[] [புனைக்கும் அடிசறுக்கும்] புனைக்கும் அடிசறுக்கும் நாகூர் ரூமி மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை   உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும். This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - பூனைக்கும் அடிசறுக்கும் - மின் நூல் பங்களிப்பு - பொருள் அடக்கம் - 1. இரண்டு கண்களாலும் பாருங்கள் - 2. என் ஊர் - 3. தமிழிலக்கியமும் நாகூர் படைப்பாளிகளும் - 4. நாகூர் சலீம் நினைவலைகள் - 5. நாகூர் தந்த கொடை - 6. சமகால மொழிபெயர்ப்பும் இஸ்லாமியப் படைப்பாளிகளும் - 7. இஸ்லாமும் தமிழும் நிறைவான கொடுக்கல் வாங்கல் - 8. மீண்ட பொக்கிஷம் - 9. பரிபூரண அழகிய முன்மாதிரி - 10. பி.ஜெ.குர்’ஆனை முன்வைத்து சில கேள்விகள் - 11. நம்பிக்கையின் படித்தரங்கள் - 12. திருக்குரானை அழிக்க முடியுமா? - 13. ஹஸ்ரத் மியான் தான்சேன் (1496-1586/1589) - 14. வள்ளல் அப்துல் ஹகீம் சாஹிப் - 15. அம்மியில் கொத்தப்பட்ட சிற்பங்கள்: யுகபாரதி திரைப்படக் காதல் பாடல்கள் - 16. அரிதாரமற்ற அரிதான கலைஞன் - 17. பூனைக்கும் அடிசறுக்கும் - 18. கிராண்ட் ஃபினாலே - 19. வரலாறு படைத்த அழுகையும் அசத்தலும் - 20. அசிங்கமும் எதிர்வினையும் - 21. நீயா நானா - 22. பில்லி சூனியம் - 23. மை நேம் ஈஸ் கான் – மகத்தான சேவை - 24. தியானம் ஓர் அறிமுகம் - 25. கடவுளோடு பேசுவது எப்படி? 1 பூனைக்கும் அடிசறுக்கும் [Cover Image] பூனைக்கும் அடிசறுக்கும் – கட்டுரைகள் ------------------------------------------------------------------------ நாகூர் ரூமி மின் நுல் வெளியீடு ------------------------------------------------------------------------  [] 2 மின் நூல் பங்களிப்பு மின் நூல் ஆக்கம், முலங்கள் முயற்ச்சி   GNUஅன்வர் தொடர்புக்கு gnuanwar@gmail.com gnunanban.blogspot.com   மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com   3 பொருள் அடக்கம்   - இரண்டு கண்களாலும் பாருங்கள் - என் ஊர் - தமிழிலக்கியமும் நாகூர் படைப்பாளிகளும் - நாகூர் சலீம் நினைவலைகள் - நாகூர் தந்த கொடை - சமகால மொழிபெயர்ப்பும் இஸ்லாமியப் படைப்பாளிகளும் - இஸ்லாமும் தமிழும் நிறைவான கொடுக்கல் வாங்கல் - மீண்ட பொக்கிஷம் - பரிபூரண அழகிய முன்மாதிரி - பி.ஜெ.குர்’ஆனை முன்வைத்து சில கேள்விகள் - நம்பிக்கையின் படித்தரங்கள் - திருக்குரானை அழிக்க முடியுமா? - ஹஸ்ரத் மியான் தான்சேன் (1496-1586/1589) - வள்ளல் அப்துல் ஹகீம் சாஹிப் - அம்மியில் கொத்தப்பட்ட சிற்பங்கள்: யுகபாரதி திரைப்படக் காதல் பாடல்கள் - அரிதாரமற்ற அரிதான கலைஞன் - பூனைக்கும் அடிசறுக்கும் - கிராண்ட் ஃபினாலே - வரலாறு படைத்த அழுகையும் அசத்தலும் - அசிங்கமும் எதிர்வினையும் - நீயா நானா - பில்லி சூனியம் - மை நேம் ஈஸ் கான் – மகத்தான சேவை - தியானம் ஓர் அறிமுகம் - கடவுளோடு பேசுவது எப்படி? [pressbooks.com] 1 இரண்டு கண்களாலும் பாருங்கள்   [With Puppies-4]கொஞ்சம் ’எடிட்’ செய்து இப்போது ஃபைனல் ட்ராஃப்ட் உங்கள் முன்னே! முகநூலில் மூன்று போமரேனியன் அழகு நாய்க்குட்டிகளைத் தூக்கிக் கையில் வைத்துக்கொண்டு இருக்கும் ஒரு ஒளிப்படத்தை இட்டேன். அதற்கு என்ன விதமான எதிர்வினைகள் வரும் என்று தெரிந்துதான் இட்டேன். ஆனால் நான் நினைத்த அளவுக்கு எதிர்வினைகள் வரவில்லை என்பது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமே. ஒரே ஒரு சகோதரர் மட்டும் நான் ஒரு இஸ்லாமியன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவதாக எழுதியிருந்தார். ஒரு முஸ்லிம் நாய்களைத் தொடலாமா என்று இன்னொரு சகோதரர் கேட்டிருந்தார். இந்த விஷயம் பற்றி எனக்குத் தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டியே இதை எழுதுகிறேன். முஸ்லிம்கள் அனைவரும் திருக்குரானையும் திருநபி வாக்கினையும் ஏற்றுக்கொண்டு, அதன்படி வாழ்கிறார்கள். அல்லது வாழ முயற்சிக்கிறார்கள். அவர்கள் எந்தக் குழுவினராக இருந்தாலும் சரி. ஆனால் இதில் ஒரு பெரிய பிரச்சனை உருவாகி, அது நம் வாழ்வை முற்றிலுமாக ஆட்கொண்டு, நாம் என்ன தவறு செய்கிறோம் என்றே அறியாமல் செய்துவிட்டதுதான் ஆகப்பெரிய சோகம் என்று கருதுகிறேன். அது என்ன தவறு? குர்’ஆன், ஹதீஸ் என்ற இரண்டில் முதலில் முக்கியத்துவம் தரவேண்டியது குர்’ஆனுக்குத்தான். ஆனால்  ஹதீஸுக்குப் பிறகான இரண்டாம் இடத்துக்குக் குர்’ஆன்  தள்ளப்பட்டுவிட்டதுதான் இன்றைக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். அதிர்ச்சிதரும் உண்மை இது. குர்’ஆனில் எதுவும் மாற்றப்படவில்லை. இறுதித்தூதர் (ஸல்) அவர்களுக்கு எந்த குர்’ஆன் கொஞ்சம் கொஞ்சமாக 23 ஆண்டுகளாக அருளப்பட்டதோ அதே குர்’ஆன்தான் இன்று உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களால் ஓதப்பட்டுக்கொண்டும், விளக்கப்பட்டுக்கொண்டும், பின்பற்றப்பட்டுக்கொண்டும் உள்ளது. இதற்கான ஆதாரங்கள் நிறைய உண்டு. ஒரு நுக்தா (புள்ளி)கூட மாற்றப்படாமல் தூய்மையாகப் பாதுகாக்கப்படும்  ஒரே நூல் குர்’ஆன்தான். இதை முஸ்லிம்கள் சந்தேகிக்கமாட்டார்கள். சந்தேகித்தால் தெளிவு பெற வழியுண்டு. ஆனால் ஹதீஸ் விஷயம் இப்படிப்பட்டதல்ல. குர்’ஆனை இறுதித்தூதர் (ஸல்) மனனம் செய்யவும் எழுதி வைக்கவும் சொன்னார்கள். எனவே இரண்டு விதங்களில் அது பாதுக்காக்கப்பட்டது. ஆனால் தன்னுடைய உபதேசங்கள் குர்’ஆனுக்கு இணையான இன்னொரு நூலாகிவிடலாம், அதனால் இறைவேதத்துக்கு உரிய மரியாதைக்கு பங்கம் ஏற்படலாம் என்பதால் அவைகளை எழுதி வைக்க வேண்டாம் என்று கூறினார்கள். (இதைக்கூட ஹதீதுகள் மூலமாகவே நாம் தெரிந்துகொள்கிறோம்). குர்’ஆனைத்தவிர்த்து நான் சொல்லும் எதையும் எழுதி வைக்கவேண்டாம். அப்படிச் செய்திருந்தால் அதை அழித்துவிடுங்கள் என்று இறுதித்தூதர் (ஸல்) சொன்னார்கள். அபூ சயீத் குத்ரி அறிவிக்கும் இந்த நபிமொழி முஸ்லிமில் பதியப்பட்டுள்ளது (நூல் 42, எண் 7147) அவர்களுக்குப் பிறகான கலீஃபாக்களாக அபூபக்கரும் உமரும்கூட இவ்விதமே செய்தார்கள். அப்படி எழுதி வைக்கப்பட்டிருந்த ஹதீஸ்களை எரித்துவிடும்படி உத்தரவிட்டார்கள். அப்படியே செய்யவும் பட்டது.  தாம் சேர்த்து வைத்திருந்த 500 நபிமொழிகளையும் எரித்துவிட்ட பிறகே அபூபக்கருக்கு நிம்மதியான உறக்கம் வந்தது. தன் மகன் அப்துல்லாஹ்வால் தொகுத்து வைக்கப்பட்ட சில நபிமொழிகளை அழித்துவிடும்படி உமர் இப்னு கத்தாப் உத்தரவிட்டார்கள். ஹதீதுக்கலை வல்லுனர்களால் இன்று ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை, நம்பத்தகுந்தவை) என்று வரையறுக்கப்பட்ட ஆறு தொகுப்புகளும் இறுதித்தூதர் (ஸல்) இந்த உலகை விட்டுப் பிரிந்து இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தொகுக்கப்பட்டவையே. இரண்டாம் உமர் என்று வரலாற்றில் அறியப்படும் உமர் இப்னு அப்துல் அஜீஸின் காலத்தில்தான் (கிபி 682 – 720) நபிமொழிகள் தொகுக்கப்பட்டன. எனவே அவற்றில் ஏகப்பட்ட பொய்களும், தவறான கருத்துக்களும் திணிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டது. அதனால்தான் லட்சக்கணக்கான ஹதீதுகளிலிருந்து உண்மையானவை என்று கருதப்பட்ட நபிமொழிகளை மட்டும் வடிகட்டி எடுக்க வேண்டியிருந்தது. இப்படியெல்லாம் நடக்கும் என்று இறைவனும் குர்’ஆனில் எச்சரிக்கின்றான்: இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகர மான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக! (6”112) இட்டுக்கட்டும் வேலை நடக்கும் என்று இறைவன் முன்கூட்டியே சொல்லிவிட்டான். அது தெரிந்ததனால்தான் இறுதித்தூதர் (ஸல்) அவர்களும் என் போதனைகளை எழுதிவைக்காதீர்கள் என்று சொன்னார்கள் போலும். ஹதீதுகள் விஷயத்தில் எவ்வளவு குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன என்று தெரிந்துகொள்ள கீழே வரும் தகவல்களைப் பற்றிக் கொஞ்சம் யோசியுங்கள். - கிட்டத்தட்ட ஏழு லட்சம் ஹதீதுகள் எழுதப்பட்டிருந்தன. - ஹம்பலி இமாம் அவர்கள் தம் ”முஸ்னது” நபிமொழித்தொகுப்பில் தனக்குக் கிடைத்திருந்த 700,000 ஹதீஸ்களிலிலிருந்து 40,000 ஹதீஸ்களை மட்டுமே தொகுத்துக் கொடுத்தார்கள். அதாவது 6,60,000 ஹதீஸ்களை விட்டுவிட்டார்கள். அதாவது, தனக்குக்கிடைத்த 100-ல் 94 விழுக்காடு பொய்யானது, புரட்டானது, இட்டுக்கட்டப்பட்டது என்ற சந்தேகத்தில் விடப்பட்டன. - இமாம் புகாரி அவர்கள் தமக்குக் கிடைத்த 6,00,000 (ஆறு லட்சம்) ஹதீஸ்களில் இருந்து 7275 ஹதீஸ்களை மட்டுமே நம்பத்தகுந்தவை என்று வடிகட்டி எடுத்துக்கொடுத்தார்கள். அப்படியானால் 592,725 ஹதீஸ்களை விட்டுவிட்டார்கள். 99 சதவீதம் நம்பத்தகுந்ததாக இல்லை! - இமாம் முஸ்லிம் தனக்குக் கிடைத்த மூன்று லட்சம் ஹதீஸ்களில் இருந்து 4000 மட்டுமே கொடுத்தார்கள். இதிலும் இட்டுக்கட்டப்பட்டவையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விடப்பட்டவை 99 சதவீதம்! ஆனால் குர்’ஆனில் விஷயம் இப்படிப்பட்டதல்ல. மிகச்சிறந்த, அழகிய ஹதீஸ் (அஹ்ஸனு ஹதீஸ்) என்று இறைவன் குர்’ஆனையே குறிப்பிடுகின்றான் (39:23). அதுமட்டுமல்ல, ஹதீதுகளின்மீது நாம் அபாரமாக நம்பிக்கை வைத்துவிட்டு அதனையொட்டி இதுதான் சரி, இதுதான் தவறு என்று விவாதித்து முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். அப்படியானால் நபிமொழிகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட வேண்டுமா? நான் அப்படிச் சொல்லமாட்டேன். ஆதாரப்பூர்வ நபிமொழித் தொகுப்புளில் இருந்து ஹதீஸ்களைப் படித்தாலும் திருமறைக்குப் பக்கபலமாக இருக்கிறதா, அல்லது திருமறைக்கு முரணாகச் சொல்கிறதா, இப்படி இறுத்தித்தூதர் சொல்லியிருக்க வாய்ப்புண்டா, அவர்களது கருணை மிகு உள்ளமைக்கு ஹதீஸ் பொருந்துகிறதா என்றெல்லாம் யோசியுங்கள். உங்களுக்கு அல்லாஹ்வின் பக்கமிருந்து உண்மை வழிகாட்டுதல் கிடைக்கலாம். உதாரணமாக நாய்கள் பற்றிய விஷயத்தைப் பார்க்கலாம். நாய்கள் அசுத்தமானவை அவற்றை முஸ்லிம்கள் வளர்க்கக் கூடாது தொடக்கூடாது அவற்றின் உமிழ் நீர் நோயை உண்டாக்கக்கூடியது என்றெல்லாம் ஹதீஸ்கள் உள்ளன. அந்த அடிப்படையில்தான் மின்ஹாஜ் முஹம்மத் என்ற சகோதரர் என்மீது வருத்தம் தெரிவித்திருந்தார். சையத் முஹம்மத் என்ற சகோதரர் கேள்வி கேட்டிருந்தார். எனவே நாய்கள் தொடர்பாக முதலில் அல்லாஹ் என்ன சொல்கிறான் என்று பார்த்துவிடலாம்: குர்’ஆனிலே ’அஸ்ஹாபுல் கஹ்ஃப்’ என்று ஒரு அத்தியாயம் உள்ளது. குகைத்தோழர்கள் என்ற அந்த 18வது அத்தியாயத்தில் குகைத்தோழர்கள் எப்படி இறைவன் விருப்பப்படி பலகாலம் உறங்கினார்கள், பின்பு விழித்தார்கள் என்ற கதை சொல்லப்படுகிறது. அதில் 13வது வசனம் இப்படிச் சொல்கிறது: அவர்களது உண்மை வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். அவர்கள் இளைஞர்கள். அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள். அவர்களுக்கு நேர் வழியை அதிகமாக்கினோம். (18:13) அந்த இளைஞர்களை ஈமான் கொண்டவர்கள் (இன்னஹும் ஃபித்யத்துன் ஆமனூ பிரப்பிஹிம்) என்று இறைவன் வர்ணிக்கிறான். அதோடு அவர்களுக்கான ஹிதாயத் (நேர்வழிகாட்டுதலை) அதிகமாக்கினோம் என்றும் கூறுகிறான். அதனால் என்ன என்கிறீர்களா? அவர்கள் ஒரு நாயை வளர்த்தார்கள். பாசத்துக்காகவோ, பாதுகாப்புக்காகவோ. அந்த நாயும் அவர்களோடுதான் சென்றது. அவர்களோடுதான் அதுவும் அந்தக் குகையில் உறங்கியது. இந்த விஷயத்தை அல்லாஹ் 18வது வசனத்தில் உறுதிப்படுத்துகிறான்: மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது (18:18) நாய் வளர்த்த அவர்கள் ஈமான் கொண்டவர்கள், அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல் பெற்றவர்கள் என்று குர்’ஆன் கூறுகிறது. எனவே ஈமான் கொண்டவர்கள் நாய் வளர்க்கலாம், அது இறைவனின் ஹிதாயத்தையும் உதவியையும் பெறுவதிலிருந்து அவர்களைத் தடுக்காது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. நாய்கள் அசுத்தமானவையாகவும், தடுக்கப்பட்டவையாகவும் இருந்தால், இறைவன் இப்படிக் கூறியிருப்பானா? அல்லது, அவை அசுத்தமானவையாக இருப்பின், அந்த அசுத்தம் நம்மை பாதிக்காத வகையில் நடந்துகொண்டால் போதும் என்ற அர்த்தம் தொனிப்பதாகவும் இதைக் கொள்ளலாம். இன்னொரு முக்கியமான ஆயத்தையும் பார்க்கவேண்டும். நம்முடைய உணவில் ஹலால் எது என்று வரையறை செய்துகொடுக்கும் வசனம் அது. அதில் அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்: (நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்; எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.(05:04) ’சூரா மாயிதா’வில் வரும் வசனங்கள் இவை. அந்தக் காலத்தில் வேட்டையாடுவதற்காக  சில பிராணிகளை அரேபியர் வளர்ந்து வந்தனர். அவற்றில் நாய் முக்கியமானது. (வேட்டை நாய்களை வைத்துக்கொள்ளலாம் என்று கூறும் ஹதீஸ்களும் உண்டு). அப்படிப்பட்ட  நாய் ஒன்று ஒரு பறவையை வேட்டையாடி தன் வாயில் பிடித்துக் கவ்விக்கொண்டு வந்து கொடுத்தால் அந்த உணவு நமக்கு ஹலால் என்று அர்த்தம். நாம் இப்போது வாழும் வாழ்க்கை முறை வேறு; அந்தக்கால அரேபியர் வாழ்ந்த வாழ்க்கை முறைவேறு. உணவு வேட்டைக்காக நாயை அனுப்பிய காலம் அது. நாய் அசுத்தமானது, அதன் உமிழ் நீர் தொற்று நோயைப் பரப்பக்கூடியதென்றால், இப்படி இறைவன் கூறியிருப்பானா? நாயைப் பற்றி அதைப்படைத்த இறைவனுக்கு அதிகமாகத் தெரியுமா அல்லது இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கா? நாய் நஜீசானது, அது உணவுப்பாத்திரத்தில் நக்கிவிட்டால் அதை ஏழு முறை கழுவ வேண்டும், கறுப்பு நாய்களையெல்லாம் கொல்லவேண்டும் என்று கூறுகின்ற ஹதீஸ்களெல்லாம் அல்லாஹ் கூறுவதற்கு முரணாகவும், இறுதித்தூதரின் ஆளுமைக்குக் களங்கம் கற்பிப்பதாகவும் உள்ளன என்பதுதான் நிஜம். அப்படியானால் எதை நம்பவேண்டும்? சிந்தியுங்கள். ஹதீதுத் தொகுப்புகளை குறை கூறுவது என் நோக்கமல்ல. மிகுந்த சிரமத்துடன் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவழித்து அவர்கள் தொகுத்துள்ளார்கள்.  அவர்கள் கவனத்தையும் கடும் உழைப்பையும் மீறி உள்ளே புகுந்துவிட்ட சில அல்லது பல தவறுகளினால் ஏற்படும் விளைவுகளை நாம் சந்தித்துதானே ஆகவேண்டும்? நாயைத் தொடலாம். கொஞ்சலாம். வளர்க்கலாம். அது அவரவர் இஷ்டம் அல்லது தேவைக்கு ஏற்றபடி. அல்லாஹ் அதைத் தடை செய்யவில்லை என்பதைப் புரிந்துகொண்டால் சரி. ஆனால் நாய் வளர்த்துதான் ஆகவேண்டும் என்றும் கட்டாயமில்லை. சகோதரர்களே, குர்’ஆன ஹதீஸ் இரண்டும் நமக்கு இரண்டு கண்களைப் போன்றவை. இரண்டு கண்களாலும் பார்க்கும்போதுதான் முழுமையான உலகம் தெரியும். ஒரு கண்ணால் பார்த்தால் குறையுடனேதான் தெரியும். கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். இனியாவது ஹதீஸ்களுக்கு மரியாதை கொடுக்கும் அதே நேரத்தில் குர்’ஆனுக்கு மரியாதை செய்யும் வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள். இரண்டு கண்களாலும்தான் பார்க்கவேண்டும். ஒரு கண்ணால் மட்டும் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்குப் பிடித்த ஒரு மார்க்க அறிஞர் சொல்லிவிட்டார் என்பதற்காக ஒரு கருத்தை சிந்தித்துப் பார்க்காமல் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடவேண்டியதில்லை.விஷயமே தெரியாமல், கொஞ்சம்கூட சுயமாகச் சிந்திக்காமல் வார்த்தையை விடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இறைவன் நம் அனைவருக்கும் ஹிதாயத் வழங்குவானாக! அன்புடன் நாகூர் ரூமி 2 என் ஊர் தான் பிறந்து வளர்ந்த ஊரான நாகூரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் நாகூர் ரூமி. ஆன்மிகம், இலக்கியம் இரண்டும் நாகூரின் இரு கண்கள் என்றால் மிகையல்ல. நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு புலவர் அல்லது பாடகரின் மேல் விழவேண்டும் என்றும் கூறுவார்கள். கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ராட்சச இலக்கிய ஆளுமைகள் 19-ம் நூற்றாண்டிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிட்டே ஆகவேண்டியவர் குலாம் காதிர் நாவலர். நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நக்கீரர் என்றும் இவர் குறிப்பிடப்பட்டவர்.”வித்தியா விசாரிணி”, ”ஞானாசிரியன்” ஆகிய பத்திரிக்கைகளை 1888ல் நடத்தியவர். தமிழில் நாவல் எழுதிய முஸ்லிம் பெண்மணி மூன்றாவதுக்கு மேல் படிக்காத சித்தி ஜுனைதா பேகம். இவரது ”காதலா கடமையா” என்ற நாவல் 1938-ம் ஆண்டு உவேசா முன்னுரை, புதுமைப்பித்தன் வாழ்த்துரையுடன் வெளிவந்தது  கமலப்பித்தன், ஹத்தீப் சாஹிப், அப்துல் கய்யூம், ஆபிதீன், சாருநிவேதிதா போன்ற படைப்பாளிகள் அனைவரும் நாகூர்க்காரர்கள். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கம்பராமாயண அறிஞருமான எம்.எம். இஸ்மாயீல், புலவர் ஆபிதீன் காக்கா, மூவாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி, ஐம்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடகர்களை உருவாக்கிய கவிஞர் கலைமாமணி சலீம், கவிஞர், பேச்சாளர் இஜட் ஜபருல்லா, கவிஞர் இதயதாசன், நாகூர் இஸ்மாயீல் என்று இலக்கியம், கவிதை, நீதித்துறை, திரைத்துறை என பல பரிமாணங்களைக் கொண்ட படைப்பாளிகளின் பட்டியல் நீள்கிறது. []இசைத்துறையில் நாகூரின் பங்களிப்பு அதிசயமானது என்று கூறவேண்டும். கர்நாடக இசையில் கரைகண்டவர் நாகூர் தர்கா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர். நாகூர் இ.எம். ஹனிபா என்றால் தெரியாத தமிழர்கள் எவரும் இருக்க முடியாது.   நாகூரில் இலக்கியத்தோடு பின்னிப் பிணைந்தது ஆன்மிகம். 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைநேசர் ஷாஹுல் ஹமீது காதிர் வலீ மகான் உத்திரப்பிரதேசத்தில் இருந்த மாணிக்கப்பூரிலிருந்து நாகூருக்கு வந்து, 28 ஆண்டுகள் வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி, நாகூருக்குப் புகழைக் கொடுத்தவர். முஸ்லிம்களின்மீது வெறுப்புகொண்டு வன்முறையில் ஈடுபட்ட போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்துப் போர் செய்ய குஞ்சாலி மரைக்காயர் போன்ற வீரர்களை உருவாக்கி இந்திய விடுதலைக்கும் தொண்டாற்றினார்.   ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாகூர் தர்காவுக்கு வரும் பத்து பேரில் ஒன்பது பேர் முஸ்லிமல்லாதவர்களாகவே இருப்பார்கள். நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடக்கும் 14 நாள் கந்தூரி விழாவின்போது லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கிலுமிருந்து வந்து கலந்து கொள்கின்றனர்.   500 ஆண்டுகளுக்கும் மேலாக மதநல்லிணக்கத்தைக் கட்டிக் காக்கும் ஊராக உள்ளது எங்கள் ஊர். நாகூர் தர்காவுக்கு ஐந்து மினாராக்கள் அழகு சேர்க்கின்றன. அதில் பிரதான வாயிலின் எதிரில் இருக்கும் 131 அடி உயர, பத்து அடுக்குகள் கொண்ட பெரிய மினாராவைக் கட்டிக் கொடுத்தவர் தஞ்சையை ஆண்ட மன்னர் பிரதாபசிங். நாகூர் நாயகம் அடக்கம் செய்யப்பட்டுள்ள மூலஸ்தானத்தையும், மேல் விட்டத்தையும் முதன் முதலில் கட்டிக் கொடுத்தது கடற்கரையோரமாக இருக்கும் பட்டினச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள்.   []கந்தூரி பத்தாம் நாள் நாகூர் நாயகத்தின் சமாதிக்கு சந்தனம் பூசப்படும். அப்போது சமாதியில் போர்த்தப்படும் போர்வையை நெய்து தருவது சென்னையைச் சேர்ந்த றா.பழனியாண்டிப் பிள்ளையின் குடும்பத்தினர். நாகூர் நாயகத்தின் அடக்கஸ்தலத்துக்கு மேலிருக்கும் கும்பத்தின் தங்கக் கலசம் கூத்தா நல்லூரைச் சேர்ந்த மகாதேவ அய்யரால் கட்டிக் கொடுக்கப்பட்டது.   தர்காவுக்கான தளத்தை கோவிந்தசாமி செட்டி என்பவர் அமைத்துக்கொடுத்துள்ளார். கந்தூரி ஊர்வலத்தில் சந்தனக்கூடு வருமுன் வரும் பல்லக்கும் செட்டியார்களால் செய்யப்படுவது. அதற்கு ‘செட்டிப் பல்லக்கு’ என்றே பெயர். நாகூரின் பிரதான சாலையில் ‘கூட்டு ஃபாத்திஹா வீடு’ என்று உள்ளது. கந்தூரி நடக்கும் 14 நாட்களும் இந்துப் பெருமக்கள் அவர்களுடைய செலவில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுமிடம் அது. பேச்சு, எழுத்து, இசை, கலை, ஆன்மிகம், வாணிகம் எனப் பல துறைகளில் கேட்பவர்களை மூக்கில் விரல் வைக்கவைக்கும் ஊர் நாகூர் என்பது உண்மை.   படங்கள்: ச வெங்கடேசன், செ.சிவபாலன்.   என்னைப் பற்றிய பெட்டிச் செய்திகள்   நாகூரைச் சேர்ந்த படைப்பாளிகளில் கவிஞர் நாகூர் சலீம், வசனகர்த்தா தூயவன் ஆகியோர் நாகூர் ரூமியின் தாய் மாமாக்கள். சித்தி ஜுனைதா பேகம் ரூமியின் பெரியம்மா!   இப்போது ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றும் நாகூர் ரூமி, கம்பன் கவிதைகள் மற்றும் மில்டன் கவிதைகள் குறித்து பிஹெச்டி ஆய்வினை மேற்கொண்டவர்!   ஆங்கிலத்தில் ஐந்து, தமிழில் 27, மொழிபெயர்ப்பு ஆறு என இதுவரை 38 நூல்களை எழுதி இருக்கிறார் நாகூர் ரூமி!   இவர் எழுதிய இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது கொடுத்து கௌரவித்து உள்ளது. இவருடைய ஹோமரின் இலியட் காவியத் தமிழ் மொழிபெயர்ப்புக்காக திசையெட்டும் தமிழாக்க விருது பெற்றுள்ளார் நன்றி என் விகடன் 04.07.12 மற்றும் நண்பர்கள் மனா, வெங்கடேசன் குறிப்பு: என் விகடன் அட்டையில் என் படத்தைப் போட்டு “யாரும் வருவார் நாளும் தொழுவார்  நாகூர் ஆண்டவர் சந்நிதியில்” என்ற திரைப்படப் பாடல் வரிகளை மேற்கோள் மாதிரி போட்டுள்ளார்கள். ஏதோ நானே சொல்வது போன்ற ஒரு தொனியை அது தருகிறது. ’நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா…உன்னை நாளும் வேண்டவா” என்ற முட்டாள்தனமான, இஸ்லாத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாத பல்லவியைக் கொண்ட பாடலின் வரிகளில் ஒன்று அது. எங்களைப் பொறுத்தவரை பாதுஷா நாயகம் அவர்கள் ஒரு மாபெரும் மகான், ஞானி. அவர்கள் ஆண்டவனல்ல. மனிதர்தான். அவரை எந்த முஸ்லிமும் தொழுவதில்லை. வணக்கம் எல்லாம் இறைவன் ஒருவனுக்குத்தான். இதைச் சொல்ல வேண்டியது என் கடமை. நான் ஒரிஜினலாக எழுதி அனுப்பிய முழு கட்டுரை: என் ஊர் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. ஆனால் சில ஊர்கள் வரலாறு படைக்கின்றன. அவ்வகையில் தொடர்ந்து வரலாறு படைக்கும் ஊர்களில் ஒன்றுதான் நாகூர். இலக்கியம் மற்றுக் கலை கன்னித் தமிழுக்குப் பெருமை சேர்த்த கவிஞர்களைத் தந்த நாகூராம் மன்னவரெல்லாம் மலரடி பணிந்த மகிமைக் காதிர் மீராவாம்   கலைமாமணி கவிஞர் நாகூர் சலீமின் ”தமிழகத்து தர்காக்களைப் பார்த்து வருவோம்” என்ற புகழ்பெற்ற பாடலின் இவ்வரிகள் நாகூரின் ஆத்மாவைத் தொட்டவரிகள் என்று கூறலாம். ஏனெனில் ஆன்மிகம், இலக்கியம் இரண்டும் நாகூரின் இரு கண்கள் என்றால் மிகையல்ல. நாகூருக்குப் “புலவர் கோட்டை” என்றொரு பெயரும், நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த பெருமையும் உண்டு. நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு புலவர் அல்லது பாடகரின் மேல் விழவேண்டும் என்றும் கூறுவார்கள். கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ராட்சச இலக்கிய ஆளுமைகள் 19-ம் நூற்றாண்டிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிட்டே ஆகவேண்டியவர் குலாம் காதிர் நாவலர்(1833-1908). நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நக்கீரர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். இவர் தமிழ் கற்றது மதுரை மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம். இவரிடம் தமிழ் கற்றவர் மறைமலை அடிகள்! நாவலர் ஒரு புலவர் மட்டுமல்ல, சொற்பொழிவாளர், அரபி, ஆங்கிலம் போன்ற மொழிகள் நன்கறிந்த பன்மொழி அறிஞர். பத்திரிக்கைத் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். ”வித்தியா விசாரிணி”, ”ஞானாசிரியன்” ஆகிய பத்திரிக்கைகளை 1888ல் நடத்தியவர். இவற்றில் முன்னது மார்க்க வினா விடைகள், சமய சட்டதிட்டங்கள், நெறிமுறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்புச் செய்திகளைத் தாங்கி, பினாங்கிலிருந்தும் நாகூரிலிருந்தும் வெளிவந்தது. குலாம் காதிர் நாவலர் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர். ”நாகூர்ப்புராணம்”, ”ஆரிபு நாயகம்” ஆகிய காவியங்களும், அனேக கலம்பகங்களும், மாலைகளும், அந்தாதிகளும் அவற்றில் அடக்கம். ரைனால்ட்ஸ் எழுதிய ”Omar” என்ற ஆங்கில வரலாற்று நாவலை ”உமறு பாஷா யுத்த சரித்திரம்” என்ற பெயரில் 900 பக்கங்களில் 1889-லேயே வெளியிட்டார்.  அது 2001-ல் சென்னை கல்தச்சன் பதிப்பகத்தால் மறுவெளியீடு செய்யப்பட்டது. தமிழகஅரசு குலாம்காதிர் நாவலரின் படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இலக்கிய ஆளுமைகளும் படைப்புகளும் நாகூரில் தொடர்ந்த வண்ணமே உள்ளன. முதன் முதலில் தமிழில் நாவல் எழுதிய முஸ்லிம் பெண்மணி மூன்றாவதுக்கு மேல் படிக்காத சித்தி ஜுனைதா பேகம். இவரது ”காதலா கடமையா” என்ற நாவல் 1938-ம் ஆண்டு உவேசா முன்னுரை, புதுமைப்பித்தன் வாழ்த்துரையுடன் வெளிவந்தது (இந்நாவலை நான் மறுபதிப்பு செய்துள்ளேன்). கமலப்பித்தன், ஹத்தீப் சாஹிப், அப்துல் கய்யூம், ஆபிதீன், சாருநிவேதிதா போன்ற படைப்பாளிகள் அனைவரும் நாகூர்க்காரர்கள். என்னையும் இதில் ’கஞ்சாடெ’யாக சேர்த்துக்கொள்ளலாம். (குழந்தைகள் விளையாடும்போது விளையாட்டு விதிகள் அறியாதவர்களை போனால்போகிறதென்று சேர்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு நாகூர் பாஷையில் ’கஞ்சாடெ’ என்று பெயர்). திரைப்படத்துறையிலும் நாகூரின் பங்களிப்பு கணிசமாக உள்ளது. குறிப்பாக இரண்டு பேர். ஒருவர் ரவீந்தர். எம்ஜியார் நடித்த மஹாதேவி படத்துக்கு வசனம் எழுதியவர். இன்னொருவர் தூயவன் என்ற அக்பர். வைதேகி காத்திருந்தாள், அன்புள்ள ரஜினிகாந்த போன்ற படங்களை தயாரித்தவர். எண்பது படங்களுக்கு மேல் வசனம் எழுதியவர். தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான வசனகர்த்தா. இவர் ஆனந்த விகடனிலிருந்து உருவானவர் என்பது குறிப்பிடத்தக்கது. விகடனில் தொடர்ந்து முத்திரைக்கதைகள் எழுதி பரிசு பெற்று அதன் மூலமாக சினிமாவுக்குச் சென்றவர். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குனராக நாகூர் ஃபரீத் காக்கா பணியாற்றினார். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும், கம்பராமாயண அறிஞருமான மு.மு. இஸ்மாயீல், புலவர் ஆபிதீன் காக்கா, மூவாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி, ஐம்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடகர்களை உருவாக்கிய கவிஞர் கலைமாமணி சலீம், கவிஞர், பேச்சாளர் இஜட் ஜபருல்லா, கவிஞர் இதயதாசன், நாகூர் இஸ்மாயீல் என்று இலக்கியம், கவிதை, நீதித்துறை, திரைத்துறை என பல பரிமாணங்களைக் கொண்ட படைப்பாளிகளின் பட்டியல் நீளுகிறது. இசைத்துறையில் நாகூரின் பங்களிப்பு அதிசயமானது என்று கூறவேண்டும். கர்நாடக இசையில் கரைகண்டவர் நாகூர் தர்கா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர். கர்நாடக சங்கீதத்தில் இஸ்லாமியப் பாடல்களை எச்.எம்.வி.யில் பாடி பிரபலப்படுத்தியவர். மூன்று காலங்களிலும் அனாயாசமாகப் பாடக்கூடியவர். (காலம் என்றால் நிகழ்காலம், இறந்த காலம் வருங்காலமல்ல. கர்நாடக இசையுலகில் ஸ்வர வரிசையை இருமடங்கு, மும்மடங்கு என வேகம் கூட்டி, ஆனால் தாளம் தவறாமல் பாடுவதை ஒன்னாம் காலம், ரெண்டாம் காலம் மூன்றாம் காலம் என்று கூறுவார்கள்). எஸ்.எம்.ஏ. காதர் அவர்களின் குரு உஸ்தாத் தாவூத் மியான் கான். கர்நாட இசையில் புகழ்பெற்ற கிட்டப்பாவும், காதர் அவர்களும் தாவூத் மியானிடம் பயின்றவர்கள் என்பது பலருக்குத் தெரியாது. முதியவர் எஸ்.எம்.ஏ. காதர் அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். நாகூர் இ.எம். ஹனிபா என்றால் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலும்கூட இருக்க முடியாது. வெண்கலக்குரலுக்குச் சொந்தக்காரர். இஸ்லாமியப் பாடல்களுக்கு இஸ்லாமியர் அல்லாதவர்கள் மத்தியிலும் ரசனையையும் மரியாதையும் ஏற்படுத்தியவர்.  இலக்கியம் மற்றும் கலைத்துறை பற்றிய ஒரு சிறு குறிப்புதான் இது. கவிஞர்கள், படைப்பாளிகள், பாடகர்கள், பேச்சாளர்களின் பட்டியலுக்கு தனியாக ஒரு புத்தகமே போடலாம். ஆன்மிகம் நாகூரில் இலக்கியத்தோடு பின்னிப் பிணைந்தது ஆன்மிகம். 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைநேசர் ஷாஹுல் ஹமீது காதிர் வலீ மகான் அவர்கள் உத்திரப்பிரதேசத்தில் இருந்த மாணிக்கப்பூரிலிருந்து நாகூருக்கு வந்து, 28 ஆண்டுகள் வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி, நாகூருக்குப் புகழையும் வரலாற்றையும் கொடுத்தவர்கள். முஸ்லிம்களின்மீது வெறுப்புகொண்டு வன்முறையில் ஈடுபட்ட போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்துப் போர்செய்ய குஞ்சாலி மரைக்காயர் போன்ற வீரர்களை உருவாக்கி இந்திய விடுதலைக்கும் தொண்டாற்றினார்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாகூர் தர்காவுக்கு வரும் பத்து பேரில் ஒன்பது பேர் முஸ்லிமல்லாதவர்களாகவே இருப்பார்கள். மருத்துவ மேதையாகவும், இசை மேதையாகவும், ஆன்மிக ஞானியாகவும் இருந்த நாகூர் நாயகத்தின் தர்காவில் ஆண்டுதோறும் நடக்கும் 14 நாள் கந்தூரி விழாவின்போது லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கிலுமிருந்து வந்து கலந்து கொள்கின்றனர். 500 ஆண்டுகளுக்கும் மேலாக மதநல்லிணக்கத்தைக் கட்டிக் காக்கும் ஊராக உள்ளது சில வரலாற்று உதாரணங்கள். நாகூர் தர்காவுக்கு ஐந்து மினாராக்கள் அழகு சேர்க்கின்றன. அதில் பிரதான வாயிலின் எதிரில் இருக்கும் 131 அடி உயர, பத்து அடுக்குகள் கொண்ட பெரிய மினாராவைக் கட்டிக் கொடுத்தது தஞ்சையை ஆண்ட மன்னர் பிரதாபசிங். (கி.பி. 1739-1763). நாகூர் நாயகம் இறந்து 199 ஆண்டுகள் கழித்து, அவர்களிடம் வைத்த வேண்டுதல் நிறைவேறியதன் பொருட்டு அது அவரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. பிரதாபசிங் கட்டிக்கொடுத்த பெரிய மினாரா தொடர்பாக 12 பிரிவுகளாக கல்வெட்டு வாசகங்கள் உள்ளன. நாகூர் நாயகம் அடங்கியுள்ள மூலஸ்தானத்தையும், மேல் விட்டத்தையும் முதன் முதலில் கட்டிக் கொடுத்து காணிக்கையாக்கியது கடற்கரையோரமாக இருக்கும் பட்டினச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள். நாகூர் நாயகத்தின் தலைமாட்டில் அவர்கள் ஏற்றி வைத்த முதல் விளக்கே இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது.   கந்தூரி பத்தாம் நாள் நாகூர் நாயகத்தின் சமாதிக்கு சந்தனம் பூசப்படும். அப்போது சமாதியில் போர்த்தப்படும் போர்வையை நெய்து தருவது சென்னையைச் சேர்ந்த றா.பழனியாண்டிப் பிள்ளையின் குடும்பத்தினர். ரயில்வே நிலையம் அருகில் உள்ள சத்திரம், பிரதான நுழைவாயில் செம்புக் கதவு ஆகியவற்றை அமைத்துக் கொடுத்ததும் பழனியாட்டிப் பிள்ளைதான். நாகூர் நாயகத்தின் அடக்கஸ்தலத்துக்கு மேலிருக்கும் கும்பத்தின் தங்கக் கலசம் கூத்தா நல்லூரைச் சேர்ந்த மகாதேவ அய்யரால் 09.02.1956 கட்டிக் கொடுக்கப்பட்டது. தர்காவுக்கான தளத்தை கோவிந்தசாமி செட்டி என்பவர் அமைத்துக்கொடுத்துள்ளார். கந்தூரி ஊர்வலத்தில் சந்தனக்கூடு வருமுன் வரும் பல்லக்கும் செட்டியார்களால் செய்யப்படுவது. அதற்கு ‘செட்டிப் பல்லக்கு’ என்றே பெயர். நாகூர் வரும் பிரதான சாலையில் ‘கூட்டு ஃபாத்திஹா வீடு’ உள்ளது. கந்தூரி நடக்கும் 14 நாட்களும் இந்துப் பெருமக்கள் அவர்களது செலவில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுமிடம் அது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தப் பணி நடந்து வருகிறது. மற்ற நாட்களில் திருமணம் போன்ற விழாக்கள் நடக்கும்.   நாகூர் நாயகத்தின் சீடர்களில் ஒருவர் ரெங்கையா. முத்துச்சாமி என்பவர் 19-ம் நூற்றாண்டில் தர்காவின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. “ஞானமென்பது உங்கள் நீண்ட அங்கியிலோ ஜபமாலையிலோ இல்லை”, “இதயம் பரிசுத்தமாக இருக்கும் அளவுக்கு அதில் ஏற்படும் தெய்வீக உதிப்பும் உயர்வானதாக இருக்கும்” போன்றவை நாகூர் நாயகத்தின் பொன்மொழிகளில் சில. நாகூர் நாயகம் மறைந்த பிறகு அவர்களது ஆன்மிகச் சேவைகள் முடிந்துபோய்விடவில்லை. அற்புதங்கள் தொடர்கின்றன. இன்றும் வேண்டுதல்கள் நிறைவேறிய வண்ணம், ஞானிகளின் மறைவாழ்வு பற்றி உணர்த்திக்கொண்டுதான் உள்ளன. அந்த பாரம்பரியத்தில் வந்தவர்தான் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆன்மிக நூல்களின் ஆசிரியரும், நாடிவந்தவர்களின் நோய்களையும் பிரச்சனைகளையும் தீர்த்தவருமான ஞானி எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி. பாகர் ஆலிம் சாஹிப், யாசீன் ஆலிம் சாஹிப் போன்ற பரவலாக அறியப்படாத எத்தனையோ மகான்களின் வாழ்வும் நாகூர் மண்ணில் புதைந்து கிடப்பது உண்மை. வாணிபத்துக்கும் நாகூர் பெயர் பெற்றது. மரைக்காயர்கள், மாலிமார்கள் போன்ற பெரும் வணிகர்கள் கப்பல் வாணிபம் நடத்திய வரலாறு உண்டு. சொந்தமாகக் கப்பல் வைத்திருந்தவர் அனேகம் பேர். நாகமரங்கள் அதிகம் இருந்ததால் நாக ஊர் என்பது மருவியும், நாவன்மை மிகுந்தவர்களைக் கொண்ட ஊரானதால் நாகூர் என்றும் ஆனது என்று கூறுவார்கள். ”சோறு எங்க விக்கும்?” (விற்கும்) என்று நாகூருக்கு வந்த ஒரு புலவர் கேட்டாராம். அதற்கு, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், “தொண்டையில்தான் விக்கும்” என்று சொல்லிவிட்டு ஓடினான் என்று ஒரு கதை சொல்வார்கள். பேச்சு, எழுத்து, இசை, கலை, ஆன்மிகம், வாணிகம் என பல துறைகளில் கேட்பவர்களை மூக்கில் விரல் வைக்க வைக்கும் ஊர் நாகூர் என்பது உண்மை. மேலதிக விபரங்களை http://en.wikipedia.org/wiki/Nagore, http://ta.wikipedia.org/wiki/நாகூர்_(தமிழ்_நாடு), http://www.nagoredargha.com/, http://abedheen.wordpress.com/, http://nagoori.wordpress.com/ போன்ற வலைத்தளங்களிலும் காணலாம். மேற்கூறிய படைப்பாளிகளில் கவிஞர் நாகூர் சலீம், தூயவன் ஆகியோர் எனக்கு தாய் மாமாக்கள்.  சித்தி ஜுனைதா பேகம் என் பெரியம்மா. நீதிபதி மு.மு.இஸ்மாயீல் நண்பர் ஆபிதீனின் பெரிய மாமனார். 3 தமிழிலக்கியமும் நாகூர் படைப்பாளிகளும் சென்ற 13.03.14 பிற்பகல் 3 மணியளவில் சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைக்காக சலாஹுதீன் மெமோரியல் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்ற என்னை அழைத்திருந்தார்கள். தமிழிலக்கியமும் நாகூர் எழுத்தாளர்களும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன். கிட்டத்தட்ட 83 ஸ்லைடுகள். ஒன்றரை மணிநேரம் பேசினேன். என்றாலும் நாகூரின் பொக்கிஷங்களை அனைத்தையும் பற்றி என்னால்கூற முடியவில்லை. காலம் கருதி பல பேரைப் பற்றி சொல்லாமல் விட நேர்ந்தது. என்றாலும் ஒரு நிறைவு. நான் பேசிய பேச்சின் சாரம் இது படித்துவிட்டு சொல்லுங்கள் [1]’நாகூர்  இல்லாமல் இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு இல்லை’ – என புகழ்பெற்ற எழுத்தாளர் ஜே.எம்.சாலி கூறுவதில் கொஞ்சம்கூட மிகையில்லை. ராட்சச இலக்கிய ஆளுமைகளைக் கொண்ட ஊர் நாகூர். அவர்களின் முக்கியமான சிலரைப்பற்றி மட்டுமே என்னால் இங்கே கூறமுடியும். சந்திரனைச் சுட்டும் விரல்போல. வழிகாட்டும் பலகை போல.  மஹாவித்வான் குலாம்காதிர் நாவலர் (1833-1908) தமிழக அரசு, குலாம் காதிறு நாவலரின் சந்ததியினருக்கு ரூ 6 லட்சம் அன்பளிப்பு வழங்கி அவருடைய படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது. இவர் ஒரு ராட்சச ஆளுமை, பன்முகப் படைப்பாளி – 50க்கும் மேற்பட்ட படைப்புகள் எழுதியவர் ஆனால் 24 மட்டுமே இப்போது முழுமையாகக் கிடைத்துள்ளது. அவற்றில் 14 கவிதைப் படைப்புகள். மற்றவை உரைநடை. வலது கையில் இலக்கணம் எனும் ‘வாளும்’ இடது கையில் செய்யுள் எனும் கொடியும் பிடித்து தமிழ்க் குதிரையில் வலம் வருபவர் என்றும்,  ”நான்காம் தமிழ்ச்சங்க நக்கீரர்” என்றும் சரியாகப் புகழப்பட்டவர். [2] புலவர், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழியலாளர், ஆன்மிகவாதி  மற்றும் மொழிபெயர்ப்புப்  பணியில் 19ம் நூற்றாண்டில் முத்திரை பதித்தவர். பன்மொழி வித்தகர்: தமிழ், அரபி, ஆங்கிலம், அரபுத்தமிழ் ஆகிய மொழிகள் அறிந்தவர். இவரது ஆசிரியர்கள் யார் மாணவர்கள் யார் என்று சொன்னால் இவரது புகழ் தெரியும். நாராயண சுவாமி பண்டிதர் — வித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆகியோர் இவரது ஆசிரியர்கள். மறைமலை அடிகள் இவரது மாணவர்! ஒன்பது வயதில் திருக்குர்ஆனையும் அரபுத் தமிழ் நூல்களையும் ஓதி முடித்தார். எழுத்துச்சுவடி, எண் சுவடி, திவாகரம், பிங்கலம், நிகண்டு முதலான நூல்களையும் இலக்கண இலக்கியங்களையும் 12 வயதில் கற்றுத் தேர்ந்தார். இலக்கிய இதழியல் முன்னோடியாகவும் இருந்துள்ளார். 1888ல் மலேயா பினாங்கில் வெளிவந்த ’வித்தியா விசாரிணி’ இதழை இவர் நடத்தினார்.பின்னர் நாகூரிலிருந்து அது வெளிவந்தது. நாவலர் ஆசிரியர். மார்க்க வினா – விடைகள், சமய சட்ட திட்டங்கள், நெறி முறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்பு முதலிய விஷயங்களை அது பேசியது.  நான்காம் தமிழ்ச்சங்கம் 1901 ஆம் ஆண்டு பாலவனந்தம் ஜமீன் பாண்டித்துரைத் தேவருடன் சேர்ந்து மதுரையில் நான்காவதுசங்கம்அமைத்தார். அச்சங்கத்தில் அரங்கேற்றிய ‘மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை’ இன்றும் இஸ்லாமியரின் தமிழ்ப் பணிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அன்று ‘நக்கீரர் என்னும் புகழ்ப்பெயரையும் பெற்றார். முதலில் தனிப் பாடல்களை எழுதத் தொடங்கினார். பின்பு பதிகம், அந்தாதி, மாலை, கோவை, கலம்பகம், புராணம், காவியம், ஆற்றுப்படை, வசன நூல்கள், உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டார்.   படைப்புகள் — கவிதை 1. ‘நாகூர்க் கலம்பகம்’ (1878) 2. “நாகூர் புராணம்”(1893) நாகூர் ஆண்டகையின் வாழ்வு சிறப்பு கூறுவது. 30 படலங்கள் 1359 விருத்தங்கள். மலடு தீர்த்த படலத்தில்: சித்திரக்கவிகள். 3. “தர்கா மாலை” (1928) நாகூர் தர்கா சிறப்புகளை 100 பாடல்களில் விவரிப்பது – 3ம் பதிப்பு – வெளியிட்டவர் ஆரிப் நாவலர் 4.  “முகாஷபா மாலை’ (1899 , 1983) நாகூர் நாயகம் கனவில் நிகழ்ந்த  விண்ணேற்ற நிகழ்ச்சிகள் குறித்த குறுங்காவியம் — 13 படலங்கள், 300 பாடல்கள் 5.  ‘குவாலீர்க் கலம்பகம்’ (1882 ) கெளது குவாலியரி மீதான 101 பாடல்கள் 6. ‘திருமக்காத் திரிபந்தாதி’ (1895) – மக்காவின் சிறப்பு கூறும் 100 பாடல்கள் 7. ‘ஆரிபு நாயகம் (1896) — செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகை வரலாறு — 02 காண்டங்கள் 43 படலங்கள். 2373 விருத்தங்கள் 8. ‘பதாயிகுக் கலம்பகம்’ (1900) – ஆரிபு நாயகம் அடங்கியுள்ள பதாயிகு நகர் சிறப்பு உரைக்கும் 101 பாடல்கள் கொண்டது. 9.  ‘பகுதாதுக் கலம்பகம்’ (1894) — பகுதாதின் சிறப்பு கூறும் 101 பாடல்கள். 10. புலவராற்றுப்படை (1903, 1968)–1901-ல் மதுரையில் நிறுவப்பட்ட 4ம் தமிழ்ச்சங்கத்தின் பெருமைகள் உரைக்கும் நூல் — பதிப்பித்தவர், டாக்டர் ம.மு. உவைஸ் (இலங்கை – MKUல் தமிழ்த்துறை  உமறுப்புலவர் இருக்கை) 11. சமுத்திரமாலை 12. பிரபந்தத் திரட்டு 13. மும்மணிக்கோவை 14. சித்திரக்கவித்திரட்டு   படைப்புகள் – உரைநடை 1. கன் ஜுல் கராமாத் – நாகூர் ஆண்டகையின் அற்புத வாழ்க்கை வரலாறு – 131 அத்தியாயம் – 576 [Kanjul Karamat]பக்கங்கள் 2. முஹ்யித்தீன் பாகர் சாகிபின் தரீக்குல் ஜன்னாவுக்கு உரை 3. காதிர் முஹ்யித்தீனுன் ஃபிக்ஹு மாலைக்கு உரை 4. அரபுத் தமிழ் அகராதி 5. சீறாப்புராண வசன காவியம் 6. ஆரிபு நாயக வசனம் 7. திருமணிமாலை வசனம் 8. நன்னூல் விளக்கம் 9. பொருத்த விளக்கம் 10. நபிகள் பிரான் நிர்யாண மான்மிய உரை 11. உமரு பாஷா யுத்த சரித்திரம் (4 பாகம்) – கல்தச்சன் பதிப்பகம் (ஆங்கிலத்தில் ரெய்னால்ட்ஸ் எழுதியது) 19ம் நூற்றாண்டின் மையப்பகுதியில் துருக்கி ரஷ்யப் பேரரசுகளுக்கிடையே பல்லாண்டுகள் நிகழ்ந்த போரினை மையப்படுத்தி  பிரபல ஆங்கில வரலாற்று நூலாசிரியர் ரைனால்ட்ஸ் என்பவரால் எழுதப்பட்ட ‘ஒமர்’ என்னும் ஆங்கில வரலாற்று நூலின் சிறப்பான மொழிபெயர்ப்பு. வியன் குயில் விளக்கம் [6]யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் : ‘விடிவெள்ளி மதினா புக்கார் வியன்குயில் கூவிற்றன்றே’ என்று அவர் கூறியபோது ஒரு பெண் வியன் குயில் என்று கூறுவதன் காரணம் கேட்டார். குயிலுக்கு முட்டையிடத்தெரியுமேயன்றி குஞ்சு பொரிக்கும் வழி தெரியாது. காக்கைக் கூட்டில்  தன் குஞ்சுகளை விட்டுவிடும். காக்கைக்கு அது தன் குஞ்சு அல்ல என்று தெரியவரும்போது அது கொத்த வரும். அப்போது குயில் குஞ்சுகள் எதிர்க்கும் துணிச்சல் கொண்ட வீறுள்ள பறவை அது. எனவேதான் வியன் குயில் என்று கூறினேன் என்று விளக்கினார். நீங்கள் ஒரு தானாப்புலவர்தானே என்று ஒருவர் கூற, ’த’ என்றால் தமிழில் ஆயிரம் என்று பொருள். எனவே ஆயிரம் புலவர்களுக்குத் தலைமைப் புலவன் நான் என்று பதில் சொன்னார். ரயில் பாடல்: ’புலவராற்றுப்படை’யில்:‘மதுரைக்கு நடந்து சென்றால் நாள் பல செல்லும். ஆதலின் புகைவண்டியில் செல்லின் விரைவில் செல்லலாம்’ என்று கூறிப் புகைவண்டியை ”மரவட்டைச் செலவொப்பச்செல்பாண்டில் எந்திரவூர்தி” என்று வர்ணிக்கிறார். [pulavarabedeen] புலவர் ஆபிதீன் (1916-66) கவிஞர், பாடலாசிரியர், நாடகக் கலைஞர், ஓவியர், பத்திரிக்கையாளர், பன்மொழி அறிந்தவர், சொற்பொழிவாளர், வணிகர், இலங்கை, பர்மா, மலேயாசிங்கப்பூர் போன்ற பல நாடுகளுக்கும் சென்று எழுதியவர். ஆனாலும் வறுமையில் வாடியவர். ’ஆசானும் அகராதியும் அருகே வைத்து அறியத்தக்க வகையில் கவிதை இயற்ற விரும்பாதவன் நான் . மக்கள் விருப்பையே இலக்கணமாக மதித்து கவிதைகள் எழுதுகிறேன்’ என்றார். நூல்கள் : 1. 1934 – நவநீதகீதம் — 10 பாடல்கள். நபிகள் பெருமானார், நாகூர் சாஹூல் ஹமீது ஆண்டகை ஆகியோர் மீது 2. திருநபி வாழ்த்துப்பா (1935) –ரங்கூன் வெளியீடு 3. 1949 – தேன்கூடு –கொழும்பு வெளியீடு 4. 1961 – முஸ்லீம் லீக் பாடல்கள், இஸ்லாமியப் பாடல்கள் 5. 1961 — ‘அழகின் முன் அறிவு’ கவிதை நூல் – யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்,சென்னை. பொது அறிவுப் பாடல்கள் அதிகம், இஸ்லாமியப் பாடல்கள் குறைவு இசைப்பாடல்கள் எழுதிக் குவித்தார். கேட்டவுடன் எழுதித் தருவார். ஒரு கோப்பைத் தேநீருக்காகவும். பாடல்களுக்காக ரூ 80 முதல் 500வரை பெற்றிருக்கிறார். முஸ்லீம் லீக், நீதிக்கட்சி, திமுக — வுக்கு கொள்கை விளக்கப் பாடல்கள் எழுதியுள்ளார். அவர் பாடல்களைப் பாடிய பாடகர்கள் சிலர்: நாகூர்தர்கா சங்கீத வித்வான் SMA காதர், நாகூர் ஹனிபா, இசைமணி யூசுப், ஹெச்.எம். ஹனிபா, காரைதாவுது, திருச்சி கலிபுல்லா, மதுரை ஹூசைன் தீன்,  இலங்கை மொய்தீன் பேக். மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே / மாநிலத்தைத் தாங்கிடவோ எங்கள் பெருமானே என்ற நாகூர் ஹனிபா பாடிய புகழ்பெற்ற பாடல் அவர் எழுதியது. [pulavar-abedeen-portrait2]ஓவியராகவும் இதழாசிரியராகவும் அவர் இருந்துள்ளார். மலேயாவில் ஓவியக்கூடம் ஒன்றை நடத்தினார் . சிங்கையின் ’மலாயா நண்பன்’ இதழின் ஆசிரியராக இருந்துள்ளார். (1947). நுட்பமான, சாடல் மிகுந்த அரசியல் விமர்சகராக இருந்துள்ளார். மாமியார் மருமகள் உறவைப்போல காங்கிரஸ் கட்சி நடந்துகொள்கிறது என்று சொன்ன அவர் அதற்கு ஒரு உதாரணம் சொன்னார். ஒரு பிச்சைக்காரிக்கு மருமகள் காசு இல்லை என்று கூறினாளாம். ஆனால் அவளை மறுபடியும் அழைத்த மாமியார், “உனக்கு காசு இல்லை சொல்வதற்கு அவள் யார், இப்போது நான் சொல்கிறேன், காசு இல்லை போ” என்று சொன்னாளாம். அதைப்போலத்தான் காங்கிரஸ் நடந்துகொள்கிறது என்று கூறினார்! 23.09.1966-ல் அவர் நாகூரில் காலமானார். நாகூர் தமிழ் பற்றி அவரது அருமையான பாடல் - ‘பாத்திரத்தை ஏனம் என்போம் / பழையதுவை நீர்ச்சோறு என்போம் - ஆத்திரமாய் மொழி குழம்பை / அழகாக ஆணம் என்போம் - சொத்தையுரை பிறர் சொல்லும் / சாதத்தை சோறு என்போம் - எத்தனையோ தமிழ் முஸ்லிம்  / எங்களுயிர்த் தமிழ் வழக்கே’ இன்னொரு பாடல் - அரசனை ஆண்டியாய் ஆக்கவா? / நல்ல அறிவுக்குத் திரையிட்டு மூடவா? - நரகத்துக் கதவினைப் பூட்டவா? / சக்தி நிறையவே எனக்குண்டு நம்புவாய். - கடவுளால் ஆகாத காரியம் / கூடக் கனிவுடன் செய்திங்குக் காட்டுவேன்! - மடையனை நான்மட்டும் நாடினால் / தேச மனிதரில் மேதையாய் மாற்றுவேன்! டாக்டர் மு.வ. 960l-ல் புலவர் ஆபிதீனின் கவிதைத் தொகுப்புக்கு வழங்கிய முன்னுரையின் ஒரு பகுதி : ‘சிறந்த கற்பனை என்பது, விரும்பியபோதெல்லாம் வந்து வாய்ப்பது அன்று. அது வாய்த்தபோதெல்லாம் அதனை விரும்பிப் போற்றுவதே கவிஞர் தொழில். இந்த நூலில் உள்ள பாட்டுக்களில் புலவர்  ஆபிதீன் அவர்களின் உள்ளத்தில் எழுந்த விழுமிய உணர்ச்சிகளையும், சிறந்த கற்பனைகளையும் காண்கின்றோம். ‘என் மனைவி’ என்ற பாட்டு உள்ளத்தைத் தொட்டு உருக்க வல்லது. ‘வேண்டுதல்’ முதலிய பாட்டுக்கள் மொழிபெயர்ப்பாகவும் தழுவலாகவும் அமையினும் நல்ல தமிழ் வடிவம் பெற்றுள்ளன. பெருநாள் பிறையைக் கண்டு தன் வறுமையை நினைத்து வாடும் ஏழைப்பெண் பற்றிய பாட்டு, நாட்டில் உள்ள வறுமையை எடுத்துக் காட்டுவது.’ [Hazrat-1]ஹஸ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி (1933-2002) ஒரு ஞானியாகவும், ஆன்மிக குருவாகவும், அரபி, பாரசீகம், தமிழ், உர்து, ஆங்கிலம் போன்ற மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற பன்மொழிப்  புலவராகவும் விளங்கிய பாகவி அவர்கள் 50க்கும் மேற்பட்ட நூல்களைக் கொடுத்தவர், சிறந்த மொழிபெயர்ப்பாளர். விந்தியன் என்ற புனைபெயரிலும் ஆரம்ப காலத்தில் எழுதியுள்ளார். பின்னர் தன் சொந்தப் பெயரிலேயே எழுதினார். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார் . மணிவிளக்கு, மணிச்சுடர் முதலிய பத்திரிக்கைகளில் அவரது படைப்புகள் வெளிவந்தன. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானியான இமாம் கஸ்ஸாலியின் இஹ்யாவு உலூமித்தீன் என்ற மிகச்சிறந்த அரபி படைப்பை  கிட்டத்தட்ட 50 நூல்களாக அத்தியாயம் வாரியாக மொழிபெயர்த்துக் கொடுத்தவர்.அவைகளை மொழிபெயர்ப்பு என்று சொல்வதைவிட மறுபடைப்பு என்று சொல்வதே மிகப்பொருத்தமானதாகும். அவருடைய முக்கிய பரிமாணம் அவர் ஒரு மகான் என்பதும், பல அற்புதங்களை நிகழ்த்தியவர் என்பதும்தான். ஒரு எழுத்தாளராக, படைப்பாளியாக இருப்பது அவரைப் பொறுத்தவரை உபரியான விஷயம்தான். [5]முக்கிய நூல்கள் 1. ஞானக்கோட்டையின் தலைவாசல், 2. உள்ளத்தின் விந்தைகள், 3. உளத்தூய்மை, 4. இம்மையும் மறுமையும், 5. மகனுக்கு, 6. நாயகத்தின் நற்பண்புகள், 7. சமுதாய வாழ்வு, 8. சமுதாய நன்மைகள், 9. பதவி மோகம், 10. பாவமன்னிப்பு, 11. பணத்தின் பயன், 12. புறம்பேசாதே, 13. பொறாமை கொள்ளாதே, 14. திருமணம், 15. தனிமையின் நன்மைகள், 16. தனித்திரு — போன்றவையாகும்     நீதிபதி மு மு இஸ்மாயீல் (1921-2005)[M M Ismail4] நாடறிந்த தமிழறிஞர், எழுத்தாளர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சிறுதுகால தமிழக ஆளுநர், கம்பன் அறிஞர், கம்பன் கழகத்தலைவர். [3]நூல்கள் : (20-க்கு மேல்) 1. மெளலானா ஆஜாத் (1945) (வாழ்க்கை வரலாறு) 2. அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள் 3. இனிக்கும் இராஜ நாயகம் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) (ஏவி.எம்.ஜாபர்தீன் – நூர்ஜஹான் அறக்கட்டளைச் சொற்பொழிவு) 4. மும்மடங்கு பொலிந்தன. (1978) வானதி பதிப்பகம், சென்னை. பக். 259 5. கம்பன் கண்ட சமரசம் (1985) வானதி பதிப்பகம், சென்னை. பக். 227. 6. உந்தும் உவகை (1987) வானதி பதிப்பகம், சென்னை. பக். 227 7. இலக்கிய மலர்கள் (சென்னை வானதி பதிப்பகம் 1990) 8. ஒரு மறக்க முடியாத அனுபவம் (1992) – வானதி கல்கியில் 1985ல் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு)  9. கம்பன் கண்ட ராமன் 10. செவிநுகர் கனிகள் 11. வள்ளலின் வள்ளல் 12. பழைய மன்றாடி – வானதி பதிப்பகம் 1980 13. மூன்று வினாக்கள் வானதி பதிப்பகம். 410 14. நினைவுச்சுடர்,  15. தாயினும் 16. உலகப் போக்கு 17. நயத்தக்க நாகரிகம் 1976-ல் கம்பராமாயணம் முழுகாப்பியத்தையும் மெல்லிய உறுதியான தாள் பதிப்பாக வெளியிட்டார். ”தலை சிறந்த 100 தமிழர்கள்” என்ற தினமணியின் ஆராய்ச்சிக்கட்டுரையில் அவர் ஒருவராக இருந்தார். 1979 –ல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியானார். அவர் மிகவும் ரோஷக்காரர். எனவே தன்னைக்கலக்காமல் கேரளாவுக்கு மாற்றியதால் 1981ல் பதவியை ராஜினாமா  செய்தார். “எதிலும் நேர்மையையும் சத்தியத்தையும் பின்பற்றினால் கடவுள் அருள் தானாக வரும்” – என்று அவர் கூறினார்.   பெற்ற பட்டங்கள் : - “இயல் செல்வம்” - “சேவா ரத்தினம்” - “இராம ரத்தினம்” - “கலைமாமணி”  (1991 – 1992) வண்ணக்களஞ்சியப் புலவர் –18ம் நூற்றாண்டு  இயற்பெயர்: சையது ஹமீது இப்ராஹீம். சந்தப் பாக்களும் ”எருக்கிலை பழுப்பதேன் எருமைக்கன்று சாவதேன் / பாலற்று” என்பதைப் போன்ற கேள்வி பதில் பாணியில் இருக்கும் வண்ணப் பாக்களும் இயற்றுவதில் புகழ்பெற்றவர். இராஜ நாயகம், குத்பு நாயகம், தீன் விளக்கம் ஆகிய மூன்று காப்பியங்களை இயற்றிய பெருமைக்குரியவர். படைப்புகள் 1.இராஜ நாயகம் – காப்பியம் சாலமன் என்று கூறப்படும் சுலைமான் நபி பற்றியது. 2240 பாடல்கள். கடவுள் வாழ்த்துப்பாடல்: ஆரணத் தினி லகிலாண்ட கோடியி / லேரணக் கடல்வரை யினின் மற்றெங்குமாய் பூரணப் பொருளெனப் பொருந்துமோர் முதற் / காரணக் கடவுளைகருத்திருத்துவாம்  2.குத்பு நாயகம்— காப்பியம்  12-ம் நூற்றாண்டு இறைநேசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி பற்றியது. 39 படலங்கள் – 1707 பாடல்கள். அதில் ஒரு பாடல்: முஹ்யித்தீன் என்று கூற முன்னவன் கருணையுண்டாம் முஹ்யித்தீன் என்று கூற முஸிபத்தும் பலாயும் நீங்கும் முஹ்யித்தீன் என்று கூற முத்தொகை உலகும் வாழ்த்தும் முஹ்யித்தீன் என்று கூற முடிவிலாப் பதவியுண்டே 3. தீன் விளக்கம் – காப்பியம் தமிழகத்தில் இஸ்லாத்தைப் பரப்ப மதீனாவிலிருந்து வந்த ஏர்வாடி நாதர் இறைநேசர் செய்யிது இப்ராகீமைப் பற்றியது. இவர் பாண்டி நாடு வந்து, அதை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியனை போரில் வென்ற  வரலாற்றுக் கதையையும் இது கூறுகிறது. இது ஏர்வாடியின் தல புராண வரலாறும் ஆகும். இவரது இன்னொரு நூல் 4. அலிபாதுஷா நாடகம் [Achima]சித்தி ஜுனைதா பேகம்(1917-1998) தமிழில் புதினம் படைத்த முதல் முஸ்லிம் புரட்சிப் பெண் படைப்பாளி இவர். ஒரு நாவலாசிரியராகவும், கட்டுரையாசிரியராகவும் இருந்துள்ளார். ”படிக்காத மேதை” என்று இவரை பேரா.மு.ஆயிஷாம்மா, 2007 அனைத்துலக இஸ்லாமிய தமிழிலக்கிய 7ம் மாநாட்டுக்கட்டுரையில் மிகச்சரியாக வர்ணிக்கிறார். ஏனெனில் இவர் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்பு வரைதான். ஆனால் இவரது தூயதமிழ் நடை முதுகலை பட்டம் பெற்றவருக்குக்கூட வராது என்று துணிந்து கூறுவேன்.   படைப்புகள் 1. காதலா கடமையா (1938, ஜூலை 2003 ஸ்நேகா, சென்னை) 2. சண்பகவல்லிதேவி அல்லது தென்னாடுபோந்த அப்பாஸிய குலத்தோன்றல் (1947) 3. மகிழம்பூ (1985) 4. இஸ்லாமும் பெண்களும் – கட்டுரைகள் (1995) 5. மலைநாட்டு மன்னன் –நூருல் இஸ்லாம் பத்திரிக்கையில் வெளிவந்த தொடர்கதை. 6. ஹலிமா அல்லது கற்பின் மாண்பு 7. பெண் உள்ளம் அல்லது கணவனின் கொடுமை 8. திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு 9. காஜா ஹஸன் பசரீ: முஸ்லிம் பெருமக்கள் வரலாறு இவரது காதலா கடமையா நாவலுக்கு டாக்டர் உவேசாவும் புதுமைப்பித்தனும் முன்னுரை வழங்கியுள்ளனர். முன்னுரை உவேசா: சமீபகாலத்தில் நாகூர் சிஜுபேகம் என்ற பெண்மணி எழுதிய காதலா கடமையா என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண்மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதையும் செய்யத் துணிவர் என்பதும், இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். ..இந்நூலை எழுதியவருக்குத் தமிழிலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது. முன்னுரை புதுமைப்பித்தன்: முஸ்லிம் பெண்டிர் எழுத முன்வருவதை நாம் வரவேற்கிறோம் காதலா கடமையாவும் நாடோடி மன்னனும் எம்ஜிஆரின் ’நாடோடி மன்னன்’ படம் இக்கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்பது சுவையான வரலாறு. அப்படத்திற்கு வசனம் எழுதிய ரவீந்தரிடம் எம்ஜியார் பாதிக்கதை சொன்னார். மீதிக்கதையை ரவீந்தர் சொன்னார்! எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்டதற்கு, இது காதலா கடமையா நாவலின் கதை என்று அவர் பதில் சொன்னார்!  ரவீந்தர் நாகூர்க்காரர். மஹாதேவி போன்ற திரைப்படங்களுக்கு வசனமெழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ’எந்தச் சமூகம் பெண் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதோ  அந்தச் சமூகம் ஒரு காலத்திலும் தலைநிமிர்ந்து நிற்க முடியாது’ – என்ற வசனம் இவரின் பெண்ணியச் சிந்தனையை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ‘காதலா கடமையா?’ நாவலின் கதைச் சுருக்கம்: ஒரு இளவரசனின் முடிசூட்டு விழாவுக்கு முன் மயக்க மருந்து கொடுத்து அவனைப்போல உள்ள வேறொருவனுக்கு தற்காலிகமாக அவனுக்கு முடி சூட்டுகின்றனர். மக்களும் இளவரசியும் அவனை உண்மையான இளவரசன் என்றே நம்புகின்றனர். நாட்டுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களை அவன் தீட்டுகிறான். இறுதியில் சிறை வைக்கப்பட்ட உண்மையான இளவரசனை , இளவரசனாக நடிப்பவன் மீட்டு வருகிறார். ஜெர்மனி கண்ணன் நாகூர் வந்து  சித்தி வீட்டுக்குச் சென்று அவரது  தமிழ் மரபு அறக்கட்டளையின் முதுசொம் சாளரத்திலும் www.infitt.org லும் படைப்புகளை டிஜிடைஸ் செய்து பதிவு செய்தனர். அறிவுரை: ’இன்றைய சமுதாயத்தில் வளர்ந்த எழுத்தாளர்களுக்கும், வளரும் எழுத்தாளர்களுக்கும் என் ஆலோசனையைக் கேட்க விரும்பினால் நான் கூற விரும்புவது இதுதான்; நீங்கள் உங்களுக்காக மட்டிலும் வாழ விரும்பாதீர்கள். உங்கள் நாட்டிற்காக – உங்கள் இனத்திற்காக – உங்கள் சமுதாயத்திற்காக – உங்கள் மக்கட்காக வாழுங்கள். பிறர் நலத்திற்காக வாழுங்கள். உங்கள் நலத்திற்காக மட்டிலும் வாழாதீர்கள். இந்த எளியேனின் புத்திமதி இதுதான். தனக்கென வாழாப் பிறர்க்குரியவராகத் திகழுங்கள். ஒருமுறை அவரை சந்திக்க நான் என் நண்பரை அழைத்துச் சென்றேன். தான் விரைவில் இறந்துவிடுவதுதான் இயற்கை என்ற கருத்துப்பட அவர் அப்போது, “பழுத்த பழம்தானே மரத்தில் இருந்து முதலில் விழும்” என்றார்! [Nagore Saleem]கவிஞர் கலைமாமணி நாகூர் சலீம்  (1936-2013) பரம்பரை: இலக்கியமும் ஆன்மிகமும் கலந்தது. பாட்டனார்கள்: வண்ணக்களஞ்சியப் புலவர், ஷாஹ் வலியுல்லாஹ் தெஹ்லவி. ஏ கே வேலன் கம்பனின் இரண்டு வரிகளை வைத்து பொங்கல் வாழ்த்துப் பாட்டு எழுதச் சொன்னார். காவேரியில் குளிக்கும் ஒரு பெண் கூறுவதுபோல. அந்த வரிகள்: வெண் முத்து மாலைகள் / வெள்ளி நுரையினில் / சூடி வருகின்றாள் இங்கே வேண்டிய பேருக்கு / வாரிக் கொடுத்திட / ஓடி வருகின்றாள் இன்னொருத்தி: கண்ணியர் கண்ணென  / மாவடுப் பிஞ்சுகள் / நீரில் மிதக்குதடி அது கண்ணல்ல பிஞ்சல்ல  / கெண்டைகள் அம்மாடி கும்மியடிங்கடி இயற்பெயர்: த’லீஃப் சலீம் பெய்க் எழுதிய பாடல்கள்: 7500க்கும் மேல் எல்.பி.இசைத்தட்டுக்கள்: 400க்கும் மேல் ஒலிநாடாக்கள்: 100க்கும் மேல் பள்ளிப்படிப்புகூடக் கிடையாது 200க்கும் மேற்பட்ட பாடகர் பாடகியர் இவர் இயற்றிய பாடல்களைப் பாடியுள்ளனர். குறிப்பிடத்தகுந்தவர்கள்: நாகூர்ஈ எம்ஹனிபா, காயல்ஷேக்முஹம்மது(தமிழகத்து), சரளா புனைபெயர்கள்: வண்ணதாசன், மறைதாசன், பயணப்பிரியா, லீசம் ”வண்ணக்களஞ்சியப் புலவரின் ஞாபகமாகத்தான் நான் ஆரம்பத்தில் வண்ணதாசன் என்று புனைபெயர் வைத்துக்கொண்டேன்”. சலீமின் பாடல்களுக்கு இசையமைத்த சில இசையமைப்பாளர்கள்: கண்மணி ராஜா,டிகே ராமமூர்த்தி, தேவா, எம் எஸ் விஸ்வநாதன் எம்ஜியார் பற்றி முதன் முதலில் பாட்டு எழுதியவர் நாகூர் சலீம்தான். அந்தப் பாடலில் இருந்து சில வரிகள்:”காய்ந்து சிவந்தது சூரிய காந்தி.. எங்கள் வீட்டுப்  பிள்ளை.. பாடல் 1: பட்டு மணல் தொட்டிலிலே.. / பூ மணக்கும் தென்றலிலே / கொட்டும் பனி குளிரினிலே / கடல் வெளிக் கரையினிலே பாடல் 2: சிரித்துச் செழித்த உன் முகம் எங்கே / சிந்திய செந்தமிழ் மொழி எங்கே / சிரித்தது போதுமென்று நிறுத்திக் கொண்டாயோ / சிந்திக்கும் இடம் தேடித் தனித்துச் சென்றாயோ இன்னொரு உதாரணம் - காதலுக்குத்தீங்கு செஞ்சா தேசிய குற்றம் - இப்படி ஆள்பவர்கள் போடவேணும் அவசரச் சட்டம் - காதல் ஒரு பாவமல்ல தோழா / நா கணக்குப் போட்டுப் பாத்தேன் ரொம்ப நாளா - காதலிச்சா சாதிபேத சச்சரவு ஏது / சமத்துவமே ஆதரிச்சு சங்கம் வைக்கும் பாரு - வரதட்சணை தற்கொலைகள்,வசதித் திமிர் ஓயுமே - வாழ்வுக்காக  ஏங்கும் பெண்கள் விழியின் ஈரம் காயுமே - கண்ணு நாலு சந்திச்சு கலந்துகிட்டா தப்பா - கற்பு ஜோதி அணைஞ்சிடாம கட்டிக்கடா அப்பா - நாலுகால் கட்டிலிலே நித்தம் நித்தம் தூக்கம் / நாலுபேர் தூக்கையிலே நிரந்தர தூக்கம் - ”அடக்கமாகப் போறவன் அடக்கமா பேசினா தப்பில்ல” என்று தன் இறுதி தொலைக்காட்சி நேர்காணலின்போது கூறினார். [Salim Mama Receiving Kalaimamani Award]எழுதிய நாடகங்கள் சில — கதை, வசனம், பாடல்கள், இயக்கம் : 1. விதவைக் கண்ணீர் , 2. சந்தர்ப்பம், 3. சோக்காளி, 4. மிஸ்டர் 1960 திரைப்படப் பாடல்கள் மஹா நடிகன் (கோடம்பாக்கம் ஒன்னு) அவளும் தாயாளாள் நாகூரார் மகிமை ( ஆறுகளெல்லாம் ) முகலேஆஸம்தமிழ்டப்பிங்3 / 4 பாடல்கள் தமிழக அரசின் கலைமாமணி  விருது 2000 [thooyavan]தூயவன்(1947-1987) இயற்பெயர்: அக்பர் சிறுகதைகள், மாத நாவல்கள், நாடகம் 84 திரைப்படங்களுக்கு வசனம் 07 திரைப்படத் தயாரிப்பு 10வது மட்டுமே படிப்பு மனைவி ஜெய்புன்னிஸாவும் எழுத்தாளர் குமுதம், ஆனந்த விகடன், மாலை முரசு, தினந்தந்தி, ராணி, நயனதாரா போன்ற வார மற்றும் மாத இதழ்களிலும் கதை எழுதினார் சிறுகதை உலகில் ஸ்டார் அந்தஸ்து பெற வைத்ததது ஆனந்த விகடன்- முத்திரைக் கதைகள் — பிரபலமான சிறுகதைகள்: உயர்ந்த பீடம், மடி நனைந்தது, பூஜைக்கு வந்த மலர், வெறும் சிலை, நிறங்கள், குங்குமச்சிமிழ் வசனமெழுதிய திரைப்படங்கள் சில: ரங்கா, பொல்லாதவன், அன்புக்கு நான் அடிமை (ரஜினி), அன்னை ஓர் ஆலயம், தாய்வீடு(ஜெய்), ஆட்டுக்கார அலமேலு, பொல்லாதவன், மனிதரில் மாணிக்கம், புதிய பாதை, திக்குத்தெரியாத காட்டில், ஜப்பானில் கல்யாண ராமன் தயாரித்த சில படங்கள் அன்புள்ள ரஜினிகாந்த் வைதேகி காத்திருந்தாள் விடியும்வரை காத்திரு கேள்வியும் நானே பதிலும் நானே உள்ளம் கவர் கள்வன் பாக்கியராஜ், ஈரோடு முருகேசன், ஜான் போன்றவர்களை அறிமுகப்படுத்தியவர் 1978-ம் ஆண்டு பலப்பரீட்சை என்ற திரைப்படத்துக்காக (முத்துராமன், சுஜாதா நடித்தது) சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழக அரசின் விருதை — ஆறு பவுனுக்கு மேல் இருந்த உண்மையான தங்கப்பதக்கம் — அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜியார் கையால் தூயவன் பெற்றுக்கொண்டார். [Z Nana]இஜட். ஜபருல்லாஹ் (மார்ச் 15, 1949) கவிஞர், மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டும் எழுதுவார். பேச்சாளர், முஸ்லிம்லீக் இளைஞரணித் தலைவர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், மாறுபட்ட சிந்தனையாளர்: ”இந்த நூல் உங்கள் வாழ்க்கையையே திசைமாற்றப்போகிறது”. நான்மறையைக் கற்றவனா ஞானி இல்லை ’நான்’ மறையக்கற்றவனே ஞானி புரிந்ததும் புரியாததும் ================= தியானம் செய் என்றார் குரு நான்தான் கவிதை எழுதுகிறேனே என்றேன் கோபித்தார் எனக்கு தியானம்  புரிந்த அளவுக்கு அவருக்கு கவிதை புரியவில்லை தனம் ===== முட்டாள்தனம் முட்டாள்தனம் என்று முன்னோர்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் முட்டாள்கள்தானே பெரும்பாலும் தனத்தோடு வாழ்கிறார்கள்?! வேறொன்றும் அறிகிலேன் ===================== மின்னல் இடிமழையாய் / மீறிவரும் மன அதிர்வில் கண்ணீரின் கரிப்பில் / கால்சுமக்கும் கடமைகளில் முன்னும் பின்னுமழுத்தும் / முதுகொடியும் பிரச்சனையில் என்னைப் புடம்போட்டு / இறுதியிலே களிப்பூட்டும் உன்னைப்புகழ்வதன்றி / வேறொன்றும் அறிகிலனே! கண்ணே! ரஹ்மானே! / கருணையின் பேறூற்றே! இன்னும் கவிதை நூல் ஒன்றும் வரவில்லை, நான் தொகுத்துக்கொண்டுள்ளேன். [Nagore Sadik]கவிஞர் நாகூர் சாதிக் (1937) - கவிஞர், பாடலாசிரியர் - ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்குத்தெரியுமா - அல்லாஹ்வை நாம் தொழுதால் - தக்பீர் முழக்கம் - சொன்னால்முடிந்திடுமோ - இருலோகம் போற்றும் இறைத்தூதராம் - நாடகவசனம்: கொள்ளைக்காரன், நல்லதீர்ப்பு     [charu]சாருநிவேதிதா – சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதுகிறார். படைப்புகள்: ஜீரோ டிக்ரி, எக்சல், எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சிபனியனும் போன்றவை. ’ஆட்டோ ஃபிக்‌ஷன்’ என்ற வகையை தமிழில் அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லப்படுபவர். ’ஆண்ட்டி கல்ச்சர்’ எனப்படும் பண்பாட்டுக்கு எதிரான குரல் இவரது. அடிக்கடி முரண்படுகின்ற, பிரச்சனைகளில்  மாட்டிக்கொள்கிற எழுத்து இவரது. பாலியல் வக்கிரங்களுக்கு இவர் எழுத்து வக்காலத்து வாங்குகிறது.       [abedeen]ஆபிதீன் (1959) நுட்பமான நகைச்சுவையோடு எழுதக்கூடிய எழுத்தாளர். சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதுகிறார். துயரம் சொல்லும் அலாதியான நகைச்சுவை இவரது. யாத்ரா, கணையாழி போன்ற பத்திரிக்கைகளில் இவர் எழுதியுள்ளார். இப்போது இணையத்தில் எழுதி வருகிறார். இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன: - இடம் – சிறுகதைகள் ஸ்நேகா வெளியீடு. - உயிர்த்தளம் – கதைகள் எனி இண்டியன் வெளியீடு. அவரது நகைச்சுவைக்கு ஒரு உதாரணம்: சில சர்க்கார்கள் இரண்டு தாடிகூட வைத்திருக்கிறார்கள் — — விஷம் கதை ஷைத்தான் டி.வியில் நான் விரும்பும் ஒரே நிகழ்ச்சி ‘காலேயே வா! ‘ தான். காலைக்கடன் முடிக்காமலேயே வரும் அறிஞர்களை பேட்டி காண்பார்கள் அதில். பேட்டி கண்ட பிறகு அவர்களாலேயே மறுபடியும் பேட்டி காண இயலாது! பே.மு , பே.பி என்ற ஒன்று இருக்கிறது – ஹே ஷைத்தான் கதை [Being introduced]நாகூர் ரூமி (1958) 1980-களிலிருந்து எழுதி வருகிறேன். கணையாழி, யாத்ரா, மீட்சி, படித்துறை, புது எழுத்து போன்ற சிற்றிதழ்களிலும், மணிவிளக்கு, மணிச்சுடர், சுப மங்களா, குமுதம், குமுதம் ஜங்ஷன், ஆனந்த விகடன், கல்கி, அமுத சுரபி போன்ற வார, மாத இதழ்களிலும் எழுதியுள்ளேன். இதுவரை 40 நூல்கள் வெளிவந்துள்ளன.     h    03 கவிதைத் தொகுதிகள் h    02 சிறுகதைத்தொகுதிகள் h    03 நாவல்கள் h    03 வாழ்க்கை வரலாறு h    02 கட்டுரைத் தொகுதிகள் h    06 சுயமுன்னேற்ற நூல்கள் h    08 மொழிபெயர்ப்பு நூல்கள் h    03 சமயம், ஆன்மிகம் h    02 ஹெச் ஐ வி h    05 ஆங்கில நூல்கள் h    02 ஒலிப்புத்தகங்கள் h    01 மின் நூல் விருதுகள் h    2004 – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் – திருப்பூர் தமிழ்ச்சங்க விருது h    2009 – நல்லி திசையெட்டும் மொழியாக்க விருது ஹோமரின் இலியட் h    2009 – இஸ்லாமிய தமிழிலக்கிய இரண்டாம் மாநாடு – இலக்கியச் சுடர் விருது h    2011 – டிஷ்டிங்க்விஷ்டு அலும்னஸ் விருது – ஜமால் முகமது கல்லூரி தமிழிலக்கியத்திற்கு நாகூர் படைப்பாளிகளின் பங்கு கணிசமானது மட்டுமல்ல, கனமானதும்கூட. அப்துல் கய்யூம், இதயதாசன், காதர் ஒலி, ஹத்தீப் சாஹிப், கமலப்பித்தன் போன்ற முக்கிய பல படைப்பாளிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளனர். நேரமின்மை காரணமாக அவர்களைப் பற்றி இதில் கூறமுடியவில்லை.  எனவேதான் இந்த பேச்சு முழுமையானதல்ல என்று கூறினேன். இது ஒரு குறிப்பான் மட்டுமே. நன்றி. 4 நாகூர் சலீம் நினைவலைகள் [Salim Mama (2)]சென்ற ஜுன் மாதம் ஒன்றாம் தேதி, கலைஞருடைய 90-வது பிறந்த நாளுக்காக நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அதுபற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன். அன்றுதான் சலீம் மாமா இந்த உலகை விட்டுப் பிரிந்திருந்தது. நான் நாகூர் போய்ச்சேரமுடியாத சூழ்நிலை எனக்கு அப்போது. (அதற்கு காரணம் கலைஞரல்ல, என் இதயம்தான்). அப்போது என்னை சந்தித்த கவிஞர் ஜலாலுதீன் சலீம் மாமா பற்றி ஒரு இரங்கல் கூட்டம் வைக்கலாம் என்று கூறினார். நான் நிச்சயம் வருகிறேன் என்று கூறினேன். கவிக்கோகூட சலீம் உங்க மாமாவா என்று கேட்டார். பின்பு பலமுறை ஜலாலுத்தீனோடு நான் இந்தக் கூட்டம் பற்றிப் பேசினேன். அவரும் பேசினார். நான் மாமா  பற்றிய தகவல்களை, நிழல்படங்களை, வீடியோக்களையெல்லாம் எடிட் செய்து வெட்டி, ஒட்டி, சேர்த்து ஒரு பவர் பாயிண்ட் தயார் செய்துவைத்திருந்தேன். கடைசியில் கூட்டம் ஓகேயான நாள் எனக்கு ஓகேயாகவில்லை! நான் சென்னையில் இந்தக் கூட்டம் கருதியே பல நாட்கள் தங்கியிருந்தேன். அப்போதெல்லாம் வைக்காமல், திடீரென்று கே எம் கே சார் ‘டேட்’ கொடுத்துவிட்டார் என்று நான் ஊர் புறப்பட்ட நாளன்று ஜலால் அவர்கள் கூட்டத்தை வைத்துவிட்டார். நான் மறுநாள் கல்லூரியில் இருக்கவேண்டும். கூட்டமும் மக்ரிபுக்குப் பிறகு தொடங்கியதால், கே எம் கே, கவிக்கோ, மு மேத்தா, முன்னால் எம் எல் கே நிஜாமுத்தீன், பாடகர் இறையன்பன் குத்தூஸ், கனிசிஷ்தி அண்ணன் போன்ற விஐபிகள் கலந்துகொண்டதால், நான் இடையில் நுழையவோ அவசரப்படுத்தவோ முடியாது. எனவே என்னால் கடைசியில் பேசிவிட்டு ரயிலில் ஊருக்குப் போக முடியாத சூழ்நிலை இருந்தது. எல் சி டி ப்ரொஜக்டர் தயார் செய்வது பற்றி சகோதரர் கவிஞர் ஜலால் அறிந்திருக்கவில்லை. நானே தயார் செய்து கொண்டுபோகலாம் என்றாலும், கூட்டம் நடந்த முஸ்லிம் லீக் அலுவலகத்தில் எப்படிப்பட்ட வசதிகள் / சுவர்கள் இருக்கும் என்றும் தெரியாது. எனக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது தேவைப்பட்டது. அது நிச்சயமாக முடியாது என்ற காரணத்தாலும் நான் போகவில்லை. என்றாலும் சலீம் மாகாவின் மகனார் பாரி பேக் அவர்களை போகச்சொல்லி நான் சொல்லியிருந்தேன். அவரும் சென்றார். நிகழ்ச்சியை வீடியோ எடுங்கள், அதற்குரிய செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் ஜலாலிடம் சொல்லியிருந்தேன். சென்ற 14.06.2013 அன்று நடந்த இரங்கல்கூட நிகழ்வுகள் முழுவதையும் அவரும் வீடியோ எடுத்து எனக்கனுப்பி வைத்தார். (என் வாக்கையும் நான் காப்பாற்றிவிட்டேன்)! அந்த வீடியோக்களைப் பார்த்து எனக்குத் தோன்றியதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளத்தான் இது. நாகூர் சலீம் நினைவலைகள் என்ற பொருத்தமான தலைப்புகூட கவிஞர் ஜலால் கொடுத்ததுதான். தலைமை கவிக்கோ அவர்கள். கிராஅத் ஏ ஹெச் எம் இஸ்மாயில். இறைவாழ்த்து: இறையன்பன் குத்தூஸ் (நாகூர் ஹனிபா மாமாவின் ’எக்கோ’க்களில் ஒன்று) முன்னிலை: கவிஞர் ஷேகு ஜமாலுதீன், ஆயிரம் விளக்கு உசேன் (மாமாமீது அளப்பரிய பிரியம் கொண்ட இவர் அன்று உடல்நலக்குறைவால் வரமுடியவில்லை) மற்றும் எம். ஜெய்னுல் ஆபிதீன். வரவேற்புறை: கவிஞர் இ பதுருதீன் தொகுப்புரை: கவிஞர் எம். ஜலாலுதீன் பேச்சாளர்கள்: பேரா. கே எம் கே, கவிக்கோ, கவிஞர் மு மேத்தா, கனி சிஷ்தி, மு ஹ ஆ அபூபக்கர், பேரா. மு இ அஹ்மது மரைக்காயர்,  எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னால் எம் எல் ஏ, நாகூர்), நாகூர் ரூமி (வரவில்லை) நன்றியுரை: பாரி பே நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமியத் தமிழிலக்கியப் பேரவை நிகழ்ச்சி நடந்த சின்ன ஹாலில் இருந்த பல நாற்காலிகள் காலியாக இருந்தன. கிராஅத் ஓதப்பட்ட பிறகு நான்கு பேர் நான்கு பாடல்களைப் பாடினார்கள். அவைகள் மாமாவின் பாடல்களைப் போல இல்லை. குரல்கள் ரசிக்கும்படியானவையாகவும் இல்லை. மாமா உயிரோடு இருந்திருந்தால், இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு வந்திருந்தால், “என்னப்பா இது, இசைக்கு இரங்கல் கூட்டமா?” என்று வழக்கம்போல வெடிச்சிரிப்புச் சிரித்துக்கொண்டே என் காதுக்குள் கேட்டிருக்கும். எனக்கு அப்படித்தான் தோன்றியது. மூத்த மகளார் ஹசீனாவுக்குத் திருமணம் முடித்துக்கொடுத்து, மணமகளை மணமகன் வீட்டுக்கு அழுதுகொண்டே அனுப்பி வைத்துவிட்டு, ஹசீனா போனபிறகு, வீட்டுக்குள் வந்த மாமா, எங்களையெல்லாம் பார்த்து, “ஹஹ் ஹஹ் ஹஹ்ஹா, எப்படி என் நடிப்பு” என்று வெடிச்சிரிப்பு சிரித்தது! அது நடிப்பு என்று சொன்னதுதான் நடிப்பு என்று அங்கிருந்த எல்லாருக்கும் புரிந்தாலும்! முதலாவதாக கனிசிஷ்தி அண்ணன்தான் பேச அழைக்கப்பட்டார். பேசுவதற்கு முன் சில வினாடிகள் அமைதியாக இருந்தார். பின்பு தொப்பியை கழற்றிப் போட்டுக்கொண்டார். தோள் துண்டை சரிசெய்துகொண்டார். அஸ்ஸலாமு அலைக்கும் என்று தொடங்கி, அவருக்கு பாடல் பாடியவர்கள், வந்திருந்தவர்கள் எல்லாருடைய பெயரையும் சொல்லி, அவர்களே, அவர்களே என்று முடித்தார். தம்பி நாகூர் ரூமியும் வருகை புரிந்திருக்கிறார் என்றும் கூறினார். எனக்கு ஒரே ஆச்சரியம். அண்ணனுக்கு என்னை நன்றாகத்தெரியும். அப்படியானால்  என் பெயரில் இன்னொருவர் இருக்கிறாரா? அல்லது எனக்கே தெரியாமல் நானே போய்விட்டேனோ?! அல்லது சாய்பாபா மாதிரி இங்கே ஒரு நாகூர் ரூமி, அங்கே ஒரு நாகூர் ரூமி! ஆஹா, நல்ல ஆன்மிக முன்னேற்றம்தான்! அண்ணன் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் அலைபேசிகளை செவிகளில் பொருத்திப் பேசிக்கொண்டிருந்தார்கள்! விருந்தோம்பலில் சலீம் மாமா ஒரு மன்னன். கடைசி விருந்து அவருக்கும் இன்னும் சிலருக்கும் கொடுக்கப்பட்டதுதான் என்று கூறினார். சலீம் மாமா டெல்லி ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களுடைய பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும், அது கவிக்கோவுக்கான தகவல் என்றும் கூறினார். மாமா காலமானது பற்றிய குறுஞ்செய்தி அவருக்கு இரவு ஒரு மணிக்கு வந்ததாகவும் கூறினார். அடுத்து பேரா. அஹ்மது மரைக்காயர் பேசினார். திருக்குறளைப்போல சுருக்கமாகப் பேசும்படி வேண்டுகோள் விடுத்தார் கவிஞர் ஜலாலுத்தீன். இஸ்லாமிய ஞானம் “இந்த அளவுக்காவது பரவியிருப்பதற்குக் காரணம்” வலிமார்கள் மட்டுமல்ல, நாகூர் ஹனிபா போன்ற பாடகர்களும் காரணம் என்று கூறினார். அவர்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொடுத்த கவிஞர்களும் காரணம் என்பது உட்குறிப்பு. கர்நாடக, இந்துஸ்தானி இசையையும் அடிப்படையாக வைத்து இசைப்பாடல்களையும், சமுதாயப்பாடல்களையும், உளவியல் பாடல்களையும் சலீம் மாமா எழுதியதாகக் குறிப்பிட்டார். கப்பலுக்குப் போன மச்சான் பாடலை பாடியும் காட்டினார்! ”பல கவிஞர்கள் எழுத்துக்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், நாகூர் சலீம் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்” என்றும் கூறினார். சலீம் மாமாவின் 6000-த்தும் மேற்பட்ட பாடல்களை அவருடைய மாணாக்கர் ஒருவருக்கு முனைவர் பட்ட ஆய்வுக்காகக் கொடுக்க இருப்பதாகவும் கூறினார். நாகூர் சலீமைத் தெரியுமா என்று கேட்டால் தெரியாது என்று பலர் கூறினார்கள். அவர் எழுதிய பாடல்களைச் சொல்லிக் கேட்டால், அவரா, அவரா என்று கேட்கின்றனர் என்று கவிஞர் ஜலாலுத்தீன் கூறினார். அடுத்து முன்னால் எம் எல் ஏ நிஜாம் பேசினார். (எனது பள்ளிக்கூட தோழர் மாலிமாருடைய தம்பி இவர்). இந்த நாடு ஒரு தாயைப்போன்ற மரம் என்று எழுதியதைக் குறிப்பிட்டார்.  எனக்கு பாட வராது என்று சொல்லிவிட்டு கொஞ்சம் பாடவும் முயற்சி செய்தார். அடிக்கடி பாரதியையும் மாமாவையும் ஒப்பிட்டுப் பேசினார். மாமா எழுதிய நாடகங்களையும், திமுகவுக்காக எழுதிய பாடல்களையும் குறிப்பிட்டார். துபாய்க்குப் பயணம் போய் வருஷம் ஆறாச்சு துள்ளி வரும் காவிரிபோய் கண்ணு ரெண்டும் ஆறாச்சு என்ற வரிகளைக் குறிப்பிட்டு, காவிரி வறண்டுபோனதுபோல் அப்பெண்ணில் கண்ணீரும் வறண்டு போகும் என்று குறிப்பிட்டாரோ என்று கூறினார். கண்மணி  ராஜா (முபாரக்) அடுத்து பேசினார். தனது தந்தைக்கும் மாமா பாடல்கள் எழுதிக்கொடுத்ததாகவும், அவருக்கும் எழுதியதாகவும் கூறினார். அவருக்காக மாமா எழுதிய இரு பாடல் வரிகளை அவர் குறிப்பிட்டபொழுதி எனக்கு கண்ணீர் முட்டிக்கொண்டது: ஆசையில் நாங்கள் மிதந்தாலும் ஆவியின்  கயிறோ உன் கரத்தில் ஓசைப்படாமல் உயிர்ப்படகு ஒதுங்கும் ஒருநாள் உன் கரையில் மூன் டிவி பேட்டியின்போது, “நீங்க ரொம்ப அடக்கமா பேசுறிங்க” என்று பேட்டியெடுத்தவர் மாமாவிடம் சொல்ல, அதற்கு மாமா உடனே, “அடக்கமாகப் போறவன், அடக்கமா பேசுனா தப்பில்ல” என்று சிரித்துக்கொண்டே சொன்னது ஞாபகம் வருகிறது. Oh my God! I really thank Allah for making me come into this family of great poets! மூன் டிவிக்கு “இன்று இவருடன்” என்ற நிகழ்ச்சியில் வந்த முதல் பேட்டி அது. மாமாவின் கடைசிப் பேட்டியும் அதுதான். ஒரு மிகப்பெரிய கவிஞரை நாம் இழந்துவிட்டோ, நாம் மட்டுமல்ல, இந்த உலகமே இழந்துவிட்டது என்று மேலும் அவர் கூறினார். இசை மேதை மொசார்ட் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். ஒருவர் இறந்துபோனதற்கான இசைக்குறிப்புகளை எழுதிக் கொடுக்கமுடியுமா என்று அவரிடம் கேட்க, அவரும் இறப்பிற்கான இசைக்குறிப்புகளை (notations) எழுதிக்கொடுக்கிறார். பின்னர் அவர் இறந்துபோகிறார். இதைச் சொல்லிய கண்மணி ராஜா, இதைப்போல இறப்புக்கான பாடலொன்றை சலீம் மாமா ஏதோ வராத ஒரு திரைப்படத்துக்காக ஏதோ ஒரு இயக்குனர் கேட்க எழுதிக்கொடுத்தது என்று சொல்லிவிட்டு அந்த வரிகளையும், அதுதான் மாமா இறுதியாக எழுதிய பாடல் என்றும் குறிப்பிடுகிறார். அதன் பல்லவி: விசுலு ஆட்டண்டா உசுரு ஊர்வலம் ஓலைப்பிரிஞ்ச மனுசனுக்கு மாலை தோரணம் ஆட்டம் போடுடா வேட்டையாடுடா ஆடும் ஊஞ்சம் அறுந்துபுட்டா ஏது நிரந்தரம் சொந்தங்கள அடையாளம் காட்டும் மூச்சுடா பந்து உடல் வெடிச்சுபுட்டா  பந்தயமே போச்சுடா வீதியெல்லாம் பூத்தெளிச்சு தூள் கெளப்புது சாதி சனம் மாத்தி மாத்தி தோள் கொடுக்குது பேசியவர்களிலேயே என் மனதைக் கவர்ந்த பேச்சுக்களில் ஒன்று இது. (அடுத்தது கவிக்கோவினுடையது). அடுத்து கவிஞர் ஷேகு ஜலாலுதீன் பேசினார். மாமாவை நாகூர் சலீம் சாபு என்றும், ஏழு திரைப்படங்களுக்கு பாடல் எழுதினார் என்றும் கூறினார். அடுத்து குத்தூஸ் ஒரு பாடல் பாடிய பிறகு, கே எம் நிஜாமுதீன் என்பவர் பேசினார். https://www.youtube.com/watch?feature=player_embedded&v=O94r3PNEJLk பின்பு மு மேத்தா அண்னன் பேசினார்: “சலீமைப் பற்றி மறுபடியும் மறுபடியும் பேசவேண்டியுள்ளது என்ற உணர்வு மேலிடுகிறது. ஹிந்துவில் வந்த செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகையில், “ஒரு மகாகவிஞனுக்குரிய மரியாதையை ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை செய்திருக்கிறது. ஆனால் ஒரு தமிழ்ப்பத்திரிக்கைகூட அவருடைய மரணச் செய்தியைக்கூட வெளியிடவில்லை. நாகூர் சலீம் என் நண்பர் என்று என்னால் சொல்லமுடியவில்லை. என்னுடைய மூத்த சகோதரர் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. நாகூர் சலீம் அற்புதமான கவிஞரும் அற்புதமான மனிதரும்கூட. நாகூர் சலீம் ஒரு மாமனிதர் என்று எந்த சபையிலும் என்னால் சொல்லமுடியும். ஒருநாளைக்கு ஒரு கவிஞன் ஒரு பாட்டு எழுதினால் அது பெரியவிஷயம். உடுமலை நாராயணகவி 15 நாள் எடுத்துக்கொள்வாராம். அண்ணன் சலீம் அவர்கள் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 15 பாடல்களை அனாயாசமாக எழுதுகிற ஆற்றல் அவருக்கு இருந்திருக்கிறது. அவர் நம்முடைய சமுதாயத்திலே இருந்தார் என்பதால்தான் திரையுலகத்திலே அவர் முன்னுக்கு வரமுடியவில்லை. பாடல்களைப் பாடியவர்களுக்கு கிடைத்த புகழ் அவற்றை எழுதிய கவிஞர் சலீமுக்குப் போய்ச்சேரவில்லை..எம்ஜியார் சலீம் பற்றிய குறிப்புகளை வாங்கி தன் பேண்ட் பாக்கட்டில் வைத்துக்கொண்டார், என்னை அடிக்கடி வந்து சந்தியுங்கள் என்றும், ரொம்ப காலதாமதமாக வந்திருக்கிறீர்கள் என்றும் கூறினார்” என்று கூறினார். மறுபடியும் குத்தூஸ் ஒரு பாடலை அலறிய பிறகு பேரா. கே. எம். கே. சார் பேசினார். https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YSAwTB-j6W8 “அந்தக் குடும்பமே ஒரு சிந்தனைச் சுரங்கம். எதனையுமே மாற்றி சிந்திக்கக்கூடிய ஒரு மரபு அந்தக் குடும்பத்தில் இருந்துவந்திருக்கிறது. நாகூருக்கு பெருமையைச் சேர்த்தவர்கள்…நாகூர் சலீம் முஸ்லிம்லீக் தலைவர்களோடு மிகமிக நெருக்கமாக இருந்தவர், என் மீது அளப்பரிய பற்றுடையவர்; அடிக்கடி அவரோடு பேசுவதுண்டு, தொடர்பு கொள்வதுண்டு,அவருடைய மறைவு எங்களைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய இழப்பு, சமுதாயத்திற்கும் தமிழுக்கும் ஏற்பட்டிருக்கிற ஈடுசெய்யமுடியாத இழப்பு, தமிழுக்குச் சேவை செய்த நட்சத்திரங்களில் ஒன்று உதிர்ந்துவிட்டது என்ற உணர்வு நமக்கு ஏற்பட்டிருக்கிறது…அவருடைய சேவையை தொடர்ந்து நாட்டுக்கு நினைவு படுத்துவோம்” என்றெல்லாம் பேசினார். பேசும்போது என்னுடைய பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டார். இறுதியாக கவிக்கோவின் சிறப்புரை. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=NwxRadBFVO4 “நாகூருக்கு பல சிறப்புக்கள் உண்டு. முதல் சிறப்பு அது ஒரு புனித பூமி. தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியராக ஆவதற்குக் காரணமாக இருந்த மகா ஞானி (பாதுஷா நாயகமவர்கள்.) அந்த நன்றிகூட இல்லை (இது இன்று பிரிந்துகிடக்கும் பல ஜமா’அத்துகளுக்காக). இறைவன் அந்த ஊருக்கு பெரிய அருள் செய்திருக்கிறான். அந்த மண்ணில் பிறந்தவன் ஒன்று ஞானியாவான் அல்லது கவிஞனாவான். வேறுமாதிரியாகவும் ஆவான்…(சிரிப்பு)..நாகூரின் மிகப்பெரிய ஆகிருதி குலாம் காதிர் நாவலரும், செய்குத்தம்பிப் பாவலரும்…குலார் காதிர் நாவலர் மதுரைக்குப் போய் சேதுபதி முன்னால் தன் புலமையைக் காட்டியபோது என்ன பரிசில் வேண்டும் என்று கேட்டார் மன்னர். அதற்கு குலாம்காதிர் நாவலர், “நீர் எமக்கேதும் பரிசில் தரவேண்டாம். தமிழன்னைக்குப் பரிசில் தாரும். நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்துத்தாரும்” என்று கேட்டாராம். இது எத்தனை பேருக்குக் தெரியும்? “நமக்குத்தான் கவிதை என்றால் ஹராம், இசை என்றால் ஹராம்… குர்’ஆனே ஒரு கவிதைதான். இவன் கவிதை ஹராம்ங்கிறான் (இது யாருக்கு என்று உங்களுக்கே இந்நேரம் தெரிந்திருக்கும்)..இசை ஹராங்கிறான்… தாவூத் நபி இசை பாடுகிறவர். அவருக்கு அருளப்பட்ட வேதமே இசை வடிவம்தான். ஸபூர் என்றால் சங்கீதம் என்று அர்த்தம். தெரியாது, படிக்கிறதில்லை, அரைகுறைகள்…தாவூத் (அலை) அவர்கள் பாடினால் பறவைகளெல்லாம் அவரைச் சூழ்ந்து அமர்ந்து உட்கார்ந்துகொள்ளும், அவ்வளவு இனிமையான குரலை அவருக்கு அல்லாஹ் கொடுத்தான். பெருமானார் அகழ்ப்போரின்போது தோழர்களெல்லாம் பாடிக்கொண்டே வேலை செய்தார்கள், பெருமானாரும் பாடினார்கள். புகாரியில இருக்கு. “படிக்கிறதில்லை, அரைகுறையாகப் படித்துவிட்டு எல்லாத்தையும் ஹராங்கிறான், வாழுறதே, சந்தோஷமாக இருப்பதே ஹராங்கிறான், மார்க்கமென்றால் சந்தோஷமாக இருக்காதேங்கிறான்” என்று கவிக்கோ சொன்னபோது என்னால்  ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. இவ்வளவு சுருக்கமாக இந்த ஜமாஅத்துகளின்மீது ஒருவர் இப்படி மிகச்சரியான விமர்சனம் வைக்கமுடியுமா? கவிக்கோ பேசும்போது ஒரு நாட்டாமைத்தனம், ’பெரிசு’த்தனம் அவ்வப்போது தலைகாட்டினாலும், ரொம்ப நேர்மையாக, சில பாடல்களையாவது படித்துவிட்டு வந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜமாஅத், அந்த ஜமாஅத் என்று சொல்லிக்கொண்டு விவாதித்துக்கொண்டிருக்கிற அரைகுறைகளின் மீதான மிகக்காட்டமான, மிகச்சரியான விமர்சனம் அவர் வைத்தது என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். கவிக்கோ குறிப்பிட்ட மாமாவின் பாடல் நாகூரார் மகிமை என்ற வராத திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து அவரும், ஷேக் முஹம்மது அவர்களும் பாடிய ‘டைட்டில்’ பாடலாகும். தஞ்சை மன்னம் பிராதாப சிங்கு தந்தான் பெரியமினாரா அன்பு நெஞ்சம் கொண்ட நான்கு முஸ்லீம்கள் நிறுவினர் நான்கு மினாராஅ டச்சுக்காரன் கட்டியதாகும் தவச்சாலை பீர்மண்டபம் நம் கூத்தாநல்லூர் மஹாதேவ அய்யர் கொடுத்தார் தங்க கலசம் இந்த பாடலைக் குறிப்பிட்டு நாகூர் எவ்வளவு மத நல்லிணக்கம் கொண்ட ஊர் என்பதற்கு கவிக்கோ உதாரணம் காட்டினார். இறைவனை யாருக்குத் தெரியும் நபி இரசூல் இல்லையென்றால் நபியை யாருக்குப்  புரியும் வல்ல நாயன் இல்லை என்றால் என்ற பிரபலமான, எதிர்ப்புகளைக் கிளப்பிய பாடலையும் அவர் பாணியில் ஆதரித்துப் பேசினார். அதற்கு ஆதரவாக ஒரு ஹதீதைக் குறிப்பிட்டார். பெருமானாரிடம் ஒரு ஏழை சென்று தன் மகளுடைய திருமணத்திற்காக உதவி கேட்கிறார். உதுமானிடம் சென்று அல்லாஹ்வின் பெயரால்  கேட்கிறேன் என்று கேட்கச்சொல்ல, அவரும் உதுமானிடம் போய்க்கேட்க, உதுமான் சில வெள்ளிக்காசுகளைக் கொடுக்கிறார். அது போதாமையால், மறுபடியும் பெருமானாரிடம் முறையிடுகிறார் அந்த ஏழை. மீண்டும் அல்லாஹ் பெயரால் போய் உதுமானைக் கேட்கச் சொல்ல, அவரும் சென்று கேட்கிறார். மீண்டும் சில வெள்ளிக்காசுகள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. மீண்டும் பெருமானாரிடம் சென்று அது போதாது என்று அந்த ஏழை முறையிட, இம்முறை ரஸூலுல்லாஹ்வின் பெயரால் கேட்கிறேன் என்று உதுமானிடம் போய்க்கேளுங்கள் என்று பெருமானார் கேட்கச் சொன்னார்கள். அவர் போய் அப்படியே மறுபடியும் கேட்க, வீட்டைத்திறந்து நீயே போய் உனக்கு வேண்டியதையெல்லாம் எடுத்துக்கொள் என்று உதுமான் சொன்னார். வியந்துபோன அந்த ஏழை, அதற்கு விளக்கம் பெருமானாரிடம் கேட்க, அதையும் உதுமானிடமே போய்க் கேள் என்று சொல்ல, அவரும் போய்க் கேட்கிறார். அதற்கு உதுமான், “இறைவனை யாருக்குத் தெரியும்? நாங்கள் தவறாகவல்லவா புரிந்துவைத்திருந்தோம். அவனை சரியாகக் காட்டியவர் பெருமானாரல்லவா? அவர்கள் பெயரைச் சொல்லிக்கேட்டால் இந்த உலகத்தையே உங்களுக்குக் கொடுப்போம்” என்று உதுமான் கூறினார்” என்று கதையை முடித்து, உதுமான் சொன்னதைத்தான் கவிஞர் சலீம் சொல்லியிருக்கிறார் என்று முடித்தார். கூட்டத்துக்கு வந்திருந்த பலருக்கு கூடிய விரைவில் இரங்கல் கூட்டம் நடத்த வேண்டி வரும் என்று தோன்றியது. ரொம்ப வயதானவர்களும், சில இளைஞர்களும் தென்பட்டார்கள். யாருமே ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. பாரி பே நன்றி கூறினார். கடைசிக் கணங்களில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகளின் வழியாக எப்படி மாமாவைக் கூட்டி வந்தோம் என்றும், அப்போதே மாமாவின் முடிவாக அது இருக்கலாம் என்று பட்டதாகவும் அவர் கூறினார். மாமாவின் பாடல்கள் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். மாமா ஒரு பிறவிக் கவிஞன்.  ஒரு மகா கவி என்றுகூட நான் சொல்லுவேன். மாமா பள்ளிக்கூடம் போகவில்லை. (பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை). முதல் முஸ்லிம் நாவலாசிரியையான ஆச்சிமா என்ற எங்கள் பெரியம்மாவும் மூன்றாவதுவரைதான் படித்தார். பின்னர் எப்படி கவிதையும், இலக்கிய வகைகளும் பொங்கிப் பிரவகித்தன என்று யோசித்தேன். ஒன்றுமில்லை. மூன்று காவியங்கள் இயற்றிய வண்ணக்களஞ்சியப் புலவரின் ரத்தம், வித்து அது. எங்கள் எல்லாருக்குள்ளும் அது ஓடுகிறது. நாங்கள் வேறு எப்படி இருக்க முடியும்? ஆச்சிமா, ஆச்சிமாவின் மூத்த சகோதரர் ஹுசைன் முனவ்வர் பே மாமா, சலீம் மாமா, காரைக்காலில் பால்யன் என்ற பத்திரிக்கை நடத்திய முஜீன் மாமா, பகடிப் பேச்சாளராக விளங்கிய முராது மாமா, கவிதைகளாக எழுதிய, பேசிய காமில் மாமா, விகடனில் முத்திரைக்கதைகள் எழுதி புகழ் பெற்று, 80 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதி, தயாரிப்பிலும் ஈடுபட்ட தூயவன் என்ற அக்பர் மாமா, நான் உள்பட – இது எப்படி சாத்தியம்? இது பரம்பரை. வண்ணக்களஞ்சிய வேரின் தொடர்ச்சி. இது எங்கெங்கோ கிளைவிட்டு இன்னும், இன்றும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. பேச்சிலும், எழுத்திலும். கூடவே நாகூரும் உள்ளது. கேட்கவே வேண்டாம். ஊரின் archetype, குடும்ப archetype இரண்டும் சேர்ந்துகொண்டுள்ளது. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=711tr8h6XIk மாமாவிடம் எப்போதுமே ஒரு வெடிச்சிரிப்பு சிரிக்கும்.  மூன் டிவி பேட்டியின்போதும் அப்படி ஒரு முறை சிரித்தது. அதை மட்டும் வெட்டி வைத்துள்ளேன். மறுமையில் மாமா எப்போதும் அப்படியே சிரித்துக்கொண்டிருக்க இறைவன் அருள் புரிவானாக, ஆமீன்! கவிஞர் ஜலாலுத்தீனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். மாமா மொகலே ஆஸம் திரைப்பட தமிழ் வெர்ஷனுக்காக சலீம் மாமா எழுதிய ஒரு பாடல். மோஹே பங்கட் பெ என்ற பாடல் தமிழில் “காதல் நதிக்கரையில்”. எள்ளளவும் ஒரிஜினலின் மெட்டு பிசகாது. பாடியவர் ஸ்வர்ணலதா. (அந்தக் குரலும் இன்று இல்லை, கவிஞரும் இல்லை). https://www.youtube.com/watch?feature=player_embedded&v=iq7L2XXBaEg 5 நாகூர் தந்த கொடை தமிழகத்து தர்காக்களைப் பார்த்து வருவோம் தூய வழி காட்டச் சொல்லிக் கேட்டு வருவோம் இறைவணக்கம் புரிபவர்க்கு எளிதில் நடக்கும் இரசூல்நபி நாயகத்தின் ஆசி கிடைக்கும் காயல் ஏ ஆர் ஷேக் முஹம்மது பாடிய இந்தப் பாடலைக் கேட்காத தமிழ் செவிகள் கிடையாது என்றே சொல்லி விடலாம். (தர்கா ஜியாரத் செய்பவர்களைக் ”கப்ர் வணங்கிகள்” என்று குறை கூறும் மூளைச்சலவை செய்யப்பட்ட சகோதரர்கள் பாடலின் மூன்றாவது வரியைக் கவனிக்கவும்). []இந்தப் பாடலை எழுதியவர் ஆயிரக்கணக்கான கவிதைகளையும், இசைப்பாடல்களையும் எழுதிய நாடறிந்த ஒரு கவிஞர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். நாகூர் ஹனிபா-விலிருந்து நூற்றுக் கணக்கான முஸ்லிம் பாடகர்களுக்கு இசைபட வாழ வழி வகுத்துக் கொடுத்த கவிஞர் இவர். அவர்தான் நாகூர் சலீம். அவரோடு நாகூரில் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கவிஞராகிய உருவாகிய காலத்தில் எழுதிய சில கவிதைகளை தன் ஞாபகத்திலிருந்து அப்போது அவர் சொல்லிச் சென்றார். அவை இதுவரை வெளியிடப்படாதவை. அவைகள் மட்டுமென்ன, ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய இந்தக் கவிஞரின் கவிதைகள் ஒட்டு மொத்தமாக இதுவரை புத்தகமாக வெளியிடப்படவில்லை என்பது அவருக்கு சமுதாயத்துக்கும் இழப்புதான். (ஒரே ஒரு புத்தகம் வந்தது. என்னைப் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே இது தெரியும்!). கவிஞர் என்னிடம் தன் நினைவுப் பெட்டகத்திலிருந்து எடுத்துக் கொடுத்த கவிதைகள் யாவும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட வரிகள். இன்னும் பசுமையாக அவர் மனதில் இருக்கின்றன! இது ஒரு முக்கியமான விஷயம். நமக்கு ஒரு விஷயம் மறந்து போவதற்கு உளவியல்வாதிகள் சொல்லும் காரணம், நாம் மறந்து போக விரும்புகிறோம் என்பதுதான்! அதேபோல, ஒரு விஷயம் நமக்கு நினைவில் இருப்பதற்குக் காரணம் அதன் மீது நாம் கொண்ட பிரியம், காதல்தான். ஒரு காதலியின் பெயரை மறந்துபோன ஒரு காதலனை மனிதகுல வரலாறு கண்டிருக்கிறதா? கவிஞர் சலீம் அவர்களும் கவிதையக் காதலித்தவர். காதலிக்கிறவர். மணந்து கொண்டவர் என்று சொல்லமாட்டேன். ஏனெனில் எல்லாத் திருமண வாழ்க்கையும் இனிப்பாகவே இறுதிவரை அமைந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அது கசப்பாக மாறுவதைப் பற்றிய பல ஹாஸ்யங்களை நாம் அறிவோம். A man is incomplete before marriage. After marriage, he is finished என்று ஒன்று உண்டு! (எவ்வளவு உண்மை! ஆனால் இதையேதான் மனைவிகளும் கூறுகின்றனர்!) எனவே, கவிஞர் கவிதையைக் காதலிப்பவர் என்று சொல்வதே சாலப்பொருத்தம். ஏனெனில் காதல் நினைவுகள் எப்போதுமே இனிப்பானவை (அப்படித்தானே?)! சலீம் அவர்களின் பரம்பரை பல கவிஞர்களையும், பெரு வணிகர்களையும், ஆன்மீக வாதிகளையும் கொண்டது. நான்கு இஸ்லாமிய காப்பியங்களை இயற்றிய வண்ணக்களஞ்சியப் புலவரும், டெல்லியில் அடக்கமாகியிருக்கும் மகான்கள் சலீம் சிஷ்தி, ஷாஹ் வலியுல்லாஹ், ஏர்வாடி இப்ராஹீம் ஷாஹ் வலியுல்லாஹ், பாண்டிய மன்னரிடம் தளபதியாகப் பணிபுரிந்த வஸீர் அப்பாஸ் போன்றோரும் கவிஞர் சலீமுக்கு பாட்டனார் முறையில் இருப்பவர்கள். நேரடிப்பாட்டனாராக அல்ல. வம்சா வழியாக. அவர்கள்தான் முன்னோர்கள். தமிழில் முதன் முதலாக நாவல் எழுதிய முஸ்லிம் பெண்மணியான சித்தி ஜுனைதா பேகம் இவருடைய மூத்த சகோதரி. மகான் சலீம் சிஷ்தியின் நினைவாகத்தான் இவருக்கு த’அலீஃப் சலீம் பெய்க் என்று பெயர் வைக்கப்பட்டது. ”பதிவுகளிலெல்லாம்கூட இப்படித்தான் உள்ளது” என்றும் அவர் என்னிடம் கூறினார். கவிஞர்கள் பிறப்பதில்லை. உருவாகிறார்கள் என்ற வாதத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவர் பிறப்பிலேயே கவிஞராக இருக்கிறார் என்று சொன்னால் கவிதை மீதான காதலும், கவிதை இயற்றுவதற்காக திறமையும் அவருடைய டி.என்.ஏ.-விலேயே இருக்கிறது என்று பொருள். ஏன் எல்லா மனிதர்களும் கவிஞர்களாக உருவாவதில்லை என்ற கேள்விக்கான பதிலைச் சிந்தித்தால் இந்த உண்மை நமக்குப் புரியும். யாருடைய டி.என்.ஏ.-யில் (அதாவது விதிவசப்பட்டோலை எனப்படும்  லஹ்ஹுல் மஹ்ஃபூலில்) கவிதை இருக்கிறதோ அவர்தான் ஒரு சிறந்த கவிஞராக தன்னை உருவாக்கிக்கொள்ளவோ, அப்படி உருவாக்கிக் கொண்ட பிறகு, பிறப்பால் கவிஞர்கள் யாருமில்லை என்று வாதிடவோ முடியும்! அந்த வகையில் பார்த்தால் சலீம் ஒரு பிறவிக் கவிஞர் அவருடைய பாட்டனார் வண்ணக் களஞ்சியப் புலவர் நான்கு காப்பியங்களை இயற்றியவர். சகோதரர் முனவ்வர் பெய்க் அவர்கள் பன்மொழி வித்தகர். சகோதர் முஜீன் பெய்க் பால்யன் என்ற பத்திரிக்கையை காரைக்காலில் பல ஆண்டுகள் நடத்தியவர். சகோதரி சித்தி ஜுனைதா பேகம் முதன் முதலில் தமிழில் நாவல் எழுதிய முஸ்லிம் பெண். இன்னொரு சகோதரர் (தம்பி முறை) தூயவன் சிறுகதைகள் எழுதியவர், பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்தவர். பல திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். சகோதரர் முராது பெய்க் ஒரு சிறந்த பேச்சாளர். எனவே கவிஞர் சலீமுக்குக் கவிதை பரம்பரைச் சொத்தாக அமைந்துவிட்டது. பள்ளிப் படிப்பு கவிஞருக்கு அவ்வளவாக இல்லை. பள்ளிப் படிப்புக்கும், பட்டப் படிப்புக்கும் ஒருவர் கவிஞராக வளர்ச்சி அடைவதற்கும் தொடர்பே இல்லை என்று சொல்லிவிட முடியாது. இலக்கியம் படித்தால் நிச்சயமாக அது இலக்கியத் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும்தான். ஆனால் நம்முடையை மகா கவிகள் கம்பனோ, திருவள்ளுவரோ, அல்லது பாரதியோகூட பெரிய படிப்பு படித்தவர்களல்ல. ஆனால் இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. உதாரணமாக முதன் முதலாக ஆங்கிலத்தில் காப்பியம் இயற்றிய ஜான் மில்டன் எம்.