[] புள்ளிகள் நிறைந்த வானம்(கவிதைகள்) ப.மதியழகன்© முதல் பதிப்பு:நவம்பர் 2017 பக்கம்:95 ஆசிரியர் மின்னஞ்சல்: mathi2134@gmail.com அலைபேசி:9597332952,9095584535 மின்னூல் வெளியீடு: FreeTamilEbooks.com உரிமை: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லோரும் படிக்கலாம். பகிரலாம் மின்னூலாக்கம்:ப.மதியழகன்   பொருளடக்கம் என்னுரை புள்ளிகள் நிறைந்த வானம் நாங்கள் நீங்கள் ஓம் ஸாந்தி ஸாந்தி மனக்குகை நொடி நிமிடம் மணி கேடயம் நிலம் பார்த்து பெய்யும் மழை லீலை பட்டியல் மானுடம் வெல்லும் உன்னிடம் எப்படிச் சொல்வது மறுபக்கம் உங்களில் ஒருவன் இதற்கும் அப்பால் ஆகக்கடவது ரகசியம் திறக்கப்படாத கதவு ஒரு நாளேனும் கையறு நிலை கைவிடப்பட்ட உலகம் ராணித் தேனீ மர்மத்தின் முடிச்சு குழந்தைகள் பெண்கள் ஆண்கள் குழந்தைகள் உலகம் பொய்யாகிப் போன ஒரு பொழுது சாபம் தடாகம் யூகம் எல்லோருக்குமாக பிழைப்பு வாய்ப்பு இதுவெனவே என்றானது எனது பெயர் சுவீகாரம் என்னைப் போல் ஒருவன் பேதலி்ப்பு கொடை கூர் விகாரம் பிரேதம் கனவென்று தெரிந்திருந்தால் பொம்மலாட்டம் மறுபக்கம் கல்லறை வாசகம் கோடம்பாக்கம் வரும்போகும் பங்குனிப் பெருவிழா அப்பாவி கழைக்கூத்தாடிச் சிறுவன் பிறழ்வு கேள்விக்குறி வானுக்கு கீழே அதன் வாழ்க்கை குருக்ஷேத்திரம் முகப்பு குறிப்பு வரைமுறை முள் பதிவுகள் கோஷம் வனவாசம் நாளும் கோளும் காத்திருப்பு விடியல் இன்னும் கொஞ்சதூரம் தான் அகராதி காண்டீபம் விடம் ஆகமம் கற்பிதம் மண்டபம் வாக்குறுதி பதுமை கோரிக்கை துரோகத்தின் நிழல் விஸ்வரூபம் இப்படியாக அநித்யம் வேட்டை இடர்பாடு கேள்விக்குறி வலை ஸ்தானம் முகூர்த்தம் சங்கேத வார்த்தை     என்னுரை   கடலில் தன்னைத் தொலைக்கும் மழைத்துளி தனது ஆத்மாவைத் தேடியலையும் காற்று விடியலுக்கு முன்பு வானில் கவிந்திருக்கும் அந்தகாரம் கவிதையில் நேர்த்தி கைவரப்பெற இன்னும் முயல வேண்டும் இன்னும் மூழ்க வேண்டும் கவிதையில் நான் பரீட்சித்துப் பார்த்ததை உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன் இலக்கை அடைய ஓய்வு கொள்ளாமல் ஓயாமல் ஓடவேண்டியிருக்கும் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள போராட வேண்டியிருக்கும் கடக்க வேண்டிய தூரம் நம்மை மலைக்க வைக்கும் நான் உங்களை மரண வீட்டுக்கு அழைத்துள்ளேன் தப்பு சத்தமும், ஒப்பாரியும் உங்களுக்கு பீதியை ஏற்படுத்தும் ஊதுபத்தியும், மரிக்கொழுந்தின் பிணவாடையும் அந்தப் பகுதி முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கும் சவஊர்வலம் மயானத்தை அடைந்தவுடன் உங்களுக்கு ஒன்று புரிந்திருக்கும் சிதைக்கு தீ மூட்டினால் எல்லோரும் ஒருபிடி சாம்பல்தான் என்று நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு அக்கணமே ஞானக் கண் திறக்கும் மரணம் நமக்கு இப்போது வாய்க்காது என செருக்குடன் நீங்கள் நடந்தால் வாழ்வின் இறுதி தருணத்தில் மேனியில் சாம்பலைப் பூசி ஆடும் சுடலையை நீங்கள் மயானத்தில் காண வேண்டியிருக்கும் மரணத்தை பொதுவில் வைத்து விளையாடும் இயற்கையை யாராக இருந்தாலும் தலைவணங்க வேண்டியிருக்கும் சத்தியத்தின் வழியே நடக்க முயற்சிப்பவர்களுக்குத்தான் சுவர்க்கத்தின் கதவுகள் கூட திறக்கும்.         மன்னார்குடி                                          ப.மதியழகன் 12.11.2017                                                     புள்ளிகள் நிறைந்த வானம்   காதல் எல்லாவற்றையும் என்னிடமிருந்து பறித்துக் கொண்டது வாழ்க்கைக் கடலில் மூழ்கிக் கொண்டிந்த எனக்கு காதல் தான் சிறகு தந்தது நம் வேர்கள் தழுவிக் கொள்வதை கிளைகள் அறியாது பொழுதுகள் உருண்டோடிக் கொண்டிருக்கிறது காற்றினைச் சிறைப்படுத்த எண்ணிய எனது முயற்சி வீணானது தொலைவில் ஒப்பாரி சத்தம் கேட்டது எனது மனமோ அவளை நினைத்து கேவியழுதது அவளை அடைய வேண்டுமென்ற பேரவா என்னை நெருப்பாகச் சுட்டெரிக்கிறது காதல் எதை விலையாகக் கேட்டாலும் கொடுத்துதான் ஆகவேண்டும் வரிகள் வாய்ப்பைத் தேடி அலைகிறது காதலைப் புதுப்பித்துக் கொள்ள… நான் இறந்த பிறகு புதைத்துவிடுங்கள் அவள் சூடும் பூக்களுக்கு எருவாகவாவது என்னை இருக்கவிடுங்கள்.           நாங்கள் நீங்கள்   நீங்கள் தீர்மானிப்பவர்கள் நாங்கள் வாயிருந்தும் ஊமைகள் நீங்கள் ஆணையிடுபவர்கள் நாங்கள் நிறைவேற்றுபவர்கள் நீங்கள் பிச்சையிடுபவர்கள் நாங்கள் கையேந்துபவர்கள் நீங்கள் ஆட்டுவிப்பவர்கள் நாங்கள் கருவிகள் நீங்கள் வாடிக்கையாளர்கள் நாங்கள் வேசிகள் நீங்கள் அரசியல்வாதிகள் நாங்கள் வாக்காளர்கள் நீங்கள் எஜமானர்கள் நாங்கள் தொழிலாளர்கள் நீங்கள் மருத்துவர்கள் நாங்கள் பைத்தியங்கள் நீங்கள் கொள்ளையடிப்பவர்கள் நாங்கள் பறிகொடுப்பவர்கள் நீங்கள் அடக்குமுறையாளர்கள் நாங்கள் உயிரற்ற சடலங்கள் நீங்கள் ஏமாற்றுபவர்கள் நாங்கள் ஏமாறுபவர்கள் நீங்கள் வி.ஐ.பி நாங்கள் அன்றாடங் காச்சிகள் நீங்கள் அதிகாரிகள் நாங்கள் மக்கள் பிரஜைகள் நீங்கள் ஆன்மிகச் செம்மல் நாங்கள் கொலையானவர்கள்.                           ஓம் ஸாந்தி ஸாந்தி         நதிப் பிரவாகம் பேதம் பார்ப்பதில்லை மதுக் குப்பிகளை திறக்கும் போதெல்லாம் உன் ஞாபகம் வருகிறது இரவின் நாயகி நீயெனவும் பகலின் நாயகன் நானெனவும் விந்தை மனிதர்கள் விரைவில் புரிந்து கொள்வர் இரவுக்கு ஆகாரமாகவும் பகலுக்கு ஆதாரமாகவும் நீ இருக்கிறாய் சக்தி ஆட்டுவிக்கிறாள் சிவன் நடனமாடி களிக்கிறான் விழிகள் போடும் கோலங்களை வியந்து போய் பார்க்கிறேன் நகத் தீண்டலிலே என்னுள் மிருகம் விழித்துக் கொள்கிறது ஆதி நாட்களில் பாம்பாக அலைந்து கொண்டிருந்த நடராஜரும் சிவகாமியும் முயங்கிக் கிடக்கிறோம் மோகத்தீயில் என்னுள் புதைந்துள்ள பெண்மையைப் புணர்ந்து விட்டு ரௌத்திரமாகச் சிரிக்கிறாள்.                       மனக்குகை   இருட்டு எல்லோரையும் பயப்படுத்துகிறது கனவில் புலியைக் கண்டால் நிஜத்தில் உடல் வியர்க்கிறது இருளில் நிழல் கூட நம் துணைக்கு வராது கடவுளை சிருஷ்டித்த மனம் சாத்தானைக் கண்டு அலறுகிறது புதையலை வைத்துக் கொண்டு பிசாசு நரபலி கேட்கிறது பிறக்கும் போதே எல்லோருடைய கண்களுக்கும் சாவின் நிழல் தெரிகிறது இருளில் நடமாடும் அருவம் கன்னிமைப் பெண்களின் மனதைப் புணர்கிறது இறந்தவர்களின் ஆவி மற்றொரு உடலைத் தேடி அலைகிறது அமானுஷ்யங்கள் நிறைந்த உலகில் ஆன்மா பல பிறவிகள் எடுக்கிறது மயானத்தின் மேலேதான் மனிதர்கள் வாழ்வது.                           நொடி நிமிடம் மணி   ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் பழைய ஏற்பாடு பிரகடனப்படுத்தி உள்ளது சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைவு சேனல்களில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் மதுபாட்டிலை காலிசெய்து கொண்டே விலைமாதர்களோடு உறங்கலாம் ஃபேஸ்புக், கூகுள்பிளஸ்ல் மூழ்கிக் கிடக்கலாம் படுக்கையிலிருந்து எழுந்து நிதானமாக நாளைத் தொடங்கலாம் பழைய புத்தகக் கடையில் தஸ்தயேவ்ஸ்கி நாவல் தேடலாம் இசையில் நீந்தியபடியே மதியத்தில் குளிக்கலாம் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் கவர்ச்சிப் படங்களை நிர்வாணப்படுத்தி ரசிக்கலாம் ஆனால் இயேசு போல் ஞாயிற்றுக்கிழமை அற்புதங்கள் செய்து நாம் மாட்டிக் கொள்ள வேண்டாம்.                           கேடயம்   சிநேகிதர்களுடைய இல்லத்தரசிகளின் கண் பார்த்து பேசுவதை தவிர்த்தே வருகிறேன் அவர்களுடைய குழந்தைகள் அங்கிள் என்றழைப்பதை நூலிழை சிரிப்போடு ஏற்றுக்கொள்கிறேன் வீட்டின் நிலைமை என்னவென்று அறியாமல் உள்ளே நுழைந்ததற்கு வெட்கப்படுகிறேன் என்னைக் கேட்காமலேயே காபி எடுத்து வந்ததை பெரிதுபடுத்தாமல் அவர்களின் ப்ரியத்துக்காக சிறிது சுவைக்கிறேன் கடன் வாங்கியிருக்கவே கூடாது வீடு வரை வந்துவிட்டான் என்று கலவரப்படுவார்கள் என்றெண்ணி யாருக்கும் கடன் கொடுப்பதில்லை எல்லா சிநேகிதர் வீட்டிலும் பார்க்கிறேன் தாழிடப்பட்ட படுக்கையறையை எனது பலகீனத்தை எண்ணி சிநேகிதர்கள் இல்லாத சமயங்களில் அவர்கள் வீட்டிற்குள் நுழைவதை தவிர்க்கிறேன்.                             நிலம் பார்த்து பெய்யும் மழை   கற்றுக் கொண்ட தமிழ் கறிவேப்பிலைக்குக் கூட உதவாது என்கிறாள் ஈசனிடமே இடப்பாகத்தைக் கேட்டவள் என்னிடம் என்ன எதிர்பார்ப்பாளோ தொண்டு செய்தோனுக்கு ஏதாவது செய்யக்கூடாதா சுவாமிநாதன் என் மீதிருக்கும் கோபத்தை புஸ்தகத்தின் மீது காட்டுவாள் எழுத்தாள நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வரக்கூடாதாம் என்னுடைய பாட்டனார் வரையில் நன்றாகத்தான் வாழ்ந்தது குடும்பம் என் அப்பா தான் சிவனைக் காட்டிவிட்டார் சைவம் தமிழ் வளர்த்த கதையை படித்திருக்கக் கூடாதுதான் சிவனுக்கு ஸ்ரீதேவி விஷ்ணுவுக்கு பூதேவி தரித்திரனுக்கு மூதேவி காளி போலத்தான் அவள் இல்லாவிட்டால் குடும்பத்தை காக்க முடியுமா நிலம் பார்த்து பெய்யும் மழைக்கு நிச்சயமாக அவள் தான் காரணம்.             