[] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] []     பூத்ததும் பறித்ததும்                 கொ.வை.அரங்கநாதன்      ஆசிரியர் -   கொ.வை.அரங்கநாதன்  renganathanv52@gmail.com    மின்னூலாக்கம் - தனசேகர் tkdhanasekar@gmail.com    மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com    உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.     பொருளடக்கம்   புதுவடிவம் 5  முதுமையின் விழைவா 8  பகலவனுக்குப் பிரியாவிடை 10  அரக்க எச்சம் 11  உன்னால் உயரும் 13  புத்தகங்கள் 16  புரையோடிய புற்று நோய் 18  வேர்களில் விஷம் வார்த்தால்.... 20  உணர்வது எப்போது 22  அந்நிய அடிமை 24  எங்களை அறியவில்லை 26  என்னவாக இருக்கும் 28  மாயப்போராட்டம் 30  நாளைய விடியல் 32  புது வாள் 35  இமைகள் இல்லா விழிகள் 37  புதிய கீதை 39  உலகம் அன்றுதான் பேசும் 41  வரம் வேண்டும்… 43  நரகம் 45  நானும் பழகிக் கொள்ளுகிறேன் 47  பாவத்தில் பங்கில்லை 49  நிழல் கொடுப்போம் 51  இறப்பு வரை 53  யார் மீது கோபம் 55  நாய்களாய் ..... 57  வரலாறு வாழ்த்தும் 59  எங்கே நீ சென்றாய் 61  இனிதே வாழ்வோம் 63  பாட்டனின் பாட்டு 65  எனது கிராமம் 67  நினைத்ததெல்லாம் நடந்தும்… 69  அப்பா குட்டையில் விழுந்தபோது.. 71  அமெரிக்காவை ஏன் வெறுக்கிறீர்கள் 73  அங்கு எழட்டும் என் தேசம் 76  மூக்கு முகம் சந்தோஷம் 78  தங்க மலர்கள் 80  இரவுப் படைகள் 82                                   என்னுரை   உள்ளத்துள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை.   என்பதை மட்டுமே இலக்கணமாய் கொண்டு என்னுள் விளந்தவை இம்மலர்கள். எனது தேடல், சமூகத்தால் என்னுள் தூவப்பட்ட விதைகள்,என்னுள் பாதிப்புகளை ஏற்படுத்திய நிகழ்வுகள் இவைகளே இங்கு கவிதைகளாய் மலர்ந்திருக்கின்றன. வல்லமை மின் இதழில் படக்கவிதைப் போட்டியில் பாராட்டுப் பெற்று அப்படங்களுடனேயே இடம் பெற்றிருக்கும் கவிதைகளும் இதில் அடங்கும்.   இவை மட்டுமின்றி அந்நிய மண்ணில் அழகாய் பூத்து எனது இதயத்தைக் கவர்ந்த  சில வேற்று மொழி கவிதைப் பூக்களையும் இங்கு பறித்து வந்து தமிழாக்கித் தந்திருக்கிறேன். அனைத்தும் அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.   உங்கள் மேலான கருத்துக்களை எனது மின் அஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறேன்.                                                                                                                                          நன்றி.                                                                                                 கொ.வை.அரங்கநாதன்                                                                                   renganathanv52@gmail.com புதுவடிவம்   தீயிடல் இல்லை  கல்லெறிதல் இல்லை  ஆனாலும்  அரசுகள் அசைகின்றன  அடிதடி இல்லை  ஆபாச வசவுகள் இல்லை  எனினும்  காளைகளின் பேரிறைச்சல்  கடல் தாண்டியும் கேட்கிறது  தலைவர்கள் எவருமில்லை  ஆனாலும்  தலைவர்களாகவே  எல்லோரும் தெரிகிறார்கள்  ஊழல்வாதிகளும்  ஊடக நரிகளும்  கபட வேஷதாரிகளும்  கரையேற்றப்படுகிறார்கள்  ஆனாலும்  பகலிலும் இரவிலும்  இவர்கள் மீதுதான்  வெளிச்சம் பாய்ந்து கொண்டே இருக்கிறது  மகாத்மாவின் அறப்போராட்டம்  மெரினா மண்வெளியில்  புதுவடிவம் பெறுகிறது  இவர்களது கோரிக்கை மீது  இருவேறு கருத்து இருக்கக்கூடும்  ஆனாலும்  இவர்களது போராட்ட வடிவத்தை  எவராலும் புறந்தள்ள முடியாது  உரிமைக்கானக் குரலை  ஒலிப்பது எவ்வாறென்று  அரிச்சுவடியை ஆத்திச் சூடியாய்  அடுத்தத் தலைமுறைக்குத் தந்திருக்கிறார்கள்  இனிவரும் போராட்டங்கள் எல்லாம்  இவர்கள் போட்ட  இராஜப் பாதையிலேயே  எவருக்கும் இடையூரின்றிப்  பயணிக்க வேண்டும்  இல்லையெனில்  இந்திய அரசியல்வாதிகளே  ஈ எறும்பும் உங்களை மதிக்காது  கற்று கொடுப்பது எங்கள் இனம்  எங்களுக்கு கற்று கொடுக்க நினைப்பது  அறிவீனம் என்பதை  மெரினா மணல் துகள்கள்  எதிரியாய் வரும் எவருக்கும்  இனி உரக்க சொல்லும்  வாடி வாசல் வழியாகப்  புதிய வரலாற்றைப்  படைத்திருக்கிறார்கள்  எங்கள் இளம் காளைகள்! முதுமையின் விழைவா               உன் வரவிற்கு பின்னர்  என்னுள் எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?    உன்  கன்னங்குழிச் சிரிப்பில்  நான் ஏன்  கரைந்து போகிறேன்?    உன் சின்ன விரல்  ஸ்பரிசத்தில்  என் சிந்தனைக்குள்  தேனாறு பாய்வதெவ்வாறு?    மூடித் திறக்கும்  இமைகளுக்குள்ளும்  உன் முகம் மட்டும்  தெரிவதெப்படி?    என்  இதயத் துடிப்பில்கூட  உன் பெயரே  உரக்க ஒலிப்பது ஏன்?    