[] [பெண்களோ பெண்கள்!] பெண்களோ பெண்கள்! பெண்களோ பெண்கள்! நிர்மலா ராகவன், மலேசியா மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப் படுகிறது. இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது. This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - பெண்களோ பெண்கள்! - முன்னுரை - 1. வந்ததே முடிவு பிரம்மச்சரியத்துக்கு - 2. கைப்பிடித்தார் மாப்பிள்ளை - 3. கைப்பிடித்தலும், காலைப் பிடித்துவிடுதலும் - 4. கடற்கரையில் காதலர்கள் - 5. மோதல் - 6. பழைய நினைவுகள் - 7. காற்றுவாங்கப் போனான் - 8. இனிப்பும் காரமும் - 9. பழைய நினைவுகள் - 10. வேறொரு பெண்ணைப் புகழாதே - 11. மானசீக நாயகர் - 12. கல்யாண நாள் - 13. திரும்பத் திரும்ப - 14. ஊர் வாய் - 15. இதுதான் உலகம் - 16. பொய்க்கோபம் நிஜமாகியது - 17. போன மச்சி திரும்பி வந்தாள் - 18. நண்பனின் உபதேசம் - 19. ஆண்களே மோசம் - 20. ரகசியச் சந்திப்பு - 21. விருந்துக்கு வந்த மாப்பிள்ளை - 22. வைத்தியின் உபசாரம் - 23. காதலர் பூங்கா - 24. நினைத்தது ஒன்று, சொன்னது ஒன்று - 25. படத்துக்குப் போகலாம் - 26. இளைத்த தொந்தி - 27. விருந்து - 28. வாடிய செடிகள் - 29. ரகசியத் திட்டங்கள் - 30. பிறந்த நாள் கேக் - 31. கணவரின் கரிசனம் - 32. பிறந்தநாள் விழா - 33. பொய் சொல்லிப் பழகு - 34. வைத்தியமும் பைத்தியமும் - 35. வயதைக் குறைக்க - 36. இளமை வைத்தியம் - 37. சின்ன வீடு - 38. மாமியார் பக்கம் பேசு - 39. விருந்துபசாரம் - 40. சொந்த வீடே சொர்க்கலோகம் - 41. நாடுகளும், கணவன்மார்களும் - 42. மீண்டும் பிரிவு - 43. அரிசிக் கோபமும் ஆம்படையான் கோபமும் - 44. ரவியின் திட்டம் - 45. முரட்டு வைத்தியம் - 46. பால்யப் பழக்கம் - 47. இன்னொரு கல்யாணம் - 48. அவள் முடிவு - 49. கழுதையின் கால் - 50. பாட்டியும், பார்ட்டியும் - 51. பெரிய விசேஷம் - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 பெண்களோ பெண்கள்! [pengalopengal] கதை உருவாக்கம்: நிர்மலா ராகவன், மலேசியா மின்னஞ்சல்: nirurag@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். 2 முன்னுரை `உங்களுடையது மட்டும் ஒரே ஹாஸ்யம்!’ என்று ஒரு நீதிபதி பல மாதங்கள் கழித்து என்னிடம் தெரிவித்தார். கதை பிறந்த கதை: `பரீட்சைக்குப் படித்துப் படித்து போரடிக்கிறது. வேடிக்கையா ஒரு கதை சொல்லும்மா!’ என்று என் மகள் கேட்க. கதையின் நாயகன், நாயகி இருவருமே சிறுபிள்ளைத்தனம் மாறாது இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்து, உடனே முதல் அத்தியாயத்தைச் சொன்னேன். ஒவ்வொரு ராத்திரியும் ஒரு அத்தியாயம் எழுதி, மறுநாள் காலை உணவுடன் அதைச் சொல்வது என்று வழக்கமாயிற்று. கதையை நகர்த்த, வயோதிகர்களின் மன உளைச்சல்களுக்கான காரணங்களை அறிய, உளவியல் புத்தகங்களைத் தேடிப் படித்தேன். என்னைப்போல் சிரிக்கப் பிடித்தவர்களுக்கு இந்நாவலை அர்ப்பணிக்கின்றேன். வணக்கம்.   நிர்மலா ராகவன், மலேசியா [pressbooks.com] 1 வந்ததே முடிவு பிரம்மச்சரியத்துக்கு வைத்தியின் கல்யாணம் நடந்ததே ஒரு விபத்தால். இல்லையென்றால், பெண் பார்க்க அவனது ஒரே உறவினளான பாட்டி ஏற்பாடு செய்திருந்த அன்று பார்த்து அவனுக்குக் கண்வலி வருவானேன், பார்வையும் மங்கலாகிப் போவானேன்! விழியை அகற்றிப் பார்த்தபோது, நிழலாகத்தான் தெரிந்தது எதிரில் அமர்ந்திருந்த இளம்பெண்ணின் உருவம். சந்தியா காலமாக இருந்ததால், எரிந்துகொண்டிருந்த இரு மின்சார விளக்குகள்கூட பிரயோசனப்படவில்லை. தனக்குப் பெண்டாட்டியாக வாய்க்கப்போகிறவளை பேரன் நன்றாகப் பார்த்துக்கொள்ள வாய்ப்பளிப்பதற்கென்று, “ஒரு பாட்டு பாடும்மா!”என்று கேட்டுக்கொண்டாள் பாட்டி. அவளுக்குக் காது டமாரச் செவிடு என்பது வேறு விஷயம். பட்டிக்காட்டுப் பெண்ணாக உருமாற்றப்பட்டிருந்த பெண்ணும், `எந்தப் பாட்டைப் பாடறது?’ என்று அம்மாவைக் கண்ணாலேயே கேட்டாள். “சாமி பாட்டு பாடு, ரஞ்சி!” என்றாள் பாக்கியம், கனிவுடன். அவளும் ஆரம்பித்தாள்: “ஐயா சாமி, ஆவோஜி சாமி! ஐயா சாமி, ஆவோஜி சாமி! ஐயா…” ரஞ்சிதத்தைச் சொல்லிக் குற்றமில்லை. அவள் வளர்ந்திருந்த விதம் அப்படி. ஒரே மகள். வீட்டின் செல்லப்பெண். எதற்காக கஷ்டப்பட்டுப் படிக்கவேண்டும், எப்படியும் ஒரு நாள் கல்யாணம் பண்ணிக்கொண்டு, கணவனுக்குச் சமைத்துப் போடத்தானே போகிறோம் என்ற ஞானம் பதின்மூன்று வயதிலேயே வந்திருந்ததால், படிப்பில் நாட்டம் போகவில்லை. மாறாக, அவளுடைய கவனம் முழுவதும் தமிழ்ப்படங்களில் லயித்தது. தாயும் மகளும் பழைய, புதிய படம் ஒன்று விடாமல் வீடியோவில் பார்த்தார்கள். பொழுதுபோக்காகவும் இருந்தது, கோயிலில், தெருவில் இன்னும் பார்க்கும் இடங்களில் எல்லாம் சந்திக்கும் தோழிகளுடன் அலசுவதற்கு சுவாரசியமான சமாசாரம் கிடைத்தது போலவும் ஆயிற்று. அவள் பிறக்குமுன்பே வெளியாகியிருந்த படங்களில் ஒலித்த பாடல்கள், நடிக நடிகையரில் யார் யாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்கள் போன்ற அதிமுக்கியமான சமாசாரங்கள் எல்லாமே ரஞ்சிதத்திற்கு அத்துப்படி. நல்லவேளையாக, அவளுக்கு அந்த `ஐயா சாமி’யில் இரண்டு வரிகளுக்குமேல் நினைவிருக்கவில்லை. அதையே நாலைந்து முறை திரும்பத் திரும்பப் பாடினாள். தலையை ஆட்டாது பாட, அதிகக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. `இந்த அம்மா ஒண்ணு, இவ்வளவு நீள சவுரியை வெச்சு சடை பின்னி விட்டிருக்காங்க! அதுக்கு மேல ஒரு பந்து மல்லிகைப்பூ வேற! ஒரேயடியா கனக்குது! எங்கேயாவது விழுந்து வெச்சு, வந்திருக்கிறவங்க எதிரே மானத்தை வாங்கிடப்போகுது!’ என்று மனதுக்குள் கவலைப்பட்டாள். எதிரே இருந்த நாற்காலியில் விறைப்பாக உட்கார்ந்திருந்த மாப்பிள்ளைப் பையனைப் பார்க்க தலையை நிமிர்த்தினாள். தனக்கு வாழ்வு கொடுக்க வந்திருக்கிறாரே! முக அழகைக் குறைத்துவிடும் என்று ஞாபகமாக, மூக்குக்கண்ணாடியைக் கழற்றி வைத்திருந்ததால், அவளுக்கும் லேசாகத்தான் தெரிந்தது. ஆனால் அவன் பார்வை தன்மேல் பதிந்திருந்தது என்றவரையில் புரிந்தது. ஒரே சமயத்தில் ரஞ்சிதத்திற்குக் கோபமும், வெட்கமும் எழுந்தன. `சீ! என்ன இப்படி நம்மையே முறைத்து முறைத்துப் பார்க்கிறார்!’ மாப்பிள்ளையைச் சரியாகப் பார்க்க முடியவில்லையே என்ற நிராசையில் எழுந்த கோபம், தன்னைக் கண்டதுமே காதல் கொண்டுவிட்டார் போலிருக்கிறதே என்ற வெட்கம் கலந்த ஆனந்தம். தனக்குப் பிடித்து என்ன ஆகவேண்டும், அவருக்குத் தன்னைப் பிடித்தால் சரி என்று, திரைப்படங்களில் பார்த்த தமிழ்ப்பெண்ணாய் லட்சணமாய் எண்ணமிட்டவள், பின்பாரம் தாங்காது தலையைக் குனிந்துகொண்டாள். “பொண்ணு ரொம்ப அடக்கம்!” என்று பாட்டி மெச்சினாள். “நல்லாவும் பாடறா! ஏண்டா, வைத்திநாதா! பிடிச்சிருக்கில்ல?” என்றுவிட்டு, “ஒன்னை என்ன கேக்கறது! அதான் ஒன் முழியே சொல்லுதே!” என்று தானே அந்த விஷயத்துக்கு ஒரு முடிவும் கட்டினாள். வைத்தி அசடுவழியச் சிரித்தான். அப்போதே மாப்பிள்ளைகளை வந்துவிட்டது போலிருந்தது. மாப்பிள்ளையின் தலை மறைந்ததுமே பெண் வீட்டுக்காரர்கள் அனைவரும் ஒரே குரலில் பேச ஆரம்பித்தார்கள். எல்லாரையும் மீறிக்கொண்டு எழுந்தது பெண்ணுக்குத் தாயான பாக்கியத்தின் குரல்: “பையனைப் பாத்தா சாதுவா இருக்கார். நம்ப பொண்ணை அடிச்சு கிடிச்சுச் செய்யாம, அருமையா வெச்சுப்பாருன்னுதான் தோணுது!” “வைத்தியை எனக்கு பள்ளிக்கூட நாளிலேயே தெரியும். தன்னைக் கடிக்கிற கொசுவைக்கூட அடிக்க அவனுக்குத் தைரியம் கிடையாது!” பெண்ணின் அண்ணன் ரவியும் ஒத்துப் பாடினான். சற்று யோசித்து, “ஆனா என்ன! ரொம்ப கருமி!” என்றான். “நல்லதுதான். வீண் செலவு செய்ய மாட்டார்!” தந்தை மணி, தன் பங்குக்கு, “பையன் கொஞ்சம் எலும்பா இருக்காரில்ல?” என்று கேட்டுவைத்தார். மாப்பிள்ளைப் பையனை அவருக்கும் பிடித்துப் போயிருந்தது. ஆனால், ஏட்டிக்குப் போட்டியாக நடக்கும் மனைவியின் குணத்தை அறியாதவரா, அவர்! தன்னை மீறி ஒருவர் பேசுவதா! பாக்கியத்திற்கு அசாத்தியக் கோபம் எழுந்தது. “கல்யாணத்தின்போது நீங்க எப்படி இருந்தீங்களாம்?” வருங்கால மருமகனுக்குப் பரிந்தாள். “நாளைக்கே, கல்யாணமானதும், நம்ப ரஞ்சி சமைச்சுப்போட்டா, அவர் ஒடம்பு தானே தேறிடாதா!” “ரஞ்சியோட சமையல்! அதைச் சாப்பிட்டு ஒருத்தர் உடம்பு ஊதிடும்!” ரவி பெரிதாகச் சிரித்தான். “ஜோக் பண்ணாதீங்கம்மா!” அவள் சோறு சமைத்தால், ஒன்று, குழைந்து போகும், அல்லது அடிப்பிடித்து, பாத்திரத்தையே தூக்கி எறியும்படி வந்துவிடும் என்றால், மற்ற குழம்பு, கறி வகைகளைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது! “நீ சும்மா இருடா!” என்று மகனை அடக்கினாள் தாய். “செல்லமா வளர்ந்த பொண்ணு! இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப்போறதாச்சேன்னு, ஒரு வேலையும் செய்யவிடாம அருமையா வளர்த்துட்டேன். இப்ப என்ன? உள்ளூரிலேதானே இருக்கப்போறா? நான் அடிக்கடி போய் அவளையும், மாப்பிள்ளையையும் கவனிச்சுட்டுப் போறேன்!” `பாவம் வைத்தி!’ கண்களை உருட்டியபடி அங்கிருந்து நகர்ந்தான் ரவி. “தாய், தகப்பன் இல்லாதவர், பாவம்! நம்பகிட்ட அருமையா இருப்பார். ரஞ்சிக்கும் மாமியார், நாத்தனார் பிடுங்கல் எதுவும் இருக்காது!” என்று சந்தோஷப்பட்டுக்கொண்ட பாக்கியம், “என்னங்க! இந்த வரனையே முடிச்சுடுங்க!” என்று அந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டினாள். இப்படித்தான் வைத்தியின் பிரம்மச்சரியத்துக்கு ஒரு முடிவு வந்தது. 2 கைப்பிடித்தார் மாப்பிள்ளை கோலாலம்பூர் செந்துல் பகுதியில், ஸ்ரீ சோனி ஜெயா என்ற பகுதிக்குப் போனால், பிரதான சாலையிலிருந்து தள்ளிக் கட்டப்பட்டிருந்த அந்த இரண்டடுக்கு வீடு தெரியும். தெருவின் இரு புறங்களிலும் `செமாராக்’ மரங்கள் தம் நீண்ட கிளைகளைப் பரப்பி நிழல் அளித்துக் கொண்டிருந்தாலும், ஒன்றோடு ஒன்று ஒட்டியதாய், இடைவெளியே இல்லாது அவ்வீடுகளைக் கட்டியிருந்தான் கண்ட்ராக்டர் — அவனுடைய லாபத்தைப் பெருக்க. ஆனால், வீடுகளுக்குள் வெளிச்சமோ, காற்றோ, ஊகும். பேசக்கூடாது. ஒவ்வொரு தளத்திலும் நான்கு குடித்தனங்கள். அதில், கீழ்த்தளத்தில் இருந்த இரண்டு அறைகள் கொண்ட வீடு ஒன்றில் நம் புதுமணத் தம்பதிகள் வைத்தியும், ரஞ்சிதமும். காலை ஏழு மணிக்கு, கலைந்த தலையும், நைட்டியுமாக கணவனை வழியனுப்ப வாசலுக்கு வந்தாள் ரஞ்சிதம். எல்லாக் குடித்தனக்காரர்களும் அதே தோற்றத்தில்தான் இருந்தார்கள் — பகலிலும்கூட. அதனால் அநியாயமாக வெட்கப்பட வேண்டியிருக்கவில்லை. “எப்ப திரும்பி வருவீங்க?” ஸ்கூட்டரில் ஆரோகணித்து, அலுவலகத்துக்குப் புறப்படத் தயாராக இருந்த கணவனைக் கேட்டாள், தலையைச் சாய்த்தபடி. “இதென்ன கேள்வி, தினமும்? வேலைக்குப் போறவன், அதை முடிச்சுட்டுத்தான் வரமுடியும்!” மணமாகி ஓரிரு மாதங்களிலேயே தன் சுதந்திரத்தைத் தொலைத்துவிட்டோமே என்ற எரிச்சலுடன் பதிலளித்தான் வைத்தி. ரஞ்சிதம் சிணுங்கினாள். “உக்கும்! வேலை முடிஞ்ச ஒடனே வந்துடறமாதிரிதான்! நீங்கபாட்டில ஊரைச் சுத்திட்டு, ராத்திரி லேட்டா..,” அவள் முடிப்பதற்குள் அவன் குறுக்கிட்டான், விஷமப் புன்னகையோடு: “அப்பதானே நம்ப வேலை!” அவன் கூறியதன் உள்ளர்த்தம் என்னவென்று சாயந்திரம்வரை மண்டையை உடைத்துக்கொண்டிருந்தாள் ரஞ்சி. அர்த்தம் புரிந்ததும், `சீ!’ என்று சொல்லிக்கொண்டாள். குதூகலம் ஏற்பட்டது. வாயிற்கதவு பலமாகத் தட்டப்படும் சப்தம் கேட்டது. `அப்பப்பா! இந்த ஆம்பிளைங்களுக்கே எதிலேயும் அவசரம்தான்!” தன்னையும் ஒருவர் நாடுகிறாரே என்ற பெருமிதத்துடன் ஒயிலாக நடந்துபோய் திறந்தவள் லேசாக அதிர்ந்தாள். “அம்மா!” “ஒரே ஊரில நானும் நீயும் இருக்கிறது ரொம்ப சௌகரியம். இல்ல ரஞ்சி?” என்றபடி, “இந்தா!” என்று ரம்புத்தான் பழங்கள் நிறைந்த ஒரு பிளாஸ்டிக் பையை அவளிடம் நீட்டினாள். இரட்டை நாடியான சரீரம் ஆனதால், மாடி ஏறாமலேயே பாக்கியத்துக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. ரஞ்சிதத்திற்குப் பேசவே நாவெழவில்லை. அம்மா வந்திருப்பது தெரியாமல், இந்த மனிதர் எப்போதும்போல் பத்து மணிக்குமேல் வீடு வந்து சேரப்போகிறாரே என்ற பதட்டம் அவளிடம் குடிகொண்டது. சாதாரணமாகவே, எல்லாரையும் குறைத்து மதிப்பிடும் அம்மா. அதிலும், இந்த எலும்பு மனிதர் தனது அருமை மகளைத் தன்னிடமிருந்து பிரித்துவிட்டாரே என்று, கல்யாணமான முதல் வாரத்திலேயே ஆத்திரப்பட்டவள்! அவளுடைய நல்லெண்ணத்தைச் சம்பாதிக்க, அவள் எதிர்பார்ப்புக்கு மேலாகவே இருக்கவேண்டாமோ இவர்? “என்ன ரஞ்சி? பேச்சையே காணோம்? மாப்பிள்ளை.. ஒங்கிட்ட.. அன்பா இருக்காரில்ல? கோபதாபம் எதுவும் இல்லையே?” தன் நினைவுகளிலேயே அமிழ்ந்திருந்த ரஞ்சி, எதுவும் புரியாது தாயின் முகத்தையே பார்த்தபடி நின்றாள். “என்னடி! நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீ என் மூஞ்சியையே பாத்திட்டு நிக்கறே?” என்று செல்லமாக ஓர் அதட்டல் போட்டாள் பாக்கியம். அந்தக் கேள்வியைச் சமீபத்தில் எங்கோ கேட்டமாதிரி இருந்தது.   `ஏன் ரஞ்சி? நான் எப்பவும் ஒன் பக்கத்திலேயே இருக்கணும்கிறியே! என் மூஞ்சியைப் பாத்து ஒனக்கு அலுக்கலே?’ காலையில் வைத்தி கேட்டது. அவன் என்ன செய்வான், பாவம்! திருமணத்துக்குமுன் ஒரே அறையில் சிக்கனமாகத் தங்கியிருந்த தனக்கு இப்போது செலவுகள் பெருகிவிட்டனவே என்று அவன் கவலைப்படாத நேரமே கிடையாது. இது புரியாது, மனைவி வேறு புதிது புதிதாக ஏதாவது கேட்டுவிடப்போகிறாளே என்று பயந்தே வீட்டில் இருப்பதைத் தவிர்ப்பதை அவளிடம் சொல்லவா முடியும்! அதற்கு, `இவரு பெரிய மன்மதன்! ஒங்க மூஞ்சியைப் பாக்கணும்னா கேக்கறேன்! வீட்டிலேயே இருந்தா, போரிங்! சாயந்திரம்.. ரெண்டுபேரும்.. ஜாலியா எங்கேயாவது..,’ என்று மயக்கும் பார்வையுடன் அவனைப் பார்த்தாள் ரஞ்சி. கணவனைத் தன்பால் ஈர்க்க இவ்வளவு பிரயாசை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே என்ற ஆயாசம் பிறந்தது. புதிதாக அறிமுகமாகி, காதல் வயப்படும் ஆணும், பெண்ணும் அடுத்து என்ன செய்வார்கள் என்று இவருக்கு ஏன் தெரியவில்லை? தமிழ்ப்படங்களே பார்த்திருக்க மாட்டாரோ? அட, மரங்களைச் சுற்றி ஓடாவிட்டாலோ, அல்லது, இதற்கென்றே கடல் கடந்துபோய், வெள்ளைக்காரன்கள் வெறித்து வெறித்துப் பார்த்து, தலையை ஆட்டி நமட்டுச் சிரிப்பு சிரிக்கும் அளவுக்கு தெருக்களில் ஓடியாடாவிட்டால் போகிறது. குறைந்தபட்சம், கைகோர்த்துக் கொண்டாவது எங்கேயாவது போகலாமில்லையா? இதையெல்லாம் வாய்விட்டா சொல்வாள் ஒருத்தி? அவளுடைய அந்தரங்கம் புரியாது, வள்ளென்று விழுந்தான் வைத்தி. `தினம் தினம் வெளியே போக, இங்கே என்ன காசு கொட்டியா கிடக்கு?’   அது காலையில். இப்போது, “அடீ! என்ன ஆயிடுச்சு ஒனக்கு?” என்று தாய் படபடக்க, சட்டெனச் சமாளித்துக்கொண்ட ரஞ்சிதம், அவசர அவசரமாகப் பதிலளித்தாள். “என்னம்மா? அவர்தானே? அதை ஏன் கேக்கறீங்க? எம்மேல ஒரே உசிரு! இன்னிக்குக் காலையில பாருங்க, `ஏதோ ஒரு புதுப்படம் வெளியாகி இருக்காமே!’ன்னு கேட்டேன் — பேச்சுவாக்கிலம்மா. கொஞ்ச நேரத்துக்கு முந்தி ஃபோன் பண்றாரு, `சினிமாவுக்கு ரெண்டு டிக்கட் எடுத்துட்டேன், டார்லிங். ரெடியா இருன்னு!’ நான் சொல்றதுதான் அவருக்கு வேதவாக்கு!” எவ்வளவு கோர்வையாகப் பொய் சொல்கிறோம் என்று சற்று பெருமையாகக்கூட இருந்தது அவளுக்கு. வாய் ஓயாது பேசும் பெண் இப்போது தன்னைக் கண்டதும் மகிழாது, ஏனோதானோ என்றல்லவா இருக்கிறாள்! புருஷன்காரன் வந்ததும், பெற்றவள், தான், வேண்டாதவளாகப் போய்விட்டோமே! பாக்கியத்தின் முகம் வாடிப்போயிற்று. “சரி. ஒன்னைப் பாக்கத்தான் வந்தேன். பாத்தாச்சு. புறப்படறேன்..,” என்று இழுத்தாள். ஆனால், இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. அம்மா தன்னை நம்பிவிட்ட மகிழ்ச்சி தாங்காது, “ஊகும்! நீங்களும் எங்களோட படத்துக்கு வர்றீங்க!” என்று கொஞ்சினாள் ரஞ்சி. `படம்’ என்ற அந்த மந்திர வார்த்தை காதில் விழுந்தவுடனேயே பாக்கியம் புத்துயிர் பெற்றாள். இருந்தாலும், தன் பிகுவை விட்டுக் கொடுக்கத் தயாரில்லாது, “நான் ஒருத்தி எதுக்குடி, சின்னஞ்சிறுசுங்க மத்தியிலே கட்டெறும்பாட்டம்!” என்றாள். அவள் எதிர்பார்த்தபடியே, மகள் பாய்ந்து அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். “உங்களை விடமாட்டேன். வாங்…கம்மா!” “சரி. சரி. புறப்படற வழியைப் பாரு!” என்ற தாயின் குரலில் பெருமிதம்! தான் நினைத்ததுபோலவே மாப்பிள்ளை இருக்கிறார்; மகளும் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை, எல்லாவற்றிற்கும் தன்னை எதிர்பார்த்த அதே குழந்தையாகத்தான் இன்னும் இருக்கிறாள் என்று. ரஞ்சியைத் தொடர்ந்து அவளுடைய அறைக்குப் போனவள், உரிமையுடன், அவளுடைய மர அலமாரியில் அடுக்கி வைக்கப்படிருந்த எல்லாப் புடவைகளையும் கலைத்துத் துழாவ ஆரம்பித்தாள். “நீ எது உடுத்தினாலும் நல்லாத்தான் இருக்கும். இருந்தாலும், புதுசா கல்யாணமானவ! பாக்க பளிச்சுனு இருந்தாத்தானே வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர ஆம்பளைக்கு..!” என்று கண்ணைச் சிமிட்டினாள். ரஞ்சிதம் வெட்கினாள். கற்பனை விரிந்தது: அவள் அழகுப் பதுமையாக நிற்கிறாள். அதைப் பார்த்த கணவன் மயக்கம் போடாத குறை. அப்படியே அலக்காக அவளைத் தூக்கி…! மிகுந்த கவனத்துடன், மணிக்கணக்காக அலங்காரம் செய்துகொண்டாள். “ஏண்டி கண்ணு? எத்தனை மணி ஆட்டம்னு சொன்னே?” என்று நொடிக்கொரு தடவை கேட்டபடி இருந்தாள் பாக்கியம். “ராத்திரிக்கு ஏதாவது சமைச்சு வைச்சிருக்கியா?” அழுகையும் முணுமுணுப்புமாக, “ஒரு நாள் பட்டினி கிடந்தா, ஒண்ணும் கெட்டுப் போயிடாது!” என்றவளைப் பார்த்து, தாய் லேசான சிரிப்புடன் தலையை ஆட்டிக்கொண்டாள். `யாரைப் பட்டினி போடணுங்கிறா?’ ஒன்பது மணிக்குமேல் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. தன் சாயம் வெளுத்துவிட்டதே என்ற ஆத்திரத்துடன், சர்வாலங்கார பூஷிதையாக இருந்த ரஞ்சிதம், கட்டியிருந்த புடவை, முத்து மாலை, வளை என்று ஒவ்வொன்றாகக் கழற்றி படுக்கைமேல் எறிந்தாள். கணவன்மேல் இருக்கும் கோபத்தை வெளிக்காட்ட கைகேயி அப்படித்தானே செய்திருந்தாள்? விளக்கை அணைத்துவிட்டு, உள்பாவாடையுடன் ஓடோடிப்போய் படுக்கையில் விழுந்தாள். நடந்தது எதையும் அறியாத வைத்தி, “அதுக்குள்ளேயா தூங்கிட்டே?” என்று சாவதானமாகக் கேட்டபடி, விளக்கைப் போட்டான். சண்டைக்குத் தயாராக எழுந்து, முழங்கால்களைக் கட்டியபடி உட்கார்ந்தாள் ரஞ்சி. “ஒங்களால எனக்கு இன்னிக்கு ஒரே அவமானம்!” “ம்?” வைத்தியின் முட்டை விழிகள் மேலும் விரிந்தன. குரலைத் தழைத்துக்கொண்டு, “அம்மா வந்திருக்காங்க. அவங்க வர சமயத்திலேயாவது நீங்க நேரத்தோட வீட்டுக்கு..,” என்று அவள் சொல்லிக்கொண்டேபோக, “அவங்க வரப்போறாங்கன்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்?” என்றான் அலட்சியமாக. “ஒங்கம்மா கெடக்கிறாங்க! பசி வயத்தைக் கிள்ளுது. இன்னிக்கும் ரவா உப்புமா இல்லியே?” என்றபடி, சாப்பாட்டு மேசை அருகே சென்றான். “அம்மா.. கெடக்கட்டுமா? அப்போ அவங்க செஞ்ச சாப்பாடு மட்டும் வேணுமோ?”என்ற மனைவியின் குரல் ஆக்ரோஷமாக ஒலிக்க, ரோஷத்துடன் மீண்டும் அறைக்குள் வந்து, தலையணையை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான். “சாப்பிடலே?” ரஞ்சியின் குரல் தாழ்ந்து ஒலித்தது. அவன் பதில் கூறாது வெளிநடப்பு செய்தது ஆத்திரப்படுத்த, கட்டிலை ஓங்கி ஒரு உதைவிட்டாள். மலிவாக இருக்கிறதே என்ற ஒரே காரணத்துக்காக வைத்தி தவணை முறையில் வாங்கியிருந்த கட்டில் அது. சரியாகப் பொருத்தப்படாமல் இருந்த அதன் நடுப்பகுதி பெரும் சப்தத்துடன் கீழே விழுந்தது. பக்கத்து அறையில் படுத்திருந்த பாக்கியம் திடுக்கிட்டு உட்கார்ந்தாள். `என்னதான் பண்றாங்க?’ முகத்தில் வெட்கம் கலந்த சிரிப்பு. கற்பனை செய்ய முயன்றதில் தூக்கம் அறவே கலைந்துபோக, `டி.வியாவது பார்க்கலாம்,’ என்று ஹாலுக்கு வந்தாள். அரைகுறை வெளிச்சத்தில் சோபாவில் வைத்தி படுத்திருப்பது தெரியாது, அதன்மேல் அமரப்போனாள். “எனக்குத் தெரியும், நீ என்னைத் தனியா விடமாட்டேன்னு!” என்ற மென்மையான குரலுடன் யாரோ அவள் கையைப் பிடித்திழுக்க, வீலென்று அலறினாள் அந்த மாமியார். 3 கைப்பிடித்தலும், காலைப் பிடித்துவிடுதலும் “என்ன பாக்கியம்? பெண்ணைப் பாக்கப் போனவ, ராத்திரி அங்கேயே தங்கிட்டே? மாப்பிள்ளை பலம்..மா உபசாரம் பண்ணினாரா?”என்றபடி மனைவியை வரவேற்றார் மணி. “அதை ஏன் கேக்கறீங்க! என் கையைப் பிடிச்சுக்கிட்டு, வி..ட மாட்டேன்னுட்டாரு!” என்று, பெருமையுடன் தலையை நிமிர்த்தியபடி, பாதி உண்மையை மட்டும் அவள் கூற, மணி பதறிப்போனார். “கையைப் பிடிச்சாரா? ம்! நான் ஒங்கிட்ட வந்தா மட்டும் விரட்டுவே!” என்றார் குறையுடன். சற்றே துணிந்து, அவளுடைய கழுத்து என்று தோன்றிய சதைப்பற்றான பகுதியில் விரல்களால் விளையாடப்போனார். துள்ளி நகர்ந்தாள் பாக்கியம். “கஷ்டம்! யாராவது பாக்கப்போறாங்க!” மணியின் கண்களில் எதையோ புரிந்துகொண்ட பிரகாசம். “அப்போ.., யாராவது பாக்காட்டி சரிதானா?” என்று உடனே பாயிண்டைப் பிடித்தவர், “ஐடியா! அந்தக் காலத்திலேதான் நாம்ப ஹனிமூன் போக முடியலே. இப்ப போலாமா?” அந்த எண்ணத்திலேயே இளமை திரும்பிவிட்டதுபோல் இருந்தது. “நாம்ப ரெண்டு பேருமா..?” தயங்கினாள் பாக்கியம். “பின்னே? தனியாவா ஹனிமூன் போவாங்க?” “இந்த வயசிலேயா?” என்று அதிர்ந்தவள், முகத்தைத் திருப்பியபடி, “இந்தக் கெழவருக்கு..,” என்ன்று ஏதோ முணுமுணுக்க, “கெழவனா! யாரைப் பாத்துச் சொல்றே அப்படி? போயிட்டு வந்தப்புறம் பேசு!” என்று வீரம் பேசினார் மணி. பாக்கியத்துக்கும் சபலம் ஏற்பட்டது. “செலவு..?” என்று இழுத்தாள். “ஆங்!” என்று கையை வீசினார் அந்த முக்கால் கிழவர். “இப்ப செலவழிக்காம, எண்பது வயசிலேயா செலவழிக்கப்போறோம்? அப்ப வெளியூர் போனா.., கண்ணு சரியாத் தெரியாம நான் ஒன் கையைப் பிடிக்க, முழங்கால் வலி, நடக்க முடியலேன்னு நீ என்னைப் பிடிக்க..!” “ஐயே! நாலுபேர் பாக்கறமாதிரி அப்படி எல்லாம் பிடிச்சுக்கணும்னுதானே இப்ப தனியாப் போகலாம்கிறீங்க!” என்ற ஒயிலாகக் கழுத்தை ஒடித்தாள் பாக்கியம். இருமல், தலைவலி, அஜீரண மாத்திரைகளுடன், துணிமணிகளையும் பெட்டியில் அடுக்கினாள் பாக்கியம். நிறைக் கர்ப்பிணியாக அதன் வயிறு பருத்தது. அவர்கள் இருவரும் ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் கிளம்பிப் போயிருந்தால், எவ்வளவோ பொய்களைச் சொல்லி, பாவம் தேடிக்கொள்ள வேண்டி இருந்திருக்காது. பெட்டிகளுடன் மகன் ரவி வந்து சேர்ந்தான், அசந்தர்ப்பமாக. ஏமாற்றம் தாங்காது, “எங்கடா வந்தே, திடீருன்னு?” என்று மகனை வரவேற்றார் தந்தை. பேச்சுக்குரல் கேட்டதும், “யாருங்க?” என்றபடி உள்ளேயிருந்து வந்த பாக்கியமும், ஒரேயடியாக அதிர்ந்து, “நீ எங்கேடா, இங்கே?” என்றாள் ஈனஸ்வரத்தில். `எங்களை எல்லாம் மறந்தே போயிட்டியாடா. நன்றிகெட்ட கழுதை!’ என்று எப்போதும் வரவேற்கும் பெற்றோர் மனம் மாறக் காரணம் எதுவாக இருக்கும் என்று விழித்த ரவியின் கண்களில் மூட்டை முடிச்சுகள் பட்டன. அப்பாவோ தனது செடிகளை விட்டுவிட்டு எங்கேயும் அத்தனை சுலபமாகக் கிளம்பிவிட மாட்டார் என்றவரை அவனுக்குத் தெரியும். “எங்கேயாவது போறீங்களாம்மா?” என்று பாக்கியத்தைப் பார்த்துக் கேட்டான். அவளுக்குக் கூச்சம் பிடுங்கித் தின்றது. “ஏங்க! கேக்கறான் இல்ல?” உளறலாக ஏதோ சொல்லி மழுப்பிவிட்டு, “அத்தைக்கு ஒடம்புக்கு முடியலியாம். ஆமா. அத்தைக்கு!” என்று அழுத்திச் சொன்னவர், “அதான் புறப்பட்டேன்,” என்றபடி பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டார். அது சரியாக மூடப்பட்டிருக்கவில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. புடவைகள் சிதறின. அலமலங்க விழித்தார். பாக்கியம் கணவருக்கு உதவியாக வந்தாள். “என்ன இருந்தாலும் நாத்தனார்! அதான், `நானும் வரேங்க’ன்னு புறப்பட்டேன். நாளைக்கு ஏதாவது எசகுபிசகா ஆனா, குத்தமா பேசமாட்டாங்க?” ரவிக்குச் சிரிப்பு வந்தது. அடக்கியபடி, “எந்த அத்தைக்கும்மா?” என்று விசாரித்தான், அப்பாவிக் களையோடு. “என்னடா கேக்கறே? இருக்கிறது ஈப்போ அத்தை மட்டும்தானே?” `நான் அங்கேயிருந்துதானே வரேன்!’ என்று அவர்களது குட்டை உடைக்க ரவி என்ன, விவரம் தெரியாதவனா? “நான் வேணுமானா, காரிலே கொண்டுவிடட்டுமா?” என்றான் அதீதப் பரிவுடன். அவர்களது பலத்த மறுப்பை ரசித்தான். 4 கடற்கரையில் காதலர்கள் தீபகற்ப மலேசியாவில், கோலாலம்பூரின் வடமேற்குப் பகுதியிலிருந்த போர்ட் டிக்சனின் கடற்கரைக் காற்றை அனுபவித்தபடி ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தனர் அந்த வயோதிகத் தம்பதியினர் — அதே கடற்கரையில் ரவியும், அவனுடைய காதலியும் கைகோர்த்தபடி எதிர் திசையிலிருந்து நடந்து வந்துகொண்டிருப்பதை உணராது! “எங்கப்பா அம்மாவைப் பாக்க ரெண்டு நாள் லீவு போட்டுட்டு நான் போனேனா! அவங்க ஜாலியா எங்கேயோ கிளம்பிட்டு இருந்தாங்க. அதுவும் நல்லதாப் போச்சு!” பேசிக்கொண்டே வந்தவனது பார்வை சற்று தூரத்தில் நிலைத்தது. திகைத்துப்போனவனாக, “அங்க…அங்க..,” என்று கையை நீட்ட, அவனுடைய தடுமாற்றத்தைப் புரிந்துகொள்ளாது, “இந்த வயசிலேயும் எவ்வளவு அந்நியோன்னியமா இருக்காங்க!” என்று பாராட்டினாள் ராதிகா. பெரியவர் தன் கையிலிருந்த சிறு கிண்ணத்திலிருந்து வேகவைத்த சோளத்தை தன் மனைவிக்கு ஊட்டப்போக, அவள் அதைத் தடுத்து, கையில் வாங்கிக்கொண்டதை சுவாரசியமாகப் பார்த்தாள். “அப்பா!” ஓசையே எழவில்லை அவனுடைய தொண்டையிலிருந்து. “நல்லதாப் போச்சு! என்னை அறிமுகப்படுத்தி வைங்க, ரவி!” கலகலத்தாள் காதலி. “வேற வினையே வேண்டாம். அவங்க ரொம்ப பழங்காலம்! காதல், கீதல் எல்லாம் அவங்க அகராதியிலேயே கிடையாது. அப்படி இருந்தா, `கெட்ட வார்த்தைகள்’ என்கிற பகுதியிலே இருக்கும். அவங்க பக்கம் திரும்பாம நடந்து போயிடலாம், வாயேன்!” அவளுடைய கையைப் பிடித்து இழுத்தான் ரவி. அந்த காதல் ஜோடியை பின்புறத்திலிருந்து பார்த்தாள் பாக்கியம். “நாம்பளும் அப்படி.. அலையோட நடக்கலாமா?” “யாரோ இளவட்டம்! நம்ப வயசிலே அதெல்லாம் முடியுமா? ராத்திரி காலைக் கொடையும்!” என்றார் மணி, அசுவாரசியமாக. “உக்கும்! இப்படி வயசை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கத்தான் என்னை இங்கே கூட்டிட்டு வந்தீங்களாக்கும்!” செல்லச் சிணுங்கல். “சரி, வா! எதுக்குக் கொறை? ராத்திரி என் காலைப் பிடிச்சுவிடத்தான் நீ இருக்கியே!” என்று கணவர் எழ, பாக்கியம் முறைக்க, “சரி. சரி. நான் ஒன் காலைப் பிடிச்சு விடுவேனாம்!” என்று சமாதானக் கொடி வீசினார். திரும்பிப் பார்த்த ரவி, “போச்சு! நம்பளைப் பாத்துட்டாங்க!” என்று ஓடாதகுறையாக நடந்தான். அந்த அரைகுறை வெளிச்சத்தில் கண் சரியாகத் தெரியாது, “ஏங்க? அந்தப் பையன்.. அசப்பிலே நம்ப ரவி மாதிரியே இல்ல?” என்று பாக்கியம் கேட்கவும், மணி சிரித்தார். “அடி மண்டு! நீ பெத்த பிள்ளையையே ஒனக்கு அடையாளம் தெரியலியா?” குழப்பத்துடன் கையை உதறினாள் பாக்கியம். “வெக்கக்கேடு! சாகக் கிடக்கிற நாத்தனார் வீட்டுக்குப் போறதாச் சொல்லிட்டு..!” “அவன்கூட யாரு, பாத்தியா?” அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை. “அவன் நம்பளைப் பாத்துட்டா, மானம் போயிடும். அதுக்குள்ளே ஓடிடலாம், வாங்க!” என்றாள் வற்புறுத்தலாக. மணியோ, “ஓடற வயசா இது? அதோட, நாம்ப எதுக்கு ஓடி ஒளியணும்? நேத்துப் பிறந்த பய, அவனுக்கெல்லாம் துணை கேக்குது! நாம்ப ஒண்ணா, சந்தோஷமா இருக்கிறதிலே என்ன தப்பு?” என்றார் உறுதியான குரலில். கணவரைப் புதிய மரியாதையுடன் பார்த்தாள் பாக்கியம். “வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்,” என்று அபஸ்வரமாகப் பாடிய மணி, கன உற்சாகமாக காலை அகட்டி வைத்தார். அப்போது பார்த்து, ஒரு பெரிய அலை வர வேண்டுமா! “ரவி!” அலறினாள் ராதிகா. “ஒங்கப்பா தண்ணியில விழுந்துட்டாரு!” “ஐயையோ! அவருக்கு நீஞ்சத் தெரியாதே!” என்று கரிசனப்பட்ட மகன், “எனக்கும்தான தெரியாது!” என்றபடி, அசையாது நின்றான். “ஆகா! அருமையான மகன்தான்! போய், ஒரு கை குடுத்து தூக்கி விடுவீங்களா..!” “ம்! ஒனகென்ன தெரியும் எங்கப்பாவோட கனம்!” என்று முணுமுணுத்தாலும், காதலியின் வார்த்தையை கல்யாணத்துக்கு முன்னரே தட்டத் துணியாது, விரைந்தான் ரவி. தந்தையைத் தூக்கிவிட்டபோது, “இங்க எங்கப்பா வந்தீங்க ரெண்டு பேரும்?” என்று புன்னகையுடன் கேட்காமல் இருக்க முடியவில்லை அவனால். “கத்துக்கடா! லேடீஸை அப்பப்ப தாஜா பண்ணி வெச்சுக்கணும்!” என்று கண்ண்டித்தார் தந்தை. அப்போது வந்த ஓர் அலை இருவரையுமே கீழே தள்ளியது. பதறியபடி அவர்கள் அருகில் ஓடிவந்த பாக்கியமும் ராதிகாவும் அப்படித்தான் அறிமுகம் ஆனார்கள். 5 மோதல் “ராதி! இன்னிக்கு நீ எங்க வீட்டுக்கு வர்றே!” விளையாட்டும் கண்டிப்புமாகப் பேசினான் ரவி. கல்யாணம் ஆகிவிட்டால், நாம் சொல்வதை இவள் கேட்பாளோ, என்னவோ, இப்போதே கட்டுப்படுத்தினால்தான் உண்டு என்ற முதிர்ச்சி அவனுக்கு வந்திருந்தது. ராதிகா தயங்கினாள். “என்னவோபோல இருக்கு, ரவி. ஒங்கப்பா அம்மா எங்க வீட்டுக்கு வர்றதுதான் முறை!” “சம்பிரதாயத்திலே அவ்வளவு நம்பிக்கை வெச்சிருக்கிறவளுக்குக் காதலா கேக்குது?” ரவி சீண்டினான். “நான் வந்து ஒன்னை முறையா..பொண்ணு பாக்க வர்றவரைக்கும் காத்திருக்கிறது!” ராதிகாவும் அந்த விளையாட்டில் பங்கு கொண்டாள். “எல்லாம் ஒங்களாலதான்! நான் பயலாஜி லாபிலே நான் வெட்டறதுக்காக வெச்சிருந்த தவளைதான் எனக்குப் பராக்கு காட்டிட்டு ஓடிப்போச்சு. அதுக்குத்தான் பயம். நீங்க ஏன்..?” “இந்த மாதிரி ஏதாவது சான்ஸ் வரும்னுதானே நான் அந்தப் பாடமே எடுத்துக்கிட்டேன்! ஒன்னோட தவளையைப் பிடிக்க அங்கே இங்கே ஓடி, கடைசியிலே ஒன் மனசிலேயும் இல்லே இடம் பிடிச்சுட்டேன்!” இருவரும் ஒருவர் கண்ணுக்குள் ஒருவர் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார்கள். சிரிப்பினிடையே, “ஒங்களை மொத மொதல்லே பாத்தபோது, `சரியான லூஸ் இந்தப் பையன்’னு நினைச்சுக்கிட்டேன்!” என்று கூறினாள் ராதிகா. “ஏய்!”அவளைத் தாவிப் பிடிக்கப் போனவனிடமிருந்து விலகி, தொடர்ந்தாள். “தனக்குத்தான் ரொம்பத் தெரிஞ்சமாதிரி டீச்சரோட சண்டை போடறது, அரை மார்க் குறைச்சுப் போட்டுட்டாங்கன்னு ஒரு மணி தர்க்கம் பண்ணறது…!” “நீ என்னதான் சொல்லு, ராதி, எங்களுக்கு இருக்கிற மூளை, சாமர்த்தியம்.. பொண்ணுங்களுக்குக் கிடையாது!” காதலியை வசப்படுத்துவதற்கு முன்னால் மட்டும்தான் மோதல் என்பதில்லை. வம்புக்கு இழுப்பதும் சுகம்தான் என்பதை அவன் உணர்ந்திருந்தான். ராதிகாவும் சளைக்காது, “ஓகோ! நான் சரித்திரம், கெமிஸ்ட்ரியில   எல்லாம் ஒங்களைவிட அதிக மார்க் வாங்கி இருக்கேனே! அதுக்கு என்ன சொல்றீங்க?” என்று சவால் விட்டாள். “அம்மா, போதும்மா இந்தப் பேச்சு. அப்புறம், ராத்திரி பரீட்சை சொப்பனமா வந்து பயமுறுத்தும்!” போலியாக நடுங்கினான் ரவி. அதற்குள் வீட்டு வாசலை அடைந்து விட்டதால், அந்த உரையாடலுக்கு ஒரு முடிவு வந்தது. “அம்மா! யார் வந்திருக்காங்க, பாருங்க!” வாசலிலிருந்தே உற்சாகமாகக் குரல் கொடுத்தான் ரவி. பதிலுக்கு, “ஒன் குரல் எனக்குத் தெரியாதாடா, ரவி!” என்றபடி வாசலுக்கு வந்த பாக்கியம், அவனுடன் வந்திருந்தவளைக் கண்டு சற்றுத் திகைத்துப்போனாள். “ஒங்களக்கு ராதிகாவைத் தெரியுமில்ல? அதான் அன்னிக்குக் கடற்கரையிலே..” என்று நிலைமையைச் சீர்படுத்த முயன்றான் ரவி. பாக்கியம் விறைப்பாக நின்றாள். வீட்டுக்கு வந்தவளை `வா!’ என்று வரவேற்கத் தோன்றவில்லை.`இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்குத்தான் என்ன துணிச்சல்!’ என்று அருவருப்புடன் அவளைப் பார்த்தாள். இம்மாதிரி ஒரு சூழ்நிலையை எதிர்பார்த்துத்தான் ராதிகா அவனுடன் வர அவ்வளவு தயங்கினாள் என்பது விளங்க, ரவிக்குத் தர்மசங்கடமாக இருந்தது. “அம்மா! ராதிகாவும் நானும் பள்ளிக்கூட நாளிலேருந்தே ஃப்ரெண்ட்ஸ்!” பலகீனமாக வந்தது அறிமுகம். `அடப்பாவி! இதுக்காடா ஒன்னைப் படிக்க அனுப்பினேன்!’ பாக்கியத்தின் மனக்குரல் முகத்தின்வழி வெளிவந்தது. இந்த அம்மாவை ஆரம்பத்திலேயே எதிர்த்தால்தான் உண்டு, இல்லை, அப்பாவைப்போல் ஒரேயடியாக வளைந்து போய்விடுவோம் என்று நினைத்தவனாய், ரவி உடலை நிமிர்த்திக்கொண்டான். பின், திடமான குரலில் அறிவித்தான். “நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப்போறோம்!” தன்னிடமே இவ்வளவு தைரியத்துடன் பேசுவான் மகன் என்று எதிர்பார்த்திராத பாக்கியம், “நீங்கபாட்டிலே ஏதாவது முடிவு எடுத்திட்டு வந்தா ஆச்சா? ரெண்டு வீட்டிலேயும் பெரியவங்ககிட்ட..,” என்று சொல்ல ஆரம்பித்தவள், ஏதோ சந்தேகம் எழ, “ஏம்மா? ஒனக்கு அம்மா, அப்பா எல்லாரும் இருக்காங்கதானே?” என்று கேட்டாள். தான் எந்தப் பேச்சைக் கேட்க வேண்டாம் என்று நினைத்தோமோ, அது இப்படி அசந்தர்ப்பமாகக் கிளம்பிவிட்டதே என்று ராதிகா குலைந்து போனாள். அவள் சார்பில் ரவிதான் பேசினான். “ராதிகாவோட அம்மாவை எனக்கும் தெரியும்மா. வேலைக்குப் போறவங்க!” “அப்பா?” “எனக்கு அம்மா மட்டும்தான், ஆன்ட்டி!” “ஐயோ பாவம்! அப்பா இல்லாத பொண்ணா நீ?” “அப்பா உயிரோடதான் இருக்கார். ஆனா, அம்மா அவரோட இல்ல. ரெண்டு பேரும் சட்டப்படி பிரிஞ்சுட்டாங்க”. அதிர்ச்சியுடன் பாக்கியம் வாயைப் பொத்திக்கொண்டாள். `சரியான திமிர் பிடிச்ச பொம்பளையா இருப்பா போல இருக்கே! அவளுக்குப் பிறந்தது மட்டும் எப்படி இருக்கும்? இந்த முட்டாள் பயலுக்கு நல்லா எடுத்துச் சொல்லணும், நாளைக்கு இவனை விட்டுட்டு இந்தச் சிறுக்கியும்..!” பாக்கியத்தின் எண்ண ஓட்டத்தின் இரைச்சலில், அடுத்து அவர்கள் பேசியது எதுவும் கேட்கவில்லை. “அம்மா!” சற்று அதிகாரமாகவே ரவி அழைக்க, “ஒக்காருங்க. இதோ போய் தண்ணி கலக்கிட்டு வரேன்,” என்று முகத்தைச் சுழித்தபடி உள்ளே விரைந்தாள் பாக்கியம். “ஸாரி, ராதி. சமயத்திலே அப்பா வீட்டில இல்லாம போயிட்டார். அவர் நாலு எடத்துக்குப் போறவர். பல பேரோட பழகறவர். இவ்வளவு மோசமில்ல!” என்று தாழ்ந்த குரலில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான் ரவி. “படிப்பிலே மட்டுமில்லே, ரவி, மத்தவங்களை எடைபோடறதிலேயும் ஆணும் பெண்ணும் வித்தியாசப்படறாங்க!” என்றாள் ராதிகா, ஆழ்ந்த வருத்தத்துடன். “அம்மாவும் அப்பாவும் கெடக்காங்க! நான் ஒன்னைத்தான்..” படபடவென்று பேசியவனை, “என்னால முடியாது, ரவி,” என்று கையமர்த்தினாள் ராதிகா. “ஒலகம் ஏத்துக்காததால எங்கம்மாவும் நானும் பட்ட துன்பம் ஒங்களுக்கும் வரக்கூடாது!” அவள் குரலிலிருந்த உறுதி ரவியைக் கலக்கியது. தன் தங்கையைப்போலவோ, அம்மாவைப்போலவோ இல்லாது, திடசித்தமும் தன்னம்பிக்கையும் கொண்ட புதுமைப்பெண் இவள் என்று அவன் கொண்டிருந்த பூரிப்பு ஆட்டம் கண்டது. இவளுடைய பிடிவாதத்தைத் தான் எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்று மலைத்தான். 6 பழைய நினைவுகள் அன்று ஞாயிற்றுக்கிழமை. புகைப்பட ஆல்பத்தை வெளியே எடுத்த வைத்தி, அதிலேயே ஆழ்ந்துபோனான். “ரஞ்சி! நம்ப கல்யாண போட்டோவிலே நீ எவ்வளவு அழகா இருக்கே, பாரேன்!” என்று உற்சாகமாகக் குரல் கொடுத்தான். “சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில வரும்!” சாயம் போன நைட்டியில், கரண்டியும் கையுமாக உள்ளிருந்து வந்த ரஞ்சி பெருமையாகக் கூறினாள். “ஏய்! இந்தப் பழமொழி எல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே!” என்று மிரட்டியவன், `புரிய மாட்டேங்குது!’ என்று முணுமுணுத்துக்கொண்டான். ஆரம்பத்தில் தோட்டப்புறத்தில் தமிழ்ப்பள்ளியில் படித்திருந்தாலும், பெற்றோர் இருவரையும் ஒரே சமயத்தில் லோரி விபத்தொன்றில் பறிகொடுத்தபின், நகர்ப்புறத்திற்குக் குடிபெயர்ந்துவிட்ட தாத்தா பாட்டியிடம் வளர்ந்தவன் அவன். வீட்டருகே இருந்த மலாய் பள்ளியில் படிக்க நேரிட்டதும், தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட, பேசுவது மட்டுமே பழக்கத்தில் இருந்தது. ஏதோ நினைவு வந்தவளாய், “ஏங்க? நானே கேக்கணும்னு இருந்தேன். அது என்ன, பொண்ணு பாக்க வந்தப்போ, என்னை அப்படி வெறிச்சு வெறிச்சுப் பாத்தீங்களாம்?” என்று அவனைச் சண்டைக்கு இழுத்தாள் ரஞ்சிதம். “அதுக்குத்தானே என்னைக் கூப்பிட்டு இருந்தாங்க? பொண்ணு பாக்க?” “உக்கும், போங்க! எனக்கு ஒரே வெக்கமா போயிடுச்சு. ஒங்களை நான் சரியாவே பாக்கல!” “ஆசையா இருந்தா பாத்திருக்கிறது!” “பாத்திருந்தா, ஒங்களை நான் ஏன் கல்யாணம் பண்ணிட்டு இருந்திருக்கப் போறேன்!” “இதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல. அப்படிப் பாத்திருந்தாப்போல, கண்ணு தெரிஞ்சிருக்கவா போகுது! இந்த சோடாபுட்டி கண்ணாடியைப் போட்டுக்காம ஏமாத்திட்டியே அன்னிக்குத்தான்! நீ மட்டும் இப்ப இருக்கிறது மாதிரி, சுருட்டையான எலிவால் பின்னலும், சோடாபுட்டியுமா காட்சி குடுத்திருந்தா, நான் ஒன் திக்குக்கே கும்பிடு போட்டுட்டு ஓடியிருப்பேன்!” ரஞ்சியின் மார்பகங்கள் மேலும் கீழும் எழுந்தவிதம் அவளுடைய ஆத்திரத்தை வெளிக்காட்ட, வைத்தியின் மூளை அபாயச்சங்கு ஊதியது. `ஏண்டா மடையா! இப்ப அவ கோவிச்சுட்டுப் போயிட்டா, அப்புறம் சமாதானப்படுத்தத் தெரியாம திண்டாடப்போறது யாரு? ஏதாவது மலிவான ஹோட்டலில அழுகின, இல்லாட்டி புழுவெச்ச மரக்கறியில பண்ணின சமையலுக்குத் தண்டம் அழப்போறியா?’ உடனே, எல்லா கணவர்களும் காலம் காலமாகச் செய்துவந்ததைப்போல, தாஜா செய்ய ஆரம்பித்தான். “நீ கண்ணாடி போட்டிருக்கிறதும் நல்லதுக்குத்தான். ஒன் ஒண்ணரைக்கண் தெரியாம மறைக்குது. முடி கட்டையா இருக்கிறதால, எண்ணையும் மிச்சம்!” அவளையும் மீறி, ரஞ்சி சிரித்தாள். “காதல் வசனம் பேச, ஒவ்வொருத்தனும் ஒங்ககிட்டதான் கத்துக்கணும்!” “வசனம்னு சொன்னதும் நினைவு வருது. படத்துக்குப் போலாமா?” “ஹை! நெசம்மாவா சொல்றீங்க?” “பின்னே? டிரெஸ் மாத்திட்டு வா!” “ஒங்க கண்ணுக்கு அழகா இருக்கேன்ல? இதுவே போதும்!” என்று அப்படியே புறப்பட ஆயத்தமானாள் ரஞ்சி. வைத்தி தலையில் அடித்துக்கொண்டதை அவள் பார்க்கவில்லை. 7 காற்றுவாங்கப் போனான் ஒருமாதிரியான படம் பார்த்ததால் எழுந்திருந்த கிளர்ச்சியுடன் உல்லாசமாக வீடு திரும்பிய வைத்திக்கு அதிர்ச்சி காத்திருந்தது — பாக்கியத்தின் உருவில். சுய பரிதாபமே ஓர் உருக்கொண்டதுபோல வாசலில் அமர்ந்திருந்த தாயைப் பார்த்து, மகள் கரிசனமாகக் கேட்டாள்: “ஏம்மா இங்க ஒக்காந்திருக்கீங்க?” “பூட்டை ஒடைச்சு உள்ளே போனா நல்லா இருக்குமா?” “அத்தை! நாங்க படம் பாக்கப்போனோம்,” வைத்தி தெரிவித்தான். “நீங்க வர்றதுக்கு முந்தி ஒரு ஃபோன் போட்டிருக்கலாம்!” ரஞ்சி கணவனை முறைத்தாள். “அம்மா எவ்வளவு பெரியவங்க! அவங்களுக்கே புத்தி சொல்றீங்களா? அவங்க வந்த சமயம் பாத்து வீட்டில இல்லாதது நம்ப தப்பு!” என்று ரகசியக் குரலில் கண்டித்தவள், “நீங்க உள்ளே வாங்கம்மா. வந்து சாப்பிடுங்க!” என்று உபசாரம் செய்தாள். தன் வீடு என்ற அதிகாரத்துடன், “பசி கொல்லுது!” என்று வைத்தியும் அவளைத் தொடர, “கொஞ்சந்தான் இருக்கு. அம்மா சாப்பிடட்டும்!” என்றாள் அருமை மனைவி, ரகசியக்குரலில். “நீங்க?” என்ற தாயிடம், “நாங்க வரும்போதே சாப்பிட்டுட்டுதான் வந்தோம்,” என்று அளந்தாள் ரஞ்சி. மகளின் பரிவால் நெகிழ்ந்துபோனாள் தாய். “அப்ப சரி. நானே எடுத்துப் போட்டுக்கறேன். போய் படுத்துக்குங்க. அலைஞ்சுட்டு வந்திருக்கீங்க!” அறைக்குள். “ஏன் இப்படி எரை தின்ன பாம்பு கணக்கா நெளியறீங்க? கட்டில் ஆடற ஆட்டத்திலே தூங்கவே முடியல”. “எரையாவது, பாம்பாவது! நீ வேற வயத்தெரிச்சலைக் கிளப்பிட்டு! பசி வயத்தைக் கொடையுது!” “நீங்கதான் தினமும் எதுக்காவது கோபிச்சுக்கிட்டு, ராப்பட்டினி கிடப்பீங்களே! இன்னிக்கு மட்டும் என்ன, புதுசா! எதையாவது நினைச்சு, கோபத்தை வரவழைச்சுக்கிறது!” என்று அற்புதமான யோசனை ஒன்றைக் கூறினாள் தர்ம்பத்தினி. வைத்தி ஆத்திரத்துடன் எழுந்தான். “எங்கே கிளம்பறீங்க?” “ஸ்டால்லே மீ பிரட்டல்(நூடுல்ஸ்) சாப்பிட்டுட்டு வரேன்!” ஸ்கூட்டர் சத்தம் கேட்ட பாக்கியம், மருமகன் உள்ளே இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, எட்டிப் பார்த்தாள். அவள் எதுவும் கேட்குமுன், “காத்துவாங்கப் போனாரும்மா. இங்க ஒரே புழுக்கமா இருக்கில்ல!” என்று கணவனுக்கு வக்காலத்து வாங்கினாள் ரஞ்சி. பாக்கியத்தின் நெளிந்த உதடுகள் அவநம்பிக்கையை வெளிப்படுத்தின. “அடிக்கடி இப்படிப் போவாராடி, கண்ணு?” ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று புரியாது, `ஆம்,’ என்னும் முறையில் தலையை ஆட்டிய மகளைப் பார்த்துத் தாய்க்குப் பரிதாபம் எழுந்தது. தளர்ந்த நடையுடன் அப்பால் சென்ற பாக்கியத்திற்கு தெய்வ நிந்தனை செய்வது தவிர வேறு வழி தெரியவில்லை. `இந்தக் குழந்தையை இப்படி ஒரு காமாந்தகாரனோட கட்டிப் போட்டியே, பத்துமலை முருகா! இவளை அங்கே இங்கே கூட்டிட்டுப்போய் தாஜா செய்துட்டு, இன்னொரு பக்கம் அந்தப் பாவி..!’ 8 இனிப்பும் காரமும் இரவு வேளைகளில் தனியே வெளியே போகும் மாப்பிள்ளையின் கெட்ட பழக்கத்தை எப்படி முறியடிப்பது என்று முதல்நாள் இரவு பூராவும் பாக்கியம் யோசித்தபடி இருந்தாள். `ஒருத்தனோட இதயத்துக்குக் குறுக்கு வழி அவனோட வயிறு மூலமாகத்தான்!’ என்று கணவர் அடிக்கடி சொல்லும் பழமொழி சமயத்தில் நினைவு வந்தது. மறுநாள் காலை, மகளைத் தூது அனுப்பினாள். “ஏங்க, ஒங்களுக்கு இனிப்பு பிடிக்குமான்னு அம்மா கேக்கறாங்க!” வைத்திக்கு எரிச்சலாக இருந்தது. `நீங்க புதுசா கல்யாணம் ஆனவங்க. இப்பவே ஒருத்தரையொருத்தர் சரியா புரிஞ்சுக்கணும்,’ என்று, தம்பி வீட்டுக்குச் சென்றுவிட்ட பாட்டிக்கு இருந்த இங்கிதம் இந்த மாமியாருக்கு இல்லையே! அடிக்கடி வந்து விடுகிறாள், சமைத்துப் போடுகிறேன் என்ற சாக்கில். இதையெல்லாம் சொன்னால், சண்டைதான் வரும். பதிலுக்கு, “நீதான் ஸ்வீட்டா பக்கத்திலேயே இருக்கியே!” என்று வழிந்தான். “கேட்டா, ஒழுங்கா பதில் சொல்லுங்களேன்!” அதற்குமேல் அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை. “நீ என்ன, என்னோட டீச்சரா?” என்று இரைந்தவன், ”அதான் சொல்றேனே, ஸ்வீட் பிடிக்காதுன்னு!” என்று அலறாத குறையாகக் கத்தினான், மனைவியை எதற்கோ தூண்டிவிட்டிருந்த மாமியார் காதிலும் விழட்டுமென்று. “அடடா! ஒங்களுக்குப் பிடிக்கும்னு நினைச்சு, வெண்ணையைக் காய்ச்சி, நெய் செஞ்சு வெச்சிருக்கேன், வாசனையா!” என்றபடி பாக்கியம் சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள். “அவருக்குப் பிடிக்காட்டி என்ன! எனக்குப் பிடிக்கும். பண்ணுங்கம்மா!” “எனக்குப் பிடிக்காதுங்கறேனில்ல?” “பிடிக்காட்டி சாப்பிடாதீங்க. எங்..கம்மா! எனக்குப் பிடிச்சதைத்தான் செய்வாங்க. ஏம்மா?” “இதுக்கென்னடி தர்க்கம்? ஒரு இனிப்பு, ஒரு காரம் பண்ணினாப் போச்சு!” “நல்லாச் சொல்லுங்க அவகிட்ட. எல்லாத்துக்கும் மல்லுக் கட்டிக்கிட்டு நிப்பா!” ரஞ்சி அவனுக்கு அழகு காட்டியது பாக்கியத்தின் கண்களுக்குத் தப்பவில்லை. அன்று மத்தியானம். “மிக்ஸ்சர்!” வைத்தியின் அருகே ஒரு தட்டை வைத்தாள் பாக்கியம். “ஒங்களுக்குக் காரம் போதுமோ, என்னவோ!” `இவங்களுக்குத்தான் போலியா உபசாரம் செய்யத் தெரியுமோ?’ என்ற ரோஷத்துடன், “ஒங்களுக்கு ரொம்பச் சிரமம்!” என்றான் வைத்தி. அதை நம்பிய பாக்கியத்தின் முகம் விகசித்துப்போயிற்று. “கூடவே ஏதாவது ஸ்வீட்டும் இருந்தா நல்லா இருக்கும்!” அவன் குரலைக் கேட்டு ஆத்திரத்துடன் வந்த ரஞ்சி, “மொதல்லே, `காரம்தான் வேணும். ஸ்வீட் பிடிக்காது’ன்னு சொல்லிட்டு..! நீங்க குடுக்காதீங்கம்மா, சொல்றேன்!” “சும்மா இருடி,” என்று அடிக்குரலில் கண்டித்த தாயை லட்சியம் செய்யாது, வைத்தி கையிலிருந்த உருண்டையைப் பிடுங்கப்போனாள். “இது.. அம்மா எனக்காக செஞ்சது!” கையை பின்னால் ஒளித்துக்கொண்டு, “எங்க அத்தை பண்ணினது! அதனால எனக்குத்தான்!” என்றவன் அதை ஒரு கடி கடித்துப் பார்த்துவிட்டு, “ரொம்ப நல்லா இருக்கு, அத்தை, நெய் வாசனை கமகமன்னு! இன்னும் ரெண்டு கொண்டாங்க!” என்று கேட்டுக்கொண்டான். “மொதல்ல வேண்டாங்கிறது! அப்புறம், என் பங்கையும் சேர்த்துச் சாப்பிடறது!” பொருமினாள் சகதர்மிணி. “ரஞ்சி! இங்க வா, சொல்றேன்! மானத்தை வாங்காதே!” சமையலறையிலிருந்து பாக்கியம் குரல் கொடுக்க, “போங்க! எல்லாரும் ஒரே பக்கம் சேர்ந்துக்குங்க! நான் எங்கேயாவது தொலைஞ்சு போறேன்!” என்று பெரிதாக அழ ஆரம்பித்தாள் ரஞ்சிதம். 9 பழைய நினைவுகள் வழக்கமாக மகள் வீட்டிலிருந்து திரும்பியதுமே வாய் ஓயாது பேசித்தள்ளும் மனைவி இன்று சுரத்தில்லாது இருந்ததைக் கண்டு மணிக்கு அதிசயமாக இருந்தது. வீட்டு வாசலில் அவர் போட்டிருந்த சிறு தோட்டத்தில் பூத்து ஓய்ந்துவிட்ட ரோஜாக் கிளைகளை மூன்று அல்லது ஐந்து முளைகளுக்குக் கீழே வெட்டிக் கொண்டிருந்தவர், தன் கையிலிருந்த கத்தரிக்கோலைக் நழுவவிட்டார். “மாப்பிள்ளையும் ரஞ்சியும் நல்லா இருக்காங்கதானே?” சில நொடிகள் கழித்துத்தான் பதில் வந்தது. “அவர் நல்லாத்தான் இருக்காரு. இந்த ரஞ்சிதான்..!” ஆச்சரியத்தோடு நிமிர்ந்தார் மணி. அருமை மகளை யாராவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டாலும் சீறியெழுவாள், இல்லை மூன்று நாட்களானாலும், அவர்களுடன் முகம் கொடுத்துப் பேசமாட்டாளே! அந்த பாக்கியம்தானா இது! எல்லாரையும் அடக்கி ஒடுக்குபவள் தானே அடங்கி இருந்ததைப் பார்க்க கண்ராவியாக இருந்தது. “என்ன ஆச்சு, பாக்கியம்?” என்று கனிவுடன் கேட்டார். “என்னான்னு சொல்றது!” என்று பெருமூச்செறிந்தவளாக, “இருபது வயசுக்குமேல ஆகியும், அவளுக்குக் கொஞ்சங்கூட பொறுப்பே வரலீங்க!” என்று குறிப்பாகத் தெரிவித்தாள். எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னால், `நீ வளர்த்த லட்சணம் அப்படி!’ என்று பழித்துவிட்டால்? “இதுக்கா கவலைப்படறே?” மணி ஆறுதல் அளித்தார். “அதெல்லாம் மாப்பிள்ளை அனுசரிச்சுப் போயிடுவார்! அவ்வளவு சாமர்த்தியம் இல்லாட்டியும், சும்மா சொல்லக்கூடாது, குணத்தில மனுசன் தங்கக் கம்பி!” “அந்த தங்கத்தோடகூட ஒத்துப்போக முடியல ஒங்க மகளுக்கு!” “அது என்ன, `ஒங்க மக?’ தாயைப்போல பிள்ளை!” குறும்பாகச் சிரித்தபடி, அவளை வம்புக்கு இழுத்தார். எவ்வளவு நாட்களாகி விட்டன, இப்படி அவரையும் ஒரு பொருட்டாக அவள் மதித்துப் பேசி! “உக்கும்! நான் என்னிக்குமே இப்படி இருந்ததில்ல. நேத்து பாருங்க, நான் நெய்யுருண்டை செஞ்சேனா! அவருக்குக் குடுக்காம, அவளேதான் எல்லாத்தையும் தின்னு தீர்ப்பேன்னு..!” மணி சிரிக்க ஆரம்பித்தார். “எல்லாரும் அவளுக்கு விட்டுக்குடுத்தே பழக்கமாயிடுச்சு, இங்க! விடு! தானே ஒரு குழந்தை பிறந்தா சரியாகிடும்!” “நீங்க வேற! இங்க மொதலுக்கே மோசமாகிடும்போல இருக்கு. அந்த மனுசன் வேணுமின்னே அவ வாயைப் பிடுங்கிட்டு, கோவிச்சுக்கிட்ட மாதிரி, தினம் ராத்திரி..” பாக்கியம் அதீதமாகத் தலையைக் குனிந்துகொண்டாள், `நான் வாய்விட்டுச் சொல்ல முடியாத அசிங்கத்தை நீங்களேதான் புரிந்துகொள்ள வேண்டும்!’ என்பதுபோல். மணி விளங்காது, “என்ன சொல்றே?” என்றார். “அட, ஆமாங்கறேன்! ராத்திரி வேளையானா, எங்கேயோ போயிடறாரு. தினமுமே இப்படித்தானாம். நான் ரஞ்சியைக் கேட்டேனே!” அழகு, அறிவு, இதெல்லாம் இருந்தால்தானா ஆண்பிள்ளை? மாப்பிள்ளையும் தன்னைப்போல ஒருவர்! மணிக்கு ரோஷம் எழுந்தது. “சேச்சே! அப்படிப்பட்ட ஆளில்ல வைத்தி!” என்று பரிந்தார். அவருடைய வார்த்தைகளால் மேலும் நொந்துபோன மனைவியைப் பார்த்ததும், என்னமோ அவளுக்குத் துரோகம் இழைத்துவிட்டதைப்போல குற்ற உணர்வு மிகுந்தது. சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். “பாக்கியம்! அவங்க ரெண்டு பேருக்கும் எத்தனை நாளாப் பழக்கம்?” “தெரியாதமாதிரி இல்ல கேக்கறீங்க! இந்த நாலைஞ்சு மாசமாத்தான்!” “அதாவது.., அவங்க கல்யாணம் ஆனப்புறம்தான், ம்?” கட்டபொம்மன் சிவாஜி கணேசன் மாதிரி உறுமினார். அவரைப் பாராட்டும் மனநிலையில் இருக்கவில்லை அவள். ஆக்ரோஷமாக, “பின்னே? அதுக்கு முந்தி அவர் அவளை நெருங்க விட்டிருப்பேனா? அப்புறம் நம்ப குடும்ப மானம் என்ன ஆகறது?” என்றவள், எதையோ நினைத்தவளாகச் சிரித்தாள். பிறகு, குரலில் என்றோ காணாமல்போன மென்மையுடன், “நம்ப நிச்சயதார்த்தம் முடிஞ்சப்புறம் நீங்க எங்க வீட்டுக்கு வருவீங்களே, நினைப்பிருக்கா?” என்று கேட்டாள். “மறக்குமா!” என்ற மணியின் குரலில் காலங்கடந்த கோபம். “அந்தக் கெழவர், எல்லாம் ஒங்கப்பாவைத்தான் சொல்றேன்! என்னமோ, நான் அவரைத்தான் பாக்க வந்தமாதிரி, மூ..ணு தலைமுறையோட கதையையும் பேசிப் பேசி.., கழுத்தறுப்பாரு!” “போனவரைப்பத்தி இப்படிக் குத்தமா..,”வருத்தத்துடன் இடைமறித்த பாக்கியத்தை அவர் சட்டை செய்யவில்லை. “நீயாவது, `ஏதுடா! நம்பமேலகூட ஆசைப்பட்டு ஒரு இளிச்சவாயன் வந்திருக்கானே!’அப்படின்னு பெருமையா என் எதிரே வந்து ஒக்காந்தியா?” “நல்லாக் கேட்டீங்க, போங்க! வீட்டுக்குள்ளே நீங்க நுழைஞ்சதுமே, உள்ளே எங்க பாட்டியும் அத்தையும் எனக்கு ரெண்டு பக்கமும் ஒக்காந்துடுவாங்க. நகரக்கூட முடியாது!” எவ்வளவு ஏக்கம் இவள் குரலில்தான்! இவளுக்கும் நம்மேல் ஆசை இல்லாமல் இல்லை என்று உள்ளூர மகிழ்ச்சி ஏற்பட்டது மணிக்கு. “கடைசியில நானே துணிஞ்சு ஒங்கப்பாகிட்ட கேட்டேன்..,” அவர் சொல்லப்போனதைப் புரிந்துகொண்டவளாக, மகிழ்வுடன் குறுக்கிட்டாள் பாக்கியம். “என்னைப் படத்துக்குக் கூட்டிப் போகத்தானே? அதான் வந்தேனே!” என்றவள், படத்தின் பெயரையும் ஞாபகமாகச் சொன்னாள்: “நாடோடி மன்னன்!” அவளுடைய மகிழ்ச்சியில் பங்கு கொள்ள முடியவில்லை மணியால். பழைய கோபம் இன்னும் கனன்றுகொண்டு இருந்தது. “நான் ஒரு மூளை கெட்டவன்! `என்னடா, கெழவர் இவ்வளவு சுலபமா ஒத்துக்கிட்டாரே!’ன்னு ஒரே சந்தோசம் எனக்கு. ஹிந்துஸ்தான் தியேட்டருக்குப் போனா, பின்னாலேயே அந்த ரெண்டு தடியன்களும்! ஒன் அண்ணன்காரங்கதான்!” பற்களைக் கடித்தார், அந்த நினைவில். “என்னமோ, ஒலகத்திலேயே இல்லாத அழகி பாரு, அவங்க தங்கச்சி! அவளுக்குக் காவலாம்! ரெண்டு பக்கமும் ஆளுக்கு ஒருத்தரா துவாரபாலகர் கணக்கா ஒக்காந்துட்டாங்க!” “அவ்வளவு நம்பிக்கை ஒங்கமேல!” பாக்கியம் சிரித்தாள். மணி தொடர்ந்து புலம்பினார். “வாத்தியார் படம் வேறயா! ஒரே கிளுகிளுப்பு! ஒன் கையைக்கூடப் பிடிக்க முடியல. எனக்கு வந்த ஆத்திரத்திலே…,” என்று ஏதோ சொல்லப்போனவர், சட்டென நிறுத்தினார். “நமக்கு வயசு ரொம்பத்தான் ஆகிப்போச்சு, பாக்கியம்!” கணவர் குறுகி உட்கார்ந்ததைப் பார்த்தாள் பாக்கியம். ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. “பாரேன், ஒங்க அத்தை, பாட்டி, அப்புறம்.. அந்தத் தடியனுங்க எல்லாரும் ஒன்னைக் கட்டிக் காத்ததாலே அவங்க வில்லன். இப்ப நாம்பளும் அதைத்தானே செய்துக்கிட்டிருக்கோம்?” சிறிது நேரம் மௌனமாக இருந்து, இருவரும் தத்தம் உணர்ச்சிகளுடன் போராடினர். மணிதான் முதலில் பேசினார். “இந்தமாதிரி.. பெரியவங்க பாத்து நிச்சயிக்கிற கல்யாணத்தில.. ஏதோ, ஒரு நாள் கூத்து இது! முன்னே பின்னே பழக்கமில்லாத ரெண்டுபேரை, `இனிமே நீங்க எப்பவும் ஒண்ணாத்தான் இருக்கணும்!’னு நிர்ப்பந்தப்படுத்திடறோம்!” “ஆமாங்க. கல்யாணமான புதுசில.. எனக்குக்கூட கண்ணைக் கட்டி காட்டில விட்டமாதிரி இருந்திச்சு. நல்லவேளை, ஒங்கம்மா அனுசரணையா இருந்தாங்க!” “என்னை விட்டுட்டியே! அப்போ ஆரம்பிச்சதுதான்! இன்னிவரைக்கும் எப்படி ஒன் தாசானுதாசனா இருக்கேன்!” பாக்கியம் சிரிப்புடன் கையை வீசினாள். முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது. “என்ன செய்யறது? ஒன் அதிர்ஷ்டம் ஒன் பொண்ணுக்கு இல்லியே!” சீண்டினார். அவள் சமாதானமாகாததைக் கண்டு, “அவங்களுக்குப் பிடிச்சிருக்கு, சண்டை போட்டுக்கறாங்க! விடுவியா!” என்றார் லேசாக. “ரஞ்சி கண்ணைக் கசக்கினா..,” பாக்கியம் வராத கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள். “அதான் அவ கண்ணைத் தொடைச்சுவிட ஒருத்தர் வந்தாச்சே! ஒனக்கு இதெல்லாம் புரியாது, பாக்கியம்!” என்ற மணி, நமட்டுச் சிரிப்புடன், “நமக்குக் கல்யாணமான புதிசில, நீ எதுவும் புரியாம முழிச்சுக்கிட்டு இருப்பியா! அப்போ.. எனக்குள்ள ஒரு வெறி — ஒன்னை அடிச்சோ, ஒதைச்சோ, எப்படியாவது அழ விடணும்னு!” “என்னங்க இது, அநியாயம்! நானே பயந்துக்கிட்டு..!” “அங்கதான் விஷயமே இருக்கு. நீ அழுதுக்கிட்டு எங்கிட்ட வருவே! அப்போ..,” வெட்கினார். “ஒன்னைக் கட்டி அணைச்சு சமாதானம் செய்யலாம்னு..!” பாக்கியம் புரியாது பேசினாள். “நான்தான் எதுக்கும் அத்தைகிட்ட ஓடுவேனே! அவங்ககூட அதிசயப்படுவாங்க — `சாதுவா, அசடுமாதரி இருந்தான்! இவனுக்கு என்ன வந்திச்சுன்னு தெரியலியே!’ன்னு!” “அதே நிலையிலதான் இப்ப வைத்தியும்! யோசிச்சுப் பாரு!” பாக்கியம் அதிக நேரம் யோசிக்க வேண்டியிருக்கவில்லை. ஆனால், உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் கடினமாக இருந்தது. “நீங்க.. அத்தைமேல ஆத்திரப்பட்டீங்களா?” அவள் குரல் இறங்கியிருந்தது. “பின்னே? சும்மாச் சும்மா எனக்கும் என் பெண்டாட்டிக்கும் குறுக்கே வந்தா?” பொரிந்தார் மணி. `மாப்பிள்ளையும் அப்படித்தானே என்னை.!’ பாக்கியம் அதைச் சொல்லவில்லை. அவள் வெறித்த பார்வையே சொல்லிற்று. 10 வேறொரு பெண்ணைப் புகழாதே அடுப்பில் ஏதோ கருகிய வாசனை. வைத்தி மூக்கைச் சுளித்தான். ஹோட்டல் சமையலில் நாக்கு செத்துப்போகிறதென்று கல்யாணம் செய்துகொண்டோமே! இவள் சமையலை எப்படிக் காலமெல்லாம் சகித்துச் சமாளிக்கப் போகிறோமோ என்ற கலக்கம் பிறந்தது. “என்ன ரஞ்சி! ஒங்கம்மாவைக் கொஞ்சநாளாக் காணோம்? வாரத்துக்கு நாலு தடவை வந்துடுவாங்க?” என்று குரல் கொடுத்தான். “பாவம்! ஒடம்புக்கு முடியலியோ, என்னவோ!” என்று சமையலறையிலிருந்தே பதில் குரல் கொடுத்தவள், ஏதோ புரிந்தவளாக, ஆக்ரோஷமாக வெளியே வந்தாள். “அது என்ன, `வாரத்துக்கு நாலு தடவை?’ அம்மாவைக் கண்டா ஒங்களுக்கு எப்பவுமே இளக்காரம்தான்!” கோபமாகப் பேச ஆரம்பித்தவள், அழுகையில் முடித்தாள். “சேச்சே! அப்படிச் சொல்வேனா? அவங்க இல்லாட்டி நீ ஏது!” அவள் முகம் மலர்ந்ததைப் பார்த்து, வைத்திக்குப் பெருமை உண்டாயிற்று. பரவாயில்லை, மனைவியை ஓரளவுக்காவது சமாளிக்கத் தெரிகிறதே இப்போதெல்லாம்! “எனக்கு ஏன் இப்ப ஒங்கம்மா ஞாபகம் வந்திச்சு, தெரியுமா?” தன்னிச்சையாக, இரு கரங்களாலும் தனது பின்பகுதியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள் ரஞ்சி. “குண்டாப் போயிட்டேனா?” விஷமத்தனமான புன்னகையுடன், “சில இடத்தில சதை போட்டாக்கூட..!” என்று தலையை ஆட்டியவன், “கை நிறைய..” என்று அவளைப் பிடிப்பதுபோல் சைகை செய்ய, ரஞ்சிக்கு ஒரேயடியாக வெட்கம் வந்தது. தன் அழகில் இப்படி மயங்குகிறாரே! உடனே, கணவனுக்குப் பிடிக்காத மூக்குக்கண்ணாடி நினைவு வர, அவசரமாக அதைக் கழற்றப்போனாள். “கழட்டாதே. ஏன் கழட்டறே? ஒன்னை இப்படிப் பாத்தே பழகிட்டேனா! இப்பல்லாம்.. தெருவில எந்தப் பொண்ணு கண்ணாடி போட்டிருந்தாலும், தெரியல, ஒரே மயக்கம்!” என்று வாய்க்கு வந்தபடி உளற ஆரம்பித்தான். ரஞ்சி ஆத்திரம் தாங்காது, உள்ளே நடப்பு செய்ததும்தான் தன் தவறு புரிந்தது அவனுக்கு. இன்னொரு பெண்ணைப் புகழ்ந்தால் — அது அவனுடைய பாட்டியாகவே இருந்தாலும் — அதை எந்தப் பெண்ணாலும் தாங்கிக்கொள்ள முடியாது என்ற பாடத்தைக் கற்றது அப்போதுதான். தான் சொன்னதை இவள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டாளே என்ற வருத்தத்துடன், நொடிக்கு ஒரு தடவை உள்ளே பார்ப்பதும், பிறகு பெருமூச்சுடன் தலையைக் குனிந்துகொள்வதுமாக இருந்தான். அவனது செய்கை ரஞ்சியின் கண்களுக்குத் தப்பவில்லை. `எப்போதும், யாரைப் பார்த்தாலும், உன் நினைவாகவே இருக்கிறது!’ என்பதைத்தான் வழக்கம்போல், சொல்லத் தெரியாமல் சொல்லி இருக்கிறார்! இதற்குப்போய் கோபித்துக் கொள்வானேன்! இப்போது என்ன சொல்லி அவரைச் சமாதானப்படுத்துவது என்று குழம்பியவள் காதில் பாக்கியத்தின் குரல் கேட்கிறது: “விதவிதமா சமைச்சுப்போடணும். அடிக்கடி ரெண்டு பேருமா சேர்ந்து வெளியே போகணும். அப்பத்தான்..!” அம்மாவே எதிரில் நின்று, மீதி சொல்ல முடியாததை கண்சிமிட்டிப் புரியவைப்பதுபோல் இருந்தது அவளுக்கு. “என்னங்க!” கோபத்தை மறந்து அழைத்தாள். சோகத்துடன் தலைநிமிர்ந்தான் வைத்தி. “வந்து..,”தயங்கினாள். “எனக்கு என் சமையல் அலுத்திடுச்சு!” `எனக்கு நாக்கே செத்துடுச்சு. அதனாலதானே ஒங்கம்மா நினைவு வந்திச்சு! வகைவகையா சமைச்சுப் போடுவாங்க!’ மனதில் தோன்றியதை உரக்கச் சொல்லாமலிருக்க அரும்பாடு பட்டான். “இன்னிக்கு நாம்ப வெளியில போய் சாப்பிடலாமா?” எப்படியோ அவள் சமாதானம் ஆனால் போதும் என்று வைத்தி தலையாட்டினான். தனிமையில் பர்சைத் திறந்து பார்த்துப் பெருமூச்சு விடத்தான் முடிந்தது. `வேணும்! எனக்கு நல்லா வேணும்! யோசிக்காம வாய்விட்டதுக்குத் தண்டனை! யாரோட அம்மா எப்படிப்போனா எனக்கென்ன?’ தெருவில் ஆணும் பெண்ணுமாக நிறையபேர் போய்க் கொண்டிருந்தார்கள் — வேலை முடிந்து திரும்புகிறவர்கள், கர்ப்பிணியான மனைவியின் உடற்பயிற்சிக்காக அவளுடன் பொறுமையாக, பெருமையாக, நடந்து செல்லும் கணவன்மார்கள், கடைக்குப் போய் அன்றாட சமையலுக்கு வேண்டியதை வாங்குகிறவர்கள், இப்படி.. “இனிமே ஒங்களுக்குக் குதிரைக்குப் போடறமாதிரி.. கண்ணை ரெண்டு பக்கமும் மறைக்க ஏதாவது வாங்கணும்!” ரஞ்சியின் கேலியும் கோபமும் நிறைந்த குரல் அப்படியும், இப்படியும் திரும்பி வருகிற, போகிற பெண்களையெல்லாம் ரசித்துக் கொண்டிருந்த வைத்தியைச் சுயநினைவுக்குக் கொண்டுவந்தது. அசடு வழிய, “ஆபீசில ஒரே நிலையில ஒக்காந்திருந்தேனா! கழுத்து சுளுக்கிக்கிச்சு!” என்று சமாளிக்கப் பார்த்தான். “பொய் சொல்லாதங்க. அப்பறம் நெசமாவே சுளுக்கிக்கும்!” `நான் என்ன சின்னப் பையனா? மிரட்டுகிறாளே, என்னமோத்தான்!’ ஆத்திரம் எழுந்தது. “ஆமா, பாத்தேன். அங்க போற பெண்ணைத்தான் பாத்தேன். யாரோ தெரிஞ்ச ஜாடையா இருந்திச்சு!” என்று இரைந்தான். அதை நம்பிவிடும் அளவுக்கு முட்டாளில்லை என்று நிரூபித்தாள் ரஞ்சி. “இப்படி எதிரே வர்ற பொண்ணுங்களை எல்லாம் வெறிச்சு வெறிச்சுப் பாத்தா, எல்லாமே பழகின முகமாத்தான் தெரியும்!” என்றவள், பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள். “சரிதான் போடி! மனுஷனுக்கு ஒண்ணில்ல, ரெண்டு கண்ணைக்கு டுத்து, பொண்ணுங்களையும் சாமி படைச்சு விட்டிருக்கிறது எதுக்காகவாம்?” தர்க்கம் பேசினான். “நீயும் பாக்கறது! என்மேல எதுக்கு பொறாமை?” அதற்குள் சாப்பாட்டுக்கடை வந்தது. அன்றைய இரவுச் சாப்பாடு இறுகிய மௌனத்தில் நடந்தது. `தண்டம்! தண்டம்!’ என்று முனகிக்கொண்டே வைத்தி எட்டு இட்லிகளை விழுங்கினான். 11 மானசீக நாயகர் தன்னை இன்னொரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள் ரஞ்சிதம். நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்துக் கண்ணாடியில் ஒட்டி வைத்துவிட்டு, அந்த இடத்தில் குங்குமத்தை வைத்துக்கொண்டவள், அதையும் சற்றே கலைத்துவிட்டாள். அவளுடைய சுருட்டை முடி பாதி முதுகுவரை அலங்கோலமாகப் படர்ந்திருந்தது. நடிகைகள் க்ளிசரின் என்று எதையோ கண்ணுக்கு விட்டுக் கொள்வார்களாமே, அதுதான் விளக்கு வெளிச்சத்தில் காய்ந்துபோகாது என்று! அதற்கு எங்கே போவது! வெங்காயத்தைக் கண்ணில் பிழிந்துகொண்டாள். அப்படியும் கண் சிவக்காததால், இமைகளின் விளிம்பில் உப்பைத் தடவிக்கொண்டாள். ஒரேயடியாக எரிந்தது. `ஒரு நல்ல காரியத்துக்காக!’ என்று அதைப் பொறுத்துக்கொண்டாள். அவள் எதிர்பார்த்தபடியே நடந்தது. உள்ளே நுழைந்த வைத்தி நிலைகுலைந்து போனான். சிவந்த கண்களுடன் மனைவி! முதல்நாள் போட்ட சண்டை மறந்தே போயிற்று. “ரஞ்சி! என்னம்மா ஆச்சு?” அவள் காதில் விழாதவளாக, பிரமை பிடித்தவள்போல உட்கார்ந்திருக்க, “ஒங்கப்பாவுக்கு ஏதாவது ஆயிடுச்சா? பாவம், கொழுகொழுன்னு இருப்பாரே!” என்று ஒரு ஊகத்தின் பேரில் அனுதாபமும் தெரிவித்தான் வைத்தி. `இல்லை,’ என்று தலையாட்டினாள். “ஓ! ஒங்கம்மாவுக்கா? அவங்க எப்பவுமே வியாதி கொண்டாடிட்டு இருப்பாங்க! இப்ப என்ன?” அவன் குரலில் கேலி நிரம்பி வழிந்தது. தான் ஒன்றை நினைத்து நாடகமாட, இவர் இப்படி உளறிக் கொட்டுகிறாரே என்ற ஆத்திரம் எழுந்தது ரஞ்சிக்கு. “சொந்தக்காரங்க இல்ல. எனக்கு ரொம்ப வேண்டியவர் ஒருத்தர் போயிட்டாரு!” மூக்கை உறிஞ்சத் தவறவில்லை அவள். தன்னைவிட வேண்டியவன் இவளுக்கு இருக்கிறானா? பதட்டத்துடன், “யாரு? யாரு?” என்று வார்த்தைகள் வந்தன. “சிவாஜி கணேசன்!” “யாரு?” தன் காதுகள் ஏமாற்றுகின்றனவோ என்ற சந்தேகம் வந்தது. “தமிழன்னு சொல்லிக்க வெட்கமா இல்ல ஒங்களுக்கு?” “அதுக்கு ஏன் வெக்கப்படணும்?” “பின்னே? எவ்வளவு பெரிய நடிகர் அவர்! ஒலகம் பூராவும் அவரைத்      தெரிஞ்சு வெச்சிருக்கு, ஒங்களுக்குத் தெரியாதுங்கறீங்களே?” “அவர் செத்துப்போய் எவ்வளவு வருஷம் ஆச்சு! இப்போ என்ன       அதுக்கு?” “எவ்வளவு பெரிய துக்கம்! அவ்வளவு சீக்கிரம் ஆறிடுமா?” என்ற         மனைவியை சந்தேகத்துடன் பார்த்தான் வைத்தி. இவள் அசடா, இல்லை,   பைத்தியமா? “அவரைத்தான் நான்.. படிக்கிற நாளிலேருந்து..,” கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தலைகுனிந்தாள் பாவை. “வீடியோவில பழைய படமாத்தான் பார்ப்போம். அப்பல்லாம் என்னை பத்மினியாவோ, சாவித்திரியாவோ, அவர்கூட யார் நடிக்கிறாங்களோ, அந்த கதாநாயகிமாதிரி நினைச்சுப்பேன். அவரையே நினைச்சுக்கிட்டுத்தான் எட்டாவது பரீட்சையிலகூட கோட்டைவிட்டேன்!” ஆத்திரம் தலைக்கேற, “அதெப்படி என்னைக் கேக்காம நீ இன்னொரு ஆம்பளையை நினைக்கலாம்?” என்று கத்தினான் வைத்தி. “சரி. அப்போ, இனிமே ஒங்களைக் கேட்டுக்கறேன்!” சிரிக்காமல் சொன்னாள். அதைக் காதில் வாங்காது, “எனக்கு வர்ற ஆத்திரத்தில, அவர் கழுத்தை அப்படியே..,” என்று ஏதோ சொல்லப்போனவன், அது நடக்காத காரியம் என்பதை உணர்ந்தவனாக, “இருக்கட்டும். அவரோட பழைய படம் ஏதாவது வர்றப்போ.. அவர் நாக்கைப் பிடுங்கிக்கிறமாதிரி நறுக்குனு..!” வைத்தி திகைப்போடு அவளைப் பார்க்கையிலேயே, ரஞ்சிதம் தலையை முடிந்தாள். களுக்கென்று சிரித்தாள். “எப்பவோ செத்துப்போன ஒருத்தர்மேல காதல்னு செல்றேன், அதுக்கே இந்த ஆட்டம் ஆடறீங்களே! நீங்க மட்டும் எதிரே போற பொண்ணுங்க எல்லாரையும் பாத்து ஜொள்ளு விடலாமா?” வைத்தி விறைப்பாக நின்றான். “அது வேற!” 12 கல்யாண நாள் காலையில் எழுந்திருந்தபோதே ரஞ்சிதம் மிகவும் உற்சாகமாக இருந்தாள். அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தைப் பாராட்டாது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவனைப் பார்த்து ஒரு செல்லக்கோபம் எழுந்தது. ஒரு வருடத்திற்குமுன் அவர் யாரோ, தான் யாரோ! `கல்யாணம்’ என்று ஒரே நாளில் நடந்து முடிந்த அந்த வைபவம்தான் அவர்களிருவரையும் என்னமாகப் பிணைத்துவிட்டது! அவன் கண்விழிப்பதாகத் தெரியவில்லை. வானொலியை அலறவிட்டாள். அந்தக் காலை நேரத்திலேயே, `மன்மத ராசா!’ என்று ஒல்லிக்குச்சி காதலனை மெச்சிக்கொண்டிருந்தாள் கதாநாயகி. ரஞ்சியின் மனநிலையைப் பிரதிபலித்தத பாடல்! வைத்தி கண்ணை விழித்து சோம்பல் முறித்தான். “என்ன, இங்கேயே நின்னு என்னைப் பாத்து முழிச்சுக்கிட்டு இருக்கே?” பக்கத்து வீட்டு டி.வி. அப்பளத்தின் சுவையை மெச்சிக்கொண்டிருந்தது. கூடவே வெங்காயம் வதங்கும் மணமும், குழந்தையின் அழுகைச் சத்தமும் பல புலன்களையும் ஒருங்கே தாக்க, அவனுடைய தூக்கம் சற்றே கலைந்தது. அடுத்த கேள்வி தானாகப் பிறந்தது. “பசியாற சுடச்சுட ஏதாவது இருக்கா?” சுடச்சுட ஏதோ சொல்ல வாயெடுத்தவள், தன்னை அட க்கிக்கொண்டாள். `பொறுமை, பொறுமை! இன்று நல்ல நாள்!’ என்று தனக்குத்தானே உபதேசித்துக்கொண்டாள். “ஏங்க! இன்னிக்கு என்ன நாள் நினைவிருக்கா?” என்று தலையைச் சாய்த்து, மையலுடன் அவனைப் பார்த்தாள். வலது கை தாலிச்சங்கிலியுடன் விளையாடியது, குறிப்பாக எதையோ உணர்த்துவதுபோல். வைத்திக்கு தூக்கம் முழுமையாகக் கலைந்திருக்கவில்லை. இவள் என்னடா, காலை வேளையில் இப்படி வேண்டாத புதிரெல்லாம் போட்டு இருக்கிற சொற்ப மூளையையும் குழப்புகிறாளே என்ற எரிச்சலுடன், “இதையெல்லாம் யாரு ஞாபகம் வெச்சுக்கறாங்க! அதுக்காகத்தானே காலண்டர் போடறாங்க!” என்றான். “யோசிச்சுச் சொல்லுங்க, டார்லிங்!” மனைவி கொஞ்சினாள். “இரு!” சுவற்றில் மாட்டியிருந்த, நர்த்தன விநாயகர் படம் போட்டிருந்த காலண்டரின் அருகே சென்றான் வைத்தி. (பலசரக்குக்கடையில் நான்கு மாதத்திற்கான பாக்கியைத் தீர்த்ததும், கடந்த ஆண்டு இறுதியில் மனமுவந்து கடைக்காரர் கொடுத்திருந்தது அது). தூக்கக் கலக்கத்தில் மீண்டும் குழப்பம். “நேத்து என்ன கிழமை?” “திங்கள்!” பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னாள். “அப்போ.., இன்னிக்குச் செவ்வாய்!” “ஆகா! அபாரக் கண்டுபிடிப்பு! இப்போ நான் அதையா கேட்டேன்?” கோபமும் அழுகையும் கலந்து அவள் குரல் வெளிப்பட, எதுவும் புரியாது விழித்தான் வைத்தி. “இது எத்தனையாவது மாசம்?” ரஞ்சி விடாமல் கேட்டாள். உடனே, வைத்தியின் பார்வை ஆர்வத்துடன் அவள் வயிற்றில் பதிந்தது. “சொல்லவே இல்லியே! கள்ளி!” “சீ! அதில்ல,” என்று அவள் மூக்கைச் சுளித்தபடி சொல்ல, அவன் மீண்டும் சுவற்றருகே சென்று, “ஜனவரி!” என்று பதிலளித்தான், சற்று பெருமையுடன். “இன்னிக்கு..,” சற்று நிறுத்தினாள், ஒரு சஸ்பென்சுக்காக. “ஜனவரி இருபத்தி எட்டு!” “ஓகோ! சம்பள நாளா? நீ..ளமா பட்டியல் போட்டு வெச்சுருப்பியே!” “எனக்கொண்ணும் வேணாம்!” ரஞ்சி பிணங்கினாள். ”கல்யாண நாளைக்கூட ஞாபகம் வெச்சுக்க முடியாதவர்கிட்டேயிருந்து!” “கல்யாண நாளா! அட!” ஒரேடியாக ஆச்சரியப்பட்டான் வைத்தி. ஒனக்கா?” இன்று ஒரு நாளாவது சண்டை போடாமல் இருக்கலாம் என்ற் பார்த்தால், நடக்காது போலிருக்கிறதே என்ற ஆயாசம் உண்டாயிற்று அவளுக்கு. “இல்ல. ஒங்களுக்கு மட்டும்தான்!” அவன் சமாளித்துக்கொண்டான். “ஒனக்கு மூளையே கிடையாது, ரஞ்சி! நம்ப கல்யாணம் ஜனவரி இருபத்தெட்டில்ல!” “இன்னிக்கு என்ன தேதி?” `இது என்னடா தொணதொணப்பாப் போச்சு!’ என்று முணுமுணுத்தபடி, வைத்தி மீண்டும் காலண்டரின் உதவியை நாட, ரஞ்சி தலையில் அடித்துக்கொண்டாள். காலண்டரில் ஒரு விரல் வைத்துத் தேடியவன், “அட! இன்னிக்கும் இருபத்தெட்டுதான்! ரஞ்சி! இங்க வந்து பாரேன்!” என்று குரல் கொடுத்தான். அவனுடைய உற்சாகம் அவளைப் பற்றிக்கொள்ளவில்லை. “நீங்களே இன்னும் ரெண்டு தடவை நல்லாப் பாத்துக்குங்க. மறந்துடப்போகுது!” என்றாள் ஏளனமாக. அதைக் கவனியாது, “அடேயப்பா! முழுசா ஒரு வருஷம் நான் ஒன்னைத் தாக்குப் பிடிச்சிருக்கேனா!” என்று பிரமித்தான் வைத்தி. முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, “”யாரு, யாரை சகிச்சுக்கிட்டு வாழ்ந்திருக்கோம்கிற ஆராய்ச்சியை அப்புற் வெச்சுக்கலாம்!” என்ற மனைவி கூற, “சரி. இப்ப என்ன செய்யலாம்கிறே?” என்ற வைத்தியின் கண்கள், கட்டிலில் தன் பக்கத்தில் இருந்த காலி இடத்தை ஜாடை காட்டின. முகத்தில் விஷமப் புன்னகை. ரஞ்சியின் கோபம் வந்த சுவடு தெரியாது மறைந்தது. “ஆபீசுக்கு நேரமாகல? புறப்படற வழியைப் பாருங்க!” என்று விரட்டினாள், வாய்கொள்ளாச் சிரிப்புடன். “இந்த வீட்டு ராணி சொன்னா சரி!” என்று பவ்யமாகச் சொன்னவன், ஏதோ நினைவுக்கு வந்தவனாக, “கல்யாண நாளுன்னா என்னென்ன செய்வாங்க?” என்று கேட்டான் அப்பாவித்தனமாக. கூடவே, “ஏன் கேக்கறேன்னா, எனக்கு இதுதான் மொதல் கல்யாணம்,” என்றும் சேர்த்துக்கொண்டான். ரஞ்சிதத்திற்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. விருக்கென்று உள்ளே போனாள். பாத்திரங்கள் கடமுடா என்று உருட்டப்பட, அவளுடைய மனம் அதற்குமேல் இரைச்சலிட்டது. `கல்யாண நாளுன்னதும் அப்படியே என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு குதிப்பாரு, `ஆபீஸ் கெடக்கு, இன்னிக்கு பூராவும் ஒன் பக்கத்திலேயேதான் இருக்கப்போறேன்’னு சொல்வாருன்னு பாத்தா..!’ நேரம் அதிகரிக்க அதிகரிக்க, அவள் கோபம் மறைந்து, அந்த இடத்தை நம்பிக்கை ஆட்கொண்டது. `கடைக்குத்தான் போயிருப்பாரு, எனக்குப் புடவை எடுக்க!’ அந்த எதிர்பார்ப்பில், காலையில் எழுந்த ஏமாற்றம்கூட மறைந்தது. 13 திரும்பத் திரும்ப தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்துவிட்டன. வைத்தியின் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருந்த ரஞ்சிக்கு ஏமாற்றமாக இருந்தது. தான் எவ்வளவு அழகாக அலங்கரித்துக்கொண்டு, வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறோம்! இந்த மனிதர் இப்படி..! அந்த சமயத்தில் ஸ்கூட்டர் ஒலி கேட்க, வாசலுக்கு விரைந்தாள். “யாருன்னு கேக்காமலேயே கதவைத் திறக்கறியே! திருடனா இருந்து வெச்சா?” என்ற வைத்தியின் சிடுசிடுப்பு அவளைப் பாதிக்கவில்லை. அவன் வெறுங்கையை வீசிக்கொண்டு வந்ததுதான் கண்ணை உறுத்தியது. ஒரு வேளை, வேலை மும்முரத்தில் தான் காலையில் சொன்னதை மறந்துவிட்டாரோ? எதற்கும் இன்னும் ஒரு முறை நினைவு படுத்திவிடலாம் என்ற நப்பாசையுடன், “ஏங்க! இன்னிக்கு நான் எப்படி இருக்கேன்?” என்று கேட்டாள், ஒரு மயக்கும் பார்வையுடன். “ம்?” அசுவாரசியமாக அவளைப் பார்த்தவன், “காலையிலதானே பாத்தேன்! அதுக்குள்ளே ஜாடை மாறிடுமா?” என்றவன், “பவுடரைக் கொஞ்சம் குறைக்கலாம்,” என்று ஆலோசனை வழங்கினான். “என்னது?” ரஞ்சி உறுமினாள். வைத்தி சட்டெனப் பேச்சை மாற்றினான். “அடடே! மறந்துட்டேனே! ஒரு சாமான் வாங்கிட்டு வந்தேன். உள்ளே எடுத்துட்டு வர மறந்துட்டேன், பாரு!” “நான் போய் எடுத்திட்டு வரேன்! நீங்க இருங்க!” மகிழ்ச்சி தாங்காது, வெளியே ஓடினாள். ஒரு பெரிய பிளாஸ்டிக் பையுடன் திரும்பி வந்தவளிடம், “அதை இங்க கொண்டா!” என்று கையை நீட்டினான் வைத்தி. “ஊகும்!” ஒரு செல்லச் சிணுங்கலுடன் பையைத் திறந்தவளுக்கு குழப்பம் ஏற்பட்டது. எதற்கு ஒரே மாதிரியான இரண்டு சட்டைகள், அதுவும் ஆண்கள் அணிவது? “நம்ப கல்யாணத்தன்னைக்கு, ஒங்க வீட்டில எனக்குப் புது சட்டை, வேஷ்டி எல்லாம் எடுத்தாங்க இல்ல? அதான், ஒன் சார்பில எனக்கு நானே வாங்கிட்டு வந்துட்டேன்!” ஒரேயடியாக இளித்தான் வைத்தி. ரஞ்சியும் சிரிக்க முயன்று தோல்வியுற்றாள். “இப்ப விலைவாசி ரொம்ப அதிகரிச்சுப் போச்சா? வியாபாரமே கிடையாது,”என்றான் வைத்தி. “கடையெல்லாம் மூடறாங்க!” அதற்கு மேலும் எரிச்சசலை அடக்கிக்கொள்ள முடியவில்லை ரஞ்சியால். “அதுக்கு நீங்க ஏன் இப்படி பூரிச்சுப்போறீங்க?” “பின்னே? அம்பது வெள்ளி வித்ததெல்லாம் இப்போ இருபது! த்சொ! த்சொ! தொட்டுப்பாரேன்!” “என் கையிலதானே பிடிச்சுக்கிட்டு இருக்கேன்! அப்புறம் என்ன தொட்டுப்பாக்கறது!” என்று வள்ளென்று விழுந்த ரஞ்சி, “ஆமா? அது என்ன, ஒரே மாதிரி ரெண்டு சட்டை வாங்கி இருக்கீங்க?” என்று கேட்டேவிட்டாள். “மலிவாக் கிடைக்குதேன்னுதான்! எப்பவுமே, எனக்குப் பிடிச்சா, ரெண்டு, மூணா வாங்கிடுவேன்!” என்று விளக்கியவன், “மூணு வாங்கினா, ஒண்ணு இனாம்னு போட்டிருந்தாங்க. என் துரதிர்ஷ்டம், கையில காசில்ல,” என்று வருத்தப்பட்டான். அவனுடைய உற்சாகம் அவளையும் தொற்றிக்கொள்ளவில்லை என்பது புரிய, “பையை நல்லாப் பாரு!” என்று புதிர் போட்டான். அவள் கையில் கிடைத்தது ஒரு புடவை. “எப்படி?” அவன் குரலில் பெருமிதம். புதுப் புடவையை உடனே கட்டிக்கொண்டு தன் காலில் விழுவாள், `தீர்க்க சுமங்கலி பவ!’ என்று ஆசீர்வதித்து, தனது ஆயுளைக் கூட்டிக்கொள்ளலாம் என்று மனம் கணக்குப்போட்டது. ஆனால், பதிலுக்கு, “கேக்கணுமா? ஒங்க செலக்ஷனில்ல!” என்றபடி, அவள் விறைப்பாக அறைக்குள் சென்றது ஏனென்று வைத்திக்குப் புரியத்தான் இல்லை. அவன் மண்டையை உடைத்துக்கொண்டிருந்தபோதே, ரஞ்சி திரும்பி வந்தாள் — இரு கரங்களிலும் ஒரே மாதிரியான புடவைகளுடன். “தவறுதலா, ரெண்டு வெச்சுட்டாங்களா கடையில?” ஸ்ருதி இறங்கிப் போய் கேட்கையிலேயே, தான் எங்கோ குழறுபடி செய்துவிட்டோம் என்றவரையில் அவனுக்குப் புரிந்தது. “இது இன்னிக்கு வாங்கினது, இன்னொண்ணு, என்னோட பிறந்தநாள் பரிசா போன மாசம் நீங்க வாங்கிக் குடுத்தது”. “எனக்கென்னவோ, இந்தப் புடவையைக் கையில எடுத்ததுமே, இதில ஒன்னைப் பாக்கறமாதிரி இருந்திச்சு. பழைய ஃபாஷனா, மலிவு வேற!” என்று உளற ஆரம்பித்தவன், அவளுடைய ஏமாற்றத்தைக் கவனித்தான். தான் இப்போது மன்னிப்பு கேட்டால், செய்த தவற்றை ஒப்புக்கொள்வதுபோல் ஆகிவிடாதா! வீரமாக நடக்க உத்தேசித்தவனாக, “ஏதுடா! ஒருத்தன் நினை..வா, `வாங்கின இன்னிக்கே சம்பளமெல்லாம் காலி ஆகுதே!’ன்னுகூட யோசிக்காம, நமக்கு ஒரு சாமான் வாங்கிட்டு வந்திருக்கானேங்கிற நன்றிகூட சிலதுங்களுக்கு இருக்கறதில்ல, சே!” என்று பொதுப்படையாகத் திட்டினான். எதிர்பார்த்ததுபோல், அவள் பதிலுக்கு இரையவோ, பேசவோ செய்யாது இருந்தது அவனுக்கு ஆத்திரமூட்டியது. “ம்! அப்பவே எங்க பாட்டி சொன்னாங்க..!” என்று ஆரம்பித்தான். இந்த யுக்தி பலித்தது. வெடுக்கென தலைநிமிர்ந்தாள் ரஞ்சி. அவளைக் கவனியாததுபோல, வைத்தி தனது குரலை மாற்றிப் பேசிக்கொண்டே போனான்: “வைத்திநாதா! இவங்க குடும்பத்தில தாத்தா ஒருத்தர் யானைக்கால் வந்து செத்துப்போயிட்டாராம். ஒனக்கு வேண்டாண்டா இந்தப் பொண்ணுன்னு தலைபாடா அடிச்சுக்கிட்டாங்க. கேக்காம போனது என் தப்பு!” ரஞ்சி மட்டும் என்ன, சளைத்தவளா! “எங்கம்மாகூடத்தான் சொன்னாங்க, `இந்தப் பையனைப் பாத்தாலே எலும்பா இருக்காரு. டி.பியோ, வேற என்ன இழவு வியாதியோ! எதுக்கும் ரெண்டு, மூணு ஜோசியர்கிட்ட ஜாதகத்தைக் காட்டிடலாம்’ அப்படின்னு!” `அந்தக் குண்டுக் கிழவி இனிமே இங்க வரட்டும், பேசிக்கிறேன்!’ என்று உள்ளுக்குள் கறுவியபடி, “ஏன்? காட்டி இருக்கிறதுதானே?” என்று வீறாப்பாகக் கேட்டான் வைத்தி. “பின்னே? விடுவோமா? ஒருத்தர் சொன்னாரு, `இந்த ஜாதகப் பலன்படி, ஆறு மாசத்துக்குள்ள ஒரு சாவு வரும்’னு! பலிச்சுடுச்சே! எங்க பாட்டி..!” துக்கத்தை வரவழைத்துக்கொண்டாள். “நம்ப கல்யாணமாகி, ஒரே மாசத்தில..!” அலட்சியமாகக் கையை வீசினான் வைத்தி. “ஒங்க பாட்டிக்கு அப்போ எண்பத்தி எட்டு வயசு! கை, கால் விளங்காம, எத்தனையோ வருஷமா படுத்த படுக்கையா, எல்லாருக்கும் பாரமா இருந்தவங்க! ஏதோ, நான் ஒங்க வீட்டுக்கு வந்த நல்ல நேரம்..!” ரஞ்சி வெறுப்புடன் அவனை ஒரு பார்வை பார்த்தாள். “ஒங்களுக்குத் துளிக்கூட..!” முகத்தைத் திருப்பிக்கொண்டாள். “சே! எங்க பாட்டி மட்டும் ஒங்க பக்கம் பேசாம இருந்திருந்தா, இந்தக் கல்யாணமே நடந்திருக்காது, தெரியுமா?” வைத்தி முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு முணுமுணுத்தான்: `வயசான காலத்தில வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்காம..!’ “என்னது?” “இல்ல.. என்ன சொன்னாங்க ஒங்க பாட்டின்னு கேட்டேன்”. “இந்தப் பையன் அசடுமாதிரி இருக்கிறதால யோசிக்காதீங்க. நம்ப பொண்ணைப் பாத்து அவன் முழிக்கிற முழியைப் பாத்தீங்களா? அவளே கதின்னு, தாசானுதாசனா.. அவ காலடியில கிடப்பான்னு..!” “நான்! ஒன் காலடியில! நெனச்சிட்டிரு!” வைத்தி ஓங்கரமிட்டுச் சிரித்தான். “நான் விரும்பினா, ஒன்னைக் காலில போட்டு மிதிப்பேண்டி. ஏன்னா, நான் ஆம்பளை!” அவனுக்கு அந்த கஷ்டமெல்லாம் வைக்காது, உள்ளே போய் கதவைத்   தாழிட்டுக்கொண்டாள் ரஞ்சி. அடுத்து என்ன செய்வது என்று புரியாது விழித்த வைத்தியின் கண்களில் தரையில் அலங்கோலமாகக் கிடந்த புதிய துணிகள் பட்டன. `ம்! நல்லவனுக்குக் காலமில்ல!’ சுயபச்சாதாபம் எழுந்தபோதே, அவளை வசப்படுத்த என்ன வழி என்ற யோசனை வந்தது. வேகமாகப் போய், படுக்கையறைக் கதவைத் தட்டினான். “என்ன?” உள்ளே இருந்து வந்த குரல் அதிகாரமாகக் கேட்டது. “தூங்கணும்”. “அதான் சோஃபா இருக்கே! படுத்துக்கறது!” “எனக்கென்ன தலையெழுத்தா? சட்டப்படி, அந்தக் கட்டிலிலே பாதி எடம் என்னோடது!” சிறிது காத்திருந்து பார்த்துவிட்டு, அவள் வருகிறமாதிரி தெரியாததால், கதவை ஓர் உதை விட்டான். ரஞ்சியின் புண்பட்ட குரல் ஒலித்தது. “யாரும் கதவை ஒடைக்க வேணாம்!” அவனைப் பாராமலேயே கதவைத் திறந்துவிட்டு, சுவற்றுப் பக்கமாகத் திரும்பி மனைவி படுத்துக்கொண்டது வைத்தியின் ஆண்மையை உசுப்பிவிட்டது. கட்டிலின்மேல் ஏறப்போனவன், அதையும் ஓங்கி ஓர் உதை விட்டான். பலத்த சப்தம் கேட்டது. அந்த இருளில் இரு ரகசியக் குரல்கள் மட்டும் கேட்டன. “பலம்..மா அடி பட்டுடுச்சா?” “நல்லவேளை, மெத்து மெத்துனு ஒன்மேல விழுந்தேன். இல்லாட்டி, இந்த எலும்பு மனுஷனோட ஒடம்பில ரெண்டு மூணு எலும்பு ஒடைஞ்சிருக்கும்!” “நீங்க ஒண்ணும் அப்படி இல்ல. நான் சும்மா சொன்னேன்!” “நானும்தான். எந்த தாத்தா எப்படிப் போயிருந்தா நமக்கென்ன! நாம்ப, கொறைஞ்சது, அப்பா, அம்மாகூட ஆகலியே! மொதல்ல அதுக்கு ஒரு வழி பண்ணலாம். எப்படி நம்ப ஐடியா?” 14 ஊர் வாய் மிளகு குழம்பை சாதத்தில் கலந்து, ரசித்துச் சாப்பிடபடியே மணி கேட்டார்: “எங்கே, ரவியைக் கொஞ்ச நாளாக் காணும்?” “அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வந்தானில்ல? அவளுக்கு நான் ஆரத்தி எடுத்து, உள்ளே கூப்பிடலேன்னு கோபம் அவனுக்கு! கெடக்கான்!” அலட்சியமாகப் பேசினாலும், பாக்கியத்துக்கும் உள்ளூரக் கவலை. இருந்திருந்து, ஒரு ஆண்பிள்ளை. அழகன். பெரிய படிப்பு படித்து, நல்ல வேலையிலும் இருப்பவன். அவனாலாவது சமூகத்தில் மேலும் ஒரு படி உயரலாம் என்று கனவு கண்டிருந்தவளுக்கு, இப்படிச் சறுக்குகிறானே என்று வருத்தம் ஏற்பட்டது. அன்றுதான் எவ்வளவு தர்க்கம் செய்தான்! `எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. அவளுக்கும்..,’என்று ஏதேதோ பிதற்றவில்லை? `அவ நல்ல பொண்ணாவே இருக்கட்டும். ஆனா, கல்யாணத்துக்கு வர்றவங்க, `பொண்ணோட அம்மா பூவும், பொட்டுமா இருக்காங்களே! அப்பா எங்கே?’ன்னு கேக்கமாட்டாங்க?’ என்று அவள் உலக ஞானத்தைப் போதிக்க முயன்றும், அவனுடைய இளம் ரத்தம் அதை ஏற்க மறுத்தது. `அவங்க யாரு கேக்க?’ என்று இரைந்தான். `ஒலகத்தை ஒதுக்கிட்டு, நாம்ப மட்டும் தனிச்சு இருந்திட முடியாதுடா!’ என்று கெஞ்சலில் இறங்கினாள் அன்று. `உள்ளதைச் சொல்லிட்டுப்போறது! அவங்கப்பா வேற பொண்ணோட தொடர்பு வெச்சிருந்தார். அதனால..!’ `சிரிப்பாங்க!’ அவன் முடிப்பதற்கள் பாக்கியம் இடைவெட்டினாள். `அவரு ஆம்பளை! ஒண்ணில்ல, ரெண்டு பொண்ணுங்களைச் சேத்துக்கலாம். அவரோட சந்தோசம்தான் முக்கியம்னு இல்ல இருந்திருக்கணும் அவங்கம்மா? அதை விட்டுட்டு, இப்படி.. நாலு பேர் வாயில புகுந்து வர்றமாதிரி..,’ மிகச் சன்னமான குரலில் முடித்தாள். `அப்பா அந்த மாதிரி ஏதாவது செஞ்சிருந்தா, அப்போ புரியும் ஒங்களுக்கு, அந்தம்மா பட்ட வேதனை!’ `என்னை ஏண்டா இழுக்கறே?’ என்று அன்று பரிதாபமாகக் கேட்கத்தான் முடிந்தது மணியால். `சண்டையை ஆரம்பித்தவளே இன்று மகனுக்காக ஏங்குகிறாள்! அம்மாவும் மகனும் எப்படியோ போகட்டும்!’ என்று அலுத்தபடி, தனது செடிகளை திரவ உரத்தால் குளிப்பாட்ட தோட்டத்துக்கு நடந்தார் மணி. 15 இதுதான் உலகம் `காதல்’ என்றாலே கிளர்ச்சி, சிரிப்பு, நிறைவான எதிர்காலம் என்றுதான் நினைத்திருந்தான் ரவி. தன் பெற்றோரைச் சந்திக்க ராதிகாவை அழைத்துப் போனதிலிருந்து அந்த நம்பிக்கை ஆட்டம் கண்டது. பெற்றோரை மீறித் தான் அவளை மணக்க சித்தமாக இருக்கிறோம். அது அவளுக்கு ஒரு பொருட்டாகவே படவில்லையா? இல்லாவிட்டால், தொலைபேசியில் அழைத்தால்கூட, உடனே அந்த இணைப்பைக் கத்தரித்துவிடுவாளா? வேலை முடிந்ததும், அவளுடைய வீட்டுக்கே போய் சந்திக்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்தான். ராதிகாவைப் பார்க்கப்போகிறோம் என்ற எண்ணத்திலேயே புத்துணர்ச்சி பிறந்தாற்போல் இருந்தது. பெரிய காம்பவுண்டுக்குள் அமைந்திருந்தது அவ்வீடு. அந்த இடத்தின் மகிமை கூடுவதற்குமுன், அவளுடைய தாத்தா தனது ஆயுள்கால சேமிப்புப் பணத்தை எல்லாம் கொட்டி, அவ்வீட்டை வாங்கிப் போட்டிருந்தார். இப்போது அவரில்லை. ராதிகாவும், அவளுடைய அம்மா பவானியும்தான் ஒருவருக்கு ஒருவர் துணை. அவர்களுக்கு ப்ரூஸ் துணை. ரவி கேட்டருகே நின்றுகொண்டு, அழைப்பு மணியை அழுத்தக் கையைத் தூக்கியபோது, உற்சாகமாக வாலை ஆட்டியபடி ப்ரூஸ் குரைத்தது. திரைச்சீலையை விலக்கியபடி பார்த்தது ஒரு முகம். “ராதிகா இல்லியே!” புறப்படும்போது இருந்த உற்சாகம் வடிந்துபோயிற்று. அடுத்து என்ன செய்வது என்று புரியாது, விழித்தபடி நின்றான். அவனுடைய தடுமாட்டத்தைக் கண்ட பவானி, “வரேன்!” என்று குரல் கொடுத்தாள். இருவரும் எதிரும் புதிருமாக, அழகிய வேலைப்பாடமைந்த தாழ்வான மர நாற்காலிகளில் உட்கார்ந்த பின்னரும், ரவிக்குப் பேச நாவெழவில்லை. மெள்ள, “ஆன்ட்டி! ராதிகாவை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன்..” என்று இழுத்தான் ரவி. “ஓ!” தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள் பவானி. “தெரியுமா?” “ஊகும்!” “என்ன ஆச்சுன்னு நீங்க கேக்கலியே!” பவானி சிரிக்க முயன்றாள். முடியவில்லை. தோள்கள் கோணலாகச் சரிய உட்கார்ந்திருந்த அவளும், கூனியபடி அமர்ந்திருந்த ரவியும் ஒரே அலைவரிசையில் இருந்ததை அவர்கள் உடலாலேயே ஊகிக்க முடிந்தது. “இப்போ எதுக்குப்பா வந்திருக்கே?” “நீங்கதான் ராதிகாகிட்ட சொல்லணும். மத்தவங்க..,”இரு கரங்களையும் அலட்சியமாக வீசினான், `எப்படியோ தொலைகிறார்கள்!’என்பதுபோல். “பெண்ணுக்கு அம்மா நீங்க இருக்கீங்க. ரெஜிஸ்டர் ஆபீசில..” பவானியின் கண்களில் லேசான சிரிப்பு. “இதைப்பத்தி ராதிகிட்ட சொல்லி இருந்திருப்பியே?” வேதனையுடன் தலையசைத்தான் ரவி. “மாட்டேன்னு ஏன் சொல்லணும்? அதான் எனக்குப் புரியல. நான்தான் சட்டபூர்வமா..,” என்று ஆரம்பித்தான். பவானி எழுந்தாள். ஜன்னலுக்கு வெளியே தெரிந்த காட்சியை வெறித்தாள். “ஒனக்கு இந்த ஒலகம் புரியல, ரவி. நான் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய நிலைமை. ஆனா, மத்தவங்களைப்போல, ஆபீஸ் முடிஞ்சதும், கூட வேலை செய்யறவர் ஒருத்தர் காரில நான் வீடு வர முடியாது. இது என் அனுபவத்தில பாத்தது. ஒரு தடவை, தெரியாத்தனமா, அப்படி நடந்தப்போ, அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் வெளியே நின்னு வேடிக்கை பாத்தாங்க. `ஒனக்கு.. அப்படி என்னம்மா வேலை?’ இப்படிக் கேட்டவங்களும் உண்டு!” அவளுடைய சோகம் அந்த அறை முழுவதும் வியாபித்ததுபோல் இருந்தது. ரவி வாளாவிருந்தான். தான் எது சொன்னாலும் சரியாக இருக்காது என்றவரை அவனுக்குத் தெரிந்தது. “நீ மொதல் தடவை எங்க வீட்டுக்கு வந்தப்போவே, நீ மத்தவங்கமாதிரி இல்லேன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஒங்கப்பா, அம்மாவும் அப்படித்தான் இருப்பாங்கன்னு நினைச்சது என் தப்பு!” அம்மாதுவின் குரலில் விரக்தி. “ராதி ஒன் ஃப்ரெண்டா இருக்கலாம். ஆனா, மத்தவங்க அவளை என் மகளா இல்ல பாக்கறாங்க!” பேசுவதற்கு இனி எதுவுமில்லை என்று புரிந்தவனாக, ரவி மெள்ள எழுந்து, வாயிலை நோக்கி நடந்தான், ஒரு தலையசைப்போடு விடைபெற்றுக்கொண்டு. பவானியின் குரல்அவனைப் பின்தொடர்ந்தது. “இத்தனை வருஷத்தில ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கிட்டேன. ஒரு குடும்பத்தில தப்பு செஞ்சது யாரா இருந்தாலும், தண்டனை அனுபவிக்கறது என்னமோ பொண்ணுதான்!” 16 பொய்க்கோபம் நிஜமாகியது இரவு மணி பத்தாகியது. சாப்பிட்டு முடிந்ததுமே வைத்தி படுக்கப் போய்விட்டான். ரஞ்சி இரவு பன்னிரண்டுவரை டி.வியின் முன் அமர்ந்து, அசையாது தவம் செய்துவிட்டுத்தான் வருவாள். கல்யாணம் ஆகிவிட்டதால் மட்டும் பல வருடப் பழக்கத்தை விட்டுவிட வேண்டுமா, என்ன! தூக்கம் வராது புரண்டுகொண்டிருந்தான் வைத்தி. அது எப்படி தனக்கும் ரஞ்சிக்கும் சில மாதங்களாக வாக்குவாதமே நிகழவில்லை என்ற வேண்டாத யோசனை வந்தது. வயது கூடிக்கொண்டே போனதில், இருவருக்குமே மனப்பக்குவம் வந்துவிட்டது போலும் என்று எண்ணினான். ஆனால், அதை ஏற்கத்தான் கடினமாக இருந்தது. ஏற்கெனவே, முன் நெற்றியில் வழுக்கை. இப்படி கன்னா பின்னா என்று முதுமை வருவதைத் தடுக்க, ஒரே வழிதான்: ரஞ்சியைச் சீண்டவேண்டும். வர வர, அவள் தன்னை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எப்போதும், டி.விதான். கேட்டால், `தினம் தினம் ஒங்ககூட பேச அப்படி என்ன விஷயம் இருக்கு?’ என்றுவிடுவாள். இருக்கட்டும், இன்று அவளை ஒரு கை பார்த்துவிடுவோம் என்று முன் ஹாலுக்கு வந்தான். “ம்! எழுந்திரு!” திரையிலிருந்து கண்ணை அகற்றாமலேயே சொன்னாள்: “அப்படிப் போய் ஒக்காருங்களேன்! வேற இடமா இல்ல?” “அது என்னவோ, இங்க ஒக்காந்தாத்தான் எனக்குப் படம் பாத்தமாதிரி இருக்கும்!”சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னான். “எனக்கும்தான்!” என்றாள் பத்தினி. “வெளையாடறியா? அப்படியே பாத்தாதான் ஒனக்கு என்ன புரியப்போகுது?” அவனை நன்றாகத் திரும்பிப் பார்த்த ரஞ்சி விழித்தாள். “ஏனாம்? எனக்குத் தமிழ்ப்படம்கூடப் புரியாதா?” `உளறிவிட்டோமே!’ என்று நாக்கைக் கடித்துக்கொண்டான் வைத்தி. திகைப்பு நீங்கியவுடன், “ரஞ்சி! ரஞ்சி! ஒன் கன்னம் எப்படி ஒட்டிப் போயிருக்கு!” என்று கொஞ்சலில் இறங்கினான். “அனாவசியமா தூக்கம் முழிக்காதம்மா. காலாகாலத்தில போய் படுத்துக்க!” “நான் என்ன, சிவாஜியோட பூந்தோட்டத்திலேயும், ஆத்தங்கரையிலேயும் டூயட் பாடிட்டு, ஓடவா போறேன்?” வைத்தியின் முகம் கோணியது. “சிவாஜி இங்க எங்க வந்தாரு?” முகம் மலரச் சொன்னாள்: “இந்தப் படத்தில அவர்தாங்க ஹீரோ!” விளையாட்டாகச் சண்டை போடலாம் என்று எழுந்து வந்த வைத்திக்கு அப்போது நிஜமாகவே கோபம் வந்தது. “நீ இதைப் பாக்கப்போறதில்ல!” என்றான் கண்டிப்பாக. ரஞ்சிக்கும் கோபம் வந்தது. “பாப்பேன்!” “அதெல்லாம் கிடையாது. நான் கால் பந்தாட்டம் பாக்கப்போறேன். ஸ்டேடியத்தில நடக்கிறதை ஒடனுக்குடனே..”. ரஞ்சி ஏளனத்துடன் உதட்டைப் பிதுக்கினாள். எல்லாம் சிவாஜியின் நடிப்பின் பாதிப்புதான். “அதையும் ஒரு விளையாட்டுன்னு பாக்கறாங்களே! ஒரே ஒரு பந்தை வெச்சுக்கிட்டு, அதுக்காக பல பேர் அடிச்சு ஒதைச்சுக்கிட்டு! சே! சரியான காட்டுமிராண்டித்தனம்!” “அதுக்காக ஆளுக்கு ஒரு பந்தா வாங்கிக் குடுப்பாங்க? என்று தன்பங்குக்கு வாதாடினான் வைத்தி. “நீங்க என்ன சொன்னாலும் சரி. நான் இந்த எடத்தைவிட்டு நகரப்போறதில்ல,” என்று அறிவிப்பு செய்தவள், “வேணுமானா, நீங்களும் எங்கூட ஒக்காந்து..,” என்று பெரிய மனது பண்ணினாள். வைத்தியின் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் போயிற்று. “நீயே பாத்து ரசிச்சுக்க. சிவாஜி ஒனக்குத்தான் பாய் ஃப்ரெண்ட்!” அறைக்குள் வேகமாகப் போனவன், சட்டையை மாற்றிக்கொண்டு, அதே வேகத்தில் வெளியே செல்வதை ரஞ்சி கவனித்தாள். ` ரசனை இல்லாத ஜன்மம்!’ என்ற பட்டத்தை அவனுக்கு வழங்கிவிட்டு, படத்தில் ஆழ்ந்தாள். ஒரு வழியாகப் படமும் முடிந்தது. தள்ளாடியபடி அறைக்குள் நுழைந்தவள் உடனே உறங்கிப்போனாள். இனிய கனவுகள் வந்தன. அவைகளில் வைத்தி இல்லை. தூங்கி எழுந்ததும், முதல் நாள் படத்தில் கேட்ட டூயட் பாட்டை தானே குரலை மாற்றி மாற்றிப் பாடியபடி அறைக்கு வெளியே வந்த ரஞ்சிதம், நிலைகுலைந்து சோபாவில் சாய்ந்திருந்த கணவனைப் பார்த்ததும் சற்றே திடுக்கிட்டாள். லேசான குற்ற உணர்ச்சி வந்தது. “ராத்திரி பூராவும் இப்படியேவா ஒக்காந்துக்கிட்டு இருந்தீங்க?” அவள் குரல் காதில் விழாதவனாக, எதிரிலிருந்த சுவற்றையே வெறித்துக் கொண்டிருந்தான் வைத்தி. “ஏங்க? கேக்கறேனே! படுக்கக்கூட சோபாதானா?” திரும்பிப் பாராது பதிலளித்தான். “ரொம்பக் கரிசனம்தான்!” “இல்லியா, பின்னே?” என்றாள் ரஞ்சி. “நீங்க சிவாஜிமாதிரி பெரிய ஒடம்புக்காரர் இல்லதான். இருந்தாலும், சோபாவோட ஸ்ப்ரிங் ஒடைஞ்சுடாது?” என்று ஆதங்கப்பட்டாள். போகிற போக்கில், “ரொட்டி வாங்கி வெச்சிருக்கேன். சாப்பிடுங்க!” என்ற உபசாரம் வேறு. வைத்தியால் அதற்குமேல் தாங்கமுடியவில்லை. “எல்லாத்தையும் நீயே கொட்டிக்க!” என்று எரிந்து விழுந்தான். இப்போது ரஞ்சிக்கும் கோபம் வந்தது. “நல்லதாப்போச்சு! நான் இன்னிக்கு சமைக்க வேணாம்! பத்தரை மணிப் படமும் பாக்கலாம்!” அன்று பிறமொழிப் படம்தான் என்பது சற்று பொறுத்து நினைவு வர, “இன்னிக்கு என்னங்க சமைக்கிறது?” என்று சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள். `எதையோ பண்ணு. எல்லாம் ஒரே லட்சணமாத்தான் இருக்கும்!’ என்று தோன்றியதை சொல்லத் தைரியம் வரவில்லை வைத்திக்கு. “சே! சரியான தொணதொணப்பு! மனுஷன் மனசு ஒடைஞ்சு போயிருக்கிறப்போ..!” “ஆமா! நீங்க என்னிக்கு சிரிச்ச முகமா இருந்திருக்கீங்க? எப்பவும் விளக்கெண்ணை குடிச்சமாதிரி..,” நொடித்தாள். “நேத்து, காசு குடுத்து டிக்கட் வாங்கி, ஸ்டேடியத்துக்குப் போனேனா! நான் ரொம்ப நம்பிக்கிட்டிருந்த டீம் என்னை ஏமாத்திடுச்சு, ரஞ்சி!” கைகளில் தன் முகத்தைப் பதித்துக்கொண்டான். அனாவசியமாகக் காசு செலவழிந்துவிட்டதே என்ற ஆத்திரமும், காலை வேளையில் தன் `மூடை’யும் கெடுக்கிறாரே என்ற கோபமும் சேர, “எவன் தோத்தா ஒங்களுக்கென்ன? ஏன் இப்படி புத்திக்கெட்டத்தனமா..!” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். அதுவரை இல்லாத உத்வேகத்துடன் எழுந்தான் வைத்தி. அவளுடைய இரு தோள்களையும் பற்றி உலுக்கினான். “சீ! என் வருத்தம் துளியாவது புரிஞ்சா, இப்படிப் பேசுவியா! நீயெல்லாம் ஒரு மனுஷி, உனக்கு ஒரு கல்யாணம்!” அவன் கையை விட்ட வேகத்தில் ரஞ்சிதம் கீழே விழுந்தாள்– உட்கார்ந்த நிலையில், காலைப் பரத்தியபடி. பதறிப்போய், அவளைத் தூக்கிவிடக் கையை நீட்டினான் வைத்தி. ரஞ்சிக்கு அழுகை குமுறியது. அவனைக் கவனிக்காது, தன் போக்கில், “இப்படி அடிபட்டுச் சாகத்தானா என்னை.. ஒங்களுக்கு..!” என்று, மணிரத்னம் பாணியில், முழுவதுமாகச் சொல்லி முடிக்காது, “நான் எங்கேயோ தொலைஞ்சு போறேன்,” என்று முடித்தாள். நிதானமாக எழுந்தாள். விளையாட்டாக ஆரம்பித்த சண்டை வினையாகிவிடும்போல இருக்கிறதே என்ற பயம் பிடித்துக்கொண்டது வைத்தியை. “ரஞ்சி, ரஞ்சி!” என்று அவள் கழுத்தில் விரல்களால் விளையாடப்போனான். “கிட்ட வராதீங்க! நான் எங்கம்மா வீட்டுக்குப் போய் தொலையறேன்!” என்று மிரட்டியவள், “இனிமே, தாராளமா ஒங்களுக்குப் பிடிச்சதை டி.வியில போட்டுக்குங்க!” என்று சேர்த்துக்கொண்டாள். மனைவி தன்னைவிட்டு விலகப்போகிறாள்! அடிப்பிடித்த சாதமோ, உப்பு சப்பில்லாத, தீய்ந்துபோன பதார்த்தங்களோ, இனிமேல் அவைகூட வீட்டில் கிடைக்காது என்ற யதார்த்தம் உறைக்க, கவலை ஆட்கொண்டது வைத்தியை. 17 போன மச்சி திரும்பி வந்தாள் பாக்கியம் சமைத்துக்கொண்டிருந்தாள். எப்போதும்போல் முதல் நாள் டி.வியில் பார்த்த படத்தின் லட்சணங்களை அலசாது, மகள் பிரமையாய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து, ஏதோ விஷயம் இருக்கிறது!’ என்றவரை புரிந்தது அவளுக்கு. அந்த அசட்டுப் புருஷன் நினைவோ? ஊகும். நம்பும்படியாக இல்லையே! இருவரும் அப்படி ஒன்றும் ஒருவருக்காக மற்றவர் உருகுவதைப்போலத் தெரியவில்லையே! பலவிதமான யோசனைகள் வந்தவண்ணமிருந்தன , குழம்பில் உப்பு போட்டோமா, இல்லையா என்பதுகூட மறந்துவிடும் என்ற பயமெழுமளவுக்கு. இறுதியில், வெளிப்படையாகவே கேட்டாள்: “கண்ணு! வந்ததிலிருந்து இப்படி ஒரே இடத்தில, பிரமையா ஒக்காந்திருக்கியே! ஒங்க வீட்டுக்குத் திரும்பிப் போற உத்தேசமே இல்லியா?” “நான் இனிமே அங்க போகப் போறதில்லம்மா!” அதிர்ச்சி தாங்காது, வாயைப் பொத்திக்கொண்டாள் பாக்கியம். “ஓயாம ஏசுவாரு. பொறுத்துக்கிட்டேன். இப்போ,” ரஞ்சி விம்மினாள். “இப்போ.. அடி வேற!” “ஐயையோ!” பாக்கியம் அலறினாள். “ஒன்னை கைநீட்டி அடிக்கிறவரைக்கும் போயிட்டாரா? நீ என்னடி கண்ணு செஞ்சே?” “அப்படியே மல்லாக்க விழுந்தேம்மா!” காலைப் பரத்திக்கொண்டு தான் விழுவதுபோல் ஒரு பிரமை ஏற்பட, ரஞ்சிதம் தன் உடலைக் குறுக்கிக்கொண்டாள். பாக்கியம் அடுப்பைத் தணித்தாள், இன்னும் அதிகக் கவனத்தை மகளின்பால் செலுத்த வசதியாக. “படுபாவி!” அனுபவித்துச் சொன்னாள். “ராத்திரி தவறாம, ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டு வெளியே போயிடுவாருன்னு சொன்னே பாரு, அப்பவே எனக்குச் சந்தேகம்தான்!” ரஞ்சி குழம்பினாள். கணவர் மீ (நூடுல்ஸ்) சாப்பிடப் போனதற்கும், தான் அடிபட்டுக் கிடந்ததற்கும் என்ன சம்பந்தம்? பாக்கியம் அடுப்பை அறவே அணைத்தாள், விஷயம் தான் நினைத்ததைவிடப் பெரிது, அதை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று. அருமை மகளின் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு, “ஏம்மா அடிச்சாரு?” என்று கொஞ்சினாள். அம்மாவை எப்படி உசுப்புவது என்று மகளுக்கா தெரியாது! “அவருக்கு நம்ப யாரையுமே பிடிக்கலேம்மா. என்னை மட்டும் சொன்னா பொறுத்துக்கலாம். ஆனா, ஒங்களைக்கூட தாறுமாறா..!” 18 நண்பனின் உபதேசம் “ரஞ்சி! கோப்பி!” படுக்கையிலிருந்து குரல் கொடுத்தபின்தான் வைத்திக்கு ஞாபகம் வந்தது, தன்னை அனாதையாக விட்டுவிட்டு, மனைவி பிறந்தகம் போய் சொகுசாக இருக்கிறாள் என்ற உண்மை. துக்கம் தாளாது, இழுத்துப் போர்த்துக்கொண்டு படுத்தான். தலையை மூடிக்கொண்டால் மட்டும் பசி அடங்கிவிடுமா என்ற ஞானோதயம் எழ, சிறிது பொறுத்து `ஃபூட் கோர்ட்’டை அடைந்தான். ஒரு பெரிய வளாகத்துள் நீண்ட வராந்தா. அதில், அலுமினியம் பூசப்பட்டு, வெள்ளியாகவே மின்னும் பிளாஸ்டிக் நாற்காலி மேசைகள். சின்னச் சின்னதாக பத்துப் பதினைந்து கடைகள். சண்டை பூசலுக்கு இடமில்லாது, ஒவ்வொன்றிலும் கிடைக்கும் சாதம், ரொட்டி சனாய், மீ வகைகள், கறி, சூப், சூடான பானங்கள், பழச்சாறு வகைகள் என்று விதவிதமாக தத்தம் கடைகளுக்குமேல் பலகையில் எழுதி வைத்திருந்தார்கள். பலவித உணவுப் பண்டங்களின் வாசனையைப் பறைசாற்றும் புகை, வெளியே குழந்தைகளுக்காக வண்ண வண்ண சறுக்கு மரங்கள் இத்தியாதிகளுடன், பசி இல்லாதவரையும் உள்ளே ஈர்ப்பதாக இருந்தது அவ்விடம். வைத்தியோ, காலை வேளையிலேயே, அதுவும் விடுமுறை நாளில், இப்படிப் பணம் கொடுத்து சாப்பிட வேண்டியிருக்கிறதே என்ற விரக்தியிலிருந்தான். “மாமாக்! . நாலு ரொட்டி புங்குஸ் (மலாயில் bungkus என்றால் பார்சல்)!” பழக்கமான குரல் கேட்க, வைத்தி திரும்பினான். (இந்திய முஸ்லிம்களை `மாமாக்’ என்றுதான் அழைப்பார்கள், மலேசியாவில்). “ரஹீம்!” என்று மகிழ்ச்சியுடன் கூவினான். முன்பு அவனுடன் ஒரே அறையில் குடியிருந்த நண்பன். நாலைந்து வயது பெரியவனாக இருப்பான். இரு சகோதரிகள் `நாம் எப்போதும் பிரியவே கூடாது!’ என்று சிறு வயதிலேயே சத்தியம் செய்துகொண்டதில், ரஹீமுக்கு அடித்தது அதிர்ஷ்டம். “அட! வைத்தியா? எங்க இப்படி?” “இனிமே எப்பவும் இப்படித்தான்!” என்றான் வைத்தி, அழமாட்டாக் குறையாக. வாய்விட்டுச் சிரித்தான் நண்பன். “ஒங்கூட சண்டை போட்டுக்கிட்டு, வீட்டில அம்மா வீட்டுக்குப் போயிட்டாங்களாக்கும்!” என்று கேட்டான் அந்த அனுபவஸ்தன். பதிலுக்குக் காத்திராமல், “மாமாக்! இங்க சாப்பிட ரெண்டு ரொட்டி!” என்று கூவினான். வைத்தியின் அருகே உட்கார்ந்துகொண்டான் ரஹீம். சமாசாரம் இவ்வளவு சுவாரசியமாகப் போகும்போது, வீடு திரும்ப என்ன அவசரம்! “மொதல் தடவையா அவங்களை விட்டுப் பிரிஞ்சு இருக்கியாக்கும்!” என்று நிலைமையை ஊகித்தான். “ம்! ஒரு நாள்கூட நான் அவளை விட்டுப் பிரிஞ்சதில்லே!” வருத்தம் தாங்காது, வைத்தி தலையைக் குனிந்துகொண்டான். “அதாவது.., ஒரு ராத்திரிகூட..!” விஷமமாகக் கண்ணைச் சிமிட்டினான் தோழன். `வீணாப்போனவன்! பேசறதைப் பாரு! ரெண்டு கட்டியும், ஆசை அடங்கலே!’ என்று மனத்துள் திட்டிக்கொண்டான் வைத்தி. `நாம்ப ஒண்ணையே சமாளிக்க முடியாம திண்டாடறோம், இவன் எப்படி ரெண்டு பெண்டாட்டியைச் சமாளிக்கிறான்!’ என்ற வியப்பும் ஒருங்கே எழ, நண்பன்மேல் மதிப்பு கூடியது. ரொட்டி சனாயை மீன் குழம்பில் நன்றாகப் புரட்டி, வாயில் திணித்துக்கொண்ட ரஹீம், “எத்தனை நாழாச்சு அவங்க ஒன்னை விட்டுப்போய்?” என்று துக்கம் விசாரித்தான். கைகடிகாரத்தைப் பார்த்தபடி வைத்தி யோசித்தான். “ம்..இப்போ என்ன, மணி ஒன்பதரையா? அது ஆச்சு, ஒரு மாசம், ரெண்டு நாள், ரெண்டு மணி, நாப்பத்து மூணு..” அதற்குமேலும் பொறுக்க முடியாது, வாயிலிருந்ததை அவசரமாக விழுங்கினான் ரஹீம். “நிறுத்துடா. நாம்ப என்ன, ராக்கெட்டா விடப்போறோம்? என்ன ஆச்சு? அதைச் சொல்லு மொதல்ல. அப்புறம் ஏதாவது வழி பண்ணலாம்!” “நான் ஒண்ணுமே செய்யல!” துப்பு துலக்கிவிட்ட உற்சாகத்துடன், “அதானே பாத்தேன்!” என்று தொடையைத் தட்டிக்கொண்டான் ரஹீம். “சீ! அதைச் சொல்லல. நீ இருக்கியே!” போலி அருவருப்புடன் தோளைக் குலுக்கினான். “நடந்ததில என் தப்பு எதுவுமே இல்லன்னு சொல்ல வந்தா..!” வைத்தியின் மறுப்பையும், தாக்குதலையும் அலட்சியப்படுத்திவிட்டு, அவனையே உற்றுப் பார்த்தான் நண்பன். “இதோ பாரு, வைத்தி! கல்யாணம் செய்துகிட்டா மட்டும் போதாது. அதுக்குன்னு சில விதிமுறைங்க இருக்கு. அது தெரியாம..!” என்று அலுத்துக்கொண்டான். வைத்தியின் விழிகள் மேலும் பெரிதாகின. “கேளு! மனைவியோட சண்டை போட்டா, ஒடனே போய் அவங்ககிட்ட பேசிடக்கூடாது,” என்று முதல் பொன்மொழியை உதிர்த்தான். வைத்திக்கு அவநம்பிக்கை பிறந்தது. “இதயமே வெடிச்சுடற மாதிரி இருந்தாக்கூடவா?” “இதயம் என்ன, கண்ணாடியிலேயா பொருத்தி வெச்சிருக்கு? கேளேன், எங்க தாத்தா ஒருத்தர். பாக்கறதுக்கு ஒன்னைவிட மோசமா இருப்பார். அவர் போறப்போ தொண்ணுறு வயசு!” என்று பேசிக்கொண்டு போனவனுக்கு, சட்டென விஷயம் புரிந்தது. “நீ டி.வியில விளையாட்டுதான் பாப்பேன்னு அடம் பிடிச்சியா?” குருவைப் பார்ப்பதுபோல், பரவசத்துடன் நண்பனைப் பார்த்தான் வைத்தி. “அது எப்படி ரஹீம், கூட இருந்த பார்த்தமாதிரி..!” என்று வாயைப் பிளந்தான். அலட்சியமாகக் கையை வீசிய ரஹீம், “வீட்டுக்கு வீடு வாசப்படி! ஒரு தடவை பாரு, எனக்கு வந்த கோபத்தில, ஒரு சின்ன டி.வி வாங்கி, என் படுக்கை அறையில வெச்சுக்கிட்டேன்!” என்று ஏதோ சொல்லிக்கொண்டு போன நண்பனை மகிழ்ச்சியுடன் இடைமறித்தான் வைத்தி. “இது எனக்குத் தோணாம போச்சே! கொஞ்சம் செலவானாலும், இப்படி சாப்பாட்டுக்குத் திண்டாட வேண்டாம், பாரு!” காதில் வாங்காது தொடர்ந்தான் ரஹீம். “பெரிசில பிள்ளைங்க, மெய்ட் எல்லாரும் படம் பாப்பாங்க. ஒரே சத்தமா இருக்குமில்ல? என் மனைவியும் உள்ள வந்துடுவாங்க!” வைத்திக்கு ஏதோ புரிந்ததுபோல் இருந்தது. “ஓ! ஒண்ணா ஃபுட் பால் பாப்பீங்களா?” ரஹீம் தலையில் அடித்துக்கொண்டான். “யாருடா இவன்! அதைப் பாத்தா, சண்டை போடற மூட் இல்ல வரும்! வீடியோவில தமிழ், இல்ல ஹிந்திப் படமா போட்டுப் பாப்போம். நாலு அழகான பொண்ணுங்களைப் பாத்தா..!” கண்ணைச் சிமிட்டினான். வைத்தி குழம்பினான். “ஹீரோவுமில்ல இருப்பான்? அந்த தடியனைப் பாத்து, என்னோட ரஞ்சி ரசிச்சா?” `நீ இருக்கிற லட்சணத்துக்கு, எவனைப் பாத்தாலும் ரசிக்கத்தான் தோணும்!’ என்று நினைத்துக்கொண்டான் ரஹீம். “ஏண்டா? இதெல்லாம் ஒரு கேள்வியா? ஒன் பங்குக்கு, நீயும் காதாநாயகியை `ஆகா, ஓகோ’ன்னு புகழ வேண்டியதுதான்!” என்று ஐடியா தந்தான். “அதுக்குமில்ல சண்டை வருது!” இப்போது தனது நிலைமை குறித்து ரஹீமுக்குப் பெருமிதம் ஏற்பட்டது. “என் மனைவி ரொம்ப விவரம் தெரிஞ்சவங்க. எந்தப் பொண்ணை வேணுமானாலும் நான் புகழலாம் — அவ எட்டாத தூரத்தில இருக்கிறவரைக்கும். சில சமயம் பாரு, ஆபீசுக்கே ஃபோன் போட்டு, `இன்னிக்கு ஆஸ்ட்ரோவில ஹன்சிகா படம்! மறந்துடாதீங்க,’ ன்னு ஞாபகப்படுத்துவா!” தனக்கு இப்படிப்பட்ட அதிர்ஷ்டம் வாய்க்கவில்லையே என்ற ஏக்கம் தொண்டையை அடைக்க, எதிரிலிருந்ததை சாப்பிடாது, ஏக்கமாக உட்கார்ந்திருந்தான் வைத்தி. `சரியான அழுமூஞ்சி! இவனோட யார் இருக்க முடியும்!’ நண்பனுக்கு அலுப்பாக இருந்தது. “நான் சொன்னதை எல்லாம் நல்லா காதில வாங்கிக்கிட்டே, இல்லியா?” என்றபடி எழுந்தான். வைத்தி தலைநிமிர்ந்தான். “செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேக்கணும்கிறே!” என்றான், முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு. ரஹீம் மீண்டும் உட்கார்ந்தான். “இதோ பாரு, வைத்தி! காதல் விவகாரத்திலே தப்பு, சரி எல்லாம் பாக்கக்கூடாது. பொம்பளைங்க வழிக்கு வரணும். அதான் முக்கியம்,” என்று உபதேசித்தவன், “ம்! மன்னிப்பு கேட்டியா! அடுத்தது — ரொம்ப வருத்தமா காட்டிக்க,” என்று பாடத்தைத் தொடர்ந்தான். “இப்போ மட்டும்?” துணிக்கு அளவெடுக்கும் தையல்காரர்போல் வைத்தியை மேலும் கீழும் பார்த்தான் ரஹீம். “ஊகும். இது போதாது. இன்னும் கொஞ்சம் கூன் போடலாம்,” என்று சினிமா இயக்குனராகவே மாறியவன், “ஒனக்கு இருமல் வருமில்ல?” என்று சம்பந்தமில்லாது ஏதோ விசாரிக்கப்போக, வைத்தி ஆக்ரோஷமாக, “பேசப்படாது. நாலு வருஷமா, தினமும் காலையில ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு, சுடுதண்ணி விட்டு, கொஞ்சம் உப்பையும் கலந்து குடிக்கிறேன்,” என்று தெரிவித்துவிட்டு, “எங்க பாட்டி சொல்லிக் கொடுத்தாங்க!” என்று பெருமையுடன் சேர்த்துக்கொண்டான். “அடப்பாவி! இது ஒடம்பு எளைக்கப் பண்ணற வைத்தியம்! ஒனக்கெதுக்குடா?” என்று அதிர்ந்த ரஹீம், “சரி. சரி. கொஞ்ச நாளைக்கு இந்தக் கண்ராவியை நிறுத்தி வை. அப்புறம்..,” மீண்டும் கண்களால் அளந்தான். “லேசா தாடி வளக்கலாம். என்ன, நான் சொல்றது விளங்குதா? ஒன்னைப் பாத்தா, அப்படியே அவங்களோட தாய்மை உணர்ச்சி பொங்கணும்!” “அருவருப்புப்பட்டு ஓடிட்டா?” “சேச்சே! ஒன்னைக் கல்யாணமே பண்ணிக்கிட்டு இருக்காங்க!” “நீ சொல்றது பலிக்காட்டி?” “நோ ப்ராப்ளம்! வேற யோசனை தந்துட்டுப்போறேன்!” கனவுகள் நிறைந்த மனத்துடனும், காலி வயிற்றுடனும் வைத்தி அங்கிருந்து அகன்றான். 19 ஆண்களே மோசம் வீட்டில் நடப்பதை எல்லாம் கண்டும் காணாததுபோல் இருந்த மணிக்கு அதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. “என்ன பாக்கியம்? ஒன் பொண்ணு ஒரேயடியா இங்கேயே வந்துட்டாப்போல இருக்கு?” ஒரு தேங்காயைக் கையில் பிடித்துக்கொண்டு, வெகு நேரமாக அதை ஆட்டுக்கல்லின்மேல் அடித்து உடைக்க முயன்றுகொண்டிருந்த பாக்கியம் திரும்பிப் பாராமலேயே, “கண்டவன்கிட்ட அடி திங்கணும்னு என் கொழந்தைக்கு என்னங்க தலையெழுத்து!” என்றுவிட்டு, மாப்பிள்ளைமேல் இருந்த கோபத்தை எல்லாம் திரட்டி, கைத்தேங்காய்மேல் காட்ட, அது இரண்டாக உடைந்தது. இம்மாதிரி கடினமான காரியங்களுக்கெல்லாம் எப்போதும் தன் உதவியை எதிர்பார்ப்பவள், இன்று மொத்த ஆண்வர்க்கத்தின்மீதே ஆத்திரமாக இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டார் மணி. இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் சாதாரணமாக, அவள் கண்ணிலேயே படாது ஒதுங்கி, தானுண்டு, தன் செடிகள் உண்டு என்று போய்விடுவார். ஆனால், அன்று அவருக்கே ஆச்சரியம் எழ, “வைத்தி.. அடிக்கிறானா? அதுக்கெல்லாம் ஒடம்பில சக்தி வேணாம்?” என்ற கேள்வி தானாகப் பிறந்தது. பாக்கியம் கொந்தளித்தாள். “இருக்கீங்களே, நீங்களும்! யாரோ மூணாம் மனுசனுக்குப் பரிஞ்சு பேசுங்க!” கணவர் இப்படி அநியாயமாக கட்சி மாறிவிட்டாரே என்ற வருத்தம் அவளுக்கு. கண்ணீர்கூட வந்தது. அலட்சியமாகக் கையை வீசினார் மணி. “எல்லாம் அவனும் நம்ப குடும்பம்தான்! எப்போ அவன் வாரிசு நம்ப பொண்ணு வயத்திலே வளருதோ..!” `எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டே இவர் அமர்த்தலாக இருக்கிறதைப் பாரேன்!’ என்று குமைந்தவளாக, “மாசமா இருக்கிற பொண்ணை கைநீட்டி அடிச்சிருக்காரு, பாருங்க!” என்று முறையிட்டாள். `கையை நீட்டாம, மடக்கிட்டா அடிப்பாங்க?’ என்று மனதில் எழுந்ததைச் சொன்னால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று பயந்தவராக, மௌனம் சாதித்தார் மணி. “கீழே பிடிச்சு வேறயில்ல தள்ளியிருக்காரு! ஏதாவது ஏடாகூடமா ஆகியிருந்தா?” என்று பொறுமிய பாக்கியம், “கேக்க ஆளில்லேன்னு நினைச்சுக்கிட்டாரா?” என்று உறுமினாள். மணியின் பொறுமை எல்லை கடந்தது. “நேரா போய் பாத்தமாதிரி சொல்லாதே, பாக்கியம்!” என்று கண்டித்தார். “முந்திமாதிரி நான் அடிக்கடி போய் வந்துக்கிட்டிருந்தா, இவ்வளவு தூரம் முத்தி இருக்குமா? எல்லாம் ஒங்களாலதான்!” சமரசப் பேச்சில் இறங்கினார் மணி. “பாக்கியம்! ரஞ்சி சொல்றதை எல்லாம் அப்படியே எடுத்துக்கக் கூடாது. ஓயாம படம் பாத்துப் பாத்து, அவ இல்லாததையெல்லாம் கற்பனை பண்ணிக்குவா! இப்ப என்னதான் செய்யப்போறே?” “சொல்லணுமா? ரஞ்சி இனிமே இங்கதான் இருக்கப்போறா. அந்த ஆளு புத்தி திருந்தி, அவ காலிலே விழுந்து மன்னிப்பு கேட்டா சரி. இல்லாட்டி..,” அவள் முடிப்பதற்குள், அந்த இடத்தைவிட்டு விலகினார் மணி. தான் இன்னும் அங்கேயே நின்றால், வைத்தியை அடுத்து, ஆண்குலத்தில் பிறக்க நேரிட்ட துர்பாக்கியத்துக்காகத் தனக்கும் சேர்த்துப் பாட்டு விழும், அது அவசியம்தானா என்று அவரது அறிவு தக்க சமயத்தில் எச்சரித்ததே காரணம். 20 ரகசியச் சந்திப்பு கடந்த வாரம், ஏதோ உற்சாகத்தில், செம்பருத்திச் செடிகளுக்கு அளவுக்கு அதிகமான உரம் போட, அதனால் மஞ்சளாகிவிட்ட இலைகளை ஒவ்வொன்றாகக் கிள்ளிப் போடும்போதுதான் அந்த யோசனை பிறந்தது மணிக்கு. வேண்டாத பழைய குப்பைகளை நீக்கினால், புதியன துளிர்க்காதா? தாய் ஆட்டுவித்தபடி எல்லாம் ஆடுபவள் ரஞ்சி. பாக்கியமோ, தன்னைவிடத் தன் அண்ணன்மார்களை அதிகம் படிக்க வைத்துவிட்டார்கள் பிறந்த வீட்டில் என்று, பொதுவாக ஆண்வர்க்கத்தின் மேலேயே கோபத்தை வளர்த்துக்கொண்டவள். மகளே மனம் மாறி, `கணவன் வீட்டுக்குப் போகிறேன்,’ என்றால்கூட, இவள் அனேகமாகத் தடுத்து விடக்கூடும். இவளை மீறித் தான் எதுவும் செய்ய முடியாது. பாக்கியம் அறியாமல் செய்தால்? நம்பிக்கை பிறக்க, சாயந்திரம் கோலாலம்பூர், ஈப்போ ரோடு சித்தி விநாயகர் கோயிலுக்குக் கிளம்பினார் மணி. காரியம் கைகூட வேண்டுமென்றால், வேறு யாரைப் பிடிப்பது என்று அவன் அங்குதான் வருவான் என்று அவர் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. படி ஏறிப் போனதுமே பார்த்துவிட்டார். வாய் ஏதோ மொணமொணக்க, பிராகாரத்தைச் சுற்றியபடி இருந்தவன், மாமனாரைக் கண்டதும் பயந்தான். நழுவப்பார்த்தவனை விடவில்லை மணி. சிநேகிதமாக அவன் தோளில் கைவைத்து அழுத்தினார். “என்ன வைத்தி! எங்கே, பாக்காதமாதிரி போறே?” வைத்திக்கு மூச்சு திரும்பி வந்தது. அக்குடும்பத்தில் தன்னைப் பிடித்தவர்களும் இல்லாமல் போகவில்லை! “நல்லா இருக்கீங்களா, மாமா?” “எனக்கென்ன கேடு? ஒன்னைப் பாத்தாதான் சகிக்கலே!” தான் சகிக்க முடியாது இருக்கிறோமா? ரஞ்சி பார்க்க வேண்டும் இப்போது! சிறிதே சந்தோஷம் உண்டாயிற்று. தன்னிச்சையாகத் தாடையை நோக்கிப் போயிற்று அவன் கரம். தடவிப் பார்த்துக்கொண்டான். “இது என்ன வேஷம்?” செல்லமாக வைதார் மாமனார். “நீ சாமான் வாங்கற கடையில பிளேடு தீர்ந்து போச்சா?” வைத்தி மனம் நொந்து, “நான் யாருக்காக மாமா இனிமே அழகா இருக்கணும்!” என்றான். “அட! சவரம் பண்ணிக்கறவன் எல்லாம் அழகா ஆயிடறானா? ஏதோ சுத்தமா..,” என்று அவர் வியாக்கியானம் செய்துகொண்டு போக, அதற்கு மேலும் பொறுக்க முடியாது இடைவெட்டினான் வைத்தி. “வீட்டிலே.. எல்லாரும் நல்லா இருக்காங்களா, மாமா?” தனக்குள் சிரித்துக்கொண்டார் மணி. `இதைக் கேட்க இவ்வளவு நேரமாயிற்றாடா பயலே உனக்கு?’ மிடுக்காகச் சொன்னார்: “நீயே வந்து பாக்கறது!” அந்த அழைப்புக்காக ஏங்கிக்கொண்டிருந்தவனுக்கு இப்போது பயம் எழுந்தது. “நான் எந்த மூஞ்சியோட மாமா அங்க வர்றது?” “சும்மா இந்த மூஞ்சியோடேயே வா!” ஜோக்கடித்தார். “நல்லா இல்லேங்கிறதுக்காக அடிக்கடி மாத்தவா முடியும்?” அதற்கு மேலும் அவன் யோசிப்பதைப் பார்த்துவிட்டு, தன் இறுதி அஸ்திரத்தைப் பிரயோகித்தார். “இப்பவே பிடிச்சு ஒன் பெண்டாட்டியை அம்மா வீ்டடில விட்டு வெச்சா, ” என்று கண்ணடித்துவிட்டு, “இன்னும் ஆறு மாசத்துக்கு அப்புறம்தான் இருக்கு இருக்கு கட்டாயப் பிரிவு!” அப்படியும் அவன் விழிப்பதைக்கண்டு, “அதான், வளைகாப்பு, சீமந்தம், அப்புறம்..!” என்று கோடி காட்டினார். வைத்தியின் விழி பிதுங்குவதை ரசித்தபடி, `நாளைக்கு நம்ப வீட்டில விருந்துதான்! நேரே பாசார் மாலாமுக்கு (இரவுச் சந்தை) போகணும்,” என்று நிச்சயித்தபடி நகர்ந்தார். வீடு திரும்பிய வைத்தியின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. தான் அப்பாவாகப்போகிறோம்! ரஞ்சியைப் பார்க்கப்போகிறோம்! என்னதான் அவளுடன் பிணக்கு இருந்தாலும், பெரியவரின் அழைப்பை மதித்துப் போகாவிட்டால், மரியாதைக் குறைவாக ஆகிவிடும் என்று சொல்லிக்கொண்டான். உதடுகளைக் குவித்து விசில் அடித்தபடி குளியலறைக்குச் சென்றான். `ராத்திரி வேளையில சவரம் பண்ணிக்காதேடா, வைத்திநாதா! இப்ப கண்ணாடியில பாத்துக்கிட்டா, அடுத்த பிறவியில மோசமான பிறவிதான் கிட்டும்!’ பாட்டியின் குரல் கடந்த காலத்திலிருந்து அசரீரியாக ஒலித்தது. அதை அலட்சியம் செய்துவிட்டு, சவர க்ரீமை தாடையில் பூசிக்கொண்டான். அப்போது இன்னொரு அசரீரி கேட்டது: `ரொம்ப வருத்தமா காட்டிக்க. ஒன்னைப்பாத்தா, அப்படியே அவங்களோட தாய்மை உணர்ச்சி பொங்கணும்!” கையிலெடுத்த பிளேடைஎடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு, முகத்தைக் கழுவிக்கொண்டான். பாட்டியின் வார்த்தையை மீறி நடக்காததுபோலவும் ஆயிற்று, ரஞ்சியைப நெருங்க வழி பண்ணியதுபோலவும் ஆயிற்று என்ற சந்தோஷம் பிறந்தது. கண்ணாடியை விட்டு அகலாது, முகத்தைப் பலவிதமாகக் கோணி, ஒத்திகை பார்த்துக்கொண்ண்டான். 21 விருந்துக்கு வந்த மாப்பிள்ளை முதல் நாளிரவு கணவர் வாங்கி வந்திருந்த ஏராளமான காய்கறி வகைகளை தனித்தனியாகப் பிரித்து குளிர்சாதனப் பெட்டியில் அடைக்க முயன்று கொண்டிருந்தாள் பாக்கியம். தான் சொல்வது கேட்கும் தொலைவில்தான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, “சரியான சுயநலம் பிடிச்சவரு! ஏதுடா! வாழவேண்டிய பொண்ணு வீட்டில அழுதுக்கிட்டு இருக்கேன்னு ஒரு வருத்தம், பச்சாதாபம் எதுவுமில்லாம்! சே!” என்று உரக்கக் கத்தினாள். “என்ன பாக்கியம்? பேச ஆளு கிடைக்கலியா? தானே பேசிக்கறே!” என்று சிரிக்காமல், அவளை வம்புக்கு இழுத்தார் மணி. “தெரியாமத்தான் கேக்கறேன், நாலு தினுசு கூட்டு, கறியோட ஒங்களுக்கு என்னங்க விருந்து கேக்குது இப்போ?” வலிய வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன், “யாரோ, யார் கூடவோ, பொழுது போகாம சண்டை பிடிச்சுட்டு வந்து நின்னா, அதுக்காக நான் எதுக்கு வாயைக் கட்டணும்? தலையெழுத்தா?” என்று இரைந்தார். “எனக்கென்ன அல்சரா, இல்ல, சர்க்கரை வியாதியா? இருக்கிறவரைக்கும் நல்லா இருந்திட்டுப்போறேன்! முடிஞ்சா ஆக்கிப்போடு!” என்று மிரட்டினார். வழக்கத்துக்கு விரோதமான அவரது தொனி மகளை அங்கு வரவழைத்தது. ரோஷத்துடன், “தள்ளுங்கம்மா. இன்னிக்கு நான் சமைக்கிறேன்!” என்றாள் சவாலாக. தன் வெற்றிப் புன்னகையை மறைக்க, மணி விரைந்து வெளியில் நடந்தார். போகிற போக்கில், “பாக்கியம்! சீனன் பாகற்காயை வெச்சா பழுத்துடும். கசப்பா இருந்தாலும், வயத்துக்கு நல்லது. உப்பு, மஞ்சள்பொடி போட்டு, கொஞ்ச நேரம் பிசிறிவெச்சு, அப்புறம் பிழிஞ்சு, வறுத்துடு. சாம்பாரில.. முருங்கக்காயை தாராளமாவே போடு. நல்ல வாசனையா இருக்கும்!” என்று குரல் கொடுக்கத் தவறவில்லை. “இவரு எனக்குச் சமையல் கத்துக் குடுக்கறாரு!” பாக்கியத்துக்கு எரிச்சலாக இருந்தது. “காடு வா, வாங்குது. இந்த வயசில இவருக்கு முருங்கக்காய் கேக்குதோ!” என்று ரகசியமாகத் திட்டியவளுக்கு ஏதோ உறைத்தது. குரலைத் தழைத்துக்கொண்டு, “ஏன் ரஞ்சி? ஒங்க வீட்டுக்காரருக்கு முருங்கக்கா ரொம்பப் பிடிக்குமோ?” என்று விசாரித்தாள். `வீட்டுக்காரர்’ என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே ரஞ்சிக்குப் பிரிவுத் துயரம், ஏக்கம் எல்லாம் ஒருங்கே எழுந்தன. “ஆசை ஆசையாச் சாப்பிடுவாரு! ஏம்மா கேக்கறீங்க?” “நான் பெரிய தப்பு பண்ணிட்டேண்டி. மொதல்லேயே ஒன்னை எச்சரிச்சிருக்கணும். இந்த மாதிரிப்பட்டவங்களுக்கு..,” மேலே சொல்லக் கூச்சப்பட்டுக்கொண்டு, தலையை ஒரேயடியாகக் குனிந்துகொண்டாள். மகள் விழிப்பதைக் கண்டு, “பாக்யராஜ் படம் பாத்தேயில்ல? அப்படித்தான்! ஒங்க வீட்டுகாரர் வேற ராத்திரி ஆனா, ஸ்கூட்டரை எடுத்திட்டு வெளியே போயிடுவாரா! இந்த மாதிரி ஆம்பளைங்களுக்கு.. வாசனையா உள்ளது எதுவுமே.. அதாண்டி, முருங்கை, முள்ளங்கி, வெங்காயம்.. இந்தமாதிரி எதையுமே இவங்க கண்ணிலே காட்டக்கூடாது,” என்று பொரிந்துவிட்டு, ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, குரலைத் தழைத்துக்கொண்டாள்: “புலனடக்கம் இல்லாம போயிடும்!” புலனாவது, அடக்கமாவது! ரஞ்சிதத்திற்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. “நான் இனிமே எங்கேம்மா அவர் முகத்தில முழிக்கப்போறேன்! என்னென்னமோ சொல்றீங்களே!” அப்போது வாசலிலிருந்து மணியின் உற்சாகக் குரல் கேட்டது: “ரஞ்சி! யார் வந்திருக்காங்க, பாரு!” ஒரு வார தாடி, மீசையுடன் வந்திருந்த வைத்தி, மனைவியின் வருகையை எதிர்பார்த்து, மேலும் கூனி நிற்க முயன்றான். இருவரும் எதிரெதிரே நின்று, இமைக்கவும் மறந்து, ஒருவரையொருவர் கண்ணாலேயே விழுங்கியபடி இருக்க, ஏதோ, என்னவோ என்று வெளியே வந்த பாக்கியம் அதிர்ந்தாள். `நான்கூட இல்ல ஏமாந்துட்டேன்! வயசாக ஆக, இந்த மனுசனுக்குத் துணிச்சல் அதிகமாயிடுச்சு!’ முறைத்தாள். அவரோ, அவளை லட்சியமே செய்யவில்லை. “ஏன் ரஞ்சி? வீட்டுக்கு வந்தவங்களை ஒக்காரச் சொல்றதில்ல?” என்ன்று சீண்டினார் மகளை. “என்னைப் பாக்கவா வந்தாரு?” பிணங்கினாள். ஏதொ அசட்டுத் தைரியத்தில் தான் இங்கு வந்துவிட்டோம், அடுத்து என்ன செய்வது என்று குழப்பமடைந்தான் வைத்தி. “மாமா! நான் வந்தது இங்க உள்ளவங்களுக்குப் பிடிக்கல போலிருக்கு!” என்று அழமாட்டாக்குறையாகச் சொல்லிவிட்டு, திரும்புவதுபோன்ற பாவனை செய்தான். `ஐயோ! போய்விடுவார் போலிருக்கிறதே!’ ரஞ்சிக்குப் பயம் பிடித்துக்கொண்டது. அவசர முடிவெடுத்தாள். “எனக்காக யாரும் போக வேணாம்பா!” சரக்கென்று உள்ளே திரும்பி நடந்தாள். அவள் சொல்லிப்போனதற்கு என்ன அர்த்தம் என்று வைத்தி விழிக்க, `எல்லாம் சரியாகிடும். இரு!’ என்று கண்ஜாடை காட்டினார் மாமனார். ஒரு காலத்தில் தன் மாமனார் செய்ததுபோல, மூன்று தலைமுறையைப் பற்றிய கதைகளை எல்லாம் மணி அனுபவித்து விவரிக்க, `சரியாக மாட்டிக்கொண்டோமே!’ என்று வைத்தி தன்னைத்தானே நொந்துகொண்டான். இந்த கழுத்தறுப்புக்காகவா இவ்வளவு கவனமாக, சவரம்கூட செய்துகொள்ளாமல், கசங்கிய சட்டையும், கலைந்த, நீண்ட முடியுடனும் வந்தோம்! ரஞ்சியோ, கண்ணிலேயே பட மாட்டேன் என்கிறாள்! ஒருவழியாக, சாப்பாட்டு நேரம் வந்தது. அப்போதுதான் தன் சாணக்கியத்தனத்தை அவனுக்கு உணர்த்தினார் மணி. “பாக்கியம்! காலையிலிருந்து ஒனக்கு நிறைய வேலை! அப்புறமா, `தோளைப் பிடிச்சு விடுங்க,’ன்னு எங்கிட்ட வந்து நிக்காதே, ஆமா! ரஞ்சி சும்மாத்தானே இருக்கா? விருந்தாளிக்குப் பரிமாறினா என்ன, கொறைஞ்சா போயிடுவா?” அவர் எண்ணியதுபோலவே, ரஞ்சி சிலும்பிக்கொண்டு வந்தாள். “நீங்க போங்கம்மா. நான் கவனிச்சுக்கறேன்!” சாப்பாடு மௌனமாக நடந்தது. அவ்வப்போது, மணி மட்டும் பேசினார்: “முருங்கக்கா வாசனை கமகமன்னு வருது, இல்ல வைத்தி?” இதற்கு ஏதானும் உள்ளர்த்தம் இருக்குமா என்று யோசித்தவன், அசடு வழியச் சிரித்தான். “யுத்தத்தில அடிபட்டவன் மாதிரி இருக்கே! பாவம், வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு காலமாச்சோ!” என்று அனுதாபப்பட்டுவிட்டு, “ஹோட்டல்லே இப்படியா சமைப்பான்! வெறும் காம்புதான் இருக்கும் சாம்பாரிலே! நாலு பங்கு விலைவேற!” என்று கண்டனம் தெரிவித்தார். மகளைப் பார்த்து, “மாப்பிள்ளைக்கு நல்லாப் பாத்துப் போடும்மா, பாத்து!” என்று பலமாக உபசாரமும் சொய்தார். தந்தையின் வாக்கை வேத வாக்காக கொண்டு, ரஞ்சியும் கணவனைப் பார்த்தபடி இருக்க, கைபாட்டில் சாம்பாரைக் கரண்டி கரண்டியாக ஊற்றியது. அரை மணி நேரத்திற்குப்பின், அந்த வீட்டில் வயதான தம்பதிகள் இருவர் மட்டுமே இருந்தார்கள். இணைந்து, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். “என்னங்க இது, அக்கிரமமா இருக்கு?” தாளமுடியாது அரற்றினாள் பாக்கியம். “அவர்பாட்டில வந்தாரு, மூக்கைப்பிடிக்க சாப்பிட்டாரு! போற போக்கிலே, இவளையுமில்ல இழுத்துக்கிட்டுப் போயிட்டாரு!” யோசனையுடன், “இவ இல்ல, அவன் பின்னால ஓடினமாதிரி இருந்திச்சு!” என்றார் மணி. 22 வைத்தியின் உபசாரம் சாயந்திரம் வேலை முடிந்ததும், உற்சாகமாக வீடு திரும்பினான் வைத்தி. மீண்டும் குடும்ப வாழ்க்கை! வித விதமாகச் சமைத்துப்போட மனைவி வந்துவிட்டாள்! ரஞ்சி கோபித்துக்கொண்ண்டு, தாய் வீட்டுக்குப் போனதிலும் ஒரு நன்மை விளைந்திருந்தது. பொழுது போகாமலிருந்ததில், வித விதமாகச் சமைக்கக் கற்றுக்கொண்டு வந்திருந்தாள். தனது மகிழ்ச்சியில் பாதியாவது அவளிடமும் இருக்காதா! இன்று ஏதாவது நல்ல டிபனாகப் பண்ணி வைத்திருப்பாள். உள்ளே நுழைந்தவன், சற்று திகைத்துத்தான் போனான். அவனுடைய இன்பக் கனவுகளுக்கும், நிதரிசனத்துக்கும் சம்பந்தமே இருக்கவில்லை. சோபாவின் கைப்பிடியில் ஈரத் துண்டு, அதன்மேல் தோய்த்த துணிமணிகள். `மலேசிய நண்பன்’ தினசரி இதழ், இதழாகப் பிரிந்து, ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் உபயத்தால் தரை பூராவும் பரவிக் கிடந்தது. `இப்படி வீண் செலவு செய்தால், யார் விளக்குக் காசு கட்டறது!’ பழக்க தோஷத்தால், முதலில் கோபம் எழுந்தது. `அடக்கு! அடக்கு!’ என்று உடனே ஒரு எதிர்ப்புக்குரல் கேட்டது. இவளோ தொட்டாச்சிணுங்கியாக இருக்கிறாள். மீண்டும் கோபித்துக்கொண்டு, எங்கேயாவது போய்த் தொலைந்துவிட்டால், யார் சமாதானப்படுத்தி அழைத்து வருவது! மனதை அடக்கும் உத்தியாக, மூச்சை இழுத்து விட்டபடி, துணிமணிகளை மடிக்கத் தொடங்கினான். பழைய தமிழ்ப் படங்களில், ஹீரோ ஒண்டியாக ரௌடிகளைத் துவம்சம் செய்தபின் வரும் போலீசைப்போல, வைத்தி எல்லாவற்றையும் மடித்து முடித்தபின், ரஞ்சிதம் எழுந்து வந்தாள், வாயைப் பிளந்து கொட்டாவி விட்டபடி. “வந்துட்டீங்களா?” அவள் குரலில் தூக்கக் கலக்கம். `இது என்ன முட்டாள்தனமான கேள்வி? வராமலா இங்க என்னைப் பாக்கறே?’ என்று கேட்க நினைத்து அடக்கிக்கொண்டான். இப்படி அடக்கி, அடக்கி, தனக்கு மன அழுத்தம்தான் வரும் என்று தோன்றியது. கஷ்டப்பட்டு முகத்தில் கனிவை வரவழைத்துக்கொண்டான். “நீ எதுக்கு எழுந்தே? போய் படுத்துக்கம்மா. நான் ஒருத்தன் எதுக்கு இருக்கேன்? ஒனக்கு இப்போ என்ன வேணும், சொல்லு!” “டீ போட்டுட்டீங்களா?” என்று விசாரித்தாள் தர்ம்பத்தினி. “டீயாவது, கோப்பியாவது! என்னை என்ன..?” வைத்தி உரக்க ஆரம்பிக்க, ரஞ்சிதம் பெருமூச்சு விட்டபடி எழுந்தாள். `மோகம் மூன்று நாள்’ என்று ஏதோ சொல்லி வைத்திருக்கிறார்களே! நாம் வந்து நான்கு நாட்கள் ஆகவில்லை? “சரி. சரி. கத்த ஆரம்பிக்காதீங்க!” என்றபடி எழுந்தாள். “நீ டீ குடிச்சா, தெரியும் சேதி!” தொனியை மாற்றினான் வைத்தி. “இனிமே மைலோ, ஹார்லிக்ஸ் இதெல்லாம்தான் குடிக்கணும். விளையாட்டு வீரர்களெல்லாம் அப்படித்தானே செய்யறாங்களாம்! டி. வியில காட்டறாங்களே!” வேளை கெட்ட வேளையில் தூங்கியதில் ரஞ்சியின் தலை கனத்தது. இவர் வேறு ஏதேதோ பேசி குழப்புகிறாரே! “நான் எப்பவும் இந்த வேளையில..,” என்றவளை இடைமறித்தான் வைத்தி. “நான்தான் இப்படி சோனியாப் போயிட்டேன். என் மகனாவது..!” குரல் தழதழத்தது. “இப்ப எனக்கு டீ வேணும்,” என்றாள் பிடிவாதமாக. “எப்பவும் தூக்கம் தூக்கமா வருது!” ஓட்டமும் நடையுமாகச் சமையலறைக்கு விரைந்தான் வைத்தி. கண்ணில் ஒரு மின்னல். சிறிது பொறுத்து, ஒரு கோப்பையை மனைவியின்முன் வைக்க, அவள் சந்தேகத்துடன் முகத்தைச் சுளித்தபடி, “என்னது இது?” என்றாள். “ஸ்ட்ராங் டீ! நீ ஆசைப்பட்டுட்டே! அதனால, சிரமப்பட்டுப் போட்டேன். இன்னும் நெறைய ஃபிளாஸ்கில வெச்சிருக்கேன்”. அவன் குரலில் தேன் வழிந்தது. “ராத்திரி தூக்கம் வராட்டி,” என்று விஷமச் சிரிப்புடன் அவளைப் பார்க்க, அவள் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தாள். 23 காதலர் பூங்கா திருமணம் செய்துகொண்ட இருவர் போராடிக்கொண்டிருந்தபோது, வேறு இருவர், `நாம் திருமணம் செய்துகொள்ள வழியே இல்லையா!’ என்ற ஏக்கத்துடன் காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தனர். `எப்படியும், இன்று இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்,’ என்று உறுதி எடுத்தவனாக, ரவி ராதிகாவின் ஆபீசைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தான். அவள் அந்தக் காம்பவுண்டின் வெளியே வருவதைப் பார்த்ததும், வேகமாகக் காரை அவளருகே நிறுத்தினான். அவனது செய்கையைக் கண்டித்து, பின்னாலிருந்து ஹார்ன் ஒலி பல ஸ்ருதிகளில் ஒலித்தன. அவன்மீது மோதிக்கொள்ளவிருந்து, தன் சமயோசித புத்தியால் உயிரைக் காப்பாற்றிக்கொண்ட ஒரு ஸ்கூட்டரோட்டி கை முத்திரையால் தன் பகைமையை வெளிக்காட்டியபடி விரைந்தான். “ஏறு, சீக்கிரம்!” ராதிகா தயங்க, “இப்ப நீ ஏறாட்டி, நான் இறங்கி, அப்படியே ஒன்னை அலக்காத் தூக்கி..,” என்று, வீராவேசமாக ரவி ஆரம்பிக்கையில், போக்குவரத்து அதிகாரி ஒருவர் கையில் நோட்டுப் புத்தகத்துடன் அங்கு வருவதைப் பார்த்த ராதிகா, அவசரமாகக் காரில் ஏறினாள். “அவர் டிக்கெட் குடுத்தா, முன்னூறு வெள்ளி தண்டம் அழணும். தெரியுமில்ல?” என்று சீண்டினாள். “காதலிக்க ஆரம்பிச்சா, செலவைப் பாக்கக்கூடாது!” தத்துவம் பேசியவன், ஏதோ நினைப்பு வந்தவனாகச் சிரித்தான். “வைத்திக்கு இது புரிய மாட்டேங்குது, பாரேன்! ரெண்டு பேருக்கும் எப்பவும் சண்டைதா்ன்!” “எப்படி இருக்காங்க ரெண்டு பேரும்?” “புருஷனோட சண்டை போட்டுக்கிட்டு, எங்க வீட்டோட இருந்தா கொஞ்ச நாள். இப்பதான் சமாதானம் ஆகியிருக்காங்க. இது எத்தனை நாள் நிலைக்கப் போகுதோ!” ”அப்படி எதுக்கு சண்டை போடுவாங்க?” “ரெண்டு பேரும் இன்னும் சின்னப்பிள்ளைங்களாவே இருக்காங்க. விட்டுக்குடுக்க மாட்டாங்க. சண்டை வராம இருக்குமா?” என்றவன், “எல்லாரும் நம்பளைமாதிரி இருக்க முடியுமா?” என்று நைசாக ஆரம்பித்தான். ராதிகாவின் முகத்தில் வேதனை படர்ந்தது. “விடுங்களேன்! அது முடிஞ்ச கதை!” பேச்சை மாற்றும் வகையில், “ஒங்க ஆபீசையே சுத்திச் சுத்தி வந்தேனா! தலை சுத்துது. டிடிவாங்க்ஸா பார்க்கில கொஞ்சம் ஒக்காந்துட்டு போலாமா?” என்று கேட்ட ரவி, அவள் பதிலுக்குக் காத்திராமல், காரைத் திருப்பினான். அந்த வேளையில், காரை நிறுத்த நிறைய இடமிருந்தது. உலாவவோ, அல்லது உடற்பயிற்சி சாதனங்களைப் பயன்படுத்தவோ யாரும் வந்து சேரவில்லை. குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்துகொண்டிருப்பார்கள். இல்லை, மத்தியான பள்ளிக்கூடமாக இருக்கும். வண்ண வண்ணமான சதுரக் கற்கள் பதிக்கப்பட்டிருந்த பாதையில் நடந்துபோய், ஃபைபர் கண்ணாடியால் செய்யப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் இருவரும் அமர்ந்துகொண்டனர். “அம்மா நல்லா இருக்காங்களா?” என்று பேச்சை ஆரம்பித்தான் ரவி. அவன் சற்றும் எதிர்பாராத விதமாக, ராதிகா விம்மினாள். “அம்மா.. போயிட்டாங்க!” “எப்போ? எனக்குக்கூட சொல்லல, பாத்தியா!” “ஆறு மாசமாச்சு. அவங்க சரியான பாதையிலதான் போய்க்கிட்டிருந்தாங்க. “லாரிக்காரன் `ஒன் வே’ன்னு பாக்காம, வந்து மோதிட்டான். அது அம்மாவோட ராசி போலயிருக்கு!” “எது?” “தப்பே பண்ணாம, தண்டனை அனுபவிக்கிறது!” ”இப்பகூட, நீ சரின்னு சொன்னா..,” என்று உத்வேகத்துடன் பேச ஆரம்பித்த ரவியைக் கையமர்த்தினாள் ராதிகா. “நான் ஒரு வீட்டுக்கு மருமகளா வந்தா, எல்லாரும் என்னை முழுமனசா ஏத்துக்கணும், ரவி”. அவள் குரல் கெஞ்சியது. “சின்ன வயசிலே நான் பிறந்தநாள் கொண்டாட்டம், கல்யாணம், இப்படி எங்கேயும் போனதில்ல — யாரும் அழைக்கல!” கழிவிரக்கத்துடன் அவளையே பார்த்தான் ரவி. இந்த இளம் வயதுக்குள் எத்தனை துன்பங்களை அனுபவித்திருக்கிறாள்! அதனால்தான், தங்கையைப்போல் இல்லாது, அவ்வளவு முதிர்ச்சியோ! “அப்போ எல்லாம் அம்மாகிட்ட போய் அழுவேன்”. “என்ன சொல்வாங்க?” “பேச்சை மாத்திடுவாங்க. `இது கேக்கக்கூடாத கேள்வி’ அப்படின்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். போனா, அம்மாகூடத்தான் போகணும், இல்லியா? மத்த பொம்பளைங்களுக்குப் பயம் — தனியா இருக்கிறவ! எங்கே, நம்ப புருஷனை..,” மேலே சொல்ல இயலாது, இழுப்பதுபோல் சைகை காட்டினாள் ராதிகா. “அது அப்போ! காலம் மாறிடுச்சு, ராதி!” என்ற ரவிக்கு ஒரு வரண்ட புன்னகையைப் பதிலாக அளித்தாள் ராதிகா, `நீ உலகத்தைப் புரிந்துகொண்ட லட்சணம் இவ்வளவுதான்!” என்பதுபோல். 24 நினைத்தது ஒன்று, சொன்னது ஒன்று தன் அருமை மகள் தன்னை விட்டு, நேற்று வந்த கணவனுடன் போய்விட்டதை பாக்கியத்தால் தாங்கவே முடியவில்லை. புலம்பிக்கொண்டே இருந்தாள். அதைத் தாங்க முடியாது, “நீதான் ஒரு நடை போய், அவளைப் பாத்துட்டு வாயேன்!” என்று யோசனை வழங்கினார் மணி. `அடிக்கடி போகிறாயே!’ என்று கண்டித்தவரே இப்போது போகச் சொன்னது பாக்கியத்துக்கு உற்சாகமாக இருந்தது. தெம்பு்டன், பட்சணங்களைச் செய்ய ஆரம்பித்தாள். சுடச்சுட அவைகளை ருசி பார்க்க முடியுமே என்ற நப்பாசையுடன், மணியும் கூடமாட ஒத்தாசை செய்தார். அவ்வளவையும் தூக்கிக்கொண்டு போக வசதியாக, தானே ஒரு வாடகைக் காரும் பிடித்து வந்தார். ஒன்றன்பின் ஒன்றாக, தாய் அடுக்கி வைத்த எவர்சில்வர் டப்பாக்களைப் பார்த்த ரஞ்சியின் விழி பிதுங்கியது. “என்னம்மா? என்னமோ, வெளியூருக்குப் போறமாதிரி இவ்வளவு!” என்று குதூகலித்தாள். “மசக்கைக்காரி, ஒனக்குத்தான்! கொஞ்சம் ரவா உருண்டை, அல்வா..! அப்பாதான் கிளறினாரு, எனக்குத் தோள் வலின்னு!” “எனக்கு ஸ்வீட்டைப் பாத்தாலே கொமட்டுதும்மா!” என்று கொஞ்சினாள் மகள். “அப்போ, பிறக்கப்போற பிள்ளை அதைத்தான் ஆசையா சாப்பிடும்!” என்று அனுமானித்த பாக்கியம், “ஒங்க வீட்டுக்காரர்தான் `பிடிக்காது, பிடிக்காது’ன்னு சொல்லிக்கிட்டே, தின்னு தீத்துடுவாரே! இந்த ஆம்பளைங்களே வேடிக்கை!” என்றாள், பழிப்புக் காட்டியபடி. “இப்ப ஒங்கிட்ட எப்படி இருக்காரு?” என்று விசாரித்தாள். கணவன் துணி மடிப்பதும், நாள் தவறாது, சுடுதண்ணிப் போத்தல் நிறைய தேத்தண்ணீர் போட்டு வைப்பதும் நினைவில் எழ, ரஞ்சிதத்தின் முகம் விகசித்துப் போயிற்று. அவள் எதுவும் சொல்லுமுன், வாசலில் வைத்தி வரும் சப்தம் கேட்டது. “அவரே வந்துட்டாரே! நீங்களே பாருங்களேன்!” என்று துள்ளினாள் மகள். தாயோ, மாமியாராய் லட்சணமாய், புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்தியபடி உள்ளே விரைந்தாள். ரஞ்சி வெளியே விரைந்து, “அம்மா வந்திருக்காங்க!” என்ன்று அறிவித்தாள், உற்சாகமாக. வைத்தியின் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து, அதன் இடத்தில் கடுமை படர்ந்தது. `என்னை வேவு பாக்க வந்திருக்காளா கிழவி? இருக்கட்டும், இருக்கட்டும், நான் யாருங்கிறதைக் காட்டறேன்!’ என்று தனக்குள் கறுவிக்கொண்டான். அவனது எண்ணப்போக்கை முகத்திலிருந்தே புரிந்துகொண்ட ரஞ்சி, அவசரமாக, “இதோ பாத்தீங்களா? அம்மா ஒங்களுக்காக எவ்வளவு பலகாரம் பண்ணிட்டு வந்திருக்காங்க!” என்று நைச்சியம் பண்ணப் பார்த்தாள். வைத்தி மேலும் விறைத்துக்கொண்டான். “எனக்கா? எதுக்கு?” வயிற்றைத் தொட்டுக் காட்டினான். “அவங்க மகள் உண்டாயிருக்கா. அவளுக்காக அரும்..மையா பண்ணிட்டு வந்திருக்காங்க!” என்று ஏடாகூடமாகப் பேச ஆரம்பித்தான். ரஞ்சி தாழ்ந்த குரலில், “ஒங்களுக்கு இன்னிக்கு வேலை அதிகமா?” என்று விசாரித்தாள். “பின்னே? சும்மா ஒக்காந்திருக்கவா எனக்குச் சம்பளம் குடுத்து ஒக்கார வெச்சிருக்காங்க?” என்று தன்னிரக்கத்துடன் பேசிவிட்டு, “எல்லாரும் ஒன்னைமாதிரி இருக்க முடியுமா? மத்தியானம், சாயங்காலம், எப்பப் பாத்தாலும் தூக்கம். ஏதோ, நானா இருக்கத்தொட்டு..! இன்னொருத்தனா இருந்தா, எப்பவோ விவாகரத்து பண்ணி இருப்பான்!” என்று கத்த ஆரம்பித்தான். ரஞ்சிக்கு ஏதோ சந்தேகம் பிறந்ந்தது. “ஏதாவது போட்டுட்டு வந்துட்டீங்களா? இப்படி சம்பந்தமில்லாம..!” என்றவளைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான் வைத்தி. “யாருடி சம்பந்தா சம்பந்தமில்லாம ஒளர்றாங்க? இல்ல, யாரு எதைப் போட்டாங்கன்னு கேக்கறேன். கொஞ்சம் விட்டு வெச்சா, குணத்தைக் காட்டிடுவியே! ஒன்னை மாதிரிப் பொம்பளைங்களை எல்லாம் அப்பப்ப நாலு தட்டு தட்டி வெச்சாத்தான்.. இருக்க வேண்டிய எடத்தில..!” அவன் விரும்பியது போலவே, உள்ளே இருந்த பாக்கியத்துக்கு அவன் குரல் தெளிவாகக் கேட்டது. `கொலைகாரப்பாவி! வாயும், வயிறுமா இருக்கிற பொண்ணை என்ன பேச்சுப் பேசறான்! இவளுக்கும்தான் புத்தி வேணாம்? எதுக்காக அவன் பின்னாலேயே ஓடி வந்தா?” மாப்பிள்ளையின் தலையைக் கண்டதுமே தேனிர் தயாரிக்க ஆரம்பித்தவளின் கைகள் நடுங்கின. `எல்லாம் அந்த முருங்கைக்கா செஞ்ச வேலை! இருக்கட்டும், வீட்டுக்குப் போய் அந்தக் கிழவரைக் கவனிச்சுக்கறேன்!’ என்று கறுவிக்கொண்டாள். அவளுடைய கோபத்தின் இலக்கு மாறியதில், சற்று அமைதி பிறந்தது. ஹாலுக்கு வந்தாள். “அடடே! அத்தை!” என்று ஆச்சரியம் காட்டிய வைத்தி, “நல்லா இருக்கீங்களா?” என்று அளவுக்கு மீறிய கனிவுடன் குசலம் விசாரித்தான். மனைவியின் பக்கம் திரும்பி, “ஏன் ரஞ்சி? அம்மா வந்திருக்காங்கன்னு சொல்லவே இல்லியே!” என்றான் சிநேகபூர்வமாக. அவளோ, இறுகிய உதடுகளுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். “ரஞ்சியைப் பாக்க வந்தீங்களா? அவளுக்கென்ன! ஒரு வேலை செய்ய விடறதில்ல நான்!” அன்புடன் அவள் பக்கம் திரும்பிப் புன்னகைத்தான். `அதான் காதுல விழுந்திச்சே!’ என்று மனதுக்குள் வைதாள் பாக்கியம். உரக்க, “அன்னிக்கு நெய்யுருண்டை ஆசையா சாப்பிட்டீங்க! இன்னிக்கு நெறை..ய!” “ரஞ்சிதான் பாவம்! எண்ணை, நெய்யைப் பாத்தாலே அவளுக்கு குமட்டுது. நானும் அவளைக் கஷ்டப்பட்டுத்தக் கூடாதுன்னு, வர்றப்போவே சப்பாத்தி, புட்டு மாயாம், ஆப்பிள் — இப்படி எதையாவது வாங்கிட்டு வந்திடுவேன்!” பாக்கியத்தின் வலது கை, பலகாரங்களை ஒவ்வொன்றாக, உடையாமல், கவனமாக அடுக்கி வைத்தது. மனமோ, `பாவி! மகாபாவி! நீ பிறந்தப்போவே நான் காது மட்டுமில்ல, மூக்கும் குத்திக்கிட்டு இருந்தேண்டா!’ என்று ஓலமிட்டது. “எனக்குத் தெரியும், நீங்க சாப்பாட்டுக்குத் திண்டாடுவீங்கன்னு. அதான் அவங்கப்பாகிட்ட கறாரா சொல்லிட்டு வந்துட்டேன், `ஒரு பத்து நாளைக்கு எப்படியோ பாத்துக்குங்க, நான் ரஞ்சிக்கும், மாப்பிள்ளைக்கும் சமைச்சுப் போட்டுட்டு வரேன்’னு”. `சே! இதுக்குத்தான் அம்மா இல்லாத பொண்ணா பாத்துக் கட்டியிருக்கணும். இல்லே, அவங்க வெளியூரிலேயாவது இருக்கணும். இந்த மாதிரியா! நெனச்சா வந்து தங்கிடறாங்க. இப்ப நாங்க படத்துக்குப் புறப்பட்டா, தானும் கெளம்பிடுவாங்களே! தியேட்டரில நான் கையைக் கட்டிட்டு ஒக்காந்திருக்கணும்!” வைத்தியின் கை உதிர்ந்துவிட்ட உருண்டையைப் பிசைந்து கொண்டிருந்தது. “ஒங்களுக்கு விருப்பமில்லாட்டி..,” என்று பாக்கியம் இழுத்தாள். அவளுக்கு உடனே திரும்பும் எண்ணம் கிடையாதுதான். ஆனால், மரியாதையை உத்தேசித்து, அவன் உபசரிப்பான் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவள் நினைத்ததுபோலவே நடந்தது.”அது என்ன அத்தை, அப்படி ஒரு வார்த்தை சொல்லிப்புட்டீங்க! ஒங்களுக்கில்லாத உரிமையா! பத்து நாளென்ன, ஒரு மாசம் தங்குங்க. நானே ரஞ்சிகிட்ட கேட்டுட்டு இருந்தேன், எங்க ஒங்கம்மாவைக் காணும்னு! நீங்க வந்தாத்தான் வாய்க்கு ருசியா சாப்பிட முடியுது!” என்று, தன்னையுமறியாமல் வைத்தி ஒத்துக்கொள்ள, பாக்கியம் பெருமையுடன் உள்ளே போனாள். தனித்து விடப்பட்டதும், வைத்தி பின்னந்தலையில் அடித்துக்கொண்டான் `நாளைக்கு மொதல் வேலையா, “முடியாது என்று சொல்வது எப்படி?”ங்கிற புத்தகத்தை வாங்கியாகணும்,” என்று நிச்சயித்துக்கொண்டான். `அந்தப் புத்தகம் லட்சக்கணக்கில விக்குதாமே! ஒலகத்தில என்னை மாதிரி இளிச்சவாயனுங்க ரொம்ப பேரு இருக்காங்கபோல!’ என்ற அதிசயமும் உடனே ஏற்பட்டது. 25 படத்துக்குப் போகலாம் சோர்ந்து படுத்திருந்த மகளைப்ப பரிதாபத்துடன் பார்த்தாள் பாக்கியம். “நீ எப்பவும் இப்படி வீட்டிலேயேதான் அடைஞ்சு கிடப்பியா? ஜெயில் மாதிரி இல்ல இருக்கு!” என்று தூபம் போட்டாள். சூள் கொட்டினாள் ரஞ்சிதம். “தினமும் எங்கம்மா போறது!” “ஏண்டி! இந்த கோலாலம்பூரில போக இடமா இல்ல? இங்கிலிஷ்காரன், அமெரிக்காக்காரன் எல்லாம் இருபதாயிரம், முப்பதாயிரம் செலவழிச்சுக்கிட்டு வரான்!” அதிகம் வெளியில் போய் பழக்கமில்லாவிட்டாலும், டி.வி செய்திகளைப் பார்த்து வந்ததில், பாக்கியத்திற்கு நாட்டு நடப்பு தெரிந்திருந்தது. “ஆ..மா!”