லீலை   பூதக்கண்ணாடியை வைத்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்தேன் வர வர நாளிதழ்கள் உத்திரகிரியை பத்திரிகை போலாகிவிட்டது பருவத்தில் ரதி போன்று இருந்தவர்கள் எல்லாம் காலச்சக்கரத்தில் சிக்கி கண்ணாடி பார்த்து அழுகிறார்கள் மறதியும், தூக்கமும் இல்லையென்றால் எல்லோரும் எப்பொழுதோ தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் பார்க்க சகிக்காதவற்றையெல்லாம் மூலவர் பார்த்துக் கொண்டு சிவனே என்று இருந்ததால் சுடலை சுடுகாட்டுச் சாம்பலை பூசிக் கொண்டு எங்கோ அலைகின்றான் உறக்கத்தை யார் கடன் தருவார்கள் உன்மத்தக் கூத்தனே நெறிகெட்டவர்களை உச்சத்திலும் அப்பாவிகளை பராரிகளாகவும் ஏன் வைத்திருக்கிறாய் பசிக்குச் சாம்பலையும் மானத்தை மறைக்க கையையும் கொடுத்ததற்கு நன்றி சொல்ல முடியுமா தீயில் தின்னப்படும் உடலை போகக் கடலில் மூழ்கடித்து முற்பிறவிகளை மறக்கடித்து விளையாடுவது தான் உன் திருவிளையாடலோ?               பட்டியல்   பாதையில் கிடந்த கருவேல முள்ளை ஓரத்தில் எடுத்துப் போடுகிறேன் புட்டத்தை வாலால் மறைத்தபடி ஒரு நாய் என்னைக் கடந்து செல்கிறது மாங்கிளைகளை வெட்டியாகிவிட்டது இனி எந்த மரக்கிளையில் கிளிகள் வந்தமரும் மேகங்கள் எங்கே சென்றன நடவு செய்பவர்களை வெயிலில் காயவிட்டு மாடுகள் தின்பதற்காகவாவது உதவட்டும் இந்த சுவரொட்டிகள் அக்கரைக்கு நீந்திச் செல்ல நீச்சல் மட்டும் தெரிந்திருந்தால் போதாது எப்போதாவது செல்லும் விமானத்தை வேடிக்கைப் பார்க்க சொல்லியாத் தரவேண்டும் காலம் முடிந்து குருக்கள் கிளம்பிவிட்டார் சாமி எங்கே போகும்.               மானுடம் வெல்லும்   பிணவறையில் உறங்குகின்றன தெய்வங்கள் பூசைகளை ஏற்றுக் கொண்டு நாட்களை ஓட்டி இருக்கலாம் பிரார்த்தனைகளை செவிமடுக்காமல் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கலாம் பக்தர்களின் பாலாபிஷேகத்தில் உள்ளம் குளிர்ந்திருக்கலாம் அடிமுடியைத் தேடியபடியே சென்றிருந்தாலும் பிரச்சனையில்லை அதிகாரமற்ற அலங்காரப் பதவியில் வீதியுலா சென்றிருக்கலாம் பாதாள அறை பொக்கிஷங்கள் பறிபோய்விட்டதை எண்ணி மனம் கலங்கியிருக்கலாம் வரம் வாங்கி திரும்புபவர்களின் வாகனங்கள் எப்படி விபத்தில் சிக்குகின்றன என்ற கேள்வி உதிக்காமல் இருந்திருக்கலாம் அவதாரங்கள் பக்கமே தர்மம் இருந்ததாக புத்தகங்களில் படித்திருக்கலாம் விதி என்ற பெயரில் மக்களின் வாழ்க்கையில் விளையாடாமல் இருந்திருக்கலாம் தான்தோன்றித் தனமாக செயல்படாமல் இருந்திருந்தால் சரண கோஷம் எழுப்ப ஆட்கள் கிடைத்திருப்பார்கள் மரணத்தை வைத்து பூச்சாண்டி காட்டாமல் இருந்திருந்தால் எல்லா கடவுளர்களும் தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருந்திருக்காது மரணத்தை ஒருவன் வென்றால் கூட கடவுளின் நிலை கேள்விக்குறிதான். உன்னிடம் எப்படிச் சொல்வது   கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இல்லாமல் போய்விடுமா தூர் வாரப்படும் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் பொருட்களைக் காண உனக்கு ஆவலாய் இருக்காதா புள்ளிகள் மட்டுமே அழகிய கோலமாகிவிடுமா வானம் எழுதும் ஓவியக் கவிதை தானே வானவில் காற்று நிரப்பப்பட்ட பலூன்களைக் கண்டால் குழந்தைமை உடைந்து வெளிவருவதில்லையா கருணை இல்லங்களுக்கு உதவிடும் போது நமது இறைமை கொஞ்சமாவது வெளிப்படுவதில்லையா ஒரு குழந்தை வந்து உன்னை அம்மா என்றழைத்தால் உனக்கு கோபிக்கத் தோன்றுமா மிக அரிதாகவே ஜோக்குகள் சொல்கிறேன் சிரிக்க மாட்டாயா.                                 மறுபக்கம்   அடிக்கடி சமநிலை பாதிக்கும்படி சிந்திக்காதே வாழ்க்கை நீ நினைப்பது போல் கொடியதல்ல இலையைப் போல் இலகுவாக இருக்கமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை தண்ணீரைப் போலாவது சளசளத்துக் கொண்டிறேன் நமது திட்டப்படி எதுவும் நடக்காத போது அச்சாணி கழன்றதைப் போல் ஏன் தவித்துப் போகிறாய் மழையை எதிர்பார்த்திருக்க அது தூறலுடன் விடை பெற்றுக்கொள்வதை கவனித்திருக்கின்றாயா நாளைக்கான டைரிக் குறிப்பை இன்று யாராவது எழுத இயலுமா ரயிலில் பயணம் செய்பவர்கள் சுமைகளை தனது தலையிலா சுமந்து செல்கிறார்கள் சில சமயம் கேள்விகளுக்கு நாம் மெளனத்தை பதிலாகத் தருவதில்லையா நாளையின் ரகசியத்தில் யாராவது நுழைந்து பார்க்க முடியுமா.                   உங்களில் ஒருவன்   தவிர்த்து விடுங்கள் நிலைக்கண்ணாடியில் உற்றுப் பார்க்காதீர்கள் உங்கள் உருவங்களை நீங்கள் செய்த தில்லுமுல்லு நினைவுக்கு வரலாம் உள்ளுக்குள் உறங்கிக் கிடந்த மிருகம் வெளியே எட்டிப் பார்க்கலாம் கையில் நீண்ட நகங்களுடனும் கூரிய பற்களுடனும் உங்கள் பிம்பம் தெரியலாம் தோலில் சுருக்கங்களும் நரை முடியும் மரணம் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை நெருங்கிக் கொண்டிருப்பதை உங்களுக்கு உணர்த்தலாம் முகமூடி விலக்கப்பட்ட உங்கள் முகத்தைக் கண்டு நீங்களே அச்சம் கொள்ள நேரலாம் ஆதாம் அறிவுக்கனியை உண்டதற்காக சந்ததிகள் தண்டனை அனுபவிப்பதை எண்ணி அழுவலாம்.                           இதற்கும் அப்பால்   கதவில் பூட்டு தொங்கியது யார் பூட்டியிருப்பார்கள் காலையில் நான் தான் பூட்டினேன் இந்த நாய் நகர்ந்து தொலைக்க கூடாது வாலை மிதித்துவிட்டேன் நல்ல வேளை கடித்து தொலைக்கவில்லை வீட்டில் வைத்தது வைத்தபடி அப்படி அப்படியே இருந்தது கலைத்துப் போட குழந்தையுமில்லை துவைத்துப் போட மனைவியுமில்லை அலமாரியிலிருந்து புஸ்தகங்களை எடுத்து மேஜையின் மீது வைத்தேன் தன்னைப் பற்றிச் சிந்திப்பது ஞானத்தை பரிசளிக்கும் ஆனால் ஊர் பைத்தியம் என பட்டம்கட்டிவிடும் வாசலில் பூனை கத்தியது இரவு உணவில் பங்கு கேட்க முன்பே வந்துவிட்டது போலும் படுக்கையை விரித்தேன் இனி என்னிடம் வாலாட்ட முடியாது இவ்வுலகம் என்று எப்போதும் போல் நினைத்துக் கொண்டு படுத்தேன் விடிந்ததும் எவரிடம் கைகுலுக்கி எவரைப் புகழ்ந்து பேசி எவர் ஜோக்குக்கு சிரிக்க வேண்டியிருக்குமோ சாக்கடையில் குளித்துவிட்டு சந்தனத்தை பூசிக் கொள்வது தான் வாழ்க்கையோ.               ஆகக்கடவது   கடைத்தெருவில் தான் அவனைப் பார்த்தேன் தன்னைப் பற்றிய பிரக்ஞையின்றி நிலைகுத்திய கண்களுடன் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தான் சடை விழுந்த கேசமும் அழுக்கடைந்த ஆடையும் அருவருப்புக் கொள்ள வைத்தன அடிக்கடி மேலே பார்த்து சிரித்தான் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டான் கைகளை மேலே தூக்கியபடி போவதும் வருவதுமாக இருந்தான் தனது கையாலாகாத தனத்தாலா மனைவியின் துரோகத்தாலா மரண பயத்தினாலா எதனால் சித்தம் கலங்கியது வாழ்க்கை தனது இன்னொரு முகத்தை நம்மிடம் காட்டிக் கொண்டுதானுள்ளது நமது வீட்டில் நடப்பது நமக்குத் தெரியாமலிருந்தால் நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான்.                             ரகசியம்   எங்கள் இருவருக்கும் மட்டும் தான் தெரியும் அந்த ரகசியம் அது வெளிப்படாதவாறு அதன் சிறகுகளை முறித்துவிட்டிருந்தோம் அது கசியாதவாறு ஐஸ்கட்டி போன்று இறுகச் செய்திருந்தோம் அது அம்பலமாகாதவாறு மனதை பூட்டி வைத்திருந்தோம் தற்செயலாக போட்டு உடைத்துவிடுவோமோ என அஞ்சி வார்த்தைகளை வடிகட்டி பேசிக் கொண்டிருந்தோம் ரகசியம் பிறர் அறியப்படாமல் போக நாங்கள் இருவரும் இல்லாமல் போக வேண்டும் என முடிவெடுத்து எங்களை நாங்களே கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருந்தோம்.                                   திறக்கப்படாத கதவு   கதவு தட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது கதவுக்கு உள்ளிருக்கும் நபர் உணவருந்திக் கொண்டிருக்கலாம் தொலைக்காட்சியில் பாடலை ரசித்துக் கொண்டிருக்கலாம் குளித்துவிட்டு தலை துவட்டிக் கொண்டிருக்கலாம் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கலாம் எதற்காகவோ அழுது கொண்டிருக்கலாம் தற்கொலைக்கு முயற்சித்து தூக்க மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருக்கலாம் புத்தகத்தை லயித்து படித்துக் கொண்டிருக்கலாம் நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருக்கலாம் குழந்தைகளிடம் விளையாடிக் கொண்டிருக்கலாம் கலவி இன்பம் துய்த்துக் கொண்டிருக்கலாம் தனிமையை அருந்திக் கொண்டிருக்கலாம் தட்டப்படும் கைகளுக்குத் தெரியாது உள்ளே நடப்பது என்னவென்று.                           ஒரு நாளேனும்   இன்னொருவரின் வாழ்க்கையை நான் வாழ்ந்தால் என்ன அவர் மீது குற்றம் சுமத்தி சிறைக்கு அனுப்பியேனும் அவரது குழந்தைகளை கடத்திச் சென்று அவரது நிம்மதியைக் குலைத்தேனும் அவரது மனைவியை கவர்ந்து சென்று அவரை பைத்தியமாக்கியேனும் அவரது லீலைகளை அம்பலப்படுத்தி அவரை தலைகுனிய வைத்தேனும் அவரை நிழலாய்ப் பின்தொடர்ந்து அவரின் ரகசியங்களை அறிந்து கொண்டேனும் அவரை கொலை செய்துவிட்டு அவர் போலவே நடித்தேனும் நான் தற்கொலை செய்து கொண்டு அவர் உடலில் புகுந்தேனும்.                                                 