பேரன் முகத்தில்  மகன் முகத்தை காணும்  முதுமையின் விழைவா?  அல்லது  காலம் காலமாய்  இதுதான்  இயற்கையின் இயல்பா?   பகலவனுக்குப்  பிரியாவிடை   (Crystal Sherriff என்ற ஆங்கில கவிஞர் Black Holes இன் பாதிப்பு குறித்து Goodbye to the Sun என்ற தலைப்பில் எழுதிய  நான்கு வரி கவிதை  உள்ளத்தை நெருடச் செய்யும்.அக்கவிதையின் தமிழாக்கத்தை இங்கு தந்திருக்கிறேன்.)   வானிலிருந்து அது வெளியே வந்தது  எனது சூரியனை கருமையாக்கியது  எனது வெளிச்சத்தை முடமாக்கியது  எனது பகலை கிரகணம் சூழ்ந்தது         எனது இரவை  உருவாக்கியது   கரும் பள்ளங்கள் கண்ட அனைத்தையும் விழுங்கியது  எனது இதயத்தையும் சேர்த்தே!  அரக்க எச்சம்           வருவது வலை என அறியாது வாழ்விழக்கும் மீன்  வாழ்விழந்த மீனால் வாழ்வுவுறும் வலைஞர்  எங்கிருந்தோ இவரைக் குறி பார்க்கும் இலங்கை அரக்கன்  உயிர்மைக்கான போராட்டம் உடன்வரும் இடரை உணர்வதில்லை  கொல்வதற்கும் கொல்லப்படுவதற்கும்  நியாயங்கள் உண்டு  முன் இரண்டும் இயற்கை அங்கீகரித்த எல்லா உயிர்க்குமான அடிப்படை விதி  மூன்றாவது மட்டும் பரிணாம வளர்ச்சியில் மனிதன் பெற்ற  அரக்க எச்சம்!    உன்னால் உயரும்   வல்லமை மின் இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்ட கவிதை புலியை முறத்தால் விரட்டிய புறநானுற்றுப் பெண் கூட ஈன்று புறந்தருதல் என் தலை கடனே சான்றோனாக்குதல் தந்தையின் கடனே என ஆணாதிக்க சிந்தனைக்குள் அமிழ்ந்து போனாள் போற்றா ஒழுக்கம் கொண்ட கோவலனைத் தூற்றாது தலையிலேற்றித் திரிந்தாள் கண்ணகி அடக்குதலும் அடுக்களையில் முடக்குதலுமே தம் பணியென எம் தலைமுறையினர் சிறையிட்டுச் சிரித்தனர் என் அன்புப் பேத்தியே மாற்றங்கள் மலருகின்ற மகத்தான தருணமிது சமுதாயச் சன்னல்கள் மெல்லத் திறந்து முடங்கிக் கிடந்த நம்மீது விடுதலை வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்ற நேரமிது இனி ஆணுக்கு நிகராக… அல்ல அதை விடவும் மேலாகச் சாதித்துக் காட்டிச் சரித்திரம் படைப்பது நம் கடமை! ஆணினத்தின் பலவீனமாம் கொலை களவு காமம் மது இவற்றில் பங்கு கேட்பதல்ல நாம் கோரும் பெண்ணுரிமை! ஆடைக் குறைப்பும் அலங்கார மாற்றங்களும் அடிமை விலங்கொடித்த அறிகுறிகள் ஆகாது! ஜான்ஸி ராணி முதற்கொண்டு சானியா மிர்சா வரை சாதனைகளால் மட்டுமே நினைவு கொள்ளப்படுகிறார்கள் என் செல்லமே…! அறிவியல் அரசியல் இலக்கியம் ஆன்மீகம் இன்னும் பல துறைகளில் பெண்கள் கோலோச்சும் போதுதான் நாம் கொண்ட துயரங்கள் நம்மை விட்டு விலகும்! வறுமையில் வாடும் பாட்டியின் வார்த்தைகளா இவையென நீ வியப்பது புரிகிறது அறிவுக்கு வறுமையில்லை என் அன்புச் செல்லமே! நாளைய நாடு பெண்களால் மட்டுமே மலரும் நம்பிக்கை கொள் உன்னாலும் இந்த உலகம் உயரப் போகிறது ஒரு நாள்! புத்தகங்கள்                   (வல்லமை இதழில் பாராட்டிற்குரிய கவிதையாகத் தேர்வு செய்யப்பட்ட கவிதை) வண்ண வண்ண சிந்தனைகளை  வார்த்தெடுத்தப் புத்தகங்கள் எண்ணக் குவியல்களால் புரட்சிகளை உருவாக்கியப் புத்தகங்கள் இன்று கருப்பும் வெள்ளையுமாய் மாறிப் போனது காலத்தின் கோலம்! அன்று வாய் மொழிச் சொற்களில் வலம் வந்த சிந்தனைகள் கல்லுக்குள் இடம் மாறி ஓலைக்குள் உருமாறி தொழில் புரட்சி ஈன்றெடுத்த அச்சு இயந்திரத்தால் காகிதத்திற்குள் புகுந்து புத்தகமாய்ப் பரிணமித்தது! புவியின் நிலை மாற்ற புத்தகங்கள் ஆற்றிய பணி போற்றற்குரியது! இன்று காகிதத்திலிருந்து டிஜிட்டலுக்குத் தாவும் அறிவியல் தருணம்! வடிவ மாற்றமென்பது இயற்கையின் இயல்பே போர்டு ஐகானில் பயணிப்பவர்கள் மாட்டு வண்டிகள் மரணித்துவிட்டதே என்று கவலை கொள்வதில்லை! என்றாலும் புத்தகங்களுக்கும் நமக்குமான உறவை எந்த டிஜிட்டலினாலும் டெலிட் செய்ய முடியாது! புரையோடிய புற்று நோய்     காலில் செருப்பின்றி மர நிழல்களை குடைகளாக்கி பள்ளிச் சென்ற காலமெல்லாம் பழங்கதையாகிவிட்டது வணிகமய வாழ்வில் நிசான் காரில் வாழ்க்கைப் பறக்கிறது அன்று தெருவோர ஏழைக்கு மதிய உணவை மனமுவந்து அளித்ததும் மற்றவர்க்கு உதவும்போது ஏற்படும் மகிழ்வும் இயல்பாய் இருந்தது இன்றோ இரக்கத்தோடு உறக்கத்தையும் மறந்த இலக்கில்லா ஓட்டமொன்று எல்லாவற்றையும் தொலைத்தது ஜோடிக்கப்பட்ட மேடையில் ஆடம்பரப் பேச்சோடு முதியோருக்கு நிவாரணம் சொந்தத் தாயும் தந்தையுமோ முதியோர் இல்லத்தில் இப்படி ஏய்த்துப் பிழைப்பவர்க்கே சமூக அங்கீகாரமென்றால் நம்முடைய வளர்ச்சி புரையோடிப் போன புற்று நோயை ஒக்கும்!   வேர்களில் விஷம் வார்த்தால்....                     