ய - சுயராஜ்ய- மோட்ச நரக பூச்சாண்டி ராஜ்ய அரசாங்கமாக இருக்கக்கூடாதென்றார் பெரியார். சமதர்மம் இல்லாமல் சுயராஜ்யம் கிடைத்தால் மக்கள் கண்டிப்பாய் ஏமாந்துபோவார்கள் என்பதே அவர் கணிப்பாக இருந்தது. ’வெள்ளைகாரன் ஆட்சியை’ விமர்சிப்பவர்களிடம் அவர் கேள்வியை எழுப்பினார். கருப்பன் அரசாண்டால் இன்னும் 50 சங்கராச்சாரியும், ஊருக்கு 10 மடமும்- 20 கோவிலும் ஏற்பட்டு மக்களை கொள்ளையடிப்பார்கள் என்கிற கருத்தை அவர் அனுப்பம்பாளையம் தொழிலாளர் கூட்டம் ஒன்றில் பேசினார் ( கு.அ 16-4-1933) கராச்சி தீர்மானங்களை விமர்சித்து குடியரசில் ( 5-4-1931) பெரியார் எழுதினார். முதலாளி தன்மைக்கு மாத்திரம் உடையவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்தியாவானது, பூரண சுயேட்சை கிளர்ச்சியின் பலனாக விடுபட்டு முதலாளித்துவ தன்மையும் வருணாசிரம வைதீகத்தன்மையும் உள்ள கூட்டத்தார் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்படுவதாக இருக்கின்றதே தவிர, வேறு எவ்வித தன்மையும் மாறுதலும் காணப்படுவதாக இல்லை. முதலாளித்துவ தன்மை அடியோடு அழிக்கப்படவேண்டும் என்பதில் நமக்கு ஒரு சிறிதும் ஆட்சேபனை கிடையாது. ஆனால் ஒன்றில் இருந்து விடுபட்டு, மறுபடியும் இரண்டிலும் போய் மாட்டிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியமான காரியமாகும் என அவர் தனது எச்சரிக்கையை தந்துகொண்டே இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சி என்பது முதலாளித்துவம் என்கிற ஆபத்தை தருகிற ஆட்சி- ஆனால் சுதந்திரம் என்கிற பெயரில் வரப்போகிற ஆட்சி அதிகாரம் இருவித ஆபத்துக்களை- முதலாளித்துவத்துடன் வர்ணாஸ்ரமும் கூடிய இரட்டை ஆபத்தை தந்துவிடும் என்கிற கருத்தை அவர் வெளிப்படுத்தினார். பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்கிற கருத்திற்கு இவ்வாதம் அழைத்துச் செல்லும் என்றாலும் வர்ணாஸ்ரம ஆபத்து என்கிற வரலாற்றுரீதியான ஆதிக்க முறைக்கு முழு அதிகாரமும் சென்றுவிட்டால் என்கிற கவலையும் இவ்வாதத்தில் மேலோங்கியிருப்பதை பார்க்காமல் இருக்கமுடியாது. சுயமரியாதை இயக்கத்தார்களால் அழிக்கப்பட வேண்டியவைகளில் இந்தக் காங்கிரசும் காந்தியமும் ஒன்றாகும்.. பலாத்காரத் தன்மையையோ இரகசிய முறையையோ நாம் அடியோடு வெறுக்கிறோம். நமது கொள்கை நியாயமும் நேர்மையும் ஆனதால், நமக்கு பலாத்காரமும், ரகசியமும் வேண்டாம். தோழர்களே நாம் தைரியமாயும், நேர்மையாயும், ஒற்றுமையாயும் கவலையாயும் வேலை செய்தோமேயானால், நம்ம ஆயுளிலேயே நமது இச்சை பூர்த்தியாவதைக் காணலாம் என அவர் எழுதினார் (14-5-1933) காங்கிரஸ் - காந்திய செயல்திட்டங்களை கடுமையாக தாக்கி எழுதிவந்தார் பெரியார். போலி இயக்கம் என்றே சொல்லிவந்தார். காந்தியாருக்கு உலகவிளம்பரம் தேடித்தரவும் , சோம்பேறிகளுக்கு ஆக்கம் தேடவும்தான் தேசியம் என்றார் பெரியார். பாமர ஜனங்கள் முட்டாள்தனமாய் ஏமாறாமல் எப்படி நடந்தால் முதலாளிதத்துவம் ஒழிக்கப்படுமோ - அதற்கேற்ற கொள்கை கொண்ட இயக்கத்துக்குப் பாடுபடும்படியும், சர்வபரித்தியாகம் செய்யும்படியும் பெரியார் குடியரசில் (6-8-1933) வலியுறுத்தி இருந்தார். இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும் என்கிற குடியரசு 20-10-1933 தலையங்கத்தால் பெரியார் மீது வழக்கு உருவாகி சிறை சென்றார். விளயாட்டுத்தனமான யோக்கியப் பொறுப்பற்ற பிரிட்டிஷ் ஆட்சி, பாமர மக்களை சுரண்டும் கூட்டுக்கொள்ளை ஸ்தாபனம் என அவர் அதில் சாடியிருந்தார். இதிலும் அவர் நிர்வாகம் பெயரில் நடந்த சம்பளக்கொள்ளையை விமர்சித்தார். கல்விச் செலவு, கல்வி வாய்ப்பின்மை குறித்து விவாதித்திருந்தார். இவ்வாட்சிக்கு இரு தூண்களாக முதலாளித்துவம், புரோகிதம் இருப்பதாக வரையறுத்தார். இதற்கேற்ப காந்தியும் காங்கிரசும் வேலை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார் பெரியார். இவைகளை ஒழிக்கவேண்டும் என்பது தலையங்கத்தின் சாரம். ’புரட்சி’ வார ஏடு ஏன் தோன்றியுள்ளது என்பது குறித்தும் அதை ஆதரிக்க வேண்டியும் அப்பத்திரிகையில் 26-11-1933ல் தலையங்கம் எழுதினார் பெரியார். அதில் சாரமாக அவர் குறிப்பிட்டிருந்தது.. “வெள்ளைமுதலாளிகளை ஒழித்து கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு இன்று ’புரட்சி’ வரவில்லை. வெள்ளை ஆட்சியை ஒழித்து கருப்பு ஆட்சியை ஏற்படுத்த ’புரட்சி’ தோன்றவில்லை. இந்துமதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப ’புரட்சி’ தோன்றியதல்ல. அதுபோலவே இஸ்லாம், கிறிஸ்து மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலை நிறுத்தப் ’புரட்சி’ வெளிவரவில்லை. சர்வ முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் பெண் அடங்கலும், சர்வ சமத்துவமாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காகப் புரட்சி செய்யவே ’புரட்சி’ தோன்றியிருக்கிறது” புரட்சி ஏட்டின் 17-12-1933 தலையங்கத்தில் நாட்டில் பயனுள்ள பொறுப்பான புரட்சி ஏற்படாவண்ணம் காந்தியின் ஆதிக்கம் தடுத்துவிட்டது என பெரியார் எழுதினார். காந்தியின் எண்ணம், பேச்சு, எழுத்து செய்கை எல்லாம் பிற்போக்கிற்கு ஆதரவாகவே இருந்து வருவதாகவும் , காந்தி காலத்தில் ஏற்பட்ட தீங்கை மாற்ற 10 வருஷத்துக்காவது பலமான முரட்டு முயற்சிகள் வேண்டும் என்றே சொல்லுவோம் என அதில் பெரியார் குறிப்பிட்டிருந்தார். இங்கு தங்களால் விரும்பிய புரட்சியை ஏன் நடைமுறையில் கொண்டுவரவில்லை என்பதற்கு வெளிக்காரணத்தையே முழுமையாக காட்டும் பல தலைவர்கள் போல்தான் பெரியாரும் அவர் தடுத்துவிட்டார் என காந்தியை இங்கு காரணமாக்கிவிடுகிறார். பலாத்கார செயலில் பிரவேசமில்லாமல், பலாத்காரத்தை பிரச்சாரம் செய்யாமல் பொதுவுடைமைத் தத்துவம் ஏற்படப் பிரச்சாரம் செய்வதில் முயற்சி செய்வதில் எவ்விதத் தப்பிதமும் இல்லை என்பதே நமது அபிப்பிராயம் எனவும் பெரியார் அத்தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார். பெரியார் பகுத்தறிவு தலையங்கமாக 30-9-1934 ஜனநாயகமா பணநாயகமா என்கிற வினா தொடுத்து எழுதியிருந்தார். செல்வாக்குப் பெற்ற வார்த்தைகள் எல்லாம் உண்மையானது, நேர்மையானது என நம்பவேண்டாம் என்கிற எச்சரிக்கை அதில் இருந்தது. புண்ணியம், அகிம்சை, ஜீவகாருண்யம், கற்பு, ஒழுக்கம் போன்ற செல்வாக்கு பெற்றவை பெரும்பாலும் இளைத்தவர்களை அடக்கியாளவே நடைமுறையில் பயன்பட்டுவருவதை பெரியார் சுட்டிக்காட்டுகிறார். அதேபோல்தான் ஜனநாயகம் என்கிற வார்த்தையும் மாற்றப்பட்டுள்ளது. பணநாயகத்தின் அடிமையாகிவிட்டது. அதன் பெயரால் புரட்டுகளை காங்கிரஸ் செய்கிறது. ஓட்டுக்கு பணம் என்று கூட ஆகியுள்ளது. இதை ’காலித்தன நாயகம்’ என்றே அழைக்கவேண்டும் என பெரியார் கடுமையாக விமர்சித்தார். கற்பு விஷயத்தில் ஆண்- பெண் இருவருக்கும் எப்படி பொறுப்பு பங்கிருக்கிறதோ அதுபோல்தான் பணம் வாங்கினால் ஓட்டர்- அபேட்சகர்- தேர்தல்முறை மூவரும் குற்றவாளிகள் என்றே சொல்லவேண்டும் என பொறுப்பற்ற ஜனநாயக முறைகள் குறித்து விழிப்புணர்வை பெரியார் உருவாக்கிவந்தார். ஜனநாயகம் பணநாயகத்தின் லைசென்ஸ் பெற்ற கூலியாகிவிட்டது என்பது அவரின் நியாயமான விமர்சனமாகவே இன்றளவும் தெரிகிறது. ஈரோட்டில் 31-10-1944ல் கிராம சீர்திருத்தத் திட்டம் பற்றிப்பேசினார். கிராமங்கள் எனும் வார்த்தை அகராதியில் கூட இல்லாமல் செய்யவேண்டும் என்றார். ஊர்த்தன்மையில் கிராமம் என்பது பஞ்சமன் நிலையில் உள்ளது. அங்கு பள்ளிக்கூடமில்லை. ஆஸ்பத்திரி, டிராமா, பார்க், நீதிஸ்தலம் , போலீஸ், நல்ல ரோடுவசதி, விளக்கு என எந்த வசதியுமில்லை. புத்தியை செலவு செய்து முற்போக்கடைய வழியில்லை. வயிற்றுக்கு ஆகாரம் என்பதை தவிர வாழ்வு ஆசைக்குப் பணம் சம்பாதிக்கும் வழியில்லை. கிராமச் சீர்திருத்தம் எனும் பித்தலாட்டக்கூட்டம் வரும்- வீதியை பெருக்கும் – அக்கூட்டம் வந்து பஜனைப்பாட்டைப் பாடிவிட்டால் கிராமம் சீர்ப்பட்டுவிடுமா. கிராமம் எனும் குப்பைக்காடு எதற்காக.. அவ்வளவையும் அனுபவிப்பது நகரந்தான் என தன் விமர்சனக் கணைகளை தொடுத்தார். விவசாயம் உடல் உழைப்பில் நடைபெறுவதை மாற்றி இயந்திரத்தொழில் மூலம் என ஆக்கவேண்டும். உற்பத்தி பண்டங்கள் கூட்டுறவு முறையால் ஆக்கப்பட்டு பலன்கள் விவசாயிகளுக்கு போகவேண்டும். பல கிராமங்களை ஒன்றாக இணைத்து நகரமாக்கி பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, பார்க், சினிமா, வாசகசாலை, புத்தகசாலை, ரேடியோ நிலையம், போக்குவரத்து- பஸ்ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன், நீதிபதி, சகலசாமான்கள் கிடைக்கும்படி கடைகள் ஏற்படுத்த வேண்டும் என பெரியார் தன் திட்டமாக முன்வைத்தார். சிறு சிறு தொழிற்சாலைகளை நிறுவி அவர்கள் வேறு ஊருக்கு பிழைப்புக்கு போகாதபடி பிழைப்பு ஏற்படுத்தவேண்டும். எவனோ ஒருவன் கோடீஸ்வரன் ஆவது முன்னேற்றமாகாது. இதை பொதுவுடைமை, சமதர்மம் என்று முட்டாள்தனமாய் கருதாமல் முற்போக்கு என்ற முறையில் சிந்தித்தால்தான் இதில் உள்ள நியாயமும் உண்மையும் விளங்கும். கிராமம் என்பதில் ’தியரியாக’ காந்திக்கு எதிராக பேசுவது போல் இருந்தாலும் நடைமுறை செயல்திட்டங்களில் கிராமத் தன்னிறைவு என நெருக்கமாக வருவதை உணரமுடிகிறது. விடுதலைக்குப் பின்னர் ஜனவரி 31, 1948 தலையங்கத்தில் அவர் நேரு அரசாங்கத்தை முதலாளிகளின் அரசாங்கம் என வரையறுத்தார். நேரு, படேல் முதலாளிகளா எனக்கேட்கலாம். அவர்கள் முதலாளிகளால் பிடித்து வைக்கப்பட்டவர்கள். நீ சதா வேலைநிறுத்தம் செய்- புரட்சி உருவாகும் என புரட்சி வீரர்கள் சொல்வதும் ஏழைகளைப் பார்த்து பாதிரிமார்கள் சொல்வதைப் போன்றதே ஆகும். பொதுவுடைமைத் தத்துவம் வேறு.தொழிலாளர் கூலி உயர்வு வேலைநிறுத்த தத்துவங்கள் வேறு. இன்றைய கம்யூனிஸ்ட்கள் நம் நாட்டில் தொழிலாளர் சங்கத்தாரால் சந்தாவால் இயக்க வேலையையும் சொந்த வாழ்வையும் நடத்துகிறவர்கள். வேலைநிறுத்தத்தால் கம்யூனிஸ்ட்களுக்கு விளம்பரம் ஏற்படுகிறது என்பதைத் தவிர, வேறு தொழிலாளர் நலம் எதுவுமே ஏற்படுவதில்லை என இரு பக்க விமர்சனத்தை அத்தலையங்கத்தில் பார்க்கமுடிகிறது. முதலாளிகளின் ஸ்தாபனம் ’காங்கிரஸ்’ என வெளியேறிய சோசலிஸ்ட்களை அவர் கடுமையான கேள்விக்கு உட்படுத்தினார். காங்கிரஸ் பெரும் முதலாளிகள்- பிறவி முதலாளிகளின் கூட்டுஸ்தாபனம் என திராவிடர் கழகம் சொல்கிறது என்றார். நமது மாகாணத்தில் சோசலிஸ்ட்கள் எனச் சொல்லிக்கொள்பவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனர்கள். அதேபோல் கம்யூனிஸ்ட்கள்- சோசலிஸ்ட்கள் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொள்ளும் விமர்சனம் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். பார்ப்பனிய சோசலிசம் என விமர்சிக்கிறார். சமவுரிமை ஏற்காமையுடன் கூடிய பொதுவுடைமை வெற்றிபெறாது என்பதை அழுத்தமாக பதிவிடுகிறார். குடிய்ரசு 1-10-1949 தலையங்கத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு தடை எனும் அரசாங்க நடவடிக்கையை பெரியார் கடுமையாக கண்டனம் செய்தார். விடுதலைகால தியாகிகள் என ஒருபக்கம் சிலரை கொண்டாடுவதும் அதேவேலையை செய்தவர்களை இப்போது தடை செய்வதும் எவ்வாறு ஜனநாயக அரசில் சரியாகும் என வினவினார். அழிவுவேலை சரியல்ல என்கிற தன் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திவிட்டு எங்கு பயங்கர நடவடிக்கைகள் நடந்ததோ அங்கு நடவடிக்கை எடுக்காமல் கட்சியை தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்வதை அவர் ஏற்கமுடியாதென்றார். எறும்பு என சொல்லிவிட்டு அதை நசுக்க பாறாங்கற்களை தூக்குவது ஏன் என்கிற கேள்வியை அவர் தயங்காமல் எழுப்பினார். மிக முக்கியமான விளக்கம் பெரியாரிடம் இத்தலையங்கத்தில் நமக்கு கிடைக்கிறது. கம்யூனிஸ்ட்கள் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள முயல்கிறார்கள் எனச் சொல்லி தடைவிதிக்கும் ஆட்சியாளர்களின் அறியாமை சிரிப்பிற்குரியது. ஆளும் உரிமை தமக்குத்தான் சாஸ்வதம் என்கிற பைத்தியக்கார எண்ணமது என அவர் சாடினார். சென்னையில் நவம்பர் 1944ல் பெரியார் பேசிய உரை டிசம்பர் 2 1944ல் வெளியிடப்பட்டது. அதில் திராவிட நாடு என்பது ஒரு பொருளாதார சமுதாய சீர்திருத்தப் பிரச்னையே தவிர அது ஒரு அரசியல் பிரச்னையல்ல என்பதை பெரியார் விளக்கினார். தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது போலவே சுரண்டல் ஒழிய வேண்டும் என்கிறோம். அன்னியனுக்கு சந்தையாக இருக்கப்படக்கூடாது போலவே அன்னிய மாகாணத்தானுக்கும் நம் நாடு சந்தையாக இருக்கக்கூடாது. நம் திராவிட நாட்டுப் பிரச்னையில் பிரிட்டிஷ் அரசாங்கம் இருப்பதா போவதா என்கின்ற பிரச்னையோ, பிரிட்டனுக்கு எவ்வளவு உரிமை, நமக்கு எப்படிப்பட்ட உரிமை என்கின்ற பேச்சோகூடக் கிடையாது. அவை தனிப்பட்ட விஷயமாகும். அது திராவிடநாடு பெற்றதும் கிளம்பும். பிரிட்டிஷ் ஆதிக்கம் மாத்திரம் கூடாது என்பதுடன் நம் அரசியல் தீர்ந்துவிடாது. பிரிட்டன், அமெரிக்கன், ஜெர்மானியன், ஜப்பானியன், ஆரியவர்த்தம், காந்தி நேரு கம்பெனி ஆதிக்கம் முதலிய ஒன்றுமே இல்லாத நம் திராவிடர் ஆதிக்கமே இருக்கவேண்டும் என்பது நமது அரசியலாகும். சென்னை மாகாணம்தான் திராவிட நாட்டு விஸ்தீரண அளவு. விஸ்தீரணம் கூடுவதும் குறைவதும் நம் நாட்டின் ’சவுகரியத்தையும் இஷ்டத்தையும்’ பொறுத்தது. மற்ற மாகாணத்தான் காலடி வைக்க பாஸ்போர்ட் வாங்கிக்கொண்டு வரவேண்டும். முஸ்லீம்கள், ஆதித்திராவிடர்கள், கிறிஸ்துவர்கள், பவுத்தர்கள் ஆகியவர்களும் திராவிடர்களே. அவரவர் சமயம், ஆத்மார்த்தம் என்பவற்றின் உணர்ச்சி இன்றுள்ளது போலவே அவரவர் இஷ்டப்படி இருக்கும். ஆரியர்கள் நிலையும் அது போலவே- மற்றவர்க்கு நட்டமும், கேடும், இழிவும், இருப்பதற்கு இல்லாத நிலையில் சம உரிமையோடிருக்கும். கும்பகோணத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவு 19-10-1946ல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் சாதிப்பாகுபாடுகள் உள்ள நாட்டில் ஒரே கொள்கையுடைய முஸ்லீம்கள் தனியே பிரித்துக் கொள்கிறதெனில் என்ன தவறு என வினவினார். திராவிடம் இழிமக்கள் இல்லாத நாடாக ஆகவேண்டும். மனிதரெல்லாம் சமமாக வாழவேண்டும். எந்த வடநாட்டானும் நமது நாட்டுக்குத் தலைவனாகவோ, இராஷ்டிரபதியாகவோ, மகாத்மாவாகவோ இருக்கக்கூடாது. உலக நாடுகள் பெற்றுள்ளதைப்போல நமது நாடு சுதந்திரம் பெற்றத் தனிநாடாக இருக்கவேண்டும். என்று பெரியார் பேசினார். இக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியார் குறித்தும் பேசுகிறார். மில்- எஞ்சின் தொழிலாளர் மட்டும் தான் தொழிலாளரா- சூத்திரப்பட்டம் பெற்ற 4 கோடி மக்களும் தொழிலாளர்தானே. நாம் எப்போது சூத்திரப்பட்டத்தை ஒழிப்பது. நயவஞ்சகமாக இதை செய்தது பிரிட்டிஷ் ஆட்சியா கம்யூனிஸ்ட்களா என பெரியார் வினவினார். விடுதலை 2-7-1948 வெளியிட்ட பீப்பிள்ஸ் பார்க் உரையிலும் அவர் திராவிடநாடு பிரிவினை நாள் பற்றிப் பேசினார். 25-2-1949 விடுதலை அறிக்கையில் மத்திய அரசாங்கப் பிடியில் இருந்து திராவிட நாடு தனிநாடாகப் பிரியாவிடில், சுதந்திரம் இல்லை- சோறு இல்லை- மான வாழ்வு இல்லை என சொல்லப்பட்டது. அரசியல் நிர்ணய சபை பற்றி அவர் 2-12-1948ல் தலையங்கம் ஒன்று எழுதியிருந்தார். ஆரிய எதிர்ப்புக்கு சிறிதும் இடம்தர இடமில்லாத சபை. இந்த அரசியல் நிர்ணய சபையால் செய்யப்படும் விதிகளில் இனிமேல் சுதந்திர சமதர்ம இந்தியாவில் பிறவியில் பிராமணன், சூத்திரன், பஞ்சமன், அரிஜனன் என்பதான பிரிவுகள் இருக்கக்கூடாது- இப்பிரிவிற்கான ஆதாரங்கள் இருக்கக்கூடாது- இல்லாமல் செய்யப்படும் எனும் வாக்கியம் இருக்கவேண்டும். மேற்சொன்ன வாக்கியத்தை தன்னைப் பிராமணன் என்று சொல்லிக்கொள்ளும் நேரு, ஆச்சாரியார், முன்ஷி, சந்தானம், கோபால்சாமி அய்யங்கார், அனந்தசயனம், கிருஷ்ணமாச்சாரி முதலிய பார்ப்பனர்கள் பிரேரேபிக்காவிட்டாலும்- முனுசாமிப் பிள்ளை, சுப்பராயன், குமார ராஜா, பாரதி, இராமசாமி ரெட்டியார் போன்ற 4வது 5வது வர்ணத்தை சார்ந்தவர்களாவது சேர்க்க முயற்சித்து இருக்கலாம். ஆனால் செய்யாமல் அவர்கள் தங்கள் சூத்திரப்பட்டத்தையும் அரசியல் நிர்ணயசபையில் காப்பாற்றி இருக்கிறார்கள்.. இன்றைய அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்படும் நூல் ஒரு மனுதர்ம நூலேயாகும் என்று கூறுகிறோம் என்று அத்தலையங்கம் செல்கிறது. சேலம், மாயவரத்தில் நடந்த கூட்டங்களில் 1950 ஜனவரி 26ம் தேதி, 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதியைப் போல் ’ஒரு விலாசம் மாற்றும்’ தினமேயாகும். அதே முதலாளி- அதே பணப்பெட்டிதான் - அதே தராசு- படிக்கல்- சரக்கு- அதே பித்தலாட்டம் என பெரியார் உரையாற்றியிருந்தார். இது குடியரசு ஆட்சியல்ல. கொடுமைக்கார கொள்ளைக்கார ஆட்சி. நாம் 1938 லேயே திராவிட நாடு - தமிழ்நாடு தமிழருக்கே என ஆரம்பித்தோம். ஒர் அங்குலம் கூட முன்னேறவில்லை. நாம் துவங்கிய பின் துவங்கியது பாகிஸ்தான் கிளர்ச்சி. அவர்கள் வெற்றி பெற்றதற்கு காரணம் முஸ்லீம்கள் ஒற்றுமையாக இருந்ததுதான். அவர்களுக்கு ஒரே மதம்- ஒரே ஆண்டவன். நமக்கு அப்படியில்லையே. ஆயிரக்கணக்கான மதம், கோடிக்கணக்கான கடவுள்கள், பல ஆயிரக்கணக்கான சாதிகள்- நாம் எப்படி உருப்படமுடியும் என தன் வருத்தத்தை பெரியார் பதிவு செய்தார் . இப்பேச்சை விடுதலை 14-2 1951 வெளியிட்டிருந்தது. விடுதலை 27-7-1951ல் பதிவான பேச்சு ஒன்றில் நமது நாடு வடநாட்டானின் ஆதிக்கத்திலே, ஸ்தல சுயாட்சி நிர்வாகத்தின் கீழ் இருக்கிற ஒரு பஞ்சாயத்து போர்டு எப்படி இருக்குமோ அது போல் இருக்கிறது. நம் மக்களுக்கு அரசாங்கத்திலே ஒரு உரிமையும் கிடையாது. மொழிவாரிமாநிலங்கள் என்பதில் மொழிவாரியாக ஏன் பிரியவேண்டும் என கேள்வி எழுப்பினார் பெரியார். சாதியின் மீது, மதத்தின் மீது, இனத்தின் மீது பிரிவது என்றால் அதற்கு அர்த்தம் உண்டு. ஏனெனில் அவை ஒவ்வொன்றுக்கும் மாறுபட்ட, பொருத்தமற்ற, ஒற்றுமையற்ற கொள்கைகள் உண்டு. இலாப நஷ்டம் சாதக பாதகம் அடைபவர்கள் இருப்பார்கள். மொழிகளில் அப்படிக் கொள்கையோ திட்டமோ அனுபவமோ கலாச்சாரமோ பழக்க வழக்கமோ மாற்றமாய் இருக்கும்படி நமக்குள் எந்த மொழியும் இல்லை. மொழியினால் பெருமை, சிறுமை, இலாப நஷ்டம் ஒன்றுமே இல்லை. இதைக் காரணம் காட்டி பிரித்துக்கொள்ள வேண்டியதில்லை. சென்னை இராஜ்ய மொழி என்ன- எத்தனை இருக்கிறது- ஒரே மொழிதானே. 