கையறு நிலை   வானவெளியெங்கும் நட்சத்திரக் கூட்டங்கள் இடைவெளியின்றி ஜொலிக்கின்றன காற்று வெளியெங்கும் பூ வாசம் மனவெளியை மயக்குகின்றன வெளியினூடே வெளிச்சம் பாய்ச்சும் கிரணங்கள் முயங்கிக் கிடக்கின்றன பேரவஸ்தையானதொரு விசும்பல் ஆகாயமெங்கிலும் எதிரொலிக்கின்றன குட்டியை பறிகொடுத்த யானையின் பிளீறிடல் சத்தம் வனமெங்கிலும் ஆக்ரமிக்கின்றன இரவுக்கு முத்தம் தந்து வழியனுப்பி வைக்கின்றன குழந்தைகள் தனது வாழ்வினூடே குட்டி குட்டி கதைகளை சேகரித்து வைத்திருக்கின்றார்கள் பாட்டிமார்கள் அநீதியை எதிர்த்து சமர் செய்யாமல் கையறு நிலையில் நின்று கொண்டிருந்தார் கடவுள் அவரது கட்டற்ற அற்புத சக்தியை கடன் வாங்கிப் போயிருந்தான் சாத்தான்.                                 கைவிடப்பட்ட உலகம்   மோட்ச தேவதைகளுடன் கடவுள் பேசிக்கொண்டிருந்தார் தமது குமாரரர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை அவர் ஒரேயொரு வேண்டுகோள் வைத்தார் தோட்டத்திலொரு மரத்தில் காய்க்கும் பழங்களை புசிக்காதீர்கள் என்பது தான் அது இருவருக்கும் மூன்று வேளை உணவு கிடைக்கச்செய்தார் தான் உருவாக்கப் போகும் கடவுளர் பூமியைப் பற்றி கனவு பல கொண்டிருந்தார் மனுஷகுமாரரர்கள் சொர்க்கத்தில் என்றென்றுமாய் நிலைத்திருப்பர் என்று நினைத்திருந்தார் காலன் கால் பதிக்காத இடம் இது என்று பெருமிதம் கொண்டார் கடவுளின் சந்தோஷம் சில காலம் கூட நீடிக்கவில்லை ஆதாம் அறிவுப்பழம் உண்டதால் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டான் அந்த துன்பியல் சம்பவத்தை எண்ணி சுவர்க்கத்தில் கடவுள் சிந்திய கண்ணீர்த் துளி பூமியில் மழையாகப் பெய்தது.                       ராணித் தேனீ   இதோ பொன் விடியல் என்றார்கள் தரித்திரம் ஓடோடிவிட்டதென்று கண் பார்த்து பொய் சொன்னார்கள் கையில் வெற்றுப் பாத்திரத்தை கொடுத்து அமுத சுரபி போல் அன்னம் குறையாமல் சுரக்கும் என்றார்கள் வீட்டிற்கு எலும்பும் தோலுமாய் தோற்றமளிக்கும் பசுவை கொண்டு வந்து காமதேனு போல் பால் கொடுக்குமென்றார்கள் ஏதோவொரு இலைகளை பறித்து வந்து நல்ல பாம்பின் விஷத்தை முறிக்குமென்றார்கள் பித்தளை தகட்டை வைத்து பத்து நாள் பூஜை செய்து ரத்தம் கொடுத்து படைத்தால் பூமிக்கடியில் புதையல் கிடைக்குமென்றார்கள் பத்தாயிரம் கொடுத்து பரிகாரம் செய்தால் பத்து மாதத்தில் பிள்ளை தொட்டிலில் வீறிட்டழும் என்றார்கள் இப்படி விதவிதமாக ஏமாற்றும் அவர்கள் தேனீக்களில் ராணித் தேனீ போன்றிருக்கவே என்றும் ஆசைகொண்டார்கள்.                                   மர்மத்தின் முடிச்சு   மீன் கதைத்தது கடல் என்றால் என்னவென்று தனது மூதாதையர் அறிந்த ஒன்றை தான் ஏன் அறியவில்லை என அந்த மீனுக்கு ஞானம் வந்தது பார்ப்போரை எல்லாம் கேட்டது அவர்கள் தாங்களும் கேள்விப்பட்டிருப்பதாகவும் அறிந்ததில்லை அதனை உணர்ந்ததில்லை அந்த மர்மத்தின் முடிச்சு இதுவரை அவிழவில்லை என்று பகன்றனர் சமுத்திரம் சற்றே சிரித்தது அது ஆயிரம் அர்த்தம் பொதிந்தது கடலுக்குள் மீனிருக்க அது கடல் என்ற உணர்விலிருக்குமா? ஆழி சூழ் உலகில் ஆண்டவனைத் தேடும் ஆத்திகனின் நிலை அம்மீனுக்கு.                               குழந்தைகள் பெண்கள் ஆண்கள்   வானம் முறுவளித்து தனது சோர்வை வெளிக்காட்டியது பூமி, ஒரு வெற்றிடம் தனது வாழ்வில் தோன்றியிருப்பதை உணர்ந்து கொண்டது காற்று சுழன்று சுழன்று உன்னதத்தைத் தேடியது மழை மண்ணை முத்தமிடுவதற்கு முதல் முறையாக அலுத்துக் கொண்டது நதி வெள்ளம் கடலில் கலந்து தனது சுயத்தை இழக்க விரும்பவில்லையென பிடிவாதம் கொண்டது அக்னி சாட்சியாக நடைபெறும் அனைத்தும் உண்மையானதல்லவென்று நெருப்பு உணர்ந்து கொண்டது அவ்வப்போது சீற்றம் கொள்வதும், உள்ளிழுப்பதும் கடலுக்கு வாடிக்கையானது குழந்தைகள் உலகத்தை புரிந்து கொள்ளாத மானுடத்தால் வாழ்க்கை தன் சுவாரஸியத்தை முற்றிலும் இழந்தது.                       குழந்தைகள் உலகம்   குழந்தைகள் உலகம் தனது நுழைவாயில் கதவுகளைத் திறந்து குதூகலத்துடன் என்னை வரவேற்றது அங்கே ஆனந்தமும், ஆச்சர்யங்களும் ஒவ்வொரு மணற்துகள்களிலும் பரவிக்கிடந்தன காற்றலைகளில் மழலைச் சிரிப்பொலி தேவகானமாய் தவழ்ந்து கொண்டிருந்தது மோட்ச சாம்ராஜ்யம், தனக்குத் தேவதைகளாக குட்டி குட்டி அரும்புகளை தேர்ந்தெடுத்திருக்கின்றது அங்கு ஆலயம் காணப்படவில்லை அன்பு நிறைந்திருக்கின்றது காலம் கூட கால்பதிக்கவில்லை அவ்விடத்தில் சுயம் இழந்து நானும் ஒரு குழந்தையாகி மண்டியிட்டு அவர்கள் முன் நிற்கின்றேன் அந்தக் கணத்தில் மரக்கிளையொன்று முறிந்து விழுகையில் அதைக் கொண்டு இன்னொரு விளையாட்டு ஆரம்பமாகிவிடுகிறது எங்கு நோக்கினும் முடமாக்கப்பட்ட பொம்மைகள் உடைந்த பந்துகள் கிழிந்த காகிதக் குப்பைகள் சேற்றுக் கறை படிந்த சுவர்கள் களங்கமில்லா அரும்புகள் எனக்கு கற்றுத் தந்தது இவைகள் வீட்டிற்குத் திரும்பியதும் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த அலமாரி பொருட்களையெல்லாம் ஒன்றுவிடாமல் கலைத்துப்போட்டேன், தரையில் விசிறி எறிந்தேன் ஏக்கத்தோடு ஊஞ்சலின் மீது அமர்ந்தேன் எனது வீட்டை அங்கீகரிக்குமா குழந்தைகள் உலகம் - என்று யோசனை செய்தபடி...                                                                                 பொய்யாகிப் போன ஒரு பொழுது   கோபம் கொண்ட அம்மா முன்பு நடுநடுங்கியது அவனுடல். பயத்தில் தொண்டையிலிருந்து குரல் வெளிவரவில்லை. மனம் மட்டும், என்ன காரணம் சொல்வது என்று ஏற்கனவே முடிவுசெய்தானோ அதனை ஒருமுறைக்கு இருமுறை சொல்லி, ஒத்திகைப் பார்த்துக் கொண்டது. படிப்பதற்கு ஒத்துழைக்காத மனம் இப்போது அந்நிகழ்வை கூர்மையாய் கவனித்து தன்னுள்ளே குதூகலித்தது. அந்த இக்கட்டுலிருந்து மீள பொய் சொல்வது ஒன்றே வழி என அவன் உள்ளத்தில் தீர்மானம் பிறந்தது இவ்வாறாக பால்யத்திலேயே பொய் சொல்லும் பழக்கம் அவனை சர்ப்பமாய் சுற்றிக்கொண்டது பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் அது மெய் - என்ற கோயபல்ஸ் தததுவத்தை அச்சிறுவயதில் அறியாத போதும் பொய்கள் அவனை நிழலாய் பின் தொடர்ந்தன... அம்மா மரணமடைந்த பொழுது அவனுடைய பொய்களின் எண்ணிக்கை வெகுவாக கூடியிருந்தது அவன் தனது நாவினால் வெளிப்படுத்திய பொய்களின் பாரத்தை தாங்கிக்கொள்ள இயலாமலேயே தனது அன்னை இறந்தாலோ என எண்ணி எண்ணி அவனுடல் குலுங்கியது, அவனுள்ளம் குமுறியது. அன்றைய தினம் மயானத்தில் தாயின் சிதைக்கும் அவனது பொய்களுக்கும் சேர்த்தே கொள்ளிவைத்தான். சாபம்   வெள்ளம் பார்ப்பது அபூர்வமாய் இருக்கிறது பருவம் தப்பி மழை பெய்கிறது குளிர் காலத்தில் விஷப்பனி வேறு கத்திரியில் கொளுத்தி எடுக்குது வெயில் வெகுஜனம் வாழப்பழகிவிட்டது சம்பிரதாயங்களுக்கும், சடங்குகளுக்கும் மீண்டும் முக்கியத்துவம் கிடைத்துவிட்டது அமிர்தத்தை பங்கிட்டு கொடுக்க விருப்பமில்லாத தேவர்களுக்கு யாகத்தின் பலன் போய்ச் சேருகிறது நியதியும், நியமங்களும் சரியாக நிறைவேற்றப்படுகிறதா என யார் பார்த்துக் கொண்டு இருப்பது குருச்ஷேத்திர யுத்தம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது சர்ப்பத்தின் சாபம் தான் கிருஷ்ண பகவானின் உயிரைப் பறித்தது.                                     தடாகம்   தடாகத்தை நீரின்றி பார்க்க என்னவோ போல் இருக்கிறது உங்கள் கண்ணுக்கு அகப்படவில்லையா அந்த ரெட்டை வால் குருவி புறணி பேசுபவர்களுக்கு எப்படி விஷயங்கள் கிடைக்கின்றன இன்று இல்லாவிட்டால் இன்னொரு நாள் பெயர் வைப்பது முதற்கொண்டு எல்லாவற்றையும் நாள் நட்சத்திரம் பார்த்துத்தான் செய்கிறார்கள் மதில் சுவரில் ஒரு மைனா இறகு கோதிக் கொண்டிருக்கிறது காலச் சக்கரம் எல்லாவற்றையும் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.                                                   யூகம்   கதவை திறப்பதற்கு முன்பே யூகித்து விடுகிறீர்கள் வந்திருப்பது இவர்கள்தானென்று இந்தக் காற்று என் நகலை எடுத்துக் கொண்டு எங்கோ பறக்கிறது எந்த வரிசையில் நிற்பது  என யோசித்துக் கொண்டிருக்கையில் என்னை அவசரமாய்க் கடந்து செல்கிறது மக்கள் கூட்டம் மூடிய கைகளில் ஒன்றுமில்லையென விரித்தவுடன் தான் தெரிகிறது தன் முன்னே வந்து நிற்பவர்களின் அழகை அள்ளிப் பருகுகிறது இந்த நிலைக்கண்ணாடி இப்படியா அப்படியா என யோசிப்பதிலேயே வாழ்க்கை விரயமாகிக் கொண்டிருக்கிறது.                                                 