விண் வெளியை உழுது வயல்களாக்கி பெருங்கடல்களை தூர்த்து மனைகளாக்கி பெருமைப்படலாம் ஆனால் முன்னேற்றத்தின் மறு பக்கத்தில் பண்பை இழந்த மனிதம் பரிதவித்துக் கொண்டிருக்கிறது நட்பு கருணை ஈகை ஒழுக்கம் உண்மை அன்பு இவையெல்லாம் காலாவதியான சொற்களாய் அறிவிக்கப்பட்டு காமம் துரோகம் களவு கொலை கொள்ளை ஏய்த்தல் இவையே வளர்ச்சியின் வழியாய் முன்மொழியப்படுகிறது பண்பில்லா வளர்ச்சி சாக்கடையில் கலந்த சந்தனமாகிவிட்டது வேர்களுக்கு விஷம் வார்த்தால் விழுதுகள் என்ன அமுதமாப் பொழியும் ?   உணர்வது எப்போது                   தன் வயிறு காய்ந்தாலும் இயலாதவர்க்கு இயன்றதை செய்யும் எம் தமிழர் பண்பாடு  எங்கே போனது   குடும்பங்களை இணைத்து குதுகலித்தத் திருமணங்கள் நீதி மன்ற வாயிலில் நித்தம் மிதிபடுவதேன்   பசுவிற்கும் புறாவிற்கும் நீதி தந்த எம் நெறிமுறை பணத்திற்குள் கரைந்து பாழானது எவ்வாறு   வள்ளலாரையே சந்தேகித்த ஆன்மீகம் போலிச் சாமியார்களுக்கு புகலிடமானது ஏன்   ஏழைக்கு எழுத்தறிவித்தல் இறைப் பணியே என்ற நாம் கல்வியை காசாக்கும் கலாச்சாரத்தை எங்கு கற்றோம்    பண்பில்லா முன்னேற்றம் பம்பர வாழ்க்கையாகி தள்ளாடிச் சுற்றி தானே கவிழும் என்பதை என்று நாம் உணரப்போகிறோம்   அந்நிய அடிமை                    (வல்லமை இணைய இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு   செய்யப்பட்டது)    செஸ் விளையாட்டில்தான் உனக்கும் எனக்குமான முதல் அறிமுகம் அந்தக்கால ஆண்மைமிக்கத் திரை கதாநாயகர்கள் உன் மீதேறி கம்பீரமாய் இசைத்த பாடல்கள்மீது எனக்கு அளவற்ற காதல்   கிண்டி மைதானத்தில் நீ நொண்டி அடித்து பலரை  ஓட்டாண்டியாய் ஆக்கியதால் ஜெமினி பாலம் ஓரமாய் நீயும் சிலை வடிவானாய்   ஆனாலும் எனக்கொன்று புரியவில்லை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ஓடி விளையாடும் எங்கள் ஜல்லிகட்டு காளைகள்மீது எங்களவர் காட்டும் அக்கரை இராணுவத்திலும் காவல்துறையிலும் வீரர்களை வேதனையோடு சுமப்பதோடு விருந்தினர் முன்னே நடனமும் ஆடும் உன் மீது ஏன் பிறப்பதில்லை ஓ    நீ அந்நிய தேசத்திலிருந்து வந்த அடிமை என்பதாலா! எங்களை அறியவில்லை                         (வல்லமை இணைய இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது)    ஆண்டவன் பணிக்கு வந்த உன்னை அங்காடித் தெருக்கள் தோறும் கையேந்த வைத்த கருணையற்றவர்கள் நாங்கள்   அன்பிற்கு நீ தந்த இசைவினை அடிமை சாசனமென்று எண்ணி உன்னை அடக்கி விட்டதாய் போலிப் பெருமிதத்தில் புன்னகைக்கிறோம்   உன் பலம் உனக்குத் தெரியாதென நிச்சயமாய் நம்பும் நாங்கள் எங்கள் பலவீனங்களை என்றுமுணர்ந்ததில்லை   அதனால்தான் இயற்கையை வென்றுவிட்டோமென்ற எங்கள் இறுமாப்பு கொட்டிய மழையில் முற்றிலுமாய் கரைந்தது பண்பற்ற எங்கள் செய்கைகளால் நீ பதற்றமடையும் பொழுதெல்லாம் மதம் பிடித்துவிட்டதாய் அறிவித்து மயக்க ஊசிப் போடுகிறோம் ஆனால் நாங்களோ மத வெறியுடனேத் திரிகிறோம் மயக்க ஊசிப்போட மட்டும் மருத்துவர் எவருமில்லை! என்னவாக இருக்கும்   (வல்லமை மின் இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது ) பாரம்மா இங்கு வந்து  பாசத்துடன் யாரோ ஒருவர் நம் படத்தை வரைந்து வாசகங்கள் எழுதுமுன் வந்த மழை காரணமாய் ஓடிவிட்டார்போலும்! பாசமென்றா நினைத்தாய் பைத்தியக்காரி ஆடுகள்தான் இங்கு சிறுநீர் கழிக்கும் எனும் எரிச்சல் எச்சரிக்கை செய்ய நினைத்திருப்பார்கள் அல்லது படம் வரைந்து பிச்சை எடுக்கும் அந்தக் கிழவரின் கைவண்ணமாய் இருக்கக்கூடும் நாளைய தேர்தலில் நம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சுவரில் முன்பதிவு பெற தீட்டிய சித்திரமாய் இருக்கலாம் இல்லையெனில் விரைவில் திறக்க இருக்கும் கறிக்கடையின் விளம்பரமாயும் இருக்கலாம் இங்கிருப்பது நல்லதல்ல வா வா விரைந்து செல்லலாம் மாயப்போராட்டம்             உன்னை நோக்கி நாங்கள் வரும்போது நீ ஓடுவதும் எம்மை நோக்கி நீ வரும்போது நாங்கள் ஓடுவதும் இது என்ன \மாயப் போராட்டம்   வானுக்கு சென்ற நீ வருவாயா என எத்தனை ஆண்டுகள் ஏங்கியிருக்கிறோம் இன்று இப்படி ஏரளாமாய் வந்து போகமாட்டாயா என புலம்ப வைத்தது ஏன் கெடுப்பதும் கெட்டாரை வாழவைப்பதும் நீயே என்றான் வான்புகழ் வள்ளுவன் கெடுத்துவிட்டாய் எப்பொழுது வாழ வைப்பாய்? நாளைய விடியல்               (வல்லமை மின் இதழில் பாராட்டிற்குரிய கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதை)    பத்துப் பாட்டு எட்டுத் தொகை பதினெண் கீழ்கணக்கென ஒரு கோடி இலக்கியங்கள் இருந்தும் மம்மி டாடியிலேயே மகிழ்கிறது நம் இனம்   குழலினிது யாழினிதென்பர் தம் மக்கள் ஆங்கிலம் பேச கேளாதார் இதுவே இன்றையக் குறளாய் எங்கும் ஒலிக்கிறது   வாவ் என்ற ஒலியே நம் வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கிறது   கத்திரிக்காயை ப்ரிஞ்ஜால் என்பதே அறிவின் அடையாளமாய் அங்கிகரீக்கப்படுகிறது   அன்னை மொழியில் பேச அவமானப்படும் ஒரே இனமென உலகெங்கும் நாம் அறியப்படுகிறோம்   இந்த இழிநிலைகளை மாற்ற  உயிரெழுத்துப் பழகும் இளந் தளிரே உன்னால் மட்டுமே முடியும்   மொழி என்பது இனத்தின் இதயம் இதயம் துறந்த இனம் பிணமொக்கும் என்பதை நம்மவருக்கு உரக்க சொல் நாளைய விடியலாவது நன்மை பயக்கட்டும்! புது வாள்                              (வல்லமை இதழில் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்டது)   பூட்டுகளுக்குள் புதைந்துவிட  நான் புராண காலத்து பெண் அல்ல பூமியைப் புரட்டிப்போடும் புதுயுகத்தின் அடையாளம்!   