ஏ. ஆங்கிலம் படித்தவர். எனவே கவிஞர் சலீமுக்கு பள்ளிப்படிப்பு பெரிதாக ஒன்றுமில்லை என்பது அவருக்கு சிறப்பு சேர்க்கும் இன்னொரு தகவலாக மட்டும் இருக்கிறது. ’ஒன்னாவது’ வகுப்பு படிக்கும்போதே, ஐந்து ஆறு வயதிலேயே, அவர் கவிதை எழுத ஆரம்பித்திருந்தார். வண்டி நல்ல வண்டி இது ஒத்த மாட்டு வண்டி மண்டி போட்டு நிண்டு கிட்டு மானம் போக்கும் மாட்டு வண்டி அஞ்சு மனாரா தோனுதே அலங்கார வாசல் காணுதே என்று பள்ளிப் பருவத்திலேயே எழுதியிருக்கிறார். இந்த வரிகளைக் கேட்ட அவருடைய சகோதரர் பன்மொழி அறிஞர் முனவ்வர் பெய்க் அவர்கள், ”அடடே, வண்ணக்களஞ்சியப் புலவரோட பேரனல்லவா” என்று உற்சாகப்படுத்தும் விதத்தில் ஏதோ சொன்னாராம். ”கவிதை என் மண்டைக்குள் ஏறி இருந்ததனால் படிப்பு ஏறவில்லை. எட்டாவது வரை போனேன் என்று நினைக்கிறேன். அந்தோனியார் பள்ளியில். ஆனால் பல பள்ளிகள் நான் மாறியிருந்தேன். பாட்டு, நாடகம் என்று அலைந்தேன்” என்று கூறினார். ”வண்ணக்களஞ்சியப் புலவரின் ஞாபகமாகத்தான் நான் ஆரம்பத்தில் வண்ணதாசன் என்று புனை பெயர் வைத்துக் கொண்டேன். மறைதாசன், பயணப் பிரியா, லீசம் (சலீம் என்பதன் உல்டா) என்ற பல பெயர்களில் எழுதினேன். வண்ணக் களஞ்சியப் புலவர் இங்கு வந்து பொறையாரில் திருமணம் செய்த விபரங்களெல்லாம் லண்டனில் உள்ள ஷரீஃபா மச்சி வீட்டில் இருந்தது. அந்த நூலை என்னிடம் கொடுத்துவிட்டதாக மச்சி சொல்லிவிட்டது. ஷாஹ் வலியுல்லாஹ் நமக்கு எப்படி சொந்தம் என்ற விபரமெல்லாம் ஆச்சிமா (சித்தி ஜுனைதா பேகம்) வீட்டில் இருந்தது. ஆனால் முஜீன்மாமா அதைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்” என்று தன் பாரம்பரியம் தொடர்பான ஆவணத் தகவல்கள் தன் கைவிட்டுப் போனது பற்றி என்னிடம் கூறினார். குழந்தைகள் இன்றி, விதவையாக இருந்த கதீஜா நாச்சியாரை, முதல் மனைவியை இழந்திருந்த ஷரீஃப் பெய்க் மணந்து கொண்டார். இருவருக்கும் பிறந்தவர்தான் சலீம். அந்தக் காலத்தில் மனிதர்கள் மனித நேயம் மட்டுமே மிக்கவர்களாக வாழ்ந்து வந்தார்கள் என்பதற்கு சலீம் அவர்களின் குடுபத்திலும் நல்ல உதாரணம் உண்டு. சலீம் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்தது நான்கு பெண்கள். ”மீனாட்சி, குப்பம்மாள், நம்பிக்கை என்ற ஆதிதிராவிடப் பெண், இதல்லாமல் ஜுனைதா ஆச்சியும் (சித்தி ஜுனைதா பேகம்) எனக்குப் பால் கொடுத்துள்ளது. அந்த வகையில் என் சகோதரி எனக்குத் தாய் மாதிரி” என்று அவர் என்னிடம் கூறினார். (எனக்குப் பால் கொடுத்ததுகூட லட்சுமி என்ற ஒரு மீனவத்தாய்தான். அதனால்தான் மீன் எனக்கு உவப்பான உணவாக உள்ளதோ?!). அந்தக் காலத்தில் தாய்மார்கள் பெற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்காமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள்தான். ஒன்று சமூக ரீதியான காரணம், இன்னொன்று உடல் ரீதியான காரணம். முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் பெற்ற பிள்ளைக்குத் தாயே பால் கொடுக்கும் பழக்கமோ வழக்கமோ இல்லை. அதற்காக நியமிக்கப்படும் பெண்கள்தான் கொடுத்தார்கள். இறுதித்தூதருக்கு அந்த வகையில் பால் கொடுத்த தாயார் ஹலீமா அவர்கள். நமது நாட்டில் பெற்ற குழந்தைக்குத் தாய்தான் பால் கொடுத்து வந்தாள். அப்படிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில், உடல் ரீதியான காரணங்களுக்காக அந்த வேலைக்கு மற்ற பெண்கள் நியமிக்கப்பட்டனர். அப்படித்தான் கவிஞர் சலீமுக்கு நான்கு பெண்களும், எனக்கு ஒருவரும் அமைந்தனர். இந்தக் காலத்தில் இருப்பதுபோல, தாய்ப்பால் கொடுத்தால் உடல் அழகு கெட்டு விடும் என்ற கற்பனையின் அடிப்படையில்  கொடுக்காமல் இருப்பதைப் போல அந்தக் காலத்தில் செய்யவில்லை. சலீம் அவர்களின் கவிதா வாழ்வு நாடகத் துறையில் தன்னை ஈடுபடுத்தி வளர்த்திக் கொண்டிருக்கிறது. சினிமாவோ டிவியோ இல்லாத அந்தக் காலத்தில் நாடகங்களே மனிதனுக்கு எளிதான, எல்லா ஊர்களிலும் கிடைத்த எண்டர்டைன்மெண்ட். அப்படி நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பல ஊர்களிலும் நடந்த பல நாடகங்களுக்கு சலீம் அவர்கள் பாடலும் வசனமும்கூட எழுதியுள்ளார். சலீம் அவர்களின் பாடல்களில் மரபின் நறுமணம் நன்றாகவே கமழ்கிறது. சில்லடி என்று அழைக்கப்படும், நாகூர் மகான் ஷாஹுல் ஹமீது அவர்கள் தவம் செய்த கடற்கரைப் பகுதி பற்றி சலீம் அவர்களின் பாடல் வரிகள் (அவர் நினைவிலிருந்து சொன்னவை): நாற்பது நாள் தூர் சினாய் மலையின் மீது நபி மூஸா தவமிருக்க மலையின் கற்கள் ஏற்புடைய சுர்மாவாம் கண் மையாகி எழில் கண்கள் ஒளிபெறவே இறைவன் செய்தான் காற்றொலிக்கும் கடற்கரையின் மண் மேட்டினில் காதிரொலி நாற்பது நாள் தவம் செய்ததால் ஏற்கும் இம் மண் அணுக்கள் ஒவ்வொன்றிலும் எந் நோய்க்கும் மருந்துண்டு ஏன் கவலை? தன்னுடைய ஆரம்பகால கவிதா வாழ்வு பற்றி அவர் சொன்னவை: ”இதுவரை 6500-க்கு மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளேன். நிறைய நாடகங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளேன், கதை, வசனம், பாடல்கள் எழுதி நானே இயக்கியும் உள்ளேன்.  நாகை பேபி தியேட்டரில் ‘விதவைக் கண்ணீர்’ என்று ஒரு நாடகம் போட்டோம். அதற்கு எல்லாம் நான்தான். அதில் ’ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடல் புகழ் ஆதித்தனும் ஸ்ரீலதா என்று ஒரு நடிகையும் நடித்தனர். மேக்-அப் மென் எல்லாம் ஜெமினி ஸ்டூடியோவிலிருந்து வந்தார்கள்.  ’ஹவுஸ்ஃபுல்’ ஆகி ஒரு ரூபாய் டிக்கட் பத்து ரூபாய்க்கு விற்றது. ஃபரீது மாமாதான் தயாரிப்பாளர். ”நாகூரில் ’சந்தர்ப்பம்’ என்று ஒரு நாடகம் போட்டோம். அதில் “திருக்குரானே ஓடிப்போய் முஹம்மது நபியின் நெஞ்சில் ஒளிந்து கொள்” என்று ஒரு வசனம் வரும். அதனால் பெரிய கலாட்டா ஆனது. ’சோக்காளி’, ’மிஸ்டர் 1960’ என்றெல்லாம் பல நாடகங்களை நாகை, நாகூர், திருவாரூர், திருமருகல் போன்ற ஊர்களில் போட்டுள்ளோம். ”சென்னையில், நடிகர் கே கண்ணன் தயாரித்த ’ஆனந்த பைரவி’ என்ற நாடகத்துக்கு நானும் ஆபிதீன் காக்காவும் பாடல்கள் எழுதினோம். கதை, வசனம்  ’மஹாதேவி’ புகழ் ரவீந்தர்”. அதில் சில வரிகள்: எந்தக் கதையைச் சொல்லிப் பாடுவேன் என் சொந்தக் கதையை எழுதிப் பூர்த்தியாகு  முன்னே எந்தக் கதையைச் சொல்லிப் பாடுவேன். ’என் தங்கை’ நடராசனின் நாடகத்துக்காக எழுதிய பாடலின் சில வரிகள்: நினைவினிலே கலந்து கனவினிலே தோன்றி நிலைபெறும் காதலின் ராணி எங்கே? அணையா ஒளி வீசும் நிலவே நீ கூறு அடையாளம்  சொல்கிறேன் நானும் இங்கே மங்கையின் மணி மொழிகள் தேனாகும் அவள் மலர் விழிகள்  அசையும் மீனாகும் தங்க உடல் மாலை வானாகும் அவள் துணை வரும் தனிச் சொந்தம் நானாகும் வண்ணமோ புள்ளியில்லா மானாகும் ஒளி வழியும் தொடை பளிங்குத் தூணாகும் சின்ன இடை உடுக்கை தானாகும் — அது தென்றல் பட்டால் ஒடிந்து வீணாகும் ’சன்னிதானம்’ என்ற நாடகம் நாகூரில் அரங்கேறியது. அதில் என் பாட்டை மேஜர் சுந்தரராஜன் வெகுவாகப் பாராட்டினார். கெட்டவனாகிப் போன ஒருவனை விரும்பும் ஒருத்தியும் அவனும் பாடும் பாடல்: பட்டுவிட்ட மரக்கிளையில் பச்சைக்கொடி படருவதோ பாவி என்னை நிழல்போதே பாவை நீ தொடருவதோ உள்ளத்தில் நானிருந்தால் தள்ளிவிடு இந்த உண்மையை உனக்கு நீயே சொல்லிவிடு கூடாது போனவனின் கூடார நாடுகிறாய் ஆகாது எனத் தெரிந்தும் ஆசையினைத் தேடுகிறாய் பழி பட்டுப் போனது என் பாதை — என்னை வழிபடத் துடிக்கிறாய் பேதை முன்னாளில் தவறு செய்து பின்னாளில் திருந்தியவன் என்றாலும் உலகத்தின் முன் ஏளனத்தைப் பொருந்தியவன் அவள்: பட்ட மரம் சில சமயம் பச்சை விட்டு வளர்வதுண்டு பாவி என்று போனவனும் பண்பு கொண்டு வருவதுண்டு உள்ளத்தில் என் நினைவை விதைத்துவிடு இந்த உண்மையை உனக்கு நீயே உணர்த்திவிடு கூடாது போனவனின் கூடார நாடுகிறேன் ஆகாது எனத் தெரிந்தும் ஆசையினைத் தேடுகிறேன் ஏனென்று புரிகிறது எனக்கு — நான் என்னுயிரை இழந்துவிட்டேன் உனக்கு == வானம் கருத்ததடி எழில் நிலவே நீ இன்றி நலிந்த என் இதய வானம் கருத்ததடி காணும் இடம் யாவும் கார்மேகக் கூட்டம் கண்கள் பெய்த மழை கடலுக்கு வளமூட்டும் மானே உன் நினைவால் மூண்டது போராட்டம் முடிந்தது என் வாழ்வு மடிந்தது உயிரோட்டம் வீணையைப் பறிகொடுத்த பாடகி நிலையானாய் கைப்பொருள் இழந்தவனும் மெய்ப்பொருள் கலையானாய் நானறியேன் கண்ணே துயருக்கு விலையானாய் மணந்துவிட்டேன் உன்னை மனதில் ஏன்  நிலையானாய் === ”ஏ கே வேலன் கம்பனின் இரண்டு வரிகளை வைத்து பொங்கல் வாழ்த்துப் பாட்டு எழுதச் சொன்னார். காவேரியில் குளிக்கும் ஒரு பெண் கூறுவதுபோல”. அந்த வரிகள்: வெண் முத்து மாலைகள் வெள்ளி நுரையினில் சூடி வருகின்றாள் இங்கே வேண்டிய பேருக்கு வாரிக் கொடுத்திட ஓடி வருகின்றாள் இன்னொருத்தி: கண்ணியர் கண்ணென மாவடுப் பிஞ்சுகள் நீரில் மிதக்குதடி அது கண்ணல்ல பிஞ்சல்ல கெண்டைகள் அம்மாடி கும்மியடிங்கடி == ”ஏகே வேலன் கொடுத்த பாடலுக்கான சூழல் ஒரு ரிக்ஷாக்காரன் மனைவி இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்து விட்டு இறந்துவிடுகிறாள். ஒரு குழந்தை எங்கோ போய் விடுகிறது. இன்னொரு குழந்தையை ரிக்ஷாவிலேயே ஊஞ்சல் கட்டி தகப்பன் சவாரி ஏற்றி வந்து கொண்டிருக்கிறான். அழும் குழந்தைக்குத் தாலாட்டு இது”: நடக்குற உலகத்தைப் பார்த்துக்கோ எது நடந்தாலும் அதை ஏத்துக்கோ சுமக்கிறதெல்லாம் சுமந்துக்கோ — மனம் சோர்ந்து விடாமல் நிமிர்ந்துக்கோ அப்பாடி கொஞ்சம் தூங்கப்பா இந்த அப்பா சொல்றதைக் கேளப்பா மாணிக்க ஊஞ்சல் இல்லை என்ற மனக்குறை போலும் உனக்கு சாலையின் ஓரத்திலேதான் நம்ம சமுதாயம் இன்னும் கிடக்கு ஏழைகள் கொதிப்பது தீமை நாம் ஏக்கத்தில் வாழும் ஊமை அன்னை சுமந்தாள் உன்னை — இன்று அவளோ இங்கே இல்லை நம்மைச் சுமக்குது பூமி இது ஏனோ விளங்கிடவில்லை அவனுக்குத் தெரியும் அருத்தம் எனக்கு அதுதான் கொஞ்சம் வருத்தம் விட்டு விட்டு இழுக்குற மூச்சு அது வெளி வந்து போனாலும் போச்சு தட்டு கெட்டுப் பேசுற பேச்சு பல தவறுக்குக் காரணமாச்சு எலும்பால் அமைந்த தேகம் — இதற்கு ஏன் தான் இத்தனை சோகம் === திருமறையின் அருள் மொழியில் என்று நாகூர் ஹனீஃபா அவர்கள் பாடிய சலீம் அவர்கள் எழுதிய பாடலின் மெட்டில் அவர் எழுதிய இன்னொரு பாடல்: மாங்கனியில் வீடுகட்டி / வாழ்ந்திருப்பது என்ன? வண்டு நம் மனதினிலே காலமெல்லாம் / குடியிருப்பது என்ன? அன்பு கொம்பில் வளையாமல் / பழுத்த பழமென்ன? கன்னம் அதைக் கொத்திக் கொண்டு செல்ல / சுற்றி வருவதென்ன? எண்ணம் எண்ணம் பரிமாற / என்ன இங்கு வேண்டும்? தனிமை நாம் தனிமையிலே கலந்தால் / என்ன அங்கு தோன்றும்? இனிமை இனிமை காணும் போது / ஏற்பதுவது என்ன? புதுமை அந்த புதுமை காணும் வழியைக் / காட்டி வைத்தால் என்ன? பொறுமை ஆறு  புரண்டோடி / ஏறுவது எங்கே? கடலில் எழும் ஆசை புரண்டோடி / மோதுவது எங்கே ? உடலில் மோதியதும் உடம்பில் / மூளுவது என்ன? நெருப்பு அந்த நெருப்பணைந்து தேகம் / தணியும் மார்க்கமென்ன? இணைப்பு, வாழ்க்கை இணைப்பு. === எம்ஜியார் பற்றி முதன் முதலில் பாட்டு எழுதியவர் நாகூர் சலீம்தான். அந்தப் பாடலில் இருந்து சில வரிகள்: காய்ந்து சிவந்தது சூரிய காந்தி.. எங்கள் வீட்டுப்  பிள்ளை / ஏழைகளின் தோழன்… மின்னுகின்ற பொன்னைப் போன்ற / நிறத்தைப் பெற்றவர் மூடி வைக்கத் தெரியாத / கரத்தைப் பெற்றவர் எண்ணுகின்ற எண்ணத்திலும் / அறத்தைப் பெற்றவர் எல்லோரும் போற்றுகின்ற / தரத்தைப் பெற்றவர் தன்னலம் கருதாத / மனத்தைப் பெற்றவர் திராவிடம் என்னும் ஒரு இனத்தைப் பெற்றவர் உண்மையில் வழுவாத / நடத்தை பெற்றவர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் / இடத்தைப் பெற்றவர் அதற்காக எம்ஜியார் பாராட்டி கவிஞருக்கு 10,000 ரூபாய் கொடுத்ததாகவும் அது தன்னிடம் வந்து சேரவில்லை என்றும் அது பாடலைப் பாடியவருக்கே (நாகூர் ஹனிஃபா) சென்றது என்றும் கூறினார். அறிஞர் அண்ணா இறந்த பிறகு அவரைப் பற்றிய பலர் பாடல் இயற்றி, அவற்றைப் பிரபலமான பல பாடகர்கள் பாடினர். அவற்றில் கவிஞர்  சலீம் இயற்றி நாகூர் ஹனிஃபா பாடிய பாடல்கள் மிகச் சிறந்தவை என்று நான் சொல்வேன். அவற்றிலிருந்து சில வரிகள்: பாடல் 1: பட்டு மணல் தொட்டிலிலே.. / பூ மணக்கும் தென்றலிலே கொட்டும் பனி குளிரினிலே / கடல் வெளிக் கரையினிலே == பாடல் 2: சிரித்துச் செழித்த உன் முகம் எங்கே / சிந்திய செந்தமிழ் மொழி எங்கே சிரித்தது போதுமென்று நிறுத்திக் கொண்டாயோ / சிந்திக்கும் இடம் தேடித் தனித்துச் சென்றாயோ ஆசை விளக்குகளை அணைத்தாயோ / எங்கள் அண்ணா உன் தம்பிகளைப் பிரிந்தாயோ நேசக்கரம் விரித்து நெஞ்சில் எமை அணைத்த / நாட்களை  ஏன் தான் மறந்தாயோ ஆளும்  திறமை அன்புக்  கலைஞருக்கு / இருப்பதை நீ  அறிந்ததனால் ஓய்வு எடுத்தாயோ == அண்ணா, எம்ஜியார் ஆகியோரைப் புகழ்ந்தும், காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்தும் — ”ச்சீ ச்சீ கீழே இறங்கு / மக்கள் குரலுக்கு இணங்கு / ஆண்டது போதும் / மக்கள் மாண்டது போதும்/ நாட்டைக் கெடுத்தது போதும் / கொள்ளை அடித்தது போதும்” — கவிஞர் சலீம் பாடல்கள் எழுதியுள்ளார். ஆனால் அதனால் அவர் திமுக ஆதரவாளர் என்றோ, காமராஜரை வெறுத்தவர் என்றோ முடிவுக்கு வந்துவிட முடியாது. எந்த சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தன்னால் பாடல்கள் எழுத முடியும் என்பதை தனக்குத் தானே நிரூபித்துக் கொள்ளும் வாய்ப்பாகத்தான் அவற்றை அவர் கருதியிருக்கிறார். அப்பாடல்களிலிருந்து அவருடைய அரசியல் சார்பு பற்றி என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. அது பற்றி நான் அவரிடம் கேட்கவும் இல்லை. ஆனால் நாடகம், அரசியல் ஆகிய துறைகளில் அவர் எழுதிய கவிதைகள் அவருக்குப் புகழையும் பெயரையும் கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆன்மிகப் பாடல்கள்தான் அவரை நாடறிய வைத்தன. வலியுல்லாஹ்க்களைப் பற்றி அவர் எழுதிய பாடல்களும், அவர் எழுதிய மற்ற இஸ்லாமியப் பக்திப் பாடல்களும்தான் அவருக்கு ஒரு ஸ்திரமான இடத்தைப் பெற்றுத் தந்தன என்று சொன்னால் அது மிகையில்லை. குறைந்தது நூறு இஸ்லாமியப் பாடகர்களையாவது அவர் தனது பாடல்களால் உருவாக்கி இருக்கிறார். இதில் முதலில் குறிப்பிட வேண்டியவர் நாகூர் ஈ எம் ஹனிபா அவர்கள். நாகூர் ஹனிபா அவர்கள் தீவிரமான திமுக ஆதரவாளர். நாடறிந்த பாடகர். ஆனால் அவருடைய ஆரம்ப காலப் பாடல்களில் மிக மிகச் சிறப்பான பாடல்களை எழுதியது நாகூர் சலீம் என்ற உண்மை பலருக்குத் தெரியாது. நாகூர் ஹனிபாவுக்கு சலீம் எழுதிய பாடல்களின் முதல் வரிகளில் சில: 1. வாழ வாழ நல்ல வழிகளுண்டு 2. தீனோரே நியாயமா மாறலாமா 3. திருமறையின் அருள் மொழியில் விளைந்திருப்பது என்ன 4. ஓ வெண்ணிலா, அன்பான நபிகள் நாதர் எங்கே 5. அன்பு மார்க்கம் தந்த எங்கள் அஹ்மதே யா முஸ்தஃபா 6. இன்று வந்து நாளை போகும் நிலையிலே 7. அருள் மணக்குது, அறம் மணக்குது அரபு நாட்டிலே 8. உம் வாசல் தேடி வந்தோம் ஷாஹே மீரானே 9. அந்த நாளிலே மக்கா நகரம் இருந்ததைக் கேளுங்கள் 10. உயிரிருக்கும்வரை உமை மறவேனே 11. இணையில்லாத அருளின் உருவே, ஹிந்து முஸ்லிம் போற்றும் குருவே இதில் 3, 7, 9 ஆகிய எண்களில் உள்ள பாடல்கள் இஸ்லாமிய வரலாற்றை மரபுக் கவிதையில் வடித்துக் கொடுப்பவையாகும். (கூடிய விரைவில் இந்த பாடல்களை mp3 கோப்புகளாக மாற்றி இணையத்தில் ஏற்றி வைக்க எண்ணம், இன்ஷா அல்லாஹ்). சலீம் அவர்கள் திரைப்படத் துறையில் பாடல்கள் எழுத எடுத்துக் கொண்ட முயற்சிகள் இதுவரை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சத்யராஜ் நடித்த மகா நடிகன் என்ற படத்தில் ”கோடம் பாக்கம் ஒன்னு கோட்டைக்குத்தான் போகுதடி” என்ற பாடல் எழுதினார். இறையன்பன் குத்தூஸ் என்பவர் பாடியது. ஆனால் நிறைய  ஒலி நாடாக்களும், குறுந்தகடுகளும், ஆல்பங்களும் வெளிவந்துள்ளன. புகழ் பெற்ற மொகலே ஆஸம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்-கிற்கு அப்படத்தின் நான்கு புகழ்பெற்ற பாடல்களுக்கு, அதே மெட்டில் தமிழில்  பாடல்கள் எழுதியுள்ளார். அதனை இங்கே காணலாம். இது தவிர, நாகூரார் மகிமை என்ற திரைப்படத்துக்கான கதை,வசனம், பாடல்களையும் எழுதினார். ஆனால் படத்தயாரிப்பு சில காரணங்களால் நின்று போனது. அதற்காக அவர் எழுதிய பாடல்களை எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.பி.பி.,வாணி ஜெயராம் போன்றோர் பாடினர். விரைவில் அப்பாடல்களையும் வலையேற்றுகிறேன். சலீம் அவர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு தந்தை : ஷரீப் பெய்க் தாயார் : கதீஜா நாச்சியார் பிறப்பு — 21.02.36 நெல்லுக்கடைத் தெரு, நாகூர் 2000 — கலைமாமணி விருது பின் குறிப்பு: கவிஞர் சலீம் அவர்கள் எனக்கும் தாய் மாமா ஆவார். 6 சமகால மொழிபெயர்ப்பும் இஸ்லாமியப் படைப்பாளிகளும் சமகால மொழிபெயர்ப்பும் இஸ்லாமியப் படைப்பாளிகளும் கடந்த 01.10.11 அன்று குற்றாலத்தில் நடந்த இஸ்லாமிய படைப்பாளிகளுக்கான பயிலரங்கில் நான் வாசித்த  கட்டுரை அலகிலா அருளும் அளவிலா அன்பும் இலங்குமோ ரிறையின் இனிய பேர் போற்றி. அஸ்ஸலாமு அலைக்கும். இறையருட் கவிமணியின் வார்த்தைகளில் என் உரையைத் தொடங்கியிருப்பது இந்த தலைப்புக்கு மிகவும் பொருத்தமானது என்று நினைக்கிறேன். “பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம்” என்ற அரபி வாக்கியத்திற்கு “அலகிலா அருளும் அளவிலா அன்பும் இலங்குமோ ரிறையின் இனிய பேர் போற்றி” என்பதைவிட  சிறப்பான கவிதா மொழிபெயர்ப்பை நான் இதுவரை பார்க்கவில்லை. தமிழ் இலக்கியத்திற்கு தமிழ் முஸ்லிம்களின் பங்கு எவ்வளவு மகத்தானது என்பதை விளக்க இந்த இரண்டு வரிகளே சான்று. சமகால மொழிபெயர்ப்புகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் மொழிபெயர்ப்பு என்ற கலை பற்றிப்  பேசவேண்டியுள்ளது. சமகாலம் என்று தலைப்பு சொல்லியிருந்தாலும், சமகாலத்துக்கு முந்தியும் கொஞ்சம் பின்னோக்கிப் போய்ப் பார்க்க வேண்டியுள்ளது. மொழிபெயர்ப்பு என்பது ஓர் அற்புதமான ஆனால் சவால் மிகுந்த கலையாகும். ஒரு நல்ல மொழிபெயர்ப்பைச் செய்வது எளிதான காரியமல்ல. இரண்டு அல்லது பல மொழிகள் பற்றிய  அறிவு ஒருவரை நல்ல மொழிபெயர்ப்பாளராக மாற்றிவிடாது. மொழியறிவோடு, இலக்கியம், இலக்கிய வடிவ வகைகள், வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, தத்துவம், மார்க்கம், சட்டம் – இப்படிப் பல துறைகளிலும் கணிசமான பரிச்சயம் தேவைப்படுகிறது. அடிப்படையில் மொழியானது பண்பாட்டின் குறியீடாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எப்படி மொழிபெயர்க்க வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் போதாது. எப்படி மொழிபெயர்க்கக் கூடாது என்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். மைக்ரோ இகனாமிக்ஸ் பாடப்புத்தகத்தில் “The govt has a big role to play” என்பதை “அரசு விளையாடுவதற்கு ஒரு பெரிய உருளையை வைத்திருக்கிறது” என்று தமிழாக்கம் செய்திருந்ததாக பல ஆண்டுகளுக்கு முன்னால் துக்ளக் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது தெரிந்திருக்கலாம். வார்த்தையை மட்டும் பார்த்தால் இப்படி அபத்தமாகத்தான் போய் முடியும். தூயதமிழ் என்ற பெயரில் ரோஜா ரோசாவானதிலிருந்து அது தன் அழகையும் நறுமணத்தையும் இழந்து தவிக்கிறது. மூலத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற ஆவலில், ”Shit, he said” என்ற வாக்கியத்தை “மலம், அவன் சொன்னான்” என்று மொழி பெயர்க்கக் கூடாது. தமிழ்ப்படுத்துவது வேறு, தமிழைப் படுத்துவது வேறு. அந்த வாக்கியம் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தால், அதை நான், “’அடச்சே’ என்று சொன்னான்” என்று தமிழாக்கம் செய்திருப்பேன். கல்லூரி மாணவனாக இருந்தபோது வாலஸ் ஸ்டீவன்ஸ் என்ற அமெரிக்க்க் கவிஞருடைய Of Mere Being என்ற கவிதையை “வெறும் இருப்பு பற்றி” என்று தமிழாக்கம் செய்திருந்தேன். ஆனால் அதே கவிதையை என் பேராசிரியர் ஆல்பர்ட் “சும்மா இருப்பது பற்றி” என்ற தலைப்பில் ஏற்கனவே தமிழாக்கம் செய்து வைத்திருந்ததைப் படித்தபோதுதான் மொழிபெயர்ப்பில் அனுபவம் என்பதும், ஆழமான உள் வாங்குதல் என்பது எவ்வளவு முக்கியம் என்பது எனக்குப் புரிந்தது. மொழியாக்கம் செய்பவர்கள் பண்பாட்டையும் பயன்பாட்டையும் மனதில் வைத்து செய்ய வேண்டும். காஃபியை காஃபியாகவே ஏற்றுக்கொள்வதால் அதன் சுவை குறையப் போவதில்லை.  அதைக் “கொட்டை வடி நீர்” என்று தமிழாக்கம் செய்யும்போது அதன்  அர்த்தம் தேவையில்லாத பரிணாமங்களை எடுத்துவிடுகிறது! ’முண்டக் கூவி’ என்ற ஒரு பதத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு நான் அரசாங்கக் கடிதங்களில் கண்டேன். அரசாங்கம் யாரையோ திட்டுகிறது என்றுதான் அப்போது நினைத்தேன். ஆனால் அது trunk call என்பதன் தமிழாக்கமாம்! ’ட்ரங்க்’ என்றால் ’முண்டம்’, ’கால்’ என்றால் ’கூவுதல்’ எனவே முண்டக் கூவி! தண்டங்களும் முண்டங்களும் அரசு மொழிபெயர்ப்புத் துறையில் இருந்ததனால் ஏற்பட்ட விளைவுகள் என்று அவற்றைக் குறிப்பிடலாம்! மொழிபெயர்ப்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 1.மொழிபெயர்க்க எளிமையானவை, 2.மொழிபெயர்க்க கடினமானவை மற்றும் 3. மொழிபெயர்க்க முடியாதவை. The meeting begins at 10 am tomorrow என்பதை “நாளைக்காலை பத்து மணிக்கு கூட்டம் தொடங்குகிறது” என்று தமிழாக்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இதில் கலாச்சாரச் சிக்கலோ வேறுவிதமான நுட்பங்களோ இல்லை. மொழிபெயர்க்க எளிமையானது என்ற வகையில் இப்படிப்பட்டவற்றைச் சேர்க்கலாம். இரண்டாவது வகை மொழி பெயர்க்கக் கடினமானவை. சில உதாரணங்களைப் பார்க்கலாம். இப்ராஹீம் நபியும் அவர்களது மகனார் இஸ்மாயீலும் இறையில்லமான க’அபாவைப் புனர் நிர்மாணம் செய்துவிட்டு, “எங்களுடைய இறைவனே, (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக” (2:127) என்று பிரார்த்திக்கிறார்கள். இதில் திருமறையின் அரபி மூலத்தில் “ரப்பனா, தகப்பல் மின்னா” என்று மட்டும்தான் இருக்கிறது. “உனக்காக நாங்கள் செய்த இப்பணியை” என்ற வாக்கியம் இல்லை. ஆனால் அது சொல்ல வரும் அர்த்தம் அதுதான். 1929-ல்  வெளியான ஆ.கா அப்துல் ஹமீது பாக்கவியின் தர்ஜுமத்துல்குர்’ஆன் மொழிபெயர்ப்பு இது. இது நுட்பமான, ஆழமான மொழிபெயர்ப்பாகும். அவர்களின் தமிழாக்கம் முழுவதிலுமே இத்தகையை வார்த்தைகளும், வாக்கியங்களும் அடைப்புக்குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்கும். அவைகள் நம் புரிந்துகொள்ளலை எளிமையாக்கும் பொருட்டு செய்யப்பட்ட உபரி சேவையாகும். ஆழமான புரிந்து கொள்ளலின் வெளிப்பாடுமாகும். மூலவன் என்ன சொல்ல நினைக்கிறான் என்று புரிந்துகொண்டால்தான் திருமறையை இப்படித் தமிழாக்கம் செய்ய முடியும். சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு கஜலைக் கேட்டு சித்தேன். யார் பாடியது, வார்த்தைகளின் அர்த்தமென்ன என்றெல்லாம் தெரியாது. ஆனால் “பாவோன் பாரி ஹோகயீ” என்ற சொற்கள் மட்டும் அதில் பல்லவியைப் போல திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன.  அதற்கு என்ன அர்த்தம் என்று உர்து நன்றாகத் தெரிந்த நண்பரைக் கேட்டேன். ’பாவோன்’ என்றால் பாதங்கள், ’பாரீ ஹோகயீ’ என்றால் வீங்கிப் போயிருக்கின்றன என்று சொன்னார். ஆனால் ஒரு பெண்ணை அந்த வார்த்தைகளைச் சொல்லித் தோழிகள் கிண்டல் செய்வது போன்ற தொனியில் அப்பாடல் அமைந்திருந்தது. அர்த்தம் தெரிந்த பின்னும் அர்த்தம் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன். உர்து ஆழமாகத் தெரிந்த இன்னொரு நண்பர்தான் பிறகு விளக்கினார். அந்தச் சொற்கள் ’இடியம்’ எனும் மரபுத் தொடர் வாக்கியம். ஒரு பெண், குழந்தை உண்டாகியிருப்பதை அது குறிக்கிறது. ஏனெனில் கர்ப்பிணிகளுக்கு பாதங்கள் வீங்கிப் போவதுண்டு. குழந்தை தரிப்பது, பாதம் வீங்குவது, அவை இரண்டிற்குமான தொடர்பு, அதை இதால் குறிக்கின்ற கலாச்சாரம் – இவையெல்லாம் தெரிந்தால்தான் அப்பாடலை விளங்கிக் கொள்ளவோ மொழிபெயர்க்கவோ முடியும், அல்லவா? எனவே மொழிபெயர்ப்பு செய்வதற்கு முன் அம்மொழிகளின் பின்னால் இருக்கும் கலாச்சாரம், பண்பாடு, மரபுத் தொடர்கள் ஆகியவற்றிலும் பரிச்சயம் இருப்பது அவசியம். Do not carry coal to Newcastle என்பதை ”திருப்பதிக்கே லட்டா?”, “நாகூருக்கே குலாப்ஜானா?”, “ஆம்பூருக்கே பிரியாணியா?”, “குற்றாலத்துக்கே குளிர்பதனமா?” என்றோ இதையொத்த வேறு வாக்கியங்களிலோ தமிழ்ப்படுத்த வேண்டும். ஏனெனில் இங்கிலாந்தின் நியூகாஸ்ல் நகரில் இருந்துதான் நிலக்கரி அதிகமாக ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தது. அதற்கே நிலக்கரி கொண்டு போவது அபத்தமான செயலாகிவிடும். சாலையெல்லாம் தங்கமாக இருந்த சுலைமான் நபியின் ராஜ்ஜியத்துக்கு பரிசளிக்க தங்கத்தை ஒரு தட்டில் வைத்து எடுத்துச் சென்ற பல்கீசின் மனநிலைதான் ஞாபகம் வருகிறது. எனவே இத்தகைய மரபுத் தொடர்களை தமிழாக்கம் செய்ய வரலாறு தெரிந்திருக்க  வேண்டியிருக்கிறது. Do not flog a dead horse என்ற ஆங்கில மரபுத் தொடரை “செத்த பாம்பை அடிக்காதே” என்றும், Do not cast pearls before swine என்பதை ”கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை” என்றும் தமிழ்ப்படுத்த வேண்டும். இங்கே நாம் கவனிக்கவேண்டியது மரபுத்தொடர்களின் அர்த்தம் மட்டுமல்ல, மிருகங்களின் பெயர்களும்தான். ஆங்கிலத்தில் குதிரையாக இருந்தது தமிழில் பாம்பாகவும், ஆங்கிலத்தில் பன்றியாக இருந்தது தமிழில் கழுதையாகவும் மாறிவிடுகிறது! இந்த உருமாற்றம் கலாச்சார, பண்பாட்டு மாற்றம். இதைப் புரிந்து கொள்ளாமல் மொழிபெயர்த்தால் கிழிஞ்சுது கிருஷ்ணகிரி! கிருஷ்ணகிரி எப்படிக் கிழியும் என்று நீங்கள் கேட்பீர்களேயானால் அரசு மொழிபெயர்ப்புத் துறையில் பணிபுரியும் தகுதி உங்களுக்கு வந்துவிட்டது ன்று அர்த்தம்! மூன்றாவது வகை மொழி பெயர்க்கவே முடியாத விஷயங்கள். ”தில்லா டாங்கு டாங்கு, நீ திருப்பிப் போட்டு வாங்கு” என்ற பாடலை எவ்வளவு பாண்டித்தியத்தோடு தமிழாக்கம் செய்ய முயன்றாலும் தமிழில் உள்ள அழுத்தம், கேட்பவர் மனதில் ஏற்படும் கிளர்ச்சி போன்றவையை எந்த மொழிபெயர்ப்பாலும் ஏற்படுத்த முடியாது. ”நீச்சோறு”, “சீம்பால்”, “கலிச்சல்ல போவா”, “படிய உளுந்துருவா” போன்ற வார்த்தைகளும் வாக்கியங்களும்கூட இப்படிப்பட்டவையே. இவற்றுக்கு விளக்கம் தரலாம். ஆனால் இன்னொரு மொழிக்கு அப்படியே கொண்டுபோக முடியாது. ஷேக்ஸ்பியரைத் தமிழ்ப்படுத்தும்போது நிகழ்வதும் இதுதான். உடல் கிடைத்துவிடுகிறது. ஆனால் உயிரை ஷேக்ஸ்பியரே வைத்துக்கொள்கிறார்! They were Jung and Freudened என்றொரு வாக்கியம் ஜேம்ஸ் ஜாய்ஸ் என்ற அமெரிக்க நாவலாசிரியரின் Finnegans Wake என்ற நாவலில் வரும். விளக்கமாக சில பத்திகள் எழுதலாமே தவிர, இந்த வாக்கியத்தைத் தமிழ்ப்படுத்தவே முடியாது. ஏனெனில் யங், ஃப்ராய்டு ஆகிய உளவியலாளர்களின் பெயர்களை வினைச்சொல்லாக்கி ஜேம்ஸ் ஜாய்ஸ் இங்கே விளையாடுகிறார். யங்கும், ஃப்ராய்டும் மனநோய்கள் பற்றி என்னவெல்லாம் சொல்லியிருந்தார்கள், அந்த மாதிரியான வகையில் மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் என்று அந்த வாக்கியம் சொல்வதாக விளங்கிக் கொண்டு விளக்கக் குறிப்பு கொடுக்கலாமே தவிர, அந்த வாக்கியம் மாதிரியானதொரு வாக்கியத்தைத் தமிழில் தருவது சாத்தியமில்லை. அடுத்து நாம் கவனிக்க வேண்டியது மூல ஆசிரியரின் நோக்கம். அந்த நோக்கம் புரியாமல் மொழி பெயர்த்தால் எவ்வளவு சிறப்பாக மொழி பெயர்த்தாலும் அது சரியாக அமையாது. உமர் கய்யாமின் ருபாயியாத்-துக்கு ஆங்கிலத்தில் பல மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. ஆனால் உலகின் தலைசிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பு என்று சொல்லப்படுவது ஃபிட்ஸ் ஜெரால்டின் மொழிபெயர்ப்புதான். ஆனால் உமர் கய்யாமின் சூஃபி பரிமாணத்தை முற்றிலுமாகப் புறக்கணித்த மொழிபெயர்ப்பு அது.  அது உமர் கய்யாமின் உடலை மட்டும் எடுத்துக்கொண்டது. உயிரை விட்டுவிட்டது. தமிழில் நான் அதை மொழிபெயர்த்தபோது இந்த உயிர், உடல் விஷயத்தை மனதில் வைத்தே செய்தேன். ஒரு மொழிபெயர்ப்பு மூலத்துக்கு முற்றிலும் உண்மையாக இருக்க முடியுமா என்ற கேள்விக்கும் நாம் விடை காண வேண்டியுள்ளது. என்னைப் பொறுத்தவரை முடியாது என்றே சொல்வேன். சில இடங்களில் மூலத்துக்கு இணையாகவும், சில இடங்களில் மூலத்தைவிட சிறப்பாகவும், சில இடங்களில் மூலத்தைவிட சிறப்பு குறைந்தும் ஒரு மொழிபெயர்ப்பு இருக்கும் சாத்தியம் உண்டு. மூல மொழி, மொழி பெயர்க்கப்படும் மொழி ஆகியவற்றின் சிறப்புக்கள், எல்லைகள், இலக்கணம், சாத்தியக்கூறுகள் முதலியன இதற்குக் காரணம். சில உதாரணங்கள்: இமாம் கஸ்ஸாலியின் இஹ்யாவின் ஒரு பகுதியாக இருந்த மின்ஹாஜுல் ஆபிதீன் என்ற நூலை அப்துல் வஹ்ஹாப் பாகவி பக்தர்களின் பாதை என்ற பெயரில் தமிழ்ப்படுத்தி இருந்தார்கள். ‘மின்ஹாஜ்’ என்றால் ‘பாதை’ என்று பொருள். ‘ஆபிதீன்’ என்றால் ‘இபாதத்’ செய்பவர்கள் என்று பொருள். எனவே ‘பக்தர்களின் பாதை’ என்பது, தலைப்பைப் பொறுத்தவரை, மூலத்துக்கு இணையானது என்று கூறலாம். அதே அப்துல் வஹ்ஹாப் பாகவி கஸ்ஸாலியின் இன்னொரு நூலான இல்ஜாமுல்அவாம்அன்இல்மில்கலாம் என்ற நூலை தர்க்கத்து அப்பால் என்ற தலைப்பில் தமிழ்ப்படுத்தி இருந்தார்கள். அரபியில் உள்ள தலைப்பை அப்படியே தமிழ்ப்படுத்தினால் “பாமரர்களுக்கான விதிகளும் இறையியல் தொடர்பான அறிவும்” என்று சொல்லாம். அனால் இந்த தலைப்பு நீளமானதாகவும், நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டாததாகவும் உள்ளது. எனவே நூலின் உள்ளடக்கத்தைக் கருத்தில் கொண்டு தர்க்கத்துக்கு அப்பால் என்ற தலைப்பில் அந்த நூலை வெளியிட்டார்கள். அப்துல் வஹ்ஹாப் பாகவி எழுதிய 50 அல்லது அதற்கும் மேற்பட்ட நூல்களில் மிக முக்கியமான நூல்களில் ஒன்றான தர்க்கத்துக்கு அப்பால், தலைப்பைப் பொறுத்தவரை, மூலத்தைவிட ஒரு படி மேலானதாக இருப்பது வெளிப்படை. In the Line of Fire என்ற தலைப்பில் பாகிஸ்தானின் முன்னால் அதிபர் பர்வேஷ் முஷர்ரஃப் அவரது சுயசரிதம் எழுதினார். The Audacity of Hope என்ற தலைப்பில் தனது அரசியல் வாழ்க்கை பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு நூல் எழுதினார். அவ்விரண்டையும் நான் கிழக்கு பதிப்பகத்திற்காக தமிழாக்கம் செய்து கொடுத்தேன். தீயின் எல்லைக் கோட்டில் என்று முன்னதற்கும், நம்பிக்கையின் பிடிவாதம், உடும்பு நம்பிக்கை என்று இரண்டு தலைப்புகளை பின்னதற்கும் கொடுத்திருந்தேன். ஆனால் கிழக்கின் பிரதான ஆசிரியர் நண்பர் பா.ராகவன் அத்தலைப்புகளை, புத்தகம் விற்பதற்கு ஏற்றவாறு, உடல் மண்ணுக்கு என்றும் நம்மால் முடியும் என்றும் மாற்றிவைத்தார். அவர் கொடுத்த இரண்டு தலைப்புகளுமே விற்பனைக்கு உதவியதா என்று தெரியாது. ஆனால் தலைப்பைப் பொறுத்தவரை மூலத்துக்கு இணையானவை அல்ல என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். பகுதி 2 சமகால மொழிபெயர்ப்புகள் என்று சொல்லும்போது விரல் விட்டு எண்ணிவிடக் கூடியவர்களே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. சமகாலம் என்பதை இருபது மற்றும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இருபத்தியோறாம் நூற்றாண்டு என்று வைத்துக் கொண்டால், 19-ம் நூற்றாண்டுதான் கணிசமான, முக்கியமான தமிழாக்கங்கள் அதிகமாக வந்த காலம் என்று சொல்ல வேண்டும். அந்த நூற்றாண்டில் இஸ்லாம் தொடர்பான நிறைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருமறையும் நபிமொழியும் பலரால் மொழிபெயர்க்கப்பட்ட நூற்றாண்டு அது. []குலாம் காதிர் நாவலர்(1833—1908) ”சமகால முஸ்லிம் மொழி பெயர்ப்பாளர்களின் தந்தை” என்று நாகூர் மகாவித்துவான், பன்மொழிப் புலவர், நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நக்கீரர், குலாம் காதிர் நாவலரைச் சொல்ல வேண்டும். தமிழிலக்கியத்திற்கான நாகூரின் பங்களிப்பு அவரிடமிருந்தே தொடங்குகிறது என்று சொன்னால் மிகையாகாது. 19ம் நூற்றாண்டில் நாகூரில் வாழ்ந்த மூன்று ராட்சச இலக்கிய ஆளுமைகளில் இவர் முதல்வர்.  இன்னொருவர் என் முன்னோரான வண்ணக் களஞ்சியப் புலவர். மூன்றாமவர் புலவர்  நாயகம் என்று அறியப்படும் செய்கு அப்துல் காதிர் நயினார் லப்பை ஆலிம். புலவர் நாயகம் நான்கு காப்பியங்களையும் மற்ற இருவரும் மூன்று காப்பியங்களையும் ஆக்கியவர்கள். []19-ம் மையப்பகுதியில் துருக்கிப் பேரரசுக்கும், இரஷ்யப் பேரரசுக்கும் இடையே தொடர்ந்து பல்லாண்டுகள் நிகழ்ந்த போரினை மையப்படுத்தி அதே நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரபல ஆங்கில வரலாற்று நூலாசிரியர் ஜார்ஜ் வில்லியம் ரைனால்ட்ஸ் ஆங்கிலத்தில் Omar, A Tale  of the War என்ற தலைப்பில் ஒரு வரலாற்று நூலை எழுதினார். ஆங்கிலத்தில் மூன்று பாகங்களாக வெளிவந்த இந்த பிரமாண்டமான நூலை, தமிழில் நான்கு பாகங்களாக, பல்வேறு காலக்கட்டங்களில் மொழிபெயர்த்து, நூறாண்டுகளுக்கு முன்பே வெளியிட்டவர் குலாம் காதிர் நாவலர். ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்துவது, பொருத்தமான இடங்களில் புதிய சொற்களை ஆய்வது, இஸ்லாமியத் தமிழ்ப் பண்பாட்டு வழக்குச் சொற்களை உரிய இடங்களில் கையாள்வது, வர்ணிக்கும் இடங்களில் தூய தமிழ்ப் புலமையை வெளிப்படுத்துவது என நடையில் பல திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார் மகாவித்வான். உதாரணமாக தியோடோர் என்ற நாயகனின் பெயரை அப்படியே பயன்படுத்தியுள்ளார். ’தியோதோரு’ என்று எழுதவில்லை. ஷேக்ஸ்பியரை ’செகப்பிரியர்’ என்றும், சாக்ரடீஸை ’சோக்ரதர்’ என்றும் தமிழ்ப்படுத்தும் பண்டிதர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. இந்நூலை கல்தச்சன் பதிப்பகம் சார்பில் புதுக்கல்லூரி பேராசிரியர் முரளி அரூபன் அழகிய மறுபதிப்பு செய்து தமிழுக்கு அரிய தொண்டாற்றியுள்ளார். சென்ற 100 அல்லது 150 ஆண்டுகளில் தமிழில் எழுதப்பட்ட படைப்புகள், மற்றும் மொழிபெயர்ப்புகள் யாவும் மார்க்கம் மற்றும் ஆன்மிகம் தொடர்பானவையாகவே இருந்துள்ளன. ஆரம்பத்தில் திருமறையும் திருநபியின் வாக்கும், வாழ்வும்தான் மொழிபெயர்ப்பாளர்களின் கவனத்துக்கு வந்திருக்கின்றன. கீழே கொடுத்துள்ள அட்டவணை இதைப் புரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்: +-------------+-------------+-------------+-------------+-------------+ | வரிசை எண் | ஆண்டு | ஆசிரியர் | தம | குறிப்பு | | | | | ிழாக்க நூல் | | +-------------+-------------+-------------+-------------+-------------+ | 1 | 1908 | கா.மி. | அல்குர்’ஆன் | விளக்க உரை | | | | அப்துல்காதர | | | | | | ் ராவுத்தர் | | | +-------------+-------------+-------------+-------------+-------------+ | 2 | 1927,31 | ப | ஜவாஹிரு | விளக்கவுரை, | | | | ா.தாவூத் ஷா | ல்ஃபுர்கான் | 2 பாகங்கள் | +-------------+-------------+-------------+-------------+-------------+ | 3 | 1929 | ஆ. | தர்ஜுமது | பொருளுரை | | | | கா.அப்துல் | ல் குர்’ஆன் | | | | | ஹமீது பாகவி | | | +-------------+-------------+-------------+-------------+-------------+ | 4 | | S.S.அப்துல் | திருமற | பொருளுரை | | | | காதர் பாகவி | ைத் தமிழுரை | | +-------------+-------------+-------------+-------------+-------------+ | 5 | | ஈ.எம்.அப்த | அன்வாரு | ஏ | | | | ுல் ரஹ்மான் | ல் குர்’ஆன் | ழு பாகங்கள் | +-------------+-------------+-------------+-------------+-------------+ | 6 | | P. | தர்ஜுமது | பொருளுரை | | | | S.K.முஹம்மத | ல் குர்’ஆன் | | | | | ு இப்ராஹீம் | | | +-------------+-------------+-------------+-------------+-------------+ | 7 | 1992 | அல்பாகியது | ஜவாஹிரு | விளக்கவுரை | | | | ஸ் ஸாலிஹாத் | ல் குர்’ஆன் | | +-------------+-------------+-------------+-------------+-------------+ | 8 | | கே | குர்’ஆன் | விளக்கவுரை | | | | .ஏ.நிஜாமுத் | | | | | | தீன் மன்பவி | | | +-------------+-------------+-------------+-------------+-------------+ | 9 | | எம்.அப | குர் | பொருளுரை | | | | ்து வஹ்ஹாப் | ’ஆன் தர்ஜமா | | +-------------+-------------+-------------+-------------+-------------+ | 10 | 2002 | ஏ.குத | | | | | | ்புத்தீன் அ | | | | | | ஹ்மத் பாகவி | | | +-------------+-------------+-------------+-------------+-------------+ R.அப்துர் ரவூஃப் பாகவி IFTதிருக்குர்’ஆன்பொருளுரை11 பி.ஜெய்னுல் ஆபிதீன்திருக்குர்’ஆன்பொருளுரை இதல்லாமல் குர்’ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் தமிழாக்கம் வழங்கும் பல இணைய தளங்கள் உள்ளன. நூல் வடிவிலான நபிமொழிகளின் தொகுப்புக்கும், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றுக்கும் சென்ற நூற்றாண்டுதான் வழிகாட்டுகிறது. சில முக்கியமான மொழிபெயர்ப்புகள்: +-----------------+-----------------+-----------------+-----------------+ | வரிசை எண் | ஆண்டு | ஆசிரியர் | தமிழாக்க நூல் | +-----------------+-----------------+-----------------+-----------------+ | 1 | | பி.எஸ்.கே.முக | திர்மிதி | | | | ம்மது இப்ராஹிம் | | +-----------------+-----------------+-----------------+-----------------+ | 2 | 1932 | பா.தாவுத்ஷ | ந | | | | ா, ஏ.என்.முஹம்ம | பிகள் நாயக மான் | | | | த் யூசுப் பாகவி | மியம், தாருல் இ | | | | | ஸ்லாம் வெளியிடு | +-----------------+-----------------+-----------------+-----------------+ | 3 | 1954 | உத்தம பாளையம் | சஹீஹுல் பு | | | | எஸ் எஸ் முஹம்ம | காரி 9 பாகங்கள் | | | | து அப்துல் காதி | | | | | ர் ஸாஹிபு பாகவி | | +-----------------+-----------------+-----------------+-----------------+ | 4 | 1964 | உத்தம பாளையம | அன்வாறு மிஷ்க | | | | ் பி.எஸ்.கே.முஹ | ாத்தில் மஸாபீஹ் | | | | ம்மது இப்ராஹீம் | | +-----------------+-----------------+-----------------+-----------------+ | 5 | | எஸ்.எஸ். அப்துல | சஹீஹுல் பு | | | | ் காதர் பாக்கவி | காரி 3 பாகங்கள் | +-----------------+-----------------+-----------------+-----------------+ | 6 | 1994 | ரஹ | புக | | | | ்மத் அறக்கட்டளை | ாரி, 7 பாகங்கள் | +-----------------+-----------------+-----------------+-----------------+ | 7 | 1997 | எம். அப்துல் | ரியாளுஸ | | | | ரஹ்மான் பாகவி, | ் ஸாலிஹீன் நபிம | | | | பஷாரத் வெளியீடு | ொழித்தொகுப்பு, | | | | | மூன்று பாகங்கள் | +-----------------+-----------------+-----------------+-----------------+ | 8 | | எம்.ஆர்.எம். அப | நபிமொழிகள் | | | | ்துற்றஹீம், ஆர் | | | | | .பி.எம். கனி, ச | | | | | ையிது இப்ராஹீம் | | +-----------------+-----------------+-----------------+-----------------+ | 9 | 2010 | உ | அர் ரஹீக் அல் | | | | மர் ஷரீஃப் இப்ன | மக்தூம், தாருல | | | | ு அப்துல் சலாம் | ் ஹுதா வெளியீடு | +-----------------+-----------------+-----------------+-----------------+ திருமறை மற்றும் நபிமொழித் தொகுப்புகளைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பாளர் முக்கியமில்லாமல் போகிறார். ஆனால் மற்ற நூல்கள் மொழிபெயர்க்கப்படுகையில் தனி மனிதர்களும் அவர்களது பங்களிப்பும் முக்கியத்துவம் பெறுகின்றன. திருச்சி சையித் இப்ராஹீம் 75க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள மகா ஆளுமைகளுள் ஒருவரான திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் சையித் இப்ராஹீம் அவர்கள் அபுல்கலாம் ஆஸாத் எழுதிய ஜுனைத் பக்தாதி என்னும் நூலைத் தியாகம் என மொழிபெயர்த்தளித்தார். []மணவை முஸ்தபா பல்துறை அறிஞராகத் திகழும் இன்னொரு பெரிய ஆளுமை அறிவியல் தமிழின் முன்னோடி கலைமாமணி மணவை முஸ்தபா. நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள இவர் மொழி பெயர்ப்புத்துறைக்கு ஆற்றிய தொண்டு சிறப்பானது. யுனெஸ்கோ வெளியீடான கூரியர் இதழ், தமிழாக்கம் பெற்று வெளிவருவது இவரது மொழிபெயர்ப்புப் பணிக்கு நல்ல எடுத்துக்காட்டு. ஆங்கிலத்தில் மைக்கேல் ஹெச் ஹார்ட் எழுதிய புகழ்பெற்ற The Hundred எனும் நூலை நூறுபேர் என மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். ம.மு.உவைஸ் இலங்கைத் தமிழறிஞராகிய இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகப் பணியாற்றியவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதும் திறம் பெற்ற இவர். எம்.ஆர்.எம்.மின் நபிகள் நாயகம் நூலைச் சிங்கள மொழியில் மொழிபெயர்த்துள்ளார். []சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் எம்.ஆர்.எம். அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய Muhammadthe Prophet என்ற நூலை தமிழில் இறைத்தூதர் முஹம்மத் என்ற  பெயரில் சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் மொழிபெயர்த்துள்ளார். மேற்குறிப்பிட்ட நூல்களைத் தவிர, மிகச்சிறந்த உரைநடை மற்றும் கவிதை நூல்கள் பலவற்றை பல இஸ்லாமிய அறிஞர்கள் தமிழாக்கம் செய்துள்ளனர். ஆர் பி எம் கனி கடந்த காலத்தில் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் ஆர்பிஎம் கனி. []நெல்லை மாவட்டத்திலுள்ள ரவண சமுத்திரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். 1940-ம் ஆண்டு ஜனாப் ஜின்னா என்ற நூலை வெளியிட்டுத் தமிழிலக்கிய உலகில் அறிமுகமா ஆர்பிஎம்-மின் 1. பேரின்ப ரசவாதம்(2008), கிதாபுல் மஸ்னவீ (2009) ஆகிய இரண்டும் மிக முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களாகும். முன்னது இமாம் கஸ்ஸாலியின் ”இஹ்யா”வின் சுருக்கமான ”கீமியாயெ ச’ஆதத்” என்ற பாரசீக நூலின் தமிழாக்கமாகும். (கீமியாவை பாரசீக மூலத்திலிருந்து முதன் முதலில் மொழிபெயர்த்தது நெல்லிகுப்பம் அப்துல் ரஹ்மான் ஹஸ்ரத் அவர்கள். அந்த பிரதி கிடைக்கவில்லை. காலம் வெளியீடு முதலிய எந்த விபரமும்  தெரியவில்லை). பின்னது மௌலானா ரூமியின் ”மஸ்னவி” என்ற பாரசீக ஆன்மிகக் காவியத்தின் முதல் பாகத்தின், 2011 பாடல்களின் உரைநடையிலான தமிழாக்கமாகும். யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் வெளியீடு. உமர் கய்யாமின் ”ருபாயியாத்”தையும் இவர் மொழிபெயர்த்துள்ளார். அதிலிருந்து சில வரிகள்: சத்தியத்தைப் போல / மதுவும் வாயில் கசக்கிறது. எனவே, இத்திராட்சை ரஸத்தை / நாம் சத்தியம் என்றழைப்போம். மஸ்னவியை தக்கலை / கோட்டாறு பீர்முஹம்மது அவர்களும் மொழிபெயர்த்துள்ளார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. காலத்தால் மிக முந்திய மொழிபெயர்ப்பு இது என்றும், அதன் உள்ளே பல் மொழிகளில் இருந்து மேற்கோள்களும் காட்டப்பட்டிருந்தன என்றும் கூறப்படுகிறது. இவ்வாறான முக்கிய தமிழாக்கங்களில் உள்ள பிரச்சனை அதன் பிரதிகள் இப்போது கிடைக்கும் நிலையில் இல்லாததுதான். எம் ஆர் எம் முஹம்மது முஸ்தபா எம் ஆர் எம் என்ற ராட்சச ஆளுமையின் சகோதரரான முஹம்மது முஸ்தபா அவர்கள் அல்லாமா இக்பாலின் முக்கியமான முதல் கவிதைத் தொகுதியான ”அஸ்ரார்-எ-ஹுதி” என்ற பாரசீக நூலை தமிழில் ”இதயத்தின் ரகசியம்” என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். []எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி(1933—2002) நாகூர் இல்லாமல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இல்லை என்கிறார் எழுத்தாளர் ஜெ எம் சாலி. நாகூர் தந்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி. இமாம் கஸ்ஸாலியின் அறிவுக் கருவூலகமாகப் போற்றப்படும் ”இஹ்யாஉ உலூமித்தீன்” என்ற வாழ்வியல் நூலை, அரபு மொழியிலிருந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கும் முயற்சியை 1957-இல் தொடங்கினார்.  இஹ்யாவை பகுதி பகுதியாகவும், கஸ்ஸாலியின் மற்ற நூல்களில் பலவற்றையும் எளிமையான தமிழில் ஈர்க்கும் நடையிலும் மொழிபெயர்த்துக் கொடுத்த பெருமை எனது ஞானாசிரியர் ஹஸ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களையே சேரும். அவர்களது பெரும்பாலான நூல்களை வெளியிட்டது யுனிவர்சல் பப்ளிஷர்ஸ். அவர்களது நூல்களில் சில: 1. நாயகத்தின் நற்பண்புகள் (மூலம்: இமாம் கஸ்ஸாலியின் []‘அக்லாகுன் நபி, 1959) 2. நாவின் விபரீதங்கள், 3. விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும், 4. இம்மையும் மறுமையும்(மூலம்: ஸம்முத் துன்யா, 1961) 5. தனிமையின் நன்மைகள் (மூலம்:கிதாபுல் உஸ்லத்,1987) 6. தனித்திரு (1988) 7. இறைச் சிந்தனை, 8. இறையச்சம், 9. இறைதிருப்தி, 10. இறையாதரவு, 11. இறை நம்பிக்கை, 1962. 