எல்லோருக்குமாக   இந்த நாளை எங்கிருந்து தொடங்குவது இரவு நேர படுக்கையறை விஷயங்கள் ஞாபகத்திற்கு வரலாம் விடியலில் சாத்தான் கடவுளானதால் வானொலியின் பக்திநேரத்தில் இறைவனைத்  துதிக்கும் பாடல்கள் இடம்பெறலாம் கட்டழகோடு கூடிய சிவப்பு நிற பெண் இந்த நாளுக்கு உரிய பலாபலன்களை சிரித்த முகத்தோடு தொலைக்காட்சியில் சொல்லலாம் தேனீர் அருந்திக் கொண்டே நாளிதழைப் புரட்டலாம் பாதி தூக்கத்திலிருந்து விடுபட அலுப்பு தீர குளிக்கலாம் மனப்பேயை சகித்துக்கொண்டிருக்கும் தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டி நெற்றியில் விபூதி பூசிக் கொள்ளலாம் அலுவலகத்தில் ஏ.சி அறையில் உட்கார்ந்து கொண்டு பேஸ்புக்கில் நுழையலாம் சகபணியாளர்களுக்கு முகமன் சொல்லிவிட்டு அன்றைய அலுவலில் மூழ்கலாம்.                           பிழைப்பு   இங்கேயே இருந்துவிடவா எனக் கேட்கிறேன் குலதெய்வம் கோயில் விபூதியை நெற்றியில் இட்டு ஊதுகிறாய் வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டைப் பிரிகிறேன் அவள் கழுத்தில் தொங்கும் மஞ்சள் கயிறு எனது இயலாமையின் வெளிப்பாடு பஞ்சத்தில் அடிபட்டது போல் பிள்ளைகள் படுத்துக் கிடக்கின்றன நைந்த புடவையின் முந்தானையால் கண்ணீரைத் துடைத்து விடுகிறாய் வெள்ளிக் கொலுசை காகித பொட்டலத்தில் மடித்து கைகளில் திணிக்கிறாய் வாழ்க்கை கடல் எங்கு நம்மை கரை சேர்க்கும் எனத் தெரியாமல் பேருந்தில் மொழி தெரியா ஊருக்கு பயணித்துக் கொண்டிருக்கிறேன்.                                       வாய்ப்பு   அந்த சொல் உச்சரிக்கப்பட்டுவிட்டது அப்போது நீ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாய் தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது தான் அந்தச் செய்தியை கேள்விப்பட்டேன் விரல்களின்றி மொக்கையாக இருக்கும் கைகள் அடிக்கடி நினைவுக்கு வந்தன கழிவிரக்கம் கொள்வதற்கு ஊனமாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை பள்ளிகளில் பென்சிலைக் களவாடியது ஏனோ ஞாபக அடுக்குகளில் வந்து போகிறது கவிதை எழுத ஆரம்பித்ததிலிருந்து மதுவில் நீந்துவதை மறந்திருந்தேன் எத்தனையோ ரட்சகர்கள் தோன்றினாலும் வாழ்க்கையை நேர்த்தியாக்க யாருக்கும் வழங்கப்படவில்லை மீண்டும் ஒரு வாய்ப்பு.                                               இதுவெனவே   நீர் எதற்காகும் குளிக்க துணி துவைக்க சாதம் வடிக்க தாகம் தணிக்க நெருப்பு எதற்காகும் வென்னீர் தயாரிக்க சமையல் தயாராக இருளை அகற்ற குளிரை விரட்ட காற்று எதற்காகும் சுவாசிக்க ஒலியலைகளை கடத்த நிலம் எதற்காகும் பயிர் விளைய மரம் வளர நதி பாய வெளி எதற்காகும் ககனவெளியில் சகலமும் அடக்கம் எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு இரவையும்,பகலையும் ஆடையாக உடுத்திக் கொள்ளும் கைம்பெண்ணாக உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை சம்ஹாரம் செய்து கொள்ளும்.                                       என்றானது எனது பெயர்   மனோவேகம் வேற்று கிரகத்துக்குக் கூட போய் வரலாம் இப்பயும் கூடவா அவன் கேட்டான் கடிவாளம் இல்லையென்று நான் சொன்னேன் விடை பெற்றுக் கொள்ளும் முன் முடிவில் மாற்றமில்லையா என அவன் கேட்கிறான் கவிதையை கடைசி வரியிலிருந்து ஆரம்பிக்க முடியுமா என்றேன் நான் நிழல்கள் கூட நம்மைப் போல் நடிக்கக் கற்றுக் கொண்டன என்றான் உனக்கு நாளை நேற்று போல் இருக்குமா என்றேன் நான் புஸ்தகம்,அகராதி,பேனா,சிகரெட் இவற்றோடு குடித்தனம் நடத்த முடியுமா என்றான் மரணம் மர்மமாக இருக்கும் மட்டும் விடுகதைக்கு பஞ்சமிருக்காது என்றேன் நான்.                               சுவீகாரம்   பொத்தி பொத்தி வளர்த்தாள் ஒன்று தறுதலையாகும் இன்னொன்று தமிழ் வளர்க்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள் அவளுக்கு வேண்டுமென்று ஒரு கவளம் சோற்றையாவது தட்டில் எடுத்து வைத்ததில்லை நாங்கள் வளர வளர சுமையை பகிராமல் மேலும் பாரமானோம் அவளுக்கு இரத்தத் திமிரில் வம்பை வீட்டுக்கு கொண்டுவர ஒரு நாளும் எங்களுக்கு பரிந்து பேசாமல் இருந்ததில்லை அவள் எந்த வேலையிலும் நிலைக்காது சொந்தமயாய் தொழில் வைத்தோம் ஒரு காசு வட்டியில் அசலையும் வட்டியையும் சேர்த்து சுமந்தாள் வாழ்க்கை யார் காலையும் வாராமல் விட்டதில்லை என்பாள் உணர்ந்து சொல்கிறாள் என்று உணராமல் வயிறு வளர்த்துக் கொண்டிருந்தோம் நாங்கள்.                                 என்னைப் போல் ஒருவன் என்னை யாரோ பின்தொடருகிறார்கள் எனக்கு பகைவரென்று யாருமில்லை கடன் வாங்கி கொடுக்காமல் இருந்ததில்லை எடுத்தெறிந்து யாரையும் பேசுவதில்லை அடுத்தவர் மனைவியை நிமிர்ந்து பார்ப்பது கூட இல்லை தீவிரவாதியோ என சந்தேகப்படுவார்கள் என்று தாடி கூட வைப்பதில்லை சர்ச்சைக்குரிய நாவல் எதையும் நான் எழுதவில்லை வெளிநாட்டுக்கு உளவறிந்து சொன்னதில்லை என் குழந்தையைத் தவிர வேறெந்த குழந்தையையும் தூக்கி கொஞ்சுவதில்லை அருகாமையில் எந்த குண்டுவெடிப்பும் நடக்கவில்லை எந்த ஒரு சித்தாந்தமும் என்னை ஈர்த்ததில்லை என்னைப் போல் ஒருவன் இருப்பானோ என்று தோன்றாமல் இல்லை.                                 பேதலி்ப்பு சுவாதீனமாகத்தான் இருக்கின்றேனா இல்லையா எனத் தெரியவில்லை பைத்தியக்கார விடுதியில் உள்ளவர்கள் மட்டும் தான் சித்தம் தெளிந்தவர்கள் போல் தோன்றுகிறது இந்தச் சமூகம் வலுக்கட்டாயமாக திணிப்பதை எல்லாம் நான் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் மரணத்திற்குப் பிறகு வாழ்வு இல்லையென்றால் வாழ்க்கை அர்த்தமிழந்து போய்விடுமல்லவா வாழும் போது தூற்றியவர்களை எல்லாம் இவ்வுலகம் இன்று ஏன் போற்றித் தொழுகிறது ஆராய்ச்சிக் கூடமான இவ்வுலகில் கருணை,தயை எல்லாம் ஏட்டில் தான் இருக்கிறது தூக்க மாத்திரைகள் நரம்புகளைச் சாகடிக்கின்றன அதனாலென்ன என்றோ ஒருநாள் சாம்பலாகப் போகும் உடல் தானே.                           கொடை கடல் பார்க்கவும் அலைகளில் கால் நனைக்கவும் ஆசைப்படாதவர் உண்டா அருவியின் முகத்துவாரம் இன்னும் அருமையாக இருக்கும் அல்லவா கங்கை,காவிரி,வைகை சமுத்ரநாயகனுக்கு எத்தனை நாயகிகள் தேங்கிய தண்ணீரை பார்க்கப் பிடிப்பதில்லை குளத்தில் நீந்தும் மீனுக்கு மார்க்கெட்டில் மவுசு அதிகம் ஏரியில் பறவைகள் கூட்டம், மக்களின் தாகத்தை தீர்க்கவும் பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கவும் நிறைஞ்ச மனசு வேணும் தோணி உண்டு ஓடையில் பயணிக்க நீங்கள் துடுப்பை வலிக்க வலிக்க உங்கள் ஜாதகத்தையே சொல்லும் ஓடை வானத்தின் கொடை தான் மக்களின் தாகத்தை தணித்துக் கொண்டிருக்கிறது.                               கூர் பாதசாரிகள் கவனத்துடனேயே சாலையை கடக்கிறார்கள் எந்த வாகனத்தில் சென்றாலும் கோயிலைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ள மறப்பதில்லை வெகுஜனங்கள் சீரூடை அணிந்த மாணவர்களின் மிதிவண்டி வேகமெடுக்கிறது பள்ளியை நோக்கி மின்வெட்டு,பெட்ரோல் தட்டுப்பாடு சகலத்தையும் எப்படி பொறுத்துக் கொள்கிறார்கள் சாமானியர்கள் வீட்டின் பெரும்பகுதியை ஆடம்பரப் பொருட்கள் தான் அடைத்துக் கொண்டுள்ளது வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற ஆங்கிலம் தான் இன்னும் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது இதிகாச நாயகர்களை கார்ட்டூன் பாத்திரமாக்கி கேலி செய்கிறார்கள் விட்டேத்தியாய் இருக்கும் வரை தான் வீட்டில் இருக்கலாம் போல.                         விகாரம் இந்த பாதை எங்கு போய் முடிகிறது விதி சகதியில் அமிழ்த்தி வெளியே தூக்கி எறிந்த போது பேரண்ட சக்தி தலைவிரி கோலமாய் தாண்டவம் ஆடியது மனிதர்கள் அருவருப்பு அடையும் போது தான் தெரிந்தது எனது கோர ரூபமும் விகாரமான என் ஜடாமுடியும் காலணி இல்லாமல் கத்திரி வெயிலில் நடந்தாலும் பாதங்கள் சூடு பொறுத்தது ஆனால் அன்றைக்கு மனம் சொல் பொறுக்கவில்லை ஏற்கனவே இறந்தவன் நடந்து செல்கிறேன் ஆழ்ந்த உறக்கத்தில் லயிப்பவன் பாடையில் போகிறான் வழிநெடுகிலும் எத்தனை கோயில்கள் அடியவர்களுக்கு சிவனாக மட்டுமே இருந்திருக்கலாம் சைவ நெறியை மீறாமல் நடந்திருக்கலாம் பிட்டுக்கு மண் சுமந்தவனிடமா பிச்சை கேட்பது பித்தனிடமா சகலத்தையும் ஒப்படைத்து சரணடைவது.       பிரேதம் புத்தகம் மூடியே கிடந்தது மேஜையில் காபி ஆறிப்போயிருந்தது ஆஸ்ட்ரேவில் சாம்பல் இல்லை இன்னும் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது அவளுக்கு உற்ற துணையாய் இருப்பேன் என்றேன் ஆனால் இதற்கு துணை வர முடியவில்லை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள மருத்துவரை அழைக்கலாமா என்று யோசனை எழுந்தது நான் இன்னும் உயிருடன் இருப்பது குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது எனது ஆன்மா பாதாள அறையில் சிறைபட்டுவிட்டது மீண்டும் அறைக் கதவை திறந்து உள்ளே சென்றேன் இத்தனை நாட்களாக வியாதி அவளை மென்று தின்று கொண்டு இருந்திருக்கிறது ஏன் எல்லா பாரத்தையும் தூக்கி சுமந்தாள் மரணம் நிகழாத வீடு இல்லை என்று இதற்காகத்தான் அடிக்கடி சொல்லி வந்தாளா விதி எனது வாழ்க்கையில் முற்றுப்புள்ளி வைத்தது இன்னும் சில மணி நேரங்களில் தீ அவளை தின்றுவிடும் அவள் புழங்கிய வீட்டில் வசிப்பது ஒரே ஆறுதலாக இருந்தது அழைப்பு வரும் வரை நாம் காத்திருக்க வேண்டுமா என மனதில் கேள்வி எழுந்தது!     