நிலம் பார்த்து நடந்து நித்திரையைத் துறந்து சுயத்தை இழக்கும் சோகச் சுவடல்ல நான்! வானில் வலை வீசி வரலாற்றை உருவாக்கும் அடுத்தத் தலைமுறையின் ஆரம்பம்!   வீட்டிற்குள் மாந்தரைப் பூட்டிவைத்த விந்தை மனிதரை புறக்கணித்த பாரதிப்  படையின் புது வாள்!   அன்று உள்ளே வைத்துப் பூட்டியது எங்களை உறைய வைக்க இன்று வெளியே பூட்டுவது எங்கள் இறகுகளை விரிக்க!   இறகு விரித்து இன்னல் துடைப்போம் பூட்டுகள் திறந்து புது வழி அமைப்போம்!   இமைகள் இல்லா விழிகள்             மழை நீர் மாசுபட்டால் பயிர்களின் உயிர்மை பறிபோகும் இமைகள் இல்லா விழிகள் பார்வையை இழக்கும் உமிழும் எச்சில் கடவுளுருவாய் காட்சி தந்தாலும் வணக்கத்திற்குரியதாய் அது ஏற்கப்படாது கடையாணி இல்லா வண்டிப் பயணம் களிப்பைத் தராது பளபளக்கும் பட்டாடைகள் செத்தப் பூச்சிகளின் சாபத்தையே தாங்கி நிற்கும்   கொள்ளை பணத்தில் கோவில் கட்டினால் கற்சிலைகள் இருக்கும் கடவுள் இருக்காது பண்புகள் இல்லா நாட்டின் வளர்ச்சி பண மேடாகி அமைதியை இழக்கும்! புதிய கீதை                   (வல்லமை இணைய இதழில் பாராட்டிற்குரிய கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது)    அதர்மம் அழித்து தர்மம் காக்க வந்த புதிய தலைமுறை கண்ணனே   காஷ்மிர் த்ரௌபதியின் துகிலுரிய காத்திருக்கும் பாகிஸ்தான் துச்சாதனனுக்கு பாடம் கற்பிக்கப்போவது எப்போது   ஜனநாயக களத்தில் களைகளாய் உணரப்படும் சமுதாயச் சகுனிகளை சட்டத்தின் முன் எப்பொழுது நீ  கொண்டு வருவாய்   ஊழல்களிலிருந்து  நாட்டை மீட்டெடுக்க புதிய கீதையை எப்போது நீ புனையப் போகிறாய்    மாறு வேடப் போட்டிக்காக கண்ணன் வேடமிட்டால் இத்தனை மனுக்களா அடப் போங்கப்பா தலை சுத்துது! உலகம் அன்றுதான் பேசும்                 பொங்கி வரும் சோகத்தை  கண்களில் தாங்கி நிற்கும்  கன்னியே நீ யார்  எல்லையிலே இரவும் பகலும்  எமக்காகப் போராடி  உயிர் நீத்து மறைந்தாரே  அந்த உத்தமரின் மகளா  ஏழ்மையால் எல்லைத் தாண்ட  இரக்கமற்ற ஆந்திரத்து காவலர்தம்  குண்டு தாங்கி சரிந்தாரே  அவரது செல்லக் குழந்தையா     ஈழத்து தமிழ் மண்ணில்  இனம் காக்க மடிந்த  வீரம் செறிந்த வேர்கள்  விளைவித்த விழுதா  கடலுக்குள் எல்லை காட்டி  கருணை இல்லா கயவர்களால்  சுடப்பட்டு செந்நீரில் கரைந்தாரே  எம்மீனவரின் இரத்த உறவா  இனியொரு கவலை உனக்கு வேண்டாம்  இழந்த தமிழினம் ஒருநாள் எழும்  வழிகின்ற விழிநீரைத் துடைத்தங்கு   வாழுகின்ற வழிதேடி வீரம் காட்டும்  உலகம் நமக்காய் அன்றுதான் பேசும்!  வரம் வேண்டும்…                      (வல்லமை இணைய இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது)  ஆசைக்கொரு மகனை அன்பாய் ஈன்றெடுத்து தோளில் சுமந்து நாளெல்லாம் திரிகின்றேன் இன்னொருவர் தோளில் எத்தனை நாள் பயணம் தன் காலில் தான் நிற்கும் தன்மையை அவன்  பெற்றாக வேண்டும் என் அனுபவ உயரத்தில் அவன் அகிலத்தைக் கண்டு தனக்கொரு வழியினை தானே அமைத்து  தலை நிமிர்ந்து நடந்திட வேண்டும்! ஊர் கோவில் திருவிழாவை உயரத்தில் இருந்துப் பார்த்தாலும் தானுயரும் நிலை வரும்பொழுது வானோக்கி நடக்காத வரமவனுக்கு வாய்க்க வேண்டும்! தள்ளாடி நான் நடக்கும் பொல்லாத காலம் புலருகின்றபொழுது எல்லோரும் போற்றும் வண்ணம் என் இரு கரம் பற்றி மெல்ல அழைத்துச் செல்லும் நல்ல மனம் நாளு மவன் நாதனருளால் பெற வேண்டும்!   நரகம்                     தூரத்தில் கேட்கும் ஹாரன் ஒலி  பதைத்தெழும் பயணிகள்  பிதுங்கி வழியும் கூட்டத்துடன்  தள்ளாடி வந்து நிற்கிறது பஸ்  பலாப்பழ ஈக்களாய்  மூர்க்கமாய் மொய்க்கும் பயணிகள்  எதிர்கால பயமின்றி  ஏணியின் மீது ஏறும்  இளைஞர் கூட்டம்!  கூடையை உள்ளே தள்ள  கோபமாய் கூச்சலிடும்  மீன்கார மூதாட்டிகள்  வேண்டுமென்றே இடித்தான்  யதேச்சையாகத்தான் நடந்தது  பட்டிமன்றப் பொருளாகி  பதை பதைக்கும் பெண்கள்  நெரிசலில் சிக்கிய  இடுப்பு குழந்தையின்  அடக்க முடியாத அழுகை    சில்லரை இல்லை  கண்டக்டரின் சிடுசிடுப்பு  கொரிய செல்களின்  கொலைவெறி கூச்சல்  டாஸ்மாக் டான்சரின்  ஆடை அவிழ்ப்பு  அலங்கோலம்  நாலே ரூபாயில்  நரகம் பார்க்க வேண்டுமா  எங்கள் காலை நேர  நகரப் பேருந்தில்  ஒரே ஒரு முறை  பயணம் செய்யுங்கள்.   