90சதம் பேர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தானே. ஒரு மொழிக்கு சென்னை இராஜ்யத்தில் நான்கு பெயர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று சொல்லப்படுகின்றன. ஆந்திரப் பிரச்னை விடுதலைப் பிரச்னையே தவிர பாகப் பிரச்னை அல்ல போன்ற கருத்துக்களை விடுதலை 7-1-1953, 8-1-1953 வெளியிட்டிருந்தது. ராயப்பேட்டை ஜனவரி 5 1953 கூட்டத்தில் தனது பிரிவினை கருத்து குறித்து எல்லோருக்கும் தெரியும் எனப் பேசிய பெரியார் எனக்கு ’ஆரியன்’ ஆதிக்கமற்ற சுரண்டலற்ற பூரண சுயேச்சையுள்ள பிரதேசம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், சென்னை போய்விடுமானாலும் பாக்கி உள்ள தமிழ்நாட்டை என இஷ்டம்போல் ஆக்கி பூரண விடுதலை பிரதேசமாக விளம்பரம் செய்யவேண்டும் எனப் பேசினார். நான் விஸ்தீரணத்திற்காக போராடுகிறவன் அல்ல சுதந்திரத்திற்காகப் போராடுகிறவன் என அழுத்தமாக பேசினார். மத்திய சர்க்கார் சொல்லும் தட்சணப்பிரதேசம் தற்கொலைக்கு சமமானது என்ற கருத்தையும் அவர் வெளியிட்டுவந்தார். அது தமிழருக்கு ஆபத்தானது என எச்சரித்தார். உத்தியோகங்கள் எல்லாம் மலையாளிகளிக்கு போய்விடும். முழு அதிகாரமும் பார்ப்பனர், வடநாட்டார், மலையாளிகளிடம் போய்விடும் என்பதை ஜூன் 5 1956 மதுரை சொற்பொழிவில் பெரியார் எச்சரிக்கையாக தெரிவித்தார். முன்னதாக 11-10-1955 விடுதலைக்குகொடுத்த அறிக்கையில் தமிழ் தமிழ்நாடு என்கின்ற பெயர் கூட இந்நாட்டுக்கு சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாமல் எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றிபெற்றுவிட்டால், பிறகு என்னுடைய கழகத்தினுடைய வாழ்வு வேறு எதற்காக இருக்கவேண்டும் என்று தோன்றவில்லை என்கிற வேதனையை தெரிவித்தார். விடுதலை 24-7-1957ல் தமிழ்நாடு தமிழருக்கே என்பதை பெரியார் குறிப்பிட்டு அதைக்குறித்து தன் கருத்துக்களை தந்திருந்தார். மலையாளம், ஆந்திரம், கர்நாடகம் பிரிந்துபோய் அவை அவைகளுக்கான சட்டசபைகள் அமைத்துக்கொண்டன. நமக்கும் அவைகளுக்கும் சம்பந்தமில்லை. என்றைக்காவது நம்நாடு பிரிந்தேதான் தீரும். பலரின் உயிர்த்தியாகத்தால்தான் நாட்டைப் பிரிக்க முடியும். பாகிஸ்தானும் பல வெட்டு, கொலைகள் நடந்து பலர் செத்துத்தான் பிரிந்தது. நாம் ஏன் வடவர் காலடியிலிருக்கவேண்டும்- அவர்கள் ஏன் கொள்ளையடிக்க வேண்டும்.. ஆகவே நம்நாடு என்றாவது தனியாகப் பிரிந்து தானாக வேண்டும் என்பதை எழுதினார். நம்நாடு தனியாகப் பிரிந்தே ஆகவேண்டும். பிரிந்தால் சிறந்த வல்லரசாக வாழ்வோம். நாம் பெரும் இயக்கம் நடத்தவேண்டும். ஆதரவு கிடைக்கும். எனக்குப் பிறகு என்ன நடக்குமோ - கவலையாகத்தான் உள்ளது. பாதியில் விட்டுப்போனால் கொள்கையை விற்றுத் தின்னத்தான் ஆள்வரும் என்று இந்தியப்படம் எரிப்பு போராட்டம் பற்றி விளக்கும்போது குறிப்பிட்டார். தமிழ்நாடு என்பதற்கு மட்டும் ஒரு கோடு போட்டு, பாக்கியுள்ள பாகத்தை- இந்திய யூனியன் படத்தை எரிக்க வேண்டும் என வழிகாட்டிய செய்தி 1-12-1957 விடுதலையில் இடம்பெற்றது. குமரி மாவட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு 20- 12-1958 விடுதலையில் பிரசுரமானது. சக்கரவர்த்தி காலத்தில் ஜின்னாவுக்கு நாடு பிரித்துக்கொள்ளவேண்டும் என்ற ஆலோசனையை சொன்னவன் நான்தான் - பிரியவில்லையா எனக்கேட்டார் பெரியார். நாடு பிரிவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானதல்ல. தமிழ்நாடு தமிழருக்கானது என்றால் அவர்கள் எல்லாம் இங்கு வருவார்கள். இங்கு இருக்கும் அன்னியர்கள் வெளியே போகவேண்டியதுதானே- பாகிஸ்தானில் இருக்கும் இந்தியர்களை அவர்கள் போ என்று சொல்லவில்லையா என வினவினார். இந்திய யூனியன் படத்தைக் கொளுத்தியும் ஒன்றும் ஆகவில்லையென்றால் வேறு என்ன செய்வது என்பது எனக்குத்தெரியும் என பெரியார் தெரிவித்திருந்தார். ஈரோட்டில் 13-2-1951ல் பெரியார் ஆற்றிய சொற்பொழிவில் சட்டசபை நுழைவா நாட்டுப்பிரிவினையா என்பதை எடுத்து பேசியிருந்தார். சட்டசபையில் நுழைந்து ஒன்றும் செய்யமுடியாது. ஒரு வீட்டை இடிக்கவேண்டும் என்றால் அந்த வீட்டுக்கு வெளியில் இருந்துகொண்டுதான் இடிக்கவேண்டும்- வீட்டுக்குள் இருந்து இடித்தால் நாம் அழியவேண்டியதுதான் என தன் கருத்தை விளக்கினார். அரசியல் என்று தனியாக ஒரு விஷயம் இல்லை. அரசியல் என்பது சமுதாயம், பொருளாதாரம், கல்வி, வியாபாரம், பகுத்தறிவு இன்னும் அனேக காரியங்களைக்கொண்டதுதான். பொலிட்டிகல் சோசியல் என பிரித்தது தந்திரமேயாகும் என்கிற விளக்கத்தை அவரது பாண்டமங்கல சொற்பொழிவில் 10-10-1951ல் பெரியார் தந்தார். திருச்சி டவுன்ஹால் சொற்பொழிவில் (17-9-1951) அவர் பேச்சை அரசியல் சட்டம் ஒழிக என்ற தலைப்பிட்டே போட்டிருந்தனர். டாக்டர் அம்பேத்கர் மட்டும் ஏதோ ஆதித் திராவிடர்களுக்காகப் போராடினார். இவரிடம் ’உம் சங்கதிக்கு’ மட்டும் தடையில்லாமல் எது வேண்டுமானாலும் சொல்- செய்கிறோம்; ஆனால் மற்றவர்கள் விஷயத்தைப் பற்றிப் பேசாதே என்று கூறிவிட்டனர். அதன்படியே அம்பேத்கரும் தன் சமூகத்தாருக்கு வழிதேடிக்கொண்டார். ஆதித்திராவிடர் விகிதாச்சாரம் கொடுப்பதாக சொல்லி சட்டமும் செய்துவிட்டனர். ஸ்தானங்கள் கொடுத்துவிட்டனர். ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கிவிட்டு, நாம் விகிதாச்சாரம் கேட்பது தப்பு என்றும் கேட்பவரை வகுப்புவாதி என்கிறார்கள். அரசியல் சட்டம் நமக்குத் தேவையில்லை- அதன் கீழ் சட்டசபைக்கு போவது சரியில்லை என உணரவேண்டும் என்கிற அறிவுரையை இப்பேச்சில் பெரியார் தந்தார். ஆச்சாரியார் ராஜாஜிக்கும் தனக்கும் தனிப்பட்ட விரோதம் குரோதம் இல்லை என பெரியார் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஓமந்தூரார் ஆட்சியிலும் இந்தி எதிர்ப்பின்போது அவரவர் கடமையை அவரவர் செய்ததாகவே பெரியார் கருதினார். ஆச்சாரியார் விஷயத்திலும் அவரவர் கடமை அவரவர்க்கு என்கிற புரிதல் இருவருக்கும் இருந்ததை பெரியார் எடுத்துச் சொன்னார். மக்கள் தன்னை நம்புவதில்லை. ஆச்சாரியாருக்கு வேண்டியவன், ஆதலால் ஏதும் செய்யமாட்டேன் என நினக்கிறார்கள். மணியம்மை கூட நீங்கள் இருவரும் திருடர்கள் என்று சொன்னார்கள் என்றால் மற்றவர்கள் என்ன சொல்லமாட்டார்கள்- நினைக்க மாட்டார்கள். நாணயத்தில், பார்ப்பனர் விஷயம் தவிர, மற்ற காரியங்களில் மற்ற காங்கிரஸ் காரர்களைவிட ஆச்சார்யார் மேலானவர். ஆனால் பார்ப்பனர்களுக்கு மகாவிஷ்ணு போன்றவர் என்கிற கருத்தை அவர் (11-4-1952) தலையங்கத்தில் வெளிப்படுத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் மந்திரிசபை இருப்பது ஆபத்தானதே எனவும் எழுதிவந்தார். சுயராஜ்யமல்ல பார்ப்பனராஜ்யம்- பார்ப்பனநாயகம் என்றே அவர் குறிப்பிட்டு வந்தார். திராவிடர் விடுதலைக் கழகம் மின்னூல் தொகுப்பிலே பெரியாரின் பிறந்த நாள் செய்திகள் கொண்ட சுதந்திர தமிழ்நாடு என்கிற சிறு நூல் உள்ளது. பெரியார் சிந்தனைகள் தொகுப்பிலிருந்து எடுத்துத்தான் தனி பிரசுரமாக தந்துள்ளனர். அதில் சொல்லப்பட்ட சில செய்திகள் தரப்பட்டுள்ளன. தனது 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் வேலைத்திட்டமாக பெரியார் கருத்துக்களை தெரிவித்திருந்தார். சூத்திரர் என இழிவு செய்யப்பட்ட நாம் கல்வி, நல்வாழ்வு, ஆட்சி உரிமை முதலியவற்றில் விகிதாச்சாரம் அடையவேண்டும். வகுப்புவாத விகிதாச்சார உரிமையே நமது இலட்சியம். அதை கடினமான வேலைத்திட்டம் என்றே அவர் கருதினார். இதில் தான் நமது சமுதாயத்தின் நான்கு எதிரிகள் என்பதை அவர் வரையறுக்கிறார். பார்ப்பனர், நம்மில் கீழ்தர மக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள்- இந்த நால்வரும் நம் சமுதாயத்தைப் பற்றி கவலையில்லாதவர்கள். மூவர் நம்மைவிட மேலான நிலையில்- ஒரு கூட்டத்தினர் நம் இழிநிலை ஏன் தங்கள் இழிநிலைப் பற்றியும் கவலையில்லாமல் சோறு சீலை காசு ஆகிய மூன்றையுமே இலட்சியமாக கொண்டவர்கள். நமது இலட்சியம் நிறைவேற இந்நான்கு குழுவினர்களும் பெரும் கேடர்களாக இருக்கும் நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. காமராஜரை எப்படியாவது தோற்கடிக்கும் சதித்திட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருவதையும் இச்செய்தியில் அவர் சொல்கிறார். ஆச்சாரியாரை அண்டியிருக்கும் கண்ணீர்த்துளிகள் என்கிறார். இங்கு கீழ்நிலை மக்கள், கண்ணீர்த்துளிகள் என்பன எவரை குறிக்கின்றன என எளிதில் புரிந்துகொள்ள முடியும். அடுத்த 86ஆம் ஆண்டு பிறந்த நாளில் ( 85 நிறைவில்) செப்டம்பர் 17 1964ல் என்ன சாதித்துவிட்டாய் எனக் கேள்வியைக் கேட்டுக்கொண்டு அதற்கான பதிலையும் அவர் தந்தார். ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்தது, சரி தேவை எனப்பட்டதை ஒளிவுமறைவின்றி சொன்னதை தெரிவிக்கிறார். நடத்தையில் தவறுகள் தகாத காரியங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பதையும் வெளிப்படுத்தினார். புத்திக்கோளாறு இல்லை- ஞாபகக் கோளாறு அதிகமாகிவிட்டது- பேச்சுத்தொடர் மறந்து போகிறது- சமாளித்துக்கொள்வதாக குறிப்பிடுகிறார்.. உடல்நிலையைப் பற்றி சிந்திக்காமல் தொண்டாற்றி வரமுடிகிறது. அரசாங்கத்தின் சோசலிச திட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவு அவசியம். பொருளாதார பேதம் ஒழிய வேண்டியது அவசியம் எனினும் முதலில் கவனம் செலுத்த வேண்டியது ஜாதி ஒழிப்பில்தான் என்கிறார். காமராஜரை உற்சாகப்படுத்த வேண்டும். அவரது ஆட்சிக்கு ஆதரிப்பு அவசியம் என செய்தியை தந்தார். தனது 88ஆம் பிறந்த நாள் செய்தியில் (17-9-1966) சமதர்மம் பற்றிப் பேசுகிறார். ஈரோட்டில் நபருக்கு 5 ஏக்கர் நிலத்திற்கு மேல் இருக்கக்கூடாதென்று போட்ட தீர்மானத்தை சொல்கிறார். உற்பத்தியாளர்- உபயோகிப்பாளர் இடையில் தரகர் கூடாது. 11ஆம் வகுப்புவரை இலவச கல்வி- காலேஜ் கல்விக்கு சர்க்கார் காசு செலவு செய்யக்கூடாது என சுயமாரியாதை மாநாட்டு தீர்மானங்களை நினைவுபடுத்துகிறார். காமராஜரே சொல்கிறார்- பெரியார் போட்ட பாதையில்தானே காங்கிரஸ் செல்கிறது என்று. எனக்கு கவலை எதிரிகளின் சூழ்ச்சி குறித்துதான் என பாராட்டு மொழிகளையும் காமராஜர் ஆட்சியை காப்பதற்குமான செய்தியைத் தருகிறார். விடுதலை 24-4-1967 தலையங்கத்தில் பார்ப்பான் பணக்காரன் பெரிய மனிதன் வலிமையிழந்த நிலையில் உண்மையான சமதர்மவாதிகள் சமதர்மத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இருப்பார்களேயானால்- சமதர்மம் என்பதை மாற்றிக்கொண்டு பகுத்தறிவை அடிப்படையாக கொண்ட ’பகுத்தறிவாதிகள் பொதுவுடைமைவாதிகள் ஸ்தாபனம்’ எனும் பெயரால் துவக்கி அங்கத்தினர்களுக்கு தகுதி பரீட்சை கொண்டு பிரச்சாரம் துவக்கினால் தேர்தலுக்குள் அனுகூலமான ஒரு நிலையை அடையலாம் என ஆலோசனையை நல்கினார். எனது சுயமரியாதை பகுத்தறிவுக்கொள்கை பொதுவுடைமைக்கு நல்ல வண்ணம் பயன்படலாம் எனவும் உறுதி அளித்தார். தனது 89 ஆம் பிறந்த நாள் செய்தியில் தான் என்றும் சுதந்தர எண்ணமுடியவன் என்றார். எனது சரித்திரத்தில் எனக்கு தலைவனே இருந்ததில்லை. எனக்குள் நான் செய்துகொண்ட வாதமே என்னை பகுத்தறிவாதியாக்கியது. என் முழுமுதற்பணி மூடநம்பிக்கை ஒழிப்பே. இந்திய சரித்திரத்திலேயே புத்தன், அசோகன் ஆட்சிக்குப் பிறகு நமது நாட்டுக்கு இன்றுதானே பகுத்தறிவாளர் நாத்திகர் ஆட்சி ஏற்பட்டிருக்கிறது. சுயமரியாதை, தி.க வை எதிர்த்தால் தி மு க படகு கவிழ்ந்துவிடும். எதிர்க்காமல் விரோதித்துக்கொள்ளாமல் தி மு க இருக்க வேண்டும். தங்கள் மக்களுக்கு அடக்கத்தை போதிக்கவேண்டும். பார்ப்பனரும் காங்கிரசும் ஒன்றாகவில்லையா- அந்தப் புத்தி நமக்கு வரவேண்டாமா என ஆட்சிக்கு வந்த அண்ணா தலையிலான தி மு கவிற்கு அறிவுரை சொல்லி ஆட்சி நிலைக்க வேண்டும் என்கிற விருப்பத்தையும் பெரியார் தெரிவித்தார். ஆட்சியாளர்களுடன் சமரசம் என்பதிலே தன்னோடு பெரியவர்கள்- சிறியவர்கள் என்கிற வேறுபாட்டை எல்லாம் அவர் பார்த்ததில்லை. ஆட்சி அதிகாரம் அதன் பலம் என்ன என்ற உணர்வுநிலை அவரிடம் எப்போதும் தொழிற்பட்டதை நாம் பார்க்கமுடியும். தனது 90 ஆம் பிறந்தநாள் பரிசாக தி மு க எனும் நல்வாய்ப்பை தக்கவைக்க வேண்டுகோள் தந்தார். அதை ஒழியும்படி செய்தீர்கள் எனில் உங்கள் கதி என்னவாகும் என மக்களிடம் வினவினார். 91ஆம் ஆண்டுக்கான செய்தியில் உடல் தளர்வு பற்றி குறிப்பிடுகிறார். களைப்பை சொல்கிறார். சலிப்பும் வெறுப்பும் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். இனிப் பிரசாரத்தில் ஆசை இல்லை. ஈரோட்டிற்கே போய்விடலாமா- வாரப்பத்திரிகை துவக்கி எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என ஆசை இருப்பதையும் வெளிப்படுத்துகிறார். உற்சாகமாக இருக்கும் ஆளும்கட்சியில் எதிர்கட்சியில் அனைவரும் தமிழர்கள். பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதவர் பிளவும், வடநாடு- தென்னாடு உணர்ச்சியும் காணப்படும் தன்மை உருவாகிவிட்டது. நம் தமிழர் சமுதாய விடுதலைக்கு நல்ல வெற்றி வாய்ப்பு எனக் கருதுவதாக மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார். தி மு க ஆட்சி இன்னும் 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டினார். 92 ஆம் ஆண்டிற்கான செய்தியிலும் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது தி மு கவை இருக்கச் செய்யுங்கள்- மக்கள் பகுத்தறிவுவாதிகளாக மாறுங்கள் என வேண்டிக்கொண்டார். 93ஆம் ஆண்டு பிறந்தநாள் செய்தியில் ஜாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப்பாடுபடும் சமத்துவத்தொண்டன் நான் என்றார். கடவுளை சிறுமைப்படுத்தி இழிவுபடுத்தி நடந்துகொண்டு வருபவன். கடவுளை செருப்பால் அடிக்கும்படி நான் சொல்லும் அளவுக்கு ஆளாகி இருக்கின்றேன். 93 ஆம் வயதிற்கு வாழ்நாள் தோன்றிவிட்டது. கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா என தன் அனுபவத்தை கொண்டு அதை புரிய வைக்க முயன்றார் பெரியார். கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்கிற நான்கும் ஒழிந்த இடம்தான் சாதி ஒழிந்த இடமாகும். கோயில்களுக்குப் போகாமல், உற்சவங்களில் கலவாமல், மதப்பண்டிகைகளை கொண்டாடாமல், நெற்றிக்குறி அணியாமல் மக்கள் இருக்கவேண்டும் என அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார். எவனொருவன் தன் நாட்டுக்கு தொண்டு செய்ய, எந்த ஸ்தாபனத்தின் தேர்தலில் ஓர் அபேட்சகராக நிற்பதானாலும் அவன் பத்தாயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையில் செலவு செய்துதான் வெற்றி, தோல்வி அடையமுடியும் என்ற நிலை எப்படி யோக்கியமான நிலையாகும்? காலித்தனத்துக்குப் பெயர் வேலைநிறுத்தம்; அயோக்கியத்தனத்திற்குப் பெயர் அகிம்சை; சண்டித்தனத்திற்குப் பெயர் சத்தியாக்கிரகம். தான் பதவிப் பெற்ற கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு எதிர்கட்சி ஆளாவது முதலிய அயோக்கியத்தனங்கள் எப்படி யோக்கியமான சுதந்திரமாக இருக்கமுடியும்? இன்றைய சுதந்திரம் என்பதில் எந்த அயோக்கியத்தனமான காரியம் விலக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லமுடியும்? இதை சுதந்திர ஆட்சி என்று வயிற்றுப் பிழைப்பு பதவிவேட்டை தேசியவாதிகளும், மக்களும்தான் சொல்லிக்கொள்ளமுடியுமே தவிர, நேர்மையான, அறிவுள்ள ஜன சமுதாயத்தால் சொல்லமுடியுமா என்று கேட்கிறேன். துக்க நாள் ஒழிக! உண்மை சுதந்திர நாள் தோன்றுக என்று விடுதலையில் ( 15-8-1972) தலையங்கம் எழுதினார். ஆகஸ்ட் 15 1947 யை துக்கநாள் என அவர் கொண்டாட சொல்லியதை அதற்கு பின்னர் அதன் வெள்ளிவிழா ஆண்டிலும் வலியுறுத்தி நிற்பதை இத்தலையங்கம் மூலம் ஒருவர் உணரமுடியும். தனது 95ஆம் பிறந்தநாள் செய்தியில் இந்திய அரசியல் சட்டப்படி நாம் பிரஜையாக இருக்கும்வரை- மதம் மாறிக்கொள்ளாமல் இந்துவாய் இருக்கும்வரை சூத்திரர்களாகத்தான் இருந்தாகவேண்டும் என்பதை அவர் குறிப்பிடுகிறார். இந்திய ஆட்சியில் இருந்து கட்டாயமாக தமிழ்நாட்டை விலக்கிக் கொள்ள முயற்சி செய்தே ஆகவேண்டிய நிர்பந்தமான நிலையில் இருக்கிறோம். உடனடியாக விடுதலை முயற்சியில் ஈடுபடவேண்டும். இந்தியாவில் இருக்கும்வரை நாம் இந்துவாகவே இருக்க வேண்டும். நம் மக்கள் எளிதில் மதம் மாறமாட்டார்கள். உடனடியாக கூட்டாட்சியிலிருந்து விலகி சுதந்திர தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டும். தி மு க இம்முயற்சிக்கு இணங்கும் என்று கருத முடியாது. தி மு க விரும்புவதெல்லாம் இந்திய கூட்டாட்சியின் ஆதிக்கத்திற்கு உள்பட்ட மாகாண சுயாட்சி தான். மாகாண சுயாட்சி என்றால் அரசியலில் சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு காரியமும் செய்யமுடியாது. நாட்டுப்பிரிவினை என்றால் எல்லா மக்களுமே பயப்படுகிறார்கள்- சிறைக்கு செல்லவேண்டுமே. 50 வருட காலமாக சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு - பலர் பதவி உத்தியோகம் பெற நேர்ந்ததோடு அரசியலில் பார்ப்பனர் கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்கிற்று என்பதல்லாமல் சமுதாயத்துறையில் உள்ள அடிப்படை இழிவு நல்ல அளவுக்கு பலம் பெற்றுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். பெரியார் தனது 95 ஆம் வருட செய்தியில் தமிழகத்தின் எதார்த்த நிலையை இவ்வாறு மதிப்பிட்டிருந்தார். இதற்கு அடுத்த பிறந்த நாள் செய்தி எழுத அவர் இல்லை. டிசம்பர் 24 1973ல் மறைகிறார். அவரது தலைமையில் இயக்கத்திற்குள் ஜனநாயகமில்லை என்ற கருத்து பொதுவாக நிலவியது. ஆனால் தான் சொல்வதால் ஒரு கருத்தை எவரும் ஏற்கவேண்டியதில்லை. யோசனை செய்து சரி என்றால் ஏற்றுக்கொள் என்று சொல்லியும் வந்தார். நாகர்கோயிலில் சமதர்ம சொற்பொழிவு ஒன்றை பெரியார் ஆற்றினார். இது குறித்து குடியரசு ( 21-9 -1930 ) முக்கிய செய்தி ஒன்றைத் தருகிறது. அவர் மேடையிலேயே தான் பேசுவது தவறு என நினைப்பவர்கள் வந்து வாதம் செய்யலாம் என அழைத்தார். கூட்டத்தாரைப் பார்த்து கேள்வி கேட்பவர்களை தாராளமாக அனுமதிக்கவேண்டும் என்றார். அப்படி ஒருவர் வந்து மாற்றுக்கருத்துடன் பேசவும் செய்தார். பெரியார் அவருக்கு பதிலையும் தந்தார். எந்த தலைப்பில் எவர் பேச அழைத்தாலும் அவர் ஏற்றுக்கொண்டு சென்றால் தான் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் பேசுவேன் என பெரியார் முதலிலேயே சொல்லிவிடுவார். இதில் பிறரின் கருத்திற்கு மதிப்பளிப்பது என்பதையெல்லாம் அவரிடம் எதிர்பார்க்க முடியாது. தன் கருத்து சமூகத்திற்கு அவசியமானது என்பதில் ஆழமான நம்பிக்கை அவரிடம் இருந்ததால் அதை வாய்ப்புள்ள இடங்களில் சொல்லிசெல்வதற்கே அவர் முன்னுரிமை கொடுத்துவந்தார். உண்மையிலேயே மனிதன் செய்யப்புகும், பேசப்புகும் காரியங்கள் ஒவ்வொன்றையும், அதனால் பொதுஜனங்களுக்கு என்ன பயன்விளையும் என்பதையும் கருதித்தான் செய்யப்படவேண்டுமே ஒழிய, பிறர் என்ன சொல்லுவார்கள்- என்ன நினைப்பார்கள் என்பதை ஆதாரமாய் கொண்டதாக இருக்கக்கூடாது என்பது அவரது அபிப்பிராயம். பகத்சிங் என அவர் தலையங்கம் ஒன்றை குடியரசில் (29-3-1931) எழுதியிருந்தார். அவர்களைப்போல நம்பிக்கையுடன் போராட்டம் நடத்தக்குடிய வேறு இளைஞர்கள் இருந்தாலும் அரசாங்கம் தூக்கில் போடட்டும். இந்த மோசமான அரசாங்கம் கீழ் வாழ்வதைவிட, மூடமக்கள் பொறுப்பற்று இருப்பதை சகித்துக்கொண்டு வாழ்வதைவிட உயிரைவிட்டு மறைய நேர்ந்தது மெத்த சாந்தி, நன்மை என தன் வேதனையை இரங்கலாக அவ்வீரர்களுக்கு பெரியார் தந்தார். இப்பேற்றை நாம் அடையவில்லை என வருந்தி சொன்னார். மனிதன் தன் கடமையை செய்தானா இல்லையா என்பதுதான் கேள்வியே தவிர பலன் என்னாச்சு என்பதல்ல என பலனை நோக்காது கடமை செய்வதை அதில் வலியுறுத்தியிருந்தார் பெரியார். சட்டத்தைப்பற்றி பயமில்லாமல் பதவி கிடைக்காதே என கவலைப்படாமல் சுதந்திர தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் என அப்பழுத்த மனிதர் வேண்டுகோள் கொடுத்தார். விலை கொடுக்காமல் கனவு நிறைவேறாது என நினைப்போரும்- விலைகொடுத்தாலும் விலை மட்டும்தான் கொடுக்கநேரும் என புரிந்தவர்களுமாக தமிழகம் தன் தனித்த்னமையைக் காத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறது. பகுதி - 2 - விமர்சனக் குறிப்புகள் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் உடன்பட்டு இயக்கப்பணியாற்றிவந்த சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் பின்னாட்களில் கருத்துவேறுபாடு கொண்டு அவரை விமர்சித்து எழுதினர். பெரியார் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு நல்ல பிள்ளையாக காட்டிக்கொள்ள சமதர்மக் கொள்கையில் சறுக்கத் துவங்கினார் என்கிற விமர்சனம் எழத்துவங்கியது. தனிப்பத்திரிகை துவங்கி இத்தோழர்கள் தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் தரத்துவங்கினர். தோழர் பி ராமமூர்த்தி ’ஆரிய மாயையா திராவிட மாயையா’ எழுதினார். கேசவன் போன்றவர்கள் விமர்சித்து எழுதினர். கோவை ஞானியும் தன் புரிதலை தந்தார். அ. மார்க்ஸ் உள்ளிட்ட நிறப்பிரிகை தோழர்கள் தங்கள் பார்வையைத் தந்தனர். சிங்காரவேலர் சிந்தனைக்களஞ்சியம் தொகுதி 2ல் அத்தியாயம் 64 பொதுவுடைமை விளக்கம் என்ற தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. சிங்காரவேலர் எழுதிய நீள்கட்டுரையது. குடியரசு 1932 என்று ஆண்டு மட்டும் போட்டுள்ளனர். (தொகுப்பாசிரியர்கள் பா. வீரமணி- முத்து குணசேகரன்) சிங்காரவேலர் மார்க்சின் வாழ்க்கைச் சம்பவங்களையும் பொருளாதார கட்டங்களையும் அதில் விளக்குகிறார். கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோவை பொதுவுடைமை விளம்பரம் என பெயரிட்டு விளக்குகிறார். பொதுவுடைமையும் ஜாதியும் என ஒரு பகுதி அதில் இருக்கிறது. அப்பகுதியில் சிங்காரவேலர் இந்தியதேசத்தில் மாத்திரம் மதபேதம், ஜாதிபேதம், பொருளாதார பேதம் என மூன்று தீமைகள் குடிகொண்டுள்ளன. பொருளாதாரபேதத்தை மாத்திரம் போக்குவது மட்டும் போதாது. அதைப்போக்கினால் ஜாதி, மதம் சீரடையும் எனச் சிலர் எண்ணுகிறார்கள். மத வித்தியாசமும், ஜாதி வித்தியாசமும் ஒழியவேண்டும். தொழிலாளர் முதலாளிகளுடன் சமத்துவம் பெறவேண்டுமானால், ஜாதி, மதப் பொருளாதார வித்தியாசங்கள் அனைத்தையும் பற்றற்று ஒழித்தல்வேண்டும். பொதுவுடைமையின்படி எல்லாத் தொழில்களும் உழைப்பவனுக்கே