கனவென்று தெரிந்திருந்தால் கிணற்று நீரில் நிலா பார்ப்போம் தண்ணீர் உனைப் பருகி தாகம் தீர்க்கும் குழலோசை செவியினில் இனிக்கும் கண்களுக்கு நீ எதிரில் வருவது மிகவும் பிடிக்கும் மரத்திலிருந்து விழுந்த பழுத்த இலையொன்று உன் மீது உரசியதால் தீப்பற்றி எரியும் வீதியில் நீ நடந்து வந்தால் வெண்மேகம் குடைபிடிக்கும் வரம் கொடுக்கிறேன் என்று கடவுள் நேற்று உன் வீட்டுக்கு வந்திருந்தாராமே கல்லூரியில் நீ வரலாறு படித்தாய் தெருவெல்லாம் நானல்லவா மரம் நட வேண்டியிருக்கிறது.                           பொம்மலாட்டம் சருகுகள் பாதையை மூடியிருந்தன பழுத்த இலைகள் தன்னை விடுவிக்கும் காற்றுக்காக காத்திருந்தன மொட்டைப் பனைமரத்தில் காகம் ஒன்று அமர்ந்திருந்தது வண்ணத்துப்பூச்சி வண்ணங்களை உதிர்த்துச் சென்றது வண்டுகளின வருகைக்காக பூக்கள் தவம்கிடந்தன திருட்டுக் கொடுக்க என்னிடம் காலணிகள் மட்டுமே இருந்தன அருவியில் குளிக்கிறார்கள் பணப் பித்து பிடித்தவர்கள் இல்லை என்பவர்கள் மீது ஒளிக்கிரணங்கள் படுவதில்லை உண்டு என்பவர்கள் வீட்டில் தீபங்கள் அணைவதில்லை பொம்மலாட்ட பொம்மைகள் எது செய்தாலும் தவறில்லை ஆட்டுவிப்பவன் கைகளுக்கு எது சரி எது தவறென்று தெரியவில்லை.                               மறுபக்கம் அடிக்கடி சமநிலை பாதிக்கும்படி சிந்திக்காதே வாழ்க்கை நீ நினைப்பது போல் கொடியதல்ல இலையைப் போல் இலகுவாக இருக்கமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை தண்ணீரைப் போலாவது சளசளத்துக் கொண்டிறேன் நமது திட்டப்படி எதுவும் நடக்காத போது அச்சாணி கழன்றதைப் போல் ஏன் தவித்துப் போகிறாய் மழையை எதிர்பார்த்திருக்க அது தூறலுடன் விடை பெற்றுக்கொள்வதை கவனித்திருக்கின்றாயா நாளைக்கான டைரிக் குறிப்பை இன்று யாராவது எழுத இயலுமா ரயிலில் பயணம் செய்பவர்கள் சுமைகளை தனது தலையிலா சுமந்து செல்கிறார்கள் சில சமயம் கேள்விகளுக்கு நாம் மெளனத்தை பதிலாகத் தருவதில்லையா நாளையின் ரகசியத்தில் யாராவது நுழைந்து பார்க்க முடியுமா.                 கல்லறை வாசகம் சாலையின் இருபுறமும் உள்ள பூக்கள் பேசிக்கொண்டன அவள் செளந்தர்யத்தில் மயங்காத ஆடவர்களே இல்லை என்றது முதல் பூ டாலடிக்கும் தோலுக்கு உள்ளே இருப்பது ரத்தமும், சதையும் தான் என்றது இரண்டாம் பூ எனக்கு மட்டும் உருமாறும் வித்தை தெரிந்தால் அவள் அணியும் காலணியாக மாறி காலடியிலேயே ஆயுள் முழுதும் கிடப்பேன் என்றது முதல் பூ அவள் இறந்தால் இந்தப் பாதையின் வழியாகத்தான் தூக்கி வருவார்கள் என்றது இரண்டாம் பூ பேரழகிகளை சாவு நெருங்குவதில்லை என்றது முதல் பூ மண் யாரையும் ருசி பார்க்காமல் விட்டு வைத்ததில்லை என்றது இரண்டாம் பூ.                           கோடம்பாக்கம் கனவுகளோடு வந்திறங்குகிறார்கள் கோடம்பாக்கத்துக்கு கம்பெனி படியேறி படியேறி செருப்பு தேய்ந்து போச்சி வாய்ப்புக்காக அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் ஏத்துக்க வேண்டியதாச்சி இழுத்தடித்த போது தான் சினிமான்னா என்னண்ணு புரியலாச்சி கற்பனைகள் வறண்டு போச்சி பசி மயக்கத்தில் கண்கள் இருட்டாச்சி வெறுங்கையா திரும்பிப் போனா ஊரு சனம் கிண்டல் பண்ணும் கனவுலக கனவுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு டீ கிளாஸ் கழுவி வயிற்றை நிரப்பலாச்சி சினிமா கம்பெனி முகவரியை விசாரித்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போச்சி இப்போது திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பதைக் கூட நிறுத்தியாச்சி.               வரும்போகும் முற்றத்தில் அடிக்கும் வெயிலும் பெய்யும் மழையும் இப்போது இல்லை ஓட்டிலிருந்து தேள் வந்து விழும் என்ற பயமுமில்லை குளியலறையை வசிப்பிடமாக்கிக் கொண்ட கரப்பான்பூச்சியைக் காணவில்லை வாங்கி வைத்த மாம்பழங்களை குதறிச் செல்லும் பெருச்சாளிகளின் தொல்லை இல்லை மழை பெய்தால் ஆங்காங்கே ஒழுகும் என்ற சிரமமில்லை வெளவாலுக்கு அடைக்கலம் தரும் இடமாக இல்லம் இனி இருக்கப்போவதில்லை இனி நெஞ்சை நிமிர்த்தி நடக்கலாம் எங்கள் வீடு ஓட்டு வீடு இல்லை மாடி வீடென்று.                         பங்குனிப் பெருவிழா ராட்சஸ ராட்டினம் ஐஸ்கிரீம்,வளையல் கடைகள் எல்லாம் உண்டு திருவிழா நடைபெறுகின்ற பதினெட்டு நாட்களுக்கு நடக்கும் அன்னதானத்துக்கு கூடும் கூட்டத்தால் கோயிலே அல்லோலஹல்லோலப்படும் ராஜகோபாலசுவாமிக்கு ஏற்றவளாகத்தான் வாய்த்திருக்கிறாள் செங்கமலத்தாயார் பங்குனிப் பெருவிழாவில் கண்ணனுக்கு வெண்ணெய்யை தின்னக் கொடுக்காமல் முகத்தில் அடித்து சந்தோஷப்படும் கோபிகைகள் கூட்டம் விழா முடிந்து பெருமானும், பிராட்டியும் ஊஞ்சல் ஆடுவதைப்பார்த்து ஆதிசேஷன் பொறாமைபடக்கூடும் ஏகாந்தமாய் இருக்கும் பெருமாளின் மனசு அன்னையாய் அணைவரிக்கும் தாயாரின் மனசு நெறைஞ்சி போய் கிடக்கும் மக்களின் மனசு.                             அப்பாவி காய்கறிகாரனிடம் பேரம் பேசுவதில்லை எதிர் வீட்டுக்காரனிடம் முறைத்துக் கொள்வதில்லை உறவுகளிடம் உரசிக் கொள்வதில்லை மளிகைக் கடை அண்ணாச்சியிடம் கடன் வைப்பதில்லை நடத்துனரிடம் மீதிச்சில்லரைக்காக சண்டையிடுதில்லை மாமனாரிடம் பணம் கேட்டு நச்சரிப்பதில்லை யாராவது கிண்டல் செய்தாலும் பதிலுக்கு அவர்களை நையாண்டி செய்வதில்லை இப்படி இருப்பதினாலேயே ஊரில் அவனுக்கு பெயர் அப்பாவியென்று.                                                           கழைக்கூத்தாடிச் சிறுவன்   எதற்காகவென்று தெரியவில்லை கண்ணீர் வந்தது சாலையோரத்தில் தன்னையே சாட்டையால் அடித்தடித்து வருவோர் போவோரிடம் காசு வாங்கிக்கொண்டிருந்தான் கழைக்கூத்தாடிச் சிறுவன் தினப்படி நடப்பது தான் இது இன்று என் செங்குருதி அவன் உடலிலிருந்து வழிந்தது.                                                       பிறழ்வு   எனது சுய ஒழுக்கம் பிறழ்வை சந்திக்கும் வேளைகளில் எனது செயலுக்காக நான்கு சுவர்களுக்குள் நானே வெட்கப்படும் தருணங்களில் வார்த்தைகளால் மனிதர்களை கொள்ளி வைக்கும் கணங்களில் ஒருவரது மனதில் ஆழ்ந்த நம்பிக்கையால் எழும்பிய அடித்தளத்தை வாதத்தால் உடைத்தெறியும் நாழிகையில் எனது சவப்பெட்டியில் அறைய பைநிறைய ஆணிகளை நானே சேகரிக்கின்றேன்!                                                   கேள்விக்குறி   எல்லா மனிதர்கள் முன்பும் ஒரு கேள்விக்குறி விடை தெரியாத புதிராகத்தான் விடிகிறது பொழுதுகள் ஆங்காங்கே ஆச்சர்யக்குறி தோன்றத்தான் செய்கிறது ஆனால் கேள்விக்குறியின் விஸ்வரூபம் முன்பு ஆச்சர்யக்குறி சுவடற்றுப் போகிறது வினாக்களுக்கு விடைகாண நேரமின்றி விரைந்தோடுகிறது நாட்கள் சற்றே அயர்வுற்று இளைப்பாறும் தருணங்களில் இதற்கென்ன தீர்வென்று எல்லா சிக்கல்களும் கேள்வி்க்குறியோடு மனத்திரையில் தோன்றி மறைகின்றன கேடயம் கூட கையில் ஏந்தாத என்னை கூர் வாளால் குத்திக் கிழிக்கின்றன உதிரம் வழிந்த பின்னர் கூட உணராதா நான் சாதாரண மானிடனென்று!                                       வானுக்கு கீழே அதன் வாழ்க்கை   கீழே குனிந்தவுடன் பின்வாங்கி ஓடும் நாம் கல்லைத்தான் தேடுகிறோம் என்று நினைத்து நேருக்குநேர் அதன் கண்களை சந்தியுங்கள் புனிதப் போருக்கே தயாராகும் அந்த நாய்கள் எதையுமே அதன் கண்களால் காணமுடியுமென்பதால் அது எதையுமே கண்டு ஆச்சர்யம் கொள்வதில்லை வெட்கம் கொண்டு, மனிதர்களைப் போல் அது காமத்தைக் கூட மூடி மறைப்பதில்லை வானுக்கு கீழே அதன் வாழ்க்கை திறந்த புத்தகமாய்... சுவர்களுக்கு மத்தியில் தங்களை மறைத்துக் கொள்ளும் மனிதர்களைக் கண்டு எள்ளி நகையாடுகின்றன வீதியில் படுத்துறங்கும் நாய்கள்.                                     குருக்ஷேத்திரம்   மக்களின் பேச்சுக்களை சட்டை செய்யக் கூடாது அடுத்தவருக்காக நாம் அரிதாரம் பூசக் கூடாது வார்த்தைகளா வேண்டும் விழிகள் சொல்லிவிடாதா காதலை வயது ஏற ஏற உடலே பாரமாகிறது சங்கோஜப்படாமல் பேனை பெருச்சாளி என்று எப்படி பேசுகிறார்கள் வார்த்தைகளால் தான் வம்பு வளருகிறது தன்னை முட்டாள் என அறிந்தவனே ஞானியாகிறான் வாழ்க்கைப் புத்தகத்தில் எனது பக்கங்களைக் காணவில்லை மண்வாசனைக்கு ஏதோ மகத்துவம் இருக்கிறது உள்ளே தான் இருக்கிறது குருக்ஷேத்திரம் நாம் யாரும் பாண்டவர்கள் இல்லை.                                           