நானும் பழகிக் கொள்ளுகிறேன்                 நீர்த்தேடி நித்தமும் நீண்ட குழாயின் குமிழ் திறந்து பார்க்கிறேன் உஸ்ஸென்று சத்தம் மட்டுமே உள்ளிருந்து வருவது ஏன்   உழைத்து வியர்த்தும் உயரம் அடையாத  உழைப்பாளியின் உஷ்ண மூச்சா   அன்னைத் தமிழிருக்க ஆங்கில மோகங்கொண்டலையும் உம்மவரைப் பார்த்து உலகம் விடும் ஏளன இழி மூச்சா   ஊழல் பெருச்சாளிகள் நாட்டையே நாசம் செய்ய ஏதும் செய்ய இயலா ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சா   ஆறு குளம்  ஏரியென  அத்தனையையும் கட்டிடங்களாக்கி வனங்களோடு வளங்களையும் இரக்கமின்றி அழித்ததால் இயற்கை விடும் எரிச்சல் மூச்சா பாய்ந்து வரும் ஆறுகளில் பக்கத்து மாநிலங்கள் அடுக்கடுக்காய் அணைகள் கட்ட அழிந்து வரும் உம் வாழ்வாதரத்தின் இறுதி மூச்சா   என்னவென்று நீங்களே உடன் வந்து பாருங்கள்   அப்படியே பத்து ரூபாய் தண்ணீர் பாட்டிலிருந்தால் எனக்கொன்று கொடுங்கள் நானும் பழகிக் கொள்ளுகிறேன்! பாவத்தில் பங்கில்லை                 நீண்ட நெடிதுயர்ந்த மரங்களை நெடுஞ்சான் கிடையாய் வீழ்த்தி நெடுஞ்சாலைகள் அமைத்தோம் நேரத்தை மிச்சப்படுத்த   உயர்ந்த குன்றுகளை உடைத்து கல்துகள்களாக்கி கட்டிடங்கள் அமைத்தோம் காலத்தின் தேவைக்காக   நீர் தேக்கும் மையங்களாம் ஆறு குளம் ஏரியென அத்தனையும் தூர்த்து அடுக்குமாடிகள் கட்டினோம் இனப் பெருக்கத்தை எதிர் கொள்ள   ஆடு மாடு கோழி மீனென அத்தனை உயிரழித்தோம் உயிர்வாழத் தேவை உணவு என்பதால்   அத்தனை அழித்தல்களும் சமூக குறிக்கோளொன்றைச் சார்ந்திருந்தது ஆனால் பட்டுப் புழுக்களே உங்களை பலியிடுவது பணத்தின் பலம் காட்டும் பகட்டிற்காக மட்டுமே   ஆனாலும் அந்தப் பாவத்தில் எனக்கேதும் பங்கில்லை ஏனென்றால் பட்டாடை அணிய  பணவசதி எனக்கில்லை என் புன்முறுவலதை உங்களுக்கு புரியவைத்திருக்கும்!   நிழல் கொடுப்போம்         நாளும் தவமிருந்து நான் பெற்ற வரமடா நீ என் கனவுகளின் மெய்பொருளும் கவிதைகளின் உட்பொருளும் நீ மட்டுமே சின்னக்கல் உன்னை இடரினாலும் என் சிந்தை கலங்குமடா உயரத்தில் உனைப் பார்க்க என் உள்ளம் நடுங்குதடா தள்ளாடித் திரிந்த தகப்பனவன் சொல்லாமலே போய்விட்டான் அதனால் பொல்லாத வறுமையை காட்டி உன்னைப் பள்ளிக்கு அனுப்பாமல் தேநீர் கடைக்கு தெருவோரம் தாள் பொறுக்க மெக்கனிக் ஷெட்டிற்கு மேலத் தெரு ஓட்டலுக்கு உழைக்கச் சொல்லி அனுப்பி அதில் உயிர் வாழ்வேன் என  நினைத்துத்தான் மரமேறிச் சென்று என் மனத்தை வதைக்கிறாயா நீவீத் தலைவாரி  நெற்றியில் முத்தமிட்டு  பாடசாலை செல் பைந்தமிழே என நாளும் வழியனுப்பும் பாவேந்தன் பேத்தியடா நான்! எட்டாதக் கல்வியினை எப்பாடு பட்டேனும் உனக்களித்து யாரும் எட்டாத உயரத்தை உன்னை எட்டச் செய்வேன் இப்போது இறங்கி வா  வறுமையை வென்று வாழ்வை வசமாக்குவோம் வளர்ந்த மரமாகி வறியவர்க்கு நிழல் கொடுப்போம். இறப்பு வரை               அன்று கடலோரம் நீ காதலால் கட்டிய கோட்டை மணல் கோட்டையாகுமென மனதாலும் நினைக்கவில்லை உச்சி சிலை உயிர் காக்கும் சாமி என்றாய் மீசை இரண்டும் நம் ஆசை காக்க ஆண்டவன் இட்ட வேலி என்றாய் சின்ன உருவமெல்லாம் நாம் சேர்ந்து வாழ வண்ணக் கவிபாடும் வானத்து தேவர் என்றாய் அத்தனையையும் பொய்யாக்கி பொல்லா நோய்க்குள் நீ ஏன்  புதைந்து போனாய் உன் சிரித்த முகத்தையும் சிந்திய சொற்களையும் கைபேசியில் அடைத்து வைத்து கண்ணீரில் வார்த்தெடுத்து தினமும் கனவுகளில் கரைகிறேன் மண் காணும் இடமெல்லாம் உன் மணல் கோட்டையும் இடிந்து போன  என் மனக் கோட்டையும் இன்னமும் இதயத்தில் விரிகிறது இனியும் விரியும் என் இறப்பு வரை.   யார் மீது கோபம்         சுட் டெரிக்கும் பார்வை சூரியனை கருக்கும் கூர்மை யார் மீது கோபம் உனக்கு மற்ற சிறுவருக்கெல்லாம் செல்வத்தோடு சீருடையும் தந்து பள்ளிச் செல்ல வைத்துவிட்டு பாதையோரப் பறவையாய்  உன்னை மட்டும் படைத்தானே அந்த பரமன்  மீதா? எத்தனைதான் உழைத்தாலும் ஏற்றம் எதுவும் காண இயலாது சிந்தையது கலங்கி சீரழிக்கும் குடிக்குள் குடிமூழ்கிப் போனானே அந்த தந்தை மீதா சிறுவாட்டு பணத்தையெல்லாம் சீட்டு கம்பெனியில் தொலைத்து சீரழிந்து  சிதறிப் போனாளே செல்ல அம்மா அவள் மீதா அந்நியர்கள் இங்கிருந்து அகன்று அறுபதாண்டுகள் ஆகியும் கூட  சொந்த மைந்தர்களை தினம் சோற்றுக்கு அலைய வைக்கும் சுதந்திர நாட்டின் மீதா   சின்னஞ் சிறுவரெல்லாம் சிதைக்கப்பட்ட சிற்பங்களாய் எங்கும் அலைவது கண்டும் சங்கடப்படாத சமூகத்தின் மீதா வாழவழி தெரியாத உனக்கு ஏதும் செய்ய இயலாது புகைப்பட மெடுத்தவர் மீதா கவிபாட வந்த எங்கள் மீதா யார் மீது கோபமாயினும் நாளையது நிச்சயம் மாறும் விடியல் உன் இருள் மீது   வேண்டிய வெளிச்சம் பாய்ச்சும் நம்பிக்கையோடிரு  நாளைய உலகம் உனக்காகவே சுழலும்! நாய்களாய் .....             வாங்கிய கடன் சுமையால்  வறண்ட வயல்களில்  வீழ்ந்து மடிகிறான்  எங்கள் விவசாயி  கல்விக் கடன் கொள்ளையால்  படிப்பதற்கு இயலாமல்  பரிதவிக்கிறான் எங்கள் மாணவன்  ஆனால்  இயற்கை வளங்களை  இருட்டிலே விற்றுவிட்டு  கோட்டு சூட்டுடன்  பகலில் வலம் வருகிறது  ஒரு பயங்கரவாதக் கூட்டம்  இவர்கள்  ஆட்சிப்பணியில் அமர்ந்த நாளாய்  சொந்தக் காசில் ஒருவேளை  சோறு கூட தின்பதில்லை  ஆலயங்களில் கூட  இவர்களுக்கான அர்ச்சனைத் தட்டை  வேறொருவன்தான் வாங்குகிறான்!  அன்றைய  ஆட்சிப் பணியாளர்கள்  அரசுப் பணியை  சேவையாய் நினைத்து  சிங்கமாய் கர்ஜித்திருக்கிறார்கள்!  இன்றைக்கு  அத்தகைய அலுவலர்கள்  மொத்தமாய் ஒதுக்கப்பட்டு  நேர்மையற்றவர்களே  எங்கும் நிறைந்திருக்கிறார்கள்!  மக்கள் வரி பணத்தில்  மகிழ்வாட்டம் போடும்  இந்தக் கயவர்கள்  அடுத்தப் பிறவியிலாவது  நாய்களாய் பிறந்து  நன்றியுடன் இருக்கட்டும்!  வரலாறு வாழ்த்தும்           உன்னுடைய  அரசியலிலும்  செயல்பாடுகளிலும்  எனக்கு  ஆயிரம் விமர்சனங்கள்  இருக்கலாம்  ஆனால்  கடந்த  கால்நூற்றாண்டாய்  தமிழகத்தின்  ஆளுமையும்  அடையாளமும்  நீ மட்டுமே  ஆணாதிக்க  அரசியலில்  தனியொரு  பெண்சிங்கமாய்  கர்ஜித்தவள்  நீ !  உன்  அறிவுத் திறன்கண்டு  அண்டை மாநிலங்கள்  அதிர்ந்து போனதுண்டு  உன்  தவறுகளை  இந்தத் தலைமுறை  விவாதிக்கக் கூடும்  ஆனால் உன்  தைரியமும்  மதிநுட்பமும்  வரலாற்றின் பக்கங்களில்  வைர வரிகளால்  நிச்சயமாய்  பதிவு செய்யப்படும்!  எங்கே நீ சென்றாய்                 இளைஞர்களை எழுப்பிய  எளிமையின் உருவே  எங்கே நீ சென்றாய்  அடுத்தத் தலைமுறையின்  அசரீரியே நீயேன்  அதற்குள் அஸ்தமித்தாய்  நாடென்னும் நிலத்தில்  நம்பிக்கை விதைத்துவிட்டு  வளர்வதற்குள் ஏன் வானமேகினாய்  அஞ்ஞானம் அகற்றிய  விஞ்ஞான வித்தையே  எங்கு நீ விரைந்தாய்  கற்பவர் கண்களில்  கனவுகளை வளர்த்தவனே  காற்றுக்குள் ஏன் கரைந்து போனாய்  வழியும் கன்ணீரிலும்  உன் வல்லரசு கனவை  நிச்சயமாய் வார்த்தெடுப்போம்  இரும்பாய் உருமாற்றி  இந்த தேசத்தை  உன் புகழ் பேச வைப்போம்.  இனிதே வாழ்வோம் நெஞ்சிலே ஈரம் நெடும் புனலாய் பெருக்கெடுக்க  பஞ்ச மனிதரின் பாவம் கரைக்கும் தீப்பிழம்பாய்  மஞ்சம் விடுத்து மாட மாளிகை சுகம் துறந்து  போதியின் கீழ் புதுஞானம் பெற்றவனே புத்தனே  அன்பென்னும் விதையை அகிலமெங்கும் தூவி  அகிம்சை நாற்றாக்கி அறிவாம் நீர் பாய்ச்சி  ஆசையாம் களைகள் நீக்கி இரக்க உரமிட்டு  அற்புதமாய் நீ வளர்த்த பௌத்த மரம்  எங்கள் அசோகனின் இதயத்திற்குள் பரவி  இனியொரு போரில்லை உயிர்பலி ஏதுமில்லை  அன்பொன்றே அனைத்தும் இனியதை அகிலமெங்கும்  எடுத்துச் செல்வேன் என சூளுரைத்து அன்று  அவன் விதைத்த விதைகள் ஈழத்தில்  சீனத்தில் சப்பானில் மியான்மரில் தாய்லந்தில்  கருணைப் பெருக்கெடுத்து கடலாய் விரிந்தது  காலங்கள் கடந்தது இன்று காண்பதென்ன  நீ தந்த அகிம்சை பெரிதும் நீர்த்துப்போக  இரக்கமில்லா அரக்கர்தம் கொடுஞ்செயலால்  ஏதுமறியா எண்ணி லடங்கா எம்தமிழர் ஈழத்து  புத்த மண்ணில் புதையுண்டு போயினர்  இரக்கம் வளர்த்தெடுத்த புத்தத்தின் அடிவருடிகள்  அரக்கராய் அவதரித்து ஆயுதங்களாய் உருமாறி  இஸ்லாமியர் இரத்தத்தில் இழிவாய் நீராடி  மியான்மர் வீதிகளில் மிருக நடம் புரிகின்றனர்!  புத்தி இல்லா இம்மனிதர் புரிகின்ற செயல்கள் யாவும்  புத்தம் ஒருபோதும் போதித்தல்ல புரிகிறது என்றாலும்  புத்தனே உன் போதி மரத்து போதனைகள் இந்த  புல்லர்களுக்கு புரிவதெப்போது புதுயுகம் பிறப்பதெப்போது  மதச் சண்டையில் மாள்வதற்கா இப்புவியில் நாங்கள்  மனிதர்களாய் பிறப்பெடுத்தோம் இல்லை இல்லை  இருக்கின்ற காலம்வரை இணைந்தே நடப்போம்  இன மத சாதி பேதமின்றி இனிதே வாழ்வோம்!  பாட்டனின் பாட்டு             பூவொன்று பனியில் பூத்தது போல் பொற்குவியல் கையில் விழுந்தது போல் தீரா நதியொன்று தேனாய் பாய்ந்தது போல் பேரா வந்தாய் பெரும்பேறு செய்தாய்    வானூறு நிலவொன்று வழிமாறி வந்ததுபோல்  வண்ணச் சுடரொன்று வடிவம் தந்ததுபோல்  சின்னப் பறவையொன்று சிறகாட்டி நடந்ததுபோல்  கன்னம் குழிவிழ கவினுருவாய் நீ வந்தாய்!  