உரியவை. தொழில் என்பது அதனை செய்பவனுக்கெல்லாம் சொந்தம். அங்கு வேலையின்மை இருக்காது. இன்று இருக்கும் நிலையில்லா வேலையை நிலைக்கச் செய்வது பொதுவுடமை கொள்கைத்திட்டம். வேலை செய்யும் சுதந்திரத்தை தொழிலாளர் பெறவேண்டியது அவசியம், தொழில் இடத்தில் தொழிலாளர் ஆதிக்கம் அவசியம். தேசசேவை, விசுவாசம் என்பதெல்லாம் நாட்டின் சுயநலமே என்று சிங்காரவேலர் எழுதியிருந்தார். நினைத்தபோது தொழிலாளியை வேலையிருந்து நீக்கும் ஆதிக்கம் ஒழியவேண்டும். இதற்கு ’ஒர்க்கர்ஸ் கண்ட்ரோல்’ தொழிற்சாலைகளில் வரவேண்டும். முதலாளிக்கு உடைமை இருந்தாலும் தொழிலாளர் ஆலோசனை என்பது தொழிலாளர் உரிமையாக வேண்டும். தொழில் நிச்சயமில்லா வாழ்வு அநித்திய வாழ்வென அறிக. தங்கள் சுகபோகத்திற்காக, பட்டம் பதவிகளுக்காக இருக்கும் தொழிலாளித் தலைவர்களை சிங்காரவேலரும் பெரியார் போல விமர்சிக்கிறார். சிங்காரவேலரும் மதங்களின் பிரயோஜனமின்மை, அவை உண்டாக்கும் பொருளாதார நஷ்டங்கள் பற்றிப் பேசுகிறார். இவ்விரய செலவிற்கு பதிலாக வீடு கட்டுதல், கல்வி , சாலைகள், கிராம மேம்பாடு என எத்தனையோ செய்யலாம் என பரிந்துரைக்கிறார். கராச்சியில் செய்துள்ள பொருளாதார திட்டம் முழுமையும் போலி என்றே கருதவேண்டும் என்பதே சிங்காரவேலர் பார்வையாக இருந்தது. குடியரசு 21-4-1933ல் ஜாதிப்பாகுபாடுகள் நாட்டின் மேன்மைக்கு சுயமரியாதைக்கும் கேடு- ஜாதிக்கொடுமை நாட்டிலுள்ள பார்ப்பானைத் தவிர, மற்ற ஒவ்வொரு மனிதனையும் கவலைக்கும் இழிவுக்கும் உள்ளாக்கி இம்சித்து வருகிறது என சிங்காரவேலர் எழுதினார். ஒவ்வோரு தொழிலாளியும் ஏன் பொதுவுடைமை கட்சியில் சேரவேண்டும் என்கிற மொழியாக்க கட்டுரையும் குடியரசு 20-8-1933ல் இடம்பெற்றது. தேசியம்- தேசிய அபிமானம் என்பதைக் கெடுதலாகவே வரையறுத்தார் சிங்காரவேலர். சுதேசியம் கூட தேசிய சுயநலம் என்றார். தேச நட்பு, தேச விசுவாசம், தேச சேவை என்பவைகளெல்லாம் ஒருவன் தேசமென்று அழைக்கும் நாட்டின் சுயநலமே. எந்த நாடும் தேசியத்தால் சுகப்பட்டதைக் காணோம். தேசியத்தை தூண்டுதலில் முதலாளிகள், மதாபிமானிகள், குருக்கள் துணையாகின்றனர். தேசிய மனப்பான்மை காட்டுமிராண்டித் தன்மைகளை அடுத்தது என்றார் சிங்காரவேலர். சர்வதேச கூட்டுறவே தேவை. இதையே மார்க்ஸ் உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று சொன்னார் என சிங்காரவேலர் எழுதினார். பொதுவுடைமையில் கூலி கூலிக்காரன் என்பதும் ஒழிந்து உழைப்பின் பயன், உழைப்பவன் என வரும். இன்று உழைப்பிற்கும் கூலிக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. முதலாளி இடும் பிச்சையாக கூலி இருக்கிறது என சிங்காரவேலர் விளக்கம் செல்கிறது. பெரியார் அழைத்திருந்த டிசம்பர் 28, 29 1932 சுயமரியாதை இயக்க வேலைத்திட்டக்கூட்டத்தில் சிங்காரவேலர்தான் திட்டத்தைப் படித்து விளக்கினார். மறுநாள் இலட்சியத்திட்டம் குறித்து பெரியார் பேசினார். லட்சியமும் அரசியலும் என்பதில் வேறுபட்ட கருத்துக்கள் வந்தன. பொன்னம்பலம் சரியான கட்டுப்பாடு ஏற்படாமல் திட்டம் பயனற்றது என்றார். ஜீவா, ராகவன் ஆகியோர் லட்சியம் அரசியல் சரியானவைதான் எனப் பேசியிருந்தனர். சுயமரியாதை சமதர்ம கட்சி என்ற பெயரில் 10 நோக்கங்கள் சொல்லப்பட்டிருந்தது. சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம் பக் 846- 848ல் இந்த நோக்கங்கள் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளன. கட்சிக்கு தென் இந்திய சமதர்ம கட்சி எனப் பெயர் சூட்டுகின்றனர். Object: To carry out the following 1. To obtain by constitutional means and methods the repeal of all irrational safeguards for the private enjoyment of public utilities, for all harmful religious and caste practices and habits, and therby free the masses from their degrading religious and caste superstitions and habits and improve their economic life. 2. To obtain the adoption of adult suffrage for election of members to all Govt, Legislative, Municipal bodies, Local, Provincial and Central. 3. To obtain security of service and minimum wage, to all workers in public and private utility services, such as factories, workshops, railways, shipping, transport, post and Telegraphs etc. 4. To get for the landless workers and agricultural labourers working in cultivable lands, estates, and waters, a reasonable share in the produce of such lands, estates and waters. 5. To obtain state sanction for utilizing temple, church, mosque and religious funds and incomes for education both literary and vocational, for sanitation and housing of the mass population in the country and for the maintenance of destitute children and orphans. 6. To obtain the removal of all caste distinctions among all castes, sects and classes of the Indian community, by removing all caste titles from all public records and making such retention of caste titles as a disability to hold any kind of public service. 7. To secure through state action municipalisation of housing, transport, milk medical service and establishment of nurseries in Municipal, Taluk, District Boards and village unions. 8. To set up party candidates to the legislative councils, Taluk District, village boards, unions and panchayats, to secure the aforesaid objects of the party 9. Party candidates pledged to these various objects of the party will be elected for the various Legislative councils, Taluk District Boards, village unions etc 10. These various measures, acts and reforms shall be obtained through all constitutional means and methods such as council entry and propaganda by means of lectures, discussions and discourses as well as through the press. Rules and regulations for party funds and organizations etc will be made by a provisional committee of the party called for the purpose. (குடியரசு 1-1-1933) மேற்கூறிய வேலைத்திட்டக் கூட்ட நடவடிக்கை கூட்டம் டிசம்பர் 28, 29 1932ல் ஈரோட்டில் ஈ வெ ரா அவர்கள் வீட்டில் நடைப்பெற்றது. எல்லா ஜில்லாப் பிரதிநிதிகளும் பங்கேற்ற பலத்த விவாதம் நடந்த கூட்டமாக அது அமைந்தது. ஈ வெ ரா , சிங்காரவேலர், ஜீவா, நாகை முருகேசன், ராமாமிர்தத்தம்மாள், சாமி சிதம்பரனர், பொன்னம்பலம், பட்டுக்கோட்டை அழகிரி, அப்பாதுரையார், லட்சுமிரதன் பாரதி உள்ளிட்ட 200 பேர் பங்கேற்ற குறிப்பை நாம் பார்க்க முடியும். மேற்கண்ட திட்டத்தில் தனியார் சொத்து ஒழிப்பு Abolition of private property என்பது பேசப்படவில்லை என்பதை நாம் பார்க்கமுடியும். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், ஆயுதம் தாங்கிய புரட்சி, மார்க்சிய லெனினிய வழிகாட்டல் என்கிற சொற்பிரயோகங்களும், அடிப்படை உரிமைகள் ஏதும் இல்லை என்பதைப் பார்க்க முடியும். Paternalism என்கிற தந்தை மனப்பாங்கு ஆட்சிக்குரிய சிந்தனையை வெளிப்படுத்துவதையும் பார்க்க முடியும். கராச்சி தீர்மானத்தை விமர்சித்தவர்களால் நிறைவேற்றப்பட்ட இத்திட்டம் அதைவிட எந்த அளவில் மேம்பட்டதாக இருந்தது என புரிந்துகொள்ளமுடியவில்லை.. அத்தீர்மானத்தின் சாரமான ஆங்கில வாசகங்கள் இங்கு தரப்பட்டுள்ளன். காந்தி- நேரு இருவராலும் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டவை என்பது பொதுவாக ஏற்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது செல்வாக்கை செலுத்திய தீர்மானமாகவும் பார்க்கப்படுகிறது. Karachi resoultion 1931 "This Congress is of opinion that in order to end the exploitation of the masses, political freedom must include real economic freedom of the starving millions. In order therefore, that the masses may appreciate what Swaraj as conceived by the Congress will mean to them, it is desirable to state the position of the Congress in a manner easily understood by them. The Congress therefore declares that any constitution that may be agreed to on its behalf, should include the following items, or should give the ability to the Swaraj Government to provide for them. 1. Fundamental rights of the people such as 1. Freedom of association and combination. 2. Freedom of speech and press, 3. Freedom of conscience and the free profession and practice of religion, subject to public order and morality, 4. No disability to attach to any person of religion, caste or creed In regard to public employment, office of power honour and the excercise of any trade or calling 5. Equal rights and obligations of all citizens, No civic bar on account of sex. 6. Equal rights to all citizens of access to and use of public roads, public wells and all other places of public resort. 7. Right to keep and bear arms in accordance with regulations made in that behalf and such reservations as may be required- for public safety. 2. Religious neutrality on part of the state. 3. A living wage for industrial workers, limited hours of labour, healthy conditions of work, protection against the economic consequences of old age, sickness. and unemployment. 4. Labour to be freed from serfdom or conditions bordering on serfdom. 5. Protection of women workers, and especially adequate provisions for leave during maternity period. 6. Prohibition against employment of children of school going age in factories. 7. Right of labour to form unions to protect their interests with suitable machinery for settlement of disputes by arbitration. 8. Substantial reduction of land revenue and rent and in case of uneconomic holdings exemption from rent for such period as may be necessary. 9. Imposition of a progressive income-tax on agricultural income above a fixed income. 10. A graduate inheritance tax. 11. Adult suffrage 12. Free Primary education. 13. Military expenditure to be reduced by at least one-half of the present scale. 14. Expenditure and salaries in civil departments to be largely reduced. No servant of the state, other than specially employed experts and the like to be paid above a certain fixed figure which should not ordinarily exceed Rs 500/- per month. 15. Protection of indigenous cloth by exclusion of foreign cloth and foreign yarn from the country. 16. Total prohibition of intoxicating drinks and drugs. 17. No duty on salt 18. State regulation of the exchange ratio so as to help to Indian industries and bring relief to the masses 19. Control by the state or key industries and mineral resources. 20. Control of usury-direct or indirect. (https://www.constitutionofindia.net/historical_constitutions/karachi_resolution__1931__1st%20January%201931) தோழர்கள் எஸ் வி ராஜதுரை- கீதா பெரியார் சுயமரியாதை சமதர்மம் என்கிற நூலை எழுதியிருந்தனர். அதில் கீழ்கண்ட மதிப்பீடு ஒன்றை நாம் காணமுடியும். ’சிங்காரவேலரால் மட்டுமே தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஈரோடு திட்டம், சட்டத்திற்குட்பட்ட வழிகளில் பிரச்சாரம், கிளர்ச்சி ஆகியவற்றின் மூலமும், சட்டமன்றத்தில் நுழைவதன் மூலமும் நிறைவேற்றப்படுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான். உண்மையில் நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனாவாதத்திட்டம்தான்-– கிராமப்புறங்களில் நிலவிய சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமைக்கொடுமை, சாதி ஆதிக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் கற்பனையான சோவியத்துகளை உருவாக்கும் திட்டம் தான். .அவரது விசாலமான மார்க்சியம், புத்தகப் படிப்பு இந்த மண்ணுக்கேற்ற மார்க்சியமாக மலரத் தவறிவிட்டது. சமதர்மக் கொள்கைகளைப் பரப்புவதற்கு அவருடைய அறிவும் திட்டமும் பயன்பட்டிருக்கலாம். அவ்வளவுதான்’ (எஸ் வி ராஜதுரை- கீதா பெரியார் சுயமரியாதை சமதர்மம் பக் 241) . அந்த நூலின் அதே பக்கத்தில் பெரியார் தரும் விளக்கம் என்பதில் கீழ்கண்ட அம்சத்தையும் நாம் காணமுடியும். ’12. அரசாங்க சட்டத்தை மதித்து அச்சட்டத்திற்குட்பட்ட கிளர்ச்சிகளைச் செய்து சமதர்மத்திட்டத்தை நிறைவேற்றுவதுதான் நாம் ஏற்றுக்கொண்ட திட்டம். அப்படியிருக்க நமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முன்வருகிற முதலாளிகளையும் ஆஸ்திகர்களையும் ஏன் வெறுக்க வேண்டும்” . மேலும் தனது இயக்கம் அரசாங்கத்தை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என பெரியார் சூசகமாக தெரிவித்தார் என்பதை அந்நூலின் பக்கம் 271ல் பார்க்கமுடியும் “நமது சமதர்மக் கட்சியும் அதன் கொள்கைகளும் வேலைத்திட்டங்களும் சர்க்கார் சட்டதிட்டங்களுக்குட்பட்டே இருந்து வருகின்றன. பலாத்காரத்திற்கு எங்கள் இயக்கத்தில் இடமேயில்லை. பிரிட்டிஷ் ஆட்சி உலகில் இன்றுள்ள மற்றெல்லா ஆட்சிமுறைகளைவிட சிறந்ததென்பதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சி எங்களுக்கு இல்லாமல் போனால் அடுத்தபடியாக நாங்கள் விரும்புவது பொதுவுடைமை ஆட்சிமுறையே” “ சமதர்மவாதிகளுக்கு குறிப்பிட்ட ஜாதியினிடமோ மதத்தினிடமோ சர்க்காரிடமோ தகராறில்லை. சமதர்மம் சட்டரீதியாக்கப்பட்டு எல்லா மக்களுக்கும் வழங்கப்படவேண்டுமென்பதும் அதற்கு தடையாயிருப்பவர்களை தண்டிக்கவேண்டும் என்பதே சமதர்மிகள் கொண்டுவரவிரும்பும் சீர்திருத்தமாகும்” ”ஜாதிமத ஏற்றத்தாழ்வுகளை ஒழித்தல், மூடநம்பிக்கைகளை ஒழித்தல் ஆகியனவற்றை சட்டத்திற்குட்பட்ட பிரச்சாரமல்ல என்று அரசாங்கத்தார் கருதுவாராயின் அது குறித்தும் சுயமரியாதை இயக்கம் ஒரு முடிவெடுத்தாக வேண்டும்..” ( பக்கம் 275) இவ்வாறு சட்டவழிகள் குறித்து அழுத்தமாக பெரியார் பேசுவது அரசாங்கத்தின் கண்காணிப்பிற்கு ஆளாகியிருக்கும் தன் இயக்கத்தை பாதுகாப்பதில் இருந்த அக்கறையாக, கவலையாக கரிசனமாக எஸ் வி ஆர்- வ.கீதா பார்க்கச் சொல்கின்றனர். . அதேபோல் ஜீவா 1934களில் சமதர்ம ஏட்டில் எழுதியவைகளை அந்நூல் சுட்டிக்காட்டுகிறது. உழைப்பாளிகளை மையப்படுத்தி அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கவேண்டும் என்று கூறும் ஜீவானந்தம் அக்கட்சி தேர்தலில் நின்று சட்டமன்றத்தில் நுழைந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுமா, மக்கள் தங்களது நியாயமான உரிமைகளை அடைவதற்காக நடத்தும் கிளர்ச்சி சட்டத்திற்குட்பட்டதா அல்லது சட்டவடிவங்களுக்கு புறம்பானதா என்பதை தெளிவுபடுத்தவில்லை என வியாக்கியானப்படுத்தும் எஸ் வி ஆர் இப்பக்கங்களில் (பக் 310) பெரியார் பேச்சு- எழுத்துக்களைப்பற்றியும் அதன் நடைமுறை சாத்தியங்கள் பற்றியும் எந்தவித விமர்சனப்பார்வையையும் வைக்கவில்லை. தோழர் ஒருவருக்கு தந்த பதிலில் பெரியார் நல்லதோர் சுயவிளக்கத்தை அளிக்கிறார். “ஒரு மனிதன் சமதர்மக் கொள்கைக்காரனாக இருப்பானானால் அவன் தனது உள்ளத்தில் மற்றொரு மனிதனை தனக்கு சமமாகவும் மற்றொரு மனிதனுக்கு சமமானவனென்றும் தான் கருதும்படியான ஒரு உணர்ச்சியைக் கொள்ளவில்லையெனில் அல்லது கொள்ளும்படி செய்யவில்லையெனில் சமதர்மத்தைப் பற்றிப் பேசும் பேச்சும்- அதற்காக பாடுபடுவதும் எதற்கு? “ சமதர்ம கொள்கையை நான் அறியதவனாகவோ அல்லது அதில் நம்பிக்கையில்லாதவனாகவோ இருக்கலாம். ஆனால் பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதவர் என்ற பிரச்னையில் எனக்குள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது” “ இந்தியாவில் ஏழை- பணக்காரன் என்பது 100க்கு 90 ஜாதியைப்பொறுத்தே உள்ளது. சரீரத்தால் உழைக்காமல் வாழ்கின்றவன் பணக்காரன் சரீரத்தின்பால் உழைப்பது பாவம் அல்லது தோஷமென்று எந்த ஜாதியானுக்கு உரிமை இருக்கின்றதோ அவனெல்லாம் செல்வவான் கூட்டத்தில் சேர்ந்தவன் – எவனெவன் உழைக்கக் கட்டுப்பட்டவன்… எவனொருவன் கஷ்டப்பட்டும் போதிய சுகமில்லாமல் இருக்கிறானோ அவனையும் ஏழை என்று கருதிக்கொண்டிருக்கிறேன்” ” ருஷ்யாவிலிருப்பது போன்ற சமதர்மக் கொள்கையை இங்கு புகுத்தமுடியாது. நம் கண்ணெதிரில் நமது அனுபவத்தில் உள்ள விஷயங்களையும் நமது புத்திக்கு சரி என்று தோன்றும் விஷயங்களையும் பற்றியே பேசவேண்டும் ” ( பக் 314-15) பெரியார் ஆற்றிய உரை ஒன்றில் சட்டமறுப்பிற்கு இடமில்லை என்பதை தெளிவுபடுத்திவிடுகிறார். “சுயமரியாதை இயக்கத்தில் சட்ட மறுப்பிற்கு இடமில்லை. அரசாங்கத்தின் பகைமையை ஈர்ப்பது இயக்கப் பணிகளுக்கு ஊறு விளைவிக்கும். நாம் பாமர ஏழைகளுக்காக பாடுபடுபவர்கள். நமக்கு பிரிட்டிஷ் சர்க்காரை ஓட்டுவதோ கவிழ்ப்பதோ நோக்கமல்ல. இயக்கம் குறிப்பிட்ட சாதியினரையோ தேசத்தாரையோ எதிர்க்கும் ஒன்றல்ல… இன்றைய திட்டங்களில் எதையாவது அரசாங்கத்தார் குற்றமானது என்று சொல்வார்களானால் திருத்தி அமைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் மனித சமூக சமத்துவமும் சாந்தியும் ஆகிய இலட்சியங்களை விட்டுக்கொடுக்கமுடியாது” ( பக் 318) பெரியார் மார்ச் 1935ல் வெளியிட்ட அறிக்கையில் காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சி மேலானது என குறிப்பிட்டிருந்தார். “ சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்க காங்கிரசை எதிர்ப்பதும் அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும் சமுதாய இயலில் ஜாதிமதபேதங்களை அகற்றுவதும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும் பொருளியலில் சமதர்மமுமேயாகும்” இதை எஸ் வி ஆர் “ சமுதாயத்தின் முதன்மையான முரண்பாடு பார்ப்பனியத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்கும் என்று கருதிய சு.ம.இ கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில் பெரியாரின் அறிக்கையில் எவ்வித முரண்பாடும் இல்லை” என சொல்லிச்செல்கிறார். அரசாங்க அடக்குமுறைகளை கண்டபிறகுதான் சமாதானம் செய்யவேண்டிய முடிவிற்கு வந்ததை பெரியார் விளக்கம் என்ற வகையில் குறிப்பிட்டிருந்தார். “ ஒரு அளவுக்கு ராஜி ஏற்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஆசையின் மீதே பொருளாதார விஷயத்தில் சமதர்மக் கொள்கையை பிரச்சாரம் செய்வதில் சர்க்காருக்கு ஆட்சேபணை இல்லை என்றும் ஜாதிமத சம்பந்தமான விஷயங்களில் வேறு ஜாதி மதக்காரர்கள் மனம் புண்படும்படியோ அவமானம் ஏற்படும்படியோ என்று இல்லாமல் ஜாதிமத கண்டனங்களை செய்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தேன். சர்க்காரோடு இந்த மாதிரியான ஒரு சமாதான முடிவுக்கு வராதபட்சம் ”சர்க்காருக்கும் நமக்கும் வீண்தொந்திரவும் மனக்கசப்பும் ஏற்படுத்தித் தீரும் என்கின்ற நிலையில் மற்ற ஆதாரங்களும் முயற்சிகளும் நிலைமைகளும் இருந்ததால், நான் இந்த சமாதானத்துக்கு வரவேண்டியதாயிற்று….” இப்படி சமாதானம் செய்துகொண்டதனால் இயக்கம் அழிந்துவிடாது என்கிற நம்பிக்கையையும் பெரியார் தெரிவித்திருந்தார். இவ்விஷயத்தில் கேவலமானது என ஒன்றுமில்லை- ஊரார் என்ன சொல்வார்கள் என்பது பிரச்னையல்ல- உண்மையும் துணிவுமான காரியம் என்றே பெரியார் இதனைப் பார்த்தார். இயக்கத்தை காப்பாற்றிய முறையாகவே அவர் எண்ணினார். சர்க்காருக்கு விரோதமான இயக்கம் என்பதாக ஆகிவிடக்கூடாது என்பதால்தான் சட்டவரம்பிற்குட்பட்டு செயல்படுதல் என்பதை பெரியார் வலியுறுத்தி சொல்லிவந்தார். இப்படிச் சொல்வதில் வெட்கப்படவும் அவமானப்படவும் ஒன்றுமில்லை என அவர் வெளிப்படையாகப் பேசினார். இதை எஸ் வி ஆர் “பெரியார் அடக்குமுறைக்கு பயந்து பலாத்கார முறையை கைவிட்டு திடீர் பல்ட்டி அடித்து சட்டவாதத்திற்கு தாவவில்லை” எனப் பேசுகிறார். இது குறித்த கம்யூனிஸ்ட் விமர்சனங்களையும் அவர் கேலி செய்கிறார். தோழர் பி ராமமூர்த்தி வழக்கு ஒன்றை இவ்விடத்தில் சுட்டிக்காட்டி அவருக்கு பார்ப்பனியத்தை விட்டுக்கொடுக்காதவர்கள் ஜாமீன் கொடுத்ததாகவும் ஒரு ’லிங்கை’ ஏற்படுத்துகிறார். சமூக வாழ்க்கையில் சமதர்மமுறை ஏற்படாமல் பொருளாதாரத்துறையிலும் அரசியல் துறையிலும் சமதர்ம முறை ஏற்படவேண்டும் என்று ஆசைப்படுவது முறையான காரியமன்று என்பது பெரியாரின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது. 1935 அக்டோபரில் திருச்சி மாவட்ட மாநாட்டில் புதுக்கோட்டை வக்கீல் தோழர் முத்துச்சாமி வல்லத்தரசு மதம் ஒழியவேண்டும் என்பதை கொள்கையில்தான் சொல்லமுடியுமா - அன்றி ’நடைமுறையிலும்’ ’முதலாவதாகவும்’ சாதிப்பது சாத்தியமா என்பது கவனிக்கப்படவேண்டும் என்கிற ’காரியசாத்தியம்’ பற்றிய கேள்வி எழுப்பினார். ஜீவா, வல்லத்தரசு உரைகளுக்கு பதிலளித்த பெரியார் “ பணக்காரர்களை நாம் தற்போதுள்ள நிலைமையில் எப்படி ஒழிக்க முடியும்? எந்த வகையில் அனுபவத்தில் இன்று அது முடியும்? பார்ப்பான் ஒழிவதற்கு முன் பணக்காரத்தன்மை ஒழிந்து விடுமா? அது சாத்தியமா என பதில் கேள்விகளை முன்வைத்தார். நீதிகட்சியின் சில முக்கிய சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார். குடியரசில் (24-12-1933) சிங்காரவேலர் கட்டுரை ஈரோட்டு திட்டம் குறித்து ராமனாதன் போன்றவர்களின் கருத்திற்கு விளக்கமளிப்பதாக வந்தது. எல்லாவகைப் புரட்சிகளும் ஏதோ ஒருவகையில் சட்டசபைகளிலிருந்தே கிளம்புகின்றன . எனவே சுயமரியாதை இயக்கம் சட்டமன்றம் சென்று சோசலிசம் குறித்து பேசலாம் என அழுத்தமாக சிங்காரவேலர் வாதாடியிருந்தார். புரட்சி 4-3-1934 என காட்டப்பட்டு சிங்காரவேலர் தொகுப்பு 2ல் 98ஆவது அத்தியாயமாக சேர்க்கப்பட்டிருப்பது ’சமதர்ம உபன்யாசம்’. மார்ச் 4ல் முதலாவது சமதர்ம மாநாட்டில் அவர் ஆற்றிய தலைமையுரையது. சோசலிசம் எனச்சொல்லி 5 அம்சங்களை அவர் விளக்குகிறார். பொது சொத்துரிமை (common ownership), சமத்துவ விநியோகம் (common distribution), சமத்துவ லாப உரிமை ( common use of profit), ஜனநாயக ஆட்சி ( democratic control) உழைப்பவனுடைய ஆட்சி (workers rule). இதை அனுஷ்டானத்திற்கு கொண்டுவர பாடுபடுபவர்கள் சமதர்மிகள். மற்றவர் போலி சமதர்மிகள். எனவே சோசலிஸ்ட் லீக்- சமதர்ம சங்க அவசியமாகிறது என்பது அவர் தந்த அழுத்தம். இந்த சொற்பொழிவில் சிங்காரவேலர் பல நூல்களை அறிமுகப்படுத்திப்பேசுகிறார். Rebel India by Brailsford, Indian crisis by Fenner Brockway, whitley commission, Indian population by Brij Narayan, The pesantry of India, Modern India by R.P Dutt- இவை தவிர அவர் நெளரோஜி, லஜ்பத்ராய், பெசண்ட் அம்மையார் நூல்களையும் குறிப்பபிடுகிறார். மேலும் பல்வேறு புனிதநூல்கள், புராண இதிகாசங்கள், ஹெகலிசம் உட்பட பல்வேறு இசங்கள் என அடுக்கி இவை எவற்றாலும் ஒரு கைப்பிடி அன்னம் உலகில் அதிகமாக விளந்ததாக இல்லை என சொல்கிறார். மனித உழைப்பைத்தான் விலை (labour is value) என்றார் மார்க்ஸ். அதன் விலை உழைப்பவனுக்கு போகாமல் தரித்திரம் ஏன் என சிங்காரவேலர் வினவினார். உடனடி வேலை சமதர்ம சங்கங்களை ஸ்தாபிப்பதே-’ஸ்தாபனம் ஸ்தாபனம்’ எனவும் சிங்காரவேலர் தெரிவித்தார். மே 13, ஜூன் 16 1934 புரட்சி இதழ்களில் சோசலிசம் பற்றி சிங்காரவேலர் எழுதினார். சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம் வால்யூம் 3ல் 104வது அத்தியாயம். மார்க்சின் Scientific Socialism என்பதை சாஸ்திரீக சோசலிசம் எனச்சொல்லி விளக்குகிறார். முதலாளித்துவ அடிமைக்கட்டிலிருந்து தொழிலாளர் விடுதலை பெற நிகழ்த்தும் அனைத்து முயற்சிகளுமே சோசலிசமாகும்- பேதாபேதமற்ற ஜன சமுதாயத்தை ஸ்தாபிப்பது சோசலிச வேலையாகும். தொழிலாளர்களையும் தாழ்த்தப்பட்ட வகுப்பார்களையும் ஒன்றுபடுத்தி அவர்களுக்கு சோசலிச உணர்வூட்டல் இக்கட்டுரையின் அவசர நோக்கம். கடவுள் விரோத பிரச்சாரத்தை சோசலிஸ்டு தத்துவத்துடன் புகுத்துவது சோசலிசத்தின் வளர்ச்சிக்கு தீங்காகிவிடும். ஆரம்ப காலத்தில் தொழிலாளரிடம் நாஸ்திக பிரச்சாரம் என்பதை லெனின் ஏற்கவில்லை என விளக்குகிறார். ரஷ்யப்புரட்சிக்கு அடிப்படையாக நின்றவை சரீர சம்பந்தமான பொது உணவு, பொதுநிலம், பொது சமதானம். ஜாதி ஒழித்தலுமல்ல, மதத்தை அழித்தலுமல்ல- சமபந்தி போஜனமல்ல- கலப்பு மணமும் அல்ல. இவைகள் சமூக சீர்திருத்தங்களுக்கு எவ்வளவு அவசியமாயினும், புரட்சிக்கு வேண்டியவைகளல்ல என்று சோசலிஸ்ட்களால் மதிக்கப்படுகின்றன. சக்லத்வாலா அபிப்ராயமும் நமது அபிப்பிராயமும் இதுவே என லெனினையும் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார் சிங்காரவேலர். கிருஷிகர் ஆதிக்கம் வலுத்த பிறகு வேண்டிய பூரண சுதந்திரம், கடவுள் மறுப்பு முதலிய இலட்சியங்கள், தற்போது விளம்பரத்திற்கு அவசியமில்லை என்றே தோன்றுகிறது. கிருஷிகர்களுக்கு வேண்டிய உணவு, நிலம் உலக சமாதானம் பெற சோசலிஸ்ட் பெரியார் வழிகாட்டவேண்டியது அவசியம். குடியரசு 8-10-1933ல் சுயமரியாதை இயக்க நெருக்கடி குறித்து சிங்காரவேலர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். வெறும் சீர்திருத்த இயக்கமாக இருந்தது ஈரோட்டு திட்டம் மூலம் புரட்சிகர இயக்கமாக மாறிவருகிறது. ஆனால் அதை பேப்பர் திட்டமாக வைக்காமல் மாநாட்டைக்கூட்டி அங்கீகரிக்க செய்யவேண்டும். இயக்கம் பிளவுபடும் என தலைவர் ஈ வெ ரா தயங்குவது அதைரியமாகும். தீவிர மாறுதலை விரும்புவோர் அதற்கு விரோதமானவர்களுடைய சம்பந்தம் வைக்காமல் இருப்பது சிறந்தது. எந்த இயக்கத்திலும், தலையாட்டுகின்றோருடன் (wobblers) உறவாடுதல் அபாயத்திற்குக் கொண்டு வந்துவிடும் என அறிவுறுத்தினார். தோழர் சிங்காரவேலர் செப்டம்பர் 30, 1934ல் ஈ வெ ராவும் பார்ப்பனர் அல்லாதவர் மாநாடும் என்கிற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். சி.வே சி க தொகுப்பு 3ல் 1165 ஆம் பக்கத்தில் இக்கட்டுரை இருக்கிறது. ஈரோட்டு திட்டத்தை (1932) அமுல்படுத்தப்படவேண்டியது சமதர்மிகளின் கடமை. அத்திட்டங்களை கனவிலும் நினையாதவர்களுடன் சரச சல்லாப வார்த்தைகளைப் பேசுவதால் யாது பயன் என வினவினார் சிங்காரவேலர். இதற்கு குறிப்பு வெளியிட்ட பெரியார் ஜஸ்டிஸ் கட்சி காங்கிரசைவிட மோசமானது என்று எனக்கு எந்தத்துறையிலும் தெரியவில்லை. காங்கிரஸ் ஜாதி ஆதிக்கம் வேண்டுமென்கிறது. ஜஸ்டிஸ் பண ஆதிக்கம் என்கிறது. காங்கிரஸ் தலைவர்களுக்கு எப்படித் தங்கள் பூணூலைக் கழற்றி எறிய முடியவில்லையோ, அப்படித்தான் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்குப் பணத்தை வீசி எறிய முடியவில்லை. பணக் கொடுமையை விட பூணூல் கொடுமையே பலமானதும் மோசமானதுமென எண்ணுகிறேன். மற்ற பல விசயங்களில் தோழர் சிங்காரவேலர் அபிப்பிராயந்தான் அநேகமாக நானும் கொள்கிறேன் என பதில் தந்திருந்தார். புதுவுலகம் மே 1935 இதழில் சிங்காரவேலர் சுயமரியாதை, ஜஸ்டிஸ், காங்கிரஸ் குறித்த கட்டுரையை எழுதியிருந்தார். அதில் பிராமணர்- பிராமணர் அல்லாதார் உயர் பதவிக்கான போட்டியால் தேசியத்தில் பிளவுண்டாயிருக்கிறது. இப்பிளவால் பெரும்பான்மை பொதுமக்களுக்கு- பொதுவாக தேசத்திற்கு யாதொரு நன்மையுமில்லை. 36 கோடி மக்களில் பிராமண ஜட்ஜ்களாலும், பிராமணரல்லாத மந்திரிகளாலும் எந்த விஷயத்தில் வாழ்க்கை உயர்ந்தது.. தேசத்தை பிரித்தாளும் மனப்பான்மைக்கு இன வித்தியாசங்கள் அனுகூலமாய் இருக்குமே ஒழிய, பொதுவில் தேசத்திற்கு யாதொரு நன்மையும் கிடையாது. நீதிக்கட்சியின் அனுபவத்தையும் சேர்த்தே சிங்காரவேலர் இங்கு மதிப்பிடுகிறார். காங்கிரசில் ஒரு பிராமண அங்கத்தினருக்கு 3, 4 பிராமணரல்லாதவர் இருந்து வருகிறார்கள். அவர்கள் ஒரு பிராமணனால் அடக்கி ஆளப்படுகிறார்கள் என்று சொல்வது despicable nonsense- இழிவான மதியீனம். காங்கிரஸ் செல்வாக்கிற்கு அவர்கள் செய்யும் தியாகமும் காரணம் . தியாகிகளை நம் நாடு வழிபடும் என சிங்காரவேலர் விளக்கம் செல்கிறது. இதே இதழில் தென் இந்திய அரசியல் நிலைமை என்கிற கட்டுரையை அப்ஸர்வர் என்கிற பெயரில் சிங்காரவேலர் எழுதியிருந்தார். அதில் ஜஸ்டிஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி, பொதுவுடைமைக் கட்சி, சமதர்ம கட்சி என நான்கையும் மதிப்பிடுகிறார். பொதுவுடைமைக் கட்சியைப் பற்றிச் சொல்கையில் தொழிலாளர் ஸ்தாபனங்களைக் கைக்கொள்ளப் பாடுபடுகிறார்கள்- அவர்கள் potential force என்றார். காங்கிரஸ் தேசத்திற்காக பாடுபட்டது- தொண்டர்கள் தியாகம் போற்றத்தக்கது. ஏழையை உபயோகப்படுத்தி பணக்காரர் நன்மையில் கண்ணும் கருத்துமாக காங்கிரஸ் இருக்கிறது. இந்தியாவிற்கு தேவை அரசியல் விடுதலையல்ல, பொருளாதார விடுதலையே. காங்கிரசையே பின்பற்றிக்கொண்டிருந்தால் உலக ஓட்டத்தில் பின்தங்கிவிடுவோம் என அதை மதிப்பிட்டார். ஜஸ்டிஸ் கட்சியினர் அவரவர்க்கு அனுசரணையாக உள்ளவர்களை பதவியில் புகுத்தியதை தவிர, தேச நலத்தை கிஞ்சிற்றும் கவனியாது, தேசத்தையே அந்நியர்க்கு காட்டிக்கொடுத்து விட்டார்கள் என்கிற விமர்சனத்தை வைத்தார். தென் இந்தியாவில் மிக பலம் வாய்ந்த கட்சி சமதர்ம கட்சி. அதன் தலைவர் ஈ வெ ராமசாமியும் சமதர்ம கொள்கை பரவுவதில் செய்த ஊழியத்தைத் தென் இந்தியா எப்போழுதும் மறக்க முடியாது. சமதர்மத்திற்காக நேற்றுவரை பாடுபட்ட ஈ வெ ராமசாமி ஏதோ தான் தெரியாமல் விஷயங்களைச் செய்துவிட்டதாகவும், தான் மிகவும் நல்ல பிள்ளை என்றும், சர்க்காருக்கு வேண்டியவரென்றும், சமதர்மத்திற்கும், அவருக்கும் சம்பந்தமில்லையென்றும் சொல்ல ஆரம்பித்துவிட்டார் என பாராட்டையும் விமர்சனத்தையும் ஒருசேர சிங்காரவேலர் வைத்தார். புதுவுலகம் ஜூன் 1935ல் இரண்டு அம்சங்களை சிங்காரவேலர் சமதர்மிகளின் கவனத்திற்கு என சுட்டிக்காட்டினார். சமதர்மிகள் காங்கிரஸ்காரர்களானாலும், சுயமரியாதைக்காரர்களானாலும் இலட்சியத்தில் குறிக்கோளாக இருக்கவேண்டும். காந்தியம் பாதுகாவலானதா அல்லது பொப்பிலிசம் பந்தோபஸ்தானதா என்கிற கனவு கூடாது. பேதங்கள் இல்லாதொழிக்க கவனம் செலுத்துவதுடன் மதம், பாஷை, நிறம் வேற்றுமை- பிரிவினைகளை ஒழிக்க பின்தங்கிவிடக் கூடாதென்று விண்ணப்பித்தார். புதுவுலகம் ஜூலை 1935ல் போலி பகுத்தறிவின் ஆபாஸம் என்கிற கட்டுரையை சிங்காரவேலர் எழுதினார். அதில் ஆங்கிலேயரை வெறுப்பது Anglophobia எப்படி இகழ்ச்சியோ , அது போலவே பிராமண சமூகத்தினரை Brahminophobia வெறுப்பதும் இகழ்ச்சி என்று அறிதல் வேண்டும். ஒரு சமூகத்தார் வேறொரு சமூகத்தாரை இகழ்வதும், மானுஷிகமாகாது. சமூக ஒற்றுமையை நாடுவோர் எநத சமூகத்தையும் வெறுக்கலாகாது. உண்மையில் ஜாதியை வெறுத்தோர் எந்த ஜாதியை இகழ்ந்து, தன் ஜாதியப் புகழ்வார்கள் ? பொதுவாக மதங்களை கைவிட்டோர், எந்த மதத்தை தாழ்த்தி எந்த மதத்தை உயர்த்துவார்கள். உண்மையில் மதங்களை விலக்கியோருக்கும், ஜாதியைத் தள்ளி வந்தவர்களுக்கும் எல்லா ஜாதியும் ஒன்றே- எல்லா மதங்களும் ஒன்றே. உயர்வு தாழ்வு கிடையாது- எல்லாம் ஒதுக்கி வைக்க வேண்டியவைகளே. எந்த சுயமரியாதையுடையோனும் தன்னைப் புகழ்ந்து பிறரை இகழமாட்டான். தன்னுடைய நன்மைக்கே உழைக்க மாட்டான். சிங்காரவேலர் வகுப்புவாரி மனப்பான்மை கொடிது என்றார். உனக்கு எனக்கென்ற நாடா சீர்படும். எந்த நாடும் உத்தியோக வேட்டைக்காரர்களால் கெட்டுப்போகும் என லெனின் சொன்னதாகவும் குறிப்பிடுகிறார். செப்டம்பர் 1935 இதழில் ஜாதி வாதமும் வகுப்பு வாதமும் என்கிற தலைப்பில் எழுதியிருந்தார். ஜாதிவாதம் சமதர்மத்திற்கு நேர் விரோதமானது. சமதர்மம் பொருளாதார வித்தியாசத்தை மாத்திரம் அனுசரிக்கிறதே தவிர ஜாதி, மத, நிற பேதங்களை அங்கீகரிப்பதில்லை என அதில் பேசியிருந்தார். ஒரு ஜாதி மாற்றொரு ஜாதியுடன் யுத்தம் செய்தால், ஒரு ஜாதிக்கு வெற்றி கிடைக்கலாம். ஆனால் இந்த வெற்றி சமதர்மத்தை நிலை நாட்டமாட்டாது. ஜாதியை அடிப்படையாக கொண்டால் ஹிட்லரிசம் ஏற்படுமேவொழிய, சமதர்மம் ஏற்படாது. இங்கு அவர் வகுப்பு எனக் குறிப்பிடுவது வர்க்கம் என்கிற பொருளில் என புரிந்துகொள்ள வேண்டும். இதே இதழில் சமதர்ம விளக்கம் என சிங்காரவேலர் வேறு கட்டுரை ஒன்றையும் எழுதியிருந்தார். சமதர்மம் என்பது சொத்துக்களைப் பரிபாலிக்கும் ஓர் வழி. சொந்தக்காரர் என்பதும் இலாபம் என்பதும் கிடையாது. மக்கள் யாவரும் போதுமான அளவு உண்டு உடுத்தி வாழவேண்டுவது என்பது அதன் நோக்கம். இவ்வுலக வாழ்வை கவனித்து ஒருவருக்கு ஒருவர் உதவி புரிந்து வாழ்வதே நோக்கம். இதற்கு உழைப்பவர் யாவரையும் ஒன்றுபடுத்தி, கட்சி அமைப்பது அவசியம். இன்று பேசுவது போலி ஜனநாயகம். தனியார் உடைமை கொண்ட முதலாளித்துவம் உள்ளவரை பொதுஜன ஆட்சி இராது . எளிய விளக்கம் என்றாலும் சமதர்மம் குறித்த அடிப்படைகளை சிங்காரவேலர் இதில் விளக்கிவிடுகிறார். நவம்பர் 1935 இதழில் ’மதமாற்றம்’ பற்றி சிங்காரவேலர் விவாதித்தார். முரட்டுத்தனம், பிடிவாதம் எல்லா மதங்களிலுமுண்டு. எந்த மதத்திலும் Tolerance அதாவது அபிப்பிராய சுதந்திரம் இல்லை. இந்தச் சுதந்திரத்தை அடையவேண்டி கொல்லப்படாதார் யார்? இம்சிக்கப்படாதார் யார்? ஒன்பது சனியன்களில் எந்த சனியன் உயர்ந்தது- தாழ்ந்தது. எதற்கு மதம் என்கிற கேள்வியைக்கேட்டு- உண்பதற்கா- நோயின்றி வாழவா- சமாதானத்திற்கா- ஆடல் பாடலுக்கா- நேசிக்க அன்பு செலுத்தவா- சுத்த சுகாதாரத்திற்கா- தீமை விலக்கி நன்மையை கடைப்பிடிக்கவா எதற்கு என வினவுகிறார். இத்யாதிகளுக்கு மதம் வேண்டாமென்றால் மற்று எதற்கு என்கிற கேள்வியை சிங்காரவேலர் எழுப்பினார். மதமாற்றம் எனும் பிரச்னையில் அம்பேத்கருக்கு நமது வேண்டுகோள் என அக்டோபர் 1935 இதழில் எழுதினார் சிங்காரவேலர். உங்கள் ஏழு கோடி மக்களின் பொருளாதர தாழ்வை நீக்காமல் ஹரிஜன் என்று அழைக்கப்பட்டாலும்- கிறிஸ்துவன், முஸ்லீம், புத்தன், பிரம்மசமாஜன் அல்லது ஆரிய சமாஜன் என்று அழைக்கப்பட்டாலும், உங்கள் வயிறு நிரம்ப உணவு கிடைக்குமா? எங்கே பெருஞ்செல்வம் நடமாடுகிறதோ, அங்கே ஜாதி மதங்களும் தாண்டவமாடுகின்றன. சிலரிடத்தே நிலை பெற்றுள்ள செல்வம், பலரிடத்தே பரவினாலொழிய ஜாதியும் மதமும் போகாது. நமது தீண்டாமை ஒழிய வேண்டுமாயின், நமது ஏழு கோடி மக்களின் பொருளாதாரத் தாழ்வை முதலில் போக்க முயலுங்கள். மதம் மாறுதலால் தாழ்ந்த நிலைமை உயரா என்கிற தன் பார்வையை சிங்காரவேலர் வெளியிட்டார். தோழர் என் ராமகிருஷ்ணன் எழுதிய தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் நூலில் சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமைப் பிரச்சாரமும் என்கிற அத்தியாயம் பக்கங்கள் 120- 135ல் இருக்கிறது. பெரியார் ராமநாதனுடன் மேற்கொண்ட 1931 டிசம்பர் சுற்றுப்பயணம், அவரின் ருஷ்ய அனுபவங்கள்- தொடர்ந்த சோசலிச பிரச்சாரங்கள் இப்பக்கங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அவ்வியக்கத்தில் சமதர்ம பிரச்சாரத்தை சிலர் விரும்பவில்லை. ஆங்கிலேய அரசும் விரும்பவில்லை. இந்த ஆட்சி ஏன் ஒழியவேண்டும் என்பதற்கு பெரியார் எதிர்வழக்காட விரும்பாமல் ஆறுமாத சிறையை எதிர்கொண்டார். 1935ல் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்பதை தமிழாக்கம் செய்த ஜீவா, வெளியிட்ட ஈ வெ கிருஷ்ணசாமி அவர்களின் மீது ராஜத்துரோக குற்றச்சாட்டு வழக்கு போடப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தடையானது போல் சுயமரியாதை இயக்கத்திற்கும் ஆபத்து வரலாம் என்கிற செய்தி நீதிக்கட்சி நண்பர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. மிரட்டல்கள் பெரியாரை கலக்கமடையச் செய்தன. சமதர்ம பிரச்சாரத்தைக் கைவிடுவதென முடிவு செய்தார். இருவரும் மன்னிப்புகேட்கவேண்டும் எனப் பெரியார் பணித்தார். ஜீவாவிற்கு விருப்பமில்லை எனினும் செய்ய நேர்ந்தது. பிறகு மார்ச் 10ல் பெரியார் வெளியிட்ட அறிக்கையில்தான் காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சி மேலானது என்கிற விளக்கத்தை நாம் பார்த்தோம். பெரியாருடன் கருத்துவேறுபாடு தோன்றிய நிலையில் ஜீவா ஜோலார்பேட்டையிலிருந்து சமதர்மம் பத்திரிகை துவங்கினார். நாகை முருகேசனைக்கொண்டு 1935ல் புது உலகம் துவக்கப்பட்டது. பாரதிதாசன் இதை வரவேற்றிருந்தார். சிங்காரவேலரும் அதில் பல கட்டுரைகளை எழுதினார். ஜீவா, ஏ எஸ் கே அய்யங்கார் ஆகியோரும் எழுதினர். பெரியார் ஜீவா பனிப்போர் 1936 திருத்துறைப்பூண்டி மாநாட்டில் வெடித்தது. ஜீவா சுயமரியாதை சோசலிஸ்ட் கட்சி ஒன்றை துவக்கினார்.. பின்னர் காட்டே, டாங்கே வழிகாட்டலில் அக்கட்சி கலைக்கப்பட்டு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைவது என்ற முடிவு ஏற்பட்டது. பின்னர் காட்டே, சுந்தரையா முன்முயற்சியால் 1936ல் கம்யூனிஸ்ட் கட்சிக்கிளை உருவாக்கப்படுகிறது. இவ்வாறு சுயமரியாதை இயக்கத்திலிருந்து ஜீவா போன்றவர்கள் மாறுபட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தது இந்நூலில் பேசப்படுகிறது. தோழர் கோவை ஞானி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மார்க்சியம் பெரியாரியம் என்கிற பெயரில் வெளியானது. அதில் பெரியார் குறித்து உயர்ந்த மதிப்பீடுகளையும் சில விமர்சனங்களையும் தோழர் ஞானி எழுதியிருக்கிறார். பெரியாரின் சிந்தனைகள் சில திறனாய்வுக் குறிப்புகள் பரிமாணம் மே 1981 இதழில் வெளிவந்த கட்டுரை. தமிழகத்தில் சமதர்ம தேவையை வற்புறுத்திய மூலவர்களில் பெரியாரும் ஒருவர். சும்மா அலங்காரமாக வேடிக்கையாக புராண முட்டாள்தனத்தையும் , பார்ப்பான் சூழ்ச்சியையும் பேசிக் காலம் கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கம் என்றால் அது அழிந்து போவதே மேலான காரியம் எனப்பேசிய பெரியாரிடம் ’நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ வெளியீட்டு சர்ச்ச்சைக்குப் பின் ஏற்பட்ட மாற்றத்தை ஞானி சொல்கிறார். மார்ச் 31, 1935ல் சுயமரியாதை இயக்கம் சட்டமறுப்பு இயக்கமல்ல- ஒத்துழையாமை இயக்கமல்ல- சட்ட வரம்பிற்குட்பட்ட இயக்கம் என தன்னை வேறுபடுத்தி காட்டுகிறார். ஏகாதிபத்தியத்தையும் நிலவுடைமையையும் தகர்க்காமல் சாதி மத ஒழிப்பை பற்றிய பேச்சு சாக்கடையை வைத்துக்கொண்டு கொசு கொல்லும் முயற்சி என்பது ஞானியின் விமர்சனம். சாதி மதங்கள் பொருளியல் சக்திகளுடன் இணைந்துள்ளன. இவை மேற்தட்டின் பகுதி. இவை தானே மறையும் என மார்க்சியர் பொருளாதாரவாதம் பேசியிருக்கலாம். ஆனால் மேற்தட்டின் அழுத்தம் சக்தியை மறுப்பது மார்க்சியமாகாது என்கிற விளக்கத்தையும் ஞானி தருகிறார். சாதி மதம் என்பது யாரோ கொண்டுவந்து போட்டதல்ல. இவற்றின் தோற்றத்தில் திராவிடருக்கும் பங்குண்டு. தேவையாக இருந்து தடையாகிவிட்டவை அவை. சுயமரியாதை இயக்கத்தை ஆரிய எதிர்ப்பாக மட்டும் குறுக்கிக்கொண்டது. பிற மேல் ஜாதியினருக்கும் உடைமைவாதியினருக்கும் பாதுகாப்பான நடைமுறைகள். இவ்வகையில் மார்க்சிய எதிர்ப்பாகவும் இவை வடிவம் பெறுகின்றன என்கிற விமர்சனம் ஞானியால் வைக்கப்பட்டிருந்தது. ஆரியர் திராவிடர் பகுப்பில் பெரியார் ஒருவகை தூய்மையான தொன்மையை கருதினார். அப்படி ஒரு ’தூய்மைத் தொன்மை’ எந்த இன மக்களுக்கும் இருந்ததில்லை என்றாலும் வரலாற்றிலிருந்து பிரித்து பெரியார் கண்ட ’திராவிடத் தூய்மை தொன்மை’ ஆற்றல் மிகுந்த தொன்மம் என கண்டறிகிறார் ஞானி. பெரியாரின் பார்வை தனது விருப்பு வெறுப்பிற்கு உட்பட்ட உலகத்திற்கு பொருள் சொல்லும் வகையானது. புறத்திலிருந்து வரலாற்றிலிருந்து உண்மைகளைத் தேடித் தொகுக்கும் முறையல்ல. அவர் ஒருங்கிணைந்த சிந்தனையாளருமல்லர் என்றார் ஞானி. பெரியாரது சிந்தனைத் தொகுப்பில் ஒன்றோடு ஒன்று ஒட்டாத பல கூறுகள் உண்டு. ஆனால் சுயசிந்தனை அவரிடத்தில் தீவிரமாக இயங்கியது. பெரியாரது பகுத்தறிவு இணைந்திருக்கவேண்டிய பலவற்றையும் பிரித்துவிட்டது. பிளவுண்ட சூழலில் சிறு எல்லைக்குள் நின்று போராடினார். அவரிடத்தில் இயங்கியல் முறையில்லை. வரலாற்று பொருள் முதல்வாதத்தின் சில கூறுகள் மட்டுமே உள்ளன. அதேநேரத்தில் காந்திக்கு நிகரான பெருமை உடையவர் பெரியார் என இக்கட்டுரையில் எழுதினார் ஞானி. பெரியாரின் குறுகிய எல்லைகள் தகர்ந்தால் மார்க்சியத்தின் எல்லைக்குள் அது வரும். தமிழக மார்க்சியர்கள் இந்த உறவால் தங்களை செழுமைப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் ஞானி கருதினார். தோழர் ஞானி பார்ப்பனிய எதிர்ப்பா- சமதர்மமா எது பெரியாரியத்தின் மய்யம் என்கிற கட்டுரை ஒன்றை மே 1993ல் நிறப்பிரிகை விவாதத்திற்காக எழுதினார். இக்கட்டுரையும் அவரது புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் மார்க்சியர்கள் மீதான விமர்சனமும் இருந்தது. சமதர்மக்கொள்கையை ஏற்றவர்கள் தொடக்கத்தில் பெரியார் மீது அமர்ந்து சவாரி செய்ய விரும்பினார்கள். பின்னர் காங்கிரஸ் சோசலிச கட்சி- நேருவின் சோசலிச ஏற்பு எனச் சென்றனர். இன்று பொருளாதாரவாதம், தொழிற்சங்கவாதம், அரசியல் அதிகாரவாதம் மார்க்சியத்தை முடக்கியுள்ளன. மார்க்சியத்தின் துணைச் சக்தி பெரியார் இயக்கம். மார்க்சியர் தோற்ற இடத்தில் பெரியார் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்க வேண்டியதில்லை. ..இன்று பெரியார் இயக்கம் முதலாளியமாகத்தான் சுருங்கிக் கிடக்கிறது. சாதி, மதம், பார்ப்பனீயம் சமூக மாற்றத்திற்கு தடையான மூலசக்திகள் என உருப்பெருக்கி இந்திய சமூகமே சாதியச் சமூகம் என வரையறுத்து மார்க்சியர்களும் இதில் சரிவது மார்க்சியத்தை சுருங்க செய்யும். அரசு ஆதிக்கத்தை முதலாளியத்தை நிறுவுவதற்கான கருத்தியல்களில் ஒன்று பார்ப்பனீயம் என்று ஞானி பேசினாலும் சாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு இவை மூன்றையும் மட்டும் ஆதாரமாக்கிக்கொண்டு முதலாளிய எல்லையைக் கடக்க முடியாது என்றார் ஞானி. வசந்தகுமார், கேசவன் நூல்களை திறானாய்வு செய்தல் எனும் கட்டுரை ஒன்றில் நீதிக்கட்சியோ, திராவிடர் கழகமோ பிரிட்டிஷாருக்கு எதிராக போராடவில்லை எனச் சொல்வதில் பொருளில்லை என்கிறார் ஞானி. சமூக விடுதலையின் களங்களில் செயல்பட்டதன் மூலம் இவர்களும் விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டனர் என்கிறார். அதே நேரத்தில் சுயமரியாதை இயக்கம் மூலம் முதலாளியம் பலம் பெற்றது என்பது உண்மை. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் விளைவும் முதலாளிய ஆக்கம்தான் என்கிறார். கேசவன் பெரியாரை பிழைப்புவாதி, சந்தர்ப்பவாதி, கவர்ச்சி அரசியல்வாதி என அடுக்குவதை வசைமொழிகளாக ஞானி பார்த்தார். இந்தி எதிர்ப்பில் கம்யூனிஸ்ட்கள் பங்கேற்கவில்லை. திராவிடம் இந்தி எதிர்ப்பு பேசி சமதர்மத்தை கைவிட்டது என்றார் ஞானி. அதே நேரத்தில் பெரியார் புரட்சியை ஏன் கைவிட்டார் என புரட்சியில் சாதனை ஏற்படுத்தாத கம்யூனிஸ்ட்கள் கேட்பது நேர்மையான ஆய்வல்ல என கேசவனுக்கு பதில் தருகிறார் ஞானி. அப்படிச் சொல்லும் ஏகபோக உரிமையை ஞானி தன்னிடம் மட்டும் இருப்பதாக எப்படி நினைத்துக்கொண்டாரோ தெரியவில்லை. சிந்தனையாளன் 2004 பொங்கல் மலருக்கு ’பெரியாரியமும் மார்க்சியமும்’ என்ற நீண்ட கட்டுரை ஒன்றை ஞானி எழுதினார். இந்திய சமூகத்தை சாதியச் சமூகம்தான் என பெரியாரியம் கூறுவதை அதே வடிவில் மார்க்சியம் ஏற்பதற்கு இல்லை. எந்த சமூகத்திலும் தனி ஒரு கருத்தியல் என்பதில்லை. பார்ப்பனியம் போலவே சமணம், பெளத்தம், சைவம் என்பனவும் அரசு அதிகாரத்துடனும் தனியுடைமையுடனும் ஒத்துழைத்ததை வரலாற்றில் காணமுடியும். தனியுடைமை, அரசு அதிகாரம் ஆகியவற்றுடன் சாதியமும் இணைந்துதான் இந்தியாவில் செயல்படுகின்றன. இக்கட்டுரையில் ஞானி தான் முன்பு பேசிய கருத்தில் தானே மாறுபட்டுப் பேசுகிறார். காந்தியுடன் பெரியாருக்கு ஏற்பட்ட முரண்பாடு விடுதலை போராட்டத்திலிருந்து அவரை முற்றிலுமாக விலக்கிவைத்தது. ஆங்கிலேயர் அகன்ற பிறகு பார்ப்பனர்க்கு அடிமைப்பட நேரும் என்று நம்பியதால் விடுதலைப் போரில் தமக்குரிய பங்கை பெரியார் செய்யவில்லை என சொல்லிச் செல்கிறார் ஞானி. மார்க்சியரும் சில நேரத்தில் ஆங்கிலேயருடன் ஒத்துழைத்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டி சமப்படுத்தலை செய்கிறார். மற்றொரு முரண்பாட்டையும் ஞானியிடம் நாம் பார்க்கலாம். பெரியார் கம்யூனிசம் பரப்புரைகளை கைவிட்டார் என்பதில் உடன்பாடில்லை என்கிறார். விஞ்ஞான சோசலிசம் எனும் கருத்தில் பெரியார் நம்பிக்கை வைக்கவில்லை, பகுத்தறிவு சமதர்மம் என அழைக்கும் வண்ணம் பேசியதாக ஞானி சொல்கிறார். முதலாளியத்தை உள்வாங்கிக்கொண்ட மார்க்சியர் போலவே பெரியாரும் முதலாளியத்தை உள்வாங்கிக்கொண்டார். திராவிடம் என்பது குறித்த வேறுபாட்டில் ஆரியம் இந்திய நாகரீகத்தின் மேல் அடுக்கு என்றால் அதன் அடித்தளம் திராவிடம் என்கிறார் ஞானி. மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று பேசும்போது பெரியாரை ஒதுக்கிவிட்டு பேசமுடியாது. சோவியத்துடன் ஒட்டியிருந்து நாசப்படுத்தியது போன்று இந்திய தேசியத்தோடு ஒட்டியிருந்து மார்க்சியத்தையும் தமிழக மக்களையும் நாசப்படுத்துவதை மார்க்சியர் கைவிடவேண்டும். பெரியாரை நாட்டு மருத்துவர் என்று கூறினால், மார்க்சியரை ஆங்கில மருத்துவர் எனக்கூறலாம் என வரையறுத்தார் ஞானி. தமிழ் மண்ணோடு உறவு கொள்ள மார்க்சியர் பெரியாரை மதிக்க வேண்டும் என்கிற அறிவுரையை ஞானி தந்து செல்கிறார். சீனாவின் சேர்மன் மாவோ நமது சேர்மன் எனப் பேசியவர்கள் குறித்து ஏதும் தெரிவிக்காமல் ஞானி நகர்கிறார். சிந்தனையாளர் கே வி ராமகிருஷ்ண ராவ் அவர்கள் திராவிட இயக்கத்தின் மீது கம்யூனிச தாக்கம் என்கிற சிறு ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் இடம் பெற்றுள்ள சில பகுதிகள் அப்படியே ஆங்கில வாசகத்தில் தரப்பட்டுள்ளன. பெரியாரின் சோவியத் பயணத்தாக்கம் இதில் விவாதிக்கப்பட்டுள்ளது. சோவியத்தின் குடிமகன் ஆவது என்ற அளவிற்கு பெரியார் சென்றார் என்பது சொல்லப்பட்டுள்ளது. பின் நாட்களில் ருஷ்யாவிடமிருந்து தான் ஏதும் கற்கவில்லை என பெரியார் பேசியிருந்தாலும் ராவ் அவர்களின் கட்டுரையில் அவர் எப்படிப்பட்ட உணர்வு மேலீட்டில் இருந்தார் என நாம் அறியமுடியும். பெரியாரின் கடவுள் மறுப்பு- கம்யூனிசம் குறித்து வாடிகன் போப்வரை புகார் சென்ற தகவலை ராவ் தருகிறார். கம்யூனிஸ்ட்கள் பேசிவந்த சுயநிர்ணய கோட்பாடும் பெரியாரை ஈர்த்ததாக ராவ் பதிவு செல்கிறது. K V Ramakrishna Rao Article on Impact of Communism on Diravidian movement “ They ( EVR – Ramanathan ) Reached USSR and stayed there for 3 months. They met Soviet President Kalinin. It is very evident that it was EVR who was more influenced by the Communist Ideology than his Collegues. Infact S Ramanathan openly expressed his opinion that Soviet Communism would not be suitable to Indian soil. It will not be exaggeration to mention that the three months stay at USSR made EVR to adapt and adopt the Communist ideology as part of his programme directly or indirectly for three decades, inspite of several political compulsions and restrictions. ..he was even prepared to apply for the Citizenship for USSR. But it was reported that it did not materialise because of political reasons. However he and his collegues became members of Anti religious propagnada association of Moscow. When EVR started changing the propaganda of self respect movement on the lines of communism, S Ramanathan expressed his disagreement…This resulted in some sort of personality clash and ideological difference. S Ramanathan rejoined Congress in 1936 to contest elections as candidate from Tanjore and became a minister in Rajajai’s cabinet. To find an alternative EVR had to colloborate with M Singaravelu… it was decided to form Self Respect Socialist party of South India….The first objective of the preamble of the Erode Programme was very clear in advocating not only freedom from British but also from the other so called capitalist forms of Government. It proposed the change of all native states into one common Indian Federation….Though the resoultion was opposed by Ramanathan and Sami Chidambaranar and others; it was accepted with a majority. The Christians not only lodged a protest against the publications, but also brought their activities (Godless and Communism) to the notice of Pope Pius IX in Vatican. On Dec 30 1933 EVR was arrested along with his sister Kannammal who was editor of Puratchi registering a case against him under Sec 124 A of IPC for alleged Communist propaganda and sedition- sentenced to undergo 9 months imprisonment and pay fine Rs 300. He was released on May 15 1934. Eugene Irschick points out that EVR was forced to back away from much of his socialist orientation because of Govt pressure. But in fact he continued to carry on his tirade against Hinduism, instead of Christianity with the dosage of Communism till his death. When Communism was banned in July 1934, EVR though a staunch leftist oriented ideologist suddenly declared that his party was no communist oriented but Common oriented. Indeed in Dec 1938, he made the demand for Diravidasthan during the Justice party conference held at Madras….EVR proclaimed in the Kovai Conference that the Diravidians might live under the rule of Pakistan, but not with Aryans. After becoming the president of the Justice party , at Tiruvarur in Aug 1940 he stressed that for the liberty and freedom of Dravidians, they had to undertake the important work of separating the Diravida country from the rest of India. A resoultion was passed to that effect…Here it may be mentioned that the separatist demand made on the lines of race, language, religion, culture and other factors also coincided with the communist propaganda about self determination, nation state and other hypotheses. EVR met Sir Stafford Cripps and put forward the demand of Diravidanad in 1939. பெரியார் ஆகஸ்ட் 15 என்கிற எஸ் வி ராஜதுரை அவர்கள் எழுதிய (1998) நூலில் பெரியாரும் கம்யூனிஸ்ட்களும் எனும் அத்தியாயம் ஒன்று இருக்கிறது. பெரியார் அவர்கள் எழுதிய (25-3-1944 குடியரசு) பொது உரிமையா பொதுவுடைமையா எது முதலில் என்ற விவாதத்தை சுட்டிக்காட்டுகிறார் எஸ் வி ஆர். இந்து மகாசபைத் தொண்டர்களுடன் சேர்ந்து உணவு நிவாரணப் பணிகளில் வேலை செய்து வந்த கம்யூனிஸ்ட்களுக்கு அவர்களது கொள்கைக்கு நெருக்கமாக வரக்கூடிய பெரியாரியக்கத்தினர் மீது காழ்ப்புத்தான் இருந்தது. காங்கிரசுக்கு இடது கவசமாக போலிப் பொதுவுடைமைக்காரர்கள் இருக்கிறார்கள் என பெரியார் இயக்கத்தினர் வருணித்து வந்ததாக குறிப்பிடுகிறார் எஸ் வி ஆர். கம்யூனிஸ்ட் நாடகம் என்கிற சா குருசாமி கட்டுரையையும் மேற்கோள் காட்டுகிறார். கதர்கட்டிக்கொண்டு காந்திக்கு ஜே, தேசிய சர்க்கார் என கம்யூனிஸ்ட்கள் பேசிவருகிறார்கள். போலிக்கம்யூனிஸ்ட்கள் என்பதற்கு அறிகுறிகளாக கதர் கட்டுதல், பார்ப்பனீயத்தை குறை சொல்லாமை, வர்ணாசிரம தர்மத்தை பழிக்காமை என சுட்டிக்காட்டுகிறார். தோழர் ஜோஷி காங்கிரஸ் தாய் ஸ்தாபனம் என எழுதியதையும் எஸ் வி ஆர் குறிப்பிடுகிறார். ஆகஸ்ட் போராட்டமும் கம்யூனிஸ்ட்களும் என்கிற நூறு பக்க ஆவணத்தில் தங்களையும் தேசபக்தர்கள் என ஏற்றுக்கொள்ள கெஞ்சியதாக எஸ் வி ஆர் விமர்சனம் செல்கிறது. தேசிய இனப்பிரச்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அடிக்கடி மாற்றம் அடைந்து வந்ததை எஸ் வி ஆர் சுட்டிக்காட்டுகிறார். பெரியார் ஆகஸ்ட் 15 கொண்டாட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் கல்ந்துகொள்வதைப்பற்றி தெரிவிக்கையில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்களுக்கான குடும்ப விஷயமது என்கிற கருத்துப்பட எழுதினார். ஆனால் நாம் பதவியைக் கைப்பற்றுவதற்காக சமயத்திற்கேற்றபடி நடந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியத்திலுள்ளவர் அல்ல என பெரியார் தெரிவித்தார். மத்திய சர்க்கார் பொறுத்த அளவில் இது உண்மையிருக்கலாமே தவிர மாநில சர்க்கார் விஷயத்தில் சமயத்திற்கேற்பத்தான் பெரியார் நடந்துகொண்டதை பெரியாரை வாசிக்கும் எவரும் உணரமுடியும். அடக்குமுறைக்காலங்களில் கம்யூனிஸ்ட்களுக்கு திராவிடர் கழகம் எவ்வாறு துணையாக நின்றது என்பதை எஸ் வி ஆர் விளக்குகிறார். தோழர் எம் கல்யாணசுந்தரம் சா குருசாமிக்கு எழுதிய ஜூன் 26, 1951 கடிதத்தையும் பிரசுரித்துள்ளார். அதில் திராவிடர் கழகம் கம்யூனிஸ்ட் கட்சியின் அய்க்கியம் தமிழ்நாட்டு மக்களின் விடுதலைப்போரின் வெற்றியை நிர்ணயிக்கும் ஒரு பெரிய சக்தியாகும் என தோழர் கல்யாண சுந்தரம் குறிப்பிடுகிறார். எம் கே இதில் தமிழ்நாட்டின் விடுதலை என எதைப் வெளிப்படுத்துகிறார் என புரிந்துகொள்ளமுடியவில்லை. அப்போது கட்சியில் தமிழ்நாட்டின் விடுதலைக்கு என தனித்து எந்த ஆவணமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததா என்று கேள்வி எழுகிறது. தோழர் அனந்தன் நம்பியாரும் பெரியாரும் பங்கேற்ற கூட்டத்தில் அவர் பேசியதை எஸ் வி ஆர் மேற்கோள் காட்டுகிறார். கம்யூனிஸ்ட் கட்சி பணக்காரர்களை ஒழிக்க முதற்படியில் நிற்கிறது. இதில் தி க விற்கு கவலையில்லை என சொல்லிவிடமுடியாது. ஒழிக்க வேண்டியது அவசியந்தான். ஆனால் பார்ப்பனீயத்தை மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டியது மிகமிக அவசரம் என தி க கருதுகிறது.. இது அதற்கு அஸ்திவாரவேலை என பெரியார் அக்டோபர் 3, 1951ல் உரை நிகழ்த்தினார். 5-11-1951 தலையங்கத்தில் பார்ப்பானும் சூத்திரனும் பறையனும் இருக்கக்கூடாது என்பதில் உயிரைக்கொடுத்து வேலை செய்வது திராவிடர் கழகம். கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் காரியத்தில் ஒன்றும் செய்யவில்லை. இந்தக் காரியம் செய்யாமல் மிராசுகளையும் முதலாளிகளையும் ஒழிப்பது என்பது பெருத்த ஏமாற்றமாகவே முடியும். பார்ப்பனர்கள் அதிகம் புகுந்த கட்சியாக இருப்பதும் மற்ற காரணமாக இருக்கலாம். கம்யூனிஸ்ட் திட்டத்தில் பார்ப்பனிய ஒழிப்பு இல்லை என சொல்லமுடியாது என்கிற பொருட்பட அத்தலையங்கம் விரிவாக எழுதப்பட்டிருந்தது. கம்யூனிஸ்ட்கள் நம் விரோதிக்கு விரோதி என்பதால் அவர்களுக்கு உதவுகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையே மிகச் சுருக்கமாக 20-11-1951ல் பெரியார் எழுதினார். கம்யூனிஸ்ட் கொள்கையே திராவிடர் கழகம் கொண்டுள்ளது. எவ்வித வேற்றுமையுமில்லை. முன்னால் செய்ய வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி கூறுவதை தி க பின்னல் செய்யவேண்டும் என்கிறது. தி க முன்னால் செய்யவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சி பின்னால் செய்ய வேண்டும் என்கிறது. இதை சிறிய வித்தியாசம் என்றே அப்போது விளக்கினார் பெரியார். ஜனவரி 4 1953ல் இந்த நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியும் சோசலிஸ்ட் கட்சியும் யார் ஆதிக்கத்திலோ, யார் தலைமையிலோ இருக்கிறது. இந்த நாட்டு பார்ப்பனர்கள் இன்றும் கம்யூனிசமும் சோஷியலிசமும் பேசிக்கொண்டிருக்கின்றனர் என விமர்சித்தார். இவ்வத்தியாயத்தின் இறுதிப்பாராவை இப்படித்தான் முடிக்கிறார் எஸ் வி ஆர். ”இந்தியாவையும் தமிழகத்தையும் பொறுத்தவரை உண்மையான தேசிய இன விடுதலையோ, நாட்டு விடுதலையோ பொருளாதார விடுதலையோ, பெண் விடுதலையோ பார்ப்பனீயத்தையும் சாதியையும் ஒழிப்பதற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட்டால் அன்றி சாத்தியமில்லை. இல்லவே இல்லை என்பதுதான் எந்த மார்க்சியவாதியும் சொல்லாததும் பெரியாரால் சொல்லப்பட்டதுமான மூலச் சிறப்புள்ள தத்துவம்.” இவ்வத்தியாயம் பெரியாரின் ’மூலச் சிறப்பு வாய்ந்த தத்துவத்தை’ உயர்த்தி கம்யூனிஸ்ட்கள் மீது குற்றப்பத்திரிகை கொடுக்கமட்டுமே எஸ் வி ஆரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்கட்சி தனது பதிலாக தான் நியாயப்படுத்திக்கொள்ளும் அம்சங்கள் குறித்த எந்த பதிவும் இதில் செய்யப்படவில்லை. பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த பின்னர் ஜீவா அவர்கள் அவ்வப்போது சில விமர்சனங்களை எதிர்வினையாக தந்திருக்கிறார். 1934ல் ஈ வெ ரா இவ்வாறு பேசினார் என ஜீவா மேற்கோள் காட்டுகிறார். “ பார்ப்பனீயம் ஒழிய வேண்டுமென்றும், வர்ணாசிரம தர்மம் ஒழிய வேண்டும் எவ்வளவோ காலம் பேசிவிட்டோம். ஒரு சுக்குக்கும் பயனேற்படவில்லை. இன்று அந்த ஜாதிகளையும், மதங்களையும் தாங்கி நிற்கும் சமுதாயத்தையும், அந்த சமுதாயத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தையும் ஒழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டோம்” இப்படிப் பேசிய பெரியார் 1935ல் வேறொரு பாதையைக் காட்டியது ஏன் என ஜீவா வினவினார். பார்ப்பனரல்லாதோர் கூட்டம் என்று கூட்டப்பட்டபோது பெரியாரிடமிருந்து தான் பிரிந்துவிட்டதாக ஜீவா பதிவிடுகிறார். ஆனானப்பட்ட கெளதம புத்தன் ஜாதியை ஒழிக்க முயன்றான் – முடியவில்லை. ஆழ்வார்களும் நாயன்மார்களும் முயன்றார்கள்- முடியவில்லை. நான் ஜாதியை ஒழித்து விடுவேன் என்று ஈ வெ ரா கையில் கத்தியை எடுக்கிறார் என ஜீவா விமர்சித்தார். கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்தார்- அதில் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை தமிழ்நாடு நன்கறியும். அவர் காட்டிய வழியால் தமிழ்நாட்டில் ஜாதிய வெறியும் ஜாதிப் பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல- மாறாக பெருகி வந்திருக்கிறது என்பதே என் பணிவான கருத்து என ஜீவா மதிப்பிட்டார். (ஜனசக்தி 1-1-1958) அரசியல் சட்டம் பற்றிப் பேசியபோது அதை புனிதமானது என்று கம்யூனிஸ்ட்கள் சொல்லவில்லை. அரசியல் நிர்ணய சபையில் ஒரே ஒரு கம்யூனிஸ்ட்- தோழர் சோம்நாத் லாகிரி மட்டுமே இருந்தார் . எத்தனையோ திருத்தங்களை தந்தும் பெரும்பான்மை கொடுமையால் எதுவும் ஏற்கப்படவில்லை. அரசியல் சட்ட குறைகளை ஒழிக்க என ஈவெரா முன் வந்திருக்கிறாரா? எல்லோரும் ஒப்புக்கொள்ளத் தக்கதாக அடிப்படை உரிமைகள் பகுதி வந்தது. ஆனால் ஈ வெ ராவோ இதை ஆட்சேபித்து சட்டப் புத்தகத்தை நெருப்பிட்டுக் கொளுத்துகிறார். மத சுதந்திரப்பகுதி ஜாதி ஒழிப்பிற்கு பெரிய தடையாக இருக்கிறது என்று சாக்குச் சொல்லித்தான் அவர் எரிப்பு இயக்கத்தில் குதிக்கிறார். சட்ட புத்தக எரிப்புத்தான் சாதி ஒழிப்பிற்கு வழி என ஈ வெரா கருதினால் அவருடைய வழியை ஏற்றுக் கொள்ள முடியுமா.. எரிப்பு ஜாதி ஒழிப்பிற்கு கொஞ்சமும் துணைபோகாது என்பதோடு மக்களின் ஒற்றுமையை உடைத்து பூசலைப் பெருக்கும் என்பதால் கம்யூனிஸ்ட் கட்சி இந்த தகாத செயலை கண்டிப்பதாக ஜீவா எழுதினார். ( ஜனசக்தி 3-1-1958) காந்தியடிகள் பட எரிப்பால் ஜாதி ஒழிப்பை கொண்டுவரவே முடியாது. ஒரு நல்ல மனிதன், நாகரீக மனிதன், ஜனநாயகவாதி, சமாதான விரும்பி காந்திப்படம் எரிப்பதை கண்ணால் பார்த்துக்கொண்டு வாளாயிருக்க முடியுமா? அதே போல் தேசியக் கொடி எரிப்பு- அது ஒருவரின் சொத்தோ, ஒரு கட்சியின் சொத்தோ அல்ல. தேசிய கெளரவத்தின் அறிகுறி அது. இதுவும் ஜாதியை ஒழிக்க கொஞ்சமும் உதவிகரமாக இராது என ஜீவா இந்த எரிப்பு போராட்டங்கள் குறித்து எழுதினார். ( ஜனசக்தி 4-1-1958) திராவிடர் கழகம் நடத்திய அடையாளப் போராட்டங்கள் குறித்த விமர்சனப் பார்வையை தொடர்ந்து ஜீவா எழுதிவந்தார். பார்ப்பனரின் பூசை சொம்பை பிடுங்கி ஆற்றில் எறிந்து விட்டால் ஜாதி ஆற்றோடு போய்விடுமா? குடுமியைக் கத்தரித்தால் ஜாதியும் கத்தரிக்கப்பட்டு விடுமா? பூணூலை அறுத்தால் ஜாதியும் அறுந்து விடுமா? இத்தகைய அநாகரீக செயல்கள் அனுமதிக்கத் தக்கவையல்ல. கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பதாகவே ஜீவா எழுதினார் . ( 7-1-1958 ஜனசக்தி) வாழ்க்கைப் போராட்டத்தில், வர்க்கப் போராட்டத்தில் ஒட்டவைப்பதன் முலம் பொதுமக்களிடமிருந்து மத நம்பிக்கையை கழற்ற வேண்டும் என்கிறது லெனின் வழி. கருத்துப் பிரச்சாரத்தின் மூலம் மத ஒழிப்பு நடத்த முடியும் என்கிறது திராவிட அறிவியக்க வீரர் வழி. அரசாங்கத்தைப் பொறுத்தவரை மதம் தனிப்பட்ட விவகாரம்- கட்சியைப் பொறுத்த மட்டில் அப்படிக் கருதக்கூடாது என்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள். எந்த சந்தர்ப்பத்திலும் மத எதிர்ப்பைத் தத்துவரீதியாக லட்சிய ரீதியாக வர்க்கப் போராட்டத்திற்கு வெளியில் நடைபெறும் பகுத்தறிவுப் போராட்டமாகக் கையாளும் தவறைச் செய்யக் கூடாது என லெனின் கூறுவதை ஜீவா எடுத்துக் காட்டினார். லெனின் கருத்துப்படி திக திமுக வர்க்கப் போராட்டத்திற்கு வெளியில் பகுத்தறிவு போராட்டத்தை நடத்துவதாக ஜீவா எழுதினார். சோவியத் யூனியனில் மத சுதந்திரத்திற்கு பரிபூரண பாதுகாப்பு இருக்கிறது. ஆயிரக்கணக்கான மாதா கோயில்களும் மசூதிகளும் அங்கே இருக்கின்றன. அதேபொழுதில் விஞ்ஞான உலகக் கண்ணோட்டத்துடன் வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கானவர்களும் இருக்கிறார்கள். உலகப் பொதுவிதி தமிழனுக்கும்தான் என ஜீவா நீண்டதொரு விளக்கத்தை தந்தார். (ஜனசக்தி 7-11-1954) மார்க்சியமும் தி மு கவும் என்கிற சிறு பகுதி ஒன்றை ஜீவா எழுதியிருந்தார், அண்ணா அவர்கள் தி மு க இதழ்களில் எழுதியிருந்தவற்றை ’அறிவு சுடரிலிருந்து’ எடுத்துக்காட்டி ஜீவா தனது மறுமொழியைத் தருகிறார். முதலாளிவர்க்கம் தங்களுடைய சுரண்டல் கொள்ளையை நடத்த எளிதான ஆயுதங்களாகப் பயன்படுத்தும் மதத்தையும், மத ஸ்தாபனங்களையும், கோயில்களையும் அழித்தால்தான் விஞ்ஞானபூர்வ பொது உடைமை நிலைபெற முடியும் என அண்ணா சொல்கிறார். இதற்கு பதிலளிக்கும் ஜீவா இவர்கள் இயக்கவியல் லோகாயதவாதத்தை அடிப்படையாக கொள்கிறார்களா என வினவினார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அஸ்திவாரம் அது என்கிறார். திராவிட இயக்கம் இன்றைய கோஷமான ஒன்றே குலம் ஒருவனே தேவன் மார்க்சிய கோஷமா. இக்கோஷத்தில் மத மயக்கத்தின் அத்தனை அசுர குணங்களும் சதிராட இடமுண்டு. தி முக தலைமை பீடம் கம்யூனிஸ்ட்களின் திட்டத்தில் பகிரங்க மத எதிர்ப்பு இடம் பெறாததால் அவர்கள் உண்மையான பொதுவுடைமைவாதிகள் அல்லர் என்கின்றனர். தங்களை மார்க்சிய சித்தாந்தத்தைப் பரப்பும் மகா சக்தி என்கின்றனர். பளா பளா! மார்க்சைவிட சிறந்த மார்க்சியவாதிகள் என ஜீவாவின் விமர்சனம் செல்கிறது. (ஜனசக்தி 14-11-1954) மார்க்சியவாதிகளின் கண்ணோட்டம் பொருள்முதல்வாதிகளின் கண்ணோட்டமாகும்- திராவிட தலைமையின் கண்ணோட்டமோ கருத்துமுதல்வாத கண்ணோட்டம் என்கிற முடிவிற்கு வாசகர்களை ஜீவா அழைத்து செல்வதை இந்த விவாதங்களில் பார்க்க முடியும் (ஜனசக்தி 28-11-1954). திமுக தலைமையின் மார்க்சிய வேஷம் என்று கூட ஜீவா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். (ஜனசக்தி 5-12-1954) ’விடுதலைப்போரும் திராவிட இயக்கமும்’ என்கிற நூல் தோழர் பி ராமமூர்த்தியால் எழுதப்பட்ட ஒன்று. 1983ல் வெளியானது. முன்னுரையிலேயே தோழர் பி ஆர் அவர்கள் திராவிடர் இயக்கம் தாங்கள் முன்வைத்த முழக்கங்களை எவ்விதம் கைவிட்டனர் என்பதைக் கூறுகிறார். திராவிட நாடு என்பதைக் கைவிட்டு இந்திய ஒற்றுமைக்கு நிற்பதாக திமுக அதிமுக கூறிவந்ததைக் காட்டுகிறார். மொழிவழி மாநிலங்களுக்கான கிளர்ச்சி நாடெங்கும் வளர்ந்தோங்கிய காலத்தில் இந்த நிகழ்ச்சிப் போக்கை இந்தத்தலைவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தமிழனும், மலையாளியும், கன்னடியரும், தெலுங்கரும் ஒரே திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய இந்த தலைவர்கள் இந்த நான்கு மக்களும் வாழும் பிரதேசங்களை ஒரே மாநிலமாக்கிடவேண்டும் என்ற யோசனையை ராஜாஜி முன்வைத்தபோது அதை ஏனையோருடன் சேர்ந்து எதிர்த்தனர். சமூக சீர்திருத்தவாதிகளில் ’பெரியார் ராமசாமி’ தலை சிறந்தவர் என்பதை பதிவிட்ட பி ஆர் அவரை ’தவறான தத்துவத்தின் தந்தை’ என்றார். மார்வாரி, குஜராத்தி முதலாளிகளைவிட மிகவும் பின்தங்கிய தமிழ்நாட்டு முதலாளிகளுக்கு தொழிற்துறையில் வளர்ந்திட விரும்பும் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ள இந்த இயக்கம் பயன்பட்டது என எழுதினார் பி ஆர். தென்னிந்திய லிபரல் பெடரேஷன் 1916 ல் தனது ஆரம்ப அறிக்கையில் இந்திய மக்களின் ஒற்றுமையை வளர்த்திட இன்றுள்ள சூழ்நிலையில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் மட்டுமே முடியும். ஆங்கில ஆட்சியாளர்களின் அதிகாரத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை எதையும் நாம் ஆதரிக்கமாட்டோம். இந்திய அரசானது நீதி மற்றும் சமவாய்ப்பு எனும் உண்மையான பிரிட்டிஷ் கொள்கையின்படி இன்னும் தொடர்ந்து ஆளப்படவேண்டும் என கருதுபவர்கள் நாங்கள் என எழுதியிருந்ததை பிஆர் மேற்கோளாகத் தருகிறார். தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் தொழில்களுக்கும் தொழில்களை வளர்க்க விரும்பும் இந்தியர் நலன்களுக்கும் முரண்பாடு கிடையாதா- தென் இந்திய முதலாளிகள் வளர்ந்துவரும் தேசிய இயக்கத்தை ஆதரிக்காமல் எப்படி இருக்க முடியும்- இதற்கு ஜஸ்டிஸ் கட்சியிடம் பதில் இருந்ததா என பிஆர் கேள்வி எழுப்பினார். செக்கிழுத்த வ உ சியையும் குறிப்பிடுகிறார். தென்னிந்தியாவில் மில்கள், தோட்டத்தொழில்கள் பிரிட்டிஷ் முதலாளிகளால் அமைக்கப்பட்டதை பி ஆர் விளக்குகிறார். ஜஸ்டிஸ் கட்சியின் பிரமுகர்களான ஜமீன்களும், பெரு நிலச்சுவான்தார்களும் அவர்களின் பிராமணரல்லாத விவசாயிகளை சுரண்டியதை பி ஆர் முன்வைக்கிறார். வகுப்புவாரித்திட்டம் கூட ஆரம்பக் காலத்தில், 1920 தேர்தல் நேரத்தில் கூட இல்லை. 1920-26 காலத்தில் அவர்கள் மந்திரிசபையில் ஏன் வைக்கப்படவில்லை- 1926 தேர்தல்வரை ஏன் காத்திருக்கவேண்டும் என்கிற கேள்வியை பி ஆர் எழுப்பியிருந்தார். தோழர் சிங்காரவேலர் மீதும் நாகை தொழிற்சங்கத்தோழர்கள் மீதும் பெனிசுலர் ரயில்வே பிரிட்டிஷ் கம்பெனியால் சதிவழக்கு போடப்பட்டபோது , அதை விசாரித்த கே பி லெட்சுமணராவ் சிங்காரவேலருக்கு ஆயுள்தண்டனை வழங்கியவர். இவர் சென்னை ஹைகோர்ட் நீதிபதியாக ஜஸ்டிஸ் மந்திரிசபை காலத்தில் உயர்ந்ததை பி ஆர் சுட்டிக்காட்டுகிறார். ஜஸ்டிஸ் இயக்கம் வேறு- பெரியார் இயக்கம் வேறு என்கிற தலைப்பில் ஒரு அத்தியாயம் பி ஆர் நூலில் இருக்கிறது. அதில் பெரியார் சுயமரியாதை இயக்கம்- சமதர்ம இயக்கம்- என பயணித்ததையும் ’நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ பிரச்னைக்குப் பின்னர் சுயமரியாதை திசையில் மட்டும் தொடர்ந்ததையும் விளக்கி எழுதுகிறார். ஜஸ்டிஸ் கட்சி மந்திரிசபை சுதந்திர லட்சிய தொண்டர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட தாக்குதல்கள், வழக்குகள் குறித்தும் பி ஆர் பேசுகிறார். 1935 சட்டத்தை வரவேற்ற ஜஸ்டிஸ் கட்சியினர் காங்கிரஸ் தேர்தலில் நிற்க முடிவான பின்னர் தோல்வியை தழுவி மக்களால் நிராகரிக்கப்பட்டதையும் எழுதுகிறார். 1937-39 காங்கிரஸ் ஆட்சியின் சாதக பாதகங்கள் குறித்து பேசும் பி ஆர் ராஜாஜியின் சில நல்ல முடிவுகளை ஜஸ்டிஸ் கட்சியினர் எதிர்த்ததையும் குறிப்பிடுகிறார். ராஜாஜி கொணர்ந்த முதல் சட்டம் விவசாயக் கடன் நிவாரணச் சட்டம். அரைவட்டி அதாவது ’கொடுத்த- கொடுக்க இருக்கும் கடனுக்கு’ ரூ 100க்கு 6 க்கு மேல் கூடாது என பல பிராமணரல்லாத விவசாயிகளை கந்துவட்டியிலிருந்து காப்பாற்ற வந்த சட்டம். இதை ஜஸ்டிஸ் கட்சியினர் எதிர்த்தனர் என விமர்சிக்கிறார். ஜமின்தாரி முறை குறித்து விசாரித்து முடிவு சொல்ல வருவாய் மந்திரி பிரகாசம் தலைமையில் தெனேட்டி விசுவநாதன் கமிட்டி போடப்பட்டது. கிழக்கிந்திய ஆட்சிக்காலத்திலிருந்து ஆவணங்களை ஆய்வு செய்து ஜமீன்தாரி முறையின் கேடுகளை சுட்டிக்காட்டி ஒழிக்கவேண்டிய முறை எனக் கமிட்டி பரிந்துரைத்தது. ஜமீன்தார்கள் கீழ் இருந்த குடிகள் எனப்படுவோர் ஆயிரத்துக்கு 999 பேர் பிராமணரல்லாதவர்கள்தான். ஆனால் சட்டசபையில் ஜஸ்டிஸ் உறுப்பினர்கள் இதை எதிர்த்தனர். குற்ற பரம்பரை சட்டம் ஒழிக்கப்பட அன்று காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் குரல் கொடுத்தனர். ராஜாஜிக்கு தயக்கம் இருந்தது . பி ஆர், ஜீவா, முத்துராமலிங்கத்தேவர் இவ்வியக்கங்களில் முன்நின்றனர். பின்னர் சட்டத்தை ரத்து செய்ய ஏற்றுக்கொண்டு அரசாங்க நடவடிக்கை வந்தது. முன்னதாக 1920 முதல் 15 ஆண்டுகளுக்கு மந்திரிகளாக இருந்த ஜஸ்டிஸ் கட்சி இதை ஏன் செய்யவில்லை என பி ஆர் கேட்கிறார். இந்தி கட்டாயம் என்கிற தவறை ராஜாஜி செய்தார். தாய்மொழியால் முடியும் எனச் சொல்லி எளிய பாடங்களையும் உருவாக்கியவரே அவ்வாறு செய்தார். தமிழ்நாட்டவர்க்கு மத்திய அரசு வேலைகள் கிடைக்காமல் போய்விடக்கூடாது என அஞ்சியே செய்வதாக தெரிவித்தார். இதை ஈ வெ ரா, மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார் கடுமையாக எதிர்த்தனர். இயக்கங்கள் எழுந்தன. பெரியார் சிறைத்தண்டனை அனுபவித்தார். பெரியாருக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கை பயன்படுத்த விரும்பிய ஜஸ்டிஸ் கட்சி அவரை தலைவராக்கியது. திருவாரூரில் 1940ல் ஜஸ்டிஸ் கட்சியின் மாநாட்டில் சென்னை ராஜதானி பிரிட்டிஷ் சர்க்காரின் கீழேயே தனிநாடாக பிரிக்கப்படவேண்டுமென்று தீர்மானம் இயற்றப்பட்டது. இதை விந்தையான கோரிக்கை என்கிறார் பி ஆர். இப்பகுதியில் இல்லாத தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசிய பிற மாகாணங்களில் இருந்தவர்கள் திராவிடர்கள் இல்லையா என கேள்வி எழுப்பினார். இவர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சி ஒழிந்துபோய்விடுமே என்கிற அச்சமும், சென்னை ராஜாதானியிலாவது அது நீடிக்கட்டும் என்கிற சபலமும் இருந்ததாக இதை விளக்குகிறார். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்தான் திராவிடர் கலை, நாகரீகம், பொருளாதாரத்தை பாதுகாக்க முடியுமாம்- இது அம்மக்களை அவமானப்படுத்துவது போன்றதே என பி ஆர் விமர்சனம் செல்கிறது. 1944ல் ஜஸ்டிஸ் கட்சியை கலைக்கும் மாநாடாக திராவிடர் கழகம் உதிக்கும் மாநாடாக சேலம் அமைந்தது. பிரிட்டிஷ் ஆட்சியை பாதுகாக்க சுரண்டல் கும்பலால் தோற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சியை இன்றும் தங்கள் மூதாதையர்கள், தாங்கள் அதன் வழித்தோன்றல்கள் என திராவிட இயக்கத்தினர் மார்தட்டிக்கொள்வது வியப்பானது , வேடிக்கையானது என்றார் பி ஆர். பெரியார் நாத்திகப் பிரச்சாரத்தின் மூலம் கடவுள் நம்பிக்கை ஏன் மறையவில்லை- ஜாதிப்பாகுபாடுகள் ஏன் போகவில்லை எனக்கேட்டு அதை பெரியாரின் சமதர்ம பிரச்சாரம் ஆரம்பமும் முடிவும் என்கிற அத்தியாயத்தில் பி ஆர் விவாதிக்கிறார். லெனினை மேற்கோள் காட்டுகிறார் “ மதக்கேடுகளை வெறும் பிரச்சார முறைகளின் மூலமாக மட்டுமே சிதறடித்துவிடமுடியும் என்று கருதுவது மடத்தனமாகும். மதம் எனும் நுகத்தடி மனித குலத்தை அழுத்திக் கொண்டிருப்பது சமுதாயத்திற்குள்ளேயுள்ள பொருளாதார நுகத்தடியின் பிரதிபலிப்பு.. முதலாளிகளுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் விழிப்புணர்வு பெறாமல் எவ்வளவு போதனைகள் செய்தாலும் அறிவொளி கிடைத்துவிடாது” நாத்திகப் பிரச்சாரம் கட்சியின் கடமை என்பதை லெனின் உணர்த்தாமல் இல்லை என்பதையும் பி ஆர் மறவாமல் குறிப்பிடுகிறார், அது வர்க்கப்போராட்ட கடமைக்கு வெளியே இருக்கமுடியாது என்கிறார். ’வரலாற்று விபரங்களும் திராவிட இயக்கக் கற்பனைகளும்’ என்கிற அத்தியாயம் ஒன்றையும் பி ஆர் இதில் தந்துள்ளார். 1946ல் பெதிக் லாரன்ஸ் குழு இந்தியாவிற்கு அதிகார மாற்றம் பற்றி முடிவுகளை சொன்ன குழு. சென்னை கவர்னர் சர் ஜான் கோப்பிடம் சென்னை ராஜாதானியிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி போகக்கூடாது என்கிற மகஜரை பெரியார் கொடுத்தார். அண்ணா அப்போது தி கவில் தான் இருந்தார். அவரும் எதிர்க்கவில்லையே என பி ஆர் குறிப்பிடுகிறார். இவ்வத்தியாயத்தில்தான் அண்ணா அவர்கள் எழுதிய ’ஆரியமாயையின்’ மாயை குறித்து பி ஆர் எழுதினார். திராவிட நாடு என்ற கற்பனையை நிலை நாட்டுவற்காக கயிறு திரிப்பதேயன்றி , வேறு வரலாறு இலக்கிய சான்றாகாது என்கிற முடிவிற்கு பி ஆர் வருகிறார். பண்டைக்காலம் பற்றிய தவறான அணுகுமுறை எனும் பகுதியில் திராவிட நாடு, திராவிடர் என்று அவர்கள் கூறும்போது உண்மையில் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் தான் கருத்தில் கொண்டுள்ளனர் என்பது தெளிவு என பி ஆர் குறிப்பிடுகிறார். ஆதிக்க வர்க்கங்களின் அரண் பிராமாண மதம் எனும் அத்தியாயத்தில் தென்னாட்டில் மட்டுமில்லாமல் வட நாட்டிலும் பிராமணர்கள் இருக்கிறார்களே அங்கு அவர்கள் ஆதிக்கத்திலிருந்து விடுதலை என்பது நடைபெறவேண்டாமா / தென்னாட்டில் மட்டும்தான் விடுதலையா என்கிற கேள்வி பி ஆரால் எழுப்பப்பட்டது. அண்ணா எழுதிய ’பணத்தோட்டம்’ குறித்த விமர்சனமாக அதில் விஞ்ஞான சோசலிசம் எனும் பார்வையின்மையை பி ஆர் விவாதிக்கிறார். பணத்தோட்டம் திராவிட இயக்கத்தின் அடிப்படை தத்துவார்த்த நூல்களில் ஒன்றென்கிறார். வடநாட்டு சுரண்டல் என்பது பம்பாயை மையப்படுத்தி பேசிய ஒன்று என பணத்தோட்டம் படித்தவர்களுக்கு தெரியும். முதலாளி தொழிலாளி தகராறில் எவர் பக்கம் நியாயம் என்பதை பொதுமக்கள் நியாயத் தராசிற்கு கொண்டுபோகவேண்டும் என்கிற கருத்துப்பட அண்ணா அதில் எழுதியுள்ளதை பி ஆர் சுட்டிக்காட்டுகிறார். பொதுமக்கள் முன்பு வழக்குரைத்து நீதிகேட்கும் காரியம் என அண்ணா எழுதியதை பி ஆர் காட்டுகிறார். இதுதான் சோசலிசம் பொதுவுடைமை பூங்கா எனப்பேசிவந்த திராவிடர் இயக்க அடிப்படை சமூகப் பொருளாதாரத் தத்துவம் என பி ஆர் விமர்சனம் காணப்படுகிறது. வர்க்க சமரசக் கொள்கைதான் திராவிட இயக்கம் கொண்டிருப்பதாகவும் பி ஆர் குறிப்பிடுகிறார். அந்தக் காலத்தில் திராவிட தமிழ் தனவந்தர்கள் பர்மா, இலங்கை, சிங்கப்பூர் சென்று கந்துவட்டிக்கு கொடுத்து, கொள்ளையடித்த பணத்தை பூர்வீக ஊர்களில் அரண்மனைகள் கட்டிக்கொண்டனர். இந்தியாவில் ஆலைகளை துவங்கவில்லை. இங்கு குஜராத்தி முதலாளிகள் வந்தனர். செளகார்பேட்டை வந்துவிட்டதே எனச் சொன்னால் போதுமா. மூலதனம் சும்மாயிருக்காது. தொழில்களில் பாயும். அழகப்பா செட்டியார் போன்றவர்கள் தொழில் துவங்கினார்கள். முத்தையா செட்டியார் வங்கித்தலைவராக இருந்தார். கோவையில் மில்கள் வந்தன. ஜி டி நாயுடுவும்கூட பெரிய தொழிற்சாலைகள் துவங்கவில்லை. டிவிஎஸ் குடும்பம் மோட்டார் தொழிலில் வந்தது. இப்படி திராவிட முதலாளிகள் உருவானபின் அவர்களை ஆங்காங்கே எதிர்த்ததும் திராவிடத் தொழிலாளர்களே. அண்ணா அவர்கள் 1947ல் கேட்டிருக்கவேண்டிய கேள்வி ஏன் தமிழ்நாட்டு வியாபாரக் கோமான்கள் தமிழ்நாட்டிலோ, இந்தியாவின் வேறு பகுதியிலோ தொழில் துவஙகவில்லை என இருந்திருக்கவேண்டும் என பி ஆர் பணத்தோட்டத்திற்கு தனது பதிலை முன்வைக்கிறார். தமிழ் நாட்டில் தொழில் வளரவேண்டும் என்பது இயல்பான அபிலாஷைதான் என்பதை ஏற்காமல் இல்லை. வடநாட்டு துவேஷம் இருப்பதை சுட்டிக்காட்டி சில தொழில்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதை தமிழ்நாடு காங்கிரஸ் ஆட்சி பயன்படுத்திக்கொண்டது. 1957ல் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே திராவிடர் இயக்கம் குறித்த பார்வையில் சர்ச்சை இருந்ததை பி ஆர் ஏற்கிறார். பிரதேச முதலாளிகள் மத்தியில் போட்டியும் முரண்பாடுகளும் வருவதையும் புரிந்துகொள்ள முடியும் என எழுதினார். சீன யுத்தம் அடுத்து ஏற்பட்ட மாற்றங்களை விவாதிக்கிறார் . காங்கிரஸ் தோற்று 1967ல் அண்ணாவின் ஆட்சி ஏற்படுகிறது. சீனயுத்தத்திற்கு பிறகு சிறையிலிருந்து வெளிவந்த அண்ணா திராவிட நாடு கோரிக்கையை கைவிடுவது பற்றி அறிவித்தார். செயற்குழு, பொதுக்குழு என எதுவும் கூடாமல் இந்த முடிவு அறிவிக்கப்படுகிறது. இதன் மர்மம் பற்றிப் பேசவேண்டும் என்கிறார் பி ஆர். தமிழ்நாட்டில் முதலாளிகளின் ஆதரவை பெற்று முன்னேறிவந்த தி மு கவிற்கு அவர்களிடமிருந்து வந்த நெருக்கடி இதற்கு காரணம் என்கிற முடிவிற்கு வருகிறார். தமிழ்நாடு தொழில்வளர்ச்சியில் மூன்றாவது இடத்திற்கு வந்த நேரம். இங்கு உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய சந்தை வேண்டும் எனும் நிலையில் திராவிட நாடு கோரிக்கைக்கு அர்த்தம் இருக்க முடியாது. மூலப்பொருட்களுக்கு தமிழ் முதலாளிகள் எங்கு போகமுடியும் போன்ற விளக்கத்தை பி ஆரிடம் பெறமுடிகிறது. அண்ணா அவர்கள் தொழிலாளர் பிரச்னைகளில் நியாயமாக நடந்து கொண்டதையும் பல போராட்டங்களில் தீர்வுக் கொணர ஜனநாயகமாக நடந்துகொண்டதையும் பி ஆர் பாராட்டுகிறார். திராவிட நாடு பொதுவுடைமை பூங்கா என்றெல்லாம் பேசிவந்தாலும் நாடு முதலாளித்துவப் பாதையில் போவதை அவர்கள் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது அதிகமாக பிராமணரல்லாத தொழிலதிபர்களே. திராவிட இயக்கம் தமிழ்நாட்டு முதலாளிகளுக்கு பாடுபடும் இயக்கம் என்கிற முடிவிற்கே 460 பக்கங்கள் கொண்ட இந்நூலில் தோழர் பி ராமமூர்த்தி வந்தடைகிறார். இந்த விமர்சனத்தை நிராகரிக்க முடியாது என்பதே அனுபவமாகவும் இருக்கிறது. பெரியாரியம் நிறப்பிரிகை கட்டுரைகள் தொகுப்பில் பெரியாரை விமர்சிக்க வருபவர்கள் சற்று அவசரப்பட்டு அவரிடம் கோட்பாட்டுத் தெளிவில்லை- முன்னுக்குப் பின் முரண்கள் இருந்தன- கொச்சைப் பொருள்முதல் நோக்குடன் அணுகினார் என சொல்வது வழக்கம்.. பெரியார் மீதான பல்வேறு வாசிப்புகளில் இவையும் ஒன்று, இவையும் சாத்தியம் என்பதில் நமக்குக் கருத்து மாறுபாடு இல்லை. எனினும் நவீன சிந்தனைகளின் வெளிச்சத்தில் பார்க்கும்போது இந்த விமர்சனங்களில் பல பொருளற்றுப் போவதையும் சுட்டிக்காட்ட வேண்டியதாகிறது. முற்றுண்மையான கோட்பாட்டுருவாக்கங்களை செய்தல் என்பதற்கு எதிராகவே பெரியார் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது என சொல்லப்பட்டுள்ளது. பெரியார் ரொம்பவும் நாசூக்கான தத்துவவாதி அல்ல. படிப்பாளிகளை நோக்கி அவர் எழுதிக்கொண்டிருந்தவரல்ல. தினந்தோறும் அதிகக் கல்வியறிவற்ற பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட பிரிவினரை நோக்கி பேசிக்கொண்டிருந்த ’கச்சாவான’ சிந்தனையாளர். அவர் எழுதியவை ஆய்வேடுகள் அல்ல. பிரச்சார வெளியீடுகள்- அவர் பேசிய அனைத்தையும் மக்கள் திரள் நோக்கிய உரையாடல்களின் அங்கமாக பார்க்கவேண்டும் என யதார்த்தமான மதிப்பீட்டை நிறப்பிரிகை குழு சார்பாக தோழர்கள் அ. மார்க்ஸ், பொ வேல்சாமி, ரவிக்குமார் வைத்தனர். இதில் ராஜன் குறை கட்டுரையில் அதிகாரம் என்பது அரசிடம் மட்டும் குவிந்திருப்பதல்ல; பல்வேறு மட்டங்களில் சமூக மனித உறவுகளில் விரவியிருப்பது- ஒரு குறிப்பிட்ட சாதிச் சமூகமென்பது அதி நிர்வாக அதி அரசாங்க அமைப்பாக செயல்படுவதாகவும் கணிக்க முடியும். இந்நிலை சாதியத்தை பிரதான எதிரியாக்குகிறது. மார்க்ஸ் பாவம் அவர் என்ன கண்டார்- இந்த நாட்டின் சொந்த மக்கள் பிறவிச் சூத்திரர்களாக்கப்பட்டு, வேசிமக்களாய் கருதப்படுகிற நிலைமையைப் பற்றி? எனக் குறிப்பிடுகிறார். பெரியார் அரசியல் வாழ்வின் தொடக்கமுதலே அவரது உடனடிக் குறிக்கோள்கள் வகுப்புவாரி உரிமைகள், இட ஒதுக்கீடு போன்றவைதான். இடையில் பொதுவுடைமைச் சிந்தனைகளால் கவரப்பட்டு அவற்றையும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்கிறார். ஆனால் அவை மிகத் தொலைதூர இலட்சியங்கள் என்பது அவருக்குத் தெரியும். பிரச்னை வந்ததும் அதைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு தன்னுடைய பிரதான, உடனடி இலட்சியமான வகுப்புவாரி உரிமைகளுக்கு வருகிறார். ஆனால் வாழ்நாளின் இறுதிவரை பொதுவுடைமைச் சிந்தனைகளுக்கு எதிராகவோ, முதலாளியம், காந்தீயம் போன்றவற்றை ஆதரித்தோ அவர் பேசியதில்லை. பிடித்தவர்கள் யுத்த செயல் தந்திரம் என்று புகழலாம்- பிடிக்காதவர்கள் சந்தர்ப்பவாதம் பிழைப்புவாதம் எனலாம். இந்த விவாதத்தில் எந்த ஒரு சத்துமில்லை என்கிற வரையறைக்கு ராஜன் குறை வருகிறார். தோழர் கேசவன் இயத்தின் இயங்குவிதியை முன்வைக்கிறார். ஓர் இயத்தின் முழு அம்சங்களையும் மற்றும் அதன் செல் நெறியையும் தீர்மானிக்கக்கூடிய உள்ளார்ந்த அம்சங்கள், அவற்றுக்கு இடையிலான இணைப்புகள், அவற்றுள் செயல்படும் விதிகள் ஆகியவற்றைக் கண்டறிவதன் மூலம் மையக் கருத்தாக்கத்தை அடையாளம் காண இயலும். ஒரு குறிப்பான கால எல்லை, ஓர் உலகக் கண்ணோட்டம், வர்க்க நிலைப்பாடு, மையம்- சுற்றெல்லைக் கருத்தாக்கங்கள் நடைமுறைப்படுத்தும் வடிவங்கள் ஆகியனவற்றைத் தவிர்த்து ஓர் இயக்கத்தை அடையாளப்படுத்த இயலாது. பெரியாரின் பார்வை இயந்திர வகைப்பட்ட பொருள்முதலியப் பார்வை என்பதை கேசவன் ஏற்கிறார். கருத்துமுதல் பார்வையே பெரியாரிய நாத்திகத்தின் நடுவமாக உள்ளது என்ற கூற்றும் சரியே என்கிறார். தமிழ் பேசும் பகுதியில் தொழிலிலும் வர்த்தகத்திலும் பிரிட்டன் மூலதனமும் இந்திய மூலதனமும் இருந்தனெவெனினும் இந்திய மூலதனம் மிகக்குறைவு. இந்திய மூலதனத்தையும் வடஇந்திய மூலதனம், பிரதேச மூலதனம் எனப் பிரிக்கலாம். பிரிட்டன் மூலதனமும், பார்சி பனியா மூலதனமும், செட்டியார் பிராமணர் மூலதனமும் ஒன்றோடொன்று கலந்தே தொழிலில் ஈடுபட்டிருந்தன; தனித்தனியாகவும் இயங்கின. இந்திய மூலதனங்களில் பார்சி பனியா மூலதனம் அதிக திரட்சி கொண்டதாகவும், அடுத்த திரட்சி நிலையில் செட்டியார், பிராமணர் மூலதனமும் இருந்தன. இத்தகு சூழலில் எல்லாவற்றுக்கும் மேலாதிக்க நிலையில் பிரிட்டன் மூலதனம் தங்கு தடையின்றி இயங்கவும் செட்டியார் மூலதனம் தனக்கு மேல் நிலையில் உள்ள பார்சி பனியா மூலதனத்துடனும் தனக்கு கீழ்நிலையில் பிராமண மூலதனத்துடனும் மோதிக்கொண்டும் ஒன்றுபட்டும் இயங்க வேண்டியிருந்தது. தமிழ்பேசும் பகுதிகளில் பாலாறு, காவேரி, தாமிரவருணி, வைகை ஆகிய நதிகளின் வளமான பகுதிகளில் பிராமண நிலவுடைமை கணிசமானது. இவர்கள் தமிழ், தெலுங்கு, மராத்தி, கன்னடம் பேசும் பிராமணர்கள். அந்தந்தப் பகுதிகளில் கள்ளர், மூப்பனார், அகமுடையார், வன்னியர், மறவர் ஆகிய நிலவுடைமையாளர்களும் இருந்தனர். சமூக அசைவில் முதலாளிய விவசாயிகள், தரகு வணிகர்கள் பல சாதியிலிருந்து வந்ததையும் கேசவன் தன் கட்டுரையில் விளக்குகிறார். பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் வழிநடத்துதலிலான ஜனநாயகத்தில் கீழமைப்புகளிலிருந்து மாகாண அமைப்புகள்வரை பார்ப்பனர்க்கு மேல் நோக்கிய ஆதிக்கமும் பார்ப்பனரல்லாதோர்க்க்கு ஆதிக்கமின்மையும் இருந்தது. பதவிகளில் எல்லா நிலைகளிலும் பார்ப்பனரே இருந்தனர். அதே நேரத்தில் மேல்நிலை வர்க்க உருவாக்கத்துடன் அடிநிலை வர்க்க உருவாக்கமும் நிகழ்ந்தது. விவசாயத்தில் விவசாயக்கூலிகள், சிறுவிவசாயிகள் துன்பத்தில் வைக்கப்பட்டனர். நெசவுத்தொழிலும் பாதிக்கப்பட்டது. பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதவரிடமிருந்து உருவான வட்டி முதலாளிகள், மற்றும் முதலாளிகள் இடையே ஒற்றுமையும் போட்டியும் இருந்தன. பெரியாருக்கும் அரசுக் கட்டமைப்புக்கும் உள்ள உறவைக் குறிப்பிடும்போது பொதுவாக நல்லுறவு என்பதாகவே கேசவன் பார்க்கிறார். ராஜாஜி காலம் தவிர அப்படித்தான் உறவை வைத்திருந்ததாக சொல்கிறார். பெரியாரின் முன்னெல்லையும் பின்னெல்லையும் இந்தக் கட்டமைப்புக்குள்ளே அடங்கியுள்ளது. அவர் ஏகாதிபத்திய பொருளாதாரக் கட்டமைப்பில் அதைச் சார்ந்திருந்த முதலாளிகள், ஜமின்கள், தரகு வணிகர்கள் ஆகியோரின் நலன்களை மையப்படுத்தினார். ஏகாதிபத்தியத்தின் நேரடி ஆட்சியின் கீழ் திராவிட நாட்டுப் பிரிவினைக் கோரிக்கை என்பது ஏகாதிபத்திய பொருளாதாரக் கட்டமைப்புடன் தொடர்புகொண்ட தமிழ்ப் பிரதேச முதலாளிகளின் மூலதனப் பாதுகாப்புக்கும் சந்தை உத்தரவாதத்துக்கும் உரியதாகக் காண இயலும். 1950க்குப் பின்னர் திராவிடர் மூலதனத்தோடு, பார்சி பனியா பார்ப்பனர் மூலதனம் இணைந்து கூட்டுத் தொழில்கள் பெருத்தன- பிரதேச தரகுமுதலாளிகட்கு இந்தியச் சந்தை கிடைத்தது என்பதை கவனிக்க கோருகிறார் கேசவன். பெரியாரின் அரசியல் எல்லைகளை தமிழ்ப் பிரதேச திராவிட தரகு முதலாளியம் வரையறை செய்ததாக கேசவன் முடிவிற்கு வருகிறார். பெரும்பாலும் தொழிலாளர் பக்கம் நின்றவர் பெரியார் எனக் குறிப்பிட்ட கேசவன் அடிப்படை மக்களின் போராட்டங்களின் போது அனுதாபம் தோய்ந்த வாய் உபசாரம் இருந்தாலும் இத்தகைய பிரச்னைக்கெல்லாம் காரணங்கள் சமூக ஜாதி பேத முறையில் - கடவுள் கர்மம் நம்பிக்கையில் இருக்கின்றன- பார்ப்பன சாஸ்திரங்களில் பிறவி பேத கற்பிதங்களில் இருக்கின்றன எனவும் குறிப்பிட்டார் பெரியார். வர்க்கங்களின் சுரண்டல் தன்மையைப் பாதுகாக்கும் அரசு இயந்திரத்தின் தன்மையைப் பெரியார் அம்பலப்படுத்தவில்லை. இன ஒருமை வர்க்க முரண்கொண்ட சங்கங்களை உருவாக்க முனைந்த வர்க்க சமரச சித்தாந்தம் என கேசவன் வரையறை செல்கிறது. பார்ப்பனர்க்கும் பார்ப்பனர் அல்லாதவர்க்கும் இடையிலான சாதிய முரண்பாடுகளை கையாண்ட விதத்துக்கும், பார்ப்பனர் அல்லாதவர்க்கும் தாழ்த்தப்பட்டோர்க்கும் இடையிலான சாதிய முரண்பாடுகளைக் கையாண்ட விதத்துக்கும் வேறுபாடுகள் இருந்தன. முன்னதைப் பகைமை நிலையில் கருதினார்; பின்னதை பகையற்றதாகக் கருதினார் என்கிற மாவோ பாற்பட்ட விளக்கத்தை கேசவன் வைக்கிறார். சாதிய ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு குறித்துப் பெரியாரியத்தின் எல்லைகளைக் காண மறுப்பது சரியாகாது என்ற மதிப்பீட்டிற்கு கேசவன் வந்தார். ஏ என் சட்டநாதன் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவு ஒன்றை 35 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்றியிருந்தார். அதை 1984ல் ‘தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் அதன் பாரம்பரியமும்’ என்ற தலைப்பில் பிரசுரமாக வெளியிட்டிருந்தனர். அவர் வெளியிட்ட கருத்துக்களில் சில இங்கு தரப்படுகிறது. ஆரியப் பண்பாட்டுத் தழுவலை எதிர்த்து, முற்காலத்தில் வாழ்ந்துவந்த தமிழக மக்கள் போராட்டமோ புரட்சியோ மேற்கொண்டதற்கு எச்சான்றும் இல்லை. ஆரியரின் பண்பாட்டுக்கொள்கையானது விருப்பமில்லா நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான குறிப்புகள் ஏதும் சங்க இலக்கியத்திலோ, சங்கம் மருவிய இலக்கியத்திலோ இல்லை. தமிழ்நாட்டை ஆண்ட பல்லவர், சோழர், பாண்டியர் எவரும் பார்ப்பனர் எதிர்ப்பைப் புலப்படுத்தவில்லை. உண்மையில் பார்ப்பனர்களை வடநாட்டிலிருந்து அவ்வப்போது கூட்டங் கூட்டமாகத் தருவித்ததற்கும், தாங்கள் கட்டிய கோவில்களைச் சுற்றி அவர்களைக் குடியமர்த்தியதற்கும் அம்மன்னர்கள் தாம் பொறுப்பாளிகள் ஆவர். பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் 1917களில் வலிவு பெற்றுத்திகழ ஆரம்பித்தபோது பார்ப்பனத்தலைவர்கள் அறிவுத்திறத்துடன் செயல்பட்டிருக்கலாம். ஒருவரால் கூடத் தங்களுடைய சிந்தனையையும் அறிவையும் மறைத்துக்கொண்டிருந்த மாயமுகத்திரையை கிழித்தெறிய முடியவில்லை. 1967ல் தி மு க ஆட்சி அமைய உருவாகிட பார்ப்பனர் அல்லாதாரின் கொள்கை அறிக்கை அடிப்படை அமைத்துக்கொடுத்தது.. இந்த ஆட்சியின் ஆதாரக்கல் நீதிக்கட்சியால் நாட்டப்பட்டது. தமிழ்நாட்டில் மிகையான தற்பற்றுணர்ச்சி வளர்ச்சியுறலாயிற்று. இத்தற்பற்றானது தமிழுக்கோ, தமிழருக்கோ நிறைந்த பலன் தராத இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு வழிகோலியது. 1920, 23, 26 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து தேர்தல்களில் நீதிக்கட்சி வெற்றிப்பெற்றது. 1935 சட்டப்படியான தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்ற சூழலில் நீதிக்கட்சி சரிவைக் கண்டது. அக்கட்சி மக்கள் ஆதரவை அடிப்படையாக கொண்டிராததும், கிராம அளவில் கட்சிக்கு தொண்டர்களை பெற்றிராததும் காரணமாகக் கொள்ளவேண்டும். அதேநேரத்தில் நீதிக்கட்சியும் பார்ப்பனர் அலலாதார் இயக்கமும் விட்டுச் சென்ற மரபு தற்போது ஆதிக்கம் செலுத்துவதும், சமூக வாழ்வில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த இருப்பதும் வரலாற்றில் குறிக்கத் தக்க ஒன்றாகும். இந்த மரபுகளை உருவாக்குவதில் பெரியாரின் பங்கு உளங்கவரக் கூடியது; ஆழ்ந்து கருதப்படக்கூடியது. பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்திலிருந்து மாறுபட்ட திராவிடர் இயக்கம் 1939 ஆம் ஆண்டில்தான் வெளிப்படையாக தலைதூக்கலாயிற்று. ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களிடம் பெரியார் திராவிடநாடு கோரிக்கையை வைத்தார். திராவிடர்களின் சென்னை மாநிலம் இந்திய அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட தனி மாநிலமாகப் பிரிக்கப்படவேண்டும் என தீர்மானம் இயற்றினார். திராவிட நாட்டைச் சார்ந்த பிறபகுதிகள் இதை ஆதரிக்கவில்லை. இது நீதிக்கட்சியின் பழைய சக்திகளான உயர்குடியினர், பிரபுக்கள், திவான்பகதூர்கள், ஜமீன்கள் ஆகியோருக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்தது. 1944ல் சேலம் மாநாட்டில் அரசுப்பதவி, பட்டம் துறப்பு என தீர்மானித்ததால் பழைய பற்றாளர்கள் பெரியாரிடமிருந்து தம்மை விலக்கிக்கொண்டனர். பெரியாருடைய போதனைகள் மக்களைச் சிந்திக்கச் செய்தன; அதனால் பெரும் சீர்திருத்தங்கள் மெல்ல விளைந்தன. அவரின் சுயமரியாதை என்பதில் ’சுய’ வடமொழி மூலத்திலிருந்து பிறந்தது என்றாலும் தன்மானம் என்ற சொல் ஏற்கப்பட்டாலும் சுயமரியாதை என்பதே நிலைத்துவிட்டது. பார்ப்பனர்கள் மட்டுமே என்ற நிலையை மாற்றி சுழல் முறையிலான வேலைவாய்ப்பு எனும் திட்டம் மூலம் அரசு 1921ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையைக் கொணர்ந்தது நீதிக்கட்சியின் பெரும் சாதனை. இத்திட்டம் நாடு விடுதலைப் பெறும்வரை 25 ஆண்டுகள் தொடர்ந்தது. பொதுப்பணிகளில் வகுப்புவாரிப் பிரதிநித்துவத்தைக் கணக்கில் கொள்ளாமல் சாதிகளின் நிலையை ஆய்வது முழுமையாகாது. சென்னை மாநிலத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக்கொள்கை பார்ப்பனர் அல்லாதார்- திராவிட இயக்கத்திற்கு முற்பட்டது. பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பட்டியலானது 1885ல் கால்கொண்டுவிட்டது. இப்பட்டியல் 1906, 1913ஆம் ஆண்டுகளில் மறு ஆய்வுக்கு உட்பட்டு விரிவாக்கப்பட்டது. 1913ஆம் ஆண்டுவரையிலும் தாழ்த்தப்பட்ட சாதியினரிலிருந்து பிற்பட்ட சாதியினரை வேறுபடுத்தி அறியும் முயற்சி மேற்கொள்ளப்பெறவில்லை. 1925 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்து வேறான சாதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.. இந்த இரு பட்டியல்களும் 1931 மக்கள்தொகை கணக்கெடுப்பைக் கொண்டு மேலும் திருத்தப்பட்டன. பள்ளிகளில் அரைக்கட்டண சலுகை கிடைத்தது. மக்களுடைய சமூக, அரசியல் விழிப்புணர்வின் காரணமாக பிற்பட்ட பட்டியலில் இருந்த பல சாதிகள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒத்தநிலையிலான வசதிகளைக்கோரிப் போராடின. 1957 ஆம் ஆண்டில் சென்னை அரசு மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியல் என்பதை ஏற்றது. 1949ல் பிறந்த தி முக 1956ல் திருச்சியில் கூடி தேர்தல்களில் போட்டி என முடிவு செய்து 1957 முதல் தேர்தல் களம் சென்றது. 1967ல் அண்ணா தலைமையில் ஆட்சிக்கும் வந்தது. கூட்டாட்சி அமைப்பு நடவடிக்கைகளை ஒப்புக்கொண்டது. திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டது. அண்ணாவின் அரசியல் உறுதிமிக்க முன்னறிவுக்கு இது எடுத்துக்காட்டானது. ஒருமுறை ஒரு சாதி பிற்பட்டோர் வகுப்பில் சேர்க்கப்பட்டுவிட்டால் பின்பு அதனை நீக்குவது என்பது இயலாததாகும். இதை வாக்கு வலிமை கோணத்தில் பார்ப்பது அரசியல் தற்கொலைக்கு சமமாகும். மாநில அரசு வகுப்புவாரிக் கொள்கையை பத்தாண்டுகளுக்கு ஒருமுறையாவது ஆய்வு செய்யாவிடில் சமூக நீதி தவறாகப் பயன்படுத்தப்படுவதோடு செயலற்றதாகவும் ஆகிவிடும். பிற்பட்டோர் குழுவின் கருத்துப்படி தமிழ்நாட்டில் 20 அல்லது 25 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சில சாதியினர் அரசுப்பணிகளில், கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டில் 60 விழுக்காட்டிற்கும் மேலாகப் பெறும் நிலையிலிருக்கின்றனர். கட்ந்த 60 ஆண்டுகளில் ( 1920-80) இடஒதுக்கீட்டின் பயன் பிற்பட்டவருள் உயர்ந்த சில சாதியினருக்கும், ஒவ்வொரு சாதியிலும் உயர் மட்டத்தினருக்குமே சென்றுள்ளது. இது தவிர்க்கமுடியாதது. ஆனால் இன்றோ நாளையோ மேல்மட்டத்தினரை நீக்குதல் தவிர்க்க முடியாததாக வந்து சேரும். இல்லாவிடில் நாம் சாதி அமைப்புக்குள்ளேயே ஒரு வகுப்புமுறையை ஊக்குவிப்பவர்களாக ஆவோம். ஜனநாயக, சோசலிச சமூகத்தில் இது விரும்பத்தக்க போக்கு அன்று. தாழ்த்தப்பட்ட மக்கள் தனி அரசியல் சட்டப்பாதுகாப்பை நன்கு உணர்ந்துள்ளனர். சாதி இந்துக்களால் அவர்களுக்கு அவமானம் ஏற்படுவதை நீண்ட நாட்களுக்கு பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். அரசியல், சமுதாயக் கட்டமைப்பு காக்கப்படவேண்டுமானால் மைய மாநில அர்சுகளும் இந்து சமூகமும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உரிய இடத்தை அளித்துப் போற்ற வேண்டும். திரு சட்டநாதன் அவர்கள் உரையின் சாரம்சம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தனியான எவ்வித விளக்கங்களும் இவ்வுரைக்கு தேவைப்படாது. சட்டநாதன் தனது பார்வையை இவ்வுரையில் பொறுப்பான ஆய்வுக்கண்ணோட்டத்தில் தந்துள்ளார். எல்லாக் கொள்கை முழக்கங்களும் நடைமுறை சோதனையில் பலன்களை யாரிடம் பெருவாரியாக கொண்டுபோய் சேர்த்தன என்பதைப் பொறுத்துத்தான் தன் உண்மைத்தன்மையை சோதித்துக்கொள்கின்றன. Tamil Renaissance and Dravdian Nationalism என்கிற புத்தகத்தை கே நம்பி ஆருரான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியிருந்தார். அதில் பிராமணர் அல்லாத இயக்கத்தின் தோற்றம்- வளர்ச்சி குறித்து பேசுகிறார். தமிழ்ப்பல்கலைக்கழகம் கோரிக்கைத் துவங்கி தனிநாடு கோரிக்கைவரை மெல்ல உருவானதை விவாதிக்கிறார். நீதிக்கட்சி- சுயமரியாதை இயக்கம், இந்தி எதிர்ப்பு மொழிப்போர், திராவிடர் கழகம் அதன் பிரிவினை தனி திராவிடஸ்தான் கோரிக்கைப் பற்றி உரையாடுகிறார். இப்புத்தகத்தில் அத்தியாயம் 9 ’The Demand for Diravida Nadu 1940-44’ என்பதை விவாதிக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள சில கருத்துக்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. நம்பி ஆரூரான் Council of States Debates யை சுட்டிக்காட்டுகிறார். அதில் நியமன உறுப்பினராக இருந்த சர் சி சங்கரன் நாயர் 1926ல் சென்னை ராஜாதானியின் 10 மாவட்டங்களுக்கு தனி ராணுவம்- இரு அவைகள் கொண்ட சுயாட்சி கோரினார். பொப்பிலி ராஜா இதை premature demand என விமர்சித்தார். வங்கத்தை சார்ந்த கே சி ராய் வங்கப் பிரிவினையின் மோசமான அனுபவங்களை படிப்பினையாக கொள்ளுங்கள் எனப் பேசினார். ஆனால் சங்கரன் நாயர் சென்னை ராஜதானி அரசியல் சுய ஆட்சிக்கு மிகப் பொருத்தமான பகுதி என வலியுறுத்தினார். மாநில கவுன்சில் இதை நிராகரித்தது. ராயல் சைமன் கமிஷன்தான் டொமீனியன் அந்தஸ்து குறித்து விசாரிக்கப்போகிறது என்பது சொல்லப்பட்டது. மெட்ராஸ் மெயில் 17 மார்ச் 1926ல் சங்கரன் நாயர் கோரிக்கையை விமர்சித்து கட்டுரை எழுதியது. அதில் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தால் இந்திய ஒற்றுமைக்கு ஆபத்தாக அமையும். அது சாதி, மத உணர்வுகளைவிட மிக அதிக வேறுபாடுகளை பலப்படுத்தும் - ”because differences of tongue set up very real barriers to intercourse and understanding" என அப்பத்திரிகை கருத்து வெளியிட்டது. சென்னை அரசாங்கம் சார்பில் 1929ல் சைமன் கமிஷனுக்கு மெமோரண்டம் தரப்பட்டது. அதில் மொழிவாரியாக தற்போதுள்ள ராஜதானியை பிரிப்பதை அரசாங்கம் எதிர்த்தது. ஆந்திரா பிரிவினை கோரிக்கையையும் நிராகரித்தது. இதில் வேடிக்கை என்னவெனில் இப்படி அரசாங்க சார்பில் கொடுத்த மெமோவை காங்கிரஸ் அடிப்படையில் பட்டாபி சீதாராமைய்யா தலைமையில் இயங்கிய Indian Linguistic provinces league விமர்சித்தது. 1935 சட்டப்படி காங்கிரஸ் மந்திரிசபை அமைந்ததும் - நீதிக்கட்சியின் தோல்வியும்- ராஜாஜி இந்தி கட்டாய உத்தரவு போட்டதும் பிராமணர் அல்லாத இயக்கத்திற்கு புதிய நெருக்கடியையும் கூடுதல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தின. சென்னை சட்டசபை சபாநாயகர் சாம்பமூர்த்தி மொழிவாரிமாநிலங்கள் தான் அந்த அந்த வட்டார மொழி வளர்ச்சிக்கு உதவும் எனப் பேசினார். அதேபோல் திருநெல்வேலி வந்த பட்டாபி சீதாராமைய்யா டிசம்பர் 1937ல் மொழிவாரி மாநிலங்கள்தான் தீர்வு எனப் பேசினார். முன்னதாக இந்தி எதிர்ப்பை மையப்படுத்தி தமிழ் அறிஞர் சோமசுந்தர பாரதி அக்டோபர் 1937ல் இந்தியிலிருந்து தமிழ் கலாச்சாரத்தை காத்திட தமிழ் மாநிலம் எனப்பேசினார். மொழிவாரி மாநிலம் எனில் கேடு என மெட்ராஸ் மெயில் அக்டோபர் 11, 1937ல் எழுதியது. காங்கிரஸ் முதல்வர்கள் மொழிவாரி மாநிலக் கோரிக்கையால் சங்கடப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பிரிவினை எண்ணங்கள் மட்டுமல்ல, தேவையில்லாத நிர்வாக செலவு வீங்கும் எனவும் அவர்கள் நினைப்பதாக மெயில் எழுதியது. மார்ச் 1938ல் சென்னை அசெம்பிளியில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என மொழி அடிப்படையில் மாநில பிரிவினைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் கவர்னர் அனுப்பிய அறிக்கையில் ராஜாஜி மட்டுமல்லாமல் பல அமைச்சர்களுக்கும் இதில் உடன்பாடு இல்லை - ஆனாலும் அரசியல் நிர்பந்தத்தால் அவர்கள் ஏற்றுள்ளனர் என்பதையும் சேர்த்தே தெரிவித்திருந்தார். இவ்வறிக்கை ஏப்ரல் 3, 1938 தேதியிட்டதாகும். பெரியார் அவர்களிடமிருந்து அக்டோபர் 1938ல் தான் தமிழ்ப்பகுதி கோரிக்கை முதல் முதலாக எழுந்தது. பிராமணர்களும் வடநாட்டினரும் சுரண்ட காங்கிரஸ் அனுமதிக்கும் என்றால் இந்தியாவிலிருந்து துண்டித்துக்கொண்ட தனிப்பகுதிக்கு- தமிழர் விடுதலைக்கு நாம் போராடவேண்டியிருக்கும் என அவர் சேலத்தில் அறிவிக்கிறார். மற்றவர்கள் தமிழ் பிரதேசம் என எழுப்பிய கோரிக்கைக்கும் பெரியார் அதை வளர்த்தெடுத்தமைக்கும் வேறுபாடு இருக்கிறது. பெரியார் மொழிவாரி மாநிலம் என்ற பொருளில் பேசவில்லை. நிலக்கோட்டையில் மாநாடு ஒன்றில் ஏ டி பன்னீர்செல்வம் அவர்கள் பேசுகையில் தமிழ்நாடு தமிழர்க்கு என நாம் பேசுகிறோம் என்றால் இங்குள்ள பிராமணரோ - ஆரியரோ, இங்கிலீஷ்காரர்களோ வெளியேறவேண்டும் எனப் பேசவில்லை. அதில் கலந்துகொண்ட முத்தையா செட்டியார் தமிழ்க் கொடியை ஏற்றிவிட்டு சேர சோழ பாண்டிய வம்சத்தினர் நாம் என உரையாற்றினார். மேலும் அவர் திருநெல்வேலி மாநாடு ஒன்றில் (1939) பேசும்போது தமிழ் பேசும் அனைவரும் தமிழர்தான் என்றார். இந்துக்களோ- பிராமணர் அல்லாதவரோ, பிராமணரோ- முஸ்லிம்களோ, கிறிஸ்துவர்களோ எவரானாலும் தமிழ் பேசினால் தமிழர் என்றார். பெரியார்தான் ’தமிழ்நாடு தமிழருக்கு’ எனச் சொல்லும்போது அதன் பொருளாதாரக் காரணங்களையும் கும்பகோணத்தில் ( அக்டோபர் 1939) தந்தார். குஜராத்திகளும் மார்வாடிகளும் காலம் காலமாக இங்கு தங்கி சுரண்டுவதை அனுமதிக்கமுடியாது. இங்கு பெறும் பணத்தை வடக்கில்கொண்டு போய் தொழில்பெருக்குவதை நான் விரும்பவில்லை எனப்பேசினார். தனித்து தனது பொருளாதார எதிர்காலத்தை தமிழ்நாடு தீர்மானிக்க வேண்டும் எனக் கருதினார். நவ்ம்பர் 20, 1939ல் பிரிட்டனுக்கு நம் முழு ஆதரவும் உண்டு ஏனெனில் பிராமண ராஜ்யத்தை விட பிரிட்டிஷ் ராஜ்யம் மேலானது என விளக்கம் தந்தார். பெரியாரின் கோரிக்கையை விமர்சித்து மெட்ராஸ் மெயில் கேள்விகளை நவம்பர் 15 1939ல் எழுப்பியது. இதை நம்பி ஆரூரன் இவ்வாறு தருகிறார். “The Mail posed to EVR a series of questions relating to the proposed Tamilnad such as its geographical boundaries, the status of Non Tamils and its foreign and defence policies. The Mail considered the scheme of EVR as utterly impracticable and said that it would be wrong to believe that a relatively weak Tamil State could be happier when independent than as a member of the Federation” - narrow and separatist sect ஆக நீதிக்கட்சி சரிந்தது வருத்தத்திற்குரிய ஒன்று என மெயில் எழுதியது. பெரியார் மெயிலுக்கு தன் பதிலை நவம்பர் 20 1939ல் எழுதினார். பெரியாரின் பதில் பற்றி நம்பி ஆரூரான் எழுதுகிறார். “ His definition of Diravidanad lay on linguistic bases in the same manner as the Congress demanded linguistic provinces. But for EVR, the concept was a Diravidian Federation which comprised all areas where the four major Diravidian languages were spoken. His definition of Diravidians included all people who inhabited in those areas- Muslims, Christians, Depressed Classes and all Hindus except Brahmins who call themselves Aryans” 1940 ஜனவரியில் பெரியார் பம்பாய் செல்கிறார். அண்ணா, நாதன், பாலசுப்பிரமணியன் உடன் சென்றனர். பம்பாயில் ஜின்னா மற்றும் அம்பேத்கரை பெரியார் சந்திக்கிறார். பிராமணர்கள் தமிழர் அல்லர். இங்கிலாந்து அளவு ஜனத்தொகை உள்ள, ஜெர்மனி போன்ற பிரதேச அளவுள்ள தமிழ்நாடு தனிநாடாக இருப்பதற்கு அனைத்து தகுதிகளையும் கொண்டது என பம்பாய் கூட்டத்தில் பேசுகிறார். நீதிக்கட்சியினர் ஜின்னா ஆதரவுடன் திராவிடஸ்தான் கோரிக்கையைப் பலப்படுத்தமுடியும் எனக் கருதினர். பொன்னம்பலனார் ஜின்னா 1940 ஏப்ரல்- மே மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து தனிநாடு கோரிக்கைக்கு பிரச்சாரம் செய்ய பெரியாரிடம் வாக்குறுதி கொடுத்துள்ளார் என்ற செய்தியை வெளிப்படுத்தினார். காங்கிரசின் 27 மாத ஆட்சி ஏற்படுத்திய உணர்வுதான் பிரிந்து செல்லவேண்டும் எனும் வேட்கைக்கு காரணம். எனவே தனித் திராவிடநாடு கோரிக்கையை மத்திய சர்க்கார் பரிசீலிக்கவேண்டும் என ஈரோட்டில் நடந்த மாநாடு ஒன்றில் (ஏப்ரல் 1940) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரத்தில் ஜூன் 1940ல் பிரிவினை மாநாடும் கூட்டப்பட்டது. இங்குதான் தனிநாட்டிற்கான எல்லைப்படமும் வெளியானது. மன்னர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம் இதன் தலைநகர் எனப் பெரியார் பேசினார். ” EVR unveiled the map of Diravidanad showing the whole of South India, Andhra desa, Deccan ( exception Hyderabad) all the Eastern coast line of India, including a portion of Bengal”. சென்னையில் ஏப்ரல் 1941ல் முஸ்லீம் லீக் மாநாட்டில் பங்கேற்ற ஜின்னா அவர்கள் இரு தேசம் கொள்கையை விளக்கிவிட்டு ’திராவிடஸ்தான்’ எனவும் கோடிட்டு பேசினார். திராவிடஸ்தான் அமைய தனது முழு ஆதரவும் உண்டு என்றார் ஜின்னா. இரண்டாவது உலகப்போர் காலத்தில் மதுரையில் 1941ல் தனிநாடு போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தார். திராவிடநாடு கோரிக்கை பிற மொழிபேசுவோரிடம் போதுமான ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. ஆந்திரர் மலையாளி என நம்பிக்கை வைக்காமல் தமிழருக்காக உறுதியாக போராடுவதே சிறந்தது என சோமசுந்தர பாரதி பேசத்துவங்கினார். பெரியாரும் இதை புரிந்துகொண்டவராகவே இருந்தார். பிரிட்டிஷாரே வெளியேறுக எனப் போராட்டம் (குவிட் இந்தியா) 1942ல் வலுத்த போது அண்ணா அவர்கள் அதை விமர்சித்தார். ஆரியர்களே வெளியேறுங்கள் என்பதே நமது முழக்கம் என்றார். ஜின்னா பாகிஸ்தானுக்காக மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் திராவிடஸ்தான் பற்றி ஏதும் வாதாடவில்லை. 1944ல் நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் பெற்றது. Explainning the aims and objects of the renamed party at the meeting in Madras EVR said that he wanted Diravidanad to be fully independent sovereign state with the status of a Dominion and that the Governor or the Viceroy would not have the authority over the new state except as the King’s representative. He also said that tariff duties and other restrictions as were imposed on Goods entering to Diravidanad inorder to prevent looting of south India wealth in the name of Commerce, industry and religion. இதை விமர்சித்த மெயில் ஓர் உண்மையையும் சேர்த்தே எழுதியது. ஆட்சியாளர்கள் சென்னை ராஜதானியில் நிலவும் அதிருப்தியின் உச்சத்தை புரிந்துகொள்ள வேண்டும் . இதை அலட்சியப்படுத்துவது பாகிஸ்தான் போன்ற ஒன்றை வலுவாக்குவது போன்றதுதான். சமூக பிரச்னைகளில் திராவிடர் கழகம் அனைத்து வகுப்பாரின், சாதியாரின் - குறிப்பாக அரசியல் பொருளாதார, சமூக அம்சங்களில் உரிமை என இருப்பதையும் பார்க்கவேண்டும் என்றது மெயில். சுயமரியாதை இயக்கத்தின் மய்ய அச்சு சுழற்சியே பிராமணர் அல்லாதவர்களுக்கு மரியாதையை சமூகத்தில் உருவாக்குதல்- சாதி மதத்தின் பெயரால் நடைபெறும் பிராமண சுரண்டலிருந்து விடுதலை பெறுதல் என்பதாக இருந்தது. இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியும், பாகிஸ்தான் உருவாகும் என்கிற நம்பிக்கையும் பெரியாருக்கு திராவிடஸ்தான் கோரிக்கையை வலுப்படுத்தக் காரணிகளாக அமைந்தன. பாகிஸ்தான் கோரிக்கைக்கு முன்னரே தாங்கள் தனிநாடு கோரிக்கை வைத்தோம் என சொல்லிவந்தாலும் அக்கோரிக்கை இங்கு உத்வேகத்தை தந்தது. தி முக உருவாகி 1963ல் தனிநாடு கோரிக்கை கைவிடப்பட்டது.. நம்பி ஆரூரானின் 300 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் மிக முக்கிய புத்தகமாக பலராலும் மேற்கோள் காட்டப்படுகிறது. பெரியாரின் இனம் சார்ந்த பிரிவினை கோரிக்கையில் பொருளாதாரக் காரணிகள் இருப்பதை நாம் காணமுடிகிறது. விடுதலைப் போராட்டம் பிரிட்டிஷ் சுரண்டலை எதிர்த்த ஒன்றாக நடந்து வந்தபோது - அவ்வாட்சி அகற்றப்பட்டு விடுதலை என்கிற பெயரில் வரக்கூடிய காங்கிரஸ் ஆட்சி வடவர்களின் பிராமணர்களின் சுரண்டல் ஆட்சியாக அமைந்துவிடும் என்கிற போராட்டமாக அதை பெரியார் எடுத்துச் சென்றதைப் பார்க்கிறோம். ஆனால் தமிழ் நாட்டில் இப்போராட்டம் முழுமையாக பெரியார் விருப்பத்தின்படி நடைபெறமுடியவில்லை. அதற்கான சூழலும் இல்லை. இறுதிநாள்வரை அவர் சுதந்திர தமிழ்நாடு என்பதை கைக்கொண்டிருந்தார். அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சிக்கு வருபவர்கள் அனைத்து நேரங்களிலும் தெருப்போராளிபோல் பேசிக்கொண்டும் நடந்துகொண்டும் இருக்க முடியாது என்பதை அனுபவம் நிரூபித்துள்ளது. மாநில ஆட்சியில் மட்டுமல்லாமல் மத்தியிலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஆட்சி அதிகார பகிர்வை மேற்கொண்ட அனுபவமும் கிடைத்தது. பேசிய முழங்கிய எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த இந்த அதிகார பகிர்வால் சாத்தியமில்லாமல் போனதை காண்கிறோம். இலங்கையில் ஆயுதங்தாங்கிய விடுதலைப் புலிகள் போராட்டங்களின் படிப்பினைகளும் கணக்கில் கொள்ளவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. மேற்கூறிய பல விமர்சன மறுமொழிகளில் தோழர் பி ஆர் அவர்களும், தோழர் கேசவன் அவர்களும் பார்த்த பார்வை மார்க்சிய இயக்கங்களின் மரபார்ந்த பார்வையாக இருந்தாலும், தமிழ்நாட்டில் அதன் வட்டார முதலாளித்துவ வளர்ச்சிக்கு துணைநின்ற இயக்கமாகவே திராவிடர் இயக்கத்தை பார்த்தது யதார்த்த மதிப்பீடாக இருக்கிறது. அவர்களுக்கு தேவையான குமாஸ்தாக்களை வகுப்புவாரி உரிமையில் உருவாக்குவதற்கான இயக்கமாகவும் - அது சமூக நீதியின் பாற்பட்டு பங்குபணியாற்றியுள்ளதையும் பார்க்க முடிகிறது. மத்திய அரசின் புதிய பொருளாதாரக்கொள்கைகள் அப்படியே மாநிலங்களில் அமுலாவதையும் மூலதனங்களை இழுக்க பலவேறு சலுகைகள் தருவதற்கான மாநிலங்களின் போட்டியையும் பார்த்து வருகிறோம். எம்மாநில முதலாளி இந்தியாவை கட்டுப்படுத்தவேண்டும்- அதற்கான உரவும் உரசலும் கொண்டதாகவே மாநிலங்கள் நகர்ந்து வருகின்றன. தமிழ்நாடும் இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் இளைய பங்காளியாகவே வளர்ந்தும் மோதியும் கொண்டிருக்கிறது. பிற்சேர்க்கை தமிழ்நாடு 130.33 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இந்திய புவிப்பரப்பில் 4 சதம் எனலாம். மக்கள் தொகையில் 2011 படி 6 சதம் கொண்டதாக இருக்கிறது. 2013ன் படி 32.4 லட்சம் விவசாய குடும்பங்கள் உள்ளன. ஏறத்தாழ 60 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பு எனலாம். சிறு குறு விவசாயிகள் 2 ஹெக்டேருக்குள் இருப்பவர்கள் 93 சதம், இவர்கள் 62 சத சாகுபடியைத் தருகின்றனர். தமிழகத்தில் 7 சத பெரு விவசாயிகள் 38 சத சாகுபடியை செய்கின்றனர். தமிழகத்தில் தரிசு நிலங்கள் எனக் கணக்கிட்டால் 23 சதத்திற்கு மேல் நிலப்பரப்பை சொல்லமுடியும். விவசாயம் தவிர இதர உபயோக நிலப்பரப்பு 17 சதமாகும். இந்த விவசாய நிலங்கள் சாதிவாரியான உடைமை குறித்து தமிழ்நாட்டின் அரசாங்க கொள்கை குறிப்புகளில் நமக்கு ஏதும் கிடைப்பதில்லை. பிராமணர் - பிராமணர் அல்லாத உயர் மற்றும் இடைநிலை சாதிகள்- தலித்கள் எந்த அளவு வேளாண்பரப்பை கையாள்கிறார்கள் என்கிற விவரம் மூலம்தான் இங்கு முன்னேற்றத்தை சரியாக அளவிடமுடியும். 2019ல் வெளியான விவசாய நிலவுடைமைக்கான அகில இந்திய 2015 சென்சஸ் அடிப்படையில் தமிழ் நாட்டிற்குரிய விவரத்தைக்கொண்டு கீழ்கண்ட அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. All classes As per Agri Census 2015 Occupational Holdings In Numbers Area Hectares ----------------------- ------------ --------------- All 7938000 5971000 Marginal 6224000 2169000 Small 1119000 1555000 Semi Medium 452000 1215000 Medium 128000 714000 Large 15000 317000 SC Occupational Holdings In Numbers Area Hectares ----------------------- --------------- --------------- All 799000 466000 Marginal 673000 237000 Small 94000 128000 Semi Medium 27000 70000 Medium 5000 25000 Large Not Available 6000 ST Occupational Holdings In Numbers Area Hectares ----------------------- --------------- --------------- All 95000 75000 Marginal 70000 26000 Small 17000 23000 Semi Medium 6000 16000 Medium 2000 9000 Large Not Available 1000 இங்கு மார்ஜினல் என்பது 1 ஹெக்டேருக்கு கீழ் - ஸ்மால் என்பது 1- 2 ஹெக்டேருக்கு கீழ் - செமி மீடியம் என்பது 2-4 ஹெக்டேர் - மீடியம் என்பது 4- 10 ஹெக்டேருக்குள்- லார்ஜ் என்பது 10 ஹெக்டேருக்கு மேல் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணைப்படி எஸ்சி எஸ்டிக்களில் 90 சதமானவர்கள் மார்ஜினல், சிறு விவசாயிகளாக இருப்பதைக் காணமுடிகிறது. அனைவர் என்பதில் இப்பிரிவு போக இதர பிரிவினர்களிடையேயான ”பிரேக் அப்” கிடைத்தால் நிலவுடைமை குறித்து சரியான மதிப்பீட்டிற்கு வரமுடியும். தமிழகத்தில் மக்கள் தொகை 2011ன் படி 7.21 கோடி. இதில் ஆதி திராவிடர்கள் 1.44 கோடி ( 20சதம்) , பழங்குடியினர் 7.95 லட்சம்( 1.10 சதம்). கல்வியறிவு எனப்பார்த்தால் 73 சதம், 54 சதம். அனைத்து மக்கள் 80 சதம் பெற்றுள்ளனர். ஆண்டு வருமானம் 72000க்கு கீழ் இருந்தால் மட்டும் இலவச வீட்டுமனை கிராமத்தில் பேருராட்சியில் தரப்படுவதாக அரசாங்கம் சொல்கிறது. ஈமச் சடங்கு மான்யம் பெறுவதிலும் சீலிங் உள்ளது. ஆண்டு வருமானம் ரூ 40000க்குள் இருக்கவேண்டும். பெண்கள் நிலம் வாங்க உதவும் மான்ய திட்டம் ஒன்று அமுல் ஆவதாகவும் அரசாங்கம் சொல்கிறது. அதே போல் தொழில்முனைவோர் மான்யம் என 2.25 லட்சத்திற்குட்பட்ட திட்டம் ஒன்றையும் சொல்கிறார்கள். அய் ஏ எஸ் தேர்விற்கு தயாராக உதவித்தொகை ரூ 50 ஆயிரம் தருகிறார்கள். ஆதிதிராவிடர்களில் பழங்குடிகளில் நிலம் உடையோர், தொழில் முனைவோர், முதலாளிகள் எவ்வளவு குடும்பங்கள் என்ற விவரத்தை ஆதிதிராவிட நலத்துறை குறிப்புகளில் பெற முடிவதில்லை. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர். தமிழகத்தில் நிலவும் 69 சத இட ஒதுக்கீட்டு முறையில் பிற்பட்டோர் 26.5 சதம், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் 3.5 சதம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் 20 சதம், ஆதிதிராவிடர் 18 சதம், பழங்குடியினர் 1 சதம் பெறுகின்றனர். ஆதிதிராவிடர் மக்கள் தொகையில் 20 சதம் இருப்பதை பார்க்கிறோம். பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர்- இதில் இடம் பெறாத பொதுப்பட்டியலில் வருவோர் குடும்பங்கள் எந்த அளவு நிலவுடைமை, தொழில் முனைவோர், முதலாளிகள் ஆக இருக்கின்றனர் என்ற விவரத்தை அரசின் மக்கள் சாசனம், செயலாக்கதிட்ட ஆவணம், கொள்கைக்குறிப்புகள் என எதிலும் பெறமுடியவில்லை. இவைகள் குறித்த சர்வே இருந்தால் பகுதிவாரியான முன்னேற்றத்தை நாம் மதிப்பிடமுடியும். தமிழகத்தில் சுரங்கங்கள் கனிமங்கள் செறிவு இருப்பதாக சொல்லப்படுகிறது. இவை தொழில்வளர்ச்சியை துரிதப்படுத்துபவையாகவும் உணரப்படுகிறது. கனிம வளம் நிர்வாகத்தில் அதை வெட்டி எடுக்க பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாது தனிநபர்களும் அனுமதிக்கும் கொள்கையைத்தான் தொடர்ந்த தமிழக அரசாங்கங்கள் பின்பற்றி வருகின்றன. பாக்சைட் எடுத்துக்கொண்டால் 420 ஹெக்டேர் பரப்பிற்கு 5 குத்தகைகாரர்களிடம் விடப்பட்டுள்ளது. மாக்னசட் வெட்டி எடுக்க 1513 ஹெக்டேர் பரப்பில் 20 பேருக்கு குத்தகை, சிலிக்கா மணல் வெட்டி எடுக்க 19 குத்தகைதாரர்கள் 38 ஹெக்டேர் பெற்றுள்ளனர். இதே போல் கிராபைட், வெர்மிகுலைட், கிரானைட் போன்ற பலகைப்பட்ட குத்தகைகள் கனிம வளத்தில் பேசப்படுகின்றன. இதை எடுத்தவர்கள் எக்கம்பெனியினர்- தமிழரா, வடநாட்டவரா, அந்நிய கம்பெனிகளா - எவ்வளவு பேருக்கு வேலைத் தரப்படுகிறது- சுரண்டல் தன்மை என்ன - சுற்றுச் சுழல் கேடு எவை எனப் பார்க்கும்போதுதான் சரியான மதிப்பீடுகளுக்கு ஒருவரால் வரமுடியும். தமிழ்நாடு நாட்டின் பொருளாதாரத்தில் மிக முன்னேறிய மாநிலம். இந்திய உள்நாட்டு உற்பத்தியில் 8.4 சதம் அளிக்கும் மாநிலம். ஹூண்டாய், ஃபோர்டு, பியூஜியட், பி எம் டபில்யூ போன்றவைகளுடன் பெரும் அசோக்லேலண்ட், டி வி எஸ், எம் ஆர் எஃப் எல் போன்றவைகளும் தொழில் நடத்தும் பெரும் நிறுவனங்களாக இருக்கின்றன. மாறிமாறி வரும் அரசாங்கங்கள் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தம் போடுவதாக பெருமை பேசுவதையும் நாம் பார்க்க முடியும். அந்நிய நேரடி மூலம் ஈர்ப்பது, சரக்கு ஏற்றுமதி ஆகியவற்றில் மகாராஷ்ட்ரா, குஜராத்துடன் போட்டியிடும் மாநிலம் தமிழ்நாடு. தொழிற்சாலை பணியில் மகாராஷ்ட்ராவைவிட 25 சதம் தொழிலாளர்கள் இங்கு அதிகம் என தமிழக அரசு விவரம் தருகிறது. அதேபோல் தொழிற்சாலைகளில் எண்ணிக்கையில் கூட மகராஷ்ட்ராவைவிட , குஜராத் விட 10 ஆயிரம், 12 ஆயிரம் கூட பெற்ற மாநிலம். ஆனால் தமிழ்நாட்டில் மூலதன முதலீடு குஜராத்தை ஒப்பிடுகையில் பாதிதான். அங்கு 80ஆயிரம் கோடி தொழில் முதலீடு இருந்தால் தமிழ்நாட்டில் 40 ஆயிரம் கோடிதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக அவ்வப்போது அறிவிக்கப்பட்ட தொழில் கொள்கைகள் மோட்டார் வாகனம், மின்னணுவில் பெரும் வெளிநாட்டுக்கம்பெனிகளை கொணரத்தக்க வகையில் அமைந்தன. பல்வேறு சலுகைகள் வழங்கித்தான் இந்த ஈர்ப்பை மாநில அரசுகள் செய்கின்றன. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. மூலதனம் வருவதில் தமிழ்நாட்டில் அந்நிய, வடநாடு, உள்பிரதேச என்கிற கதவடைப்புக்கொள்கை இல்லை. அதே போல் இங்கு வேலைக்கு மலிவில் சுரண்ட வடநாட்டு தொழிலாளர்களின் புலம் பெயர்தலும் பெருமளவில் அனுமதிக்கப்பட்டதை பார்க்கமுடிகிறது. இங்கிருப்போர் அத்தொழிலாளர்களை சுரண்டுவதில்லை என பெருமைப்பட ஏதுமில்லை. இங்கு சமூக நீதி பேசினாலும் வர்க்கப்போராட்டம் என பேசினாலும் அரசியல் தாண்டி அவ்வரசியலின் பொருளாதார செல்திசை என்னவென்று பார்க்கவேண்டியுள்ளது. பெரும் தொழிற்சாலைகளை நடத்துபவர்கள் யார் யார்- அங்கு வேலை பார்ப்பவர்கள் யார்- அரசாங்கம் நியூட்ரல் போல் பாவனை செய்தாலும் எங்கு இலாபம் செல்கிறது- சுரண்டல் பிற மாநிலங்களைவிட இங்கு மட்டுப்படுத்தப்பட்டே இருக்கிறது என பேசுவதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. வறுமைக் குறியீட்டு அட்டவணை என்பதில் குடிநீர், எரிபொருள், கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பது பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டு மனித மேம்பாட்டுக் குறியீட்டில் மாவட்டங்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி தான் இருக்கிறது என்பதை நாம் பார்க்க முடியும். திருவாரூர், விழுப்புரம், தேனி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் கடை நிலையில் இருப்பதை பார்க்கமுடியும். பாலின சமமின்மை குறியீட்டில் விழுப்புரம் அரியலூர் வருவதைக் காணலாம்.. அதிக வருவாய் ஈட்டும் மாவட்டங்களான கன்னியாகுமாரி, ஈரோடு ஆகியன குறைவான வருவாய் ஈட்டும் மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூரைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக வருவாய் ஈட்டுகின்றன. திருவள்ளூர், விழுப்புரம், தேனி, திருவண்ணாமலை ஆகியவற்றின் தனிநபர் வருமானம் அதிக வருவாய் மாவட்டங்களைப் பார்க்கையில் பாதிதான் இருக்கின்றன. இந்த வருவாய் குறைவான வறுமை மாவட்டங்களில்தான் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் அதிகம் காணப்படுகின்றனர். தமிழ்நாடு கல்வியில் முன்னேறி இருந்தாலும் உயர்கல்வியில் 50 சதத்திற்கு கீழ்தான் இருக்கிறது. தொழிற்கல்விக்கு செலவிடப்படுவது குறைவாகவே பார்க்கப்படுகிறது. கல்விக்காக அரசாங்கம் செய்யக்கூடிய செலவினங்கள் எந்த வகையான பலன்களை கொடுத்துவருகின்றன என்பதில் மதிப்பீடுகள் செய்யப்படாமையும் உள்ளதை தமிழ்நாடு அரசாங்கம் ஏற்றுள்ளது. கழிவறை வடிகால் வசதியுடன் கூடிய வீடுகள் 55 சதத்திற்கு கீழேயே இருக்கின்றன. மருத்துவ வசதி பெறுவதில் மாவட்டங்கள் மத்தியில் சமனற்ற நிலை இருப்பதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. மாநிலத்தில் பரவலாக மனித வளம் அனைத்து தேவையான பணிகளுக்கும் போதுமான அளவில் இல்லை என்பதே தெரிய வருகிறது. சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, விழுப்புரம், அரியலூர், தர்மபுரி மாவட்டங்களில் பெண்கள் எழுத்தறிவு விகிதாச்சாரம் தேசிய சராசரியைவிடக் குறைவாக இருப்பது நிதர்சன உண்மையாக இருக்கிறது. வங்கி வசதிகளைப் பெற்ற பெண்கள் எண்ணிக்கையும் இந்திய சராசரி 53 % விட 13 சதம் தமிழகத்தில் குறைவாக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி ஏற்றத்தாழ்வான மாநில வளர்ச்சிகளை கொண்டதாகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் மாவட்டங்கள் ஒரே சீரான வளர்ச்சியைப் பெற்றிருக்கவில்லை என்பதை பார்க்கமுடிகிறது. மாவட்டத்தை எடுத்தாலும் அங்குள்ள தாலூகாக்களில் சீரற்ற வளர்ச்சி இருப்பதை உணரமுடியும். தமிழகத்தின் வளர்ச்சி என்பதை இப்படிப்பட்ட பல்வேறு கூறுகளையும் கொண்டதாகவே மதிப்பிடவேண்டியுள்ளது. உதவிய நூல்கள்: - பெரியாரின் பொதுவுடைமை கருத்துக்கள்- தி க வெளியீடு 3 வால்யூம்கள் - பெரியார் ஈ வெ ரா சிந்தனைகள் வே ஆனைமுத்து பதிப்பாசிரியர் - சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம் - ஜீவானந்தம் ஆக்கங்கள் திரட்டு - தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்- என் ராமகிருஷ்ணன் - ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் 2 - பெரியார் சுயமரியாதை சமதர்மம் எஸ் வி ராஜதுரை- கீதா - பெரியார் ஆகஸ்ட் 15 எஸ் வி ராஜதுரை - விடுதலைப்போரும் திராவிட இயக்கமும் – பி ராமமூர்த்தி - பெரியாரியம் நிறப்பிரிகை கட்டுரைகள் - தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் அதன் பாரம்பரியமும்- சட்டநாதன் - Tamil Renaissance and Diravidian Nationalism - K Nambi Arooran ஆசிரியரின் பிற நூல்கள் 1. மார்க்சியத் தடங்கள் 2. ரோசாலக்ஸம்பர்க் 3. போராளிகளின் குரல் 4. பகவத்கீதை பன்முகக் குரல்கள் 5. Trade Justice in Telecom 6. Selected Ideas of O.P Gupta 7. ஹெகல் துவங்கி.. 8. கார்க்கியின் அரசியல்வெளி 9. நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் 10. காந்தியைக் கண்டுணர்தல் 11. நேருவின் மரபு சிறு வெளியீடுகள் 1. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா 2. சிகாகோ மேதின தியாகிகள் 3. பகுனின் போராட்ட வாழ்வும் அனார்க்கிசமும் 4. விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் 5. பிரடரிக் எங்கெல்ஸ் நட்பின் சிகரம் 6. நேதாஜி சுபாஷ் – கம்யூனிஸ்ட்கள் உறவும் உரசலும் www.pattabiwrites.in FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.