முகப்பு   கொஞ்சம் பொறுங்கள் மெல்ல முணுமுணுத்துக் கொள்ளுங்கள் உங்களது பிரார்த்தனையை வேறொருவர் கேட்டுவிடக் கூடும் திரும்பப் பார்த்துக் கொண்டே செல்லுங்கள் உங்களை யாரேனும் பின்தொடரக் கூடும் எதையும் திருடாதீர்கள் உங்களிடமிருந்து அதே பொருள் களவாடப்படும் எதையும் உழைத்தே பெறுங்கள் வாழ்க்கை நகரும் படிக்கட்டல்ல அடுத்த அடியை நாம் தான் எடுத்து வைக்க வேண்டும் கூடியவரை உண்மை பேசுங்கள் வயதாக வயதாக பொய்களின் பாரத்தை தாங்க மாட்டீர்கள் உபதேசங்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பாதீர்கள் வாழ்க்கையே கடவுள் வாழ்ந்து பாருங்கள்.                                               குறிப்பு   அழகான மனைவி அமைந்தால் அவஸ்தை தான் அவளுடைய கைபேசியை சோதனை செய்யத் தோன்றும் தொலைக்காட்சியில் அவள் அஜித்தை பார்த்தால் சங்கடம் தோன்றும் இவ்வளவு அழகானவளை கல்லூரியில் காதலிக்காமலா விட்டிருப்பார்கள் என்று யோசிக்கத் தோன்றும் உங்களை டி.வி.யில் பார்த்திருக்கிறேனே என்று யாரேனும் அவளிடம் கேட்டால் எரிச்சல் தோன்றக் கூடும் பொது இடங்களுக்கு அவள் கூட செல்ல தயக்கம் தோன்றக் கூடும் கொடுத்து வைத்தவன் என அவன் காதுபடவே பேசினால் சொன்னவனை கொலை செய்யத் தோன்றும் பரிசுத்தமாக அவள் இருந்தாலும் மனம் சாக்கடையை நாடி ஓடும்.                                         வரைமுறை   நீங்கள் தயங்கி நின்றால் உங்கள் திருவோட்டில் காலணா கூட விழாது நீங்கள் கூச்சம் கொண்டால் நான்கு பேருக்கு மத்தியில் உங்கள் தரப்பை வாதிட இயலாது நீஙகள் சந்தேகம் கொண்டால் மனைவியை சித்ரவதை செய்வது தீர்வாகாது நீங்கள் பேசாமல் நின்றால் உங்கள் தரப்பு வெற்றி பெறாது நீங்கள் வெட்கம் கொண்டால் அடுத்த அடி கூட எடுத்து வைக்க இயலாது நீங்கள் செல்லும் வழி சத்தியம் வெற்றிபெற வழிவகுக்காது நீங்கள் இரக்கம் கொண்டால் சுற்றியிருக்கும் மிருகங்களை வேட்டையாட இயலாது உங்களிடமுள்ள கருணையை தானமாக பெற்று உங்களை இறைவன் வீழ்த்தியது மறுபிறவியிலும் மறக்காது.                                           முள்     சம்பளம் வாங்கும் செவிலியர் பணி தான் தாய் போல கவனித்த அவளுக்கு என்ன சன்மானம் அளிப்பேன் தாய்மை குழந்தைப் பேறு சம்பந்தப்பட்டது அல்ல பயிற்றுவிக்கப்பட்டு வருவதில்லை அது மனமொன்றி வேலை செய்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் கடலில் நீச்சலடித்தவர்கள் எந்த வெள்ளத்தையும் சமாளித்து விடுவர் தான் பலனடைய மாட்டேன் என்று தெரிந்தும் விதையிடுவது அபூர்வம் தான் திருமண ஒப்பந்தம் சிநேகிதர்களாக நடக்கக் கூடவா வேண்டும் விதை முளையிடுவதற்கு மண் மனதுவைக்க வேண்டும் வாழ்க்கை சதுரங்க ஆட்டமல்ல சிப்பாய்கள் காவலிருக்க வாக்கப்பட்டவளுக்கு தெரிய வேண்டும் சிலுவை பாரமென்று.                                     பதிவுகள்   பொறுத்திருங்கள் உங்களுக்கான அழைப்பு வரும் வரை பொறுத்திருங்கள் வாடிக்கையாளர் வேறொரு அழைப்பில் உள்ளார் பொறுத்திருங்கள் உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை பொறுத்திருங்கள் உங்கள் படைப்பு பரிசீலனையில் உள்ளது பொறுத்திருங்கள் காத்திருப்போர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளது பொறுத்திருங்கள் உங்கள் மனு விசாரணைக்கு வரும் வரை பொறுத்திருங்கள் உங்கள் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் இல்லை பொறுத்திருங்கள் அலுவலகத்தில் துரித கதியில் பணிகள் நடைபெறாது பொறுத்திருங்கள் முதலில் நீங்கள் வன்முறையை பிரயோகிக்காதீர்கள் பொறுத்திருங்கள் நாங்களே உங்களைத் தொடர்பு கொள்கிறோம் பொறுத்திருங்கள் முடிவு தெரிய காலதாமதமாகலாம் பொறுத்திருங்கள் அதிர்ஷ்டக்காற்று உங்கள் பக்கம் வீசக்கூடும் பொறுத்திருங்கள் வேறொரு சந்தர்ப்பம் உங்களுக்கு வாய்க்கக்கூடும் பொறுத்திருங்கள் நீதிதேவதை கண்கள் திறக்கும் வரை பொறுத்திருங்கள் கடவுள் உங்கள் பிரார்த்தனையை செவிமடுக்கக்கூடும் பொறுத்திருங்கள் உங்களுக்கு வாழும் ஆசை உள்ளவரை சாக மாட்டீர்கள்.                     கோஷம்   அழகான பெண்களுக்கு கணவனாக வரம் வாங்கி வர வேண்டும் ரஜினி கிராப்புக்கு பின்னே ஒளிந்திருக்கும் சோகக் கதை வேட்டி சட்டை ஏதேவொரு இயக்கத்தில் ஐக்கியமாகிவிட்டான் என்பதை உணர்த்தும் ஓடுகிற பேருந்தில் ஏறுவது தான் ஹீரோயிஸம் டிக்கெட் எடுக்காமல் பஸ்ஸில் பயணித்தால் கல்லூரியே அவனை மெச்சும் சபரிமலைக்கு மாலைபோட்டால் ஊரே சாமி என்றழைக்கும் உள்குத்து நடவடிக்கையில் ஈடுபட்டால் தான் கட்சிப் பதவி கிடைக்கும் பேனரில் எக்குத்தப்பாக எழுதினால் தான் பயபுள்ள மதிக்கும் பொது ஜனம் இறுதி வரை கொடி பிடித்து கோஷம் போட்டே காலம் கழிக்கும்.                                   வனவாசம்   உங்களுக்குத் தெரியுமா அனுமன் பற்ற வைத்த தீ லங்கையில் இன்னும் எரிந்து கொண்டிருப்பதை இராமனின்  நிழலாய் இருந்த இலக்குவனை சீதை ஏன் சந்தேகப்பட்டாள் என்று மாய மானை தேடிச் சென்ற இராமன் எப்படி மாயமானான் என்று இராமன் மீது மோகம் கொண்ட சூர்ப்பனகை ஏன் மூக்கு உடைபட்டாள் என்று சத்திய சொரூபனான இராமன் ஏன் வாலியை மறைந்திருந்து வதம் செய்தானென்று எவ்வளவு பேருக்குத் தெரியும் இராமனின் வனவாசத்துக்கு காரணம் கைகேயி தான் என்று தசரதனைக் கேட்க வேண்டும் கூனியின் தந்திரம் எப்படி செல்லுபடியானதென்று சீதைக்கு கிடைத்தது போன்று எத்தனை பேருக்கு வாய்க்கும் ஜீவனைத் தேடி பரமன் ஓடிவரும் பாக்யம் கண்டேன் சீதையை என்று கணையாழியைக் காட்டியதும் இராமன் கண்ணீர் வடிப்பானென்று அனுமன் ராம நாமத்தை சொல்லியபடியே எப்படி கடலைக் கடந்தான் என்று அவதாரம் கடல் தாண்ட சேதுப்பாலம் ஏன் கட்ட வேண்டி வந்ததென்று.                     நாளும் கோளும்   இந்த முயலகனை மிதித்துக் கொண்டே இருக்கிறான் சிவபெருமான் தூரத்தில் தெரியும் மலைகளிலெல்லாம் குடிகொண்டிருக்கிறான் முருகப்பெருமான் ராட்சசி போல் பலி கேட்கிறாள் கோர முகத்துடன் அருள் பாவிக்கிறாள் தில்லை காளி கோதையர்களிடம் விளையாடிக் களிக்கிறான் குருவாயூர் கிருஷ்ணன் சமரில் வெற்றியைத் தேடித் தந்தவன் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறான் திருப்பதியில் நாமம் தரித்து பிசினஸ் சாமி ஆகிப்போனான் அம்மை போல் அழகி கேட்டான் வீதியாய் வீதியாய் பெண்களை  பார்த்துச் சலித்தான் விநாயகப் பெருமான் புலிப்பால் கொண்டுவந்தான் அன்னைக்காக இருமுடி  கட்டுவோருக்கு வரமருள காத்திருக்கிறான் சபரிமலையில் சாஸ்தா சாமத்தில் உலாவப் போவான் கொடை கொடுத்தால் குடியைக் காப்பான் பதினெட்டாம்படி கருப்பசாமி எல்லையம்மனின் காவலை மீறி ஊர் எல்லையில் கால் வைக்க முடியாது ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத நவகிரகங்கள்தான் உலகை ஆள்கிறது.               காத்திருப்பு   நாடி தளர்ந்து  போய் விட்டது காலண்டர் தேதியை கிழிக்க கிழிக்க விடைபெறும் நாள் வெகுவிரைவாக என் வாசலை வந்தடையப் போகிறது என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது எல்லோருடைய காலிலும் விழுவது சாத்தியமில்லாததால் பாதிரியாரின் காலில் விழுந்து பாவமன்னிப்பு கோரினேன் மஞ்சள் வெயில் இன்னும் சற்று நேரத்தில் சூரியன் அஸ்தமனம் ஆகப்போவதை உணர்த்துகிறது அந்தியில் கூடடையும் பறவைகள்  போல நான்கு சுவர்களுக்கு மத்தியில் விட்டம் பார்த்தபடி உறங்க வேண்டி இருக்கும் அறுதலிப் புறாக்கள் பார்வையில் படுவது ஆபூர்வம் நான் இங்கே கழுதையாய் கத்திக்கொண்டு இருக்கிறேன் எத்தரப்பு வாதத்தையும் கேட்காமல் எள்ளி நகையாடுகிறான் இறைவன்.                               விடியல்   சித்தம் சுவாதீனம் இல்லை அவருக்கு நீங்களெல்லாம் இருப்பீர்கள் நான் மட்டும் சாகணுமா என்பார் இதுநாள் வரை துக்க வீட்டுக்கு ஒரு முறை கூட சென்றதில்லை அவர் எல்லாரும் ஏன் என்னை சாகச் சொல்றீங்க என்று கூச்சலிடுவார் மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் தவிப்பார் கனவிலிருந்து விழித்தெழுந்து மருள மருள விழிப்பார் கடவுளாவது கண்றாவியாவது என்பார் அவர் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கைகளை படிப்படியாய் இழந்தார் வாழ்க்கைக் காற்று எதிர்த்து நிற்பவர்களை வேரோடு சாய்த்துவிடும் என்று தனது இறுதிநாளில் உணர்ந்தார்.                                         இன்னும் கொஞ்சதூரம் தான்   இவனை என்ன செய்வதென்றே தெரியவில்லை இவன் போக்கில் போனால் நமக்குத்தான் அசிங்கம் டாஸ்மாக் திறக்கும் முன்பே போய் நிற்பவனை என்ன செய்வது என்ன கிழமை இன்று என்று கேட்டுப்பாருங்கள் அவனை வாழ்க்கைப் பந்தயத்தில் ஒதுங்கி நிற்பவனைப் பார்த்து ஊர் பரிகசிக்காது வாழ்க்கை ஒரு வாய்ப்பு என்று எப்போது உணர்வான் தோன்றி மறைந்தவர்கள் தான் பெரும்பாலோர் கல்வெட்டு போல் நிலைத்தவர்கள் எத்தனை போ் இதெல்லாம் நினைத்துப் பார்கின்றானா அவன் பாம்பின் விஷத்தால் பாம்புக்கு கெடுதலில்லை நடைபோடு இடுகாட்டுக்கு இன்னும் கொஞ்ச தூரம் தான்.                                         அகராதி   நண்பா எனக்கு கவிதை வருகிற அளவுக்கு கணக்கு வராது வங்கிக் கணக்கு எனக்கில்லை வருவாயும் இல்லை அண்டிப் பிழைப்பவனுக்கு தன்மானம் எதற்கு கவிஞனுக்கும் காசு தேவையாய் இருக்கிறது வயிற்றுப் பாடுதான் தகிடுதத்தம் செய்ய வைக்கிறது வேறெப்படியும் பிழைக்கலாம் எழுதிப் பிழைக்க நினைப்பவன் வீட்டின் அடுக்களையில் பூனை தான் உறங்கும் சாகிற வரை பிறருக்கு பாரமாய்த்தான் இருக்க வேண்டும் போலிருக்கு தமிழை அருளியவனே ஆண்டியாய் நிற்கும் போது தமிழில் எழுதுபவன் எம்மாத்திரம்.                                         காண்டீபம்   இந்தக் கைகள் ஓய்ந்துபோம் இந்த மனசு லேசுபட்டதில்லை உடலில் எங்கேயாவது காயம்பட்டால் அழும் மற்றவருக்கு குழிபறிக்க ஆளாய்ப் பறக்கும் மாற்றான் மனைவிக்காக ஏங்கித் தவிக்கும் காசு பணத்துக்காக கூட்டிக் கொடுக்கும் அடுத்தவர் பணத்தைக் களவாடி குற்றவுணர்ச்சி இல்லாமல் செலவழிக்கும் ஆளுக்கு ஏற்றபடி நன்றாய் நடிக்கும் செல்வந்தனிடம் நயமாகப் பேசி காரியத்தை சாதிக்கும் அதுவரை சாத்தானுக்கு ஏவல் செய்த மனது உடல் படுக்கையில் விழுந்த பின்பு தான் கடவுளைப் பற்றி நினைக்கும்.                                                 விடம்   வாழ்க்கை இப்படியே கழிந்துவிடுமோவென கவலையாய் இருக்கிறது இந்த மனசாட்சி பண்ணுகிற தொல்லை தாங்கமுடியவில்லை சித்தன் போக்கு சிவன் போக்கு ஆனாலும் பசிக்கிறதே தான் ராமனாக இல்லாவிட்டாலும் தனக்கு வாய்த்தவள் சீதையாக இருக்கவேண்டுமென்ற எண்ணம் கொண்டவன் நான் பதிவிரதைகளுக்குத் தான் சிலை வைப்பார்கள் இதை நான் எடுத்துச் சொல்லியும் வேலி தாண்டத்தான் பார்க்கிறாள் அவள் என் வாதத்தையெல்லாம் எடுத்து வைத்த போதும் உன் உதட்டுச் சுளிப்பு எனக்கு வேதனையைத் தருகிறது ஆணியைச் சேகரித்துக் கொண்டேயிரு என் கல்லறையில் அறைவதற்கு அங்கேயாவது என்னை நிம்மதியாக உறங்கவிடு பரலோகத்தில் திறக்கப்படாமல் திருப்பியனுப்பப்பட்டவளை தேடி அலைகிறேன் நான்.                                           ஆகமம்   வீணான ஆசைகள் மனதில் அலைமோதிக் கொண்டு இருக்கிறது வரும்படி சொற்பம் தான் என்றாலும் அது கையில் கிடைத்தவுடன் செலவாகிவிடுகிறது மாசக் கடைசியில் செலவுக்கு என்ன செய்வது என்ற மனஉளைச்சலில் உடலை மழை நனைப்பது கூட தெரியாமல் போனது ஆடம்பர செலவு இல்லைதான் அப்படியும் கட்டுப்படியாகமாட்டேன் என்கிறது மொய் எழுதாமல் சுபநிகழ்ச்சிக்குச் சென்று சாப்பிட்டு வருகிறேன் வயிற்றுப்பாட்டுக்கு வேறென்ன செய்வது கிழிந்த சட்டையுடன் அலைவது என்னை அடையாளங் காட்ட போதுமானதாக இருந்தது இவனது கையாலாகாத தனத்தால் கட்டியவளின் தாலிகூட புஸ்தகமானது சோறு என்று காகிதத்தில் எழுதினால் அதை தின்ன முடியாது செல்லாக் காசுக்கு இருக்கும் மதிப்பு கூட சமூகத்தில் கவிஞனுக்கு இருக்காது.                                 கற்பிதம்   வெற்றுக் காகிதங்களில் என்னை நிரப்புகிறேன் உடனே அது தீப்பற்றி எரிகிறது துர்சம்பவங்களின் போதெல்லாம் எனது முழுமையின் ஒருபாதி அழிகிறது மற்றவர்களுக்கு நிகழாதது எனக்கு நிகழும்போது அது பைத்தியத்தின் உச்சநிலையாகப்படுகிறது என்னை ஒருமையில் அழைக்கும் போது எனது நிழல் திரும்பிப் பார்க்கிறது என்னால் தோற்கடிக்கப்பட்டவர்கள் கடவுளாகிப் போனார்கள் என்னால் தோற்கடிக்கப்படாதவர்கள் இன்றென்னை ஆள்கிறார்கள் இன்னாரென்று அறிமுகப்படுத்திக் கொள்வதே எனக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்னைத் தவிர எல்லாருமே  ஜெயிக்கப் பிறந்தவர்களாக தெரிகிறார்கள் வாழ்வுப் பாதையில் வழிதவறிப் போனவர்கள் என்னை ஏன் தேடுகிறார்கள்.                                     மண்டபம்   தான் உலகைப் படைத்ததற்கு சாட்சியாக உள்ள தடயங்களை அழித்துக் கொண்டிருந்தார் கடவுள் ஏதேன் தோட்டத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவர் படைப்பதற்கு ஆறு நாட்கள் எடுத்துக்கொண்ட கடவுள் உலகை அழிப்பதற்கு திணறிக் கொண்டிருந்தார் தங்களைக் கைவிட்ட தேவாலயங்களைப் பூட்டிவிட்டு சாத்தானை நாடினர் ஆதாமின் சந்ததிகள் ஆதியில் ஒரு நாள் கடவுள் ஆணைப் படைத்தார் தனது மகனுக்கு அறிவைத்தவிர அனைத்தையும் அளித்தார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சாத்தான் ஆணை அழிப்பதற்காக வேண்டியே பெண்ணைப் படைத்தான் அவளின் மூலமாகவே ஆதாமிற்கு அறிவுக்கனியைக் கொடுத்தான்.                                                 வாக்குறுதி   விடைபெறும் நேரத்திலாவது சொல்லிவிடு உன் அபிப்ராயங்களை உன் மனக்குமுறல்களை உன் எதிர்பார்ப்புகளை உன் வேண்டுதல்களை உன் பயங்களை உன் குறுக்கீடுகளை உன் எண்ணங்களை உன் முடிவுகளை உன் நிராகரிப்புகளை உன் தேவைகளை உன் நியதிகளை ஒருதலைபட்சமாக தீர்ப்பெழுதுவதற்கு முன்பு இதையெல்லாம் சொல்லிவிடுவது உனக்கு நல்லது.                                                             பதுமை   உனக்கு என் சொற்களின் மேல் நம்பிக்கை இல்லை நான் செய்யும் எச்சரிக்கைகளை கண்டுகொள்வதில்லை நீ உன் நம்பிக்கைக்கு விரோதமாய் முன்னெப்போதும் நடந்து கொண்டதில்லை நான் கைவிலங்கிடப்பட்ட நான் உன்னைக் காப்பாற்றுவதற்காகத்தான் இதைச் சொல்கிறேன் என் பைத்தியக் கண்களில் உன்னைத் தவிர எதுவுமே தெரிவதில்லை கடந்த காலங்களின் எச்சம் உன் மீது பட்டுவிடக் கூடாது என்று துடிக்கிறேன் நான் என்னை விலக்கிவிட்டு கற்பனைச் சித்திரம் வரைந்த பிரமைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் நீ லெட்சுமணக் கோடென்றாலும் நவீன சீதைகள் தாண்டுவதற்கு யோசிப்பதில்லை என எனக்கு புரியவைக்கிறாய் நீ நான் கையேந்தும் நிலைமைக்கு நீ காரணமில்லை என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் நான்.                                   கோரிக்கை   எனக்குப் புரிகிற மாதிரி சொல்லி இருக்கலாம் நகரை நிர்மாணிக்கும் பொறுப்பை உனக்கு வழங்கியிருப்பேன் காடுகளை அழித்து குடியிருப்புகளாக மாற்றுவது ஆதிகாலந்தொட்டே நிகழ்ந்து வருகிறது உத்தரவுக்கு கீழ்ப்படிவது உனக்கு சிரமமாய் இருக்கலாம் வாழ்க்கை நம்மை துரத்தியடிக்கிறது மாயையிலிருந்து மீள்வது அவதாரத்தால் கூட முடியாது உன்னை சமாதானப்படுத்துவதற்காக நான் இதைச் சொல்லவில்லை சீட்டுக்கட்டு கோபுரமாய் இந்த உலகம் சரியும் போது நம்மை மட்டும் மீட்க கடவுள் எப்படி இறங்கி வருவார் மனுஷகுமாரனின் குரலுக்கே அவர் செவிசாய்க்காத போது.                                                   துரோகத்தின் நிழல்   துரோகத்தின் நிழல் என்னைத் துரத்திக் கொண்டேயுள்ளது சரணடைவதற்கான நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் தூரத்தில் கேட்கும் ஒலி கூட என்னை நிம்மதி இழக்கச் செய்கிறது இந்த தண்டனையை பாவத்தின் சம்பளமாக ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன் தப்பிப்பதற்கான வழியைத் தேடித்தேடி நான் களைப்படைந்துவிட்டேன் என் ஆயுளை ஒருநாள் நீட்டித்து கடவுள் கையெழுத்திடுகிறார் மரணம் தரும் விடுதலையை அனுபவிக்க ஆசைப்படுகிறேன் என்னை வாழவைத்து சித்ரவதைக்கு உள்ளாக்குவதை எங்கே சென்று முறையிடுவேன் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் கண்டுகொண்டேன் என்று சொன்னால் இந்த உலகம் என்னை சிலுவையில் அறைந்துவிடாதா.                                           விஸ்வரூபம்   என்னை நானே கேட்டுக் கொள்கிறேன் வேதகாமத்தில் சொல்லியபடி நடக்க விழைகிறேன் சமூகம் கடவுள் முகமூடி அணிந்த சாத்தானாய் இருக்கிறது ஆன்ம விடுதலையை ஒருபோதும் அது ஏற்றுக் கொள்ளாது நரகத்தில் இருப்பவர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கச் சென்ற பன்னிரு சீடர்களும் இன்னும் பரலோகம் திரும்பவில்லை மலை உச்சிக்குச் சென்ற இயேசுவை திரும்ப வானமண்டலத்துக்கு அழைத்துக் கொண்டு கிறிஸ்து மண்ணில் இறங்கி வந்ததை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.                                         இப்படியாக   இப்படி நிறைய தவறவிட்டுவிட்டேன் சிரத்தை எடுத்து படித்திருந்தால் நல்ல நிலைமைக்கு வந்திருப்பேன் விளையாட்டில் கவனம் செலுத்தியிருந்தால் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பேன் பேசத் தெரிந்திருந்தால் அரசியலில் குதித்திருப்பேன் பணத்தை அள்ளி இறைக்க மனமிருந்தால் பவர் ஸ்டாராகி இருப்பேன் மொழியை திறம்பட பயின்றிருந்தால் கவிஞனாகி இருப்பேன் இசைக்கு தன்னையே அர்ப்பணித்திருந்தால் சங்கீதக் கலைஞனாகி இருப்பேன் கேள்வி ஞானம் மிகுந்திருந்தால் ஜோதிடராகி இருப்பேன் சித்து வேலை தெரிந்திருந்தால் ஆன்மிக குருவாகி இருப்பேன் மூன்றாவது கண் கொண்டு எதையும் ஆராயத் தெரிந்திருந்தால் விஞ்ஞானியாகி இருப்பேன் சட்டத்தின் ஓட்டை கொண்டு தப்பிக்கத் தெரிந்திருந்தால் தலைவனாகி இருப்பேன் மனசாட்சிப்படி கொஞ்சம் நடந்திருந்தால் மனிதனாகி இருப்பேன் அதிகார வர்க்கத்துக்கு வளைந்து கொடுக்க முடியாது என கைவிரித்ததால் கைதியாகி சிறைக்குள் காலம் கழிக்கிறேன் கடவுள் பற்றிய உண்மையைச் சொன்னதால் பைத்திக்காரன் என முத்திரை குத்தப்பட்டு மனநலக் காப்பகத்தில் மீதி நாட்களைத் தொலைக்கிறேன்.             அநித்யம்   கவனமாக இருங்கள் நாளை விழித்தெழுவோம் என்ற உத்திரவாதம் யாருக்கும் இங்கே வழங்கப்படவில்லை சந்திப்புகள் குறித்த நேரத்தில் நடைபெறும் என்ற உத்திரவாதத்தை யாருக்கும் வழங்காதீர்கள் உங்களின் இன்னல்களைக் களைய இன்னொரு மனிதனால் முடியும் என்று நம்பாதீர்கள் உங்கள் தன்மானத்தை கேலி செய்யும் எவரோடும் சமரசம் கொள்ளாதீர்கள் நாக்கில் தேனொழுக பேசுபவரின் வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள் உங்களுக்காக கடவுள் வானத்திலிருந்து இறங்கி வருவார் என கனவு காணாதீர்கள் கூடுமானவரை நான்கு பேருக்கு மத்தியில் முகமூடி அணிவதை தவிருங்கள் உள்ளக் குப்பைகளை எல்லார்க்கும் மத்தியில் கொட்டாதீர்கள் பொய் மூட்டைகளை வண்டி வண்டியாக சுமந்து எந்த ஆற்றில் கரைக்கப் போகின்றீர்கள் மனதால் மலத்தை நக்கிவிட்டு பிறருக்கு பைத்தியம் என்று முத்திரை குத்தாதீர்கள்.                       வேட்டை     சில குறிப்பிட்ட தினங்களில் படுக்கையிலிருந்து எழுவது அசெளகர்யமாக உள்ளது அன்பைப் பகிரும் போது ஏற்படும் இடைவெளி முன்னெப்போதும் இல்லாமல் வெகுவாய் நீண்டு விடுகிறது தோற்றவர்களின் மண்டை ஓடுகளை அணிந்து கொள்கிறார்கள் ஜெயித்தவர்கள் மற்ற தினங்களில் சாத்தானை சபித்த நாம் விடுமுறை தினங்களில் சாத்தானாகவே  வாழ்கிறோம் சந்திப்புகள் அர்த்தமற்று போய்க் கொண்டிருக்கின்றன தொலைபேசியில் பேயின் குரலை கேட்கிறோம் மறக்க நினைத்தவையெல்லாம் நினைவடுக்கின் மேல் வந்து எட்டிப் பார்க்கிறது பிறகொரு நாள் வீட்டை குகையாக்கி வேட்டையாடப் பதுங்குகிறோம் மாமிசத்தை உண்டு கொண்டே ஜீவகாருண்யம் பற்றி வாய்க்கிழிய பேசுகிறோம்.                                 இடர்பாடு     அர்த்தமிழந்து போனது வாழ்வு கனவில் குடித்தனம் நடத்துபவர்கள் பெருகிவிட்டனர் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள் பெருகிவிட்டனர் கடவுளை துணைக்கு அழைக்கும் கொலைகாரர்கள் பெருகிவிட்டனர் என்றாலும் மக்கள் சொற்ப காசானாலும் அதை எப்படிச் செலவழிப்பது என அறிந்திருக்கின்றனர் விசேஷத்திற்கு சென்று சாப்பிடாமல் திரும்புவதில்லை அவர்கள் வம்சவிருத்திக்காக உயிர்களை பலிகொடுப்பது மனதை உறுத்தவில்லை அவர்களுக்கு வருவதும் போவதுமாக இன்ப துன்பம் இருப்பதால் தான் கல்லைக் கூட கடவுளாக வழிபடுகின்றனர் வாழ வேண்டுமென்ற உந்துதல் இருக்கும்வரை எத்தனை இடர்பாடுகளையும் சகித்துக் கொண்டு தான் ஆகவேண்டும்.                                       கேள்விக்குறி   தெற்றுப்பல் சிறுமி என்னைப் பார்த்து சம்பந்தமே இல்லாமல் சிரித்தாள் மீன் கடையை தாண்டிப் போகும்போதெல்லாம் கவுச்சி நாற்றம் எந்த பேரமுமின்றி  என்னைப் பின்தொடர்கிறது காதல் பறவைகள் கொஞ்சிக் கொண்டிருப்பதை நானும் நிலாவும் பார்த்தோம் வாழைப்பழத் தோலில் வழுக்கி  விழுந்தவன் சம்பந்தமே இல்லாமல் என்னைப் பார்த்து முறைத்தான் மிதிக்க முடியாமல் சைக்கிளை மிதித்துக் கொண்டு சென்ற முதியவர் நடக்கமுடியாமல் நடந்து செல்கிற என்னைத் தாண்டிப் போனார் என் வீட்டிலும் புல்லாங்குழல் இருக்கிறது வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே நேற்று போட்ட வண்ணக் கோலத்தை எவ்வளவு பெருக்கினாலும் அழிக்க முடிவதில்லை முதல் வரியின் கேள்விக்கு அடுத்த வரியில் விடை கிடைக்குமா எனத் தெரியவில்லை.                           வலை   உன் கவனத்தை ஈர்ப்பதிலேயே குறியாயிருந்தேன் என் பார்வைகளை நீ ஏனோ புறக்கணித்தாய் உன்னிடம் எப்படி பேசுவதென்று நான் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தேன் நீ ஏனோ என்னைப் பற்றிய அவதூறு செய்திகளை காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தாய் உன்னை ஏறெடுத்துப் பார்க்க எனக்கு அருகதை இருக்கிறதாயென்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் உன்னைப் பற்றி எண்ணங்களாலே என்னை நீ விழுங்கிக் கொண்டிருக்கிறாய் நண்பர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து என் காதலை உன்னிடம் வெளிப்படுத்தாமல் இருந்தேன் அவகாசம் எடுத்ததால் குடித்தனம் நடத்துவதற்கு வேறொருவனுக்கு வாக்கு கொடுத்துவிட்டாய் அது தான் இறுதி சந்திப்பு எனத் தெரிந்திருந்தால் அவள் உருவத்தை நெஞ்சத்தில் பதியவைத்திருப்பேன் எந்தத் திசையில் நான் பயணித்தாலும் எதிரே நீ தான் வருகிறாய் பற்றிக் கொண்ட பிடியையும் விட்டு அதலபாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கிறேன் சம்பவங்கள் எனக்கு சாதகமாக இல்லாததால் அதிருப்தியில் கொஞ்சம் கொஞ்சமாக நான் புதைந்து கொண்டிருக்கிறேன் இயலாமையை எண்ணி வருந்தி டாஸ்மாக்கே கதியென்று கிடக்கிறேன்.       ஸ்தானம்   எழுத்து அவ்வளவு சீக்கிரத்தில் வசப்பட்டுவிடாது பாத்ரூமில் வார்த்தைகள் வந்து விழும் குறித்துக்கொள்ள காகிதம் இல்லாதபோது கரு பிறக்கும் சொற்களை தனதாக்கிக் கொள்ள நினைக்கும்முன் தப்பிவிடும் பாடுபொருளைத் தேடுவதில் சிக்கல் எழும் சரக்கை உள்ளே ஊற்றினால்தான் கற்பனைகள் சிறகுவிரிக்கும் அனுபூதி இருந்தால்தான் ஆற்றொழுக்காய் வரி பிறக்கும் தரையில் விழுந்த மீனைப் போல் துடித்தால் தான் எழுத்துலகில் அசைக்கமுடியாத ஓர் இடம் கிடைக்கும்.                                             முகூர்த்தம்   விடைபெறும் நேரம் வரும்வரை உன் பிரிவைப் பற்றி நினைக்கவே இல்லை ஏகாந்தமாய் வாழ்ந்தவனின் வயிறு பசி என்பதை அறியாது குறிப்பிட்ட நபர்களை எதிர்கொள்ளும் போது என்ன செய்வது என்று தெரியாமல் சிலை போல் நின்று விடுகிறேன் வெளிப்படுத்தப்படாத எண்ணகளை சுமை தாங்கி போல் முதுகில் சுமந்து செல்கிறேன் உங்கள் விருப்பமின்றியே வந்து ஒட்டிக் கொள்கிறது நிழல் நிறபேதம் காட்டும் சமூகம் மேனியை சிவப்பாக மாற்ற க்ரீம்களை பரிந்துரைக்கிறது அச்சுறுத்தலுக்கு மத்தியில் உண்மை பேசுவது தற்கொலைக்குச் சமமானது.                                         சங்கேத வார்த்தை   உன் சங்கேத வார்த்தைக்கு அர்த்தமென்ன என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன் வாழ்க்கையைவிட கொடூர தண்டனை வேறு என்னவாக இருக்க முடியும் சங்கடங்கள் இல்லாது அக்கடா என்று விட்டம் பார்த்து படுத்துக் கிடக்க எவரால் முடிகிறது இங்கே மயிரிழையில் உயிர்ப்பிழைத்தவனிடம் கேட்க வேண்டும் உயிரின் மகத்துவம் என்னவென்று சிறிய தவறு பின்னால் பூதாகரமான பிரச்சனையாகிவிடுவதை யார் தான் கணிக்க முடியும் மரணத்தாகத்துடன் அலைபவன் இந்தக் கிணற்று நீரை குடிக்கலாமா என யோசிப்பானா உன் கவிதையை நான் எழுத வேண்டுமென்றால் என் வாழ்க்கையை நீ வாழ வேண்டும் சிந்தனைக்கு எல்லை வகுக்கும் உனது சட்டதிட்டங்களை அமல்படுத்தினால் பூமியே கல்லறைத் தோட்டமாகத்தான் இருக்கும் உனது நடவடிக்கைகளை சகித்துக் கொண்டு வாழ எனது சுதந்திரத்தை தாரை வார்க்க வேண்டும் எனது மனக்குதிரை விருப்பம்போல் மேயாமல் உனது லாயத்தில் கட்டிப் போடப்பட்டிருக்கும் அடிவானத்துக்கு அப்பால் சுதந்திரத் தீவொன்று இருக்கிறதாம் முயற்சி செய்து அங்கே போகிறேன் இல்லையேல் மீன்களுக்கு இரையாகி நடுக்கடலில் சாகிறேன்.                                                               ப.மதியழகன்(28.3.1980)   திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது. முதல் கவிதை தொகுப்பு தொலைந்து போன நிழலைத் தேடி 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு சதுரங்கம் 2011ல் வெளிவந்தது.இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது. தற்போது மன்னார்குடியில் தனியார் மையத்தில் கணினி பயிற்றுனராக வேலை செய்து வருகிறார்.     [photo.jpg]                   கவிதை சிறகு தந்தது. விசாலமான இலக்கிய வானில் வண்ணத்துப்பூச்சியைப் போல் தாழப் பறக்கத்தான் என்னால் முடிந்தது. எச்சமிடும் காக்கைக்குத் தெரியாது எந்த விதை விருட்சமாகும் என்று. வாழ்க்கைப் பாதை கரமுரடானது. அதே சமயம் ஒருவழிப்பாதையும் கூட. மரணம் முடிவான ஒன்றாக இருக்குமே தவிர கடந்த காலத்தில் நிகழ்ந்த ஏதாவதொரு நிகழ்வுக்குள் நம்மால் நுழைந்து பார்க்க முடியாது. கடந்த காலத்தின் மீது நமது ஆளுமையும் எடுபடாது. உறக்கமற்றவனின் விடியல் நரகமாகத்தான் இருக்கும். சபிக்கப்பட்டவனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நீங்கள் இந்த கவிதைத் தொகுப்பை படித்து முடித்ததும் தெரிந்து கொள்வீர்கள்.                                                                                                                           ப.மதியழகன்