12. இறைவணக்கம், 13. சிந்தனையின் சிறப்பு, 14. பொறுமையாயிரு, 15. பாவ மன்னிப்பு (மூலம்: அத்தௌவ்பா, 1957) 16. பதவி மோகம் (1958) 17. கோபம் வேண்டாம், 18. உளத் தூய்மை(மூலம்: ரியாலத்துன் நஃப்ஸ், 1958) 19. பொருளீட்டும் முறை, 20. அறிவு எனும் அருள், 21. அறிவோ அருட்பேறோ, 22. அறிவும் தெளிவும், 23. பொறாமை கொள்ளாதே(1958) 24. புறம் பேசாதே(மூலம்: கிதாபுல் கீபத், 1955) 25. திருமணம்(மூலம்: கிதாபுன் நிகாஹ், 1958) 26. திருந்துங்கள் திருத்துங்கள்(மூலம்: அல் அம்ரூ பில் மாரூப் வன்னஹீ அல் முன்கர், 1966) 27. நல்லெண்ணம், 28. உள்ளத்தின் விந்தைகள்(மூலம்: அஜாயிபுல் கல்ப், 1961) 29. ஏகத்துவம், 30. பயணத்தின் பயன்(மூலம்: கிதாபுஸ் ஸஃபர், 1966) 31. செல்வமும் வாழ்வும்(மூலம்: ஹுப்புல் மால், 1965) 32. நோன்பின் மாண்பு, 33. பக்தர்களின் பாதை, (மூலம்: மின்ஹாஜுல் ஆபிதீன், 1970) 34. ஞானக் கோட்டையின் தலைவாசல் (33ன்2ம் பாகம், 2000) 35. தர்க்கத்துக்கு அப்பால், (மூலம்: இல்ஜாமுல் அவாம் அன் இல்மில் கலாம்) 36. சமுதாய வாழ்வு (சுலைமானியா பதிப்பகம், 1992) 37. இமாம் கஸ்ஸாலியின் கடிதங்கள் ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை வழங்கிய அப்துல் வஹ்ஹாப், அறுபதுகளில் ஞான, ஆன்மீகப் பணியில் இறங்கினார்கள். இறைநாட்டப்படி 9.9.2002 அன்று இவ்வுலகைத் துறந்தார்கள். []நரியம்பட்டு அப்துல் சலாம் (1947) அதிகமாக அறியப்படாமல் சப்தமில்லாமல் சாதனை செய்துகொண்டிருக்கும் படைப்பாளி இவர். ஆம்பூருக்கு அருகில் உள்ள நரியம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தமிழ், ஆங்கிலம், பாரசீகம், ஹிந்தி, உர்து ஆகிய ஐந்து மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். ஹிந்தியிலிருந்து ஓஷோவின் ஐந்து நூல்களை தமிழாக்கம் செய்துள்ளார். ஆன்மிக இலக்கியமே இவரது ஈடுபாடு. இவர் எழுதிய 43 தமிழ் நூல்களில் 35-க்கும் மேற்பட்டவை மொழி பெயர்ப்புகளே. மௌலானா ரூமியின் சில பாடல்களை ”மலர்வனம்” என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். கண்ணதாசன் பதிப்பக வெளியீடு. அவருடைய ஆன்மிக குருநாதரின் நூலையும் ”ஞானச் சிதறல்” என்ற பெயரில் உர்து மூலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அவருடைய சிகரச் சாதனை என்று சொன்னால் மௌலானா ரூமியின் மஸ்னவியைத்தான் சொல்ல வேண்டும். மஸ்னவியின் ஆறு பாகங்களையும் உரைநடையில் மூல மொழி மற்றும் உர்து தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் படிக்கக் கிடைக்குமாறு எழுதி முடித்திருக்கிறார். 2008-ல் சென்னை ஃபஹீமியா ட்ரஸ்ட் சார்பாக முதல் பாகமும் அடுத்து இரண்டாம் பாகமும் வெளி வந்துவிட்டன. உலகின் தலைசிறந்த ஆன்மிகக் காவியத்தை தமிழுக்குக் கொண்டு வந்ததற்காக தமிழுலகம் இவருக்குக் கடன் பட்டிருக்கிறது. அவரது மொழிபெயர்ப்பு நூல்கள் சில: 1)    அன்பெனும் ஓடையிலே 2)    உண்மையைத் தேடவேண்டியதில்லை 3)    விளக்கின் கீழ் விதை 4)    நாரதரின் பக்தி சூத்திரம் 5)    புரட்சி விதை ஆகிய ஐந்து ஓஷோவின் நூல்களை ஹிந்தியில் இருந்து தமிழாக்கம் []செய்துள்ளார். கண்ணதாசன் பதிப்பக வெளியீடாக இவை வந்தன. உர்துவில் இருந்த ஒரு சூஃபிக் கவிஞரின் ருபாயியாத்துகளை “ஞானச் சிதறல்” என்ற தலைப்பிலும் தனது ஞானாசிரியரின் ஆன்மிக நூல “ஞான விடியல்” என்ற தலைப்பிலும் தமிழாக்கம் செய்துள்ளார். இவரது தமிழாக்கங்களில் உரைநடையே அதிகம். மற்ற மொழிபெயர்ப்புகள்: 1)    இஸ்மெ ஆஜம், 2)    முந்தானை மலர்கள் (முஹம்மது யாகூப் எழுதிய சில கதைகளின் தமிழாக்கம்) 3)    சத்திய வேட்கை (தலாஷெ ஹக் என்ற நூலின் தமிழாக்கம்) நை.மு. இக்பால் ஓய்வு பெற்ற பேராசிரியர், கவிஞர் நை மு இக்பால் அவர்கள் மலையாளத்திலிருந்து முக்கியமான சில மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். குறிப்பாக சச்சிதானந்தன், வயலார் ஆகியோரின் கவிதைகள் மற்றும் வைக்கம் முஹம்மது பஷீரின் சில சிறுகதைகள். ஆனால் புத்தகமாக எதுவும் வரவில்லை. ரமீஸ் பிலாலி திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருக்கும் இந்த இளைஞர் இரண்டு முக்கியமான மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார்: 1)      ரகசிய ரோஜா. இது மௌலானா ரூமியின் 76 ருபாயி வகைக் கவிதைகளின் தமிழாக்கம். 2)      சூஃபி கோட்பாடுகள் – பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் அல் குஷைரியின் அர் ரிஷாலத்துல் குஷைரிய்யா என்ற நூலின் தமிழாக்கம். இராஜா வெளியீடு2010. அழகான தமிழில் நுட்பமான வாதங்களை வைக்கும் கட்டுரைகளை எழுதக்கூடிவர் இவர். தமிழின் சிறந்த உரைநடை ஆசிரியர்களுள் ஒருவராக வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இவரது எழுத்தில் மிளிர்கின்றன. பிரபஞ்சக் குடில் என்ற பெயரில் தனக்கான ஒரு வலைத்தளமும் வைத்திருக்கிறார்.  எச்.பீர் முஹம்மது நாகர்கோயிலைச் சேர்ந்த இந்த தகவல் தொழில் நுட்ப இளைஞர் ஓரியண்டலிசம், காலனிய ஆட்சிக்குப் பிறகான ஆசிய வாழ்க்கை பற்றி எழுதிய தாரிக் அலி, எட்வர்ட் சயீத், இக்பால் அஹ்மத், மன்சூர் ஹிக்மத் போன்ற கீழைச்சிந்தனையாளர்களை ஒரு நூலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். அடையாளம் வெளியீடு. தன் வலைத்தளத்தின் மூலமாகவும் கீழைச் சிந்தனையாளர்கள் பலருருடைய எழுத்துக்களை, கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வருகிறார். மொழிபெயர்ப்பு நூல் என்று முழுமையான நூலாக இதுவரை வரவில்லை. நாகூர் ரூமி நான் இதுவரை 35 நூல்களை எழுதியுள்ளேன். அவற்றில் சில மொழிபெயர்ப்பு நூல்களும் உள்ளன. அவை: 1. ஹோமரின் இலியட். முழு காவியத்தின் தமிழாக்கம். கிழக்கு, சென்னை, ஜனவரி 2007. இந்த நூலுக்காக 2009-ம் ஆண்டில் நல்லி திசையெட்டும் மொழியாக்க விருது கிடைத்தது. 2. நம்மால் முடியும். அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதிய The Audacity of Hope என்ற அவரது அரசியல் வாழ்வு நூலின் மொழிபெயர்ப்பு கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் ஃப்ராய்டின் The Interpretation of Dreams என்ற நூலின் சுருக்கமான தமிழாக்கம்.) ஸ்நேகா வெளியீடு, சென்னை முதல் பதிப்பு ஜுலை 2003. 3. செல்வம் சேர்க்கும் விதிகள். ரிச்சர்ட் டெம்ப்ளர். தமிழாக்கம். (The Rules of Wealth). கிழக்கு. 238 பக்கங்கள். 2009. விலை ரூ. 150/- 4. பாரசீக கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள் (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்). சந்தியா பதிப்பகம் வெளியீடு, சென்னை, 2002. 5. உமர் கய்யாமின் ருபாயியாத். (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்). ஆரூத் புக்ஸ் வெளியீடு, சென்னை, 2002. 6. ஹிதாயதுல் அனாம் (இறைநேசர்களைப் பற்றிய தமிழ் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு.) இர்ஃபான் மஜ்லிஸ் வெளியீடு, கொழும்பு, பிப்ரவரி, 2000. 7. உடல் மண்ணுக்கு. பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதை In the Line of Fire-ன் ஆதாரப்பூர்வமான தமிழாக்கம். 2007. 8. என் பெயர் மாதாபி. சுசித்ரா பட்டார்ச்சார்யாவின் கதைகள். அம்ருதா வெளியீடாக வர இருக்கிறது. 9. ஹராம் ஹலால்.  எகிப்திய எழுத்தாளர் யூசுஃப் கர்ளாவி எழுதிய அரபி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம். இது விரைவில் வெளிவரும். முடிவுரை மொழிபெயர்ப்புகளின் காலகட்டத்தையும் தேர்வுகளையும் பார்க்கும்போது ஆரம்பத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும் ஆன்மிகத்திலும் அதிக நாட்டமிருந்துள்ளது தெரிகிறது. படிப்படியாக அது வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம், பின்காலனியம், இலக்கியம், கவிதை என விரிவடைந்து கொண்டே போவதையும் பார்க்க முடிகிறது. இது ஒரு ஆரோக்கியமான அடையாளமாகும். எளிமையான தமிழில் எல்லோரையும் சென்றடையும் மொழிபெயர்ப்புகள் நிறைய வருவதற்கு இதுவரை வந்த மொழிபெயர்ப்புகள் நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு நல்ல மொழிபெயர்ப்பும் ஒரு மறுபடைப்புத்தான். 7 இஸ்லாமும் தமிழும் நிறைவான கொடுக்கல் வாங்கல் இந்த கட்டுரை தி இந்து தமிழ் இதழின் சித்திரைச் சிறப்பிதழில் (ஜய வருட மலர் 2014) வெளியாகியுள்ளது. சில மாற்றங்கள் / நீக்கங்களுடன். கட்டுரையின் நீளம் கருதி (என்று நினைக்கிறேன்). நான் இங்கே நீலநிறத்தில் கொடுத்திருப்பதெல்லாம் நீக்கப்பட்டவை. தி இந்துக்கு என் நன்றி. இங்கே உங்களுக்காக அந்த முழு கட்டுரையும். இந்த இதழில் பல அருமையான கட்டுரைகள் உள்ளன. உதாரணமாக பத்ரி எழுதிய “தமிழ் செல்ல வேண்டிய தூரம்” என்ற கட்டுரை. வாங்கிப் படியுங்கள். இஸ்லாம் என்பது கிபி ஏழாம் நூற்றாண்டில் நபிகள் நாயகத்தால் தோற்றுவிக்கப்பட்ட மதம் அல்ல. அது ஒரு மார்க்கம், வாழ்முறை. அதை நபிகள் நாயகம் அறிமுகப்படுத்தவில்லை. உலகில் தோன்றிய முதல் மனிதர் ஆதாம் ஒரு முஸ்லிமாகவே தோற்றுவிக்கப்பட்டார். எனவே உலகில் தோன்றிய முதல் மார்க்கம் இஸ்லாம். இறுதித்தூதரான நபிகள் நாயகத்தால் அது பரிபூரணப்படுத்தப்பட்டது. இது இஸ்லாத்தின் பார்வை.   இந்தப் பார்வைக்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றிலேயே ஆதாரக் குறிப்புகளைக் காணமுடியும். உதாரணமாக ’அல்லாஹ்’ என்ற சொல். முஸ்லிம்களுக்கான இறைவன் மட்டுமல்ல அல்லாஹ். அல்லாஹ் என்பது அரபி மொழியில் கடவுளைக் குறிக்கும் சொல். அதனால்தான் முஹம்மது நபியின் தந்தையாருக்கு ’அப்துல்லாஹ்’ (அல்லாஹ்வின் அடிமை) என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.   [My Article Page1]இதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இருக்கிறது. தமிழ் தொன்மையான மொழி, அதன் இலக்கியம் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானது என்றெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால் இருபது ஆண்டுகள் ஆய்வுக்குப் பிறகு ஒருவர் ஒரு புரட்சிகரமான கருத்தை முன்வைக்கிறார். தமிழ் தொன்மையான மொழி மட்டுமல்ல, அதுதான் உலகத் தாய்மொழி என்கிறார். அதுமட்டுமல்ல. முதல் மனிதர் ஆதாம் பேசிய மொழி தமிழ்தான் என்று அவரது 700 பக்க நூலில் விரிவாக சான்றுகளை வைக்கிறார். ’சொற்பிறப்பியல்’ என்ற நூல் இப்படிக் கூறுகிறது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட கருத்தாக இதை நாம் அலட்சியப்படுத்த  முடியாது. அக்கருத்து தவறு என்று நாம் சொல்வதாக இருந்தால் குறைந்தது 21 ஆண்டுகளாகவது அதே திசையில் ஆராய்ச்சி செய்துவிட்டு முடிவுகளை முன்வைக்கவேண்டும். அதுதானே நியாயம்? இஸ்லாத்தின் பார்வையில் முதலில் தோன்றிய மார்க்கம் இஸ்லாம். ஓர் ஆராய்ச்சியின் பார்வையில் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ். இந்தக் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட வரலாற்றின் கதியில் நமக்குப் புலப்படாத ஏதோ ஒரு புள்ளியில் இஸ்லாமும் தமிழும் இணைவதை நாம் இங்கே பார்க்க முடிகிறது. அந்த இணைப்பு இன்றுவரை பல பரிமாணங்களில் தொடர்ந்துகொண்டிருப்பது கண்கூடு.   [My Article Page2]மொழி என்பது சொற்களின் கூட்டுத்தொகை அல்ல. அதன் பின்னால் இருக்கும் சிந்தனை, கலாச்சாரம், பண்பாடு, சமுதாயம் எல்லாமே அந்த மொழிதான். அதேபோல ஒரு மதம் அல்லது மார்க்கம் என்பதும் குறிப்பிட்ட கோட்பாடுகள், நம்பிக்கைகளின் மொத்த உருவம் அல்ல. அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனிதர்களுக்கு ஒரு மொழியும், ஒரு பண்பாடும், அவர்களுக்கான பிரச்சனைகளும் இருக்கின்றன. எல்லாமாகச் சேர்ந்ததுதான் அந்த மார்க்கம். ஒரு ஹிந்து திருமணம் என்றால் தாலி கட்டுவதிலிருந்து அதைப் பிரிக்கமுடியாது. ஒரு முஸ்லிம் திருமணம் என்றால் மாப்பிள்ளை பெண்ணுக்கு ’மஹர்’ கொடுப்பதிலிருந்து அதைப் பிரிக்க முடியாது. பிரியாணி சாப்பிடுவது வேண்டுமானால் இரண்டு பேருக்கும் பொதுவாக இருக்கலாம். ஆனால் மேலே சொன்னது போன்ற பிரத்தியேகமான விஷயங்களை பொதுவில் வைக்கவே முடியாது. மதம் சார்ந்த கலாச்சாரமும், வாழ்முறையும், அந்த மதம் சார்ந்த நம்பிக்கைகளும், உணர்ச்சிகளும் அந்த மதம் சார்ந்தவர் பேசும் மொழியில் பிரதிபலிக்கும். அது மொழியை, இலக்கியத்தை வலுப்படுத்தும், அதற்கு அழகு சேர்க்கும். இது தவிர்க்க முடியாததும்கூட. தமிழுக்கும் அதுதான் நடந்துள்ளது. சமயமும் இலக்கியமும் பிரிக்க முடியாததாகவே இருந்துள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் காண முடிகிற பொதுத்தன்மையாகும். ஜான் மில்டன் ஆங்கிலத்தில் ’பாரடைஸ் லாஸ்ட்’ என்று பன்னிரண்டு காண்டங்களில் ஒரு காப்பியம் எழுதினான். அது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு கிறிஸ்தவ காப்பியம். புனித பையிளில் சொல்லபட்ட ஆதாம் ஏவாள் கதையைத்தான் அவன் காவியமாக்கினான்.   [My Article Page3]கம்பன் ராமகாதை காவியம் இயற்றினான். அது ராமனின் கதை  மட்டுமல்ல. அது ஒரு வைணவ காப்பியம். ராமனின் கதையை நான் எழுத நினைப்பது ஒரு பூனை கடலை நக்கிக் குடிக்க ஆசைப்படுவதைப் போன்றது என்ற படிமத்தை அவன் முதலில் வைக்கிறான். படிமம் அற்புதமாக உள்ளது. ஆஹா, ஒரு பூனையால் ஒரு கடல் முழுவதையும் நக்கிக் குடிக்க முடியுமா?! ஆனால் கம்பன் அங்கே நின்றுவிடவில்லை. ஒரு முக்கியமான முடிச்சை அங்கே வைக்கிறான். கடலை பாற்கடலாக்குகிறான்! ஆமாம்: ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு பூசை நக்குபு புக்கெனெ ஆசை பற்றி அறையலுற்றேன் என்று கூறுகிறான். வெறும் கடல் பாற்கடலானது ஏன்? ஏனெனில் பாற்கடல் விஷ்ணுவின் படுக்கையாகும். அதனாலென்ன என்கிறீர்களா? ராமன் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர். எனவே ஆரம்பத்திலேயே கம்பன் வெகு ஜாக்கிரதையாக, வெகு அழகாக தான் ஒரு வைணவ காப்பியம் வடிப்பதைச் சுட்டிவிட்டான்.   மத உணர்வும்,  மொழி உணர்வும் பிரிக்க முடியாதபடி இயற்கையாகவே கலந்திருக்கிறது. அதனால்தான் முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் எங்கு சென்றாலும் திருக்குறளையும் கனியன் பூங்குன்றனாரையும் பற்றி மேற்கத்திய உலகுக்கு மேற்கோள் காட்டுகிறார். அதனால்தான் புகழின் உச்சியிலும் ஏ ஆர் ரஹ்மான், ’எல்லாப்புகழும் இறைவனுக்கே’ என்று ஆஸ்கார் விருது வாங்கிய மேடையில் ’அல்ஹம்துலில்லாஹ்’ என்ற அரபி வாக்கியத்தின் தமிழாக்கத்தைச் கூறினார். இலக்கியம் படைக்கும் திறன் கொண்டவர்கள், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களாக இருந்தபோதும் இதுதான் நடந்தது. நடக்கிறது. தமிழிலக்கியம் தொப்பி போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தது. அழகான தாடியும் வைத்துக்கொண்டது! அது தமிழுக்கு ஒரு புதிய பரிமாணத்தை, புதிய அழகைக் கொடுத்தது. தமிழ் புதிய கோணத்தில் செழித்தது. தமிழுக்கு இஸ்லாத்தின் கொடை அது. பகரமாக அரேபியாவிலிருந்து வந்த இஸ்லாம் தமிழ் பேசியது. தமிழில் இஸ்லாமிய இலக்கியம் வளர்த்தது. எப்படியெல்லாம் அது நடந்தது என்று காலக்கிரம வரிசைப்படி பார்ப்பதோ, பங்களிப்புச் செய்த அனவரையும் பற்றிப் பேசுவதோ சாத்தியமில்லை. நிலவைச் சுட்டும் விரல் போல, ஊர் காட்டும் ஒரு பலகைபோல  இருப்பது மட்டுமே இங்கே சாத்தியம். ஒரு சில முக்கிய உதாரணங்கள் மூலம். முஸ்லிம்கள் தூய தமிழ் பேசுபவர்களாகவும் அரபி, உர்து, பாரசீகம் ஆகிய மொழிகள் கலந்த தமிழ் பேசுபவர்களாகவும் இருக்கிறார்கள். உதாரணமாக  கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் பேசும் தமிழில் இந்த இரண்டையும் காணலாம். புலவர் ஆபிதீனின் ’நாகூர்த் தமிழ்’ என்ற பாடல் அப்படித்தான் கூறுகிறது: - ‘பாத்திரத்தை ஏனம் என்போம் - பழையதுவை நீர்ச்சோறு என்போம் - ஆத்திரமாய் மொழிக் குழம்பை - அழகாக ஆணம் என்போம் - சொத்தையுரை பிறர் சொல்லும் - சாதத்தை சோறு என்போம் - எத்தனையோ தமிழ் முஸ்லிம் - எங்களுயிர்த் தமிழ் வழக்கே. 1966வரை வாழ்ந்த புலவர் ஆபிதீன் காலத்து தமிழ் மட்டுமல்ல இது. இன்றும்கூட நாகூர், நாகை, காரைக்கால் பக்கம் வாழும் தமிழ் முஸ்லிம்கள் சோறு, நீ(ர்)ச்சோறு, ஆணம் ஆகிய தூய தமிழ்ச்சொற்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். நமக்குத் தெரிந்த சில சொற்கள் நமக்குத் தெரியாத பல பரிமாணங்களை எடுக்கவல்லவை. இதுவும் சமயத்தின் கொடை என்றுதான் சொல்லவேண்டும்.  ’செப்புத் தூக்கி’ – இது ஒரு சிறுகதையின் பெயர். எழுதியவர் பேரா. நத்தர்சா. ஒரு முஸ்லிம் இறந்து விட்டால் அவர் உடலை அடக்கம் செய்ய இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது எல்லோருக்கும் முன்னால் ஒரு பெரிய மூடப்பட்ட வட்டத்தட்டில் சில உணவுப்பண்டங்களை எடுத்துச் செல்வது வழக்கம். இறுதிச்சடங்குகள், பிரார்த்தனைகள் முடிந்தபிறகு ஏழைகளுக்குக் கொடுக்க அப்பண்டங்கள். அந்த வட்டத் தட்டுதான் செப்பு. அதைத் தூக்கிச் செல்லும் ஒரு பெயரற்ற அனாதை கதாபாத்திரம்தான் செப்புத்தூக்கி. கதையில் அந்த செப்புத்தூக்கி இறந்துவிடுகிறார். அவருக்காக செப்புத்தூக்குவது யார்? இதைப் பற்றியதுதான் கதை. ‘செப்பு’ என்ற சொல் தமிழ்ச்சொல்லாக இருந்தாலும் ’செப்புத் தூக்கி’ என்பது இஸ்லாமியப் பண்பாட்டின் கூறொன்றைக் குறிக்கும் சொல்லாக மாறிவிடுகிறது. வட்டார வழக்கு என்று ஒன்றிருக்கிறது. ஒவ்வொரு மொழியும் பல வட்டார வழக்குகளைக் கொண்டிருக்கிறது. ‘படிய உளுந்துடுவான்’ என்று நாகூர், நாகப்பட்டினம், காரைக்கால் பக்கம் சொல்வார்கள். சிறுவர்களை பெரியவர்கள் திட்டும் முறை அது. அதற்கு என்ன பொருள் என்று அப்பெரியவர்களுக்கும் தெரியாது! ‘தடவிக்கிட்டிருந்தேன்’ என்ற சொல்லுக்கு வட ஆற்காடு மாவட்டம் பக்கம் ‘தேடிக்கொண்டிருந்தேன்’ என்று பொருள். ‘ரெண்டு மணி நேரமா நாய்க்குட்டியைத் தடவிக்கிட்டிருந்தேன்’ என்று சொன்னாலும் அதே அர்த்தம்தான்! (இங்கே ஒரு அருமையான மாற்றத்தை தி  இந்து செய்திருக்கிறது! நான் ‘நாய்க்குட்டியை’ என்று எழுதவில்லை, ‘வேலைக்காரியை’ என்று எழுதியிருந்தேன்)! இவ்வித  வட்டார வழக்குகள் இலக்கியத்தில் வருவது இலக்கியத்தின் அந்தஸ்தைக் குறைக்கும் என்பது தவறான கருத்து. உலகெங்கிலும் வட்டார வழக்கில் எழுதுபவர்களும் பேசுபவர்களும் கொண்டாடப்படுகிறார்கள். குறிப்பாக அமெரிக்க ஆங்கில இலக்கியம் படைப்பவர்கள். மார்க் ட்வைனில் தொடங்கி கவிஞர் மாயா ஆஞ்சலூ, நாடக ஆசிரியர் லாங்ஸ்டன் ஹ்யூஸ் போன்றோரை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் தமிழில் எழுதுபவர்களுக்கு ஏன் அந்த மரியாதையை நாம் கொடுக்கத் தவறுகிறோம்? வயதுக்கு வந்த இரண்டு மகள்களைத் திருமணம் செய்துகொடுக்க முடியாமல் வீட்டிலேயே வைத்திருக்கும் ஒரு முஸ்லிம் காய்கறி வியாபாரி ஹஜ்ஜுக்குப் போக விரும்புகிறார். குடும்பத்தில் உள்ள அனைவரின் விருப்பத்துக்கும் மாறாக. மகள்களின் திருமணம் பற்றிக் கேட்கும் மனைவியிடம், வெள்ளிக்கிழமை கூட்டுத்தொழுகை முடிந்துவருபவர்களிடம் யாசகம் கேட்டுச் செய்வேன் என்று கூறுகிறார் கணவர். மிகையான சமய உணர்வு எப்படி உடனடிக் கடமையைச் செய்யவிடாமல் தடுக்கிறது என்பதைச் சொல்லும் அழகான கதை களந்தை பீர்முகம்மது எழுதிய ’யாசகம்’. “வெள்ளிக்கிழமை ஜும்மாவுல…ஒவ்வொரு பள்ளிவாசலா யாசகம் கேட்பேன்…ஒவ்வொரு நல்லடியார்கிட்டேயும் கேப்பேன்…வீட்டுல ரெண்டு குமருங்க கரையேத்தனும் பாவா” என்று கேட்பேன் என்று சொல்வதாகக் கதை முடிகிறது. இதில் வரும் ’குமர்’, ’பாவா’, ‘ஜும்மா’ போன்ற சொற்கள் முஸ்லிம்கள் மத்தியில் மட்டும் புழக்கத்தில் இருக்கும் அரபி கலந்த தமிழ்ச்சொற்கள். ’குமர்’ என்பது திருமணமாகாத வயதுக்கு வந்த இளம் பெண்ணையும், ’பாவா’ என்பது உதவி செய்யும் பெரியவர்களையும் குறிக்கும் சொற்களாகும். ’சஜ்தா’ என்ற ஃபிர்தௌஸ் ராஜகுமாரனின் சிறுகதை இப்படித் தொடங்குகிறது:               “பள்ளியில் மறுபடியும் ஒரு பித்னா இன்னிக்கு எங்க செட்டியார் சின்னாப்பாவால் உண்டாச்சு”. சஜ்தா(தொழுகையில் தலையை தரையைத் தொடும்படி வைத்து வணங்குதல்), பித்னா(குழப்பம்), சின்னாப்பா(சித்தப்பா), பள்ளி(வாசல்) ஆகிய சொற்களைக் கவனிக்கும்போது ஒரு உண்மை புரியும். சித்தப்பா, பள்ளிவாசல் போன்ற தமிழ்ச்சொற்கள் புதிய வடிவம் பெறுகின்றன. “நானும் நேத்திகடன் பாத்தியாவா இருக்கேன். அவன அல்லாதான் கண் பாக்கணும். நம்ம கையில என்ன இருக்கு! எப்பவும் பாரு இவன நினப்பாதான் இருக்கு! கபுருல கொண்டு போயி கட்டை வச்சாகூட தறிக்காது போலிருக்கு” என்று எழுதுகிறார் சீர்காழி தாஜ் தன் ’பெருநாள் காலை’ என்ற கதையில். ’நேத்திகடன்’ (நேர்ச்சை), ’பாத்தியா’ (அரபியில் சொல்லப்படும் பிரார்த்தனை) ’கபுரு’ (மண்ணறை). இவற்றில் ’பாத்தியா’ என்பதும் ’கப்ரு’ என்பது அன்றாடம் தமிழ் முஸ்லிம்கள் பயன்படுத்துகின்ற அரபிச் சொற்கள். ஆனால் அவை அரபிச் சொற்கள் என்ற தகவல்கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அந்த அளவுக்கு அச்சொற்கள் அவர்கள் உணர்வோடும், உயிரோடும் கலந்துவிட்டன. அவர்களுக்கு மொழி முக்கியமில்லை. ஒரேயொரு சொல் போதும். அது ஒரு காவியமே பாடிவிடும். ”ம்மா ஒத்தத் துப்பட்டியுடன் ஓடி சந்துவீட்டில் புகுந்துகொண்டார்கள்….அந்த ஹயாத்தலிவானெ நாலு தட்டு தட்டிட்டு வந்தாத்தான் நீ ஆம்புளை” – ஆபிதீனின் ’குழந்தை’ என்ற சிறுகதையில் வரும் சொற்கள் இவை. ’துப்பட்டி’ என்பது நாகூர், நாகை, காரைக்கால், மாயவரம், திருமுல்லைவாசல் பக்க முஸ்லிம் பெண்கள் அணியும் வெள்ளை நிற, தையலில்லாத 12 முழ புர்கா மாதிரியான காட்டன் மேலாடை. ’ஒத்தத் துப்பட்டி’ என்பது மேலாடையை மட்டும் குறிக்கவில்லை. அதைத்தாண்டி, ஒரு பெண் இன்னொரு பெண்ணின் துணையில்லாமல் வெளியில் செல்வதையும், அப்படிச் செல்பவர் மீதான சமூக விமர்சனத்தையும் ஏளனப் பார்வையையும் குறிக்கிறது. ’ஹயாத் அலிவான்’ என்றால் ஆயுள் அழிவான் என்ற சாபம். வாழ்முறை சார்ந்து சொற்கள் இங்கே அர்த்த விரிவு பெறுகின்றன. அடிப்படையான உறவுமுறைப் பெயர்கள்கூட புதிய வடிவம் பெற்று பொலிவுடன் உலாவருகின்றன தமிழ் முஸ்லிம் உலகில். ம்மா (அம்மா), வாப்பா (அப்பா), லாத்தா (அக்கா), காக்கா, நானா (அண்ணன்) என.  தமிழல்லாத அரபி, உர்து, பாரசீகச் சொற்கள் தமிழோடு கலந்து உருமாற்றம் அடைகின்றன. மஹாவித்வான் குலாம் காதிர் நாவலரின் (1833-1908) படைப்புகளை அரசு நாட்டுடமையாக்கியுள்ளது. அவர் நான்காம் தமிழ்ச்சங்கம் மதுரையில் அமைத்தவர். அவர் எழுதிய 11 உரைநடைப் படைப்புகளில் எட்டும், 14 கவிதைப் படைப்புகளில் பத்தும் சமயம் சார்ந்தவை. நாகூர் ஆண்டகை மற்றும் இஸ்லாமிய மகான்கள், அவர்களது ஊர்களின் சிறப்பு பற்றியவை. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த மீசல் வண்ணக்களஞ்சியப் புலவர் மூன்று காப்பியங்கள் படைத்தவர். அவை மூன்றுமே இஸ்லாமிய மகான்களைப் பற்றியவை. ஆனால் முஸ்லிம்கள் படைக்கும் எல்லா இலக்கிய வகைகளுமே சமயம் சார்ந்தவையாக இருக்கும் என்று சொல்லமுடியாது. சமயம் சாராத, சமயம் தாண்டிய பொதுவான விஷயங்களும் அவர்களால் முழுவீச்சில் எழுதப்படுகின்றன. நாடு மறக்கக்கூடாத ஒரு தமிழறிஞரைப்பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவர்தான் நூறு காரியங்களை ஒரே நேரத்தில் செய்து சரித்திரம் படைத்த அசாதாரண ஆளுமையான சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர். அவருடைய சதாவதானம் எவ்வளவு வியப்புக்குரியதோ அதே அளவு வியப்புக்குரியதுதான் அவரது தமிழறிவும் புலமையும். மத்திய அரசு அவரது உருவம் பொதித்த தபால் தலை வெளியிட்டு அவரை கௌரவித்தது. தமிழக அரசு அவரது நூல்களை நாட்டுடமையாக்கி கௌரவித்தது. தமிழர்களாகிய நாம் அவரைப் பற்றி இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் அவரது புகழையும் பரப்புதல் வேண்டும். வள்ளலாரின் பாடல்களை மருட்பா அல்ல, அருட்பாதான் என்று வாதிட்டு வென்ற மேதை அவர். அவரது தமிழ்ப்புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒரு முறை சிலேடையாக கடவுள் வாழ்த்துப் பாடும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்கள். உடனே அவர்  சிரமாறுடையான் செழுமா வடியைத் / திரமா நினைவார் சிரமே பணிவார் பரமா தரவா பருகாருருகார் / வரமா தவமே மலிவார் பொலிவார் என்று பாடினார். பின்னர் அவரே இதை விளக்கினார்.  ’சிரம் ஆறுடையான்’ என்பது தலையில் கங்கையைக் கொண்ட சிவன் என்றும், ’சிரம் மாறு உடையான்’ என்பது மாறுபட்ட தலையைக் கொண்ட கணபதி என்றும்,  ’சிரம் ஆறுடையான்’ என்பது ஆறு தலைகளைக் கொண்ட முருகன் என்றும்,  ’சிரம்  ”ஆறு” உடையான்’ என்பது திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரி ஓட பள்ளிகொண்டிருக்கும் திருமால் என்றும், தலையாய நல்வழிகளை உலகுக்குக் காட்டும் அல்லாஹ் என்றும் ஐந்து பொருள்களை விளக்கினார்! சமயம் சாராத ஒரு தமிழ் இமயத்தை அவரில் நாம் பார்க்க முடிகிறது. இன்னொரு உதாரணம் சித்தி ஜுனைதா பேகம். முதன் முதலில் நாவல் எழுதிய முஸ்லிம் பெண்மணி அவர்தான். (நான் தமிழின் முதல் நாவலைச் சொல்லவில்லை). உவேசா முன்னுரையுடன் 1938ம் ஆண்டு வெளிவந்த ’காதலா கடமையா’ என்ற அந்த நாவல் முழுக்க முழுக்க தமிழ்ப் பெயர்களையும், தமிழ்ச் சூழலையும், தமிழ் இளவரசனின் காதலையும்  சமூகக்கடமையையும் கதைக்களமாகக் கொண்ட கலப்படமற்ற தூய தமிழில் எழுதப்பட்ட புதினம். எம்ஜியாரின் ’நாடோடி மன்னன்’ திரைப்படக் கதைக்கு அது வித்தாக இருந்தது என்பது சுவாரஸ்யமான வரலாறு. சித்தி ஜுனைதா பேகம் மூன்றாம் வகுப்பு வரைதான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்பனின் பெருமைகளை தமிழ்நாடு பரவலாக அறிந்த கொள்ள வழிவகுத்தவர் ஒரு முஸ்லிம் அறிஞர். அவர் வேறு  யாருமல்ல. மறைந்த சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்த மு மு இஸ்மாயீல்தான். கம்பனைப் பற்றிய அவரது சொற்பொழிவுகளும் நூல்களும் காலம் கடந்து வாழ்பவை. கம்பராமாயணத்தை முதன் முதலில் மெல்லிய உறுதியான தாளில் ஒரே நூலாக வெளியிட்டவரும் அவரே. இயக்குனராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த ஏ கே வேலன் ஒரு கவிஞரைக் கூப்பிட்டு ஒரு சூழலைச் சொல்லி பாடல் எழுதிக்கேட்கிறார். காவிரியில் குளிக்கும் இரண்டு பெண்கள் புரண்டு வரும் நீரைப்பற்றிப் பாடுகின்றனர். கம்பனின் ஈரடிகளைச் சொல்லி அதைப்போல இருக்கவேண்டும் என்றும் கூறுகிறார். கவிஞர் உடனே, ஆமாம், உடனே எழுதிக்கொடுக்கிறார் இந்த வரிகளை: பெண் 1: வெண் முத்து மாலைகள் வெள்ளி நுரையினில் சூடி வருகின்றாள் இவள் வேண்டிய பேருக்கு வாரிக்கொடுத்திட ஓடி வருகின்றாள் பெண் 2; கண்ணியர் கண்ணென மாவடுப் பிஞ்சுகள் நீரில் மிதக்குதடி அது கண்ணல்ல, பிஞ்சல்ல, கெண்டைகள் அம்மாடி, கும்மியடிங்கடி இப்படி எழுதிக்கொடுத்தவர் கலைமாமணி கவிஞர் சலீம். அதுமட்டுமா? “காய்ந்து சிவந்தது சூரிய காந்தி” என்று தொடங்கி “எங்கள் வீட்டுப் பிள்ளை / ஏழைகளின் தோழன் / தங்க குணமுள்ள கலை மன்னன் / மக்கள் திலகம் எங்கள் எம்ஜியார் அண்ணன்” என்ற பாடல், “சிரித்துச் செழித்த உன் முகமெங்கே / சிந்திய செந்தமிழ் மொழி எங்கே / சிரித்தது போதுமென்று நிறுத்திக்கொண்டாயோ / சிந்திக்கும் இடம் தேடித் தனித்துச் சென்றாயோ” என்று அறிஞர் அண்ணாவின் இறப்பு பற்றியும் நிறைய கட்சிப் பாடல்களை எழுதியவரும் இவரே. 1964-ல் ஆனந்த விகடனில் தூயவன் ’பூஜைக்கு வந்த மலர்’ என்ற தலைப்பில் ஒரு முத்திரைக்கதை எழுதினார். அதில் சாரு என்பவளை கிருஷ்ணன் நம்பூதிரி என்ற செண்டைக்கலைஞன் காதலிக்கிறான். ஆனால் சாரு ஒரு நடனக்கலைஞி என்பது அவனுக்குத் தெரியாது. ஒரு நாள் அதை அவன் தெரிந்துகொள்கிறான். அவன் செண்டை வாசிக்க அவள் ஆடுகிறாள். அந்த நிகழ்ச்சியை தூயவன் இப்படி வர்ணிக்கிறார்: ”அர்த்தபதாக, காத்தரீமுக முத்திரைகளை வலது இடது கைகளால் அலட்சியமாகப் பிடித்து ஒன்றையொன்று நீட்டிய விரல்களால் தொட்டுத் தொட்டு, மேலும் கீழுமாய்க் கொண்டு போய்  தை…தை என்று விளம்பத்திலும், திமிதை…திமிதை.. என்று திருதத்திலும் பிடித்து, மண்டியிட்ட கால்களுடன் வலக்கையை அலபத்ம முத்திரையாய் மார்பிலிருந்து முன்னே கொடுத்து, பின்  வாங்கி த்ரிபதாக முத்திரையுடன் தை…தை… என்று அழகாகப் பின்னடி போட்டுப் போய், அஞ்சலி ஹஸ்தங்களைச் செய்து, அடி அட்டிமை போட்டு அந்தக் கஷ்டமான அலாரிப்பைச் சற்றும்  சிரமமின்றி அவள் செய்து முடித்தபோது, கிருஷ்ணனின் முகத்தில் ஒரு மிரட்சி விரவியது. இத்தனை பெரிய கலைச் செல்வியா சாரு? இப்படியொரு தெய்வீகக் கலையம்சமா அவளிடம்  தேங்கி நிற்கிறது?” கேரளப் பின்புலத்தில் நடக்கிறது இந்தக்கதை. ஒரு செண்டை மற்றும் நடனக்கலைஞரே சிறுகதை எழுதியதைப் போல இவ்வளவு விலாவாரியாக எழுதியிருக்கும் தூயவன் ஒரு  தமிழ் முஸ்லிம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நான் குறிப்பிட்ட மஹாவித்வான் குலாம் காதிர் நாவலர், வண்ணக்களஞ்சியப்  புலவர், புலவர் ஆபிதீன், நீதிபதி மு மு இஸ்மாயீல், சித்தி ஜுனைதா பேகம், கவிஞர் கலைமாமணி சலீம், தூயவன், ஆபிதீன் ஆகிய அத்தனை பேரும் நாகூர்க்காரர்கள் என்பது ஆச்சரியமான உண்மை. இக்கட்டுரையில் நான் உமருப் புலவர் போன்ற வெகுவாகவும், பரவலாகவும் அறியப்பட மகா ஆளுமைகளைப் பற்றி வேண்டுமென்றே பேசவில்லை. தமிழால் இஸ்லாம் செழித்திருக்கிறது. இஸ்லாத்தின் மூலம் தமிழ் வளர்ந்திருக்கிறது. இன்பத் தமிழ் எங்கள் மொழியாகும், இஸ்லாம் எங்களின் வழியாகும் என்ற பாடல்தான் எவ்வளவு உண்மையானது! 8 மீண்ட பொக்கிஷம் எனக்கு நண்பர்கள் ஒருசிலர்தான் உண்டு. அதில் ஆபிதீனும் ஒருவர் (இதை அவர் மறுக்கலாம். அந்த உரிமை அவருக்கு உண்டுதானே)! எண்பதுகளில் நாங்கள் கடிதங்கள் ஒருவருக்கொருவர் அதிகமாக எழுதிக் கொண்டோம். இப்போது என் கையெழுத்தைப் பார்த்தால் எனக்கே ஆச்சரியமாகவும் வாந்தி வாந்தியாகவும் வருகிறது. லாப்டாப்-புக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். சில ஆண்டுகளாகவே எனக்கு 102 விரல்கள் வந்துவிட்டன.  கீபோர்டைத்தான் சொல்கிறேன். அவற்றைக் கொண்டுதான் இந்த கட்டுரையைக்கூட ’அடித்துக்’ கொண்டிருக்கிறேன். (இந்த சொல்லும் ஆபிதீனுக்கு மிகவும் பிடித்த சொல்)! சவுதி போனதிலிருந்து அவருடைய சிந்தனையெல்லாம் ஒரே ’திசை’யை நோக்கித்தான் இருந்து கொண்டிருக்கிறது (ஆமாமா, கஃபதுல்லாஹ்வைத்தான் சொல்கிறேன்)! சரி விஷயத்துக்கு வருகிறேன். அந்தக் காலத்தில் — ஐ மீன் எண்பதுகளில் அல்லது எழுபதுகளின் கடைசியில் — நான், ஆபிதீன், சாரு நிவேதிதா எல்லாரும் கடித ‘இலக்கியங்கள்’ படைப்பதில் மிகத்தீவிரமாக ஈடுபட்டிருந்தோம். சாரு 50 பக்கங்கள்கூட எழுதுவார். ஆபிதீன் சவுதியிலிருந்து எழுதுவார். நானும் பதில்கள் ’போடுவேன்’ (இந்த வார்த்தைகூட…சரி, வேண்டாம்). [] அந்தக் கடிதங்களையெல்லாம் ஓட்டை போட்டுப் பத்திரப்படுத்தக் கூடிய ஒரு கோப்பில் வைத்திருந்தேன். அதில் சாருவின் கடிதங்களெல்லாம் எங்கே போயின என்று தெரியவில்லை. (நல்ல வேளை, அவைகள் காணாமல் போயின). ஆபிதீன், தாஜ், நான் கீழக்கரை கல்லூரியில் பணி புரிந்தபோது என்னோடு பணி புரிந்த கவிஞர் அக்பர் அலி ஆகியோரின் கடிதங்களும் அதில் இருந்தன. நேற்று இரவு சாப்பிடப் போனபோது, நிறைய கோப்புகள் போடப்பட்டிருந்த ஒரு பெரிய பையைக் கொண்டு வந்து காட்டிய என் மனைவி, வீட்டைச் சுத்தப் படுத்தும்போது அகப்பட்டது என்றும், அதில் எனக்குத் தேவையானது ஏதும் இருக்கிறதா என்று பார்க்கும்படியும் கூறி வைத்து விட்டுச் சென்றாள். நான் ஒவ்வொரு கோப்பாகத் திறந்து பார்த்தேன். சிலவற்றில் என் கதைகள், கட்டுரைகள், கவிதைகளின் ஜெராக்ஸ் இருந்தன. தேவையானதையெல்லாம் வலது பக்கமும் தேவையில்லாததையெல்லாம் இடது பக்கமும் வைத்துக் கொண்டே வந்தேன். (என் எழுத்தெல்லாம் இடது பக்கம்தான்). அப்போதுதான் அகப்பட்டன ஆபிதீனின் கடிதங்கள். எழுத்தா அது! ஆபிதீனுக்கு பல திறமைகள் உண்டு. ஓவியம், பாடல் பாடுவது, எழுத்து, பேச்சு என. எதிலுமே [] அவர் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.  தன் திறமைகளில் எதையாவது ஒன்றைக் கொண்டு தன்னால் வெற்றிகரமாக இந்தியாவில் வாழ முடியுமென்ற நம்பிக்கை அவருக்கு ஏன் வராமல் போனது, என்று எனக்கு இன்னும் புரியவில்லை. அவரது எழுத்தில் கிண்டலும் கேலியும் கொட்டித்தான் கிடக்கும். ஓவியம். அது ஒரு அபாரமான திறமை. அதில் ஆபிதீன் ஒரு இயற்கை ஓவியர். உங்களைப் பார்த்த மாத்திரத்தில் இர்ண்டு மூன்று நிமிடங்களில் தத்ரூபமாக கோட்டோவியமாக வரைந்து விடுவார். அவர் வீட்டு சுவர் முழுவதும் ஹென்றி டேவிட் தோரோ, ஷே குவேரே என்று இண்டியன் இங்கில் வரைந்து வைத்திருப்பார்.  அப்படி ஒரு அபார திறமை. அவருடைய கோட்டோவியங்களும் அதில் அவர் காட்டும் க்ரியெட்டிவிட்டியும் எப்போதுமே அசத்துபவை. அவருடைய எழுத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். எழுத்து என்றால் இலக்கியத் திறமை அல்ல. அது பற்றி நான் இங்கே பேசவில்லை. அவர் எழுதும் முறை. ஒரு போஸ்ட் கார்டில் அவர் எழுதினாலும் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற அழகான எழுத்துக்கள் அவரைவிடப் பொடி எழுத்தில் எழுதிய ஒருவரை நான் இதுவரை பார்க்கவில்லை. அவ்வளவு சின்னதாகவும், அவ்வளவு அழகாகவும் எழுத முடியும் என்று அவரது கடிதங்களைப் பார்த்துத்தான் நான் கற்றுக் கொண்டேன். அகப்பட்ட ஆபிதீனின் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள் முதலியன் எனக்கு பழைய நினைவுகளைக் கிளப்பி விட்டுவிட்டன. அவருடைய படைப்புத் திறமைக்கு — நான் அவருடைய மகனையும் மகளையும் பற்றி இங்கே சொல்லவில்லை — ஒருவகையில் அவருடைய வாப்பா காரணம் என்று சொல்லவேண்டும். எனக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் அவருடைய வாப்பா அவருக்குப் பார்த்திருந்த பெண்ணைப் பற்றிக் குறிப்பிட்டதை எழுதியிருந்தார். அதை அப்படியே கீழே தருகிறேன்: [] உமக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் பெண் கோட்டையிலே வீற்றிருந்தவர்களின் வாரிசு. கோலோச்சிய குடும்பத்தின் பரம்பரை. முன்னாள் ஆளுநரும், தலைமை நீதிபதியுமான ஜஸ்டிஸ் அவர்களின் உடன் பிறந்த தம்பி மகள். தரமான தேர்வு. புகழ் மிக்க குடும்பம். ‘பெண்ணுக்கு ஆசைப்படு, அல்லது பொன்னுக்கு ஆசைப்படு’ என்பது பழமொழி. அழகில் தெய்வத்தைக் காணலாம். ஆண்டவனைப் பார்க்கலாம் என்பது அறிஞர் பெருமக்களின் வாக்கு. அந்த வகையில் பொன்னைத் தள்ளிவிட்டு பெண்ணையே, அழகையே தேர்ந்தெடுத்திருக்கிறோம். நாகூரில் அழகு மிக்க பெண்கள் நான்கு என்று வைத்துக் கொண்டால் அதில் தலைம தாங்கும் தகுதி இந்தப் பெண்ணுக்குத்தான் உண்டு. இது ஊரின் ஏகோபித்த அபிப்பிராயம். நீர் ஓவியர் — எழுத்தாளர். உமது ரசனைக்கேற்ற பெண்ணையே எங்கள் மருமகளாக தேர்ந்தெடுத்திருக்கிறோம். தமிழ் ஆச்சாரப்படி சொல்வதானால் லட்சுமியையே வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறோம்… வாப்பாவின் கடிதம்! என்று எனக்கு அனுப்பிய, ‘பதில் போடாத ரஃபிக்கு புது வருட வாழ்த்துக்கள்’ என்ற வாழ்த்துக் கடிதத்தின் பின்னால் நுணுக்கமாக — ஐ மீன், நுணுக்கி நுணுக்கி — எழுதியிருந்தார் ஆபிதீன். [] நாகூர் தமிழ் முஸ்லிம்களின் தமிழ் ஈடுபாட்டையும், தமிழ்ப் புலமையையும் இதிலிருந்தும் வாசகர்கள் உணர்ந்து கொள்ளலாம். முக்கியமாக ஆபிதீன் வாப்பாவின் கடிதத்தின் கடைசி வரி. அது அவர்கள் எத்தகைய அருமையான மனிதர் என்று எனக்குச் சொல்லுகிறது. (என்ன, சரியாக ஒரு மகனை வளர்த்தெடுக்காமல் விட்டுவிட்டார்கள் என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது, என்ன செய்ய? லண்டனுக்குப் போய் குளிருகிறது என்று சொல்லி ஓடி வந்து, துபாய் போய் மணல் சூட்டிலும் மனச் சூட்டிலும் வெந்து கொண்டிருப்பவரை வேறு என்ன சொல்ல!) அவர் வப்பா எழுதிய கடைசி வரிகளைப் படித்து சிலர் கொதிப்படையலாம். நான் ‘வணக்கம்’ என்று எழுதிய ஒரு வார்த்தைக்காகவே சகோதரத்துவ இணக்கம் வேண்டாமென கொதிப்படைந்த புழுக்கள், ஸாரி குழுக்கள், உண்டு. அப்படிப்பட்ட சமுதாயச் சகோதரர்களுக்கு வணக்கத்திற்குரிய அல்லாஹ் ’ஹிதாயத்’ செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்வதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ஒரு கடிதத்தில் எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமாவை அப்படியே கடிதத்தின் உள்ளேயே ’வாட்டர் மார்க்’ மாதிரி வரைந்திருந்தார். அது இப்போதும் பார்க்க மிகவும் பிரமிப்பூட்டுவதாகவே இருக்கிறது. (மேலே கொடுத்திருக்கிறேன்). [] அவருடைய கடிதங்கள் அனைத்தையுமே ஸ்கேன் செய்து ’போடலாம்’ — ச்சே, ஆபிதீனுக்குப் பிடித்த இந்த வார்த்தையே அடிக்கடி வருகிறது என்ன செய்ய ? — என்று பார்த்தேன். ஆனால் அதில் அவர் புழங்கிய சில வார்த்தைகள் வயது வராதவர்களுக்கு மட்டும் என்பதால், வயது வந்த உங்களுக்கு வேண்டாமென அவற்றைத் தவிர்த்துவிட்டேன்! பார்த்துவிட்டு எழுதுங்கள். 9 பரிபூரண அழகிய முன்மாதிரி எஸ்.ஏ.கே.கல்விக் குழுமம்  இந்த மாதம் வெளியிட்ட மீலாது மலரில் (ஜனவரி 26, ஞாயிறு 2014) வெளியான என் கட்டுரை இது. உங்கள் பார்வைக்கு. [S.A.K. Kalvik Kuzhumam Meelad Malar]மனிதர்களுக்கு வழிகாட்டியாக, முன்னுதாரணமாக எத்தனையோ பெரிய மனிதர்கள், மகான்கள் இருந்திருக்கிறார்கள். எப்படி வாழவேண்டும்  என்று தம் சொல்லாலும் செயலாலும் கற்றுக்கொடுத்துள்ளார்கள். அவர்கள் அத்தனை பேருமே போற்றுதலுக்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. சாக்ரடீஸை எடுத்துக்கொள்வோம். கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி. அவரைப் பொய்யாகக் குற்றம் சாட்டி, சிறையிலடைத்து, விஷம் குடித்து உயிர் துறக்க வேண்டும் என்று தண்டனையும் அளித்தது அக்காலத்து அரசு. சாக்ரடீஸ் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் சிறைக்காவலர்களுக்கு அவருடைய சீடர்கள் லஞ்சம் கொடுத்து வைத்திருந்தனர். சிறையிலிருந்து அவர் தப்பிக்கவும் அவர் வழிசெய்தனர். ஆனால் சாக்ரடீஸ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மரணத்தைப் பற்றிய பயம் எனக்கில்லை என்று சொல்லிவிட்டார். அதுமட்டுமா? விஷத்தை அவரே எந்தவித அச்சமும் இன்றி அருந்தினார். அவரது உடல் கொஞ்சம் கொஞ்சமாக மரத்துக்கொண்டே வந்தது. கீழிருந்து மேலாக. கால்கள் முழுமையாக மரத்தவுடன் உட்கார வைக்கப்பட்டார். கவலையுடன் அவருடைய சீடர்கள், “ஐயா, தாங்கள் இறந்த பிறகு உங்கள் உடலை என்ன செய்யவேண்டும்?”  என்று கேட்டனர். அதற்கு அவர், “என்ன வேண்டுமனாலும் செய்யுங்கள். ஆனால் அது நான் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்” என்று பதில் கூறினார்! ஆஹா, என்ன அற்புதமான பதில்! நாம் என்பது உடல் அல்ல என்ற உண்மையை இறுதிக்கணத்தில்கூட மறக்காமல் மக்களுக்கு எடுத்துரைத்த பெரிய ஞானி அவர். அதோடு அவர் அருகிலிருந்த க்ரிட்டோ என்பவரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். “க்ரிட்டோ, அஸ்க்ளிபியஸுக்கு நாம் ஒரு சேவலை பலி கொடுக்கவேண்டும். இன்னும் கொடுக்கவில்லை. அந்தக் கடனைத் திருப்பிகொடுத்துவிடு, மறந்துவிடாதே” என்றும் சொன்னார்! எனக்கு இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் ஞாபகம் வந்தது. இந்த உலகைப் பிரிந்து செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு பள்ளிவாசலுக்கு வந்த பெருமானார், யாருக்காவது தான் ஏதாவது கடன் பட்டிருக்கிறேனா, ஏதாவது கொடுக்க வேண்டியுள்ளதா என்று கேட்டார்கள். ஆமாம் என்று சொன்னவரின் கடனைத் தீர்க்கவும் ஏற்பாடு செய்தார்கள்! கொலை செய்ய வந்த எதிரிகளிடமிருந்து தப்பிக்க, நபிகள் நாயகமும் அபூபக்கரும் தவ்ர் என்ற குகையில் ஒளிந்து கொண்டிருந்தபோது, “நாம் இரண்டு பேர்தானே இருக்கிறோம்?” என்று அபூபக்கர் பயந்து கேட்க, “லா தஹ்ஸன், இன்னல்லாஹ மஅனா” என்று நபிகள் நாயகம் சொன்னார்கள். “பயப்படவேண்டாம், அபூபக்கரே! நாம் இருவரல்ல, (மூவர் இருக்கிறோம்.) நம்மோடு இறைவன் இருக்கிறான்” என்பது அதன் பொருள். இறைவன் நம்மோடு எப்போதும் எங்கும் இருக்கிறான் என்பதை வெறும் அழகான, கவர்ச்சிகரமான வாக்கியமாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. அந்த உண்மையை அவர்கள் கணம் தோறும் தரிசித்தார்கள். (திருமறையிலும் சூரா 57:04ன் வசனம் ”வஹுவ ம’அகும் அய்னமா குன்தும்” என்ற வசனமும் அதையே குறிக்கிறது). அதையே அடுத்தவருக்கும் எடுத்துரைத்தார்கள். அதனால்தான் அவர்களுடைய வாழ்க்கையை இறைவன் சாதாரண முன்மாதிரி இல்லை, ”அழகிய முன்மாதிரி” (உஸ்வத்துன் ஹஸனா) என்று கூறினான் (33:21). இறைவனின் திருப்பெயர்களை திக்ர் எனும் உச்சாடனம் செய்யும் முறைகளில் “அல்லாஹு ஹாளிர்”, “அல்லாஹு நாளிர்”என்று ஒரு திக்ர் உள்ளது. “இறைவன் [நம் அருகிலேயே] இருக்கிறான்”. “இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்” என்று அதற்குப் பொருள். இந்த உணர்வு உண்மையிலேயே ஒரு மனிதனுக்கு இருக்குமானால் அவனால் தவறு செய்ய முடியுமா? கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறைகள் இருக்குமா? இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் இறைவனை ஒவ்வொரு கணமும் வாழ்வில் உணர்ந்தவர்களாகவே செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களது வழிகாட்டுதலும் அவ்விதமே அமைந்துள்ளது. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் மற்ற பெரியவர்களுக்கும் ஒரு வித்தியாசமுள்ளது. மற்றவர்களால் சிலருக்கோ, சில சமுதாயத்தவருக்கோ, சில குழுக்களுக்கோ மட்டும்தான் வழிகாட்டமுடிந்திருக்கிறது. ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கும் அவர்களால் வழிகாட்ட முடியாது. அத்தகைய  பரிபூரண முன்மாதிரி அவர்களிடம் இல்லை. உதாரணமாக இயேசு கிறிஸ்து எனப்படு ஈஸா (அலை). திருமணம் செய்வது எப்படி, மனைவியிடம், பெற்ற குழந்தைகளிடம் எப்படி ஒரு மனிதன் நடந்துகொள்ளவேண்டும், போர் என்று வந்துவிட்டால் அதன் தர்மங்கள் என்ன என்றெல்லாம் ஒரு மனிதர் இயேசுவிடம் வழிகாட்டுதல் பெற முடியாது. ஏனெனில் இயேசு திருமணமும் செய்துகொள்ளவில்லை, போர் நடத்தியதும் இல்லை. எந்தப் போரிலும் பங்கெடுத்ததில்லை. அவருடைய மனம் அந்தப்பக்கமெல்லாம் போகவில்லை. அவர்ருடைய வாழ்நாள் விரைவாக முடிந்தும் போனது. இம்மாதிரியான விஷயங்களுக்கு அவரிடம் வழிகாட்டுதல் இல்லை. புத்தர் பெரிய மகான். ஆனாலும் அவராலும் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் வழிகாட்டுதல் இயலாது. அவர் திருமணம் செய்துகொண்டார். குழந்தை பெற்றுகொண்டார். ஆனாலும் குடும்பத்தை விட்டுவிட்டு உண்மையைத் தேடி காட்டுக்குப் போனார். அந்த உதாரணத்தை குடும்ப வாழ்க்கையில் இருக்கும் யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. இப்படிப் பார்ப்போமேயானால் இறுதித்தூதர் அவர்களிடம் இருந்த சிறப்பு வாழ்க்கையின் எல்லா தரப்புக்கும் வழிகாட்டக்கூடிய பரிபூரணத்தன்மையாகும். எல்லாத் துறைகளிலும் ஒரு மனிதனுக்கு வழிகாட்டக்கூடிய வேறு எந்த மகானும் இந்த உலகில் தோன்றியதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு முறை பள்ளிவாசலில் பொதுச் சொத்தாக குவிந்துக் கிடந்த பேரீத்தம் பழங்களில் ஒன்றை நபி அவர்களின் பேரர் ஹஸன் எடுத்து தன் வாயில் வைத்துவிட்டார். உடனே தன் பேரரை நோக்கி, “சீ! சீ! அதைத் துப்பிவிடு” என்று கூறிவிட்டு, “தர்மப் பொருளை நாம் உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” என்று கேட்டு பொதுச் சொத்தை தம் குடும்பத்தினர் சாப்பிடுவதைத் தடை செய்தார்கள் அண்ணலார். தாயிப் நகர மக்கள் கல்லால் அடித்து ரத்தம் வரும் அளவுக்குத் துன்புறுத்தியபோதும், “இம்மக்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் நேர் வழி பெறாவிட்டாலும் இவர்களின் சந்ததிகள் நேர்வழி பெறக் கூடும்” என எண்ணி அம்மக்களுக்காக இறைவனிடம் இறைஞ்சினார்கள். ஒரு யூதரின் பிணம் கொண்டுபோகப்பட்டபோது பெருமானார் எழுந்து நின்று மரியாதை செய்தார்கள். அது ஒரு யூதரின் பிணம் என்று தோழர்கள் சொன்னப்போதும், “ அதனுள்ளும் இறைவன் கொடுத்த உயிர் இருந்ததல்லவா?” என்றுதான் பதில் சொன்னார்கள். தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்த யூதப்பெண்ணை மன்னித்தார்கள். போரில் பிடிபட்ட கைதிகளையெல்லாம் கொன்றுவிடலாம் என்று யோசனை வந்தபோதெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், மன்னித்துவிடலாம் என்று சொன்னார்கள். ஒரு துளி ரத்தம்கூடச் சிந்தாமல் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது உலகவரலாற்றிலேயே  ஒரு புதுமையான சாதனையாகும். ஒவ்வொரு முறை எதிரிகளோடு தற்காப்பு யுத்தம் செய்ய நேரிட்டபோதெல்லாம், “பெண்கள், குழந்தைகள், வயதானவர்களைக் கொல்லவேண்டாம்” என்றும், “மரங்களை வெட்டவேண்டாம்” என்றும் உத்தரவு கொடுக்க மறந்ததில்லை. ‘பூனையின் தந்தை'(அபூ ஹுரைரா), ‘அறியாமையின் தந்தை'(அபூ ஜஹ்ல்) என மக்களுக்குப் பட்டப்பெயர்கள் கொடுத்து மகிழ்ந்த அரபிகள், பெருமானாருக்கும் ஒரு பட்டம் கொடுத்திருந்தார்கள். அதுதான் ”அல்அமீன்” என்பது. அதற்கு ‘நம்பிக்கைக்குரியவர்’ என்று அர்த்தம். பெருமானார் பொய்சொல்ல மாட்டார்கள், அவர்கள் சொல்வது எப்போதும் உண்மையாகத்தான் இருக்கும் என்பதற்கு பெருமானாரின் எதிரிகளே சான்று பகர்ந்தார்கள். க’அபாவைப் புதுப்பிப்பதற்காக கற்களைத் தூக்கிச் சென்று கொண்டிருந்தவர்களோடு பெருமானாரும் இருந்தார்கள். அப்போது அவர்களின் இடுப்புக்குக் கீழே இருந்த ஆடையை அவிழ்த்துவிடும்படி அல்அப்பாஸ் என்ற அவர்களுடைய மாமா ஒருவர் சொன்னவுடன், வேறு வழியின்றி பெருமானாரும் அப்படிச் செய்ய நேர்ந்தது. ஆனால் நடந்தது என்ன தெரியுமா? ஆடையைக் களைந்து கொண்டிருந்தபோதே, நிர்வாணமாகப் போகிறோம் என்ற உணர்வு வந்தவுடனேயே, பெருமானார் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி புகாரியிலும் ஜபீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) என்ற தோழர் அறிவிப்பதாகப் பதிவாகியுள்ளது. பின்னாளில், ’ஹயா’ என்று அறியப்படும் வெட்க உணர்வு, முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டிய ஈமான் எனப்படும் நம்பிக்கையின் பிரிக்கமுடியாத பகுதி என்று ஹதீது ஒன்றில் குறிப்பிடுகின்ற அளவுக்கு அது முக்கியமான உணர்வாகிவிட்டது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவையெல்லாம் பெண்களுக்கு மட்டும் இருக்க வேண்டிய குணங்கள் என்று நமது தமிழ்க் கலாசாரம் கூறுகிறது. ஆனால் வெட்கங் கெட்டவன் என்று பெயரெடுப்பது ஆண்களுக்கும் அழகல்ல என்று பெருமானாரின் வாழ்வு காட்டுகிறது. பெருமானார் தங்கள் வாழ்நாளில் ஒரு குழந்தையைக்கூட அடித்ததில்லை. ஒரு அடிமையை ஒரு நாளைக்கு எத்தனைமுறை மன்னிக்க வேண்டும் என்று கேட்டபோது, “எழுபது முறை” என்று சொன்னார்கள். அதாவது மன்னித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம். தனக்கு உணவில் விஷம் வைத்த யூதப் பெண்ணைக்கூட அவர்கள் மன்னித்தார்கள். பெருமானார் தன் வாழ்நாளில் ஒரேயொரு கெட்ட வார்த்தையைக்கூட சொன்னதில்லை. ரொம்ப கோபமாக இருந்தால், “உன் நெற்றி அழுக்கால் கறுப்பாகட்டும்” என்றுதான் சொல்வார்களாம். இதுதான் அவர்கள் வாழ்நாளில் சொன்ன மிகக் கடுமையான வார்த்தை! உணர்ச்சிகளை அவர்களைப் போல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்கள் ரொம்ப அரிது. எண்ணற்ற மனைவிகளையும் வைப்பாட்டிகளையும் வைத்துக் கொண்டிருந்த ஒரு சமுதாயத்தில் வந்த அவர்கள், முதலில் தன்னைவிட 20வயது மூத்த விதவை கதீஜாவை மணந்து, அந்த ஒரே மனைவியுடன் மட்டுமே, அவர் தனது 65ஆவது வயதில் இறக்கும்வரை, வாழ்ந்தார்கள். இப்படி வாழ்ந்த மனிதர் அரேபிய வரலாற்றிலேயே பெருமானார் ஒருவர்தான். இது ஒரு வரலாறு காணாத பெரும் புரட்சி என்றே சொல்லவேண்டும். காரணம், அந்தக் காலத்திலும் சரி, அதற்கு முந்தைய காலத்திலும் சரி, பெண்கள் போகப்பொருளாகத்தான்  பார்க்கப்பட்டார்கள். அவர்களை மனுஷியாகப் பார்த்த முதல் மனிதர் பெருமானார்தான். பெருமானாருக்கு முந்திய இறைத்தூதர்கள் அனைவருக்குமே ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர்தான். நபி தாவூதுக்கு (டேவிட்) ஆறு மனைவிகளும் ஏகப்பட்ட வைப்பாட்டிகளும் இருந்தனராம் (II சாமுவேல், 5:13). நபி சுலைமானுக்கு (சாலமன்) 700 மனைவிகளும் 300 வைப்பாட்டிகளும் இருந்தனராம்: “அவனுக்கு பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்” (I இராஜாக்கள், 11:3). சுலைமானுடைய மகன் ரெஹொபோமுக்கு 18 மனைவிகளும் 60 வைப்பாட்டிகளும் இருந்தார்கள் (II நாளாகமம்,  11:21) என்றெல்லாம் பரிசுத்த வேதாகமம் பகர்கிறது. உயிர் பிரிந்துகொண்டிருந்த தருணத்தில்கூட தன் மனைவி ஆயிஷாவிடம் சொல்லி தனக்கு பல் துலக்கிவிடச் சொன்னார்கள் நபிகள் நாயகம்! பல மதங்கள் தர்மம் செய்வதை வலியுறுத்துகின்றன. ஆனால் இஸ்லாம் தர்மம் செய்வதை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாக்கியுள்ளது. ஒருவருடைய வருமானத்தில் எவ்வளவு குறைந்த பட்சம் தர்மம் செய்யவேண்டும் என்றும் வரையறை செய்துகொடுத்துள்ளது. எல்லாவற்றையும் எப்படிச் செய்யவேண்டும், எத்தனை நாளைக்குச் செய்யவேண்டும், எப்படிச் செய்யக்கூடாது, எது கூடும், எது கூடாது என்று சின்னச் சின்ன விஷயங்களைக்கூட மிகத்தெளிவாக வரையறை செய்து கொடுத்துள்ளது இஸ்லாம். சாதனை செய்த எந்த மனிதரின் வாழ்க்கையையும் ஆராய்ந்து பாருங்கள். ஒரு உண்மை புரியும். அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு ஒழுங்கு, ஒரு கட்டமைப்பு, ஒரு வரையறை இருந்திருக்கிறது. எத்தனை மணிக்கு விழிக்க வேண்டும், என்னென்ன செய்யவேண்டும் என்று ஒரு திட்டமும், அதற்கான செயல்முறையும், ஒரு கட்டுப்பாடும் இருந்துள்ளது. இப்படி இல்லாத ஒரு சாதனையாளன்கூட உலகில் கிடையாது. சாதனை செய்ய விரும்பும், வாழ்க்கையில் பெருவெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரும் இம்முறையையே பயன் படுத்தவேண்டியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு முறைப்படுத்தப்பட்ட, வரையறை செய்யப்பட்ட வாழ்க்கையை இஸ்லாம் ஒரு மனிதனுக்கு அளிக்கிறது. அதற்கான அழகிய முன்மாதிரியாக இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. வாழ்க்கையில் நாம் வெற்றிபெற, சுயமுன்னேற்றம் பெற முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சொல்லிலும் செயலிலும் இல்லாத பரிபூரண வழிகாட்டுதல் வேறு எங்காவது உள்ளதா காட்டுங்களேன்! 10 பி.ஜெ.குர்’ஆனை முன்வைத்து சில கேள்விகள் சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் எனக்கு பரிசளிக்கப்பட்ட திருமறையின் பிரதியை எடுத்துப் பார்த்து அதிர்ந்தேன். அது சகோதரர், மார்க்க அறிஞர் பி.ஜெ. அவர்கள் விளக்கக் குறிப்புகளுடன் தமிழாக்கம் செய்திருந்த குர்’ஆன் பிரதி. அதிலென்ன அதிர்ச்சி என்கிறீர்களா? சொல்கிறேன். முதல் இரண்டு பக்கத்தில்தான் என் அதிர்ச்சி. முதல் பக்கம்   ”ஒவ்வொரு இறைத்தூதரும் அற்புதங்களுடன் அனுப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்’ஆன்” (புகாரி 4598, 6732)  என்ற நபிமொழி மட்டும் உள்ளது. இது ஒரு நபிமொழி மட்டுமல்ல. இது ஒரு குறிப்பு. நபிகள் நாயகம் (ஸல்) அற்புதங்ள் நிகழ்த்தும் ஆற்றல் கொண்டவரல்ல என்று சொல்லவருதன் குறிப்பு. [PJ Quran-3]ஆனால் பெருமானார் தன் வாழ்நாளில் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். நான் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்தான் என்று அவர்கள் சொன்னது பணிவின் பொருட்டே. ஒருவர் என்ன நோக்கத்தில் பேசுகிறார் என்று புரிந்துகொள்வதே புரிந்துகொள்வதாகும். சொன்ன வார்த்தையை மட்டும் பிடித்து வவ்வால் மாதிரி தொங்கிக் கொண்டிருப்பது ஒருவகையான சிந்தனைச் சோம்பேறித்தனமாகும். பெருமானார் நிகழ்த்திய அற்புங்களுக்கு சில உதாரணங்கள் தருகிறேன். ஒரு முறை தன் உமிழ்நீரை அலீ (ரலி) யின் கண்ணின் மீது தடவி கண் வேதனையை குணப்படுத்தியிருக்கிறார்கள்(புகாரி 4:58, 5:170, ஹம்பலி இமாமின் முஸ்னத் 1:85, மற்றும் முஸ்லிம், தபரானி) வாய் கொப்பளித்த தண்ணீரை மீண்டு கிணற்றுக்குள் உமிழ்ந்து அந்நீரை குடிக்கத்தகுந்த இனிப்பான நீராக மாற்றியிருக்கிறார்கள் (புகாரி, பாகம் 4, அத்தியாயம் 56, எண் 777). [PJ Quran-5]ஏன் சந்திரனை இரண்டாகப் பிளந்திருக்கிறார்கள் (54:01). மி’அராஜ் பயணம் சென்றிருக்கிறார்கள். எல்லாமே அற்புதங்கள்தான். திருக்குர்’ஆனின் மகிமையை எடுத்துச் சொல்ல, அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதாகவே மேலே முதலில் குறிப்பிடப்பட்ட ஹதீஸை எடுத்துக்கொள்ளவேண்டும். வேறு அற்புதங்கள் செய்யும் ஆற்றல் எனக்கில்லை என்று சொல்ல வருவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால் என் அதிர்ச்சி இந்தக் குறிப்பு தொடர்பானதல்ல. அது அடுத்தடுத்த பக்கங்களில் இருந்தது. இரண்டாம் பக்கத்தில், பொருளடக்கம் உள்ள பக்கத்துக்கு முதல் பக்கத்தில் [PJ Quran-2]திருக்குர்’ஆன் - குர்’ஆன் – மூலம் – அறிமுகம் – வரலாறு - தமிழாக்கம் — விளக்கவுரை —  அட்டவணை - கலைச் சொற்கள் —  அறிவியல் சான்றுகள் - வசனங்களின் பின்னணி —  நபிகளாரின் விளக்கம் என்று போட்டு கீழே பி.ஜைனுல் ஆபிதீன் Moon Publications [Wahiduddin Khan Q]என்றிருந்தது! அதுதான் என் அதிர்ச்சியின் முதல் காரணம். குர்’ஆன் மூலமும் அவர்தானா! இப்படிச் சொல்வதற்காக இறைவன் என்னை மன்னிப்பானாக! ஆனால் அப்படி ஒரு பொருளை அந்தப் பக்கம் கொடுக்கிறது. இதுவரை உலகத்தில் குர்’ஆனை எத்தனையோ அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர், விளக்கவுரைகள் எழுதியுள்ளனர். அவர்கள் அனைவரும் தமிழாக்கம், விளக்கவுரை என்பதன் கீழே மட்டும்தான் தங்கள் பெயர்களைப் போட்டுக்கொண்டனர். குர்’ஆன் – மூலம் என்று போட்டு தன் பெயரைப் போடும் பைத்தியக்காரத்தனத்தை இதுவரை யாரும் செய்யவில்லை. நான் சில மொழிபெயர்ப்புகளின் அட்டையையும் இங்கே கொடுத்துள்ளேன். மௌலானா யூசுஃப் அலி, மர்மட்யூக் பிக்தால், தாவூத், வஹீதுத்தீன் கான் மற்றும் IFT வெளியீடுகள் ஆகியவற்றை உதாரணமாகக் காட்டியுள்ளேன். இவற்றுக்கும் பி.ஜெ.யின் பிரதிக்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும். [Yufuf Ali Q]சரியான கோணத்தில் இதை எடுத்துக்கொள்வோம். திருமறை இறைவனுடைய பேச்சு என்பது உலக முஸ்லிம்கள் அனைவரும் அறிந்த உண்மை என்பதால், யாரும் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று இதை ஒதுக்கிவிடலாம். வேறு என்ன செய்வது? அடுத்து பக்கம் 11ம் தொடங்குகிறது என் அடுத்த அதிர்ச்சி. “வாசிப்பதற்கு முன்” என்ற தலைப்பு கொண்ட பகுதி அது. அதில் நல்லொழுக்கமுள்ள அறிவுள்ள தந்தை தன் மகனுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுரை கூறுகிறார்.  இவ்வாறு அவர் பத்தாண்டுகளில் கூறிய அறிவுரைகளை நாம் தொகுத்தால் அது எவ்வாறு அமைந்திருக்கும்?…இது போலவே திருக்குர்’ஆனும் பல அறிவுரைகளைக் கூறியுள்ளது. கடைசியில் [Pickthal Q]சொந்த மகனைக்கூட மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும்போது ‘நம்ம பையன்’ என்று கூறுவதுண்டு. இதை நேரடியான பொருளில் யாரும் கூறுவதில்லை. புரிந்துகொள்வதும் இல்லை. இதுபோல்தான் நாம், நம்மை, நம்மிடம் என்பன போன்ற சொற்கள் குர்’ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன் என்று கூறுகிறது. இதிலென்ன அதிர்ச்சி என்கிறீர்களா? ஒரு தந்தை தன் மகனோடு பேசுவதுபோல அல்லாஹ் பெருமானாரிடம் பேசியுள்ளான் என்று திரும்பத் திரும்ப இன்ற மூன்று பக்கங்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இறைவனைத் தந்தையாகக் கருதுவது, பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற முத்தெய்வக் கொள்கையுடைய கிறிஸ்தவர்களது நம்பிக்கையாகும். ஏதோ உதாரணத்துக்காக இப்படிக்கூறியிருக்கலாம் என்று என்னால் கருதமுடியவில்லை. யூட்யூபில் சில விடீயோ கிளிப்பிங்-குகளைப் பார்த்தபோதும் இந்த எண்ணம் உறுதிப்பட்டது. டி.என்.டி.ஜெ. அடித்த ஒரு போஸ்டரில் அல்லாஹ்வை ’கர்த்தர்’ என்று குறிப்பிட்டு அதை நியாயப்படுத்தியும் பி.ஜெ. பேசுகிறார். (கீழே காணொளி பார்க்க) https://www.youtube.com/watch?feature=player_embedded&v=hBwHXJS4Qdk கேள்வி 1) அப்படியானால் பி.ஜே அன் கோ எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது? இத்தனையும் பத்தாதென ஒரு தான் ஏற்கனவே சொல்லிய பல விஷயங்கள் தவறுகள்தான். இப்போது அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறோம் என்று ஒரு காணொளியில் அந்தர் பல்டி அடித்திருக்கிறார்கேள்வி 2) இப்படியே பல்டிகள் அடித்துக்கொண்டே போகமாட்டார் என்பது என்ன நிச்சயம்?கேள்வி 3) நிச்சயத்தைன்மையில்லாத, முரண்பாடான கருத்துக்களின் மூட்டைகளாக விளங்கும் இவர்களை இனியும் இளைஞர் சமுதாயம் நம்பி பின்னால் போகவேண்டுமா? இறுதியாக அவரது திருமறையின் தமிழாக்கம் பற்றி ஒன்று சொல்லவிரும்புகிறேன். 2010-ல் நடந்த ஒரு விவாதத்தில் அன்புள்ள சகோதரர்களே, குர்’ஆனையும் ஹதீஸையும் விளங்குவதற்கு இமாம்களுடைய விளக்கங்கள் தேவையில்லை. அவர்களுடைய விளக்கங்கள்தான் குர்/ஆன் ஹதீஸை விளங்குவதற்கு அவைகள்தான் முட்டுக்கட்டையாக உள்ளன என்பதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத்தின் நிலைப்பாடு – இது ஒரு விவாதத்துக்கு உரிய விஷயமே அல்ல. ஏனென்றால் குர்’ஆனை மனிதர்கள் விளங்குவதற்காக வேண்டி அல்லாஹ் தந்திருக்கிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை குர்’ஆனை விளக்குவதற்காக அனுப்பியிருக்கிறான்…….அவர்கள் சொன்னது விளங்கவில்லை என்று சொன்னால் அதனுடைய கருத்து அல்லாஹ்வுக்கு விளக்கத் தெரியலெ, அல்லாஹ்வுடைய ரஸூலுக்கு விளக்கத் தெரியலெ,…வெறெ ஒரு ஆள் வந்துதான் வெளக்க வேண்டியிருக்கு என்பது எவ்வளவு டேஞ்சரான, பாரதூரமான, அல்லாஹ்வையும் ரஸூலையும் இழிவு படுத்தக்கூடிய ஒரு விவாதம் என்பதை சிந்தித்தாலே இது எளிதாக விளங்கிவிடும். அல்லாஹ்வுக்கு விளக்கத் தெரியல என்பதை ஒத்துக்கொண்டால்தான் இன்னொருத்தருடைய தயவு தேவை என்று வரும்…வெறெ ஒருத்தராலதான் குர்’ஆனை விளக்கவேண்டியுள்ளது என்பது அல்லாஹ்வை மறுக்கிற, அல்லாஹ்வை நிராகரிக்கிரதாகும்,  என்று அக்டோபர் 30, 2010-ல் அவர் பேசியிருக்கிறார் . கேள்வி 4) அப்படியானால் இவர் ஏன் குர்’ஆனுக்கு தமிழில் விளக்கம் சொல்கிறார்? அதை ஏன் மற்றவர்கள் கேட்கவேண்டும் அல்லது படிக்க வேண்டும்? சிந்தியுங்கள் சகோதர்களே… அன்புடன் கவலையுடன் நாகூர் ரூமி 11 நம்பிக்கையின் படித்தரங்கள் []   கடவுள் நம்பிக்கைக்கு நான்கு படி நிலைகள் உண்டு. நான்குமே சம அளவு முக்கியத்துவம் வாய்ந்தவைதான். ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. படி நிலைகள் என்று சொல்வதைவிட படிகள் என்றே சொல்லலாம். ஒவ்வொரு படியாகத்தான் நாம் கடந்து போக வேண்டும். அகலக் கால் வைத்து முதல் படியிலிருந்து மூன்றாம் படிக்குப் போக முடியாது. அவசர அவசரமாகவோ, வேகமாகவோகூடப் போக முடியாது. அப்படிச் செல்ல முயன்றால் படிகள் படிகளாய் இருக்காது. பள்ளத் தாக்குகளாய் மாறும் அபாயம் உண்டு. ஒவ்வொரு படியாக, நிதானமாகப் போக வேண்டும். அப்போதுதான் எங்கே போய்ச் சேர வேண்டுமோ அங்கே போய்ச் சேரலாம். நம்பிக்கை என்பது ஒரு வழியே தவிர,  போய்ச்சேர வேண்டிய இடமல்ல. படியிலேயே நின்று கொண்டிருந்தால் பயணம் சாத்தியமில்லை. இங்கே இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும். நம்பிக்கையை நோக்கி ஒருவர் பயணிக்க முடியாது. நம்பிக்கையிலிருந்துதான் பயணிக்க வேண்டும். நம்பிக்கைதான் தொடக்கம். ’இறைவன் இல்லை என்ற படியிலிருந்து இறைவனைத் தவிர என்ற படிக்கு’ என்று அல்லாமா இக்பால் கூறுவது போல. எனவே முதல் படி நம்பிக்கை ஒரு மதம் சார்ந்ததாக, ஒரு கோட்பாடு, ஒரு கொள்கை சார்ந்ததாக, ஒரு குறிப்பிட்ட கடவுள் சார்ந்ததாக, மறுமை, சொர்க்கம், நரகம், தீர்ப்பு நாள் — இப்படி எதைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். இது நம்பிக்கையின் முதல் படி. இந்த படியில் இருப்பவர்கள் கோடிக்கணக்கானோர். இவர்கள் அனைவரும் ஒருவகையில் கொடுத்து வைத்தவர்கள்தான். ஏனெனில் அந்த நம்பிக்கையின் மூலமாக தாங்கள் எதையோ அடைந்து விட்டதாகவோ, அல்லது அடையப் போவதாகவோ அவர்கள் நம்புகிறார்கள். இது நல்லதுதான். ஆனால் இங்கேயே நின்றுவிடுவது நல்லதல்ல. இங்கேயே நின்றுவிட்டால் இறைவனை நோக்கிய பயணத்தில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது. ஒரு மதம் சார்ந்த நம்பிக்கை மட்டுமே உண்மையை அறிந்து கொள்ளப் போதுமானது என்றால், இந்நேரம் கோடிக்கணக்கானோர் உண்மையை அறிந்த புத்தர்களாக, மகாவீரர்களாக, மகான்களாக, ஞானிகளாக இருப்பார்கள். இந்த உலகை ஆட்டி வைக்கும் மனிதனால் உருவாகும் பல பிரச்சனைகள் இல்லாது ஒழிந்து போயிருக்கும். ஆனால் நடப்பு நிஜம் இது உண்மையில்லை என்பதையே நமக்குக் காட்டுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அல்லது அதற்கும் முன்னால் கொடுக்கப்பட்ட நம்பிக்கைகளை அப்படியே வாங்கி நாமும் வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஒரு கிருஷ்ணருக்கு, ஒரு ஜீசஸுக்கு, ஒரு மோசஸுக்கு, ஒரு முஹம்மதுக்குத் தெளிவான உண்மை நமக்கும் தெளிவாகியுள்ளதா? இல்லை என்பதுதான் நேர்மையான பதில்.  பல நூற்றாண்டுகளாக படிக்கட்டிலேயே நாம் நின்றுவிட்டோம். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? நம்பிக்கையின் நான்கு படித்தரங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எந்தப் படியில் நிற்கிறோம் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். முதல்வகை நம்பிக்கை இது பொதுவான நம்பிக்கை. கும்பல் நம்பிக்கை. சாதாரண மக்களின் நம்பிக்கை. கடவுள் இருக்கிறார் ஆமாம் கடவுள் இருக்கிறார். ஒரு கடவுள்தான் இருக்கிறான். ஆமாம் ஒரு கடவுள்தான் இருக்கிறான். பல கடவுள்கள் இருக்கின்றனர். ஆமாம், பல கடவுள்கள் இருக்கின்றனர். கடவுள் இல்லை.ஆமாம் கடவுள் இல்லை, இல்லவே இல்லை. இம்மாதிரியான நம்பிக்கை. இது பொது நம்பிக்கை. பரவலான நம்பிக்கை. பத்தில் ஒன்பது பேருக்கு இருக்கும் நம்பிக்கை. இதில் தவறு என்ன? இது மாறக்கூடியது. உதாரணமாக, கடவுளுக்கு உருவம் உண்டு என்பது இந்து மத நம்பிக்கை. அதே சமயம், ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்’ என்று சொல்பவரும், கடவுள் இல்லை என்று சொல்பவரும் இந்துவாக இருக்கும் சாத்தியம் உண்டு என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. இறைவனுக்கு உருவம் இல்லை என்பது இஸ்லாமிய நம்பிக்கை. ஆனால் உருவம் உண்டு, ஆனால் நம் ஜடக் கண்களால் அவனைப் பார்க்க முடியாது என்று சொல்பவர்களும் முஸ்லிம்களாக இருக்கும் சாத்தியக்கூறையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். []கும்பல் நம்பிக்கை என்பது கூடக்கூடியது, அல்லது குறையக் கூடியது. உடையக் கூடியது, அல்லது மறையக் கூடியது. ரஷ்யப் புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் ரஷ்ய மன்னர் ஜாரின் ஓவியமும், ரஷ்ய அரசி ஜாரினியின் ஓவியமும் அலங்கரிக்காத தெருக்களே கிடையாது. மக்கள் ஒரு தெய்வத்துக்குக் கொடுக்கும் மதிப்பை ஜாருக்கும், ஜாரினிக்கும் கொடுத்தனர். அவர்கள் தெருவில் போனால், கடவுளைத் தரிசித்துவிட்டதைப் போல புளகாங்கிதம் அடைந்தனர். ஆனால் புரட்சிக் காலத்தின்போது, அதே மக்கள்தான் தெருத்தெருவாக இறங்கிச் சென்று ஜார், மற்றும் ஜாரினியின் அடையாளச் சின்னங்கள் அத்தனையையும் உடைத்து நொறுக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். இந்த வரலாறு ஒரு தொடர்கதை என்பதை நாம் அறிவோம். ஜார் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், மரியாதையையும் மாற்றிக் கொள்ள அவர்களுக்கு ஒரு கணம் போதுமானதாக இருந்தது. ஏன்? அவர்களது நம்பிக்கை கும்பல் நம்பிக்கை. ஆனால் கும்பல் நம்பிக்கை மிகவும் சக்தி வாய்ந்தது. சாம்ராஜ்ஜியங்களைச் சாய்க்க வல்லது. புதிய சாம்ராஜ்ஜியங்களை உருவாக்க வல்லது. தேர்தல் காலத்தில் இதை நாம் இன்னும் தெளிவாகப் பார்க்கலாம். முன்னர் தோற்ற கட்சி பின்னர் ஜெயிக்கும். அதைத் தோற்க வைத்ததும், ஜெயிக்க வைத்ததும் அக்கட்சியின்மீது மக்கள் கொண்ட நம்பிக்கை. அந்த நம்பிக்கை தேர்தலுக்குத் தேர்தல் மாறிக் கொண்டே இருக்கும். நம் அனைவரையும் இந்த நம்பிக்கை ஏதோ ஒரு கட்டத்தில் ஆட்டி வைக்கத்தான் செய்கிறது. நாம் ஒத்துக் கொண்டாலும் சரி, ஒத்துக் கொள்ளாவிட்டாலும் சரி. இரண்டாவது வகை நம்பிக்கை இது ஒரு தலைவன் மீதான நம்பிக்கை. ஒரு தனி மனிதன் மீதான நம்பிக்கை. ஒரு காந்தி, ஒரு நேரு, ஒரு ஹிட்லர், ஒரு முசோலின், ஒரு நாராயண மூர்த்தி, ஒரு பில் கேட்ஸ் இப்படி அது யாராக வேண்டுமானலும், எந்தத் துறையைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் இறை நம்பிக்கையைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதால், அது தொடர்பானவர்களை தலைவர்களாக, மாடலாக, ஏற்றுக் கொள்வதை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஒரு இயேசு, ஒரு மோசஸ், ஒரு முஹம்மது, ஒரு கிருஷ்ணர், ஒரு புத்தர், ஒரு மகா வீரர், ஒரு பரம ஹம்சர் இப்படி. நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொன்னால், நான் இயேசுவைப் பின்பற்றுபவன் என்றும், நான் ஒரு முஸ்லிம் என்று சொன்னால், நான் முஹம்மது நபியைப் பின்பற்றுபவன் என்றும் பொருள் கொள்ளலாம். இவ்வகையான நம்பிக்கை முதல் வகை நம்பிக்கையைவிட உயர்ந்தது. முதல் வகை நம்பிக்கை அரூபமானது, வெறும் கருத்து ரீதியானது. ஆனால் இந்த இரண்டாவது வகை நம்பிக்கை ரொம்பவும் திடமானது. ரத்தமும், சதையும், உயிரும், வாழ்வும் கொண்ட ஒரு முன் மாதிரி மனிதர் மீதான நம்பிக்கை சார்ந்தது. மூன்றாவது வகை நம்பிக்கை இது நம் சிந்தனை சார்ந்தது. நாமே அறிவுப் பூர்வமாக சிந்தித்து, ஒரு முடிவுக்கு வந்த பிறகு ஏற்றுக் கொண்ட நம்பிக்கை. ஒருவர் சொல்லி விட்டார் என்பதற்காகவே ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டதல்ல இது. அதையே இறைவன் கொடுத்த மூளையை உபயோகித்து, சிந்தித்து, பின்பு சரிதான் என்று ஏற்றுக்கொண்ட நம்பிக்கை நிலை இது. இது நேர்மறையானதாகவும் இருக்கலாம், எதிர் மறையானதாகவும் இருக்கலாம். []சிந்தித்துப் பார்த்து, இந்த நம்பிக்கை எனக்குத் தேவையில்லை என்ற நம்பிக்கைக்கும் அல்லது முடிவுக்கும் ஒருவர் வரலாம். ”நான் ஏன் கிறிஸ்தவனல்ல?” என்ற தலைப்பில் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் நீண்டதொரு கட்டுரை எழுதினார். அதில் தான் ஏன் ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியாது என்று அவர் அறிவுக்குப் பட்ட வகையில் சிந்தித்து அதற்கான காரணங்களைப் பட்டியலிட்டார்.[] இந்த மூன்றாவது வகையான நம்பிக்கையானது அவநம்பிக்கையில் கொண்டுவிடும் அபாயமும் உண்டு. அதோடு, இந்த வகை நம்பிக்கைக்கு சில வரம்புகள், வரையறைகள் உண்டு. இதன் முக்கியக் குறைபாடு இது அறிவைச் சார்ந்து இருப்பதுதான்! ஏனெனில் அறிவு உணர்ச்சியைச் சார்ந்து இருக்கிறது! ஆம், பல சமயங்களில் உணர்ச்சியின் அடிமையாகவே மனித அறிவு செயல்படுகிறது. பாபர் மசூதியை ஏன் இடித்தீர்கள்? சோம நாதபுரக் கோயிலை ஏன் முற்றுகை இட்டீர்கள்? தேவாலயத்தை ஏன் கொளுத்தினீர்கள்? கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றைக் கீறி சிசுவை வெளியில் எடுத்து தீயில் எறிய உங்களுக்கு எப்படி மனம் வந்தது? யாரோ ஒருவர்மீது வழக்கு போட்டதற்காக அப்பாவி இளம் மாணவிகளை பேருந்துக்குள் வைத்து ஏன் தீமூட்டிக் கொன்றீர்கள்? இயற்கையாக கடலில் ஏற்பட்ட மணல் திட்டை புராண காலத்துப் பாலம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? அப்பாவி மக்களை குண்டு வைத்து ஏன் கொன்றீர்கள்? ஏன் கற்பழித்தீர்கள்? இப்படிப்பட்ட ஏன்-கள் ஏராளம். அதையெல்லாம் செய்தவர்கள் அல்லது சொல்பவர்கள் அதற்கான காரணங்களை நிச்சயமாக வைத்திருந்தனர். அல்லது வைத்திருக்கின்றனர். லட்சக் கணக்கான அப்பாவி மக்களை எப்படிக் கொல்ல உத்தரவு கொடுத்தாய் என்று கேட்டால் நிச்சயம் ஹிட்லரிடம் அதற்கு ஒரு அல்லது பல ‘நியாயமான’ காரணங்கள் இருக்கும். காந்தியைக் கொல்ல கோட்சேவுக்கு ஒரு காரணமிருந்தது. எல்லாக் குற்றவாளிகளின் குற்றங்களுக்கும் பின்னால் அவரவர்க்கான காரணங்கள் நிச்சயம் உண்டு. அந்தக் காரணங்கள் சட்டத்தோடும், சமூகத்தோடு ஒத்துப் போகாமல் இருக்கலாம். ஆனால் இந்தக் காரணங்கள் நிரந்தரமானவை அல்ல. உணர்ச்சிகள் மாறும்போது காரணங்களும் மாறும். ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்குத் தாவுபவர் அதற்கான காரணத்தைச் சொல்வார். மீண்டும் அவர் தாய்க் கட்சிக்கே திரும்பும்போது அதற்கான காரணமும் அவரிடம் தயாராக இருக்கும். ஒரு மனிதனை நாம் விரும்புவதற்கு சில காரணங்கள் இருக்கும். அதே மனிதனை கொஞ்ச நாள் கழித்து நாம் வெறுக்கலாம். அதற்கும் காரணங்கள் இருக்கும். அறிவென்பது தட்பவெப்ப நிலை மாதிரி மாறிக்கொண்டே இருக்கும். ஒரு நேரத்தில் வெயிலடிக்கும். கொஞ்ச நேரம் கழித்து குளிரெடுக்கும். இந்த அறிவை நம்பி வைக்கின்ற நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருக்க முடியும்?! நான்காவது வகை நம்பிக்கை ஆங்கிலத்தில் conviction என்றொரு சொல் உண்டு. ஒரு விதமான நிச்சயத்தன்மை என்று இதைச் சொல்லலாம். இவ்விதமான நிச்சயத்தன்மையின்மீது கட்டப்படும் நம்பிக்கைதான் நான்காவது வகையிலானது. இது மனித அறிவுக்கும் மேலானது. இவ்விதமான நிச்சயத்தன்மை கிடைக்க கொஞ்ச காலமாகும். பின்னர் ஒரு கட்டத்தில் அதுவாகவே நமக்குக் கிடைக்கும். அன்றுதான் நமக்கு அருள் பாலிக்கப்பட்ட நாள் என்று சொல்லலாம். அந்த நிச்சயத்தன்மை சந்தேகங்கள், கேள்விகள், குழப்பங்களுக்கு அப்பாற்பட்டது. தூய்மையானது. இவ்விதமான நிச்சயத்தன்மையில் உருவாகும் நம்பிக்கையை எந்த அறிவாலும் உடைக்க முடியாது. ”காற்றடித்தால் மலை அசையுமா?” என்று கேட்பார் சூஃபி கவிஞானி ஜலாலுத்தீன் ரூமி. அப்படிப்பட்ட மலை போன்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கை ஒருவருக்கு வந்து விட்டால், அதை வார்த்தைகளால் அடுத்தவருக்கு விளக்க முடியாமல்கூடப் போகலாம். ஆனாலும் நூற்றுக்கு நூறு இந்த நம்பிக்கை கொண்டவர் தெளிவாக இருப்பார். ஒரு விஷயத்தில் நேரடி அனுபவம் கொண்டவர் எந்த அளவு நம்புவாரோ அதைவிட உறுதியாக இந்த நான்காவது வகை நம்பிக்கை கொண்டவர் இருப்பார். அவரைப் பொறுத்தவரை எந்த ஆதாரமும் தேவையில்லை. சொர்க்கத்தின் ஏழு கதவுகளும் திறந்து காட்டப்பட்டாலும், நரகத்தில் ஏழு வாயில்களும் திறந்து காட்டப்பட்டாலும், எனது நம்பிக்கை கூடப் போவதுமில்லை, குறையப் போவதுமில்லை என்று அலீ சொன்னார். அந்த வகை நம்பிக்கை இது. இது கூடாது, குறையாது. இது பரிபூரணமானது. நிரந்தரமானது. இந்த நம்பிக்கையைத்தான் சூஃபிகள் ஈமான் என்ற சொல்லால் குறிப்பிட்டனர். நமது நம்பிக்கை எந்த வகையைச் சேர்ந்தது? நம்பிக்கையுடன் நாகூர் ரூமி 12 திருக்குரானை அழிக்க முடியுமா? 13 ஹஸ்ரத் மியான் தான்சேன் (1496-1586/1589) சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம் என்ற எனது நூல் கிழக்கு பதிப்பக வெளியீடாக ஏற்கனவே வெளிவந்துள்ளது. அது மீண்டும் சில அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடாக வர இருக்கிறது. அதிலிருந்து ஒரு அத்தியாயம் உங்களுக்காக. இறைவன் மனித உடலை முதலில் படைத்தான். அதற்குள் புகுந்துகொள்ளுமாறு ஆன்மாவிடம் சொன்னான். ஆனால் சிறைப்பட்டுவிடுவோமே என்று ஆன்மா தயங்கியது. இறைவன் வானவர்களை அழைத்து பாடவும் ஆடவும் சொன்னான். அந்த இசையில் மயங்கிய ஆன்மா தன்னை மறந்து அந்தப் பரவசத்தில் மனித உடலினுள் புகுந்துகொண்டது. எனவே மனிதனுக்கு இசை மீது ஏற்படும் ஆர்வம் பிறப்புக்குப் பின்னர் ஏற்படுவதல்ல. அது அவனோடு கூடப்பிறந்தது   — இசைக்கலைஞர், சூஃபி ஞானி ஹஸ்ரத் இனாயத் கான்.   [Akbar and Tansen visit Swami Haridas in Vrindavan.]காட்டுவழியாக ஒருநாள் போய்க்கொண்டிருந்த அவர் ஒரு இசை மேதை. அவருடைய காலத்தில் அனைவராலும் அறியப்பட்டவர். அவருடைய புகழ் எட்டுத்திசைகளிலும் பரவியிருந்தது. ராஜா மான்சிங்கின் (கிபி1486-1516) அவையில் ஆஸ்தான  பாடகராக இருந்தவர். அவர் வேறு யாருமல்ல. ஸ்வாமி ஹரிதாஸ் என்ற புகழ் பெற்ற இசை மேதை.   ஏன் அவர் காட்டுவழியாகப் போகவேண்டும் என்ற வரலாற்றுத்தன்மையைக் கெடுக்கும் சந்தேகம் எழலாம். வேண்டுமென்றே அவர் காட்டுவழியில் போய்க்கொண்டிருந்திருக்க நியாயமில்லை. அவர் போக வேண்டிய வழியே காட்டுவழியாகத்தான் இருந்திருக்கும். ராஜாபாட்டைகளைத் தவிர மற்றபகுதிகள் பெரும்பாலும் அந்தக்காலத்தில் அப்படித்தானே இருந்திருக்கும்?   அப்போது ஒரு புலியின் கர்ஜனை கேட்டது. ஆனால் உண்மையில் அது ஒரு புலியின் சப்தமல்ல, ஒரு சிறுவன் புலியைப் போல எழுப்பிய ஒலிதான் என்று அறிந்தபோது ஹரிதாஸுக்கு வியப்பேற்பட்டது. அதைவிட ஆச்சரியம் புலியின் ஒலியை எழுப்பிய சிறுவனுக்கு அப்போது ஐந்து வயதுதான்! அந்தச் சிறுவன்தான் பின்னாளில் தீபக் ராகம் பாடி தீயை மூட்டிய தான்சேன் ! தான்சேனுக்குக் கொஞ்சகாலம் குருவாக இருந்து வட இந்திய சங்கீதமான ஹிந்துஸ்தானியை, குறிப்பாக ’த்ருபத்’ என்ற வகை இசையை சொல்லிக் கொடுத்தவர் ஸ்வாமி ஹரிதாஸ்.   தான்சேனுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு சிறுவயதிலேயே தொடங்கிவிட்டது. மிருகங்கள், பறவைகளைப்போல அட்சர சுத்தமாக ஒலியெழுப்புவதில் அந்த வயதிலேயே தான்சேன் சிறந்து விளங்கினார். அவர் இசைத்துறையில் மாபரும் சாதனைகள் செய்ய அந்த பயிற்சி நிச்சயமாக உதவியாக இருந்திருக்க வேண்டும். அவர் ஒரு இசைமேதை என்பதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்த இந்த நிகழ்ச்சி ஒரு ’ஃபாண்டஸி’ திரைப்படத்தைவிடவும் அல்லது ’மேஜிகல்ரியலிஸ’ இலக்கியத்தைவிடவும் சுவாரஸ்யமாக உள்ளது! ஆச்சரியம், ஆனால் உண்மை!   [Mia_Tansen_by_Lala_Deo_Lal]இசைக்கும் ஆன்மிகத்துக்கும் உள்ள நெருக்கமான உறவுக்கு மிகச்சிறந்த உதாரணம் ஹஸ்ரத் மியான் தான்சேன். அவர் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்; அவர் பெயர் ராம்தனு பாண்டே; பின்னாளில் அவர் இஸ்லாத்தை ஏற்றார்; பேரரசர் அக்பரின் அவையில் ஆஸ்தானப் பாடகராக, நவரத்தினங்களில் ஒருவராக இருந்தார்; அக்பருடைய மகள் மெஹ்ருன்னிஸாவைத் திருமணம் செய்துகொண்டார் என்பதையெல்லாம்விட முக்கியமான விஷயம் இரண்டு வேறுபட்ட துறைகளில் மேதைகளாக இருந்த இருவரால் உருவாக்கப்பட்டு, இரண்டும் ஒன்றாய்க்கலந்த ஆன்மிக இசைமேதையாக தான்சேன் இருந்தார் என்பதுதான்.   ஆமாம். அவரது இசைக்கு குருவாக ஸ்வாமி ஹரிதாஸ் இருந்ததுபோல, ஷெய்கு மகான் முஹம்மது கௌது குவாலியரி அவர்களின் ஷத்தாரிய்யா ஆன்மிகப் பாதையில் சிஷ்யராக தான்சேன் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இதுமட்டுமல்ல. தன் குருநாதரின் அடக்கஸ்தலம் இருக்கும் இடத்திலேயே தான்சேனுடைய அடக்கஸ்தலமும் இருக்கிறது. குருவுக்கு மிக நெருங்கிய சிஷ்யர்களுக்கு மட்டுமே அத்தகைய பாக்கியமும் அனுமதியும் கிடைக்கும். குருவையும் சீடரையும் பற்றி அதிகபட்ச தகவல்கள் நமக்குக் கிடைக்காவிட்டாலும், கிடைத்திருக்கும் தகவல்களே நமக்கு வேண்டியதைச் சொல்கின்றன.   இசையின்மீது இறைவனுக்கு எந்தக் காலத்திலும் பிணக்கு இருந்தது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் எல்லாவற்றையும் படைத்தவன் இறைவனே எனும்போது, சப்தங்களையும், சப்தங்களின் ஒழுங்கமைப்பான இசையையும் படைத்தவன் அவனேயாவான். இசைமேதைகளுக்கெல்லாம் இசைமாமேதை இறைவன் ஒருவனே. இதை இஸ்லாமிய சூஃபித்துவம் புரிந்துகொண்டது. இறைவனிடமிருந்து மனிதனை தூரப்படுத்துவதற்கு பதிலாக, ஒரு மனிதன் இறைவனோடு நெருங்குவதற்கு இசை உதவிகரமாக இருக்கிறது என்பதும் சூஃபிகளுக்குத் தெரிந்துவிட்டது.  தன்னை இழந்து, இறையோடு ஒன்றுவதற்கு உதவும் கருவியாக ’ஸமா’ என்ற சூஃபி இசை பயன்படுத்தப்பட்டதும் வரலாறு.   மனித உடலின் அசைவுகள் யாவும் இசையாகவே பரிணமிக்கிறது. அது மூச்சானாலும் சரி, இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு, ரத்த ஓட்டம் எதுவானாலும் சரி. எதுவுமே இஷ்டத்துக்கு நடப்பதில்லை. ஒரு லயத்திலும், சுதியிலும், ஒரு தாளகதியிலும்தான் எல்லாமே நடந்துகொண்டுள்ளன. இசை மனிதனுக்குள்ளேயே உள்ளது. அதனால்தான் அவனால் வெளியிலிருந்து வரும் இசையையும் கேட்டு ரசிக்க முடிகிறது. மனித உடலும் இந்த பிரபஞ்சமும் இசையில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. தாளம் சரியாக இருந்தால் பருவம் சரியாக இருக்கிறது. தாளம் தவறினால், நோய், பூகம்பம், சுனாமி இப்படி எவ்வளவோ, என்னென்னவோ. இசைதான் தொடக்கம். திருக்குர்’ஆனில் வரும் ’குன்ஃபயகூன்’ என்னும் சொல்லும், ஓம் எனும் நாதமும் சொல்வது அதுதான். புனித பைபிள்கூட God said என்றே தொடங்குகிறது. The word was God என்று மறுபடியும் பைபிள் உறுதி செய்கிறது. எனவே உண்மையைப் புரிந்துகொண்ட யாரும் இசைக்கு எதிராக இருக்க முடியாது.   [TansenTomb02]’அவ்லியா’ எனப்படும் இறைநேசர்கள் அனைவருமே இஸ்லாமிய சட்டதிட்டங்களைக்  கரைத்துக் குடித்தவர்கள் மட்டுமல்ல, சொல்லப்பட்ட சொற்களுக்குப் பின்னால் இருக்கும் சொல்லப்படாத உண்மைகளைப் புரிந்துகொண்டவர்கள். அவர்களுடைய கண்கள் சாதாரண கண்கள் அல்ல. எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் கண்கள். நமக்கு ஒரு துளி ரத்தம் தெரிந்தால் அவர்களுக்கு அதில் உள்ள RBC, WBC எல்லாம் தெரியும். ஆனால் அவர்கள் பார்ப்பதை நம்மால் பார்க்க முடியாது. மலையின் உச்சியில் நிற்பவர்களுக்கு மலைக்குக் கீழே உள்ள எல்லாம் தெரியும். இரண்டு பக்கமும் தெரியும். மலையடிவாரத்தில் அன்னாந்து பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கோ அவர்களுக்குத் தெரிவதெல்லாம் தெரிய நியாயமில்லை. சூஃபிகளை விமர்சிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான்.   நாகூர் நாயகம் மகான் காதிர் வலி ஷாஹுல் ஹமீது பாதுஷா அவர்களைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவர்களுடைய குருநாதர் ஷெய்கு முஹம்மது கௌது குவாலியரி அவர்கள் என்னும் விஷயம் வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் மியான் ஹஸ்ரத் தான்சேனுடைய குருவும் கௌது குவாலியரி அவர்கள்தான்!   ஆம். தான்சேன் ஒரு இசை மேதை மட்டுமல்ல. ஒரு ஞானியும்கூட. அவருடைய ஞானம் இசை சம்பந்தப்பட்டதல்ல. ஆனால் அவருடைய இசை ஞானம் சம்பந்தப்பட்டது. அதனால் அவரால் தீபக் ராகத்தைப் பாடி தீயை மூட்டவும், அதற்கு எதிரான மேக் மல்ஹார் ராகத்தால் மழையை வரவழைக்கவும் முடிந்தது! அவர் பாடியபோதெல்லாம் மெழுகுவர்த்திகள் தாமாகவே பற்றிக்கொண்டு ஒளிவிட ஆரம்பித்தன என்றும் கூறப்படுகிறது!   இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஏனெனில் குறிப்பிட்ட சப்த ஒழுங்குகள் குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானபூர்வமாகவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. இசையால் நோயைக் குணப்படுத்த முடியும் என்பதும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும். இசை கேளுங்கள், மூளையில் ‘நியூரோபெப்டைடுகள்’ சுரந்து உங்கள் நோய்கள் நீங்குகின்றன என்கிறார் டாக்டர் தீபக் சோப்ரா.   நாகூர் தர்கா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் வாப்பா அவர்களின் சங்கீத குரு தாவூத் மியான் கான் அவர்கள் கடைசிக்காலத்தில் கால் நோயால் அவதிப்பட்டபோது, நாகூர் நாயகம் அவருடைய கனவில் தோன்றி, மால்கோஸ் என்ற ராகத்தை தர்காவில் வைத்துப் பாடுமாறு உத்தரவு கொடுத்தார்கள். அதன்படி தாவூத் மியான் கான் பாட, அவருடைய கால் நோயும் குணமானது என்பது நாகூர் வரலாற்றின் ஒரு பகுதியாகும்.   இந்த நிகழ்ச்சி எனக்கு சொல்லப்பட்டபோது தான்சேன் பற்றியோ அவரும் நாகூர் நாயகமும் ஒரே குருவிடம் பயின்றவர்கள் என்ற உண்மையோ எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது எல்லாம் புரிகிறது. பாதுஷா நாயகமவர்களுடன் சேர்ந்து தான்சேன் பயின்றுள்ளார்!   தான்சேன் இறந்தபோது துக்கத்தில் அவர் மகன் பிலாஸ்கான் ’பிலாஸ்கான் தோடி’ ஒரு புதிய ராகத்தையே உருவாக்கிப்பாடுகிறார். அவர் அதைப் பாடியபோது தான்சேனின் இறந்த உடலிலிலிருந்து வலதுகை மட்டும் ‘ஆஹா’ என்பதுபோல அசைந்து அந்த ராகத்தைக் கௌரவித்தது என்றும் கூறப்படுகிறது. தான்சேன் ஒரு ஆன்மிகவாதி, மகான் முஹம்மது கௌது குவாலியரி அவர்களின் சீடர் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு பார்க்கும்போது இந்த நிகழ்ச்சி நிச்சயம் நடந்திருக்கும் என்ற உண்மை புரியும். அக்பர் உண்மையில் கொடுத்துவைத்தவர்தான். இந்த வரலாற்றுத் தகவல்களையெல்லாம் படிக்கும்போது, அந்தக் காலத்தில் நாம் பிறக்காமல் போய்விட்டோமே என்ற ஏக்கம் எனக்கு ஏற்படுகிறது!   தான்சேனுக்கு ’மியான்’ என்ற கௌரவப் பட்டத்தைக் கொடுத்தது பேரரசர் அக்பர். ’மியான்’ என்றால் ‘பேரறிஞர்’ என்று பொருள். முதல் முறையாக அவர் அக்பருடைய அவையில் பாடியபோது அக்பர் அவருக்கு ஒருலட்சம் தங்கக் காசுகளைப் பரிசளித்தார்! ஹிந்துஸ்தானி இசைப்பாரம்பரியத்தில் பாடப்படும் எல்லா வகையான பாடல்களுமே, எல்லா ’கரானா’க்களுமே ஒருவிதத்தில் தான்சேனிடமிருந்து வருவதாகக் கூறப்படுகிறது.   ஹிந்துஸ்தானி இசையில் உள்ள பல ராகங்கள் தான்சேன் என்ற பெயருடன் சேர்த்தே சொல்லப்படுகின்றன. மியான் கி தோடி, மியான் கி மல்ஹார், மியான் கி மந்த், மியான் கி சரங் என. தர்பாரி கானடா, தர்பாரி தோடி, ராகேஸ்வரி ஆகிய ராகங்களையும் உருவாக்கியவர் தான்சேன் என்பது குறிப்பிடத்தக்கது. தான்சேன் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் ’தான்சேன் சங்கீத் சம்மேளன்’ என்னும் இசை விஷா குவாலியரில் நடத்தப்படுகிறது.   ஒருநாள் அக்பர் தான்சேனிடம் கேட்டார், “நீங்கள் இவ்வளவு அற்புதமாகப் பாடுகிறீர்களே. உங்களுடைய குருநாதர் எப்படிப் பாடுவார்?”   “அவரோடு என்னை ஒப்பிட்டுப் பேச வேண்டாம்”   “உங்கள் குருநாதர் இருக்கிறாரா?”   “ஆம் இருக்கிறார் ஆனால் உடல் மரித்துவிட்டது”   “நான் அவர் பாடுவதைக் கேட்க வேண்டுமே” “அது முடியாது. அவர் அரசர்கள்  முன்னிலையிலெல்லாம் பாடுவதில்லை”   “நான் ஒரு சேவகனைப் போல வருகிறேனே”   “அப்படியானால் அவர் பாடும் சாத்தியமுள்ளது”   இந்த ஒப்பந்தத்தின்படி ஒரு வேலைக்காரனைப் போன்ற உடையில் பேரரசர் அக்பரும் தான்சேனும் சென்றனர். ஒரு மலைப்பொதும்பில் தனிமையில் இருந்தார் ஸ்வாமி ஹரிதாஸ். இருவரும் சென்று அவரைப் பாடும்படிக் கேட்டுக்கொண்டனர். வேலைக்காரன் ரூபத்தில் வந்திருப்பது ஒரு பேரரசர் என்பது ஹரிதாஸுக்குத் தெரிந்தது. இருந்தாலும் பேரரசரின் பணிவு அவருக்குப் பிடித்திருந்தது. அவரும் பாடினார்.   அவர் பாடப்பாட இந்த பூமியும், அந்த இருவரும் பரவசமடைந்து பிரக்ஞை இழந்தனர். அவர்கள் பாடல் முடிந்து மீண்டபோது அங்கே ஹரிதாஸ் இல்லை.   “நாம் மறுபடி வந்து தொல்லை கொடுப்போம் என்றோ என்னவோ அவர் போய்விட்டார். இனி நிரந்தரமாக வரமாட்டார்”, என்றார் தான்சேன்.   ஆனாலும் ரொம்ப காலம் அக்பருக்கு ஹரிதாஸின் குரலையும் இசையையும் மறக்கவே முடியவில்லை. இனி அவர் மறுபடியும் வரவே மாட்டாரா, இனி அவர் குரலைக் கேட்கவே முடியாதா என்று அக்பர் கேட்டார். முடியாது என்று பதில் சொன்னார் தான்சேன். உங்களுக்குத்தான் அவர் பாடிய ராகம் என்னவென்று தெரியுமல்லவா, நீங்களாவது அதைப் பாடுங்களேன் என்று அக்பர் கேட்டுக்கொண்டார்.   பாதுஷா கேட்டுக்கொண்டதற்காக தான்சேன் பாடினார். ஆனாலும் அக்பருக்குத் திருப்தி ஏற்படவில்லை. “நன்றாக இருக்கிறது. ஆனாலும் அவர் பாடியது மாதிரி இல்லையே ஏன்?” என்று கேட்டார் அக்பர்.   மிகுந்த வருத்தத்தோடும் கொஞ்சம் கோபத்தோடும் ஒரு பதிலைச் சொன்னார் தான்சேன். இசை என்பது ஆன்மிகத்தின் கூறு என்பதை நிரூபிக்கும் பதில் அது. “நான் ஒரு அரசருக்காக, அரசருக்குமுன் பாடினேன். ஆனால் என் குருநாதரோ இறைவனுக்காக, இறைவனின் முன்னிலையில் பாடினார்”   அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் தான்சேன் உலக வாழ்வை வெறுத்து ஆன்மிக நாட்டம் கொண்டு மகான் முஹம்மது கௌது குவாலியரி அவர்களிடம் சென்று சீடராகி ஆன்மிகப் பாதையில் தன்னை இணைத்துக்கொண்டார் என்று கூறுகிறார் சூஃபி ஞானியும் சரோத் மற்றும் வீணை வித்வானும் ஹிந்துஸ்தானி பாடகருமான சூஃபி ஞானி ஹஸ்ரத் இனாயத் கான்.   14 வள்ளல் அப்துல் ஹகீம் சாஹிப் வள்ளல் அப்துல் ஹகீம் சாஹிப்(1863-1938) []வட ஆற்காடு மாவட்டம் கீழ்விசாரம் என்ற ஊரில் கிபி 1863ல் இவர் பிறந்தார். இவருடைய மூதாதையர்கள் தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டையைச் சேர்ந்தவர்கள். பாட்டனார் காதர் ஹுசைனுக்கு விவசாயம். தகப்பனார் சித்தீக் ஹுசைனுக்கு பம்பாயில் சின்னதாக துணி வியாபாரம். இப்படித்தான் தொடங்கியது இந்த வள்ளல் குடும்பத்தின் வரலாறு.விஷாரத்தில் பள்ளி இல்லாததால் வருங்கால வள்ளல் அப்துல் ஹகீம் ஆற்காடு வரை நடந்துபோய் மூன்றாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சிறு அளவில் வியாபாரத்தில் ஈடுபட்டார். கிட்ட்த்தட்ட பத்து கிலோ மீட்டர் தூரத்தை அந்த சிறுவயதில் கடந்துபோய், நடந்து போய் மூன்றாம் வகுப்பு வரை அவர் படித்திருக்கிறார் என்பது கல்விமீது அவருக்கு அல்லது அவரது பெற்றோருக்கு அல்லது இருவருக்குமே இருந்த காதலைக் காட்டுகிறது. அவருடைய தந்தையாருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அந்தக் கவலையோடு ஊர் திரும்பிய அவர் உயிரும் பிரிந்தது. ஆனால் தன் மகனுக்கு வசிய்யத் – இறுதி விருப்பம் – போல ஒன்றை அவர் சொல்லிச் சென்றார். தான் பம்பாயிலிருந்து சென்னை வந்தபோது அங்கிருந்த ராமசாமி முதலியார் விடுதியில் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் மிகவும் கேவலமாக, நாயைவிடக் கேவலமாக நடத்தப்படுவதாகவும், அதுகண்டு தன்னை மிகவும் வாட்டியது என்றும், வருங்காலத்தில் செல்வம் கிடைக்குமாயின், முஸ்லிம்கள் மரியாதையோடும் கண்ணியத்தோடும் சென்னை வந்து தங்கிச் செல்வதற்கு ஒரு விடுதி கட்டிக் கொடுக்க வேண்டும் என்று தன் மகனிடம் கூறி அவர் உயிர் விட்டார். சமுதாயத் தொண்டு கொண்ட உள்ளம் என்றால் இதுதான். தராவீஹுக்கு எட்டு ரக்’அத்தா இருபதா, தொழுகையில் விரலை ஆட்டுவதா நீட்டுவதா, தவ்ஹீத் ஜமா’அத் சரியா, சுன்னத் வல் ஜமா’அத் சரியா என்ற தனி மனித அகந்தைத் தீக்கு நெய்யூற்றி வளர்க்கும் வாக்குவாதங்களைவிட மேலான, ஆரோக்கியமான, உண்மையான இஸ்லாமிய சேவை என்பது இதுதான். வள்ளல் ஹகீமின் தந்தையாருக்கு இறைவன் மறுமையில் நிச்சயம் கண்ணியம் கொடுத்திருப்பான் என்றே நம்புகிறேன். இந்த இறுதி விருப்பத்தை ஹகீமின் தந்தையார் அவரிடம் தெரிவித்து இறந்தபோது ஹகீமின் வயது பதினெட்டுதான். [] தன் சிறிய தந்தை அப்துர் ரஜ்ஜாக்குடன் இணைந்து ஹகீம் வியாபாரம் செய்தார். ஹகீமின் திறமையைக் கண்டு தன் மகள் குல்ஸும் பீவியை ஹகீமுக்குத் திருமணம் செய்து வைத்தார் அப்துர் ரஜ்ஜாக். மாமனாரின் மறைவுக்குப் பிறகு, அவரது மகனுடன் சேர்ந்து வியாபாரம் செய்தார் ஹகீம். அவர் செய்த தோல் வாணிபம் அவருக்கு விரைவிலேயே செல்வத்தையும் செல்வாக்கையும் கொடுத்தது. அந்தப் பகுதிக்கே ஒரு ராஜா மாதிரி ஆகிவிட்டார் ஹகீம். தர்ம சிந்தையும் வள்ளன்மையும் கர்ண பரம்பரையாக இவரது ரத்தத்தில் ஊறிக் கலந்திருக்க வேண்டும். இவரது செல்வம் வளர வளர இவரது தர்மச் செயல்பாடுகளும் வளர்ந்தன. தர்மம் செய்தால் அந்த செல்வத்தில் அல்லாஹ் அருள் புரிந்து அதை பெருகச் செய்கிறான் என்று குர்’ஆனும் கூறுகிறது(2:276). மலையளவு என்னிடம் தங்கம் இருந்தாலும் மூன்று நாட்களுக்குள் அதையெல்லாம் தர்மம் செய்துவிடுவேன் என்றும், தொடர்ந்து தர்மம் செய்யுங்கள் அது உங்களைத் தூய்மைப் படுத்தும் என்றும் இன்னும் தர்மத்தின் சிறப்புகள் பற்றி அனேக நபிமொழிகள் இருக்கின்றன. கொடு, நீ கொடுக்கப்படுவாய் என்று புனித பைபிள் கூறுகிறது. (ல்யூக் 06:38). வேதங்களெல்லாம் தர்மத்தைப் பற்றி உயர்வாக இப்படியெல்லாம் கூறியிருந்தாலும் செல்வம் பெற்ற எல்லாருக்கும் தர்ம சிந்தை இருக்குமா என்றால் அது கேள்விக்குறிதான். கொடுக்கக் கொடுக்கக் குறையும் என்பதுதான் பெரும்பாலான மனிதர்களுடைய தர்க்கமாக இருக்கிறது. ஆனால் சீதக்காதி, வள்ளல் அப்துல் ஹகீம் போன்றவர்கள்தான் அது தவறு என்பதை தம் வாழ்க்கையால் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். தன் தந்தையின் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற, சென்னையில் இருந்த ராமசாமி முதலியார் விடுதிக்கு அருகில் இருந்த காலி இடத்தை ஹகீம் விலை பேசினார். அவரது நோக்கம் அறிந்து கொண்ட சிலர் இடத்தின் விலையை ஏலத்தில் ஏற்றிவிட்டனர். கடைசியில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அதை வாங்கிய ஹகீம் மேலும் 50,000 செலவிட்டு அதில் தங்குவதற்கு மாடிக் கட்டிடமும் தொழுவதற்கு ஒரு பள்ளியும் கட்டி அதைத் தன் தந்தையின் பெயரால் 1921-ம் ஆண்டு வக்ஃபு செய்தார். இன்றும் சென்னையில் செண்ட்ரலுக்கு எதிர்ப்பக்கத் தெருவில் இருக்கும் சித்தீக் ஸராயின் சேவை புகழுக்குரியது. இங்கு முஸ்லிம்கள் இலவசமாக மூன்று நாட்கள் தங்கலாம். அதற்கு மேல் கொஞ்சம் பணம் கொடுத்தால் தங்கிக் கொள்ளலாம். கல்விக்காக இவர் செய்த சேவையும் தர்மமும் காலத்தால் அழியாதவை. இப்படிக்கூட மனிதர்கள் இருந்தார்களா என்று ஆச்சரியப்பட வைப்பவை. சென்னை அங்கப்ப நாயக்கன் தெருவில் ஒரு இந்துப் பெண்மணி வாடகை இடத்தில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். தொடர்ந்து அங்கே நடத்த முடியாத சூழ்நிலை வந்தபோது, அப்பெண்மணி அப்துல் ஹகீம் அவர்களிடம் வந்து முறையிட்டாள். உடனே அதே தெருவில் கடை வைத்து நடத்திக் கொண்டிருந்த தன் மகனை, அந்தக் கடையைக் காலி செய்து அப்பெண்மணி பள்ளிக்கூடம் நடத்துவதற்காக்க் கொடுக்க உத்தரவிட்டார்! தந்தையின் அன்புக் கட்டளைக்கு மகனும் அடி பணிந்தார்! அது கண்டு வியந்த இந்து மக்கள், அப்பள்ளிக்கு அவர்களே சி.அப்துல் ஹகீம் இந்து முஸ்லிம் பள்ளி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். வரலாற்றில் நெகிழ்ச்சியூட்டும் இத்தகைய கணங்கள் மறுபடியும் கிடைக்குமா? முடியாது என்று கூறவில்லை. முடியலாம். முடிய வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். ஏனெனில் வள்ளல் தன்மைக்கு ஜாதி மதமெல்லாம் தெரியாது. ஆம்பூரில் உள்ள இந்து மேல்நிலைப்பள்ளியின் மைய வளாகத்தை இவர்தான் கட்டிக் கொடுத்தார். அப்பள்ளியின் கல்வெட்டு இன்றும் அதைப் பறைசாற்றிக் கொண்டுள்ளது. அந்தக் காலத்திலேயே ஏழை மாணவர்கள் 200 பேர் இவருடைய தர்மத்தில் படித்தார்கள். அவர் செய்த சில தர்ம காரியங்கள்:  வேலூர் பாகியாதுஸ் ஸாலிஹாத் மார்க்கக் கல்லூரிக்கு ஒரு லட்ச ரூபாய்  உம்ராபாத் மத்ரஸா தாருல் உலூமுக்கு 50,000 ரூபாய்  வாணியம்பாடி முஸ்லிம்சங்க வருமானத்துக்கு சென்னை பெரியமேட்டில் ஆறு கிடங்குகள்  மேல்விஷாரம் உயர் நிலைப்பள்ளிக்கு கட்டிடம்  அதன் வருமானத்திற்காக சில கட்டிடங்கள்  ஆம்பூர் மஸ்ஹருல் உலூம் உயர் நிலைப்பள்ளிக்காக ஒரு மார்க்கட் வாங்கி அப்துல் ஹகீம் மார்க்கட் என்ற பெயரில் வக்ஃபு செய்தார்.  