நொடித்தாள் மகள். “அவங்க மாதிரி பணத்தைக் குவிச்சு வெச்சுக்கிட்டு, எப்படி செலவழிக்கிறதுன்னு புரியாம திண்டாடறோம், பாருங்க! பிள்ளைக்கு வாங்க வேண்டியது இன்னும்.. !” “பிள்ளை பெத்துட்டா, நெனச்சவுடனே வெளியே கிளம்ப முடியுமா? கூடை நிறைய டயாபர், பால் போத்தல், சுடு தண்ணி எல்லாத்தையுமில்ல கட்டித் தூக்கிட்டுப் போகணும்!” “ஐயோ! கேக்கறப்போவே பயமா இருக்கு!” என்று சிலிர்த்துக்கொண்டாள் ரஞ்சி. “இப்பவே எல்லாத்தையும் நல்லா அனுபவிச்சுடு. கைப்பிள்ளை ராத்திரி பூராவும், `நை, நை’ன்னு அழும். என்ன, ஏதுன்னு கண்டு பிடிக்கிறதுக்குள்ளே பொழுது விடிஞ்சுடும்!” “என்னால் அதெல்லாம் முடியாதுப்பா. நான் படுத்தா, அசந்து தூங்கிடுவேன். அவர்தான் பாத்துக்கணும்”. “ரொம்ப நல்லா இருக்குடி. யாராவது கேட்டா, சிரிக்கப் போறாங்க!” “ஏன்? நான் இப்ப பத்து மாசம் சுமக்கல? அவரும்தான் அதுக்கப்புறம் பத்து மாசம் சுமக்கட்டுமே!” லாஜிக் பேசினாள் மகள். “அடி போடி! நாங்க எல்லாம் மூணு, நாலு பிள்ளைங்களைப் பெத்து வளத்தோமே, சும்மாவா? அம்மான்னா அப்படித்தான். கடை..சிவரைக்கும்..,” என்று வீறாப்பாக ஏதோ சொல்ல ஆரம்பித்தவளுக்குத் திடீரென்று தொண்டை கம்மியது. “இல்லாட்டி, நான் ஏன் இந்த வயசில ஒங்க வீட்டுக்கு வந்து இப்படி மாடா ஒழைக்கிறேன்! அப்பா கேட்டா.., அப்படியே உருகிடுவாரு. என்னை ராணிமாதிரி வெச்சிருப்பாரு!” அந்தக் குற்றச்சாட்டைக் கேட்டு ரஞ்சி நொந்து போனாள். “ஏம்மா? நானா எங்களை வேலை வாங்கறேன்? நீங்களே இழுத்துப் போட்டுக்கிட்டு ஏதாவது செஞ்சுட்டு..!” அவள் வாக்கியத்தை முடிக்க விடவில்லை, அப்போது வேகமாக உள்ளே வந்த வைத்தி. “ரஞ்சி! புறப்படு, புறப்படு!” என்று அவசரப்படுத்தினான். தன் காதுகளையே நம்ப முடியாதவளாக, ”எங்கே போறோம்?” என்று கேட்டாள் ரஞ்சி. “நாளைக்கே பிள்ளை பிறந்துட்டா, இப்படி நெனச்சமாதிரி வெளியே கிளம்ப முடியுமா? அதான் சினிமாவுக்குப் போக ரெண்டு டிக்கட் வாங்கிட்டு வந்திருக்கேன்!” பாக்கியம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள் .”அவ காலையிலேருந்து வாந்தியும் மயக்கமுமா தலையே நிமிரல. ஓய்வா கொஞ்சம் படுத்திருக்காம, எதுக்கு ஊர் சுத்தணும்?” அவள் பேசியதையே மருமகன் காதில் வாங்கிக்கொள்ளாததைப் பார்த்து, தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு உள்ளே நடந்தாள். “ஏங்க? மூணு டிக்கட் வாங்கி இருக்கக்கூடாது? அம்மா நம்பகூட இருக்கிறதை மறந்துட்டீங்களா?” `நல்லா மறப்பேனே!’என்று எண்ணிய வைத்தியின் முகத்தில் வெற்றிப் புன்னகை. ஆனால், உரக்க, “அது வந்து.., ரஞ்சி, ஒரு மாதிரியான படமாம். பேசிக்கிட்டாங்க. சென்சார் கொஞ்சம் அசந்திருந்தப்போ, ஹி..ஹி.. அப்படியே விட்டுட்டாங்களாம். அதுக்கென்ன! பக்திப் படம் வராமலா போயிடும்! அப்ப எல்லாரும் போகலாம், என்ன?” உள்ளேயிருந்து மனத்தாங்கலுடன் குரல் வந்தது: “எனக்குப் படம் பாக்கற ஆசையே இல்ல. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க!” அரை மணி கழித்து, ஏதோ பூங்காவில் இறங்கிய கணவனைப் பார்த்து, எதுவும் புரியாதவளாக ரஞ்சி கேட்டாள்: “எத்தனை மணிக்குப் படம்?” “படமாவது! அது சும்மா, ஒன்னைத் தனியா வெளியே கிளப்பறதுக்காக!” “இது ஒங்களுக்கே நல்லாயிருக்கா? நம்ப வீட்டுக்கு வந்து இப்படி மாடா உழைக்கணும்னு அம்மாவுக்கு என்னங்க தலையெழுத்து? அவங்களை வெளியே கூட்டிட்டுப் போக மட்டும்..!” “அவங்க பக்கத்தில ஒக்காந்திருந்தா, அவங்களைப்பத்தி நாம்ப பேசறது நல்லாவா இருக்கும்?” ரஞ்சிதம் கண்களைச் சுருக்கிக்கொண்டு அவனையே பார்த்தாள். வைத்தி தொண்டையைக் கனைத்துக்கொண்டான், தான் எவ்வளவு கண்டிப்பானவன் என்று காட்டிக்கொள்ள. “நம்ப வீட்டில, ஒண்ணு, நான் இருக்கணும், இல்ல ஒங்கம்மா. இப்பல்லாம் எனக்கு வீட்டுக்கு வர்றதுக்கே பிடிக்கல”. ரஞ்சிக்கும் கோபம் எழுந்தது. எப்போதோ சினிமாவில் கேட்டிருந்த வசனம் கைகொடுத்தது. “ஓகோ! பிடிக்கலியா? எங்கம்மாவைப் பிடிக்காட்டி, என்னையும் பிடிக்கலேன்னுதான் அர்த்தம்!” என்று பொரிந்தாள். வைத்தி அந்தப் படத்தைப் பார்த்திருக்கவில்லை. ஆகவே, பதிலுக்கு, “நீங்க ரெண்டு பேரும் ஓயாம என் மண்டையை உருட்டறது எனக்குத் தெரியும்,” என்று கத்தினான். தான் மட்டும் என்ன, சளைத்தவளா! ரஞ்சியும் கத்தினாள்: “ஆமா! ஒங்களைப்பத்திதான் பேசறோம். அம்மாவுக்கு அவங்க கவலை. நீங்கபாட்டில எப்பவும்போல என்னை அடிச்சுக்கிட்டும், பிடிச்சுத் தள்ளிக்கிட்டும் இருந்தா? அதான் எனக்குக் காவலா..!” அப்போதே அவளை அடித்துத் தள்ள வேண்டும்போல இருந்தது வைத்திக்கு. கைகளிரண்டையும் இறுக மூடினான், வலிக்கும்வரை.. அங்கிருந்தால் ஏதாவது செய்து வைத்துவிடப் போகிறோமே என்று பயந்தவனாக, “போகலாம்! வழியிலே ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம்!” என்றான் சமாதானமாக. அவளும் இறங்கி வந்தாள். “அம்மா ஏதாவது சமைச்சு வெச்சிருப்பாங்க. வீணாகிடும். அதோட, அவங்களை அவமரியாதை செய்யறமாதிரி..!” “இவ்வளவு சீக்கிரமா எப்படிப் போறது?” “எதையோ சொல்லி சமாளிச்சுக்குங்க. மனசில ஒண்ணை வெச்சுக்கிட்டு, வெளியில ஒண்ணு பேச ஒங்களுக்குச் சொல்லியா தரணும்?” 26 இளைத்த தொந்தி தட்டியவுடன் வீட்டு வாசற்கதவு திறக்கப்படவில்லை. “அம்மா உள்ளே வேலையா இருக்காங்க போலயிருக்கு!” என்றபடி, ரஞ்சி தன் கைப்பையிலிருந்த சாவியைக்கொண்டு அதைத் திறந்தாள். நுழைந்தவுடன், ஹாலில் சோகமே உருவாக, உட்கார்ந்து கொண்டிருந்த பாக்கியம்தான் அவர்கள் கண்ணில் பட்டாள். அவள் பக்கத்தில் துணிமணிகள் அடங்கிய பை. `இப்போ எதுக்கு ஆயத்தமோ!’ என்று அலுத்து, புருவத்தை உயர்த்தியபடி, வைத்தி உள்ளே விரைந்தான். “என்னம்மா?” மகளைப் பாராது, மனத்தாங்கலுடன் பதிலளித்தாள் பாக்கியம். “நீங்க ரெண்டு பேரும்தான் சந்தோஷமா இருக்கீங்களே! நான் ஒருத்தி எதுக்கு, குறுக்கே?” “நீங்க என்ன, சண்டை தீர்த்து வைக்கவா இங்க வந்தீங்க?” லேசாகச் சிரித்தபடி பேசினாலும், ரஞ்சிதத்திற்கும் எரிச்சலாக இருந்தது. அவர் சொல்வதில் என்ன தப்பு, ஆனாலும் இந்த அம்மா இப்படி பாடாய் படுத்த வேண்டாம் என்று தனக்குள் அலுத்துக்கொண்டாள். “அவர் என்ன சொல்றாரு? நான் இருக்கிறது தொந்தரவா இருக்குதாமா?” முகத்தை முழ நீளம் வைத்துக்கொண்டு கேட்டாள் பாக்கியம். உள்ளேயிருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த வைத்தியின் மூளையில், `இதுதான் சமயம்!’ என்று ஒரு பொறி பறக்க, விரைந்து வெளியே வந்தான். “அத்தை! இன்னிக்கு மத்தியானம் லெபோ அம்பாங்கில, சாப்பாட்டுக்கடையில மாமாவைப் பாத்தேன். பாவம், நீங்க இல்லாம சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்படறாரு. எளைச்சுத் துரும்பா ஆயிட்டாரு, போங்க” என்று அளந்தான். சந்தர்ப்பம் புரியாது, “அப்பாவைப் பாத்தீங்களா? எங்கிட்ட சொல்லவே இல்லியே!” என்று குறுக்கிட்டாள் ரஞ்சி. “படம் பாக்கற சுவாரசியத்தில மறந்துட்டேன், ரஞ்சி!” என, அவள் முறைத்தாள். பாக்கியத்தின் கவலை திசை திரும்பியது. “ஐயோ! எளைச்சுப் போயிட்டாரா? தொப்பையும், தொந்தியுமா அழ..கா இருப்பாரே!” பந்து விளையாட்டுகள் பார்த்திருந்ததில், எப்போது அடிக்க வேண்டும் என்று வைத்திக்குத் தெரிந்திருந்தது. “எனக்கு மாமாவைப் பாத்தா பாவமா இருந்திச்சு. நீங்க இங்க எவ்வளவு நாள் தங்கியிருந்தாலும், எங்களுக்குச் சந்தோஷம்தான். ஆனா, மத்தவங்களையும் நினைச்சுப் பாக்கணுமில்ல?” என்று ஒரேயடியாக உருக, ரஞ்சி ஆத்திரம் தாங்காது பல்லைக் கடித்துக்கொண்டாள். அவளைக் கவனியாதவன்போல, “அத்தை! நாளைக்கு நானே சாவகாசமா ஒங்களைக் கொண்டு விடறேன். கவலைப்படாம, சாப்பிட்டுட்டுத் தூங்குங்க,” என்றான் கரிசனத்துடன். “என் ஒருத்திக்காக என்ன சமைக்கிறது! நீங்க எப்படியும் சாப்பிட்டுட்டுதான் வருவீங்கன்னு தெரியும்!” என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டாள் பாக்கியம். மனைவியைப் பார்த்து முறைத்து, `பசி’ என்று வயிற்றில் ஒரு விரலால் வட்டம் போட்டான் வைத்தி. அவனை அலட்சியம் செய்துவிட்டு, “நீங்க தண்ணி ஏதாவது கலக்கிக் குடிச்சுட்டுத் தூங்குங்கம்மா. வயத்தைக் காயப்போடாதீங்க. கெட்ட கனவா வரும்!” என்று தாயைப் பரிந்தாள் அவள். அவர்களது அறைக்குள் நுழைந்ததுமே அவள்மேல் பாய்ந்தான் வைத்தி. “வர்ற வழியில சாப்பிடலாம்னு அடிச்சுக்கிட்டேனே! கேட்டியா?” “ஒரு வேளை பட்டினி கிடந்தா, ஒடம்புக்கு நல்லதுதான்!” “ஒன் ஒடம்பே நல்லா இருக்கட்டும். நான் எதுக்காக வயத்தைக் காயப்போடணும்? கெட்ட கனவு வர்றதுக்கா?” வந்த வேகத்திலேயே வெளியே போனான். அறைக்குள் படுத்திருந்த பாக்கியம் கலக்கத்துடன் எழுந்து உட்கார்ந்தாள். `வீட்டில பெரியவங்க இருக்காங்களேங்கிற பயம் துளிக்கூட இல்லாம..! ஐயோ! பெண்டாட்டியே வேணாம்னு எப்போ இவளைப் பிறந்த வீட்டுக்கே திருப்பி அனுப்பிடப் போறானோ இந்த காமுகன்! அப்பனே! பத்துமலை முருகா! நீதாண்டாப்பா இவளுக்குத் துணை! ஒனக்குக் கண் அவிஞ்சு போச்சா? நீ இருக்கிற எடத்தில இப்படி ஒரு அநியாயம் நடக்குதே!” என்று இரவு பூராவும் தனக்குள் பேசிக் கொள்வதும், கடவுளை மாற்றி மாற்றி பிரார்த்திப்பதும், நிந்திப்பதுமாகப் பொழுதைக் கழித்தாள் பாக்கியம். 27 விருந்து மாமியார் ரஞ்சியையும் அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனதும், அந்த மகிழ்வைக் கொண்டாட, வைத்தி சற்றுத் தூரத்திலிருந்த ப்ரிக்ஃபீல்டுஸுக்குப் போனான். அங்குதான் சிவன், முருகன், கிருஷ்ணன் என்று, பாரபட்சம் இல்லாது எல்லா தெய்வங்களுக்கும் கோயில் இருக்கிறதே, யாராவது ஒருவருக்காவது நன்றி செலுத்த வேண்டாமா என்ற யோசனை எழுந்தபோதே, இன்று எங்கே போய் சாப்பிடலாம் என்று மறறுமொரு யோசனை எழுந்தது. காசு கொடுத்து சாப்பிடப்போகிறோம், வீட்டுச் சாப்பாட்டைவிடச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணியபோதே சிரிப்பு வந்தது. ரஞ்சியின் கைப்பதத்தைவிட எதுவும் சிறப்பாகத்தான் இருக்கும், இதற்குப்போய் அதிகமாகச் செலவழிப்பானேன் என்றது அவனது இயல்பான கஞ்சத்தனம். கொண்டாடுவது என்று வந்துவிட்டு, செலவைப் பார்க்கலாமா என்று தன்னைத்தானே கடிந்துகொண்டு, அருகிலிருந்த பங்க்சாரிலிருந்த சரவணபவனுக்குப் போக முடிவெடுத்தான். அப்போது உள்ளே நுழைந்துகொண்டிருந்த ரவியையும், கூடவே ஒரு பெண்ணையும் பார்த்துவிட்டு, அவ்வெண்ணத்தைக் கைவிட்டு, மதராஸ் உட்லாண்ட்ஸுக்குப் போனான். அங்கு குளிர்சாதன வசதியை அனுபவித்தபடி, இலைச் சாப்பாடு, குலாப் ஜாமூன், மெட்ராஸ் காபி இத்தியாதிகளுடன் மூச்சு முட்ட சாப்பிட்டுவிட்டு, வெளியே போகும் வழியில் ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்த பெருஞ்சீரகத்தையும் தாராளமாக அள்ளி வாயில் போட்டுக்கொண்டபடி வெளியே வந்தான். அப்போது எதிர்ப்பட்ட ரவி, “என்ன வைத்தி? பாக்காதமாதிரி போறே? நான் ஒரு சிநேகிதனைப் பாக்க வந்தேன்! ” என்று முந்திக்கொண்டான். “சிநேகிதனா, சிநேகிதியா? ” “பாத்துட்டியா? ”நமட்டுச்சிரிப்பு. “ராதிகாவைப் படிக்கிற நாளிலிருந்தே பழக்கம்! ” “அப்ப, சீக்கிரமே கல்யாணச் சாப்பாடுன்னு சொல்லு! ” “ஒடனே சப்புக்கொட்டிடுவியே! கல்யாணம் நடக்குமா, நடக்காதான்னு நானே பயந்துக்கிட்டிருக்கேன்! ” “ஏன்? அவங்க அப்பா, அம்மா..? ” “யாருமில்ல அவளுக்கு”. ரவி முடிக்குமுன், “இதைவிட வேற என்ன வேணும்? அம்மா இருக்கிற பொண்ணைக் கட்டிக்கிட்டு நான் படற பாடு இருக்கே..! ” என்ற வைத்தி நாக்கைக் கடித்துக்கொண்டான். இவன் அந்த மாமியாரின் மகன் என்பதை மறந்து உளறிவிட்டோமே! ஆனால், ரவி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாகச் சிரித்தான். தைரியம் வர, வைத்தி தன் மனதைத் திறந்து காட்டினான் மைத்துனனிடம். “ஒங்கம்மா ரஞ்சியைத் தலைமேல தூக்கி வெச்சுக்கிட்டு ஆடறாங்க! நான் ஒருத்தன் இருக்கிறதே அவங்க ரெண்டு பேருக்கும் மறந்துபோச்சு! ” “ஒன்னைச் சொல்லி குத்தமில்ல. அம்மா இருக்கிற எடமெல்லாம் குழப்பம்தான், ” என்றான் ரவி, ஒரு புன்முறுவலுடன். “வெளியில எங்கேயாவது கெளம்ப அப்பா சட்டையை மாட்டிக்கிட்டாலே அம்மாவுக்கு இல்லாத சந்தேகமெல்லாம் வந்துடும்! ” “இப்பகூடவா? ” “அங்கதான் விஷயமே இருக்கு. எங்கே யாராவது தன்னைக் கிழவன்னு நெனச்சுடப் போறாங்களோன்னு அப்பாவுக்கு இப்பல்லாம் பயம். எளவட்டம் மாதிரி.. பாக்கிற பொண்ணுங்களை எல்லாம் விமர்சனம் செய்வார்! ” வைத்திக்கு மாமனார் மீதிருந்த மதிப்பு கூடியது. “அம்மாவுக்கோ, தனக்கு வயசு போயிட்டதால, அப்பாவுக்குத் தன்மேல உள்ள அன்பு கொறைஞ்சிடுச்சுன்னு கொறை. முந்தியெல்லாம் அப்பா இப்படியா இருந்தாருன்னு ஓயாம புலம்புவாங்க”. “நீ என்ன சொல்வே? ” “நான் சொல்ல முடியுமா, அப்பாவுக்குக் குறைஞ்சுட்டது அன்பில்லம்மா, அவரோட சக்திதான்னு? பேசாம, எல்லாத்தையும் கேட்டுக்குவேன்”. ஒருசில நாட்களே தன்னால் இந்த மாமியாரைத் தாக்குப்பிடிக்க முடியவில்லையே, அந்த அப்பாவி மனிதருடைய தலையெழுத்து, ஆயுள் பூராவும் அவர்களுடன் கழிக்க வேண்டும் என்று இருக்கிறதே, பாவம்! “பாவம், மாமா! ”   வாய்விட்டுச் சொன்னான். ரவி தொடர்ந்தான், “அதனாலதான், அம்மா ஒங்க வீட்டுக்குப் போன மறு வினாடியே அப்பா எங்கேயோ புறப்பட்டபோது சந்தோஷமா இருந்திச்சு எனக்கு. நிம்மதியா, எந்தக் கோயிலைச் சுத்திட்டு இருக்காரோ! ” அந்தச் சமயத்தில், மணி பங்கோர் தீவில் சமுத்திர ஸ்நானம் செய்யும் சாக்கில், தன் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தார் எனபது அந்த இளைஞர்களுக்கு தெரிய நியாயமில்லை. 28 வாடிய செடிகள் தன் வீட்டருகே வந்தபோது, பாக்கியத்திற்கு நிறைவாக இருந்தது. தான் உரிமையோடு இருக்கக்கூடிய இடம் இது ஒன்றுதான். இங்கு அர்த்தமில்லாமல், எவருக்கும் பணிந்துபோக வேண்டியதில்லை. இங்குள்ளவர்கள்தாம் எவ்வித போலித்தனமும் காட்டாது, உண்மையாக நடந்து கொள்பவர்கள். `பெண்ணுமாயிற்று, மாப்பிள்ளையுமாயிற்று! எல்லாம் கொஞ்ச காலம்தான்! அவரவர்கள் காரியம் ஆனால் சரி. நானென்ன சமையல்காரியா, கண்டவன் வீட்டுக்குப் போய் சமைத்துப்போட!’ என்று எழுந்த கசப்பை வலுக்கட்டாயமாக ஒதுக்கிவிட்டு, எப்போதுமில்லாத வழக்கமாக, கணவர் போட்டிருந்த தோட்டத்தை அன்புடன் நோட்டமிட்டாள். புருவங்கள் நெரிந்தன. கணவருடைய உயிரே அவைதாமே? எப்படிச் செடிகளை வாடவிட்டார்? ஒரு வேளை, தோட்டத்தைப் பராமரிக்க முடியாத அளவுக்கு உடம்பு முடியாமல் போய்விட்டதோ! மாப்பிள்ளை சொல்லவில்லை, அவர் பாதி உடம்பாக ஆகிவிட்டதாக? படபடப்புடன் உள்ளே நுழைந்தாள். முன்ஹாலில் ஒரு பெட்டி இருந்தது. `யார் வந்திருப்பார்கள்?’ என்ற யோசனையுடன் பாக்கியம் நின்றுகொண்டிருந்தபோது. “என்ன பாக்கியம்! மாப்பிள்ளையை விட்டு வர மனசு வரலியா? இல்ல, அவர் ஒன் கையைப் பிடிச்சுக்கிட்டு விட மாட்டேன்னுட்டாரா?” “ஏன் கேக்க மாட்டீங்க?” பாக்கியம் நொடித்தாள். “ஐயோ பாவம், சோத்துக்குத் திண்டாடுவீங்களேன்னு நான் ஓடி வந்தா..!” “என்னைப்பத்தி என்ன! நான் எதையோ சாப்பிட்டு சமாளிச்சுக்குவேன். ரஞ்சிக்கு ஒத்தாசையா, நீ இன்னும் ஒரு வாரம் இருந்திட்டு வந்திருக்கலாம்!” என்றார் மணி, உபசாரமாக. “அது சரி, பொழுநு போகாம, நீங்க செடிகிட்ட நின்னு பாட ஆரம்பிச்சுட்டீங்களா, மறுபடியும்?” அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாது விழித்தார். “இல்லை, செடி எல்லாம் வாடி இருக்கேன்னு கேட்டேன்,” என்று பாக்கியம் விளக்கவும், “அ.. ஆமா, ஆமா. பொழுது போகலியா, அதான்!” என்று உளறிவிட்டு, தான் சொன்னதில் தனக்கே நம்பிக்கை ஏற்படாது, “என்னான்னு சொல்றது, போ! நீ இல்லாம பொழுதே போகல. அதான் கிட்டப்பா பாட்டெல்லாம்..,” என்றார் அழுத்தமாக. “ஒங்களுக்கு ஒண்ணுமே தெரியாது!”என்று, ஒரு மனைவிக்கே உரிய உரிமையுடன் கண்டனம் தெரிவித்தாள் பாக்கியம். “இந்தக் காலத்து செடிங்க பாகவதரைக் கண்டுச்சா, கிட்டப்பாவைக் கண்டுச்சா? சும்மா, இளையராஜா, ரஹ்மான் பாட்டெல்லாம் எடுத்து விட்டா, அப்படியே தளதளன்னு வளராதா!” “அதானே! எனக்கு இது தோணல, பாரு!” என்று அவளுக்கு ஐஸ் வைத்தார் மணி. அந்தச் சமயம் பார்த்துத்தானா உள்ளேயிருந்து ரவி வரவேண்டும்! “எப்பப்பா வந்தீங்க?” என்று கேட்டவன், பாக்கியத்தைக் கவனித்துவிட்டு, “ஓ! வர்றபோதே அம்மாவையும் கூட்டிட்டு வந்துட்டீங்களா?” என்றான் அசந்தர்ப்பமாக. பாக்கியம் கணவரை உற்றுப் பார்க்க, அவர் நெளிந்தார். இந்த இக்கட்டிலிருந்து விடுபட, அவருக்குத் தெரிந்தது ஒரே வழிதான். அதைப் பிரயோகித்தார். “பாக்கியம்! காலையில என்ன சாப்பிட்டியோ, என்னமோ! காபி போட்டுட்டு வரட்டுமா?” குழப்பம் தாற்காலிகமாக மறைந்து போக, பாக்கியம் வாயைப் பிளந்தாள். “ஒங்களுக்கு காபிகூடப் போடத் தெரியுமா?” “அதென்ன அப்படிக் கேட்டுட்டே! நீ இல்லாதபோது நான்தானே எல்லாம்?” என்று, சமயத்திற்கு ஏற்ற அஸ்திரத்தை ஏவிவிட்டார். தான் உளறிவிட்டது புரிய, ரவி பெற்றோர் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். முகத்தில் சிறு நகை. பாக்கியத்திற்கு இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை. “ஆமா? ரவி என்னமோ..?” அவளை நெருங்கி ரகசியக் குரலில், “எப்போ நீ அந்தப் பொண்ணு ராதிகாவை வேணாம்னு சொன்னியோ, அப்பலேருந்து அவன் ஒரு மாதிரியா ஆகிட்டான்!” என்றார். “பாவம்!” என்றார், சிறிது பொறுத்து. “இந்தப் பொட்டி ஏன் இங்க வந்திச்சு?” என்று துருவினாள் பாக்கியம். “அது.. அது.. எனக்குப் பொழுது போகல, இல்லியா?அதான் தூசி தட்டி வெச்சேன். எவ்வளவு பாச்சைக் குஞ்சுங்க, தெரியுமா? கரப்பான் பூச்சி மருந்து வாங்கி, போட்டு வெச்சிருக்கேன்!” இவ்வளவு பொறுப்பான மனிதரை அனாவசியமாக சந்தேகித்தோமே என்று வருந்திய பாக்கியம், “எங்கே நான் அந்தப் பக்கம் போனதும், நீங்க இன்னொரு பக்கம் நழுவிட்டீங்களோன்னு நினைச்சுட்டேன்!” என்று ஒத்துக்கொண்டாள். குரல் தழுதழுத்தது. மணி அதிர்ந்தார். அதாவது, அப்படிக் காட்டிக்கொண்டார். “நழுவறதா! நானா! என்ன பாக்கியம், நீ! முப்பது வருஷத்துக்குமேல என்கூட இருந்திருக்கே! இன்னும் என்னை.. நீகூடப் புரிஞ்சுக்கல, பாத்தியா!” இன்னும் கொஞ்சம் போனால், அழுதுவிடுவார் போலிருந்தது. “இப்ப நான் என்ன சொல்லிட்டேன், நீங்க இப்படி வருத்தப்படறீங்க?” அவள் கேள்விக்குப் பதிலளிக்காது, சோகமே உருவாக மணி விட்டுக்கு வெளியே போனார். குற்ற உணர்ச்சி தாக்க, “காபி கேட்டீங்களே! இதோ போட்டுக்கிட்டு வரேன், இருங்க!” என்றபடி பாக்கியம் உள்ளே விரைந்தாள். அதற்கு மேலும் சஸ்பென்ஸைத் தாங்க முடியாது, ரவி தந்தையைப் பின்தொடர்ந்து போனான். “அப்படி எங்கதாம்பா போனீங்க?” “ஒங்கம்மா திரும்பி வர்றதுக்குள்ளே வந்துடலாம்னு நான் போனா, அவளும் இன்னிக்கே வந்து தொலைச்சுட்டா. நீ வேற, சமயத்தில காலை வாரி விட்டுட்டே!” “எங்கப்பா போனீங்க?” மறுபடியும் கேட்டான். தர்மசங்கடத்துடன், முகத்தைத் திருப்பிக்கொண்டு பதிலளித்தார் மணி. அது.. “சமுத்திர ஸ்நானம் பாவத்தைத் தொலைக்கும்பாங்க. அதான், பங்கோர் தீவுக்கு..!” என்று, பாதி உண்மையும், பாதி பொய்யுமாகக் கலந்து சொல்ல ஆரம்பித்தவருக்கு, கோர்வையாகப் பேசத் தைரியம் வந்தது. “பாரேன், நம்ப நாட்டிலேயே இருக்கு இவ்வளவு அழகான கடற்கரை! டி.வியில வெள்ளைக்காரன் படம் பிடிச்சுப் போடறான். ஆனா, நான் இன்னும் அங்க போனதே கிடையாது. இத்தனைக்கும் இங்கேயே பிறந்து வளர்ந்தவன்! “அப்படி என்னப்பா பாவ மூட்டை சேர்ந்துடுச்சு?” “யாருடா இவன், துருவித் துருவிக் கேட்டுக்கிட்டு! இதுக்கு ஒங்கம்மாவே தேவலை போலிருக்கே!” கையில் சூடான கோப்பையோடு வந்த பாக்கியம், தன் பெயர் அடிபடுவதைக் கேட்டு, மறைவாக நின்றுகொண்டாள். “அது வந்துடா.. ஒங்கம்மாவோட போர்ட் டிக்சனுக்குப் போனப்போ, அங்கே, இங்கே பாக்க முடியல. ஹி! ஹி! என் வயசில பாக்கத்தான் முடியும். அது இந்தக் கெழவிக்குப் புரியுதா?” அவர் காலத்தில் இல்லாத புதுமையாக, குறைந்த அளவில் நீச்சலுடையில் இருந்த இளம்பெண்களைத்தாம் அப்பா குறிப்பிடுகிறார் என்று புரிந்துகொண்ட ரவிக்குச் சிரிப்புப் பொங்கியது. சிரித்தால் மரியாதையாக இருக்காது என்று கையால் வாயை மூடிக்கொண்டான். “நீ பாட்டில, விவரம் புரியாம, ஏதோ உளறிட்டே! நல்லவேளை, நான் எப்படியோ சமாளிச்சுட்டேன்!” என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டவர், “ஏண்டா? செடிக்குத் தண்ணிவிடச் சொல்லிட்டுப் போனேனே! நீ என்ன செய்துக்கிட்டிருந்தே?” என்று மடக்கினார். `மறந்து விட்டேன்!’ என்று உண்மையைக் கூறினால், அப்பாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று, அவர் ஏற்கும் விதத்தில் பதிலளித்தான் மகன். “நீங்க செஞ்சதுதாம்பா. நான் இங்கேயே.. பார்க்கில.., தியேட்டரில்ல.., சும்மா மயிலு, குயிலு எல்லாம் பாத்துக்கிட்டு!” பாக்கியத்தின் கொதிப்பான மூச்சு பருத்த மார்பகங்களின்வழி வெளியே தெரிந்தது. `இருக்கட்டும். கவனிச்சுக்கறேன்!’ உள்ளே போய், மேலும் மூன்று கரண்டி சீனி போட்டுக் கலக்கினாள். `என் வீட்டிலேயே இவ்வளவு தில்லுமுல்லு! இந்த அழகிலே, மாப்பிள்ளையைக் குத்தம் சொல்லப் போயிட்டேனே! அவரோட கை அடிக்கிற கை. ஆனா, அது அணைக்கவும் செய்யும். இங்கேயோ, அடியோ, அணைப்போ — ரெண்டுமே கிடையாது!’ அவளுடைய மன ஒட்டத்தைத் தடுத்து நிறுத்தியது மணியின் குரல்: “ஆகா! இந்தமாதிரி காபி குடிச்சு எத்தனை நாளாச்சு! ஒன் கைமணமே தனிதான், பாக்கியம்! என் ருசி புரிஞ்சு, சீனி அதிகமா..!” சோகமும், வெறுப்புமாகக் கணவரையே பார்த்தாள் பாக்கியம். 29 ரகசியத் திட்டங்கள் அன்று ஞாயிற்றுக்கிழமை. காரைத் திறந்து வைத்துக்கொண்டு, ஏதோ எண்ணையை ஊற்றி, அதை, இதைத் துடைத்து, அதற்கு சிசுருஷை செய்துகொண்டிருந்தான் ரவி. வழக்கமாக தமிழ், ஆங்கில தினசரிகள் எல்லாவற்றையும் வாங்கி, அவைகளில் ஆழ்ந்துவிடும் மணிக்கு அன்று சுரத்தே இல்லை. மகனைத் தேடிக்கொண்டு வாசலுக்கு வந்தார். “ஒங்கம்மாவுக்கு என்னடா ஆயிடுச்சு? ரஞ்சி வீட்டில தங்கிட்டு வந்ததிலேருந்து எங்கிட்ட முகம் குடுத்தே பேசறதில்ல,” என்றார் பரிதாபமாக. பின், குரலைத் தணித்துக்கொண்டு, “நீ ஏதாவது சொல்லிட்டியா?” என்று கேட்டார், அதற்கு உண்மையான பதில் அவனிடமிருந்து வராதென்று தெரிந்திருந்தும். “சேச்சே! என்னப்பா நீங்க!” வன்மையாக மறுத்தான் மகன். “நான் நினைக்கறேன், ரஞ்சி வீட்டில.. அவங்க புதுசா கல்யாணமானவங்க, இல்லியா? வைத்தி அசட்டுப்பிசட்டுன்னு நடந்துக்கிட்டிருப்பான் பொண்டாட்டிகிட்ட! அம்மாவுக்குப் பழைய ஞாபகம் வந்திருக்கும்!” என்று தானே ஒரு காரணத்தைக் கற்பித்துக் கூறினான். “நான் என்னிக்கு அப்படி நடந்திருக்கேன்!” மணியால் குரலிலிருந்த ஏக்கத்தை மறைக்க முடியவில்லை.”மூணு தங்கச்சிங்க — ஒன் அத்தைங்கதான். பாட்டியும் கடைசிவரைக்கும் நம்பகூடவேதானே இருந்தாங்க! அம்மா கிட்ட வந்தாலே..!” ஏதோ புரிந்தவனாக ரவி தலையை ஆட்டிக்கொண்டான். “தாலி கட்டினவர் பக்கித்தில வர்றதுகூட அசிங்கமா?” மேலும் யோசித்தவன், “ஓ! அதான், நீங்க வெளியில கிளம்பினாலே, அம்மாவுக்கு அப்படி ஒரு பயம்!” என்று சரியாக ஊகித்தான். “தனியா ஒங்கம்மாவைக் கூட்டிட்டு நான் எங்கேயுமே போனது கிடையாது, ரவி. அப்படியே போனாலும், கல்யாணம், இல்லே, கருமாதிக்குத்தான்! எங்க காலம் அப்படி. இப்ப நானே கூப்பிட்டாக்கூட, அவளுக்குக் கூச்சமா இருக்கு!” “இப்ப.., ஒங்களுக்கு அம்மாமேல அன்பு இருக்குன்னு காட்டிக்கணும். அவ்வளவுதானே!” ரவி நிறையவே யோசித்தான். “இப்படிச் செஞ்சா என்னப்பா? வர்ற ஞாயித்துக்கிழமை அம்மாவுக்குப் பிறந்தநாள்!” அலட்சியமாகக் கையை வீசினார் மணி. “இதையெல்லாம் யாரு ஞாபகம் வெச்சுக்கறாங்க?” “அம்மாதாம்பா. நீங்களும் மறக்காம, ஒரு பரிசு குடுத்தா..!” மணியின் முகத்தில் வெளிச்சம் வந்தது. “பரிசென்னடா பரிசு! தடபுடலா விழாவே கொண்டாடிலாம்!” கேக், வெளியிலிருந்து ஆர்டர் செய்த விருந்துச் சாப்பாடு என்று உற்சாகமாகத் திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள் இருவரும். “இப்படியெல்லாம் செய்யணும்னு எனக்கு மொதல்லேயே தோணல, பாத்தியா!” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார் மணி. “ஏம்பா? கேக்கில எவ்வளவு மெழுகுவத்தி வைக்கலாம்? அம்பத்தி..,” என்று கணக்கிட்டவனைச் சாடினார் மணி. “ஏண்டா? இப்ப நாம்ப கொண்டாடறது எதுக்கு? `ஒனக்கு ரொம்ப வயசாகிடுச்சு’ன்னு ஒலகத்துக்கே டமாரம் அடிக்கவா? அது அம்மாவைக் கேலி செய்யறமாதிரி ஆகிடாது?” “இது எனக்குப் புரியலியே! ஒங்களுக்கும் வயசானதால, ஒங்களைப்போல இன்னொருத்தர் மனசு..!” “டே டேய்! சமயத்ததில காலை வார்றே, பாத்தியா!” ரவி சிரித்தான். “சரி. எத்தனை மெழுகுவத்தி வைக்கலாம்? நீங்களே சொல்லுங்கப்பா!” “பதினெட்டு,” என்றார் மணி, ஆணித்தரமாக. `அது என்ன கணக்கு?’ என்று முதலில் விழித்த ரவி, புரிந்து கொண்டவனாக, `ஓ! கல்யாணம் ஆனப்போ, அம்மாவுக்கு பதினெட்டு வயசில்ல!’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். பாசத்துடன் தந்தையை நோக்கினான். “அவளுக்கு எத்தனை வயசானாலும், என் கண்ணுக்கு என்னவோ..!” சுவற்றில் மாட்டியிருந்த கல்யாணப் போட்டோவில் மாலையும் கழுத்துமாகத் தன் பக்கத்தில் நின்றிருந்த மனைவியையே அன்பு கனியப் பார்த்தார் மணி. 30 பிறந்த நாள் கேக் தன்னை அவசரமாகச் சந்திக்க வேண்டும் என்று ரவி அழைத்தபோது, கலவரமடைந்தாள் ராதிகா. உடனே சம்மதித்தாள். அவன் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு, “இது அநியாயம், ரவி! பெரியவங்களைப் போய் ஏமாத்திக்கிட்டு! வெள்ளிக்கிழமை, அதுவும் அவங்க பிறந்தநாள் அன்னிக்கு!” ரவி அலட்சியமாகச் சூள் கொட்டினான். “ஒன்னைப்பத்தின உண்மை எல்லாத்தையும் சொன்னதாலதான் நாம்ப இன்னிக்கு..!” ராதிகா கண்டிப்புடன் அவனைப் பார்த்தாள். “அது வேற! அதுக்காக, சுத்த சைவமான அவங்களுக்கு முட்டை போட்ட கேக் குடுக்கறதை நான் ஒத்துக்க மாட்டேன். அது தப்பு!” ஆக்ரோஷமாகப் பேசியவளைப் பார்த்து ரவிக்குப் பெருமையாக இருந்தது. “ஒங்களுக்கென்ன! முட்டை போடாத கேக்தானே வேணும்?” “சண்டை போடாதே. எந்தக் கடையில கிடைக்குமின்னும் சொல்லிடும்மா, தாயே!” “கடையில ஏன் வாங்கணும்? நான் செஞ்சு தரேன்!” கண்களை சுருக்கிக்கொண்டு ராதிகாவையே பார்த்தான் ரவி. ஏதாவது சாக்கில், தன் குடும்பத்துடன் நெருங்கிவரப் பார்க்கிறாளோ? “கவலைப்படாதீங்க. நான் வரமாட்டேன். இது ஒங்க குடும்ப சம்பந்தப்பட்ட விஷயம்,” என்று வருத்தமாகச் சிரித்தவள், “நான் செஞ்ச கேக்குனுகூட யார்கிட்டேயும் சொல்லக்கூடாது!” என்று நிபந்தனை விதித்தாள். 31 கணவரின் கரிசனம் அந்தக் குடும்பத்தினர் — பாக்கியம் நீங்கலாக — காத்துக்கொண்டிருந்த வெள்ளிக்கிழமை ஒருவாறாக வந்தது. மணி சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். “குளிக்கப்போறியா, பாக்கியம்?” என்று அவளை வம்புக்கு இழுத்தார். “பின்னே? தோளில துண்டு, மாத்துப்புடவை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கடைவீதிக்கா போவாங்க?” “ஏன் இப்படி எதுக்கெடுத்தாலும் வள்ளுனு விழறே?” என்று முனகினார் மணி. “எனக்கு வர்ற கோபத்துக்கு..!” என்று பல்லைக் கடித்தாள் பாக்கியம். “வயசாயிடுச்சா? முந்தி மாதிரி என்னால எதையும் தாங்க முடியல. ஒன் கொரலைக் கேட்டாலே படபடன்னு வருது!”என்று மூக்கால் அழுதார் மணி. “ரொம்ப பயந்தமாதிரிதான்!” முணுமுணுத்தாள். “எதுக்கு இப்படி காலை வேளையில எங்கிட்ட வாய்குடுக்கறீங்க?” முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டார் மணி. “நான் ஒண்..ணுமே தப்பா சொல்லலியே! ஒன் முகமெல்லாம் `சவசவ’ன்னு, தண்ணி கோத்தமாதிரி இருக்கே, இதில குளிக்கப்போறியான்னுதான்..!” “என்ன அளக்கறீங்க?” அந்த மிரட்டலுக்கும் அஞ்சாது, “இரு, இரு! கண்ணுகூட கலங்கலா..!” என்றபடி, அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தவர், நெற்றியைத் தொடப்போனார். அவரது ஸ்பரிசத்தையே வெறுத்தவள்போல, பாக்கியம் அறைக்குள் விரைந்து, சுவற்றில் பதித்திருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள். உள்ளங்கை, புறங்கை இரண்டையும் மாற்றி மாற்றி நெற்றியிலும், கழுத்திலும் வைத்துக்கொண்டும், அவளால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. முகத்தில் தோன்றிய வெற்றிப் புன்னகையை மறைத்தபடி, “அப்படியே படுத்துக்க, பாக்கியம். நீ ஒரு வேலையும் செய்ய வேணாம்!” என்றார் அன்புக் கணவர். பாக்கியத்தின் முகம் தொங்கிப்போயிற்று. “வெள்ளிக்கிழமையும், அதுவுமா..!” “ஒனக்கும் சேர்த்து, நான் ரெண்டு முழுக்கு போட்டுடறேன்”. “சமையல்?” “அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ நிம்மதியா தூங்கும்மா. ஒன் ஒடம்புதானே முக்கியம்!” என்றுவிட்டு, அதற்குமேலும் அங்கு நின்றால், தான் உரக்கச் சிரித்தாலும் சிரித்துவிடுவோம் என்று பயந்து, மணி வேகமாக வெளியில் சென்றார். `ஏதோ தப்பு பண்ணிட்டு வந்திருக்காரு! மனசாட்சியோட உறுத்தல் தாங்கல. அதான், ரொம்ப நல்லவர்மாதிரி வேஷம்!’ என்ற ரீதியில், படுத்திருந்த பாக்கியத்தின் யோசனை போயிற்று. `அப்பாடி! ரொம்ப முரண்டு பிடிக்காம படுத்துட்டா. இவ வேற சமைச்சு, ரவி வேற வாங்கிட்டு வந்துட்டா..? நல்ல வேளை!’ என்று சந்தோஷப்பட்டுக்கொண்டார் மணி. 32 பிறந்தநாள் விழா கணவர் தன் மனத்துடன் விளையாடியது புரியவில்லை பாக்கியத்துக்கு. தன்னை நோயாளி என்றே நம்பி, அயர்ந்து உறங்கிப்போனாள். “அம்மா! தூங்கறீங்களா?” என்ற மகளின் குரலைக் கேட்டு, திடுக்கிட்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். குழப்பத்துடன், “ரஞ்சியா? எங்கேடி வந்தே? வீட்டுக்காரரோட சண்டையா மறுபடியும்?” என்று குசலம் விசாரித்தாள். ரஞ்சிதம் சிரித்தாள். “என்னம்மா நீங்க! நான் ஒரு நல்ல நாளுக்கு வரக்கூடாதா? ஒங்க மாப்பிள்ளையும் வந்திருக்காரு!” “இப்போ என்ன டைம்?” கணவன் பெயரை உச்சரித்தால், அவருக்கு ஆயுள் குறைந்துவிடும் என்று நம்பியவள் பாக்கியம். `மணி’ என்ற பெயரையே தவிர்த்தாள் அந்தப் பத்தினி. “ஒண்ணாகப் போகுது!” பாக்கியம் பதறி எழுந்தாள். “இவ்வளவு நேரமா தூங்கிட்டேன்! காலையில பாரு, குளிக்கப்போனவ..!” “அப்பா சொன்னாரு. சாப்பாடெல்லாம் ரெடி. முகத்தை மட்டும் கழுவிட்டு வாங்கம்மா”. பாக்கியம் கூனிக் குறுகிப் போனாள். பெண்ணும், மாப்பிள்ளையுமாக வீடு தேடி வந்திருக்கிறார்கள்! அவர்களை உபசரிக்காது, தான் இப்படி வேளை கெட்ட வேளையில் படுத்து..! தலையைக் கோதியபடி சாப்பாட்டு அறைக்கு வந்தாள். மேசையைச்சுற்றி குடும்பத்தினர் அனைவரும் ஏதோ ரகசியச் சிரிப்புடன் நின்றிருந்தது போல் தோன்றியது அவளுக்கு. `என்ன நடக்கிறது இந்த வீட்டில்?’ பாக்கியம் சற்றும் எதிர்பாராவிதமாக, அனைவரும் உற்சாகமாகப் பாட ஆரம்பித்தார்கள். “ஹாப்பி பர்த்டே டு யூ!” என்று இருமுறை பாடிவிட்டு, அந்த வரியின் இறுதியில், `பாக்கியம்’ என்று மணியும், `அம்மா’ என்று அவள் பெற்ற செல்வங்களும், `அத்தை’ என்று மாப்பிள்ளையும் ஒரே சமயத்தில் ஆளுக்கொரு ஸ்ருதியில் கூவ, அதையெல்லாம் மீறி, மேசைமேல் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த கேக்கையை உற்றுப் பார்த்தாள் பாக்கியம். அவளுடைய திகைப்பை ரசித்த ரவி, “என்னம்மா அப்படிப் பாக்கறீங்க? ஓ! மெழுகுவத்தியை எண்ணறீங்களா? பதினெட்டுதான். எல்லாம் அப்பாவோட ஐடியா!”என்றான் பெருமை பொங்க. அவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக, பாக்கியம் ஒரு கையால் முகத்தை மூடிக்கொண்டாள். விசும்ப ஆரம்பித்தாள். “இப்படி நம்ப பிள்ளைங்க முன்னாலேயே என்னை அவமானப்படுத்தணும்னு எத்தனை நாளாத் திட்டம் போட்டீங்க?” மணி எதுவும் புரியாது விழிக்க, பாக்கியம் தன் கணைகளைத் தொடர்ந்து வீசினாள். “நான் வயசானவதான். இல்லேங்கலே. ஆனா, நீங்களும் அப்படி ஒண்ணும் சின்ன வயசில்ல. உக்கும்! ஒங்களுக்குப் பதினெட்டுவயசுப் பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்னு.. இப்படி… எல்லார் எதிரிலேயும்..! ஒங்களுக்கே இது நல்லாயிருக்கா?” பெரிதாக அழுதபடி உள்ளே ஓடினாள். அதிர்ச்சியில், மணியின் வாய் பிளந்தது. தான் எது செய்தாலும், அது ஏன் இப்படி அனர்த்தமாகவே வந்து முடிகிறது என்று அயர்ந்து போனார். ரவியும், ரஞ்சிதமும் அவரை இரக்கத்துடன் பார்க்க, `இந்த பொம்பளைங்களை யாராலும் மாத்த முடியாது!’ என்று வெறுப்புடன் தலையை ஆட்டிக்கொண்டான் வைத்தி. 33 பொய் சொல்லிப் பழகு அன்று மத்தியானம் சாப்பாட்டுக்கு வரப்போவதாகச் சொல்லிவிட்டுப் போயிருந்தான் ரவி. சமையலை முடித்துவிட்டு, ஆசுவாசமாக பாக்கியம் உட்காரப் போனபோது, ஒரு கடிதத்துடன் உள்ளே வந்தார் மணி. அவர் முகத்தில் கவலை தேங்கியிருந்தது. அவள் அவர் முகத்தையே பார்த்தாள். “சாமி எழுதியிருக்கான். சொர்ணத்துக்கு மூணாவது தடவை ஹார்ட் அட்டாக் வந்திருக்காம். பிழைக்கிறது கஷ்டமாம்”. அவளுடைய நாத்தனார் மகன் சாமிக்குக் கடிதம் போடும் வழக்கமெல்லாம் கிடையாதே! ஏதோ நினைவு எழ, பாக்கியத்திற்குச் சிரிப்பு வந்தது. “நெசம்..மாவே சாமிதான் எழுதியிருக்கானா, இல்லே, இன்னொரு ஹனிமூன் திட்டம் போட்டு, நீங்களே எழுதி போஸ்ட் செய்தீங்களா?” “சே! இந்தமாதிரி விஷயத்திலே எல்லாமா விளையாடுவேன்! நீ நம்பாட்டி போ! மிச்சம் இருக்கிறது ஒரு தங்கை! உசிரோட இருக்கிறப்போ பாக்காம, அப்புறம் எதுக்காக போய் நிக்கறது!” வருத்தம் கோபமாக மாறியது. விர்ரென்று உள்ளே போனார். அவர் தயாராகி வருவதற்குள், பாக்கியமும் இரு தோய்த்த புடவைகளை `ஜயண்ட்’ என்ற பச்சை எழுத்துக்களைத் தாங்கியிருந்த பிளாஸ்டிக் பைக்குள் திணித்துக்கொண்டு வாசலில் தயாராக நின்றாள். அந்தச் சமயம் பார்த்து வந்த ரவி, “எங்கேம்மா புறப்பட்டீங்க?” என்றான் சிறிது ஆச்சரியத்துடன். காலையில்கூட தன்னிடம் எதுவும் சொல்லவில்லையே! பிறகு, அவனே ஒரு முடிவுக்கு வந்தவனாக, “ரஞ்சியைப் பாக்கவா?” என்று கேட்டான். “இல்லடா. ஈப்போ அத்தைக்கு..,” அவள் முடிப்பதற்குள், பொங்கி வரும் சிரிப்பை மறைக்க முயன்றவனாய், உள்ளே விரைந்தான். `பாவம் அம்மா! சின்னப்பிள்ளை மாதிரி, எப்பவும் இந்த ஒரே சாக்குதான்!’ என்று பரிதாபப்பட்டுக்கொண்டவன், `இதுக்குத்தான் அடிக்கடி பொய் சொல்லிப் பழகணும்!’ என்று சொல்லிக்கொண்டான். “வீட்டைப் பாத்துக்க, ரவி! நானும் அம்மாவும் ஈப்போ போறோம். எப்போ வருவோமோ, தெரியல!” என்றபடி மணியும் உள்ளேயிருந்து வந்தார். `அப்ப.., அம்மாவோட கோபம் போயிடுச்சா? ரெண்டு பேரும் ஒண்ணாக் கெளம்பறாங்க!’ என்று மகிழ்ந்தான் மகன். 34 வைத்தியமும் பைத்தியமும் கறிகாய் நறுக்கியபடி இருந்த பாக்கியம் நடுநடுவே கண்ணைத் துடைத்துக்கொண்டாள். “வெங்காயம் ரொம்பக் காரமா, பாக்கியம்?” என்று கேட்டபடி அருகில் வந்த மணி, “அட, கீரையா! அதுக்குக்கூடவா கண்ணில தண்ணி வருது?” என்று அதிசயப்பட்டார். பின், “ஆமா? நேத்தும் கீரை, முந்தா நாளும் கீரை! உருளைக்கிழங்கு, வாழைக்காய் எல்லாம் வாங்கிட்டு வந்தேனே! வாய்க்கு ருசியா..,” என்று ஏதோ சொல்வதற்குள், “அதெல்லாம் அப்படியே விஷம்! நான் ஒருநாள் தண்டுக்கீரை, அப்புறம், தவசிமுருங்கை, பசலைக்கீரை — இப்படி மாத்தி மாத்தித்தானே சமைக்கிறேன்! அது எப்படி, எல்லாக் கீரையும் ஒண்ணாகிடும்?” என்று வாதம் செய்தாள். `தினமும் கீரையே சாப்பிட்டா, போகிற போக்கில மாடாவே..,’ என்று முணுமுணுத்தார் மணி. அவள் வாதம் நியாயமாகப் பட்டதால், உரக்கச் சொல்ல தைரியம் வரவில்லை. “ம்! டாக்டர் எவ்வளவோ சொல்லியும் கேக்காததாலதானே சொர்ணம் அண்ணி..,” என்றவள் கண்ணைத் துடைத்துக்கொண்டாள். “இத்தனைக்கும், என்னைவிட ஒரு வயசு சின்னவங்க. இப்படி அநியாயமா..!” “அவ ஆயுசு அவ்வளவுதான்! விடுவியா! அதையே நினைச்சுக்கிட்டு,” என்று எரிச்சலுடன் கூறியவர், “டாக்டர் சொல்றதை எல்லாம் கேட்டா மட்டும், யாராவது யமனுக்கு டிமிக்கி குடுக்கமுடியுமா, என்ன!” பாக்கியத்தின் அழுகை பலத்தது. சமாதானமாகப் போகலாம் என்றெண்ணிய மணி, “அப்படி என்னதான் சொன்னாராம் அந்த டாக்டர்?” என்று கேட்டுவைத்தார். “வீட்டை விட்டு வெளியேவே போகக்கூடாதுன்னு..!” “பைத்தியம் பிடிக்க வழி சொல்லி இருக்காரு அவரு!” “ஒங்ககிட்ட போய் சொல்றேனே!” “சரி. சரி. எனக்கு மட்டும் துக்கமில்லையா? சொர்ணத்தோட காரியமெல்லாம் முடிஞ்சு வந்ததிலேருந்த் மனசு ஒரு மாதிரியா இருக்கு!” என்று சொல்லிப்பார்த்தார். “ஒங்களுக்கு மனசு மட்டும்தான் சரியா இல்ல. எனக்கு ஒடம்பும்..!” அவளது நீண்ட பெருமூச்சு மீதியைச் சொல்லிற்று. ஏதாவது மருத்துவப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தால்கூட, அதிலிருக்கும் அத்தனை வியாதிகளும் தனக்கும் வந்துவிட்டதாகப் பிரமை பிடித்துவிடும் பாக்கியத்திற்கு. ஆயாசத்துடன், “இப்ப என்ன?” என்றார் மணி. “அதை ஏன் கேக்கறீங்க!” என்று அவள் தோளைப் பிடித்துவிட்டுக்கொள்ள, “கத்தியை இப்படிக் குடு,” என்று கையை நீட்டினார். “ஒண்ணும் வேணாம். அப்புறம், `இந்த வீட்டில பொம்பளை வேலையெல்லாம் நான் செய்ய வேண்டியிருக்கு!’ அப்படின்னு முணுமுணுப்பீங்க!” என்று பிகு செய்துகொண்டாள். “அது..,” மணிக்கே சிரிப்பு வந்தது தனது `ஆண்பிள்ளை பந்தா’வை எண்ணி. “நீ ஏதாவது செய்யச் சொன்னாதான் அப்படி. இப்ப நானேதானே கேக்கறேன் பரவாயில்ல, குடு!” இரும்பு சாமான் எதையாவது ஒருவர் கையில் கொடுத்தால், அவருடன் சண்டை மூளுமாமே! ஏற்கெனவே, வீட்டில் நிம்மதி இல்லை. இன்னும் புதிய சண்டைகள் வேறு வேண்டுமா! கத்தியைப் பலகைமேல் வைத்துவிட்டு, “வெளியே போனா, கேரட்டு வாங்கிட்டு வாங்க!” என்று பணித்தாள். “வயசாகிட்டு வருதா! கண்ணு கொஞ்சம் மங்கலா இருக்கிற மாதிரி.. நாம்பளே இயற்கை வைத்தியம் பண்ணிக்கிட்டா நல்லதுதானே! இப்பல்லாம், காலையில சூரிய நமஸ்காரம்கூடச் செய்யறேன்!” என்று பெருமையாகத் தெரிவித்தாள். “என்னென்ன வெணுமோ, எல்லாத்துக்கும் ஒரு பட்டியல் போட்டுக் குடு!” சிரிக்காது சொன்னார் மணி. “ஒரு பெரிய புட்டி தேன்!” “தேனா? போன வாரம்தானே வாங்கிட்டு வந்தேன்!” “அது போ..ன வாரம்!” “அது எதுக்கு? கண்ணுக்கா, மூக்குக்கா?” அவர் கேலிதான் செய்கிறார் என்பது சந்தேகமறப் புரிய, பாக்கியத்தின் உதடுகன் இறுகின. மெளனம் சாதித்தாள். இப்போதுதான் கொஞ்சம் சுமுகமாகப் பேசத் தொடங்கி இருக்கிறாள், எங்கே பழையபடி, திரும்பவும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு படாத பாடு படுத்தப்போகிறாளோ என்று பயந்த மணி, முகத்தை அப்பாவித்தனமாக மாற்றிக்கொண்டார். “நான் நெஜமாத்தான் கேக்கறேன், பாக்கியம். ஒன்னைமாதிரி.. இந்த கைவைத்தியமெல்லாம் எனக்கு என்ன தெரியும், சொல்லு!” முனகலாக, “அங்க வேளை கெட்ட வேளையில தலைக்குக் குளிச்சது, வந்தவங்ககூட சேர்ந்து ஓயாம அழுதது, எல்லாமாச் சேர்ந்து, ஒரே சளி பிடிச்சிருக்கு!” என்றாள். “அப்படிச் சொல்லிட்டுப் போயேன்! இதுக்குப் போய்..!” என்றார் அலட்சியமாக. “ஒங்களை மாதிரிதான் எங்க மாமா பொண்ணு சரசா..,” அவள் முடிப்பதற்குள், ஆர்வத்துடன் குறுக்கிட்டார் மணி: “யாரு, நம்ப கல்யாணத்தன்னைக்கு நீலத் தாவணி போட்டுக்கிட்டு, துடிய்..யா ஒரு பொண்ணு..!” பாக்கியம் அவரையே உற்றுப் பார்த்தாள். “வயசானதில எது கொறைஞ்சிருந்தாலும், ஒங்க ஞாபகசக்தி மட்டும்.. ஆகா!” அசட்டுச்சிரிப்புடன் மணி நெளிந்தார். “என்னைவிட ரெண்டு வயசுதான் சின்னவ அவ!” என்று ஏதோ சொல்லப்போன பாக்கியத்தை தன்னையுமறியாமல் இடைமறித்தார்: “அவ்..வளவு வயசாகிடுச்சா?” “என்னது?” பாக்கியம் முறைத்தாள். “இல்ல, இல்ல, சொல்லு. ஒங்க சரளாவுக்கு..?” “சரளா இல்ல. சரசா. அவளுக்கும் என்னைமாதிரிதான்!” “என்னது? கீரை, கேரட்டு, தேன் எல்லாத்துமேலேயும் தனி மோகமா?” பாக்கியம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள். “ஒங்களுக்குக் கேலியா இருக்கு! அவளுக்கும், பாவம், சளியும், இருமலுமா..!” “புட்டி புட்டியா தேன் குடிக்கச்சொல்லி நீ அட்வைஸ் குடுத்திருப்பியே!” அவரது குரலில் தொக்கியிருந்த கேலியைப் புரிந்துகொள்ளாது, “அவ யார்கிட்டேயும் சொல்லாம, அசிரத்தையா இருந்துட்டா. டாக்டர்கிட்ட போனப்போ, `நீங்க மொதல்லேயே வந்திருக்கணும்’ அப்படின்னுட்டாரு!” “பிழைக்கத் தெரிஞ்சவர்! அப்பத்தானே நல்லா கறக்க முடியும்!” “சும்மா இருங்க. அவளுக்கு என்ன கோளாறு தெரியுமா?” “உசிரு போறதுக்கு எதுவா இருந்தா என்ன?” “கான்சர்! சுவாசப் பையிலே!” “அட! அவள் சிகரெட் பிடிப்பாளா?” “கேலியா செய்யறீங்க? ஒங்களுக்கு வந்தா தெரியும்!” “இதுக்குத்தாம்பா நான் சிகரெட்கிட்டேயே போறதில்ல,” என்று சந்தோஷப்பட்டுக்கொண்ட மணி, “வெறும் புகையிலைதான்!” என்றார் மெள்ள. “ஒங்ககிட்டபோய் சொல்றேனே!” “கோவிச்சுக்காதே, பாக்கியம்! ஒங்கிட்ட விளையாடாம, வேற யார்கிட்ட விளையாடப்போறேன், சொல்லு!” அதற்கும் அவள் மசிவதுபோல் தெரியாததால், “ ஒனக்கு என்ன! தேன் வாங்கிட்டு வரணும். அவ்வளவுதானே? சொல்லிட்டேயில்ல? விடு. பெரிய புட்டியா ரெண்டு..”. “இங்க என்ன, காசு கொட்டியா கிடக்குது! ஏன்தான் இப்படிக் காசைக் கரியாக்குவீங்களோ!” `தாக்குப்பிடிக்க முடியாது,’ என்பதாக மணி தலையை ஆட்டிக்கொண்டார். ஒரு சிறு காகிதத்தை எடுத்துப் பட்டியல் போடத் துவங்கினார். `ஒரு டஜன் எலுமிச்சம்பழம்! அதை விட்டுட்டாளே! ரெண்டா வெட்டி, தலையிலே தேய்ச்சுக்கிட்டா, எனக்கு பைத்தியமாவது பிடிக்காம இருக்கும்!” 35 வயதைக் குறைக்க “என்னப்பா? சோர்ந்துபோய் ஒக்காந்திருக்கீங்க, லைட்டுகூடப் போடாம? ஒடம்பு சரியில்லையா?” துள்ளி எழுந்தார் மணி. “அந்த வார்த்தையையே என் காதில போடாதேடா!” “என்னப்பா?” “என்னான்னு சொல்றது, போ! முந்தியெல்லாம் `ஒடம்பு’ங்கிற வார்த்தையைக் கேட்டா, நல்..லா, வளைவு, வளைவா.. (கையால் ஒரு பெண்ணின் உருவத்தைக் காட்டியபடி தொடர்ந்தார்), கண்ணுக்கு முன்னாடி தெரியும். இப்பவோ, கண்ணு, மூக்கு, தோள், முழங்கால்.. இப்படி தனித்தனியா வந்து பயமுறுத்துது!” என்றார் அழமாட்டாக்குறையாக. தன்னையும் மீறிச் சிரித்தான். “ஏம்பா?” “நம்ப வீட்டில என்னமோ ஆயிடுச்சுடா. அம்மா தினம் ஒரு வியாதி கொண்டாடறதும், அவ பேச்சைக் கேட்டுக்கிட்டு நானும் என்னென்னமோ வாங்கிட்டு வர்றதும்..! சேச்சே! ஏண்டா கல்யாணம் செய்துகிட்டோம்னு இருக்கு!” ரவி புன்னகை மாறாது, “இந்த யோசனை முப்பது, நாப்பது வருஷத்துக்கு முந்தி வந்திருக்கணும்,” என்றான் மெள்ள. தொடர்ந்து, “நல்ல வேளை, வரல. இல்லாட்டி, நான் எங்கே?” என்று முடித்தான். மணிக்குத் தர்மசங்கடமாகப் போயிற்று. தான் வாய்தவறி ஏதோ சொல்லப்போக, இந்தப் பயல் இப்படி அசிங்கமாகப் பேசுகிறானே! அவரது நிலைமையைப் புரிந்துகொண்ட ரவி, ஆதரவாகப் பேச ஆரம்பித்தான். “அப்பா! நான் நெனைக்கறேன், அம்மாவோட வயசைச் சேர்ந்தவங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா சாகறதைப் பாத்து அம்மாவுக்கும் பயம் வந்திருக்கணும். நீங்க ஏதாவது புது முயற்சி எடுத்துக்கிட்டா..!” அவன் முடிப்பதற்குள் மணி அலறினார். “இன்னொரு முயற்சியா! ஐயோ! நீ சொன்னதை நம்பி, அவ பிறந்தநாள் அன்னைக்கு நான் வாங்கிக் கட்டிக்கிட்டது போதாதா?” “ஏதோ ஒரு தடவை அப்படி ஆயிடுச்சு. அதுக்காக.. வேற முயற்சியில..”. “சரி, சொல்லு. நிலைமை இதைவிட மோசமாக முடியாது!” “வயசாகிக்கிட்டே போகுதேன்னு அம்மாவுக்குக் கவலை!” “வயசு விலைவாசியைப்போல! ரெண்டும் எறங்கினதா சரித்திரமே இல்லியே! அதுக்கு நான் என்னடா செய்யறது?” “அப்படிக் கேளுங்க! ஒங்க வயசு குறைஞ்சமாதிரி நீங்க நடந்துக்கணும். சும்மா, நடையில ஒரு மிடுக்கு, சட்டையில செண்டு..!” “கஷ்ட காலம்! புதுசா கல்யாணமானவன் செய்யறது அதெல்லாம்!” அருவருப்படைந்தார். “நானோ, சீக்கிரமே தாத்தா ஆகப்போறவன்!” “நீங்க எளமையாக் காட்டினா, அம்மா தனக்கும் வயசு கொறைச்சல்தான்னு..,” என்று ஆரம்பித்த ரவி, தன்னறைக்குள்போய் எதையோ எடுத்து வந்தான். ஒரு பூப்போட்ட சட்டையைத் தந்தையிடம் கொடுத்தபடி, “இந்தாங்கப்பா. என் ஃப்ரெண்ட் எனக்காக வாங்கிட்டு வந்தான். எனக்குத் தொளதொளன்னு இருக்கு. ஒங்களுக்குச் சரியா இருக்கும்,” என்றான். அதற்குள் மணி செண்ட் பாட்டிலைத் திறந்து முகர்ந்து கொண்டிருந்தார். மூக்கு சுளித்தது. “இது என்னடா கர்மம்? இந்த நாத்தம் நாறுதே?” “இது.. ஆண்களை விரட்டியடிக்கும், பெண்களைக் கவர்ந்திழுக்கும்!” விளம்பரத்தொனியைக் கையாண்டான். “இந்த வயசில எனக்கெதுக்குடா இந்தக் கண்ராவியெல்லாம்!” “பாத்தீங்களா, பாத்தீங்களா? ஒங்க வயசை நீங்க மறந்து நடக்கணும்னுதானே பிளான் போட்டோம்? எனக்குத் தெரியும். சொன்னாக் கேளுங்கப்பா!” என்று வற்புறுத்தி அவரை இணங்கவைத்தான் ரவி. தனது வாக்குச் சாதுரியத்தில் பெருமைகூட ஏற்பட்டது அவனுக்கு. 36 இளமை வைத்தியம் கண்ணாடிமுன் நின்று, பூப்போட்ட சட்டையில் தன்னழகை ரசித்துக் கொண்டிருந்தார் மணி. செண்டை நாலைந்து தடவை விரலில் தடவி, பின்கழுத்து, அக்குள் என்று எக்கச்சக்கமாய் பூசிக்கொண்டார். `மன்மத லீலையை’ என்று முனகிவிட்டு, “சே!” என்று தம்மைத் தாமே கடிந்துகொண்டு, “நேத்து ராத்திரி யம்மா!” என்று சற்றே நாகரிகமாக மாற்றிக்கொண்டார். இப்போது வரும் படப்பாடல்கள் காதலைவிட காமத்தையே தூண்டுகின்றன என்பது அவரது அபிப்ராயம். சமையலறையிலிருந்து கரண்டியுடன் வெளியே வந்தாள் பாக்கியம். மூச்சை இழுத்துவிட்டாள் இரண்டொரு முறை. `என்ன, ஒரே நாத்தம்? வீட்டுக்குள்ளே எலி, கிலி செத்து வெச்சுடுச்சா?’ என்று மோப்பம் பிடித்தபடி நேராக நடந்தவள், அறைக்குள் நின்றிருந்த கணவரைக் கண்டதும், மீண்டும் இரண்டடி பின்னால் நகர்ந்தாள். அதிர்ச்சியும் அருவருப்பும் ஒருங்கே எழுந்தன. அவளைக் கவனியாததுபோல, தலையிலிருந்த நாலைந்து முடிகளைச் சீவியபடி, மணி தன்பாட்டில் விசிலடித்துக் கொண்டிருந்தார்:`ஐ லவ் யூ!’ சீப்பை பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டுவிட்டு, கண்ணாடியை நோக்கி ஒரு கரத்தை நீட்டியபடி பாட ஆரம்பித்தார்: `அன்பே வா! அழைக்கின்றதென்றன் மூச்சே!’ அதற்குமேலும் தாக்குப்பிடிக்க முடியாது, அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தாள் பாக்கியம். `இந்தக் கெழவருக்கு என்ன, மூளை பெரண்டு போச்சா? இங்க நான் ஒருத்தி போற நாளை எண்ணிக்கிட்டு இருக்கேன்! காதல் பாட்டா கேக்குது இவருக்கு! `ஐ லவ் யூ!’வாமே! எங்கிட்ட ஒருவாட்டி சொல்லியிருப்பாரா அப்படி?’ என்று தன்னிரக்கத்துடன் யோசித்தவள், தோளைக் குலுக்கிக்கொண்டாள். `யாருக்கு நெனப்பு இருக்கு!’ `என் ஒடம்பிலே மூச்சு ஒட்டி இருக்கிறப்போவே இந்த ஆட்டம் போடறாரே, மனுசன்! நான் கண்ணை மூடிட்டா, பத்தாம் நாளே ஒரு பதினெட்டு வயசுப் பொண்ணாப் பாத்து..!’ கன்னத்தில் கை கைத்தபடி உட்கார்ந்திருந்த பாக்கியம் அவளருகே வந்து நின்ற மணியைக் கவனிக்கவில்லை. “எப்படி நம்ப அலங்காரம்? இருபது வயசு கொறைச்சலாக் காட்டலே?” என்று பெருமையுடன் கேட்டவரை முறைத்தாள். அவளுடைய மன ஓட்டத்தைப்புரிந்துகொள்ளாது, “பார்! ரசிச்சுப் பார்!” போஸ் கொடுத்தார். “ரசிக்க வேண்டியவங்க ரசிச்சா சரி!” வெறுப்பு மேலிட, பாக்கியம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். `இந்த உத்தியும் பலிக்கவில்லையே!’ என்ற நிராசை தாங்காது, அவளையே சிறிது நேரம் பார்த்துகொண்டிருந்துவிட்டு, சட்டையைக் கழற்றிப்போட்டார். மூக்கின் அருகை கையல் விசிறியபடி உட்கார்ந்திருந்த மனைவியிடம், “என்னால முடிஞ்சதை எல்லாம் செஞ்சு பாத்துட்டேன். இனிமே ஒன்னை மாத்த யாராலும் முடியாது!” என்று கசந்து பேசினார். “அதுக்கு என்ன செய்யப்போறீங்க? என்னைத் தள்ளி வைக்கப் போறீங்களா?” அவர்மீதே பாய்ந்தாள். “நான் ஒண்ணும் செய்யப் போறதில்லப்பா!” என்றார் மணி, முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு. இவள் கொஞ்சகாலம் எங்காவது தொலைந்து போனாலாவது தான் நிம்மதியாக இருக்க முடியுமே என்றெண்ணி, “நம்ப வயசுக்காரங்க ரொம்ப பேர் செத்துப்போயிட்டாங்க. இல்ல, அவங்களுக்கு கண்ணு சரியாத் தெரியறதில்ல. கண்ணு தெரிஞ்சா, காது கேக்கறது கிடையாது. சிநேகிதங்களுக்கோ மறதி! எங்கேதான் போறது!” என்று ஏதேதோ சொல்ல ஆரம்பித்தார். “ஐயோ, ஐயோ! எதுக்கு ஒரேயடியா மூக்கால அழறீங்க? தங்கச்சி போனதிலேருந்து ஒங்களுக்கு என்னவோதான் ஆயிடுச்சு!” என்று பாக்கியம் தலையிலடித்துக்கொண்டாள். “எனக்கா போக்கிடம் இல்ல? எனக்கு மக ஒருத்தி இருக்கா! அதை மறந்திட்டு, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசறீங்களே!” தன் உபாயம் பலித்ததே என்று மணிக்குக் கொள்ளை சந்தோஷம். “அடடே, ரஞ்சி! எனக்கு இது தோணல, பாரேன்! நீ போய் அவகூட இருந்துட்டு வா. ஒனக்கும் ஒரு நல்ல மாறுதலா இருக்கும்!” பாக்கியத்தின் முகமும் மலர்ந்தது. “அங்கே என்னை ஒரு வேலை செய விடமாட்டா ரஞ்சி! மாப்பிள்ளையும், `அத்தே, அத்தே’ன்னு ராஜமரியாதை செய்வாரு! தாயில்லாப் பையன், பாவம்! என்னைக் கண்டா உசிரு!” “இன்னும் என்ன யோசனை? இன்னிக்கே போ, பாக்கியம். இங்க என்ன, பிள்ளையா, குட்டியா? நல்லா, ஒன் உடம்பைத் தேத்திக்கிட்டு வந்து சேரு!” என்று அவளைத் துரத்தாதகுறையாகச் சொன்னார் மணி. அப்படியே, வைத்தியிடம் மானசீகமாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். 37 சின்ன வீடு தாயின் எதிர்பாராத வருகையால் அகமகிழ்ந்து போனாள் ரஞ்சிதம். ஆனால், வந்ததிலிருந்து எதுவும் பேசாது, தலையில் கைவைத்தபடி ஒரே இடத்தில் அமர்ந்து, வெறித்தபடி இருந்தவளைக் கண்டு கலக்கம் பிறந்தது. “ஏம்மா ஒருமாதிரி இருக்கீங்க? அப்பாவுக்கு ஏதும்..?” என்று நாசூக்காகக் கேட்டாள். பாக்கியம் ஆத்திரத்துடன் தலைநிமிர்த்தினாள். “ஒங்கப்பாவுக்கு என்ன! புது மாப்பிள்ளை கணக்கா இருக்காரு! கலர் கலரா, கண்ணைக் குத்தறமாதிரி சட்டைங்க, அதில செண்டு — அதொட நாத்தம் ஆளையே தூக்கிடும். பத்தாத குறைக்கு..!” “அப்பாவா!” நம்பமுடிஆதி கேட்டாள் மகள். “நான் சின்னப்பொண்ணா இருந்தப்போகூட அப்பா செண்டு போட்டுக்கிட்டதா நெனப்பு இல்லியே!” “அப்பல்லாம் அவர் போடலைடீ. அப்போ என்னை மயக்கி என்ன ஆகணும்!” பொருமினாள் பாக்கியம். “அவரை விட்டா, இனிமே வேற கதி இல்லேன்னு இப்போ அவர் ஆடற ஆட்டம்! மிச்சம் இருக்கிற நாலு முடியை இவர் சீவறது இருக்கே! எப்போ அந்த முடியும் கையோட வந்துடப் போகுதோ!” “அப்பாவுக்கு அப்படி என்னம்மா ஆயிடுச்சு?” மேலே எதுவும் பேச இயலாது, அவளையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள் பாக்கியம். பின், தலையை அதீதமாகக் குனிந்துகொண்டு, “வேற ஒரு பொம்பளையோட.!” என்று இழுத்தாள். பரம சாதுவான அப்பா! அம்மாவை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் அப்பா! அவரைப்போய் கன்னாபின்னாவென்று..! ரஞ்சிக்கு எரிச்சல் வந்தது. ”போங்கம்மா! நான் நம்ப மாட்டேன்!” என்றாள் அழுத்தமாக. பாக்கியம் கோபத்துடன் எழுந்தாள். “அந்த அப்பனுக்குப் பொறந்தவதானே நீ! வேற எப்படிப் பேசுவே?” என்றாள் மனத்தாங்கலுடன். ரஞ்சதம் மீண்டும் யோசித்தாள். `அப்பா?’ `ஊகும்!’ என்பதாகத் தலையை ஆட்டிக்கொண்டாள். “என் எடத்தில நீ இருந்து பாத்தா புரியும்,” என்று வீறாப்பாக ஏதோ சொல்ல ஆரம்பித்தவளுக்குக் குரல் தழுதழுத்துப் போயிற்று. “ரஞ்சி! எனக்கு சாகப் பயமில்லே. எல்லாரும் ஒரு நாள் போகத்தான் போறோம். அதுக்காக இப்படி. எனக்குக் கொஞ்சம் பலகீனமா இருக்கிறதாலே.. இளவட்டமா ஒருத்தியைப் வெச்சுக்கிட்டு, அவ நெனப்பா `ஐ லவ் யூ’ பாடறாருடீ!” புடவைத் தலைப்பு வாயை அடைக்கப் போயிற்று. சந்தேகம் பரிபூரணமாக அகலாத நிலையில், என்ன சொல்வதென்று தெரியாது, அவளையே பார்த்துக்கொண்டு வாளாவிருந்தாள் பாக்கியம். “எவளையோ நெனச்சுக்கிட்டு கண்ணாடி முன்னால நின்னு சிங்காரிச்சுக்கிறதும், விசில் அடிக்கிறதும்! இதெல்லாம் எதில போய் முடியப்போகுதோ!” “நீங்க கவலைப்படாதீங்கம்மா. இந்தமாதிரி சபலம் எல்லாம் அதிக நாள் நிலைக்காது. அப்பாவோட வழுக்கைத் தலையையும், அபஸ்வரமான பாட்டையும் வேற எந்தப் பொண்ணாலம்மா சகிச்சுக்க முடியும்? ஒங்க பொறுமை எல்லாருக்கும் வந்துடுமா?” தாயை உயர்த்திப் பேசினாள் மகள். “ஒன்னைவிட்டா வேற யாரு இருக்காங்க எனக்கு, ரஞ்சி? அதான்..!” என்று, தான் அனேகமாக, நிரந்தரமாகவே அங்கு தங்க நேரலாம் என்று மறைமுகமாக உணர்த்தினாள் பாக்கியம். பிறகு, தயக்கத்துடன், “நானா வரலேடி. ஒங்கப்பாதான் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளாத குறையா அனுப்பினாரு,” என்று விளக்கினாள். அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு, “நெசமாவா?” என்று மட்டும் கேட்டாள் ரஞ்சி. “அட, ஆமாங்கறேன்! நான் கண்ணு மறைவா இருந்தாத்தானே கேக்க ஆளில்லாம, கொட்டம் அடிக்க முடியும்!” இவ்வவளவு நொந்துபோன தாயைப் பார்த்து ரஞ்சிக்குப் பரிதாபம் எழுந்தது. “அண்ணன்தான் இருக்காரேம்மா!” என்று சமாதானப்படுத்தப் பார்த்தாள். அதுவும் பலிக்கவில்லை. “ஒங்கண்ணனை நீதான் மெச்சிக்கணும். அந்தப் படுபாவியும் இவருக்கு உடந்தை. புதுசு புதுசா கலர் சட்டையெல்லாம் அவன்தானே சப்ளை! ஆம்பளையோட ஆம்பளை!” என்றவள், “பொண்ணாப் பொறந்துட்டோமே! என்ன செய்யறது!” என்று நிராசையில் முடித்தாள். அவளுடைய கையாலாகாத்தனம் மகளையும் பற்றிக்கொள்ள, அப்படியே சரிந்து உட்கார்ந்தாள் ரஞ்சிதம். கொடுத்துவைத்த மாமனார் அன்று வீடுதிரும்பும்போதே உற்சாகமாக இருந்தான் வைத்தி. “ரஞ்..சி! நான் வந்துட்டேன்!” என்று குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்தான். பதில் குரல் கேட்காததால், படுக்கை அறைக்குள் நுழைந்தவன், அங்கே தலைவரை போர்த்திப் படுத்திருந்த உருவத்தைக்கண்டுவிட்டு, `தூங்கிட்டா போலயிருக்கு!’ என்று படுக்கையின் விளிம்பில் உட்காரப்போனான். “இங்கே வந்து என்ன கலாட்டா பண்ணறீங்க?” என்று பின்னாலிருந்து மனைவியின் கண்டனக் குரல் கேட்க, பதறி எழுந்தான் வைத்தி. “இது..?” குரலே எழும்பாது, உதட்டை மட்டும் அசைத்தாள் ரஞ்சி. “அம்மா!” ஓடாதகுறையாக வெளியில் வந்தான் வைத்தி. “நீதான் படுத்திருக்கிறதா நெனைச்சு..!” தலையில் அடித்துக்கொண்டான். “எங்கே வந்தாங்க?” ரஞிக்குப் பெருமை உண்டாயிற்று. தான்கூட என்ன, இவரைமாதிரி அனாதையா! “கேக்கறதைப்பாரு! என்னைப் பாக்கத்தான்!” `மத்தவங்க கொஞ்சம் நிம்மதியா இருந்தா, பிடிக்காதே இவங்களுக்கு!’ என்று அரற்றிய வைத்தியின் மனக்குரல் அவளுக்குக் கேட்கவில்லை. “அட, ஒங்கம்மாகூட என்ன, ஒன்னைமாதிரி நெனச்ச நேரத்திலே தூங்கறாங்க! ஏதும் விசேஷமா?” விஷமமாக கண்ணைச் சிமிட்டினான். “பேரன், பேத்தி எடுக்கிற வயசிலே அப்பாவுக்குப் புத்தி இப்படிப் போகவேணாம்!” வைத்தியின் கண்கள் ஆர்வத்துடன் மின்னின. “எத்தனை மாசம்?” என்று அக்கறையாக விசாரித்தான். “ரெண்டோ, மூணோ! யாருக்குத் தெரியும்!” “ஓ! நிச்சயமாத் தெரியாதா?” “எல்லாம் ஒரு ஊகம்தான்!” “ரொம்ப வருஷம் ஆயிடுச்சில்ல! மறந்திருக்கும்!” “முந்தியெல்லாம் இப்படியா இருந்தாரு எங்கப்பா!” ரஞ்சியின் பெருமூச்சுக்குக் காரணம் அவனுக்கு விளங்கத்தானில்லை. “இந்தக் காலத்திலே ரொம்பப்பேரு முப்பது வயசிலேயே வீரியம் கெட்டுப்போயிடறாங்களாம். வயகரா.. அப்புறம், டோங்காட் அலி (TONGKAT ALI) அப்படின்னு ஒரு வேர் இங்க விக்குது இல்ல, அந்த கண்ராவியை எல்லாம் கொள்ளைப் பணம் குடுத்து வாங்கறாங்களாம். நல்ல வேளை, ஒங்கப்பா நல்லபடியா ஒடம்பைப் பாதுகாத்து வந்திருக்காரு. எல்லாம் ஒங்கம்மாவோட அதிர்ஷ்டம்தான்!” “துரதிர்ஷ்டம்னு சொல்லுங்க!” “அது எப்படி?” சற்று விழித்தான். “ஓ! நாலு பேர் கேலி செய்வாங்களேன்னு பாக்கறியா? இதில என்ன தப்பு? முறையா கல்யாணம் செய்துகிட்டவங்கதானே?” “முறை..யா, கல்யாணமா? அப்போ, ஒங்களுக்கும் அவளைத் தெரியுமா?” “எவளை?” விழித்தான் வைத்தி. “ரொம்பத்தான் நடிக்காதீங்க. அதான். எங்கப்பாவோட..,” முகத்தைத் திருப்பிக்கொண்டாள். “அவரோட சின்னவீடு!” வைத்தியின் கண்ணில் ஒளி பாய்ந்தது. “பலே!” என்று மாமனாரை வாயாரப் பாராட்டினான். “ஒங்கப்பா எப்படி இவ்வளவு காலமா இப்படி ஒரு காரியத்தைப் பண்ணாம இருந்தாருங்கிறதுதான் அதிசயம்!” ரஞ்சிக்கு அழுகை வந்தது. “எங்களைமாதிரி பொம்பளைங்க ஒங்களை நம்பி வந்துடறோம். நீங்க ஒங்க இஷ்டத்துக்கு..!” விம்மல் எழுந்ததில் மேலே பேசமுடியவிலை ரஞ்சியால். “ஏய்! நீ ஏன் அழறே? ஒங்கப்பா கொடுத்து வெச்சவர். அவரால அது முடியும். அதுக்காகத்தான் அடிக்கடி ஒங்கம்மாவை இங்க அனுப்பிடறாரு. அங்கே அவர்பாட்டிலே ஜாலியா..!” பொறாமை தாங்காது, பெருமூச்சு விட்டான். அப்பாவிபோல் இருந்த அப்பாவே அம்மா இவ்வளவு தூரம் கலங்கும்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கும்போது, ஏற்கெனவே தெருவில் போகும் பெண்களை எல்லாம் வெறித்து வெறித்துப் பார்க்கும் கணவரைப்பற்றியோ கேட்கவே வேண்டாம்! எங்கே மாமியார் கண்குத்திப் பாம்பாக அருகிலேயே இருந்தால், தனது லீலைகளைத் தொடர்ந்து நடத்த முடியாதோ என்கிற பயம்! வேறென்ன! ரஞ்சிக்கு ரோசம் பிறந்தது. “அம்மா இங்கதான் இருக்கப்போறாங்க. அதுக்ககு என்ன செய்யப்போறீங்க?” வைத்திக்கு ஆயாசமாக இருந்தது. “அதைப்பத்தி அப்புறமா யோசிக்கலாம். மொதல்ல குடிக்க ஏதானும் குடு!” “இதோ எடுத்திட்டு வரேன்!” தேனீர் கோப்பையுடன் தன்னைக் கடந்துபோன மனைவியைத் தடுத்து நிறுத்தினான் வைத்தி. “நான் இங்கதானே இருக்கேன்! எங்கே போறே?” `என்னடா, அதிசயமா அம்மாவுக்குப் பரிஞ்சு பேசறாரேன்னு பாத்தா..! அவ்வளவும் சுயநலம்!’ முறைத்துவிட்டு, வேண்டாவெறுப்பாக அவனிடம் நீட்டினாள். சூடான பானத்தைக் குடித்ததும், வைத்தியின் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்தது. `மசக்கையா இருந்தா, பொண்ணுதான் அம்மா வீட்டுக்குப் போகும். இங்க எல்லாமே தலைகீழா இல்ல இருக்கு!’ உரக்கக் கேட்டான்: “ஏன் ரஞ்சி? இந்தமாதிரி சமயத்திலே அம்மா பொண்ணு வீட்டுக்கு வர்றது..?” “அந்த வீட்டிலே இருக்கணும்னு அம்மாவுக்கு என்னங்க தலையெழுத்து? வயசுக்கு ஏத்தமாதிரி அப்பா நடந்துக்கு வேணாம்?” வைத்திக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “இதுக்கா கோவிச்சுக்கிட்டு வந்துட்டாங்க! ஒவ்வொருத்தர்.. புருஷன் வயசுக்கு ஏத்தமாதிரி நடந்துக்கறாரேன்னு குறைப்படறதைத்தான் நான் கேட்டிருக்கேன்!” “ஒங்களுக்கு ஒண்ணும் புரியாது! சும்மா இருங்க!” “அம்மாவும், பொண்ணும் எப்படியோ போங்க! நான் ஒரு தூக்கம் போட்டுட்டு, விடிய விடிய ஏதாவது படம் பாக்கலாம்னு ஆசையா வந்தேன். அதுக்கும் வழியில்ல,” என்று ஆயாசப்பட்டான். “ஒங்களுக்கென்ன இந்த வேளையில தூக்கம்? அம்மாவுக்குத்தான் ஒடம்புக்கு முடியல, பாவம்!” “விட்டுக்குடுக்க மாட்டியே! சரி. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்!” “இப்பத்தானே வந்தீங்க! மறுபடியும் எங்கே போறீங்க?” தன் செய்கையால் அவள் மனம் கலங்குகிறாள் என்ற நிதரிசனமே ஒரு பலத்தைத் தர, மிடுக்காகத் திரும்பினான் வைத்தி. “அதான் சொன்னேனே! வெளியே!” 38 மாமியார் பக்கம் பேசு வீட்டில் கோபித்துக்கொண்டு, நேராக அலுவலகத்தை ஒட்டியிருந்த கிளப்புக்குப் போனான் வைத்தி. எத்தனையோ ஊழியர்கள், வீட்டிற்குப்போக வேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்கவேண்டி, மாலை வேளைகளில் அங்கு சரண் அடைந்துவிடுவார்கள். கல்யாணத்திற்குப் பிறகு வைத்தி அங்கு அதிகமாக வந்த்தில்லை. இப்போது அந்த அவசியத்தை உண்டாக்கியிருக்கிறார்கள் தாயும் மகளும். இப்படி எண்ணியபோதே ஆத்திரம் பிறந்த்து. ஒருவன் நல்லவனாக இருக்க வேண்டுமென்றாலும் விட மாட்டேன் என்கிறார்களே! ரஹீம் அங்கு கேரம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தான். “ஏ வைத்தி! நீ என்னடா பண்ணறே இங்கே?” என்று ஆரவாரமாக வரவேற்றான். “வீடு என்கிற நரகத்திலேருந்து தப்பிச்சுக்கிட்டு ஓடி வந்துட்டேன்!” நாடகபாணியில் பேசினான் வைத்தி. ரஞ்சியுடன் சேர்ந்து உட்கார்ந்துகொண்டு, மணிக்கணக்காய் டி.வி. பார்த்ததன் பலன். யோசிப்பதைப்போல பாவனை செய்த ரஹீம், “ஒன் மாமியார் வந்திருக்காங்க. சரியா?” என்றான். “ஒன்னோட புத்திசாலித்தனம் என்னை பிரமிக்க வைக்குது, ரஹீம்!” “அதெல்லாம் ஒண்ணுமில்ல. கல்யாணமான எந்த ஆணுக்குமே சில வருஷங்களில, சில விஷயங்களில ஞானம் வந்திடும். நண்பர்களைத் தவிர தான் யாருக்கும் வேண்டாதவன்னு என்கிறது அதில ஒண்ணு. விடு! மாமியார் என்ன சொல்றாங்க?” “நல்ல வேளை, அவங்க தூங்கிக்கிட்டிருந்தாங்க!” “இந்த வேளையிலேயா?” “எனக்கும் ஆச்சரியமாத்தான் இருந்திச்சு. ஆனா, அவங்க நிலையிலே..!” “எத்தனை வயசு அவங்களுக்கு?” “சரியாத் தெரியல. அம்பதுக்கு மேல!” “அப்படிச் சொல்லு! அந்த வயசு வந்துட்டாலே பொம்பளைங்களைச் சமாளிக்கிறது பெரிய கஷ்டம்!” “எல்லா வயசிலேயும் பொம்பளைங்களால தொந்தரவுதான்!” வைத்தியின் முணுமுணுப்பைக் காதில் வாங்கிக்கொள்ளாது, “பிள்ளைங்க வளர்ந்து, தனித் தனியா போயிடறாங்க. இவங்களுக்குப் பொழுது போறதில்ல. நாம்ப யாருக்கும் வேண்டாதவங்களாப் போயிட்டோமோன்னு..!” “நல்ல வேளை, நான் சின்னப் பையனா இருந்தப்போவே எங்கம்மா செத்துப்போயிட்டாங்க. இல்லாட்டி, அவங்களும் இந்தமாதிரி பிராணனை வாங்கிட்டு இருந்திருப்பாங்களோ, என்னவோ! யார் கண்டாங்க!” என்று சந்தோஷப்பட்டுக்கொண்டான் வைத்தி. “ஒவ்வொரு வாட்டி என் மாமியார் வர்றபோதும், கூடவே எனக்கும் என் மனைவிக்கும் ஏதாவது சண்டையைக் கொண்டுவந்துடுவாங்க!” “டேய், டேய்! நீ ஒன் மிஸஸ்கிட்டேயே அவங்கம்மாவைப்பத்திக் குறை சொல்வியா?” வைத்தி பதில் சொல்ல வேண்டியிருக்கவில்லை. அவனுடைய திருதிரு முழியே அவனைக் காட்டிக்கொடுத்தது. ரஹீம் உள்ளங்கையைத் தட்டிக்கொண்டான். “இப்பத்தான் புரியுது, முனிவர்கள் எல்லாம் ஏன் கல்யாணமே பண்ணிக்கலேன்னு! நிம்மதியா, அவங்களுக்குப் பிடிச்ச விதத்திலே, காட்டிலே தவம் செய்திருக்க முடியுமா, இல்லாட்டி?” “அவங்க கிடக்கறாங்க! இப்போ எனக்கு ஒரு வழி சொல்லுப்பா!” “எவ்வளவு பெரிய சமாசாரம்! அவசரப்பட்டா எப்படி?” பொறுமையை உபதேசித்தான் நண்பன். “எப்படி ரயில் ரெண்டு இணையாத தண்டவாளத்திலே போகுதோ, அந்தமாதிரிதான் கல்யாணமானவனோட நிலைமையும்!” “நீ தமிழிலே புலவன்தான், ஒத்துக்கறேன். கொஞ்சம் புரியும்படியா பேசித் தொலை! இதில ரயிலும், தண்டவாளமும் எங்கே வந்திச்சு?” “ரயில் — மனைவி. புருஷனும், மாமியாரும் தண்டவாளங்கள். எப்பவுமே இணையமாட்டாங்க, இணையக்கூடாது,” என்று ஒரு அரிய தத்துவத்தை விளக்கினான் ரஹீம். “புரியலியே!” “நீ அவங்கம்மாவைக் குறை சொன்னா, அவங்களையே பழிக்கிறமாதிரி எடுத்துக்கிறாங்க மனைவி. அங்கதான் தகறாறே ஆரம்பிக்குது!” “ஏன் அப்படி?” “நான் என்னத்தைக் கண்டேன்! அவ்வளவுதான் தெரியும். நானும் பாத்துட்டேன், என் மொதல் சம்சாரமும் அப்படித்தான், அவ தங்கச்சி, என்னோட ரெண்டாவது சம்சாரமும் அப்படித்தான். அப்புறம்..!” வைத்தி சுவாரசியத்துடன் அவனையே பார்த்தான். இரண்டோடு நிறுத்திக்கொள்ளவில்லையா இவன்! நண்பனுடைய தைரியத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. “அப்புறம் மாமியார் எங்ககூடவே வந்துட்டாங்களா! ஒரு வழியா, நானும் நிலைமையை எப்படிச் சமாளிக்கிறதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். இப்பல்லாம் நான் மாமியார் பக்கம்தான்!” அப்படி ஒரு எண்ணமே கசப்பை விளைவிக்க, “ரஞ்சி அதிர்ஷ்டசாலி. அவளுக்கு மாமியாரே இல்லே!” என்று வெளிப்படையாகவே வயிற்றெரிச்சல் பட்டான் வைத்தி. 39 விருந்துபசாரம் “இப்பத்தான் போனீங்க! அதுக்குள்ளே வந்துட்டீங்களே?” ஆச்சரியமும், மகிழ்ச்சியுமாகக் கணவனை எதிர்கொண்டாள் ரஞ்சிதம். “வீட்டிலே விருந்தாளி வந்திருக்கிறப்போ, நான் தனியா வெளியே சுத்திக்கிட்டிருந்தா, நல்லாவா இருக்கு?” வேண்டாத விருந்தாளியாக இருந்த அம்மா, எப்போது இப்படி இவர் மரியாதை தரும் அளவுக்கு உயர்ந்துபோனாள்? சந்தேகத்துடன் அவனை ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையால் சற்றே நிலைகுலைந்து போனவன், “ராத்திரிக்கு சமைச்சுட்டியா, ரஞ்சி?” என்று வினவினான். “வந்து.., காலையில சுட்ட அப்பளமும், மிளகு ரசமும் செஞ்சேன்..,” என்று முனகினாள். முகத்தைச் சுளிக்காதிருக்கப் பாடுபட்டான். “ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கே! நீ இப்ப திரும்ப அடுப்படியில வேகவேணாம், பாவம்! ஒங்கம்மாவையையும் கூட்டிக்கிட்டு, நாம்ப வெளியே போறோம்!” அரச கம்பீரத்துடன் வந்து விழுந்தன வார்த்தைகள். “ஒரு சைனீஸ் வெஜிடேரியன் ரெஸ்டரண்டிலே நம்ப டின்னர்! எப்படி?” காலரைத் தூக்கி விட்டுக்கொண்டான். இன்று தான் மாமியாருக்கு வைக்கப்போகும் ஐஸில், மனைவியும் சேர்ந்து உருகிவிட மாட்டாளா! ரஞ்சியின் சந்தேகம் வலுத்தது. “கொள்ளை, கிள்ளை அடிச்சீங்களா?” “அதுக்கெல்லாம் சாமர்த்தியம் வேணாம்? நீ வேற!” ”லாட்டரி அடிச்சிருக்கு!” ஊகம் செய்ய முயன்றாள். “சீட்டு வாங்கினா இல்ல பரிசு விழும்?” தானே கைக்காசு செலவழித்து, அம்மாவை அழைத்துப் போகப்போகிறார்! ரஞ்சியின் முகம் விகசித்துப்போயிற்று. “நான் இப்பவே அம்மாகிட்ட சொல்றேன்,” என்று உற்சாகமாகப் போனாள். வெளியில் சுற்றிவிட்டு வந்ததும், அந்த இனிமையான அனுபவம் முற்றும் அகலாத நிலையில், ரஞ்சி தனிமையில் தன்னிடம் எப்படி நடந்துகொள்வாள் என்று வைத்தி கற்பனை செய்துகொண்டிருந்தபோது, அகால வேளையில் தூங்கி எழுந்திருந்த களைப்புடன் தள்ளாடியபடி வந்தாள் பாக்கியம். “நல்லா இருக்கீங்களா?” என்று மாப்பிள்ளையைக் குசலம் விசாரித்தாள். `வீட்டிலே இருக்கிறவங்க எல்லாருமா சீக்கா இருப்பாங்க?’ என்று எரிச்சல்பட்ட வைத்தி, “எனக்கென்ன கொறைச்சல்? நல்..லா இருக்கேன்!” என்று அழுத்திச் சொல்லிவிட்டு, `நீங்க வர்றவரைக்கும்!’ என்று மனத்துக்குள் சேர்த்துக்கொண்டான். பாக்கியம் அத்துடன் விட்டிருக்கலாம். “பிள்ளை பிறக்கப்போற சந்தோஷம்போல! குண்டாயிட்டீங்க!” என்றாள். அவனுடைய ஆண்மை அவனை உசுப்பிவிட்டது. `என்னமோ, இவங்க வீட்டு சாப்பாட்டைச் சாப்பிட்டு, நான் ஒடம்பை வளர்த்துக்கிட்ட மாதிரியில்ல பேசறாங்க!’ நல்ல வேளையாக, அவன் ஏடாகூடமாக எதுவும் சொல்வதற்குள், ரஞ்சி வந்தாள், “அம்மா! எல்லாரும் வெளியே போய் சாப்பிடலாம்கிறாரு!” என்றபடி. “எதுக்கும்மா வீண் செலவு! வீட்டிலேயே ஒரு ரசம் சோறா சாப்பிட்டுட்டுப் போகாம!” வயதானவளாய் லட்சணமாய், நீட்டி முழக்கினாள் பாக்கியம். தனக்கு எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, “சும்மா வாங்க, அத்தே. செலவு இருக்கவே இருக்கு! மாசம் பொறந்தா, சம்பளம் வந்துட்டுப்போகுது!” என்று அலட்டிக்கொண்டான். பாக்கியத்திற்குச் சபலம் ஏற்பட்டது. இருந்தாலும், “நீங்க ரஞ்சியைக் கூட்டிட்டுப் போங்க. நான் வீட்டைப் பாத்துக்கறேன். ரெண்டு பேர் போனா, பைக்கிலே போயிடலாம். நான் ஒருத்தி சேர்ந்துக்கிட்டா, டாக்சி இல்ல பிடிக்கணும்!” என்றவள், தன்னை `டாம்பீகம்’ என்று மாப்பிள்ளை நினைத்துவிடக்கூடாதே என்ற பதைப்புடன், “எனக்கு முந்திமாதிரி பஸ்ஸிலே ஏறி எறங்கறது எல்லாம் முடியல. ம்..! பாட்டியாகப் போறேனே!” வைத்தி நெகிழ்ந்து போனான், அவனுக்குப் பிறக்கப்போகும் பிள்ளையைப்பற்றி அவள் குறிப்பிட்டதும். “நல்லா ஒங்களை விட்டுட்டுப் போவோமே!” என்று நெருங்கி வந்தான். பெருந்தன்மையாக விட்டுக்கொடுப்பதுபோல, “ரொம்ப வற்புறுத்திக் கூப்பிடறீங்க! நான் வராட்டி.., வருத்தப்படுவீங்க!” என்று சம்மதம் தெரிவித்தாள் பாக்கியம். “இதையே கொஞ்சம் சிரிச்சுக்கிட்டு சொல்றது! என்னமோ, பெரிய தியாகம் பண்ணறமாதிரிதான்!’ என்ற எரிச்சல் எழுந்தது வைத்திக்குள். இந்தப் பெண்கள் அலங்காரம் முடிந்து வருவதற்குள், சீனன் கடையை மூடிவிடப் போகிறானே என்ற பதைப்பும் உடன் எழுந்தது. கடைக்குள் நுழைந்து, சீருடையிலிருந்த ஒரு இளம்பெண் ஆசார உபசாரம் செய்ய, ஒரு வழியாக அமர்ந்தார்கள். மேசைமேல் அழகிய விரிப்பு. பூச்சாடி. விலைப்பட்டியல் வைத்தியின் வயிற்றைக் கலக்கியது.. இந்தியக் கடை என்றால், ஒருவர் சாப்பாட்டுக்கு ஐந்திலிருந்து எட்டு வெள்ளி ஆகும். இங்கேயோ, ஒரு பண்டமே எட்டு வெள்ளிக்குக் குறையாமல்இருக்கிறதே என்று கணக்குப் போட்டான். பின்னே, சும்மாவா ஒரு சாப்பாட்டுக் கடையை இவ்வளவு அழகு படுத்தியிருப்பார்கள் என்று சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றான் வழக்கமான கஞ்சத்தனத்திலிருந்து சட்டென மீண்டான். மாமியாரைத் தன் கைக்குள் போட்டுக்கொள்வதெனத் தீர்மானித்து, வந்தது வந்தாயிற்று. இனி உபசரித்துத் தொலைக்க அஞ்சுவானேன்! “சாப்பிடுங்கத்தே. எதையுமே தொடலியே நீங்க!” என்றான் அலாதி கனிவுடன். எல்லாருக்கும் பொதுவாக, ஒரு பெரிய தட்டில் வைக்கப்பட்டிருந்த எதையோ பாக்கியம் அருவருப்புடன் பார்த்தாள். “இதுக்குத்தான் மொதல்லேயே நான் வரலேன்னு சொன்னேன். எனக்கு இதெல்லாம் பிடிக்கிறதே இல்ல. பழக்கம் இருந்தாத்தானே..?” “சாப்பிட்டா, தானே பழகிடுது! இந்தாங்க!” தாராளமாக அந்த எதையோ எடுத்து, அவளுடைய வெள்ளைப் பீங்கான் தட்டில் போட்டான். “பாக்கவே பயம்..மா இருக்கே!” என்று வெளிப்படையாகவே சொன்ன பாக்கியம், பக்கத்தில் அவளைப்போலவே அயர்ந்துபோய் உட்கார்ந்திருந்த மகளிடம் திரும்பினாள். “ஏன் ரஞ்சி? நான் சைவம்தான்னு ஒனக்குத் தெரியாது?” மெள்ளக் கடிந்துகொண்டாள். வைத்திக்கும் அது காதில் விழ, பல்லைக் கடித்துக்கொண்டான். “நல்லாச் சொன்னீங்க! நீங்களே கேட்டாக்கூட வேற எதுவும் கிடைக்காது இங்க. வெளியே போர்டில போட்டிருந்தாங்களே, வெங்காயம், பூண்டு, பால் எல்லாம் கலக்காத சுத்த சைவம்னு!” “இது.. மரக்கறிங்கிறீங்களா?” சந்தேகத்துடன் கேட்டாள் பாக்கியம். முகம் சுளித்தபடியே இருந்தது. “ஆமா. அதோட ஏதாவது மாவு சேர்த்திருப்பாங்க. அவ்வளவுதான். தைரியமாச் சாப்பிடுங்க!” இதேபோல் உபசாரம் செய்துகொண்டே இருக்க வேண்டுமானால், தன்னால் இன்னும் எத்தனை நேரம் தாக்குப்பிடிக்க முடியும் என்ற பயம் எழுந்தது. பாக்கியம் தன்முன் வைக்கப்பட்டிருந்த சிறய தட்டை தூர நகர்த்தினாள். “நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க. எனக்கென்னமோ..!” தன் தாயிடம் கணவன் இவ்வளவு அன்பு வைத்திருப்பது தனக்கு இத்தனை நாட்களும் தெரியாமல் போயிற்றே என்று பிரமித்துக்கொண்டிருந்த ரஞ்சிக்கு இப்போது எரிச்சலாக இருந்தத்து. “ஏம்மா? இவ்வளவு தூரம் சொல்றாரு, இல்ல?” குரல் எப்போதும்போல குழைவாக இல்லாது, மிரட்டலாக வெளிவந்தது. வைத்திக்கு அதுவே போதுமான ஊக்கம் அளிப்பதாக இருந்தது. பரவாயில்லை, ரஞ்சி! பிடிக்காட்டி வேணாம். விடு!” என்று பெரிய மனது பண்ணினான். “நான் வரலேன்னு சொன்னேன். நீங்கதான்..!” மீண்டும் அதையே சொல்லி, பழியை அவர்கள்மீதே திருப்பினாள் பாக்கியம். மகள் உதட்டை இறுக்கிக்கொண்டவிதம் அவளை பயமுறுத்த, “அது.. வந்து.., கண்ட எண்ணையிலே செய்தது எல்லாம் எனக்கு ஒத்துக்காது. வயசு கொஞ்சமாவா ஆகுது! ஒங்களுக்கென்ன! கல்லைக்கூட ஜீரணிக்கிற வயசு! இங்கேயோ எல்லாமே எண்ணையில மிதக்குது!” என்று சொல்லிக்கொண்டே போனவளுக்கு, திடீரென்று ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. “என்னா சமைக்கிறாங்க இவங்க எல்லாம்! ஹூம்! இதெல்லாம் ஒரு சமையல்னு போர்டைத் தொங்கவிட்டுக்கிட்டு..! வர்றவங்களுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நெனச்சுக்கிட்டாங்களா! ஏமாத்து வேலை! சைவச் சாப்பாடுன்னு சொல்லி, கோழிக்கால், வறுத்த வாத்து அப்படின்னு பேர் வெச்சு, பித்தலாட்டமா பண்ணறாங்க?” கணவனும், மனைவியும் தங்களைச் சுற்றிப் பார்வையை ஓடவிட்டார்கள். `தர்மசங்கடம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புவர்கள் அப்போது அவர்கள் முகத்தைப் பார்த்திருக்க வேண்டும். “ஷ்! அம்மா!” அடங்கிய குரலில் ரஞ்சி தாயை அடக்க முயன்றாள். வைத்தி எதுவும் பேசாது, அவசரமாக எழுந்திருந்தான். “கெளம்புங்க!” “இன்னும் நெறைய ஆர்டர் செய்திருக்கீங்களே! அதுக்குள்ளே ஏன் எழுந்துட்டீங்க?” சந்தர்ப்பம் புரியாமல், பாக்கியம் கேட்டாள். “அதானே! என்னங்க அவசரம்?” என்று ரஞ்சியும் ஒத்துப் பாடினாள். “போதும், நாம்ப டின்னருக்கு வந்த லட்சணம்! நல்ல வேளை, இங்க யாருக்கும் தமிழ் புரியல. இல்லாட்டி, அவங்களே நம்ப கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளி இருப்பாங்க!” என்று எரிந்து விழுந்தான். தலையைத் தொங்கப் போட்டபடி, எழுந்து நடந்தார்கள் பெண்கள் இருவரும். 40 சொந்த வீடே சொர்க்கலோகம் “சரியான அலைச்சல்! தலை சுத்துது!” முணுமுணுத்தபடியே பாக்கியம் வீட்டுள் நுழைந்தாள். அவள் பின்னாலேயே வந்த ரஞ்சிதம் கதவை ஓங்கியடித்துத் தாழிட்டாள். “அவர் இன்னும் உள்ளே வரலியே!” “அவர் ஏன் வர்றார்? வெளியே போயிட்டார்!” அதிர்ச்சியும், களைப்பும் ஒன்றுசேர, பாக்கியம் சோபாவில் விழுந்தாள். “இதென்னடி அநியாயம்! நானும் பாக்கறேன், நான் எப்ப வர்றபோதும் ராத்திரி வேளையில இப்படித்தான் நடக்குது! அப்படி எங்கதான் போவாரு?”என்றவள், தாங்கமுடியாது, “சீச்சீ!” என்று உடலைச் சிலிர்த்துக்கொண்டாள். “எல்லாம் ஒங்க தப்புதாம்மா!” வழக்கத்துக்கு விரோதமாக மகள் அவளைத் தாக்கவும், பாக்கியத்தின் வாய் பிளந்தது. “எவ்வளவு ஆசையா ஒங்களைச் சாப்பிடக் கூட்டிட்டுப் போனாரு! பில் மட்டும் எவ்வளவு வந்திச்சு, தெரியுமா? அதுக்கு அழுத காசில நான் ரெண்டு நல்ல புடவை எடுத்திருப்பேன்!” தான், `வேண்டாம், வேண்டாம்’ என்று கதறக் கதற, இழுத்துக்கொண்டு போகாத குறையாக அழைத்துப்போய்விட்டு, இப்போது பழியைத் தன்மேலேயே சுமத்துகிறார்களே! ரஞ்சிக்கு அப்படியும் மனம் ஆறவில்லை. தொடர்ந்தாள். “ஒவ்வொரு தடவை நீங்க இங்க வர்றபோதும், எனக்கு ஒடம்பு முடியாம போய், நீங்க சமைக்கும்படியா ஆகிடுது. பரிதாபப்பட்டு, டாக்சி பிடிச்சு கூட்டிட்டுப் போனார். நீங்க என்னமோ..!” எங்கோ பார்த்தபடி, பாக்கியம் முனகினாள்: “இப்படி.. மொதல்லே ஒரு வார்த்தை சொல்லாம வெளியே கூட்டிட்டுப் போனா, எனக்கென்னமோ பிடிக்கிறதேயில்ல!” “இதுக்கெல்லாம்கூட ஒரு மாச நோட்டீஸா குடுப்பாங்க? யார்கூடவும் ஒத்துப்போக முடியாம, ஏன்தான் இப்படி இருப்பீங்களோ!” மகள் சொல்வது உண்மைதான் என்றாலும், `இவள் என்ன சொல்வது?’ என்று பாக்கியம் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டாள். “வீட்டில.. அப்பாவோட மனஸ்தாபம்! ஏதோ, வந்த எடத்திலேயாவது அனுசரிச்சுப் போகலாமில்ல? நான்தான் ஒங்க மக. அவருக்கு என்ன தலையெழுத்து, ஒங்களைப் பொறுத்துப்போகணும்னு?” என்று தாக்கியவள், “இந்தவரைக்கும், ஆத்திரத்தை ஒங்கமேல காட்டாம, வெளியே போயிட்டாரேன்னு சந்தோஷப்பட்டுக்குங்க,” என்று முணுமுணுப்பில் முடித்தாள். “நான் என்ன செய்துட்டேன் அப்படி? பணத்தோட அருமை தெரியாம, வாரி இறைக்கறீங்க! கொஞ்சம் புத்தி சொன்னா..!” ரஞ்சி முகத்தைத் திருப்பிக்கொண்டாள். “நீங்க எப்ப வந்தாலும், இப்படித்தான் — கண்டிப்பா எங்களுக்குள்ளே ஏதாவது சண்டை நடந்தாகணும். மத்த சமயத்திலே.. சொன்னா நம்ப மாட்டீங்க, அவ்வளவு அருமையா இருப்பாரு!” பாக்கியம் நொந்தே போனாள். “என்னால ஏன் மத்தவங்களுக்கு கஷ்டம்? நான் இப்பவே எங்க வீட்டுக்குப் போயிடறேன். அங்க என்னை, `சீ’ன்னு ஒருத்தர், ஒரு வார்த்தை, சொல்ல மாட்டாங்க!” விருக்கென்று உள்ளே போனவள், `எனக்கென்ன தலையெழுத்து, இப்படி பெரியவங்க, சின்னவங்க இல்லாம, எல்லார்கிட்டேயும் மரியாதைகெட்டத்தனமா பேசறவங்ககிட்டே எல்லாம் பேச்சு வாங்கிக் கட்டிக்கணும்னு!’ என்று பிரலாபித்துக்கொண்டே இருந்தாள். அப்படியே படுக்கையின்மேல் உட்கார்ந்துகொண்டவள், தன்னிரக்கத்துடன் ஒரே இடத்தை வெறித்தாள். சிறிது பொறுத்து, ரஞ்சியின் குரல் கேட்டது: “அம்மா! நீங்க ஒண்ணுமே சாப்பிடலியே! தயிர், ஊறுகாய் எல்லாம் இருக்கு!” “ஒண்ணும் வேணாம், போ!” 41 நாடுகளும், கணவன்மார்களும் இரவு நெடுநேரம்வரை கிளப்பில் ஏதேதோ விளையாடி, அத்தனையிலும் தோற்றுவிட்டு, வீடு திரும்பியிருந்தான் வைத்தி. படுக்கையறைக்குள் மனைவியா, மாமியாரா என்று நிச்சயமாகத் தெரியாத நிலையில், அங்கு நுழையும் துணிவில்லை அவனுக்கு. ஹால் சோபாவில் படுத்தவன், மறுநாள் தாமதமாகத்தான் எழுந்தான். சாப்பாட்டு மேசையருகே, தலையை ஒரு கையால் தாங்கிப் பிடித்தபடி உட்கார்ந்திருந்த ரஞ்சிதம்தான் முதலில் கண்ணில்பட்டாள். “நேத்து புதுசு புதுசா சாப்பிட்டது ஒத்துக்கலியா? என்று பரிவுடன் விசாரித்தவனுக்கு, அங்கு நிலவிய நிசப்தம் ஆச்சரியத்தை விளைவித்தது. “அம்மா?” குரல் வெளிவராது, பாவனையில் கேட்டான். வருத்தத்துடன் அவனை ஒருமுறை பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள் ரஞ்சி. “அவங்க ஏன் இன்னும் இங்க இருக்காங்க!” வைத்தியின் முகத்தில் ஓர் அலாதி ஒளி. “போயிட்டாங்களா?” அவள் கோபத்துடன் திரும்ப, சமாளிக்க நினைத்து, “இல்ல.., இப்பத்தானே வந்தாங்க, எப்பவும் இவ்வளவு சீக்கிரமா போகமாட்டாங்களேன்னு கேட்டேன்!” என்று ஒரேயடியாக உளற ஆரம்பித்தான். “அதுக்குத்தானே நீங்க நல்லவர்மாதிரி வேஷம் போட்டீங்க? `மாட்டேன், மாட்டேன்’னவங்களை வற்புறுத்தி, சாப்பிடக் கூட்டிட்டுப்போனீங்க?” “இது என்னடா வம்பாப்போச்சு! நீதானே அடிக்கடி, `ஒங்களுக்கு எங்கம்மாமேல பிரியமே இல்ல’ன்னு குறைப்படுவே?” தான், நல்லது என்று நினைத்து ஏதோ செய்யப்போக, அது இப்படி எதிர் விளைவுகளைக் கொண்டுவரும் என்று சற்றும் எதிர்பார்த்திராத வைத்தி, பின்னந்தலையில் அடித்துக்கொண்டான். “வேணும். எனக்கு நல்லா வேணும்!” ஒரு பெரிய சண்டைக்கு ஆயத்தமாக ரஞ்சி எழுந்து நின்றுகொண்டாள். “அட, ஒரு இட்லி, தோசை.., ஒரு பூரி.. இந்தமாதிரி, அவங்களுக்குப் பழக்கமானது எதையாவது வாங்கிக் குடுத்திருக்கலாமில்ல? அதிசயமா.. நீங்கதானே கைநிறைய சம்பாதிக்கிறீங்க! அந்தப் பெருமையை மாமியார்கிட்டே காட்டிக்க வேணாமா?” ஆத்திரத்துடன் குறுக்கும், நெடுக்கும் நடந்தாள். “மரக்கறி சாப்பாடு எதுக்காக கோழிக்கால் மாதிரி, மச்சம் மாதிரி இருக்கணும்? இல்ல, கேக்கறேன்! பாத்தாலே அம்மாவுக்குக் குமட்டிடுச்சு, பாவம்! ஒடம்பு சரியில்ல. வயசானவங்கவேற! புதுசு புதுசா எதையாவது பழகிக்கறது அவங்களுக்கு முடியாதுதான்!” வைத்திக்கு அலுப்பாக இருந்தது. “சரி, சரி. நான் செஞ்சது மன்னிக்க முடியாத குத்தம்தான். அதுக்கு எப்படி பரிகாரம் தேடணும்? அதையும் நீயே சொல்லிடு, தாயே! ஒன் காலிலே விழணுமா, இல்ல ஒங்கம்மா காலிலே விழணுமா?” சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு, இனிமேல் அவளிடமிருந்து எந்த வார்த்தையும் வராது என்று முடிவானதும், “குடிக்க ஏதாவது உண்டா, இல்லே பசியால சாகணும்கிற தண்டனையா எனக்கு?” என்று கேட்டான். “இன்னும் ஒண்ணுமே ஆரம்பிக்கலே. காலையிலேயே அம்மா அவசரமாப் போனது.. மனசை என்னமோ..!” முணுமுணுத்தபடி உள்ளே போனாள் ரஞ்சி. மாமியார் தங்களுடன் இல்லை, இனிமேல் அநாவசியமான குழப்பங்கள் எழாது என்பதே புத்துணர்வை அளிக்க, வைத்தி சமாதானத்தில் இறங்கினான். “வீட்டிலே ஏதாவது அவசர வேலை இருந்திருக்கும். தானே ரெண்டு நாளில வந்துடுவாங்க, பாரேன்!” என்று வாய்தவறிச் சொல்லிவிட்டு, நாக்கைக் கடித்துக்கொண்டான். எங்காவது பலித்து வைக்கப்போகிறதே! “ஐயோ! புரியாம பேசாதீங்க. வீட்டில நிம்மதி இல்லேன்னுதானே இங்க வந்தாங்க!” `ஒங்கம்மா போற எடத்திலேயெல்லாம்தான் நிம்மதியும் பறிபோயிடுமே! இது என்ன புதுசா?’ வைத்தி முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான், எங்காவது தன் மனதில் ஓடிய எண்ணம் அவளுக்குப் புரிந்துவிடப் போகிறதே என்று. வருத்தம் மாறாமலேயே ரஞ்சி பேசினாள்: “நேத்து ராத்திரி.. அவ்வளவு செலவழிச்சு அம்மாவை வெளியே கூட்டிட்டுப்போயும், அவங்க திருப்தியா சாப்பிடலியா! ஏதோ ஆத்திரம்! `பட பட’ன்னு நாலு வார்த்தை பேசிட்டேன். இந்தமாதிரி நான் நடந்துக்கிட்டதே இல்ல!” கண்களைப் புறங்கையினால் மூடிக்கொண்டாள். `பலே!’ அவளைப் பாராட்டி, முதுகில் தட்டிக்கொடுக்க வேண்டும் போலிருந்தது வைத்திக்கு. “பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி.. அம்மா எனக்கு எவ்வளவு செஞ்சிருப்பாங்க!” பழைய திரைப்பட வசனம் சமயத்தில் கைகொடுத்தது. “அந்த நன்றிகூட இல்லாம, அவங்களைப்போய் கன்னாபின்னான்னு..!” “அதுக்கு இப்ப என்ன செய்ய முடியும், ரஞ்சி? பேசறதுக்கு முந்தி யோசிச்சிருக்கணும்!” “சும்மா இருங்க. ஒங்களை ஒண்ணும் கேக்கல!” வைத்திக்கு ரஹீம் எப்போதோ அளித்திருந்த போதனை நினைவு வந்தது: ஏதாவது குறையை மனைவி சொல்றப்போ, ஒடனே அதை நிவர்த்தி செய்யற வழியைச் சொல்லக்கூடாது. இந்த உண்மை தெரியாமதான் நிறைய ஆம்பளைங்க குடும்பத்திலே மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. லேடீஸ் பேசறதைச் சும்மா கேட்டுக்கணும். அதுதான் அவங்க எதிர்பாக்கறது! வைத்தி மீண்டும் நாக்கைக் கடித்துக்கொண்டான். சுரீரென்று எரிந்தது. தான் செய்த தவற்றை எப்படி நிவர்த்தி செய்வது? ரஞ்சி அவனை நெருங்கினாள். கோபம் மாறியிருந்தாற்போலிருந்தாள். “ஒரு மாறுதலுகாக.., கோயிலுக்குப் போகலாமா?” வைத்தி மூளையில் இருந்த வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியிருக்க வேண்டும். இல்லாவிட்டால், “பைத்தியக்காரத்தனம்! சாமிகிட்ட புத்தி போட்டுக்கப்போறியா?” என்று கேட்டிருப்பானா? முகமெல்லாம் சிவக்க, “நீங்க வராட்டி போங்க! எனக்கென்ன வழி தெரியாதா? பஸ்ஸிலே போய்க்கிறேன்,” என்று கத்தினாள். வைத்தி சுதாரித்துக்கொண்டான். “சேச்சே! மாசமாவேற இருக்கே! ஒன்னைத் தனியா விடுவேனா! இரு. நானும் குளிச்சுட்டு வரேன். எனக்கு மட்டும் புண்ணியத்திலே பங்கு வேண்டாமா?” தாற்காலிக இக்கட்டிலிருந்து தப்பிக்க அப்படிச் சொல்லிவிட்டானே தவிர, மனம் என்னமோ ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. `கல்யாணம் செய்துகொண்டதால்தானே இப்படி, தனித்தன்மையை இழந்து, எங்கே மனைவி கோபித்துக்கொண்டுவிடுவாளோ என்று ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேச வேண்டியிருக்கிறது! அடிமைப்படுத்தப்பட்ட நாடுகள்கூட ஏதோ வழியில் சுதந்திரம் வாங்கி விடலாம். ஆனால், ஒரு கணவன் இழந்த சுதந்தரம் போனது போனதுதான்!’ பலவும் எண்ணிக் குமைந்தவன், எதிரே வந்த காரைத் தவிர்க்க பக்கவாட்டில் ஒரேயடியாக வளைக்க, அவனுடன் சேர்ந்து வாகனமும், மனைவியும் தெருவில் விழுந்தார்கள். 42 மீண்டும் பிரிவு பாக்கியத்திற்குத் தனது உடலைப்பற்றிய கவலைகள் பறந்தோடிவிட்டிருந்தன. உண்மையாகவே அவளை நாடும் மகள்தான் வீட்டிலேயே இருந்தாளே! மிளகு ரசம் சேர்த்துக் குழையப் பிசைந்திருந்த சாதக் கிண்ணத்துடன் அறைக்குள் நுழைந்தாள். ரஞ்சிதம் கட்டிலில் படுத்தவாறே, எதிரில் மாட்டியிருந்த காலண்டரில் சிரித்துக்கொண்டிருந்த பாப்பாவைக் கலங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தது அவள் கண்ணுக்குத் தப்பவில்லை. `ஏற்கெனவே பிள்ளையைப் பறிகுடுத்த துக்கத்தில இவ இருக்கா. இது வேற, இன்னும் அழவிட்டுக்கிட்டு! மொதல்ல இதைத் தூக்கி வீசணும்!’ “அம்மா! குழந்தை.. என் ஜாடையா, இல்ல, அவர் மாதிரியா? பொம்பளைப் பிள்ளைதானே?” திக்கித் திக்கிக் கேட்டாள் ரஞ்சி. இதற்குப் பதில் கூற முடியாது, தாய்க்கும் அழுகை வந்தது. “விடு, ரஞ்சி! அடுத்த வருஷமே ராஜாமாதிரி ஒரு குழந்தை பிறக்கும், பாரு! இப்ப நடந்ததெல்லாம் கதையாப் போயிடும்!” “ஹூம்! அஞ்சு மாசமா சுமந்ததே நிலைக்கலியே!” இப்படியே புலம்பிக்கொண்டிருந்தவளிடம் என்னதான் பேசுவது என்று விழித்த பாக்கியம், “ரஞ்சி! ஒங்க வீட்டுக்காரர் இங்கேயேதான் இருக்காரு. கூப்பிடவா?” என்று பேச்சை மாற்றினாள். “எல்லாம் அவராலதான்! நான் எதுக்கு அவரைப் பாக்கணும்? கெளம்பறப்போவே தடங்கல். என்னைக் கேலி செஞ்சாரு. அதான் கடவுள் சரியான தண்டனை குடுத்துட்டார்!” இவள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறாளே, எப்படித்தான் சமாதானப்படுத்தப்போகிறோம் என்ற ஆயாசம் ஏற்பட்டது பாக்கியத்துக்கு. “சாப்பாடு வெச்சிருக்கேன்,” என்று யாரிடமோ தெரிவிப்பதுபோலச் சொல்லிவிட்டு, அறைக் கதவை லேசாக மூடியபடி வெளியே வந்தாள். மாமனாருக்கு எதிரே உட்கார்ந்திருந்த வைத்தி வேகமாக எழுந்து வந்தான். “ரஞ்சியோட குரல் கேட்டுச்சே! நான் போய் பாக்கறேன்!” இப்போது தன்னை நாடும் மகள், எங்கே கணவனின் அரவணைப்பில் மீண்டும் தன்னைத் தூக்கி எறிவதுபோல் பேசிவிடுவாளோ என்ற பயம் உள்ளூர அரிக்க, “இப்ப யார்கூடவும் பேசறமாதிரி இல்ல அவ!” என்று அவனைத் தடுத்து நிறுத்த முயன்றாள். அவன் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியைக் கண்டு, “ரொம்ப ஒடைஞ்சு போயிருக்கா,” என்று விளக்கினாள். இப்போது தன் கை ஓங்கியிருக்கிறது, முடிந்தவரையில் இதை அனுபவித்துவிடுவோமே என்பதில் குறியாக இருந்தாள். மணி எழுந்து வந்தார். வைத்தியின் முதுகில் ஆதரவாகத் தட்டினார். “விட்டுப் பிடி. ஒன் பொண்டாட்டி எங்கே போயிடப் போறா? போனதையே நெனைச்சுக்கிட்டு இருக்காம, ஏதாவது வேலையை இழுத்துப் போட்டுக்கிட்டு செய். இந்தமாதிரி சமயத்திலே. யோசனை செய்யற சமாசாரமே கூடாது!” என்றவர், அவன் தோளில் கைபோட்டு, தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். `மாப்பிள்ளை’ என்று வரட்டு உபசாரம் எதுவும் செய்யாது, இயல்பாக அவர் பழகியது வைத்திக்கு ஆறுதலாக இருந்தது. “மாமா! ஆபீசுக்குப் போனா, வேலையில கவனம் செலுத்த முடியல. வீட்டுக்கு வந்தா.., அதைவிட! வெறிச்சுனு, பயங்கரமா இருக்கு! குழந்தையை ஒரு தடவைகூட தூக்கிக் கொஞ்சல. ஆனா, அதை மிஸ் பண்றேன்!” ஒரு ஆண் இன்னொரு ஆணிடம் தன் மனதைத் திறந்து காட்டினான். வீட்டுக்குள் பார்வையை ஓடவிட்டு, குரலைத் தணித்துக்கொண்டார் மணி. “ஒங்க அத்தையைப் பாரு! சமையலைத் தவிர வேற வேலையே கிடையாது — என்னமோ, பிறவி எடுத்ததே சமைக்கத்தான் என்கிறமாதிரி! பிள்ளைங்களும் வளந்துட்டாங்களா! ஓய்வு நேரத்தை என்ன பண்றதுன்னு புரியாம, ஏதாவது குருட்டு யோசனை செய்துகிட்டிருப்பா. அவளோட பிரச்னையே அதுதான்!” வைத்திக்கு அவர்மேலிருந்த மதிப்பு அதிகரித்தது. இப்படி ஒரு மனைவியைச் சகித்துப்போவதும் இல்லாது, அதற்கு மனோதத்துவ ரீதியில் விளக்கம் வேறு அளிக்கிறாரே! “அதனாலதான், நான் தோட்டத்தில உசிரை விடறேன். ஒடம்பால ஒழைச்சுச் செய்யற வேலையால மனசுக்கு நிம்மதி. அதோட..,” என்றவர், மஞ்சளாகி இருந்த செம்பருத்தி இலைகளைப் பறித்துத் தரையில் போட்டார். “செடிங்களுக்கும் உயிர் இருக்கில்ல! அது வளர, வளர, ஏதோ ஒரு திருப்தி!” வைத்தி பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தான். “நிறையப் பதியன் போட்டு வெச்சிருக்கேன். எடுத்துக்க. தினமும் தண்ணி விடணும். மாசத்துக்கு ஒருவாட்டி உரம், பூச்சி மருந்தெல்லாம் போடு. முடிஞ்சா பாடு!” `பாட்டு’ என்ற வார்த்தை காதில் விழுந்ததும், தான் ரஞ்சியைப் பெண்பார்க்க வந்தபோது, `ஐயா சாமி, ஆவோஜி சாமி’ என்று அவள் பாடியது வைத்தியின் காதில் ரீங்காரமிட்டது. வருத்தம் மேலெழுந்தது. “எனக்கு அதுக்கெல்லாம் பொறுமை கிடையாது, மாமா. எங்க ஆபீஸ் கிளப்புக்குப் போறேன். அங்கே ஏதாவது விளையாடலாம்!” என்று, அவர் விவரித்த கடினமான வேலைகளிலிருந்து தப்பிக்கப்பார்த்தான். “அதுவும் சரிதான்,” என்று பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார் மணி. “வெளியே போனா, நாலுபேர்கிட்ட ஒன் வருத்தத்தைச் சொல்லிக்க, வைத்தி. தப்பில்லே. மனசிலேயே வெச்சுக்கிட்டா, தாங்க முடியாம போயிடும்!” என்று ஓர் அரிய அறிவுரையும் வழங்கினார். 43 அரிசிக் கோபமும் ஆம்படையான் கோபமும் அலுவலக வேலை முடிந்ததும், மிஞ்சிய நேரத்தை எல்லாம் கிளப்பில் கழித்தான் வைத்தி. காண்டீனில் சூடான பானங்களுடன், `குவே’ எனப்படும், வெண்ணையோ, நெய்யோ கலக்காத மலாய் கேக் வகைகள், சமோசா முதலியவை மலிவாகக் கிடைத்தன. உடலுக்கு ஊட்டமளிக்காத, ஆனால் செயற்கைப் பொருட்கள் சேர்க்கப்பட்டதால் மேலும் மேலும் தின்னும் ஆசையை உண்டுபண்ணும் தண்டத்தீனிகளும் பாக்கெட்டு பாக்கெட்டுகளாகத் தொங்கிக்கொண்டிருந்தன. சிகரெட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தது சிலருக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால், நல்ல காற்றை எல்லாருமே சுவாசிக்க முடிந்தது. சாப்பாட்டில் மனம் செல்லாமல், ஒரு கோப்பை டீயை வைத்துக்கொண்டு, அதற்குள் எதையோ கண்ணாலேயே துழாவிக்கொண்டிருந்த வைத்தியின் அருகே வந்தான் ரஹீம். “இங்க பாரு, வைத்தி! நடந்ததை மறந்துடுன்னு சொல்லல. அதுக்காக, இன்னும் எத்தனை காலம்தான் இப்படி உனக்குப் பழக்கமே இல்லாத குழந்தைக்காக உருகிக்கிட்டே இருக்கப்போறே?” என்று கனிவுடன் கேட்டான். அவனுடைய பெரிய உடல் ஆகிருதிக்கும் குரலுக்கும் சம்பந்தமே இருக்கவில்லை. “என் மனைவி என்னைப் பாக்கக்கூட மாட்டேங்கிறா!” என்றான் வைத்தி, அழமாட்டாக்குறையாக. “இன்னும் அம்மா வீட்டிலேயேவா இருக்காங்க?” ரஹீம் தன் ஆச்சரியத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டது வைத்திக்குத் தெம்பளித்தது. “இனிமே எப்பவுமே அங்கதான்!” “அதெல்லாமில்லை. சில பேருக்கு துக்கம் மெதுவாத்தான் ஆறும்”. “எனக்கு மட்டும்? போனது என் குழந்தை! எனக்கு மட்டும் துக்கமில்லியா? “ஒன்னை விடு! அது அவங்க ஒடம்பில ஒரு பாகமா இருந்தது. இப்ப திடீருன்னு காணாமப் போயிடுச்சு. வெறுமையா இருக்காதா, பாவம்!” “நான் என்ன, வேணுமின்னா பைக்கைக் கவுத்தேன்? எல்லாரும் என்னையே குத்தவாளியா பாக்கறது எனக்குத் தெரியாதா, என்ன?” ஓயாது உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்ததில், சிறுபிள்ளைத்தனம் பிரதானமாக நின்றது. “போனதைப்பத்தியே நெனச்சுக்கிட்டிருக்காம, நிகழ்காலத்துக்கும் கொஞ்சம் வாப்பா! கேரம்ஸ் விளையாடலாம், வா!” “நான் வரல!” “எப்படியோ போ!” என்று எரிச்சலுடன் நகர்ந்தவன், திரும்பினான். “சொல்ல மறந்துட்டேனே! இந்த சனிக்கிழமை எங்க வீட்டில டின்னர்”. “இப்போ, பண்டிகைகூட இல்ல!” ”பையனுக்குப் பதிமூணு வயசாகுது, இல்ல!” ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் நீட்டி, வெட்டுவதுபோல் பாவனை செய்தான். வைத்தி தலைகுனிந்துகொண்டான். “ஒன்னோட மனைவியையும் கூட்டிட்டு வா. அதைச் சொல்லத்தான் வந்தேன். பேச்சு எங்கேயோ போயிடுச்சு!” “இத்தனை நேரமா நான் என்ன சொல்லிக்கிட்டிருக்கேன், நீ என்ன பேசறே? என் மனைவிதான்..” “அட, தெரியும்பா. நான் போடாத சண்டையா! அப்பல்லாம், `அரிசிக் கோபமும், ஆம்படையான் கோபமும் அரை நொடி!” அப்படிம்பாங்க எங்க பக்கத்து வீட்டு மாமி”. வைத்தி யோசனையில் ஆழ்ந்தான். “அப்படியா சொல்வாங்க?” “ஒன் மிஸஸை திரும்ப ஒங்க வீட்டுக்கு வரவழைக்க ஒனக்கும்தான் ஒரு சாக்கு வேண்டாமா?” 44 ரவியின் திட்டம் இரவு கிட்டத்தட்ட ஒன்பது மணி. வேண்டாவெறுப்பாக வீடு திரும்பிக் கொண்டிருந்தான் வைத்தி. சற்று தூரத்தில் ரவியின் கார் நிற்பதும், அதன் பின்சக்கரத்தின் அருகே மைத்துனன் குனிந்திருப்பதும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. தன் வண்டியை அருகே ஓட்டிப்போனான். “என்ன ரவி? பங்க்சரா? “ஆமா. ஒன்னைப் பாக்கத்தான் வந்தேன். அதுக்குள்ளே இப்படி!” “வா. ரெண்டுபேருமா மாத்திடலாம்!” ரவி விழிப்பது வேடிக்கையாக இருக்க, வைத்தி சிரித்தான். “ஸ்பேர் இல்லியா?” `எவ்வளவு நாட்களாகிவிட்டன, நான் சிரித்து!’ என்று ஒரு நினைவு போயிற்று. “மெகானிக்கைக் கூப்பிட்டிருக்கேன்,” என்ற ரவி, “ஆமா? ஆபீசிலிருந்து இப்பத்தான் வர்றியா?” என்று கேட்டான். மாப்பிள்ளை நாள் தவறாது, இரவில் எங்கோ போவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்ற தாயின் குற்றச்சாட்டை அலட்சியப்படுத்திவந்தவனுக்கு, முதன்முறையாக, `அதில் ஏதாவது விஷயம் இருக்குமோ?’ என்ற சந்தேகம் பிறந்தது. “வீட்டில யாரு எனக்காக காத்திட்டு இருக்காங்க!” விரக்தியுடன் பேசினான் வைத்தி. “ஆபீஸ் விட்டா, கிளப்! அப்புறம் வெளியே சாப்பிட்டுட்டு, கால் கெஞ்சறவரைக்கும் அப்படியே நடப்பேன்!” ரவி சட்டென்று நின்று, அவனை உற்றுப் பார்த்தான். இவனைப்போய் தான் தவறாக நினைத்தோமே என்று வெட்கினான். இந்த அப்பிராணிக்கு எந்த விதத்திலேயாவது உதவ வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான். “ஆனாலும், நீ ரொம்ப..!” முடிக்காமல் விட்டான். “இந்தமாதிரி இருந்தா, எங்கம்மாகிட்டேயும், ரஞ்சிகிட்டேயும்.. ஊகும்!” தலையாட்டிக்கொண்டான் நம்பிக்கையின்றி. வைத்தி கையை விரித்தான் பரிதாபகரமாக, `என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லையே!’ என்பதுபோல். “நானா இருந்தா, ஒரு அறைவிட்டு, ரஞ்சியை வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடுவேன்!” “சேச்சே!” சிறிது நேரத்தில் காரை பழுதுபார்ப்பவன் வர, இருவரும் அருகிலிருந்த டீக்கடைக்குப் போனார்கள். தயங்கியபடி, வைத்தி கேட்டான்: “ரஞ்சி.. அவ ஒடம்பு தேவலியா?” ரவியின் முகத்தில் குடிகொண்ட அலட்சியம் அந்த அரைகுறை வெளிச்சத்திலும் தெளிவாகத் தெரிந்தது. “அவளுக்கென்ன! எய்ட்ஸ், இல்ல கான்சர் வந்தவங்ககூட இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பா இருப்பாங்க!” என்றவன், “அவளைச் சொல்லியும் குத்தமில்லே. `நம்பளையும் நம்பி ஒரு ஆள் வந்திருக்கே’ன்னு பூரிச்சுப் போயிருக்காங்க அம்மா. கைப்பிள்ளைமாதிரி..!” வைத்தி முகத்தைக் கடுமையாக ஆக்கிக்கொண்டான். “ரவி! ஒங்கம்மாவை எனக்கு அவ்வளவா பிடிக்காதுதான். இருந்தாலும், பெரியவங்களைப்பத்தி நீ இப்படிப் பேசறது நல்லாயில்லே!” “அட போப்பா! பெரியவங்க சும்மா வயசை முழுங்கிட்டா மட்டும் போதுமா? அதுக்கு ஏத்த குணமும் இருக்கணும்!” “இப்ப ஒங்கம்மா என்ன செஞ்சுட்டாங்க? அவங்க பொண்ணோட துக்கத்தைப் பாக்க சகிக்காம..” “பெரிய துக்கம்!” ரவி இடைவெட்டினான். “ஒனக்கில்லாத துக்கமா?” வைத்திக்கு வாயடைத்துப்போயிற்று. இவன் ஒருவன்தான், குறை ஆயுளில் போன குழந்தைக்காக தந்தையும் துக்கப்படுவான் என்று ஒத்துக்கொண்டிருக்கிறான்! “விவரம் தெரிஞ்ச ஒரு அம்மா என்ன சொல்லி இருக்கணும்? `பாவம்! ஒன்னைவிட்டா அந்த அசட்டு மனுஷனுக்கு — அதான் ஒன் வீட்டுக்காரனுக்கு,,” “ஏய்!” வைத்தியின் குறுக்கீட்டைப் பொருட்படுத்தாது, “அம்மா புத்தி சொல்லி இருக்கணும். `ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருந்துக்குங்க’ன்னு ரஞ்சியைத் திருப்பி அனுப்பியிருக்கணும். இவங்களோ, இன்னும் தூபம் போட்டுக்கிட்டு..! அவளே புறப்பட்டாகூட, தடுத்துடுவாங்க போல இருக்கு!” வைத்திக்கு திடீரென ஏதோ ஞாபகம் வர, “ஐயையோ!” என்று கையை உதறினான். “என்னது? ஏதாவது பூச்சி கடிச்சுடுச்சா?” கேலியாகக் கேட்டான் ரவி. சுரணை இல்லாதிருக்கும் ஆணை எப்படி உசுப்பேற்றினால், அவன் ஆணாக, லட்சணமாக நடந்துகொள்வான் என்று அவனுக்குத் தெரியும். “அட, நீ ஒருத்தன்! என் ஃப்ரெண்ட் வீட்டிலே டின்னர். நான் கண்டிப்பா ரஞ்சியையும் கூட்டிட்டுதான் வரணும்னு..!” “இவ்வளவுதானே! நீயே வந்து கூப்பிடேன்!” வைத்திக்கு எங்கிருந்தோ ரோஷம் வந்தது. “அதான் நடக்காது. அவ என்னை யாருன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கா?” ரவி ஒரு சிறு புன்னகையுடன் புருவங்களை உயர்த்தினான். “எல்லாத்துக்கும் என்மேல தப்பு கண்டுபிடிச்சுட்டு, அவ போய், அம்மா வீட்டிலே ஒக்காந்திடணும். நான் வெக்கங்கெட்டுப்போய்..!” “சரி. சரி. அம்மாவையும் பொண்ணையும் எப்படியாவது வழிக்குக்கொண்டு வரணும். அவ்வளவுதானே? அந்த பொறுப்பை என்கிட்ட விடு” என்று கூறிய ரவி, “இப்ப நீ என்ன பண்றே, பைக்கிலே என்னை வீட்டிலே கொண்டு விடுவியாம்!” என்று முதல் கட்டத்தை ஆரம்பித்தான். “கொஞ்சம் பொறுத்தா, காரே ரெடியாகிடுமே!” “கார் ஒன் வீட்டிலே இருக்கட்டும். நாளைக்கு எடுத்துக்கிட்டா போச்சு! ஆனா, வைத்தி, நீ கண்டிப்பா வீட்டுக்குள்ளே வரவேண்டாம் — வரக்கூடாது!” என்றபடி, கைத்தொலைபேசியை எடுத்தான் ரவி. 45 முரட்டு வைத்தியம் “யாரு ரஞ்சி இந்த வேளையிலே கூப்பிட்டாங்க?” “அண்ணனோட கார் ரிப்பேர் ஆயிடுச்சாம். வர லேட்டாகும்னு..!” பாதி வாக்கியத்திலேயே தன் அறைக்குள் ஓடினாள். `அண்ணனும், இவரும்தான் மெகானிக்கைக் கூட்டி வந்தாங்களாமே! அவசரமா இன்னிக்கே ரிப்பேர் செய்ய முடியாதுன்னாரே! அப்போ.. இவர்தான் கொண்டுவிடுவாரு!’ என்று பூரிப்புடன் எண்ணமிட்டவள், வலிய கோபத்தை வரவழைத்துக்கொண்டாள். `இருக்கட்டும். என்னை வந்து பாத்து எத்தனை மாசமாச்சு! நான் அவர் முகத்திலேயே முழிக்கப்போறதில்லே,’ என்று தீர்மானம் செய்துகொண்ட அடுத்த கணமே கண்ணாடியில் முகத்தில் எண்ணை வழியாமல் இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொண்டவள், மூக்கில் கொஞ்சம் பவுடரைப் பூசிக்கொண்டாள். கலைந்திருந்த தலையைக் கோதிக்கொண்டு, அப்படியும் திருப்தி ஆகாது, அவிழ்த்துப் பின்னிக்கொண்டாள் அவசர அவசரமாக. ஸ்கூட்டர் சப்தம் இன்னிசையாகக் கேட்டது. கைகளை இறுக மூடியபடி, வாசலுக்கு ஓடாதபடி தன்னைக் கட்டுப்படுத்தியபடி நிற்க ரஞ்சி மிகுந்த பிரயாசை எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. சிறிது பொறுத்த, கதவருகே நின்றுகொண்டு, பேச்சுச் சப்தம் கேட்கிறதா என்று ஒட்டுக்கேட்டாள். வெளியே வந்தபடி, “என்னண்ணா! கார் ரிப்பேரா?” என்று அசுவாரசியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டாள். “அதான் ஃபோன் பண்ணினேனே! பாவம், வைத்திதான் சிரமத்தைப் பாக்காம கொண்டு விட்டுட்டுப் போறான்!” “போயிட்..டாரா?” ரஞ்சியின் குரல் தாழ்ந்து ஒலித்தாலும், அதிலிருந்த ஏமாற்றம் தெளிவாகவே கேட்டது. ரவி தனக்குள் சிரித்துக்கொண்டான். “என்னை இவ்வளவு தூரம் கொண்டுவிட்டதே பெரிசு! நான்கூட, `வாசலோட போறியே! நாங்க என்ன, அந்நியமா?’ன்னு கேட்டேன். `உள்ளே வந்தா, என்னை மதிச்சுப் பேச யார் இருக்காங்க?’ன்னுட்டான். நியாயமான கேள்வி!” அவளுடைய ஏமாற்றத்தைக் கவனித்துவிட்டு, விஷமச் சிரிப்புடன், “வீட்டிலே பாட்டி வேற தொணதொணத்துக்கிட்டு! பாவம், வைத்தி!” என்று தன் நாடகத்தை ஆரம்பித்தான். “பாட்டி வந்திருக்காங்களா?” “சரியாப் போச்சு! ஒனக்கு விஷயமே தெரியாதா?” அடுத்து என்ன சொல்வது என்று யோசிக்க சிறிது இடைவெளி விட்டான். பிறகு தொடர்ந்தான்: “தினமும் கண்ட கண்ட இடத்திலே சாப்பிட்டு, இவனுக்கு வயத்திலே கட்டி. அதுக்காக பாட்டியை வரவழைச்சான்!” பதட்டத்துடன், “ஒங்களுக்கு மொதல்லேயே தெரியுமா? என்கிட்ட சொல்லவே இல்லியே!” என்றாள் தங்கை. “தெரியுமாவாவது! நான்தானே காரை எடுத்திட்டுப்போய், பாட்டியை ஸ்டேஷனிலேருந்து கூட்டிட்டு வந்தேன்! அவங்களுக்கு பைக்கில ஒக்கார பயமாம்! வயசாயிடுச்சில்ல, பாவம்!” இவ்வளவு நடந்திருக்கிறது, தன்னை மதித்து ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லையே! ரஞ்சியின் சுயபரிதாபம் பெருக்கெடுத்தது. `எல்லாரும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டாங்க!’ என்று முணுமுணுத்தபடி, முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ரவியின் மூளை வேகமாக வேலை செய்தது. “பாட்டி நம்ப வைத்தியைப் பாத்தாங்களா! அழவே ஆரம்பிச்சுட்டாங்க!” அனுபவித்துப் பேசினான். “இவனோ எப்பவுமே சாகப்போறவன்மாதிரி இருப்பான். இப்ப ஒடம்பு வேற மோசம். கேக்கணுமா? `ஒனக்கென்னடா தலையெழுத்து — பொண்டாட்டி குத்துக்கல் மாதிரி இருந்தும், இப்படிப் பரதேசிமாதிரி திண்டாட!’ அப்படின்னு கதறிட்டு, அண்ணங்காரன் நான் பக்கத்திலே இருந்ததைக்கூட லட்சியம் செய்யாம, `இந்த வீட்டுக்கு இன்னொரு பொண்ணைக் கொண்டுவர நானாச்சு!’ன்னு சபதம் போட்டாங்க!” “நீங்களே அவரோட ஜாதகத்தை எடுத்துக்கிட்டு அலைவீங்க போலிருக்கே!” என்றாள் ரஞ்சி. உலகமே அவளுக்கு எதிரியாகிவிட்டதுபோல் தனித்து உணர்ந்தாள். ரவி அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டான். “நானா! சேச்சே!”வன்மையாக மறுத்தான். பிறகு, சுவாரசியத்துடன், “அவங்களுக்கு இப்போ ஜாதகம் பாக்கறதிலே நம்பிக்கையே போயிடுச்சு. தெரியுமா? `எவ்வளவோ பொருத்தம் பாத்துத்தான் ஒரு கல்யாணம் பண்ணினோம். அது என்ன வாழ்ந்திச்சு?’ங்கிறாங்க பாட்டி!” இவர்களின் உரையாடலைக் கேட்டபடி வந்த பாக்கியம், “இந்தாடா! என்ன, நீபாட்டிலே ஒளறிக்கிட்டிருக்கே?” என்று மகனை அடக்கப்பார்த்தாள். ரவி விறைப்பாக நின்றுகொண்டான். “நாளைக்கே வைத்தி கல்யாணப் பத்திரிகை அனுப்பினா, என்னைக் குத்தம் சொல்லாதீங்க. அவ்வளவுதான்! நான் சொல்றதைச் சொல்லிட்டேன்!” பாக்கியம் அடைந்த பயம் கோபமாக மாறியது. “அது எப்படி செய்துப்பாருன்னு நானும் பாத்துடறேன்! இவ உசிரோட இருக்கிறப்போ..” “இவதான் அவனோட போகப்போறதில்லேன்னு தீர்மானம் ஆயிடுச்சே! அப்புறம், எவன், எந்தக் கழுதையைப் பண்ணிக்கிட்டா நமக்கென்ன!” எதை, எப்படிச் சொன்னால், அம்மாவுக்கும், பெண்ணுக்கும் வலிக்கும் என்று புரிந்து வைத்திருந்தான். “நான் என்ன சொல்றேன், சட்டப்படி விவாகரத்து வாங்கிட்டா, ஒங்ககூட ரா..