எண்ணத்தில் இப்பாட்டன் இதுவரை சேர்த்ததெல்லாம்  உன்னிடத்தில் சொல்லவே ஓடோடி வந்தேன்  சின்னக் குழந்தையிடம் செல்லரித்துபோன அறிவுரையா  முன்னம் பழங்கதையாயென நீ முகம் திருப்பக் கூடாது  பண்பான தமிழ் பேசி நீ வளரவேண்டும்  பாரதியையும் கம்பனையும் நீ பயில வேண்டும்  பக்தியோடு பகுத்தறிவை நீ பழக வேண்டும்  பள்ளத்து மனிதருக்கும் கை கொடுக்க வேண்டும்  உள்ளத்தில் நல்லதையே நீ உள்ள வேண்டும்  உறவோடு உணர்வுகளையும் மதிக்க வேண்டும்  கள்ளமில்லாச் சிரிப்புடனே விளங்க வேண்டும்  காலமெல்லாம் புகழுடனே வாழ வேண்டும்    பாட்டனிவன் வார்த்தைகளை கேட்க வேண்டும்  பலருக்கும் நல்லதையே செய்ய வேண்டும்  படிப்போடு பணத்தையும் நீ குவிக்க வேண்டும்  பசித்திருக்கும் ஏழைக்கு அதைப் பகிர வேண்டும்!   எனது கிராமம்                                                                   பச்சை பசேல் என்றிருந்த புல்வெளிகள்  மஞ்சள் கோடுகளால் பிரிக்கப்பட்டு  மனைகளாய் மாறிவிட்டன  தாவணிப் பெண்கள்  உச்சி வெயிலில் கூட  நைட்டியில் திரிகிறார்கள்  ஊர் பஞ்சாயத்தெல்லாம்  இப்பொழுது  டாட்டா சுமோ தாதாக்களின்  தலைமையில்தான்  நடைபெறுகிறது  ஆலயங்களில் விளக்கேற்றிய  அய்யர்களெல்லாம்  அமெரிக்காப் போய்விட்டார்கள்  குடிசைகளெல்லாம்  மாடிகளாய் மாறிவிட்டன  டீ கடைகளைவிட  மருந்து கடைகள்  அதிகமாகிவிட்டது  பத்தாண்டுகளில்  எனது கிராமத்தின்  வளர்ச்சி வியக்க வைக்கிறது  ஆனாலும்  இதயம் ஏனோ வலிக்கிறது. நினைத்ததெல்லாம் நடந்தும்…                 அந்த காலத்து காதலர்களா அல்லது அற்ப சுவைக்காக ஆண்டவனிடம் சாபம் பெற்ற ஆதாமும் ஏவாளுமா   இவர்கள் எதுவும் இல்லாதிருந்தபோது எல்லாமும் பெற்றிருந்தனர் எல்லாமும் கிடைத்தபோது எதையோ இழந்து நிற்கின்றனர்!   ஆடைகள் இல்லாதபோது இவர்கள் அவமானம் அடைந்ததில்லை இப்போது ஆடை அரைகுறையானதால் மானம் மரணமடைந்து கொண்டிருக்கிறது!   மலை மரம் வெட்டவெளி எங்கு இருந்தாலும் இவர்களது அந்தரங்கம் அசிங்கப்பட்டதில்லை     இப்போது மூடிய அறைகளுக்குள்ளே கூட முகம் தெரியாத கருவிகளால் இவர்கள் முக்காடு நீக்கப் படுகிறது!   ஓ மனித இனமே உன் ஆறாம் அறிவு நேர்மையின்றி நடந்ததால் நினத்ததெல்லாம் நடந்தும் நீ நிர்வாணமாய் நிற்கிறாய்! அப்பா குட்டையில் விழுந்தபோது..   (ஆல்பிரெட் நோயிஸ்(Alfred Noyes) இங்கிலாந்து நாட்டு கவிஞர். நாடக ஆசிரியரும் கூட. அவர் இயற்றிய "Daddy fell into the pond" என்ற ஆங்கில நகைச்சுவைக் கவிதையினைத் தமிழில் தழுவி தந்திருக்கிறேன்.) அத்தனை பேரும் அலுத்துக் கொண்டனர் அந்தி வானம் சாம்பல் வண்ணமானது எங்களுக்கு சொல்வதற்கோ செய்வதற்கோ ஏதுமில்லை சுவையற்ற நாளொன்று சுருங்கிக் கொண்டிருந்தது இந்நாளில் இதற்கு மேல் ஒன்றுமில்லை என்றே நினைத்திருந்தோம் அப்பொழுதுதான் அப்பா குட்டைக்குள் விழுந்துவிட்டார்! அத்தனை பேரின் முகமும் ஆனந்தத்தில் வெளிச்சமானது எங்கள் வீட்டு டைகர் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது "கேமராவை எடுத்து வாருங்கள் சீக்கிரம்" அல்லிக் கொடிகளை மெல்ல விலக்கியவாறு அப்பா தவழ்ந்து வந்து கொண்டிருந்தார்... க்ளிக் அப்பொழுது தோட்டக்காரார் திடீரென்று இரு முட்டிகளைத் தட்டியெழுந்து அசைந்தாடினார் வாத்துகள் அத்தனையும் முட்டாள்களைப் போல சத்தம்போட ஆரம்பித்தன கிழ வாத்தொன்று சிரிப்பது போலிருந்தது அந்த சத்தம்! ஓ சந்தோஷத்தைக் காட்டாத ஜீவன் எதுவும் அங்கில்லை! அப்பா குட்டையில் விழுந்தபோது!   அமெரிக்காவை ஏன் வெறுக்கிறீர்கள்                   (ஜாக்கி காம்ப்டன்Jackie Compton)  அமெரிக்காவின் முன்னணி கவிஞர்களில் ஒருவர். அவர் இயற்றிய Why hate America என்ற கவிதையின் தமிழாக்கத்தை இங்கு தந்திருக்கிறேன்.வஞ்சப் புகழ்ச்சியில் இயற்றப் பட்டிருக்கிறது இக்கவிதை.)    ஆயிரம் காரணங்கள் உண்டு அமெரிக்காவை வெறுக்க அத்தனையையும் அடுக்கிட இயலாது எனக்கும் நீங்கள் கூட வெறுக்கலாம் தலை வணங்க அரச குடும்பங்கள் இல்லாதஅமெரிக்காவை!   கடலிலிருந்து ஒளிரும் கரைக்கு சுதந்திரமாய் செல்வதற்கும் செல்லும் பொழுதே பொன்னென மின்னும் தானிய அலைகளை காணமுடிகிறதே அதற்காக அமெரிக்காவை நீங்கள் வெறுக்கலாம்   நீங்கள் எதனை நம்பினாலும் நீங்கள் எதன் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும் அவற்றிற்கான உரிமைகளை இங்கு உருவாக்கித் தருவது கடவுளன்றி  அரசுகள் அல்ல என்பதற்காக அமெரிக்காவை நீங்கள் வெறுக்கலாம்   சுதந்திர சிந்தனை கதவுகளை அமெரிக்கா மூடுவதில்லை என்பதற்காக நீங்கள் அமெரிக்காவை வெறுக்கலாம்   வாயில் கதவை திறந்து வைத்தால் போதும் வாய்ப்புகள் வந்து வரவேற்கிறதே அதற்காக அமெரிக்காவை நீங்கள் வெறுக்கலாம்   பட்டியலுக்கு முடிவில்லை என்பதால் பாதியில் முடிக்கிறேன்   அமெரிக்கா என் இதயத்தின் இனிமை நீ உன்னால் மட்டுமே உன்னை வெறுக்கும் உரிமைகூட அவர்களுக்கு கிடைத்திருக்கிறது அடக்குமுறை பயங்கள் எதுவுமின்றி! அங்கு எழட்டும் என் தேசம்   (இந்தியா உலகிற்கு தந்த அற்புதமான கவிஞர்களுள் ரவீந்தரநாத் தாகூரும் ஒருவர். இந்திய தேசிய கீதம் அவரால் இயற்றப்பட்டதுதான் என்பதை அனைவரும் அறிவோம். அவரின் கீதாஞ்சலி காவியத்திற்கு நோபெல் பரிசு கிடைத்தது. கீதாஞ்சலியில் என்ணற்ற அற்புத கவிதைகள் இடம் பெற்றுள்ளது. அவற்றில் ஒன்றைத்தான் இங்கு தமிழாக்கித் தந்திருக்கிறேன்).   எங்கு மனம் பயமின்றி தலை நிமிர்ந்து நடக்கிறதோ எங்கு அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ   எங்கு உட்பூசல்களால் உலகம் உடைந்து துகள்கள் ஆகாமல் இருக்கிறதோ   எங்கு தளர்வறியா உழைப்பின் கரங்கள் நேர்த்தியை நோக்கி நீள்கிறதோ   எங்கு தெளிந்த பகுத்தறிவு நீரோடை பாழாய்ப் போன பழக்கங்கள் என்னும் பாலைவனத்திற்குள் பாதை மாறாமல் பயணிக்கிறதோ   எங்கு உங்கள் மனதை பரந்த நினைவு செயல்களை நோக்கி எடுத்து செல்ல முடிகிறதோ   அங்கு, அந்த சுதந்திர சொர்க்கத்தில், ஓ தந்தையே என் தேசம் எழட்டும்! மூக்கு முகம் சந்தோஷம்               (ஜாக் ப்ரிலட்ஸ்கி (Jack Prelutsky)  அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர்.  அவருடைய Be Glad Your Nose is on Your Face என்ற இந்த கவிதை படிப்பதற்கு வேடிக்கையாகத் தோன்றினாலும் படைப்பின் மேன்மையை பறை சாற்றுகிறது."ஆட்டிற்கும் வாலை அளந்துதான் வைத்திருக்கிறான்" என்ற நமது பழமொழியை நினைவு படுத்துவதாக அமைந்திருக்கிறது)   வேறு இடத்தில் ஒட்டப்படாமல் முகத்தில் அமைந்திருக்கிறதே மூக்கென நீ சந்தோஷப்படு! இருக்கின்ற இடத்தைவிட்டு வேறு இடத்தில் அது இருந்திருந்தால் நீயே உன் மூக்கை முற்றிலுமாய் வெறுத்திருப்பாய்   கற்பனை செய்து பார் கால் விரல்களுக்கிடையில் அது அமைந்திருந்தால் பாதத்தை நுகரவேண்டிய கட்டாயம் உனக்கு விருந்தாகவா இருக்கும்?   உச்சந்தலையில் மூக்கு இருந்திருந்தால் அச்சத்தின் ஊற்றாய் மாறியிருக்கும் முடியுடன் அது கொள்ளும் மோதல் விரக்தியின் எல்லைக்கு உன்னை விரட்டியிருக்கும்!   காதுக்குள் மூக்கு இருந்திருந்தால் பேரழிவை அது உருவாக்கும் நீ தும்முகின்ற நேரமெல்லாம் மூளைக்குள் பூகம்பம் வெடிக்கும்!   மாறாக முகவாய்க்கும் கண்களுக்குமிடையே அழகாய் அமைந்திருக்கிறது மூக்கு வேறு இடத்தில் ஒட்டப்படாமல் முகத்தில் அமைந்திருக்கிறதே மூக்கென நீ சந்தோஷப்படு! தங்க மலர்கள்                 ஆங்கில கவிஞர்களில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவருடைய கவிதைகளில் ஒன்றான The Daffodils என்ற கவிதையினை இங்கு தமிழாக்கி தந்திருக்கிறேன்   செல்லுமிடமறியா மேகமென பள்ளம் குன்றென திரிந்திருந்தேன்   தங்க மலர் கூட்டமொன்றை தற்செயலாய் காணப் பெற்றேன்   ஆர்ப்பரிக்கும் கடலோரம் அவை முடிவிலா வரிசையாய் அணிவகுத்து நின்றன!   ஒரே பார்வையில் பல்லாயிரம் மஞ்சள் மலர்கள் தலையாட்டி நடமிடக் கண்டேன்!   பின் நின்ற அலைகளின் பேரரவ ஆட்டம் பூக்களின் நடனம் முன் பொலிவிழந்து போனது! காணற்கரிய இக்காட்சியினை கண்டு களிக்காதவன் கவிஞன் இல்லை   கண்டேன்... கண்டேன்... கண்டுகொண்டேயிருந்தேன்!   சின்னதாய் ஒரு நினைவு சித்திரக் காட்சி இதனால் எனக்கு சேர்வதுதான் என்ன?   அமைதியற்ற  நாட்களில் வெறுமையுற்ற மன நிலையில் வீழ்ந்து கிடக்கும் பொழுதெல்லாம் உள்ளிருக்கும் விழிகளில் ஒளியூட்டும் இக்காட்சி!   தனிமையுற்ற நாட்களில் இனிமையதை சேர்க்கும்!   தாவி எழும் உள்ளம் தங்க மலர்கள் இவற்றோடு தளிராட்டம் போடும்! இரவுப் படைகள்                     Mathew Arnold எழுதிய Dover Beach என்ற ஆங்கில கவிதையின் தழுவல் தெளிவான கடல் அலைகள் மிளிரத் தென்றல் வந்து அவைகளைத் தழுவ நிலவொளி கடல் எங்கும் பரவ இனிமை இது ! இந்த இரவு! ஐயைந்து மைல்கள் தாண்டி அழகுடனே மிளிரும் பிரெஞ்சு கரையும் அன்பே சாளரத்தின் அருகில் நின்று அலைகள் சாற்றுவதை கேண்மின் சற்றே சிப்பிகளை கரை சேர்க்கின்ற அலைகள் செப்புகின்ற மொழியினை கேட்டாயோ ? அதில் தொக்கி நிற்கும் சோகத்தை உணராயோ? மானிடத்தின் அழிவை எண்ணி வருந்தாயோ மத்திய கடலின் ஓரம் நின்று சோபோக்ளியஸ் கேட்டான் அன்று ஓடிவரும் அலைகளின் ஓலத்திலே மானிடத்தின் அவலத்தை கேட்டான் நின்று நம்பிக்கை கடல் நாற்புறமும் சூழ்ந்து தெம்பினை தந்தது முன்னொரு நாள் தேயும் நாணயம் உலகில் கண்டு கடலும் விளக்கும் அலைகள் கொண்டு துன்பமே துணையாகிப் போன இவ்வுலகத்தில் இன்பத்தை கண்டவன் எவனுமில்லை அன்பைச் செலுத்தும் மனிதன் இல்லை ஆறுதல் கூறிட யாருமே இல்லை அன்பும் பண்பும் எங்கோ சென்று பகலின் கனவாய் மாறிற்றே இன்று இரவில் செல்லும் படை எனவே இனம் தெரியாமல் மோதுகிறோம் இறைவன் ஒருவனை மறந்து விட்டோம் இதனால் அன்றோ வருந்துகிறோம் !