திருவல்லிக்கேணி முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியின் கட்டிடம்  கட்டாக்கில் உள்ள தேசியக் கல்லூரிக்கு 25000 ரூபாய்  பெங்களூர் அநாதை விடுதிக்கும் உயர் நிலைப்பள்ளிக்கும் நிதி  அதன் சார்மினார் மஸ்ஜிதுக்கு நிதி  பல சிற்றூர்களிலும் பள்ளிகள்  சேலத்தில் ஒரு பள்ளிவாசல்  குடியாத்தத்தில் ஒரு பெரிய பள்ளிவாசல்  மைசூர் பெரிய பஜாரில் ஜாமிஆ மஸ்ஜித்  ஆற்காடு அப்துல் ஹகீம் போர்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரைச்சம்பள உதவி  அகில இந்திய காங்கிரஸுக்கு நிறைய பண உதவி  திருவண்ணாமலை கோவில் தர்மஸ்தான் நிர்வாகிகளின் கோரிக்கையின் பேரில் கோவிலுக்கு ஒரு யானை இவர் சென்னையில் இருந்து விஷாரம் வந்துவிட்டாரென்றால் சிறுவர் சிறுமியரெல்லாம் இவரைச் சுற்றுக் கொள்வர் சந்தோஷமாக. கரும்பு வண்டியோ, பழக்கூடையோ போனால், இவர் உடனே “கொள்ளை” என்று சொல்வார். உடனே குழந்தைகள் அந்த கரும்பு வண்டியையோ பழக்கூடையையோ ’அபேஸ்’ செய்துகொண்டு போய்விடுவர். ஆனால் இவர் அதற்கான முழுப்பணத்துக்கும் மேல் இரண்டு மூன்று மடங்கு பொருளுக்கு உரியவர்களுக்குக் கொடுத்து அனுப்புவார். இவர் தன் ஆயுளில் சம்பாதித்த 40 லட்சம் ரூபாயில் 35 லட்சம் வரை தர்மம் செய்துவிட்டார். எஞ்சிய ஐந்து லட்சம்தான் இன்று பல கோடியாகப் பெருகிக் கிடக்கிறது. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு இவருக்கு ’சர்’ பட்டத்துக்கு பதிலாக நவாப் பட்டம் கொடுத்து கௌரவித்தது. ஹஜ்ஜுக்குச் செல்வதற்காக சென்னை சென்ற இவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு 1938-ம் ஆண்டு இவர் காலமானார். அவர் இறந்த பிறகு கலியுகக் கர்ணன் மறைந்துவிட்டார் என்று ராஜாஜியும், தர்மம் குடை சாய்ந்தது என்று சுதேசமித்திரன் தலையங்கமும், தென்னிந்தியாவின் வணிக மன்னர் காலமானார் என்று இந்து நாளிதழும் இரங்கல் செய்திகள் வெளியிட்டன. ஜாதி மத பேதம் பார்க்காமல், தர்மம் செய்வதில், கொடுப்பதில் இன்பம் கண்ட இந்தப் பெருமகன் இம்மையில் மறுமைக்காண காரியங்களை சிறப்பாகச் செய்த வள்ளல் பெருமக்களில் நினைவு கூறத்தக்கவர். நவாப் சி. அப்துல் ஹகீம் அவர்களைப் பற்றி இளைய சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒற்றுமையான, வளமான இந்தியாவை உருவாக்க இது உதவும் என்று நம்புகிறேன். தகவல்: இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் – பாகம் 1 — அப்துற்றஹீம் — யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் 15 அம்மியில் கொத்தப்பட்ட சிற்பங்கள்: யுகபாரதி திரைப்படக் காதல் பாடல்கள் by நாகூர் ரூமி [kaviko]திரைப்படத்துக்குப் பாடலெழுத ஒரு கவிஞனை அழைப்பது ஒரு சிற்பியை அம்மி கொத்தச் சொல்வதைப் போன்றது என்று ஒருமுறை கவிக்கோ அப்துல் ரகுமான் ரொம்ப அழகாகச் சொன்னார். அந்தப் பிரச்சனை பற்றி இதைவிட அழகாகவும் மிகச்சரியாகவும் சொல்லமுடியுமா என்பது சந்தேகம்தான். என்றாலும் அம்மி கொத்துவது சிற்பக்கலையைவிட மட்டமானது என்ற அடிப்படையில் சொல்லப்பட்டது அது. அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும்போதுதான் அது சரி. அம்மி கொத்துவதையே அழகாகச் செய்ய முடியுமானால்?! கவிஞனாகவும் திரைப்படப் பாடலாசிரியனாகவும் இருக்கின்ற ஒருவனுக்கு முன்னால் இருக்கும் சவால் இதுதான். ஆனால் அப்படிச் செய்வது சாத்தியமா என்றால் முழுக்க முழுக்க சாத்தியமில்லை. ஆங்காங்கு சாத்தியம். அவ்வப்போது சாத்தியம். அப்படியானால்  ஏன் அதைச் செய்யவேண்டும்? கவிதை எழுதுவதும் அப்படித்தான். ஒரு மகா கவிஞனின் ஒவ்வொரு கவிதை வரியும் மகத்தானதாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அப்படி இருப்பதும் இல்லை. பாரதியோ, ப்ளேக்கோ, கம்பனோ, கீட்ஸோ எல்லோருக்கும் இது பொருந்தும். ஒரு நீண்ட கவிதையில் ஆங்காங்கு சில பொறிகள் இருக்கும். அவ்வளவுதான். அதற்காகத்தான் அந்தக் கவிதை கொண்டாடப்படும். அந்தப் பொறிகள்தான் மேற்கோள் காட்டப்படும். எனவே அம்மிகொத்துவதைப் பற்றிச் சிற்பிகள் கவலைப்படவேண்டியதில்லை. அதைப்போல சிற்பங்களிலும் ஆங்காங்கே அம்மிபோல கொத்தப்பட்டிருப்பதைப் பற்றியும் நாம் பேசவேண்டியதில்லை! [Picture 078]அந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் பாடலாசிரியர்கள் நம் பாராட்டுக்கு உரியவர்கள். கவிஞர்களைவிட அதிகாமான பொறுப்புணர்வு கொண்டவர்கள் என்று சொல்லவேண்டும். ஏனெனில் ஒரு கவிஞனுக்குக் கிடைக்கும் சுதந்திரம் ஒரு திரைப்படப் பாடலாசிரியருக்குக் கிடைப்பதில்லை. பல நேரங்களில் பலவிதமான சமரசங்களை அவர்கள் செய்ய வேண்டியிருக்கும். “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே” என்ற ஆட்டோகிராஃப் படத்தின் பா.விஜய்யின் பாடல் தேசிய விருது பெற்றது நமக்குத் தெரியும். ஆனால் முதல் வரியே இலக்கணப் பிழை கொண்டது. “ஒவ்வொரு பூவுமே” என்பதுதான் சரியாக இருக்கும். ஒருமையும் பன்மையும் ஒருசேர அந்த வரியில் உள்ளது. ஆனால் வேறு வழியில்லை. அது அப்படித்தான் வரவேண்டும். அந்த மெட்டு அப்படி. மெட்டுக்காக செய்யப்பட்ட இலக்கணத் தியாகம் அது. அதனால் என்ன? ரசிக்கிறோமா இல்லையா? அதுதான் முக்கியம். அம்மி கொத்தும்போதே அதில் சின்னச் சின்ன சிற்பங்களை ஆங்காங்கு நுட்பமாகச் செதுக்க ஒரு கலைஞனால் முடியும். அதைத்தான் கண்ணதாசன், கா.மு. ஷரீஃப், வாலி, வைரமுத்து போன்ற ‘பெரிசுகள்’ செய்தன. இப்போது பல இளங்கவிஞர்கள்-திரைப்படப் பாடலாசிரியர்கள் எழுதுகிறார்கள். அவர்களின் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்  இருவர்: ஒருவர் நா.முத்துக்குமார். இன்னொருவர் யுகபாரதி. இவர்கள் வருங்காலப் பெரிசுகள்! [nm]அவள் அப்படியொன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை அவள் பெரிதாய் எதுவும் படிக்கவில்லை, அவளைப் படித்தேன், முடிக்கவில்லை என்று முரணழகு சொட்டும் பாடலை எழுதியவர் நா.முத்துக்குமார். அவரோடு எனக்கு அதிகமாகப் பழக்கம் கிடையாது. ஓரிரு முறை நேரில் சந்தித்திருக்கிறேன். பழகுவதற்கு இனிமையான, எளிமையானவர் என்று புரிந்துகொண்டேன். அதோடு, சினிமாத்துறைக்கு வந்தால் ஒட்டிக்கொள்ளும் உயிர்கொல்லிப் பழக்கங்கள் எதுவும் இல்லாதவர் என்று கேள்வி. அதேபோன்ற இன்னொரு திறமைசாலிதான் யுகபாரதி. யுகபாரதியைப் பற்றி எழுதுவதில் எனக்கொரு சங்கடம் உண்டு. அவர் என் நெருங்கிய நண்பர். என்றாலும் மிகவும் யோசித்து ஒரு பதிவு இருக்கட்டுமே என்று முடிவுசெய்தே இதை எழுதுகிறேன். யுகபாரதி அடிப்படையில் ஒரு கவிஞர் மட்டுமல்ல. பன்முகத்திறமைகள் கொண்ட ஒரு படைப்பாளி. கவிதை, [yb]கட்டுரை, விமர்சனம், இதழியல் (படித்துறை சிற்றிதழ் ஆசிரியர்), புத்தகப்பதிப்பு (நேர்நிரை), திரைப்படப்பாடல், சொற்பொழிவு என பல தளங்களில் தன்னை நிறுவியவர். நிறுவிக்கொண்டிருப்பவர். எனக்குத் தெரிந்து இதுவரை ஏழு கவிதைத் தொகுதிகளும் ஏழு கட்டுரைத்தொகுதிகளும் வெளி வந்துள்ளன. எல்லா நூல்களுமே அவருடைய ”நேர்நிரை” பதிப்பக வெளியீடாக வந்தவை. ”தெருவாசகம்” மட்டும் முதலில் ஆனந்த விகடனில் பிரசுரமாகி பின்பு விகடன் வெளியீடாக வந்தது. பல கட்டுரைகளும் கவிதைகளும் பிரபலமான நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தவை. 1.மனப்பத்தாயம், 2. தெப்பக்கட்டை, 3. பஞ்சாரம், 4. தெருவாசகம், 5. ஒரு மரத்துக்கள், 6. நொண்டிக்காவடி. 7. கனவுகளின் கைநாட்டு ஆகியவை கவிதை நூல்கள். மரபு மற்றும் புதுக்கவிதைகள். 1.அதாவது, 2. கண்ணாடி முள், 3. நேற்றைய காற்று. 4. வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள், 5. காதல் பிசாசே, 6. நானொருவன் மட்டிலும், 7. நடுக்கடல் தனிக்கப்பல் — ஆகியவை கட்டுரைத் தொகுப்புகள். பல் வேறு காலகட்டங்களில்,   சங்க இலக்கியம், மரபுக்கவிதை,  நவீன இலக்கியம், கவிஞர்கள், தலைவர்கள், திரைப்படப் பாடல்கள்,– இப்படிப் பலவிஷயங்களைப் பற்றி எழுதப்பட்டவை. அவருடைய எழுத்தின் அழகையும், ஆளுமையையும், வாசிப்பு அனுபவத்தையும் இவற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். [Kadhal Pisase]“இந்தத் தொன்மையான மொழியின் முதல் காதல் கடிதம் இப்போது எங்கே இருக்கும்? காலத்தால் அழியாது போகவே பெண்களி கண்களிலும் ஆண்களின் இதயத்திலும் அது மடித்துவைக்கப்பட்டிருக்கும்” (காதல் பிசாசே, பக்கம் 18) என்று அழகாகக் கூறமுடிகிற ஒரு படைப்பாளியை நாம் எப்படி கவனிக்காமல் இருக்க முடியும்? திரைப்படப்பாடலுக்கு அடிப்படை “கவிதை மனம்” என்று ஒரு கட்டுரையில் (வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள், பக்கம் 70) கூறுகிறார். அந்தக் கவிதை மனதை அவர் பாடல்களில் கண்டுபிடிக்கும் முயற்சிதான் இக்கட்டுரை. 2001ம் ஆண்டு தொடங்கியது யுகபாரதியின் திரைப்படத்துறை சார்ந்த வாழ்வும் வாய்ப்பும். அந்த ஆண்டுதான் ”ஆனந்தம்” என்ற படம் வெளிவந்தது. அதில் வரும் ஹரினி, உன்னி கிருஷ்ணன் பாடிய ”புல்லாங்குழலின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்” என்ற பாடலில் தொடங்குகிறார் யுகபாரதி. தயக்கத்தோடும் சந்தேகத்தோடும் ஆமை மீது ஏறித் தொடங்கிய அந்த பயணம், இப்போது விமானத்தில் தொடர்ந்துகொண்டிருக்கிறது! ஆம். இதுவரைக்கும் 1000க்கும் மேற்பட்ட பாடல்களை 300 மேற்பட்ட படங்களுக்கு எழுதிவிட்டார் யுகபாரதி! பல பாடல்கள் ஹிட்டோ ஹிட்! திரைப்படப் பாடல்கள் மட்டுமல்ல. சன், விஜய் தொலைக்காட்சிகளில் வந்த, வரும் பல நெடுந்தொடர்களுக்குப்  பாடலும் இவரே. மதுர, பிரிவோம் சந்திப்போம், அழகி, செல்வி, திருமதி செல்வம் ஆகியவை சில உதாரணங்கள். கணையாழி பத்திரிக்கையில் அவர் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தார். நான் கட்டுரை, கவிதை எழுதி கணையாழிக்குக் கொடுக்கப் போகும்போது எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. எப்படி ’ஆனந்தம்’ படத்துக்கு எழுதினீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் இன்னும் நினைவிருக்கிறது. “சில்லறை மாற்றுவதற்காக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு விழுந்த மாதிரி” என்றார்! என்ன ஒரு கவித்துவமான பதில்! [anandam1]யுகபாரதியின் முதல் பாடலையே எடுத்துக்கொள்வோம். காதலன் கொடுத்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொண்டு நாயகி பாடுவதாக வரும் பாடல் அது.  எனக்குத் தெரிந்து “ஒற்றை நாணயம்” என்ற தூய தமிழ்ச்சொல் வந்திருப்பது திரைப்படப் பாடல் வரலாற்றில் அதுதான் முதன் முறை என்று நினைக்கிறேன். அந்த சொல்லுக்காகவே ஒரு ஆறு மாதம் அந்த பல்லவியோடு யுகபாரதியை மறந்துவிட்டு படக்குழுவினர் இயங்கினர். கடைசியில் இறைவனின் திட்டப்படி, அந்தப் பாடல் வரிகளைத் தவிர வேறு எதுவும் அந்த மெட்டுக்கு சரியாக வராததால், யுகபாரதியை மீண்டும் அழைத்து சரணங்களை எழுதச் சொல்லினராம். படத்தின் ப்ரோமோ காட்டும்வரை அந்தப் பாடலை இணைப்பதா இல்லையா என்ற கேள்விக்கு பதில் காணாமலே இருந்துள்ளனர் படக்குழுவினர். பாடல் ஹிட் ஆனபிறகுதான் நல்ல தமிழ்ச்சொல்லின் மகத்துவமும் நல்ல கவிஞனின் திறமையும் எல்லாருக்கும் புரிந்தது! முடிந்தபோதெல்லால் தன் பாடல்கள் மூலமாக தூய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்த யுகபாரதி முயல்கிறார். [pokkisham]சிவப்பதிகாரம் என்ற படத்தில் “அற்றைத் திங்கள்” என்றொரு பாடலும் அப்படிப்பட்டதுதான். பொக்கிஷம் படத்தில் வரும் “நிலா, நீ வானம் காற்று” என்ற பாடலும் இப்படிப்பட்டதுதான். அதில் வரும் சில சொற்கள்: “இதில் யாவுமே நீதான் எனினும் / உயிரென்றே உனைச் சொல்வேனே நான் நாம் என்பதே இனிமேல் மெய்சுகம் அன்புள்ள மன்னா, அன்புள்ள கணவா, அன்புள்ள கள்வனே, அன்புள்ள கண்ணாளனே அன்புள்ள ஒலியே, அன்புள்ள தமிழே, அன்புள்ள செய்யுளே, அன்புள்ள இலக்கணமே அன்புள்ள திருக்குறளே, அன்புள்ள நற்றினையே / அன்புள்ள படவா, அன்புள்ள திருடா, அன்புள்ள ரசிகா, அன்புள்ள கிறுக்கா… / அன்புள்ள அன்பே” என்று செல்லும் அந்தப் பாடல். [With YB Vikramadityan1]எனக்குத் தெரிந்து செய்யுள், திருக்குறள், நற்றினையோடெல்லாம் காதலர்கள் தங்களை ஒப்பிட்டுச் சொல்லும் பாடல் இதுவரை வந்தது கிடையாது. தமிழின் மீதும் தமிழிலக்கியத்தின் மீதும் யுகபாரதி கொண்டுள்ள காதலை இது வெளிப்படுத்துகிறது. (அந்தப் பாடலை டெல்லிக்கு அனுப்புவதற்காக நான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துகொடுத்த அனுபவமும் எனக்குண்டு). யுகபாரதியின் திருமணத்துக்குச் சென்றிருந்தபோது பேசிய இயக்குனர் சேரன் இப்பாடல் பற்றி ஒரு சுவையான விஷயத்தைக் குறிப்பிட்டார். ”அன்புள்ள அன்பே” என்று கடைசியில் முடித்திருந்ததன் ரகசியம் தனக்கு யுகபாரதியின் திருமண அழைப்பிதழைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது என்று சொல்லிவிட்டு, அவருடைய (வருங்கால) மனைவியின் பெயரான ”அன்புச் செல்வி”  என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டதாகச்  சொல்லி கைதட்டல் வாங்கினார்! ஒரு பாடலுக்குள் எவ்வளவு நுட்பங்கள் உள்ளன என்று பாருங்கள்! யுகபாரதிக்கு ஒரு வித்தியாசமான ராசி உண்டு. நமக்கெல்லாம் எது அபசகுனமாக இருக்குமோ அதுவே அவருக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்! ஆமாம். ”அய்யோ”  என்ற சொல் அமங்கலமானதாகக் கருதப்படுகிறது. வீட்டில் குழந்தைகள் யாராவது ‘அய்யோ’ என்று கத்தினால், “அய்யோ என்று சொல்லாதே, அல்லாஹ் என்று சொல்” என்று சொல்வார்கள். இதையொத்த எச்சரிக்கைகளை மற்ற சமூகத்தவர்களும் செய்வார்கள். நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் யுகபாரதிக்கு “அய்யோ” என்ற சொல் ராசியான, மங்கலமான சொல்லாக மாறிவிட்டது. அல்லது அவர் அதை அப்படி மாற்றிவிட்டார்! [mkumaran]“அய்யோ, உன் கண்கள் அய்யய்யோ, உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே அய்யய்யோ / அய்யோ   , அய்யோ, அய்யோடா அய்யய்யோ, நீ என்னைக் கண்ட நேரத்தில் மின்சாரம் அய்யய்யோ”  என்ற பாடல் ”எம்.குமரன்” படத்தில் வருகிறது. இது அவருடைய ஹிட் பாடல்களில் ஒன்று. வார்த்தைகளால் சொல்லமுடியாத காதலை, உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக இங்கே ‘அய்யோ’ மிகச்சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ”அய்யய்யோ யோ ஆனந்தமே”  என்பது ”கும்கி” படத்தின் ஹிட் பாடல்களில் ஒன்று. “காதல் போடும் தூரலில் தேகம் மூழ்கிப் போகுதே” என்றொரு வரி அதில். தூரல் போட்டு யாரும் அதில் மூழ்கிப் போகும் வாய்ப்பு கிடையாது. ஆனால் காதல் தூரல் வித்தியாசமானது. அது தூரல்தான் என்றாலும் நடுக்கடல் போல ஆழமானது அது. அதில் காதலர்கள் மட்டுமே மூழ்கிப்போவார்கள்! உன்னை முதல் முறை கண்ட நொடியினில் / தண்ணிக்குள்ளே விழுந்தேன்[kumki1] அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல / ”மெல்ல மெல்லக் கரைந்தேன்” கரை சேர நீயும் கையில் ஏந்த வா / உயிர் காதலோடு நானும் நீந்தவா ( பாடியவர்கள்: ஹரிஹரன், மதுஸ்ரீ ) என்ற வரிகள் வரும்.  முதன் முதலாக நாயகி யானையைக் கண்டு பயந்து குளத்தினுள் விழுந்துவிடுவாள். அதைப் பார்க்கும் நாயகனும் தண்ணீருக்குள் குதிப்பான். இது காட்சி. இப்போது பாடல் வரிகளைக் கேளுங்கள்.  ”அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல” என்பது புதிய அர்த்தம் கொடுக்கும். வரிகளுக்குள் கதையும் வருகிறது, காதலும் வருகிறது. அதோடு, கரைதல் என்பது தண்ணீரோடு இணைந்த ஒரு காரியமாகும். ”மெல்ல மெல்லக் கரைந்தேன்”என்பது காதலில் கரைவதையும், நீரினுள் விழுந்தததைக் குறிப்பதையும் கவனிக்கவேண்டும். காதல் என்ற முக்கிய தளத்தோடு கதை என்ற தளத்தையும் சேர்த்துக்கொண்டு பயணிக்கிறது பாடல். [kumki3]இந்தமாதிரி கதையோடு அழகாக பின்னிப் பாடல்களை எழுதும் திறமை கண்ணதாசனுக்குரியது. உதாரணமாக ”அவர்கள்” என்ற படத்தில் நாயகியின் காதலனும், அவளது கணவனும், ஒரே இடத்தில் அவள் உடல் நலத்தை கவனிக்க ஒன்றுகூடுகிறார்கள். அப்போது எஸ்.பி.பி. பாடும் ”அங்கும் இங்கும் பாதை உண்டு, இன்று நீ எந்தப் பக்கம்” என்ற பாடலில் ”கண்ணா என்றாள் முருகன் வந்தான், முருகா என்றாள் கண்ணன் வந்தான் / எந்த தெய்வம் சொந்தம் என்று பூஜை செய்குவாள்” என்று பாடல் வரிகள் வரும்! அந்த வகையில் கவியரசின் வாரிசாக யுகபாரதி எழுதுகிறார்! ஜெயங்கொண்டான்” படத்தில் ஒரு பாடல். ஹரிஹரன் பாடியது. காதலுக்கு காதலி சம்மதம் சொன்னபிறகு என்ன நடக்கிறது? நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே[jeyamkondan] நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்களானதே என் தலை நனைத்த மழைத்துளி அமுதமானதே நான் இழுத்து விட்ட மூச்சிலே இசை கசிந்ததே ஆமாம். காதல் ஒரு அற்புத சக்தி. அது ஓவியத்தில் இருக்கும் சூரியனையும் ஒளிர வைக்கும். மணல் வெளியையும் பூக்களாய் மலரவைக்கும். எல்லாவற்றுக்குமே காதல் உயிர் கொடுத்துவிடுகிறது! காதலின் அற்புத சக்தியை இதைவிட அழகாகச் சொல்லமுடியுமா என்ன? [run]’ரன்’ படத்தில் வரும் ”காதல் பிசாசே” என்ற பாடலை எடுத்துக்கொள்வோம். ’காதல் பிசாசே’ என்ற சொல்லாடல் பழைய இலக்கியத்திலிருந்து கிடைப்பது. ஆனால் அதில் வரும் பல வரிகள் கவித்துவமிக்கவை. காதலை அழகாகச் சொல்பவை. “என் மீசைக்கும் பூவாசம் நீ தந்து போனாயடி” என்று அவன் பாட, “என் ஸ்வாசத்தில் ஆண் வாசம் நீ என்று ஆனாயடா” என்று அவள் கூறுகிறாள். ”என் தாயோடும் பேசாத மௌனத்தை நீயே சொன்னாய்”, “நான் யாரோடும் பேசாத முத்தத்தை நீயே தந்தாய்” என்று மாறிமாறி அவர்கள் பாடிக்கொள்வார்கள். மீசைக்குப் பூவாசமும், ஸ்வாசத்தில் ஆண் வாசமும் காதலிம் நெருக்கத்தை அழகாகச் சொல்கின்றன. காதல் தரும் அனுபவம், அந்த சுகம் யாரோடும் பகிர்ந்த கொள்ள முடியாதது. பகிர்ந்துகொள்ள விரும்பாததும்கூட. அது தாயோடுகூட பேசமுடியாத மௌனத்தையும், யாரோடும் பேசமுடியாமல் நினைத்து நினைத்து சந்தோஷத்தில் இருக்கக்கூடிய ஒரு முத்தத்தையும் கொடுக்கவல்லது! [Parthiban Kanavu]”பார்த்திபன் கனவு” என்ற படத்தில் வரும் “கனாக் கண்டேனடி”என்று ஒரு அருமையான பாடல். மது பாலகிருஷ்ணன் பாடியது. அதில் ”ஒரு கண்ணில் அமுதம் கண்டேன், மறு கண்ணில் அமிலம் கண்டேன். எங்கெங்கோ தேடித்தேடி உன்னில் என்னை நான் கண்டேன்” என்று வரிகள் காதல் இலக்கிய வரலாற்றில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் பாரம்பரிய படிமத்தின் தொடர்ச்சியை அழகாகச் சுட்டுபவை. காதலி என்பவள் சமயங்களில் அன்பாகவும், சமயங்களில் கோபமாகவும் இருப்பாள். இதைச் சொல்லாத உலக இலக்கியமே இல்லை.  ஜக்ஜித் சிங் பாடிய ”தில் கெ தீவாரோன் தர் பெ க்யா தேக்கா” (இதயச் சுவரில் என்ன பார்த்தாய், உன் பெயர்மட்டும் எழுதி இருந்ததைப் பார்த்தேன்) என்ற கஜலில் ஒரு வரி வரும். ”தேரி ஆங்கோன் மெ ஹம்னெ க்யா தேக்கா / கபி காதில் கபீ ஹுதா தேக்கா” என்று. அதன் பொருள்: “சமயங்களில் எமனையும், சமயங்களில் இறைவனையும் பார்த்தேன்” என்று கொள்ளலாம். சுதர்ஷன் ஃபாகிர் எழுதிய புகழ்பெற்ற கஜல் அது. அந்த  பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக யுகபாரதியின் வரிகளைப் பார்க்கலாம். உர்துவில் ”காத்தில்”, ”ஹுதா” என்று வருவதுபோலவே தமிழில் அவர் ”அமுதம்”, “அமிலம்” என்று சொல்லியிருப்பதும், ஒன்றில் வாழவைக்கும் குணமும், இன்னொன்றில் சாகடிக்கும் குணமும் இருப்பதும் கவனிக்கத்தக்கது. ”பொறி” என்ற படத்தில் ஒரு பாடல்.[With YB] “பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் / பின்வாசல் முற்றத்திலே துளசி மாடம் / விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் / விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்” என்று. அருமையான பாடல். மதுபாலகிருஷ்ணனும் மதுஸ்ரீயும் பாடியது. பேருந்தில் ஜன்னலோரம் என்பது சிறப்பானதொரு இடம். அது அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் புரியும். நான் பல ஆண்டுகளுக்கு முன்பு கணையாழியில் பேருந்தில் தஞ்சாவூரில் இருந்து நாகூர் செல்வது பற்றி ”ஒரு மாலைப்பொழுதில்” என்று ஒரு சிறுகதை எழுதினேன். அதில் எனக்குப் பிடித்த ஜன்னலோர இருக்கையில்தான் அமர்ந்து போவேன். (கதையிலும்). அந்த இடத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டேன். ஒரு வேளை, ஒரு காலத்தில் எனக்காக வர இருக்கும் அவளுக்காக வேண்டுமானால் விட்டுகொடுக்கலாம் என்று எழுதியிருப்பேன். அது நினைவுக்கு வந்தது. காதல் உணர்வு என்பது பிரபஞ்சம் முழுக்கவும் பொதுவாகத்தான் இருக்கும் என்பதை இந்த வரிகளும் எனக்கு உறுதிசெய்கின்றன. ஆனால் “தினமும் காலையில் எனது வாசலில் கிடக்கும் நாளிதழ் நீதானே” என்ற வரியோடு நான் உடன்படவில்லை.”காத்துக் கிடத்தல்”  என்ற விஷயத்துக்கு அது சரி என்றாலும், படித்த பின்னர் தூக்கிப் போடப்படுதல் என்ற அர்த்தத்தில் அது சரியானதாக இல்லை.  ஒருவேளை காதலர்களின் கதி காதலின் நிறைவேற்றத்துக்குப்பின் அதுதான் என்று யுகபாரதி சொல்ல வருகிறாரோ என்னவோ! [images]”மைனா” படத்தில் (எல்லாப்பாடல்களும் இவரே) ’மைனா மைனா’ என்ற பாடலில் சிம்னிக்கு மண்ணெண்ணெயப் போல / சித்திரைக்கு உச்சி வெயில் போல நீயும் எனக்காக / உயிர் வாழ்வேன் ஒனக்காக சக்கரத்தைப் போல சுத்தி வரும் ஆசெ / கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீசெ அடியே நீ மணலெ திரிச்ச கயிறா / கொடியே நீ உசுரெ கடஞ்ச தயிரா – என்ற வரிகள் வரும். இந்தப்பாடலில் “உசிர கடஞ்ச தயிரா” என்ற வரி அதற்கு முந்தைய வரியோடு சந்தத்தில் சேருகிறது என்பதைத் தாண்டி, அவனது உயிரைக் கடைந்து எடுத்த தயிர் அவள் என்று சொல்வதன் மூலம் அவனுக்காக உயிரைக்கொடுக்கும் அவளது பாத்திரத்தோடு ஒன்றிப்போகிறது. சிம்னி, மண்ணெண்ணெய் போன்ற அன்றாடம் நம் வழக்கில் உள்ள சாதாரண சொற்களைப் பாடல்களுக்குப் பயன்படுத்துவதில் யுகபாரதிக்கு முதல் பரிசு கொடுக்கலாம். ”கருப்புசாமி குத்தகைக்காரர்” என்ற படத்தில் பாம்பே ஜயஸ்ரீ பாடும் ”உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது” என்று ஒரு பாடல். அதில் “கண்ணுரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது” என்று ஒரு வரி. கண்களும் கண்ணீரும் பிரிக்க முடியாதபடி வாழ்நாள் முழுவதும்  துயரமாக மாறிவிட்ட ஒரு கசப்பான, உப்புக்கரிப்பான நிஜத்தை இதைவிட சிறப்பாகச் சொல்லமுடியுமா? “வாக்கப்படுவது” என்ற சொற்றொடர் நமக்கு மட்டுமே புரிகின்ற, நம் கலாச்சாரம் சார்ந்த ஒரு விஷயம். பெண்கள் வாக்கப்பட்டுப் போவதன் பின்னணியில் உள்ள சோகங்களும் நாம் அறிந்தவையே. [Theruvasagam]இன்னொரு இடத்தில் / வேரொடு பிடுங்கி நடும் பாரியத் துயரைப் / பெண்களைப் போல உணரமுடியாது / ஆண்களால் என்று நாற்று நடுபவள் பற்றிய அவர் சிந்தனையை (தெருவாசகம்) இங்கே சேர்த்து சிந்தித்துப் பார்க்கலாம். வாக்கப்பட்டுப் போவதன்மீதான விமர்சனமாகவும் இதை நாம் பார்க்கமுடியும். ”சாட்டை” படத்தில் (எல்லாப் பாடல்களும் இவரே) “அடி ராங்கி” என்ற பாடலில் அன்னந்தண்ணி தேவையில்ல ஒன்னப்பத்திப் பேசுனா அட்ட கத்திகூட வெட்டும் ஒன்னெ சொல்லி வீசுனா என்னெ ஓடா ஒடைக்கிறியே காப்பி தண்ணி போல என்னெ கண்ணு ரெண்டும் ஆத்துதே[sattai] மூடி வச்ச ஆசையெல்லாம் பொத்துகிட்டு ஊத்துதே உரிபோல குறி பாத்து என்னெ சில்லு சில்லா ஒடைக்கிறியே என்னெ நாராக் கிழிக்கிறியே போன்ற வரிகள் நம் சிந்தனைக்கு உரியவை. “அன்னந்தண்ணி”, “அட்ட கத்தி”, ”காப்பித்தண்ணி”, “பொத்துகிட்டு ஊத்துது”, ”சில்லு சில்லா உடைக்கிறியே”, “நாராக் கிழிக்கிறியே” – இவையெல்லாம் ஒரே பாடலில் ஒருசேர வருவது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. திருமலை என்ற படத்தில் மனதைப் பிழியும் விதத்தில் ஷங்கர் மஹாதேவன் பாடிய “நீயா பேசியது” என்ற பாடலை என் நண்பர் யுகபாரதி எழுதினார் என்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். வித்யா சாகருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அப்பா, என்ன குரல், என்ன மெட்டு! ஹெட் ஃபோன் வைத்து அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தால் போதும். நம் துயரங்களையெல்லாம் மறந்து அதில் மூழ்கி ஆரோக்கியம் கொடுக்கும் நியூரோபெப்டைடுகளை நம் மூளைக்குள் அதிகம் சுரக்க வைக்கலாம். காதலிக்கவில்லை என்று பொய்சொல்லும் காதலியை நினைத்து பாடப்படும் அந்தப் பாடலில் [thirumalai]வேரில் நான் அழுதேன், என் பூவோ சோகம் உணரவில்லை வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை என்ற வரிகள் ரொம்ப அற்புதமானவை. காதலனின் அழுகையும் சோகமும் ரகசியமானதாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ காதலி அந்த சோகத்தை உணரவில்லை. அந்த அழகிய பூவை வாழவைக்கும் உயிர் நீராகக்கூட அந்த அழுகை இருக்கலாம். ஆனால் காம்பில் குடியிருக்கும் அந்தப் பூவால் அதை உணர முடியாது. ஏனெனில் அவன் வேரில் அழுதுகொண்டிருக்கிறான்! கதா நாயகர்களுக்கு ஏற்றவாறு பாடல் வரிகள் எழுதுவதிலும் யுகபாரதி வல்லவர். ”பரமசிவம்” என்ற படத்தில் காதாநாயகன் அஜீத். ரொம்ப நாளைக்குப் பிறகு நடிக்க வந்திருந்தார். ரொம்ப ஒல்லியாகி இருந்தார். ”ஒரு கிளி காதலி” என்ற பாட்டில் “யார் மீது ஆசை கூடிப்போக தேகமிளைத்தாயோ” என்று நாயகி கேட்பாள். அதற்கு நாயகன், “ நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ” என்று பதில் சொல்வான்! படத்தில் நீங்கள் அஜித்தைப் பார்த்தால்தான் இந்த வரியின் மகத்துவம் புரியும்! [konjaneram]”சந்திரமுகி” படத்தில் வரும் “கொஞ்ச நேரம்” என்ற பாடலில் காதலன் பாடுவதாக ஒரு வரி: “நீ என் நாடு / நான் உன்னோடு” என்று. அந்த வரிகளை நாயகன் ரஜினிகாந்த் பாடுவார். தமிழ்நாட்டை சிலாகிப்பதுபோல் வரி. ரொம்ப சரி. யுகபாரதிக்கு இன்னொரு ராசியுண்டு. தமிழ் தெரியாத பாடகர்கள் பாடினால் பாடல் செம ஹிட்டாகிவிடும். ஆமாம். யுகபாரதியின் அனேக பாடல்களின் ஹிட்டானவை யுதித் நாராயணன் பாடியவை. சந்திரமுகியில் ஆஷா போன்ஸ்லே தமிழைக் கடித்துத் துப்புவார். ’ழ’அவருக்கு வரவே வராது. ”கண்ணில் ஓரலகு, கையில் நூறலகு, உன்னால் பூமியலகே” என்று பாடுவார். யுதித் நாராயணனோ, ”கில்லி” படத்தின் ”கொக்கரக்கொக்கரக்கோ”  பாடலில் ”உலகம் உனக்குப் பின்னாலே” என்ற வரியை ”ஒலுகம் ஒனுக்க பின்னாலே”  என்று பாடுவார்! சுத்தம்! யுகபாரதியின் தெருவாசகம் என்ற அற்புதமான விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய கவிதைகளைக் கொண்ட நூலில் இருந்து உங்கள் சிந்தனைக்கு சில வரிகளை மேற்கோள் கொடுத்து முடித்துக்கொள்கிறேன். தண்ணீரில் / முட்டையிடுகிறது மீன் கண்ணீரில் / குஞ்சு பொறிக்கிறாள் இவள் (மீன்காரி) வயிற்றுக்கு மிக நெருங்கி / வருகின்ற கேமிராமில் தெரியாது இவள் பசியும் / தெய்வத்தின் வஞ்சகமும் (துணை நடிகை) ஓதுவதால் ஆயபயன் / ஒன்றுமில்லை என அறிந்து ஊதுகிறான் ஓயாமல் / உயிர்மூச்சை விற்பதற்கு (பலூன் காரன்) என்னிடம் இருப்பவைகள் / ஏழையின் புன்னகைகள் என்பதை உரக்கச் சொல்லும் / இன்னொரு வேர்வை வேடன் (அடகு கடைக்காரன்) ஊரடங்கும் நள்ளிரவில் / ஒட்டுகிறான் சுவரொட்டி தான் மட்டும் உறங்காத / தகவலையும் தெரிவிக்க இண்டு இடுக்கெல்லாம் / இருக்குமிவன் கைரேகை கண்டு செல்பவர்கள்/ காண்பதில்லை கண்ணீரை (போஸ்டர் ஒட்டுபவன்) அவரது மின்னஞ்சல்: yugabhaarathi@gmail.com yugabhaarathi@yahoo.co.in 16 அரிதாரமற்ற அரிதான கலைஞன் []நேர்காணல்களுக்காகவே நேர்காணல் என்ற தலைப்பில் ஒரு இதழ் — இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று புரிந்து கொள்கிறேன் —  வருகிறது. ஆசிரியர் பௌத்த அய்யனார். அதில் மூன்றாவது நேர்காணல் நாசருடையது. 68 பக்கங்கள் கொண்ட அந்த இதழில் 42 பக்கங்கள் நாசரின் பதில்கள். நான்கு மணி நேரப் பேட்டியும் அதன் பதிவும். கேள்வி சின்னதுதான். ஆனால் நாசரின் பதில்கள் நீண்டவை. நேர்காணல் கேள்வி பதில் என்பதால் மட்டும் அப்படி அமையவில்லை. நேர்காணலின் நோக்கத்தை நிறைவேற்றும் முறையும் அதுதானே? நாசரை ஓரளவுக்கு நானறிவேன். ஒரு நடிகராக, ஒரு தயாரிப்பாளராக, ஒரு இயக்குனராக, தூரத்து உறவினராக — எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நல்ல, நேர்மையான, பண்புள்ள மனிதராக. போல்டில் இருக்கும் கருத்து இந்த நேர்காணலில் மேலும் உறுதிப்பட்டுவிட்டது. []நாசரின் எளிமையும் நேர்மையும் மிகவும் அரிதானவை. நிறைய தகவல்கள் எனக்கு ஆச்சரியமூட்டின. அதே சமயம் அவருடைய நேர்மையை நேர்மையான எந்த மனிதனாலும் பாராட்டாமல் இருக்க முடியாது! (சரி, சரி, நீங்களும் நேர்மையான வாசகர்கள்தான், ஒத்துக் கொள்கிறேன்). ஆசிரியர் பவுத்த அய்யனார்தான் பேட்டி கண்டிருக்கிறார். (அய்யனாரையும் எனக்குத் தெரியும்.ஆனால் அவர் தலையை மொட்டை போட்டிருப்பதற்குக் காரணம் பௌத்தமா என்பது தெரியவில்லை). ”மிக இயல்பாகப் பழகும் தன்மை கொண்டவர், எந்த மனத் தடையுமின்றி அவரால் பேச முடிந்தது” என்று அய்யானார் சொல்வது முற்றிலும் உண்மை. முதன் முதலாக அவரை அவரது இல்லத்தில் அல்லது அவரது மனைவி இல்லத்தில் சந்திக்கச் சென்றது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ஒரு நடிகரைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வத்தில் என் மனைவி இருந்தாள். நாசர் வருவதற்குச் சில நிமிடங்கள் ஆயின. ஒரு நடிகர் என்றால் உடனே வரமுடியுமா என்ன? கால தாமதமாக வருவதுதானே ஒரு சிறந்த நடிகருக்கு அழகு என்று அவள் ஆர்வமுடன் காத்திருந்தாள். ஆனால் நாசர் தூக்கத்தில் இருந்திருப்பார் போல. அதனால்தான் தாமதமாகியிருந்தது. அவர் வந்தமர்ந்த கோலத்தைப் பார்த்து என் மனைவி அசந்து போய்விட்டாள். ஒரு சாதாரண சட்டை. அழுக்கான அல்லது அழுக்கேறியதைப் போலத் தோற்றமளித்த ஒரு கைலியில் அவர் வந்தமர்ந்தார். ”என்னாம்மா, ஒரு நடிகர் இப்புடி வந்து உக்காந்துட்டாரே” என்று போகிற வழியெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டே வந்தாள். அவருடைய எளிமையை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. அந்த நேர்மையும் எளிமையும் அவருடைய சினிமா வாழ்வுக்கேகூட ஒரு கட்டத்தில் உலை வைத்தது என்பதையும் அவருடைய நேர்காணலில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு காலகட்டத்தில் எனக்குப் பின்னால் வந்த நடிகர்கள் என்னைவிட அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள். என்னைவிட அடுத்த தளம்  நோக்கிப் போகிறார்கள். நான் கிரியிடம் — அப்போதைய காரியதரிசி — அப்போது கேட்டேன். என்னைவிடத் திறனற்றவர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்களே என்று. கிரி சொன்ன வார்த்தை. பின்ன என்னங்க , உங்க வீட்டுக் கதவைத் தட்டுனா, நீங்களே வந்து திறக்கிறீங்க. போன் வந்தா நீங்களே எடுக்கிறீங்க. அப்புறம் எப்புடி சம்பளத்தை உயர்த்த முடியும்? நாசரின் இன்றைய நிலைக்கு அஸ்திவாரமிட்டது அவரது தந்தை என்று தெரியும்போது மிகுந்த வியப்பு மேலிடுகிறது. தன் மகன் டாக்டராக வேண்டும் என்று எல்லாத் தந்தைகளையும்போல அவருக் கனவு கண்டிருக்கிறார். ஆனால் டாக்டராகாவிட்டால் அடுத்த ‘ஆப்ஷன்’ ஆக அவர் வைத்திருந்தது நடிப்புக் கலை! இதனாலேயே விமானப்படையில் சேர்ந்துவிட்ட மகனுக்கு அவருக்கும் சண்டைகள் வந்துள்ளன! அந்த வகையில் நாசர் கொடுத்து வைத்தவர்தான். ஓஷோவுக்கு ஒரு நானி அமைந்த மாதிரி நாசருக்கு ஒரு தந்தை! ஆமாம். ஓஷோவுக்கு அவரை வளர்த்த நானி கொடுத்த சுதந்திரம் நமது கற்பனைக்குப் பிடிபடாதது. அவரைப் போன்ற ஒரு பாட்டி அமையும் யாரும் ஞானம் பெறுவது நிச்சயம். அப்படிப்பட்ட பாட்டி அவர். அதேபோலத்தான் நாசரின் தந்தை மகபூப் பாட்சாவும் இருந்துள்ளார். அவர் ஒரு வித்தியாசமான முஸ்லிமாக இருந்திருக்கிறார். தன் பிள்ளைகள் அனைவருக்கும் அரசியல் தலைவர்களின் பெயர்களைத்தான் பிடிவாதமாக, எதிர்ப்புகளைத் தாண்டி, வைத்திருக்கிறார்: நாசர், அயூப்கான், இந்திரா மோத்தி, ஜவஹர், ஜாகிர் ஹுசைன் என்று. அதோடு ஒரு வெஜிடேரியனாகவும் இருந்திருக்கிறார்! அப்பா அதிகம் படிக்காதவராக இருந்தாலும், அவரது தீவிரத் தன்மைக்காக, பிடிவாதத்திற்காக நான் []நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஏனென்றால் முறையாக  நான் — நடிக்கக் — கற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக அவரே தேடிப்பிடித்து சென்னை பிலிம் சேம்பரில் நடந்து கொண்டிருந்த திரைப்படப் பயிற்சிக் கல்லூரியை அறிந்து, அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவம் வாங்கி வந்து, அதைப் பூர்த்தி செய்து, அதன் பிறகு என் கூடவே இண்டர்வியூவிற்கு வந்து, அங்கு சேர்வதுவரை மிகத் தீவிரமாகச் செயல்பட்டார் — என்கிறார். இப்படி ஒரு தந்தை அமைவது ஒரு கொடுப்பினையன்றி வேறில்லை. நாசருடைய வாழ்க்கையில் நாம் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய இன்னொன்று, அவர் தாஜ் கொரமாண்டல் ஐந்து நட்சத்திர ஓட்டலில் சர்வராக தட்டுகள் கழுவும் வேலையை மூன்று ஆண்டுகள் செய்திருக்கிறார் என்பது! நாசர் வாடிக்கையாளர் ஒருவருக்கு தேநீர் கொடுத்த விதத்தை கவனித்த அவருடைய மேலதிகாரி சுனில், நாசரை அழைத்து, ஒரு அடிமையைப் போல சேவை செய்யக் கூடாது என்றும், எப்படி தன்னம்பிக்கையோடு சேவை செய்ய வேண்டும் என்றும் விளக்கியது பற்றிக் குறிப்பிடும் நாசர், அதன் பிறகு என் முட்டாள்தனத்தில் ஒரு பகுதி காணாமல் போனது. என் தாழ்வு மனப்பான்மையின் ஒரு பெருங்கிளை வெட்டி எறியப்பட்டது. இது ஒரு சாதாரண நிகழ்ச்சி போல் தோன்றலாம். ஆனால் எனக்கு அது ஒரு போதனையாய் அமைந்தது. பாடி லாங்குவேஜ், பாடி லாங்குவேஜ் என்று மாய்ந்து மாய்ந்து நடிப்புப் பயிற்சியாளர்கள் மணிக்கணக்காக வறட்டுத் தனமாக எடுத்த பாடத்தை சுனில் ஒரு வரியில் விளக்கினார். உண்மையில் அன்றுமுதல் என் நடை, உடை பாவனைகள் மாறிப்போயின — என்று கூறுகிறார். அதிர்ஷ்டம் பற்றிய ஒரு கேள்விக்கு நாசர் சொல்லும் பதில் மிக முக்கியமானது: அதிர்ஷ்டம் என்ற வார்த்தையை நான் அறவே வெறுக்கிறேன்…அதிர்ஷ்டத்தினால் ஒருவன் ஒரு உயரத்தை எட்டியிருக்கிறான் என்று சொல்லப்பட்டால் அந்த இடத்திற்கு அவன் லாயக்கற்றவன் என்றுதானே பொருள்? — என்று கேட்கிறார். நீங்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கும் பட்சம் அவர் சொல்வது உங்களுக்குப் புரியும்! ஒருமுறை தாஜுக்கு வந்த ஒரு வெளிநாட்டு கிழத்தம்பதிகளுக்கு உபசரிக்க நாசர் அனுப்பப்படுகிறார். அவரது பெயர் பொறித்த பேட்ஜைக் கழற்றி விடும்படி மேலதிகாரி கூறுகிறார். இல்லை நான் பேட்ஜை சுத்தமாகக் கழுவித்தான்  வைத்திருக்கிறேன் என்று நாசர் சொல்வதையும் அவர் பொருட்படுத்தவில்லை. கட்டாயமாகக் கழற்றிவிட்டே சேவை செய்ய வைத்திருக்கிறார். பின் அவர்கள் போன பிறகு, ஏன் அப்படிச் செய்யச் சொன்னீர்கள் என்று நாசர் கேட்டதற்கு, அவர்கள் ஜூஸ் (Jews)  அதாவது யூதர்கள், முஸ்லிம்களை வெறுப்பவர்கள் என்று கூறியிருக்கிறார். புதிய தகவலாக இருந்த அது நாசரை சிந்திக்க வைத்திருக்கிறது. தன் அம்மாவிடம் போய், அம்மா, ஜூஸுக்கும் முஸ்லிம்களுக்கும் ஆகாதா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் அம்மா, ஜூஸ் யார் குடிச்சாலும் நல்லதுதாண்டா என்று பதில் சொல்லியிருக்கிறார்! ஒற்றுமையாக இருக்கும் சமுதாயத்திற்குள் கருத்து விஷம் கலக்காத வரையில் மனிதர்கள் அனைவருமே இப்படித்தான் வெள்ளந்தியாக இருக்கிறார்கள் என்பது நாசரின் கணிப்பு. அது சரிதான். பிறக்கும்போது ஒரு குழந்தை குழந்தையாகவே பிறக்கிறது, அதாவது ஃபித்ரா எனும் அதன் இயற்கையான தன்மையிலேயே பிறக்கிறது. பெற்றோர்கள்தான் அதை யூதராகவோ, கிறிஸ்தவராகவோ மாற்றிவிடுகிறார்கள் என்று நபிகள் நாயகம் சொன்ன ஹதீஸும் உண்டு. (அந்த நபிமொழிக்கு அர்த்தம் பிறக்கும்போது குழந்தை இஸ்லாத்திலேயே பிறக்கிறது என்று வாதிடுவோரும் உண்டு)! நடிப்புப் பள்ளியில் பயிலும்போது ஒன்றும் பெரிதாக கற்றுக் கொள்ளவில்லை என்றும், நண்பர்கள் குழுவினாலும், பள்ளிக்கு வெளியிலும்தான் கற்றுக்கொண்டதாக நாசர் கூறுகிறார். அவரது பேச்சில் லேசான, இயற்கையான நகைச்சுவையும் இழையோடுகிறது. பிரபாகரன் — நடிப்புப் பள்ளி ஆசிரியர் — கடமைக்குத்தான் சொல்லுவார். நாங்களும் கடமைக்குக் கேட்பதுபோல் நடித்தோம். ஆக, நடிப்பை அங்கேயே ஆரம்பித்துவிட்டோம் — என்கிறார்! நாசருடைய பேட்டியில் அவர் சொல்லியிருந்த ஒரு விஷயம் மிகமிக முக்கியமானதாக இருந்தது. அது []அவ்வளவு முக்கியமானதென்று அவருக்கே தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்த விஷயத்தின் முக்கியத்துவம் பற்றி நான் சமீபத்தில் எழுதிய இந்த விநாடி என்ற புத்தகத்தில் தற்செயலா? தெய்வச் செயலா? என்ற அத்தியாயத்தில் எழுதியுள்ளேன். அதில் நண்பரும் கவிஞருமான யுகபாரதியின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியையும் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளேன். நாசர் வாழ்வில் நடந்த அந்த நிகழ்ச்சி தெரிந்திருந்தால் நிச்சயம் அதையும் சேர்த்திருப்பேன். நாசருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. சரி, அது போகட்டும். தற்செயலாக நடக்கும் விஷயங்களை ஆங்கிலத்தில் chance occurrence, accident என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் தற்செயலாக நடக்கும் எதுவுமே தற்செயலாக நடப்பதல்ல என்பதுதான் அவற்றின் பின்னால் இருக்கும் உண்மை. இதை டெக்னிகலாக ஆங்கிலத்தில் synchronicity என்று கூறுகிறார்கள். தீபக் சோப்ரா Synchrodestiny என்று ஒரு புத்தகமே எழுதியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு செயல் நாசரின் வாழ்விலும் நடந்துள்ளது. அது அவர் வாழ்க்கையையே திசைமாற்றிப் போட்டது என்று அவரே கூறுகிறார். அது என்ன நிகழ்ச்சி? தாஜ் கோரமண்டலில் அவர் வேலை செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு துண்டு விளம்பரம் — அவர் —  கண்ணில் பட்டது. அதுதான் என் வாழ்க்கையை, நடிப்பிற்கான எனது அணுகு முறையை முற்றிலும் மாற்றியது — என்று கூறுகிறார். முற்றிலுமாக அவர் வாழ்க்கையை மாற்றிப் போட்ட அந்த விளம்பரம் அவர் கண்ணில் பட்டது தற்செயலாக நடந்தது. நாம் கவனிக்க வேண்டிய இடம் இதுதான். தென்னிந்திய பிலிம் சொசைட்டியும் பூனா ஆர்க்கைவ்ஸும் இணைந்து பத்து நாட்களுக்கு திரைப்பட ரசனை வகுப்புகள் பற்றிய விளம்பரதான் அது. இங்கே இன்னொரு விஷயம் கவனிக்கப்படவேண்டியுள்ளது. நாசரோ தாஜில் வேலை பார்க்கும் ஒரு தட்டுக் கழுவும் சிப்பந்தி. ஆனால் நிகழ்ச்சியோ பத்து நாட்களுக்கு நடக்கிறது. அதில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் பத்து நாட்களுக்கு லீவு வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சிப்பந்திக்கு அத்தனை நாட்கள் லீவு கொடுப்பார்களா? ஆனால் நான் விடுமுறைகள் அதிகம் எடுக்காததால் விடுமுறை நாட்கள் சேர்ந்திருந்தன. பன்னிரண்டு நாட்கள் விடுப்பெடுத்து அவ்வகுப்பில் சேர்ந்தேன் — என்று அவர் கூறுகிறார். இதுவும் ஒரு சின்க்ரானிக் ஈவண்ட்-தான். ஏனெனில், அந்த 10 நாள் வகுப்பில் கலந்து கொள்வதற்காகவே இறைவன் அவரை விடுப்பில் போகாமல் பார்த்திருக்கிறான் என்பதுதான் உண்மை. ஜீன்ஸ் போட்ட சித்தர் என்று நாசரால் வர்ணிக்கப்படும் ரவூஃப் என்பவர் கொடுத்த அறிவுரைகூட ஒரு சிங்க்ரானிக் ஈவண்ட்–தான். இயக்குனர்கள் வீட்டு வாசலில் போய் வாய்ப்புக்காக நிற்பதும் பிச்சை கேட்பது போலத்தான் என்று சொல்லி அவர் நாசரை உசுப்பேற்றி இருக்கிறார். அடுத்தவர் வாசலில் நிற்பதை நிறுத்து. வாய்ப்பு உன்னைத் தேடி வரும்படி செய் — என்று அவர் கூறுகிறார். முதலில் சங்கடப்பட்ட நாசர் பின்னர் அதுதான் சரி என்பதை உணர்ந்து கொள்கிறார். இதுவும் இவர் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சி. தான் நடிகராக உருவான விதம் பற்றிப் பேசும்போது இரண்டு நிகழ்ச்சிகளை நாசர் குறிப்பிடுகிறார். அற்புதமான நிகழ்ச்சிகள் அவை. திரைப்படக் கல்லூரிக்கு ஒருமுறை ஹாலிவுட் நடிப்பாசிரியர் வில்லியம் க்ரீவ்ஸ் என்பவர் வருகிறார். அவரிடம் நாசர், ராணி சுதா, அனிதா ஆகிய மூவரும் நிகழ்த்திக் காட்டிய உணர்ச்சி மயமான சில நிமிட நாடகம் — நாசர் எவ்வளவு பெரிய கலைஞர் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. அவர் விவரிக்கும் ராணி சுதா, அனிதா ஆகியோரையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது. உடம்பு முழுக்க பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்துக் கிடக்கும் மனைவி ராணி சுதாவிடம் நாசர் வந்து தன் அலுவலகத் தோழி அனிதாவைத் திருமணம் செய்ய இருப்பதாக சொல்வதாகக் காட்சி. இதை நாசர் வார்த்தைகளில் சொல்லும் விதமே அபாரமாக உள்ளது. இன்னொரு நிகழ்ச்சி மழையில் அவர், பப்லு போன்றோர் ஜப்பானிய மொழியில் திடீரென்று பேசிக்கொண்டு நடித்த காட்சி. அதை நாசர் விவரிக்கும் விதத்தில் அடடா, அந்த இடத்தில் நாம் இல்லாமல் போய்விட்டோமே என்று தோன்றும் விதத்தில் இருக்கிறது. ஆரம்பத்திலிருந்து கடைசி வரையிலும் நாசரின் பேச்சில் நேர்மை தெரிகிறது. சில உதாரணங்கள் 1. அவர் அப்பா வெஜிடேரியனாக இருந்ததால், கறி சாப்பிட வேண்டும் என்பதற்காக வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வரமாட்டார்களா என நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம் 2. திரைப்பட ரசனை வகுப்புக்கு வந்திருந்தவர்கள் பேசியது ஒரு எழவும் புரியவில்லை. 3. அறிவு வகுப்பறையில் கிடைப்பதில்லை. அறிந்து கொள்ளும் தாகம் வளர்த்துக் கொண்டால், பாறையிலும் நீர் கிடைக்கும் (இந்த வரிகளில் ஒரு கவிதையின் அழகு மிளிர்கிறது) 4. இன்றைக்கும்கூட கவிதை படிப்பது எனக்குக் கஷ்டமானது (இது பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். எனது முதல் கவிதைத் தொகுதியான நதியின் கால்கள் — நூலுக்கு அவரிடம் ஒரு முன்னுரை கேட்டிருந்தேன். முதலில் தயங்கிய அவர் பின்னர் எப்படியோ ஒத்துக்கொண்டார். ஆனால் அந்தத் தொகுதியைத் தூக்கிக்கொண்டு ஷூட்டிங் ஷூட்டிங்-காக பாவம் கிட்டத்தட்ட ஆறு மாதம் அலைந்திருக்கிறார். என் கவிதைகளைப் புரிந்து கொள்ளும் முயற்சியில்! முடியுமா அது? எனக்கே புரியாதது அவருக்கு மட்டும் எப்படிப் புரிந்துவிடும்! கடைசியில் ஒரு வழியாக, ஒரு மாதிரியான முன்னுரையை எழுதியும் கொடுத்தார், பாவம்)! 4. தீவிர வாதத்துக்கு எதிரானவன் நான். எப்போது எந்த வகையில் இருந்தாலும் சரி. தமிழ் சினிமாவில் தீவிரவாதிகள் என்றால் அது முஸ்லிம்கள்தான் என்று ஸ்திரப்படுத்திவிட்டார்கள். 5.பாப்கார்ன் படம்  படுதோல்வியைத் தழுவி இரண்டே கால் கோடி ஒட்டு மொத்த நஷ்டத்தில் தள்ளியது. (எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. நான் நாசரின் அவதாரம்,  பாப்கார்ன், தேவதை ஆகிய படங்கள் பார்த்துள்ளேன். மாயன் பார்க்கவில்லை. பாப்கார்ன் மாதிரி ஒரு சொதப்பலான, மோசமாக எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்ததில்லை. குறிப்பாக கதாநாயகன் தேர்வு, அவருடைய தலைமுடி ஸ்டைல் இன்ன பிறவற்றைச் சொல்லலாம். கதையை எடுத்துச் சென்ற முறையிலும் மக்களுடைய ஆர்வத்தைத் தூண்டுவதாக இல்லை. நாசர் எப்படி இப்படி எடுத்தார்? அவதாரம் எடுத்தவரா இவர்? என்ற கேள்விகளெல்லாம் இன்னும் என் மனதில் உள்ளன. நல்ல வேளை அந்தப் படம் வெற்றி பெறாமல் அவருக்கு ஒரு நல்ல பாடம் கற்பித்துக் கொடுத்தது. அவதாரத்தில்கூட எனக்கொரு கேள்வி உள்ளது. Survival of the Fittest என்று சொல்வார்களல்லவா? அப்படித்தான் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் நசிந்து போகின்றன என்று அங்கலாய்ப்பதில் என்ன பிரயோஜனம் அவற்றைவிட வலுவான கலைகள் வந்தபிறகு? அவைகள் நசிந்து போய்விட்டன என்ற செய்தியைக்கூட நீங்கள் ஒரு திரைப்படம் மூலமாகத்தானே சொல்ல முடிகிறது?) அவர் நஷ்டப்பட்டு, கஷ்டப்பட்ட காலகட்டத்தில், அவருடைய காரியதரிசி கிரியும் அவரை விட்டுப் பிரிந்து போன நேரத்தில் அவருடைய மனைவி காமிலா — ஏன் எல்லாரும் அவர் பெயரை கமீலா என்று சொல்லவும் எழுதவும் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அரபியில் காமில் (perfect) என்ற சொல்லில் இருந்து காமிலா வருகிறது. அதில் நெடில்தான். குறில் கிடையாது — அவருக்கு உறுதுணையாக இருந்து அவரை பொருளாதார மற்றும் எமோஷனல் நஷ்டத்தில் இருந்து மீட்டெடுத்தது பாராட்டுதலுக்கு உரிய ஒன்று. நாடக இயக்குனர் கருணா பிரசாத் சொல்வதுபோல, நாசர் உண்மையிலேயே அரிதாரமற்ற ஒரு அரிதான கலைஞர் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த கட்டுரையில் உள்ள கோட்டோவியங்களை வரைந்தவரும் நாசர்தான். 17 பூனைக்கும் அடிசறுக்கும் 18 கிராண்ட் ஃபினாலே https://www.youtube.com/watch?feature=player_embedded&v=CUlg_PWDR70 பிரகதி அருமையாகப் பாடக்கூடியவள். கர்நாடக சங்கீதம், வெஸ்டர்ன், மெலடி எதானாலும் சரி. ஆனால் க்ராண்ட் ஃபினாலே அன்று அவள் முதலில் பாடிய கர்நாடக இசைப்பாடல் யாருக்குமே தெரியாதது. ஆடியன்ஸ் மௌனமாக இருந்தது அவளுக்கான பாராட்டு அல்ல. என்ன பாடுகிறாள் என்று புரியாததால் ஏற்பட்ட மௌனம். ஆடியன்ஸ் வாக்குகள்தான் முடிவைத் தீர்மானிக்கின்றன என்று தெரிந்த பிறகும் அப்படியொரு பாடலைத் தேர்ந்தெடுத்தது ஜாதி முட்டாள்தனம். சுதா ரகுநாதனுக்கும் ரமேஷ் வைத்யாவுக்கும் பிடித்த பாடல்கள் பாடுவதற்கான மேடையல்ல அது. ஆனால் இரண்டாவதாக ’மையா மையா’ பாடி சமாளித்துவிட்டாள். எல்லாருக்கும் தெரிந்த, அதே சமயம் சவாலான பாடல்களை அவள் தேர்ந்தெடுத்திருந்தால் நிச்சயம் மற்ற போட்டியாளர்களுக்கு சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அழகான அவளிடம் இருக்கும் பிரச்சனை தேவையில்லாமல் improvise செய்வது, பாடும்போது ரொம்ப கஷ்டப்படுவது மாதிரியான பாவத்தில் முகத்தைச் சுருக்கிக் கொள்வது. ஆனால் முதல் பரிசுக்குத் தகுதியானவள்தான். ஆஜித் இல்லாவிட்டால்! கௌதம் பாடிய ஒரே உருப்படியான பாட்டு உள்ளத்தில் நல்ல உள்ளம்-தான்.  மற்ற எல்லாம் சொதப்பல்தான். அதுவும் க்ராண்ட் ஃபினாலேயில் சுதி பிசகி, குரல் உடைந்து பாவம் அவனுக்கும் கஷ்டமாகிவிட்டது. அவன் அம்மா தலையைக் குனிந்துகொண்டே இருந்தார். தேவையில்லாத தலைகுனிவு. சுகன்யா நன்றாகப் பாடக்கூடியவள்தான். ஆனால் க்ராண்ட் ஃபினாலேயில் இப்படி சுதியில்லாமல் சொதப்புவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.  மின்சாரக்கண்ணா சகிக்கவில்லை. ரொம்ப பயந்துவிட்டாள் பாவம். நான்காவது ஐந்தாவது இடம் மிகச்சரியானதுதான். சின்னப் பெண் யாழினி மட்டும் கௌதம், சுகன்யாவைவிட சிறப்பாகப் பாடினாள். என்றாலும் கமகம், அகார சாதாகம், உச்ச ஸ்தாயி, சங்கீதம், ஸ்வரம் எல்லாம் பிடிபடும் வயது இன்னும் அவளுக்கு வரவில்லை. ஆஜித்தும் ஸ்வரங்கள் பாடக்கூடியவனல்ல. எனினும் யாழினி மூன்றாம் பரிசுக்குத் தகுதியானவளே. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ABsZXRp37l4 ஆஜித் முதல் பாடலைப் பாடும்போதே முடிவும் தெரிந்துவிட்டது. ஆடியன்ஸின் சந்தோஷமும் ஆரவாரமும் அப்படி. ஆஜித் காலிக் என்ற 11 வயது சிறுவன் வயதுக்கு மீறிய கட்டையில், ஸ்ருதி பிசகாமல், பாவத்துடன், வழக்கம்போல பயமறியாத கன்றுக்குட்டியாக அனாயாசமாக, சவால்களற்ற, சாதாரணமான இரண்டு ஏ ஆர் ரஹ்மான் பாடல்களைப் பாடி ஆடியன்ஸை ஸ்தம்பிக்க வைத்துவிட்டான். What a perfect pitching especially in high notes! ஏதோ அவன் உடம்புக்குள் ஜின் புகுந்துகொண்டு பாடிய மாதிரி இருந்தது. இவன் நம்ம வீட்டுப்பிள்ளையாக இருக்கக் கூடாதா என்று கேட்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும் அளவுக்குப் பாடினான். ஓரிரு இடங்களில் மட்டும் உன்னிப்பாக கவனிக்க முடியாத அளவுக்கு ஸ்ருதி பிசகியது. ஆனால் அது கவனத்தில் கொள்ளவேண்டிய அளவில் உள்ளதல்ல. ஹரிஹரனோடு பாடும்போது இடையில் பாட்டை நிறுத்தி, “இவன் பாடுவதைப் பார்த்து எனக்கு பாடல்வரி மறந்துவிட்டது” என்று ”அன்பே அன்பே” பாடிய ஹரிஹரன் கடைசியில் அவனைத் தூக்கிக் கொண்டார். அவன் சிறப்புக்களை இப்படி வகைப்படுத்தலாம்: 1. Perfect Pitching 2. Smooth sailing in high pitched notes 3. Performing while singing 4. Voice modulation 5. Fearlessness அவன் பாடி முடித்தவுடன் கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கு ஆடியன்ஸ் எழுந்து நின்று கொண்டும், ஆடிக்கொண்டும், பாராட்டு ஒலிகள் எழுப்பிக்கொண்டும் இருந்தனர். இப்படி வேறு யார்பாடும்போதும் நடக்கவில்லை. ம.க.ப.வை விட பாவனாதான் அதிகமாகப் பேசுகிறார். நன்றாகவும். அவருக்கு வாய் பெரிசாக இருப்பது அதற்குக் காரணமல்ல! பெரிசாக என்றதுமே ஒரு அப்பள விளம்பரம் ஞாபகம் வருகிறது. இரண்டு வட்டமான பெரிய்ய்ய அப்பளங்களை கைகளில் பிடித்துக்கொண்டு ஏதோ நோபல் பரிசு கிடைத்துவிட்ட மாதிரி ஸ்னேகா ஆடுவார்! அதைப்பார்த்து எங்க ஊர் அஸ்மா தாசன், “ரொம்பவும் பெருசா, லெஹட்டு சைஸால்ல இக்கிது” என்றார்! இயற்கைக்கு மாறாக ஆடினால் இப்படித்தான் சொல்ல வேண்டி வரும்! திரும்பத் திரும்ப மனோவை ஏன் ஒரு நீதிபதியாக நியமிக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவே இல்லை. சரியாகப் பாடத்தான் தெரியவில்லை என்றால், சரியாகப் பேசக்கூட அவருக்கு இன்னும் வரவில்லை. கருத்துக்கேட்டால், “சத்தியமா” என்று ஆரம்பிக்கிறார்! “உங்க ட்ராவல்” என்று அடிக்கடி சொல்வார்! சரியாகப் பாடாத குறைபாடுகளை மென்மையாகச் சுட்டிக்காட்டும் பக்குவமும் தைரியமும் அவருக்கு இல்லை. மனோ, மால்குடி சுபா போன்றவர்களை இனியாவது தவிர்க்கலாம்.   19 வரலாறு படைத்த அழுகையும் அசத்தலும் by நாகூர் ரூமி []விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நான் தொடர்ந்து பார்க்கும் ஒன்று. அது சீனியராக இருந்தாலும் சரி, ஜூனியராக இருந்தாலும் சரி. இனிமையான, கம்பீரமான குரலை எனக்கு இறைவன் கொடுத்திருந்தால் நான் நிச்சயம் ஒரு கஜல் பாடகனாகப் போயிருப்பேன். என் நண்பர்கள் என் குரலைப் பற்றி கிண்டலாக எழுதுகிறார்கள். எனக்கு லதா மங்கேஷ்கர் குரல் என்று! முஹம்மது ரஃபிக்கு லதா மங்கேஷ்கரின் குரல்! எத்தனை முரணுண்மை! போகட்டும், Accept the inevitable. என் குருநாதர் சொன்னது. நான் ஏற்றுக்கொண்டது. நல்ல குரல் வளத்துடன் நன்றாகப் பாடுபவர்கள் என் ஆன்மாவின் பசிக்குத் தீனி போடுகிறார்களோ என்னவோ! எப்படி யோசித்தாலும் செவி வழியாக ஆன்மாவை நேரடியாக ஊடுறுகின்ற அனுபவத்தைத் தருவது இசையைத் தவிர வேறு எது? எல்லாப் புகழும் இசை மேதையான இறைவனுக்குத்தான்! இப்போது ஜூனியரில் பாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளில் குறிப்பிடத் தகுந்தவர்கள் சிலர். குறி0ப்பாக  பெண்குழந்தைகள். ப்ரகதி, சுகன்யா, அனு, யாழினி, அஞ்சனா, செஃபி இப்படி. இதில் முதல் இரண்டு குழந்தைகளும் மற்றவர்களைவிட வயதில் கொஞ்சம்கூடியவர்கள். குறிப்பாக ப்ரகதியும் சுகன்யாவும். இருவரும் பிரம்மாதமாகப் பாடுகிறார்கள். ஆனால் முதலாமவர் ஒரு சில பாடல்களில் improvise செய்ய நினைத்து அளவுக்கு அதிகமாகச் செய்து சொதப்பிவிட்டார். சுகன்யாவிடம் அந்தப் பிரச்சனை இல்லை. மிகச்சரியாகப் பாடுகிறார். அவருடைய எளிமையின் காரணமாகவோ என்னவோ அவர்தான் ஃபைனல்ஸில் பாட முதல் ஆளாகத் தேர்வானார். எனினும், இரண்டு சின்னப் பையன்கள் இருக்கிறார்கள். ஒருவர் கௌதம். 13 வயதிருக்கும். இன்னொருவர் ஆஜித் 11 []வயதுதான் இருக்கும். இந்த சீசனில் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு பாடல்களை இவர்கள் கொடுத்துள்ளனர். கொஞ்ச நாட்களுக்கு முன்பு கர்ணன் படத்தில் வரும் ”உள்ளத்தில் நல்ல உள்ளம்” என்ற பாடலை கௌதம் பாடி முடித்தவுடன் எல்லா நீதிபதிகளும், வீணை வித்வான், கடம் வாசித்தவர் இப்படி அனைவருமே எழுந்து நின்று, எழுந்து வந்து அவனைக் கட்டியணைத்து, உச்சி முகர்ந்து அழுதுவிட்டனர். என்ன செய்துவிட்டோம் என்றே புரியாத ஒரு தருணமாக கௌதமுக்கு அது இருந்திருக்க வேண்டும். அவனும் அழுதுவிட்டான். எல்லாருடைய ஆன்மாக்களையும் சந்தோஷப்படுத்தி விழிகளை மட்டும் நனைத்த அந்தப் பாடலை யாரும் மறக்கவே முடியாது. இதுவரை நீங்கள் அதைக் கேட்டிருக்காவிட்டால் இதோ இப்போது கேளுங்கள். https://www.youtube.com/watch?feature=player_embedded&v=u9oWm7E9-8c கௌதம் செய்தது வரலாறு படைத்த அழுகை என்றால் அவனை விடச் சின்னப்பையனான ஆஜித் செய்தது ஒரு அற்புதமான அசத்தல் என்று சொல்ல வேண்டும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ”ஆரோமலே” (அது என்ன தமிழா மலையாளமா?) என்ற பாடலை அவன் பாடிய விதம் இருக்கிறதே! அது ஒரு அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு perfect pitching. அதுமட்டுமல்ல, இதே பாட்டை சீனியராக சீனிவாஸ் பாடும்போதுகூட உச்சஸ்தாயிக்குச் சென்றபோதெல்லாம் கழுத்து நரம்புகள் புடைக்கக் கஷ்டப்பட்டார். ஆனால் ஆஜித்? ம்ஹும். இதுசும்மா ஜுஜுபி என்பதுபோலப் பாடினான். அவ்வளவு அனாயாசம். அவ்வளவு இனிமை. குரலில் அப்படி ஒரு கந்தர்வம். என்ன பாவம்! இவ்வளவு சின்ன வயதில் இப்படிக்கூடப் பாட   முடியுமா? என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. [][]அவன் பாடி முடித்ததும் எல்லாரும் எழுந்து நின்று, ஓடி வந்து, அவனைத் தூக்கி, முத்தமிட்டு..ஆஹா கண்கொள்ளாக் காட்சி. இதில் விஷேஷம் என்னவென்றால் அவன் பாடலின் இறுதிக்கட்டத்திற்கு வந்தபோதே பொறுமை இழந்த ஒரு நீதிபதியான புஷ்பவனம் குப்புசாமி ஓடிவந்து அவனைக் கட்டி அணைத்து முத்தமிட்டார். அதையும் வாங்கிக் கொண்டு அவன் கொஞ்சம்கூட அசராமல் தொடர்ந்து பாடி முடித்தான்! நீதிபதி விஜய் ப்ரகாஷ் மற்றும் குரல் பயிற்சியாளர் அனந்த்வைத்யநாதன் சொன்னதுபோல ஒரு பெரிய இசை மேதையின் ஆத்மா அவனுக்குள் புகுந்துகொண்டு பாடியது போலத்தான் இருந்தது. Unbelievable and historic musical performance of a child prodigy. இதோடு சூப்பர் சிங்கர் ஜூனியரை நிறுத்திவிட்டு ஆஜித்துக்கு அந்த 60 லட்ச ரூபாய் வீட்டை பரிசாகக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும். ஆஜித் பாடியதைக் கேட்க நீங்கள் தவறி இருந்தால் இதோ கேட்டுவிட்டு எனக்கு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?feature=player_embedded&v=u9oWm7E9-8c 20 அசிங்கமும் எதிர்வினையும் கொதிப்படைய வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் அமெரிக்காவும் இன்னொரு பக்கம் தினசரிகளும் ஊடகங்களும். அமெரிக்கா என்றால் முழு அமெரிக்காவுமல்ல. தினசரிகள் என்றால் எல்லா தினசரிகளும், எல்லா ஊடகங்களும் அல்ல. உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே போராட்டம் நடக்குமானால் உணர்ச்சிதான் ஜெயிக்கும். எப்போதுமே. அறிவுப்பூர்வமாகவே இது நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது  மூளையில்  அறிவின் செயல்பாட்டுக்கு நியோகார்டெக்ஸ் எனப்படும் பகுதியும் உணர்ச்சிகளின் செயல்பாட்டுக்கு அமிக்டாலா என்ற பகுதியும் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கின்றன. நியோகார்டெக்ஸ் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கில் செயல்படும் வேகம் கொண்டது. ஆனால் அமிக்டாலாவோ ஒரு விநாடியில் பத்தாயிரத்தில் ஒரு பங்கிலேயே செயலாற்றும் ராக்கட் வேகம் கொண்டது. சொல்கிறது விஞ்ஞானம். எனவே அறிவுக்கும் உணர்ச்சிக்குமான போராட்டத்தில் எது வெல்லும் என்ற கேள்வியே அபத்தமாகிப் போகிறது. நல்லதற்காகவோ, கெட்டதற்காகவோ, ஒரு கூட்டமாகச் செயல்படும்போது அங்கே அறிவு வேலை செய்யாது.  குறிப்பாக  எதிர்வினையாற்றும்போது. சிந்திக்கும் திறன்கொண்ட மனிதன் ஆட்டு மந்தைகளுக்குப் போட்டியாகத்தான் கும்பலோடு கலக்கும்போது செயல்பட முடியும். இதில் ஜாதி, மதம் என்ற வித்தியாசங்கள் கிடையாது. உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் காரியங்கள் தவறா சரியா என்று அந்த உணர்ச்சி அடங்கிய பிறகுதான் முடிவு செய்ய முடியும். அறிவுப்பூர்வமாகத் திட்டமிட்டு பாப்ரி மஸ்ஜிதை இடித்த பிறகு அது ”உணர்ச்சியின் வெளிப்பாடு” என்றுதான் திட்டங்களுக்கு கோடு, ரோடு எல்லாம் போட்டுக்கொடுத்த தலைகள் சொல்லின. ஆனால் பல மாமாங்கங்கள் கழித்து குற்றவாளிகள் இன்னின்னபேர் என்று தெளிவான அறிக்கை வந்தபிறகும் அதில் ஒருவர்கூட இன்றுவரை கைதுசெய்யப்படவில்லை. அமிக்டாலா, நியோகார்டக்ஸ் இரண்டுமே இல்லாமல் போன ஒரு அரசு உலகில் நமதாகத்தான் இருக்கும்! இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை ஒரு கொசு மாதிரி. ஆனால் பல தலைமுறைகளாக நமது மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையினரால் இழைக்கப்படும் கொடுமைகள் முடிவே இல்லாமல்  சிந்துபாத் கதைபோலத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. நான் சின்னப்பையனாக இருந்தபோதிருந்தே இந்தப் பிரச்சனை இருக்கிறது. ஏன், அதற்கு முன்கூட இருந்திருக்கலாம். இதுவரை எதுவுமே ‘காங்க்ரீட்’டாக அப்பிரச்சனையைத் தீர்ர்கும் விதத்தில் செய்யப்படவில்லை. ஆனால், தர்மத்துக்குப் புறம்பான முறைகளில், கொடூரமாகப் பிரபாகரனையும் அவர் குடும்பத்தாரையும்  கொன்ற இலங்கை அரசுக்கு ’ராஜ’வரவேற்பு கொடுத்துக்கொண்டிருப்பதும் நமது அரசுதான்! (நான் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு ஆதரவோ எதிர்ப்போ கொண்டவனல்ல. பிரபாகரனுடைய மரணம் பற்றி பா.ராகவன் தமிழில் எழுதிய நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது அந்த விஷயம் பற்றி விபரமாக அறிந்துகொள்ள முடிந்தது. அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அதில் உள்ளன). ஏதோ குஜராத் பிரச்சனையில் மட்டுமாவது ’கோமா’வில் இருந்த இந்தியநீதி புத்துயிர் பெற்றுள்ளது சந்தோஷப்படக்கூடியதே. இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக்  கேவலப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சினிமா பற்றிய எதிர்வினைகளையும் இப்படித்தான் என்னால் பார்க்க முடிகிறது. ஆத்ம நண்பர்களைவிட, சொந்தபந்தங்களைவிட, காதலன், காதலியைவிட, மனைவி மக்களைவிட, பெற்ற தாய்தந்தையரைவிட, ஏன் உயிரைவிட உயர்வாக, இன்று ஒருவரை இந்த  உலகம் மதிக்கிறது என்றால் அது நபிகள் நாயகத்தை மட்டும்தான். நபிகள் நாயகத்துடன் பேசும்போதெல்ல்லாம் “என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று அவர்களின் ஆத்ம நண்பர் அபூபக்கர் கூறுவது வழக்கம். அந்த அபூபக்கரின் ஆன்மாதான் இன்று இந்த உலகில் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலை உலக முடிவுநாள் வரையிலும் தொடரும். இன்ஷா அல்லாஹ். இன்று முஸ்லிகளுக்கிடையே பல ஜமாஅத்துகள்  தோன்றி, விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், இந்தவிஷயத்தில் மட்டும் யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.   சமீபத்தில் தமிழகத்தில் நடந்த எதிர்வினைகள் அதைத்தான் நிரூபிக்கின்றன. முதலில் தினமணியின் தலையங்கத்தில் உள்ள விஷ(ய)ங்களைப் பார்த்துவிடலாம். கடந்த 5 நாள்களாக சென்னை அண்ணா சாலையில், ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தங்களது மத உணர்வைப் புண்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால், அமெரிக்காவுக்கு எதிராகச் சென்னையில் நடத்தும் இந்தப் போராட்டத்தின் மூலம் அவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள் என்பது புரியவில்லை இப்படித்தொடங்குகிறது 20.09.12 தேதியிட்ட  தலையங்கம். அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தை சென்னையில் நடத்தக்கூடாதாம். அமெரிக்காவுக்குச் சென்றுதான் நடத்த வேண்டுமாம்! அப்படியானால் ”தங்களது மத உணர்வைப் புண்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு” என்று எழுதியதற்கு அர்த்தம் என்ன? அது ஒரு அரசியல். முதலில் கட்டியணைக்க வேண்டும். பின்பு முதுகில் கத்தியால் குத்தவேண்டும். அதற்குத்தான். புரிகிறது. அடுத்த பத்தி இதோ: இந்தப் போராட்டம் அமெரிக்காவுக்கு எதிரானதா? அந்தப் படத்தை தயாரித்த சாம் பாஸில் என்ற நபருக்கு எதிரானதா? இதுவரை எங்குமே வெளியாகாத திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட யு ட்யூப்-க்கு எதிரானதா? யாரை எதிர்க்கிறார்கள் நமது தமிழக இஸ்லாமியச் சகோதரர்கள்? யாரை எதிர்க்கிறார்கள் என்று புரியவில்லையா? ஒரு உன்னதமான மனிதரைக் கேவலப்படுத்தும் நோக்கத்துடன் எடுத்த அசிங்கமான மனதை எதிர்த்து, அதை வெளியிட  அனுமதித்த யூட்யூபின் நேர்மையின்மையை எதிர்த்து, கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் அதைத் தடைசெய்ய முடியாது என்று சொல்லும் ஹிலரி கிளிண்டன்களின் மனநிலையை எதிர்த்து. (சுதந்திரம் என்ற பெயரில் ஆணை ஆணே ’திருமணம்’ செய்துகொள்ள அனுமதித்து அதற்கு ‘சான்றித’ழும் கொடுக்கும் அமெரிக்கா வேறு எப்படிப்பேசும்?) சாலையின் நடுவில் போகும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது என்று நீங்கள் வாதிட்டால் உங்கள்மீது என் காரை ஏற்றும் உரிமை எனக்கு இருக்கிறது என்று நான் சொல்ல வேண்டிவருமல்லவா? Your freedom ends where my nose begins என்று ஆங்கிலத்தில் அழகான ஒரு முதுமொழி உண்டு தெரியும்தானே? யாருக்காக, எதற்காக  இந்த போராட்டம் என்று என்ன கேள்வி இது? கேள்விகளின் பின்னால் உள்ள அசிங்கமான உள்நோக்கத்தை நியோகார்டக்ஸ் உள்ள யாரும் புரிந்துகொள்ள முடியும். ”நமது இஸ்லாமிய சகோதரர்கள்”! உண்மைதான். எல்லா மனிதர்களும் சகோதரர்கள்தான். ஆனால் அதை நீங்கள் சொல்வதுதான் ஆச்சரியமாக உள்ளது! அமெரிக்கத் தூதரகத்தின் மீதான தாக்குதல் ஒருநாள் மட்டுமே நடைபெற்றிருந்தால் அதை உணர்ச்சியின் எழுச்சியால் ஏற்பட்ட மனக்கொந்தளிப்பாகக் கருதலாம். ஆனால் தொடர்ந்து 5வது நாளாக அமெரிக்கத் தூதரகத்துக்கு எதிர்ப்பு என்ற பெயரால் அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைப்பதும், ஐந்து நாள்களாகப் பொதுமக்களை அவதிக்குள்ளாக்குவதும் ஏன் என்பதுதான் புரியவில்லை. ஆக, ஒரேயொருநாள் தாக்குதல் நடத்தி அதில் அமெரிக்கத் தூதரகமே தூள்தூளாக உடைக்கப்பட்டிருந்தாலும் அது தினமணிக்கு ஓகேதான், அப்படித்தானே! ஐந்து நாட்களாக  போராட்டம் தொடர்ந்ததுதான் பிரச்சனைபோலுள்ளது. எதிர்காலத்தில் தினமணியின் ஆதரவை விரும்பும் போராட்டக்காரர்கள் கவனிக்க வேண்டிய நெறிமுறை இது! முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உள்படுத்திய போதும், அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் பேசுவதற்காகச் சென்ற நடிகர் ஷாரூக் கானை பரிசோதனைக்கு உள்படுத்தியபோதும் இந்திய முஸ்லிம்கள் மனக்கொதிப்புக்கு ஆளாகவில்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இந்தப் போராட்டம் அரசியல் காரணிகளைக் கொண்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது கோணல் நடையும் கோணல் பார்வையும் கொண்ட தினமணிப்பூனை சாக்கை விட்டு இங்கேதான் வெளியே வருகிறது! நபிகள் நாயகத்துக்காக மனக்கொதிப்புக்கு ஆளாகும் முஸ்லிம்கள் அப்துல் கலாமுக்காகவும் ஷாருக்கானுக்காகவும் ஏன் கொதிப்புக்கு ஆளாகவில்லை என்பதுதான் தினமணிக்கு புரியவில்லை! கேவலப்படுத்தும் வேலையை ரொம்ப நுட்பமாக இங்கே தினமணி செய்கிறது. காஞ்சிபுரத்துக்குச் சென்ற ஜனாதிபதி அப்துல்கலாம் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலும் பெயிலுமாக  அலைந்துகொண்டிருக்கும் ஜெயேந்திரரைப் பார்த்து ஆசிபெற்றார். போனவர், பவ்யமாகத் தரையில் உட்கார்ந்து கொண்டார். ஜெயேந்திரர் வழக்கம்போல நாற்காலியில் அமர்ந்தோ அல்லது நின்றுகொண்டோ அவருக்கு ஆசி வழங்கியிருப்பார். சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாத ஜனாதிபதியாக அப்துல்கலாம் அன்று செயல்பட்டார். ஒட்டுமொத்த இந்தியாவையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தியதை ஏனோ மறந்துபோனார். குர்’ஆனை நான் ஏன் படிக்க வேண்டும்? என் மதத்தில் உள்ளவற்றை மட்டும் நான் தெரிந்துகொண்டால் போதும் என்ற ரீதியில் ஜெயேந்திரர் ஒருமுறை ஒரு பேட்டியில் சொன்னார். உலகளாவிய ஒரு மார்க்கத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ளக்கூட விரும்பாத ஜெயேந்திரரிடம் ஆசி பெறவேண்டிய அவசியம் அப்துல்கலாமுக்கு என்ன ஏற்பட்டது? மரியாதை இழப்பை மரியாதையாகப் புரிந்துகொண்டால் என்ன செய்வது! ஏவுகனை விஷயத்தில் வேகமாகச் செயல்பட்ட அப்துல்கலாமின் நியோகார்டக்ஸ் சமுதாய நடைமுறைகளில் தூங்கிவிட்டது. பிரபலமான ஜனாதிபதி என்று பெயர் எடுத்தாரே தவிர முஸ்லிம்கள் மெச்சும் முஸ்லிம் என்று அவர் பெயர் எடுக்கவில்லை. ஷாருக்கான் ஒரு அருமையான நடிகர். அவருடைய ”மை நேம் ஈஸ் கான்” அற்புதமான படம். சந்தேகமே இல்லை. அதுபற்றி ”நமது முற்றம்” பத்திரிக்கையில் நாம் விமர்சனம்கூட எழுதியிருக்கிறேன். ஒரு விவாதத்தில் பேசும்போது, முஸ்லிமென்றால் தாடி வைக்கத்தான் வேண்டும் என்று டாக்டர் ஜாகிர்  நாயக் சொல்ல, “Do you want to look Muslim or feel Muslim?” என்று ஒரு அழகான கேள்வியையும் ஜாகிருக்கு பதிலாகச் சொன்னார் ஷாருக். அதெல்லாம் சரி. இஸ்லாத்தில் இசைக்கு, திரைப்படத்துக்கெல்லாம் ஆதரவுண்டா என்ற கேள்விக்குள் நாம் இப்போது போகவேண்டாம். அது விரிவான விவாதத்துக்கு இட்டுச்செல்லும். உண்டு என்றும் இல்லை என்றும் விவாதம் செய்யலாம். அதெல்லாம் விளக்கங்கள் சார்ந்தது. ஆனால், விளக்கம் தேவைப்படாத, தெளிவான இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு விரோதமாக, கௌரி சிப்பர் என்ற ஹிந்துப் பெண்ணை ஹிந்துமத முறைப்படி திருமணம் செய்தார் ஷாருக்கான். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ஹிந்து கடவுளர்களின் பூஜையறையில் திருக்குரானும் இருப்பதாக விக்கி கூறுகிறது. ஒருதட்டில் அப்துல் கலாம், ஷாருக் கான். இன்னொரு தட்டில் நபிகள் நாயகம். ஒரு தட்டுக்காக குரல் கொடுக்கும் முஸ்லிம் சமுதாயம் ஏன் இன்னொரு தட்டைக் கவனிக்கவில்லை என்று தினமணி கேட்கிறது! யாரோடு எப்படிப்பட்டவர்களை இணைக்கிறது என்று புரிகிறதா? The Hundred என்று உலகப்புகழ் பெற்ற ஒரு நூலை மைக்கேல் ஹார்ட் எழுதினார். அதில் உலகில் மகத்தான சாதனைகள் செய்த நூறு பேரை அவர் பட்டியலிட்டார். அதில் முதல் ஆளாக அவர் வைத்தது நபிகள் நாயகத்தை! ஒரு கிறிஸ்தவராக இருந்தபோதும் அவர் இந்த காரியத்தைத் துணிந்து செய்தார். ஏன் அப்படிச் செய்தார் என்ற விளக்கமும் கொடுத்தார். அந்த நூலைப்பற்றிப் பெருமையாக நான் என் ஊரைச்சேர்ந்த அண்ணன் கவிஞர் ஜஃபருல்லா நானாவிடம் சொல்லியபோது அவர் அதை சிலாகிக்கவில்லை. ஏன் என்று நான் கேட்டேன். முதல் ஆளாக வைத்தாலும் நூறு பேரில் ஒருவராகத்தானே சொல்கிறார் என்று கேட்டார்! அதுதான் ஒரு உண்மையான முஸ்லிம் இறுதித்தூதர்மேல் கொண்ட மதிப்பு. ஈடு இணையற்ற ஒரு மாமனிதராகத்தான் நாங்கள் அவரைப் பார்க்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, நபிகள் நாயகத்துக்கு இணையாக வைத்துப்பேச முடிகிற மனிதர் இந்த உலகில் ஒருவர்கூட இல்லை. அவர்களுடைய மகத்துவமும் குணாம்சமும் அப்படிப்பட்டவை. If any religion had the chance of ruling over England, nay Europe within the next hundred years, it could be Islam. I have always held the religion of Muhammad in high estimation because of its wonderful vitality. It is the only religion which appears to me to possess that assimilating capacity to the changing phase of existence which can make itself appeal to every age. I have studied him – the wonderful man and in my opinion far from being an anti-Christ, he must be called the Savior of Humanity.” “I believe that if a man like him were to assume the dictatorship of the modern world he would succeed in solving its problems in a way that would bring it the much needed peace and happiness: I have prophesied about the faith of Muhammad that it would be acceptable to the Europe of tomorrow as it is beginning to be acceptable to the Europe of today.” The Genuine Islam என்ற நூலில் இப்படிச் சொன்னவர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. மனிதகுலத்தைக் காக்க வந்தவர் என்றும், அவரைப் போன்ற ஒரு மனிதரிடம் இந்த நவீன உலகத்தின் ஆட்சியை ஒப்படைத்தால், அது நமக்கெல்லாம் தேவைப்படும் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டுவந்துவிடும் என்றும் நபிகள் நாயகத்தைப் பற்றி ஷா கூறுகிறார்! ஷா மட்டுமல்ல, அறிவார்ந்த தளத்தில் உண்மையிலேயே இயங்கிய வில்லியம் முய்ர், எட்வர்ட் கிப்பன் போன்ற பல மேனாட்டு அறிஞர்களும் இதை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். தினமணிகளின் விஷமத்தனத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவும் சொன்னேன். கும்பலாக, கூட்டமாக எந்தக் காரியம் செய்யப்பட்டாலும் அங்கே உணர்ச்சி மிகைத்து நிற்கும் என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அது நல்ல காரியமாக இருந்தாலும் சரி, கெட்ட காரியமாக இருந்தாலும் சரி. ஒரு சின்ன நெருப்பு, வீடு முழுவதையும் எரித்துவிடும் அபாயம் உண்டு. நம்முடைய தூதரைக் கேவலப்படுத்த முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? இங்கேயும் நாம் நபிகள் நாயகத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும். தனக்கு விஷம் வைத்த யூதப்பெண்ணை நாயகம் மன்னித்தது வரலாறு. போரில் பிடிபட்ட கைதிகளை என்ன செய்யலாம் என்ற கேள்வி வந்தபோதெல்லாம் கொன்றுவிடலாம் என்று உமரும், மன்னித்துவிடலாம் என்று அபூபக்கரும் கூறுவார்கள். நாயகமவர்கள் எப்போதும் மன்னிப்பையே தேர்ந்தெடுத்தார்கள். தாயிப் நகரத்தில் இஸ்லாத்தை எடுத்துரைக்க நாயகம் சென்றபோது அவர்கள் கல்லால் அடித்து விரட்டப்பட்டார்கள். ஆனால் அடித்தவர்களை சபிக்கவில்லை. அவர்களுக்குப் பின்னே வரும் சமுதாயம் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். தொழுது கொண்டிருந்தபோது அவர்களின் கழுத்தில் ஒட்டகக் குடலைப் போட்டு இறுக்கிக் கொல்ல முயன்றவர் உண்டு. ஆனால் மக்காவை வெற்றி கொண்டபோது ஒரு துளி ரத்தம்கூட சிந்தப்படவில்லை. நிராயுதபாணியாக இருப்பவர்களை, வயதானவர்களை, பெண்களை, குழந்தைகளை, சரணடைபவர்களை – இப்படி யாரையும் தாக்கக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தார்கள். மன்னிப்புக்கு ஒரு உருவம் கொடுக்க முடியுமென்றால் அது நபிகள் நாயகமாக இருக்கும் என்பதைத்தான் அவர்களது வரலாறு காட்டுகிறது. வட நாட்டில் ஒரு பாதிரியாரையும் ஒரு சிறுவனையும் உறங்கிக்கொண்டிருந்த வேனோடு எரித்துக் கொன்றவர்களை மன்னித்துவிட்டதாக அச்சிறுவனின் தாய் சொன்னதை இந்த உலகம் மறக்க முடியாது. நாயகமவர்களைக் கேவலப்படுத்த முயற்சி நடந்துள்ளது. புனை பெயருக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் அந்தக் கோழைகளை மன்னிக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அவர்கள் துணிச்சலாக வெளிவருவார்களேயானால் நிச்சயமாக அவர்களுக்குரிய தண்டனையைக் கொடுக்கப் போராடலாம். நமது நியாயமான கோபத்தை  வெளிப்படுத்தத்தான் வேண்டும். அதேசமயம் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் அக்காரியத்தைச் செய்தால் அதுதான் ’இமோஷனல் இண்டெலிஜெண்ட்ஸ்’ என்று சொல்லப்படும் அறிவார்ந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக  இருக்கும். யாருக்கோ சொந்தமான இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களைக் கொளுத்துவது, கண்ணாடிகளை உடைப்பது, தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது, அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்குவது போன்ற செயல்கள் நம் பிரச்சனையைத் தீர்க்க நிச்சயம் உதவாது. அவசரமாக மருத்துவமனைக்குக்  கொண்டு செல்ல  வேண்டிய நோயாளிகள், அல்லது பிரசவ வேதனையுடன் தவிக்கும் பெண்கள், பள்ளிக்கூடத்துக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள் – இப்படி எத்தனையோ பேர் சென்னை மாநகரை ஸ்தம்பிக்க வைத்த போராட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதே போன்ற ஒரு சூழ்நிலை நமக்கு ஏற்பட்டு, வேற்று மதத்தவரால் நமக்கு இத்தகையை இடையூறுகள் ஏற்பட்டிருந்தால் நாம் என்ன சொல்வோம்? இதைத்தான் டாக்டர் ஹபீப் முஹம்மது அவர்களும் அவர் பாணியில் சொன்னார். எதிர்வினை பற்றியே கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள், அதைத்தூண்டிய முதல் வினைக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறீர்களே என்றார். சகோதரர்கள் பொறுமை காக்க வேண்டும். யோசிக்க வேண்டும். எதிர்வினை அவசியம்தான். அது இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வழியில் இருக்க வேண்டும். அவ்விதம் நமது செயல்பாடுகள் இருக்குமானால் எதிர்காலத்தில் இஸ்லாத்துக்கு எதிரான குப்பைகளை அல்லாஹ் நீக்குவான். அதற்கான சாத்தியக்கூறு நிச்சயம் ஏற்படும். இஸ்லாத்தின் புகழ் மேன்மேலும் ஓங்கும். இன்னல்லாஹ ம’அஸ்ஸாபிரீன். நிச்சயமாக பொறுமையாளர்களோடு நான் இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறுகிறான். அன்புடன் நாகூர் ரூமி       21 நீயா நானா []இந்த தலைப்பில் விஜய்டிவில் நடக்கும் விவாதங்கள் மிகவும் பிரபலமானவை. அதன் மூலமாக நண்பர் கோபிநாத்தும். ஆனால் எனக்கு இந்த தலைப்பின்மீது உடன்பாடில்லை. நீயா நானா பார்த்துவிடுவோம் என்ற போட்டி மனப்பான்மையும் எனக்கு உடன்பாடானதில்லை. நீ நீயாக இரு, நான் நானாக இருக்கிறேன் என்பதே சரியாக இருக்கும். போட்டி போட்டு ஒருவர் மூக்கை ஒருவர் உடைப்பது இறுதியில் பயனற்ற செயலாகத்தான் முடியும். அப்படிச் செய்வதனால் இருவருக்கும் நட்பு மலரப் போவதில்லை. பகை வளரலாம். நீயா நானா என்பது மனிதர்களைப் பிரிக்கும் ஒரு செயலாகத்தான் இருக்கும். சுன்னத் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத்காரர்களுக்கிடையே நிலவும் ’சகோதரத்துவம்’ போல. நான் இங்கே விஜய் டிவியின் தலைப்பு பற்றி மட்டும் பேசவில்லை. பொதுவாகச் சொல்கிறேன். நீயும் நானும் என்று அந்த நிகழ்ச்சிக்குத் தலைப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் நீயா நானா-வில் உள்ள ‘கிக்’  இருக்காது! அந்த தலைப்பே ஒரு கனவில் கிடைத்ததாக கோபிநாத் நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் கூறினார்! விவாதத்தின் முடிவு அங்கேயே தெரிந்துவிட்டது! நீயா நானா-வில் நடப்பது என்ன என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுகூடச் சொல்லிவிடலாம். க்ளைமாக்ஸ் இல்லாத படம் மாதிரி நிகழ்ச்சி முடிந்து போகும். ஏனெனில் இதுதான் சரி என்று முடிவு எடுக்கும் அதிகாரம் எந்த தனி நபருக்கோ, அல்லது தொலைக்காட்சிக்கோ இல்லை. இரண்டு பக்கமும் உள்ள கருத்துக்களை முன்வைக்கலாம். அவ்வளவுதான் செய்ய முடியும்.  முடிவுகளை மக்கள்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நிகழ்ச்சியின் சரியான உட்குறிப்பு. அதோடு பொதுவாக தொலைக்காட்சியில் வருபவை எல்லாம் அதிகமாக ‘எடிட்’ செய்யப்பட்டவையே. மனதைப் புண்படுத்தும் வார்த்தைகள், தேவையற்ற கருத்துக்கள் – என்று கருதப்படும் எல்லாமும் – ‘எடிட்’ செய்யப்படும். அவை நீக்கப்பட்டு, ‘சுத்தப்படுத்தப்பட்ட’ பிறகுதான் நிகழ்ச்சி வெளியாகும். அதுவும் ஊடக தர்மம்தான். ஆனால் பல நேரங்களில் உண்மையானது ‘எடிட்’ செய்யப்பட்ட பகுதிக்குள்தான் ஒளிந்திருக்கும்! கனவுகளைப் பற்றிய பதிவுக்காக நான் சென்றிருந்தபோது வேறு ஒரு பதிவுக்கான ரெகார்டிங் நடந்துகொண்டிருந்தது. அதில் திரு பழ. கருப்பையா ஒரு சிறப்பு விருந்தினர். அவர் பேசும்போது, சட்டத்தைவிட தர்மமே முக்கியம் என்பதைக் குறிக்க, ஷாபானு வழக்கில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எதிர்த்து பாராளுமன்றம் தனிமசோதா மூலம் அதை செல்லாதபடியாக்கியதைக் குறிப்பிடும்போது, முஸ்லிம்கள் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை “செருப்பால அடிச்சான்ல” என்று சொன்னார். எனது கருத்தில் அவர் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசவில்லை. சட்டம் தன் கலாச்சாரத்தில் தலையிடக்கூடாது என்பதில் ஒரு சமுதாயம் பிடிவாதமாக இருந்ததல்லவா என்ற கேள்வியைத்தான் அவர் அப்படிக் கேட்டார். நிகழ்ச்சி வெளியானபோது அவ்வார்த்தைகள் நீக்கப்பட்டுவிட்டன. சட்டம் என்ன, “மாற்ற முடியாததா? அது முஹம்மது நபி ஓதிய குரானா?” என்று அவர் சொன்னதை மட்டும் வைத்துக்கொண்டனர். இது தவறல்ல. பிரச்சனை வரும் என்று தோன்றும் இடங்களைத் தவிர்ப்பது விவேகம்தான். அதே சமயம், அவர் எவ்வளவு காட்டமாக, உணர்ச்சிப் பூர்வமாகப் பேசினார் என்பது அந்த எடிட்டிங் மூலம் தெரியாமலே போய்விடுகிறது. பிரமுகர்களின் உண்மையான முகம் இதன் மூலம் மறைக்கப்படுகிறது. அதோடு, விவாதம்செய்ய வருபவர்களில் பெரும்பாலானோர் துறை சார்ந்த நிபுணர்கள் அல்ல. பொதுமக்கள்தான். அதனால் அழைக்கப்படும் சிறப்பு விருந்தினர்களாவது அந்த துறையின் அறிஞர்களாக இருந்தால் நல்லது. ஆனால் அழைக்கப்படும் விருந்தினர்களில் பலர் சமுதாயத்தில் ஏதோ ஒரு வகையில் பிரபலமானவர்களே தவிர, துறை சார்ந்த சிறப்பு அறிவு பெற்றவர்களாக எப்போதுமே இருப்பதில்லை. நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில்கூட இரண்டு முக்கிய விருந்தினர்கள் இருந்தனர். ஒருவர் அருணா பாஸ்கர். இன்னொருவர் மனவியல் நிபுணர் முஹம்மது ஷஃபி. அருணா பாஸ்கரை ஏன் அழைத்தார்கள் என்று தெரியவில்லை. அவர் கடைசியில் ஒரு ’காமெடி பீஸ்’ ஆகிப்போனார். தான் முகலாயப் பேரரசர் அக்பரின் ராஜபுத்திர மனைவி, ஜோதா அக்பர் என்று ஃபதேபூர் சிக்ரிக்குப் போனபோது உணர்ந்து கொண்டதாகக் கூறி பிரபலமானவர் அவர். முன் ஜென்மம் பற்றிய நீயா நானா-வில் கூப்பிட வேண்டியவர். கனவுகள் பற்றிய விவாதத்துக்கு அவரை ஏன் அழைத்தார்கள் என்று தெரியவில்லை. (முன் ஜென்மம் என்று ஒரு நிகழ்ச்சியும் விஜய் டிவியில் வருகிறது. அதில் கலந்துகொள்ளும் டிவி சீரியல் கதாநாயகிகள் மற்றும் உப கதா நாயகிகள் பலர் தான் முன் ஜென்மத்தில் ஒரு ராணியாக இருந்ததாக சொல்லிக்கொள்கிறார்கள். ’அதுஇதுஎது’ போன்ற காமடி நிகழ்ச்சிகள் இருக்கும்போது ’முன் ஜென்மம்’ என்று எக்ஸ்ட்ராவாக எதற்கு என்று எனக்கு விளங்கவில்லை). அருணா பாஸ்கர் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஏற்கனவே சொன்ன செய்திகளை திரும்பச் சொன்னார். அக்பரைத் தனக்குப் பிடிக்காது எனவும், அக்பர் தன்னை மணந்த பிறகு இன்னொரு பெண்ணையும் மணந்ததால் ஏற்பட்ட வெறுப்பு என்றும் சொன்னார். நமக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றின்படி, ஜோதாஅக்பர் என்று சொல்லப்பட்ட ராஜபுத்திரப் பெண் அமர் அல்லது அம்பர் என்ற ஊரின் ராஜா பர்மால் என்பவரின் மகள். ஜஹாங்கீர் என்ற மகனைப் பெற்ற தாய் என்றும், அப்படியில்லை, ஜோதா அக்பர் என்ற பெயர் அக்பரின் வாழ்க்கை வரலாற்று நூலிலும், ஜஹாங்கீரின் வரலாற்று நூலிலும் குறிப்பிடப்படவில்லை. அவர் உண்மையில் ஜஹாங்கீரின் மனைவிதான், ஷாஜஹானின் அம்மா என்றும், அக்பரின் ராஜபுத்திர மனைவியின் பெயர் மரியமுஸ் ஸமான் (அந்தக் காலத்தின் மரியம் அல்லது மேரி) என்றும் வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் வரலாற்றில் குழப்பமில்லாமல் கூறப்படும் ஒரு விஷயம், ஜோதா அக்பர் என்ற ராஜபுத்திர இளவரசி அக்பரின் மூன்றாவது மனைவி என்பதுதான். ஜோதாபாய் அக்பரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர் என்பது ஜோதாவுக்குத் தெரியாமலிருந்திருக்க வாய்ப்பில்லை. அதோடு, அன்றாடங் காய்ச்சிகளுக்கே சின்னச் சின்ன வீடுகள் இரண்டு மூன்று  இருக்கும்போது சக்கரவர்த்திகளுக்கு பல மனைவிகள் இருப்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. இங்கிலாந்தில் ஒரு மன்னருக்கு இன்னொரு பெண்ணைப் பிடித்துப் போய்விட்டால் (அவள் பெரும்பாலும் மனைவிக்கு பணிவிடை செய்யும் பெண்ணாகவே இருப்பார்), மனைவி மீது துரோக்க் குற்றம் சாட்டி அவரை டவர் எனப்படும் தனிக்கோட்டைக்கு அனுப்பி, தலையை வெட்டிவிடுவது வழக்கம்! உதாரணமாக எட்டாம் ஹென்றி அப்படித்தான் செய்தான். ஆனால் முகலாயர்கள் இந்த விஷயத்தில் ரொம்ப நல்லவர்கள். கூடப்பிறந்தவர்களைக் கொல்வார்களே தவிர, மனைவியைக் கொல்லமாட்டார்கள்! தான் அக்பரின் மனைவி என்று முன் ஜென்ம நினைவுவந்த அருணா அக்பருக்கு, சாரி, அருணா பாஸ்கருக்கு, தான் மூன்றாவது மனைவியாகத்தான் அக்பரிடம் போய்ச்சேர்ந்தோம் என்ற விஷயம் நினைவு வரவில்லையாம்! நான்காவதாக ஒரு பெண்ணை அவர் மணந்துகொண்டதால் அக்பரைப் பிடிக்காதாம்! அக்பர் அவருக்கு துரோகம் செய்துவிட்டாராம்! மனதை பாதிக்கும் நோய்கள்தான் எத்தனை விதம் ! போகட்டும். நல்லவேளையாக அவர் அரைமணியாகக் கொட்டிய கற்பனைக் கதைகளையெல்லாம் சுத்தமாக நீக்கிவிட்டு அவரை ஒரு டம்பி பீஸ்-ஆக உட்கார வைத்த விஜய்டிவியை பாராட்ட வேண்டும்! இன்னொரு முக்கியப் பிரமுகர் டாக்டர் ஷஃபியைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏன் சார் நீங்கள் சீஃப் கஸ்ட் இல்லியா என்று இரண்டு மூன்று பேர் என்னைக் கேட்டார்கள். என் எழுத்தாள ஈகோவைச் சொரிந்து கொள்ள அக்கேள்விகள் உதவும் என்பதால் நான் அவற்றை ஒதுக்கிவிடுகிறேன். இன்னும் தகுதியான சிறப்பு விருந்தினர்களை அழைத்திருக்கலாம். நிற்க இந்தப் பக்கம் 25 பேர், அந்தப் பக்கம் 25 பேர் என்று அமர்ந்திருப்பதால் மைக் கையில் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. இரண்டு முறை கோபிநாத் ‘நாகூர் ரூமியிடம் கொடுங்கள்’ என்று என் பெயரைச் சொல்ல வேண்டியிருந்தது. அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். கனவுகள் நமது உடல் நோயை, ஆழ்மன விருப்பங்களை, ஆழ்மன நினைவுகளை, நமது எதிர்காலத்தை, நமக்கோ நம் சொந்தக்களுக்கோ நடக்க இருக்கும் ஆபத்தை – இவற்றையெல்லாம் முன்னறிவிக்கும் தகுதி கொண்டவை என்று உதாரணங்களோடு விளக்கிச்சொன்னபிறகும், கனவுகளை ஒரு சமிக்ஞை என்று எதிரில் உள்ளவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் திரும்பத் திரும்ப ஒரு கேள்வி கேட்கப்பட்டது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. எதிர்ப்பக்கம் இருந்த ஒருவர் சைக்காலஜி பேராசிரியர் என்றும், அவர் ஜெனடிக்ஸ் பற்றிப் பேசுகிறார் என்று சப்பைக்கட்டு கட்டப்பட்ட அவர் உளறிக் கொட்டினார் என்றுதான் சொல்லவேண்டும். கார் ஏன் ஓடுகிறது என்று கேட்டால் நான்கு டயர்கள் இருப்பதால்தான் என்று அவர் சொல்கிறார் என்று என் நண்பர் டாக்டர் ஸ்ரீதரன் கூறியது ரொம்பச் சரி. விஷயத்தை அவர் உள் வாங்கிக்கொள்ளவே இல்லை. ஒரு முன்னறிவிப்புக் கனவை உதாசீனப்படுத்தியன் மூலம் தன் கணவரை இழந்த கதையை ஒரு இளம் சகோதரி கண்ணீருடன் சொல்லிக்காட்டியபோது அந்த ’சைக்காலஜி ப்ரொஃபசர்’ செய்த விவாதம் அபத்தத்தின் உச்சம். வாய்ப்புக் கிடைத்தால் அதைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்று நான் விரும்பினேன். வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் சிறப்பாகப் பேசியதற்காக அவருக்கு ஒரு பரிசு கொடுத்ததுதான் தாங்க முடியாத சோகம். என்ன கொடுமை சரவணன்! அதில் நிச்சயம் ஏதோ அரசியல் இருக்கிறது என்பதை உணர முடிந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகும், நடந்து கொண்டிருந்த போதும்கூட, எனக்கு நிறைய அலைபேசி அழைப்புகளும் மின்னஞ்சல்களும் வந்தன. அவற்றில் பல புகழ் மொழிகள். நண்பர்களும் சொந்தக்காரர்களும். ஆனால் இரண்டு அழைப்புகளும் ஒரு மின்னஞ்சலும்தான் குறிப்பிடத் தக்கவை: 1. நண்பர், எழுத்தாளர் தாஜிடமிருந்து வந்த அழைப்பு 2. நண்பர், எழுத்தாளர் சங்கர நாராயணனிடமிருந்து வந்த அழைப்பு 3. நண்பர் ஸ்ரீதரனிடமிருந்து வந்த மின்னஞ்சல். ஸ்ரீதரன் பச்சையப்பன் கல்லூரியில் கணிதத் துறையின் தலைவராகவும், பின்பு கணிணித் துறைத் தலைவராகவும், பின்பு சென்னை புதுக்கல்லூரியில் உள்ள ஐடி கல்லூரியின் முதல்வராகவும் இருந்தவர். நிகழ்ச்சி தனக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் அது பற்றி எழுத இருப்பதாகவும் தாஜ் தெரிவித்தார். அவர் என்ன எழுதப்போகிறார் என்று தெரிந்து கொள்ள எனக்கும் ஆசை.  கனவுகள் மிகவும் சீரியஸான விஷயம் ஆனால் அவை பற்றி தீவிரமாக எதுவும் பேசப்படவில்லை என்று சங்கர நாராயணன் கூறினார். அது உண்மைதான். ஆனால் சீரியஸாகவும் மிகத்தீவிரமாகவும் பேசமுடிகின்ற சூழல் எண்டர்டைன்மெண்ட் மீடியாவாகச் செயல்படும் ஒரு ஊடகத்துக்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.  அவர்களுக்கென்று சில வரம்புகள் இருக்கும். உதாரணமாக நேரம். ஐம்பது பேரை  அழைத்து இரண்டு மணி நேரம்பேச வேண்டுமென்றால் ஒருவருக்கு எத்தனை நிமிடங்கள் கொடுக்க முடியும்? அதற்குள் அவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் எவ்வளவுதான் பேச முடியும்? நண்பர் ஸ்ரீதரன் அனுப்பிய ஆங்கில மின்னஞ்சல்: 13-8-2012 My Dear Rafee I watched the நீயா நானா program. You were the only person to mention the name & work of Carl Gustav Jung, though there were professional psychologists & university professors! Your comment on the psychologist who picked up an insensible argument with the young lady who lost her husband in a motor cycle accident true to her dream, was most appropriate; my wife & I felt relieved that you recorded dissent (on behalf of thousands of viewers like us).  His knowledge is half-baked. His reference to neuro-chemical events in the brain as the primary cause for mental states is like saying: ‘car moves because the wheels are rotating’!  It is disappointing to me that he got selected for a prize. Your reference to the Lincoln’s dream, the necessity of relaxed state, and the unconscious as the agent causing dream were timely, appropriate & well received. Gopinath gave due attention to you. It is surprising to me that certain important points (from the point of view of dreams as symbolic foretelling of events) have not emerged from the discussion that lasted for about an hour & a half, like (a) distinction between big dreams (Jung’s term) & ordinary dreams, (b) some people’s propensity for prophetic dreams (like the ability for ESP), (c) the collective & personal unconscious, (d) Jung’s hypothesis (jointly with the physicist Pauli)  that the unconscious psyche has connection with the nature (the UNUS MUNDUS). பேச்சு வார்த்தை மூலமாக  சுமூகமான முடிவுக்கு வர முடியும் என்பது வேறு. ஆனால் இந்த மாதிரி நிகழ்ச்சிகளின் மூலம் பேச்சு மூலமாக எந்த முடிவுக்கும் வர முடியாது. எங்க ஆத்துக்காரரும் ஓடினார் என்பதுபோல,  நம் முகத்தைத் தொலைக்காட்சியில் நம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காட்டிக்கொள்ள ஒரு வாய்ப்பு. இதைத்தாண்டி என்ன உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் கோபிநாத்-தான் பாவம். கோட்டையும் போட்டுக்கொண்டு, அவ்வப்போது செய்யப்படும் மேக்-அப்பையும் பொறுத்துக்கொண்டு மூன்று அல்லது நான்கு நிகழ்ச்சிகளை ஒரே நாளில் நடத்தி முடிக்க வேண்டும். ஒரு மனிதன் பிரபலமாவதற்குக் கொடுக்கும் விலை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. 22 பில்லி சூனியம் பில்லி சூனியம் செய்யப்படுவதில் நம்பிக்கையில்லாதவர்கள் இக்கட்டுரையைப் படிக்க வேண்டாம். ஆமாம். அன்றாடம் செய்யப்படும் பில்லி சூனியம் பற்றிய கட்டுரை இது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அன்றாடம் சூனியம் வைக்கப்படும் லட்சக் கணக்கான மக்களில் நீங்கள் ஒருவர். ஏன் நான்கூடத்தான். எனக்கும் உங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் நான் எப்படி சூனியத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்வது என்று தெரிந்து கொண்டேன். அதைச் சொல்லி உங்களையும் காப்பாற்றலாம் என்றுதான் இக்கட்டுரை எழுதுகிறேன்.   சூனியம் வைப்பதற்கு மொழி தேவையில்லை. அல்லது எந்த மொழியிலும் வைக்கலாம். இது தமிழ் சூனியம். ஆமாம். நம் வீட்டுக்குள்ளேயே 24 மணி நேரமும் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூனியம். சூனியம் என்ற வார்த்தை உங்களுக்குப் பிடிக்கவில்லை, கொஞ்சம் பயமாக இருக்கிறது என்று சொன்னால், வசியம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.   எங்கள் வீட்டுக்குள்ளேயேவா? அதுவும் நாள் முழுவதுமா? எப்படி? யார் வைப்பது? இப்படி ஆயிரம் கேள்விகள் உங்களுக்கு இப்போது வருகின்றனவா? அதற்கெல்லாம் ஒரே பதில்தான். வசியம் வைக்கப் பயன்படுத்துவது தொலைக்காட்சிப் பெட்டி. ஆமாம். அதற்குள்ளிருந்துதான் நாள் முழுக்க நம்மை வசியம் செய்கிறார்கள். அது என்ன வசியம் என்று கேட்கிறீர்களா? விளம்பரங்களைத்தான் சொல்கிறேன்.   விளம்பரங்களால் நாம் தினமும் வசியப்படுத்தப்படுகிறோம். நம்மை அறியாமலே. அவற்றால் mass-hypnotize செய்யப்படுகிறோம். ஆமாம். நாம் மெத்தப்படித்தவர்களாக இருந்தாலும் சரி. இதுதான் நடக்கிறது. தெரிந்தும் தெரியாமலும் நாம் அவற்றால் கவரப்படுகிறோம். அவற்றுக்கு அடிமையாகி விடுகிறோம்.   விளம்பரங்களின் பொதுவான விதி உண்மையைச் சொல்லக்கூடாது என்பது. ஆமாம். எப்போதுமே மிகைப்படுத்தப்பட்ட விஷயங்களைத்தான் உண்மைகளாக அவை காட்டுகின்றன. ’தூள்’ படத்தில் ஜோதிகாவைப் பார்க்கும் விவேக், “ஏய், திம்ஸ் ஈஸ்வரி, இப்பவும் அந்த ரெண்டு இட்லிக்கு ஒரு லிட்டர் நல்லெண்ண ஊத்தி சாப்பிடுற பழக்கம் இருக்குதா?” என்று கேட்பார், நினைவிருக்கிறதா?  இதயம் நல்லெண்ணய் விளம்பரத்தில் ஜோதிகா அப்படித்தான் ஊற்றுவார்.   விளம்பரங்களில் வரும் காட்சிகள், வார்த்தைகள், வண்ணங்கள் இப்படி எல்லாமே திரும்பத் திரும்பக் காட்டப்பட்டும் சொல்லப்பட்டும் நமக்கே தெரியாமல் நம் ஆழ்மனதில் இடம் பிடித்துவிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட சோப்பு விளம்பரத்தை நீங்கள் தொடர்ந்து ஒரு மாதத்துக்குப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் விரும்பி அதைப் பார்ப்பதில்லை. அது உங்கள் கண்களில் படுகிறது. சரி. என்றாலும் ஒரு மாதம் கழித்து சோப்பு வாங்க வேண்டும் என்று நீங்கள் கடைக்குப் போனால், உங்களை அறியாமலே உங்கள் கைகள் அந்த விளம்பரத்தில் பார்த்த சோப்பை எடுக்கும்.அல்லது இந்த முறை வாங்கித்தான் பார்க்கலாமே என்று தோன்றும். இங்குதான் சோப்பு வசியம் ஜெயிக்கிறது. இப்படிப்பட்ட Unconscious Influences-லிருந்து நாம் விடுபட விளம்பரங்களை விமர்சன நோக்கோடு பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான சில குறிப்புகள் இங்கே.   []காத்ரெஜ் சிந்தால் சோப்பு   சோப்பு போடுவதில் பல வகை உண்டு. அதிலும் குறிப்பிட்ட ஒரு சோப்பை நாம் போட வேண்டும் என்பதற்காக நமக்குப் போடப்படும் சோப்புதான் சோப்பு விளம்பரங்கள் என்று சொன்னால் அது வழுக்காத உண்மை.   ஆறு பெண்கள் காட்டப்படுகிறார்கள். ஆறு வகையான பெண்கள் என்றும் சொல்லலாம். காதலி மாதிரி ஒருத்தி, போலீஸ் அல்லது ராணுவத்தில் சேர்ந்தது மாதிரி காக்கிச் சீருடையில் ஒரு பெண், ஒரு ஆணோடு (காதலன் / கணவன்) ஒரு பெண், பஸ்ஸில் சின்னப் பெண்ணோடு ஒரு அம்மா, இன்னும் ஒரு பெண், மொட்டை மாடியில் ஒரு பனியனைப் போட்டுக்கொண்டு ஒரு பெண்.   அப்பெண்கள் அனைவரும் சிந்தால் சோப்பை ஏதோ காதலனிடமிருந்து வந்த கடிதம் மாதிரி கையில் வைத்துப் பார்க்கிறார்கள். திருப்பிப் பார்க்கும்போது அவர்கள் முகத்தில் ஒரு சிரிப்பு. சிந்தாலின் பின்பக்கம் ஏன் பெண்களுக்கு புன்னகை வரவழைப்பதாக இருக்கிறது என்று ஒரு ஆணாக நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அதற்கு பதில் கிடைத்துவிடுகிறது:   “சோப்பு உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும்,விலை உங்கள் முகத்தில் பொலிவூட்டும், சிந்தால் இப்போது ஏழு மற்றும் 17 ரூபாயில் கிடைக்கிறது ’எக்ஸ்பெர்ட்’ பாதுகாப்பு இப்பொழுது எல்லோருக்கும்” என்ற குரலில்.   ஓஹோ விலைதான் புன்னகைக்குக் காரணமா? நான் தேவையில்லாமல் வேறு ஏதேதோ யோசித்துவிட்டேன்! பாலஸ்தீனில் இஸ்ரேலிய ராணுவத்தினரால் அவஸ்தைக்குள்ளாக்கப்படும் பெண்கள் அத்தனை பேருக்கும் இந்திய அரசின் சார்பில் சில லட்சம் சிந்தால் சோப்புகளை வாங்கி அனுப்பினால் ரொம்ப நல்லது. எக்பர்ட் பாதுகாப்பு எல்லோருக்கும் கிடைக்குமல்லவா?   []ஃபி அமா டி வில்ஸ் சோப்பு   திடீரென்று தீபிகா படுகோனே பரவசமடைந்து ஓடி வருகிறார். நிச்சயம் அடுத்தது படுக்கையறைக் காட்சிதான் என்று ஆர்வமாகப் பார்த்தால் இந்த சோப்பைப் போட்டு ’டப்’பில் இறங்கிக் குளிக்கிறார்! அவர் குளித்து முடித்து வெளியே வந்தவுடன் அவர் காதலனும் பரவசமாக உள்ளே வருகிறார். அவர் கையிலும் ஒரு ஃபி அமா டிவில்ஸ்! அவரும் குளிக்கப் போகிறார்! பரவசங்களுக்குப் பிறகு குளியல் என்பதுதான் இந்திய வாழ்க்கை முறை. ஆனால் இங்கே குளியலே ஒரு பரவசமாக இருக்கிறது! அதிலும் சோப்பை உடம்பில் தேய்த்துக் கொள்ளும்போது அவர் முகத்தில் தெரியும் உணர்ச்சி இருக்கிறதே, அதைப்பார்க்கும்போது அது சோப்புதானா இல்லை வேறு ஏதாகிலுமா என்று சந்தேகம் ஏற்படுகிறது! ஆரம்பத்தில் எனக்கு தீபிகாவின் பெயர் பிடிபடவில்லை. தீபிகாவை யாரோ படுக்கச் சொல்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் ’படுகோனே’ என்பதும் அவர் பெயர்தான் என்று பின்னால்தான் தெரிந்தது! சோப்பு விளம்பரங்களில் இருக்கும் ஆப்பு விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.   ஈனோ அசிடிட்டி பாக்கட்   பெண்ணின் தந்தை ஏதோ ஸ்வீட்டை ரகசியமாக கபளீகரம் செய்கிறார். ”கண்ட்ரோலே கிடையாது” என்று அவர் மனைவி(யாகத்தான் இருக்க வேண்டும்) சொல்கிறார். ஏதோ ரோஸ்கலர் ஜெலுசில் ஒன்று ஊற்றிக் காட்டப்படுகிறது. ஆனால் பிறகு ஈனோ கரைத்துக் குடித்தால் அசிடிட்டி போய்விடும் ஆறே நொடிகளில் அது வேலை செய்ய ஆரம்பிக்கிறது என்று சொல்கிறார்கள். இதில் ஜெலுசிலைக் காட்டிவிட்டு ஈனோ பற்றிக் காட்டியது விளம்பர நியதிகளுக்கு (ethics) எதிரானது. ஒரு மனிதர் கட்டுப்பாடே இல்லாமல் சாப்பிடும் பழக்கம் கொண்டிருந்தாலும் ஈனோ குடித்தால் போதும் அவர் காப்பாற்றப்பட்டுவிடுவார் என்ற முட்டாள்தனமான உட்குறிப்பும் இருக்கிறது.   []லிட்டில் நாதெல்லா   குழந்தைகளுக்கான தங்க நகைகளுக்கான இந்த விளம்பரத்தில்,  “லா,லா,லா லிட்டில் நாதெல்லா ” என்று பாடப்படும் வார்த்தைகளும் அதன் மெட்டும், வசீகரமான கோரஸ் குரல்களும் தாலாட்டை அடிப்படையாக வைத்ததுபோல் தோன்றுகிறது. விளம்பர உலகில் நமது பாரம்பரியமும் கலாச்சாரமும் பண்பாடும் எப்படியெல்லாம் உத்திகளாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று பார்க்கும்போது வியப்பாகத்தான் உள்ளது. தங்கம் விற்கும் விலையில், நகை எதுவுமே கேட்காத மாப்பிள்ளைகளையே திருமணம் செய்துகொள்ளப்போவதாக அழகான பெண்கள் அத்தனை பேரும் முடிவெடுத்துள்ளார்களாம்!   லா லா லா / கட்டில் போதும்லா!   கல்யாண் ஜுவல்லர்ஸ்[]   உருண்டை திலகம் பிரபு நடிக்கும் இந்த விளம்பரத்தில் அவர் ஆபீசில் இருக்கும்போது அவர் மகள் பொம்மை வாங்கி வரச் சொல்லி அலைபேசுகிறாள். எல்லாக் கடைகளும் மூடப்பட்டுவிட்டன. ஸ்பென்சர் ப்ளாசா உட்பட. ஆனால் பிரபு ஒரு கடை முதலாளியின் வீட்டுக் காலிங் பெல்லை அழுத்தி, வேண்டிக் கேட்டுக் கொள்வதன் பேரில் ஒரு கடை திறக்கப்பட்டு குழந்தை விரும்பிய பொம்மையை வாங்கிக் கொண்டு போகிறார்.   ”உறங்காத எதிர்பார்ப்புகள், விழித்திருக்கும் நம்பிக்கை / கல்யாண் ஜுவல்லர்ஸ் / நம்பிக்கை – அதானே எல்லாம்” என்ற சொற்கள் பின்புலத்தில் கம்பீரமான குரலில் கேட்பதோடு முடிகிறது விளம்பரம்.   உறங்காத / விழித்திருக்கும் இரண்டும் ஒன்றுதானே? சரி போகட்டும். இந்த விளம்பரத்தில் அந்த இரண்டுமே அந்தக் குழந்தைதான். அப்ப, அதுதான் கல்யாண் ஜுவல்லர்ஸ். அப்போ அதற்கு பொம்மை வாங்கிக் கொடுக்கும் அப்பா யார்? அதுவும் கல்யாண் ஜுவல்லர்ஸாகத்தான் இருக்கும். நம்புவோம். நம்பிக்கை, அதானே எல்லாம்?   [] சின்னிஸ் ஊறுகாய்   ”போர் சாப்பாட்லேருந்து ஜோர் சாப்பாடு” என்று ஊறுகாய் பாட்டிலைத் தயாராக பின்னால் மறைத்து வைத்திருந்து எடுத்துக் காட்டி (டைரக்டோரியல் (ஊறுகாய்) ‘டச்’ என்பது இதுதானோ?) நடிகை ஸ்னேகா சொல்லும் விளம்பரம்.   இட்லி, தோசை, சப்பாத்தி, புராட்டா, இடியாப்பாம், சோறு என்று எல்லா வகையான உணவுக்கும் சின்னீஸ் ஊறுகாய் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் முதலில் அது ’போர்’சாப்பாடாக இருக்க வேண்டும். தொட்டுக்கொள்ள, சாரி, ஒத்துக்கொள்ள ஸ்னேகா வருவாரா?   டாட்ஸ் அப்பளம்   டாட்ஸ் அப்பளத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஸ்னேகா போடும் ஆட்டம் இருக்கிறதே…ஆஹா. ”அப்பளம் மாதிரிதான் உப்பிக் கிடக்கு” என்றார் என் அருகில் விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ரசிகர். அவர் எதைச் சொன்னார் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை. கன்னமாக இருக்கலாம் என்று யூகிக்கிறேன். ஆனால் ஒரு அப்பளத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஏதோ ஐஏஎஸ் பரீட்சையில் தேர்வாகிவிட்ட மாதிரி ஒரு பெண் குதூகலிப்பாளா என்றெல்லாம் கேட்கக்கூடாது. சில லட்சங்களைக் கொடுத்து “இதைப் பிடித்துக் கொண்டு சில வினாடிகள் டைட் பேண்ட் போட்டுக்கொண்டு ஆடம்மா” என்று சொன்னால் ஆடமாட்டீர்களா? அப்பளம் என்ன, கொப்பளத்தைப் பிடித்துக்கொண்டுகூட குதூகலமாக ஆடலாமே!   டானிஷ்க் நகை   வருண் என்று அமெரிக்காவில் சான் ஜோஸ் நகரில் ’செட்டில்’ ஆகி இருக்கும் ஒரு இளைஞனைப் பற்றி கார் ஓட்டிக்கொண்டு போகும் மகளிடம் சிபாரிசு செய்கிறார் தந்தை. ஆர்வமில்லை என்று அவள் சொல்கிறாள். போகும் வழியில் காரை நிறுத்தி டானிஷ்க்கில் நகை எடுக்கச் செல்கிறாள் அம்மா. அதைப்பார்த்து தானும் சில நகைகளை அணிந்து பார்க்கிறாள் மகள். பின் காரில் வரும்போது என்ன பேர் சொன்னிங்க என்று அப்பாவைக் கேட்கிறாள்.   பெண்ணின் மனதை அறிந்த, சைகாலஜி தெரிந்த அம்மாதான் இந்த விளம்பரத்தின் முக்கிய பாத்திரம். ஆனால் முக்கிய பாத்திரம் சொல்லும் செய்தி என்ன? நகைகளைப் பார்த்ததும் பெண்களுக்குக் கல்யாண ஆசை வருகிறது! நகைகளால்தான் இப்போதெல்லாம் கல்யாண ஆசையே பெண்களுக்கு போய்க்கொண்டிருக்கிறது என்கிறது சமீபத்திய புள்ளி விபரம் ஒன்று!   கார் ஓட்டுகின்ற, அமெரிக்க மாப்பிள்ளை தேடுகின்ற பெண்களுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம். என்றாலும் நகைகளைப் போட்டுக் கொண்டே வாழ்க்கையை ஓட்டிவிட முடியுமா என்ன? இந்த விளம்பரத்தின் செய்தி பெண்களைக் கேவலப்படுத்துவதாகவும், இயற்கைக்கு மாறானதாகவும் உள்ளது. ஆணை வைக்க வேண்டிய இடத்தில் தங்க நகைகளை வைக்கிறது!   []ஆரோக்யா பால்   நல்ல ஒரு விளம்பரத்துக்கு உதாரணமாக இதை நான் சொல்லுவேன். ஒரு கிராமத்தில் மாட்டுப் பண்ணை வைத்து பால் கறக்கும் ஒரு பெண் பேசுவதைப் போல அமைக்கப்பட்டுள்ளது.  இந்த விளம்பரத்தில் பயன்படுத்தப்படும் மொழி மண்ணின் மொழி. மாடுகளைப் பற்றி அந்தப் பெண் கூறும் ஆரம்ப வசனம் முக்கியமானது: ”மாடுங்கன்னா எனக்கு ரொம்பப் புடிக்கும், கொழந்தைங்கள எப்புடி பாத்துக்குவனோ அப்டிதான் மாடுங்களையும் பாத்துப்பேன்” இந்த வார்த்தைகளை யாராவது எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். விளம்பரம் என்பதைத் தாண்டி, உயிரினங்களைக் கையாள்வது பற்றிய அக்கறையை அது காட்டுகிறது. நிச்சயம் நமது பாராட்டுக்குரியது. இயல்பாக அந்தப் பெண் பேசுவதும், மிகையில்லாத காட்சிகளும்கூட இந்த விளம்பரத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்று சொல்ல வேண்டும்.   ”நலம், அன்புடன் நமது கிராமங்களில் இருந்து ஆரோக்யா மில்க்” என்ற வாசகங்களுடன் இந்த விளம்பரம் முடிகிறது. மண்ணை விரும்புபவர்கள், மாட்டை விரும்புபவர்கள், கிராமங்களை விரும்புபவர்கள் நிச்சயம் ஆரோக்யா பால் பாக்கட்டையும் விரும்புவார்கள்.   ஏர் டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்   ”காலு கிலோ கறுப்புப் புளி மஞ்சத்தூளுடா” என்று பாடிக்கொண்டே ஒரு சிறுவன் கடையில் சாமான் வாங்க வரும் இந்த விளம்பரம்தான், சமீபத்தில் வந்த பொருத்தமான, ரசிக்கத்தக்க விளம்பரம். என் பரிசும் இதற்குத்தான். நன்றி தமிழோவியம் நவம்பர் 16, 2011 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=LdF_t0Ra8ZE 23 மை நேம் ஈஸ் கான் – மகத்தான சேவை by நாகூர் ரூமி [] ராமச்சந்திரனா என்றேன் ராமச்சந்திரன் என்றார் எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை அவர் சொல்லவுமில்லை பல ஆண்டுகளுக்கு முன் நான் ரசித்துப் படித்த நகுலனின் கவிதை இது. வேண்டுமென்றே அபத்தமான தொனியில் அமைந்த கவிதை இது. ஒரு மனிதனை யார் என்று அறிந்து கொள்ள அவனுக்கு ஒரு பெயர் இருக்க வேண்டும். ஆனால் ஒரு பெயர் இருப்பதனாலேயே அவன் யார் என்று தெரிந்து கொண்டுவிட முடியாது. ஒருவன் யார் என்பதன் அடையாளம் அவனது பெயரல்ல. பலருக்கு ஒரே பெயர் இருக்கும் பட்சம், யார் எப்படிப் பட்டவர் என்று அறிந்து கொள்வது எப்படி? இந்தக் கவிதை எழுப்பும் கேள்வி இன்று மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிட்டது. சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு, எதிரான சூழ்நிலை உலகெங்கிலும் உருவாகி வருகின்றது. முஸ்லிம் பெயர்கள் இருப்பதனாலேயே, சில தனி மனிதர்களும், சில குழுக்களும் செய்யும் வன்முறைகளுக்கு இஸ்லாமிய முத்திரை குத்தப்படுகிறது. எங்கள் ஊரில் குழந்தைகள் தாயை ‘ம்மா’ என்றுதான் அழைக்கும். குழந்தை பசியால் அழுது தாயை ‘ம்மா’ என்று அழைத்தால்கூட அந்தக் குழந்தை ‘அல்-உம்மா’ இயக்கத்தைச் சேர்ந்த குழந்தையாக இருக்கலாம் என்று காவல் துறையினர் கொண்டு போய்விடுவார்கள் என்று என் எழுத்தாள நண்பர் ஆபிதீன் ஒரு முறை ஒரு கதையில் எழுதி இருந்தார். அது நகைச்சுவையல்ல, விரக்திச் சிரிப்பு. அவர் செய்த கிண்டலின் விரிவைப் போலத்தான் இன்று தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும், ஏன் உலகெங்கிலும் காரியங்கள் நடந்து கொண்டுள்ளன. ஊடகங்களும், பத்திரிக்கைகளும், அரசியல் வாதிகளும் இன்னும் பலவும் இதற்குக் காரணம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்திய முஸ்லிம்களுக்கு நாட்டுப் பற்று கிடையாது. எல்லாத் தீவிர வாதிகளும் முஸ்லிம்களல்ல. ஆனால் எல்லா முஸ்லிம்களும் தீவிர வாதிகள் — என்பது போன்ற வாசகங்கள் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வருகின்றன. (இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கு பற்றி வின்.என்.சாமி என்பவர் 1016 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் எழுதியுள்ளார்). ஒரு பக்கம் சல்மான் ரஷ்டி போன்ற எழுத்தாளர்கள் இஸ்லாத்தையும், இறுதித் தூதரையும் கேவலப்படுத்தி எழுதி வருகின்றனர். இணையத்தளங்களில் இதற்கென்றே வலைப்பக்கங்கள் திறந்து இறுதித்தூதரைப் பற்றி மரியாதை கெட்ட வார்த்தைகளில் எழுதுவதையே தங்கள் வாழ்க்கைப் பணியாகச் சிலர் செய்து கொண்டுள்ளனர். இந்திய ஜனநாயகமோ வேடிக்கை பார்க்கும் கோழைக் குழந்தையாகவே உள்ளது. ஒரு பள்ளிவாசல் அராஜகமான முறையில் இடிக்கப்படுவதை ‘லைவ்’-ஆகக் காட்டுகின்ற ஜனநாயகத்துக்கு அதைத் தடுக்கும் துணிச்சல் இல்லை. குற்றவாளிகள் யார் யார் என்று பட்டியலிட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு அறிக்கை வெளியிடும் ஜனநாயக மரபு இருக்கிறது. ஆனால் அந்த அறிக்கையில் சொல்லியுள்ள குற்றவாளிகளைக் கைது செய்யும் துணிச்சல் அதற்குக் கிடையாது. 1947-ல் சுதந்திரமடைந்த பிறகு வணக்கஸ்தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியேதான் இருக்க வேண்டுமென்று வெளிப்படையாகவும், ஆணித்தரமாகவும், துணிச்சலாகவும் சொல்கின்ற அறிவு நமது அரசியலுக்கு இல்லை. மாறி மாறி நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாக்களித்து, காலில் விழுந்து கிடக்கும் ஜனநாயகம்தான் நமது. இஸ்லாமும் முஸ்லிம்களும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறார்கள் என்ற வாதம் முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இஸ்லாத்தைத் தங்கள் இஷ்டத்துக்குப் புரிந்து கொண்டு பல குழுக்களாகப் பிரிந்து, குர்’ஆனையும், ஹதீஸையும் பற்றி தனிப்பட்ட முறையில் சிந்திப்பதே இஸ்லாத்துக்கு செய்யும் துரோகம் என்று நினைத்துக் கொண்டு, மார்க்க அறிஞர்களுக்கு ‘ஹீரோ வொர்ஷிப்’ செய்து, தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்கள்தான். ஆனால் இஸ்லாத்தைப் பற்றி என்ன சொல்ல வேண்டுமோ, எப்படிச் சொல்ல வேண்டுமோ எப்படியெல்லாம் சொல்லி இளம் மனங்களில் விஷம் விதைக்க வேண்டுமோ அப்படியெல்லாம் செய்யும் வேலையை இஸ்லாத்தின் எதிரிகள் வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாமோ, தாடி வைக்க வேண்டுமா, விரலை ஆட்ட வேண்டுமா என்பது தொடர்பாக கொலை வெறியுடன் எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் இஸ்லாத்தின் எதிரிகள் தாடியை ஒட்ட வைத்துக் கொண்டு, ஒரு தொப்பியைப் போட்டுக் கொண்டு பள்ளிவாசலுக்கு உள்ளேயே குண்டு வைக்கிறார்கள். இந்திய சினிமாவைப் பொருத்தவரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இன்றுவரை அது சரியாகப் பிரதிபலித்ததில்லை. பத்திரிக்கைகளும் ஊடகங்களும் ஒருதலைப்பட்சமாகவோ அல்லது அபத்தமாகவோதான் பிரதிபலிக்கின்றன. ‘பாங்கு’ ஒலி கேட்டுக் கொண்டிருக்கும்போதே தொழுது கொண்டிருப்பதுபோல் எத்தனையோ தமிழ்ப்படங்களில் காட்சி வந்தாயிற்று. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதைக்கூட ஒழுங்காக ஒரு படத்தில்கூட சொல்லவிட்டதில்லை. கமல்ஹாஸனின் ‘தசாவதாரம்’ படத்தில் நெட்டையாக வரும் முஸ்லிம் பாத்திரத்தைவிடக் கேவலமான ஒரு பாத்திரம் இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததில்லை. அவரது ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் பெஸ்ட் பேக்கரி எரிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட ஒருவர் தீவிரவாதியாக ஆகிவிட்டதைப் போலக் காட்டப்படுகிறது. ‘ரப்னே பனாதீ ஜோடி’ என்ற ஹிந்திப் படத்தில் ஒரு தர்காவில் பல பெண்களும் குழந்தைகளுமாய் நடனமாடிக் கொண்டே பாட்டுப் பாடுவதாக வருகிறது. எந்த அடக்கஸ்தலத்திலாவது நடன நிகழ்ச்சிகள் நடப்பதுண்டா? அதுவும் காதல் பாட்டு! அப்பாடலில் வரும் ‘துஜ் மே ரப் திக்தாஹே’ (உன்னில் நான் இறைவனைக் காண்கிறேன்) என்ற வரி அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் தொனியில் உள்ளது. அதைப் பாடும் ஷாருக்கான் ஒரு முஸ்லிம். இப்படி வரலாற்றைச் சிதைத்தும், அபத்தமாகவும்தான் இன்றுவரை இஸ்லாமும் முஸ்லிம்களும் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் 2010-ல் எடுக்கப்பட்ட ‘மை நேம் ஈஸ் கான்’ என்ற ஹிந்திப்படம் ஒரு மகத்தான சாதனையும் சேவையும் ஆகும் என்றே சொல்லத் தோன்றுகிறது. இஸ்லாத்தின் உண்மை நிலையைப் பற்றி பல சொற்பொழிவுகள் மூலமாகவும், பல புத்தகங்கள் மூலமாகவும் மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு என்றாலும், எது சரியான சொற்பொழிவு, எது சரியான புத்தகம் என்று தேர்ந்து கொள்வது கடினம். ஆனால் ஒரு சரியான திரைப்படத்தின் மூலமாக பேச்சும் எழுத்தும் செய்ய முடியாத வேலையைச் செய்ய முடியும். ‘மை நேம் ஈஸ் கான்’ அதைச் செய்துள்ளது. மிகச்சரியாகவும், மிகைப்படுத்தாமலும் ரொம்ப நுட்பமாகவும் எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம். கதை மும்பையில் போரிவலி என்ற பகுதியில் வாழும் ஒரு நடுத்தர அல்லது ஏழைக்குடும்பத்தில் பிறந்த மூத்த மகன் ரிஸ்வான் கான். அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். ஜாகிர் என்று ஒரு தம்பி. ரிஸ்வானிடம் ஒரு சிறப்பும் ஒரு குறையும் உண்டு. பழுதான எந்த யந்திரத்தையும் அவனால் சரி செய்துவிட முடியும். அதே சமயம் ‘அஸ்பெர்கர்ஸ் சிண்ட்ரம்’ என்ற ஒரு நோயால் அவன் பாதிக்கப்பட்டுள்ளான். அந்த நோய் உள்ளவர்களால் சமுதாயத்தில் சகஜமாகப் பழக முடியாது. அவர்களுடைய மொழியறிவு மிகக் குறைவாகவே இருக்கும். ஒரு சில வார்த்தைகளையே திரும்பத் திரும்ப அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதோடு புதிய மனிதர்கள், புதிய சூழ்நிலை, புதிய சப்தங்கள் என்று எதைக் கண்டாலும் அவர்கள் பயப்படுவார்கள். ரிஸ்வானுக்கு இந்த நோய் இருப்பது அவன் அம்மாவுக்கே தெரியாது. வளர்ந்தபின் அமெரிக்கா சென்று குடியேறி வாழ்கிறான் தம்பி ஜாகிர். அம்மா இடையில் இறந்து போகிறாள். அதன் பிறகு அண்ணன் ரிஸ்வானையும் அமெரிக்காவுக்கு வரவழைத்துக் கொள்கிறான் ஜாகிர். அமெரிக்கா வரும் ரிஸ்வான் தன் தம்பி தயாரிக்கும் மூலிகை அழகுச் சாதனங்களை விற்பதில் ஈடுபடுகிறான். அவனுக்கு ‘அஸ்பெர்கர்ஸ் சிண்ட்ரம்’ நோய் இருப்பதை முதலில் ஜாகிரின் மனைவி உளவியலாளரான ஹஸீனாதான் கண்டு பிடிக்கிறாள். மந்திரா என்ற ஒரு ஹிந்துப் பெண்ணோடு ரிஸ்வானுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அவளைக் காதலிக்கிறான். அவளுக்கு ஏற்கனவே ஆன திருமணத்தில் பிறந்த சாம் அல்லது சமீர் என்ற மகனுண்டு. கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி அவளது மனதில் இடம் பிடிக்கும் ரிஸ்வான் இறுதியில் தன் தம்பியின் வெறுப்பையும் மீறி மந்திராவைத் திருமணம் செய்து கொள்கிறான். மந்திரா, மந்திரா கான் என்றும், சாம், சமீர் கான் என்றும் பெயர் மாற்றம் பெறுகின்றனர். (முஸ்லிமாகாமலே). அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்போது செப்டம்பர் 9-ம் தேதி அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் அல்காயிதா தீவிரவாதிகளால் தகர்க்கப் படுகின்றன. அதன் பிறகு முஸ்லிம்களைப் பற்றிய கருத்து அமெரிக்காவில் மாறிப்போகிறது. சந்தேகத்தோடும், வெறுப்போடு, அச்சத்தோடும் அவர்கள் பார்க்கப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் பக்கத்து வீட்டு பத்திரிக்கையாள நண்பரான மார்க் யுத்தம் பற்றி நேரில் பார்த்து எழுத ஆப்கனிஸ்தான் செல்கிறார். அங்கே அவர் கொல்லப்பட்டு இறக்கிறார். ஏற்கனவே சாமுடன் நண்பனாக இருந்த மார்க்கின் மகன் ரீஸ் சாமை வெறுக்க ஆரம்பிக்கிறான். அவனைச் சமாதானப் படுத்தி, அவனுக்குப் புரிய வைக்க சாம் முயல்கிறான் ஆனால் முடியவில்லை. பள்ளியில் இருந்த சில மாணவர்களால் அவன் தாக்குதலுக்கு உள்ளாகிறான். ரீஸ் அதைத் தடுக்க முடியவில்லை. கடுமையாகக் காயமுற்ற சாம் அதனால் இறந்து போகிறான். இடிந்து போகிறாள் மந்திரா. தன் ஒரே மகனின் சாவுக்குக் காரணம் அவர்கள் வைத்துக் கொண்ட ‘கான்’ என்ற முஸ்லிம் பெயர்தான் என்று தீவிரமாக நம்புகிறாள். இனிமேல் என்னோடு இருக்க வேண்டாம் உடனே போய்விடு என்று கணவனிடம் கூறுகிறாள். நான் எப்போது திரும்பி வரவேண்டும் என்று அப்பாவித்தனமாகக் கேட்கிறான் ரிஸ்வான். “போ, போய் அமெரிக்க மக்களிடமும், அமெரிக்க ஜனாதிபதியிடமும் என் பெயர் கான், நான் தீவிரவாதி இல்லை என்று சொல்லிவிட்டு வா பார்க்கலாம்” என்று கடுமையாகக் கூறிவிடுகிறாள். அவள் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்  கொண்டு உடனே கிளம்புகிறான் ரிஸ்வான். அவனைப் பொறுத்தவரை ஹிந்து, முஸ்லிம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. உலகில் நல்ல மனிதர்கள், கெட்ட மனிதர்கள் இரண்டு வகையினர்தான் என்று அவன் அம்மா சொல்லிக் கொடுத்ததையே அவன் நம்புகிறான். அவ்வப்போது தன் பழுது பார்க்கும் திறமையைப் பயன்படுத்திக் கொஞ்சம் பணம் சம்பாதித்து, ஊர் ஊராக, மாகாணம் மாகாணமாகப் பயணம் செய்து, அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசச் செல்கிறான். கடைசியில் பேசினானா என்பதுதான் கதை. இந்தக் கதையின் மூலமாக படம் சொல்ல வரும் விஷயம்தான் நமது கவனத்துக்குரியது. கதையினூடே மிக நுட்பமாக பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ரிஸ்வான் கானின் சிறுவயதில் ஒரு நிகழ்ச்சி. மாடியில் இருக்கும் அவர்களது போர்ஷனுக்குக் கீழே இரவில் சில முஸ்லிம்கள் ஆக்ரோஷமாகப் பேசிக் கொள்கிறார்கள். ‘அந்த ஹராம் ஜாதாக்கள் ஒவ்வொருவரையும் சுட்டுத் தள்ள வேண்டும்’ என்பதாக அவர்கள் பேச்சு போகிறது. மதம் தொடர்பாக ஏற்கனவே நடந்த ஒரு வன்முறை அல்லது பிரச்சனையை ஒட்டி அவர்கள் பேசிக்கொள்வதாக நாம் புரிந்து கொள்ளலாம். அவர்கள்  சொல்லும் வார்த்தைகளைச் செவி மடுக்கும் சிறுவன் ரிஸ்வான் அதை அப்படியே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அதைக்கேட்கும் அவனது தாயார் (ஜரீனா வஹாப் — ஆமாம் ‘சிட்சோர்’ படத்து கதாநாயகிதான்) மகனை அழைத்து கீழே உட்கார வைத்து ஒரு தாளை எடுத்து சோளக்கொல்லை பொம்மை போல ஒரு கோட்டோவியத்தை — தலைக்கு ஒரு வட்டம், கை, இடுப்பு, கால்களுக்கு கோடுகள் — வரைந்து இது ரிஸ்வான் என்கிறாள். பின் அதற்குப் பக்கத்தில் இன்னொன்றை அதுபோலவே வரைந்து இது ஒரு கெட்ட மனிதன். அவன் கையில் ஒரு கழி இருக்கிறது. அவன் ரிஸ்வானை அடிக்கிறான் என்கிறான். ரிஸ்வானும் அவன் கெட்ட மனிதன் என்று திருப்பிச் சொல்கிறான். பின் மறுபடியும் ஒன்றை வரைந்து இது மறுபடியும் நீதான் என்று சொல்லி, இன்னொன்றை வரைந்து இது ஒரு நல்லவன், இவன் உனக்கு லாலிபாப் தருகிறான் என்கிறாள். நல்லவன், லாலிபாப் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கூறுகிறான் ரிஸ்வான். அப்போது அந்த ஓவியங்களைக் காட்டி, இதில் ஹிந்து யார், முஸ்லிம் யார் சொல்லு என்று தாய் கேட்கிறாள். கொஞ்ச நேரம் அதைப் பார்த்துவிட்டு, ‘எல்லாமே ஒன்று போலத்தானே உள்ளது’ என்று சொல்கிறான் ரிஸ்வான். அதற்கு அவன் அம்மா, சபாஷ் மகனே, உலகத்தில் இரண்டு வகையான மனிதர்கள்தான் இருக்கிறார்கள், நன்மை செய்யும் நல்லவர்கள் (அச்சீ இன்சான்), தீமை செய்யும் கெட்டவர்கள் (புரீ இன்சான்) என்று சொல்லி புரிந்ததா என்று கேட்கிறாள். புரிந்ததாகத் தலையாட்டுகிறான் ரிஸ்வான். என்ன புரிந்தது என்று கேட்கிறாள். இந்த உலகத்தில் அச்சீ இன்சான், புரீ இன்சான் இரண்டு வகையினர்தான் உண்டு என்கிறான் ரிஸ்வான். இந்தப் படத்தின் முழுச் செய்தியும் இதுதான். இந்தியாவுக்கும் உலகத்துக்குமான செய்தி இது. மிக எளிமையாக, தொழில்நுட்ப வேலைப்பாடுகள் எதுவுமின்றி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம். இந்த எளிமை வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட எளிமை. படத்தின் தரத்தை உயர்த்தும் விஷயங்களில் இதுவும் ஒன்று. அம்மா சொல்லிக் கொடுத்த இந்த செய்தியை உள் வாங்கிக் கொண்டு வளர்ந்தவனே ரிஸ்வான் கான். அவனைப் பொறுத்தவரை மனிதர்களுக்கு மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை, நல்லவர் கெட்டவர் என்பதைத் தவிர. சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் ரிஸ்வான் வந்திறங்குவது படத்தின் முதல் காட்சி. கொஞ்சம் கோணலாக முகத்தை வைத்துக் கொண்டு, கொஞ்சம் கோணலாக நடந்து கொண்டு  அவன் வருகிறான். அவன் உருவத்தைப் பார்க்கின்ற எவரும் அவன் ஒரு நார்மலான மனிதன் இல்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள். லேசான பைத்தியம் மாதிரியான தோற்றமும் அசைவும் கொண்டு வருகிறான் ரிஸ்வான். அவன் கையில் கறுப்பு நிறத்தில் சில கற்கள். அவைகள்தான் அவனது தஸ்பீஹ் மணி. அவற்றை உருட்டி உருட்டி அவன் கஸ்டம்ஸ் அதிகாரிகளைக் கடந்து போக நின்று கொண்டிருக்கும்போது ‘குல்ஹுவல்லாஹு அஹது’ சூராவை ஓதிக்கொண்டே நடக்கிறான். அரபி மொழிச் சப்தம் அருகில் இருக்கும் ஒரு பெண்மணிக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக சந்தேகத்தின் அடிப்படையில் அவன் அழைக்கப்பட்டு சோதிக்கப்படுகிறான். (ஷாருக்கான் கூட இந்தப் படத்துக்காக அமெரிக்கா சென்ற சமயத்தில் கான் என்ற அவருடைய பெயருக்காக அதிக நேரம் சோதிக்கப் பட்டது செய்தி). சட்டையைக் கழற்றியும், வாயைத்திறந்தும் சோதனை நடக்கிறது. சதாம் ஹுசைனின் வாயைத் திறந்து பல் பரிசோதனை செய்தது எனக்கு நினைவுக்கு வந்தது. எல்லாச் சோதனைகளும் முடிந்து, ‘ஹீ ஈஸ் க்ளீன்’  என்ற சான்றிதழுடன் அவன் வெளியே அனுப்பப்படுகிறான். அப்போது அந்த கஸ்டம்ஸ் அதிகாரி அமெரிக்காவுக்கு நீ ஏன் வந்தாய் என்று கேட்கும்போது, அமெரிக்க அதிபரைப் பார்க்க என்று கான் பதில் சொல்கிறான். அவர் உனக்கு நண்பரா என்று கேட்க, இல்லை, அவரிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது என்று சொல்கிறான். என்ன செய்தி என்று அவன் கேட்க, “என் பெயர் கான், நான் தீவிரவாதி அல்ல” என்று நான் அவரிடம் சொல்ல வேண்டும் என்று கான் சொல்கிறான். ஒரு கணம் அமைதி நிலவுகிறது அந்த கஸ்டம்ஸ் அதிகாரி முகத்தில். கான் சொன்னது வெறும்  வார்த்தைகளல்ல. ஜார்ஜ் புஷ் மீது வீசப்பட்ட செருப்பு அது. மிக அழுத்தமாகவும், அழகாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது இந்தக் காட்சி. அடுத்த முக்கியமான காட்சி சாம் எனப்படும் சமீர் கொல்லப்பட்ட பிறகான காட்சி. ஆப்கனிஸ்தான் போன தன் தந்தை இறந்து போனவுடன் முஸ்லிம்கள்மீது இனம்புரியாத ஒரு வெறுப்பை வளர்த்துக் கொள்கிறான் சாமின் நண்பன் ரீஸ். சாம் எவ்வளவோ எடுத்துச் சொல்ல முயன்றும் அவன் கேட்கவில்லை. அந்த முயற்சியில் சிறுவர்களுக்குள் நடக்கும் சண்டையில் அவன் இறந்து போகிறான். அவன் இறந்ததற்குக் காரணம் கான் என்ற அவனுடைய பெயர்தான், நான் தப்பு செய்துவிட்டேன், ஒரு முஸ்லிமை நான் திருமணம் செய்திருக்கக் கூடாது, அவன் பெயர் ‘ராத்தோட்’ என்று முடிந்திருந்தால் அவன் செத்திருக்க மாட்டான் என்றெல்லாம் மந்திரா (கஜோல்) ரிஸ்வானிடம் புலம்புகிறாள். ஆனால் சாம்  இறந்ததற்கான காரணம் மதத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று என்பது மிக முக்கியமான குறிப்பு. இப்படித்தான் முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள். திருவல்லிக்கேணியில் நடு வீதியில் மாடு சாணி போட்டால் அதற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று சொல்வது போல. சாம் சாகும் நிகழ்ச்சியின் பின்னணியில் இரண்டு காரணங்கள் காட்டப்படுகின்றன. ஒன்று 9/11 நிகழ்ச்சி. இன்னொன்று அதன் விளைவாக முஸ்லிம்களின் மீது ஏற்பட்ட உலகளாவிய வெறுப்பின் பகுதியாக ரீஸ் தன் பள்ளி நண்பன், பக்கத்து வீட்டுக்காரன் சாமை வெறுப்பது. ஒன்றாக அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டுச் சந்தோஷித்த குடும்பங்கள். நெருங்கியவர்களுக்கு மத்தியில்கூட வெறுப்பு வளர்கிறது. அதுவும் ஒரு அப்பாவிச் சிறுவன் சாகும் அளவுக்கு அது போகிறது. ஆப்பிரிக்காவில் பசியால் வாடும் குழந்தைகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றுக்கு அதிபர் ஜார்ஜ் புஷ் வருகிறார் என்று கேள்விப்பட்டு அங்கு போகிறான் கான். 500 டாலர்கள் கட்ட வேண்டும் என்று சொன்னதும் எடுத்துக் கொடுக்கிறான். நீங்கள் எந்த சர்ச் என்றும், அது கிறிஸ்டியன் மிஷன் நடத்தும் நிகழ்ச்சி என்றும் விளக்குகிறாள் பணம் பெறும் பொறுப்பில் இருப்பவள். ”இது கிறிஸ்தவர்களுக்காக ஹனீ” என்று அவள் சொன்னதும், “ஹனீ, ஆப்பிரிக்காவில் இருக்கும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்காக இதை வைத்துக் கொள்ளுங்கள் ஹனி” என்று சொல்லிவிட்டுப் போகிறான் கான். இதுவும் ஒரு முக்கியமான காட்சி. அதிபரைப் பார்த்துப் பேசுவதுதான் கானின் நோக்கமென்றாலும் அவன் மனம் எப்போதுமே ஏழைகளுக்கு இரங்குவதாகவும், சேவை செய்வதிலும் இருப்பதை இது உணர்த்துகிறது. செல்லும் வழியில் பஸ்ஸில் ஒரு முஸ்லிம் தம்பதியர் எதிரில் அமர்ந்திருக்கும் கானிடம் சப்பாத்தியை நீட்ட அவன் அதில் இரண்டை எடுத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கிறான். அவர்களுக்கு நன்றி சொல்வதில்லை. காரணம், அவனது நோய். ‘ஆஸ்பர்கர்ஸ் சிண்ட்ரம்’ உள்ளவர்களுக்கு சமுதாயத்தில் பழகத் தெரியாது, முன்பின் தெரியாத அந்நியர்களின் உணர்ச்சி பற்றியும் அக்கறை இருக்காது. படம் முழுக்க நோயின் பாதிப்பை எங்கெல்லாம் காட்ட முடியுமோ அங்கெல்லாம் எந்த உறுத்தலும் இல்லாமல் காட்டியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, தொழுகை நேரம் வந்தவுடன் இருக்கும் இடத்திலேயே தொழ ஆரம்பிக்கிறான் கான். பார்ப்பவர்கள் தப்பாக எடுத்துக் கொள்வார்கள் என்று அந்த தம்பதியர் சொல்வதை அவன் எடுத்துக்கொள்வதில்லை. எல்லாம் எண்ணத்தைப் பொறுத்ததே என்று பதில் சொல்கிறான். பின்னர் அவன் ஜார்ஜியாவில் உள்ள வில்ஹெல்ம் என்ற ஊருக்குச் செல்கிறான். அங்கு சைக்கிளில் அடிபட்டு விழும் ஒரு சிறுவனுக்கு உதவி செய்து அவனுடைய அம்மா ‘மாமா ஜென்னி’ என்ற கருப்பினப் பெண்மணியின் குடும்பத்தோடு பழகுகிறான். ஈராக் யுத்தத்தில் தன் மகனை இழந்தவள் அவள். சாம் இறந்தது பற்றியும் அவர்களிடம் அவன் சொல்கிறான். அவர்களிடமிருந்து பிரிந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வரும் கான் ஒரு பள்ளிவாசலில் தொழச்செல்கிறான். அங்கு தலைவராக இருக்கும் ஃபசல் ரஹ்மான் என்பவர் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுகிறார். இப்ராஹீம் நபி பெற்ற மகனையே அல்லாஹ்வுக்காக தியாகம் செய்ததை எடுத்துச் சொல்லி அவர்களை உசுப்பேற்றுகிறார். எல்லாரும் அவர் பக்கம் சாய்வதாக உறுதி மொழியெடுக்கும்போது கான் பேசுகிறான். அது அப்படியல்ல, இஸ்மாயீலை இறைவன் காவு வாங்கவில்லை என்பதுதான் உண்மை, அல்லாஹ்வின் பாதை அன்பின் பாதை என்று சிறிய சொற்பொழிவாற்றுகிறான். அங்கே குழப்பம் ஏற்படுகிறது. சிலர் அவன் சொல்வது சரியென்று நினைக்கின்றனர். அங்கிருந்து போகுமுன் கையில் வைத்திருந்த ஜபமாலைக் கற்களை “ஷைத்தான், ஷைத்தான்” என்று சொல்லிக்கொண்டே ஃபசல் ரஹ்மான்மீது வீசிவிட்டுச் செல்கிறான். வன்முறை செய்பவர்கள் அனைவரும் ஷைத்தானின் மறு உருவங்கள் என்பது படத்தில் இன்னொரு செய்தி. ஒரு பள்ளிக்கூடம் மாதிரி இருக்கிறது. அங்கே அதிபர் புஷ் வருகை தருகிறார். கூட்டத்தில் இருந்து கான், ”மை நேம் ஈஸ் கான் அண்டு அயம்  நாட் எ டெர்ரரிஸ்ட்” என்று திரும்பத் திரும்ப உரக்கச் சொல்ல, அதை இரண்டு இளம் இந்திய மாணவப் பத்திரிக்கையாளர்கள் வீடியோ எடுக்கின்றனர். அவனைத் தவறாகப் புரிந்து கொள்ளும் காவல்துறையினர் கானைச் சுற்றி வளைத்துக் கைது செய்து தனியறையில் வைத்து சூடு, குளிர் எல்லாம் அதிகமாகக் கொடுத்து சித்திரவதை செய்கின்றனர். ஆனால் ராதா என்ற சைக்கியாட்ரிஸ்ட் அவன் குற்றமற்றவன் என்று நம்புகிறாள். அந்த ஃபைசல் ரஹ்மான் பேசியது பற்றி கான் FBI-க்கு அறிவிக்க முயன்றதையெல்லாம் எடுத்துக் காட்டி, இரண்டு மாணவப் பத்திரிக்கையாளர்களும் பாபி ஆஹூஜா என்ற பிபிசி செய்தி வாசிப்பாளருமாகச் சேர்ந்து கான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கின்றனர். வெளியே வரும் கானுக்கு ரசிகர் கூட்டம் உருவாகிறது. மந்திராவுக்கும் செய்தி தெரிய வருகிறது. தன் மகனின் இறப்புக்கான காரணம் தேடி அவளும் முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். விடுதலையாகி வெளியில் வரும் கான் ஜார்ஜியாவை கடும் புயலும் சூறாவளிக்காற்றும் தாக்கிய செய்தியைப் பார்க்கிறான். மாமா ஜென்னியில் ஊரென்பதால் உடனே அங்கே கிளம்பிப் போகிறான். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும்  மக்களுக்கு தன் மூளையப் பயன்படுத்தி உதவிகள் செய்து வெகு விரைவில் அங்கே நார்மல் வாழ்க்கை திரும்ப உதவுகிறான். அங்கே செல்லும் ஆஹூஜா அதையும் டிவியில் காட்டுகிறார். A man from India moves America என்று டிவியில் காட்ட கான் புகழின் உச்சிக்குச் செல்கிறான். பாரக் ஒபாமா அதிபராகிறார். கான் ஏன் அதிபரைச் சந்திக்க விரும்புகிறான் என்பதை டிவில் கேட்க அவன் சொல்லும் பதிலை ஒபாமா(வாக நடிப்பவர்) கூர்ந்து கேட்டுக்கொள்கிறார். ரீஸ் மந்திராவிடம் மன்னிப்புக் கேட்டு உண்மையைச் சொல்ல சாமைக் கொன்ற குற்றவாளிகளும் கைது செய்யப்படுகிறார்கள். மந்திரா உடனே கிளம்பி ஜார்ஜியா போகிறாள். ஏற்கனவே ஜாகிரும் அவன் மனைவி ஹசீனாவும் அங்குதான் இருக்கிறார்கள். 9/11 நிகச்சிக்குப் பிறகு கொஞ்ச நாள் ஹிஜாப் போட முடியாமல் இருந்த ஹசீனா, கானின் புகழுக்குப் பிறகு துணிச்சலாக ஹிஜாப் அணிந்து கொள்கிறாள். மந்திராவும் கானும் சந்திக்கும் வேளையில் ஃபசல் ரஹ்மானின் அனுதாபி ஒருவர் கானைக் கத்தியால் குத்த, கானை மருத்துவ மனையில் சேர்த்துக் காப்பாற்றுகிறாள் மந்திரா. மருத்துவ மனையிலிருந்து வரும் கானை புதிதாக அதிபராகியிருக்கும் ஒபாமாவே அழைத்து, “உங்களை எனக்குத் தெரியும், your name is khan and you are not a terrorist” என்று கூறுவதோடு படம் முடிகிறது. ஷாருக் கானின் நடிப்பு [] படத்தின் மிகச்சிறப்பான அம்சம், கதைக்கு அடுத்த படியாக, ஷாருக் கானின் நடிப்புதான். ‘ரப் நே பனாதி ஜோடி’ படத்தில் ஒரு தர்காவுக்குள், அல்லது அப்படி போடப்பட்ட செட்டுக்குள் ஜீன்ஸ் பேண்ட்டுடன் முட்டாள்தனமான ஒரு பாட்டைப் பாடி டான்ஸ் ஆடிய ஷாருக்கானா இது என்று மலைக்க வைக்கிறார். ‘ஆஸ்பெர்கர்ஸ் சிண்ட்ரம்’ உண்மையிலேயே வந்தவர் போலேயே நடித்துள்ளார். எந்த இடத்திலும் தன் அசைவுகள் நார்மலாகிவிடாதபடி கவனமாக இருக்கிறார். தலையையும் கண்களையும் ஒரு மாதிரியாக கோணலாக வைத்துக் கொள்வது, சொன்னதைத் திருப்பித் திருப்பிச் சொல்வது என மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கஜோலும் சிறப்பாக நடித்திருந்தாலும் கானின் நடிப்புக்கு முன்னால் அது எடுபடவில்லை. கான் இஸ்லாமியப் பழக்க வழங்கங்களில் மூழ்கி வளர்ந்தவர் என்பதைக் காட்ட பல இடங்களை பயன்படுத்தியுள்ளனர். யாரைப்பார்த்தாலும் கான் ‘ஸலாமலைக்கும், ஸலாமலைக்கும்’ என்றுதான் சொல்கிறார், கேட்பவர் முஸ்லிமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும். படத்தில் ஒரே ஒரு கட்டத்தில் மட்டும்தான் அவருடைய ஸலாமுக்கு தம்பி மனைவி ஹசீனா பதில் சொல்கிறாள். மந்திராவிடம் ஒரு முறையும், ஒபாமாவிடம் இரு முறையும் ஸலாம் சொல்கிறார். (ஒபாமாவாவது அலைக்கும் ஸலாம் என்று சொல்லியிருக்கலாம். அவர் இப்போது கிறிஸ்தவராக வாழ்ந்தாலும், முஸ்லிம் தந்தைக்குப் பிறந்து இந்தோனியாவில் வளர்ந்தவர்தானே அவர்? அவர் அலைக்கும் ஸலாம் என்று சொல்லாதது எனக்கு வருத்தமே)! சாம் இறந்துவிட்டதாக மந்திரா சொல்லும்போது ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ என்று சொல்கிறார். விமான நிலையத்துக்குள் ‘குல்ஹுவல்லாஹு’ ஓதிக்கொண்டிருக்கிறார் (அரபி உச்சரிப்பு ஷாருக்குக்கு அவ்வளவு சரியாக வரவில்லை). திருமணமான புதிதில் ஷரியத்தின்படி குறிப்பிட்ட தொகையை தருமம் வேறு செய்கிறார். நகைச்சுவை படத்தில் ஆங்காங்கே ரொம்ப நுட்பமான நகைச்சுவை இடம் பெறுகிறது. கான் தனது பெயரை உச்சரிக்க மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் இடம். காரித் துப்புவது போன்ற ஒலியை ஏற்படுத்த வேண்டும் என்று from the epiglottis என்று linguistic-ஆக விளக்குவது அருமையான நகைச்சுவை. ஜார்ஜியாவில் சைக்கிளிலிலிருந்து விழுந்து முழங்காலில் அடிபட்டுக் கிடக்கும் சிறுவனிடம், I can’t repair your knee என்று சொல்வது போன்ற பல இடங்களைக் குறிப்பிடலாம். எல்லாம் சரி. ஒரு திரைப்படத்தில் குறைகள் இல்லாமல் இருக்குமா? அப்படிப் பார்த்தால் இப்படத்தில் சில குறைகள் உள்ளன. உதாரணமாக, 1. இவ்வளவு இஸ்லாமிய கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள கான் ஒரு ஹிந்துப் பெண்ணை முஸ்லிமாக்காமலே திருமணம் செய்து கொண்டு வாழ்வது. (ஒரு வேளை அமெரிக்கா என்பதால் அப்படிக் காட்டியிருக்கலாம் என்று முதலில் நினைத்தேன். ஆனால் இந்த விஷயம் ஷாருக்கானுக்கு ஒரு முரண்பாடாக நிச்சயம் பட்டிருக்காது என்று பின்னர் புரிந்து கொண்டேன். ஏனெனில் இந்தப் படத்தைத் தயாரித்தவர்களில் கானின் மனைவியும் ஒருவர். கௌரி கான் என்ற பெயர் கொண்ட அவர் முஸ்லிமல்ல). எனவே கானின் பாத்திரம் கானின் நிஜ வாழ்க்கையை ஒட்டியதாகவே உள்ளது. இதுபற்றி நாம் மேற்கொண்டு பேசவே முடியாது. ஏனெனில் அவரே அப்படி நிஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்போது நாம் என்ன சொல்வது? என்.டி.டிவி. பேட்டியில்கூட ஷாருக் கான், தான் ஒரு முஸ்லிம் என்றும், அதற்காகப் பெருமைப் படுகிறேன் என்றும், தோற்றத்தில் முஸ்லிமாக இருப்பதைவிட உணர்வில் முஸ்லிமாக இருப்பதே மேல் என்று நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார். 2. திருமணமான புதிதில் முதல் இரவில் எனக்கு என்ன செய்வதென்று தெரியும், உடலுறவு பற்றிப் படித்துள்ளேன் என்று மனைவியிடம் சொல்வதும், மற்றொரு நாள் திடீரென்று வந்து நாம் உடலுறவு கொள்ளலாமா என்று கேட்பதும் நாகரீகத்துக்கு அப்பால் உள்ள விஷயங்களாக உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் என்று இதைச் சொல்ல வேண்டும். ஷாருக்கானின் நடிப்பு உலகத்தரமாக உள்ளது. அடுத்த ஆஸ்கார் அவருக்குக் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வளவு அற்புதமான நடிப்பு. முஸ்லிம்கள் மீதான வெறுப்பு எவ்வளவு முட்டாள்தானமானது, அல்லது அயோக்கியத்தனமானது என்பதை அழகாகவும் எளிமையாகவும் எடுக்கப்பட்ட ஒரு கதையின் மூலம் இது சொல்கிறது. சுனாமியில் தமிழகம் பாதிக்கப்பட்டபோது கடலூரில் வாரக்கணக்கில் முகாமிட்டு நடிகர் விவேக் ஓபராய் தர்ம காரியங்கள் செய்தார். அதுபோலத்தான் கானும் ஜார்ஜியாவில் செய்கிறான். படத்தில் மிகை எதுவும் இல்லை, பொய் எதுவும் இல்லை. முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்ற முன் முடிவு இல்லை. ரொம்ப யதார்த்தமாக ஒரு உண்மையை அழகாகச் சொல்லியிருக்கிறது படம். இயக்குனர் கரன் ஜோஹர் பாராட்டப்பட வேண்டியவர். படத்தின் செய்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. படத்தின் மொத்த அழுத்தமும் முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் பொதுவான தீவிரவாத குற்றச்சாட்டு தொடர்பானது என்பதால் கானின் தனிப்பட்ட வாழ்க்கையை ஷாருக்கானின் வாழ்க்கையாகவே எடுத்திருக்கிறார்கள். அதை மன்னித்துவிட்டு, அல்லது மறந்துவிட்டுப் பார்ப்போமேயானால், காலத்தால் நிற்கக் கூடிய படம் இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மாத நமது முற்றம் இதழில் (மே, 2010) இக்கட்டுரை அளவு கருதி ‘எடிட்’ செய்யப்பட்டு பிரசுரமாகியுள்ளது. 24 தியானம் ஓர் அறிமுகம் 25 கடவுளோடு பேசுவது எப்படி? The Autobiography of a Yogi என்ற உலகப்புகழ்பெற்ற நூலை எழுதிய பெரியவர் [Paramahansa_Yogananda_Standard_Pose]பரமஹம்ச யோகானந்தரின் How to Talk with God என்ற சின்ன நூலைப் படித்துக்கொண்டிருந்தேன். அதைத் தமிழில் தரலாம் என்று தோன்றியது. இதோ உங்களுக்காக: கடவுளோடு பேசமுடியுமென்பது நிச்சயமான, சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நிஜம். பல இறைநேசர்கள் கடவுளோடு பேசிக்கொண்டிருந்தபோது நான் அவர்களருகில் இருந்திருக்கிறேன். நீங்கள் அனைவருமே கடவுளோடு பேசமுடியும். அது ஒருவழிப்பேச்சல்ல. அவரும் உங்களோடு பேசுவார். எல்லோருமே இறைவனோடு பேசமுடியும். அவனை எப்படி நமக்கு பதில் சொல்ல வைப்பது என்பது பற்றி இன்று நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.   கடவுளும் மனிதர்களும் பேசிக்கொண்டது பற்றி நிறைய வேதநூல்களில் சொல்லப்பட்டுள்ளன. புனித பைபிளில் இதுபற்றிய ஒரு அழகான சம்பவம் சொல்லப்பட்டுள்ளது. இறைவன் சாலமனின் கனவில் தோன்றி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். “இறைவனுடைய ஊழியனாகிய எனக்கு எதையும் புரிந்துகொள்ளக்கூடிய இதயத்தைக் கொடு” என்று சாலமன் கேட்டார். அவர் நீண்ட ஆயுளையோ, செல்வத்தையோ, எதிரிகளின் உயிரையோ கேட்காததால் மகிழ்ந்த கடவுள், ”நீ கேட்டதையும் கேட்காததையும் தருகிறேன்” என்று சொல்லி அவருக்கு செல்வத்தையும் கௌரவத்தையும் கொடுத்தார். நாம் இறைவனோடு பேசும்போது நெருக்கமாகவும், முழு நம்பிக்கையோடும் பேசவேண்டும். ஒரு அம்மாவோடு அல்லது அப்பாவோடு பேசுவதுபோல் பேசவேண்டும். உங்களுடைய மனதில் இறைவனைத்தவிர வேறு எதுவும் இருக்கிறதா என்று கடவுள் பல சோதனைகள் செய்வார்.  அதை உறுதிசெய்துகொண்ட பிறகுதான் அவர் உங்களோடு பேசுவார். அவர் தரக்கூடிய பரிசுகளின்மீது உங்கள் மனமிருக்கும் பட்சம், அவர் எதற்கு உங்களோடு பேசவேண்டும்? நாம் ஏன் இறைவனோடு பேசவிரும்புகிறோம்? நாமனைவரும் தெய்வத்திடமிருந்து வந்தவர்கள்தான். எனவே நம்மிடமும் தெய்வீகத்தன்மை உள்ளது. அதன் காரணமாகத்தான் அழியக்கூடிய எந்தப் பொருளின்மீதான நமது விருப்பமும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஒரு பொருளின் மீதான சந்தோஷம் கொஞ்சநாள் கழித்து குறைவதற்கும் மறைவதற்கும் இதுதான் காரணம். பேசுவது என்றால் அதிர்வலைகளை எழுப்புவது என்றுதான் அர்த்தம். அந்த அதிர்வலைகளின் மூலம் கடவுள் எந்நேரமும் நம்மோடு பேசிக்கொண்டேதான் இருக்கிறான். ஆனால் நாம்தான் கேட்பதில்லை. நீங்கள் மனமாற பிரார்த்தனை செய்தால் அந்த பிரார்த்தனைக்கு நிச்சயம் பதில் கிடைக்கும். ஏனெனில் பிரார்த்தனை என்பது அதிர்வலைகளை அனுப்புவதாகும். அதற்கான பதில் அதிர்வலைகள் நிச்சயம் கிடைக்கும். நீங்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் இறைவனோடு பேசலாம். நீங்கள் ஜெர்மன் மொழியில் பேசினால் ஜெர்மன் மொழியில் பதில் கிடைக்கும். ஆங்கிலத்தில் கேட்டால் ஆங்கிலத்திலேயே பதில் கிடைக்கும். ஏனெனில் மொழி என்பதே ஒருவகையான அதிர்வலைகளின் தொகுப்புதான். அதிர்வலை என்பதென்ன? அது ஒருவகையான ஆற்றல். ஆற்றல் என்பதென்ன? அது ஒருவகையான எண்ணம். கடவுள் நம் அனைவரின் பிரார்த்தனைகளையும் கேட்கிறார். ஆனால் அனைத்துக்கும் அவர் பதில் தருவதில்லை. ஏன்? அம்மா வேண்டும் என்று அழும் குழந்தையைப் போல நாம் இருக்கிறோம். அழும் குழந்தையை அமைதிப்படுத்த அம்மாவானவள் பல நேரங்களில் பொம்மைகளைக் கொடுப்பாள். ஆனால் அம்மா வந்தால்தான் போச்சு என்று அடம்பிடித்துக் குழந்தை அழுமானால் அவள் வந்து சமாதானப்படுத்துவாள். எனவே கடவுள் வேண்டுமென்றால் அந்தப் பிடிவாதமான குழந்தை மாதிரி நீங்கள் இருக்கவேண்டும். கடவுளும் உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டே இருக்கிறார். அவனிடம் நீங்கள் திரும்பிவரவேண்டும் என்றே அவர் விரும்புகிறார். இந்த பூமியை விட்டு நீங்கள் ஒருநாள் போயாகவேண்டும். இது உங்களுக்கான நிரந்தர இடமல்ல. இது ஒரு பள்ளிக்கூடம் மாதிரி. அங்கே எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று இங்கே கற்றுக்கொள்ளவேண்டும். “இறைவா, உன்னை எனக்கு வெளிப்படுத்திக்காட்டு, இறைவா, உன்னை எனக்கு வெளிப்படுத்திக்காட்டு” என்று கேட்டுக்கொண்டே இருங்கள். அவன் அமைதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ளாதீர்கள். உங்கள் பிரார்த்தனைக்கு பதிலாக முதலில் நீங்கள் விரும்பும் ஒன்றை உங்களுக்குக் கடவுள் கொடுப்பான். அவனுடைய கவனத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காக. ஆனால் அந்தப் பரிசுகளில் நீங்கள் மகிழ்ந்துவிடாதீர்கள். நீங்கள் விடாமல் முயற்சி செய்துகொண்டிருந்தால் உங்கள் கனவில் ஏதாவதொரு மகான் தோன்றலாம். அல்லது ஒரு தெய்வீகக் குரல் கேட்கலாம். கடவுளோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அப்போது புரிந்துகொள்ளுங்கள். கடவுளோடு பேசவேண்டுமென்றால் நிற்காத, எதாலும் தடுக்க முடியாத ஆசை வேண்டும். அப்படிப்பட்ட ஆசை இதுதான் என்று உங்களுக்கு யாரும் சொல்லித்தர முடியாது. அதை நீங்கள்தான் உருவாக்கி, வளர்த்துக்கொள்ளவேண்டும். இறைவன் பதில் சொல்வானா என்ற சந்தேகத்தை முதலில் உங்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டும். நிறைய பேருக்கு இறைவனிடமிருந்து பதில் கிடைக்காமல் போவது இதனால்தான். தொடர்ந்து கஷ்டங்கள் வந்தாலும் நீங்கள் அசைந்துகொடுக்காமல் இருந்தீர்களென்றால் கடவுள் உங்களோடு பேசுவது உங்களுக்குக் கேட்கும்.