ணிமாதிரி இருக்கலாம் ரஞ்சி!” பாக்கியம் பதறிப்போனாள். “என்னடா, அசிங்க அசிங்கமா பேசறே! நாம்ப எவ்வளவு மரியாதைப்பட்ட குடும்பம்! விவாகரத்தாம் விவாகரத்து! சீ! போகுதே ஒனக்கும், மூளை!” `என்ன கலாட்டா?’ என்று படுக்கையிலிருந்து எழுந்துவந்தார் மணி. கண்ணாலேயே மகனை விசாரிக்க, அவன் யாருக்கும் தெரியாமல், அவரைப் பார்த்துக் கண்ண்டித்தான். `தங்கை நல்லா வாழணும்னு இந்தப் பயதான் என்ன புளுகு புளுகறான்!’ என்று மகனை மெச்சிக்கொண்டு, பாதியில் விட்ட தூக்கத்தைத் தொடரப்போனார் மணி. ரவி அத்துடன் நிற்கவில்லை. “அம்மா! நீங்க இன்னும் ஒங்க காலத்திலேயே இருக்கீங்க. அநியாயமா நடக்கிற புருஷனை தட்டிக்கேக்க சட்டமே இடங்குடுக்குது, இப்போ. முந்தி ஒரு தடவை வைத்தி நம்ப ரஞ்சியை அடிச்சானே, அப்பவே நாம்ப கோர்ட்டுக்குப் போயிருக்கணும்!” “எனக்கு ஒண்ணுமே புரியல!” அதிர்ச்சி தாங்காது, அப்படியே தரையில் உட்கார்ந்தாள் பாக்கியம். “ஒங்களுக்கு ராதிகாவை நெனப்பிருக்கில்ல? அதான் பீச்சிலே பாத்தீங்களே!” `இவன் ஒருத்தன்! நானும், இவனோட அப்பாவும் தனியா பீச்சுக்குப் போனதைச் சும்மாச் சும்மா சொல்லிக்காட்டிக்கிட்டு!” பாக்கியம் விறைத்துக்கொண்டாள். ரவி சிரித்துக்கொண்டான். “அவங்கம்மா இந்த தலைமுறையில பிறந்திருந்தா, `தைரியசாலி’ன்னு கொண்டாடி இருப்பாங்க. ரஞ்சிக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் கிடைச்சிருக்கு. நாளைக்கே ஒரு நல்ல வக்கீலைப் பாத்து..!” “சீ! சீ! வாயைக் கழுவுடா. கர்மம்!” தலையில் அடித்துக்கொண்டாள் பாக்கியம். இவ்வளவையும் கேட்டுக்கொண்டு, தான் அடுத்து என்ன பண்ண வேண்டும் என்ற பிரக்ஞைகூட இல்லாது ஜடமாக இருக்கும் மகளைப் பார்த்து எரிச்சலாக இருந்தது. “இதோ பார், ரஞ்சி! நீ இங்கேயே எத்தனை நாள் இருக்க முடியும்? ஒரு பொண்ணு கழுத்திலே தாலி ஏறிட்டா, அப்புறம் அவ அம்மா வீட்டுக்கு விருந்தாளியாத்தான் வர முடியும். நீ இங்கேயே நிரந்தரமா தங்கிட்டா.., நம்ப குடும்ப கௌரவத்தையும் கொஞ்சம் யோசிச்சுப்பாரு!” என்று கறாராகச் சொன்னாள். தாயிடமிருந்து இம்மாதிரியான கடுமையான வார்த்தைகளைக் கேட்டே இராத ரஞ்சிக்கு அழுகை வந்தது. “ஒங்களுக்கெல்லாம் ஏன் என்னால கஷ்டம்! நான் நாளைக்கே..,” என்று ஆரம்பித்தவளை அவசரமாகத் தடுத்தான் ரவி. “நாளைக்கு வேண்டாம். போகாதே!” அவ்வளவுதான் அவனால் சொல்ல முடிந்தது. யோசிக்கச் சற்று நேரம் எடுத்துக்கொண்டான். “ஏண்ணா?” அழுகைக் குரலில் கேட்டாள் தங்கை. ரவி தடுமாறினான். “ஒங்கிட்ட சொல்ல வேண்டாம்னு பாத்தா முடியல. நாளைக்கு ஒரு எடத்திலே.. பெண்பாக்கப் போறான் வைத்தி!” 46 பால்யப் பழக்கம் மறுநாள் சீக்கிரமே எழுந்தார் மணி, முதல்நாள் மகன் வைத்த வேட்டு எப்படி வெடிக்கப்போகிறது என்ற ஆவலில். வழக்கம்போல் தினசரியைக் கையில் எடுத்துகொண்டு, சாய்வு நாற்காலியில் சௌகரியமாக உட்கார்ந்தாலும், கவனம் அதில் போகவில்லை. உள்ளேயிருந்து ஏதேனும் சப்தம் வருகிறதா என்று காதைத் தீட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். ஒரு தட்டில் கீரையை எடுத்துக்கொண்டு, பாக்கியம் அவர் காலடியில் வந்து அமர்ந்தாள். சமீப காலத்தில் அவள் இவ்வளவு பணிவாக இருந்ததாக அவருக்கு நினைப்பில்லை. பெருமையை மீறி, பாவமாக இருந்தது. புலி உறுமினால்தான் அழகு. அதன் பல்லைப் பிடுங்கலாமோ? கீரையை ஆய்ந்தபடியே, “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்தாள். சாவதானமாக, பேப்பரிலிருந்து தலையை நிமிர்த்தினார் மணி. மகன் ஆரம்பித்து வைத்த நாடகத்தைத் தானும் நல்லபடியாக நகர்த்திக்கொண்டு போக வேண்டாமா! “நீ செய்யறதைத் தவிர, வேற யாரு எது செய்தாலும் அநியாயம்தானே ஒனக்கு?” என்றார் சுள்ளென்று. அவரே எதிர்பாரவண்ணம், பாக்கியம் தழைந்துபோனாள். “நீங்க இப்படிப் பேசினா, நான் யாருகிட்டேபோய் சொல்றது!” என்று மூக்கை உறிஞ்சினாள். அதற்கு மேலும் நடிக்கத் தெம்பில்லாதவராய், “என்ன ஆச்சு, பாக்கியம்?” என்றார் கரிசனத்துடன். அழுகைக் குரலில் அவள், “ஒங்க அருமை மாப்பிள்ளை இன்னொரு கல்யாணம் செய்துக்கப் போறாராம்!” என்று தெரிவித்தாள். அலட்சியத்தை வலிய வரவழைத்துக்கொண்டார். “யார் சொன்னாங்க?” “ரவிதான். கல்யாணத்துக்கு முந்தியே இவனும், அவரும் சிநேகமில்ல!” “நெனச்சேன், இப்படியெல்லாம் வரும்னு! வைத்திக்கு சின்ன வயசு! எத்தனை நாள்தான் ரஞ்சி திரும்பி வருவாள்னு காத்திட்டு இருப்பான்! ஒங்களுக்கெல்லாம் ஆம்பளைங்க சுபாவம் புரியறதில்ல!” “நீங்கதான் அவர்கிட்டே போய், எடுத்துச் சொல்லி..,” மிகுந்ததைச் சொல்ல முடியாது தொண்டை அடைத்துப்போக, இரு கரங்களையும் இணைத்துக் காட்டினாள். கவனிப்பாரற்று, கீரை அப்படியே கிடந்தது. “என்னமோ, நான் அவங்களைப் பிரிச்சமாதிரி இல்ல பேசறே?” கிண்டலாகக் கேட்டார். அந்த தாக்குதலால் சட்டென அவள் உடல் பின்னால் போயிற்று. சமாளித்துக்கொண்டு, “எல்லாம் அந்த பாழாப்போன விபத்தால வந்தது!” என்று, பழியை அதன்மீது திருப்ப முயற்சித்தாள். “எந்த விபத்தைச் சொல்றே? எனக்கு மறந்துகூடப் போச்சு!” “வெளையாடாதீங்க!” “அடேயப்பா! எப்பவோ நடந்ததை இன்னுமா மனசிலே வெச்சுக்கிட்டு இருக்கே?” என்றவர், அவள் அங்கிருப்பதையே மறந்தவர்போல, சினிமாப் பக்கத்தைத் திருப்பி, படிக்க ஆரம்பித்தார். வழக்கமாக, பாக்கியமும், ரஞ்சியும்தான் அதில் ஒரு எழுத்து விடாமல் படிப்பார்கள் — என்னமோ கடவுள் நாமாவளியைப் பாராயணம் செய்வதுபோல. அதற்கென்றே, ஞாயிறு பேப்பரை புதன், வியாழன்வரை பத்திரப்படுத்துவார்கள். ஒரு `க’ நடிகர், ஒன்றில்லை, இரு மனைவியரை விவாகரத்து செய்தார் என்று படித்தபோது சுவாரசியம் மிக, பல நாட்கள் அதைப்பற்றியே பேசினார்கள், அலுக்காமல். அதே பிரச்னை தனக்கென்று வந்தபோது, எவ்வளவு பாதிப்பை உண்டாக்குகிறது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை அவரால். “ஆமா! ஒங்களுக்கு ஒங்க தோட்டத்தைவிட்டா, வேற எதுவுமே தெரியாது!” என்று நொடித்தாள பாக்கியம். “எனக்குத் தனியா ஒரு வேலை இருக்கிறதாலதான், மத்தவங்க விவகாரத்திலே குறக்கிடாம..,” மறைமுகமாக அவளைத் தாக்கினார். “ஏன் சுத்தி வளைக்கறீங்க?. நான்தான் ரஞ்சியோட வாழ்க்கையிலே புகுந்து, கலாட்டா பண்றேன்னு நேராவே சொல்லிட்டுப் போங்களேன்!” அவளை ஒரு முறை பார்த்துவிட்டு, பேப்பரைக் கீழே போட்டார், அசிரத்தையாக. “ஒண்ணு சொல்றேன், கேட்டுக்க. ஒரு வயசுவரைக்கும்தான் பிள்ளைங்க நமக்கு சொந்தம். அதுக்கப்புறம்..!” “ஒங்கமாதிரி பாசம், பந்தம் எதுவுமில்லாம என்னால இருக்க முடியாது!” “நல்ல பாசம்! ரஞ்சிக்குக் குறைப்பிரசவம் ஆனப்போ, அவளைவிட நீதான் அமர்க்களப்படுத்தினே!” “பெத்தவளுக்குத்தான் தெரியும், பிள்ளையோட அருமை,”தலைநிமிர்த்திச் சொன்னாள். “அவ செஞ்ச புண்ணியம், நாம்ப கூப்பிடு தூரத்திலே இருக்கோம். இல்லாட்டி, இந்தமாதிரி புருஷன் வாய்ச்சதுக்கு.. எப்பவும் கண்ணைக் கசக்கிட்டு..!” “பாக்கியம்! நாம்ப சண்டை போடலியா, சமாதானம் செஞ்சுக்கலியா?” சமாதானமாக ஆரம்பித்தவருக்கு எங்கிருந்தோ வெறி வநதது. “இப்படியா எல்லாத்துக்கும் அம்மாகிட்ட ஓடி, ஓடி வருவாங்க! வந்து, வந்து, புருஷன்மேல கோள் சொல்றது!” காட்டுக் கத்தலாகக் கத்தினார். “ஷ்! எனக்கென்ன, காது செவிடா? ஏன் இந்தக் கத்து கத்தறீங்க? அவ காதிலே விழுந்து வைக்கப்போகுது!” “விழட்டுமே! உள்ளதைத்தானே சொல்றேன்!” மேலும் கத்தினார். உடனே இரும ஆரம்பித்தார். சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “பாக்கியம்! பிள்ளைங்க வளர்ந்தா, பெத்தவங்களை விட்டுப்போறது என்ன, ஒலகத்திலே நடக்காத அதிசயமா? நீ வரலியா?” என்றார் கனிவாக. பாக்கியம் வருத்தம் மேலிட, “அம்மா, அம்மான்னு என் காலைச் சுத்திச் சுத்தி வளர்ந்தது. இன்னிக்கு நான் மட்டும் தனியா..!” “அது எப்படி தனியா? என்னை விட்டுட்டியே!” என்றார் மணி. குரல் ரகசியமாக, படுக்கையறையில் பேசுவதுபோல், ஒலித்தது. “ஆ..மா! நீங்க பாட்டிலே, ஏதோ பண்ணிக்கிட்டு இருப்பீங்க!” “வெள்ளைக்காரன்மாதிரி கையைக் கோர்த்துக்கிட்டோ, இல்லே, ஒருத்தர் இடுப்பை ஒருத்தர் பிடிச்சுட்டுப் போனாத்தான் அன்பா? நம்ப வயசிலே.. இவ்வளவு வருஷம் சேர்ந்து, ஒண்ணா இருந்து, அப்புறம் எதிரெதிரே ஒக்காந்து, ஒண்ணும் பேசாமலே இருந்தாலே..! எனக்கென்னமோ, நீ என்னோட ஒரே வீட்டிலே இருந்தாக்கூட..! சொல்லத் தெரியல, போ!” பாக்கியம் ஆச்சரியத்துடன் கணவரைப் பார்த்தாள். ஒரு புதிய மனிதரைப் பார்ப்பதுபோலிருந்தது. அவர் இவ்வளவு பேசினதே அதிகம். ஆனால், அவளுக்குப் புரிந்தது, அவர் என்ன சொல்ல வருகிறார் என்று. மணி தொடர்ந்தார்: “நீ அடிக்கடி ரஞ்சி வீட்டுக்குப் போவியே, அப்பல்லாம்.. ஒண்ணும் புரியாம, வீட்டையே சுத்திச் சுத்தி வருவேன்!” “அதெல்லாம் சும்மா!” என்றாள் பாக்கியம். அவளுக்குப் பெருமை தாங்கவில்லை. பிறகு, சற்று யோசித்துவிட்டு, “தெருவிலே போற பொம்பளைங்களை எல்லாம் நீங்க திரும்பித் திரும்பிப் பாக்கறது எனக்குத் தெரியாதுன்னு நெனச்சுட்டீங்களா?” என்று வம்புக்கு இழுத்தாள். மணி அசட்டுச் சிரிப்புச் சிரித்தார். “அது.. பதினஞ்சு வயசிலே உண்டான பழக்கம். மொதமொதல்லே, டீச்சரைப்பத்திப் பேசுவோம் –அவங்க நடை, உடை, அழகு, இப்படி. ஒரு டீச்சருக்குக் காதல் கடிதம்கூட எழுதி வெச்சேன்!” பொங்கிய சிரிப்புடன், வாயைப் பொத்திக்கொண்டாள் பாக்கியம். “இப்படியெல்லாம் செய்தாத்தான் ஆம்பளைன்னு கூட்டாளிங்க சொல்லிக் குடுத்தது. எத்தனை வருஷப் பழக்கம்! அவ்வளவு சுலபமா விட்டுப் போயிடுமா?” பாக்கியம், சிரிப்பு மாறாமலேயே, தலையில் அடித்துக்கொண்டாள். “அதெல்லாம்.. சும்மா! அந்த நிமிஷத்திலே ஒரு ஜாலி. அவ்வளவுதான். ஒரு வாரம் கழிச்சு, அவங்க முகம்கூட ஞாபகம் இருக்காது. ஆனா, ஒன்னைப்பத்தி நினைச்சா.. நம்ப கல்யாண சமயத்திலே..!” ஆச்சரியம் தாங்காது, சட்டென தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்தாள் பாக்கியம். “இன்னும் என் கண்ணுக்கு அப்போ பாத்தமாதிரிதான் இருக்கே! அப்போ, பதினெட்டு வயசுப் பொண்ணு நீ!” “அதான் என்னோட பொறந்தநாளிலே..?” மேலே சொல்ல முடியாது, நா தழுதழுத்தது. கேக்கின் மேல் வைக்கப்பட்டிருந்த பதினெட்டு மெழுகுவர்த்திகளைப் பார்த்து, தான் என்ன அமர்க்களம் பண்ணினோம்! நினைக்கவே வெட்கமாக இருந்தது பாக்கியத்திற்கு. நெருங்கி வந்து உட்கார்ந்துகொண்டாள். தன்னையும் அறியாது, அவரது கையைத் தடவிக் கொடுத்தாள். “ஒங்க மகளாப் பொறந்து, இந்தப் பொண்ணு இப்படிக் குணமில்லாம இருக்கே!” என்று அங்கலாய்த்தாள். “அதுக்கென்ன செய்யறது! அவ எனக்கு மட்டும்தான் மகளா?” என்றார் மணி, குறும்புச் சிரிப்புடன். ஆருயிர் கணவனைச் செல்லமாக முறைத்தாள் தர்மபத்தினி. யோசிப்பதுபோல் பாசாங்கு செய்தார் மணி. “ஒனக்கென்ன, காலைக் கட்டிக்க பிள்ளைங்க வேணும். அவ்வளவுதானே? ரவிக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வெச்சுடலாம். நாளைக்கே, பேரப் பிள்ளைங்க..!” “பொண்ணு யாரு? ராதிகாவைத்தானே சொல்றீங்க?” “சீச்சீ! புருஷனை வேணாம்னு விட்ட குடும்பத்தில வந்த பொண்ணில்ல அது! நம்ப குடும்ப கௌரவம் என்ன ஆறது? வேற நல்ல எடத்திலே..!” அவரைச் சந்தேகமாகப் பார்த்தாள். தன் காலை வாருகிறாரோ? “என் ஃப்ரெண்ட் ரத்னசபாபதி இல்லே?” என்று எதற்கோ ஆயத்தமானார். “யாரு? போன வருஷம் செத்துப்போனாரே, அவரா?” “அ.. செத்துப் போயிட்டானா? அவனோட சொந்தக்காரங்கதான். ஆமா. அவனோட சொந்தக்காரங்க! பொண்ணு அடக்க ஒடுக்கமா இருக்கும். அவங்க வீட்டுக்குப் போய், மெதுவா பேச்சுகுடுத்துப் பாத்தேன்..!” பணக்காரக் குடும்பமாயிற்றே! “என்ன சொன்னாங்க?” ஆர்வத்துடன் கேட்டாள். “அவங்க கெடக்காங்க, மரியாதை தெரியாதவங்க! `ஒங்க மக வாழாவெட்டியா, ஒங்க வீட்டுக்கே வந்திடுச்சாமே!’ன்னு நீட்டி முழக்கினாங்க, பாரு!” “படுபாவிங்க! மத்தவங்களைப்பத்தி என்ன வம்பு இவங்களுக்கு எல்லாம், கேக்கறேன்! ஒரு நல்..ல பொண்ணு, ஏதோ மனத்தாங்கலோட புருஷனைவிட்டுக் கொஞ்சநாள் பிரிஞ்சிருந்தா, ஒடனே பேர் கட்டிடுவாங்களே!” சாதுவாக, “இதெல்லாம் எனக்கென்ன தெரியும்! நான் பேசாம, தலையைக் குனிஞ்சுகிட்டு, எழுந்து வந்துட்டேன்!” என்றார் மணி. புளுகுவதில் மகனையும் மிஞ்சிவிட்டோமோ என்ற பெருமை ஏற்பட்டது. “நீங்க ஏன் என்னைக் கேக்காம, இப்படி கண்டவங்க வீட்டுக்கெல்லாம் போய் அவமானப்படறீங்க? ரவிக்கு எதிலே கொறைச்சல்? இல்ல, அவனுக்குப் பொண்ணு குடுக்கத்தான் ஆளில்லையா? நம்ப ராதிகா அவனுக்காகவே பொறந்து வளர்ந்திருக்கா,” என்று அழுத்திச் சொன்னவள், “ஒங்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப்போகுது!” என்று முடித்தாள். மணி வாயைப் பிளந்தார். “பாவம், அவங்கம்மா! அநியாயம் செய்யறதெல்லாம் ஆம்பளை, ஆனா, கெட்ட பேரு பொம்பளைக்கா? இதைப் பொம்பளைங்கதானே தட்டிக் கேக்கணும்?” “பாக்கியம்! நீதானா பேசறே!” தன் காதையே அவரால் நம்ப முடியவில்லை. “எனக்கு எல்லாம் தெரியும். நீங்க குறுக்கே பேசாதீங்க. காலை வேளையிலே, என்னை ஒரு வேலை செய்யவிடாம, வம்புக்கிழுத்துக்கிட்டு!” என்றபடி எழுந்தாள். போகிற போக்கில், “என்னோட மருமக ராதிகாதான்! அவங்களைத் தனிக்குடித்தனம் வெச்சுடலாம். பிரச்னையே வேணாம்!” என்றாள். “பாக்கியம்!” “நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம். போய், ஒங்க செடிக்கெல்லாம் தண்ணியோ, வேற என்ன எழவோ ஊத்தற வேலையைப் பாருங்க!” வெற்றிச் சிரிப்பை அடக்கிக்கொண்டார் மணி. “அதுக்கென்ன! ரெண்டு பேரும் பட்டதாரிங்க. ஆயிரக்கணக்கில சம்பாதிக்கிறாங்க. அந்த வயத்தெரிச்சல்லே நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கதான்! பேசிட்டுப் போகட்டுமே! அதுக்கெல்லாம் பயப்படறவ இந்த பாக்கியம் இல்லே!” 47 இன்னொரு கல்யாணம் வாசலில் நின்றிருந்தார் மணி. வழக்கமான வேட்டி, பனியனுடன் இல்லாது, முழுக்கை சட்டையும், முழுநீள கால்சட்டையும் அணிந்து, வெளியே புறப்படத் தயாராக இருந்தார். வழக்கம்போல் செடிகளிடம் கவனத்தைச் செலுத்த முடியாது, எதையோ நினைத்துக்கொள்வதும், தனக்குத்தானே சிரிப்பதுமாக இருந்தார். அவரைக் கவனிக்காது, ரவி காரில் ஏறப்போனான். உரிமையுடன், பக்கத்திலிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டார், “போற வழியிலே என்னை இறக்கி விடுடா,” என்று கோரிக்கை வைத்தபடி. உள்ளே ஏறக்கூடத் தோன்றாது, அவரை ஏற இறங்கப் பார்த்தபடி, “எங்கேப்பா போறீங்க?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான். “ஏண்டா, பொறப்படறப்போவே அபசகுனமா..!” முகத்தைச் சுளித்தார். “நீங்க போற எடம் தெரிஞ்ச இல்ல, நான் அங்கே கொண்டுபோய் விடமுடியும்!” என்று சிரித்தவன், “ஒங்களுக்குக்கூட சகுனத்திலே நம்பிக்கை வந்துடுச்சாப்பா?” என்று கேட்டான், சிறிது கேலியும், சிறிது ஆச்சரியமுமாக. “சாதாரணமாக, கிடையாதுதான். இருந்தாலும், கல்யாண விஷயம் பேசப் போறப்போ..!” “அடி சக்கை! வைத்திக்குப் போட்டியா, ரஞ்சிக்கும் இன்னொரு கல்யாணமா!” வேண்டுமென்றே உரக்கக் கத்தினான். முதல் நாளிரவு பன்னிரண்டு மணி தாண்டி படம் பார்த்த களைப்பில், ரஞ்சி இன்னும் தூங்கிக்கொண்டிருந்தாள். பாக்கியம்தான் பதறிப்போய் வெளியே ஓடி வந்தாள், “டே டேய்,” என்று அலறியவளாக. “பேசறதைப் பாரு! ஒனக்குத்தான் கல்யாணம்!” ரவி திடுக்கிட்டான். வேகமாக அவளருகே சென்றான். “அம்மா! விளையாடாதீங்க!” என்றான் மிரட்டலாக. இப்போது, மணி காரிலிருந்து இறங்கிக்கொண்டார். “எங்க மகனுக்குக் காலாகாலத்திலே ஒரு கல்யாணம் செஞ்சு பாக்கணும்னு எங்களுக்கு ஆசையா இருக்காதா?” என்று, மனைவியின் சார்பில் பதிலளித்தார். பூரித்துப்போய், “அதானே! ஒன் வயசிலே ஒங்கப்பாவுக்கு..!” மையல் விழிகளுடன் பார்த்தாள். “இதானே வேணாங்கிறது! பாக்கியம்! நீ அடிக்கடி என் வயசை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கே! அப்புறம் நான்..!” விளையாட்டாக மிரட்டினார். “இன்னும் எளமை இருக்குன்னு காட்டிக்க ஏதாவது அசட்டுக் காரியம் செய்வீங்க! எனக்குத் தெரியாதா!” என்று தானும் சாடினாள் பாக்கியம். ரவிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. தாய், தந்தை இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். மணி ஆரம்பித்தார்: “இதோ பாரு, ரவி! இது ஒனக்கு எல்லா விதத்திலேயும் ஏத்த பொண்ணு. நல்லாப் படிச்சிருக்கு. எங்களுக்கும் பிடிச்சிருக்கு!” “அப்பா!” அலறினான் ரவி. “நீங்களாவது என்னைப் புரிஞ்சுப்பீங்கன்னு நம்பிக்கையா இருந்தேன். இப்படி சதி செய்யறீங்களே!” “நீங்க ஒண்ணும் இப்போ கல்யாணம் பேசப் போகவேணாம். இப்ப ராகு காலம்!”பாக்கியம் குறுக்கிட்டாள். “ஒங்களுக்கும் வீட்டிலேயே இருந்து சலிப்பா இருக்கு, பாவம்! எங்கேயாவது போயிட்டு வாங்க!” மணி நமட்டுச் சிரிப்புடன், மகன் முதுகில் ஒரு கை வைத்துத் தள்ளினார். “காரை எடுடா. போற வழியிலே எல்லாம் சொல்றேன்!” “எங்கேப்பா?” மீண்டும் கேட்டுவிட்டு, நாக்கைக் கடித்துக்கொண்டான். “அட, என் வயசுக்காரங்க யாராவது.. ஒண்ணு, ரெண்டு பேராவது உசிரோட இருக்க மாட்டாங்களா! போய் பேசிட்டு வரேன். அடுத்த வருஷம் யார் இருக்கப்போறோமோ, என்னமோ!” “ஒங்களுக்கென்னங்க! ரவியோட சேர்த்து ஒங்களைப் பாத்தா, அவனோட அண்ணன்னுதான் ஒங்களைச்சொல்வாங்க!”என்று பாக்கியம் புகழ்ச்சியாகச் சொல்ல, ரவி அவசரமாகக் காரில் ஏறினான். “சீக்கிரம் வாங்கப்பா. எனக்கு மயக்கமே வரும்போல இருக்கு!” கார் ஓடிக்கொண்டிருந்தது. மணி நடந்ததை விவரித்தார். ரவியின் பூரிப்பை ரசித்தபடி, “ஹனிமூனுக்கு எங்கே போறதா உத்தேசம்?” என்று அக்கறையோடு விசாரித்தார். “பங்கோர் தீவுதான்! அழகான எடம்னு, வெள்ளைக்காரன் படம் பிடிச்சு, டி.வியில போடறான். இங்கேயே பிறந்து வளர்ந்திருக்கேன், நான் இன்னும் அங்கே போனதில்ல, பாருங்க!” தான் என்றோ சொன்னதை, வார்த்தை பிசகாமல் சொல்கிறானே, பாவிப்பயல்! முகத்தைச் சாதாரணமாக வைத்துக்கொள்ள மணி பாடுபட்டார். “எதுக்குப்பா கேக்கறீங்க?” “இல்ல.., நானும் ஒங்கம்மாகூட எங்கேயாவது போகலாம்னு..!” மென்று விழுங்கினார். “நீங்க போற எடத்துக்கே நாங்களும் வந்துவெச்சு.. சிறிசுங்க ஒங்களுக்கு எதுக்கு எடைஞ்சல், சொல்லு!” `இடைஞ்சல் யாருக்கு, ஒங்களுக்கா, எனக்கா?’ என்று எண்ணமிட்ட ரவியின் முகத்தில் புன்னகை அரும்பியது. பாதி வழியில் இறங்கிக்கொண்ட மணி, “என்னைக் கேட்டா, நீங்க ஏதாவது மலைப்பிரதேசமா போகலாம். சும்மாவா மலாயான்னு பேரு, நம்ப நாட்டுக்கு! அங்கதான் குளிரும். அப்போ..!” என்று கண்ணடித்தார். சிரித்தபடி, ரவி காரைக் கிளப்பிக்கொண்டு போனான். ஆனால், அப்பா தன்னை ஏமாற்றிவிட்டது உறுத்திக்கொண்டே இருக்க, தானும் வேறு யாரையாவது முட்டாளாக்கினால்தான் மனம் அமைதியடையும் என்று தோன்றியது. கைத்தொலைபேசியை எடுத்தான். `எவனாவது போலீஸ்காரன் பாத்துவெச்சா, முந்நூறு வெள்ளியில்ல தண்டம் அழணும்!’ என்று புத்தி இடிக்க, காரை ஒதுக்குப்புறமாக நிறுத்தினான். “ஹலோ, ராதி. எங்கம்மா என்னோட கல்யாணத்துக்கு — அவங்களுக்குப் பிடிச்ச பொண்ணாப் பாத்து — ஏற்பாடு செய்துட்டாங்க. என்னால ஒண்ணுமே பண்ண முடியல. சாயந்திரம் ஆறு மணிக்கு ஒங்க வீட்டுக்கு வந்து, விவரமாச் சொல்றேன்!” என்று ஒரே மூச்சில் சொன்னான். முகத்தில் வெற்றிப் புன்னகை. 48 அவள் முடிவு ராதிகாவின் வீட்டை அடைந்தான் ரவி, மனங்கொள்ளா பூரிப்புடன். வாயிற்கதவு திறந்தே இருந்தது. இருமுறை அழைத்துவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தவனின் கண்ணில், மேசைமேல் திறந்தே வைக்கப்பட்டிருந்த வெள்ளைக் காகிதம் பட்டது. பரபரப்புடன் அதனருகே சென்று, அதைக் கையால் தொடவும் பயந்தவனாய், குனிந்து படிக்க ஆரம்பித்தான். “அன்புள்ள ரவி, உங்களை மணக்கும் பாக்கியம் இல்லாவிட்டாலும், நம் நட்பாவது நீடித்திருக்கிறதே என்று மகிழ்ந்தேன். ஆனால், உங்கள் அம்மாவின் அபிமானத்திற்குரிய மருமகள் என்னை ஏற்பாளா? ஆகையால்..” அத்துடன் நின்றது கடிதம். “ஐயோ ராதி!” என்று கத்தியபடி, உள்ளே ஓடினான். குளியலறை மூடியிருக்க, பயங்கரமான சந்தேகம் முளைத்தது. காலால் அதன் கதவை ஓங்கி உதைக்கப்போனான். அப்போது, எதிர்பாராவிதமாக கதவு திறக்க, தலையைத் துவட்டியபடி வெளியே வரவிருந்த ராதிகாவின்மேல் விழுந்தான். “வாழ்த்துகள்!” என்றாள் அவள், சிரிக்காமல். அந்தக் குரலில் இருந்த ஏதோ அவள் திட்டமிட்டுத் தன்னை ஏமாற்றியதை அவனுக்கு உணர்த்த, திகைத்தான். “ஒனக்கு மொதல்லேயே தெரியுமா?” “என்னைவிட்டா, வேற எந்த பைத்தியக்காரி ஒங்களைக் கட்டிப்பா! இது ஒங்கம்மாவுக்கே புரிஞ்சு போயிருக்கணும்!” மானசீகமாக, தனக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்த வருங்கால மாமனாருக்கு நன்றி செலுத்தினாள் ராதிகா. “என்னை முட்டாளாக்கலாம்னு பாத்தீங்களே! எப்படி நம்ப நாடகம்?” புருவத்தை மேலும் கீழும் உயர்த்தி, கட்டை விரலை ஆட்டியபடி அவனைக் கேலி செய்தாள். போலிக்கோபத்துடன், வெளியே நடப்பதுபோல் பாவனை செய்தான் ரவி. “ஒரு சந்தோஷமான தாம்பத்தியத்திலே நிறைய சண்டை பூசல் இருக்கணும். அதுக்குத்தான் ஒத்திகை!” ”நல்ல ஒத்திகை! ஒரு நிமிஷம் எனக்கு மூச்சே நின்னு போச்சு, தெரியுமா?” “கவலைப்படாதீங்க. கோவிச்சுக்கிட்டுப் போக, அம்மா வீடு கிடையாது எனக்கு!” இதுவரை கலகலப்பாக இருந்தவளின் குரல் அடைத்துப்போயிற்று. அவளை எப்படி சமாதானம் செய்வதென்று ரவிக்குப் புரியவில்லை. சமாளித்துக்கொண்டு, “அம்மா வீடுன்னதும், ரஞ்சி ஞாபகம்தான் வருது. பாவம், வைத்தி! `அம்மா இல்லாத பொண்ணாப் பாத்து கல்யாணம் செஞ்சிருக்கணும்’னு இப்ப கெடந்து அடிச்சுக்கறான்!”என்று சிரித்தான். “நாளைக்கு என் தங்கைக்கு ஒரு பெரிய அதிர்ச்சி வைத்தியம் வெச்சிருக்கேன்!” பேச்சின் திசை மாற, காதலர்கள் இருவரும் தங்களைப்பற்றி மறந்து, ரஞ்சி-வைத்தியின் பிரச்னையைப்பற்றி அலச ஆரம்பித்தார்கள். 49 கழுதையின் கால் காலையில் எழுந்த மகள் சமையலறைப் பக்கமே வராததால், பாக்கியம் அவளைத் தேடிக்கொண்டு போனாள். “ரஞ்சி! மணி பத்தாகுது. இன்னும் பசியாறலியே நீ! மீஹூன் பெரட்டி வெச்சிருக்கேன், வாடி!” என்று கரிசனத்துடன் அழைத்தாள். சம்பந்தமில்லாது, “அம்மா! இன்னிக்கு அதைப் பிடிச்சுட்டா.., என் கதி?” என்று என்னமோ கேட்டாள் மகள். “என்ன சொல்றே? வர வர..!” “மறந்துட்டீங்களா? அவர்.. இன்னிக்கு.. பொண்ணுபாக்க..!” திணறித் திணறி வந்தன வார்த்தைகள். ”அதுக்கென்ன இப்போ? கல்யாணமேவா ஆயிடுச்சு? மொதல்லே அவருக்குப் பொண்ணைப் பிடிக்கணும்..,” நடைமுறையை விளக்க ஆரம்பித்தாள் பாக்கியம். “அவருக்கு எந்தப் பொண்ணையும் பிடிச்சுடும். என்னைப் பாத்தே மயங்கினவரு இல்ல!” “இவன் குணம் தெரிஞ்சும், நீ இத்தனை நாள் தனியா விட்டிருக்கக் கூடாது!” மரியாதை தேய்ந்தது. எப்போதும் தன் பக்கமே பேசும் தாயே தன்னிடம் குற்றம் கண்டிபிடிக்க, கண்களை ஒரு கையால் மூடியபடி, தலையைக் குனிந்துகொண்டாள் ரஞ்சிதம். “ஹூம்!” பாக்கியம் ஒரு பெருமூச்சு விட்டாள். “சாயந்திரமா அப்பாவை ஒன்னை அந்த வீட்டுக்குக் கொண்டுபோய் விடச்சொல்றேன். அவன் கையையோ, காலையோ பிடிச்சு..! `காரியம் ஆகணும்னா, கழுதைக் காலைக்கூடப் பிடிக்கணும்’னு சும்மாவா சொல்லி வெச்சிருக்காங்க!” இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மணி, மத்தியானமே தலைமறைவானார். 50 பாட்டியும், பார்ட்டியும் வாசலில் வந்து நின்ற ரவியின் கார் கிரீச்சிட்டது. வேகமாக உள்ளே ஓடி வந்தான் ரவி. “என்னடா? வழியிலே பாத்ரூம் எதுவும் இல்லியா?” அவனுடைய அவசரத்துக்குத் தானே ஒரு காரணம் கற்பித்துக் கேட்டாள் பாக்கியம். இறைக்க, இறைக்க, ரவி, ”ஐயோ! அதில்லேம்மா!” என்றவன் மேலே பேச முடியாது, காரைச் சுட்டிக்காட்டினான். எட்டிப் பார்த்தவள், “யாரு, மாப்பிள்ளையா வந்திருக்காரு!” என்று முகமெல்லாம் மலர, “ரஞ்சி! இங்க வந்து பாரேன்!” என்று கூவினாள். “அவன் ரஞ்சியைப் பாக்க வரல, கூட்டிட்டுப் போக! வைத்தி.. பார்ட்டி..!” என்றவன் தலையை ஒரேயடியாகக் குனிந்து, உதடுகளை இறுக்க மூடிக்கொண்டான். சிரிப்பு பொத்துக்கொண்டது அப்படியும். “பாட்டியா? ஐயையோ!” என்று அலறிய பாக்கியம், “அடி ரஞ்சி! பொறப்படு, பொறப்படு. ஒங்க வீட்டுப் பாட்டி போயிட்டாங்களாம். நாம்ப எல்லாரும்..!” என்று குரல் கொடுத்தாள். “ஐயோ! நீங்க எங்கேம்மா கெளம்பறீங்க?” என்றான் ரவி, உண்மையாகவே அதிர்ந்து. “சம்பந்தி, நான் போகாட்டி எப்படி!” “நீங்க அப்புறம் அப்பாவோட வாங்க. மொதல்லே ரஞ்சி போகட்டும்,” என்றான் கண்டிப்பாக. உள்ளே வந்த பாக்கியம், மகள் பவுடர் டப்பாவை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, “எழவு வீட்டுக்குப் போக என்ன அலங்காரம்! இப்படியே கெளம்பு!” என்று ஆக்ஞை பிறப்பித்தாள். கழுத்துப்பட்டியில் நைந்துபோன இரவு உடையிலிருந்தவள் தயங்கினாள். எத்தனையோ மாதங்களுக்குப்பின் கணவர் தன்னை இப்படியா பார்ப்பது! “என்னம்மா!” என்று சிணுங்கத்தான் அவளால் முடிந்தது. “போடி, சரிதான்! அவர் மனசிருக்கிற நெலையில ஒன்னைத்தான் கவனிக்கப்போறாராக்கும்!” அதற்கு மேலும் தான் தாமதித்தால், கணவர் கோபித்துக் கொண்டுவிடுவாரோ என்று பயந்தவளாக, ரஞ்சி வேகமாக வாசலைநோக்கி நடந்தாள். திடீரென்று நினைத்துக்கொண்டு, “வரேம்மா!” என்று தாயிடம் விடைபெற்றாள். “எங்கேடி வரப்போறே? போய் ஒழுங்கா இருக்கிற வழியைப் பாரு!” என்று மிரட்டலாகச் சொன்ன பாக்கியம், “ம்! ஒனக்கு இப்படி ஒரு புருஷன் வாய்ச்சிருக்க வேணாம். இனிமே சொல்லி என்ன புண்ணியம்? கெடைச்சதை வெச்சுக்கிட்டு, ‘நமக்குக் கொடுப்பினை அவ்வளவுதான்’னு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்!” என்று அறிவுரை கூறினாள். தவறாமல், “நானோ, போற நாளை எண்ணிக்கிட்டிருக்கேன். என்னை நம்பி, எத்தனை நாள் நீ இங்கே தங்க முடியும்!” என்று முடித்தாள். தங்கை வருவதைப் பார்த்த ரவி, கார் சாவியை வைத்தியிடம் கொடுத்துவிட்டு, “நல்வாழ்த்துகள்!” என்று சிரித்தான். ஒட்டமும் நடையுமாக வெளியே வந்தவளைப் பார்த்து மனதுக்குள் சிரித்தபடி, “என்ன ரஞ்சி, ரெடிதானே?” என்று கேட்டுவைத்தான். பெரிதாகத் தலையாட்டினாள் தங்கை. பக்கத்தில் அமர்ந்த மனைவியை மேலும் கீழுமாக அருவருப்புடன் பார்த்தான் வைத்தி. “இப்படியேவா வரப்போறே?” “அம்மாதான் சொன்னாங்க..,” என்று அவள் ஆரம்பிக்க, முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு, விழிகளைச் சுழற்றினான் வைத்தி. `வைத்தி! வேணாண்டா. இப்பவே இன்னொரு சண்டையை ஆரம்பிக்காதே!” என்று உட்குரல் எச்சரித்தது. `ஒரு வாரமாவது போகட்டும்!’ கார் அவர்கள் வீட்டுக்குப் போகாமல், வேறு திசையில் திரும்பியது ரஞ்சிக்குக் குழப்பம் விளைவித்தது.”பாட்டி வீட்டிலே இல்ல?” “பார்ட்டி.. வீட்டிலேதான்!” என்று அழுத்திச் சொன்னான் வைத்தி. முன்பு வைத்தியின் வீட்டருகே இருந்த ரஹீம் இப்போது புதிய வீட்டுக்குக் குடிபெயர்ந்திருந்தான். “இல்ல.., இந்தப் பக்கம் போறீங்களே, ஆஸ்பத்திரியில இருக்காங்களோன்னு கேட்டேன்!” பரிதாபத்துடன் அவள் பக்கம் திரும்பி, ஒரு பார்வை பார்த்தான் வைத்தி. `ஏற்கெனவே அரைகுறை! தெருவிலே விழுந்தது, அபார்ஷன் ஆனது, எல்லாம் சேர்த்து, இவளை முக்கால் பைத்தியமா ஆக்கிடுச்சு, பாவம்!” 51 பெரிய விசேஷம் ரஹீமின் வீட்டுக்கு வெளியே, தெருவின் இருபுறங்களையும் அடைத்துக்கொண்டு கார்கள் நின்றன. ரஞ்சிக்குப் பெருமையாக இருந்தது. “பெரிசா, புது வீடு வாங்கிட்டீங்களா! அடேயப்பா! எவ்வளவு பேர் வந்திருக்காங்க!” என்று பூரித்துப்போனாள். பாட்டிக்கு இவ்வளவு செல்வாக்கா, இது நமக்கு முதலிலேயே தெரியாமல் போயிற்றே, செவிட்டுப் பாட்டி என்று அலட்சியமாக நடத்தினோமே என்று தன்னையே நொந்துகொண்டாள். `என்னென்னவோ உளறுகிறாளே! இவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகாமல், பொது இடத்திற்கு அழைத்து வந்தது தவறோ?” என்ற அச்சம் எழ, அவளை ஒரு பார்வை பார்த்தான். தன் பதிலை எதிர்பார்த்து, வாயையே அவள் பார்த்துக்கொண்டிருந்தது உறுத்த, “பெரிய விசேஷம், இல்லியா!” என்று சமாளிக்கப்பார்த்தான். வீட்டு வாசலில் அறுபதுக்குக் குறையாத ஜோடி செருப்புகள். பெண்களையுடையதில் பல சரிகை வேலைப்பாடு அமைந்ததாகவும், குதிகால் உயர்ந்து, மணிகள் பொருத்தப்பட்டதாகவும் இருந்தன. தன்னையுமறியாமல், தனது செருப்புகளைப் பார்த்துக்கொண்டாள் ரஞ்சி. வீட்டில் மட்டுமே அணியத் தகுந்த மலிவான ஜப்பான் செருப்புகள்! பாதம் பட்ட இடத்தில் திட்டுத் திட்டாக அழுக்கு வேறு! `எப்படியும் வெளியேதானே விடப்போகிறோம்! நல்ல வேளை, யாரும் நம்மை இதில் பார்க்க மாட்டார்கள்!” என்ற அல்ப திருப்தியுடன், கணவனைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தாள். பலத்த ஆரவாரத்துடன் அவர்களிருவரையும் வரவேற்றான் ரஹீம். நண்பன் அழுமூஞ்சியாக இருந்தது போதும், இப்போதாவது மனைவியுடன் இணைந்திருக்கிறானே என்று அவர்களுக்காக மகிழ்ச்சியடைந்தவனாக, உரத்த குரலில் மனைவியை அழைத்தான். பொய்யான புன்னகையுடன் யாருடனோ பேசிக்கொண்டிருந்த அவள், அரைகுறையான வாக்கியத்தில் நிறுத்திவிட்டு, அங்கு விரைந்தாள். கணவன் இவ்வளவு பலமான வரவேற்பு கொடுக்க வேண்டுமென்றால், அவர்கள் அரசாங்கப் பட்டம் வாங்கியவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தாள். யாராக இருக்கும்? நாடாளும் அரசியல் கட்சிப் பிரமுகர்களா, இல்லை, தொழிலதிபர்களா? எண்ணற்ற கற்பனைகளுடன் விரைந்து வந்தவள், ரஞ்சிதத்தைப் பார்த்துத் திகைத்துப்போனாள். ஏதோ புறம்போக்குப் பகுதியிலிருந்து வந்தவள்போல, யார் இவள்! திகைத்தது அவள் மாத்திரமில்லை. ரஞ்சியும் விறைத்துப்போனாள். பெண்களிடையே நிலவிய அசாதாரண மௌனம் வைத்தியின் அறிவுக்குக்கூடத் தப்பவில்லை. அடுத்து என்ன செய்வது என்று அவன் விழிக்க, ரஞ்சி விடுவிடுவென வெளியில் நடந்தாள். பின்னாலேயே ஓடினான் வைத்தி. “ரஞ்சீ..!” கெஞ்சலாகக் கூப்பிட்டான். “இத்தனைபேர் முன்னாலே இப்படி என்னை அவமானப்படுத்தணும்னு எத்தனை மாசமா திட்டம் போட்டீங்க?” கேட்பதற்குள் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அண்ணனும் இந்த அநியாயத்துக்கு உடந்தை! “எல்லாரும் பட்டை பட்டையா சங்கிலியும், வளையும் போட்டுட்டு வந்திருக்காங்க. நான் மட்டும் வேலைக்காரி மாதிரி..!” தன் பங்குக்கு, “நான்தான் அப்பவே கேட்டேன்! நீதான் அம்மா சொன்னாங்க, ஆட்டுக்குட்டி சொன்னாங்கன்னு..! ஒனக்குச் சுயமா மூளை இருந்தா இல்ல!” வைத்தியும் இரைந்தான். மனைவி அடைந்த அவமானத்தில் அவனுக்கு மட்டும் பங்கில்லையா, என்ன! “பாட்டி செத்துப் போயிட்டாங்கன்னு பித்தலாட்டம் பண்ணிட்டு, என்னைப் பார்ட்டிக்கா கூட்டிட்டு வர்றீங்க?” உறுமினாள். கொஞ்சம் விழித்த வைத்தி, `ஓகோ! இவளை அந்த வீட்டிலேருந்து கிளப்ப ரவிதான் ஏதோ அளந்து வெச்சிருக்கான். அவனை..,’ என்று ஆத்திரப்பட்டுவிட்டு, `அவன்மேல என்ன தப்பு! நான்தானே அந்த வீட்டுக்குள்ளே நுழையமாட்டேன்னு, பெரிய `இவன்’ மாதிரி சபதம் போட்டேன்!’ என்று தன் தவற்றை உணர்ந்தான். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித்தர யாருமில்லையே என்ற பயம் உண்டாயிற்று. “என்ன முழிக்கிறீங்க? பொய் சொல்றதையும் சொல்லிட்டு..!” வைத்திக்கு வீரம் வந்தது. “ஆமா. சொன்னேன். நல்லபடியா கேட்டாதான், அம்மாவும், பொண்ணுமா சேர்ந்துக்கிட்டு ஆட்டி வைப்பீங்களே!” தன் அருமை அம்மாவைப்பற்றி கணவன் குறை சொன்னது ரஞ்சிக்கு ரோஷமாக இருந்தது. “நான் இப்பவே போறேன்!” என்று முழங்கினாள். “போ!” விரட்டாத குறையாகச் சொன்னான். ஆனால், அவள் நகரவில்லை. “அவசரத்திலே.. காசு கொண்டு வரல!” அவமானத்துடன் முனகினாள். எதுவும் பேசாது, வைத்தி பர்சைத் திறந்து, பச்சை நிறத்திலிருந்த ஐம்பது ரிங்கிட நோட்டு ஒன்றைக் கொடுத்தான். அதைப் பிடுங்காத குறையாகப் பெற்றுக்கொண்டு, அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்த டாக்சியைக் கையைக் காட்டி நிறுத்தினாள் ரஞ்சி. மீண்டும் அவ்வீட்டில் நுழையும் துணிவு வைத்திக்கு இருக்கவில்லை. நண்பன் புரிந்துகொள்வான் என்று எண்ணியவனாக, தான் கொண்டு வந்திருந்த காரில் ஏறி, வீட்டை நோக்கி ஓட்டிப்போனான். எல்லாம் நடக்கிறபடி நடந்தால், பத்தே மாதங்களில் இன்னொரு குழந்தை பிறக்கும் என்று கனவு கண்டிருந்தவனுக்கு மனமெல்லாம் கனத்திருந்தது. `எவ்வளவு ஆசையாக அவளை அழைத்துப்போனோம்! இப்படி ஆகிவிட்டதே! இனி என்ன சொன்னாலும் ரஞ்சி மசியப்போவதில்லை!’ வீட்டையடைந்ததும், சோர்வுடன் இறங்கினான். வாசலில் ரஞ்சி உட்கார்ந்திருந்தாள். அவனைப் பார்த்ததும் எழுந்துகொண்டு, “வீட்டுச் சாவியும் கொண்டு வரல!” என்று முனகினாள். வெற்றிப் புன்னகையுடன், “வீட்டிலே சாப்பிட ஒண்ணுமில்லே. ஒன் சாமானெல்லாம் அப்படி அப்படியே இருக்கு. ஒரு நல்ல புடவையை எடுத்துக் கட்டிட்டு வா. வெளியே போய் சாப்பிடப்போறோம்!” புருஷனாய், லட்சணமாய், அதிகாரமாகச் சொன்னான் வைத்தி. சொன்ன உடனேயே, `தண்டச் செலவு! ரஹீம் வீட்டிலே சும்மா கெடச்ச வீட்டுச் சாப்பாட்டை கோட்டை விட்டுட்டு..!” என்று மனம் இடித்துரைத்தது. `அதனாலென்ன! ஒரு குழந்தைக்கு அஸ்திவாரம் போடுவதென்பது லேசா!’ என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டான் அந்தக் கஞ்சன்.   முற்றும் 1 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. 2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !